திருக்கைலாச பரம்பரைத் திருவாரூர் சுத்தாத்துவித சித்தாந்த சைவாசாரியா குழாத்துள் ஒருவராய
சு.சுவாமிநாததேசிகரவர்கள் இயற்றியது.
உ
திருச்சிற்றம்பலம்.
சந்தானாசாரியபுராண சங்கிரகம்.
பாயிரம்.
விநாயகர்.
பொன்னா ரிதழி சடைக்கணிந்த புனிதப் பெருமான் பூங் கழலே,
முன்னா விரும்பு மெப்பொருளு மென்று முன்னி முறைபரவு,
மின்னார் கயிலைச் சந்தான குரவர் சரிதம் விளம்பிடுவா
னென்னே ரோடை யைங்கரத்த னிருதாட் கமல மிறைஞ்சிடுவாம். (1)
சபாநாதர்.
துடியதனிற் படைத்தன்மிகு தூய்மையொடு மமைகரத்திற் காத்த றொல்லைப்,
படிபுகழு மங்கியினி லழித்தலுற வூன்றுமலர்ப் பாதந் தன்னின்,
மடியுறவே மறைத்தனற்குஞ் சிதசரண மலரின்க ணருள லாகத்,
திடமுறுத்திச் சிற்சபையிற் றிருநடஞ்செய் துறைதேவைத் தியானஞ் செய்வாம். (2)
சமயாசாரியர்.
தம்மானைச் சுட்டியருந் தந்தையர்க்குப் புலப்படுத்தார் சரணம் போற்றி,
யம்மானை மறைக்கதவந் திறப்பித்துத் தரிசித்தா ரடிகள் போற்றி,
யெம்மானைப் பரவையிடைச் சந்துசெல வேவினர்தம் மிருதாள் போற்றி,
பெம்மானைப் பரிவயவ ராக் கினர்தம் பிரசமலர்ப் பாதம் போற்றி. (3)
சந்தானாசாரியர்.
ஈராண்டிற் சிவஞானம் பெற்றுயர்ந்த மெய்கண்டா ரிணைத்தாள் போற்றி,
நாராண்ட பல்லடியார்க் கருள்புரிந்த வருணந்தி நற்றாள் போற்றி,
நீராண்ட கடந்தைநகர் மறைஞான சம்பந்தர் நிழற்றாள் போற்றி,
சீராண்ட தில்லைநக ருமாபதியார் செம்பதுமத் திருத்தாள் போற்றி. (4)
புராணவரலாறு.
சம்புவிற் றெளிந்த நந்தி யருள்பெறு சனற்கு மார
னம்புநல் வியாதற் கோத நவையறு மவன்சூ தற்குப்
பம்பிட நவில்பு ராணம் பதினெட்டுட் பவிடி யத்தி
லெம்பெரு மக்கள் காதை யினையன திகழு மன்றே. (5)
நூற்பயன்.
எவ்வுலகுந் தொழுமெழிலார் சந்தான குரவர்கடமியற்புராண,
திவ்வியநன் மான்மியத்தைத் தீவிரமா மன்பினொடு செவியிற் கேட்போ,
ரிவ்வுலக விந்திரரா யினிமையுறு செல்வமெலா மெய்திட பின்னர்,
நவ்விவிழி யுமைபாக னருளாலே பரமுத்தி நண்ணி வாழ்வார். (6)
அவையடக்கம்.
இவ்வுலகிற் புலவரெலா மிலக்கியமு மிலக்கணமு மிசைய வாய்ந்து,
திவ்வியநற் பிரபந்தம் பலவிழைப்பார் திடமொன்று மில்லாத் தீயேன்,
செவ்வியபன் மயிலாடல் கண்டிடுவான் கோழியுறு சிறைவி ரித்தே,
யெவ்வமுறவாடுதல்போ லெழிற் குரவர் மான்மியத்தை யியம்ப லுற்றேன். (7)
பாயிர முற்றிற்று.
------------------------------------------------------------------------------------------------------------------
மெய்கண்டசிவாசாரியர்புராணம்.
அம்பொன் மேருவிற் கரத்தினி லேந்திநல் லருள்செய்
நம்பன் மேவிய குலஞ்செறி நன்னடு நாட்டி
னும்ப ராரும்வந் தொழிவுறா தாடுறு நிவாவின்
கம்ப மாமணி திரையெறி கரைவட பாங்கர். (1)
கடந்தை மாநக ரமர்ந்தகா ராளர்தங் குலத்திற்
படர்ந்த நாமவச் சுதர்களப் பாளர்தம் பக்க
லிடம்பெ றும்பல செல்வமு மெய்திமேம் பட்டே
யடங்கி டாதபே ரறிவுறு மதலையை யடைவான். (2)
தங்கு ருச்சக லாகம பண்டிதர் தாளி
லங்க மெட்டுறப் பணிந்தரு மகவினை யளிக்குந்
துங்க நல்வர மருளெனத் தொல்லை நூ லுணர்ந்தோன்
புங்க மார்தமிழ் மறையினைப் போற்றிநாண் சாத்தி. (3)
வேறு.
தூயமறைக் குலமேவு தமிழ்விரகர் துதிசெய்த
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவெ லாம்பெறுவ ரென்னவமை யருட்பதிகஞ்
சேயதமிழ் மறையதனிற் றெளிவுறக்கண் டுளமகிழ்ந்தே (4)
(திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்- திருவெண்காட்டுத் திருப்பதிகம் - சீகாமரம் - பேயடையா )
வேறு.
தன்ன டித்தலம் பணிவுறுந் தன்மைசால் கடந்தை
மன்னு பேரறி வுறுநன்மா ணாக்கனை நோக்கிப்
பொன்னி மாநதி வடகரைப் பொலியும்வெண் காட்டிற்
பன்னு நல்வர மளித்திடு முக்குளம் படிந்து. (5)
பிரம வித்தியா நாயகி தன்னையும் பிறைசே
ரருண வேணியா ரரனையு மடிபணிந் தேத்திக்
கருணை யன்பர்தம் பூசனை கவினுற விழைத்துச்
சரண மென்மலர் தலைக்கணி யாமெனத் தாழ்ந்து. (6)
எனை நல்லற மில்லொடு மியற்றியே வதியிற்
பான லங்கணாள் பங்கன தருளினாற் பரம
ஞான நல்லுருப் புதல்வனை நயமுறப் பெறுவை
யின மற்றிடு மிம்மொழிக் கையமின் றென்றார். (7)
என்று கூறிய தங்குலக் குரவன திணைத்தா.
ளொன்று மன்பொடு பணிந்துகை யுச்சிமேற் கூப்பி
யன்று தம்மனைக் கிழத்தியோ டகங்களி துளும்பிச்
சென்று செய்குவ லென்றுநல் விடைகொடு செல்வார் (8)
திடம்பெ றுங்கலை முழுதுணர் தேசிக ருரைத்த
நடந்த ருஞ்சிவன் சுவேதமா வனத்திடை நண்ணி
யிடம்பெ றும்பல தருமமு மியற்றியே வதிந்தா
ரடங்க லில்லருஞ் செல்வவச் சுதர்களப் பாளர். (9)
வதிய லுற்றவோ ராண்டினின் மருவுமோர் வைகன்
மதிய மாருநற் சடையினான் கனவில்வந் தெம்பாற்
பதியு மன்பகே ளிம்மையிற் பாலனைப் பயக்கும்
விதிநி னக்கிலை யென்றருள் செய்தனன் விமலன். (10)
அன்ன வாசகங் கேட்டவச் சுதர்களப் பாளர்
பொன்னங் கொன்றையம் மதியொடு மெளலியிற் புனைந்தோய்
மன்னு பூம்புக லிப்பெரு மான்மன மகிழ்ந்து
சொன்ன லங்களும் பொருள்களுஞ் சுரந்தருள் பொழிய. (11)
உம்மை யேத்துநற் றமிழ்மறைப் பாடலை யுன்னி
மெய்ம்மை யாகவே நம்பினேன் விதியிது கண்டா
யும்மை காணநல் லருணடம் புரியுமா ரமுதே
யிம்மை யிற்கதி யருளுநற் புதல்வனை யீவாய். (12)
வேறு.
என்றுபல முறையிறைஞ்சித் துதித்து நிற்க
லிமயமலைக் கொடிபாக னியம்ப லுற்றா
னன்றுனது துதிகேட்டு மகிழ்ந்தோ முன்ன
ஞானபோ னகனம்மைத் துதித்த பாட
லொன்றுறுதி கொளுநின்பா லுலக மேத்த
வுயர்காழிக் கவுணியன்போ லொருவன் வந்து
நன்றருளு மகவுருவாய் நண்ணு மென்ன
நவிற்றியருள் செய்தனனன் மகிழ்ச்சி பொங்க. (13)
வேறு.
இம்மொழிகேட் டுக்கடந்தை யச்சுதர்க ளப்பாள ரின்ப மேவிச்,
செம்மையுறு மறமனைத்து முன்போல வினிமையொடு செய்யுங் காலைக்,
கொம்மைவரிக் குயமனையா டிருவயிற்றிற் சிறுகருப்பங் குலவித் தோன்ற,
மெய்ம்மறையிற் சடங்கனைத்து மையிரண்டு திங்களினும் விரும்பிச் செய்தார். (14)
இந்தமுறை கிரியையெலா மீரைந்து திங்களினு மியற்று நாளிற்,
சந்தமறை யாகமங்கள் வழியொழுகு தாபதர்கள் சலிப்பற் றோங்க,
மந்தபரி பாகருநல் லத்துவித மெய்யுணர்ந்து மகிழ்ச்சி யெய்த,
வெந்தையருள் சிவஞான போதமறை யியற்ற மிழி னினிது மேவ. (15)
நல்வியாத முனியுரைசெய் சூத்திரத்தின் பாடியமோர் நான்குங் கொண்ட,
சொல்வாய்மை பொருள்வாய்மை தெளித லுறத் தேராது சோக முற்றோ,
ரெல்லாரு மத்துவித சுத்தநிலை யினிதெய்திச் சோக மேயப்,
பொல்லாத சமயிகளு மதிசயிப்பப் புவனிமிசைப் போத மேற. (16)
நலமலியுஞ் சிவனடியா ரெஞ்ஞான்று மானந்த நண்ணி யோங்கத்,
தலமலியு மெந்நாட்டுந் தென்னாடு தலையெனவே சகங்கொண் டாடக்,
கலைமலியும் பிள்ளையா ரொருவர்தாந் தந்தை மனக் கவலை தீர,
நிலவலயத் தவதரித்தார் நிறையன்பர் சுற்றத்தார் மகிழ்ச்சி நீட. (17)
அந்நாளிற் றந்தையா ரகமகிழ்ச்சி மிகவெய்தி யந்த ணர்க்குப்
பொன்னாதி பல்வகைய தானங்கள் பூமிசையிற் பொலிய நல்கி,
மின்னாரும் புத்திரர்க்கு மரபுளிமுற் செய்சடங்கு விதியிற் செய்து,
பின்னாளிற் சாதகநல் வினைமுற்றிப் பேரின்பம் பெருகி வாழ்நாள். (18)
வேறு.
வெள்ளை மாவனத் தடிகள்பால் விடை பெற்று மீண்டு
பிள்ளை யோடுநன் மனைவியுஞ் சுற்றமும் பிறரு
முள்ள மாருகன் மகிழ்ச்சியி னொருவுதங் கடந்தை
யெள்ள ருங்கதிர் மாளிகை யிடத்துமே வினரால், (19)
அண்ண லாகுமச் சுதர்களப்பாளர்தா மரிய
வண்ண நன்மக வோடுவந் தணைந்தநற் செய்தி
கண்ண கன்பொழிற் கடந்தையார் களிப்பூறக் கேட்டு
முண்ணு மன்பொடு நாடொறும் வந்துபார்த் துவப்பார். (20)
பிள்ளை மாமதி போன்றுநற் பிள்ளையார் வளர
வெள்ள வேணியா ரன்பராம் விமலரைக் கொண்டு
வள்ள லார்க்குநன் னாமமிட் டழைத்திட வரத்த
தெள்ளு மாகம விதிமுறை செய்துநற் சடங்கு. (21)
ஒருசு வேதவனப்பெரு மாளென வொண்பே
ருரிமை யாலிடக் கடந்தையா ருவப்புற வருநா
ளிருமை சேர்திரு வெண்ணெய்நல் லூரினி லுறைய
மருநன் மாமனார் தம்மனை யெடுத்துவந் தணைந்தார். (22)
அணைந்த காதல ரும்மையி லரன்றனற் சரியை
மணந்த வாதநற் கிரியைநல் யோகமே மன்னி
யிணங்கு சாமுசித் திகநிலை யாண்டிரண் டினராய்ப்
புணர்ந்தி ருக்குநா ளங்ஙன நிகழ்ந்தது புகல்வாம். (23)
வெள்ளி வெற்பமர் விமலனா ரருள்பெறு நந்தி
வள்ள லாரடி மலர்புனை சனற்குமா ரன்பாற்
றெள்ளு சத்திய ஞானநற் றரிசனி திருத்தா
ளுள்ளு முள்ளமா ரொருபரஞ் சோதிமா முனிவர். (24)
அன்ன குன்றொரீஇத் தென்மல யாசல மணுக
மின்னு பேரொளி விமானமீ தேகுறும் வேலைப்
பொன்னி னோடுமுத் தெறிதிரைப் பெண்ணைநீர் புடைசூழ்
சென்னி மாமதிச் சிவனுறை வெண்ணெய்நற் பதிக்கு. (25)
நேர தாகவவ் விமானநின் விடுதலு நிறைந்த
தீர வாலறி வுடைப்பரஞ்சோதியார் தேர்ந்து
வார மோடிழீஇச் சுவேதவனப்பெரு மாட்குச்
சேர மெய்யுணர் வெய்திய திறந்திரு வருளால். (26)
தேர்ந்து தீக்கையு மெய்கண்ட நாமமுஞ் செறித்துச்
சார்ந்த மந்தண மாஞ்சிவ ஞானபோ தத்தை
யீந்து தங்குரு வறிவுறுத் தியபொழிப் பிசைத்தே
யார்ந்த செந்தமி ழாக்கெனப் பொதிவரை யடைந்தான். (27)
அருட்டு றைக்கணே யமர்பொலாப் பிள்ளையா ரருளான்
மருட்டி லாமலே சிந்தித்துத் தெளிந்துபின் மாட்சிப்
பொருட்ட தாஞ்சிவ ஞானபோ தத்தைத்தென் மொழியி
லருட்டி றத்தினாற் பெயர்த்துவார்த் திகப்பொழிப் பறைந்தார் (28)
இன்ன காலையிற் பலர்பரி பாகர்க ளீண்ட
வன்னர் சென்னிமேற் றிருவடி வைத்தருள் செய்தே
மன்னு மச்சிவ ஞானபோ தத்தினை வகுத்துப்
பின்னர் முன்னொடு மாறுகோ ளின்றியே பெருக்கி. (29)
வேறு.
உரைத்தருளி வாழ்நாளிற் சின்னாட் பின்ன
ருயர்வுடைய தங்குலத்துக் குரவ ரான
திருத்துறையூ ராகமபண் டிதர்தாந் தம்மைத்
தெரிசிக்கா திருக்கின்றான் றிருவெண் காடன்
பொருத்தமுற நாமங்குச் சென்று காண்டும்
பூம்பொழில்வெண் ணெய்ப்பதியிற் பொலிய வென்றே
வரச்சிலரை முன்விடுத்தா ரவர்கள் கூறும்
வாய்மைகேட் டகமகிழ்ந்தார் வெண்ணெய் வாழ்வார் (30)
வாழ்வுற்று நகரெங்குங் காவ ணங்கள்
வாழைதோ ரணங்கமுகு வகைக ணாட்டித்
தாழ்வற்ற சூதமலி கும்ப மாடி
தனைமுதலா மங்கலங்களெவையுந் தந்தே
யேழுற்ற மாடங்கள் புதுக்கி யாரு
மியலுறவே யெதிர்கொண்டு வணங்கி யெங்க
ளூழுற்ற வினைமுருக்கி யோதி நல்கு
முத்தமசற் குருநாத வுய்ந்தோ முய்ந்தோம் (31)
என்று பல முறைபழிச்சி வெண்ணெய் நல்லூ
ரிகலறுநல் வேளாளர் யாருஞ் சூழ
நன்று தவு மக்குரவர் விருதி னோடு
நல்லசிவா கமசகட நண்ணச் சென்றே
வொன்றுறுமங் கலவெண்ணெய் நல்லூர் மேவி
யுயர்வீதி வலம்வந்தங் கும்பர் போற்ற
அன்றுகட னஞ்சுண்ட வண்ணல் பொற்றா
ளன்பினொடு மிறைஞ்சியருள் பெற்று மீண்டார் (32)
மீண்டுதிரு மடத்தெய்து குரவர் பாதம்
விருப்பினொடும் பணிந்தேத்தி விருந்த ளித்தார்
நீண்டதிரு முண்டநுத லரனார் பாத
நினைந்துய்யு மெய்கண்டார் நினைவிற் சற்றுங்
காண்டகைய குருவரவை யெதிர்நோக்காது
கழல்பணியா திருக்குமதைக் கருதி நோக்கி
யாண்டகைய வக்குரவ ரவர்பா லேகி
யண்மையராய் நின்றுலவ வப்போ தங்ஙன் (33)
ஆணவமென் மொழியதனை நூன்முன் னாக
வங்கமரு மாணவக ரறைதல் கேளாக்
காணுறுநன் மெய்கண்டார் தம்மை நோக்கிக்
கருதுமா கமகுரவர் கனலு நெஞ்சா
ரேணமரா ணவசொருவ மென்னை யென்ன
வியலுறுநற் செவிகேட்டே யினிமை யோடு
மாணுறுதந் தர்ச்சனியங் குலியி னாலே
மற்றவரை நேர்சுட்டி மதிக்க வைத்தார். (34)
மெய்கண்டா ரிவ்வாறு சுட்ட லோடும்
விநயமுறு சிந்தையராய் மெய்ம்மை தேர்ந்தே
கைகண்ட சிவஞானந் திகழச் சென்று
கருதுமா கமகுரவர் கண்ணுற் றாங்குப்
பொய்கண்ட சமயநெறிப் புரைநீக் கந்தப்
புண்ணியர்தங் கழல்பணியப் புகழ்ந்தளாவி
நெய்கொண்ட குழலுமையாள் பங்கன் பாத
நிலவியபே ரன்புடையார் நினைந்து செய்வார். (35)
வேறு.
ஆதி சைவநல் லருணந்தி யேயென வழைத்துப்
பூதி யீந்துதங் குருவருள் புரிந்திட்ட படியே
தீது தீர்சிவ ஞானபோ தப்பொரு டெளிய
வோது செந்தமிழ்ச் சூத்திரங் களைமுன முரைத்து. (36)
வார்த்தி கப்பொழிப் புரைபினர் வகுத்தருள் செய்து
கூர்த்த வன்பொடு முதன்மைமா ணாக்கராக் கொண்டு
பார்த்த லத்ததி பக்குவ ரெனப்பலர் புகழத்
தீர்த்த னைந்தெழுத் தோடுமா வாக்கியஞ் செப்பி. (37)
மாவாக்கியம்- தத்துவமசி
வேறு.
மெய்யுணர்ந்தார் புகழுமரு ணந்தி யோடு
மேவதிகை மனவாசகங்க டந்தார்
பொய்யகல்சிற் றம்பல மாடிகண்முன் னாகப்
புகழுறுமா ணாக்கர் நாற் பத்தொன் பதின்மர்
மையகலும் பரிபாக நன்கு ணர்ந்து
மன்னுசிவ தீக்கைமுறை மருவச் செய்து
தெய்வவருண் மேவிடமுப் பொருளு ணர்த்திச்
சின்மயராந் தன்மையினைச் செய்து பின்னர். (38)
வேறு.
சுத்த மானவத் துவிதநற் சோகம்பா வனையே
நித்த முந்நினைந் திருத்தலா னிருமல சீவன்
முத்த ராகிப்பே ரானந்த மூர்த்தியாய் முடிவில்
சித்த சித்தெலா நிறைந்திடு சிவபர னானார். (39)
மண்ணு ளார்கடம் மாசுதீர்ந் தரனருண் மன்ன
வெண்ணி லாகம சாரங்க ளினிதெடுத் தியம்பு
மண்ண லாகிய மெய்கண்டா ரடியிணை வழுத்தி
விண்ணு ளார்பணி யருணந்தி யார்திறம் விரிப்பாம் (40)
மெய்கண்டசிவாசாரியர்புராணமுற்றிற்று.
ஆகச் செய்யுள் - 47
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அருணந்திசிவாசாரியர்புராணம்.
வேதவொலியு முழவொலியும் வேள்வி யியற்றுந் திருமறையோர்
நாத வொலியு மோவாத நன்மை பெருகுந் திருத்துறையூ
ராதி சைவர் குலம்புரிந்தவருமை யான பெருந்தவத்தா
னீதி சாலுஞ் சிவாகமங்க ணிலவு வொருவ ரவதரித்தார். (1)
செல்வ மலியுந் தந்தையர்தஞ் சீராட் டோடு வளர்நாளின்
மல்ல லாதி சைவர்கடம் மரபிற் கேற்ற முறைமையினாற்
றொல்லை வேத வாகமங்கள் சொல்லு நல்ல விதிமுறையின்
வல்ல பல்ல பெரியோராற் சாத கன்மம் வகுத்துப்பின். (2)
சேய்மை யான பதிவதியுஞ் சிவவே தியருஞ் சூழ்ந்துறைய
நாம கரணஞ் செய்துவந்து நலமார் கேச வினைமுற்றி
யோம மாற்றி யன்ன நுகர் கிரியை முடித்தே யொளிர்பருவந்
தூய்மை யோடு மேறப்பின் றுகடீர் சுற்றஞ் சூழலுற. (3)
எல்லை யில்லாச் சிறப்போடு மினிய வேதா கமமுறையிற்
புல்லும் பூணூற் கடிமுடித்துப் புரையில் காயத் திரியதனை
நல்ல வோரை தனிலுரைத்து நவைதீர்'காண்டோ பக்கிரமந் *
தொல்லை முறையிற் செய்வித்தார் துகடீர் சைவ மறையோர்கள் (4)
(காண்ட உபக்கிரமம் எனப் பிரிக்க . உபக்கிரமம் - ஆரம்பம்)
அந்நாட் டொடங்கிப் பொது நூலா மரிய மறையின் கன்மவகை
பொன்னார் பத்தி காண்டவகை போத மாருங் காண்டவகை
பன்னா ளோதி யங்கவகை பயின்று **சிறப்பு நூலாகு
மின்னார் சைவா கமங்களெலாம் விதியா லங்குப் பயிலுறுவார். (5)
( **பொதுநூல் மறை. சிறப்புநூல் ஆகமம் என்பதை
" வேதமொ டாகம மெய்யா மிறைவுனூ,
லோதும் பொதுவுஞ் சிறப்பு மென் றுன்னுக,
நாத னுரையிவை நாடி லிரண்டந்தம்,
பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே"
என்னுந் திருமந்திரத்தானு முணர்க)
வேறு.
காமி காதியா மாகமங் கவினுறச் சொல்லு
நாம நற்சரி யைப்பொரு ணயமுறு கிரியை
தூய்மை *யெட்டுறுப் பாச்சொலும் யோகபா தத்தின்
வாய்மை நற்பொருண் ஞானபா தப்பொருள் வகையும் (6)
(*எட்டுறுப்பாச்சொலும் யோகம் - அட்டாங்கயோகம். அட்டாங்கமாவன : இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.)
ஏனை நற்கலை யாவையு மினியசெந் தமிழு
மீன மற்றிடப் பயின்றதா லியாவரு முவந்து
ஞான நற்சக லாகம பண்டித நாம
மான முற்றிட வைத்தனர் மண்ணகம் புகழ (7)
வேறு.
புன்மை நீங்காப் புறச்சமய நெறிகள் போக்கிப் புரைதீர்ந்த
நன்மை பெருகுஞ் சைவநெறி நாட்டி நான்கு வருணத்திற்
றொன்மை யாக வருமடியார் தொல்லை வினையின் றுகண்முழுது
மின்மை யாகச் சிவாகமங்க ளியம்பு தீக்கை முறைபுரிந்து (8)
வளரு நாளிற் றிருவெண்ணெய் மெய்கண் டருளும் வள்ளன் முன்
கிளரு ஞானந் தடையுண்டு கீழ்மை யகற்று மவர்பாத
மிளிரு மன்பிற் பணிந்தேத்தி மெய்ம்மைச் சிவஞா னமும்பெற்றே
தளர்வு நீங்கி மறைஞான சம்பந் தர்க்குத் தக்கமுறை. (9)
சுத்தாத் துவித நிலையுணர்த்திச் சொல்லற் கரிய சிவஞான
சித்தி யாரு நல்லிருபா விருபஃதினையுஞ் செய்தருளிப்
பத்த ராவார் பலர்பணியப் பரசி வோகம் பாவனையா
னித்த வகண்ட பரணமா நிலைமை யெய்தி நின்றனரால். (10)
அந்தண் பெண்ணைக் கரைத்துறையூ ரமரு மருணந் திப்பெருமான்,
பந்த மவிழ்ந்து மணங்கமழும் பதும பதத்தைத் துதித்திறைஞ்சிக்,
கந்த வடவி புடைசூழுங் கடந்தை மறையோர் களிதுளும்ப,
வந்த நல்ல மறைஞான முனிவர் சரிதம் வகுத்திடுவாம். (11)
அருணந்திசிவாசாரியர்புராணமுற்றிற்று.
ஆகச் செய்யுள் - 58
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மறைஞானசம்பந்தசிவாசாரியர்புராணம்.
மாவாழ் திருமார் பனுமயனு மகவான் முதல்வா னோரெவரு,
மோவா தென்றும் பணிந்துவக்கு முயர்வாம் வெள்ளாற்றின்பாங்கர்த்,
தாவா மறைநான் கோதுசிவன் றணவாத் தூங்கானைமாடப்,
பூவார் கோயி லினிதமரும் பெண்ணா கடமாம் புரியதனில். (1)
வேறு.
தூயமறைக் குலம்விளங்கச் சொற்கலைக டெளிவெய்த
மேயசிவ னடியார்கண் மேல்வினையின் றுகளகற்ற
மாயவயற் சமயங்கண் மறையவர்தங் குலத்தொருவர்
தீயனவெ லாமாழத் திருவவதா ரஞ்செய்தார். (2)
தந்தையார் சுற்றத்தார் *தாய்மார்க ளெடுத்தேந்திச்
சிந்தைகளிப் புறவேத விதிவழியே செய்சடங்கு
சந்தமறை யொலிமுழங்கச் சாதகா திகள்செய்து
வந்தமுறை யேழாண்டின் மறைமுந்நூன் மணமுடித்தார். (3)
(*ஆட்டுவாள் ஊட்டுவாள் ஒலுறுத்துவாள் நொடிபயிற்றுவாள், கைத்தாய் எனத் தாயர் ஐவராகலின் பன்மையாற் கூறினார்.)
வந்தமர பினுக்கேற்ப வளர்மறையு மாகமமு
முந்தைமநு முதலறநூன் மூவறுதொல் புராணங்கள்
சந்தமுறப் பயின்றாறு சாத்திரமும் வந்தபின
ரெந்தைபிரான் மறைஞான சம்பந்த ரெனப்பெற்றார் (4)
அந்நிலையிற் றிகழ்வார்தா மருணந்தி யாரையடைந்
தென்னுடைய பந்தமறுத் திணையடிசூட் டிடுமென்னச்
சொன்னமுறை சிவதீக்கை சோகமறச் செய்வித்தே
பன்னரிய சிவஞான முணர்த்துநூல் பலவுரைத்தார். (5)
வேறு.
அன்ன தேசிக ரடியிணை தொழுதவ ணீங்கிச்
சென்னி யாறுடை யார்சிதம் பரதலஞ் சேர்ந்து
மன்னு சிற்சபா நாதரை வலங்கொடு பணிந்து
பன்னு மைந்தெழுத் தோதுறூஉம் பணியடைந் தனர்பின் (6)
உத்த மப்பரி பாகரா முமாபதி யார்க்குச்
சுத்த தத்துவ ஞானத்தைத் துகளற வருளிச்
சித்தர் சூழ்ந்துவாழ் திருக்களாஞ் சேரியி லமர்ந்து
முத்தி யெய்தினார் முழுமுதற் றுணையடி முன்னி. (7)
வேறு.
கண்ணகன் புரிசை மாடக் கடந்தைமா நகரில் வந்த
வண்ணல்சம் பந்த னார்த மடியிணை தலைமேற் கொண்டு
விண்ணுளார் பரவுந் தில்லை வேதவந் தணரின் மிக்க
வொண்மைசேருமாப திப்பே ருத்தமர் திறமு ரைப்பாம். (8)
மறைஞானசம்பந்தசிவாசாரியர்புராணமுற்றிற்று
ஆகச்செய்யுள் -66
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உமாபதிசிவாசாரியர்புராணம்.
பொன்னிவளந் தருசோழ னன்னாட்டிற் புகழ்மலியும் புலியூர் தன்னின்,
மன்னுமறைக் குலமகிழ மாமுனிவர் போற்றிசைப்ப வனிதை பாகன்,
சொன்னசிவா கமம்விளங்கத் திருவுடையந் தணர்மரபி லொருவர் தோன்றிப்,
பன்னரிய வபிதானமுமாபதியா ரெனவெவரும் பரவப் பெற்றார். (1)
அப்பெற்றி யுடையபிரா னருமறையா கமமுதலா மனைத்துந் தேர்ந்தே,
யெப்பற்று மறவெறிவா ரெழில்வளர்பொன்னம்பலவ ரிருதாள் பற்றிக்,
கைப்பற்று மலர்கொண்டு காலமுறப் பூசித்துக் கருதி வாழ்நா,
ளொப்பற்ற மறைஞான சம்பந்தர் பாலுற்ற வுண்மை சொல்வாம். (2)
வேறு
மூவா யிரநாட் கொருநாளின் மூல முதல்வன் பூசைபுரிந்
தோவா லிருதோ டுயர்சிவிகை யாரோ கணரா யுண்ணின்றுந்
தாவா வடியார் புடைசூழத் தகுநல் வீதி வருவாரை
நாவார் மறைஞானப்பெருமா னண்ணுஞ் சிவிகை யுறநோக்கி (3)
வேறு.
பட்ட கட்டையிற் பகற்குரு டேகுதல் பாரீர்
சிட்டர் சூழ்தர வென்றசொற் செவியுறக் கேட்டே
யட்ட மூர்த்திதா ளகமல ரன்புமா பதியார்
மட்டி லாதபே ரன்பராய் மகிழ்வுகொண் டனராய். (4)
வார்த்தை கேட்டவக் கணத்தினே வாகனத் திழிந்து
தீர்த்த ராகிய சம்பந்தர் திருவடி தொழுது
பார்த்த வக்கணம் பகற்குரு டென்றருள் செயநா
சீர்த்தி யெய்தினீர் நாயினேற் கப்பொருள் செப்பி. (5)
வேறு.
பூர்த்தி ஞானநல் வரம்பினைப் புகலுவீ ரென்ன
நார்த்த தும்பிய குரவரு மதன்பொரு ணவிலப்
போர்த்த தம்வரு ணாபிமா னம்புறக் கணித்துக்
கூர்த்த வன்பொடு மாங்கவர் குறிவழி நின்றார் (6)
இந்நிலை நிற்கு நாளி லெழில்வளர் மறையோர் வாழு
மன்னுதண் கடந்தை வந்த மறைஞான முனிவர் தாமுந்
தன்னிகர் பணியி யற்றிச் சாருமா பதியார் தங்க
ணின்னருள் சுரந்து நோக்கி யெய்துநற் பாகம் பார்ப்பான் (7)
பாரகம் புகழு நல்ல பண்புடைத் தொழிலென் றுன்னிக்
* காருக வினைமேற் கொண்ட கரிசிலார் வீதி சென்று
சீரகம் புகுநூற் பாவிற் செலுத்திய கூழின் சேடம்
வாருமவ் விடைத்தாஞ் சென்று கரத்தினில் வாங்கி யுண்டார் (8)
* காருகவினை- நெய்தற்றொழில்
உண்ணுறு காலை யந்தக் கரத்தினி லொழுகுங் கூழை
யண்ணலா ருமாப திப்பே ரந்தண ரேந்தி யுண்ணத்
தண்ணருள் சுரந்தே யாங்குத் தனிச்சிவ ஞான போதம்
புண்ணியர் திருவாக் காலே பொலிவுற வுரைத்தா ரன்றே. (9)
உரைத்தலு மேனை நூலு மொழிவுறா தோதுங் காதல்
வரப்பினும் வணங்கிக் கேட்ப மறைஞான முனிவர் தாமுந்
திரத்தநற் பத்தி சான்ற திருவுடை யந்தணர்க்குக்
கரத்தலா கமலமென்னச் சிவாகமப் பொருள்கள் காண (10)
ஏனைய ஞான நூல்கள் யாவையு முரைத்துத் தம்மெய்ஞ்
ஞானசற் குருவு ரைத்த நல்லுப தேசஞ் செய்து
தேனினோ டினிமை முற்றுஞ் சிவணுறா வமிழ்த முண்ட
வானவ ரெனக்க ளிக்க மகிழ்வருள் செய்தா ரன்றே (11)
இம்முறை வாழ்வார் தம்மை யெழிலரு ணிருத்தர் தாளை
மெய்ம்முறை பூசை செய்யும் வேதிய ரறியா ராகித்
தம்முறை பிறழ்ந்தா ரிந்தத் தனியுமா பதியா ரென்ன
வெம்மர பிழந்தீ ரென்றே யெள்ளினா ரெவருங் காண (12)
மற்றது காலை தன்னின் மநுகுல வேந்தாற்பெற்ற
கொற்றவன் குடியி லேகிக் கோதிலா மடங்கண் டாங்கே
பெற்றிசா லடியர் சூழப் பேரருட் சிவனைப் பூசை
சொற்றநூல் விதியா லாற்றித் துயக்கறு தியானஞ் செய்வார் (13)
வேறு.
இந்தமுறை ஞானநிட்டை புரியு நாளி
லெழில்வளரு நடராசர்க் கியற்றும் பூசை
யந்தமுறை நாள்வரவுந் தில்லை வாழு
மந்தணர்கண் மேவுதிரு வம்ப லத்தே
பந்தமக லுமாபதியார் பரிவு கூர்ந்து
பரமனடி பூசிப்பான் பணிந்து செல்லச்
சிந்தைவே றாகியநல் லந்த ணாளர்
செல்லன்மின் போமெனவே செப்பி விட்டார் (14)
இக்கொடிய மொழிகேட்ட முனிவர் தாமன்
றெய்துமனத் தளர்வோடு மேகி யந்தத்
தக்கதனி மடமெய்திச் சம்பு பூசை
தணவாமே மானதத்திற் றயங்கச் செய்ய
மிக்கவெறுப் பொடுதடுத்த மறையோர் தாமும்
வேதநா யகர்பூசை விருப்பிற் செய்வான்
புக்குமணிப் பொன்மன்றின்- கதவ நீக்கிப்
புண்ணியவம் பலவாணர் திருமுன் போந்தார் (15)
அழகியசிற் றம்பலவன் பேட கத்தை
யாங்குற்று நோக்கினார் காணா ரஞ்சி
மழவிடையான் றிருமுன்னர்ப் பணிந்து மாழ்கி
மாயமிதென் மன்றின்வளர் மணியே மாலு
மழகுறுதா மரையயனு மாதி யந்த
மறிவரிய வழற்பிழம்பா மண்ணா லண்ணால்
பழகியவெம் மபராதம் பற்றா யெங்ஙன்
பழவடியார்க் கருள்புரிவான் பரிந்து சென்றாய் (16)
தாட்டுணையே புணையாகப் பற்றி நின்று
தனிமாயைக் கடனீந்துந் தக்கோர் பாலோ
கோட்டமிலா மனத்தோடுங் குளத்தி லுன்னைக்
குறித்துமதி யமிழ்துண்ணுங் குணத்தர் பாலோ
வீட்டமரு மலராதி கொண்டன் பாக
வெழிலுறுபூ சனைபுரியு மியல்போர் பாலோ
நாட்டமொரு மூன்றுடையா யெங்க ணுற்றாய்
நடமிடுவா யென்றழுது நைவா ரானார். (17)
வேறு.
இம்முறை யந்த ணாள ரியாவரு மிரங்கிப் போற்ற
மெய்ம்முறை வேத நாதன் விண்ணிடை விளம்ப லுற்றான்
றன்முறைப் பூசை யாற்றுந் தகுதிசா லுமாபதிப்பே
ரம்மறை யோனம் மன்ப னவனிடை யமர்ந்தோ மென்றான் (18)
விளம்புமா காய வாணி வேதியர் யாருங் கேட்டுத்
தளர்ந்தநெஞ் சுடைய ராகித்தாயிடைப் புகுமான் கன்றிற்
கிளர்ந்தெழு மன்பி னோடுங் கேடிலா ஞானச் செல்வ
வளந்தரு முமாப திப்பேர் மறையவர் பால்வந் துற்றார். (19)
உற்றடி பணிந்தி யாரு மோதிசான் முனியே யெங்கள்
குற்றநற் குணமாக் கொண்டு குறைவுதீர்த் தருளு மாறு
பற்றிலார்க் கருளுந் தில்லைப் பரனடிப் பூசை யாற்ற
விற்றைக்கே வருதல் வேண்டு மெம்பிராற் குரியா யென்றார். (20)
இன்னணந் தில்லை வாழு மந்தணர் வேண்ட வேகிப்
பொன்னணி மன்ற வாணர் பூம்பதப் பூசை யாற்றித்
தன்னிக ரந்த ணாளர் தனிமட மேவிப் பின்னர்
மன்னுறு சீவன் முத்தி வரத்தராய் வைகு நாளில். (21)
முன்னொரு முனிவன் பன்னாண் முதுசிவ புண்ணி யஞ்செய்
தன்னநற் பலத்தி னாலே யகக்கர ணந்தி ருந்தி
யுன்னரு ஞான நூல்க ளோதிமா மேதை யாகிப்
பின்னொரு பாவந் தன்னை யிழைத்தனன் பேதை போல. (22)
அன்னதோர் கார ணத்தா லவனியிற் புலையர் தங்க
ளுன்னருங் குலத்து தித்தா னொப்பில்பேர் பெற்றா னென்னப்
பன்னருந் தாதை கூறப் பாலனாம் பருவ நீங்கித்
தன்னருங் குலத்துக் கன்னி தனைமணம் புரிந்தா னன்றே (23)
இன்னணஞ் சின்னாட் செல்ல வெம்பிரா னருளி னாலே
முன்னைநற் பவத்திற் செய்த புண்ணிய முதிர்வா லங்ங
னுன்னுதம் மரபி லுற்ற குறைவெலா முன்னி யுன்னிப்
பின்னறா வருப்புக் கொண்டு சேரியிற் பிரிந்தா னன்றே. (24)
சுற்றமுந் துணைய நீத்துத் துகளறு பேச்சுமேவக்
கற்றைவார் சடையான் வாழுங் கவினுறு தில்லை மேவிய
பொற்றிணி மதில் சூழ் கோயிற் புறத்தினில் வணங்கிச் சின்னா
ளுற்றபின் விறகு வெட்டி யொவ்வொரு நாளுங் கொண்டு. (25)
மருமலர்ச் சடையான் கோயின் மடைப்பள்ளி யூடு செல்லத்
திருவுடை யந்த ணாளர் வாயிலாச் செலுத்துங் காலை
வரிசிலை வரையாக் கொண்ட வள்ளலா ரருள்வந் தெய்தக்
கருமலி பவந்து டைக்குங் காலமு மணிமை யாக (26)
வேறு.
விரவு மடியார் துயர்தீர வெள்ளி விடைமேல் வரும்பெருமான்
பரவும் பெற்றான் சாம்பாற்குப் பரமுத்தியினை நல்கிடுவான்
றிரமெய் யடியார்க் கெளியனெனத் தீட்டும் பாவார் திருமுகத்தை,
வரமார் கனவில் வந்தருளி வனிதை பாகர் சில மொழிவார் (27)
என்பா லன்பா ருமாபதிவா ழெழிலார் கொற்ற வன்குடியி,
லன்பா லேகிப் பணியியற்றி யளித்தி யாலித் திருமுகத்தைத்,
துன்பார் மலக்கூ டகல்வித்துத் தூய முத்தி தனைநல்கு
நின்பா லன்பாயெனவுரைத்து நீத்தார் பொன்னம் பலக்கிழவர். (28)
கனவு நீங்கிச் சாம்பானார் கருத வரிய திருமுகத்தை,
மனவாக் கெட்டாச் சிவனளித்த வண்ண நோக்கி மகிழ்ந்துருகிப்,
பனவர் தில்லைப் பரனேயோ பதிதனேன்பா லருள்செய்யு,
மனகா பொன்னம் பலக்கூத்தா வரசே யமுதே யெனத்துதித்தார் (29)
இந்த முறையாற் றுதித்திறைஞ்சி யினிய சிவனார் திருமுகத்தைப்,
பந்தஞ் செய்து பரனுரைத்த வாறே போந்து பலநாட்கள்,
கொந்தார் தளவக்கொடி புடைசூழ் கோமான் கொற்றவன்குடிவா,
ழந்த ணாளர் திருமடத்தி னருகு விறகுப் பணிசெய்வார். (30)
பன்னாள் விறகுப் பணிசெயுநாண் மழையா லொருநாட்பணிமுட்ட,
வந்நாண் மடத்தி லமுதமைக்கத் தாழ்த்த தாக வஃதறிந்தே,
மின்னார் பொன்னம் பலக்கூத்தர் விரும்பு மடியார் தாமதமென்,
னிந்நா ளென்ன மடைத்தொழிலா ரிறைஞ்சி யினைய வியம்புவரால். (31)
வேறு.
பனவர்தங் குரவீர் கேட்பீர் பஞ்சம னொருவன் பன்னா
ணனிவிற களித்தா னிற்றை நல்கல னென்று ரைத்தா
ரனையனை நாளை வந்தா னம்மிடை யழைமி னென்னப்
புனிதவந் தணர்கள் கோமான் புகன்றனன் புகலக் கேட்டார் (32)
மற்றைநா ளிரட்டி யான காட்டங்கண் மல்கக் கொண்டே
யுற்றனர் சாம்பாருற்ற வெல்லையி னோடித் தாழ்ந்து
கற்றவர் பணியு மெங்கள் கருணையங் கடலே யிந்நாண்
மற்றவன் போந்தா னென்று மகிழ்வுற வோதி னாரே. (33)
மடைவளத் தடியார் கூறு மகிழ்வுரை கேட்டெ ழுந்து
நடைகொடு திருமடத்தின் முன்றிலை நண்ணி யுற்ற
வடியனை நோக்கி யப்பா வாரை நீ யாங்ங னுற்றாய்
படிதவிர் குணத்தா யெல்லாம் பகர்தியென் றருளிச் செய்தார் (34)
இம்முறை யந்த ணாள ரருளலு மெழிற்சாம் பானார்
மெய்ம்முறை யரனார் தந்த திருமுகம் வைத்து வீழ்ந்தார்
கொம்மென வடியா ரோடிக் குலவுசீர்த் திருமு கத்தைத்
தம்மிடைத் தரலு மந்தத் திருமுகந் தன்னை நோக்கா. (35)
அரனருள் செய்த வந்தத் திருமுக மதனை யன்பாற்
சிரமிசை யேற்றிக் கூப்பித் திருநயனங்க ளொற்றிக்
கரசர ணாதி யங்கள் கம்பித்து நடனஞ் செய்து
வரதனே நாயே னுய்ந்தே னுய்ந்தன னெனவ ணங்கா (36)
எழுந்துபே ரின்ப மெய்தி யேகனா ணையை நினைந்து
தொழுந்தகைச் சாம்பார் சுத்த சத்திநி பாத நோக்கி
யழுந்துசத் தியநிர்வாண தீக்கையா லளித்தார் முத்தி
செழுந்திரு வந்த ணாளர் தெய்விக குரவ ராவார். (37)
இந்தநன் முறைமை கேட்டே யெய்திய சாம்பா னார்தஞ்
சந்தமார் மனைவி சுற்றந் தக்கநட் பாளர் கூடிப்
பந்தநான் மறையோ னெங்கள் பதியமர் சாம்பா னாரைச்
செந்தழல் கொளுவச் செய்தா னென்றிறை செவியிற்சொற்றா (38)
அந்தநல் வசனங் கேட்டே யரசனு மதிச யித்துச்
சுந்தர மறையோர் தம்பால் வந்தடி தொழுது சொல்வா
னந்தண ரேறே யெங்க ளருந்தவப் பயனே யின்றென்
சிந்தனை யயிர்க்கு மாறு செய்தனர் சில்லோ ரென்றான். (39)
என்றலு மந்த ணாள ரியம்பினர் தீக்கை மேன்மை
நன்றுறு மரசன் கேட்டு நாயினே னறியு மாற்றா
லின்றொரு தீக்கை தன்னை யியற்றிட வேண்டு மென்ன
வன்றவர் சூழ்ந்து நிற்கு மடியவர் குழாத்தை நோக்கி, (40)
*சத்திநி பாதம் பெற்ற தகைமையர் தமைக்கா ணாது
நித்தலு மருச்சித் தேத்து நிருத்தன்மஞ் சனநீர் தன்னா
லத்தனி மடத்தின் பாங்கர்க் கோமுகப் புறத்த மர்ந்த
சுத்ததா வரம தான முள்ளியை நோக்கிச் சொல்வார். (41)
* சத்திநிபாதமாவது, ஆன்மாவினது ஞானத்தைத் தடுக்கும் ஆணவமலசத்தி நழுவும் அவசரத்திலே முற்பிற்பாடறச் சிவத்தினது சிற்சத்தி பதிந்து அவ்வான்மாவினது நித்திய ஞானக் கிரியை விளக்குவதாம். நிபாதம் - பதிதல்.
அரசனே கேட்டி யிங்ங னடியவர் பலரை யாய்ந்தும்
வரதபோ தனரா யுள்ள பக்குவர் மருவக் காணோம்
பரசிவ னடியர் நாளும் பரிந்துணக் காய்க ளீந்த
வுரைபெறு முள்ளி யித்தை யுயர்கதிக் குய்த்துங் காண்டி (42)
என்றுரை புகன்றே யந்த வெழிலுமா பதியார் முள்ளி
தன்றனி யுருவ நோக்கத் தகைபெறு சோதி யாகி
யன்றர சனையுள் ளிட்டா ரரகர வெனச்சே விப்பச்
சென்றுயர் விசும்பி லேகிச் சிவனுரு வாய தன்றே (43)
இன்னண நிகழ்ந்த செய்தி கண்டவவ் வரச னேத
மன்னிடா வகையா னந்த மருவுமா பதியார் பாதம்
பொன்னணி யாடை மாலை முதலிய கொடுபூ சித்து
நண்ணுநின் பெருமை யோரா நாயினேன் பிழைபொ றுத்தி (44)
என்றப ராத மீந்து விடைகொடு மீண்ட தற்பி
னன்றுசா லருண மச்சி வாயர்முன் னயக்குஞ் சித்தர்க்
கொன்றுமுப் பொருளுணர்த்தி யுயர்சிவ ஞான மீந்து
பொன்றுதல் பலித்த லில்லாப் புனிதரா லயத்தி னண்ண (45)
ஆங்கம ரந்த ணாள ரியாவரு மருவ ருத்துத்
தீங்கிலாப் பெரியோர் தம்மைச் செறுத்துடன் கொண்டு சென்றே
வோங்கெயில் வட்டப் பாங்க ரோவுறத் தள்ளி விட்டுத்
தீங்கிலா வரனார்க் கேயுந் திருவிழாத் தொடக்கஞ் செய்வார். (46)
மெய்ம்முக மறையோ ரேற்றும் விழாக்கொடி யெழாமைகாணாப்
பைம்முக வரவப் பூணான் பதநினைந் திரங்க வாங்கோர்
மைம்முக விசும்பின் வாணி யெழுந்தது மறையோர் கேட்பீர்
நம்முக மன்பு மிக்க கல்லுமா பதிவந் தக்கால் (47)
ஏறிடுந் துவச மென்ன விம்மென யாரு மோடித்
தேறுநும் பெருமை யெண்ணாச் சிறியரேம் பிழைபொ றுத்தே
யாறணி சடையி னான்ற னணிவிழா வமைத்தல் வேண்டு
மூறமு தனையீ ரென்றே யுவப்பொடும் பணிந்து நின்றார். (48)
பணிந்தபி னெழுந்து சென்றே பயிலுமா பதியா ரென்பார்
குணங்குறி யிலாத கூத்தப் பிரானடி குறுகிப் போற்றி
யிணங்குநல் * லொளிக்கு மென்னு மின்பமார் முதற்பா வோதி
யணங்குசேர் பாகத் தண்ண லணிவிழாச் செய்து பின்னர். (49)
* கொடிக்கவி
வேறு.
கொடிப்பாட்டு நூலருளிக் குலவுசிவப்பிரகாசங் கொள்வினாப்பா,
வொடிப்பாட்டு மருட்பயனோ டுண்மைநெறி விளக்க * முள முய்க்குந் தூது,
படைப்போற்றிப் பஃறொடைப்பா சங்கற்ப நிராகரணம் பதிகக் கோவை,
புடைத்தோற்று பதிக்கோவை சேக்கிழார்பு ராணமன்பர் புராண சாரம். (50)
* நெஞ்சுவிடு தூது
அருளியபின் றிருக்கோயிற் புராணமதை யாக்கியரும் பேட கத்தே,
மருவியிடப் புரிகாலை யந்தணர்க ளம்பலத்தின் வாரா வண்ணம்,
பரிவின்றித் தடுத்தனரப் பொதுவாழு நடப் பெருமான் பரிவு கூர்ந்து,
பெருகுதிரு வுமாபதியார் மான்மியத்தைப் புவனிமிசைப் பிறங்கச் செய்ய. (51)
ஒருநாட்சா யங்காலைச் சபரியைசெ யந்தணர்க ளுள்புக்கார்க்குப்,
பெருநாட கப்பெருமா னுருவமறைத் தருளுதலும் பெம்மா னேயோ,
கருமாற வருளுதவுங் கண்ணுதலே யெனக் கரைந்து கலங்க லுற்றுத்,
திருநாதா வம்பலவா வெங்குற்றா யென்றென்றே செப்புங் காலை. (52)
சிற்சபையி னடமிடுவா ரருளாலே - விண்ணின்மிசைத் திருவாக் கொன்று,
மற்சரமி லுமாபதிபே டகமதனின் மன்னி னம்யாம் வரத்தீ ரென்றே,
சற்கனவந் தணர்செவியில் சார்த்தி டலு மிரங்குமனத் தாய்பாற் செல்கோ,
வற்சமென நற்கொற்ற வன்குடிவா ழுமாபதிபால் வந்து சூழ்ந்தார் (53)
எங்கள்குலச் சிகாமணியே யேழைமையால் யாங்களிழை குற்ற மெள்ளிப்,
பங்கமுறா தெமைக்காத்தி யென்றவர்தஞ் சரணமிசைப் பணிந்து - சொல்வார்,
புங்கவர்கள் போற்றிசைக்கும் பொதுவினடம் புரிபெம்மான் பூசைக் காக,
வங்குசெலக் காணாதெம் பெருமானை யழுங்கினோ மனைய காலை (54)
உமாபதியார் பேடகத்தி லுறைகின்றோ மென்னவொரு விண்ணின் வாணி,
நமாவென்று தொழுமடியா ரெல்லாருஞ் செவிகேட்க நண்ணிற் றென்ன,
எமாலொன்று குறையுமிலை பேடகத்தி லெழுதுகோயிற் புராணஞ் செய்து,
சுமாவைத்துப் பூசித்தா மென்றருள வக்கணம்பூ சுரர்கள் சொல்வார். (55)
அடிகேளிப் புராணமதை யம்பலம்வைத் தரங்கேற்றி யருள்வீ ரென்னப்,
படிபோற்றும் தில்லை நகர்த் திருவுடையந் தணராவார் பல்லோர் கூடிக்
கொடிதோரணங்கள்குடை சாமரை சின்னம்முதல குலவிச் சூழ,
மடியாராத் தலமுடையீர் வைகுறுமிச் சிவிகைமிசை யென்ன வந்தார். (56)
வந்தேறுஞ் சிவிகைதனை மலிதலுறு மந்தணர்கள் வாங்கித் தோண்மேன்
மந்தார மலர்சொரிய வந்தார வீதியிடை வணங்கிச் சென்றே
சந்தாரு மம்பலத்திற் றவிசினிடைத் தகைமைபெறு புராணந் தன்னை,
முந்தாக வைத்து மலர்கொடு தூவி வாசிக்க முதலவ னாதாம். (57)
என்றுமிருந் ததுபோலப் பொன்மன்றி லெழுந்தருளி யிருப்பக் கண்டு,
நன்றுறுமந் தணர்மகிழ்வு கொண்டுநவில் புராணத்தை நயந்து கேட்டுக்,
கன்றையுடை யானெனவே கசிந்த மனத் தினராகிக் கதிப்பா ரானார்,
மன்றவர்பே ரருளாலே புராணமதை யரங்கேற்றி வைகிப் பன்னாள். (58)
வேறு.
சத்திய ஞானா னந்தத் தத்துவ வனுப வத்தாற்
பத்திசெய் யடியார் போற்றப் பரனடிக் கமல மெய்தி
நித்திய சுபாவ முத்த நிராகா ரபூர்த்தி யான
சுத்தவத் துவிதா னந்த சொரூபமே யாகி நின்றார். (59)
வேறு.
வாழிதிரு வந்தணர்கள் வாழிசெறி வானோர்
வாழிமலி யானிரைகள் வாழிபொழி வானம்
வாழியுல காளரசர் வாழிமநு நீதி
வாழிசிவ நேசர்குழு வாழிசிவ நாமம். (60)
உமாபதிசிவாசாரியர்புராணமுற்றிற்று.
ஆகச் செய்யுள் - 126.
சந்தானாசாரியர்புராணசங்கிரகமுற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.