திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
Tiricirapuram makavitvan minatci cuntaram pillaiyin pirapantat tirattu
tirukkarkutimamalaimalai
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: S. Karthikeyan, Swaminathan Narayanan, V.S.Kannan and V. Devarajan Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சிவமயம்
நிருத்தவிநாயகர். விருத்தம்.
திருவளர் செம்பொன் மாளிகை யுடுத்துத்
திகழ்தருங் கற்குடி மலைவாழ்,
மருவள ரிதழி மாலையெம் பிராற்கு
மாலையென் றொருபிர பந்தங்,
கருவள ரளக்கர் நீந்துவா னியற்றக்
கருணைமா மதம்பொழி முகச்சீ,
ருருவளர் நிருத்தக் கணேசர்பொற் பாத
முளத் றுவைத் துன்னுது முவந்தே.
1
அஞ்சனக்கணம்மை
பங்கய மலர்த்று மிரவியிற் கரமும்
படரிராக் கதிரினிற்கலையு,
மங்கியிற்சூடு மறலிற்றண் மையுஞ்செய்
யலரின்வா சமுமென வரவுங்,
கங்கையு மிலைந்த சடைப்பிரான் குணமாய்க்
கருதுல களித்தருள் புனிதை,
மங்கையர்க் கரசி யானவஞ் சனக்கண்
மடவா றிருவடி போற்றி.
2
சைவசமயாசாரியார்
பூசுரர் விளங்கும் புகலிகா வலனார்
புண்ணியப் பாதமுமுலகம்,
பேசுசீர் நாவுக்கரசர்பொற் றாளும்
பெருகுமா நதிவழி தருமா,
மாசுதீர் பதிகம் பாடுநா வலர்தா
மரைமல ரடியும்வண் கதிர்போற்,
றேசுசெய் வாத வூரர்பொற் கழலுஞ்
சிறியனேன் சந்தைவிட் டகலா.
3
நமச்சிவாயதேசிகர்.
அகழுமா கடல்சூ ழுலகின்மன் பதைக
ளடர்புறச் சமயர்பொய் யுரைவிட்,
டிகழுமா றில்லாப் பதிபசு பாச
மிஃதிஃ தெனத்தெளிந் துய்யப்,
புகழுமான் மழுவு நுதற்கணுங் கரந்து
பொங்கருள் வடிவெடுத் துவந்த,
திகழுமா வடுதண் டுறைநமச் சிவாய
தேசிகன் றிருவடி போற்றி.
3
நூல்.
மலர்தலை யுலகிற் புன்னெறிச் சமயர்
வாய்ப்பிதற் றுரை மனங் கொளாது,
பலர்கொள்பூ தியுங்கண் மணியுமைந்
தெழுத்தும்பற்றியா னுய்யுமா றருள்வாய்,
வலனுடைத் திகிரிப் படையினான்
வணங்க வரமுகி ‍லெனவுள மதித்துக்,
கலபமா மயில்கள் களிசிறந்தாடுங்
கற்குடி மாமலைப் பரனே.
1
பண்வழுக் குற்ற வீர்ஞ்சொலர் மையற்
பரப்பினை நயந்துபா ராட்டிப்,
புண்வழுக் குற்ற மெய்யினைச் சுமந்தேன்
பொய்யினைப் போக்குநா ளுளதோ,
வெண்வழுக் குறுவா னவர்கள்பொன் மோலியிணைந்
திணைந் துரிஞவீழ் துகளாற்,
கண்வழுக் குறுவின் மேருவேபோலுங்
கற்குடி மாமலைப் பரனே.
2
இட்டமா விரையாக் கலிபிழைத் தாரென்
றிருங்கிளைதந்தை தாய் மனையாள்,
பட்டபால் வாய்ச்சே யொறுத்தகோட்
புலியார்பத்திபெற் றுய்யுநா ளுளதோ,
வட்டமாய் நடுப்பொன் மானந்தாங்குதலால்
வரத்தகா தவருங்கண் டனாதிக்,
கட்டறுத் துய்ய வருட்குறியாகுங்
கற்குடி மாமலைப்பரனே
3
நளிமனம் வாக்குக் காயமூன் றாலு
நனிமுயன் றவர்கொணின் னருளை,
யொளிர்பசும் பொன்செய் கொழுக்கொடு
வரகுக்குழுதயான் கொள்வது முளதோ,
குளிறுமா மேகந் தவழ்ந்துறைபிலிறறுங்
குளிர்க்குடைந் தாலென வுடலிற்,
களிவரக் காந்தட் டழல்வளர்த் தணைக்குங்
கற்கு‍டி மாமலைப்பரனே
4
மங்கைமூக் கரிந்த தொன்றுமோ போது
மாமலர் தொட்டது கரமென்,
றங்கையுந் துணித்த வன்பரோ வடியா
ரஃதிலா வெமர்களோ வடியார்,
பங்கமி றவத்தா னினதுசா ரூபம்
பயனுறப் பெற்றென வானக்,
கங்கையு மதியு முடிதரித் தோங்குங்
கற்கு‍டி மாமலைப்பரனே
5
புண்ணிய வடிவாம் வேடர்தம் பிரானார்
பொன்னடித் தாமரைச் செருப்பு,
மண்ணிடைத் தோய வேட்டஞ்செய் நாளவ்
வழிப்புலாய்க் கிடப்பினு முய்வே,
னெண்ணுவ தினியா திமையவருலக
மிறுதிநா ளழிவது நோக்கிக்,
கண்ணகன் குடுமி மதியினா னகைக்குங்
கற்கு‍டி மாமலைப்பரனே
6
மறைநெறி வழாத புகலிகா வலனார்
வளங்கொளோத் தூரிலாண் பனைகாய்,
நிறைதர வருள்கால் யானுமோர் பனையாய்
நிற்பினு முய்வனென் செய்வே,
னிறைவநின் றனக்குப் போர்வையுமுடையு
மீந்தவென் றாதரித் தாற்போற்,
கறையடி புலிகள் பயிலவீற்றிருக்குங்
கற்கு‍டி மாமலைப்பரனே
7
மண்பொழி தானக் களிற்றொடு பாகர்
மடிந்தது போதுமோவெனையும்,
புண்பொழிவாளாற்கொல்லுமென் றவர்
வாழ் புரங்குடியிருப்பினு முய்வே,
னொண்பொழி லேத்தச் சிவானந்த வெள்ள
மூற்றெழத் தவஞ்செயு மடியார்,
கண்பொழி நீரோ டருவிநீர் பாயுங்
கற்கு‍டி மாமலைப்பரனே
8
யாதனின் யாத னினீங்கியா னோத
லதனின தனினிலனெனமுன்,
னோதிய ‍பெரியோர் வார்த்‍தையும் பேணா
துழல்கொடியேற்கருள் குவையோ,
மேதகு புழுகு நானமு முகிலும்
விரைதருமாரமு நூற்றுக்,
காதநாற் றிசையுங் கமழ்தருந் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
9
சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குத்
தவறுறேல் சைவ சித்தாந்த,
மோவுறே லெனமுன் வாய்மலர்ந் தவர்த
முரைவழி நிற்குமாறருள்வாய்,
பாவிய பாகற் கோட்டினிற் பற்றிப் படர்கறிக்
கொடியினைவணக்கிக்,
காவளர் சார லருவிகல் லெனப்பாய்
கற்குடி மாமலைப்பரனே.
10
மெல்வினை ஞானம் வல்வினை
ஞான மிளிரிவை பத்திவை ராக,
நல்வினை யென்ப ரவற்றிலோர் வினையு
நண்ணிலேன் றீவினை யன்றிச்,
செல்வழி யருள்வா யகத்திரு டனைநின்
றிருவருளோட்டல்போற் புறத்துக்,
கல்லரு மிருளை யராமணி யோட்டுங்
கற்குடி மாமலைப் பரனே.
11
மெய்யெலா முரோமஞ் சிலிர்ப்பவென்
புருக விழிகணீர் சொரியவன் புருவா,
யையநின் புகழே பேசிடார் நாவா
யளக்கரின் மிதக்குநாவாயே,
தெய்வமங் கையர்கள் சுனைகுடைந் தேறித்
திருமகப்பெறுவரம் வேண்டிக்,
கைகளேந் துதல்போற் காந்தள்கண்
மலருங்கற்குடி மாமலைப் பரனே.
12
செயிரறு நினது திருவருள் காட்டுந்
திறத்தினாற் காண்பதை யன்றிப்,
பயிறரு கல்வி கேள்வியா னின்னைப்
பளகறக் காணவும் படுமோ,
வயிரமா மலைச்செம் மணிக்குவால் பச்சை
மணிக்குவா லொடுபிறங் கிடுதல்,
கயிலைநீ யுமையோ டிருப்பது தெரிக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
13
ஏந்தறற் செறுவிற் செந்நெலுட் பதடி
யென்னவிப் புவியிடைப் பிறந்த,
மாந்தருட் பதடி யானயான் மூல மலத்தொட
ரறுத்துய்வ தென்றோ,
பாந்தளின் மிசைக்கண் படுக்குமா யவன்போற்
பரப்பிய தழலெனப் பூத்த,
காந்தளி னருகு யானைகண் படுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
14
கல்லினால் வல்லப் பலகையால் வாளாற்
கமரினாற் சாணையாலன்பர்,
புல்லுமும் மலமும் போக்கிநின் னடிக்கண்
புகுந்தனர்யான்புகு மாறென்,
வெல்லும்வான் சைவம் விட்டுப்புன் சமயம்
விரும்புவார் போற்பல கந்தங்,
கல்லுவார் மணிக ளகழ்ந்தெறிந்தெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
15
வேணவா வெகுளி முதற்களை கட்டு
வேரற மனச்செயி லன்பாம்,
பேணறல் பாய்த்திப் பத்தியாம் பைங்கூழ்
பிறங்கயான் வளர்த்துய்வ தென்றோ,
மாணுறு வட்டப் பளிக்கறை மதிபோல்
வயங்கலா லுடுக்கண் மதனைக்,
காணவந் தாற்போல் வேரன்முத் திமைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
16
சூதினாற் பொருள்செய் துன்னடி யார்க்கே
துறுத்த மெய் யன்பரோ மூர்க்கர்,
வாதினாற் பொருள்செய் துண்டுடுத் துவக்கு
மறத்தொழி லெமர்களோ மூர்க்கர்,
சீதளக் கதிரோ னெனவுல கேத்தத்தினமும்
வெண் மதிமலர் ததைந்த,
காதநீள் சுனையின் மூழ்கிநின்றேறுங்
கற்குடி மாமலைப் பரனே.
17
துன்றிய பூத விருளொரு பொருளுந்
தோன்றக்காட் டாதுபோ லிரண்டு,
ளொன்றினை யேனுங் காட்டிடா வனாதி
யுறுமலமொழித்துய்வ தென்றோ,
நன்றுநின் னுருவங் கண்டுகண்
புனல்பெய்நற்றவர்க் கருகுநி லாக்கல்,
கன்றலின் மதியைக் கண்டுதண்புனல்பெய்
கற்குடி மாமலைப் பரனே.
18
தரணியான் மாக்க ளுடற்குரி மைகளிற்
றலைக்குமே லிலாதது போல,
வுரவுசெய் நின்ற னருட்குமே லிலையென்
றுண்மையோ ரறிவர்யான் வலனோ,
பொருள்செய்நம் மகளார் கதுப்பினுக் கிணையாப்
புகறகா தெனக்கறுத் துவந்த,
கருளினைத் துரந்தெக்காலமும் பகல்செய்
கற்குடி மாமலைப் பரனே.
19
சேரர்நின் கயிலைக் கெழுந்தநாட் பரிக்குந்
திருப்பரி யுருக்கொண்டே னெனினு,
மோருமென் கிளையு முய்யுமெற் குறுமோ
வுதிக்குமாற் பரிக்குமஃ துறுமோ,
பாரவில் வயிரப் படையினாற் சுமந்த
பகையற வடுத்துற வுறல்போற்,
காரணைந் திரவி வெப்பற வுறைபெய்
கற்குடி மாமலைப் பரனே.
20
அன்றுநன் புகலூர் மணிமுதற் றோற்றி
யரசினைச் சோதனைசெய்த,
தென்றுமெம் போல்வா ருய்பொருட் டன்றோ
விதனையுமெண்ணிலன் சிறியே,
னொன்றுமும் முனிவர் தமிழ்வளர் வரையென்
றொருமுனித் தமிழ்வரைத் தென்றற்,
கன்றுபன் மலர்வா சனையொடுற் றுலவுங்
கற்குடி மாமலைப் பரனே.
21
பிறைவடங் கிடந்த பொம்மல்வெம் முலையார்
பெருங்களி மயக்கிடை வீழ்ந்து,
நிறைபொறி யிலானை யாண்டதென் னென்று
நினைவெறுப் பாரிலை யருள்வா,
யிறைபிர ணவகுஞ் சரமுமை பிடியீ
ரெச்சமும் யானையா னைக்கோ,
கறையடி வதியு மிடமெனக்கரிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
22
வறியவ ரகட்டும் பசித்தழ லவிய
வல்சியீந் திடுதலோ மாயாக்,
குறியுடைச் செல்வர்க் கீதலோ வறமக்
கொள்கைதேர்ந் தெனைப்புரந் தருள்வாய்,
சிறியபுன்சுரர்நன் றிலரென நின்னைத்
தேடுவார் போற்பல்வா னரங்கள்,
கறிகறித் துமிழ்ந்து குளிர்சுனை நேடுங்
கற்குடி மாமலைப் பரனே.
23
பொற்புறு சபையின் மாதரார் நடனம்
புரிந்தியான் காண்பதை யொழித்துச்,
சிற்பர சபையி னின்றிரு நடனந்
தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
மணிப்பட மெனப்பயந் துந்திக்,
கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
கற்குடி மாமலைப் பரனே.
24
தட்பமே மிகுந்த சாகரம் புனிதத்
தடநதிப் புனலலா லெவரும்,
பெட்புறா திழிக்கு மங்கணப் புனலும்
பெருகிடின் வெறுப்பது முளதோ,
கொட்புறு மனத்தேன் பிதற்றுரை யுங்கொள்
குகைதொறு முறைதவர்க் குறுவெங்,
கட்பணி யுமிழ்ந்த மணிவிளக் கெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
25
மைக்கணார் முதலா மாயகா ரியங்கண்
மயலென வெறுத்தெனதுள்ள,
மெய்க்கணின் னடியார் பாதமே பற்றி
விடாவிருப் புடனுறவருள்வாய்,
மொய்க்குமீ னுவரி புகுந்தறன் மடுத்து
முழங்கிவந்தணைதரு முகிலைக்,
கைக்களி றோடிப் பிடியென வணைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
26
வேடமே பொருளா வுயிரளித் தவரை
மெய்ப்பொரு ளென்பருய் திறத்தோர்,
மாடமின் மக்கண் மெய்ப்பொரு ளென்று
மயங்முவேற் குய்திற மெவனோ,
பேடைமா மயின்மீ நோக்கியே யகவப்
பெருமகண் மகிழ்நனூர் தியெனக்,
காடுடைத் தருக்கோ னூர்தியையுய்க்குங்
கற்குடி மாமலைப் பரனே.
27
பனிமதி நுதலெம் பிராட்டிமேற் கடைக்கண்
பாய்த்திநீ யாடுமா னந்தத்,
தனிநடங் காண வருள்வையேன் மற்றோர்
தவமுமோர் பேறும்வேண் டுவனோ,
நனியரம் பையர்தங் குழைகள்கொண்டெறிய
நறுவிளக் கோட்டுவா னரமக்,
கனிகள்கைப் பறித்து மீச்செல வெறியுங்
கற்குடி மாமலைப் பரனே.
28
வளிமுதன் மூன்றும் பயிறர விடக்கால்
வகுத்தவிப் புழுக்குடி லந்தோ,
விளிவுறக் குலையு முன்னராண் டிடினுண்
டெனக்கினியெப்பிறப் புறுமோ,
துளிமுகிற் கூந்தற் சசிபுல வியினாற்
றுரந்தமுத்தாரமா நடஞ்செய்,
களிமயிற் கழுத்திற் பரிசிலின் வீழுங்
கற்குடி மாமலைப் பரனே.
29
மன்னெகப் புளக முடலெலாம் புதைப்ப
மழைபொழி தருங்கணி னடியா,
ரினநகத் திரிவே னாணஞ்சற் றில்லே
னென்செய்கேனருள்செயூ டலினாற்,
சினமதக் களிறு தொடர்ந்திட
வோடுஞ்சிறுபிடி குறமட மாதர்,
கனதனத் திடியுண் டஞ்சிமீண் டணைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
30
தடித்தெழு மன்பே யுருவமாம் வேடர்
தம்பிரா னோவென்றி முன்னீ,
பொடித்தமுப் புரத்தும் வலியதோ வெய்ய
பொய்யினேன் றீவினை யுரையாய்,
கொடிச்சிய ரேன லிடித்திடு முலக்கைக்
கொம்புபட் டுடைந்திழி பாகற்,
கடிச்செழு நறவவ் வுரற்குழி நிறைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
31
தேயுநுண் மருங்கு லிறுத்தெழு முலையார்
சீறடிச் சிலம்பொலி நேடி,
யாயுமென் செவிநின் குஞ்சித பாதத்
தணிசிலம் பொலியறிந் திடுமோ,
பாயுமம் புலியின் குழவியும் வானப்
பரப்பிடை யுதித்திரு ளனைத்துங்,
காயுமம் புலியின் குழவியுந் தவழுங்
கற்குடி மாமலைப் பரனே.
32
பந்தமார் கிளைக ளறத்துணித் துரிமைப்
பண்புடை மனையைநிற் களித்த,
வெந்தையா ரவரோ பிறர்மனை நயக்கும்
யாங்களோ நின்னடிக் கன்பர்,
முந்துமா தவத்து முனிவரே போல
முடிச்சிகை வளர்த்துவன் கிராதர்,
கந்தமே யுண்டு கலையத ளுடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
33
நண்ணிமுன் னாலங் காட்டிற்குத் தலையா
னடந்திடு மம்மையோ நினது,
புண்ணியத் தலத்திற் காலினா னடந்தும்
புகாப்பெரும் படிறனோ பேயார்,
விண்ணியை யமர ரவியுணா விரும்பி
விரித்திரு கைகளு மேந்தக்,
கண்ணிய யாக முறுவர்செய் சாரற்
கற்குடி மாமலைப் பரனே.
34
மதித்துனை யுள்ளச் சினகரத் திருத்தி
வாழ்ந்தவர் வாயிலா ரல்லர்,
துதித்துனைப் புகழாக் கொடியவெம் மனோரே
துயரும்வா யிலாரிஃ துண்மை,
யுதித்தசெங் கதிர்மீச் செல்பொழு தேத்த
வுறுந்திசைப் பாலரோ டுற்ற,
கதித்தகூற் றினைமுத் திட்டிட வுயர்ந்த
கற்குடி மாமலைப் பரனே.
35
ஏத்தியன் புறுநின் னடியரை நின்னை
யிகழ்ந்துரை யாடி யுமத்தி,
நாத்தியென் றுரைத்து நான்பர மென்று
நந்துவார் மாட்டெனைக் கூட்டேல்,
பூத்திரள் சிந்திச் சூழ்பவர் பாவம்
போதல்போற் கயக்கருந் தானங்,
காத்திர ளுடுத்த சாரனின் றோடுங்
கற்குடி மாமலைப் பரனே.
36
பொருந்திய சாந்தம் பொற்பணி முனிந்து
புண்ணிய நீறுகண் டிகையே,
தருந்திரு வெனவுட் கொள்ளுநா ளென்றோ
சாரலிற் குடாவடி தவழ்த,
லருந்தவ ரியற்றும் பெருமகஞ் சிதைப்பா
னடுத்தவர் சாபத்திற் கஞ்சிக்,
கருந்தயித் தியர்க ளிரிவது கடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
37
அருந்தலை விரும்பி யணைத்தலைக் காண
லவாவலை யுயிர்த்தலைக் கேட்க,
வருந்தலை யெல்லா நின்னடிக் காக்கி
வருந்தலை மையுமெனக் குளதோ,
முருந்தலை சாரற் றேக்கடிப் படுத்த
மொய்ம்மயி ரெண்கின்மேற் கிராதர்,
கருந்தலை வைத்து முடங்கத ளுறங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
38
மன்னுசெங் கதிரோ னன்றியு மவன்கல்
வாய்த்தழ றோன்றுமோ வதுபோற்,
பன்னுநின் னருளை யன்றியெவ் வுயிரும்
பளகறு முத்தியிற் புகுமோ,
மின்னிடை யெயிற்றி மாதர்தண் சுனைத்தம்
விளங்குருக் கண்டறற் குடிகொள்,
கன்னிய ரெனக்கை கூப்பிநின் றழைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
39
சந்திரற் றரித்த நின்றிரு முடியிற்
றழலா வையுமுடன் வைத்தாய்,
வந்தது புகழே யன்பரோ டெனைநீ
வைப்பினும் வருவதுபுகழே,
யிந்திரன் மயங்க நீன்மணிச் சுடர்மே
லெழீஇயொரு முனிவனே போல்வெண்,
கந்தடு களிற்றைக் கருங்களி றாக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
40
தெளியுநின் கருணை மரகதக் கொழுந்தே
சிவணுமென்பசியபுனேடிக்,
குளிர்பய னுதவுங் கோவினை யருத்தேன்
கோதினையருத்துவேற் குளதோ,
வொளிசெய்பொன் னுலகிற் கொடுமுடி யுரிஞ
வுதிரும்பொற் றுகளிடை மூழ்கிக்,
களிறுமா தங்கப் பெயர்ப்பொருள் விளக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
41
தேகமே நானென் றுனியிரு சார்புந்
திடமுறக் கொண்டவத் தைகளுள்,
ளேகியே யுழன்று திரியுநா ளொழிந்துன்
னிணையடிவணங்குநா ளுளதோ,
போகுயர் குடுமிக் கருகிருந் தெயினர்
பொன்னுல கத்தவ ரிசைக்குங்,
காகுளி துத்தந் தாரங்கேட் டுவக்குங் கற்குடி மாமலைப் பரனே.
42
பணியும்வெள் ளெலும்பு நரம்பும்பூண் டதற்குன்
பாலெவர் வினாவினர் தகாதென்,
றணிதர விடையார்க் கருளினை யெனையுமாளினத்
தன்மையாய் விடுமால்,
பிணிமுகச் சாயற் கொடிச்சியர்வதுவைப்
பெருநல நுகரமங் கலநாள்,
கணியெனக் கணிக ளேடவிழ்த் துரைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
43
மல்லலம் புவியிற் கூற்றினைக் கடத்தல்
வயங்குநின் றிருவடித் துணையே,
புல்லிய நெறியார்க் கன்றிமற் றல்லாப்
புல்லிய நெறியினர்க் காமோ,
வல்லியங் குழலா ருறுவெறி யாட்டி
லணிகெழுமுருகியந் துவைக்கக்,
கல்லெனு மொலியே செல்லொலி மழுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
44
பஃறலைப்பாய லான்முதற் றேவர்
பகுத்தொதுக் கிடநந்தியோச்சுஞ்,
சுஃறொலிச் சூரல் கண்டுகை யேந்தித்
துதிக்குநின் றிருமுனென் றுறுவேன்,
சிஃறொழில் களுஞ்செய் யாதுசெய் நின்னைத்
தெளிதவர் புரிமகப் புகைபாற்,
கஃறெனுங் கானிற் குயினொடு தவழுங்
கற்குடி மாமலைப் பரனே.
45
மையினுங் கழிந்த கருங்குழன் மடவார்
மயக்கினை நயந்து மட் சுமையா,
மெய்யினுட் புகுந்து பொய்யினுட் சுழலும்
வீணனுக்கெங்ஙன மருள்வாய்,
வையினுட் பழகு நெடுங்கணைக் கிராதர்
வயங்கெழு தொண்டகந் துவைப்பக்,
கையினுட் குணிலென் றொளிர்பிறையெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
46
கொடும்பசித் தழலு ணனிமுழு கியும்பொற்
குடமெடுத்தாட்டினா ரன்ப,
ரடும்பலூ ணுண்டுங் கைதொழ வருந்து
மடியனுக்கெங்ஙன மருள்வாய்,
விடுஞ்சுடர்க் கற்ப மாமலர் பறித்து
மேலவர்கண்வழி விரும்பிக்,
கடும்புட னிறங்க வேரல்க ளோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
47
மறையவர் திருவை வைதிகர் துணையை
வருபர சமயகோ ளரியைக்,
குறைவிலா வமுதைக் காழியுண் ஞானக்
கொழுந்தினைத் துதிக்குமா றருள்வாய்,
நறைகம ழலங்கற் கதுப்பரம் பையர்க
ணன்குமை திலகந்தீட் டுதற்குக்,
கறைதபு சுனைக ளாடியிற் பொலியுங்
கற்குடி மாமலைப் பரனே.
48
மைக்கருங் கடலிற் கன்மிசை மிதந்து
மாறினின் னருட்கட லழுந்து,
மெய்க்கணெம் பெருமா னாவினுக் கரசை
விளம்பிலேனெங்ஙன முய்வே,
னைக்கரு நெடுங்க ணாய்ச்சிய ருறிக்க
ணளையெடுத் தவனென நிலவைக்,
கைக்கருங் களிறு கவளமென் றெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
49
நின்னுடைத் தோழப் பெருந்தகைப்
பிரானை நிகரறுமுதுகிரிச் செம்பொன்,
மன்னுமாற் றிட்டுக் குளத்தினி
லெடுத்தவள்ளலைப் பரசுமா றருள்வாய்,
துன்னுசெந் தினையின் குரல்கவர்குருகின்
றொகுதியைக் கவண்கயிற் றெயினக்,
கன்னியர் மணிவைத் தெறிந்தெறிந் தோட்டுங்
கற்குடி மாமலைப் பரனே.
50
துதிகரைந் துனக்குன் னடியருக் கன்பு
துறுத்தலே முத்தியென் றெண்ணேன்,
மதிசெயு நானே பரமெனு மாயா
வாதியு மாயின னழகே,
திதியவன் பிரம னின்னமுந் தேடத்
திகழுநின்னுருவென வோங்கிக்,
கதிரொளி மழுக்குங் கோபுரம் பலசூழ் கற்குடி மாமலைப் பரனே.
51
ஆணவ மகன்ற வறிவன்றி யுருவி
லையநீ பல்லுருக் கொண்டு,
பேணுபன் னாமம் புனைந்துபல் லிடத்தும்
பிறங்குத லுயிர்கட்கென் றறியேன்,
மாணநின் னடியு முடியுங்காண் கினுமம்
மாலயனிவற்றடி முடியுங்,
காணரி தெனச்செய் பொன்மதில் பலசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
52
தினகரன் பூத விருள்விடக் கிரணஞ்
செலுத்தல்போற் சிறியன்மும் மலமா,
மினவிருள் விடநீ யருள்செலுத் திடினுண்டின்றெனின்
விடலென்று மின்றாந்,
தனபதி நகரி லதிகமீ தென்னத்
தவழ்சுடர் மணிபல பதித்த,
கனகமா ளிகைகள் பலவுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
53
நவையறு மாசி னாமமப் பூதி நாயனார்
தாஞ்செயு மறங்க,
ளவையினன் கெழுதி யுய்ந்தனர் யானின்
றளவுஞ்சொல் லியுமறியேனாற்,
சுவைதரும் பல்பூக் கறித்துவாய் குதட்டித்
துணர்த்தபைஞ்சூதமா நீழற்,
கவையடி மேதி துயில்வய லுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
54
தாலிகொண் டுறுநெற் கொளச்செலும் பொழுது
தக்ககுங் கிலியங்கொள் புனிதர்க்,
கேலுமன் பனந்தங் கோடிகூற் றொருகூறெய்தினு
மையமின் றுய்வேன்,
மாலிருங் கடந்த களிற்றின மறைய
வளர்கதிர்க் குலைச்செழுஞ் சாலிக்,
கால்கள்பாய் பழனம் பலவுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
55
தூரமாஞ் செல்வச் செருக்கர்பி னடந்து
தொடர்ந்துளந் திகைப்பதை யொழிந்து,
சீரிய நின்மெய் யன்பரைத் தொடர்ந்து
திகைப்பறச் செல்லுநா ளுளதோ,
வாரிசத் தடத்தை யுழக்கிய பகட்டு
வாளைபாய்ந் துறுகருக் கலங்கக்,
காரினைக் கலக்குங் கணியுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
கூற்றினை யுதைத்துங் காமனை விழித்துங்
கொன்றநின் றனக்கன்பு செய்யார்,
மாற்றறுங் கூற்றின் றண்டமுங் காம
வருத்தமு மெங்ஙன மொழிவார்,
தாற்றிளங் கமுகின் கழுத்திறப் பாயுந்
தகட்டகட் டிளநெடு வாளைக்,
காற்றடம் பணைக ணனியுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
மின்னுசெந் தழலாய் நின்றுமென் பாதி
மிலைந்துமல் லறநுதல் விழித்து,
முன்னுநஞ் சயின்றுந் தெரிக்குநிற் கயன்மா
லொப்பெனக் கரைநரும் வாழ்க,
பன்னுகூன் குலைய குறுங்கழுத் தரம்பைப்
பழங்கனிந் தொழுகிய செழுந்தேன்,
கன்னலின் படப்பை நனைக்குந்தண் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
இயல்புடை யோகத் திருந்தநா ளெவரு
மெவையுமின் புணர்ப்பற விருந்த,
செயலுணர்ந் துமையைப் புணர்ந்தரு ணீயே
தெளிபர மென்பது தெளிந்தே,
னயலுறு முளரி மணந்தமக் கிலாத
தறிந்துநெற் கதிர்தலை வணக்குங்,
கயலுடைப் பழனக் கணியுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
பராபர நினது மேனியிற் பட்ட
பாண்டியன் கைப்பிரம் படிதான்,
சராசர மனைத்தும் படுதலா னீயே
தறபர னெனவுளந் துணிந்தே,
னிராவெனத் திரியுங் கவையடிக் கயவா
யெருமைகள் கன்றுளிப் பொழிபால்,
கராமலை மடுக்க ணிறைதரும் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
பங்கயா சனனுந் திருநெடு மாலும்
பாகசா தனனும்வா னவரு,
மெங்குநா டியுங்கா ணரியநின் பாத
மெளியதன் பருக்கென வுணர்ந்தேன்,
கொங்குலாந் தடத்திற் சலஞ்சல முகுத்த
கொழுங்கதிர் முத்தம்வில் வீசிக்,
கங்குலை மழுக்கும் பணைமருங் குடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
ஐயவென் னுள்ள வெள்ளமிந் திரிய
வடற்குலை யுடைத்ததி விரைவிற,
செய்யநின் பாத பங்கயக் கடலிற்
சேர்தரப் படருநா ளென்றோ,
நெய்யணி கூந்த லுழத்தியர் நெடுங்க
ணிழலற லிடைக்கண்டு மள்ளர்,
கையினாற் கயலென் றரித்திடுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
கட்டுவீ டருள்வோ னீயெனத் தெளிந்து
கரிசுறு புன்றெய்வப் பற்று,
விட்டுனை யடைந்தேற் கெப்பற்று மறுத்துன்
மெய்ப்பற்றைப் பற்றுமாறருள்வாய்,
வட்டவாய்க் கமல மதுமடை யுடைக்க
மள்ளர்கள் கரும்படு மினிய,
கட்டியா லடைக்குங் கணிமருங் குடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
விரிதனு கரண புவனபோ கங்கள்
வினைவழிக் கொடுத்தவை துய்த்த,
பரிவுயி ரறப்பி னொடுக்கிமீட் டாக்கும்
பரிவினுங் கதிதர லெளிதே,
நெரிமருப் பெருமை கரும்பினைக்
குதட்ட நேரிழி சாறவ னிரப்புங்,
கரிசறு மகணி மருங்குடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
செறிபிறப் பென்னும் பேதைமை நீங்கச்
சிறப்பெனுஞ் செம்பொருள் காண்ப,
தறிவெனத் தெரிக்குங் குறட்பொரு ளறிந்து
மறிகிலன் போற்பிற காண்பேன்,
வெறிமலர்ப் பணைநெற் பச்சிளங் கதிர்கள்
விண்ணகத் தேனுநா நீட்டிக்,
கறிசெய வளரும் படுகர்சூழ் பழனக்
கற்குடி மாமலைப் பரனே.
வெம்பிய காமம் வெகுளியுண் மயக்கம்
வேரறப் பறித்துநின் பதமே,
நம்பியென் புருக வனபுசெய் நாளு
நாயினேற் குள்ளதோ வருள்வாய்,
பம்புபன் மலர்கண் மருதவேந் துறையப்
பன்மணி குயிற்றிய பைம்பொற்,
கம்பலம் விரித்தாற் போலடர் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
வையமும் வானு முய்யவன்
புருவாய் வாதவூர் வந்தவ தரித்த,
வையனன புரையை நயந்துபா ராட்டு
மவ்வள வாவதெற் கருள்வாய்,
செய்யதா மரையின் பன்மல ரொளிர்த
றிகழ்தர விழித்துவச் சிரத்த,
கையினான் கிடத்தல் போன்மெனும் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
ஒழுக்கமன் பருளா சாரநற் சீல
முறவுப சாரம்வந் தித்த,
லிழுக்கிலா வாய்மை தவந்துற வடக்க
மிவைகளி லொன்றும்யா னறியே,
னழுக்கிலா வமுத முடுக்கள போற்
சிதற வணிமதி மேற்பெரு வாளை,
கழுக்கடை யெனப்பாய் படுகர்சூழ் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
நின்னுரை வழியே நிற்பவர் நில்லார்
நீளற மறஞ்சுவர்க் காதி,
மின்னுபோ கத்தா னரகத்தாற் றொலைத்து
வீட்டுய்ப்போ னீயெனத் தெளிந்தேன்,
மன்னிய தென்னம் பழம்பல வீழ
வருக்கையின் பழங்கிழிந் திழிதேன்,
கன்னலங் கழனி பாய்தரும் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
மானிடப்பிறவி வந்தது மனத்தால்
வாக்கினாற் காயத்தாற் பணிசெய்,
தானிடத் தைந்து மாடுநின் னடிக்கீ
ழமரவென் றறிந்திலன் சிறியேன்,
கூனுடைக் குலைய குறுங்கழுத் தரம்பைக்
கொழுங்கனி யிழிந்ததேன் கருப்பங்,
கானிடைப் பாயும் படுகர்சூழ் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
பொருள்செய்சன் மார்க்க நெடுஞ்சக
மார்க்கம் புத்திர மார்க்கமின் பாக்கு,
மிருமைசெய் தாத மார்க்கமிம் மார்க்கத்
தியானொரு மார்க்கமு மறியேன்,
பருமர கதமுத் தந்துகிர் கண்டம்
பாளைசெம் பழத்தினாற் காட்டிக்,
கருமுகி லணவுங் கமுகடர் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
கொச்சையர்க் குயர்மா னியுமர சினுக்குக்
குலவுமப் பூதியுமுலக,
நச்சுசுந் தரருக் குதியரும் போல
நான்சிறந் துய்வதெந் நாளோ,
வச்சணங் கயில்வேற் கண்ணுழத் தியர்நெல்
லரிதருங் கொடும்புற விரும்பைக்,
கச்சப வெரிநிற் றீட்டிடுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
படர்புகழ்க் காழிப் பிள்ளையார்க் கிவனைப்
பாரெனச் சற்றுநீ மொழிந்தாற்,
பிடகன்மாத் தலையி லுருமுவீழ்த் தவரென்
பெருவினைக் கும்மது வீழ்ப்பா,
ரடுமடைப் பள்ளி யுலைக்கழு நீர்செய்
யாவிகால் குளம்பல நிரம்பக்,
கடலுடைத் தென்னப் பாயுமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
நயந்தரு நாவுக் கரசருக் கிவன்பா
னாட்டம்வை யென்னினப்பூதி,
பயந்தசேய்க் குற்ற விடந்தொலைத் தவரென்
பாசவல்விடத்தையுந் தொலைப்பார்,
வயந்தரு மள்ள ருடைப்பினை யூரு
வரைகுவி நவமணி வாரிக்,
கயந்தலை யெனநின் றடைத்திடுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
பழிதபு குணவன் றொண்டருக் கிவன்பாற்
பார்வைசெ யென்பையேற் கராவாய்க்,
குழியினின் றொருசேய் மீட்டவர் சனனக்
குழியினின் றென்னையு மீட்பார்,
வழிமதுப் பொழிபூங் கொடிகடாய் வளைப்ப
வளைந்துபைங் கழைகணின் றிடுதல்,
கழிவில்கைக் கொடுவேள் பொரல்பொருங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
அருவமா யுருவ மாயரு வுருவா யனைத்துயிர்க்
குயிருமா யறிவாய்ப்,
பொருள்படு மறைக்குந் தெரிவரி யாயாம்
புராணநிற் றெரிதலெற் கெளிதோ,
சுருள்விரி யரம்பைக் குருத்துமீ யசைந்து
சுரர்மினார் கலவியெய்ப் பாற்றுங்,
கருள்படு பொதும்பர்ப் படுகர்சூழ் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
செவியினாற் கேட்டு மறிகிலே னின்னைத்
தெரிந்தவர் போற்பல பிதற்றிக்,
குவிதரக் கவியும் புனைவனுன் னிடினென்
குணமெனக் கேநகை தருமா,
லவிருநெற் பணையின் ஞெண்டுகள் கிளைத்த
வளவில்பல் வளையெலா நிரம்பக்,
கவிழிணர்ச் சூதத் தாதுகுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
அருமறை தெரிதண் டீசர்பா லென்னை
யடைக்கலம் புகுத்துவையானால்,
வெருவறத் தந்தை தாடுணித் தவரென்
வெம்பவத் தாளையுந் துணிப்பார்,
மருவிய வுணவு கொடுவரச் சென்ற
மடவனச்சேவலை நோக்கிக்,
கருவுயிர்த் துறைபே டலமருங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
நானவார் கூந்தற் பரவையார் மனைக்கு
நள்ளிரு ணாப்பணீ தூது,
போனநா ளாரூர் மறுகிலோ ரெறும்பாய்ப்
பொருந்தினும் வருந்திடா துய்வேன்,
கூன்முது கிப்பி யுயிர்த்தவெண் முத்தங்
குவிதரக் கயிலையே யென்று,
கான்மலர் தூவிச் சுரர்தொழுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
கெடுத்திடு முலோகா யதன்முத லான
கீழ்ப்படுஞ் சமயர் பொய் யுரையை,
யடுத்திடும் படியெப் பிறப்பெனக் குறினு
மருளனின் னடிக்கன்பே யருள்வாய்,
மடுத்தவெண் குருகோர் முடக்கிழ நாரை
வாய்க்கொளு முணவினைத் தட்டக்,
கடுத்திடா தறவோர் போலுறை கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
தரிசனங் கொடுத்தா ளுயர்ந்தவ னீயான்
றாழ்ந்தவ னியல்பினெப்பொருளுந்,
தெரிபவ னீயா னீதெரி விக்கத் தெரிபவ
னின்னடிக் கடியே,
னரிசிதர்ந் தயில்கொன் றாள்வழக்
கறுக்கு மங்கணார் முகமதி கண்டு,
கரிசறக் குமுத மலருமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
பொருவினின் பூசை யென்னும்புண் ணியத்தாற்
பொலிசிவ ஞானம்பெற் றடங்கி,
மருவுற மேல்கீழ் தருமறம் பாவ மாற்றிநின்
னடிக்கணென் றுறுவேன்,
குருமலர்ச் செந்தேன் புலியடிப் பைங்காய்க்
கோழரை யரம்பையைச் சாய்த்துக்,
கருநிறக் கவரி நீந்தப்பாய் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
யானது செய்தேன் பிறரிது செய்தார்
யானென தென்னுமிக் கோணை,
ஞானவா ரழலால் வெதுப்புபு நிமிர்த்து
நான்செவ்வே நிற்கவென் றருள்வாய்,
மீனுண வளித்து விரிசிறை நாரை
மென்மடப் பெடையொடு திளைக்குங்,
கானகன் மென்பூந் தடத்தமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
மூதறி வுடையோர் புகழ்சிறுத் தொண்டர்
முளரித்தா ளடைந்திலே னடைந்தான்,
மேதகு சேயை யறுத்தவர் வெறுத்தென்
வினையினை யறுக்கவஞ் சுவரோ,
மாதர்மென் றடத்தில் வெள்ளிதழ்க் கமல
மலரினை மடவனச் சேவல்,
காதலி னணைக்கப் பெடைதுயர் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
பெருகிய வெள்ளந் திரைக்கட லன்றிப் பிபீலிகை யளையினும் புகல்போ,
லுருகிய வன்ப ரன்றியென் பாலு முன்னருள் புகுவது வழக்கால்,
பருதிய யிரமோர் கடலிடைத் தோன்றும் பானமைபோ லொவ்வொரு மடுவிற்,
கருதுசெங் கமலம் பலமலர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே.
உயிரெலா நின்ன தடிமையெப் பொருளு
முன்னுடை மைப்பொரு ளென்னச்,
செயிரற வுணர்ந்த நின்னடி யவாதாள்
சிறியனே னடைந்துய்வ தென்றோ,
குயிலெனப் பேசுங் கடைசியர் வதனக்குறுநகை
மதிநில வென்னக்,
கயிரவங் கருதி மலர்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
பாவியேன் சிந்தை நின்னடிக் காக்கிப்
பணிவிடைக் கிருகையுமாக்கி,
நாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி
நவையற வுய்யுநா ளுளதோ,
வாவியிற் பொலிவெண் டாமரை மலர்போன்
மதியுறப் பெருக்கெடுத் தொழுகுங்,
காவிரிப் புனல்பாய் நெடும்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
மிடைத்தம ருடற்றும் பலகுண மறுத்து
மிகுசிவா னந்தமூற் றெடுப்பக்,
கிடைத்துனைக் காண வாணவ வெழினி
கீழயான் பெறுவதெந் நாளோ,
வுடைப்பினை மள்ள ரடைக்குமுன் வராலவ்
வுடைப்படை படவுடை மடையின்,
கடைத்தலை வெடிபோய் விழும்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
ஐந்துபே ரறிவும் பார்வையாய் முடிய
வடுத்திடு கரணமீ ரிரண்டுஞ்,
சிந்தையாய் முடிய நின்றிரு ந்டனந்
தரிசிக்கு நாளுமெற் குளதோ,
விந்திர தருவோ ரளிக்குந்தே னளியா
வியல்பினை நோக்கிவெண் மலராற்,
கந்தவார் பொழில்க ணகைக்குமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
பூப்பயி னந்த வனம்பல வியற்றேன்
பொருந்தல கிடேனினா லயத்தி,
லாப்பிகொண் டைதா மெழுகிடே னெங்ங
னடியனே னுய்யுமா றருள்வாய்,
வீப்பயி லளிகண் மூக்குழ வழிதேன்
விரிகடற் படுமுவ ரகற்றுங்,
காப்பயின் மென்பான் மருங்குடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
அவாவெனப் படுவ வெவ்வகை யுயிர்க்கு
மணியவெவ் விடத்து மெஞ்ஞான்றுந்,
தவாவரு பிறப்பின் வித்தென வுணரேன்
றண்ணரு ளெங்ஙனம் பெறுவே,
னுவாமதி தவழுஞ் சோலையி லிளைஞ
ரொளிர்கத லியைமறை மாதர்,
கவானென வணைக்கு நெடும்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
மலைக்கொடி படருங் கற்பக தருவே
வயங்கருண் மழை பொழி முகிலே,
புலைக்கொடி யனையா ளென்றுமெய் யாவிப்
பொய்யினே னடையுநா ளென்றோ,
நிலைக்கொடி யாட வுலகங்கொண் டாட
நிறைமலர்ச் செங்கொடி யாடக்,
கலைக்கொடி யாடு மாளிகை பலசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
அற்குடி கொண்ட விரைநறுங் கூந்த
லணிமுலை யெம்பிராட்டி யையான்,
சொற்குடி கொண்ட யாப்பினா லன்பாற் றுதித்திடப்
பெறுநன்னா ளென்றோ,
விற்குடி கொளும்பொன் னுலகமேத் தெடுப்ப வியனொளி
குடிகொள்பன் மணியென்,
கற்குடி கொளச்செய் நற்குடி மலைதாழ்
கற்குடி மாமலைப் பரனே.
பல்லெலாந் தெரித்துச் சொல்லெலாந் துறுத்துப்
பாட்டெலாம் பாடினீர் யாமு,
மில்லெலா மாய்ந்தோங் கொடுப்பதற் கிலையென்
னிவர்கள்பாற் புலவரென் பெறுவார்,
சொல்லெலாந் திருவைந்தெழுத்திவண் வாழ்வோர்
தொழிலெலாம் பணிவிடை யென்றுங்,
கல்லெலாஞ் சிவலிங் கம்மெனச் சுரர்தாழ்
கற்குடி மாமலைப் பரனே.
பொற்பக மலர்ந்த மாதரர் மையற்
புணரியி லழுந்திடா துனக்கே,
யற்பக மலர்ந்து சிவானந்தப் புணரி
யழுந்திடு மாறெனக் கருள்வா,
யெற்பக மலர்ந்த குவட்டுறும் யானை
யீர்ங்கவு ளளிகளைக் கையாற்,
கற்பக மலர்ந்த குழையெடித் தோச்சுங்
கற்குடி மாமலைப் பரனே.
புவிமுழு தளந்தோ னேடியுங் காணாப்
பொன்னடித் தாமரை காண்பான்,
குவிமனத் தோடு மகம்படித் தொண்டு
கொண்டியா னுய்வதெந் நாளோ,
வவிர்தரு பிறையைக் கண்டவில் வேட
ரவாவொடு கொடிச்சியர் தமது,
கவினுத லென்னப் பொட்டணிந் துவக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
மன்றினின் னடனங் கண்டகண் கொண்டு
மற்றினிக் காண்பதி யாதென்,
றொன்றிய சிந்தை யுறுதிகொள் ளுவனே
லுய்குவே னெனக்கது போதுங்,
குன்றவ ரேனற் குரல்களை யறைக்கட்
கொண்டுபோய்க் குவித்தடும் யானைக்,
கன்றினான் மிதிப்பித் துதிர்தினை யளக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
நனியிடை யறாம லுன்னடி நினைக்க
நாயினேற் கருளுவை யாயி,
னினிவரு கதிரெங் கெழினுமெண் ணேன்யா
னிருப்பனீ தருளிட வேண்டுந்,
துனியறு களிற்றின் கோடுபட் டுடைந்து
சுட்டபொன் போற்பல வருக்கைக்,
கனிபழங் கீண்டு சுளைபல வுதிருங்
கற்குடி மாமலைப் பரனே.
நீதிசேர் சைவத் தடைந்தவ ரடையா
நின்றவ ரடைபவர் தமக்கியான்,
பாதகக் குழிசித் தொடர்பற வடிமைப்
படும்பரி சென்றுநீ யருள்வாய்,
கோதில்கற் பகத்தி னறுங்குள கருத்திக்
கொழுமத யானையங் கூந்தற்,
காதலம் பிடியைப் புலவிதீர்த் தணைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
சைவமே பொருண்மற் றவையல வென்று
சார்திரு நீறுங்கண் டிகையுந்,
தெய்வவைந் தெழுத்தும் பற்றறப் பற்றத்
திருவரு ளென்றெனக் கருள்வாய்,
பைவளர் மணியைத் தழலென நினைந்து
பாவடிப் பருமநல் வேழங்,
கைவளர் கடநீர் மழையெனப் பொழியுங்
கற்குடி மாமலைப் பரனே.
வெண்பா.
நிலமாலை கொண்ட நெடுஞ்சடையி லென்பின்
குலமாலை யுஞ்சேர்த்துக் கொண்டாய் -- பலமேலோர்
சொன்மாலை கொள்செவியிற் றூக்கற் குடியாயென்
புன்மாலையுங் கொளது போல்.
திருக்கற்குடிமாமலைமாலை முற்றிற்று.