Source:
உ
சிவமயம்
ஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம்.
தீர்த்தகிரித்தேசிகரால் செய்யப்பட்ட மூலமும் திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மாணாக்கருளொருவராகிய வல்லம் தி. கந்தசாமி உபாத்தியாயரால் செய்யப்பட்ட பொழிப்புரையும் பெரம்பலூர் தாலூகா தேவஸ்தானம் கமட்டியார்களில் தலைமைபெற்ற வெங்களம் நாட்டுப்பெரிய முத்துவிஜயமாச்சிரெட்டியார் அவர்களும் உறையூர் நாச்சிக்குரிச்சி மகா-௱-௱-ஸ்ரீ தா. நாராயணபிள்ளையவர்களும் வேண்டிக்கோடலினால், திருவாதி A.பஞ்சாபகேசய்யரவர்களது "கீர்வாண வாணீ விலாச அச்சுக்கூடத்தில்" பதிப்பிக்கப்பட்டது.
1891
திருமதி கிருட்டிணா சஞ்சீவி
---------------
இந்தஸ்தலம் தேவாரப்பதிகம் பெற்றிலவாயினும் திருநாவுக்கரசுசுவாமிகள் வாய்மலர்ந்தருளிய க்ஷேத்திரக் கோவையினுள் (வைப்புத் தலமாக) அமைந்திருக்கின்றது.
அதனைப் பின்வருஞ் செய்யுளான் உணர்க.
திருத்தாண்டகம்.
திருச்சிற்றம்பலம்.
நாறையூரிற் சித்தீச்சரநள்ளாறு நாரையூர் நாகேச்சுர நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரந்துருத்தி சோமீச்சுரம்
உறையூர் கடலொற்றியூ ரூற்றத்தூ சோமாம்புலியூ ரோரேடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாயநாதனையே காணலாமே. (1)
திருச்சிற்றம்பலம்.
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்
1. காப்பு | 3 (1-3) |
2. பாயிரம். | 18 (4-21) |
3. முதலாவது - தலவிசேடச் சருக்கம். | 16 (22-37) |
4. இரண்டாவது - பிரமதேவனகங்காரச் சருக்கம். | 21 (38-58 ) |
5. மூன்றாவது - சிவபூசைச் சருக்கம் | 28 (59-86) |
6. நான்காவது - வரம்பெற்ற சருக்கம். | 16 (87 - 102) |
7. ஐந்தாவது - திருவிழாச் சருக்கம். | 81 (103-183) |
8. ஆறாவது - பிசாசு விமோசனச் சருக்கம். | (184- 226) |
9. ஏழாவது - தானபலச் சருக்கம். | 40 (227 - 266 ) |
10,. எட்டாவது - தேவகிரிச் சருக்கம். | 21 (267 - 287 ) |
11. ஒன்பதாவது - நந்தாநதிச் சருக்கம். | 17 (288- 304 ) |
12. பத்தாவது - தீர்த்தச்சருக்கம். | 43 (305- 347 ) |
13. பதினொன்றாவது - விபூதியுருத்திராக்ஷச் சருக்கம். | 30 (348-377) |
கலிவிருத்தம்
தழைசெவிப் புகர்முகத் தந்திமும் மதம்
பொழிபிறை யெயிற்றுடன் புழைக்கரத்தினான்
மழைதவழ் தண்டலைவளர் சமரபுரத்
தழகிய பிள்ளையாரடியைப் போற்றுவாம்
தழைத்தகாதும் பொறிகள் படர்ந்த பாளைமுகமும் கன்னமதம் கோசமதம் ******** என்னும் மும்மதங்களை பனியொழுகின்ற மூன்றாம் பிறையையொத்த தந்தங்களுடனே துவாரம் பொருந்திய துதிக்கையு முடையவரும் மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் வளர்ந்த சமாபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பிள்ளையாரென்னும் பெயரை யுடையவருமாகிய விநாயகக்கடவுளினது திருவடிகளை வணங்குவாம். என்றவாறு. யாம் என்னுந் தோன்றாஎழுவாய் வணங்குவாம் பயனிலை திருவடியைச் செயப்படுபொருள். (1)
இதுவுமது.
கலீகலைத்துறை.
புத்தியானதுங் கல்வியுஞ் செல்வமும் பொருந்த
முத்திசோவுறும்படி சிவ ஞானமு மோங்க
அத்திமாமுகத் தழகியபிள்ளையார் பாதத்தைப்
பத்தியாகியே சிரத்தினாற் பணிந்து போற்றுதுமே.
(இ-ள்)புந்தியும் வித்தையும் செல்வமும் பொருந்தவும் மோட்சத்தையடையும்படி சிவஞானம் ஓங்கவும் யானைமுகத்தையுடைய அழகியபிள்ளையார் பாதங்களைப் பத்திகொண்டு சிரத்தினாற் பணிந்து போற்றுவாம். எ-று.
(2)
திறைகொண்டவிநாயகா்.
அறுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்.
நந்தார் வயல்சூழ் நந்தை நதி நந்தாபுரத்துப் புரா ணத்தை,
நந்தாவண்மைத்தெனகலையா னந்தாலுற விற் கூறுதற்குத்,
தந்தாவளஞ்சோ மணிச்சிரத்துத் தழற்கணாகந் தனைப்பூண்ட,
தந்தா வளந்தானென நீளுந்தன்னைத் திறைகொள் விநாயகனே.
(இ-ள்) சங்குகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த நந்தைநதி விளங்கிய நந்தாபுரத்தின் புராணத்தை கந்டாத வண்மையாகிய தமிழினால் எம்முடைய நாவாற்பொருந்தச் சொல்லுதற்கு வெண்மை மிகுந்த தங்கள் சேர்ந்த கருமையான தலையையும் அக்கினிமயமாகிய கண்களையும் பருத்த சரீரத்தையும் படைத்த யானையே தானென்று சொல்லும்படி நீண்டவனாகி யகஜமுகா சூரனை வெற்றிகொண்ட விநாயகக் கடவுளை வணங்குவாம். எ-று. (3)
----------------------
2. பாயிரம். (4-21)
சுத்தவிரத்தினேசுவரர்.
மேற்படி வேறு.
பொன்கொண்ட சிலையாரைப் புலியதளின் கலையாசெப் பொருப்பின்வந்த,
மின்கொண்ட விடத்தாரை யிரத்தினபுரி யிடத்தாரை விமலனாரைக்,
கொன்கொண்ட படையாரைக் கோலமழ விடையாரைக்குலவுநாக,
மன்கொண்ட பணியாரைத் துய்யமா மணியாரை வணங்குவோமே.
(இ-ள்) மகமேருவை வில்லாக உடையவரும் புலித்தோலை வஸ்திரமாகத் தரித்தவரும் பருவதராஜன் புத்திரியாகிய உமாதேவியாரை இடப்பாகத்திலுடையவரும் இரத்தினபுரியை இடமாகக் கொண்டவரும் மலரகிதனாயுள்ளவரும் பகைவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கின்ற சூலப்படையை யுடையவரும் அழகும் இளமையும் வாய்ந்த இடபவாகனத்தையுடையவரும் தாருகாவன இருடிகளால் ஏவிய சர்ப்பத்தை நிலைபெற்ற ஆபரணமாகக் கொண்டவரும் ஆகிய துய்ய மாமணியாரென்னும் பெயரையுடைய சுத்த விரத்தினேசுவரரை வணங்குவாம்.
எ-று. (1)
சமாபதி யம்மை.
மேற்படிவேறு.
வேதன் மகிழ வரங்கொடுக்கும் விமலர் துய்ய மாமணியென்
னாத ரிடத்திற் குடிகொண்ட நங்கை முருகன் றனையீன்ற
மாதி யாமி யகிலாண்ட வல்லி யாகுஞ் சமாபதியார்
பாத கமலம் பணிந்தேத்திப் பாத கமலம் பற்றறுப்பாம்.
(இ-ள்) பிரமதேவன் மகிழத்தக்க வரங்களைக்கொடுக்கும் விமலனாகிய துய்யமாமணியென்னும் எனது நாதரிடத்திற் குடிகொண்டவரும் முருகக்கடவுளைப் பெற்ற தாயாரும் இயாமியென்கின்ற அகிலாண்ட வல்லியாரும் சமாபதியென்னும் பெயரை யுடையவருமாகிய என்னம்மையினது திருவடித் தாமரைகளை வணங்கித் துதிசெய்து கெடுதியை விளைவிக்கின்ற மும்மலப் பற்றுக்களையும் ஒழிப்பாம். (எ-று) 2
விநாயகர்.
விடங்கொண் டமரர் குலம்வாழ வெள்ளி வரையி லுமையுடனே
யிடங்கொண் டவரை வலங்கொண்டே யினிய கனியைத் தனிவாங்கும்
படங்கொண் டிலங்கும் பணியகட்டுப் பகட்டு முகத்துக் காரனைய
கடங்கொண் டிருந்த கணபதிதன் கமல பதத்தை வணங்குவாம்.
(இ-ள்) தேவர்கள் குலம் உயிர்வாழ்ந்திருக்க ஆலகால விடத்தை யுண்டு கைலாயகிரியை இடமாகக் கொண்டு உமாதேவியாரோடு எழுந்தருளிய பரமசிவனைப் பிரதக்ஷணம்பண்ணி மதுரமாகிய ஒப்பற்ற கனியை வாங்கிய படத்தினாற் பிரகாசிக்கப்பட்ட அரவக்கச்சை கட்டிய வயிறும் யானை முகமும் மேகத்தை யொத்துப் பொழிகின்ற மதசலமும் உடைய விநாயகக் கடவுளினது செந்தாமரை மலர்போன்ற பாதங்களை வணங்குவாம். எ-று. (3)
முருகக்கடவுள்.
கலிநிலைத்துறை.
பீத கந்தனை யுடுத்தவ னுதவிய பிரமன்
வேத கந்தனைத் தரித்தவன் மேனியி லுறையு
மாத கந்தனை மகிழ்வுசெய குமரனை நமது
பாத கந்தனைத் தவிர்த்திடுங் கந்தனைப் பணிவாம்.
இ-ள்) பொற் பீதாம்பரத்தைத் தரித்த மகா விஷ்ணுவினாற் பெற்ற பிரமதேவனுடைய வேதச் சிரமென்னுங் கபாலத்தை யேந்திய சிவபெருமான் திருமேனியையே தனக்கு இடமாகக் கொண்ட மாதாகிய உமாமகேஸ்வரியினுடைய இருதயத்தை மகிழ்வு செய்கின்ற குமாரனாயுள்ளவரும் நம்முடைய பாதகங்களையெல்லாம் தவிர்த்து ஆண்டருளும் கந்த னென்னும் பெயரை யுடையவருமாகிய முருகக்கடவுளை வணங்குவாம். எ-று. (4)
வீரபத்திரர்.
ஆர பத்திரம் வில்வ பத்திர முடனணிந்தோன்
றார பத்திர மாகிய வுமைமு னிந்தருளக்
கோர பத்திரங் கொண்டு தக்கன் றலைகொய்யும்
வீர பத்திர னடியிணை விரும்பி யேபணிவாம்.
(இ-ள்) ஆத்திப்பத்திரத்தை வில்வபத்திரத்துடன் அணிந்த பரமசிவனுடைய மனைவியாகிய அழகிய உமையம்மை கோபங்கொண்ட மாத்திரத்தில் பார்ப்பவருக்கு அச்சத்தை விளைவிக்கின்ற வாளாயுதத்தைக் கொண்டு சிறுவிதியாகிய தக்கன்றலையை அறுத்த வீரபத்திரக் கடவுளினது பாதங்களை விரும்பிப் பணிவாம். எ-று. (5)
திருஞான சம்பந்த சுவாமிகள்.
அறுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்.
கண்ணா யிரவர் பணிந்தேத்துங் கடம்ப வனத்திற் மண்மூகர்
எண்ணா யிரவர் கழுவேற வேடு நதியி னெதிரேறப்
பண்ணா ரிசையி னிசைத்தமிழைப் பயின்ற ஞான சம்பந்தர்
கண்ணா ரிரண்டு பதமணியத் தருமே நாலாம் பதந்தனையே.
(இ-ள்) ஆயிரங்கண்களையுடைய இந்திரனானவன் பணிந்து துதிபண்ணப்பட்ட கடம்பவனமென்னும் மதுரையில் சமணரான ஊமையர்கள் எண்ணாயிரவர் கழுவிலேறவும் இராகத்துடனே இசையாக விசைக்கப்பட்ட தமிழ்ப் பதிகங்களுள் (போகமார்த்த பூண்முலையாள்) என்று முகற் குறிப்பினையுடைய தேவாரமெழுதிய ஏடு வையையாற்றில் எதிர்ந்தேறவும் அனுக்கிரகஞ்செய்த திருஞானசம்பந்த சுவாமிகளினது பிறவி விடாயைத் தணிக்கும் சீதளம் வாய்ந்த இரண்டு திருவடிகள் பணிந்தால் சாயுச்சிய பதவியையே தந்தருளும். எ-று. (6)
திருநாவுக்கரையர்.
கலையாப் புலித்தோற் றரித்தவன்பாற் காசு மிழலை தனில்வாங்கி
நிலையா யடியா ரீடேற நிறைத்த தமிழை யறைந்தோதிச்
சிலையா ரலையின் மிதந்றேச் செனனக் கடலே றிக்கயிலை
மலையார் திருநா வுக்கரசை மகிழ்வா லென்றும் வணங்குதுமே.
(இ-ள்) புலித்தோலை ஆடையாகத் தரித்த பரம சிவனிடத்துத் திருவீழிமிழலையில் பொற்காசு பெற்று நிலைபெற்ற சிவனடியார்கள் ஈடேறவும் நிறைந்த தமிழ்ச்சொல்லினால் (சொற்றுணை வேதியன்) என்னும் முதற்குறிப்புள்ள பதிகமோதிப் பொருந்திய அலைகளையுடைய சமுத்திரத்தில் கற்றூணானது மிதந்தேறவும் செனனக் கடலைக் கடந்து கயிலை மலையென்னும் தீவையடைந்த அப்பர் சுவாமிகளை மகிழ்வுடன் எப்பொழுதும் வணங்குவாம். எ-று. (7)
திருநாவலூரர்.
கிரணம் பொருந்து முடிசூடுங் கேள்விசேர் சுந்த ரப்பெருமான்
கரணங் களுக்கு மறிவரிதாங் கமலா லயத்தி லரவணியா
பரணஞ் சிறக்கு முடியோனைப் பரவை மனைக்குச் செல்கென்றே
சரணஞ் சிவக்கத் தமிழுரைத்தோன் சரணஞ் சரணந் தானமக்கே.
(இ-ள்) பிரகாசம் பொருந்திய கிரீடத்தைத் தரித்த சிவபெருமானால் நற்கேள்விகளை யடைந்த சுந்தரப் பெருமானென்னும் நாமத்தை யுடையவரும் கமலாலயமென்னும் திருவாரூரில் அந்தக் கரணங்களுக்கு மறிவரிதாகிய சர்ப்பாபரணஞ் சிறந்து விளங்குஞ் சடையை யுடையோனான புற்றிடங்கொண்டாரைப் பரவை நாச்சியார் வீட்டுக்குப் பாதஞ்சிவக்கத் தூதுபோமென்று தமிழ்ப்பதிகம் சொன்னவரும் ஆகிய நம்பியாரூரருடைய திருவடிகள் எந்நாளும் நமக்குப் புகலிடமாம். எ-று. (8)
திருவாதவூரர்.
கொச்சகக் கலிப்பா.
ஒருவாத சிவஞானத் துண்மையினாற் றமிழுறைத்து
மருவாத புறச்சமயப் புத்தருடன் மாறாகிப்
பெருவாது வென்றவரைப் பிறங்குவெண்ணீ றணிவித்த
திருவாத வூரரிரு திருத்தாளைப் பரவுதுமே.
(இ-ள்) நீங்காத சிவஞானத்து உண்மையினாலே தமிழை யுரைத்துப் பொருந்தாத புறச்சமயிகளான புத்தருடன் பகையாகிப் பெரியவாதினால் வென்று அப்புத்தர்களைப் பிரகாசிக்கின்ற வெள்ளிய திருநீறணியும்படிசெய்வித்த திருவாதவூரரென்னும் மாணிக்க வாசக சுவாமிகளது அழகிய இரண்டு பாதங்களையுந் துதித்து வணங்குவோம். எ-று. (9)
தண்டியடிகள்.
குருகாலுந் திருச்சேய்ஞ்ஞ லூர்தன்னின் மணற்குவித்துக்
கருகாள கண்டரெனக் கண்டாவின் பாலாட்டி
யொருநாலுஞ் சிவபதத்தை யொழியாமற் பெறத்தாதை
யிருகாலுந் தடிந்தாரை முக்காலு மிறைஞ்சுதுமே.
(இ-ள்) பறவைகள் நிறைந்து ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருச்சேய்ஞ்ஞலூரில் பசுக்களாகிய நம்மையாள்கின்ற பதி கருத்த காளகண்டத்தை யுடைய பரமசிவனேயென்று துணிந்து மணலைச் சிவலிங்கமாகக் குவித்துத்தாம் மேய்த்த பசுவின் பாலை அச்சிவலிங்கப் பெருமானுக்கு அபிடேகித்து ஒருகாலுஞ் சிவபதத்தை நீங்காமற் றாம்பெற எச்சதத்த னென்னும் தந்தையின் இரண்டு காலைத் துணித்தவராகிய தண்டீச நாயனாரைத் திரிகாலமுந் துதித்து வணங்குவோம். எ-று. (10)
காளி.
அறுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்.
கோகனக மயிலடியும் வாணியெனுங் குயிலடியுங் குறித்துப் போற்றி
யாகமஞ்சே ரிரத்தினபுரிப் புராணத்தைத் தமிழ்மொழியா லடைவிற் கூற
யோகினிடா கினியடியார்க் கிட்டகா மியமுதவு முதல்வி யாகும்
வாகுபுனை வடக்குவாய்ச் செல்லியெனுங் காளிபதம் வணங்கு வோமே.
(இ-ள்) தாமரை மலரில் வீற்றிருக்கின்ற மயிலையொத்த திருமகள் பாதத்தையும் கோகிலம் போன்ற இசையையுடைய கலைமகள் திருவடியையும் நினைத்துத் துதிபண்ணிப் பின்னர் ஆகமானுட்டானஞ் சேர்ந்த இரத்தினபுரிப் புராணத்தைத் தமிழ் மொழியினாலே பொருந்தச் சொல்லுதற்கு யோகினி இடாகினி என்னும் நாமத்தைப் பெற்று அடியார்களுக்கு இஷ்டகாமியங்களைத் தந்தருளும் முதல்வியாகிய வெற்றிமாலையை அணிந்த வடக்குவாய்ச் செல்லியென்னும் காளிதேவியினது திருவடிகளை வணங்குவோம். எ-று. (11)
அடியார்கள். கலிவிருத்தம்.
விரைசெயுந் திருவில்வ வனஞ்சமா
புரமிரத்தினபுரி பஞ்சமங்கலம்
பொருவினந்தாபுர மெனுமூறையின்
மருவுதொண்டர் மலர்ப்பதமேத்துவாம்.
(இ-ள்) வாசனையைவீசுகின்ற அழகிய வில்வவனமென்னும் சமாபுரமென்றும் இரத்தினபுரியென்றும் பஞ்சமங்கலமென்றும் ஒப்பில்லாத நந்தாபுரமென்றுந் துதித்து நல்லொழுக்கத்துடன் ஊறை மா நகரில் இருக்கின்ற சிவனடியார்களுடைய மலர்போன்ற திருவடிகளைத் தோத்திரஞ் செய்வாம். எ-று. (12)
ஆசிரியர்.
அறுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்.
சீரங்கமாகிய வைகுந்தவாசனு மயனுந் தேடிக்காணாச்,
சீரங்கமா முடியோன்றனை யெளிதிற் காட்டியும் பேய்த்தேரைத் தாவுஞ்,
சாரங்கமெனப் பவஞ்சாராதுயிர்க டழைக்க வருடருங்குடந்தைச்
சாரங்க தேசிகேந்திரசாமி தன்மலர்த்தா டலைமேற்கொள்வோம்.
(இ-ள்) செல்வமே சபையாக அதனுள் எழுந்தருளியிருக்கின்ற வைகுந்தவாசனாகிய திருமாலும் பிரமதேவனுந் தேடிக்காணாக சிறப்பும் அழகும் வாய்ந்த கங்கையைப் பெருமை தங்கிய முடியினிடத்துடைய பரமசிவனை எளிதிற்காட்டிக்கானலை நீ ரென்று கருதித் தாவிச்செல்கின்ற மானைப்போலப் பிறப்பிலே சேராதவண்ணம் ஆன்மகோடிகளுக்கு அனுக்கிரகஞ்செய்யும்குடந்தையென்னும் கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் சாரங்கதேசிகேந்திர சுவாமியென்னுஞ் சற்குருவினுடைய மலர் போன்ற பாதங்களைச் சிரமேற்கொள்வோம். எ-று. (13)
நூல் செய்ததற்குக் காரணம்.
ஆர்த்தலை நீர்சுருட்டாழி சூழ்புவிக்குட் டென்கயிலை யாமிதென்னக்,
கூர்த்த மெய்ஞ்ஞானி யருணருமிர த்தினபுரிப்புராணத்தைக் கூறவேண்டுஞ்,
சீர்த்திபெறத் தமிழுரையா லென்றூறை நாட்டவர்தாஞ் செப்பலாலே,
தீர்த்தகிரித் தேசிகனென் றையாற்றில வாழ்வனுரை செய்ததாமால்.
(இ-ள்) சத்தித்து அலைநீரைச் சுருட்டுகின்றசமுத்திரஞ் சூழ்ந்த உலகத்தினுள் இதுதென்கயிலாய மென்று அறிவினையுடைய மெய்ஞ்ஞானியர்களால் அறிகின்ற இரத்தினபுரிப் புராணத்தை மிக்க புகழைப்பெறத் தமிழ்மொழியினாற் சொல்ல வேண்டுமென்று துய்ய மாமணியார் அடியவர்களாகிய ஊறைவள நாட்டார் அனைவரும் வேண்டிக் கோடலினால் திருவையாற்றில் எழுந்தருளிய தீர்த்தகிரித் தேசிகரால் அருளிச்செய்ததாகும். எ-று. (14)
அவையடக்கம்
கொச்சகக்கலிப்பா.
அழுக்குடைய பாண்டத்தி லமுதமுறைந்திடிலதனை,
யொழுக்கமுடனோர்சிக்கத்துறவேற்றிப் போற்றுதல்போல்,
வழுக்கிடினுஞ் சுத்தவிரத் தினமணியிதனு ளிருக்கையினால்,
இழுக்குரையா ரென்கவிதைக் கிவ்வுலகிற் பெரியோரே.
(இ-ள்) அழுக்குமயமாகிய மண்பாண்டத்தில்பால் இருந்தால் அப்பாண்டத்தை ஆசாரத்துடன் ஓர் உறியிற் பொருந்த ஏற்றிப் பாதுகாத்துக் கொள்வதுபோல என்னாற்சொல்லப்பட்ட பனுவலானது குற்றமுடைய தாயிருப்பினும் அக்கவியினுள் சுத்தவிரத்தின மணியானது இருப்பதனால் இவ்வுலகத்திலுள்ள பெரியோர்கள் என் கவிக்குக் குற்ற முரையார்கள். எ-று.
(15)
மொழி பெயர்த்த விதம்.
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
தலம்வேத னகங்காரம் பூசை வரம் பெறுவிழாத்தானடாத்தல்,
நலம் பெறாப்பேய் தீர்த்தறா னபலன் றேவகிரி நந்தையாறு,
'பலப்பேறாந்தீர்த்த மணிநீறு பஞ்சாட்சர மிவைகள் பதினொன்றாக,
நிலப்பேறா மனிதரெல்லா மீடேறும் படியிதனை நிரப்பினோமே.
(இ-ள்) தலவிசேடச் சருக்கம் பிரமதேவ னகங்காரச் சருக்கம் சிவபூசைச் சருக்கம் வரம்பெறு சருக்கம் திருவிழாச் சருக்கம் பிசாசுவிமோசனச் சருக்கம் தானபலச் சருக்கம் தேவகிரிச் சருக்கம் நந்தாநதிச் சருக்கம் தீர்த்தச் சருக்கம் விபூதியுருத்திராக்ஷச் சருக்கம் ஆகப்பதினொரு சருக்கமாக இவ்வுலகிலுள்ள மானிடர்களெல்லாம் ஈடேறும்படி இந்த நூலினைச் சொன்னோம். எ-று. 16
நூற்பயன்.
இந்தவகையா மினிய விரத்தினபுரிப் புராணத்தையினிது கேட்டோர்,
சிந்தை தனிலுறக் கற்றோர், கூறுமவர்க் குபகாரஞ் செய்தபேர்கள்,
புந்திதனி னினைந்தபடி கருமங்கண் முடிந்து செல்வம் பொருந்தி வாழ்ந்தே,
யந்தமலர்க்கயிலைதனை யடைந்துமுத்தி சேர்வருண்மை யாகுந்தானே.
(இ-ள்) இவ்வாறாகிய இனிதான இரத்தினபுரிப் புராணத்தைச் சிரத்தையாகக்கேட்டபேர்களும் அகத்திற் பொருந்தக் கற்றபேர்களும் இப்புராணத்தைப் படிப்பவர்க்கு உபகாரஞ்செய்தபேர்களும் தங்கள் மனதில் நினைத்த காரியங்களெல்லாம் முடிவுபெற்று இவ்வுலகில் மிக்க செல்வத்துடன் வாழ்ந்து பின்னர் இடமகன்ற கைலையங்கிரியைச் சேர்ந்து நித்தியாநந்தமாகிய மோட்சத்தைப் பெறுவார்கள் இது சத்தியமாகும். எ-று. 17
அரங்கேற்றிய காலமுமிடமும்.
மேற்படி வேறு.
உரைத்திடுஞ் சகாத்த மோராயிரத் தைஞ்ஞூற்றேழிலோது,
நிரைச்செயவருடந் தைப்பூசத்தினி னிறைந்த விரத்தின,
புரிப்புராணந்தான் றுய்யமாமணிப் புனிதர்மன்னே,
விருப்புட னரங்கேற்றிப் பின் மெய்ம்மையாய் விளங்கிற்றன்றே.
(இ-ள்) இந்த இரத்தினபுரிப் புராணமானது அறிவுடையோரால் எடுத்தரைக்கப்பட்ட சாலிவாகன சகாத்தம் ஆயிரத்தைஞ்ஞூற் றேழின்மேற் செல்லாநின்ற ஜயவருடம் தைமாதம் பூசநாளில் அழகு நிறைந்த துய்யமாமணீசுவரர் சந்நிதிமுன்பாகவிருப்புடன் அரங்கேற்றிப் பின்னர் சத்தியமாக உலகத்தில் விளங்கியது. எ-று. 18
பாயிரமுற்றிற்று.
காப்புள்படச் செய்யுள் --21.
--------------------
உ
சிவமயம்.
~~~~~~~~~~~~~~~~
கலிநிலைத்துறை.
திருவரந்தரு முனிவரா தொகுதியே சிறக்கும்,
ஒருவர் சிந்தைபோ லியாவாக்கு நல்லுணர் வோங்கந்,
தருவிளங்கியே நல்லறஞ்சிறந்திடுந் தரைமேல்,
அருள் சிறந்தவர்க் குறையுளா நைமிசாரணியம்.
(இ-ள்) ஆன்மகோடிகளுக்குச் சிறந்த வரங்களைக் கொடுத்தருளும் முனிவர் கூட்டத்தினாற் சிறந்துள்ளதும் தன்னுள் வசிப்போர் இயாவர்க்கும் ஒரேதன்மையாக நல்லுணர்வை வளர்விப்பதும் மந்தாரம் பாரிசாதம் வில்வம் பாடலம் முதலாகிய விருட்சங்களாற் பொலிவடைந்து நல்லறத்தினாற் சிறந்துள்ளதும் இவ்வுலகில் அருளினாற் சிறந்தவர்கட்கு
உறைவிடமாயுள்ளதுமாகும், நைமிசாரணியம். எ-று.(1)
அந்த வாச்சிரா மந்தனி லத்திரி வசிட்டன்,
முந்து கோசிகன் பராசரன் பரத்துவ முனிவன்,
சிந்தைதான் மகிழகத்தியன் புலத்தியன் சிறந்த,
புந்தியாலுயர்காசிபன் சௌனகன் பொருந்தி.
(இ-ள்) இருடிகள் ஆளுகை செல்லுமிடமாகிய அந்த நைமிசாரணியத்தில் அத்திரி வசிட்டா வேத காயத்திரிக்கு முதல் முனிவனாகிய விசுவாமித்திரர் பராசரர் பரத்துவாசர் சிவானந்த மகிழ்ச்சியடைந்த அகத்தியர் புலத்தியர் அறிவாலுயர்ந்த காசிபர் சௌனகர் என்னம் அபிதானம் வாய்ந்த முனிவர்கள் பொருந்தி. எ-று. 2
இன்ன மற்றுள விருடளைனைவரு மிருந்து,
மன்னு சூதமாமுனிவனுக் சாசனம் வழங்கிப்
பன்னு நான்மறை பத்துடனெட்டெனும் புராணந்,
தன்னையோ தெனக் கேட்டுள மகிழ்வர் சந்ததமும்.
(இ-ள்) மேற்சொன்ன முனிவர்களன்றி மற்றுமுள்ள இருடிகளனைவரு மிருந்து நிலைபெற்ற சூத மகாமுனிவருக்கு ஆதனங்கொடத்து அதிலெழுந்தருளப்பண்ணி நான்மறைகளும் சொல்லுகின்ற பதினெண்புராணத்தைத் தேவரீர் திருவாய்மலர்ந்தருள வேண்டுமென்று கேட்க அவர்சொல்ல அப்பொருளை உணர்ந்து தினமும்மகிழ்வடைவார்கள்.எ-று. (3)
ஒருதினத்தினிற் சௌனகன் சூதனை யுவந்து
பரவிநல்லறப் படிவமே யாகமப் பயிரே
விரவு ஞானமாம் பாதவம் பழுத்த மெய்க்கனியே
உரவுமோர்பொருள் செப்பிடவேண்டு மென்றுரைத்தே.
(இ-ள்) இவ்வாறு அமர்கின்ற நாட்களுள் ஓர்நள் சௌனகர் எழுந்து சூதமாமுனிவர் சந்நிதியினின்று விரும்பித் துதிசெய்து நல்ல தருமசொரூபியாயுள்ளவரே அகமமாகிய பயனுண்டாகும் பைங்கூழாயுள்ளவரே அறிவுடையோருள்ளத்திற் கலந்த ஞானமாகிய விருட்சம் பழுத்த உண்மைக்கனியாயுள்வரே அடியேற்கு அறிவை வளர்க்கின்ற ஒருண்மைப் பொருளை விளம்பிடவேண்டுமென்றுசொல்லி. எ-று. (4)
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
அப்பொருளெதெனவினவிற் சிலாதரர்க்கு விழியனையவருட்குமார,
மெய்ப்பொருளாகிய நந்திகேசர் சனற்குமாரற்கு விளம்பினாரென்,
றெப்பொருட்கு மேலான சமாபுர நந்தாபுரத் தினியற்புராணத்,
துடபொருளை விரித்துரையா துரைத்தீரிப்பொழுத விரித்தரைத்தல் வேண்டும்.
(இ-ள்) அப்பொருள் இயாதென வினவில் சிலாதரற்கு விழியனைய அருட்குமார மெய்ப்பொருளாகிய நந்திகேசர் சனற்கமாரற்கு எவ்வகைப்பட்டபொருள்கட்கு மேலான சமாபுரமென்ன நந்தாபுரத்தின் அழகிய புராணத்தை விளம்பினாரென்று அப்புராணத்தின் உட்பொருளை விரித்துச்சொல்லாமற் சுருங்கச்சொன்னீர் அதனை இப்பொழுது விரித்துச் சொல்லவேண்டும். எ-று. 5
ஆனசமாபுர நந்தாபுர மதனினடைவு மதன்றீர்த்தந்தானு,
மானசமேபொருந்து துய்யமாமணி யீசுரர் தனில வரவுதானு,
மோன சமாதிகளிருக்கு முனிவர்கண மவணுறையு முதன்மைதானு,
ஞானசமாகுண முனியே விளம்புகெனச் சூதமுனி நவில லுற்றான்.
(இ-ள்) அவ்வண்ணமான சமாபுரமென்னும் நந்தாபுரத்து மகத்துவத்தையும் அந்நந்தைநதியின் மகிமையையும் ஆன்மகோடிகள் உள்ளந்தோறு முறைகின்ற துய்ய மாமணீசுரர் அதில் வந்த வரலாற்றையும் மௌனசமாதியிலிருக்கின்ற முனிவர் கூட்டங்கள் அவ்விடத்தில் வசிக்கின்ற தன்மையையும் ஞான சமாகுணம் பொருந்திய முனிசிரேஷ்டனே சொல்லக்கடவதாகவென்று சவுனகர் கேட்கச் சூதமகா முனிவரானவர் சொல்லத்தொடங்கினார். எ-று. 5
முன்னமே நந்தீசர் சனற்குமரற் குறைத்தபடி மொழிவன் கேண்மோ,
சந்நிதானத்துடனே சிவன் விரும்பி நுறைநு மந்தச் சமாபுரந்தான்,
மன்னவே சிறந்த பஞ்சமங்கலமென்னும் பெயரான் மருவலாலே,
கன்னமே விரும்பு பஞ்சாக்கரவடிவா மதனிலைமை கழறுகேனே.
(இ-ள்) முன்னாளில் நந்திகேசுரர் சனற்கமாரற்குச் சொல்லியபடியே சந்நிதானத்துடன் பரம சிவன் விரும்பி யுறைகின்ற சமாபுரமானது நிலை பெற்ற பஞ்சமங்கலமென்ற சிறந்த பெயரைப் பெற்றதனாற் செவியினிடத்து விரும்பிக் கேட்கப்பட்ட பஞ்சாடசர சொரூபமாகும் ஆதலால் அதன் மகிமையைச் சொல்லுகிறேன் நீ விருப்புடன் கேட்பாயாக. எ-று. 7
வரையடனே நதிதீர்த்தம் வனம்புரமென்றைந்துவகை மருவலாலே,
யுரைசெயவாயின பஞ்சமங்கல மென்றெவ்விடத்தே யுலகத்தென்னில்,
விரைசெறி காவேரிநதிக் குத்தரமாய் விளங்குமி யோசனைதூரத்திற்,
குரைசெறியும் பைரவி யாரணியத்துக் கோர் வாயுகோணமாகும்.
(இ-ள்.) மலை ஆறு தீர்த்தம் வனம் புரம் என்னும் இவ்வைந்தும் பொருந்தி யிருத்தலாற் பஞ்சமங்கலம் என்னும் பெயர் வாய்ந்தது அப்பஞ்சமங்கலம் உலகத்தில் எவ்விடத்தில் உள்ளதெனில் வாசனை நெருங்கிய காவேரி நதிக்கு வடபாகத்தில் ஓர் யோசனை தூரத்திற் பிரகாசிக்கும். அன்றியும் பைரவி ஆரணியத்துிற்குவாயுகோணமாகும். எ-று. 8
அவ்விடத்தில் வில்வவன மந்தவனத்திடைத் தேவகிரியாம் வெற்புச்,
செவ்விடத்தே தருதேவகாதீர்த்த மதன்மருங்கிற் சிறந்தநந்தை,
யெவ்விடமு நிகரில்லாச் சமாபுரமா மிரத்தினபுரமிமையோர்வாழ,
வெவ்விடத்தை யுண்டபிரான் பதிவெள்ளிக் கிரிபோல விரும்பி மேவும்.
(இ-ள்.) அந்தவிடத்தில் வில்வவனமென் றொன்றுண்டு அந்தவனத்திடைத் தேவகிரியேன்றோர் மலையுண்டு அம்மலையின் பக்கத்தில் தேவகாதீர்த்த மென்றோர் தீர்த்தமுண்டு அத்தீர்த்தத்தின் பக்கத்திற் சிறப்புள்ள நந்தாநதியென்றோர் நதியுண்டு. அந்த நதி சூழ்ந்த இடத்தில் எவ்விடமு நிகரில்லாத சமாபுரமென்கின்ற இரத்தின புரமானது தேவர்களெல்லாம் வாழும்படி ஆலகால விடத்தையுண்ட பரமசிவன் கயிலாச பருவதம்போல விரும்பியிருக்கின்ற பதியாகும். எ-று. 9
அத்தலத்தின் மணல்சிலையோடவையெல்லாஞ் சிவலிங்காகாரமாகு,
மெத்திய பைங்கொடி செடிகண் மிருக பறவைகண் முதலா விளங்குகின்ற,
சித்தபுருடர்களோடு கின்னரர் கிம்புருடரெனச் சிறந்தவாகும்,
உத்தம பூசுரரெல்லா முனிவர்களா மொழிந் தோரு மும்பராகும்.
(இ-ள்.) அந்தத் தலத்திலிருக்கின்ற மணல் கல் ஓடுகளெல்லாம் சிவலிங்க சொரூபமாகும் மிகுந்த பசுங்கொடிகள் செடிகள் மிருகங்கள் பறவைகளெல்லாம் சித்த புருடர்களும் கின்னரரும் கிம்புருடர்களுமென்று சொல்வனவாகும் உத்தம குணத்தை யுடைய வேதியர்களெல்லாம் முனிவர்களாவார்கள் மற்றமனிதரெல்லாம் தேவர்களாவார்கள். எ-று. 10
எவரையு நிந்திக்க வொண்ணா திருந்தவர் நாலாம்பதமே யெய்துவார்கள்,
தவமுயல்வோர் தங்களுக்கு மத்தலம்போற் பூலோகந்தனில் வேறில்லைச்,
சிவனை ரத்தனேசுரனை யெந்நேரமானாலுந் தெரிசித்தோர்கள்,
பவமகற்றி நினைந்தவெல்லாம் பெறுவார்கள் பாதகங்கள் பயின்றொரேனும்.
(இ-ள்.) அந்தத் தலத்தில் வசிக்கப்பட்டவர்களை நிந்தனை செய்யாமலிருப்பவர்கள் சாயுச்சிய பதத்தை யடைவார்கள் தவஞ்செய்யப்பட்டவர்க்கும் அவ்விடம்போல் உலகத்தில் வேறிடமில்லை மகா பாதகங்களைச் செய்தவரானாலும் சிவபெருமானாகிய இரத்தினேசுவரனை எந்தநேரத்திலாகிலுன் தரிசித்தால் இகத்தில் எண்ணிய கருமங்கள் முடிவு பெற்றுப் பின்னர் செனனத் தொடர்பையும் அறுப்பார்கள். எ-து (11)
அணுவளவு பொன்வெள்ளி தானமிடிலது மேருவ லவேயாகி,
யுனர்வினுடன் கோடிதனந் தானமிட்ட பலன்பெறுவ ரொருவர்க்கேனு,
நணுகியன்னமிடிலோ ரன்னதுக் காயிரவருட நலமேயாகிப்,
புணர்வினுடன் கயிலைதனின் மகிழ்ந்திருந்து பின்னர் முத்தி பொருந்துவாரே.
(இ-ள்.) யாவராயினும் அந்தத் தலத்தில் அணுப்பிரமாணம் பொன்னாகிலும் வெள்ளியாகிலும் தானம்பண்ணினால் அது மேருவளவாகி அறிவுடனே கோடிதனம் தானம்பண்ணின பலனைப் பெறுவார்கள் அத்தலத்தை யடைந்து ஒருவருக்கு அன்னமிடுவார்களானால் ஒவ்வொரு அன்னத்திற்கு ஆயிரவருடம் நன்மையை யடைந்து சாரூபத்துடன் கைலையங்கிரியிலிருந்து பின்னர் மோட்சத்தை யடைவார்கள். எ.று. (12)
கன்னிகாதானமொன்று செயினுமொருகோடி பிதிர்க்கணங்களோடு,
மன்னியே கைலைதனில் வாழ்ந்திடுவ ரிடபமொன்று மகிழ்ந்தவிட்டால்,
மின்னுமுரொமத்துக் காயிரவருட விதப்படியே நூறுகோடி,
துன்னுமுயர் பிதிர்க்களுடனிறைவர்பதி தனிலிருப்பர் சுகத்தில் வாழ்ந்தே.
(இ-ள்.) அந்தத் தலத்தில் ஒரு கன்னிகாதானஞ் செய்தால் ஒருகோடி பிதிர்க்கணங்களுடன் நிலையாகக் கைலாயத்தில் வாழ்ந்திருப்பார்கள் சூலமுத்திரையிட்ட காளையொன்று விட்டால் பிரகாசிக்கின்ற அந்த இடபத்தின் ஒரு உரோமத்திற்கு ஆயிரவருடவீதம் நெருங்கி உயர்வுற்ற நூறுகோடி பிதிர்க் கணங்களுடன் இறைவர் பதியாகிய கயிலாசத்தில் சுகமாக வாழ்ந்திருப்பார்கள். எ-று. 13
திதிமதியின் முதற்றீர்த்த நந்தநதி தனிலாடித் தேவதேவன்,
மதியணியுந் துய்யமாமணியாரைச் சேவித்து வசித்தோர்க் கெல்லாங்,
கொதுியுறு நோயிலை நெருப்புச் சலத்தாலும் பயமுடனல் குரவுமில்லை,
இதமகன் சாவதுந் தந்தை கண்டதில்லை யமவாதை யில்லைத்தானே.
(இ-ள்.) அந்தத் தலத்திலுள்ள முதற்றீர்த்தமாகிய தேவதா தீர்த்தத்திலும் நந்தா நதியிலும் புண்ணிய திதிகளிலும் மாதப்பிரவேச காலங்களிலும் ஸ்நானஞ்செய்து தேவதேவனுஞ் சந்திரசூடனுமாகிய துய்ய மாமணியாரைத் தரிசனம் பண்ணினவர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கின்ற வியாதியும் அக்கினியாலும் தண்ணீராலும் உண்டாகும் பயமும் தரித்திரமும் புத்தென்னு நரகத்தினின்று விடுவித்து இதத்தை விளைவிக்கின்ற மகன் இறப்பதைத் தந்தை காண்பதும் இயமவாதையுமில்லை. எ-று. (14)
மருவியமுற் சென்மத்திற் றவமுடையோர்க் கத்தலத்தில் வாசங்கூடும்,
பரவுமந்தத் தலவாசிகளைக்கண்டபேர்களுக்கும் பாவந்தீரும்,
அரனருளா னந்தீசர் சனற்குமரற் குரைத்ததிவ்வா றாகுமீது,
தருமமுடன் சத்தியஞ் சத்தியமென்றே சூதமுனி சாற்றினானே.
(இ-ள்.) பொருந்திய முற்சன்மத்தில் அனேககோடி தவம் பண்ணினபேர்களுக்கே அந்தத் தலத்தில் வாசம்பண்ணுதல் கைகூடும் அன்றியும் தேவர் முனிவர்களாற் பரவுகின்ற அந்தத்தலவாசம் பண்ணினபேர்களைக் கண்டவர்களுக்குப் பாவங்களெல்லா நசிக்கும் பரமசிவத்தின் அருளினால் நந்திகேசர் சனற்குமாரற்கு இவ்வண்ணஞ் சொன்னதாகும் இது தருமத்துடன் சத்தியஞ் சத்தியிமன்று சூதபுராணிகர் சொல்லினார். எ-று. 15
இன்னுமந்தத் தலமகிமை வருடமொராயிரக் காலமிசைத்திட்டாலும்,
பன்னரிதா மெனக்கூறச் சௌ னகனு முளமகிழ்ந்து பரிவினோடும்,
அந்நகரந்தனிற் றுய்யமாமணியார் வரலாறு மறைதியென்றே,
நன்னயமதாக் கேட்பச் சூதமுனி யிவ்வாறு நவிலலுற்றான்.
(இ-ள்.) இன்னமுமந்தத் தலத்தின் மகிமையை ஆயிரவருடஞ் சொன்னாலுஞ் சொல்லிமுடியாதென்று சூதமாமுனிவர் சொல்ல அதைக்கேட்ட சௌனகர் உளமகிழ்ச்சி கூர்ந்து அன்புடன் எழுந்து நின்று தேவரீர் தலவிசேடத்தை மொழிந்தருளியபடியே துய்யமாமணியார் வரலாற்றையும் சொல்ல வேணுமென்று வினயத்துடன் கேட்கச் சூகமுனிவர் துய்யமாமணியார் வரலாற்றைப் பின்வரும வண்ணஞ் சொல்லத்தொடங்கினார். எ-று. 16
தலவிசேடச் சருக்கம் முற்றிற்று.
ஆக செய்யுள் 37.
----------------------
உ
சிவமயம்.
இரத்தினபுரிப் புராணம்
இரண்டாவது
பிரமதேவனகங்காரச் சருக்கம்.(38-58 )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
சீதரனார் திருவுந்தி பூத்தலர்ந்த செழுங்கமலத் திறற் பொகுட்டு,
மீதெழுந்து நால்வேத முணர்ந்தோது மைந்துசிர விதியாம வேதன்,
ஏதமறப் படைக்கு முறை யெவ்வுலகுஞ் சிருட்டித்தே யிமையோரேத்த,
நீதிபுனை சத்தியலோகத்திருந்தே வாழ்வுபெற்று நிகழுநாளில்.
(இ-ள்.) மகாவிஷ்ணுவின் உந்தியாகிய செழுங்கமலப் பொகுட்டிற் பிறந்து நான்கு வேதங்களையும் உணர்ந்த யாவருக்கும் தெரிவிக்கும் ஐந்து சிரங்களைப்பெற்ற விதி என்னும் பிரமதேவன் குற்றமில்லாமற் படைக்கு முறைமைப்படி எல்லா உலகங்களையும் சிரட்டித்துத் தேவர்கள் அடிபணிய நீதி நிறைந்த சத்திய உலகத்தில் இருந்து வாழுநாளில். எ-று. (1)
முந்தியெழுஞ் சாத்துவித ராசத தாமதமென்னு முக்குணத்திற்,
புந்திதரு சாத்துவித ஞானநெறி யறிவுதனைப் பொருத்துவிக்குஞ்,
சிந்தைதனி லிரா ச தந்தா னகங்காரம் வெகுளியினைச் சேர்ப்பிவிக்கும்,
இந்தவகை யல்லாமற் றாமதந்தான் சோம்பு றக்க மெய்துவிக்கும்.
(இ-ள்.) முதன்மையாய்த் தோன்றுகின்ற சாத்துவித குணமென்றும் இராசத குணமென்றும் தாமத குணமென்றும் முக்குணங்களுண்டு அக்குணங்களில் சாத்துவிதமானத ஞானத்திற்கு ஏதுவாகிய அறிவினை யுண்டாக்கும் இராசதமானது மனதில் அகங்காரத்தையும் கோபத்தையும் உண்டாக்கும் தாமதமானது மேற்குறித்தவகை யல்லாமற் சோம்பலையும் உறக்கத்தையும் உண்ணுபண்ணும். எ-று. (2)
இவ்வகையா மக்குணத்தி லிராசதமாங் குணமிகுதி யெழுகவேதன்,
செய்வகையாஞ் செயலெல்லாஞ் சிவன்செயலா மென்பதனைச் தேர்ந்திடாமற்,
பவ்வமணிப் பார்மிசையிற் சராசரங்கண் முழுது நாம் படைத்தோமன்றி,
முவ்வுலகு மெவ்வுலகும் பிறர் படைப்பன் றெனவுளத்தின் மோகமுற்றே.
(இ-ள்.) இத்தன்மையாகிய முக்குணங்களில் இராசதகுண மேலீட்டாற் பிரமதேவன் தான்செய்யுஞ் செயலெல்லாம் சிவபெருமான் செயலென்பதனை அறியாமல் சமுத்திரஞ் சூழ்ந்த அழகிய உலகத்திலிருக்கின்ற சராசரங்கள் முழுவதும் நமதுபடைப்பே அல்லாமல் மூவுலகமும் முற் றெவ்வுலகமும் பிறராற் படைக்கக்கூடியது அன்றென உள்ளத்தில் மயக்கங்கொண்டு. எ-று. (3)
நாம் படைத்த படைப்பா லிவ்வலகமெல்லாம் புரந்தளிப்பா னாரணன்றான்,
பாம்பணியும் பணியரனார் துடைப்பனெல்லா நம்மெழுத்தின் படியேயன்றோ,
ஆம்படிநயினா லியாமே முழுமுதல்வ னனை வருநம் மேவல் செய்வோய்
மேம்படுமுத் தொழறூ னு நமதென்றே யகங்கார மிகவுங் கொண்டான்.
(இ-ள்.) பிரமதேவனானவன் நமது எழுத்தின்படியல்லவா நம்மால் சிருட்டிக்கப்பட்ட பொருள்களால் திருமாலானவன் காத்து இரட்சிப்பதும் சர்ப பாபரண மணிந்த உருத்திரனானவன் சங்காரஞ் செயாவதுஞ் ஆதலால் இவ்வுலகத்திற்கு முழு முதலாயுள்ளவன் நாமே மற்றத் தேவர்கள் நம்முடைய ஏவல் செய்யப்பட்டவர்கள் மேன்மையாகிய முத்தொழிலும் நமதே என்று அகங்காரத்தைக் கொண்டான். எ-று. (4)
கொண்ட வகங்காரமுட னைந்துசிரப் பிரமாவுங் குணம் வேறாகி,
அண்டிரெல்லாம் வெருவும்வகை யிருத்தல் சிவன் றிருவுளஞ் சற்றறிதலோடு,
மிண்டுசெயும் பிரமாவுந் தன்பதவி விட்டிழிந்து மிகவுந்தாழப்,
பண்டு படைத்திடுஞ் செயலுந் தெரியாம லுன்மத்தப் படிவமானான்
(இ-ள்) இப்படி அகங்காரங்கொண்ட பிரமதேவனும் தன் குணம் வேறுபட்டுத் தேவர்கள் அஞ்சும் வண்ணம் இருப்பதைப் பரமசிவன் திருவுளத்திற்சற்றே அறிந்தமாத்திரத்தில் அகங்காரங்கொண்ட பிரமதேவன் தன்பதவியை விட்டிழிந்து மிகவுந்தாழ்வடைந்து முன்னாற் படைத்த தொழில் எல்லாந் தெரியாமல் மயக்கமே சொரூபமானான். எ-று. (5)
மருள்கொண்ட பாலகனுக் கவுடதத்தை யளித்ததனை மாற்றி நன்மை,
அருள்கொண்ட குணம் வரவே செய்துதவுந் தந்தையைப்போ லானாரெண்ணித்,
திருகொன்று குணத்தயற்குத் திருக்ககற்றிச் சிருட்டிக்கு முறைசெய்வோமென்,
றிருள்கொண்டகஞ்சுகத்து வைரவனை நினைத்தலு முன்னிறைஞ்சிநின்றான்.
(இ-ள்.) மயக்கமாகிய நோய்கொண்ட பிள்ளைக்கு மருந்து அளித்து வியாதியை அகற்றி நன்மை மிகுந்த அருட்குணம் வர அருள் செய்கின்ற தந்தையைப்போல பரமசிவன் அஞ்ஞானமுடைய பிரம தேவனுக்கு உன்மத்த குணத்தைமாற்றி உலகத்தைப்படைக்கும் முறைமையைச் செய்விப்போமென்று இருள்போற் கருத்த சட்டையையணிந்த வயிரவமூர்த்தியை நினைத்தமாத்திரத்தில் வயிரவ மூர்த்தியானவர் வந்து எதிர்நின்று பரமசிவனை வணங்கினார். எ-று.
(6)
நின்றவயிரவன்றன்னை யன்பினொடு முகநோக்கி நிமிலன்கூறும்,
இன்றயனைப் பற்றுமிராசத குணமா மதமோக மேகிவேக,
மன்றிநெறி ஞானகுண மருவும்வகை யவன்றலைக ளைந்துதன்னில்
*ஒன்றுகளைத்திளளியிங்கு மீடியென வணங்கிமகிழ்வுடன்
(இ-ள்.) வணங்கித் தன்னெதிர்நின்ற வயிரவன் முகத்தைப் பரமசிவன் அன்புடன் நோக்கிப் பிரம தேவனைப் பற்றிய இராசதகுண மதமோகங்கள் போகவும் வேகமல்லாத நியாயமாகிய மெஞ்ஞானம் அடையவும் அவன்றலைகள் ஐந்தில் ஒன்றைக் கிள்ளி யெறிந்து இப்பொழுதே இவிடத்தில் வருவா யென்றுசொல்ல அதைக்கேட்ட வயிரவன் தேவரீர் கட்டளை சிரமேற் கொண்டேனென்று வணங்கி மகிழ்வுடன் சென்றான். எ-று. (7)
வேறு.
வசையில்பிறையெனுநகைமுகமழகெழ வலிய திரிசிகை யகிலது சுடர்விட,
அசைவுகொளவரு தமருகசதயினி லகிலபுவனமும் வெடி படவுரமிசை,
இசைவுகொ*ளவணி யரவிடை யினமணி யிரவிவெருவிட வெயிதுவிரிதர,
விசையபரிபுர மொலிசெய வயிரவன் விடலை கடவினன் விரைகொடு ஞமலியே.
(இ-ள்.) வயிரவனானவன் குற்றமற்ற மூன்றாம் பிறையையொத்த தந்தங்களையுடைய முகத்தில் அழகொழுகவும் வலிமையான முத்தலைச்சூலத்தின் பிரகாசமோங்கவும் அசைவுகொண்ட தமருக ஒலியினால் அகில புவனங்கள் வெடிபடவும் மார்பில் இசைவாக அணியப்பட்ட நாக விரத்தினங்கள் சூரியன் ஒளிமழுங்கப் பிரகாசிக்கவும் பாதத்தில் தரித்த சிலம்புகள் சத்திக்கவும் பலமான சுவானவாகனத்தில் ஏறி நடந்தான். எ-று. (8)
நீலநிறைதரு பேருருவொளிவிட நீடுசெறி நிருவாண மதிலகுற,
கோலமழகெழ மார்பிட தொனியருள் கோட்டநிலகிட நீடியசுடர்விடு,
சூலமொருகர மீதினிலெழநிறை தோட்டினிதழியின் மாலையின் வெறிநறை,
காலவயனுறை நீள்பதியதனிடை காலவயிரவ னேகினனணுகியே.
(இ-ள்.) பெரிய வுருவமானது நிறைந்த நீலத்தைப்போல் ஒளிவிடவும் நீண்ட நிருவாண சொரூபத்தின் அழகு பிரகாசிக்கவும் மார்பினிடத்தில் தாங்கிய சத்திக்கின்ற வீணைபிரகாசிக்கவும் ஒருகையிற் சூலாயுதம் ஒளிரவும் நிறைந்த இதழ்களையுடைய கொன்றை மாலையின் வாசனையும் தேனும் ஒழுகவும் கால வயிரவன் நடந்து பிரமதேவன் வசிக்கின்ற சத்திய உலகத்தைக் கிட்டினான். எ-று. (9)
சிங்கநாதமும் வெங்கடுவூறிய திண்கிரீபமுதுங்கரவார்தரு,
கங்கணாகரமுந் திருநீறணி கஞ்சுகாதர வங்கமுமானவன்,
வங்கமால்வரையின் கணநாதர்கள் வந்துசூழ்தர வுந்துசுவாமிசை,
பங்கமேன்மருவுங் குளிர்தோடலந் பங்கயாசன னெங்கெனநாடியே.
(இ-ள்.) சிங்கநாதமும் ஆலகாலவிஷத்தை உமிழ்கின்ற அரவைக் கடகமாகத் தரித்த கையும் விபூதியைத் தரித்துச் சட்டையைப் போர்த்த சரீரமும் உடைய வயிரவன் வெள்ளியங்கிரியில் வசிக்கின்ற கணநாதர்கள் மருங்கு சூழ்ந்துவர சுவானவாகனத்தில் ஏறிக்கொண்டு சேற்றில் முளைத்துக் குளிர்ச்சி பொருந்தி இதழ்களால் விரிந்த தாமரைமலரை ஆசனமாகக்கொண்ட பிரமதேவன் எங்கேயெனத் தேடி. எ-று. (10
வையமுழுவது மெய்யெனவேதிரி வள்ளல் வடுகன் மெய்யொள்ளிய மூவிலைத்,
துய்யவகிலமர் கையினன் வீறொடு துள்ளுஞமலியன் வெள்ளிய நீறணி,
மெய்யிலணிதரு பையர வோன்வளை வெள்ளை செறிகுழை யள்ளவன் வேகனை,
ஐயகலைகளின் மையமதானதை யள்ளி யுகிர்கொடு கிள்ளினனாமரோ.
(இ-ள்.) உலகமுழுவதும் கணப்பொழுதில் சுற்றித்திரிகின்ற வள்ளலாகிய வடுகனென்னும் பெயரையுடையவரும் பிரகாசிக்கின்ற மூவிலைகளையுடைய பரிசுத்தமாகிய சூலாயுதம் அமர்ந்த கையினையுடையவரும் உன்மத்தத்தடன் தாண்டிச் செல்கின்ற சுவானவாகனத்தையுடையவரும் வெண்மையாகிய விபூதியை நிறையத் தரித்த சரீரத்தில் அணிகின்றவடமாக வாய்ந்த அரவினையுடையவரும் வெண்மைமிகுந்த சங்கக் குழையைக் காதில் அணிந்தவரும் ஆகிய வயிரவர் பிரமதேவனைக்கண்டு அவனுடைய ஐந்து தலைகளில் நடுத்தலையைப்பற்றிக் கை நகத்தினாற் கிள்ளினார்.
எ-று. (11)
வேறு.
அஞ்சுதலை தனினடுவாந் தலையைக்கிள்ளி
வஞ்சுதலை மிகவுமடைந்தழுங்கியேதான்,
நெஞ்சுதனிலறவுகற வீழ்ந்தான் வேதனிமலனருளால்
வந்த ஞமலியூர்வான்,
விஞ்சுதலை யுடன்வேதன் றலையுங்கொண்டு வெள்ளிமலையெனங்-
கைலையடைந்தா னப்பாற்,
கஞ்சமல ரயன்செய்கை யதனையெல்லாங்
கட்டுரைப்பினெனச் சூதன் கழறலுற்றான்.
(இ-ள்.) பிரமதேவன் அஞ்சுதலைகளில் நடுவாகிய தலையை வயிரவன் கிள்ளின அளவில் மிகவம் யந்து நடுநடுங்கி நெஞ்சிற் கவலைகொண்டு பூமியில் விழுந்தான் அப்பொழுது பரமசிவனருளால் வந்த சுவானவாகனனான வயிரவன் பிரமதேவன்றலையைச் சூலத்தில் கோர்த்துக்கொண்டு வெள்ளியங்கிரியாகிய கைலாசத்தை அடைந்தான் அப்பால் கமலாசனனாகிய பிரமதேவன் செய்கைகளை எல்லாம் உறுதியாகச் சொல்லுகிறேன் என்று சூதமுனி சொல்லலுற்றார். எ-று. (12)
நாலுதலை யுடன்வீழ்ந்து குருதிபொங்க நாலுதலைநோக்கிமிகநடுநடுங்கித்,
நாலுதலை யொன்றறுபட்டதுவேயென்று தானுரைக்கு மொழிகுழறித் தயங்கி விம்மிக்,
காலுதலையொழி யாம னாலிரண்டு கண்களுநீரே பெருக வெங்கையாலே,
மேலுதலை வாங்கநமக் கெய்திவந்த வினையேதென் றுளத்தெண்ணி விசாரமுற்றான்.
(இ-ள்.) அப்பொழுது பிரமதேவன் நாலுதலையுடன் பூமியில் விழுந்து இரத்தம்பெருக நாலுதலைகளையம் பார்த்து மிகவும் நடங்கிப் பயந்து ஒருநாவும் ஒருதலையும் அறுபட்டுப்போயினதே என்று சொல்லும் சொற்களும் குழறித் தடமாறி மதிமயங்கி அழுது எட்டுக் கண்களினின்றும் தண்ணீர் தாரைதாரையாய் ஒழுகிப்பெருக கை நகத்தினால் நம்முடைய மேலான தலை கொய்பட நமக்கு வந்த வினையாதென்று மனதிலெண்ணி விசாரமுற்றான். எ-று.
(13)
சிவனருளால் வந்ததா மிதுவயென்று தியங்கி யிராசதகுணத்தின்செய்கையாலே,
தவமழுது மிழந்ததன்றித் தலையிலொன்று தன்னை யுமின் றிழந்திடவுந் தந்திதென்று,
கவலை யுடனினைந்து நினைந்துறுதியோர்ந்து கலங்கிய சித்தந்தெளிந்து சிரங்களைந்துங்,
குவலயத்தில் விழவெறிந்தாற் றடுப்பாரியாவர் கொடுத்தவனே மாற்றியக்காற் கொள்கையாதோ.
(இ-ள்.) பரமசிவனருளால் நமக்கு இவ்வண்ணம் விளைந்ததென்று இராசதகுண மேலீட்டால் தவமெல்லாம் போனதுமன்றி எனதுதலையும்போனதென்று விசாரத்துடன் நினைந்து நினைந்து கலங்கிய சித்தந்தெளிந்து நமக்கு ஐந்து சிரங்களைக்கொடத்த பரமபதியாகிய கடவுளே அச்சிரங்களில் ஓர் சிரத்தைத் தடிவாரானால் அதைத் தடுப்பவர் யாண்டுமில்லையென்றெண்ணினான். எ-று. (14)
நமதுசிர மறுப்பதனை யுணரமாட்டா நமக்கு
மோராதிக்க மேதுநாடின்,
அமைவதில்லைச் சிவன்பெருமைக் கவனேயல்லா
லியாருமில்லை முழுமுதல்வ ராகும்பேர்தான்,
இமையவரே முதற்றேவரானோர்க்கெல்லா
மீசனேதலைவ னென்பதெண்ணியெண்ணி,
உமையவடன் கணவனையே துதித்தானாஞ் செய்துற்ற
பிழைபொறுக்குமென வுணர்ந்தானன்றே.
(இ-ள்.) நமது தலையை அறுப்பதை உணரமாட்டாத நமக்கு அதிகாரமேது நினைக்குமிடத்தில் நம்மாலாவது ஒன்றுமில்லை சிவபெருமானுடைய பெருமைக்கு அச்சிவபெருமானே ஒப்பல்லாமல் முழு முதல்வரெனத் திரிகின்ற மற்றத்தேவர்கள் ஒப்பில்லை ஆதலால் தேவர்களுக்கெல்லாம் தலைவன் சிவபெருமானே என்றெண்ணி உலக மாதாவின் கணவனாகிய ஸ்ரீ கண்டமூர்த்தியைத் துதித்த வணங்கினால் நாம்செய்த பிழைகளை யெல்லாம் பொறுப்பார் என்று உணர்ந்தான் பிரமதேவன். எ-று. (15)
சிந்தையுறு தியானத்திற் படிகமெய்யுஞ் செஞ்சடையுங் கண்மூன்று மபயக்கையுங்,
கந்தமிகும் புலியதளினுடையும் பூதகணஞ்சேர் வைப்பதமு முயர்குணமுஞ்சால,
முந்துகருணையு மிமையவரையின் வல்லி முழுமுதல்வரெனும்வடிவு முழுதுங்கண்டே,
அந்தமிலாப் பரமசிவன்றன்னையுன்னி யம்புயத்தோ னிருப்பவர னருளினாலே.
(இ-ள்.) பிரமதேவனானவன் பளிங்கை ஒத்த திருமேனியையும் சிவந்த சடையையும் முக்கண்களையும் அபயக்கையையும் வாசமிகுந்த புலித்தோற்கலையையும் பூதகணங்கள் சேவிக்கின்ற திருவடியையும் சின்மயகுணத்தையும் மிகவும் முதிர்ந்தொழுகுகின்ற கருணையையும் பருவதராசன் புத்திரியாகிய பார்வதிதேவியார் கணவனென்பதையும் ஆதியந்தமில்லாதவ ரென்பதையும் அகத்தில் உன்னிப் பொருந்திய தியானத்தில் இருக்க அப்பொழுது பரமசிவன் அருளினால். எ-று. (16)
மிக்கவசரீரி வாக்கியமேயாகவேதாவே யுனது குணவிராசதத்தால்,
தக்கசிரமொன்றறுந்த ததுதாமென்னுந் தருக்கினாலதுநீங்கித் தராதலத்திற்,
றுக்கமின்றியே பிரமந்தானேயாகத் தொல்லுலகி னூற்றெட்டுச் சிவலிங்கத்தில்,
அக்காவப்பணியானைப் பூசைசெய்ய வமையு மவற்றுளு மிருநான்கதிகந்தானே
(இ-ள்) ஓ பிரமதேவனே உனது இராசதகுண மேலீட்டால் உனது ஐந்து தலைகளில் ஒன்று அறுபட்டது எல்லாந்தாமே ஆகப்பிரபஞ்சாதி விசாரம் மனத்தின்கண் இல்லாமல் பழமையாகிய இவ்வுலகத்தினுள் இருக்கின்ற அதிகமாகிய நூற்றெட்டுத் தானங்களில் அக்கமணியுடன் சர்ப்பத்தையும் ஆபரணமாகத்தரித்த பரமசிவனைப் பூசைசெய்யப் பொருந்தும் அந்நூற்றெட்டுச் சிவலிங்கத்தினுள்ளும் எட்டுச் சிவலிங்கம் அதிகமென்றும். எ-று. 17
கங்கை காவிரிநந்தை கிரதமாலை கௌதமை கிருட்டினவேணி துங்கபத்திரி,
மங்கலகேதார மிந்தத் தலங்களெட்டின் மகேச்சுரனைப் பூசை செய்யின் மருவுமன்றிப்,
பொங்குபுவியினிற் சமபுத் தீவுதன்னிற் பொருந்திய பாரதவருட பரதகண்டந்,
தங்கதலந்தனிற் கிரியுநதியுந் தேவ தானமுமுண்டவற்றின்மிகத் தவஞ்சேர்பூமி.
(இ-ள்) கங்கை காவிரி நந்தை கிரதமாலை கௌதமை கிருட்டினவேணி துங்கபத்திரி கபகரமருவிய கேதாரம் என்னும் இந்த எட்டுத் தலங்களில் பரம சிவனைப் பூசைபண்ணினால் உனக்குப் பிரமத்துவம் பொருந்தும் இவையன்றி இன்னுமொருதலம் உண்டு இந்த உலகத்தில்சம்பத்தீவிலிருக்கின்ற பரதகண்டத்தில் ஒரு பருவதமும் ஒரு நதியுமுடைய தெய்வத்தானம் ஒன்றுண்டு அந்த இடம் மிக்க தவஞ்சார்ந்த பூமியாகும். எ-று. 18
எண்ணில் பலமுனிவ ராச்சிரமந்தன்னி லீசர்வடிவாகு முயர் வில்வக்கானம்,
நண்ணுநதிக காவிரிக்குத்தரத்தி னந்தாநதித் தீர்த்தந் தேவகிரி தேவகாமெய்த்,
தெண்ணிய தீர்த்தமுமுடைத்தா யுரோமமேனிசேர்ந்த முனியுடன்முனிவ ரநேகர் சூழ்ந்து,
புண்ணியமாந் தவம்பலிப்ப வனேகங்கோடி பொருந்துகற்ப காலமதிற் புக்கிவாழ்வர்.
(இ-ள்) அந்தப்பூமியில் கணக்கில்லாத முனீஸ்வரர்கள் ஆச்சிரமம் உண்டு அவர்களெல்லாம் அதில் சிவசொரூபமாய் இருப்பார் அது உயர்வுபெற்ற வில்வவனமாகும் அவ்வனம் எவ்விடத்து உள்ளதெனில் காவிரிநதிக்கு வடபாரிசம் உள்ளது அதில் நந்தாநதி யென்றொரு தீர்த்தமும் தேவகிரியென்றொரு பருவதமும் தேவகாதீர்த்த மென்றோர் தீர்த்தமும் உண்டு. அந்தவிடத்தில் உரோமசமுனியுடனே அனேக முனிவர்கள் சூழ்ந்து புண்ணியமாகிய தவங்கள் பலிக்கும்படி அனேகங்கோடி கற்பகால மளவும் அதிற் பொருந்திவாழ்வார்கள். எ-று. (19)
அத்தலத்துக் கெத்தலமு மொவ்வாதாகு மவ்விடத்தில் விக்வவிருக்கத்தின் பாங்கர்,
மெத்துசிவலிங்கமொன்று பதிட்டைசெய்து மேவுசிவாகமங்களோ ரிருபத்தெட்டிற்,
சுத்தமுறு சூக்குமமா மாகமத்திற் சொன்னவகை பூசைசெய்யிற் சிவனுந்தோன்றி,
உத்தமமாம் வரங்கொடுக்கும் பரமனிவ்வா றுரையென்றாரென வசரீரியுங் கூறிற்றே.
(இ-ள்.) அந்தத் தலத்திற்கு மற்றெந்தத் தலங்களும் இணையில்லை அவ்விடத்தில் வில்வவிருட்சத்தின் பக்கத்தில் நிறைந்த சிவலிங்கம் ஒன்று பிரதிட்டை செய்து விரும்பிய சிவாகமங்கள் இருபத்தெட்டினுள் சுத்தமான சூக்குமாகமத்தில் சொல்லியபடி பூசைபண்ணினால் சிவபெருமான் பிரசன்னமாகி உத்தமமாகிய வரங்களைக் கொடுப்பார் என்று உனக்குச் சொல்லென எனக்குப் பரமசிவன் கூறினார் என்பதாக ஆகாயத்தினின்றும் ஓர் அசரீரிவாக்கியம் எழுந்தது. எ-று. (20)
இவ்வாறு சூதனெனு முனிவன்கூற வினிய சௌனகன் மிகவு மதிசயித்துச்,
சைவாகமப் பெருமையெல்லா மிந்தத் தரணிதனி லியாவர் நின்போற்சாற்றவல்லார்,
ஒவ்வாதகுணமகற்றி வேதனெவ்வா றுறைந்திரத்தினேசுரப் பதிட்டையோங்கச் செய்தான்,
அவ்வாறு யானறிய வுரைத்தல் வேண்டு மையவெனச் சூதமனி யறையலுற்றான்.
(இ-ள்.) இவ்வண்ணமாக சூதமுனிவர் சொல்லியபோது சௌனகமுனிவர் மிகவம் ஆனந்தம் அடைந்து அதிசயித்த சைவாகமத்தின் பொருள்களையெல்லாம் இவ்வுலகத்தில் உம்மைப்போலச், சொல்லவல்லார் யாவரென்று துதிசெய்து பிறகு அந்தப் பிரமனானவன் பொருந்தாத இராசதகுணத்தை அகற்றி இரத்தினேசுவரனைப் பிரதிட்டை செய்து எவ்வாறு பூசை பண்ணினான் அதனை அடியேற்குச் சொல்லியருளவேண்டும் ஐயனே என்று கேட்க அபெோது சூதமகாமுனிவர் சொல்லத் தொடங்கினார். எ-று. (21)
இரண்டாவது
பிரமதேவன் அகங்காரச் சருக்கம்
முற்றுப்பெற்றது.
ஆக செய்யுள் 58.
---------------
-----------------------------------------------------------
உ
சிவமயம்.
இரத்தினபுரிப் புராணம்
மூன்றாவது
சிவபூசைச் சருக்கம் (59-86)
------------
வேறு
இருநாலு திசைப்பால ரெவருமஞ்சு முகமாக,
ஒருநாலு முகத்துடனே யொளிபரவப் பிரமாவும்,
தருநாலுஞ் சம்புதிசை தனிலேசம்புவைப்போற்ற,
திருநாலு மறையோதித் தேவகிரிதனைச்சேர்ந்தான்.
(இ-ள்) பிரமதேவனானவன் தன்னைக்கண்ட திக்குப்பாலகர் எண்மரும் அஞ்சும்படி நான்கு முகத்துடனே பிரகாசம் விரிய நாலு விருட்சம் சூழ்ந்த மகமேருவுக்குத் தென்பாலாகிய நாவலந்தீவில் சம்புவாகிய பரமேசுவரனைப் போற்றச் சிறந்த நாலுவேதங்களையும் சொல்லிக்கொண்டு தேவகிரியை அடைந்தாள். (எ-று). (1)
தேவகிரி யெனுமிரத்தினச் சிகரவரை தனை நோக்கிப்,
பாவவினை தீர்க்குமுயர் பாணிநந்தை தனைநோக்கி,
மேவுவில்வ வனநோக்கி விரும்பியதிற் றவம்புரியும்,
தாவிலுரோ மசன் முதலாந்தவமுனிவர் தமைநோக்கி.
(இ-ள்) தேவகிரி என்னும் இரத்தினச் சிகரம் பொருந்திய மலையைநோக்கியும், பாவவினையை அகற்றி உயர்பதவியை அருளும் உதகம் நிறைந்த நந்தாநதியைக் கண்டும் அவ்விடத்திலிருக்கின்ற வில்வவனத்தைப் பார்த்தும் அதனுள் விரும்பித் தவஞ்செய்து கொண்டிருக்கும் உரோமசர் முதலான மகாமுனிவர்களைத் தெரிசித்தும். எ-று. (2)
சருகுதனை யேபுசித்துந் தருவினிலை தானுகர்ந்தும்,
வருமனிலந் தனையுண்டும் வார்புனலையே குடித்தும்,
பொருவு நிலவருந்தியும் வான் பொங்க னலைந்திடையிருந்தும்,
ஒருபதத்தை யெடுத்து நின்று முயர் தவஞ் செய்தவர் பலரால்.
(இ-ள்.) அந்த வில்வ வனத்தில் உதிர்ந்த சருகுகளைப் புசித்தும் தருவின் இலைகளை உண்டும் வரப்பட்ட காற்றினை அயின்றும் ஒழுகுகின்ற புனலினைக்குடித்தும் பொருந்திய நிலவை அரந்தியும் ஒளி பொங்குகின்ற பஞ்சாக்கினி மத்தியில் வைகியும் ஒரு தாளைத் தூக்கி நின்றும் உயர் தவஞ்செய்யப்பட்டவர்கள் பலர். எ-று. (3)
தருவெனவே கிதலையெல்லாந் தாண்முழுதும் புற்றெடுப்ப,
விரவு செடி கொடிகளெல்லா மேனிமுழுவதும் படரப்,
பரவு சடைமிசைக் குடம்பை பறவையினந் தானமைப்ப,
உரவுசிலை யெனமாக்களுரசநோற்பவர் பலரால்.
(இ-ள்.) உலர்ந்த கட்டையென்று கருதிக் கால்களில் சிதல்கள் புற்றமைக்கவும் முளைத்த கொடி செடிகள் எல்லாம் சரீரமுழுதும் படரவும் சடையின்மீது பறவைகள் கூடு அமைக்கவும் திண்ணிய கற்கம்பங்களென்று மிருகங்கள் உரிஞ்சவும் தவம்செய்யப் பட்டவர்கள் பலர். எ-று. ( 4)
ஆனினத்தி னீண்முலைக ளைப்புலிப் பறழருந்து,
மானிளங்கன்று புலிமுலை மகிழ்வுடன் குடிக்கும்,
கானெலிக் கிடம்புற்றிடைக் கொடுத்தராக் காக்குந்,
தேனருந்துவோர்க்குதவி யீயப்புறஞ் செல்லும்.
(இ-ள்.) இன்னும் அவ்வனத்தில் பசுக்கூட்டத்தின் நீண்ட முலைகளில் புலிக்குட்டிகள் சென்று அருந்தும் மானிளங்கன்று புலிமுலைகளில் மகிழ்ச்சியுடன் உண்ணும் கானகத்தில் திரிகின்ற எலிகளக்குப் பாம்புகள் தமது புற்றிடத்து இடங்கொடுத்துக் காக்கும் வண்டுகள் அவ்விடத்தில் மது உண்ண வந்தவர்களுக்கு தாமுண்ணுந்தேனைக் கொடுத்துவேறொரு இடத்தில் செல்லும். எ-று. 5
இன்னவாறு சோமசருரை யெழில் கொளாச் சிரமந்,
தன்னைநோக்கியே வேதனு மிகவதி சயித்து,
மின்னுசெஞ்சடைப் பரமன்மே லருச்சனை விரும்பி,
யுன்னியே சிவலிங்கம் தேதென வோர்வான்.
(இ-ள்.) இவ்விதமான உரோமசமுனிவர் வசிக்கின்ற அழகுபொருந்திய ஆச்சிரமத்தைப் பிரமதேவன் கண்டு மிகவும் மகிழ்ந்து பிரகாசிக்கின்ற சடாமகுடத்தையுடைய பரமசிவனை அவ்விடத்தில் எழுந்தருளச்செய்து சிவார்ச்சனைபண்ண விரும்பி அதற்குச் சிவலிங்கம் எதுவென உணர்வானாயினன். எ-று. 6
விரிந்த தேவமால் வரைதனில் விளங்கிய சோதி,
நிரைந்திலங்கிய விந்திரநீல விரத்தினத்தால்,
வரிந்து நின்மிதம் பஞ்சசூத்திரப்படி வகுத்துத்
திருந்தவேசெய நினைந்தனன் றேவதச்சனையே.
(இ-ள்.) விசாலமான தேவகிரியில் விளங்கியசோதி வரிசையாகப் பிரகாசிக்கின்ற இந்திரநீல இரத்தினத்தினால் பஞ்சசூத்திரவிதிப்படி வரிந்து நிர்மாணஞ்செய்யத் தெய்வத்தச்சனாகிய விசுவகன்மாவை நினைத்தான். எ-று. 7
வந்திறைஞ்சிய விசுவகன்மனை மிகமகிழ்ந்தே,
இந்துசேகாற்காலய மமைத்தி யின்றெனலும்,
புந்தியானினைந்துத் தமவிதிப்படி பொருந்த,
நந்தைமாநதித் தெக்கண தீர்த்தத்தை நாடி.
(இ-ள்.) பிரமதேவன் நினைத்தமாத்திரத்தில் தன் எதிர்வந்து வணங்கி நின்ற விசுவகன்மனை மிக்க மகிழ்ச்சியுடன் நோக்கிச் சந்திரசூடனாகிய சிவபெருமான் எழுந்தருள்வதற்கு ஓர் ஆலயம் இப்பொழுதே அமைப்பாய் என்று சொன்னவளவில் அதைக்கேட்ட விசுவகன்மனானவன் தன் புத்தியில் நினைத்து உத்தமவிதி பொருந்த நந்தைமா நதியின் தென்கரையில் ஆராய்ந்து. எ-று. 8
ஓங்குவில்வமாவனத்திடை யுயர்தருவதனின்,
பாங்கராகவே விமானமும் கோயிலும் பணித்துத்,
தாங்குமண்டப நெடுமதில் கோபுரஞ்சமைத்தே,
தீங்குறாவகை செய்தனனாலையஞ் சிறக்க.
(இ-ள்) உயர்ந்த வில்வவனத்தினிடை ஒரு விருட்சத்தின்பக்கத்தில் விமானமுங் கோயிலும் உண்டாக்கி அதனைச்சூழ அனேக மண்டபமும் மதில்களும் கோபுரமுஞ் சமைத்துக் குற்றமில்லாதபடி பார்ப்பவர்களுக்குச் சிறப்பாக ஆலயத்தை அமைத்தான். எ-று. 9
மருவு நந்தியாவட்ட மாமலரதேபோல,
பொருவிலெட்டு நாலாகிய விலக்கணம்பொருந்தத்,
திருவிமானமுஞ் சிகரமு முடிகளுஞ் செய்தே,
பரவுசெம்பொனு மணிகளுங் குயிற்றியே பணித்தான்.
(இ-ள்) பொருந்திய நந்தியாவட்ட மலர்போல ஒப்பில்லாத முப்பத்திரண்டு இலட்சணமும் பொருந்த அழகாற் சிறந்த விமானமும் சிகரமும் முடிகளுஞ் செய்து அவைகளிற் சிவந்த பொன்னாலிழைத்து நவரத்தினங்களைப் பதித்துப் பிரகாசமாக உண்டாக்கினான். எ-று. 10
அமைக்கும் வேய்புரை தோளியா மிமைய வெற்பருளும்,
உமைக்குமெண்ணிய நூல்வழிக் கோயிலுண்டாக்கிச்,
சமைத்தனன் மயன் வீதிகளானதுந் தழைக்க,
இமைக்கொளாதிடு மெண்கணனெண்ணினன் முகுர்த்தம்.
(இ-ள்) திரண்ட பசுமூங்கிலையொத்த தோளையுடைய இமோர்ப்பருவத ராஜகுமாரியான உமாம கேசவரிக்கும் சிற்பசாஸ்திரப் பிரகாரம் கோயிலுண்டாக்கி வீதிகளெல்லாந் தழைத்தோங்க மயன் சமைத்தான் அப்பொழுது இமைத்தலில்லாத எண் கண்னான பிரமதேவன் அதனைப்பார்த்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்ய நல்ல முகூர்த்த காலத்தை எண்ணினான். எ-று. 11
அஞ்சதாகிய வங்கமுமமுத சித்தியோகம்
விஞ்சுமோரையின் மதிபுகர் வியாழவுச்சத்தின்
மஞ்சுநேர்குழலுமையுடன்சிவலிங்கமலரோன்
பஞ்சமாக்கரவிதிப்படி பண்ணினன் பதிட்டை.
(இ-ள்) பஞ்சாங்கவிதிமுறைப்படி அமுதசித்தி யோகமுங் குற்றமில்லாத ஒரையும் சந்திரன் வெள்ளி வியாழன் உச்சங்கூடிய சுபதினத்தில் நீருண்ட மேகத்தையொத்த அளகபாரத்தையுடைய உமாமகேசுவரியுடன் சிவபெருமானையும் பஞ்சாக்ஷரவிதிப்படி பிரமதேவன் பிரதிஷ்டை செய்தான். எ-று.
எண்ணுநான்மறைவேதிய ரிருடிகள்சூழத்
திண்ணமாகவே யாகமவிதிமுறை தேர்ந்து
பண்ணமோமமுஞ்சாந்தியும் பலிகளுஞ்செய்தே
அண்ணலைப்பிரமன் சுயம்பாகவே யமைத்தான்.
(இ-ள்) எண்ணப்படுகின்ற நான்மறை வேதியர்களும் முனிவர்களும் சூழ்ந்திருக்க உண்மையாகம விதிப்படி தெளிந்துபண்ணப்பட்ட ஒமம்சாந்திபலி முதலானயாவுஞ்செய்து அண்ணலாகிய பரமசிவத்தைப்பிரமதேவன் சுயம்புலிங்கமாகவே அமைத்தான். எ-று. 13
கருதுமால் வசைக்காரிகை கணபதி கந்தன்,
திருவுருத்திரர் மகேசுராதவன்றிங்கள்,
மருவுநந்திசண்டே சுரர்வயிரவர் முதலா,
விரவுகின்ற தோரிருப்பத்து நாலுவிக்கிரகம்
(இ-ள்) யாவருங்கருதுகின்ற பெரிதான இமோர்ப்பருவத ராஜபுத்திரியாகிய உமைகணபதி சுப்பிரமணியர் மகாலட்சுமி உருத்திரர் மகேசுவரர் சூரியன் சந்திரன் நந்திகேஸ்வரர் தண்டியடிகள் வயிரவர்முதலான விக்கிரகங்களையும் அமைத்தான். எ-று.
மற்றுமுள்ளனவுறசவவண்மையாம்பேதம்
முற்றுமாகம விதிப்படி பதிட்டை கண்முடித்துப்,
பற்றிடந் திரிகாலமும் பூசைகள் பண்ணி,
வெற்றியே தருமுற்சவ விழாவெலா நடத்தி.
(இ-ள்) மற்றுமுள்ள விக்கிரகங்களை அமைத்து ஆகமவிதிப்படி பிரதிட்டை செய்து திரிகாலமும் பூசைபண்ணி ஆனந்தத்தை விளைவிக்கின்ற திருவிழாவையும் நடத்தினான். எ-று. 15
சந்நிதிக்கெதிராகவே பிரம தீர்த்தந்தான்,
என்னவே யொரு தீர்த்தந்தன் பெயரினாலியற்றி,
மி்ன்னுநூலிடைவாணியுந் தானுமாய் வேதன்,
மன்னுகாலமநேகமங்கி ரந்தனன்மகிழ்து.
(இ-ள்) சிவபெருமான் சந்நிதிக் கெதிராகப் பிரமதீர்த்த மென்றொரு தீர்த்தம் தன்பெயரால் உண்டுபண்ணிப் பிரகாசிக்கின்ற நூல்போன்ற இடையையுடைய வாணியுந்தானுமாக அநேககாலம் மகிழ்ச்சியுடன் அங்கிருந்தனன். எ-று. 16
வேறு.
பிரமபுரமெனவந்தப் பெரும்பதிக்குப் பேருரைத்துப்,
பரவுமறைவேதி யர்களநேகரையும் படைத்தருளி,
அரனுடனேயு மைமகிழவந்தி சந்திநடுவிடைகள்,
விரவுசிவாகமப் படியே மேலானபூசை செய்தான்.
(இ-ள்) பிரமதேவனானவன் தன்பேர் விளங்கும்படிக்கப் பிரமபுரமென்று பெயரிட்டுப்பரவுகின்ற வேதோத்தமர்கள் அநேகரைச்சிருட்டித்துவைத்துச் சிவபெருமானுக்கும் உமாமகேஸ்வரிக்கும் மூன்று காலமும் விரிந்தசிவாகமத் தின்பிரகாரம் பூசைபண்ணினான். எ-று. 17
அப்பரிசேபூசைசெய் யுமந்நாளிலோர் ஞான்று,
செப்பரி தாமணிமயமாய்ச் சிவலிங்கந்தனிலிருந்தோர்,
மெய்ப்படிவமுறத் தோன்றி விளங்குமையாளுடனாக,
ஒப்பரிதாஞ்சோதியுடனோங்கியெழுந்திடக் கண்டான்.
(இ-ள்) பிரமதேவனானவன் மேற்சொல்லிய வண்ணம்சிவபூசைசெய் யும்நாட்களில்ஓர்நாள் சொல்லற்கரிய மாணிக்க மயமாகச் சிவலிங்கத்திலிருந்து எழ அந்த ஒளியில் சிவபெருமானும் உமாமகேஸ்வரியும் தோன்றக்கண்டான். எ-று. 18
கண்டுமிகமனம் வெருவிக்கசிந்துநெகிழ்ந்துளமுருகித்,
தெண்டனிட்டுப்பஞ்சாங்கவட்டாங்கச்செயலாகப்,
பண்டைமறைவிதிப்படியேபலகாலும் பணிந்தேத்திப்,
புண்டரிகவுடையானைப் புண்டரிகன்போற்றுதலும்.
(இ-ள்) பிரமதேவனானவன் சோதி சொரூபத்தைக் கண்டவுடனே அஞ்சி உள்ளம் கசிந்து நெகிழ்ந்து உருகிப் பஞ்சாங்க அஷ்டாங்க விதியாகத் தெண்டனிட்டுப் பழமையான வேதவிதிப்பிரகாரம் புலித்தோலை உடையாகத்தரித்த சிவபெருமானைத்தோத்திரம் பண்ணினமாத்திரத்தில். எ-று. 19
இந்துற்ற சடைமுடியாரிறைவிமுகமதிநோக்கிச்,
சந்தசுபாராயணனாஞ்சதுர்வேதன் பூசையினால்,
வந்தித்துப் போற்றுதலால்வந்தபிழையாம்பொருத்தேம்,
சிந்தித்துவரமுதவத் தேவியே நீயும் பொறுப்பாய்.
(இ-ள்) சந்திரசூடனாகிய பரமேசுவரன் பார்வதியினுடைய பூரணச்சந்திரோதயம் போன்ற முகத்தைப் பார்த்து தேவி சதுர்வேத பாராயணனாகிய பிரமதேவன் நம்மை வந்தனை செய்து போற்றுதலினால் அவன் பிழையை யாம் பொறுத்தோம் அவ்வாறே நீயும் பொறுத்தருள்வாய் என்றார். எ-று.
சமையுன்பா லிருத்தலினாற் சமாபதியா முன்பெயரும்,
எமையுந்தான் சுத்தரத்தினேசனென்றி யாருந்துதிப்பர்,
உமையுன்பேராற்றீர்த்தமென்றுனது கோயின்முன்னர்,
அமையென்றே யருளவுமை யருள்விழியினாலமைத்தாள்.
(இ-ள்) பரமசிவனானவர் பின்னுந் தேவியைப் பார்த்துப் பெண்ணே பொறுமை உன்னிடத்திலிருத்தலினால் சமாபதியென்னந் திருநாமம் உனக்கு உண்டாகும் எமையும் சுத்த இரத்தினேசுரர் என்பதாக இயாவரும் துதிப்பார்கள் ஆதலினால் உன் பெயரால் ஒரு தீர்த்தம் உன்னடைய கோயிலின் முன்னாக அமைத்தருள்வாயென்று சொல்ல அப்பொழுதே அம்மையும் கிருபாநோக்கத்தினால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினாள். எ-று. 21
தந்தயிந்தத் தீர்த்தந்தான் சமாபதியாமெனவாகும்,
வந்தயுக நாலுக்கு மருவுமிந்த வளம்பதிதான்,
முந்துகத்திற் பிரமபுரமொழிந்த திரேதாயுகத்தில்,
உந்தனுடைப் பெயராலே சமாபுரமா முமைகேளாய்.
(இ-ள்) இவ்வண்ணம் உமையவள் பரமசிவன் சொற்படி தீர்த்தத்தைச் சிருட்டித்தவளவில் பரமேசுவரன் அம்மையைநோக்கிப் பெண்ணே நீ கேட்பாயாக உன்னால் சிருட்டிக்கப்பட்ட இந்தத் தீர்த்தம் சமாபதியென்னும் பெயரையுடையதாகும் நான்கு யுகத்திலும் நிலைபெற்ற இந்தச்க்ஷேத்திரம் முதல் யுகமாகிய கிரேதாயுகத்தில் பிரமபுரமென்றும்திரேதாயுகத்தில் உன்னுடைய பெயரால் சமா புரமென்றும் பெயரையுடையதாகும். எ-று. 22
நாடுதுவாபரயுகத்தினன் னந்தாபுரமாகுங்,
கூடுங்கலியுகந்தன்னிற் குறித்த விரத்தினபுரமாகும்,
வீடுபெறு மெவரேனும் விரும்பியிந்தத் தலத்திலிருந்து,
தேடிநம்மைத் தெரிசித்தாற் செல்வமுடன் பெறுவர்முத்தி.
(இ-ள்) துவாபரயுகத்தில் நந்தாபுரமென்றும் கலியுகத்தில் இரத்தினபுரமென்றும் பெயரையுடையதாகும் அன்றியும் மோக்ஷத்தைப்பெற விரும்புவோர்கள் இந்தத் தலவாசம்பண்ணி நம்மைத் தெரிசித்தால் இகத்திற்குரிய செல்வத்தோடு மோக்ஷத்தையும் அடைவார்கள். எ-று. 23
விருத்தமெனு வனம்வில்வ விருக்கமு நம்முருவாக,
இருக்குமிந்த விருடிகளு மெமத பங்கிலொருகூறாம்,
திருக்கிலின்னம் பிரமர்பலர் செயும்பூசை தெரிசிக்க,
உருக்கமுடன் விருடிகளு முரோமசரு மிங்கிருந்தார்.
(இ-ள்) பல விருட்சங்களால் நிறைந்த இவ்வனத்தினுள் இருக்கின்ற வில்வ விருட்சங்களெல்லாம் நமது சொரூபமாகும் இவ்வனத்திலிருக்கின்ற இருடிகள் எல்லாம் எமது பங்கில் ஒருகூறாகும் இஃதன்றியும் மாறுபாடில்லாத அனேகம் பிரமர்கள் நமக்குச் செய்யும் பூசையைத் தெரிசிக்க அன்புடன் அனேக முனிவர்களோடு உரோமசமுனிவரும் இங்கு வசித்தார். எ-று.
24
முன்னநாமித்தலத்தின் முனிவரனேகம்பேர்க்கு,
நன்னுதலாய் வரங்கொடுத்தோ நமது சடைமுடிமீதில்,
மின்னு கங்காநதிச்சலமேவீறு நந்தாநதியாகும்,
பன்னபஞ்ச பாதகங்கள கலுமிந்தப் பதிதனிலே.
(இ-ள்) பிறைபோலும் நல்ல நெற்றியையுடைய பெண்ணே முன்னாளில் நாமிந்தத் தலத்தில் எழுந்தருளியிருந்து அனேக முனிவர்களுக்கு வரங்கொடுத்தருளினோம் நமத சடையிலிருக்கின்ற கங்காசலமே பெருமைபொருந்திய நந்தாநதியாகும் இந்தத் தலத்தில் கொடிய பஞ்சமா பாதகங்களும் போம். எ-று. 25
அஞ்சுகுரோசத்தூரமாகுமந்தத்தலத்தெல்லை,
விஞ்சவே யெவரேனு மிதித்தவுடனே துலையாப,
பஞ்சமாபாதகங்கள் பறந்தோடு மிப்பதியில்,
வஞ்சமாமனத்தவரும் வந்திருக்கிற் கதியடைவார்.
(இ-ள்) அந்தத் தலத்திற்கெல்லை ஐந்து குரோச தூரமாகும் இந்த எல்லைக்குள் யாவராயினும் ஓரடியிடில் அவர்களுடைய மகா பாதகங்களெல்லாம் பறந்தோடிப்போகும் வஞ்சனையுள்ளவரானாலும் இப்பதியில் வசித்தால் மோட்சத்தை அடைவார்கள். எ-று 26
மருவிய விப்பதிமகிமை மாதேகாணென்றுரைத்துப்,
பரவகின்ற பிரமாவைப் பார்த்துனது பூசையினால்,
உரவுபிரமத்துவந் தானுண்டாக வுனக்கென்று,
திரமுறு நல்வரங்கொடுத்துச் சிவலிங்கத்துடன் கலந்தார்.
(இ-ள்) இந்தச் க்ஷேத்திரத்தின் மகிமையைப் பெண்ணே நீ அறிவாயென்று உமாதேவியாருக்குரைத்துப் பின்பு தன்னைப் பூசித்துத் துதிக்கின்ற பிரமதேவனை நோக்கி ஓ பிரமனே உனக்குப் பிரமத்துவம் உண்டாகக்கடவதென்று திரமான வரங்கொடுத்துச் சிவலிங்கத்துடன் கலந்தருளினார். எ-று.
மென வெழில்பெறு சூதனுமினிது,
பன்னவே சவுனகனும் பரிவுடனுண் மகிழ்வாகி,
அன்னவாகன னெவ்வாறரனைத் தோத்திரஞ்செய்தான்,
என்னநேர்வரம்பெற்றா னென்பது கூறெனச் சொல்வான்.
(இ-ள்) இவ்வண்ணமாக அழகிய சூதமகாமுனிவர் அன்புடன் சொன்ன அளவில் அதைக்கேட்ட சவுனகனும் மகிழ்வடைந்து சுவாமி பிரமதேவன் எவ்வண்ணம் சிவபெரமானைத் தோத்திரம் செய்தான் என்ன நேர்மையான வரத்தைப்பெற்றான் அவற்றைச் சொல்லியருளவேண்டு மென்று கேட்கச் சூதமகாமுனிவர் சொல்லத்தொடங்கினார். எ-று.
சிவபூசைச் சருக்கம்
முற்றுப்பெற்றது.
ஆகச்செய்யுள் -- 86.
~~~~~~~~~~~~~~
உ
சிவமயம்.
~~~~~~~~~~~~~~~~
பிரமபுரப் புராணத்திற் சிவனையன்று பிரமனுரை
தோத்திரஞ்செய் பெருமைதன்னைப்,
பரவுமெவர்களுக்குநாமுரைத்ததில்லைப்
பரமர கசியமாகும் பாரின்மீது,
விரவுதிருநீற்றுடன் கண்டிகையணிந்து மேலாம்
பஞ்சாக்கரமோதாதபேர்க்கும்,
உரவுசிவபூசை யில்லாதார்க்கும் வேதவுரையைப்
பொய்யென்றுரைக்கு நாத்திகர்க்கும்.
(இ-ள்) பிரமபுரபுராணத்தில் பரமேசுவரனை அந்நாளில் பிரமதேவன் வாக்கினால் தோத்திரம் செய்த பெருமையைப்
பரவகின்ற யாவருக்கும் நாம் சொன்னதில்லை இது பரமரகசியமாகும் ஆதலால் இந்த மகத்துவத்தைச்
சொல்லுகிறோமென்று சூதமகாமுனிவர் சௌனகருக்குச் சொல்லுகின்றார் பூலோகத்தில் நிறைந்த விபூதியையும்
உருத்திராட்சத்தையும் அணிந்து மேலான பஞ்சாட்சரத்தைச் செபிக்காத பேர்களுக்கும் ஆனந்தத்தை விளைவிக்கின்ற
சிவபூசைபண்ணாதபேர்களுக்கும் வேத வாக்கியங்களைப் பொய்யென்று நிந்திக்கின்ற நாஸ்திகருக்கும். எ-று. 1
சிவநிந்தைசெய்வோர்க்கும் பாசண்டர்க்குஞ் சிவனை
நினையாதார்க்கும் செப்பவொண்ணா,
கெவனிந்தத் தோத்திரத்தைச் செவியிற் கேட்கி
லெப்பாவஞ் செய்தாலுமடைவன் முத்திப்,
பவமிகுந்த பாதகங்களனேகஞ்செய்தோர் பரதிரவியங்
கவர்ந்தோர் பரிவில்லாதார்,
அவரன்னமுண்டோர் சிரார்த்தம்புசித்தோ ரடாத
வண்டிதனை நுகர்ந்தந ரவகுணத்தோர்.
(இ-ள்) சிவநிந்தனை செய்யப்பட்டவர்களுக்கும் பாசண்டருக்கும் சிவனை நினைக்காதவர்களுக்கும் சொல்லுதற்கரிதாகிய
இந்தத் தோத்திரத்தை யாவராயினம் காதினாற்கேட்டால் அவர்கள் பாவமெல்லாம் நசித்துமோட்சத்தை அடைவார்கள்
பாவமிகுந்த பாதகங்கள்செய்த அநேகம்பேர்களும் பாதி வியங்களை அபகரித்தவர்களும் அன்பு செய்யாதார்
அன்னத்தையுண்டவர்களும் சிரார்த்தங்களில் புசித்தவர்களும் உண்ணத்தகாத வுணவுகளை உண்டவர்களும்
அவகுணமான துற்குணத்தவர்களும் எ-று. 2
உண்டிதனைப் பந்திபேதகஞ்செய்துண்டோ ரொருவருக்குக்
கொடுப்பதனை விலக்கல்செய்தோர்,
கொண்டவிரதந்தவிர்ந்தோர்பொய்சொல்வோர்கள்
கூடிய வேள்வியைக் குலைத்தோர்
கொடியபாவி மிண்டினுடனெளியாருக் ககிதசெய்தோர்
மேவிய பொய்க்கரியுரைத் தோரியாவரேனும்,
புண்டரிகனுரைசெய் தோத்திரத்தைக் கேட்கிற்
புவிமீதிற் புனிதராயடைவர்முத்தி.
(இ-ள்.) பந்தியில் உணவுசெய்யும்போது தனக்கு நல்லுணவும் பிறருக்கு வேறுவிதமான உணவும்செய்து புசிப்பவர்களும்
கொடுப்பதை விலக்குகின்றவர்களும் தானெடத்துக்கொண்ட விரதத்தை விடப்பட்டவர்களும் பொய்சொல்லிய பேர்களும்
கூடினயாகங்களைக் குலைத்தபேர்களும் கொடிய பாவஞ் செய்தபேர்களும் எளியாருக்கு இடர்பண்ணினவர்களும்
பொய்ச்சாட்சி சொன்னவர்களும் அன்றி இன்னும் எவ்விதப் பாதகங்களைச் செய்தவராயினும் பிரமதேவன் உரைசெய்த
தோத்திரத்தைக் கேட்பாராயின் உலகத்தில் புண்ணியராய் வசித்துப் பின்மோட்சத்தை அடைவார்கள். எ-று. 3
இத்தனைகாலமெவர்க்கு முரைத்ததில்லையே
காந்தப்பொருளாகு மிதனையின்று,
பத்தியுடன்கேட்கையினா னீயுமிக்கப் பரமமுனி
யாககையினாற் பகர்வேன்கேட்டி,
சுத்தரத்தினவிலிங்கத்திற் பிரமமான சோதி-
யெழுந்திடக் கண்டுதொழுதுவேதன்,
நித்தகத்த வத்தபத்தர்க் கெளியாயென்று நின்று
பரவசனாகிப் போற்றல்செய்வான்.
(இ-ள்) இந்நாள்வரையிலும் யாம் ஒருவருக்குஞ் சொன்னதில்லை இரகசியப் பொருளாகிய இப்பொருளை இப்பொழுது
அன்புடன் கேட்கின்றமையாலும் நீயும் பரம சிலாக்கிய முனிவனாகையினாலும் சொல்லுகின்றேன் கேட்பாயாக அந்தச்
சுத்த ரத்தின விலிங்கத்தில் பரப்பிரமசோதிப் பிரகாசம் எழுந்ததைக்கண்டு பிரமதேவன் தொழுதுவணங்கி நித்தனே
கர்த்தனே அத்தனே அடியார்க்கெளியவனே யென்று ஆநந்த பரவசத்தனாகித் தோத்திரம் செய்வானாயினான். எ-று.
4
சாம்பசிவமகாதேவுருத்திரபோற்றி
சச்சிதாநந்தபரயோகிபோற்றி,
பாம்பணியும் வேணி மறைமுடிவேபோற்றி
பரமகலியாணிசத்தி யதுரியா போற்றி,
யாம் பரவுமீச மகேசுரனேபோற்றி
யபயகரனேகாலகாலபோற்றி,
தேம்பொருளே யாதியந்தநடுவிலாத
திரியம்பகவம்பிகை நாதபோற்றிபோற்றி.
(இ-ள்) சாம்பசிவ மகாதேவுருத்திரனே போற்றி சச்சிதாநந்த பரயோகியானவனே போற்றி சர்ப்பா பரணமணிந்த
சடாமகுடத்தையுடையோனாகிய வேதாந்தப் பொருளே போற்றி பரம கலியாண சத்தியப்பொருளாகிய துரியனே போற்றி
யாங்கள் பரவித்துதிக்கின்ற ஈச மகேசனேபோற்றி அபயாஸ்தத்தை யுடையவனே போற்றி காலகாலனே போற்றி
வாசனைப்பொருளானவனே ஆதிமத்தியாந்தரகிதனான திரிநேத்திரதாரியே உமாமகேஸ்வரி நாதனே போற்றி போற்றி.
எ-று. 5
ஈசான தற்புருட வகோரவாம விறைவசத்தியோசாத வேகரூப,
தேசான சூக்குமனேயனேகரூப சிற்பரானந்த வோங்காரரூப,
ஆசாரமானவனே ரூபாரூப வதலவிதலாதி யண்டமானரூப,
வாசாமகோசா வேதாந்தரூப மருவுதற்பரானந்தரூபா போற்றி.
(இ-ள்.) ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம் சத்தியோசாதமென்னும் பஞ்சானனங்களை யுடைய இறைவனே ஏகரூபனே
சூக்குமரூபனே அனேகரூபனே சிற்பரானந்த ஓங்காரரூபனே ஆசாரமானவனே ரூபாரூபனே அதலவிதலாதி அண்ட
சொரூபமானவனே வாசாமகோசரனே வேதாந்த ரூபனே தற்பரானந்த சொரூபனே போற்றி போற்றி. எ-று. 6
ஆறாமக்கா மெட்டாமக்காங்க ளைம்பத்
தோரக்கரங்களனைத்துமேனி,
நீறாயமுதல்வ சந்திரபானு நேத்திர நின்மல
பண்டித வயித்திய நிருவிகார,
வீறாமியோகியரித யகமலவாச
விமலகயிலாச நிராமயவுலாச,
பேறாகுஞ்சுத்த ரத்தினேசுரனே போற்றி
பிஞ்ஞகனே யுன்றிருத்தாள் போற்றி போற்றி.
(இ-ள்) சடாட்சரம் அட்டாட்சரம் ஐம்பத்தோரட்சரங்கள் முதலான அட்சரங்களையெல்லாம் நீறாக்கித்
திருமேனியிற்றரிக்கும் முதல்வனே சோமசூரிய நேத்திரனே நின்மலனே எல்லாம் வல்லவனே பவப்பிணியை நீக்கும்
வயித்தியனே விகாரமில்லாதவனே பெருமைபொருந்திய யோகியர் இதய கமலத்தில் வாசம்பண்ணப்பட்டவனே
மலாகிதனே கைலாசனே நிராமயனே உல்லாசனே அடியார்கள் பேறாகிய சுத்த ரத்தினேசுரனே போற்றி பிஞ்ஞகனென்னு
நாமத்தை யுடையவனே உனது திருவடிகள் போற்றி போற்றி. எ-று. 7
அடியேன்செய் யபசாரமனேகங்கோடி யத்தனையும்
பொறுத்தருள்வாய் போற்றி யென்றே,
முடிமீதுகுவித்த கையானின்று போற்ற
முக்கணானெண்கணன்பான் முனிவுமாறிப்,
படிமீதில்வேண்டும்வரங்கொடுப்பேங்கேளாய்
பங்கயனேயென வேதன் பகர்வானென்றும்,
கொடிதான விராசதமாங் குணந்தானென்பாற்
குறுகாமல் வரங்கொடுப்பாயென்று பின்னும்.
(இ-ள்)அடியேன் செய்த அநேகங்கோடி அபசாரங்களைப் பொறுத்தருளவேண்டுமென்று சிரசின்மேற் குவித்த கையினனாகி
நின்று போற்ற அப்பொழுது பரமசிவன் பிரமதேவன்மேல் உண்டான முனிவுநீங்கி ஓ பிரமனே உனக்கு வேண்டும்
வரங்களைக் கேட்பாயாக என்று சொல்ல அதைக்கேட்ட பிரமதேவன் சுவாமி கொடுமையான இராசதகுணம் என்பால்
வாராதிருக்க வரங்கொடுப்பாயென்று சொல்லிப்பின்னும். எ-று. 8
தேவனேயுன்மீதில் வைத்தபத்தி சிதையாம-
லென்னுளத்தி லிருத்தல்வேண்டும்,
மேவியிந்தச் சுத்த ரத்தினவிலிங்கந்தன்னில் விளங்கி
யிவ்வாறேயென்று மிருத்தல் வேண்டும்,
யாவராயினுந் தெரிசித்தோர் கட்கெல்லா
மிட்டகாமியங்களெல்லாமி னிதுநல்கிப்,
பாவவினைதீர்த்துமுத்தியுதவவேண்டும்
படிமீதிலிப்பிரம புரத்திற்றானே.
(இ-ள்.) ஓ தேவதேவனே உன்மீதில் யான்வைத்த பத்திசிதையாமல் என்னுளத்தில் இருத்தல் வேண்டும் இப்பூமியில்
பிரமபுரத்தில் என்னால் ஸ்தாபிக்கப்பட்ட சுத்தரத்தின விலிங்கத்தில் இன்று சோதிமயமாய் விளங்கிய வண்ணமே என்றும்
விளங்கி அருளல் வேண்டும் உன்னைத் தெரிசித்தவர் யாவராயினும் அவர்கள் விரும்பிய இஷ்ட காமியங்களைக்
கொடுத்து அவர்களைப்பற்றிய பாவகருமங்களைத்தீர்த்து முத்தியளித்தருளவேண்டும். எ-று. (9)
பிறந்தோர்க்கு மிருந்தோர்க்கு மிறந்துளோர்க்கும்
பேரின்பமாம் பதவி யுதவவேண்டும்,
அறந்தானோர் சிறிதுசெய்தபேர்கட்கெல்லா மனேக
புண்ணியஞ் செய்த பலனுதவ வேண்டும்,
சிறந்தொருவர்க்கமுதளித் தாலா யிரம்பேர் சேர்ந்து
புசித்திடு பலனேகொடுத்தல்வேண்டு,
மறந்த சிந்தையாரேனு மொரு நாள்வைகில்
வளர்ந்துறையும் பாவமெல்லாம கற்றவேண்டும்.
(இ-ள்) இந்தஸ்தலத்தில் பிறந்தவர்கட்கும் இருந்தவர்கட்கும் இறந்தவர்கட்கும் பேரின்பமாகிய மோட்ச பதவியைக்
கொடுத்தருளவேண்டும் இந்த ஸ்தலத்தில் சிறிது தருமஞ்செய்தவர்கட்கு அனேக புண்ணியபலனைக்
கொடுத்தருளவேண்டும் ஒருவருக்கு அன்னங்கொடுத்தால் ஆயிரம்பேருக்குக் கொடுத்தபலனை அளித்தருளவேண்டும்
எப்பொழுதும் பாவவினையையே பயின்றவராயினும் அவர்கள் இத்தலத்தில் தங்குவாராயின் அவர்கள் பாவங்கள்
யாவற்றையும் அகற்றல்வேண்டும். எ-று. (10)
மதிக்குமின்றுபோல விந்த வைகாசத்தின் மருவுபௌரணைத்
தினத்தின் மகிழ்ச்சியாகக்கதிக்கினிய விந்தவிரத்தின
விலிங்கந்தன்னைக் கலந்தபஞ்ச கவ்வியத்தா
லெண்ணெய்க்காப்பால்,
விதிப்படியே யபிடேகஞ்செய்து சால மேனியெலா
முபசாரத்தாலேயொற்றி,
இதற்குப்பின் பரிவட்டமியல்பாச் சுற்றியிணர்த்து
ம்பைமாலையினை யிணையச்சாத்தி.
(இ-ள்.) இயாவராலு மதிக்கப்பட்ட இன்றைத் தினம்போல வைகாசிமாதப் பௌரணையில் ஆனந்தத்தை விளைவிக்கின்ற
முத்தியைக்கொடுக்கும் இந்தச் சுத்தரத்தின இலிங்கத்தைப் பஞ்சகவ்வியத்தினாலும் எண்ணெய்க்காப்பினாலும் விதிப்படி
அபிஷேகஞ் செய்து உபசாரத்துடன் திருமேனியில் ஒற்றாடை யிட்டுப் பின்பு பரிவட்டஞ்சுற்றி அலர்ந்த தும்பை
மாலையைப் பொருந்தத் தரித்து. எ-று. 11
யாவர் தொழுதாலுமிந்த விலிங்கந்தன்னிலிப்படியே
தெரிசித்தோர் கண்ணிற்காண,
சேவைகொடுத்தவர் கடமக்கந்தந்தன்னிற் சிறந்த
சாயுச்சியமே கொடுத்தல்வேண்டும்,
மேவியவர் தமைத்தெரிசித்தோர் கட்கெல்லாமிக்க
செல்வ முதவியவர் கிளைஞரோடுந்,
தாவுகயிலாயத்திற் சாரூபத்தைத் தரித்திருந்து
பின்னர் முத்தியடையவேண்டும்.
(இ-ள்) இயாவராயினும் யான் மேற்சொல்லிய வண்ணம் அபிஷேகம் முதலியவைசெய்து வணங்கினால் இன்று
தோன்றியவாறே அவர்கள் கண்ணிற்காணச் சேவைகொடுத்து இறுதிக்காலத்தில் சிறப்பான சாயுச்சியபதவியும்
கொடுத்தருளவேண்டும் அப்படித் தெரிசித்தவர்களைத் தெரிசித்தவர்கட்கெல்லா மிக்க பாக்கியத்தைக் கொடுத்து அவர்கள்
சுற்றத்தாருடன் சாரூபத்தைப் பெற்றுக் கயிலாசத்திலிருந்து பின்பு மோட்சத்தை யடைய வேண்டும். எ-று. 12
மன்னுவைகாசிப் புகரோன்வாரந் தன்னில் வந்து
சிறுகாலைநந்தைநதியின் மூழ்கிப்,
பின்னர் சமாபதித்தீர்தித்தம்படிந்து கோயிற்பிரதக்
கணஞ் செய்தம்மை யகிலாண்டதேவி,
தன்னை மணமல்லிகை மாலையினாற் சாத்திச்
சந்தனமு மரிசனமுஞ் சிறக்கத்தீட்டிப்,
பன்னுபச்சைமாவோடையமுது நல்லபாலுடனி
வேதித்துப் பணிந்துபோற்றி.
(இ-ள்) நிலைபெற்ற வைகாசிமாதம் சுக்கிரவாரம் உதயகாலையில் நந்தாநதியில் ஸ்நாநம்பண்ணிப் பின்பு
சமாபதித்தீ்த்தத்தில் மூழ்கித் திருக்கோயிலைப் பிரதக்ஷணஞ்செய்து அகிலாண்டநாயகிக்கு மணங் கமழும்
மல்லிகைமாலைசாத்திச் சந்ததனமு மஞ்சளும் சிறப்பாகத் தரித்துப்பச்சைமாவும் பஞ்சாமிருதமும் பாலுடன் நிவேதனஞ்
செய்து பணிந்து போற்றி. எ-று. 13
மங்கையர்களிப்படியே நாலுவாரமதிப்புடன்
போற்றிடிற் சென்மமலடுநீங்கித்,
தங்கிய கர்ப்பந்தரித்து மகவுண்டாகித்
தாமரைமின்னிருவாருடானும் பெற்றே,
எங்குநிறை புகழுடனே வாழவேண்டு
மெழில்பெறவே மாசியெனுமாதந்தன்னிற்,
பொங்குநந்தாநதி மூழ்கிநீறுசாத்திப் பொருந்திய
கண்மணிமாலை நிறையப் பூண்டு.
(இ-ள்) மாதர்களும் இவ்வண்ணமே வைகாசி மாதத்தின் நான்கு சுக்கிரவாரத்திலும் போற்றினால் சென்மலடு நீங்கிச்
சந்ததியுண்டாகி இலக்குமி சசுவதி இருவர்கடாட்சமும் பெற்று எங்கு நிறைபுகழுடனே வாழவேண்டும் அல்லாமலும்
மாசிமாதத்தில் நந்தாநதியில் மூழ்கி விபூதிதரித்தலுடன் உரத்திராட்சமாலையும் பூண்டு. எ-று. (14)
தெக்கணத்தினுறைமூர்த்திக் கெதிரதாச்
சிறக்கவெழுதின மஞ்சுதினமூன்றாகும்,
தக்க தினமன்றியொரு தினந்தானேனுஞ்
சாந்தமுடனிருந்து பஞ்சாக்கரஞ்செபிக்கில்,
உக்கிரமாம் பூதவேதாளத்தோடு முடன்
பிரியாப்பிரம ராக்கதி பேயெல்லாம்,
மிக்கவவரைக்காணி லரியைக்கண்டு
வெருவுமதமரவென விட்டேக வேண்டும்.
(இ-ள்) தச்சனாமூர்த்தி சன்னதியில் ஏழுதினமாயினும் ஐந்துதினமாயினும் மூன்றதினமாயினும் அல்லது ஒருதினமாயினும்
சாந்தகுணத்துடனிருந்து பஞ்சாக்ஷரம் செபித்தவர்களைக் காணில் உக்கிரமான பூதவேதாளங்கள் நீங்காத
பிரமராக்ஷதிகள் பேய்கள் முதலானவைகளெல்லாம் சிங்கத்தைக்கண்ட யானையைப்போல் பயந்தோடல் வேண்டும்.
எ-று. (15)
இப்படியே யிவ்வரங்க ளனைத்தும்வேதனெம்-
பிரான்றனைக்கேட்க வுளமகிழ்ந்தே,
அப்படியேயருளின மென்றுரைத்தாரென்ன-
வகங்களிகூர்ந்தே சவுனகன்றான்கூறும்,
மைப்படியுங் குழலுமையாளுடனே துய்யமாமணியீ
சுரன்றனக்கு மகிழ்ந்தே வேதன்,
எப்படித் தான்றிருவிழாநடத்தல் செய்தானென்ப
தனைக்கூறுமெனச் சூதன்சொல்வான்.
(இ-ள்.) பிரமதேவன் இவ்விதமான வரங்களையெல்லாந் தந்தருளவேணுமென்று பரமபதியைக் கேட்கச் சிவபெருமான்
அவ்வண்ணமே தந்தளினோமென்று சொல்லினாரென்றதைக்கேட்ட சௌனகன் அகமகிழ்ச்சிகொண்ட சூதமுனிவரை
நோக்கிச் சுவாமி சமாபதியாருக்கும் துய்யமாமணியாருக்கும் பிரமதேவன் நடத்திய திருவிழாச்சிறப்பையும்
சொல்லியருளவேணுமென்று கேட்கச் சூதமுனிவர் சொல்லத்தொடங்கினார். எ-று. (16)
வரம்பெற்ற சருக்கம்
முற்றிற்று.
ஆகச்செய்யுள் -- 102
-------------------
உ
சிவமயம்
ஐந்தாவது
திருவிழாச் சருக்கம். (103-183)
~~~~~~~~~~~~~~~~~
வேறு.
சிந்தைமகிழ்ந்தயனர்ச்சனை செய்துதிருநாட்கள்
சந்ததமுஞ்செய்து வந்திடுசெயலெதுதானென்னிற்
கந்தமிகுந்த சுவாசுகமாரன் களிகூர
வந்ததுமுந்துறு சித்திரைதானெனு மறிமாதம்.
(இ-ள்) பிரமதேவன் மனமகிழ்ச்சியுடன் சிவார்ச்சனை செய்த பின்னடத்திய திருவிழாச்சிறப்பு எவ்வாறென்னில்,
வாசனைமிகுந்த நல்ல புட்பபாணத்தையுடைய மன்மதன் களிப்படையும்படி வருகின்ற வசந்தகாலத்தில்
மேடமாதமென்கின்ற சித்திரைமாதம் பிறந்தது. எ-று (1)
கோடலர் சண்பகநீடுறு புன்னைகுருக்கத்திப்
பாடலாமாமகிழ் கேதகைமாதுளை பைம்பூகம்
எடலருங்கனி காரமொடார மிருஞ்சோகம்
காடணிகூவிளை புன்குநறும்கனிகற்சூரம். (2)
(இ-ள்) கொம்புகள்விரிந்த சண்பகம், நீண்டபுன்னை, குருக்கத்தி, பாதிரி, மகிழ், தாழை, மாதளை, பசுமயையுடைய கமுகு,
ஏடவீழ்ந்த கோங்கு, சந்தனம், பெரிய அசோகம், காவிற்கு அலங்காரமாகிய வில்வம், புன்கு, நறிய கனிகளைத்தருகின்ற
பேரீந்து. எ-று. (2 )
தாழைபலாவர் தாதகிதோடு தருங்குந்தம்
வாழையொடாசினி நீடதவால் மருதம்பன்னீர்
காழையுரும்பெரு லாசைசெருந்திகருஞ்சம்பு
மாழைபெருந்தரு வாமலகத்துடன் மலிசோலை.
(இ-ள்) தென்னை, பலா, மலர்ந்த ஆததி, விரிந்த குருந்தம், வாழை ஈரப்பலா, நீண்டஅத்தி, ஆல், மருதம், பன்னீர்,
வயிரம்பொருந்திய பெரிய வாகை, செருந்தி! கருநாவல், பெரிய புளிமா, நெல்லி, முதலான விருட்சங்களால் நிறைந்த
சோலை. எ-று (3)
மல்லிகை பட்டிகை கருமுகநறவணி மந்தாரம்
எல்லையில் வாசமலிந்த செவந்தியோடிருவேலி
முல்லைகடுக்கை மணந்தருத மனகமுதலாக
அல்லிதருஞ்சிறு சண்பகவல்லி யநேகங்கள்.. (3)
(இ.ள்) மல்லிகை, இருவாக்ஷி, அரும்புநிறைந்த மந்தாரம், வாசனைமிகுந்த செவ்வந்தி, மரு முல்லை, மருக்கொழுந்து,
அகவிதழை யுடைய சிறுசண்பகம் முதலான கொடிகளும் விருக்ஷங்களும் அனே
கம். எ-று. (4)
இத்தகையாகிய சோலையின்வாவிகளிடையெங்கும்
மெத்தியதாமரை செங்கழுநீரலர் விரிநெய்தல்
கொத்தலர் செங்கிடை வள்ளையரத்தங்குளிர்நீலம்
நத்தொடுபுட்கயல் த்திமிகுந்தே நனிவாழும். (5)
(இ-ள்) இத்தன்மையான சோலையினடுவிளுள்ள தடாகளினிடமெங்கும் நிரம்பிய தாமரையும் செங்கழுநீரும்
மலரவீழ்ந்தநெய்தல்களும் கொத்துகளலர்ந்த சென்நெட்டியும் வள்ளைத்தண்டும், செம்பரத்தையும் குளிர்ச்சியும்பொருந்திய
நீலோற்பலமு ம் சங்கும் பட்சிகளும் கயல்மீன்களும் மிகுந்து வாழநிற்கும். எ-று. (6)
கூவியகோகில வோசைகளாசைகள் குடிகொள்ளத்
தாவியமாமயி லாடிடவண்டுகடான்பாடப்
பாவியல்சேர்திரு வாசகநாளும் பைங்கிள்ளை
நாவின்மொழிந்திடு சோலைகள்சூழ்தரநடுவாக. (6)
(இ-ல்) அச்சோளையினவடுவாகக் கூவப்பட்டு குயிலின் ஓசையைக் கேட்டு அன்புகுடிகொள்ளத் தாவிச் செல்கின்ற
மயில்களாட வண்டுகள்பாடப் பாவிலக்கனமமைந்த திருவாசகத்தைப் பசியகிளிகள் நாவினார் சொள்ளநிற்கும். எ-று. (7 )
பசைந்தெழுபுனல் சுற்றுறுகுழி நடுவண்பாங்காக
இசைந்துறுசந்திரகாந்தமெனுஞ்சிலையேகொண்டே
அசைந்துறுதென்றல் வருந்திசையது முகமேயாக
வசந்தவிமண்டப மொன்றெழிலாக வகுத்தேதான். (7)
(இ-ள்) பிரமதேவனானவன் விரும்பி அச்சோலையிலுள்ள தடாகத்தின் மத்தியில் அழகாக இசைந்த சந்திரகாந்தக்
கற்களைக்கொண்டு தென்றற் காற்றிற்கு எதிராமுகமாக வசந்தமண்டபம் ஒன்றுவகுத்து. எ-று.
( 7)
காவணமானதுசுற் றுறுபவளக்கால்கொண்டே
மேவிடவாசவிலா மிச்றசங்கொடு மேய்வித்தே
தாவில்விதானிப் பதுமவிமலர்கொடுதான்செய்து
பூவடைவாலுகமீதுபனிப் புனல்பொலிவித்தே.
(இ-ள்) பவளக்கால்கள் நிறுத்தி அதன்மேல் வாசனைப்புற்களால் பந்தல்வேய்ந்து குறைவில்லாத பலபுட்பங்களினால்
மேற்கட்டிகட்டிப் பூமியில் வெண்மணலைப் பரப்பி அதன்மீது பன்னீர்களைப் பொலிவாகத்தெளித்து . எ-று.
(8)
சப்பரமானது பூமலரேகொடுதான் சோடித்
தெப்பதிதன்னிலு மிப்படி யிலையெனவேசெய்தே
ஒப்பிலிரத்தினபுரத் துறைநாயகருடனாகச்
செப்பன கொங்கை சமாபதிமாது சிறப்பாக.
(இ-ள்) பூமலர்களைக்கொண்டு விமானமொன்று எவ்விடங்களிலும் இவ்வாறாக இல்லையென்று சொல்லும்படி
செய்வித்து அதில் ஒப்பில்லாத இரத்தினபுரத்தில் எழுந்தருளியிருக்கின்ற நாயகரான சுத்த ரத்தினேசுரரையும் இங்குலிகச்
செப்பையொத்த தனபாரத்தையுடைய சுமாபதியாரென்கிற அகிலாண்டவல்லியாரையும் எழுந்தருளப்பண்ணி. எ-று. (9)
அலரணிசப்பரமீதி லெழுந்தருளப்பண்ணி
நலமிகு சந்தவசந்தக் காவணநடுவைத்தே
யிலகியசிங்காதன மண்டபமதிலினி தேற்றிப்
பலமணிசந்தனங் குங்குமமான்மதம் பன்னீர்கள்.
(இ-ள்) புட்பங்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தின்மீது சுவாமியையும் அம்மனையுமெழுந்தருளப் பண்ணி
நன்மைமிகுநத சந்தனவாடையுடன்லந்து வரப்பட்ட தென்றல் வீசுகின்ற வசந்தப்பந்தலின் நடுவில் பிரகாசிக்கின்ற
சிங்காதனத்திலேற்றிப் பல ஆபரணங்களும் சந்தனம் குங்குமம் கஸ்தூரி பன்னீர்களும். எ-று. (10)
சாத்திமலிந்த சுகந்தத்தொடை மலர்தன்னோடும்
ஏத்தி நிவேதன முழுதுந்தூபமு மினிதாகத்
தோத்திரமேசெய்து மங்கையர்நடனத்தொழில் காண
வேத்திரபாணிகடிருவோலக்க மிகச்செய்ய.
(இ-ள்) ஆபரணம் சந்தனம் குங்குமம் கஸ்தூரி பன்னீர் முதலானதும் சுவாமிக்கும் அம்மனுக்கும் தரித்து அதனடன் சுகந்த
மலர்களினாலே தொடுத்த மாலைகளுந் தரித்து நிவேதனஞ்செய்து தூபதீப வுபசாரங்களையு முடித்துத் தோத்திரஞ்
செய்தபின் அரம்பைமாதர்கள் நடனஞ்செய்ய வேத்திர பாணிகள்திருவோலக்கதெரிசனஞ்செய்யவும். எ-று. (11)
வேறு.
இந்தநல்வசந்தமு மிலங்குபணிலங்குறமொழிந்துவரு மங்கைமடவார்,
கொந்தளகபந்திகள் வகிர்ந்து மலர்கொண்ட தொடைகொண்டு குழலைப்பின்னியெ,
சந்தனநிரம்பிய தனந்தனிலுமங்கெழில் கொடங்கமெனு மங்கமிசையுங்,
கந்தமிக வெங்கணுமணிந்து நடனங்கள் செய்து கம்பிதவசந்த மறைவார்.
(இ-ள்) இந்நன்மையான வசந்தப் பாக்கனைப் பண்பொருந்தப்பாடி ஆடுகின்ற பெண்கள் அளக பாரத்தின் பந்திகளை
வகிர்ந்தெடுத்து அதில் புட்பங்களாற்றொடுத்த மாலைகளையணிந்து சந்தனக் குழம்பு திமிர்ந்த தனபாரத்திலும்
பொன்போலு மேனியிலுங் கதம்பப்பொடிகளை யணிந்து நடனமாடி வசந்தம் பாடுவார்கள். எ-று. (12 )
கனகமணியண்டைகளை வெள்ளியண்டைகளுடன்
காந்தளங்கையிலேந்திக்,
குனகுகிளியெனு மழலைவஞ்சியர்கள் களபக்
குழம்பினைமுகந்தெறிகுவார்,
தனகடினவம்புகள் பொறாதறக்கைகளிற்
றாங்கியே நாணிநிற்பார்,
தினகரனையெதிர்கண்ட கமலமெனுமுகமாதர்
செண்டுகளெறிந்து மகிழ்வார்.
(இ-ள்) சுவணத்தினாற் செய்யப்பட்ட அழகு பொருந்திய தட்டுக்களும் வெள்ளித்தட்டகளும் காந்தளங்கையிலுந்திக்
கிளிபோலுஞ் சொல்லினையுடைய பெண்கள் களபச்சேற்றினை முகந்தெறிவார் கச்சறுந்த தனங்களைக் கையிலேந்துவார்
வெட்கி நிற்பார்கள் சூரியனைக்கண்டு மலர்ந்த தாமரைமலரையொத்த முகத்தையுடைய பெண்கள் ஒருவர்
மேலொருவர் மலர்ச்செண்டுகளை யெறிந்து விளையாடுவார்கள். எ-று. (13)
கேடகக்குழிதனிற் குதிகொண்டு நீந்துவார் கேசங்களவிழ விழுவார்,
சூடகக்கைகளாற் புனன்முகந்தெறிகுவார் சூழ்புனலின் மூழ்கி யெழுவார்,
பாடகக்கால்களிற் கலைசுற்றவரவென்று பதைபதைத்துளம் வெருவுவார்,
ஆடகப்படிகளில் வழுக்கிவிழுவார் நீரிலாடைவிழவே நாணுவார்.
(இ-ள்) நீரிற்குதித்து நீந்துவார்கள் கூந்தலவிழச் சலத்தில் விளையாடுவார்கள் வளையலையணிந்த கைகளினாலே
சலத்தை முகந்தெறிவார்கள் சலத்தில் மூழ்கி யெழுவார்கள் இடையில் தரித்த வஸ்திரம் அவிழ்ந்து பாடகக்கால்களில்
சுற்றிக்கொள்ளப்பாம்பு சுற்றிக்கொண்டதென்று உள்ளம் பதைபதைத்து வெருவுவார்கள் கரையில் ஏறுகிறபோது
சுவர்ணத்தினால் செய்த படிகளில் கால்வழுக்கி விழுவார்கள் வஸ்திரம்அவிழ வெட்கப்பட்டு நிற்பார்கள். எ-று.
(14)
இந்தவகை வளர்பிறைச் சத்தமிதொடங்கியே யிறைவனுடனிறைவிமிகவும்,
சிந்தைமகிழும்படி வசந்தம்விளையாடியே சித்திரைப்பௌரணையிலே,
முந்துவகையபிடேக முஞ்செய்து மகிழ்வான்முடித்தனன் மாதபூசை,
பிந்தவருவைகாசி மாதத்திருத்தேர் பிறங்குதிருநாளை மொழிவாம்.
(இ-ள்) இவ்வண்ணமாக வளர்பிறைச் சத்தமி தொடங்கிச் சிவபெருமானும் தேவியாரும் மனமகிழும்படி வசந்தம்
விளையாடிச் சித்திரைப்பௌரணையிலே முன்சொல்லியபடி அபிஷேகஞ் செய்து மகிழ்வுடன் மாதபூசையும் பண்ணினான்
வைகாசி மாதத்தில் இரதவுற்சவம் நடத்திய சிறப்பினையுஞ் சொல்லுவாம். எ-று. (15)
வையமீதினில் வந்தவைகாசிமாதத்தின் மருவிரத்தினபுரத்துத்,
துய்யமாமணி யீசரேறிய திருத்தேர்துலங்கு திருநாளென்னவே,
வெய்யமால் யானைமிசை வள்ளுவர்களேறியே வீதிவீதிக ளெங்குமே,
கையினான்முரசறைய நகரிசனமெங்குங் களிப்புடன் மிகமகிழ்ந்தே.
(இ-ள்) இவ்வுலகில் வரப்பட்ட வைகாசி மாதத்தில் இரத்தினபுரத்திற் பொருந்திய துய்யமாமணி யீசுரர் திருத்தேரில்
ஆரோகணித்துவரப்பட்ட திரு நாளாகும் இதனை யாவருமறிவீர்களென்று கோபத்தையுடைய பெரிய யானையின்மீது
வள்ளுவர்களேறி வீதிகளெங்குஞ்சென்று முரசறைந்தார்கள் அதைகேட்ட நகரத்துள்ள ஜனங்கள் இயாவரும் ஆ
நந்தசாகரத்தி லழுந்தி. எ-று. (16)
வீதிகள்சிறக்கவே தோரணநிறுத்துவார் மிக்கவேதிகை யமைப்பார்,
கோதில்பவளத் தினாற் கால்களை நிறுத்திக் கொடுங்கைகனகத்தமைப்பார்,
போதிகைவிளங்கிடுந்தூணுத்திரங்களைப் புதியபட்டான் மறைப்பார்,
சோதிபெறு சுவர்களைக் களபகத்தூரியாற் சூழ்ந்துசித்திரமெழுதுவார்.
(இ-ள்) வீதிகளில் தோரணங்களைக் கட்டுவார் மேடைகள் போடுவார்கள் குற்றமில்லாத பவளங்களாற் கால்கள் நிறுத்திச்
செம்பொன்னினாற் கொடுங்கைகளமைப்பார் போதிகைவிளங்கிய தூண்உத்திரங்களைப் புதிய பட்டினால் மறைப்பார்
பலர்கூடி அழகிய சுவர்களிற் களபகஸ்தூரிகளினாற் சித்திரமெழுதுவார்கள். எ-று. (17)
பச்சைமாணிக்கமுத்தின் றொடைகணாற்றியே
பட்டுமேற்கட்டி புனைவார்,
செச்சைமாலைத் தொடையல்கட்டியே
வகைவகைச்செய்ய பூப்பந்தலிடுவார்,
வச்சிராயுதனுலக மென்னவே பொன்னால்
வகுத்ததிண்ணைகண் மெழுகுவார்,
கச்சமில்லாமணிய ழுத்தியேவாசலிற்
கனகதோரணமமைப்பார்,
(இ-ள்) மரகதத்தினாலும் மாணிக்கத்தினாலும் முத்துக்களாலும் மாலைகள் தொடுத்துத் தொங்கக்கட்டிப்
பட்டுவஸ்திரங்களினால் மேற்கட்டி கட்டுவார்கள் வெட்சிமாலைகளைத் தொங்கக்கட்டிச் சிவந்த புட்பங்களினாற்
பந்தலிடுவார்கள் இந்திரஉலகம் இதுதானென்று சொல்லும்படி பொன்னாலமைக்கப்பட்ட திண்ணைகளைச்
சந்தனக்குழம்பால் மெழுகுவார்கள் குற்றமில்லாத இரத்தினங்களைப் பதித்த வாசல்களில் பொன்னரிமாலையைத்
தூக்குவார்கள். எ-று. (18)
செம்பொனாற்கும்பம் பசும்பொனான் மாவிலை
சிறந்த தேங்காய்மணியினாற்,
பைம்பொனால் வேதிகை வெண்பொனான்மென்
முளைப்பாலிகை நிரைத்துவைப்பார்,
தம்பமானதை மணியினாற்பொதிகுவார் செய்ய
சாந்துகொடுதரை மெழுகுவார்,
உம்பர் மாளிகைதொறுங்கொடிகளணிவார்
வீதியொளிபெறத் தீபமிடுவார்.
(இ-ள்) செம்பொன்னினாற் கும்பமும் பசும் பொன்னினால் மாவிலையும் நவரத்தினங்களினால் தேங்காய்களமைத்துப்
பசும்பொன்னினாலமைத்த திண்ணைகளிற் பரப்பி வெள்ளியினால் பாலிகைகளை நிரைநிரையாக வைப்பார்கள்
கம்பங்களைநாட்டி அதில் மாணிக்கங்களைப் பதிப்பார்கள் சிவந்த சந்தனக்குழம்பால் பூமியை மெழுகுவார்கள்
மேல்வீடுகள்தோறுங் கொடிகளை நிறைப்பார்கள் வீதிகளெங்கும் பிரகாசமாகும்படி அளவில்லாத தீபங்களை
யேற்றுவார்கள். எ-று. (19)
நாலுதிசையுஞ் சத்திரசாலை செய்வார்
மணநறும்புனற்பந்தலிடுவார்,
பாலுநறையுந் தயி ருநறு நெய்யுமாகவே
பந்தியில் விருந்தளிப்பார்.
ஏலமணியுங்குழன் மடந்தையர்தமேனிதனை
யிசையவொப்பனைகள்செய்வார்.
ஞாலமிடையுளபந்து சனமெலாம்வந்துறவு
நண்ணவேதூதுவிடுவார்.
(இ-ள்) நாலுதிக்குகளிலும் அன்னசத்திரமும் யாக சாலைகளும் செய்வார்கள் வாசனையுடைய பன்னீர்க்குடங்களைப்
பந்தலெங்கும் வைப்பார்கள் பால் தேன் தயிர் நெய்யுடன் யாவருக்கும் விருந்தளிப்பார்கள் சாந்தணிந்த
அளகபாரத்தைநுடைய மாதர்கள் தங்கள் மேனிகளை அழகுபொருந்த அலங்காரம் செய்வார்கள் உலகத்திலுள்ள
பந்துஜனங்களெல்லாம் வந்து உறவுகொள்ளும்படி தூதுகள் விடுவார்கடள். எ-று. (20)
வேறு.
இலகுமான கருளோரியாரு மிவ்வகைப்
பலபலவிதத்தினாற் பரிவுகூர்தர
உலகெலாம் படைப்பவனு வந்து நோக்கியே
அலகினூற்கணித மாமதனையுன்னியே.
(இ-ள்.) பிரகாசிக்கின்ற பெரிய நகரத்தினுள்ளோர் இயாவரும் இவ்வண்ணமாக மகிழ்ச்சி அடைந்திருக்க அப்பொழுது
பிரமதேவனானவன் சந்தோஷித்து நகரின் அலங்காரத்தை நோக்கி அளவில்லாத சாஸ்திரகணிதத்தை மனதில் எண்ணி.
எ-று. (21)
திக்கெனுங்கிராம தேவதைகள் பூசனை
தக்கதோர்கிராம சாந்திகளுந்தான்செய்து
சுக்கிலபக்கத்திற் றோன்று சட்டியிற்
புக்கதாமகிழ் புனர்பூசநாளிலே.
(இ-ள்.) திக்குகளிலிருக்கின்ற கிராமதேவதைகளுக்குப் பூசைசெய்து தகுதியாகக் கிராம சாந்திகளு முடித்துச்
சுக்கிலபக்ஷத்திற் றோன்றிய சஷ்டித் திதியில் பொருந்திய புனர்பூசநக்ஷத்திரத்தில். எ-று.(22)
அங்குரார்ப்பணஞ்செய்தே யன்னவூர்தியான்
பொங்குமோமத்தொழில் புரிந்துபோற்றியே
தங்கமார்ந்தில குறப்பதுமந்தாபித்துக்
கொங்கலான்னமாங் கொடியையேத்தினான்.
(இ-ள்.) அங்குரார்ப்பணஞ் செய்து மூன்றக்கினியால் ஓமத்தொழிலை நடத்திப் பொன்னால் நிறைந்து பிரகாசிக்கும்படி
பதுமபீடந் தாபித்து வாசனைமிகுந்த தாமரைமலரில் எழுந்தருளிய திருமகளைப் பூசைபண்ணினான். எ-று.
(23)
ஆகமவிதிப்படி யட்டதிக்கினும்
வாகினாலவரவர் வாகனங்களால்
ஓகையாற்கொடிகளு மோங்கவேத்தியே
தோகைபாகரை மிகத்தொழுது போற்றியே.
(இ-ள்.) ஆகமசாஸ்திரவிதிப்படி அஷ்டதிக்கிலு மிருக்கப்பட்ட தேவதைகளை அழகுபொருந்த அவரவர்கள் வாகனங்களில்
ரோகணிப்பித்துச்சந்தோசத்துடன் கொடிகளை யேத்திப்பின்பு உமா பங்கனாகிய பரமசிவனை மிகவும் தொழுதுபோற்றி.
எ-று. (24)
பேரிகைதாளத்தாற் பிறங்குதெவர்கள்
சேரவேவந்துதான் சேவைசெய்யவே
சீரியலத்திர தேவரைக்கொடு
பாரியபலியெலாம் பாலித்தானரோ.
(இ-ள்.) மேளதாளங்கள்முழங்கப்பிரகாசிக்கின்ற தேவர்கள் தெரிசனஞ் செய்யும்படி சிறப்பினையுடைய அஸ்திர தேவரைக்
கொண்டு பெரிய பலியெல்லாங் கொடுத்தான். எ-று. (25)
கணபதிதிருவிழாக் கந்தனுற்சவம்
மணமிகநடத்தியே மண்டபப்படி
பணபதிதனை யணிபரமனன்பினால்
நணுகிடவகைவகை நடத்தனானரோ.
(இ-ள்.) கணபதிதிருவிழா சுப்பிரமணியர் திருவிழா திருக்கலியாண உற்சவம்முதலானதும் நடத்திப் பின்னர்
மண்டபப்படியிலே ஆதிசேஷ கங்கணமணிந்த பரமசிவன் மகிழும்படி வினோத வினோதமாக நடத்தினான். எ-று.
(26)
நாலுநாட்டிருவிழா நடந்தசப்பரம்
சாலவேநடத்திப் பின்றருமவேதனும்
ஏலவைந்தாந்தின மிடபவாகனம்
மேலதாந்திருவிழா விழைவித்தானரோ.
(இ-ள்.) நாலாந்திருவிழா நடக்கப்பட்ட சப்பரத்தின்பேரில் மிகவும் சிறப்பாகநடத்திவைத்துப் பின்பு தருமசொரூபியாகிய
பிரமதேவன் சிறப்புப் பொருந்தும்படி ஐந்தாந்தினத்தில் விருஸபாரூடரா எழுந்தருளிவரும்படி செய்வித்தான். எ-று. (27)
ஆறதாந்திருவிழா யானைவாகனம்
வீறுடனேழி லிந்திரவிமானமும்
கூறுமெட்டதனிலே குதிரைவாகனம்
பேறுறநடத்தியே பிறங்குமொன்பதில்.
(இ-ள்) யானைவாகனத்தில் ஆறாந்திருவிழாவும் இந்திரவிமானத்தில் பெருமைபொருந்திய ஏழாந்திருவிழாவும்
குதிரைவாகனத்தில் எட்டாந் திருவிழாவும் நடத்திவைத்துப் பின்பு பிரகாசிக்கின்ற ஒன்பதாந்தினத்தில். எ-று.
(28)
பொன்னணியிரத்தின புரத்துநாயகர்
நன்னதற்சமாபதி நாயகிக்குமே
உன்னியதினகர னுதிக்குமுன்னமே
மன்னுநந்தாநதி மஞ்சனங்கொடு.
(இ-ள்) ஒன்பதாந்திருநாளில் அழகுபொருந்திய இரத்தினபுரீசுவரற்கும் நன்னுதலையுடைய சமாபதியென்னும்
அகிலாண்டநாயகிக்கும் சூரியோதயமாகு முன்னமே நிலைபெற்ற நந்தாநதித் தீர்த்தங் கொண்டுவந்து. எ-று.
(29)
திருந்தவேவகை யபிஷேகஞ் செய்தபின்
பொருந்துசெம்பொன் கொடுபுனை பட்டாடையை
அருந்தவர்விடும்புலி யதளைச்சாத்திய
பெருந்தகை மருங்கினிற் பிறங்கச்சாத்தியே.
(இ-ள்) திருத்தமுற அபிஷேகஞ்செய்து பின் செம்பொன் இழையாற் புனைந்த பீதாம்பரத்தைத் தாருகாவன இருடிகளால்
ஏவியபுலித்தோலைத்தரித்த பரமபதியின் யிடையிற்றரித்து. எ-று. (30)
நலமணிநவமணி நற்கிரீடமும்
குலவியமகர குண்டலமுஞ்சந்திர
கலையொடுகங்கை யுங்கண்டமாலிகை
இலகுறுதாளமு மிலங்கச்சாத்தியே.
(இ-ள்) குற்றமற்ற நவரத்தினம் பதித்த நல்ல கிரீடமும்குலாவிய மகரகுண்டலமும் மூன்றாம் பிறைச் சந்திரனும்
கங்காநதியும் கண்டமாலிகையும் பிரகாசிக்கின்ற முத்து மாலிகையுந் தரித்து. எ-று. (31)
ஆரமும் பதக்கமு மாரமாமணித்
தாருநல்லுதர பந்தனமுங்கண்டிகை
யேரணிவடங்களு மிழையுமுப்புரிச்
சீருபவீதமுஞ் சிறக்கச்சாத்தியே.
(இ-ள்) சந்தனமும் பதக்கமும் முத்துமணித் தாவடமும் உதரபந்தனமும் உருத்திராக்ஷத் தாவடமும் நூலிழையினால்
முப்புரியாகச் சேர்க்கப்பட்ட சிறப்பான பூணநூலுந் தரித்து. எ-று. (32)
சுரந்தனிற் கடயமும் கவின்கொளாழியுந்
திரந்தரு பதமிசைச் சிலம்புங்கிண்கிணி
வரிந்திடு மரவமும் வலியவீரமும்
தருந்தனிக்கழலுடன் றயங்கச்சாத்தியே.
(இ-ள்) கைகளில் கடககங்கணமும் அழகினையுடைய மோதிரமுந்தரித்து மோட்சத்தைத் தரப்பட்ட பாதங்களில்
சிலம்புகளையும் கிண்கிணிகளையும் தரித்தலோடு அரவத்தையும் வலியையும் வீரத்தையும் குறிக்கின்ற வீகண்டாமணியும்
பிரகாசிக்கத் தரித்து. எ-று. (33)
செண்பக மல்லிகை செருந்திகூவிளம்
தண்பிடி கடுக்கையார்த மனகத்தொடும்
எண்பட வகைவகை யிணங்குமாலிகை
பண்படியளியினம் பரவச்சாத்தியே.
(இ-ள்) சண்பகம் மல்லிகை செருத்தி வில்வம் குளிர்ச்சிபொருந்தியகொன்றை ஆத்திமருக் கொழுந்து முதலானவைகளைக்
கணக்குவகையாகத் தொடுத்த மாலைகளை இசைபாடுகின்ற வண்டுகள் சூழத்தரித்து. எ-று.
(34)
மேருவைவளைத்திடும் வெற்றி வில்லினைத்
தாரணிமுடிமிசைத் தாங்கினாரெனச்
சீரணிசெம்பொனிற் சிறந்தவாசிகை
ஏரணிந்திட மிசையினிது சாத்தியே.
(இ-ள்) ஆதிகாலத்தில் வளைத்த வெற்றிபொருந்திய மேருவில்லை இப்பொழுது மாலையையணிந்த
முடிமேற்றாங்கினாரென்று சொல்லும்படி சிறப்புப் பொருந்திய செம்பொன்னாற் செய்து விளங்கிய திருவாசிகையை
அழகுபொருந்த மேலே இன்தாகச் சாத்தி. எ-று. (35)
மணிமுலைச் சமாபதி மடந்தைக்குங்கலை
அணிவகை மாலைகளனைத்துஞ் சாத்தியே
தணிதருநெறித்திரு நீறுஞ்சாத்தியே
பணிபதமுடியினாற் பணிந்துபோற்றிப்பின்.
(இ-ள்) நவரத்தின மாலிகைகளைத் தாங்கிய சமாபதியாரென்னும் அகிலாண்ட நாயகியாருக்கும் பட்டுவத்திரங்களும்
ஆபரணங்களும் வகைவகையாகிய மாலைகளுஞ் சாத்திச் சாந்தத்தை விளைவிக்கின்ற திருநீறுஞ்சாத்தி
அரவத்தண்டையணிந்த திருவடியில் முடியினாற் பணிந்து போற்றிப்பின்னர். எ-று. (36)
அருந்திடுமமுதுடன் பூபமாதியாத்
திருந்திட நிவேதனஞ் செய்து சோடசந்
தரும்பரிவுடனுப சாரந்தானெலாம்
போருந்திடவுதவியே பொற்றண்டேற்றினான்.
(இ-ள்) அந்தத்தக்க அன்னங்களுடனே அப்பவருக்கங்களையும் திருத்தமாக நிவேதனஞ் செய்து பரிவாகச்
சோடசவுபசாரத்துடன் எல்லா உபசாரங்களையும் செய்தபின்னர் பொற்பல்லக்கின்மேல் எழுந்தருளப்பண்ணினான் எ-று.
(37)
முன்னரே கணபதி முருகவேளெழிற்
பொன்னணியிரத்தின புரத்துநாயகர்
தன்னிகரிலாதமர் சமாபதித்திருப்
பின்னர்சண்டேச்சுரன் பெரிதுதோன்றினார்.
(இ-ள்) முன்னாக விக்கினேசுரரும் முருகக்கடவுளும் எழுந்தருளிவரவும் அவர்கட்குப் பின்னாகத் திருமகள் வசிக்கும்
இரத்தினரைியைக் கோவிலாகக் கொண்ட சிவபெருமானும் தனக்குத்தானே ஒப்பாகியமர்ந்த சமாபதியாரென்னம்
அகிலாண்டவல்லியாரும் அவர்கட்குப் பின்னாக சண்டேசுரநாயனாரும் எழுந்தருளினார். எ-று.
(38)
சங்கமெக்காளநற் றாளமத்தளந்
துங்கபெரிகையுட னிடக்கைதுந்துமி
சிங்கநாதத்தொடு சிறந்தமேளங்கள்
எங்கணுஞ்செவிடுற விரைந்துவிம்மவே.
(இ-ள்) சங்கு எக்காளம் நல்லதாளம் உயர்ச்சியான பேரிகை உடுக்கை தேவதுந்துபி சிங்கநாதம் முதலான
வாத்தியங்களுடன் சிறந்த மேளவாத்தியங்களும் எவ்விடமும் செவிடுபடச் சத்தித்து அதிகரிக்கவும். எ-று.
(39)
மெல்லிய கவரிகள் வீசமீதினிற்
சொல்லருமால வட்டங்கள் சூழ்தரப்
பல்வகையடுக்கொலி பயிலவாசமே
புல்லியதூபத்தின் புகைகள்விம்மவே.
(இ-ள்) மெல்லிய சாமரைகள் வீசவும் சொல்லுதற்கரிய ஆலவட்டங்கள் ஆகாசத்தில் நிறையவும் பலவகையான
மணிச்சத்தங்கள் ஒலிக்கவும் வாசனைகள் பொருந்திய தூபத்தின் புகைகள் எங்கும் அதிகரிக்கவும். எ-று.
(40)
துங்கமாதேத்தின் றோத்திரங்களுந்
தங்கிசைநாவலர் தமிழின்பாடலும்
மங்கைமாரிசையுடன் மகரவீணையும்
அங்கவராடலு மாகிமுன்செல.
(இ-ள்) மகத்தாகிய நாலுவேதங்களையும் பிராமணோத்தமர்கள் சொல்லிக்கொண்டு வரவும் எங்கும் இசைபரவிய
சமயாசாரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரந் திருவாசகமுழங்கவும் மங்கைப் பருவப்பெண்கள் குரலிசையோடு
வீணைகள் வாசித்துக்கொண்டு வரவும் அப்பருவப்பெண்களிற் சிலர் நடனமாடவும். எ-று.
(41)
முத்தினாற்பவளத்தான் முறைசெய்பொன்னினாற்
பத்திசேர்மணியினாற் பட்டினாற்செய்த
மெத்தியகொடிகளோர் கோடிமீதிடச்
சித்திரம்வகுத்த சீராடிகோடியே.
(இ-ள்) முத்தாற்செய்த குடைகளும் பவளத்தினாற்செய்த குடைகளும் பொன்னினாற்செய்த வரிசையானகுடைகளும்
பத்திபத்தியாக நிறைத்து நல்லரத்தினங்கள் பதித்த குடைகளும் பட்டுகளாற்செய்த குடைகளும் ஆகாசத்திற் சூழ்ந்துவரவும்
சித்திரங்கள்வகுத்தகண்ணாடிப்படங்கள் சூழ்ந்துவரவும். எ-று. (42)
சந்திரவட்டமுந் தரணிவட்டமும்
இந்திரமகர தோரணமுமெண்ணிலாப்
பந்தியின்சாலையாப் பற்றுதொங்கலின்
கொந்தலர்பீலியங் குடைகள் கோடியே.
(இ-ள்) சந்திரவட்டங்களும் சூரிய வட்டங்களும் தேவேந்திர சம்பிரமமான மகரதோரணங்கள் பந்தியின் சாலையாகப்
பற்றிப்பிடிக்கக் கொத்துகளலர்ந்த குஞ்சங்கள் கட்டிய ஆலவட்டக்குடைகள் கோடானுகோடி சூழ்ந்துவரவும். எ-று.
(43)
உலவியவிடையினு முயர்ந்தபொற்கொடி
வலிதருமூடிக மலிந்தபொற்கொடி
இலகியமயிலடி யெழுதுபூங்கொடி
குலவுமன்னக்கொடி கோடிகோடியே.
(இ-ள்) உலாவிவருகின்ற உயர்ச்சியான அழகமைந்த இடபக்கொடிகளும் வலிமையமைந்த மிக்க அழகான பெருச்சாளிக்
கொடிகளும் பிரகாசிக்கின்றமயிலடியெழுதிய அழகானகொடிகளும் குலாவுகின்ற அன்னக்கொடிகளும்
கோடானுகோடிகள் . எ-று. (44)
மாயனார்கருட வாகனத்தின்மேல்வர
ஆயபேரிந்திரனி யானைமேல்வரத்
தீயவன்மேடத்திற் சிறக்கவேவரக்
காயுயிர்ச்சமன் பெருங்கடாவின்மேல்வர.
(இ-ள்) திருமால் கெருடவாகனத்தி லெழுந்தருளிவரவும் இந்திரன் யானைவாகனத்தி லேறிவரவும் அக்கினிதேவன்
ஆட்டுக்கட்வாகனத்திலேறி வரவும் உயிர்களைக் காயப்பட்ட இயமன் பெரிய எருமைக்கடாவி லேறிவரவும். எ-று.
(45)
நிருதிதன்றொழிலுறு நிருதன்மேல்வர
வருணனுஞ்சுறாமிசை மருவியேவரக்
கருதியவாயுவங் கலையின்மேல்வர
வருநிதியவனம் புட்பகத்தின்மேல்வர.
(இ-ள்) நிருதிதன்றொழில்பெற்ற இராக்ஷகன் மேலேறிவரவும் வருணன் மகரவாகனத்திலேறி வரவும் வாயு
மான்வாகனத்திலேறிவரவும் குபேரன் புட்பகவிமானத்தி லேறிவரவும். எ-று. (46)
ஈசனென்றியம்புவா ரிடபமேல்வர
மூசகார்க்கஞ்சுகன் முடுவன்மேல்வரத்
தேசணியந்திரி சிங்கமேல்வர
ஆசிலாக்காளியு மலகைமேல்வர.
(இ-ள்) ஈசனென்றியாரு மியம்புகின்ற ஈசானன் இடபவாகனத்தி லேறிவரவும் மொய்த்த இருளையொத்த
சட்டையையணிந்த வயிரவர் சுவான வாகனத்திலேறிவரவும் பிரகாசம்பொருந்திய துர்க்கையம்மன்
சிங்கவாகனத்திலேறிவரவும் குற்றமில்லாத காளியம்மன் பிசாசுவாகனத்திலேறிவரவும். எ-று. (47)
மற்றுளோர்களமவர் வாகனங்கண்மேற்
சுற்றியேபணிந்து மெய்த்தோத்திரஞ்செய
அற்றைநாளோத்திரு வாடுதண்டின்மேற
பற்றமர்மழுவினார் பரிந்துதோன்றலும்.
(இ-ள்) மற்றுண்டான தேவர்களெல்லா மவரவர்கள் வாகனங்களி லேறிச்சூழ்ந்து பணிந்து உண்மையாகத் தோத்திரங்கள்
செய்துவர அன்றைத்தினம் அழகுபொரந்திய திருவாடுதண்டின்மேல் மழுவைக் கையிற்பிடித்த பரமேசுரன்
எழுந்தருளினார். எ-று. (48)
தேவமால்வரையான் வந்தான்றிரு வில்வ வனத்தான் வந்தான்,
நாவினிற்றுதிக்கு நந்தாநதிதனக்கிறைவன் வந்தான்,
பூவினான்போற்று மந்தப் புகழ்புனை தீர்த்தந்தன்னிற்,
பாவமோ சனங்கள்செய்யும் பஞ்சமங்கலத்தான்வந்தான்.
(இ-ள்) இவ்வண்ணமாகப் பரமசிவனெழுந்தருளி வரும்போது பெரிய தேவகிரியான் வந்தான் அழகுபொருந்திய
வில்வவனத்தான் வந்தான், நாவாற்றுதிக்கப்பட்ட நந்தாநதிக்கிறைவன்வந்தான் கமலாசனத்தான் போற்றுமக் கீர்த்தியைப்
புனைந்த பிரமதீர்த்தத்தில் பாபவிமோசனஞ்செய்கின்ற பஞ்சமங்கலத்தான் வந்தான். எ-று. (49)
பிரமபுரத்தான் வந்தான் பெருஞ்சமாபுரத்தான் வந்தான்,
வரமெலாமருளு நந்தாபுரத்துறைமகேசன் வந்தான்,
பொருவிலா வெழிலிரத்தினாபுரத்துறை யொருவன் வந்தான்,
துரியனாஞ்சுத்த விரத்தின துய்யமாமணியான் வந்தான்.
(இ-ள்) பிர மபுரத்தான்வந்தான் பெரியசமாபுரத்தான்வந்தான் வரங்களைப்பாலித்தருளும் நந்தாபுரத்து மகேசன்வந்தான்
ஒப்பில்லாத அழகு பொருந்திய இரத்தினாபுரத்தொருவனாகிய ஈசன் வந்தான் இடபவாகனத்தையுடை
சுத்தரத்தினமென்னும் துய்யமாமணீசுரன் வந்தான். எ-று (50)
செப்புமிவ்வாறுசெம்பொற்சின்னங்கடொனித்தலோடு,
மும்புரமெரித்த நாலுமுதற்பெயர் படைத்துவாழும்,
இப்புரத்தீசனார்த மிருபதம்பணியவென்றே,
துப்பணி கடகச்செங்கைச் கரிகுழன்மடவாரெல்லாம்.
(இ-ள்) மேற்சொல்லியவாறு பொற்சின்னங்கள் தொனித்தவளவில் நந்தபுரமென்றும் இரத்தின புரமென்றும்
பிரமபுரமென்றும் சமாபுரமென்றும் நான்கு நாமங்களையுடைய க்ஷேத்திரத்திலெழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளை
வணங்க வேண்டமென்று பவளங்களையும் கடகங்களையு மணிந்த கைகளையும் அளகபாரத்தையுமுடைய மாதர்களும்.
எ-று. (51)
பேதையராதியாகப் பேரிளம் பெண்களீறாச,
சோதிசேர்தளத்தின்மீதுஞ் சதைபொதிமாடமீதும்,
வீதியின் மருங்கு மேடைவிளங்கு சாளரத்தினூடும்,
ஓதைமேகலைகளார்ப்பவொருவர் முன்னொருவர் நின்றார்.
(இ-ள்) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண்ணென்னும் எழுவகைப் பருவப்பெண்களும்
காந்தியையுடைய தளத்தின்மீதும் சுண்ணச்சாந்தந் தீற்றிப் பிரகாசிக்கின்ற மாடமாளிகைகளிலும் வீதிப்பக்கங்களிலும்
மேடைகளிலும் விளங்காநின்ற பலகணியினுள்ளும் மேகலாபரணங்களார்ப்ப ஒருவர்முன்னொருவராக நின்றார்கள். எ-று.
(52)
முண்டகவேதன்செய்த முதன்மையாம் பூசையாலே,
கண்டனமிவரையென்பார் காணுதற்கெளிதோ வென்பார்,
கெண்டைவேல் விழிகளாலே கிரியனமார்பிற்பூண்ட,
வெண்டாளத்தின் மாலைவிளங்கு நீலமதாச்செய்வார்.
(இ-ள்) கமலாசனனாகிய பிரமதேவன் செய்த முதன்மையாகிய பூசையால் நாம் கடவுளைக் கண்டோமென்பாரும் இவர்
காணுதற்கெளியரோ வென்பாரும் கெண்டைமீன் போன்ற கண்ணால் பருவதத்தை யொத்த முலைகளையுடைய
மார்பிற்பூண்ட வெள்ளிய முத்துமாலைகளை இக்கடவுள் மார்பில் நீங்கள் சேரவில்லையேயென்னுங்
கருத்தரனோக்குந்தோறும் அவைநீலமாலையாகப் பிரகாசித்தன. எ-று. (53)
ஆலமேமிடத்தில் வைத்தாரயன்றலை நகத்தாற்கொய்தார்,
காலனைக் காலாலட்டார் கண்ணினாலெரித்தார்வேளை,
சாலமுப்புரங்க டன்னைத் தழலெழ நகையாற்செய்தார்,
சூலமுமழுவுங்கையிற் சுமப்பதே னிவருக்கென்பார்.
(இ-ள்) மேற்சொல்லிய மாதருட் சிலர் ஆலகால விஷத்தைக் கண்டத்தில் வைத்தவரிவரென்பார் சிலர் இயமனைக் காலால்
உதைத்துக் கொன்றவரென்பரார் சிலர் மன்மதனைக் கண்ணாலெரித்தவ ரென்பார் சிலர் திரிபுரத்தை
நகைத்தெரித்தாரென்பார் சிலர் அப்படிப்பட்டவர் சூலமும் மழுவுங் கையிற் சுமந்த காரணமென்னென்பார் சிலர். எ-று.
(54 )
சிலைமதன்றனை யெரித்தாரென்பதுதிண்ணமாயிற்,
றலையினிற்பாதிமெய்யிற் றருணியரிருவர்வாழ்வர்,
உலைமெழுகென்னவுள்ள முருகவே விகாரஞ்செய்தார்,
கலைமதன்றானு மைந்தாங்கணை மலரெய்தானென்பார்.
(இ-ள்) இவர் காமவிகாரமில்லாதிருக்கக் கருப்புவில்லையுடைய மன்மதனையெரித்தது மெய்யாயின்
தருணமங்கையரிருவர் இவர் சிரசிலும் சரீரத்திலுமிருக்கக் காரணமென் அன்றியும் நாம் இவரைக்
கண்டவளவில் அக்கினியைக்கண்ட மெழுகுபோல் நம்மனமுருகக் காரணமில்லை மன்மதன் பாணங்களை
யெய்கின்றானென்பார் சிலர். எ-று. (55)
அண்டத்திலிமையோர்வாழ வாலத்தைத்தரித்தாரென்பார்,
கண்டத்தைக் காணிரென்பார் காண்கிலம் வளையலென்பார்,
விண்டொத்த தோளிபங்கர் வெள்ளிய சோமனாகுந்,
துண்டத்தைத் தலைமேற்கட்டித் தோலையே னுடுத்தாரென்பார்.
(இ-ள்) சிலர் தேவர்கள் பொன்னுலகத்தில்வாழும்படி விஷத்தைக் கண்டத்திற் றரித்தாரென்பார் சிலர் இவர் கழுத்தைப்
பாருங்களென்பார் சிலர் நம்கை வளையல்களைக் காணோமென்பார் சிலர் மூங்கிலை யொத்த தோளையுடைய
உமைபங்கனென்பார் பாலசந்திரனைத் தலையிற்றாங்கி யரையிற் புலித்தோலைத் தரித்தாரிதற்குக்
காரணமென்னவென்பார் சிலர். எ-று. (56)
தொடுக்குமிவ்வாளிவேளைத் தூளெழப் பாரீரென்பார்,
அடுக்கலிற்பொன்னும் வேலையதனிலாரமுமாநிற்பார்,
இடுக்கணும் விரகந்தீரவெழுதுமே மடலையென்பார்,
படுக்கு மெல்லணைமேல்வீழ்ந்து பரதவித்துழன்றுநிற்பார்.
(இ-ள்) புஷ்பபாணங்களைத் தொடுத்து நிற்கின்ற மன்மதனைப் பொடியாகும்படியாகப் பாருமென்பார்கள் சிலர்
பருவதத்திலே இலக்குமியும் சமுத்திரத்திலே சந்தனமுமாக நிற்பார்கள் சிலர் துன்பமாகிய விரகந்தீர மன்மதசின்னங்கள்
நிறைந்த மடல் எழுதுமென்பார்கள் சிலர் சயனத்தில் விழுந்து பரதவித்து வருந்தி நிற்பார்கள் சிலர். எ-று. (57)
மங்கையர்குழாங்களெல்லா மறுகியிவ்வாறுகூற,
எங்கணும் பூவின்மாரி யிமையவர் சொரிந்துபோற்றத்,
துங்கமால் விடையிலேறுந் துய்யமாமணியார் சோதி,
தங்குமாமேருவென்னத் தழைத்ததோர் மருங்குசார்ந்தார்.
(இ-ள்) இவ்வாறு மாதர்கள் விரகங்கொண்டு ஒருவருக்கொருவர் சொல்லிநிற்கின்ற வேளையில் தேவர்கள் புஷ்பமாரி
சொரிந்து போற்றப் புனிதமான இடபத்தின்மேல் துய்யமாமணியார் ஆரோகணித்து மேருகிரியைப்போல் உன்னதமாகிய
மாடங்கணிறைந்த வீதியில் எழுந்தருளினார். எ-று. (58)
மன்னிய செம்பொன்சில்லிவச்சிர மச்சுமீது,
துன்னிய பூதப்பார்க டுலங்கு கோமேத கந்தான்,
மின்னுமாணிக்கத்தட்டு மேனிலம்பச்சையோங்கிப்,
பன்னசிங்காதனந்தான் பலவகைமணிகளாமே.
(இ-ள்) இடபாரூடராக எழுந்தருளிய பரமசிவன் செம்பொன்னினாற் சகடமும் வச்சிரத்தினால் மேல்மச்சும் கோமேதகத்தாற்
பூதங்களும் பதுமைகளும் மாணிக்கத்தால் தட்டுகளும் மரகதத்தினால் மேனிலங்களும் நவரத்தினங்களால் சிங்காதனமும்.
எ-று. (59)
கால்களே பவளமீது கலந்திடு கொடுங்கை தங்கம்,
வால்கொளுமுத்தின்கோவை வதிந்து பீதாம்பரந்தான்,
நூல்வழிமையநீலநுவலின்மீ திந்திரகோபம்,
சாலவேசிகரமீ திற்றமனிய மகுடந்தானே.
(இ-ள்) பவளத்தினாலே கால்களும் அதன்மேற் றங்கத்தினாலே கொடுங்கையும் வெண்மையையுடைய முத்துக்களினாற்
கோவையும் பீதாம்பரங்களாற் றேர்ச்சீலையும் நீலக்கற்களினால் நடுப்பதித்தும் இந்திரகோபத்தைமிக்குப்பதித்ததும்
அபரஞ்சிப்பொன்னினாற் சிகரமும். எ-று. ( 60)
தழுவுவெண்பட்டு முத்தாற்சமைத்திடு தவளச்சத்திரங்,
குழுவுபொன்னெழுத்தின் பட்டைக்கொடிகளி னிசையனேகம்,
ஒழுகுசாய நிறையும் பட்டினொலிபலுநிலங்கடோறுங்,
கெழுமிய மணியின்கோவை கிண்கிணியனந்தமாமே.
(இ-ள்) வெண்பட்டினாலும் முத்தினாலும் அமைத்த குடைகளும் பொன்னிழையாலமைத்த இடக்கியங்களும்
நிரைநிரையாகக்கட்டிய வெண்சாமரைகளம் பீதாம்பரங்களாற் றொங்களும் எங்கும் பிரகாசிக்கின்ற
நவரத்தினக்கோவைகளும்கிண்கிணியரசிலைத் தொங்கலும் அமைத்து. எ-று. (61)
இன்னதன்மையதாந் தேர்களெழில் பெற வலங்கரித்துப்,
பன்னுபுண்ணியாகமோமம் பலவகைத் தானம்பண்ணி,
முன்னவன் கந்தன்றுய்ய முழுமணியகதனமமை,
மன்னுதண்டே சரிந்த வகைப்படி தேறிலேற்றி.
(இ-ள்) இத்தன்மையான தேர்களில் புண்ணியாகனம்தான முதலானதுஞ்செய்து கணேசர் முருகக்கடவுள் துய்யமாமணீசுரர்
அகிலாண்டநாயகியார் தண்டீசுரர் முதலானவர்களையும் ஆரோகணிப்பித்து. எ-று. 62
வேறு.
மாரதிகணவனை வன்னிக்கூட்டினோற்
கோர்தினமறைப்பரிசிறக்கப்பூட்டிய
பாரதிகணவனாம் பதுமன்முன்புபோற்
சாரதியாகவே தானடாத்தினான்.
(இ-ள்) இரதிகேள்வனாகிய மன்மதனை அக்கினிக்கிரையாக்கியபரமசிவனாரோகணித்த இரதத்திற்கு வேதப்பரிகளைப்
பூட்டிய பாரதிநாயகனாகிய பிரமன் திரிபுரதகனத்திற்குத் தேர்ச்சாரதியானது போலவே இப்பொழுதுஞ்சாரதியாகித்
தேரினை நடத்தினான். எ-று 63
பஞ்சமஞ்சிவணு மின்னிசைகள் பாடிடக்
பஞ்சமபூதங்கள் பரவிச்சூழ்ந்திடப்
பஞ்சமகதிப் பரிபரிந்த தேர்களைப்
பஞ்சமங்கலத்தினிற் பவனிசெய்வித்தான்.
(இ-ள்) பஞ்சமசுருதியமைந்தவாத்தியங்களினின்றும் இராகங்கள் வெளிப்படவும் பஞ்சபூத ஆன்மகோடிகள் பரவிச்
சூழ்ந்துவரவும் பஞ்சகதிகளையுடைய பரிகளைப்பூட்டிய தேரைப் பஞ்சமங்கலமென்னும் பெயரையுடைய இரத்தினபுரியிற்
பவனிசெய்வித்தான். எ-று. 64
சோதிமூன்றுள்ளவத் துய்யமாமனிச்
சோதியைச்சமாபதித் தோகைதன்னையுஞ்
சோதியாந்தேரின்மேற் றோன்றுநலவிழாச்
சோதிநாஸடன்னிலே சூழ்வித்தானரோ.
(இ-ள்) சோமசூரியாக்கினியாகிய திரிநேத்திரங்களையுடைய துய்யமாமணீசுரரும் சமாபதியென்னும் அகிலாண்ட
வல்லியம்மையும் சோதிநிறைந்த தேரிலேறிவரச்ச கலவெபவத்துடன் சோதி நக்ஷத்திரத்தில் பிரதக்ஷணமாகச் சூழ்ந்துவரப்
பண்ணினான். எ-று. 65
மற்றைநாட் பௌரணைமலிவிசாகத்திற்
றெற்றுறுபுனலபிடேகஞ் செய்வித்து
முற்றுறுதிருவிழா முடித்தமாதத்தில்
அற்றைப்பூசையிற் படியன்னஞ்சாத்தினான்.
(இ-ள்) மறுநாட்பௌரணையில் நிறைந்தவிசாக நக்ஷத்திரத்தில் கரையையெற்றுகின்ற தீர்த்தங் கொண்டுவந்து
சிவபெருமானுக்கு அபிடேகஞ் செய்வித்து நல்லதிருவிழாமுடிந்த மாதத்தில் தினப்பூசைப் படித்திரங்களுடனே
அன்னமலருஞ் சாத்தினான். எ-று 66
முறையினிற் றிருவிழாமுடியுங்காறுநின்
றறுபதினாயிர மந்தணாளர்க்கும்
மறுவறுலக்கமா மகேசுரர்க்குநல்
லறுசுவையமுதளித்தனன்பாலரோ.
(இ-ள்) முறையாகத்திருவிழா முடியுமளவுமிருந்து அறுபதினாயிரம் பிராமணோத் தமர்களுக்கும் இலக்ஷமாகேஸ்வரருக்கும்
அறுசுவையுடன் அன்னமிட்டான். எ-று. 67
வந்துறுமிதுனநன் மாதப்பூசைதான்
றந்துமுக்கனியினாற் சாற்றியேத்தியே
பிந்துகற்கடகந்தான் பிறங்குந் திங்களின்
அந்திலான்பாலினா லாட்டிப்போற்றினான்.
(இ-ள்) ஆனிமாதத்திற் பூசைகள் செய்வித்து முக்கனிகளைச் சிவபெருமான் றிருமேனிமுழுதுஞ் சாற்றியேத்திப்பின்
ஆடிமாதத்திற் பசுவின்பாலால் அபிஷேகஞ்செய்து வணங்கிப் போற்றினான். எ-று. 68
ஆவணிதனிலெள் ளதனைச்சாற்றியே
பூவினோன்கன்னியிற் பொரியைச் சாற்றிப்பின்
மேவிய துலாத்தினெய் விழுதுசாற்றிமேற்
றேவகார்த்திகையினிற் றீபஞ்சாற்றினான்.
(இ-ள்) ஆவணிமாதத்தில் எள்ளைச்சாற்றிப் புரட்டாசிமாதத்தில் நெற்பொரியைச் சாற்றிப்பின் வந்த அர்ப்பிகைமாதத்தில்
நெய்விழுதுசாற்றிக் கார்த்திகை மாதத்திற் றீபங்களைச் சாற்றினான். எ-று.
தெரிதருமார்கழித் திங்கடன்னிலே
வருதிருவாதிரை வாய்த்தநாளிலே
தருதிருவிழாவகை தானடாத்தியே
பரிமளகுங்குமம் பரிவிற் சாற்றினான்.
(இ-ள்) மார்கழிமாதத்தில் வருகின்ற திருவாதிரை நக்ஷத்திரத்தில் திருவிழாவகைகளெல்லா நடத்திப்பின்
குங்குமமுதலாகிய வாசனாதிரவியங்களையுஞ் சாற்றினான். எ-று. 70
மகாசங்கிராந்தியு மருவுபூசமுந்
திகழ்வுறநடத்தியே திங்கட்பூசைதான்
றகவுறத்தேன்பி டேகஞ்சாற்றியே
மிகமகிழ்ந்திறைஞ்சினன் விதிக்கும்வேதனே.
(இ-ள்) சங்கிராந்தி மருவியதைமாதம் பூசநக்ஷத்திரத்தில் பிரகாசிக்கப் பூசைநடத்தித் தேனபிஷேகஞ்செய்து மிகவும்
மகிழ்வடைந்து வணங்கினான். சிருட்டிகர்த்தாவாகிய பிரமதேவன். எ-று.
கும்பமாதத்தினிற் குலவுபூசைநெய்க்
கம்பளஞ்சாத்தியே கருதுமீனத்தில்
வம்பவிழ்சந்தன மலியச்சாத்தியே
செம்பதுமத்தனுஞ் சிறந்துபோற்றினான்.
(இ-ள்) பிரமதேவனாகியவன் மாசிமாதத்திற் குலவிய பூசைகள்செய்து நெய்கின்ற மயிர்ப்பாக மென்னும் வஸ்திரந்தரித்துப்
பின் பங்குனிமாதத்தில் வாசநிறைந்த சந்தனத்தை மலியச்சாத்திப் போற்றினான். எ-று. 72
மாதபூசைகளு மிவ்வாறுசெய்துமேற்
றீதறுவிழாவெலாந் திருந்தச்செய்துதான்
வேதனல்வரங்களை மிகவும்பெற்றுப்பின்
கோதமமுனிவனை நோக்கிக் கூறுவான்.
(இ-ள்) இவ்வண்ணம் பனிரண்டுமாதப் பூசைகளையும் குற்றமில்லாத திருவிழாக்களையுஞ் சிறப்பாகச் செய்து
பரமசிவனிடத்தில் நல்ல வரங்களையும் பெற்றுப்பின் கௌதமமுனிவனை நோக்கிக் கூறுகின்றான் . எ-று. 73
இத்தலமாமிகு விரத்தினபுரந்தனில்
மெத்தியகலியுக மீதொருத்தன்றான்
சுத்தமாமன்ன தானச்சொரூபியாச்
சத்தியநெறியுளான் றானிங்கெய்தியே.
(இ-ள்) இந்தவிரத்தினபுரியென்னுந் தலத்தில் கலியுகத்தில் அன்னதானஞ்செய்யும் சத்திய நெறியுடையவனா
யொருவனிங்கடைந்து. எ-று. 74
அன்னதானத்தினை யடைவிற்செய்துதான்
மன்னியதுய்யமா மணியென்னாதற்குத்
தென்னியல் கைங்கரியத்திருப்பணி
பன்னியதிருவிழாப் பலவுஞ்செய்வனே.
(இ-ள்) அன்னதானத்தினை யடைவாகச் செய்து நிலைபெற்ற துய்யமாமணியென்னும் எந்நாதனுக்கு அழகும் இயல்பும்
வாய்ந்த திருப்பணியோடு திருவிழாவையுஞ் செய்வான். எ-று. (75)
சிறந்தவந்தணர் சிவபத்தரானபேர்
நிறைந்திடப்பதிட்டைக ணீதியாச்செய்தே
பிறந்திடுமிரத்தின புரத்தைப் பேர்பெற
அறந்தனால்விளக்கியே யடைவுசெய்வேனே.
(இ-ள்) வேதோத்தமர்களுஞ் சிவனடியவர்களு நிறைந்து வாழும்படி பிரதிட்டைசெய்து இரத்தினபுரமென்னும்
பெயரையுடைய இந்தஸ்தலம் விளங்கச்செய்வான். எ-று. (76)
நிதியாற்பத்தியா னிறையுமன்பினாற்
பேதியாமனத்தினாற் பெருமைசெய்குவான்
ஆதலான்மேதினி யாளுமன்னர்க்கு
மீதுசேர்தேச மானியங்கள் விஞ்சுமால்.
(இ-ள்) நீதியினாலும் பத்திமார்க்கத்தாலும் நிறைந்த அன்பினாலும் பேதமில்லாத மனத்தினாலும் யாவர்க்கும்
பெருமைசெய்குவான் அந்தவிசேடத்தால் அரசருக்குமேலான சம்பத்தும் மானியங்களும் அதிகரிக்கும். எ-று. (77)
என்றுவிரத்தினேசுரன் றன்னையேத்தியே
தன்றுனைத்தேவியுந் தானுமாகவே
துன்றியமலருளோன் றூயவன்னமீ
தொன்றியே சத்திய வுலகமெய்தினான்.
(இ-ள்) இவ்வாறு சொல்லி இரத்தினேசுரரைத் தோத்திரஞ்செய்து வணங்கி விடைபெற்றுக் கொண்டு மனையாளோடு
அன்னவாகனத்திலேறித் தன்னுலகமாகிய சத்தியவுலகத்தை யடைந்தான் பிரமதேவன். எ-று. (78)
ஒன்னவேசூதனு மியம்பக்கேட்டலு
மன்னியசௌனகன் மகிழ்ந்துபோற்றியே
யுன்னுபஞ்சாட்சர மொருதினத்தினிற்
பன்னுமாவடிதரு பரமன்முன்னரே.
(இ-ள்) இப்படியென்று சூதமுனிவர் சொல்ல நிலைபெற்ற சௌனகர் கேட்டு மகிழ்ச்சிகொண்டு போற்றி உச்சரிக்கத்தக்க
பஞ்சாட்சர மந்திரத்தை யொருதினம் யாவரும் பரவுகின்ற திருவடி யைத்தந்தருளும் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியின்
முன்னிருந்து. எ-று. (79)
செவித்திடிலவர்தமைத் தெரிசித்தால்வினைப்
பவத்தினிற்படுத்திடும் பசாசுதீர்வதுந்
தவத்துமைதனைபுகர் தன்னிற் போற்றினால்
எவர்க்குமேபால ருண்டாகுமென்பதும்.
(இ-ள்) செபம்பண்ணினால் அவர்களைக்கண்டால் வினையாகிய பவத்திற்பட்டழுந்திய பிசாசு விமோசனமும்
தவத்தினையுடைய அகிலாண்டவல்லியாரைச் சுக்கிரவாரத்திற் போற்றி வணங்குகிறவர்களுக்குப் புத்திரோர்ப்பத்தியு
முண்டாம். எ-று (80)
கொடுத்தனர்வரமெனக் கூறினீர்முனம்
அடுத்தவரொருவருக் கானதுண்டெனிற்
றொடுத்ததுதெரிவுறக் சொல்லவேண்டுமென்
றெடுத்துரைசெய்வதற் கினிதுசூதனே.
(இ-ள்) பரமசிவன்கொடுத்தனரென்று முன்னர்க்கூறினீர் அவ்வரப்படி யாருக்காவது நடந்ததுண்டானால் அதனை
அடியேற்குத் தெரியும்படி சொல்லியருளவேணுமென்று சௌனகர்கேட்க அதற்குச் சூதமாமுனிவர்
சொல்லத்தொடங்கினார். எ-று. (81)
திருவிழாச்சருக்கம்
முற்றிற்று.
ஆகசெய்யுள்-183
-----------------------------------------------------------
உ
சிவமயம்
ஆறாவது
பிசாசு விமோசனச் சருக்கம். (184- 226)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவணிமரகத தேசநாட்டினிற்
பொருவிறன்மா ரணியப்புரத்தினில்
அருமறைவேதிய ரமைந்துவாழ்வுபெற்
றிருநிதிவளத்துட னினிதுமேவுவார்.
(இ-ள்) திருவிளங்கிய மரகததேசமென்னு நாட்டில் ஒப்பில்லாத தன்மாரணியபுரமென்று ஒரு நகரமுண்டு அந்நகரத்தில்
மிக்கசெல்வத்துடன் அனேகம் வேதோத்தமர்கள் வாழ்வுபெற்றிருந்தார்கள். எ-று. 1
மேவும்வேதியர்களில் விளங்குநான்மறை
நாவினான்கலை தெரிநற்குணத்தினான்
றாவுநீதியுமுயர்த யாவுமேயுளான்
றேவசன்மாவெனத் திருந்துபேரினான்.
(இ-ள்) அப்பிராமணர்களுக்குள் நான்கு வேதங்களையும் பயின்ற நாவினையுடையவனும் அறுபத்து நான்கு
கலைக்கியானங்களையுந் தெரிந்த நற்குணத்தினையுடையவனும் நீதியுமுயர்ந்த தயை யுடையவனமாகிய
தேவசன்மாவென்னு மழகிய நாமத்தையுடைய வொரு பிராமணனுண்டு. எ-று. 2
அன்னவன்மனைவி காந்திமதியாமெனப்
பன்னுநாமத்தினள் பரிந்தகற்பினாள்
நன்னியற்குணத்தினா ணலஞ்செய்வாணகை
மின்னிடையிரவிபோல் விளங்குமெய்யினாள்.
(இ-ள்) அத்தன்மையையுடைய பிராமணன் மனையாள் காந்திமதியென்னும் பெயரையும் பரிவுற்ற கற்பினையும் நல்ல
ஒளிபொருந்திய நகையையும் யாவருக்கு மிதஞ்செய்கையையும் மின்னற் போன்ற இடையையும் சூரியனைப்போல்
விளங்கு மெய்யையுமுடையாள். எ-று. 3
அனையவளுடனவ னன்புபூண்டெழில்
மனையறம்புரிந்துதான் மருவுநாடனிற்
சனமகிழ்தேவசன் மாவின்முன்னவன்
மனமகிழ்தன்மசன் மாவென்பானுளன்.
(இ-ள்) அத்தன்மையையுடைய மனையாளுடன் அன்புபூண்டு அழகிய இல்லறநடத்தி வாழுநாளில் உலகத்தார்
நன்குமதிக்கும் அத்தேவசன்மாவின் தமையன் தன்மசன்மா வென்பவ னொருவனுளன்.
சத்திரயாகத்தைத்
மித்திரர்தன்னுடன் விரும்பிச்செய்தனன்
அத்திரங்காண்டலுக் காகவெண்ணியே
புத்திசேர்தேவசன் மாவும்போயினான்.
(இ-ள்) அந்தத்தன்மசன்மாவென்னும் பிராமணன் சத்திரயாகத்தை வேறோரிடத்தில் சில நண்பர்களுடன் கூடிச்செய்தனன்
அந்தயாகத்தைக் காண்பதற்குத் தேவசன்மா அவ்விடத்திற்குப் போயினான். எ-று. 5
அந்தவேலையிற்கட லனைத்துமுண்டவன்
விந்தமால்வரைதனை மேதினிக்குளே
நந்திடநடந்தவ னாட்டுமுத்தமிழ்
தந்தவன்புவியெலாஞ் சமதலஞ்செய்தோன்.
(இ-ள்) அத்தருணத்தில் சமுத்திரத்தையுண்டவரும் உயர்ந்த விந்தகிரியைக் கெடும்படி பூமிக்குட் புதைத்தவரும் நிலைபெற்ற
முத்தமிழை இவ்வுலகத்தவருக்கத் தந்தவரும் பூமியைச் சமதலமாகச் செய்தவரும். எ-று. 6
வேறு.
வாகாவிவில்வலர் கட்கானதேசெய மடித்த தலைவன்,
வேதாகமக்களைகள் கரைகண்டவன்பினன் விளங்குகருவின்,
போதார்தமிழ்ப் பொதிய மீதிலுறைவோனெறி பொருந்துலகினுக்,
காதாரமானவ னகத்தியனெனும் பெயரமைந்தமுனிவன்.
(இ-ள்) வாதாவி வில்லவன் என்னுமிருவர்களைக்கொன்றவரும் வேதாகம சாஸ்திரங்களைக் கரைகண்டவரும் அனேக
தருக்கணிறைந்த பொதியாசலத்தி லெழுந்தருளினவரும் நீதிநிறைந்த இவ்வுலகினுக் காதாரமானவரும் ஆகிய
அகத்தியரென்னும் பெயரையுடைய முனிவர். எ-று. 7
வந்தேதன்மாரணிய புரமதிற் றேவசன்மாவின் மனையிற்,
பந்தார்விரற்காந்தி மதிதனைக்கண்டே பசித்தனமியாஞ்,
சந்தார்தனத்துமட வாயன்னபானந் தனைத்தருதிநீ
பிந்தாதமத்தியா னத்திலதிதிக்கிடுதல் பெரிதுநலனே.
(இ-ள்) தன்மாரணியபுரத்திற்கு வந்து தேவசன்மாமனையிற்சென்று பந்துபோல் விரல்களையுடைய காந்திமதியைக்கண்டு
சந்தன நிறைந்த தனபாரத்த்தையுடைய பெண்ணே யாம் பசித்துவந்தனம் உச்சிக்காலத்திற் பசித்துவந்தவர்களுக்கு
அன்னமிடுதல் பெரிய பலனாகும் ஆகையால் அன்னபானாதிகளை யெனக்குத் தருவாயென்றார். எ-று. 8
என்றலுமெழுந்திலளருக்கியமோடாசனமு மீந்திலளுறச்,
சென்றடிபணிந்தில டிருந்தன்னமிங்கிலைச் செல்லுமெனலும்,
மென்றயில் கிழங்கு காயடகுமலரேனும் விருப்பமுடனே,
தின்றிடவளித்தியென வவையுமிலைமனையிலென் செல்லுமெனலும்.
(இ-ள்) என்றுசொன்ன வளவில் எழுந்திருக்காமலும் அருக்கியம் ஆசனமுதலானதுங் கொடாமலும் எதிர்சென்று
அடிபணியாமலும் உண்ணத்தக்க அன்னமும் இங்கில்லையெனலும் அகஸ்தியர் மென்று தின்கின்ற கிழங்கு, காய், தழை, பூ
யாதாயினும் கொடென்று கேட்க அவைகளுமில்லை என் வீட்டில் உமக்கென்ன காரியம் போமென்று
சொன்னமாத்திரத்தில். எ-று. 9
கணவனில்லந்தனி லிராதிருந்தாலுமே கருதிமனையாள்,
உணவயின டுப்கலில் திதிசத்காரம துறச்செய்வதே,
குணமதெனவாதலா லன்னமிடுவாயென்று கூறமுனிவன்,
அணு குவினையாலன்ன மில்லையெனவாதர வறக்கூறினாள்.
(இ-ள்) நாயகனில்லத்தி லிராதிருந்தாலு மனையாள் உச்சிப்போதில் பசித்துவந்த ஆதுலர்க்குத் தன்னா லியன்ற
வுபகாரஞ்செய்யவேண்டும் ஆதலால் எனக்கன்னமிடுவாயென்று அகஸ்தியர்சொல்ல அதைக்கேட்டும்
பூர்வபாவகர்மத்தால் பின்னும் அன்னமில்லையென்று இரக்கமறச்சொல்லினாள். எ-று.
ஓதனமருந்துபக னேரத்திலே யன்னமுண்டில்லையென்
றாதரவறச்சொன்ன புருடனேபிரம காதகனாமவன்,
நீதிபெறுமனையாளிருந்தாலுமில்லையெனு நீதிதவறி்ப்,
பாதகமிகுந்திடு மவட்கென்னமுனிவன் பகர்ந்துமுனிவன்.
(இ-ள்) அன்னம்புசிக்கும் பகனேரத்தில் அதிதிகள் வந்து யாசித்தால் உண்டென்றாயினும் இல்லையென்றாயினும்
அன்பறச்சொன்ன புருடன் பிரமகாதகனாவான் வீட்டில் அன்னமிருக்க இல்லையென்று சொன்ன பெண்களுக்குப்
பாதகமிகுமென்று கோபித்துச் சொல்லுவார். எ-று. 11
எக்காலமுந்தன் மனைதன்னிலுமருந் தனமிருக்கவுந்தான்,
முக்காலுமன்னமிலை யென்றே பசாசுபோன் மொழியோதலாற்,
றக்காரிலாதபே யாகுவாயென்னச் சபித்தேகினான்,
அக்காலையவ்வுரு வெடுத்துளமயங்கியவ ளஞ்சினளரோ.
(இ-ள்) எப்பொழுதும் தன்வீட்டில் அன்னமிருக்கவும் அன்னமில்லையென்று மூன்றுதரம் பிசாசு போற்சொன்னதால்
உற்றாரொருவருமில்லாத பேயாகுவாயென்று சபித்துத்தம் மாச்சிரமத்துக் கெழுந்தருளினார் அந்தக்ஷணமே
பிசாசுரூபத்தை யடைந்து மனமயங்கி அஞ்சினாள். எ-று. 12
பொன்னானமேனியது கருகியேதாம் புடைகொண்டுகாய்,
மின்னானநுண்ணிடை பெருத்து முலையானதுவிழுந்துநெடிகிக்,
கொன்னாரயிற்கண்கள்குழிவிழுந்துபுட்கக் கூனன்முதுகாய்ப்,
பன்னாதவுரைகூறு வாணாணடுங்ளியேபற்கடெறிய.
(இ-ள்) அக்காந்திமதி பொன்போன்ற சரீரங் கொள்ளிக்கட்டைபோற் கருக்கவும் வயிறு பருக்கவும் மேனோக்கிய முலைகள்
கீழ்வீழ்ந்து நீளவும் கூறிய வேல்பொன்ற கண்கள் குழிக்கவம் முதுகுவிற்போல் வளையவும் வாய் தகாதவார்த்தைகளைச்
சொல்லவும் சீவனடுங்கவும் பற்கள் கோரமாக வெளியிற்றெரியவும். எ-று. 13
எந்துமுலையானது வனப்பழிய நேர்ந்தவிடை பொந்துதெரியக்,
கூந்தன் மணமாகிலு முலர்ந்துமுடை நாறுவதுகொண்டுகுறுக,
மாந்தளிரின் மேனிபுகை சேர்ந்தசுவராமென வரண்டு கருகிக்,
காந்திமதியானவள் பிராந்திமதி யாயினள் கருத்தழியவே.
(இ-ள்) நிமிர்ந்த தனங்கள் வனப்பழியவும் நேர்ந்த நூலொத்த இடையிற் பொந்துதெரியவம் கூந்தலிலுள்ள
அகில்வாசனைவரண்ட முடைநாற்றங் கொண்ட கருகவம் காந்திமதியானவள் பிராந்திமதியாகிக் கருத்தழிந்துநின்றாள்.
எ-று. 14
தன்மனையிலுண்டாகு மாடை யாபரணங்கடனகனகமும்,
நென்மலையுடன் சேருமில்லமுங்கைவிட்டு நெடுவீதியிற்,
றுன்மதிகளே கொண்டு மேனிவேறாகியே தோன்றுமுன்செய்,
கன்மவினை வந்துறக்காடதனி லேகினாள் காந்திமதியே.
(இ-ள்) தன் வீட்டிலிருக்கின்ற ஆடை ஆபரணம் திரவியம் நெல் முதலான தானியங்கள் யாவுங் கைவிட்டுப்
பெரியவீதியில்வந்து துன்மதிநிறைந்த சரீரம்வேறாகித் தோன்றிய ஊழ்வினைபற்றக் காட்டிற் சென்றாள். எ-று. 15
வேறு.
பின்னகறேவசன் மாபிறங்குவேள்வியினை முற்றித்
தன்னகரடைந்துபோந்து தானுறைமனையிலெய்தி
நன்னுதற்பாரிதன்னை நாடினன்காண்கிலாமல்
இன்னலுற்றிரங்கியேங்கி யெங்கணுந் தேடினானே.
(இ-ள்) காந்திமதிகாட்டிற் சென்ற பின்னர்யாகத்தை முடித்து வந்த தேவசன்மா தன்னூருக்குவந்து தான் வசிக்கின்ற வீட்டிற்
சென்று நன்னுதலையுடைய தன் மனையாளைக் காணாமல் மிகத் துயரங்கொண்ட ஏங்கி யெங்குந்தேடினான். எ-று.
16
தனமிருந்தாலும்வேறு தானுளபொருள்களோடும்
அனமிருந்தாலுமிக்க வன்பினரிருந்தாலுந்தன்
மனதினுக்கினிதாங்கற்பு மனைவியில்லாதவில்லம்
புனைகலனணிந்துஞ்சீவன் போயின வுடலமாமே.
(இ-ள்) மிக்க திரவியங்களிருந்தாலும் தன தானிய சம்பத்துகளிருந்தாலும் அன்னவஸ்திரங்கள் குறைவறவிருந்தாலும்
மிகுந்த அன்பினர்களிருந்தாலும் மனதிற்கினிய மனையாளில்லாத வீடு உயிரில்லாத உடலில்
ஆபரணமணிந்ததையொக்கும். எ-று.
என்பதை யெண்ணியெண்ணி யின்னலுற்றிருக்குமேல்வை,
துன்பொடு சுற்றத்தார்கள் சூழ்ந்தவனுடனுரைப்பார்,
அன்புட னன்னம் வேண்டி யகத்தியமுனிவினன்னல்,
நன்பகறன்னிலிங்கே நண்ணியுன் மனையில்வந்தான்.
(இ-ள்) இவ்வண்ணமாகவெண்ணித் துக்கமுற்றிருக்கும்பொழுது பக்கங்களிலிருக்கின்ற சுற்றத்தார்கள் துன்பத்துடன்
சூழ்ந்துகொண்டு தேவசன்மனே அகஸ்தியமுனிவர் நேற்றைத்தின மிகுந்த பசியுடன் அன்னத்தைவிரும்பி நல்லபகலில்
உன்மனையில் வந்தார் எ-று. 18
பசிபெரிதானதன்னம் படைத்திடென்றவளைக்கேட்க,
இசைவிலா மனத்தாளன்ன மிருக்கவுமில்லையென்றாள்,
அசைவிலாக் கந்தமூலமாகினுமளித்தியென்ன,
வசையுட னில்லையென்றே வழுத்தினாள் பின்னுந்தானே.
(இ-ள்) வந்த கும்பமுனிவர்நின்மனையாளைநோக்கிப் பெண்ணே என்னைப் பசி மிக வருந்துகினறது அதனைத் தணிப்பான்
அன்னமளிக்கவேணுமென்ற சொல்ல அதைக்கேட்ட நின்மனையாள் கிரகத்தில் அன்னமிருக்கவுமில்லையென்றாள்
அதன்பின் கந்தமூலங்களாயினுங் கொடென்றார் அவைகளுமில்லை யென்றாள். எ-று. 19
ஆதலாற் பிசாசமாகிய வடனையடவிதன்னிற்,
போதியென்றழன்று சாபம்பொருந்துறவுரைத்துப்போனான்,
மாதுநின்றேவிதானும் வண்ணமும்வேறதாகி,
யாதுமோதாமல் யாங்களிணக்கவு மிணங்காளாகி.
(இ-ள்) ஆதலால் பிசாசாகச் சபித்துக் காட்டிற்றிரியக் கடவாயென்று சாபமிட்டப்போனார் உடனே பிசாசாகி
உருவம்வேறுபட்டு ஒரு வார்த்தையுஞ் சொல்லாமலும் யாங்கள் புத்திசொல்லவுங் கேளாதவளாகி. எ-று. 20
போந்தனளுரையு நீங்கிப் புறந்தரு கானிலென்றார்.
சாந்தமாங் குணத்தான் கேட்டுச் சஞ்சலமனத்தனாகிப்,
பாந்தளுமிடியேறுண்டபடி யெனத் துயரந்தன்னை,
மாந்தியே பொந்தகாந்தி மதிதனைக் கண்ணிற்கண்டான்.
(இ-ள்) யாதொரு வார்த்தையுமில்லாதவளாய்க் காட்டிற் சென்றாளென்றார்கள் அதைக்கேட்ட சாந்தகுணத்தானாகிய
தேவசன்மா கலங்கியமனத்தனாகி இடியேறுண்ட பாம்புபோல் ஏக்கங்கொண்டு வெளிப்பட்டுத் தேடும்பொழுது தன்
மனையாளாகிய காந்திமதியைக்கண்டான். எ-று. 21
மெய்கரிந்துருவம்வேறா மேனிகொண்டவளுநின்று,
கையொடுகையையெற்றிக் களே ரெனச் சிரித்துநோக்கும்,
பையவேநடக்கு மீளும்படி மிரையாடும்பாடுந்,
தொய்யவேயழதுசோருந் துள்ளியே குதிக்குநிற்கும்.
(இ-ள்) சரீரமெல்லாங்கறுத்து வேற்றுருவங் கொண்டவள் நின்று கையோடுகையையெற்றிக் களேரெனச்
சிரித்துநோக்குவாள் மெள்ள நடப்பாள் திரும்புவாள் கூத்தாடுவாள் பாடுவாள் துயரங்கொண்டழுது சோர்ந்திடுவாள்
துள்ளிக்குதிப்பாள். எ-று. 22
சுற்றியே தலமும்பாரிற் றுகளின்மேற்புரளுங்காலைத்,
தெற்றியே நடக்குமோடுந் திரும்பியே வெறித்துப்பார்க்கும்,
மெத்தியே யடிப்பார்போலவெ திருறவதட்டிநிற்கும்,
நிற்றிவாரலைநீயென்னுநீணிலத்தறையுங்கையால்.
(இ-ள்) சுற்றிக்கொண்டு எவ்விடத்திலும் சுழலுவாள் புழுதியிற் புரளுவாள் காலொடுகால் தெற்றிக்கொண்டு நடப்பாள்
ஓடுவாள்திரும்பிவந்து வெறித்து மிழித்துப் பார்ப்பாள் எற்றியடிப் பார்ககளைப்போல் அதட்டி உறுக்கி நிற்பாள்
சலத்திற்றோன்று நிழலை நில்லென்பாள் கையாற் பூமியையறைவாள். எ-று. 23
இருந்திடும்படுக்குமீள வெழுமழுஞ்சிரிக்கம் வெட்கும்,
அருந்திடுமுமிழுமண்ணை யல்றிடுமௌனமாகும்,
வருந்தியேதலையைச் சுற்றும் வலியபற்கடித்துறுக்கும்,
குருந்தெனச் சிலையைப்பற்றிக் கொடுத்திடு முலையைத்தானே.
(இ-ள்) இருப்பாள் படுப்பாள் திரும்ப எழுவாள் வருத்தமாகத் தலையைச் சுற்றுவாள் கடினமான பற்களை நெறுநெறென்று
கடித்துறுக்குவாள் கற்களை யெடத்துப் பிள்ளையென்று கையிலேந்தி முலைகொடுப்பாள். எ-று. 24
இன்னதன்மையளைக்கண்டேயிருபிறப்பாளனொந்து
மன்னியவீபூதி வேதமந்திர விதியாலிட்டுத் தே
தன்னுணர்வொருகாற்கூறித்தனையறிந்திடவேசெய்தே
அன்னவளுடனேதீரத்தயாத்திரையாகச்சென்றான்.
(இ-ள்) இத்தன்மையான செய்கையையுடைய மனையாளைப் பிராமணன்கண்டு மிகவுநொந்துநிலை பெற்ற விபூதியை
யெடுத்து வேதமந்திரத்தைத் தியானம்பண்ணி விதிப்படி அவளுக்குத் தரித்துத் தன்னுணர்வாகிய பஞ்சாட்சரத்தை
யொருதரம் சிவசிவாவென்று சொல்லி அவள் தன்னையறியும்படி செய்து அழைத்துக்கொண்ட தீர்த்தயாத்திரை
போயினான். எ-று. 25
எண்ணியவருடமீரைந்தெங்கணுந் திரிந்து சுற்றி,
நண்ணினன்பரத்துவாசநன்முனி யிருக்கைதன்னிற்,
கண்ணினான்முனியைக்கண்டு கழல்பணிந்தேத்தலோடுந்,
திண்ணியமுனியு மாசி செப்பிநல்விருந்தளித்தான்.
(இ-ள்) பத்துவருடகால மெங்கணந் திரிந்து சுற்றிக்கொண்டு பரத்துவாசமுனிவர் ஆச்சிரமம் வந்து அவரைக் கண்டு
பாதத்தில் வணங்கி யெழுந்து தோத்திரஞ்செய்து நின்றபொழுது வலிமை பொருந்திய பரத்துவாசமுனிவர்
ஆசீர்வாதஞ்சொல்லி சட்சுவையுட னமுதளித்தனர். எ-று. 26
இவளியாரென்றலோடு மென்னுடைப் பாரியென்ன,
அவள்பிசாசத்துவந்தா னடைந்த காரணமியாதென்னக்,
குவலயந்தன்னின் மிக்க குருமுனியையங்கேட்க,
இவளையமில்லை யென்ன விட்டனன் சாபமென்ன.
(இ-ள்) அமுதுசெய்த பின்னர் தேவசன்மாவைப் பரத்துவாசர் பார்த்து இந்தப்பெண யாரென்று கேட்கத் தேவசன்மா என்
மனைவியென்று சொல்ல அவர் இவளுக்குப் பேயுருவமெய்தக் காரணமென்னென்று வினவத் தேவசன்மா சுவாமி
மலயமுனிவர் உலகத்திலென்னில்லமடைந்து பிச்சைகேட்க விவள் பிச்சையில்லையென்று சொன்னாள் அவர்
இச்சாபமிட்டேகினார். எ-று. 27
சிறியவர் செய்ததீமை சீரியர்பொறுக்கவேண்டும்,
அறிவினான்மிக்கமேன்மை யகத்தியர் பொறையிலாமற்,
றருகியிவ்வாறு செய்தற் காதெனத் தேவசன்மா,
மறுகிநொந்தழுது கூற மாசறு முனிவன்சொல்வான்.
(இ-ள்) சிறியவர்கள்செய்த பிழையைப் பெரியோர்கள் பொறுக்கவேண்டுவது கடனென்பதை மறந்து மிக்க
சிலாக்கியமுடைய அகஸ்தியமுனிவர் பொறுமையில்லாமற் கோபித்து இவ்வாறு செய்தாரென்று தேவசன்மா
மனஞ்சுழன்று அழுது கூற அதைக் கேட்ட பரத்துவாசமுனிவர் சொல்வார். எ-று. 28
ஒழிந்தமுற்சனனந்தன்னி லுனக்கிவள் பாரியாகுந்,
தழைந்திடு மிளையதாரந்தானும் வேறொருத்தியாகும்,
அழிந்தழகிழந் துன்மத்தமாகவே யவுடகத்தை,
விழைந்தி வளவளுக் கிட்டு மெலிவித்தாளந்தப்பாவம்.
(இ-ள்) நீங்கிய முற்சென்மத்தில் உனக்கிவள் மனைவியாவாள் இவளையன்றி மற்றொருத்தி உனக்கு மறுதாரமான
மனையாளுண்ட அவளை யிவள்காய்மகாரத்தாலும் கெட்ட உன்பத்தகுணத்தினாலும் கொடிய ஒரு அவிஷதத்தைக்
கொடத்துச் சரீரம் மெலியச் செய்தனள் அந்தப்பாவம். எ-று 29
இம்மையிலிவளைப்பற்றி யிடர்செய்ய வந்துதோன்றி,
அம்முனியிடத்திற் சென்றே யடைந்ததாதலினாலிந்தச்,
செம்மை சேரகத்தி யன்பாற் றீங்கிலையெனத் தெரிந்து,
மும்மை யுமுணரவல்ல முனிபரத்துவன் மொழிந்தான்.
(இ-ள்) இப்பிறப்பில் இவளைப்பிடித்து இடர்செய்யவந்து தோன்றி அந்த அகஸ்தியமுனிவரிடத்திற் கோபமாக
அடைந்ததேயன்றி மகானுவாகிய அம்முனிவரிடத்தில் யாதொரு தீங்குமில்லை யென்று தெரிந்து
மூன்;றுகாலமுமுணரவல்ல பரத்துவாசமுனிவர் சொல்லினார். எ-று. 30
ஈங்கிவள் செய்த தீமை யீரைந்துவருடமாக,
நீங்கிடாதுனையுங்கூட நீணிலத்திழுத்ததன்றே,
யாங்கதுதீரும்வண்ண மறைகுவன்கேண்மினென்னப்,
பாங்குடன் பின்னுமந்தப் பரத்துவன் கூறலுற்றான்.
(இ-ள்) இவள் செய்த தீமை பத்துவருஷமாக நீங்காமல் உன்னையும் பத்துவருடம் அலையச்செய்தது
அந்தப்பாவநீங்கும்வண்ணஞ் சொல்லுவன்தை நீங்கள் கேளுங்களென்று பாங்காகப் பின்னும் பரத்துவாசமுனிவர்
சொல்லலுற்றார். எ-று.
பலபலசெனனந்தன்னிற் பத்துச்சென்மத்திற்செய்த,
நிலைபெறுபாவமெல்லா நீங்கும் புண்ணியங்களாகுந்,
தலமதில் வாசஞ்செய்தாற் றரணியின் மனிதர்தேவர்,
குலவிய முனிவர்சித்தர் கூறினாற் பாவமெய்தும்.
(இ-ள்) பல சென்மத்திலுஞ் செய்த பாவங்களெல்லாம் புண்ணியஸ்தலத்தில் வாசம் பண்ணினால் அப்பாவங்களெல்லா
நசித்துப்போகும் அதுவன்றி இவ்வுலகில் வசிக்கும் உத்தமர்களும் தேவர்களும் குலவியமுனிவர்களும் சித்தர்களும்
எந்தக்காரணத்திலாவது கோபித்துச் சாபமிடுவாராயில் உடனேயது பலிதமாகப் பற்றும். எ-று. 32
அன்னது மொன்றுக்கொன்றங் கதிகமாயேறும்பாவம்,
பின்னது தீரும்வண்ணம் பிரமன்செய் பதிட்டையாக,
மன்னுநூற்றெட்டுலிங்க மகிதலத்துளவவற்றின்,
நன்னெறிவிசிட்டமான நற்றலமெட்டதாகும்.
(இ-ள்) மேற்சொல்லியவர்களானேர்ந்த பாவமொன்றுக்கொன்றதிகமாகும் ஆனதால் அப்பாவந் தீர்வதற்
கோருபாயமுண்டு பிரமதேவன் செய்த பிரதிஷ்டையாக நூற்றெட்டுச் சிவலிங்கமிந்த உலகத்திலுண்டு அவைகளுக்குள்
நன்மைமிகுந்த ஸ்தலங்களெட்டுண்டு.எ-று. 33
காசிகாஞ்சினி பிருங்காவாசினிசனநல்வாசம்
வீசியவசுந்தரேசம்விசுவேசங் கரிவனந்தான்
மாசிலாவில்வமேவு வனத்தினி லிரத்தினேசம்
ஆசிலாமுத்திதன்னை யளித்திடுந்தலங்களாகும்
(இ-ள்) அவையாதென்னிற் காசி காஞ்சினி பிருங்காவனம் ஆசினிவனம் வாசநிறைந்த வசுந்தரேசம் விசுவேசம் ஆனைக்கா
குற்றமில்லாத வில்வவிருக்ஷங்கணிறைந்த இரத்தினேசம் என்று சொல்லப்பட்ட குற்றமில்லாத முத்தியைக் கொடுக்குந்
தலங்களாகும். எ-று. 34
இன்னதினந்தையாகு மிருநதித்தீர்த்தத்தின்பான்,
மன்னியசுத்தவிரத்தின மகேசனைத் தெரிசித்தாங்கண்,
முன்னுதெக்கணத்தின் மூர்த்தி முன்னர்ப்பஞ்சாக்கரத்தைப்,
பன்னியே யிவளைப்பார்கிற் பசாசுவிட் டேகுங்கண்டாய்.
(இ-ள்) இந்த எட்டத்தலங்களுக்குள் விசேடத்தலமொன்றுண்டு அதுயாதென்னில் பெருமை பொருந்திய
நந்தாநதிப்பக்கத்தில் நிலைபெற்ற இரத்தினபுரியாகும் ஆதிற்றிருக்கோயில் கொண்டெழுந்தருளிய துய்யமாமணியாரைத்
தெரிசித்துப்பின்னர் தெக்ஷிணாமூர்த்தி சந்நிதியிலிருந்து பஞ்சாக்ஷரத்தைச் செபித்து இவளைப்பார்த்தால் பிசாச
நீங்கிவிடும். எ-று. 35
என்றந்தமுனிவன்கூற விருபிறப்பாளன்கேளா
நன்றெனவவளுந்தானு நணுகினர்சமாபுரத்தின்
மன்றல்சேர்தலத்தோர்கூடி மாகத்தாநந்தானாடி
அன்றெழினந்தையாற்றி னணிகரை மீதினின்றே.
(இ-ள்) என்று அந்தமுனிவர் சொன்னவளவில் தேவசன்மாவென்னும் பிராமணன் அவ்வண்ணஞ் செய்கின்றேனென்று
தானுந்தன் மனையாளுஞ் சமாபுரத்திற்கு வந்தார்கள் அப்பொழுது அந்தஸ் தலத்திலுள்ள சனங்கள் கூடி மகாஸ்நாநஞ்
செய்து அந்நந்தையாற்றின் கரைமேனின்று. எ-று. 3
கேசமதாத்தும்போது கிட்டினபிசாசுதன்மேல்
வீசியதிவலைசற்றே மேனியிற்படுதலோடுந்
தேசுடன்முன்புபோலச் சிறந்திடுவடிவம்பெற்றாள்
மாசணிபிசாசுதீரும் வகையது நினைத்துமாதோ.
(இ-ள்) மயிரினை யுலர்த்தும்போது அந்தவிடத்தில் வந்த இவ்விருவர்மேலும் மயிரினின்றும் தெறித்த திவலைகொஞ்சம்
பட்டமாத்திரத்தில் அழகுடன் முன்புபொலச் சிறந்த உருவத்தைப்பெற்றாள் உடனே குற்றத்தையுடைய பிசாசு
தீரும்வகையை நினைத்து. எ-று. 37
தேவசன்மாவுநந்தைத் திருநதிதன்னின்மூழ்கி,
மேவியசுத்த விரத்தினவிமலனைத் தேவியோடும்,
ஆவலின்வணங்கித்தென்பா லரன்முன்னஞ் செழுத்தையோதிப்,
பாவியாமவளைப் பார்க்கப் பசாசவிட்டகன்றதன்றே.
(இ-ள்) தேவசன்மாநந்தாநதியில் ஸ்நாநஞ்செய்து அங்கெழுந்தருளிய சுத்த இரத்தினேசுரரையும் அகிலாண்டவல்லி
யாரையும் அன்புடன் தெரிசித்துப்பின் தென்பாலெழுந்தருளிய தக்ஷணா மூர்த்தி சந்நிதி முன்னிருந்து பஞ்சாக்ஷரத்தைச்
செபித்துப் பாபியாகிய தன் மனையாளை நோக்க அவளைப் பற்றிய பிசாசு விட்டிநீங்கியது. எ-று. 38
அவளையு நந்தையாகு மாற்றினின் மூழ்குவித்துத்,
தவளவெண்ணீறு பூசிச் சமாபதிதனைப்பணிந்து,
கவளமாகரியுரித் தகண்ணுதல்பாதம்போற்றித்,
துவளுநூலிடையாளோடுந் தோத்திரம்பலவுஞ்செய்தான்.
(இ-ள்) பின் அந்தப்பிராமணன் மனையாளுக்கு நந்தாநதியில் ஸ்நானஞ்செய்வித்து வெள்ளிய திருநறு தரித்துச்
சமாபதியாரைப் பணிந்து பின்னர் கவளமுண்கின்ற பெரியயானையை யுரித்துப்போர்த்த கண்ணுதலாகிய
சுத்தரத்தினேசுரரை வணங்கித் துவளுநூல்போன்ற இடையையுடைய காந்திமதியோடு அளவில்லாத தோத்திரங்கள்
செய்தான்.
வந்தனைசெய்துமீண்டுமகிழ்ந்திருவருமன்பாகி,
நந்தைமாநகரந்தன்னி னலம்பெறமனையுண்டாக்கி,
மைந்தரைப்பெறுதல் வேண்டிவைகாசிப்புகர்வாரத்திற்,
சுந்தரிமாதேவிக்குச் சொல்லுநான்முறையிற் செய்தான்.
(இ-ள்) வந்தனைவழிபாடுகள் செய்து திரும்பி மகிழ்ந்து இருவரு மிகுந்த அன்புடையராகி அந்நந்தாபரத்திலோர்
இல்லமுண்டாக்கி யதிலிருந்து புத்திரப்பேற்றை விரும்பி வைகாசிமாதம் சுக்கிரவாரந்தோறும் சுந்தரியென்னும்
பெயரையுடைய அகிலாண்டவல்லியாருக்குச் சொல்லப்பட்ட நான்குவித உபசாரத்துடன் பூசைசெய்தார்கள். எ-று. 40
நாலுவாரமும் பூசித்த நலத்தினாலுமைமகிழ்ந்து,
சாலவேநாலுமைந்தர் தனைப்பெற வரங்கொடுத்தாள்,
ஏலவரா குழலிகாந்திமதியுமிவ்வாறுபெற்றே,
பாலர் நால்வரையும் பெற்றுப்பதியுடன் கலந்திருந்தாள்.
(இ-ள்) வைகாசி மாதம் நாலு சுக்கிரவாரமும் பூசை செய்த நன்மையினால் உமையவள் மனமகிழ்ந்து நான்கு பிள்ளைகளைப்
பெற வரங்கொடுத்தாள் அவ்வண்ணமே மயிர்ச்சாந்தமணிந்த கூந்தலை யுடையாளாகிய காந்திமதி நான்கு பிள்ளைகளைப்
பெற்று நாயகனுடன் கலந்திருந்தாள். எ-று. 41
அந்தத்திற் கதியும் பெற்றாளாமெனச் சூதன்கூறச்,
சிந்தித்த சௌனகன்றான் றெளிவறமகிழ்ந்து போற்றி,
நந்தைப்பொற்பதியிலற்ப நண்ணுபுண்ணியஞ்செய்தாலும்,
விந்தத்தைப்போல வோங்கு மேன்மையை யுரைத்தல்வேண்டும்.
(இ-ள்) அந்தக் காந்திமதியானவள் அந்தத்தில் கதியும்பெற்றாளென்று சூதமுனிவர் சொல்ல அவைகளை மனதிற் சிந்தித்த
சௌனகமுனிவர் தெளிவுறமகிழ்ந்துபோற்றி நந்தாநதிசூழ்ந்த அந்நகரத்திற் கொஞ்சம் புண்ணியஞ்செய்தாலும் அது
விந்தைகிரியைப்போல வோங்கி வளரு மேன்மையைச்சொல்லி யருளவேண்டும். எ-று. 42
புண்ணியமற்பமாகப் புரிந்துதானியாவர்தாமே,
நண்ணினரதனைக்கேட்க நாடினதென்னுளந்தான்,
எண்ணியதவத்தின்மிக்கோ யியம்பு கவென்னச் சூதன்,
பண்ணிசைபுராணத்துள்ள படியினையுரைக்கலுற்றான்.
(இ-ள்) யாவராலுங் கருதப்பட்ட தவத்தினான் மிக்கோனே இந்தஸ்தலத்தில் சிறு புண்ணியங்களைச்செய்து பெரும்பலனை
யடைந்தவர்கள் யார் அவர்கள் சரித்திரங்களைக் கேட்க என்னுளம் விரும்புகின்றது அதனைச் சொல்லி யருளவேண்டு
மென்று சௌனகர் கேட்க நல்ல பண்ணிசைந்த புராணத்திலுள்ளவாறே சூதமுனிவர் சொல்லத் தொடங்கினார். எ-று. 43
பிசாசுவிமோசனச் சுருக்கம்
முற்றிற்று.
ஆகச்செய்யுள் -- 226.
------------
உ
சிவமயம்.
ஏழாவது
தானபலச் சருக்கம். (227 - 266 )
~~~~~~~~~~~~~~~~~~
ஏடலர்பெண்ணையெனத்திரிமெய்யன்
றூடணமாகிய சொற்பெறுபொய்யன்
வேடர்குலத்தன் வினைப்படுதீயன்
காடகனாமவன் விற்செறிகையன்.
(இ-ள்) மடல்விரிந்த பனைமரம்போல் நீண்டுவளர்ந்து எங்குஞ்சுழன்று திரிகின்ற சரீரத்தையம் நிந்தைச்சொற்களைப் பெற்ற
பொய்யை யுடையவனும் வேடர்குலத்திற் பிறந்தவனும் கெடுவினையே குடிகொண்ட தீயவனும் விற்பிடித்தகையை
யுடையவனும் ஆகிய அவன் காடகனென்னும் பெயரையுடையவன். எ-று. 1
இருள்பலகூடியிருந்த நிறத்தன்
பெருகுசினங்கள் பிறந்தமுகத்தன்
பருகுநிணத்தசை பற்றுமெயிற்றன்
சுருள்பசிதங்கிய தொந்திவயிற்றன்.
(இ-ள்) பலவிருள் கூடியிருந்ததை யனையநிறத்தையும் பெருகிய கோபம் பிறந்த முகத்தையும் உண்கின்ற நிணத்தசை
பிடித்த பற்களையும் சுருட்டிப் பிடிக்கின்ற பசிதங்கிய தொந்திவயிற்றையு முடையவன். எ-று. 2
வெண்வடித் தொடைமீது புனைந்தே
வண்கணுரித்த வசைந்தொளிர்மார்பன்
றிண்கடுமைத் திறலேதெரிபாதன்
கண்கள் சிவந்தழல் கதுவவிழிப்பான்.
(இ-ள்) வெண்மையை யுடைய பலகறைமாலையை மீது புனைந்து வண்மைபொருந்திய கண்பார்வை யுருவத்தக்க
மார்பையும் பலமும் கடினமும் வல்லமையும் காணப்பட்ட காலையும் சிவந்து அக்கினிப் பொற்களைச் சிந்துகின்ற
விழியையடைய கண்களையுமுடையன். எ-று. 3
அரையில்விசித்திடு சுரிகையனம்பும்
வரிவிலுமுற்றிடு வலியகரத்தான்
நெரிபுருவத்தனு ணெடிதுயர்கிற்கும்
பெரியகுரற்கொடு பெரிதிரைகிற்பான்.
(இ-ள்) இடையில் விசித்துக் கட்டப்பட்ட உடைவாளையும் அம்பும் வரிக் கட்டினையுடைய வில்லும் பொருந்திய
கையையும் நெரிப்பான புருவத்தையும் உண்ணீண்டுயர்ந்திருக்கும் பெரிய குரற்கொடுமிக் கிரைதலையு முடையவன்.
எ-று. 4
வேறு.
அடவிநெறியில்வழிகட்டியாரேனுந்தான்வருபவரை,
உடைமைநிதியமுதல் யாவுமுள்ள கலைகளுடன் பறித்துக்,
கடகோரயிலாற் குத்திவெட்டிக் கணைகளெறிந்து சோதித்துப்,
பு டவிமிசையே விழவிடுத்துப் போந்தேகாட்டினுட் புகுவான்.
(இ-ள்) காட்டுமார்க்கத்தில் வழியைக்காட்டி யாவராயினும் வருகின்றபேர்கள் ஆபரணந்திரவியம்வ ஸ்திரங்களைப்
பறித்துக்கொண்டு பரிசாயுதத்தினால் வெட்டியும் வேலாயுதத்தினாற் குத்தியும் சோதித்துக் காட்டினுட் புகுந்தொளிப்பவன்.
எ-று. 5
வேதநெறிசேர் பூசுரர்கள் விரதம்பூண்டதா பதர்கள்,
ஏதமிலாவெதீசுரர்களிவர்கண் முதலாவெவர்களையும்,
வாதைப்படுத்திக் கொலை செய்து வலியநிதி கடனைக் கவர்ந்தும்,
போ துமடவார்தமை யழித்தும் பொல்லாநெறியே புகுந்திடுவான்.
(இ-ள்) வேதப் பிராமணர்கள் மாவிரதியர்கள் முனிவர்கள் யோகியர்கள் முதலான நல்லோர்களை வாதைப்படுத்திக்
கொலைசெய்தும் வரப்பட்டவர்கள்நிதியங்களைக் கவர்ந்தும் போதுகின்ற மாதர்களைக் கற்பழித்தும் திரிகின்றகெட்ட
நிலைமையையே பூண்டவன். எ-று. (6)
இந்தவகையேகொலைகள விங்கெல்லை யில்லா வகைசெய்து,
சந்ததமுந்தானவ் வடவிதனிலே யுறையுமந்நாளில்,
நந்தைநதியீசுரன்றிருத்தேர்நடத்துந்திருநாள்சேவிக்கச்,
சிந்தைம கிழ்ந்தே காஞ்சிபுரந்தனிலே யிருந்துசிலபேர்கள்.
(இ-ள்) இவ்விதமான கொலை களவு முதலானவைகளை யெல்லையில்லாமற் றினஞ்செய்து அக்காட்டிற் றிரிகின்ற அந்த
நாளில் நந்தாபுரத்திலெழுந்தருளிய பரமபதியின் இரத உற்சவஞ்சேவிக்க மனமகிழ்ந்து காஞ்சிபுரத்தினின்றும் சில பேர்கள்
வந்தார்கள். எ-று. (7)
தூசின்விதங்கள் பல வகையுந்துகிருந் தாளத்துடன்விளங்குங்,
காசின்வடமுஞ்செழு நிதியுங் கலனுமாகி வருவோரை,
வீசுமயில்வா டரித்த காவேடன்கண்டு வழிகட்டி,
மாசில்வ கைகளெலாம் பறித்து வனத்துளிருக்கு மவ்வேலை.
(இ-ள்) பட்டுவஸ்திரங்களும் பவளங்களூம் முத்துகளுங்கோர்த்து விளங்கப்பட்ட குற்றமில்லாத் தாவடங்களூம்
செழுமையான திரவியங்களும் ஆபரணங்களும் கொண்டுவருகிற பேர்களைக் கூர்மை பொருந்திய வேலும் வாளும் பிடித்த
கையையுடைய வேடன்கண்டு வழிகட்டிப் பறித்துக் கொண்டு அவ்வனத்துள் ளிருக்கும் வேளையில். எ-று. (8)
தூரவொருவன்விளாங் கனியின்சுமையங் கெடுத்துவருபவனைச்,
சாகவருகலொடுங் காலிற்றடியாற் புடைத்தான வ்வடியாற்,
பாரின்விழுந்தானவ னிவனும் பறித்துக்கலையும் பழச்சுமையுஞ்,
சேரவெடுத்துவனத்துள்ளே செறிந்தேயிருக்குமந்நாளில்.
(இ-ள்) தூரத்திலொருவன் விளாம்பழச்சுமையை யெடுத்துக்கொண்டு வருவதைக்கண்டு தன்னருகு வருமளவும்
பேசாமலிருந்து சமீபத்திலவன் வந்தவுடன் தன்கையிலிருந்த தடியால் அவன் கணைக் காலில் ஓங்கியடித்தான்.
அடித்தவுடன் பூமியில் விழுந்தான். அத்தருணத்தில் வஸ்திரத்தையும் பழச்சுமையையும் பறித்துக்கொண்டு
அக்காட்டினுள்ளிருக்குமந்த நாளில். எ-று. (9)
வேறு.
மெய்திகழிரத்தினபுரி மீதிலுறைநெறியோன்
வைதிகனெனப்பெயர் தரித்தநெறி மறையோன்
எய்தியவனத்திடை யெரித்திடு சமித்துக்
கொய்துபலபுட்பமொடு கொண்டுவரலோடும்.
(இ-ள்) சத்தியமேவிளங்குகின்ற இரத்தினபுரியில் வசிக்கப்பெற்றவனும் நன்னெறியை யுடையவனும் வைதிகனென்னும்
பெயரையுடையவனும் ஆகியவோர் பிராமணன் அக்கொடியவேடன் தங்கியவனத்தினுட்சென்று சமித்தும் பத்திர
புஷ்பங்களும் கொய்துகொண்டு வருந்தருணத்தில். எ-று. (10)
கண்டனனவெவேடனு யர்கலைநிதிகள் கவர்தற்
குண்டெனநினைத்தவ னொளிக்கமறையோனுங்
கொண்டதோர்சமித்தினொடு குறுகுதலுமதிர
மிண்டினொடுநில்லென வெருண்டுநிலம்வீழ்ந்தான்.
(இ-ள்) அந்தப்பிராமணன் வருதலை வேடன்கண்டு வஸ்திரங்களும் நிதிகளும் கவர்தற்கு இவனிடத்திலுண்டென்று
நினைத்து ஒளித்துக்கொண்டிருக்க அப்பொழுது பிராமணன் சமித்தொடு புஷ்பங்களுங்கொண்டு வேடனொளித்த
இடத்திற்குச் சமீபத்தில் வந்தமாத்திரத்தில் கோடையிடிபோற் சத்தித்து மிண்டி னோடு நில்லென்று சொல்ல
அதைக்கேட்டபிராமணன் பயந்து நிலத்தில் வீழ்ந்தான். எ-று. (11)
விழுந்துடறளர்ந்துமிக வெடவெடெனவெருவுற்
றெழுந்திலனடுங்கின னிரைப்பினொடு புரளும்
அழுந்துமனவேடனவ னருகுறவும்வந்தே
மொழிந்ததிருவேடமு முந்நூலுமணிநீறும்.
(இ-ள்) அந்தப்பிராமணன் பூமியில் விழுந்து சரீரந்தளர்ந்து மிகவும் வெடவெடென்று நடுங்கிப்பயந்து எழுந்திராமல்
இரைப்புடன் பூமியிற் புரளும் போது கடின சித்தத்தையுடைய வேடன்கண்டு அந்தப்பிராமணன் கிட்டேவந்து பார்த்துச்
சொல்லப்பட்ட உருத்திராக்ஷமும் பூணூலும் விபூதியும். எ-று. (12)
மானதளூமுள்ளினுடை கோவணமுமன்னும்
மேனியதுகண்டிவனில் வேறுபலமொன்றும்
ஆனதிலையென்னவய ரேலெழுதியானீ
தானெதுநினைத்தபொரு டந்திடுவனென்றான்.
(இ-ள்) மான்றோலும் உள்ளுடையாகிய கோவணமும் சிவவேடந்தரித்த திருமேனியுங்கண்டு இவனிடத்தில் நமக்கு
யாதொரு பிரயோசனமு மில்லை யென்று நினைத்து ஓ பிராமணா நீ சோர்வடைய வேண்டாம் எழுந்திருநீ மனசில்நினைத்த
பொருளைச் சொல் அப்பொருளை யான்றருவேனென்று சொல்லினான். எ-று. (13)
வேண்டுவதுகூறுகென வேடனுமியம்ப
நீண்டமறைவேதிய னினைத்தயர்வுநீங்கி
யீண்டிவன்மொழிந்தபடி யாமினிமறுத்தான்
மீண்டுமிவனென்செயுமெனாவெருவலுற்றே.
(இ-ள்) பின்னும் நீவேண்டுவதைச் சொல்லென்றுசொல்ல அவ்வார்த்தையைக் கேட்ட வேதவல்லவனாகிய பிராமணன்
சோபநீங்கி யிப்பொழுதிவன் சொல்லியபடி செய்யாமல் மறுத்தால் பின்னென் செய்வானோவென்று பயந்து. எ-று.
(14)
வைத்திடுவிளாங்கனியின் வாசமதறிந்தே
யுத்தமகனிந்தபல மொன்றருடியென்றான்
அத்திடமிரண்டுகனி யவனுதவல்கொண்டே
எத்துமறைவேதிய னிரத்தினபுரியுற்றான்.
(இ-ள்) அவ்விடத்தில் வைத்திருந்த விளாங்கனியின் வாசத்தை யறிந்து ஏ உத்தமனே ஒருவிளாம்பழம்
கொடுக்கவேணுமென்றான். அந்தப்படி யே யிரண்டுபழத்தைக் கொடுத்தான் அதைப்பெற்றுக்கொண்டு
வேதவல்லவனாகிய பிராமணன் இரத்தினபுரியையடைந்தான். எ-று. (15)
நந்தைநதிமேவிய நறும்புனலிலாடிப்
புந்தியுடன்மிக்க சிவபூசனை புரிந்தே
நிந்தையில்விளங்கனி நிவேதனமளித்தே
அந்தவிதியோடவையு மன்னமுமயின்றான்.
(இ-ள்) அடைந்தவன் நந்தாநதியிற் பொருந்தியவாசநீரில் ஸ்நானஞ்செய்து அறிவுடன் மிக்க சிவபூசைசெய்து
கெடுதியில்லாத விளாங்கனியைப்பரமசிவநிவேதனஞ்செய்து அந்தவிதிப்படி செய்த அன்னத்தோடு
விளாம்பழத்தையுமுண்டான். எ-று.(16)
அஞ்சுதினமானதிரு நாளதனின்மேவி
விஞ்சுவிடைமீதில்வரு விமலனடிபோற்றி
நெஞ்சமகிழ்வோடனவனு நேசமோடிருந்தான்
வஞ்சமனவேடனவன் வளமினியுரைப்பாம்.
(இ-ள்) பின் அந்தப்பிராமணன் ஐந்தாந்திருவிழாவில் இடபவாகனாரூடராக எழுந்தருளிவந்த விமலனாகிய இரத்தினேசுரர்
திருவடிகளில் வணங்கித் துதிசெய்து மிக்க மகிழ்வுடன் அங்கிருந்தான் அது நிற்க வஞ்சக நிரம்பிய மனத்தையுடைய
வேடனது செய்தியை யினிச்சொல்வாம். எ-று. (17)
பன்னுவனவேடனெடு நாட்பலமிழைத்தே
பின்னரவன் வல்லுயிர்பிரிந்திடு மந்நாளில்
முன்னியமதூதுவர் கடாமுடுகிவந்தே
பின்னுறுவபாசமதனாற் பிணிவுசெய்தார்.
(இ-ள்) மேற்சொல்லியவேடன் நெடுங்காலமிக்க பாவங்களைச்செய்து பின் அவன் வலிய உயிர்பிரிகின்ற அந்தநாளில்
யமதூதர்கள் இவன்மிகக்கொடிய பாவியென்று நினைத்து எருமைக்கடாவெ முடுகி நடத்திக்கொண்டு வந்து பின்னலுற்ற
பாசக்க யிற்றினாற் கட்டியிழுத்தார்கள். எ-று. (18)
வேறு.
அந்தவேலை யானருள்சூடிய
நந்திதான்கணநாதரை யேவவே
வந்துதோன்றி வன்பாசமதிற்றுகச்
சிந்தவேயமதூதரைச் சீறினார்.
(இ-ள்.) அத்தருணத்தில்பரமசிவன் அருளைப்பெற்ற நந்திகேசுரர் வேடனைக்கொண்டுவரும்படி சிவகணங்களை அனுப்ப
அச்சிவகணங்கள் வேடனருகு வந்து யமதூதர்கள் கட்டியபாசக்கயிறுகள் அற்றுப்போகச் செய்து அவ்யமதூதர்களை
மிகவுங் கோபித்தார்கள். எ-று. (19)
அடித்துரப்பிட வங்கைமுறிந்தவர்
நடுக்கிடச்சென்று காலனைநண்ணினார்
விடுத்தவேடனம் வேடனையொப்பென
அடுத்தமேனிய தேதரித்தனரோ.
(இ-ள்) யமதூதரைக் கணநாதர்கள் ஆர்ப்பரித்துஅடித்த அளவில் கைகால்கள் முறிந்து மிக நடுக்கத்துடன் யமன்பாற்
போய்ச் சேர்ந்தார்கள் அப்பாற் பாசக்கயிற்றினின்றும் விடுபட்ட வேடனானவன் மன்மதனுக்குச் சமானமான அழகுவாய்ந்த
உருவத்தைப்பெற்றான். எ-று. (20)
தேவனாகிய திவ்வியரூபத்தான்
மேவிச்செம்பொன் விமானத்தின்மீதிலே
தாவியந்தாதுந் துமிதானெழப்
பூவின்மாரி பொழிந்திடப்பூவைமார்.
(இ-ள்). தேவாம்சத்தையடைந்த அழகுநிறைந்த உருவத்தையுடைய வேடன் செம்பொன்விமானத்திற் பொருந்த
அச்சமயத்தில் அந்தரதுந்துமி மழங்கவும் அரம்பைமாதர்கள் புட்பமாரி பொழியவும். எ-று.
(21)
கவரிவீசிடக் கானங்கள்பாடிட
எவருமேத்த வினிதுகொண்டேகியே
தவமுனிக்கணந் தாங்குங்கயிலையிற்
புவனநாதனைப் போற்றிடவேசெய்தார்.
(இ-ள்) அரம்பைமாதர்கள் வெண்சாமரை வீசிக்கொண்டு வரவும் வயிரியர்கள் கானம்பாடிவரவும் யாவருந்துதிக்க
மனமகிழழ்வுடன் அழைத்துச்சென்று தவமனிவர் குழாம் ஏத்தெடுக்கின்ற கைலையிலெழுந்தருளிய அகிலபுவன
காரணனாகிய பரமசிவனைத் துதிபண்ணும்படி செய்தார்கள். எ-று. (22)
அன்னதாகவ வன்கைலாயத்தின்
மன்னினான்பின் மலியதூதுவர்
முன்னியந்தகன் முன்புறச்சென்றுதான்
சென்னிதாழ்த்திச் செயறெரித்தாரரோ.
(இ-ள்) அவ்வண்ணமாக அந்தவேடன் கைலாயத்தினிலைபெற்றிருந்தான் பின் யமதூதர்கள் அந்தக்ஷணமே இயமன்
முன்சென்று வணங்கி வேடன் கைலையங்கிரிக்குப்போன சங்கதியைத் தெரிவித்தார்கள். எ-று.
(23)
கேட்டகூற்றுகி லேசமுங் கோபமுங்
காட்டவேகண் கனல்வந்துசிந்திட
வாட்டமாகிய திர்ந்தெழுந்தெமிகுங்
கோட்டினாகம யிடங்கொணர்கென்றான்.
(இ-ள்) தூதுவர்கள் வார்த்தையைக் கேட்ட யமன் கிலேசமுங் கோபமுங்கொண்டு கண்களினின்று நெருப்புப் பொறிபறக்க
மிக்க வாட்டத்துடன் சத்தித்தெழுந்து நீண்டகொம்புகளையுடைய மலையையொத்த மகிஷத்தைக்
கொண்டுவருகவென்றான். எ-று. (24)
வேறு.
நெறித்தமருப்பி னழுத்தியகிம்புரி நிமிரொளி மணியிலகச்,
செறித்தவெறித்த விளிக்குளனற்பொறி சிதறிக்கனலுதிரப்,
பிறித்தவகைப்படி கட்டுசதங்கைகள் பெருகொலி கலகலெனக்,
குறித்தகழுத்தின் மணித்தொனிதிக்குறை குலகிரிசெவிடுபட.
(இ-ள்) நெறித்து முறிப்பாகிய கொம்புகளிற்பதித்த பூண்களில் அழுத்திய ஒளியையுடைய மணிகள் பிரகாசிக்கவும்
நெருக்கமாக விழித்துப்பார்க்கின்ற கண்களினின்றும் அனற்பொறி சிந்தவும் வகைவகையாகக் கட்டிய சதங்கையினின்றும்
பெருகிய வொலி கலகலெனவும் கழுத்திற்கட்டிய மணித்தொனியால் அஷடகுல பருவதங்கள் செவிபடவும். எ-று.
( 25)
கனைக்க்கனைப்பினி டிக்குமுகிற்குல கணமது கைபகுகத்,
தனித்தனிவைத்த பதத்தினதிர்ச்சியிற் றாரணிமுதுநெரியக்,குனித்த
குனிப்பொடுதத்திமதத்திடு கொடியமயிடமதனைப்,
பனைக்குநிகர்த்த விரற்கைபடைத்திடுபடர்கொடு வரலுமரோ.
(இ-ள்) கனைக்கின்ற கனைப்பினால் முகிற் கூட்டங்கள் பயந்து பக்கங்களிலொதுங்கவும் தனித்தனியாக வைத்த பாத
அதிர்ச்சியால் பூமியின் முதுகு நெரியவும் குதித்துத் துள்ளி வருகின்ற எருமைக்கடாவைப் பனை மரத்துக்குச் சமானமான
விரல்களையடைந்த கையையுடைய தூதர்கள் கொண்டு வரலும். எ-று. (26)
சிவத்த மயிர்த்தொகை பற்றுசினத்தொடு செறியனல் விழியிலகக்,
கவர்த்தபிறைக்குலமொத்த வெயிற்றொடு கரியமுகம தொளிரப்,
புவித்தலமுற்றும் வளைத்தகயிற்றொடு புகரணியயிலுடனே,
நிவர்த்தகதைப்படி வைத்தகரத்துணை நிமிர்வளையமதுறவே.
(இ-ள்) இயமனானவன் சிவந்த மயிர்த்தொகையைப் பற்றிக்கோபத்துடன் நெறுங்கிய அக்கினிக் கண் பிரகாசிக்கவும்
பிளந்து வளைந்த மூன்றாம்பிறையையொத்த கோரதந்தங்களுடன் கருமேகம் போன்ற முகம் விளங்கவும் பூமியெல்லாம்
வளைக்கப்பட்ட பாசக்கயிறும் புள்ளிவாய்ந்த வோலோடு உயர்ந்த தண்டாயுதத்தைவைத்த இரண்டுகைகளிலுள்ள
வளையத்தோடு எ-று. ( 27)
பகட்டினின் மேற்கொடு டைத்தவிசைக் கொடு பரவையரவமுடனே,
முகட்டளவெற்றி யிரைத்துவரத்தென முழுதுமுலைத்துலையத்,
துகட்டரைமுற்று மெழுப்பியதப்பணி தொடுகடலளறுபட,
விகற்பெறுகொற்ற மிகப்படர்சுற்றிட ரிற்றிரியணுகலமே.
(இ-ள்) எருமைக்கடாவின் மேலேறிக்கொண்டு சமுத்திர முடைத்துக்கொண்டு ஆகாசமளவும் பொங்கி யிரைத்து
வருதலைப்போல் உலகமெல்லாம் உலைந்துபோகவும் நடைவேகத்திலெழுந்ததுகள் படிந்து சமுத்திரஞ் சேறாகவும்
வெற்றிமிகுந்த அனேக யமபடாள் சூழ்ந்துவரவு நடந்தான். எ-று. (28)
வேறு.
கருங்கடாவினின்றிழிந்து போய்க்கைலைவெற்பெய்தி
மருங்கெலாந்தவர்சூழ் திருவாயிலையணுக
நெருங்கியண்டர்குழாத் தொகைநிரைநிரையாக
ஒருங்கினேத்துநந்தீ சுரரோலக்கமதனை.
(இ-ள்) தானேறிச்சென்ற கருத்த எருமைக்க டாவினின்றிழிந்து கயிலாயமலையையடைந்து அருந்தவராகிய
முனிவர்கூட்டங்கள் நிறைந்த கோபுர வாயிலைச்சேர்ந்து அவ்விடத்தில் தேவர்கள் நிரைநிரையாகச் சேவித்து நிற்கு
நந்திகேசுரர் திருவோலக்கத்தை. எ-று. 29
கண்டுதூரத்தில் வேளைபார்த்தருகுறக்கலந்தே
அண்டர்நாயகசயசய போற்றியென்றகலந்
தெண்டனிட்ட நின்றேத்தலுஞ் சிலாதரன்குமார்
சண்டன்வந்ததென் கூறெனமலியுஞ்சாற்றும்.
(இ-ள்) கண்டு தூரத்தில்நின்று சமயம்பார்த்து அருகிற்சென்று தேவர்நாயகனே ஜயஜய போற்றியென்று மார்பானது
நிலத்திற்படியத்தீர்க்க தெண்டஞ்செய்து எழுந்து கைகட்டி வாய்புதைத்து நிற்கச்சிலாதமுனிவர் வரபுத்திரராகிய
நந்திகேசுரர் இயமனை நீ யிங்குவந்தகாரியம் யாதென்று வினவ இயமன் சொல்வான். எ-று. 30
அய்யகேளிரத்தின புரத்துத்தரத்தடவி
வெய்யகானிலோர் வேடனாங்காடகனென்பான்
செய்யொணா மகாபாதகங் கொலையுடன்றீங்கும்
பொய்யுமேசெய்துதிரிந்துபின்னிறந்திடும்போதில்.
(இ-ள்) ஐயனே கேட்டருளுக இரத்தினபுரிக்கு உத்தரபாரிசத்தில் மிகப்பயங்கரமான காடொன்றுண்டு அதில்
காடகனென்னும் பெயரையுடைய ஒருவேடன் செய்யத்தகாத மகா பாதகங் கொலை தீங்கு பொய் முதலான கெடுதிகளைச்
செய்து திரிந்து அந்தியகாலத்தில் சீவன் விடுகிறபோது. எ-று.
தானபலச்சருக்கம்.
அடியனேன் படரவனுயிர்கவரச்சென்றாரைத்
தடியதேகொடு சிவகணநாதர் கடாக்கி
நெடியதானபொன்விமானத்தினேற்றிநின்னெறியே
கடிதினுய்த்தனரவனையிக் கயிலையங்கிரியினில்.
(இ-ள்) அடியேனாகிய என்னுடைய தூதர்கள் அவனுயிரைக் கவரச் சென்றார்கள். அவர்களைச்சி
வகணநாதர்கள் தடிகளினாற்றாக்கி நெடிய பொன்வி மானத்திலேற்றி நெறியில் விரைவாக நடத்தி
யிக்கயிலையங்கிரியினிற் கொண்டுவந்து சேர்த்தார்கள். எ-று.(32)
ஞாலமீதினிற் பாவரைநரகத்தில் வீழ்க்க
ஏலுமிவ்வதிகார மேதினியெனக்கென்றே
காலதண்டமும் பாசமுங்கழித்து முன்வைத்தான்
நீலகண்ட நந்தீசனார் வெகுண்டிவை நிகழ்த்தும்.
(இ-ள்) உலகத்திற் பாவஞ்செய்தவர்களை நரகத்தில் விழுத்தத்தக்க அதிகாரம் எனக்கேதென்று காலதண்டத்தையும்
பாசக்கயிற்றையும் வாங்கி நந்திகேசுரர் முன்வைத்து நின்றான் அப்பொழுது நீலகண்டராகிய நந்திகேசுரர் கோபித்துச்
சொல்வார். (33)
எம்பிரானுறை யிரத்தினபுரத்துறை யெவரும்
சம்புவாகியசொரூபமாச் சர்க்கதியடைவார்
அம்புவிக்கணேயஞ்ச தாங்குரோசமென்னெல்லை
நம்புமவ்விடமாகு முன்னிடரதினண்ணா.
(இ-ள்) எம்பிரானாகிய பரமேசுரன் எழுந்தருளிய விரத்தினபுரியில் வசிக்கப்பட்டவர்கள் யாவரும் சிவசொரூபமாகி
நற்கதியையடைவார்கள். அந்த இரத்தினபுரிக்கு எல்லை ஐந்து குரோசமாகும் அவ்வெல்லைக்குள் வசிப்பவர்களிடத்தில்
உன் தெண்டனை செல்லாது. எ-று. (34)
அந்தவெல்லையிலுறைபவரகம்புறமுறைவோர்
எந்தவல்வினைப் பாவங்கள் செய்தபேரெனினும்
சிந்தையாரவோருண்டியுஞ் சீரடைக்காயுந்
தந்திடிற் பரகதியினிற் சாருவர்பின்னும்.
(இ-ள்) மேற்சொல்லிய எல்லைக்குள் உறைபவர்கள் அல்லது அகத்திலாயினும் புறத்திலாயினு முறைபவர்கள் மகா
பாதகங்களைச் செய்தவராயினும் அவர்களுக்கு அன்புடன் ஓர் பொழுது அன்னமிட்டு வெற்றிலைபாக்கு அளிப்பாராயின்
பரகதியடைவது திண்ணம் இதன்றியும். எ-று. (35)
கருதுவெள்ளியங்கிரியவர் காணியாங்காணாய்
கருதிவேதியன்கையினிற் றோன்றிய கனிவின்
அரியவெள்விளங்கனி யிரண்டளித்தபுண்ணியத்தாற்
பெரிதுபெற்றனன் வேடனிப்பிறங்கலின் பேறே.
(இ-ள்) யாவருங் கருதுகின்ற வெள்ளியங்கிரியவர் காணியாகுங்கண்டாய் அத்தன்மையையுடைய இரத்தினபுரியில் வசித்த
வேதோத்தமன்கையில் இந்தவேடன் மனக்கனிவோடு இரண்டு விளாங்கனியைக் கொடுத்த புண்ணியத்தால்
இக்கயிலாயகிரியை யடையும்பேற்றைப் பெற்றான். எ-று. (36)
ஆதலாலிரத்தினபுரத் துறைந்தவர்க்காகாப்
பேதையாளருஞ்சிறிது செய்திடினுமேபெரிய
மாதவங்கள்செய்தவரினும் வளர்ந்திடும் பலந்தான்
ஈதறிந்து நீ நடத்தியாலிப் பிழைபொறுத்தோம்.
(இ-ள்) ஆதலால் இரத்தினபுரியில் வசிக்கின்றவர்களுக்கு உலகத்தார்களுக் காகாத பேதமையையுடையவர்களானாலும்
அற்ப உபகாரத்தைச் செய்வாராயின் மாதவத்தோர் புண்ணியங்களினும் அதிகப் புண்ணியப் பலன்களை யடைவார்கள்
இதையறிந்து நீ நடப்பாயாக இப்பொழுது செய்த பிழையைப் பொறுத்தோம். எ-று. (37)
என்றுகூறலுநன்றென வடியிணையிறைஞ்சித்
தென்றிசைக்கிழவோனுந்தன்செழும்பதிசென்றான்
கொன்றுகுத்தி வெங்கொலைபுரிகொடும்பவவேடன்
மன்றல்வெள்விளாங்கனியினாற் கயிலையில்வாழ்ந்தான்.
(இ-ள்) இவ்வண்ணமாக நந்திகேசுரர் சொன்னமாத்திரத்தில் அவ்வண்ணமே செய்கிறேனென்று திருவடிகளில் வணங்கி
யமனானவன் தன்னுடைய வளநகரத்திற்குச் சென்றான் வரப்பட்டவர்களைக் கொன்றும் குத்தியும் கொலை செய்த
வேடனானவன் வாசனையையுடைய இரண்டு விளாங்கனியைக் கொடுத்த புண்ணியத்தால் கைலயங்கிரியில்
வாழ்ந்திருந்தான். எ-று. (38)
பறித்தவெள் விளாம்பழமிரண்டிப் படிப்பலித்தால்
அறத்திறத்தினாற்றான்செய்த பலத்தை யாரறிவார்
குறித்தவாறெனச் சூதமாமுனிவனுங்கூற
நிறைத்தமாதவச் சௌனகன் மகிழ்ந்துறை நிகழ்த்தும்.
(இ-ள்) காட்டிற்பறித்த வெள்ளிய இரண்டு விளாம்பழம் இப்படிப் பலத்தைக் கொடுக்குமானால் அறத்தினாலீட்டிய
பொருள்கொண்டு செய்த புண்ணியத்தால் வரும் பலனை யாவர் மொழியவல்லார் என்று சூதமுனிவர் சொல்ல நிறைந்த
மாதவத்தினையுடைய சௌனகர் மகிழ்ச்சியாற் சொல்வார். (39)
இந்தவாறுதானப்பல நன்ற தாமினிமேல்
நிந்தையில்லதாந் தேவமால்வரை யந்தநிலத்தில்
வந்தவாற துகேட்க வென்மனம்விரும்பியதாற்
புந்தியாலுணர்ந்துரையெனச் சூதனும் புகல்வான்.
(இ-ள்) இந்தப்பிரகாரந் தேவீர் அனுக்கிரகம் பண்ணின தானபல மகத்துவங்கேட்டு அடியேனுக்கு ஆனந்தமாயிற்று
இனிமேல் இகழ்வில்லாதபெரிய தேவகிரி பருவதம் அந்தயிடத்தில்வந்த வரலாற்றையுங் கேட்க என் மனம் விரும்புகின்றது
ஆகையால் தங்கள் அறிவினாலுணர்ந்த அக்கதையையுஞ் சொல்லவேண்டுமென்ற சௌனகர் சொன்னமாத்திரத்தில்
சூதகமுனிவரும்சொல்வார். எ-று. (40)
தானபலச் சருக்கம்.
முற்றிற்று.
ஆகச்செய்யுள் -- 266.
---------------
உ
சிவமயம்.
ஏட்டாவது
தேவகிரிச் சருக்கம். (267 - )
----------------
சுத்ததவளித சுடரொளிகிளர்தர
மெத்துமிரசித மிகவளர்கிரியது
பத்தர்சிவகணமரமர் கண்முனிவர்கள்
சித்தருறைவது சிவனுறைகைலையே.
(இ-ள்) பரமசிவனுறைகின்ற கயிலாசகிரியானது பரிசுத்த வெண்மை நிறங்கிளருகின்ற மிருதுவாகிய இரசிதத்தினால்
அமைந்தமலை அன்றியும் அடியவர்களும் கணநாதர்களும் முனிவர்களும் சித்தர்களும் உறைவிடமாயுள்ளது. எ-று.
(1)
குயிலைவிருதுள கொடிகயன்மதனனோ
டெயிலையவுணரை யெரிசெயுமவனுடன்
மயிலைநிகரெழின் மலைமகளுறைவது
கயிலைவரையது கடவுளர்பணைிவதே.
(இ-ள்) குயிலை எக்காளமாகக்கொண்ட மீனக் கொடியை யேந்திய மன்மதனையும் திரிபுரத்தையும் அதிற்றங்கிய
அவுணர்களையும் எரித்த பரமசிவனம் மயிலையொத்த சாயலையுடையமலைமகளும் உறைவிடமாயுள்ளது.
கயிலையென்னும் பெயரையுடையது தேவர்கள் வணங்கத்தக்கது. எ-று. (2)
அனைய கயிலையிலழகிய சிகரம
தெனைய பலபலவிலகிய கொடுமுடி
வனையுமவைதனின் மருவியதொருவரை
புனையுமிறகொடு புவிமிசைதிரியுமே.
(இ-ள்) அத்தன்மையான கைலையங்கிரியிலே அழகிய உச்சியில் அனேகவிதங்களாகப் பிரகாசிக்கின்ற
கொடுமுடிகளுண்டு அவைகளுக்குட் பொருந்தியிருக்கின்ற ஒரு கொடுமுடி பறக்கின்ற சிறையுடன் உலகத்தில்
உலாவித்திரியும். எ-று. (3)
தேவகிரியெனவே பெயர்திகழ்வது
தாவியிறகொடு தாரணிமுழுவதும்
மேவுபறைவகளாமென விசையுடன்
ஏவில்விடுசர மீதெனமருவுதுமெ.
(இ-ள்) அந்தக் கொடுமுடியானது தேவகிரியென்னும் பெயரைக்கொண்டு சிறகொடு உலகமுழவதுந் தாவிப்
பறவைகளைப்போலப் பறந்து விலவிற்பூட்டி விடப்பட்ட பாணத்தைப்போல் விசை கொண்டு மருவும். எ-று.
(4)
வேறு.
அந்தாளில் வரையனைத்து மகிலமிசைப் பறவைகள்போல்,
மின்னாருஞ்சிறகுடனேமிகப்பறந்து வீழ்ந்தெழுந்து,
பன்னாளுந் திரிதலினாற் பலவுயிர் வீய்ந்திடக் கண்டான்.
கொன்னாருஞ்சதகோடி கொடுவாள் கொண்டிந்திரன்றான்.
(இ-ள்) அக்காலத்தில் உலகத்திலுள்ள மலைகள் யாவும் இந்தப்பூமியிற் பறவைகளைப்போலப் பிரகாசம்பொருந்திய
சிறகுடனேபறந்து விழுந்து எழுந்து அனேககாலந் திரிதலினாற் பல வுயிர்களிறப்பதை அச்சத்தை விளைவிக்கின்ற
நூறுகோடி கொடுவாளாகிய ஆயுதங்களைக்கொண்டு இந்திரன் கண்டான். எ-று. (5)
வரையனைத்துஞ்சிறகரிந்து வரும்போதி லெதிராக
விரைவுடனேதேவகிரி மீளுதலுமகவான்கண்
டுரைவெகுண்டங் கதன்மீதி லுயர்குலிசந்தாக்கு தலும்
நிரைவிரிந்த சிறகின்மிசை நேர்பட்டுவாய்மடிந்தே.
(இ-ள்) தேவேந்திரன் பருவதங்கள் எல்லாவற்றையும் சிறகரிந்துவருகிறசமயத்தில் தனக்கெதிராக அதிக வேகத்துடன்
தேவகிரி வருவதைக்கண்டு கோபித்து அக்கிரியின்மேல் வச்சிராயுதத்தை யெடுத்துத் தாக்கினமாத்திரத்தில் விசாலமாக
விரிந்த அந்தத்தேவகிரியின் சிறகிற்பட்டு வாய்மழுங்கி. எ-று. (6)
சுவரெறிந்தகந் துகம்போற் சுடர்க்குலிசமீளுதலும்,
கவரெயிற்றுவெண்ணிறவெங்கடா மலையை யெதிர்கடவித்,
தவவில்வளைத்தனந் தமழைச்சரம்பொழியத்தேவகிரி,
குவியிறகி லிருபாலங் கொண்டகேடகம்போல.
(இ-ள்) அந்தவச்சிராயுதமானது சுவரிற்றாக்கிய பந்துபோல் மீண்டமாத்திரத்தில் கவர்பட்ட தந்தங்களையும்
வெண்ணிறத்தையும் மதசலத்தையுமுடைய யானையை அந்தத்தேவகிரிக்கு எதிராகச் செலுத்தி மிகவும்
இந்திரதனுவைவளைத்துக் கார்காலமழைபோலச் சரங்களைப்பொழிய அப்பாணங்களைத்
தேவகிரி யிருபாலுமுள்ள சிறகிற் கேடகம்போலக்கொண்டது. எ-று. 7
புடைத்து தறிச்சரங்களெல்லாம் புகர்முகக்கைதனினூறி,
அடர்த்தெறிந்தே தந்திதனையச்சிறகான் மோதுதலும்,
கிடைத்தசெருவிப் படியில்கிரிசெயலே தெனவெகுண்டு,
மிடல்செய்குலி சந்தனையேவிட நினைக்க நாரதன்றான்.
(இ-ள்) அந்தத்தேவகிரி சிறகையடித்து உதறினபோது கேடகம்போற் பொருந்திய சரங்களெல்லாம் அயிராவதத்தின்
புகர்பாய்ந்த முகத்திலுள்ள கையிற்றைத்து வீறிடஎதிர்ந்து அச்சிறகால் மோதின மாத்திரத்தில் நமக்குக்கிடைத்த
யுத்தத்திற்குள் உலகத்தில் இப்படிப்பட்ட யுத்தங்கிடையாதென்று பயந்துவலிமைசெய்கின்ற வச்சிராயுதத்தையே
பின்னுமவிடநினைந்தான் அந்தச்சமயத்தில் நாரதமுனிவன். எ-று. 8
வந்துவலாரியைநோக்கி மகிதலத்துக்கிரிகளென
இந்தவரைதனைநினை யேலிதுகைலைக்கொடுமுடியின்
முந்துசிகரத்திலொன்றாமென்று முனியோதிடலுந்
தந்திதனை விரையவிட்டுத் தடங்கைலைக்கிரியணுகி.
(இ-ள்) நாரதமுனிவருவந்து இந்திரனைநோக்கி ஓ இந்திரனே இந்தஉலகத்திலுள்ள மலைகளைப்போல இம்மலையை
நினைக்காதே இது கைலாய பருவதத்தின் கொடுமுடிகளில் முந்திய கொடுமடி யாகுமென்று சொன்ன மாத்திரத்தில்
இந்திரன் வெள்ளையானையை விரைவாக நடத்தி விசாலமான கைலாயகிரியை
அடைந்து. எ-று. 9
இறைவனடியைப் பணிந்திங்கிவ்வாறு விளம்புதலும்,
நறையிதழிச்சசடை முடியோனவில்வவனந்தக் கிரியதனைப்,
பறவைகள்போனீ யுலகிற்பறந்த திரிவதுதவிர்ந்தே,
உறையென நாமதற் குரைத்தவண்மையை நீ கேட்டியெனா.
(இ-ள்) சிவபெருமானைப் பணிந்து தேவகிரியின் சமாசாரத்தைச் சொன்னமாத்திரத்தில் வாசனை பொருந்திய கொன்றை
மாலையைத்தரித்த சடையையுடைய பரமசிவன் இந்திரனைநோக்கி ஓ இந்திரனே அந்தத்தேவகிரிக்குப்
பறவைகளைப்போல உலகத்திற் பறந்து திரிவதைவிட்டு உலகத்தில் தங்கியிருப்பாயென்று நாம் உத்திரவு
கொடுத்திருக்கின்றோம் அந்த உண்மையை நீ கேட்பாயாக. எ-று.
விளங்குவில்வவனம் பொன்னிவியனதிக்குவடக்காக,
உளங்கனியுமுனிவர் குழாத்துடனீ யோசனைதூரம்,
களங்கமில்லாநிலத்தாங்ககாசி னிக்குண் மேன்மையதாய்,
வளர்ந்திடுமவ்விடந் தன்னின்மருவு முரோமசனிருக்கும்.
(இ-ள்) விளக்கப்பட்ட வில்வவனமென்று ஒரு வனமுண்டு, அந்த வனம் விசாலமாகிய காவேரிநதிக்கு வடக்காக
உளக்கனிவினையுடைய முனிவர் கூட்டத்துடன் யோசனை தூரத்திலுள்ளது. குற்றமில்லாத இந்தப் பூமிக்குள்
மேன்மையையுடைய தாக வளர்ந்தோங்கும் அந்த விடத்தில் உரோமசமுனிவ ரிருப்பார். எ-று. 11
உத்தமமாவவணேகியுன் சிறகுமேனியுந்தான்
மெத்துபுவிதனக்குளுறமீது சிறிதேவிளங்கீ
அத்திசையிலுறை முனிவோர்க்கருத்து கந்தமூலப
மொய்த்ததிரணங்காட்ட முயர்சமித்துமுதலாக.
(இ-ள்) உத்தமமாகிய அவ்விடத்திற் சென்றுஉன் இறகும் சரீரமும் மெத்தென்ற புவிக்குள் மறைந்து வெளியிற் சிறிது
தோற்றப்பட்டு அந்தவிடத்தில் வசிக்கப்பட்ட முனிவர்களுக்குக் கந்தமூலம் பலம் இந்தனம் சமித்து முதலானவைகளை
யெல்லாம். எ-று. 12
உதவியவணுறை யுன்மீதுறைதேவனாகமெனும்,
முதன்மைபெறு தீர்த்தத்தின் முதல் வியுடனே நாமும்,
இதமுடனே சலக்கிரிடை யெனப்புரிய வருதுமென,
விதமுடனேயுரைத்தப் பான்மேலு முயர் வரங்கொடுத்தும்.
(இ-ள்) அவர்களுக்குக் கொடுத்து அந்த இடத்தில் உறையின்மேல தங்கிய தேவநாதமென்னு முதன்மைபெற்ற தீர்த்தத்தில்
பார்வதியும் நாமும் இன்பமாக அதிற் சலக்கிரீடைசெய்ய வருவோமென்று பலவிதமாகச் சொல்லியும் உயர்ந்த
வரங்களைக்கொடுத்தும். எ-று. 13
உனையொருகால்வலம் வந்தாருறுபிணிநோய்மிடியடையார்,
நினைவதெல்லாம்பெற்றிடுவார் நீடுகதியும் பெறுவார்,
வனையுமெழிற் கயிலைதனை வலம்வந்தோர் பெறும்பேற,
தனைய டைவார் தெரிசித்தோர் தானுமிக்கபலன்பெறுவார்.
(இ-ள்) உன்னையொருதரம் வலமாகப் பிரதக்ஷணம் வந்தபேர்கள் பொருந்திய பிணி தரித்திரம் அடைய மாட்டார்கள்
நினைத்ததையெல்லாம் பெறுவார்கள் பெரிய கதியையும் அடைவார்கள் தெரிசித்தவர்கள் கயிலாசத்தை வலமாக
வந்தபலன் எதுவோ அந்தப் பலனையும் பெறுவார்கள். எ-று. 14
உன்னிடத்தின் முளைத்த புதலுயர்தரு புல்கொடிமுதலா,
மன்னுமந்தப் பச்சிலைகள் வந்துதனியுறைவோர்கள்,
தன்னைவருத்திடுங்கொடிய சகல வியாதிக்குந்தான்,
நன்னெறிசேரவுட தமாநன்மை தனைக்கொடுத்திடுமே.
(இ-ள்) உன்னிடத்தில் முளைத்த பூண்டுகள் உயர்ந்த மரங்கள் புற்கள் கொடிகள் முதலாகப் பொருந்திய பச்சிலைகள்
உன்னிடத்தில் வந்து பொருந்தினவர்களுடைய கொடிய சகல வியாதிகளுக்கும் நல்ல அவுடதமாகி வினைகளை நீக்கி
நன்மையைக் கொடுக்கும். எ-று. 15
என்றுமிகவா நாமிங்கீய மனமதுமகிழ்ந்து
தன்றுமணித் தேவகிரி தொழுது விடைகொண்டேகி,
நன்றுபுரி வில்வவனநாடிய திற்பாய்ந்திடலும்,
ஒன்று புவியினுஞ் சேடனுயர் படமுநெளித்துளதால்.
(இ-ள்) இவ்விதமாக மிகுந்த வரங்களை நாம்கொடுக்க மணிகள் பொருந்திய தேவகிரியானது மனமகிழ்ந்து வணங்கி
விடைபெற்று நன்மையைச் செய்கின்ற வில்வவனத்தைத் தேடியதிற் பாய்ந்திடலும் அந்த அதிர்ச்சியினால்
பூமியைத்தாங்கிய ஆதிசேடன் படங்களை நெளித்தனன். எ-று. 16
யோசனையொன்றாய் நீளமுயரங்கால் யோசனையாய்,
மாசிலகலங்காலாய்வளைந்திடுவிற்போல் வடிவாய்,
வீசிவிழுந்திரு நிலத்தின்மீ தழுந்தி மேனியெல்லாந்,
தேசுபெறு சிறுவரையாய்த்தெரிந்திடு மத்தேவகிரி.
(இ-ள்) ஒரு யோசனைதூர நீளமும் கால்யோசனைதூர முயரமும் குற்றமில்லாத கால்யோசனை தூரம் அகலமும் விற்போல்
வளைந்த உருவமுமாக அந்தப் பூமியில் வீசிவிழுந்து மேனியெல்லாம் பூமிக்குள் அழுந்திப் பிரகாசம்பெற்ற சிறுமலையாகக்
காட்டியிருந்தது அத்தேவகிரி. எ-று. 17
அக்கிரியைவலம்புரிந்தோர வருமையுநாமுமுறை,
சுக்கிலமார்கைலைதனைத் தொழுதுவலஞ்செய்தார்கள்,
தக்கபலன் பெறுவதெல்லாந்தாம் பெறுவார் தூரத்தே,
திக்கிலுறத் தெரிசித்தோர் சிந்தைநினைந்தது பெறுவார்.
(இ-ள்) அந்தத் தேவகிரியை வலமாகவந்தபேர்கள் உமையு நாமும் வசித்திருக்கின்ற வெண்மை பொருந்திய
வெள்ளியங்கிரியைத் தொழுது வலம் வந்தவர்கள் பெறும் பலனைப் பெறுவார்கள் அதுவன்றித் தூரத்திலிருந்து
அக்கிரியைத் தெரிசித்தபேர்கள் மனதில் நினைத்தவைகளை யெல்லாம் பெறுவார்கள். எ-று. 18
அந்தமலைதனிலுள்ளவடவியுறு பச்சிலைகள்,
எந்தவினையுந் தீர்க்குமினிய வவுடதமாகும்,
புந்திதனி னினைந்தோர்க்கும் புண்ணியங்கண் மிகப் பெருகும்,
இந்தவகை யெனக்கயிலை யிறைவன் மகிழ்ந்திசைத்தலுமே.
(இ-ள்) அந்தமலையிலுள்ள காட்டிற்பொருந்திய பச்சிலைகள் எவ்வகைப்பட்ட வியாதிகளையும்போக்கும் ஔடதமாகும்
அன்றியும் அந்த மலையைத் தியானம் பண்ணினவர்கட்குப் புண்ணிய மிகப் பெருகும் என்று கயிலாயபதி
சொன்னமாத்திரத்தில்.
கேட்டமரர்கோ னுமையாள் கேள்வனிணைத்தா ளிறைஞ்சி,
நாட்டமுறத் தேவகிரி நண்ணிவலம்வந்துடனாற்,
கோட்டிபத்தின்மேற் கொடுதன்கொழும்பதியிற் சென்றானென்,
றிட்டுதவச் சவுனகனுக் கெழிற் சூதமுனியுரைத்தான்.
(இ-ள்) அதைக்கேட்டு அமரர்கோமானாகிய விந்திரன் உமைகேள்வனாகிய பரமசிவன் றிருவடிகளில் வணங்கி
விடைபெற்றுக்கொண்டு மிக்கபேரவாவோடு தேவகிரியையடைந்து பிரதக்ஷணஞ் செய்து உடனே நான்கு
கொம்புகளையுடைய வெள்ளையானையின்மேலேறித் தன்னுடைய செழித்த அமராவதிப் பட்டணத்தையடைந்தானென்று
தவசிரேஷ்டராகிய சௌனக முனிவருக்குச் சூதமுனிவர் சொல்லினார். எ-று. 20
தேவகிரிவரலாறு சிறந்துளதென் றகமகிழ்ந்து,
பூவணியுஞ் சீவனமேற் புனைந்த கங்கைத் திவலையதா,
மேவு நந்தாநதியென்றே விளம்பினையாலந்தநதி,
தாவிலங்குவந்தபடி சாற்று கெனக் கூறலுற்றான்.
(இ-ள்) தேவரீர் சொல்லிய தேவகிரியின் வறலாற்றைக் கேட்க மிகவுஞ் சிறப்புற்றிருக்கின்றது கொன்ற மாலையை யணிந்த
சடாமகுடத்திற் சூடிய கங்காநதியின் துளிகளாகப் பொருந்தும் நந்தாநதியென்று சொல்லினை அந்த நதி கெடுதியில்லாத
அவ்விடத்தில் வந்த வரலாற்றையுஞ் சொல்லவேண்டு மென்று சௌனகர் கேட்கச் சூதமுனிவர் சொல்லலுற்றார். எ-று.
21
தேவகிரிச் சருக்கம்
முற்றிற்று.
ஆகச்செய்யுள் -- 287
-------------
உ
சிவமயம்.
மாரகாளமதான குயில்கூவிவளரும்
பாரகாவினிடைமாமயில் பயின்றுநடமார்
தீரசாரலுயர்வாவிகள் செறிந்துமருவுந்
தாரகாவனமதாகிய தபோவனமதே.
(இ-ள்) மன்மதன் காகளமான குயில்கள் கூவிக்கொண்டு திரிகின்ற சோலையினிடத்திற் பெருமை பொருந்திய மயில்கள் பயில்கின்ற நடன நிறைந்த தீர்த்தக்கரைகளும் மலைச்சாரலும்பொருந்தியிருக்கின்ற தாரகாவனமென்றோர் தபோவனமுண்டு.
பகர்ந்த தாருவனமீது பயில்வேதமுனிவோர்
அகந்தைகூறுவதுணர்ந்த மலநாயகன்வெகுண்
டுகந்தமாதவனை மோகினியதாகவுரைசெய்
திகழ்ந்தமாதவர்கள்பால் வருதியென்றினிதினே.
(இ-ள்) சொல்லப்பட்ட அந்தத் தாருகாவனத்தில் நான்கு வேதங்களையுங் கற்றுணர்ந்த முனிவர்கள் அனேகம்பேர்களுண்டு அவர்கள் கருவத்தினால் ஆணவங்கொண்டு சிவபெருமானைக் கேவலமாக எண்ணி யிகழ்ந்தார்கள் அதைத் திருவுளத்தில் உணர்ந்து தனக்குகந்த திருமாலை யழைத்து நீ மோகினி உருவங்கொண்டு நம்மையிகழ்ந்த அவர்களிடம் வருவாயென்று சொல்லி. எ-று. 2
கருதுகாமவிசையோதிய கபாலிவடிவாய்ச்
சுருதிமாமுனிவர் மாதருழை துன்னியவர்நாண்
இரியமாகலவியிற் கைவளையாவுமொழியப்
பெரிதுகொண்டவர்கள் பின்றொடரநின்றனனரோ.
(இ-ள்) தான் கருதுகின்ற காம இராகங்களைப் பாடிக்கொண்டு கபாலி உருவமெடுத்து அந்த வேத முனிவர்களுடைய பத்தினியிடம் வந்து அவர்கள் வெட்கி மன்மதவிகாரத்தால் மயங்கிக் கைவளைகள் கழன்றுபெரிய ஆசையோடு பின்றொடரும்படி நின்றார். எ-று. 3
வந்தமோகினியு மாதவர்மனங்களுருகிச்
சிந்தைவேறுசெயல் வேறுசெயுமோகமுதவ
உந்துமால்கொடு பணிந்தவர் துடர்ந்துமுளமே
நொந்துமாதர்மயங்கொண்டதுவுநோக்கிமொழிவார்.
(இ-ள்) முன்வந்த திருமாலாகிய மோகினி மாதவர்கள் மனமுருகிச் சிந்தைவேறுசெயல் வேறு ஆகும்படியான மோகத்தையுதவ அந்தமயக்கம் தங்கள் பிடர்பிடித்துந்தப் பணிந்தவர் பின்றொடர்ந்ததும் உள்ளநொந்ததும் தங்கள் மாதர்கள் மயல்கொண்டதும் நோக்கி மொழிவார். எ-று. 4
இங்குமோகினியுமங்கொரு கபாலியுமெனாப்
பொங்கியே வெகுளிகொண்டழல் புரிந்ததனிடந்
துங்கமானபுலியானை யுழைசூழமழுவோ
டங்கியார்முயலகன் பணியழைத்துவிடலும்.
(இ-ள்) இங்கே நம்மிடத்திலொரு மோகினியும் அங்கே நம்மனைவியர்களிடம் ஒரு கபாலியுமாகவந்து மயக்கித் தவத்தையும் கற்பையும் அழித்தார்களென்று கோபித்து ஓர் யாகத்தைச் செய்து அதில் புலியையும் யானையையும் மானையும் மழுவையும் அக்கினி சொரூபமாகிய முயலகனையும் பாம்பையும் அழைத்துவிட்டார்கள். ஏ-று. 5
உழுவையானையையுரித்து மெய்தரித்துழையொடு
மழுவுமங்கையிலிலங்கிட மகிழ்ந்துபிடியாத்
தழல்விழிப் பணிதரித்து முயறாளின்மிதியா
முழுநடத்தொழில் புரிந்தனனனாதிமுதல்வன்.
(இ-ள்) அவர்கள் ஏவிய புலியையும் யானையையும் உரித்து இடையிலுஞ் சரீரத்திலுந் தரித்தும் மானையும் மழுவையும் மகிழ்த்து கையிற்பிடித்தும் அக்கினியைச்சிந்துகின்ற கண்களையுடைய பாம்பை ஆபரணமாகத் தரித்தும் முயலகனைத்தாளில் மிதித்தும் நடனமாடினார் அனாதிமுதல்வனாகிய பரமசிவன். எ-று. (6)
தவருமண்டரொடு மாலயனும்வீறுதரைமீ
தெவருமஞ்சலிசெய்தஞ்ச விமவானருளுமோர்
கவுரிகண்டுளமகிழ்ந்திட நடஞ்செய்கழலோன்
பவுரிகொண்டனன்முன் னெண்டிசைபறந்துசுழல.
(இ-ள்) முனிவருந் தேவருந் திருமாலும் அயனும் பூமியில் அஞ்சலியஸ்தர்களாகப் பயத்துடன் அருகில் நிற்கவும் இமோர்ப்பருவத ராஜகுமாரியாகிய பார்வதிதேவியார் கண்களிகொண்டு மகிழ்ந்து நிற்கவும் நடனஞ்செய்கின்ற திருவடியையுடைய பரமசிவன் எண்டிசையும்பறந்து சுழலும்படி இடம் வலமாகச் சுற்றினான். எ-று. (7)
வேறு.
தளையவிழுஞ்சடை விரித்துத் தாண்முழுதுந்தோள்விரவ,
இளையபிறை முழுமதிபோலிலகமுயலகன்முதுகு,
வளைவினொடு நெறுநெறென மலர்க்கையன்றி குதிகெனத்,
துளையவரும் புனற்கங்கைதுளுதுளும் பினலைமோத,
(இ-ள்) சிவபெருமான் ஆனந்த நடனஞ்செய்கிறபோது கொன்றைமாலையையணிந்த சடையவிழ்ந்து தாளினும் தோளினும் விரவவும் பாலசந்திரன் பூரணச்சந்திரனைப்போலப்பிரகாசிக்கவும்முயலகன் முதுகுவளைந்து நெறுநெறென்று நெளியவும் மலர்போன்ற கையிலுள்ள மழுதிகுதிகென்று சொலிக்கவும் கங்கையானது துளும்பி யலைகளை மோதவும். எ-று. 8
அன்றுநடம்புரி போதிலலர்கங்கைத்திவலைதனில்
ஒன்றுவில்வவனத் துறையுமுயர் தேவகிரிமீதிற்
சென்றுவிழவத்திவலை செறிந்தபுனலது பெருகி
மன்றலுடனத்திவலை வானதியாயினதன்றே.
(இ-ள்) பரமசிவனடனஞ் செய்கிறபோது சடாமகுடத்திலிருந்த கங்கையின் துளிகளில் ஒருதுளி தெறித்து வில்வவனத்துலுறைந்திருக்கின்ற உயர்ந்த தேவகிரியில் விழுந்து நீராகப்பெருகி வாசனையுடன் ஆகாயகங்கையாயினது.
எ-று. 8
நந்தாதுபுனல் வரலான ந்தைநதியெனும்பெயராம்,
வந்தேதான் றெரிசித்தோர் பரிசித்தோர் வரும்புனலைத்,
தந்தாகத் துடனுகர்ந்தோர் தந்தமெய்யிற்றான் றெளித்தோர்,
முந்தேசெய்வினைப் பஞ்சபாதகங்கண்முத றொலைப்பார்.
(இ-ள்) ஒருநாளுங் குறைவில்லாம லதிற்றீர்த்தம் வருகின்றமையால் நந்தா நதியென்னும் பெயருண்டாயிற்று அந்த நதியை வந்து தெரிசித்தோர் பரிசித்தோர் குடித்தோர் சரீரத்திற்றெளித்துக் கொண்டோர் முற்சென்மத்திற் செய்த வினைப் பகுப்பால் வந்த பஞ்சமா பாதக முதலான பாவங்களை யெல்லாந் தொலைப்பார்கள். எ-று. 10
அப்புனலின்மூழ்கி மயிராற்றுகின்ற திவலையன்றோ,
ஒப்புரவிற் பிசாசுவடிவொழித்ததுதான்பசார்ப்பனிக்கு,
மெய்ப்படியமூழ்கிடினும்வேண்டுமிட்டகாமியங்கள்,
செப்பமுறக் கொடுத்தவர்கடீமையெலாந் தீர்த்திடுமே.
(இ-ள்) அந்தத் தீர்த்தத்தில் ஸ்நாநம்பண்ணி மயிர் உலர்த்துகின்றபோது அந்த மயிரிலுள்ள ஒரு துளி ஒப்புரவாகத் தெறித்த மாத்திரத்தில் ஒரு பிராமணத்தி பிசாசுரூபம்விட்டுத் திவ்விய உருவமானாளன்றோ அவ்வாறே அந்தத் தீர்த்தத்துளி மேலே தெறித்தாலும் ஸ்நாநம் பண்ணினாலும் அவர்களுக்கு இஸ்டகாமியங்களை யளித்துத் தீமைகளைப் போக்கும். எ-று. (11)
மாகமாதந்தனிலே மருவுதினமுப்பதுந்தான்,
ஏகமாகிய சித்தத்துடனிந்தப்புனன்மூழ்கில்,
தெகமனேகம் பவமுன்னெடுத் ததனிற்செய்து நின்று,
போகொண்ணாப் பாவமெலலாம் போக்கி முத்திதனைச் சேர்வார்.
(இ-ள்) மாசிமாதத்திற் பொருந்திய முப்பதுநாளும் ஏகசித்தத்துடன் இந்தநதியில் ஸ்நானம் பண்ணினால் முற்பிறப்பில் எடுத்த சரீரங்களாற் செய்துநின்ற போகாத பாவங்க ளெல்லாவற்றையும் போக்கி மோக்ஷமடைவார்கள். எ-று. (12)
திங்களணிசங்கரன்றன் றிருமுடியின்மீதுறையுங்,
கங்கையினற் கொழுந்துமிஞ்சிக் கனிதிவலை யாதலினால்,
அங்கதிலு மதிகமதாமப்புனன் மூழ்கினரெவர்க்கும்,
தங்குவினைப் பவம்போதறப் பாதுசத்தியமே.
(இ-ள்) சந்திரசூடனாகிய பரமசிவன் சடாமகுடத்தின்மேற் றங்கிய கங்கைநதியின் கொழுந்துமிகுந்து கனிந்த துளியாதலினால் அக்கங்கைநதியினுஞ் சிலாக்கியமாகிய அந்தத்தீர்த்தத்தில் முழுகிய யாவர்க்குந் தங்கிய தீவினைகளாகிய பாவங்களெல்லாம் நாசமடைவது தப்பாது இது சத்தியவசனமாகும். எ-று. (13)
பகிரதியின் றிவலையது பட்டதனாலவ் விடமும்,
மகிதலத்தின் மிகவெழுந்து வளர்ந்த வில்வத்தருக்களெல்லாம்,
மிகுதிபெறு சிவரூபமென் விளங்கித் தோன்றுதலால்,
அகமகிழ்ந்து ரோமசருமனந்த முனிவருமதனில்.
(இ-ள்) கங்கைத்துளி தெறித்தபடியால் அந்தப்பூமி பூலோகத்துக்குள் சிலாக்கியமானது அதில் வளர்ந்த வில்வவிருக்ஷங்களெல்லா மிகவும் பேறுபெற்று சிவரூபமாக விளங்கித் தோன்றும் ஆகையால் மனமகிழ்ந்து உரோமச முனிவர் முதலாக அனேக முனிவர்கள் அந்தவனத்தில். எ-று. 13
எண்ணுபலகால முதலின்றளவு மதிலிருந்து,
நண்ணுதவ மிகப்புரிந்து நணுகுவினைப்பவமுடித்தார்,
புண்ணியவில் வாரணியம் பொருந்தியோர் கணமுறைந்தால்,
மண்ணவரும்விண்ணவரா மருவிமிகக் கதிசேர்வார்.
(இ-ள்) எண்ணதற்குரிய பலகாலமுதல் இந்நாள்வரையில் அதிலிருந்து செய்தற்கரிய தவங்களைச் செய்து தங்கள் செனனத்தொடர் பையறுத்தார்கள் அந்த வில்வாரணியத்தில் ஒருகணந்தங்கியிருந்தால் மனிதர்களுந் தேவர்களாகிக் கதியை யடைவார்கள். எ-று. 15
விஞ்சுவில்வவனமாகி மேதினியோர்வினை தீர்க்கம்,
அஞ்சுகூப்பிடு தூரமாகுமது தனிலினிதா,
நஞ்சணிவார் சடைக்கங்கை நந்தைநதி யதைச்சூழ்ந்து,
பஞ்சமாபாதகங்கள் பற்றறுக்கு மனைவோர்க்கும்.
(இ-ள்) மிகுந்த வில்வவனமாகி உலகத்தார்கள் வினைகளைத் தீர்க்கும் அந்தவனம் ஐந்து கூப்பிடு தூரம் விசாலமாகும் அதில் ஸ்ரீ கண்டனாகிய சிவபெருமான் சடையினின்றும் வரப்பட்ட கங்கையே நந்தாநதியாக வந்து அந்தவில்வவனத்தைச் சூழ்ந்துகொண்டு ஆன்மகோடிகள் வினைகளைப் பற்றறுக்கும். எ-று. (16)
என்னவே சூதமுனி யியம்புமொழி தனைக்
கேளா, மன்னுசவுனகன்மகிழ்ந்து மணிக்கோ
யின் முன்றீர்த்தம், மன்னியுறைவதின்மகி
மை மொழிந்திடுக வெனவுரைப்ப, நன்னெ
றிசேர் சூதனெனு ஞானமுனியது பகர்வான்.
(இ-ள்) இந்தப்பிரகாரஞ் சூதமுனிவர் சொல்லியதைக்கேட்டு நிலைபெற்ற சௌனகமுனிவர் மனமகிழ்ந்து சுவாமி அழகிய திருக்கோயிலின் எதிராகப் பிரமதீர்த்தமிருக்கின்ற விசேடத்தையுஞ் சொல்லியருளவேண்டுமென்று கேட்கச் சூதனென்னும் ஞானமுனிவர் சொல்லத்தொடங்கினார். எ-று. (17)
நந்தாநதிச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் -- 304.
--------------------
உ
சிவமயம்
துய்யமாமணிச் சோதியார் சந்நிதிக்கெதிரே
மெய்யதாகிய பிரமதீர்த்தமதென வேதன்
செய்யமூன்றரைக்கோடி தீர்த்தங்களுஞ்சேர
வையமீதிலா வாகனஞ்செய்து வைத்தனனே
(இ-ள்) துய்யமாமணீசுரர் சந்நிதிக் கெதிராக மெய்யாகிய பிரமதேவன் தன்பெயரினால் பிரமதீர்த்தமென்று ஒரு தீர்த்தமுண்டாக்கி அதில் உலகத்தில் உண்டாகிய மூன்றறைக்கோடி தீர்த்தங்களையும் ஆவாகனம் பண்ணிவைத்தான்.
எ-று. (1)
அத்திறத்தினாற் புழுக்களும் பாசியுமன்றி
மெத்துதப்பளை யழுக்குடன் மேவுதலிலதாய்க்
சுத்தநின்மலச் சலமதுவாகியே தோன்றும்
உத்தமப்புனன்மகிமையா ரறிந்துணர்ந்துரைப்பார்.
(இ-ள்) அந்த மகிமையினால் அதிற் பூச்சி புழுபாசி தவளை அழுக்குமுதலானதும் பொருந்தாமல் நின்மலதீர்த்தமாகத் தோன்றியிருக்கும் அந்த உத்தமதீர்த்தத்தின் மகிமையை யாவர் அறிந்துசொல்வார். எ-று.
(2)
அப்புனறன்னைத் தெரிசிக்கப் பரிசிக்கவள்ளி
மெய்ப்புறத்தினிற் றெளித்திடவிநாசமாம்பாவம்
செப்பின்மூழ்கிடிற் சென்மசென்மந்தோறுஞ்செய்த
ஒப்பில்பஞ்சமா பாதகப் பாவங்களொழியும்.
(இ-ள்) அந்தத்தீர்த்தத்தைக் கண்ணினாற் றெரிசித்தாலும் பரிசித்தாலும் கையினால் அள்ளிச் சரீரத்திற் றெளித்துக்கொண்டாலும் பாவங்களெல்லா நாசமும் சொல்லுமிடத்து அதில் ஸ்நானம் பண்ணினால் சென்மசென்மந்தோறுஞ் செய்த ஒப்பில்லாத பஞ்சமாபாதகங்களும் விட்டுநீங்கும். எ-று.(3)
பெருகுபூரணையு வாவொடு திங்களின்பிறப்பிற்
பருகுசந்திர சூரியகிரணங்கள் பயில
வருதினம்விதிபாதங்கள் மருவிய தினத்திற்
கருதிமூழ்கிடுமவர் குலமரபினிற் கலந்தே.
(இ-ள்) பெருகிய பௌரணையிலும் அமாவாசையிலும் வரப்பட்ட மாதப்பிறப்பில் வருகிற சந்திரசூரியகிரணங்களிலும் விதிபாதங்களினும் நினைத்து அந்தத்தீர்த்தத்தில் முழுகும் அவர்கள் குலத்தினிற் கலந்து. எ-று. (4)
நரகிலவீழ்ந்திடு மவரெலா நற்கதியடைந்தே
விரவிநற் கயிலாயத்தின் மேவிவாழ்ந்திருப்பார்
திரமதாஞ்சமாதேவிதன் னருளினாற் சிறந்தே
பரவிடுஞ்சமாதீர்த்தத் தின்மகிமையைப் பகர்வாம்.
(இ-ள்) நரகத்தில் விழுந்தவர்களெல்லா நற்கதியை யடைந்து கைலாயத்தில் வாழ்ந்திருப்பார்கள் உறுதியான சமாபதியா ரருளினாற் சிறந்து விளங்கிடும் சமாதீர்த்தத்தின் மகிமையை யினிச்சொல்வாம். எ-று. (5)
சமையினில்வந்த தாதலாலப் புனறன்னில்
அமைவிலாப்பெருங் குரோதனாயவ குணனாகி
இமையினேரமுந் தூடணனாகியேயிசையாத்
திமையனாயினு முழ்கிடினற் குணஞ்சேரும்.
(இ-ள்) சமையினால்வந்ததாதலால் அந்தத்தீர்த்தத்தில் அமைவில்லாத பெருங்குரோதனும் அவகுணனும் இமைநேரமாயினும் ஒழிவில்லாத பிரதூஷணனும் இசைவில்லாத கெட்டகுணமுடையவனும் ஆகிய ஒருவன் மூழ்கினால் உடனே நற்குணத்தை யடைவான். எ-று. (6)
ஞானசிந்தையுஞ் சாந்தமாங்குணங்களு நண்ணி
ஊனமின்றியே கல்வியுஞ்செல்வமுமோங்கும்
ஈனமாகிய பஞ்சபாதகங்கள் விட்டேகும்
மானதத்தினா னினைந்தகாமிய மெல்லாமருவும்.
(இ-ள்) ஞானசிந்தையும் சாந்தகுணமும்அடைவதோடு கெடுதியில்லாத கல்வியும் செல்வமும் அதிகரிக்கும் அவையன்றி ஈனத்துவத்தையுடைய பஞ்சமா பாதகங்கள் நீங்குவதுடன் மனதால் நினைத்த கருமங்களு முற்றுப்பெறும். எ-று.
(7)
வேந்தன்கோபமாய் வேறினிச்செயலில்லையென்னிற்,
றோய்ந்துதோய்ந்ததிற் சமாபதிதேவியைத் தொழுதாற்,
சாந்தனாகியேயவன் வெகு சந்துட்டனாகி,
வாய்ந்த நன்மையும் வரிசையு முகவுவள் மகிழ்ந்தே.
(இ-ள்) அரசன் கோபமாக வேறொரு கெதியுமில்லாதவனானால் இந்தச்சமாபதி தீர்த்தத்தில் அடுத்தடுத்து முழுகிச் சமாபதியம்மனைத் தெரிசித்து வணங்கினால் அந்த அரசன் சாந்தகுணனாகிப் பிரிய வசனத்துடனே மகிழ்ந்து பொருந்திய நன்மையையுடைய செல்வங்களைத் தந்தருளுவான். எ-று. (8)
தலைவன்சேர்விலா மடந்தையரந்நதி மூழ்கி
மலைமடந்தையைச் சுக்கிரவாரநாடன்னில்
நிலைபெறும்படியரிச்சனைசெய்து நேர்ந்திறைஞ்சின்
முலையின்மேவிய கணவனுமோக முற்றணைவான்.
(இ-ள்) நாயகன்சேராத பெண்கள் அந்தத்தீர்த்தத்தில் ஸ்நானம்பண்ணி மலைமடந்தையாகிய சமாபதியம்மனைச் சுக்கிரவாரத்தில் நிலைபெறும் அரிச்சனைசெய்த மனப்பொருத்தமாக வணங்கினால் கணவன்றானேவந்து முலைகுழையப் புல்லுவான். எ-று. (9)
முழுகியப்புனன் மூன்றுகையள்ளி யுட்கொண்
வழுவிலாதொரு மண்டலமுமைதனை வணங்கில்
தழுவுவெவ்விடக் கடிகளும் வியாதியுந் தவிர்ந்தே
விழுமிதாகிய மேனியாய் விளங்குவரினிதே.
(இ-ள்) அந்தநதியில் ஸ்நானஞ்செய்து மூன்று கைச்சலம் அள்ளியுட்கொண்டு வழுவதலில்லாமல் ஒருமண்டலஞ் சமாபதியம்மனை வணங்கினால் சரீரத்தைத் தழுவிய கொடியவிஷ்கடிகளும் வியாதியு நீங்கி நல்ல சரீரத்தைப் பெற்று விளங்குவார். எ-று. (10)
யாவர்கூறுவர் சமாபதியிரு விழிக்கருணை
மேவியேயரு டீர்த்தத்தின் மகிமையின் விதத்தைத்
தாவுதேவமால் வரையின்மீதுறை தருசலந்தான்
தேவகாமகா தீர்த்தமாயுறைவது சிறந்தே. (11)
(இ-ள்)சமாபதியம்மன் கடாக்ஷ வீக்ஷண்ணியம் பெற்றுக் கருணைசெய்கின்ற இந்தத்தீர்த்தத்தின் மகிமையை யாவர் சொல்லவல்லார் அதுநிற்கத் தேவகிரியின்மேற் பொருந்திய தீர்த்தத்தின் மகிமையைச் சொல்லுகிறோம் அந்தத்தேவகிரியின்மேல் தேவகாதீர்த்தமென்றுசிறந்துறைதொன்றுண்டு.
உரைத்த தேவமால் வரையின்மீது மாபதியருளால்
விரைத்தடம்புனற் றீர்த்தமுண்டாயது மேனாள்
நிரைத்தபூமுலைச் சமாபதி தன்னுடனிமலன்
றிரைப்புனல் குடைந்தாடினனதிற் செலக்கிரிடை. (12)
(இ-ள்)முன்சொல்லப்பட்ட தேவகிரியின்மேல் பரமசிவன் அருளால் மணம்வீசுகின்ற விசாலமாகிய நன்னீர் நிறைந்த தீர்த்தமுண்டாயிற்று அதில்முன்னாளில் பூமாலைநிறைந்த தனபாரங்கயுடைய சமாபதியாரோடு பரமசிவன் சலக்கிரீடைசெய்து விளையாடினன். எ-று. (12)
புண்ணியப்படிவம்பெறு புரிகுழலுமையாள்
நண்ணுமேனியி லரிசனங் களபகஸ்தூரி
பண்ணுகுங்குமந் தோய்தலாற் பரிமளமாகி
வண்ணமான குங்குமவடிவாகியே லயங்கும். (13)
(இ-ள்) புண்ணியவடிவத்தைப் பெற்ற கட்டப் பட்ட கூந்தலுடைய சமாபதியம்மன் பொருந்திய திருமேனியிற் றோய்ந்த மஞ்சட்பொடி சந்தனம் கஸ்தூரி குங்குமம் முதலானதுங் கலந்திருப்பதால் அந்தத்தீர்த்தம் பரிமள வாசத்தை யுடைத்தாகி அழகிய குங்குமவண்ணமாகப் பிரகாசிக்கும். எ-று()
அனையதண்புனன் மூழ்கியேயந்த மண்ணதனை
யினியதேகத்திற் புண்டரமாக விடாமற்
புனையுநெற்றிமேற் றிலகமதென்னவே புனைந்தால்
அனையதே நுதற் கண்ணெனவடைவர் சாரூபம்.
(இ-ள்) அத்தன்மையான கண்ணிய தீர்த்தத்தில் முழுகி அந்தத் திருமண்ணை யெடுத்து நல்லதேகத்தில் புணடரமாகத் தரித்துக்கொள்ளாமல் நெற்றியிற் பொட்டாக வணிந்துகொணடால் அதுவே நெற்றிக்கண்ணாகச் சாரூபத்தை யடைவார்கள். எ-று (14)
ஆயுணாளுன நாடனிலொரு தினமேனும்
ஏயவிப்படிச் செய்திடிலிட்ட காமியங்கள்
மேயசெல்வங்கள் மேவியே மேதினிமீதிற்
காயம்விட்டிடும் போதினிற்பெறுவர் நற்கதியே.
(இ-ள்) யாவராயினுந்தன் னாயுளுக்குள் ஒருதினம் மேற்சொல்லியவண்ணஞ் செய்வாராயின் இஷ்ட காமியங்களோடு மிக்க செல்வத்தை யடைந்திருந்து சரீரத்தை விட்டு உயிர் நீங்கும்பொழுது நற்கதியை யடைவார்கள். எ-று
(15)
அந்தநீர்தனையொரு பணமளவுதான் பருகிற்
சிந்தைதான் மகிழ்ந்தே சிரமீதினிற் றெளிக்கில்
வந்துதன்னனை வயிற்றினிற் பிறந்திடார் மண்மேல்
முந்துபாவங்க ளகற்றியே முத்தியையடைவார்.
(இ-ள்) அந்தத் தீர்த்தத்தின் புனலை ஒரு பணமளவு பருகினாலும் மனமகிழ்ந்து சிரமேற் றெளித்துக் கொண்டாலும் தாய் வயிற்றிற் பிறவார்கள் அன்றியும் இந்த உலகத்தில் முன்செய்த பாவங்களை எல்லா நீக்கி முத்தியை யடைவார்கள். எ-றி. (16)
ஆறுதிங்களினளவதிற் காலையின்மூழ்கி
வீறுமோர் கைநீர்குடித்திடில் விருப்புடன்வாணி
ஏறிநாவின் மீதிருந்தெந்தக் குலத்தவரேனுங்
கூறுபாடைக ளெவற்றினுங் கவிதை கூறிடுவார் (17)
(இ-ள்) எந்தக்குலதிற் பிறந்தவராயினும் அந்தத்தீர்த்தத்தில் ஆறுமாதம் உதயகாலத்தில் முழுகி ஒருகைச் சலத்தைக் குடித்துவருவராயில் அவர்கள நாவில் சரஸ்வதி குடியிருக்கச் சகல பாஷைக்ளிளுங் கவிசொல்வார்கள். எ-று. (68)
மதித்திடுந் துலாமாதத்திற் பூர்வபக்கத்துத்
துதித்திடுந் திதிநவமி யன்றுதய காலையிலே
நதிக்குள்வீரிய நந்தாமாநதியின்முன் மூழ்கி
விதித்ததேவகா தீர்த்தம்பின் மூழ்கியேவிரும்பி. (18)
யாவராலுங் கருதப்பட்ட துலாமாதம் பூர்வபக்ஷத்து நவமிதிதியில் உதயகாலத்தில் நதிளுக்குள் மேன்மையாகிய நந்தாநதியில் முதலமுழுகியபின் தேவகாதீர்த்தத்தில் முழுகிவிருப்புடன்
சேர்த்தமண்ணது நெற்றியிற் றிலதமாத்திருத்தி
வாய்ந்த தேவமால்வரை பிரதக்கணம் வந்தே
ஆய்ந்தபோசனம் விப்பிரற்கியன்றவா றளித்து
மாந்தர்சேர்ந்த பேருடன் வனபோசனமருந்தி. (19)
தேவகாதீர்த்தத்திற் சேர்ந்து மண்ணை யெடுத்து நெத்தியிற் றிலதமாகத் தரித்துக்கொண்டு தேவகிரியைப் பிரக்ஷிணமாக வந்து அந்தவனத்தில் தன்னாவியன்றவளவு பிராமணபோஜனஞ் செய்வித்துப்பின் கூடிய சனங்களுடன் வனபோஜனமுண்டு. எ-று. (20)
வந்துமாலை நேரந்தனிற் சமாபதிதேவிக்
கந்தமா வபிடேகஞ்செய் தரிச்சனைபுரிந்து
சந்தனாதிகுங்குமத்துடன் சண்பகமாலை
கொந்தலாததொடை சாற்றி நிவேதனங்கொடுத்து. (20)
நேரத்தில் சமாபதிதேவியாருக்குஅழகாக அபிஷேகஞ்செய்தபின் அரிச்சனைசெய்து சந்தனமுதலாகிய குங்குமத்துடன் சண்பகமாலையும் கொத்தாக விரிந்த மற்ற மாலைகளுஞ் சாத்தி நிவேதனஞ்செய்து. எ-று.
(20)
பாயசத்துடன் பூபமு நிவேதனம்பண்ணி
ஆயதூபதீபத்துட னாடல்பாடலுநன்
னேயமாகவே செய்யடிபணிந்திட நிலைசேர்
சாயலைத்தரித்துடன் மிகுக னாட்டியராவார்.
(இ-ள்) பாயசமும் அப்பவர்க்கங்களும் நிவேதனம்பண்ணிப் பொருந்திய தூபதீபமும் ஆடலும் பாடலுஞ்செய்து நல்ல அன்புடன் அம்மையின் திருவடியில் வணங்கினால் நிலைமை சேர்ந்த மேன்மையும் அழகும்பெற்ற மிகுந்த திரவியசம் பன்னராவார்கள். எ-று. (21)
தனம்படைத்திடச் செய்திடிற் குபேரன் போற்றழைப்பார்,
நினைந்து பூமியைச் செய் திடினேமிவேந்தாவார்,
சினந்தவன்றனோடெ திர்த்திடுஞ் செருநர்களெல்லாம்,
இனன்புறப்படிற்பனியெனவேகி மாய்ந்திடுவார்.
(இ-ள்) திரவியங்களை விரும்பிப் பூசைபண்ணினால் குபேரனைப்போலாவார்கள் பூமியை நினைத்துப் பூசை பண்ணினால் பூமண்டலத்தை யாளும் அரசராவார்கள் பூசைபண்ணுகின்ற பேர்களைப் பகைத்து எதிர்க்கின்றவர்கள் சூரியனைக்கண்ட பனிபோல் மாய்ந்துபோவார்கள். எ-று. (22)
பண்ணுபாவங்களாகிய மலையெனும்பஞ்சை
எண்ணுந்தேவகாசல நெருப்பாகவே யெரிக்கும்
புண்ணியஞ்செய்தோர்க்கெய்துமப்புனலிசைந்தாடி
மண்ணின்மேன்மிகவாழ்ந்துபின்கைலைமன்னுவரால்.
(இ-ள்) பண்ணப்பட்ட பாவங்களாகிய மலையென்கின்ற பஞ்சை எண்ணத்தக்க தேவகா தீர்த்தமாகிய நெருப்பு வீழ்ந்து எரித்துவிடும் புண்ணியஞ் செய்தவர்களுக்குக் கிடைக்கின்ற அந்தத்தீர்த்தத்தில் இசைந்து ஸ்நானம்பண்ணினால் உலகத்தில் மிக்க செல்வத்துடன் வாழ்ந்து பின் கைலாயமடைவார்கள். எ-று. (23)
மகஞ்செயாதவிப் பிரர்தின மூழ்கிமண்டரிக்கின்
மிகுந்தமாமக விருடியாஞ் செய்பலன்மேவும்
உகந்து தன்னுடனாகாவாகி மூழ்கினுமுன்
பகர்ந்திடும்பலன் கிடைத்திடும்பாவம் பற்றறுமால்.
(இ-ள்) யாகங்களைச்செய்யாத பிராமணர் அதில் முழுகி மண்ணைத்தரித்தால் மிக்க யாகங்களைச் செய்த பலனைப்பெறுவார்கள் ஒருகடத்தில் அந்தத் தீர்த்தத்தை முகந்துகொண்டு வந்து ஸ்நானம்பண்ணினாலும் மேற்சொல்லிய பலனைப்பெறுவார்கள் அவர்கள் பாவங்களும் பற்றற்றுப் பறக்கும். எ-று. (24)
எந்தத்தேசத்தி லெப்புனறன்னின்மூழ்கிடினும்
சிந்தையாரவே தேவகாதீர்த்தத்தை நினைக்கின்
முந்தயாம்சொன்ன பலனெலாம்பெறுவர் முடிவாய்
அந்தமானபோதிலுஞ் சிவலோகமே யடைவார்.
(இ-ள்) எத்தேசத்தில் எத்தீர்த்தத்திலாவது ஸ்நானம்பண்ணும்போது தேவகாதீர்த்தத்தை நினைத்து ஸ்நானம்பண்ணினால் முன் யாம் சொன்ன பலனை யெல்லாம் பெறுவார்கள் அன்றியுமவர்கள் அந்தியத்திற் சிவலோகமடைவார்கள். எ-று. (25)
விலங்குடன்புவியூர் வனபறப்பனவெல்லாங்
கலங்கியப்புனல் வீழ்கினுமிறக்கினுங்கதியின்
நலம்பெறுங் கயிலாயத்தில் வாசமாநண்ணுந்
துலங்கி யிப்படிப் பெற்ற துண்டது சொலக்கேண்மோ.
(இ-ள்) மிருகங்களும் பூமியில் ஊர்வனவும் பறப்பனவும் ஆகிய எல்லாம் மனங்கலங்கியத் தீர்த்தத்தில் தவறிவீழ்ந்தாலும் இறந்தாலும் முத்திப்பதவியாகிய கைலாயத்தில் வாசமாகப் பொருந்தும் பிரகாசமாக இப்படி யோர்கதையுண்டு அதைச்சொல்லுகிறோம் கேட்பாயாக. எ-று. (26)
பொன்னிமாநதிவடகரைப் பூமியிற்பொருந்தும்
கன்னியாகிரியென்னு மாநகரிகாவலவன்
பன்னுவேடர்தங்குலத்துளான் சபரனென்பானோர்
மன்னன்வேட்டைமார்க்கத்தினி லெய்தினன் வனத்தில்.
(இ-ள்) காவேரிக்கு வடகரையிற் பொருந்தியகன்னியாகிரி யென்றொரு நகருண்டு அந்த நகரத்திற்கு அதிபதியாக உள்ளவனும் வேடர்குலத்திற் பிறந்தவனும் ஆகியசபரனென்பவன் வேட்டைமார்க்கமாக வனத்துக்கு வந்தான். எ-று. (27)
சுற்றும் வேடர்கணாய்களுந் தொடுத்திடும்வலையும்
பற்றியேவரப்படைத்தலைவர்கள்புடைசூழ
வெற்றிசேர் வுறும்பரியின் மேற்கொண்டு முன்னடத்தி
எற்றியேவிருகங்களை யெறிந்து வந்தனனே.
(இ-ள்) வேடர்கள் நாய்களையும் பின்னப்பட்டவலைகளையும் பற்றிக்கொண்டு வரவும் படைத்தலைவர்கள் பக்கத்திற் சூழ்ந்து வரவும் வெற்றிமிகுந்த குதிரையின்மேல் அவ்வேடராஜன் ஏறி முன்னாக நடத்தி மிருகங்களை வெட்டியும் எறிந்தும் வந்தான். (28)
பஞ்சமாநதிக்குத்தர வனத்தினிற் பரந்து
விஞ்சுபச்சிம திசைதனின் மேவியேவளைந்து
குஞ்சரத்தொடு மரைகளு மான்களுங்கொடிய
வஞ்சகப்புலி கரடியுங் கோலமும் வதைத்தான்.
(இ-ள்) பஞ்சமாநதிக்கு வடபாரிசமான வனமெங்கும் பரவி மேற்குத்திசையில் வளைந்து யானைகளையும் மரைகளையும் மான்களையும் கொடிய புலிகளையும் கரடிகளையும் பன்றிகளையும் வதைத்தான். (29)
அனையகாலையி லனைவரும் வெருக்கௌவதிர்ந்து
முனையதாகிய கோட்டினான் முழுநிலங்கீறி
வனையவீக்கியே வளைந்திடும் வலையெலாம் பீறித்
தனியனாகியபன்றியொன் றெதிர்த்ததுதருக்கால்.
(இ-ள்) அப்படி வேட்டையாடிக்கொண்டு வரும்போது தனியனாகிய பன்றி ஒன்று யாவரும் பயப்படும்படி சத்தித்து முனையாகிய கொம்பினால் நிலத்தைக்கீறிச் சுற்றிலும் கட்டிய வலையைக் கிழித்துத் தருக்கால் எதிர்த்தது. (30)
வேறு.
நீலகிரிக்குநிகர்த்திடு மெய்மயிர்நிமிரவெதிர்த்துவரும்,
வாலமதிப்பிள வொத்தமரப் புடைவாய்கொ டெதிர்த்துவருங்,
காலனெனக் கொலைசுற்றி வளைத்திடுகா னவரைச் சிதறுங்,
கோலமெனக் கருமேகமெனப் பொருகுஞ்சரமாமெனவே.
(இ-ள்) அந்தப் பன்றியானது நீலகிரிக்குச் சமானமான சரீரத்திற்பொருந்திய மயிர்களைச் சிதறிச் சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்து எதிர்த்தும் மூன்றாம்பிறையைப்போல் வளைந்த கொம்புகளை யுடைய வாயைப் பிளந்துகொண்டு சத்தித்தும் இயமனைப்போலக் கொலைபுரிகின்ற வேடர்களைச்சிதறியும் எதிர்த்துத் தாக்குகின்ற கரிய யானையைப்போலச் சத்தமிட்டும் வரும். எ-று. (31)
மோதியுளைத்திடு நாய்களின் மொய்த்தலை மூளைகளைச் சிதறும்,
ஏதியோடுற்றிடு வீரர்வ யிற்றினுளீரு முறக்கியெழும்,
கோதியுடற்களைமீது நிணத்தொடு குருதிகளைப்பருகும்,
காதியதட்டி முன்னேவருவோ ருயிர்கடலின் முழக்கெனவே.
(இ-ள்) உளைத்துச் சத்திக்கின்ற நாய்களின்நெருங்கிய தலைகளை மோதிப் பாய்ந்து மூளைகளைச் சிதறும் வாள்களைக் கையிற்பிடித்து நிற்கின்ற வேட்டைக்காரருடைய வயிற்றைக் கிழித்துப் பெருஞ்சத்தமிட்டும் உடல்களைக் கோதிப் பிளந்து தசையுடன் ரத்தங்களைக் குடிக்கும் கோபித்து அதட்டி முன்னே வரப்பட்டவர்களுடைய உயிரை வாங்கிச் சமுத்திரம்போல ஆரவாரிக்கும். எ-று. (32)
பராகமெழுங்குதி கொள்ளுநிலத்திடை படியு மெழுந்துதறும்,
வராகமிதன்றிது மத ரியாமென வந்து வளைந்திடுமால்,
கிராதர் நடுங்கினர் வாடின ரோடினர் கிளைதருநாய்களொடுந்,
தராதலமீது மடிந்தனர் வேல்சடகர்ந்து முறிந்திடவே.
(இ-ள்) பூமியிற் றூளியெழும்படி குதிக்கும் எழும் மயிர்களை யுதறும் பார்த்தவர்கள் இது பன்றியன்று யானையென்றுசொல்லும்படிவந்து வளைந்திடுங் கிராதர் நடுங்கிவாடி யோடிப் பிடித்த ஆயுதங்கள் முறிந்துநாய்களோடு மடிந்தனர். எ-று. (33)
சேனைமடிந்தது கண் வெகுண்டு சினத்துடனேசபரன்,
சோனையெனும்படி யம்புபொழிந்து தொடர்ந்திடலுங் கிரிபோல்,
ஆனையெனும்படி நின்றிடுபன்றியு மடவியிலுட்புகுத,
வானளவுங் குதிகொண்டு வெகுண்டு வனத்திடை கூடினவே.
(இ-ள்) சேனைகளெல்லா மடிந்ததைச் சபரன்கண்டு அதிகக் கோபத்துடன்சோனை மாரியைப்போலப் பாணங்களை யேவிப் பின்றொடர்ந்தமா த்திரத்தில் மலையையொத்த யானைபோல் நின்ற பன்றி ஆகாசமளவுந் தாவிக் குதித்துக் கோபங்கொண்டு வனத்தினுட் புகுந்தது. எ-று. (34)
மல்வயமானபுயச் சபரன்கடுமாவைவிரைந்துவிடக்,
கொல்வனெனக் கருதிக்கிரிபோல்வருகோலமு மோடிமிகச்,
சொல்வருமுத்தம மனிவர்கணத்தொடு சுருதிமுழங்கியெழும்
வில்வவனத்திடை வந்தது சபரனும் விசைகொடுபின்வரவெ.
(இ-ள்) வலிமையும் வெற்றியும் வாய்ந்த புயத்தையுடைய சபரனானவன் கடியவேகத்தையுடையகுதிரையிலேறிக்கொண்டு மனவேகத்தைப்போல் பின்றொடரக் கொல்வேனென்று கருதி வந்த பன்றி யோடிச் சொல்வதற் கருமையாகிய முனிவர் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு வேதவொலியிடையறாது முழங்குகின்ற வில்வவனத்துட் புகுந்தது சபரனு மவ்வனத்துட் சென்றான். எ-று. (35)
திரண்டிடு வில்வவனத்திடை சூழ்தருதிசைதிசை யெங்கணுமே,
இரண்டுடனே யொருகாதமதோடியிளைத் துவருங்கருமா,
வெருண்டுயர் தேவகிரிக்கிடையேகி விளங்கிய தீர்த்தமதாம்,
புரண்டதிரைப் புனல்கண்டு விழுந்து புகுந்ததின் மூழ்கியதே.
(இ-ள்) அந்தப்பன்றியானது திரண்டு கூட்டமாகிய வில்வவனத்தினுட்புகுந்து திசைதிசைகள் தோறும் இரண்டுமூன்ற காதமோடி யிளைத்துப் பயந்து உயர்ந்த தேவகிரிக்கிடையே விவங்கிய தேவகாதீர்த்தத்தின் திரைப்புனலில் விழுந்து முழுகியது. எ-று. (36)
வேறு.
தாரைபற்றியே யந்தச்சபரனுந்
தீரமுற்றிடு தேவகிரிக்கிடை
ஈரமோங்குஞ் சலங்கண்டிருகையால்
வாரிமாந்தினன் மாலிழந்தானரோ.
(இ-ள்) வரரகஞ் சென்ற வழியேதொடர்ந்துவந்த சபரன் பலமுடைய தேவகிரிக்கிடையில் குளிர்ச்சிபொருந்திய சலத்தைக்கண்டு இருகையாலும் வாரியுண்டு மயக்கநீங்கினான். எ-று. (37)
பரியுநீருணப் பண்ணியிருந்தனன்
கரியபன்றியித னுட்கரந்ததென்
றரியமன்னனவன்றன் கையாடலர்த்
தரியதோள்கண்ட பின் சற்றறிந்ததால்.
(இ-ள்) வேடராஜன் தானேறிவந்த குதிரையும் நீருண்ணச்செய்து கரிய பன்றியானது இந்நதிக்குள் மறைந்ததென்று தன்கையால் அத்தடாகத்துள் தடவிப்பன்றியின் பிடரைக்கண்டான் பன்றியும் அரசனறிந்ததைக் கொஞ்சம்தெரிந்தது.
எ-று. (38)
அறிந்துதண்புனலாழத்தின் மூழ்கியே
யுறைந்துசாமமிரண்டதி னுள்ளுறக்
குறைந்து சீவன்குடித்த புனலினால்
இறந்துநீங்கின வின்னுயிர்தானுமே.
(இ-ள்) பன்றியானது குளிர்ந்த புனலில் ஆழமுழுகி இரண்டுசாமம் தங்கியதால் சலத்தை மிகவுங்குடித்து உயிர்மாய்ந்தது.
எ-று. (39)
அந்தவேலையரனஞ்செழுத்தினை
வந்துகேழல் வலச்செவியிற் சொல
அந்தரத்திடை துந்துமியார்த்தெழ
விந்துசெம்பொன் விமானத்தினேறியே.
(இ-ள்) அந்தப்பன்றி உயிர்விடுஞ்சமயத்தில் பரமசிவன் வந்து வலச்செவியில் பஞ்சாக்ஷர மந்திரத் தை உபதேதஞ் செய்யத் தக்ஷணமே தேவதுந்துபிமுழங்க நிறைந்த செம்பொன் விமானத்தில் அப்பன்றியானது ஏறி. எ-று. (40)
கயிலைமேவிக் கதியையடைந்த நற்
சயிலநீங்கிச் சபானுமாவுமாய்
எயினரேத்தச் சிவகதியேறினன்
பயிலுமந்தப் புனலைப்பருகலால். (41)
கயிலைமேவிச் சிவகதி யடைந்தது அதன்பின் சபரன் தேவகிரியை நீங்கித் தன்னகரடைந்து சுற்றத்தாரோடு வாழ்ந்திருந்து அந்தத் தில் தேவகா தீர்த்தத்தைக் குடித்த புண்ணியத்தால் வேடர்களேத்தக் குதிரையோடு சிவகதியை யடைந்தான். எ-று.
பன்றிதன்பயத்தால் வீழ்ந்திறந்ததில்
ஒன்றுநற்கதி யுற்றதென்றாலதிற்
சென்றுமூழ்கினர் சேர்ந்திடும் பேறுதான்
றுனறியாவர் தொகுத்துரைப்பாரகளே. (42)
பன்றியானது பயத்தால் அந்தத் தீர்த்தத்தில் வீழ்ந்திறந்து பொருந்திய நற்கதியை யடைந்தென்றால் அறிவுடன் அதையடைந்து முழுகினவர் அடையும் பலனைச் சூழ்ந்து யாவர் சொல்லவல்லார்கள். எ-று. (43)
இந்தவாறெனச் சூதனியம்பலுஞ்
சிந்தைதானுந் தெளிந்துசௌனகன்
எந்தைநீறுமிசைந்திடு கண்டிகை
முந்துகூறெனச் சூதன்மொழிகுவான். (43)
இவ்வண்ணஞ் சூதமுனிவர் சொன்ன போது செளனமுனிவர் அகமகிழ்ந்து சூதரை நோக்கி எந்தைபிரானோ சிவசின்னமாகிய விபூதி உருத்திராக்ஷத்தின் பெருமையையுஞ் சொல்லியருளவேண்டுமென்று வேண்டிக்கொள்ள அதையுஞ்சொல்லுகிறோமென்று சூதகமுனிவர்சொல்லத் தொடங்கினார். எ-று. (43)
தீர்த்தச்சருக்கம் முற்றிற்று.
ஆகச்செய்யுள் -- 347.
-----------------
உ
சிவமயம்
வேறு.
சிவன்றிருவடிவேயாகுஞ் சிறந்தபஞ்சாக்கரந்தான்,
சிவன்றிருவடிவிலுண்டாய்ச் சிறந்தது விபூதிதானும்,
சிவன்றிரு நயனந்தன்னிற் செனித்ததாமுருத்திராக்கம்,
சிவன் றிருவுளமே யல்லாற் செப்புதற்கார்வல்லாரே.
(இ-ள்) பஞ்சாக்ஷரம்சிவபெருமானுடைய திருவடிவாகும் விபூதிசிவபெருமானுடைய திருமெனியிலுண்டானதாகும் உருத்திராக்ஷம்சிவபெருமான் நயனத்திலண்டானதாகும்ஆனதால் இந்தமூன்று பொருளின்பெருமையைச்சொல்ல வல்லார்யாவர். எ-று. (1)
கற்பமேயனுகர்ப்பந்தான் கருதியவுபகர்ப்பந்தான்
சிற்பரநீறதாகுஞ் சிறந்திடுமோமந்தன்னில்
அற்புதச்சிவாக்கினிக் கோத்திரத்த வுபாசனத்தின்
பற்பமுநிதேஞ்செய்யும் பயின்மடப்பள்ளிநீறு.
(இ-ள்) விபூதியில் கற்பமென்றும் அனுகற்பமென்றும் உபகர்ப்பமென்றும் மூன்றுவிதமுண்டு அவற்றுள் கற்பமானது சுத்தவெண்மைநிறமுடைய பசுவின்சாணத்தை யுலர்த்திப்புடம்பண்ணியெடுப்பது. அனுகற்பமானது காட்டில் மேய்கின்ற பசுக்கள் எருதுகள் போட்டுக்காய்ந்த எருக்களைப்புடம் பண்ணியெடுப்பது உபகற்பமென்பது சிறந்த ஓமத்தில் உண்டாவது அற்புதமான சிவாக்கினிகோத்திரத்திலுண்டான நீறும் அவபாசனத்திலுண்டான நீறும் சிவநிவேதனஞ் சமைக்கு மடைப்பள்ளியிலுண்டான நீறும். எ-று. (2)
சாற்றிடுமிவற்றுளீசன் சந்நிதிநீறுங்கூட்டி
யேற்றமந்திரத்தாற் கூறுமியற்றிரி புண்டரத்தாற்
றோற்றியநெற்றிமார்பு தோளிலாறங்குலந்தான்
ஏற்றிடுமளவுமற்ற விடங்களோரங்குலந்தான்
(இ-ள்) மேற்சொல்லிய நீற்றுடன் சிவசந்நிதியிலுண்டான நீற்றையுமொன்றாகக் கலந்ததற்கு உபகர்பமென்றுபெயர் இவற்றுள் இசைந்ததை யெடுத்துப் பஞ்சாக்ஷரத்தைத் தியானம்பண்ணித் திரிபுண்டரமாக நெற்றியிலும் மார்பிலும் தோளிலும் ஆறங்குலமும் மற்றவிடங்களில் ஒருவிரல் அளவுந் தரிக்கவேண்டியது. எ-று. (3)
சிரநெற்றிமார்புநாபி சிறந்திடு முழந்தாடோள்கள்
விரவுற்ற முழங்கை முன்கைமேவு பின்பிடரிகாது
தரமிக்கபதினாறாகுந் தானத்தினீறுசாற்றல்
பரமுற்றுத்தவளம்பண்ணிற்பாவநாசமதாந்தானே.
(இ-ள்) மேற்சொல்லிய விபூதியைச் சிரம் நெற்றி மார்பு முழந்தாள் தோள்கள் முழங்கை முன்கை பின்பிடர் காது இந்தப்பதினாறு தானங்களிலும் மேற்சொன்ன பிரமாணமாகத் தரிக்கவேண்டியது இவ்வாறன்றிப் பரப்பிரம சொரூபமாகச்சரீரமுழுதுந் தூளிதம்பண்ணினாற் பாவங்கள் நாசமாகப் பறந்துபோகும். எ-று. (4)
பஞ்சமா பாதகஞ்செய் பாவியாசாரவீனன்,
மிஞ்சியவேதவீனன் மிகுமனுட்டானவீனன்,
றஞ்சிவபூசை யோமந் தகுமெக்கிய மதனை விட்டோன்,
அஞ்சொன் மாதாபிதாவையடரத்தா டனங்கள்செய்தோன்.
(இ-ள்) பஞ்சமாபாதகங்கள் செய்தவன் பாவியானோன் ஆசாரவீனன் வேதபாராயணம் விட்டவன் அநுட்டானம் விட்டவன் ஆத்தும இலாபமாகிய சிவபூசைவிட்டவன் ஓமயெக்கியத்தை விட்டவன் அழகிய மாதாபிதாவைச் சீறியடித்தவன். எ-று. (5)
குருவுரையதனைவிட்டோன் கூறுதன்மங்கள் விற்போன்,
பரவிய வேதம்விற்போன் பாரியில்லதனிலுண்போன்
றிருகுகுண்டரைச்சே ர்ந்துண்போன், றினஞ்சிரார்த்தம் புசிப்போன்,
மருவியபந்திபேதமாகவே மகிழ்வுலுண்போன்.
(இ-ள்) குருவாக்கியங்களை விட்டோன் தருமங்களைவிற்றவன் பெரிய வேதத்தை விற்றவன் பிறர் அன்னம் புசிப்பவன் தாழ்ந்த ஜாதியாரோடு கூடியுண்பவன் சிரார்த்த அன்னம் புசிப்பவன் பந்தியில் உணவுபேதம் பண்ணியுண்பவன். எ-று.
(6)
இப்டியடாத பாவமியற்றினா ரெவர்களேனும்
மெய்ப்படிவத்தினீறும்விளங்குகண்டிகையுமிட்டே
செப்புபஞ்சாக்கரத்தைத் தியானிக்கப்பாவமெல்லாம்
வெப்பெரிகவரும்பஞ்சதரமென விஞ்சமாகுமே.
(இ-ள்) மேற்சொல்லிய பாவங்களைச் செய்தவர் யாவராயினும் சரீரத்தில் விபூதியைத்தரித்துக் கண்டிகைபூண்டு பஞ்சாக்ஷரத்தைச் செபித்தால் அந்தப்பாவங்களெல்லாம் அக்கினிபற்றிய பஞ்சைப் போல் நாசமாகும். எ-று.
(7)
திருந்துருத்திராக்கந்தன் னாற்செபித்திடிலஞ் செழுத்தைத்
தருங்கதியை யைந்துக்குச் சாந்தமூவொன்பதாகும்,
பெருந்தனங்கல்வி சேரும் பிறங்குநாலெட்டதாகில்,
அருஞ்சமுசார ம்பத்தோடஞ்சுச் சாடனம்பன் மூன்றே.
(இ-ள்) திருத்தமாக உருத்திராக்ஷத்தினாலே ப*ஞ்சாக்ஷரத்தைச் செபிக்குமிடத்தில் இருபத்தைந்து மணியினாற் செபித்தல் மோக்ஷத்தைக் கொடுக்கும் இருபத்தேழு மணியினாற் செபித்தால் சாந்த குணத்தைக் கொடுக்கும் முப்பத்திரண்டுமணியாற் செபித்தாற் கல்வியுஞ் செல்வமுஞ் சேரும் பதினைந்து மணியினாற் செபித்தாற் சமுசாரவாழ்க்கையைக் கொடுக்கும் பதின்மூன்று மணியினிற் செபித்தால் உச்சாடனத்தைக் கொடுக்கும். எ-று. (8)
இந்திரதிக்கேயாதி யிசைத்திடல்வசியநோயாம்
உந்திடுமரணந்தீமை நிதியுச்சாடனநீள்சாந்தந்
தந்திடுஞானந்தன்னைத் தருஞ்சிறுவிரலேயாதி
வந்தகாமியமுஞ் சாந்தமருவுவ மரணம் வீடே.
(இ-ள்) இந்திரதிக்கு முதலாக எட்டுத்திக்குஞ்சொல்லுமிடத்துக் கிழக்குமுகமாக இருந்து செபித்தால் வசீகரத்தைக் கொடுக்கும் அக்கினிமூலையாக இருந்து செபித்தால் வியாதியைக்கொடுக்கும் தெற்குமுகமாகச் செபித்தால் தள்ளப்பட்ட மரணத்தைக் கொடுக்கும் நிருதிமூலையாக இருந்துசெபித்தால் தீமையைக்கொடுக்கும் மேற்குமுகமாகஇருந்து செபித்தால் திரவியத்தைக் கொடுக்கும் வாயுமூலை முகமாகஇருந்து செபித்தால் உச்சாடனத்தைக் கொடுக்கும் வடக்குமுகமாக இருந்துசெபித்தால் நீண்ட சாந்தகுணத்தைக்கொடுக்கும் ஈவானிய மூலை முகமாக இருந்து செபித்தால் மெய்ஞ்ஞானத்தைக் கொடுக்கும் உருத்திராக்ஷத்தை விரல்களிற்றாங்கிச் செபிக்குமிடத்தில் சுண்டுவிரலிற்றாங்கிச் செபித்தால் காமியமுண்டாகும் அதற்குமேல் விரலிற்றாங்கிச்செபித்தால் சாந்தகுணமண்டாகும் அதற்முமேல் விரலிற்றாங்கிச் செபித்தால் மரணமுண்டாகும் அதற்குமேல் விரலிற்றாங்கிச் செபித்தால் மோக்ஷமுண்டாகும். எ-று.
(9)
அங்குலியொன்றெட் டாகுமதினுரை புத்திரசீவந்
தங்குபத்தாகுஞ் சங்குநானொரு நூறதாகும்
பங்கோராயிரம் பிரவாளம் படிகம்பத்தாயிரந்தான்
பொங்குநூறாயிரந்தான் பொருந்தியமுத்துக்காமே.
(இ-ள்) விரலினாற் செபம்பண்ணினால் எட்டுப்பங்குப்பலன் அதிகமாகும் அதனிலும்சொல்லப்பட்ட புத்திரசீவமணியினாற் செபம்பணணினாற் பத்துப்பங்குப்பலன் அதிகமாகும் சங்குமணியினால் ஜபம்பண்ணினால் அதிலும் நூறுபங்குப்பலன் அதிகமாகும் பிரவாள மணியினாற் செபம்பண்ணினால் அதிலும் ஆயிரம்பங்குப்பலன் அதிகமாகும் படிக மணியினாற் செபம்பண்ணினால் அதிலும் பதினாயிரம்பங்குப்பலன் அதிகமாகும் முத்துமணியினாற் செபம்பண்ணினால் அதிலும் நூறாயிரம்பங்குப்பலன் அதிகமாகம். எ-று. (10)
பதுமாமணி தனக்குப் பத்துநூறாயிரந்தான்,
பொதிதரு பொன்மணிக்குப் பொருந்திடுங்கோடிதானே,
குதைதருகுசைமுடிச்சுக்கோடி ரண்டஞ்சேயாகும்,
அதிகருத்திராக்கமாகி லளவில்லைக் கணக்குத்தானே.
(இ-ள்) தாமரைமணியாற் செபம்பண்ணினால்அதிலும் பத்துநூறாயிரம் பங்குப்பலன் அதிகமாகும் பொன்மணியினாற் செபம்பண்ணினால் அதிலும் கோடிபங்குப்பலன் அதிகமாகும் முடியிட்ட தருப்பைப்புல்லினாற் செபம்பண்ணினால் அதிலும் பத்துக்கோடி பங்குப்பலன் அதிகமாகும் உருத்திராக்ஷமணியினாற் செபம்பண்ணினால் இவ்வளவென்னுங் கணக்கில்லை. எ-று. (11)
தெக்கணாமூர்த்தித்தேவர் திருந்துசந்நிதிமுன்மேவி,
தக்கவாயிரத்தோ டெட்டுத்தகு நூற்றெட்டிருபத்தெட்டு,
மிக்கபஞ்சாக்கரத்தை மேன்மையதாச் செபிப்போர்,
புக்கான்கைலை தன்னிற் பொருந்தி வாழ்ந்திருப்பர் தாமே.
(இ-ள்) தக்ஷிணாமூர்த்தியின் திருத்தமான சந்நிதி முன்னிருந்து ஆயிரத்தெட்டாயினும் நூற்றெட்டாயினும் இருபத்தெட்டாயினும் பஞ்சாக்ஷரசெபம் பண்ணினால் அவர்கள் சிவபெருமான் எழுந்தருளிய கைலாயத்தில் நிலைபெற்று வா்ந்திருப்பார்கள். எ-று. (12)
தினமனத் தியானஞ்செய்வோர் சேர்வர்சாயுச்சியந்தான்,
எனதெனவவர்குலத்தோர் யாவருங் கையிலைசேர்வார்,
தனமிகவேண்டினோர்தான் றனாட்டிய குபேரனாவார்,
சனமகிழ்ந்திருத்தல்வேண்டிற் றமருமிந்திரனாராவார்.
(இ-ள்) பஞ்சாக்ஷரத்தை எந்தக்காலமும் மனத்தியானஞ் செய்தவர்கள் சாயுச்சியபதவியைச் சேர்வார்கள் அவர்கள் குலத்திற் பிறந்தவர்கள் யாவரும் கையிலாயமடைவார்கள் திரவியத்தை விரும்பினவர்கள் குபேரனைப்போல் வாழ்ந்திருப்பார்கள் பந்து சனங்களை மிக விரும்பினவர்கள் இந்திரனைப்
போல் வாழ்ந்திருப்பார்கள். எ-று. (13)
மணிமந்திர மவுடந்தான்வருபிணிநீக்கல்போல,
அணிசென்மமென்னுநோயையகற்றிடுமிந்தமூன்றும்,
மணியுருத்திராக்கமாகும் ந்திரமஞ்செழுத்தாந்,
தணியவுடதந்தானாகத் தருந்திருநீறுதானே. (14)
வருகின்ற வியாதிகளை மணிமந்திர ஒள டதத்தால் மாற்றுதல் போல் அடைந்த செனனமென்னும் வியாதியை உருத்திராக்ஷ மணியினாலும்பஞ்சாக்ஷர மந்திரத்தாலும் விபூதி ஔடத்தாலும் நீக்கல்வேண்டும். எ-று.
இவற்றினன் மகிமைதன்னை யாவரேயறிந்து சொல்வார்,
தவமுத்தி பலித்தோர்க்கெல்லாஞ் சாரந்திடுமிந்த மூன்றும்,
அவமுற்று நரகில் வீழ்வார்க் கன்னியமாகத்தோன்றும்,
சிவமுற்று முணர்வில்லாதார் தெரிந்திடாரெவர்க்குந்தானே. (15)
(இ-ள்) மேற்சொல்லிய மூன்றுபொருளில் மகிமையைச் சொல்லவல்லார் யாவர்முன் தவஞ்செய்து முத்தியை யடைந்தவர்கள் இந்த மூன்றையுஞ் சாதனமாகக் கொண்டிந்த தேயன்றிவேறில்லை பாவங்களைச் செய்து நரகில் விழப்பட்டவர்களுக்கு இந்த மூன்றும் அன்னியமாக தோற்றப்படும் அறிவில்லாதவர்கள் இந்த மூன்றையுந் தரித்திருந்தும் அவற்றின் பெருமையைப் பிறர்க்குத் தெரிவிக்க மாட்டார்கள். எ-று. (16)
சித்திரைப்பூர்வபக்கந் திருந்துமட் டமித்தினத்திற்
சத்தியபிரமதீர்த்தந் தனினமூழ்கி யுபவாசித்துச்
சித்தநோபிதக்கணங்கள் செய்தஞ்சுதெண்டநிட்டாற்
பத்திசேர்சாம்பிராச்சய பதியாகி வாழ்வர்தாமே.
(இ-ள்) சித்திரைமாதப் பூர்வபக்ஷத்து அட்டமித்திதியில் சத்தியமாகிய பிரமதீர்த்தத்தில் முழுகி உபவாசஞ்செய்து ஒருமித்த மனதுடன் பிரதக்ஷணஞ்செய்து ஐந்ததீர்க்கதெண்டம் பண்ணினால் சாம்பிராச்சியபதியாகி வாழ்வார்கள். எ-று. (16)
தனுர்மாதம் பிரமதீர்த்தந்தனின்மூழ்கி யீசன்மேனிக்,
கினிதாகு மெண்ணைக்காப்புற்றேழஞ்சு மூன்றோர் நாடான்,
கனிவசச்சாத்திற் கோடி குலத்துடன் கயிலாசத்தில்,
இனிதான சிவபதத்தி லிருந்துவாழ்ந்திடுவர் மாதோ.
(இ-ள்) மார்கழிமாதம் பிரமதீர்த்தத்தில் முழுகிச் சிவபெருமான் திருமேனிக்கினிதான எண்ணெய்க்காப்பு ஏழு ஐந்து மூன்று ஒருநாள் சாத்தினால் அப்படிப்பட்டவர்கள் தங்கள் குல கோடிகளுடன் கையிலாசத்தில் வாழ்ந்திருப்பார்கள். எ-று. (17)
அந்தமாதத்தில்வந்த வாதிரைநன்னாடன்னிற்,
சுந்தரத்தாண்டவஞ்செய் சுவாமிக்குப் பூசைசெய்து,
பந்தியாமிழைசேர் வெள்ளைப் பரிவட்டஞ் சுகந்தஞ்சாத்திச்,
சிந்தையால் வணங்கி வெற்பின்றிருமகடனையும் போற்றில்.
(இ-ள்) மேற்கூறிய மார்கழிமாதத்தில் வரப்பட்ட திருவாதிரை நாளில் அழகாக ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளுகின்ற நடராஜருக்குப் பூசை செய்து வரிசையாக இழைசேர்ந்த வெண்பரி வட்டமும் சுகந்த மாலைகளுந் தரித்து வணங்கிப் பின் உமாதேவியாரையும் வணங்கினால். எ-று. (18)
அவர்சிவபத்தியுண்டா யனேக விராச்சியங்களாண்டு,
தவமனேகங் காலங்கடான் செய்த பலன்கள் பெற்றே,
இவரவரெனாம லெல்லாப் பிதிர்களோடினிதேயாக,
நவமணிச் சிவலோகத்தி னண்ணிநற் கதியைச் சேர்வார்.
(இ-ள்) அப்படி வணங்கினவர் சிவபத்தியுண்டாகி அனேக ராச்சியங்களாண்டு பலநாட்செய்த தவப்பலனைப்பெற்று இவரவரென்னும் பேதமில்லாமல் தங்கள் பிதிரர்களோடு இன்பமாக அழகிய சிவலோகத்தை யடைந்து நல்லகதியைச் சேர்வார்கள். எ-று (19)
மாசியாந்திங்கடன்னில் வருஞ்சிவநிசியந்நாளில்
ஆசிலாப்பிரமதீர்த்த மதின்மூழ்கி யுபவாசித்து
வீசியசுகந்தபுட்ப மெய்ககளபங் கற்பூரம்
வாசமாயெம்மட்டேனு மணியீசர் தமக்குச் சாற்றி.
(இ-ள்) மாசிமாதஞ் சிவராத்திரி யன்றைக்குக் குற்றமில்லாத பிரமதீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி யுபவாசஞ்செய்து வாசநிறைந்த புஷ்பங்களும் களபகற்பூரங்களும் வேண்டிய அளவு துய்யமாமணி யாருக்குச் சாத்தி. எ-று.
(20)
பாயசநிவேதனந்தான் பண்ணியே யரிச்சித்தேத்தி
ஆயசாமங்கணாலு மரிச்சித்து மண்டபத்தின்
மேயகீதங்களாடன்மிகச்செய்வித்தேயிருந்து
தூயவிப்புராணந்தன்னைச்சொற்பெறமகிழ்ந்துகேட்டே.
(இ-ள்) பாலன்ன நிவேதனஞ்செய்து அரிச்சித்துவணங்கிப் பின்னாலுசாமமுந் அவ்வாறே செய்து நிருத்தனமண்டபத்திருந்திப்பாடல் ஆடல்செய்வித்து அவ்விடத்திலிருந்து இந்தப்புராணத்தைச் சுத்தமாகப் படிக்கக் கேட்டு.
எ-று. (21)
மற்றைநாடானுமுன்போன் மகிழ்வுடன்வலஞ்செய் தேத்திற்,
குற்றமில்லாமற்கோடி குலத்துடன் கைலைசேர்வார்
ஒற்றுமிவ்வாறு செய்யா துபவாசமிருந்த போற்றிற்,
சற்ற மாங்குடும்பத்தோடுசுகத்துடன்கைலைசேர்வார்.
(இ-ள்) மறுநாள் முதனாட்செய்ததுபோல் அன்புடன் வலஞ்செய்தேத்தினாற் கோடி குலத்தாருடன் கைலையை யடைவார்கள் இப்படிச் செய்யச்சத்தியில்லாதவர்கள் உபவாசமிருந்து மறுநாள் துய்யமாமணியாரை வணங்கினால் அவர்கள் சுற்றத்தாரோடு கைலாயமடைவார்கள். எ-று. (22)
பானுவத்தமனமென்னப் பற்றியமூன்றேமுக்காற்,
போனபின் மூன்றேமுக்காற் பொருந்துமோர் சாமமாகும்.
ஆனதுபிரதோடந்தான துதிரியோ தசத்தின்,
ஈனமிறவத்தோர்க்கெய்து மீசனைப்போற்றுஞ் சிந்தை.
(இ-ள்) சூரிய அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால்நாழிகையும் அஸ்தமனத்திற்குப் பின் மூன்றேமுக்கால் நாழிகையுங்கூடிய எருசாமம் பிரதோஷமாகும் அந்தவேளையில் மும்மலப்பற்றறுத்த குற்றமற்ற தவத்தோர்கட்கே சிவபெருமானைப் போற்றுஞ் சிந்தையெய்தும். எ-று. (23)
நந்திதண்டீசநந்தி நலத்தகோமுகைமேற்பாகம்
பிந்தவுநந்திசண்டன் பிறங்குகோமுகைகீழ்பாகம்
முந்தியசண்டனந்தி முதுகின்பின் நின்றுபோற்றல்
சுந்தரப்பிதக்கணந்தான் சோமசூத்திரமதாமே.
(இ-ள்) இந்தப் பிரதோஷகாலத்தில் நந்திகேசுரனிடத்தினின்று தெரிசனைபண்ணிப்பின் தண்டி கேசுரனிடத்தில் வந்து தெரிசனைபண்ணிப்பின்னந்திகேசுரனிடத்தில் வந்து தெரிசனைபண்ணிப்பின்னன்மையாகிய கோமுகைக்கு மேல்பாரிசத்தில் வந்து நின்று தெரிசனைபண்ணிப்பின் னந்திகேசுரனிடத்தில் வந்து தெரிசனைபண்ணிப்பின் தண்டிகேசுரனிடத்தில்வந்து தெரிசனை பண்ணிப்பின் பிரகாசிக்கின்ற கோமுகைக்குக் கீழ்பாரிசத்தில் வந்து நின்று தெரிசனைபண்ணிப்பின் தண்டிகேசுரனிடத்தில் வந்து தெரிசனைபண்ணிப்பின் னந்திகேசுரன் முதுகின் புறத்தில் வந்து நின்று தெரிசனைபண்ணிப் பிரதக்ஷணஞ்செய்வது சோமசூத்திரவிதிப் பிரதக்ஷணமாகும். எ-று.
(24)
இப்படிப் பிரதோடத்தி லியாவர்தாம்பணிந்தக்காலும்
மெய்ப்படிவமதாஞ்சென்மம்வேண்டுமென்றாலு மெய்தார்,
செப்பியசென்மமா குமனேக சென்மத்தின் பாவம்,
ஒப்புடன் கழிந்துநீங்கி யுயர்கதியடைவர்தாமே.
(இ-ள்)இவ்வண்ணமாகயாவராயினும் பிரதோஷகாலத்திற் பணிவார்களாயின் அவர்கள் அழகிய சென்மத்தை விரும்பினாலும் பிறவியை யடைய மாட்டார்கள் இந்தச்சென்மத்திலும் நீங்கிய அனேகம் சென்மத்திலும் செய்தபாவங்களெல்லா நீங்கி யுயர்வான கதியை யடைவார்கள். எ-று. (25)
இன்னமுமனந்தமாகு மிரத்தினபுரியின்மேன்மை,
நன்னெறியனந்தனாலு நாவினாற்கூறொணாதால்,
மின்னிடையுமையாள் கேள்வன் விரும்பியிவ் விடத்தின்மேவிச்
சந்நிதானமதாயார்க்குஞ் சர்க்கதிகொடுக்குந்தானே.
(இ-ள்) இந்த இரத்தினபுரியின் மகிமை யின்ன மனேகமாகும் அதனைச்சொல்ல அயிரநாவினையுடைய ஆதிசேடனாலும் முடியாது மின்போன்ற இடையையுடைய உமா தேவி நாயகனாகிய பரமசிவன் விரும்பி இவ்விடத்திற் பொருந்திச் சந்நிதியாக யாவர்க்கு நல்லகதியைக் கொடுத்தருளுவார். எ-று. (26)
இந்தநற்புராணந்தன்னி லியம்பியபொருள்கள் யாவும்,
புந்தியாலுண்மையென்றே பொருந்தினோர் செல்வம்பெற்றுச்,
சந்தமார்க்கண்டன்போலத் தங்குவர் கைலைமீதில்,
நிந்தனை செய்தோர்யாக நேர்ந்த தக்கனைப்போலாவார்.
(இ-ள்) இந்தப்புராணத்திற் சொல்லிய பொருள்களையெல்லாம் புத்தியிலுண்மையென்றுகொண்டவர்கள் மிக்கசெல்வமுற்று மார்க்கண்டரைப்போலக் கயிலாயத்திற் றங்குவார்கள் நிந்தனைசெய்தவர்கள் கொடிய யாகஞ்செய்த தக்கனடைந்த கதியை யடைவார்கள். எ-று. (27)
இயம்பிரத்தின புரிச்சீரெழில்பெறு மகிமை தன்னை,
நயம்பெறக் கற்போர் கேட்போர் நன்மையா
லெழுதிச் சேர்ப்போர் பரிசிப்போரும்,
பயம்படுபிறப்பைநீங்கிக் கயிலையாம் பதியில் வாழ்வார்.
(இ-ள்) சொல்லிய இந்த இரத்தினபுரியின் அழகிய மகிமையை நயம்பெறக் கற்றவர்களும் கேட்டவர்களும் நன்மைபெற எழுதிவைத்தவர்களும் பூசைசெய்தவர்களும் தெரிசித்தவர்களும் பரிசித்தவர்களும் அச்சத்தை விளைவிக்கின்ற பிறப்பினின்று நீங்கிக் கயிலாயத்தில் வாழ்வார்கள். எ-று. (28)
ஆகுமென்றிவ்வாறேதா னருளினாற் சூதன்கூற
வாகுடன்சௌனகன்றான்மனமிகமகிழ்ந்துபோற்றி
ஏகநாகனாமேன்மையீசனார் பெருமைக்காதை
யூகமாயுனைப் போலியாவருரைப் பவரெனமகிழ்ந்தான்.
(இ-ள்) இத்தன்மையாகுமென்று மிக்க கிருபையினாற் சூதமுனிவர் சொன்னமாத்திரத்தில் சௌனகமுனிவர் மனமகிழ்ந்து போற்றிச் சுவாமி ஏகநாயகனாகிய மேன்மையையுடைய சிவபெருமானது பெருமைதங்கிய கதையைத் தங்களைப்போல் யூகமாகச் சொல்லவல்லார் யாவரென்று மனமகிழ்ந்தார். எ-று. (29)
மங்கையோர்பாகர்துய்ய மாமணிச்சிவனார்வாழி
பொங்குவிஞ்சையர்கள்வாழி புகலுநூற்சைவம்வாழி
துங்கவெண்ணீறுபஞ்சாக் கரத்துடன்றுலங்கிவாழி
திங்கண்மும்மாரிபெய்துசெழித்துலகெங்கும்வாழி
(இ-ள்) உமையையோர் பாகராகிய துய்யமாமணிச் சிவபெருமான் வாழ்க விளங்கிய வித்துவான்கள் வாழ்க யாவராலமெடுத்துரைக்கின்ற சைவம் வாழ்க மேன்மையையுடைய வெண்ணீறு பஞ்சாக்ஷரத்துடன் றுலங்கிவாழ்க மாதமும்மாரிபொழிந்து உலகமெங்குஞ் செழித்துவாழ்க. எ-று. (30)
விபூதியுருத்திராக்ஷச் சருக்கம்
முற்றிற்று.
---------------
ஆகச்சருக்கம் 11 க்கு, பாயிரங்காப்புள்படச் செய்யுள் - 377.
இரத்தினபுரிப்புராண மூலமும் உரையும்
முற்றுப்பெற்றது