logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கும்பேசர் குறவஞ்சி - நாடகம்

Kumbesar Kuravanchi (Drama)
of Sri Papanasa Muthaliyar 


Acknowledgements: 
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image 
version of this work for the etext preparation. 
This etext has been produced via Distributed Proof-reading Implementation and 
we thank the following volunteers for their assistance: 
R Aravind, S. Karthikeyan, Lakshmi Subramaniyan, S Mithra,
R. Navaneethakrishnan, R, Alagaraj, K. Ravindran, Santhosh Kumar Chandrasekaran,
V. Jambulingam, V, Devarajan , Sriram Sundaresan and N.D. Logasundaram. 
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 

© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
https://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. 


கும்பேசர் குறவஞ்சி (நாடகம்) 
ஸ்ரீ பாபநாச முதலியார் இயற்றியது

Source: 
கும்பேசர் குறவஞ்சி நாடகம்
முத்தமிழ்க் கவிராஜசேகரர்
ஸ்ரீ பாபநாச முதலியார் இயற்றியது
இது குறிப்புரை முதலியவற்றுடன் டாக்டர் ஐயரவர்கள் குமாரர் S. கலியாணசுந்தரையரால் 
அடையாறு வசந்தா அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது
பதிப்புரிமை] 1944 [ விலை ரூ.1-8-0
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு--3


பொருள் அடக்கம்
 

1. முகவுரை. . . . . . 

 

2. கும்பேசர் குறவஞ்சி நாடகம் . . . . . 

 

[ பாயிரம்--நூற்பயன்--காப்பு--தோடையம்-மங்களம் --கட்டியக்காரன் வருகை--
செகன் மோகினி வருகை-- செகன் மோகினி துதித்தல்--காதல் வேட்கை--
சகிவருகை --தலைவி கூற்று--சகி இரங்கல்--சகியின் கூற்று--குறத்தி வருகை--
வாசல் வளம்--குறத்தி சாதிவளம் கூறுதல்-- செகன் மோகினி வினவுதல்--
குறத்தி மலைகளைக் கூறுதல்-- செகன் மோகினி மலைவளம் வினவுதல்--
குறத்தி மலைவளம் கூறுதல்--செகன் மோகினி தேசங்கள் வினவுதல்- 
-குறத்தி தேசங்களைச் சொல்லுதல்--செகன் மோகினி அண்டகோளத்தின் 
அதிசயங்கள் வினவுதல்--குறத்தி அண்டகோளத்தின் அதிசயம் கூறுதல்--
செகன் மோகினி நதிகளை வினவுதல்-- குறத்தி நதிகளைக் கூறுதல் -- 
செகன் மோகினி தலங்களை வினவுதல்--குறத்தி தலங்களைக் கூறல்--
செகன் மோகினி குறத்தி கற்ற வித்தையை வினவுதல்--குறத்தி தன் வித்தை கூறல்-
செகன் மோகினி குறிதேற வினவுதல்--குறத்தியின் மறுமொழி--
குறத்தியின் செயல்--குறத்தி குறி சொல்லத் தொடங்கல்--
செகன் மோகினி தன் காதலன் அடையாளம் வினவுதல்--
குறத்தி அடையாளம் கூறல்--செகன் மோகினி சன்மானம் கொடுத்தல்--
குழுவன் வருகை--சிங்கன் வருகை --புள்வரவு கூறல்--கண்ணி பதித்தல்--
பறவை படுத்தல் -- சிங்கன் குறத்தியைத் தேடி வருந்தல்-- 
சிங்கனும் குறத்தியும் உரையாடல்-கும்பேசர் பவனிவரல்--
ஸ்ரீ கும்பேசர் தரிசனம் அருளுதல்--வாழ்த்து.]

 

3. பாட்டு முதற் குறிப்பகராதி . . . 

 

4. அரும்பத முதலியவற்றின் அகராதி . 

 

முகவுரை

 

திருச்சிற்றம்பலம்

 

கழைவளர் கவ்வை முத்தங்கமழ் காவிரி யாற்றயலே
தழைவளர் மாவி னல்ல பலவின் கனிகடங்கு
குழைவளர் சோலை சூழ்ந்த குழகன் குடமுக்கிடமா
இழைவளர் மங்கை யோடுமிருந் தானவ னெம்மிறையே.
…… திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்

 

குறவஞ்சி யென்பது பலவகையான பிரபந்தங்களுள் நாடகவகையைச் சார்ந்தது. பண திறம் முதலிய பண்டைத் தமிழிசை வகையாலமைந்த இலக்கியங்களும் அவற்றிற்குரிய இலக்கணங்களும் இப்பொழுது அருகிவிட்டமையாலும், இப்பிரபந்தத்தின் அமைப்பும் இதன்பாற் காணப்படும் இசைப்பகுதிகளும் வடமொழி முறையைப் பின்பற்றி யிருத்தலினாலும் இம்முறை பிற்காலத்ததெனக் கருத இடந்தருகின்றது. பன்னிரு பாட்டியலில் 'குறத்தி பாட்டு' என்னும் பிரபந்தத்தின் இலக்கணமாக, 'இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக காலமும், திறப்பட வுரைப்பது குறத்தி பாட்டே' என்னும் சூத்திரமொன்று உள்ளது. அவ்விலக்கணம் குறத்தி குறிகூறுவதாக இயற்றப்படும் ஒருவகை நூலுக்கு உரியதாகத் தோற்றுகின்றது.

 

குறவஞ்சியுள் வரும் பல செய்திகளுள் குறத்தி குறி கூறுதலும் ஒன்று. 96-வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய கலம்பகத்துள் 'குறம்' என்ற ஓர் உறுப்பு உண்டு. அதன்கண்ணே குறத்தி குறிகூறுதலொன்றே காணப்படும்.

 

இக்காலத்து வழங்கும் மீனாட்சியம்மை குறமென்னும் நூலைப் போன்ற சிலவற்றிற் குறத்தி குறிசொல்லுதற்கு முன்னும் பின்னும் சில செய்திகள் காணப்படுகின்றன. எனவே, பன்னிருபாட்டியல் இயற்றப்பட்ட காலத்துக் குறத்தி பாட்டென்ற ஒருவகைப் பிரபந்தம் மட்டும் வழங்கிவந்ததென்றும், அத‌னைப் பின்ப‌ற்றி ஓருறுப்புக் க‌ல‌ம்ப‌க‌த்துள்ளே அமைக்க‌ப்ப‌ட்ட‌தென்றும் அவ்விர‌ண்டையும் த‌ழுவி இசைப்பாட்டும் கலந்து குறமென்னும் பிரபந்தம் எழுந்ததென்றும், அவற்றைப்பின்பற்றி நாடகமுறையிற் குறவஞ்சியென்னும் பிரபந்தம் இயற்றப்பட்டதென்றும் கூறலாம்.

 

குறத்தியின் இயல்பு, அவள் குறி கூறுதல், அவளைக் குறவன் தேடி வந்து காணல் முதலிய குறத்தியின் திறத்திலமைந்த செய்திகளே பெரும்பாலும் இதன்கண் அமைந்திருத்தலின் இஃது இப்பெயர் பெற்றது போலும்; குறவஞ்சி = குறப்பெண்.

 

குறவஞ்சி நூல்களைப் பற்றிய பிற வரலாறுகளை மகாமகோபாத்தியாய டாக்டர் ஐய்யரவர்கள் பதிப்பித்துள்ள ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகா் பிரபந்தங்களுள் சரபேந்திரபூபால குறவஞ்சி நாடகத்தின் நூன்முகத்திற் காணலாம்.

 

கும்பேசர் குறஞ்சி நாடகமென்னும் இந்நூல் கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கும்பேசர் மீது குடந்தைப் பாபநாச முதலியாரால் இயற்றப்பெற்றது. இடையிடையே வெண்பா, அகவல், விருத்தம், கொச்சக்கலிப்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை முதலிய செய்யுட்களை விரவுவித்துக் கீர்த்தனரூபமாக அமைந்துள்ளது. கும்பேசர் மீது ஒரு நாயகி காதல் கொண்டு விரக தாபத்தால் துன்பமடைகிறாள். நிலவையும் தென்றலையும் மன்மதனையும் வெறுத்துப் 
புலம்புகிறாள். அப்போது ஒரு குறத்தி வந்து தன் நாட்டு வளத்தையும் மலை வளத்தையும் சொல்லிக் குறி கூறுகிறாள்: 'கும்பநாதர் உனக்கு அருள் செய்வார்' என்று சொல்லுகிறாள். அப்போது அவளைத் தேடிக் கொண்டு அவள் நாயகனாகிய குறவன் வருகிறான். குறத்தியும் குறவனும்சேர்ந்து கும்பேசரைத் துதிக்கிறார்கள். இதனோடு நாடகம் முடிகிறது.

 

இந்த நாடகம் எளிய நடையில் சங்கீத அமைப்புக்கு ஏற்ற கீர்த்தனங்களையும் நாடக அமைப்புக்கு ஏற்ற பாடல்களையும் கொண்டுள்ளது. குறத்தி தான் கண்ட மலைகளையெல்லாம் அடுக்கிச் சொல்லும்போது பல ஸ்தலங்களின் பெயர்கள் வருகின்றன. இறுதியில், 'தெரிசனம் பாவ நாசமென்ற அசலகிரிக ளின்னஞ் சொல்லித் தொலையாதே யடிமாதே நான்' என்று முடிக்கிறாள். இதில் பாவ நாசம் என்ற முத்திரை வருகிறது.

 

இந்த நூலில் வரும் குறத்தி சாதரனமானவள் அல்லள். மிகப் பழங்காலம் முதல் இருந்து வருபவள். அவள் சுபத்திரைக்குக் குறி சொன்னவளாம். "இவன் சந்நியாசியல்ல, அரசன்' என்ற ரகஸ்யததைச் சொல்லிப் பரிசுபெற்றவளாம்.

 

'திரிதணடு சஞாசியல்ல ராச னென்று
திருச்சுபத் திரைக்குரைத் தேனந்தத்
தெள்ளழது மெய்த னுள்ள தென்று நல்ல
வெள்ளிபொன் னள்ளித்தந்தாள் பார்'

 

என்று அவள் தன் பெருமையைச் சொல்லிககொள்ளுகிறாள். குந்திதேவிக்குக்கூட குறிசொல்லி, 'வர்ணச்சேலையுமாமுதது மாலையுங் கொந்தல வோலையும்' பரிசாகப் பெற்றாளாம். கவிஞன் படைத்த குறத்திக்கு முதலேது, முடிவேது?

 

குறச்சாதியரின் வழக்கங்கள் பல இதனால் அறியப்படுகின்றன. அவள் மாத்திரைக்கோலும் வற்றாப் பத்திரமான பருங் குறக்கூடையும் வைத்திருப்பாளென்றும் அவள் கைக்குறிகளையும் மெய்க்குறிகளையும் பார்த்துப் பலன் கூறுவாளென்றும், குறிகூருவதற்கு முன் பல தெய்வங்களையும் தன் குலதெய்வத்தையும் வேண்டிக் கொள்வாள் என்றும், பல தலங்கள் மலைகள் நதிகள் முதலிய இடங்களில் சஞ்சரிக்கிறவள் என்று பல வித்தைகளில் தேர்ந்தவள் என்றும் அறியலாம்.

 

இதனுள் தலைவியின் கூற்றாக வரும் பாடல்கள் புறத்திணைக் கைக்கிளை வகையைச் சேர்ந்தனவாகக் கொள்ளுதல் பொருந்தும். அவ்வகையில் இதன்பால் அமைந்துள்ள துறைகள் மன்மதோபாலம்பனம், சந்திரோ பாலம்பனம், தென்றலைப்பழித்தல், பொழுது கண்டிரங்கல், காம மிகக்கழிபடர் கிளவி முதலியனவாம்.

 

குடந்தை சம்பந்தமாக இந்நூலில் வந்துள்ள பெயர்கள்: அரிசிலாறு, ஆராவமுதர், ஈழந்திறை கொண்டார், காசிபன் மடு, காயாரோகணம், காவேரி, குலோத்துங்க காளி, சப்தகன்னிகைகள், நவநதிகள், பகவ தீரித்தம், பேராரவாரப் பிள்ளையார், பொற்றாமரைக்குளம்; மங்கைநாயகி, மாமகத்தீர்த்தம் முதலியன.

 

இத்தல சம்பந்தமான செய்திகளிற் சில வருமாறு: எழும்புகள் தாமரை மலர்களாக மாறினமை, கோதமரின் கோஹத்தி தவிர்ந்தமை, ஒரு நாய் பேறு பெற்றது, இராமபிரான் கும்பேசரை அருச்சித்து இரவணனைக் கொல்லத்தக்க வலிமை பெற்றது, பிரகஸ்பதி வழிபட்டுத் தேவகுருவானது, ஆதிசேடன் சேவைசெய்து பூபாரத்தை ஒரு தலையில் சுமக்கும் வலிமை பெற்றது, ஏம மாமுனி இத்தலத்திற் தவம் செய்து முத்தியடைந்தது, இந்திரன் பிள்ளைப் பேற்றைப் பெற்றது, காசிபர் அலித்தன்மை நீங்கியது, நவநதிகள் தம்பாவங்களைத் தீர்த்துக் கொண்டது, கும்பேசர் உற்பவித்த வரலாறு, மாநதாதா அருச்சித்து ஏகசககராதி பதியானது முதலியன.

இந்தக் குறவஞ்சி நாடகத்தைக் கும்பகோணத்திலிருந்த கோப்பு நடராஜ செட்டியார் என்பவர் நாட்டியக் காரர்களைக்கொண்டு மாசிமகத் திருவிழாவின்போது மிகச் சிறப்பாக நடைபெறச்செய்தாரென்று பாயிரச் செய்யுள் தெரிவிக்கின்றது.

 

*இக்கோப்பு நடராஜ செட்டியார் என்பவர் 80 வருடங்களுக்கு முன்பு கும்பகோண தேவஸ்தானத்தில் தருமகர்த்தாவாக இருந்தவர். கும்பேசுவரரருக்குப் பல பொற்பணிகளும் கற்பணிகளும் செய்தமைத்தவர், இவர் ஒரு மகாமக விழாவில் அம்பிகையின் திருத்தேர் சாய்ந்ததினால் சிவபதம் பெற்றவர்.
___
*இச்செய்தி கும்பகோணம் பேடேடைத்தெருவிலுள்ள ஸ்ரீ P.T.S. குமாரசாமி செட்டியார் அவர்களால் தெரியவந்தது.

 

இந்நூல் ஏட்டுப்பிரதியின் ஈற்றில் நடராஜ செட்டியாரைப்பற்றிய கலித்துறை யொன்று காணப்படுகிறது. அது வருமாறு:---

' நம்மலைக் குந்துயர் தீர்த்தாண் டிடுகும்ப நாயகர்மேல்
எம்மலைப் புந்தவிர்த் தின்பப் பணிகள் இயற்றவல்லோன்
செம்மலைக் குப்பின் வருஞ்செம் மலையப்பன் சேரியன்மன்
விம்மலைத் தீர்க்கும் நடராச பூப விதரணனே.'

 

ஸ்ரீ பாபநாச முதலியார் கும்பகோணத்தில் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வசித்தவர். அந்நகரத்தில் வாணாதுறை வடக்கு வீதியில் ஸ்ரீமான் திருவேங்கடம் பிள்ளை என்பவர் வசித்திருந்தவீடு இவர் வீடென்று சில பத்திரங்களால் தெரியவந்தது. இவர்காலத்தில் தஞ்சையில் மகாராஷ்டிர அரசு ஸ்தாபிதமாகி இருந்தது:: ஏகோஜி என்பவரை இவர் இந் நூலில் (பாட்டு 6, 43) பாராட்டியுள்ளார். 

 

இவர் சிவபக்திச் செல்வர், தமிழில் அருமையான பலகீர்த்தனங்ளைப் பாடியவர். 'நடமாடித்திருந்த உமக்கு' என்ற காம்போதி ராகக் கீர்த்தனம் இவர் இயற்றியது. தம் கீர்த்தனங்களில் இவர் பாபநாசம் என்ற முத்திரையைப் பாட்டின் பொருளோடு இசைந்து நிற்கும்படி அமைத்திருப்பர். பாட்டு ( 35, 49, 58,72,89,113 ) இடையிடையே கீர்த்தனங்களில் சில சரணங்கள் தெலுங்கு மொழியில் உள்ளன (பாட்டு 12, 15,41). அதனால் பாபநாச முதலியாருக்குத் தெலுங்குப் பயிற்சியும் உண்டென்று தெரிகிறது. சங்கீதம் தெரிந்தவர்களுடைய சாகித்தியம் என்றால் அதற்கு ஒரு தனிக் கௌரவம் உண்டு. அதில் ராக பாவம் நன்றாகப் பொருந்தியிருக்கும். கீர்த்தனங்களின் நடை சாதாரணமாக இருந்தாலும் அவற்றின் சங்கீத அமைப்பு உயர்ந்ததென்பதைச் சங்கீத வித்துவான்கள் நன்கு அறிவார்கள். இவருடைய கீர்த்தனைகளைக் கனம் கிருஷ்ணையா, மதுரகவி, அனந்தபாரதி, கோபாலகிருஷ்ண பாரதியார் முதலிய சங்கீத சாகித்திய வித்துவான்கள் பாடி இன்புற்றார்கள் என்று தெரிகிறது.

 

உத்தேசமாக 60 வருடங்களுக்குமுன் என் தந்தையாரவர்கள் கும்பேசர் குறவஞ்சியின் சில ஏட்டுப்பிரதிகளைத் தேடி எடுத்துப் பிரதி செய்து வைத்திருந்தார்கள். தாம் முதன் முதல் உத்தியோகஞ் செய்துவந்த தலமாதல் பற்றிக் குடந்தை விஷயமான இக் குறவஞ்சியை அவர்கள் தாம் பதிப்பிக்க வேண்டிய நூல்களுள் ஒன்றாக எண்ணியிருந்தார்கள். அவர்களுக்கிருந்த முக்கியமான பல வேலைகளால் இதனை அவர்கள் வெளியிடவில்லை. 1941 இல் அவர்கள் இந்நூலாசிரியராகிய பாபநாச முதலியாரைப் பற்றி வெளியிட்ட * கட்டுரை ஒன்றில், 'அவர் இயற்றிய குறவஞ்சி மறைவில் இருக்கிறது அந்த நாடகம் உலக அரங்கில் ஏறுங்காலம் எப்போது வருமோ!' என்று குறித்திருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பம் இப்போது. மகாமகத்தெருவுக்கு முன்பு ஈடேறியது ஸ்ரீ கும்பேசுவரருடைய திருவருளின் செயலென்றே எண்ணுகிறேன்.

--------------------------

 

* இக்கட்டுரை நினைவு மஞ்சரி இரண்டாம் பாகத்தில் வெளி வந்துள்ளது.

 

அடையாற்றில் ஐயரவர்கள் பெயரால் அமைந்திருக்கிற நூல் நிலையத்தின் மூன்றாம் பிரசுரமாக இப்பொழுது இது வெளிவருகின்றது.

 

கிடைத்த பிரதிகளில் கீர்த்தனங்களிற் பலவற்றுக்கு இராகங்களின் பெயர் காணப்படவில்லை; எனவே, வாசகர்கள் தக்கவர்களைக் கொண்டு அவைகளுக்கு இராகம் அமைத்து எழுதிக்கொள்வததற்கு வசதியாக அவற்றின் தலைப்பில் இராகம் என்ற சொல்மட்டும் பதிப்பிக்கப் பட்டுள்ளது. தரவு கொச்சகக் கலிப்பாக்கள் விருத்தம் என்ற பெயராலே பிரதிகளிற் காணப் பட்டமையால் அவைகள் அங்ஙனமே பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

 

இந்நூலை வெளியிடும் விஷயத்தில் எனக்கு ஒரு சிறிதும் பொருட் கவலையில்லாமல் முழுப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்நூல் நிலையத்தின் அத்யக்ஷராகிய ஸ்ரீமதி ருக்குமணி தேவியார் அவர்களுடைய பெருந்தகைமையையும் தமிழ்மொழிப்பற்றையும் மிகவும் பாராட்டுகின்றேன்.

 

இந்நூலைப் பதிப்பித்தற்காக ஆராய்ந்து வந்தபோதும், குறிப்புரை முதலியன எழுதுகையிலும், அச்சாகி வரும்போதும் உடனிருந்து உதவிபுரிந்த கலாக்ஷேத்திரத்தின் தமிழாசிரியரும் இந்நூல் நிலையத்தின் நூற்பரிசோதகருமாகவுள்ள ஸ்ரீமான் ச.கு.கணபதி ஐயர், பி.ஓ.எல்., அவர்களுடைய பேருழைப்பு மிகவும் போற்றத்தக்கது.

 

அடையாறு         இங்ஙனம்
25-12-1944         S.கலியாணசுந்தரையர்
----------------



கும்பேசர் குறவஞ்சி நாடகம்

பாயிரம் 
இரட்டையாசிரிய விருத்தம்

 

அவனிபுகழ் முத்தமிழக் கவிராச சேகரன்
        அருள்பாப நாசநேசன்
    ஆதிகும் பேசர்மேற் குறவஞ்சி நாடகம்
        அன்புட னுரைத்து வைத்தான்
கவனமுட னிதையெடுத்தி யாவருங் கண்டுகண்
        களிகூர வரிய பரதக்
    கருவியோ ராற்பாடி யாடல்புரி வித்தனன்
        கருணைமிகு பேட்டை நகர்வாழ்
குவளைமலர் மாலையணி மார்பன்வர தன்தந்த
        குபேரன் பயந்த மேருக்
    கொண்டல் கோப்புக் குமர பூபனருள் செல்வக்
        குமாரன் மன்னவர் வசீரன்
நவரச மிகுசற்ப வசனநிச தருமநிலை
        நாட்டினோ னீட்டு புகழோன்
    நற்கருணை யாளன்மிகு சொற்புலவ ருக்குதவு
        நடராச மகிபாலனே.

 

(குறிப்புரை) அவனி - உலகம்; உயர்ந்தோரைக் குறிக்கும். முத்தமிழ் கவிராசசேகரன்: பபனச முதலியாருக்கு அளிக்கப் பெற்ற பட்டம். பரதக் கருவியோரால் - பாரத நாட்டியத்தைத் தொழிலாக உடையவரைக் கொண்டு. பேட்டைநகர் - கும்பகோணத்தின் மேல்பாலுள்ள ஒருபகுதி. கொண்டல்-மேகம்.போன்ற. கோப்புக்குமர பூபன் - நடராசச்செட்டியாரின் தந்தையார். சற்சவசன - நல்ல இனிய சொற்களையுடைய.

 

தருமநிலை நாட்டினோன் - தர்மகர்த்தா. நடராசமகிபாலர் -கும்பேசர் கோவிலுக்குப் பல ஆண்டுகள் தர்மகர்த்தாவாக இருந்து கற்பணிகளும், பொற்பணிகளும் நிரம்பச் செய்து புகழ்பெற்றவர்.

 

நூற்பயன் 

 

சீருலவு சிங்கிசிங் கனைமூல மாக்கொடு
        திருக்குடந் தைப்பதியில்வாழ்
    தேவர்கும் பேசர்மேற் குறவஞ்சி நாடகம்
        செப்பினே னிதையெடுத்துத்
தாரணி யுளோர்மகிழ நடனஞ்செய் வித்திடும்
        சற்குணர்கள் கண்டுகேட்டோர்
    தண்ணளியி னானிதம் துதிசெயும் விவேகிகள்
        சகலருக்குந் தயவினால்
பார்மருவு கல்வி செல்வமிட்ட பாக்கியம்
        பாலகன் தனதானியம்
    பகரட்ட சித்தியே முதலிந்த்ர போகமும்
        பாலிக்க மனதிலெண்ணித்
தாரணி தனக் கொங்கை மங்கை நாயகியுடன்
தவளவிடை மீதில்வந்து
    தண்ணளிசெய் தேவிண்ண வர்க்குமுத லியார்க்குமெய்த்
        தரிசனம் புரிகுவாரே.

 

(குறிப்புரை.) இட்டபாக்கியம் - இஷ்டபாக்கியம். பகர் அட்ட சித்தி - புகழ்கின்ற அஷ்ட மகா சித்திகள். தார் அணி - மாலையை அணிந்த. மங்கை நாயகி - இத்தலத்துத் தேவியார் திருநாமம்; மங்களாம்பிகை யென்றும் சொல்வர். தவளவிடை - வெள்ளை நிறத்தோடு கூடிய காளை. விண்ணவர்க்கு முதல் யார்க்கும். புரிகுவர் - அருளுவர்.
------ 

நூல்

காப்பு 

 

1 கணபதி துதி 

 

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பொன்கொண்ட மணிமார்ப னீன்ற வேதன்
        புரந்தரன்வா னவர்முனிவர் போற்றும் பாதர்
மின்கொண்ட நுண்ணிடைமங் கைச்சி பாகர்
        விமலர்குட மூக்கமுதர் மீதில்வாசம்
தன்கொண்ட காட்சியென மதுரங் கொண்டு
        சதுர்கொண்ட குறவஞ்சித் தமிழை பாட 
முன்கொண்ட துதிக்கைப்பே ராரவார
        மும்மதவா ரணமுகவன் முன்னிற்பானே. (1)

 

(குறிப்புரை.) பொன் - இலக்குமி. மணிமார்பன் - அழகிய மார்பன்; கவுத்துவ மணியை அணிந்த மார்பன் எனினும் ஆம்; திருமால். புரந்தரன்-இந்திரன். மின்- மின்னல். கொண்ட: உவமவாசகம். குடமூக்கமுதர்: குடமூக்கு: கும்பகோணம்; அமுதர் - அமிர்ததில் உதிப்பவர். சதுர்- நடனம்; நாடகம் என்றபடி. ஆரவாமும்மதவாரணமுகவன் : ஒரு விநாயகர்.

 

--------------------

 

2 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

சீராருங் கும்ப கோணஞ் செழிக்கும் கும்பேசர் வில்வத்
தாராருஞ் சடையார் மீதிற் றமிழ்க்குற வஞ்சி பாட
வாராருங் களபக் கொங்கை மங்கைநா யகியா ளீன்ற
பேரார வாரச் செல்வப் பிள்ளையார் காப்புத் தானே. (2)

 

(குறிப்புரை.) வில்வித்தார் - வில்வமாலை. வார் - கச்சு. களபம் - கலவைச் சாந்து.

 

-----------------

 

கறைகொண்ட கண்டர் வேளைக் காய்த்தகும் பேச ரந்திப்
பிறைகொண்ட சடையார் மீதிற் பெருங்குற வஞ்சி பாட‌
மறைகொண்ட மேனி யார்மும் மதங்கொண்ட கொண்ட லீழம்
திறைகொண்டார் பதவா ரீசச் செழுமலர் காப்ப தாமே. (3)

 

(குறிப்புரை.) கறை - விடம். கண்டர் - கழுத்தையுடையவர். வேள் - மன்மதனை. சிவபெருமான் அணிந்தது தேய் பிறையே யாயினும் அவர் முடியை அடைந்ததும் வளர்ச்சிபெற்றதனால் அந்திப்பிறை என்றார்; அந்தி - மாலைக்காலம். மறை - வேதம். கொண்டல் - மேகம். ஈழம் திறைகொண்டார்: கோவிலிலுள்ள‌ ஒரு விநாயகமூர்த்தி. வாரீசம் - தாமரை.

 

----------------

 

4 அம்பிகை, சுப்பிர‌ம‌ணிய‌ர், திருமால், பிர‌ம‌ர்துதி

 

ம‌டந்தையோர் பாக‌ர் வில்வ‌ மாலையார் வ‌ருண‌ன் போற்றும்
குட‌ந்தைக்கும் பேச‌ர் மீதிற் குற‌வ‌ஞ்சித் த‌ழிழைப் பாட‌
ம‌ட‌ங்க‌லா ச‌ன‌த்தோள் வென்றி ம‌யிலேறும் பெருமாள் பாம்பின்
ந‌ட‌ம்புரி திருமால் வேத‌ நான்முக‌ன் காப்ப‌ தாமே. (4)

 

(குறிப்புரை.) ம‌ட‌ங்க‌ல் ஆச‌ன‌த்தோள் - சிங்க‌ வாக‌ன‌த்தையுடைய‌ அம்பிகை, வென்றி‍ - ‍வெற்றி.

 

5 க‌லைம‌க‌ள் துதி

 

ம‌ட‌க்கொடி பொறிசேர் பொற்றா ம‌ரைக்குமேற் புற‌த்திற் ற‌ங்கும்
குட‌த்தினி ல‌முத‌ லிங்க‌ர் குறவ‌ஞ்சிப் ப‌னுவ‌ல் பாட‌
இட‌த்தினிற் சுழிக்கும் வைகை யேட்டினிற் ற‌வ‌ழ்ந்தென்னாவின்
ந‌டிக்கின்ற‌ துரைப்பெண் ணான‌ நாம‌க‌ள் காப்ப‌ தாமே. (5)

 

(குறிப்புரை.) பொறி - இல‌க்குமி. பொற்றாம‌ரை : திருக்குள‌த்தின் பெய‌ர். ஸ்ரீ சார‌ங்க‌பாணிஸ்வாமியின் தெப்போத்ஸ்வ‌ம் இந்த‌க் குளத்திலேதான் நடந்து வருகிறது. பனுவல் - நூல், ஏடு - சமணரோடு வாதம் புரிந்தபோது திருஞானசம்ப்நதமூர்த்தி நாயனார் தமிழ்ப் பாசுரம் எழுதி வைகை நதியில் இட்ட ஏடு; 'வைகையேட்டினிற் றவழ்ந்த பேதை' (வி.பா.) என் நாவில் நடிக்கின்ற.

 

6 இலக்குமி துதி

 

இரவலர் தருவான் றஞ்சை யேகோசி ராசன் போற்றும் 
சரணரா டரவு கொன்றை தரித்தகும் பேசர்மீதிற்
பரிபுர மணிந்த செம்பொற்பதக்குற வஞ்சிபாட
வரசரோ ருகமாந் திவ்ய மலர் மங்கை காப்ப தாமே. (6)

 

(குறிப்புரை.)இரவலர்தரு - யாசிப்பவர்களுக்குக் கற்பக விருக்ஷம் போன்றவன். வான் - சிறந்த. ஏகோசி -தஞ்சையை ஆண்ட மகாராட்டிர மன்னர்களில் ஒருவன்; ஆசிரியர் வரலாற்றைப் பார்க்க. சரணர் - பாதங்களையுடையவர். ஆடு அரவு - ஆடுகின்ற பாம்பு. பரிபுரம் - பாதகிண்கிணி; பரபுரமணிந்த செம்பொற்பாதம் என்பது குறப்பெண்ணுக்கு அடைமொழி. வர - சிறந்த. சரோருகம் - தாமரை.

 

7 தோடையம்

ராகம் : நாட்டை

 

திருவளர் கடிகமழ் நிறைகும்ப கோணரெண்
        டிசைபுகழ் வள்நக ரெழில்கொண்ட தேசிக
குருவடி வெனவரு வொருகும்ப நாதர்மேல்
        குறவஞ்சி பாட செயசெய;
அரிமரு கனெனு மடமங்கை நாயகி
        அகமகிழ் மணியென வருளுஞ் சுகாதரன்
சரவண பவனுடன் வருதும்பி மாமுகன்
        சரணமலர் துணையே செயசெய. (7.1)

 

சிறுபிறை நதியர வணிசெஞ் சடாடவி
        திரிபுர மெரிதரு சிவகும்ப நாதர்மேல்
குறிசொல வருமட மயிற்சண்ட மாருதக்
        குறவஞ்சி பாட செயசெய;
உறிதனி லளைநவ நீதமுண் டசோதைமுன்
        உரல்கொடு மருதிட றியநந்த கோபர்விண்
எறிசுடர் திகிரியை யணிவிண்டு மாமலர்
        டிணையடிகள் துணையே செயசெய. (7.2)

 

அலர்மழை சொரிதரு மிகல்சம்ப ராரிமேல்
        அனலெறி விழியினர் சிவகும்ப நாதர்மேல்
குலகிரி தனில்வரு மயில்கும்ப மாமுலைக்
        குறவஞ்சி பாட செயசெய;
கலைமகளமரர்கள் பொதுமன்று ளாடிய
        கடவுளை யிகல்புரி வெறிமண்டு மாமேதி
தலைமிசை நடமொடு விடைதநத வேதாளி
        சரணமலர் துணையே செயசெய. (7.3)

 

அளிமுர லணிமலர் நறைதங்கு சோலைசூழ்
        அலைவிசை தனில்வரு சிவகும்ப நாதர்மேல்
குளிர்மதி முககமல மடந்தை மாதுநேர்
        குறவஞ்சி பாட செயசெய;
துளிதரு கறைவிட தரனுந்தி மாமலர்
        சுருதியில் வருமறை யவனிந்தி ராதிபன்
இளவெயி லவனில வுமிழ்சந்தி ரன்மாகுரு
        இணையடிகள் துணையே செயசெய. (7.4)

 

(குறிப்புரை.) தோடையம் - நாடகத்தின் முதற்பாட்டு. பலதெய்வங்களின் காப்பாக உள்ளது இது.

 

(1) கடி - மணம். செய செய - ஜய ஜய. அரி - திருமால். தும்பி - யானை.

 

(2) திரிபுரம் - முப்புரங்கள்; விண்ணிலேதிரிகின்ற புரங்களுமாம். அளை நவநீதம் - தயிரும் வெண்ணெயும். மருது - மருதமரம். நந்தகோபர் - கிருஷ்ணர். விண் எறி - சூரியனை மறைக்க விண்ணிலே எறிந்த. திகிரி - சுதர்சனமென்ற சக்கரம். விண்டு - விஷ்ணு.

 

(3) இகல் - போர்செய்த. சம்பராரி - மன்மதன். மாமேதி தலைமிசை - மகிஷாசுரன் தலையின் மேல். வேதாளி - மாகாளி. கலை மகள், அமரர்கள், வேதாளி சரணமலர் துணையே.

 

(4) அளி - வண்டுகள். நறை - தேன். அலைமிசைதனில்வரும் சிவகும்பநாதர் - பிரளய வெள்ளத்தின் விசையினால் அடித்துக் கொண்டு வரப்பட்ட அமுத கும்பத்தில் உற்பவித்த சிவபெருமான். கமல மடந்தை மாதுநேர் - லக்ஷ்மி என்ற பெண்ணை யொத்த; மாது - அழகுமாம். கறைவிடதரன் - கறையாகிய விடத்தை யணிந்த சிவபெருமான். சுருதி - வேதம். மறையவன் - பிரமன். வெயிலவன் - சூரியன். குரு - பிரகஸ்பதி.

 

8 மங்களம்

ராகம்: பந்துவராளி

 

8. மங்களம் கும்பலிங்கருக்கு மங்களம்

 

(1) மங்களங் கும்ப லிங்கருக்குந் திங்களணி வேணியர்க்கும்
பொங்கரவப் பூசுரர்க்கும் மங்கை நாயகி பக்தருக்கும் (மங்)

 

(2) இமபுர கண்டனர்க்கும் அமரேச வந்திதர்க்கும்
கமலாசன பூசிதர்க்கும் அமுதலிங் கேசருக்கும் (மங்)

 

(3) சர்வஜன ரட்சகர்க்கும் பர்வத வீரபாணிக்கும்
மறிமழு வேந்துங்கும்பத் திரிகோண நாதருக்கும் (மங்)

 

(4) விடமயில் கண்டருக்குங் கடம்பவ னேசருக்கும்
நடம்புரி பாதர் திருக் குடந்தைக் கும்பேசருக்கும். (மங்)

 

(குறிப்புரை.) 

 

(1) இம புர கண்டனர் - யமனையும், முப்புரங்களையும் கண்டித்தவர்; யமனுடைய உடலைக் கண்டித்தவர். அமரேச வந்திதர்- இந்திரனால் வணங்கப்பெற்றவர். கமலாசனர் - நான்முகன்.

 

(2) பர்வதவீரபாணி - மேரு மலையாகிய வில்லைக் கையிலே உடையவர். மறி - மான். (3) அயில் - உண்ணும். கடம்ப வன ஈசர்; கடம்பவனம் - மதுரை.

 

---------------
 

9 அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

நதிமதிச் சடையார் கும்ப நாதனார் குறவஞ் சிக்குத்
திதியருள் புரிவலென்னாத் திகழக மகிழ்ந்து போற்றித்
துதிசெயு மடியார்க் கன்பு சுரந்தருள் குடந்தை மேவிக்
கதிநித முதவு முக்கட் கணபதி தோன்றி னாரே. (9)

 

(குறிப்புரை.) திதி = ஸ்திதி - நிலைபேறு.

 

------------------

 

10 
ராகம் : மத்திமாவதி

பல்லவி

 

10. சத்திக் கணபதி வந்தார்--நிர்த்தனமிடு

 

சத்திக் கணபதி வந்தார்

 

அனுபல்லவி

 

சித்தர் முனிவர் போற்றுந் தேவர் குடந்தை நாட்டிற்
சிந்துர மெழுதிய தந்திமுகமுடனே
திந்திமி திந்திமி திங்கணத்தோமென்று (சத்தி)

 

சரணம்

 

தேவர் பூசுரர் துன்னவே - பூதகணங்கள்
செய செய செய வென்னவே
பூவின் மனிதர் துன்னப் பாவினிசைகள் மன்னப்
பொங்கர வம்புனை சங்கரர் தந்தருள்
ஐங்கர னிங்கித மங்கள மாகவே (சத்தி) (10.1)

 

தும்புரு நாரதர் பாடவே - தேவர்கடேவ
துந்துமி யிசையோ டாடவே
அம்புவியு ளோர்கொண் டாட அன்பர்க ளானந்த நீட
அத்திமு கத்துய ரொற்றை மருப்புடை
உத்தம ரற்புத நித்த நடத்தொடு (சத்தி) (10.2)

 

உச்சியின் மகுடஞ் சூடியே - வல்லபையெனும்
உத்தமப் பெண்ணொடு கூடியே
இச்சையு டன்றனை நாடி நச்சிடு மன்பரைத் தேடி
இன்ப மளித்துயர் தன்பத முத்தியில்
அன்புட னுய்த்திடு செம்பொன் மலர்ப்பத (சத்தி) (10.3)

 

(குறிப்புரை.) நிர்த்த கணபதி: “கணபதியானவர் தாண்டவம் லாசியம், நாட்டியம், நிருத்தம், நடனம் என ஐந்து வகை செய்து அவற்றைத் தாம் ஆடிச் சிவபெருமானால் நிருத்த கணபதி என்னும் சிறப்புத் திருநாமம் பெற்றார்” (பரத சேனா. சூ. 43, உரை). குடந்தை நாடு--பெரியோர் வாழும் ஊரை நாடு என்றல் பழைய வழக்கு. சிந்துரம்-குங்குமம். (1) பூவின்-பூவுலகில். (2) தேவர்கள் ஆடவே எனக்கூட்டுக. அம்புவி - பூவுலகம். (3) வல்லபையோடுகூடிய விநாயகர்-வல்லப விநாயகர்; இவர் இத்தலமூர்த்தி களுள் ஒருவர். நச்சிடும் - விரும்பிடும்.

 

.-------------------

 

11 கட்டியக்காரன் வருகை

விருத்தம்

 

நகைத்துமுப் புரத்தை வென்ற
        நாதர்கும் பேசர் நாட்டிற்
சுகத்தினைப் பயிற்றுஞ் செஞ்சொல்
        சுரதமோ கினியார் வாசல்
மகத்துவஞ் கூற நந்தி
        வாகனாங் கட்டியக் காரன்
திகைக்கவெண் ணீறு பூசிச்
        செயஞ்செய மெனவந் தானே. (11)

 

(குறிப்புரை.) சுகத்தினைப் பயிற்றும்-கிளிக்குப் பேச்சினிமையைக் கற்றுக்கொடுக்கும். நந்திவாகன் ஆம் கட்டியக்காரன்-நந்தி என்னும் அழகுள்ளவனாகிய கட்டியக்காரன்.

 

---------------
 

 

12 
ராகம்: பந்துவராளி

பல்லவி

 

12. கைதனி லொற்றைப் பிரம்பெடுத்துக்

 

கட்டியக்காரனும் வந்தானே.

அனுபல்லவி

 

கிடதக தெய்தெய் தரிகிடு திமிதக
கிடதரி தரிகிடு திங்கிண தோமென்று (கைதனில்)

 

சரணம்

 

(1) மார்பினிற் சவ்வாதுப் பட்டை
வாங்கிய பாங்குஞ் சுங்குருமாலையும்
தீருக தித்தின நாமமு தோடனு
தித்திமி தித்திமி திங்கிண தோமென்று (கைதனில்) (12.1)

 

(2) காவிச் சல்லடந் தொட்டுக்
கச்சை யிறுக்கிக் குச்சம தாட
டீவிக தனசவு ரியமுனனு சூபுசு
டிங்கு டங்குதா ததிங்கிண தோமென்று (கைதனில்) (12.2)

 

(3) மங்கை பாகர் குடந்தை
வாசர் கும்பேசர் நாட்டில்
ரங்குக செகன் மோகினி
வாசலினணி தொங்கத்
தொங்கத் தோத திங்கிண தோமென்று (கைதனில்) (12.3)

 

---------- 

 

13 செகன் மோகினி வருகை 

 

அகவல்

ராகம் : ஆரபி 

 

ஆரணன் கைவந் தமைந்த பெண்ணமுதிற்
கார்ண வடிவாய்க் கமலமென் பொகுட்டிற்
செந்திரு மகளோ திலோத்த்மைப் பெண்ணோ
சுந்தர வனங்கன் தோகையோ கடல்வாய்
அமுதமோ சுகமோ ஆசையின் கரும்போ 5

 

சுமுகவேள் துரைஎனத் தோன்றிவிண் ணார்ந்த
பருவநீர் முகிலைப் பசிய சைவலத்தைக்
குரைகடற் கரையிற் கொழித்த தெள் ளறலைக்
காரிருட் கற்பகக் காட்டினை பழிக்கும்
சூரிகைக் கமையாச் சூழிகைக் குழலாள்; 10

 

பெருகிய மூன்றாம் பிறைத் திரு நுதலாள் ;
பொருதகை வாளுறைப் புருவவெஞ் சிலையாள்;
பூங்குமிழ் நாசி பூத்திலம் வைத்து
வாங்குபொன் னூசல் வள்ளைவார் காதாள்;
நெய்த்தலைத் தனுவின் நீண்டகூ ரம்பைச் 15

 

செய்யவள் மருவுந் தேன்றுளிக் கமலம்
நஞ்சமுதை வென்று நளினங்களை வெகுண்டுநமன்
அஞ்சிட வெதிர்ந்து குறைநாடி யிகல
சுரந்தருள் கொண்டு சுழன்று சினந்து
பரந்து தரங்க மெனப்பாய்ந்து துள்ளி 20

 

மான்மறி வனம்புகுத மாவடு வகிர்ந்ததென
மீனை விலைகொண்ட வேல்மதர் விழியாள்;
உடைபெறா துலையி லுருகுசெம் பதத்திற்
கடைந்தகண் ணாடிக் கபோலமெய் யழகி;
செம்பவ ளத்தைச் சிறுகோவைக் கனியை 25

 

அம்புயச் செவ்வாய் அதரமென் மலராள்;
முருந்தை நித்திலத்தை முல்லையி னரும்பை
விரும்புமா தளையின் வித்தெனு நகையாள்;
திரைகடற் சங்குஞ் செழித்தபூங் கமுகும்
குருகிரு நான்குங் குமுறு கந்தரத்தாள்; 30

 

காம்பிணைத் தோளாள் காந்தள் செங்கமலப்
பூம்புது வீணை பொருதுசெங் கரத்தாள்;
கடுகெனக் குறித்துக் கண்டித்துச் சுழித்துத்
திடுமெனப் புடைத்துத் திரண்டுருண் டெழுந்து
பாக்கெனப் பருத்துப் பருவமா தளையின் 35

 

ஆக்கென வனசத் தரும்பெனக் கதிர்த்துச்
சிக்கெனப் பருத்த திணைப்பொற் செப்பெனச்சினத்த
கைக்கட் களிற்று வெற்றி மத்தகப்
பொருப்பை மிக்கென நெருங்கியு முரம்
களைநிறைந் தளிபொருந் தலைநெருங் கவரும் 40

 

இளைஞர்விழி யம்புயமு மெழில்களப குங்குமமும்
நளினமுது வெண்டரள நவமணியு மளிபெருக
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும்
வேள்மகு டத்தின் மிகவளர் முலையாள்;
தடத்தருகு நின்று தளிர்த்துத் தழைக்கும் 45

 

வடத்திலையை வென்ற வயிறாள்;
மையமென் னூன்மரும மைதடவி மாமலரோன்
செய்ய கரத்தாற் றெரித்ததென
எள்ளொன்றி நூற்றோன் றெறும்மைத் தலைகீழாய்த்
தள்ளுங் கருரோம தாரையாள், 50

 

எழிலிரு சிகரத் திடையில்வே ளுந்திச்
சுழியள வறியத் தொடுரோம சரத்தாள்;
மின்னூற் றுடியை விசும்பினை யனங்கன்
கன்னியர் மனத்தைக் கற்றோர்க்கு லோபர்
வாய்வருஞ் சொல்லை வல்லியங் கொடியைத் 55

 

தாய்வயிற் றிருந்து தலைச்சுமை யேந்தி
நடைதனிற் றேய்ந்து நற்றுகில் புனைந்து
இடையிலை யுண்டென் றிருந்தபூங் கொம்பும்
உடுபொறி யரவவமணி யுருளைபொருதிகிரி மதனரசு
புலவர்பத மிருகதலி பொருது திரள்தூண் 60

 

இணைதுடை நிறைந்து [. . . . .
. . . . . . . . 
. . . . . . . .
. . . . . . . .;

 

தூணிதனை யானைத் துதிக்கையுந்து பொற்சில்லைக் 65

 

காணின் மயக்குங் கெண்டைக் காலினாள்;
கணைக்கால் திரண்டிரண்டு கண்போற் சிறந்த
பணைதரா சென்னும் பரட்டினாள்;
புதுமையா மதனூற் பொத்தக மாமை
முதுகெனச் சிவந்த முளரியம் பதத்தாள்; 70

 

குளிர்மதி முகத்தாள் கும்பகோ ணத்தில்
தளிர்பயில் சோலைத் தாவுபூந் தென்றற்
காவிரித் துறையிற் காசிபர் மடுவிற்
பூவிரித் தொதுங்கப் புதுநீ ராடி
நனைதுகில் களைந்து நற்றுகில் புனைந்து 75

 

பனிமல்ர்க் காவிற் பாவையர் சூழத்
திருமுக நுதலிற் றிருநீ றணிந்து
மருவுசிந் தூரமு மைவிழிக் கெழுதிச்
சூழிகை கொண்டைச் சுரிகுழற் பின்னல்
தாழ்விலா முல்லை சண்பக மணிந்து 80

 

கற்பூர வெள்ளிலை கமுகுநீ ரூறல்
அற்புத மெனவந் தணங்குகள் வணங்கப்
பசுங்கிளி சர்வா பரணபூ ஷிதையாய்
அசைந்தசைந் தெழில்சே ரந்திவெண்ணி லவில்
நித்திலங் கொழிக்கு நிறைநீர்த் தடமாம் 85

 

பொற்றா மரைப்பூம் பொய்கைமேற் புறத்து
நின்றனள் குடபால் நிறைந்தபூங் கொன்றை
மன்றலந் தும்பை மாலைசேர் மார்பும்
காள கண்டமுங் கண்ணொரு மூன்றும்
தோளிரு நான்குந் துள்ளுமான் கரமும் 90

 

மங்கைநா யகியார் வளர்வாம பாகமும்
திங்கள்சேர் அம்புலிச் செஞ்சடா டவியும்
குளிர்மதிச் சடையார் கும்பலிங் கேசர்
விளங்கிய தவள விடைமேற் பவனி
கடைவிழி நோக்கிக் கண்டன ளன்றே 95

 

படைமத னைந்து பாணத்தி லொன்றைத்
தோய்ந்திள முலையிற் சுறுக்கெனத் தெறிப்பப்
பாய்ந்து பின்னுருவப் பதைபதைத் திட்டுக்
கும்ப நாதர் குலதெய்வ மென்றென்றம்பொன் 
மேகலை சோர்ந்தாவி சோர்ந்துருகிச் 100

 

சேயிழை யன்ன செகன்மோ கினிப்பெண்
மாயமின் னுருவாய் வந்துதோன் றினளே.

 

(குறிப்புரை) (1) ஆரணன் - நான்முகன். கைவந்து - தேர்ச்சியடைந்து. 
(4) அநங்கன் தோகை - ரதி. (6) வேள்துரை என.*
(7-70) செகன்மோகினியின் கேசாதிபாத வருணனை.
(7) முகில் - மேகம். சைவலம் - கொடிப்பாசி. (8) அறல் - கரு மணல்.
(10) சூழிகை - ஓர் அணி. (13) குமிழ் - குமிழம்பூ. பூத்திலம் - எள்ளின் பூ. 
(14) வாங்கு - வளைந்த. வள்ளை - வள்ளைத்தண்டு. (15) தனுவின் - வில்லின். 
(18) இகல - பகைக்க.(20) தரங்கம் - அலை. 
(24) கபோலம் - கன்னம். (26)என் - என்று கூறும். 
(27) முருந்து - மயிலிறகின் குருத்தின் அடி. நித்திலம் -முத்து. 
(30)குருகு இரு . . . . . கந்தரத்தாள் - எட்டுப்புள்ளொலியும் அமைந்த கண்டத்தையுடையவள். 
(36) வனசத்து அரும்பு - தாமரைமொட்டு. (38-9)மத்தகப்பொருப்பு - மத்தகங்களாகிய மலை. 
(49) நூல் தோன்று எறும்பை. (53) மின்நூல் - மின்னலையும் நூலையும். துடி - உடுக்கை.
(55) வாய்வரும்சொல் - இல்லையென்பது. (81) வெள்ளிலை -வெற்றிலை. கமுகுநீரூறல் - பாக்கு. 
(87) குடபால் - மேற்கில். (94) தவளவிடை - வெண்ணிறமுள்ள காளை. 
(100)மேகலை -எண்கோவைமணி; இடையிலணியும் ஓர் அணிவிசேடம்.

 

------------------

 

14 
விருத்தம்

 

தண்ணறவ மலர்ச்சோலைத் திருக்குடந்தைக்
        கும்பேசர் தரணி மீதில்
விண்ணவர்பண் ணவர்துதித்து நண்ணவிடை
        மேற்பவனி மேவக் கண்டு
கண்ணளவி நன்றிமன வளவினளப்
        பரியபெருங் காதல் கொண்ட‌
வண்ணமுலைச் செகன்மோகி னிப்பெண்மத
        ன‌னுமயங்க வருகின்றாளே. (14)

 

(குறிப்புரை.) பண்ணவர் -பண்ணையுடையவர்; பண் - இசை; பாட்டு.

 

---------------------

 

15 
ராகம்: சௌராஷ்டரம்

பல்லவி

 

வந்தாளையா செகன்மோகினிப்பெண்
வந்தாளையா.

 

அனுபல்லவி

 

வந்தனள்நிறை செலச சந்திர சடாடவிச்
சுந்தர ராதி குடந்தைக்கும் பேசர்முன்
அந்தமுக வரவிந்தலோசன மந்தகாசமு ஜெந்துரீதின (வந்தா)

 

(1) அலைக்குளசைந் தசைந்து நிலைக்கொள் கடவுண்மிக‌
நலக்குடந்தையிற் கும்பநாதர் நன்னாட்டினில்
தளுக்கு செக்குலதோ பலுகு சூபுலதோ
கலகலமனுசுன சிலுகல கொலுகி (வந்தா) (15.1)

 

(2) அப்பரவணிவேணி முப்புரதகனர்
ஒப்பிலாதமணி த‌ற்பரர் நாட்டினில்
உப்புசு குப்பிய கொப்ப கொப்புலனு
நிப்பமு கப்பின ராஜ வதன (வந்தா) (15.2)

 

(3) மங்கையோர் பங்கினர் பொங்கரவம்புனை
சங்கரர்சிவ கும்பலிங்கர் நன்னாட்டினில்
இங்கித முலுகல அங்கன மணுலதோ
சிங்காரமுக பங்காரு பொம்ம (வந்தா) (15.3)

 

(குறிப்புரை.) நிரைசொல் - இனிமைநிறைந்த சொற்களையுடைய. சடாடவி= சடா அடவி -சடைக்காடு. அந்தமுக - அழகுடன். செந்துரீதின - பொருந்தியரீதியில். 
(2) செக்குலதோ - கன்னங்களுடன். பலுகு சூபுலதோ - பேசும் பார்வையோடு. கலகலமனுசுன - கலகலப்போடு கூடிய மனத்தினால். சிலுகல கொலுகி - கிளியைப்போல் பேசுகிறவள்.
(3) அப்புஅரவு; அப்பு - நீர், கங்கை என்றபடி. உப்பு - உப்பியுள்ள. குப்பிய கொப்ப கொப்புலனு -ராக்கடியை யணிந்த மேலான கொண்டையில், நிப்பமு கப்பின - தகுதிபொருந்திய‌
(4) இங்கித. . . . .பொம்ம; கல - இருக்கிற; அங்கன மணுலதோ - பெண்மணிகளுடன். சிங்காரமுக - அழகுடன். பங்காருபொம்ம - பொற்பாவை.

 

-----------------

 

 

16 செகன் மோகினி துதித்தல்

விருத்தம்

 

பவளமே னியிற்கவள களிற்றூரியார்
        திருக்குடந்தைப் பதியின் மேவு
திவளணிசேர் கொங்கைமங்கை பங்கரெங்கள்
        கும்பலிங்கர் திருவீ திக்கண்
தவளவிடை மேற்பவனி கண்டுமயல்
        கொண்டுமலர்த் தைய லென்னத்
துவளுமிடைச் செகன்மோகி னிப்பெண்க‌
        முருகிமிகத் துதிக்கின்றாளே. (16)

 

--------------------

 

17 
ராகம்: நீலாம்புரி

 

(1) மந்தாகினிச் சடையின் மந்தாரை திகழ்கொன்றை
அந்தாரணியுமெங்க ளானந்தனடன கும்பநாதா - மிக‌
நொந்தார்க்கெல்லா மனதிற் சந்தாபந்தீர்க்குமர‌
விந்தப்பொற்சரணா வேத சொரூப – கும்பநாதா (17.1)

 

(2) சீறார்ந்து மாதவள வேறேறி வீதிவரும்
சீறாடரவமணிச் செஞ்சடைப்புனிதா - கும்பநாதா
மாறாத செல்வப் பெரும்பேறான் திருக்குடந்தைச்
சீறாத முகசந்திர சின்மய ரூபா - கும்பநாதா. (17.2)

 

(குறிப்புரை.) நீறார்ந்து - விபூதிபூசி; ஏறு ஏறி - காளையில் ஏறி; சீறு ஆடு ஆரவம் - சீறுகின்ற ஆடும் பாம்பு.

 

-----------------------

 

18 
விருத்தம்

 

மதிதவழொன் பதுநிலைகோ புரக்குடந்தைக்
        கரசுதவு மைய லாலே
பதிமயங்கி நிலைகலங்கி வளை துறந்து
        கலைமறந்து பரிந்து சித்தத்
துதிதருமோ கினிக்கெதிரே மதவேடன்
        படைவகுப்பைத் தொகுத்து முன்னே
சதிசெய்வசந் தத்தலைவன் குயிற்காளத்
        துடன்சமர்க்குஞ் சந்தித் தானே (18)

 

(குறிப்புரை.) குடந்தைக்கு அரசு. பதி - இடம். கலை - ஆடை. காதல் வேட்கை

 

-------------------

 

19 

 

(1) குயில்கூவ வேனேனென்று கொம்பிற்றளிர் தழைக்கும் 
மயில்தோகை யைச்சுருட்டும் வசந்த காலம்

(2) மலரிதழ்க் கதவடைத்து வரிவண் டுறங்கும்பொய்கை 
அலர்கோ கனகங்குவியு மந்திக் காலம்

(3) பெரும்பாக் கியஞ்செய்த போகள்பெண்ணாணுங் கூடிக்கூடி 
இரவிற்கண் கமலம் மலர்ந்திருக்குங் காலம்

(4) இக்காலமாய்க் கசக்கு தென்காலப் 
பிழைநாலுதிக்கோர்புகழ் கும்பேசர் சினந்த காலம்.

 

(குறிப்புரை.) (4) இக்கு - கரும்பு. ஆலம் - விஷம்

 

-----------------

 

20 காதல் வேட்கை

விருத்தம்

 

காளைவா ளைகளாளைப் பாய்ந்துவிசை
        கொண்டெழுந்து கதித்த பூகப்
பாளைகீ றியபழனத் திருக்குடந்தைக்
        கும்பலிங்கர் பவனி நோக்கும்
வாளையே பொருதவிழிச் சுரதமோ
        கினிக்கெதிரே வந்து பொல்லாத்
தேளையே நிகரான கணைக்காமன்
        பூங்கருப்புச் சிலைகொண்டானே. (20)

 

(குறிப்புரை.) காளை வாளை - வீரமுள்ள வாளைமீன். பூகம் - கமுக மரம். கருப்புச்சிலை - கரும்புவில்

 

---------------

 

21 
ராகம்: பல்லவி

 

அடடா மன்மதப்பயலே யுன்னினை வென்ன - என்னசேதி?

 

அனுபல்லவி

 

அடடா கும்பலிங்கேச ரதோ வாரார் மலரம்பைத்
தொடடா கருப்புவில்லை எடடா இனிமேற் பார்ப்போம் (அடடா)

 

சரணங்கள்

 

(1) கணைக்கென விழிக்கணையுங் கருப்புவில்லுக்குப்புருவம்
இணைக்கிணை தென்றற்றேர்க்கு என்னல்குல் தேரிருக்குது (அடடா)

 

(2) அம்புலிக் குடைக்கென்றன் அளகமேக முண்டுன்றன்
மும்மதக் கங்குலானைக்கென் முலையானை ரெண்டிருக்கு (அடடா)

 

(3)வண்டுநாணுக் கென்மேனி மலர்ச்சண்பக முண்டுன்றன்
வெண்டிரைக் கடலுக்கென்றன் விரகாக்கினியிருக்குது (அடடா)

 

(கு - ரை.) (2) அளகமேகம் - கூந்தலாகிய மேகம். கங்குல் ஆனை - இரவாகிய யானை. (3) மன்மதன் வில்லுக்கு வண்டுநாண்.

 

------------------

 

22 
விருத்தம்

 

நலவேளைப் பொடித்தருளைக் கொடுத்துமுன்போல்
        உலகியற்கை நடத்தல் வேண்டிக்
குலமாதுக் கிடமுதவுங் கும்பலிங்கர்
        எனக்கருளைக் கொடுப்பா ரிப்போ
சலமேது மிலையெனக்கு முனக்குமிஃ
        தறியாது சமர்செய் கின்றாய்
நிலவேயென் னிலவரத்தை நினையாதிங்
        கேன்வாராய் நில்லென் பாளே. (22)

 

(குறிப்புரை.) சலம் - தீராக் கோபம். நிலவரம் - நிலைமை.

 

---------------------

 

23 
ராகம்: பல்லவி

 

நிலவே யிங்கேன் வாராய் என் நிலவரமறியாமல்?

அனுபல்லவி

 

வலவர கும்பகொணத்தில் வருங்கும்பநாதர்
என்னைப் பேதகஞ்செய்வரோ! (நிலவே)

 

சரணங்கள்

 

(1) ஆளனில்லா வாசலிலே வந்துவந்
தசைவைப் பார்க்கிறாய் நிலவே
சாளர வாசனிலைக் கண்ணாடி வைத்துன்றன்னைப்
பிடித்தடைத்துத் தடிகொண்டடிக்கப் போறேன் (நிலவே)

 

(2) மின்னேரிடை மங்கை பாகர்
பிடித்திறுக்கி வேணியிற் கட்டுண்ட நிலவே
முன் குருசாபத்திற்குறைந்தமதியே முகமுழு மதியைக் 
கொண்டுன்னை முனைபங்கஞ்செய்யப்போறேன் (நிலவே)

 

(3) ததியறிந்துன்னை யெடுத்து விழுங்கவொரு
சடைப்பாம்பிருக்குதென் றலைமேலே
அதுவல்லாமற் கும்பநாத மகேசருன்னை
அன்று தேய்த்த பாதா ரவிந்த‌மிருக்குதுபோ (நிலவே)

 

(குறிப்புரை.) குரு சாபம் என்றது பிரகஸ்பதி சந்திரனுக்குத் தேய்ந்துபோம்படி இட்டசாபத்தை. உன்னை அன்று தேய்த்த; அன்று - தக்ஷன்யாகம் செய்தநாள். ததி - சமயம்.

 

--------------

 

24 
வெண்பா

 

ஞானஞ் சனகர்முத னால்வர்க் களித்தரிய‌
மோனந் தருகுடந்தை மூர்த்தியெனக் - கான‌
நனியா ரருள் புரிவர் நன்குபோர் செய்ய‌
இனிநீவா வாதென்ற லே. (24)

 

(குறிப்புரை.) மோனந்தருமூர்த்தி - மௌனநிலை மேற்கொண்ட‌ தக்ஷிணாமூர்த்தி. எனக்கான - எனக்கு விருப்பமுள்ள.

 

--------------

 

25 
ராகம்: சங்கராபரணம்
பல்லவி

 

வாவாதென்றலே வந்துபார் நீ மனவஞ்சக மில்லாமல்

 

அனுபல்லவி

 

தேவர் பரவுங் கும்பநாதர் வருவார் போர்செய்ய‌
நீவந்தா லுமொருகை பார்க்கலாங்கிட்ட (வாவா)

 

சரணங்கள்

 

(1) நளினபங்கேருகத்தடத்தைவளை த்தெழுந்து
ராத்திரி வருந்தென்றற் காற்றே கலைபொருது
பளித மின்னலைக்கண்டு பயந்திடையிற் பதுங்கிப்
படத்தை விரித்துப் பாம்பு பசித்திருக்குதுகிட்ட ( வாவா)

 

(2) இயற்கைக் குணத்தைவிட்டுச் செயற்கைக் குணத்தைக் கொண்
டெனைச் சீறிப்பாயும் புலித்தென்றலே
மயக்கமோ வென்ன வுன்றன் ம‌தியோ வாசற்கதவை
வந்து மோதாதே முலைமலையுடன் மற்பொருத (வாவா)

 

(குறிப்புரை.) (1) நளின பங்கேருகம் - தாமரை ; ஒரு பொருட் பன்மொழி. தடம் - குளம். கலைபொருது - புடைவை போர் செய்யப்பெற்று. இடையில் - அரையில். (2) புலித்தென்றல் - புலியாகிய தென்றல் ; "தென்றற் புலியே" (கம்ப கடிமனம். 7 .)
மற்பொருத - மல்யுத்தம் செய்ய.

 

---------------------

 

26 

விருத்தம்

 

கோலமணிக் குடந்தைக் கும்பலிங்க நாதரைக்கண்
டேலமயல் கொண்ட விரதமொழி மோகினியார்
சாலவெனைத் தேற்றுஞ் சகிதனைக்கா ணேனெனத்தன்
சீல மறந்து தியங்கி மயங்குவளே. (26)

 

(குறிப்புரை) கோலம் - அழகு. ஏல - ஏற்றுக்கொள்ளவேண்டி. இரதமொழி - ரஸமுள்ள வார்த்தைகளைப்பேசும் ; சகி - தோழி.

 

-------------------

 

27 

ராகம் : பைரவி

பல்லவி

 

வந்தாளில்லையே என்சகி வர்ஹ்த்தமறியாளே பழிகாரி (வந்தா)

 

அனுபல்லவி

 

செந்தாமரை மலரயன் பணிபாதர்
தென்றிருக்குடந்தையிற்கும்பநாதர்க்கென்மையல்சொல்ல(வந்தா)

 

சரணங்கள்

 

(1) மதிமயக்கத்தி லேதோ பெண்புத்தி யாலே
மலைவிழுந் தாலுமென்றன் றலையே தாங்குமென்று
எதிரிக்கிளைக்க லாகா தென்றல்லோ மன்மதனை
ஏய்க்கலா மென்றுநான் வாய்க்கருவஞ் சொன்னேன் (வந்தா) (27.1)

 

(2) புடைபரந்த முலைமேற் பசலைபூத்து விம்மிப்
போகாத வுயிர்கொண்டு புலம்பிநின்றேன் அனங்கன்
படையிற் கலக்கத்திலென் பாங்கியைக் காணாமற்
பார்த்த முகங்களெல்லாம் வேற்றுமுக மாகுதே (வந்தா) (27.2)

 

(3) மாறிநின்றாடுஞ் செம்பொற் பாதரான மங்கை
மடந்தை பாகர்திருக் குடந்தை மேவுமெங்கள்
சீறர வணிகும்ப நாதர்வந்தா ரென்று
தேறுதலைச் சொல்லவும் வேறொருவரைக் காணேன் (வந்தா) (27.3)

 

(குறிப்புரை.) (1) வாய்க்கருவம் = கர்வமொழிகள்.

 

---------------------

 

28 சகி வருகை

விருத்தம்

 

அத்தர்பரி சுத்தர்தமக் காளான
        பத்தருளத் தன்பு கூரும்
நித்தர்பித்தர் மங்கைபங்கர் கும்பலிங்கர்
        திருக்குடந்தை நிமலர் நாட்டிற்
சித்தமயங் கியசுரத மோகினியார்
        குறையனைத்துந் தீர்க்க நானே
சுத்தமதி யூகியென்று சகியொருத்தி
        கலுகுலெனத் தோன்றி னாளே. (28)

 

(குறிப்புரை.) கூரும் - மிகும். சுரதம் - போகம்.

 

-----------------

 

29 
பல்லவி

 

செகன்மோகினிக்கன்பான சகிவந்தாளையா

 

அனுபல்லவி

 

முகிலார் மலர்க்கா வளம்பதிகுட
மூக்கினில் வருமெங்கள் முக்கணர் நாட்டினில் (செகன்)

 

சரணங்கள்

 

(1)
கனகச்செஞ்சிலம்பு கொஞ்ச இருகடைக்
கண்மருட்டிற்கணைக் காமனுமஞ்ச
அனநடைதனி லொயின் மிஞ்ச-மிக
ஆசை கொண்ட மடவார் வந்து கெஞ்ச (செகன்) (29.1)

 

(2)
விலைக்கிளிஞோர் மனதை வாங்கிக் குழல்
வீரச் சொருகிற் சொருகிய துரைப்பாங்கி
சிலைக் காமனைச் சினந்தோங்கிக்-கூட்டிச்
சேர்த்துப் பிரிக்கரெண்டுந் தெரிந்த சித்திராங்கி (செகன்) (29.2)

 

(3)
குறையுள்ளோர் மனத்தைத் தேற்றி-ஆதி
கும்பலிங்கேசர் பதத்தைப் போற்றிச்
சிறையளி நாணனை மாற்றிப்-பூருவம்
சின்ன வயதினில் நல்ல சிநேகசம் ஆற்றி (செகன்) (29.3)

 

(குறிப்புரை.) முகில் ஆர் - மேகங்கள் நிறைந்த. மலர்க்கா - பூஞ்சோலை. கணை - அம்பு. சிறை அளி நாணன் - சிறகுகளுடைய வண்டுகளை வில்லின் நாணாகப்பெற்ற மன்மதன். பூருவம் - ஆதியில். சிநேகசம் - நட்பு.

 

------------------------

 

30 தலைவி கூற்று

கட்டளைக் கலித்துறை

 

30.

 

காராருஞ் சொலைக் குடந்தைக்கும் பேசரைக் கண்டுமனத்
தாராத காதலி னான்மத னான்மதி யாற்றென்றலால்
தீரா விடும்பையுற் றேதுயர் வேற்கொரு செய்திசொல்ல
வாரா திருந்ததென் வல்வினை காண்சகி மாதரசே. (30)

 

(குறிப்புரை.) இடும்பை - துன்பம். சகிமாதரசு வாராதிருந்தது என் வல்வினை காண்.

 

-------------------------

 

31 

ராகம்:

 

(1) வருவாய் வருவாய் என்று வழிபார்த்துப் பார்த்தெனது
தெருவினின்று நின்றலைந்தேனடி சகியே

 

(2) ஒருதாய்க் கொருபெண் பிறந்தலைந் தேனுன்
திருவுள மிரங்காத தேதோ சகியே

 

(3) மிளகுபத மாகுமுன்னே கடுகுபொடி யாகுமென்
றுளவு சொன்னதைச் சொல்லவொண் ணாதோ சகியே

 

(4) குளிர்மதிச் சடையாளர் கும்பலிங் கேசர்வரக்
களவிற்குறி சொல்வாரைக் காணேன் சகியே.

 

--------------

 

32 சகி இரங்கல்

விருத்தம்

ஆலமிடற் றரன்குடந்தைப் பதிக்கண் மேவும்
        அன்புமிகு சகியுமெனக் கரசி யான
சேல்பொருங்கட் செகன்மோகி னிப்பெ ணுன்றன்
        றிருப்பவனி நோக்கிமிகு விருப்ப மாகிப்
பாலனமுங் கசந்துடலம் பசந்து வாடிப்
        படைமதனால் வருந்துவளைப் பாது காப்பாய்
மால்விடைமேற் பவனிவரு மரசே யென்று
        வாழ்த்துவாள் பணிந்தெதிர்நின் றேத்து வாளே. (32)

(குறிப்புரை.) பால் அனமும் கசந்து; அனம் - அன்னம். மால்விடை - பெரியகாளை; திருமாலாகிய காளை எனினும் ஆம்; திருமால் சிவபெருமானை இடபவாகனமாக இருந்து சுமந்தாரென்பது வரலாறு.

 

-------------------

 

33 
ராகம்: பந்துவராளி

 

(1) விடைமேற் பவனிவருங் கும்பநாதா-கையும்
மெய்யும் மரந்துன்கை வசமானாள் கும்பநாதா
மடமாதரெல்லாங் காணக் கும்பநாதா - கையில்
வரிவளை புனைகலை மதிபறி போமோ கும்பநாதா (33.1)

 

(2) எல்லோர்க்கும் எழுத்தொன்றோ கும்பநாதா - இந்த
ஏழைதலைக்கு ளெழுத்தென் வேறோ கும்பநாதா
நல்லோரில் யாரை வைதாள் கும்பநாதா - இந்த
நாடு கிடைக்க நடுப்பதர் போமோ கும்பநாதா (33.2)

 

(3) ஒருதாய்க் கொருபெண் பிறந்தாள் கும்பநாதா - இந்த
ஊர்பகையென் றொருபேர் வரலாமோ கும்பநாதா
திருநாள் பார்க்கவந்த விடத்திற் கும்பநாதா - கருப்புச்
சிலைமதப்பேய் வந்துதலை சுற்றலாமோ கும்பநாதா (33.3)

 

(4) மதிசேர் வேணிக குடந்தைக் கும்பநாதா - உன்னை
வந்தனை செய்து வருந்துவார்க்காணேன் கும்பநாதா
புதுமோகங் கொண்டா ளாதிக் கும்பநாதா - உலகிற்
பூவையர் கண்டிதை நாவளையாரோ கும்பநாதா. (33.4)

 

(குறிப்புரை.) புனைகலை - அணிந்த ஆடை. மதி - புத்தி. கரும்புச் சிலை - கரும்புவில்.

 

--------------------

 

34 சகியின் கூற்று

கட்டளைக்கலிப்பா

 

தடத்தி லேதுள்ளிச் சேல்பாய்ந்து தாமரைத்
        தவிசி லேயசைந் தாடுங் குடந்தையிற்
குடத்தி லேவளர்ந் தோங்குந்த்ரி யம்பகர்
        கும்ப நாதர் கொடுத்தரு ளாசைக்கே
சடத்தி லேமல ரங்கைக்குள் ளேமுகம்
        தன்னைப் பார்த்துக் குறிசொல் குறத்தியுன்
இடத்தி லேதய வாய்வரு வாள் குறி
        என்ன வேனு மினிக்கேட்க லாகுமே. (34)

 

(குறிப்புரை.) தடம் - குளம். த்ரியம்பகர் - முக்கண்ணர். சடம் - உடல்.

 

-----------------

 

35 குறத்தி வருகை

அகவல்

 

தாமரைத் தவிசிற் சதுமுகன் படைத்த
பூமியிற் சிறந்த பொன்மலைக் கடுத்த
தென்றிசை விளங்குந் திருநாவற் றீவில்
வென்றிசேர் பரவை வெண்டிரை சூழ்ந்த
பரதகண் டத்திற் பகர்பொன்னி யாற்றங் 5

 

கரைதனின் மருதங் கலந்தநன் னிலத்தில்
நிலமகண் முகமாய் நிறைந்துவிண் ணாடர்
உலகெனச் சிறந்த உயர்கும்ப கோணம்
தவச்சூத னைமி சாரணர்க் குரைத்த
திவளுமா ளிகைசேர் திருக்குடந் தாபுரி 10

 

அன்னிய தலத்தி லரும்பாவம் செய்யில்
தன்னிலே புண்ணிய தலத்தினிற் றீரும்
புண்ணிய தலத்திற் பூண்ட பாவங்கள்
கண்ணினாற் காணக் காசியிற் றீரும்
சேதுவிற் காசியிற் செய்பெரும் பாவம் 15

 

கோதிலாக் கும்ப கோணத்திற் றீரும்
கும்பகோ ணத்திற் கொடியதீ வினைகள்
கும்பப கோணமாம் குடந்தையிற் றீரும்
மேவுகபக வன்பிதா வெந்தவெள் ளெலும்பு
பூவாய்த் தோன்றும் புரிதிருக் குடந்தை 20

 

தோன் றுபத தாவைத் துணித்தமா பாவம்
மூன்றிரா வினிற்போம் முக்கணற் பாடில்
கோதமன் பசுவைக் கொன்றவெம் பாவம்
ஆதியிற் றீரு மாவணக் களரி
சுணங்கெனத் திரிந்த சுவாகுகன் பாவம் 25

 

வணங்கிடத் தொலைந்த மணிமாடக் கோயில்
மாயப் பிரவஞ்ச மாயையைத் தவிர்க்கும்
காயா ரோகணக் கடவுண்மா நகரம்
பொருமியங் கிரசு புதல்வன்வந் திறைஞ்சக்
கருதிய கருமங் கைகண்ட பேரூர் 30

 

அரவு காவிரிக் கடுத்ததெற் காகும்
சரசினின் மூழ்கித் தவம்புரி புரிசை
ஏமமா முனிவ னிலக்குமி துளசித்
தாமனை வணங்கித் தவம்புரி பூங்கா
விறலரி யேறு விமானம்வந் திறங்கும் 35

 

குறைவிலாச் செல்வக் குடந்தை மாநகரம்
போகிவந் திறைஞ்சும் புனிதர் பாதாள‌
நாகீச சுரமெனும் நலங்கொள் தண்டலை
பெய்யுமும் மாரி பேரா வாரச்
சைவமும் பெருகித் தழைத்தருள் கூடல் 40

 

வாழைபயில் சோலைபுளி மாமதுர நீள்பலவு
தாழைமரு தாமல்கு தாதகியு மேகமுகு
நந்தன வனங்களபெரு நந்திசிறு சண்பகமொ
டிலந்தைவகுள் வஞ்சிநிரை யிஞ்சிபசு மஞ்சள்சுர‌
புன்னைமரு நீழலடர் பொன்னியரு கேமருவு 45

 

தென்னைமர மேவயல்கள் செந்நெல்வள மேபெருக‌
அகத்தினுக் கோர்நா ளாதுல னுண்டு
சுகத்தி னூறாண்டு தொலைத்தபூங் குடந்தை
தேசிக நான்மறை தேர்தவ முடையான்
காசிபன் மடுச்சேர் கனங்கொள் காவிரி 50

 

குடவளை முத்தங் கொழித்திடக் காலால்
மடைதள்ளப் பாயும் வற்றாக் காவிரி
அரிநதி பொன்னி யாற்றினீர் பெருகி
இருபுற மாலை யெனவரு தவக்கரை
பன்னிரு வருடம் பகீரதி செய்த 55

 

கன்மமே தவிர்க்குங் கனங்கொள் காவிரி
ஆறொன் பதுக்கு மரும்பாவ நாசம்
மாறிடாத் தெண்ணீர் மாமக வாவி
கீதமு நாதக் கின்னரர் கிளவி
வேத பாராயணர் வீதியஞ் சாரல் 60

 

மணிநவ மதிலு மாட மாளிகையும்
அணியணி நிறைந்த வாஸ்தான வாசல்
தூபமுந் தீபச் சுடரொளிச் செம்பொற்
கோபுர மழகிய குடந்தைமா நகரில்
ஐம்பொறி கலங்கு மாதிய லந்தணன் 65

 

இன்புறக் குடத்தி லெடுத்தடைத் துயர்ந்த
ஆடகப் பொருப்பி லடைத்தருண் மாயா
ஆடல்சேர் சோலையி லசைந்தசைந் தெழில்சேர்
வற்றாத் தெண்ணீர் மலர்வாடை வீசும்
பொற்றா மரைப்பூம் பொய்கைமேற் புறத்திற் 70

 

பெருகுநீர் வடிந்த பின்பெரு முகட்டில்
ஒருகுடந் தங்க வுமைபாக வேடன்
கைக்கணை செம்பொற் கடத்தினைத் தகர்க்க
மெய்ப்பொரு ளமுதம் வெண்மதிக் கலையாய்
நனைந்திடு மணலே ஞான மூர்த்தியாய் 75

 

அனைவருந் துதிக்க வாதியாய் வந்தோர்
பரந்திடு மமுதம் பள்ளத்திற் றங்கச்
சுரந்தமெய்ஞ் ஞானச் சுடர்ச்சோம நாதர்
கூற்றுவன் வணங்கக் குடதிசை வருணன்
போற்றிய பதத்தார் புரமூன் றெரித்தார் 80

 

மாந்தா தாப்பெயர் மன்னவன் வணங்கும்
சேர்ந்தார்க் கருள்செய் செம்பொற் பாதர்
சித்திரா பருவத் திருநா ளரசர்
முத்தமிழ் மூவர் முடிசூட்டும் புனிதர்
மடந்தையோர் பாகர் மகத்தே ரேறும் 85

 

குடந்தையம் பதியார் குடமூக் கமுதர்
திருநீற் றழகர் சிரமா லிகையார்
அரவணி மிகுத்தா ரமுதலிங் கேசர்
மருமலர்த் தும்பை மாலைசேர் புயத்தார்
அருள்பெற நின்ற வாதிகும் பேசர் 90

 

நடம்புரி பாதர் நதியணி சிரத்தார்
குடந்தையில் வந்தார் கும்ப லிங் கேசர்
மங்கைச்சி நெடிய மாயவற் கிளைய
தங்கைச்சி பாகத் தமர்ந்த கும்பேசர்
கவன விடைமேற் கண்ணுதல் கோயிற் 95

 

பவனியூ டுருவப் பார்த்தமோ கினியார்
மாமதி விளங்கும் வசந்தகா லத்திற்
காம வேடன் கலக்கத்திற் சிக்கி
வளையுங் கலையு மனமும் பறிபோய்த்
தெளிவிலா துழலுஞ் செகன்மோ கினியைக் 100

 

கண்டனள் புனவர் கருணையால் வந்த
தண்டமிழ் ஞானம் தழைத்தபொற் குறத்தி
பகத்தினிற் றண்டை பரிபுரஞ் சதங்கை
புதுமணிப் பாடகம் பொன்மிஞ்சி யணிந்து
இடைக்கிடை முத்து மிசைந்தசெம் பவளமும் 105

 

தொடுத்த தாழவடந் தோண்மாலை புனைந்து
அரதன மிட்டிழைத் தமைத்த வலியும்
புற்றர வின்மணிப் பூணணியழகும்
இழையா யிரம்பொன் நிசைந்தபொற் கலையும்
குழையினிற் றந்த கொந்தள வோலையும் 110

 

தின்ற பாக்கும் சேல்வரு விழியும்
நின்ற நிலையு நீறணி நெற்றியும்
அக்கு மணியு மம்புய மணியும்
வக்கா மணியு மாமயிற் பீலியும்
புலிநகக் கோவையும் பூனைக் காய்ச்சியும் 115

 

பலமணிச் சங்கா பரணமு மணிந்து
கமகமென வெறிபுனுகு கலகலென வரிவளைகள்
குமுகுமென மலரணியில் குயில்களென விசைமிடறு
நடக்குவமை யன்னமிள நகக்குவமை முல்லைநடு
இடக்குவமை மின்னலினி யெனக்குவமை யில்லையென‌ 120

 

நோக்குமிளை ஞோர்விழிகள் தாக்குமுலை மீதுகலை
நீக்கவரு வார்மிகவு மேக்கமிடு வார்களடி
போர்க்குற மினேகலவிப் போர்க்குவரு வாரொருகை
பார்ப்பமடி வாடியொரு வார்த்தைசொல டீமனது
பொய்யாச்சொ லேன்கணைகட் கடையாங் கொடூரவிழி 125

 

கைவீச்சி லாள்வீழ்வர் மெய்யாச்சொன் னேனெனவும்
கன்னலைவி லாக்கிவளை மன்னனடி யேனுமது
பின்னைவரு வேன்கலையை மன்னிநட வீரெனவும்
மகரமெழு தியதுவச மதனனது சரணமடி
(முககமலம் மலரவொரு முறுவல்செயு மென்மொழியும் 130

 

இடைசிறிது முலைபரும மிடையொடியு மதனனடி
பழிவருது மெலெனநட பதனமடி யெனவுமிகு
துடித்தமத வேள்தனுவை யொடித்தெறிகு வேன்வெளிலை
மடித்தசுருள் தருவெனொரு கடித்தசுருள் தாவெனவும்
மறையுணர்மெய்ஞ் ஞானியர்கண் மயலடர மினார்களடி 135

 

குறமகளே வாடியொரு குறிசொலென வேகனக‌
மாத்திரைக் கோலு மலர்க்கையில் வற்றாப்
பாத்திர மான பருங்குறக் கூடையும்
வள்ளிதெய் வானை மலர்ப்பதம் வணங்கித்
துள்ளுமா மயிலோன் றுணைப்பதம் போற்றிக் 140

 

கொஞ்சுகிளி யஞ்சுமொழி பஞ்சசர னெஞ்சுமயன்
மிஞ்சியுமி தஞ்சொல்குற வஞ்சியிதோ வந்தனளே.

 

----------- 

 

(குறிப்புரை.) (2) பொன்மலை - மேருமலை. (3) நாவல் தீவு - சம்புத்வீபம். 
(4) பரவை - கடல். (5) பொன்னி - காவேரி
(6) மருதம் - வயலும் வயலைச் சார்ந்த இடமும்; வளப்பமிக்க இடம் என்றபடி. கும்பகோணத்திற் கொடிய தீவினைகள் - மகத்துச் சனியைப் போன்ற கொடிய துன்பங்கள்; கும்பம் - மகம். கோணம் - சனி.

(19-20) பகவன் என்பவன் திருமறைக் காட்டைச் சேர்ந்த ஓர் அந்தணன். இறந்துபோன தன் பிதாவின் அஸ்திகளைக் கங்கையில் விட்டுவர எண்ணி யாத்திரையாகச் சென்ற இவன் வழியில் கும்பகோணத்தில் காவிரிக் கரையை அடைந்ததும் எலும்புகள் இருந்த கலத்தை ஒரு மரக் கொம்பில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். இவனுடன் சென்ற ஒரு சிறுவன் அதில் ஆகாரமேதேனும் இருக்குமோவென்று பாத்திரத்தைத் திறந்து பார்க்க எலும்புகளுக்குப் பதிலாக அதில் தாமரை மலர்கள் இருப்பதைக்கண்டு மறுபடியும் மூடிவைத்துவிட்டான். பகவன் நீராடி வந்து கலையத்தை எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்றான். கங்கைக் கரையில் அதனைத் திறந்து பார்க்கையில் கலையத்துள் எலும்புகளே இருப்பதைச் சிறுவன் கவனித்தான். உடனே அவன் பகவனிடம் காவிரிக் கரையில் அதனைத் தான் திறந்து பார்த்ததையும் அப்பொழுது அதனுள் தாமரை மலர்கள் இருந்ததையும் கூறினான். அதனைக் கேட்ட பகவன் எலும்புகளைக் கங்கையில் போடாமல் மீட்டும் குடந்தைக்கு வந்து காவிரிக் கரையில் திறந்து பார்த்தான். எலும்புகளெல்லாம் திரும்பவும் தாமரை மலர்களாக மாறிவிட்டன. அவற்றைக் காவிரியிலேயே விட்டுவிட்டான் என்பது வரலாறு. இறந்து போனவர் பகவனுடைய தாய் என்று தமிழ்க்குடந்தைப் புராணம் கூறும். பகவன் எலும்புகளை விட்ட இடம் பகவதீர்த்தம் எனப்படும்.

 

(23-4) ஒரு காலத்தில் பெரும்பஞ்சம் வந்தபோது பல தேசங்களிலிருந்து வந்த அந்தணர்களைக் கௌதமர் அன்னமிட்டு ஆதரித்து வந்தார். பஞ்சம் தீர்ந்து நாடு நாடாகிய பின் தத்தம் தேசம் போக அந்தணர்கள் கௌதமரை விடை கேட்டனர். அவர்களைப் பிரிய மனமில்லாத முனிவர் விடை கொடாமல் காலம் தாழ்த்து வந்தார். இதனைக் கண்ட‌ மறையவர்கள் மிகுந்த துர்ப்பலமுள்ள மாயப் பசுவொன்றை உண்டாக்கி அதனைக் கௌதமர் முன் அனுப்பினார்கள். அப்பசு பஞ்சக் கொடுமையினால் மெலிந்துள்ளது போலுமென்று கௌதமர் நினைத்து அதனைத் தடவிக்கொடுக்கும் சமயத்தில் அது கீழேவீழ்ந்து இறந்து போயிற்று. பிறகு கௌதமர் தூர்வாச முனிவருடைய யோசனையின்படி குடந்தைக்கு வந்து தம்பெயரால் ஒரு தீர்த்த லிங்கமும் ஸ்தாபித்துப் பூசை செய்து தம் கோஹத்தியைத் தீர்த்துக்கொண்டார் என்பது வரலாறு. (குடந்தைப் புராணம், கௌதமேசப் படலம்.) ஆவணக் களரி: முற்காலத்தில் பத்திரங்கள் பதிவாகுமிடம் இப்பெயரால் வழங்கப் பெற்றன. இந்தக் களரிகள் பெரும் பாலும் கோயிற்கட்டடங்களில் அமைந்திருந்தமையை நினைத்துக் கோயிலை ஆவணக்களரி என்றார் போலும்.

 

(25-6) கும்பகோணத்தில் காசிப தீர்த்தங்கரையில் ஜன நெருக்கத்திற் புகுந்த ஒருநாய் அங்கிருந்தவர்களால் துரத்தப் பெற்றுக் காசிபர் மடுவில் விழுந்து தப்பி ஓடியது. அந்தத் துறையிற் படிந்த புண்ணியத்தால் ஞானம் வரப் பெற்று அது வேறு நாய்களுடன் கலவாமல் கோபுர வாசலில் இருந்துகொண்டு கும்பேசரின் தீபாராதனைக் காட்சியைப் பலநாள் தரிசித்து இன்புற்று அடியவர் புசித்து இலையோடு எறிந்த மிச்சிலைப் புசித்து ஜீவித்து வந்தது. சுவாமிக்கு நிவேதித்தபின் பலிபீடத்தில் இடும் சேஷத்தைப் புசித்துப் புண்ணிய மடையலாமென்றெண்ணி அந்த நாய் ஒரு நாள் கோவிலுள் பிரவேசித்தது. அச்சமயம் சில வாலிபர்கள் தடிகொண்டு அதனைத்துரத்தித்துரத்தி அடித்தனர். இம் முயற்சியில் கோயிலை வலம் வரும் பாக்கியம் அதற்குக் கிடைத்தது. கடைசியில் வாலிபர்களால் அது தாக்குண்டு இறந்து இவ்விதமான புண்ணிய கிருத்தியங்களால் மறுஜன்மத்தில் சுவாகுகன் என்ற பெயருடன் வேடர்களுக்கு அரசனாகப் பிறந்தது என்பது வரலாறு. (குடந்தை புராணம், சுவாகுகன் முத்தியடைந்த படலம்.)

 

(28) காயாரோகணக் கடவுள் மா நகரம் : ஸ்ரீ இராமபிரான் இராவணனைச் சங்கரிக்கும் வன்மையைப் பெறும் பொருட்டுக் கும்பகோணத்துக்கு வந்து சிவபெருமானை அருச்சித்து அவரைத் தம் உடலில் ஆரோகணித்துக்கொண்டார். அதனால அத்தலம்
காயாரோகணம் என்னும் பெயர்பெற்றது. சுவாமிக்கும் காயாரோகணர் என்னும் பேருண்டு. காயாரோகணம் என்பது காரோணமென்று மருவியும் வழங்கும் (குடந்தை புராணம், சுவாகுகன் முத்தியடைந்த படலம், 33.)

 

(29_30) அங்கிரசு புதல்வன் -_ பிரகஸ்பதி ; பிரகஸ்பதி தேவர்களுக்குக் குருவாக வருதலை விரும்பிக் குடந்தை வந்து சோமேசரைப் பூசித்துத் தேவகுருவானார். குரு பூசித்ததால் சோமேசருக்கு வியாழச் சோமேசர் என்ற ஒரு திருநாமம் உண்டு; இக்காலத்தில் ஏழைச் சோமநாதர் என்று அது திரிந்து வழங்கப்படுகிறது (குடந்தை புராணம், மாளவேசப்படலம்.)

 

(31_2) அரவு-ஆதிசேடன்; ஆதிசேடன் தன் ஆயிரந்தலைகளாலும் உலகபாரத்தைத் தாங்க இயலாதவனாகிக் குடந்தையம்பதிக்கு வந்து சிவபெருமானை வணங்கிப் பூசித்து ஒரு தலையில் பூபாரத்தைப் பொறுக்கும் வலிமையைப் பெற்றான் என்பது வரலாறு (குடந்தைப் புராணம், நாகேசப் படலம்.) நாகேசுவரம், நாகதீர்த்தம், நாகேசன் என்ற பெயர்கள் ஆதிசேஷன் கும்பேசரை வணங்கி வந்தமைக்கு அறிகுறியாக அமைந்தவையாகும். திருநாகேசுவரம் கும்பகோணத்துக்குத் தென்கீழ்த் திசையில்
மூன்று மைல் தூரத்தில் உள்ளது.

 

(33-4) ஏமமாமுனிவன் . . . . . . பூங்கா: மேருமலையில் ஏமமா முனிவரென்பவர் திருமாலைக்குறித்துத் தவஞ்செய்து வர‌ அவர்முன் திருமால் தோன்றி என்னவரம் வேண்டுமென்று வினாவினார். அதற்கு அம்முனிவர், 'எனக்குச் சீவன் முத்தி வேண்டும்' என்று விண்ணப்பிக்கத் திருமால், 'நீ குடந்தையம் பதிக்‌குச் சென்று அங்கே அமுதவாவியிற் படிந்து அதன் வடகரைக்கண் தவம் செய்துகொண்டிரு; அங்கே நாம் வ்ந்து நீ வேண்டியதை அருளுவோம' என்றார். அதன்படியே ஏமமாமுனிவர் கும்பகோணம் வந்து அமுதவாவியிற் படிந்து அதன் வடகரைக்கண் தவம்செய்துகொண்டிருக்கையில் அந்த வாவியில் அழகிய பொற்றாமரை ஒன்று பூத்தது. அதில இலக்குமி தேவியார் சிறு குழந்தை வடிவாகக் கிடந்தை முனிவர் கண்டு எடுத்து வளர்த்து வந்தார். கடைசியில் பெருமாள் ஆராவமுதமூர்த்தியாக அங்கே எழுந்தருளி ஏமமாமுனிவருக்கு அருள்செய்தார் என்பது வரலாறு (குடந்தை புராணம் - ஆராவமுதப்படலம்.) அமுததீர்த்தம் இப்பொழுது பொற்றாமரைக்குளம் என்று வழங்கும். அவர் தவம் செய்து வந்த இடம் கதம்பாரணியமென்பது.

 

(37) போகி-இந்திரன் ; இந்திரன் தனக்குப் பிள்ளைப் பேறு வேண்டிக் கும்பகோணம் போந்து சிவபிரானை அருச்சித்துச் சயநதனைப் புத்திரனாகப் பெற்றானென்பது வரலாறு (குடந்தை புராணம் - இந்திரன் பூசைப்படலம்.) 

 

(38) தண்டலை-சோலை (39-40) வாரச்சைவம் _அன்பு மிகுந்த சைவம். அருள கூடல்- அருளைக் கூடுதலையுடைய இடம்.

 

(41-6) மரவிசேடங்கள் இவ்வடிகளிற் கூறப்படுகின்றன; மதுரம் நீள்பலவு-இனிமை பொருந்திய பலா. மருது-மருத‌ மரம். தாதகி-ஆத்தி. கமுகு-பாக்குமரம். நந்தி-ந‌ந்தியா வட்டம். வகுள்- மகிழமரம். (47-8) ஆதுலன்-பிஷையெடுத்து வட்டம். வகுள் - மகிழமரம். 

 

(47-8) ஆதுலன்- பிஷையெடுத்து வாழ்பவன். குடந்தையில் வளம் மிக்கிருப்பதனால் ஆதுலன் ஒரு நாள் ஒரு வீடாக உண்டு சுகமாக நூறுவருடங்களையும் கழிக்கும் கும்பகோணம்.

 

(50) காசிபன்மடு: காசிபர் தம் மனைவியருள் திதியிடம் விசேஷ அன்பு காட்டி அதிதியைப் பராமுகமாகக் கவனிய்திருந்த காரணத்தால் அவளால் அலித்தன்மை எய்திக் குடந்தைக்கு வந்து காவிரிக்கரையில் தம்பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்து மங்கள நாயகியை வழிபட்டு அலித்தன்மை நீங்கப்பெற்றார் என்பது வரலாறு. கனம்-பெருமை. 

 

(51) குடவளை-குடம்போன்ற சங்குகள். காலால்-சிறு கால்வாய்களின் வழியாக. 

 

(53) அரி நதி-அரிசிலாறு.

 

(55) பகீரதி-கங்கை. 

 

(57) ஆறு ஒன்பது-கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, கோதாவரி, காவிரி, சிந்து, பாலாறு, சரயு என்னும் ஒன்பது நதிகள். இவா நவகன்னியர் வடிவில் மகாமக தீர்த்தக்கரையில் தங்கள் பாவங்கள் அறுமாறு வேண்ட வந்து குடிபுகுந்துள்ளன. பாவநாசம் என்ற தம் பெயரை இவ்வாசிரியர் இந்நூலுள் பலவிடங்களில் வேறு பொருளில் அமைத்துள்ளார்.

 

(59) கிளவி-சொல்; இங்கே பாசலை உணர்த்திற்று.

 

(65-76) கும்பேசர் வந்த வரலாறு இவ்வடிகளில் கூறப்படுகிறது. ஐம்பொறி கலங்கும் ஆதி என்றது பிரளயத்தை. அந்தணன்-பிரமன். (67) ஆடகப்பொருப்பு-பொன்மலை; மேருமலை. (73) கடம்-குடம். (81) மாந்தாதா: இவன் இக்ஷ்வாகு வமிசத்தவன். உலக முழுவதையும் தானொருவனே தனிக்கோலோச்ச விரும்பிக் குரு வாகிய வசிஷ்ட முனிவரின் யோசனையின்படி கும்பகோணம் வந்து மேஷமாத உற்சவம் செய்துசிவபிரானது அருளைப்பெற்று உலக முழுதும் ஆண்டான் என்பது வரலாறு. (குடந்தைப் புராணம், மாந்தாதா பேறு பெற்ற படலம்.) 

 

(83) மாந்தாதா தொடங்கி நடத்திய உற்சவம் 'சித்திராபருவத்திருவிழா' எனப்படும்.

 

(84) முத்தமிழ்--இயல், இசை, நாடகம். மூவரென்றது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்பவர்களை.

 

(87) சிர மாலிகையார்-தலைமாலையை அணிந்தவர்; ‘தலை மாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேரும் தலைவன்’ (அப்பர் தேவாரம்) (95) கவன விடை-வேகமாகச் செல்லும் காளை.

 

(98) காமவேள்+தன்=காமவேடன். (99) கலை-ஆடை. (101) புனவர்-தினைப்புனத்தைக் காக்கும் வேடர்.

 

(103-142) குறி சொல்ல வந்த குறப்பெண்ணின் வருணனை. (115) பூனைக்காய்ச்சி-ஓர் அணி விசேடம். 

 

(118) மிடறு-கண்டம்; சாரீரம். (127) கன்னகை விலாக்கி வளை மன்னந்மன்மதன்; கன்னல்-கரும்பு.

 

(129) மகரமெழுதிய துவசம்-மீன்கொடி. (133) வெளிலை=வெற்றிலை. 

 

(141) பஞ்சசரன்-ஐந்து (புஷ்ப) பாணங்களையுடையவன்.

 

-----------------

 

36 
விருத்தம்

 

இந்தவர வுறுதிருமு கந்தவர
        வெழிலிரதி யேத்தப் போந்த
சந்தவார் முலைமலைஞா னக்குறத்தி
        தங்கள்குலச் சாமி யான
கந்தவேள் தனைவாழ்த்தி யந்தவேள
        தனைத்தாழ்த்திக் களிப்பி னாலே
புந்தியா னுயர்திருக் குடந்தைவா
        ழெந்தையடி போற்று வாளே. 36

 

(குறிப்புரை.) இந்த வரவு உறு-இத்தகைய வரவைப் பெற்ற. திருமுகந்த வர எழிலி-அழகினைத் தன்னிடத்தே முகந்துகொண்ட சிறந்த அழகி. சந்தம்-அழகு. அந்தவேள்-மன்மதன்.

 

---------------

 

37 
ராகம் செண்டா

 

(1) மந்தகாச முகமதி யிலுதித் திடவே--பூ
மங்கைமாரு தவுதன நகுபொற் பணியாகும்.

 

1 இப்பாட்டின் பல்லவியோ அனுபல்லவியோ ஒரு பிரதியிலும் காணப்படவில்லை.

கொந்தளோலைகள் நிகனிகெ னமதிச் சடையாளர்
கும்பநாதரை யடியிணை தொழுதற் புதமான‌

 

(2) மஞ்சள் வாடைகள் கமகமெ னமுலைத் தடமீது
மண்டலாதிபர் விழிமல ரருச்சனை தூவக்
கொஞ்சியேமொழி கிளிபொரு மிசையிற் குயிலாதி
கும்பநாதரை யடிதொழு ததியற் புதமான‌

 

(3) கண்டமாதர்கள் குறிபக ரெனமற் பொருவாவிக்
கஞ்சமாமலர் முகநவ ரஸமுற் பனமான‌
லொண்டகோலமு மழகிய கனகச் சிலையாளர்
கும்பநாதரை யடியிணை தொழுதற் புதமான‌

 

(4) தும்பிபாடிய மலரணி யளகச் சுரதானி
அம்புநேர்கரு விழிபுர ளநடத் தொழில்நாரி
சம்பராரிமேல் விழியன லெறியுத் தமராதி
கும்பநாதரை யடியிணை தொழுதற் புதமான‌

 

(குறிப்புரை.) (1) மந்தகாசம் - இளநகை. (3) உற்பனம் - தோற்றம். (4) சுரதானி - கிரீடைகள்; குறத்தியைக்குறிக்க வந்தது.
(41:3). அ+நடத்தொழில்; அ - அழகிய. சம்பாரி - மன்மதன்.

 

-----------------

 

38 

விருத்தம்

 

பெருஞ்சினவெங் களிறனைய சனகனருள்
        தனுவின்நாண் பெட்பிற் பூட்டி
இறுஞ்சிலையாப் புரிவீர னெனுமால்கண
        மலர்க்காழி யீந்த நாதன்
தெறுஞ்சினவே டுவனாகுந திருக்குடந்தைக்
        கும்பேசர் திகழ்நன் னாட்டிற்
குறிஞ்சிநின்று மருதமகட் கியல்குறிசொல்
        குறத்திவந்து கூடி னாளே. 38

 

(குறிப்புரை) இறும் சிலையாய் _ ஒடிந்த வில்லாக. கண்மலர்க்கு ஆழி ஈந்தது: சிவபெருமான் சலந்தராசுரனைக் கொன்ற சக்கரா யுதத்தைப் பெறுவதற்காகத் திருமால் அவரை ஆயிரம் தாமரை மலர்களைக்கொண்டு அருச்சித்த பொழுது சிவபெருமான் அவரது அன்பைச் சோதிக்கக் கருதி அம்மலர்களுள் ஒன்றை மறைத்தருளினார். அப்பொழுது திருமால் அம்மலருக்குப் பிரதியாகத் தம் கண்ணை யிடந்து அருச்சிக்கவே, களிகூர்ந்தபெருமான் அவருக்குப் பதுமாட்சரென்ற பெயரை வழங்கி அந்தச் சக்கரா யுதத்தையும் கொடுத்தருளினார் என்பது சிவபுராணங்களிற் கண்ட வரலாறாகும். பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத குடத்தை அம்பெய்து உடைக்கவேண்டிச் சிவபெருமான் வேடராகவந்ததை நினைந்து 'வேடுவனாகும் கும்பேசர்" என்றார். குறத்தியின் இருப்பிடம் குறிஞ்சிநிலம். மருதநிலத்துப்பெண் செகன்மோகினி.

 

-------------

 

39 

ராகம்: பந்துவராளி

பல்லவி

 

வந்தாளே குறவஞ்சி வந்தாளே

அனுபல்லவி

 

வந்தா ளேகுற மாமகள் குருபர‌
கந்தா குகனே கதிர்வே லாவென்று
மந்தா கினியறு கரவணி வேணியில்
இந்தார் கும்பம கேசர்நன் னாட்டினில் (வந்தாளே)

 

சரணங்கள்

 

(1) கடைவிழி புரளநல் லிளநகை புரிந்து
கனதன மசையமின் நிகரிடை துவண்டு
அடியிணை முளரியி லணிபணி யலம்ப‌
அனமென வலவென வாமென நடந்து (வந்தாளே) 

 

(2) கிறுதக் கிடதிமி யடைவுட னெழுந்து
கிளிமொழி நயமதில் வெகுமதி மறந்து
ப்ரமையுட னதிபெல ரதிபதி தொடர்ந்து
பிடிபிடி யெனவனப் பேடென நடந்து (வந்தாளே)

 

(3) கடகரி யதள்நீறை கறைமிட றணிந்து
கடலலை தனிலுயர் முகடினி லமர்ந்து
குடமதில வருமமு தரைமிக மகிழ்ந்து
குறிசொல வருமவர் குருவென நடந்து (வந்தாளே)

 

(குறிப்புரை.) மந்தாகினி அறுகு _ கங்கையையும் அறுகம்புல்லையும். இந்து ஆர்- சந்திரன் பொருந்தியுள்ள, அலம்ப _ ஒலிக்க. (2) வெகுமதி-மிக்க புத்தி. ரதிபதி-மன்மதன். (3) கடகரி-மத யானை. அதள் _ தோல்.

 

-------------

 

40 
விருத்தம்

 

மறியணி கரத்தார் துங்க‌
        மங்கைபங் காள ரெங்கள்
அறிவினுக் கறிவாய் நின்ற‌
        வாதிகும் பேசர் நாட்டிற்
பிரிவிலா வறிவா ளல்குற்
        பிடிபிடி நடையாள் செங்கைக்
குறிகுறி சொலவே ஞானக்
        குறத்தியும் வருகின் றாளே. 40

 

----------------

 

41 
ராகம்:பல்லவி

 

குறிசொலவே ஞானக் குறத்தி வந்தாளையா

 

அனுபல்லவி

 

மறிமா னேந்திய கையர் திருக்குடந்தாபுரி
மங்கைச்சி மணவாளார்நன் னாட்டினில் (குறி)

 

(1) சிலைவேளை மார்தட்டிச் செகத்தா டவரைத் தெட்டிக்
கலுகுலெனப் பொற்சுட்டி கங்கணங் கட்டிச்
சலுவ வலுவகட்டி சாலசொம்முலு பெட்டி
பலுமாறு சங்கபுட்ட பாகுகனு பட்டி (குறி)

 

(2) மிககமந் திரவாதி மெய்குறிசொல் வாள்நீதி
திக்கெங்கும் ப்ரக்யாதி தேன்மொழிச் சேதி
சக்கனைன குருலாதி சரசபு பலுகு லாதி
எக்குவ மிஞ்சின வாதி எந்தெந்தோ குலுகுலாதி (குறி)

 

(3) மலைக்குறத்தி யயிராணி வந்தனைசெய் சுரதானி
கலைஞ்ஞான வாணி காரெனும் வேணி
சிலுகலு கொலிகிமணி செலுவயின பூபோணி
அலிவேணி அதிராணி அம்புஜபாணி (குறி)

 

(குறிப்புரை.) (1) தெட்டி _ வஞ்சித்து. சலுவ வலுவ--சலவை செய்த புடவை. சாலசொம்முலு பெட்டி--மிகுதியான நகைகளை யணிந்து. பலுமாறு--பல தடவை. சங்புட்ட-அக்குளில் இணைத்துக்கொண்டிருக்கும் கூடையை. பாகுகனு பட்டி-- நன்றாகப் பிடித்துக்கொண்டு. 
(2) சக்கனைன--அழகான. குரு லாதி= குருலதி--கூந்தலையுடையவள்; நீட்டல் விகாரம். சரச புலுகுலதி--இன்பந்தரும் மொழிகளைப் பேசுகின்றவள்; பலுகுலாதி: நீட்டல் விகாரம். எக்குவ மிஞ்சின வாதி--வாக்சாதுரியத்தால் யாவரையும் வெல்லக்கூடியவள். எந்தெந்தோ _ எவ்வளவோ. குலுகுலாதி = குலுகுலதி--தளுக்கையுடையவள்; நீட்டல் விகாரம். 
(3) அயிராணி--இந்திரன் மனைவி. சிலுகலு கொலிகி--கிளியைப்போல் பேசுகின்றவள்;15:1. செலுவயின பூபோணி... ..... .... .... ... ..... ....அலிவேணி--வண்டுகள் மொய்க்கும் கூந்தலாள்.

 

---------------

 

42 வாசல் வளம்

விருத்தம்

 

ஈசன்மா லயன்விண் ணோர்மற்
        றிந்திரன் புவியி லுள்ள‌
பூசுரர் முதலோர் போற்றிப்
        புகழ்குற வஞ்சி யென்பாள்
தேசுலா மதிற்கு டந்தைத்
        தேவர்கும் பேசர் கோயில்
வாசலின் வளங்க ளெல்லாம்
        வரிசையா யுரைசெய் வாளே. 42

 

-----------------

 

43 
ராகம் : ஆரபி

 

வாசலிதுகாண் ஆதிகும்பேசர் வாசலிதுகாண்

 

(1) கதிர்மதி ரத்தினச் சிகரி கடக்கக்
கடினமெ னப்பொற் றிகிரி நிறுத்தம் (வாச‌லிது)

 

(2) கமலம லர்ப்பொற் சதுமுக னிர்த்த‌
கணபதி முத்துக் குமர னிருக்கும் (வாச‌லிது)

 

(3) துளசி ராசனருள் சுந்தர புசபெல‌
வளவ னேகபதி மகரா சன்பணி (வாச‌லிது)

 

(4) துளசி மாலையணி விண்டக மகிழ்துணை
இளைய மங்கைபங்க ரெங்கள் கும்பலிங்கர் (வாச‌லிது)

 

(குறிப்புரை.) (1) கதிர் மதி--சூரிய சந்திரர். சிகரி-- ‍கோபுரம். (4) விண்டு அகம் மகிழ் ; விண்டு--திருமால்.

 

-------------------

 

44 

பேரும் ஊரும் கேட்டல்

விருத்தம்

 

காரூரும் பொழில்சூழ் பொன்னிக்
        கரைக்குத்தென் கரையின் மேவும்
வாரூரு முலையாள் மங்கை
        மகிழ்குடந் தைக்கும் பேசர்
சீரூருங் கோயில் வாயிற்
        றிறஞ்சொலுங் குறமா தேயுன்
பேரூரு மெனக்கு நன்றாய்ப்
        பிரித்துரை செய்கு வாயே. 44

 

---------------------

 

45 
ராகம் : காம்போதி

பல்லவி

 

ஆரடிவாசல் வளஞ்சொன்ன மயிலே யிளங்குயிலே யுன்றன்
பேரூரறியச் சொல்லடி பெண்ணே
என் னிருகன்ணே அல்லடி பெண்ணே நீ

அனுபல்லவி

 

நீருலாவிய வேணியானருள் நீதிசேர்மங்கை பாகர்வாசலில்
ஆரபார மயூரமாய்நட மாடியேயிசை பாடிவந்த நீ (ஆரடி)

 

சரணங்கள்

 

(1) சுரருல கரம்பை மேனகையோ _ அதி
சுந்தரமாங் கோகனகையோ ரதியோ
நாக கன்னிகையோ நானறியேன் நீ
பாதமெல்லடி பரிபுரம் பொர‌
விருது சொல்லிச் சரசரென வந்த நீ (ஆரடி)

 

(2) அடையா ளக்குறச் செம்பொற் கூடையும்_முகத்
தபிந யத்தினிற் சன்னச் சாடையும்
படைமூட் டிடுங்கள்ளப் பனியூன்றிய பார்வையுஞ்
சடுதி கண்டொரு தடையி லாமலே
திடுதி டெனநடை நடையாய் வந்தனீ (ஆரடி)

 

(3) ஆசை நாதரென்றால் விசைப்பு மேதோ
ஆயிரம் பேச்சுக் கோர்தலை யசைப்பும்
கூசாமன் முன்பின்னைக் குறியாம லேசெக
தீசர் கும்பம கேசர் கோபுர
வாசல் நின்றுமெய் பேசிவந்த நீ (ஆரடி)

 

(குறிப்புரை.) ஆரபார மயூரம்-மாலைகளாகிய சுமையைத் தாங்கி நிற்கும் மயில்.

 

-----------------

 

46 
விருத்தம்

 

நிறங்கிள ருங்கன கச்சிலை தொட்டவர்
நீல மிடற்றரனார்
உறைந்த குடந்தையின் மேவி நிலாவில்
உலாவிய வொண்டொடியே
மறந்தொரு பொய்யுரை யாத விநோத
மனோரத மாமயிலே
பிறந்து வளர்ந்திடு சாதியி னீதி
பிரித்துரை செய்வாயே. 46

 

---------------

 

47 குறத்தி சாதிவளம் கூறுதல்

ராகம்:பல்லவி

 

ஆரென்ற மோகினி யாரே சொல்லக்கேள்
ஆண்பெண் ணிரண்டு சாதி யல்லவோ


அனுபல்லவி

 

பாரெங்கும் புகழ்திருக் குடந்தைக் கும்பேசர்முன்
பம்பரமெனச் சாதி பகுத்துச் சொல்லிட - என்னை (ஆரென்)

 

சரணங்கள்

 

(1) சத்திசிவ மிரண்டாய்த் தழைக்குமிந் நிலமே
சடலமைந்து பூதத்தின் றன்னுடல் பெலமே
குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லையொரு குலமே
குறத்தியென்னும் பேர்வள்ளி குலமுஞ் சஞ்சலமே என்னை (ஆரென்)

 

(2) குலவன்மை தவறாமற் குறிசொல்லத் தொடுத்தோம்
கொழுந்தனை யழைத்தொரு குடிசைக்குட் படுத்தோம்
உலகி நாங்கள்தெய்வ மெனச்சென்ம மெடுத்தோம்
உமைபாகா பிள்ளைக்கு மொருபெண்ணைக் கொடுத்தோம் என்னை (ஆரென்)

 

(3) ஆருநா னென்பது மாகமேற் பூச்சே
அச்சொன்று மதிலிரண் டடையாள மாச்சே
பேருள முனிமூல நதிமூல மேச்சே
பெரியோர் நல்லோரெங்கே பிறந்தென்ன பேச்சே என்னை (ஆரென்)

 

(குறிப்புரை.) 1. சடலம்--உடல். 2. கொழுந்தனை . . . . . . . . . . . . . . படுத்தோம்--: 'கொழுந்தனொடு படுப்போம்' (சரபேந்திர. குற); 'தம்பி மனைவியைத் தமையன் விரும்புவான்' (அர்த்த குற) 3. ஆரும் நான் என்பதும்--எல்லோரும் நான் என்பதும். ஆகமேற் பூச்சு-- உண்மையில்லை என்றபடி. அச்சு--உடம்பு; இர்ண்டு-- ஆண், பெண்; 'அச்செல்லா மொன்றா வதிலே யிருவகையா, வச்சதென்ன சோணகிரி வள்ளலே' (அருணகிரியந். 44).

 

---------------

 

48 செகன் மோகினி வினவுதல்

விருத்தம்

 

சாதியின் வளங்க ளெல்லாஞ்
        சதிருட னுரைத்தா யின்று
மேதினி தனிலே யுள்ள 
        மேதகு மலைக ளெல்லாம்
நீதியா யுரைக்க வேண்டும்
        நெறித்திறு மாந்து விம்மிப்
போதகக் கோடு போன்ற‌
        பூண்முலைக் குறத்தி யாரே. 48

 

(குறிப்புரை.) போதகக் கோடு - யானைக்கொம்பு.

 

---------------

 

49 
குறத்தி மலைகளைக் கூறுதல்

ராகம்: பல்லவி

 

கரதலாமலகமெனக் கண்டமலைசொல்லக்கேளம்மே

 

அனுபல்லவி

 

திருநிறை குடந்தா புரிவளர்
சிறந்த மங்கைச்சி பாகத்தமர்ந்த‌
கருனைபொழி முகத்தனார் கம்பிக்
காதனார் கும்ப நாதர்வரையில் (கரதலா)

 

சரணங்கள்

 

(1) கண்ணுதல் வில்லுக் கான மேரு
கண்ணன் கைக்குடைக் கான பொருப்பு
விண்ணி லிறகு முளைத்துப் பறக்கும்
விருதுமை நாக . . . . . . .
பெண்ணன் றெழுந்த கிரியுந்தேவி
பிறந்த விமைய கிரி குருகிரி
கண்ணி லேகா ணாத கொடிய‌
காகமு மணு காத மாமலை (கரதலா)

 

(2) சந்திரன் பானு மறைந்தெழுமலை
சக்கிர வாள கிரியு முயர்ந்த‌
மந்தரகிரி சந்திரகாந்த‌
மதங்க மாமலையுஞ்
சுந்தரகுல கிரிக ளேழும்
துதிபெருகிய பொதிய மாமலை
கந்தருவ கிரிவிளங்கு சாளக்கிர கிரியும்
கருதுத் தரகிரி விருத்த கிரியும் (கரதலா)

 

(2) ரசத கிரியுந் திருவண்ணாமலை
ராம தூத னெடுத்து வாலால்
விசையி லெறிந்து விடுஞ்சஞ் சீவி
விசித்திர கூடமும்
திசையு ளோர்புகழ் மலையெலாங் கண்டு
தெரிசனம் பாவனாச மென்ற‌
அசல கிரிக ளின்னஞ் சொல்லத்
தொலையா தேயடி மாதே நான் (கரதலா)

 

(குறிப்புரை.) கரதலாமலகம் - உள்ளங்கை நெல்லிக்கனி. 1. பெண்ணன்று எழுந்தகிரி - வள்ளிமலை. குருகிரி - சுவாமிமலை. காகம் அணுகாத மலை - இரத்தினகிரி. 2. மறைந்து எழும் மலை--அஸ்த‌ கிரியும் உதயகிரியும். உத்தரகிரி--வடமலை என்னும் திருவேங்கடம். விருத்தகிரி - விருத்தாசலம். 3. ரசதகிரி - வெள்ளிமலை. விசித்திர கூடம் - சித்திரகூடம். அசலகிரிகள - சலனமற்ற மலைகள்.

 

-----------------

 

50 

செகன் மோகினி மலைவளம் வினவுதல்

விருத்தம்

 

வேய்வளைந் தெழுந்து சிந்தும்
        வெண்டர ளங்கள் பொன்னி
பாய்வள வயலிற் சேர்ந்து
        பல்வளஞ் சுரக்கு மூதூர்
பேய்வளஞ் சுற்று கின்ற‌
        பித்தர்கும் பேசர் நாட்டில்
வாய்வளஞ் சொன்ன மாதே
        மலைவள முரைசெய் வாயே. 50

 

(குறிப்புரை.) வேய்-மூங்கில். வெண்டாளம்-வெண்முத்து.

 

-----------------------

 

51 குறத்தி மலைவளங் கூறுதல்

ராகம்: அடாணா

 

பல்லவி

 

மலையி லதிசயம் சொல்லக்கே ளம்மே
அம்மே யம்மே யெங்கள் (மலையி)

 

அனுபல்லவி

 

மலையி லதிசயம் சொல்லப் பலபல விதங்களுண்டு--குல‌
மங்கைபங் காளர்திருக் குடந்தைக்கும் பேசர் நாட்டில் (மலையி)

 

சரணங்கள்

 

(1) ஒருபுறம் பாலை நன்னிலம்
ஒருபுறம் நெய்த ன‌ன்னிலம்
ஒருபுறம் மருத நன்னிலம்
ஒருபுறம் முல்லை நன்னிலம்

 

ஒருதெய்வங் கரகபாலி-திக்கொரு நான்கும்
ஒருவன் மேற்றிசை கோலி-தேவருக்கெல்லாம் 
ஒருவனிந்திரயோகசாலி-- தெய்வங்கள் பெருமான்
ஒருதெய்வப் பேர்வனமாலி--வாசமலையின்

 

புருஷரைப் போல மிருக சேனை-பென்னம்பெரிய‌
பருவளைத்துதிக்கை மேயவெள் ளானை-எங்கெங்கு நின்ற‌
மனரமுங் கல்லும் வாசம் வீசும் பூனை- பதுங்கிப்பாயும்
வரிபொருவேங்கை தொடாது மானை-மலைகளெங்கும்

 

பிரசம் பூவா ராயுமே பெருநிலவு காயுமே
கரிமழைகள் மேயுமே மலையருவி பாயுமே (மலையி)

 

(2) துண்டச் சாரை வெள்ளைக் காகம்
சுரபுன்னை யாமா மிருகம்
சுடர்மணி யைந்தலை நாகம்
சுனையெல்லாம் புருட ராகம்

 

சண்ட மாருதத்தை யுண்ணுமே-ஒரு பறவை
மண்டுதீயை வாரி யுண்ணுமே-ஒரு பறவை
கொண்டலைப் போசனம் பண்ணுமே-ஒரு பறவை
என்றும் வீணையிசை நண்ணுமே-மலைகளெங்கும்

 

கண்டகண்டவிடத்தி லரச கூபம்-பெருமரத்தை
அண்டிப் பேரு மிந்திர கோபம்-ஒருவனுக்கும்
அண்டாத பூதவே தாள ரூபம்-பிரிந்தபேரைக்
கண்டிக்கு மதவேடன் கலாபம்-சுனையிற்றுள்ளிக்

 

கெண்டைமல ரேறுமே எண்டிசைகள் மீறுமே
தென்றல் வந்து சீறுமே கொன்றை பொன்னைத் தூறுமே (மலையி)

 

(3) அயிலுடைக் கடவுண்மலைக்
கதிபன் வெற்றிக் குகன்பொன்னாட்
டமரர்க் கிறைவன் தெய்வ‌
யானைக்கு மணாளன் மேவும்

 

சயிலத்தினி லனேக சிங்கம்-சிங்கத்தின்
வாயிற் பிறாண்டிப் பிழைக்குங்குலிங்கம்-வளவிலேறிப்
புயலளவு மேவுஞ்சாதி லிங்கம்-மலைமுழைஞ்சில்
உயர் தவம்செய் மாமுனிவர் சங்கம்-கவரிமானோர்

 

மயிருக்குள் ளேமாந்து நிற்குங் காடு-உல்லாசத்துடன்
மயலைத்தீரு மாணும் பெண்ணுஞ் சோடு-சேவற்பிரியில்
உயிரை யெண்ணி பாரா தன்றிற் பேடு-மேன்மேலுமதி

 

சயமுள நவநாத சித்தர் வீடு-தடத்திற்றாவும்
கயல்கமுகை நாடுமே கமலமசைந் தாடுமே
மயில்கள் நட மாடுமே குயில்களிசை பாடுமே (மலையி)

 

(கு-ரை.) 1. வாசம் வீசும் பூனை - புனுகு பூனை. பிரசம் - வண்டுகள். பூ ஆராயுமே. கரி - யானை. மழைகள் - மேகங்கள். 
2. ஆமா மிருகம் - காட்டுப்பசு என்னும் விலங்கு. மேகத்தை உண்பது வானம்பாடி. வீணை யிசை நண்ணுவது அசுணப்புள். இந்திரகோபம் - மழைக்காலத்தில் தோன்றும் ஒருவகைச் செந்நிறப் பூச்சி. கலாபம் - கலகம். பொன்னை - பொன் போன்ற மலர்களை. 3. குலிங்கம் - ஊர்க்குருவி. வளவு - வீடு. மலைமுழைஞ்சு - மலைக்குகை. ஏமாந்து - ஆசைப்பட்டு. கவரிமான்: இது தன் உடலிலுள்ள ஒரு மயிர் போனாலும் உயிர் விட்டுவிடும் என்று நூல்கள் கூறும்; 'மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்' (குறள்).

 

------------

 

52 செகன்மோகினி தேசங்கள் வினவுதல்

விருத்தம்

 

எழில்சேர் பொன்னாட் டிறைவருக்கு
        மிமையோர் தமக்கு மிகுஞான‌
வழியே நிற்கு முனிவருக்கு
        மலர்ச்சே வடியின் மனம்வைத்தோர்க்
கழியாப் பெரிய வரமளிக்கு
        மரனார் குடந்தைத் திருநாட்டில்
விழியா லாட வரைமயக்கி
        வெல்வீர் தேசஞ் சொல்வீரே. 52

 

(கு - ரை.) வைத்தோர்க்கு: உம்மை விகாரத்தால் தொக்கது.

-----------------------------------------------------------

 

53 
குறத்தி தேசங்களைச் சொல்லுதல்

ராகம்:பல்லவி

 

ராசராசர் நித்தியம் வாசமானபர‌
தேசஞ் சொல்லக்கே ளம்மே.

 

அனுபல்லவி

 

வாசமேவுந் திருக்குடந்தா புரிவளர்
ஈசராதி கும்பேசர் வரைப்பெண்ணே (ராச)

 

சரணங்கள்

 

(1) பருநெருப் பொருபெண்ணைப் பயந்தருள்தேசம்
பாண்டவ ரொளிக்கின்ற பதிராடதேசம்
அரசன் சுடலைகாத்தருள் காசிதேசம்
ஆமென்று கல்லுந்தலை யசைக்கின்றதேசம் (ராச)

 

(2) சொர்ணமாரி கர்ணன் சொரியங்கதேசம்
சூதாடிவெல்லுந் துரந்தரன்றேசம்
அன்னைவாககிய பரிபாலனன்றேசம்
அரிவையர் மேல்வட்டமாங் கேரளதேசம் (ராச)

 

(3) படியிற்குணமிகு சுத்த சேலதுர்க்கதேசம்
பலதிக்கும் வெகுசித்திரமுள மத்திரதேசம்
சடிலத்தர் குடமூக்க ரமுதத்தர்தேசம்
சடலத்தைப் புறாவுக்குத் தானஞ்செய்தேசம் (ராச)

 

(கு - ரை.) நெருப்புப் பெண்ணைப் பயந்தது பாஞ்சாலம்; பெண்-திரௌபதி. அரசன்-அரிச்சந்திரன். கல் தலையசைக்கின்ற தேசம் பாண்டியநாடு; கல்லாடமென்னும் நூலைக்கேட்டு மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் தம் தலையை அசைத்ததை உட்கொண்டு இங்ஙனம் கூறினார்; 'கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறு நூல், . . . . . . மாமதுரையீசர் மனமுவந்து கேட்டுமுடி, தாமசைத்தார் நூறு தரம்'. 2. துரந்தரன் - நளன். பரிபாலனன் - இராமபிரான். மேல்வட்டம் - உயர்வு. 3. புறாவுக்குத் தானம் செய்தவன் சிபிச்சக்கரவர்த்தி; சோழதேசம் இவனான்டது என்று கலிங்கத்துப்பரணி மூவருலா முதலியவை கூறும்; சிபியின் வமிசத்தவர் செம்பியர்; செம்பியர் - சோழர்.

 

------------------

 

54 செகன்மோகினி அண்டகோளத்தின் அதியசங்கள் வினாதல்

விருத்தம்

 

தண்டமிழ்க்காத் தூது சென்ற
        தற்பரர்சிற் பரைபாகர்
கொண்டகோ லத்தழகர்
        கும்பலிங்கர் நன்னாட்டில்
அண்டகோ ளத்தைநெல்லி
        யங்கனிபோற் கைகாணும்
அண்டகோ ளத்தினதி
        சயமெல்லாஞ் சொல்வீரே. 54

 

(கு-ரை.) தூதுசென்றது திருவாரூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாருக்காக.

 

-----------------

 

55 குறத்தி அண்டகோளத்தின் அதிசயம் கூறுதல்

ராகம்:பல்லவி

 

அண்டரண்ட பகிரண்டமு மண்டத்தி
னதிசயஞ் சொல்லுவேனே
கொண்டகோல மழகிய குடந்தாபுரிக்
கும்பநாதர்வரை மானே (அண்டரண்ட)

 

(1)
ஆதிபரத்தினருளினாற் றோன்றிய
அண்டகோடிகளனேகம் - அந்த
அண்டகோடிகளனேகத்திலோர்
அண்டத்தளவு சொல்லக்கேளம்மே
பூதலமொன்றதின் கீழேழு மேலேழுபொன்மலை
பூதலத்திருக்குமந்தப் பொன்மலை நாலு
புறத்தம்பதம்பது பூகோளகோடிதன்னிலக்கம் (அண்டரண்ட)

 

(2)
ஏழுகடல் வரையெட்டு நாகம்
இதை வளையும் சக்கிரவாளம்கரு
கிருளுண்டு மூதணடத்திரணிய பூமியுண்
டிதைவளையும் சுவாகிள்ஞ சூழுஞ்சுடர்க்குளடங்கிய பூதண்டஞ
சொல்லப் பிரிவொன்பதாகும் முன்பு
சொன்ன நவகண்டத் தேழுதீவுமுண்டு
சொர்ணமலையுருவாணி (அண்டரண்ட)

 

(3)
செம்பொன் மலையினின்று தெற்கு நோக்கி
அதிசயங்கள றியவந்தேனே
திவ்வியதேசத்திலுயர் சோழதேசத்தில்
வருபொன்னித்திருநதிக்கடுத்த தென்றிசையிற்
கும்பநாதர் குடந்தைப்பதியினிற் கைக்குறி
யொன்று மொன்றாகச் சொல்வேனே
நாட்டுக் குறத்தியல்ல தெய்வக்குறத்திக்குள்ளே
ஞானக் குறத்தி காணம்மே (அண்டரண்ட)

 

(கு-ரை.) 1. அம்பதம்பது - ஐம்பது, ஐம்பது; போலி. 2. நாகம் - யானை பாம்பும் ஆம். இரணிய பூமி - இரணிய கற்பம். பூமண்டலத்தைச் சுற்றிப் பெரும்புறக்கடலும் அதனை யடுத்துப் பேரிருளும் உண்டென்பர்; கம்ப க. 3:21

 

------------------

 

56 செகன்மோகினி நதிகளை வினாவுதல்

விருத்தம்

 

நண்ணிய மதுவை யுண்டு நாதகீ தங்கள் வண்டு
பண்ணியல் பயிலுஞ் சோலைப் பதிவளர் குடந்தை நாட்டிற்
பண்ணிய பாவந் தீரப் பகிரதி முதனீ ராடும்
புண்ணிய நதிக ளெல்லாம் பொருந்தவே யுரைசெய் வாயே. 56

 

----------------

 

57 குறத்தி நதிகளைக் கூறுதல்

ராகம்:பல்லவி

 

நானாடிய புண்ணிய நதி நதஞ் சொல்லக்கேள்
மானார்க் கரசே என்மதி மானே

 

அனுபல்லவி

 

வானோர் பணிகும்பநாதர் செஞ்சடை
மகுடங்கள் தவழ்கின்ற ககனங்கள் நிறைகங்கை (நானாடிய)

சரணங்கள்

 

(1)
நறைதங்கு நதி கோதாவிரிபஞ்சநதியும்
நளினங்க ளருகெங்கு மிகுதுங்க நதியும்
துறையெங்கு மணிதங்கு நதிபம்பை நதியும்
துதியாம்ப்ரவதி சொர்ண முகிசிந்து நதியும் (நானாடிய)

 

(2)
அணிகொண்டல் சொரிகன்னி நதிசந்த்ர நதியும்
அலைபம்பு நதிதாம்ப்ர வதிநரும தையும்
மணிகர்ணி நதிபொன்னி மகிழ்சங்க முகமும்
மடுநொங்கு நுரைபொங்கி வழிகம்பை நதியும் (நானாடிய)

 

(3)
சுரர்வந்து முழுகுங்க ருடமங்கை நதியே
துவையுங்கை விரலுங்கல் பொருதுங்க நதியே
விரதங்கள் சபலன்தந் திடுமங்கு நதியே
விசைகொண்ட நதிசங்க மிகவுண்டு ரதியே (நானாடிய)

 

(கு-ரை.) நதம் - மேற்குமுகமாகப் பாயும் ஆறு. ககனம் - விண். 1. துங்கநதி - துங்கபத்திரை என்பவற்றுள் ஒன்று. 2. கன்னி நதி - குமரியாறு. மணிகர்ணி - முத்தாறு. நொங்குநுரை: உலக வழக்கு. 3. நதிசங்கம் - நதிகளின் கூட்டம்.

 

----------------

 

58 செகன்மோகினி தலங்களை வினாவுதல்

விருத்தம்

 

வரியளி குமுறுங் கொன்றை மாலையார் கும்ப கோணத்
தருளபெற நின்ற நித்த ராதிகும் பேசர் நாட்டிற்
சுருதிபோ நதிக ளெல்லாந் தோய்ந்திடுங் குறத்தி யாரே
தெரிசனம் பாவ நாசஞ் செய்திடுந் தலஞ்சொல்வீரே. 58

 

(கு-ரை.) சுருதி - கீர்த்தி; சுருதிபோம் என்றது 'இசையாற்றிசை போய துண்டே'(சீவக.31) என்பதைப் போன்றது.

 

------------------

 

59 குறத்தி தலங்களைக் கூறல்

பல்லவி

 

தரிசிக்குந் தலஞ்சொல்வே னம்மே நான் (தரிசிக்குந்)

 

அனுபல்லவி

 

தரிசிக்குந் தலஞ்சொல்வே னருமைப்பெண் ணமுதேகேள்
சுரருக்குந் தினமுத்தி தருஞ்சிற்றம் பலமுதுல (தரிசிக்குந்)

 

சரணங்கள்

 

(1)
கலைச்சிக்கு வளைகின்ற கங்காள னாரூர்
கல்லானை வளர்கின்ற கழைதின்ற தோரூர்
வலச்செவிமேற் ப்ரணவந்தான் வழங்கிவருமோரூர்
மணலொருகாற் சிவலிங்க வடிவானதோரூர் (தரிசிக்குந்)

 

(2)
உறக்கமிலா வாழையினல் லுருக்கொண்டதோரூர்
உமையேந்தச் சிவனார்வந் துபதேசந் தருமூர்
பிறக்கமுத்தி யாமென்று பேரான தோரூர்
பிள்ளையினைக் கறிபண்ணிப் போடென்றதவனூர் (தரிசிக்குந்)

 

(3)
கருமாரிக் குமைவந்து கையேந்து மோரூர்
கன்னிப்பெண் ணாகிக் கலைக்ஞானந் தருமூர்
அரும்பாவ நாசஞ்செய் தருளியபற் பலவூர்
அங்கஞ்செந் தாமரையா யலர்ந்திடுமோர் சீரூர் (தரிசிக்குந்)

 

(கு-ரை.) கலைச்சி - தாடகை என்னும் உத்தமியாள். கங்காளனார் ஊர் - திருப்பனந்தாள்; தாடகை சிவபெருமானுக்கு மாலைசூட்டும்போது அவளுடைய கலை அவிழ்ந்துவிட, அதனைக் காப்பதற்காக அவள் மாலையேந்திய கைகளால் ஆடையை இடுக்கிக்கொண்டனள். மாலையை அந்நிலையில் சாத்த இயலாமை கண்டு கடவுள் தம் தலையை வளைத்துக்கொடுத்து மாலையை ஏற்றுக் கொண்டார் என்பது வரலாறு; கலையினால் இவள்பால் சிவ பெருமான் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டமையின் இவள் கலைச்சி எனப்பெற்றாள். கல்லானை கரும்பு தின்றது மதுரையில். வலச்....வழங்கி வரும் ஊர் - விருத்தாசலம். மணல் சிவலிங்கமானது இராமேசுவரம். 3. வாழையுருக்கொண்டது பைஞ்ஞீலி; என்றும் அழியாதிருத்தலின் உறக்கமிலாவாழை என்றார். உபதேசம் தரும் ஊர் - காசி. பிறக்க முத்தி - திருவாரூரில். சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டது செங்காட்டங்குடியில். 3. கருமாறிக்கு உமைவந்து கையேந்தும் ஊர் - காஞ்சீபுரம்;'கருமாறிப் பாய்ச்சல் என்பது காஞ்சீபுரத்துக் காமாட்சிகோயிற் குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்று இலக்குத்தவறாது குதிக்கையாம்.'(பெருந்தொகை 2133, விசேடக் குறிப்பு); இதிற்குதிப்பாருக்கு உமாதேவி யார் உதவவந்து குதிப்பவரைக் கையேந்திப் பிடித்துக்கொள்ளுவாராம்.

 

----------------------------------------------------------

 

60 செகன்மோகினி குறத்தி கற்ற வித்தையை வினவுதல்

விருத்தம்

 

பாகத்தை யோர்மங் கைக்கே
        பங்கிட்டு மதஞ்சேர் கோட்டு
நாதத்தி னதளைப் போர்த்த
        நம்பர்கும் பேசர் நாட்டில்
நீகற்ற வித்தை யெல்லாம்
        நிலவரஞ் சொல்வாய் மோக
தாகத்தை மாற்றி யின்பந்
        தரும்பெருங் குறத்தி யாரே. 60

 

(கு-ரை.) கோட்டுநாகம் - யானை. அதள் - தோல்

 

-----------------------

 

61 குறத்தி தன் வித்தை கூறல்

ராகம்:பல்லவி

 

அரகரப்பிரம் மாதிகட்கும் என்வித்தை யெல்லாம்
அங்கங்கே பிரபலஞ் செய்தேனே

 

அனுபல்லவி

 

திரிபுர வயிரி திருக்குடந்தைக் கும்பேசர்முன்
தீராத காதலான தேனே முத்துமானே (அரிகரப்)

 

சரணங்கள்

 

(1)
ஈசற்கு நானுப தேசித்த மந்திரத்தால்
எரிமழுவைக் கையி லெடுத்தாரே - பன்ன
காசன மானதென் மகிமையல்லோ பொங்கும்
அலைகடன்மேன் மாயன் படுத்தே உறங்கத்
தொடுத்தாரே (அரிகரப்)

 

(2)
வடித்த தமிழ்முனிவன் கையினாலே தொட்ட
மலையடங்கின தென்றன் மருந்தினல்லவோ - வெள்ளைப்
பொடிபோட் டங்கத்தைப் பூம்பாவை யாகென்று
பிள்ளைசம் பந்தன்செய்த புதுமை யதிசயமே (அரிகரப்)

(3)
ஆறாதா ரத்தின் முனிவர்க்கு நெடுமூச்
சடக்கிவிட மந்திர மொன்றுரைத் தேனே - திரு
நீறார் மேனியர் குடந்தைக் கும்பேசரை
நெஞ்சிலனுதினமு நினைத்தேன் மனங்களித்தேன். (அரிகரப்)

 

(கு-ரை.) 1. பன்னகாசனம் - அரவணை. 2. தமிழ்முனிவன் - அகத்திய முனிவர். மலை - விந்தமலை. வெள்ளைப்பொடி - திருநீறு. அங்கம் - எலும்பு; சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது மயிலாப்பூரில்.

 

--------------------

 

62 செகன்மோகினி குறிதேற வினாவுதல்

விருத்தம்

 

நீர்க்குங் கொடிய பாம்பினுக்கும்
        நிலாவெண் மதிக்கு மலர்க்கொன்றைத்
தார்க்கு மிருக்க விடங்காட்டுஞ்
        சடையார் விடையார் தமிழ்ப்பெருமை
யார்க்குங் குடந்தைத் தெருவில்வரும்
        அனமே முனநீ ரறிந்துகுறி
யார்க்குச் சொன்னீ ரென்னதந்தா
        ரல்லார் குழலீர் சொல்லீரே. 62

 

 

(கு-ரை.) விடையார் - காளையையுடையவர். பெருமை ஆர்க்கும் - பெருமை முழங்கும். அல்லார் - இருள்போன்ற

 

-----------------------------------------------------------

 

63 குறத்தியின் மறுமொழி

ராகம்:பல்லவி

 

வெகுவெகு பேர்க்கெல்லாம் குறிசொல்லி வாங்கின‌
வெகுமானங்கள் பாரம்மே

 

அனுபல்லவி

 

மகபதி பணிந்தருள் திருக்குடந் தாபுரி
வாச ராதிகும் பேசர் வரையில் (வெகுவெகு)

 

சரணங்கள்

 

(1) திரிதண்டு சன்யாசி யல்ல ராசனென்று
திருச்சுபத்திரைக் குரைத்தேன் அந்தத்
தெள்ளமுது மெய்தா னுள்ளதென்று நல்ல‌
வெள்ளிபொன் னள்ளித் தந்தாள்பார். (வெகுவெகு)

 

(2) நாக கன்னிகைக் கேகைக் குறிபார்த்து
வாகுடன் குறிசொன்னேன் அந்த 
நாரியும் முன்கை முதாரியுஞ் சொன்ன‌
மாரியாய் வாரித்தந் தாள்பார். (வெகுவெகு)

 

(3) அமலைக் கும்மலர்க் கமலைக் குங்குறி
சம்மதமாகவே சொன்னேன் ரத்தினச்
சுட்டியுஞ் செம்பொன் னட்டியும் பிள்ளைத்
தொட்டி யுங்குறப் பெட்டியுந் தந்தாள்பார். (வெகுவெகு)

 

(4) சிந்திக் குந்திருக் குந்திக்கும் பிள்ளை
மந்திரந்தா னென்று சொன்னேன் வர்ணச்
சேலையு மாமுத்து மாலையுங் கொந்தள 
ஓலையு மொருக்கா லெதந் தாள்பார். (வெகுவெகு)

 

(கு - ரை.) மகபதி - இந்திரன். 1. திரிதண்டு - முக்கோல். 2. முதாரி - முன்கைவளையல். 3. அம அலைக்கும் - நீரால் அலைக்கப்படும்.

 

----------------

 

64 குறத்தியின் செயல்

விருத்தம்

 

திங்களஞ் சடையார் கும்ப‌ லிங்கர்வாழ் திருக்கு டந்தை
தங்குசெங் கயற்கண் ணாளே தாமரை முகத்தி னாளே
மங்கையர்க் கரசே யெங்கள் மதுரமோ கினிப் பெண் ணாளே
அங்கமார் குறிசொல் வேனுன் னங்கைதா வெனச்சொன் னாளே. 64

 

------------------

 

65 

ராகம்:பல்லவி

 

கைதா வம்மே கைதா

 

சரணங்கள்

 

(1) பங்கய மாமலர்க் கைதா-அடி
பாக்கிய சாலி கைதா
திங்கண் முகத்தி கைதா-அடி
சேல்பொரு விழியே கைதா (கைதா)

 

(2) குரும்பை முலைச்சி கைதா-அடி
கோகில மொழியே கைதா
அரும்பு நகைச்சி கைதா-அடி
அன்ன பூரணி கைதா (கைதா)

 

(3) ஊடல் வளைக்குங் கைதா-அடி
உத்தமிப் பெண்ணே கைதா
ஆடக வரிவளைக் கைதா-மலை
அரையன் பெண்ணே கைதா (கைதா)

 

(4) மடந்தைக் கரசே கைதா-அடி
மலைமலி மங்கையே கைதா
குடந்தைக் கொடியே கைதா-அடி
குமரிப் பெண்ணே கைதா (கைதா)

 

--------------

 

66 

கட்டளைக் கலித்துறை

 

ஆடிக்கண் வந்த வழகர் கொண் டாடி யமைவுபெறப்
பாடிப் புகழ்குடந் தைப்பதி மேவு பணிமொழியே
சோடிக்கை யாயின்று நானாடிச் சொன்னவெல் லாஞ்சுருக்கிற்
றேடிக் கொடுவா வெனச்சொலு தென்குல‌ தெய்வங்களே. 66

 

--------------

 

67 

ராகம்:பல்லவி

 

கோதையே நான்சொன்ன சொன்னவெல்லாம்
கொண்டுவரச் சொலுதென் குலதெய்வம்

 

அனுபல்லவி

 

சூதர்பரவுங் கும்ப நாதர் வரைமானே
சுபஞ்சீக்கிரங் குறி சபல மாகவென்றால் (கோதையே)

 

சரணங்கள்

 

(1) குணத்திற் கள்ளுஞ்சோறுங் காயமும் கைக்
குழந்தைக்குச் சிக்கெண்ணெய் சாராயமும்
இணக்கத்தின் மணக்குங்காற் சாயமும்-கேட்கு
தினையெனக்கிலை யெனமயக்கியே
கணவனைக்கலந் தணைவதெப்படி (கோதையே)

 

(2) நிறைய முறத்திற் செந்நெற் பச்சையும்-பெரிய‌
நெடுமுழத்தினிற் கருங்கச்சையும்
முறைமையாய்வர வேணுநிச்சய-முனக்கு
முறுவலெத்தனை சிறுவரைப்பல‌
குறுணிமுக்குறுணி பெறுவதெப்படி (கோதையே)

 

(3) நமக்காக நீ யொன்றுந்தர வேண்டாம்-கும்ப‌
நாதர்க்கென் மேலுந்தய வுண்டாம்
உனக்காகவே சொன்னேன் குறைவேண்டாம்-அம்மே
உண்டுகண்டு மகிழ்ந்துநவமணி
நின்றநிலையிலே கொண்டுவாவோடிக் (கோதையே)

 

(கு - ரை.) சூதர்-மூர்க்க நாயனார். 1. உச்சிக்கு எண்ணெய். 
2. கச்சை-புடைவை; ஆகுபெயர்.

 

-----------------

 

68 

விருத்தம்

 

சதுரமுட னிலமெழுகிச் சத்திவிநா யகனைவைத்
திதமுளமா வருக்கைமுர லெல்லாநி வேதித்து
மதுரமுறு தேன்றினைமா வைத்துவள்ளி வேலவனும்
துதிபெறுசே வலுமயிலுந் துணையெனச்சிந் தித்தனளே. 68

 

-----------------

 

69 குறத்தி குறிசொல்லத் தொடங்கல்

 

(1) சதுரமாக நிலந்தன்னை மெழுகித் தொந்தித்
தந்திமுகனை ஆவாகனஞ்செய்து
கதிர்வடி வேலவர்க் குகந்த வள்ளியைக்
கைதொழு தேவரங் கேட்கிறே ன‌ம்மே.

 

(2) வருக்கைமாங் கனியு நிறைந்த 
வாழைக் கனியுந் தேனுந் தினைமாவும்
கருத்தி லன்புற வணங்கிக் காரியம்
கைகூடு மோவென்று கேளுமெ னம்மே.

 

(3) பச்சிள நீருங் கரும்பு நாளிகேரம்
பருத்த மோதகமு மதிரசமும்
பச்சிம முகத்தி லிருந்து பணிந்து
பச்சிளங் கொங்கையைக் காட்டுமென் னம்மே.

 

(4) பொன்மணி மேகலை யுஞ்சொர்ண‌
பூஷண முஞ்சிறிது பாஷணமும்
பன்மலர் கொண்டு பணிந்தெதிர் நின்று
பயபத்தி யாய்வந்து கேளுமெ னம்மே.

 

(கு - ரை.) 2. வருக்கை-பலாவில் ஒரு வகை. 3. பச்சிம‌ முகம்-கிழக்கு. 4. பாஷணம்-பேச்சு.

 

------------

 

70 

விருத்தம்

 

கைக்குறியார் மதிச்சடையார் தற்பரர்கும் பேசர் வெற்பில்
மைக்கினிய கண்ணாரும் மடமோ கினிமானே
மெய்க்குறிகான் சொல்வதன்றி மேவுங்கு றத்திகள் போற்
பொய்க்குறிசொல் லத்தெரியா தென்று புகன்றனளே. (70)

 

----------------

 

71 

ராகம்:பல்லவி

 

பொய்க்குறி சொல்லிப் பிழைக்குங் குறத்திகள்
போலல்ல நானடி யம்மே

 

அனுபல்லவி

 

மெய்க்குறி நான்சொல்லக் கேளடிபெண்ணே
வேதன் பணிகும்ப நாதர் வரையில் (பொய்க்குறி)

சரணங்கள்

 

(1)
சுந்தர மாந்தன தானிய ரேகை
சூட்சும மிருக்கு தென்னம்மே
இந்திரைப் பெண்ணை யெடுத்தெடுத் தாட்டுவ
திந்த ரேகை தானடி யம்மே (பொய்ககுறி) (71.1)

 

(2)
அம்புச ரேகை யணிசங்க ரேகைகள்
அன்ன ரேகையிது பாரம்மே
அம்பிகையார் தம்மை யாட்டிப் புடைப்பதும்
அந்தரேகை தானடி யம்மே (பொய்ககுறி) (71.2)

 

(3)
கங்கண ரேகைவித் தியாரம்ப ரேகையும்
கலைமகள் கையிற் கண்டே னம்மே
அங்குனக்கவை யனுசரணை யானவா
றறிந்தவரைக் கேளடி யம்மே (பொய்ககுறி) (71.3)

 

----------

 

72 
அகவல்

 

ஆகாச வாணி யருள்பூமா தேவி
ஏகாச னத்தி யெக்கலா தேவி
கண்ணனூர் மாரி கால பயிரவி
பண்ணுலா மொழிசேர் பாவவிநாசர்
பேரையூர்ச் சாத்தர் பெருத்த கோரக்கர் (5)
பூரண வடிவே பொதுவிடை யாரே
ஆரா வமுதே யாதிகும் பேசர்
பேரார வாரப் பிள்ளையார் காப்பர்
கோமள வல்லி குடந்தைமங் கைச்சி
சாமள ரூபி சதகன் னிகையே (10)
குடந்தையூர் காக்குங் குலோத்துங்க காளி
அடைந்தவர்க் கருள்செயு மழகிய புண்ணியர்
கந்தச் சுவாமி கருங்கான வள்ளி
என்றன் முன்னே நின்றொன் றுரையே. (72)

 

------------------

 

73 செகன்மோகினி தன் காதலன் அடையாளம் வினாவுதல்.

விருத்தம்

 

தேனைப்பா லைக்கருப்பஞ் சாற்றை வெள்ளைச்
        சீனியைக்கற் கண்டைநிகர் தீஞ்சொன் மாதே
மானைப்பார் வையிற்பதித்த மயிலே தோகை
        மயிற்சாயன் மடவனமே வனத்தார் கொம்பே
ஆனைப்பா டலமாக நடத்து மெங்கள்
        அத்தர்கும்ப லிங்கரென்றா யானா லுன்றன்
ஞானப்பார் வையிற்குறித்து நோக்கி யன்ன
        நலங்கொளடை யாளமெல்லா நவிலு வாயே. (73)

 

---------------

 

74 குறத்தி அடையாளம் கூறல்

ராகம்:பல்லவி

 

ஆளால் அழகனடி - அவ னடை
யாளஞ் சொல்லக் கேளடி

 

அனுபல்லவி

 

வாள்பொரு திடுவிழிக் குடந்தை யில்வரு
மங்கைச்சிக் கேற்ற மணாளன டீயவன் (ஆளால்)

 

சரணங்கள்

 

(1)

நீரார் சடையனடி - கூந்தல் நீண்டகொன்றைக் காரனடி
வாரார் மூஞ்சியடி - மைவிழி மலர்விழி ஒண்ணரைக் கண்ணனடி
பாரோர் நாதனடி - கன்னப் பரிசையின் மூக்குத்தி மூக்கனடி
பேரார் பெரியவன்-ஆணல்ல‌ பெண்ணல்ல பேடி யல்லவிரு பிறப்பனடி (ஆளால்)

 

(2) நடையெருதுக் காரனடி-வில்வ‌ நாறியடி மழு மாறியடி
படைதிரி சூலனடி-யழகிய பல பணிவரிவளக் கையனடி
உடைபொருமறை யாள-னொருபுற‌ மொதுங்கிய கோவணக் காரனடி
நெடுவ னடி குறுங் கும்பத்திலடங்கிய-நெஞ்சு நீலனடி நெற்றிச் சிவப்பனடி (ஆளால்)

 

(3) பொதுமன்று ளாடியடி-பரிபுரம் பொலிந்த பாடகக் காலனடி
துதிபெறு போதனடி-செம்பொற் றோடணி கம்பிக் காதனடி
சதுமுகன் பூசிதண்டி-கோணங்கித் தாதனு மாண்டியு மானவண்டி
சதமகன் றேவர் பரவிய-திரிபுர‌ தகனனடி ரெண்டு பிள்ளைத் தகப்பனடி (ஆளால்)

 

(கு - ரை.) 1. கன்னப்பரிசை-கதுப்புமயிர். நாறி-நாற்றத்தையுடையவன். பணிவரிவளை-நாகங்களாகிய வரிகளையுடைய வளையல்கள். குறுங் கும்பத்திலடங்கிய நெடுவன் என்று கூட்டுக. நெஞ்சு அதைச் சார்ந்த கண்டத்தைக் குறிக்கும்.

 

----------------

 

75 
விருத்தம்

 

காரார் கறைககண்டர் கரத்தர்கும்ப லிங்கர்வெற்பில்
தாரார் குழலணங்கே தையன்மட மோகினியே
சீரா ருனதுகுல தெய்வங் களைநினைந்து
ஈராறு ராசியிலொன் றிப்போ தியம்புவையே. (75)

 

-------------------

 

76 செகன்மோகினி சன்மானம் கொடுத்தல்

ராகம்:பல்லவி

 

விம்ப சிந்தாமணியே ராசியி லீராறின்
மேலான பேரைச் சொல்வாயே.

 

அனுபல்லவி

 

கும்பராசி யென்றசொல் லறிந்தேன் - திருக்
கும்ப கோண மவனூரே. (விம்ப)

 

சரணங்கள்

 

(1)
என்னைப் பார்த்திரு வென்றாற் பெருமூச்
செறிந்த சேதி யறிவேனே - பசும்
பொன்னல்ல பூவல்ல பூடணா திகளல்ல
புருடர்மே லாசை மெய்தானே. (விம்ப) (76.1)

 

(2)
நூற்றெட்டி லோரிலக்கம் பன்னிரண்டா மென்று
நுட்பஞ் சொன்னாய்மட மானே - சொன்ன
வார்த்தைக்குள் ளேகுறி பார்த்துப் பார்த்துமலை
மங்கை மணாளனென் றேனே. (விம்ப) (76.2)

 

(3)
ஆகத்தி லோரிட நீதொடென் றால்முலைமேல்
அங்கையை வைத்துக்கொண்டாயே - உன்னை
ஏக போகமாய்ச் சேரக் குடந்தைக் கும்பலிங்கேசர்
இதோவந்தார் வந்தார் வந்தாரே. (விம்ப) (76.3)

 

-----------

 

77 செகன்மோகினி சன்மானம் கொடுத்தல்

விருத்தம்

 

தரத்தையொரு கரத்திலணிந் திடப மேறும்
தற்பரர்சிற் பரைபாகர் தழைத்த நாட்டிற்
கருத்தினினைந் ததுசொன்னாய் சொன்ன வார்த்தை
கைகண்டே னமுதர்வரக் கண்டேன் சேர்ந்தார்

 

இரத்தினம ழுத்தியபொன் கலைகள் யாவு
மெதுவேணு மதுதந்தே னிந்தா தேனே
வரைக்குறவர் குலத்துதித்த மயிலே யென்றன்
மனம்போலக் குளிர்ந்துநிதம் வாழி தானே. (77)

 

(கு_ரை.) தரம் - சங்கு; வளையலுக்கு ஆகுபெயர். கலைகள் - ஆடைகள்.

 

--------------

 

78  குழுவன் வருகை

விருத்தம்

 

தவலரும் பொருளை வேண்டித்
        தாய்முலைப் பாலி லாது
சவலையி னடியார்க் கின்பம்
        தருந்திருக் குடந்தை நாட்டிற்
சிவலனம் பைங்கால் நாரை
        சிற்றடிக் குருகு நேடிக்
குவலயத் தவர்கள் மெச்சும்
        குழுவனும் வருகின் றானே. (78)

 

(கு-ரை.)
தவலரும் - கெடுதலில்லாத. சிவல் - ஒரு பறவை. அனம் - அன்னம். குவலயம் - பூமி. குழுவன் = குளுவன் - குறத்தியின் கணவனாகிய சிங்கனுக்கு வேலையாள்.

 

---------------

 

79 
ராகம்:பல்லவி

 

குழுவன் வந்தானே _ மலைக்குறக்
குழுவன் வந்தானே.

 

அனுபல்லவி

 

மழுவ லாளர்தென் குடந்தை மாநகர்
வாவு மலைபொலி காவிரி நாட்டினிற் (குழுவன்)

குழுவன் வருகை

 

சரணங்கள்

 

(1) மார்பிற் புலிநக மாலையும் தோளினில்
வக்கா மணியுங் கொக்கிற கணிந்து
கார்முக மம்பறாத் தூணி புறத்துறக்
கட்டி மிரட்டி வெருட்டி விழித்துக் (குழுவன்) (79.1)

 

(2) பக்கிக ளெங்கென்று பார்த்தெதி ரார்த்துப்
பதுங்கிப் பதுங்கித் தியங்கி மயங்கிச்
சக்கர லாகு கிறிககி நடையொடு
தாண்டிக் குலதெய்வம் வேண்டிக் கொண்டு (குழுவன்) (79.2)

 

(3) முறுக்கிக் கச்சையை யிறுக்கிக் கட்டியே
மூச்ச டக்கியே பாய்ச்ச லாப்பாய்ந்து
நறுக்கு வீசையை முறுக்கி யுறுக்கி
நாடிப் பறவையைத் தேடித்தேடிக் கொண்டு. (குழுவன்) (79.3)

 

(கு-ரை.) வாவும் அலை பொலி-தாவுகின்ற அலைகள் விளங்கும். (1) வக்காமணி-சிப்பிமணிகளால் இயன்ற ஒருவகை மாலை. கார்முகம்-வில். புறத்து-முதுகில். (2) பக்கிகள்- பட்சிகள்.

 

------------- 

 

80 
விருத்தம்

 

நடைக்கலக் கொடியின் மேவி
நலிகருங் கொடியொப் பேனை
அடைக்கல மென்ன வாண்ட‌
ஆதிகும் பேசர் நாட்டில் 
தொடைக்கலச் சிங்கன் றன்னைத்
தொழுகுழு வனைப்பார்த் தெந்தம்
படைக்கல்க் கான கானம்
பார்த்துவா வெனவந் தானே. (80)

 

(கு-ரை.) கலக்கொடி-கப்பலில் உள்ள கொடி. கருங் கொடி-கரியகாக்கை. கப்பற்காக்கைபோல் தவிக்கின்றவனை
என்றபடி. தொடைக்கலம்-மாலைகளாகிய அணிகள்.

 

-----------------------------------------------------------

 

81 
ராகம்:பல்லவி

 

வந்தான் வந்தா னையே _ குழுவன்
வந்தான் வந்தா னையே

 

அனுபல்லவி

 

செந்தாரும் பொழில்சூழ குடந்தாபுரித்
தேசிகர் கும்பலிங் கேசர்நன் னாட்டினில்
கொந்தார் குஞ்சிச் சிங்க னனுப்பக்
கூட்டப் பறவைக்கு நாட்ட மிட்டுக்கொண்டு (வந்தான்)

 

சரணங்கள்

 

(1)
தோளிற் கிடந்து துடிக்கும் பறவையைச்
சுட்டுக்கட் டித்தேனை விட்டுப் பிரட்டியே
நீளத்திற் றின்றுதின் றோலக்க மாயோடி
நேரிட்ட பட்சியைத் தாரிட்டுக் குத்தியே (வந்தான்) (81.1)

 

(2)
வக்காவுங் கொக்காவும் வந்திந்தா மேயுது
வானத்தி லோடிப்போஞ் சேனைசே னையாகச்
சிக்காதென் றெண்ணியே கெக்கெலி கொட்ட‌
செற்ற முடன்குறு நெற்றியிற் கைவைத்து (வந்தான்) (81.2)

 

(3)
கோலக் குறத்தியோ டோலமிட் டுச்சிங்கன்
குடிசையி னின்று துடிதுடிப் பானென்று
நீலக் குழுவனுங் கீலக்கச் சிங்கனை
நேடிப் பிடித்துக்கொண் டாடியா டிக்கொண்டு (வந்தான்) (81.3)

 

(கு-ரை.) செந்நாரும் - ஊர்வன முதலிய உயிர்ப்பிராணிகள் வாழும். கொந்து ஆர் - பூங்கொத்துக்கள் நிறைந்த. (1) தாரிட்டு - இரும்புமுள்ளைப்போட்டு; தாறு என்பது வழக்கில் இங்ஙனம் வந்தது; 92. (2) வக்கா, கொக்கா என்பன பறவை ஜாதிகள்.
(3) கீலக்கம்=கீலகம் - தந்திரம், சமத்காரம்.

 

-----------------------------------------------------------

 

82 சிங்கன் வருகை

விருத்தம்

 

ஆறணி சடையார் கும்பத் தமுதலிங் கேசர் மூவர்
கூறுசெந் தமிழ்சேர் செல்வக் குடந்தையங் கோவி னாட்டில்
தேறிய மனத்து ஞானச் சிங்கியார் தமைக்கா ணாமல்
சீறிய புலிபோற பாய்ந்து சிங்கனுந் தோறினானே. (82)

 

(கு-ரை.) கோவில் நாட்டில்

 

------------

 

83 
ராக‌ம்:

 

(1) நித்தர் செக்கர் தாரண‌
நீதர் கும்ப நாதர் நாட்டில்
சித்தப் பிரமை கொண்டு கள்ளச்
சிங்கன் வந்து தோன்றினானே. (83.1)

 

(2) கொத்து முத்தும் பூனைக் காய்ச்சியும்
கொக்கிறகுங் கொண்டை சூடிச்
சித்திரக் குள்ளன் போலே கள்ளச்
சிங்கன் வந்து தோன்றினானே. (83.2)

 

(3) திங்கள் கங்கை யணியுந் துங்கர்
சீரார் குடந்தை யூரார் நாட்டிற்
சிங்கி யம்மா ளெங்கே யென்று
சிங்கன் வந்து தோன்றி னானே. (83.3)

 

(கு-ரை.) செக்கர் தாரண-செவ்வானத்தின் நிறத்தைத் தரித்த. பூனைக்காய்ச்சி: 35: 115.

 

------------

 

84 
விருத்தம்

 

செந்நெல் வயல்சூழுந் திருக்குடந்தை நன்னாட்டில்
சின்னச் சிறுக்கிமயல் தேட்ட மிகவுடையாள்
என்னைப் பிரிந்துவந்தா ளென்றுகுற வர்க்குள்ள‌
சின்னக் கெடிமன்னச் சிங்கன்வந்து தோன்றினனே. (84)

 

--------------

 

85 

ராகம்:பல்லவி

 

சிங்கனும் வந்தானே - கெடிமன்னச்
சிங்கனும் வந்தானே.

 

(1) சங்கரி மங்கையோர் பங்கி லமர்ந்தருள்
கொங்கணர் சிவகும்ப லிங்கர்நன் னாட்டினில்
இங்கித மோகவ லங்க்ருத மாகிய‌
அங்கண நாயகி யெங்கேயெங் கேயென்று (சிங்) (85.1)

 

(2) மத்த மதிபுனை முத்தார்ச டாமகு
டத்தார்நன் னாட்டினி லுற்ற வுயிர்த்துணை
முத்துமுத் தேயென்று சுத்திப் பார்த்துப் பார்த்துப்
பித்துப் பிடித்துப் பிதற்றிப் பேத்திக் கொண்டு (சிங்) (85.2)

 

(3) நாச்சர வங்கன கச்சிலை யிற்றொடு
நாணார் திருக்கும்ப கோணார்நன் னாட்டினிற்
கச்சு முலைச்சிநன் மச்சினி யுச்சிதக்
கொச்சை மொழிச்சிமே லிச்சை கொண்டுகள்ளச் (சிங்) (85.3)

 

(4) ஆடிய செஞ்சர ணத்தர் குடந்தை
அமுத குணத்த ரமர்ந்தநன் னாட்டினிற்
கூடிக் கலந்தசுகம் பாடிப் பாடிநல்ல‌
வேடிக்கைச் சிங்கியைத் தேடித்தே டிக்கொண்டு (சிங்) (85.4)

 

(கு-ரை.)கெடி - அதிகாரம். (1) மத்தம் - ஊமத்தமலர்.
(3) நச்சரவம் - ஆதிசேடன், கச்சம் - நகில்களுக்கு இடும் கச்சு. 

 

-------

 

86 
கட்டளைக் கலித்துறை

 

நந்தார் வயற்குடந் தாபுரி வாழகும்ப‌ நாதர்வெற்பிற்
கொந்தார் குழன்மா தினைத்தேடிக் கள்ளைக் குடித்தசைந்து
சிந்தா குலத்துடன் சேல்பாய் வயற்பட் சிகள்துருவி
வந்தானை யேசிங் கனுமென் றவையில் வருகுவனே. (86)

 

(கு-ரை.) நந்து ஆர் - சங்குகள் நிறைந்த.

 

87 
ராகம்:பல்லவி

 

வந்தானையே சிங்கனும் வந்தானையே.

 

சரணங்கள்

 

(1) சந்திர சேகரர் வாழ்குடந் தாபுரிச்
சங்கர னார்கும்ப லிங்கர்நன் னாட்டினில்
அந்தந்தத் தாவுக ளங்கங்கு மாய்ப்பொன்னி
யாற்றங் கரைப்பக்கம் பார்த்துப்பார்த் துக்கொண்டு (வந்தா) (87.1)

 

(2) வெண்ணீ றணிந்த மேனியர் மெய்யினில்
வில்வ மணியாடல் வல்லவர் நாட்டினில்
தண்ணீர்த் துறைகள் தடாகங்க ளாறுசெய்
தளைஎல் லாஞ்சுற்றி வளைந்து வளைந்துபார்த்து (வந்தா) (87.2)

 

----

 

88 புள் வரவு கூறல்

வெண்பா

 

செக்கர்ச் சடையார் திருக்குடந்தைக் கும்பேசர்
அக்கரவம் பூண்டா ரணிநாட்டிற் _ பக்கமுள்ள‌
அக்கரைநின் றிக்கரைவந் தாடப்பார்த் துப்பார்த்து
மிக்கபட்சி வருகுதையே பார். (88)

 

(கு_ரை.) அக்கு அரவம்; அக்கு - அக்குமணி; 95.

 

------------

 

89 
ராகம்:பல்லவி

 

வருகுதையே _ பறவைகள் _ வருகுதையே.
சரணங்கள்

(1)
வாரார் கொங்கைச்சி மங்கைச்சிக் கேற்ற‌
வள்ளல் மகிழ்ந்தருள் பிள்ளை வயலிலே
பாரா வராவுச்சிக் கட்டளைச் செய்யுக்குள்
பாரப் பறவைகள் சேரச் சேரமண்டி (வருகு) (89.1)

 

(2)
தார்ப்பொலி வேணியர் மங்கை மணாளர்
சந்தனச் சோலை யிருந்துபக் கம்பார்த்து
ஆர்க்காட்டு வேளான் செய்யைப் பார்த்துக்குரு
கந்தரத் தெழுந்து பந்தி பந்தியாக (வருகு) (89.2)

 

(கு-ரை.) வார் - கச்சு.

 

------ 

 

90 
விருத்தம்

 

மந்தரவெற் பார்குடந்தை மன்னுதட மாடுநறுங்
கெந்தமுலை யார்விழிசேல் கெண்டையென வெண்ணியெண்ணிப்
பந்திபந்தி யாகவிரு பக்கச் சிறகடித்து
வந்திந்தா மேயுதையே வன்னப் பறவைகளே. (90)

 

(கு-ரை.) த‌டம் - குளம். விழியைச் சேலும் 
கெண்டையும் என்று எண்ணி.

 

---------------

 

91 
ராகம்:பல்லவி

 

இந்தா மேயுதையே _ பறவைகள்
இந்தா மேயுதையே.

 

சரணங்கள்

 

(1) நடத்து வல்லவர் வியலூர் வயலை
நாடியே வாலா னடுப்பொற்றாமரைத்
தடத்துக் கெண்டையைக் கண்டு சுழன்று
தரித்துச் சிறகை விரித்தடித் துக்கொண் (டிந்தா) (91.1)

 

(2) வெள்ளெரு தேறுங் குடந்தைத் தெருவினில்
வீதி வருஞ்சோம நாதர்செய் யுக்குள்
கள்ளத் திருககையைப் புள்ளிறாஞ் சிககொத்திக்
கக்கிக்கக் கியென்று கூக்குரற் போட்டுக்கொண் (டிந்தா) (91.2)

 

------------- 

 

92 

கண்ணி பதித்தல்

கட்டளைக் கலித்துறை

 

கோங்கா ரிதழிச் சடையார் விடையார் குடந்தைவெற்பில்
ஆங்காரச சிங்க னதட்டாம னின்றுகொண் டட்டதிக்கும்
தீங்கா முனைமுட் செறித்ததிற் பட்சி செறியும்வண்ணம்
பாங்காருங் காவயல் பார்த்தார்த்துக் கண்ணி பதித்தனனே. (92)

 

(கு - ரை.) கோங்கு ஆர் இதழி-மணம் மிகுந்த கொன்றை;
கோங்கு:விகாரம். கா வயல் - காவும் வயலும்; கா - சோலை.

 

-------------

 

93 
ராகம்:பல்லவி 

 

கண்ணி பதிப்பேனையே - பறவைக்
கண்ணி பதிப்பேனையே.

 

சரணங்கள்

 

(1) நச்சர வும்வெள் ளெலும்பு மணிந்தவர்
நாக மடந்தை பாகர் செய்யுக்குள் 
பச்சைத்தா ராவுக்கு மயிலைக் கண்ணியைப்
பரப்பியே கெம்பிப் பாய்ந்து பதுங்கிப் (கண்ணி) (93.1)

 

(2) கடுவுண்ணுங் கண்டர் குடந்தையி லந்திக்
காப்பழகர் புழுகுக் காப்புச் செய்யுக்குள்
சடுதியிற் கொக்கு வக்கா நாரையைத்
தப்பவொட் டாமலே மப்புத் தட்டிக்கொண்டு (கண்ணி) (93.2)

 

(கு-ரை.) (1) நாக மடந்தை-மலைமகள். தாரா-ஒரு பறவை. (2) புழுகுக்காப்புச்செய்-புனுகு அபிடேகத்திற்கு
மானியாக விட்ட நிலம்.

 

94 பறவை படுத்தல்

வெண்பா

 

சீலர் புகழ்குடந்தைச் சேவற் பதாகையன்கை
வேல்கண் டசுரர் விலகல்போற்-சேல்பறவை
வான்கூக குரல்போட்டு வட்டமிட்டுத் தெட்டிடுநீ
தான் கூப்பி ராரையேயென் றான். (94)

 

(கு-ரை.) சேவல் பதாகையன்-முருகன்; பதாகை- 
கொடி. தெட்டிடும்-ஏமாற்றிவிடும். கூப்பிராரையே-கூப்பிடா
தே ஐயே என்பதன் சிதைவு.

 

-------------

 

95 
ராகம்:பல்லவி

 

கூப்பிராரையே-பொறு பொறு
கூப்பிராரையே.

 

சரணங்கள்

 

(1) அக்கர வம்புனை முக்கணர் குடந்தை
ஆதி கும்பநாத ரன்ன வயலிலே
சிக்கிய பக்கியை மொக்கிடத் தாரேன்
தித்திக்கு முள்ளா னெத்திப்போட் டோடிப்போம் (கூப்பி) (95.1)

 

(2) எல்லையெல் லாங் கண்ட ஏழைபங் காளர்
ஈசர் குடந்தைக்கும் பேசர் வயலிலே
சில்லைக்கோ லைப்பிடி பிடியடா வந்தச்
சிட்டுக் குருவிமார்பிற் குட்டுப்போட் டோடிப்போம் (கூப்பி) (95.2)

 

(கு - ரை.) (1) மொக்கிட-உண்ண. உள்ளான்-ஒரு பறவை.

 

---------------

 

96 
கட்டளைக் கலித்துறை

 

வண்ணஞ் சுவைவா சனைதா னறிந்தூன் மகிழ்ந்தளித்த‌
திண்ணன் றனக்கருள் செய்குடந் தாபுரிச் செம்மல்வெற்பில்
கண்ணன் வளைபோற் பலவளை யார்வயற் கட்பதித்த‌
கண்ணிக்குட் சிக்கிக் கிடக்கும் பறவை கணக்கில்லையே, (96)

 

(கு - ரை.) திண்ணன்-கண்ணப்பநாயனார். கண்ணன-திருமால். வளை-சங்கு.

 

---------------

 

97 
ராகம்:பல்லவி

 

சிக்கிச் சடையே - பறவைகள் - சிக்கிச்சடையே.

 

சரணங்கள்

 

(1) வேளைத் தருதிருக் குடந்தை யம்பதி
விமல ராரா வமுதர்செய் யுக்குள்ளே

 

(கு - ரை.) (1) வேள்-முருகக்கடவுள். நீளத்தி லேயோடித் 
தளைபோ லங்கங்கே நின்ற பறவைக ணின்ற நின்றிடத்தில் (சிக்கிச்சடையே)

(2) மன்னு புகழ்திருக் குடந்தை யம்பதி வாச ராதிகும் பேசர் வரையில்
அன்னங் களுமடை யானுஞ் சேனைகோடி
அறுபத்து மூவா பேறுபெற்ற செய்க்குள் (சிக்கிச்சடையே)

 

---------------- 

 

98 சிங்கன் குறத்தியைத் தேடி வருதல்

விருத்தம்

 

நதிச்சடிலர் புரத்தினைமுன் நகைத்தெரிசெய்
        குடத்தமுத நாதர் நாட்டில்
பதைத்துவய லிடத்திலொரு பகற்பொழுது
        மயக்குகண்ணி பதித்தே பார்த்துக்
கொதித்தெயிறு கடித்துருவு சுருக்கிறுகு
        சிறுபறவை கொண்டு வந்தேன்
எதிர்த்துமுலை முகட்டிலணைத் திறுக்குகுறத்
        தியைக்காணே னென்செய் வேனே. (98)

 

-------------- 

 

99 
ராகம்:பல்லவி

 

காணேன் சிங்கியைக் காணேனே
கண்ட துண்டோ சொல்லையே.

 

அனுபல்லவி

 

சேணாடருக் கமுதர் பத்தர் பரா
தீனா நாட்டிலென்றென் மானுபாவியைக் கண்ணிற். (காணேன்)

 

சரணங்கள்

 

(1) கிண்ணிமுலைச்சி யென்வார்த்தை கேளே னென்றாளே
கெருவமிஞ்சிக் கலைப்பார்சொற் கேட்கச் சென்றாளே
கண்ணைக்காட்டி முகத்தைக் காட்டி வென்றாளே
நாமப் பயல்கையிற் காட்டிக் கடக்கநின்றாளே (காணேன்) (99.1)

 

(2)
திக்கெங்கும் பிரமிக்கச் சென்ம மெடுத்தாளே
தெய்வமென் றென்னைப்பூசை செய்யத் தொடுத்தாளே
கைக்கொடுங் கைக்குள் ளிருந்துகடு கடுத்தாளே
கன்னெஞ்சி யென்னை நட்டாற்றிற கையை விடுத்தாளே (காணேன்) (99.2)

 

(3)
வள்ளல்கும் பேசர்பேரை மனதிற் கொண்டாளே
மாயக்கள்ளி ஒருவருக்கும் வர்மஞ் சொல்லாளே
புள்ளினங்கள் பிடிக்கப் போய்வா வென்றாளே
போகவிட் டென்னையவள் புறக்கணித்தாளே (காணேன்) (99.3)

 

(கு-ரை.)மானுபாவி -மஹானுபாவி, அதிக தேஜஸ் உடையவள்.

 

------------ 

 

100 
விருத்தம்

 

கங்குற் கறைமிடற்றர் கண்ணுதலார் தென்குடந்தை
மங்கைக் குரிய மணவாளர் மாநகரில்
எங்கட் கினிய வியலார் புயன்மேனிச்
சிங்கிக் கடையாளஞ் செப்பலுற்றான் சிங்கனுமே. (100)

 

(கு-ரை.) புயன்மேனி - மேகம் போன்ற கருநிறமுடைய

 

--------------

 

101 
ராகம்:பல்லவி

 

சிங்கிக் கடையாளஞ் சொல்லக்கே ளையே

 

அனுபல்லவி

 

கங்கா தரர்கும்ப லிங்கர்நன் னாட்டினிற்
கண்ணாட்டியைப்போற் கண்டதுண் டோவென்னையே (சிங்கிக்)

 

சரணங்கள்

 

(1)
சிரித்த முகமலர் முளைத்த தனகிரி
சுருட்டு மயிர்கன முருக்க மலரிதழ்
கறுத்த விழிகண்ணைப் பறிக்க வருசின்னச்
சிறுக்கி யவளதனக் கிறுத்த குடிநான் (சிங்கிக்) (101.1)

 

(2)
கழுத்தின் மணிசங்க மிழைக்கு நிகரிடை
கழைக்கு நிகர்மொழி கொழுத்த குமரி
குழைக்கு நிகர்வள்ளை முழுக்கறு வல்வெகு
பழக்க மவள்தனக் குழைத்த குடிநான் (சிங்கிக்) (101.2)

 

(3)
விடைக்குள் வருகறை மிடற்ற ரமுதுறு
குடத்த ரழகிய நடத்தர் வரையினில்
படுக்கை தனினினை வெடுத்த லறுமெனைக்
கெடுக்க நினையன் நடைச்சி யாமென (சிங்கிக்) (101.3)

 

(கு-ரை.) (2) இழைக்கு நிகர் இடை - இடை நூலிழைக்கு ஒப்பாகும். கழை - கரும்பு. குழை - காதணி; காதிற்கு ஆகுபெயர். வள்ளை - ஒரு கொடி. முழுக்கறுவல் - முற்றும் கருநிற முடையவள். (3) விடை - காளை. கறைமிடற்றர் - விடம் 
பொருந்திய கழுத்தையுடையவர். அன நடைச்சி - அன்னநடையினள்.

 

-------------

 

102 
விருத்தம்

 

பரிவாய்நான் கொண்டுவந்த பட்சிகளெல் லாஞ்சமைத்துத்
தருவா ளெனக்கினியர் தண்குடந்தை நன்னாட்டில்
தெருவாச னின்றுகுறி செப்பவரு சிங்கிக்குச்
சரியா யொருவரையித் தாரணியிற் கண்டிலனே. (102)

 

----------- 

 

103 
ராகம்:பல்லவி

 

சிங்கிக்குச் சரியான பேரிந்தச்
செகத்தி லில்லையடையே. 

 

அனுபல்லவி

 

மங்கை மணாளர் கும்பேசரைத் துதிசெய்து
வருவாளே முத்தந் தருவாளேயென் (சிங்கிக்கு)

 

சரணங்கள்

 

(1) கறிக்குப் புள்ளினங்களை நெய்யினிற் பொரிப்பாள்
கலத்திற் பகுத்துநின்று மிகவுப சரிப்பாள்
சுறுக்கிலுண் டெழுந்திரு டாவென்று கரிப்பாள்
சுரதத்தி னாலிளைத்தாற் கையை நெரிப்பாள் (சிங்கிக்கு) (103.1)

 

(2) வந்தவழியில் வந்தென் காலடி பிடிப்பாள்
மனங்கலங் கிச்சிறுக்கி சினந்துபற் கடிப்பாள்
பந்துமு லைதிறந்தே கைவிரல் நொடிப்பாள்
பயலேயென் றெத்தனை தோதகம் படிப்பாள் (சிங்கிக்கு) (103.2)

 

(3) கருதி யொருவர்பேர் நாம மெடாளே
கலவியி லொன்றரைச் சாமம் விடாளே
பரபுரு டரைக்கையி னாலே தொடாளே
பாதகி யென்னைவிட்டுத் தனியே படாளே (சிங்கிக்கு) (103.3)

 

(கு -ரை.) 1. கலத்தில்-பரிகலத்தில், இலையில் அல்லடய் தட்டில்; 107. சுரதத்தில்-போகத்தில். தோதகம்-சாலவித்தை.

 

--------------

 

104 
விருத்தம்

 

சட்ட முறுகுடந்தைச் சங்கரனார் நாட்டிலென்றன்
கட்டழகி சிங்கிதனைக் காட்டிலுனக் கிவ்வுலகில்
அட்ட கரும மருத்துமுத லானவெல்லாம்
இட்ட முடன் றருவே னென்றான்சிங் கேந்திரனே. (104)

 

(கு - ரை.) சட்டம்-கட்டளைத் திட்டம். மருத்து-மருந்து.

 

------------------------------

 

105 
ராகம்:பல்லவி

 

என்ன வேணும தெல்லாந் தாறேனென்
இங்கிதச் சிங்கியைக் காட்டடையே.

 

அனுபல்லவி

 

பன்ன காபரணர் கும்பலிங் கேசர்
பதியினிற் கிடையாத வதிசய மருந்துகள் (என்ன)

சரணங்கள்

 

(1)
கன்னியர்பின் னேதொடரக் கைமருந் துண்டுதாறேன்
கல்லைநீ ராளமாகக் கரைக்கவும் வேர்தாறேன்
வன்னியைக் குளிரநல்ல மருந்துபச் சிலைதாறேன்
மலடிகள் பிள்ளைபெற மதுரவிழ்தந் தாறேன் (என்ன) (105.1)

 

(2)
ராச வசீரமான நரிக்கொம்பு நான்தாறேன்
நரைத்தமயிர் கறுத்துவரவே நல்ல மாத்திரை தாறேன்
வேசியர்கள் காசில்லாமல் விரும்புபச் சிலைதாறேன்
விழுந்துதாளம் போடுமுலை விம்மிநெருக்க வேர்தாறேன் (என்ன) (105.2)

 

(3)
அஞ்சன விதங்களுண் டனேக முறைகள்தாறேன்
ஆதிகும்ப நாதசுவாமி அருள்வெண் ணீறுந் தாறேன்
நஞ்ச மமுதாக நல்லவே ருந்தாறேன்
நவநாதசித்தர் மூலிகையு நானுமக்குத் தாறேன் (என்ன) (105.3)

 

(கு-ரை.) 1. நீராளம் ஆக - நீர்த்தன்மைபெற. வன்னி - நெருப்பு. 2. வசீரம் - வசீகரம்.

 

---------

 

106 
விருத்தம்

 

கொற்ற மதிற்குடந்தைக் கும்பேசர் நன்னாட்டில்
பற்றிவரு மாதர்கள்கை பார்த்துக் குறிபார்த்தே
அற்ற மிலாதுகுறி யாய்ந்துரைக்க வந்தசிங்கி
உற்றதுணை யென்றேற் கொருவார்த்தை சொல்லுகவே. (106)

 

(கு-ரை.) அற்றம் - சோர்வு.

 

--------- 

 

107 

 

(1)
உற்றதுணை யென்றுமெத்த
மெத்தவுந்தா னாகவிருந் தேனே - யெங்கும்
ஓலையிட்டல் லேசங்குத் 
தாலியுமென் கையாற் கட்டி னேனே. (107.1)

 

(2)
தற்சொரூப மகளைப்போல்
சொற்பனத்திற் காணுதுமெய் தானே - எங்கள்
சங்கரர் குடந்தைக்கும்ப
லிங்கருடன் சொல்லிப்பிடிப் பேனே. (107.2)

 

(3)
ஆதிநாள் முதலாய்ப் பங்கு
பாதியாய் ஓர் கலத்திலுண் டேனே - இவள்
ஆனாலும் கன்னியென்று
நானாக அறிந்துகொண் டேனே. (107.3)

 

(4)
போதுமெனப் பத்தரைச்சங்
கேதக் குதிரை பரிசமிட்டேனே - அந்தப்
பொல்லாத நீலியொன்றுஞ்
சொல்லாம லேபிரியவிட் டாளே. (107.4)

 

------------- 

 

108 சிங்கனும் குறத்தியும் உரையாடல்

விருத்தம்

 

கனகமலைச் சிலையாளர் குடந்தை நாட்டிற்
கட்சிசெறி பட்சிகட்குக் கண்ணி வைத்து
இனிதுவரும் பட்சிசில்லாக் கோலி லேற்றி
யெட்டியெட்டிக் கிட்டிநடந் தேறப் பார்த்து

மனதுமிகச் சலித்தலுத்தா வலித்துச் சிங்கன்
மனவணிசேர் சிங்கிதனை மகிழ்ந்து நோக்கி
எனதுகுறக் குடிசைவிட்டிங் கேன்வந் தாயென்
றேசுவா னவளுமெதிர் பேசுவாளே. (108)

 

(கு-ரை.) கட்சி - கூடு. சலித்து அலுத்து ஆவலித்து. மனவு அணி - சங்கு மணியாலான ஆபரணம்.

 

------------

 

109 

 

(1)
தேசதே சமெங்குஞ் சித்தப்பிர மைகொண்டு
தேடியலைந்தேண்டி சிங்கி.
தேடிப் புதைத்தது கோடிக்கு மேலே
சிலவான மல்லவடா சிங்கா. (109.1)

 

(2)
சங்கர னார்கும்ப லிங்கர்நன் னாட்டினில்
தனிவழி வருவானேன் சிங்கி?
தான்கள்ளன் பிறரையேன் நம்புவா னென்முன்
றானையே காவலடா சிங்கா. (109.2)

 

(3)
முன்றானைக் காவலாய் வந்த வுனக்கு
முகவாட்ட மென்னடி சிங்கி?
முன்னெதிர் வெய்யிலில் வந்த விகாரம்
முகத்திற் றேணுதடா சிங்கா. (109.3)

 

(4)
அன்னமே யுன்னத ரத்திலென் னையல்லாமல்
ஆர்குறி வைத்தாரடி சிங்கி?
ஐங்கணை வேளை யதட்டி யெயிற்றை
அதுக்கிச் சுவைத்ததடா சிங்கா. (109.4)

 

(5)
நின்னிரு தோளின் முலையிற் குறியேது
நிலவர மாய்ச்சொல்லடி சிங்கி?
நின்கைப் பிடிபோ லென்கையா லுன்னை
நினைத்துப் பிடித்ததடா சிங்கா. (109.5)

 

(6)
கள்ளத் தனத்தைவிட் டுள்ளத்தைச் சொல்வெள்ளைக்
கலை..... னேண்டி சிங்கி?
கண்ணுக்கு ளுன்னைப் போலே போகங்
கண்டு...... சிங்கா. (109.6)

 

(7)
பேதைப்பெண் ணேயுன்றன் மெய்யினிற் பொன்வண்டு
பெருகமொய்ப் பானேண்டி சிங்கி?
பேருல கினின்மட வார்க்குக் குறிசொல்லிப்
பெற்ற பணத்தினடா சிங்கா. (109.7)

 

(8)
பாதகி நீஎன்னை விட்டுப் பிரிந்து
பரதேசம் போவானேன் சிங்கி?
பக்குவத் திலொரு சக்களத் திவாய்
பார்த்துமிருப் பேனோடா சிங்கா. (109.8)

 

(9)
பித்த னடிபிழை எத்தனை செய்தாலும்
குற்றமாய்க் கொள்ளாதே சிங்கி?
பிள்ளைத் தாச்சியொரு கள்ளக் குறத்தியைப்
பெண்டு பிடிப்பேண்டா சிங்கா. (109.9)

 

(10)
சுற்றத்துக் கேமுறி யெழுதுவே னென்று
சொன்னசொன் மெய்யாமே சிங்கி?
தோஷ பாவமில்லை யெங்கே வேணுமங்கே
சொல்லித்தா றேன்வர்டா சிங்கா. (109.10)

 

(11)
அடிக்கடிக் கப்பந்து விசைகொண்ட ஞாயம்போல்
ஆசை வளருதடி சிங்கி.
ஆசாரக் கள்ளாநீ யெங்கே யிருந்தாயென்
ஆமக்க னாமெனவே சிங்கா. (109.11)

 

(12)
இன்பத்தை நாடி இருவருங் கூடி
இணங்கியிருப் போம்வா சிங்கி.
ஈசர் குடந்தைக்கும் பேச ரறிய
இணங்கி யிருப்போம் வா சிங்கா. (109.12)

 

(13)
புன்னைப்பூ மணக்கும் பூங்குடி சைக்குட்
பொருந்தி யிருப்போம்வா சிங்கி.
பூசா பலத்தினா லாசையெல் லாந்தீர
பு......மடவாடா சிங்கா. (109.13)

 

(14)
கும்பநா தர்பேரைக் கொண்டாடிக் கொண்டாடிக்
கும்மி யடிப்போம்வா சிங்கி.
கொங்கைக் குடமசைய மங்கைச்சி பெயர்சொல்லிக்
கும்மி யடிப்போம் வா சிங்கா. (109.14)

 

(கு-ரை.) 7. பொன்வண்டு - பொன்னால் இயன்ற நகைகளைப் பொன் வண்டு என்றான்: வண்டு - வளையலுமாம். 10. முறி - ஓலை. 11. ஆமக்கன் - கணவன்.

 

------ 

 

110 கும்பேசர் பவனி வரல்

விருத்தம்

 

இவ்விதம் சிங்கன் சிங்கி
இருவரும் பாடி யாடித்
திவ்வியா னந்த மாகிச்
சிறந்தினி திருக்கும் வேளை
கவ்வையி லிருவ ருக்குங்
காட்சிதந் தருள வேண்டி
நவ்வியங் கரத்தார் கும்ப
நாயகர் வருகின் றாரே. (110)

 

(கு-ரை.) கவ்வை இல் - துன்பமற்ற, பழியற்ற. நவ்வி - மான்.

 

--------------------------------

 

111 
ராகம்:பல்லவி

 

ஆதிகும்ப நாதர் வந்தார் - மங்கையுடனே
ஆதிகும்ப நாதர் வந்தார்.

 

அனுபல்லவி

 

தாதுல வும்பொழில்சூழ் - சைவக்குடந்தை நாட்டில்
தந்திரர் கின்னரர் அந்தரர் இந்திரர்
துந்துமி யிசையுடன் வந்தனை செய்திட (ஆதி)

 

சரணங்கள்

 

(1)
தேவர்முனிவர் பாட - அரம்பையர்கள்
ஆவலுடனே யாட
தாவில் சபையில்நெறி மேவு மடியவர்கள்
தந்திர முறைசொல்லி மந்திர முரைசெய
விந்தை நடனஞ்செய்து சுந்தர மாகவே (ஆதி) (111.1)

 

(2)
சோதிமகுட மின்னவே - மார்பிலணிந்து
துலங்குகேயூரந் துன்னவே
மாதொரு புடைமன்ன மனிதர்கள் துதிபண்ண
வஞ்சமில் விஞ்சையர் ரஞ்சித மாகவி
பஞ்சி முறைத்தொழில் வஞ்சியர் பாடிட (ஆதி) (111.2)

 

(3)
பங்கயச்செங்கை யாடவே - மதுரமொழிப்
பாவையர்களிசை பாடவே
சங்கிதமுடனேஆடத் துங்கமிகு மன்புநீட
சங்கரி மங்கையோர் பங்கி லமர்ந்தருள்
சங்கர னிங்கித மங்கள மாகவே (ஆதி) (111.3)

 

(கு-ரை.) தாது - தேன், பூந்தாது. ரஞ்சிதம் - இன்பம். விபஞ்சிமுறைத்தொழில் - வீணைமீட்டிப்பாடுதல். சங்கிதம்- சங்கீதம்; விகாரம்.

 

------- 

 

112 ஸ்ரீ கும்பேசர் தரிசனம் அருளுதல்

ராகம்:பல்லவி

 

தரிசனம் தந்தாரே - சகலருக்கும்
தரிசனம் தந்தாரே

 

(1)
அரச ரனுதினமும் பரசுந் திருக்குடந்தை
அண்ணல் கும்பலிங்கேசர்
விண்ணவர் முதல்யாவர்க்கும் (தரிச) (112.1)

 

(2)
சரியை கிரியைவழி தப்பா திருப்பவர்க்கு
வரிசையுடன் சற்புத்திர வரமுரிமை யிற்றந்து (தரிச) (112.2)

 

(3)
யோக ஞானவழி யுற்றவர் தங்கட்கு
வாகுடன் சம்பத்து வகையுடன் தாமீந்து (தரிச) (112.3)

 

(4)
மேலான ஞானபத மேவி யிருந்தவர்க்குச்
சீல முடன்றமது செல்வ மனைந்துந்தந்து (தரிச) (112.4)

 

------

 

113 
வாழ்த்து

விருத்தம்

தேவர்கள் முனிவர் வாழி
செங்கோலுங் குடியும் வாழி
நாவலர் துதிக்குங் கும்ப
நாதனார் தாமும் வாழி
மாவடு வகிருண் கண்ணாள்
மங்கைநா யகியார் வாழி
பாவவி நாசர் தந்த
பைந்தமிழ் வாழி தானே. (113)

 

(கு-ரை.) பாவவிநாசர் - கும்பேசர்; இது இந்நூலாசிரியரின் முத்திரை.

 

------------

 

114 
வேறு

 

பூமலியுந் தடக்குடந்தைக் கோயில் வாழி
        புகழ்தானம் பரிகலம்பொன் பொருந்தி வாழி
வாமபா கத்தினிற்செஞ் சடையின் மேவு
        மங்கைகங்கை யாள்நாலு மறையும் வாழி
ஈமமதி லாடியசங் கரனா ரீன்ற
        இளையபிள்ளை மூத்தபிள்ளை இருவோ ருக்கும்
மாமன்வேங் கடாசலம் வாழி வாழி
        மற்றுமுள்ள பேருநிதம் வாழி தானே. (114)

 

(கு-ரை.) மாமன் - தாய்மாமன்; வேங்கடாசலம் - ஆராவ முதப் பெருமாள்; உமையவள் திருமாலின் சகோதரி என்ற வழக்குப்பற்றி மாமன் என்றார்.

கும்பேசர் குறவஞ்சி நாடகம் முற்றும்.

 

Related Content

চন্দ্রচূডালাষ্টকম - Chandrachoodaalaa Ashtakam

শ্রী শিবরাত্রি ব্রত পূজাবিধি - Shivaratri vrata - How to obs

শ্রী শোণাদ্রিনাথাষ্টকম - shri shonadrinathashtakam

কল্কি কৃতম শিৱস্তোত্র - kalki kritam shivastotra

শিৱ স্তৱঃ - shiva stavah