logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தச ச்லோகீ ஸ்துதி - சங்கரர் - தமிழ் உரை - ஞானானந்த பாரதீ

॥ दशश्लोकी ॥
த³ஶஶ்லோகீ 
ஸ்ரீ சங்கரபகவத்பாதாசார்யர் அருளியது.

[ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசாரியாரவர்கள் காலடியில் ஆதுர ஸந்யாஸக்கிரம ப்படி ஸநியாஸம் செய்து குருமுகமாய் பிரணவ மஹா வாக்கியங்களை கிரஹிக்க வேண்டும் என்ற ஸம்பிரதாயத்தை அனுஸரித்து அங்கிருந்து புறப்பட்டு நர்மதா தீரம் போய் அங்கு ஸமாதி நிஷ்டையிலிருந்த ஸ்ரீமத் கோவிந்த பகவத்பாதாசாரியார் அவர்களை துதித்ததின்பேரில் அவர் பஹிர்முகமாகி ஸ்ரீசங்கரரை பார்த்து “நீர் யார்?" என்று கேட்டதாகவும், அதற்கு இவர் உடனே ஆத்ம தத்துவத்தை விளக்கக்கூடிய தான இந்த பத்து சுலோகங்களால் பதில் சொன்னதாகவும் அதன் பேரில் அந்த யோகி இவருக்கு உபதேசங்கள் செய்து அனுகிரஹித்தார் என்றும் ஸ்ரீமத் சங்கர விஜயம் கூறுகிறது. ஆத்மாவின் ஸ்வரூபம் இவ்விதமென்று குறிப்பிட்டு காட்டமுடியாத காரணத்தினாலேயே வேதமும், “இது அல்ல, இது அல்ல” என்று நிஷேதமுறையிலேயே எடுத்துச் சொல்லியிருப்பதை அனுசரித்து இந்த சுலோகங்க ளும் அமைந்திருக்கின்றன. கடைசி சுலோகத்தில் ஆத்ம தத்துவத்தை எப்படித்தான் சொல்லமுடியும் என்றும் கண்டிருக்கிறார். ஆத்ம ஞானம்தான் எல்லா துன்பங்க ளையும் போக்குகிறது. 'அஹம்' (நான்) என்ற சொல்லின் பொருள்தான் ஆத்மா. எது ஆத்மா? எது அனாத்மா?. என்று. தெரியாததால் ஆத்மாவையும் அனாத்மாக்களையும் சேர்த்தே நான் என்று சொல்கிறோம். அதாவது. பிராந்தியால் அனாத்மாக்களையும் ஆத்மா என்றே எண்ணுகிறோம். இச்சிறிய நூலில் அனாத்ம வஸ்துக்களைக் குறிப்பி ட்டு இவைகள் நானல்ல என்று கூறுவதனால் ஆத்மானாத்ம விவேகம் ஏற்பட்டு சுத்தமான ஆத்மாவை அறியமுடிகிறது. ஜீவாத்மாவைப்பற்றி பிறவாதிகள் சொல்லும் பக்ஷங்களை கண்டித்து விட்டு சுத்த சைதன்யமே ஆத்மா என்ற உபநிஷத் சித்தாந்தத்தை உபதேசிக்கிறார். இச்சிறிய கிரந்தத்தின் காம்பீர்யத்தை விளக்கி "அத்வைத ஸித்தி" எழுதி இருக்கும் ஸ்ரீ மதுஸூதன ஸரஸ்வதி ஸ்வாமிகள் 'ஸித்தாந்தபிந்து' என்றதோர் பிரஸித்தமான வியாக்யானத்தை எழுதி இருக்கிறார். அந்த வியாக்கியானத்தின் பேரிலேயே குறைந்தது ஐந்து வியாக்கியானங்கள் ஏற்பட்டிருக்கிறபடியால். அதன் மஹிமையும் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீமத் ஆச்சார்யாரவர்களின் பிரகரணங்களைத் தமிழ் நடையில் ஸாமான்ய ஜனங்கள்கூட அறிந்து கொள்ளகூடிய முறையில் பிரசுரிப்பதே ஸ்ரீ சங்கர ஸேவா ஸமிதியின் கிரந்தமாலாவின் உத்தேசமாயிருப்பதால் அவ்வியாக்கியானங்களில் கடை விஷயங்களை இங்கே எடுத்துச் சொல்வது பிரஸித்தமாகாது. ஆகையால் “த³ஶஶ்லோகீ” மூலத்தின் தாத்பரியத்தை மாத்திரம் இங்கு விளக்கப்படுகிறது.]


न भूमिर्न तोयं न तेजो न वायुः 
न खं नेन्द्रियं वा न तेषां समूहः । 
अनेकान्तिकत्वात सुषुप्त्यैकसिद्धः 
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ १ ॥ 
ந பூ⁴மிர்ன தோயம் ந தேஜோ ந வாயு꞉
ந க²ம் நேந்த்³ரியம் வா ந தேஷாம் ஸமூஹ꞉ ।
அனேகாந்திகத்வாத ஸுஷுப்த்யைகஸித்³த⁴꞉
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 1 ॥

"நான் பூமியல்ல, ஜலமல்ல, தேஜஸ் அல்ல வாயுவல்ல, ஆகாசமல்ல, இந்திரி யமல்ல அவைகளின் கூட்டமுமல்ல, அவைகள் ஒரே நிலையில் இல்லாததால் நல்ல தூக்கத்தில் மாத்திரம் தெரிகிற தனித்து ஒன்றாய் மிஞ்சினதாய் ஸர்வமங்களமாய் விளங்கும் தத்துவமே நான்.”

"நான்" என்று சகல ஜனங்களும் வியவஹாரம் செய்வதினால் “நான்” என்ற பதார்த்தம் பிரஸித்தம் என்பதில் ஸந்தேகமில்லை. ஆனால் “நான்'' பெறுமனாக இருக்கிறேன்” “நான் இளைத்துவிட்டேன்" “நான் பார்க்கிறேன்” “நான் நடக்கிறேன்” ”நான் நினைக்கிறேன்” என்றெல்லாம் சொல்வதால் அந்த “நான்” என்பது யார் என்ற விஷயத்தில் ஸந்தேகம் ஏற்படுகிறது "இந்த ஸ்தூல சரீரம் நானா" “இந்திரியங்கள் நானா“ “மனஸ் நானா“ “எல்லாம் சேர்ந்து நானா" என்று விசாரிக்கையில் பாமர ஜனங்களின் வியவஹாரத்தையொட்டி "சரீரம்தான் நான்” என்று சார்வாகன் சொல் லுகிறான். சரீரம் ஜடம். அதை சேஷ்டிக்கும்படி செய்வது இந்திரியம்தான். ஆகையால் அதுதான் "நான்" என்று இன்னொருவன் சொல்லுகிறான். இந்திரியங்களும் மனசும் இல்லாமல் போனால் சேஷ்டிக்காததினால் "மனஸ்தான் நான்” என்று சொல்லுகிறார் கள் சிலர். மனசும் ஜடம்தான் என்று சொல்லி அதைவிட சூக்ஷ்மமான வேறு தத்துவங்கள் “நான்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள். சரீரம், ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் இவ்வைந்து பூதங்களால் செய்யப்பட்டிருப்பதுடன் தூங்கும் போது இந்த சரீரம் இருப்பதாகவே பிரக்ஞையில்லாமல் மனஸினாலேயே ஒரு உலகத்தை சிருஷ்டி செய்துகொண்டு ஸ்வப்னத்தில் ஸுகதுக்கானுபவங்கள் இருப்ப தாலும் அந்த நான் விழித்துக் கொண்டிருக்கும்போது இந்த ஜகத்தைப் பார்த்தேனோ அதே நான் ஸ்வப்ன உலகத்தையும் பார்த்தேன். அதே நான் ஸுஷுப்தி உலகத்தை யும் அனுபவித்தேன் என்று சொல்லமுடிகிறபடியாலும், முக்காலங்களிலும் அதா வது சரீரம், மனஸு இவைகள் இருந்தாலும், இல்லாமல் போனாலும் நான் மாத்திரம் இருந்து கொண்டவனாய் மிஞ்சி இருக்கும் தத்துவமே “நான்” என்று ஸ்ரீமத் ஆச்சாரியாளின் தாத்பர்யம்.

ஸ்ரீ கோவிந்த பகவத்பாதருடைய கேள்விக்கு தான் யார் என்று ஜீவனுடைய வாஸ்தவ ஸ்வரூபத்தை எடுத்துச் சொல்லவே இந்த சுலோகங்கள் ஏற்பட்ட போதி லும் தன்னுடைய அவதார ரகஸ்யத்தை வெளியிட்டு "ஜகத்பூறாவையும் உபஸம்ஹாரம் செய்த பிறகு ஒருவனாய் தனித்து மிஞ்சும் பரமேஸ்வரன் நான். இப்போது கைலாஸபதி, உமாபதி என்ற விசேஷங்களை எல்லாம் விட்டுவிட்டு ஸர்வ ஸங்க பரித்யாகம் செய்து ஏகாகியாய் வந்திருக்கும் “சிவன் நான்" என்று குறிப்பிடுவது போலும் த்வனிக்கிறது.

"நான் பஞ்சபூதங்கள் அல்ல, இந்திரியம் அல்ல. அவைகளின் கூட்டம் அல்ல" என்பதை மாற்றி "பஞ்சபூதங்கள் நான் அல்ல இந்திரியங்கள் நான் அல்ல” ‘அவைகளின் கூட்டம் நான் அல்ல' என்றும் அன்வயம் செய்துகொள்ளலாம். இந்த சுலோகத்தில் சார்வாகன், பௌத்தன், ஜைனன், நையாயிகன், மீமாம்ஸகன் ஸாங்கி யர் முதலானவர்களின் முதலானவர்களின் மதம் மறுக்கப்படுகிறது.

(அவதாரிகை) “சரீரம் நான் அல்ல” என்றால், வேதத்தில் பிராம்மணனுக்கு இந்த வயதில் உபநயனம் க்ஷத்திரியனுக்கு இந்த வயதில் உபநயனம் என்றெல்லாம் சரீரத்தை ஒட்டியேதான் விதிக்கப்பட்டிருக்கும் பலவித ஸம்ஸ்காரங்கள் அகர்தா வான ஆத்மாவிற்கு ஸம்ஸ்காரங்களாக எப்படியாகும்? அப்பொழுது வேதம் அப்பிர மாணமாகிவிடும். அதிலிருந்து ப்ரஹ்மஸ்வரூபம் எப்படி ஸித்திக்கும்? யமநியமாதி களை விதிக்கும் சாஸ்திரத்துக்கு போக்கு என்ன? என்று கேட்டால் சரீரீத்தில் நான் என்று எண்ணம் இருக்கிறவரையில்தான் ஸகலவித ஸம்ஸ்காரங்களும், சித்தத்தை நிலைநிறுத்தி தியானம் செய்வதும், சிரவணாதிகளை செய்து ஞானம் சம்பாதிப்பதும் அவசியமாகும். அதுவரை வேதோக்தமான ஸர்வஸாதனங்களும் அனுஷ்டிக்கப்பட வேண்டியதுதான். வேதம் பிரமாணம்தான். ஆனால் அவைகளினால் ஸாதிக்கப்பட வேண்டியதான ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டுவிட்டால் இவைகள் தேவையில்லை என்பதை அடுத்த சுலோகத்தில் காட்டுகிறார்.

न वर्णा न वर्णाश्रमाचारधर्मा
न मे धारणाध्यानयोगादयोऽपि ।
अनात्माश्रयाहंममाध्यासहानात्
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ २ ॥
ந வர்ணா ந வர்ணாஶ்ரமாசாரத⁴ர்மா
ந மே தா⁴ரணாத்⁴யானயோகா³த³யோ(அ)பி ।
அனாத்மாஶ்ரயாஹம்மமாத்⁴யாஸஹானாத்
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 2 ॥

"என்னிடம் வர்ணங்கள் (ஜாதிகள்) கிடையாது. வர்ணங்களையொட்டிய ஆசிரம ங்களோ, ஆசாரங்களோ, தர்மங்களோ கிடையாது. எனக்குத் தாரணையோ, தியான மோ, யோகமோ மற்றும் எந்தவித ஸாதனமோ, கிடையாது. ஆத்தாவல்லாததை (சரீராதிகளை) ஒட்டிய “நான், எனது” என்ற அத்யாஸத்தை விலக்கிவிட்டபடியால் ஒருவனாய் மிஞ்சினவனாய் தனித்திருக்கும். மங்கள ரூபியான தத்துவமே “நான்".

இங்கு பிராஹ்மண்யம் முதலானவை வர்ணம். பிரஹ்மசர்யம் முதலானவை ஆசிரமம். ஸ்னானம், சௌசம், முதலானவை ஆசாரம். குருஸேவை முதலியவை தர்மம் மனதை பிரஹ்மத்தில் நிறுத்துவது தாரணா. பரமாத்மசிந்தனம் தியானம். மனோவிருத்திகளையடக்குவது யோகம், சிரவணம், மனனம் முதலானவை.

 சரீரத்தில் நான் என்கிற எண்ணமிருக்கும்வரையில் சரீரத்துக்கு வெளியிலு ள்ள பதார்த்தங்களில் தனக்கு அனுகூலமானது தனக்கு பிரதிகூலமானது. என்கிற எண்ணம் இருந்தேதீரும். அவைகளுக்கும் தனக்குமுள்ள ஸம்பந்தத்தையே மமதை 
என்பார்கள். இதை நன்கு விலக்கிவிட்டாலும், சரீரம் முதல் புத்தி வரையுள்ள தத்து வங்களில் என்னுடையது என்ற மமதை இருக்கும் அதுவும் விலகவேண்டும். ஆகையால் தன் ஆத்ம ஸ்வரூபத்தைத்தவிர வேறு எந்த பதார்த்தத்திலும் அஹந் தையையும் விலக்கிவிட்டால் அவைகள் ஸம்பந்தமான எவ்வித தர்மங்களும் ஆத்மாவில் ஒட்டாது. இவ்விதமான எந்த அநாத்ம பதார்த்தத்திலும், தனக்கு ஸம்பந் தமில்லை என்ற அறிவு ஏற்பட்டு விட்டவனுக்கு சரீராதிகளை சம்பந்தித்த வர்ணாம சிரமாதிகளோ யமநியமாதி ஸாதனங்களோ எவ்விதத்திலும் சம்பந்திக்கக் கூடியவை அல்ல. சுத்தமாய் அஸங்கமாய் ஆத்மதத்துவம் மாத்திரம் மிஞ்சும்.   (2)

(அவதாரிகை) வேதோக்தமான ஸாதனங்கள் அவசியம் இருக்க வேண்டாம். உலகத்தில் ஜீவித்திருக்கும் வரையில் லௌகீக விவஹாரங்கள் இருந்து தானே தீரும்? என்றால் ஜீவித்திருக்கும் போதே பிரதிதினமும் நன்கு தூங்கும்போது ஸகல லௌகீக வைதீக வியவஹாரங்களும் நின்றுபோய் ஆத்மா மாத்திரம் தனித்திருந்து ஆனந்தமாயிருக்கிறது என்பதை யாவரும். அனுபவித்திருப்பதால் தூக்கத்தில் தோன் றும் அக்ஞானமும் நிவ்ருத்தியாகி சுத்த சைதன்யமாக நிற்கும் ஆத்ம ஸாக்ஷாத்கார நிலையில் எவ்வித வ்யவஹாரமும் இருக்க நியாயமில்லை என்பதை மூன்றாவது சுலோகத்தில் காட்டுகிறார். 

न माता न पिता न देवाः न लोकाः 
न वेदा न यज्ञाः न तीर्थं ब्रुवन्ति । 
सुषुप्तौ निरस्ताति शून्यात्मकत्वात् 
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ३ ॥ 
ந மாதா ந பிதா ந தே³வா꞉ ந லோகா꞉
ந வேதா³ ந யஜ்ஞா꞉ ந தீர்த²ம் ப்³ருவந்தி ।
ஸுஷுப்தௌ நிரஸ்தாதி ஶூன்யாத்மகத்வாத்
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 3 ॥

“தாயார் இல்லை. தகப்பனார் இல்லை; தேவர்கள் இல்லை, லோகங்கள் இல்லை, யக்ஞங்கள் இல்லை, தீர்த்தம் இல்லை, என்கிறார்கள். நல்ல தூக்க சமயத்தில் (அறியப்ப டும் பதார்த்தங்கள் இல்லையானாலும் அறிகிறவன் இருந்ததினால் நான் தூங்கினேன் என்று சொல்ல முடிகிறபடியால்) சூன்யமில்லை என்று தெரிகிறபடியால் ஏகனாய் தனித்து மிஞ்சி தனித்து மிஞ்சி நிற்கும் மங்கள ஸ்வரூபியான ஆத்ம தத்துவமே நான்.”

தாயார், தகப்பனார் முதலியவை எல்லாம் தேஹாபிமானத்தை ஒட்டி ஏற்படு கிறது. இந்த அபிமானம் நீங்கிவிட்டால் ஒன்றும் இல்லை ஸுஷுப்தியில் தேஹாபிமானமில்லாததால் ஒன்றும் தோன்றுகிறதில்லை.

முந்திய சுலோகத்திலும் ஸுஷுப்தி காலத்தில் சரீராதிகளில்     அபிமானமி ல்லாததினால் நான் பிராம்மணன், நான் கிருஹஸ்தன் முதலான எண்ணங்களுக்கு இடமில்லை என்று எடுத்துக்காட்டி இருக்கிறபடியால் இம்மூன்று சுலோகங்களிலுமே ஸுஷுப்தி காலத்தில் அனுபவத்தை வைத்தே ஆத்மா ஸர்வ ஸர்வவித வ்யவஹா ரத்திற்கும். அதீனன் என்று நிர்வசனம் செய்திருக்கிற முறையில் ஜீவ பிரும்ம ஐக்கிய பிரதி பாதகமான “தத்துவமஸி” முதலான மஹா வாக்கியங்களிலுள்ள ஜீவனுடைய வாஸ்தவமான ஸ்வரூபத்தை சோதித்து தீர்மானப்படுத்திக் கொடுத்த தாக ஆகிறது.           (3)

மூன்று சுலோகங்களால் “த்வம்” பதார்த்தத்தை சோதித்து விட்டு இனி "தத்" பதார்த்த சேதனத்தை ஆரம்பிக்கிறார். ஏகனாய் மிஞ்சுகின்றவனே ஆத்மா என்றால் ஜகத்தை சிருஷ்டி செய்து பரிபாலித்து உபஸம்ஹாரம் செய்யும் ஈசுவரனும் அவரால் ஆளப்படும் ஜகத்தும் இருக்கும் வரையில் எப்படி ஸாத்தியம் என்று கேட்டால், அந்த ஈசுவரனுடைய தத்துவமும் ஆத்ம தத்துவம் தான். ஜகத்தும் வேறாயில்லை என்பதை மேல் சுலோகங்களால் தெரியப்படுத்துகிறார். ஆத்ம தத்துவத் திற்கு வேறாக பிரதானம் என்ற அசேதனம் தான் ஜகத் காரணம் என்று ஸாங்க்யர் களும், ஈசுவரன் என்று வேறு சேதனா தத்துவம்தான் காரணம் என்று சைவர்களும் அப்படியே ஜகத்தையும் ஜீவனையும் உண்டுபண்ணின வாஸுதேவன் என்று ஜைனர்க ளும், ஜகத்தை உண்டுபண்ணி ஜீவனைத் தன் கர்மாவினால் போதுமே என்று மீமாம் ஸகர்களும், யுக்தியினாலேயே ஜீவனுக்கு வேறாக் ஸர்வஞனாக ஸர்வசக்தனாக ஈசுவரன் உண்டென்று லாதித்து விடலாமென்று தார்க்கிகர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் ஈசுவரன் ஜீவனைத் தவிற வேறாக இருந்தானேயானால் அவருக்கு ஸர்வ வ்யா பகத்வம் என்ற முக்கிய அம்சம் சித்திக்காது என்பதை மறந்து விடுகிறார்கள். ஆகையால் ஜீவனுடைய தத்துவமும் ஈசுவரனுடைய தத்வ மும் ஒன்றேயாகும். உபாதிவசத்தால் அந்த ஒரு தத்வமே ஜீவனாகவும் ஈசுவரனாக வும் தோன்றுகிறது. என்று உபநிஷத்துக்களில் கண்ட ஸித்தாந்தத்தைத்தான் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமத் ஆசார்யாள் நான்காவது சுலோகத்தில் காட்டுகிறார்.

न सांख्यं न शैवं न तत्पाञ्श्चरात्रं 
न जैनं न मीयांमकादेः मतं वा ।
विशिष्टानुभूत्या विशुद्धात्मकत्वात 
सदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ४ ॥
ந ஸாங்க்²யம் ந ஶைவம் ந தத்பாஞ்ஶ்சராத்ரம்
ந ஜைனம் ந மீயாம்மகாதே³꞉ மதம் வா ।
விஶிஷ்டானுபூ⁴த்யா விஶுத்³தா⁴த்மகத்வாத
ஸதே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 4 ॥
அது (ஜகத்க ரணவஸ்து) ஸாங்கியமல்ல. சைவமல்ல, பாஞ்சராத்திரமல்ல, ஜைனமல்ல, மீமாம் ஸகர் முகலானவர்களின் அபிப்ராயப்படியுமல்ல. எவ்வித வேற்றுமையுமற்று தனித்து அனுபவிக்கப்படும். சுத்தமான சைதன்ய ஸ்வரூபமான தினால் தனித்து ஏகமாய் மிஞ்சும் மங்கள ரூபியான தத்வமே “நான்”   (4)

ப்ரஹ்மத்தை அணுவாகவும் அணுவான ஜீவனோடு ஒன்றாகவும் சொல்லியி ருந்தாலும் பல சுருதிகள் விபுவாகக் கூறுவதால் உபாதியினால் சிறிய தன்மை ஸ்வரூபம் ஸர்வ வ்யாபகம் என்று ஸர்வ வ்யாபகமான ஆத்ம தத்வத்தை ஆகாசத் துக்கு ஸமானமாகச் சொல்ல அதில் வேற்றுமைக்கு இடமில்லையென்பதை அடுத்த சுலோகத்தில் விவரிக்கிறார்.

न चोध्ये न चाधो न चान्तः न बाह्यं 
न मध्यं न तिर्यक् न पूर्व: न परा दिक् । 
वियद्व्यापकत्वात अखण्डैककल्पः 
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ५ ॥ 
ந சோர்த்⁴வம் ந சாதோ⁴ ந சாந்த꞉ ந பா³ஹ்யம்
ந மத்⁴யம் ந திர்யக் ந பூர்வ: ந பரா தி³க் ।
வியத்³வ்யாபகத்வாத அக²ண்டை³ககல்ப꞉
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 5 ॥

மேலும் கிடையாது, கீழும் கிடையாது, உள்ளும் கிடையாது, வெளியும் கிடை யாது மத்தியும் கிடையாது குறுக்கேயும் கிடையாது, கிழக்கோ வேறு திக்கோ கிடை யாது. ஆகாசம்போல் வ்யாபகமாயிருத்தலால் துண்டிக்கமுடியாமல் ஒன்றாக இருக்கும் தன்மையுடைய தனித்து ஒன்றாக மிஞ்சும் மங்கள ரூபியான தத்வமே “நான்”

நமக்கு ஆகாசத்துக்கு மேல் வியாபகமான பதார்த்தம் தெரியாததினால் அதை திருஷ்டாந்தமாகச் சொல்ல ஏற்பட்டது. வாஸ்தவத்தில் ஆகாசமும் பிரஹ்மத்தில் தோன்றும் அம்சமே யானதினால் அதை பரிபூர்ணமான திருஷ்டாந்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகாசத்தைக் காட்டிலும் வ்யாபகமென்று சொல்லாம்.  (5)

(அவதாரிகை) ஜகத் பூராவையும் ஆத்ம தத்வம் வ்யாபிக்கிறதென்றால் ஜகத்திலுள்ள வைகித்திரியங்கள் எல்லாம். அதில் ஒட்டாதாவென்று ஸம்சயம் ஏற்படக்கூடியதால் அதை நிவர்த்தி செய்வதற்காக அந்த தத்வம் எவ்வித ரூபமும் அந்த ஸ்வயஞ்ஜோதிசின் ஸ்வரூபம் என்பது ஆறாவது சுலோகத்தில் சொல்லப்படு கிறது.

न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं
न कुब्जं न पीनं न ह्रस्वं न दीर्घम् ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात्
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ६ ॥
ந ஶுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம்
ந குப்³ஜம் ந பீனம் ந ஹ்ரஸ்வம் ந தீ³ர்க⁴ம் ।
அரூபம் ததா² ஜ்யோதிராகாரகத்வாத்
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 6 ॥

“வெளுப்பு அல்ல, கருப்பு அல்ல, சிவப்பு அல்ல, மஞ்சள் அல்ல, சிறியது அல்ல. பெரியது அல்ல, குட்டையல்ல, நீளமல்ல, அப்படியே எவ்வித ரூபமும் அற்றது. ஜ்யோதிஸ் ஸ்வரூபமாய் இருத்தலால் தனித்து ஏகமாய் மங்கள ரூபியான தத்வமே "நான்"

ஜ்யோதிஸ் ஸ்வரூபம் என்றால் நமக்கு சாதாரணமாய் ஸூர்யப்ரகாசம் போல் பளிச்சென்று இருக்கும் என்ற எண்ணமே ஏற்படுகிறது. வாஸ்தவத்தில் ஜ்யோதிஸ் என்பது மற்ற பதார்த்தங்களை நமக்கு தெரிவிக்கக்கூடிய யோக்கியதையுடைய வஸ்து. என்று மாத்திரம் தாத்பரியம் - ஸூர்ய சந்திராதிகளின் பிரகாசமில்லாத இடத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. தூங்கும்போது ஸ்வப்னத்தில் எத்தனையோ விஷயங்களைப் பார்க்கிறோம். அங்கேயாவது இந்திரியங்கள், மனஸ், சரீரம் எல் லாம் இருப்பதாக தோற்றமிருக்கிறது. நல்ல தூக்கத்தில் ஒரு பதார்த்தத்தையும் அறியாமலிருந்த போதிலும், அறிவற்று இருந்தேன். சுகமாய் தூங்கினேன் என்கிற அறிவு மாத்திரம் இருந்தே வருகிறது. அந்த அறிவுக்கு ஸாதனங்கள் எவையும் கிடையாது. ஆகையால் ஆத்மா ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லப்படுகிறது. பிரகாசத்துக்குத் தனியாக ரூபம் கிடையாது எந்தெந்த பதார்த்தத்தை விளங்கச் செய்கிறதோ அந்தந்த ரூபத்தை அந்தந்த சமயத்தில் எடுத்துக்கொள்ளும். அப்படியே 
தான் ஆத்ம பதார்த்தமும் ஜ்யோதிஸ் ஸ்வரூபமாயிருந்து ஜகத்தை வியாபிக்கும் போது ஜகத் ரூபமாகத் தோன்றுகிறது. ஸூர்யன் சாக்கடையில் பிரகாசித்தாலும், அதன் ஜலத்தில் பிரதிபலித்தாலும் எப்படி சாக்கடையின் குணதோஷங்களால் பாதிக் கப்படாமல் எப்போதும் போல் சுத்தமாகவே இருந்து வருகிறதோ அப்படியேதான் ஆத்மாவும் ஜகத்தாகத் தோன்றினாலும் ஜகத்தின் குண தோஷங்களினால் கொஞ்ச மேனும் பாதிக்கப்படாமல் அஸங்கனாய்; நிர்விகாரணாய், சுத்தனாய் இருக்கிறார். ஸ்வயம் பிரகாச பரமானந்த ரூபமான பிரஹ்மம் பிரபஞ்சத்திற்கு விவர்த்தோபாதா னமாக அதிஷ்டானமாக இருப்பதால் காரணமாக இருந்த போதிலும் காரியமான பிரபஞ்சத்துடன் ஸம்பந்தமில்லாததால் ததபின்னமான ஜீவனுக்கும் பிரபஞ்ச சம்பந் தமில்லை.            (6)

(அவதாரிகை) இவ்விதமாக ஈசுவரன் இதர மதவாதிகள் சொல்லுகிறபடி இல்லாமல் உபநிஷத்தில் சொல்லியபடியே அஸங்கராகவும் சுத்தராகவும் இருக்கி றார் என்று 4 வது சுலோகத்திலும் அவர் ஸர்வ வியாபகர் என்று 5 வது சுலோகத்தி லும் அவர் ஜகத்திலுள்ள வேற்றுமைகளினால் வேற்றுமையடையாதவர் என்று 6 வது சுலோகத்திலும் ஜகத்காரணமாகக் கருதும் ஈசுவரனுடைய ஸ்வரூபத்தை ஒருவாறு நிரூபணம் செய்து விட்டு, மேலால் ஜீவனின் தத்வமான சைதன்யமும் ஈசுவரனின் தத்வமான சைதன்யமும் ஒன்றுதான் என்பதை மேல் மூன்று சுலோகங் களால் ஸ்ரீமத் ஆசார்யாள் உபதேசிக்கிறார்.

இரண்டு சைதன்யமும் ஒன்று என்றால் உலகத்திலுள்ள வியவஸ்தை எல்லா மே ஆதாரமற்று விடுமே, சிஷ்யனாயிருந்து குருவை ஸேவித்து சாஸ்திரங்களைக் கற்று கர்மானுஷ்டானம் செய்து ஈசுவரனுடைய பிரசாதம் பெற்று சித்தசுத்தி ஏற்பட்டு சிரவண மனனாதிகள் செய்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்து பரமபுருஷா ர்த்தமான மோக்ஷநிலையை அடையவேண்டும் என்று ஸகல சாஸ்திரங்களும் சொல்லும் போது இவை எல்லாவற்றையும் மறுதனித்ததாக ஆகிவிடாதா? என்று தோன்றலாம். 

அஞ்ஞான தசையில் இவை எல்லாம் உண்டு என்பதை மறுதனிக்கவே இல்லை. எவர் ஒருவருக்கு தன்னுடைய ஆத்மஸ்வரூபம் அஸங்க மாய இரண்டற் றதாய் சுத்தமாய் நித்யமாய் ஞானமாய் ஆனந்தமாயிருப்பது என்ற ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டிருக்கிறதோ அவருக்கு அதற்குமேல் அடையவேண்டியது ஒன்றுமில்லாதத னால் அவருக்கு எவ்வித ஸாதனத்தின் அபேக்ஷையும் இருக்க நியாயமில்லை. அவருடைய நிலையிலிருந்து பார்க்கும்போது. இவையாவும் கிடையாதுதான்.

न शास्ता न शास्त्रं न शिष्यो न शिक्षा
न च त्वं न चाहं न चायं प्रपञ्चः ।
स्वरूपावबोधो विकल्पासहिष्णुः
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ७ ॥
ந ஶாஸ்தா ந ஶாஸ்த்ரம் ந ஶிஷ்யோ ந ஶிக்ஷா
ந ச த்வம் ந சாஹம் ந சாயம் ப்ரபஞ்ச꞉ ।
ஸ்வரூபாவபோ³தோ⁴ விகல்பாஸஹிஷ்ணு꞉
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 7 ॥

“கட்டளையிடுகிற குரு கிடையாது - கட்டளை கிடையாது. சிஷ்யன் கிடையாது சிக்ஷை கிடையாது கேட்கிற நீ என்பதும் கிடையாது சொல்லுகிற நான் என்பதும் கிடையாது தேஹேந்திரியம் முதலான இந்த உலகமும் உண்மையாக கிடையாது. பலவிதமாக எண்ணுவதற்கு இடம் கொடுக்காமல் ஸ்வரூப ஸாக்ஷாத்காரத்தோடு கூடி ஏகனாய் தனித்து மிஞ்சிய மங்களரூபியான தத்வம் "நானே"    (7) 

(அவதாரிகை) இவ்விதமாக ஸகல த்வைத பிரபஞ்சத்தையும் நிஷேதம் செய்துவிட்டாலும். அனுபவிக்கிறவனாக இருக்கும் ஜீவன் ஒருவன் பரிச்சின்னனாய் இருந்தால் அத்வைதம் சித்திக்காதே என்றால், அந்த ஜீவன் பரிச்சின்னனாய்த் தோன் றுதற்கு காரணம் அவித்யை ஏற்பட்ட மூன்றுவித அவஸ்தைகள்தான். அந்த அவித்யை ஆத்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரத்தினால் விலகினவுடன் அந்த அவஸ்தை களும் ஆத்மாவைச் சேர்ந்ததில்லை என்ற அனுபவம் ஏற்பட்டுவிடும்.

விழிப்பு திசையில் ஸ்தூல சரீரம் மனஸ் இந்திரியங்களோடு வெளிப்பிரஞ்சத் தின் அறிவு ஏற்படுவதை ஜாக்ரத் என்றும் அப்பொழுது அனுபவிக்கும் ஜீவனே விசுவன் என்றும் சொல்வார்கள். ஸ்தூல சரீரத்தை மறந்து வாஸனாமயமான சரீரம் மனஸ் இந்திரியங்கள் ஜகத் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டி செய்துகொண்டு தான் மாத்திரம் தனித்திருந்து அறிவதை ஸ்வப்னம் என்றும் அப்பொழுது அனுபவிப் பவனை தைஜஸன் என்றும் சொல்வார்கள். வெளி உலகமோ உள் உலகமோ இரண்டுமற்ற சரீரம் மனஸ் இந்திரியங்கள் யாவும் காரணமாய் அவித்யையில் லயமடைந்து அந்த அவித்யையுடன் மாத்திரம் இருக்கும் அனுபவத்தை ஸுஷுப்தி என்றும் அப்பொழுது அனுபவிப்பவனை ப்ராஞன் என்றும் சொல்வார்கள். இம்மூன்று அவஸ்தைகளும் அவித்யையின் ஸ்தூல ஸூக்ஷ்மகாரணாவஸ்தையாகவும் இருப்பதால் இவ்வவஸ்தைகள் ஆத்மாவுக்கு சம்பந்தப்பட்டவைகள் அல்ல. ஆத்மா இவைகளுக்கு அதீதமான நிலையில் இருப்பதால் அந்நிலையை நான்காவது என்று வ்யவஹரிப்பார்கள்.

न जाग्रन् न मे स्वप्नको वा सुषुप्तिः
न विश्वौ न वा तैजसः प्राज्ञको वा ।
अविद्यात्मकत्वात् त्रयाणं तुरीयः
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ८ ॥
ந ஜாக்³ரன் ந மே ஸ்வப்னகோ வா ஸுஷுப்தி꞉
ந விஶ்வௌ ந வா தைஜஸ꞉ ப்ராஜ்ஞகோ வா ।
அவித்³யாத்மகத்வாத் த்ரயாணம் துரீய꞉
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 8 ॥

எனக்கு ஜாக்ரத் கிடையாது. ஸ்வப்னம் கிடையாது. ஸுப்தியும் கிடையாது. நான் விசுவன் இல்லை. தைஜஸனுமில்லை. பிராஞனுமில்லை. மூன்றும் அவித்யா தன்மையுடையதால் நான்காவதாக ஏகமாய் தனித்து மிஞ்சி நிற்கும் மங்கள ரூபி யான தத்வமே 'நான்'...... 

(அவதாரிகை) வியாபகனாய் ஞானஸ்வரூபியாய் ஆனந்தமாய் இருக்கும் ஆத்மாவை மறைத்து துண்டுபடுத்தி அல்ப்பஞனாய் துக்கியாய் செய்தது அவித்யை யேயாகும். அதன் காரியங்களான ஸ்தூல ஸூக்ஷ்ம காரண சரீரங்களில் கட்டுப் பட்டவன் போல் இருக்கும் வரை அவைகளுடைய எல்லா தர்மங்களும் ஆத்மாவில் இருப்பது போலவே தோன்றும். ஆகையினாலேயே ஜனன மரண சுகதுக்காதிகள் அடங்கிய ஸம்ஸாரமாகிய பந்தம் ஆத்மாவிடத்தில் இருந்து வருகிறது. அந்த பந்தத் திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டுமானால் அந்த தேகங்களின் கட்டிலி ருந்து தன்னை அவைகள் விடுவித்துக் கொள்ளவேண்டும். தன்னை பாதிக்காமல் செய்ய வேண்டுமானால் அவித்யையை விலக்கியாகவேண்டும். அவித்யையை விலக்க அதன் எதிரியான வித்யையை ஸம்பாதித்துக் கொள்ளவேண்டு. வித்யை என்பது புதிதாக எதையும் சிருஷ்டி செய்யாது. ஏற்கனவே இருக்கிற வாஸ்தவ நிலையை மறைத்துக் கொண்டிருக்கிற அஞ்ஞானத்தை போக்கடித்து ஆத்மாவை கலப்பன்னியில் சுத்தமாக எடுத்துக் காட்டும். இவ்விதம் ஆத்ம தத்துவம் பிரகாசிக்க ஆரம்பித்து விட்டால் அதைப் பரிசின்னப்படுத்திக்காட்டிய அம்சங்கள் எல்லாம் நிவிருத்தியாகி விடுகிறபடியால் ஆத்மா வ்யாபகமென்பது, அனுபவத்திற்கு வரும். தன்னைத் தவிற வேறு பதார்த்தம் கிடையாததால் தன்னை பாதிக்கக்கூடியதாக யாதும் இல்லாததால் நிரதிசயமான ஆனந்த ஸ்வரூபி என்பதும் அனுபவ சித்தமா கும். இவ்வித அனுபவமே பரமபுருஷார்த்தமென்றும் உபநிஷத்துக்கள் பிரதீபாதிக் கின்றன. அந்த நிலை அடைந்தவர் சுத்த பிரஹ்ம சைதன்யமேயாவார். அந்த நிலை வந்த பிற்பாடும் பிராரப்த கர்ம வேகத்தினால் சரீரம் இருக்கிறவரையில் ஜகத்தும் அதிலுள்ள பலவிதமான இந்திரியங்களும் கண்ணுக்கு தென்பட்டுக் கொண்டிருந் தாலும் இவை எல்லாம் தோற்றமே தவிர வாஸ்தவம் இல்லையென்று உணர்ச்சியும் கூடவே இருக்குமாதலால் அவைகளினால் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டார். 

अपि व्यापकत्वात् हितत्वप्रयोगात्
स्वतः सिद्धभावात अनन्याश्रयत्वात् ।
जगत् तुच्छमेतत् समस्तं तदन्यत्
तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ९ ॥
அபி வ்யாபகத்வாத் ஹிதத்வப்ரயோகா³த்
ஸ்வத꞉ ஸித்³த⁴பா⁴வாத அனன்யாஶ்ரயத்வாத் ।
ஜக³த் துச்ச²மேதத் ஸமஸ்தம் தத³ன்யத்
ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ॥ 9 ॥

“ஆத்மா வியாபகமாக இருப்பதினாலேயும் அதுவே மேலான ஹிதம் என்று சொல்லப்பட்டிருக்கிறபடியினாலேயும், அது எப்பொழுதும் தானாகவே நிலைத்திருக்கும் 
ஸ்வபாவத்தோடு கூடியதினாலேயும், அது வேறு எதையும் ஆசிரயிக்கும் தன்மை யற்றகாயிருப்பதினாலேயும், அதற்கு வேறாகத் தோன்றும் ஸமஸ்தமான இந்த ஜகத்தும் வெறும் தோற்றமேயாகும். ஏகமாய்த் தனித்து மங்களரூபியை மிஞ்சியிரு க்கும் தத்துவமே “நான்"          (9)

(அவதாரிகை) இவ்விதமாக ஆத்மாவை பரிச்சின்னப்படுத்தி காட்டும் அம்சங் களை விலக்கி சுத்தமான ஆத்மாவை கவனிக்கும்போது அதுவே வியாபகமான பிரஹ்ம சைதன்யம் என்று மூன்று சுலோகங்களால் தீர்மானம் செய்து கொடுத்தார் ஸ்ரீமத் ஆசார்யார். ஆனால் இவ்விதமாக சரீர விலக்ஷணன், அவஸ்தாத்ரய ஸாக்ஷி, ஸர்வ வ்யாபகன், என்றெல்லாம் எடுத்துச் சொல்லும்போது ஒவ்வொரு சுலோகத்திலும் அவர் ஏகர், தனித்தவர், மிஞ்சினவர், மங்களமானவர், என்று சொல்லப்படுகிறதே இந்த அம்சங்கள் எல்லாம் அவருக்கு விசேஷணங்கள் ஆகாதா? இரண்டாவது வேறு பதார்த்தங்கள் இருந்தால்தானே "ஒன்று" என்ற வ்யவஹாரம்? கலப்பதற்கு வேறு இருந்தால் தானே “தனித்து" என்று சொல்லமுடியும்? விலக்குவத ற்கு வேறு இருந்தால்தானே "மிஞ்சினவர்" என்று சொல்லலாம்? அமங்களமான பதார்த்தங்கள் இருந்தால்தானே இதை "மங்களம்" என்றலாம்? ஆகையால் இந்த அடைமொழிகளும் வேறு பதார்த்தங்களின் இருப்பை அனுசரித்துக்கொண்டுதானே உபயோகப்படுத்தப்படுகின்றன? வேறு எவ்வித ஆசிரயமும் அற்ற ஆத்ம பதார்த்தத் தைத் துலக்கிக்காட்டும்போது மற்ற பதார்த்தங்களையும் அவலம்பித்தே சப்தங்களை பிரயோகிப்பது நியாயமா? என்றெல்லாம் சந்தேகம் ஏற்படலாம். அந்த சந்தேகம் மிகவும் நியாயமே. இரண்டற்ற ஆத்ம தத்துவத்தை வார்த்தைகளினால் எடுத்துச் சொல்ல முடியாது என்பது வாஸ்தவம். சப்தம் என்பதே உலக வ்யவஹாரத்திற்காக ஏற்பட்டது. அதைக்கொண்டு எவ்வித வ்யவஹாரத்திற்காக அதீதமாயிருக்கும் ஆத்மாவின் ஸ்வரூபத்தை வர்ணிப்பது ஸாத்தியமில்லை. ஆகையால் அதையும் வர்ணிக்க வேண்டும் என்று எண்ணம்கொண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துவத னால் உலக வ்யவஹாரத்திலுள்ள வார்த்தைகளைத்தான் உபயோகப்படுத்த வேண்டு மே தவிர வேறு வழியில்லை. ஆகையினால்தான் மேலே கண்ட அடைமொழிகள் ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்டன. இரண்டாவது வஸ்துவே கிடையாததினால் அது "ஒன்று” என்று சொல்லக்கூடாததுதான். அது தனித்து இருக்கிறது என்றாவது தனித்திருக்கவில்லை என்றாவது சொல்வதும் உசிதமில்லைதான். ஜகத்தைப் பூராவும் துக்கமென்றுவிட்டால் மிஞ்சுவதாக ஒன்றையும் காணவில்லையே என்றால், அதுவும் 
வாஸ்தவம்தன. ஆனால் காணவில்லை என்று சொல்கிறவன் ஒருவன் இருந்தேதீர வேண்டியிருப்பதால் சூன்யம் என்றும் சொல்வதற்கு இல்லை. எல்லா வேதாந்த ங்களிலும் ஆத்மா இது அல்ல, இது அல்ல என்று விலக்கி விலக்கியே மறைமுறை யாக ஆத்ம தத்வத்தை நமக்கு போதிக்கின்றனவே தவிர, நேராக ஆத்மா இவ்விதம் என்று எடுத்துக்காட்டுவதில்லை. மனஸுக்கும் வாக்குக்கும் எட்டாத தத்துவத்தை வாக்கு எப்படி வர்ணிக்க முடியும். உபநிஷத்துக்களில் சொல்லிய மார்க்கத்தை அனுசரித்து சிரவண மனன நிதித்யாஸனாதி ஸாதனங்களை அப்யஸித்து கடைசி யில் தானாகவே ஸாக்ஷாத்தாக அநுபவிக்க வேண்டிய விஷயம் ஆத்மஸ்வரூபம். அவ்வனுபவம் ஏற்படாதவன் அதைப்பற்றி சொல்லவே யோக்கியதையற்றவன். அவ்வனுபவமுள்ளவர் அதை வெளியிட வார்த்தைகள் இல்லாத படியால் வெளியிட முடியாது. ஸ்வானு பூதிக்கு விஷயமாகுமே தவிர இன்னொருவன் சொல்லித் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயமே இல்லை. அப்படியே ஒரு ஆத்ம ஞானிக்கு போதுமான வார்த்தைகள் அகப்பட்டுவிட்டாலும் அதைக்கேட்டு அர்த்தம் தெரிந்து கொள்ளக்கூடிய யோக்கியதை வேறுயாருக்கும் கிடையாது. ஆகையால் பிரஹ்ம ஸ்வரூபத்தைப்பற்றி வாக்கினால் சொல்லிவிடலாமென்று நினைப்பதோ, இன்னொரு வர் சொல்லி நாம் தெரிந்துகொண்டுவிடலாம் என்று நினைப்பதோ இரண்டும் தவறுதான். இவ்வித உண்மையான நிலையை ஸ்ரீமத் ஆசார்யார் எடுத்துக்காட்டி இந்த ப்ரகரணத்தை முடிக்கிறார்.

न चैकं न तदन्यद् द्वितीयं कुतः स्यात्
न वा केवलत्वं न चाऽकेवलत्वम् ।
न शून्यं न चाशून्यमद्वैतकत्वात्
कथं सर्ववेदान्तसिद्धं ब्रवीमि ॥ १० ॥

 

ந சைகம் ந தத³ன்யத்³ த்³விதீயம் குத꞉ ஸ்யாத்
ந வா கேவலத்வம் ந சா(அ)கேவலத்வம் ।
ந ஶூன்யம் ந சாஶூன்யமத்³வைதகத்வாத்
கத²ம் ஸர்வவேதா³ந்தஸித்³த⁴ம் ப்³ரவீமி ॥ 10 ॥

“அது ஒன்றும் அல்ல, அதற்கு இரண்டாவது எப்படி இருக்கமுடியும்? அந்தத் தனித்திருக்கும் தன்மை கிடையாது, தனித்திராத தன்மையும் கிடையாது. அது சூன்யமல்ல, சூன்யம் அல்லாததுமல்ல. இரண்டற்றதாயிருப்பதால், எல்லா உபநிஷத் துக்களினாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிற வஸ்துவை நான் எப்படிச் சொல்ல முடியும்?”

இவ்விதம் ஸ்ரீமத் பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யாராயும்
ஸ்ரீ கோவிந்த பகவத்பூஜ்யபாதரின் சிஷ்யராயும் உள்ள
ஸ்ரீமத் சங்கரபகவத்பாதருடைய கிருதிகளில்
த³ஶஶ்லோகீ முற்றிற்று.

ஓம் தத் ஸத்
 

Related Content

Adishankara's Dashashloki

दशश्लोकि - Adishankara's dashashloki

பரப்ரம்ம தச சுலோகீ

வேதஸார சிவஸ்தோத்ரம் - உரை

அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை