logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்

ஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய

ஶ்ரீ தீனாக்ரந்தனம்
என்னும்
காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்


Sri Dinakrandanam
alias
Kasiviswesvara Stotram


ௐ
ஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய
ஶ்ரீ தீனாக்ரந்தனம்
 என்னும் 
காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்

ஶ்ரீ லோஷ்ட்தேவ கவி எழுதிய தீனாக்ரந்தனம் என்னும் இவ்வுத்தம ஸ்தோத்திரத்தின் பெருமையை ஜன்மாந்தரங்களில் செய்த புண்ணிய பலன்களாலும், இந்தப் பிறவியின் நற்செய்கைகளின் பாக்கிய வசத்தாலும் புண்ணியாத்மாக்கள் அறியக்கூடும். இதில் கவி கூறும் எல்லா விஷயங்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உணரப்பட்டுவரக்கூடியவைதான். இந்த ஸ்துதியில் ஶ்ரீ லோஷ்ட்தேவருடைய ஆத்மானுபவம் தெளிவாகக் கானக்கிடக்கின்றது.

இந்த மஹான் தன் வாழ்நாள் முழுவதும் தான் நேசித்து வந்த கவிதையை விலக்கிக் காஷாயம் பூண்டு, ஏகாக்கிர சித்தராய், பாபங்களை எரிக்கும் மகாச்மசானமாகிய காசீ ஷேத்திரத்தில் மோஷ சாம்ராஜ்யத்தை உடனே அளிக்கக் கூடிய விசாலாக்ஷீ சமேதரான ஶ்ரீ விச்வேச்வர்ரின் சந்நிதானத்தில் பக்திரஸப் பெருக்குடன் கதறுகிறார்.

ஶ்ரீ லோஷ்ட தேவர் ஆரம்பத்தில் இவ்விலக வாழ்க்கையில் முற்றும் ஈடுபட்டிருந்தார். சுகங்களை அனுபவித்தார். ஆனால் மனவமைதியைப் பெறவில்லை. பிறகு காஷாயம் அணிந்து உயர்ந்த இன்பத்தைப் பெற்றார். அவரது வாழ்க்கையின் அனுபவத்தை யொட்டியே அவருடைய ஸ்தோத்திரமும் ஆரம்பத்திலிருந்து மேலே செல்லச் செல்ல பக்திமேலீட்டையும் கவித்திறமையையும், உணர்ச்சிப் பெருக்கையும், அர்த்தபுஷ்டியையும் அதிகமாகக் கொண்டு சோபிக்கின்றது.

“பாபத்தை செய்து உடலைப் போஷித்தேன். ஏழைகளைக் கருதினேன் இல்லை. பெண்களின் கால்களில் விழுந்தேன். ஆசிரியர்களை வணங்கினேன் இல்லை. செல்வத்தில் ஆசை வைத்தேன். புண்ணியத்தை வெறுத்தேன். ஆதலால் வருந்துகின்றேன். நீரே கதி,” என்கிறார் (சுலோகம் 48).

பிறகு, “காசி ஷேத்திரத்தில் கங்கையின் மணலில் அரசர்களைப்பற்றிய சாடு வார்த்தைகளை இயற்றுவதை விட்டுப் பசுபதியைக் குறித்துக் கதறுவதென்ற கடுமையான விரதத்தை ஏற்றுக் கொண்டேன்,” (சுலோகம் 51) என்ற சொல்லிவிட்டு, “உயர்ந்த வம்சத்தில் பிறந்து கவிதைக் கடலைக்கடந்து சக்திக்கேற்ப ஏழைகளுக்குத் தானம் செய்து, சுகங்களையும் அனுபவித்து, உண்மை என்னவென்பதை அறிந்து, ஸந்நியாஸம் ஏற்று, ஸம்ஸாரத்தை வெறுத்துக் காசியில் நிம்மதியுடன் இனிது வாழ்கின்றேன்” (சுலோகம் 52) என்று கூறித் தமது மனவமைதியைக் காண்பிக்கின்றார்.

மேலும் சாதாரணமாகக் கேள்விப்பட முடியாததானதொரு ஆச்சரியமான பிரதிக்ஞையையும் செய்கின்றார். “எதிரிகள் பொறாமையடைக் காரனமாகிய கவிதையென்னும் காதலி, நான் ஸந்யாஸம் ஏற்றுக்கொண்ட பிறகும், என்னை வந்து அணைகின்றாள், என்பதினால், பிரம்மசரியத்தை விட்ட தோஷம் சிறிது ஏற்பட்டுத்தான் விடுகின்றது. ஆதலால், விச்வேச்வரா, உம்மெதிரில் ஆணையிடுகிறேன், இனி இவளை என்றும் மனதினாலும் நினையேன், இதுவரை செய்த குற்றத்தை மட்டும் மன்னித்துவிடும்,” (சுலோகம் 53), என்று பொருள்படும் இந்த சுலோகத்தின் பெருமையை ஆதிசேஷனும் கூறமுடியாது.

உலக வாழ்க்கையை வெறுத்துக் கவிதா ஸந்யாஸமும் செய்கின்றேன் என்ற பிரதிக்ஞை எவ்வளவு கடினமானதென்பது கவிகளுக்கு மட்டுமே தெரியும்.

காளிதாஸ மகாகவி சாகுந்தலத்தின் முடிவில் இதே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

காவ்யலக்ஷணங்கள் முற்றிலும் அமைந்துள்ள தமது உயர்ந்தக் கிரந்தத்தைப் “பிதற்றல்” என்று லோஷ்ட்தேவர் குறிப்பது அவருடைய வைராக்கியத்தைக் காட்டுகின்றது. கவிதையினால் ஏற்படும் புகழையும் அவர் வெறுத்தார் என்பதையும் காட்டுகின்றது.

லோஷ்டதேவரைப் போலவே ஈசுவரனை நோக்கிக் கதறும் இயல்பு ஒவ்வொருவருடைய மனதிலும் குடிகொண்டிருக்கின்றது. ஆனால் ஸம்ஸார மோஹம் அதை மறைத்திருக்கின்றது. இந்நூலைப் படிக்கும் எல்லோரும் லோஷ்ட்தேவரின் உண்மை நிலையை உணர்ந்து, தாமும் அந்நிலையைப் பெற்று, விச்வேசுவர்ரிடம் கதறி, லோஷ்ட்தேவர் விச்வேசுவர்ரிடம் பெற்ற, பெறுவதற்கரியதான அருளபி பெறுவார்களாக!


முன்னுரை

“நம: சிவாய ச சிவதராய ச”

என்று வேதம் வணங்கியதைப் பின்பற்றி, சிவனுடைய வழிபாடு இந்நாட்டில் எங்குமே பரவியிருந்தும், முக்யமாய்க் காஸ்மீரதேசத்திலும் தென்னாட்டிலும் இந்த சிவோபாஸனை த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத மத பேதங்களால் பல வைசித்ர்யங்களை அடைந்து ஒங்கிற்று. “ப்ரத்யபிஜ்ஞை” என்ற அத்வைதம் செழித்த காஸ்மீரத்தில் கணக்கில்லாத அரிய சிவ ஸ்தோத்ரங்கள் எழுந்தன. இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த்து ஆசார்ய அபிநவகுப்தரின் குருவான உத்பலதேவர் இயற்றிய ‘சிவஸ்தோத்ராவளி’ என்பது. ப்ரத்யபிஜ்ஞை வளர்ந்து வந்த காஸ்மீரத்தில் நம் ஆசார்யபகவத்பாதர்களின் அத்வைத மதம் புகுந்ததும், அதைப் பின்பற்றி நூல் இயற்றிவர்களில் ஒருவர் ரம்யதேவர் என்றவர். கி.பி. 1127 முதல் 1149 வரை காஸ்மீரத்தை ஆண்ட ஜயஸிமஹராஜனுக்கு ‘லங்க்கன்’ (அதாவது அலங்காரன்) என்றும், ‘மங்ககன்’ என்றும் இரு ஸஹோதர்ர் மந்த்ரிகளாயிருந்தனர். மங்ககன் கி.பி. 1140-இல் திரிபுரதஹன விருத்தாந்தத்தை ஶ்ரீ கண்ட சரிதம் எனுங் காவ்யமய் எழுதினார். இதன் இறுதியில் 25-ம் ஸர்கத்தில் தமையன் லங்ககனைச் சூழ்ந்திருந்த பெரிய வித்வத் ஸபையில், மங்ககன் தன் காவ்யத்தை அரங்கேற்றினதாகச் சொல்லியிருக்கிறார். அந்த ஸந்தர்பத்தில், லங்ககனின் ஸபையில் உள்ள வித்வான்களை ஒவ்வொருவராக வர்ணிக்கும் போது ரம்யதேவர் என்றவரை மூன்று ச்லோகங்களில் (31-33) மங்ககன் புகழ்கிறார். இதிலிருந்து நமக்குத் தெரியவருகிறது யாதென்றால்: ரம்யதேவர் ப்ரபல அத்வைத வேதாந்த ஆசார்யராய் இருந்தார்; ஸந்நியாஸி; நித்யம் வேதாந்த உபந்யாஸம் செய்பவர்; உபநிஷத்தின் பாகங்களான கடவல்லிகளுக்கும், அவ்ய்யாத்ம பகவானின் சிஷ்யரான விமுக்தாத்ம பகவானின் இஷ்டஸித்தி என்னும் அத்வைத க்ரந்தத்திற்கும் வியாக்கியானம் எழுதியவர்.

இந்த ரம்யதேவரின் மைந்தர் லோஷ்ட்தேவர்; இவருக்கு ஆறு பாஷைகளில் இருந்த பாண்டித்யத்தையும் நிர்தோஷமான கவிதையையும்பற்றி மங்ககன் மூன்று சுலோகங்கள் சொல்லிப் பின்பு இந்த லோஷ்டதேவர் லங்ககனைப் புகழ்ந்த பல ச்லோகங்கலைச் சொல்லுகிறார். இப்படித் தம் கவிதைக்காகப் புகழப்பட்ட லோஷ்ட்தேவர் என்னென்ன காவ்யங்களை இயற்றினார் என்று நமக்குத் தெரியவில்லை.

கி.பி. 1205-இல் ஶ்ரீதரதாஸன் தொகுத்த ‘ஸதுக்திகர்ணானிருத’ த்திலும், இதற்குச் சற்று முன்னால் தொகுக்கப்பட்ட ‘ஜல்ஹண ஸூக்திமுக்தாவளி’யிலும்’ யிலும் லோஷ்டஸர்வஜ்ஞர் என்ற கவி யொருவருடைய தனி சுலோகங்கள் சில காணப்படுகின்றன. ஒரு அனுஷ்டுபில், இந்த லோஷ்டஸர்வஜ்ஞர் தான் பாண மகாகவியை மிஞ்சியதாய்ச் சொல்லிக்கொள்ளுகிறார். மற்றொன்றில், சார்தூலவிக்ரீடிதத்தில், கரிவத்தாலும், த்வேஷத்தாலும், முட்டாள்தனத்தாலும், ஸபை வியாபித்து நிற்க, ஸபையின் சுவரைக் கூவி, ‘நீராவது நம் கவிதையைக் கேட்டுப் புகழும்,’ என்கிறார். வஸந்ததிலகை யொன்றில், வர்ஷாகாலமேகம் இருண்ட இரவுகளில், கையில் மின்னல் என்ற விளக்குகளைக் கொண்டு, கர்ஜனை செய்துகொண்டு, ‘எங்கே, எந்தப் பிரிவடைந்த காதலர் இன்னும் உயிர் தரித்திருக்கிறார்’ என்ற தேடுவதுபோலிருக்கின்ற தென்ற அழகிய உத்பரேக்ஷை யொன்றைச் செய்கிறார். இந்த லோஷ்ட ஸர்வஜ்ஞரும், ரம்யதேவரின் புத்ரர் என்றும், மஹாகவி என்றும், மங்ககன் புகழ்ந்த லோஷ்ட தேவரும் ஒருவரே என்று சொல்லலாம்.

‘தந்தை வேதாந்தியாகிக் காஷாயம் பூண்டார்; மைந்தன் எப்பொழுதும் காவ்யமென்ற காதலியோடு விளையாடிக்கொண்டே இருந்தான்,’ என்ற அபவாதம் கூடாதென்றோ, தன் கடைசிக் காலத்தில் லோஷ்ட்தேவர் முக்தி க்ஷேத்ரமான காசியை அடைந்தார். ஸர்வ பிராபஞ்சிக விஷயங்களும், ஸமஸ்த துரிதங்களும் எரிந்து சாம்பலாகும் அந்த மஹாச்மசானட்த்தில், ஆத்மாவின் நிஜ ஸ்வரூபமான ஆனந்தம் வியக்தமாகும் அந்த ஆனந்த கானனத்தில், விச்வேச்வரனைப் பஜித்துக்கொண்டு, தன் பெயருக்கு ஒப்ப (லோஷ்டம்-மண்ணாங்கட்டி)த் துறந்து, விரக்தராகி, ஞானியுமாகித் தன் வாழ் நாட்களைக கழித்தார்.* (* 51-வது சுலோகத்தைப் பார்க்க). கவனம் செய்வதில் மிகவும் ஈடுபட்டிருந்தவராகையால், என்ன முயன்றாலும் அந்தச் சபலம் இங்கும் தன்னை விடாமல், அவ்வப்போது தெரியாமல் தனியே கள்ளக் காதலிபோல் தன்னிடம் வந்துவிட்டுப் போகிறாள் என்று ஒரிடத்தில் சொல்லுகிறார்.† († 53-வது சுலோகத்தைப் பார்க்க) இப்படிப் பழைய வாஸனை தோன்றினாலும் அதை இடுகாறும் விநியோகஞ் செய்தபடி சிறு விஷயங்களிலோ, தன் காவ்ய சில்ப சக்தியைக் காட்டவேண்டும் என்ற அபிமானத்திற்காகவோ கையாளாமல், சிவபரமான ஸ்துதியில் உபயோகஞ் செய்வது என்ற பரிஹாரத்தைச் செய்து, தன்னையும் தன் வாழ்க்கையையும் கிருதார்த்தம் செய்துகொண்டார். இந்த வழியில் அவர் செய்த சிவஸ்தோத்திரங்களில் ஒன்றே தீனாக்ரந்தனம் (ஏழையின் கதறல்) என்று இங்கு வெளியிட்டிருக்கிறது.

நம் தென்னாட்டில் வழக்கமாய் ஸ்தோத்திரங்கள் படித்தும் சொல்லியும் வருபவருக்கு ஸாதாரணமாய் பழக்கமிராதவையும், காஸ்மீரத்திலும் இதர இடங்களிலும் இயற்றப்பட்டவையுமான சில அரிய ஸ்தோத்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணி, நான் சில வருஷங்களுக்கு முன்பு வெளியிட்ட ஸ்தோத்ரக்கோவையில், உத்பலதேவரின் சிவஸ்தோத்ரவாளி, லோஷ்ட்தேவரின் தீனாக்ரந்தனம் முதலியவற்றிலிருந்து சில பாகங்களைப் பொறுக்கிச் சேர்த்தேன். நான் தீனாக்ரந்தனத்திலிருந்து எடுத்திருந்த ஸ்லோகம் 49-ல் பக்தரொருவருக்கு ஏற்பட்ட பெரும் ஈடுபாட்டினால் இப்பொழுது அந்த ஸ்தோத்ரம் முழுவதும் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளிவருகிறது என்பது என் எண்ணம் நிறைவேறியதற்கு அடையாளமாகும். இந்த தீனாக்ரந்தன ஸ்தோத்திரம் ‘காவ்யமாலா’ குச்சகங்களில் 6-வது பாகத்தி 21-30 பக்கங்களில் 1890-இல் அச்சாயிற்று. அப்பதிப்பை ஆதாரமாகக்கொண்டே இந்த ஸ்தோத்திரம் இங்கு அச்சிடப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பு குறிப்புக்களுடன் பிரம்மஶ்ரீ A. S. நடராஜ அய்யர், B.A., M.L.,அவர்களால் செய்யப்பட்டிருக்கிறது.

லோஷ்ட்தேவரின் பக்தியின் உயர்வும், பாவத்தின் சுத்தியும், கவிதையின் ருஜுவாயும் தெளிவாயுமுள்ள சைலியும், இந்த ஸ்தோத்திரத்தில் நன்கு அனுபவிக்கப்படுகின்றன. முக்யமாய் 43-வது சுலோகத்தில் இவர் தன் பக்தியைக் காதலாய்க்கொண்டு சிவனிடம் நாயிகா பாவத்தில் புலம்பியது மிகவும் ஈசவ்ரப் பித்தருக்கு ரஸனீயமானது. இந்த்த் தெய்வக் காதலின் பித்து நம்மையும் பிடித்து ஆட்டுமாக!

                                                            வே. ராகவன்.
                                                      (Department of Sanskrit, Madras University)
1-6-1943

ஶ்ரீ குருப்யோ நம

சுண்டீஜலைரிவ ஸுகை: பரிணாம – து:கை:
ஆஸ்வாதிதைரபி மநாகவிலுப்த-த்ருஷ்ண: |
ச்ராந்தோ(அ)ஸ்மி ஹா பவமரெள ஸுசிரம் சரித்வா
தச்சாயயா சரணயோ: சிவ மாம் பஜேதா: ||			(1)

ஏ! பரமசிவ! சுகமானது அனுபவிக்க அனுபவிக்க ஆசையை விருத்தி செய்கிறது. பாலைவனத்தில் கிடைக்கும் ஜலம் அல்பம்; அதைக் குடிக்கக் குடிக்கத் தாகமும் அதிகமாகின்றது. இம்மாதிரி கொஞ்சமும் ஆசை அடங்காமல் ஸம்ஸாரம் என்னும் பாலைவனத்தில் அலைந்து திரிந்து களைத்து இருக்கிறேன். களைப்படைந்தவன் வேண்டுவது சுகம் அல்லவா? அம்மாதிரி ஸம்ஸார தாபத்தினால் களைத்து எனக்கு உமது இரு பாதங்களின் நிழலைத் தந்து அனுக்ரஹம் செய்யுங்கள்.

துர்வார-ஸம்ஸ்ருதி-ருஜா ப்ருச-காந்திசீக:
த்வாமோஷதீ-பதி-ப்ருதம் ஸுக்ருதைரவாப்ய |
ஆவேதயாமி யதஹம் தவ தந்நிதானம்
தத்ராவதேஹி ம்ருட மா குரு மய்யவஜ்ஞாம் || 		(2)

ஏ! ம்ருட! நான் ஸம்ஸாரம் என்கிற ரோகத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கிறேன். இது தீராத நோயாய் இருக்கிறது. இதனால் திகைத்து நிற்கிறேன். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் தங்களை வைத்தியனாக அடைந்தேன். என்னுடைய வியாதியின் தன்மையச் சொல்லுகிறேன். தாங்கள் என்மேல் அலக்ஷியம் செய்யாமல் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

துர்வாஸநா-சத-வசாதசுசித்வமீக்ஷய
யா மே ஹடாத் க்ரு தவதீ மனஸி ப்ரவேசம் |
ஸா (அ) நேக-ஜன்ம-மரணா-(அ)வட-பாதநேந
மாம் ராக்ஷஸீவ பஹுநாத துதத்யவித்யா ||			(3)

ராக்ஷஸி ஒருவனைப் பிடிப்பதுபோல், என்னை அவித்யை என்பது பிடித்துத் துன்பப்படுத்துகிறது. ராக்ஷஸி பிசாசம் பூதம் முதலியன ஒருவனுடைய அநாசாரத்தைக் கண்டல்லவோ அவனைப் பிடிக்கும். என்னிடம் எண்ணிக்கையில்லாத துர்வாஸனைகள் குடி கொண்டு இருக்கின்றன. அந்த அநாசாரத்தைக் கண்டு அவித்யை என் மனத்தில் பிரவேசிக்கிறது. ராக்ஷஸி தான் பிடித்தவர்களைக் குழியில் தள்ளுவது முதலிய சேஷ்டைகளால் துன்பப்படுத்துமல்லவா? அம்மாதிரி இந்த அவித்யை என்னை பிறப்பு இறப்பு என்கிற குழியில் தள்ளுகிறது. அநேக ஜனமங்களை எடுக்கும்படி செய்து துன்பப்படுத்துகிறது.

கோரே க்ஷணம் விநிபதந் நரகே க்ஷணம் ச
புண்யம் பதம் திவிஷ தாம் ஸஹஸா (அ) திரோஹந் |
மோஹேந கந்துகதசாமிவ நீயமாந:
ஸ்வாமிந் ஸஹே கிம (அ)வதீநி கதாகதாநி || 			(4)

ஏ ஸ்வாமி! சிறீது காலம் நரகத்தில் துக்கங்களை அனுபவிக்கின்றேன். சிறிது காலம் ஸ்வர்க்கத்தில் ஸுகங்களை அனுபவிக்கிறேன். இப்படியே ஜனனமரணங்களின் சுக துக்கங்களை அனுபவித்துக் கொண்டு, மேலும் கீழும் அடிக்கப்படும் பந்தைப்போல் கஷ்டப்படுகிறேன். இதை நான் எப்படிப் பொறுப்பேன்? இதற்கு ஏதாவது என்லை உண்டா?

கா மே கதிர் விசதி நைவ மனோ விவேக:
ஸ்வப்னே (அ)பி பக்கணமிவ ப்ரவரோ த்விஜாநாம் |
ருத்தேபி தத்ர ந ஸ ரோடுமலம் முஹூர்தம்
விச்வேச மெளக்திகமிவோபரி தர்பணஸ்ய ||			(5)

பறைச்சேரிபோல் மிகவும் அசுத்தமானது என் மனம்; பிராமண சிரேஷ்டன் போல் மிகவும் தூய்மையும் மஹிமையும் வாய்ந்தது அறிவு; ஸ்வப்னத்திலும்கூட என் மனத்தில் அது எப்படிப் ப்ரவேசிக்கும்? ஒரு ஸமயம் கஷ்டப்பட்டு அந்த அறிவைப்பிடித்து மனத்தில் நிறுத்தலாம் என்றாலோ, அது ஒரு சிறிதும் நிற்காமல் கண்ணாடியின்மேல் வைக்கப்பட்ட முத்தைப்போல் தத்தளிக்கின்றது; நிலையாய் நிற்பதில்லை. அந்த அறிவு (விவேகம்) என் மனத்தில் எப்படி வேர் ஊன்றித் தழைக்கும்?

இனி வைராக்யம் த்ருடப்படுவதற்காக ஜீவன் ஜன்மம் எடுத்த ப்ரகாரத்தை ஜுகுப்ஸை ஏற்படும்படி, கர்போபநிஷத்தில் சொல்லிய ப்ரகாரம், கவிவிவரிக்கிறார்.

பித்ரோர் ஜகந்ய-ரஸ-பிந்து-யுகம் க்ருஹூத்வா
ஹந்தாஸக்ருத் பதிதவாநதிகர்பவாஸம் |
தத்து:கமந்வபவமீச கபீர-கும்பீ-
பாகோ வராக இதி யஸ்ய புரோ க்ருணந்தி ||			(6)

மாதா பிதாக்களின் இழிவான இடத்தில் உண்டான பிந்துக்களின் மூலம் பிறப்படைந்து அடிக்கடி கர்ப்பவாஸம் செய்தேன். கர்ப்பத்தில் ஜீவனால் நான் அனுபவித்த துக்கத்தை வாயால் சொல்ல முடியாது. கும்பீபாக நரகவேதனைகள் எல்லாம் நான் அனுபவித்த கர்ப்பவாஸத்திற்கு முன்பு அல்பம் என்றே தோன்றும்.

குறிப்பு – தன் பிறப்பிற்குக் காரணமான மாதா பிதாக்களின் சுக்ல சோணிதங்களைச் சொன்னது பிறப்பின் இழிவு த்வனிப்பதற்காக, நரகங்களுள் கும்பீபாகத்தைக் கர்ப்பவாஸத்திற்கு உபமானமாக எடுத்ததின் பொருத்தமும் இங்குக் குறிக்கத்தக்கது.

இதே அர்த்தம் ஸூதஸம்ஹிதையிலும் சொல்லப்படுகிறது.

தத்ரஸ்திதஸ் ததநு தத்ததநேக-பூர்வ-
ஜன்மாந்தர-ஸ்மரண-விஸ்மய-து:கிதாத்மா |
அஸ்மாந் நிஸ்ருத்ய புனருத்பவ-பங்க-ஹேதோ:
சேதோ விதாஸ்ய இதி சாகரவம் ப்ரதிஜ்ஞாம் || 		(7)

அப்படிக் கர்ப்பவாஸம் செய்யும் காலத்தில் நான் முன்பு எடுத்திருந்த அநேக ஜன்மங்கள் ஞாபகத்திற்கு வந்தன, அந்த ஜன்மங்களை நினைத்து ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் அடைந்தேன். அப்பொழுது “இனி இந்தக் கர்ப்பவாஸத்திலிருந்து வெளிவந்ததும் மறுபடியும் கர்ப்பவாஸ துக்கம் இல்லாமல் இருக்கும் மார்க்கத்தைத் தேடுவேன். அதற்குத் தங்கள் சரணாரவிந்தங்களிலேயே என் மனத்தைச் செலுத்துவேன்” என்று பிரதிஜ்ஞையும் செய்தேன்.

குறிப்பு – இதே விஷயம் கர்போநிஷத்திலும், ஸூதஸம்தையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

தேநாத்வநா(அ)த நிஸ்ருதோ(அ)ஸ்மி தத: ஸ்ம்ருதே(அ)பி
யஸ்மிந் நிகாமமபிமானதனாஸ்த்ரபந்தே |
ஸம்ஸ்பர்சதஸ்து சதச:சிதிகர்மவாயோ:
ப்ராயோ நிகூட-த்ருட-மூட-தசாமவாபம் ||				(8)

பிறகு அந்தக் கர்ப்ப வாஸஸ்தானத்திலிருந்து நான் வெளிவந்தேன். நான் வெளிவந்த வழியை நினைத்தாலும் மானிகள் வெட்கப்படுவார்கள். (வைஷ்ணவ) வாயுவின் ஸ்பர்சத்தால் பூர்வ ஜன்ம நினையுபோய், நான் மறுபிறப்பில்லாதற்கு முயல்வேன் என்ற ஸங்கல்பமும் மறந்து போய், த்ருடமான அவிவேக தசையை அடைந்தேன்.

குறிப்பு - இதே விஷயம் ஸூதஸம்ஹிதையிலும் கர்போபநிஷத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.

திர்யக் – தசாமிவ சநைரவிவேக-ஸேகாத்
வர்ஷாண்யவாப்ய பரமேச்வர பஞ்சஷாணி |
தத்-தத்க்ருதம் பததபி ஸ்ம்ருதி-ஸீம்நி யத்-யத்
ஸத்யோ ஹ்ரியம் ஜடதியோ(அ)பி ஹ்ருதி ப்ரஸூதே ||	(9)

இப்படிப் பிறந்த பிறகு அஜ்ஞானத்தில் மூழ்கினேன். ம்ருகங்களைப்போல் ஐந்து ஆறு வருஷங்கள் அறிவற்ற குழந்தைப் பருவத்தில் கழிந்தன. அப்போது நான் செய்த காரியங்களை நினைத்தாலும் மந்த புத்தியுள்ளவனும் வெட்கம் அடைவான். [கிடந்த இடத்தில் மல விஸர்ஜனம் முதலியவைகளைச் செய்வதால் குழந்தைப் பருவத்தை மிருக வாழ்க்கைக்கு ஒப்பிடுகிறார். பிற்காலத்தில் நினைத்து வெட்கம் அடையக்கூடிய சேஷ்டைகள் ஸ்தன்யபானம் முதலியவை].

ஆஸாத்ய யெளவனமதோ பஹூபி: ப்ரகாரை:
ச்ருங்கார-பங்க்யநுகுணைர் குணிதா(அ)விவேக: |
ஜாதோ(அ)ஸ்மி கோர-நரகாவஹ-கர்ம-யோகாத்
போகாசயா ப்ரசமிதோபய-லோக-சுத்தி: ||				(10)

பிறகு யெளவனப் பருவத்தை அடைந்தேன். பல விதத்திலும் காம சேஷ்டைகளில் ஈடுபட்டேன். ச்ருங்கார லீலைகளில் ஆழ்ந்து விட்டதால் அவிவேகம் அதிகரித்தது. காம வேட்கையால் நரகத்தில் கொண்டு சேர்ப்பிக்கும் காரியங்களை அனுஷ்டித்தேன். இம்மையிலும் மறுமையிலும் சுகத்திற்குக் காரணமாகிய ஸதாசாரத்தையும் அதனால் உண்டாகும் சுகத்தையும் இழந்தேன்.

மோஹாத் க்ருத:பரிணயோ (அ)ப்யநயோ மஹீயாந்
மூலம் ஸமஸ்த-பவ-பந்தந-துர்கதீநாம் |
யஸ்மாதுதேத்ய துரபத்ய-ஜனேந ஸ்ருஷ்ட –
ஸ்நேஹோ(அ)ஸ்மிவேஷ்டித இவோத்கட-நாக-பாசை: ||	(11)

பிறகு கல்யாணம் செய்து கொண்டேன். கல்யாணம் செய்து கொள்வதைவிட மிகவும் தவறான காரியம் வேறு என்ன இருக்கிறது? ஸம்ஸார பந்தத்தினால் உண்டாகும் ஸமஸ்த கஷ்டங்களும் அதுவே மூலம். அந்தக் கல்யாணத்தின் பயனாக குழந்தைகள் உண்டாயின. அந்தக் குழந்தைகளிடத்தில் ஸ்நேகம் வைக்கலானேன். கடுமையான நரக பாசத்தால் கட்டுப்பட்டவன் போல் நான் இந்த ஸ்நேஹத்தால் ஸம்ஸாரத்தில் கட்டுண்டவன் ஆனேன்.

தத்-போஷணாய விதுஷா(அ)பி மயா ஸமஸ்தம்
ஒளசித்யமுஜ்ஜிதவதா(ஆ)த்தவதா குக்ருத்யம் |
த்வாரி ச்வவல் லடிதமேவ கதீச்வராணாம்
ஸோடா(அ)வமான-சத-விக்லவ-மானஸேன ||			(12)

நல்வழி இதுதான் என்று அறிந்திருந்தேன். அப்படி அறிந்தும் மனைவியையும் மக்களையும் காப்பாற்றுவதற்குப் பல தீச்செயல்களையும் செய்யலானேன். நல்வழியை முற்றும் துறந்தேன். அற்பர்கள் வாசலில் நாய்போல் ஏங்கி நின்றேன். அற்பர்கள் செய்த அவமானங்களையும் பொறுத்துக் கொண்டேன்.

ப்ராணாதிகைரத வியோகமவாப்ய தைஸ்தை:
இஷ்டைரருந்துத-விஷாத-வசம்வதேந |
ஸ்திரீவந் மயா விலபிதம் விஹிதம் ந கிஞ்சித்
க்ருத்யம் ஸதாம் ஸமுசிதம் ஹஹஹா ஹதோ(அ)ஸ்மி ||	 (13)

என் உயிரைவிட நான் மேலாகப் போற்றி வந்தவர்களும் காலக்கிரமத்தில் என்னைவிட்டுப் பிரிந்து யமவுலகம் அடைந்தார்கள். அவர் பிரிவாற்றாமையினால் மிகவும் கொடுமையான துன்பங்களுக்கு உள்ளானேன். பெண்பாலர்போல் வாய்விட்டு அழுதேன். ஜன்மம் எடுத்து ஸாதுக்கள் செய்யும் நல்ல காரியங்கள் எதையும் நான் செய்யவில்லை. அந்தோ! கெட்டுவிட்டேனே!

ஸாம்ஸாரிகேஷு விஷயேஷு நிபத்ய ராக –
த்வேஷைக-நிஷ்ட-ஹ்ருதயோ பகவந்நபூவம் |
ஆஸீததந்தக – பய – ப்ரதிகூல-வ்ருத்தி
கிஞ்சிந் மயா ந ரசிதம் விதிதம் ந வாபி ||				(14)

ஸம்ஸார ஸம்பந்தமான விஷயங்களிலேயே நான் ஈடுபட்டுவிட்டேன். அதனால் உண்டான விருப்பு வெறுப்புக்களில் மூழ்கினேன். யமன் ஸமீபத்து வருகிறான் என்பதைக் கவனிக்கவும் இல்லை. அந்த யமனைத் தடுப்பதற்கு உரிய காரியங்கள் எதையும் நான் செய்யவில்லை; யமன் வராமல் தடுப்பதற்கு உரிய மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளவும் இல்லை.

இத்தம் ந கிம் வ்யவஹ்ருதம் ந கிமுக்தமாத்தம்
கிம் வா ந கிம் ந கலிதம் லலிதம் ந வா(அ)பி |
ஸர்வத்ர தத்ர ஸரணம் க்ருபணஸ்ய மே த்வம்
ஏஹ்யேஹி தேஹி சரணம் சிரஸீ(இ)ந்துமெளளே ||		(15)

மேற்கூறியபடி என் வாழ்நாள் முழுவதையும் வீணாகக் கழித்துவிட்டேனே? நான் என்னதான் செய்யவில்லை? நான் என்னதான் சொல்லவில்லை? நான் என்னதான் கைக்கொள்ளவில்லை? எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால் தீனனாகிய எனக்கு நீரே கதி ஏ சந்திரசேகர! நீர்தான் வந்து உம்முடைய இரண்டு பாதங்களையும் என் தலையில் வைத்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.

யா:ப்ரோத்கடா ப்ருகுடயோ யமகிங்கராணாம்
பீடாஸ்ச யா நவநவா நரகாவனீஷு |
தாஸ்சிந்திதா அபி பயாய மமாதுநைவ
ஸோடஸ்மி தா: கதமஹோ விஷமோ விஷாத: ||		(16)

யமகிங்கரர்கள் எவ்வளவு கடுமையாக விழித்துப் பார்த்து என்மீது அதிகாரத்தைச் செலுத்துவார்களோ, நரக ப்ரதேசங்களில் புதிது புதிதான எத்தகைய துன்பங்களை அனுபவிக்கவேண்டி வருமோ, இவைகளை எல்லாவற்றையும் நினைத்தால் இப்பொழுதே பயம் உண்டாகிறது. அந்தோ! இந்தக் கஷ்டங்களை எப்படிச் சகிப்பேன்? என் துயரம் மிகவும் தாங்க முடியாமல் இருக்கின்றது.

பீதோ(அ)ஸ்மி துர்கததமோ(அ)ஸ்மி கதர்த்திதோ(அ)ஸ்மி
பாபோ(அ)ஸ்மி விஸ்ம்ருத-ஸதத்வ-பரிக்ரஹோ(அ)ஸ்மி |
தத் கேந கேந ந பதா(அ)ஸ்மி க்ருபாஸ்பதம் தே
மத்வேதி சங்கர யதோசிதமாசரேதா: ||				(17)

இந்தப் பிரகாரம் என் வாழ்நாளைக் கழித்ததை யோசித்துப் பார்க்கையில் எனக்கு என்ன பயம்தான் உண்டாகவில்லை? மிகவும் கேடு அடைந்துவிட்டேன். மிக்க அவமதிப்புக்கு உள்ளாகிவிட்டேன். பாவியாய் இருக்கிறேன். ஸாதுக்களுடைய நல்வழியை மறந்துவிட்டேன். ஆகையால் எந்தவிதத்திலும் நான் ஏன் தங்கள் கிருபைக்குப் பாத்திரன் ஆகவில்லை? என் நிலையை யோசித்து எப்படிச் செய்யவேண்டுமோ அப்படித் தங்கள் இஷ்டப்படிச் செய்யுங்கள்.

இதில் கவி பாரம் முழுவதையும் சிவன் மேலேயே வைத்துச் சரணாகதியின் பராகாஷ்டையைக் காண்பித்து இருக்கிறார்.

நோ யத்ர பந்துரத நைவ பிதா ந மாதா
நோ வா ஸுஹ்ருத் த்ருதிமுபேத்ய விதாதுமீஷ்டே |
தாஸ்வேத்ய நாத மம நாரக-புஷு குர்யா:
த்ராணம் த்வமேவ ஹி ஜகத்ஸு தயார்த்ர-சேதா: ||		(18)

நரகபூமிகளில் அணுகி எனக்குத் தைர்யத்தை உண்டு பண்ணுவதற்கு பந்துவும் இல்லை, தகப்பனும் இல்லை, தாயும் இல்லை, நண்பனும் இல்லை. அந்த நரக பூமிகளில் என்னிடம் வந்து என்னைத் தாங்களே காப்பாற்ற வேண்டும். நீர் ஒருவர்தாம் ஸமஸ்த ஜகத்திலும் கருணையால் நனைந்த சித்தத்தை உடையவர் அன்றோ.

ப்ரஷ்டோ (அ)ஸ்மி யத்யபி ஸதாம் சரிதாத்ததா(அ)பி
மாம் த்ராதுமர்ஹஸி க்ருதாந்த-பியா ச்ரயந்தம் |
ப்ரஹ்வேஷு விஹ்வலதயா சரணாகதேஷு
நோ ஸாதவோ விதததே ஸதஸத்-விவேகம் ||			(19)

ஸாதுக்களுடைய மார்க்கத்தில் இருந்து நழுவி விட்டேன். அப்படி யிருந்தும் யமனிடத்தில் உண்டான பயத்தால் உம்மைச் சரணம் அடைந்திருக்கிறேன். நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். பயத்தால் வணங்கிச் சரணாகதி அடைந்தவர்களுள், சரணம் அடைந்தவன் நல்லவனா கெட்டவனா என்ற பாகுபாடு செய்வதுண்டா? இந்தப் பாகுபாட்டைப் பெரியோர்கள் செய்வதில்லை யன்றோ?

யேஷ்வந்தகார-நிகரேண கராளிதா பூ:
யத்ர ஜ்வலந்தி நரகேஷ்வநிசம் ஹுதாசா: |
தாம-த்ரயீ-நயந நிர்ஜர-ஸிந்து-மூர்தந்
தத்ரேதரஸ் த்வமிவ க: சரணம் நராணாம் ||			(20)

நான் உழலவேண்டிய நரகங்களைப்பற்றி என்ன கூறுவது? அங்குச் சில விடங்களில் இருட்கூட்டங்கள் பயத்தை உண்டுபண்ணுகின்றன. இன்னும் சில விடங்களில் அக்னி ஜ்வாலைகள் பற்றி எரிகின்றன. இவைகளில் தவிக்காமல் தப்பிப்பதற்குச் சரண்புகவேண்டியவர் நீங்கள் தானே. உங்களைத் தவிர மற்று யாரைச் சரணம் அடைகிறது? இருட்டைப்போக்க தாங்கள் சந்திரன் சூரியன் அக்னி என்ற மூன்று தேஜஸ்ஸுகளையும் கண்ணாகவுடையவர் அன்றோ? அக்னிஜ்வாலையை அணைப்பதற்கு தாங்கள் தேவகங்கையைத் தலையிலேயே தரித்துக்கொண்டு இருக்கிறீர்கள், ஆகையால் உம்மைத்தான் சரணம் அடைகிறேன்.

கவி, சிவனை முக்கண்ணன் என்றும் கங்காதரர் என்றும் அழைத்தது இந்த ச்லோகத்தில் மிகவும் பொருத்தமாய் இருக்கிறது.

ப்ராக் யாவதிந்த்ரியகண: படு-சக்திராஸீத்
ஸ்வாமிந் ஸ தாவதகமத் விஷயேஷுநிஷ்டாம் |
சக்தி-க்ஷயே(அ)த்ய ஸ கதம் பஜதே பவந்தம்
ஜன்மேதி மே விபலமீச கிமா: கரோமி ||				(21)

ஏ ஸ்வாமின்! முன்பு என்னுடைய இளம்பிராயத்தில் என்னுடைய இந்திரிய ஸமுகங்கள் வல்லமை உடையனவாய் இருந்தன. அந்தக்காலங்களில் என் இந்திரியங்கள் சிற்றின்பத்தில் நிலைத்திருந்தன. பிறகு வயது ஆனதும் இந்திரியங்களின் சக்தி குறைந்தது. இப்பொழுது அவைகள் உம்மை எப்படி பஜிக்கும்? இம்மாதிரி ஆகிவிட்டபடியால் என் ஜன்மம் வீணாய்விட்ட்து. ஏ நாத! ஐயோ! நான் என்ன செய்வேன்?

கரணங்கள் படுவாக இருக்கும்பொழுதே பகவத் பஜனை செய்யவேண்டும்.

நாதாயி தானமத நைவ தபோ வ்யதாயி
நாஸேவி தீர்த்த-திகஸாத்யதர: ஸமாதி: |
தத் கா(அ)பரத்ர கதிரஸ்த்யநவாப்த-புண்ய-
ஞானஸ்ய மே பவ பவத்ஸ்மிருதிமந்தரேண ||			(22)

நான் தானம் ஒன்றும் செய்யவில்லை. தபஸும் செய்யவில்லை. புண்ணிய தீர்த்தங்கள் இருக்கும் திக்கைக் குறித்தும் கூட என்மனம் நாடவில்லையே? தானம் தபஸ் தீர்த்தயாத்திரை இவைகள் எல்லாவற்றைவிட அடைவதற்கு மிகவும் அரியதான யோக ஸமாதி எனக்கு எப்படி ஸித்திக்கும்? நான் கர்ம மார்க்கத்தையாவது ஞான மார்க்கத்தையாவது அனுஷ்டிக்கவில்லையே. உம்மை மனத்தில் நினைத்துத்தான் நல்ல கதி அடையவேண்டும். உம்முடைய தியானம் தவிர வேறு கதி ஒன்றும் எனக்கு இந்தக் கடைசிக்காலத்தில் இல்லை.

காலாந் நமே பயமதோ கனகே ந லிப்ஸா
நைவா(அ)ஸ்மி சைசவவசேந பய: பிபாஸு: |
த்வத்-தர்சனாய து சிவ ஸ்பருஹயாமி லோபாத்
தத்ரா(அ)பி கிம் தவ ந வா ஸுகர: ப்ரகார: ||			(23)

எனக்கு, தாங்கள் மற்ற பக்தர்களுக்குச் செய்த உதவி செய்ய வேண்டாம். ஒரு பக்தருக்கு யமனுடைய பயத்தை நீக்கினீர். ஒரு பக்தருக்கு, வேண்டிய பொன் கொடுத்து உதவினீர். மற்றும் ஒருவருக்குச் சிறு வயதில் பால் கொடுக்கச்செய்து அனுக்ரஹம் செய்தீர்கள், நான் இப்படி எதையாவது கேட்கின்றேனா? ஒன்றும் இல்லையே. நான் விரும்புவதெல்லாம் தங்கள் தர்சனம் மட்டும் தானே. இதைத்தாங்கள் லகுவாய்ச் செய்துவைக்க முடியாதா?

குறிப்பு: ச்வேதன் என்ற ராஜருசிஷி யம பயத்தினின்றும் பரமேச்வரனால் விடுவிக்கப்பட்டான்; மருத்தன் என்ற அரசன் தபஸ்ஸினால் சிவனை த்ருப்தி செய்வித்துத் தன் நகரத்தில் சிவன் அருளால் ஏழு நாட்கள் பொன்மழை ஏற்படும்படி செய்து கொண்டான்; உபமன்யு என்ற முனி குமாரன் பால் பருகவேண்ட ஷீரஸமுத்ரத்தையே சிவன் அருளினார். மார்க்கண்டேயருக்கு யமனை உதைத்து அபயம் அளித்தாலும், சுந்தமூர்த்தி நாயனாருக்கு வேண்டும் போதெல்லாம் பொன் அளித்ததும், திருஞானாச்ம்பந்தருக்குச் சீர்காழியில் அம்பிகையின் திருமுலைப்பால் தருவித்ததும் எல்லோரும் நன்கு அறிந்ததே.

யஜ்ஜன்ம துர்லபமுசந்தி மனுஷ்ய-லோகே
தத் ப்ராப்தமப்யதநு-பூர்வ-சுப-ப்ரபாவாத் |
ஜா தம் வ்ருதைவ மம யத்ர முஹு: கதா(அ)பி
நைவாந்வபாபி பவதர்சன-பக்தி-ஸெளக்யம் ||			(24)

நான் அடைந்திருக்கும் இந்த மனுஷ்ய ஜன்மத்தையன்றோ கிடைத்தற்கு அரிது என்று சொல்லுகிறார்கள்? நான் ஏதோ முன்ஜன்மங்களில் செய்த புண்ணியத்தால் இந்த மனுஷ்ய ஜன்மத்தைப் பலமுறை அடைந்திருக்கிறேன். அப்படி அடைந்த மனுஷ்ய ஜன்மத்தில் உம்மைப் பூஜிக்கவும் இல்லை. உம்மிடம் பக்தி செய்யவும் இல்லை. ஆகையால் அந்தப் பூஜை பக்தி இவைகளால் உண்டாகும் ஸெளக்கியத்தையும் அடையவில்லை. ஆதலால் மானிட ஜன்மம் எனக்குக் கிடைத்ததும் வீணே.

ஜாதிர் மஹேச்வர புஜங்கம-புங்கவாநாம்
ஸ்துத்யா வரம் பவதலங்க்ருதி-வாஹ-க்ருத்யை: |
மானுஷ்யகம் து மம திக் கலயா கயா(அ)பி
யந்நோபயோகமகமத் த்வயி மச்சரீரம் ||				(25)

ஏ பரமசிவ! நான் அடைந்த மனுஷ்ய ஜன்மத்தை விட பாம்பினுடைய ஜன்மமும், வ்ருசஷபத்தினுடையஜன்மமும் மேலானது. பாம்போ உமக்கு அலங்கரமாய் இருக்கிறது. வ்ருஷபமோ உமக்கு வாஹனமாய் இருக்கிறது. ஆகையால் இவ்விரண்டு ஜன்மங்களும் ஸ்தோத்ரம் செய்யத்தக்கன. என்னுடைய மனுஷ்ய சரீரமோ தங்களுக்கு எவ்விதமாகவும் உபயோகப்படவுமில்லை. ஆகையால் இந்த என் மனுஷ்ய ஜன்மத்தைப் பொசுக்க வேண்டும். சிறந்ததான மானிடஜன்மம் எடுத்துப் பக்திசெய்யாவிட்டாலும் வேறு எவ்வகையிலாவது என் உடல் சிவ கைய்கர்யத்தில் ஈடுபட்டதா? இல்லை.

சச்வத் ப்ருச-வ்யஸனிதாமபி மே (அ)வதார்ய
தத்ஸே கதம் பரம-காருணிகோ (அ)ப்யவஜ்ஞாம் |
கிம் நாத பச்யஸி ந யத் பரிஹ்ருத்ய சங்காம்
லக்நோ (அ)நிசம் சிவ சிவேதி மம ப்ரலாப: ||			(26)

நான் அடிக்கடி அதிகமாக மனம் வருந்திக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் கருணையுள்ளவர் ஆயிற்றே, நான் வருந்துவதைத் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்தும் ஏன் என்னை அசட்டை செய்கிறீர்கள்? நான் தயக்கத்தை விட்டு ‘சிவ’ ‘சிவ’ என்று ப்ரலாபிக்கிறேன். இது தங்கள் காதில் விழவில்லையா? தாங்கள் ஏன் என்னைப் பார்க்காமல் இருக்கிறீர்கள்? ஏன் கவனிக்காமல் இருக்கிறீர்கள்?

ரக்தார்த்ர-சர்ம-வஸனாய மஹா-ச்மசான-
தாம்னே (அ)ஸ்தி-பூஷணவதே பணிகங்கணாய |
ரக்ஷ:-பிசாச-ஸசிவாய பலிம் ப்ரயாம:
ரூபாய தே ஹர யுகாந்த-நிசாசராய ||					(27)

ஏ ஸம்ஹார மூர்த்தியே! தாங்கள் ரத்தம் தோய்ந்த யானையின் தோலை ஆடையாய் உடுத்து இருக்கிறீர்கள். மஹாச்மசானத்தை வாஸஸ்தானமாக்க் கொண்டு இருக்கிறீர்கள். பாம்பை வளையக அணிந்து இருக்கிறீர்கள். ராக்ஷஸர்களோடும் பிசாசகளுடனும் கூடியிருக்கிறீர்கள். யுகத்தின் முடிவாகிய ப்ரளயகாலத்தில் சஞ்சரிக்கிறீர். உம்முடைய உருவத்திற்கு நிவேதனம் ஆகிறோம்.

திவ்யோத்தரீய-ப்ருதி கெளஸ்துப-ரத்ன-பாஜி
தேவே (அ)பரே ததது லுப்த-தியோ (அ)னுபந்தம் |
ரூபம் திகம்பரமகண்ட-ந்ருமுண்ட-சூடம்
பாவத்கமேவ து பதேச மம ஸ்ப்ருஹாயை ||			(28)

திவ்ய பீதாம்பரம் தரித்துத் கெளஸ்துபரத்னத்தை மார்பில் அணிந்த விஷ்ணுவிடம் ப்ரீதி வைக்கிறவர்கள் ப்ரீதி வைக்கட்டும். திக்கையே தனக்கு ஆடையாகவும், மண்டை யோட்டையே ஆபரணமாகவும் உடைய பரமசிவனாகிய உம்மிடத்திலேயே என் மனம் செல்லுகிறது.

ஜீவாமி சேதத ப்ருது-ப்ரிய-விப்ரயோக-
ரோகாதயோ நரக-துக்க-பியோ(அ)ன்யதா(அ)பி |
க்னந்த்யேவ மாமுபயதா(அ)ப்யஸுகோ(அ)ஹமித்தம்
அத்ரோசிதம் ஹர சர ஸ்வக்ருபாளுதாயா: ||			(29)

உயிரோடு இருப்போம் என்றால் பிரியமுள்ளவர்கள் பிரிவு, வியாதி, முதலிய துன்பங்கள் துன்பப் படுத்துகின்றன. இல்லை, இறந்து போவோம் என்றால் நரகத்தில் அனுபவிக்க வேண்டிய துக்கங்களின் பயமும் விடுவதில்லை, இப்படி இரண்டு வகையிலும் என்னைத் துன்பங்கள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துகின்றன. ஏ பரமசிவ! இப்படித் துன்பப்படும் எனக்கு உம் கருணையுள்ள தன்மைக்கு எது தகுதியாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.

யத்ரேந்த்ரியாணி விரமந்தி நிஜ-க்ரியாப்ய:
யாத்யாந்தரோ(அ)பி கரண-ப்ரஸ்ரோ(அ)வஸாதம் |
ப்ராணா: த்ருடந்தி ச ஸமஸ்த-நிராசபூதம்
மாமேத்ய சங்கர குதோ(அ)பி ததா தயேதா: ||			(30)

என் கடைசிக் காலத்தில் (நான் மரணம் அடையும் காலத்தில்) என் இந்திரியங்கள் அவைகள் செய்யும் தொழில்களைச் செய்யாமல் ஒய்வடைகின்றன. அந்தகரணத்தின் சக்தியும் அடங்குகிறது. இந்தத் தசையில் எத்துணையிலும் நம்பிக்கை அற்றவனாக இருக்கிறேன். ஏ, பரமசிவ! இத்தசையில் இருக்கும் என்னைக் காப்பாற்ற எங்கிருந்தாவது வந்து எனக்குக் கிருபை செய்யும்.

ஸ்வாசேஷ-பூர்வ-துரித-ஸ்மரணாதுதேதி
யத்ராஸமம் பயமஸு-ப்ரசம-ப்ரஸங்கே |
க: காந்திசீக-மனஸ: சரணம் ததா மே
ஸ்வாமின் தவைவ ஸமய: ஸ க்ருபாளுதாயா: || 		(31)

என் பிராணன் ஒடுங்கும் தறுவாயில் நான் முன் செய்த பாப கர்மங்கள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. அதனால் ஒப்பிட முடியாத பயத்தை அடைகிறேன். அதனால் திக்கற்றவன்போல் திகைக்கின்றேன். அந்த ஸமயம் நான் யாரைச் சரணமாக அடைவேன்? இப்படி நான் உழலும் ஸமயத்தில்தான் நீர் என்னை ஆட்கொள்ள வேண்டும். அந்த ஸமயத்தில் தான் தாங்கள் கிருபா ஸமுத்ரம் என்பதைக் காட்ட வேண்டும்.

அத்யைவ யாமி சரணம் பரமேச்வர த்வாம்
சக்ஷ்யாமி கிம் நநு ததா(ஆ)ஹத-ஸர்வ-சக்தி: |
ம்ருத்யுர் யதா மம பயாய பதத்யகஸ்மாத்
அந்தஸ்ய வக்தா இவ ஹஸ்த-தல-ப்ரஹார: ||			(32)

யமன் திடீரென்று சொல்லாமலே வந்துவிடுவான். கண்ணில்லாதவனைத் திடீரென்று முகத்தில் அடித்தால் எப்படிப் ப்ரமித்து நிற்பானோ, அம்மாதிரி யமன் என்னிடம் வரும் காலத்தில் எனக்கு ஸர்வ சக்திகளும் அடங்கிக் கிடக்கும். அந்தக் காலத்தில் ம்ருத்யுவைத் தடுக்கும் சக்தியிம் சரணாகதி செய்யும் சக்தியும் இரண்டும் எனக்கு இல்லாமல் போகும். ஆகையால் தங்களை இன்றே சரணம் அடைகிறேன்.

ஆர்த்தி-க்ஷணே ஸபதி விஸ்மா தாத மாத:
இத்யாதிகம் ச விபலம் க்ருபண-ப்ரலாபம் |
சர்வேச சங்கர சிவேதி நுதிம் பஜஸ்வ
ஜிஹ்வே யதோ விகடதே (அ)கில துக்கபார: ||			(33)

ஏ நாக்கே! மரண வேதனை அடையும் காலத்தில் எல்லோரைப்போல் அப்பா அம்மா ஐயோ என்னும் பயனற்ற சொற்களை அறவே மறந்துவிடு. ஏ சர்வ! ஏ ஈச! ஏ சங்கர! ஏ சிவ! என்னும் ஈச்வர நாமாக்களைச் சொல்லு இந்த ஈச்வர நாமாக்களால் அன்றோ சகல துன்பங்களும் சிதறி விடுகின்றன.

இம்மாதிரியே தேவாரத் திருவாசகங்களிலும் கூறப்பட்டிருக்கின்றது. நாக்கைப் போல் தேகங்களின் மற்ற இந்திரியங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஸ்வாஸ்த்யே மதாத் கதி ந து:சரிதானி நாம
நாத வ்யதாம் கதவிவேகதயா விசங்க: |
ஸம்ஸ்ம்ருத்ய ம்ருத்யு-பயமத்ய து விஹ்வலோ(அ)ஸ்மி
ச்ரீகண்ட போக்துமபி யேன ந பாரயாமி || 			(34)

ஸ்வஸ்தமாய் இருந்தகாலத்தில் விவேகத்தை இழந்து மத்த்தினால், பயமில்லாமல், நான் எந்த எந்தக் கெட்ட கார்யங்களைத்தாம் செய்யவில்லை. அந்த கெட்ட காரியங்களின் பலனைக் கொடுப்பதற்கு ஸித்தமாய் உள்ள யமனை நினைத்து இப்பொழுது நடுங்குகின்றேன். இந்தக் காரணத்தினால் சாப்பிடுவதற்குக்கூடத் தகுதியற்றவனாய் இருக்கிறேன்.

பூர்வம் ந சேத் விரசிதா தவ தேவ ஸேவா
தேனைவ நைவ தயஸே ச்ரயதோ மமார்த்திம் |
கிம் ப்ராகஸம்ஸ்துத இதி ப்ரதிபன்ன-மூல-
ச்சாயம் கத-ச்ரம-ருஜம் ந தரு: கரோதி ||				(35)

நான் தங்களை ஸேவிக்கவில்லை. இந்தக் காரணத்தை முன்னிட்டு இப்பொழுது மரண வேதனையை அடைந்த என் மீது தயவு செய்யாமல் இருந்துவிடுவீர்களா? விருக்ஷமானது நிழலைத் தந்து தன்னிடம் வந்தவர்கள் சிரமத்தைப் போக்குகிறது. தன்னிழலை அடைந்தவனை “நீ முன்பு என்னிடம் பழகாதவன், உனக்கு நிழலைக் கொடுக்கமாட்டேன்” என்று சொல்லுகிறதா? சொல்லுகிறதில்லை. அம்மாதிரி தங்களை முன்புஸ்தோத்ரம் செய்யவில்லை என்ற காரணத்தினால் இப்பொழுது சரணம் அடைந்த என்னைக் கைவிடமாட்டீர்கள் என்பது நிச்சயம்.

கடவுளுக்குக் கருணை புரிவது ஸ்வாபாவிகமான குணம் என்று கவி இந்தச் சுலோகத்தால் விளக்குகிறார்.

ஞான-ப்ரகாச-ஸுலபம் சிவ தர்சனம் தே
ஜாத்யந்த்தைவ ச பரம் மம தத்வி-யோகாத் |
தத்தாம் த்வமேவ கில காமபி தேஹி யுக்திம்
வ்யக்திம் யயைஷ்யஸி மம ச்ரமமந்தரேண ||			(36)

ஏ பரமசிவ! தங்களை அடைவதற்கு ஞான மார்க்கமே ஸுலபமான மார்க்கம். ஞானக்கண் உடையவர்களே தங்களை தர்சனம் செய்ய முடியும். எனக்கு ஞானக்கண் என்பது இல்லை. பிறவிக் குருடனாய் இருக்கிறேன். ஆனால் எப்படியாவது நான் சிரமம் இல்லாமல் தங்களை தர்சனம் செய்தாக வேண்டும். இதற்கு வேண்டிய யுக்தியைத் தாங்களே செய்யவேண்டும்.

மேலே 17, 29-வது சுலோகங்களில் சொன்னது போல் இங்கும், கவி பாரம் முழுவதையும் ஈச்வரன் பேரிலேயே போடுகிறார்.

ப்ராப்யேத்ருசீமபி மனுஷ்ய-தசாம் ந புண்யே
ஞானே(அ)தவா விதிஹதோ(அ)ப்யகமம் ப்ரிதிஷ்டாம் |
ஸாமக்ர்யஸாவத குத: புனரப்யதோ மாம்
ஸ்வாமிந்நதன்யமனுகம்பிதுமர்ஹஸி த்வம் ||			(37)

கிடைத்தற்கு மிகவும் துர்லபமான மனுஷ்ய தேகத்தை அடைந்தேன். மனிதனாய்ப் பிறந்தவர் தங்களை அடையக்கர்ம யோகத்தையாவது ஞானயோகத்தையாவது அனுஷ்டிப்பார்கள். நான் இவ்விரண்டில் எதையும் அனுஷ்டிக்காமல் கெட்டுவிட்டேனே. மறுபடியும் இவ்வளவு ஸெளகர்யங்களோடு கூடிய மனுஷ்ய தேகம் எப்பொழுது கிடைக்கும்? ஏ ஸ்வாமின்! அபாக்யசாலியாகிய என்பேரில் தாங்கள் கிருபை செய்யவேண்டும்.

லீனேன பூரி விஷயாத்வனி ஸெளக்ய-லோபாத்
நாமா(அ)பி மோஹித-தியா கலிதம் ந ம்ருத்யோ: |
ஆஸீதத: ஸபதி தத்பயதோ மயா கிம்
சக்யம் விதாதுமஹஹா மஹாதாகுலோ(அ)ஸ்மி ||		(38)

இன்பத்தில் பேராசை கொண்டு சிற்றின்ப ஸெளக்கியங்களில் மிகவும் முழுகி விட்டேன். இப்படி இருக்கும் பொழுது, ‘யமன்’ என்பவன் ஒருவன் இருக்கின்றான் என்று எண்ணவேயில்லை. ஆனால் அந்த யமன் சீக்கிரமாக ஸமீபம் வருகிறான். அவனிடம் இருந்து எனக்கு உண்டாகும் பயத்தைப் போக்க என்னால் என்ன செய்ய முடியும். அந்தோ! மிகவும் மனங்கலங்கினவனாய் இருக்கிறேன்.

யா விக்ரியா யம-பட-ப்ருகுடி-ச்சடானாம்
பீடா:ச யா நவ-நவா: நரகாவனீஷு |
தா நிர்விசன் பவ கதம் பவிதாஸ்ம்யமுத்ர
குத்ர வ்ரஜாமி சரணம் கதரம் ப்ரபத்யே ||				(39)

நான் செய்த கெட்ட கார்யங்களின் பலன்களை நரகங்களில் அனுபவிக்க வேண்டும். அங்கு யம படர்களின் புருவ நெரிப்புகளைப்பற்றி என்ன சொல்லுவது? அங்கு அனுபவிக்க வேண்டிய புதிது புதிதான கஷ்டங்களைப் பற்றித்தான் என்ன சொல்லுவது? இவைகளை அங்கே எப்படி அனுபவித்துக் கொண்டிருப்பேன்? எனக்குப் புகலிடம் ஒன்றும் இல்லையே; யாரைத்தான் நான் சரணம் அடைவேன்?

ஸ்ம்ருத்வா(அ)ப்யஹோ ரவிஜ-கிம்க்ருத-ஹும்க்ருதீனாம்
முஹ்யாமி யாமி விலயம் பய-விஹ்வலாத்மா |
ஆஸன்னமேவமஹஹா விஷமம் புரஸ்தாத்
தத்கா கதிர்மம கு-கர்ம-நிமக்ன-வ்ருத்தே: ||				(40)

நான் செய்த கெட்ட கார்யங்களுக்காக அந்தப் பலனை அனுபவிக்க வேண்டிய நரகங்களில் இருக்கும் யம கிங்கரர்களின் ஹுங்காரங்களை நினைத்தாலேயே இப்பொழுதே எனக்கு மயக்கம் உண்டாகிறது. பயத்தால் தத்தளிக்கிறேன். நாசத்தை அடைகிறேன். கஷ்டமானது எதிரிலேயே நெருங்கிக்கொண்டு வருகிறது. நானோ கெட்ட வழியில் முழுகி விட்டேனே, எனக்கு என்னதான் கதி இருக்கிறது?

ஆஸன்ன-பாப-சத-ஸம்ப்ருத-கோர-பீட:
க்ரந்தாம்யனந்ய-கதிகத்வ-வசாத் புரஸ்தே |
தஸ்மாத் கதம் ந தயஸே த்வரிதம் குதஸ்சித்
ஆகத்ய விச்வமய ஸாந்த்வய மாம் வராகம் ||			(41)

நான் செய்த கணக்கில்லாத பாபங்களின் பயனை அனுபவிக்கும் ஸமயம் கிட்டிவிட்ட்து. எனக்குப் புகலிடம் யாதும் இல்லை. தங்கள் முன்பாக நான் கதறுகிறேனே. தாங்கள் ஏன் தயவு செய்யவில்லை? தாங்கள் விச்வமயர் அன்றோ! ஸர்வ வ்யாபியாய் எங்கும் இருப்பவர் அன்றோ! ஆகையால் எங்கிருந்தாவது வந்து தீனனாகிய என்னை ஆச்வாஸப்படுத்த வேண்டும்.

விச்வமய: ‘விச்வமய’ என்று கவி கூறியிருப்பது மிகவும் பொருத்தமானது. சிவனை எங்கிருந்தாவது வந்து என்னைக் காப்பாற்று என்கிறார். சிவன் இல்லாத இடமே இல்லை. ஆகையால்தான் ‘விச்வமய’ என்று ஸம்போதனம் செய்கிறார்.

பச்யன் ஸமான-வயஸோ(அ)பி யவீயஸோ(அ)பி
நக்தந்திவம் யமபடைரபி நீயமாநாந் |
ஆத்மன்யபூவமஜராமரதாபிமானீ
யத்-விப்லவாதகரவம் ந சுபம் கதாசித் ||				(42)

இரவிலும் பகலிலும் எனக்கு ஸமானமான வயதுள்ளவர்களையும் எனக்குக் கீழ் வயதுள்ளவர்களையும் யம படர்கள் இழுத்துப் போவதை நேரில் பார்த்துக் கொண்டே யிருக்கிறேன். என் கண் முன்பாக அவர்கள் இறப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தும், நான் மட்டும் இறக்கமாட்டேன் கிழவனாகமாட்டேன் என்ற இந்த அபிமானத்தால் குழப்பம் அடைந்து சுபமான காரியங்கள் ஒன்றும் எப்பொழுதும் செய்யவில்லை.

இதைத் தான் மஹாபாரதத்தில் யக்ஷப்ரசனக்தில் சொல்லியிருக்கிறது.

த்வாரே லுடாமி கருணம் ப்ரலபாமி சம்போ
வாஞ்சாமி சும்பிதுமதோ பரிரப்ய ச த்வாம் |
வாதூலதாமுபகதோ(அ)ஸ்மி தவானுராகாத்
ஹா துஸ்ஸஹஸ்த்வயி மமைஷ த்ருடோ(அ)னுராக: ||	(43)

நான் வாசலில் புரள்கின்றேன். தீனமாய்ப் பிதற்றுகின்றேன். ஏ சம்போ! உம்மை ஆலிங்கனம் செய்துகொண்டு முத்தம் கொடுக்க விரும்புகிறேன். உம்மேல் இருக்கும் காதலால் பைத்தியம் பிடித்தவன் படும் துன்பங்களை அனுபவிக்கிறேன். அந்தோ! உம்மிடத்தில் எனக்கு இருக்கும் அன்பு என்னால் தாங்க முடியாததாய் இருக்கிறது.

இந்தச் சுலோகம் நாயக-நாயிகா-பாவ வர்ணனை. தேவாரத் திருவாசகங்களில் இம்மாதிரி நாயகியாய்க் கவி தன்னை வர்ணித்துக் கூறுவது வழக்கம். மாணிக்கவாசகப் பெருமான் அகப்பொருள் துறைகளையே முழுவதும் அமைத்த திருக்கோவையார் என்னும் நூலில் பகவானிடம் தனக்கு இருக்கும் காதலை மிக விரிவாகப் பாராட்டியுள்ளார்.

கண்டே (அ)ர்பயத்யுரக-பாசமஸூயயா மே
யாமின்யதீச-சிக யத்ஸமையே க்ருதாந்த: |
நூநம் ததா முஹுருபைமி பணீந்த்ரஹார
த்வத்துல்யதாமிதி பஜே மரணே(அ)பி ஹர்ஷம் ||		(44)

கடைசிக் காலத்தில் யமன் என்னை அழைத்துக் கொண்டு போகும்போது தனது நரக பாசத்தை என் கழுத்தில் போடுகிறான். அப்பொழுது எனக்கு வருத்தமில்லை. ஏ சந்திரசேகர! தங்களுக்கு நரகங்கள் ஆபரணமாக ஆகவில்லையா? அதே மாதிரி யமன் என்மேல் போட்ட நரக பாசத்தையும் ஆபரணமாக என்ணிக் கொண்டு தங்களுக்கு ஸமானமான ரூபத்தை அதாவது ஸாரூப்யத்தை அடைந்ததாக எண்ணிக்கொள்ளுகிறேன். ஆகையால் இப்படி நரக பாசத்துடன் இறப்பதிலும் எனக்குச் சந்தோஷந்தான்.

இதுவும் முன் சுலோகம்போல் நாயக-நாயிகா பாவத்தைக் காட்டுகிறது. நாயகி நாயகனுடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டும் நாயகன் செய்யும் கார்யங்களை எல்லாம் தான் செய்துகொண்டும், சந்தோஷிப்பதைக் கவிகள் வர்ணிப்பது வழக்கம். இதை நாட்டிய சாஸ்திரத்தில் ‘லீலா’ என்று பரதமுனி வர்ணிக்கிறார்.

சித்தம் ந பாரதமிவ க்ஷணமுஜ்ஜதீதம்
சாஞ்சல்ய-விப்லவமயுக்திவித: ப்ரபோ மே |
தஸ்மாத் கதம் பவதி பக்தி-ரஸஸ்ய ஸித்தி:
கஸ்தாம் வினா ச பவ-கோர-விபத்-வினாச: ||			(45)

உபாயம் தெரியாத என்னுடைய மனமானது ரஸத்தைப்போல் ஒரு நிமிஷமும் ஒரு இடத்தில் ஸ்திரமாய் இருக்கிறதில்லை. ஆகையால் எனக்குப் பக்தி ரஸத்தின் ஸித்தி எப்படி உண்டாகும்? அந்தப் பக்தி ரஸத்தின் ஸித்தி இருந்தால் அன்றோ ஸம்ஸாரமாகிய கோரமான ஆபத்தை நாசம் செய்ய முடியும்.

ரஸம் என்னும் பதத்தைக் கவி மிகச் சமத்காரமாய் உபயோகப் படுத்தியிருக்கிறார். ரஸம் என்பது ஒரு க்ஷணம் கூட ஒரு இடத்தில் நில்லாது எப்பொழுதும் சஞ்சலஸ்வபாவம் உள்ளது. இந்த ரஸத்தினால் யோகிகள் யோகஸித்தி அடைவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறும். ஆனால் கவி தன்னிடம் பக்தி ரஸம் இல்லை, சஞ்சலஸ்வபாவம், ரஸத்தின் குணம், இருக்கிறது என்கிறார். மேலும் ரஸ்ஸித்தி அதாவது ரஸத்தைக்கட்டியல்லவோ அதை ஒரு விபத்துக்கு மருந்தாக உபயோகப்படுத்த முடியும். அது முடியவில்லையே என்கிறார் கவி.

ஸ்வாமிந்நநுத்கத-விவேக-லவோ (அ)க்ருதாத்மா
திர்யக்வதேவ திவஸாநதிவாஹயாமி |
நேதா க்ஷணாச்ச வசமந்தக-ஸெளநிகோ மாம்
ஆசைவ தந்மம குத: ஸுகதி-ப்ரஸக்த்யை. ||			(46)

ஏ ஸ்வாமின்! விவேகத்தின் லேசமும் உண்டாகவில்லை. இந்திரிய நிக்ரஹமும் செய்யவில்லை. தனந்தோறும் மிருகங்களைப்போல் நாட்களைக் கழித்து வருகிறேன். இந்தப் பாழும் யமன் வந்து ஒரு நிமிஷத்தில் கொண்டும்போய்விடப் போகிறான். எனக்கு நல்லகதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்கிருந்து உண்டாகும்?

திர்யக்: ஆதி ஆசார்யர்களான ஶ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆத்மஞான மில்லாதவர்களைப்பற்றி பிரம்ம ஸூத்ர பாஷ்யோபக்ரமத்தில் மிருகங்களுக்கும் ஆத்மக்ஞான மில்லாதவர்களுக்கும் யாதொரு வித்யாஸமும் இல்லை என்று சொல்லுகிறார்.

துஸ்ஸ்வப்ன ஏஷ விஷமோ பவ-து:க-நாமா
ஸ்வாமிந் கதம் த்யஜதி மாம் விகத-ப்ரபோதம் |
யஸ்மாந் மமாநவரத-ச்ருத-பூரி-சாஸ்த்ர-
தூர்யஸ்வநைரபி ந சாம்யதி மோஹ-நித்ரா ||			(47)

மோஹமென்னும் தூக்கமானது சாஸ்திரங்களைக் கேட்டல் என்னும் வாத்ய கோஷங்களாலேயே முடிவு அடைகிறதில்லையே? அப்படி இருக்க ஸம்ஸாரத்தின் துக்கம் என்று பெயர்கொண்ட கொடிய கெட்ட ஸ்வப்னம் தூங்கிக்கொண்டு இருக்கும் என்னை எப்படி விடும்?

கும்பகர்ணனுடைய நித்ரை போன்ற தூக்கம் தன்னுடைய மோகம் என்று கவி மனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

க்ருத்வா பாபமஸாவபோஷ்யத நிஜ: காயோ ந தீனோ ஜன:
வைவச்யால் லுடிதம் சிரம் சரணயோஸ் ஸ்த்ரீணாம் 
குருணாம் ந து |
லோபோ(அ)காரி மயா தனே ந ஸுக்ருதே 
தேனானுதப்யே மஹத்
கிம் சக்யம் மம தத்ர கர்துமதுநா நாத த்வமேகா கதி: ||	(48)

பல பாபங்களைச் செய்து இந்த என்னுடைய தேகத்தை வளர்த்தேனே யொழிய ஏழை ஜனங்களுக்கு அன்னம் இட்டு அறியேன். பரவசனாய் ஸ்திரீகள் கால்களில் விழுந்தேனே ஒழியக் குருவின் பாத கமலங்களில் ஸேவை செய்யவில்லை. பணத்தை ஸம்பாதிக்கப் பேராசை கொண்டேனே யொழிய ஸத்கார்யங்கள் செய்ய ஆசை கொள்ளவில்லை. இப்படி வாழ்நாளைக் கழித்ததால் மிகவும் வருந்துகின்றேன். இப்பொழுது என்னால் என்ன செய்ய முடியும்? தாங்கள் தாம் இப்பொழுது எனக்கு ஒப்பற்ற ஒரே கதி.

அஹம் பாபீ பாப-க்ஷபண-நிபுண: சங்கர பவான்
அஹம் பீதோ பீதா(அ)பய-விதரணே தே வ்யஸநிதா |
அஹம் தீனோ தீனோத்தரண-விதி-ஸஜ்ஜஸ் த்வமிதரத்
ந ஜாநே(அ)ஹம் வக்தும் குரு ஸகல-சோச்யே மயி தயாம் || (49)

நானோ பாவி, நீரோ பாபத்தைப் போக்குவதில் ஸமர்த்தார். நானோ பயந்தவன், நீரோ பயந்தவர்களுக்கு அபயம் (பயமில்லாதிருக்கும் தன்மையை) அளிப்பதில் விசேஷ ஈடுபாடு உடையவர். நானோ தீனன், நீரோ தீனர்களைக் கைதூக்கிவிடும் கார்யத்தில் ஸஜ்ஜரானவர். இதைத் தவிர வேறு ஒன்றும் நான் சொல்ல அறிகிலேன். எல்லாவிதத்திலும் வருந்தத்தக்கவனாகிய என்னிடம் தயை செய்யுங்கள்.

இதி பரிஹ்ருதவான் ஸ்வ-காவ்ய-சில்ப-
ப்ரகடனமாகுலிதோ பவ-வ்யதாபி: |
வ்யதித கிரிச ரம்யதேவ-ஜன்மா
தவ புரதோ ஹட-தைன்யத: ப்ரலாபான் ||				(50)

இந்த ப்ரகாரம் ரம்யதேவரின் புத்ரனாகிய லோஷ்ட்தேவனாகிய நான் மற்ற காவ்யங்களை இயற்றுதல் என்ற தோஷத்திற்கு இந்த தீனாக்ரந்தன ஸ்தோத்ரத்தைச் செய்த ப்ராயச்சித்தத்தால் பரிஹாரஞ் செய்துகொண்டேன். புலம்பல்கள் அடங்கிய இந்த தீனாக்ரந்தன ஸ்தோத்திரத்தை உமக்கு முன்பு இயற்றினேன்.

குறிப்பு:- 50, 51, 52, 53 ச்லோகங்களால் இந்த தீனாக்ரந்தன ஸ்தோத்ரம் காசியில் ஶ்ரீ விச்வேச்வசருக்கு முன்பு இயற்றப்பட்டு ஶ்ரீ விச்வேச்வரருக்கு நேரிலேயே ஸமர்ப்பணம் செய்யப்பட்டதென்று ஸ்பஷ்டமாக த்வனிக்கின்றது.

ஏதத் தீவ்ரம் வ்ரதமுபசி தம் ஸைகதே ஸித்த-ஸிந்தோ:
வாராணஸ்யாம்சம-தம-த்ருசோரேஷ காடோ(அ)னுபந்த: |
தீனாக்ரந்தனம் ப்ரதி பசுபதேருத்யமச் சாடுகானி
த்யக்த்வா ராஜ்ஞாம் பத மம சுபைஸ் தன்யதே தன்ய–தேயம் || (51)

ஞானம் என்பதற்கு ‘சமம்’ ‘தமம்’ என்பது இரண்டு கண்கள். இதை அடையக் காசியில் கங்கைக் கரையை விட்டு ஆயுஸு வரையில் அகலுவதில்லை என்று காசிக்ஷேத்திரத்தில் “க்ஷேத்திர ஸந்யாஸம்” என்னும் விரதத்தைக் கைக்கொண்டேன். ராஜாக்களுக்கு ப்ரீதியான சாடுக்கள் இயற்றுவதை விட்டுவிட்டேன். பசுபதியான விச்வேச்ரரின் பொருட்டு இந்த தீனக்ரந்தன ஸ்தோத்திரத்தை இயற்றினேன். இதனால் நான் தந்யன் ஆனேன்.

கங்கை: “இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். அவர் ‘காணாமற் கோணாமற் கண்டு கொடு; ஆடு; காண்; போகுது பார் போகுது பார்’; என்றார். முதல் மூன்றும் மூன்றுகால ஸந்த்யாவந்தனத்தையும் குறிக்கும்; ஆடு என்றால் நீராடு; கங்கையில் ஸ்நானமும் பண்ணு என்பது அர்த்தம்; காண் என்றால் ஸேது தர்சனம் பண்ணு என்று அர்த்தம்; போகுது என்றால் கங்கா ஸ்நாநத்தாலும் ஸேது தர்சனத்தாலும் நம் பாபம் துலைகிறது; இதைப் பார் என்று சொன்னார். ஜன்மத்தில் ஒருதரமாவது கங்கா ஸ்நானமும் ஸேது தர்சனமும் பண்ணவேண்டும்.” ஆசார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகள் I 500-501.

காசி: “உலகத்தில் உள்ள க்ஷேத்திரங்களுள் காசி அதிக மகிமையுடையது என்று நினைக்கப்படுகிறது. வேறு க்ஷேத்திரங்களப்பற்றி சொல்லும்போதெல்லாம் அவை காசிக்கு ஸமானமானவை என்கிறார்கள். அதனால் காசியினுடைய மகிமை தெரிகிறது. காசியை உபமானமாகச் சொல்லிச்சொல்லி அதற்கு இன்னும் கெளரவத்தை உண்டாக்கி வருகிறார்கள். 100 வருஷங்களுக்கு முன் ஒரு கவி உத்தம க்ஷேத்திரங்களுக்குள் எதை உபமானமாகச் சொல்லிப் பிரசித்திவருகிறதோ அது காசி, அங்கே பக்தியாகிய காசைக் கொடுத்தால் முக்தியைச் சுலபமாக வாங்கலாம், அது கிடைக்கும் கடைத்தெருவு காசிதான் என்று சொல்லி யிருக்கிறார்கள்.

ஆசார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகள் I 259-260.

“காசிமகா க்ஷேத்திரம், அங்கே விச்வேசரர் இறந்து போகும் ஒவ்வொரு பிராணிக்கும் ஞானோபதேசம் செய்து முக்தி கொடுக்கிறார். இந்த வகையில் இல்லாமல் வேறு விதத்திலும் காசி க்ஷேத்திரத்திற்கு விசேஷம் இருக்கிறது. நம்முடைய தேகத்தில் அநேக மதங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களுடைய பிரதிநிதிகளும் காசி க்ஷேத்திரத்தில் இருப்பார்கள். அந்தக் காலத்தில் மஹா பண்டிதர்கள் இருந்த ஸ்தானமாக அது இருந்தது. யாத்திரை பண்ணிக்க்கொண்டே பல பேர்கள் அங்கு வந்து தங்கி இருப்பார்கள். நம்முடைய தேசத்தில் எத்தனை ஜாதி, எத்தனை மதங்கள், எத்தனை பாஷைகள் இருக்கின்றனவோ அவ்வளவையும் அங்கே பார்க்கலாம். ஆகையால் அங்கே போய்ப் பிரசாரம் செய்தால் லோகம் முழுவதும் பிரசாரம் ஆகும் என்று நமது ஶ்ரீ ஆதி ஆசார்யாளவர்கள் நினைத்தார்கள். பல தேசங்களில் உள்ள வைதிகர்கள் (வேதம் அறிந்த வித்வான்கள்) அங்கே இருந்தார்கள். ஆகையால் ஶ்ரீ ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகள் காசி க்ஷேத்திரத்தில் இருக்கும் பொழுது பிரம்ம ஸூத்ர பாஷ்யம் இயற்றினார். அதனால் காசியில் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் பண்ணினது லோகப்ரசாரத்திற்கு ஏது (ஹேது) வாயிற்று. அங்கே பல மதஸ்தர்களுடைய கொள்கைகளை நிராகரணம் பண்ணி ஒளபநிதமான மதத்தை ஸ்தாபித்தார்.”

ஆசார்ய ஸ்வாமிகள் அருளிய நன்மொழிகள் II சங்கர விஜயம் 155-156.

அப்ரம்சே ஜன்ம வம்சே ஸுமஹதி விஹிதோ 
வாங்மயாப்தெள ஹனூமத்-
ஸம்ரம்போ தான-போகெள ததநு ச ரசிதெள 
கிஞ்சிதெளசித்ய-ரீத்யா
ஜ்ஞாத்வா தத்வம் யதித்வம் ச்ரிதமத மதிதா 
ஸம்ஸ்ருதி: துர்நிவாரா
வாராணஸ்யாம் ப்ரஸந்நா ஸ்திதிரிதி க்ருதிந: கிம்
ந மே நாம ஸித்தம் || 	(52)

நான் மாசற்ற வம்சத்தில் பிறந்தேன். ஹனுமான் ஸமுத்ரத்தைத் தாண்டியதைப்போல் நான் காவ்யம் என்னும் ஸமுத்ரத்தைத் தாண்டினேன். அதாவது பல காவியங்களை இயற்றினேன். பிறகு சாஸ்த்ரங்களில் கூறியபடி தானம் செய்தேன். சாஸ்த்ர விரோதமில்லாமல் போகத்தையும் கொஞ்சம் அனுபவித்தேன். பிறகு தத்வத்தை உணர்ந்து ஸந்யாஸ ஆச்ரமத்தை கைக்கொண்டேன். ஸந்யாஸஆச்ரமத்தைக் கைக்கொண்டதால் தாண்ட முடியாத ஸம்ஸாரம் என்னும் ஸமுத்ரத்தைத் தாண்டினேன். காசியில் க்ஷேத்ர ஸந்யாஸம் பூண்டேன். இம்மாதிரி கிருதக்ருத்யனாகிவிட்டேன். எனக்கு என்ன தாம் ஸித்திக்கவில்லை?

க்ஷேத்ர ஸந்யாஸம்: காசி க்ஷேத்திரத்தில் காசி எல்லையை விட்டு எக்காரணம் பற்றியும் அகலுவதில்லை என்று பிரமாணம் செய்து காசியிலேயே வசிப்பதற்கு க்ஷேத்ர ஸந்யாஸம் என்று பெயர். இதைத்தான் கவி குறிப்பிடுகிறார். க்ஷேத்ர ஸந்யாஸம் என்னும் தர்மத்தை ஸந்யாஸிகள் மட்டுமல்ல, கிருஹஸ்தர்களும் பெண்டிரும் எல்லோரும் கைக்கொள்ளலாம். இக்காலம் வரையிலும் இந்த்த் தர்மம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

ஈர்ஷ்யாயை பரவாதினாம் கவி-கலா-காந்தாயதிம் மாமியம்
யச்சும்பத்யதுனா(அ)பி தன்மயி பவத்யப்ரஹ்மசர்யம் ந கிம் |
ஏதாவத் ஸ்கலிதம் க்ஷமஸ்வ பகவன் பூயோ(அ)பி துப்யம் சபே
ஶ்ரீ விச்வேச்வர தேவ நைவ பவிதாஸ்ம்யஸ்யா ரஹஸ்யா திதி: ||
											(53)

காவியம் இயற்றுவதை, கவிதா என்னும் வநிதையானவள் கவியை ஆலிங்கனம் செய்துகொள்வதாகச் சொல்வது வழக்கம். அப்படி, ஸந்யாஸியான பிறகும் தீனாக்ரந்தன ஸ்தோத்ரம் இயற்றியதால் கவிதை என்னும் மாது ரஹஸ்யத்தில் தன்னுடன்கூடித் தன்னை முத்தம் கொடுத்த மாதிரி ஆகிறது. ஆனால் ஸந்நாஸி பிரம்மசர்யம் அல்லவோ கைக்கொள்ள வேண்டும். ஆகையால் ஏ விச்வேச்வர! உம்மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். இனி நான் ஒரு காவியமும் செய்வதில்லை. இந்த தீனக்ரந்தன ஸ்தோத்ரம் செய்ததை மட்டும் பொறுத்துல் கொள்ளும், என்கிறார் கவி.

நாஸத்ய-வ்யதிரேகதோ(அ)க்ஷரமபி
					ப்ராயுங்க்த் யத்பாரதீ
நைவான்யத் பரபாததோ யதஸக்ருத்
					ஸஞ்சிந்திதம் சேதஸா |
நா(அ)க்ருத்யாதிதரத்ர காத்ரமதனோத் சேஷ்டாம்
					யதேஷ்டம் ச யத்
ஸர்வத்ரா(அ)பி மயா த்வமேவ சரணம்
					தத்ராச்ரிதோ தூர்ஜடே ||		(54)

என் வாக்கானது அஸத்யத்தோடு கலக்காமல் ஒரு அக்ஷரமும் கூடப் பிரயோகம் செய்யவில்லை. என் மனமானது பிறருக்குக் கெடுதலை நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் நினைக்கவில்லை. என் தேகத்தால் அக்ருத்யத்தைத் தவிர வேறு யாதொரு சேஷ்டையும் செய்யவில்லை. ஆகையால் தாங்களே இந்த எல்லாவற்றிலும் சரணம். ஹே தூர்ஜடே! நான் உங்களையே சரணமாக அடைகிறேன்.

ௐ தத் ஸத்


Back to Sanskrit Page
Back to Hindu Scriptures and Stotras Main Page

Related Content

आर्तिहर स्तोत्रम - Artihara stotram

दक्षिणामूर्ति वर्णमालास्तोत्रम - DhakshiNamurthi varnamala

शिव प्रातः स्मरण स्तोत्रम - shiva praataH smaraNa stotram

श्री शिवापराधक्षमापण स्तोत्रम - Shivaaparaadhakshamaapana

ਪ੍ਰਦੋਸ਼ ਸ੍ਤੋਤ੍ਰਮ - Pradoshastotram