logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மூவர் தமிழ் மாலை - தேவார விளக்கம்

சிவமயம்

மொழிக்கு மொழி தித்திக்கும்

(உரையாசிரியர் ஆங்கீரஸ எஸ். வெங்கடேச சர்மா )

            திருஞானசம்பந்தர் அருளியவை

                சீகாழி

பண் : தக்கராகம்                        1-ம் திருமுறை

                திருச்சிற்றம்பலம்

    பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா 
    காவா யெனநின் றேத்துங் காழியார் 
    மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் 
    பாவா ரின்சொற் பயிலும் பரமரே.        1.

    எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் 
    கந்த மாலை கொடுசேர் காழியார் 
    வெந்த நீற்றர் விமல ரவர்போலாம் 
    அந்தி நட்ட மாடும் அடிகளே.         2.

    தேனை வென்ற மொழியா ளொருபாகம் 
    கான மான்கைக் கொண்ட காழியார் 
    வான மோங்கு கோயி லவர்போலாம் 
    ஆன இன்ப மாடும் அடிகளே.        3

    மாணா வென்றிக் காலன் மடியவே 
    காணா மாணிக் களித்த காழியார் 
    நாணார் வாளி தொட்டா ரவர்போலாம் 
    பேணார் புரங்க ளட்ட பெருமானே.        4

    மாடே ஓத மெறிய வயற்செந்நெல் 
    காடே றிச்சங் கீனுங் காழியார் 
    வாடா மலராள் பங்க ரவர்போலாம் 
    ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.        5

    கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் 
    கங்கை புனைந்த சடையார் காழியார் 
    அங்க ணரவ மாட்டு மவர்போலாம் 
    செங்க ணரக்கர் புரத்தை எரித்தாரே.    6

    கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடும் 
    கல்ல வடத்தை உகப்பார் காழியார் 
    அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் 
    பல்ல விடத்தும் பயிலும் பரமரே.        7

    எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக் 
    கடுத்து முரிய அடர்த்தார் காழியார் 
    எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் 
    பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.        8

    ஆற்றல் உடைய அரியும் பிரமனும் 
    தோற்றங் காணா வென்றிக் காழியார் 
    ஏற்ற மேறங் கேறு மவர்போலாம் 
    கூற்ற மறுகக் குமைத்த குழகரே.        9

    பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் 
    கரக்கு முரையை விட்டார் காழியார் 
    இருக்கின் மலிந்த இறைவர் அவர்போலாம்
    அருப்பின் முலையாள் பங்கத் தையரே.     10

    காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் 
    சீரார் ஞான சம்பந் தன்சொன்ன 
    பாரார் புகழப் பரவ வல்லவர் 
    ஏரார் வானத் தினிதா இருப்பரே.        11

            திருச்சிற்றம்பலம்

சுவாமி: பிரமபுரீசுவரர் ,தோணியப்பர்         தேவி: திருநிலைநாயகி, பெரியநாயகி

பதிக வரலாறு :

    சீகாழி பிரமதீர்த்தக்கரையில் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தப் 
பிள்ளையார் மறுநாளே தமது திருத்தல யாத்திரையினைத் தொடங்கி திருக்கோலக்கா 
எழுந்தருளி இறைவனைப்பாடி செம்பொற்றாளமும் அதற்கு ஓசையும் அருளப் பெற்றார் .
ஓசை கொடுத்தவர் அம்மையார் என்று திருக்கோலக்கா தலவரலாறு கூறுகிறது. அங்கு 
நின்றும் இறையருள் பெற்றுத் திரும்பவும் சீகாழி வந்து சேர்ந்த திருஞான சம்பந்தர் 
திருக்கோலக்காவில் 'மடையில் வாளை பாய' என்று எடுத்துப் பாடிய அதே தக்கராகப் 
பண்ணில், அதே கட்டளையில், அதே தாள இசை அமைப்பில் பாடியருளப் பெருவிருப்பம் 
கொண்டு 'பூவார் கொன்றை' என்ற திருப்பதிகத்தினை எடுத்தருளித் திருத்தோணியப்பரைப் 
பாடி மகிழ்ந்தார்.

    திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் 
        கொண்டருளித் திருமுன்னின்றே
    அருட்பெருகு திருப்பதிகம் எட்டொரு 
        கட்டளையாக்கி அவற்றுள் ஒன்று 
    விருப்புறுபொன் திருத்தோணி வீற்றிருந்தார் 
        தமைப்பாட மேவு காதல் 
    பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றியெடுத்து
        அருளினார் 'பூவார் கொன்றை' 

என்ற பெரியபுராணத் திருப்பாடல் இச்செய்தியினைக் கூறுதல் காண்க.

பதிகப் பொழிப்புரை :

1.    கொன்றைப் பூ நிறைந்த முறுக்கிய பொன்னிறமான சடையினை உடைய ஈசனே ! 
காப்பாயாக என்று அடியார்களால் துதிக்கப்படுகின்ற சீகாழி மேவும் இறைவனார் பகைமை 
கொண்டவர்களது மூன்று புரங்களையும் எரித்தவர். அவரே அடியார்களது பாடல்களில் 
இனிய சொல்லும் அதன் பொருளுமாய் நிறைந்து நிற்கும் பரமர் போலும்.

    பொன்சடை என்பது புன்சடை என்று மருவிற்று என்று சித்தாந்தப் பேராசிரியர் 
சித்தாந்த சிரோமணி சித்தாந்த ரத்நாகரம் மதுரகவி முதுபெரும்புலவர் வித்துவான் 
திரு. முத்து சு.மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தமது திருத்தருமை ஆதீன வெளியீடு 
நான்காந் திருமுறை உரையில் கூறியுள்ளார்கள். புன்மை என்பதற்கு அற்பம் எனல் 
சிவாபராதம் என்றும், ஈண்டுப்புன்மை கொள்வோர் புல்லரே என்றும் அப்பெரியார் 
ஆணித்தரமாகக் கூறியுள்ளமை கவனத்திற்குரியது.

    'பாவார் இன்சொற்பயிலும் பரமர்' என்பதின் கருத்தினையே மஹாகவி 
காளிதாஸனும் தனது ரகுவம்ஸம் என்னும் காவியத்தின் முதல் சுலோகத்தில் 
கூறியுள்ளது காண்க:

    வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதி பத்தயே \ 
    ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ பரமேச் வரௌ \\

    சொல்லும் அதன் பொருளும் போல என்றும் பிரியாது இணைந்திருக்கும் 
ஜகன்மாதாவும் ஜகத்பிதாவுமான பார்வதீ பரமேச்வரர்களை சொல்லிலும் பொருளிலும் 
நல்ல மேன்மை பெறும் பொருட்டு வணங்குகிறேன் என்பது மேற்படி சுலோகத்தின் பொருள்.

2.    எமது தந்தையே என்று தேவர்கள் அனைவரும் துதித்து மாலையும் சாந்துங்கொண்டு 
வழிபடும் சீகாழிப் பெருமான் வெந்த சாம்பலைப் பூசும் விமலர்; அவரே சந்தியா காலத்தில் 
தாண்டவம் செய்யும் பரமர் போலும்.

    சாந்து என்பது வழிபாட்டிற்குரிய இதர பொருள்களான சந்தனம், விபூதி முதலியவற்றைக் 
குறிக்கும். சந்தியாகாலம் என்பது சூரியன் மறையுங்காலத்துக்கு மூன்று நாழிகை அதாவது 
72 நிமிடங்கள் முந்திய காலம் தொடங்கி நக்ஷத்திரம் தோன்றும் காலம் உள்ளவரையில் உள்ள நேரம். 
இக்காலத்தில் சிவபெருமான் ஆடும் தாண்டவத்தை பிரம்ம விஷ்ணு உள்பட முப்பத்து முக்கோடி 
தேவர்களும் மற்றும் கணங்களும் வழிபட்டுப் பேறுபெறுகின்றனர். மற்றும் ஸரஸ்வதி வீணை
வாசிக்கிறாள். இந்திரன் புல்லாங்குழல் வாசிக்கிறான். பிரம்மதேவன் தாளம் போடுகிறான். 
லஷ்மி தேவியானவள் வாய்ப்பாட்டு பாடுகிறாள், விஷ்ணுவானவர் மிருதங்கம் வாசிக்கிறார். 
இப்படி எல்லாத்தேவர்களும் ப்ரதோஷ நடனத்தில் சேவை செய்கின்றனர்.

3.    தேனின் இனிமையையும் வென்ற இன்மொழியாளான உமாதேவியாரை 
ஒரு பாகம் வைத்து மானினைக் கரத்தில் தாங்கிய சீகாழிப் பெருமான் வானமோங்கும் 
கோயிலைக் கொண்டவர். அவரே முழுமையாய் நிறைந்த ஆனந்தத்தோடும் ஆடுகின்ற 
இறைவர் போலும்.

4.     பெருமையில்லாத வெற்றியினைக் கொண்ட இயமன் மடியுமாறு செய்து, 
பெருமானைத்தவிர வேறொன்றையும் காணாத பிரமசாரியாகிய மார்க்கண்டருக்கு 
வரமளித்து அருள் புரிந்த சீகாழிப் பெருமான் ஒரு அம்பினைத்தொட்டு பகைவரது 
புரங்களை எரித்தவர் அவரே போலும்.                        

    நாணார் வாளி என்பது அந்த அம்பும் மிகையான காரணம் பற்றி.'ஓரம்பே 
முப்புரம் உந்தீபற, ஒன்றும் பெருமிகை யென்றுந்தீ பற' என்ற திருவாசகம் இங்கு 
கவனித்தற்குரியது.

5.     கடற்கரைப் பக்கங்களில் வெள்ளத்தால் எறியப்பட்ட சங்கங்கள் வயல் செந்நெல் 
காட்டில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழியில் கோயில் கொண்ட பெருமான் என்றும் வாடாத 
தெய்வமலர் சூடிய பெருமாட்டியை ஒரு பங்கில் உடையவர். அவரே புரங்கள் மூன்றையும் 
எரித்த பிரான் ஆவர். ஏடார் புரம் என்பது சிவாபராதமாகிய குற்றம் நிறைந்த முப்புரம் 
என்று பொருள் படும்.

6.    கொங்கு, செருந்தி, கொன்றை முதலிய மலர்களுடன் கூடக் கங்கையாளையும் 
வைத்த சடையினை உடைய சீகாழிப் பெருமானார் தமது அவயவங்களில் அழகிய 
கண்களையுடைய பாம்புகளை அணிந்து ஆட்டுபவர். சிவந்த கண்களையுடைய அரக்கரின் 
புரமூன்றையும் எரித்த பெருமான் அவரே போலும்.

7.     கொல்லை எனப்படுகிற முல்லை நிலத்துக் கடவுளாகிய திருமால் இடப வடிவமெடுத்து 
நிற்க அதன்முன் பூதங்கள் வளைந்து ஆடும் கல்லவடம் என்ற ஒருவகைப் பறையினை விரும்புபவர் 
சீகாழிப் பெருமானார். அவர் செல்லுதற்குரியதல்லாத இடத்தும் பலவிடங்களிலும் பயிலுபவர் 
போலும். அல்லவிடத்து என்பது பிறர் செல்லுதற்கு அல்லாத இடமாகிய சுடுகாடு போன்ற இடங்கள். 
அங்கெல்லாம் இறைவர் செல்வது அவர் எல்லாவிடத்துக்கும் இறைவர் என்பது பற்றி.

8.     திருக்கயிலாய மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனாகிய இராவணன் 
முரியும்படி விரலினை ஊன்றிக் கோபித்து அவனை நெருக்கிய பெருமானார் சீகாழிக் கோயில் 
கொண்டவர். அவரே அந்த இராவணன் தன்பிழை உணர்ந்து சாமகானம் பாடி இறைவனைத் 
துதித்த பொழுது அதற்கு இரங்கி அருள்புரிந்த நீறுபூசிய பரமர் போலும்.

9.     மிக்க ஆற்றலுடையவராகிய திருமாலும், பிரமதேவனும் காண முடியாத தோற்றத்தினை
உடைய வெற்றியாளர் சீகாழியில் மேவியிருக்கும் பெருமான் ஆவர். கூற்றினைக் குமைத்த 
குழகனாம் அவரே மிக உயர்ந்த விடையேறும் பெருமானும் போலாம். 
குழகன்-என்றும் இளமையுடையவன்.

    ஆற்றலுடைய அரி என்றது தனது ஆற்றலினால் இறைவனைக் காணப் புகுந்து 
தோல்வியுற்றமை பற்றி. எனவே ஆற்றல் பயன்படாது பின்னர் அன்பினால் துதித்து இறைவனைக் 
காணப் பெற்றார் என்பது கருத்து.

10.     மிக அதிகமாகப் பிதற்றுகின்ற (சாரமற்ற சொற்களைப் பேசுகின்ற) சமணர், புத்தர் 
ஆகியோரது வஞ்சகமான வார்த்தைகளை விட்டவர்களது சீகாழியில் வீற்றிருக்கும் பெருமானார்
அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியைப் பாகத்துடைய தலைவர். அவரே 
இருக்கு வேதம் முழுவதும் நிறைந்த பரம்பொருள் ஆவர் போலும். இருக்கு என்பது வேதப் 
பொதுமையைக் குறித்து நான்கு  வேதங்களிலும்  பரம்பொருளாய் நிறைந்தவர் என்றும் 
பொருள்படும்.

11.     வயல்கள் சூழ்ந்த சீகாழியிலே கோயில் கொண்ட சிவபிரான்தன்னைச் சிறப்பு 
மிகுந்த  திருஞானசம்பந்தன்  சொன்ன திருப்பாடல்களை உலகோர் புகழும்படி துதிக்க 
வல்லவர்கள் அழகு மிகுந்த வானுலகத்தில் இனிதாக வீற்றிருப்பார்கள். அதாவது 
திருஞானசம்பந்தர் பாடல்களைக் கொண்டு இறைவனைத் துதிக்கவல்லவர்கள் வான் உலகு 
சென்று இன்பங்களை அனுபவிப்பர் என்பது கருத்து . 

                -சிவம்-
 

            திருஞானசம்பந்தர் அருளியவை


                திருநனிபள்ளி

பண் - பியந்தைக்காந்தாரம்.                 2-ம் திருமுறை

                திருச்சிற்றம்பலம்

    காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை 
        படர்தொடரி கள்ளி கவினிச்
    சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
        சிவன்மேய சோலை நகர்தான்
    தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
        குதிகொள்ள வள்ளை துவள
    நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் 
        நனிபள்ளி போலும் நமர்காள்.         1

    சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம் 
        வளர்திங்கள் கண்ணி அயலே 
    இடையிடை வைத்ததொக்கு மலர்தொத்து மாலை 
        இறைவன் இடங்கொள் பதிதான்
    மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து 
        மணநாறு நீலம் மலரும்
    நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை 
        நனிபள்ளி போலும் நமர்காள்.        2

    பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் 
        ஒழிபா டிலாத பெருமான்
    கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை 
        இடமாய காதல் நகர்தான்
    வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் 
        விடுபோ தலர்ந்த விரைசூழ் 
    நறுமல ரல்லிபுல்லி ஒலிவண் டுறங்கு 
        நனிபள்ளி போலும் நமர்காள்.        3

    குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
        தலைமா லையோடு குலவி 
    ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
        உடையான் உகந்த நகர்தான் 
    குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
        பெடைவண்டு தானும் முரல
    நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு
        நனிபள்ளி போலும் நமர்காள்.        4

    தோடொரு காதனாகி ஒருகா திலங்கு 
        சுரிசங்கு நின்று புரளக்
    காடிட மாகநின்று கனலாடும் எந்தை 
        இடமாய காதல் நகர்தான் 
    வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று 
        வெறிநீர் தெளிப்ப விரலால் 
    நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு 
        நனிபள்ளி போலும் நமர்காள்.        5

    மேகமொ டோடுதிங்கள் மலரா அணிந்து 
        மலையான் மடந்தை மணிபொன் 
    ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை 
        பெருமான் அமர்ந்த நகர்தான்
    ஊகமொ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப 
        அகிலுந்தி ஒண்பொன் இடறி
    நாகமொ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் 
        நனிபள்ளி போலும் நமர்காள்.        6

    தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகம்
        கொடுகொட்டி வீணை முரல 
    வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
        பெருமான் உகந்த நகர்தான் 
    புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் 
        பணிவார்கள் பாடல் பெருகி 
    நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை 
        நனிபள்ளி போலும் நமர்காள்.        7

    வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று 
        மதியா அரக்கன் வலியோடு 
    உலமிகு தோள்கள் ஒல்க விரலாலடர்த்த 
        பெருமான் உகந்த நகர்தான்
     நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை 
        யெனநின்ற நீதி அதனை 
    நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 
        நனிபள்ளி போலும் நமர்காள்.         8

    நிறஉரு ஒன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
        தொருநீர்மை சீர்மை நினையார் 
    அறவுறு வேதநாவன் அயனோடு மாலும் 
        அறியாத அண்ணல் நகர்தான் 
    புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை 
        புனைகொன்றை துன்று பொதுளி
    நறவிரி போதுதாது புதுவாசம் நாறும் 
        நனிபள்ளி போலும் நமர்காள்.          9

    அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் 
        இடவுண்டு பட்ட அமணும் 
    மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
        குணமின்றி நின்ற வடிவும்
    வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் 
        விடையா னுகந்த நகர்தான் 
    நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் 
        நனிபள்ளி போலும் நமர்காள்.        10

    கடல்வரை ஓதம்மல்கு கழிகானல் பானல் 
        கமழ்காழி யென்று கருதப் 
    படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
        பதியான ஞான முனிவன் 
    இடுபறை யொன்றஅத்தர் பியன்மேல் இருந்து 
        இனிசையா லுரைத்த பனுவல் 
    நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளியுள்க 
        வினைகெடுதல் ஆணை நமதே.        11

                திருச்சிற்றம்பலம்

சுவாமி: நற்றுணையப்பர்;                தேவி: மலையான்மடந்தை

பதிகவரலாறு:

    "பூவார் கொன்றை' என்ற திருப்பதிகத்தினைப் பாடி இறைவனை மிக்க ஆர்வத்துடன் 
வணங்கிச் சென்று சீகாழிப் பதியிலுள்ளோர் தமது வாழ்வின் பயனையடைய வேண்டித் தமது
இளங்குழவியாகிய அழகிய காட்சியைக் கொடுத்து சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தர் 
எழுந்தருளியிருந்தனர். அந்நிலையில் அவரது தாயார் பகவதியம்மையாரது பிறந்த ஊராகிய 
திருநனிபள்ளி என்னும் தலத்து அந்தணர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் மங்கல வாத்தியங்களுடன் 
வேதங்களையும் ஓதிக் கொண்டு சீகாழி வந்து திருஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து 
வணங்கினர். மற்றும் பக்கத்துத் தலங்களிலேயுள்ள தொண்டர்களும் கூடி வணங்கிப் பூலோக 
சிவலோகம் எனச் சீகாழிப்பதி சிறந்து விளங்கியது. அக்காலத்தில் திருநனிபள்ளி மறையவர்கள் 
எங்கள் பதிக்கும் எழுந்தருளி இறைவனைப் பாடிக் கும்பிட வேண்டும் எனப்பெரிதும்  வேண்டினர். 

    அதற்கு இணங்கிய பிள்ளையாரும் திருத்தோணிபுரத்துப் பெருமானிடம் வணங்கி 
விடை பெற்றுக்கொண்டு திருநனிபள்ளியையும் மற்றும் பிற பதிகளையும் கும்பிட நினைந்து 
எழுந்தார். இது திருஞானசம்பந்தப் பிள்ளையாரது இரண்டாவது தலயாத்திரையாகும். 
திருஞானசம்பந்தர் தமது தாமரையொத்த பாதங்களால் நடந்து செல்வதைப் பொறாத 
தந்தையாராகிய சிவபாதவிருதயர் அவரைத் தமது தோளின் மீது தரித்து நடந்து செல்லத் 
தாம் சிவபெருமான் திருவடிகளைத் தமது முடியின் மீது கொண்ட சிந்தையினை உடையவராய்ப் 
போந்தருளினர். திருநனிபள்ளியினைச்சாரும் போது தந்தையின் தோள் மீதிருந்தபடியே "வான் 
அணையும் மலர்ச்சோலை தோன்றுவது எப்பதி" என வினவ அதுவே திரு நனிபள்ளி எனத் 
தாதையார் கூறக்கேட்டு "காரைகள் கூகை முல்லை'' என ஆரம்பித்துத் திருக்கடைக்காப்பு தன்னில் 
''நாரியோர் பாகம் வைகும் நனிபள்ளி உள்குவார் தம் பேரிடர் கெடுதற்கு ஆணை நமது" என்னும் 
பெருமையினை வைத்துப் பாடியருளினார். பின்னர் கோயிலையடைந்து,  பெருமானை 
வணங்கினர் என்பதாம்.

பதிகச் சிறப்பு :

    இத்திருப்பதிகம் பாலையாயிருந்த திருநனிபள்ளியை நெய்தலாக்கிப் பின்னர் 
அதனையே கானமும் மருதமுமாக்கிய பதிகம் என்று பலவிடத்து இதன் பெருமையை 
நம்பியாண்டார் நம்பிகள் போற்றி உள்ளனர். மருதம் - வயலும் வயல் சூழ்ந்த இடம். 
அதாவது பாலைவனமாக இருந்த பிரதேசம் திருஞானசம்பந்தரின் இப்பதிகச் சிறப்பால் 
வயலும் வயல் சூழ்ந்த செழிப்பான பிரதேசமாக மாறியது. “பாலை நெய்தல் பாடியதும்” 
என்று தொடங்கும் திருக்களிற்றுப்படியார் பாடலிலும் இந்த உண்மையைச் செப்பியிருத்தல் 
காண்க. 

பதிகப் பொழிப்புரை :

1.     (சூழ இருக்கும் அடியாரை விளித்து) நம்மைச் சேர்ந்தவர்களே ! கேளுங்கள், காரைமரங்கள், 
கூகைகள், முல்லை,களாச்செடிகள், ஈகைச்செடி, முட்செடிகள், கவினி, சூரை முதலிய தாவரங்கள் 
மிக்குச் செறிந்த சுடுகாடு தன்னில் அமர்ந்த சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் 
சோலைகள் நிறைந்த நகர், தேரைகள் குளத்தினிற் படர்ந்த ஆரை மீது சாய, வாளை மீன்கள் 
குதிக்க, வள்ளைகள் துவள நாரைகள் ஆரல் மீன்களை வாரியெடுத்து வயல்களில் எருமைகளின் 
முதுகில் உண்ணும் பொருட்டு வைக்கும் நனிபள்ளி என்னும் தலம் போலும். (போலும் என்பது
 ஈண்டு தேற்றப் பொருளைக் குறிக்கும்)

    காரை முதலிய தாவரங்கள் சுடுகாட்டில் மிக்க வளருபவையாகும். வள்ளை என்பது 
நீரினில் வளரும் ஒருவகைக் கொடி. ஆரை என்பது குளத்தில் படரும் ஒருவகைத் தாவரம். 
ஆரல் என்பது நாரைகளுக்கு உணவாகும் ஒருவகை மீன்கள். கூகைகள் என்பது கோட்டான்களைக் 
குறிக்கும்.

2.     நம்மவர்களே ! சடையின் இடையே புகுந்து ஒடுங்கி அங்கே தங்கி உள்ள கங்கையினையும் ,
திங்கட்பிறையினையும், பக்கத்தில் இடையிடையே வைத்த மலர் மாலைகளையும் உடைய இறைவன் 
தனக்கு இடமாகக் கொண்ட பதி மடைகளின் இடையே வாளை மீன்கள் பாய முகிழ்ந்து இருக்கும் 
வாய்கள் மலர்ந்து மணம் வீசும் நீலமலரும், சிறந்த நடையினையுடைய அன்னமும் வசிக்கும் 
நீர்ப்பரப்புகளையுடைய நனிபள்ளி போலும். (அதாவது நனிபள்ளி ஆகும்) அன்னத்தின் நடையழகு
மகளிர் நடைக்கு உவமித்துச் சொல்லும் சிறப்புடையதாகலின் அதன் நடையைச் சிறப்பித்து 
'நடையுடை அன்னம்' என்றார்.

3.     தொண்டர்கள் தாம் பெறக்கூடிய மலர்களைக் கொண்டு வழிபாடு செய்தல் ஒழிவில்லாத 
பெருமான், (அதாவது எப்போதும் ஒழிதல் இன்றித் தொண்டர்கள் வழிபாடு செய்த வண்ணம் 
இருக்கின்றனர் என்பது கருத்து) கண்டத்தில் கறுத்த மலர் போன்று விளங்க விஷத்தினை உண்ட 
சிறந்த பெருமான், அவனுக்கு இடமாக அன்பு கொண்டு தங்கிய நகர், முன்னரே மலர்ந்து அதனால் 
மணம் நீங்கிய வெறு மலர்களை வண்டுகள் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து பின் அவை நீங்கியதால் 
வேகமாக உயர எழுந்த மலர்க் கொம்புகளில், அவ்வண்டுகளால் தொடப்படாது விட்டுப் போன 
போதுகள் மலர்ந்தமையால் மணம் பரவ, அம்மணத்தினால் ஈர்க்கப்பட்டு அம்மலர்களின் 
இதழ்களைப் புல்லி வண்டுகள் தேனினை உண்டு ஒலி அடங்கி இன்பத்தில் உறங்கும் 
திருநனிபள்ளி போலும், நமர்காள்.

4.     குளிர்ச்சி மிக்க கங்கை தங்கியிருக்கிற சடையின் ஒரு பக்கத்தில் விளங்கும் 
தலை மாலையோடு பொருந்தி ஒளி தரும் சந்திரனையும் சூடி,உமையை ஒரு பாகமாக உடைய
இறைவன் மிகவும் மகிழ்ந்த தலம், குளிர்ச்சியைத் தரும் மகளிரது கும்மிப்பாடல்களின் 
ஒலியோடு குயிலின் பாடலையும் கேட்ட பெண் வண்டானது தானும் ஒலி செய்ய நிழல் தரும்
சோலையில் மாலைக் காலத்து வெண்ணிறமுள்ள குருகுகள் வசிக்கும் திருநனிபள்ளி போலும், 
நமர்காள். குருகுகள் என்பது நீர் வாழ் பறவைகள்.

5.     ஒரு காதில் தோடும் ஒரு காதில் சங்கக் குழையும் உடையவனாகி, சுடுகாட்டினை 
இடமாகக் கொண்டு தீயுடன் ஆடும் எமது தந்தைபிரானார்க்கு இடமாகிய காதல் நகர்,
மோட்சப் பேற்றினையடையச் சரணடையும் வைதிகர்கள் தமது கைவிரல்களால் நூல்களில் 
விதித்த முறையே நீரினைத் தெளிப்ப, நாட்டினர் யாவரும் நீராடுகின்ற செம்மை ஒலி மிக்க 
நீர் வெள்ளம் நிறைந்த திருநனிபள்ளி போலும், நமர்காள்.

    வெறிநீர் என்பது அர்க்யம் கொடுப்பதற்காக அமைந்த மலர்கள் சேர்ந்து அதனால் 
மணம்உண்டாகப் பெற்ற நீர், கைவிரலால் நீர் விதி முறை தெளித்தல் என்பது வைதிகச் 
 சைவர்கள் உரிய மந்திரம் பாவனைகளுடன் 'அர்க்கியம்' விடுதல் என்னும் கிரியையாகும். 
பூஜையின் முடிவில் 'இதமர்க்கியம், இதமர்க்கியம் இதமர்க்கியம்' என்று இறைவனை 
முன்னிலைப் படுத்தி கைவிரல்களின் நுனியால் ஜலத்தைக் கீழே விடுதல் மரபு. இதில் 
நீருடன் பாலையும் கலந்து கொள்ளுதலும் உண்டு.

    "நாடுனாடு......வெள்ளமாரும்' என்பதற்கு விரலால் விதி முறையாக அடியவர்கள் 
தெளிக்கும் நீர் ஒலியுடன் வெள்ளம் போலப் பெருகும் நனிபள்ளி எனக்கொள்ளுதலும் பொருந்தும்.

6.     மேகத்தோடு ஓடுகின்ற சந்திரனை மலராகத் தலையில் அணிந்து தனது பொன்மேனியில் 
மலையரசன் மகளான உமையம்மையாரை ஒருபாகமாகக் கொண்டு கையில் அனலேந்திக் 
கூத்தாடுபவனாகிய எமது தந்தையாகிய சிவபெருமான் விரும்பி அமர்ந்த நகர், ஆண் 
குரங்குகளுடன் விளையாடுகின்ற பெண் குரங்குகள் குதித்துப் பாயும் மலையினின்றும் 
அகிற் கட்டை, பொன், நாகமரம், சந்தனமரம் இவைகளை இடறிக் கொண்டு கொழித்து 
வெள்ளமாகப் பெருகும் நீர் வந்து மோதும் திருநனிபள்ளி போலும், நம்மவர்களே கேளுங்கள் 
என்றவாறு.

7.     தண்டு, சூலம், நாகவடிவுடைய படை இவைகளுடன் வீணை ஒலியுடன் கொடுகொட்டி 
என்னும் வாத்தியத்தினையுடையவனாய் வன்னி, கொன்றை, ஊமத்தம்பூ இவைகளைச் 
சிரத்தில் வைத்த சிவபெருமான் விரும்பிய ஊர் தான்,  தூபம் காட்டி மணம் மிக்க மாலைகள் 
இவைகளை அணிவிப்பார்களாகிய அடியவர்கள், மிக்க ஒலியுடன் பணிவார்கள் இவர்களது 
பாடல் ஒலி பெருகியதும்,  வெண்மை ஒலி மிக்க முத்துக்கள் நிரம்பிய  மணல் சூழ்ந்த 
பிரதேசமாகிய திருநனிபள்ளி போலும் நமர்காள் என்று அடியவர்களை  விளித்துக் கூறியவாறு.

    அனலுமிழு நாகம் என்பதற்கு மற்றைய ஆயுதங்களுடன் இனம் பற்றி ஓர் ஆயுதமாகவே 
பொருள் கொள்ளப்பட்டது. அனல் போலும் விஷத்தினைக் கக்கும் பாம்பினையுடையவன் 
என்றும் கொள்ளலாம்.

8.     மிகுந்த வலிமை கொண்டவனும், வாள் வேல் முதலிய ஆயுதங்களையுடையவனும், 
வளைந்த வாள் போன்ற பற்களையுடையவனும், பிறரை மதியாதவனுமாகிய அரக்கனாகிய
 இராவணனது வலிமையோடு, திரண்ட கல் போன்ற தோள்களும் நெரியும்படி தமது திருக்கால் 
விரலினால் அடர்த்த சிவபிரான் மகிழ்வுடன் அமர்ந்த ஊர் கீழ் மேல் ஆகிய பதினான்கு 
உலகங்களிலும் தனக்கு நிகர் யாதுமில்லை என்ற  நியதியினை அறிந்து நலம் மிகு 
தொண்டர்கள் நாளும் அடிதொழுது துதித்தலைச் செய்யும் திருநனிபள்ளி போலும் நமர்காள்.

9.     மிக்க நிறத்துடன் எரி ஒன்று சேர்ந்து நின்றது போன்ற தன்மையில் தமக்கு முன் 
தோன்றிய தன்மையை நினையாது, அறங்களைத் தன்னுள்ளே கொண்ட வேதங்களை ஓதும் 
நாவினனாகிய பிரமதேவனும் திருமாலும் அறியாத வண்ணம் அழலுருவாகிய பெருமானது 
நகர்தான், கானகத்தில் மலரும் முல்லை, கொன்றை, மௌவல், பிண்டி, புன்னை, பொதுளி 
போன்ற மலர்கள் மலருதலால் உண்டாகும் புதிய மணம் வீசும் சிறப்பு மிக்க திருநனிபள்ளி 
போலும், நமர்காள்.

10.     சோற்றினைக் கொணர்க எனக்கூறி அதனைக் கையில் உண்பவர்கள் சமணர்கள். 
கஞ்சியினை மண்டை என்னும் பாத்திரத்தில் ஏந்தி உண்பவர்கள் புத்தர்கள். இவர்கள்  
தொண்டர்களின் குணம் இல்லாத வடிவுடையவர்கள்.  (ஆகையால் இவர்களைச் சாரேல் 
என்பது குறிப்பு). நமது பெருமானோ வேதங்கள் நான்கினையும் உலகிற்கு அருளிச் செய்த 
பிரான். அறமே உருவான விடை (எருது)யின் மேல் அமர்ந்த பிரான். அவன் விரும்பி எழுந்தருளிய 
நகர் தான் மிக்க மனத் தெளிவு பெற்ற தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைத் துதித்தல் 
செய்கின்ற திருநனிபள்ளி போலும், நமர்காள்,

    மண்டை என்பது புத்தர்கள் உண்கலமாகக் கொள்ளும் ஒரு பாத்திரம். பனை மட்டையால் 
ஆகியது என்பர். நனவு அதாவது தெளிவுடன் விழித்து இருக்கும் தன்மை. வட மொழியில் ‘ஜாக்ரத்’ 
அவஸ்தை என்பர். நனவு ‘நன' என்று குறுகி வந்தது.

11.     கடல் ஓதம் மிக்கதும், கழிகளும், கானமும், சோலைகளும் மிக்கதுமான சீகாழிப்பதியாகிய 
ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களும் அமைத்த பெருமானுடைய பதியில் அவதரித்த 
ஞானமுனிவனாகிய திருஞானசம்பந்தன் தந்தையின் திருத்தோள்மிசை அமர்ந்து பறை சாற்றி 
ஏழிசையால் உரைத்த பாமாலையினால் நள்ளிருளில் நட்டமாடும் எந்தை பெருமானுடைய 
திருநனிபள்ளியினை மனதிலே தியானிப்பவர்களது வினைகள், அவற்றால்வரும் பேரிடர்கள், 
கெடுதற்கு ஆணை நமதே. இவ்வாறு ஆணையிட்டுப் பாடவல்லவர் திருஞானசம்பந்தர் ஒருவரே 
என்பதை "ஆணை நமதென்னவல்லான்" என்று நம்பியாண்டார் நம்பிகள் தமது ஆளுடைய 
பிள்ளையார் திருத்தொகையில் பாடிப் பரவியுள்ளார்கள்.

                    -சிவம் -

 


                சிவமயம்

            திருஞானசம்பந்தர் அருளியவை

            திருத்தலைச்சங்காடு

பண்-காந்தாரம்.                        2-ம் திருமுறை

            திருச்சிற்றம்பலம்

    நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம் 
    சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
    குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும் 
    தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.        1

    துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் 
    மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர் 
    பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந்  தலைச்சங்கை
    அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.        2

    சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளே றூர்தியீர்
    நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர்  நின்றேத்தத்
    தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழும் தலைச் சங்கை
    ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.         3

    வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
    ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
    கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித் தோன்றும் 
    மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.        4

    சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
    நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர் 
    ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக் 
    கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.         5

    நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
    புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
     சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை 
    நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.            6

    அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
    கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங்கூடினீர்
    பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
     கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.            7

    திரையார்ந்த மாகடல்சூழ் தென்இலங்கைக் கோமானை
    வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
    அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
    நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.         8

    பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும் 
    போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
    தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச் 
    சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.        9

    அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கீயர் 
    தொலையாதங் கலர் தூற்றத் தோற்றங்காட்டி ஆட்கொண்டீர்
    தலையான நால்வேதந் தரித்தார் வாழுந் தலைச்சங்கை 
    நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.         10

    நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன் 
    குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை 
    ஒளிரும் பிறையானை உரைத்தபாடல் இவைவல்லார் 
    மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.         11

            திருச்சிற்றம்பலம்

சுவாமி: சங்கருணாதேசுவரர்             தேவி: சௌந்தரநாயகி

பதிக வரலாறு :

    திருநனிபள்ளிப் பெருமானை வணங்கி அப்பதியில் மறையவர்கள் போற்றப் 
பிள்ளையார் அங்கு எழுந்தருளியிருந்த பொழுது தவத்தொண்டர்களும் திருத்தலைச்சங்காடு 
என்னும் தலத்தில் வாழும் அந்தணர்களும் அங்கு வந்து உலகெலாம் உய்ய அம்பிகை அளித்த 
ஞானப்பாலை உண்ட பிள்ளையாரை அடிபணிந்து போற்றித் தங்கள் பதிக்கு எழுந்தருள 
வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். எங்கும் நடைப் பந்தர்கள் இட்டு, கமுகு வாழை 
முதலிய மரங்களை நாட்டி மலர் மாலைகள் கட்டி அலங்கரித்து நிறை குடங்களைத் தாங்கிப் 
பிள்ளையாரை வரவேற்றனர். வேதியர்கள் மறை முழக்கஞ் செய்யப் பிள்ளையார்             
பெரு மகிழ்ச்சியுடன் பெருந் திருமாடக் கோயிலையடைந்து, வேத விழுப்பொருளான சிவபிரானை 
வணங்கி அக்கோயில் வலம்புரிச்சங்கின் வடிவமாக அமைந்திருக்கும் பெற்றியினைத் 
திருப்பதிகத்தில் சிறப்பித்தருளிச் செய்தார். இந்தச் செய்தியினைக் கூறும் பெரியபுராணச் 
செய்யுளைக் கீழே காண்க.

    திருமறை யோர்கள் சூழ்ந்து சிந்தையின் 
        மகிழ்ச்சி பொங்கப்
    பெருமறை ஓசை மல்கப் பெருந்திருக் 
        கோயில் எய்தி
    அருமறைப் பொருளா னாரைப் பணிந்தணி 
        நற்சங் கத்தின்
    தருமுறை நெறியக் கோயில் சார்ந்தமை 
        அருளிச் செய்தார்.

    இப்பாடலின் கருத்து என்னையெனின் மறையவர்கள்  சூழ்ந்து மனதில் 
பெருமகிழ்ச்சியுடன் வேத ஒலி முழங்கப் பெருந்திருக்கோயிலுள் அடைந்து வேதப் 
பொருளான இறைவரைப் பணிந்து அழகிய வலம்புரிச் சங்கத்தின் முறை நெறியில் 
அமைக்கப்பட்ட அத்திருக்கோயிலின்கண் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் 
தன்மையைப் பதிகத்தில் அருளிச் செய்தார். 

    பெருந்திருக்கோயில் என்பது மாடக்கோயில். இது கோச்செங்கட்சோழன் 
இறைவனார்க்கு அமைத்த 78 மாடக் கோயில்களுள் ஒன்றாகும். இறைவர் மாடத்தின் மீது 
எழுந்தருளியிருப்பார். மேலே செல்லும் படிகள் நேராக இருக்காது. யானை மேலே ஏறிச் செல்ல 
இயலாதபடி இருபுறமாகப் பக்கங்களில் அமைக்கப்பட்டிருக்கும். அணி நற்சங்கத்தின் முறை 
நெறி தரும் அக்கோயில் என்பது அத்திருக்கோயில் பிரணவத்தினை ஒத்த வடிவுடைய 
வலம்புரிச் சங்கத்தின் வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதாகும். சங்கத்தினில் எப்பொழுதும் 
இடைவிடாது முழங்கும் பிரணவ ஒலி (ஓம்) போன்று இறைவரும் அத்திருக்கோயிலில் 
எழுந்தருளியிருப்பர் என்பது கருத்து.

பதிகப் பொழிப்புரை:

1.     அழகுடைய வெண்சங்கினாலான குண்டலமும் தோடும் அணிந்து நான்கு           
வேதங்களும் பரம்பொருள் என்று சங்கையில்லாமல் சொல்லும் பெருமானே, நீர் சுடுகாடு 
அல்லது வேறிடம்  கருத மாட்டீர். செந்நிறமுடைய காய்கள் குலையாகக் காய்த்திருக்கும் 
கமுகின் குயில்கள் கூவும்  குளிர்ந்த சோலைகளையுடைய திருத்தலைச்சங்காட்டைக் 
கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.  சங்கை என்பது ஐயம் என்னும் பொருளைக் 
குறிக்கும். நான்கு வேதங்களும் சிவ பெருமானையே முழுமுதற் கடவுள் என்று சிறிதும் 
ஐயத்திற்கு இடமில்லாமல் பறை சாற்றுகின்றன என்பது கருத்து.

2.     துணியினால் ஆன கோவணத்தையும் தோலினால் ஆன உடையையுங்காட்டி 
அடியவர்களைத் தொண்டு கொண்டருளினீர். நீலமணி போலும் நிறமுடைய கழுத்தினை
யுடையவரே, தேவர்களனைவர்க்கும் பெருமை மிக்க மகாதேவனாயினீர். பிணித்திருக்கும்             
முப்புரிநூலை மார்பினில் உடையவரான பெரியோர்கள் (வேதியர்கள்) வாழும் திருத்தலைச் 
சங்காட்டின்  அழகு மிக்க கோயிலினையே தேவரீருக்குக் கோயிலாகக் கொண்டு அமர்ந்தீரே.

3.     பெருமை மிக்க பாடல்களின் பொருளானவரே, சிவந்த கண்களை உடைய வெள்ளை 
ஏற்றினை வாகனமாகக் கொண்டவரே, நீரும்பூவுங்கொண்டு நீங்காமல் தொண்டர்கள் நின்று 
வழிபாடு செய்ய, மாலையணிந்த முப்புரிநூல் மார்பினின் அணிந்த அந்தணாளர்கள் வாழும் 
திருத்தலைச் சங்காட்டில் உள்ள அழகு மிக்க கோயிலையே உமக்கு இருப்பிடமாகக் கொண்டு 
எழுந்தருளியிருந்தீரே. 

    வழிபாட்டிற்கு இன்றியமையாத பொருள்கள் பூவும் நீருமாகும். 'புண்ணியம் செய்வார்க்குப் 
பூவுண்டு நீருண்டு' என்று தொடங்கும் திருமந்திரச் செய்யுள் இங்கு நினைவு கூர்தற்குரியது .

    புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு 
    அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் 
    எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை 
    நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

                    -திருமந்திரம்: 1828ம் பாடல்

4.     அனைத்தும் உமது வேடமாம் கொள்கையினீர். சந்திரன் வந்து வேண்ட அவனை 
உச்சியில் கங்கை நதியில் ஒரு ஓடம் போல் வைத்தருளினீர். திருத்தலைச்சங்காட்டினில் 
மண்டபங்களும் கூடங்களும் பொருந்திய வாயிலில் கொடிமரம் தோன்றும் மாடமுடைய 
திருக்கோயிலினையே உமக்குக் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தருளினீரே.

5.     சூலந்தரித்த கையினை உடையவரே, பொடியான திருநீற்றில் விரும்பி ஆடியவரே, 
(திருநீற்றினால் அபிடேகம் செய்து கொண்டருளினவர்) நீலநிறம் சேர்ந்த கழுத்தினையுடையவரே, 
நீண்ட சடையின்மீது கங்கையைத் தரித்தருளினவரே, நீர்வளம் மிக்க குளிர்ந்த கானத்தில் 
அன்னங்கள் பொருந்தியிருக்கும் திருத்தலைச்சங்காட்டு அழகுமிக்க திருக்கோயிலையே 
உமக்குக் கோயிலாகக் கொண்டருளினீரே.

6.     நிலம்,நீர்,ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய ஐந்து பூதங்களாகி நின்று, ஐந்து 
புலன்களையும் வெற்றி கொண்டவர்களாகிய சீலர்கள், பொய்மை பேசாதவர், உம்மைத் 
துதித்தலை எப்போதும் தவிராதவர், வஞ்சனையில்லாதவர், இழிசெயல் எதுவும் செய்யாதவர், 
மேலோர்கள் வாழுந்தலமாகிய திருத்தலைச் சங்காட்டில் உள்ள அழகிய கோயிலையே 
உமக்குக் கோயிலாகக் கொண்டருளினீரே.                                 

7.     திருவடிகளைச் சேர்ந்த கழல்கள் ஒலிக்கக் கையில் அனல் ஏந்தி நடனமாடி கொடி 
போலும் மென்மையும் சாயலும் உடைய உமையம்மையாரை ஒரு பாகமாகக் கூடினீர், 
வெண்ணீறு சேர்ந்த முப்புரி நூல் மார்பினையுடைய நூல்களைக் கற்ற வேதியர்கள் வாழும் 
திருத்தலைச்சங்காட்டுக் காவல் மிக்க  கோயிலினையே உமக்கு இருப்பிடமாகக் கொண்டருளினீரே.

8.     அலைகள் நிறைந்த பெருங்கடலால் சூழப்பட்ட தென்னிலங்கை அரசனாகிய 
இராவணனை அவனது மலை போன்ற தோள்களை நெருக்கி விரலால் ஊன்றிய பெருமையை 
உடையவரே, இடையிற்பொருந்திய மேகலை என்னும் ஆபரணமுடையவரே, அந்தணர்கள் வாழும் 
திருத்தலைச்சங்காட்டு வரிசை பொருந்திய கோயிலையே உமக்கு இருப்பிடமாக நினைந்தருளினீரே. 
மேகலை என்பது பெண்களின் ஆபரண விசேடமாகலின் பெண்ணைப் பாகங் கொண்டவர் 
என்ற குறிப்பு தோன்றப் பாடியதாகும்.

9.     பரந்து கிடக்கும் பாம்பணை மீது கிடக்கும் திருமாலும், தாமரை ஆசனனாகிய 
நான்முகனும் முறையே வராகமும் அன்னமுமாய்க் கீழே இடந்தும் மேலே பறந்தும் போய்த் 
தேடியும் உம்மைக்காண இயலாதாராயினர். புறச்சமயங்களின் நெறி நில்லாதவரும், 
உம்மைத் துதித்தலினின்றும் என்றும் நீங்காதவருமாகிய வேள்வித்தீயினைப் போற்றும் 
மறை ஓதும் வேதியர்கள் விளங்கும் செல்வமிக்க திருத்தலைச் சங்காட்டினில் உயர்வு 
பெற்று விளங்கும் திருக்கோயிலினையே உமக்கு இருப்பிடமாகக் கொண்டு சேர்ந்தருளினீரே.

10.     அலைகள் மோதுகின்ற நீரில் மூழ்குதலைத் துறந்த அதாவது நீராடுதலைச் செய்யாத 
சமணர் குண்டர்களும், பௌத்தர்களும் இடைவிடாது உம்மைப் பழிச்சொற்களால் தூற்றவும், 
அடியவர்களுக்கு உமது தோற்றத்தினைக் காட்டி ஆட்கொண்டருளினீர். சாத்திரங்களில் 
முதன்மையான நான்கு வேதங்களையும் பயின்றார் வாழுகின்ற திருத்தலைச் சங்காட்டு 
உயர்ந்த கோபுரவாயிலை உடைய திருக்கோயிலினையே உமக்குக் கோயிலாகக் 
கொண்டருளினீரே.

11.     குளிர்ச்சிமிக்க நீர் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த நன்மையுடைய திருஞானசம்பந்தன், 
குளிர்ச்சி பொருந்திய திருத்தலைச்சங்காட்டில் ஓங்கி உயர்ந்த கோயிலில் விரும்பி அமர்ந்த 
பெருமானை, ஒளிவீசும் பிறைச்சந்திரனை அணிந்தவனைத் துதித்து உரை செய்த பாடல்களாகிய 
இவைகளைப்பாட வல்லவர்கள் விளங்கும் திரைகடல் சூழ்ந்த மண்ணுலகில் வசிப்பவர்க்கெல்லாம் 
மேலானவராக ஆவார்கள். அதாவது எல்லோரினும் மேம்பட்டவராக விளங்குவார்கள். அல்லது 
வையத்தார்க்கு  மேலார் என்பதற்கு மேலிடத்தவராவர் அதாவது வானுலகத்தவராம் தேவராவர் 
என்று கொள்ளினும் அமையும்.

    தலைச்சங்கைக் கோயில், தலைச்சங்கை ஓங்கு கோயில் என்பன போன்று வருமிடங்களில் 
எல்லாம் தலையாகிய வலம்புரிச்சங்கினை ஒத்த வடிவ அமைப்பில் அமைந்த கோயில் என்றும் 
பொருள் கொள்ள அமையும். சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த கருத்தினையும் மேலே 
பதிக வரலாற்றில் காண்க.

                -சிவம்-

 

                சிவமயம்
                
            திருஞானசம்பந்தர் அருளியவை

                திருவலம்புரம்

பண்: பழம்பஞ்சுரம்                    3-ம் திருமுறை

    கொடியுடை மும்மதி லூடுருவக் 
        குனிவெஞ் சிலைதாங்கி 
    இடிபட எய்த அமரர்பிரான் 
        அடியார் இசைந்தேத்தத் 
    துடியிடை யாளையொர் பாகமாகத் 
        துதைந்தா ரிடம்போலும் 
    வடிவுடை மேதி வயல்படியும் 
        வலம்புர நன்னகரே        1

    கோத்தகல் லாடையுங் கோவணமும் 
        கொடுகொட்டி கொண்டொருகைத்
    தேய்த்தன் றநங்கனைத் தேசழித்துத் 
        திசையார் தொழுதேத்தக் 
    காய்த்தகல் லாலதன் கீழிருந்த 
        கடவுள் இடம்போலும் 
    வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர் 
        வலம்புர நன்னகரே.         2

    நொய்யதொர் மான்மறி கைவிரலின் 
        நுனைமேல் நிலையாக்கி 
    மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி 
        விரிபுன் சடைதாழ 
    மையிருஞ் சோலை மணங்கமழ 
        இருந்தா ரிடம்போலும் 
    வைகலும் மாமுழ வம்மதிரும் 
        வலம்புர நன்னகரே.         3

    ஊனம ராக்கை உடம்புதன்னை 
        உணரிற் பொருளன்று
    தேனமர் கொன்றையினானடிக்கே 
        சிறுகாலை ஏத்துமினோ 
    ஆனமர் ஐந்து கொண் டாட்டுகந்த 
        அடிகள் இடம்போலும் 
    வானவர் நாடொறும் வந்திறைஞ்சும் 
        வலம்புர நன்னகரே.        4

    செற்றெறியுந் திரையார் கலுழிச் 
        செழுநீர்கிளர் செஞ்சடைமேல் 
    அற்றறியா தனலாடு நட்ட
         மணியார் தடங்கண்ணி 
    பெற்றறி வார்எரு தேறவல்ல 
        பெருமான் இடம்போலும் 
    வற்றறியாப் புனல்வாய்ப் புடைய 
        வலம்புர நன்னகரே.        5

    உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு 
        உமையோடு உடனாகிச் 
    சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் 
        சுடர்ச்சோதி நின்றிலங்கப் 
    பண்ண வண்ணத்தன பாணிசெய்யப் 
        பயின்றா ரிடம்போலும்
    வண்ணவண் ணப்பறை பாணியறா 
        வலம்புர நன்னகரே.         6

    புரிதரு புன்சடை பொன்தயங்கப் 
        புரிநூல் புரண்டிலங்க 
    விரைதரு வேழத்தின் ஈருரிதோல் 
        மேல்மூடி வேய்புரைதோள்
    அரைதரு பூந்துகில் ஆரணங்கை 
        அமர்ந்தா ரிடம்போலும் 
    வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா
        வலம்புர நன்னகரே.         7

    தண்டணை தோளிரு பத்தினொடும் 
        தலைபத் துடையானை 
    ஒண்டணை மாதுமை தான்நடுங்க
         ஒருகால் விரலூன்றி 
    மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல 
        விகிர்தர்க் கிடம்போலும் 
    வண்டணை தன்னொடு வைகுபொழில் 
        வலம்புர நன்னகரே.        8

    தாருறு தாமரை மேலயனும் 
        தரணி யளந்தானும் 
    தேர்வறி யாவகை யால்இகலித் 
        திகைத்துத் திரிந்தேத்தப் 
    பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த 
        பெருமான் இடம்போலும் 
    வாருறு சோலை மணங்கமழும் 
        வலம்புர நன்னகரே.        9

    காவிய நல்துவ ராடையினார் 
        கடுநோன்பு மேல்கொள்ளும் 
    பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் 
        பழந்தொண்டர் உள்ளுருக 
    ஆவியுள் நின்றருள் செய்யவல்ல 
        அழகர் இடம்போலும் 
    வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய 
        வலம்புர நன்னகரே.        10

    நல்லியல் நான்மறை யோர்புகலித் 
        தமிழ்ஞான சம்பந்தன்                 
    வல்லியந் தோலுடை யாடையினான் 
        வலம்புர நன்னகரைச் 
    சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல 
        வல்லவர்  தொல்வினைபோய்ச் 
    செல்வன சேவடி சென்றணுகிச் 
        சிவலோகஞ் சேர்வாரே.    11

            திருச்சிற்றம்பலம்

சுவாமி: வலம்புரிநாதேசுவரர்         தேவி: வடுவகிர்க்கண்ணி

பதிக வரலாறு: 

    திருத்தலைச்சங்காட்டில் கறையணிகண்டர் கோயிலைக் காதல் மிக்கூரப் பாடிப் 
பணிந்த பின்னர் மறையவர்கள் போற்ற திருவலம்புரம் வந்து அங்குக் கோயில் கொண்ட 
பெருமானாரைத் திருஞானசம்பந்தர் தொழுது பாடியது "கொடியுடை" என எடுத்த 
இத்திருப்பதிகம்.

பதிகப் பொழிப்புரை :

1.    கொடிகளை உடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு வளைத்த 
வெம்மையான வில்லினைத் தாங்கி பேரொலியுடன் அம்மதில்கள் அழியும்படி அம்பெய்த 
தேவர் தேவனாகிய பிரான், அடியார்கள் எல்லாம் ஒரு சேரச்சேர்ந்து துதிக்க உடுக்கை 
போலும் இடையினையுடைய உமாதேவியாரை ஓர் பாகமாகப் பிரிவிலாது தமது தேகத்தில் 
கொண்டவரது இடம் போலும், வடிவுடைய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் 
என்னும் நன்னகர். அதாவது வலம்புர நன்னகர் துடியிடையாளை ஓர்பாகமாகக்  கொண்ட 
பெருமானார்க்கிடம் என்பது கருத்து. இனிவரும் பாடல்களிலும் அம் மாதிரியே கொள்க. 

2.     அணிந்து கொண்ட காவியுடையும், கோவணமும், ஒரு கையினில் கொடுகொட்டி 
என்னும் இசைக்கருவியையும் கொண்டு, மன்மதனை அன்று அவனது ஒளி மிக்க உடல் 
உருவழியும்படி எரித்து, எல்லாத் திசையில் உள்ளவர்களும் தொழுது வணங்கும்படி காய்கள் 
நிறைந்த கல்லால மரத்தின் கீழிருந்த முழுமுதற்கடவுளின் இடம் போலும், முத்தீ வளர்த்து 
வேள்விகளைப் புரிவோராகிய நான்மறை பயின்ற அந்தணர்கள் வாழும் வலம்புரம் 
என்னும் நன்னகர்.

3.     மெல்லிய மான்குட்டியினை ஒரு கைவிரல் நுனிமேல் நிலைபெறச் செய்து, 
தீப்போன்ற மேனியில் வெண்ணீறு பூசி, விரித்த பொன் போலும் சடை கீழே தாழ்ந்திருக்க 
இருளடர்ந்த பெரிய சோலைகள் நறுமணம் வீச வீற்றிருந்த பெருமானாரின் இடம் போலும், 
தினமும் பெரிய முழவம் என்னும் வாத்தியங்கள் அதிரும் (பேரொலி செய்யும்) திருவலம்புரம் 
என்னும் நன்னகர். தினமும் திருவிழாக்கள் போன்று சிறப்புடன் பூசைகள் நடக்கும் 
என்பது கருத்து.

4.     தசையினால் ஆக்கப் பெற்ற இந்த உடம்பினை நிலையான பொருள் அன்று என்று 
உணருவீர்களேயானால் தேன் நிறைந்த கொன்றைப் பூமாலையினனான சிவபெருமானின் 
திருவடிகளுக்கே இளமை முதலே ஏத்துதலைச் செய்யுங்கள். அவ்வாறு ஏத்துதற்குரிய 
பெருமான், பசுவினால் பெறும் பஞ்ச கவ்வியத்தினால் அபிடேகஞ் செய்தலை விரும்பிய 
பெருமான், அவனது இடம் போலும் தேவர்களும் நாள்தோறும் வந்து வழிபடும் திருவலம்புரம் 
என்ற நன்னகராகும்.

    உடம்பு நிலையானது அன்று என்பதை இளமையிலேயே உணர்ந்து அதனையே 
பேணுதலை விட்டொழித்து அதற்கே இரைதேடிக் காலங்கழிக்காது இறைவனாகிய 
பெருமானை நினையுங்கள் என்று நல்வழிப்படுத்தியவாறு காண்க.

5.     கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினைப் 
பிரகாசிக்கின்ற  செஞ்சடை மீது நீங்குதலில்லாமல் தங்க வைத்து, அனல் கைக்கொண்டு 
நடனமாடுபவர் அழகு பொருந்திய விசாலமான கண்களையுடைய உமாதேவியாரை 
ஒரு பாகமாகப் பெற்றவர், எருதினை வாகனமாகக் கொள்ள வல்ல பெருமான், 
அவரது இடம் போலும், என்றும் வற்றுதலை அறியாத நீர் பெருகும் வாய்ப்புடைய 
திருவலம்புரம் என்னும் நன்னகர்.

6.     தேவர்கள் அமுதமுண்ணும் பொருட்டுத் தான் கரு நிறமும் ஒளியும் பொருந்திய 
நஞ்சினையுண்டு, உமாதேவியாரொடு ஒன்றாகி, பொடியாகிய அழகிய திருநீற்றினை 
மேனி மீது பூசி கதிர்கள் வீசும் ஒளிப் பிழம்பு போல் நின்றுப் பிரகாசிக்க, பல்வேறு பண்களில் 
சிவபூதங்கள் பாடியாடத்  தாமும் ஆடல் புரிந்தவராகிய சிவபெருமானார்க்கு இடம் போலும், 
பலவகைப்பட்ட பறை முதலிய வாத்தியங்களின்  முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் 
நன்னகர். வலம்புரம்  நன்னகரில் என்றும் பறைகளின் ஓசையறாது நித்தலும் திருவிழாவாகவே 
இருக்கும் என்பது கருத்து.

7.     முறுக்கிய சடையானது பொன்போல் பிரகாசிக்க, மார்பில் முப்புரிநூல் புரண்டு 
விளங்க, மிகவேகமாகச் செல்லக் கூடிய யானையினை  இழுத்து உரிக்கப்பட்ட தோலினை 
உடலின் மீது போர்த்தி, மூங்கிலையொத்த தோளினை யுடையவளும் இடையினிலே 
அழகிய பூந்துகிலினைத் தரித்தவளுமான அருமையான தெய்வமாகிய உமாதேவியாரை 
விரும்பியவரான சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் போலும், வரையின்றித் 
தருதலால் மிக்க பழைமையான புகழ் படைத்த குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் 
குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர். 

8.     தண்டு முதலிய ஆயுதங்கள் சேர்ந்த இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் 
உடைய இராவணனை, தன்னுடன் ஒன்றியிருந்த உமையாள் நடுங்கும்படி மலையினையெடுத்தபோது 
ஒருகால் விரலினையூன்றி அவனது வலிமையைக் கெடுத்துப் பின்னர் அவன் தன் பிழையினை 
உணர்ந்தபோது அவனுக்கே அருள் செய்யவல்ல பிரானார்க்கு இடம் போலும், வண்டுகள் 
நெருங்கிப் பயிலும் பொழில்கள் சூழ்ந்த வலம்புரம் என்னும் நன்னகர்.

9.     மாலையாக அமைந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும் பிரமதேவனும், உலகை 
இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது தம்முள் யார் பெரியவர் 
என்று மாறுபாடு கொண்டு, ஒளிப் பிழம்பான இறைவனைக் காணமுடியாது திகைத்துத் 
திரிந்துப் பின்னர் தம் குறையினை உணர்ந்து சிவபெருமானை ஏத்தித் துதிக்க, அசைக்க 
முடியாத தாணுவாய் விளங்கிய ஓங்கிய அப்பெருமானது இடம் போலும், நீண்டு உயர்ந்த 
சோலைகள் மணங் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர்.

    உலகை இரண்டடியால் அளக்கும் வல்லமை உடையானாயினும் சிவபெருமானிடம் 
அவ்வலிமை பயனற்று அவரைக்காண முடியாது திகைத்தனன் என்பதைக் காட்ட 
'தரணி அளந்தான்' என்று குறிப்பிட்டார்.

10.     காவி நிறத்தைத் தருவதாகிய துவர் நீரில் தோய்த்த ஆடையினையுடைய பௌத்தர்களும்,
கடுமையான நோன்புகளை இயற்கைக்கு மாறாகப் பயிலும் பாவிகளான சமணர்களும் கூறும் 
சொற்களைச் சிறிதும் கேளாத அதாவது மதிக்காதவர்களான வழி வழியாக சிவனடிமை 
செய்யும் தொண்டர்களின் உயிருக்குள் உயிராக நின்று பேரருள் செய்யவல்ல அழகரான 
சிவபெருமானது இடம் போலும், குளங்களிலும் வயல்களிலும் நல்ல நீர் பொருந்துதலை உடைய 
திருவலம்புரம் என்ற நன்னகர்.

11.     நல்ல இயல்பினையுடைய (ஒழுக்கத்தினையுடைய) நான்கு மறைகள் வல்லவர்கள் 
வாழும் புகலியென்னும் சீகாழிப் பதியிலே தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் புலித்தோலினைத் 
தனக்கு ஆடையாகக் கொண்டருளினவனாகிய  சிவபெருமான் கோயில் கொண்ட திருவலம்புரம் 
என்னும் நன்னகரைப் புகழ்ந்து சொல்லிய பாடல்கள் பத்தினையும் சொல்லவல்லவர்கள் 
தமது தொன்மையான வினைகள் எல்லாம் கழிந்துச் செல்வனாகிய சிவபிரானின் சேவடிகளைச்
சென்றணுகிச் சிவலோகஞ் சேர்வார்கள். 

    பாடல்கள் சொல்ல வல்லார்கள் என்று அருளிச் செய்தது எற்றுக்கோ எனில் பாடல்களை 
எல்லோரும் ஓதுவதில்லை. பூர்வ புண்ணியம் இருந்தாலன்றித் திருமுறைகள் ஓதுதலில் 
மனஞ்செல்லாது. இக்காரணம் பற்றியே பிள்ளையார் ஒவ்வொரு பதிகத்திலும் சொல்ல வல்லார் 
அதாவது நம்பிக்கையுடன் சொல்லுகின்ற மனவலிமை உள்ளவர்கள் என்ற பொருளில் அமைத்துப் 
பாடியருளினார். மற்றப் பதிகங்களிலும் வருமிடங்களில் எல்லாம் இவ்வாறே கொள்க.

                -சிவம் -
 

                சிவமயம்

            திருஞானசம்பந்தர் அருளியவை

        காவிரிப்பூம்பட்டினத்துத் திருபல்லவனீச்சரம்

பண்: தக்கேசி                         1-ம் திருமுறை

    அடையார்தம்  புரங்கள்மூன்றும்  ஆரழலில்லழுந்த 
    விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம் 
    கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப் 
    படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே.        1

    எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரான் இமையோர்
    கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்  நண்ணுமிடம் 
    மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேன் அருந்திப் 
    பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.        2

    மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல் 
    கங்கையங்கே வாழவைத்த கள்வன்இருந்தஇடம் 
    பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின் மேல்
    பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.            3

    தாரார்கொன்றை பொன்தயங்கச் சாத்தியமார்பகலம் 
    நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம் 
    போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினால் 
    பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே.             4

    மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந் துதிப்ப
    மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவிஇருந்தவிடம்
    கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற் கழலே 
    பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே.        5

    குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக் 
    கழலினோசை யார்க்கஆடுங் கடவுள் இருந்தவிடம் 
    சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரைமொண்டெறியப்
    பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.         6

    வெந்தலாய வேந்தன்வேள்விவேரறச்சாடிவிண்ணோர் 
     வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்த இடம் 
    மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் 
    பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.            7

    தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க அவன் 
    தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர் 
    காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப் 
    பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.            8

    அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால் 
    தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம் 
    வங்கமாரு முத்தம் இப்பி வார்கடலூடலைப்பப் 
    பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.        9

    உண்டுடுக்கை இன்றியேநின் றூர்நகவேதிரிவார் 
    கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாத விடம்
    தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
    பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே.            10

     பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
    அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன் சொல்
    சித்தஞ்சேரச் செப்பும்மாந்தர் தீவினைநோயிலராய் 
    ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோங்குவரே.     11

            திருச்சிற்றம்பலம்

பதிக வரலாறு :

    திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருவலம்புரத்தைக் கோயிலாகக் கொண்டு 
எழுந்தருளியிருக்கும் இறைவனாரை  "கொடியுடை" என்றெடுத்த பதிகத்தால் தொழுதுப் 
போந்துப் பின்னர் திருச்சாய்க்காடு என்னும் தலத்தினைத் தொழுவதற்கு நினைந்து 
செல்பவர் வழியில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தைத் தமது தலையார 
வணங்கி திருந்திசைப்பதிகம் பாடியருளினார். அங்ஙனம் பல்லவனீச்சரத்துக் கோயில் 
கொண்ட, பாம்புகளை அணிகலன்களாகக் கொண்ட பரமனாரைத் துதித்துப் 
பாடியருளியதே இதுவும் அடுத்து வரும் பதிகமுமாம்.

பதிகப் பொழிப்புரை :

1.     பகைவர்களது மூன்று புரங்களையும் தீயில் அழுந்தும்படி விடையேறும் பெருமானாய்க் 
கோலங்கொண்டு கோபித்த வித்தகர் விரும்பி எழுந்தருளிய இடம் வாயில்கள் நிறைந்த மாடங்கள் 
எல்லாம் மிகவும் உயர்ந்து ஆகாயத்தினைத்தொட, படைகள் நிறைந்த மதில்கள் கொண்ட 
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

    வித்தகர் என்பது திறமையாளர் என்னும் பொருளில் வந்தது. கடை ஆர் என்பதற்கு 
'சாளரங்கள் நிறைந்த' என்றும் கொள்ளலாம். படை ஆர் என்பது மதிற்சுவர் மேல் நிறைந்த 
மதில் உறுப்புக்கள் அல்லது பொறிகள் எனக்கொள்ளலாம்.

2.     பகைவர்களது முப்புரங்களும் எரியுமாறு கோபித்த எந்தை பிரானாகிய 
சிவபெருமான் தேவர்களுக்குக் கண்ணாய் நின்று உலகமனைத்தையும் காக்கின்ற 
கண்ணுதல் ஆவான். அவன் விரும்பி இருக்குமிடம் நிலவுலகத்தில் பொருந்திய 
சோலைகளில் அழகிய வண்டுகள் தினமும் தேனினை அருந்திப் பண்ணிறைந்த 
பாடல்களைப் பாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

3.     மங்கையான பார்வதிதேவி ஒரு பாகத்திருக்கவும் ஒளி வீசும் நிலவு தங்கிய 
சடையின் மீது கங்கையையும் வாழ வைத்த கள்வனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளிய 
இடம் பொங்குகின்ற நீர் நிறைந்த கடலின் ஓதம் மீது உயர்ந்த குளத்தின்மேல் தாமரை 
மலர்கள் பூக்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமே யாகும்.

    ஒரு பாகத்து மங்கை இருக்கவும் சடைமேல் கங்கையை ஒளித்து வைத்த 
காரணத்தினால் இறைவனைக் கள்வன் என்று கூறினார். உள்ளம் கவர்கள்வன் என்று 
முன்னரும் கூறியுள்ளார். வேதமும் இறைவனை திருடர்களின் தலைவனே உனக்கு 
வணக்கம் என்று கூறுகிறது. (தஸ்கராணாம் பதயே நம: --ஸ்ரீருத்ரம்)

    "பொங்கயம் சேர்...பொய்கை" என்பதற்குக் கடலின் வெள்ளத்தினால் நீர் நிறைந்த 
பொய்கை என்று கொள்ளினும் அமையும்.

4.     மாலையாக அமைந்த கொன்றையினைப் பொன்னிறம் விளங்கும்படி சாத்திய 
மார்பின் மீது பொடியாக்கிய திருநீறும் சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களும் 
சாத்திய நின்மலனாகிய பெருமான் பொருந்தியிருக்குமிடம் போர் செய்யும் வேலினைப் 
போன்ற கூரிய கண்களைக் கொண்ட மாதர்களும் ஆண் மக்களும் புகுந்து இசைகள்         
பாடுவதனால் இப்பூமியே அதிர்கின்ற காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

    நின்மலன் என்பது சுத்தன் (பரிசுத்தமானவன்) என்னும் பொருளில் வந்தது. 
மைந்தர் என்பது ஆடவர்களைப் பொதுமையாகக் குறித்தது. மாதர்களும் ஆண் மக்களும் 
சேர்ந்து பூமியே அதிரும்படியாக இசை பாடினார்கள் என்பதினால் அம்மாதிரி பாடியவர்களின் 
எண்ணிக்கையின் பெருக்கத்தை உய்த்துணரலாம்.

5.    நீலகண்டரும், தேவலோகத்திலே உள்ளவரும் துதிக்கும்படி  நீறு பூசியவருமாகிய 
சிவபெருமான் அடியார்கள் தொழும்படி அமர்ந்து இருந்தவிடம்,  கைகளில் நிறைந்த வளையல்களை
உடைய பெண்மக்கள் விருப்பினோடும் காதலோடும் கழலடியைச் சேரும் காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரமாகும். 

    காதல் என்பது ஒன்றின் மீது ஏற்படும் விருப்பம்  முற்றி அது இன்றியமையாததாக 
ஆகும் தன்மையில் ஏற்படும் மனோநிலை. கழல் என்பது இங்கு திருவடிகளைக் குறித்தது.

6.     குழலின் ஓசையும், வீணை மொந்தை முதலிய வாத்தியங்கள் முழங்கவும், கால்களிலே 
தரித்த வீரக்கழல்கள் ஆரவாரிக்கவும் ஆடுகின்ற கடவுளாகிய சிவபெருமான் எழுந்தருளிய 
இடம் சுழித்துப் பெருகும் கடல் வெள்ளத்தினை அலைகள் மொண்டு எறிய எவ்விதமான பழியும் 
இல்லாதவர்கள் பழகுகின்ற காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

7.     தக்கனது யாகத்தை அடியோடு அழித்து தேவர்களெலாம் வந்து முன் நின்று வழிபட 
நின்ற இறைவனாகிய சிவ பெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருந்த இடம் மென்மையான
மல்லிகையும், புன்னையும் வளர்கின்ற குரவின் பந்தல்களும் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்துப் 
பல்லவனீச்சரமாகும்.

    குரவு என்பது ஒரு வகை மலர்தரும் மரம். ஆகையால் பந்தல் என்பதற்கு நிழல் என்று 
பொருள் கொள்ளலாம்.

8.     தேரின்மீது சென்ற இராவணன் கயிலை மால் வரையைப் பெயர்த்து எடுக்க 
அவனது மாலைகள் அழுத்துகின்ற திண்ணிய முடிகளை நெரிய கால் விரலினை 
ஊன்றிய சங்கரனாரது ஊர் மேகங்கள் நீரினை முகக்கும் கடல் ஒலிக்கும் எல்லாக் 
காலத்தும் பூமியிலுள்ள மக்கள் அக்கமாலைகளைத் தரிக்கின்ற காவிரிப்பூம்பட்டினத்துப் 
பல்லவனீச்சரமாகும்.

    ‘கடல் கிளர்ந்த காலமெலாம்' என்றது கடலின் ஒலி எக்காலத்தும் ஓயாதது போல 
மக்கள் அக்க மாலைகளைத் (ருத்திராக்ஷ மாலை) தரிப்பது என்றும் ஓயாது என்பதைக் குறிப்பதாகும்.

9.     ஆறு வேதாங்கங்களையும், நான்கு வேதங்களையும் ஓதுகின்ற பிரம்ம தேவனும், 
நெடுமாலும் காணும்படியாக ஒளிப்பிழம்பாய் நின்ற இறைவன் தங்குமிடம் கப்பல்களில் 
நிறைந்த முத்துச்சிப்பிகள் கடலுள் புகுந்து அலைப்ப பழியில்லாதவர்கள் பயிலுகின்ற 
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். 

    சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கல்பம் என்ற ஆறும் வேதாங்கங்களாகும். 
ருக், யஜுர், சாமம், அதர்வணம் இவை நான்கு வேதங்கள். இவைகளை ஓதுவதால் பிரம்மதேவனுக்கு 
வேதன் என்று பெயர். மஹாபலியின் யாகத்தின் போது மூன்று உலகங்களையும் இரண்டு அடிகளால் 
அளப்பதற்கு நீண்டு உயர்ந்து திருவிக்ரமனாக ஆனதால் திருமால் நெடுமால் எனப்படுகிறார். 
அத்தகைய திருமாலும் இறைவனின் ஜோதியினைக் கண்டாரே தவிர அதனுடைய அடிமுடிகளை 
அவரும் பிரம்மதேவனும் கண்டாரில்லை என்பது கருத்து.

10.    உணவினை மட்டும் நிறையத்தின்று ஆடையின்றியே இருந்து ஊரார் சிரிக்கும்படி 
திரிகின்ற சமணரும், ஆடையினை நன்றாக உடம்பினில் போர்த்தித் திரியும் புத்தரும்
கண்டு அறியாத பெருமானாரது இடம் தண்டு, உடுக்கை, தாளம், தக்கை  முதலியவைகளை 
ஏந்தி நடனமாடுகின்ற பெருமான் பழைய காலம் தொட்டு அடியார்களது துன்பத்தினைத் 
தீர்க்கும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

    நடம் பயிலும் பரமர் பண்டு தொட்டே காவிரிப்பூம்பட்டினத்து அடியார்களது 
இடுக்கண்களைத் தீர்க்கின்றார் என்பது கருத்து. அல்லது அடியார்களது பண்டைய வினைகளை 
(சஞ்சிதம் என்னும் தொல்வினையை)த் தீர்க்கின்றார் என்று கொள்ளினும் அமையும்.

11.     பக்தர்கள் ஏத்தித் துதிக்கின்ற காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் கோயில் 
கொண்ட பல்லவனேச்வரரை அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் தோத்திரம் 
செய்து செப்பிய இப்பதிகத்தினை மனமூன்றிச் சொல்லுகின்ற மக்கள் தீவினையும், நோயும் 
இல்லாதவராய் சிறந்த இன்பங்கள் ஒருசேர அமைந்த உயர்ந்த வானுலகில் சிறப்புடன் ஓங்கி 
வாழ்வார்கள்.

                -சிவம்-
 


                சிவமயம்

            திருஞானசம்பந்தர் அருளியவை

        காவிரிப்பூம்பட்டினத்துத் திருபல்லவனீச்சரம்

பண்-பழம்பஞ்சுரம்-ஈரடி                 3-ம் திருமுறை

            திருச்சிற்றம்பலம்

    பரசுபாணியர் பாடல்வீணையர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    அரசுபேணி நின்றார் 
        இவர்தன்மை யறிவாரார்.        1

    பட்டநெற்றியர் நட்டமாடுவர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    இட்டமா யிருப்பார்
        இவர்தன்மை யறிவாரார்.        2

    பவளமேனியர் திகழும்நீற்றினர்
         பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    அழகரா யிருப்பார்
        இவர்தன்மை யறிவாரார்.        3

    பண்ணில்யாழினர் பயிலும்மொந்தையர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    அண்ணலா யிருப்பார் 
        இவர்தன்மை யறிவாரார்.        4

    பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    எல்லியாட்டு உகந்தார் 
        இவர்தன்மை யறிவாரார்.        5

    பச்சைமேனியர் பிச்சைகொள்பவர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    இச்சையா யிருப்பார் 
        இவர்தன்மை யறிவாரார்.        6

    பைங்கணேற்றினர் திங்கள்சூடுவர் 
         பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    எங்குமா யிருப்பார் 
        இவர்தன்மை யறிவாரார்.        7

    பாதங்கைதொழ வேதமோதுவர்
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    ஆதியா யிருப்பார்
        இவர்தன்மை யறிவாரார்         8

    படிகொள்மேனியர் கடிகொள்கொன்றையர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    அடிகளா யிருப்பார் 
        இவர்தன்மை யறிவாரார்.        9

    பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர் 
        பட்டினத்துறை பல்லவனீச்சரத்து 
    இறைவரா யிருப்பார் 
        இவர்தன்மை யறிவாரார்.        10

    வானமாள்வதற்கு ஊனமொன்றிலை 
        மாதர்பல்லவன் ஈச்சரத்தானை 
    ஞானசம்பந்தன் நற்றமிழ் 
        சொல்லவல்லவர் நல்லவரே.    11

            திருச்சிற்றம்பலம்

சுவாமி: பல்லவனேசுவரர்            தேவி: சௌந்தரநாயகி

பதிகப்பொழிப்புரை: 

1.     பரசு என்னும் ஆயுதத்தைக் கரத்தில் தரித்தவர்.  பாடுவதற்குரிய கருவியாகிய வீணையை
உடையவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் கோயில் கொண்டுள்ளார். இவரது தன்மை 
எத்தகையது என்பதை யாவரே அறிவார்? ஒருவரும் அறியார் என்பது கருத்து. 

    இறைவனது உண்மையான தன்மை இத்தன்மைத்து என்று அறுதியிட்டுக் 
கூற எவராலும் இயலாது. அருள் ஞானம் படைத்தவர்கள் ஓரளவுக்குக் கூறலாம்.

2.     தலைமையானவர் என்பதைக் குறிக்கும் அடையாள அணிகலன் தரித்த நெற்றியினை 
உடையவர். திருக்கூத்து ஆடுபவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பியிருப்பார். 
இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?

3.     பவளம் போன்ற நிறம்பொருந்திய மேனியை உடையவர். மேனியின் மீது பிரகாசிக்கின்ற 
திருநீற்றினை உடையவர். காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரத்தில் அழகராக வீற்றிருப்பார். 
இவரது தன்மை எத்தகையது என்பதை  யாவரே அறிவார்? 'பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்' 
என்ற அப்பர் அடிகளின் திருவாக்கு இங்கு கவனத்திற்கு உரியது.

4.    பண்ணோடு கூடிய இசை பயிலும் யாழினை உடையவர். பொருந்திய மொந்தை என்னும் 
வாத்தியத்தினை உடையவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்திலே அண்ணலாய் 
வீற்றிருப்பார். இவரது தன்மையினை யாவரே அறிவார்? அண்ணல் என்ற பதம் அனைவருக்கும் 
தலைவர் என்பதைக் குறிக்க வந்தது.

5.     பற்களே இல்லாத மண்டையோட்டினைக் கையிலே கொண்டவர். அப்பாத்திரத்தில் பிச்சை 
ஏற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் கோயில் கொண்டு நள்ளிருளில் 
நடனமாடுதலை விரும்புபவர். இவரது தன்மையினை யாவரே அறிவார்?

6.    உமாதேவியாரை இடப்பாகம் கொண்டதால் பச்சை நிறம் விளங்கும் திருமேனியினை 
உடையவர். பிச்சை எடுப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்திலே விருப்பத்துடன் 
எழுந்தருளியிருப்பவர். இவரது தன்மையை யாவரே அறிவார்? 

    திருமால் பச்சை நிறமுடையவர். 'படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை' 
என்ற திருஞானசம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கைப்படி இறைவனார் விஷ்ணு மூர்த்தியாக
ஆகும்போது பச்சை மேனியராக ஆகிறார் என்று கொள்ளலாம். மேலும் 'இருவரோடு ஒருவனாகி 
நின்றனை' என்ற திருவாக்குப்படி விஷ்ணுவைத் தனது இடது பாகத்தில் கொண்டவர் என்பதால் 
பச்சை நிறமுடையவர் என்றும் கொள்ளலாம். சதாசிவமூர்த்தியின் ஐம்முகங்களில் ஒன்றாகிய 
ஸத்யோஜாதம் பச்சைநிறம் உடையது என்ற குறிப்பு திருத்தருமபுர ஆதீனத்து உரைப்பதிப்பில்         
கூறப்பட்டுள்ளது.

7.     பசிய கண்களை உடைய எருதின் மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சிரசிலே தரித்தவர். 
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்திலே இருக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருள். இவரது 
தன்மையினை யாவரே அறிவார்? 'எங்குமாயிருப்பார்' என்றது காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் 
கொண்டிருப்பினும் அவர் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஸர்வ வியாபகராய் 
விளங்குபவர் என்பதைக் காட்டுதற்காகவாகும்.

8.     தமது திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு 
வேதங்களை அருளிச் செய்தவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் கோயில் கொண்ட 
ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையினை அறிவார் யாவர்?

    "தொல்லை மால் வரைபயந்த தூயாள்தன் திருப்பாகன்  அல்லல் தீர்ந்து உலகுய்ய 
மறையளித்த திருவாக்கால்" என்ற  பெரியபுராணத்து வாக்கினால் உலகம் உய்வதற்காக 
இறைவனால் வேதங்கள் அளிக்கப்பட்டன என்பதை அறியலாம்.  'ஆதியாயிருப்பார்' என்றது 
இவ்வுலகம் அனைத்தும் தோன்றுதற்கு முதல் காரணமாயிருப்பவர் என்பதைக் குறித்ததாகும்.
 'ஆதியும் அந்தமுமாயினாய்' என்ற சுந்தரர் திருவாக்கும் காண்க.

9.     இவ்வுலகம் முழுவதும் தமது திருமேனியாயுடையவர். மணமிக்க கொன்றைப்பூ 
மாலையினைச் சூடியவர்.  காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரத்தில் பெருமானாக விளங்குபவர். 
இவரது தன்மையினை யாவரே அறிவார்?

    உலகம் என்பது உயிர்களைக் குறிக்கும். உயிர்கள் எல்லாம் இறைவனுக்கு உடம்பாகலின் 
படிகொள்மேனியர் என்று கூறுகிறார்.

10.     பறை என்னும் இசைக்கருவியினை உடையவர்.  பிறைச்சந்திரனையணிந்த திருமுடியினை 
உடையவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவருக்கும் தலைவராக விளங்குபவர். 
இவரது தன்மையினை யாவரே அறிவார்?

11.     அழகிய காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்துப் பெருமானை ஞானசம்பந்தனது 
நன்மைபயக்கக்கூடிய தமிழ் மாலையினால் துதிக்க வல்லவர்கள் வானுலகத்தையும் ஆள்வதற்குத் 
தடையேதுமில்லை. வானுலகம் ஆள்வார்கள் என்பது கருத்து.

        -சிவம் -
 

 

Related Content