(தமிழ் உரையுடன்)
[குறிப்பு : ( ) ல் உள்ளது ஒரே சொல்- கூட்டுச்சொல் ]
தேவா திக்பதய: ப்ரயாத பரத: கம் முஞ்சதாம்போமுச:
பாதாளம் வ்ரஜ மேதினி ப்ரவிஶத க்ஷோணீதலம் பூதரா: |
ப்ரஹ்மன்னுன்னய தூரமாத்மபுவனம் நாதஸ்ய நோ ந்ருத்யத:
ஶம்போ: ஸங்கடமேததித்யவது வ: ப்ரோத்ஸாரணா நந்தின: ||1||
1. ஹே தேவர்களே! பத்து திசைகளின் அதிபதிகளே! இங்கிருந்து எங்காவது வெகுதூரம்
சென்றுவிடுங்கள் . ஹே நீரைப் பொழியக்கூடிய மேகங்களே! ஆகாசத்தை விட்டு விட்டு
வெகுதூரம் சென்றுவிடுங்கள் . ஹே பூமாதேவியே ! நீ இங்கிருந்து நகர்ந்து பாதாளத்துக்குள்
சென்று மறைந்துகொள் . ஹே கம்பீரமான மலைகளே ! நீங்கள் அந்தப் பூமிக்கும் அடியில்
சென்று புகுந்து கொள்ளுங்கள் . நான்கு தலைகள் கொண்ட ப்ரஹ்மனே ! நீ உன்னுடைய
ப்ரஹ்மலோகத்தை இங்கிருந்து மேல்நோக்கி வெகுதூரம் எடுத்துச் சென்றுவிடு . ஏனெனில்
நமது ஸ்வாமீ பகவான் நடராஜன் மிகு வேகமாக ஆனந்த தாண்டவம் புரியும்போது
நீங்கள் சங்கடத்திற்கு உள்ளாவீர்கள் . எனவே எம்பெருமானின் ஆனந்த பிரதோஷ
தாண்டவம் தடையின்றி நடைபெறும் பொருட்டு தங்களை எல்லாம் வெகுதூரம்
போகக்கூறிய நந்தீஸ்வரனின் இந்த நல்லறிக்கை தாங்கள் அனைவரையும் காத்தருளட்டும்.
[ இது பிரதோஷ காலத்தில் ஆடிய ஆனந்ததாண்டவம் என்பதை 3-வது ஸ்லோகத்தில்
நந்தீஸுவரரே கூறுகின்றார். மேற்கூறிய வாக்கின்படி அவரவர் வெகுதூரம் சென்ற பின்பும்
எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தின் உச்சத்தில் அவர்களின்
நிலை எப்படியிருந்தது என்பதை நந்தீஸுவரனே அந்த ஆனந்த தாண்டவ ஸ்துதியின்
மூலம் கீழ்க்காணும் நான்கு ஸ்லோகங்களில் கூறுகின்றார் ]
(தோர்தண்டத்வயலீலயாசல கிரிப்ராம்யத்ததுச்சை ரவ
த்வோநோத்பீதஜகத்ப்ரமத்பத பராளோலத்பணா க்ர்யோரகம் ) |
(ப்ருங்காபிங்க ஜடாடவீபரிஸரோத் கங்கோர்மிமாலாசலத்)
(சந்த்ரம் சாரு மஹேஶ்வரஸ்ய பவதான் ந: ஶ்ரேயஸே தாண்டவம்) ||2||
2. எம்பெருமான் ஆனந்த தாண்டவத்தின் போது தனது இரு புஜங்களையும் லீலையாக
அசாதாரணமாக சுழற்றும்போது அந்த இரு புஜங்களின் சுழற்றியால் மிகக்
கம்பீரமான அசைக்கமுடியாத பெரிய பெரிய மலைகளும் சுழல ஆரம்பித்துவிட்டன.
அவைகளின் சுழற்சியால் ஏற்பட்ட மிக பயங்கரமான ஒலியால் அனந்தகோடி பிரமாண்டங்களில்
உள்ள அனைத்து ஜீவராசிகளும் பயந்து நடுங்கின. மேலும் கால்களின் அசைவால் ஏற்பட்ட
சுமையைப் பொறுக்கமாட்டாமல் அனைத்து பிரமாண்டங்களையும் தனது தலையில்
தாங்கிநிற்கும் ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளில் முக்கியமான நடுத்தலையும்
நடுக்கத்தால் ஆட்டம் கண்டுவிட்டது . இப்படியாக, பிருங்கி மஹரிஷியைப் போல
கருமையும் மற்றும் மஞ்சள் நிறமும் கலந்த பழுத்த நிறமுடைய அடர்ந்த காடு போன்ற
ஜடையில் புனித கங்கையானவள் நிரந்தரமாக ஆனந்தமாக அசைந்து பெருக்கெடுத்து
ஓடிக்கொண்டிருக்க , அதையே மேலும் அழகூட்ட இளமையான இரண்டாம் பிறைச் சந்திரனைச்
சூடிய எம்பெருமான் தில்லைக்கூத்தன் ஆடும் ஆனந்த தாண்டவமானது உண்மையில்
நம் எல்லோருக்கும் மங்களத்தையே அளிக்கவல்லதே .
(ஸந்த்யா தாண்டவ டம்பரவ்யஸனினோ) ( பர்கஸ்ய ) ( சண்டப்ரமி -
வ்யாந்ருத்யத் புஜதண்ட மண்டல புவோ ) ( ஜஞ்ஜாநிலா: பாந்து வ: ) |
யேஷாமுச்சலதாம் ஜவேன ஜடிதி வ்யூஹேஷு (பூமிப்ருதா -
முட்டீநேஷு விடௌஜஸா புனரஸௌ தம்போலிரா லோகிதா ) ||3||
3. மாலையில் சந்த்யாகாலத்தில் (பிரதோஷ காலத்தில்) புரியும் இந்த ஆனந்த தாண்டவத்தில்
உடுக்கையை நன்கு சுழற்றி அடிக்கும் பொருட்டு தனது இரு புஜங்களையும் நாலாபுறமும்
சுழற்றிக்கொண்டு மிக மிக வேகமாக ஆடியவண்ணம் உயர எழுந்து குதித்த வண்ணம்
தாண்டவம் புரியும் அதிர்வினால் மிக உயர்ந்த மலைகளும் உயர எழுந்து
மீண்டும் பூமியைத் தொட்டபொழுது ஏற்பட்ட பயங்கரமான ஒலியைக் கேட்டு பயந்து போன
தேவேந்திரன் அசுரர்கள்தான் நம்மை நெருங்கி விட்டார்களோ என எண்ணித் தனது
வஜ்ராயுதத்தை மீண்டும் ஒருமுறை பிரயோகம் செய்யும் நோக்குடன் பார்த்தான் .
இப்படியாகத் தனது இருபுஜங்களையும் , கால்களையும் அசைத்து எம்பெருமான் நடராஜன்
ஆனந்த பிரதோஷ தாண்டவம் புரியும் பொழுது எழும் இந்த மங்களமயமான ஒலியானது
உண்மையில் நம்மை எல்லாம் ரக்ஷித்து காத்தருளவல்லதே .
( ஶர்வாணீபாணீதாலைஶ் சலவலய ஜணத் காரிபி: ) ஶ்லாக்யமானம்
ஸ்தானே ஸம்பாவ்யமானம் புலகிதவபுஷா ஶம்புனா ப்ரேக்ஷகேண |
( கேலத்பிச்சாலிகேகா கலகலகலிதம் ) க்ரௌஞ்சிபித் பர்ஹியூனோ
( ஹேரம்பாகாண்டப்ருங்ஹாதரலிதமனஸஸ் ) தாண்டவம் த்வா துனோது ||4||
4. எம்பெருமானின் லீலையால் வீழ்த்தப்பட்டு மீண்டும் அவனின் திருக்கருணையினாலேயே
மாற்றுச்சிரம் பெற்று உயிர்த்தெழுந்த ஆனைமுகனின் மனம் ஆனந்தத்தில் திளைத்தது கண்டு,
வாலிபமான திடமான மயிலை வாஹனமாகக் கொண்டவனும் இளையவனுமான கார்த்திகேயனின்
மனமும் ஆனந்தத்தில் பொங்கியெழ , அவனுடைய வாஹனமான மயில் அற்புதமாக
சப்தமிட்டுக்கொண்டு (அகவுதல்) ஆடத்தொடங்கியது . அச்சமயம் அதுகண்ட பர்வதராஜனின்
மகளான பார்வதி தேவியும் , ஆனைமுகன் , ஆறுமுகன் , மயூரம் உள்பட அனைவரையும்
ஊக்குவிக்கும் பொருட்டு , தனது இருகரங்களில் அணிந்திருந்த வைரவளையல்களை
அசைத்தபடி கைத்தாளமிட , பிரதோஷகாலமும் உச்சத்தைத் தொட , (தினமும் மாலையில்
சூரிய அஸ்தமனத்துக்கு முன்பான 1 மணி 36 நிமிடங்கள் பிரதோஷ காலம். அதில் பாதியே
உச்சம் எனப்படும். அதாவது சூரிய அஸ்தமனம் 6 மணியெனப் பொதுவாகக் கொண்டால்
5 மணி 12 நிமிடமே நடுப்பிரதோஷம்- உச்சம் எனப்படும்) .
அனைவரின் உள்ளிருந்து, அவர்களின் மனங்களுக்கு , ஆடும்படி உத்தரவு பிறப்பித்தது
மட்டுமல்லாமல் , வெளியிலிருந்தும் அவர்களுக்கு ஆதரவாக தனது ஆனந்த பிரதோஷ
தாண்டவத்தைச் சிறப்பாக ஆடினார் . இப்படியாக எம்பெருமான் மற்றவர்களை
மகிழ்விக்கும் பொருட்டு ஆடிய இந்த ஆனந்த தாண்டவம் உண்மையில் நம்மை
எல்லோரையும் மகிழ்வித்து அருளவல்லதே [ நந்தீஸ்வரனின் இந்த வாக்கிலிருந்து
விநாயகனுக்கு ஆனைமுகம் பொருத்தப்பட்ட காலம் பிரதோஷகாலமே
என்றும் தெளிவாகின்றது]
தேவஸ்த்ரைகுண்யபேதாத் ஸ்ருஜதி விதனுதே ஸம்ஹத்யேஷ லோகான் -
அஸ்யைவ வ்யாபினீபிஸ் தனுபிரபி ஜகத் வ்யாப்த மஷ்டா பிரேவ |
வந்த்யோ நாஸ்யேதி பஶ்யன்னிவ சரணகத: பாது புஷ்பாஞ்சலிர்வ:
ஶம்பேர் ந்ருத்யாவதாரே (வலயபணி பணா பூத்க்ருதைர்விப்ரகீர்ண: ) ||5||
5. இந்த உலகின் அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் அனைத்தும் எம்பெருமானின்
அஷ்டமூர்த்தங்களால் மட்டுமே நிறைந்துள்ளது . நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ,
சூரியன் , சந்திரன், ஆத்மா (எஜமான்) என்பதே அந்த அஷ்ட மூர்த்தங்கள் . அவைகளையே
வேதங்கள் மற்றும் புராண இதிகாஸங்கள் பவம், ஶர்வம், ஈஶானம், பஶுபதிம், ருத்ரம்,
உக்ரம், பீமம், மஹாந்தம் எனும் அஷ்ட நாமங்களில் கூறுகின்றன. குணங்களற்று ,
ஆகாரமற்று மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத அவன் லீலையாக முக்குணங்களுக்கும்
ஆதாரமாய் விளங்கி பிரஹ்மா , விஷ்ணு , ருத்திரன் என்ற ரூபங்கள் தாரணம் கொண்டு
முறையே இவ்வுலகின் உற்பத்தி, இருப்பு, அழிவுக்கும் காரணமாய் விளங்குகின்றான்.
ஸ்ரீ இராவணன் போன்ற பரம பக்தர்களுக்காக தினமும் பிரதோஷ தாண்டவம்
ஆடுவதோடு மட்டுமல்லாமல் , பதஞ்சலி மஹரிஷி, வியாக்ரபாதர் மஹரிஷி
போன்றவர்களுக்கும் தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியுள்ளான். சனைச்சரனை மகிழ்விக்கவும்
ஒருமுறை ஆனந்த தாண்டவம் ஆடியுள்ளான். இப்படியாக , அன்று ஆனைமுகனை மகிழ்விக்க
பிரதோஷ காலத்தில் எம்பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் முன்பும் , ஆடும் போதும் , ஆடிய பின்பும்
அனைவரும் தங்களின் இஷ்டதெய்வமான எம்பெருமானுக்குச் செலுத்திய புஷ்பாஞ்சலி
(மலர் தூவி வணங்குதல்) அவனின் கைகளில் வளையல்களாகச் சுற்றி வைக்கப்பட்ட
பாம்புகளின் மூச்சுக்காற்றினால் ஒன்று கூட்டப்பட்டு , அவனின் இரு திருப்பூங்கமலங்களிலேயே
குவிந்தன. அப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய அந்த புஷ்பாஞ்சலிக்கு இணையாகவும்,
மேலாகவும் கூற வேறொன்றும் கிடையாது. அந்த உன்னதமான புஷ்பாஞ்சலி
உண்மையில் நம்மை எல்லாம் ரக்ஷித்து காத்தருள வல்லதே .
|| இதி ஸ்ரீநந்தீஶ்வரக்ருதம் ஸ்ரீ ஶிவதாண்டவஸ்துதிஸ்ஸம்பூர்ணம் ||
(ஸந்த்யா தாண்டவம் = ப்ரதோஷ தாண்டவம்)
ஸ்ரீ நந்தீஸ்வரர் இயற்றிய ஸ்ரீ சிவதாண்டவ ஸ்துதி முற்றுப்பெற்றது .
சுபம்
உரை இளைய இராவணன் என்கின்ற சிவபக்தன் பாலமுருகன்.