logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீ ஶிவ தாண்டவ ஸ்தோத்ரம் தமிழ் உரையுடன் 


(குறிப்பு : ( ) ல் உள்ளது ஒரே சொல் - கூட்டுச்சொல் )

(ஜடாடவீகளஜ்ஜளப்ரவாஹபாவிதஸ்தளே )
    (களே) (வளம்ப்ய ளம்பிதாம் புஜங்கதுங்கமாளிகாம்) |
(டமட்டமட்டமட்டமந்நிநாதவட்டமர்வயம்)
    சகார சண்டதாண்டவம் தநோது ந: ஶிவ:  ஶிவம் ||1||

1. ஜடாடவீ - அடர்ந்த வனத்தைப் போன்ற ஜடாமுடியிலிருந்து , களஜ்ஜல- வெளிவந்து
கொண்டிருக்கும் புனித கங்கையின்,  ப்ரவாஹ - பிரவாஹத்தினால், பாவிதஸ்தலே - புனிதமாக்கப்பட்ட ,
களே - கழுத்தில், அவளம்ப்ய - பற்றிக்கொண்டு , லம்பிதாம்- தொங்கும், புஜங்க- (கொடிய விஷம் நிறைந்த)
பாம்புகளாலான,  துங்க- விஸாலமான, மாளிகாம்- மாலையைத் தரித்தவரும் ,  டமட்  டமட் டமட் டமட் -               
(உடுக்கையின்) டமட் டமட் டமட் டமட்  என்ற , நிநாத - ஒலிக்கு , வட்டமர்வயம்- இணங்க அதிக 
கம்பீரத்துடன்  சுழன்று சுழன்று , சண்ட - அதிக வேகத்துடன் , தாண்டவம்- ஆனந்த தாண்டவம் , 
சகார- புரியும் (புரிந்த) ஶிவ: - எம்பெருமான் ஶிவபெருமான், ந: - நமக்கு , 
ஶிவம்- மங்களமான (ஶ்ரேயஸை) , தநோது- பெருக்கட்டும் . 

(ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமந்நிளிம்பநிர்ஜரீ-
    விளோளவீசிவள்ளரீவிராஜமானமூர்த்தனி ) |
(தகத்தகத்தகஜ்ஜ்வளள் ளளாடபட்டபாவகே ) 
    கிஶோரசந்த்ரஶேகரே ரதி: ப்ரதிக்ஷணம் மம ||2||

2. ஜடாகடாஹ- தலையில் சுருட்டிக் கட்டியுள்ள ஜடாமுடியிலிருந்து , ஸம்ப்ரமப்ரந் - மிகவேகமாக நன்கு        
சுழன்று சுழன்று (வெளிவரும்) , நிளிம்பநிர்ஜரீ - புனித கங்கையின் ( அசைவினால் எழுந்த), 
வீசிவள்ளரீ- கொடிபோன்ற அலைகளால் , விலோல- மிகுந்த அழகுடன் , விராஜமான- காணப்படும் 
(எம்பெருமான்) , ளாளாட - நெற்றி (கண்ணில்) , தகத் தகத்  தகத் - தகத்  தகத்  தகத்  என்ற ஒலியுடன் ,
பட்டஜ்வளல்- சுடர்விட்டுப் பிரகாசமாய் எரியும் , பாவகே - அக்னியையும் , மூர்த்தனி- தலையில்,            
கிஶோர - இளமையான (இரண்டாம் பிறை ) , சந்த்ரஶேகரே - சந்திரனை அணிந்து திகழும் 
எம்பெருமான் சந்திரசேகரனிலேயே , மம- என் மனம் , ப்ரதிக்ஷணம் - நிரந்தரமான , ரதி: - அன்போடு
நிலைத்திருக்கட்டும் (அ) சந்திர சேகரன் என்மீது நிரந்தரமான அன்போடு இருக்கட்டும் . 

( தராதரேந்த்ர நந்தினீ விளாஸ பந்துபந்துர-
    ஸ்புரத்திகந்த ஸந்ததி ப்ரமோதமான மானஸே ) |
(க்ருபாகடாக்ஷதோரணீ நிருத்த துர்தராபதி )
    க்வசித் திகம்பரே மனோ விநோதமேது வஸ்துனி ||3||

3. தராதரேந்த்ர - பர்வத ராஜனின், நந்தினீ - மகளான அன்னை பார்வதி தேவியின் ,
விளாஸபந்துபந்துரஸ்புரத் - விசாலமான காலத்தையும் கணிக்கக்கூடிய ( தலையில் )
சூடப்பட்டுள்ள ஆபரணங்களின்  ஒளியானது , திகந்தஸந்ததி- பத்து திசைகளையும்         
பிரகாசிக்கச் செய்வதைக் கண்டு (எவருடைய), ப்ரமோத மானஸே - மனம் ஆனந்தத்தில்         
திளைக்கின்றதோ , க்ருபாகடாக்ஷதோரணீ - (எவருடைய) நிரந்தரமான கிருபா கடாக்ஷத்தினால் ,
துர்தராபதி- மிகமிகக் கடினமான ஆபத்துக்களும் , நிருத்த - நிவர்த்தியடைகின்றனவோ ,        
க்வசித்- அப்படிப்பட்ட, திகம்பரே - திசைகளையே ஆடையாகக் கொண்டவருமான ,         
வஸ்துனி- தத்துவமான எம்பெருமானிலேயே, மனோ- என் மனமானது, விநோதமேது- 
ஒப்புயர்வற்ற ஆனந்தத்தோடு ஒருமிக்கட்டும் . 

( ஜடாபுஜங்கபிங்களஸ்புரத்பணாமணிப்ரபா-
    கதம்பகுங்கும த்ரவப்ரளிப்த திக்வதூமுகே ) |
(மதாந்தஸிந்துரஸ்புரத் த்வகுத்தரீயமேதுரே )
    மனோ வினோத மத்புதம்  பிபர்து பூதபர்தரி ||4||            

4. ஜடா- (எந்த) ஜடாமுடியிலுள்ள, புஜங்க- மிகக்கொடிய விஷமுடைய நாகங்களின் , 
பணாமணி - நாகரத்தினத்திலிருந்து , கதம்ப- பரந்து விரிந்த , பிங்கள- இளம்சிவப்பான ,
ப்ரபா- ஒளியினால் , திக்- பத்து திசை என்ற ( பத்து திசைகளாகிய) , வதூ - சுமங்கலிகளின் ,
முகே - முகத்தில் , குங்குமத்ரவ - குங்குமச் சாந்து , ப்ரளிப்த - பூசியது போல் ,             
ஸ்புரத்- திகழ்கின்றதோ (அப்படிப்பட்ட ஜடாமுடியை உடையவரும்) , மதாந்தஸிந்து
ரஸ்புரத்- மதம் பிடித்த யானையின் , த்வக்- தோலையே , உத்தரீயமேதுரே - 
மேல்வஸ்திரமாகக் கொண்டவரும் , பூதபர்தரி- பூதகணங்களின்  தலைவருமான         
எம்பெருமானிலேயே , மனோ - என்னுடைய மனமானது , அத்புதம்- அத்புதமான ,
விநோதம் - ஒப்புயர்வற்ற ஆனந்தத்தோடு , பிபர்து- ஒருமிக்கட்டும். 

(ஸஹஸ்ரலோசன ப்ரப்ருத்யஶேஷலேகஶேகர-
    ப்ரஸுன தூளிதோரணீ விதூஸராங்க்ரி பீடபூ : ) |
(புஜங்கராஜமாளயா நிபத்த ஜாடஜூடக: )
    ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரபந்துஶேகர: ||5||

5. ஸஹஸ்ரலோசனப்ரப்ருதி- விஷ்ணு , இந்திரன் முதலான , அஶேஷலேக- அனைத்து தேவர்களும் 
(விழுந்து வணங்குவதால் ) அங்க்ரிபீடபூ:  - (எவருடைய ) பாதகமலங்களின் , 
தூளிதோரணீ - தூளியில் உள்ள , ப்ரஸூன- நறுமணமானது , ஶேகரவிதூஸர- (அந்த தேவர்களின்)
தலையில் கமழுகின்றதோ, புஜங்க ராஜமாலயா - நாகராஜனையே மாலையாகவும் , 
நிபத்தஜாடஜூடக: - ஜடாமுடியைக் கட்டும் கயிறாகவும் கொண்டு விளங்கும் எம்பெருமான் ,     
சகோரபந்துஶேகர: - விண்மீன்களின் உறவினரான சந்திரனைச் சூடிய சந்திரசேகரன்,        
சிராய - (நம்பொருட்டு) நிரந்தரமான , ஶ்ரியை - ஶ்ரேயஸை ஜாயதாம் - உண்டாக்கட்டும், 
அளிக்கட்டும், பெருக்கட்டும் . 

(ளளாடசத்வரஜ்வளத் தனஞ்ஜயஸ்புளிங்கபா-
    நிபீத பஞ்சஸாயகம் ) (நமந்நிளிம்ப நாயகம்) |
(ஸுதாமயூகளேகயா விராஜமான ஶேகரம் )
    மஹாகபாளி ஸம்பதே ஶிரோ ஜடாளமஸ்து ந: ||6||

6. சத்வர- அகன்ற வீதி போன்ற , லலாட - நெற்றியில், ஜ்வளத் - கொழுந்து விட்டு எரியும் ,
தனஞ்ஜய - அக்னியின் , ஸ்புலிங்கபா- சிறுபொறியின் ஒளி- வெப்பத்தினாலேயே ,
பஞ்சஸாயகம்- காமதேவனை , நிபீத- சாம்பலாக்கிய ( எம்பெருமான்) , 
நிளிம்ப நாயகம் - தேவேந்திரனால் ( சதாகாலமும்  ஶ்ரத்தையுடன்), நமந்- வணங்கப்
பெறும் எம்பெருமான், ஸுதாம யூகலேகயா - சந்திரனின் இளம் ஒளிக் கதிர்களினால் ,             
விராஜமானஶேகரம்- அழகுற்று விளங்கும் முகுடமும் , ஶிரோஜடாளம்- தலையில் ஜடாமுடியும்,         
மஹாகபாளி- விசாலமான நெற்றியையுமுடைய எம்பெருமான் சந்திரசேகரன் , 
ந: - நம்பொருட்டு , ஸம்பதே - நிரந்தரமான,  ஶ்ரேயஸை அஸ்து- (அளிக்கட்டும்) வைக்கட்டும் .   

கராளபாளபட்டிகா தகத் தகத் தகஜ் ஜ்வளத்-
    தனஞ்ஜயாஹுதீ க்ருதப்ரசண்ட பஞ்சஸாயகே ) |
(தராதரேந்த்ர நந்தினீ குசாக்ரசித்ர பத்ரக -
    ப்ரகள்ப நைக ஶிள்பினி )  த்ரிலோசனே ரதிர்மம ||7||

7. கராளபாள- அதிஸுந்தரமான நெற்றியில்,  தகத் தகத் தகத் - தகத் தகத் தகத்  என்ற ஒலியுடன் ,
பட்டிகாஜ்வளத்- கொழுந்துவிட்டெரியும் , தனஞ்ஜய- அக்னியில்,  ப்ரசண்ட - கோபத்தினால் ,
பஞ்சஸாயகே - பஞ்ச பாணங்களையுடைய காமதேவனை , ஆஹுதிக்ருத- ஆஹுதியாகப்            
போட்டு எரித்த எம்பெருமான் ,   தராதரேந்த்ர - பர்வதராஜனின் , நந்தினீ - குமாரியான அன்னை
உண்ணாமுலையின் , குசாக்ர - உன்னதமான அதிஸுந்தரமான ஸ்தனத்தை, சித்ரபத்ரக - 
நறுமணம் கமழும் பலவிதமான புஷ்பங்கள் மற்றும் மரிக்கொழுந்து போன்ற இலைகளால்,
ப்ரகல்பன - அலங்கரிக்கத் தகுதியுள்ள , ஏகஶில்பினி - ஒப்பற்ற ஒரே கலைஞனான எம்பெருமான் ,         
த்ரிலோசனே - முக்கண்ணனிலேயே, மம- என்னுடைய மனமானது எப்பொழுதும், 
ரதி: - ஆனந்தமாய் நிலைத்திருக்கட்டும் . 

நவீனமேக மண்டலீ நிருத்த துர்தரஸ்புரத்-
    குஹூனி ஶீதினீதம: ப்ரபந்தபத்தகந்தர: ) |
நிளிம்ப நிர்ஜரீதரஸ் தநோது க்ருத்திஸிந்துர :
    கலாநிதான பந்துர: ஶ்ரியம் ஜகத்துரந்தர: ||8||

8. நவீன- புத்தம் புதிய , மேகமண்டலீ - கருமேகக் கூட்டத்திலிருந்து, நிருத்ததுர்தரஸ்புரத்-              
விழுந்த ஒரு பாகம் போன்று கருமையாகவும் , குஹூனிஶீதினீ - அமாவாசையின் நடுஇரவுக்குச்        
சமமான , தம: - இருளின் கருமை நிறம் போன்றும் , ப்ரபந்தபத்தகந்தர: - கழுத்தில் ஆலகால
விஷம் அழகு செய்கின்ற எம்பெருமான் , க்ருத்திஸிந்துர: - யானையின் தோலையணிந்துள்ள
எம்பெருமான் , ஜகத்துரந்தர: - ஸம்ஸாரத்தின் பாரத்தை அதாவது ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்,
நிக்ரஹம், அனுக்கிரஹம்  என்னும் ஐந்தொழிலை ஒரு விளையாட்டாகச் செய்யக்கூடிய  எம்பெருமான் ,     
கலாநிதான பந்துர: - பதினாறு கலைகளையுடைய , சந்திரனைத் தரித்து , அனைத்து             
ஜீவர்களின் மனதைக் கவர்ந்திழுக்கும் எம்பெருமான் , நிளிம்பநிர்ஜரீதர :  - புனித கங்கையைத்         
தலையில் தாங்கிய  எம்பெருமான்  கங்காதரன் , ஶ்ரியம்- (நம் பொருட்டு) நிரந்தரமான,
ஶ்ரேயஸை தநோது- பெருக்கட்டும் .

(ப்ரபுள்ளநீலபங்கஜ ப்ரபஞ்சகாளிமப்ரபா-
    வளம்பிகண்ட கந்தளீ ருசிப்ரபத்த கந்தரம் ) |
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் 
    கஜச்சிதாந்தகச்சிதம் தமந்தகச்சிதம் பஜே ||9||

9.  அவளம்பி கண்ட - கழுத்துப் பகுதியில் , ப்ரபுள்ளநீல பங்கஜ - அலர்ந்த கருநீலத்தாமரை போன்று        
விளங்கும், ப்ரபஞ்சகாளிமப்ரபா - (ஆலகால விஷத்தின்) கருமையான பரந்த ஒளியில் ,             
கந்தளீருசிப்ரபத்த கந்தரம்- மயங்கி நிற்கும் மான் போன்று இடமேல் கையில் மான்மழுச்        
சின்னத்துடன் மிகுந்த அழகுடன் விளங்கும் எம்பெருமான் , ஸ்மரச்சிதம்- காமதேவனைச்        
சிதைத்தவரும் , புரச்சிதம்- திரிபுரத்தைச் சிதைத்தவரும், பவச்சிதம்- சரணடைந்தவர்களின்         
பிறவிப்பிணியைச் சிதைத்தவரும், மகச்சிதம்- தக்ஷனின் கர்வரூபமான யக்ஞத்தைச் சிதைத்தவரும் ,         
கஜச்சிதம்- மதயானையைச் சிதைத்தவரும், அந்தகச்சிதம் - அந்தகாசுரனைச் சிதைத்தவரும் ,         
தமந்தகச்சிதம்- மார்க்கண்டேயனைக் காக்க ) யமதர்மனைக் காலால் உதைத்துச்             
சிதைத்தவருமான எம்பெருமான் சந்திர சேகரனை, பஜே- நான் மனம், வாக்கு, 
சரீரத்தால் சேவிக்கின்றேன் .

(அகர்வஸர்வமங்களா களாகதம்ப மஞ்ஜரீ -
    ரஸப்ரவாஹமாதுரீ விஜ்ரும்பணா மதுவ்ரதம் ) |
ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் 
    கஜாந்தகாந்தகாந்தகம் தமந்தகாந்தகம் பஜே ||10||

10. அகர்வஸர்வமங்களா - அபிமானமில்லாதவளும், எம்பெருமானின் இசைவுக்கு இசைய
இணைந்து இருப்பவளுமான என் அன்னை பார்வதிதேவியின் , களாகதம்ப மஞ்சரீ - 
கழுத்திலுள்ள கதம்பமாலையின், ரஸப்ரவாஹ மாதுரீ - நறுமணத்தை நுகர்ந்து அதிலுள்ள 
தேனை , விக்ரும்பணாமதுவ்ரதம்- பருகும் வண்டு போல, ரமித்து விளங்கும் எம்பெருமான்,
ஸ்மராந்தம்- காமதேவை அழித்தவரும், புராந்தகம்- திரிபுராசுரனை அழித்தவரும்,
பவாந்தகம்- பிறவிப்பிணியை அழிப்பவரும், மகாந்தகம்- தக்ஷனின் யக்ஞத்தை அழித்தவரும், 
கஜாந்தகம்- மதயானையை அழித்தவரும், அந்தகாந்தகம்- அந்தகாசுரனை அழித்தவரும், 
தமந்தகாந்தகம்- யமதர்மனை அழித்தவருமான எம்பெருமான் சந்திரசேகரனை மனம், வாக்கு,
சரீரத்தால் , பஜே - வணங்குகின்றேன் . 

(ஜயத்வதப்ர விப்ரம ப்ரமத் புஜங்கமஶ்வஸத் -
    விநிர்கமத் க்ரமஸ்புரத் கராள பாள ஹவ்யவாட் ) |
(திமித் திமித் திமித் த்வநந் ம்ருதங்க துங்க மங்கள -
    த்வநிக்ரம ப்ரவர்தித ப்ரசண்டதாண்டவ : ) ஶிவ: ||11||

11. ஆனந்த தாண்டவம் புரியும் போது, கராள பாள - தலையில் ஜடையை அலங்கரிக்க சூடியுள்ள,
புஜங்கம- கொடிய பாம்புகளின் , ஜயத்வதப்ரவிப்ரமத்- வேகமான சுழற்றியால் , ஶ்வஸத்விநிர்கமத் -
அவைகளின் பெருமூச்சினால், ஹவ்யவாட்- நெற்றியிலுள்ள அக்னி பெரும் ஜ்வாலையுடன், 
க்ரமஸ்புரத்- பரந்து விரிந்து திகழும் போது மேலும் மிகப்பொலிவுடன் விளங்கும் எம்பெருமான்,
திமித் திமித் திமித் -   திமித் திமித் திமித் என்ற , துங்க- கம்பீரமான, மங்கள - மங்கள, ம்ருதங்க 
த்வனன்- மிருதங்க ஒலிக்கு, க்ரமப்ரவர்தித- ஏற்றவாறு , ப்ரசண்ட தாண்டவ: - அதிக வேகத்துடன்
ஆனந்த தாண்டவம் புரியும் எம்பெருமான், ஶிவ: மங்கள ஸ்வரூபமான எம்பெருமான் (பூங்கழல்கள்
போற்றி , வெல்க) (த்ருஷத் விசித்ர தள்பயோர் ) (புஜங்கமௌக்திகஸ்ரஜோர் )
    (கரிஷ்டரத்ன லோஷ்டயோ : ) (ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ:) |
(த்ருணார விந்தசக்ஷுஷோ: ) (ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ : )
    ஸமப்ரவ்ருத்திக: கதா ஸதாஶிவம் பஜாம்யஹம் ||12||

12. த்ருஷத்விசித்ர தள்பயோர் - சாதாரணக் கல்லிலும், அழகு நிறைந்த சிலையிலும் ,            
புஜங்கமௌக்திகஸ்ரஜோர் - பாம்பின் மாலையிலும், அழகிய முத்து மாலையிலும்,
கரிஷ்டரத்னலோஷ்டயோ : - உயர் மதிப்புள்ள ரத்தினத்திலும் , மண் கட்டியிலும்,
ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷயோ : - நண்பனிலும், எதிரியிலும் , த்ருணாரவிந்தசக்ஷுஷோ: -             
மிகச்சிறிய கண்களையுடைய கன்னியிலும் , அலர்ந்த தாமரை போன்ற கண்களையுடைய
கன்னியிலும், ப்ரஜாமஹீமஹேந்த்ரயோ:  - சாதாரணக் குடிமகனிலும், பூலோகச் சக்ரவர்த்தியிலும்,        
ஸமப்ரவ்ருத்திக: - சமமான பாவனை வைத்தவண்ணம் , அஹம் கதா- நான் எப்பொழுது,
சதாசிவம்- என் ஆத்மநாதன் ஸதாசிவனை ஸாம்பசதாசிவனை, பஜாமி- சேவிப்பேனோ?

கதா (நிளிம்ப நிர்ஜரீ நிகுஞ்ஜகோடரே ) வஸன்
    விமுக்ததுர்மதி : ஸதா ஶிர: ஸ்தமஞ்ஜளிம் வஹன் |
விலோல லோல லோசனோ லலாமபாளலக்னக :
    ஶிவேதி மந்த்ரமுச்சரன் கதா ஸுகீ பவாம்யஹம் ||13||

13. நிளிம்ப நிர்ஜரீ- நினைத்த மாத்திரத்திலேயே  புனிதமடையச் செய்யும் புனிதத்திலும்        
மிகப்புனிதமான கங்கையின், நிகுஞ்ஜகோடரே - கரையில் ஒரு குகையில்,                 
வஸந்- அமர்ந்தவாறு (வசித்தவாறு) , ஶிர: ஸ்தமஞ்ஜலிம் வஹன் - இரு கைகளையும்
சிரம் மேல் கூப்பிக்கொண்டு , விமுக்த துர்மதி: - மனதில் கெட்ட எண்ணங்கள் இல்லாமலும்
தேவையில்லாத சிந்தனைகளைத் தவிர்த்தும், விளோலலோலலோசனோ- நீர் நிறைந்த            
கண்களுடன் , ளளாமபாளலக்னக:  - பரந்து விரிந்த அழகான நெற்றியும், தலையில்
இளமையான சந்திரனையும் தரித்த எம்பெருமான் சதாசிவனிலேயே ஸதா எப்பொழுதும்
மனம் லயித்தவாறு , ஶிவேதி- சிவ சிவ என்ற , மந்த்ரமுச்சரன்- மந்திரத்தை மனதாலும்,
எல்லா இந்திரியங்களாலும்  கூறிக்கொண்டு , ஸுகீ- அந்த உண்மையான சுகத்தை             
அடைந்து ஏகமாய் பரமானந்தமாய், அஹம்- நான், கதா - எப்பொழுது, 
பவாமி- அடைந்து திகழ்வேனோ?

மம் ஹி நித்யமேவமுக்த முத்தமோத்தமம் ஸ்தவம் 
    படந் ஸ்மரந் ப்ருவந் நரோ விஶுத்திமேதி ஸந்ததம் |
ஹரே குரௌ ஸுபக்திமாஶு யாதி நான்யதா கதிம் 
    விமோஹனம் ஹி தேஹினாம் ஸுஶங்கரஸ்ய சிந்தனம் ||14||

14. நர:   - எந்த மனிதன் , ஏவமுக்தம்- இப்படிக்கூறப்பட்ட , இமம்- இந்த,  உத்தமோத்தம்- 
உத்தமத்திலும் உத்தமமான, ஸ்தவம்- ஸ்தோத்திரத்தை, நித்யம்- நித்தியமும், 
படந், ஸ்மரன், ப்ருவந்- படிக்கின்றானோ , நினைக்கின்றானோ , மற்றவர்களுக்குக்             
கூறுகின்றானோ அவன், ஸந்ததம்- எப்பொழுதும், விஶுத்திமேதி- சுத்தமானவனாய் ,
மனம் , வாக்கு, செயல் தூய்மையுடையவனாய்த் திகழ்கின்றான்.  மேலும் ஹரே குரௌ-             
சாக்ஷாத் பகவானை, தன் குருவிலும், குருவை பகவானாகவும் , அவனையே தனது 
ஹ்ருதய நாயகனாகவும்  (பேதம் ஒழித்து), ஸுபக்திம்- உயர்நிலையான அபேத பாவனை
என்னும் பராபக்தியை, ஆஶு- விரைவில், யாதி- அடைகின்றான், அன்யதா கதிம்- 
அதற்கு வேறு நிலையான பேதபாவம் என்னும் அஞ்ஞான ஜீவ நிலையை , ந (யாதி)-
ஒருக்காலும் அடைவதில்லை. ஏனெனில் ஸுஶங்கரஸ்ய - மங்கள ஸ்வரூபமான 
எம்பெருமானின், சிந்தனம்- நினைவு, தேஹினாம்- ஜீவர்களின், விமோஹனம்- 
மோஹத்தையும், பாபத்தையும் சுட்டுப் பொசுக்கி நாசம் செய்யக் கூடியது.                 

ஜாவஸானஸமயே தஶவக்த்ர கீதம்
    ய: ஶம்பு பூஜன பரம் படதி ப்ரதோஷே |
தஸ்ய ஸ்திராம் ரதகஜேந்த்ர துரங்க யுக்தாம் 
    ளக்ஷ்மீம் ஸதைவ ஸுமுகீம் ப்ரததாதி ஶம்பு: ||15||

15. ப்ரதோஷே- தினமும் பிரதோஷ காலத்தில், பூஜாவஸான சமயே - எம்பெருமான் 
மங்கள ஸ்வரூபனின் பூஜைக்குப் பிறகு , தஶவக்த்ர கீதம்- பரமசிவ பக்தன் பத்து                
தலைகள் கொண்ட  ஸ்ரீ இராவணேஸ்வரனால் இயற்றி இசைத்துப் பாடப்பட்ட,
ஶம்புபூஜனபரம்- எம்பெருமானின் பூஜை சம்பந்தப்பட்ட இந்த உத்தமமான  ஸ்தோத்திரத்தை,
ய: படதி - எவர் படிக்கின்றாரோ , தஸ்ய - அவருக்கு, ரத- ரதமாகக் கூறப்பட்ட சரீரத்தின்             
ஆரோக்யத்தையும், துரங்க- குதிரையாகக் கூறப்பட்ட  இந்திரியங்களை உள்நோக்கச் செய்தும்,         
கஜேந்த்ர - யானைகளின் தலைவன் ( சிங்கம்) ஆகக் கூறப்பட்ட புத்தியை சூக்ஷ்மமாகச் செய்தும் ,         
யுக்தாம் - இவைகள் எல்லாவற்றுடன், ஸ்திராம்- நிலையான, நித்தியமான , லக்ஷ்மீம்- 
ஆன்ம ஞானத்தையும், ஸதைவ ஸுமுகீம் - எப்பொழுதும் புன்னகை பூத்தவளாய் (சுமங்கலியாய்),
ஶம்பு: - எம்பெருமான்  மங்கள ஸ்வரூபமானவன் , ப்ரததாதி- விசேஷமாய் அளித்துத்             
திகழச்செய்கின்றார் . 


||இதி ஸ்ரீராவணக்ருதம் ஶிவதாண்டவ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

இப்படியாக பரம பக்தன் ஸ்ரீ இராவணேஸ்வரன் இயற்றிய 
ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம் முடிவு பெற்றது. 

சுபம். 

உரை - இளைய இராவணன் என்ற சிவபக்தன் பாலமுருகன் 

Related Content