ஸ்காந்த புராணம் ஹாலாஸ்ய மாஹாத்மியத்தில் அடங்கிய
1. ஸுவர்ண பத்மினீ தடாந்த திவ்யஹர்ம்ய வாஸிநே
ஸுபர்ண வாஹன ப்ரியாய ஸூர்யகோடி தேஜஸே |
அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ர தாரிணே
ஸதாநம: சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
பொற்றாமரைக் குளக்கரையில் அமைந்த அழகிய கோவிலில் வீற்றிருப்பவரும், கருட வாஹனரான ஹரிக்குப் பிரியமானவரும், கோடி சூர்யப் பிரகாசம் பெற்று விளங்குபவரும், இலையைக் கூட சாப்பிடாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் கூடி விளங்குபவரும், ஸர்ப ராஜனைச் சிரோச்சத்ரமாகக் கொண்டவரும், என்றைக்கும் மங்கள மூர்த்தியும், மாண்டூக்யோபநிஷத் ப்ரதிபாத்ய சாந்தம் சிவம் அத்வைதம் என்ற சம்பு மூர்த்திக்கு எப்பொழுதும் வணக்கம் .
2. ஸுதுங்க பங்க ஜஹ்னுஜா ஸுதாம்சு கண்ட மௌளயே
பதங்க பங்க ஜாஸுஹ்ருத் க்ருபீடயோனி சக்ஷுஷே |
புஜங்கராஜ குண்டலாய புண்யசாலி பந்தவே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
பெரிய அலைகள் மோதும் கங்கா ப்ரவாஹம் சந்திரகலை ஆகிய இரண்டையும் தலையில் கொண்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களையுடையவரும், சிறந்த பாம்பினை, காதில் குண்டலமாக அணிந்தவரும், புண்ணியவான்களைக் காப்பவரும், என்றைக்கும் மங்கள மூர்த்தியும், சம்புவுமான சிவபெருமானுக்கு எப்பொழுதும் வணக்கம் .
3. சதுர்முகானனாரவிந்த வேதகீத பூதயே
சதுர்புஜானுஜா சரீர சோபமான மூர்த்தயே |
சதுர்விதார்த்த தான சௌண்ட தாண்டவ ஸ்வரூபிணே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
பிரம்ம தேவரால் தமது தாமரை போன்ற நான்கு முகங்களால், நான்கு மறைகளாலும் விளக்கப்படும் பெருமை வாய்ந்தவரும், நான்கு கரங்களையுடைய திருமாலின் தங்கையான மீனாக்ஷி தேவி இடது பாகத்தில் விளங்குவதால் சோபையுடன் ப்ரகாசிப்பவரும், நான்கு விதமான புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல தாண்டவக் கோலத்தை உடையவரும் என்றும் மங்கள மூர்த்தியும், சம்புவுமான சிவபெருமானுக்கு எப்பொழுதும் வணக்கம்.
4. சரந்நிசாகர ப்ரகாச மந்தஹாஸமஞ்ஜுலா
தரப்ரவால பாஸமான வக்த்ரமண்டல ச்ரியே |
கரஸ்புரத் கபால முக்த விஷ்ணு ரக்தபாயினே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
சரத்காலத்துச் சந்திரன் போல் வெளுப்பான புன்சிரிப்பால் அழகுடையவையும் , பவளம்போல் சிவந்த உதடுகளால் ப்ரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் காந்தியைப்
பூண்டவரும் கையில் கொண்ட கபாலத்தினால் விஷ்ணுவின் இரத்தத்தை, பிக்ஷையாக ஏற்றவரும் (பைரவக் கோலத்தில்) , என்றும் மங்கள மூர்த்தியும், சம்புவுமான சிவபெருமானுக்கு
எப்பொழுதும் வணக்கம் .
5. ஸஹஸ்ர புண்டரீக பூஜனைக சூன்ய தர்சனா
ஸஹஸ்வநேத்ர கல்பிதார்சனாச்யுதாய பக்தித: |
ஸஹஸ்ர பானுமண்டல ப்ரகாச சக்ரதாயினே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
ஸ்ரீமந் நாராயணன் தனது உபாஸ்ய தெய்வமான ஸதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்யும்போது, கடைசியில் ஒரு தாமரை மலர்
மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து, தாமரை மலராக அர்ச்சனை செய்த அந்த பக்த சிரோமணிக்கு ஆயிரம் ஸுர்ய ப்ரகாசம் வாய்ந்த ஸுதர்சனம் என்ற சக்கராயுதத்தைக்
கொடுத்தருளிய என்றும் மங்கள மூர்த்தியும் சம்புவுமான சிவபெருமானுக்கு எப்பொழுதும் வணக்கம் .
6. ரஸா ரதாய ரம்ய பத்ர ப்ருத்ரதாங்க பாணயே
ரஸாதரேந்த்ரசாப சிஞ்ஜிநீக்ருதா நிலாசினே |
ஸ்வஸாரதீ க்ருதாஜநுந்ந வேதரூப வாஜினே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
திரிபுர ஸம்ஹார காலத்தில் பூமியை ரதமாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேருவை வில்லாகவும்,வாசுகியை நாணாகவும், பிரம்ம தேவனை ஸாரதியாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும் கொண்ட ஸதாசிவனும் சம்பு மூர்த்தியுமான சிவபெருமானுக்கு எப்பொழுதும் வணக்கம்.
7. அதிப்ர கல்ப வீரபத்ர ஸிம்ஹநாத கர்ஜித
ச்ருதிப்ரபீத தக்ஷயாக போகி நாகஸத்மநாம் |
கதிப்ரதாய கர்ஜிதாகில ப்ரபஞ்ச ஸாக்ஷிணே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
த்வேஷத்தால் சிவநிந்தை செய்து நடத்தப்பட்ட தக்ஷனுடைய யாகத்தில் துஷ்ட நிக்ரஹத்தை முன்னிட்டு வீரபத்ர கடவுளை ஆவிர்பவிக்கச் செய்து அவரது கர்ஜனையைக் கேட்டு
பயந்து ஓடிய ஹவிர்பாகம் பெற வந்த தேவர்களுக்கு நற்கதி அளித்த நிஸ்ஸங்கரான ஸர்வலோக சாக்ஷியுமான ஸதாசிவனும் சம்பு மூர்த்தியுமான சிவபெருமானுக்கு வணக்கம் .
8. ம்ருகண்டு ஸூனு ரக்ஷணாவதூத தண்டபாணயே
ஸுகண்ட மண்டல ஸ்புரத் ப்ரபாஜி தாம்ருதாம்சவே |
அகண்ட போக ஸம்பதார்த்த லோக பாவிதாத்மனே
ஸதாநம:சிவாய தே ஸதாசிவாய சம்பவே ||
மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேய முனிவர் மேல் வந்த யமதர்மராஜனை நீக்கி ஆயுள் கொடுத்தவரும் கன்னத்தின் காந்தியால் சந்திரனை வென்றவரும் சாஸ்வத ஸுகமான மோக்ஷத்தை விரும்பும் பெரியோர்களால் தியானிக்கப்படுபவருமான ஸதாசிவனும் சம்புவுமான சிவபெருமானுக்கு வணக்கம் .
9. மதுரிபு விதி சக்ர முக்ய தேவைரபி
நியமார்சித பாத பங்கஜாய |
கனககிரி சராஸனாய துப்யம் ரஜத
ஸபாபதேய நம:சிவாய ||
விஷ்ணு பிரம்மன் இந்திரன் முதலிய விண்ணவர்களால் பாதாரவிந்தங்களில் இடைவிடாது அர்ச்சிக்கப் படுபவரும், தங்க மலையை வில்லாகக் கொண்டவரும் வெள்ளியம்பலத்தில்
கூத்தாடுபவருமான சிவபெருமானுக்கு வணக்கம் .
10. ஹாலாஸ்ய நாதாய மஹேச்வராய
ஹாலாஹலாலங்க்ருத கந்தராய |
மீனேக்ஷணாயா: பதயே சிவாய
நமோ நம: ஸுந்தர தாண்டவாய ||
மதுராபதிக்கு அரசரும் மஹேச்வரனும் ஹாலாஹலம் என்னும் விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தையுடையவரும் மீனாக்ஷீ ஸமேதராய் விளங்குபவரும் ஸுந்தர தாண்டவம் ஆடுபவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.
சிவம்.