logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கந்தபுராணம் - கத்திய ரூபம் (உரைநடை) ஆறுமுக நாவலர்

கணபதி  துணை.

திருச்சிற்றம்பலம்.

    ( யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்களாலும், 
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தரும பரிபாலகர் பொன்னம்பல பிள்ளையாலும் 
        கத்திய ரூபமாகச் செய்யப்பட்டது)


            
            விநாயகர் காப்பு.

1.    திகட சக்கரச் செம்முக மைந்துளான் 
    சகட சக்கரத் தாமரை நாயக 
    னகட சக்கர  வின்மணி யாவுறை
    விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். 

2.    உச்சியின் மகுடமின்ன வொளிர்தர நுதலினோடை
    வச்சிர மருப்பினொற்றை மணிகொள் கிம்புரிவயங்க. 
    மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமாமுகங் கொண்டுற்ற
    கச்சியின் விகடசக்ர கணபதிக் கன்புசெய்வாம்.

            சுப்பிரமணியர் காப்பு.

3.     மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணைபோற்றி 
    யேவருந் துதிக்கநின்ற விராறுதோள் போற்றி காஞ்சி 
    மாவடி வைகுஞ்செவ்வேண் மலரடிபோற்றியன்னான் 
    சேவலுமயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

            நூற்பயன்.

4.     இந்திர ராகிப்பார்மே லின்பமுற் றினிதுமேவிச்
    சிந்தையி னினைந்தமுற்றிச் சிவகதியதனிற் சேர்வ 
    ரந்தமிலவுணர் தங்களடல்கெட முனிந்த செவ்வேற் 
    கந்தவேள் புராணந்தன்னைக் காதலித் தோதுவோரே.

            வாழ்த்து.

5.      வான்முகில்வழாதுபெய்க மலிவளஞ்சுரக்க
    மன்னன் கோன்முறையரசுசெய்க குறைவிலாதுயிர்கள்வாழ்க 
    நான் மறையறங்களோங்க நற்றவம் வேள்விமல்க 
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்.

            திருச்சிற்றம்பலம்.

            கடவுள் வாழ்த்து.

            சிவபெருமான்.

1.    திருவந்ததொல்லைப்புவனத்தொடுதேவர்போற்றிப் 
    பெருவந்தனை செய்தறிதற்கரும்பெற்றியெய்தி 
    யருவந்தனையுமுருவத்தையுமன்றிநின்றா 
    னொருவன்றனதுபதந்தன்னையுளத்துள்வைப்பாம்.

2.    ஊனாகியூனுளுயிராயுயிர்தோறுமாகி 
    வானாதியானபொருளாய்மதியாகிவெய்யோன் 
    றானாகியாண்பெண்ணுருவாகிச்சராசரங்க 
    ளானான்சிவன் மற்றவனீள்கழற்கன்புசெய்வாம். 

            வேறு.

3.    பிறப்பதுமிறப்பதும் பெயருஞ்செய்கையு 
    மறப்பதுநினைப்பதும் வடிவம்யாவையுந் 
    துறப்பதுமின்மையும் பிறவுஞ்சூழ்கலாச் 
    சிறப்புடையரனடிசென்னிசேர்த்துவாம்.

4.     பூமலர்மிசைவருபுனிதனாதியோர் 
    தாமுணர்வரியதோர் தலைமையெய்தியே 
    மாமறைமுதற்கொருவடிவமாகியோன்
    காமருசெய்யபூங்கழல்கள் போற்றுவாம்.

5.     பங்கயன்முகுந்தனாம்பரமென்றுன்னியே 
    தங்களிலிருவருஞ்சமர்செய்துற்றுழி 
    யங்கவர்வெருவரவங்கியாயெழு 
    புங்கவன்மலரடிபோற்றிசெய்குவாம்.

6.     காண்பவன் முதலியதிறமுங்காட்டுவான்
    மாண்புடையோனுமாய்வலி கொள்வான்றொடர் 
    பூண்பதின்றாய்நயம்புணர்க்கும்புங்கவன் 
    சேண்பொலிதிருநடச்செயலையேத்துவாம்.

            சிவசத்தி.

7.     செறிதருமுயிர்தொறுந்திகழ்ந்து மன்னிய 
    மறுவறுமரனிடமரபின் மேவியே
    யறுவகைநெறிகளும் பிறவுமாக்கிய 
    விறைவிதன்மலரடியிறைஞ்சியேத்துவாம்.

        விநாயகக்கடவுள்.

8.     மண்ணுலகத்தினிற்பிறவிமாசற 
    வெண்ணியபொருளெலாமெளிதின்முற்றுறக்
    கண்ணுதலுடையதோர்களிற்றுமாமுகப் 
    பண்ணவன்மலரடிபணிந்துபோற்றுவாம்.

        வைரவக்கடவுள்.

9.    பரமனைமதித்திடாப்பங்கயாசன 
    னொருதலைகிள்ளியேயொழிந்தவானவர் 
    குருதியுமகந்தையுங்கொண்டு தண்டமுன் 
    புரிதருவடுகனைப்போற்றிசெய்குவாம்.

10.     வெஞ்சினப்பரியழன் மீது போர்த்திடு 
    மஞ்சனப்புகையெனவாலமாமெனச் 
    செஞ்சுடர்ப்படிவமேற்செறித்தமாமணிக் 
    கஞ்சுகக்கடவுள்பொற்கழல்களேத்துவாம்.

        வீரபத்திரக்கடவுள்.

11.     அடைந்தவியுண்டிடுமமரர்யாவரு 
    முடிந்திடவெருவியேமுனிவர்வேதிய 
    ருடைந்திடமாமகமொடியத்தக்கனைத் 
    தடிந்திடுசேவகன்சரணம்போற்றுவாம்.

        சுப்பிரமணியக்கடவுள்.

12.     இருப்பரங்குறைத்திடுமெஃகவேலுடைப் 
    பொருப்பரங்குணர்வுறப்புதல்விதன்மிசை 
    விருப்பரங்கமரிடைவிளங்கக்காட்டிய 
    திருப்பரங்குன்றமர்சேயைப்போற்றுவாம்.

13.     சூரலைவாயிடைத்தொலைத்துமார்புகீண் 
    டீரலைவாயிடுமெஃகமேந்தியே
    வேரலைவாய்தருவெள்ளிவெற்பொரீஇச் 
    சீரலைவாய்வருசேயைப்போற்றுவாம்.

14.    காவினன்குடிலுறுகாமர்பொன்னகர் 
    மேவினன் குடிவரவிளியச்சூர்முதல் 
    பூவினன் குடிலையம்பொருட்குமாலுற 
    வாவினன் குடிவருமமலற்போற்றுவாம்.

15.    நீரகத்தேதனைநினையுமன் பினோர் 
    பேரகத்தலமரும்பிறவிநீத்திடுந் 
    தாரகத்துருவமாந்தலைமையெய்திய 
    வேரகத்தறுமுகனடிகளேத்துவாம்.

16.    ஒன்றுதொறாடலையொருவியாவிமெய் 
    துன்றுதொறாடலைத்தொடங்கியைவகை 
    மன்றுதொறாடியவள்ளல்காமுறக் 
    குன்று தொறாடிய குமரற்போற்றுவாம்.

17.    எழமுதிரைப்புனத்திறைவிமுன்புதன் 
    கிழமுதிரிளநலங்கிடைப்பமுன்னவன் 
    மழமுதிர்களிறெனவருதல்வேண்டிய 
    பழமுதிர்சோலையம்பகவற்போற்றுவாம்.

18.     ஈறுசேர்பொழுதினுமிறுதியின்றியே 
    மாறிலாதிருந்திடும் வளங்கொள்காஞ்சியிற் 
    கூறுசீர்புனைதருகுமரகோட்டம்வா
    ழாறுமாமுகப்பிரானடிகள்போற்றுவாம். 

        திருநந்திதேவர்.

19.    ஐயிருபுராண நூலமலற்கோதியுஞ் 
    செய்யபன்மறைகளுந்தெரிந்துமாயையான் 
    மெய்யறுசூள்புகல்வியாதனீட்டிய 
    கையடுநந்திதன்கழல்கள்போற்றுவாம்.

        திருஞானசம்பந்தமூர்த்திநாயனார். 

20.     பண்டைவல்வினையினாற்பாயுடுத்துழல் 
    குண்டரைவென்றுமுன்கூடல்வைகியே 
    வெண்டிருநீற்றொளிவிளங்கச்செய்திடுந்
    தண்டமிழ்விரகன்மெய்த்தாள்கள்போற்றுவாம்.

        திருநாவுக்கரசுநாயனார்.

21.     பொய்யுரை நூல்சிலபுகலுந்தீயமண் 
    கையர்கள்பிணித்துமுன் கடலகத்திடு 
    வெய்யகற்றோணியாய்மிதப்பமேற்படுந்
    துய்யசொல்லரசர்தாடொழுதுபோற்றுவாம்.

        சுந்தரமூர்த்திநாயனார். 

22.     வறந்திடுபொய்கைமுன்னிரம்பமற்றவ
    ணுறைந்திடுமுதலைவந்துதிப்பவன்னதா 
    லிறந்திடுமகன்வளர்ந்தெய்தப்பாடலொன்
    றறைந்திடுசுந்தரனடிகள்போற்றுவாம். 

        மாணிக்கவாசக சுவாமிகள்.

23.     கந்தமொடுயிர்படுங்கணபங்கம்மெனச்
    சிந்தைகொள்சாக்கியர் தியங்கமூகராய் 
    முந்தொருமூகையைமொழிவித்தெந்தைபால் 
    வந்திடுமடிகளை வணக்கஞ்செய்குவாம்.

        திருத்தொண்டர்கள்.

24.     அண்டருநான்முகத்தயனும்யாவருங் 
    கண்டிடவரியதோர்காட்சிக்கண்ணவா 
    யெண்டகுசிவனடியெய்திவாழ்திருத் 
    தொண்டர்தம்பதமலர்தொழுதுபோற்றுவாம்.

            சரசுவதி.

25.    தாவறுமுலகெலாந்தந்தநான்முகத் 
    தேவு தன்றுணைவியாய்ச்செறிந்தபல்லுயிர்
    நாவுதொறிருந்திடுநலங்கொள் வாணிதன் 
    பூவடிமுடிமிசைப்புனைந்துபோற்றுவாம்.

        திருச்சிற்றம்பலம்.

        புராணவரலாறு.

    வடக்கின்கண்ணே திருவேங்கடமும் தெற்கின்கண்ணே குமரியும் கிழக்கின்கண்ணும் 
மேற்கின்கண்ணும் கடலும் எல்லையாகவுடைய தமிழ் நாட்டிலே, சான்றோருடைத்தெனச் சிறந்து 
விளங்காநின்ற தொண்டை மண்டலத்தின்கண்ணே காஞ்சீபுரமென ஒரு திருநகரமுண்டு. அயோத்தி, 
மதுரை, மாயை,காசி,காஞ்சி, அவந்தி, துவாரகை என்னுஞ் சத்தபுரிகளுள்ளும் காஞ்சீபுரமே சிறந்தது. 
அது காஞ்சி, திரிபுவனசாரம், காமபீ டம், தபோமயம், திரிமூர்த்திவாசம்,துண்டீரபுரம், இலயசித்து, பிரமபுரம், 
விண்டுபுரம், சிவபுரம், சகலசித்திகரம், கன்னிகாப்பு என்னும் பன்னிரண்டு * திருப்பெயர்களையுடையது.

    அத்திருக்காஞ்சி நகரத்திலே சிவபெருமான் முதலியோர்க்கு அறுபத்தாறாயிரம் * ஆலயங்களுண்டு. 
அவற்றுள் நூற்றெட்டுச் சிறந்தன. அவற்றுள்ளும் சிவபெருமானுக்கு இருபது சிறந்தன. திருமாலுக்கு எட்டுச் சிறந்தன. 
சிவபெருமானுக்குரிய ஆலயங்கள் இருபதாவன திருவேகம்பம், கச்சபாலயம், திருக்காயாரோகணம், திருமேற்றளி, 
இந்திராலயம், பணாதரேசம், மணீசம்,சதுர்முகசங்கரம், சுரகரேசம், பரசுராமேசம், உருத்திரர்கா, மாகாகாளேசம், 
வராகேசம், திருவோத்தூர், திருமாற்பேறு, அநேகபேசம், வேதநூபுரம், திருமயானம், கடம்பை, வீராட்டகாசம் 
என்பனவாம். திருமாலுக்குரிய ஆலயங்க ளெட்டாவன அத்திகிரி, வெஃகா, சந்திர கண்டம், நிராகாரம், அட்டபுயம்,
சகாளாங்கம், ஊரகம், பாடகம் என்பனவாம். அவ்விருபத்தெட்டினுள்ளும் திருவேகம்பம், கச்சபாலயம், 
திருக்காயாரோகணம் என்னுமூன்றுஞ் சிறந்தன. அவற்றினுள்ளும் திருவேகம்பஞ் சிறந்தது.

* இந்த இரண்டெண்களும் காஞ்சிப்புராணத்திற் கண்டபடி காட்டப்பட்டன.

    திருவேகம்பம் கம்பாநதியின் கரையருகே வேதவடிவாகிய மாவடியினுள்ளது. படைத்தல், காத்தல், 
அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் உயிர்கள்பொருட்டுச் செய்தருளும் அநாதிமுத்த 
பதியாகிய சிவபெருமான், தமது வாசகமாகிய வேதத்துக்கும் அதன்வாச்சிய மாகிய தமக்கும் வேறுபாடில்லை
யென்பதை யாவரும் உணர்ந்துய்யும் வண்ணம், வேதவடிவாகிய அம் மாவினது மூலத்தின்கண்ணே, எந்நாளும்
திருவேகம்ப நாதரென்னும் திருப்பெயரோடு, சிவலிங்க மூர்த்தியாய் எழுந்தருளியிருப்பர்.

    திருவேகம்பநாதருடைய அருட்சத்தியும் உலகமாதாவுமாகிய உமாதேவியார், உலகாணித் தீர்த்தக் 
கரையினருகே சிற்பர வியோமமாகிய பிலத்தின்கண்ணே, காமாக்ஷியென்னுந் திருப்பெயரோடு 
தவஞ்செய்துகொண்டிருக்கும் ஆலயம் காமக்கோட்டமெனப் பெயர்பெறும். அதற்கோர் பக்கத்திலே 
குமரகோட்டமெனப் பெயர்கொண்ட ஓராலயமுண்டு. அதிலே சிவபெருமானுடைய இளைய திருக்குமாரராகிய 
சுப்பிரமணியக்கடவுள், தம்மை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய வேண்டியவாறே போக மோக்ஷங்களைக் 
கொடுத்துக்கொண்டு, எழுந்தருளியிருப்பர்.

    இத்துணைச் சிறப்பினதாகிய திருக்காஞ்சி நகரத்தினுள்ள கச்சபாலயமென்னுஞ் சிவாலயத்தின்கண்ணே, 
பிரமதேவர் சிவபெருமானைப் பூசை செய்துகொண்டு, தமது பத்தினியாகிய சரசுவதியோடும் அங்கிருந்தார்.. 
இருக்குநாளிலே, சௌனகர் முதலிய முனிவர்களெல்லாரும் திருக்காஞ்சி நகரத்தை அடைந்து, பிரமதேவர் 
திருமுன் சென்று, அவரை வணங்கித் துதித்து, படைத்தற்றொழிற் கிறைவராகிய சுவாமீ, அடியேங்கள் இதுகாறும் 
கிருகத்தர்களாய் இல்லறத்தைச் செய்துகொண்டு இப்பூமியினுள்ள நகரங்களெங்குமிருந்தேம், இனி 
வானப்பிரத்தர்களாய்த் தவஞ்செய்ய விரும்புகின்றோம், அவ்வாறு தவஞ்செய்யும் பொருட்டு ஒருதபோவனம் 
பணித்தருளும் என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 

    அதுகேட்ட பிரமதேவர் ஒரு  தருப்பையை எடுத்துச் சக்கரமாக்கி நிலத்திலேயுருட்டி, இருடிகளை 
நோக்கி, முனிவர்களே, நீங்களெல்லீரும் இச்சக்கரத்தின் பின்னே செல்லுங்கள், இச்சக்கரந் தங்கும் வனமே 
உங்களுக்குத் தபோவனமாகச் கொள்ளுங்கள் என்றார். உடனே முனிவர்கள் பிரமதேவரை வணங்கி,
விடைபெற்றுக்கொண்டு, சென்றார்கள். சக்கரம் விரைந்து சென்று ஒரு வனத்திலே தங்கிற்று. அதனால் 
அவ்வனம் நைமிசமெனப் பெயர் பெற்றது. முனிவர்களெல்லாரும் அவ்வனத்தின்கண்ணே தவஞ்செய்து 
கொண்டிருந்தார்கள். சிலகாலமாயினபின், வேதவிதிப்படி சகச்சிரசமமென்னும் யாகஞ்செய்து, 
சித்த சுத்தியடைந்து, மெய்யுணர்வுடையராயினார்கள்.

    இவ்வாறிருக்கும்பொழுது, உண்மையறிவானந்த வடிவாகிய சிவபெருமானுடைய திருவடிக் 
கமலங்கண்மலரும் நெஞ்சத்தடத்தையுடையவரும், வியாசமுனிவருடைய மாணாக்கரும், விபூதி 
ருத்திராக்ஷமென்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி தரித்தவருமாகிய சூதமுனிவர் அங்கே சென்றார். 
அதுகண்ட முனிவர்கள் யாவரும் மிக்கவுவகையோடு விரைந்தெதிர் கொண்டு வணங்கி, தங்களாச்சிரமத்துக்கு 
அழைத்துக்கொண்டு சென்று,  ஓருயர்ந்த ஆசனத்தின் மீதிருத்தி, அவருடைய திருவடிகளை நறுமலர் 
கொண்டு விதிப்படி பூசித்து, நிலத்திலே எட்டுறுப்புந்தோய மும்முறை வணங்கியெழுந்து, அஞ்சலிசெய்து 
கொண்டு நின்றார்கள். சூதமுனிவர் நீவிரிருங்களென்று பணித்தருளியபின், இருந்தார்கள். 

    இருந்து கொண்டு  கருணாநிதியாகிய சுவாமீ, சிவபெருமானுடைய இளைய திருக்குமாரரும் கிருபா 
சமுத்திரமுமாகிய சுப்பிரமணியக்கடவுளுடைய சரித்திரத்தை அறிதல்வேண்டுமென்னும் பேராசை 
யுடையேமாயினேம், அதனை அடியேங்களுக்கு அருளிச்செய்யும் என்று விண்ணப்பஞ்செய்தார்கள். 
அது கேட்ட சூதமுனிவர் அழலிடைப்பட்ட மெழுகு போல மனங் கசிந்துருக, மெய்ம்மயிர் பொடிப்ப, 
ஆனந்தவருவி சொரிய, சுப்பிரமணியக் கடவுளையும் தமதாசாரியராகிய வியாசமுனிவரையுஞ் 
சிந்தித்துத் துதித்துக்கொண்டு, இவ்வாறு சொல்வாராயினார்:

    ஆதி கற்பத்திலே துவாபர யுகத்திலே, ஆன்மாக்கள் செய்த தீவினையினாலே வேதங்களெல்லாம் 
அடி தலை தடுமாறின. அதனாலே தேவர்களும் முனிவர்களும் மனிதர்களும் மதிமயங்கி, மெய்யுணர்வு 
சிறிதுமில்லாதவர்களாகி, வேதநெறியை விடுத்து, பல புறச்சமயங்களைக் கற்பித்துக்கொண்டு, 
அவற்றின்வழி ஒழுகுவாராயினார்கள். விட்டுணுவும் பிரமாவும் அதுகண்டிரங்கி, சுவதந்திரராகிய 
சிவபெருமானுடைய திருவருளாலன்றி இம்மயக்கம் நீங்குவதன்றென்று துணிந்து, இந்திரன் முதலிய 
தேவர்கள் சூழத் திருக்கைலாசமலையை அடைந்து, செம்பொற்றிருக்கோயிலின் முதற்கோபுர 
வாயிற்கண் எழுந்தருளியிருக்குஞ் சித்தாந்த சைவ சமயாசாரியராகிய திருநந்தி தேவரைத் தரிசித்து, 
எம்பெருமானுக்கு அடியேங்களுடைய வரவை விண்ணப்பஞ் செய்தருளும் என்று பிரார்த்தித்தார்கள். 

    திருநந்திதேவர் மகாதேவர் திருமுன் சென்று வணங்கி யெழுந்து, அஞ்சலிசெய்து நின்று, 
தேவர்களுடைய வரவை விண்ணப்பஞ்செய்தார். பரமேசுரன் தேவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு 
வரும்பொருட்டுப் பணித்தருள, திருநந்திதேவர் வணங்கிக்கொண்டு புறத்தே சென்று, தேவர்களை அணுகி,
ஓ தேவர்களே, எம்பெருமான் உங்களை உள்ளே வரும்பொருட்டுப் பணித்தருளினார், வாருங்கள் என்றார். 
உடனே விட்டுணு முதலிய தேவர்கள் யாவரும் தங்கள் கவலையை ஒழித்து, புழுத்த நாயினுங்கடையேமாகிய 
எங்களையும் ஒரு பொருளாகக்கொண்டு எம்பெருமான் உள்ளே வரும்வண்ணம் பணித்தருளிய பெருங்கருணை 
இருந்தபடி என்னை என்னை என்று, ஆனந்தவருவி பொழிய மெய்ம்மயிர் சிலிர்ப்பக் குதூகலங்கொண்டு, 
திருநந்திதேவரோடும் எண்ணில்லாத வாயில்களைக் கடந்து, உள்ளே சென்று, பேரானந்தப் பெருங்கடலாகிய 
சிவபெருமானைத் தூரத்தே தரிசித்து, அடியற்ற மரம் போலப் பலகாலும் வீழ்ந்து வீழ்ந்து நமஸ்கரித்து எழுந்து, 
அஞ்சலிசெய்துகொண்டு திருமுன் சென்று, நறுமலர்களாலே பூசித்து, வணங்கித் துதித்துக்கொண்டு, 
தலை பணிந்து ஆடையொதுக்கி வாய் புதைத்து நின்றார்கள்.

    அப்பொழுது சருவலோகைக நாயகராகிய சிவபெருமான் பெருங்கருணை கூர்ந்து, விட்டுணு 
முதலிய தேவர்களை நோக்கி, உங்களரசியல்களெல்லாம் ஓர் குறையுமின்றி நன்றாக நடக்கின்றனவா 
என்று வினாவியருளினார். அதுகேட்ட விட்டுணு வணங்கி நின்று, விசுவாதிகரும் விசுவசேவியருமாகிய 
சுவாமீ, பிரமாவினுடைய படைத்தற்றொழிலும் அடியேனுடைய காத்தற்றொழிலும் இயமனுடைய அழித்தற் 
றொழிலும் மற்றைத்தேவர்களுடைய தொழில்களும் உம்முடைய திருவருளினாலே நன்றாக நடக்கின்றன. 
 அது நிற்க, உலகத்துள்ள ஆன்மாக்கள் மெய்ந்நூலாகிய வேதத்தின் வாச்சியமாய் உள்ள நீரே 
பசுபதியென்பதைச் சிறிதுமுணராது மதிமயங்கி, உலோகாயதம், ஆருகதம், பௌத்தம், மீமாஞ்சை, 
பாஞ்சராத்திரம், மாயா வாதம் என்னும் புறச்சமயங்களின்வழி  ஒழுகுகின்றார்கள்; ஆதலால் அவர்கள் 
இம்மயக்கத்தினின்று நீங்கி நீரே பரம்பொருளெனத் துணிந்து  உம்மையே வழிபட்டுய்யும்பொருட்டுச் 
சிறிது திருவருள் செய்தல் வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்தார். 

    வேண்டுவார் வேண்டுவதே ஈயும் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் விட்டுணுவை நோக்கி, 
நீ உன்கலைகளுள் ஒன்றுகொண்டு பூமியின்கண்ணே வியாதனென்னும் பெயரையுடைய இருடியாய்ப் பிறந்து, 
வேதங்களெல்லாவற்றையும் ஓதாதுணர்ந்து, அவற்றை நான்காக வகுத்து, நன்மாணாக்கர்களுக்கு உபதேசிக்கக் 
கடவாய்; வேதத்தை ஓதியுணர்ந்தும் மெய்ப்பொருட்டுணிவு பிறவாதவருக்கும் வேதத்துக்கு அருகரல்லாதவருக்கும் 
பயன்படும்பொருட்டுப் பதினெண்புராணங்களை நாம் முன்னே நந்திக்கு உபதேசித்தேம்; அவன் அவைகளைச் 
சனற் குமாரனுக்கு உபதேசித்தான் ; நீ அவைகளை அச் சனற்குமாரனிடத்தே கேட்டறிந்துகொண்டு, அவைகளையும் 
உன் மாணாக்கர்களுக்கு உபதேசிக்கக்கடவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். விட்டுணு அதற்கியைந்து, 
சிவபெருமானை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு, பிரமா முதலிய தேவர்களோடுந் தமது வைகுண்டத்தை 
அடைந்து, அவர்களெல்லாரையும் தங்கள் தங்கள் பதத்துக்குப் போம்வண்ணம் விடுத்து, தாம் அங்கெழுந்தருளியிருந்தார்.

      அருட்கடலாகிய அவ்விட்டுணு தம்முடைய கலைகளுள் ஒருகலை கொண்டு, பூமியின் கண்ணே 
கங்கைக்கரையிலே பராசரமுனிவருக்குச் சத்தியவதியென்னும் பெயரையுடைய யோசனகந்தியிடத்தே 
திருவவதாரஞ் செய்தருளினார். அவர் வதரிகாவனத்தில் இருந்துகொண்டு வாதராயணரென்னும் 
பெயரைப் பெற்று, சிவபெருமானுடைய  திருவருளினாலே வேதங்களெல்லாவற்றையும் ஓதாதுணர்ந்தார் .
தாமுணர்ந்த வேதங்களை நான்காக வகுத்து, உலகத்தார் உய்யும் வண்ணம் நிறுவியருளினார். 
அதனால், அவருக்கு வியாசரென்னுந் திருப்பெயர் உண்டாயிற்று. 

    அவ்வியாசமுனிவர் சனற்குமாரமகாமுனிவரை வழிபட்டுப் பதினெண்புராணங்களையுங் கேட்டறிந்தார். 
அதன்பின் வரையறைப்படாத வேதத்தின் உண்மைப் பொருளைப் பரிபக்குவர்கள் உணரும்பொருட்டு வேதாந்த சூத்திரஞ் 
செய்தருளினார். அவர் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்னு நான்குவேதங்களையும் முறையே பைலர், 
வைசம்பாயனர், சைமினி, சுமந்து என்னு நான்கு மாணாக்கர்களுக்கும் உபதேசித்தருளினார். வேதாந்த சூத்திரத்தையும் 
சைமினி முதலிய நால்வருக்கும் உபதேசித்தருளினார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் இவ்வேதங்களை 
உங்களை வழிபடும் நன்மாணாக்கர்க ளெல்லாருக்கும் உபதேசிக்கக்கடவீர்களென்று பணித்தருள, அவர்களும்
அவ்வாறே உபதேசித்தார்கள். 

    அதன்பின் வியாசமுனிவர் பதினெண் புராணங்களையும் எனக்கு உபதேசித்து, அவைகளை உலகத்துள்ள
யாவருக்கும் உணர்த்தும் பொருட்டுப் பணித்தருளினார். அவ்வாறே யானும் அவற்றை உபதேசித்தேன். இவ்வாறே 
வியாசமுனிவருடைய திருவருளினாலே நான்குவேதங்களும் வேதாந்த சூத்திரமும் பதினெண் புராணங்களும் 
உலக மெங்கும் பரந்தன.

    பதினெண்புராணங்களாவன பிரமபுராணம், பதுமபுராணம், வைணவபுராணம், சைவபுராணம், 
பாகவதபுராணம், பவிடியபுராணம், நாரதீய புராணம், மார்க்கண்டேயபுராணம், ஆக்கினேயபுராணம்,
பிரமகைவர்த்த புராணம், இலிங்கபுராணம், வராகபுராணம், காந்தபுராணம், வாமனபுராணம், மற்சபுராணம், 
கூர்மபுராணம், காருடபுராணம், பிரமாண்டபுராணம் என்பனவாம். இப்பதினெட்டும் நாலிலக்ஷத்தெண்ணாயிரங் 
கிரந்தமுடையன. இவற்றுள், சைவபுராணம், பவிடியபுராணம், மார்க்கண்டேயபுராணம், இலிங்கபுராணம், 
காந்தபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், மற்சபுராணம், கூர்மபுராணம், பிரமாண்டபுராணம் என்னும் 
பத்துஞ் சிவபுராணங்கள். காருடபுராணம், நாரதீயபுராணம், வைணவபுராணம், பாகவத புராணம் என்னு நான்கும் 
விட்டுணுபுராணங்கள். பிரமபுராணம், பதும புராணம் என்னு மிரண்டும் பிரமபுராணங்கள். ஆக்கினேயம் அக்கினி 
புராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம். சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம். வைணவபுராண நான்கும் 
தாமசங்களாம். பிரமபுராண மிரண்டும் இராசசங்களாம். அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுண யுத்தமாம். 

    ஆதலால், சிவபுராணங்களே இப்பதினெட்டினுள்ளும் உயர்ந்தனவாம். அவற்றுள்ளும் காந்தம் மிகவுயர்ந்ததாய், 
சகல வேதாந்தங்களின் சாரத்தையும் உள்ளடக்கினதாய், ஐம்பது கண்டங்களாற் புனையப்பட்டதாய், ஓரிலக்கங் 
கிரந்தமுடைத்தாயிருக்கும். அது சனற்குமார சங்கிதை, சூதசங்கிதை,பிரமசங்கிதை, விட்டுணுசங்கிதை, சங்கரசங்கிதை,
சூரசங்கிதை என ஆறுசங்கிதையுடையது. அவற்றுள், சனற்குமாரசங்கிதை ஐம்பத்தையாயிரங் கிரந்தமும், 
சூதசங்கிதை ஆறாயிரங் கிரந்தமும், பிரமசங்கிதை மூவாயிரங் கிரந்தமும், விட்டுணுசங்கிதை ஐயாயிரங் கிரந்தமும், 
சங்கர சங்கிதை முப்பதினாயிரங் கிரந்தமும், சூரசங்கிதை ஆயிரங் கிரந்தமுமுடையன. முப்பதினாயிரங் கிரந்தமுடைய 
சங்கரசங்கிதை பன்னிரண்டு கண்டமுடையது. அவற்றுள் முற்பட்டது சிவரகசியகண்டம். அது பதின் மூவாயிரங் 
கிரந்தமுடையதாய், உற்பத்திகாண்டம், அசுரகாண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தக்ஷகாண்டம், 
உபதேச காண்டம் என ஏழுகாண்டங்களை யுடையதாயிருக்கும். உண்மையறிவானந்தவடிவாகிய சுப்பிரமணியக் 
கடவுளுடைய சரித்திரம் அடங்கிய இச்சிவ ரகசிய கண்டத்தை இப்போது உங்களுக்குச் சொல்வேன், 
நீங்கள் சிரத்தையோடு கேளுங்கள்.

                திருச்சிற்றம்பலம்.

                முதலாவது

                உற்பத்திகாண்டம்.

                திருக்கைலாசப்படலம்.

    அநாதிமலமுத்தராய், நித்தியராய்,சர்வவியாபகராய், சர்வஞ்ஞராய், சர்வகர்த்தாவாய், நித்தியானந்தராய் 
உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான், சர்வான்மாக்களுக்கும் அருள்செய்யும்பொட்டு, ஒரு திருமுகமும், 
அடியார்களது துயரத்தை ஒழிக்குந் திருப்புன்முறுவலும், சந்திரன் சூரியன் அக்கினி என்னும் முச்சுடர்களாகிய 
மூன்று திருக்கண்களும் கங்கையையும் பிறையையும் கொன்றை மாலையையுஞ் சூடிய சடாமுடியும், 
சங்கக் குண்டலத்தையும் தோட்டையும் அணிந்த திருச்செவிகளும், திருநீலகண்டமும், மான் மழு அபயம் வரதம் 
என்பவைகளோடு கூடிய நான்கு திருக்கரங்களும், விபூதியினாலே உத்தூளிக்கப்பட்ட செம்பவளத் திருமேனியும், 
வெள்ளைப் பூணூலையும் கற்பங்கடோறும் இறந்த எண்ணில்லாத பிரமவிட்டுணுக்களுடைய தலைகளாலும் 
என்புகளாலுந் தொடுக்கப்பட்ட மாலைகளையும் அணிந்த திருமார்பும், புலித்தோலை உடுத்து உடை வாளுடனே 
கச்சையுடைத்தாய் விளங்குந் திருவரையும், வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்கும் செந்தாமரைமலர்போலுந் திருவடிகளும் 
உடைய ஸ்ரீகண்டசரீரியாய், பலவிரத்தினங்களாலே புனையப்பட்ட வெள்ளிமயமாகிய நானாவித சிகரங்களோடு 
கூடிய நிருமலமாகிய திருக்கைலாச மலையிலே, உயர்வொப்பில்லாத செம்பொற்றிருக்கோயிலிலே, எண்ணில்கோடி 
சூரியர்களது ஒளியைப்போலும் ஒளியையுடைய திவ்விய சிங்காசனத்தின் மேலே, தமது அருட்சத்தியும் உலக 
மாதாவுமாகிய உமாதேவியார் தமது இடப்பாகத்தின் மேவ, அளவிறந்த பெருங்கருணையோடும் எழுந்தருளியிருந்தார்.

    அப்பொழுது பூதர்கள் நானாவித வாத்தியங்களை முழக்கினார்கள், இருபுறத்தும் வெண்சாமரம் 
வீசினார்கள், ஆலவட்டம் அசைத்தார்கள். தும்புரு நாரதர்களும் விஞ்சையர்களும் இசை பாடினார்கள். 
கணநாதர்கள் சிவபெருமானுடைய திருவருளை நினைந்து நினைந்து, என்புகளெல்லாம் அழலிடைப்பட்ட
வெண்ணெய்போலக் கரைந்து நெக்கு நெக்குருக, சரீர நடுங்க, மெய்ம்மயிர் சிலிர்ப்ப, மயிர்க்காறோறுந் 
திவலையுண்டாக, மதகினிற் புறப்படுஞ் சலம்போல ஆனந்தவருவி பொழிய, நாத்தழுதழுப்ப, உரை
தடுமாற, கரையற்ற இன்பக்கடலின் அழுந்தி நின்றார்கள். முனிவர்கள் தங்கள் கைகள் சிரசின்மீதேறிக் 
குவிய,நினைப்பினும், ஓதினும் செவிமடுப்பினும் புத்தமிர்தத்தினும் தித்திக்கும் வேதசிரசுகளாகிய 
உபநிடதங்களை எடுத்தோதினார்கள். தேவர்கள் பேரானந்தப் பெருங்கடலின் முழுகி, ஹர ஹர முழக்கஞ்செய்து, 
கைகொட்டி, ஆடிப் பாடினார்கள். பரமகிருபாலுவாகிய திருநந்திதேவர் தமது திருக்கரத்திற் பொற்பிரம்பு 
கொண்டு, அடியார் கூட்டத்தை வரிசையின் முறை நிறுவி, சிவபெருமான்றிருமுன்னே இருபக்கத்தும் உலாவிக் 
கொண்டு, அவ்வகில காரணருடைய உயர்வொப்பில்லாத பெருங்கீர்த்தியைப் படித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            பார்ப்பதிப்படலம்.

    சிவபெருமான் இவ்வண்ணம் எழுந்தருளியிருக்கும்பொழுது வாம பாகத்தின் எழுந்தருளியிருந்த 
உமாதேவியார் தமது திருவுளத்திலே ஒன்றை நினைந்து,விரைந்தெழுந்து, சிவபெருமானை வணங்கி நின்று, 
எல்லாவறிவும் எல்லாத்தொழிலும் எல்லா முதன்மையுமுடைய பரமபதியே, உம்மை இகழ்ந்த தக்கனிடத்தே 
அடியேன் சிலகாலம் வளர்ந்து, தாக்ஷாயிணியென்னும் பெயரைப் பெற்றேன். இனி இப்பெயரையும் அவனிடத்தே 
வளர்ந்த இச்சரீரத்தையும் தரித்தற்கு அஞ்சுகின்றேன், ஆதலின் இவைகளை நீக்குமாறு பணித்தருளும் என்று 
விண்ணப்பஞ்செய்தார். 

    சிவ பெருமான் உமாதேவியாரை நோக்கி, நமது சத்தியே, நீ இவ்வண்ணம் முயலுதல் எண்ணில்லாத 
உன்புதல்வர்களாகிய ஆன்மாக்கள் முத்தியெய்தும் பொருட்டேயாம்; உன்கருத்து முற்றவேண்டுமாயிற் 
சொல்வேங்கேள்; இமைய மலையரையன் உன்னைத் தன்மகளாக வளர்த்து நமக்கு விவாகஞ் செய்துதர விரும்பி, 
நம்மை நோக்கிக் கொடுந்தவஞ் செய்கின்றான். நீ ஒரு குழந்தைவடிவாய் அவனிடத்தே சென்று வளர்ந்து, ஐந்து 
வயசாயபின் நம்மை நோக்கித் தவஞ்செய்யக்கடவாய்; அப்பொழுது நாம் வந்து உன்னை விவாகஞ்செய்து 
அழைத்துக்கொண்டு வருவேம் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே உமாதேவியார் திருவுளமகிழ்ந்து, 
சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு திருக்கைலாச மலையினின்று நீங்கி, 
இமைய மலையை யடைந்தார்.

    இமைய மலையின் மேலே மானச வாவியென்னும் பெயரையுடைய ஒரு தடாகமுண்டு. அதிலே, 
மலையரையன், தான் உமாதேவியாரைத் தன்மகளாகப் பெறுதற்பொருட்டும், அவளைச் சிவபெருமானுக்கு 
விவாகஞ் செய்து கொடுத்தற் பொருட்டும், அருந்தவஞ் செய்துகொண்டிருந்தான். உலக மனைத்தையுங் 
கருப்பமெய்தாது பெற்றருளிய பெருங்கருணைப் பெருமாட்டியார் அம்மலையரையன் காணும்வண்ணம் 
அவ்வாவியிலுள்ள ஒரு தாமரை மலரின் மேலே குழந்தை வடிவாய் எழுந்தருளியிருந்தார்.

    மலையரையன்  அதுகண்டு, உமாதேவி யடியேன் பொருட்டுச் சிவபெருமானை நீங்கினள் போலும், 
சிறியேன் செய்த தவத்துக் கிரங்கியருளிய எம்பெருமானுடைய பெருங்கருணை இருந்தபடி என்னையென்று 
பேரானந்தப்பெருங்கடலின் மூழ்கி, ஆனந்தவருவி பொழிய, மெய்ம்ம்யிர் பொடிப்ப, அடியேன் உய்ந்தேன் 
உய்ந்தேன் என்று, பாடியாடி, உமாதேவியாரை வணங்கி நின்றான். பின்பு தாமரைமலர் மேலிருக்கும் 
உமாதேவியைத் தனது கையாலெடுத்து, சிரமேற் றாங்கிக்கொண்டு, விரைந்து சென்று, தன் வீட்டினுள்ளே 
புகுந்து, தன் மனைவியாகிய மேனை கையிற் கொடுத்தான். மேனை தொழுது வாங்கிக் கொண்டு, 
பெருமானே, இவள் உன்னிடத்து வந்ததெங்ஙனம் என்று வினாவ, மலையரையன் நிகழ்ந்தனவெல்லாம் 
அவளுக்குச் சொன்னான். மேனை அது கேட்டு, சிவபெருமானது திருவருளைத் துதித்து, பெருமகிழ்ச்சியடைந்தாள். 
மேனைக்குத் தனங்களினின்றும் பால் சுரந்து பெருகிற்று, மெய்ம்மயிர் சிலிர்த்தது, உமாதேவியுடைய திருவருளே 
உள்ளமெங்கும் நிறைந்தது. மேனை உமாதேவியைத் திவ்விய ரத்தினாபரணங்களினாலே அலங்கரித்து, 
மெய்யன்போடு வளர்த்தாள்.

    இவ்வாறே உமாதேவியார் இவரிடத்தே வளர்ந்து, ஐந்துவயசு சென்றபின், சிவபெருமானை நோக்கித்
தவஞ்செய்யக் கருதி, மலையரையனை நோக்கி, முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் என்னை விவாகஞ்செய்து 
கொள்ளும்பொருட்டு இம்மலையில் ஒருபக்கத்தே அவரை நோக்கித் தவஞ் செய்யக் கருதுகின்றேன், கன்னியரோடும் 
என்னை விடுக்கக் கடவாய் என்றாள். மலையரையன் பார்ப்பதியம்மையாரை நோக்கி, அம்மே, நீ நம்மினின்று 
நீங்கித் தவஞ்செய்தற்கு ஒத்த பருவம் இதுவன்று, உனக்கு ஐந்து வயசு மாத்திரமே சென்றன, இக்கருத்தை ஒழித்துவிடு 
என்றான். பார்ப்பதியம்மையார் திருநகைசெய்து, யாவரேயாயினும் சுதந்திரராகிய சிவ பெருமானாலே 
காக்கப்படுவதன்றித் தம்மாலும் பிறராலுங் காக்கப்படுவதில்லை, இது துணிவு. தவஞ்செய்வேனென யான் 
பேசியதும் எம்பெருமானது திருவருளே : இனி மறாது விடைதரக் கடவாய் என்றாள். 

    மலையரையன் அதற்கியைந்து; அம்மலையினொருபக்கத்தே ஒருதவச்சாலை செய்வித்து, தன்கிளைஞராகிய 
கன்னியர் பலரோடும் பார்ப்பதியை அங்கே விடுத்தான். பார்ப்பதியம்மையார் அந்தத் தவச்சாலையை அடைந்து, 
கன்னியர் பலர் சூழ, சிவபெருமானைச் சிந்தித்துத் தவஞ்செய்துகொண்டிருந்தார். மலையரையனும் மேனையும் 
நாடோறுஞ் சென்று, உமாதேவியாரைக் கண்டுகொண்டு திரும்புவார்கள். அது நிற்க, இனி உமாதேவியைப் பிரிந்த 
சிவபெருமானுடைய செயலைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            மேருப்படலம்.

    உயிர்களையெல்லாம் பெற்று அவைகளுக்குப் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுத்தருளும் 
அருள்வடிவாகிய உமாதேவியார் இமையமலையின்மீது தவஞ்செய்துகொண்டிருக்கும்போது, சூரபன்மா, 
அசுரர்கள் சூழ, இப்பூமியின் கண்ணே அரசு செய்துகொண்டிருந்தான். அப்போது,  கல்லால நிழலின்கண்ணே 
தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருந்த சிவபெருமானிடத்தே வேதநூற்பொருளைப் பெற்ற சனகர், 
சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் முனீந்திரர் நால்வரும் மாயையினாலே ஞானநிலை பெறாதவராகி, 
பின்னும் நெடுங்காலந் தவஞ்செய்து, திருக்கைலாச மலையை அடைந்து, முதற் கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கும் 
சித்தாந்த சைவ சிகாமணியாகிய திருநந்திதேவரை வணங்கி நின்றார்கள். உடனே திருநந்தி தேவர் 
அம்முனீந்திரர்களைக் கருணையோடும் செம்பொற் றிருக்கோயிலினுள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். 

    முனீந்திரர்கள் பிரமவிட்டுணுக்களுக்கும் வேதங்களுக்கும் எட்டாத ஞானநாயகரைத் தூரத்தே தரிசித்து, 
மொழி தடுமாற, மெய்ம்மயிர் பொடிப்ப, ஆனந்தக் கண்ணீர் பெருக, அழலிடைப்பட்ட மெழுகுபோல நெஞ்சநெக்குருக, 
இருகைகளையும் சிரமீது குவித்துக்கொண்டு திருமுன் சென்று, திருவடிகளைப் பலகாலும் நமஸ்கரித்து, எழுந்து, 
அஞ்சலிசெய்து நின்று, சிவபெருமானது நிரதிசயமாகிய ஐசுவரியத்தை உணர்த்தாநின்ற உபநிடதங்களாலே 
துதித்தார்கள். துதித்தபின்பு, ஞானானந்த மயமாகிய முழுமுதற்கடவுளே, அடியேங்கள் வேதங்களையும் ,
உபநிடதங்களையும் நெடுநாள்வரையும் ஓதியும் ஞானநிலைபெறாதேமாயினேம். அருட்கடலே, ஏகாத்துமவாதசுருதி 
முதலிய சுருதிகளாலே மதி மயங்குகின்றது; பெருங்கருணை கூர்ந்து, அம்மயக்கத்தை நீக்கியருளுக என்று 
விண்ணப்பஞ் செய்தார்கள். 

    அடியார்க்கு எளியராகிய பரம கருணாநிதி அம்முனீந்திரர்கண்மீது திருநோக்கம் வைத்து, அன்பர்களே, 
உங்கள் மதிமயக்கம் நீங்கும்வண்ணம் நாம் இரகசியமாகிய திவ்வியாகமத்தை உபதேசிப்போம், இருங்கள் என்று 
திருவாய் மலர்ந்தருளினார். முனீந்திரர்கள் நால்வரும் பேருவகை பூத்து, எம்பெருமானுடைய திருவடிகளின்முன் 
இருந்தார்கள். சிவபெருமான் திருநந்திதேவரை நோக்கி, மன்மதனன்றி மற்றைத் தேவர் யாவர் வரினும் உள்ளே 
விடுக்காதே என்று பணித்தருள, திருநந்திதேவர் அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு, சிவபெருமானைத் தொழுது, 
முதற்கோபுர வாயிலை அடைந்து, காவல் செய்து கொண்டிருந்தார்.

    கிருபாமூர்த்தியாகிய சிவபெருமான் தமது சந்நிதியில் இருக்கின்ற சனகர் முதலிய முனீந்திரர்கள் 
நால்வரும் தொழுது கேட்ப, திவ்வியாகமங்களிலே சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் 
நான்கு பாதங்களுள்ளும் சரியை முதலிய முதன்  மூன்று பாதத்தையும் உபதேசித்தருளினார். அது கேட்ட 
முனீந்திரர்கள், கருணைக்கடலே, இனி ஞானபாதத்தையும் உபதேசித்தருளுக என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 
சிவபெருமான் திருநகைசெய்து, ஞானபாதம் ஏனையனபோல வாயினாற் சொல்லற் பாலதன்று. அது இப்படி 
யிருத்தலேயாம் என்று திருவாய்மலர்ந்து, அந்நெறியை அவர்களுக்கு உணர்த்தும்பொருட்டு, தமது 
திருமார்பின்கண்ணே ஒரு திருக்கரத்தைச் சேர்த்தி, மௌன முத்திரை காட்டி ஒருகணம் ஒரு செயலுமின்றி 
யோகஞ் செய்வார் போல் எழுந்தருளியிருந்தார். அது கண்ட முனீந்திரர்கள் தங்கள் தங்கள் உள்ளம் ஒடுங்கப்பெற்று 
சிவஞானத்தை அடைந்து, சித்திரப்பாவை போல் அசைவற்றிருந்தார்கள்.

    சிவபெருமான் இவ்வண்ணம் எழுந்தருளியிருக்கும் கணமொன்றினுள்ளே பிரமா விட்டுணு முதலிய 
தேவர்களுக்கெல்லாம் பற்பல யுகங்கள் சென்றன. ஆடவரையும் மகளிரையும் காமப்பற்றை விளைத்துப் புணர்த்தற்கு 
மன்மதன் நிற்பவும், சிவபெருமான் போக வடிவமன்றி யோகவடிவங் கொண்டு வீற்றிருத்தலால், திருமால் 
முதலிய தேவர்களும் மனிதர்களும் மற்றைச் சீவர்களும் காமப்பற்றும் புணர்ச்சியும் இல்லாது வருத்தமுற்றார்கள்.
அதனாலே கரு மல்குதலின்றி, உயிர்களெல்லாம் நாடோறுங் குறைந்தன. இதனாலே, அகிலகாரணர் சிவபெருமானே 
என்பது தெள்ளிதிற் றுணியப்படும்.

    இவ்வாறே சிவபெருமான் யோகத்திருக்கும்பொழுது, சூரபன்மன் தீங்கு செய்தமையால் இந்திரன் 
தன்மனைவியாகிய இந்திராணியோடும் தேவர்களோடும் சுவர்க்கத்தை விட்டுப் பூமியில் வந்தான். திருக்கைலாய 
மலையை அடைந்தும் சிவபெருமானைத் தரிசிக்கப்பெறாமையால் சோகத்தோடு மீண்டு, மகாமேருமலையை 
அடைந்து, சூரனுடைய குமாரனாகிய பானுகோபன் சுவர்க்கத்தை எரித்துத் தன் குமாரனாகிய சயந்தனையும் 
தேவர்களையுஞ் சிறைசெய்தமையை அறிந்தான். அம்மேருமலையிலே சிவபெருமானைச் சிந்தித்து நெடுங்காலந் 
தவஞ்செய்தான். சிவபெருமான் இடப மேற்கொண்டு, இந்திரனுக்குத் தோன்றியருளினார். அது கண்ட இந்திரன் 
வணங்கித் துதிக்க, முற்றறிவையுடைய சிவபெருமான் இந்திரனை நோக்கி, நீ நெடுங்காலங் கொடுந்தவஞ்செய்து 
வருந்தினாய், உனக்கு வேண்டும் வரம் யாது என்று அறியாதார் போலக் கேட்டருளினார். 

    இந்திரன் வணங்கி நின்று, பரமகருணாகரரே, தீயோனாகிய சூரன் அடியேங்களையெல்லாம் துயரப்படுத்தி, 
சுவர்க்கத்தை எரித்துவிட்டு, அடியேனுடைய குமாரனாகிய சயந்தனையும் தேவர்களையுஞ் சிறைப்படுத்தினான், 
அச்சூரனைக் கொன்று அடியேங்களைக் காத்தருளுக என்று விண்ணப்பஞ்செய்தான். சிவபெருமான் இந்திரனை 
நோக்கி,யஞ்ஞத்துக்கு ஈசுரனாகிய நம்மை இகழ்ந்து தக்கன் செய்த வேள்வியில் இருந்த பெருங்கொடும் 
பாவத்தினாலே நீங்கள் இப்படித் துயருறுகின்றீர்கள்; இனி நம்மிடத்தே ஒரு குமாரன் பிறந்து சூரனைக் கொன்று 
உங்களைக் காப்பான் என்று திருவாய் மலர்ந்து, மறைந்தருளினார்.

    சிவபெருமான் மறைந்தருளலும், இந்திரன் கவற்சிகொண்டு,எம்பெருமான் சனகர் முதலிய முனீந்திரர்கள் 
பொருட்டுத் திருக்கைலாசத்திலே யோகத்தெழுந்தருளி யிருக்கின்றார், உமாதேவியார் இமையமலையிலே தவஞ்
செய்துகொண்டிருக்கின்றார்; இங்ஙனமாக இவர்களுக்குப் புதல்வன் உதிப்பது எங்ஙனம் என்று நினைந்து, 
சோகத்தோடும் மனோவதியென்னும் நகரத்தை அடைந்து, அங்கிருந்த தன்குருவாகிய வியாழனுடைய மனைவியிடத்தே 
இந்திராணியை இருத்திவிட்டு, தேவர்களோடும் பிரமதேவருடைய கோயிலிற் சென்றான். அங்கே, சிவபெருமான் 
யோகத்திருத்தலினாலே தன் படைத்தற்றொழில் நிகழாமை பற்றிக் கவற்சி கொண்டிருக்கும் பிரமதேவரைக் 
கண்டு, வணங்கி, அஞ்சலி செய்து நின்றான். பிரமதேவர் இந்திரனை நோக்கி, நீ இங்கு வந்ததென்னை என்று 
வினாவ, இந்திரன் சூரன் செய்யுந் துன்பத்தையும், சிவபெருமான் யோகத்திருத்தலையும், தன்னுடைய தவத்தைக் 
கண்டு சிவபெருமான் அருளிச் செய்தமையையும் பிரம தேவருக்குச் சொன்னான்.

    பிரமதேவர் இந்திரனை நோக்கி, இவ்வாறு சொல்வாராயினார்: எவ்வுயிர்க்கும் மேலாகிய சிவபெருமான்
கருணைக் குறையுளும் தம்மை வழிபடும் மெய்யடியார்க்கு அருள்செய்வோரும் முறைசெய்வோருமாகலின், 
எம்மை ஆண்டருளும் பொருட்டுத் திருக்கைலாச மலையின் கண்ணே யோகியர்போல வீற்றிருந்தருளினார். 
விட்டுணுவாலும் என்னாலும் தேடியறியப்படாது நின்ற விசுவாதிகராகிய அவருக்கு உயர்வும் இல்லை 
ஒப்பும் இல்லை: அவ்வியல்புடைய முழுமுதற்கடவுள் முனிவர்கள்பொருட்டு யோகவடிவங் கொண்டிருத்தல் 
நம்முடைய குறைகளனைத்தையும் ஒழிக்குந் திருவருளேயன்றி, வேறன்று. 

    சிவபெருமான் சருவான்மாக்களையுஞ் சங்கரித்தல் பிறப்பிறப்புக்களினாலும் சுவர்க்க நரகத்திற்குச் 
செல்லுதல் மீளுதல்களினாலும் அவைகளுக்கு உளதாய இளைப்பை நீக்குங் கருணையன்றோ; அதுபோலவே 
நமக்குச் சூரனைக்கொண்டு துன்பஞ் செய்வித்தலும் நாஞ்செய்த தீவினைப் பயன்களை ஊட்டித் தொலைத்து 
நமக்கு முத்தியைத் தரும் பெருங் கருணையே, தந்தையர் தாம் பெற்ற புதல்வர்களுக்கு யாதானுமோர் நோயுற்றவழிப் 
பிறரைக்கொண்டும் அறுத்தல் கீறுதல் முதலிய துயரங்களைச் செய்வித்தும் தீர்ப்பார்களன்றோ. அது 
அப்புதல்வர்கண்மீது வைத்த அன்பன்றி வன்கண்மையன்றே. அதுபோலவே, சிவபெருமானும் நம்முடைய 
தீவினைகளைத் தீர்க்கும்பொருட்டே இவ்வண்ணஞ் செய்விக்கின்றார். நாஞ்செய்த தீவினைகளெல்லாம் 
நீங்குங்காலம் அணுகியது போலும். ஆதலாற்றானே, எம்பெருமான் பெருங்கருணையோடும் உனக்குத் தோன்றி 
இவ்வண்ணந் திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்: இனி நாமெல்லாம் துன்பக்கடலினின்றும் கரையேறினம்போலும். 
சிவபெருமான் இனி நமக்கருள்செய்வார். அதற்கு நாமும் முயலுமாறு சிறிதுண்டு. நாம் இதனை விட்டுணுவுக்குச் 
சொல்லி, இதற்கு வேண்டுஞ் செய்கையை விரைந்து செய்தல் வேண்டும் என்றார்.

    பிரமதேவர் இப்படிச் சொல்லி, இருக்கை விட்டெழுந்து, இந்திரன் முதலிய தேவர்கள் சூழச் சென்று, 
வைகுண்டத்தை அடைந்து, விட்டுணுவை வணங்கி நின்றார். விட்டுணு கருணைசெய்து, தம்புதல்வராகிய 
பிரமதேவருக்கு ஆசனங்கொடுத்து, அவரை நோக்கி, உன்னுடைய படைத்தற்றொழில் இடையூறின்றி நடக்கின்றதா 
என்று வினவினார். பிரம தேவர் விட்டுணுவை நோக்கிச் சொல்லலுற்றார்: 

    சுவாமீ, இதனைக் கேட்க,முன்னாளிலே சனகன், சனந்தனன்,சனாதனன், சனற்குமாரன் என்னும் முனிவர் 
நால்வரும் என்கருத்திலே தோன்றினார்கள். நான் அவர்களை நோக்கி, நான் செய்யும் இப்படைத்தற்றொழிலை நீங்கள் 
செய்துகொண்டு இங்கிருங்கள் என்றேன். அதற்கு அவர்கள் நகைசெய்து, பாசமாகிய சிறையிற்பட்டுப் படைத்தற்றொழிலாகிய 
விலங்கை நாங்கள் பூணேம், நாங்கள் ஞானானந்த மயராகிய சிவபெருமானுடைய திருவடிகளை அடைவேம் 
என்று சொல்லிக்கொண்டு விரைந்து சென்று, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்தார்கள். சிவபெருமான் 
அவர்களுக்குத் தோன்றி, உங்களுக்கு வேண்டியது யாது என்று வினாவியருள, அவர்கள் சிவபெருமானை வணங்கி, 
அடியேங்களுக்கு வேதப்பொருளை உபதேசித்தருளுக என்று விண்ணப்பஞ்செய்தார்கள். சிவபெருமான் கருணைகூர்ந்து, 
திருக்கைலாசமலையின்மீது தென்சிகரத்தினிற்கும் கல்லால நிழலின்கண்ணே தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருந்து, 
அம்முனிவர்கள் நால்வருக்கும் வேதப்பொருளை உபதேசித்து, மறைந்தருளினார். முனிவர்கள் நால்வரும் பூமியிலே போய், 
ஞானம் நிலைபெறாமையால் வருத்தமுற்று, பின்னுந் தவஞ்செய்து சிவபெருமானுடைய திருவருளினாலே 
திருக்கைலாசமலையை அடைந்தார்கள். 

    சிவபெருமான் அவர்களுடைய மலபரிபாகத்தைக் கண்டு, திவ்வியாகமங்களால் உணர்த்தப்படும் 
நான்கு பாதங்களுள்ளும் சரியை முதலிய முதன் மூன்று பாதத்தையும் உபதேசித்து, ஞானம் அவ்வண்ணஞ் 
சொல்லற்பால தல்லாமையால் அவர்கள் காணும்பொருட்டு மௌனமுத்திரை காட்டி எழுந்தருளினார். 
அப்பொழுது முனிவர்கள் தங்கள் மனம் ஒடுங்கி, மும் மலமுநீங்கி, சிவானந்தபரவசர்களாய்ச் செயலற்றிருந்தார்கள். 
இவ்வாறு சிவபெருமான் யோகத்திருக்கும் கணமொன்றினுள்ளே பற்பல யுகங்கள் சென்றன. சிவபெருமான் 
உமாதேவியாரைப் பிரிந்து யோகத்திருத்தலால், ஆண்பெண் முயக்கம் இன்றாயிற்று. ஆகவே, என் படைத்தற்றொழில் 
தவறியது. இது நிற்க, சிவபெருமான் கொடுத்தருளிய வரத்தினாலே எண்ணில்லாத போகங்களைப் புசிக்குஞ் 
சூரபன்மனானவன் நம்மையெல்லாம் வருத்துகின்றானே. இவ்விந்திரனுடைய குமாரனாகிய சயந்தனையும் 
தேவர்களையுஞ் சிறைப்படுத்தினான். இவ்வண்ணம் நமக்கெல்லாம் நாடோறும் பெருந்துயரம் விளையவும், 
சிவபெருமான் அறியாதார் போல எழுந்தருளியிருக்கின்றார். இதற்கு யாது செய்யலாம்! சொல்லுக என்றார்.

    பிரமதேவர் இவ்வாறு சொல்லக் கேட்ட விட்டுணு அவரை நோக்கிச் சொல்லுகின்றார்: சர்வான்மாக்களிடத்தும் 
நிறைந்து சகலத்திற்குங் காரணராய் உள்ள மகாதேவர் யோகவடிவங்கொண்டு எழுந்தருளியிருப்பராயின். 
காமப்பற்றுடையராய் முன்போலிருக்கும் இயல்புடையார் யாவர்! சிவபெருமான். நாமெல்லாம் தம்மை இகழ்ந்த 
தக்கனுடைய யாகத்திருந்த அதிபாதகத்தை ஊட்டித் தொலைத்து, அதன்பின்பு முன்னை வாழ்வை நமக்கருளிச் 
செய்யும்பொருட்டுத் திருவுளங் கொண்டருளினார், சூரபன்மனுக்கு வரங்கொடுத்தமையும், தேவர்கள் யாவரும் 
தம்மைச் சாரா வண்ணம் முனிவர்கள் பொருட்டு யோகத்திருந்து உயிர்களுக்குத் துன்பஞ் செய்தலும், நுண்ணுணர்வால் 
ஆராயுமிடத்து, எம்மாட்டுளதாகிய பேரருளேயன்றிப் பிறிதொன்றன்று. சிவபெருமான் மௌனத்தை நீங்கி 
மலையரையன் புதல்வியாகிய உமாதேவியைத் திருக்கல்யாணஞ் செய்தருளுவராயின், பிரமனே, படைத்தற்றொழில் 
கைகூடும். இனி ஒருகுமாரர் திருவவதாரஞ் செய்வாராயின், சூரன் முதலிய அசுரர்களெல்லாம் நாசமடைவர்கள், 
உலகமெல்லாம் முன்போல உய்யும். இது நிறைவேறும் பொருட்டு ஒன்று சொல்வேன்,கேள். எல்லாருக்குங் காமப்பற்றை 
விளைவிக்கும் மன்மதனை விடுப்பாயாயின், சிவபெருமான் மௌன நீங்கி, உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து, 
ஒரு குமாரரைத் தந்தருளுவர் என்றார். பிரமதேவர் அது கேட்டு, மனமகிழ்ந்து, "அவ்வாறு செய்வேன்'' என்று சொல்லி, 
இருக்கை விட்டெழுந்து, விடைபெற்றுக்கொண்டு, இந்திரன் முதலிய தேவர்களோடு சென்று, மனோவதி நகரத்தை 
அடைந்து, தமது கோயிலின் வீற்றிருந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            காமதகனப்படலம்.

    பிரமதேவர் மன்மதன் வரும்பொருட்டு நினைந்தார். நினைந்தவுடனே மன்மதன் விரைந்து வந்து, 
பிரமதேவரை வணங்கி, அஞ்சலிசெய்து நின்று, "சுவாமீ,நீர் அடியேனை மனசிலே நினைந்தது என்னை' என்று 
வினாவினான். பிரமதேவர் மன்மதனை நோக்கி, "நீ எங்கள் பொருட்டுத் திருக்கைலாச மலையிற்சென்று, 
சிவபெருமான் மௌன நீங்கி உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ் செய்யும்பொருட்டு அவர்மீது உன் 
பாணங்களைத் தொடுப்பாயாக" என்றார். அது கேட்டவுடனே, மன்மதன் தன்னிரண்டு காதுகளையும் விரைவிலே 
பொத்தி, வருத்தமுற்று, ''சிவசிவ' என்று சொல்லி, ''ஐயையோ! பெருங்கொடும்பாவத்தை விளைவிக்கும் 
இவ்வசனத்தைக் கேட்டேனே" என்று கிலேசமுற்று, பிரமதேவரை நோக்கி, இவ்வாறு சொல்வானாயினான்: 

    'வன்கண்ணரும் அறிவுடையோரிடத்துச் சென்றால், அவ்வறிவுடையோர் அவருக்கு உய்யுநெறியைப் 
போதிப்பர். நான் உம்மிடத்து வர நீர் எனக்கு இக்கடுஞ்சொல்லைச் சொன்னீர். என்னிடத்தே உமக்குச் சிறிதும் 
அருளில்லையா! நான் என் கருப்புவில்லையும் புட்ப பாணத்தையுங்கொண்டு, பூமிதேவியையும் இலக்குமியையும் 
புணரும்வண்ணம் என்பிதாவாகிய விட்டுணுவை வென்றிலனா? நீர் சரசுவதியைப் புணரும்படிக்கும் உம்மாலே 
படைக்கப்பட்ட திலோத்தமை மீது இச்சை கொண்டு உள்ளப்புணர்ச்சி செய்யும்படிக்கும் உம்மை நான் 
மயக்கிக் கீர்த்தி பெற்றிலனா? இலக்குமியை விட்டுணுவுடைய மார்பில் வைத்திலனா? சரசுவதியை உம்முடைய 
நாவில் இருத்திலனா? இந்திரன் இந்திராணியைப் புணரவும், அகலியையினாலே அவனுடைய உடம்பெங்கும் 
ஆயிரம் யோனிகள் உண்டாகவும் செய்திலனா? 

    முன்னொருநாள் சூரியனும் இந்திரனும் பெண்வடிவங்கொண்ட பாகனாகிய அருணனைப் புணர்ந்து 
வசையுறும் வண்ணம் மயக்கிலனா? இருபத்தேழு நக்ஷத்திரங்களைப் புணருஞ் சந்திரன் தன் குருவாகிய 
வியாழனுடைய மனைவியாகிய தாரையைப் புணர்ந்து புதனைப் பெறும்வண்ணம் செய்திலனா? 
வேதங்கள் யாவையும் நன்குணர்ந்த தேவர்களெல்லாரையும் மகளிருடைய குற்றேவல்களைச் செய்யும்வண்ணம் 
மயக்கிலனா? வசிட்டர், மரீசி, அகத்தியர், அத்திரி, கௌதமர், காசிபர் முதலிய துறவிகளுடைய வலிமையைக் 
கெடுத்திலனா? மனிதர்களுள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வருணத்தாரையும் 
அனுலோமர் அறுவரையும் பிரதிலோமர் அறுவரையும் கோளகர்,குண்டகர், கானீனர் என்னும் புறக்குடிகள் 
மூவரையும் பெண்மயலில் வீழ்த்திலனா? என்னாணையைக் கடந்தவர் யாவருளர்? இங்கே சொன்னவைகளெல்லாம் 
 பரதந்திரனாகிய என்னால் முடியுமா! 

    சுவதந்திரராகிய சிவபெருமானுடைய சத்தியே என்னை ஏவி நின்று செய்யும். என்பாணங்களினாலே 
விட்டுணு முதலிய பசுக்களை வெல்வதன்றி, பரமபதியாகிய சிவபெருமானை வெல்லுதல் கூடுமா? 
சிவபெருமானை வழிபட்டு அவரால் அருளப்பட்ட அதிகாரத்தைப் பெற்றவரைப்போல அச்சிவபெருமானையும் 
எண்ணிப் பேசினீரே! சோதி வடிவாயுள்ள சிவபெருமான்மீது நான் பாணங்களைத் தொடுக்கினும் செல்லுமா? 
திருக்கரமும் திருநகையும் திருக்கண்ணும் திருமேனியும் அக்கினியாக உள்ள சிவபெருமானை நான் எய்யும்படி 
செல்வேனாயின், இவ்வுயிர்கொண்டு உய்யுந்திறம் உண்டோ? சொல்லும் சொல்லும். விருப்பு வெறுப்பில்லாத
பரம்பொருளை மயக்குவது எப்படி? ஐயையோ சிவபெருமானையும் பிறர்போல நினைந்தீரே! அவருடைய 
பேராற்றலைத் தொலைத்தல் யாவராலாயினுங்கூடுமா? பேசும் பேசும். 

    சூறைக்காற்று அடிக்கும் இடத்தே ஒருசிறுபூளை எதிர்க்குமாயின், சிவபெருமான் றிருமுன்னே சிறியேன் 
போர்செய்யப் புகுவேன். சிவபெருமானோடும் எதிர்ந்தவர்களுள் வலிதொலைந்து துயருற்றவரும் இறந்தவருமன்றி 
உய்ந்தவர் யாவர்? இவ் விட்டுணு முதலியோர் யாவரும் முன்னாளிலே பாணமாதல் முதலிய தத்தம் பணிகளைச் 
செய்யும்பொழுது, அவர்கள் கருத்தை அறிந்து சிவபெருமான் தமது திருநகையினாலே முப்புரங்களையும் எரித்தமையை 
அறியீரா? தம்மை வழிபடும் மார்க்கண்டேயரை வைதுகொண்டு பெருங்கோபத்தோடு எதிர்ந்த இயமனை 
எம்பெருமான் தமது திருவடியினால் உதைத்தமையை அறியீரா? முன்னாளிலே நீரும் விட்டுணுவும் 'யானே பரம்பொருள்' 
'யானே பரம்பொருள்' என்று வாதிக்கும்பொழுது, எம்பெருமான் எழுந்தருளிவந்து, தம்மை இகழ்ந்த உம்முடைய 
உச்சிச் சிரசைக் கொய்தமையை மறந்தீரா? சலந்தரன் முதலிய அசுரர்கள் பலர் எம்பெருமானோடு எதிர்ந்து 
இறந்தொழிந்தமையைக் கேட்டிலீரா? உம்முடைய குமாரனாகிய தக்கனுடைய யாகத்திருந்தவர் யாவரும் எம்பெருமானால் 
விடுத்தருளப்பட்ட வீரபத்திரக் கடவுளினாலே மானமிழந்து வலிதொலைந்து இறந்தமையைப் பார்த்திலீரா? 

    திருப்பாற்கடலினின்றுந் தோன்றி விட்டுணுவும் அஞ்சி ஓட்டெடுக்கும் வண்ணம் துரந்த ஆலாகல         
விஷத்தை உண்டருளினாரே! உமாதேவியுடைய திருக்கை விரலிற்றோன்றி உலகெங்கும் பரந்த கங்கையை 
ஓரணுவைப்போலச் சடையிற் கொண்டருளினாரே! தம்மை இகழ்ந்த நரசிங்கத்தையும் யானையையும் 
புலியையும் உரித்து அவற்றின் தோல்களைப் போர்வையும் உடையுமாகக் கொண்டருளினமையைப் 
பார்த்திலீரா? தமது பெருமையை ஆராயாது யாவராயினும் அகந்தை கொள்வராயின், உடனே அவருடைய 
வலிமையைத் தொலைத்தல் சிவபெருமான் செயலென்பது அறியீரா? கடைநாளிலே உலகங்களெல்லாம் 
சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றும் ஓர் பொறியினாலே பொடி படுமென்பது, ஐயையோ,
 உமக்கு விளங்காதா? இத்தன்மைத்தாகிய முடிவி லாற்றலையுடைய சிவபெருமானை நான் என் கருப்புவில்லையும்
 புட்ப பாணத்தையுங்கொண்டு பொரச் சிறிதுந் துணியேன். தம்முயிர்மீது விருப்பில்லாதவரே இது செய்யத் துணிவர். 
ஆதிகாலத்தில் உலகத்தைப் படைக்கும் பொருட்டுத் தம்மோடு பிரிவில்லாத அருட்சத்தியையே தமக்கு மனைவியெனத் 
தாமாக இருத்தியருளிய பெருங்கருணைப் பெருமானை நானா மயல் செய்வது! இது நன்று நன்று" என்றான்.

    மன்மதன் இவ்வாறு கூறி மறுக்கவும், பிரமதேவர் மனக்கவலை கொண்டு, சிறிது பொழுது ஆலோசித்து, 
பெருமூச்செறிந்து, மன்மதனை நோக்கிச் சொல்வாராயினார்: "நீ சிவபெருமானுடைய பெருமையை எடுத்துப் 
பேசினாய். இது சத்தியமே. சிவபெருமானைப் பொருதல் எளிதா, யாவருக்கும் அரிதன்றோ! ஆயினும், தம்மை 
அடைந்தோரது துன்பத்தை ஒழித்தருளும் எம்பெருமானுடைய திருவருளினால் இக்கருமம் உன்னாலே முடியும். 
பிறரான் முடியுமா, முடியாது. எல்லார் செயலும் இறைவன் செயலேயன்றிப் பிறிதன்று. அவருடைய திருவருளையின்றி 
ஓரணுவும் அசையாது, யாவும் நில்லா. நீ இப்பொழுது அவரிடத்தே செல்லக்கடவாய். உன் செயலும் அவர்செயலே. 

    இறுமாந்து தம்மைப் புகழும் தேவர்கள் யாவரும் மருளும் வண்ணம் எம்பெருமான் ஓரியக்க வடிவங்கொண்டு 
வந்திருந்து ஒரு துரும்பை நிறுவி, அனைத்தும் தஞ்செய்கையெனக் காட்டியருளினாரே. நம்மாலும் சிலமுற்றுமென்றல் 
நாணன்றோ? உயிர்ப்பொருளும் உயிரில் பொருளுமாகிய யாவும் பாவைபோலும், அவற்றை ஆட்டுவிப்பவர் 
சிவபெருமானே. ஆராயுங்கால், நம்மால் ஒன்று ஆகுமா! மன்மதனே, இதனை நீ இந்நாள்காறும் அறிந்திலையா! 
நீ விரைந்து அவரைப் பொரும்வண்ணம் செல்லக்கடவாய்; அதுவும் அவரருளே. இன்னும் சொல்வேன் கேள். 
துன்பமனுபவிப்போர் யாவராயினும் தமக்கு உதவிசெய்யும்பொருட்டு இரந்தாராயின், ஒருவன் அது செய்யாது 
மறுத்துத் தன்னுயிரைத் தாங்குதல் உலக நடைக்குத் தக்கதா? ஒருவன் பிறருக்கு யாதாயினுமோருதவியைச் 
செய்யவல்லனாயின், தானே செய்தல் உத்தமம், அவர் சொல்லியபின் செய்தல் மத்திமம், சொல்லிய பின்பும் 
பலநாண் மறுத்துப் பின் செய்தல் அதமம். யாவராயினும் துன்பமுழந்து வருந்துவராயின், அதனை நீக்குதற் 
பொருட்டுத் தம்முயிரை விடினும், அது தருமமே. 

    மறுத்தாராயின், பாவமும் பழியும் நீங்காவாம். ஒருவன் தானுய்தலே பொருளாகக்கொண்டு பிறருக்கு, 
உதவி செய்யா தொழிவனாயின், அவன் சிறியோனே; அவன் கழித்த நாள் நன்னாளாகுமா? அவன் வாழ்க்கை 
பொய்கையின் மலர்ந்த கோட்டிபோலும். விட்டுணுவைப் பொருது வென்ற ததீசி முனிவர் விருத்திரனைக் 
கொல்லும்பொருட்டு இந்திரன் வந்திரப்பத் தம் முதுகெலும்பைக் கொடுத்து உயிர்விட்டமையை நீ கேட்டிலையா? 
எம்பெருமான் திருப்பாற்கடலினின்றுந் தோன்றிய ஆலாகல விஷத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தமருளிச்    
செய்தமையை நீ சிறிதும் அறிந்திலையா? அவ்வாலாகலம் தாக்கும்பொழுது 'வருந்தாதொழியுங்கள்' என்று 
சொல்லி, விட்டுணு ஒருகணமாயினும் ஊக்கத்தோடு எதிர்ந்து நின்று நம்மைக் காக்கும் பொருட்டுத் தாம் 
கறுத்தமையை நீ கண்டிலையா? 

    யாராயினுமொருவர் பிறர்மீது அன்புகூர்ந்து அவருக்கு உதவிசெய்ய விரும்புவராயின், அதனாலே 
தமக்கு வரும் பெருங்கொடுந் துன்பத்தையேனும் மரணத்தையேனும் பாரார்; புகழொன்றே பயனாகக் கொள்வர். யாவரினும் 
வலிய சூரபன்மனுடைய ஏவலினாலே நாமெல்லாம் துன்பமுற்று வருந்துகின்றோம். இனி அது நீங்கும்படி 
சிவபெருமான் ஒரு திருக்குமாரரைத் தரும்வண்ணம் பஞ்சபாணங்களைச் செலுத்தும் பொருட்டு உன்னை நாம் 
வேண்டுகின்றோம். ஆதலால்,நமது துன்பத்தை ஒழிக்கும் பொருட்டு உனக்கு மரணம் வரினும் அதைத் தவறாகக் 
கொள்ளாதே. புகழைத் தேடுவோர் யாது வரினும் எதிர்செல்வர். இனி மறுத்துப் பேசாதே; நாம் பணித்தபடி 
செல்லக்கடவாய்'' என்றார்.

    பிரமதேவர் இவ்வாறு சொல்லவும், மன்மதன் துயரங்கொண்டு "நான் சிவபெருமானுக்கு 
மாறுகொண்டு பொரமாட்டேன். இஃதன்றி எனக்கடுத்ததொன்று சொல்லும், செய்வேன்'' என்றான். 
உடனே பிரமதேவர் கோபங்கொண்டு, "நாம் நயந்து சொல்லிய சொல்லை மறுத்துவிட்டாய். 
நாஞ்சொல்லியபடி செய்வாயாயின், உய்வாய். இன்னும் மறுப்பாயாயின்,  உனக்குச் சாபமிடுவேம். 
யாது துணிவு? சொல்வாயாக'' என்றார். மன்மதன் அதுகேட்டு, வருந்திப் பெருமூச்செறிந்து, "நான் இனி 
யாது செய்வேன்'' என்று கிலேசித்து, தன் மனசைத் தேற்றிக்கொண்டு, பிரமதேவரை நோக்கி, "சுவாமீ, 
நான் நீரிடுஞ் சாபத்தினாலே முன்னை யியல்பிழந்து துன்பமனுபவித்து வருந்துதலினும் சிவபெருமான் 
றிருமுன் சென்று பாணங்களைத் தொடுத்து மாளினுஞ் சிறந்தது; அங்ஙனம் மாண்டாற் பின்னும் உய்யலாம். 

    நீர் கோபிக்கவேண்டாம். நான் இன்று சிவபெருமானோடு போர்செய்யப் போகின்றேன்" என்றான். 
பிரமதேவர் மனமகிழ்ந்து, ''மன்மதனே, நீ நாம் பணித்தபடி செய்யத் துணிந்தது நன்று நன்று. சிவபெருமானிடத்தே 
உன்னை விடுத்து யாமிங்கிரேம், தொடர்ந்து பின்னே வருவேம். அஞ்சாதே, போ" என்று ஏவினார். அப்பொழுது 
இந்திரன் மன்மதனை நோக்கி, "மைந்தனே, நான் தேவர்களோடும் துன்பமனுபவித்துச் சிறுமையுற்றமை 
உனக்குத் தெரியுமே. நமக்கு வாழ்வு தருங் கருத்துடையையாயின், சிவபெருமான் உமாதேவியைத் 
திருக்கல்யாணஞ் செய்யும் வண்ணம் புரியக்கடவாய்" என்றான்.

    அதுகேட்ட மன்மதன் அங்குநின்று நீங்கி, தன்னகரத்தை அடைந்து, தன்மனைவியாகிய இரதிக்கு 
அவ்வியற்கையைச் சொல்லி, அவளைத் தெளிவித்து ஒருப்படுத்திக்கொண்டு, புட்ப பாணங்கள் இட்ட தூணியை 
முதுகிலே கட்டி, மாந்தளிராகிய உடைவாளை அரையிலே வைத்து, வில்லைக் கையிற்கொண்டு, குயில்கள் 
காகளமாகவும் கடல்கள் முரசமாகவும் ஒலிக்க, திரைகள் சாமரமாக அசைந்து செல்ல, மற்சக்கொடி செல்ல, 
சந்திரன் குடையாக நிழற்ற, கிளிகளாகிய குதிரைகள் பூண்ட தென்றலாகிய தேர்மீது இரதியோடுமேறி, 
தன்னுலகத்தை அகன்று, துர்ச் சகுனங்கள் அளவில்லாதன நிகழ, திருக் கைலாசமலையை அணுகினான். 

    தூரத்தே திருக்கைலாச மலையைக் கண்டு தேரினின்றுமிறங்கி, வணங்கிக்கொண்டு, தனக்கு அயலில் 
வந்த பரிசனத்தை அங்கு நிறுத்தி, புலியைத் துயிலுணர்த்தப் புகும் மான்போல இரதியோடு துணிந்து சென்றான். 
திருக்கைலாசமலை மேல் ஏறி, அங்கே புணர்ச்சியின்றி இருந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் காமப்பற்றை 
விளைவிக்க நினைந்து, தன் கைவில்லை வளைத்துப் புட்ப பாணங்களைத் தொடுத்தான். சிவபெருமானுடைய 
திருக்கோயிலின் முதற் கோபுர வாயிற்கண் எழுந்தருளியிராநின்ற சிவானுபூதிப் பெருவாழ்வாகிய திருநந்திதேவர் 
அதுகண்டு,கோபித்து, "இது மன்மதனுடைய செய்கையே'' என்று திருவுளங்கொண்டு, "உம்" என்று உரப்பினார். 

    அதனால் மன்மதனுடைய பாணங்கள் மிருகங்கண்மேலும் பறவைகண்மேலும் செல்லாது 
ஆகாயத்திலே தடைப்பட்டு நின்றன. மன்மதன் அதுகண்டு, திருநந்திதேவருடைய காவலையும் 
ஆணையையும் நோக்கி, பெருமூச்செறிந்து, நடுநடுங்கி, விம்மி, அவர் திருமுன் விரைந்துசென்று, 
அவரை வணங்கி எழுந்து, அஞ்சலிசெய்து நின்று, தோத்திரம் பண்ணினான். திருநந்திதேவர் 
மன்மதனை நோக்கி, "நீ இம்மலைக்கண் வந்தது என்னை'' என்று வினாவியருள, மன்மதன் 
பிரமதேவருடைய புணர்ப்பனைத்தையும் திருநந்திதேவருக்கு மெய்ம்மையாக விண்ணப்பஞ் செய்தான். 
அதுகேட்ட திருநந்திதேவர், தமது திருவுளத்திலே இவ்வாறு எண்ணுவாராயினார்: "பிரமன் முதலிய தேவர்கள் 
தங்கள் துன்பம் நீங்கு நிமித்தம் இம்மன்மதனை விடுத்தார்கள். சிவபெருமான் தாம் யோகத்திருக்கும்பொழுது 
யாவர் வரினும் உள்ளே விடுக்கலாகாதெனவும், மன்மதனை மாத்திரம் விடுக்கலாமெனவும், எனக்குப் 
பணித்தருளினார். 

    பசுவைக் கொன்று யாகஞ்செய்து பின்னர் அப்பசுவை முன் போல எழுப்பும்படி வேதஞ்சொல்லியவாறு
போல எம்பெருமானும் மன்மதனைக் கொன்று உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து, பின்பு அவனை 
முன்போலவே எழுப்பும்படி திருவுளங்கொண்டருளினர்போலும். ஆதலால், இது அருளே, இவன் வரவும் ஆணையே" 
என்று நினைந்து, மன்மதனை நோக்கி, ''நீ சிவபெருமான்றிருமுன் செல்லல் வேண்டுமா" என்றார். மன்மதன் 
வணங்கி நின்று, "சுவாமீ, அடியேனுக்கு மரணம் வரினும் சிவபெருமான்றிருமுன் செல்லுதற்கு உடன்பட்டு 
இங்கு வந்தேன். அதற்கியைந்த வகைமையை அருளிச்செய்யும்' என்று விண்ணப்பஞ் செய்தான். திருநந்திதேவர் 
'நீ சிவபெருமான்றிருமுன் செல்ல விரும்பினையாயின், மேலை வாயிலாலே செல்லக்கடவாய்'' என்றார்.

    மன்மதன் வணங்கி விடைபெற்றுக்கொண்டு, மேலை வாயிலாலே சென்று, தேவதேவராகிய சிவபெருமான் 
அக்கினிமலைபோல மௌனத்தோடு எழுந்தருளியிருந்த திருவெல்லையை அணுகினான். அணுகியவுடனே,
ஒப்பில்லாததொரு சரபம் இருந்தமை கண்ட சிங்கக்குட்டிபோலச் சிவபெருமான் எழுந்தருளியிருந்தமை கண்ட 
விட்டுணு குமாரனாகிய மன்மதன் அஞ்சி, சரீரமெல்லாம் வேர்ப்ப நடுநடுங்கி, தன்கையிற்கொண்ட படையோடு 
அவசரமாக விரைவில் வீழ்ந்தான். உடனே இரதி "ஐயையோ இறந்தான்போலும் ' என்று துன்பங்கொண்டு, 
அவனை எடுத்துக் கையிற்றாங்கித் தேற்றினாள். மன்மதன் அறிவுபெற்று, "தந்துயரொழித்தலொன்றே 
பயனாகக் கொண்ட பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள், திருநகையினாலே முப்புரத்தையும் எரித்தருளிய 
மகாதேவரைப் பொரும்வண்ணம், என்ன இங்கு விடுத்தார்கள். 

    தீவினையேற்கு இப்போதே மரணம் வந்தணுகியது  இதற்கும் ஐயமுண்டா! மகாதேவர் எழுந்தருளியிருக்கும் 
இத்திருக்கோலத்தைக் கண்டவுடனே அஞ்சி நடுநடுங்கி அவசமாயினேனே! இவ்வியல்புடைய சிறியேன் கைக்கொண்ட 
பாணங்களா இம்மகாதேவரை வெல்வன?  இதனைப் பிரமனும் தேவர்களும் அறியார்கள் போலும். பிரசண்ட வாயு 
முன்னே தீபத்தைப் போக்கினால் அது நிற்குமா. அதுபோலவே தேவர்கள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத இப்பரம் 
பொருளுக்கு முன்னே சிறியேனை விடுத்தார்கள். இம்மகாதேவருடைய திருநோக்கினாலே இனிச் சிறிது பொழுதினுள்ளே
 நான் நுண்பொடியாவேன். சருவ லோகங்களையும் சங்கரிக்கும் இம்முழுமுதற் கடவுளைப் புட்பபாணங்கொண்டு 
நானா பொர வல்லேன்! இது நகைப்புக் கிடமன்றோ! இது விதியின்செய்கையே, விதியை யாவர் கடக்கவல்லர்! பிரமனாலும் 
முடியாதன்றோ! இவையெல்லாம் சிவன் செயலே. யாது முடியுமோ! அறியேன். நான் இவ்வாறு தூங்கிக் கிடத்தலாகாது. 
இனி விரைந்தெழுந்து, வில்லை வளைத்துப் புட்ப பாணங்களைப் பூட்டி, எம்பெருமான் பக்கத்தே நின்று, 
வல்லவாறு செய்வேன். மேலே பட்டவா படுக" என்று நினைந்து, கீழ்விழுந்த வில்லை எடுத்து வளைத்து புட்ப பாணங்களைப் 
பூட்டிக்கொண்டு, இரதி தன்னை அகலாது செல்ல, சிவபெருமானுக்கு ஒருபக்கத்திலே போய்ப் பொரும்வண்ணம் 
முயன்று நின்றான். 

     மன்மதன் இங்கே நிற்க, மனோவதி நகரத்திலே பிரமதேவரை இந்திரன் வணங்கி, 
"சுவாமீ, நீர் மன்மதனைச் சிவபெருமானிடத்து விடுத்தீரே,  அவன் செய்யும் போரைப் பார்க்கும் வண்ணம் 
நாமெல்லாம் போதல் வேண்டும்" என்றான். பிரமதேவர் அதற்கியைந்து, இந்திரன் முதலிய தேவர்களோடு 
சென்று, திருக்கைலாசமலையின் மீது ஒரு பக்கத்தே போய், சிவபெருமானைத் துதித்து, மன்மதனுடைய 
செயலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

    மன்மதன் "நான் நினைத்தது முடிப்பேன்" என்று, புட்ப பாணங்களைந்தையும் சிவபெருமான்மீது 
செல்லவிட்டான். அவை திருமேனிமீது படுதலும், சிவபெருமான் மன்மதனைச் சிறிதே பார்த்தார். பார்த்தவுடனே
மன்மதனை அக்கினி வடிவாகிய நெற்றிக்கண் விரைந்து சுட்டது. திருக்கைலாச மலையெங்கும் புகை பரந்தது. 
பரத்தலும், கீழைக் கோபுர வாயிலின் கண் எழுந்தருளியிருந்த திருநந்திதேவர், அதுகண்டு தம்மைச் சூழ்ந்த 
கணங்களை நோக்கி, ''உள்ளே சென்ற மன்மதன் இறந்துவிட்டான். மன்மதனைப் பொடித்தது எம்பெருமானுடைய 
நெற்றிக்கண்ணுமிழ்ந்த அக்கினி யன்று, சிவபெருமானை எய்வேனென்று துணிந்து சொல்லி இங்கு வந்த 
அவன்செயற்கையே அவனைச் சுட்டதுபோலும். இனி இரதியானவள் தன் கணவன் இறந்தமை கண்டு புலம்பி 
எம்பெருமானை வந்திரப்ப, எம்பெருமான் மன்மதனை உயிர்ப்பித்தருளுவர்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அதுகேட்ட கணர்கள் சருவான்மாக்களும் உய்யும்பொருட்டுத் திருவுளங் கொண்டருளும் எம்பெருமானுடைய 
திருவருணீர்மையை எடுத்துத் துதி செய்துகொண்டிருந்தார்கள். சிவபெருமான் மன்மதனை எரித்துவிட்டு, முன்போலவே 
மௌனத்தோடு எழுந்தருளியிருந்தார். இரதி தன் கணவன் இறந்தமை கண்டு, துயரங் கொண்டு அறிவிழந்து, 
கண்ணீர்சொரிய உடம்பெங்கும் வேர்வை தோன்றக் கீழே விழுந்தாள். சிறிது பொழுது சென்றபின், அறிவு வருதலும், 
கையினாலே வயிறலைத்துப் புலம்புவாளாயினாள்: "இலக்குமி குமாரனே, என்னுயிரே, விட்டுணு புதல்வனே, 
சம்பரனுக்குப் பகைவனே, கருப்பு வில்லைக் கையிற்கொண்ட வீரனே, நீ செம்பவள மலையைப் போலும் 
சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணினால் எரிந்தாயே! தேவர்களுடைய கண்களெல்லாம் உறங்கினவோ! 
பிரமதேவரும் மகிழ்ந்தனரோ! 

    முன்னாளிலே முப்புரங்களை எரித்தருளிய மகாதேவர் மேலே போர் செய்யப்போதல் முறையோ
 முறையோ' என்று நான் சொன்னாலும் கேட்டாயில்லையே! தேவர்களுடைய பணியைச் செய்வதே துணிவாகக் 
கொண்டாயே! உன் சரீரம் பொடியாய்ப் போயிற்றே! இது கண்டும் உய்வாருண்டா! என்னுயிராகிய நீ 
இறந்தபின்னும் நான் தனியே இருக்கலாமா! மகாதேவருடைய நெற்றிக்கண் உனக்கு மாறாக, உன்வலிமை. 
இலதாக, உன் சரீரமோ நீறாக, திருக் கைலாசமலையெல்லாம் நெருப்பாக, கவலை தேவர்களுடைய நெஞ்சத்ததாக,
ஆறாத பெருந்துயரம் எனக்காக, நீ எங்கே ஒளித்தாய்? அருவாயேனும் சொல்லாயோ! ஒன்றும் பேசாதிருக்கின்றாயே! 
என்கணவனே, உனக்கு நான் யாதாயினுங் குறை செய்ததுண்டா! தேவர்களிடத்தோ, இந்திரனிடத்தோ,உன்னை 
இங்கு விடுத்த பிரமனிடத்தோ, 'சிவபெருமானுடைய மௌன நிலையைச் சிதைப்பேன்' என்று இங்கு விரைந்து 
வந்த உன்னிடத்தோ, நீ பொடியாயிறந்த இந்தப்பழி யாரிடத்துச் சென்றதையா! 

    சிவ பெருமானுடைய யோகத்தைத் தவிர்க்க வேண்டின், தேவர்களெல்லாரும் இறந்தார்களோ! என்கணவனே, 
நீ மாத்திரமா இலக்காய் நின்றாய்! உன்னைக் கொல்லாமற் கொன்றார்களே! என்னுயிருக்குங் கொலை சூழ்ந்தார்களே! 
பொல்லாதவர்களுக்கு நன்மை செய்வது தம்முயிர் போகும் பொருட்டன்றோ? நான் என்ன பாவஞ்செய்தேனோ! 
என்போலும் மகளிருக்கு என்னவிடர் செய்தேனோ! முன்னை விதியை அறிவேனோ! ஐயையோ இப்படி முடிந்ததே! 
என்காவலவோ, தமியேனைக் காத்திடாயோ! சிவபெருமானை நோவதற்கு நீதி உண்டோ! உன்முடியைக் காணேனே! 
அழகொழுகாநின்ற உனது திருமுகப் பொலிவைக் காணேனே! இரத்தினாபரணங்கள் விளங்காநின்ற புயங்களைக் 
காணேனே! மார்பினழகைக் காணேனே! புட்ப பாணங்களைக் காணேனே! வில்லைக் காணேனே! போர் செய்யுங்
கோலத்தைக் காணேனே! நான் என்செய்வேன், என்செய்வேன்! 

    என் கணவா,  என்னையொழித்து எவ்விடத்தே இருக்கின்றாய்! அந்நாளிலே அக்கினி சாக்ஷியாக, 
தேவர்களும் பிரம விட்டுணுக்களுங் காண, என்னை மங்கலியந் தரித்து விவாகஞ் செய்தபொழுது 'நான் உன்னைப் 
பிரியேன்' என்று சத்தியஞ் செய்தாயே! வேனின் மன்னாவோ மன்னாவோ, என்னைத் தனியே விட்டுப்போதல் நீதியோ! 
சொல்லு. போ என்று உன்னை இங்கு விடுத்த தேவர்களெல்லாம் பொடியாய்ப் போன உன்னை வா என்று 
விரைந்தெழுப்ப மாட்டார்களோ! உன் பிதா மிக வலியவன் என்று சொல்வார்களே! ஓவென்று நான் இங்கே அழவும், 
வந்தானில்லையே! உறங்கினானோ! எரிந்து போவாயென்று உன் சிரத்தில் விதித்திருந்தால், அவரையெல்லாம் 
நான் வெறுக்கலாமோ? பிரமாவையும் இந்திரனையும் உன் பிதாவாகிய விட்டுணுவையும் முனிவர்களையும் 
மற்றை யாவரையும் உன்னுடைய புட்ப பாணத்தினால் மருட்டி வென்றாய்; 

    அதுபோலவே சிவபெருமானையும் நினைந்து, இப்படி யழிந்தாயே.  இது விளக்கில் வீழும் விட்டிலின் 
செயல்போலுமன்றோ! பூஞ்சோலையிலே பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடிப் பூக்கொய்து, புட்ப சயனத்தின் 
மீது சிறுதென்றல் இனிது வீச, பச்சைக் கர்பூரங் கலந்த சந்தனச் சேறாடி, இருவருமாய்க் கூடித் துயில் செய்த 
வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையாயிற்றே! தம்மை மருமகனென்று அவமதித்த தக்கனுடைய 
வேள்வியை அழித்த மகாதேவரைப் போர் செய்யென்று தேவர்களெல்லாம் உன்னை விடுத்தார்களே! 
அவர்களாலே பொடிபட்டாயே! நானும் உன்னைப் போல ஆறாத பெருந்துயரத்தினால் எரிகின்றேன்! 
என்னுயிரே,நானும் அங்கே வருகின்றேன் வருகின்றேன்'' என்று புலம்பி வருந்தினாள்.

                திருச்சிற்றம்பலம்.

                மோன நீங்குபடலம்.

    பிரமா முதலிய தேவர்களெல்லாரும் மன்மதன் பொடிபட்டமையையும் சிவபெருமான் முன்போலவே 
மௌனத்தோடு எழுந்தருளியிருத்தலையுங்கண்டு, சரீரம் நடுநடுங்கி, கண்ணீர் வார, வேர்வை தோன்ற,
துன்பக் கடலின் வீழ்ந்து, அழுதார்கள்."நாமெல்லாம் உய்யும்வண்ணம் மன்மதனைச் சிவபெருமானிடத்தே 
விடுத்தேம், சிவபெருமான் அவனைப் பொடி படுத்தனர். தமது மௌனநிலையை விடுத்திலர், முன்போலவே 
எழுந்தருளியிருக்கின்றார். ஐயையோ இனி யாது செய்வேம்" என்று அயர்ந்தார்கள். 

    "மன்மதனைப் பொடிபடுத்திய எம்பெருமானுடைய மௌன நிலையை உபாயத்தினாலே நீக்குதல் கூடாது; 
அவர் நம்மைத் துயரத்தினின்றும் நீக்கிக் காத்தல் வேண்டுமாயின், நாமெல்லாம் அவரைத் துதிப்பதே கடன்' என்று 
கோபுரத்தின் புறத்தே சென்று துதிக்கலுற்றார்கள்: "நஞ்சை உண்டும், கங்கையைச் சூடியும், நெற்றியிலே 
அக்கினிக் கண்ணைப் படைத்தும், அசுரர்களைக் கொன்றும், முன்னாளிலே அடியேங்களைக் காத்தருளினீர். 
இப்பொழுது அருள்செய்யீராயின், புதல்வர்களாகிய எங்களுக்குப் பிதாவாகிய உம்மையன்றிப் புகலிடமாவார் 
யாவர்! அன்பர்கள் குற்றமே செயினும் குணமாகக் கொண்டருளும் எம்பெருமானே, உம்முடைய திருவடிகளே 
சரணம் என்று அடைந்தேம். நாம் நாடோறும் சூரபன்மாவினாலே நலிவெய்தி மாளலாமா! சிறிதாயினும் எமது 
துயரத்தைத் திருவுளங்கொண்டருளீரா? நீர் உமாதேவியாரைப் பிரிந்து யோகநெறி காட்டற்கண் உமக்கு ஓரிறைப் 
பொழுது மாத்திரமே சென்றது; எங்களுக்கோ பலயுகங்கள் சென்றன. இன்னும் நீர் புறக்கணித்திருப்பீராயின், 
நாமெல்லாம் உய்வது எப்படி! விட்டுணு முதலியோர் யாவரும் உம்மை நோக்கித் தவஞ்செய்து உம்முடைய 
திருவடிகளைப் பூசித்துத் துதிக்க,நீரே இப்பதங்களெல்லா வற்றையும் அருளிச்செய்தீர். 

    தோற்றமும் ஈறும் இல்லாதவராகிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் 
ஐந்தொழில்களையும் செய்யும் முழுமுதற்கடவுள் நீரே. இத்தன்மையையுடைய நீர் செய்யும் இத் தவநிலை 
எம்பொருட்டன்றி உம்பொருட்டன்றே. அடியேங்கள் முன் செய்த பெருங்கொடும்பாவத்தினாலே சிறியேங்களை 
இடராகிய வாளினாலே நாடோறும் அரிகின்றீர். இனி எங்களைக் காத்தருளும், அல்லது விரைந்து கொன்றுவிடும். 
இவ்விரண்டினுள் எது உமக்குப் பிரீதியோ அது செய்யும். நீர் உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து அடியேங்களைக் 
காத்தருளும் வண்ணம் மன்மதனை உம்மிடத்து விடுத்தேம் அறிவிலாதேம். நீர் அவனைப் பொடிபடுத்தி முன்போலவே 
எழுந்தருளியிருக்கின்றீர். அடியேங்கள் இவ்வாறு வருந்தலாமா! இனியாயினும் சிறிது திருவுளமிரங்கீரா! 
நரசிங்க முதலிய மிருகங்களை உரித்து அவற்றின் றோல்களைத் தரித்தருளினீர். தக்கனுடைய யாகத்தை 
வீரபத்திரக் கடவுளைக் கொண்டு தடிந்தருளினீர். அதுபோலவே, சூரபன்மனைக் கொன்று, அடியேங்களுடைய 
துயரத்தை நீக்கியருளும்'' என்றார்கள்.

    பிரமா முதலிய தேவர்கள் உருகுகின்ற அரக்குப் போலச் சரீரம் தளர்ந்து, இவ்வாறே மனநொந்து 
அழுது துதித்தலும், அவர்களுடைய பாவம் முடிவதற்கு அணித்தாயினமையால், சிவபெருமான் திருவுளமிரங்கி 
திருநந்திதேவரை நினைந்தருளினார். அதனை அறிந்த திருநந்திதேவர் சிவபெருமான்றிருமுன் சென்று, 
நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலிசெய்து நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "பிரமன் முதலிய தேவர்களை 
நம்முன் அழைத்துக் கொண்டு வரக்கடவாய்" என்று பணித்தருள, திருநந்திதேவர் முதற்கடையில் வந்தார். 
அது கண்ட பிரமா முதலிய தேவர்களெல்லாரும் திருநந்திதேவரை வணங்கித் துதித்தார்கள். திருநந்திதேவர்
அவர்களை நோக்கி, "எம்பெருமான் உங்களை உள்ளே அழைத்துக் கொண்டுவரும் வண்ணம் பணித்தருளினார். 
வருந்தாதொழிமின், வாருங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    இத்திருவாக்குச் செவிகடோறும் வார்த்த அமிர்தம் போலப் புகுதலும், தேவர்கள் பேரானந்தப் பெருங்கடலின் 
மூழ்கி, ஆரவாரித்துச் சிவபெருமானைப் பாடியாடினார்கள். திருநந்தி தேவர் தேவர்களைச் சிவபெருமான் றிருமுன்னே 
கொண்டுசென்றுய்ப்ப,  அவர்கள் சிவபெருமானைத் தரிசித்துப் பலகாலும் விழுந்து நமஸ்கரித்து எழுந்து அஞ்சலி 
செய்து நின்று, தோத்திரம் பண்ணினார்கள். சிவபெருமான் அவர்கண்மீது திருநோக்கஞ்செய்து, 'உங்கள் துன்பத்தையும் 
வேண்டுகோளையுஞ்சொல்லுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குத் தேவர்கள் "பெருங்கருணைக்கடலே, 
அளப்பில்லாத யுகங்களாக அடியேங்கள் சூரபன்மனுடைய ஆணையினாலே துன்பப்படுகின்றேம். அடியேங்களுடைய 
துன்பத்தை நீக்குவோர் நீரன்றி வேறு யாருளர்? சூரபன்மனைக் கொல்லும் பொருட்டு ஒருகுமாரரைத் தந்தருளும் 
வண்ணம், இமையமலையின் மீது தவஞ்செய்யாநின்ற உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ் செய்தருளுக" என்று 
விண்ணப்பஞ்செய்தார்கள். சிவபெருமான் அதற்கியைந்து, "நீங்கள் வருந்தாதொழிமின். நாம் உங்கள்பொருட்டு 
இமைய மலைமீது தவஞ்செய்யும் உமையைக் கல்யாணஞ்செய்து, உங்கள் வருத்தத்தை நீக்குவோம். இனி 
நீங்களெல்லீரும் போங்கள்' என்று திருவாய் மலர்ந்தருளினார். பிரமா முதலிய தேவர்களெல்லாரும் வணங்கி, விடை
பெற்றுக்கொண்டு, துயர நீங்கி, மகாமேருமலைமீது சென்றார்கள்.

    இரதி அது கண்டு, எம்பெருமான்றிரு முன்னே வணங்கித் துதித்து, " முறையோ, முறையோ! சுவாமீ, 
பிரமா முதலிய தேவர்களுடைய புணர்ப்பினாலே அடியேனுடைய  நாயகன் இங்கே வந்து உம்மாலிறந்தான். 
அவன் செய்த குற்றத்தைத் திருவுளங்கொள்ளாது அருள்செய்க" என்று விண்ணப்பஞ் செய்தாள். 
சிவபெருமான் கருணை கூர்ந்து, "இரதியே, நீ புலம்பாதொழி.  நாம் இமையமலைமீது சென்று 
உமையை விவாகஞ்செய்யும் பொழுது உன்னாயகனை உயிர்ப்பித்தருளுவோம்;  நீ போகக்கடவாய்" 
 என்று அருளிச்செய்தார். இரதி அதுகேட்டு மனமகிழ்ந்து, வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
இமைய மலையிற்சென்று, ஓர்பக்கத்தே முகிலினது வரவை நோக்கும் மயில் போலிருந்தாள்.

    சிவபெருமான் உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து தேவர்களுடைய துன்பத்தை 
ஒழிக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, சனகர் முதலிய முனிவர்கள் நால்வரையும் நோக்கி, 
"மைந்தர்களே, ஞானயோகம் சொல்லற்பாலதன்று; அது இவ்வாறு மௌனத்தோடிருந்து நம்மை 
அறிவதேயாம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட முனிவர்கள் தெளிந்து 
மனமகிழ்ந்து, சிவபெருமானை மெய்யன்போடு வணங்கி நின்று, “கிருபா சமுத்திரமே, 
அடியேங்கள் முன்னை மயக்கம் நீங்கி உய்ந்தேம்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். சிவபெருமான் 
"இனி நீங்கள் நிட்டையிலிருந்து நமது  சாயுச்சிய பதத்தை அடையக்கடவீர்கள்'' என்று திருவாய் 
மலர்ந்து, விடைகொடுத்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            தவங்காண்படலம்.

    முனிவர்கள் சென்றபின்பு, சிவபெருமான் இமைய மலைமீது தவஞ் செய்யும் பார்ப்பதியம்மைக்குத் 
தம்மாட்டுள்ள அன்பையுங் காதலையும் யாவருக்குங் காட்டும் வண்ணம் திருவுளங்கொண்டு, கல்லாடையுடையும், 
சிகையும், விபூதியாலாகிய திரிபுண்டரமும், பூணூலும், கமண்டலம் பொருந்திய கையும், மழையையும், பனியையும் ,              
வெய்யிலையும் காக்கும் ஒலையும், தண்டும் உடைய ஒரு முதிய பிராமண வடிவங்கொண்டு இமைய மலையிற் 
சென்று, உமாதேவியார் தவஞ்செய்யுஞ் சாலையை அடைந்தார். கடைகாப்போராகிய மகளிர்கள் பலர் 
"இவர் பெரியவர்" என்று வந்து, அவர் திருவடிகளை வணங்கி நின்று, "முதியோரே, இம்மலைமீது வருதல் 
எளிதன்று; சுவாமிகள் வந்த காரியம் யாது" என்றார்கள். அதற்குப் பிராமணர் "பார்பதியம்மை செய்யுந் 
தவத்தைப் பார்க்க வந்தேன்'' என்றார்.

    உடனே சிலர் உமாதேவியிடத்தே சென்று, வயோதிகப் பிராமணருடைய வரவை விண்ணப்பஞ் 
செய்தார்கள். உமாதேவியார் "அவர் முதியவராயின், இங்கே அழைத்துக்கொண்டு வாருங்கள்" என்று பணித்தருள, 
அம்மகளிர்கள் பிராமணரை உமாதேவியார் திருமுன் கொண்டுசென்றுய்த்தார்கள். உடனே உமாதேவியார் 
'இவர் எம்பெருமானுடைய அடியவர்” என்று தொழுதார். அப்பொழுது தேவியாருக்கு மெய்த்துணையாயுள்ள 
விசயையென்பவள் ஓராசனமிட்டு, பிராமணரை அதன்மேல் இருத்தினாள். உமாதேவியாரும் பக்கத்திலே நின்றார். 
பிராமணர் உமாதேவியை விருப்பத்தோடு பார்த்து, 'உனதழகெல்லாம் அழிய, சரீரத்துள்ள தசை குன்ற, பெருந்தவஞ் 
செய்கின்றாய். யாது விரும்பினை? சொல்" என்றார். உமாதேவியார் விசயையுடைய முகத்தை நோக்கி, 
குறிப்பினாலே "இவருக்கு எதிர்மொழி சொல்லக்கடவாய்'' என்று கண் காட்ட, விசயை "சுவாமீ, இவ்வம்மையானவள் 
தன்னைச் சிவபெருமான் திருக்கல்யாணஞ்செய்து தம்மிடத்திருத்திக்கொள்ளும்பொருட்டுத் தவஞ்செய்கின்றாள்'' என்றாள்.

    பிராமணர் நகைத்து, பிரம விட்டுணுக்களாலும் அறியப்படாத சிவபெருமான் இவளுடைய தவத்துக்கு 
எய்துவாரா? எய்தினும், இவளை விருப்பத்தோடு விவாகஞ் செய்வாரா? இவள் அறியாதே தவஞ்செய்கின்றனள். 
சிவபெருமான் இவளுக்கு எளியவரா? இவள் வருந்தித் தவஞ்செய்தலால் ஓர்பயனுமில்லை. இத்துணைப் 
பெறலரும் பொருள் இவளுக்கு எளிதாகுமா? இவளுடைய அழகு பலகாலம் வறிதுபட்டதன்றோ! இனி இத்தவத்தை
 விரைந்து விடுதலே இவளுக்குக் கடன்" என்றார். 

    அதுகேட்டவுடனே உமாதேவியார் "ஐயையோ! எம்பெருமானுக்கு இவர் அன்பர், முதுகுரவர் என்று எண்ணினேன். 
இவர் இக்கடுஞ்சொல்லைச் சொல்வாரென்பது அறியேன்'' என்று திருவுளத்திலே கோபங்கொண்டு, வருந்திப் பெருமூச்செறிந்து, 
பொறுக்கலாற்றாமையால் நாணை விடுத்து, பிராமணரை நோக்கி, "தோற்றமும் இறுதியுமில்லாத மகாதேவர் 
என்கருத்தை முடியாது விடுவராயினும், நான் இத்தவத்தை விடுவேனோ! இன்னும் மிகக் கொடுந் தவத்தை 
அளப்பில்லாத காலஞ்செய்து உயிர்விடுவேன். நீ மிக மூத்தமையால் மயங்கினாய். பித்தனோ நீ'' என்றார். 
அதுகேட்ட பிராமணராகிய சிவபெருமான் மீட்டும் ஓர்புணர்ப்பைத் திருவுளங்கொண்டு, உமாதேவியாரை நோக்கி, 
"பெண்ணே, நீ விரும்பிய சிவனுடைய வளத்தினியல்பை நன்றாகக் கேட்டறிந்திலைபோலும். அதனை நாஞ் 
சொல்லுகின்றோம், கேள். சிவனுக்கு வஸ்திரம் தோல்; வாகனம் எருது; ஆபரணம் பாம்பு, எலும்பு, தலைமாலை, 
பன்றிக்கோடு முதலியன; போசன பாத்திரம் தலையோடு; போசனம் பிக்ஷையும் நஞ்சும்; நடனசாலை சுடுகாடு; 
அணிவன வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, மத்தம், கங்கை, பாம்பு முதலியன பல; சந்தனம் சாம்பர்; 
கையிற் றரிப்பன சூலம், மான், மழு, உடுக்கு, அக்கினி என்பன; சேனை பூதம். அச்சிவனுக்குத் தாயும் தந்தையும் 
சுற்றமும் உருவும் குணமுமில்லை. அவனுக்கு உரிய வளங்கள் இவைகளே. இவைகளெல்லாம் உன்னுடையனவாகும்
பொருட்டா நீ தவஞ்செய்து இளைத்தாய்? சிறப்புப் பொருந்திய அளப்பில்லாத வளங்களையுடைய மகாராசாவுடைய 
புத்திரிக்கு இது இயையுமா" என்றார்.

    பார்ப்பதியம்மையார் அது கேட்டவுடனே, திருச்செவிகளைத் திருக்கரங்களினாலே பொத்தி, "சிவசிவ'' 
என்றுசொல்லி, இரங்கி, பெருங்கோபங்கொண்டு, வருத்தமுற்று, பிராமணரை நோக்கி, "பார்ப்பானே, கேள். 
பரமபதியாகிய எம்பெருமானிடத்து உன்மனசிலே சிறிதாயினும் அன்பு நிகழ்ந்ததில்லை. நீ இச் சிவவேடங் 
கொண்டமை வேடுவர் காட்டினுள்ள பறவைகளைக் கவரும்பொருட்டுப் புதலை மேற்கொண்டமைபோலும். 
முன்னாளிலே தக்கனென்பானொருவன் உன்னைப்போலவே எம்பெருமானை இப்படி இகழ்ந்துபேசினதும் 
அதனால் அவன்பட்டபாடும் நீ கேட்டாயில்லையா! ஐயையோ! எம்பெருமானை இப்படி நீ என்முன் இகழ்ந்தாயே! 
பார்ப்பானே, நீ இந்நாள்வரையும் வேதங்களைச் சிறிதும் ஆராய்ந்தறிந்திலைபோலும். பார்ப்பார்கள், 
சிவபெருமானே பரம்பொருளென்று துணிந்து கூறா நின்ற வேதங்களை ஓதினாராயினும், அவ்வேதநெறியின் 
நில்லாது, தீயொழுக்கத்தையே மேற்கொண்டு சிவபெருமானை இகழ்ந்து இகழ்ந்து அவ்வதி பாதகத்தினாலே 
முத்தியெய்தாது பிறந்தும் இறந்தும் உழலும்வண்ணம், முன்னாளிலே இருடிகளாலே பெற்ற சாபம், ஐயையோ, 
உன்னையும் மயக்காது விடுமா! 

    செகற்பிதாவாகித் தங்களைப் பெற்றுத் தங்கள் தொழிலுக்கு அதிபதியாகித் தங்களுக்கு இன்றியமையாச் 
சிறப்பினையுடைய சிவபெருமானை நீங்கி, தங்கணவரை விடுத்துப் பிறர்பக்கமாகிக் கற்பினையிழந்த 
மகளிரைப் போலும் பார்ப்பார்களுடைய முறையே நீ செய்தாய். உன்னை நான் வெறுப்பதென்னை! ஆயினும், 
பார்ப்பார்களுள்ளே வேதத்தில் விதித்தபடி விபூதி உருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்களைத் தரித்து, 
சிவபெருமானுக்குத் தொண்டுசெய்வோரும் உண்டு. நீ அவர்போலச் சிவசின்னங்களைத் தரித்தும் 
சிவபெருமானை இகழ்ந்தாயெனின், அசுரர்களுள்ளும் உன்னைப் போலுந் தீயவர் இல்லை இல்லை. விருப்பு 
வெறுப்பில்லாத அநாதி பகவனை நீ இங்கே இகழ்ந்தனவெல்லாம் சருவான்மாக்களும் உய்யும்வண்ணம் 
பெருங்கருணையினாலே பூண்டருளுங் குறிகளென்று அறியக்கடவாய். இவையெல்லாம் எம்பெருமானுக்குப் 
புகழேயாம். அவருடைய இயல்பனைத்தும் யாவ ரறியவல்லவர்! நீ இகழ்ச்சிபோலப் பேசியவைகளெல்லாம் 
பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் தம்மை வழிபட்டுத் துதிக்க அவர்களுக்கு வலிமையையும் அதிகாரத்தையுங் 
கொடுத்தருளிய மகா தேவர் விருப்பும் வெறுப்புமின்றி உயிர்களுக்கு அருள்செய்யும் நிலையே என்று நினை. 
இவ்வாறே வேதமுதலிய உண்மை நூல்களெல்லாம் சொல்கின்றன. இவையெல்லாம் சித்த சுத்தியையுடைய 
பெரியோர்கள் அறிவர்கள். சிவநிந்தை செய்யும் அதிபாதகனாகிய உனக்குச் சொல்லொணாது: சொல்லிற் 
பாவம் பாவம்! பொய்வேடத்தவனே, புறம்பே போய்விடு" என்றார்.

    உடனே பிராமண வேடங்கொண்ட கள்வராகிய சிவபெருமான், ''பெண்ணே, உன்மேல் இச்சைகொண்டு 
வந்த என்செயலைக் கேளாது, என்னைப் புறத்தே போம்படி சொல்லுகின்றாய். இது தகுமா! நான் இங்கு வந்தது 
உன்னை விவாகஞ்செய்து கொள்ளற்பொருட்டே" என்றார். உடனே பார்ப்பதியம்மையார் திருச்செவிகளைப் 
பொத்தி, பொறுக்கலாற்றாது வருந்தி, சரீரம் பதைபதைக்க விம்மி, ''இக்கிழவன் போகான்; நானே போவேன்" 
என்று, தமது செந்தாமரைமலர்போலும் அருமைத் திருவடிகள் சேப்ப, அங்கோரிடத்தே போதலுற்றார். 
போதலோடும், பெருங்கருணைத் திருவிளையாட்டையுடைய சிவபெருமான் பார்ப்பதியம்மையாருடைய 
இயற்கையை நோக்கி, எல்லையில்லாத பேரருள் கூர்ந்து, பிராமண வேடத்தை ஒழித்து, பலகணங்கள் 
சூழ்ந்து துதிப்ப, இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். உமாதேவியார் அதுகண்டு, திருமேனி 
நடுநடுங்கி, நாணங்கொண்டு, பலகாலும் நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலிசெய்து நின்று, தோத்திரம்பண்ணி, 
"அளவற்ற அறிவினாலும் எட்டாத முழுமுதற்கடவுளே, உம்முடைய மாயையை அறிந்திலேன். அறிவொருசிறிதுமில்லாச் 
சிறியேன் உம்மை இகழ்ந்தமையைப் பெருங்கருணையோடும் பொறுத்தருளுக" என்று விண்ணப்பஞ்செய்தார். 

    அதற்குச் சிவபெருமான், "கேளாய், உமையே,நீ நம்மிடத்துள்ள அன்புமிகுதியினாலே முன்சொல்லியன 
வெல்லாம் துதியாகவே கொண்டோம். உன்னிடத்தே குற்றம் உண்டாயினன்றோ நாம் பொறுப்பது. இனி நீ கொடிய 
தவத்தினால் வருந்தாதொழி. நாளை உன்னை விவாகஞ்செய்ய வருவேம்'' என்று திருவாய்மலர்ந்து, மறைந்தருளினார். 
உமாதேவியார் திருவுள மிகமகிழ்ந்து, சிவபெருமானைச் சிந்தித்துத் துதித்துக்கொண்டிருந்தார்.  

    அங்குள்ள மகளிர் சிலர் மலையரையனிடத்துச் சென்று, சிவபெருமான் எழுந்தருளிவந்து பார்ப்பதியம்மைக்கு 
அருளிச்செய்தமையைத் தெரிவித்தார்கள். மலையரையன் மனத்துயரநீங்கி, விரைந்து தன்மனைவியாகிய மேனையோடு 
சென்று, உமாதேவியாரைத் தன்கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

            திருச்சிற்றம்பலம்.

            மணம்பேசுபடலம்.

    பார்ப்பதியம்மையாருடைய தவத்தைக் கண்டு திருவருள்செய்து,  திருக்கைலாசமலையை அடைந்து 
வீற்றிருந்தருளிய சிவபெருமான், சத்த விருடிகளைத் தந்திருமுன் வரும்வண்ணம், திருவுளத்தே நினைந்தருளினார்.
 அதனை அறிந்த இருடிகள் எழுவரும் மனம் அஞ்சி, சரீர நடுநடுங்கி, விரைந்து வந்து, சிவபெருமானை வணங்கி, 
அஞ்சலிசெய்து நின்று, "மகாதேவரே, பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் உம்முடைய ஏவலுக்கு உரியர்களாய் 
இருப்ப, அடியேங்களை நினைந்தருளினீர். அதனால் அவர்கள் செய்த தவத்தினும் அடியேங்கள் செய்த தவமே 
அதிகம்போலும். எம்பரம பிதாவே, நீர் சிறியேங்களைப் பெருங்கருணையோடு நினைந்தருளினமையால் 
உய்ந்தோம் உய்ந்தோம். அடியேங்கள் செய்த பெருங்கொடும் பாவங்களெல்லாம் நீங்கிவிட்டன. இனி ஒரு 
தீதுண்டாகுமா! அநாதியே தொடங்கி ஐந்தொழிலையும் இடையறாது செய்தருளும் பகவனே, நீர் அடியேங்களுடைய 
புன்மையை ஒழிக்கும் பொருட்டுத் திருவுளங் கொண்டருளினீர்! அடியேங்களால் விரைந்து செயற்பாலதனைப் 
பணித்தருளுக!" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். தேவதேவர் இருடிகண்மீது திருவருணோக்கஞ் செய்து,
 ''அன்பர்களே, நீங்கள் இமைய மலையரையனிடத்தே சென்று பார்ப்பதியை இன்றைக்கு நமக்கு விவாகஞ்செய்து 
தரும்வண்ணம் பேசிக் கொண்டு, விரைந்து நம்முன் வரக்கடவீர்கள்” என்று பணித்தருளினார்.

    இருடிகள் அத்திருப்பணியைச் சிரமேற்கொண்டு, சிவபெருமானை வணங்கி,நடந்து, இமையமலை 
யரையன் முன் செல்ல, அவன் தன் மனைவியோடும் எதிர்கொண்டு வணங்கி, அழைத்துக்கொண்டு சென்று, 
ஆசனத்திலிருத்திப் பூசித்துத் துதித்து நின்று, "இருடிகளே, உங்களுடைய திருவடித் தாமரைகள் படுதலால், 
இவ்விமையமலை மகாமேரு மலையைப் போலத் தூயதாகித் தலைமையும் பெற்றது. சிறியேனுடைய 
பிறவியும் இப்போழ்தே நீங்கியது. நீங்கள் அடியேனிடத்து வந்த நிமித்தம் யாது? சொல்லுக'' என்றான். 
அதற்கு இருடிகள் "அரசனே, உயிர்க்குயிராய் நின்ற சிவபெருமான் உன் புதல்வியாகிய பார்ப்பதியம்மையைத் 
திருக்கல்யாணஞ்செய்யத் திருவுளங்கொண்டு, உன்னோடு பேசும்பொருட்டு எங்களை விடுத்தருளினார்.
இதுவே எங்கள் வரலாறு' என்றார்கள்: 

    மலையரையன் அதற்கியைந்து, "சருவலோகைக நாயகராகிய சிவபெருமானுக்குச் சருவலோகங்களையும் 
சருவான்மாக்களையும் பெற்றும் நித்தியகன்னிகையாயுள்ள உமாதேவியைத் திருக்கல்யாணஞ்செய்து கொடுத்துச் 
சிறியேனையும் அடிமையாகக் கொடுப்பேன்" என்றான். மலையரையன் பக்கத்தே நின்ற மனைவியாகிய மேனை 
''பிரமதேவருடைய புதல்வனாகிய தக்கன் தன்புதல்வியை விவாகஞ்செய்துகொடுப்ப, சிவபெருமான் அவனுடைய 
சிரசைச் சேதித்தார் என்று பேசுகின்றார்கள். அதனை நினைந்து நினைந்து, மனம் அஞ்சுகின்றது. இவ்வாறாக, 
அவருக்கு எங்கள் புதல்வியை விவாகஞ்செய்துகொடுப்பது எங்ஙனம்" என்றாள். இருடிகள் மேனையை நோக்கி, 
"நீ வருந்தாதொழி. நீ உயர்வொப்பில்லாத சிவபெருமானுடைய செய்கையை நன்றாக அறிந்திலை. தக்கன் 
யாகத்திலே தமக்குக் கொடுக்கற்பாலதாகிய அவியை மாற்றித் தம்மை இகழ்ந்தமையால், சிவபெருமான் 
அவனுடைய சிரசைச் சேதித்தருளினார். தம்மை வழிபடும் அடியார்களுக்கு அனுக்கிரகமும், அல்லாதவர்களுக்கு 
நிக்கிரகமுஞ் செய்தல் சிவபெருமானியல்பு. இவ்வுண்மையை மேலோர் யாவரும் நன்குணர்வர்கள். 
நீயும் இதனை அறியக்கடவாய். வேறொன்றும் சிந்தனை செய்யாதே'' என்றார்கள். 

    மலையரையன் "இது சத்தியம்" என்றான். மேனை அஞ்சி நடுநடுங்கி, "ஐயையோ! எம்பெருமானுடைய 
செய்கையை அறியாதே சொல்லிவிட்டேன்' என்று நினைந்து, வருத்தமுற்று, இருடிகளுடைய திருவடிகளை 
வணங்கி நின்று. "பெண்ணறிவென்பது பெரும்பேதைமையை உடையதன்றோ! அடியேன் சிவபெருமானுடைய 
திருவருணீர்மையைச் சிறிதும் அறிந்திலேன். சிறியேன் சொல்லிய புன்மொழியைப் பொறுத்தருளுக'' என்றாள். 
இருடிகள் அவளிடத்தே திருவருள் செய்தார்கள். மலையரையன் இருடிகளை நோக்கி," ''அறிவு சிறிதுமில்லாத 
இவளுடைய புன்மொழியைத் திருவுளத்திலே கொண்டருளா தொழிமின். உமாதேவியைத் திருக்கல்யாணஞ் 
செய்யும் பொருட்டு எழுந்தருளி வரும்வண்ணம் சிவபெருமானுக்கு விண்ணப்பஞ் செய்யுங்கள்" என்றான்.

    அதுகேட்ட இருடிகள் எழுவரும் மன மிகமகிழ்ந்து, மலையரையனையும் மேனையையும் அங்கே நிறுத்தி, 
திருக்கைலாச மலையை அடைந்து, சிவபெருமான் றிருமுன் சென்று, அவரை வணங்கித் துதித்து, 
திருக்கல்யாணத்திற்கு மலையரையன் உடன்பட்டமையை விண்ணப்பஞ் செய்தார்கள். சிவபெருமான் "முனிவீர்காள், 
நீங்கள் உங்கள் செயலைச் செய்யும்பொருட்டுப் போங்கள்" என்று விடைகொடுத்தருள, இருடிகள் சிவபெருமானை 
வணங்கித் துதித்துக்கொண்டு, தங்கள் பதத்தை அடைந்தார்கள்.

                திருச்சிற்றம்பலம்.

                வரைபுனை படலம்.

    மலையரையன் தன் புதல்வியாகிய உமாதேவிக்குச் சிவபெருமான் வெளிப்பட்டு "உன்னை நாம் 
விவாகஞ்செய்வேம்'' என்று திருவாய் மலர்ந்தருளினமையையும் சத்தவிருடிகளைத் தன்னிடத்து விடுத்து 
மணம்பேசுவித்தமையையும் நினைந்து, மனமகிழ்ந்து, உமாதேவியைச் சிவபெருமானுக்குத் 
திருக்கல்யாணஞ் செய்துகொடுக்கக் கருதி, தேவத்தச்சனைத் தன்முன் வரும்வண்ணம் நினைந்தான். 
உடனே தேவத்தச்சன் அவனெதிர் வந்து, வணங்கி நின்று, "என்னை நீ நினைந்ததென்னை! என்னாலே 
செயற்பாலதாகிய பணி யாது? சொல்லுக" என்றான். அதற்கு மலையரையன் "நம்மை ஆட்கொண்டருளும் 
சிவபெருமானுக்கு யான் பெற்ற உலக மாதாவாகிய உமா தேவியைத் திருக்கல்யாணஞ் செய்துகொடுக்கக் 
கருதுகின்றேன். ஆதலால், நீ இந்நகர முழுதையும் அமராவதிபோல அலங்கரிக்கக்கடவாய்" என்றான்.

    அது கேட்ட தேவத்தச்சன் மனமகிழ்ந்து, அந்நகரத்தை அலங்கரிக்க நினைந்தான். இமைய 
மலையின்மேலே கோபுரங்களையும்,மன்றங்களையும், சூளிகைகளையும், நிலைத்தேர்களையும், 
மண்டபங்களையும், வீதிதோறும் பூம்பந்தர்களையும் செய்தான். பந்தர்களின்மேலே கொடிகளைக் 
கட்டி உள்ளே மேற்கட்டிகளினாலே அணிசெய்து, சாமரங்களையும் பூமாலைகளையும் தூக்கினான். 
வாழைகளையும் கமுகுகளையும் நாட்டினான். தோரணங்களைக் கட்டினான். எண்ணில்லாத தேவர்கள் 
கொணரும் பொருள்களெல்லாம் வைக்கும் வண்ணம் பலவகைப்பட்ட சாலைகளைச் செய்தான். 
கோயிலுக்கு ஒரு பக்கத்தே பதினாயிரம் யோசனைப் பரப்பினதாகிய ஒரு புரிசையையும், அதன் 
வாயில்கணான்கினும் கோபுரங்களையும், செய்தான். 

    அதனடுவே திருக்கல்யாண மண்டபத்தைச் செம்பொன்னினாலே செய்து, நிலத்தைச் சந்தனமும் 
கஸ்தூரியும் புழுகும் கலந்த பனிநீரினாலே பூசி, நறுமலர்களைத் தூவினான். தேவர்களெல்லாருக்கும் 
ஆசனங்களைச் செய்தான். பலநிறங்களானும் வேதிகைகளை இயற்றினான். கண்ணாடிகளையும் 
பூமாலைகளையும் சாமரங்களையும் வஸ்திரங்களையும் இரத்தின மாலைகளையுந் தூக்கினான். 
தேவர்களும் முனிவர்களும் அரம்பையர்களும் போலப் பிரதிமைகளைச் செய்து, சாமரம் வீசுதல் 
வீணைவாசித்தல் நடனஞ்செய்தல் முதலிய தொழில்களைச் செய்யுமாறமைத்தான். இவ்வாறு 
செய்யப்பட்ட திருமணச் சாலையினுள்ளே, சிவபெருமானும் உமாதேவியாரும் எழுந்தருளியிருக்கும் 
பொருட்டு, இந்திரநீல ரத்தினத்தினாலே ஒரு திவ்விய சிங்காசனஞ் செய்தான். குண்டமண்டல 
வேதிகைகளை வகுத்து, வேள்வித் திரவியங்களையும் அட்டமங்கலங்களையும் அமைத்தான். 

    பக்கத்திலே சூரியகாந்தம், சந்திர காந்தம், பவளம், முத்து, வைரம், பதும ராக முதலியவற்றினால் 
எண்ணில்லாத மண்டபங்களைச் செய்தான். புறத்திலே தாமரை முதலிய பூக்கள் மலரும் வாவிகளைச் 
செய்தான். மரகதம், பளிங்கு, வைரம், மாணிக்கம் பொன் முதலியவற்றால் பூந்தடாகங்களைச் 
செய்தான். கற்பகம், சந்தனம், அகில்,வாழை,கமுகு,பலா,மா,புன்னை முதலிய மரங்களைப் பற்பல 
ரத்தினங்களாலே செய்தான்.

    இவ்வாறே தேவத்தச்சன் தன்னினைவினாலே செய்து முடித்தலும், மலையரையன் அது கண்டு 
மகிழ்ந்து, பிரமா விட்டுணு முதலிய தேவர்களும் முனிவர்களும் தங்கள் தங்கள் மனைவியர்களோடும் 
உமாதேவியுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கவரும்பொருட்டுத் தூதர்களை எங்கும் விடுத்தான். 
தூதர்களுடைய வசனத்தை அறிந்து, தேவர்களும் முனிவர்களும் "நாமெல்லாம் சிவபெருமானை 
வணங்கிக்கொண்டு அவரோடும் வருவேம்'' என்றார்கள். துர்க்கையும், காளியும், சத்த நதிகளும், 
இலக்குமியும், சரசுவதியும், இந்திராணியும், இருடி பத்தினிகளும், அரம்பையர்களும் இமையமலையை 
அடைந்து, உமாதேவியாரை வணங்கினார்கள். இலக்குமி சரசுவதி முதலிய மகளிர்கள் தவத்தான் வருந்திய 
திருமேனியையுடைய உமாதேவியை வணங்கி, திருமணக் கோலஞ்செய்யும் பெரும்பேற்றைப் பெற்றார்கள். 
மகாமேரு மந்தரம் முதலிய சுற்றங்களும், கடல்களும், நாகங்களும், திக்குயானைகளும், பிறவும் வந்தன.

    மலையரையன் தன் சுற்றத்தாரோடு திருக்கைலாசமலையை அடைந்து, திருநந்திதேவர் உள்ளே 
விடுப்பச் சென்று, பரமசிவனை வணங்கி நின்று, "எம்பெருமானே, உலக மாதாவாகிய உமாதேவியைத் 
திருக்கல்யாணஞ் செய்யும் பொருட்டுத் திருவுளங் கொண்டருளினீர். சோதிட நூலோர் மங்கல தினமெனக் 
கூறிய பங்குனியுத்திரம் இன்றேயாகும். எம்பரமபிதாவே, இப்பொழுது இமைய மலைக்கு எழுந்தருளுக" என்று 
விண்ணப்பஞ் செய்தான். சிவபெருமான் மலையரையனை நோக்கி, "நாம் இப்பொழுதே எல்லையில்லாத 
கணங்கள் சூழ இமைய மலைக்கு எழுந்தருளுவோம். நீ முன்னே போகக் கடவாய்'' என்று திருவாய்மலர்ந்தருளினார். 
மலையரையன் சிவபெருமானை வணங்கித் துதித்துக்கொண்டு, மீண்டு தன்னகரத்தை அடைந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            கணங்கள் செல் படலம்.

    கைலாசபதி திருநந்திதேவரை நோக்கி, "நம்முடைய கல்யாணத்தைத் தரிசிக்கும்பொருட்டு, 
உருத்திர கணங்களையும், விட்டுணு பிரமன் இந்திரன் முதலிய தேவரையும், மற்றை யாவரையும் இங்கே 
தரக்கடவாய்' என்று பணித்தருளினார். திருநந்திதேவர் அத்திருப்பணியைச் சிரமேற்கொண்டு, 
அவர்களெல்லாரும் திருக்கல்யாணத்தின் பொருட்டு வரும்வண்ணம் நினைந்தார். அதனை யாவரும் 
அறிந்து, சிவபெருமானைத் துதித்து, விம்மிதமும் பத்தியும் பெருமிதமும் மகிழ்ச்சியும் திரண்டு செலுத்த, 
திருக்கைலாசத்துக்கு வருதலுற்றார்கள். காலாக்கினி ருத்திரர் பஞ்சவத்திரனும் இடப கேதுவும் உள்ளிட்ட 
ஆயிரங்கோடி கணங்கள் சூழ வந்தார். கூர்மாண்டேசர் எழுபத்திரண்டுகோடி பூதங்கள்சூழ வந்தார். 
ஆடகேசுரர் கோடி கோடி ருத்திரர்கள் சூழ வந்தார். வீரபத்திரக் கடவுள் நூறுபத்தாயிர கோடி பூதங்கள் சூழ வந்தார். 
அரிகர புத்திரராகிய ஐயனார் நூறுகோடி பூதங்கள் சூழ வந்தார். பதினோரு ருத்திரர்கள் வந்தார்கள். 

    ஈண்டுக் கூறிய உருத்திரர்களன்றி மற்றைப் பலபுவனங்களினுமுள்ள உருத்திரர்களும் வந்தார்கள். 
புத்திதத்துவத்திற் பொருந்திய பைசாசபுவனம், இராக்கதபுவனம், இயக்கபுவனம், காந்தருவபுவனம், 
ஐந்திரபுவனம், செளமியபுவனம், பிராசேசுரபுவனம், பிராமியபுவனம் என்னும் எட்டுப்புவனங்களினுள்ளோரும் 
வந்தார்கள். பவர் முதலிய அட்டமூர்த்திகள் எண்ணூறு கோடி பூதங்கள் சூழ வந்தார்கள். குண்டோதரர் 
நூறுகோடி பூதங்கள் சூழ வந்தார். கண்டகண்ணரும்பினாகியும் நூற்றிருகோடிபூதங்கள் சூழ வந்தார்கள். 
பானுகம்பர் நூற்றைம்பதுகோடி பூதங்கள் சூழ வந்தார். சங்குகன்னர் பலகோடி பூதங்கள் சூழ வந்தார். 
காளகண்டரும், தண்டியும், நீலரும், கரரும், விச்சுவமாலியும் மற்றைப் பூதர்களும் எண்ணில்லாத 
சேனைகளோடு வந்தார்கள். ஈசானர் நூற்றுமுப்பதுகோடி பூதங்கள் சூழ வந்தார். விட்டுணு,பிரமா, 
இந்திரன், திக்குப்பாலகர், தேவர்கள், சூரியன் சந்திரன் முதலிய கிரகங்கள், நக்ஷத்திரங்கள், சத்தமாதர்கள், 
அட்டவசுக்கள், விஞ்சையர்கள், இருடிகள் முதலிய யாவரும் வந்தார்கள். வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள்,
 பிருதிவி முதலிய பூதங்கள், உலகங்கள், நகரங்கள், காலங்கள் முதலியனவெல்லாம் தைவத வடிவங் 
கொண்டு வந்தன.

    இவ்வண்ணமே திருக்கைலாசமலையில் யாவரும் யாவும் வந்த தன்மையைத் திருநந்திதேவர் 
கண்டு மிகமகிழ்ந்து, உள்ளே புகுந்து, சிவபெருமானுக்கு விண்ணப்பஞ் செய்தருள, சிவபெருமான் 
"யாவரையும் இங்கே அழைத்துக்கொண்டு வரக்கடவாய்" என்று பணித்தருளினார். அது கேட்ட திருநந்திதேவர் 
முதற்கடையை அடைந்து, அங்கு நின்ற உருத்திரர்கள், தேவர்கள், முனிவர்கள் முதலிய யாவரையும் 
திருக்கோயிலினுள்ளே செல்ல விடுத்தார். விடுத்த காலையில், அவர்களெல்லாரும் திவ்விய சிங்காசனத்தின் 
மீது எழுந்தருளியிருக்கும் பரமகிருபாலுவாகிய சிவபெருமானைத் தரிசித்து, பேரன்போடு வணங்கி வணங்கி 
எழுந்து,சிரசின் மீது குவித்த கைகளோடு அவருடைய திருப்புகழைத் துதித்துக்கொண்டு சந்நிதியை 
அணுகினார்கள். திருநந்திதேவர் அங்கு நின்ற உருத்திரர் முதலிய யாவரையும் தம்முடைய திருவிரலினாலே 
வெவ்வேறாகச் சுட்டிக் காட்டி விண்ணப்பஞ்செய்தார்.

    அப்பொழுது பிரமதேவர் எம்பெருமான் அணியும்பொருட்டு முடி முதலிய பலவகைப்பட்ட 
திவ்வியாபரணங்களையும் படைத்து ஒருபொற்பீடிகையிலே கொண்டுபோய்த் திருமுன் வைத்து, 
வணங்கி நின்று, "எம் பரமபிதாவே, உமக்கு விருப்பும் வெறுப்பும் இல்லை. அடியேங்கள் உய்யும் பொருட்டுத் 
திருக்கல்யாணஞ் செய்யத் திருவுளங் கொண்டருளினீர். உமது திருமேனியிலுள்ள சர்ப்பாபரணங்களை 
ஒழித்து, இவ்விரத்தினாபரணங்களை அணிந்தருளுக" என்று விண்ணப்பஞ் செய்தார். அது கேட்ட மகாதேவர் 
திருப்புன்முறுவல்செய்து, "பிரமனே, நீ அன்போடு தந்தமையால் நாம் இவற்றை அணிந்தாற்போல மகிழ்ந்தேம்'' 
என்று திருவாய்மலர்ந்து, அவ்வாபரணங்களைத் தமது திருக்கரத்தினாலே தொட்டருளினார். பின்பு தமது 
திருமேனியிலுள்ள சர்ப்பாபரணங்களே இரத்தினா பரணங்களாகும் வண்ணம் திருவுளங்கொண்டருள, 
அவை அவ்வாறாயின. அது கண்டு,யாவரும் அற்புதமடைந்து, வணங்கினார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            திருக்கல்யாணப்படலம்.


    சிவபெருமான், இமைய மலைக்குச் செல்லத் திருவுளங்கொண்டு,தமது பக்கத்துள்ள கணநாதர்களுக்குக் 
குறிப்பாலுணர்த்தி, சிங்காசனத்தினின்றும் எழுந்து, திருநந்திதேவர் துதித்துக்கொண்டு முன்னே செல்ல, 
தேவர்களும் முனிவர்களும் புகழ, தும்புரு நாரதர்களும் விஞ்சையர்களும் இசை பாட, வேதாகமங்கள் துதிக்க, 
தமது செம்பொற்றிருக்கோயிலினின்றும் நீங்கி, தமது திருவடிகளைக் குண்டோதரருடைய புயத்தின்மீது வைத்து, 
சின்மயமாகிய இடபத்தின்மேல் ஏறியருளினார். எம்பெருமான் இடபத்தின்மீது தோன்றி விளங்க, பக்கத்து 
வந்தவர்களும் திருக்கோயிற் புறத்து நின்றவர்களுமாகிய யாவருங்கண்டு கண்களித்து, வணங்கித் துதித்து, 
கடல்போல ஆர்த்தார்கள். மகாதேவர் இடபமேற்கொண்டு எழுந்தருளும்போது, விநாயகக் கடவுள் 
ஐந்நூற்றேழு கோடிபூதங்கள் சூழ வந்து, வணங்கிக்கொண்டு, முன்னே சென்றருளினார். சூரியனும் சந்திரனும் 
குடையையும், வாயு சாமரத்தையும், வருணன் சாந்தாற்றியையும், இந்திரன் ஆலவட்டத்தையும், எடுத்துக்கொண்டு, 
பக்கத்தே தத்தம் பணிகளைச் செய்தார்கள். பூதர்கள் பலவகைப்பட்ட வாத்தியங்களை முழக்கினார்கள். 
எம் பெருமானுடைய ஏவலினாலே, உருத்திரர்களும், பிரம விட்டுணுக்களும், முனிவர்களும், பிறரும் தேர், 
விமானம், மிருகம்,பறவை முதலிய தங்கள் தங்கள் வாகனத்தின்மேற் கொண்டார்கள். இவ்வண்ணமே 
யாவருஞ் சூழ்ந்து செல்ல, சிவபெருமான் திருக்கைலாசமலையை அகன்று, உலகம் வாழும்வண்ணம் 
இமைய மலைமீது சென்றருளினார்.

    அதனையறிந்த மலையரையன் தன்சுற்றத்தாரோடும் எதிர்கொண்டு வணங்கி, தன்னுடைய 
ஓஷதிப்பிரஸ்தமென்னும் நகரத்துக்கு அழைத்துக் கொண்டு போயினான். சிவபெருமான் அந்நகரத்துள்ள 
வீதிகளைக் கடந்து, பார்ப்பதியம்மையாருடைய திருக்கோயிலுக்கு அணித்தாகச் சென்றருளினார். 
அப்பொழுது மலையரையனுடைய ஏவலினாலே, இருடிகள் பலபூரண கும்பங்களை ஏந்திக்கொண்டு வந்தார்கள்; 
மகளிர்கள் அட்டமங்கலங்களைக் கொண்டுவந்து காட்டினார்கள்; வேறுபல மகளிர்கள் நீராசனஞ் சுற்றினார்கள். 
திருமணச்சாலைக்கு முன் சென்றவுடனே, யாவரும் தங்கள் தங்கள் வாகனத்தினின்றும் இறங்க, 
ஞானநாயகராகிய சிவபெருமான் இடப வாகனத்தினின்றும் இறங்கியருளினார்.

    அப்பொழுது மேனை அரம்பையர்களோடு வந்து, எம்பெருமானுடைய திருவடிகளைக் காமதேனுவின் 
பாலினாலாட்டி, கைதொழுதுகொண்டு திரும்பினாள். உடனே சிவபெருமான் திருநந்திதேவர் கொண்டுவந்து 
வைத்த பாதுகையின் மேலே தம்முடைய அருமைத் திருவடிகளைச் சேர்த்தி இருபக்கத்தும் பிரமாவும் விட்டுணுவும் 
கைகொடுப்ப, தமது திருக்கரங்களினாலே பற்றிக்கொண்டு, நானாவித வாத்தியங்கள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, 
விஞ்சையர்கள் பாட, கணங்கள் ஆரவாரிக்க, உருத்திரர்கள் சூழ திருக்கோயிலினுள்ளே சென்று, பிரமாவும் 
விட்டுணுவும் வேண்ட, அங்குள்ள அழகுகளனைத்தையும் திருநந்திதேவர் காட்டச் சென்று சென்று பார்த்தருளினார்.

    வேதங்களுக்கும் எட்டாது நின்ற பரமபதியாகிய சிவபெருமான் அழகனைத்தையும் பார்த்துக்கொண்டு, 
திருமணச் சாலையினுள்ளே சென்று இந்திரநீல ரத்தினாசனத்தின்மேலே வீற்றிருந்தருளினார். வீற்றிருந்தருளும் 
பொழுது, வீரபத்திரர், காலாக்கினி ருத்திரர், கூர்மாண்டேசர், ஆடகேசுரர், ஐயனார் முதலிய உருத்திரர்களும்,பிரமா, 
விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானைச் சூழத் தங்கள் தங்களுக்குரிய ஆசனத்தின் 
மேலிருந்தார்கள். அப்பொழுது, திருக்கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு எப்புவனத்தினுமுள்ள யாவரும் வந்து 
கூடினமையால் இமயமலை நடுங்கியது. பூமியின் வடபால் தாழ, தென்பால் மிகவுயர்ந்தது. உடனே தேவர்கள் முதலிய 
யாவரும் ஏங்கி வருத்தமுற்று, 'சிவனே சிவனே" என்று ஓலமிட்டார்கள். 

    சிவபெருமான் அது கண்டு, திருமுறுவல் செய்து, அவர்களுடைய குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, 
திருநந்தி தேவரை நோக்கி, 'அகத்திய முனிவனை இங்கே அழைத்துக்கொண்டு வா" என்று பணித்தருளினார். 
திருநந்திதேவர் வணங்கிக் கொண்டு போய், அகத்திய முனிவரைக் கூவ, அவர் அங்கு வந்தார். அவரை அழைத்துக் 
கொண்டுபோய்ச் சிவபெருமான்றிருமுன் விடுப்ப, அவர் திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்துகொண்டு நின்றார். 
சிவபெருமான் அகத்திய முனிவரை நோக்கி, "முனிவனே, இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் 
தென்பால் மிகவுயர்ந்தது. இதனால் உயிர்களெல்லாம் மிகக் கலங்குகின்றன. மந்தர முதலிய மலைகளும் மகாமேருவும் 
தவறடையும். ஆதலால், நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டிற்சென்று பொதியமலையின்மேல் இருக்கக்கடவாய். 
அது செய்வையாயின் பூமிமுழுதும் முன்போலச் சமமாய்விடும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட 
அகத்தியமுனிவர் அச்சம்பொருந்தி, "பரமகருணாநிதியாகிய பிதாவே, அடியேன் யாதாயினும் அபராதஞ் செய்தேனோ! 
கொடியேனை இங்கே இருக்கும் வண்ணம் பணித்தருளாது தூரத்தே செல்லும்வண்ணம் திருவாய் மலர்ந்தருளுகின்றீர்" 
என்று விண்ணப்பஞ்செய்தார். 

    சிவபெருமான் அகத்தியமுனிவரை நோக்கி, 'உனக்கு ஒப்பாகிய முனிவர்கள் உலகத்து உண்டோ,இல்லை. 
பிரமனும் உனக்கு ஒப்பல்லன். ஆதலால், நீ நினைந்த யாவையும் தவறின்றி முடிக்கவல்லை. இவ்வரிய செய்கை 
மற்றை முனிவர்களாலேனும் தேவர்களாலேனும் முடியுமா! யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும். 
போகக்கடவாய்' என்று திருவாய் மலர்ந்தருளினார். அகத்தியமுனிவர் "எமது பரமபிதாவே, பிரமாவும் விட்டுணுவும் 
இந்திரனும் நிற்க, இச்செய்கையை அடியேன் செய்யும்வண்ணம் பணித்தருளினீர். இதனால் நான் செய்ததே தவம்போலும். 
அடியேனுக்கு இப்பணியைப் பணித்தருளினீராயின், உமது திருமணக்கோலத்தை வணங்காது பிரிதலாற்றாமையால் 
என்மனம் மிகக் கவல்கின்றதே. இதற்கு யாது செய்வேன்'' என்று விண்ணப்பஞ்செய்தார். அதற்குக் கைலாசபதி 
"முனிவனே, நீ சிறிதுங் கவலாது பொதியமலைக்குச் செல்லக்கடவாய். நாம் அங்கு வந்து, நமது கல்யாணக்கோலத்தை 
உனக்குக் காட்டுவோம். நீ மகிழ்ந்து தரிசிக்கக் கடவை. நம்மைத் தியானித்துக்கொண்டு அங்கே சிலநாளிருந்து, 
பின்பு முன்போல நமது பக்கத்து வருவாயாக'' என்று அருளிச்செய்தார்.

    அகத்தியமுனிவர் அதற்கியைந்து, மகாதேவருடைய திருவடிகளைப் பலமுறை வணங்கி, எழுந்து நின்று, 
அஞ்சலிசெய்து, துதித்து, பெருமூச்செறிந்து, அரிதினீங்கி, தென்றிசையை நோக்கிச் சென்று, பொதியமலையை
அடைந்தார். முப்புரத்தையுந் தகிக்கத் திருவுளங்கொண்டு தாமேறிய பூமியாகிய தேரை ஒரு திருவடியா லூன்றிப் 
பாதலத்திட்ட சிவபெருமானுடைய திருவுருவைத் தியானித்துக்கொண்டு, அப்பொதியமலையில் எழுந்தருளியிருந்தார். 
இருக்க, வடபாலும் தென்பாலும் துலைத்தட்டுப் போலச் சமமாயின. அப்பொழுது ஆன்மாக்களெல்லாம் துன்பநீங்கி, 
சிவபெருமானைத் துதித்து மகிழ்ச்சியுற்றன.

    அகத்தியமுனிவர் சென்றபின்பு, இமைய மலையிலே தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானுடைய 
திருவருணீர்மையை எடுத்துத் துதித்தார்கள். அப்பொழுது மலையரையனுடைய ஏவலினாலே, உலக மாதாவாகிய 
உமாதேவியார், துர்க்கை காக்க, இந்திராணி அடைப்பை ஏந்த,கங்கைகள் சாமரம் வீச, காளிகள் குடை பிடிக்க, 
இலக்குமி கைகொடுப்ப, சரசுவதி துதிக்க, எழுந்தருளி வந்து, திருமணச் சாலையை அடைந்து, சிவ பெருமானுடைய 
திருவடிகளை வணங்கினார். அதுகண்ட சிவபெருமான் "நம்பக்கத்தே இருக்கக்கடவாய்" என்று பணித்தருள, 
பார்ப்பதியார், இலக்குமி முதலியோர் யாவருந் துதிக்க, எழுந்தருளியிருந்தார். அப்பொழுது மேனை தீர்த்தமும், 
சந்தனமும், மலர்களும் பிறவுங் கொண்டுவந்தாள். மலையரையன் சிவபெருமானை வணங்கிக் கொண்டிருந்து, 
மேனை கரகநீர் விடுப்ப, அவருடைய திருவடிகளை விளக்கி, சந்தனத்தாலும் நறுமலராலும் பூசைசெய்தான். 
பூசைசெய்தபின்பு, உமாதேவியாருடைய திருக்கரத்தைச் சிவபெருமானுடைய திருக்கரத்தில் வைத்து, ''நான் என் 
புதல்வியாகிய உமாதேவியை உமக்குத் தந்தேன்'' என்று வேதமந்திரங்களைச் சொல்லித் தாராதத்தஞ் செய்தான். 

    அப்பொழுது அரம்பையர்கள் ஆடினார்கள்; சித்தர்களும் கந்தருவர்களும் தும்புரு நாரதர்களும் இசைபாடினார்கள்; 
தேவர்களும் முனிவர்களும் வேதங்களைச் சொன்னார்கள்; இலக்குமியும் சரசுவதியும் பிறரும் மங்கலம் பாடினார்கள்; 
பூதர்கள் நானாவித  வாத்தியங்களை முழக்கினார்கள். மலையரையன் பசுப்பால், வாழைப்பழம், மாம்பழம், பாலாப்பழம்,
நெய், தேன் முதலியவற்றைப் பாசனத்திலிட்டு, சிவபெருமான்றிருமுன் வைத்து, "எம்பெருமானே, இவற்றைத் திருவமுது 
செய்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தான். சிவபெருமானும் அவற்றைத் திருக்கரத்தினாலே தொட்டு, 
திருவருள்சுரந்து, "நாம் இவற்றை அமுது செய்தாற்போல உவந்தேம். நீ எடுத்துக்கொள்ளக் கடவாய்" என்று
 திருவாய் மலர்ந்தருளினார். மலையரையன் பேரன்போடு அந்நிருமாலியத்தை எடுத்து, மலர், கந்தம், தீர்த்தம் 
என்பவற்றோடும் ஒருபக்கத்தே வைத்தான்.

    பிரமதேவர் சிவபெருமானை வணங்கி, "எம்பெருமானே, பூமியினும் சுவர்க்கத்தினும் உள்ளோர் 
யாவரும் தங்கள் தங்களுக்கு அடுத்த விவாகச் சடங்கைச் செய்யும்வண்ணம் சர்வலோகத்துக்கும் நாயகராகிய 
நீர் நடத்தியருளல்வேண்டும். ஆதலால், இனிச்செயற்பாலதாகிய விவாகச்சடங்கை முற்றுவிக்கும்பொருட்டு 
அனுமதிசெய்தருளுக'' என்று விண்ணப்பஞ் செய்தார். அதற்குச் சிவபெருமான் திருமுறுவல்செய்து, இயைந்தருள, 
பிரமதேவர் அக்கினியையும் அதற்கு வேண்டும் பொருள்களையும் வருவித்து, பிருகற்பதியும் சுக்கிரனும் 
மற்றைமுனிவர்களும் பக்கத்தே சூழ,விவாகச் சடங்கனைத்தையும் செய்து முடித்தார். முடித்தபின்பு, 
பெருமானையும் உமாதேவியாரையும் அங்குள்ளோர் யாவரும் வணங்கினார்கள். மகாதேவரும் தேவியாரும் 
அவர்களெல்லாருக்கும் திருவருள் செய்தார்கள். அதுகண்டு, மலையரையன் "இதுவே ஏற்ற சமயம்" என்று நினைந்து, 
சிவபெருமானுடைய தீர்த்தம்,மலர், சந்தனம், அவி முதலியவற்றைப் பிரமா முதலிய தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் 
பிறருக்குங் கொடுப்ப, அவர்கள் யாவரும் அவற்றை மெய்யன்போடு அணிந்து உட்கொண்டு, "நம்முடைய 
வினைகளெல்லாம் இன்றே கழிந்தன" என்று பெருமகிழ்ச்சியுற்றார்கள். அதன்பின் மலையரையனும் மேனையும் 
அவர் சுற்றத்தாரும் பிறரும் அணிந்து உட்கொண்டு, இன்பமடைந்தார்கள்.

    அப்பொழுது தாபதநிலையாளாகி * அங்கிருந்த இரதி வந்து சிவபெருமானை வணங்கி நின்று, "சுவாமீ, 
அடியேனுடைய துன்பத்தை நீக்கியருளுக என்று விண்ணப்பஞ் செய்தாள். சிவபெருமான் அதுகேட்டு, "இரதியே, 
நீ வருந்தாதொழி" என்று திருவாய் மலர்ந்து, மன்மதன் வந்துதிக்கும் வண்ணம் திருவுளங்கொண்டருளினார். 
உடனே மன்மதன் தோன்றி; சிவபெருமானை வணங்கித் துதித்து, ''கிருபா சமுத்திரமாகிய சுவாமீ,
அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுக'' என்று விண்ணப்பஞ் செய்தான்.

* தாபதநிலை - கணவனை இழந்தாள் நோற்கும் விரதவொழுக்கம்

     சிவபெருமான் மன்மதனை நோக்கி, "நாம் உன்னைக் கோபித்தாலன்றோ பின்பு அது தணிவது. 
மனம் வருந்தாதொழி. நம்முடைய அக்கினிக் கண்ணினாலே உன்சரீரம் விரைந்து சாம்பராயிற்று. அதுகண்ட 
உன் மனைவியாகிய இரதி உன்னை உயிர்ப்பிக்கும் பொருட்டு நம்மைப் பிரார்த்தித்தாள். நீ அவளுக்கு மாத்திரம் 
உருவமாயிருக்கக் கடவாய். மற்றைத் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அருவமாயிருந்துகொண்டு 
உன்னரசியலை நடாத்தக் கடவாய்" என்று திருவாய்மலர்ந்து, அவனுக்கு உரிய அரசையும் சிறப்பையும் 
ஆணையையும் வலியையுங் கொடுத்து, இரதியோடும் தன்னகரத்திற்குச் செல்லும்வண்ணம் விடைகொடுத்தருளினார். 
மன்மதனும் இரதியும் சிவபெருமானை வணங்கிக்கொண்டு போனார்கள்.

     அதன்பின் சிவபெருமான் உமாதேவியாரோடு சிங்காசனத்தினின்றும் இறங்கி, உருத்திரர்களும் 
தேவர்களும் முனிவர்களும் பிறருந் துதிக்கப் பூதர்கள் வாத்தியங்களை முழக்கச் சென்று, இடபவாகனத்தின்மீதேறி, 
உமாதேவியாரைத் தமது பக்கத்திருத்தித் தழுவிக்கொண்டு இடபவாகனத்தை நடத்தி, இமைய மலையைக் கடந்து, 
திருக்கைலாச மலையை அடைந்தார். அடைந்தவுடனே, விட்டுணுவையும், பிரமாவையும், மலையரையனையும், 
இந்திரனையும், தேவர்களையும், முனிவர்களையும், தங்கள் தங்கள் இடங்களுக்குச் செல்லும்வண்ணம், முன்னே 
விடுத்தருளினார். பின்பு காலாக்கினி ருத்திரர், கூர்மாண்டேசர், ஐயனார், வீரபத்திரர் முதலிய உருத்திரர்களுக்கும், 
விநாயகக் கடவுளுக்கும், கணநாதர்களுக்கும் விடைகொடுத்து, திருக்கோயிலினுள்ளே புகுந்து, இடபவாகனத்தினின்றும் 
இறங்கி, உமாதேவியாரோடு சென்று, சிங்காசனத்தின்மேல் முன்போல வீற்றிருந்தருளினார். உயிர்க்குயிராகிய 
சிவபெருமான் உமாதேவியார் தமது பக்கத்திலே பொருந்த வீற்றிருந்தருளலும், ஆண் பெண் என்னும் இருபாலினவாகிய 
உயிர்களெல்லாம் முன்னைத் துன்பநீங்கி, இன்பத்தோடு போகத்தை யனுபவித்துக் கொண்டிருந்தன.

            திருச்சிற்றம்பலம்.

            திருவவதாரப்படலம்.

    இவ்வாறே பற்பலநாட்செல்லலும், பின்னொருநாளிலே,பிரமா, விட்டுணு, இந்திரன், திக்குப்பாலகர், 
முனிவர்கள், தேவர்கள் முதலிய யாவரும் மகாமேரு மலையிலே கூடி, சூரனால் மிகமெலிந்து, 'சிவபெருமான் 
உலகத்தை அசுரர்களுக்குக் கொடுத்து, யோகி போலிருந்துகொண்டு, நமக்குத் துன்பத்தை விளைத்தார். 
நாம் போய்ப் பிரார்த்தித்தலும், திருவுளமிரங்கி உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ் செய்தார். செய்தும், 
ஒரு திருக்குமாரரைப் பெற்று நம்மைக் காத்தருளாது வாளாவிருப்பதென்னை! விருப்பும் வெறுப்புமின்றி 
யாவருக்கும் ஓரியல்புடையராகி அவரவர் வினைகளை அறிந்து அததற்குரிய பயன்களைக் கொடுத்தருளுஞ் 
சிவபெருமானை நாம் வெறுத்தல் குற்றம். நாம் அருந்தவஞ்செய்யாது தவறுசெய்தேம் என்று நம்மை நோதலே தகுதி. 
ஆயினும், எம்பெருமானுடைய திருவடிகளை அடைந்து வழிபடின், தீயனவெல்லாம் நீங்கும், நல்லனவெல்லாம் ஆகும்;
இது திண்ணம். ஆதலால், இன்னும் கைலாசபதிக்கு இதனை விண்ணப்பஞ் செய்யும்பொருட்டு நாமெல்லாம் 
போகக்கடவேம்'" என்றார்கள். 

    அப்பொழுது பிரமதேவர் "சிவபெருமானுடைய செய்கையை நாம் கேட்டறிந்துகொண்டே போதல்வேண்டும். 
ஒரு தூதனை முன்னே விடுத்தறிவேம்" என்று சொல்லிக்கொண்டு, வாயுதேவனை நோக்கி, "மைந்தனே, நீ திருக்
 கைலாசமலையிலுள்ள திருக்கோயிலிற்சென்று, சிவபெருமானுடைய செய்கையை அறிந்துகொண்டு வருவாயாக'' 
என்றார். அதுகேட்ட வாயுதேவன் "மன்மதனை யெரித்த சிவபெருமான்றிருமுன் செல்லுதல் அரிது.
 செல்லிற்றீமையே விளையும். இச்செய்கை என்னால் முடிவதன்று. என் மனம் அஞ்சுகின்றது" என்றான். 
பிரமதேவர் வாயுதேவனை நோக்கி "அஞ்சாதே.வலிமையுடனே எங்கும் உலாவும் இயல்பினையுடைய நீயேயன்றி 
இது செய்யவல்லவர் வேறொரு தேவருண்டோ,இல்லை. உற்றவிடத்து உதவிசெய்வோரும், வரையாது கொடுப்போரும், 
தவஞ்செய்வோரும், போர்செய்யும் வீரரும் பிறிதொரு பொருளையும் விரும்பார், வருத்தத்தையும் பாரார், 
உயிர் நீங்க வரினும் கவலாது நன்றென்று மகிழுவர். ஆதலால், எங்களுக்கெல்லாம் உதவிசெய்யும் பொருட்டு 
நீ போகக் கடவாய்'' என்றார்.

    அதற்கு வாயுதேவன் உடன்பட்டெழுந்து, விடைபெற்றுக்கொண்டு திருக்கைலாச மலையிற்சென்று, 
அதன்பக்கத்திலே வீழும் நதியில் ஆடி, பூஞ்சோலையின் மலர்களினுள்ள நறுமணம் அளாவி, தென்றலாய் அசைந்து
கொண்டு மெல்லத் திருக்கோயிலினுள்ளே செல்வானாயினான். முதற்கடை வாயிலின் எழுந்தருளியிருக்குந் 
திருநந்திதேவர் அதுகண்டு, மிகக்கோபித்து உரப்பினார். உரப்பலும், இடியொலிகேட்ட பாம்புபோல வாயுதேவன் 
சிறிதும் வலியின்றி வெருவி விழுந்தான். விழுந்த வாயுதேவன் எல்லையில்லாத அச்சத்துடனே இரங்கி எழுந்து, 
முன்னையுருவங்கொண்டு தோன்றி திருநந்திதேவருடைய திருவடிகளை வணங்கி, "பிரமா, விட்டுணு, இந்திரன் 
முதலிய தேவர்கள் எல்லாரும் சிவபெருமானைத் தரிசிக்க நினைந்து என்னை நோக்கி, 'நீ விரைந்து சென்று 
சமயம் அறிந்துகொண்டு வருவாயாக' என்றார்கள். அதற்கு நாயேன் 'சிவபெருமானுடைய திருவிளையாடலை 
அறிதல் அரிது. அவரிடத்தே செல்ல நான் அஞ்சுகின்றேன்' என்று மறுத்தேன். 

    அது கேளாது அவர்கள் மீண்டுந் தங்கள் வருத்தத்தை சொல்லிச் சிறியேனை வலிந்தேவினார்கள். 
ஆதலால், அடியேன் அஞ்சியஞ்சித் தென்றலாய் மெல்ல வந்தேன். உமக்கு இதனை விண்ணப்பஞ்செய்ய 
நினைந்திலேன். அறிவில்லாதேனுடைய பிழையைப் பொறுத்தருளுக. சூரபன்மனாலே மானநீங்கி 
வருந்தியிளைத்துவிட்டேன். அதனாலே செய்யத் தக்கது இன்னது ஒழியத்தக்கது இன்னது என்று அறிகின்றிலேன். 
அறிவு மயங்கினேன். மற்றைத் தேவர்களும் இவ்வாறேயாயினர். எம்பெருமானே, உமது கோபத்துக்கு 
இலக்காயினார் ஒருவருமில்லை. சிறியேன்பொருட்டுக் கோபங்கொண்டருளலாமா? பொறுத்தருளுக" என்று 
விண்ணப்பஞ் செய்தான். திருநந்திதேவர் கோபந்தணிந்து, "நாம் இங்கே உன்னுயிரைத் தந்தேம். நில்லாதே. 
மீண்டு போய்விடு" என்று ஏவியருளினார். வாயுதேவன் திருநந்திதேவரை வணங்கிக்கொண்டு, விரைந்து 
திருக்கைலாச மலையினின்று நீங்கி, மகாமேரு மலையிலுள்ள தேவர்கூட்டத்தை அடைந்து, விட்டுணுவையும் 
பிரமதேவரையும் வணங்கி, திருநந்திதேவருடைய வன்மையையும் நிகழ்ந்த காரியத்தையும் விரித்துச் சொன்னான்.

    விட்டுணுவும், பிரமதேவரும், இந்திரனும் அதுகேட்டு, பெருந்துயரக் கடலின் அழுந்தி, தம்முள் ஆராய்ந்து 
தெளிந்து, "எம்பெருமானுடைய செய்கையை அறிந்து வரும்பொருட்டு வாயுவை விடுத்தேம். அவன் திருநந்தி 
தேவருடைய ஆணையினால் அஞ்சி நடுநடுங்கித் திரும்பிவிட்டான். இனி நாமெல்லாம் திருக்கைலாச மலையிற்சென்று 
சிவபெருமானுக்கு நம்முடைய குறையை விண்ணப்பஞ் செய்வதே துணிவு" என்றார்கள். இவ்வாறே எல்லாருந் 
துணிந்துகொண்டு, மகாமேரு மலையினின்று நீங்கி, திருக்கைலாச மலையை அடைந்து, திருக்கோயிலின்முன் 
சென்று, திருநந்திதேவரை வணங்கி நின்று, "கருணாநிதியே, அடியேங்களுடைய துன்பமுற்றையுந் 
திருவுளத்திலடைத்து, மகாதேவருக்கு அடியேங்களுடைய வரவை விண்ணப்பஞ்செய்து, அடியேங்களைச் 
சந்நிதியிலே விரைந்து அழைத்துக் கொண்டுபோய் விட்டருளும்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 

    திருநந்திதேவர் அவர்களை "நில்லுங்கள்" என்று நிறுவி, உள்ளே போய்ச் சிவ பெருமானை வணங்கி நின்று,
 'பரமகிருபாலுவாகிய சுவாமீ, உம்முடைய திருவடிகளைத் தரிசிக்கும்பொருட்டுப் பிரமவிட்டுணு முதலியோர் 
யாவரும் வந்து நிற்கின்றனர்" என்று விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான் "இங்கே அழைத்துக்கொண்டு வா" 
என்று பணித்தருளினார். உடனே திருநந்திதேவர் சிவபெருமானை வணங்கிக்கொண்டு விரைந்து சென்று,
 "பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லீரும் வாருங்கள்" என்று கூவியருளினார். கூவியருளலும், முகிலினது 
பேரொலியைக் கேட்ட சாதகப்புட்கள் போலப் பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் மிகமகிழ்ந்து, 
உள்ளே சென்று, அருட்சத்தியாகிய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளிய பெருங்கருணைக்கடலாகிய மகாதேவர் 
சந்நிதியை அடைந்து, அவருடைய திருவடிகளைப் பலகாலும் வணங்கி எழுந்து, அஞ்சலிசெய்து நின்று, துதித்தார்கள்.

    சிவபெருமான் தேவர்கண்மீது திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மிக வருந்தினீர்கள். உங்களுக்கு 
வேண்டும் வரம் யாது? சொல்லுங்கள். தருவேம்'' என்று திருவாய்மலர்ந்தருளினார். அதுகேட்ட தேவர்கள் "எம் பெருமானே,
அடியேங்களெல்லாம் இந்நாள்காறும் சூரன் முதலிய அசுரர்களால் வருந்தினோம், இனி அவ்வருத்த நீங்கி 
முன்னையாக்கத்தை அடையும் பொருட்டுப் பரமகருணாநிதியாகிய உம்மிடத்தே ஒருவரம் வேண்டுகிறோம். 
சருவான்மாக்களையும் பெற்ற நித்தியகன்னிகையாகிய உமாதேவியாரை நீர் திருக்கல்யாணஞ் செய்தமை 
தீவினைக்கடலினழுந்திய சிறியேங்களை ஆளுதற்கு ஓரேதுக்காட்டுதற்கன்றி அவரிடமாக ஒருதிருக்குமாரரைப் 
பெறுதற்கன்று. உற்பத்தியும், திதியும், நாசமும்,அருவமும், உருவமும்,ஒப்பும்,ஏதுவும், போக்கும், வரவும், 
இன்பமும், துன்பமும் இன்றி  நின்ற அநாதிமலமுத்தரே,ஒரு திருக்குமாரரை உமக்கொப்பாக உம்மிடத்தினின்றுந் 
தோற்றுவித்தருளுக" என்று விண்ணப்பஞ் செய்தார்கள்.

    சிவபெருமான் "நீங்கள் சிறிதும் வருந்தாதொழிமின். புதல்வனைத் தருவேம்" என்று திருவாய்மலர்ந்து, தமது பழைய 
ஆறுதிருமுகங்களையுங் * கொண்டு, அத்திருமுகங்களினுள்ள நெற்றிக்கண்கடோறும் ஒவ்வோர் அக்கினிப் பொறியைத் 
தோற்றுவித்தருளினார். அவ் வாறு பொறிகளும், பிரமவிட்டுணு முதலியோர் யாவரும் சிறிதும் அணுகலாற்றாத மிக்க
வெம்மையை உடையனவாகி, உலகமெங்கும் பரந்தன. அப்பொழுது வாயுக்கள் உலைந்து ஓய்ந்தன; கடல்களெல்லாம் 
வற்றின; வடவாமுகாக்கினியும் தன்செருக்கு நீங்கிற்று; பூமி பிளந்தது; மலைகளெல்லாம் நெக்கன; அட்டநாகங்களும் 
நெளித்து நீங்கின; அட்டதிக்கயங்களும் அழுது தியங்கின; உயிர்களெல்லாம் நடுங்கின. சிவபெருமானுடைய 
நெற்றிக்கண்களினின்றும் தோன்றிய அக்கினிப்பொறிகள், பெருங்கருணை செய்யும்வண்ணம் பிறந்தனவாதலால், 
ஓருயிரையும் நாசஞ்செய்தில; எவர்களையும் எவைகளையும் அச்சமாத்திரஞ்செய்தன. 

* ஐந்துமுகத்தோடு அதோமுகமொன்று கூட்டி ஆறுமுகமெனக் கொள்க.

    அப்பொறிகளின் வெம்மையைக் கண்டு, சிவபெருமான் பக்கத்தே எழுந்தருளியிருந்த உமாதேவியார் வேர்த்துத் 
திருவுளங்கலங்கி எழுந்து, தமது திருவடிகளிலுள்ள சிலம்புகள் புலம்பித் தாக்க, தமது திருக்கோயிலினுள்ளே ஓடினார். 
சிவபெருமான் றிருமுன்னர் நின்ற பிரமா முதலிய தேவர்களெல்லாரும் அவ்வக்கினிப் பொறிகளைக் கண்டு அஞ்சி 
நடுநடுங்கி, இடந்தோறும் வெருவியோடினார்கள். கடனடுவினுள்ள தெப்பத்தின் பாய்மரத்தை நீங்கிய காகம் பின்னும் 
அதனையே அடைதல்போல, அவ்வாறு ஓடிய தேவர்களெல்லாரும் பெருமூச்செறிந்துகொண்டு மீண்டும் 
எம்பெருமான்றிருமுன் வந்து வணங்கித் துதித்து, "பரமபிதாவே, அசுரர்களைக் கொல்லும்பொருட்டு ஒரு திருக்குமாரரைத் 
தந்தருளும் வண்ணம் வந்து பிரார்த்தித்தேம். நீர் முடிவில்லாத அக்கினியைத் தோற்றுவித்தருளினீர். எம்பெருமானே,
அடியேங்கள் உய்வது எங்ஙனம்! முற்காலத்திலே உமாதேவியாருடைய திருக்கரத்தினின்றும் தோன்றிய கங்கைபோல 
இப்பொழுது உமது நெற்றிக்கண்களினின்றும் தோன்றிய அக்கினிப்பொறிகளும் உலகமெங்கும் பரந்தன. ஒருகணத்தினுள்ளே 
அவைகளை மாற்றாதொழிவீராயின், அவைகள் சருவான்மாக்களையும் அழித்துப்போடும். அக்கினிப்பொறியின் 
வெம்மையை ஆற்றாது அஞ்சியோடிய நாங்கள் மீண்டும் உம்முடைய திருவடிகளையே அடைந்தேம்.

    ஆராயுமிடத்து, அடியேங்களுக்குப் புகலிடம் உம்மையல்லாது பிறிதுண்டோ, இல்லை. அடியேங்களுடைய 
துன்பமுற்றையும் நீக்குதற்குரிய நீர் அடியேங்களுக்குத் துன்பமே செய்வீராயின், அதனை விலக்க வல்லவர் வேறியாவர்! 
உலகமுழுதையும் இறைப்பொழுதினுள்ளே முடிக்கின்ற இவ்வக்கினியை நீக்கி எங்கள் குறையை முடித்தருளுக" என்று 
விண்ணப்பஞ் செய்தார்கள்.

    அப்பொழுது சிவபெருமான் தேவர்களை நோக்கி, "அஞ்சாதொழி மின்கள்' என்று கையமைத்து, புதியனவாகத் 
தோன்றிய ஐந்துதிருமுகங்களையும் மறைத்து, ஒருதிருமுகத்தோடு முன்போல எழுந்தருளியிருந்து, தம்முடைய 
நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றி உலகமெங்கும் பரந்த அக்கினிப்பொறிகள் தமது திருமுன் வரும் வண்ணம் 
திருவுளங்கொண்டருளினார். உடனே எங்கும் பரந்த அக்கினி முன்போல ஆறுபொறிகளாய் வந்து சந்நிதியை அடைந்தது. 
அதுகண்டு, சிவபெருமான் வாயுதேவனையும் அக்கினிதேவனையும் நோக்கி, "நீங்களிருவீரும் இவ்வக்கினிப் பொறிகளைத் 
தாங்கிக்கொண்டு சென்று கங்கையில் விடக்கடவீர்கள். அது இவைகளைச் சரவணப்பொய்கையிலே கொண்டு சென்றுய்க்கும்" 
என்று பணித்தருளினார். வாயுதேவனும் அக்கினிதேவனும் அதுகேட்டு, மனவருத்தமுற்று நடு நடுங்கி, மும்முறை வணங்கி, 
"எம்பெருமானே, ஒருநொடிப்பொழுதினுள்ளே உலகங்களெல்லாம் பரந்த இவ்வக்கினிப்பொறிகள் உமது திருவருளினாலே 
சிறுகின. அரிது அரிது! இவைகளை அடியேங்கள் தாங்க வல்லமா! உலகத்தைச் சங்கரிக்கும் உமது நெற்றிக்கண்ணினின்றும் 
தோன்றிய இவ்வக்கினியைப் பிரமவிட்டுணுக்கடாமும் ஓர் கணப்பொழுதாயினும் தாங்க வல்லவர்களா! 

    முற்காலத்தெழுந்த ஆலாகலம்போலப் படர்ந்த இவ்வக்கினியைக் கண்டவுடனே நில்லாது வருந்தி ஓடினேம். 
இவற்றை அணுகவும் அஞ்சுகின்றோம். இவ்வாறாக, இவற்றை நாங்கள் சிரமேற்கொண்டு செல்லுதல் கூடுமா!  
இவ்வக்கினியை அடைதற்கு நினைப்பினும் எமது உள்ளம் வெப்புறுகின்றது; சரீரம் வேர்க்கின்றது. நாங்கள் எப்படித் 
தாங்குவோம்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். சிவபெருமான் "இவ்வக்கினிப் பொறிகளைச் சுமந்து சென்று 
கங்கையில் விடும்பொருட்டு உங்களுக்குத் திண்மை உண்டாகுக" என்று திருவாய்மலர்ந்தருளினார். வாயுதேவனும் 
அக்கினிதேவனும் அதற்கியைந்து, சிவபெருமானைத் துதித்தார்கள். அதுகண்ட பிரம விட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் 
துளக்க நீங்கி, "எங்கள் துன்பம் இன்றே நீங்கியது" என்று மனமகிழ்ந்து,சரீரம் பூரித்தார்கள். சிவபெருமான் அவர்களை 
நோக்கி, 'இவ்வக்கினி சரவணப்பொய்கையிலே சேர்ந்து, ஒரு குமாரனாய் வளர்ந்து, சூரன் முதலிய அசுரர்களைக் 
கொன்று உங்களுக்கு அருள் செய்யும். நீங்களெல்லீரும் போங்கள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார். பிரமவிட்டுணு 
முதலிய தேவர்கள் 'உய்ந்தனம் உய்ந்தனம். இனி அடியேங்களுக்கு ஓர்குறையுமில்லை'' என்று சொல்லி, சிவபெருமானை 
வணங்கிக்கொண்டு அங்குநின்று நீங்கினார்கள்.

     வாயுதேவன் சிவபெருமானுடைய திருவடிகளை  அக்கினிதேவனோடு வணங்கி எழுந்து, அவருடைய திருவருளினாலே 
அக்கினிப்பொறிகளாறையும் சிரமேற்றாங்கிக்கொண்டு, திருக்கோயிலை நீங்கிச் செல்வானாயினான். அதனைப் 
பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் பெருமகிழ்ச்சியோடு கண்டு, "சுத்தசிவசோதியாகிய எம்பெருமான் 
தமது நெற்றிக்கண்ணினின்றும் ஒரு திருக்குமாரரை அக்கினிவடிவமாகத் தோற்றுவித்தருளினார். சூரபன்மன் இறத்தற்கும் 
நாம் முன்னையாக்கத்தைப் பெறுதற்கும் இன்னஞ் சிலநாளிருத்தலால், சிவபெருமான் தம்முடைய திருக்குமாரர் சரவணப்
பொய்கையிலே குழந்தையாக வளரும்வண்ணம் அருள்செய்தார். சிவபெருமானுடைய செயல்களெல்லாம் திருவருளே. 
இங்கே அக்கினியைத் தோற்றுவித்ததும் எம்மாட்டுள்ள பெருங்கருணையாயிற்றே. இதுவே அதற்குச் சான்று.
 இனி அசுரரெல்லாம் இறந்தனர். நங்குறை தீர்ந்தது. நாமும் சரவணப்பொய்கைக்குச் செல்வேம்" என்றார்கள். 

    அக்கினிப்பொறிகளை தாங்கும் வாயுதேவன் தங்களுக்குமுன் செல்ல, திருக்கைலாசமலையைக் கடந்து 
செல்வாராயினார்கள். ஒருநாழிகை செல்ல, வாயுதேவன் "இவ்வக்கினிப் பொறிகளைத் தாங்குதல் அரிது அரிது" 
என்று புலம்பி, சிவபெருமானுடைய திருவருளினாலே வலிமை பெற்ற அக்கினிதேவனுடைய சிரசிலே 
அப்பொறிகளைச் சேர்த்தினான். சேர்த்தலும், அக்கினிதேவன் சரீரம் வேர்த்து மிகமெலிந்து, ஒருநாழிகையிலே 
தாங்கிக்கொண்டு, பிறிதொரு நாழிகை தாங்கலாற்றாது விரைந்து சென்று, அவைகளைக் கங்கையில் விடுத்தான்.
அப்பொறிகள் வந்தடைந்தவுடனே, கங்கையானது, சிவபெருமானுடைய சடையின் மறைந்தமைபோல, வறந்தது. 
சிவபெருமானுடைய திருவருளையறிந்து கங்கையானது அப்பொறிகளைத் தன் சிரமேலேந்திக் கொண்டு 
ஒருநாழிகையினுள்ளே சென்று, சரவணப்பொய்கையில் விடுத்தது. பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் 
அதுகாறும் வந்து அண்ணியதாகிய விளைவை நாடிக் காக்கும் வறியார்போலச் சரவணப் பொய்கையைப் 
பேருவகையோடு சேர்ந்தார்கள். பிரமா ஆகாயத்தினும், விட்டுணு பூமியினும், இந்திரன் முதலிய திக்குப்பாலகர்கள் 
எண்டிசைகளினும் நின்று காத்தார்கள். கங்கையும் வறக்கும்வண்ணம் புகுந்த அக்கினிப் பொறிகளாறும் 
இமையமலைச் சாரலினுள்ள சரவணப்பொய்கையிலே புகுதலும், அது சிவபெருமானுடைய திருவருளினாலே 
வறத்தலின்றி முன் போலிருந்தது.

    அருவமும் உருவமுமாய் அநாதியாய் ஒன்றாய்ப் பலவாய்ப் பரப்பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பே 
திருமேனியாக, கருணைவெள்ளம் பொழியாநின்ற ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களுங்கொண்டு, 
முருகக்கடவுள், உலகம் உய்யும்வண்ணம், திருவவதாரஞ்செய்தருளினார். செய்தருளலும், ஆகாயத்திலே துந்துபிகள் 
ஒலித்தன; வேதங்களெல்லாம் ஆர்த்தன; பிரமாவும், விட்டுணுவும், இந்திரனும், முனிவர்களும் பூமாரி பெய்து, 
''அடியேங்களுக்கு அருள்செய்க" என்று துதித்துச் சூழ்ந்தார்கள். உலகத்துள்ள உயிர்களெல்லாவற்றிற்கும் உவகைக்
குறிப்புண்டாயின. சூரன் முதலிய அசுரர்களெல்லாருக்கும் இறப்பை யுணர்த்துங் குறிப்புக்களுண்டாயின. வேதங்களாலும் 
மனத்தாலும் வாக்காலும் அறியொணாது எங்கும் நிறைந்து நின்ற நிருமலராகிய முதற்கடவுள் ஆறுதிரு முகங்களை 
யுடையராய்த் தோன்றி, உயிர்களிடத்துள்ள பேரருளோடும் சரவணப்பொய்கையிலே செந்தாமரை மலரின்மீது 
வீற்றிருந்தருளினார்.

    அம்முருகக்கடவுள் கைக்குழந்தைபோலச் செய்யுந் திருவிளையாடலைக்கண்டு, விட்டுணு முதலிய தேவர்கள் 
யாவரும் கார்த்திகை மகளிர்களை நோக்கி, "சரவணப் பொய்கையிலே ஆறுமுகக் கடவுளாய் வீற்றிருந்தருளும் 
எம்பெருமான் ஒருகுழந்தைபோலத் தோன்றினார். நீங்கள் அவருக்கு நாடோறும் உங்கள் முலைப்பாலைக் கொடுத்து, 
அவரை வளர்க்கக்கடவீர்கள்' என்றார்கள். கார்த்திகை மகளிர்கள் அறுவரும் அதற்கியைந்து, சரவணப்பொய்கையில் 
எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுளை அடைந்து துதிக்க, அவ்வறுமுகக்கடவுள் தம்மை அடைந்தோர்க்கு வேண்டியன
அருள்செய்யும் பெருங்கருணைக் கடலாதலால், வெவ்வேறாக ஆறுசிறுவர் வடிவங்கொண்டருளினார். கொண்டருளலும், 
கார்த்திகை மகளிர்கள் அறுவரும் மிகமகிழ்ந்து, அச்சிறுவர்களறுவரையும் வெவ்வேறெடுத்து, தங்கள் தங்கள் 
முலைப்பாலை ஊட்ட, அவ்வறுமுகக்கடவுள் திருமுறுவல் செய்து, நீங்காத பேரருளினாலே மிகவருந்தினோர்போல 
உண்டருளினார். உண்ட பின், ஆறுசிறுவராய் நின்ற ஒருமுதற்கடவுளை, அம்மகளிர்கள் சரவணப் பொய்கையினுள்ள 
தாமரைமலர்களாகிய சயனத்தின்மீது சேர்த்துத் துயில்செய்வித்துத் துதித்தார்கள். 

    அம்முருகக்கடவுள், திருவருளினாலே,துயில்செய்ய ஓருருவமும், துயில்செய்து விரைந்தெழுந்து மதலைபேச 
ஓருருவமும், மாதாவின் முலைப்பாலைச் செம்பவளத் திருவாய்வைத்து உண்ண ஓருருவமும், நகைத்துக்கொண்டிருக்க
 ஓருருவமும், விளையாட ஓருருவமும், அழ ஓருருவமும், உடையராயினார். தவழ ஓருருவமும், தளர்ந்து செல்ல ஓருருவமும், 
நில்லாது விரைந்து எழுந்து விழ ஓருருவமும், இருக்க ஓருருவமும், பொய்கையெங்குஞ் சென்றுழக்க ஓருருவமும், 
மாதாவிடத் திருக்க ஓருருவமும் உடையராயினார். கூத்தாட ஓருருவமும், செங்கை கொட்ட ஓருருவமும், பாட்டுப்பாட 
ஓருருவமும், பார்க்க ஓருருவமும், ஓடவோருருவமும், ஓரிடத்தொளிக்க ஓருருவமும் உடையராயினார். இவ்வாறே 
ஆறுதிருமேனியும் கணமொன்றினுள்ளே ஆயிரம் பேதமாம்வண்ணம், முழுமுதற்கடவுளாய் நின்ற குமாரசுவாமி 
எண்ணில்லாத திருவிளையாட்டைச் செய்தருளினார்.

    பிரமவிட்டுணு முதலிய தேவர்களும், முனிவர்களும், பிறரும் அது கண்டு அற்புதமடைந்து, "இவ்வொருபாலரே 
பலசிறுவர் வடிவங்கொண்டு நம்முன்னே கணப்பொழுதினுள்ளே எண்ணில் பேதத்தராயினார். ஆராயுங்கால், 
இக்குமார சுவாமியுடைய திருவிளையாடல் எங்களாலும் அறிவரியது. இவர் எல்லாமாயமுஞ் செய்யவல்லவர்; 
வரம்பில்லாத அறிவினையுடையர். கைக்குழந்தைபோலத் தோன்றிய இவர் செய்யும் இம்மாயை போல ஒருவரும் 
செய்யவல்லரல்லர். பிறிது சொல்லியென்னை! நாமும்   இவ்வாறு செய்ததொன்றில்லை. இவர் உயர்வொப்பில்லாத 
சிவபெருமானேயாம்' என்று சொல்லி, வணங்கி நின்றார்கள். கார்த்திகை மகளிர்கள் அறுவரும் 
அறுமுகக்கடவுளுடைய திருவிளையாடல் முழுதையும் நோக்கி நோக்கி, மிக்க அற்புதமடைந்து, குழந்தைகளெனக் 
கொள்ளுதலை ஒழித்து, சிறிதும் பிரியாது அஞ்சி, வழிபடுகடவுளராகவே கொண்டு, மெய்யன்போடு துதித்தார்கள்.

    அறுமுகக்கடவுளுடைய திருவவதாரத்தைச் சொன்னோம். இனி அக்கடவுளுக்குத் தம்பியர்களாய் 
உமாதேவியாரிடத்தே இலக்கத்தொன்பதின்மர் உதித்த தன்மையைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            துணைவர்வருபடலம்.

    சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றிய அக்கினிப் பொறிகளின் வெம்மையை 
ஆற்றாது, உமாதேவியார், திருவடிகளினுள்ள சிலம்புகள் தாக்கலால் நவரத்தினங்கள் சிதறும்வண்ணம், 
அஞ்சியோடினார்.  திருவுளத்திலே "விட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் சிவபெருமானை வணங்கி, 
'நீர் ஒரு திருக்குமாரரைத் தந்தருளும்' என்று பிரார்த்திக்க, சிவபெருமான் தமது நெற்றிக்கண்ணினின்றும் 
அக்கினிப்பொறிகளைத் தோற்றுவித்து, ஒருகுமாரனாய் வளரும்வண்ணம் சரவணப்பொய்கையிலே
சேர்ப்பித்தருளினார்" என்றுணர்ந்தார். 

    அதன்பின் "எம்பெருமானுக்குக் குமாரன் என்னிடத்தே தோன்றாவண்ணம் தடுத்த பிரமா விட்டுணு 
இந்திரன் முதலிய தேவர்களுடைய பன்னியர்களுக்கெல்லாம் புதல்வர்கள் இல்லாதொழிக"  என்றார். 
உமாதேவியார் இவ்வாறே சொல்லிக்கொண்டு , மீண்டு சென்று, சிவபெருமான் சந்நிதியை அடைந்து, 
அவருடைய திருவடிகளை வணங்கி நின்று, "எம்பெருமானே, தேவர்களெல்லாரும் குறையிரப்ப, 
நீர் தோற்றுவித்தருளிய அக்கினிப் பொறிகளின் வன்மையையும் வெம்மையையும் கண்டு, வெம்பிச் 
சரீரமுற்றும் பதைபதைப்ப, ஓடினேன். பின்பு நீர் அவ்வக்கினிப்பொறிகளை இங்குநின்றும் 
அகற்றினமையால் மீண்டேன்" என்று விண்ணப்பஞ்செய்தார். சிவபெருமான் கருணை செய்து 
தேவியாரைத் தம்பக்கத்திருத்தியருளினார்.

    உமாதேவியார் முன் னோடியபொழுது, அவருடைய திருவடிச்சிலம்பினின்றுஞ் சிதறிய 
இரத்தினங்களெல்லாம் சிவபெருமான்றிருமுன் விளங்கின. சிவபெருமானுடைய ஆணையினாலே, 
அந்நவரத்தினங்களினும் உமாதேவியாருடைய  திருவுருவந் தோன்றியது. அவ்வுருவங்களைச் 
சிவபெருமான் நோக்கி, திருவருளினால் 'வாருங்கள்' என்று திருவாய் மலர்ந்தருள , ஒவ்வோரிரத்தினத்துக்கு 
ஒவ்வோர் சத்தியாக நவசத்திகள்  தோன்றினார்கள். அவர்கள், சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி 
நின்று அவரிடத்தே விருப்பம் வைத்தமையால், இருடி பத்தினிகள்போல விரைவிலே கருப்பமுற்றார்கள். 
இவையாவையும் பார்ப்பதியார் கண்டு, அந்நவசத்திகண்மீது கோபங்கொண்டு, "நீங்கள் இங்கு நமக்கு 
மாறாயினமையால், பல காலம் இக்கருப்பத்தோடிருக்கக்கடவீர்கள்' என்று சபித்தார். அப்பொழுது 
நவசத்திகள் அஞ்சி நடுநடுங்கிச் சரீரம் வெயர்த்தார்கள். 

    அவ்வெயர்வையினின்றும், தேவதேவருடைய திருவருளினாலே, ஓரிலக்க வீரர்கள் உதித்தார்கள். அவ்வீரர்கள் 
இடியேறொக்கும் சொல்லையுடையர்களும், பொன்னாடையை உடுத்தவர்களும், வாளையும் பரிசையையும் 
கையிலேந்தினவர்களுமாய், சிவபெருமான் றிருமுன்சென்று, அவருடைய திருவடிகளை வணங்கித் துதித்துக் 
கொண்டு நின்றார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி, "நம்புதல்வர்களே,கேளுங்கள். தேவர்களுக்குப் 
பகைவர்களாகிய அசுரர்களைக் கொல்லும்பொருட்டு நமது புதல்வனாகிய முருகக்கடவுளுக்கு நீங்கள் யாவிரும் 
படைகளாகக் கடவீர்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வீரர்கள் இலக்கரும், நாடோறும் பேரன்புடையர்களாய், 
சிவசந்நிதியை அகலாது, திருத்தொண்டின்வழி நின்றார்கள்.

    முன்னே பார்ப்பதியார் சபிப்ப, நவசத்திகள் நடுநடுங்கி, அவ்வம்மையாரை வழிபாடுசெய்துகொண்டு, 
கருப்பத்தோடு பலகாலம் இருந்தார்கள். அந்நவசத்திகளுடைய கருவினுள்ளே நந்திகணத்தவர்கள் சிசுக்களாய்ப் 
புகுந்து, காளையர்களாகி, சிவபெருமானைச் சிந்தித்துத் தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு 
யோகஞ்செய்துகொண்டிருத்தலால் கருப்பம் மிகப்பாரமாதலும், நவசத்திகள் சிவபெருமானையும் உமாதேவியாரையும் 
வணங்கி நின்று, "அடியேங்கள் இந்நாள்காறும் இக்கருப்பத்தினால் வருந்தினேம். இனித் தாங்கலாற்றேம். திருவுளமிரங்கி 
யருளுங்கள்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். 

    அப்பொழுது சிவபெருமான் திருவுளமிரங்கி, தேவியாருடைய திருமுகத்தை நோக்கி, "உமையே, உன் 
காற்சிலம்பினின்றும் உதித்த இந்நவசத்திகள் உன்சாபங் காரணமாக நெடுங்காலம் கருப்பத்தைச் சுமந்து மிக 
வருந்தினார்கள். இனிப் புதல்வர்களைப் பெறும்பொருட்டு அருள்செய்க" என்று பணித்தருளினார். உமாதேவியார் 
'நன்று" என்று அதற்கியைந்து, திருமுறுவல் செய்து, நவசத்திகளை நோக்கி, "இனி நீங்கள் புதல்வர்களைப் 
பெறக்கடவீர்கள்' என்று திருவாய் மலர்ந்தருள, அவர்கள் வயிற்றினுள் யோகஞ்செய்துகொண்டிருக்கும் வீரர்கள் 
அதனையறிந்து, யோகத்தை விடுத்து, மனமிகமகிழ்ந்து, சிவபெருமானுடைய திருவருளை நினைந்து தொழுது, 
பிறக்கும்பொருட்டு நினைந்தார்கள்.

    நவசத்திகள் உமாதேவியாருடைய பெருங்கருணைத் திருவாக்கைக் கேட்டலும், கவற்சி நீங்கி, 
மகாதேவரையும் தேவியாரையும் வணங்கித் துதித்து, விடைபெற்றுக்கொண்டு அங்குநின்று நீங்கி, ஓரிடத்தே 
சென்று, புதல்வரைப் பெற்றார்கள். மாணிக்கவல்லியிடத்து வீரவாகுவும், மௌத்திகவல்லியிடத்து வீரகேசரியும், 
புட்பராகவல்லியிடத்து வீரமகேந்திரரும், கோமேதவல்லியிடத்து வீரமகேச்சுரரும், வைடூரியவல்லியிடத்து 
வீரபுரந்தரரும், வைரவல்லியிடத்து வீரராக்கதரும், மரகதவல்லியிடத்து வீரமார்த்தாண்டரும், பவளவல்லியிடத்து 
வீராந்தகரும், இந்திரநீலவல்லியிடத்து வீரதீரரும், அவதரித்தார்கள். 

    இவ்வீரர்களொன்பதின்மரும், சிவபிரானுடைய திருவருளினாலே, தங்கள் தங்கள் அன்னையர்களுடைய
 நிறத்தையுடையர்களாய், பொன்னாடையுடுத்தவர்களாய், பலகாலம் வளர்ந்த உறுப்புக்களோடும் நவசத்திகளுடைய 
உந்தியின் வழியே பிரமதேவரைப்போல் உதித்தார்கள். இவ்வண்ணம் உதித்த வீரர்கள் சிவபெருமானையும் 
உமா தேவியாரையும் வணங்கி எழுதலும், சிவபெருமான் பார்ப்பதியாரை நோக்கி, "நம் மைந்தர்களாகிய 
இவர்கள் அறிவுடையர்கள், ஆற்றலுடையர்கள் மானமாகிய அருங்கலமுடையர்கள். இவர்கள் புதியர்களல்லர், 
நந்திகணத்தவர்கள்" என்று சொல்லியருளினார். தேவியார் அதுகேட்டு, அம்மைந்தர்களுக்குத் திருவருள்புரிந்தார். 
சிவபெருமான் அவர்களெல்லாருக்கும் தனித்தனி வாள்கொடுத்து, "ஓரிலக்க மைந்தர்களோடு நீங்களுங்கூடி, 
உங்களுக்கு நாயகனாகிய அறுமுகக்கடவுளை நீங்காது, அவன் பணித்த தொண்டுகளைச் செய்துகொண் 
டொழுகக்கடவீர்கள்' என்று அருளிச்செய்ய, அவர்களும் அதற்கியைந்து வணங்கினார்கள். இவ்வொன்பது 
வீரரும் இலக்கவீரர்களோடு கலந்து, எம்பெருமானுடைய திருக்கோயிலை அகலாது, அங்கிருந்தார்கள். 
சத்திகளொன்பதின்மரும் உமாதேவியாரை நீங்காது,அவர் பணித்த தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            சரவணப்படலம்.


    சிவபெருமான் உமாதேவியாரை நோக்கி, "உமையே, முன்னே நமது நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றிச் 
சரவணப்பொய்கையிலிருக்கும் உன் புதல்வனை நாம் போய் இங்கே கொண்டுவருவோம், வா" என்று திருவாய்
 மலர்ந்தருளினார்.உமாதேவியார் அதுகேட்டு, உவகையும் அன்புங்கொண்டெழுந்து, ''எம்பெருமானே,
நம்முடைய குமாரனை நாம் கொண்டு வருவேம், எழுந்தருளுக'' என்றார். உடனே சிவபெருமான் எழுந்து, 
உமாதேவியாரோடும் இடபமீது ஏறியருளினார். அதுகண்ட தேவர்கள் "நம்முடைய தீவினைகளெல்லாங் கழிந்தன'' 
என்று மனமிகமகிழ்ந்து, நந்திகணத்தோடு அணைந்து துதித்தார்கள். ஆலாலசுந்தரர் முதலிய கணத்தர்களும் 
உருத்திரர்களும் வந்து இருபக்கத்தும் நெருங்கித் துதித்தார்கள். ஞானாசிரியராகிய திருநந்திதேவர் விடுப்ப, 
பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்கள் பூமாரிபெய்து, திருவடிகளை வணங்கிக்கொண்டு சூழ்ந்தார்கள் 
பூதர்கள் நானாவிதவாத்தியங்களை முழக்கினார்கள். நான்கு வேதங்களும் பிரணவமும் பலகலைகளும் ஒலித்தன. 
விஞ்சையர்கள் கீதம்பாடினார்கள். சூரியர்கள் வெண்குடைபிடித்தார்கள். பூதர்கள் சாமரம் வீசினார்கள். 
நூறு கோடி பூதர்கள் சூழ்ந்தார்கள். இடபக்கொடிகள் நெருங்கிச் சென்றன. 

    அப்பொழுது உமாதேவியாரோடும்  இடபமேற்கொண்டருளிய சிவபெருமான் தமது திருக்கோயிலினின்று 
நீங்கி, திருக்கைலாசத்தைக் கடந்து இமைய மலைச்சாரலினுள்ள சரவணப் பொய்கையை அடைந்தார். கைலாச 
பதியும் பார்ப்பதியம்மையாரும் ஆறுருவங்கொண்ட முருகக்கடவுளுடைய தன்மையைப் பார்த்துத் திருவருள்செய்து, 
சரவணப் பொய்கைக் கரையிலே நின்றார்கள். அப்பொய்கையிலே ஆறுதிருவுருவங்கொண்டுலாவி வீற்றிருந்தருளும் 
குமாரக்கடவுள் சிவபெருமானையும் உமாதேவியாரையுங் கண்டு, திருமுகமலர்ந்து திருவுளங்களித்தார். அப்பொழுது 
மகாதேவர் உமாதேவியாரை நோக்கி, "நீ போய் உன்புதல்வனைக் கொண்டுவரக்கடவாய்'' என்று பணித்தருள, 
தேவியார் இடப வாகனத்தினின்றும் விரைந்து இறங்கி, திருவுள்ளத்தே கிளர்ந்த பேராசையோடு சென்று, 
சரவணப் பொய்கையில் எழுந்தருளியிருந்த தமது திருக்குமாரருடைய ஆறுருவங்களையும் இரண்டு திருக்கரங்களினாலும் 
அன்போடு எடுத்துத் தழுவி, ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருப்புயங்களுங்கொண்ட ஓருருவமாம் வண்ணஞ்
செய்தருளினார். அக்குமாரசுவாமி உமாதேவியாரால் ஆறு திருவுருவும் ஒன்றாகி, கந்தர் என்னுந் திருநாமத்தைப் 
பெற்றார். 

    உமாதேவியார் தம்மாலே தழுவப்பட்ட குமாரவேளுடைய முடிதோறும் மோந்து, முதுகைத் தடவலும், 
அவ்வம்மையாருடைய திருமுலைகள் சுரந்து பால்சொரிந்தன. சிவபெருமானது திருவருளாகியும் நிருமலமாகியும் 
பரஞானமாகியுமுள்ள தம்முடைய திருமுலைகள் பொழிந்த பாலை ஓரிரத்தினவள்ளத்திலேற்று, முருகக்கடவுளுக்கு 
அன்பினுடன் ஊட்டினார். ஊட்டியபின்பு, அக்குமாரக் கடவுளைக் கொண்டுபோய், எம்பெருமான்றிருமுன்னே 
வணங்குவிப்ப, அவர் தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, மார்பிலணைத்து, பெருங் கருணையோடும் 
தமது பக்கத்திருத்தி யருளினார். பின்பு உமாதேவியாரையும் திருக்கரத்தினால் எடுத்து, தமதிடப்பக்கத் திருத்தியருளினார்.

     இடபத்தின்மீது சிவபெருமானுக்கும் பார்ப்பதியம்மையாருக்கும் இடையே ஆறுமுகக்கடவுள் எழுந்தருளி 
யிருத்தலைக் கண்டு, பிரமா, விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்கள் கடல்போல் ஆரவாரித்து, அணுகி, பக்கத்தும் 
முன்னும் பின்னும் நெருங்கி, 'சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றியருளிய குமாரசுவாமியே, 
அடியேங்கள் சூரபன்மனால் மிகவருந்தினேம். இனிச் சிறியேங்களை ஆட்கொண்டருளும்' என்று விண்ணப்பஞ்செய்து, 
பூமழை பொழிந்து, வணங்கி எழுந்து, வாழ்த்தினார்கள். அப்பொழுது கார்த்திகை மகளிர்கள் சிவபெருமானைப் 
பேரன்போடு வணங்கி எழுந்தார்கள். கைலாசபதி அவர்கண்மீது திருவருணோக்கஞ்செய்து, "நம்முடைய 
குமாரனாகிய இவன், உங்களால் வளர்க்கப்பட்டமையால், கார்த்திகேயன் என்னும் பெயரைப் பெறக்கடவன். 
யாவராயினும் உங்கள் நக்ஷத்திரத்திலே இவனை மெய்யன்போடு வழிபடுவாராயின், அவர் வேண்டும் வரங்களைக் 
கொடுத்து, முத்தியை அருளிச்செய்வேம்'' என்று  திருவாய்மலர்ந்தருளினார்.

    உமாதேவியார் தம்முடைய திருக்குமாரரைச் சென்று தழுவியபொழுது சொரிந்த திருமுலைப்பால் 
நதிபோலப் பெருகிச் சரவணப் பொய்கையிலே புகுதலும், தங்கள் தந்தையாராகிய பராசரமுனிவருடைய 
சாபத்தினால் அப்பொய்கையுள் மீனாய்த் திரிந்த ஆறுசிறுவரும் அப்பாலைப் பருகினார்கள். பருகியபொழுது, 
மீன்வடிவம் ஒழிய முன்னை வடிவங்கொண்டு எழுந்து, பொய்கையை நீங்கி, சிவபெருமான் றிருமுன் சென்று 
வணங்கித் துதித்தார்கள். அப்பொழுது சிவபெருமான் அவர்களை நோக்கி, "நீங்கள் திருப்பரங்குன்றிலே 
தவஞ்செய்துகொண்டிருங்கள். சிலநாளாயபின், நம்முடைய குமாரனாகிய இவன்வந்து உங்களுக்கு அருள்செய்வன்'' 
என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அதுகேட்ட சிறுவர்களறுவரும் மனமகிழ்ந்து சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
சென்றார்கள். சிவபெருமான் கார்த்திகை மகளிர்களையும் பிரம விட்டுணு முதலிய தேவர்களையும் தங்கள் தங்கள் 
இடத்துக்குச் செல்லும் வண்ணம் விடுத்து, திருக்கைலாசமலையை அடைந்து, முருகக்கடவுளோடும் உமாதேவியாரோடும் 
இடபவாகனத்தினின்றும் இறங்கி நடந்து, செம்பொற் றிருக்கோயிலிற்சென்று, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தருளினார். 
நவவீரர்களும் இலக்க வீரர்களும் தங்கள் தமையனாராகிய முருகக்கடவுளை நறுமலர்களாலே பூசித்து வணங்கித் 
துதித்து, அவர்தொண்டின்வழி நின்றார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            திருவிளையாட்டுப்படலம்.


    மகாதேவருக்கும் தேவியாருக்கும் இடையே எழுந்தருளியிருந்த முருகக்கடவுள் தம்முடைய தம்பியர்களோடும் 
எழுந்து, பெருங்கருணையினாலே திருவிளையாடல் செய்யத் திருவுளங்கொண்டருளினார். திருவடிகளிலே 
தண்டையும் சிலம்பும் கழலும் சதங்கையும் ஒலிக்க, திருவரையிலே கிங்கிணி இசைக்க, திருச்செவிகளிலே 
குண்டலமும், திருமார்பிலே மதாணியும், திருநெற்றியிலே வீரபட்டிகையும் விளங்கத் திருவிளையாடல் செய்வார். 

    சபைதோறும் உலாவுவர், வாவிதோறும் உலாவுவர், பூஞ்சோலைதோறும் உலாவுவர், ஆறுதோறும் உலாவுவர், 
குன்றுதோறும் உலாவுவர், குளத்தில் உலாவுவர், ஆற்றிடைக்குறையில் உலாவுவர், ஆத்தீண்டு குற்றியையுடைய 
இடத்தில் உலாவுவர், அந்தணர் சாலையில் உலாவுவர், சிவதலந் தோறும் உலாவுவர், கடம்பமரம் நிற்கும் 
இடந்தோறும் உலாவுவர், வட மொழி தமிழ்மொழி கற்குங் கழகந்தோறும் உலாவுவர், பூமியில் உலாவுவர், 
திக்குக்களில் உலாவுவர், கடல்களில் உலாவுவர், ஆகாயத்தில் உலாவுவர், சூரியன் சந்திரன் முதலிய கிரகங்களும் 
நக்ஷத்திரங்களும் உள்ள இடங்களில் உலாவுவர், கந்தருவர் சித்தர் கருடர் முதலாயினோருடைய உலகங்களில் 
உலாவுவர், இந்திரனுடைய உலகத்தில் உலாவுவர், இருடிகளுடைய உலகத்தில் உலாவுவர், பிரமலோகத்தில் உலாவுவர், 
விட்டுணுலோகத்தில் உலாவுவர், சத்திலோகத்தில் உலாவுவர், சிவலோகத்தில் உலாவுவர், பிருதிவியண்டங்களெங்கும் 
உலாவுவர், அப்புவண்டங்களெங்கும் உலாவுவர், தேயுவண்டங்களெங்கும் உலாவுவர், வாயுவண்டங்களெங்கும் 
உலாவுவர், ஆகாயவண்டங்களெங்கும் உலாவுவர், மற்றைப்புவனங்களினும் உலாவுவர்.

    ஆறுதிருமுகங்களோடும் பாலராய்த் திரிவர்,ஒருதிருமுகத்தோடு குமாரராய்த் திரிவர், பிராமணராய்த் திரிவர், 
முனிவராய்த் திரிவர், வீரராய்த் திரிவர், காலாற் செல்லுவர், குதிரைமீது செல்லுவர், யானைமீது செல்லுவர், 
தேர்மீது செல்லுவர், சிங்கமீது செல்லுவர், ஆட்டுக்கடாமீது செல்லுவர், விமானமீது செல்லுவர், முகின்மீது செல்லுவர், 
மணியை அசைப்பர், குழலை ஊதுவர், கோட்டை இசைப்பர், வீணை வாசிப்பர், நானாவித வாத்தியங்களை முழக்குவர், 
இசைபாடுவர், கூத்தாடுவர்.

    இவ்வாறே முருகக்கடவுள் பலதிருவுருவங்கொண்டு எவ்விடத்தும் திருவிளையாடல் செய்யும்பொழுது, 
உலகமாதாவாகிய உமாதேவியார் அதனையறிந்து வியந்து, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி நின்று, 
"எம்பெருமானே, நம்முடைய குமாரன் சிறுகுழவிப் பருவத்தே செய்யும் ஆடற்றொழில் எனக்கு அத்தியற்புதமா           
யிருக்கின்றது.  ஆராயுங்கால், அவனுக்கு ஒப்பாவார் பிறரில்லை. மாயையில் உமக்கு ஒப்பாவன். அவனுடைய 
பெருமையை  அடியேனுக்குத் திருவாய் மலர்ந்தருளும்" என்று விண்ணப்பஞ்செய்தார். பார்ப்பதியம்மையார் 
தாம் அறியாதார்போல இவ்வாறு வினவுதலும், சிவபெருமான் அவரை நோக்கி, 'உமையே,எல்லாவுயிர்களும் 
அறிந்து உய்யும் பொருட்டு உன்குமாரனதியல்பை நீ நம்மிடத்து வினாவினாய். அவனியல்பைச் சொல்வேம்,கேள். 

    நமது நெற்றிக்கண்ணினின்றுந்தோன்றிய குமாரன் கங்கையிலே கொண்டுசென்று சரவணப் பொய்கையில் 
விடப்பட்டமையால் காங்கேயன் எனவும், சரவணத்திலே தோன்றினமையால் சரவணபவன் எனவும், கார்த்திகை 
மகளிர்களாலே பாலூட்டி வளர்க்கப்பட்டமையால் கார்த்திகேயன் எனவும், உன்னாலே ஆறுருவமுந் திரட்டி 
ஒன்றாக்கப்பட்டமையால் கந்தன் எனவும், பெயர் பெற்றான். நமக்கு ஆறுமுகங்களுண்டு. அவைதாமே கந்தனுக்கு 
முகங்களாயின. தாரகப்பிரமமாயுள்ள நமது ஆறெழுத்தும் ஒன்றாகி உன் குமாரனுடைய மந்திரமாகிய 
சடாக்ஷரமாயிற்று. ஆதலால், அறுமுகக்கடவுள் நமது சத்தியே. அவனுக்கும் நமக்கும் வேற்றுமையில்லை. 
அவன் நம்மைப் போல நீக்கமின்றி எங்கும் வியாபித்திருக்கின்றனன். பாலன்போலத் தோன்றுவன். 
எல்லாப்பொருளையும் புலப்படக்காணும் முற்றறிவுடையவன். தன்னை அன்போடு வழிபடுவோர்க்குச் 
செல்வத்தையும் ஞானத்தையும் முத்தியையும் கொடுக்க வல்லவன். 

    இனிமேல் அவன் பிரமனை வேதத்துக்கெல்லாம் மூலமாய் நின்ற பிரணவத்தின் பொருளை வினாவி, 
அவன் அதனை அறியாது மயங்கக் கண்டு, அவனைச் சிரசிலே குட்டிச் சிறைப்படுத்தி, தானே உயிர்களனைத்தையும் 
பலநாட் படைத்துக்கொண்டிருப்பன். அதன்பின் தாரகாசுரனையும், சிங்கமுகாசுரனையும், சூரபன்மாவையும், 
மற்றை யசுரர்களையுங்கொன்று, பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களுடைய இடுக்கணை நீக்கி, 
அவர்களுக்குப் பேரருள் -செய்வன். இவையெல்லாம் பின்னர் நீ காண்பாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
எம்பெருமாட்டியார் தமதருமைத் திருக்குமாரருடைய பெருமையைக் கேட்டுத் திருவுளமகிழ்ந்து, எழுந்தருளியிருந்தார். 
அது நிற்க.

    உலகங்களனைத்தினுஞ் சென்று திருவிளையாடல்செய்யும் சண்முகக் கடவுள் பின் ஒரு திருவிளையாடல் 
செய்வாராயினார். குலமலைகளனைத்தையும் ஓரிடத்து ஒருங்கு கூட்டுவர். அவைகளைப் பின்பு தலைதடுமாற்றமாக 
பூமியில் நிறுத்துவர். கடல்களனைத்தையும் ஒன்றாக்குவர். மகாமேருமலையைப் பாதாளத்திற்பொருந்த அழுத்துவர். 
கங்காநதியை அடைப்பர். பாதாளத்துள்ள எட்டு நாகங்களையும் பிடித்து மகாமேரு முதலிய மலைகளிலே பூட்டிக் கட்டி, 
உயிர்களுக்கு ஊறில்லாவண்ணம் சிறுதேர்களாகக் கொண்டு உருட்டிச்செல்வர். திக்குயானைகளை ஒன்றோடொன்று 
பொரும் வண்ணஞ்செய்வர். ஆகாயகங்காசலத்தால் வடவாமுகாக்கினியை அவிப்பர். கருடனையும் வாசுகியையும் பிடித்து, 
தம்முள் மாறுபட்டுப் பொரும் வண்ணம் இயற்றுவர். பாதாளத்துள்ள நாகர்களைப் பூமியிற்சேர்த்தி, பூமியிலுள்ள 
கடல்களனைத்தையும் பாதாளத்திற் புகும்வண்ணம் விடுவர். சூரியனைச் சந்திரமண்டலத்தில் எறிவர். 
சந்திரனைச் சூரியமண்டலத்தில் விடுவர். திக்குப்பாலகர்களுடைய பதங்களனைத்தையும் முன்னைத் 
தானத்தினின்றும் பறித்துப் பிறழ வைப்பர். முகில்களுள்ளிருந்த மின்களையும் இடியேறுகளையும் பற்றி, 
மாலைசெய்தணிவர். சூரியன் சந்திரன் முதலிய கிரகங்களும் பிறவும் ஆகாயத்துச் செல்லும் விமானங்களையும் 
தேர்களையும் பிணித்த கயிறுகள் துருவன் கையிலிருப்பன, அவற்றுள் வேண்டுவனவற்றை இடையில் 
அரிந்து, பூமியினும் திக்குக்களிலும் செல்லும் வண்ணம் விடுவர். 

     ஆகாயத்திற்செல்லும் விற்களிரண்டையும் பற்றி, கிரகங்களையும் நக்ஷத்திரங்களையும் உண்டைகளாகக் 
கொண்டு, தேவர்களுடைய தலையும் மார்பும் தோளும் கழுத்தும் முகமும் இலக்காக எய்து, வில்வன்மை காட்டுவர்.
சீவன்முத்தருக்கன்றிப் பிறருக்கு வெளிப்படாத நிருமலமூர்த்தியாகிய அறுமுகக்கடவுள், தேவர்கள் மனிதர்கள் 
முதலிய யாவரும் அஞ்சித் தங்கள் தங்கள் உள்ளமும் உடம்பும் தளர்தலன்றிச் சிதைவுறாவண்ணம், இவ்வாறே 
எண்ணில்லாத திருவிளையாடல்களைச் செய்தருளினார்.

    அப்பொழுது பூமியினுள்ள அசுரர்கள் அதனை நோக்கி, தாம் பெரும் பாவிகளாதலால், எம்பெருமானாகிய 
அறுமுகக்கடவுளுடைய திருமேனியைக் கண்டிலராகி, "இது செய்தவர் யாவர்" என்று தியக்கமுற்றார்கள்.
 அசுரர்கள் யாவரும் பின்னுஞ் சிலநாள் சீவிக்கும்வண்ணம் ஆயுள் பெற்றுள்ளமையால், முருகக்கடவுள் அவர்களுக்குத் 
தமது திருமேனியைக் காட்டாதுலாவினார். உலாவலும், அவர்கள் தேடித் தேடி ஒருவரையுங்காணாமையால், 
"பிரம விட்டுணுக்களாலும் காணப்படாத சிவபெருமானுடைய மாயமே இது" என்றார்கள். முருகக்கடவுளது 
செய்கையைப் பூமியினுள்ள மனிதர்கள் கண்டு, 'கொடுங்கோல் செலுத்தாநின்ற அசுரர்களெல்லாரும் இறப்பது திண்ணம். 
இது அதற்கு ஏதுவாய்த் தோன்றிய விம்மிதம் போலும்" என்றார்கள். திக்குப்பாலகர்களும் சூரியன் சந்திரன் முதலாயினோரும் 
சண்முகக் கடவுளுடைய செய்கையைக் கண்டு, அவருடைய திருவுருவத்தைக் காணாதவர்களாய், 'இது அசுரர்கள் 
செய்கையன்று. வேறியாரோ செய்தார்' என்றிரங்கி ஒருங்கு கூடி,"இந்திரன் சிலரோடும் மகா மேருமலையில் இருக்கின்றனன்; 
பிரமதேவரும் அங்கிருக்கின்றார். நாமெல்லாம் அவர்களிடத்தே சென்று இதனைச் சொல்வேம்' என்று துணிந்து கொண்டு, 
சூரனுக்கும் அஞ்சித் துயரத்தோடு சென்று, மேருசிகரத்தை அடைந்தார்கள். 

    அங்கே, அறுமுகக் கடவுளுடைய திருவிளையாடலைக் கண்டு அவர் திருவுருவத்தைக் காணாது வருந்தும் 
மனத்தனாய் இருந்த இந்திரனைக் கண்டு, அவன்முன் சென்று வணங்கி, இருந்துகொண்டு, 'பூவுலகத்தினும் 
வானுலகத்தினும் உள்ள முன்னை நிலைமைகளனைத்தையும் யாரோ மாறுபடச் செய்தனர். அவரை இன்னரென 
நாங்கள் அறிந்திலம். அசுரர்கள் இது செய்திலர்போலும், நிகழ்ந்த இப்புணர்ப்பு யாது" என்றார்கள். இந்திரன் அதுகேட்டு,
 "நானும் இதனை ஆராய்ந்துகொண்டே இருக்கின்றேன். சிறிதும் அறிந்திலேன். நாமெல்லாஞ்சென்று பிரமதேவரை 
வினவுவோம். எழுங்கள்" என்றான். உடனே, அவ்விந்திரன் முதலிய தேவர்கள் யாவரும்  மெய்த்தவஞ்செய்தமையால், 
அவர்கள் கண்ணுக்குத் தெரியும்வண்ணம்,  அறுமுகக்கடவுள் ஒருதிருமுகமுடைய பாலராய் அம்மலைமீது தோன்றி யருளினார்.

    தேவர்கள் கொண்ட மயக்கம் நீங்கும்வண்ணம் தமது செய்கையைக் காட்ட வந்த எம்பெருமான், 
மகாமேருமலையை அசைத்து, தாமரையிதழைக் கொய்து சிந்துதல்போலக் கொடுமுடிகளைப் பறித்து வீசினார்.
இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் அங்ஙனந்தோன்றிய குமாரசுவாமியைக் கண்டு, "ஐயையோ!  
பூவுலகத்தையும் வானுலகத்தையும் திரிவுசெய்தவன் இவனேயாகும்' என்று, சிங்கத்தையெதிர்ந்த விலங்குகள் 
போலக் கலங்கி, "இவனது வன்மையை ஆராயுங்கால், இவனைப் பாலனெனக் கொள்கின்றிலம்.அசுரரினும் இவன் 
மிகக் கொடியன். யாவரும் எய்தாத மாயமுடையன். இவனை இங்கே போர்செய்து வெல்வேம்' என்று துணிந்து சூழ்ந்தார்கள். 

    அப்பொழுது இந்திரன் முன்னாளிலே தந்தமொடிந்து திருவெண்காட்டிற்சென்று சிவபெருமானைப் 
பூசித்துத் தந்தம்பெற்றுக் கொண்டு அங்கிருந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தை நினைக்க, அது அங்கு வந்தது. 
உடனே இந்திரன் போர்க்கோலங்கொண்டு, குலிசம், வாள், வில், வேல் என்னும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, 
அவ்வைராவத மேலேறி, முருகக்கடவுளைத் தேவர்களோடு வளைந்து போர்செய்யத் தொடங்கினான். குமாரசுவாமி 
தம்மைத் தேவர்கள் பகைவராய் வளைந்தமையை நோக்கி, திருநகைசெய்து, யாதும் எண்ணாது முன்போலவே 
தமது திருவிளையாடலைச் செய்தார். இந்திரன் படைக்கலங்கள் பலவற்றைக் குமாரசுவாமிமேல் விடுப்ப, 
அவையெல்லாம் அவர்மீது மலர்போலப் பட்டன. அதுகண்டு, இந்திரன் குலிசத்தை விட்டு ஆரவாரித்தான். அக்குலிசம் 
எம்பெருமானுடைய திருமார்பிலே பட்டு, நுண்மணல்போலத் துகளாயிற்று. இந்திரன் அது கண்டு துயரத்தழுந்த,
 ஐராவதம் ஒலித்துக்கொண்டு குமாரசுவாமி திருமுன் சென்றது. முருகக்கடவுள் அது கண்டு, சங்கல்ப மாத்திரத்தால் 
ஓர் வில்லையும் பலபாணங்களையும் விரைந்து படைத்துக் கொண்டு, வில்லை வளைத்து நாணொலிசெய்து, ஒரு பாணத்தை 
அவ்யானையின் நெற்றியிற்புக விடுத்தார். உடனே ஐராவதம் புலம்பி வீழ்ந்திறந்தது. 

    அது கண்ட இந்திரன் "ஐயையோ'' என்று இரங்கி,அணுகி நின்று கோபத்தோடு தன்வில்லை வளைப்ப, 
முருகக்கடவுள் ஓரம்பை அவன் புயமீது விடுத்தார். இந்திரன் வருத்தமுற்றுத் தன்வன்மை இழந்து,                 
விற்றொழிலினீங்கித் தன்கையினிருந்த வேலொன்றைக் குமாரசுவாமி மீது விடுத்தான். அவ்வேல் ஒருசிறு 
புற்போலச் சென்று பட, அது கண்ட தேவர்கள் யாவரும் அற்புதமடைந்தார்கள். முருகக்கடவுள் இந்திரனுடைய 
முடியை ஓரம்பினாலும், கொடியை ஓரம்பினாலும், மார்பிற் கவசத்தை ஓரம்பினாலும் அழித்து, அவன்மார்பிலே 
ஏழம்பை விடுத்தார். உடனே இந்திரன் அழிந்து வீழ்ந்தான். அது கண்ட மற்றைத் தேவர்களெல்லாரும் 
கந்தசுவாமியை வளைந்து பொருதார்கள். அப்பொழுது சுப்பிரமணியக்கடவுள் வருணனை நான்கம்பினாலும், 
இயமனை ஐந்தம்பினாலும், சந்திரனை ஓரம்பினாலும், சூரியனை மூன்றம்பினாலும், வாயுவை இரண்டம்பினாலும்,         
அக்கினியை மூன்றம்பினாலும், கொன்று நின்றார். எஞ்சிய தேவர்களெல்லாரும் குமாரசுவாமியினுடைய 
நிலைமையை நோக்கி, ''இவனே இன்றைக்கு எல்லாரையுங் கொன்றுவிடுவன்' என்று துணிந்து, சரபத்தின் 
வன்மையைக் கண்ட சிங்கக்கூட்டம்போல, மனங்கலங்கி நடுநடுங்கி ஓடினார்கள். அதுகண்ட முருகக்கடவுள்     
அப்போர்க்களத்திலே தனிநின்றுலாவினார்.

    இச்செயலை நாரதமுனிவர் கண்டு, தேவகுருவாகிய பிருகற்பதியிடத்துச் சென்று, சொன்னார். 
பிருகற்பதி அது கேட்டு, "தேவர்களுடைய வாழ்க்கை இறந்ததுபோலும்" என்று சொல்லிக்கொண்டு, துயருற்று
 விரைந்துசென்று, போர்க்களத்தை அடைந்து, தேவர்கள் அங்கிறந்துகிடத்தல் கண்டு, மனங்கவன்று, குகப்பிரான்
 அங்கு நின்று செய்யும் திருவிளையாடலைத் தரிசித்தார். தரிசித்து, அவருடைய திருவடித்தாமரைகளை
 வணங்கித் துதித்து, "எம்பெருமானே, தாரகன், சிங்கமுகன், சூரன் என்னும் அசுரர்கள் தண்டிப்ப 
இந்திரன் நாடோறும் துன்பமுழந்து, தன்பதத்தை விடுத்து,இம்மேருமலையில் மறைந்திருந்தான். அவன்         
உம்முடைய திருவடிகளை அடைந்து வழிபட்டு, உம்மைக்கொண்டு தன்பகைவர்களையும் கொல்வித்து, 
முன்போலத் தன்னரசைப் பெற நினைந்திருந்தான். பல காலம் அருந்தவஞ்செய்து வாடினான். 

    சரவணத்தடத்திற் சென்று உமது திருவவதாரத்தை நோக்கி, தன்றுயரமெல்லாம் நீங்கினாற்போல 
உவகை பூத்தான்.உமக்குத் தொண்டுசெய்ய விரும்பிய இந்திரன் நீர் இவ்வாறு  திருவிளையாடல் செய்வதை அறிந்திலன். 
விட்டுணு முதலியோர் தேடியும் காணாத சிவபெருமானும் உமாதேவியாரும் அவர் திருவருள்பெற்றோர் 
சிலருமன்றி உமது திருவிளையாடலை அறியவல்லார் வேறியாவர்! அடியேம் பாசத்தையும் பசுவையும் 
பகுத்து இஃதித்தன்மையது என்று அறிந்திலேம். பாசத்தினின்று நீங்கிலேம். சிற்றறிவுடையேம். இவ்வியல்புடைய 
சிறியேம் பதிப்பொருளாகிய உமது பெருங்கருணைத் திருவிளையாடலை அறிய வல்லமா! ஆதலால், இந்திரன், 
தனது அஞ்ஞானங்காரணமாக உமது திருவிளையாடலைத் தீது என்று நினைந்து, உம்மோடு போர் செய்தனன்.        
நீதி சேர் தண்டமே நீர் புரிந்தீர். 

    மற்றைத்தேவர்களும் அஞ்ஞானத்தால் உம்மோடு பொருதிறந்தார்கள். தந்தை தாயர்களே தமக்குப் 
பிழைசெய்த தம் புதல்வர்களைக் கொல்வார்களாயின், அவர்களுக்கு வேறு யாவர் அருள் செய்குவர்! ஞானவடிவாகிய 
சுவாமீ, சரபமானது சிங்கத்தைக் கொல்வதன்றி மின்மினியைக் கொல்லுதல் வெற்றியாகுமா! அருட்பெருங்கடலே, 
வலியர்களாகிய அசுரர்கள் ஒழியும்வண்ணம் வேரோடறுத்தருளும். எளியவர்களும் உம்முடைய திருவடிகளை 
மறத்தலில்லாத அன்பர்களுமாகிய இவர்களுடைய பிழையைப் பொறுத்தருளும். மரக்கலத்தினாலே தாங்கப் 
பெறுவோரும் அதனாலே தங்கள் செல்வத்தை அடைதற்பாலருமாகிய வணிகர்கள் அதனைச் சாய்த்து அது 
கவிழ்ப்பத் தாம் இறத்தல்போல,உம்மாலே  தாங்கப்படுவோரும் உம்மாலே தங்கள் செல்வத்தை அடைதற்பாலருமாகிய             
 தேவர்கள் உம்மைப் பொருது நீர் கொல்லத் தாம் இறந்தார்கள். உம்முடைய அடித்தொண்டர்கள் செய்த பிழையைத் 
திருவுளங்கொள்ளா தாழிக. இவர்கள் இங்கு அறிவு பெற்றெழும்வண்ணம் திருவருள்செய்க'  என்று விண்ணப்பஞ் செய்தார்.

    முன்னவர்க்கெல்லாம் முன்னவராகிய முருகக்கடவுள் அது கேட்டுத்  திருமுறுவல் செய்து, இந்திரன் 
முதலிய தேவர்கள் ஐராவதத்தோடும் எழும்வண்ணம் திருவுளங்கொண்டருளினார். உடனே இந்திரன் முதலிய
தேவர்கள் எழுந்து, மெய்யறிவு தோன்ற, தாங்கள் முன்செய்த செயற்கையை அறிந்து, தாங்கள் போர்செய்தது 
கந்தசுவாமியோடென்று நினைந்து மனங்கலங்கி, வாடி, நடுநடுங்கி, ஒடுங்கினார்கள். அவர்கள் முருகக்கடவுள் 
திருவிளையாடல் செய்தலைக் காண்டலும், அவருடைய திருவடித் தாமரைகளைப் பலமுறை வணங்கி எழுந்து. 
துதித்து, சரீர நடுநடுங்கிக்கொண்டு நின்றார்கள். அதுகண்ட குமாரசுவாமி "வருந்தாதொழிமின் வருந்தாதொழிமின்' 
என்று திருவருள்செய்தார். 

    தேவர்கள் துயரமும் அச்சமுமாகி, முருகக்கடவுளை வணங்கி, "எம்பெருமானே, அமிர்தத்தோடு நஞ்சு 
கலந்து உண்பவரை அந்நஞ்சன்றி அமிர்தமா கொல்லும். அதுபோல உமது திருவருளினாலே செல்வத்தைப் 
பெறக் கருதிய அடியேங்கள் உம்மோடு பொருதமையால், நீர் எம்மைக் கொன்றீரல்லீர், அக்குற்றமே நம்மைக்
கொன்றது. முன்னாளிலே சிவபெருமானை இகழ்ந்த தக்கனுடைய யாகத்தில் தரப்பட்ட பாகத்தை யாம் உண்ட 
அதிபாதகம் இன்னும் முடிந்திலது . அதனோடு உம்மைப் பொருத அதிபாதகமுங் கூடிற்று. எம்பரம பிதாவே, 
நீர் பெருங்கருணையினால் இப்போது அடியேங்களைத் தண்டித்து, அப்பாவங்களைத் தொலைத்தருளினீர். 

    ஆதலால், அடியேங்களுக்கு நீர்செய்த திருவருளுக்கு நாங்கள் செய்யுங் கைம்மாறு யாது! எங்களை 
உமக்கு அடியர்களாகத் தருவேமெனின், அநாதிமலபெத்த பசுக்களாகிய நாங்கள் அநாதிமலமுத்த பதியாகிய 
உமக்கு என்றும் அடிமைகளேயன்றோ! அவ்வாறாக, அடியேங்களைப் புதிதாகத் தருவது எங்ஙனம்! சிறுவர்கள் 
தங்களைத் தங்கள் தந்தையர்களுக்குக் கொடுத்தல் தகுதியாமா! அறிவில்லாதேம் செய்த பிழைகளனைத்தையும் 
திருவுளத்திற்கொள்ளாது பொறுத்தருளும்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 

    முருகக்கடவுள் அது கேட்டு, "நம்மை நீங்கள் முன்னே ஒருபாலன்  என்று நினைந்து பொருதீர்கள். 
நமது வன்மையையும் பெருமையையும் இன்னும் நீங்கள் உணரும்வண்ணம், காட்டுவேம்" என்று திருவாய்மலர்ந்து, 
எட்டுத்திக்குக்களும், பதினாலுலகங்களும், எட்டுமலைகளும்,ஏழுகடல்களும், புறவேலையும், சக்கரவாளகிரியும், 
வெவ்வேறண்ட நிரைகளும்,சர்வான்மாக்களும், பிரமவிட்டுணு ருத்திரர்களும் அடங்கிய பாரமேசுர ரூபத்தைக் 
கொண்டருளினார். பாதாளமெல்லாம் திருவடிகளும், திகந்தமெல்லாம் திருப்புயங்களும், ஆகாயமெல்லாம் 
திருமுடிகளும், சோமசூரியாக்கினியெல்லாம் திருக்கண்களும், நடுவெல்லாம் திருமேனியும், வேதங்களெல்லாம் 
திருவாயும், ஞானமெல்லாம் திருச்செவிகளும், பக்கம் பிரமவிட்டுணுக்களும், சிந்தை உமாதேவியாரும்,
ஆன்மாச் சிவபெருமானுமாக இவ்வாறு முருகக்கடவுள் விசுவரூபங்கொண்டு நிற்ப, இந்திரன் முதலிய 
தேவர்களெல்லாரும் "இஃதற்புதம் இஃதற்புதம்' என்று வணங்கி, ஆகாயத்தை நோக்கினார்கள். 

    திருமேனி முற்றையும் அதனழகையுங் காணாது, முழந்தாள் வரையும் அரிதாகக் கண்டு புகழ்ந்து, 
''ஞானானந்தவடிவாகிய முழுமுதற் கடவுளே, அடியேங் கண்முன் நீர் கொண்டருளிய விசுவரூபத்தை முற்றும்
 தரிசித்திலேம். அடியேங்கள் முற்றும் தரிசிக்கும்வண்ணம் காட்டியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். 
பெருங்கருணைக் கடலாகிய சுப்பிரமணியக்கடவுள் திருவுளமிரங்கித் தேவர்களுக்குத் திவ்விய நேத்திரத்தைக் 
கொடுத்து, அநந்தகோடி சூரியர்கள் திரண்டாற்போலப் பேரொளியை வீசிநின்ற தமது பாரமேசுர ரூபத்தைக் 
காட்டியருளினார். தேவர்கள் அறுமுகக் கடவுளுடைய திருவுருவமுற்றையும், அடிமுதன் முடிகாறும்
அவரது திருவருளினாலே தரிசித்து, அளப்பில்லாத அண்டங்களும், ஆன்மாக்களும், திரிமூர்த்திகளும் 
அவ்வடிவத்திருப்பக் கண்டு, ஆனந்தபரவசர்களாய் வணங்கித் துதித்து நின்று, "எம்பெருமானே, பிருதிவியண்ட 
முதலிய அண்டங்களும், அங்கங்குள்ள தேவர்களும், உயிர்ப்பொருள்களும், உயிரில்பொருள்களும், 
பிரமா விட்டுணு உருத்திரன் என்னும் திரிமூர்த்திகளும் உமது திருமேனியில் இருப்பக் கண்டேம். 

    உமது திருமேனியா அகிலமும் இருப்பது! விசுவமெல்லாம் நீரேயாய் இருக்கும் உண்மையை         
அடியேங்கள் இந்நாள்காறும் அறிந்திலேம். நீரே வந்து அறிவித்தமையால் இப்பொழுதறிந்தேம். 
உமது திருமேனியேயன்றிப் பிறிதொருபொருளையுங் காணேம். உமது திருவடிவத்தைச் சிறியேங்கள் 
காண வல்லமா! ஒரு பிரமன் இறந்தபோது விட்டுணு பேருருவங்கொண்டு திருப்பாற்கடலிலே துயில்செய்யும்     
அகந்தையை ஒழிக்கும்வண்ணம் சிவபெருமான் அண்டங்களெல்லாம் ஆபரணங்களாக ஓர் திருமேனி 
கொண்டருளினார் என்னுந் தன்மையை, எம்பெருமானே, உமது திருமேனியிற்கண்டேம். உமது திருவுருவம் 
பிரமாவும் விட்டுணுவும் பலகாலமுந்தேட அவர்களுக்குத் தோன்றாது அக்கினிவடிவாய் நின்ற சிவபிரானது 
திருவுருவமே போலும்.

    எம்பரமபிதாவே, இதனை யாவரும் அறிகிலர். எங்களைப்போல உமது திருவருளைப் பெற்று 
அடியையும் முடியையும் தெரிந்தவர் யாவர்! விட்டுணுவும் பிரமாவும் உலகத்தோடும் ஒருவரை ஒருவர் 
விழுங்கி உந்தியாலும் முகத்தாலும் தோற்றுவித்து இருவரும் மாறுபடும்பொழுது எடுத்த பேருருவங்கள் 
நீர் கொண்டருளிய திருவுருவத்துக்கு மிகச்சிறியனவேயாம். ஆதலால்,எம்பிரானே, நீர் அருவமும் உருவமுமாய் 
நின்ற ஏகநாயகரேயாகும். அடியேங்கள் செய்த தவத்தினாலே சூரன் முதலிய அவுணர்களைக் கொன்று 
அடியேங்களுடைய துன்பத்தை நீக்கும்பொருட்டுப் பாலராய்த் திருவவதாரஞ் செய்தருளினீர் . 
எவ்வுருவங்களுக்கும் ஒரிடமாயுள்ள உமது திருவுருவத்தைத் தரிசித்துச் சிறப்படைந்தேம். 

    இருவினைப் பயன்களை நுகர்தற்கெடுத்த சரீரத்துன்பம் நீங்கிவிடுவேம். இனி நாங்கள் 
பிறவித் துன்பமடையாது, நிரதிசயமுத்தியின்பத்தை அடைவேம்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 
பின்பு முருகக்கடவுளுடைய விசுவரூபத்தை நோக்கி மனம் மிகவெருவச் சரீரம் அலமர மயங்கி, "எம்பெருமானே,
உமது திருவுருவம் அளப்பில்லாத ஒளியையுடையது. இனிப் பார்த்தல் கூடாது.கண்களெல்லாம் ஒளியிழந்தன. 
அன்றியும் இதன்பெருமையை நோக்கி அஞ்சுகின்றேம். அடியேங்கள் உய்யும்வண்ணம், முன்னைத் 
திருவுருவங்கொண்டு தோன்றியருளுக என்று பிரார்த்தித்தார்கள்.

    முருகக்கடவுள் தமது விசுவரூபத்தை ஒழித்து, ஆறு திருமுகங்களோடும் முன்னைவடிவங்கொண்டு 
தோன்ற, இந்திரன் வணங்கித் துதித்து, "பெருங்கருணாநிதியே, சூரன் முதலிய அசுரர்களைக் கொன்று, 
அடியேனும் தேவர்களும் தொண்டுசெய்யச் சுவர்க்கத்தை அரசுசெய்துகொண்டிருத்தல்வேண்டும்" என்று 
பிரார்த்தித்தான். தம்மை வழிபடும் அடியார்களுக்கு அவரவர் வேண்டியவாறே இம்மை மறுமை வீடுகளைக் 
கொடுத்தருளும் பெருங்கருணைக் கடலாகிய அறுமுகக்கடவுளுக்கு இந்திரன் தன்னரசைக் கொடுப்பான் 
சொல்லிய வாசகம் அக்கினிதேவனுக்கு ஒருவன் ஒருதீபங்கொடுக்கச் சங்கற்பித்தமைபோலும். சுப்பிரமணியக் 
கடவுள் இந்திரனை நோக்கி நகைத்து, 'நீ நமக்குத் தந்த அரசை நாம் உனக்குத் தந்தேம். நீங்கள் சேனைகளாக
 நாமே சேனாதிபதியாகி அசுரர்களெல்லாரையும் கொல்வேம். வருந்தாதொழி" என்று அருளிச்செய்தார். 

    இந்திரன் அது கேட்டுத் தேவர்களோடும் மகிழ்ச்சியுற்று, முருகக்கடவுளை நோக்கி, சுவாமீ, 
இவ்வண்டத்துள்ள மலைகள், கடல்கள், உலகங்கள், உயிர்கண்முதலியனவெல்லாம் இந்நாளில் உம்மாலே 
முறை பிறழ்ந்தன. அவைகளை யெல்லாம் முன்புபோல நிறுவியருளும்" என்று பிரார்த்தித்தான். முருகக்கடவுள் 
திருநகை செய்து, "இவ்வண்டத்தில் நம்மாலே முறைபிறழ்ந்தனவெல்லாம் முன்னைநிலையை அடையக்கடவன" 
என்று திருவாய்மலர்ந்தருள, அவையெல்லாம் முன்னைநிலையை அடைந்தன. யாவரும் அது கண்டு,
அற்புதமடைந்து நின்றார்கள். 

    அப்பொழுது இந்திரன் முருகக்கடவுளை வணங்கி, "அநாதிபகவரே, வேதசிரசிலே விளங்காநின்ற 
உம்முடைய திருவடிகளைப் பூசிக்க விரும்புகின்றேம். அது செய்யும்வண்ணம் திருவருள் புரிக'' என்று வேண்டினான். 
முருகக்கடவுள் அதற்கியைந்து, தேவர்கள் பின்றொடர நடந்து, மகா மேருமலையை நீங்கி, திருக்கைலாசமலையின் 
பக்கத்துள்ள ஒருமலையை அடைந்தார். அப்பொழுது இந்திரன் தேவத்தச்சனை நினைக்க, அவன் இந்திரன் முன் வந்து, 
கைதொழுதுகொண்டு நின்றான். இந்திரன் அவனை நோக்கி "நீ இங்கே ஒரு திருக்கோயில் செய்யக்கடவாய்" என்றான். 
தேவத்தச்சன் அங்கே ஒருதிருக்கோயிலும், அதனுள்ளே ஒருதிவ்வியசிங்காசனமுஞ் செய்தான். தேவர்கள் பலர் 
இந்திரனுடைய ஏவலினாலே, திருமஞ்சனம்,சந்தனம், நறுமலர், தூபம், தீபம் முதலிய பூசோபகரணங்களெல்லாம் 
கொண்டுவந்தார்கள். அப்பொழுது இந்திரன் அறுமுகக்கடவுளை வணங்கி "சுவாமீ, உம்முடைய திருவடிகளை 
அடியேங்கள் பூசித்து உய்யும்பொருட்டு இத்திருக்கோயிலினுள் எழுந்தருளுக' என்று பிரார்த்தித்தான். 

    வேதப் பொருளாகிய சுப்பிரமணியக்கடவுள் அது கேட்டு, தேவர்களெல்லாரும் துதிப்பத் திருக்கோயிலினுள்ளே 
புகுந்து, திவ்வியசிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தருளினார். அப்பொழுது இந்திரனும் தேவர்களும் "ஞான நாயகரே, 
அடியேங்கள் உமக்குச் சேனையாக , நீர் சேனாதிபதியாகுக" என்று ஆகாய கங்கா சலத்தினாலே திருமஞ்சனமாட்டி, 
செம்பட்டாடை சாத்தி சந்தனக்குழம்பு மட்டித்து, திவ்வியாபரணங்கள் அணிந்து, திருமாலைகள் சூட்டி,
 தூபதீபங்காட்டி, பூசைசெய்து வலஞ்செய்து, வணங்கித் தோத்திரம் பண்ணினார்கள். அதன்பின் முருகக்கடவுள் 
அங்குநின்று மறைந்து திருக்கைலாசமலையை அடைந்தார். இந்திரனும் தேவர்களும் அற்புதத்துடன் அம்மலையை 
நீங்கினார்கள். கந்தசுவாமி தேவர்கள் பூசிப்ப எழுந்தருளியிருந்தமையால், அம்மலை கந்தவெற்பெனப் பெயர்பெற்றது.
கந்த வெற்பை நீங்கி, இந்திரன் மனோவதிநகரத்தை அடைந்தான்; மற்றைத்தேவர்களெல்லாரும் தங்கள் தங்கள் 
தானத்திற்சென்று, முன்போலிருந்தார்கள்.  திருக்கைலாசமலையை அடைந்த முருகக்கடவுள், இலக்கத்தொன்பது 
வீரர்களும் பூதர்களும் சேவிப்ப, அங்கெழுந்தருளியிருந்தார்.

 
                திருச்சிற்றம்பலம்.

                தகரேறுபடலம்.

    முருகக்கடவுள் திருக்கைலாசமலையில் எழுந்தருளியிருக்கும்பொழுது, நாரதமுனிவர், சிவபெருமானுக்குப் 
பிரீதியாம்வண்ணம், பூமியிலே தேவர்களும் முனிவர்களும் அந்தணர்களுஞ் சூழ, ஒரு யாகஞ்செய்தார். அந்த 
யாகாக்கினியினின்றும் ஓராட்டுக்கடாத் தோன்றியது. யாகத்துள்ளோர் யாவரும் அது கண்டு, அஞ்சியோடினார்கள். 
ஓடினவர்கள் யாவரையும் பூவுலகத்தினும் வானுலகத்தினும் துரந்து சென்று, சிலரைத் தாக்கிக் கொன்றது. 
எங்கெங்குந் திரிந்து மிக்க கோபத்தோடும் உயிர்களுக்கு நாசம் விளைத்தது. அப்பொழுது நாரதமுனிவரும் 
மற்றை இருடிகளும் தேவர்களும் திருக்கைலாசமலையை அடைந்தார்கள். அவர்கள் தாங்கள் திருமலைமீது 
ஏறிவரும்பொழுது, அறுமுகக்கடவுள் இலக்கத்தொன்பது வீரர்களோடு கூடி விளையாடல் கண்டு, "நாம் 
சிவபெருமானிடத்துச் செல்லவேண்டாம். நமது துயரத்தை நீக்கும் பொருட்டுக் குமாரசுவாமியே ஈண்டு 
நம்மெதிரே எழுந்தருளிவந்தார். இவர் சிறுவரல்லர். இந்திரனையும் தேவர்களையும் கொன்று மீண்டெழுவித்தவர். 
நமது குறையை முடித்தல் இவருக்கு எளிது. 

    நிகழ்ந்ததனை இவருக்கு விண்ணப்பஞ்செய்வேம் என்று தங்களுள்ளே தெளிந்துகொண்டு, 
எம்பெருமான்றிருமுன் சென்று, அவருடைய திருவடித்தாமரைகளை வணங்கித் துதித்தார்கள். கந்தசுவாமி 
அவர்களுடைய துயரத்தைக் கண்டு, " நீங்கள் மிக வருந்தினீர்கள். நிகழ்ந்தது யாது?  சொல்லுங்கள்" என்று 
திருவாய் மலர்ந்தருளினார். இருடிகளும் தேவர்களும் அது கேட்டு, "அடியேங்கள்  வேதவிதிப்படி ஒருயாகஞ் 
செய்தேம். யாகாக்கினியினின்றும் ஓராட்டுக்கடா எழுந்து, எங்களைக் கொல்ல நினைந்தது. 
அவ்வாடெழுங் கிளர்ச்சியைக் கண்டு, அடியேங்கள் யாகத்தை விட்டு இங்கே ஓடிவந்தேம். அது கோபத்தோடு 
துரந்து சிலரைக் கொன்றது. பூவுலகத்தினும் வானுலகத்தினும் அதனால் எண்ணிலுயிர்கள் இறந்தன. இன்னும் 
ஒருநாழிகையினுள்ளே எல்லாவுயிர்களும் இறந்து விடும். அவ்வாட்டின் வன்மையை அடக்கி, அடியேங்களுடைய 
அச்சத்தை நீக்கி, யாகத்தை முற்றுவித்தருளுக" என்று விண்ணப்பஞ்செய்தார்கள்.

    முருகக்கடவுள் அவர்கண்மீது திருவருணோக்கஞ்செய்து, "அஞ்சா தொழிமின்கள் அஞ்சாதொழிமின்கள்' 
என்று கையமைத்து, வீரவாகு தேவரை நோக்கி, "யாகாக்கினியினின்றுந் தோன்றி இவர்கள் யாகத்தை அழித்து 
உயிர்களைக் கொன்று கொன்று எங்குந் திரியாநின்ற ஆட்டுக்கடாவை, நீ விரைந்து சென்று, பிடித்துக்கொண்டு வா" 
என்று பணித்தருளினார். வீரவாகுதேவர் அத்திருப்பணியைச் சிரமேற்கொண்டு, முருகக்கடவுளுடைய திருவடிகளை 
வணங்கித் துதித்துக்கொண்டு, திருக்கைலாச மலையை நீங்கி, ஆட்டுக்கடாவைத் தேடுவாராயினார். பூமியினும் 
கீழேழுலகங்களினும் தேடிக் காணாமையால் மேலுலகங்களிலே தேடி, பிரமலோகத்தின் முன் அவ்வாட்டுக்கடாச் 
செல்லக் கண்டு, அது அஞ்சும்வண்ணம் ஆர்த்து விரைந்து சென்று, அதன் கோட்டைப் பிடித்து இழுத்துக்கொண்டு 
திருக் கைலாசமலையை அடைந்து, முருகக்கடவுடிருமுன் விடுத்து, வணங்கி நின்றார். முருகக்கடவுள் தேவர்களையும் 
இருடிகளையும் நோக்கி, "ஆட்டுக்கடா நம்மிடத்து வந்துவிட்டது. இனி நீங்கள் வருந்தாது பூமியிற்சென்று நீங்கள் 
தொடங்கிய யாகத்தை முடியுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அவர்கள் அது கேட்டு, "எம்பெருமானே, அடியேங்கள் உய்யும்பொருட்டு இவ்வாட்டுக்கடாவை வாகனமாகக் 
கொண்டருளும்" என்று பிரார்த்தித்தார்கள். முருகக்கடவுள் "நாம் இதனை வாகனமாகக் கொள்வேம். நீங்கள் போய், 
யாகத்தை முடியுங்கள்' என்று அருளிச்செய்தார். நாரதர் முதலாயினோர் யாவரும் முருகக்கடவுளை வணங்கிக்கொண்டு 
பூமியிற் சென்று, யாகத்தை முடித்தார்கள். அவர்கள் செய்த தவத்தினாலே முருகக்கடவுள் அன்றுதொட்டு அவ்வாட்டுக் 
கடாவைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            அயனைச்சிறைபுரிபடலம்.

    சுப்பிரமணியக்கடவுள் ஆட்டுக்கடாமேலேறி எவ்வுலகங்களினும் உலாவித் திருவிளையாடல் 
செய்துகொண்டு திருக்கைலாசமலையில் எழுந்தருளியிருக்கும் நாள்களில், ஒருநாளிலே பிரமதேவர் 
முதலாயினோர் திரு கைலாசமலையிற்சென்று, சிவபெருமானை வணங்கித் திருவருள்பெற்றுக்கொண்டு, 
மீண்டு திருவாயிலை அடைந்தார்கள். அடையும்பொழுது,அறுமுகக்கடவுள், அச்செம்பொற்கோயிலின் 
முதற்கோபுரத்துள்ளே இலக்கத்தொன்பது வீரரும் சூழ்ந்து துதிப்ப, எழுந்தருளியிருந்தார். அம்முருகக்
 கடவுள் சிவபெருமானை வணங்கிக்கொண்டு மீளும் தேவர்களுள்ளே தலைவராகிய பிரமதேவரை நோக்கி, 
"இங்கே வா" என்று விளிக்க, பிரமதேவர் சென்று, முருகக்கடவுளை நமஸ்கரியாது அஞ்சலிசெய்தார். 

    முருகக்கடவுள் பிரமதேவருடைய உள்ளக்கருத்தை நோக்கி, 'பிரமனே, இரு" என்று சொல்லி இருத்தி, 
"நீ யாதுதொழில் செய்கின்றாய்" என்று வினாவ, பிரமதேவர் "சிவபெருமானுடைய ஆணையினாலே நான் 
படைத்தற்றொழில் செய்கின்றேன்" என்றார். முருகக்கடவுள் அது கேட்டவுடனே திருமுறுவல் செய்து, 
 "நீ படைத்தற்றொழில் செய்வையாயின், வேதங்களெல்லாம் உனக்கு வருமா" என்று வினாவ, பிரமதேவர்
 "ஆதிகாலத்தில் என்னைப் படைத்தருளிய சிவபெருமான் வேதாகமங்களைச் செய்து, அவற்றுட் சிலவற்றை 
யான் உய்யும் பொருட்டு எனக்கு உபதேசித்தருளினார். அவற்றை நான் அறிவேன்" என்றார். 

    முருகக்கடவுள் "பிரமனே, அவற்றுள் ஓரிருக்குச் சொல்லக்கடவாய்'' என்று திருவாய் மலர்ந்தருள, 
பிரமதேவர் வேதங்களுக்கெல்லாம் முன் சொல்லப்படும் பிரணவத்தை முன்னே சொல்லிக் கொண்டு 
வேதஞ்சொல்லத் தொடங்கினார். தொடங்கலும், அப்பிரணவத்தைத் தம்முடைய திருமுகங்களுள் ஒன்றாகவுடைய 
முருகக்கடவுள் திருநகைசெய்து,"நில். நீ முன் சொல்லிய 'ஓம்' என்னுஞ் சொற்குப் பொருள் யாது! சொல்லக்கடவாய்'' 
என்றார். உடனே பிரமதேவர் பிரணவத்தின் பொருள் தமக்கு விளங்காமையால், கண்களை விழித்து நாணமுற்று 
விக்கித்  திகைத்திருந்தார். சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பீடமாயும் மற்றைத் தேவர்களுக்கெல்லாம் 
பிறப்பிடமாயும், எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் மூலமாயும்,காசியில் இறப்பவருக்கு எம்பெருமான் 
உபதேசித்தருளும் தாரகப் பிரமமாயும் உள்ள பிரணவத்தின் பொருளை ஆராய்ந்தார். பிரணவத்தைச் 
சொல்லுதன் மாத்திரமன்றி அதன்பொருளை அறிந்திலர். யாதுசெய்வார்! சிவபிரானது திருவருளினால் 
அதனை முன் பெற்றிலர். அதனால் மயங்குவாராயினார். அதன்பொருளை யாவர் சொல்ல வல்லவர்! 
வேதங்களுக்கெல்லாம் முதலினும் இறுதியினும் சொல்லப்படும் "ஓம்'' என்னும் ஒரெழுத்தின் உண்மைப்பொருளைப் 
பிரமதேவரும் அறியாது மயங்கினராயின், நாம் இனிச் சிறிது அறிந்தனம் என்பது நகையே.

    பிரமதேவர் பிரணவத்துக்குப் பொருள் இதுவென்று சொல்லாது மயங்கலும், அறுமுகக்கடவுள் 
'இதன்பொருளை அறியாத நீ படைத்தற் றொழில் செய்வது எங்ஙனம்'' என்று சொல்லி, பிரமதேவருடைய நான்கு 
சிரசுகளுங் குலுங்கும்வண்ணம் குட்டி, கீழே விழும்வண்ணம் திருவடியினால் உதைத்து, தம்முடைய பரிசனரைக் 
கொண்டு கந்தவெற்பிலே விலங்கு பூட்டிச் சிறையிடுவித்தார். அதன்பின் தாம் கந்தவெற்பிற்சென்று, ஒருதிருமுகமும் 
நான்கு திருக்கரங்களுங்கொண்டு, ஒருத்திருக்கரம் செபமாலையும், ஒருதிருக்கரம் கமண்டலமும் தாங்க, 
மற்றையிரு திருக்கரங்களும் வரதமும் அபயமுந்தர, பிரமதேவரைப் போலப் படைத்தற்றொழில் செய்து 
கொண்டிருந்தார். பிரம தேவரைச் சிறையிடுவித்தலும், அவரோடு வந்த தேவர்களெல்லாரும் மனநடுங்கி 
முருகக்கடவுளைத் தொழுதுகொண்டு, தங்கள் பதங்களை அடைந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            அயனைச்சிறை நீக்குபடலம்.

    உயிர்க்குயிராய், பரஞ்சுடராய், வேதமுடிவின் விளங்கும் மெய்ப் பொருளாய், படைத்தல் காத்தல் அழித்தல் 
மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழிற்கும் இறைவராய் உள்ள சுப்பிரமணியக்கடவுள் இவ்வாறே அளப்பில்காலம் 
படைத்தற்றொழில் செய்துகொண்டிருப்ப, விட்டுணு பிரமதேவரைச் சிறைநீக்குவிக்கக் கருதி, தேவர்களையும் 
முனிவர்களையும் தம்மிடத்து வரும்வண்ணம் நினைந்தார். அதனை அறிந்து ஆதித்தர்களும், மருத்துவர்களும்,
 வசுக்களும், சத்தமாதர்களும், விஞ்சையர்களும், கருடர்களும், இயக்கர்களும், திக்குப்பாலகர்களும், சந்திரனும், 
மற்றைக்கிரகங்களும், நக்ஷத்திரங்களும், அகத்தியர் முதலிய முனிவர்களும், பிரமரொன்பதின்மரும், 
சேடனும், உரகர்களும் வந்தார்கள்.

    விட்டுணு அவர்களோடு சென்று,திருக்கைலாசமலையை அடைந்து, திருநந்திதேவர் விடுப்ப உள்ளே போய்,
 தமக்குத் தாமே ஒப்பாகிய சிவ பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்கி, உபநிடதங்களாலே தோத்திரஞ் 
செய்துகொண்டு நின்றார். நிற்றலும், சிவபெருமான் அவர்கண்  மீது திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் எந்நாளும் 
இல்லதொரு துயரத் தோடு இன்று நம்மிடத்து வந்தமை யாது' என்று வினாவியருளினார். அது கேட்ட விட்டுணு 
வாய்புதைத்து நின்று, "சருவலோகைக நாயகரே, உம்முடைய திருக்குமாரர் இங்கு வந்த பிரமனைப் பிரணவத்திற்குப் 
பொருள் கேட்டு, அவன் அஃதறியாது மயங்க, அவனைக் குட்டிச் சிறையிடுவித்து, அவனது படைத்தற்றொழிலுஞ் 
செய்கின்றார். கருணைக்கடலே,  முருகக்கடவுளைப்போலப் பிரமனும் உமக்கு மைந்தனேயன்றோ. அவன்
 ஊழினால் அளப்பில்காலம் சிறைப்பட்டு மனநொந்து வாடித் துயருறுகின்றான். எம்பெருமானே, அவன்சிறையை 
நீக்கியருளுக" என்று விண்ணப்பஞ்செய்தார்.

    உடனே கருணாகரராகிய பரமசிவன் திருநந்திதேவரை நோக்கி "நம்முடைய குமாரனாகிய கந்தன் 
பிரமனைச் சிறையிடுவித்தான் என்கின்றனர். நீ அவனிடத்து விரைந்து சென்று, நமது வாசகத்தைச் சொல்லி, 
பிரமனைச் சிறைவிடுவித்து, இங்கு மீளக்கடவாய்'' என்று பணித்தருளினார். திருநந்திதேவர் அத்திருப்பணியைச் 
சிரமேற்றாங்கி,எம்பெருமானை வணங்கிக்கொண்டு, அளப்பில் கணங்கள் சூழப் போய்க் கந்தவெற்பை
 அடைந்து, திருக்கோயிலிற்புகுந்து, சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடித் தாமரைகளை வணங்கி எழுந்து 
அஞ்சலிசெய்து துதித்துக்கொண்டு, வாய் புதைத்து நின்று, ''சுவாமீ, பிரமனைச் சிறைநீக்கும்பொருட்டு உமக்குச் 
சொல்லும்வண்ணம் எம்பெருமான் அடியேனை இங்கு விடுத்தருளினார். அவனைத் தடையின்றிச் சிறைநீக்கியருளுக. 
பிரணவப்பொருள் அவன் சொல்லுதற்கு எளியதா" என்று சொன்னார். சொல்லுமுன், முருகக் கடவுள் கோபித்து, 
''நான் பிரமனைச் சிறைநீக்கேன். நீ நிற்பாயாயின்,உன்னையும் சிறையிடுவிப்பேன். விரைந்து போய்விடு'' என்றார். 
உடனே திருநந்திதேவர் வேறொன்றும் பேசாது,அஞ்சி நடுநடுங்கி,முருகக்கடவுளை வணங்கிக்கொண்டு, மீண்டு 
திருக்கைலாச மலையை அடைந்து, எம்பெருமான் றிருமுன் சென்று, வணங்கி நின்று, முருகக்கடவுள் திருவாய் 
மலர்ந்த வாசகத்தை விண்ணப்பஞ்செய்தார்.

    அது கேட்டலும் எம்பெருமான் திருநகைசெய்து, சிங்காசனத்தினின்றும் விரைந்தெழுந்து, திருக்கோயிலை 
நீங்கி, இடபவாகனமீது ஏறியருளினார். விட்டுணுவும் தேவர்கள் முனிவர்கள் முதலாயினோரும் தொழுது
 கொண்டு எம்பெருமான் பின்னே சென்றார்கள். பூதர்கள் துதித்துக் கொண்டு பக்கத்தே சூழ்ந்தார்கள். 
சிவபெருமான் இவ்வாறே இடபமூர்ந்து திருக்கைலாசமலையை நீங்கி, கந்தவெற்பை அடைந்து, முருகக்கடவுளது
 திருக்கோயிலுக்கு முன் சென்றவுடனே இடபவாகனத்தினின்றும் இறங்கி உள்ளே புகுந்தருளினார். அது 
கண்டவுடனே குமாரசுவாமி விரைந்து இருக்கைவிட்டெழுந்து, எதிர்கொண்டு வணங்கி, அழைத்துக்கொண்டு
போய், தமது திவ்விய சிங்காசனத்தின்மேல் இருத்தி, ''உயிர்க்குயிராகிய எம்பெருமானே, நீர் இங்கு எழுந்தருளிவந்த 
காரியம் யாது" என்று விண்ணப்பஞ்செய்தார். சிவபெருமான் "நம் புதல்வனே, நீ பிரமனைச் சிறையிடுவித்தாய். 
நாம் அதனை நீக்கக் கருதி வந்தேம். அவனைச் சிறைவிடக்கடவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    எம்பெருமான் மிக்க அன்போடு திருவாய் மலர்ந்தருளிய இவ்வின்சொல்லைக் கேட்டபொழுது, 
முருகக்கடவுள் தமது திருமுடியை அசைத்து, "ஓரெழுத்தாகிய பிரணவத்தின் பொருளை அறியாதவன் 
உலகத்தைப் படைப்பன் என்பது பேதைமையே, அவன் வேதங்கள் வல்லனென்பதும் அதுபோலும். 
உமது திருவருள் அழகிது அழகிது. வேதத்துக்கு முன்னின்ற ஓரெழுத்தின் பொருளை அறியமாட்டாதவன் 
உமக்குப் பூசைசெய்யவும், நீர் படைத்தற்றொழிலாகிய பாரத்தை அவன்மீது சுமத்தினீர், இப்படைத்தற் றொழிலைப் 
பெற்றமையால், பிரமன் யாவரையும் சிறிதாயினும் மதிக்கின்றிலன். உம்மை அவன் வழிபடினும், அகந்தை 
சிறிதும் நீங்கிற்றிலன். ஆதலால், யான் அவனைச் சிறைநீக்கேன்'' என்றார். அப்பொழுது பெருங்கருணாநிதியாகிய 
கைலாசபதி "மைந்தனே,உன்செய்கை என்னை? நாம் பணித்தவாறே நந்தி வந்து  பிரமனைச் சிறைநீக்கும் 
வண்ணம் சொல்லவும் நீ கேட்டிலை. நாம் வந்து சொல்லினும் கேட்கின்றிலை. எதிர்மறுத்துப் பேசுகின்றாய்" 
என்று சற்றே கோபமுடையவர்போலத் திருவாய்மலர்ந்தருளினார். முருகக்கடவுள் சிவபிரானதியல்பை நோக்கி, 
வணங்கி நின்று, "எம்பெருமானே, உமக்குத் திருவுளம் இதுவாயின், பிரமனை விரைந்து சிறைநீக்கித் தருவேன்'' 
என்று விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான் அவர்மீது திருவருள் சுரந்தார். சண்முகக்கடவுள் தமது பக்கத்தினின்ற 
பூதர்களிற் சிலரை நோக்கி, "நீங்கள் விரைந்துசென்று பிரமனைச் சிறைநீக்கி நம்முன் கொண்டுவாருங்கள்'' என்று 
பணித்தருள, அவர்கள் போய், பிரமதேவரைச் சிறைவிடுத்துக் கொண்டுவந்து, குமாரசுவாமி திருமுன் விடுத்தார்கள். 
விடுத்தலும், முருகக்கடவுள் பிரமதேவரைக் கையிலே பிடித்து எம்பெருமான்றிருமுன் விடுத்தார்.

    உடனே பிரமதேவர் எம்பெருமானை மெய்யன்போடு வணங்கி, வெள்கி நின்றார். எம்பெருமான் 
அவர்மீது திருவருணோக்கஞ்செய்து, "நீ நெடுங்காலம் சிறையிருந்து இளைத்தனைபோலும்'' என்று திருவாய் 
மலர்ந்தருள, பிரமதேவர் "கருணாநிதியே, உம்முடைய திருக்குமாரர் அடியேனுக்குச் செய்த இத்தண்டம் தீதன்று. 
சிறியேனுக்கு மெய்யுணர்வைத் தந்து,யான் என்னும் அகந்தையை ஓட்டி, தீவினைகளையெல்லாங் களைந்து, 
சித்தசுத்தியை விளைத்தது' என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது கைலாசபதி பிரமதேவரை நோக்கி, 
'நீ இன்று தொட்டு உன்படைத்தற் றொழிலை முன்போலவே செய்துகொண்டிருக்கக்கடவாய்" என்று அருளிச்செய்தார். 
அதன்பின் முருகக்கடவுளை நோக்கித் திருமுறுவல் செய்து திருவருள் சுரந்து, "மைந்தனே, வா" என்று திருவாய்மலர்ந்து, 
அவரைத் தமது திருக்கரத்தினால் எடுத்து, திருத்தொடைமீது இருத்திக்கொண்டு,  உச்சிமோந்து, தமது அருமைத் 
திருக்கரத்தினாலே தழுவி, "பிரமனும் அறியாத பிரணவத்தின் பொருள் உனக்கு வருமா? வருமாயிற் சொல்வாயாக" 
என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அப்பொழுது முருகக்கடவுள்  'முற்றொருங்குணர்ந்த முழுமுதற்கடவுளே, உலகமெல்லாம் பெற்றருளிய 
 மாதாவாகிய எம்பெருமாட்டிக்கு நீர் பிறரறியாவண்ணம் உபதேசித்தருளிய பிரணவப்பொருளை இரகசியமாகச் 
சொல்வதன்றி யாருங்கேட்பச் சொல்லலாமா' என்று விண்ணப்பஞ் செய்தார். செய்தலும், எம்பெருமான் திருநகை செய்து,
 "மைந்தனே, நமக்கு இரகசியமாகச் சொல்வாயாக' என்று திருவாய் மலர்ந்து, திருச்செவி கொடுப்ப, சண்முகக்கடவுள்
 எம்பெருமானுக்குப் பிரணவப்பொருளைச் சொன்னார். அது கேட்டு, ஞான நாயகராகிய கைலாசபதி திருவுளமகிழ்ந்து, 
திருவருள் செய்து, குமார சுவாமியை அங்கிருக்கும்வண்ணம் பணித்து, இடபவாகன மேற்கொண்டு, முன்போல 
யாவரும் துதிப்பச் சென்று, திருக்கைலாசமலையை அடைந்து,  பிரமவிட்டுணுக்களுக்கும் தேவர்களுக்கும் 
முனிவர்களுக்கும் விடை கொடுத்து, தமது திருக்கோயிலிற் புகுந்து, வீற்றிருந்தருளினார்.

    சுப்பிரமணியக்கடவுள், கந்தவெற்பினுள்ள திருக்கோயிலினுள்ளே திவ்வியசிங்காசனத்தின்மீதேறி, 
இலக்கத்தொன்பது வீரரும் பூதர்களுள் சேவிப்ப, எல்லையில்லாத பெருங்கருணையோடும் எழுந்தருளியிருந்தார்.
முற்றொருங்குணர்ந்த பரமாசாரியராகிய அம்முருகக்கடவுள் தம்மை மெய்யன்போடு விதிப்படி வழிபடலுற்ற 
நன்மாணாக்கராகிய அகத்தியமுனிவருக்குப் பிரணவப்பொருளையும், வேதசிவாகமங்களையும், உலகமெல்லாம்
 உய்யும்வண்ணம், உபதேசித்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            விடைபெறுபடலம்.

    முருகக்கடவுள் கந்தவெற்பில் எழுந்தருளியிருக்கும்பொழுது, விட்டுணுவின் புதல்வியர்களாகிய 
அமிர்தவல்லி சுந்தரவல்லி என்னும் இருவரும் முருகக்கடவுளுக்குப் பத்தினிகளாக விரும்பி, அவரைக் குறித்துச் 
சரவணப்பொய்கையில் அருந்தவஞ் செய்தார்கள். முருகக்கடவுள் அதனை அறிந்து, கந்தவெற்பை நீங்கிச் 
சரவணப்பொய்கையிற் சென்றார்.அது கண்ட கன்னியரிருவரும் அஞ்சி வணங்கி நின்று துதிக்க, 
முருகக்கடவுள் அவர்களை நோக்கி, "நீங்கள் யாது விரும்பித் தவஞ்செய்தீர்கள்'' என்று வினாவியருளினார். 
கன்னியரிருவரும் கைகுவித்து நின்று, "எம்பெருமானே, நீர் அடியேங்களைக் கல்யாணஞ்செய்துகொள்ளும்
பொருட்டுத் தவஞ் செய்தேம். திருவருள் செய்க" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். அறுமுகக்கடவுள் 
அவர்களை நோக்கி, "மூத்தாளாகிய அமிர்தவல்லியே, நீ இந்திரனுக்கு மகளாய் வளரக்கடவாய். 
இளையாளாகிய சுந்தரவல்லியே, நீ பூமியிலே சிவமுனிக்குப் புதல்வியாய் வேடரிடத்து வளரக்கடவாய். 
இவ்வாறு  வளரும்பொழுது, நாம் வந்து உங்களைக் கல்யாணஞ்செய்துகொள்வேம் . போங்கள்' என்று 
திருவாய் மலர்ந்தருள, கன்னியரிருவரும் கைதொழுது விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள்.

    அமிர்தவல்லி ஓர் குழந்தை வடிவங்கொண்டு மேருமலையில் இருந்த இந்திரன்முன் சென்று, 
"அரசனே, யான் உன்னோடு தோன்றிய உபேந்திரனுடைய மகள். ஆதலால், என்னை நீ வளர்க்கக்கடவாய்" என்றாள்.
 இந்திரன் அவளை நோக்கி, "தாயே, இங்கு வா" என்று சொல்லி, ஐராவதத்தை அழைத்து, 'இவள் நம்முடைய மகள். 
இவளை நீ அன்போடு வளர்க்கக்கடவாய். இவள்பொருட்டு இனி நமக்கு அளப்பில்லாத சிறப்புண்டாகும்" என்றான். 
ஐராவதம் அவளைப் பிடர்மேற் கொண்டு சென்று, மனோவதியில் இருத்தி வளர்த்தது. அதனால் அவள் தெய்வயானை 
எனப் பெயர் பெற்று, குமாரசுவாமியைத் தியானித்துக்கொண்டிருந்தாள். சுந்தரவல்லி தொண்டைநாட்டினுள்ள 
வள்ளிமலையிலே தவஞ்செய்துகொண்டிருந்த சிவ முனிவருக்கு மகளாகும்பொருட்டுச் சென்றாள்.

    சுப்பிரமணியக்கடவுள், விட்டுணுவின் புதல்வியரிருவருக்கும் வரங் கொடுத்தபின், கந்தவெற்பை அடைந்து, 
பெருங்கருணையோடும் அங்கெழுந்தருளியிருந்தார். சிலநாளாயபின், இலக்கத்தொன்பது வீரர்களும் 
பூதங்களும் சூழத் திருக்கைலாசமலையை அடைந்து, தாய் தந்தையரிருவரையும் வணங்கிக்கொண்டு, 
அவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருந்தார்.

    அறுமுகக்கடவுள் இவ்வாறு எழுந்தருளியிருக்கும்பொழுது, இந்திரன் முதலிய தேவர்கள் தங்கள் 
குறையைச் சொல்லி, பிரமதேவரையும் விட்டுணுவையும் முன்கொண்டு திருக்கைலாசமலையை அடைந்தார்கள். 
திருநந்திதேவர் "நில்லுங்கள்'' என்று அவர்களைத் தடுக்க, அவர்கள் தளர்ந்து, பல நாட்பெருந்துயரத்தோடு 
நின்றார்கள். அவ்வாறு நின்ற பிரமவிட்டுணு முதலிய தேவர்கள் ஒருநாள் திருநந்திதேவரை வணங்கித் துதித்து,
அவருக்குத் தங்கள் துயரத்தை விண்ணப்பஞ்செய்தார்கள். அதுகேட்ட திருநந்திதேவர் திருவுளமிரங்கி,
 "இனி உங்கள் கவற்சியை விடுங்கள். யான் எம்பெருமான்றிருமுன் சென்று, உங்கள் குறையை விண்ணப்பஞ் செய்து, 
உங்களை விரைவில் அங்கே கொண்டுபோய் விடுவேன். இங்கிருங்கள்' என்று சொல்லிக்கொண்டு, உள்ளே புகுந்து, 
சிவபெருமானை வணங்கி நின்று, "சுவாமீ, பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் திருக்கோயின் 
முதற்கடைவாயிலின் நிற்கின்றார்கள்'' என்று விண்ணப்பஞ்செய்தார். கருணாநிதியாகிய கைலாசபதி 
''அவர்களெல்லாரையும் நம் முன்னே அழைத்துக்கொண்டு வா'' என்று பணித்தருள, திருநந்திதேவர் மீண்டு சென்று,
 "எல்லீரும் வாருங்கள்' என்று அருளிச்செய்தார்.

    உடனே தேவர்களெல்லாரும் திருக்கோயிலினுள்ளே விரைந்து சென்று, கிருபாசமுத்திரமாகிய சிவபெருமானை 
வணங்கினார்கள். அதற்குள், இடருறு மனத்தினனாகிய இந்திரன் "அருட்சத்தியாகிய உமாதேவியாரோடும் 
எழுந்தருளியிராநின்ற முதற்கடவுளே, சிறியேங்கள் எண்ணில்லாத யுகங்களாகச் சூரன் முதலிய அசுரர்களால் 
வருந்தி ஒடுங்கினேம். அடியேனுடைய புதல்வனாகிய சயந்தனும் தேவர்களும் அரம்பையர்களும் சூரனுடைய 
நகரத்திலே சிறையிலிருக்கின்றார்கள். சுவர்க்கலோகம் அசுரர்களால் அழிந்தது. இவையெல்லாம் அடியேன் 
விண்ணப்பஞ்செய்தல் வேண்டுமா! முற்றறிவுடைய பதிப்பொருளாகிய நீர் இவையெல்லாம் அறிவீரே. 

    முன்னே அடியேன் தவஞ்செய்தபொழுது, நீர் எழுந்தருளிவந்து, 'நம்மிடத்தே ஒருகுமாரன் பிறந்து சூரன் 
முதலிய அசுரர்களைக் கொன்று உங்களைக் காப்பான்' என்று திருவாய் மலர்ந்தருளினீரே. அவ்வாறே திருக்குமாரரும் 
திருவவதாரஞ் செய்திருக்கின்றாரே. இந்நாள்காறும் எங்கள் துயரத்தை நீக்கத் திருவுளங்கொண்டிலீரே. அடியேங்கள் 
பவப்பயன் இன்னுந்தொலைந்திலதுபோலும். சூரனுடைய வன்மையைத் தொலைக்க வல்லவர் பிறரில்லை. 
அடியேன் என்றுயரத்தை உம்மிடத்தன்றி வேறியாரிடத்துச் சொல்வேன்! யாரை நோவேன்! கடனடுவே காகத்துக்கு 
மரக்கலமல்லது பிறிதோரிடம் இன்மைபோல, அடியேங்களுக்கு இத் திருக்கைலாசமன்றிப் பிறிதோரிடமில்லையே. 
அடியேங்களுடைய துயரத்தை நீக்கும் துணைவர் நீரன்றி ஒருவரும் இல்லை இல்லை. அக்கினியாயினும் 
அதன்மீது நித்திரைசெய்யலாம். நஞ்சாயினும் அதனை உண்ணலாம். பகைவராலே செய்யப்படும் துயரம் 
ஆற்றரிது ஆற்றரிது! இக்கீழ்மை போதும் போதும்!  புதல்வருக்குத் தீதை நீக்கவும் திருவைக் கொடுக்கவும் 
தாதையரன்றி வேறியாவருளர்! ஆதலால், கருணாநிதியே, இனிச் சிறியேங்களைக் காத்தருளும் 
காத்தருளும்'' என்று விண்ணப்பஞ்செய்து வணங்கினான். அப்பொழுது பிரமவிட்டுணுக்கள் "எம்பெருமானே, 
சூரபன்மன் உயிர்களுக்குச் செய்யும் வருத்தம் எம்மாலே சொல்வதரிது. இனிச் சிறிதும் தாழ்க்காது இப்பொழுதே 
அருள்செய்யும்" என்று வேண்டினார்கள்.

    சிவபெருமான் அவற்றைக் கேட்டலும் பெருங்கருணை கூர்ந்து  "இனி உங்கள் கவற்சியை விடுங்கள்'' 
என்று அருளிச்செய்து, அங்கெழுந்தருளியிருந்த அறுமுகக்கடவுளை நோக்கி, 'உலகத்துள்ள உயிர்களுக்குத் 
துன்பஞ்செய்து தேவருலகத்தை அழித்துக் கெடுதலில்லாத வலிமை கொண்டுற்ற சூரபன்மனை அசுரர்களோடு 
கொன்று, வைதிகமார்க்கத்தை நிறுவி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கி, இந்திரனுக்கு அவனரசைக் கொடுத்து, 
மீள்வாயாக" என்று பணித்தருளினார். முருகக்கடவுள் அது கேட்டு "எம்பெருமானே, அடியேன் இப்பணியைச் செய்வேன்" 
என்று விண்ணப்பஞ்செய்தார். அதன்பின் சிவபெருமான் பதினோரு ருத்திரர்களைத் திருவுளத்தில் நினைந்தருள, 
அவர்கள் வந்தார்கள். 

    சிவபெருமான் "நீங்கள் இவன் கையில் படைக்கலங்களாக இருக்கக்கடவீர்கள்' என்று திருவாய்மலர்ந்து, 
அவர்களைப் படைக்கலங்களாக்கி, முருகக்கடவுளுடைய திருக்கரங்களிற் கொடுத்தருளினார். பதினோரு 
ருத்திரர்களும் தோமரம்,கொடி, வாள் குலிசம், அம்பு, அங்குசம்,மணி,தாமரை, தண்டம், வில், மழு என்னும் 
பதினொரு படைக்கலங்களாகி, அறுமுகக்கடவுளுடைய திருக்கரங்களில் வீற்றிருந்தார்கள். பின்பு சிவபெருமான், 
ஏவியக்கால், ஐம்பெரும்பூதங்களை அழிப்பதும், சருவான்மாக்களையும் ஒருங்கு முடிப்பதும், யாவர்மேல் 
விடுக்கினும் அவருடைய வன்மையையும் வரங்களையும் கெடுத்து உயிரை உண்பதும், எவ்வெப் படைக்கலங்களுக்கும் 
நாயகமுமாகிய ஒர்வேலாயுதத்தைச் சிருட்டித்து, முருகக்கடவுளுடைய திருக்கரத்திற் கொடுத்தருளினார். 

    அதன்பின் தாம் ஏவினவற்றைச் செய்துகொண்டு தம்பக்கத்து நின்ற இலக்கத்தொன்பது குமாரர்களை 
நோக்கி, "நீங்கள் யாவரும் முதல்வனாகிய இக்குமரனோடு சென்று, அசுரர்களைக் கொல்லக்கடவீர்கள்" என்று பணித்து, 
அவர்களுக்குப் பல படைக்கலங்களையும் உதவி, முருகக்கடவுளுக்கு அவர்களைத் துணைப்படைகளாகக் 
கொடுத்தருளினார். பின்பு அண்டாபரணர்,நந்தி, உக்கிரர்,சண்டர், அக்கினிநேத்திரர், சிங்கர் முதலிய கணநாதர்களை 
நோக்கி, "நீங்கள் இரண்டாயிரம் வெள்ளம் பூதங்களோடு சண்முகனுக்குச் சேனாதிபதிகளாய்ச் செல்லக்கடவீர்கள்" 
என்று திருவாய்மலர்ந்து, முருகக்கடவுளுக்கு அவர்களைப் படைத்தலைவர்களாகக் கொடுத்தருளினார். 

    ஐம்பெரும்பூதங்களின் வன்மையையும் அங்கங்குள்ள பொருள்களின் வன்மையையும் பிரமன் முதலிய 
தேவர்களுடைய வன்மையையும் ஒருங்கு கொண்டதும், இலக்கங்குதிரை பூண்டதும், மனத்தினும் விரைந்து 
செல்வதுமாகிய ஒருதேரைத் திருவுளத்தினாலே சிருட்டித்து, முருகக்கடவுளுக்கு ஏறும்வண்ணம் கொடுத்தருளினார். 
இவ்வாறெல்லாம் சிவபெருமான் விரைந்துதவி, "இனி நீ போகக்கடவாய்” என்று பணித்தருளினார்.

    அறுமுகக்கடவுள் மகாதேவரையும் தேவியாரையும் தொழுதுகொண்டு வலஞ்செய்து, மும்முறை 
நமஸ்கரித்து எழுந்து, தோத்திரஞ்செய்து கொண்டு நிற்ப, எம்பெருமான் திருவுளத்திலே கிளர்ந்த பெருமகிழ்ச்சியோடு 
அம்முருகக்கடவுளைத் தழுவி, தமது அருமைத் திருக்கரத்தினால் எடுத்துத் திருத்தொடையில் இருத்தி, உச்சிமோந்து 
திருவருள்புரிந்து, எம் பெருமாட்டியாருடைய திருக்கரங்களிலே கொடுத்தருளினார். எம்பெருமாட்டியார் தமது 
அருமைத் திருக்குமாரரைத் தமது மடியில் இருத்திப் பெருங்கருணையோடு தழுவி, உச்சிமோந்து, 
"உன்னை அடுத்த இலக்கத்தொன்பது வீரர்கள் படைஞராய்ச் சூழச் சென்று, அசுரர்களைக் கொன்று, 
இத்தேவர்களுடைய குறையை முடித்து, மீள்வாயாக'' என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    உடனே அறுமுகக்கடவுள் எம்பெருமானையும் எம்பெருமாட்டியாரையும் வணங்கி எழுந்து, 
விடைபெற்றுக்கொண்டு, சென்றார். இலக்கத்தொன்பது வீரர்களும், பூதசேனாதிபதிகளும் சிவபிரானையும் 
உமாதேவியாரையும் மும்முறை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு, சென்றார்கள். அங்கு நின்ற பிரமா விட்டுணு 
இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் ''எம்பரமபிதாவே, நீர் அடியேங்களைக் காத்தருளினீர். இனி எங்கள் நெஞ்சத்து 
ஓர்குறையுமில்லை. உய்ந்தனம் உய்ந்தனம்'' என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு, சிவபெருமானையும் 
உமாதேவியாரையும் வணங்கி, எழுந்தார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அருள்செய்யும் 
நாயகனாகிய குமரனோடும் நீங்களும் நடவுங்கள்" என்று விடைகொடுத்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.


             படையெழுபடலம்.

    சிவபெருமானிடத்து விடை பெற்றுக்கொண்டு செல்லும்பொழுது விட்டுணு அயலில் வரும் வாயுதேவனை 
நோக்கி, "நீ அறுமுகக்கடவுளுடை தேர்மேல் ஏறி, முட்கோலும் மத்திகையுங்கொண்டு பாகனாய்ச் செலுத்தக்கடவாய்” 
என்று பணித்தார். வாயுதேவன் அதற்கிசைந்து, ஆகாயத்திற் செல்லும் தேர்மேலே பாய்ந்து, தன்னினமாகிய 
வாயுக்கள் பக்கத்து வர, மகிழ்ச்சியோடு செலுத்திக்கொண்டு குமாரசுவாமி திருமுன் விடுத்து  "எம்பெருமானே,
இத்தேர்மீது ஏறியருளுக" என்று விண்ணப்பஞ் செய்தான். முருகக்கடவுள் பேரருள் புரிந்து, அத்தேர்மீது ஏறியருளினார்.

    அது கண்ட இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் "இனிச் சூரபன்மன் இறந்தான் இறந்தான்" என்று துள்ளி 
ஆர்த்தார்கள். இலக்கத்தொன்பது வீரர்களும் முருகக்கடவுளைச் சூழ்ந்தார்கள். தேவர்களும் முனிவர்களும்
அவ்வீரர்களைச் சூழ்ந்தார்கள். திருக்கைலாசமலையில் இருந்த அநந்தவெள்ளம் பூதங்களுள் இரண்டாயிரம் 
வெள்ளத்தர்கள் நூற்றெட்டுச்சேனாதிபதிகளோடும் முருகக்கடவுளிடத்து வந்து, வணங்கித் துதித்து, 
ஆரவாரித்தார்கள். அவர்களிற்சிலர் பலவிதவாத்தியங்களை முழக்கினார்கள். அதுகண்ட அறுமுகக்கடவுள் 
பூதசேனைகள் சூழத் திருக்கைலாசமலையை நீத்துப் பூமி மேற்சென்றருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            தாரகன்வதைப்படலம்.

    அறுமுகக்கடவுள் சேனையோடு செல்லும் நெறியிலே, தாரகாசுரனுக்கு உறையுளாய்த் தன்னை அடைந்தோரை 
வருத்தும் கிரௌஞ்ச மலை  சேர்ந்தது. அதனைக் கண்டவுடனே, தேவர்கள் மனம் பதைபதைத்தார்கள் .இந்திரன் கலக்கங்
கொண்டு நின்றான். அப்பொழுது நாரதமுனிவர் வந்து முருகக்கடவுளுடைய திருவடித்தாமரைகளை வணங்கி நின்று, 
"எம்பெருமானே, அந்தணர்களும் முனிவர்களும் இச்சுரத்திற் செல்லும்பொழுது தன்னுள்ளே வழிகாட்டி வரவரப் 
புணர்த்துக் கொன்று பின் அகத்திய முனிவருடைய சாபத்தினாலே இவ்வடிவமாய் நிற்கும் கிரௌஞ்சமலை இதுவே. 
 இம்மலைக்கு ஒருபக்கத்துள்ள மாயபுரியிலே, சூரனுக்கு இளவலும்,யானை முகத்தையுடையவனும், போரிலே 
விட்டுணுவுடைய சக்கரத்தைப் பதக்கமாகக் கொண்ட வீரனுமாகிய தாரகன் இருக்கின்றான். இவனைக் கொல்வீராயின், 
இவன்றமையனாகிய சூரனை வெல்லல் மிக எளிது' என்று விண்ணப்பஞ்செய்தார். அது கேட்ட குமாரசுவாமி 
"அவனை இங்கே கொல்வேம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்திரன் முதலிய  தேவர்களெல்லாரும் 
மனக்கவலை நீங்கி, "தாரகன் இன்றே இறந்தனன்" என்று மகிழ்ச்சியுற்றார்கள்.

    முருகக்கடவுள் தம்பக்கத்து நின்ற வீரவாகுதேவரை நோக்கி, "இளவலே, அம்மலை கிரௌஞ்சம். 
அதன் ஒருபக்கத்துள்ள மாயபுரியிலே தாரகாசுரன் அசுரசேனைகளோடு இருக்கின்றான். நீ உன்றம்பியர்களாகிய 
இலக்கத்தெண்மர்களோடும் ஆயிரம்வெள்ளம் பூதர்களோடும் பூதசேனாதிபதிகளோடும் போய், அவனுடைய 
நகரத்தை வளையக்கடவாய். தடுத்தெதிர்ந்து போர்செய்யும் அசுரசேனைகளைக் கொல்லக்கடவாய். 
எதிர்வானாயின், அவனோடு பொரக்கடவாய். உன்னாலரிதாயின், நாம் அவனைக் கொல்லவருவேம்.
நீ முன்னே போ'' என்று பணித்தருளினார். வீரவாகுதேவர் அதுகேட்டு, 'நன்று'' என்று சொல்லி, பூமியின்மேல் 
விழுந்து நமஸ்கரித்து, எழுந்து இருகைகளையுஞ் சிரமேற்குவித்துக்கொண்டு நின்றார். 

    பின்பு முருகக்கடவுள் இலக்கத்தெண்மரையும் பூதர்களையும் நோக்கி, "நீங்கள் அசுரர்களைப் 
பொரும்பொருட்டு வீரவாகுவோடு போங்கள்' என்று பணித்தருளினார். அவர்கள் யாவரும் எம்பிரானுடைய 
திருவடிகளை வணங்கிக்கொண்டு போதற்குன்னலும், உயிர்க்குயிராகிய சண்முகக்கடவுள் தம்பக்கத்து நின்ற 
தேவத்தச்சனை நோக்கி, "வீரவாகு முதலிய யாவருக்கும் கொடுக்கும் பொருட்டு நீ பலதேர்களைச் செய்யக்கடவாய் "
என்று பணித்தருளினார். தேவத்தச்சன் ஒருமாத்திரை ஒடுங்குமுன்னரே குதிரைகளும் சிங்கங்களும் பூதங்களும் 
பூண்ட பலதேர்களைச் செய்தான். எம்பெருமான் அத்தேர்களை வீரவாகுதேவர் முதலிய இலக்கத்தொன்பது 
வீரர்களுக்கும் பூதசேனாதிபதிகளுக்கும் கொடுத்தருளினார். வீரவாகுதேவர் முதலாயினோர்கள் எம்பெருமானை மும்முறை 
வலஞ்செய்து வணங்கி விடைபெற்று, அத்தேர்கண்மேல் ஏறிக்கொண்டு, ஆயிரம்வெள்ளம் பூதர்களோடு 
சென்றார்கள். வீரவாகுதேவர் பூதசேனாதிபதிகளுக்கும் இலக்கத்தெட்டு வீரர்களுக்கும் நாயகராய், நடுவே 
சென்றார். முருகக்கடவுள் வீரவாகுதேவரை முன்னே ஏவி, ஆயிரம்வெள்ளம் பூதர்கள் சூழவும், இந்திரன் முதலிய 
தேவர்கள் வணங்கவும், கடைக்கூழையிலே சென்றார்.

    நானாவித வாத்தியங்கள் முழங்க, வீரர்களும் பூதர்களும் சூழ, வீரவாகுதேவர் மாயபுரியைச் சேர்ந்தார். 
சேர்ந்தவுடன், பூதர்கள் போய்,  நகரத்தினுள்ளே புகுந்து, எதிர்ந்த அசுரர்களோடு போர்செய்துகொண்டு 
நின்றார்கள். அது கண்ட தூதர்கள் ஓடிப்போய்க் கோயிலினுள்ளே புகுந்து, தாரகாசுரனை வணங்கி நின்று, 
"அரசனே, 'சூரபன்மன் தேவர்களை இட்ட சிறையை நீக்கும் பொருட்டுச் சிவபெருமான் கந்தசுவாமி என்னும் 
பெயரையுடைய ஒருகுமாரரைப் பெற்றருளினார். அவர் அசுரர்களெல்லாரையும் கொன்றுவிடுவர்' என்று 
ஆகாயத்திலே செல்லும் தேவர்கள் சொல்லக் கேட்டேம். நாம் 'இவர்கள் வார்த்தை என்னை' என்றிருந்தேம். 
இப்பொழுது அவர்கள் கூறியவாறே இரண்டாயிரம் வெள்ளம் பூதங்கள் சூழக் கந்தசுவாமி வந்தார். 
முன்னுற்ற தூசிப்படை நமது நகரத்தை வளைந்தது" என்றார்கள். உடனே தாரகன் மிகக்கோபங்கொண்டு, 
சிங்காசனத்தினின்றும் நீங்கி, தூதர்களை நோக்கி, ''இந்நகரத்தை வளைத்த சேனையை உலர்ந்த புற்காட்டின் 
அக்கினி புகுந்தாற்போல விரைந்து கொல்வேம். நம்முடைய சேனைகண்முற்றையும் உழுந்துருளுமுன் 
கொண்டுவாருங்கள் " என்று பணித்தான். 

    அப்பணியைச் செய்யும்பொருட்டுத் தூதர்கள் செல்லலும், தாரகன் அங்கு நின்ற பரிசனரை நோக்கி, "நமது 
தேரைக் கொண்டுவாருங்கள்'' என்றான். அவர்கள் ஒருநொடியினுள்ளே தேரைக் கொண்டுவந்தார்கள். 
தாரகன் அத்தேர்மீதேறி, மந்திரிகள் துதிக்க, சாமரம் இரட்ட, புடைவைக்குஞ்சம் வீச, வெண்குடை நிழற்ற, 
வலம்புரிகள் ஒலிக்க, மகாமேருமலையைப் போலும் ஒரு வைரத்தண்டமும் பலபடைக் கலங்களும் பலசிங்கங்களால் 
இழுக்கப்படும் தேர்மீது செல்ல, தூதர்களாலே கூவப்பட்ட அசுரசேனைகள் யானை குதிரை தேர்களோடு வந்து நெருங்க, 
படைத்தலைவர்கள் பலதேர்கண்மீதேறிச் சூழ, தன்னகரத்தை  நீங்கிச் சென்றான். அது கண்ட பூதர்கள் 
ஆரவாரித்து எதிர்ந்து சென்று சண்முகக்கடவுளுடைய திருவடிகளைத் துதித்துக்கொண்டு, குன்றுகளையும், 
மரங்களையும், தண்டங்களையும், மழுக்களையும், சூலங்களையும் அசுரர்கண்மேல் வீச, அசுரர்கள் அம்புகளையும், 
வேல்களையும், சக்கரங்களையும் எதிர்வீசிப் போர்செய்தார்கள். இவ்வாறு பொரும்பொழுது, இரத்த நதி பெருக, 
தோள்களும் தலைகளும் துள்ள,குடர்கள் சிந்த, அசுரர்கள் பலர் இறந்தார்கள். பூதர்களுஞ் சிலர் மாய்ந்தார்கள். 

     பூதர்களாலே தன்சேனை இறத்தல் கண்ட தாரகன் மிகக்கோபங் கொண்டு, தேரினின்றும் பூமியிலே 
குதித்து, ஒருதண்டத்தை எடுத்து, பூதர்களைக் கொன்று, அண்டமும் குலுங்கும்வண்ணம் ஆரவாரித்து, கால்களால் உழக்கிச் 
சென்றான். தாரகன் பூதர்களைக் கொன்றமையையும் அவனை எதிர்க்கும்வன்மை தங்களிடத்தின்மையையும் 
மதித்து நோக்கி,  பூதசேனாதிபதிகள் மனந்தளர்ந்து, சிதறி ஓடினார்கள். அது கண்ட இலக்க வீரர்கள் மிகக்கோபங் 
கொண்டு, நானாவித வாத்தியங்கள் ஒலிக்க,வில்லை வளைத்து, அம்புகளைத் தொடுத்துக்கொண்டு, தாரகனை 
விரைந்து வளைந்தார்கள். அவர்கள் தொடுத்த அம்புகள் தாரகனுடைய சரீரத்தைப் பிளந்தில, ஊறேனும் செய்தில, 
வறுமையால் மிக்கான் ஒருவன் செல்வருக்குச் சொல்லும் சொற்போல வறிது மீண்டன. அம்புகளெல்லாம் தாரகன்
 மார்பிலே பொள்ளெனப்பட்டு மீண்டு, மலைமீது சிதறும் கன்மாரிபோலாயின. வீரர்கள் அது கண்டு வெகுண்டு, 
தெய்வப்படைக்கலங்களைச் செலுத்த, அவைகள் தாரகன்மீது பட்டுத் தம்வலி சிந்தி மறிந்து சென்றன. தேவர்கள் 
அதனை நோக்கிக் கைகுலைத்திரங்கினார்கள். அப்பொழுது தாரகன் தன்வைரத்தண்டத்தைச் சுழற்றி, 
தன்னைச் சூழ்கின்ற தேர்களெல்லாவற்றையும் அடித்து, புழைக்கையைநீட்டி, இலக்க வீரர்களையும்  வாரி
வில்லோடு வீழும்வண்ணம் கடலிலெறிந்தான். வீழ்ந்த வீரர்கள் வில்லோடெழுந்து, ஒருபக்கத்தே போனார்கள்.

    வீரகேசரி அதனை நோக்கிக் கோபத்தோடு சென்று, முருகக்கடவுளுடைய திருவடிகளை மனத்துட் 
கொண்டு, வில்லை வளைத்து, நூறம்புகளைத் தொடுத்து, தாரகனுடைய மகுடத்தைத் தள்ளி, கடலும் நாணும் 
வண்ணம் ஆரவாரித்தார். அவ்வோதை கேட்ட தேவர்கள் அவர்மீது பூ மாரி பொழிந்தார்கள். தாரகன் அது கண்டு, 
வேர்த்து மான முற்று, தன்கைத் தண்டத்தை வீரகேசரி மீதெறிந்துவிட்டு, தன்றேர் மீதேறி, ஓர் மகுடத்தைத் தரித்தான். 
தாரகன் எறிந்த தண்டம் தம்மார்பிலே படுதலும், வீரகேசரி மயங்கி வீழ்ந்தார். வீரவாகுதேவர் அது கண்டு வெகுண்டு, 
தாரகனெதிர் சென்று, வில்லை வளைத்து, அம்புகளைத் தொடுத்து, அவன் சரீரத்தே செறித்தார். தாரகன் 
ஒருவில்லை வளைத்து, வீரவாகுதேவர்மீது சரமழையைப் பொழிந்தான். அப்பொழுது வீரவாகுதேவர் 
பதினான்கு பாணந்தொடுத்து, தாரகனுடைய வில்லைத் துணித்தார். தாரகன் "இனி நீ இறந்தாய். இதற்கு 
ஐயமில்லை" என்று சொல்லி, ஒரு சூலத்தைச் செலுத்தினான். அச்சூலம் தம்மார்பிலே படுதலும், வீரவாகுதேவர்
 மயங்கி நிற்ப, தாரகன் அது கண்டு, இடிபோலார்த்தான். 

    வீரவாகுதேவருடைய தம்பியரெழுவர் தாரகனோடெதிர்ந்து பொருது, தோற்றார்கள். வீரவாகுதேவர் 
அது கண்டு, "நம்முடைய தம்பியர்களெல்லாரும் பொருது தோற்றார்கள்" என்று, தாரகனெதிர்சென்று, ஒருவில்லை 
வளைத்து, நாணொலியெடுத்தார். அப்பொழுது மலைகளெல்லாம் சுழன்றன. அசுரர்கள் இருகாதையும் 
பொத்திக்கொண்டு, ஏங்கி ஓடினார்கள். முகிலினது வரவைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர் பின் அதனதிடியொலி 
கேட்டலும் மயங்கித் தளர்தல்போல, வீரவாகுதேவரது வரவைக் கண்டு மகிழ்ச்சியுற்ற தேவர்கள் யாவரும், 
பின் அவரது நாணொலி கேட்டலும், அஞ்சி ஏங்கினார்கள். வீரவாகுதேவர் வில்லை வளைத்து, அக்கினிபோல 
வெகுண்டு, தாரகனை நோக்கி, "பூதர்களையும் வீரர்களையும் வன்மையால் வென்றாம் என்று நினைந்தனை 
போலும். நான் உன்னை விரைந்து கொல்வேன்'' என்றார். 

    அதுகேட்ட தாரகன் 'விட்டுணு விடுத்த சக்கரத்தை என் கழுத்திலே பதக்கமாகத் தரித்தேன். இவ்வாறு 
செய்த என்வலியை எண்ணாது 'நான் உன்னைக் கொல்வேன்' என்றாய். சிங்கத்தை நரி வெல்லுமா! இங்கு 
வந்த பூதப்படைகளெல்லாம் இறந்தன. வீரர்களெல்லாரும் தொலைந்தார்கள். நீயும் அயர்ந்து நின்றாய். 
இப்போது வீரம் பேசுகின்றாய். பார், என்வலியினால் உன்னைக் கொல்வேன்' என்றான். அப்பொழுது 
வீரவாகுதேவர் ஆயிரம்பாணங்களைத் தொடுக்க, தாரகன் தன் கைவில்லை வளைத்து, ஆயிரம் பாணங்களை 
விரைந்து எதிர்தூண்டி, அவற்றைச் சின்னஞ்செய்து, வேறு நூறு பாணங்களைச் செலுத்தினான். வீரவாகு தேவர் 
அத்துணைக்கணைகள் தொடுத்து, அவற்றை மாற்றினார். தாரகன் அது கண்டு, "வில்வன்மையில் ஒப்பில்லாத 
இவ்வீரனைத் தெய்வப்படைக் கலங்களாலே கொல்வேன்' என்று சிந்தித்து, அக்கினிப் படைக்கலத்தை விட, 
வீரவாகுதேவரும் வெகுண்டு அக்கினிப்படைக்கலத்தை ஏவி, அதனை அழித்தார். தாரகன் வருணப்படைக் 
கலத்தை விட, வீரவாகுதேவரும் வருணப்படைக்கலத்தை ஏவி, அதனைத் துண்டமாக்கினார். 

    தாரகன் சூரியப் படைக்கலத்தை விட, வீரவாகுதேவரும் சூரியப்படைக்கலத்தை ஏவி, அதனைத் 
தொலைத்தார். தாரகன் வாயுப்படைக்கலத்தை விட, வீரவாகுதேவரும் வாயுப்படைக்கலத்தை ஏவி, அதனைச் 
சிதைத்தார். தாரகன் பிரமப் படைக்கலத்தை விட, வீரவாகுதேவரும் பிரமப்படைக்கலத்தை ஏவி 
அதனை மாற்றினார். தாரகன் இவற்றைக் கண்டு, அற்புதங்கொண்டு, "நான் விடுத்த தேவப் 
படைக்கலங்க ளெல்லாவற்றையும் இவ்வீரன் வென்றான். இனி நான் இவனை மாயையினால் வெல்வேன்" 
என்று நினைந்து, மாயா மந்திரத்தை  உச்சரித்துக்கொண்டு, எண்ணில்லாத வடிவங்களைத் தாங்கி, 
அளப்பில்லாத படைக்கலங்களைச் செலுத்தினான். 

    இருட்குழாம் எங்கும் பரந்தாற் போல அவனொருவனே எங்குமாய் நின்று போர்செய்ய,தேவர்கள் 
அது கண்டு கலங்கி ஏங்கினார்கள். முன்னரே தூரத்தோடிநின்ற பூதர்கள் வெருண்டு பின்னரும் ஓடினார்கள். 
முன் போர்செய்து அயர்ந்த வீரர்களும் அச்சங்கொண்டு நின்றார்கள். அசுரர்கள் முறுவல்செய்து 
குணலையிட்டார்கள்.* தாரகன் செய்யும் மாயப்போரையும் அதுகண்டு யாவரும் அஞ்சுதலையும் 
வீரவாகுதேவர் அக்கினிப்பொறி சிந்த நோக்கி, வீரபத்திரப்படைக்கலத்தை விடும்வண்ணம் எடுத்தார். 
எடுத்தலும், சூரியன்முன் இருள்போலத்  தாரகனுடைய மாயைமுற்றும் அப்பொழுதே அழிந்தது. 
அழிதலும், தனித்து நின்ற தாரகன் வீரவாகுதேவரைப் பின்பு மாயையால் வெல்லும் வண்ணம் பிறிதோர் 
சூழ்ச்சியைக் கடைப்பிடித்து, தன்றேரை விட்டு விரைந்தோடினான். ஓடலும், வீரவாகுதேவர் 'தோற்றோடினவன் 
மேலே படைக்கலம் விடுத்தல் வீரமன்று' என்று சிந்தித்து, அவ்வீரபத்திரப் படைக்கலத்தைத் தூணியுள் இட்டார். 

* குணலை - வீராவேசத்தாற்கொக்கரித்தல்.

    அதன்பின் "யான் வலியிழந்தோடிய தாரகன் பின் விரைந்து சென்று, அவனைப் பிடித்துப் புயத்தைக் 
கயிற்றினாலே கட்டி, எம்பெருமானாகிய சண்முகக்கடவுடிருமுன் கொண்டு சென்று விடுப்பேன்' என்று நினைந்து, 
முருகக்கடவுளைச் சிந்தித்து, கடல்போல ஆரவாரித்து, வைதுகொண்டு, தாரகனைத் தொடர்ந்தணுகினார். 
அணுகலும், தாரகன் மாயைக்கு உறையுளாகிய கிரௌஞ்ச மலையின் குகையொன்றினுள்ளே சென்றொளித்தான். 
அவன் சென்ற குகையினுள்ளே வீரவாகுதேவர் புகுதலும், அம்மலை முற்றும் சூரியன் செல்லாத இருணிலம் 
போல் இருந்தது.  வீரவாகுதேவர் திருவடிகளினாலே தடவி நடந்து, தாரகனைக் காணாது, அம்மலையின் 
புணர்ப்பினாலே மீளுநெறியையுங் காணாது, வெகுண்டு, "இம்மலையின் மாயை இது' என்று சிந்தித்து 
நின்றார்.அப்பொழுது அசுரனாகிய கிரௌஞ்சமலை அது கண்டு, வீரவாகுதேவருடைய அறிவை மயக்க
 அவர் மயங்கி முன்னையறிவெல்லாம் இழந்து, துயின்றார்.

    இவ்வாறே அம்மலையினுள் வீரவாகுதேவர் துயிறலும், அவருடை தம்பியர்கள் இலக்கத்தெண்மரும் 
பூதசேனாதிபதிகளும் விம்மிச் சிறகில்லாப் பறவைபோல மெலிந்து, 'நமது நாயகர் தோற்றோடிய தாரகனைத்
 தொடர்ந்து சென்றார். இன்னும் மீண்டிலர். அவனோடு மலையினுள்ளே நின்று போர்செய்கின்றார்போலும். 
நாமும் அங்கே போவேம்" என்று நினைந்து, அங்கு நின்று நீங்கி, விரைந்து சென்று, வீரவாகுதேவர் புகுந்த
 குகையினுள்ளே புகுந்தார்கள். கிரௌஞ்சமலை வீரவாகுதேவருக்குப் போல எண்ணில்லாத மாயத்தைச் செய்தலும், 
அவர்கள் யாவரும் மயங்கித் துயின்றார்கள். தாரகன் வந்து அதனை நோக்கி, "நம் மாயையால் 
இவர்களெல்லாரும் ஒருங்கே இறந்தார்கள்' என்று மகிழ்ந்து, மலையின் மேல் எழுந்தான்.

    ஆகாயத்து நின்ற தேவர்கள் இவையனைத்தையுங் கண்டு, கண்ணீர் வார அழுது கலங்கிப் 
பதைபதைத்தோடினார்கள். பூதப்படைகள் தலைவரின்மையால் அச்சமுற்றன. மலைமீதெழுந்த தாரகன் 
ஒர்தேர்மேற்கொண்டு, அசுரர்கள் பலரும் வந்து வந்து ஆர்த்துச் சூழ,ஓர்வில்லை வளைத்துப் போர்க்களத்திற் 
சென்று, நாணோதைகொண்டு, கோடிகோடி பாணங்களை ஒரு தொடையாகவே பூட்டி, பூதர்கண்மேற் 
பொழிந்தான். பொழிதலும் பூதர்கள் சுழன்று திசைகளினும் ஆகாயத்தினும் சிதறியோடினார்கள்.

    நாரதமுனிவர் இவையெல்லாங் கண்டு இரங்கி, சரீர நடுநடுங்கி வெயர்த்து வழிக்கொண்டு 
விரைந்து போன தேவர்களோடு சென்று, தேவசேனாதிபதியாகிய சண்முகக்கடவுள் நின்றருளிய 
கடைக்கூழையை அடைந்து, அவருடைய திருவடித் தாமரைகளை வணங்கி நின்று, 'எம்பெருமானே, 
உம்முடைய படைவீரர்கள் பெரும்போர் செய்து, அசுரப்படைகளையும் மந்திரிகளையுங் கொன்று, 
தாரகனோடு பொருதார்கள். தாரகன் தன் சூழ்ச்சியினாலே வீரவாகுதேவரையும் இலக்கத்தெட்டு 
வீரர்களையும் பூதசேனாதிபதிகளையும் கிரௌஞ்சமலையினுள்ளே புகுவித்தான். புகுவித்தவுடனே, 
கிரௌஞ்சமலை மாயையைச் செய்ய, அவர்கள் யாவரும் மயங்கினர்கள் போலும். தாரகன் இதனை 
அறிந்து, மகிழ்ச்சியோடு போர்க்களத்தை அடைந்து, நம்முடைய சேனைகண்மீது சரமாரி பொழிய, 
அவைகள் தோற்றோடின. எல்லாவுயிர்களினும் நிறைந்திருக்கும் முழுமுதற்கடவுளாகிய நீர்
இவையெல்லாம் அறிவீரே'' என்று விண்ணப்பஞ்செய்தார். 

    அருட்பெருங்  கடலாகிய சண்முகக்கடவுள் நாரதமுனிவருடைய உள்ளத்தையும் தேவர்களுடைய 
துயரத்தையும் நோக்கி, "எல்லீரும் இது கேளுங்கள். நாம் போர்க்களத்திலே சென்று, தாரகனை வேலாயுதத்தினாலே 
கொன்று, கிரௌஞ்சகிரியைப் பிளந்து, வீரர்களை ஒரிறைப்பொழுதினுள்ளே மீட்டருள்வோம்' என்று திருவாய் 
மலர்ந்தருளினார். அதுகேட்ட யாவரும் மனத்துயரநீங்கி, முடிவில்லாத மகிழ்ச்சியுடன் கூத்தாடி, இசைபாடி, 
முருகக்கடவுளுடைய திருவடிகளை வணங்கினார்கள். அப்பொழுது முருகக்கடவுள் தமது சாரதியாகிய 
வாயுதேவனை நோக்கி, "மனசினும் விரைந்து செல்லும்வண்ணம் தேரைச் செலுத்துவாயாக'' என்று பணித்தருள, 
வாயுதேவன் "நன்று" என்று வணங்கி, தன்னினமாகிய வாயுக்கள் புடைசெல்ல, குதிரைகளைத் தூண்டி 
ஆர்த்தான். அப்பொழுது வானமும், பூமியும், அங்குள்ள மலைகளும், கடல்களும், திக்கயங்களும் நடுங்கின. 

    சண்முகக்கடவுளுடைய தேர் இவ்வாறே ஆகாயமார்க்கமாகச் சென்றது. பூதசேனைகள்  அவரைச் 
சூழ்ந்து சென்றார்கள். போரிலே தோற்றோடிய பூதர்களெல்லாரும் முருகக்கடவுளைத் தரிசித்தவுடனே 
வணங்கிக்கொண்டு, ஆற்றலோடும்  அவரைச் சூழ்ந்து சென்றார்கள். இவ்வாறே முருகக்கடவுள் 
தாரகனுடைய  போர்க்களத்தை அடைந்தார். பூதர்களோடு அசுரர்கள் போர்செய்து பலர் இறந்தார்கள்.
 மற்றவர்களெல்லாரும் வலியழிந்து தோற்றோடினார்கள்.


    தாரகன் தன்சேனைகள் தோல்வியடைந்தமையை நோக்கி, வில்லை வளைத்து, பல பாணங்களைத்
தொடுத்துக் கொண்டு நடந்து, தன்னோடெதிர்ந்த கணநாதர்களெல்லாரையும் பலபாணங்களைச் சொரிந்து, 
துரந்து கொண்டு, குமாரசுவாமி திருமுன் அடைந்தான். அடைந்தவுடனே, சிந்தையின்  கண்ணே கோபாக்கினி 
சொலிக்கத் தூதர்களை நோக்கி, "இவன்றானோ சிவனுடைய குமாரன்" என்று வினாவ, அவர்கள் "ஆம்,அரசனே"
என்றார்கள். உடனே தாரகன் தேரை விரைந்து செலுத்திக்கொண்டு சுவாமி திருமுன் சென்று, பூரணசந்திரர் 
போலும் ஆறுதிருமுகங்களையும் பன்னிரண்டு திருக்கண்களினின்றும்பொழியாநின்ற திருவருளையும்,
வேலாயுதம் முதலிய படைக்கலங்களையும், பன்னிரண்டு திருக்கரங்களையும், தண்டை ஒலிக்கும் 
செந்தாமரைமலர்போன்ற அருமைத்திருவடிகளையும் கண்டான். 

    இவ்வாறே சிற்பரமூர்த்தியாகிய முருகக்கடவுளுடைய திருவுருவனைத்தையும் நோக்கி, அற்புதமடைந்து, 
"இவன் நம்மேலே போர்செய்ய வந்தான் என்றால், கற்பனை கடந்த ஆதிக்கடவுளேபோலும்" என்றான். இவ்வாறு 
எண்ணியபின்பு, யாவருக்கும் முதல்வராகிய சிவபெருமான் தமக்குத் தந்த வரத்தையும், வீரத்தையும், 
வன்மையையும், செல்வத்தையும் நினைந்து கோபித்து,கந்தசுவாமியை நோக்கி, "கேள், பிள்ளாய். விட்டுணுவுக்கும் 
பிரமனுக்கும் இந்திரனுக்குமன்றிச் சிவபெருமானுக்கும் எமக்கும் போர்செய்தற்கு ஓர்காரணமுமில்லை. 
நீ வந்ததென்னை? சொல்' என்றான்.  அதற்கு முருகக்கடவுள் "உயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளை நாடி
அவற்றிற்கேற்ப அருளும் தண்டமுஞ் செய்யும் முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தேவர்களை நீங்கள் சிறையில் 
வைத்தமையைத் திருவுளங் கொண்டு, உங்கள் வீரத்தையும் வன்மையையும் அழிக்கும்பொருட்டு
நம்மை விடுத்தருளினர்" என்று திருவாய்மலர்ந்தார். 

    அது கேட்ட தாரகன் "கருடன்மேற்கொண்டு என்னோடெதிர்ந்து பொருத விட்டுணுவினுடைய
 சக்கரம் என்கழுத்தில் ஆபரணமாயிருத்தலை நீ காண்கிலையா? இந்நாள் காறும் எம்மோடு பகைத்துப் 
போர்செய்யப் புகுந்தவர்கள் யாவருள்ளும் சிறிதுபோழ்தினுள் இறந்தவர்களும் தோற்றோடினவர்களுமன்றி 
எம்மை வென்றவர்கள் இல்லை. இது நீ கேட்டிலையா? நீ என்னோடு பொரும்வண்ணம் விடுத்த தலைவர்களை 
நான் வென்று கிரௌஞ்சமலையினுள்ளே மாளும் வண்ணஞ்செய்தேன், பல கணங்களைக் கொன்றேன். 
இவற்றை நீ அறிந்திலையா? பிள்ளாய், நீ என்னோடு பொருது வருந்தாது உன்றந்தையாகிய சிவனிடத்தே 
போய்விடு" என்றான். 

    அறுமுகக்கடவுள் அது கேட்டு, "ததீசி முனிவன்மேல் விட்டுணு விடுத்த சக்கரம் தன்கூரை இழந்து 
போய்க் குயவன் கைச்சக்கரம் போலாயினதை நீ கேட்டிலையா? படைக்கலங்களுக்கெல்லாம் நாயகமாகிய 
நம்முடைய வேற்படை விட்டுணு கைச்சக்கரம் போலப் பழிப்படுமா? அது உன்னுயிரை விரைவின் உண்டுவிடும். 
பூமி முழுதையும் உண்டு பரந்த பேரிருள் சூரியன் உதிக்க அகலுதல்போல, இவ்வுலகனைத்தையும் வென்ற 
உங்கள் பேராற்றல் இங்கு நாம் வர இமைப்பின் மாய்ந்தது. மாயைகளெவற்றையும் தன்னிடத்தே காட்டிய கிரெளஞ்ச
வெற்பையும், கள்வனே, உன்னையும்,வேலாயுதத்தினாலே கொன்று, நமது சேனையை விரைவிலே மீட்கின்றேம்'' 
என்று திருவாய்மலர்ந்தார்.

    உடனே தாரகன் கோபங்கொண்டு வில்லை வளைத்து நாணொலியெடுக்க, தேவர்களும் 
தியக்கமடைந்தார்கள். அப்பொழுது அறுமுகக்கடவுள் தமது திருக்கரத்திருந்த வில்லை வளைத்து, 
நாணோதை கொண்டார். கொள்ளலும், பிரமா முதலாயினாரும் அஞ்சினார்கள். உலகமெல்லாம் ஏங்கின. 
தாரகனும் தலையசைத்தான். தலையசைத்த தாரகன் அளப்பில்லாத கணைகளைத் தூண்ட, அறுமுகக் 
கடவுள் ஆயிரம் பாணங்களைத் தூண்டி அவற்றைத் துணித்தார். தாரகன் கோபித்துப் பின்னும் 
ஆயிரம்பாணஞ் செலுத்த, முருகக்கடவுள் பத்துப்பாணஞ் செலுத்தி அவற்றை மாற்றினார். மீட்டும் தாரகன் 
அம்புகளை வில்லிலே பூட்டலும், முருகக்கடவுள் ஒருபாணந் தொடுத்து, அவன் வில்லைத் துண்டமாக்கினார். 
தாரகன் வேறோர்வில்லை வளைக்க, முருகக்கடவுள் ஆயிரம் பாணங்களை அவன்மீது செலுத்தினார். 
அது கண்ட தாரகன் ஆயிரம்பாணங்களைச் செலுத்தி, அப்பாணங்கள் யாவற்றையும் நீறாக்கி, வேறு 
அநந்தம் பாணங்களைச் செலுத்தினான். முருகக்கடவுள் அவைகளை அறுத்து, கோடிபாணங்களைத் தூண்டி, 
தாரகனுடைய சரீரமெங்கும் செறிவித்தார். செறிவித்தலும், தாரகன் கோபங்கொண்டு, இருகோடிபாணங்களைச் 
செலுத்த, முருகக்கடவுள் அவைகளைப் பாணங்களினால் மாற்றி, இரண்டு பாணங்களைச் செலுத்தி, தாரகனுடைய 
புழைக்கையையும் கோடுகளையும் துணித்து வீழ்த்தினார். 

    உடனே தாரகன் தளர்ந்து வெகுண்டு, ஆயிரம் பாணங்களைத் தொடுத்து, முருகக்கடவுளுடைய 
தேர்க்கொடியை அறுத்தான். அது கண்டு, முருகக்கடவுள் எட்டம்பினாலே தாரகனுடைய வில்லைத் துணித்து, 
ஆயிரமம்பு தூண்டி, அவனுடைய தேரையும், குதிரைகளையும், பாகனையும் அழித்தார். தாரகன் வேறோர் 
தேர்மீதேறி, ஓர் வில்லை வளைத்து, முருகக்கடவுளுடைய சாரதியாகிய வாயுதேவனுடைய புயங்களில் 
ஆயிரமம்பு தொடுத்தான். முருகக்கடவுள் தமது சாரதியுடைய வருத்தத்தை அறிந்து, ஆயிரம்பாணங்களைத் 
தாரகனுடைய நெற்றியிலே புகும்வண்ணம் செலுத்த, அவன் இரத்தம் பெருகத் தன்றேர்மீது புலம்பி மயங்கி வீழ்ந்தான்.

     தாரகன் வீழ்தலும், அவனுடைய படைவீரர் அதனை நோக்கி, கோபங்கொண்டு, எம்பெருமானை வளைந்து, 
சூலம் சக்கரம் தோமரம் முதலிய பல படைக்கலங்களை அவர்மீது பொழிந்து, ஆர்த்தார்கள். குமாரசுவாமி அது கண்டு, 
தம்வில்லை வளைத்து, சரமாரி பொழிந்து, அவுணர்கள் விடுத்த படைக்கலங்கள் யாவையும் அறுத்தார். 
மீட்டும் சரமாரி பொழிந்து, அசுரர்களுடைய தலைகளையும் மார்புகளையும் வாய்களையும் கைகளையும் 
தோள்களையும் தாள்களையுந் துணித்தார். இரத்தம் எங்கும் கடல்போலப் பெருகியது. முருகக்கடவுளுடைய 
பாணங்களினாலே அசுரர்களிற் பலர் இறந்தார்கள். சிலர் இரத்தக்கடலிலே பாய்ந்து நீந்தி, தத்தமுயிர் 
கொண்டோடினார்கள்.

    அப்பொழுது தாரகன் மயக்க நீங்கி எழுந்து, தன்னயலிலே நின்ற தன் சேனைகளைக் காணாது 
துன்பங்கொண்டு,நகைத்து,"பரமசிவனுடைய சிறுவனொருவன் போர்செய்ய, நான் என்புழைக்கையையும் 
கோடுகளையும் இழந்து, மயங்கி வீழ்ந்தேன். என்சேனைகளையும் இழந்தேன். இங்கே தனித்து நிற்கின்றேன். 
என்னாண்மை அழகிது அழகிது. வில்வன்மை கொண்டு எண்ணிறந்த பாணங்களைத் தூண்டி இப்பகைவனுடைய 
உயிரைக் குடித்தலும் வெல்லலும் அரிது. இனித் தேவப்படைக்கலங்களைச் செலுத்தக்கடவேன்" என்று சிந்தித்தான். 
சிந்தித்து, விட்டுணுப் படைக்கலம் பிரமப்படைக்கலம் முதலிய தேவப்படைக்கலங்கள் யாவற்றையும் விட விட 
அவையெல்லாம் வந்து வந்து, அஞ்சி நடுநடுங்கி, எம்பெருமான் பக்கத்தே ஒதுங்கித் துதித்துக்கொண்டு நின்றன. 

    தாரகன் அது கண்டு, அகந்தையை ஒழித்தான், சிறிதஞ்சினான், மிக விம்மிதமடைந்தான். 
அக்கினி சொலிக்குங் கண்ணினையுடையனாகி, "இவனை வெல்லல் அரிதுபோலும்" என்று மனசினினைந்தான். 
"இனிச் சிவப்படைக்கலத்தை விடக்கடவேன்'' என்று சிந்தித்து, அதனை எடுத்து, மனத்தினாலே பூசித்துக் 
கோபத்தோடு செலுத்தினான். அச்சிவப்படைக்கலம் நஞ்சையும், தேவப்படைக்கலங்களையும், பூதங்களையும், 
பாம்புகளையும், சூலங்களையும், அக்கினியையும் உண்டாக்கிக் கொண்டு, சருவாண்டங்களும் சருவான்மாக்களும் 
உலைந்து சுழலும்வண்ணம் உருத்துச் சென்றது. 

    சுப்பிரமணியக்கடவுள் அது கண்டு, தந்தையாராகிய சிவபெருமானைத் திருவுளத்திலே தியானித்துக் 
கொண்டு, ஒருதிருக்கரத்தை நீட்டி, அச்சிவப்படைக்கலத்தைப் பற்றிக்கொண்டார். தாரகன் அது கண்டு, "இன்றே எமது 
செல்வம் அழிந்தது' என்று ஏங்கினான். "தேவதேவராகிய சிவபெருமானுடைய படைக்கலத்தைச் செலுத்தினேன். 
அதனையும் எதிர்ந்து பற்றினான். இவ்வறுமுகக்கடவுளுடைய வன்மை ஒருவராலே சொல்லற்பாலதா! 
ஆயினும் இவன் தருமப்போரன்றி வஞ்சகப் போர் செய்ய நினையான். நான் மாயைகளைச் செய்து, மறைந்து 
நின்று போர் செய்வேன் " என்று சிந்தித்து, விரைந்து தேரோடு கிரௌஞ்சமலையின்முன் சென்று,  
"நீ வல்ல மாயைகளை விரைந்து செய்வாயாக செய்வாயாக" என்றான். 

    உடனே கிரௌஞ்சமலை மாயையினாலே முப்புரங்கள் பலவாய்வர, தாரகன் அப்புரங்களிலுள்ள 
அசுரர்களாய் வந்தான். கிரௌஞ்சமலை பலபல முகில்களாய் வர, தாரகன் அவற்றினுள்ளே இடியாய் வந்தான். 
கிரௌஞ்சமலை பல கடல்களாய் வர, தாரகன் அவற்றினுள்ளே வடவாமுகாக்கினியாய் வந்தான். கிரௌஞ்சமலை 
சக்கரவாளகிரியைச் சூழும் இருளாய் வர, தாரகன் அதனுள்ளே பூதர்களாய் வந்தான். கிரௌஞ்சமலை 
அட்டதிக்கயங்களாய் வர, தாரகன் குலமலைகளாய்ச்  சடசடவென்னும் ஒலியோடு வந்தான். கிரௌஞ்சமலை 
வாயுவாய் வர, தாரகன் அக்கினியாய் வந்தான். கிரௌஞ்சமலை நெருப்புக்கொள்ளிகளாய் ஆகாயத்து வர 
 தாரகன் ஆயிரகோடி சூரியர்களாய் வந்தான்.

    இவ்வாறே தாரகன் கிரௌஞ்சகிரியோடும் அளவில்லாத மாயையின் வடிவங்களைக் கொண்டு 
எங்குந் திரிதலும் , அறுமுகக்கடவுள் இவற்றைக் கண்டு, தமது திருக்கரத்திலுள்ள வேலாயுதத்தை நோக்கி, 
"நீ தாரகாசுரனையும் கிரௌஞ்சமலையையும் ஒரிறை செல்லுமுன் பிளந்து, உள்ளுயிருண்டு புறத்தே சென்று, 
இலக்கத்தொன்பது வீரர்களையும் பூதசேனாதிபதிகளையும் மீட்டுக்கொண்டு, இங்கு வருவாயாக" என்று 
பணித்து, அதனைச் செலுத்தினார். சருவசங்காரகாலத்தில் மாயையினாகிய உலகங்களையும் 
அவற்றின்கணுள்ள உயிர்களையும் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றும் அக்கினி 
சுடுதல்போல, அவ்வேலாயுதம் தாரகனும் கிரௌஞ்சகிரியும் அங்கே செய்த மாயைகளனைத்தையும் 
விரைவின் அழித்தது. 

    எம்பெருமானுடைய ஆறுதிருமுகங்களினுநின்று எழுந்த கோபம் திரண்டொரு வடிவெடுத்துச் 
செல்லல்போலவும், சிவபெருமானுடைய முத்தலைச்சூலமிரண்டு ஒருபடையாய்ச் செல்லல்போலவும், 
அவ்வேற்படை சென்றது. செல்லலும், தாரகன் "இதனை நான் பிடித்து முறித்துவிடுவேன்' என்று 
கோபத்தோடு விரைந்து வந்தான். அச்சஞ் சிறிதும் இல்லாத தாரகன் கருடன்மேற்செல்லும் பாம்புபோலச் 
சீறி நணுகுதலும், அவ்வேலாயுதம் அவனது மார்பாகிய வைரமலையின் மீது இடிபோலப் பட்டு, 
அதனைக் கிழித்துப்போய்க் கிரௌஞ்சமலையிலே பட்டு, அதனை உருவிச் சென்று, வீரமும் புகழுங்கொண்டு 
விளங்கினாற்போல இரத்தமுந்துகளுமாடி, விரைந்து மீண்டது. மீண்ட வேலாயுதம் மலையினுள்ளே துயில்கின்ற 
வீரர்களை எழுப்பிவிட்டு,ஆகாயத்திலே போய்க் கங்கைநீராடிச் சுத்தவடிவாய், எம்பெருமானுடைய 
திருக்கரத்தில் வந்து, முன்போல் இருந்தது. 

    வேலாயுதம் தாரகனுடைய மார்பிலும் கிரௌஞ்சகிரியிலும் பட்டுருவிய பேரோசையைக் கேட்டு, 
உலகத்துள்ளோர்கள் "பூமி பிளந்தது' என்பாரும், "மகா மேருமலை வெடித்தது" என்பாரும், "அண்டம் உடைந்தது'' 
என்பாரும் ஆயினார்கள். வேலாயுதம் தன் மார்பை ஊடறுத்துச் செல்ல, தாரகாசுரன் அநந்தகோடி யிடிகள்போல 
ஆர்த்து, எழுந்து துள்ளிப் பூமியில் விழுந்து, பதைபதைத்து இறந்தான். அறுமுகக்கடவுள் செலுத்திய வேலாயுதம் 
மீண்டு அவரது திருக்கரத்து இருப்ப,தாரகன் இறந்தமையையும், கிரௌஞ்சகிரி பிளந்தமையையும், விட்டுணுவும் 
பிரமாவும் இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் நோக்கி, ஆரவாரித்தார்கள், கூத்தாடினார்கள், இருகைகளையும் 
சிரசின்மேற்குவித்துக் குமாரசுவாமியைத் துதித்தார்கள், பூமாரி பொழிந்தார்கள், வலஞ்செய்து பாடினார்கள், 
திருமுன்னே பலமுறை வணங்கி நின்றார்கள், பேரானந்தப்பெருங்கடலின் மூழ்கினார்கள். 

    கிரௌஞ்சகிரி அழிந்தவுடனே, அதனுள்ளே துயின்ற வீரவாகுதேவர் முதலிய வீரர்களெல்லாரும் மயக்கநீங்கி, 
விரைந்து சென்று, சண்முகக்கடவுளுடைய திருவடிகளை வணங்கித் துதித்துக்கொண்டு, அவர்பக்கத்தை அடைந்தார்கள். 

    பெருங்கருணாநிதியாகிய சுப்பிரமணியக்கடவுள் அவர்களை நோக்கி, ''நீங்களெல்லீரும் தாரகனுடைய 
கிரௌஞ்சகிரியுட்பட்டு, மாயையின் அழுந்தி அறிவிழந்து வருந்தினீர்கள்போலும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
தண்ணளியோடு கூடிய இவ்வருமைத் திருவாக்கைக் கேட்ட வீரர்கள் "எம்பெருமானே, உமது திருவருள் இருக்கும்
பொழுது அடியேங்கள் ஊறடைவதுண்டா? மையலுடன் உறங்குவோர் போல இன்பமடைந்ததன்றிக் கிரௌஞ்ச மலையினது 
மாயத்தினாலே சிறிதும் துன்பமடைந்திலேம்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள்.

    அப்பொழுது குமாரசுவாமி வீரவாகுதேவரை அழைத்து, முன்னே தாரகன் விடுப்பத் தாம் பற்றிய 
சிவப்படைக்கலத்தை  அவர்கையிற் கொடுத்து, 'இதனை நீ வைத்துக்கொள்ளக்கடவாய்" என்று திருவாய்மலர்ந்து, 
திருவருள் புரிந்தார். அதன்பின்பு, தாரகனுடைய யுத்தத்தில் இறந்த பூதர்களெல்லாரையும் 'நீங்களெல்லீரும் 
எழுங்கள்'' என்று எழுப்பி, பூதசேனைகள்  சூழ, தேவர்கள் துதிக்க, வீரர்கள் நெருங்க, செருக்களத்தினின்றும் நீங்கினார்

            திருச்சிற்றம்பலம்.

            தேவகிரிப்படலம்.

    முருகக்கடவுள் போர்க்களத்தை அகன்று, தேவர்களும் பூதர்களும் வீரர்களும் துதிக்க வந்து, அங்கு நின்ற 
இமையமலையைக் கடந்து, தென்றிசையின் நடந்து, சூரியன் அஸ்தமயனஞ் செய்யும்பொழுது தேவகிரியை அடைந்தார். 
அவ்விரவிலே அம்மலையின் ஒருபக்கத்தெய்தி, விட்டுணுவும், பிரமாவும், இந்திரனும், தேவர்களும் முருகக்கடவுளுடைய 
திருவடிகளை வணங்கி, ''பெருங்கருணாநிதியே, வன்கண்மையையுடைய தாரகாசுரன் வருத்த இந்நாள்காறும் 
சிறியேங்கள் வருந்தினேம். எம்மாட்டுள்ள பெருங்கருணையினாலே அவனைக் கிரௌஞ்சகிரியோடு 
கொன்றருளினீர். உம்மைப் பூசிக்க நினைந்தேம். இம்மலையில் எழுந்தருளியிருத்தல் வேண்டும்.இவ்வரந்தருக'' 
என்று விண்ணப்பஞ் செய்தார்கள். அருட்பெருங்கடலாகிய முருகக்கடவுள் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தருள, 
தேவர்கள் அது கண்டு, சரீரம் பூரிக்க உரோமஞ் சிலிர்க்கத் துள்ளிப் பேருவகைபூத்தார்கள். முருகக்கடவுள் 
சேனைகளோடும் தேவர்களோடும் தேவகிரி மேற் சென்று, தம்மைத் தொழுதுகொண்டு தம்பக்கத்து வந்த 
தேவத்தச்சனை நோக்கி, "நாமும், நம்முடைய தம்பியர்களும், தேவர்களும், கணங்களும் இருக்கும்பொருட்டு, 
இம்மலையின்கண்ணே ஒருநகரத்தை இப்பொழுதே விரைவின் உண்டாக்கக்கடவாய்'' என்று பணித்தருளினார். 

    அது கேட்ட தேவத்தச்சன் "சுவாமீ, அவ்வாறே செய்வேன்' என்று விண்ணப்பஞ்செய்து, திருவடிகளை 
வணங்கிக்கொண்டு போய், அவ்விடத்தே ஒருநகரத்தையும், அதனுள்ளே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் 
பொருட்டு ஒரு செம்பொற்றிருக்கோயிலையும், அதனுள்ளே ஓரிரத்தினசிங்காசனத்தையும் செய்து முடித்துக்கொண்டு, 
மீண்டு வந்து, விண்ணப்பஞ் செய்தான்.

    சண்முகக்கடவுள் தம்மைச் சூழ்ந்த யாவரோடும் அத்திருநகரத்தினுள்ளே போய், பூதசேனைகளைத் 
திருக்கோயிற்றிருவீதியிலே நிறுவி, தேரினின்றும் இறங்கி, செம்பொற் பாதுகைகளிலே தமதருமைத் திருவடிகளை 
வைத்து, வீரர்களும் தேவர்களும் சூழ,திருக்கோயிலினுள்ளே புகுந்து, சூரியர்கள் யாரும் ஒரோவழிக் கூடினாற் 
போலப் பேரொளி வீசும் இரத்தின சிங்காசனத்தின்மேல் எழுந்தருளியிருந்தார். அப்பொழுது பிரமா முதலிய 
தேவர்கள் யாவரும் எம்பெருமானைப் பூசிக்க நினைந்து, உமாதேவியாருடைய திருக்கரத்திற் றோன்றிய 
கங்கையை நினைப்ப, அஃதங்கு வந்தது. பின்னர் இரத்தினாபரணம், பீதாம்பரம், நறுமலர், சந்தனம், தூபம், தீபம் 
முதலிய பூசோபகரணங்களனைத்தையும் அங்கு வருவித்தார்கள். 

    முன்னே அமுதம் வைத்த குடங்களைக் கொணர்ந்து, வேதங்களைச் சொல்லிக் கங்கையிலே 
திருமஞ்சனமெடுத்தார்கள். பிரமா முதலிய தேவர்களும் முனிவர்களும் சண்முகக்கடவுள் பக்கத்தை 
அடைந்து, அவருடைய மந்திரத்தைச் சொல்லித் திருமஞ்சனமாட்டினார்கள். அதன்பின், முன்னே தரித்த 
பீதாம்பரத்தை நீக்கி, வேறுபீதாம்பரஞ் சாத்தி, வேறொரு சிங்காசனத்தின் மேல் எழுந்தருளியிருக்கச்செய்து, 
அவருடைய திருநாமத்தைச் சொல்லி, நறுமலர்களைச் சாத்தி, திருமாலைகளைச் சூட்டி, சந்தனக்குழம்பை 
அணிந்து, பச்சைக் கர்ப்பூரத்தை அப்பி, புழுகையும், கஸ்தூரியையும் மட்டித்து, திருமேனியெங்கும் 
திவ்வியாபரணங்களைச் சாத்தி, மணியொலியோடு தூப தீபங்காட்டி, மெய்யன்போடு வலஞ்செய்து 
வணங்கித் துதித்தார்கள். தேவர்களெல்லாருங்கூடி இவ்வாறு பூசிப்ப, அறுமுகக்கடவுள் பெருங்கருணையினாலே 
அதனை ஏற்றுக்கொண்டு, அங்கெழுந்தருளியிருந்தார். அது நிற்க, தாரகனுடைய புதல்வனாகிய அசுரேந்திரன் 
செய்ததும் பிறவுஞ் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            அசுரேந்திரன் மகேந்திரஞ் செல்படலம்.

     அறுமுகக்கடவுள் செலுத்திய வேலாயுதத்தினாலே தாரகன் இறந்தமையைச் சிலதூதர்கள் போய்ச் 
சொல்ல, அவனுடைய மனைவியாகிய சௌரி வருத்தமுற்று, மற்றைமனைவியர்களும் பிறரும் தன்னைச் சூழ்ந்து 
பதைத்திரங்க, துன்பத்துடனே சென்று, தன் கணவன்மேல் வீழ்ந்து, புலம்புவாளாயினாள்: "சிவபெருமானுடைய 
திருவருளைப் பெற்ற நீ விட்டுணு பதத்திற்சென்றாயல்லை, பிரமபதத்திற்சென்றாயல்லை, திருக்கைலாசத்திற் 
சென்றாயல்லது வேறெங்குச் சென்றாய்! தன்சக்கரத்தை உனக்காபரணமாகத் தந்த விட்டுணுவும் இந்திரனும் 
மற்றைத்தேவர்களும் இயமனும் மற்றனைவர்களும் இன்றன்றோ தங்கள் மனக்கவலையெல்லாம் தீர்ந்தார்கள். 
தேவர்கள் யாவரும் புலம்பும்வண்ணம் அசுரமன்னவர்களோடும் நீ வரும் பவனியைக் காணாதேன் 
பறவைக்கூட்டஞ்சூழத் துயிலும் உன்னை, எம் பெருமானே, இப்படியே காண்பேனாயினேன். நான் உன்னைத் 
தழுவுதல் கண்டும்,நீ என்னைத் தழுவாதிருந்தனை. 

    அது பலருங்காணிற் பழுதாமென் றொழிந்தாயாயின், மயங்காநின்ற எனக்கு ஓர்சொல்லாயினும் 
சொல்கின்றிலையே! வறிதே துயில்கின்றாய். என்மேல் யாதாயினும் வெறுப்புண்டா? கைலாசபதி உனக்குத் 
தந்த வரம் மெய்யென்றே இந்நாள்காறும் துணிந்திருந்தேன். அது பொய்யாய் விளைந்ததுவோ!  என்கணவா, 
இறந்தனையே.ஐயோ! இதற்கோ நீ முன் அருந்தவஞ் செய்தாய். உயர்வொப்பில்லாத சிவபெருமான் பெற்ற 
குமாரனோடு நீ ஏன் எதிர்ந்தாய் ! ஐயோ இறந்தாயே! விதிவலியை யாவர் கடந்தவர்! அசுரர்கள் சூழும்வண்ணம் 
சிங்காசனத்தில் வீற்றிருந்த நீ போர்க்களத் திறந்தாயே. என்னாயகனே, சொல்.  இதுவுஞ்சிலநாளோ. 
சிவபெருமான் உனக்குத் தந்த வரத்தை நீ நம்பினாயே. அவருடைய சூழ்ச்சியைச் சிறிதும் உணராது 
உயிருந் தொலைந்தாயே. இனி உன்னைத் தமியேன் காண்பது எந்நாளோ! சிவகுமாரன் வந்து போர்செய்ய 
நீ முன்னை வலியிழந்து இறந்தனையென்பது கேட்டும் பின்னும் உயிரோடிருந்தேன். என்னினும் பேரன்புடையோர் 
யாவர்!  இனி நான் யாது செய்வேன்" என்று இரங்கினாள். மற்றை மனைவியர்களும் வந்து நெருங்கித் 
தாரகனைச் சுற்றிப் புலம்பித் துயருற்றார்கள்.

    அப்பொழுது சிங்கமுகாசுரனுடைய ஆசுரபுரிக்குப் போயிருந்த புதல்வனாகிய அசுரேந்திரன் 
கேள்வியுற்று வந்து, தன்பிதாவாகிய தாரகன் இறந்ததனைக் கண்டு, பெருமூச்செறிந்தான், அழுதான், 
கைகுலைத்தான்,  சோகத்தழுங்கினான், விழுந்தயர்ந்தான், பின்பு தெளிந்தான். முன்னொருநாளும் அடையாத 
பெருந்துயரத் தழுந்திய புதல்வன் எழுந்து சென்று,  தன்மாதாவுடைய கால்களில் விழுந்து, 'அம்மே, உன்கணவன் 
எங்கே சென்றான்! சொல்வாயாக" என்று நின்று புலம்பினான், பின்பு தன்மாதா முதலாயினோரை "நீங்கள் 
ஒருபக்கத்தே போயிருங்கள்" என்று ஏவி,தன்னயலில் நின்ற அசுரர்களைக் கொண்டு அக்கினி விறகு முதலிய 
கருவிகள் பலவற்றையும் வருவித்தான். தந்தையாகிய தாரகனது சரீரத்தை முன் போலப் பொருத்தி, 
ஓர் தேர்மீதேற்றி, சுடுகாட்டிற் சேர்த்தி, சந்தனப்பள்ளிமீது கிடத்தி,ஈமக்கடன்களைச் செய்து, தகனம் பண்ணினான். 

    பண்ணும்பொழுது, மாதாவாகிய சௌரி சென்று, 'நான் என் கணவனுடன் செல்லுதற்கு அக்கினி 
வளர்க்கக்கடவாய்" என்று சொல்ல, அசுரேந்திரன் அது கேட்டு, நடுநடுங்கி, அவள் கால்களின் வீழ்ந்து, 
"தாயே,என்னை காப்பாற்றிக் கொண்டிருப்பாயாக" என்றான். சௌரி அதனை மறுத்துக் கோபித்துரைக்க,
அசுரேந்திரன் "அவ்வாறாகுக" என்றான். மற்றைத் தாயர்களும் 'நாங்களும் கணவனோடு செல்லும்வண்ணம் 
அக்கினி வளர்க்கக் கடவாய்" என்று சொல்ல, அசுரேந்திரன் அதற்கியைந்து அக்கினி வளர்க்க, 
தாயர்களெல்லாரும் அதில் வீழ்ந்தார்கள்.

    வீழ்ந்தபொழுது அசுரேந்திரன் புலம்பி, அந்நகரத்தை அக்கணமே நீங்கி,தன்கிளைஞர்சிலர் தன்னைச் 
சூழச் சென்று, தென்கடலினுள்ள வீரமகேந்திரபுரியை அடைந்தான். அங்கே சூரபன்மனுடைய கோயிலிற் புகுந்து, 
அவனுடைய கால்களின் வீழ்ந்து, தன்கைகளால் அவற்றைப் பிடித்துக்கொண்டு அழுதான். சூரன் அது கண்டு,
 "மைந்தனே, நீ புலம்பாதே. நிகழ்ந்தது யாது?சொல்வாயாக" என்றான். அப்பொழுது அசுரேந்திரன் 
"பிதாவே,இந்திரனுடைய புணர்ப்பினாலே பரமசிவனுடைய குமாரனாகிய கந்தன் பூதசேனைகளோடு வந்து, 
உன்றம்பியைக் கிரௌஞ்ச மலையோடு வேற்படையினாலே கொன்று, பூமியில் வந்தான்" என்றான். 
சூரன் அது கேட்டு, "நன்று நன்று' என்று இடிபோலச் சிரித்து, "கிரௌஞ்ச கிரியோடு தாரகனைச் சிவனுடைய 
குமாரனா கொல்வான்! இது பொய்வார்த்தை. மைந்தனே, அஞ்சாதே. உண்மை சொல்வாயாக" என்றான். 

    அதற்கு அசுரேந்திரன் "பிதாவே, இது உண்மை. என்றந்தையையும் கிரௌஞ்சகிரியையும் சிவனுடைய 
குமாரன் வேலாயுதத்தினாலே கொன்றுவிட்டுச் சென்றான்.நான் விதிப்படி ஈமக்கடன் செய்து முடித்துக்கொண்டு, 
பெருந்துயரத்தோடும் உன்னிடத்து வந்தேன்'' என்றான். அது கேட்டலும், சூரனுடைய மனசிலே கோபாக்கினி கிளர்ந்தது; 
கண்கள் அக்கினியைக் கான்றன; நாசிகள் புகையைத் தோற்றுவித்தன. சரீரத்து ரோமங்கள் பொறியைச் சிந்தின. 
நெறித்த புருவமிரண்டும் நெற்றிமேற் சென்றன. பற்கள் அதரத்தைக் கவ்விக் கடித்தன. உதடுகள் துடித்தன. 
மனம் ககனகூடத்தையும் இடிக்க நினைந்தது. இவ்வாறே கோபாக்கினி எழுந்து சொலிக்க, தாரகன்மீது தொடரும் 
அன்பினாலே சூரனிடத்துச் சேர்ந்த துன்பக்கடல் அவ்வக்கினியி னாற்றலை அவித்தது. கண்களினின்றும் 
பொழியாநின்ற நீர்  நதிபோலவும், சரீரத்திற்றோன்றிய வேர்வை கடல்போலவும், பெருகின. சூரபன்மன் இவ்வாறே 
துன்பக்கடலில் அழுந்திச் சிங்காதனத்தினின்றுந் தவறிப் பூமியில் வீழ்ந்து, இடிபோல் அழுதான். பக்கத்துநின்ற 
அசுரர்கள்  துன்பத்தழுந்தி, ஏங்கி வீழ்ந்தழுதார்கள். அந்நகரமெங்கும் அழுகையொலியே மலிந்தது.

    அப்பொழுது சூரபன்மன் முன் அவிந்த கோபாக்கினி பின் மனத்தின் மூள, மானமும் நாணமும் வருத்த, 
விரைந்தெழுந்து, தன்னேவலர்களை நோக்கி, "என்றம்பியைக் கொன்ற கந்தனை நான் சென்று பொருது வென்று 
வரல்வேண்டும். என்னுடைய தேரையும் படைக்கலங்களையும் கவசத்தையும் ஒருகணத்தினுள்ளே கொண்டுவாருங்கள்'' 
என்றான். உடனே ஏவலர்கள் யாவரும் அவ்வாறு செய்யும்பொருட்டுப் போனார்கள். அசுரர்கள் அதனை அறிந்து குறைவற்ற 
படைகளோடு வந்து சேர்ந்தார்கள். இவற்றைக் காண்டலும், மந்திரிகளுள் ஒருவனாகிய அமோகன் சூரனுடைய 
கால்களை வணங்கி நின்று, "மகாராசாவே, அடியேன் ஒருசொற் சொல்வேன். கோபங்கொள்ளாது அதனைக் கேட்க" 
என்று சொல்லலுற்றான்: 

    "படைத்தொழில் கற்றுப் பகைவரைத் தாங்கூறிய வஞ்சினப்படியே கொல்ல வல்ல வீரர்கள், தந்நகரத்தைப் 
பகைவர் வந்து வளைப்பினும், எண்ணியன்றிக் கோபத்தை மேற்கொண்டு விரைந்து போர்செய்யச் செல்லார். 
பகைவருடைய குலத்தையும், உட்கோளையும், வந்த நிலத்தையும், அவருடைய முன்னோரது நெறியையும், 
அவர்கொண்ட கோபத்தையும், அவருடைய படையையும், வலியையும், வினவியன்றிப் பிறிதொன்று 
மனங்கொள்வாரா? பகைவர் வரத்தின் வலியரோ, மாயையின் வலியரோ, படைக்கலக்கல்வியின் வலியரோ, 
உரத்தின் வலியரோ, ஊக்கத்தின் வலியரோ என்று இவற்றை ஆராய்வர். ஒற்றரைத் தூண்டி அவரது வலியை 
உணர்ந்தாராயினும், வேறோரொற்றனாலன்றி அவர் கூற்றை மனத்துட்கொள்ளார். 

     அப்பகைவரைச் சூழுஞ் சேனையன்றி அவருக்குப் பிறிதிடத்தும் சேனையுண்டோ என்று பின்னும் 
ஒற்றரை விடுத்தாராய்வர். வினையினது விளைவை ஓர்காலும் மெலிதென நினையார். அவரது சேனையையும்
 அவரது தன்மையையும் சிறுமையாகக் கருதார். தமக்குப் பகைவர் வரின், கொடுத்தல், இன்சொற்சொல்லல், 
வேறுபடுத்தல் என்னும் முன்னை மூன்றுபாயங்களையும் ஆராய்ந்து நிலைமையறிந்து செய்வர். இம்மூன்றின் 
வாராவழித் தம்மரசியன் மரபுக்கேற்பக் கொடுஞ்சினங்கொண்டு குற்றந்தீர்ந்த படைஞரோடும் படைக்கலங்களோடும் 
எதிர்ந்து சுற்றி, பகைவரதியல்பை அறிந்து, அதற்கேற்பப் பொருது வெற்றிகொண்டு மீள்வர். எதிர்க்க வலியில்லாதார் 
எதிர்ந்தவழியும், அரசராயினோர் அவரோடு போரைக் குறித்துச் செல்லல் பழியதன்றோ! அவரை வெல்லக் கருதினும், 
தம்படைஞரைத் தூண்டி வெல்வர். அதுவே பெறற்கரும்புகழ். உலகத்துள்ள அரசரதியற்கை இதுவே யாகும். 
அரசனே, உனக்கொப்பாரில்லை. நீ அழிவில்லாய். எவ்வுலகுமாளுவாய். குற்றமொன்றும் அடையாய். 
தேவர்கள் யாவரையும் ஏவல்கொண்டாய். 

    பிரமனுந் திருமாலும் நாடோறும் புகழுமாறிருந்தாய். இத்தன்மைத்தாய வலி பெற்றுள்ள நீ, எளியனாகிய 
இந்திரன்சொற்கேட்டுப் பூதமே படையாகப் பரமசிவன் நேற்றுப் பெற்ற பிள்ளை எதிர்ந்திடின், அவனை 
வெல்லக் கருதிச் செல்வையாயின், அது உனக்கு வசையன்றோ? நீ பகைவரது வன்மையை அறியாய். 
அவருடைய படைஞரது வன்மையை அறியாய். உனது அரும்பெருந்தலைமையை நினையாய். 
செயற்பாலனவற்றை அமைச்சரோடுஞ் சூழாய், வாளா கோபமேல்கொண்டு செல்லலும் வலியின்பாலதா! 
வீரமும் வலியும் மிக்கோராயினும், விதி வந்தெய்தின், வலியில்லாராலும் கொல்லப்படுவர். உன்னைப்போல 
அழியாவாற்றல்  பெறாமையால், தாரகன் மழலை தேறாத சிறுவனாலும் கொல்லப்பட்டான். தண்டை
 ஒலிக்கும் சீறடிகளையுடைய சிறுவன் தாரகனைக் கொன்றது அற்புதமன்று.  வலியரும் ஒருகாலத்து 
வன்மையை இழப்பர். மெலியரும் ஒருகாலத்து வீரராய் விளங்குவர். யாருமொப்பாகாது வைகும் இராசராசனாகிய 
நீ சிறுவன்மேற் போர்குறித்துச் செல்லல் புகழன்று. அவனது சிறப்பையும் வலியையும் அறிந்துகொண்டு, 
பின் அவனின் வல்ல வீரரைப் படைஞரோடேவி வெற்றிகொண்டிருக்கக்கடவை'' என்றான்.

    அமோகன் இவ்வாறு தேற்ற, சூரபன்மன் அது கேட்டு, "இது உறுதி" என்று தெளிந்து, கோபத்தை விடுத்து, 
சிங்காசனமீதேறி இருந்து கொண்டு, தன்னயலினின்ற ஏவலாளருட்சிலரை நோக்கி, "பகன், மயூரன், சேனன், 
சக்கரவாகன், சுகன் முதலிய தூதர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்று பணித்தான். அவர்கள் 
சூரபன்மனை  வணங்கித் துதித்துச் சென்று, அத்தூதர்களை அழைத்துக்கொண்டு வந்து விடுத்தார்கள்.
தூதர்கள் வணங்கி நிற்ப, சூரன் அவர்களை நோக்கி, "நீங்கள் விரைந்து போய், பூமியில் வந்த கந்தனதியல்பையும், 
அவனுடைய படைஞர்களாகிய பூதர்களுடைய தொகையையும், பிறவனைத்தையும் ஆராய்ந்தறிந்துகொண்டு 
இங்கு வருவீர்களாக'' என்று பணித்தான். தூதர்கள் அப்பணியைச் சிரமேற்கொண்டு, சூரனை வணங்கி, 
பூமியை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் சென்றபின்பு, சூரபன்மன் அசுரர்கள் துதிக்க வீற்றிருந்து 
அரசுசெய்தான். அது நிற்க, அறுமுகக்கடவுள் தேவகிரியை நீங்கிப் பூமியில் எழுந்தருளி வந்தமையைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            வழிநடைப்படலம்.

    தேவகிரியில் எழுந்தருளியிருந்த அறுமுகக்கடவுள், சூரியன் உதித்த பின்பு, அதனை நீங்கி, சேனைகளும் 
தேவர்களும் சூழத் தென்றிசை நோக்கிச் சென்றார். உமாதேவியார்தம்மை நீக்கி வலஞ்செய்யும் பிருங்கிமுனிவர் 
துணிந்த வேதமுடிவை உணர்ந்து சிவபெருமானுடைய இடப்பாகத்தைச் சேரவிரும்பிப் பூசித்த திருக்கேதாரத்தை 
முன்னே தரிசித்தார். விட்டுணுவுக்கும் சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை மானுடர்கள் 
தெளியும்வண்ணம் வியாசமுனிவர் எடுத்த கையே தெளிவித்த காசியம்பதியைத் தரிசித்தார். 
சிலாத முனிவருடைய குமாரராகிய திருநந்திதேவர் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்பொருட்டு 
ஓர்மலையாகுவன் என்று அருந்தவஞ்செய்து மலையாகிக் கைலாசபதியைத் தம்முடிமேற் புனைந்த 
திருப்பருப்பதத்தைத் தரிசித்தார். 

    உமாதேவியாரோடு முனிந்து சுவாமிமலையை விடுத்துப் பாதாளத்திற்சென்று ஓர்குகைவழியே
 முன்னே தாம் வந்ததும் சுவாமி புட்கரிணி தீரத்திலே விட்டுணு முதலிய தேவர்கள் தம்மைப் பூசித்ததுமாகிய 
திருவேங்கடமலையைப் பார்த்தார். சிலந்தியும் பாம்பும் யானையும் சிவகோசரியாரும் கண்ணப்பநாயனாரும் 
நக்கீரதேவரும் கன்னியரும் முத்தியடையும் தக்கிண கைலாசமாகிய திருக்காளத்திமலையைத் தரிசித்தார். 
காளியானவள் இப்பூமிமுழுதையும் அழித்தற்கு எழுந்த நாளிலே பிரமன் முதலியோர் யாவரும் அஞ்சலும் 
அவள் செருக்கழியும் வண்ணம் சிவபெருமான் தமது ஆடலால் வென்றருளிய திருவாலங்காட்டைத் தரிசித்தார். 
பிரளயகாலத்தும் அழிவில்லாததாய்ப் பிரமா விட்டுணு முதலிய தேவர்களுக்கு உறையுளாய்ச் சிவபெருமான் 
மாமரநிழலின்கண் வீற்றிருந்தருள்வதாய் உள்ள திருக்காஞ்சிநகரத்தைத் தரிசித்தார். அங்கே உமாதேவியார் 
பூசித்த திருவேகம்பத்தையும் விட்டுணுவும் பிரமனும் தேவர்களும் பூசித்த மற்றையாலயங்களையும் தரிசித்தார். 

    "யானே பரம்பொருள் யானே பரம்பொருள்" என்று பிரமனும் விட்டுணுவும் இகலும்பொழுது 
அவர்கணடுவே தோன்றி அவர்களால் அடிமுடி தெரியப்படாததாகித் தன்னைத் தியானித்தோர்க்கெல்லாம் 
முத்தியைக் கொடுத்துக்கொண்டு நிற்கும் திருவண்ணாமலையைத் தரிசித்தார். சிவபெருமான் ஒருவிருத்தப் 
பிராமண வடிவங்கொண்டு வந்து அடிமையோலை காட்டிச் சுந்தரமூர்த்தியை வழக்கில் வென்று விவாகத்தை 
விலக்கி ஆட்கொண்டருளிய திருவெண்ணெய் நல்லூரைத் தரிசித்தார். உமாதேவியார் புடைவையால் வீசச் 
சிவபெருமான்  தமது திருத்தொடையின் மேற்கிடத்தி இறந்த உயிர்கட்கெல்லாம் திருவைந்தெழுத்தினுண்மையை 
உபதேசித்துத் தமது சாரூப்பியத்தைக் கொடுத்தருளு மியல்பினாலே காசிபோலச் சிறந்த விருத்தாசலத்தைத் 
தரிசித்தார். 

     பதஞ்சலிமுனிவரும் வியாக்கிரபாதமுனிவருமாகிய இருவரும் தரிசிக்கும் பொருட்டு எல்லையில்லாத 
பெருங்கருணையினாலே சிவபெருமான் ஆனந்த நிருத்தஞ் செய்தருளும் திருத்தில்லை நகரத்தைத் தரிசித்தார். 
அங்கே கனக சபையின்கண்ணே சிவகாமியம்மையார் தரிசிக்கும்வண்ணம் சபாநாதர் செய்தருளும் 
உயர்வொப்பில்லாத ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்து திருவுளங் கனிந்துருக வணங்கிச்சென்றார். 
அகத்தியமுனிவருடைய கையினுள்ள கமண்டலத்தின் கணின்று நீங்கிப் பூமியின்கண் வேறுவேறாய்ப்
பெருகிப் பற்பலபெயர்களைத் தாங்கிச் செல்லும் காவேரியாற்றின் வட கரையிலுள்ள மண்ணியாற்றங் 
கரையை அடைந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            குமாரபுரிப்படலம்.


    அறுமுகக்கடவுள் மண்ணியாற்றங்கரையை அடைந்தபொழுது, சூரியன் அஸ்தமயனமானான். 
பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் முருகக் கடவுளை வணங்கி, "எம்பெருமானே, இவ்வாற்றங்கரையெல்லாம் 
மணற்குன்றுகள் மலிந்தன, சோலைகள் நிறைந்தன, சிவஸ்தலங்கள் எண்ணில்லாதன இருக்கின்றன. 
ஆதலால், இந்நதிக்கரையில் இருந்தருளுக" என்று பிரார்த்தித்தார்கள். அது கேட்ட முருகக்கடவுள் 
தேவத்தச்சனாகிய விசுவகன்மாவை நோக்கி, "இவ்விடத்தில் ஒரு கணத்தினுள்ளே நமக்கு ஒரு நகரம் செய்வாயாக" 
என்று பணித்தருளினார். உடனே தேவத்தச்சன் எம்பெருமான் தம்முடைய சேனைகளோடும் தேவர்களோடும் 
எழுந்தருளியிருக்கும்பொருட்டு மண்ணியாற்றின் றென்கரையிலே ஒரு திருநகரத்தை மனத்தால் உண்டாக்கிக் 
கொண்டு, முருகக்கடவுளை வணங்கி, "எம்பெருமானே, இந்நகரத்தினுள் எழுந்தருளுக" என்று விண்ணப்பஞ் 
செய்தான்.  

    முருகக்கடவுள் தேரினின்றும் இறங்கி, தேவர்களும் சேனைகளுஞ் சூழ நகரத்தினுள்ளே புகுந்து, 
அங்குள்ள வளங்களனைத்தையும் நோக்கி, நாம் இருத்தற்கு இது நல்லநகரம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
அது கேட்டலும் தேவர்களெல்லாரும் அந்நகரத்திற்குத் 'திருச்சேய்ஞலூர்' * என பெயரிட்டார்கள். முருகக்கடவுள் 
தம்பியர்களும் பூதசேனாதிபதிகளும்  தேவர்களும் சூழும்வண்ணம் அங்குள்ள திருக்கோயிலிற்சென்று, 
எழுந்தருளியிருந்தார். பிரமன் முதலிய தேவர்கள், எம்பெருமான் விடுத்தருள, அத்திருக்கோயிலுக்குப் புறத்தே 
சென்று, தங்கள் தங்களுக்கு அமைக்கப் பட்ட இருக்கைகளை அடைந்தார்கள்.

* சேய்நலூர் என்பது சேய்ஞலூர் எனப் போலியாயிற்று. இது வடமொழியிலே குமாரபுரி எனப்படும்.

    இந்திரனானவன், தாரகாசுரன் கிரௌஞ்சகிரியோடு இறந்தமையால், தன்றுயர முழுதும் நீங்கிப் 
பெருமகிழ்ச்சியோடிருந்தான். அப்பொழுது சீர்காழியினுள்ள வனதேவதை இந்திரனை அடைந்து வணங்கி, 
அவ்விந்திரன் தன்னாபரணங்களையும் தன்மனைவியாகிய இந்திராணியுடைய ஆபரணங்களையும் பொதிந்து 
தன்னிடத்து வைத்த கிழியை அவனெதிரே வைத்து, "இறைவனே, நீ இந்திராணியோடு வந்து சீர்காழியிலே 
தவஞ்செய்த நாளிலே என்னிடத்து வைத்த ஆபரணக்கிழி இது. ஏற்றுக்கொள்க" என்று சொல்லி நின்றது. 
இந்திரன் அவ்வாபரணக்கிழியை விரலினாலே நீக்கலும், தன்மனைவியினுடைய ஆபரணங்கள் மேலே தோன்ற, 
அது கண்டு, அவளை நினைந்து, காமநோய்க் கவலை அடைந்து, தன்னேவலாளரை நோக்கி, "இக்கிழியை 
முன்போலக் கட்டிச் சேமித்து வையுங்கள்" என்று பணிக்க, அவர்கள் அவ்வாறு செய்தார்கள். 

    பின்னர் இந்திரன் வனதேவதைக்கு விடைகொடுத்து, காமாக்கினியால் வெதும்பிய உள்ளத்தையும் 
உடம்பையும் உடையனாய், குளிர்மையின்மேல் உளம்வைத்துச் சென்று, பூஞ்சோலையின் புறத்துள்ள ஓர்மணற் 
குன்றின்மீதிருந்து, காமநோயால் மிகவருந்திப் புலம்பினான்.

    இவ்வாறிருக்கும்பொழுது சூரியன் உதித்தது. உதித்தலும், இந்திரன் மனத்தெழுந்த காமாக்கினி தணிந்தது. 
தணிதலும், இந்திரன் பதை பதைத்து, விரைந்து எழுந்து, நகைத்து, வெள்கினான். "ஐயையோ! எனக்கு இது வருவதே" 
என்றான். "காமமானது தீமையென்பன யாவையும் விளைக்கும். சிறப்பையும் செல்வத்தையுங் கெடுக்கும், 
நல்லறிவைத் தொலைக்கும், நன்னெறியைத் தடுத்து நரகத்தில் விடுக்கும். ஆதலால், ஆராயுமிடத்துக் காமத்தின் 
மிக்க பகை இல்லை" என்று நினைந்து, அவ்விடத்து நின்று நீங்கி, தேவர்களெல்லாரும் சூழச் சென்று, அறுமுகக்கடவுள் 
சந்நிதியை அடைந்து பலமுறை வணங்கி எழுந்து, துதித்துக்கொண்டு நின்றான்.

    முருகக்கடவுள் இந்திரனை நோக்கி, "நாம் சிவபெருமானைப் பூசிக்க விரும்புகின்றோம். நீ அதற்குரிய 
உபகரணங்கள் பலவற்றையும் வருவிக்கக் கடவாய்" என்று பணித்தருளினார். உடனே இந்திரன் வணங்கிக்கொண்டு 
போய், தன்னேவலாளர் பலரை  வெவ்வேறிடங்களின் ஏவி திருமஞ்சனம், நறுமலர், பீதாம்பரம், திருவமுது,தூபம், தீபம், 
சுகந்தங்கள் முதலிய உபகரணங்களனைத்தையும் விரைவின் வருவித்தான். அறுமுகக்கடவுள் தேவத்தச்சனைக் கொண்டு 
ஒரு திருக்கோயில் செய்வித்து, சைவாகம விதிப்படி ஒரு சிவலிங்கந் தாபித்து, பூசைசெய்து, மும்முறை வணங்கித் 
துதித்தார். அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபமீது தோன்றியருளினார். அறுமுகக்கடவுள் 
எம்பெருமானை வணங்கி எழுந்து, சிரமேல் அஞ்சலிசெய்து நின்று, துதித்தார். 

    இலக்கத்தொன்பது வீரர்களும், தேவர்களும், பூதர்களும் சிவபெருமானைத் தரிசித்து, மெய்ம்மயிர் பொடிப்ப 
மனங்கசிந்துருக மும்முறை வணங்கி, எண்டிசையும் செவிடுபடும் வண்ணம் துதித்தார்கள். அப்பொழுது சிவபெருமான்
 குமார சுவாமியை நோக்கி, "உன்வழிபாட்டுக்கு உவகை செய்தாம். நீ இதனைக் கொள்ளக்கடவாய்" என்று, 
உலகமுற்றையும் ஓரிறைப்பொழுதினுள் முடிக்கும் உருத்திர பாசுபதப் படைக்கலத்தைக் கொடுத்து, "இது 
நம்மிடத்தே தோன்றிய படைக்கலம். பிரம விட்டுணுக்களும் இது பெற்றிலர். இதனைத்  தாங்க வல்லார் யாவர்! 
சூரனுடைய சேனைகளைச் சங்கரிக்கும் பொருட்டு,  மைந்தனே, நீ இதனைக் கொள்ளக்கடவாய்" என்று திருவாய் 
மலர்ந்து மறைந்தருளினார்.

            திருச்சிற்றம்பலம். 

            சுரம்புகுபடலம்.

    சிவபெருமான் மறைந்தருளலும், முருகக்கடவுள் அவரைத் துதித்துக்கொண்டு, தேர்மீதேறி, 
வீரர்களும், தேவர்களும், பூதர்களுஞ் சூழத் திருச்சேய்ஞலூரை நீங்கி, காவேரியாற்றைக் கடந்து, திருவிடைமருதூர்,
மாயூரம், திருப்பறியலூர் முதலிய சிவஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூரை அடைந்தார். 
அங்குள்ள திருக்கோயில்களைத் தரிசித்துக் கொண்டு, கொல்லனுடைய உலையினுள்ள அக்கினியிற் 
காய்ச்சிய இரும்பு  போலும் மிக்க வெப்பத்தையுடைய பாலைவனத்திலே சென்றார். செல்லலும்
அப்பாலைவனம் நறுமலர்ச்சோலைபோல மிகக்குளிர்மை யுடைத்தாயிற்று.

    முருகக்கடவுள் தன்வெம்மை நீங்கிய சுரத்திற்செல்லும் பொழுது,  திருப்பரங்குன்றிலே தவஞ்செய்து
கொண்டிருந்த பராசரமுனிவருடைய புதல்வர்களாகிய தத்தர், அநந்தர், நந்தி, சதுர்முகர், சக்கிரபாணி, மாலி
 என்னும் அறுவரும் ஞானநோக்கத்தினாலே அதனை அறிந்து, எம்பெருமானுடைய திருவருளை நினைந்து, 
திருப்பரங்குன்றினின்று நீங்கி, வடதிசையை நோக்கி நடந்தார்கள். பாலைநிலத்தெல்லைக்கு நேரே வரும்பொழுது, 
அறுமுகக்கடவுள் அணிமையின் எழுந்தருளிவந்தார். புதல்வர்கள் அறுவரும் முருகக்கடவுளைத் தரிசித்து, 
வணங்கித் துதித்து நின்று, 'தேவதேவரே அடியேங்களுக்குத் திருவருள் செய்க" என்று விண்ணப்பஞ்செய்தார்கள்.

     அப்பொழுது இந்திரன் முருகக்கடவுளை வணங்கி நின்று, "எம்பெருமானே, பராசரமுனிவருடைய 
புதல்வர்களாகிய இவர்களறுவரும் சிறு பருவத்திலே சரவணப்பொய்கையிற் பாய்ந்து முழுகி அலைக்கலுற்றார்கள். 
அப்பொழுது அங்குள்ள மீன்கள் இடந்தோறும் ஓட, இவர்கள் அது கண்டு,  அவைகளைப் பற்றிக் கரையில் விடுத்து, 
உலாவினார்கள். உலாவும் பொழுது, மத்தியானசந்தி முடிக்கும்பொருட்டுப் பராசரமுனிவர் அங்கு வந்தார். 
அவர் தம்புதல்வர்களாகிய இவர்களுடைய புன்றொழிலை நோக்கி, கோபங்கொண்டு, 'பிள்ளைகாள், நீங்கள் 
இப்பொய்கையிலே மீன்களாய்த் திரியக்கடவீர்கள்' என்று சபித்தார். உடனே இவ்வறுவரும் மீன்களாகி, அஞ்சி, 
'இம்மீனுருவம் நீங்குவது எந்நாள்? சொல்லியருளும்' என்றார்கள். பராசரமுனிவர் அது கேட்டு, 'இப்பொய்கையிலே 
அறுமுகக்கடவுள் சிவபெருமானது திருவருளினால் எழுந்தருளியிருக்கும்பொழுது அவரை எடுக்கும் உமாதேவியாரது 
திருமுலைப்பால் வெள்ளமாய்ப் பெருகும். அதனை நீங்கள் உண்ணும்பொழுது முன்னையுருவத்தை அடைவீர்கள்' 
என்று சொல்லி, மத்தியான சந்தியை முடித்துக்கொண்டு, சென்றார். 

    மீன் வடிவடைந்த இவ்வறுவரும் அன்று தொட்டு அளப்பில் காலம் மயக்கம் பொருந்திச் சரவணப் 
பொய்கையிற் றிரிந்தார்கள். எம்பெருமானே, நீர் அப்பொய்கையில் எழுந்தருளியிருத்தலும், எம்பெருமாட்டியார் 
கண்டு உம்மை எடுப்ப, அவருடைய திருமுலைகளினின்றும் சொரிந்தபால் வெள்ளமாய்ப் பெருகியது. 
அதனை இவர்கள் உண்டு, மயக்கநீங்கி, முன்னை வடிவத்தை அடைந்து, சிவபெருமானுடைய திருவருளினாலே 
திருப்பரங்குன்றத்திற்சென்று தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது எம்பெருமான் இங்கு எழுந்தருளுவதை 
அறிந்து, வந்தார்கள்'' என்று விண்ணப்பஞ்செய்தான்.

    முருகக்கடவுள் அது கேட்டு, பராசரமுனிவருடைய புதல்வர்களை நோக்கி, "நீங்கள் நம்மோடு வாருங்கள்" 
என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்களறுவரும் "எம்பெருமானே, உம்மைச் சரணடைந்தேம்" என்று வணங்கிச் செல்ல, 
சண்முகக்கடவுள் சுரத்தைக் கடந்து போயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            திருச்செந்திப்படலம்.

    முருகக்கடவுள் சுரத்தைக் கடந்து சென்று, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருச்செங்குன்றூரைத் 
தரிசித்துக்கொண்டு, கடற்கரையின் உள்ள அலைவாயாகிய திருச்செந்தூரை அடைந்து, தேவத்தச்சனைக் கொண்டு 
ஒரு திருக்கோயில் செய்வித்து, தேரினின்றும் இறங்கி, அதனுள்ளே புகுந்து, வீரர்களும் பூதசேனாதிபதிகளும் 
தேவர்களும் துதிப்ப, திவ்விய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தருளினார். வீற்றிருந்தருளியபின் இந்திரனை 
நோக்கி, "சூரன் முதலாயினோர் பிறந்ததும், தவஞ்செய்ததும், வரம்பெற்றதும், அரசுசெய்வதும், அவர்களுடைய 
மாயமும், வெற்றியும், வலியும்,  மேன்மையும், உங்களிடத்து இந்நாள்காறும் செய்த துன்பமுமாகிய எல்லாம் 
நமக்குச் சொல்லக்கடவாய்" என்று பணித்தருளினார். இந்திரன் குருவாகிய பிருகற்பதியை அன்போடு நோக்கி, 
"நீர் இவைகளைச் சொல்லியருளும் " என்றான். பிருகற்பதி அதற்கியைந்து, அறுமுகக்கடவுளுடைய திருவடிகளை 
வணங்கி, "எம்பெருமானே, நீர் உயிர்கடோறுஞ் செறிந்திருக்கின்றீர், எப்பொருளையும் அறிவீர். அடியேங்களுடைய 
துன்பத்தை நீக்கத் திருவுளங்கொண்டு பாலவடிவங்கொண்டருளினீர். உமது செயலை யாவர் அறியவல்லவர்! 
முன்னே எல்லையில்லாத புவனங்களும், மும்மூர்த்திகளும் உயிர்த்தொகைகளும் அடங்கிய விசுவரூபத்தைக் 
கொண்டு தோன்றியருளினீர். உமது மாயத்தை யாவர் அறியவல்லவர்! அசுரர்களுடைய தன்மையை நீர் வினாவியது, 
அதனையறிதற் பொருட்டன்று, சிறியேங்களுடைய துன்பத்தைக் களைந்து இன்பத்தை அருளும்பொருட்டே. 
ஆகையால், அசுரர்களுடைய தன்மைகளெல்லாவற்றையும் அடியேன் அறிந்தவாறே சொல்கின்றேன்'' என்று சொல்லலுற்றார்.

            திருச்சிற்றம்பலம்.

            உற்பத்திகாண்டமுற்றிற்று.

            இரண்டாவது

            அசுரகாண்டம்.

            மாயைப்படலம்.

    ஊரிலான் குணங்குறியிலான்செயலிலானுரைக்கும் 
    பேரிலானொருமுன்னிலான்பின்னிலான்பிறிதோர் 
    சாரிலான்வரல்போக்கிலான்மேலிலான்றனக்கு 
    நேரிலானுயிர்க்கடவுளாயென்னுளே நின்றான்.

    காசிப முனிவருடைய புதல்வர்களாகிய அறுபத்தாறுகோடி யசுரர்களுக்கு அரசனாகிய அசுரேந்திரன் 
மங்கலகேசியென்னும் அரக்கியை விவாகஞ்செய்து, சுரசையென்னும் மகளைப் பெற்றான். அவள் வளர்ந்தபின், 
அசுர குருவாகிய சுக்கிரன் மாயையின் கல்விகளனைத்தையும் அவளுக்குணர்த்தி, அவளுடைய கல்வித்திறத்தை 
நோக்கி, அவளுக்கு மாயையென்று பெயரிட்டார். பின்பு அசுரர்களுடைய சிறுமையையும், தேவர்களுடைய 
பெருமையையும், தேவர்கள் அசுரர்களால் வருந்தும்வண்ணம் திரு நந்தி தேவர் சபித்தமையையும் தம்முள்ளத்து 
நினைந்து, மேல்வருந் தன்மையையும் அறிந்து, மாயையை விளித்து, "மாயையே, கேள். விட்டுணுவாலும், 
இந்திரனாலும், இருடிகளாலும், தேவர்களாலும், அளப்பில்லாத அசுரர்கள் இறந்தார்கள். உன்றந்தையும் 
வலியிழந் தொடுங்கினான். இனி உன்னாற்றானே அசுரர்களுக்கு மேன்மை உண்டாகும். நீ இலக்குமியும் வந்து 
வணங்கற்பாலதாகிய பேரழகையுடைய ஒருருவத்தைக் கொண்டுபோய், காசிப முனிவரை அடைந்து, 
உன் வல்லபத்தைக் காட்டி, ஆசையூட்டி, இரவிலே அவரோடு புணர்ந்து, அசுரர்களை உண்டாக்கி, அவர்களுக்குப்     
பெயரிட்டு, அவர்கள் எல்லையில்லாத வளங்களைப் பெறும்பொருட்டு அவர்களுக்கியலும் யாகங்களையும் 
தவங்களையும் உணர்த்தி, மீளக்கடவாய்" என்று பணித்தார். 

    மாயை அதற்கியைந்து, சுக்கிரனை வணங்கிப் போய், தன்றந்தையாகிய அசுரேந்திரனுக்கு இதனைச் 
சொல்லி, விடைபெற்றுக்கொண்டு, மகாமேருவுக்கு வடதிசையிலே காசிப முனிவர் தவஞ்செய்யும் எல்லையை அடைந்தாள்.
மாயை காசிப முனிவருடைய இருக்கையிலே வாவிகளையும், பூஞ் சோலைகளையும், செய்குன்றுகளையும், 
மண்டபங்களையும், பூஞ்சயனங்களையும் உண்டாக்கினாள். காசிபமுனிவர் அவற்றையெல்லாங்கண்டு, அதிசய
மடைந்து, ஆசையினாலே அவற்றை நெடுநேரம் உற்று நோக்கி, "இவையெல்லாம் இங்கே செய்தவர் யாவர்' என்றெண்ணி, 
சுற்றெங்கும் பார்த்து, ஒருவரையுங் காணாது,சித்திரப்பாவை போலாகி, "வான நாடிழிந்ததோ! இந்திரனுடைய நாடிழிந்ததோ! 
குபேரன் முதலியோரது நாடிழிந்ததோ! இங்ஙனமன்றாயின், இவை இங்குத் தோன்றியவா றறிகிலேன். இது பிரமதேவருடைய 
செய்கையோ! விட்டுணுவினுடைய செய்கையோ! அவ்விருவரானும் அறியப்படாத சிவபெருமானுடைய செய்கையோ! 
பிறருடைய செய்கையோ! அறிகிலேன். 

    இக்காட்டிலே புகுந்த இத்திரு நன்மைக்கேதுவோ தீமைக்கேதுவோ! இதுவும் அறிகிலேன். இங்கே யாது 
நிகழினும் நிகழுக. அதனியற்கை நமக்கு மேலே விளங்கும். நம்மறிவு இங்ஙனஞ் சென்றது பழுது"  என்று சிந்தித்து, 
தம்மனத்தைத் தேற்றி, முன்போலத் தவஞ்செய்யப் புகுந்தார். புகும்பொழுது, அதுகண்ட மாயை ஒரிரத்தினக் குன்றின்
மேலே பேரழகோடு தோன்றி நின்றாள். காசிப முனிவர் அவளை நோக்கி, மையல் கொண்டு, தவத்தை விடுத்து, 
அவளெதிரே சென்று நின்று, "இலக்குமியினும் அழகிய மாதே, நின்வரவு நன்று நன்று. உன்குலம் யாது? உன் வாழ்பதி யாது? 
உன் பெயர் யாது? உன்னைப் பெற்றவர்யாவர்? சொல்லுக"  என்றார். மாயை அது கேட்டு, "முனிவரே, நீர் இவ்வாறு 
வினவிநிற்றல் தகுதியன்று. அன்றியும் நீர் என்னிடத்திற் றனித்து வந்தீர். தவஞ் செய்வார்க்கு இது நன்றா ? 
தவத்தை விடுத்து அறிவில்லாதார் போலப் பேசிக் கொண்டு என்னை யணுகுதல் நீதியன்று. உமது கடனைச் 
செய்யப்போம்" என்றாள். 

    காசிப முனிவர் "மங்கையே, கேள். எண்ணில் காலம் உடலம் வெம்ப உள்ளம் மெலியத் தவம்பல செய்தல் 
இங்கு வேண்டியவற்றை அடைதற்கன்றோ. நான்றவஞ் செய்தது உன்னைச் சேர்தற் பொருட்டேயாம். நீ இங்கு வந்தனை. 
ஆகவே, என்றவத்திற்குப் பயன் எய்தியது.  இனித் தவம் வேண்டுமோ! பேரும் ஊரும் பிறவும் வினவிய எனக்கு ஓர் விடையுஞ் 
சொல்கின்றிலை. ஆயினும், அவையெல்லாம் பின்னர் அறிந்து கொள்வேன். என்னைக் காமநோய் ஈர்கின்றது. 
இரங்கக் கடவாய்" என்றார். மாயை அது கேட்டு நகைசெய்து, "நீர் இவ்வாறு நெடுந்தவஞ் செய்தது என்பொருட்டா! 
அங்ஙனமன்றே. பொய்சொல்லல் முறையா" என்றாள். காசிப முனிவர் "நான் பொய் சொல்லிற்றிலேன். மெய்ம்மையே 
சொன்னேன். யான் நெடுங்காலந் தவஞ்செய்தது முத்திபெற்றுய்யும் பொருட்டு. அதனையே எனக்கருள் செய்ய வந்தாய்.
உன்னைப்  புணர்தலன்றோ முத்தியாவது. இதுவன்றி எனக்குப் பிறிதொரு பேறுமில்லை. ஆதலாலே உன்னையே     
அடைந்தேன்"  என்றார். மாயை அவரை நோக்கி, "நான் உத்தரபூமியினுள்ளேன். மேருமலைக்குத் 
தென்றிசையினுள்ள கங்காநதியிலே ஸ்நானஞ் செய்யச் செல்கின்றேன். நீர் இங்கு நில்லும்" என்றாள். 
அதற்குக் காசிபமுனிவர் "கங்கை முதலிய நதிகளேழையும், சிவதலங்கள் யாவையும், விட்டுணு தலங்கள் 
யாவையும், ஒரிமைப் பொழுதினுள் இங்கே அழைப்பேன். 

    பொன்னுலகையும், விஞ்சையருலகையும், திக்குப்பாலர்களுலகையும், பிறருலகையும், அங்கங்குள்ள 
தேவர்களோடும் வளங்களோடும், இப்பொழுதே இங்கு விரைந்தழைக்க வல்லேன். மும்மூர்த்திகளையும், 
மூவுலகத்துள்ளோர் யாவரையும், நீ காணவெண்ணினும், இங்கே வரும் வண்ணஞ்செய்வேன். நீ விரும்பினையாயின், 
தேவாமிர்தத்தையும் விரைந்து தருவேன். நீ எப்பொருளை விரும்பினும் அப்பொருள் யாவையும்  இமைப் 
பொழுதினுள்ளே தருவேன். அஃதன்றிப் புதல்வர்களை விரும்பினும் உண்டாக்குவேன். இவர்கட்கு ஒப்பில்லை 
என்று கூறும்வண்ணம் அவர்களை  வானுலகத்து விடுப்பேன். மேனகை அரம்பை முதலிய தேவ மகளிர்கள் 
வந்து உன்னேவல் புரியும் வண்ணஞ் செய்வேன். மையல் கொண்டு தியங்கும் எனதாவி உய்யும்வண்ணம் 
விரைந்தருள்செய்க" என்றார்.  மாயை முறுவலெய்தி, "தனித்தவளென்றா இவ்வாறு சொன்னீர். இனி இதனை 
ஒழித்துவிடும். மேலோருக்கு இது இசையுமா? நானும்  முன்னினைந்தவிடத்துச் செல்வேன். நீர் இங்கே
 தவஞ்செய்துகொண்டிரும்'' என்று சொல்லி, கங்கையின் றிசையை நோக்கி விரைந்து செல்வாள் போலச் 
சென்றாள். செல்லலும், காசிபர் தொடர்ந்து செல்ல, மாயை அரூபமெய்தி மறைந்து நின்றாள். காசிபமுனிவர் 
எங்கும் நோக்கிக் காணாது, வருந்திப் புலம்பினார்.


            திருச்சிற்றம்பலம்.

            அசுரர்தோற்றுபடலம்.

    காசிப முனிவர் மாயையைத் தேடி மயல்கொண்டு வாடும்பொழுது, சூரியன் அஸ்தமயனமானான். 
காசிபமுனிவர் அவ்விரவிலே காமநோயால் மிகவருந்தி, மாயையை நினைந்து , பலவாறு புலம்பிச் சோர்ந்தார். 
அப்பொழுது மாயை காசிபர் முன்பு வெளிப்பட்டு நின்றாள். அது கண்ட காசிப முனிவர் மகிழ்ச்சிகொண்டு, அவண்முன் 
சென்று, "நீ என்னை விரைந்தாள்வாயாக" என்று வேண்டினார். மாயை அவரை நோக்கி, 'அஞ்சாதொழிக. இங்கு நின்ற 
என்வடிவத்துக் கியையும் வடிவமும் இனி யான் கொள்ளும் வடிவத்தை ஒக்கும் வடிவமும் உடனே உடனே 
கொள்வீராயின் நான் உம்மைப் புணர்வேன்" என்றாள். காசிபமுனிவர் அது கேட்டலும் மன மகிழ்ந்து, 
பேரழகையுடைய  ஓர் தேவ வடிவங் கொண்டார். மாயை அது கண்டு வியந்து, நகைசெய்து, அவரைக் 
கைப்பற்றிக்கொண்டு சென்று, அங்குள்ள ஒரு மண்டபத்தினுள்ளே புகுந்து, தன்னாணையால் உளதாகிய 
சயனத்தின் மீது முதல்யாமத்தில் அவரோடு கூடினாள். அப்பொழுது சூரபன்மா அவளிடத்துப் பிறந்தான். 

    அப்புணர்ச்சிக்கண் இருவர் சரீரத்துந் தோன்றிய வேர்வையினின்றும் முப்பதினாயிரம்வெள்ளம் 
அசுரர்கள் உதித்தார்கள். மாயை அவ்வசுரர்களையும் சூரபன்மாவையும் அங்கே நிறுவி, காசிப 
முனிவரோடும் வேறொரு மண்டபத்தினுள்ளே புகுந்து பெண்சிங்க வடிவங்கொண்டாள். 
காசிப முனிவர் ஆண்சிங்கவடிவங்கொண்டு, இரண்டாம் யாமத்தில் அவளோடு புணர்ந்தார். அப்பொழுது 
ஆயிரஞ் சிங்க முகங்களும் இரண்டாயிரங் கைகளுமுடைய சிங்கமுகாசுரன் பிறந்தான். அப்புணர்ச்சிக்கண் 
இருவர் சரீரத்தினுந் தோன்றிய வேர்வையினின்றும் சிங்க முகத்தர்களாகிய நாற்பதினாயிரம்வெள்ளம் 
அசுரர்கள் உதித்தார்கள்.

    மாயை அவ்வசுரர்களையும் சிங்கமுகாசுரனையும் அங்கே நிறுவி, வேறொரு மண்டபத்தினுள்ளே புகுந்து, 
பெண்யானை வடிவங்கொண்டாள். காசிப முனிவர் ஆண்யானை வடிவங்கொண்டு, மூன்றாம் யாமத்தில் அவளோடு
புணர்ந்தார். அப்பொழுது நான்குகோடுகள் பொருந்திய யானைமுகத்தையுடைய தாரகாசுரன் பிறந்தான். 
அப்புணர்ச்சிக்கண் இருவர் சரீரத்தினும் தோன்றிய வேர்வையினின்றும் யானைமுகத்தையுடைய நாற்பதினாயிரம் 
வெள்ளம் அசுரர்கள் உதித்தார்கள்.

     மாயை அவ்வசுரர்களையும் தாரகாசுரனையும் அங்கே நிறுவி, வேறொரு மண்டபத்தினுள்ளே புகுந்து, 
ஆட்டுப் பிணா வடிவங்கொண்டாள். காசிப முனிவர் ஆட்டுக்கடா வடிவங்கொண்டு நான்காம் யாமத்தில் 
அவளோடு புணர்ந்தார். அப்பொழுது அசமுகி பிறந்தாள். அப்புணர்ச்சிக்கண் இருவர் சரீரத்தினும் தோன்றிய 
வேர்வையினின்றும் ஆட்டுமுகத்தையுடைய முப்பதினாயிரம்வெள்ளம் அசுரர்கள் உதித்தார்கள். மாயையும் 
காசிப முனிவரும் அவர்களை அங்கே நிறுவி,வேறுவேறுள்ள மண்டபங்கடோறும் புகுந்து, யாளி, புலி, குதிரை,
மான், கோழி,  கரடி, பன்றி,கூளி முதலிய வடிவங்களெல்லாங்கொண்டு, வைகறையிலே புணர்ந்து, அறுபதினாயிரம்         
வெள்ளம் அசுரர்களைப் பெற்றார்கள். அப்பொழுது சூரியன் உதித்தான். மாயையும் காசிப முனிவரும் 
தங்கள் தங்கள் முன்னை வடிவத்தைக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளான சூரன் முதலிய 
நால்வரையும் இரண்டிலக்கம் வெள்ளம் அசுரர்களையும் அற்புதத்தோடு கண்டு, அன்பினையுடையர்களாய் நின்றார்கள்.

                திருச்சிற்றம்பலம் .

                காசிபனுபதேசப் படலம்.

    சூரபன்மன் சிங்கமுகாசுரனும் தாரகாசுரனும் தன்னுடன் வரச் சென்று, காசிப முனிவர் மாயை என்னும்
 இருமுதுகுரவர்களுடைய  பாதங்களை வணங்கி, "நாங்கள் செய்வதென்னை? சொல்லுங்கள்" என்றனர்.
 அது கேட்ட  காசிபமுனிவர் சொல்வாராயினார்:

    "பிள்ளைகாள், நான் உங்களுக்கு ஓருறுதியை உணர்த்துகின்றேன். நீங்கள் மூவிரும் அந்நெறியே 
நிற்கக் கடவீர்கள். அறிவால் அமைந்த பெரியோர்கள் ஆராயத்தக்க பொருள்கள் பதி, பசு, பாசம் என மூன்று.        
வேதாகமங்களெல்லாவற்றாலும் உணர்த்தப்படுவன இவையே. நித்தியராய், வியாபகராய், ஞானானந்தமயராய்,         
உயிர்கள்பொருட்டுப் படைத்தல்,  காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்யுஞ் 
சிவபெருமானே பதியெனப்படுவர். வேண்டுதல் வேண்டாமை யில்லாத சிவபெருமானுடைய இலக்கணத்தைச் 
சொல்லுதல் யாவர்க்கும் அரிது. வேதங்களாலும் துணியப்படாத அவருடைய இலக்கணத்தை
இத்தன்மையதென்று நாம் பேசவல்லமா! 

    ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களாகிய பாசங்களாலே பந்திக்கப்பட்டுள்ள பசுக்களாகிய
 உயிர்கள் எண்ணில்லாதன. அவை அநாதியே உள்ளன. அவை தாம் தாம் செய்த நல்வினை தீவினைகளினாலே இடையறாது 
பிறந்திறந் துழலும்.பிருதிவி யண்டத்தும், அப்புவண்டத்தும், தேயுவண்டத்தும், வாயுவண்டத்தும் ஆகாயவண்டத்தும் 
உதிக்கும். அவற்றிற்கு ஓரிடமே நிலையென்று  சொலற்பாலதா! அவை தேவர், மக்கள், விலங்கு,புள், ஊர்வன, நீர் வாழ்வன,
 தாவரம் என்னும் எழுவகைத் தோற்றத்தையுடையனவாம். அவை பிறக்கு முன் கருப்பத்தினும் அழியும், பிறந்த பின்னும் 
அழியும், சிலநாளிருந்தும் அழியும்,காளைப் பருவத்தினும் அழியும், மூப்பினும் அழியும், அவற்றினிலையாமை             
இத்தன்மையதென்று சொல்லலாகுமா! உயிர்த்தொகை கதிரெழு துகளினும் மிகுதியுடைத்தென்று சொல்லுதலும்         
அறியாமையே. இறந்தவுயிர்களும் பிறந்தவுயிர்களும் இவ்வளவை யுடையனவென எண்ணற்பாலன. கல்வியும்,         
வீரமும், செல்வமும், வலியும், பிறவும் நீர்க்குமிழிபோல நிலை யில்லாதனவாம்.

     தருமமென ஒருபொருளுண்டு. அது இருமையின்பத்தை  எளிதிற்பயப்பது. அது அருமையினெய்தும் 
பொருள். அது ஒருமையுடையோர்க்கன்றிப் பிறர்க்கு அறிவரிது. இத்துணைச் சிறப்பினதாகிய தருமத்தை        
 ஓருயிர் செய்யுமாயின், அன்பும் அருளும் உண்டாகும். அவை உண்டாக, தவம் உண்டாகும். அது உண்டாக, 
அவ்வுயிர் சிவபிரானை  அடையும். அடையின், பிறவிக்குக் காரணமாகிய மும்மலங்களினின்றும் நீங்கி, 
பேரின்பத்தை அனுபவிக்கும். ஆதலால், தவம்போலச் சிறந்தது பிறிதொன்றுமில்லை. ஐம்பொறிகளை 
அடக்கித் தவஞ்செய்து, முத்தியின்பத்தைப்  பெற்றவர் சிலர், இம்மையின்பத்தைப் பெற்றவர் சிலர், 
இருமையின்பத்தையும் பெற்றவர் சிலர். 

    தம்முடம்பை வாட்டி நெடுங்காலந் தவஞ் செய்தவரல்லரோ தேவர்களாகி மேற்பதங்களைப் 
பெற்று வாழ்வோரெல்லாரும். பத்திமையோடு தவஞ்செய்து முத்தியின்பத்தைப் பெற்றவர்களையும் 
இவ்வளவினர்களென்று சொல்வதரிது, தவஞ்செய்து இருமையின்பத்தையும் பெற்றவர்கள் பிரமா
 விட்டுணு முதலியோர். தவஞ்செய்யாது பிறவுயிர்களுக்குத் துன்பஞ்செய்யும் பாவிகளுக்கு இருமையின்பமும் 
இல்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் பிறவித்துன்பத் தழுந்துவர்கள். இவ்வுண்மையை அறிந்து அறிவிப்பினும்,     
பூமியிலுள்ளோர் கொலை களவு முதலிய பாவங்களினின்றும் நீங்குகின்றிலர். 

    அதனால் முத்தியின்பம் பெறாது சனனமரணத் துன்பங்களை அடைகின்றனர். இருமையின்பத்துக்கும் 
ஏதுவாயுள்ள தவத்துக்கு உயர்வுமில்லை, ஒப்புமில்லை. தவத்தை ஒப்பது தவமேயாம் . ஆதலால், பிள்ளைகளே, 
நீங்கள் தருமத்தைச் செய்யுங்கள். பாவத்தை விலக்குங்கள். சிவபெருமானைத் தியானித்துப் பெருந்தவம் புரியுங்கள்.    
அதுவன்றிச் செயத்தக்கது யாது! உடம்பை வாட்டித் தவஞ்செய்வோர் உலகமெல்லாம் வியக்கும்படி வாழ்வர், 
அடைந்தாரைக் காப்பர், பகைவரை அழிப்பர், விரும்பிய பொருள்களெல்லாம் அடைவர், நித்தராய் இருப்பர்.
 இது உங்கண்மனத்தே திடம்பெறும்வண்ணம் உங்களுக்கு ஓர் கதை சொல்வேன்” என்று காசிபமுனிவர் 
சொல்வாராயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            மார்க்கண்டேயப்படலம்.


    "கடகமென்னும் நகரத்திலே பெருந்தவத்தினாற் சிறந்த குச்சகர் என்னும் பிராமணர் ஒருவருளர்.     
அவருடைய புதல்வராகிய கௌச்சிகர் என்பவர் வேதங்களின் மிக வல்லராய், பிறவிக்கடலினின்றும் 
நீங்கும்பொருட்டுச் சிவபெருமானைச் சிந்தித்துத் தவஞ்செய்யக் கருதி, அங்குள்ள ஓர் தடாகக்கரையை 
அடைந்து, உண்டியும் உறக்கமுமின்றி, மெளனம் பொருந்தி ஆத்தீண்டு குற்றிபோல அசைவின்றி         
இருந்துகொண்டு, சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தைச் சிந்தித்து, பேரின்பக்கடலின் மூழ்கித் 
தவஞ்செய்தார். செய்யும்பொழுது, மரை காட்டா முதலிய மிருகங்கள் தங்கள் தங்கள் உடம்பினுள்ள 
தினவு நீங்கும்வண்ணம் அவருடைய சரீரத்திலே உரைத்துக்கொண்டு போகும். 

    இவ்வாறு செய்யவும், கெளச்சிக முனிவர் இதுவொன்றும் அறியாது தவஞ்செய்துகொண்டிருந்தார். 
அதனை அறிந்த விட்டுணு, தேவர்கள் சூழ, அங்குவந்து, அவருடைய அருந்தவத்தைக் கண்டு, அற்புதங்கொண்டு, 
அவர்முன்சென்று, அவரது சரீரத்தைத் தனது திருக்கரத்தினாலே தடவி, 'முனிவனே, உன்பெயர் மிருககண்டூயன்'
என்றார். உடனே மிருககண்டூயர் எழுந்து, கைதொழுது நின்றார். விட்டுணு அவரை நோக்கி, 'அநாதிமுத்த 
சித்துருவாகிய சிவபெருமானது பெருங்கருணை உன்னிடத்தே பெருகுக. நீ முன் செய்த தீவினைகளெல்லாம்     
நீங்குக' என்று சொல்லி, தேவர்களோடு மறைந்தருளினார்.

    விட்டுணு மறைந்தருளலும், மிருககண்டூயர் தமது தந்தையாராகிய குச்சகமுனிவரிடத்தே சென்று, 
அவரை வணங்க, அவர் மனமகிழ்ந்து எடுத்துத் தழுவிக்கொண்டு, 'நீ தவஞ்செய்தபோது நிகழ்ந்ததனைச் 
சொல்வாயாக' என்று வினாவினார். மிருககண்டூயர் தமது தந்தையார் கேட்ப நிகழ்ந்தனவெல்லாம் 
விண்ணப்பஞ்செய்தார். அது கேட்ட குச்சகமுனிவர் மனமகிழ்ந்து, 'இத்தன்மைத்தாகிய தவம் உன்குலத்தார்களுள் 
உனக்குப் போல வேறியாவர்க்கு உளது! இத்தவஞ்செய்த உனக்கு அரியது  யாது? பூமி அந்தரம் சுவர்க்கமென்னும்     
மூவுலகத்தினும் உள்ளவர்களுள் உன் ஒப்பவர் யாவர்! நீ செய்த தவத்தைச் சிவபெருமானேயன்றி             
வேறியாவர் காண்பவர்' எனப் புகழ்ந்து கூறினார்.                                                                                                 

    பின்பு சிவபெருமானது திருவருளினாலே வேறொரு நினைப்பு வரலும், குச்சகமுனிவர் 
மிருககண்டூயரை நோக்கி , 'மைந்தனே, வேதத்திலே விதிக்கப்பட்ட பிரமசரியம், கிருகத்தம், 
 வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் நான்காச்சிரமங்களுள் முன்னையதை இன்றுகாறும் அனுட்டித்தாய். 
பின்னையவிரண்டும் பின் அனுட்டிக்கப்படுவனவாதலால், அவற்றை இங்கே பேசவேண்டுவதின்று. 
இரண்டாவதாகிய கிருகத்தாச்சிரமத்தை இனி நீ அனுட்டித்தல்வேண்டும்' என்றார். 

    மிருககண்டூயர் அது கேட்டு, 'எந்தையார் இனியதோருறுதி சொன்னார்' என்று உள்ளே முறுவலித்து, 
தந்தையாரை நோக்கி, 'அநாதியே பிணித்த பாசத்தை அறுக்கவேண்டிய சிறியேன் பின்னும் ஒருபாசத்தினாலே 
பிணிக்கப்படுவேனாயின், பசுபதியாகிய சிவபெருமானை எவ்வாறு அடைவேன்! ஐயையோ! பிறவித்துன்பமாகிய 
பெருங்கடலின் வீழ்ந்து உலைவேனே! தன்கைகளே பற்றுக்கோடாகத் தவழும் முடவனொருவன் அக்கைகளுக்கும் 
நோயொன்று வந்தக்கால் யாது செய்வான்! நானும் அவன்போலத் தளர்வேனே! தவவொழுக்கம் இருக்க 
இல்லொழுக்கம் பூண்டு வினைகளைப் போக்கக் கருதுதல் நல்ல நீர் இருக்கச் சேற்றிலே மூழ்கிச் சரீரத்தழுக்கை 
நீக்கக் கருதுதல் போலுமன்றோ ! பூமியினுள்ள அளப்பில்லாத பெரும்பாவங்களைப் பிரமதேவர் பெண்ணுருவமாகப் 
படைத்தனர். என்பிதாவே, உமக்கு அது விளங்கும். அவ்வியல்புடைய பெண்களை மனத்தே நினைக்கும் பாவம் 
ஏழுபிறப்பினும் நீங்காதே. 

    இச்சைகொண்டு  சுழலாநின்ற ஐம்புலன்களாகிய பூதங்கள் இழுக்கப் புலம்பாநின்ற சிறியேனைப் 
பெண்ணாகிய பேயும் வந்து பற்றியக்கால், யாது செய்வேன்! ஐயையோ எனக்கோ இது வரும்! பெண்ணாசையானது 
பலநாளும் பூமியின்கண்ணே, துன்பத்தின் மூழ்குவிக்கும், பின்னாளிலே நரகக்குழியில் வீழ்த்திவிடும், எந்நாளில் 
ஆடவருக்கு இன்பம் பயக்குமோ அறியேன். துன்பநுகர்தற்கு  ஏதுவாகிய தீவினையையுடையோர் இன்ப நுகர்வார்
போலப் பெண்கள்வயப்படுகின்றனர். 

    நாயானது தன் பற்கள் நடுங்கும் வண்ணம் தசையில்லாத  எலும்பைக் கறித்தால் சுவையைப்  பெறுமா? 
பெண்ணாசையானது ஒருவருள்ளத்தே புகுமாயின், அது பின்னர் நீங்குமியல்புடையதா! அது குன்றாது எந்நாளும் 
உயிரைப் பற்றி ஈரும். நஞ்சு மிக இனிது ; அது பின் ஒரு நாளும் நலியாது. பெண்களுடைய உள்ளக்கருத்துப் பிறரால் 
அறியப்படுவதா! அவரோடு நீக்கமின்றிப் பலநாட்பழகி அவருள்ளத் திருக்குந் தேவனும் உணர்தற்கரியதன்றோ! 
மனமொன்று வாக்கொன்று செய்கையொன்றாகப் பேதைமையையே கடைப்பிடித்துப் பெரும்பவஞ்செய்யும் 
பெண்கள் வலையிற்பட்டு மயங்கினோரல்லரோ பிறந்தும் இறந்தும் உழல்கின்றோர்! 

    அதனால் உலகத்தின்கண்ணே கற்பினையுடைய மகளிர் இல்லையோ என்பீராயின் , தத்தங்கணவர் வழி
 வழுவாதொழுகும் மகளிருஞ் சிலர் உண்டு. ஒரு மரக்கொம்பிலே தீயை மூட்டினால் அது மிகச் சுவாலித்துத் தான் 
பற்றல் கூடாத பலவற்றினும் போய்ப் பற்றும். அதுபோலவே, ஒருபெண்ணினிடத்தே காமமுடையராயின், 
அது வளர்ந்து தான் பற்றல்கூடாத பலரிடத்தும் போய்ப் பற்றும். பேரழகையுடைய மகளிர்கள் பலர் புடைசூழவும், 
இந்திரனுக்குக் கௌதம முனிவருடைய பன்னியாகிய அகலியையினாலே ஒருகாலும் நீங்காத பெரும்பழி 
வந்தெய்தியது. பிரமதேவர் தம்மாலே படைக்கப்பட்ட  திலோத்தமைமேல் மையல்கொண்டு நான்கு 
முகமுடையராயினமை நாம் உணராததன்று, மற்றைத்தேவர்களும் முனிவர்களும் காமத்தினால் 
அடைந்த துன்பங்களெல்லாம் சொல்லப்புகின், அளவுபடா. அவையெல்லாம் நிற்க. பிறவித்துன்பத்தை 
நீக்க விரும்பிய யான் அத்துன்பத்தை மேன்மேலும் வளர்க்குமியல்புடைய பெண்கள் கூட்டத்தை விரும்பேன். 
இந்திரன் முதலிய தேவர்களுடைய பதத்தையும் விரும்பேன் . இல்வாழ்க்கையென்னும் சிறையினும் வீழேன், 
ஐம்புலங்களின் மாயும் மயக்கத்தை ஒழித்து, தவமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் அழியாச் 
செல்வத்தைப் பெற்று இன்பமுற்றிருப்பேன்' என்றார்.

    குச்சகமுனிவர் அது கேட்டு, 'இவன் இல்லொழுக்கத்தை இகழ்கின்றான். வேதத்துணிவையும் 
கொள்கின்றிலன். தவமயல்  பூண்டான் " என்று துயரங்கொண்டு, மிருககண்டூயரை நோக்கி, 
"மைந்தனே ஓர் கன்னியை விவாகஞ்செய்து குலத்தொழிலை நடாத்தும்பொருட்டுக் குமாரரைப் 
பெற்ற பின்னன்றோ தவஞ்செய்து முத்தியடைதல் முறைமை. அறியாமையிற்  கட்டுண்ட உலகத்தார்
போல நீயும் காமவின்பத்தை நுகர்தற்பொருட்டா இல்லொழுக்கத்தை அனுட்டிக்கச் சொன்னேன். 
இறந்த மேலோர்களுடைய  துன்பத்தையும் நரகமடைதலையும் நீக்கும்வண்ணம் புதல்வரைப்
பெறும்பொருட்டு ஓர் கன்னியை நீ விவாகம் பண்ணல்வேண்டும், 

    புத்திரரென்னும் சொல்லின்பொருளை மறந்தாய்போலும். இவ்வுண்மையை  நீ ஆராய்ந்து 
இல்லறம் பூண்டு நிற்றலே உத்தமநெறி. தவத்தினதொழுக்கம் அதுவே. ஓர்மலையின் மீதேற விரும்பினோன்
 அதன் சாரலை அடைந்து படிப்படியே ஏறிப்போதலன்றி, கீழ் நின்று மேலே பாயுந்தன்மைக்கொக்கும்
நீ இப்போது தவஞ்செய்யக் கருதுதல். மரம் விலங்கு முதலியவற்றை  அவற்றால் வரும் பயனைக் 
கொள்ளுதற்கன்றோ, நீக்காது கொள்ளுவர். அவ்வாறே நீயும் இல்லறமும் மகப்பேறுமாகிய பயன்களின் 
பொருட்டே ஓர் கன்னியை விவாகஞ்செய்து பின்பு அருந்தவஞ் செய்யக்கடவாய். இவ்வில்வாழ்க்கையை முன்னாளே 
நினைத்திலை. இந்நாள்காறும் பிரமசரியத்தையே அனுட்டித்தாய். 

    தேவர்களுக்கு அவி முதலிய சிறப்புக்களைச் செய்யாது  மைந்தனே, நீ இப்பொழுதே தவஞ்செய்யக் 
கருதுதல் தகுதியா!இல்லொழுக்கத்தில் நிற்பவருக்குத் தத்தமொழுக்கத்திலே தவறுண்டாயினும், அதற்குப் 
பரிகாரமுண்டு. தவவொழுக்கத்திலே நிற்பவருக்குத் தவறுண்டாயின், உய்தலரிது. அது மலையுச்சியினின்றும் 
தவறுதல் போலும். நீ பிறவித் துன்பத்தினின்று நீங்க விரும்பினையெனினும், நாட்செல்லத் துறப்பதன்றி
விரைவிலே துறக்கலாமா! உன் முன்னோர்கள் போலவே நீயும் இல்லொழுக்கத்தை அனுட்டிக்கக்கடவாய். 

    பசுபதியாகிய சிவபெருமான் தாம் உமா தேவியாரோடு கூடி, பிரமா விட்டுணு முதலிய தேவர்களும் 
முனிவர்களும்  மற்றை யாவரும் மனைவியரோடு இல்லறத்தொழுகும்வண்ணம் பணித்தருளினார். 
அச்சிவபெருமான் நிறுவிய வரம்பை நீ மறுக்காதே. மகப்பேற்றை விரும்பி, என்சொல்லை வெறுக்காது 
கொள்ளக்கடவாய். உலகியலை விலக்காதே. இன்னும் மாறுபட்டு ஒன்றும் பேசாதே. இப்போதே எமர்களைத் 
துறவாதே. வசிட்டமுனிவர் அருந்ததியைத் தம்பக்கத்திருத்தியும் பழிபெறாது தவமேன்மையோடு இருக்கின்றாரே.         

    வேண்டுதல் வேண்டாமையில்லாத தூயோர்கள் பெண்களோடு புணரினும், தவஞ்செய்யினும், 
அவர்களுள்ளத்தறிவு வேறுபடுமா, வேறுபடாது. நற்குண நற்செய்கைகளையுடைய பெண்ணை  விவாகஞ்செய்யின், 
தானமும் தவமும் உளவாகும், மண்ணுலகத்தின்பமும் விண்ணுலகத்தின்பமும் எய்தும். தங்கணவரையே கடவுளராகக் 
கொண்டு வழிபடும் கற்பினையுடையாரது சொல்லின் வழியே தெய்வமும் முகிலும் நிற்குமாயின், 
ஆண்டகைமையோரும் அவர்களுக்கு நிகரல்லர். இல்லொழுக்கத்தை முன்னே அனுட்டியாது, தவவொழுக்கத்தைத் 
தொடங்குவையாயின், மாயமிகுந்த  காமவிடம் வந்தணுகின், விதி காக்கினும் அதனை விலக்கலாமா! 

    துறந்தவர்களுக்கு உணவு முதலியன கொடுத்து, இறந்தவர்களுக்குத் தீக்கடன் நீர்க்கடன்களைச் செய்து 
பல தருமங்களையும் இயற்றி, விருந்தோம்பும் இல்லறமன்றி, மானுடப்பிறவியாலாகும் பேருதவி வேறியாது! 
ஆடவர்களும் பெண்களும் நன்மை தீமை செய்தல் ஊழ்வழியன்றிப் பிறிதன்று. உழவர்கள் வயலின்கண்ணே 
வித்திய வித்தின் பயனேயன்றிப் பிறிது பெறுவார்களா! முன்னே நல்லறமாகிய இல்லறத்தை நடாத்திப் 
பின்றுறத்தலே துறவு. இவ்வாறு செய்வையாயின், உனக்குக் குற்றம் வாராது. இதனை நீ மறுத்துப் பேசாதே. 
'இது நமதாணை' என்றார். 

    அது கேட்ட மிருககண்டூயர் 'எந்தையார் இல்லொழுக்கத்தை வேதத்துணிவென்றார். சிவபெருமானது 
பணியுமாமென்றார். இனிச் சொல்வதென்னை' என்று நினைந்து வருந்தி, 'தங்கள் தங்கள் குரவர்கள் கடலின் 
வீழக்கடவீர்கள் என்றாராயினும், அன்போடும் அது செய்தலே புத்திரருக்குக் கடனாகும். அது புதுமையன்று. 
யானும் இதனை மறுக்காது செய்குவன். தாய் தந்தை குரு என்னும் மூவருடைய சொல்லை மறுத்தவரும், 
வேதநெறியை மாற்றினவரும், எரிவாய் நரகத்து வீழ்வர். ஆதலால், இவர்சொல்லை நான் விலக்குதல் 
முறையன்று' என்று துணிந்துகொண்டு, தந்தையாராகிய குச்சக முனிவருடைய திருவடிகளை வணங்கி, 
'பிதாவே, முனியாதொழிக. நீர் பணித்தபடி நிற்பேன். உமக்குச் சொல்வதொன்றுண்டு. தன்சொற்கு 
அமையாத மனையாளோடு கூடி வாழ்தலினும், நரகத்து வீழ்தலே இனிது. அவளோடு கூடி வாழும் 
ஆடவனுக்கு அவளையன்றிப் பின்னுமோரியமனும் நோயும் உண்டோ! அடியேன் கூறும் இலக்கணங்கள் 
சிறிதுங் குறைவின்றி நிறைந்த கன்னி கிடைப்பாளாயின், அவளை நான் விவாகஞ்செய்வேன்' என்றார்.

    குச்சகமுனிவர் அது கேட்டு மனமகிழ்ந்து, 'மைந்தனே,நீ என் சொல்லை மறாது உட்கொண்டமையால், 
நானும் உய்ந்தேன், உன்றாயும் உய்ந்தாள்,என் சுற்றங்களும் உய்ந்தன, தவங்களும் உய்ந்தன, மண்ணுலகத்தோரும் 
உய்ந்தனர், விண்ணுலகத்தோரும் உய்ந்தனர், இந்திரனும் உய்ந்தனன். உன்விருப்பத்தைச் சொல்வாயாக. நீ கூறிய 
இலக்கணங்களெல்லாம் பூண்டு, குற்றம் ஓர்சிறிதுமில்லாத ஓர் கன்னியைத் தேடி, உன்னிடத்தே புணர்ப்பேன். 
அது செய்யாதொழிவேனாயின், என்னுடைய தவம் குன்றுக' என்றார். குச்சகமுனிவர் இவ்வாறு சூளுரை சொல்லலும், 
மிருககண்டூயர் அவருடைய திருவடிகளை வணங்கி, உம்முடைய புதல்வனாகிய சிறியேன் உய்யும்பொருட்டு 
இது சொன்னீர். நீரோ தவத்தினிற் சிறந்த  முனிவரர். உமக்கு எய்துதற்கரியதொருபொருள் மூவுலகத்தினும் 
உண்டோ,இல்லை. 

    ஆயினும், நான் சொல்வதுண்டு. தந்தையை இழந்தவர், தாயை இழந்தவர், தமக்கையரில்லாதவர், 
தங்கையரில்லாதவர், ஆடவரோடு பிறவாதவர், இம்முத்திறத்தரை இழந்தவர், சுற்றமில்லாதவர், திருவற்றவர், 
உயர்குடியிற் பிறவாதவர், பிணியாளராகிய தாய் தந்தையரிடத்துப் பிறந்தவர், தேவர்களுக்குரிய பெயர் 
பெறாது விலங்குகளுக்குரிய பெயரைப் பெற்றவர், பிசாசின் பெயரைப் பெற்றவர், புறச்சமயப்படுகுழியின்
 வீழ்ந்தவர்,பிணியர், ஊமையர், முடவர், செவிடர், பிறர் வீட்டிற்செல்வோர், பொதுமகளிர்போல விழிப்பவர், 
பலமுறை ஆடவரை நோக்கித்  தலைக்கடையில் நிற்பவர், தம்மை அழகுபெற அலங்கரிப்பவர், 
பேருண்டியை உடையவர், பெருந்துயிலை யுடையவர், தன்னினும் மூத்தவர்,தன் கோத்திரத்துப் பிறந்தவர், 
நெடியவர்,குறளானோர், பருத்தவர், மெல்லிய உருவத்தையுடையவர், கருநிறத்தவர், பொன்னிறத்தவர், 
பசப்பையுடையவர், விளர்ப்பை யுடையவர், உதிர நிறத்தையுடையவர், நாணமில்லாதவர்,

 ஆடவர்புணர்ச்சியை நண்ணினவர், சிரிப்பவர்,நிலையில்லாதவர், வலிமிக்கவர், தாய்தந்தையருடைய 
ஆணையைக் கடந்தவர், கோபமுடையவர், பகையுடையவர், சண்டைசெய்பவர், கூத்து முதலியன காண 
விரும்புவோர்,  மன்மதனாற் கவல்கின்றவர், சிவபிரானிடத்து அன்பில்லாதவர், முனிவர்களை இகழ்பவர், 
உயிர்களிடத்து இரக்கமில்லாதவர், தங்குல நெறியிலே நில்லாதவர், தீக்குணத்தவர், நிறையில்லாதவர், 
ஆசாரியனை மனிதனென்று நினைப்பவர், தேவரைக் கல்லென்பவர், பத்து வயசின் மிக்கவர், 
பூப்புப் பருவம் வந்தணுகினவர், ஒத்த குணமில்லாதவர், அச்சமில்லாத மனத்தையுடையவர், 
இடிபோலப் பேசுவோர், தம்மைத் தந்தை தாயர் விவாகஞ் செய்துகொடுக்குமுன் ஒருவரிடத்து 
வேட்கை வைத்து அவரைச் சேர விரும்புவோர், பெருமிதமுடையவர், மடமும் பயிர்ப்புமில்லாதவர், 

பிறக்கும்போதே கண்ணில்லாதவர், பின்பு கண்ணிழந்தவர், மறுப் பொருந்திய கண்ணினையுடையவர்,
படலம் பொருந்திய கண்ணினையுடையவர்,மெல்லெனப் பார்க்குங் குருடர், சாய்ந்த கண்ணையுடையவர், 
பூனைக்கண்ணையுடையவர், பேய்போலச் சுழலுஞ் செங்கண்ணையுடையவர், தூறு மயிரையுடையவர், 
நரைத்த மயிரையுடையவர், பெருங்கூந்தலுடையவர், சிறுகூந்தலுடையவர், விரிந்த அளகமுடையவர், 
செம்மயிருடையவர், நிலத்தில் இறங்கிய கூந்தலையுடையவர், உதிர்ந்த மயிரையுடையவர், 
விலங்குபோல வலிய மயிரையுடையவர், சிறுத்த கண்ணையுடையவர், நெடுமூக்கையுடையவர், 
ஒன்றிய புருவங்களையுடையவர், குறிய காதையுடையவர், உயர்ந்த தந்தத்தையுடையவர், 

வளைந்த கழுத்தையுடையவர், மறுப்பொருந்திய முகத்தையுடையவர், தேமலில்லாத தனத்தையுடையவர்,
நுடங்கிய இடையில்லாதவர், கல்லுப்போலப் பருத்த வயிற்றையுடையவர், நல்லிலக்கணமில்லாத
 நிதம்பத்தையுடையவர், வாயும் உள்ளங்கைகளும் நகங்களும் உள்ளங்கால்களும் சிவப்பில்லாதவர்,
மயிர் பரந்த காலையுடையவர், அன்னம்போலும் மென்னடையில்லாதவர், விரல் பூமியிலே தோயாதவர் 
என்னும் இத்தன்மையராகிய மகளிர்களும் பிறரும் விவாகத்திற்கு உரியர்களல்லர். இத்தன்மையராயின், 
நான் விரும்பேன். இவ்வியல்பு முழுவதுமில்லாத கன்னி உண்டாயின், விரும்புவேன். நீர் ஆராய்ந்து 
விவாகஞ்செய்து தரக்கடவீர்' என்றார். குச்சகமுனிவர் அது கேட்டு, மகிழ்ச்சியும் முறுவலுங்கொண்டு, 
'நல்லிலக்கணமுடைய கன்னியைத் தேடி, உனக்குத் தருவேன்' என்றார்.

    இவ்வாறு கூறிய குச்சகமுனிவர் மிருககண்டூயரை நிறுவி, தாம் உலகெங்கும் ஒருகன்னியைத் 
தேடித் திரிந்து, தம்மெதிர்ப்பட்ட சில முனிவர்களால் சோழதேசத்திலே அநாமயமென்னும் வனத்திலே 
உசத்திய முனிவரிடத்திலே ஒரு கன்னிகை இருத்தலை அறிந்து, அவரிடத்தே சென்றார். உசத்தியமுனிவர் 
குச்சக முனிவரை வணங்க, குச்சகமுனிவர் உசத்தியமுனிவரை எதிருறத் தொழுது தழுவினார். 
உசத்தியமுனிவர் குச்சக முனிவரைத் தமதாச்சிரமத்திலே அழைத்துக்கொண்டு போய், ஆசனத்திருத்தி, 
தம்முடைய பன்னியையும் புதல்வியையும் அங்கே அழைத்து, அவரை வணங்குவித்து, அவரை விதிப்படி 
பூசித்து அமுது செய்வித்தார். 

    அதன் பின்பு அவரை நோக்கி, 'சுவாமீ,நீர் அடியேனிடத்து எழுந்தருளியதென்னை' என்று வினாவினார். 
குச்சகமுனிவர் மனமகிழ்ந்து, 'நீர் பெருந்தவஞ் செய்து பெற்ற புதல்வியை என்புதல்வனுக்கு மணம்பேசும் 
பொருட்டு வந்தேன்' என்றார். உசத்திய முனிவர் அது கேட்டு மகிழ்ந்து, 'என்புதல்வியாகிய விருத்தையை 
உம்முடைய புதல்வனுக்கு விவாகஞ்செய்து தரும்பொருட்டு நான் முன் செய்த தவம் யாதோ' என்று சொல்லி, 
விவாகத்துக்கு உடன்பட்டு, அம்முனிவரை அங்கே சிலநாளிருத்தி, வழிபடுவாராயினார்.

    ஒருநாள் உசத்தியமுனிவருடைய பன்னியாகிய மங்கலை விடுப்ப, மகளாகிய விருத்தை தன்னுடைய 
தோழியர்களோடு சென்று, கான்யாற்றிலே நீராடி, பக்கத்துள்ள சோலையிலே போய், மலர் கொய்து, 
விளையாடிக் கொண்டு திரும்பினாள். திரும்பும்பொழுது, மதயானையொன்று எதிரே வந்தது. அதனைக் 
கண்டோர் யாவரும் அஞ்சித் தனித்தனியே விரைந்தோடினார்கள். விருத்தை கண்டு துன்பமுற்று,'இனி யாது 
செய்யலாம்' என்றிரங்கி ஏங்கி, மிகவிரைந்தோடினாள். ஓடலும், புதர் மூடிய துரவொன்றணுக, அதில் 
விழுந்தழுந்தி இறந்தாள். யானை மலயமானாட்டைச் சார நடந்தது. தனித்தனியே ஓடிய தோழியர்கள் 
யாவரும் பின் ஒருங்கு கூடி, விருத்தையைத் தேடிக் காணாது, பெருந்துயரமடைந்து, உசத்திய முனிவருடைய 
ஆச்சிரமத்தை அடைந்து, மங்கலைக்கு இதனைச் சொன்னார்கள்.  மங்கலை அது கேட்டலும், கண்ணீர் வார 
வயிற்றினடித்து அழுதுகொண்டு,  தன் கணவருடைய பாதங்களின் வீழ்ந்து, நிகழ்ந்ததனைச் சொன்னாள். 
 உசத்தியமுனிவர் அது கேட்டு, மனங்கவன்றழுது, தன்புதல்வியோடு  சென்று பிரிந்த தோழியரை நோக்கி,
 'என்புதல்வியை யானை கொன்றதா? சொல்லுங்கள்' என்றார். 

    தோழியர்கள் முனிவரை நோக்கி, "நாங்கள் நீராடி மலர்கொய்து கொண்டு திரும்பும்பொழுது, 
யானை வந்தது கண்டு, எல்லோமும் தனித்தனி ஓடினோம். பின்பு விருத்தையைத் தேடிக்காணாது
திரும்பினோம்' என்றார்கள். உசத்திய முனிவர் அவ்வெல்லையிற் சென்று தேடித் தியக்குற்று நின்றார். 
தம்மகளுடைய ஆபரணங்கள் ஒருநெறியிலே ஓரொன்றாகச் சிந்திக் கிடப்பக் கண்டு, 'என்மகள் சென்ற 
நெறி இதுவே'  என்று துணிந்து, 'ஆபரணம் போகிய நெறியே தொட்டுப் புதல்வியைக் காண்போம்' என்று, 
பெண்களோடு போக, துரவொன்று வந்தணுகியது. அதிலே தம்மகளைக் கண்டு, நெடிதுயிர்த்து, 
கண்ணீர் பெருக அதனுள்ளே குதித்து, மகளை எடுத்துக் கரையிலே சேர்த்து, அழுதார். உடனே 
பெண்களெல்லாரும் விருத்தையைத் தழுவிக்கொண்டழுதார்கள். நற்றாயாகிய மங்கலை அது கேட்டு, 
பெருந்துயரக்கடலின் அழுந்தி, வயிற்றினடித்து, விருத்தையின்மீது வீழ்ந்து அழுதாள்.

    குச்சகமுனிவர் இவையெல்லாம் அறிந்து, அவ்விடத்துச் சேர்ந்து, அழுகின்ற பெண்களை நோக்கி, 
'இக்கன்னியை நான் உயிர்ப்பித்துத் தருவேன், அழாதொழிமின்கள்' என்று தேற்றி, வேறோரிடத்திருந்த 
உசத்தியமுனிவரைப் பார்த்து, 'கல்வியில்லாதவரும், சிறியரும், முதியரும்,பாலரும், மகளிரும்போல 
நீர் இவ்வாறு துன்புறுகின்றீர். ஊழ்வினை முறையை அறிகிலீர். அறிஞராகிய நீர் இவ்வியல்பினராயின், 
வேறியாவர் தெளியுமியல்பினர்! ஐயரே,கேளும். மனத்திற்றுன்பத்தை ஒழித்துவிடும். நான் இக்கன்னியை 
நாளை உயிர்ப்பித்துத் தருவேன். பின்பு என் புதல்வனுக்கு நீர் இவளை விவாகஞ்செய்துகொடும். 
இதனை ஐயுற்று  வருந்தாதொழியும் . விதியும் அதுவே. இதனை நான் ஞானநோக்கத்தினால் அறிந்தேன். 
விருத்தையினது சரீரத்தை எண்ணெய்த்தோணியில் வைத்திரும். நான் தவஞ்செய்து உயிரை மீட்டுத்தருவேன்' 
என்றார். அது கேட்ட உசத்திய முனிவர் தம்மகளுடைய சரீரத்தை எண்ணெயில் வைத்தனர்.

    குச்சகமுனிவர் போய், ஒருபொய்கையிலே மூழ்கி நின்று, இயமனை நினைந்து  தவஞ்செய்தார். 
அப்பொழுது, முன்னே பெண்கள் அஞ்சும் வண்ணம் வந்த மதயானை மீண்டணைந்து, அப்பொய்கையினுள்ளே 
புகுந்து, புழைக்கையினாலே துளாவி, அங்கு நின்ற குச்சகமுனிவரைப் பற்றித் தன்பிடர்மேல் ஏற்றிக்கொண்டு, 
நெடுந்தூரஞ்சென்றது. குச்சகமுனிவர் உணர்ந்து, பின்னர் மதயானையை நோக்கி, 'இது என்னைப் பற்றிச் 
செல்வதென்னை' என்றெண்ணி, ஞானநோக்கத்தினாலே அதனது ஊழ்முறையை நினைவாராயினார்:

    'கலிங்கநாட்டிலே அரிபுரத்திலே வணிகர்குலத்திலே தேவதத்தன் என்றொருவன் இருந்தான். 
அவனுடைய புதல்வனாகிய  தருமதத்தன் மிக்க செல்வத்தையுடையனாய், தருமங்களைச் செய்து 
பெரும்புகழ் பெற்றான். அவன் தன்னுடைய தந்தையும் தாயும் இறத்தலும், தமியனாகித் துயறுழந்து, 
பின் ஒருவாறு  தேறியிருக்கும் பொழுது, ஓரிரதவாதி முண்டிதமாகிய சிரசையும், குண்டலம் பொருந்திய 
காதையும், உபவீதம் அணிந்த மார்பையும், விபூதியைத் திரிபுண்டரமாகத் தரித்த நெற்றியையும், 
உருத்திராக்ஷ மாலையையும், பிரம்பு பொருந்திய கையையும் உடையனாய், அவனிடத்து வந்தான். 

    தருமதத்தன் அவ்விரதவாதியைக் கண்டு, வணங்கி, தன் வீட்டினுள் அழைத்துக்கொண்டு சென்று, 
அமுதுசெய்வித்து, முகமன் கூறி, பின்பு அவனை நோக்கி, 'சுவாமீ, நீர் இங்கு வந்ததென்னை' என்றான். 
வாதி அது கேட்டு, 'சிவபிரான் அருளிச்செய்த வித்தையொன்று நம்மிடத்துளது. அது எவருக்கும் 
பேசுந்தன்மையதன்று. குருபத்தியுடையார்க்கு மாத்திரம் சொல்லத்தக்கது. நெஞ்சிற்சிறிதும் 
மாசில்லாத உனக்கு நாம் அதை உணர்த்துவேம். சிவபிரானிடத்துத் தோன்றிய இரதமுண்டு. 
அதனாலே வேண்டிய பொன்னைச் செய்வோம். அது நமக்கு அரியதன்று. அது போல இன்னும் பலவுள.

     அவற்றைப் பெருந்தவமுடைய பெரியோர்களன்றி வேறியார் விரும்பாதவர்! காரிரும்பை 
நாகமாக்கு வோம். மீட்டும் அதனைப் பொன்னாக்குவோம். மகாமேருமலையும் திருக் கைலாசமலையுமாகிய 
இரண்டனையும் யாரும் நோக்கவே காட்டுவோம். இவை நமக்கரியனவா! ஈயத்தையும் இரதத்தையும் 
வெள்ளியாக்குவோம். வங்கத்தைப் பொன்னாக்குவோம். இரும்பிற் செம்புண்டாக்குவோம். ஈயத்தையும் 
அவ்வாறே செய்வோம். அளப்பில்லாத பிருதிவியண்டங்கள் யாவையும் பொன்மயமாக்குவோம். 
நமது வன்மையை உள்ளவாறு சொல்ல விரும்பினோமாயின், அளப்பில்லாத வருடங்கள் வேண்டும். 

    ஒருபொன்னைக் கோடிபொன்னாக்குவோம். கோடிபொன்னை மலைபோலக் கோடி கோடி 
பொன்னாக்குவோம். உன்பொருளனைத்தையும் தருவையாயின், உன் வீட்டிலே அப்பொருளை வைத்தற்கு 
இடமில்லையென்னும்படி செய்வோம்' என்றான். இவ்வாறு கூறிய வாதியைத் தருமதத்தன் வணங்கி, 
முன்னே தன்னிடத்துள்ள நிதியையும், பின்னே தன்னால் ஈட்டப்பட்ட நிதியையும், பேடகங்களில் உள்ள 
ஆபரணங்களையும் கொண்டுவந்து, அவன்முன் வைத்தான். வாதி அவற்றை நோக்கி, 'ஓகோ! 
வணிகரிற்றிலகனாகிய உன்னிடத்துள்ள செல்வம் இதுதானோ'  என்று கை தட்டிச் சிரித்து, 'இப்பொருள் 
நமது வித்தையில் இறைக்கும் போதாது. இது நாம் உருக்கு முகத்திலே சிந்துகின்ற அளவுங்காணாது. 
நீ நம்பின் றிரிவையாயின், அளப்பில்லாத பொருள் தருவோம். இதனை வைத்துக்கொள்வாயாக' என்றான். 

    அப்பொழுது தருமதத்தன் 'சுவாமீ, கோபியாதொழிக.நீர் வேண்டிய பெருநிதிமுழுதும் 
தேடிக் கொண்டுவருவேன். இரும்' என்று சொல்லிக் கொண்டு போய், வஸ்திரங்களையும், நிலங்களையும், 
இரத்தினங்களையும், ஆபரணங்களையும், வீடுகளையும், ஆடுமாடுகளையும் விற்று, மதிமயக்கத்தினாலே 
தருமத்தையும் விற்றான். இவ்வாறு தேடிய பெருநிதியனைத்தையும் கொண்டுவந்து, வாதிமுன் வைத்து 
நிற்றலும்,வாதி மனமகிழ்ந்து. அவையெல்லாவற்றையும் அக்கினியிலே உருக்கித் திரட்டி, ஒருருவாக்கி, 
அதனிரட்டி எடைகொண்ட இரதத்தை ஓரம்மியிலிட்டு, அப்பொன்முழுதையும் உரைத்து, அதனை உருட்டி, 
மட்குகையினுள்ளே மருந்தை உள்ளுறுத்திப் பொன்னை உள்ளிட்டு, அதனிடத்தே ஓர்களங்கத்தை இட்டு, சீலை
மண்செய்து, அக்கினியிலே நூற்றெட்டுக்குக் குடபுடமிட்டு, அதனைப் பார்த்து, 'மிகவும் மாற்று வந்தது. 
இனி ஒருவராகியிலே பழுக்கும். காற்றில்லாத ஒருறையுள் காட்டு' என்றான். 

    தருமதத்தன் ஒருறையுளைக் காட்டலும்,இரதவாதி அதனுள்ளே போய்,விறகின்மீது சுடலையக்கினி கொண்டு
வராகிமேலிட்டுப் புகைப்பித்தான். அதனாலே தருமதத்தன் கண்ணீர் பொழிய, சரீரம் வெதும்ப, எங்கும் வேர்ப்ப, 
ஊமைபோல ஒன்றும் பேசாமலும், போக முயலாமலும், வாளாவிருந்தான். அப்பொழுது இரதவாதி
பொற்குகையை எடுத்து, மெல்லெனத் தனது வஸ்திரத்தினுள்ளே மறைத்துக்கொண்டு, அதுபோலத் 
தன்னிடத்திருந்த வேறொரு குகையைப் பக்கத்து வைத்து, புகையைத் தணித்து, தருமதத்தனை நோக்கி, 
'இக்குகையை உன்கையினால் எடுத்து, இவ்வக்கினிமேல் வைப்பாயாக' என்றான்.

     தருமதத்தன் அவ்வாறு செய்தலும், இரதவாதி அதற்குரியன யாவற்றையும் அமைத்துச் 
சேமஞ்செய்து, தருமதத்தனை நோக்கி, 'நீ உணவில்லாமலும், ஒருவரோடும் பேசாமலும், பெண்களை 
விரும்பாமலும், பிறரைப் பாராமலும், மூன்றுநாள் நம்மையே சிந்தித்துக் கொண்டிருக்கக்கடவாய்.
 நாம் காளிசந்நிதியிலே ஒருயாகம் முடித்தல்வேண்டும். முடித்துக்கொண்டு நாலாநாள் இங்கே வருவோம்' 
என்றான். தருமதத்தன் 'அவ்வாறே செய்க' என்று சொல்லி, அவனை மும்முறை வணங்கி, அவன்பின் 
செல்லாது நின்றான். 

    இரதவாதி அங்குநின்றும் விரைந்து நெடுந்தூரம் போய், உருமாறி வேறோரிடத்தை அடைந்தான். 
தருமதத்தன் இரதவாதி விதித்தபடியே இருந்து,மூன்றுநாட்செல்லலும், 'பெரியவர் சொல்லிய நாளெல்லை 
சென்றுவிட்டதே. இன்று வந்திலர். அவர் சொற்றப்புவாரா' என்று தளர்ந்து காளிகோயிலினும் நகரத்தினும் 
அவனைத் தேடிக் காணாது மயங்கி வாடி வீட்டுக்குத் திரும்பினான். முன் வைத்த குகையை எடுத்துப் பார்த்து
அது இரும்பாயிருக்கக் கண்டு, மிகுந்த துயரமடைந்து வீழ்ந்திறந்தான். அவன் தருமத்தை விற்ற பாவத்தினாலே 
'யானையாய்ப் பிறந்தான்' என்றுணர்ந்தார். 

    இவ்வுண்மையை உணர்ந்த குச்சகமுனிவர் 'இவ்வியானைப் பிறப்பை விரைவிலே நீக்குவேன்' என்று 
சொல்லி, 'நான் முன் செய்த தவத்திலே ஒருநாட்டவம் இவ்வியானைக்கு எய்துக' என்றார். உடனே யானை வடிவத்தை 
ஒழித்து, தேவ வடிவத்தை அடைந்து, தேவ விமானத்தேறி, குச்சக முனிவரைத் தொழுதுகொண்டு, விண்ணுலகத்தை 
அடைந்தான். அதன் பின்பு குச்சகமுனிவர் பொய்கையிலே முன்போலத் தவஞ்செய்தலும் இயமன் வந்து, 
'முனிவரே, உம்முடைய தவத்தை நோக்கி மகிழ்ந்தனம். நம்மிடத்து வேண்டியது என்னை' என்றான். 

    குச்சகமுனிவர் இயமனை வணங்கி, 'உசத்திய முனிவருடைய புதல்வியை என்புதல்வனுக்கு 
மணம் பேச வந்தேன். அவள் நேற்றிறந்தனள். அவளை முன்போலத் தந்தருளும்' என்றார். அப்பொழுது இயமன் 
தன்றூதனொருவனை நோக்கி, இம்முனிவர் வேண்டிய கன்னியினது உயிரை வைத்தோமே. அதனை நீ 
விரைவின் இங்கே மீட்டுக் கொண்டுவந்து விடுவாயாக' என்று பணித்து, மறைந்தான். தூதுவன் அவ்வுயிரைக் 
கொண்டுவந்து, அவளுடைய சரீரத்துள் விடுத்தான்.உடற்குள் உயிர் வருதலும், விருத்தை துயிலுணர்ந்தாள்போல
எழுந்தாள். எல்லாரும் அவளைச் சூழ்ந்தார்கள். 

    மாதாவாகிய மங்கலை அவளைத் தழுவினாள். தந்தையாராகிய உசத்தியமுனிவர் அவளை 
எடுத்தணைத்துப் பலகால் உச்சிமோந்து, தன்னிருதொடைமீதிருத்தி, 'என்றவப்பயனாகிய குச்சகமுனிவர் 
நேற்றுக் கூறியவாறே தவஞ்செய்து இவளை உய்வித்தருளினர்' என்றார். பின்பு புதல்வியை நோக்கி, 
'நீ இங்கு நிகழ்ந்ததும், இறந்ததும், மீண்டதும் முறைப்படியே சொல்வாயாக' என்று சொல்ல, அவள் அது கேட்டு, 
தான் தோழியர்களோடு போனதும், கான்யாற்றிலே நீராடியதும், மீண்டதும், யானை வந்ததும், அதனைக் 
கண்டோடினதும்,தானொருத்தி தனித்ததும், துரவில் வீழ்ந்திறந்ததும், மீண்டதும், இயமலோகத்தில் 
நிகழ்வனவும் விரித்துச் சொன்னாள்.

    அது கேட்டு மகிழும்பொழுது, இயமனுடைய அருளைப் பெற்ற குச்சக முனிவர் வந்தார். வருதலும், 
உசத்தியமுனிவர் தம்முடைய பன்னியோடும் புதல்வியோடும் சுற்றத்தோடும் அவரை எதிர்கொண்டு, 
வணங்கித் துதித்து, 'என்னுடைய உயிரும், என்பன்னியுடைய உயிரும், சுற்றத்தாருடைய உயிரும், 
நண்பர்களுடைய உயிரும் நிற்கும்வண்ணம், நான் தவத்தினாலே பெற்ற விருத்தையுடைய 
உயிரைத் தந்தருளினீர். இது உமக்கு அரியதா! பூமியின்கண் உள்ள உயிர்களனைத்தையும் காத்தருளும் 
கடவுளும் நீரென்றே என்மனம் கருதுகின்றது. 

    உமது திருவுளத்தை யாவர் அறிவார்!  உம்முடைய புதல்வனுக்கு என் புதல்வியைக் 
கொள்ளும் பொருட்டு வந்தீரோ! இயமனாலே போன உயிரை மீண்டும் அழைத்துத் தரும்பொருட்டு வந்தீரோ! 
சொல்லும்' என்று முகமன்கள் பலவற்றை எடுத்துச் சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு தமதாச்சிரமத்தை 
அடைந்தார். பின்பும் சிலநாள் குச்சகமுனிவரை அங்கிருத்தி, 'சுவாமீ, உம்முடைய புதல்வரை இங்கே 
அழைத்துக்கொண்டு வாரும். என்புதல்வியை விவாகஞ்செய்து கொடுப்பேன்' என்றார். குச்சகமுனிவர் 
தம்முடைய புதல்வரை அழைத்துக்கொண்டு வரலும், உசத்தியமுனிவர் சுப தினத்திலே சுபமுகூர்த்தத்திலே, 
தம்முடைய புதல்வியாகிய விருத்தையை மிருககண்டூயருக்கு விதிமுறையே விவாகஞ்செய்து கொடுத்தார்.

    மிருககண்டூயரும் விருத்தையும் அன்பினோடு கூடி இல்லறம் நடாத்த, குச்சகமுனிவர் பலநாட் 
கண்டுகொண்டு, தவஞ்செய்யும்பொருட்டு உத்தரதேசத்துக்குப் போனார். மிருககண்டூயர் தமது பெருந்தவ 
வலியினாலே மிருகண்டு என்னும் ஒர்புதல்வரைப் பெற்று, அவருக்கு ஆறுவயசு சென்றபொழுது உபநயனம் 
முடித்துவிட்டு, தமது தந்தையார் போலத் தாமும் தவஞ்செய்யப் போயினார்.

    மிருகண்டு முனிவர் பிரமசரியம் அனுட்டித்து முடித்து, முற்கலமுனிவருடைய புதல்வியாகிய 
மருத்துவதியை விவாகஞ்செய்து, இல்லறத்தை நடாத்தினார். சிலகாலமானபின், புதல்வர் இல்லாமையால் 
மனம் வருந்தி, தம்முடைய மனைவியோடும் சுற்றத்தாரோடும் அநாமயவனத்தை நீங்கி, காசியை அடைந்தார். 
அடைந்து, கங்கா நதியில் ஸ்நானஞ்செய்து, மணிகன்னிகை என்னும் திருக்கோயிலிற் சென்று, சிவபெருமானை 
வலஞ்செய்து வணங்கித் துதித்தார். அத்திருக்கோயிலுக்கு அணித்தாகிய ஓரிடத்திலே சிவபெருமானைச் 
சிவாகமவிதிப்படி வழிபட்டார். 

    வெய்யில், பனி, மழை, காற்று என்பவற்றிற்கு அஞ்சாத மரம்போல,ஆறுபருவத்தும், 
புத்திர பாக்கியத்தை விரும்பிச் சிவபெருமானைச் சிந்தித்து, ஒருவருடம் தவஞ் செய்தார். அப்பொழுது 
சிவபெருமான் எழுந்தருளிவருதலும்,மிருகண்டு முனிவர் அவரை வணங்கித் துதித்தார். 
சிவபெருமான் மிருகண்டு முனிவரை நோக்கி, 'நீ யாது விரும்பினாய்' என்று வினாவியருளலும், 
மிருகண்டு முனிவர் 'எம்பெருமானே, அடியேன் புத்திரபாக்கியத்தை விரும்பினேன். தந்தருளுக' 
என்று விண்ணப்பஞ் செய்தார். சிவபெருமான் திருமுறுவல் செய்து, 'தீக்குணமே உடையவனாய், 
அறிவு சிறிதும் இல்லாதவனாய், ஊமையும் செவிடும் முடமும் குருடுமாய், வயசுநூறினும் நோயால்
வருந்துவோனாய் உள்ள ஒரு புதல்வனைத் தருவேமா? அழகு மிக்குடையனாய், உறுப்புக்குறைவு 
இல்லாதவனாய், நோய்களாலே சிறிதும் வருந்தாதவனாய், பலகலைகளினும் பயின்று வல்லனாய், 
நம்மிடத்து அன்புடையனாய்,  பதினாறு வயசுமாத்திரம் பெற்றவனாய் உள்ள ஒருபுதல்வனைத் தருவேமா?
உன்னெண்ணம் யாது? சொல்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    மிருகண்டு முனிவர் அவற்றை நன்காராய்ந்து துணிந்துகொண்டு, 'பெருங்கருணாநிதியே, 
வயசு குறுகினாலும், அறிவுடையனாய், உடற்குற்றம் சிறிதும் இல்லாதவனாய், எம்பெருமானே, 
உம்மிடத்து அன்புடையனாய், உள்ள ஒரு புதல்வனையே விரும்பினேன். தந்தருளுக' என்று 
விண்ணப்பஞ்செய்தார் . செய்தலும், சிவபெருமான் ' உனக்குச் சற்புத்திரனைத் தந்தேம்' என்று
திருவாய்மலர்ந்து, மறைந்தருளினார். மிருகண்டுமுனிவர் சிவபெருமானைத் துதித்துக்கொண்டு, 
மனமகிழ்ந்து, தஞ்சுற்றத்தாரோடும் காசியிற்றானே இருந்தார்.

    இவ்வாறிருக்கு நாளிலே, பூமியிலுள்ளோர் துன்பத்தினின்று நீங்கவும், சிவபுண்ணியம் ஓங்கவும், 
தவத்தையுடைய முனிவர்கள் உய்யவும், சற்சமயமாகிய வைதிக சைவம் வாழவும், இயமன் இறக்கவும், 
எம்பெருமானது திருவருளினாலே, மிருகண்டு முனிவருடைய பன்னியாகிய மருத்துவதியுடைய 
அருமைத் திருவயிற்றிலே ஒருகருப்பம் வந்தடைந்தது. அடைதலும், மிருகண்டு முனிவர் அதனை அறிந்து, 
அங்குள்ள சிவனடியார்கள் யாவருக்கும் வேண்டிய வேண்டியவாறே பலவளங்களையும் கொடுத்து 
மாசந்தோறும் செயற்பாலனவாகிய கடன்களைச் செய்துகொண்டிருந்தார். பங்குனி மாசத்திலே, 
இரேவதி நக்ஷத்திரத்திலே, மிதுன லக்கினத்திலே, சுக்கிரனும் குருவும் உச்சத்தானத்தில் இருப்ப, 
சூரியன் முதலிய மற்றைக் கிரகங்கள் நட்பும் ஆட்சியும் ஆகிய தானங்களில் இருப்ப, ஒரு சற்புத்திரர் 
*திருவவதாரஞ்செய்தார். அப்பொழுது, சுற்றத்தார்கள் இரத்தினங்களையும், பொன்னையும், 
பொற்சுண்ணத்தையும், நறுமலரையும், மகரந்தத்தையும், கலவைச்சாந்தையும், கஸ்தூரிச் சேற்றையும் 
இடந்தோறும் வீசி ஆர்த்தார்கள்.

* இவருடைய திருவவதார காலத்தையுணர்த்தும் "மீனமு முடிந்த நாளும்" என்னுஞ் செய்யுட்கு 
வேறு பொருள்கள் கூறுவாறுமுளர்.

    தேவதுந்துபிகள் ஒலித்தன. மும்மூர்த்திகளல்லாத மற்றையாவரும் ஆசி செய்தார்கள். 
திருக்காசி நகரமன்றி உலகமெல்லாம் களிப்புற்றன. தந்தையாராகிய மிருகண்டு முனிவர் கங்கா நதியிலே 
ஸ்நானஞ்செய்து, பிராமணர் முதலியோர்கட்கெல்லாம் தானம் கொடுத்து, சாதகர்மம் முதலியனவற்றைச் 
செய்தார். பிரமதேவர் வந்து, அச்சற்புத்திரருக்கு 'மார்க்கண்டேயர்' என்று நாம கரணஞ்செய்தார். 
பிள்ளை மறுவற்ற சந்திரன் போல வளர்தலும், உபநிட்டானம் அன்னப்பிராசனம் முதலியவற்றைச் செய்து, 
ஒரு வருடத்திலே சௌௗகர்மமும், இரண்டாம் வருடத்திலே, கன்னவேதனமும் செய்தார். ஐந்தாம்வயசிலே 
உபநயனஞ்செய்து, வேதம் முதலிய கலைகளெல்லாவற்றையும் உணர்த்துவிக்க, மார்க்கண்டேய முனிவர் 
அவைகளின் மெய்ப்பொருளை உணர்ந்து, சிவபெருமானே அநாதிமுத்த சித்துருவாகிய முதற்கடவுள் 
என்று துணிந்து, அவருடைய திருவடிகளே புகலிடமாகக் கொண்டார். சிவபெருமானையும், அவருடைய 
அடியார்களையும், தங்குருவையும், முனிவர்களையும், தாய்தந்தையர்களையும், சிரத்தையோடு வழிபடுவாராய், 
பிரமசரியத்தை வழுவாது அனுட்டித்தார்.

    இவ்வாறு ஒழுகும்பொழுது, பதினாறுவயசு சென்றது. தாய் தந்தையர்கள் அதனை அறிந்து, 
தங்கள் குமாரரை நோக்கி, தனித்தனியே இருந்து கொண்டு, பெருந்துயர்க்கடலின் மூழ்கி, அழுது 
வருந்தினார்கள். மார்க்கண்டேயமுனிவர் அது கண்டு, அவர்களை அணுகி, அவர்கள் பாதங்களை 
வணங்கி, 'நீங்கள் துன்பமுறுகின்றீர்கள். இது என்னை ! இன்னும் யான் யாதுமொன்றறியேன். 
இனித் துன்பத்தை ஒழிமின்கள். உங்களிடத்து நிகழ்ந்தது யாது? சொல்லுங்கள்' என்றார். 

    தந்தையார் அது கேட்டு, 'மைந்தனே, நீ இருக்க, நாம் வேறொரு துன்பம் எய்தி மெலிவதும் உண்டோ! 
முன்னாளிலே சிவபெருமான் உனக்குப் பதினாறு வயசு என்று அருளிச்செய்தார். அது சென்றதனால்,
துன்பமுறுகின்றோம்' என்றார். உடனே மார்க்கண்டேயர் அவர்முகத்தை நோக்கி, 'நீங்கள் சிறிதும் 
இரங்கவேண்டாம். உயிர்க்குயிராய் எங்கும் நிறைந்த சிவபெருமானைப் பூசைசெய்து, இயமனுடைய 
வலியைக் கடந்து, உங்களிடத்து விரைந்து வந்தடைவேன். நீங்கள் இங்கிருங்கள்' என்று சொல்லி 
அவர்களைத் தேற்றி, அவர்கள் பாதங்களின் வீழ்ந்து வணங்கி நின்றார். நிற்க, தந்தை தாயர் இருவரும் 
அவரை மார்பில் அணைத்து, உச்சிமோந்து, முன்னை வருத்தநீங்கி, மனமகிழ்ந்தார்கள்.

    மார்க்கண்டேய முனிவர் இருமுதுகுரவர்களுடைய ஏவலினாலே, சிவ பெருமானது திருவருளும் 
தமக்கு அவர்மாட்டுள்ள அன்புமே உடனுறு துணையாய்ச் செல்ல, பெருமகிழ்ச்சி பொங்க, விரைந்து போய், 
மணிகன்னிகை என்னும் திருக்கோயிலிற் புகுந்தார். என்புகள் நெக்கு நெக்குருக, ஆனந்தவருவி பொழிய, 
சிவபெருமானை வலஞ்செய்து, திருமுன்னே வணங்கி, தென்றிசையின் ஒரிடத்து இருந்துகொண்டு, 
சிவலிங்கந் தாபித்து, பலநாள் அன்போடு பூசித்துத் துதித்து, அருந்தவஞ்செய்தார். அன்புவலையிற் 
படுவோராகிய சிவபெருமான் வெளிப்பட்டு, 'நீ அருந்தவமும் பூசையும் செய்கின்றாய். நாம் அவற்றில் 
மிக விருப்பம் அடைந்தேம். நீ விரும்பியது யாது? இனிச் சொல்வாயாக' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

     மார்க்கண்டேயமுனிவர் 'பரமபிதாவே, அநாதி மலமுத்தரே, சித்தும் அசித்துமாகிய 
பிரபஞ்சமெல்லாம் நிறைந்த மெய்யரே, யாவருக்கும் மேலானவரே, மெய்யடியார்களுடைய மலத்தை 
ஒழித்தருளும் கருணாநிதியே, அக்கினியை ஏந்திய திருக்கரத்தை உடையவரே, சிறியேன் இயமன் 
கைப்படாது உய்யும்பொருட்டு நீர் எதிர்வந்து அருளல்வேண்டும்' என்று விண்ணப்பஞ்செய்தார். 
செய்தலும், கிருபா சமுத்திரமாகிய எம்பெருமான் 'இயமனுக்கு அஞ்சாதே அஞ்சாதே' என்று 
திருவாய்மலர்ந்து, தம்முடை அருமைத் திருவடிகளிரண்டையும் மார்க்கண்டேய முனிவருடைய 
சிரசில் வைத்தருளினார். வைத்தருளலும், மார்க்கண்டேய முனிவர் 'இனி உய்ந்தேன் உய்ந்தேன்' 
என்று சொல்ல, சிவபெருமான் முன்போலச் சிவலிங்கத்தில் மறைந்து எழுந்தருளியிருந்தார்.

    அதன்பின்பு மார்க்கண்டேய முனிவருக்குப் பதினாறு வயசெல்லை செல்லலும், ஒரு யமதூதன் 
தோன்றி, சிவபூசையைக் கண்டு அஞ்சி 'நான் மார்க்கண்டரை அண்டுவது அரிது' என்று மீண்டு போய், 
இயமனை வணங்கி நின்று, 'இறைவனே, காசியிலே மார்க்கண்டேயன் எனப்பெயர் பெற்ற ஓர் பிராமணன் 
இருக்கின்றான். அவன் சிவபெருமானிடத்தே பதிந்த சிந்தையை உடையவன், அவருடைய திருவடிகள் 
பொருத்திய சிரசை உடையவன், எந்நாளும் அவருடைய திருப்புகழையே பேசும் நாவினை உடையவன், 
அவன் சிவபூசை செய்கின்றான். அப்பாலனை அணுக அஞ்சினேன், அவன்முன்னும் சென்றிலேன். 
அவன் சிவபெருமானிடத்து இருக்கின்றனன்' என்றான். 

    உடனே இயமன் மிகக்கோபங்கொண்டு, பெருமூச்செறிந்து, 'அச்சிறுவன் நாசமில்லாத முதற்கடவுளோ'
 என்றான். பின்பு 'நம்முடைய கணக்கர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள்' என்று பணிக்க, அங்கு நின்ற 
தூதனொருவன் ஓடிப்போய், 'எம்மரசன் அழைக்கின்றான். வாருங்கள்' என்று கூவ, அவர்கள் வந்து 
இயமனை வணங்கினார்கள். இயமன் 'காசியிலே சிவபூசை செய்துகொண்டிருக்கும் மார்க்கண்டேயன் 
என்னும் சிறுவனுக்கு வயசெல்லை சொல்லுங்கள்' என்றான். சித்திரகுத்தர் என்னும் கணக்கர்களிருவரும் 
தங்கள்கையினுள்ள கணக்கைப் பார்த்து, 'அரசனே,சிவபெருமான் முன்னாளிலே பதினாறு வயசு என்று 
எல்லைகூறினார். அவ்வெல்லை சென்றது. அச்சிறுவன் செய்த சிவபூசை தருமத்தின்பாலது. 

    பெருந்தவத்தையுடைய முனிவர்களாயினும் பொதுவாகாது தமக்கே சிறப்பாயுள்ள ஐசுவரியத்தை 
உடையர்களாயினும், அறிஞர்களாயினும், வலியர்களாயினும், விதியை வெல்ல வல்லவர் யாவர்! ஆதலால்,
அச்சிறுவன் சுவர்க்கம் அடைதற்கு உரியன். நரகத் துன்பத்திற்குத் தப்பினான். இதுவே அவனிலைமை' 
என்றார்கள். இயமன் கோபங்கொண்டு தன்மந்திரியாகிய காலனை விளித்து, 'காசியிலுள்ள 
மார்க்கண்டேயன் என்னும் பிராமணனை இங்கே கொண்டுவரக்கடவாய்' என்று பணித்தான். 
பணித்தலும், காலன் காசியை அடைந்து, மார்க்கண்டேய முனிவர் இருக்கும் இடத்தே போய், 
அவருடைய சிவபூசையையும் குறிப்பையும் கண்டு, 'இவர் வருவது எங்ஙனம்' என்று எண்ணி ஏங்கி, அவர்
கண்ணுக்குத் தெரியும்வண்ணம் சென்று அவரை வணங்கினான். 

    வணங்கலும், மார்க்கண்டேயமுனிவர் 'நீ யார்? சொல்' என்றார். காலன் அது கேட்டு, 'இயமனுக்கு 
அடிமை செய்கின்ற காலன் யான். இங்கு வந்த காரணம் யாதென்பீராயிற் சொல்வேன். உமக்குச் சிவபெருமான் 
அருளிச்செய்த பதினாறு வயசெல்லை நேற்றே சென்றது. இனி நீர் தென்புலத்திற்கு வருதல்வேண்டும். 
இது தடுக்குந் தன்மையதன்று. பிரமதேவருக்கும் அடுக்குந்தன்மையது, இது புதிதாகப் புகுந்ததன்று. 
படைத்தல் காத்தல்கள்போல, இயமன் அழித்தலும் சிவபெருமான் இட்ட பணியேயாம். ஆதலால், அவன் 
உம்மை அழைக்கின்றனன். அன்றியும் நீர் சிவபூசை செய்வதைப் பலரும் சொல்லக் கேட்டு, மனமகிழ்ந்து, 
உம்மைக் காண விரும்புகின்றான். அவன் அழித்தற்றொழில் உடையனாதலால், அவனைக் கொடியன் 
என்பர் அறிவிலார். 

    அவன் உயிர்களெல்லாவற்றிற்கும் முடிவிலே அவ்வவற்றின் செய்வினை குறித்து, முறைசெய்குவன். 
அதனால், அவனை நடுவன் என்றே உலகமெல்லாம் கூறும். நீர் மனசிலே யாதும் எண்ணாதொழிமின். 
நீர் இயமபுரத்துக்கு வருவீராயின், இயமன் உம்மை எதிர்கொண்டு வணங்கித் துதித்து, இன்சொற்சொல்லி, 
உமக்கு இந்திர பதத்தைத் தருவன். வாரும்' என்றான். மார்க்கண்டேய முனிவர் அது கேட்டலும், 'யாவருக்கும் 
இறைவராகிய சிவபெருமானை வழிபடும் அன்பர்கள் இந்திரலோகத்துக்கும் போகார்கள், உன்னோடு 
இயமலோகத்துக்கும் வாரார்கள். எவ்வுலகங்களுக்கும் மேலாகிய சிவலோகத்தை அடைந்து இனிது 
வாழ்ந்திருப்பார்கள். நானும் சிவபெருமானுடைய அடியார்க் கடியவன்.ஆதலால், உங்கள் யமலோகத்துக்கு 
வரேன். பிரம விட்டுணுக்களுடைய பதங்களையும் விரும்பேன். விரைந்து போய்விடு போய்விடு' என்றார். 
அது கேட்ட காலன் ‘நன்று', என்று சொல்லிக்கொண்டு போய், இயமனை வணங்கி, நிகழ்ந்தனவெல்லாம் சொன்னான்.

    அப்பொழுது இயமன் உளம் பதைபதைக்க, உடலமெங்கும் வெயர்க்க, கண்கள் கனல் பொழிய, 
புருவக்கடை நிமிரக் கோபங்கொண்டு, 'எருமைக்கடாவைக் கொண்டுவாருங்கள்' என்று பணித்தான். 
பணித்தலும், எருமைக்கடா வந்தது. வருதலும், இயமன் அதன்மேல் ஏறிக்கொண்டு, குடை நிழற்ற,
கொடி பிடிக்க, வீரர்கள் சூழ்ந்து துதிக்கச் சென்று, காசியை அடைந்து, மார்க்கண்டேய முனிவர் 
இருக்கும் இடத்தே போய், சிவந்த குஞ்சியும், கரிய சரீரமும், கோபத்தினால் அக்கினி சொலிக்கும் 
கண்களும், பிடித்த பாசமும், கையில் ஏந்திய தண்டமும், சூலமுமாய் எதிர்த்தான். 

    எதிர்த்தலும், மார்க்கண்டேயமுனிவர் 'இயமன் வந்து அணுகினான்' என்று சிந்தித்து, அவன் 
செய்கையை நோக்கி, எம்பெருமானுடைய திருவடிகளைத் துதித்து வணங்கினார். அப்பொழுது இயமன் 
'மைந்தனே, நீ யாதுநினைந்தாய்! யாது செய்தாய்! முன்னையூழின் முறைமையையும் சிவபெருமானது 
திருவாக்கையும் கடக்கலாமா? ஊழ்வலியைச் சிறிதும் ஆராய்ந்திலை. உறுதி ஒன்றும் அறிந்திலைபோலும், 
இறப்புப் பிறப்பென்பன யாவரும் பெறுகுவர். அது பேசல்வேண்டுமா! பெருந்தவத்தை உடையோர்க்கும் 
இயலாத இது இயலும் என்று துணிந்து இவ்வாறு இருத்தல் கற்றுணர்ந்த ஆடவருக்குத் தகுதியா! 

    நீ சிவபெருமானுடைய திருவடிகளிலே மிக்க அன்புடையை என்பது சத்தியம். ஆயினும், நீ நாடோறும் 
செய்யும் சிவபூசை உன்பாவத்தைப் போக்குவதன்றி, நான் வீசும் பாசத்தை விலக்கவும் வல்லதா! கடலினுள்ள 
மணலை எண்ணினும், ஆகாயத்துள்ள நக்ஷத்திரத்தை எண்ணினும்,என்னாணையால் இறந்த இந்திரர்களை 
எண்ணலாமா! இறந்தவர்களாகிய தேவர்களையும் அசுரர்களையும் சொல்லப் புகின், முடிவு பெறாது. 
அவ்வாறாக,மற்றையோரைச் சொல்லல் வேண்டுமா! பிறப்பிறப்புக்கள் பிரமனுக்கும் உண்டு, 
விட்டுணுவுக்கும் உண்டு, எனக்கும் உண்டு. இங்ஙனமாயின், உனக்கும் உண்டென்பது உரைத்தல் வேண்டுமா! 
நான் சிவபெருமானை முன்னே பூசைசெய்தமையால், அவர் எனக்கு அருளிச்செய்தவை இவ்வரசியலும், 
நான் ஏந்திய பாசமும் சூலமும் மழுவும் தண்டும். தேவர்கள் காப்பினும், படைத்தல் காத்தல் அழித்தல்கள் 
செய்யும் மும்மூர்த்திகள் காப்பினும், மற்றை வலியோர் யாவர் காப்பினும் காக்க. நான் உன்னுயிரை 
இன்று கொண்டன்றி மீள்வேனா! நீ துன்பங்கொள்ளாதே. சிவனடியாராயினும், முடிவு வந்தெய்தினால், 
அவரைத் தென்புலத்திற் சேர்த்துவேன். இது திண்ணம். இனி நீ என்பின் வருவாயாக' என்றான்

    மார்க்கண்டேயமுனிவர் அது கேட்டு, 'இயமனே, கேள். முடிவென்பது எம்பெருமானுடைய 
அடியார்களுக்கு இல்லை. உண்டாயினும், உன்னுலகத்துக்கு வாரார்கள், திருக்கைலாசமலைக்குப் 
போவார்கள். அவர்களுடைய தன்மையைச் சொல்வேன். கேள். அவர்கள் துறவிகளாயினும், 
இல்வாழ்க்கையர்களாயினும், முத்தியின்பத்தை அடைவர்கள். அவர்கள் பதி, பசு, பாசமென்னும் 
முப்பொருள்களின் இலக்கணத்தையும் அறிந்தவர்கள். அவர்கள் பிறவித்துன்பத்தினின்றும் நீங்கினவர்கள்.
அவர்களுடைய திருவடிகளைச் சேர்தலே பரபதஞ்சேர்தல். 

    அவர்கள் உன்னை மதியார்கள். தேவர்களை மதியார்கள், தேவேந்திரனை மதியார்கள், 
பிரமனை மதியார்கள். விட்டுணுவையும் மதியார்கள். சிவபெருமானுக்கும் அவருடைய திருவடியார்களுக்கும் 
வேற்றுமை கருதுதல் அறியாமையே என்று வேதங்களெல்லாம் சொல்லும் உண்மைப்பொருள் பொய்க்குமா, 
பொய்யாது. சிவனடியார்கள் செம்மையாகிய சிந்தையை உடையவர்கள், யாவரினும் சிறந்தவர்கள், 
பற்றற்றவர்கள், தம்மையும் துறந்து நின்றவர்கள், சீவன்முத்தராகி இம்மையினும் பேரின்பத்தை 
அனுபவிப்பவர்கள், இன்மையாவது யாண்டும் இல்லாதவர்கள், நன்மையென்பதே 'இயல்பாகப் 
பொருந்தினவர்கள். இவ்வியல்புடையவர்கள் சுவர்க்கமுதலிய புன்பொருள்களை விரும்புவார்களா, 
விரும்பார்கள். அவர்களுடைய தன்மையை யாவர் சொல்ல வல்லவர்! 

    அவர்களுடைய வன்மையை நீ சிறிதும் அறிந்திலை. உலகத்தாரைப் போல அவர்களையும் 
நினைந்தாய். அவர்களை அடைந்த என்னுயிருக்கும் தீங்கு நினைந்தாய். இவையெல்லாம் உன்னுயிரும் 
இத்தலைமையும் ஒழிதற்குக் காரணமன்றோ! தீயசொற்களை என்செவி கேட்கச் சொல்கின்றாய். 
மேல் நிகழ்வதனை அறிகின்றிலை. மூடனே மூடனே, நீ இங்கே நிற்கப் பெறுவாயோ! போ போ' என்றார்.

    மார்க்கண்டேய முனிவர் இவ்வாறு கூறக் கேட்ட இயமன் அக்கினி சொலிக்குங் கண்ணையுடையனாய், 
'என்னை நீ அச்சுறுத்துகின்றாய். வலியில்லாதவனே, நம்முயிரை இயமன் கைக்கொள்ள மாட்டான் 
என்று நினைந்தாய் போலும்' என்றான். இடியேறுபோல ஆர்த்தான். 'இவன் நேரே நின்றால் வாரான்' 
என்று நினைந்தான். நீலமலைபோல மார்க்கண்டேயர்முன் சென்றான். பாசத்தை வீசி ஈர்த்தான். 
அப்பொழுது மார்க்கண்டேய முனிவர் எம்பெருமானைத் துதித்துக்கொண்டு, அவருடைய நித்தியானந்த 
வடிவாகிய திருவடிநீழலைப் பிரியாது நின்றார். 'இனி இம்மைந்தன் இறந்தானன்றோ' என்று தேவர்களும் 
மயங்கினார்கள். 

    இயமன் கைப்பாசம் தங்கழுத்தின் உற்றும், இடர் சிறிதும் உறாத மார்க்கண்டேய முனிவர் முன்பு 
திரி புராந்தகராகிய முதற்கடவுள் 'மைந்தனே, உனது துன்பத்தைத் தீர்க்கின்றோம். நீ அஞ்சாதே அஞ்சாதே' 
என்று திருவாய் மலர்ந்துகொண்டு தோன்றியருளினார். 'மதத்தினால் மிக்க இவ்வியமன் நம்மைந்தனுடைய 
உயிரைக் கொள்ள நினைந்தான்' என்று திருவுளங்கொண்டு, கோபித்து, தமது இடப் பாதத்தினாலே அவனைச் 
சிறிதுதைத்தார். உதைத்தவுடனே இயமன் பூமியில் வீழ்ந்திறந்தான். அவன் பக்கத்து நின்ற சேனைகளும் 
அவன் வாகனமாகிய எருமைக்கடாவும் ஏங்கி வீழ்ந்திறந்தன.

    அந்தக் காலத்திலே 'எம்முயிரைக் காக்கச் சிவபெருமான் உண்டு. இயமன் வந்து யாது செய்வான்' 
என்று வடமொழியினாலே தோத்திரஞ் செய்துகொண்டு தனிநின்ற மார்க்கண்டேய முனிவரைக் 
காலகாலராகிய எம்பெருமான் கண்டு, திருவுள மகிழ்ந்து,'மைந்தனே,நீ நம்மை மெய்யன்போடு 
பூசை செய்தமையால், நாம் உனக்கு முடிவில்லாத ஆயுளைத் தந்தோம்' என்று திருவாய் மலர்ந்து, 
சிவலிங்கத்தின் மறைந்தருளினார். சிவ பெருமானுக்கு மார்க்கண்டேய முனிவரிடத்தும் 
இயமனிடத்தும் விருப்பும் வெறுப்பும் இல்லை. அறிஞர்கள்,ஆராயுங்கால், எம்பெருமான் செய்தவை 
முறையேயாம் என்று துணிவர்கள். 

    அங்கு நின்ற மார்க்கண்டேய முனிவர் எம்பெருமானுடைய திருவுருவத்தை அன்பினோடு 
தியானித்துக்கொண்டு, மணிகன்னிகை என்னும் திருக்கோயிலினுள்ளே சென்று, எம்பெருமானை 
வணங்கிக்கொண்டு போய், தம்மைக்குறித்துக் கண்ணீர் பெருகப் புலம்பி நையும் தந்தைதாயர்களைப் 
பணிந்து, அவர்களுடைய துயரமுழுதையும் மாற்றினார். அத்திருநகரத்திலே சிலநாள் இருந்து, 
பின்பு அங்குநின்று நீங்கி,சிவதலங்கள் யாவையும் பத்தியோடு வணங்கித் துதித்து, சீவன் முத்தராயினார். 
அவர் விண்ணுலகத்தினும் உளர், மண்ணுலகத்தினும் உளர், தம்மை விரும்பித் துதிப்போர்கள் 
கண்ணினும் உளர், கருத்தினும் உளர். அவர் செயல் நினைக்கற்பாலதுமன்று, சொல்லற்பாலதுமன்று, 
அவர் கண்ட பிரம கற்பங்களும் விட்டுணு கற்பங்களும் கணக்கில்லாதன.

    மார்க்கண்டேய முனிவருக்குத் துன்பஞ்செய்த இயமன் இறந்தமையால், பூமியின்கண் உள்ள 
உயிர்களெல்லாம் நெடுங்காலம் இறப்பின்றி வளர்ந்து பெருகின. ஆதலால், பூமிதேவி பாரம் பொறுக்க லாற்றாது, 
விட்டுணுவை வணங்கித் தன்றுன்பத்தை விண்ணப்பஞ் செய்தாள். விட்டுணுவும் பிரமதேவரும் இந்திரன் 
முதலிய தேவர்கள் யாவரோடும் திருக்கைலாச மலையை அடைந்து, சிவபெருமானை அன்போடு வணங்கித் 
துதித்தார்கள். துதித்தலும், கைலாசபதி விட்டுணுவை நோக்கி, 'நீங்கள் வந்ததென்னை' என்று திருவாய் 
மலர்ந்தருளினார். அதற்கு விட்டுணு 'எம்பெருமானே இங்குள்ள பிரமன் முதலிய தேவர்களெல்லாரும் நீர் 
விதித்தவாறே தங்கள் தங்கள் அரசியலை இதுகாறும் வழுவாது நடாத்தினார்கள். 

    எனக்கு நீர் விதித்தருளிய காவற்றொழிலை உமது திருவருளே துணையாக நாடோறும் வழுவாது 
செய்கின்றேன். இதற்கு ஓர் குறை எய்தியது. அதனை விண்ணப்பஞ்செய்வேன், கேட்டருளும். உமது திருவருளை 
நினையாமையினால் இயமன் இறந்துபோயினான். அதனாலே பூமியினுள்ள உயிர்கள் வளர்ந்து பெருகின. 
அவற்றைச் சுமக்கும் பூமிதேவி துன்புறுகின்றாள். அவள் துன்புற, உயிர்களெல்லாம் பிறந்து பிறந்து பின் 
இறவாமலே பெருகுமாயின் என்காவற்றொழில் என்படும்! என்படும்! அழித்தற்றொழிலுக்குத் தலைவர்
 ஒருவரும் இல்லை. நீர் கோபியாது இயமன் செய்த தீமையைப் பொறுத்து அவனை உயிர்ப்பித்தருளும். 
இதனை மறுக்காதொழியும்' என்று திருவடிகளை வணங்கி வேண்டினார். 

    அப்பொழுது சிவபெருமான் 'இயமனே எழும்பக்கடவாய்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 
அருளலும், இயமன் உயிர்பெற்று வந்து, கைலாசபதியை வணங்கி, 'எம்பெருமானே, உம்முடைய திருவடி 
படுதலினால் அடியேன் உய்ந்தேன்' என்று விண்ணப்பஞ் செய்தான். சிவபெருமான் இயமனை நோக்கி,
 'நம்முடைய சின்னங்களாகிய விபூதி ருத்திராக்ஷங்களைத் தரித்துக்கொண்டு நம்மைத் தியானிக்கும் 
அன்பர்களிடத்தே 'நான் இயமன்' என்று சொல்லி நீ போகாதே. நம்மடியார்களை மனிதர்களென்று 
எண்ணாது, நாமென்றே எண்ணக்கடவாய். அவர்களைக் கண்டால், அவர்கள் கால்களின் வீழ்ந்து 
வணங்கக்கடவாய்.  மனமொழிமெய்களாலே புண்ணிய பாவங்களைச் செய்யும் மற்றையோர்களைச் 
சுவர்க்கநரகத்தில் இருத்தக்கடவாய், என்று திருவாய்மலர்ந்து, 'உன் படையோடு போவாயாக' என்று 
பணித்தருளினார். 

    இயமன் சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, முன் இறந்த எருமைக்கடாவோடும் 
சேனைகளோடும் தென்புலத்தை அடைந்து, தன்னரசியலை நடாத்துவானாயினான். விட்டுணு முதலிய 
தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானை மும்முறை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
திருக்கைலாச மலையை நீங்கித் தங்கள் தங்கள் பதங்களை அடைந்தார்கள். இயமன் 'முன் போல் இன்னமும் 
யாது விளையுமோ' என்று மார்க்கண்டேய முனிவருடைய சரித்திரத்தை ஓதுவோர் முன்னும் செல்லுதற்கு அஞ்சுவன்.

    தவவலியினாலே, குச்சகமுனிவர் ஒரு பெண்ணுக்கு உயிர்கொடுத்தார், ஒரு யானையைத் தேவனாக்கிச் 
சுவர்க்க பதத்திருத்தினார், அவர் புதல்வராகிய மிருககண்டூய முனிவர் பிரமவிட்டுணு முதலியோர் புகழும் 
முதன்மையைப் பெற்றார், அவர் புதல்வராகிய மிருகண்டு முனிவர் ஒப்பில்லாத ஒரு சற்புத்திரரைப் பெற்றார், 
அவர் புதல்வராகிய மார்க்கண்டேய முனிவர் விதியைக் கடந்து இயமனது வலியை அகற்றி, ஓர்காலும் 
இறப்பில்லாதவராயினார். இது சத்தியமென்றறியக்கடவீர்கள். இன்னும் தவத்தின் பெருமையைச் சொல்வேன்" 
என்று காசிபமுனிவர் சொன்னார்.

            திருச்சிற்றம்பலம்.

            மாயையுபதேசப்படலம்.

    காசிப முனிவர் இவ்வாறு சொல்லலும், மாயை நகைத்துக் காசிப முனிவரை நோக்கி, "முனிவரரே, நீர் 
உண்மையாகிய உறுதியையே சொன்னீர். ஆயினும், முத்திவிருப்புடைய முனிவர்களுக்கன்றி நாம் பெற்ற 
சிறுவர்களுக்கு இவ்வாறு சொல்லலாமா! இவர்கள் பெருஞ்செல்வத்தையும், வெற்றியையும், இன்பத்தையும், 
அழிவில்லாத ஆயுளையும், பெரும்புகழையும், குற்றமற்ற வாழ்க்கையையும் அடைதல்வேண்டும். 
அவையெல்லாம் விரைவின் அடைதற்பொருட்டு இவர்களுக்கு உபாயம் சொல்லும்" என்றாள். அது கேட்ட 
காசிபமுனிவர் "இதுவா உனதெண்ணம்! நீயே அதனை இவர்களுக்குச் சொல்லக்கடவாய்" என்றார். 
மாயை தன்புதல்வர்களை நோக்கி, "இம்முனிவரர் சொல்லியது, உண்மையேயாயினும், உங்களுக்கு 
ஆவதன்று. நான் சொல்வேன்,கேளுங்கள்" என்று சொல்லலுற்றாள்:

    "அறிவினையுடைய உயிர்களுக்கெல்லாம் பிறவியால் ஆகும் பயன் கல்விப்பொருள் 
செல்வப்பொருள் என இரண்டாம். உயிரானது இவ்விரண்டனுள் ஒன்றை அடையாதாயின், அவ்வுயிரிலும் 
பேய்ப் பிறப்பே மிகப் பெருமையுடையது. இவ்விருபொருளின் வன்மையையும் அறிஞர்கள் ஆராய்வராயின், 
கல்விப்பொருளினும் செல்வப்பொருளே சிறந்ததெனத் துணிவர். கலைகளெல்லாவற்றையும் நெடுங்காலம் 
விடாது கற்றவராயினும், வறியராயின், செல்வத்தை வேண்டித் தம்பகைவரையும் பணிந்து நிற்பர். அளப்பில்லாத 
கல்வியையும் பலவகை வளங்களையுங் கொள்ளுதற்கும், அவற்றைக் குறையாது வளர்த்தற்கும், அணிசெய்தற்கும், 
கருவியாதலால், செல்வப்பொருளே மேலாயது. 

    கல்வியறிவின் மிகச்சிறந்தவரும் செல்வமுடையரல்லாக்கால், உலகம் அவரைக் குற்றத்துட்படுத்தும். 
கல்வியையே யன்றி மேன்மையையும், தருமத்தையும், புகழையும், வெற்றியையும், பிறவற்றையும், ஆக்கலால், 
செல்வத்திற் சிறந்தது பிறிதொன்றுமில்லை. ஒருவர் செல்வத்தைப் பெற விரும்புவராயின், ஊக்கம் உடையராகுக.
அஃதுடை யராகச் செல்வம் உண்டாகும். அவ்வூக்கத்திலே இடையறாது நிலைபெறுவராயின், பெருஞ்செல்வம் 
விரைந்தெய்தும். அச்செல்வம் பலவகைப்படும். அவையனைத்தையும் ஒருவரும் பெற்றிலர். நீங்கள் அவையனைத்தையும்
பெற முயலுங்கள். இதுவன்றி உங்களுக்கு உறுதி பிறிதில்லை. நீங்கள் எங்களிடத்து நேற்றிரவு பிறந்தமையால், 
நிருதகதியின ராயினீர்கள். 

    உங்களுக்குப் பகைவர்கள் தேவர்கள் யாவரும். அவர்கள் தங்கள் முயற்சியினாற் றானே தலைமை 
பெற்றவர்கள். நீங்கள் அவர்களினும் தலைமை பெறுவீர்கள் போலும். ஆக்கம் அடையும்பொருட்டு நீங்கள் 
மூவிரும் முயலுங்கள், முயலுமுறைமையை நான் எடுத்துச் சொல்வேன். இத்திசை ஆலந்தீவெனப் பெயர்பெறும். 
இவ்விடத்துக்கு நேரே போன உத்தரபூமி அசுரர்கள் தவஞ்செய்தற்கு ஏற்றது. நீங்கள் இப்பரிசனங்களோடு 
அப்பூமியிற்சென்று, வேள்வியின்பொருட்டுக் குண்டமுதலியன செய்து, நச்சுச்சமித்திட்டு, அக்கினி சொலிப்பித்து 
ஓமத்திரவியங்களையும், இரத்தங்களையும் மாமிசங்களையும், பிறவற்றையும் தூவி, தேவதேவராகிய 
சிவபெருமானைத் துதித்து, வேள்வியைப் பற்பகல் செய்யுங்கள். செய்வீர்களாயின், எம்பெருமான் அருளோடு 
வெளிப்பட்டு, நீங்கள் விரும்பிய அனைத்தையும் தந்தருளுவர். நீங்கள் மூவிரும் இவ்வேள்வியை முயறற்பொருட்டு 
அங்குச் சென்றவுடனே, அதற்கு அவ்விடத்து வேண்டும் பொருள்களனைத்தையும் வேறுவேறாக நான் தருவேன். 
போங்கள்' என்று சொல்லி, அவ்வேள்வி செய்யும் விதியையும், அதற்கு வேண்டும் மந்திரங்களையும், சூரன் 
முதலிய மூவருக்கும் உபதேசித்தாள். அப்பொழுது சூரன் தன்றம்பியர்களோடும் தாய்தந்தையர்களை 
வணங்கி விடைபெற்றுக்கொண்டு, புறப்பட்டான்

            திருச்சிற்றம்பலம்.


            மாயை நீங்குபடலம்.

    சூரன் முதலிய புதல்வர்கள் சென்றபொழுது, மாயை தன்பக்கத்திருந்த காசிபமுனிவரை நோக்கி, 
"இனி நான் புதல்வர்களைப் பேணும்பொருட்டுப் போகின்றேன். நீர் கவலாதிரும்'' என்று நிறுவிப் போயினாள்.
 போதலும், காசிபமுனிவர் அவண்மேல் வைத்த ஆசை செலுத்த அவள் பின்னே போய், நீ என்னை விட்டுப் 
போதல் நீதியோ" என்றார். அது கேட்ட மாயை ''முனிவரரே, வருந்தாதொழியும். நான் இங்கு வந்தது புத்திரர் 
பொருட்டன்றி, உம்மோடிருத்தற் பொருட்டன்று. நான் மாயை,அறிந்துகொள்ளும்" என்று மறைந்து போயினாள். 
உடனே அற்புதத்தின் அங்கு வந்த பொருள்களெல்லாம் மறைந்துபோயின. காசிப முனிவர் மாயையைக் 
காணாமையால், கவலைகொண்டு மதிமயங்கிப் பொருமி ஏங்கி நின்றார்.

    பிரமதேவர் தம்புதல்வராகிய காசிபமுனிவருடைய துயரத்தை அறிந்து, அங்கு வந்தார். வருதலும், 
காசிபமுனிவர் பிரமதேவரை வணங்கினார். பிரமதேவர் ஆசிகள் கூறி, "காசிபனே, நீ உன்னருந்தவத்தை 
விடுத்து மெலிவதென்னை? சொல்'' என்றார். காசிபமுனிவர் நிகழ்ந்தனவெல்லாம் விண்ணப்பஞ்செய்தார். 
பிரமதேவர் அது கேட்டு மனங்கூசி, தம்புதல்வரை நோக்கி, 'வேதமுதலிய கலைகளை ஓதியுணர்ந்த முனிவனே,
அறிவில்லாதார்போல நீ ஒரு பெண்பொருட்டு மையல்கொண்டு வருந்துகின்றாயோ! கள்ளெனவும் 
காமமெனவும் தீப்பொருள் இரண்டுண்டு. அவற்றுள், கள்ளு உண்டவழி அறிவைக் கெடுக்கும்; காமம் 
நினைந்தவழி உயிரையுங் கொல்லும். காமாக்கினி நினைப்பினும் சுடும், கேட்பினும் சுடும், அணைந்து 
தள்ளினும் சுடும். ஆதலால் அது கள்ளினுங் கொடியது. 

    பிறப்புக்களையும் வினைகளையும் விளைப்பது காமமேயாதலால், மெய்யுணர்வினாலே 
அக்காமநோயை ஒழித்தவரன்றோ முத்தியின்பத்தை அடைந்தவர். அறிஞர்கள் காமத்தை நெஞ்சினும் 
நினைப்பர்களா! நினைந்தவர்களை இம்மையிலே துன்பத்தழுத்தி,மேலே பெரும்பவக்கடலின் வீழ்த்தும். 
அதனால் காமம் நஞ்சினுந் தீயது. ஆதலால், காமமுற்று வருந்தாதே. நீ புணர்ந்த பெண்ணும் வஞ்சகத்தையுடைய 
மாயை. நீ தீமை செய்தாய். அது தீரும்பொருட்டு முன்போலத் தவஞ்செய்யக்கடவாய்'' என்று அவருள்ளத்தைத் 
தேற்றி, அவரை அங்கு நிறுவிப் போயினார். காசிபமுனிவர் தமது தந்தையாருடைய வாய்மையினாலே தேறி, 
மையனோய் நீங்கி, வினையினின்று நீங்கும்பொருட்டுச் சிவபெருமானைச் சிந்தித்துத் தவஞ்செய்வாராயினார். 
அங்கு நின்று நீங்கிய மாயை தன் புதல்வர்கள் யாகஞ்செய்யும்பொழுது வேண்டியவற்றைக் கொடுக்கும் 
பொருட்டுச் சுக்கிரனுடைய ஏவலினாலே சிவபெருமானைத் துதித்துப் பெருந்தவஞ்செய்தாள்.

            திருச்சிற்றம்பலம்.

            அசுரர்யாகப்படலம். 

    தன்மாதாவாகிய மாயையினுடைய ஏவலினாலே யாகஞ்செய்யக் கருதிப் புறப்பட்ட சூரன் 
தன்றம்பியர்களை நோக்கி, "நாம் யாகஞ்செய்யும் பொருட்டு வடதிசைக்குச் செல்லும்பொழுது, நீங்களிருவிரும் 
நமது சேனையின் கடையினும் தலையினும் காவலாய்ச் செல்லுங்கள்'' என்று பணித்தான். பணித்தலும், சூரனை 
வணங்கி, தாரகாசுரன் "அடியேன் சேனைக்கடையிலே செல்வேன்'" என்றான்; சிங்கமுகாசுரன் "அடியேன் 
சேனைத்தலையிலே செல்வேன்" என்றான். தம்பியரிருவரும் இவ்வாறு கூறித் தமையனிடத்து விடைபெற்றுக் கொண்டு, 
தாங்கூறியவாறே போயினார்கள். அவர்கள் பணியினாலே சேனைவெள்ளம் பதினாயிரம் யோசனை யெல்லை 
ஆகாயத்தினும் பூமியினும் கலந்து, வடதிசைநோக்கி ஆர்த்துச் சென்றது. செல்லலும், பூமிதேவி ஆற்றாது வருந்தினள், 
ஆதிசேடன் நாகர்களோடும் அயர்ந்தனன். திக்கியானைகளும் குலமலைகளும் மேருமலையும் சலித்தன, 
ஆதிகூர்மமும் வருந்தியது, இந்திரன் முதலிய திக்குப்பாலகர்கள் எண்மரும் அஞ்சி நடுநடுங்கினார்கள். 
அசுரசேனை வெள்ளத்தின் முன்னணியிலே சிங்கமுகாசுரனும், பின்னணியிலே தாரகாசுரனும் செல்ல 
நடுவே சூரன் சென்றான். 

    அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன் அவர்களைக் காண நினைந்து, விமானமேற்கொண்டு 
வந்தணுகி, அவர்களுடைய விரைவையும், வலியையும், ஊக்கத்தையும் கண்டு, நடுங்கினார். நடுங்கி, 
"இவ்வசுரர்களுடைய கடுந்திறலைக் கண்டேன். முன்னே அசுரர்கள் அளப்பில்லாதவர்களைப் பார்த்தேன். 
இது சிவபெருமானுடைய திருவருளின் வண்ணமோ! இவர்களுக்கு நிகராவார் ஒருவர் உண்டோ!  
தங்களை எதிர்ந்த பகைவர்களுடைய ஊனையும் உயிரையும் ஒருங்குண்ணும் இவ்வசுரர்களுக்கு 
இந்திரனோடும் விட்டுணுவோடும் ஏனையரோடும் பொருது வெல்லல் ஒருபொருளாமோ! 

    இவர்களுடைய வன்மைக்கு இறுதி இல்லையாயினும், முன்னோர்களைப்போலத் தவவலியும் 
வரமும் படைக்கலங்களும் பெற்றிலர்கள். ஐயோ இவர்களுக்கும் குறையுளதாயிற்றே! இயமனைக் கடந்த 
தனியாற்றல் கொண்டுற்ற சிவபெருமானொருவருக்கே குறை கண்டிலம். மற்றைத் தேவருக்கும் யாவருக்கும் 
ஒவ்வோர் குறை உண்டு. அது யாவரும் அறிகுவர். இவ்வசுரர்களிடத்துள்ள குறை, சிலநாட் டவஞ் செய்வாராயின், 
ஒழிந்துவிடும். இது திண்ணம். தவத்தால் இழிந்தோரும் உயருவர். விசுவாமித்திரரே இதற்குச் சான்று" என்று 
இவ்வாறு பலவுங்கூறி நின்று, தாம் சூரபன்மன் முன் செல்லவும் முகமன் கூறவும் நினைந்தார். 

    நினைந்து, சூரபன்மன் முன் செல்லலருமையை நோக்கி உயிர்களை வசிகரிக்கும் ஓர்மந்திரத்தை 
விதிமுறையே சிந்தித்துக்கொண்டு, எதிர் சென்று, சேனைக் கடலினடுவே புகுந்தார். அவருடைய மாயமாகிய 
அக்கினியினாலே அசுரர்கள் தங்கள் வன்னெஞ்சமாகிய இரும்பு உருகப்பெற்று, அவரைக் கை தொழுதார்கள். 
சுக்கிரன் சூரன்முன் போய், " சூரபன்மனே ! நீ இந்திரன் முதலியோர் யாவருக்கும் மேலாகக்கடவாய். 
அசுரர்களுடைய துயரநோய்க்கு ஏலாதிகடுகமென்னும் மருந்து போலாகக்கடவாய்' என்று ஆசி சொன்னார்.

    அது கேட்ட சூரன் இந்திரலோகத்துள்ளீரோ! அதனின் மேலாய உலகங்களினுள்ளீரோ? 
பூலோகத்துள்ளீரோ? நாகலோகத்துள்ளீரோ? நீர் யார்? இங்கு வந்ததென்னை? உம்மிடத்தே என்மனம் உருகுகின்றது. 
அஃதன்றி என்புகளும் உருகுகின்றன. என்னை அறியாது அன்பு உதிக்கின்றது. அருந்தவஞ் செய்யும்பொருட்டு 
வனத்திற்குப் போதற்குக் கால்களும் எழுகின்றில. நீர் நன்னேயத்தோடு வந்தீர். உயிர்களெல்லாவற்றையும் 
அன்னைபோலக் காத்தருளும் இயல்புடையீர் போலும். இவ்வியல்புடைய உம்மை இப்பொழுது நான் எதிர்ந்தது 
முற்பிறப்பிலே வருந்திச் செய்த தவவலியானன்றோ " என்றான். 

    சுக்கிரன் அது கேட்டு "நான் ஆகாய நெறியிற்செல்வேன். உன்குலத்துக்கெல்லாங் குருவானேன் .
என்பெயர் சுக்கிரன். நான் உனக்கு ஒருறுதி சொல்லும்பொருட்டு வந்தேன்'' என்றார். சூரன் அது கேட்டு, 
மிக்க உவகையை யுடையனாகி,  "சுவாமீ, நான்  உய்ந்தேன்" என்று சொல்லி, சுக்கிரனை அணுகி நின்று 
கைதொழுது துதித்தான். துதித்தலும், சுக்கிரன் சூரனை நோக்கி,  அரசனே,  நீ தவஞ்செய்யும் பொழுது 
பகைவர்கள் ஊறு செய்வர்கள். அது உன்னை அணுகாவண்ணம் ஒருபாயம் சொல்வோம்" என்று சொல்லி, 
சிவ பெருமானுடைய மந்திரமொன்றை அவனுக்கு விதிப்படி உபதேசித்தார். 

    உபதேசித்து, "நீ நாடோறும் இம்மந்திரத்தைச் செபித்துக்கொண்டு, கொலை களவு காமம் பொய் 
முதலிய தீமைகள் சாராவண்ணம் ஐம்பொறிகளை அடக்கித் தவத்தைச் செய்யக்கடவாய்" என்று செவியறிவுறுத்தார். 
அப்பொழுது சூரன் சுக்கிரனுடைய பாதங்களை வணங்கி, "சுவாமீ, அடியேன் இப்பணியைச் செய்வேன்" என்றான். 
சுக்கிரன் அளப்பில்லாத ஆசிகளைக் கூறி, மீண்டு போயினார்.

    சூரபன்பன் அசுரர்கள் சூழ வடபுலத்தில் விரைந்து சென்று, அங்குள்ள ஆலவனத்தில் ஓர்பக்கத்தை 
அடைந்தான். அங்கே யாகஞ்செய்தற் பொருட்டுப் பதினாயிரம் யோசனைப் பரப்பை உள்வைத்து, அதனைச் 
சூழ அசுரர்களைக்கொண்டு மலைகளினாலே மதில்செய்வித்து, அதனைச் சூழ அளப்பில்லாத சேனைகளை 
அரணமாக நிறுவி,நான்கு திக்கினும் வாயில் செய்வித்தான். அவ்வாயில்கடோறும் காவல்செய்யும்பொருட்டு 
வீரமடந்தையை மந்திரத்தினாற் கூவி நிறுவினான். மதிலைச் சுற்றிக் காவல்செய்தற்பொருட்டுப் பூதங்களையும் 
பிசாசுகளையும் காளிகளையும் மந்திரத்தாற் கூவி நிறுவினான். பின் வைரவர் குழாத்தை மந்திரத்தாற் கூவி 
வணங்கி, யாகத்தைக் காக்கும்பொருட்டு வைத்தான். 

    மதிலினுள்ளே நடுவே ஆயிரம்யோசனை அகலமும் ஆயிரம்யோசனை ஆழமுமுடைய  ஒரோம குண்டமும் ,
அதனைச் சூழ நூற்றெட்டு ஓமகுண்டமும், அவற்றைச் சூழ ஆயிரத்தெட்டு ஓமகுண்டமும் செய்வித்தான். இவ்வாறு 
செய்வித்தபின்பு, யாகத்துக்கு உரிய உபகரணங்களை வேண்டி மாயையை நினைந்தான். நினைதலும், சிவபிரானது 
திருவருளினாலே மாயையானவள் சிங்கம் புலி யாளி கரடி யானை குதிரை ஆட்டுக்கடா முதலிய 
மிருகங்களின் மாமிசம், இரத்தம், எண்ணெய், நெய், பால், தயிர், மது ,கடுகு மிளகு முதலிய வெய்ய திரவியங்கள், 
நெய்யன்னம், யாகப்பசுக்கள், செந்நெலரிசி, அரிசனங்கலந்த அரிசி, மலர், கஸ்தூரி முதலிய சுகந்தம், 
சுருக்குச்சுருவம், தருப்பை, நெற்பொரி, முதிரைவர்க்கம், நச்சுச்சமித்து, கொள்கலங்கள் முதலியவற்றையும், 
ஒரு வச்சிர கம்பத்தையும் வருவித்து, மூவாயிரம் யோசனைப்பரப்பை அவற்றால் நிறைத்து, மீண்டனள்.

    அது கண்ட சூரபன்மன் யாகஞ்செய்யத் தொடங்கி, நடுவேதியின் மத்தியிலே வச்சிரகம்பத்தை 
நிறுவினான். மதிலின் நாற்றிசை வாயிறோறும் போய், வீரமடந்தையைச் சிந்தித்துப் பூசித்து, மாமிசபலி 
கொடுத்தான். மதினடுவினுள்ள பூதங்களுக்கும் பிசாசுகளுக்கும் பலிகொடுத்தான். ஆயிரத்தெட்டுக் 
குண்டங்கடோறும் நச்சு விறகிட்டு அக்கினி மூட்டி, தன்றம்பியர்களோடும் சிவபிரானது திருநாமத்தை 
உச்சரித்து, அவி கொடுத்தான். பின்பு தாரகனை நோக்கி, "நீ சிறிதும் தாழ்க்காது இவ்வேதிதோறும் 
சென்று சென்று, வேள்வியை உலவாது செய்யக்கடவாய்" என்று பணித்து, அவனை நிறுவி, அப்பாற்சென்றான். 

    சென்று நூற்றெட்டு வேதிகளை அடைந்து, முன்னையவற்றிற்போல அவற்றினும் வேள்வி செய்து, 
சிங்கமுகனை நோக்கி, "நீ இங்கு நின்று இவ்வேள்வியைச் செய்யக்கடவாய்'' என்று பணித்து, அவனை நிறுவி, 
அப்பாற் சென்றான். சென்று, நடுவேதியை அடைந்து, சிவபெருமானைத் தியானித்து, விதிப்படி பூசித்து, 
தன்யாகத்தைச் செய்வானாயினான். நச்சு விறகுத் துண்டங்களை ஓமகுண்டத்துள் இட்டு, நச்சுமரத்தினாகிய     
தீக்கடை கோலால் ஆக்கிய அக்கினியை இட்டுச் சொலிப்பித்து, அவ்வக்கினியிலே நெய்யை மந்திரத்தோடு     
சொரிந்தான். அதன்பின் மாமிசத்துண்டங்களையும் உதிரத்தையும் இட்டான். அன்னத்தை இட்டான். 
நெய்யையும், எண்ணெயையும், இரத்தத்தையும்,பாலையும், தயிரையும் விடுத்தான். நெற்பொரியை இட்டான். 
ஈற்றிலே தேனையும் கள்ளையும் சிந்தினான். தோரைநெல், மலைநெல், குளநெல், தினை, இறுங்கு, எள், 
முதிரைவர்க்கம் முதலியவற்றை உய்த்தான். நெய்யைச் சிந்தினான். கடுகு மிளகு முதலிய வெய்ய பொருள்கள் 
பலவற்றையும் இட்டான். நெய்யைச் சொரிந்தான். இவ்வாறே சிவபிரானைச் சிந்தித்துக்கொண்டு சூரபன்மன் 
வீரயாகஞ்செய்தலும், ஓமாக்கினி மிகச்சொலித்தெழுந்து, திசைகளையும் மேலுலகங்களையும் சுட்டது.

    சூரபன்மன் வீரயாகஞ்செய்தலைப் பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் 
கேள்வியுற்று, அஞ்சி நடுநடுங்கிப் பெருந் துயர்க்கடலின் அமிழ்ந்தினார்கள். இவ்வாறே சூரன் தன்னிளைஞர்களோடும் 
பதினாயிரம்வருடம் யாகஞ்செய்தான். செய்தும், சிவபெருமான் எழுந்தருளிவந்திலர். அதனாலே சூரன் "எம்பெருமான் 
இச்செயலுக்கு எழுந்தருளிவருவரோ'' என்று சொல்லி, அத்தொழிலைத் தன்றம்பியர்களிடத்தே பணித்து, தான் 
ஆகாயத்திற்சென்று, அங்கு நின்றுகொண்டு, வாளினாலே தன்சரீரத்துள்ள தசைகளனைத்தையும் அரிந்தரிந்து, 
ஓமாக்கினியிலே சிந்தி, இரத்தத்தை நெய்போலச் சொரிந்தான். தன்சரீரத்துள்ள தசைகள், அரியவரிய, முன்போல 
வளர்ந்தன. வளர்தலும், அது கண்டு விம்மிதங்கொண்டு, யாவரும் அஞ்சும்படி உரப்பிப் பெருமகிழ்ச்சியுடையனாய், 
"இச்செயல் எம்பெருமான் அன்புசெய்யுந் தன்மையதோ" என்றெண்ணிப் பின்னும் ஆயிரம் வருஷம் ஆகாயத்தில் 
நின்று தன்சரீரத்தினுள்ள தசைகளையரிந்து ஓமாக்கினியிற் சிந்தி யாகஞ்செய்தான். 

    செய்தும் சிவபெருமான் எழுந்தருளி வந்திலர். சூரபன்மன் அதனால் மனம் வருந்தி "இனி நான் 
மாண்டுபோவதே தகுதி' என்று உறுதிசெய்து, அக்கினியினாலே சூழப்பட்டதாய் அதனால் எரியாமல் 
ஆதிகுண்டத்திற் பொருந்திய வச்சிரகம்பத்தின்மேலே குதித்து, விரைந்து அதனுச்சியினின்றும் 
உருவி அடியிற் சென்று, எரிந்து சாம்பராயினான்.

    இதனைக்கண்ட சிங்கமுகன் மனம் பதைத்து, இரத்தக்கண்ணீர் விட்டழுது, வேள்வித்தொழிலை மறந்து, 
தன்னுயிர் உண்டோ வில்லையோ வென்று சொல்லும்படி யொடுங்கத் துயர்க்கடலுளாழ்ந்து, அறிவழிந்து
 மலைபோல விழுந்து, பின் ஒருவாறு அறிவுண்டாகப் பெற்றுப் பதைபதைத்துச் சுழன்று பெருமூச்செறிந்து, 
வாய்திறந்து புலம்புவானாயினான்.

    "மாயையினுடைய புத்திரனே, காசிப முனிவருடைய அன்புள்ள குமாரனே, அசுரகுலத்துக் கிறைவனே, 
யான் உன்னை உடம்போடு காணேன்! எங்கே யொளித்தாய்! தீய யாகத்தைப் பலநாட்செய்து பெற்ற பேறிதுவோ?
 தாயும் நீ; தந்தையும் நீ; அசுரர்களைக் காப்பாற்றும் அரசனும் நீ; எங்கள் உயிரும் நீ; என்று எண்ணியிருந்தோம். 
நீ அதனை நினையாதிறந்தாயே! மாய்கின்ற சிறியோர்க்கு இங்கே யாதாயினும் பற்றுண்டோ! வீரனே, 
அசுரர்களுக்குள் மேலானவனே, மிக்க புகழையுடைய சூரனே, உன்னைப் போல இந்த வேள்வியை அநேகநாட் 
செய்தவர் யாவர்! அன்பில்லாமல் எங்களை அகன்று போயினையே! முப்புரங்களையும் எரித்த வன்கண்ணராகிய 
பரமசிவன் உன்னிடத்து அன்பில்லாமையை யறியாது அவரைக் குறித்தோ யாகஞ் செய்தாய்! அவர் அதற்காகவோ 
உன்னுயிரையும் கவர்ந்தார்! உன்னைப்போல உயிரைவிட்டு உயர்வாகிய யாகத்தைச் செய்தவரும், 
பரமசிவனைப்போல அதற்கு அருள்செய்யாத பெரியோரும், இவைகளைக் கண்டு என்னைப்போல 
உயிரோடிருந்தவர்களும் இல்லை! 

    இம்மூவருள் வன்கண்ணர் ஆர் ஐயா! 'இவர்கள் யாகத்தைச் செய்து சிவபெருமானுடைய திருவருளினால் 
வலிமையைப் பெற்று நமது உயிரையும் செல்வங்களையும் நீக்குவார்கள்' என்று நமக்குப் பயந்திருந்த இந்திரனும் 
மனக்கவலை தீர்ந்தது இன்றைக்குத் தானோ! எல்லாரும் போற்றும்படி யாகத்தைச் செய்து பல்லாயிரநாட் பழகி 
நமக்கும் இதனைச் சொல்லாமலிறந்தாய், இவர் துணைவராய் நம்மோடு கூட வரமாட்டாரென்றெண்ணினையோ! 
எல்லாருங் காண வச்சிரகம்பத்தில் விழுந்துருவி அக்கினியில் எரிந்திறந்தாய். மிக்க வன்கண்மை பூண்டாய். 
உன்னுடம்பையுமொளித்தாய். புலம்பும் யாங்கள் இறந்தாயினும் உன்முகத்தைக் காண்போமோ" என்று இவை 
போல்வனவற்றைச் சொல்லித் தாய்ப்பசுவைக் காணாத கன்றைப்போலச் சிங்கமுகன் வீழ்ந்தழுதான். 

    அதனைக் கண்ட தாரகனும் கைகளையுதறி அரற்றி வீழ்ந்து, பெரு மூச்சுவிட்டு வேள்விக்களமுற்றும் 
புரண்டு, துதிக்கையால் நிலத்தைப் புடைத்துத், துயர்க்கடலுளாழ்ந்து புலம்பினான். இப்படிச் சிங்கமுகாசுரனுந் 
தாரகாசுரனுந் தங்கள் தமையன் இறந்ததுகண்டு புலம்ப, அதுகண்ட அவுணர்களும் கடல்போலப் புலம்பினார்கள்.

    இப்படி இவர்கள் எல்லாரும் புலம்புமொலியை இந்திரன் கேட்டு, சூரபன்மன் யாகாக்கினியில் 
வீழ்ந்திறந்தமையை ஒற்றுவராலறிந்து, துன்ப மெல்லாம் நீங்கி மிகுந்த மகிழ்ச்சியையுடையனாய், தேவர்கள் 
சூழ ஐராவத யானையில் ஏறி அவுணர்களுடைய துன்பத்தைக் காணும்படி ஆகாயத்தில் வந்து, நகைத்து, தன்னுடைய 
தவத்தை எண்ணி, இரங்குகின்ற அசுரர்களைக் கண்ணாரக்கண்டு களிப்புற்று நின்றான். அவுணர்களோடு மிகுந்த 
துயர்க்கடலுள் ஆழுகின்ற சிங்கமுகன் "என்னுயிர்போன்ற தமையன் இறக்க நான் உயிரோடிருக்கலாமா" என்று 
எண்ணி எழுந்து தன் ஆயிரந் தலைகளையும் வாளினால் அறுத்து, வீரம்பேசி, தன்றமையனுடைய ஆதிகுண்டத் 
தக்கினியில் இட்டான். இட இட அவை முன்போல வளர்தலும், பின்னும் அத்தொழிலைச் செய்துகொண்டு நின்றான். 

    அதனைக்கண்ட தாரகன் தன் தலையையும் அறுத்து அவ்வக்கினியில் இட இட அதுவும் முன்போல
 வளர்ந்தது. இவ்விருவருடைய செயலைக்கண்ட அவுணர்களிற் சிலர் தங்கள் சிரங்களையும் அறுத்து 
அவ்வக்கினியில் இட்டார்கள்; சிலர் அவ்வக்கினியில் வீழ்ந்து இறந்தார்கள். சிங்கமுகனும் அக்கினியில் 
வீழத்துணிந்து, ஆகாயத்தில் எழுந்து போம்படி எண்ணினான்.

            திருச்சிற்றம்பலம்.

            வரம்பெறுபடலம்.

    சிவபெருமான் அதனையறிந்து, ஒருவிருத்தப் பிராமண வேடங் கொண்டு தண்டைக் கையிலூன்றிக் 
கொண்டு வேதிகைக் கணித்தாகப் போய்ச், சிங்கமுகனைப் பார்த்து, "இங்கே நீங்கள் எல்லீரும் இரங்குகின்றீர்கள்; 
உங்கள் வரலாற்றைச் சொல்லுங்கள்'' என்றார். சிங்கமுகன் "பிதாவையொத்த இவர் எங்கள் துயரைக் கண்டு 
வந்து வினாவுகின்றார். இவர் அருள் சேர்ந்த மனத்தையுடையவர்' என்று எண்ணி, அக்கடவுளுடைய திருவடிகளில் 
வீழ்ந்து வணங்கியெழுந்து, "எங்களுடைய வரலாற்றையும் எங்களுடைய துன்பத்தின் வரலாற்றையும் சொல்லுவேன்" 
என்று சொல்லுகின்றான்:

    எங்கள் தந்தை காசிபமுனிவர். தாய் மாயை என்பவள். அவர்களுக்கு நாங்கள் மூன்றுபுத்திரர்கள். 
எங்களோடு பிறந்த புத்திரர்கள் இன்னும்  பலர் உளர். நாங்கள் மூவரும் எங்கள் தாயினுடைய ஏவலினாலே 
சிவபெருமானை நோக்கி இந்தவனத்திலே தவத்தைச் செய்தோம். பலவாண்டு தவஞ் செய்தும் சிவபெருமான் 
அருள் செய்திலர். எங்கள் தமையனாகிய சூரபன்மன் ஆகாயத்திற் போய் வாட்படையினாலே தன்னுடம்பிலுள்ள 
தசையை அறுத்து யாகாக்கினியிலிட்டான். இட இட அத்தசை பின்னும்  முன்போல் வளருதலும், 
வச்சிர கம்பத்தினது தலையில் வீழ்ந்து உருவி அக்கினியிற் புகுந்து நீறாயினான். 

    அதனை யாங்கள் கண்டு மிகத் துன்புற்று வெருவிப் புலம்பி, எமதுயிரையும் ஒருங்குவிட நினைந்தோம். 
உம்மைக்கண்டு ஓரிறைப் பொழுது தாழ்த்தேம். ''இதுவே எங்கள் வரலாறும் துன்பத்தின் வரலாறும்" என்று 
சிங்கமுகன் கூறினான். பிராமணவடிவங் கொண்ட சிவபெருமான் அதனைக்கேட்டு, " நீவிரும் நுந்தமையனைப் போல 
இறவாவண்ணம் யாகாக்கினியினின்றும் இப்பொழுதே அவனை எழுவித்தருள் செய்கின்றோம். மிகுந்த 
சோகத்தை விடுதிர்" என்று அருளிச்செய்து, தேவ கங்கையை வரும்படி திருவுளஞ் செய்தார். 

    அக்கங்கை மிகவிரைந்துவந்து எம்பிரானுடைய திருவடிகளை வணங்கி, அவருடைய பணியினால் 
நடுக் குண்டத்தினிடையே புகுதலும், சூரபன்மன் ஆர்த்தெழுந்தான் , எழுதலும், சிங்கனும் தாரகனும் தரித்திரர் 
பெருஞ் செல்வம் பெற்றாற் போல மகிழ்ந்து, எல்லையில்லாத வலிமையைப் பொருந்தி, விரைந்தோடிச்சென்று
சூரபன்மனுடைய கால்களை வணங்கினர். அவுணர்கள் "நம்மரசன் வந்தான் வந்தான் " என்று கூறி, பூரண சந்திரனுடைய 
வரவைக் கண்ட சமுத்திரம்போல "வாழிய" வென்று துதித்து ஆர்த்தார்கள். இவைகளைப் பார்த்த தேவர்கள் 
மேகத்தின் வரவைக்கண்ட குயில்போல அஞ்சித் துன்பத்தோடு ஓடித்தம்மூரை அடைந்தார்கள்.

    தம்பியர்கள் இருவரும் இருமருங்கும் நிற்ப அசுரர்கள் வாழ்த்தச் சூரபன்மன் நிற்கும்போது, 
சிவபெருமான் பிராமண வேடத்தை மறைத்து, உமாதேவி பாகமும் முக்கண்ணும் நாற்றோளும் உடையராய் 
இடப வாகனத்தின் மேற்கொண்டு, தாமாந்தன்மையை அறிதற்குரிய திருவுருவத்தோடு தோன்றினார். 
சூரபன்மன் துணைவர்களோடு ஆராத பெருமகிழ்ச்சியினனாய்ப் பூமியில் விழுந்து வணங்கி யெழுந்து, 
பலமுறை துதித்து நின்றான். சிவபெருமான் அவனுடைய முகத்தைப் பார்த்து, "நெடுங்காலம் நம்மை 
நினைத்துப் பெரிய யாகத்தைச் செய்து இளைத்தாய். வேண்டும் வரம் என்னை? சொல்லுதி" என்று அருளிச் 
செய்தார், அவன் பிரமா முதலிய தேவர்களெல்லாரும் "இன்றே எங்கள் பெருமைகளெல்லாம் போயின"
 என்று இரங்கும்படி இதனைச் சொல்வான்:

    "இப்பிருதிவியிலுள்ள அண்டங்களெல்லாவற்றிற்கும் யான் அரசனாயிருத்தல் வேண்டும்; 
அவைகளைக் காத்தற்குரிய ஆஞ்ஞா சக்கரமும் வருதல் வேண்டும்; நினைத்தவுடனே அவைகளுக்கெல்லாம் 
செல்லுதற்கு வாகனங்களையும் உதவல் வேண்டும்; எப்பொழுதும் அழியாமலிருக்கின்ற உடம்பையும் 
எனக்கு ஈதல்வேண்டும்; விட்டுணு முதலிய தேவர்கள் போர் செய்தாலும் அவர்களை வெல்லும் பேராற்றலையும் பல 
படைக்கலங்களையும் உதவல் வேண்டும்; என்றும் அழியாமலிருக்கவும் வேண்டும்'' என்று வேண்டினான். 

    வேண்டுதலும், சிவபெருமான் 'பிருதிவியிலுள்ள ஆயிரகோடி அண்டங்களுள் ஆயிரத்தெட்டண்டங்களை 
நூற்றெட்டு யுகம் ஆளுக'' என்று அருள் செய்து, அவ்வண்டப் பரப்பெங்குஞ் செல்லும் வண்ணம் மிகுந்த 
வலியையுடைய இந்திர ஞாலமென்னுந் தேரையும் அவ்வண்டங்களை என்றும் பாதுகாக்கும்படி 
ஒராஞ்ஞா சக்கரத்தையும் சிங்க வாகனத்தையும் கொடுத்து, அன்று முதலாகத் தேவர்கள் எல்லாருக்கும் 
முதல்வனாகும் மேன்மையையும், தேவர்களையும் அசுரர்களையும் மற்றையோர்களையும் வெற்றிகொள்ளும் 
வலிமையையும், பாசுபதப்படை முதலிய தெய்வப்படைகளையும், எந்நாளும் அழியாமலிருக்கின்ற 
வச்சிர யாக்கையையும் ஈந்தருளினார். அதன்பின் கங்கையாற்றை விண்ணுலகத்துக்குச் செல்லும்படி 
அனுப்பி, அக்கங்கை யாகாக்கினியோடு கலந்தமையாற் பிறக்கும்படி பதினாயிரகோடி வெள்ளம் என்னும் 
எண்ணைக் கொண்ட கச ரத துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகளை உண்டாக்கிச் சூரபன்மனுக்குச் 
சேனைகளாகக் கொடுத்தார். 

    இப்படிச் சூரபன்மனுக் கருள் செய்தலும், அவனுடைய தம்பியர்கள் வந்து சிவபெருமானுடைய 
திருவடிகளை வணங்க; ''நீங்கள் உங்கள் தமையனாகிய சூரபன்மனுடைய இரண்டு தோள்களையும் போல் 
அவனுக்குத் துணையாக வீரத்தைப் பொருந்தி விளங்கி நூற்றெட்டுகம் சிறப்போடு வாழுதிர்; 
தேவர்களெல்லாரையும் புறங்காணுதிர்; தேவர்களெல்லாராலும் வணங்கப்படும் உங்கள் மூவரையும் 
நம்முடைய சத்தி யொன்றேயன்றி வேறு யாவர் வெல்லுபவர்" என்று அருளிச் செய்து, அழியாத தேர்களையும் 
பாசுபதப்படையையும் கொடுத்து, வேறு வேறாக அவர்களுக்கு மிகவும் அருள்செய்து, பரமசிவன் மறைந்தருளினார். 

            திருச்சிற்றம்பலம்.

             சுக்கிரனுபதேசப்படலம்.

    அப்பொழுது, அவுணர்கள் தம்மரசன் மிகுந்த வலிமையைப் பெற்றான் என்று எண்ணி, மிக்க 
வலியுடையர்களாய், முன்னுள்ள துன்பங்கள் நீங்கி மிக மகிழ்ந்து ஆர்த்து, ஏழுகடல்களும் மேருமலையைச் 
சூழ்வது போலச் சூரபன்மனைச் சூழ்ந்தார்கள். அவன் அவுணப் படைத்தலைவர்களுட் சிலரைப் பார்த்து, 
"இந்நாள்வரையும் நீவிர் க்ஷேமமுடையீர்களா' என்று வினாவி நல்லருளைச் செய்ய, அவர்கள் மகிழ்ந்து, 
'"சிவபிரானுண்டு .நீயுண்டு. எங்களுக்கு ஓர் குறையுண்டோ! நிலையாகிய செல்வத்தையும் சிறப்பையும் 
பெற்றோம். தாயுண்டாயிற் பிள்ளைகளுக்கோர் தளர்வு முண்டோ!'' என்றார்கள். இப்படிச் சொல்லுகின்ற 
அசுரர்கண்மாட்டுச் சூரபன்மன் அன்புடையனாய், தம்பியர் இருமருங்கும் ஆக நின்றான். 

    இதனைக்கண்ட தேவர்கள் "இந்த அசுரன் வலியனாயினான், இனி நாம் செய்வதென்னை?'' என்று 
உயிர்துறப்பார் போல அஞ்சி ஏங்கினார்கள். சேனைகளினடுவே சூரபன்மன் நிற்றலை முன்னைய அசுரர்கள் 
விருப்பினோடு பார்த்து  தம்மரசனோடு விமானத்திலேறி வந்து பூக்களைத்தூவி, புடைவைகளை வீசி, 
"சூரபன்மன் வாழ்க' என்று ஆசிகூறி, ஆடிப்பாடிப் பெருமகிழ்ச்சியை அடைந்து, இந்திரனுடைய 
மனத்துயரத்தை நோக்கினார்கள். சூரபன்மன் சிவானுக்கிரகத்தினால் யாகாக்கினியிலிருந்து தோன்றிய 
அளவிறந்த படைகளுக்கெல்லாம் பல அசுரர்களைத் தலைவர்களாக்கி, சேனைகள் மண்ணுலகத்திலும் 
விண்ணுலகத்திலும் திக்குக்களிலும் செல்ல, தம்பியரோடு யாகசாலையை நீங்கி, பிதாவாகிய காசிப 
முனிவரிடத்திற் சென்று வணங்கி, சிவபிரானிடத்தே தாம்பெற்ற வரங்களைச் சொல்லி, "இனி யாங்கள் 
செய்வது என்னை?" என்று வினாவினான். 

    காசிபமுனிவர் அதனை கேட்டு, "இந்திரனுடைய வாழ்வுக்கு முடிவு வந்ததோ! தேவர்களுக்குத்
 துன்பம் வந்ததோ! எங்கள் வேதாசாரந் தவறியதோ! சிவபெருமானுடைய திருவருள் இவ்வாறாயிற்றோ!" 
என்று உள்ளத்திலே உணர்ந்து, 'உங்கள் குரு சுக்கிராசாரியர். அவரிடத்தே போங்கள்; அவர் உங்களுக்கு 
இந்தச் செல்வங்கள் இடையறாதவண்ணம் விருத்தியாதற்கு வேண்டும் புத்திகளை நன்றாகப் போதிப்பார்" 
என்று விடைகொடுத்தனுப்பினார். சூரபன்மன் விடை பெற்றுக்கொண்டு சுக்கிராசாரியரை அடைய, 
அவர் இவனுடைய வரவை யறிந்து, சீடர் கூட்டத்தோடு எதிர்கொண்டார். 

    சூரபன்மன் சேனைகளுக்கு முன்னே போய்த் தம்பிமார்களோடு அவரை வணங்கினான்.
ஆசாரியர் ஆசி கூறித் தழுவி, தமது மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போயினார். சூரபன்மன் 
சேனைகளைக் காக்கும்படி தாரகனுக்குப் பணித்துச் சிங்கமுகனோடு செல்ல, சுக்கிரன் ஆசனங் 
கொடுத்திருக்கச்செய்து, சற்கார வசனங்களைக் கூறி, 'நீங்கள் என்னிடம் வந்த காரணம் என்னை' 
என்று வினாவினார். சூரபன்மன் தாங்கள் நெடுங்காலம் வீரயாகஞ் செய்ததும் சிவபெருமான் 
எழுந்தருளிவந்து வரங்களையும் அளவில்லாத வளங்களையும் தந்ததும், பின் காசிபமுனிவரிடத்தில் 
வந்ததும், அவர் தங்களுக்குச் சொல்லியதும் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி, 'நாங்கள் இனிச் 
செய்யத்தக்க நீதிகளெல்லாவற்றையும் ஆசாரியராகிய நீர் உபதேசிக்க வேண்டும்" என்று வேண்ட, 
அவர் சொல்வாராயினார்:

    "பாசமென்றும் பசுவென்றும் இவற்றிற்கு மேலாகிய பதியென்றும் முப்பொருள்கள் உண்டென்றும், 
நல்வினை தீவினை என வினைகள் இரண்டு என்றும், அவை யேதுவாகப் பிறப்பிறப்புக்களையும் 
இன்பதுன்பங்களையும் பசுக்கள் அடையும் என்றும், ஊழினாலே ஒருபிறப்பிலன்றி மறுபிறப்பிலும் 
அப்பசுக்கள் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் என்றும், அவைகள் அங்ஙனம் அனுபவிக்கும்பொழுது 
மேல் வருபிறப்புக்காக இருவினைகளை ஈட்டும் என்றும், அவ்விருவினைகளினால் அவைகள் மாறிமாறிப் 
பிறத்தலைப் பதியறிந்து அவ்வினைகளைத் தப்பாது கூட்டுவார் என்றும், பதியும் பசுக்களும் ஒன்றென்னில் 
அதனால் அப்பதிக்குக் குற்றம் உண்டாகும் என்றும் சிலர் கூறுவர். சூரபன்மனே, இதற்கு நாம் சொல்வோம் கேட்பாய்:

     பாசம் உண்டென்று சொல்லுதல் பொய். பதியும் பசுவும் இரண்டல்ல ஒன்றே. உற்பத்தி நாச மில்லாதவரும் 
மலரகிதரும் சோதிசொரூபருமாகிய சிவபெருமான் திருவிளையாட்டினால் இச்சை கொண்டு தமது மாயையினாலே 
பூதங்களையும் பிறவற்றையும் உண்டாக்கி மாயையாலாகிய உடம்புகடோறும் கடாகாயம் போலத் தாம் கலந்து நின்று, 
அவ்வுடம்புகள் அழியுங் காலத்திலே தாம் முன்போல இருப்பர். இவ்வாறே அச்சிவபெருமான் எக்காலமும் 
திருவிளையாடலைச் செய்வர். இருவினைகளும் அவற்றின் பயன்களாகிய இன்பதுன்பங்களும் பொய்யாம். 
முத்தியென்று ஒன்று உண்டென்பதும் அதற்காக முயலவேண்டும் என்பதும் பொய்யாம். பொறிகளும் புலன்களும் 
பொய்யாம். ஆகவே அவைகளைக் காணும் பசு மெய்யாகுமோ! புத்தியும் வாக்கும் வடிவமும் செயல்களும் பொய்யாம். 
செயல்கள் பொய்யாகும்போது, அச்செயல்களால் வரும் துன்ப இன்பங்கள் மெய்யாகுமோ! இல்லனவாகிய 
வினைப்பயன்களை உள்ளனவாகக் கொள்ளினும், அவைகள் உடம்பிற்கன்றி நிருமலராகிய சிவபெருமானைச் 
சாருமோ! பிறப்பதும் இறப்பதும் வினைகளைச் செய்வதும் சிவபெருமானுக்கில்லை. உற்று நோக்கும்போது 
இவைகள் உடம்பிற்கேயாம். 

    போவதும் வருவதும் ஆவதும் அழிவதும் வினைகளைச் செய்வதும் எண்ணில்லாத கடங்கடோறும் 
பொருந்திய ஆகாயங்களுக்கு ஆகுமோ! அதுபோல எங்கும் உயிர் தானேயாய்ப் பொருந்திநிற்கும். சிவன் 
வேறுபாடு சிறிதுமின்றி ஒரேதன்மையுடையராயிருப்பர்; இது உண்மை என்று அறி. 'தருமம் நமக்குத் துணையாகும். 
அதனைச் செய்வது நன்று' என்று செய்வதும், 'பாவம் தீது அதனைச் செய்யலாகாது' என்று அஞ்சுகின்றதும் 
அறிவின்மையாம். யாது யாது செய்யும்படி நேர்ந்ததோ அதனை அதனை இது தீது இது நன்று எனச் சிந்தை
செய்யாது அவையெல்லாம் கடவுளுடைய மாயை என்று எண்ணிச் செய்தலே முறைமை. 'தருமத்தைச் செய்க.
 பாவத்தைச் செய்யாதொழிக' என்று சில மூடர் சொல்வர். இவ்விரண்டையும் யார் செய்தாலும் மேலே 
வருவதொன்றுமில்லை. மாயம் வித்தாகுமோ! கனவிலே நாம் இன்பமடையவும் துன்பமடையவும் கண்டவைகளை 
நனவிலே கண்டதில்லை. 

    அவை போல இப்பிறப்பிற் செய்யும் புண்ணிய பாவங்கள் மறுபிறப்பிற் பயன்படுதலில்லை. 
மறுபிறப்பொன்றிருந்தாலல்லவா இப்பிறப்பிற் செய்யும் இருவினைப்பயன் அனுபவிக்கப்படும். அம் மறுபிறப்பென்பது 
பொய்மையே. ஆதலால் அப்பொய்யில் உண்டாவது மெய்யாகுமோ! இத்தன்மைகளை யெல்லாம் பிறரறிவாரேயெனின் 
யாம் அடைந்த மேன்மைகளையெல்லாம் அப்போதே அடைவர். இவைகள் உறுதியாகக் கொண்டால் உண்மையாயிருக்கும். 
சிலரைச் சிறியர் என்றும் சிலரைப் பெரியர் என்றும் எண்ணுவது தகுதியன்று. 'உயிர்கள் எல்லாம் ஒன்றே' என்று 
அறிதல்வேண்டும். இது உண்மையே. இவைகள் ஞானிகள் அறியத்தக்க நுண்பொருள்களாம். இனி உங்களுக்கேற்ற 
வண்மைகளையும் வழக்கங்களையும் சொல்வோம்.கேட்பாய்: 

    தேவர்களினும் விட்டுணு முதலாகிய மற்றை எவர்களினும் மேலாகிய அரசுரிமையும் வெற்றியும் ஆணையும் 
அழியாத செல்வங்களும் உனக்கு வந்தன. இந்த மேன்மையினால் உன்னை நீயே பிரமமென்று தெளிகுதி. 
பிரமா முதலிய தேவர்களை மேலோரென்று எண்ணாதே, வணங்காதே. தேவர்கள் உங்களுக்குப் பகைவர். 
அவர்களுடைய செல்வங்களை அழித்துத் தண்டிப்பாய். இந்திரனென்பவன் தேவராசன். அவனே முன்னை
 நாளில் அளவிறந்த அவுணர்களுடைய உயிரைக் கவர்ந்தான். அவன் தப்பி ஓடாவண்ணம் விரைந்து 
அவனைப்பிடித்து விலங்கிட்டுச் சிறையில் வை, பல  தீமைகளையுஞ் செய். முனிவர்களையும் தேவர்களையும் 
திக்குப்பாலகர்களையும் ஏவல் கொள்ளுதி. அவர்களுடைய பதங்களை அவுணர்களுக்குக் கொடு.  கொலை களவு 
காமம் வஞ்சமெல்லாவற்றையும் உறுதியென்று செய். அதனால் உனக்கு வருந் தீதொன்றுமில்லை. அவைகளைச் 
செய்யாயாயின் விரும்பியவையெல்லாம் ஒருங்கு வாரா, உனக்கெவர் அஞ்சுவர்! சிவபெருமான் தந்த 
ஆயிரத்தெட் டண்டங்களையும் சேனைகளோடு இப்பொழுதே போய்ப் பார்த்துப் பார்த்து ஆங்காங்குச் செய்யும் 
கடன் முறைகளாகிய இறைமையைச் செய்து, எண்டிசையும் புகழும்படி மீண்டுவந்து இவ்வண்டத்தில் வீற்றிருப்பாய்." 
என்று சுக்கிராசாரியர் உபதேசித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            அண்டகோசப்படலம்.

    இவ்வாறாகிய தீய உபதேசத்தைச் சுக்கிராசாரியர் உபதேசித்தலும், சூரபன்மன் "இது நல்லது! ஆசாரியராகிய 
உம்முடைய பணியின்படி நிற்பேன். பரமசிவன் எனக்குத் தந்த ஆயிரத்தெட்டண்டங்களினிலைமைகளையும் நீர் சொல்லும்' 
என்றுகேட்ப அவர் சொல்வாராயினார்: "மூலப்பிரகிருதிக்கு மேலுள்ள அசுத்தமாயை சுத்தமாயையாகிய தத்துவங்களும் 
அவற்றிலே தோன்றுவனவும் நிற்க, இப்பால் அவற்றின் கீழுள்ள மூலப்பிரகிருதியிற் புத்தி தத்துவந் தோன்றும். 
அதில் அகங்கார தத்துவம் தோன்றும். அதில் சத்த முதலிய ஐம்புலன்களும் தோன்றும். அவற்றில் முறையே 
ஆகாசம் வாயு தேயு அப்பு பிருதிவி என்னும் ஐந்து தத்துவங்களும் தோன்றும். இவற்றுள் பிருதிவி தத்துவத்துக்கு 
ஆயிரகோடி அண்டங்கள் உள்ளன. அவை பொன்னிறமுடையனவாய்ப் பரந்திருக்கும்; ஒன்றற்கொன்று மேலுள்ளனவல்ல. 
இவ்வியல்பினவாகிய ஆயிரகோடி பிருதிவி யண்டங்களில் சூரபன்மனே நீ பெற்ற அண்டங்கள் ஆயிரத்தெட்டு. 
இவற்றுள் ஓரண்டத்தினியற்கையைச் சொல்லுகின்றேம் நன்கறிகுதி.

    கதிரெழு துகள் இருபத்து நான்கு கொண்டது ஒருமயிர்நுனி. மயிர்நுனி எட்டுக் கொண்டது ஒரு ஈர். 
ஈர் எட்டுக்கொண்டது ஒரு பேன். பேன் எட்டுக் கொண்டது ஒரு நெல்.நெல் எட்டுக் கொண்டது ஒரு அங்குலம். 
அங்குலம் இருபத்து நான்கு கொண்டது ஒரு முழம். முழம் நான்கு கொண்டது ஒரு தனு. தனு விரண்டு கொண்டது 
ஒரு தண்டம். தண்டம் இரண்டாயிரம் கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்கு கொண்டது ஒரு யோசனை. 
இப்படிப்பட்ட நூறுகோடி யோசனை தனித்தனி இந்த ஒரு அண்டத்தின் விசாலமும் உயர்ச்சியுமாம். ஒழிந்த 
பிருதிவியண்டங்களும் இந்த அளவையுடையன. பூமியின் மேற்பரப்புக்குக் கீழே ஐம்பதுகோடி யோசனையும், 
அதற்குமேலே ஐம்பதுகோடி யோசனையும், மேருமலையின் மத்தியிலிருந்து அண்டகடாகத்தினெல்லை வரையும் 
ஐம்பதுகோடி யோசனையுமாம். 

    கீழேயுள்ள அண்டகடாகம் ஒருகோடியோசனை. அதற்கு மேலே காலாக்கினி உருத்திரருடைய செம்பொற் 
கோயில் ஒருகோடி யோசனையும், அவருடைய அக்கினிச் சுவாலை பத்துக் கோடி யோசனையும், அதன் புகை ஐந்து 
கோடியோசனையும், அவருடைய சிங்காசனத்தினுயர்ச்சி ஆயிரம்யோசனையும், அதன் விசாலம் இரண்டாயிரம் 
யோசனையும், காலாக்கினி யுருத்திரருடைய அக்கினிமயமாகிய திரு மேனியினுயர்ச்சி பதினாயிர யோசனையுமாம். 
அவர் தம்மைப் போல்வாராகிய உருத்திரர் பதின்மரும் அவர்களுடைய பத்துக்கோடி பரிசனங்களும் தம்மைச் சூழ்ந்து 
சேவிக்க வாள் பரிசை வில் அம்பு என்னும் ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். ஆதிகூர்மம் அவரைத் துதித்துக்கொண்டு 
அந்தப் புவனத்திலிருக்கும். அதன்மேல் அடுக்குறு நிலைமையனவாகிய இருபத்தெட்டுக்கோடி நரகங்கள் உள்ளன. 
அவற்றின் உயர்ச்சி இருபத்தொன்பது கோடி யோசனை. அவற்றின் இடைவெளி பன்னிரண்டிலக்கம் யோசனை. 
அதன்மேல், கீழ்பாகம் மண்ணும் நடுப்பாகம் இரும்பும் மேல்பாகம் பசும்பொன்னும் மயமாகிய ஓர் புவனம் 
தொண்ணூற்றொன்பதிலக்கம் யோசனை உயர்ச்சியுடையதாயிருக்கும். 

    அம் மேல்பாகத்தில், கரியமுகத்தையும் சுழலுங் கண்களையும் காலாக்கினி போலும் திருமேனியையும் 
மழுப்படை பொருந்திய கையையுமுடைய கூர்மாண்ட வுருத்திரர் பொன்னாசனத்தில் வீற்றிருப்பர். அவரைச் சூழ்ந்து 
சேவித்துக் கொண்டிருக்கும் உருத்திரர் அளவில்லாதோர். இந்தக் கூர்மாண்ட புவனத்தின் மேலுள்ள ஆகாய வெளி 
ஒன்பதிலக்கம் யோசனை. அதன்மேலே சப்த பாதலங்களுள்ளன, பாதலம் ஒன்றற்கு ஒன்பதிலக்கம் யோசனையாக 
அவற்றினுயர்ச்சி அறுபத்து மூன்றிலக்கம் யோசனை. அவற்றின்மேலுள்ள கனிட்ட பாதலம் எட்டிலக்கம் யோசனை 
உயர்ச்சியுடையது. அப்பாதலங்களுக்குத் தனித்தனி அகற்சி பதினாயிரம் யோசனை. 

    அவை தனித்தனி மூன்றுபாகமுடையன .கீழ்பாகத்தில் அசுரரும், நடுப்பாகத்தில் நாகரும், மேல்பாகத்தில் 
அரக்கரும் இருப்பர். இப்பாதலத்துக்கு மேலுள்ள ஆடகேச வுருத்திரர் புவனம் ஒன்பதிலக்கம் யோசனை யுடையது. 
பாதலங்களுக்கெல்லாம் தலைவராய்ப் பாதுகாப்போர் இதிலுள்ள ஆடகேசவுருத்திரர். இவரைச் சேவிக்கும் சனங்கள் 
நாகரும் அவுணரும் அரக்கருமாம். இந்த ஆடகேசுர புவனத்தின் மேல் ஒரு கோடியே இருபதிலக்கம் யோசனை 
வெளியுண்டு. இதன்மேல் எட்டியானைகளாலும் எண்பெரும்பாம்புகளாலும் ஆதிசேடனாலுந் தாங்கப்படும் 
பூமியினுயர்ச்சி எண்பதிலக்கம் யோசனையாம். அண்ட கடாகமுதற் பூமியீறாக * ஐம்பதுகோடி யோசனையாம். 
இதனைக் கணித்தறிந்து  கொள்வாய்.

* காலாக்கினி யுருத்திரருடைய சிங்காசனவுயர்ச்சி ஆயிரயோசனையும், அவர் திருமேனியுயர்ச்சி பதினாயிர 
யோசனையும், அவருடைய திருமேனிச் சுவாலை பத்து கோடியோசனையுள் அடங்குதலால், அவ்விரண்டனையும் நீக்கி 
ஐம்பதுகோடி யோசனை கொள்க.
    
     பாதலங்கட் கெல்லாம் மேலாயுள்ள பூமியின் விரிவையும் அங்கேயுள்ளனவற்றையுஞ் சொல்வேன் 
சூரபன்மனே கேட்பாய். பூமியில் சம்புத்தீவு, சாகத்தீவு, குசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, கோமேதகத் தீவு, 
புட்கரத்தீவு என ஏழு தீவுகள் உள்ளன. உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல்,கருப்பஞ்சாற்றுக்கடல், 
தேன்கடல், சுத்தோதகக்கடல் என்னும் ஏழுகடல்கள் இத் தீவுகளை முறையே சூழ்ந்திருக்கும். சம்புத்தீவின் பரப்பும் 
அதனைச் சூழ்ந்த உவர்க்கடலின் பரப்பும் தனித்தனி ஓரிலக்கம் யோசனை. மற்றைத் தீவுகளுக்கும் கடல்களுக்கும் 
உள்ள பரப்பு முறையே இவற்றிலிருந்து ஒன்றற்கொன்று தனித்தனி இரட்டித்த யோசனை. அங்ஙனம் கணிக்கும்போது 
ஏழு தீவுகளுக்கும் கடல்களுக்கும் உள்ள பரப்பு இரண்டு கோடியே ஐம்பத்து நான்கிலக்கம் யோசனையாம். சுவர்ணபூமி 
இவற்றைச் சூழ்ந்திருக்கும். அதன் பரப்புப் பத்துக்கோடி யோசனை. அதனைச்சூழ்ந்த சக்கரவாளகிரியின் பரப்புப் 
பதினாயிர யோசனை. அதனைச் சூழ்ந்த புறவாழியின் பரப்பு ஒருகோடியே இருபத்தேழிலக்கம் யோசனை. 
அதனைச் சூழ்ந்த இருட்பூமியின் பரப்பு முப்பத்தைந்து கோடியே பத்தொன்பதிலக்கத்து நாற்பதினாயிரம் யோசனை. 
அதனைச் சூழ்ந்த அண்டச் சுவரின்கனம் ஒருகோடி யோசனை. இங்ஙனம் கணிக்கப் பூமியின் அகலம் * ஐம்பதுகோடி 
யோசனையாம். நாம் கூறிய இந்தக் கணிதத்தையுடையது ஒரு திசையே. இவ்வாறே மற்றைத் திசையையும் சேர்த்துக் 
கணிக்கில் பூமியின் அகலம் நூறுகோடி யோசனையாம்.

* பூமியின் மத்தியிலிருந்து கணிக்கவேண்டுதலால், ஏழுதீவுக்கும் நடுவிலுள்ள சம்புத் தீவின் பரப்பு ஓரிலக்கம் 
யோசனையில் ஐம்பதினாயிரம் யோசனையைக் கழிக்க ஐம்பதுகோடியாதல் அறிக.

    பிரமாவினுடைய வலப்புயத்திற் றோன்றிய சுவாயம்புவின் புத்திரனாகிய பிரியவிரதன் என்பான் 
இப்பூவுலக முழுதையும் ஆண்டான். அவனுக்கு அங்கிதீரன், மேதாதி, வபுட்டு, சோதிட்டு, துதிமான், அவ்வியன், சவநன் 
என ஏழு புத்திரரிருந்தனர். அவர் எழுவரும் முறையே சம்புத் தீவு முதலிய ஏழு தீவுகளையும் ஆண்டார்கள். 
சம்புத்தீவுக்கரசனாகிய அங்கிதீரன் தன்னுடைய புத்திரர்களாகிய பாரதன், கிம்புருடன், அரி, கேது மாலன்,
 பத்திராசுவன், இளாவிருதன், இரமியன், இரணியன், குரு என்னும் ஒன்பதின்மருக்கும் அத்தீவை ஒன்பது 
கண்டமாக்கிக் கொடுத்தான். மேருமலை சம்புத் தீவினடுவில் பூமிக்குமேலே எண்பத்து நாலாயிரம் யோசனை 
உயர்ந்தும், கீழே பதினாறாயிரம் யோசனை ஆழ்ந்தும், தலை முப்பத்தீராயிரம் யோசனையும் அடி பதினாறாயிரம் 
யோசனையும் அகன்றும் தாமரைப் பொகுட்டுப் போலிருக்கும்.

     அதில் மூன்று மேகலைகளுள்ளன. மேலுள்ள மேகலையிற் பல சிகரங்களிருக்கின்றன. அவற்றுள் 
நடுச்சிகரத்தில் பிரமாவின் புரமாகிய மனோவதியும், மேற்றிசைச் சிகரத்தில் விட்டுணுவின் புரமாகிய வைகுண்டமும், 
வடகீழ்த்திசைச் சிகரத்தில் பரமசிவனுடைய புரமாகிய சோதிட்கமும், இவற்றின் மருங்கே எட்டுத்திசைகளினுமுள்ள
சிகரங்களில் இந்திரன் முதலிய திக்குப்பாலகர் எண்மருடைய புரங்களுமிருக்கும். அம்மலையின் மருங்கில் 
தெற்கு முதல் வடக்களவும் நேர்மையான தேசமாய்ச் செவ்வே போகின்ற நெடிய குகையொன்றுள்ளது. சூரபன்மனே 
இதனை நினைப்பாய். அம்மேருமலையின் கீழ்த்திசையில் வெண்ணிற முடைய மந்தரமலையும், தெற்கில் 
பொன்னிறமுடைய கந்தமாதனமலையும், மேற்கில் நீலநிறமுடைய விபுலமலையும், வடக்கில் மாதுளம்பூ நிறமுடைய சுபார்சுவ 
மலையும் உள்ளன. இவற்றில் முறையே கடம்பும், நாவலும், அரசும் ஆலும்  நிற்கின்றன. நாவன் மரத்தினுயர்ச்சியும் பரப்பும் 
தனித்தனி இரண்டாயிரம் யோசனையும், மற்றை மூன்றுமரங்களினுயர்ச்சியும் பரப்பும் தனித்தனி ஆயிரம் 
யோசனையுமாம். மந்தரமலைக்குக் கிழக்கிலும், கந்தமாதனமலைக்குத் தெற்கிலும், விபுலை மலைக்கு மேற்கிலும், 
சுபார்சுவ மலைக்கு வடக்கிலும் முறையே அருணம் மானசம் அசிதோதம் மாமடு என்னும் நீர் நிலைகளும், முறையே 
இவற்றின் கிழக்குத் தெற்கு மேற்கு வடக்குத் திசைகளில் சயித்திரதம் நந்தனம் வைப்பிரசம் திருதாக்கியம் என்னும் 
வனங்களும், மேருமலைச் சாரலிற் பொருந்தும். மேருமலையின் தெற்கில் ஒரு நாவன்மரம் நின்ற காரணத்தாற்
பாரதவருட முற்றும் நாவலந்தீவென்னும் பெயர் பெற்றது. 

    இத்தருவின் பழச்சாறு ஆறாய் அம்மலையைச் சூழ்ந்து வடபாற் சென்று சாம்பூநதம் என்னும் 
பெயர் பெறும். அதனைப் பருகினோர் உடல முழுதும் பொன்மயமாய்ப் பதின்மூவாயிர மாண்டு வாழ்வர். 
நாற்றிசைகளினுமுள்ள மந்தர முதலிய மலைகளின் மேலகலம் தனித்தனி பதினாறாயிரம் யோசனையும், 
உயர்ச்சி தனித்தனி நாற்பத்தீராயிரம் யோசனையும், கீழ் அகலமும் ஆழமும் தனித்தனி எண்ணாயிரம் 
யோசனையுமாம். மேருவின் கிழக்கில் நீல நிறமுடைய மாலியவானும், தெற்கில் பதுமராக நிறமுடைய 
நிசதமும், பொன்னிறமுடைய ஏமகூடமும், பனி நிறமுடைய இமையமும், மேற்கில் 
பொன்னிறமுடைய கந்தமாதனமும், வடக்கில் நீல நிறமுடைய நீலமும் வெண்ணிறமுடைய சுவேதமும் 
சந்திரகாந்த நிறமுடைய சிருங்கமும், அதனைச் சூழ்ந்த எட்டுமலைகளாம். 

    முறையே கிழக்கிலும் மேற்கிலுமுள்ள மாலியவானும் கந்தமாதனமும் வடக்கில் நீலகிரியையும் 
தெற்கில் நிடதகிரியையுமுறத் தெற்குவடக்காகவும், தெற்கிலுள்ள நிஷதம் ஏமகூடம் இமையம் என்னும் 
மூன்றும் வடக்கிலுள்ள நீலம் சுவேதம் சிருங்கம் என்னும் மூன்றும் தனித்தனி கீழ்மேல் கடல்களைச் சாரக் 
கிழக்கு மேற்காகவும், நிற்கும். இவ்வெட்டு மலைகளும் தனித்தனி இரண்டாயிர யோசனை உயரமும், 
கந்தமாதனமும் மாலியவானும் தனித்தனி பதினாயிர யோசனை அகலமும், மற்றை ஆறுமலைகளும் 
தனித்தனி இரண்டாயிரயோசனை அகலமுமுடையனவாம். இனி, இச் சம்புத்தீவிலுள்ள நவகண்டங்களி 
னெல்லையைச் சொல்வோம்.

    வடகடல் முதற் சிருங்கமலை வரையும் குருவருடமும், சிருங்கமலை முதற் சுவேதமலைவரையும் இரணியவருடமும், 
சுவேதமலைக்கும் நீலமலைக்கும் நடு இரமியவருடமும், மேருமலையைச் சூழ்ந்த வருடம் இளாவிருதமும், 
மாலியவான் மலைமுதற் கீழ்கடல் வரையும் பத்திராசுவ வருடமும், கந்தமாதன மலைக்கும் மேல் கடலுக்கும் 
நடுக் கேதுமாலவருடமும்,நிடத மலைமுதல் ஏமகூடமலைவரையும் அரிவருடமும், ஏமகூடம் முதல் இமையம் 
வரையும் கிம்புருட வருடமும், தென்கடலுக்கும் இமையத்துக்கும்  நடுப் பாரதவருடமுமாம். கேதுமாலவருடமும் 
பத்திராசுவ வருடமும் தனித்தனி முப்பத்து நாலாயிரம் யோசனை விரிவும், ஒழிந்த ஏழு வருடங்களும்
 தனித்தனி ஒன்பதினாயிரம் யோசனை விரிவுமுள்ளன. பாரத வருட மொழிந்த மற்றை எட்டு வருடங்களும் 
தம்மிடத்து வசிப்பவர்க்குத் தேவருலகத்தை யொப்பனவாம். 

    குருவருடத்திலிருப்போர் ஓர் தாய்வயிற்றில் ஒரு பொழுதினுள் ஆணும் பெண்ணுமாய்ப் பிறந்து 
தம்முட் புணர்ந்து தேவதருவின் காய்கனிகளை யுண்டு பச்சை நிறமும் பதின்மூவாயிரம் வயசு முடையராய் 
வாழ்வர். அதன் வடபாகத்தில், படிக நிறமுடைய முனிவரும் சாரணரும் சித்தரும் வசிப்பர். அவர்க்கு வயசு 
பதின்மூவாயிரம். பத்திராசுவ வருடத்திலிருப்போர் செம்மைநிறமும் பதின்மூவாயிரம் வயசும் உடையர்; 
கனிகாய் புசிப்பர். இரணிய வருடத்திருப்போர் சந்திரன் போலும் நிறமும் பன்னீராயிரத் தைஞ்ஞூறு 
வயசு முடையர்; பழங்களைப் புசிப்பர். இரமிய வருடத்திலிருப்போர் கருங்குவளை மலர்போலும் நிறமும் 
பன்னீராயிரம் வயசுமுடையர்; ஆலம்பழம் புசிப்பர். இளாவிருத வருடத்திலிருப்போர் வெண்மை நிறமும் 
பன்னீராயிரம் வயசுமுடையர்; கருப்பஞ்சாற்றை யுண்பர். கேதுமால வருடத்திலிருப்போர் செங்கழுநீர்மலர் 
போலும் நிறமும் பதினாயிரம் வயசுமுடையர்; கண்டகிப் பழம் உண்பர். அரிவருடத்திலிருப்போர் சந்திரன்போலும் 
நிறமும் பதினாயிரம் வயசு கனிகாய் புசிப்பர். கிம்புருட வருடத்திலிருப்போர் வெண்ணி றமும் 
பதினாயிரம் வயசுமுடையர்; இத்திப்பழம் உண்பர். ஏமகூடத்துக்குத் தென்பாலும் இமையத்துக்கு வடபாலுமாகிய 
இக்கிம்புருடவருடத்தில், மேன்மை மிக்க திருக்கைலாசமலை நிற்கும். அதன்மீது சிவபெருமான் உமாதேவி சமேதராய் 
வீற்றிருப்பர். அம்மலை ஊழி காலத்தில் அண்டத்தின் அடிமுடியளவும் வளரும். 

    இந்த எட்டுக் கண்டங்களிலுமிருப்பவர் துன்பம் நோய் நரை திரை மூப்புக்களைச் சிறிதும் பொருந்தார். 
வலிமை நிறை அறிவு உடலம் ஆயுள் முயற்சி சீர் முதலிய எல்லாவற்றையும் கிருதயுகத்திற் போல மற்றை 
மூன்றுயுகங்களினும் அடைவர்; முன்பு பாரதவருடத்திற் பிறந்து செய்த நல்வினைப் பயன்களை அவைகளில் 
அனுபவிப்பர். அங்கே மழைபெய்யாது. 

    பாரத வருடத்திலிருப்பவர்கள் உழுது பயிர் செய்தும் மற்றும் பலவகைத் தொழில்கள் செய்தும் 
புண்ணிய பாவங்களையீட்டி, ஆதிபௌதிகம் ஆதிதைவிகம் ஆத்தியான்மிகம் என்னும் 
மூன்றினாலும் பெறற்பாலனவாகிய பயன்களைக் கொண்டு, ஈசுரனுடைய அருளினால் உய்வர். 

    பெருமை வலி சீர் அறிவு நிறை ஆயுள் உருவம் உண்டி செய்கை என்னுமிவைகளை யுகங்களுக்கேற்றபடி 
பெறுவர். மலைநென் முதலிய பயிரின் விளைவுகளையும் கனிகாய் கிழங்குகளையும் பிறவற்றையு முண்பர். மற்றை 
எட்டுக் கண்ட வாசிகளும் தேவர்களும் நரகவாசிகளும் பாரதவருடத்திற் போயிருந்து புண்ணிய பாவங்களைச் செய்து 
அவற்றிற் கேற்ற பயன்களை அனுபவிப்பர். ஆதலால், பாரதவருட மொன்றே நல்வினை தீவினைகளுக்கெல்லாம் 
காரணமாகிய இடமாம். முனிவர்களும் தேவர்களும் தமக்கேதும் குறையுண்டானால் அங்கே வந்து தவங்களையும் 
பூசைகளையுஞ் செய்து அவைகளை நீக்கிக் கொள்வர்.பாரதன் என்பவனுக்கு இந்திரன், கசேருகன், தாமிரபன்னன், 
கபத்தி, நாகன் , சவுமியன் , கந்தருவன், வருணன் என்னும் புத்திரர் எண்மரும், குமரி என்னும் ஒரு புத்திரியும் உளர். 
அவன் இவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆயிரம் யோசனையாகப் பாரதவருடத்தை ஒன்பது கண்டமாக்கிக் கொடுத்தான். 

    இவற்றுள், குமரிகண்ட மொழிந்த எட்டுக் கண்டங்களும் மிலேச்சரிடங்கள்; அவை வியப்பில்லன. கங்கை, 
கவுதமி, யமுனை, குமரி, வாணி, காவிரி, நர்மதை, பாலி, கம்பை, பம்பை, துங்கபத்திரை, குசை, கோமதி, 
பாஞ்சாலி, சூரி, சிகி, பாபகரை, தூதபாவை,சங்கவாகினி, சிகை, பாரத்துவாசி, சார்வரி, சந்திரபாகை,சரயு,
வேணி,பிங்கலை, குண்டலை, பொன்முகரி, பொருநை,வெஃகா, பெண்ணை முதலாகிய அநேக ஆறுகளையும், மகேந்திரம் 
மலையம் சையம் சத்திமான் விருட்சம் பாரியாத்திரம் விந்தம் என்னும் ஏழு மலைகளையும், காஞ்சி முதலிய முத்திநகரம் 
ஏழையும், சிவஸ்தலங்கள் ஆயிரத்தெட்டையும், பிராமணர்கள் வசிக்குந் தேயங்கள் பலவற்றையும், வேதாசார 
வொழுக்கத்தையும் பொருந்தி, மெய்நெறி சேர்ந்திருப்பது குமரி கண்ட மொன்றுமே. இவைகள் சம்புத்தீவின் இடங்களாம்.

    இதற்கப்பால், பாற்கடலாற் சூழப்பட்ட சாகத்தீவுளது. அதற்கரசன் பிரியவிரதனுடைய மகனாகிய மேதாதி 
என்பான். அவன் தன் குமாரர்களாகிய சாந்தவயன் சிசிரன் கோதயன் ஆனந்தன் சிவன் கேமகன் துருவன் என்னும் 
எழுவருக்கும் அவரவர் பெயரால் அத்தீவை ஏழுகண்டமாக்கிக் கொடுத்தான். அங்கே, சோமகம் சுமனம் சந்திரம் 
துந்துபி வப்பிராசனம் நாரதீயம் கோமதம் என்னும் ஏழு மலைகளும், சிவை விபாவை அமிர்தை சுகிர்தை மநுதத்தை 
சித்தி கிரமை என்னும் ஏழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் ஆரியரும் விந்தரும் குகுரரும். அவர்க்குத் தெய்வம் வாயுவாம்.

    இதற்கப்பால், தயிர்க்கடலாற் சூழப்பட்ட குசைத்தீவுளது. அதற்கரசன் பிரியவிரதனுடைய மகனாகிய வபுட்டு 
என்பான். அவன் தன் குமாரர்களாகிய சுப்பிரதன் உரோகிதன் தீரன் மூகன் சுவேதகன் சித்தியன் வைத்திதன் என்னும் 
எழுவர்க்கும் அவரவர் பெயரால் அத்தீவை ஏழு கண்டமாக்கிக் கொடுத்தான். அங்கே, உன்னதம் குமுதம் குமாரம் 
மேகம் சந்தகம் மகிடம் துரோணம் என்னும் ஏழு மலைகளும், சோனை வெள்ளி மதி தோமை நேத்திரை விமோசனை 
விருத்தி என்னும் ஏழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் தர்ப்பகர் கபிலர் சாரணர் நீலர் தண்டர் விதண்டகர் 
எனப்படுவோர். அவர்க்குத் தெய்வம் வாயுவாம்.

    இதற்கப்பால், நெய்க்கடலாற் சூழப்பட்ட கிரவுஞ்சத்தீவுளது. அதற்கரசன் பிரியவிரதனுடைய மகனாகிய 
சோதிட்டு என்பான். அவன் தன் குமாரர்களாகிய சாரணன் கபிலன் கிருதி கீர்த்தி வேணுமான் இலம்பகன் உற்பிதன் 
என்னும் எழுவர்க்கும் அவரவர் பெயரால் அத்தீவை ஏழுகண்டமாக்கிக் கொடுத்தான். அங்கே, குசேசயம் அரி 
வித்துருமம் புஷ்பாவருத்தம் இமம் துதிமானம் மந்தரம் என்னும் ஏழுமலைகளும், சிவை விதூதபாவை இமை 
புனிதை பூரணை சர்வபாபகரை தம்பை என்னும் ஏழுநதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் தபதர் சடாவகர் 
மந்தேகர் அநேகர் எனப்படுவோர். அவர்க்குத் தெய்வம் பிரமாவாம்.

    இதற்கப்பால், கருப்பஞ்சாற்றுக் கடலாற் சூழப்பட்ட சான்மலித் தீவாம். அதற்கரசன் துதிமான் என்பான். 
அவன் தன் குமாரர்களாகிய குசலன் வெய்யவன் தேவன் முனி அந்தகாரன் மனோரதன் துந்துபி என்னும் 
எழுவர்க்கும் அத்தீவை ஏழுகூறாக்கிக் கொடுத்தான். அத்தீவில் திமிரம் சுரபி வாமனம் விருத்தம் துந்துபி 
சம்மியத்தடம் புண்டரீகம் என்னும் ஏழுமலைகளும், குமுதை கவரி யாதி யாமை புண்டரிகை மனோபமை
சந்தியை என்னும் ஏழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் புட்கலாதர் புட்கரர் தனியர் சிசிரர் எனப்படுவோர். 
அவர்க்குக் கடவுள் சிவபெருமானாம்.

    இதற்கப்பால், தேன்கடலாற் சூழப்பட்ட கோமேதகத் தீவாம். அதற்கரசன் அவ்வியன் என்பான். 
அவன் தன் குமாரர்களாகிய விமோசனன் மோகன் சகலன் சோமன் சுகுமாரன் குமாரன் மரீசகன் என்னும் 
எழுவர்க்கும் அத்தீவை எழு கூறாக்கிக் கொடுத்தான். அத்தீவில் சிங்கம் அத்தம் உதயம் சலகம் கிரவுஞ்சம் 
ஆம்பிகேயம் இரமியம் என்னும் ஏழு மலைகளும், அயாதி தேனு கபத்தி சுகுமாரி குமாரி இக்ஷு மாயை என்னும் 
ஏழுநதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் மந்தகர் ஆமங்கர் மாகதர் மானசர் எனப்படுவோர். அவர்க்குத் 
தெய்வம் சந்திரனாம்.

    இதற்கப்பால், சுத்தோதகக் கடலாற் சூழப்பட்ட புட்கரத்தீவாம். அதற்கரசன் சவனன் என்பான். 
அவன் தன் குமாரர்களாகிய தாதகி மாபீதன் என்னும் இருவர்க்கும் அத்தீவை இருகூறாக்கிக் கொடுத்தான். 
அத்தீவில் இடபம் மகேந்திரம் வருணம் வராகம் நீலம் இந்திரம் மந்திரியம் என்னும் ஏழுமலைகளும், 
குடிலை சிவை உமை தரணி சுமனை சிங்கை குமரி என்னும் எழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் நகரரும் 
நாகரும் எனப்படுவோர். அவர்க்குத் தெய்வம் சூரியனாம். இப்புட்கரத்தீவின் முடிவில் மானசோத்தரமென்னும் 
மலை ஐம்பதினாயிரயோசனை யுயர்ச்சியுடையதாய்ச் சகடக்கால்போல வளைந்து நிற்கும். 

    அதின் கீழ்த்திசை முதலிய எட்டுத்திசைகளினும் முறையே இந்திரன் முதலிய திக்குப்பாலகர் 
எண்மருக்கும் நகரங்கள் உள்ளன. இவ்வாறே ஒவ்வொரு கடல்களின் முடிவிலும் ஒவ்வோர் மலைகள் 
அவற்றைச் சூழ்ந்து நிற்பனவாம். சாகத்தீவு முதலிய ஆறு தீவுகளிலுமிருப்பார்க்கு நரை திரை மூப்புத் 
துன்பங்களில்லை; கலியுகத்தினும் கிம்புருட கண்டத்தவர்களைப் போலப் பொன்னிறமுடைமை 
முதலிய குணங்களோடு பதினாயிரம் வருடமிருப்பர். மானசோத்தரமென்னுமலையைச் சூழ்ந்து பொற்பூமியும் 
அதனைச் சூழ்ந்து மாணிக்க ரத்தினநிறமுடைய சக்கரவாளகிரியுமுள்ளன. அம்மலையின் உட்பக்கம் ஒளியும் 
வெளிப்பக்கம் இருட்படலமுமாயிருக்கும். அதில் வசிப்போர் இயக்கரும் இராக்கதரும் பேய்களுமாம். 

    திக்குப்பாலகர்களும் மேருவிலே தத்தமக்குரிய திசைகளிலிருத்தல்போல அம்மலையிலிருப்பர். 
சக்கரவாளகிரிக்கப்பாற் பெரும்புறக்கடலும், அதற்கப்பால் இருட்பூமியும். அதற்கப்பால் அண்டச் சுவருமுள்ளன. 
தம்முயிரை வலியவிட்டவரும் ஞானமென்பது சிறிதுமில்லாதோரும் அவ்விருட்பூமியிற் கிடந்துழல்வர். 
அண்டச்சுவரின் அணிமையில் அநாதிக்கடவுளாகிய பரமசிவன் வீற்றிருக்கின்ற மஹாகைலாசபர்வதம்
 இருக்கின்றது. அங்கே சிவகணங்கள் வசிக்கும். சம்புத்தீவு முதலாக அண்டச்சுவர்காறும் பூவுலகம் 
என்று பெரியோர் சொல்லுவர்.

    இப்பூமியின்மேல், கணரும் குய்யகரும் தசவாயுக்களும் சத்தமேகங்களும் கிம்புருடரும் கருடரும் 
சித்தர்களும் விஞ்சையர்களும் தேவகங்கையும் வழங்குமிடங்கள் முறையே ஒன்றற்கொன்று மேலுள்ளன. 
சத்தமேகங்களுள் ஒவ்வொன்றை முப்பதினாயிரகோடி மேகங்கள் சூழும். இதன்மேற் சூரியலோகம் பூமியிலிருந்து 
ஒரிலக்கம் யோசனையிலுள்ளது. அதில் சூரியனுடன் முப்பத்துமுக்கோடி தேவர்கள் சஞ்சரிப்பார்கள். 
அதன்மேல் ஓரிலக்கம் யோசனையிற் சந்திரலோகமும், அதன்மேல் ஓரிலக்கம் யோசனையில் நக்ஷத்திர 
லோகமும்,அதன்மேல் தனித்தனி இரண்டாயிரம்யோசனையில் முறையே புதன் சுக்கிரன் செவ்வாய் 
வியாழன் சனி என்னும் இவர்களுடைய உலகங்களும் உள்ளன. அதன்மேல் சத்த முனிவருடைய வுலகமும், 
துருவனுடைய உலகமும், ஒவ்வோரிலக்க யோசனையில் ஒன்றற்கொன்று மேலுள்ளன. 

    இதுகாறும் புவர்லோகம் எனப் படும். இங்கே எழுவகையாகிய மருத்துக்களும் வசிப்பர். 
இப்புவர்லோகத்தின் உன்னதம் பதினைந்திலக்கம் யோசனையாம். அதன்மீது சுவர்லோகம் எண்பத்தைந்திலக்கம் 
யோசனையிலுள்ளது. அதில் தேவர்களும் பிறருந் துதிக்க இந்திரன் வீற்றிருந்தரசு புரிவன். அப்பால் மகலோகம் 
இரண்டுகோடி யோசனையிலுள்ளது. அதில் மார்க்கண்டர் முதலிய முனிவர்களிருப்பார்கள். அதன்மேல் சனலோகம் 
எட்டுக்கோடி யோசனையிலிருக்கும் அதிற் பிதிர்தேவர்கள் இருப்பர். அதன்மேல் தவலோகம் பன்னிரண்டு
கோடியோசனையிலிருக்கும். அதில் சனகர் முதலிய மகாமுனிவர்கள் இருப்பார்கள். 

    அதன்மேற் சத்தியவுலகம் பதினாறுகோடி யோசனையிலுள்ளது. அது பிரமதேவரிருந்து படைப்புத்தொழில் 
செய்யுந்தானமாம். அதன்மேல் பிரமலோகம் மூன்றுகோடி யோசனையிலும், விட்டுணுலோகம் மூன்றுகோடி யோசனையிலும், 
சிவலோகம் நான்குகோடி யோசனையிலும், முறையே ஒன்றற்கொன்று மேலுள்ளனவாம். அதன்மேல் அண்டகோளகை 
கோடியோசனை உயரமுடையது. *இந்த அண்டத்தில் நூற்றெட்டுப் புவனங்கள் சிவபெருமானுடைய திருவருளை அடைந்த 
உருத்திரர்களுடைய தானங்களாம்

*பூமிமுதல் அண்டகோளகைவரையும் ஐம்பதுகோடியோசனையாதல் காண்க

     வேதாகமங்களும் அவற்றின் சார்புநூல்களும் பிறவும் அண்டத்தினியற்கையை வெவ்வேறாகச் சொல்லுகின்றன. 
அவை ஒன்றற்கொன்று மலைவாகுமோ எனின், சிருட்டிபேதம் பலவாமாதலால் அவை மலைவாகா. ஆதலால் 
அவற்றின் வேறுபாடுகளை நாம் யோசித்து, அறிந்த உனக்கு இந்தச் சிருட்டியிலிருக்கின்ற வியற்கையைச் சொன்னோம். 
முன் சிவபெருமான் உனக்குத் தந்தருளிய ஆயிரத்தெட்டண்டங்களும் இந்த அண்டத்தினியல்புடையன. மைந்தனே 
சென்று காண்பாய்” என்று சுக்கிராசாரியார் சொல்ல, சூரபன்மன் அளவில்லாத மகிழ்ச்சியோடு அறிந்தான். 

            திருச்சிற்றம்பலம்.

            திக்குவிசயப்படலம்.

    இங்ஙனம் பற்பல குணங்களையுபதேசித்த சுக்கிராசாரியருடைய பாதங்களைச் சூரபன்மன் 
சிங்கமுகனோடு வணங்கி, விடைபெற்றுக்கொண்டு, விரைந்து அவுணசேனா சமுத்திரத்தினுட் புகுதலும், 
தாரகன் சென்று சூரபன்மனை முன்வணங்கிப் பின் தன்றமையனாகிய சிங்கமுகனை வணங்கி முன்னிற்க, 
அவன் சுக்கிரன் தமக்குபதேசித்தனவற்றையெல்லாஞ் சொன்னான். அவைகளைத் தாரகன் கேட்டு 
மனத்துட்கொண்டு, ''தலைவனே இது நன்று. பகைவர்களை வெல்லுதற்கு நாம் இனி விரைவிற் 
போவதே கடன்'' என்றான். அப்பொழுது மாயையானவள் தன் புதல்வர் மூவரும் சிவபெருமானிடத்திற் 
பெற்ற வரங்களையும் வலியையும் அறிந்து, அன்போடு ஆகாயத்தில் வந்து தோன்றினாள். சூரபன்மன் 
அவளை முன்னே கண்டு, தம்பியரோடும் அசமுகியோடும் வணங்கினான். 

    அவள் பெற்ற அற்றைநாளினும் மகிழ்ந்து ஆசீர்வதித்து, "யாகத்தில் நிகழ்ந்தனவற்றையும் 
அதற்காகச் சிவபெருமான் கொடுத்தருளிய வரங்களையும் கேள்வியுற்று அன்போடு உங்களைக் காணும்படி
 வந்தேன். நீவிர் வலிமையினால் இந்திரன் முதலாயினோரை வென்று எவ்வுலகங்களையும் ஆண்டு 
பூமியில் என்றும் வாழுதிர். மாயைகள் வேண்டினால் என்னை அன்புடன் நினையுங்கள். அப்பொழுதே 
யான் வந்து நீர் விரும்பினவற்றைச் செய்து முடிப்பேன், விருப்பத்தோடு உம்மைக் காணும்படி வருவேன். 
நீவிர் ஒற்றுமையுடையராயிருக்குதிர்' என்று சொல்லிப் புத்திரர்கள் வணங்கப் போயினாள்.

    மாயை போதலும், சூரபன்மன் கோடி தேர்களோடு அசுரர்களை அழைத்து, 'நம்முடைய சேனைகள் 
குபேரனுடைய பட்டணத்துக்குச் செல்லும்படி பறையறைக' என்று பணித்தான். அவுணர்கள் அவ்வாறு 
பறையடித்தலும், சேனைகள் ஊழிக்கடல்போல் வடதிசையை நோக்கிச் சென்றன. பத்து நூறு ஆயிரம் 
முதலாகிய பல தலைகளையும் பலவகைப் படைக்கலங்களை யேந்திய கைகளையும் கொடுமைக் 
குணத்தையும் கடலொலியையுமுடைய அவுணப்படைகளும், விண்ணும் திசையும் கடலும் முதலிய 
இடங்களிற் பாய்வனவாகிய அளவில்லாத குதிரைகளும், ஆறுபோலும் மதத்தையும் பிளிற்றொலியையுமுடைய 
அளவில்லாத யானைகளும், மலை முதலாகிய இடங்களிற் செல்லுந் திறத்தனவாகிய அளவில்லாத தேர்களும், 
மூன்றுகோடி யோசனை விசாலத்திற் சென்றன; 

    தூசிப்படைகள் அளகையை அடைந்தன. அப்பொழுது சூரபன்மன் பஞ்சபூதங்களினும் 
வலி மிகவுடையதும், சூரியனுடைய தேரினும் சிறப்புடையதும், அவனிலும் ஒளியுடையதும், திக்குக்களை 
அகற்சியான் மறைப்பதும், பூவுலகையொத்த பரப்புடையதும், இமைப்பொழுதில் எங்குஞ் சென்று திரும்புவதும், 
பேருணர்வுடையதும், குறிப்பிற் செல்வதும், அழியாத ஒருகோடி குதிரை பூண்டதும், அழியாத பல சாரதிகளை
யுடையதும், சிறந்தனவும் அளவில்லனவுமாகிய படைக்கலங்களைத் தாங்கியதும், பகைவர்கள் கெடும்படி 
அவர்கள் தேரின்மேற் செல்வதும், முகில்களும் அஞ்சும்படி பல மணிகள் ஒலிக்கப்பெறுவதும், என்றும் 
அழியாதிருப்பதும், சிவபெருமானாற் கொடுத்தருளப் பெற்றதும் ஆகிய இந்திரஞாலம் என்னுந் தேரின்மேல், 
ஒரு பெரிய மலையில் சிங்கம் ஏறிச்செல்லுதல்போல அவுணர்கள் வணங்கப் போயினான். 

    ஆயிரமாயிரம் யாளிகளும் ஆயிரமாயிரம் குதிரைகளும் ஆயிரமாயிரம் பூதங்களும் பூண்ட 
ஓர் தேரின்மீது சிங்கமுகன் ஏறிச்சென்றான். தாரகன் பதினாயிரம் குதிரைபூண்ட ஓர் தேரிலேறி ஆலாகல 
விஷம்போலச் சென்றான். இவரிருவரும் சூரபன்மனுடைய இருமருங்கினுஞ் செல்ல அவுணப்படைத் 
தலைவர்கள் தேர்களிலேறியும், மற்றைப் படைவீரர்கள் யானைகளினும் குதிரைகளினும் ஏறியும், 
சூரபன்மனைத் துதித்துப் பக்கங்களிற் சூழ்ந்தார்கள். அளவில்லாத அவுணர்கள் பதினெண்வகைப் 
படைகளையுமேந்தி இடியும் அஞ்சுஞ் சொல்லினராய்க் கடல் கிளர்ந்தாற் போல் சூரன் முதலிய 
மூவருடைய பக்கங்களிற் போயினார்கள். 

    கச ரத துரக பதாதி யாகிய நால்வகைப் படைகளும் இவ்வாறே தன்னைச் சூழ்ந்துவரச் 
சூரபன்மன் நடுவே சென்றான். நால்வகைப் படைகளினொலியும் நானாவித வாத்தியங்களினோதையும் 
எங்கும் மிக்கன. அவுணவீரர்கள் ஏந்திய ஆயுதங்கள் ஒன்றோடொன் றுரிஞ்சுதலாற் பிறந்த நெருப்பினால் 
மலைகளும் பூமியும் பொடிந்தன.சூரனுடைய படைகளின் செலவினாற் பூவுலக முதலிய வுலகங்களும்             
மலைகளும் கடல்களும் நெருப்பும் நடுங்கின.

    இவ்வாறே சேனைகளோடு சூரபன்மன் சென்று, குபேரனுடைய நகரத்தை வளைந்தான். வளைதலும், 
தூதுவர்கள் அதனை வினவி, குபேரனுடைய கோயிலை விரைந்தடைந்து, அவனுடைய பாதங்களை வணங்கி,
"சூரபன்மன் நம்முடைய நகரத்தை வளைந்துகொண்டான். இப்பொழுதே யழியும்போலும், இனித் தாழ்த்திருத்தல்     
நன்றல்ல. சேனைகளோடு போருக்கெழுவாய்'' என்றார்கள். குபேரன் அதனைக் கேட்டுத் துன்பமும் நடுக்கமும்
 அடைந்து, "அவுணர்கள் சிவபெருமானிடத்தில் வரம் பெற்றிருக்கின்றார்கள். அவர்களை நாம் வெல்லுதல் கூடாது. 
ஆதலால் அவர்களைப் புகழ்ந்து ஆசிசொல்லும்படி போதலே கடன்" என்று விரைந்தெழுந்து புட்பக விமானத்திலேறிச் 
சென்று, இயக்கர்களுந் தானும் சூரனை வணங்கித் துதித்து ஆசிகளைச் சொல்லி, "யான் உமக்கடியவன்" என்று கூற, 
சூரன் "நீ  இந்நெறி தவறாதிருப்பாய்" என்று அவனை விடுத்தான். 

    அவுணப் படைகள் ஆரவாரித்தன. சூரபன்மன் தம்பியர்களோடு அதனைக்கண்டு மகிழ்ச்சி யடைந்தான். 
அவுணப்படைகள் அளகாபுரியினுட் புகுந்து, நிதிகளையும், மணிகளையும் விமானங்களையும் ஆயுதங்களையும் 
யானை தேர் குதிரையையும் கவர்ந்தார்கள். இச்செல்வங்கள் நீங்கப்பெற்ற அந்நகரம் திருமங்கலத்தையிழந்த 
கைம்மையின் வடிவு போன்றது. குபேரன் இவற்றைப் பார்த்து உள்ளம் நாணி, பெருமையிழந்த அளகையில் 
மீண்டும் போயினான்.

    சூரபன்மன் அங்குள்ள குபேரனை "இவன் நம்முடைய அடித்தொண்டு செய்வானாயினான்" என்று 
மனத்திலெண்ணிக்கொண்டு, பாகனை நோக்கி, "இமைப்பிற் றேரைத் தூண்டுதிர்' எனச் சொல்லி, 
அளகையின்  நீங்கி வடகீழ்த்திசையை அடைந்து, "இது காளகண்டராகிய ஈசான வுருத்திரர் வீற்றிருக்குந்தலம்' 
என்றெண்ணி, அந்நகரைவிட்டு இந்திரனிருக்கும் கீழ்த்திசையை யடைந்தான். அதனை யறிந்து மிக்கதுயருற்ற 
இந்திரன் மறைந்து சுவர்க்கத்துக்குப் போயினான். அவன் ஒளித்தோடியதை சூரன் அறிந்து, அப்புரம் 
முழுவதையும் கொளுத்தி, சேனைகளோடு அவ்விடத்தை நீங்கி, அக்கினிதேவனுடைய நகரை அடைந்தான். 
அதனை அக்கினிதேவன் அறிந்து, மிகுந்த கோபமுடையனாய்,  ஆயிரநூறு கோடி பேர் தன்னைச்
சூழ, போர்புரியும்படி வந்து  சேர்ந்தான் . 

    சேர்தலும் இருபக்கத்துச் சேனைகளும் போர்செய்த பொழுது, அக்கினி தேவனுடைய படைகள் 
தோற்றன. அவன் துன்பம்பொருந்திய மனத்தனாய், ஊழிக்காலத்தில் உலகங்களையெல்லாம் ஈறு செய்கின்ற 
வலிய பேருருவைத் தாங்கி, "சூரனுடைய சேனா சமுத்திரம் வற்றும்படி இத்தினமே யான் மாய்ப்பேன் " 
என்று அவுண வெள்ளங்களை நெருங்கி வளைந்து, அழிப்பானாயினான். சடசட என்னும் ஒலியுண்டாம்படி 
சேனைக்கடலை அக்கினிதேவன் கொல்லும்போது, தாரகன் விடம்போலக் கோபித்து தேருடன் 
வாயுவேகத்தோடு வந்து எதிர்ந்து, வில்லை வளைத்து, "அக்கினியையும் தேவர்களையும் பிறரையும் 
இப்பொழுதே முடிப்பேன்" என்று சிவப்படைக்கலத்தை வழிபாடு செய்து எடுத்தான். 

    அதனை அக்கினி கண்டு, " இவன் இதனைத் தொடுத்தால் உலகங்களை யெல்லாந் தொலைக்கும். 
என்னையும் முடிக்கும்;  பிரமா முதலாகிய தேவர்களையும் இன்றே கொல்லும்" என்று கவலையுற்று, மனநடுங்கித் 
தன்னுருவைச் சுருக்கி, ஒடுங்கி, தாரகனுக்கு முன்வந்து, கைகளைக் கூப்பி, "உலகங்களை யெல்லாம் 
படைத்தழிக்கின்ற சிவபெருமானுடைய  மாற்றமுடியாத படைக்கலத்தை என்மேல் விடும்படி வழிபாடு 
செய்து எடுத்தாய்; எப்புவனத்துள்ளவர்களுடைய வலியும் உயிர்களும் அதன்முன் நிற்குமோ? மிகுந்த சினங் 
கொள்ளற்க; சிவப்படைக்கலம் சிறந்தது. அதனை விடுப்பாயாயின் உலகமெல்லாம் அழியும்; அதுவன்றி, 
அப்படைக்கலத்துக்குத் தலைவராகிய கடவுளும் பழிபடுவார். என் பிழையைப் பொறுப்பாய்'' என்று துதித்து நின்றான். 

    நிற்றலும், தாரகன் சிவப்படைக்கலத்தை அவன்மேற் செலுத்தாது கோபம் நீங்கி மகிழ்ந்தான். 
அவுணர்கள் "இவனை எற்றுங்கள் எற்றுங்கள்; விரைந்து கொல்லுங்கள் கொல்லுங்கள்; இவன் மிகக்கொடியன் 
குற்றுங்கள் குற்றுங்கள்'' என்று அக்கினியைச் சூழ்ந்தார்கள். தாரகன் அவர்கள் எல்லாரையும் விலக்கி, 
''நீ நம்முடைய ஏவலின்வழிநிற்பாய். போன உன்னுயிரை நாம் உதவினோம். உன்னுடைய நகரத்திற் போதி போதி" 
என்று விடுத்தான். அவனை விடுக்கு முன்னே, அவுணர்கள் அவனுடைய நகரிற் புகுந்து செல்வங்களை யெல்லாம் 
வாரிக்கொண்டு மீண்டார்கள். அக்கினி தேவன் வெட்கித்துத் தன்னகரிற் போயினான். தாரகன் அந்நகரை நீங்கினான்.

    சூரன் அவற்றையெல்லாங்கண்டு,"பாகனே யமனுடைய நகரத்துக்குத் தேரைச் செலுத்துவாய்'' என்றான். 
என்னலும், பலிங்கனென்னும் பாகன் மற்றைப் பாகர்களோடும் அஞ்சலிசெய்து, ''அரசனே விரைந்து 
யமனுடைய திசைக்குத் தேரைச் செலுத்துவேன் காண்பாய்' என்று கூறி, விரைந்து தேரைத் தூண்டி ஆர்த்தான். 
சேனைகளும் முரசங்களும் ஆர்த்தன; துகள் கடலைத் தூர்த்தன; கொடிகள் விண்ணுலகத்தை அளாவின. 
தூசிப்படைகள் யமனுடைய ஊரை அடைந்தன. அதனைக் கண்டவர் தூதுவன் யமனிடத்திற்சென்று 
''சூரன் முதலிய அவுணருடைய சேனைகள் நம்முடைய நகரத்தை வளைந்தன" என்று சொன்னார்கள். 
யமன் இடியேறுற்ற பாம்புபோல ஏங்கி இரங்கி, "குபேரனும் அக்கினிதேவனும் சூரனை எதிர்கொண்டு 
துதித்துப் போயினார்கள். நானும் அதனைச் செய்வதே அழகிதாம்" என்று நினைத்து, தெளிவினுடன் எழுந்து 
படைஞர்கள் சூழ விரைந்து சென்று, சூரனைத் தொழுது ஆசி கூறினான். 

    அவனுடைய செய்கையைக் கண்டு சூரபன்மன் மகிழ்ந்து, "நம்முடைய பணிகளைச் செய்துகொண்டு 
உன் பரிசனங்களோடும் ஈண்டேயிருக்குதி" என்று ஏவினான். அவுணசேனைகள் யமனுடைய நகரத்தினுட் 
புகுந்து திரவியங்களை முறைமுறையாகக் கவர்ந்தன. யமன் பெருவலி குறைந்ததையும், தம்மைத்துதித்துப் 
போயதையும் சூரபன்மன் நினைத்து மிகவு மகிழ்ந்து, சேனைகளோடு தென்மேற்றிசையிலிருக்கும் நிருதியின்மேல் 
விரைவிற் சென்றான். நிருதி இந்நிழ்ச்சிகளையெல்லாம் அறிந்து, "நாம் இவரைப் பொருவது அரிது. 
போரியற்றினும் வசையேயன்றி வெற்றி வருவதில்லை" என்று அவர்களோடு கலத்தற் கெண்ணி, 
சேனைகளோடு சூரனுக்கெதிரே போய்த் தோத்திரஞ்செய்து வணங்கி "உன் சுற்றம் யான்'' என்று கூறித் 
தாரகனுக்குப் பக்கத்திலே போயினான். 

    சூரபன்மன் நிருதியினுடைய நகரத்தை நீங்கி அப்பாற் சென்றான். அவனுடைய வரவை யறிந்த 
வருணனும் வாயுவும் முறையே கடலினும் இருட்பூமியிலும் இமைப்பொழுதினுட் போயினார்கள். போதலும்,
 சூரபன்மன் அவர்களுடைய பதங்களைச் சூறை கொண்டு பழுது செய்வித்து, சத்தபாதலங்களுக்கும் போய், 
அங்கங்குள்ள அவுணர் முதலாயினோர் துதிக்க அவர்களுக்கு அருள்செய்து, நாகருலகத்துக்குப் போயினான். 

    ஆதிசேஷன் கோபத்தோடு யுத்தஞ் செய்தான். சூரபன்மன் சேனைகளால் அவனை வெற்றிகொண்டு, 
அவன் வியந்து துதிக்க அவனுடையவிருக்கையில்  ஒருநாள் இருந்து, அங்கே தேவர்கள் தர ஆதிசேஷன் 
வைத்திருக்கும் அமுதத்தை வலிதின் வாங்கித் தம்பியர்களோடு உண்டு, மற்றைப் பிலங்கள் தோறும் சென்று,
அங்கங்குள்ள புதுமைகளை வியப்போடு பார்த்து, போன போன திசைகளெல்லாவற்றினும் 
புகழை நாட்டி, பூவுலகில் வந்து, உவர்ச் சமுத்திரத்தையும் அதற்கப்பாலுள்ள சாகத்தீவையும் கடந்து, 
பூமிலக்ஷுமியும்,  மகாலக்ஷுமியும் துதிக்கச் சேஷசயனத்தின் மீது விட்டுணு அறிதுயில் செய்யும் பாற்கடலிற் 
சேனைகளோடு விரைந்து போயினான்.

    சூரனுடைய அவுணப்படைகள் "இங்கே விட்டுணு இருக்கின்றான்" என்று அப்பாற்கடலை மிகுந்த 
ஆரவாரத்தோடு கலக்கின. அந்த ஒலியைப் பூமிலக்குமியும் மகாலக்குமியும் கேட்டு, உடம்பு வேர்த்துப்பதைக்க 
அஞ்சி வெருவி விட்டுணுவினுடைய மார்பைத் தழுவ, அவர் பார்த்து, அவர்களை அஞ்சற்கவெனக்கூறி, 
விரைந்து துயிலை நீங்கிச் சேஷசயனத்தைவிட்டு எழுந்து, வடவாமுகாக்கினியும் அஞ்சும்படி உருத்துச் சீறி, 
"இத்தீயர் நம்மையும் பொரவும் வந்தார்போலும், இவர் வலியைக் காண்போம்' என்று கைதட்டிச் சிரித்துக் கருடனை 
நினைத்தார். உடனே அவன் வந்தான். அவனுடைய தோளின்மேல் ஏறிப் பஞ்சாயுதங்களையும் ஏந்தி, 
அசுரசேனைக்கெதிரே சென்று, சார்ங்கம் என்னும் வில்லை வளைத்து நாணோதைசெய்து, அவுணர்களுடைய 
மனசைக் கலக்கி, அவர்கள் கொண்ட செற்றத்தைக் கெடுத்துப், பாணங்களை மேன்மேற் பூட்டி விடாமழையைப் 
போலப் பொழிந்தார். அப்பொழுது அவுணசேனைகள் அழிந்து, கச ரத துரகங்கள் ஒழிந்து, வலியும் 
போரினூக்கமும் படையுமாகிய எல்லாங் கழிந்து சூறைக்காற்றாலடியுண்ட மேகங்கள் போலாயின. 

    சூழ்ந்த அவுணர்களுடைய சிரங்கள் துணிந்தன. தோள்களுந் தாள்களும் கரங்களும் வீழ்ந்தன. 
சிந்திய இரத்தவெள்ளம் கடல் முழுதும் பாய்ந்தன. பிணமலைகள் உயர்ந்தன. விட்டுணுவானவர் 
கருடவாகனாரூடராய் எண்ணில்லாத வுருவங்களைக்காட்டி அவுணர்கள் யாவரும் போகாவண்ணம் 
பாண மழைகளைச் சிந்தித் தேவர்கள் ஆரவாரிக்கும்படி இப்படிப் போர்செய்தார். தாரகன் அவற்றை 
உருத்து நோக்கி, உடைகின்ற  தன்சேனைகளை " ஒன்றும் நீர் அஞ்சற்க" என்று கூறி, மேருமலைபோலும் 
வில்லை யேந்தித் தேரின் மீது இமைப்பில் வந்து விட்டுணுவுக் கெதிரிற் புகுந்து, அவ்வில்லை வளைத்து, 
கடலின் மீது விடாமழை பொழிவதுபோலப் பாணங்களைத் துண்ணென்று தூவி ஆரவாரித்தான். 
அப்பொழுது, விட்டுணுவானவர் எண்ணில்லாத பாணங்களைத் தாரகன்மீது சொரிந்து, அவனுடைய 
தேரையும் பாகனையும் தொலைத்தார். 

    அவன் பிறிதொரு தேரிலேறி வில்லை வளைத்து விட்டுணுவின் மீது ஆயிரம் பாணங்களைச் 
செலுத்தி, கருடன் மீதும் ஆயிரம் பாணங்களை விடுத்தான். அப்பாணங்களினாற் கருடன் வருத்தமடைதலும், 
விட்டுணு அதனைப்பார்த்து, அளவில்லாத மாயா ரூபங்களை எடுத்து, தாரகனைச் சூழ்ந்து போர்செய்ய, அவனும் 
தன் தாய் உபதேசித்த மந்திரத்தைத் தியானித்துப் பல மாயாரூபங்களைக்கொண்டு, நான்குநாள் வரையும் 
பெரும்போர் செய்தான். பிரமதேவர் இதனைப்பார்த்து, "யார் இவனெதிரில் நிற்பார்" என்று அதிசயமடைந்தார். 
விட்டுணு தாரகனுடைய வில்லும் தேரும் குதிரைகளும் பாகனும் துணிந்து விழும்படி ஒருகோடி பாணங்களை 
விடுத்தார். இந்திரன் அதனைக் கண்டு மகிழ்ந்தான். 

    தாரகன் தன்னுடைய தேரும் குதிரைகளும் பாகனும் வில்லும் அழிதலும், ஓர் தண்டாயுதத்தை 
எடுத்துக் கொண்டு நிலத்திற்போய், தேவர்கள் தலைபனித்து அஞ்ச அண்டங்கள் குலுங்க ஆர்த்து, விட்டுணுவை 
எதிர்த்துச் சென்றான். அவர் எதிரேவரும் தாரகன் மேல் எண்ணில்லாத பாணமழைகளை வீசினார். அவைகளைத் 
தாரகன் தண்டினால் விலக்கிச் சிந்திக் கோபித்து அவருக்கு முன்னே செல்ல, விட்டுணு சக்கரப்படையை 
விடுத்தார். ஓரிமைப் பொழுதினுள் உலகங்களை யெல்லாந் தொலைக்கும் வலிமையையுடைய சக்கரப்படையும் 
தாரகனுடைய கண்டத்தை அணுகிச் செம்பொன்னாரமாயிற்று. இஃது என்ன அதிசயம் ! தவத்தினும் ஆக்கம் வேறுண்டோ!

    விட்டுணுவானவர் அதனைப் பார்த்துச் சிவபெருமானருளிய வரத்தை நினைத்து, அடங்காத 
அற்புதத்தினராய், "தாரகன் வலியன்'' என்று எண்ணி, ''பிரமாவும் ததீசி முனிவனும் என்னுடன் போர்செய்த 
அவுணர்களும் உனக்கொப்பல்லர். அவர்கள் சொல்லளவன்றிச் செயலளவில் உவமையாதல் இல்லை. 
வீரபத்திரக்கடவுள் மாத்திரம் உனக்கிணையாவர். சிவபெருமான் ஈந்தருளிய சக்கராயுதம் உன் கழுத்திற் 
பதக்கமாயிற்றென்றால் வெற்றியும் உனதேயன்றோ! இனி வேறு போருமுண்டோ! உன்வலிமை இதுவானால் 
உனக்குத் தமையன்மார்களாய் நிற்கின்றவர்களுடைய பெருமையைப் பேசவல்லார் யாவர்! 
சிவபெருமான் மகிழும்படி யாகத்தைப் பலநாட் செய்து உங்களைப் போல வலிபெற்றுள்ளார் 
அவுணரிலொருவருமில்லை; உங்களை வெல்வார் யார்! எமக்கும் நீர் சுற்றத்தார்களே' என்று எல்லையில்லாத 
ஆசிகளைச் சொல்லிப் போயினார். 

    அவைகளையெல்லாம் அவுணர்கள் பார்த்து ஆர்ப்பரித்தார்கள். தேவர்கள் வேர்த்து, இறப்பவர்களைப்போல 
மெலிந்து  துன்பமுற்றவராய் அஞ்சி ஓடினார்கள். தாரகன் பிறிதொரு தேரின்மீதேறிச் சூரபன்மனுக் கெதிரிற் போயினான். 
அவன் அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்து மிகமகிழ்ந்து தாரகனைத் தழுவி, சேனைகளோடு அப்பாற்போய்,
 பூவுலகத்தைச் சக்கரவாளகிரிவரையும் பார்த்து, ஆகாயவழிக்கொண்டு சென்று, சூரியன் முதலாயினோர் 
ஆசீர்வதிக்கச் சுவர்க்கத்திற் போயினான்.

    சூரபன்மன் சுவர்க்கத்துக்குச் செல்லுதலும், ஒற்றுவர்களிற் சிலர் ஓடிப்போய், "சூரன் என்னும் 
வலியன் வந்தான்' என்று இந்திரனுக்குச் சொல்ல, அவன் அஞ்சிப் பெருமூச்சுவிட்டு அலந்து தேம்பி அறிவு 
சோர்ந்து, 'இங்குவந்த சூரபன்மனோடு போரில் எதிர்ப்பேனாயின் என்னுயிற்கிறுதியாம். இங்கிருப்பேனாயின், 
துன்பத்தினும் பழியினும் மூழ்குவேன்.  புல்லிய செயலாய் எனக்கு வந்த இத்தீங்கு என்செயலால் வந்ததன்றிப் 
பிறர் செயலால் வந்ததன்று. பற்றற்ற பெரியோர்கள் பிறர் செய்கின்றனவற்றையுந் தஞ்செயல் என்பர்கள். 
அறிஞர்கள் செல்வம் வருங்கால் மகிழ்ந்தும் அது போங்கால் வருந்தியும் பிரபஞ்சத்தில் அழுந்துவார்களோ! 
வருவது வரும். அதனை மறுக்க முடியுமோ! ஆதலால் இவனோடு பொருது உயிரை விடேன்; வருத்தமுமடையேன். 
துன்பமுற்றவர் பின்னொருகாற் பெருமகிழ்ச்சியுமடைவர். இதனை, தீமைசெய்கின்ற இவ்வவுணர்களிடத்திற் 
காண்பேன். வெட்கத்தையும் பகைவர்களுடைய சிரிப்பையும் கொள்ளேன். சூரபன்மனைக் காண்பேனாயினும், 
கறுவுகின்ற மனத்தையுடைய  அவன் என்னைச் சிறைசெய்வான்" என்று எண்ணி விரைந்தெழுந்து இந்திராணியோடு 
குயிலுருக்கொண்டு ஆகாயத்திற் பறந்து போயினான். 

    அவுணர்கள் அவனைத்தேடிக் காணாராயினர். பொன்னுலக முழுதும் பொலிவிழந்தது. அவுணர்கள் 
தேவர்களைப் பிடித்து, அடித்துக் குற்றி அவர்களுடைய வஸ்திரங்களினாற் றோள்களைக் கட்டி, மிகவுந் 
துன்புறுத்தி, சூரனுக்குமுன் விடுத்தார்கள். தேவர்கள் அவனை வணங்கித் துதித்து, 'அரசனே நீ அவுணவமிசத்திற்
 பிறந்து, தவத்தைச் செய்து சிவனுடைய திருவருளைப் பெற்றுத் திக்குப்பாலகர்கள் முதல் எல்லாரையும் 
வென்றாய் என்றால், எளிய எங்களைத் துன்பப்படுத்துவதா உனக்கு நன்று. நீ ஒரு சிறிது சினஞ்செய்தால், 
யமனுமிருப்பானோ! மற்றைத் திக்குப்பாலகர்களும் இருப்பார்களோ! தேவர்கள் யாவரும் உய்வார்களோ! 
உலகம் இப்பொழுதேயழியுமே! இன்றுமுதல் எங்களுக்கு வழிபடுகடவுள் நீ; எங்களைப் பாதுகாக்கும் அரசனும் நீ; 
பற்றுள்ள உறவும் நீ; யாமெல்லோரும் உன்பணிகளை முறையிற் செய்வோம்." என்று சொல்லித் தோத்திரஞ் 
செய்தார்கள். அவர்களைச் சூரன் பார்த்து "நுஞ்செய்கை நன்று" என்று சிரித்து, கட்டிய கட்டுக்களை அவிழ்ப்பித்து,
"இனி நீர் நம்முடைய பணிகளைச் செய்துகொண்டிருக்குதிர்" என்று கூறி விடுத்தான். 

    அவுணர்கள் இந்திரனுடைய வளங்களெல்லாவற்றையும் கவர்ந்துகொண்டு சென்றார்கள். 
சூரன் அளவிடப்படாத மகிழ்ச்சிகொண்டு, தம்பியர்கள் பக்கங்களில் வர, மகலோகம், சனலோகம், தவலோகம் 
என்னும் மூன்றுலகங்களையும் அங்கங்குள்ள மார்க்கண்டேய முனிவர் முதலாயினார் புகழ நீங்கி, 
சத்தியவுலகத்திற் போயினான்.

    பிரமதேவர் சூரபன்மனுடைய வரவையறிந்து நடுக்கமுற்று, முனிவர்கள் தம்மைச் சூழ அவனையடைந்து, 
'நீடூழிகாலம் வாழுதி வாழுதி' என்று ஆசி கூறி, 'மகாராசனே நீ இங்கேவர யான் முன்னாளில் என்ன தவத்தைச் 
செய்தேனோவறியேன். அதனைச் சிவபெருமான் அன்றி வேறி யார் அறிந்தவர்! சிவபெருமானை நோக்கி
 அருந்தவத்தைச் செய்து இவ்வியல்பினவாகிய செல்வங்களெல்லாவற்றையும் பெற்றுள்ளாய்; பெரியவலிமையைக் 
கொண்டாய்; விட்டுணுவையும் தேவர்களையும் தம்பியாகிய தாரகனைக்கொண்டு வென்றாய்; உன்னையொப்பவர் 
உலகத்திலுளரோ! நீ  அன்பிற்சிறந்த என்மகனாகிய காசிபமுனிவனுடைய புத்திரனாதலால் யான் உன் பாட்டன்; 
உன் புகழ்களெல்லாம் என்புகழ்கள்; யான் பிறனன்று இது சத்தியம்" என்று பல உபசாரங்களைச் சொல்லி, 
தம்பிமார்களையடைந்து, அழியாத வில்லையும் தேரையும் தன்படையையும் தனித்தனி கொடுத்தார். 

    சூரபன்மன் அதனைப் பார்த்துப் பெருமகிழ்ச்சியினனாய் அன்புசெய்து, பிரமாவை அங்கே இருத்தி, 
வைகுண்டவுலகத்துக்குப் போய், அங்குள்ள விட்டுணுவானவர் வந்து "அழிவில்லாத வாழ்நாளோடு வாழ்வாய்" என்று பல 
ஆசிகளையும் இன்சொற்களையுஞ் சொல்ல மிகவும் மகிழ்ந்து, பரிசனங்களோடு அவ்வுலகமுழுதையும் பார்த்து, 
அவரை அங்கேயிருக்கும்படிவைத்து,சிவலோகத்துக்குப் போயினான்.

    அங்கே சூரன் பரிசனங்களை நீங்கித் தம்பியர்களோடும் சிவபெருமானுடைய திருக்கோயிற் 
புறங்கடைவாயிலினின்று, அக்கடவுளுடைய அருண்முறையை யறிந்த திருநந்திதேவர் உள்ளே விடுப்பச் சென்று, 
பார்வதி சமேதராய் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திவ்விய சந்நிதானத்திற்போய், அன்போடு வணங்கித் 
துதித்து நின்றான். சிவபெருமான் கருணைசெய்து, "இனி நீ ஏனை அண்டங்களிலுஞ் சென்று பார்த்து, 
ஆணையாலெண்டிசையும் புகழும்படி அரசு புரிந்திருப்பாய்" என்று அருளிச்செய்தார். 

    சூரன் அவருடைய திருவடித் தாமரைகளைத் துதித்து விடைபெற்றுக் கொண்டு புறத்துவந்து, 
சேனைகளைச் சேர்ந்து, அண்டகோளகையை அடைந்தான். அங்கே வைரவர்களாகிய உருத்திரர் 
அளவில்லாதோருளர். அவர்கள் சிவபெருமானுடைய திருவருளை உட்கொண்டு அப்பாலுள்ள 
அண்டத்துக்குச் செல்லும் வாயிலைக் காட்டி விடுக்க, சேனைகளோடு சூரபன்மன் சென்று, அங்கும் 
இவ்வண்டத்திற்போலவே பார்த்து, யாவரையும் வென்று, மற்றையண்டங்களினும் சிவகணங்களாயுள்ளோருடைய 
அருளினாற் போய், அங்குள்ள தேவர்களை வென்று, அவர்களுடைய வளங்களெல்லாவற்றையுங் கவர்ந்து, 
தன்மாட்டுள்ள அவுணர்களிற் பலரை அங்கே தன்னரசுரிமையை நடத்தும்படி வைத்து, தனக்கு உற்ற 
உறவினர்களாகிய அவுணர்களை அண்டங்கள்தோறும் அரசர்களாக வைத்து, துணைவர்களோடு மீண்டு 
இந்த அண்டப் பித்திகையில் வந்து, சுவர்க்கத்தை அடைந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            எதிர்கொள்படலம்.

    முன்னே தேவர்களால் வருத்தமுற்ற அசுரர்கள் சூரபன்மன் திக்கு விசயஞ் செய்துகொண்டு 
சுவர்க்கவுலகத்தை அடைந்தமையைக் கண்டு மகிழ்ந்து, களிப்பின் மூழ்கினார்கள். அச்சூரபன்மனுடைய 
வரவை அசுர ராசனாகிய அசுரேந்திரனுக்கு ஒற்றுவர் போய்ச்சொல்ல, அவன் களிப்பு மிகுந்து, 
சூரபன்மன் பெற்ற அளவில்லாத ஆக்கத்தையும் சிவபெருமானுடைய கருணையையும் மனத்திற்கொண்டு, 
சேனைகளோடு சுக்கிராசாரியரிடத்திற்போய், "நான் சூரபன்மனைக் காணும்படி செல்லுவேன். நீர் 
முன்னே சென்று நம்முடைய முறையையுஞ் செயல்களையும் அவனுக்குச் சொல்லுதிர்" என்று அனுப்பினான். 
அவர் விமானத்திலேறிக்கொண்டு முன்னே போயினார். அசுர ராசன் தன்கிளைஞர்களோடு அவருக்குப் 
பின்னே போயினான். சுக்கிராசாரியர் விமானத்தில் வரும்போது, சூரபன்மன் அவரைத் தூரத்திலே 
கண்டு எதிர்கொண்டு, அஞ்சலிசெய்தான். ஆசாரியர் மகிழ்ச்சியோடு நின்று, 'உனக்குச் செல்வமும் 
வெற்றியும் மேன்மேலும் விருத்தியாகுக" என ஆசீர்வதித்தார். 

    சூரனுக்குப் பக்கத்தில் வந்த சிங்கன் தாரகன் என்னும் இருவரும் அவரை வணங்கித் துதித்தார்கள். 
ஆசாரியர் அவர்க்கும் ஏற்றவாறு ஆசிகளைச் சொல்லி,சூரபன்மனை நோக்கி, அசுர ராசனுடைய வரவைக்காட்டி, 
''உனக்கு நாம் அறிவுறுத்துகின்ற ஓர் வார்த்தையுளது. அதனைக் கேள். இவன் காசிபமுனிவனுக்கு மனைவியாகிய 
உன்னுடைய தாயைப் பெற்றவன்; நுண்ணிய கேள்வியையுடையான்; அளவில்லாத அசுரர்களைப் பாதுகாத்தவன்; 
எங்களுக்கு ஓர் துணையென்னுந் தன்மையான்; இங்குள்ள இந்திரன் பலநாள் யுத்தஞ்செய்து வெற்றி கொண்டமையால் 
மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப்போல மாழ்கியிருந்தான் . விதைத்த பயிரினால் வரும்விளைவை எதிர்பார்த்துக் 
கொண்டிருக்கும் தரித்திரனைப்போலத் தன் சிறுமை நீங்கும்படி உன்னுடைய ஆக்கத்தையே நாடோறும் எதிர்பார்த்துக் 
கொண்டிருந்தான். 

    நீ யாகஞ் செய்ததையும் சிவபெருமான் உனக்குக்கொடுத்த வரங்களையுஞ் சொல்லக்கேட்டு உவந்து, துன்பத்தை 
ஒழிந்தான். இவனுடைய தோள்கள் இப்போது பூரித்தன. நீ சிவபெருமானிடத்திற் பெற்ற வரத்தோடு திக்குவிசயஞ் செய்து 
கொண்டு இங்கே வரும் மேன்மையைக் கேட்டு உன்னைக் காண வருகின்றான்"  என்று சொன்னார். சூரபன்மன் 
இவைகளைக்கேட்டு உவகையால் நிறைந்த மனத்தினனாய் நின்றான். அசுரராசன் தன்கிளைகளோடு  வந்து
சூரபன்மனைத் தொழுது துதித்து, பிரிந்து போய உயிரைப் பெற்ற உடல் போலாயினான். சூரன் அவனைப்பார்த்து,
 "நீ  சந்தோஷத்தோடிருக்கின்றாயா" என்று வினாவினான். அவன் "நுங்குலத்தலைமை விளங்கும்படி உதித்த 
நீ யிருக்கும்போது நம்மாட்டுத் தீயன அடையுமோ, சிறுமைகள் வருமோ" என்று உபசாரவார்த்தைகளைச் சொல்லிச் 
சூரனுக்குப் பக்கத்திற் போயினான். சூரன் அசுரசேனைகள் சூழ வெற்றியோடு விரைந்து பூமியில் மீண்டான்.

    பிரமாவும் இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் "சூரபன்மன் மண்ணுலகத்தினில் வந்தான்" 
என்னுஞ் சொல்லைக்கேட்டு, துண்ணென வந்து, விட்டுணு நித்திரைசெய்யும் பாற்கடலிற் புகுந்து, அவரை அணுகி 
நின்று கைகூப்பி வணங்கி, தாங்கள் சூரபன்மனால் அடைந்த சிறுமைகளெல்லாவற்றையும் சொல்லி, 
"இனிமேல் யாங்கள் செய்கின்றதென் கொல்? சொல்லும்" என்றார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளை விட்டுணு 
கேட்டு, "புன்றொழிலையுடைய தக்கன் செய்த யாகத்திற் புகுந்த தீமையினால் இது நமக்கு வந்தது. இதனை 
விலக்குவார் யார்!  இனிச் செய்வதொன்றை நாம் சொல்லுகின்றோம். கேளுங்கள். சூரபன்மன் சிவபெருமானிடத்தில் 
வரம் பெற்றுள்ளான். அண்டங்கள் எவற்றையும் வென்றான். ஆதலால் அவன் நம்மால் வெல்லுந் திறத்தனல்லன். 
நாம் அவனைப் போய்க் கண்டுவருவோம். இதுவே காரியம்' என்றார். 

    பிரமாமுதலிய தேவர்களும் முனிவர்களும் "இதுவே செய்யத்தகுவது' என்று இசைந்தார்கள். விட்டுணு 
சேஷ சயனத்தை நீங்கி அவர்களோடு சூரபன்மனைக் காணும்படி வந்தார். அவர்கள் எல்லாரும் சூரனுக் கெதிரேபோய் 
நின்று ஆசிர்வதித்துத் துதித்தார்கள். சூரன் அவர்களுட் பதினொருகோடி யுருத்திரர்கள் ஒருங்கு நிற்பக்கண்டு, 
"சிவபெருமானைப்போல அமைந்த வடிவத்தினராய்த் தொகையான் மிகுந்த இவர் யாவர்" என்று வினாவ, 
விட்டுணு சொல்வாராயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            உருத்திரர் கேள்விப்படலம்.

    "இராசாதிராசனே, இவர்களுடைய வரலாற்றைச் சொல்வேன் கேள்: பிரமன் முன்னொரு கற்பகாலத்தில் 
மூவுலகங்களையும் உயிர்களையும் படைத்து அதனால் அகந்தை கொண்டு, தன்னையும் பரம் என்றுன்னிச் 
சிவபெருமானை மறந்து அதன்மேலும் படைத்தான். சராசரங்கள் அவன் முன்படைத்த வளவினன்றிப் 
பெருகாவாயின. அதனைக் கண்டு, 'நான்செய்த குறை யென்னை' என்று நோக்கி, 'எம்மை முன்னாளிலே 
பெற்றருளிய பஞ்சகிருத்திய முதல்வராகிய சிவபெருமானை அயர்த்தேன் போலும். இனி அவரருளைப் 
பெற்றாலன்றி இந்தப் படைத்தற்றொழில் கைகூடாது' என்று எண்ணி, அளவில்லாத காலம் சிவபெருமானை 
நோக்கித் தவஞ்செய்தான். சிவபெருமான் அவனிடத்து எழுந்தருளி வந்திலர். அவன் அதனை நினைத்து, 
'தீவினையேன் முன்பு பரமபிதாவாகிய சிவபெருமான் எங்ஙனம் வெளிப் பட்டருளுவர்' என்று ஏழைகள்போல் 
ஏங்கித் துன்பமுற்றுப் பெருமூச்சு விட்டழுதான். அவன் வேறென்செய்வான்! அப்பொழுது, அவன் கண்ணீர் விழவிழப் 
பேய்களாய் மிக எழுந்து நெருங்கிற்று. பிரமன் அப்பேய்களைக் காணுதலும், இடருழப்ப வீழ்ந்து, இறந்தனன்போலச் 
சோர்ந்தான். 

    உயிர்க்குயிராகிய சிவபெருமான் உணர்வைக் கொடுத்து, அவன் கனவில் வந்து, 'மைந்தனே இனி 
வருந்தாதே, எழுக. நீ உன்னைப் பரம்பொருளென்று மதித்து எம்மை மறந்தாய். அதனால் உனக்குச் சிருட்டித் தொழில் 
கைகூடிற்றில்லை. விரைவில் அது முடியும்படி நம்முடைய பதத்திலுள்ள உருத்திரரை உன்னிடத் தனுப்புவோம்' 
என்று அருளிச்செய்தார்.  உடனே பிரமன் கனாவிற்கண்ட அற்புதத்தோடெழுந்து, செம்மையாகிய நெறியைப் 
பொருந்தி,மனத்திற் றெளிவடைந்து, அக்கனாவை நினைத்தலும், சிவபெருமானுடைய திருவருளினாற் 
 பதினொரு உருத்திரர்கள் அவனுடைய நெற்றியினின்றும் வெளிப்பட்டு நின்றார்கள். அவர்களைப் பிரமன் பார்த்து, 
'நீர் நமது நெற்றித்தலத்தில் வந்த காரணம் என்னை'  என்று வினாவ, 'உன் படைப்புத்தொழில் கைகூடும்படி 
சிவபெருமான் எங்களை விடுத்தருளினார் ஆதலினால் வந்தோம்' என்று அவர்கள் கூறினார்கள் அதுகேட்ட 
பிரமன் 'என்பால் அன்போடு வந்த நீங்கள் விரைவில் உயிர்களைப் படைக்குதிர்' என்று கூற, அவர்கள் 
தம்மைப்போலப் பதினோரு  கோடி யுருத்திரர் கூட்டத்தைத் தந்தார்கள்.

     பிரமன் அதனைப் பார்த்து, 'உயிர்களை இருவினைக்கீடாகப் படைப்பதன்றி, நீங்கள் இவ்வாறு 
படைத்தல் நெறியல்ல' என்னலும், பதினோருருத்திரரும் 'நீ உயிர்களை முன்போலப் படைத்துக்கொண்டிருப்பாய், 
நாம் இப்பொழுதே எமது பதத்திற் போவோம்' என்று கூறி, பிரமன் யாவையும் படைக்கும்படி செய்து, தாம் படைத்த 
பதினொருகோடி யுருத்திரர்களையும் 'தேவர்களோடு இருக்குதிர்' என்று சொல்லி, சிவபெருமான் ஆதிகாலத்திலே 
தமக்குக் கொடுத்தருளிய புவனத்தையடைந்தார்கள். அவர்கள்  உண்டாக்கவந்த பவர் முதலிய பதினொருகோடி
 யுருத்திரராயுள்ளார் இவர்கள்.  இவர்கள் சிவபெருமானுடைய திருவருளினால் தேவர்குழுவோடு சேர்ந்துற்றார்" என்று 
விட்டுணு கூறினார். சூரபன்மன் அவர்களுடைய வரலாற்றைக் கேட்டு வியந்தான். 

            திருச்சிற்றம்பலம்.

            நகர்செய்படலம். 

     அதன்பின் சூரபன்மன் ஆண்டுள்ள தெய்வத்தச்சனை நோக்கி "நாம் வசித்தற்கேற்ற 
அழகிற் சிறந்த ஓர் நகரத்தை விரைவிற் செய்குதி" என்றான். அவன் நன்றென்று வணங்கி, "உங்களுக்காகச் 
செய்யும் நகரத்துக்கு எல்லை சொல்லுதி' என்ன, சுக்கிராசாரியர் அவ்வெல்லையைக் கூறினார். தெய்வத்தச்சன் 
அவ்வெல்லையைக் கேட்டறிந்து, தென்சமுத்திரத்தையடைந்து, சூரபன்மனுடைய நகரம் எண்பதினாயிர யோசனை 
விரிவுடையதாகக் கோலி, மலைகளினால் அதனைத் தூர்த்து, பாசறை கொண்டு சமமாக நிலம்படுத்து, 
செம்பொன்னால் மதிலையும் மதிலுறுப்புக்களையும் நான்கு வாயில்களையும் நான்குவாயில்களிலும் நான்கு     
கோபுரங்களையும் செய்து ஒவ்வொன்று நூறு யோசனையுடையனவாகப் பற்பல வீதிகளையும், மூன்று 
மதில்களையும், அளவிறந்த பொன்மாடங்களையும், அளவிறந்த நடன சாலைகளையும், மாளிகைகள் தோறும் 
தெற்றிகள்  மண்டபங்கள்  முன்றில்கள் கோபுரங்கள் செய்குன்றங்கள் சூளிகைகள் அரங்குகள் மன்றங்கள் 
மேன்மாடங்கள் சாளரங்கள் என்னுமிவைகளையும், சோலைகளையும், வாவிகளையும் தனித்தனி உண்டாக்கி, 
அதன் நடுவே பதினாயிர யோசனை யுடையதாகிய ஒரு மதிலைச் செய்து, அதனடுவே சூரபன்மன் இருத்தற்காக
 ஒரு கோயிலை அழகுறவியற்றினான். 

    கச ரத துரகங்கள் செல்லுதற்குரிய தோரணவாயில்களையும், கச ரத துரக பதாதிகளாகிய நால்வகைச் 
சேனைகளும் தங்குதற்குரிய இடங்களையும், அசுரத்தலைவர்களும் பிறருமிருக்கு மிடங்களையும், அரம்பையர்கள் 
பாடலாடல்கள் செய்யுமண்டபங்களையும், மயில் புறா முதலிய பக்ஷிசாதிகளும் கருங்குரங்கு மான்முதலிய 
மிருகசாதிகளும் இருக்கு மண்டபங்களையும், வேதாத்தியயன மண்டபங்களையும், யாகமண்டபங்களையும்,
 மந்திரிகள் இருக்கு மண்டபங்களையும், இந்திரன் முதலாயினோரிருக்கு மண்டபங்களையும், பெண்களிருக்கு 
மண்டபங்களையும், சூரன் அரசிருக்கும் அத்தாணி மண்டபத்தையும், பலவகைத் திரவியங்களிருக்கு 
மண்டபங்களையும், சிவபெருமான் கொடுத்தருளிய படைக்கலங்களிருக்கு மண்டபங்களையும், அன்ன 
மண்டபங்களையும், கஸ்தூரி முதலாகிய வாசனைத் திரவியங்களும் வெற்றிலைபாக்கு முதலாயினவும் 
இருக்கு மண்டபங்களையும், பலபெண்கள் இருக்கு மண்டபங்களையும், ஊசலாடு மண்டபங்களையும், நவரத்தின 
மண்டபங்களையும், சந்திரகாந்த மண்டபங்களையும், அரசருக்கேற்ற பிறவற்றையும் செய்து, சூரபன்மனும் 
அவனுடைய பட்டத்துத் தேவியும் இருத்தற்கு ஒருறையுளையும் அதனைச் சூழ அவன் மனைவியர்களாகிய 
மற்றைப்பெண்கள் இருத்தற்குரிய தானங்களையும், இவைகளுக்கருகில் வாவி ஓடை முதலிய நீர்நிலைகளையும், 
சோலைகளையும், செய்குன்றுகளையும், இவைபோன்ற பிறவற்றையும் இயற்றினான்.

    சமுத்திரம் அகழியாக அதன் மத்தியிலிருக்கும் இந்நகரத்திலுள்ள கோயிலின் ஒளியினாற் பொன்னுலகமும் 
பொலிவுகுன்றியது. தனக்கு நிகரில்லாத சூரபன்மன் வெற்றியும் பெருந்தலைமையும் பொருந்த இருத்தலால் 
அந்நகரத்திற்கு "வீரமகேந்திரபுரம்" என்று ஒர் பெயரைத் தேவத்தச்சன் சூட்டி, அதன் எண்டிசையினும் 
ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம் சுவேதபுரம் அவுணர்புரம் வாமபுரம் பதுமபுரம் என்னும் எட்டு 
நகரங்களையும் அழகுபெற வமைத்தான். இவ்வாறு வீரமகேந்திரத்தைச் செய்தபின்பு, வடசமுத்திரத்தினடுவில் 
எண்பதினாயிர யோசனை விசாலமுடையதாக ஆசுரம் என்றொரு நகரத்தைச் சிங்கமுகாசுரனுக்காகச் செய்தான். 

    மற்றைச் சமுத்திரங்கடோறும் தீவுகடோறும் சூரபன்மனுடைய சேனைகள் சுற்றங்களோடு 
வசித்தற்குப் பலநகரங்களை அமைத்தான். அதன்பின் விச்சுவகன்மன் மாணவகர்களோடு மேருமலையின் 
தென்பக்கத்திலுள்ள நாவலந்தீவில் ஏமகூடமலைக்கு ஒருசாரிற் போய், அவ்விடத்தில் தாரகாசுரனுக்காக 
மாயாபுரம் என்னும் ஓர் நகரத்தை அணிபெற உண்டாக்கி, சூரபன்மனுக்குச் சொன்னான். 
அவன் சேனைகளோடு தன்னகரத்துட் குடிபுகுந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            பட்டாபிடேகப்படலம்.

    சூரபன்மன் வீரமகேந்திரத்துட் புகுந்து, அந்நகரத்தை உற்றுப் பார்த்து, விச்சுவகன்மன் கற்ற 
வித்தையை வியந்து களித்து, தன்கோயிலை அடைந்தான். பிரமா முதலிய தேவர்கள் "அரசனுக்கு 
முடிசூட்டுதும்" என்று அதற்குவேண்டிய உபகரணங்களெல்லாவற்றையும் வருவித்தார்கள். கோயிலினுட் 
புகுந்த சூரபன்மன் ஓர் பீடத்திலிருந்து, தேவர்கள் சமுத்திர ஜலத்தாலாட்டச் சிறப்புடனாடி பீதாம்பரத்தை 
உடுத்து,புஷ்பத்தைச் சூடி,ஆபரணங்களைப் பூண்டு, தம்பிமார்கள் இருமருங்கும் வர, அவுணர்களும் 
அவர்க்கரசனாகிய அசுரேந்திரனும் தேவர்களும் வணங்கித் துதிக்க, இந்திரன் மனந்தளர, சுக்கிரனும் 
முனிவர்களும் புகழ, வந்து சிங்காசனத்திலேறினான். அப்பொழுது பிரமாவானவர் கிரீடத்தை எடுத்துச் 
சூட்டினார். அவுணர்கள் அதனைக்கண்டு, சூரனுடைய கால்களை வணங்கி அடங்காத மகிழ்ச்சியாற் 
சிறந்தார்கள். தேவர்களும் முனிவர்களும் அவனுடைய முடியின்மீது பொற்பூக்களை முறைமுறையாகத் 
தூவி வாழ்த்தினார்கள். 

    அதன்பின் தம்பியர்கள் பிரமாவையும் விட்டுணுவையும் "இருங்கள்"  என்று அநுமதிசெய்ய இருந்தார்கள். 
அத்தம்பியர்களுடைய ஏவலினால் இந்திரன் காளாஞ்சியை ஏந்தினான்; குபேரன் அடப்பையைத் தாங்கினான்; 
வாயு சாமரை வீசினான்; அவுணர்க்கரசனாகிய அசுரேந்திரன் உடைவாள் பிடித்தான்; சூரிய சந்திரர்கள் 
குடையை நிழற்றினார்: வருணனும் புத்திரர்களும் ஆலவட்டம் வீசினர் : கருடரும் கந்தருவரும் சித்தரும் 
இசைபாடினர்; யமனும் அக்கினியும் பிரம்பையேந்தி எவரையும் விலகும்படி கோபத்தோடு பார்த்து 
ஆரவாரித்துப் பத்தியாக நிறுத்தி, சூரனுடைய புகழ்களைத் துதித்து நின்றார்கள்; நிருதி கெண்டியை 
ஏந்தினான். தேவகுருவும் அசுரகுருவும் பல முனிவர்களும் பொற்கலத்திலுள்ள  கங்கா சலத்தை அறுகிற் றோய்த்துத் 
தூவி ஆசி கூறினார்கள். அரம்பை மேனகை முதலிய தெய்வப்பெண்கள் சுதியோடு பாடி யாடினார்கள். 
இவ்வாறே தேவர்களும் பிறரும் தத்தமக்குரிய ஏவல்களைத் தவறாது மேற்கொண்டு செய்ய
 சூரபன்மன் சிங்காசனத்தின்மீது ஐசுவரியத்தோடு வீற்றிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            அரசு செய்படலம்.

    பட்டாபிஷேகஞ் செய்யப் பெற்றுச் சிங்காசனத்தின் மீதிருக்கின்ற சூரபன்மன் விட்டுணுவை நோக்கி, 
"நீ என்பிதாவாகிய காசிப முனிவருக்குப் பாட்டன் ஆதலால் உன்னை நாம் அழைக்குந்தோறும் விரைந்து 
வருக" என்றும், பிரமாவை நோக்கி, "உன் புத்திரர்களோடு எந்நாளும் இங்குவந்து பஞ்சாங்கஞ் சொல்லிப் 
போகுக'' என்றும், சூரியனை நோக்கி, "நம்மூர் மதிலின் மேலாற் போதல் உனக்கரிது. ஆதலால் கீழ்மேற்றிசைகளிலுள்ள 
கோபுரவாயில்களின் வழியாற் புகுந்து ஆகாயத்திற் போய் எந்நாளும் இளங்கதிராய் எறித்துத் திரிதி" என்றும், 
சந்திரனை நோக்கி, "இனி வளர்தல் தேய்தல் சுருங்குதல் ஆகிய இவைகளை விடுத்துப் பூர்ணகலையோடு 
கீழ்மேற் கோபுரவாயிலாற் சஞ்சரிக்குதி" என்றும், அக்கினியை நோக்கி, "நம்மூரினுள்ளவர்கள் யாவர் 
நினைத்தாலும் அவரிடத்து வந்து அவர் பணிகளைச் செய்து யாவர் தீண்டினும் செந்தாமரை மலர்போலக் குளிருதி' 
என்றும், யமனை நோக்கி, ''உலகத்துயிர்களை நாளுங் கவர்வதுபோல நம்முடைய யானை குதிரைகளையும் 
அவுணர்களையும் கொல்வதைக் கனவிலுங் கருதாது அஞ்சித் திரிதி' என்றும், வாயுவைப் பார்த்து, "இந்நகரிலுள்ளார் 
யாவரும் அணிந்து நீக்கிய மாலையும் ஆபரணங்களும் சந்தனமு முதலாகிய குப்பைகளை அவ்வப்பொழுதில் நீக்குதி' 
என்றும், வருணனைப் பார்த்து, "பச்சைக் கருப்பூரம் கஸ்தூரி என்னுமிவற்றைச் சந்தனத்தோடளாவிப் பனிநீரிற் 
கலந்து காற்றுப் பெருக்கிய இடங்கடோறும் தெளிக்குதி" என்றும், இந்திரனை நோக்கித் தேவர்களோடும் 
திக்குப்பாலகர்களோடும் முனிவர்களோடும் வந்து நாம் சொல்லிய பணிகளைச் செய்து திரிவாய், இதிற்றவறாதே' 
என்றும் இவ்வாறே தன்பணியிற்றவறாதொழுகும்படி யாவர்க்கும் வெவ்வேறாகக் கட்டளையிட்டான். 
அவர்கள் அஞ்சி "உன்கட்டளைப்படி செய்வோம்'' என்று சொல்லி அவ்வாறொழுகினார்கள்.

    சூரபன்மன் இப்படி அரசுசெய்து, பின் மணஞ்செய்ய எண்ணி தெய்வத்தச்சன் மகளாகிய பதுமகோமளை 
என்பாளைச் சுக்கிரன் விதிப்படி மணஞ்செய்து கொடுக்க அவளோடு கலந்திருந்தான். அதன்பின் தேவர் கந்தருவர் 
முதலாகிய பலசாதிகளிலுமுள்ள அளவில்லாத பெண்களைக் காமக்கிழத்தியர்களாக மணஞ்செய்து, 
இன்பமனுபவித்தான். சிங்கமுகனுக்கு யமனுடைய மகளாகிய விபுதை என்பாளையும், தாரகனுக்கு நிருதியின் 
புதல்வியாகிய சவுரியையும் விவாகஞ்செய்து கொடுத்தான்.

    இவ்வாறு மணஞ்செய்து கொடுத்தபின், சூரபன்மன் இரண்டு தம்பியர்களையும் நோக்கி, 
"உங்களுக்காக விதித்த நகரங்களில் இரண்டு கோடி வெள்ளஞ் சேனைகளோடு போய் இருங்கள்" என்று அனுப்பி,
 சேனைத் தலைவர்களிற் பலரை நோக்கி, "நீங்கள் இரண்டு கோடிவெள்ளம் சேனைகளோடு தீவுகளிலும் 
சமுத்திரங்களிலும் செய்யப்பட்ட நகரங்களிற் போயிருக்குதிர்" என்று அனுப்பினான். எட்டுத்திசைகளினும், 
மேலுலகம் ஏழினும், கீழுலகம் ஏழினும், ஒழிந்த இடங்களினும் தன்னுடைய ஆணையை நடாத்தும்படி எல்லையில்லாத 
அசுரர்களை ஆறுகோடிவெள்ளஞ் சேனைகளோடு செல்ல ஏவினான். இவ்வாறு சூரபன்மனால் அனுப்பப்பட்ட 
அவுணசேனைகள் விண்ணுலகத்தினும், மண்ணுலகத்தினும், எண்டிசைகளினும், ஏழ்பிலங்களினும், 
மலைகளினும், ஆகாசத்தில் உதித்த அளவில்லாத நக்ஷத்திரங்கள்போல மலிந்தன. தன்சேனைகள் எங்கும் 
இடையறாது நெருங்குதலும், சூரபன்மன் தானிருக்கும் வீரமகேந்திரபுரியில் இலக்கம்வெள்ளம் அவுணர்களை 
மாளிகைகள்தோறும் முறையே இருக்க வைத்தான்: யானை குதிரை யாளி கரடி புலி பன்றி சிங்கம் மரை 
என்னும் முகங்களையுடைய அவுணத்தலைவர்கள் எண்மருக்கும் வீரமகேந்திரத்தின் எண்டிசையிலுமுள்ள 
எட்டுநகரங்களையுங் கொடுத்து, தனித்தனி பதினாயிரம் சேனைகளோடும் அதனைக் காக்க வைத்தான்; அந்நகரத்தைச் 
சூழ்ந்த மதிலிலுள்ள நான்கு வாயில்கடோறும், அந்நகரின் மதில்கடோறும், கோயில்கடோறும், காவல்செய்யும்படி 
எல்லையில்லாத வீரர்களை நிலையாக வைத்தான். இதன்பின் சூரபன்மன் துர்க்குணன், தருமகோபன், துன்முகன், சங்கபாலன், 
வக்கிரபாலன், மகிடன் முதலாயினோரை மந்திரிமார்களாகத் துணைக்கொண்டு, தேவர்கள் துதிக்க வீற்றிருந்து அரசுசெய்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            தேவரையேவல்கொள்படலம்.

    சூரபன்மன் இவ்வாறு அரசுசெய்யுங் காலத்தில், தேவர்களும் முனிவர்களும் அவனுடைய ஏவலின் 
வண்ணம் மகேந்திரபுரியிலும், சிங்கமுகனுடைய ஆசுரத்திலும், தாரகனுடைய மாயாபுரத்திலும், மற்றை 
அசுரர்களுடைய பல பதிகளிலும் சென்று, அவர் பணித்த பணிகளைச் செய்து ஊசல்போல உலைந்து திரிவர்.

    அக்காலத்தில் ஒருநாள், சூரபன்மன் இந்திரனையும் தேவர்களையும்  வலிந்தழைத்து,
 ''நீவிர் அவுணர்களுக்குத் தம்பியர் அவர்பணி நும்பணியன்றோ? கடலிலுள்ள மீன்களை நாடோறும் 
வாரிக்கொண்டுவந்து கொடுங்கள்'' என்று பணித்தான். தேவர்கள் அதனைக்கேட்டு மனநடுங்கிச்
சோர்ந்து வெள்கி, "கடலிலுள்ள மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து  தருக என்றான்; இதற்கினி 
நாஞ்செய்வதேது; பிரமா நந்தலையில் இப்படியும் விதித்தாரே" என்று இரங்கி மறுத்தற்கஞ்சி, 
'அவ்வாறே செய்வோம்' என்று அவனை வணங்கிப் போயினார்கள். போகின்றவழியில் இந்திரனும் 
தேவர்களும் பொருமி ஏங்கி, "நமக்கு வருகின்றது ஓர் பழியன்றோ!. அது வருவதற்கு முன் சாகின்றதே 
மிகவும் இனிதாகும். நமக்கதுவும் வாராது. ஐயோ வேகின்ற மனத்தையுடையேம் செய்வதென்னை' 
என்று புலம்பிக்  கடலையடைந்தார்கள். 

    இந்திரன் வருணனையழைத்து, ''சமுத்திரத்துக்குத் தலைவன் நீயன்றோ; உன்னினும் 
வலியருளரோ. திமிங்கில முதலிய மீன்களை இக்கரையில் ஏற்றுவாயாயின், எம்மைத்துயர்க் கடலின் 
கரையில் ஏற்றினவனாவாய்" என்றான். வருணன் அதனைக்கேட்டு, "தேவர்க்கரசனாகிய நீயும் 
வருந்துகின்றனையோ, இத்தொழிலையான் செய்வேன்'' என்ற கூறிக் கடலுட்புகுந்து, கைகளாலலைத்து, 
அங்குள்ள மீன்களையெல்லாம் கரையிலே மலைபோல உயர்த்தினான். கடற்கரையில் வருணன் உயர்த்திய
 மீன்களை இந்திரன் பார்த்து, தேவர்களை அழைத்து, ''இவற்றை எடுப்பது உங்கள் தொழில்" என்றான். 
அவர்கள் நடுங்கி மனம்பதைத்துக் கண்ணீர்விட்டு நாணி, யமன் உயிரைக் கவரச் சூரியன் உலர்த்திய 
சின்னை திமிங்கல முதலிய மீன்களைப் பாம்புகளாற் கட்டினர். அச்சுமைகளை இந்திரன் தேவர்களுக்கு எடுத்த, 
அவர்கள் கொண்டு சென்று இரங்குகின்றார்கள்: 

    "சூரபன்மனாகிய தீயவனால் முன்னமுந் துயர்க்கடலின் மூழ்கி வலியழிந்தோம். பழியாகிய 
இத்தொழிலையுஞ் செய்தோம். இன்னும் நமக்கு வருங் தொழிலேதோ அறியேம் ! சூரனுடைய பணியினால் 
நமக்கு இன்று வருகின்றது பழிமொழியே. அஃது நம்முயிரை ஈர்கின்றது. விதியே நமக்கு இதுவும் தீர்கின்ற 
காலமுண்டா நீ சொல்லுவாய். பூவுலகில் வசிக்கும் மனுடரும் பாவமென்று நூலிற் சொல்லுகின்ற இத்தொழிலை 
எவர் செய்கின்றார். இது எமக்கோ வந்தெய்துவது! தேவகதியினும் நரகம் சிறப்புடைத்து. செய்யத்தகுவனவற்றை 
உணராத அசுரர்களினும் மனுடர்களினுந் தாழ்வாகிய வலைஞர் தொழிலைச் செய்தோம். இந்த விண்ணுலக 
வாழ்வை விரும்பி யாஞ்செய்த மிக்கதவமும் வினையாய் விளைந்ததே. 

    வேதா சாரத்தை விலக்கினோம். ஞானநெறிக்குப் புறம்பானோம். தீயவனாகிய சூரன் கோபத்தினாற் 
சொல்லுகின்ற இழிந்த செயல்களைச் செய்வோமாயின், எம்மினும் உயர்ந்தவர் எவர்! 'ஐந்தரு நீழலில் 
இன்புற்றிருக்கும் தேவர்கள்' என்று மதிக்குந் தகையேமாகிய யாம் எவர்களும் நகைக்கும்படி இழிவோடு 
மீன்சுமந்து அசுரர்களுக்கு முன் செல்வதினும், சாதல் மிக நன்று நன்று!" என்று இவ்வாறு தேவர்கள் சொல்லிப் 
புலம்பிக்கொண்டு சூரனுடைய நகரில் வந்தார்கள். 

    அவுணர்கள் அதனைப் பார்த்து, 'இவர் சமுத்திரத்தைக் கலக்கி இதோ சில மீன்களைத் தருகின்றார்' என்பாரும்,
"சூரியன் முன்னுண்ட வெறுங் கோதையோ எமக்குக் கொணர்கின்றார்'' என்பாரும், "கடலிலுள்ள மீனைச் 
சுமந்துகொண்டு வருகின்றார் இவர்க்குச் சிறிதும் நாணமில்லையோ" என்பாரும், "தீங்குசெய்தால் யாராயினும் 
செய்யாததேது' என்பாரும், 'இவர்கள் ஊமைகள் போல்வாரோ? ஒன்றும் பேசுகின்றிலர்' என்பாரும், 'பரதவர்களே 
செய்கின்ற இந்த இழிதொழிலும் இவர்க்கு வருமோ?" என்பாரும், "நாம் சிந்திப்பதென்ன இது விதியின் செயல்" என்பாரும், 
"வேதாசாரத்தை விட்டு நமக்குத் தொண்டு செய்யும் பேதைத் தொழிலையே கடைப்பிடித்தார்" என்பாரும், 
"வடுப்படாத நம்முடைய குலத்தை இவர் மிக வருத்தினார் இன்னும் என்னபாடு தான் படார்" என்பாரும் ஆயினார். 

    இவ்வாறு அவுணர்கள் பலருஞ் சொல்ல மனம்நொந்து புலம்புந் தேவர்கள் இந்திரனை முற்கொண்டு 
சூரனுடைய வாயிலை வந்தடைய, வாயிலாளர்கள் சூரனுடைய அனுமதிப்படி உள்ளே விடுத்தார்கள். தேவர்கள் 
மீன்களைக் கோயிலினுள்ளே சேர்த்தார்கள். சூரன் அதனைக்கண்டு களிப்புற்று, தேவர்காள், நாடோறும் 
மீன்களைக் கொண்டு வருகுதிர் என்று பணிக்க, அவர்கள் 'நன்று" என்று சொல்லிப் போய், எந்நாளும் 
இவ்விழி தொழிலைச் செய்து புலம்பித் துயர்க்கடலின் மூழ்கி, வைதிகாசாரத்தை இழந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            புதல்வரைப்பெறுபடலம். 

    சூரபன்மன் இப்படித் தேவர்களை ஏவல்கொண்டு அரசுபுரிந்து வருநாளில், அவன்செய்த தவத்தினாற் 
பதுமகோமளை என்னும் பட்டத்துத் தேவியினிடத்தில் ஓர் புதல்வன் பிறந்தான். அவனைச் சூரன் பார்த்து, 
தன் கிளைஞர்களுக்குச் செல்வங்களை வீசி மகிழ்ச்சியின் மிகுந்தான். இந்திரன் முதலாயினோர் 
துன்பமுற்றார்கள். அரம்பையர்களும் அசுரப்பெண்களும் அப்புதல்வனை ஆசிர்வதித்துத் தொட்டிலிலேற்றினர்.
 அவன் பிறைபோல வளர்ந்துவருநாளில், ஒருநாள் தொட்டிலிலே நித்திரை செய்யும்போது, அவனுடைய 
உடம்பிலே சூரியகிரணம் ஒரு நூழைவழியால் வந்து படுதலும் அவன் கோபித்துப் பார்த்து, தொட்டிலினின்றும் 
ஆகாயத்திற் பாய்ந்து, சூரியனைக் கையாற் பற்றிக்கொண்டு இறைப்பொழுதில் வந்து, தொட்டிலின் 
காலிற்கட்டி, முன்போல நித்திரை செய்தான். தேவர்கள் அதனைப்பார்த்து அச்சமுற்றார்கள். 

    சூரியன் ஆகாயத்திற் சஞ்சரித்தலின்றிப் பிழைபடுதலும், பிரமா அதனை நினைத்து, இந்திரன் முதலிய 
தேவர்களோடு சூரபன்மனிடத்தில் வந்து, ''மகாராஜனே, சூரியனை உன்புதல்வன் செய்த சிறையினின்றும் 
விடுவித்துத் தருதி' என்றார். சூரன் அதனைக்கேட்டு, "என்மகன் சூரியனைச் சிறைசெய்ததை யான் அறியேன். 
அவன் சிறைசெய்யும்படி சூரியன் செய்த குற்றம் யாது?'' என்றான். "உன் மகனுடைய முகத்திற் சூரியனுடைய 
வெய்யில் தீண்டியது. அதனால் அவனைப் பிடித்துச் சிறைசெய்தான்'' என்று பிரமதேவர் கூறினார். 

    சூரன் தன்புதல்வனுடைய வீரச்செயலைக்கேட்டு மகிழ்ந்து, "நீவிர் என்மகனை அடைந்து மிகவும் 
இனிய மொழிகளைக்கூறி அவன் விடுத்தபின் சூரியனை இங்கே கொண்டு வருதிர்" என்றான். பிரமா நன்றென்று 
விடைபெற்று, மேனகை முதலிய அரம்பையர்கள் பாடியாட்டுகின்ற பொற்றொட்டிலிற்கிடக்கும் புதல்வனிடத்தில்
 வந்து, அளவில்லாத ஆசிகளைச் சொல்லிப் புகழ்ந்து, முன்னிற்றலும் அவன் "நுமக்கு வேண்டுவது யாது சொல்லுதிர்' 
என்றான். பிரமா "  இந்தச் சூரியனுடைய சிறையை நீக்குதி' என்றார். புதல்வன் " உன்னுடைய படைக்கலத்தை 
எனக்குத் தருதியாயின் விடுவேன்' என்றான். அவர் தன் படையைக் கொடுக்க, அவன் சூரியனுடைய சிறையை 
விடுத்தான். பிரமா அப்புதல்வனைப் புகழ்ந்து மோகப்படையைக் கொடுத்தார். புதல்வன் சூரியனுக்கும் 
பிரமாவுக்கும் விடைகொடுத்தனுப்பினான்.

    சூரபன்மன் அவர்களால் அதனையறிந்து, அவ்விருவர்க்கும் விடைகொடுத்து, அந்த நல்லநாளில் 
தன்மகனுக்குப் பானுகோபன் என்று காரணப்பெயரிட்டான். பானுகோபன் அழகினால் மன்மதனையொத்தவனாய் 
வளர்ந்து விட்டுணுவோடு போர்செய்து அவரை வென்றான். சூரன், பானுகோபனைப் பெற்றபின்பு, 
அக்கினிமுகனையும், அதற்குப்பின் இரணியனையும், அதற்குப்பின் வச்சிரவாகுவையும் பதுமகோமளை பெற 
மகிழ்ந்தான். மற்றை மனைவியர்கள் மூவாயிரம் புதல்வர்களைப் பெற்றார்கள். மேற்சொல்லிய புதல்வர்க 
ளெல்லாரோடும் சூரபன்மன் மகேந்திரபுரியில் வீற்றிருந்தான்.

    சிங்கமுகனுக்கு விபுதை என்னும் பட்டத்துத் தேவியினிடத்தில் அதிசூரன் என்று ஒர்குமாரனும், 
மற்றை மனைவியர்களிடத்தில் நூறு புத்திரர்களும், மிகுந்த வலிமையுடையர்களாய்ப் பிறந்தார்கள். 
தாரகனுக்குச் சௌரி என்னும் பட்டத்துத் தேவியினிடத்தில் தபோபலத்தினால் ஓர் குமாரன்வந்து 
தோன்றி, குருவாகிய சுக்கிரனால் அசுரேந்திரன் என்று நாமகரணஞ் செய்யப்பெற்று, அழகிற் சிறந்தவனாய் 
வளர்ந்தான். அவன் சகலகலைகளினும் வல்லவனாயினும் தீங்குடைய ஓர்விஞ்சையையும் செய்யான்; 
பாதகங்களைப் புரியான்; பழியைப்பூணான்; நீதியையன்றி வேறெவற்றையும் நினையான்; 
வீரம்பேசித் தன்னோடெதிர்ப்பவர் உளராயின், அவர் கெடும்படி எதிர்த்து, தன் மார்பின்மேல் அவர் 
படைத்தழும்பை ஏற்க நினைக்குந் தகைமையான். கள்ளி அகிலைத் தந்தாற்போலத் தாரகன் இந்த 
நல்லபுத்திரனைத் தந்து மாயாபுரியில் அரசுசெய்திருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            வில்வலன் வாதாவிப் படலம்.

    சூரன் முதலிய மூவருக்குந் தங்கையாகிய அசமுகி என்று ஒருத்தி உளள். அவள் ஒரு புருஷனுக்கு 
மனையாள் என்னும் முறையில்லாதவள்; கற்பில்லாதவள்; தருமமில்லாதவள்; தேவர்களுடைய மனைவியர்களைத் 
தன் தமையன்மாருக்கு மனைவியர்களாகச் சேர்ப்பவள்; முனிவர்கள் செய்யும் யாகங்கள் கெடும்படி 
தீச்செயல்களைச் செய்பவள்; பாவமே வடிவானவள்; அசுரர் குலங்களை யெல்லாம் மாளச் செய்யும் 
தீவினைபோல எவ்விடத்திலும் எந்நாளும் உலாவுகின்றவள்; தன் சுற்றத்தாரை இகழுபவர்களைக் 
கொன்று தின்பவள்; அழகிற் சிறந்த ஆடவர்களைத் தேடி வலிந்து புணருகின்றவள். 

    இவ்வியல்புடைய அசமுகி ஒருநாள் துருவாச முனிவருடைய ஆச்சிரமத்தில் வந்து அம்முனிவரைப் 
பார்த்து,"இவன் செய்யுந் தவத்தை அழிப்பேன், அதுவன்றிப் புதல்வரையும் பெறுவேன்" என்று எண்ணி, 
அவருக்கெதிரே போயினாள். போதலும் துருவாசமுனிவர் அவளைப்பார்த்து, "பெண்ணே நீ தனித்து வந்த காரணம் 
என்னை? சொல்லுதி" என்ன, அவள் 'உம்மை மகிழ்வோடு சேர்ந்து புதல்வரைப் பெறும்படி வந்தேன்'' என்றாள். 
முனிவர் 'இவள் சூரனுடைய தங்கை' என்றறிந்து, "நான் உன்னைக் கூடுவேனாயின் என் தவமெல்லாம் அழியும், 
நீ இங்கே நிற்றல் பழி, நீதியுமல்ல" என்றார். முனிவர் இப்படிச் சொல்லுதலை அசமுகி கேட்டு, "நான் இனி 
உன்னைச் சேராது போகேன், தப்பிப்போம் நினைவை யொழி" என்று கூறி, அவரை வலாற்காரமாகத் தழுவி 
அதரபானஞ்செய்தாள். 

    அப்பொழுது அவளிடத்தில் வலிமை மிகுந்த இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களை 
அசமுகி நோக்கி, வருகவென்று மகிழ்ச்சியோடு தழுவி,"மைந்தர்காள், நீவிர் அசுரகுலத்தில் வந்தீர். 
சிறந்த தவத்தைச்செய்து வலியைப் பெறுகுதிர்" என்றாள். தந்தை தாயர்களின் வடிவாய் வந்த இருவரும் 
முறையே வில்வலன் வாதாவி என்னும் பெயரைப் பெற்று, தாயின் சொற்படி பிதாவாகிய துருவாசமுனிவருடைய 
பாதங்களை வணங்கி, அவர் "உமக்கு வேண்டிய தென்னை?' என்று கேட்க ''உம்முடைய தவம் முழுதையும் 
நாம் பெறும்படி அருள் செய்யும்" என்றார்கள். முனிவர் 'நான்செய்த தவம் முழுதையும் தரேன், வேறொரு
பொருள் என்னிடத்துள தாயின் அதனைக்கேளுங்கள் தருவேன்" என்றார். 

    புதல்வர்கள் கோபமுடையராய் "இப்பொழுதே இவனுடைய உயிரைக் கவர்வோம்' என்று 
விரைந்தெழுந்தார்கள். துருவாசமுனிவர் அவர்களுடைய செயலைப் பார்த்துக் கோபமுற்று, "நீவிர் 
நாடோறும் முனிவர்களுக்கே துன்பஞ் செய்யுங்கள். அதன்மேல் அகத்தியமுனிவர் உங்கள் உயிரைக் கவர்வார்" 
என்று சபித்து, "நம்மை இவர் கொல்வார்'' என்றெண்ணி மாயையினால் மறைந்து போயினார். வில்வலன் 
வாதாவி என்னுமிருவரும் தமது தந்தையைக் காணாதவராகி, தாயினிடத்து விடைபெற்றுக் கொண்டு 
அவ்விடத்தை நீங்கி, வேறொரு வனத்தையடைந்து, முனிவர்களைக் கொல்லுதலையே பொருளாகக்கொண்டு, 
பிரமதேவரை நோக்கி அக்கினியில் நின்று அளவிறந்த காலந் தவஞ்செய்தனர். செய்யவும் அவர் வந்திலர். 
அதுகண்டு பிறிதொன்று செய்யநினைத்து, வில்வலனானவன் தம்பியாகிய வாதாவியை வாளாற்றுணித்துக் 
கிழித்து, பிரமாவுடைய மந்திரத்தை உச்சரித்து, இரத்தத்தையுந் தசையையும் முறையே நெய்யும் அவியுமாக 
நெருப்பிற் சொரிந்து, ஒருயாகத்தைச் செய்தான். 

    அதுகண்டு பிரமதேவர் பூமியில் வந்து, "அருஞ்செயலைச் செய்வாய், "உனக்கு நாம் தரும் வரம் என்னை?"
என்று கேட்க, வில்வலனாகிய அவுணன் அவருடைய பாதங்களை வணங்கித் துதித்து, ''அக்கினியில் அவிப்பாகமாயிறந்த 
என்தம்பி, குறைவில்லாத வடிவத்தோடும் விரைந்தெழல்வேண்டும்" என்றான். என்னலும், " வாதாவி எழுக" என்று 
பிரமதேவர் சொல்ல உடனே அவன் ஆர்த்தெழுந்தான். அப்பொழுது வில்வலன் அதிசயித்து தீமையோடு 
ஒருசூழ்ச்சியை மனத்திலெண்ணி, பிரமாவைத் துதித்து " அடியேனுக்கு ஒரு வரந்தரல் வேண்டும்" என்று அதனை 
வேண்டுகின்றவனாய், "ஆட்டினுருவைக் கொண்ட வாதாவி என்னும்  என் தம்பி இன்னும் உடம்பு வெட்டுப்படுவானாயின், 
யான் 'தம்பியே எழுக' என்று சொல்ல முன்னை வடிவோடு தோன்றி என்முன் வரல்வேண்டும். இவ்வரமொன்றை அடியேன் 
பெறும்படி அருள்செய்க'' என்று பிரார்த்தித்தான். "அவ்வாறே பலகாலம் அது முடிக"  என்று பிரமதேவர் அருள் செய்து,
 ஆகாயவழிக்கொண்டு சென்றார்.

    வில்வலன் வாதாவியாகிய இருவரும் சூரன்முன் சென்று, " நாம் உன் மருகர், வேறல்ல" என்று சொல்லி, முனிவர்களைக் 
கொல்லுதற்குரிய வரத்தைப் பிரமாவினிடத்திற் பெற்றதையுஞ் சொன்னார்கள். சூரபன்மன் அவர்களை மகிழ்ந்து 
தழுவி, "மருகர்களே,இனிமையுடன் என்னோடிருங்கள்.'' என்று சொன்னான். அவர்களிருவரும் சிலநாள் அங்கிருந்து
 பின்பு நிலவுலகத்தில் வந்து, குடகநாட்டிலே, வளஞ்செறிந்த ஒரு காட்டிற் பொருந்திய நாற்சந்தியில் ஓராச்சிரமத்தைச் செய்து,
 எவர்களும் விரும்பும் எல்லாப் பொருள்களையும் வருவித்து வைத்துக்கொண்டு அங்கே இருந்தார்கள். 
அவ்வழியில்வரும் முனிவர்களுடைய உயிரைக் கவரும்படி நினைத்து, தம்பியாகிய வாதாவி ஆட்டுக் 
கடாவாய் நிற்ப,தமையனாகிய வில்வலன் முனிவர் வடிவங் கொண்டிருந்து, அங்கே வரும் முனிவர்களை 
விரைந்தெதிர்கொண்டு வணங்கி, "அடியேனுடைய ஆச்சிரமத்துக் கெழுந்தருளுக" என்று உபசாரத்தோடு 
அழைத்துக்கொண்டு சென்று, "சுவாமிகளுக்கு இன்றைக்கு இங்கே திருவமுது' என்று சொல்லி, உணவின் 
வகைகளை யெல்லாம் அப்பொழுதே சமைத்து, ஆடாய் நிற்கின்ற வாதாவியை வாளாற்றுணித்து, 
கறியாகத்தக்க ஊன்களை வகைப்பட அரிந்து, கறிகளாகச் சமைத்தபின், அம்முனிவர்கள் அவ்வூனை 
உண்ணும்படி செய்து, பின் வாதாவியாகிய தம்பியைக் கூவுவான். கூவியபொழுது ஆடாகிய அவன் உயிரோடுகூடிய 
உடம்பையுடையனாய், தன்னை உண்ட முனிவருடைய வயிற்றை வலியோடு கிழித்துக்கொண்டுவருவான். 
பின் இறக்கின்ற முனிவர்களுடைய தசைகளை அவரிருவரும் உண்டு, ஆடாகவும் முனிவனாகவும் பொருந்தி, 
முனிவர்கூட்டமெல்லாமிறக்கும்படி  நாடோறும் இதனையே செய்திருந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திரன்கரந்துறைபடலம்.


    இந்தப் பிரகாரம் இவ்வில்வலன் வாதாவியாகிய அசுரரும் பிறரும் முனிவர்களையுந் தேவர்களையும் 
வருத்த, சூரபன்மன் இந்திரஞாலத்தேரின் மீதேறி ஆயிரத்தெட்டண்டங்களினுஞ் சென்று, நாடோறும் அரசியலை 
நடாத்தியிருந்தான். ஒருநாட் பாதலத்திலிருப்பான்; ஒருநாள் திக்குக்களிலுலாவியிருப்பான்; ஒருநாள் 
விண்ணுலகங்கடோறுமிருப்பான்; ஒருநாட் சத்தியவுலகத்திலிருப்பான் ; ஒருநாள் வைகுண்டவுலகத்திலிருப்பான். 
சூரபன்மன் இவ்வாறு நாடோறும் எண்ணிறந்த உலகங்கடோறும் சென்று மாலைக் காலத்தில் விரைந்து மீளுவான். 
இவ்வாறு அரசு புரியுங்காலத்தில், மேலே தனக்கு வருங்கேட்டை அறியானாய், இந்திரனைச் சிறைசெய்து 
அவன் மனைவியாகிய அயிராணியைக் கவரும்படி நினைத்தான். நினைத்த சூரன், தன்னுடைய சேனைத் 
தலைவனொருவனை அழைத்து, "நீ இப்பொழுதே சென்று, இந்திரனைப் பிடித்துக்கொண்டுவந்து என்முன் 
விடுவாய்' என்று அனுப்பி, தன் கோயிலைக் காக்கின்றவர்களும் வாள் முதலிய படைக்கலங்களை ஏந்தினவர்களும் 
ஆகிய ஒன்பதுகோடி அசுரப்பெண்களை விரைந்தழைத்து, "நீங்கள் இந்திரன் மனைவியாகிய அயிராணியைப் 
பிடித்துக் கொண்டு வந்து தாருங்கள்'' என்று அனுப்பினான். 

    அவர்களெல்லாரும் கோபித்து ஊக்கத்தோடு விண்ணுலகத்திற் சென்றார்கள். செல்லுதலும், 
அதனைக் கண்ட தூதுவர்கள் விரைந்து சென்று இந்திரனை அடைந்து, ''அவுணர்களும் வீரத்தையுடைய பெண்களும் 
போர் செய்வாரைப் போல வந்தார்கள்; அவர்கள் கருத்தென்னையோ யாம் அதனை அறிந்திலோம்"  என்று 
இந்திரனறியும்படி கூறினார்கள். இந்திரன் அவர்களை விரைந்து அனுப்பி, அவுணர்களுடைய உபாயத்தை எண்ணி,
 தன் மனைவியோடு மாளிகையை அகன்று, மாயையினால் விரைந்து இப்பூமியிற் சென்றான். சூரபன்மன்விட 
விண்ணுலகத்துக்குச் சென்ற பெண்களும் வீரரும், இந்திரனிருக்கின்ற அமராவதி என்னும் நகரை அடைந்து, 
* ஆகரம் முதலிய இடங்களை ஆராய்வார்கள். 

* ஆகரம் - உறைவிடம்.

    இந்திரனைப் பிடித்துவரும்படி சென்ற வீரர்கள் அவனைத் தேடிக் காணாராயினார். இந்திராணியைப் 
பிடித்துவரும் படிசென்ற பெண்கள் அவளைத்தேடிக் காணாராயினார். அதனால் அவ்விரு பாலாரும் 
அறிவு சோர்ந்து, கவலைமிகுந்து, "நம்மரசன் இங்கே நம்மை அழைத்து ஏவிய பணியை முடியேமாயினேம்; 
இந்திரன் அயிராணியோடும் இவ்விடத்தை விட்டுப்போயினான்" என்று அவனுடைய நகரையெல்லாம் 
ஆராய்ந்தார்கள். நகரெங்குஞ் சுற்றிப்பார்த்துத் தேவர்களைப்பிடித்து, "இந்திரனைக் காட்டுக" என்று அடித்து, 
"இந்திராணி எவ்விடத்தாள்'' என்று வாய்கடோறும் இரத்தம் வடியும்படி குற்றினார்கள். அத்தண்டனையுற்ற 
தேவர்கள், "எங்களரசனாகிய இந்திரனும் அவன் மனைவியும் சென்றதை யாங்கள் அறியேம். 
எங்களை வருத்தன்மின். யாங்கள் துயருறுகின்றோம்" என்று அவ்வசுரர்களுக்கு அன்பு வரும்படி தளர்ந்து 
சொல்லினர். அசுரர்கள் அத்தேவர்களைவிட்டு, விண்ணுலகத்தை நீங்கி மகேந்திரபுரியை அடைந்து, 
சூரபன்மன் முன்சென்று "இந்திரனும் இந்திராணியும் விண்ணுலகத்தை நீங்கிப் புறத்தே போயினார்" என்று 
பழிபொருந்திய மனத்தினராய்க் கூறினார்கள். 

    சூரபன்மன் அதனைக்கேட்டு, அக்கினிபோலக் கோபித்து, தேடுதற்கரிய மணியை இழந்த நாகம் 
போலத் துன்புற்று, ஒற்றுவர்களிற் பலரை விரைந்தழைத்து, "இந்திரன் தன் மனைவியாகிய 
இந்திராணியோடிருக்குமிடத்தைத் தேடிப்பார்த்துவந்து சொல்லக்கடவீர்கள்" என்று தூண்டினான். 
ஒற்றுவர்கள் வேறுவேறாய் உலகமெங்குந் தேடிக் காணாது திரிவாராயினார். 
இனி விண்ணுலகத்தில் நிகழ்ச்சிகளைச் சொல்வாம்.

    இந்திரனானவன் மனைவியோடு நீங்க, விண்ணுலகம் சந்திரனும் நக்ஷத்திரங்களுமில்லாத 
இராக்காலம்போன்று சிறிதுஞ் சிறப்பின்றாய்ப் புல்லெனலாயது. வளங்களெல்லாம் அழிந்தன. துன்பம் மிகுந்தது. 
தேவர்களுடைய மனம் இன்பம் நீங்கி ஒடுங்கியது. அவ்வுலகமெங்கும் புலம்பலோசை எழுந்தது. 
எல்லாருடைய கண்களும் நீரைப்பொழிந்தன. பொன்னுலகம் உயிர்நீங்கிய உடலையொத்தது. 

    இவைகள் நிகழுதற்கு முன்னரே, இந்திரனுடைய தம்பியெனப்படும் உபேந்திரனாகிய விட்டுணுவானவர், 
விண்ணுலகத்தை நீங்கிப் பழைய வைகுண்ட பதத்தை அடைந்தார். இந்திரகுமாரனாகிய சயந்தன், தன் சிறிய
பிதாவாகிய அவரைக்காண எண்ணி வைகுண்டத்திற் சென்று சிலநாள் அங்கிருந்தான். இருக்கின்ற சயந்தன், 
இந்திரன் அயிராணியோடு மறைந்தோடியதையும், அவுணர்கள் சுவர்க்கத்தில் வந்து அவ்விருவரையுந் தேடி 
மீண்டபின் தேவர்கள் துன்பமுற்றிருந்த தன்மையும், வைகுண்டத்திலிருந்து அறிந்து, "பிதாவின் மெலிவைக் 
கண்டால், தங்குடித்தலைமைகளையெல்லாம் புதல்வர்கள் தாங்குதல் வழக்கமாம்; தருமமும் அதுவே ; 
என் பிதாவுமில்லை; யான் போய் என்னகரைக் காப்பேன்' என்று மனத்தில் நினைத்து, பொன்னுலகத்தில் வந்தான். 

    சயந்தன் பொன்னுலகத்தை அடைந்து, புலம்புகின்ற தேவர்களைக் கண்டு, தன்னுயிர்போலுந் 
தந்தை தாயர்களைக் காணானாய்த் துன்பக்கடலின் மூழ்கி, ஏங்கி இரங்கி, ஒருசெயலுமின்றிப் பித்தர் 
போலாயினான். அப்பொழுது, நாரதமுனிவர் அவன் மனத்தைத் தெளிவிக்க நினைத்து அங்கே செல்ல, 
அவன் நடுக்கத்தோடெழுந்து வணங்கி, ஆசனத்தை இட்டு அவரை அதிலிருக்கச்செய்து, பக்கத்தில் நின்று,
 "அடியேனைப் பெற்ற தந்தை தாயர்கள் சூரபன்மனுக்கஞ்சி ஒளித்தோடினர். அவர் சென்ற இடத்தை அறிந்திலேன். 
எங்களுக்கு இந்தத் தீமை எந்தக் காலம் நீங்கும். எம்பெருமானே சொல்லியருளுக." என்றான். 

    களிப்பை இழந்துநின்ற சயந்தன் இவ்வாறு கூற, நாரதமுனிவர் திருவருளாற் சிந்தித்தறிந்து, 
இரத்தினாசனத்தில் அவனை இருத்தி, பின்னர் இவைகளைச் சொல்லுவார்: "நன்மை தீமைகள் தாந்தாஞ் செய்த 
வினையினாலன்றிப் பிறராலே தத்தமக்கு வாரா. அமுதத்திற்கும் நஞ்சிற்கும் முறையே தித்திப்பும் கசப்பும் 
ஆகிய சுவைவேறுபாடுகளைக் கொடுத்தார் சிலருண்டோ? கற்றறிந்த பெரியோர் இன்பம் வந்தபொழுது 
அதனை இனிதென்று மகிழார்; துன்பம் வந்தபொழுது அதற்கு நடுங்கிச் சோரார்;' இன்பமுந் துன்பமும் 
இவ்வுடலுக்கே இயைந்தன' என்று பழவினையை ஆராய்வர். வறியவர் செல்வராவர்; செல்வர் பின் வறியராவர்; 
சிறியவர் உயர்ந்தோராவர்; உயர்ந்தவர் சிறியராவர்; இது முறை முறை மாறிமாறிவரும். இதனைப் 
பழையவினைப் பயனே யென்றறி. உலக வழக்கமுமிதுவே. செல்வமும் வறுமையும், துன்பமும் இன்பமும் 
என்னும் இவைகளெல்லாம் உயிர்களுக்கு என்றும் நிலையென்று கொள்ளும் பகுதியையுடையனவோ! 

    சந்திரனுடைய நிலாக்கற்றை தேய்தலையும் வளர்தலையும் நாடோறும் முறைமுறையே பொருந்தின. 
ஆதலினால், உங்களுடைய தாழ்வும் அவுணர்களுடைய உயர்வும் நிலைபெற்று நில்லா. இதனை 
மெய்யென் றெண்ணுதி. இந்நகரை நீங்கிச் சென்ற உன்பிதாவும் மாதாவும் தம்முருவை மறைத்துச் சென்று 
பூவுலகத்திலிருந்தார்போலும். சயந்தனே, அந்நாளில் நீ பிறத்தற்குமுன் தேவர்களுக்குத் துயர்புரிந்த 
கயமுகன் என்னும் அவுணனிறக்கும்படி உன்பிதா முயற்சி செய்தான். அதுபோல் இந்தக் கொடிய சூரனும் 
இறக்கும்படி இன்னும் முயல்வான்'' என்றிவைகள் பலவற்றையுஞ் சொல்லி, "இனிக் கொடிய சூரனும் இறப்பான்; 
உங்கள் துயரும் விரைவில் நீங்கும்; இதை நன்றாய்த் துணிதி' என்று நாரதமுனிவர் சயந்தனைத் தேற்றிச் சென்றார். 

    அவன்மனந் தெளிந்து வருந்திய தேவர்களைத் தெளிவித்து, நாடோறுஞ் சூரனுடைய ஏவல்களைச் செய்யும்படி 
அவர்களை ஏவி, விண்ணுலகத்திலிருந்தான். இனி, நிலவுலகத்திற்சென்ற இந்திரன் செய்த செயல்களைச் சொல்லுகின்றேன்.

     இந்திரன், ஐந்தரு நீழலிலிருந்தனுபவிக்குஞ் செல்வங்களை வெறுத்து, மனைவியோடு தக்ஷணதேயத்தில் 
* பன்னிரண்டு திருநாமங்களையுடைய சீர்காழியை அடைந்து, "இத்தலம் யாமிருத்தற்கு நன்று" என்று துன்ப நீங்கி 
இருந்தான். அதன்பின் "சிவபெருமானை மனமகிழ்வோடு எப்பொழுது அருச்சிப்போம்' என்றெண்ணி, 
அங்கே ஓர் திருநந்தனவனம் வைக்க நினைத்து, சந்தனம் அகில் முதலிய விருக்ஷங்களால் வேலி கோலி, 
சிறுசண்பகம் கோங்கு முதலாகிய தருக்களையும் மல்லிகை முல்லை செவ்வந்தி முதலாகிய புதல்களையும் 
பழுதறத் தெரிந்துவைத்து ஓர் நந்தனவனத்தை உண்டாக்க, அவைகள் மிகவும் மலர்ந்தன. இந்திரன் அம்மலர்களால் 
நாடோறும், சிவபெருமானுடைய திருவடிகளை அருச்சித்துக்கொண்டு, அங்கே மனைவியோடிருந்தான். 

*சீர்காழியின் பன்னிரண்டு திருநாமங்கள் -- பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், 
சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்பனவாம்.

    இருக்குநாளில், சூரபன்மன் விடுத்த ஒற்றுவர்கள் இந்திரனைப் பூவுலகமெங்குந் தேடிச்செல்ல, 
அவன் அதனை அறிந்து, மனைவியோடும் அங்கே மூங்கில்வடிவாய் மறைந்திருந்து தவஞ்செய்தான். 
ஒற்றுவர்கள் காணாராய்ப் போயினார்கள். அவுணர்களுடைய ஆணையினால், முகில்மழை பெய்யாதாக, 
தீப்பட்டாற்போல அத்திரு நந்தனவனம் வாடியது.  அதனை இந்திரன் அது கண்டு வருந்தி, பிறிதொரு செயலுமின்றி, 
பிரமவிட்டுணுக்களுந் தேடியறியாத சிவபெருமானைத் தியானித்திரங்கித் துதித்தான். அப்பொழுது, 'இந்திரனே 
நீ வைத்த நந்தனவனம் வாடிப்போயினவெனினும் அழியா; இந்த ஸ்தலத்திலே ஒரு ஆறு வரும்; வருந்தாதொழி'' 
என்று ஓரசரீரி வாக்கு ஆகாயத்திலெழுந்தது. அவ்வாக்கை இந்திரன் கேட்டு, "இது எம்பெருமானுடைய திருவருள்' 
என்று அஞ்சலி செய்து துதித்து, உரோமஞ் சிலிர்ப்ப, மனமகிழ, திட்பத்தோடிருந்தான். 
இனி,சீர்காழியில் ஒரு நதி வந்த வரலாற்றைச் சொல்வேன்.

            திருச்சிற்றம்பலம்.

            விந்தகிரிப்படலம்.

    இந்திரன் அசரீரி வாக்கைக் கேட்டு மனத்திட்பமுற்றிருக்க, சிவபெருமானுடைய திருவருளால், 
பின்னிகழ்வனவற்றை முன்னறிகின்ற நாரத மகாமுனிவர் விந்தகிரிக்கு முன்னே சென்று பல 
ஆசிகளைச் சொன்னார்.  சொல்லுதலும், தெய்வவடிவத்தைக் கொண்ட அம்மலை தொழுது,
" எம்பெருமானே, நீவிர் எழுந்தருளியது பேரதிசயம்." என்று உபசார வசனங்களைக்கூற, அந்நாரதமுனிவர், 
தம்முடைய வசனங்களால் அம்மலை ஏவப்படும்வண்ணம் இதனைச் சொல்லுவார்: "மேருமலையானது, 
தான் சிவபெருமானுடைய வில்லாகிய வலியினாலும், உலகங்களையெல்லாம் பெற்ற உமாதேவியார் 
தன்மரபிலே அன்போடுவந்து திருவவதாரஞ் செய்தமையினாலும், மலைகளுக்கெல்லாம் அரசாயிருத்தலினாலும், 
சூரியனைத் தொடும்படி ஆகாயத்தில் வளர்ந்திருத்தலினாலும், சங்காரகாலமளவும் நின்று இப் பூவுலகமுழுதையுங் 
காத்தலினாலும், ஆயிரங் கொடுமுடிகளையுடைமையினாலும், சிவபெருமானெழுந்தருளியிருக்கின்ற 
திருக்கைலாசமலை தன்னொரு பக்கத்திலே பொருந்தியிருத்தலினாலும், சூரபன்மனால் அழியாமையினாலும், 
சூரியனும் சந்திரனும் மற்றை ஏழுகிரகங்களும் நக்ஷத்திரங்களுமாகிய எல்லாருஞ் சூழும்படி நிற்கின்ற 
பழமையினாலும், தேவர்கள் குடிகொண்டிருத்தலினாலும், பொன்னைக் கொண்டுயர்ந்திருத்தலினாலும், 
பலமலைகள் தன்னைச் சூழ்ந்திருத்தலினாலும் தனக்கொப்பில்லை என்று செருக்குற்றது. 

    பரந்து ஆகாயத்தில் நிமிர்ந்த மேருமலை, தன் பெருந்தகைமையை மதிக்குந் தன்மையை நீ 
அறிந்திலை போலும்! யாம் அந்தச் செயல்களையெல்லாம் விரைந்து உனக்குச் சொல்லும் வண்ணம் வந்தேம்' 
என்று கூறினார். தெய்வ வடிவாய் வந்த விந்தகிரி இதனைக்கேட்டு, வீரத்தைப் பொருந்தி,பெருமூச்சுவிட்டு, 
"இது நன்று' என்று சிரித்துச்சொல்லும்: "இல்லாகிய இறுமாப்பு நீங்கப் பலருமிகழ, பெண்களைப் போல 
நாணமுற்று வில்லாய் வளைந்தது மேன்மையோ? எந்நாளும் எல்லாவற்றையும் பெற்ற உமாதேவியார், 
இமயமலையரசன் செய்த தவத்தால் அவனிடத்தில் வந்திருந்தாரன்றி, அவன் மகளாய்ப் பிறந்தனரோ? 
மேருவானவன் 'பூமியைத் தாங்குவேன்' என்று உயர்ந்தான். எவ்வுலகையுந் தாங்கியுற்றன இன்னும் பலவுள. 
அவற்றையுந் தாங்குவது சிவசத்தியே. சூரியன் முதலியோர் தன்னைச் சூழ்ந்தார்களல்லது நாடோறும் 
என்னைச் சூழ்ந்திலரோ, ஏழுதீவுகளிலுமுள்ள கற்களைச் சூழ்ந்திலரோ? அம்மேரு தனக்குப் பல கொடுமுடிகள் 
உள்ளன என்று நினைக்குமோ! 

    கள்ளிகளின் அளவிறந்த தலைகளைப் பார்த்தால், நான்கு தலைகளையுடைய பிரமதேவர் 
அவற்றை ஒப்பாகாரோ! கொடிய சூரபன்மன் 'இது கல்' என்று அம்மேருவைத் தாக்காமல் விட்டான். அவன், 
சூரபன்மனுக்கஞ்சியிருக்கின்ற சக்கரப்படையையுடைய விட்டுணுவிலும் வலியனோ!  மேருவானவன் 
'நாம் பொன்மயமாகிய உருவத்தைப் பொருந்தினோம்' என்று நினைத்தானோ ? அவன் மண்ணாற்செய்து 
அலங்கரித்த பாவையினழகை எண்ணினானில்லை. தன்னிடத்திலிருக்குந் தேவர்கள் பலரும் 
என்னிடத்திலிராமல் இகழ்ந்தார்களோ? சிவபெருமான் வீற்றிருக்கின்ற கைலாசமலைக்கு அருகிலில்லாதது 
எந்தமலை? ஆதிசேஷன் தன்னைவந்து மறைத்தநாளில் வாயுவானவன் கோபித்துத் தன்னுடைய மூன்று 
கொடுமுடிகளையும் பறித்து வீசியதை யான் அறிந்திலேனோ? வீரபத்திரக்கடவுளாகிய 
சரபப்பக்ஷி விட்டுணுவாகிய நரசிங்கத்தின் முன்னே தன்னுரு அண்ட மெல்லாம் பொருந்த வளர்ந்தபொழுது, 
ஒருபருக்கைக்கற்போல அதன்காலின்கீழ்ப் பொருந்தினான். இதனை அம்மேரு நினைத்திலனோ ! 
வீரபத்திரக்கடவுள் சரபப்பக்ஷி வடிவங் கொண்டபொழுது, அதன் சிறைக்காற்றினால் மின் மினிபோலத் 
திரிந்தான். அதனை அறிந்திலனோ! 

    விநாயகக்கடவுள் கயமுகாசுரன்மீது முறித்தெறிந்த கொம்பினாலே, பாரத சரித்திரமெல்லாம் 
அவன்மேல் எழுதப்படும் என்பது தவறுமோ! மேருவானவன் தானோர்மலையன்றி விட்டுணுவோ அல்லன்; 
பிரமாவோ அல்லன்; இந்திரனோ அல்லன்; அவன் தன்னை மேலென்றெண்ணியது ஏனோ?" என்று 
மேருமலையை இழித்துப்பேசி, "முனிவரே, அந்த மேருமலை தன்னை வியக்கின்ற செருக்கை யான் நீக்குவேன், 
பார்ப்பீராக" என்று, விந்தமலை பழைய வடிவையொழித்து, கோடிவிட்டுணுக்கள் எல்லையில்லாத மாயாசரீரங்களைக்
கொண்டு திரண்டு நிமிர்ந்தாற்போல ஓர் வித்தையினால் அகன்று ஆகாயத்திலுயர்ந்து, சத்தியவுலகம் வரையும் 
நிமிர்ந்து, இமயமலைவரையு மகன்று, நெருக்கியது. 

    விந்தகிரி இந்தப்பிரகாரம் அகன்று மேலே உயர்ந்து சென்று ஆகாய வழியைத் தடைசெய்ய,ஆதித்தன் முதலிய 
ஒன்பது கிரகங்களும் நக்ஷத்திரங்களும் பிறரும் பார்த்து மனநடுங்கி, 'இது அவுணர்களுடைய செயலோ' என்பார்; 
தருமமில்லாத கொடிய இராக்கதர்களுடைய செயலோ' என்பார்; அவர்கள் செயலல்லவாயின், பிரமவிட்டுணுக்களுடைய 
செயலோ என்பார்; இது மாயமாகும் என்பார்; மேலேயுயர்ந்த மலையன்றி வெளியிடம் இல்லைபோலும் என்பாராய், 
சிவபெருமானது திருவருள் துணையாக  ஞானத்தால் நோக்க, அது வெளிப்பட்டது. வெளிப்படுதலும், "விந்த மலையானது 
மேருமலையோடு பகைத்து, மண்ணுலகத்தினும் விண்ணுலகத்தினுஞ் செல்லும் வழியைத் தடுத்தது'' என்று சிந்தித்து, 
''அகத்தியமுனிவர் மேருமலைச்சாரலிற் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துத் தவஞ் செய்து
கொண்டிருக்கின்றனர். அவர் இங்கே வந்தால் மேலேயுயர்ந்து நின்ற விந்தம் ஒடுங்கும்'' என்று எல்லோரும் 
ஆராய்ந்து தெளிந்தார்கள்.


            திருச்சிற்றம்பலம்.

            அகத்தியப்படலம்.

    அகத்தியமுனிவரைக்கொண்டு விந்தமலையின் வலியை அடக்குவித்தல் வேண்டும் என்று துணிந்த 
சூரியன் முதலிய கிரகங்களும் பிறரும் அவரை நினைத்து, இவைகளைச் சொல்லித்துதிப்பார்கள்:-
"விட்டுணுவினுடைய பாதங்களை அருச்சிக்கும்படி பூவைக்கொய்த கசேந்திரனென்னும் யானையானது,
 தன்னை ஒருமுதலை பற்ற, 'என்னாயகனே' என்று கையை எடுத்தழைப்ப அவர் வந்துவிடுவித்ததை அறியீரோ? 
பிரமதேவர் தாம் படைத்த திலோத்தமையென்னும் பெண்ணினிடத்து ஆசை வைத்து, கிளியாய்த் 
தொடர்ந்துசெல்ல, அவள் 'பரம்பொருளே காத்தருளும்' என்று வேண்டுதலும், தேவாதிதேவராகிய 
சிவபெருமான் அவளுக்கருள் செய்ததை அறியீரோ? தேவர்க்காயினும்  மனிதர்க்காயினும் ஒரு துன்பம் 
வந்தால் அடைந்து அதனை நீக்குதல் காத்தற்குரியாருக்குக் கடனாம். அக்கடனை ஆராயின் அது 
அடைதற்கரிய முத்தியினுஞ் சிறந்ததன்றோ? வேதங்களைத் திருடிக்கொண்டு சமுத்திரத்திலொளித்த 
சோமுகாசுரனை அழித்த விஷ்ணுவாகிய மீனைப்போல, சமுத்திரத்தை உள்ளங் கையிலடக்கி அதில் மறைந்த 
விருத்திராசுரனைக் காட்டித்தந்து நம்மிடத்தில் வைத்த மிகுந்த கிருபை உலகமெல்லாவற்றையும் விழுங்கியது.

    எம் பெருமானே, விந்தமலை நாரதமுனிவருடைய சூழ்ச்சியினால் இப்பொழுது மேருமலையோடு பகைத்து, 
' ஊழிக்காலத்திலுயருகின்ற திருக்கைலாசமலைக் கிணையாவேன்' என்று நினைத்ததுபோலும். அது ஆகாயமெல்லாம் 
மூடி எழுந்து அண்டகடாகம் வரையும் மேலே உயருகின்றது. இதனைக் கிருபா நோக்கஞ் செய்தருளீரோ? 
விந்தகிரி ஆகாயவழியைத் தடைசெய்தலால் எங்களுக்குஞ் செல்லுதற்கரிதாயது. நிலவுலக முழுதும் பொழுது 
மயங்கின. முனிவர்பெருமானே இக்குறைகளை நீக்குதற்கு எழுந்தருளி வரல்வேண்டும்" என்று துதித்து 
அகத்திய முனிவரை நினைப்பாராயினார்கள்.

    சூரியன் முதலாயினோர் இவ்வாறு நினைத்தலும், மேருமலைச்சாரலிலே தவஞ்செய்துகொண்டிருக்கின்ற 
அகத்தியமுனிவர் அதனை அறிந்து, மேலேயுயர்ந்த விந்தமலையின் வலியை அடக்கி, ஆகாயவழியை முன்போலாக்கித் 
தேவர்களுடைய குறையை நீக்கும்படி முயன்றார். முயன்று, கண்களில் ஆனந்தபாஷ்பஞ் சொரிய, கைகளஞ்சலிக்க, 
மனமும் என்பும் நெக்குருக, மயிர்பொடிப்ப, சிவபெருமானைப் புகழ்ந்து தியானித்தார். தியானிக்கும்பொழுது, 
பரமசிவன் இடபவாகனமேற்கொண்டு பூதர்கள் சூழத் தோன்றியருளினார். அகத்தியமுனிவர் அச்சத்தோடெழுந்து 
அவரைத்தரிசித்து, அடியற்ற மரம்போலவீழ்ந்து பலமுறை வணங்கி, சந்நிதானத்திலே நின்று துதித்தார். 

    
    சிவபெருமான் "முனிவனே, நீ விரும்பியதென்னை? அதனை வேண்டுதி' என்று திருவாய்மலர்ந்தருளினார். 
அதுகேட்ட அகத்தியமுனிவர் "எம்பெருமானே, விந்தமலை மேருமலையோடு மாறுகொண்டு ஆகாயவழியை அடைத்தது. 
அதன்வலியை அடக்கும்படி அடியேனுக்குச் சிறிதருள்செய்க" என்று பிரார்த்தித்தார். சிவபெருமான்,"முனிவனே, 
உனக்குவலிமையைத் தந்தருளினோம். செருக்குற்ற விந்தத்தை அடக்கி, தெக்ஷிணதேயத்தை யடைந்து, 
பொதியமலையிலிருப்பாய்'' என்றருளிச்செய்தார். அகத்தியமுனிவர் அஞ்சலிசெய்து துதித்து, "தேவரீரை 
அருச்சனை செய்தற்கும், தடாகங்களினுங் கிணறுகளினும் நீர் குறைவற்றிருத்தற்கும் தென்றிசைக்கு ஒரு தீர்த்தத்தைத் 
தந்தருளுக'' என்று வேண்டினார். 

    அப்பொழுது சிவபெருமான், திருக்கைலாச மலையிலிருந்த ஏழு நதிகளுள்ளும் பரிசுத்தமாகிய காவேரிநதியை 
வரும்படி நினைத்தருள, அந்நதி அதனை அறிந்து அஞ்சி, மனவேகமும் பிற்படும்படி விரைந்து திரு முன்வந்து 
வணங்கியது. அதனைநோக்கி, "பெண்ணே, நீ குற்றமில்லாத தென்றிசைக்குச் செல்லுகின்ற அகத்திய முனிவனோடு 
போதல்வேண்டும்' என்று சிவபெருமான் பணித்தருளினார். "எம்பெருமானே இம்முனிவர் ஐம்பொறிகளையும் 
அடக்கிய இயல்பினராயினும், ஒரு ஆடவர்; யான் ஒரு பெண்; ஆதலினால் இவருக்குப் பின்னே செல்லுதல் முறையோ! 
ஆராயின், இதுமுறையன்று'” என்று காவேரியாகிய பெண்ணானவள் சொல்லினாள். சிவபெருமான் அதனைக்கேட்டு, 
''இம்முனிவன் மாறுபாடில்லாத மனத்தினன் ; நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக் கேடுகளிலே சமபுத்தி 
பண்ணும் மனத்தினையுடையன்; நம்முடைய அடியார்களுட்சிறந்தவன். இவன் பின்னே செல்வாய்' என்று அருளிச்செய்தார். 

    அந்நதி அதற்கிசைந்து, ''இன்றைக்கு அடியேன் இம்முனிவருக்குப் பின்னே செல்வேன். எம்பெருமானே இவரை 
அடியேன் நீங்குங்காலத்தைச் சொல்லியருளுக' என்று வேண்ட, “பெண்ணே, இது நன்று நன்று. இம்முனிவன் என்றைக்கு 
உன் பொருட்டாகப் பார்த்துக் கைகாட்டுவானோ அன்றைக்கு இவனை நீங்கிப் பூமியிற் சென்றிருப்பாய்' என்று சிவபெருமான் 
சொல்லியருளினார். அத்திருவாக்குத் தன் செவிக்கமுதம் போலாக, காவேரியாறு அகத்தியமுனிவருக்குப் பின்னே 
செல்லுதற்கு உடன்படுதலும், உயிர்க்குயிராகிய சிவபெருமான் அகத்தியமுனிவரைநோக்கி, "காவிரிநதியை 
உன் கமண்டலத்திலே ஏற்பாய்" என்று பணித்தருள, அந்நதியானவள் அகத்தியமுனிவரை அடைந்தாள். 
சிவபெருமான் ''முனிவனே தக்ஷிண தேயத்திற்குச் செல்லுதி'' என்று விடைகொடுத்து, பூதகணங்களோடு மறைந்தருளினார்.
அகத்தியமுனிவர் அவரிடத்து விடைபெற்றுக்கொண்டு தென்றிசையை நோக்கி நடந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            கிரவுஞ்சப்படலம்.

    அகத்தியமுனிவர் மேருமலையினின்றும் நிலவுலகத்தின் வழியாகத் தெக்ஷிணதிசையை நோக்கிச் 
செல்லும்பொழுது, தாரகாசுரன் வாழுகின்ற மாயாபுரி என்னு நகரம் சமீபித்தது. அங்கே இருக்கின்ற கிரவுஞ்சன் 
என்னும் அசுரன் அவருடைய வரவைக் கண்டான். அவன் வானுலகத்தை நிலவுலகமாக்குவான்; நிலவுலகத்தை 
வானுலகமாக்குவான்; கடலை மலையாக்குவான்; மலையைக் கடலாக்குவான். சூரியனைச் சந்திரனாக்குவான்;
சந்திரனைச் சூரியனாக்குவான். அணுவை மேருவாக்குவான்; மேருவை அணுவாக்குவான். பூமியைக் கடலாக்குவான்; 
கடலைப் பூமியாக்குவான். வடவைத்தீயைக் கடலாக்குவான். ஒருநாழிகையின் பதினாயிரத்திலொரு பங்கினுள், 
தேவர்களுக்காயினும் முனிவர்களுக்காயினும் பல மாயங்களைச் செய்து, பலநாட் கழிந்தபின் அவர்களைக் 
கொல்வானென்றால், அவன் வலிமைகளையெல்லாம் யாவரறிந்து சொல்லவல்லார். அந்தக் கிரவுஞ்சன் என்னும் 
அசுரன் அகத்தியமுனிவர் வரும்வழியில், பல சிகரங்களையுடைய ஒரு மலையாய், தன்னிடத்துய்க்கும் வழியைக்காட்டி 
நின்றான்.நிற்றலும், அகத்தியமுனிவர்  கண்டு வியந்து, "நல்லது! இம்மலையின் நடுவே இஃதோர் வழியுண்டு 
இவ்வழியே செல்வேம்" என்று அவ்வழியே போக, அது ஒரு கூப்பிடு தூரங் கழிந்தபின் இல்லையாக, வேறொருவழி வந்தது. 
அவ்வழியைக் கண்டு செல்லுதலும், அது பின்னர் இல்லையாக, திரும்பிச்சென்றார். செல்லும்பொழுது, முந்திய 
வழியையுங் காணாது மயங்கி, பிறிதொரு வழியைக் கண்டு வருத்தத்தோடு சென்றார். அவ்வழியாற் செல்லும்பொழுது, 
அக்கினி நெருங்கிச்சூழ, சுழல்காற்று வீச, மழைபெய்ய, இடிஇடிக்க, இருட்படலஞ்சூழ, அளவிறந்த மாயங்களைக் 
கிரவுஞ்சனென்னு மவுணன் இயற்றினார்.

அகத்தியமுனிவர் அதனை நோக்கி, "இது கொடியராகிய அவுணர்களுடைய வஞ்சனை" என்று ஞானத்தாலறிந்து, 
அக்கினிபோலக் கோபித்து,கையோடு கைதட்டிச் சிரித்து, "நல்லது நல்லது! இவ்வசுரனா நமக்கிதனைச் செய்வான். 
இன்றைக்கே இவன் வலிமையைக் கெடுப்பேன்" என்று அவன் மலை வடிவிலே திருக்கரத்தின்கணுள்ள தண்டினாற் 
குற்றிப் பூழைகளாக்கி, "நல்லறிவில்லாத கொடிய அசுரனே, நீ உன் பழைய அசுரவடிவை நீங்கி மலைவடிவாய் 
இங்கே நின்று, அவுணர்களுக்கிருப்பிடமாய், முனிவர்களுக்குந் தேவர்களுக்குங் கொடுந்தொழிலைப் புரிதி. உன்மீது நமது 
கையின்கணுள்ள தண்டினாற்செய்த முழைஞ்சுகளெல்லாம் பற்பல மாயங்களுக்கிருப்பிடமாகுக. பின்னாளில், 
சிவகுமாரராகிய குமாரசுவாமியினுடைய வேற்படையினால் நீ இறக்கக்கடவாய்' என்று சபித்து, கமண்டலத்திலுள்ள 
நீரை அள்ளி மந்திரத்தோடு தெளித்து, அவன் மாயத்தைக் கெடுத்து, அவ்விடத்தைநீங்கி, தென்றிசையை நோக்கிச் 
சென்றார். அந்தக்கிரவுஞ்சனென்னும் அவுணன் முந்தைநாள்வரையும் மலையின் வடிவாய் நின்றான். அவனைத் 
தேவரீரன்றி வேறியாவர் வதைபுரிய வல்லவர்.

            திருச்சிற்றம்பலம்.

            விந்தம் பிலம்புகு படலம்.

    அகத்தியமுனிவர் மேருமலையை நீங்கித் தேவகிரிச் சாரலையடைந்து, காசிப்பதியிற் சென்று, விசுவேசுரருடைய 
திருவடிகளை வணங்கித் துதித்து, அங்கு நின்று நீங்கி விந்தமலைச் சாரலையடைந்து அதனைப்பார்த்து, "மிக வுயர்ந்து 
ஆகாயத்திற் புகுகின்ற விந்தமலையே கேள்,யாம் பொதியமலையிற் போயிருக்கும்படி நினைத்துவந்தோம் .
அதற்கு நீ இப்பொழுது ஒரு சிறிது செல்லும் வழியைத் தருதி' என்று கூறினார். அதுகேட்ட விந்தமலை, "சூரிய 
சந்திரர்களும் செல்லுதற்கரிய தன்மையால் ஆகாயவழியை மறைத்து, நெடிய வடிவையுடைய விட்டுணுவைப் 
போல யான் நின்றேன். குறிய வடிவையுடைய உனக்கஞ்சி வழிகொடுப்பேனோ! எனது தோற்றத்தை நீயறிகிலை.
மீண்டுபோதி' என்று சொல்லியது. 

    அகத்தியமுனிவர் அதனைக்கேட்டுச் சிரித்து, சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்து, 
முன்னாளில் இந்திரன் வேண்டக் கடலில் நீட்டிய திருக்கரத்தைச் சத்தியவுலகம் வரையும் நீட்டி, தேவர்கள் 
அற்புதமடையும்படி விந்தமலையின் முடியின் மீது மிகவுயர்ந்த உள்ளங்கையை வைத்து, வலிபொருந்த 
ஊன்றினார். அது பூமியிற்றாழ்ந்து பாதலத்திற் புகுந்து,சேடனுடைய பதத்தை அடைந்தது. பின் அம்மலை 
அஞ்சி அகத்தியமுனிவரை நோக்கி, "வள்ளற்றன்மையையுடைய முனிவரே கேட்டருளுக. உம்மை வழிபாடு 
செய்யாது இகழ்ந்து மேன்மையை இழந்தேன். தமியேனுடைய குற்றத்தை மனத்துக்கொள்ளாது எழுங்காலத்தை 
அருளிச்செய்க" என்று கூறியது. அகத்தியமுனிவர் விந்தமலையின் வசனத்தைக்கேட்டு, "யான் சென்று பின்னர் 
இவ்வழியே மீண்டால் நீ எழுவாய்' என்று நாரதமுனிவருடைய சூழ்ச்சிக்கிசைய நகையோடு கூறினார்.

    விந்தம் பூமியினுள் மறைதலும், அகத்தியமுனிவர் கையை முன்போலச் செய்து, தேவர்கள் பூமழை
பொழியப் பொதிய மலைக்குச் செல்லக் கருதினார். விந்தம் பூமியினுள் அழுந்தினமையால் ஆகாயம் 
வெளியிடமாக  சூரியன் முதலாயினோருடைய ஒளிகள் எங்கும் பரந்தன. சூரியன் முதலிய தேவர்கள் விரைந்து அகத்திய 
முனிவரை அடைந்து, அஞ்சலித்துத் துதித்து, "தேவரீர் செய்த உதவியை யார்செய்வார். உம்மால் ஆகாயவழியிற் 
செல்லப்பெற்றோம். இனி நீர் எம்பொருட்டாற் பொதியமலையிற் சென்றிருத்திர்'' என்றார்கள். அகத்தியமுனிவர் 
நன்றென்று இசைந்து, தேவர்களை வானுலகிற் செல்லும்படி விடுத்து, தென்றிசையை நோக்கிச்சென்றார். 
குடக தேசத்திலிருக்கின்ற வில்வலன் வாதாவி என்னும் இருவரும் தம்முயிர் நீங்கநின்றவர்கள் அவருடைய 
வரவைக் கண்டார்கள்.


            திருச்சிற்றம்பலம்.

            வில்வலன் வாதாவி வதைப்படலம்.

    வில்வலன் வாதாவி என்னும் இருவரும் அகத்தியமுனிவர் வருதலைக் கண்டு, "இவன்போலும் அவுணர்களுடைய 
உயிரைக் கவர்ந்தவன். கடலைக் குடித்துமிழ்ந்தவன். இப்பொழுது தேவர்களுக்கருள்புரியும்படி அடைந்தான் போலும். 
அவனுக்கிப்பொழுதே உணவைக் கொடுத்து உடம்போடு உயிரையுங் கவர்வோம்" என்றார்கள். அவர்கள் இவைகளைத் 
தம்முள்ளே பேசிக்கொண்டபின்னர், தம்பியாகிய வாதாவி என்பவன், மலைச்சாரலிலே ஆட்டுக்கடாவின் வடிவத்தைக் 
கொண்டு சென்று, தழைகளையும் புதல்களையும் மேய்ந்தான். தமையனாகிய வில்வலன் சடையும், திரிபுண்டரமணிந்த 
நெற்றியும், சுந்தரவேடமணிந்த காதும், உருத்திராக்க வடமும்,உடம்பின் மீது உத்தூளித்த விபூதியும், தண்டையேந்திய 
கையும், மரவுரியுடையுமாக முனிவருக்குரிய தவவேடத்தைத் தாங்கி, அகத்திய முனிவரெதிரே விரைந்து சென்று, 
மும்முறை வணங்கி அஞ்சலித்துத் துதித்து, ''முனிவரே நீர் எழுந்தருளும்படி இந்நாள்காறும் அருந்தவஞ் செய்தேன். 
இன்றைக்கு முடிவுற வந்தீர். யானும் முனிவர் நிலைமையைப் பெற்றேன். பாவியேனுடைய இருக்கை இது. 
அது புனிதமாகும்படி எழுந்தருளுதிர்.'' என்ற கூறி, அவருடைய பாதங்களைப் பின்னும் பலமுறை வணங்கினான். 

    வணங்குதலும், அகத்தியமுனிவர் அவனுடைய தீய எண்ணத்தை நினையாது,மகிழ்ச்சியுண்டாக, 
"தவத்தினான் மிக்கவனே எழுதி" என்றருளிச்செய்து "நாற்பத்தெண்ணாயிர முனிவர்களிடத்தும், மற்றை 
முனிவர்களிடத்தும் உன் பெருந்தகைமைக் குணத்தில் ஓரணுவளவுதானும் இல்லை; இது மெய்யென்று தெளிதி. 
உன்னுடைய ஆச்சிரமம் யாது செல்வோம் வருக" என்றார். என்றுகூறிய அகத்தியமுனிவரை வில்வலன் நோக்கி,     
"இதுவே அடியேனுடைய குடிசை" என்று அழைத்துக்கொண்டு சென்று, ஆசனத்திலிருத்தி, பாதங்களைப் பூசித்து, 
"எம்பெருமானே நீர் யானும் என்குலத்தவர்களும் உய்யும்படி எழுந்தருளினீர்போலும். இன்றைக்கு அடியேனுடைய
குடிசையிலிருந்து வெந்த புற்கையையேனும் அமுதுசெய்து, அடியேனுக்குச் சேஷத்தைத் தந்தருளிச் செல்லுக' என்றான்.

    அகத்தியமுனிவர் வில்வலனுடைய வசனங்களைக்கேட்டு, "அன்பின் மிக்கானே அதுநன்று. உன்மாட்டு 
உன்னாற் றரத்தக்க உணவை உவந்து அமுதுசெய்து, பின்னர்ச் செல்வதே முறை" என்றுகூறினார். வில்வலன் 
வணங்கி, "எம்பெருமானே சிரத்தையோடு திருவமுதைப் பாகம் பண்ணுவேன் சிறிதுபொழுதிருக்குக' என்றுகூறி, 
அப்பொழுதே ஒரு தடாகத்தில் ஸ்நானஞ்செய்து மிகவும் பரிசுத்தனாய், மடைப்பள்ளியை அடைந்து, அதனைச் 
சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, சமையலுக்கு வேண்டிய உபகரணங்களைத் தேடி, அரிசியை நீரிலிட்டு 
மூன்றுதரங் களைந்து வேறொரு குழிசியிலிட்டு, தீக்கடைகோலிலே நெருப்பைக் கடைந்தெடுத்து அடுப்பினுள் 
மூட்டி, அதில் சந்தனமாகிய விறகுகளை மாட்டி, ஒரு செப்புப்பானையில் உலைப்பெய்து அடுப்பின்மேல் வைத்து, 
அரிசியையிட்டுப் பதமறிந்து சமைத்துப் பக்கத்தில் வைத்தான். பின்னர் முதிரைத் தானியங்களாற் சமைக்கப்படும் 
அன்னங்களைச் சமைத்து, பாயசான்னம் குளான்னம் முதலிய விதம்விதமாகிய உணவுகளையெல்லாஞ் சமைத்து 
புதுமணங்கமழுகின்ற புனிதமாகிய கறியையுஞ் சமைத்தான். 

    ஆட்டுக்கடாவாய் நின்ற தம்பியாகிய வாதாவியை அகத்தியமுனிவருக்கு முன்னே வலிந்திழுத்துக் 
கொண்டு வந்து அரிவாளினால் வெட்டி இருதுணியாக்கி, தோலையும் எலும்பையும் நீக்கி, வாளினாற் 
றுணிப்பனவற்றைத் துணித்தும், அரிவனவற்றை அரிந்தும்,சுவையையுடைய உறுப்பிலூன்களைக் 
குணிப்போடு அகழ்ந்தெடுத்துப் பலமிடாக்களிலிட்டு, மூன்றுதரம் நீரினாற் கழுவி, அக் கறிக்கு வேண்டிய 
 உப்பு முதலியவற்றையிட்டு, நெருப்பில் வைத்துச் சமைத்து, மிளகுபொடி முதலியவற்றைத் தூவி, நெய்விட்டுப் 
பொரிப்பனவற்றைப் பொரித்து, புகை போகாவண்ணம் மூடிவைத்து, மி