logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கந்தபுராணம் - கத்திய ரூபம் (உரைநடை) ஆறுமுக நாவலர்

கணபதி  துணை.

திருச்சிற்றம்பலம்.

    ( யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்களாலும், 
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தரும பரிபாலகர் பொன்னம்பல பிள்ளையாலும் 
        கத்திய ரூபமாகச் செய்யப்பட்டது)


            
            விநாயகர் காப்பு.

1.    திகட சக்கரச் செம்முக மைந்துளான் 
    சகட சக்கரத் தாமரை நாயக 
    னகட சக்கர  வின்மணி யாவுறை
    விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். 

2.    உச்சியின் மகுடமின்ன வொளிர்தர நுதலினோடை
    வச்சிர மருப்பினொற்றை மணிகொள் கிம்புரிவயங்க. 
    மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமாமுகங் கொண்டுற்ற
    கச்சியின் விகடசக்ர கணபதிக் கன்புசெய்வாம்.

            சுப்பிரமணியர் காப்பு.

3.     மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணைபோற்றி 
    யேவருந் துதிக்கநின்ற விராறுதோள் போற்றி காஞ்சி 
    மாவடி வைகுஞ்செவ்வேண் மலரடிபோற்றியன்னான் 
    சேவலுமயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

            நூற்பயன்.

4.     இந்திர ராகிப்பார்மே லின்பமுற் றினிதுமேவிச்
    சிந்தையி னினைந்தமுற்றிச் சிவகதியதனிற் சேர்வ 
    ரந்தமிலவுணர் தங்களடல்கெட முனிந்த செவ்வேற் 
    கந்தவேள் புராணந்தன்னைக் காதலித் தோதுவோரே.

            வாழ்த்து.

5.      வான்முகில்வழாதுபெய்க மலிவளஞ்சுரக்க
    மன்னன் கோன்முறையரசுசெய்க குறைவிலாதுயிர்கள்வாழ்க 
    நான் மறையறங்களோங்க நற்றவம் வேள்விமல்க 
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்.

            திருச்சிற்றம்பலம்.

            கடவுள் வாழ்த்து.

            சிவபெருமான்.

1.    திருவந்ததொல்லைப்புவனத்தொடுதேவர்போற்றிப் 
    பெருவந்தனை செய்தறிதற்கரும்பெற்றியெய்தி 
    யருவந்தனையுமுருவத்தையுமன்றிநின்றா 
    னொருவன்றனதுபதந்தன்னையுளத்துள்வைப்பாம்.

2.    ஊனாகியூனுளுயிராயுயிர்தோறுமாகி 
    வானாதியானபொருளாய்மதியாகிவெய்யோன் 
    றானாகியாண்பெண்ணுருவாகிச்சராசரங்க 
    ளானான்சிவன் மற்றவனீள்கழற்கன்புசெய்வாம். 

            வேறு.

3.    பிறப்பதுமிறப்பதும் பெயருஞ்செய்கையு 
    மறப்பதுநினைப்பதும் வடிவம்யாவையுந் 
    துறப்பதுமின்மையும் பிறவுஞ்சூழ்கலாச் 
    சிறப்புடையரனடிசென்னிசேர்த்துவாம்.

4.     பூமலர்மிசைவருபுனிதனாதியோர் 
    தாமுணர்வரியதோர் தலைமையெய்தியே 
    மாமறைமுதற்கொருவடிவமாகியோன்
    காமருசெய்யபூங்கழல்கள் போற்றுவாம்.

5.     பங்கயன்முகுந்தனாம்பரமென்றுன்னியே 
    தங்களிலிருவருஞ்சமர்செய்துற்றுழி 
    யங்கவர்வெருவரவங்கியாயெழு 
    புங்கவன்மலரடிபோற்றிசெய்குவாம்.

6.     காண்பவன் முதலியதிறமுங்காட்டுவான்
    மாண்புடையோனுமாய்வலி கொள்வான்றொடர் 
    பூண்பதின்றாய்நயம்புணர்க்கும்புங்கவன் 
    சேண்பொலிதிருநடச்செயலையேத்துவாம்.

            சிவசத்தி.

7.     செறிதருமுயிர்தொறுந்திகழ்ந்து மன்னிய 
    மறுவறுமரனிடமரபின் மேவியே
    யறுவகைநெறிகளும் பிறவுமாக்கிய 
    விறைவிதன்மலரடியிறைஞ்சியேத்துவாம்.

        விநாயகக்கடவுள்.

8.     மண்ணுலகத்தினிற்பிறவிமாசற 
    வெண்ணியபொருளெலாமெளிதின்முற்றுறக்
    கண்ணுதலுடையதோர்களிற்றுமாமுகப் 
    பண்ணவன்மலரடிபணிந்துபோற்றுவாம்.

        வைரவக்கடவுள்.

9.    பரமனைமதித்திடாப்பங்கயாசன 
    னொருதலைகிள்ளியேயொழிந்தவானவர் 
    குருதியுமகந்தையுங்கொண்டு தண்டமுன் 
    புரிதருவடுகனைப்போற்றிசெய்குவாம்.

10.     வெஞ்சினப்பரியழன் மீது போர்த்திடு 
    மஞ்சனப்புகையெனவாலமாமெனச் 
    செஞ்சுடர்ப்படிவமேற்செறித்தமாமணிக் 
    கஞ்சுகக்கடவுள்பொற்கழல்களேத்துவாம்.

        வீரபத்திரக்கடவுள்.

11.     அடைந்தவியுண்டிடுமமரர்யாவரு 
    முடிந்திடவெருவியேமுனிவர்வேதிய 
    ருடைந்திடமாமகமொடியத்தக்கனைத் 
    தடிந்திடுசேவகன்சரணம்போற்றுவாம்.

        சுப்பிரமணியக்கடவுள்.

12.     இருப்பரங்குறைத்திடுமெஃகவேலுடைப் 
    பொருப்பரங்குணர்வுறப்புதல்விதன்மிசை 
    விருப்பரங்கமரிடைவிளங்கக்காட்டிய 
    திருப்பரங்குன்றமர்சேயைப்போற்றுவாம்.

13.     சூரலைவாயிடைத்தொலைத்துமார்புகீண் 
    டீரலைவாயிடுமெஃகமேந்தியே
    வேரலைவாய்தருவெள்ளிவெற்பொரீஇச் 
    சீரலைவாய்வருசேயைப்போற்றுவாம்.

14.    காவினன்குடிலுறுகாமர்பொன்னகர் 
    மேவினன் குடிவரவிளியச்சூர்முதல் 
    பூவினன் குடிலையம்பொருட்குமாலுற 
    வாவினன் குடிவருமமலற்போற்றுவாம்.

15.    நீரகத்தேதனைநினையுமன் பினோர் 
    பேரகத்தலமரும்பிறவிநீத்திடுந் 
    தாரகத்துருவமாந்தலைமையெய்திய 
    வேரகத்தறுமுகனடிகளேத்துவாம்.

16.    ஒன்றுதொறாடலையொருவியாவிமெய் 
    துன்றுதொறாடலைத்தொடங்கியைவகை 
    மன்றுதொறாடியவள்ளல்காமுறக் 
    குன்று தொறாடிய குமரற்போற்றுவாம்.

17.    எழமுதிரைப்புனத்திறைவிமுன்புதன் 
    கிழமுதிரிளநலங்கிடைப்பமுன்னவன் 
    மழமுதிர்களிறெனவருதல்வேண்டிய 
    பழமுதிர்சோலையம்பகவற்போற்றுவாம்.

18.     ஈறுசேர்பொழுதினுமிறுதியின்றியே 
    மாறிலாதிருந்திடும் வளங்கொள்காஞ்சியிற் 
    கூறுசீர்புனைதருகுமரகோட்டம்வா
    ழாறுமாமுகப்பிரானடிகள்போற்றுவாம். 

        திருநந்திதேவர்.

19.    ஐயிருபுராண நூலமலற்கோதியுஞ் 
    செய்யபன்மறைகளுந்தெரிந்துமாயையான் 
    மெய்யறுசூள்புகல்வியாதனீட்டிய 
    கையடுநந்திதன்கழல்கள்போற்றுவாம்.

        திருஞானசம்பந்தமூர்த்திநாயனார். 

20.     பண்டைவல்வினையினாற்பாயுடுத்துழல் 
    குண்டரைவென்றுமுன்கூடல்வைகியே 
    வெண்டிருநீற்றொளிவிளங்கச்செய்திடுந்
    தண்டமிழ்விரகன்மெய்த்தாள்கள்போற்றுவாம்.

        திருநாவுக்கரசுநாயனார்.

21.     பொய்யுரை நூல்சிலபுகலுந்தீயமண் 
    கையர்கள்பிணித்துமுன் கடலகத்திடு 
    வெய்யகற்றோணியாய்மிதப்பமேற்படுந்
    துய்யசொல்லரசர்தாடொழுதுபோற்றுவாம்.

        சுந்தரமூர்த்திநாயனார். 

22.     வறந்திடுபொய்கைமுன்னிரம்பமற்றவ
    ணுறைந்திடுமுதலைவந்துதிப்பவன்னதா 
    லிறந்திடுமகன்வளர்ந்தெய்தப்பாடலொன்
    றறைந்திடுசுந்தரனடிகள்போற்றுவாம். 

        மாணிக்கவாசக சுவாமிகள்.

23.     கந்தமொடுயிர்படுங்கணபங்கம்மெனச்
    சிந்தைகொள்சாக்கியர் தியங்கமூகராய் 
    முந்தொருமூகையைமொழிவித்தெந்தைபால் 
    வந்திடுமடிகளை வணக்கஞ்செய்குவாம்.

        திருத்தொண்டர்கள்.

24.     அண்டருநான்முகத்தயனும்யாவருங் 
    கண்டிடவரியதோர்காட்சிக்கண்ணவா 
    யெண்டகுசிவனடியெய்திவாழ்திருத் 
    தொண்டர்தம்பதமலர்தொழுதுபோற்றுவாம்.

            சரசுவதி.

25.    தாவறுமுலகெலாந்தந்தநான்முகத் 
    தேவு தன்றுணைவியாய்ச்செறிந்தபல்லுயிர்
    நாவுதொறிருந்திடுநலங்கொள் வாணிதன் 
    பூவடிமுடிமிசைப்புனைந்துபோற்றுவாம்.

        திருச்சிற்றம்பலம்.

        புராணவரலாறு.

    வடக்கின்கண்ணே திருவேங்கடமும் தெற்கின்கண்ணே குமரியும் கிழக்கின்கண்ணும் 
மேற்கின்கண்ணும் கடலும் எல்லையாகவுடைய தமிழ் நாட்டிலே, சான்றோருடைத்தெனச் சிறந்து 
விளங்காநின்ற தொண்டை மண்டலத்தின்கண்ணே காஞ்சீபுரமென ஒரு திருநகரமுண்டு. அயோத்தி, 
மதுரை, மாயை,காசி,காஞ்சி, அவந்தி, துவாரகை என்னுஞ் சத்தபுரிகளுள்ளும் காஞ்சீபுரமே சிறந்தது. 
அது காஞ்சி, திரிபுவனசாரம், காமபீ டம், தபோமயம், திரிமூர்த்திவாசம்,துண்டீரபுரம், இலயசித்து, பிரமபுரம், 
விண்டுபுரம், சிவபுரம், சகலசித்திகரம், கன்னிகாப்பு என்னும் பன்னிரண்டு * திருப்பெயர்களையுடையது.

    அத்திருக்காஞ்சி நகரத்திலே சிவபெருமான் முதலியோர்க்கு அறுபத்தாறாயிரம் * ஆலயங்களுண்டு. 
அவற்றுள் நூற்றெட்டுச் சிறந்தன. அவற்றுள்ளும் சிவபெருமானுக்கு இருபது சிறந்தன. திருமாலுக்கு எட்டுச் சிறந்தன. 
சிவபெருமானுக்குரிய ஆலயங்கள் இருபதாவன திருவேகம்பம், கச்சபாலயம், திருக்காயாரோகணம், திருமேற்றளி, 
இந்திராலயம், பணாதரேசம், மணீசம்,சதுர்முகசங்கரம், சுரகரேசம், பரசுராமேசம், உருத்திரர்கா, மாகாகாளேசம், 
வராகேசம், திருவோத்தூர், திருமாற்பேறு, அநேகபேசம், வேதநூபுரம், திருமயானம், கடம்பை, வீராட்டகாசம் 
என்பனவாம். திருமாலுக்குரிய ஆலயங்க ளெட்டாவன அத்திகிரி, வெஃகா, சந்திர கண்டம், நிராகாரம், அட்டபுயம்,
சகாளாங்கம், ஊரகம், பாடகம் என்பனவாம். அவ்விருபத்தெட்டினுள்ளும் திருவேகம்பம், கச்சபாலயம், 
திருக்காயாரோகணம் என்னுமூன்றுஞ் சிறந்தன. அவற்றினுள்ளும் திருவேகம்பஞ் சிறந்தது.

* இந்த இரண்டெண்களும் காஞ்சிப்புராணத்திற் கண்டபடி காட்டப்பட்டன.

    திருவேகம்பம் கம்பாநதியின் கரையருகே வேதவடிவாகிய மாவடியினுள்ளது. படைத்தல், காத்தல், 
அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலையும் உயிர்கள்பொருட்டுச் செய்தருளும் அநாதிமுத்த 
பதியாகிய சிவபெருமான், தமது வாசகமாகிய வேதத்துக்கும் அதன்வாச்சிய மாகிய தமக்கும் வேறுபாடில்லை
யென்பதை யாவரும் உணர்ந்துய்யும் வண்ணம், வேதவடிவாகிய அம் மாவினது மூலத்தின்கண்ணே, எந்நாளும்
திருவேகம்ப நாதரென்னும் திருப்பெயரோடு, சிவலிங்க மூர்த்தியாய் எழுந்தருளியிருப்பர்.

    திருவேகம்பநாதருடைய அருட்சத்தியும் உலகமாதாவுமாகிய உமாதேவியார், உலகாணித் தீர்த்தக் 
கரையினருகே சிற்பர வியோமமாகிய பிலத்தின்கண்ணே, காமாக்ஷியென்னுந் திருப்பெயரோடு 
தவஞ்செய்துகொண்டிருக்கும் ஆலயம் காமக்கோட்டமெனப் பெயர்பெறும். அதற்கோர் பக்கத்திலே 
குமரகோட்டமெனப் பெயர்கொண்ட ஓராலயமுண்டு. அதிலே சிவபெருமானுடைய இளைய திருக்குமாரராகிய 
சுப்பிரமணியக்கடவுள், தம்மை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய வேண்டியவாறே போக மோக்ஷங்களைக் 
கொடுத்துக்கொண்டு, எழுந்தருளியிருப்பர்.

    இத்துணைச் சிறப்பினதாகிய திருக்காஞ்சி நகரத்தினுள்ள கச்சபாலயமென்னுஞ் சிவாலயத்தின்கண்ணே, 
பிரமதேவர் சிவபெருமானைப் பூசை செய்துகொண்டு, தமது பத்தினியாகிய சரசுவதியோடும் அங்கிருந்தார்.. 
இருக்குநாளிலே, சௌனகர் முதலிய முனிவர்களெல்லாரும் திருக்காஞ்சி நகரத்தை அடைந்து, பிரமதேவர் 
திருமுன் சென்று, அவரை வணங்கித் துதித்து, படைத்தற்றொழிற் கிறைவராகிய சுவாமீ, அடியேங்கள் இதுகாறும் 
கிருகத்தர்களாய் இல்லறத்தைச் செய்துகொண்டு இப்பூமியினுள்ள நகரங்களெங்குமிருந்தேம், இனி 
வானப்பிரத்தர்களாய்த் தவஞ்செய்ய விரும்புகின்றோம், அவ்வாறு தவஞ்செய்யும் பொருட்டு ஒருதபோவனம் 
பணித்தருளும் என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 

    அதுகேட்ட பிரமதேவர் ஒரு  தருப்பையை எடுத்துச் சக்கரமாக்கி நிலத்திலேயுருட்டி, இருடிகளை 
நோக்கி, முனிவர்களே, நீங்களெல்லீரும் இச்சக்கரத்தின் பின்னே செல்லுங்கள், இச்சக்கரந் தங்கும் வனமே 
உங்களுக்குத் தபோவனமாகச் கொள்ளுங்கள் என்றார். உடனே முனிவர்கள் பிரமதேவரை வணங்கி,
விடைபெற்றுக்கொண்டு, சென்றார்கள். சக்கரம் விரைந்து சென்று ஒரு வனத்திலே தங்கிற்று. அதனால் 
அவ்வனம் நைமிசமெனப் பெயர் பெற்றது. முனிவர்களெல்லாரும் அவ்வனத்தின்கண்ணே தவஞ்செய்து 
கொண்டிருந்தார்கள். சிலகாலமாயினபின், வேதவிதிப்படி சகச்சிரசமமென்னும் யாகஞ்செய்து, 
சித்த சுத்தியடைந்து, மெய்யுணர்வுடையராயினார்கள்.

    இவ்வாறிருக்கும்பொழுது, உண்மையறிவானந்த வடிவாகிய சிவபெருமானுடைய திருவடிக் 
கமலங்கண்மலரும் நெஞ்சத்தடத்தையுடையவரும், வியாசமுனிவருடைய மாணாக்கரும், விபூதி 
ருத்திராக்ஷமென்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி தரித்தவருமாகிய சூதமுனிவர் அங்கே சென்றார். 
அதுகண்ட முனிவர்கள் யாவரும் மிக்கவுவகையோடு விரைந்தெதிர் கொண்டு வணங்கி, தங்களாச்சிரமத்துக்கு 
அழைத்துக்கொண்டு சென்று,  ஓருயர்ந்த ஆசனத்தின் மீதிருத்தி, அவருடைய திருவடிகளை நறுமலர் 
கொண்டு விதிப்படி பூசித்து, நிலத்திலே எட்டுறுப்புந்தோய மும்முறை வணங்கியெழுந்து, அஞ்சலிசெய்து 
கொண்டு நின்றார்கள். சூதமுனிவர் நீவிரிருங்களென்று பணித்தருளியபின், இருந்தார்கள். 

    இருந்து கொண்டு  கருணாநிதியாகிய சுவாமீ, சிவபெருமானுடைய இளைய திருக்குமாரரும் கிருபா 
சமுத்திரமுமாகிய சுப்பிரமணியக்கடவுளுடைய சரித்திரத்தை அறிதல்வேண்டுமென்னும் பேராசை 
யுடையேமாயினேம், அதனை அடியேங்களுக்கு அருளிச்செய்யும் என்று விண்ணப்பஞ்செய்தார்கள். 
அது கேட்ட சூதமுனிவர் அழலிடைப்பட்ட மெழுகு போல மனங் கசிந்துருக, மெய்ம்மயிர் பொடிப்ப, 
ஆனந்தவருவி சொரிய, சுப்பிரமணியக் கடவுளையும் தமதாசாரியராகிய வியாசமுனிவரையுஞ் 
சிந்தித்துத் துதித்துக்கொண்டு, இவ்வாறு சொல்வாராயினார்:

    ஆதி கற்பத்திலே துவாபர யுகத்திலே, ஆன்மாக்கள் செய்த தீவினையினாலே வேதங்களெல்லாம் 
அடி தலை தடுமாறின. அதனாலே தேவர்களும் முனிவர்களும் மனிதர்களும் மதிமயங்கி, மெய்யுணர்வு 
சிறிதுமில்லாதவர்களாகி, வேதநெறியை விடுத்து, பல புறச்சமயங்களைக் கற்பித்துக்கொண்டு, 
அவற்றின்வழி ஒழுகுவாராயினார்கள். விட்டுணுவும் பிரமாவும் அதுகண்டிரங்கி, சுவதந்திரராகிய 
சிவபெருமானுடைய திருவருளாலன்றி இம்மயக்கம் நீங்குவதன்றென்று துணிந்து, இந்திரன் முதலிய 
தேவர்கள் சூழத் திருக்கைலாசமலையை அடைந்து, செம்பொற்றிருக்கோயிலின் முதற்கோபுர 
வாயிற்கண் எழுந்தருளியிருக்குஞ் சித்தாந்த சைவ சமயாசாரியராகிய திருநந்தி தேவரைத் தரிசித்து, 
எம்பெருமானுக்கு அடியேங்களுடைய வரவை விண்ணப்பஞ் செய்தருளும் என்று பிரார்த்தித்தார்கள். 

    திருநந்திதேவர் மகாதேவர் திருமுன் சென்று வணங்கி யெழுந்து, அஞ்சலிசெய்து நின்று, 
தேவர்களுடைய வரவை விண்ணப்பஞ்செய்தார். பரமேசுரன் தேவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு 
வரும்பொருட்டுப் பணித்தருள, திருநந்திதேவர் வணங்கிக்கொண்டு புறத்தே சென்று, தேவர்களை அணுகி,
ஓ தேவர்களே, எம்பெருமான் உங்களை உள்ளே வரும்பொருட்டுப் பணித்தருளினார், வாருங்கள் என்றார். 
உடனே விட்டுணு முதலிய தேவர்கள் யாவரும் தங்கள் கவலையை ஒழித்து, புழுத்த நாயினுங்கடையேமாகிய 
எங்களையும் ஒரு பொருளாகக்கொண்டு எம்பெருமான் உள்ளே வரும்வண்ணம் பணித்தருளிய பெருங்கருணை 
இருந்தபடி என்னை என்னை என்று, ஆனந்தவருவி பொழிய மெய்ம்மயிர் சிலிர்ப்பக் குதூகலங்கொண்டு, 
திருநந்திதேவரோடும் எண்ணில்லாத வாயில்களைக் கடந்து, உள்ளே சென்று, பேரானந்தப் பெருங்கடலாகிய 
சிவபெருமானைத் தூரத்தே தரிசித்து, அடியற்ற மரம் போலப் பலகாலும் வீழ்ந்து வீழ்ந்து நமஸ்கரித்து எழுந்து, 
அஞ்சலிசெய்துகொண்டு திருமுன் சென்று, நறுமலர்களாலே பூசித்து, வணங்கித் துதித்துக்கொண்டு, 
தலை பணிந்து ஆடையொதுக்கி வாய் புதைத்து நின்றார்கள்.

    அப்பொழுது சருவலோகைக நாயகராகிய சிவபெருமான் பெருங்கருணை கூர்ந்து, விட்டுணு 
முதலிய தேவர்களை நோக்கி, உங்களரசியல்களெல்லாம் ஓர் குறையுமின்றி நன்றாக நடக்கின்றனவா 
என்று வினாவியருளினார். அதுகேட்ட விட்டுணு வணங்கி நின்று, விசுவாதிகரும் விசுவசேவியருமாகிய 
சுவாமீ, பிரமாவினுடைய படைத்தற்றொழிலும் அடியேனுடைய காத்தற்றொழிலும் இயமனுடைய அழித்தற் 
றொழிலும் மற்றைத்தேவர்களுடைய தொழில்களும் உம்முடைய திருவருளினாலே நன்றாக நடக்கின்றன. 
 அது நிற்க, உலகத்துள்ள ஆன்மாக்கள் மெய்ந்நூலாகிய வேதத்தின் வாச்சியமாய் உள்ள நீரே 
பசுபதியென்பதைச் சிறிதுமுணராது மதிமயங்கி, உலோகாயதம், ஆருகதம், பௌத்தம், மீமாஞ்சை, 
பாஞ்சராத்திரம், மாயா வாதம் என்னும் புறச்சமயங்களின்வழி  ஒழுகுகின்றார்கள்; ஆதலால் அவர்கள் 
இம்மயக்கத்தினின்று நீங்கி நீரே பரம்பொருளெனத் துணிந்து  உம்மையே வழிபட்டுய்யும்பொருட்டுச் 
சிறிது திருவருள் செய்தல் வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்தார். 

    வேண்டுவார் வேண்டுவதே ஈயும் பரம கருணாநிதியாகிய சிவபெருமான் விட்டுணுவை நோக்கி, 
நீ உன்கலைகளுள் ஒன்றுகொண்டு பூமியின்கண்ணே வியாதனென்னும் பெயரையுடைய இருடியாய்ப் பிறந்து, 
வேதங்களெல்லாவற்றையும் ஓதாதுணர்ந்து, அவற்றை நான்காக வகுத்து, நன்மாணாக்கர்களுக்கு உபதேசிக்கக் 
கடவாய்; வேதத்தை ஓதியுணர்ந்தும் மெய்ப்பொருட்டுணிவு பிறவாதவருக்கும் வேதத்துக்கு அருகரல்லாதவருக்கும் 
பயன்படும்பொருட்டுப் பதினெண்புராணங்களை நாம் முன்னே நந்திக்கு உபதேசித்தேம்; அவன் அவைகளைச் 
சனற் குமாரனுக்கு உபதேசித்தான் ; நீ அவைகளை அச் சனற்குமாரனிடத்தே கேட்டறிந்துகொண்டு, அவைகளையும் 
உன் மாணாக்கர்களுக்கு உபதேசிக்கக்கடவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். விட்டுணு அதற்கியைந்து, 
சிவபெருமானை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு, பிரமா முதலிய தேவர்களோடுந் தமது வைகுண்டத்தை 
அடைந்து, அவர்களெல்லாரையும் தங்கள் தங்கள் பதத்துக்குப் போம்வண்ணம் விடுத்து, தாம் அங்கெழுந்தருளியிருந்தார்.

      அருட்கடலாகிய அவ்விட்டுணு தம்முடைய கலைகளுள் ஒருகலை கொண்டு, பூமியின் கண்ணே 
கங்கைக்கரையிலே பராசரமுனிவருக்குச் சத்தியவதியென்னும் பெயரையுடைய யோசனகந்தியிடத்தே 
திருவவதாரஞ் செய்தருளினார். அவர் வதரிகாவனத்தில் இருந்துகொண்டு வாதராயணரென்னும் 
பெயரைப் பெற்று, சிவபெருமானுடைய  திருவருளினாலே வேதங்களெல்லாவற்றையும் ஓதாதுணர்ந்தார் .
தாமுணர்ந்த வேதங்களை நான்காக வகுத்து, உலகத்தார் உய்யும் வண்ணம் நிறுவியருளினார். 
அதனால், அவருக்கு வியாசரென்னுந் திருப்பெயர் உண்டாயிற்று. 

    அவ்வியாசமுனிவர் சனற்குமாரமகாமுனிவரை வழிபட்டுப் பதினெண்புராணங்களையுங் கேட்டறிந்தார். 
அதன்பின் வரையறைப்படாத வேதத்தின் உண்மைப் பொருளைப் பரிபக்குவர்கள் உணரும்பொருட்டு வேதாந்த சூத்திரஞ் 
செய்தருளினார். அவர் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்னு நான்குவேதங்களையும் முறையே பைலர், 
வைசம்பாயனர், சைமினி, சுமந்து என்னு நான்கு மாணாக்கர்களுக்கும் உபதேசித்தருளினார். வேதாந்த சூத்திரத்தையும் 
சைமினி முதலிய நால்வருக்கும் உபதேசித்தருளினார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் இவ்வேதங்களை 
உங்களை வழிபடும் நன்மாணாக்கர்க ளெல்லாருக்கும் உபதேசிக்கக்கடவீர்களென்று பணித்தருள, அவர்களும்
அவ்வாறே உபதேசித்தார்கள். 

    அதன்பின் வியாசமுனிவர் பதினெண் புராணங்களையும் எனக்கு உபதேசித்து, அவைகளை உலகத்துள்ள
யாவருக்கும் உணர்த்தும் பொருட்டுப் பணித்தருளினார். அவ்வாறே யானும் அவற்றை உபதேசித்தேன். இவ்வாறே 
வியாசமுனிவருடைய திருவருளினாலே நான்குவேதங்களும் வேதாந்த சூத்திரமும் பதினெண் புராணங்களும் 
உலக மெங்கும் பரந்தன.

    பதினெண்புராணங்களாவன பிரமபுராணம், பதுமபுராணம், வைணவபுராணம், சைவபுராணம், 
பாகவதபுராணம், பவிடியபுராணம், நாரதீய புராணம், மார்க்கண்டேயபுராணம், ஆக்கினேயபுராணம்,
பிரமகைவர்த்த புராணம், இலிங்கபுராணம், வராகபுராணம், காந்தபுராணம், வாமனபுராணம், மற்சபுராணம், 
கூர்மபுராணம், காருடபுராணம், பிரமாண்டபுராணம் என்பனவாம். இப்பதினெட்டும் நாலிலக்ஷத்தெண்ணாயிரங் 
கிரந்தமுடையன. இவற்றுள், சைவபுராணம், பவிடியபுராணம், மார்க்கண்டேயபுராணம், இலிங்கபுராணம், 
காந்தபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், மற்சபுராணம், கூர்மபுராணம், பிரமாண்டபுராணம் என்னும் 
பத்துஞ் சிவபுராணங்கள். காருடபுராணம், நாரதீயபுராணம், வைணவபுராணம், பாகவத புராணம் என்னு நான்கும் 
விட்டுணுபுராணங்கள். பிரமபுராணம், பதும புராணம் என்னு மிரண்டும் பிரமபுராணங்கள். ஆக்கினேயம் அக்கினி 
புராணம். பிரமகைவர்த்தம் சூரியபுராணம். சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம். வைணவபுராண நான்கும் 
தாமசங்களாம். பிரமபுராண மிரண்டும் இராசசங்களாம். அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுண யுத்தமாம். 

    ஆதலால், சிவபுராணங்களே இப்பதினெட்டினுள்ளும் உயர்ந்தனவாம். அவற்றுள்ளும் காந்தம் மிகவுயர்ந்ததாய், 
சகல வேதாந்தங்களின் சாரத்தையும் உள்ளடக்கினதாய், ஐம்பது கண்டங்களாற் புனையப்பட்டதாய், ஓரிலக்கங் 
கிரந்தமுடைத்தாயிருக்கும். அது சனற்குமார சங்கிதை, சூதசங்கிதை,பிரமசங்கிதை, விட்டுணுசங்கிதை, சங்கரசங்கிதை,
சூரசங்கிதை என ஆறுசங்கிதையுடையது. அவற்றுள், சனற்குமாரசங்கிதை ஐம்பத்தையாயிரங் கிரந்தமும், 
சூதசங்கிதை ஆறாயிரங் கிரந்தமும், பிரமசங்கிதை மூவாயிரங் கிரந்தமும், விட்டுணுசங்கிதை ஐயாயிரங் கிரந்தமும், 
சங்கர சங்கிதை முப்பதினாயிரங் கிரந்தமும், சூரசங்கிதை ஆயிரங் கிரந்தமுமுடையன. முப்பதினாயிரங் கிரந்தமுடைய 
சங்கரசங்கிதை பன்னிரண்டு கண்டமுடையது. அவற்றுள் முற்பட்டது சிவரகசியகண்டம். அது பதின் மூவாயிரங் 
கிரந்தமுடையதாய், உற்பத்திகாண்டம், அசுரகாண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தக்ஷகாண்டம், 
உபதேச காண்டம் என ஏழுகாண்டங்களை யுடையதாயிருக்கும். உண்மையறிவானந்தவடிவாகிய சுப்பிரமணியக் 
கடவுளுடைய சரித்திரம் அடங்கிய இச்சிவ ரகசிய கண்டத்தை இப்போது உங்களுக்குச் சொல்வேன், 
நீங்கள் சிரத்தையோடு கேளுங்கள்.

                திருச்சிற்றம்பலம்.

                முதலாவது

                உற்பத்திகாண்டம்.

                திருக்கைலாசப்படலம்.

    அநாதிமலமுத்தராய், நித்தியராய்,சர்வவியாபகராய், சர்வஞ்ஞராய், சர்வகர்த்தாவாய், நித்தியானந்தராய் 
உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான், சர்வான்மாக்களுக்கும் அருள்செய்யும்பொட்டு, ஒரு திருமுகமும், 
அடியார்களது துயரத்தை ஒழிக்குந் திருப்புன்முறுவலும், சந்திரன் சூரியன் அக்கினி என்னும் முச்சுடர்களாகிய 
மூன்று திருக்கண்களும் கங்கையையும் பிறையையும் கொன்றை மாலையையுஞ் சூடிய சடாமுடியும், 
சங்கக் குண்டலத்தையும் தோட்டையும் அணிந்த திருச்செவிகளும், திருநீலகண்டமும், மான் மழு அபயம் வரதம் 
என்பவைகளோடு கூடிய நான்கு திருக்கரங்களும், விபூதியினாலே உத்தூளிக்கப்பட்ட செம்பவளத் திருமேனியும், 
வெள்ளைப் பூணூலையும் கற்பங்கடோறும் இறந்த எண்ணில்லாத பிரமவிட்டுணுக்களுடைய தலைகளாலும் 
என்புகளாலுந் தொடுக்கப்பட்ட மாலைகளையும் அணிந்த திருமார்பும், புலித்தோலை உடுத்து உடை வாளுடனே 
கச்சையுடைத்தாய் விளங்குந் திருவரையும், வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்கும் செந்தாமரைமலர்போலுந் திருவடிகளும் 
உடைய ஸ்ரீகண்டசரீரியாய், பலவிரத்தினங்களாலே புனையப்பட்ட வெள்ளிமயமாகிய நானாவித சிகரங்களோடு 
கூடிய நிருமலமாகிய திருக்கைலாச மலையிலே, உயர்வொப்பில்லாத செம்பொற்றிருக்கோயிலிலே, எண்ணில்கோடி 
சூரியர்களது ஒளியைப்போலும் ஒளியையுடைய திவ்விய சிங்காசனத்தின் மேலே, தமது அருட்சத்தியும் உலக 
மாதாவுமாகிய உமாதேவியார் தமது இடப்பாகத்தின் மேவ, அளவிறந்த பெருங்கருணையோடும் எழுந்தருளியிருந்தார்.

    அப்பொழுது பூதர்கள் நானாவித வாத்தியங்களை முழக்கினார்கள், இருபுறத்தும் வெண்சாமரம் 
வீசினார்கள், ஆலவட்டம் அசைத்தார்கள். தும்புரு நாரதர்களும் விஞ்சையர்களும் இசை பாடினார்கள். 
கணநாதர்கள் சிவபெருமானுடைய திருவருளை நினைந்து நினைந்து, என்புகளெல்லாம் அழலிடைப்பட்ட
வெண்ணெய்போலக் கரைந்து நெக்கு நெக்குருக, சரீர நடுங்க, மெய்ம்மயிர் சிலிர்ப்ப, மயிர்க்காறோறுந் 
திவலையுண்டாக, மதகினிற் புறப்படுஞ் சலம்போல ஆனந்தவருவி பொழிய, நாத்தழுதழுப்ப, உரை
தடுமாற, கரையற்ற இன்பக்கடலின் அழுந்தி நின்றார்கள். முனிவர்கள் தங்கள் கைகள் சிரசின்மீதேறிக் 
குவிய,நினைப்பினும், ஓதினும் செவிமடுப்பினும் புத்தமிர்தத்தினும் தித்திக்கும் வேதசிரசுகளாகிய 
உபநிடதங்களை எடுத்தோதினார்கள். தேவர்கள் பேரானந்தப் பெருங்கடலின் முழுகி, ஹர ஹர முழக்கஞ்செய்து, 
கைகொட்டி, ஆடிப் பாடினார்கள். பரமகிருபாலுவாகிய திருநந்திதேவர் தமது திருக்கரத்திற் பொற்பிரம்பு 
கொண்டு, அடியார் கூட்டத்தை வரிசையின் முறை நிறுவி, சிவபெருமான்றிருமுன்னே இருபக்கத்தும் உலாவிக் 
கொண்டு, அவ்வகில காரணருடைய உயர்வொப்பில்லாத பெருங்கீர்த்தியைப் படித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            பார்ப்பதிப்படலம்.

    சிவபெருமான் இவ்வண்ணம் எழுந்தருளியிருக்கும்பொழுது வாம பாகத்தின் எழுந்தருளியிருந்த 
உமாதேவியார் தமது திருவுளத்திலே ஒன்றை நினைந்து,விரைந்தெழுந்து, சிவபெருமானை வணங்கி நின்று, 
எல்லாவறிவும் எல்லாத்தொழிலும் எல்லா முதன்மையுமுடைய பரமபதியே, உம்மை இகழ்ந்த தக்கனிடத்தே 
அடியேன் சிலகாலம் வளர்ந்து, தாக்ஷாயிணியென்னும் பெயரைப் பெற்றேன். இனி இப்பெயரையும் அவனிடத்தே 
வளர்ந்த இச்சரீரத்தையும் தரித்தற்கு அஞ்சுகின்றேன், ஆதலின் இவைகளை நீக்குமாறு பணித்தருளும் என்று 
விண்ணப்பஞ்செய்தார். 

    சிவ பெருமான் உமாதேவியாரை நோக்கி, நமது சத்தியே, நீ இவ்வண்ணம் முயலுதல் எண்ணில்லாத 
உன்புதல்வர்களாகிய ஆன்மாக்கள் முத்தியெய்தும் பொருட்டேயாம்; உன்கருத்து முற்றவேண்டுமாயிற் 
சொல்வேங்கேள்; இமைய மலையரையன் உன்னைத் தன்மகளாக வளர்த்து நமக்கு விவாகஞ் செய்துதர விரும்பி, 
நம்மை நோக்கிக் கொடுந்தவஞ் செய்கின்றான். நீ ஒரு குழந்தைவடிவாய் அவனிடத்தே சென்று வளர்ந்து, ஐந்து 
வயசாயபின் நம்மை நோக்கித் தவஞ்செய்யக்கடவாய்; அப்பொழுது நாம் வந்து உன்னை விவாகஞ்செய்து 
அழைத்துக்கொண்டு வருவேம் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே உமாதேவியார் திருவுளமகிழ்ந்து, 
சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு திருக்கைலாச மலையினின்று நீங்கி, 
இமைய மலையை யடைந்தார்.

    இமைய மலையின் மேலே மானச வாவியென்னும் பெயரையுடைய ஒரு தடாகமுண்டு. அதிலே, 
மலையரையன், தான் உமாதேவியாரைத் தன்மகளாகப் பெறுதற்பொருட்டும், அவளைச் சிவபெருமானுக்கு 
விவாகஞ் செய்து கொடுத்தற் பொருட்டும், அருந்தவஞ் செய்துகொண்டிருந்தான். உலக மனைத்தையுங் 
கருப்பமெய்தாது பெற்றருளிய பெருங்கருணைப் பெருமாட்டியார் அம்மலையரையன் காணும்வண்ணம் 
அவ்வாவியிலுள்ள ஒரு தாமரை மலரின் மேலே குழந்தை வடிவாய் எழுந்தருளியிருந்தார்.

    மலையரையன்  அதுகண்டு, உமாதேவி யடியேன் பொருட்டுச் சிவபெருமானை நீங்கினள் போலும், 
சிறியேன் செய்த தவத்துக் கிரங்கியருளிய எம்பெருமானுடைய பெருங்கருணை இருந்தபடி என்னையென்று 
பேரானந்தப்பெருங்கடலின் மூழ்கி, ஆனந்தவருவி பொழிய, மெய்ம்ம்யிர் பொடிப்ப, அடியேன் உய்ந்தேன் 
உய்ந்தேன் என்று, பாடியாடி, உமாதேவியாரை வணங்கி நின்றான். பின்பு தாமரைமலர் மேலிருக்கும் 
உமாதேவியைத் தனது கையாலெடுத்து, சிரமேற் றாங்கிக்கொண்டு, விரைந்து சென்று, தன் வீட்டினுள்ளே 
புகுந்து, தன் மனைவியாகிய மேனை கையிற் கொடுத்தான். மேனை தொழுது வாங்கிக் கொண்டு, 
பெருமானே, இவள் உன்னிடத்து வந்ததெங்ஙனம் என்று வினாவ, மலையரையன் நிகழ்ந்தனவெல்லாம் 
அவளுக்குச் சொன்னான். மேனை அது கேட்டு, சிவபெருமானது திருவருளைத் துதித்து, பெருமகிழ்ச்சியடைந்தாள். 
மேனைக்குத் தனங்களினின்றும் பால் சுரந்து பெருகிற்று, மெய்ம்மயிர் சிலிர்த்தது, உமாதேவியுடைய திருவருளே 
உள்ளமெங்கும் நிறைந்தது. மேனை உமாதேவியைத் திவ்விய ரத்தினாபரணங்களினாலே அலங்கரித்து, 
மெய்யன்போடு வளர்த்தாள்.

    இவ்வாறே உமாதேவியார் இவரிடத்தே வளர்ந்து, ஐந்துவயசு சென்றபின், சிவபெருமானை நோக்கித்
தவஞ்செய்யக் கருதி, மலையரையனை நோக்கி, முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் என்னை விவாகஞ்செய்து 
கொள்ளும்பொருட்டு இம்மலையில் ஒருபக்கத்தே அவரை நோக்கித் தவஞ் செய்யக் கருதுகின்றேன், கன்னியரோடும் 
என்னை விடுக்கக் கடவாய் என்றாள். மலையரையன் பார்ப்பதியம்மையாரை நோக்கி, அம்மே, நீ நம்மினின்று 
நீங்கித் தவஞ்செய்தற்கு ஒத்த பருவம் இதுவன்று, உனக்கு ஐந்து வயசு மாத்திரமே சென்றன, இக்கருத்தை ஒழித்துவிடு 
என்றான். பார்ப்பதியம்மையார் திருநகைசெய்து, யாவரேயாயினும் சுதந்திரராகிய சிவ பெருமானாலே 
காக்கப்படுவதன்றித் தம்மாலும் பிறராலுங் காக்கப்படுவதில்லை, இது துணிவு. தவஞ்செய்வேனென யான் 
பேசியதும் எம்பெருமானது திருவருளே : இனி மறாது விடைதரக் கடவாய் என்றாள். 

    மலையரையன் அதற்கியைந்து; அம்மலையினொருபக்கத்தே ஒருதவச்சாலை செய்வித்து, தன்கிளைஞராகிய 
கன்னியர் பலரோடும் பார்ப்பதியை அங்கே விடுத்தான். பார்ப்பதியம்மையார் அந்தத் தவச்சாலையை அடைந்து, 
கன்னியர் பலர் சூழ, சிவபெருமானைச் சிந்தித்துத் தவஞ்செய்துகொண்டிருந்தார். மலையரையனும் மேனையும் 
நாடோறுஞ் சென்று, உமாதேவியாரைக் கண்டுகொண்டு திரும்புவார்கள். அது நிற்க, இனி உமாதேவியைப் பிரிந்த 
சிவபெருமானுடைய செயலைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            மேருப்படலம்.

    உயிர்களையெல்லாம் பெற்று அவைகளுக்குப் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுத்தருளும் 
அருள்வடிவாகிய உமாதேவியார் இமையமலையின்மீது தவஞ்செய்துகொண்டிருக்கும்போது, சூரபன்மா, 
அசுரர்கள் சூழ, இப்பூமியின் கண்ணே அரசு செய்துகொண்டிருந்தான். அப்போது,  கல்லால நிழலின்கண்ணே 
தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருந்த சிவபெருமானிடத்தே வேதநூற்பொருளைப் பெற்ற சனகர், 
சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் முனீந்திரர் நால்வரும் மாயையினாலே ஞானநிலை பெறாதவராகி, 
பின்னும் நெடுங்காலந் தவஞ்செய்து, திருக்கைலாச மலையை அடைந்து, முதற் கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கும் 
சித்தாந்த சைவ சிகாமணியாகிய திருநந்திதேவரை வணங்கி நின்றார்கள். உடனே திருநந்தி தேவர் 
அம்முனீந்திரர்களைக் கருணையோடும் செம்பொற் றிருக்கோயிலினுள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். 

    முனீந்திரர்கள் பிரமவிட்டுணுக்களுக்கும் வேதங்களுக்கும் எட்டாத ஞானநாயகரைத் தூரத்தே தரிசித்து, 
மொழி தடுமாற, மெய்ம்மயிர் பொடிப்ப, ஆனந்தக் கண்ணீர் பெருக, அழலிடைப்பட்ட மெழுகுபோல நெஞ்சநெக்குருக, 
இருகைகளையும் சிரமீது குவித்துக்கொண்டு திருமுன் சென்று, திருவடிகளைப் பலகாலும் நமஸ்கரித்து, எழுந்து, 
அஞ்சலிசெய்து நின்று, சிவபெருமானது நிரதிசயமாகிய ஐசுவரியத்தை உணர்த்தாநின்ற உபநிடதங்களாலே 
துதித்தார்கள். துதித்தபின்பு, ஞானானந்த மயமாகிய முழுமுதற்கடவுளே, அடியேங்கள் வேதங்களையும் ,
உபநிடதங்களையும் நெடுநாள்வரையும் ஓதியும் ஞானநிலைபெறாதேமாயினேம். அருட்கடலே, ஏகாத்துமவாதசுருதி 
முதலிய சுருதிகளாலே மதி மயங்குகின்றது; பெருங்கருணை கூர்ந்து, அம்மயக்கத்தை நீக்கியருளுக என்று 
விண்ணப்பஞ் செய்தார்கள். 

    அடியார்க்கு எளியராகிய பரம கருணாநிதி அம்முனீந்திரர்கண்மீது திருநோக்கம் வைத்து, அன்பர்களே, 
உங்கள் மதிமயக்கம் நீங்கும்வண்ணம் நாம் இரகசியமாகிய திவ்வியாகமத்தை உபதேசிப்போம், இருங்கள் என்று 
திருவாய் மலர்ந்தருளினார். முனீந்திரர்கள் நால்வரும் பேருவகை பூத்து, எம்பெருமானுடைய திருவடிகளின்முன் 
இருந்தார்கள். சிவபெருமான் திருநந்திதேவரை நோக்கி, மன்மதனன்றி மற்றைத் தேவர் யாவர் வரினும் உள்ளே 
விடுக்காதே என்று பணித்தருள, திருநந்திதேவர் அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு, சிவபெருமானைத் தொழுது, 
முதற்கோபுர வாயிலை அடைந்து, காவல் செய்து கொண்டிருந்தார்.

    கிருபாமூர்த்தியாகிய சிவபெருமான் தமது சந்நிதியில் இருக்கின்ற சனகர் முதலிய முனீந்திரர்கள் 
நால்வரும் தொழுது கேட்ப, திவ்வியாகமங்களிலே சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் 
நான்கு பாதங்களுள்ளும் சரியை முதலிய முதன்  மூன்று பாதத்தையும் உபதேசித்தருளினார். அது கேட்ட 
முனீந்திரர்கள், கருணைக்கடலே, இனி ஞானபாதத்தையும் உபதேசித்தருளுக என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 
சிவபெருமான் திருநகைசெய்து, ஞானபாதம் ஏனையனபோல வாயினாற் சொல்லற் பாலதன்று. அது இப்படி 
யிருத்தலேயாம் என்று திருவாய்மலர்ந்து, அந்நெறியை அவர்களுக்கு உணர்த்தும்பொருட்டு, தமது 
திருமார்பின்கண்ணே ஒரு திருக்கரத்தைச் சேர்த்தி, மௌன முத்திரை காட்டி ஒருகணம் ஒரு செயலுமின்றி 
யோகஞ் செய்வார் போல் எழுந்தருளியிருந்தார். அது கண்ட முனீந்திரர்கள் தங்கள் தங்கள் உள்ளம் ஒடுங்கப்பெற்று 
சிவஞானத்தை அடைந்து, சித்திரப்பாவை போல் அசைவற்றிருந்தார்கள்.

    சிவபெருமான் இவ்வண்ணம் எழுந்தருளியிருக்கும் கணமொன்றினுள்ளே பிரமா விட்டுணு முதலிய 
தேவர்களுக்கெல்லாம் பற்பல யுகங்கள் சென்றன. ஆடவரையும் மகளிரையும் காமப்பற்றை விளைத்துப் புணர்த்தற்கு 
மன்மதன் நிற்பவும், சிவபெருமான் போக வடிவமன்றி யோகவடிவங் கொண்டு வீற்றிருத்தலால், திருமால் 
முதலிய தேவர்களும் மனிதர்களும் மற்றைச் சீவர்களும் காமப்பற்றும் புணர்ச்சியும் இல்லாது வருத்தமுற்றார்கள்.
அதனாலே கரு மல்குதலின்றி, உயிர்களெல்லாம் நாடோறுங் குறைந்தன. இதனாலே, அகிலகாரணர் சிவபெருமானே 
என்பது தெள்ளிதிற் றுணியப்படும்.

    இவ்வாறே சிவபெருமான் யோகத்திருக்கும்பொழுது, சூரபன்மன் தீங்கு செய்தமையால் இந்திரன் 
தன்மனைவியாகிய இந்திராணியோடும் தேவர்களோடும் சுவர்க்கத்தை விட்டுப் பூமியில் வந்தான். திருக்கைலாய 
மலையை அடைந்தும் சிவபெருமானைத் தரிசிக்கப்பெறாமையால் சோகத்தோடு மீண்டு, மகாமேருமலையை 
அடைந்து, சூரனுடைய குமாரனாகிய பானுகோபன் சுவர்க்கத்தை எரித்துத் தன் குமாரனாகிய சயந்தனையும் 
தேவர்களையுஞ் சிறைசெய்தமையை அறிந்தான். அம்மேருமலையிலே சிவபெருமானைச் சிந்தித்து நெடுங்காலந் 
தவஞ்செய்தான். சிவபெருமான் இடப மேற்கொண்டு, இந்திரனுக்குத் தோன்றியருளினார். அது கண்ட இந்திரன் 
வணங்கித் துதிக்க, முற்றறிவையுடைய சிவபெருமான் இந்திரனை நோக்கி, நீ நெடுங்காலங் கொடுந்தவஞ்செய்து 
வருந்தினாய், உனக்கு வேண்டும் வரம் யாது என்று அறியாதார் போலக் கேட்டருளினார். 

    இந்திரன் வணங்கி நின்று, பரமகருணாகரரே, தீயோனாகிய சூரன் அடியேங்களையெல்லாம் துயரப்படுத்தி, 
சுவர்க்கத்தை எரித்துவிட்டு, அடியேனுடைய குமாரனாகிய சயந்தனையும் தேவர்களையுஞ் சிறைப்படுத்தினான், 
அச்சூரனைக் கொன்று அடியேங்களைக் காத்தருளுக என்று விண்ணப்பஞ்செய்தான். சிவபெருமான் இந்திரனை 
நோக்கி,யஞ்ஞத்துக்கு ஈசுரனாகிய நம்மை இகழ்ந்து தக்கன் செய்த வேள்வியில் இருந்த பெருங்கொடும் 
பாவத்தினாலே நீங்கள் இப்படித் துயருறுகின்றீர்கள்; இனி நம்மிடத்தே ஒரு குமாரன் பிறந்து சூரனைக் கொன்று 
உங்களைக் காப்பான் என்று திருவாய் மலர்ந்து, மறைந்தருளினார்.

    சிவபெருமான் மறைந்தருளலும், இந்திரன் கவற்சிகொண்டு,எம்பெருமான் சனகர் முதலிய முனீந்திரர்கள் 
பொருட்டுத் திருக்கைலாசத்திலே யோகத்தெழுந்தருளி யிருக்கின்றார், உமாதேவியார் இமையமலையிலே தவஞ்
செய்துகொண்டிருக்கின்றார்; இங்ஙனமாக இவர்களுக்குப் புதல்வன் உதிப்பது எங்ஙனம் என்று நினைந்து, 
சோகத்தோடும் மனோவதியென்னும் நகரத்தை அடைந்து, அங்கிருந்த தன்குருவாகிய வியாழனுடைய மனைவியிடத்தே 
இந்திராணியை இருத்திவிட்டு, தேவர்களோடும் பிரமதேவருடைய கோயிலிற் சென்றான். அங்கே, சிவபெருமான் 
யோகத்திருத்தலினாலே தன் படைத்தற்றொழில் நிகழாமை பற்றிக் கவற்சி கொண்டிருக்கும் பிரமதேவரைக் 
கண்டு, வணங்கி, அஞ்சலி செய்து நின்றான். பிரமதேவர் இந்திரனை நோக்கி, நீ இங்கு வந்ததென்னை என்று 
வினாவ, இந்திரன் சூரன் செய்யுந் துன்பத்தையும், சிவபெருமான் யோகத்திருத்தலையும், தன்னுடைய தவத்தைக் 
கண்டு சிவபெருமான் அருளிச் செய்தமையையும் பிரம தேவருக்குச் சொன்னான்.

    பிரமதேவர் இந்திரனை நோக்கி, இவ்வாறு சொல்வாராயினார்: எவ்வுயிர்க்கும் மேலாகிய சிவபெருமான்
கருணைக் குறையுளும் தம்மை வழிபடும் மெய்யடியார்க்கு அருள்செய்வோரும் முறைசெய்வோருமாகலின், 
எம்மை ஆண்டருளும் பொருட்டுத் திருக்கைலாச மலையின் கண்ணே யோகியர்போல வீற்றிருந்தருளினார். 
விட்டுணுவாலும் என்னாலும் தேடியறியப்படாது நின்ற விசுவாதிகராகிய அவருக்கு உயர்வும் இல்லை 
ஒப்பும் இல்லை: அவ்வியல்புடைய முழுமுதற்கடவுள் முனிவர்கள்பொருட்டு யோகவடிவங் கொண்டிருத்தல் 
நம்முடைய குறைகளனைத்தையும் ஒழிக்குந் திருவருளேயன்றி, வேறன்று. 

    சிவபெருமான் சருவான்மாக்களையுஞ் சங்கரித்தல் பிறப்பிறப்புக்களினாலும் சுவர்க்க நரகத்திற்குச் 
செல்லுதல் மீளுதல்களினாலும் அவைகளுக்கு உளதாய இளைப்பை நீக்குங் கருணையன்றோ; அதுபோலவே 
நமக்குச் சூரனைக்கொண்டு துன்பஞ் செய்வித்தலும் நாஞ்செய்த தீவினைப் பயன்களை ஊட்டித் தொலைத்து 
நமக்கு முத்தியைத் தரும் பெருங் கருணையே, தந்தையர் தாம் பெற்ற புதல்வர்களுக்கு யாதானுமோர் நோயுற்றவழிப் 
பிறரைக்கொண்டும் அறுத்தல் கீறுதல் முதலிய துயரங்களைச் செய்வித்தும் தீர்ப்பார்களன்றோ. அது 
அப்புதல்வர்கண்மீது வைத்த அன்பன்றி வன்கண்மையன்றே. அதுபோலவே, சிவபெருமானும் நம்முடைய 
தீவினைகளைத் தீர்க்கும்பொருட்டே இவ்வண்ணஞ் செய்விக்கின்றார். நாஞ்செய்த தீவினைகளெல்லாம் 
நீங்குங்காலம் அணுகியது போலும். ஆதலாற்றானே, எம்பெருமான் பெருங்கருணையோடும் உனக்குத் தோன்றி 
இவ்வண்ணந் திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்: இனி நாமெல்லாம் துன்பக்கடலினின்றும் கரையேறினம்போலும். 
சிவபெருமான் இனி நமக்கருள்செய்வார். அதற்கு நாமும் முயலுமாறு சிறிதுண்டு. நாம் இதனை விட்டுணுவுக்குச் 
சொல்லி, இதற்கு வேண்டுஞ் செய்கையை விரைந்து செய்தல் வேண்டும் என்றார்.

    பிரமதேவர் இப்படிச் சொல்லி, இருக்கை விட்டெழுந்து, இந்திரன் முதலிய தேவர்கள் சூழச் சென்று, 
வைகுண்டத்தை அடைந்து, விட்டுணுவை வணங்கி நின்றார். விட்டுணு கருணைசெய்து, தம்புதல்வராகிய 
பிரமதேவருக்கு ஆசனங்கொடுத்து, அவரை நோக்கி, உன்னுடைய படைத்தற்றொழில் இடையூறின்றி நடக்கின்றதா 
என்று வினவினார். பிரம தேவர் விட்டுணுவை நோக்கிச் சொல்லலுற்றார்: 

    சுவாமீ, இதனைக் கேட்க,முன்னாளிலே சனகன், சனந்தனன்,சனாதனன், சனற்குமாரன் என்னும் முனிவர் 
நால்வரும் என்கருத்திலே தோன்றினார்கள். நான் அவர்களை நோக்கி, நான் செய்யும் இப்படைத்தற்றொழிலை நீங்கள் 
செய்துகொண்டு இங்கிருங்கள் என்றேன். அதற்கு அவர்கள் நகைசெய்து, பாசமாகிய சிறையிற்பட்டுப் படைத்தற்றொழிலாகிய 
விலங்கை நாங்கள் பூணேம், நாங்கள் ஞானானந்த மயராகிய சிவபெருமானுடைய திருவடிகளை அடைவேம் 
என்று சொல்லிக்கொண்டு விரைந்து சென்று, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்தார்கள். சிவபெருமான் 
அவர்களுக்குத் தோன்றி, உங்களுக்கு வேண்டியது யாது என்று வினாவியருள, அவர்கள் சிவபெருமானை வணங்கி, 
அடியேங்களுக்கு வேதப்பொருளை உபதேசித்தருளுக என்று விண்ணப்பஞ்செய்தார்கள். சிவபெருமான் கருணைகூர்ந்து, 
திருக்கைலாசமலையின்மீது தென்சிகரத்தினிற்கும் கல்லால நிழலின்கண்ணே தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருந்து, 
அம்முனிவர்கள் நால்வருக்கும் வேதப்பொருளை உபதேசித்து, மறைந்தருளினார். முனிவர்கள் நால்வரும் பூமியிலே போய், 
ஞானம் நிலைபெறாமையால் வருத்தமுற்று, பின்னுந் தவஞ்செய்து சிவபெருமானுடைய திருவருளினாலே 
திருக்கைலாசமலையை அடைந்தார்கள். 

    சிவபெருமான் அவர்களுடைய மலபரிபாகத்தைக் கண்டு, திவ்வியாகமங்களால் உணர்த்தப்படும் 
நான்கு பாதங்களுள்ளும் சரியை முதலிய முதன் மூன்று பாதத்தையும் உபதேசித்து, ஞானம் அவ்வண்ணஞ் 
சொல்லற்பால தல்லாமையால் அவர்கள் காணும்பொருட்டு மௌனமுத்திரை காட்டி எழுந்தருளினார். 
அப்பொழுது முனிவர்கள் தங்கள் மனம் ஒடுங்கி, மும் மலமுநீங்கி, சிவானந்தபரவசர்களாய்ச் செயலற்றிருந்தார்கள். 
இவ்வாறு சிவபெருமான் யோகத்திருக்கும் கணமொன்றினுள்ளே பற்பல யுகங்கள் சென்றன. சிவபெருமான் 
உமாதேவியாரைப் பிரிந்து யோகத்திருத்தலால், ஆண்பெண் முயக்கம் இன்றாயிற்று. ஆகவே, என் படைத்தற்றொழில் 
தவறியது. இது நிற்க, சிவபெருமான் கொடுத்தருளிய வரத்தினாலே எண்ணில்லாத போகங்களைப் புசிக்குஞ் 
சூரபன்மனானவன் நம்மையெல்லாம் வருத்துகின்றானே. இவ்விந்திரனுடைய குமாரனாகிய சயந்தனையும் 
தேவர்களையுஞ் சிறைப்படுத்தினான். இவ்வண்ணம் நமக்கெல்லாம் நாடோறும் பெருந்துயரம் விளையவும், 
சிவபெருமான் அறியாதார் போல எழுந்தருளியிருக்கின்றார். இதற்கு யாது செய்யலாம்! சொல்லுக என்றார்.

    பிரமதேவர் இவ்வாறு சொல்லக் கேட்ட விட்டுணு அவரை நோக்கிச் சொல்லுகின்றார்: சர்வான்மாக்களிடத்தும் 
நிறைந்து சகலத்திற்குங் காரணராய் உள்ள மகாதேவர் யோகவடிவங்கொண்டு எழுந்தருளியிருப்பராயின். 
காமப்பற்றுடையராய் முன்போலிருக்கும் இயல்புடையார் யாவர்! சிவபெருமான். நாமெல்லாம் தம்மை இகழ்ந்த 
தக்கனுடைய யாகத்திருந்த அதிபாதகத்தை ஊட்டித் தொலைத்து, அதன்பின்பு முன்னை வாழ்வை நமக்கருளிச் 
செய்யும்பொருட்டுத் திருவுளங் கொண்டருளினார், சூரபன்மனுக்கு வரங்கொடுத்தமையும், தேவர்கள் யாவரும் 
தம்மைச் சாரா வண்ணம் முனிவர்கள் பொருட்டு யோகத்திருந்து உயிர்களுக்குத் துன்பஞ் செய்தலும், நுண்ணுணர்வால் 
ஆராயுமிடத்து, எம்மாட்டுளதாகிய பேரருளேயன்றிப் பிறிதொன்றன்று. சிவபெருமான் மௌனத்தை நீங்கி 
மலையரையன் புதல்வியாகிய உமாதேவியைத் திருக்கல்யாணஞ் செய்தருளுவராயின், பிரமனே, படைத்தற்றொழில் 
கைகூடும். இனி ஒருகுமாரர் திருவவதாரஞ் செய்வாராயின், சூரன் முதலிய அசுரர்களெல்லாம் நாசமடைவர்கள், 
உலகமெல்லாம் முன்போல உய்யும். இது நிறைவேறும் பொருட்டு ஒன்று சொல்வேன்,கேள். எல்லாருக்குங் காமப்பற்றை 
விளைவிக்கும் மன்மதனை விடுப்பாயாயின், சிவபெருமான் மௌன நீங்கி, உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து, 
ஒரு குமாரரைத் தந்தருளுவர் என்றார். பிரமதேவர் அது கேட்டு, மனமகிழ்ந்து, "அவ்வாறு செய்வேன்'' என்று சொல்லி, 
இருக்கை விட்டெழுந்து, விடைபெற்றுக்கொண்டு, இந்திரன் முதலிய தேவர்களோடு சென்று, மனோவதி நகரத்தை 
அடைந்து, தமது கோயிலின் வீற்றிருந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            காமதகனப்படலம்.

    பிரமதேவர் மன்மதன் வரும்பொருட்டு நினைந்தார். நினைந்தவுடனே மன்மதன் விரைந்து வந்து, 
பிரமதேவரை வணங்கி, அஞ்சலிசெய்து நின்று, "சுவாமீ,நீர் அடியேனை மனசிலே நினைந்தது என்னை' என்று 
வினாவினான். பிரமதேவர் மன்மதனை நோக்கி, "நீ எங்கள் பொருட்டுத் திருக்கைலாச மலையிற்சென்று, 
சிவபெருமான் மௌன நீங்கி உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ் செய்யும்பொருட்டு அவர்மீது உன் 
பாணங்களைத் தொடுப்பாயாக" என்றார். அது கேட்டவுடனே, மன்மதன் தன்னிரண்டு காதுகளையும் விரைவிலே 
பொத்தி, வருத்தமுற்று, ''சிவசிவ' என்று சொல்லி, ''ஐயையோ! பெருங்கொடும்பாவத்தை விளைவிக்கும் 
இவ்வசனத்தைக் கேட்டேனே" என்று கிலேசமுற்று, பிரமதேவரை நோக்கி, இவ்வாறு சொல்வானாயினான்: 

    'வன்கண்ணரும் அறிவுடையோரிடத்துச் சென்றால், அவ்வறிவுடையோர் அவருக்கு உய்யுநெறியைப் 
போதிப்பர். நான் உம்மிடத்து வர நீர் எனக்கு இக்கடுஞ்சொல்லைச் சொன்னீர். என்னிடத்தே உமக்குச் சிறிதும் 
அருளில்லையா! நான் என் கருப்புவில்லையும் புட்ப பாணத்தையுங்கொண்டு, பூமிதேவியையும் இலக்குமியையும் 
புணரும்வண்ணம் என்பிதாவாகிய விட்டுணுவை வென்றிலனா? நீர் சரசுவதியைப் புணரும்படிக்கும் உம்மாலே 
படைக்கப்பட்ட திலோத்தமை மீது இச்சை கொண்டு உள்ளப்புணர்ச்சி செய்யும்படிக்கும் உம்மை நான் 
மயக்கிக் கீர்த்தி பெற்றிலனா? இலக்குமியை விட்டுணுவுடைய மார்பில் வைத்திலனா? சரசுவதியை உம்முடைய 
நாவில் இருத்திலனா? இந்திரன் இந்திராணியைப் புணரவும், அகலியையினாலே அவனுடைய உடம்பெங்கும் 
ஆயிரம் யோனிகள் உண்டாகவும் செய்திலனா? 

    முன்னொருநாள் சூரியனும் இந்திரனும் பெண்வடிவங்கொண்ட பாகனாகிய அருணனைப் புணர்ந்து 
வசையுறும் வண்ணம் மயக்கிலனா? இருபத்தேழு நக்ஷத்திரங்களைப் புணருஞ் சந்திரன் தன் குருவாகிய 
வியாழனுடைய மனைவியாகிய தாரையைப் புணர்ந்து புதனைப் பெறும்வண்ணம் செய்திலனா? 
வேதங்கள் யாவையும் நன்குணர்ந்த தேவர்களெல்லாரையும் மகளிருடைய குற்றேவல்களைச் செய்யும்வண்ணம் 
மயக்கிலனா? வசிட்டர், மரீசி, அகத்தியர், அத்திரி, கௌதமர், காசிபர் முதலிய துறவிகளுடைய வலிமையைக் 
கெடுத்திலனா? மனிதர்களுள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வருணத்தாரையும் 
அனுலோமர் அறுவரையும் பிரதிலோமர் அறுவரையும் கோளகர்,குண்டகர், கானீனர் என்னும் புறக்குடிகள் 
மூவரையும் பெண்மயலில் வீழ்த்திலனா? என்னாணையைக் கடந்தவர் யாவருளர்? இங்கே சொன்னவைகளெல்லாம் 
 பரதந்திரனாகிய என்னால் முடியுமா! 

    சுவதந்திரராகிய சிவபெருமானுடைய சத்தியே என்னை ஏவி நின்று செய்யும். என்பாணங்களினாலே 
விட்டுணு முதலிய பசுக்களை வெல்வதன்றி, பரமபதியாகிய சிவபெருமானை வெல்லுதல் கூடுமா? 
சிவபெருமானை வழிபட்டு அவரால் அருளப்பட்ட அதிகாரத்தைப் பெற்றவரைப்போல அச்சிவபெருமானையும் 
எண்ணிப் பேசினீரே! சோதி வடிவாயுள்ள சிவபெருமான்மீது நான் பாணங்களைத் தொடுக்கினும் செல்லுமா? 
திருக்கரமும் திருநகையும் திருக்கண்ணும் திருமேனியும் அக்கினியாக உள்ள சிவபெருமானை நான் எய்யும்படி 
செல்வேனாயின், இவ்வுயிர்கொண்டு உய்யுந்திறம் உண்டோ? சொல்லும் சொல்லும். விருப்பு வெறுப்பில்லாத
பரம்பொருளை மயக்குவது எப்படி? ஐயையோ சிவபெருமானையும் பிறர்போல நினைந்தீரே! அவருடைய 
பேராற்றலைத் தொலைத்தல் யாவராலாயினுங்கூடுமா? பேசும் பேசும். 

    சூறைக்காற்று அடிக்கும் இடத்தே ஒருசிறுபூளை எதிர்க்குமாயின், சிவபெருமான் றிருமுன்னே சிறியேன் 
போர்செய்யப் புகுவேன். சிவபெருமானோடும் எதிர்ந்தவர்களுள் வலிதொலைந்து துயருற்றவரும் இறந்தவருமன்றி 
உய்ந்தவர் யாவர்? இவ் விட்டுணு முதலியோர் யாவரும் முன்னாளிலே பாணமாதல் முதலிய தத்தம் பணிகளைச் 
செய்யும்பொழுது, அவர்கள் கருத்தை அறிந்து சிவபெருமான் தமது திருநகையினாலே முப்புரங்களையும் எரித்தமையை 
அறியீரா? தம்மை வழிபடும் மார்க்கண்டேயரை வைதுகொண்டு பெருங்கோபத்தோடு எதிர்ந்த இயமனை 
எம்பெருமான் தமது திருவடியினால் உதைத்தமையை அறியீரா? முன்னாளிலே நீரும் விட்டுணுவும் 'யானே பரம்பொருள்' 
'யானே பரம்பொருள்' என்று வாதிக்கும்பொழுது, எம்பெருமான் எழுந்தருளிவந்து, தம்மை இகழ்ந்த உம்முடைய 
உச்சிச் சிரசைக் கொய்தமையை மறந்தீரா? சலந்தரன் முதலிய அசுரர்கள் பலர் எம்பெருமானோடு எதிர்ந்து 
இறந்தொழிந்தமையைக் கேட்டிலீரா? உம்முடைய குமாரனாகிய தக்கனுடைய யாகத்திருந்தவர் யாவரும் எம்பெருமானால் 
விடுத்தருளப்பட்ட வீரபத்திரக் கடவுளினாலே மானமிழந்து வலிதொலைந்து இறந்தமையைப் பார்த்திலீரா? 

    திருப்பாற்கடலினின்றுந் தோன்றி விட்டுணுவும் அஞ்சி ஓட்டெடுக்கும் வண்ணம் துரந்த ஆலாகல         
விஷத்தை உண்டருளினாரே! உமாதேவியுடைய திருக்கை விரலிற்றோன்றி உலகெங்கும் பரந்த கங்கையை 
ஓரணுவைப்போலச் சடையிற் கொண்டருளினாரே! தம்மை இகழ்ந்த நரசிங்கத்தையும் யானையையும் 
புலியையும் உரித்து அவற்றின் தோல்களைப் போர்வையும் உடையுமாகக் கொண்டருளினமையைப் 
பார்த்திலீரா? தமது பெருமையை ஆராயாது யாவராயினும் அகந்தை கொள்வராயின், உடனே அவருடைய 
வலிமையைத் தொலைத்தல் சிவபெருமான் செயலென்பது அறியீரா? கடைநாளிலே உலகங்களெல்லாம் 
சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றும் ஓர் பொறியினாலே பொடி படுமென்பது, ஐயையோ,
 உமக்கு விளங்காதா? இத்தன்மைத்தாகிய முடிவி லாற்றலையுடைய சிவபெருமானை நான் என் கருப்புவில்லையும்
 புட்ப பாணத்தையுங்கொண்டு பொரச் சிறிதுந் துணியேன். தம்முயிர்மீது விருப்பில்லாதவரே இது செய்யத் துணிவர். 
ஆதிகாலத்தில் உலகத்தைப் படைக்கும் பொருட்டுத் தம்மோடு பிரிவில்லாத அருட்சத்தியையே தமக்கு மனைவியெனத் 
தாமாக இருத்தியருளிய பெருங்கருணைப் பெருமானை நானா மயல் செய்வது! இது நன்று நன்று" என்றான்.

    மன்மதன் இவ்வாறு கூறி மறுக்கவும், பிரமதேவர் மனக்கவலை கொண்டு, சிறிது பொழுது ஆலோசித்து, 
பெருமூச்செறிந்து, மன்மதனை நோக்கிச் சொல்வாராயினார்: "நீ சிவபெருமானுடைய பெருமையை எடுத்துப் 
பேசினாய். இது சத்தியமே. சிவபெருமானைப் பொருதல் எளிதா, யாவருக்கும் அரிதன்றோ! ஆயினும், தம்மை 
அடைந்தோரது துன்பத்தை ஒழித்தருளும் எம்பெருமானுடைய திருவருளினால் இக்கருமம் உன்னாலே முடியும். 
பிறரான் முடியுமா, முடியாது. எல்லார் செயலும் இறைவன் செயலேயன்றிப் பிறிதன்று. அவருடைய திருவருளையின்றி 
ஓரணுவும் அசையாது, யாவும் நில்லா. நீ இப்பொழுது அவரிடத்தே செல்லக்கடவாய். உன் செயலும் அவர்செயலே. 

    இறுமாந்து தம்மைப் புகழும் தேவர்கள் யாவரும் மருளும் வண்ணம் எம்பெருமான் ஓரியக்க வடிவங்கொண்டு 
வந்திருந்து ஒரு துரும்பை நிறுவி, அனைத்தும் தஞ்செய்கையெனக் காட்டியருளினாரே. நம்மாலும் சிலமுற்றுமென்றல் 
நாணன்றோ? உயிர்ப்பொருளும் உயிரில் பொருளுமாகிய யாவும் பாவைபோலும், அவற்றை ஆட்டுவிப்பவர் 
சிவபெருமானே. ஆராயுங்கால், நம்மால் ஒன்று ஆகுமா! மன்மதனே, இதனை நீ இந்நாள்காறும் அறிந்திலையா! 
நீ விரைந்து அவரைப் பொரும்வண்ணம் செல்லக்கடவாய்; அதுவும் அவரருளே. இன்னும் சொல்வேன் கேள். 
துன்பமனுபவிப்போர் யாவராயினும் தமக்கு உதவிசெய்யும்பொருட்டு இரந்தாராயின், ஒருவன் அது செய்யாது 
மறுத்துத் தன்னுயிரைத் தாங்குதல் உலக நடைக்குத் தக்கதா? ஒருவன் பிறருக்கு யாதாயினுமோருதவியைச் 
செய்யவல்லனாயின், தானே செய்தல் உத்தமம், அவர் சொல்லியபின் செய்தல் மத்திமம், சொல்லிய பின்பும் 
பலநாண் மறுத்துப் பின் செய்தல் அதமம். யாவராயினும் துன்பமுழந்து வருந்துவராயின், அதனை நீக்குதற் 
பொருட்டுத் தம்முயிரை விடினும், அது தருமமே. 

    மறுத்தாராயின், பாவமும் பழியும் நீங்காவாம். ஒருவன் தானுய்தலே பொருளாகக்கொண்டு பிறருக்கு, 
உதவி செய்யா தொழிவனாயின், அவன் சிறியோனே; அவன் கழித்த நாள் நன்னாளாகுமா? அவன் வாழ்க்கை 
பொய்கையின் மலர்ந்த கோட்டிபோலும். விட்டுணுவைப் பொருது வென்ற ததீசி முனிவர் விருத்திரனைக் 
கொல்லும்பொருட்டு இந்திரன் வந்திரப்பத் தம் முதுகெலும்பைக் கொடுத்து உயிர்விட்டமையை நீ கேட்டிலையா? 
எம்பெருமான் திருப்பாற்கடலினின்றுந் தோன்றிய ஆலாகல விஷத்தை உண்டு தேவர்களுக்கு அமிர்தமருளிச்    
செய்தமையை நீ சிறிதும் அறிந்திலையா? அவ்வாலாகலம் தாக்கும்பொழுது 'வருந்தாதொழியுங்கள்' என்று 
சொல்லி, விட்டுணு ஒருகணமாயினும் ஊக்கத்தோடு எதிர்ந்து நின்று நம்மைக் காக்கும் பொருட்டுத் தாம் 
கறுத்தமையை நீ கண்டிலையா? 

    யாராயினுமொருவர் பிறர்மீது அன்புகூர்ந்து அவருக்கு உதவிசெய்ய விரும்புவராயின், அதனாலே 
தமக்கு வரும் பெருங்கொடுந் துன்பத்தையேனும் மரணத்தையேனும் பாரார்; புகழொன்றே பயனாகக் கொள்வர். யாவரினும் 
வலிய சூரபன்மனுடைய ஏவலினாலே நாமெல்லாம் துன்பமுற்று வருந்துகின்றோம். இனி அது நீங்கும்படி 
சிவபெருமான் ஒரு திருக்குமாரரைத் தரும்வண்ணம் பஞ்சபாணங்களைச் செலுத்தும் பொருட்டு உன்னை நாம் 
வேண்டுகின்றோம். ஆதலால்,நமது துன்பத்தை ஒழிக்கும் பொருட்டு உனக்கு மரணம் வரினும் அதைத் தவறாகக் 
கொள்ளாதே. புகழைத் தேடுவோர் யாது வரினும் எதிர்செல்வர். இனி மறுத்துப் பேசாதே; நாம் பணித்தபடி 
செல்லக்கடவாய்'' என்றார்.

    பிரமதேவர் இவ்வாறு சொல்லவும், மன்மதன் துயரங்கொண்டு "நான் சிவபெருமானுக்கு 
மாறுகொண்டு பொரமாட்டேன். இஃதன்றி எனக்கடுத்ததொன்று சொல்லும், செய்வேன்'' என்றான். 
உடனே பிரமதேவர் கோபங்கொண்டு, "நாம் நயந்து சொல்லிய சொல்லை மறுத்துவிட்டாய். 
நாஞ்சொல்லியபடி செய்வாயாயின், உய்வாய். இன்னும் மறுப்பாயாயின்,  உனக்குச் சாபமிடுவேம். 
யாது துணிவு? சொல்வாயாக'' என்றார். மன்மதன் அதுகேட்டு, வருந்திப் பெருமூச்செறிந்து, "நான் இனி 
யாது செய்வேன்'' என்று கிலேசித்து, தன் மனசைத் தேற்றிக்கொண்டு, பிரமதேவரை நோக்கி, "சுவாமீ, 
நான் நீரிடுஞ் சாபத்தினாலே முன்னை யியல்பிழந்து துன்பமனுபவித்து வருந்துதலினும் சிவபெருமான் 
றிருமுன் சென்று பாணங்களைத் தொடுத்து மாளினுஞ் சிறந்தது; அங்ஙனம் மாண்டாற் பின்னும் உய்யலாம். 

    நீர் கோபிக்கவேண்டாம். நான் இன்று சிவபெருமானோடு போர்செய்யப் போகின்றேன்" என்றான். 
பிரமதேவர் மனமகிழ்ந்து, ''மன்மதனே, நீ நாம் பணித்தபடி செய்யத் துணிந்தது நன்று நன்று. சிவபெருமானிடத்தே 
உன்னை விடுத்து யாமிங்கிரேம், தொடர்ந்து பின்னே வருவேம். அஞ்சாதே, போ" என்று ஏவினார். அப்பொழுது 
இந்திரன் மன்மதனை நோக்கி, "மைந்தனே, நான் தேவர்களோடும் துன்பமனுபவித்துச் சிறுமையுற்றமை 
உனக்குத் தெரியுமே. நமக்கு வாழ்வு தருங் கருத்துடையையாயின், சிவபெருமான் உமாதேவியைத் 
திருக்கல்யாணஞ் செய்யும் வண்ணம் புரியக்கடவாய்" என்றான்.

    அதுகேட்ட மன்மதன் அங்குநின்று நீங்கி, தன்னகரத்தை அடைந்து, தன்மனைவியாகிய இரதிக்கு 
அவ்வியற்கையைச் சொல்லி, அவளைத் தெளிவித்து ஒருப்படுத்திக்கொண்டு, புட்ப பாணங்கள் இட்ட தூணியை 
முதுகிலே கட்டி, மாந்தளிராகிய உடைவாளை அரையிலே வைத்து, வில்லைக் கையிற்கொண்டு, குயில்கள் 
காகளமாகவும் கடல்கள் முரசமாகவும் ஒலிக்க, திரைகள் சாமரமாக அசைந்து செல்ல, மற்சக்கொடி செல்ல, 
சந்திரன் குடையாக நிழற்ற, கிளிகளாகிய குதிரைகள் பூண்ட தென்றலாகிய தேர்மீது இரதியோடுமேறி, 
தன்னுலகத்தை அகன்று, துர்ச் சகுனங்கள் அளவில்லாதன நிகழ, திருக் கைலாசமலையை அணுகினான். 

    தூரத்தே திருக்கைலாச மலையைக் கண்டு தேரினின்றுமிறங்கி, வணங்கிக்கொண்டு, தனக்கு அயலில் 
வந்த பரிசனத்தை அங்கு நிறுத்தி, புலியைத் துயிலுணர்த்தப் புகும் மான்போல இரதியோடு துணிந்து சென்றான். 
திருக்கைலாசமலை மேல் ஏறி, அங்கே புணர்ச்சியின்றி இருந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் காமப்பற்றை 
விளைவிக்க நினைந்து, தன் கைவில்லை வளைத்துப் புட்ப பாணங்களைத் தொடுத்தான். சிவபெருமானுடைய 
திருக்கோயிலின் முதற் கோபுர வாயிற்கண் எழுந்தருளியிராநின்ற சிவானுபூதிப் பெருவாழ்வாகிய திருநந்திதேவர் 
அதுகண்டு,கோபித்து, "இது மன்மதனுடைய செய்கையே'' என்று திருவுளங்கொண்டு, "உம்" என்று உரப்பினார். 

    அதனால் மன்மதனுடைய பாணங்கள் மிருகங்கண்மேலும் பறவைகண்மேலும் செல்லாது 
ஆகாயத்திலே தடைப்பட்டு நின்றன. மன்மதன் அதுகண்டு, திருநந்திதேவருடைய காவலையும் 
ஆணையையும் நோக்கி, பெருமூச்செறிந்து, நடுநடுங்கி, விம்மி, அவர் திருமுன் விரைந்துசென்று, 
அவரை வணங்கி எழுந்து, அஞ்சலிசெய்து நின்று, தோத்திரம் பண்ணினான். திருநந்திதேவர் 
மன்மதனை நோக்கி, "நீ இம்மலைக்கண் வந்தது என்னை'' என்று வினாவியருள, மன்மதன் 
பிரமதேவருடைய புணர்ப்பனைத்தையும் திருநந்திதேவருக்கு மெய்ம்மையாக விண்ணப்பஞ் செய்தான். 
அதுகேட்ட திருநந்திதேவர், தமது திருவுளத்திலே இவ்வாறு எண்ணுவாராயினார்: "பிரமன் முதலிய தேவர்கள் 
தங்கள் துன்பம் நீங்கு நிமித்தம் இம்மன்மதனை விடுத்தார்கள். சிவபெருமான் தாம் யோகத்திருக்கும்பொழுது 
யாவர் வரினும் உள்ளே விடுக்கலாகாதெனவும், மன்மதனை மாத்திரம் விடுக்கலாமெனவும், எனக்குப் 
பணித்தருளினார். 

    பசுவைக் கொன்று யாகஞ்செய்து பின்னர் அப்பசுவை முன் போல எழுப்பும்படி வேதஞ்சொல்லியவாறு
போல எம்பெருமானும் மன்மதனைக் கொன்று உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து, பின்பு அவனை 
முன்போலவே எழுப்பும்படி திருவுளங்கொண்டருளினர்போலும். ஆதலால், இது அருளே, இவன் வரவும் ஆணையே" 
என்று நினைந்து, மன்மதனை நோக்கி, ''நீ சிவபெருமான்றிருமுன் செல்லல் வேண்டுமா" என்றார். மன்மதன் 
வணங்கி நின்று, "சுவாமீ, அடியேனுக்கு மரணம் வரினும் சிவபெருமான்றிருமுன் செல்லுதற்கு உடன்பட்டு 
இங்கு வந்தேன். அதற்கியைந்த வகைமையை அருளிச்செய்யும்' என்று விண்ணப்பஞ் செய்தான். திருநந்திதேவர் 
'நீ சிவபெருமான்றிருமுன் செல்ல விரும்பினையாயின், மேலை வாயிலாலே செல்லக்கடவாய்'' என்றார்.

    மன்மதன் வணங்கி விடைபெற்றுக்கொண்டு, மேலை வாயிலாலே சென்று, தேவதேவராகிய சிவபெருமான் 
அக்கினிமலைபோல மௌனத்தோடு எழுந்தருளியிருந்த திருவெல்லையை அணுகினான். அணுகியவுடனே,
ஒப்பில்லாததொரு சரபம் இருந்தமை கண்ட சிங்கக்குட்டிபோலச் சிவபெருமான் எழுந்தருளியிருந்தமை கண்ட 
விட்டுணு குமாரனாகிய மன்மதன் அஞ்சி, சரீரமெல்லாம் வேர்ப்ப நடுநடுங்கி, தன்கையிற்கொண்ட படையோடு 
அவசரமாக விரைவில் வீழ்ந்தான். உடனே இரதி "ஐயையோ இறந்தான்போலும் ' என்று துன்பங்கொண்டு, 
அவனை எடுத்துக் கையிற்றாங்கித் தேற்றினாள். மன்மதன் அறிவுபெற்று, "தந்துயரொழித்தலொன்றே 
பயனாகக் கொண்ட பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள், திருநகையினாலே முப்புரத்தையும் எரித்தருளிய 
மகாதேவரைப் பொரும்வண்ணம், என்ன இங்கு விடுத்தார்கள். 

    தீவினையேற்கு இப்போதே மரணம் வந்தணுகியது  இதற்கும் ஐயமுண்டா! மகாதேவர் எழுந்தருளியிருக்கும் 
இத்திருக்கோலத்தைக் கண்டவுடனே அஞ்சி நடுநடுங்கி அவசமாயினேனே! இவ்வியல்புடைய சிறியேன் கைக்கொண்ட 
பாணங்களா இம்மகாதேவரை வெல்வன?  இதனைப் பிரமனும் தேவர்களும் அறியார்கள் போலும். பிரசண்ட வாயு 
முன்னே தீபத்தைப் போக்கினால் அது நிற்குமா. அதுபோலவே தேவர்கள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத இப்பரம் 
பொருளுக்கு முன்னே சிறியேனை விடுத்தார்கள். இம்மகாதேவருடைய திருநோக்கினாலே இனிச் சிறிது பொழுதினுள்ளே
 நான் நுண்பொடியாவேன். சருவ லோகங்களையும் சங்கரிக்கும் இம்முழுமுதற் கடவுளைப் புட்பபாணங்கொண்டு 
நானா பொர வல்லேன்! இது நகைப்புக் கிடமன்றோ! இது விதியின்செய்கையே, விதியை யாவர் கடக்கவல்லர்! பிரமனாலும் 
முடியாதன்றோ! இவையெல்லாம் சிவன் செயலே. யாது முடியுமோ! அறியேன். நான் இவ்வாறு தூங்கிக் கிடத்தலாகாது. 
இனி விரைந்தெழுந்து, வில்லை வளைத்துப் புட்ப பாணங்களைப் பூட்டி, எம்பெருமான் பக்கத்தே நின்று, 
வல்லவாறு செய்வேன். மேலே பட்டவா படுக" என்று நினைந்து, கீழ்விழுந்த வில்லை எடுத்து வளைத்து புட்ப பாணங்களைப் 
பூட்டிக்கொண்டு, இரதி தன்னை அகலாது செல்ல, சிவபெருமானுக்கு ஒருபக்கத்திலே போய்ப் பொரும்வண்ணம் 
முயன்று நின்றான். 

     மன்மதன் இங்கே நிற்க, மனோவதி நகரத்திலே பிரமதேவரை இந்திரன் வணங்கி, 
"சுவாமீ, நீர் மன்மதனைச் சிவபெருமானிடத்து விடுத்தீரே,  அவன் செய்யும் போரைப் பார்க்கும் வண்ணம் 
நாமெல்லாம் போதல் வேண்டும்" என்றான். பிரமதேவர் அதற்கியைந்து, இந்திரன் முதலிய தேவர்களோடு 
சென்று, திருக்கைலாசமலையின் மீது ஒரு பக்கத்தே போய், சிவபெருமானைத் துதித்து, மன்மதனுடைய 
செயலைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

    மன்மதன் "நான் நினைத்தது முடிப்பேன்" என்று, புட்ப பாணங்களைந்தையும் சிவபெருமான்மீது 
செல்லவிட்டான். அவை திருமேனிமீது படுதலும், சிவபெருமான் மன்மதனைச் சிறிதே பார்த்தார். பார்த்தவுடனே
மன்மதனை அக்கினி வடிவாகிய நெற்றிக்கண் விரைந்து சுட்டது. திருக்கைலாச மலையெங்கும் புகை பரந்தது. 
பரத்தலும், கீழைக் கோபுர வாயிலின் கண் எழுந்தருளியிருந்த திருநந்திதேவர், அதுகண்டு தம்மைச் சூழ்ந்த 
கணங்களை நோக்கி, ''உள்ளே சென்ற மன்மதன் இறந்துவிட்டான். மன்மதனைப் பொடித்தது எம்பெருமானுடைய 
நெற்றிக்கண்ணுமிழ்ந்த அக்கினி யன்று, சிவபெருமானை எய்வேனென்று துணிந்து சொல்லி இங்கு வந்த 
அவன்செயற்கையே அவனைச் சுட்டதுபோலும். இனி இரதியானவள் தன் கணவன் இறந்தமை கண்டு புலம்பி 
எம்பெருமானை வந்திரப்ப, எம்பெருமான் மன்மதனை உயிர்ப்பித்தருளுவர்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அதுகேட்ட கணர்கள் சருவான்மாக்களும் உய்யும்பொருட்டுத் திருவுளங் கொண்டருளும் எம்பெருமானுடைய 
திருவருணீர்மையை எடுத்துத் துதி செய்துகொண்டிருந்தார்கள். சிவபெருமான் மன்மதனை எரித்துவிட்டு, முன்போலவே 
மௌனத்தோடு எழுந்தருளியிருந்தார். இரதி தன் கணவன் இறந்தமை கண்டு, துயரங் கொண்டு அறிவிழந்து, 
கண்ணீர்சொரிய உடம்பெங்கும் வேர்வை தோன்றக் கீழே விழுந்தாள். சிறிது பொழுது சென்றபின், அறிவு வருதலும், 
கையினாலே வயிறலைத்துப் புலம்புவாளாயினாள்: "இலக்குமி குமாரனே, என்னுயிரே, விட்டுணு புதல்வனே, 
சம்பரனுக்குப் பகைவனே, கருப்பு வில்லைக் கையிற்கொண்ட வீரனே, நீ செம்பவள மலையைப் போலும் 
சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணினால் எரிந்தாயே! தேவர்களுடைய கண்களெல்லாம் உறங்கினவோ! 
பிரமதேவரும் மகிழ்ந்தனரோ! 

    முன்னாளிலே முப்புரங்களை எரித்தருளிய மகாதேவர் மேலே போர் செய்யப்போதல் முறையோ
 முறையோ' என்று நான் சொன்னாலும் கேட்டாயில்லையே! தேவர்களுடைய பணியைச் செய்வதே துணிவாகக் 
கொண்டாயே! உன் சரீரம் பொடியாய்ப் போயிற்றே! இது கண்டும் உய்வாருண்டா! என்னுயிராகிய நீ 
இறந்தபின்னும் நான் தனியே இருக்கலாமா! மகாதேவருடைய நெற்றிக்கண் உனக்கு மாறாக, உன்வலிமை. 
இலதாக, உன் சரீரமோ நீறாக, திருக் கைலாசமலையெல்லாம் நெருப்பாக, கவலை தேவர்களுடைய நெஞ்சத்ததாக,
ஆறாத பெருந்துயரம் எனக்காக, நீ எங்கே ஒளித்தாய்? அருவாயேனும் சொல்லாயோ! ஒன்றும் பேசாதிருக்கின்றாயே! 
என்கணவனே, உனக்கு நான் யாதாயினுங் குறை செய்ததுண்டா! தேவர்களிடத்தோ, இந்திரனிடத்தோ,உன்னை 
இங்கு விடுத்த பிரமனிடத்தோ, 'சிவபெருமானுடைய மௌன நிலையைச் சிதைப்பேன்' என்று இங்கு விரைந்து 
வந்த உன்னிடத்தோ, நீ பொடியாயிறந்த இந்தப்பழி யாரிடத்துச் சென்றதையா! 

    சிவ பெருமானுடைய யோகத்தைத் தவிர்க்க வேண்டின், தேவர்களெல்லாரும் இறந்தார்களோ! என்கணவனே, 
நீ மாத்திரமா இலக்காய் நின்றாய்! உன்னைக் கொல்லாமற் கொன்றார்களே! என்னுயிருக்குங் கொலை சூழ்ந்தார்களே! 
பொல்லாதவர்களுக்கு நன்மை செய்வது தம்முயிர் போகும் பொருட்டன்றோ? நான் என்ன பாவஞ்செய்தேனோ! 
என்போலும் மகளிருக்கு என்னவிடர் செய்தேனோ! முன்னை விதியை அறிவேனோ! ஐயையோ இப்படி முடிந்ததே! 
என்காவலவோ, தமியேனைக் காத்திடாயோ! சிவபெருமானை நோவதற்கு நீதி உண்டோ! உன்முடியைக் காணேனே! 
அழகொழுகாநின்ற உனது திருமுகப் பொலிவைக் காணேனே! இரத்தினாபரணங்கள் விளங்காநின்ற புயங்களைக் 
காணேனே! மார்பினழகைக் காணேனே! புட்ப பாணங்களைக் காணேனே! வில்லைக் காணேனே! போர் செய்யுங்
கோலத்தைக் காணேனே! நான் என்செய்வேன், என்செய்வேன்! 

    என் கணவா,  என்னையொழித்து எவ்விடத்தே இருக்கின்றாய்! அந்நாளிலே அக்கினி சாக்ஷியாக, 
தேவர்களும் பிரம விட்டுணுக்களுங் காண, என்னை மங்கலியந் தரித்து விவாகஞ் செய்தபொழுது 'நான் உன்னைப் 
பிரியேன்' என்று சத்தியஞ் செய்தாயே! வேனின் மன்னாவோ மன்னாவோ, என்னைத் தனியே விட்டுப்போதல் நீதியோ! 
சொல்லு. போ என்று உன்னை இங்கு விடுத்த தேவர்களெல்லாம் பொடியாய்ப் போன உன்னை வா என்று 
விரைந்தெழுப்ப மாட்டார்களோ! உன் பிதா மிக வலியவன் என்று சொல்வார்களே! ஓவென்று நான் இங்கே அழவும், 
வந்தானில்லையே! உறங்கினானோ! எரிந்து போவாயென்று உன் சிரத்தில் விதித்திருந்தால், அவரையெல்லாம் 
நான் வெறுக்கலாமோ? பிரமாவையும் இந்திரனையும் உன் பிதாவாகிய விட்டுணுவையும் முனிவர்களையும் 
மற்றை யாவரையும் உன்னுடைய புட்ப பாணத்தினால் மருட்டி வென்றாய்; 

    அதுபோலவே சிவபெருமானையும் நினைந்து, இப்படி யழிந்தாயே.  இது விளக்கில் வீழும் விட்டிலின் 
செயல்போலுமன்றோ! பூஞ்சோலையிலே பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடிப் பூக்கொய்து, புட்ப சயனத்தின் 
மீது சிறுதென்றல் இனிது வீச, பச்சைக் கர்பூரங் கலந்த சந்தனச் சேறாடி, இருவருமாய்க் கூடித் துயில் செய்த 
வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையாயிற்றே! தம்மை மருமகனென்று அவமதித்த தக்கனுடைய 
வேள்வியை அழித்த மகாதேவரைப் போர் செய்யென்று தேவர்களெல்லாம் உன்னை விடுத்தார்களே! 
அவர்களாலே பொடிபட்டாயே! நானும் உன்னைப் போல ஆறாத பெருந்துயரத்தினால் எரிகின்றேன்! 
என்னுயிரே,நானும் அங்கே வருகின்றேன் வருகின்றேன்'' என்று புலம்பி வருந்தினாள்.

                திருச்சிற்றம்பலம்.

                மோன நீங்குபடலம்.

    பிரமா முதலிய தேவர்களெல்லாரும் மன்மதன் பொடிபட்டமையையும் சிவபெருமான் முன்போலவே 
மௌனத்தோடு எழுந்தருளியிருத்தலையுங்கண்டு, சரீரம் நடுநடுங்கி, கண்ணீர் வார, வேர்வை தோன்ற,
துன்பக் கடலின் வீழ்ந்து, அழுதார்கள்."நாமெல்லாம் உய்யும்வண்ணம் மன்மதனைச் சிவபெருமானிடத்தே 
விடுத்தேம், சிவபெருமான் அவனைப் பொடி படுத்தனர். தமது மௌனநிலையை விடுத்திலர், முன்போலவே 
எழுந்தருளியிருக்கின்றார். ஐயையோ இனி யாது செய்வேம்" என்று அயர்ந்தார்கள். 

    "மன்மதனைப் பொடிபடுத்திய எம்பெருமானுடைய மௌன நிலையை உபாயத்தினாலே நீக்குதல் கூடாது; 
அவர் நம்மைத் துயரத்தினின்றும் நீக்கிக் காத்தல் வேண்டுமாயின், நாமெல்லாம் அவரைத் துதிப்பதே கடன்' என்று 
கோபுரத்தின் புறத்தே சென்று துதிக்கலுற்றார்கள்: "நஞ்சை உண்டும், கங்கையைச் சூடியும், நெற்றியிலே 
அக்கினிக் கண்ணைப் படைத்தும், அசுரர்களைக் கொன்றும், முன்னாளிலே அடியேங்களைக் காத்தருளினீர். 
இப்பொழுது அருள்செய்யீராயின், புதல்வர்களாகிய எங்களுக்குப் பிதாவாகிய உம்மையன்றிப் புகலிடமாவார் 
யாவர்! அன்பர்கள் குற்றமே செயினும் குணமாகக் கொண்டருளும் எம்பெருமானே, உம்முடைய திருவடிகளே 
சரணம் என்று அடைந்தேம். நாம் நாடோறும் சூரபன்மாவினாலே நலிவெய்தி மாளலாமா! சிறிதாயினும் எமது 
துயரத்தைத் திருவுளங்கொண்டருளீரா? நீர் உமாதேவியாரைப் பிரிந்து யோகநெறி காட்டற்கண் உமக்கு ஓரிறைப் 
பொழுது மாத்திரமே சென்றது; எங்களுக்கோ பலயுகங்கள் சென்றன. இன்னும் நீர் புறக்கணித்திருப்பீராயின், 
நாமெல்லாம் உய்வது எப்படி! விட்டுணு முதலியோர் யாவரும் உம்மை நோக்கித் தவஞ்செய்து உம்முடைய 
திருவடிகளைப் பூசித்துத் துதிக்க,நீரே இப்பதங்களெல்லா வற்றையும் அருளிச்செய்தீர். 

    தோற்றமும் ஈறும் இல்லாதவராகிப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் 
ஐந்தொழில்களையும் செய்யும் முழுமுதற்கடவுள் நீரே. இத்தன்மையையுடைய நீர் செய்யும் இத் தவநிலை 
எம்பொருட்டன்றி உம்பொருட்டன்றே. அடியேங்கள் முன் செய்த பெருங்கொடும்பாவத்தினாலே சிறியேங்களை 
இடராகிய வாளினாலே நாடோறும் அரிகின்றீர். இனி எங்களைக் காத்தருளும், அல்லது விரைந்து கொன்றுவிடும். 
இவ்விரண்டினுள் எது உமக்குப் பிரீதியோ அது செய்யும். நீர் உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து அடியேங்களைக் 
காத்தருளும் வண்ணம் மன்மதனை உம்மிடத்து விடுத்தேம் அறிவிலாதேம். நீர் அவனைப் பொடிபடுத்தி முன்போலவே 
எழுந்தருளியிருக்கின்றீர். அடியேங்கள் இவ்வாறு வருந்தலாமா! இனியாயினும் சிறிது திருவுளமிரங்கீரா! 
நரசிங்க முதலிய மிருகங்களை உரித்து அவற்றின் றோல்களைத் தரித்தருளினீர். தக்கனுடைய யாகத்தை 
வீரபத்திரக் கடவுளைக் கொண்டு தடிந்தருளினீர். அதுபோலவே, சூரபன்மனைக் கொன்று, அடியேங்களுடைய 
துயரத்தை நீக்கியருளும்'' என்றார்கள்.

    பிரமா முதலிய தேவர்கள் உருகுகின்ற அரக்குப் போலச் சரீரம் தளர்ந்து, இவ்வாறே மனநொந்து 
அழுது துதித்தலும், அவர்களுடைய பாவம் முடிவதற்கு அணித்தாயினமையால், சிவபெருமான் திருவுளமிரங்கி 
திருநந்திதேவரை நினைந்தருளினார். அதனை அறிந்த திருநந்திதேவர் சிவபெருமான்றிருமுன் சென்று, 
நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலிசெய்து நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "பிரமன் முதலிய தேவர்களை 
நம்முன் அழைத்துக் கொண்டு வரக்கடவாய்" என்று பணித்தருள, திருநந்திதேவர் முதற்கடையில் வந்தார். 
அது கண்ட பிரமா முதலிய தேவர்களெல்லாரும் திருநந்திதேவரை வணங்கித் துதித்தார்கள். திருநந்திதேவர்
அவர்களை நோக்கி, "எம்பெருமான் உங்களை உள்ளே அழைத்துக் கொண்டுவரும் வண்ணம் பணித்தருளினார். 
வருந்தாதொழிமின், வாருங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    இத்திருவாக்குச் செவிகடோறும் வார்த்த அமிர்தம் போலப் புகுதலும், தேவர்கள் பேரானந்தப் பெருங்கடலின் 
மூழ்கி, ஆரவாரித்துச் சிவபெருமானைப் பாடியாடினார்கள். திருநந்தி தேவர் தேவர்களைச் சிவபெருமான் றிருமுன்னே 
கொண்டுசென்றுய்ப்ப,  அவர்கள் சிவபெருமானைத் தரிசித்துப் பலகாலும் விழுந்து நமஸ்கரித்து எழுந்து அஞ்சலி 
செய்து நின்று, தோத்திரம் பண்ணினார்கள். சிவபெருமான் அவர்கண்மீது திருநோக்கஞ்செய்து, 'உங்கள் துன்பத்தையும் 
வேண்டுகோளையுஞ்சொல்லுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குத் தேவர்கள் "பெருங்கருணைக்கடலே, 
அளப்பில்லாத யுகங்களாக அடியேங்கள் சூரபன்மனுடைய ஆணையினாலே துன்பப்படுகின்றேம். அடியேங்களுடைய 
துன்பத்தை நீக்குவோர் நீரன்றி வேறு யாருளர்? சூரபன்மனைக் கொல்லும் பொருட்டு ஒருகுமாரரைத் தந்தருளும் 
வண்ணம், இமையமலையின் மீது தவஞ்செய்யாநின்ற உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ் செய்தருளுக" என்று 
விண்ணப்பஞ்செய்தார்கள். சிவபெருமான் அதற்கியைந்து, "நீங்கள் வருந்தாதொழிமின். நாம் உங்கள்பொருட்டு 
இமைய மலைமீது தவஞ்செய்யும் உமையைக் கல்யாணஞ்செய்து, உங்கள் வருத்தத்தை நீக்குவோம். இனி 
நீங்களெல்லீரும் போங்கள்' என்று திருவாய் மலர்ந்தருளினார். பிரமா முதலிய தேவர்களெல்லாரும் வணங்கி, விடை
பெற்றுக்கொண்டு, துயர நீங்கி, மகாமேருமலைமீது சென்றார்கள்.

    இரதி அது கண்டு, எம்பெருமான்றிரு முன்னே வணங்கித் துதித்து, " முறையோ, முறையோ! சுவாமீ, 
பிரமா முதலிய தேவர்களுடைய புணர்ப்பினாலே அடியேனுடைய  நாயகன் இங்கே வந்து உம்மாலிறந்தான். 
அவன் செய்த குற்றத்தைத் திருவுளங்கொள்ளாது அருள்செய்க" என்று விண்ணப்பஞ் செய்தாள். 
சிவபெருமான் கருணை கூர்ந்து, "இரதியே, நீ புலம்பாதொழி.  நாம் இமையமலைமீது சென்று 
உமையை விவாகஞ்செய்யும் பொழுது உன்னாயகனை உயிர்ப்பித்தருளுவோம்;  நீ போகக்கடவாய்" 
 என்று அருளிச்செய்தார். இரதி அதுகேட்டு மனமகிழ்ந்து, வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
இமைய மலையிற்சென்று, ஓர்பக்கத்தே முகிலினது வரவை நோக்கும் மயில் போலிருந்தாள்.

    சிவபெருமான் உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ்செய்து தேவர்களுடைய துன்பத்தை 
ஒழிக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, சனகர் முதலிய முனிவர்கள் நால்வரையும் நோக்கி, 
"மைந்தர்களே, ஞானயோகம் சொல்லற்பாலதன்று; அது இவ்வாறு மௌனத்தோடிருந்து நம்மை 
அறிவதேயாம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட முனிவர்கள் தெளிந்து 
மனமகிழ்ந்து, சிவபெருமானை மெய்யன்போடு வணங்கி நின்று, “கிருபா சமுத்திரமே, 
அடியேங்கள் முன்னை மயக்கம் நீங்கி உய்ந்தேம்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். சிவபெருமான் 
"இனி நீங்கள் நிட்டையிலிருந்து நமது  சாயுச்சிய பதத்தை அடையக்கடவீர்கள்'' என்று திருவாய் 
மலர்ந்து, விடைகொடுத்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            தவங்காண்படலம்.

    முனிவர்கள் சென்றபின்பு, சிவபெருமான் இமைய மலைமீது தவஞ் செய்யும் பார்ப்பதியம்மைக்குத் 
தம்மாட்டுள்ள அன்பையுங் காதலையும் யாவருக்குங் காட்டும் வண்ணம் திருவுளங்கொண்டு, கல்லாடையுடையும், 
சிகையும், விபூதியாலாகிய திரிபுண்டரமும், பூணூலும், கமண்டலம் பொருந்திய கையும், மழையையும், பனியையும் ,              
வெய்யிலையும் காக்கும் ஒலையும், தண்டும் உடைய ஒரு முதிய பிராமண வடிவங்கொண்டு இமைய மலையிற் 
சென்று, உமாதேவியார் தவஞ்செய்யுஞ் சாலையை அடைந்தார். கடைகாப்போராகிய மகளிர்கள் பலர் 
"இவர் பெரியவர்" என்று வந்து, அவர் திருவடிகளை வணங்கி நின்று, "முதியோரே, இம்மலைமீது வருதல் 
எளிதன்று; சுவாமிகள் வந்த காரியம் யாது" என்றார்கள். அதற்குப் பிராமணர் "பார்பதியம்மை செய்யுந் 
தவத்தைப் பார்க்க வந்தேன்'' என்றார்.

    உடனே சிலர் உமாதேவியிடத்தே சென்று, வயோதிகப் பிராமணருடைய வரவை விண்ணப்பஞ் 
செய்தார்கள். உமாதேவியார் "அவர் முதியவராயின், இங்கே அழைத்துக்கொண்டு வாருங்கள்" என்று பணித்தருள, 
அம்மகளிர்கள் பிராமணரை உமாதேவியார் திருமுன் கொண்டுசென்றுய்த்தார்கள். உடனே உமாதேவியார் 
'இவர் எம்பெருமானுடைய அடியவர்” என்று தொழுதார். அப்பொழுது தேவியாருக்கு மெய்த்துணையாயுள்ள 
விசயையென்பவள் ஓராசனமிட்டு, பிராமணரை அதன்மேல் இருத்தினாள். உமாதேவியாரும் பக்கத்திலே நின்றார். 
பிராமணர் உமாதேவியை விருப்பத்தோடு பார்த்து, 'உனதழகெல்லாம் அழிய, சரீரத்துள்ள தசை குன்ற, பெருந்தவஞ் 
செய்கின்றாய். யாது விரும்பினை? சொல்" என்றார். உமாதேவியார் விசயையுடைய முகத்தை நோக்கி, 
குறிப்பினாலே "இவருக்கு எதிர்மொழி சொல்லக்கடவாய்'' என்று கண் காட்ட, விசயை "சுவாமீ, இவ்வம்மையானவள் 
தன்னைச் சிவபெருமான் திருக்கல்யாணஞ்செய்து தம்மிடத்திருத்திக்கொள்ளும்பொருட்டுத் தவஞ்செய்கின்றாள்'' என்றாள்.

    பிராமணர் நகைத்து, பிரம விட்டுணுக்களாலும் அறியப்படாத சிவபெருமான் இவளுடைய தவத்துக்கு 
எய்துவாரா? எய்தினும், இவளை விருப்பத்தோடு விவாகஞ் செய்வாரா? இவள் அறியாதே தவஞ்செய்கின்றனள். 
சிவபெருமான் இவளுக்கு எளியவரா? இவள் வருந்தித் தவஞ்செய்தலால் ஓர்பயனுமில்லை. இத்துணைப் 
பெறலரும் பொருள் இவளுக்கு எளிதாகுமா? இவளுடைய அழகு பலகாலம் வறிதுபட்டதன்றோ! இனி இத்தவத்தை
 விரைந்து விடுதலே இவளுக்குக் கடன்" என்றார். 

    அதுகேட்டவுடனே உமாதேவியார் "ஐயையோ! எம்பெருமானுக்கு இவர் அன்பர், முதுகுரவர் என்று எண்ணினேன். 
இவர் இக்கடுஞ்சொல்லைச் சொல்வாரென்பது அறியேன்'' என்று திருவுளத்திலே கோபங்கொண்டு, வருந்திப் பெருமூச்செறிந்து, 
பொறுக்கலாற்றாமையால் நாணை விடுத்து, பிராமணரை நோக்கி, "தோற்றமும் இறுதியுமில்லாத மகாதேவர் 
என்கருத்தை முடியாது விடுவராயினும், நான் இத்தவத்தை விடுவேனோ! இன்னும் மிகக் கொடுந் தவத்தை 
அளப்பில்லாத காலஞ்செய்து உயிர்விடுவேன். நீ மிக மூத்தமையால் மயங்கினாய். பித்தனோ நீ'' என்றார். 
அதுகேட்ட பிராமணராகிய சிவபெருமான் மீட்டும் ஓர்புணர்ப்பைத் திருவுளங்கொண்டு, உமாதேவியாரை நோக்கி, 
"பெண்ணே, நீ விரும்பிய சிவனுடைய வளத்தினியல்பை நன்றாகக் கேட்டறிந்திலைபோலும். அதனை நாஞ் 
சொல்லுகின்றோம், கேள். சிவனுக்கு வஸ்திரம் தோல்; வாகனம் எருது; ஆபரணம் பாம்பு, எலும்பு, தலைமாலை, 
பன்றிக்கோடு முதலியன; போசன பாத்திரம் தலையோடு; போசனம் பிக்ஷையும் நஞ்சும்; நடனசாலை சுடுகாடு; 
அணிவன வெள்ளெருக்கு, அறுகு, கொன்றை, நொச்சி, மத்தம், கங்கை, பாம்பு முதலியன பல; சந்தனம் சாம்பர்; 
கையிற் றரிப்பன சூலம், மான், மழு, உடுக்கு, அக்கினி என்பன; சேனை பூதம். அச்சிவனுக்குத் தாயும் தந்தையும் 
சுற்றமும் உருவும் குணமுமில்லை. அவனுக்கு உரிய வளங்கள் இவைகளே. இவைகளெல்லாம் உன்னுடையனவாகும்
பொருட்டா நீ தவஞ்செய்து இளைத்தாய்? சிறப்புப் பொருந்திய அளப்பில்லாத வளங்களையுடைய மகாராசாவுடைய 
புத்திரிக்கு இது இயையுமா" என்றார்.

    பார்ப்பதியம்மையார் அது கேட்டவுடனே, திருச்செவிகளைத் திருக்கரங்களினாலே பொத்தி, "சிவசிவ'' 
என்றுசொல்லி, இரங்கி, பெருங்கோபங்கொண்டு, வருத்தமுற்று, பிராமணரை நோக்கி, "பார்ப்பானே, கேள். 
பரமபதியாகிய எம்பெருமானிடத்து உன்மனசிலே சிறிதாயினும் அன்பு நிகழ்ந்ததில்லை. நீ இச் சிவவேடங் 
கொண்டமை வேடுவர் காட்டினுள்ள பறவைகளைக் கவரும்பொருட்டுப் புதலை மேற்கொண்டமைபோலும். 
முன்னாளிலே தக்கனென்பானொருவன் உன்னைப்போலவே எம்பெருமானை இப்படி இகழ்ந்துபேசினதும் 
அதனால் அவன்பட்டபாடும் நீ கேட்டாயில்லையா! ஐயையோ! எம்பெருமானை இப்படி நீ என்முன் இகழ்ந்தாயே! 
பார்ப்பானே, நீ இந்நாள்வரையும் வேதங்களைச் சிறிதும் ஆராய்ந்தறிந்திலைபோலும். பார்ப்பார்கள், 
சிவபெருமானே பரம்பொருளென்று துணிந்து கூறா நின்ற வேதங்களை ஓதினாராயினும், அவ்வேதநெறியின் 
நில்லாது, தீயொழுக்கத்தையே மேற்கொண்டு சிவபெருமானை இகழ்ந்து இகழ்ந்து அவ்வதி பாதகத்தினாலே 
முத்தியெய்தாது பிறந்தும் இறந்தும் உழலும்வண்ணம், முன்னாளிலே இருடிகளாலே பெற்ற சாபம், ஐயையோ, 
உன்னையும் மயக்காது விடுமா! 

    செகற்பிதாவாகித் தங்களைப் பெற்றுத் தங்கள் தொழிலுக்கு அதிபதியாகித் தங்களுக்கு இன்றியமையாச் 
சிறப்பினையுடைய சிவபெருமானை நீங்கி, தங்கணவரை விடுத்துப் பிறர்பக்கமாகிக் கற்பினையிழந்த 
மகளிரைப் போலும் பார்ப்பார்களுடைய முறையே நீ செய்தாய். உன்னை நான் வெறுப்பதென்னை! ஆயினும், 
பார்ப்பார்களுள்ளே வேதத்தில் விதித்தபடி விபூதி உருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்களைத் தரித்து, 
சிவபெருமானுக்குத் தொண்டுசெய்வோரும் உண்டு. நீ அவர்போலச் சிவசின்னங்களைத் தரித்தும் 
சிவபெருமானை இகழ்ந்தாயெனின், அசுரர்களுள்ளும் உன்னைப் போலுந் தீயவர் இல்லை இல்லை. விருப்பு 
வெறுப்பில்லாத அநாதி பகவனை நீ இங்கே இகழ்ந்தனவெல்லாம் சருவான்மாக்களும் உய்யும்வண்ணம் 
பெருங்கருணையினாலே பூண்டருளுங் குறிகளென்று அறியக்கடவாய். இவையெல்லாம் எம்பெருமானுக்குப் 
புகழேயாம். அவருடைய இயல்பனைத்தும் யாவ ரறியவல்லவர்! நீ இகழ்ச்சிபோலப் பேசியவைகளெல்லாம் 
பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் தம்மை வழிபட்டுத் துதிக்க அவர்களுக்கு வலிமையையும் அதிகாரத்தையுங் 
கொடுத்தருளிய மகா தேவர் விருப்பும் வெறுப்புமின்றி உயிர்களுக்கு அருள்செய்யும் நிலையே என்று நினை. 
இவ்வாறே வேதமுதலிய உண்மை நூல்களெல்லாம் சொல்கின்றன. இவையெல்லாம் சித்த சுத்தியையுடைய 
பெரியோர்கள் அறிவர்கள். சிவநிந்தை செய்யும் அதிபாதகனாகிய உனக்குச் சொல்லொணாது: சொல்லிற் 
பாவம் பாவம்! பொய்வேடத்தவனே, புறம்பே போய்விடு" என்றார்.

    உடனே பிராமண வேடங்கொண்ட கள்வராகிய சிவபெருமான், ''பெண்ணே, உன்மேல் இச்சைகொண்டு 
வந்த என்செயலைக் கேளாது, என்னைப் புறத்தே போம்படி சொல்லுகின்றாய். இது தகுமா! நான் இங்கு வந்தது 
உன்னை விவாகஞ்செய்து கொள்ளற்பொருட்டே" என்றார். உடனே பார்ப்பதியம்மையார் திருச்செவிகளைப் 
பொத்தி, பொறுக்கலாற்றாது வருந்தி, சரீரம் பதைபதைக்க விம்மி, ''இக்கிழவன் போகான்; நானே போவேன்" 
என்று, தமது செந்தாமரைமலர்போலும் அருமைத் திருவடிகள் சேப்ப, அங்கோரிடத்தே போதலுற்றார். 
போதலோடும், பெருங்கருணைத் திருவிளையாட்டையுடைய சிவபெருமான் பார்ப்பதியம்மையாருடைய 
இயற்கையை நோக்கி, எல்லையில்லாத பேரருள் கூர்ந்து, பிராமண வேடத்தை ஒழித்து, பலகணங்கள் 
சூழ்ந்து துதிப்ப, இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். உமாதேவியார் அதுகண்டு, திருமேனி 
நடுநடுங்கி, நாணங்கொண்டு, பலகாலும் நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலிசெய்து நின்று, தோத்திரம்பண்ணி, 
"அளவற்ற அறிவினாலும் எட்டாத முழுமுதற்கடவுளே, உம்முடைய மாயையை அறிந்திலேன். அறிவொருசிறிதுமில்லாச் 
சிறியேன் உம்மை இகழ்ந்தமையைப் பெருங்கருணையோடும் பொறுத்தருளுக" என்று விண்ணப்பஞ்செய்தார். 

    அதற்குச் சிவபெருமான், "கேளாய், உமையே,நீ நம்மிடத்துள்ள அன்புமிகுதியினாலே முன்சொல்லியன 
வெல்லாம் துதியாகவே கொண்டோம். உன்னிடத்தே குற்றம் உண்டாயினன்றோ நாம் பொறுப்பது. இனி நீ கொடிய 
தவத்தினால் வருந்தாதொழி. நாளை உன்னை விவாகஞ்செய்ய வருவேம்'' என்று திருவாய்மலர்ந்து, மறைந்தருளினார். 
உமாதேவியார் திருவுள மிகமகிழ்ந்து, சிவபெருமானைச் சிந்தித்துத் துதித்துக்கொண்டிருந்தார்.  

    அங்குள்ள மகளிர் சிலர் மலையரையனிடத்துச் சென்று, சிவபெருமான் எழுந்தருளிவந்து பார்ப்பதியம்மைக்கு 
அருளிச்செய்தமையைத் தெரிவித்தார்கள். மலையரையன் மனத்துயரநீங்கி, விரைந்து தன்மனைவியாகிய மேனையோடு 
சென்று, உமாதேவியாரைத் தன்கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

            திருச்சிற்றம்பலம்.

            மணம்பேசுபடலம்.

    பார்ப்பதியம்மையாருடைய தவத்தைக் கண்டு திருவருள்செய்து,  திருக்கைலாசமலையை அடைந்து 
வீற்றிருந்தருளிய சிவபெருமான், சத்த விருடிகளைத் தந்திருமுன் வரும்வண்ணம், திருவுளத்தே நினைந்தருளினார்.
 அதனை அறிந்த இருடிகள் எழுவரும் மனம் அஞ்சி, சரீர நடுநடுங்கி, விரைந்து வந்து, சிவபெருமானை வணங்கி, 
அஞ்சலிசெய்து நின்று, "மகாதேவரே, பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் உம்முடைய ஏவலுக்கு உரியர்களாய் 
இருப்ப, அடியேங்களை நினைந்தருளினீர். அதனால் அவர்கள் செய்த தவத்தினும் அடியேங்கள் செய்த தவமே 
அதிகம்போலும். எம்பரம பிதாவே, நீர் சிறியேங்களைப் பெருங்கருணையோடு நினைந்தருளினமையால் 
உய்ந்தோம் உய்ந்தோம். அடியேங்கள் செய்த பெருங்கொடும் பாவங்களெல்லாம் நீங்கிவிட்டன. இனி ஒரு 
தீதுண்டாகுமா! அநாதியே தொடங்கி ஐந்தொழிலையும் இடையறாது செய்தருளும் பகவனே, நீர் அடியேங்களுடைய 
புன்மையை ஒழிக்கும் பொருட்டுத் திருவுளங் கொண்டருளினீர்! அடியேங்களால் விரைந்து செயற்பாலதனைப் 
பணித்தருளுக!" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். தேவதேவர் இருடிகண்மீது திருவருணோக்கஞ் செய்து,
 ''அன்பர்களே, நீங்கள் இமைய மலையரையனிடத்தே சென்று பார்ப்பதியை இன்றைக்கு நமக்கு விவாகஞ்செய்து 
தரும்வண்ணம் பேசிக் கொண்டு, விரைந்து நம்முன் வரக்கடவீர்கள்” என்று பணித்தருளினார்.

    இருடிகள் அத்திருப்பணியைச் சிரமேற்கொண்டு, சிவபெருமானை வணங்கி,நடந்து, இமையமலை 
யரையன் முன் செல்ல, அவன் தன் மனைவியோடும் எதிர்கொண்டு வணங்கி, அழைத்துக்கொண்டு சென்று, 
ஆசனத்திலிருத்திப் பூசித்துத் துதித்து நின்று, "இருடிகளே, உங்களுடைய திருவடித் தாமரைகள் படுதலால், 
இவ்விமையமலை மகாமேரு மலையைப் போலத் தூயதாகித் தலைமையும் பெற்றது. சிறியேனுடைய 
பிறவியும் இப்போழ்தே நீங்கியது. நீங்கள் அடியேனிடத்து வந்த நிமித்தம் யாது? சொல்லுக'' என்றான். 
அதற்கு இருடிகள் "அரசனே, உயிர்க்குயிராய் நின்ற சிவபெருமான் உன் புதல்வியாகிய பார்ப்பதியம்மையைத் 
திருக்கல்யாணஞ்செய்யத் திருவுளங்கொண்டு, உன்னோடு பேசும்பொருட்டு எங்களை விடுத்தருளினார்.
இதுவே எங்கள் வரலாறு' என்றார்கள்: 

    மலையரையன் அதற்கியைந்து, "சருவலோகைக நாயகராகிய சிவபெருமானுக்குச் சருவலோகங்களையும் 
சருவான்மாக்களையும் பெற்றும் நித்தியகன்னிகையாயுள்ள உமாதேவியைத் திருக்கல்யாணஞ்செய்து கொடுத்துச் 
சிறியேனையும் அடிமையாகக் கொடுப்பேன்" என்றான். மலையரையன் பக்கத்தே நின்ற மனைவியாகிய மேனை 
''பிரமதேவருடைய புதல்வனாகிய தக்கன் தன்புதல்வியை விவாகஞ்செய்துகொடுப்ப, சிவபெருமான் அவனுடைய 
சிரசைச் சேதித்தார் என்று பேசுகின்றார்கள். அதனை நினைந்து நினைந்து, மனம் அஞ்சுகின்றது. இவ்வாறாக, 
அவருக்கு எங்கள் புதல்வியை விவாகஞ்செய்துகொடுப்பது எங்ஙனம்" என்றாள். இருடிகள் மேனையை நோக்கி, 
"நீ வருந்தாதொழி. நீ உயர்வொப்பில்லாத சிவபெருமானுடைய செய்கையை நன்றாக அறிந்திலை. தக்கன் 
யாகத்திலே தமக்குக் கொடுக்கற்பாலதாகிய அவியை மாற்றித் தம்மை இகழ்ந்தமையால், சிவபெருமான் 
அவனுடைய சிரசைச் சேதித்தருளினார். தம்மை வழிபடும் அடியார்களுக்கு அனுக்கிரகமும், அல்லாதவர்களுக்கு 
நிக்கிரகமுஞ் செய்தல் சிவபெருமானியல்பு. இவ்வுண்மையை மேலோர் யாவரும் நன்குணர்வர்கள். 
நீயும் இதனை அறியக்கடவாய். வேறொன்றும் சிந்தனை செய்யாதே'' என்றார்கள். 

    மலையரையன் "இது சத்தியம்" என்றான். மேனை அஞ்சி நடுநடுங்கி, "ஐயையோ! எம்பெருமானுடைய 
செய்கையை அறியாதே சொல்லிவிட்டேன்' என்று நினைந்து, வருத்தமுற்று, இருடிகளுடைய திருவடிகளை 
வணங்கி நின்று. "பெண்ணறிவென்பது பெரும்பேதைமையை உடையதன்றோ! அடியேன் சிவபெருமானுடைய 
திருவருணீர்மையைச் சிறிதும் அறிந்திலேன். சிறியேன் சொல்லிய புன்மொழியைப் பொறுத்தருளுக'' என்றாள். 
இருடிகள் அவளிடத்தே திருவருள் செய்தார்கள். மலையரையன் இருடிகளை நோக்கி," ''அறிவு சிறிதுமில்லாத 
இவளுடைய புன்மொழியைத் திருவுளத்திலே கொண்டருளா தொழிமின். உமாதேவியைத் திருக்கல்யாணஞ் 
செய்யும் பொருட்டு எழுந்தருளி வரும்வண்ணம் சிவபெருமானுக்கு விண்ணப்பஞ் செய்யுங்கள்" என்றான்.

    அதுகேட்ட இருடிகள் எழுவரும் மன மிகமகிழ்ந்து, மலையரையனையும் மேனையையும் அங்கே நிறுத்தி, 
திருக்கைலாச மலையை அடைந்து, சிவபெருமான் றிருமுன் சென்று, அவரை வணங்கித் துதித்து, 
திருக்கல்யாணத்திற்கு மலையரையன் உடன்பட்டமையை விண்ணப்பஞ் செய்தார்கள். சிவபெருமான் "முனிவீர்காள், 
நீங்கள் உங்கள் செயலைச் செய்யும்பொருட்டுப் போங்கள்" என்று விடைகொடுத்தருள, இருடிகள் சிவபெருமானை 
வணங்கித் துதித்துக்கொண்டு, தங்கள் பதத்தை அடைந்தார்கள்.

                திருச்சிற்றம்பலம்.

                வரைபுனை படலம்.

    மலையரையன் தன் புதல்வியாகிய உமாதேவிக்குச் சிவபெருமான் வெளிப்பட்டு "உன்னை நாம் 
விவாகஞ்செய்வேம்'' என்று திருவாய் மலர்ந்தருளினமையையும் சத்தவிருடிகளைத் தன்னிடத்து விடுத்து 
மணம்பேசுவித்தமையையும் நினைந்து, மனமகிழ்ந்து, உமாதேவியைச் சிவபெருமானுக்குத் 
திருக்கல்யாணஞ் செய்துகொடுக்கக் கருதி, தேவத்தச்சனைத் தன்முன் வரும்வண்ணம் நினைந்தான். 
உடனே தேவத்தச்சன் அவனெதிர் வந்து, வணங்கி நின்று, "என்னை நீ நினைந்ததென்னை! என்னாலே 
செயற்பாலதாகிய பணி யாது? சொல்லுக" என்றான். அதற்கு மலையரையன் "நம்மை ஆட்கொண்டருளும் 
சிவபெருமானுக்கு யான் பெற்ற உலக மாதாவாகிய உமா தேவியைத் திருக்கல்யாணஞ் செய்துகொடுக்கக் 
கருதுகின்றேன். ஆதலால், நீ இந்நகர முழுதையும் அமராவதிபோல அலங்கரிக்கக்கடவாய்" என்றான்.

    அது கேட்ட தேவத்தச்சன் மனமகிழ்ந்து, அந்நகரத்தை அலங்கரிக்க நினைந்தான். இமைய 
மலையின்மேலே கோபுரங்களையும்,மன்றங்களையும், சூளிகைகளையும், நிலைத்தேர்களையும், 
மண்டபங்களையும், வீதிதோறும் பூம்பந்தர்களையும் செய்தான். பந்தர்களின்மேலே கொடிகளைக் 
கட்டி உள்ளே மேற்கட்டிகளினாலே அணிசெய்து, சாமரங்களையும் பூமாலைகளையும் தூக்கினான். 
வாழைகளையும் கமுகுகளையும் நாட்டினான். தோரணங்களைக் கட்டினான். எண்ணில்லாத தேவர்கள் 
கொணரும் பொருள்களெல்லாம் வைக்கும் வண்ணம் பலவகைப்பட்ட சாலைகளைச் செய்தான். 
கோயிலுக்கு ஒரு பக்கத்தே பதினாயிரம் யோசனைப் பரப்பினதாகிய ஒரு புரிசையையும், அதன் 
வாயில்கணான்கினும் கோபுரங்களையும், செய்தான். 

    அதனடுவே திருக்கல்யாண மண்டபத்தைச் செம்பொன்னினாலே செய்து, நிலத்தைச் சந்தனமும் 
கஸ்தூரியும் புழுகும் கலந்த பனிநீரினாலே பூசி, நறுமலர்களைத் தூவினான். தேவர்களெல்லாருக்கும் 
ஆசனங்களைச் செய்தான். பலநிறங்களானும் வேதிகைகளை இயற்றினான். கண்ணாடிகளையும் 
பூமாலைகளையும் சாமரங்களையும் வஸ்திரங்களையும் இரத்தின மாலைகளையுந் தூக்கினான். 
தேவர்களும் முனிவர்களும் அரம்பையர்களும் போலப் பிரதிமைகளைச் செய்து, சாமரம் வீசுதல் 
வீணைவாசித்தல் நடனஞ்செய்தல் முதலிய தொழில்களைச் செய்யுமாறமைத்தான். இவ்வாறு 
செய்யப்பட்ட திருமணச் சாலையினுள்ளே, சிவபெருமானும் உமாதேவியாரும் எழுந்தருளியிருக்கும் 
பொருட்டு, இந்திரநீல ரத்தினத்தினாலே ஒரு திவ்விய சிங்காசனஞ் செய்தான். குண்டமண்டல 
வேதிகைகளை வகுத்து, வேள்வித் திரவியங்களையும் அட்டமங்கலங்களையும் அமைத்தான். 

    பக்கத்திலே சூரியகாந்தம், சந்திர காந்தம், பவளம், முத்து, வைரம், பதும ராக முதலியவற்றினால் 
எண்ணில்லாத மண்டபங்களைச் செய்தான். புறத்திலே தாமரை முதலிய பூக்கள் மலரும் வாவிகளைச் 
செய்தான். மரகதம், பளிங்கு, வைரம், மாணிக்கம் பொன் முதலியவற்றால் பூந்தடாகங்களைச் 
செய்தான். கற்பகம், சந்தனம், அகில்,வாழை,கமுகு,பலா,மா,புன்னை முதலிய மரங்களைப் பற்பல 
ரத்தினங்களாலே செய்தான்.

    இவ்வாறே தேவத்தச்சன் தன்னினைவினாலே செய்து முடித்தலும், மலையரையன் அது கண்டு 
மகிழ்ந்து, பிரமா விட்டுணு முதலிய தேவர்களும் முனிவர்களும் தங்கள் தங்கள் மனைவியர்களோடும் 
உமாதேவியுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கவரும்பொருட்டுத் தூதர்களை எங்கும் விடுத்தான். 
தூதர்களுடைய வசனத்தை அறிந்து, தேவர்களும் முனிவர்களும் "நாமெல்லாம் சிவபெருமானை 
வணங்கிக்கொண்டு அவரோடும் வருவேம்'' என்றார்கள். துர்க்கையும், காளியும், சத்த நதிகளும், 
இலக்குமியும், சரசுவதியும், இந்திராணியும், இருடி பத்தினிகளும், அரம்பையர்களும் இமையமலையை 
அடைந்து, உமாதேவியாரை வணங்கினார்கள். இலக்குமி சரசுவதி முதலிய மகளிர்கள் தவத்தான் வருந்திய 
திருமேனியையுடைய உமாதேவியை வணங்கி, திருமணக் கோலஞ்செய்யும் பெரும்பேற்றைப் பெற்றார்கள். 
மகாமேரு மந்தரம் முதலிய சுற்றங்களும், கடல்களும், நாகங்களும், திக்குயானைகளும், பிறவும் வந்தன.

    மலையரையன் தன் சுற்றத்தாரோடு திருக்கைலாசமலையை அடைந்து, திருநந்திதேவர் உள்ளே 
விடுப்பச் சென்று, பரமசிவனை வணங்கி நின்று, "எம்பெருமானே, உலக மாதாவாகிய உமாதேவியைத் 
திருக்கல்யாணஞ் செய்யும் பொருட்டுத் திருவுளங் கொண்டருளினீர். சோதிட நூலோர் மங்கல தினமெனக் 
கூறிய பங்குனியுத்திரம் இன்றேயாகும். எம்பரமபிதாவே, இப்பொழுது இமைய மலைக்கு எழுந்தருளுக" என்று 
விண்ணப்பஞ் செய்தான். சிவபெருமான் மலையரையனை நோக்கி, "நாம் இப்பொழுதே எல்லையில்லாத 
கணங்கள் சூழ இமைய மலைக்கு எழுந்தருளுவோம். நீ முன்னே போகக் கடவாய்'' என்று திருவாய்மலர்ந்தருளினார். 
மலையரையன் சிவபெருமானை வணங்கித் துதித்துக்கொண்டு, மீண்டு தன்னகரத்தை அடைந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            கணங்கள் செல் படலம்.

    கைலாசபதி திருநந்திதேவரை நோக்கி, "நம்முடைய கல்யாணத்தைத் தரிசிக்கும்பொருட்டு, 
உருத்திர கணங்களையும், விட்டுணு பிரமன் இந்திரன் முதலிய தேவரையும், மற்றை யாவரையும் இங்கே 
தரக்கடவாய்' என்று பணித்தருளினார். திருநந்திதேவர் அத்திருப்பணியைச் சிரமேற்கொண்டு, 
அவர்களெல்லாரும் திருக்கல்யாணத்தின் பொருட்டு வரும்வண்ணம் நினைந்தார். அதனை யாவரும் 
அறிந்து, சிவபெருமானைத் துதித்து, விம்மிதமும் பத்தியும் பெருமிதமும் மகிழ்ச்சியும் திரண்டு செலுத்த, 
திருக்கைலாசத்துக்கு வருதலுற்றார்கள். காலாக்கினி ருத்திரர் பஞ்சவத்திரனும் இடப கேதுவும் உள்ளிட்ட 
ஆயிரங்கோடி கணங்கள் சூழ வந்தார். கூர்மாண்டேசர் எழுபத்திரண்டுகோடி பூதங்கள்சூழ வந்தார். 
ஆடகேசுரர் கோடி கோடி ருத்திரர்கள் சூழ வந்தார். வீரபத்திரக் கடவுள் நூறுபத்தாயிர கோடி பூதங்கள் சூழ வந்தார். 
அரிகர புத்திரராகிய ஐயனார் நூறுகோடி பூதங்கள் சூழ வந்தார். பதினோரு ருத்திரர்கள் வந்தார்கள். 

    ஈண்டுக் கூறிய உருத்திரர்களன்றி மற்றைப் பலபுவனங்களினுமுள்ள உருத்திரர்களும் வந்தார்கள். 
புத்திதத்துவத்திற் பொருந்திய பைசாசபுவனம், இராக்கதபுவனம், இயக்கபுவனம், காந்தருவபுவனம், 
ஐந்திரபுவனம், செளமியபுவனம், பிராசேசுரபுவனம், பிராமியபுவனம் என்னும் எட்டுப்புவனங்களினுள்ளோரும் 
வந்தார்கள். பவர் முதலிய அட்டமூர்த்திகள் எண்ணூறு கோடி பூதங்கள் சூழ வந்தார்கள். குண்டோதரர் 
நூறுகோடி பூதங்கள் சூழ வந்தார். கண்டகண்ணரும்பினாகியும் நூற்றிருகோடிபூதங்கள் சூழ வந்தார்கள். 
பானுகம்பர் நூற்றைம்பதுகோடி பூதங்கள் சூழ வந்தார். சங்குகன்னர் பலகோடி பூதங்கள் சூழ வந்தார். 
காளகண்டரும், தண்டியும், நீலரும், கரரும், விச்சுவமாலியும் மற்றைப் பூதர்களும் எண்ணில்லாத 
சேனைகளோடு வந்தார்கள். ஈசானர் நூற்றுமுப்பதுகோடி பூதங்கள் சூழ வந்தார். விட்டுணு,பிரமா, 
இந்திரன், திக்குப்பாலகர், தேவர்கள், சூரியன் சந்திரன் முதலிய கிரகங்கள், நக்ஷத்திரங்கள், சத்தமாதர்கள், 
அட்டவசுக்கள், விஞ்சையர்கள், இருடிகள் முதலிய யாவரும் வந்தார்கள். வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள்,
 பிருதிவி முதலிய பூதங்கள், உலகங்கள், நகரங்கள், காலங்கள் முதலியனவெல்லாம் தைவத வடிவங் 
கொண்டு வந்தன.

    இவ்வண்ணமே திருக்கைலாசமலையில் யாவரும் யாவும் வந்த தன்மையைத் திருநந்திதேவர் 
கண்டு மிகமகிழ்ந்து, உள்ளே புகுந்து, சிவபெருமானுக்கு விண்ணப்பஞ் செய்தருள, சிவபெருமான் 
"யாவரையும் இங்கே அழைத்துக்கொண்டு வரக்கடவாய்" என்று பணித்தருளினார். அது கேட்ட திருநந்திதேவர் 
முதற்கடையை அடைந்து, அங்கு நின்ற உருத்திரர்கள், தேவர்கள், முனிவர்கள் முதலிய யாவரையும் 
திருக்கோயிலினுள்ளே செல்ல விடுத்தார். விடுத்த காலையில், அவர்களெல்லாரும் திவ்விய சிங்காசனத்தின் 
மீது எழுந்தருளியிருக்கும் பரமகிருபாலுவாகிய சிவபெருமானைத் தரிசித்து, பேரன்போடு வணங்கி வணங்கி 
எழுந்து,சிரசின் மீது குவித்த கைகளோடு அவருடைய திருப்புகழைத் துதித்துக்கொண்டு சந்நிதியை 
அணுகினார்கள். திருநந்திதேவர் அங்கு நின்ற உருத்திரர் முதலிய யாவரையும் தம்முடைய திருவிரலினாலே 
வெவ்வேறாகச் சுட்டிக் காட்டி விண்ணப்பஞ்செய்தார்.

    அப்பொழுது பிரமதேவர் எம்பெருமான் அணியும்பொருட்டு முடி முதலிய பலவகைப்பட்ட 
திவ்வியாபரணங்களையும் படைத்து ஒருபொற்பீடிகையிலே கொண்டுபோய்த் திருமுன் வைத்து, 
வணங்கி நின்று, "எம் பரமபிதாவே, உமக்கு விருப்பும் வெறுப்பும் இல்லை. அடியேங்கள் உய்யும் பொருட்டுத் 
திருக்கல்யாணஞ் செய்யத் திருவுளங் கொண்டருளினீர். உமது திருமேனியிலுள்ள சர்ப்பாபரணங்களை 
ஒழித்து, இவ்விரத்தினாபரணங்களை அணிந்தருளுக" என்று விண்ணப்பஞ் செய்தார். அது கேட்ட மகாதேவர் 
திருப்புன்முறுவல்செய்து, "பிரமனே, நீ அன்போடு தந்தமையால் நாம் இவற்றை அணிந்தாற்போல மகிழ்ந்தேம்'' 
என்று திருவாய்மலர்ந்து, அவ்வாபரணங்களைத் தமது திருக்கரத்தினாலே தொட்டருளினார். பின்பு தமது 
திருமேனியிலுள்ள சர்ப்பாபரணங்களே இரத்தினா பரணங்களாகும் வண்ணம் திருவுளங்கொண்டருள, 
அவை அவ்வாறாயின. அது கண்டு,யாவரும் அற்புதமடைந்து, வணங்கினார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            திருக்கல்யாணப்படலம்.


    சிவபெருமான், இமைய மலைக்குச் செல்லத் திருவுளங்கொண்டு,தமது பக்கத்துள்ள கணநாதர்களுக்குக் 
குறிப்பாலுணர்த்தி, சிங்காசனத்தினின்றும் எழுந்து, திருநந்திதேவர் துதித்துக்கொண்டு முன்னே செல்ல, 
தேவர்களும் முனிவர்களும் புகழ, தும்புரு நாரதர்களும் விஞ்சையர்களும் இசை பாட, வேதாகமங்கள் துதிக்க, 
தமது செம்பொற்றிருக்கோயிலினின்றும் நீங்கி, தமது திருவடிகளைக் குண்டோதரருடைய புயத்தின்மீது வைத்து, 
சின்மயமாகிய இடபத்தின்மேல் ஏறியருளினார். எம்பெருமான் இடபத்தின்மீது தோன்றி விளங்க, பக்கத்து 
வந்தவர்களும் திருக்கோயிற் புறத்து நின்றவர்களுமாகிய யாவருங்கண்டு கண்களித்து, வணங்கித் துதித்து, 
கடல்போல ஆர்த்தார்கள். மகாதேவர் இடபமேற்கொண்டு எழுந்தருளும்போது, விநாயகக் கடவுள் 
ஐந்நூற்றேழு கோடிபூதங்கள் சூழ வந்து, வணங்கிக்கொண்டு, முன்னே சென்றருளினார். சூரியனும் சந்திரனும் 
குடையையும், வாயு சாமரத்தையும், வருணன் சாந்தாற்றியையும், இந்திரன் ஆலவட்டத்தையும், எடுத்துக்கொண்டு, 
பக்கத்தே தத்தம் பணிகளைச் செய்தார்கள். பூதர்கள் பலவகைப்பட்ட வாத்தியங்களை முழக்கினார்கள். 
எம் பெருமானுடைய ஏவலினாலே, உருத்திரர்களும், பிரம விட்டுணுக்களும், முனிவர்களும், பிறரும் தேர், 
விமானம், மிருகம்,பறவை முதலிய தங்கள் தங்கள் வாகனத்தின்மேற் கொண்டார்கள். இவ்வண்ணமே 
யாவருஞ் சூழ்ந்து செல்ல, சிவபெருமான் திருக்கைலாசமலையை அகன்று, உலகம் வாழும்வண்ணம் 
இமைய மலைமீது சென்றருளினார்.

    அதனையறிந்த மலையரையன் தன்சுற்றத்தாரோடும் எதிர்கொண்டு வணங்கி, தன்னுடைய 
ஓஷதிப்பிரஸ்தமென்னும் நகரத்துக்கு அழைத்துக் கொண்டு போயினான். சிவபெருமான் அந்நகரத்துள்ள 
வீதிகளைக் கடந்து, பார்ப்பதியம்மையாருடைய திருக்கோயிலுக்கு அணித்தாகச் சென்றருளினார். 
அப்பொழுது மலையரையனுடைய ஏவலினாலே, இருடிகள் பலபூரண கும்பங்களை ஏந்திக்கொண்டு வந்தார்கள்; 
மகளிர்கள் அட்டமங்கலங்களைக் கொண்டுவந்து காட்டினார்கள்; வேறுபல மகளிர்கள் நீராசனஞ் சுற்றினார்கள். 
திருமணச்சாலைக்கு முன் சென்றவுடனே, யாவரும் தங்கள் தங்கள் வாகனத்தினின்றும் இறங்க, 
ஞானநாயகராகிய சிவபெருமான் இடப வாகனத்தினின்றும் இறங்கியருளினார்.

    அப்பொழுது மேனை அரம்பையர்களோடு வந்து, எம்பெருமானுடைய திருவடிகளைக் காமதேனுவின் 
பாலினாலாட்டி, கைதொழுதுகொண்டு திரும்பினாள். உடனே சிவபெருமான் திருநந்திதேவர் கொண்டுவந்து 
வைத்த பாதுகையின் மேலே தம்முடைய அருமைத் திருவடிகளைச் சேர்த்தி இருபக்கத்தும் பிரமாவும் விட்டுணுவும் 
கைகொடுப்ப, தமது திருக்கரங்களினாலே பற்றிக்கொண்டு, நானாவித வாத்தியங்கள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, 
விஞ்சையர்கள் பாட, கணங்கள் ஆரவாரிக்க, உருத்திரர்கள் சூழ திருக்கோயிலினுள்ளே சென்று, பிரமாவும் 
விட்டுணுவும் வேண்ட, அங்குள்ள அழகுகளனைத்தையும் திருநந்திதேவர் காட்டச் சென்று சென்று பார்த்தருளினார்.

    வேதங்களுக்கும் எட்டாது நின்ற பரமபதியாகிய சிவபெருமான் அழகனைத்தையும் பார்த்துக்கொண்டு, 
திருமணச் சாலையினுள்ளே சென்று இந்திரநீல ரத்தினாசனத்தின்மேலே வீற்றிருந்தருளினார். வீற்றிருந்தருளும் 
பொழுது, வீரபத்திரர், காலாக்கினி ருத்திரர், கூர்மாண்டேசர், ஆடகேசுரர், ஐயனார் முதலிய உருத்திரர்களும்,பிரமா, 
விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானைச் சூழத் தங்கள் தங்களுக்குரிய ஆசனத்தின் 
மேலிருந்தார்கள். அப்பொழுது, திருக்கல்யாணத்தைத் தரிசிக்கும் பொருட்டு எப்புவனத்தினுமுள்ள யாவரும் வந்து 
கூடினமையால் இமயமலை நடுங்கியது. பூமியின் வடபால் தாழ, தென்பால் மிகவுயர்ந்தது. உடனே தேவர்கள் முதலிய 
யாவரும் ஏங்கி வருத்தமுற்று, 'சிவனே சிவனே" என்று ஓலமிட்டார்கள். 

    சிவபெருமான் அது கண்டு, திருமுறுவல் செய்து, அவர்களுடைய குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, 
திருநந்தி தேவரை நோக்கி, 'அகத்திய முனிவனை இங்கே அழைத்துக்கொண்டு வா" என்று பணித்தருளினார். 
திருநந்திதேவர் வணங்கிக் கொண்டு போய், அகத்திய முனிவரைக் கூவ, அவர் அங்கு வந்தார். அவரை அழைத்துக் 
கொண்டுபோய்ச் சிவபெருமான்றிருமுன் விடுப்ப, அவர் திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்துகொண்டு நின்றார். 
சிவபெருமான் அகத்திய முனிவரை நோக்கி, "முனிவனே, இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் 
தென்பால் மிகவுயர்ந்தது. இதனால் உயிர்களெல்லாம் மிகக் கலங்குகின்றன. மந்தர முதலிய மலைகளும் மகாமேருவும் 
தவறடையும். ஆதலால், நீ இம்மலையினின்று நீங்கித் தென்னாட்டிற்சென்று பொதியமலையின்மேல் இருக்கக்கடவாய். 
அது செய்வையாயின் பூமிமுழுதும் முன்போலச் சமமாய்விடும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட 
அகத்தியமுனிவர் அச்சம்பொருந்தி, "பரமகருணாநிதியாகிய பிதாவே, அடியேன் யாதாயினும் அபராதஞ் செய்தேனோ! 
கொடியேனை இங்கே இருக்கும் வண்ணம் பணித்தருளாது தூரத்தே செல்லும்வண்ணம் திருவாய் மலர்ந்தருளுகின்றீர்" 
என்று விண்ணப்பஞ்செய்தார். 

    சிவபெருமான் அகத்தியமுனிவரை நோக்கி, 'உனக்கு ஒப்பாகிய முனிவர்கள் உலகத்து உண்டோ,இல்லை. 
பிரமனும் உனக்கு ஒப்பல்லன். ஆதலால், நீ நினைந்த யாவையும் தவறின்றி முடிக்கவல்லை. இவ்வரிய செய்கை 
மற்றை முனிவர்களாலேனும் தேவர்களாலேனும் முடியுமா! யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும். 
போகக்கடவாய்' என்று திருவாய் மலர்ந்தருளினார். அகத்தியமுனிவர் "எமது பரமபிதாவே, பிரமாவும் விட்டுணுவும் 
இந்திரனும் நிற்க, இச்செய்கையை அடியேன் செய்யும்வண்ணம் பணித்தருளினீர். இதனால் நான் செய்ததே தவம்போலும். 
அடியேனுக்கு இப்பணியைப் பணித்தருளினீராயின், உமது திருமணக்கோலத்தை வணங்காது பிரிதலாற்றாமையால் 
என்மனம் மிகக் கவல்கின்றதே. இதற்கு யாது செய்வேன்'' என்று விண்ணப்பஞ்செய்தார். அதற்குக் கைலாசபதி 
"முனிவனே, நீ சிறிதுங் கவலாது பொதியமலைக்குச் செல்லக்கடவாய். நாம் அங்கு வந்து, நமது கல்யாணக்கோலத்தை 
உனக்குக் காட்டுவோம். நீ மகிழ்ந்து தரிசிக்கக் கடவை. நம்மைத் தியானித்துக்கொண்டு அங்கே சிலநாளிருந்து, 
பின்பு முன்போல நமது பக்கத்து வருவாயாக'' என்று அருளிச்செய்தார்.

    அகத்தியமுனிவர் அதற்கியைந்து, மகாதேவருடைய திருவடிகளைப் பலமுறை வணங்கி, எழுந்து நின்று, 
அஞ்சலிசெய்து, துதித்து, பெருமூச்செறிந்து, அரிதினீங்கி, தென்றிசையை நோக்கிச் சென்று, பொதியமலையை
அடைந்தார். முப்புரத்தையுந் தகிக்கத் திருவுளங்கொண்டு தாமேறிய பூமியாகிய தேரை ஒரு திருவடியா லூன்றிப் 
பாதலத்திட்ட சிவபெருமானுடைய திருவுருவைத் தியானித்துக்கொண்டு, அப்பொதியமலையில் எழுந்தருளியிருந்தார். 
இருக்க, வடபாலும் தென்பாலும் துலைத்தட்டுப் போலச் சமமாயின. அப்பொழுது ஆன்மாக்களெல்லாம் துன்பநீங்கி, 
சிவபெருமானைத் துதித்து மகிழ்ச்சியுற்றன.

    அகத்தியமுனிவர் சென்றபின்பு, இமைய மலையிலே தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானுடைய 
திருவருணீர்மையை எடுத்துத் துதித்தார்கள். அப்பொழுது மலையரையனுடைய ஏவலினாலே, உலக மாதாவாகிய 
உமாதேவியார், துர்க்கை காக்க, இந்திராணி அடைப்பை ஏந்த,கங்கைகள் சாமரம் வீச, காளிகள் குடை பிடிக்க, 
இலக்குமி கைகொடுப்ப, சரசுவதி துதிக்க, எழுந்தருளி வந்து, திருமணச் சாலையை அடைந்து, சிவ பெருமானுடைய 
திருவடிகளை வணங்கினார். அதுகண்ட சிவபெருமான் "நம்பக்கத்தே இருக்கக்கடவாய்" என்று பணித்தருள, 
பார்ப்பதியார், இலக்குமி முதலியோர் யாவருந் துதிக்க, எழுந்தருளியிருந்தார். அப்பொழுது மேனை தீர்த்தமும், 
சந்தனமும், மலர்களும் பிறவுங் கொண்டுவந்தாள். மலையரையன் சிவபெருமானை வணங்கிக் கொண்டிருந்து, 
மேனை கரகநீர் விடுப்ப, அவருடைய திருவடிகளை விளக்கி, சந்தனத்தாலும் நறுமலராலும் பூசைசெய்தான். 
பூசைசெய்தபின்பு, உமாதேவியாருடைய திருக்கரத்தைச் சிவபெருமானுடைய திருக்கரத்தில் வைத்து, ''நான் என் 
புதல்வியாகிய உமாதேவியை உமக்குத் தந்தேன்'' என்று வேதமந்திரங்களைச் சொல்லித் தாராதத்தஞ் செய்தான். 

    அப்பொழுது அரம்பையர்கள் ஆடினார்கள்; சித்தர்களும் கந்தருவர்களும் தும்புரு நாரதர்களும் இசைபாடினார்கள்; 
தேவர்களும் முனிவர்களும் வேதங்களைச் சொன்னார்கள்; இலக்குமியும் சரசுவதியும் பிறரும் மங்கலம் பாடினார்கள்; 
பூதர்கள் நானாவித  வாத்தியங்களை முழக்கினார்கள். மலையரையன் பசுப்பால், வாழைப்பழம், மாம்பழம், பாலாப்பழம்,
நெய், தேன் முதலியவற்றைப் பாசனத்திலிட்டு, சிவபெருமான்றிருமுன் வைத்து, "எம்பெருமானே, இவற்றைத் திருவமுது 
செய்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தான். சிவபெருமானும் அவற்றைத் திருக்கரத்தினாலே தொட்டு, 
திருவருள்சுரந்து, "நாம் இவற்றை அமுது செய்தாற்போல உவந்தேம். நீ எடுத்துக்கொள்ளக் கடவாய்" என்று
 திருவாய் மலர்ந்தருளினார். மலையரையன் பேரன்போடு அந்நிருமாலியத்தை எடுத்து, மலர், கந்தம், தீர்த்தம் 
என்பவற்றோடும் ஒருபக்கத்தே வைத்தான்.

    பிரமதேவர் சிவபெருமானை வணங்கி, "எம்பெருமானே, பூமியினும் சுவர்க்கத்தினும் உள்ளோர் 
யாவரும் தங்கள் தங்களுக்கு அடுத்த விவாகச் சடங்கைச் செய்யும்வண்ணம் சர்வலோகத்துக்கும் நாயகராகிய 
நீர் நடத்தியருளல்வேண்டும். ஆதலால், இனிச்செயற்பாலதாகிய விவாகச்சடங்கை முற்றுவிக்கும்பொருட்டு 
அனுமதிசெய்தருளுக'' என்று விண்ணப்பஞ் செய்தார். அதற்குச் சிவபெருமான் திருமுறுவல்செய்து, இயைந்தருள, 
பிரமதேவர் அக்கினியையும் அதற்கு வேண்டும் பொருள்களையும் வருவித்து, பிருகற்பதியும் சுக்கிரனும் 
மற்றைமுனிவர்களும் பக்கத்தே சூழ,விவாகச் சடங்கனைத்தையும் செய்து முடித்தார். முடித்தபின்பு, 
பெருமானையும் உமாதேவியாரையும் அங்குள்ளோர் யாவரும் வணங்கினார்கள். மகாதேவரும் தேவியாரும் 
அவர்களெல்லாருக்கும் திருவருள் செய்தார்கள். அதுகண்டு, மலையரையன் "இதுவே ஏற்ற சமயம்" என்று நினைந்து, 
சிவபெருமானுடைய தீர்த்தம்,மலர், சந்தனம், அவி முதலியவற்றைப் பிரமா முதலிய தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் 
பிறருக்குங் கொடுப்ப, அவர்கள் யாவரும் அவற்றை மெய்யன்போடு அணிந்து உட்கொண்டு, "நம்முடைய 
வினைகளெல்லாம் இன்றே கழிந்தன" என்று பெருமகிழ்ச்சியுற்றார்கள். அதன்பின் மலையரையனும் மேனையும் 
அவர் சுற்றத்தாரும் பிறரும் அணிந்து உட்கொண்டு, இன்பமடைந்தார்கள்.

    அப்பொழுது தாபதநிலையாளாகி * அங்கிருந்த இரதி வந்து சிவபெருமானை வணங்கி நின்று, "சுவாமீ, 
அடியேனுடைய துன்பத்தை நீக்கியருளுக என்று விண்ணப்பஞ் செய்தாள். சிவபெருமான் அதுகேட்டு, "இரதியே, 
நீ வருந்தாதொழி" என்று திருவாய் மலர்ந்து, மன்மதன் வந்துதிக்கும் வண்ணம் திருவுளங்கொண்டருளினார். 
உடனே மன்மதன் தோன்றி; சிவபெருமானை வணங்கித் துதித்து, ''கிருபா சமுத்திரமாகிய சுவாமீ,
அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுக'' என்று விண்ணப்பஞ் செய்தான்.

* தாபதநிலை - கணவனை இழந்தாள் நோற்கும் விரதவொழுக்கம்

     சிவபெருமான் மன்மதனை நோக்கி, "நாம் உன்னைக் கோபித்தாலன்றோ பின்பு அது தணிவது. 
மனம் வருந்தாதொழி. நம்முடைய அக்கினிக் கண்ணினாலே உன்சரீரம் விரைந்து சாம்பராயிற்று. அதுகண்ட 
உன் மனைவியாகிய இரதி உன்னை உயிர்ப்பிக்கும் பொருட்டு நம்மைப் பிரார்த்தித்தாள். நீ அவளுக்கு மாத்திரம் 
உருவமாயிருக்கக் கடவாய். மற்றைத் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அருவமாயிருந்துகொண்டு 
உன்னரசியலை நடாத்தக் கடவாய்" என்று திருவாய்மலர்ந்து, அவனுக்கு உரிய அரசையும் சிறப்பையும் 
ஆணையையும் வலியையுங் கொடுத்து, இரதியோடும் தன்னகரத்திற்குச் செல்லும்வண்ணம் விடைகொடுத்தருளினார். 
மன்மதனும் இரதியும் சிவபெருமானை வணங்கிக்கொண்டு போனார்கள்.

     அதன்பின் சிவபெருமான் உமாதேவியாரோடு சிங்காசனத்தினின்றும் இறங்கி, உருத்திரர்களும் 
தேவர்களும் முனிவர்களும் பிறருந் துதிக்கப் பூதர்கள் வாத்தியங்களை முழக்கச் சென்று, இடபவாகனத்தின்மீதேறி, 
உமாதேவியாரைத் தமது பக்கத்திருத்தித் தழுவிக்கொண்டு இடபவாகனத்தை நடத்தி, இமைய மலையைக் கடந்து, 
திருக்கைலாச மலையை அடைந்தார். அடைந்தவுடனே, விட்டுணுவையும், பிரமாவையும், மலையரையனையும், 
இந்திரனையும், தேவர்களையும், முனிவர்களையும், தங்கள் தங்கள் இடங்களுக்குச் செல்லும்வண்ணம், முன்னே 
விடுத்தருளினார். பின்பு காலாக்கினி ருத்திரர், கூர்மாண்டேசர், ஐயனார், வீரபத்திரர் முதலிய உருத்திரர்களுக்கும், 
விநாயகக் கடவுளுக்கும், கணநாதர்களுக்கும் விடைகொடுத்து, திருக்கோயிலினுள்ளே புகுந்து, இடபவாகனத்தினின்றும் 
இறங்கி, உமாதேவியாரோடு சென்று, சிங்காசனத்தின்மேல் முன்போல வீற்றிருந்தருளினார். உயிர்க்குயிராகிய 
சிவபெருமான் உமாதேவியார் தமது பக்கத்திலே பொருந்த வீற்றிருந்தருளலும், ஆண் பெண் என்னும் இருபாலினவாகிய 
உயிர்களெல்லாம் முன்னைத் துன்பநீங்கி, இன்பத்தோடு போகத்தை யனுபவித்துக் கொண்டிருந்தன.

            திருச்சிற்றம்பலம்.

            திருவவதாரப்படலம்.

    இவ்வாறே பற்பலநாட்செல்லலும், பின்னொருநாளிலே,பிரமா, விட்டுணு, இந்திரன், திக்குப்பாலகர், 
முனிவர்கள், தேவர்கள் முதலிய யாவரும் மகாமேரு மலையிலே கூடி, சூரனால் மிகமெலிந்து, 'சிவபெருமான் 
உலகத்தை அசுரர்களுக்குக் கொடுத்து, யோகி போலிருந்துகொண்டு, நமக்குத் துன்பத்தை விளைத்தார். 
நாம் போய்ப் பிரார்த்தித்தலும், திருவுளமிரங்கி உமாதேவியாரைத் திருக்கல்யாணஞ் செய்தார். செய்தும், 
ஒரு திருக்குமாரரைப் பெற்று நம்மைக் காத்தருளாது வாளாவிருப்பதென்னை! விருப்பும் வெறுப்புமின்றி 
யாவருக்கும் ஓரியல்புடையராகி அவரவர் வினைகளை அறிந்து அததற்குரிய பயன்களைக் கொடுத்தருளுஞ் 
சிவபெருமானை நாம் வெறுத்தல் குற்றம். நாம் அருந்தவஞ்செய்யாது தவறுசெய்தேம் என்று நம்மை நோதலே தகுதி. 
ஆயினும், எம்பெருமானுடைய திருவடிகளை அடைந்து வழிபடின், தீயனவெல்லாம் நீங்கும், நல்லனவெல்லாம் ஆகும்;
இது திண்ணம். ஆதலால், இன்னும் கைலாசபதிக்கு இதனை விண்ணப்பஞ் செய்யும்பொருட்டு நாமெல்லாம் 
போகக்கடவேம்'" என்றார்கள். 

    அப்பொழுது பிரமதேவர் "சிவபெருமானுடைய செய்கையை நாம் கேட்டறிந்துகொண்டே போதல்வேண்டும். 
ஒரு தூதனை முன்னே விடுத்தறிவேம்" என்று சொல்லிக்கொண்டு, வாயுதேவனை நோக்கி, "மைந்தனே, நீ திருக்
 கைலாசமலையிலுள்ள திருக்கோயிலிற்சென்று, சிவபெருமானுடைய செய்கையை அறிந்துகொண்டு வருவாயாக'' 
என்றார். அதுகேட்ட வாயுதேவன் "மன்மதனை யெரித்த சிவபெருமான்றிருமுன் செல்லுதல் அரிது.
 செல்லிற்றீமையே விளையும். இச்செய்கை என்னால் முடிவதன்று. என் மனம் அஞ்சுகின்றது" என்றான். 
பிரமதேவர் வாயுதேவனை நோக்கி "அஞ்சாதே.வலிமையுடனே எங்கும் உலாவும் இயல்பினையுடைய நீயேயன்றி 
இது செய்யவல்லவர் வேறொரு தேவருண்டோ,இல்லை. உற்றவிடத்து உதவிசெய்வோரும், வரையாது கொடுப்போரும், 
தவஞ்செய்வோரும், போர்செய்யும் வீரரும் பிறிதொரு பொருளையும் விரும்பார், வருத்தத்தையும் பாரார், 
உயிர் நீங்க வரினும் கவலாது நன்றென்று மகிழுவர். ஆதலால், எங்களுக்கெல்லாம் உதவிசெய்யும் பொருட்டு 
நீ போகக் கடவாய்'' என்றார்.

    அதற்கு வாயுதேவன் உடன்பட்டெழுந்து, விடைபெற்றுக்கொண்டு திருக்கைலாச மலையிற்சென்று, 
அதன்பக்கத்திலே வீழும் நதியில் ஆடி, பூஞ்சோலையின் மலர்களினுள்ள நறுமணம் அளாவி, தென்றலாய் அசைந்து
கொண்டு மெல்லத் திருக்கோயிலினுள்ளே செல்வானாயினான். முதற்கடை வாயிலின் எழுந்தருளியிருக்குந் 
திருநந்திதேவர் அதுகண்டு, மிகக்கோபித்து உரப்பினார். உரப்பலும், இடியொலிகேட்ட பாம்புபோல வாயுதேவன் 
சிறிதும் வலியின்றி வெருவி விழுந்தான். விழுந்த வாயுதேவன் எல்லையில்லாத அச்சத்துடனே இரங்கி எழுந்து, 
முன்னையுருவங்கொண்டு தோன்றி திருநந்திதேவருடைய திருவடிகளை வணங்கி, "பிரமா, விட்டுணு, இந்திரன் 
முதலிய தேவர்கள் எல்லாரும் சிவபெருமானைத் தரிசிக்க நினைந்து என்னை நோக்கி, 'நீ விரைந்து சென்று 
சமயம் அறிந்துகொண்டு வருவாயாக' என்றார்கள். அதற்கு நாயேன் 'சிவபெருமானுடைய திருவிளையாடலை 
அறிதல் அரிது. அவரிடத்தே செல்ல நான் அஞ்சுகின்றேன்' என்று மறுத்தேன். 

    அது கேளாது அவர்கள் மீண்டுந் தங்கள் வருத்தத்தை சொல்லிச் சிறியேனை வலிந்தேவினார்கள். 
ஆதலால், அடியேன் அஞ்சியஞ்சித் தென்றலாய் மெல்ல வந்தேன். உமக்கு இதனை விண்ணப்பஞ்செய்ய 
நினைந்திலேன். அறிவில்லாதேனுடைய பிழையைப் பொறுத்தருளுக. சூரபன்மனாலே மானநீங்கி 
வருந்தியிளைத்துவிட்டேன். அதனாலே செய்யத் தக்கது இன்னது ஒழியத்தக்கது இன்னது என்று அறிகின்றிலேன். 
அறிவு மயங்கினேன். மற்றைத் தேவர்களும் இவ்வாறேயாயினர். எம்பெருமானே, உமது கோபத்துக்கு 
இலக்காயினார் ஒருவருமில்லை. சிறியேன்பொருட்டுக் கோபங்கொண்டருளலாமா? பொறுத்தருளுக" என்று 
விண்ணப்பஞ் செய்தான். திருநந்திதேவர் கோபந்தணிந்து, "நாம் இங்கே உன்னுயிரைத் தந்தேம். நில்லாதே. 
மீண்டு போய்விடு" என்று ஏவியருளினார். வாயுதேவன் திருநந்திதேவரை வணங்கிக்கொண்டு, விரைந்து 
திருக்கைலாச மலையினின்று நீங்கி, மகாமேரு மலையிலுள்ள தேவர்கூட்டத்தை அடைந்து, விட்டுணுவையும் 
பிரமதேவரையும் வணங்கி, திருநந்திதேவருடைய வன்மையையும் நிகழ்ந்த காரியத்தையும் விரித்துச் சொன்னான்.

    விட்டுணுவும், பிரமதேவரும், இந்திரனும் அதுகேட்டு, பெருந்துயரக் கடலின் அழுந்தி, தம்முள் ஆராய்ந்து 
தெளிந்து, "எம்பெருமானுடைய செய்கையை அறிந்து வரும்பொருட்டு வாயுவை விடுத்தேம். அவன் திருநந்தி 
தேவருடைய ஆணையினால் அஞ்சி நடுநடுங்கித் திரும்பிவிட்டான். இனி நாமெல்லாம் திருக்கைலாச மலையிற்சென்று 
சிவபெருமானுக்கு நம்முடைய குறையை விண்ணப்பஞ் செய்வதே துணிவு" என்றார்கள். இவ்வாறே எல்லாருந் 
துணிந்துகொண்டு, மகாமேரு மலையினின்று நீங்கி, திருக்கைலாச மலையை அடைந்து, திருக்கோயிலின்முன் 
சென்று, திருநந்திதேவரை வணங்கி நின்று, "கருணாநிதியே, அடியேங்களுடைய துன்பமுற்றையுந் 
திருவுளத்திலடைத்து, மகாதேவருக்கு அடியேங்களுடைய வரவை விண்ணப்பஞ்செய்து, அடியேங்களைச் 
சந்நிதியிலே விரைந்து அழைத்துக் கொண்டுபோய் விட்டருளும்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 

    திருநந்திதேவர் அவர்களை "நில்லுங்கள்" என்று நிறுவி, உள்ளே போய்ச் சிவ பெருமானை வணங்கி நின்று,
 'பரமகிருபாலுவாகிய சுவாமீ, உம்முடைய திருவடிகளைத் தரிசிக்கும்பொருட்டுப் பிரமவிட்டுணு முதலியோர் 
யாவரும் வந்து நிற்கின்றனர்" என்று விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான் "இங்கே அழைத்துக்கொண்டு வா" 
என்று பணித்தருளினார். உடனே திருநந்திதேவர் சிவபெருமானை வணங்கிக்கொண்டு விரைந்து சென்று,
 "பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லீரும் வாருங்கள்" என்று கூவியருளினார். கூவியருளலும், முகிலினது 
பேரொலியைக் கேட்ட சாதகப்புட்கள் போலப் பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் மிகமகிழ்ந்து, 
உள்ளே சென்று, அருட்சத்தியாகிய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளிய பெருங்கருணைக்கடலாகிய மகாதேவர் 
சந்நிதியை அடைந்து, அவருடைய திருவடிகளைப் பலகாலும் வணங்கி எழுந்து, அஞ்சலிசெய்து நின்று, துதித்தார்கள்.

    சிவபெருமான் தேவர்கண்மீது திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மிக வருந்தினீர்கள். உங்களுக்கு 
வேண்டும் வரம் யாது? சொல்லுங்கள். தருவேம்'' என்று திருவாய்மலர்ந்தருளினார். அதுகேட்ட தேவர்கள் "எம் பெருமானே,
அடியேங்களெல்லாம் இந்நாள்காறும் சூரன் முதலிய அசுரர்களால் வருந்தினோம், இனி அவ்வருத்த நீங்கி 
முன்னையாக்கத்தை அடையும் பொருட்டுப் பரமகருணாநிதியாகிய உம்மிடத்தே ஒருவரம் வேண்டுகிறோம். 
சருவான்மாக்களையும் பெற்ற நித்தியகன்னிகையாகிய உமாதேவியாரை நீர் திருக்கல்யாணஞ் செய்தமை 
தீவினைக்கடலினழுந்திய சிறியேங்களை ஆளுதற்கு ஓரேதுக்காட்டுதற்கன்றி அவரிடமாக ஒருதிருக்குமாரரைப் 
பெறுதற்கன்று. உற்பத்தியும், திதியும், நாசமும்,அருவமும், உருவமும்,ஒப்பும்,ஏதுவும், போக்கும், வரவும், 
இன்பமும், துன்பமும் இன்றி  நின்ற அநாதிமலமுத்தரே,ஒரு திருக்குமாரரை உமக்கொப்பாக உம்மிடத்தினின்றுந் 
தோற்றுவித்தருளுக" என்று விண்ணப்பஞ் செய்தார்கள்.

    சிவபெருமான் "நீங்கள் சிறிதும் வருந்தாதொழிமின். புதல்வனைத் தருவேம்" என்று திருவாய்மலர்ந்து, தமது பழைய 
ஆறுதிருமுகங்களையுங் * கொண்டு, அத்திருமுகங்களினுள்ள நெற்றிக்கண்கடோறும் ஒவ்வோர் அக்கினிப் பொறியைத் 
தோற்றுவித்தருளினார். அவ் வாறு பொறிகளும், பிரமவிட்டுணு முதலியோர் யாவரும் சிறிதும் அணுகலாற்றாத மிக்க
வெம்மையை உடையனவாகி, உலகமெங்கும் பரந்தன. அப்பொழுது வாயுக்கள் உலைந்து ஓய்ந்தன; கடல்களெல்லாம் 
வற்றின; வடவாமுகாக்கினியும் தன்செருக்கு நீங்கிற்று; பூமி பிளந்தது; மலைகளெல்லாம் நெக்கன; அட்டநாகங்களும் 
நெளித்து நீங்கின; அட்டதிக்கயங்களும் அழுது தியங்கின; உயிர்களெல்லாம் நடுங்கின. சிவபெருமானுடைய 
நெற்றிக்கண்களினின்றும் தோன்றிய அக்கினிப்பொறிகள், பெருங்கருணை செய்யும்வண்ணம் பிறந்தனவாதலால், 
ஓருயிரையும் நாசஞ்செய்தில; எவர்களையும் எவைகளையும் அச்சமாத்திரஞ்செய்தன. 

* ஐந்துமுகத்தோடு அதோமுகமொன்று கூட்டி ஆறுமுகமெனக் கொள்க.

    அப்பொறிகளின் வெம்மையைக் கண்டு, சிவபெருமான் பக்கத்தே எழுந்தருளியிருந்த உமாதேவியார் வேர்த்துத் 
திருவுளங்கலங்கி எழுந்து, தமது திருவடிகளிலுள்ள சிலம்புகள் புலம்பித் தாக்க, தமது திருக்கோயிலினுள்ளே ஓடினார். 
சிவபெருமான் றிருமுன்னர் நின்ற பிரமா முதலிய தேவர்களெல்லாரும் அவ்வக்கினிப் பொறிகளைக் கண்டு அஞ்சி 
நடுநடுங்கி, இடந்தோறும் வெருவியோடினார்கள். கடனடுவினுள்ள தெப்பத்தின் பாய்மரத்தை நீங்கிய காகம் பின்னும் 
அதனையே அடைதல்போல, அவ்வாறு ஓடிய தேவர்களெல்லாரும் பெருமூச்செறிந்துகொண்டு மீண்டும் 
எம்பெருமான்றிருமுன் வந்து வணங்கித் துதித்து, "பரமபிதாவே, அசுரர்களைக் கொல்லும்பொருட்டு ஒரு திருக்குமாரரைத் 
தந்தருளும் வண்ணம் வந்து பிரார்த்தித்தேம். நீர் முடிவில்லாத அக்கினியைத் தோற்றுவித்தருளினீர். எம்பெருமானே,
அடியேங்கள் உய்வது எங்ஙனம்! முற்காலத்திலே உமாதேவியாருடைய திருக்கரத்தினின்றும் தோன்றிய கங்கைபோல 
இப்பொழுது உமது நெற்றிக்கண்களினின்றும் தோன்றிய அக்கினிப்பொறிகளும் உலகமெங்கும் பரந்தன. ஒருகணத்தினுள்ளே 
அவைகளை மாற்றாதொழிவீராயின், அவைகள் சருவான்மாக்களையும் அழித்துப்போடும். அக்கினிப்பொறியின் 
வெம்மையை ஆற்றாது அஞ்சியோடிய நாங்கள் மீண்டும் உம்முடைய திருவடிகளையே அடைந்தேம்.

    ஆராயுமிடத்து, அடியேங்களுக்குப் புகலிடம் உம்மையல்லாது பிறிதுண்டோ, இல்லை. அடியேங்களுடைய 
துன்பமுற்றையும் நீக்குதற்குரிய நீர் அடியேங்களுக்குத் துன்பமே செய்வீராயின், அதனை விலக்க வல்லவர் வேறியாவர்! 
உலகமுழுதையும் இறைப்பொழுதினுள்ளே முடிக்கின்ற இவ்வக்கினியை நீக்கி எங்கள் குறையை முடித்தருளுக" என்று 
விண்ணப்பஞ் செய்தார்கள்.

    அப்பொழுது சிவபெருமான் தேவர்களை நோக்கி, "அஞ்சாதொழி மின்கள்' என்று கையமைத்து, புதியனவாகத் 
தோன்றிய ஐந்துதிருமுகங்களையும் மறைத்து, ஒருதிருமுகத்தோடு முன்போல எழுந்தருளியிருந்து, தம்முடைய 
நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றி உலகமெங்கும் பரந்த அக்கினிப்பொறிகள் தமது திருமுன் வரும் வண்ணம் 
திருவுளங்கொண்டருளினார். உடனே எங்கும் பரந்த அக்கினி முன்போல ஆறுபொறிகளாய் வந்து சந்நிதியை அடைந்தது. 
அதுகண்டு, சிவபெருமான் வாயுதேவனையும் அக்கினிதேவனையும் நோக்கி, "நீங்களிருவீரும் இவ்வக்கினிப் பொறிகளைத் 
தாங்கிக்கொண்டு சென்று கங்கையில் விடக்கடவீர்கள். அது இவைகளைச் சரவணப்பொய்கையிலே கொண்டு சென்றுய்க்கும்" 
என்று பணித்தருளினார். வாயுதேவனும் அக்கினிதேவனும் அதுகேட்டு, மனவருத்தமுற்று நடு நடுங்கி, மும்முறை வணங்கி, 
"எம்பெருமானே, ஒருநொடிப்பொழுதினுள்ளே உலகங்களெல்லாம் பரந்த இவ்வக்கினிப்பொறிகள் உமது திருவருளினாலே 
சிறுகின. அரிது அரிது! இவைகளை அடியேங்கள் தாங்க வல்லமா! உலகத்தைச் சங்கரிக்கும் உமது நெற்றிக்கண்ணினின்றும் 
தோன்றிய இவ்வக்கினியைப் பிரமவிட்டுணுக்கடாமும் ஓர் கணப்பொழுதாயினும் தாங்க வல்லவர்களா! 

    முற்காலத்தெழுந்த ஆலாகலம்போலப் படர்ந்த இவ்வக்கினியைக் கண்டவுடனே நில்லாது வருந்தி ஓடினேம். 
இவற்றை அணுகவும் அஞ்சுகின்றோம். இவ்வாறாக, இவற்றை நாங்கள் சிரமேற்கொண்டு செல்லுதல் கூடுமா!  
இவ்வக்கினியை அடைதற்கு நினைப்பினும் எமது உள்ளம் வெப்புறுகின்றது; சரீரம் வேர்க்கின்றது. நாங்கள் எப்படித் 
தாங்குவோம்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். சிவபெருமான் "இவ்வக்கினிப் பொறிகளைச் சுமந்து சென்று 
கங்கையில் விடும்பொருட்டு உங்களுக்குத் திண்மை உண்டாகுக" என்று திருவாய்மலர்ந்தருளினார். வாயுதேவனும் 
அக்கினிதேவனும் அதற்கியைந்து, சிவபெருமானைத் துதித்தார்கள். அதுகண்ட பிரம விட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் 
துளக்க நீங்கி, "எங்கள் துன்பம் இன்றே நீங்கியது" என்று மனமகிழ்ந்து,சரீரம் பூரித்தார்கள். சிவபெருமான் அவர்களை 
நோக்கி, 'இவ்வக்கினி சரவணப்பொய்கையிலே சேர்ந்து, ஒரு குமாரனாய் வளர்ந்து, சூரன் முதலிய அசுரர்களைக் 
கொன்று உங்களுக்கு அருள் செய்யும். நீங்களெல்லீரும் போங்கள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார். பிரமவிட்டுணு 
முதலிய தேவர்கள் 'உய்ந்தனம் உய்ந்தனம். இனி அடியேங்களுக்கு ஓர்குறையுமில்லை'' என்று சொல்லி, சிவபெருமானை 
வணங்கிக்கொண்டு அங்குநின்று நீங்கினார்கள்.

     வாயுதேவன் சிவபெருமானுடைய திருவடிகளை  அக்கினிதேவனோடு வணங்கி எழுந்து, அவருடைய திருவருளினாலே 
அக்கினிப்பொறிகளாறையும் சிரமேற்றாங்கிக்கொண்டு, திருக்கோயிலை நீங்கிச் செல்வானாயினான். அதனைப் 
பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் பெருமகிழ்ச்சியோடு கண்டு, "சுத்தசிவசோதியாகிய எம்பெருமான் 
தமது நெற்றிக்கண்ணினின்றும் ஒரு திருக்குமாரரை அக்கினிவடிவமாகத் தோற்றுவித்தருளினார். சூரபன்மன் இறத்தற்கும் 
நாம் முன்னையாக்கத்தைப் பெறுதற்கும் இன்னஞ் சிலநாளிருத்தலால், சிவபெருமான் தம்முடைய திருக்குமாரர் சரவணப்
பொய்கையிலே குழந்தையாக வளரும்வண்ணம் அருள்செய்தார். சிவபெருமானுடைய செயல்களெல்லாம் திருவருளே. 
இங்கே அக்கினியைத் தோற்றுவித்ததும் எம்மாட்டுள்ள பெருங்கருணையாயிற்றே. இதுவே அதற்குச் சான்று.
 இனி அசுரரெல்லாம் இறந்தனர். நங்குறை தீர்ந்தது. நாமும் சரவணப்பொய்கைக்குச் செல்வேம்" என்றார்கள். 

    அக்கினிப்பொறிகளை தாங்கும் வாயுதேவன் தங்களுக்குமுன் செல்ல, திருக்கைலாசமலையைக் கடந்து 
செல்வாராயினார்கள். ஒருநாழிகை செல்ல, வாயுதேவன் "இவ்வக்கினிப் பொறிகளைத் தாங்குதல் அரிது அரிது" 
என்று புலம்பி, சிவபெருமானுடைய திருவருளினாலே வலிமை பெற்ற அக்கினிதேவனுடைய சிரசிலே 
அப்பொறிகளைச் சேர்த்தினான். சேர்த்தலும், அக்கினிதேவன் சரீரம் வேர்த்து மிகமெலிந்து, ஒருநாழிகையிலே 
தாங்கிக்கொண்டு, பிறிதொரு நாழிகை தாங்கலாற்றாது விரைந்து சென்று, அவைகளைக் கங்கையில் விடுத்தான்.
அப்பொறிகள் வந்தடைந்தவுடனே, கங்கையானது, சிவபெருமானுடைய சடையின் மறைந்தமைபோல, வறந்தது. 
சிவபெருமானுடைய திருவருளையறிந்து கங்கையானது அப்பொறிகளைத் தன் சிரமேலேந்திக் கொண்டு 
ஒருநாழிகையினுள்ளே சென்று, சரவணப்பொய்கையில் விடுத்தது. பிரமவிட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் 
அதுகாறும் வந்து அண்ணியதாகிய விளைவை நாடிக் காக்கும் வறியார்போலச் சரவணப் பொய்கையைப் 
பேருவகையோடு சேர்ந்தார்கள். பிரமா ஆகாயத்தினும், விட்டுணு பூமியினும், இந்திரன் முதலிய திக்குப்பாலகர்கள் 
எண்டிசைகளினும் நின்று காத்தார்கள். கங்கையும் வறக்கும்வண்ணம் புகுந்த அக்கினிப் பொறிகளாறும் 
இமையமலைச் சாரலினுள்ள சரவணப்பொய்கையிலே புகுதலும், அது சிவபெருமானுடைய திருவருளினாலே 
வறத்தலின்றி முன் போலிருந்தது.

    அருவமும் உருவமுமாய் அநாதியாய் ஒன்றாய்ப் பலவாய்ப் பரப்பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பே 
திருமேனியாக, கருணைவெள்ளம் பொழியாநின்ற ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களுங்கொண்டு, 
முருகக்கடவுள், உலகம் உய்யும்வண்ணம், திருவவதாரஞ்செய்தருளினார். செய்தருளலும், ஆகாயத்திலே துந்துபிகள் 
ஒலித்தன; வேதங்களெல்லாம் ஆர்த்தன; பிரமாவும், விட்டுணுவும், இந்திரனும், முனிவர்களும் பூமாரி பெய்து, 
''அடியேங்களுக்கு அருள்செய்க" என்று துதித்துச் சூழ்ந்தார்கள். உலகத்துள்ள உயிர்களெல்லாவற்றிற்கும் உவகைக்
குறிப்புண்டாயின. சூரன் முதலிய அசுரர்களெல்லாருக்கும் இறப்பை யுணர்த்துங் குறிப்புக்களுண்டாயின. வேதங்களாலும் 
மனத்தாலும் வாக்காலும் அறியொணாது எங்கும் நிறைந்து நின்ற நிருமலராகிய முதற்கடவுள் ஆறுதிரு முகங்களை 
யுடையராய்த் தோன்றி, உயிர்களிடத்துள்ள பேரருளோடும் சரவணப்பொய்கையிலே செந்தாமரை மலரின்மீது 
வீற்றிருந்தருளினார்.

    அம்முருகக்கடவுள் கைக்குழந்தைபோலச் செய்யுந் திருவிளையாடலைக்கண்டு, விட்டுணு முதலிய தேவர்கள் 
யாவரும் கார்த்திகை மகளிர்களை நோக்கி, "சரவணப் பொய்கையிலே ஆறுமுகக் கடவுளாய் வீற்றிருந்தருளும் 
எம்பெருமான் ஒருகுழந்தைபோலத் தோன்றினார். நீங்கள் அவருக்கு நாடோறும் உங்கள் முலைப்பாலைக் கொடுத்து, 
அவரை வளர்க்கக்கடவீர்கள்' என்றார்கள். கார்த்திகை மகளிர்கள் அறுவரும் அதற்கியைந்து, சரவணப்பொய்கையில் 
எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுளை அடைந்து துதிக்க, அவ்வறுமுகக்கடவுள் தம்மை அடைந்தோர்க்கு வேண்டியன
அருள்செய்யும் பெருங்கருணைக் கடலாதலால், வெவ்வேறாக ஆறுசிறுவர் வடிவங்கொண்டருளினார். கொண்டருளலும், 
கார்த்திகை மகளிர்கள் அறுவரும் மிகமகிழ்ந்து, அச்சிறுவர்களறுவரையும் வெவ்வேறெடுத்து, தங்கள் தங்கள் 
முலைப்பாலை ஊட்ட, அவ்வறுமுகக்கடவுள் திருமுறுவல் செய்து, நீங்காத பேரருளினாலே மிகவருந்தினோர்போல 
உண்டருளினார். உண்ட பின், ஆறுசிறுவராய் நின்ற ஒருமுதற்கடவுளை, அம்மகளிர்கள் சரவணப் பொய்கையினுள்ள 
தாமரைமலர்களாகிய சயனத்தின்மீது சேர்த்துத் துயில்செய்வித்துத் துதித்தார்கள். 

    அம்முருகக்கடவுள், திருவருளினாலே,துயில்செய்ய ஓருருவமும், துயில்செய்து விரைந்தெழுந்து மதலைபேச 
ஓருருவமும், மாதாவின் முலைப்பாலைச் செம்பவளத் திருவாய்வைத்து உண்ண ஓருருவமும், நகைத்துக்கொண்டிருக்க
 ஓருருவமும், விளையாட ஓருருவமும், அழ ஓருருவமும், உடையராயினார். தவழ ஓருருவமும், தளர்ந்து செல்ல ஓருருவமும், 
நில்லாது விரைந்து எழுந்து விழ ஓருருவமும், இருக்க ஓருருவமும், பொய்கையெங்குஞ் சென்றுழக்க ஓருருவமும், 
மாதாவிடத் திருக்க ஓருருவமும் உடையராயினார். கூத்தாட ஓருருவமும், செங்கை கொட்ட ஓருருவமும், பாட்டுப்பாட 
ஓருருவமும், பார்க்க ஓருருவமும், ஓடவோருருவமும், ஓரிடத்தொளிக்க ஓருருவமும் உடையராயினார். இவ்வாறே 
ஆறுதிருமேனியும் கணமொன்றினுள்ளே ஆயிரம் பேதமாம்வண்ணம், முழுமுதற்கடவுளாய் நின்ற குமாரசுவாமி 
எண்ணில்லாத திருவிளையாட்டைச் செய்தருளினார்.

    பிரமவிட்டுணு முதலிய தேவர்களும், முனிவர்களும், பிறரும் அது கண்டு அற்புதமடைந்து, "இவ்வொருபாலரே 
பலசிறுவர் வடிவங்கொண்டு நம்முன்னே கணப்பொழுதினுள்ளே எண்ணில் பேதத்தராயினார். ஆராயுங்கால், 
இக்குமார சுவாமியுடைய திருவிளையாடல் எங்களாலும் அறிவரியது. இவர் எல்லாமாயமுஞ் செய்யவல்லவர்; 
வரம்பில்லாத அறிவினையுடையர். கைக்குழந்தைபோலத் தோன்றிய இவர் செய்யும் இம்மாயை போல ஒருவரும் 
செய்யவல்லரல்லர். பிறிது சொல்லியென்னை! நாமும்   இவ்வாறு செய்ததொன்றில்லை. இவர் உயர்வொப்பில்லாத 
சிவபெருமானேயாம்' என்று சொல்லி, வணங்கி நின்றார்கள். கார்த்திகை மகளிர்கள் அறுவரும் 
அறுமுகக்கடவுளுடைய திருவிளையாடல் முழுதையும் நோக்கி நோக்கி, மிக்க அற்புதமடைந்து, குழந்தைகளெனக் 
கொள்ளுதலை ஒழித்து, சிறிதும் பிரியாது அஞ்சி, வழிபடுகடவுளராகவே கொண்டு, மெய்யன்போடு துதித்தார்கள்.

    அறுமுகக்கடவுளுடைய திருவவதாரத்தைச் சொன்னோம். இனி அக்கடவுளுக்குத் தம்பியர்களாய் 
உமாதேவியாரிடத்தே இலக்கத்தொன்பதின்மர் உதித்த தன்மையைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            துணைவர்வருபடலம்.

    சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றிய அக்கினிப் பொறிகளின் வெம்மையை 
ஆற்றாது, உமாதேவியார், திருவடிகளினுள்ள சிலம்புகள் தாக்கலால் நவரத்தினங்கள் சிதறும்வண்ணம், 
அஞ்சியோடினார்.  திருவுளத்திலே "விட்டுணு முதலிய தேவர்களெல்லாரும் சிவபெருமானை வணங்கி, 
'நீர் ஒரு திருக்குமாரரைத் தந்தருளும்' என்று பிரார்த்திக்க, சிவபெருமான் தமது நெற்றிக்கண்ணினின்றும் 
அக்கினிப்பொறிகளைத் தோற்றுவித்து, ஒருகுமாரனாய் வளரும்வண்ணம் சரவணப்பொய்கையிலே
சேர்ப்பித்தருளினார்" என்றுணர்ந்தார். 

    அதன்பின் "எம்பெருமானுக்குக் குமாரன் என்னிடத்தே தோன்றாவண்ணம் தடுத்த பிரமா விட்டுணு 
இந்திரன் முதலிய தேவர்களுடைய பன்னியர்களுக்கெல்லாம் புதல்வர்கள் இல்லாதொழிக"  என்றார். 
உமாதேவியார் இவ்வாறே சொல்லிக்கொண்டு , மீண்டு சென்று, சிவபெருமான் சந்நிதியை அடைந்து, 
அவருடைய திருவடிகளை வணங்கி நின்று, "எம்பெருமானே, தேவர்களெல்லாரும் குறையிரப்ப, 
நீர் தோற்றுவித்தருளிய அக்கினிப் பொறிகளின் வன்மையையும் வெம்மையையும் கண்டு, வெம்பிச் 
சரீரமுற்றும் பதைபதைப்ப, ஓடினேன். பின்பு நீர் அவ்வக்கினிப்பொறிகளை இங்குநின்றும் 
அகற்றினமையால் மீண்டேன்" என்று விண்ணப்பஞ்செய்தார். சிவபெருமான் கருணை செய்து 
தேவியாரைத் தம்பக்கத்திருத்தியருளினார்.

    உமாதேவியார் முன் னோடியபொழுது, அவருடைய திருவடிச்சிலம்பினின்றுஞ் சிதறிய 
இரத்தினங்களெல்லாம் சிவபெருமான்றிருமுன் விளங்கின. சிவபெருமானுடைய ஆணையினாலே, 
அந்நவரத்தினங்களினும் உமாதேவியாருடைய  திருவுருவந் தோன்றியது. அவ்வுருவங்களைச் 
சிவபெருமான் நோக்கி, திருவருளினால் 'வாருங்கள்' என்று திருவாய் மலர்ந்தருள , ஒவ்வோரிரத்தினத்துக்கு 
ஒவ்வோர் சத்தியாக நவசத்திகள்  தோன்றினார்கள். அவர்கள், சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி 
நின்று அவரிடத்தே விருப்பம் வைத்தமையால், இருடி பத்தினிகள்போல விரைவிலே கருப்பமுற்றார்கள். 
இவையாவையும் பார்ப்பதியார் கண்டு, அந்நவசத்திகண்மீது கோபங்கொண்டு, "நீங்கள் இங்கு நமக்கு 
மாறாயினமையால், பல காலம் இக்கருப்பத்தோடிருக்கக்கடவீர்கள்' என்று சபித்தார். அப்பொழுது 
நவசத்திகள் அஞ்சி நடுநடுங்கிச் சரீரம் வெயர்த்தார்கள். 

    அவ்வெயர்வையினின்றும், தேவதேவருடைய திருவருளினாலே, ஓரிலக்க வீரர்கள் உதித்தார்கள். அவ்வீரர்கள் 
இடியேறொக்கும் சொல்லையுடையர்களும், பொன்னாடையை உடுத்தவர்களும், வாளையும் பரிசையையும் 
கையிலேந்தினவர்களுமாய், சிவபெருமான் றிருமுன்சென்று, அவருடைய திருவடிகளை வணங்கித் துதித்துக் 
கொண்டு நின்றார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி, "நம்புதல்வர்களே,கேளுங்கள். தேவர்களுக்குப் 
பகைவர்களாகிய அசுரர்களைக் கொல்லும்பொருட்டு நமது புதல்வனாகிய முருகக்கடவுளுக்கு நீங்கள் யாவிரும் 
படைகளாகக் கடவீர்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வீரர்கள் இலக்கரும், நாடோறும் பேரன்புடையர்களாய், 
சிவசந்நிதியை அகலாது, திருத்தொண்டின்வழி நின்றார்கள்.

    முன்னே பார்ப்பதியார் சபிப்ப, நவசத்திகள் நடுநடுங்கி, அவ்வம்மையாரை வழிபாடுசெய்துகொண்டு, 
கருப்பத்தோடு பலகாலம் இருந்தார்கள். அந்நவசத்திகளுடைய கருவினுள்ளே நந்திகணத்தவர்கள் சிசுக்களாய்ப் 
புகுந்து, காளையர்களாகி, சிவபெருமானைச் சிந்தித்துத் தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு 
யோகஞ்செய்துகொண்டிருத்தலால் கருப்பம் மிகப்பாரமாதலும், நவசத்திகள் சிவபெருமானையும் உமாதேவியாரையும் 
வணங்கி நின்று, "அடியேங்கள் இந்நாள்காறும் இக்கருப்பத்தினால் வருந்தினேம். இனித் தாங்கலாற்றேம். திருவுளமிரங்கி 
யருளுங்கள்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். 

    அப்பொழுது சிவபெருமான் திருவுளமிரங்கி, தேவியாருடைய திருமுகத்தை நோக்கி, "உமையே, உன் 
காற்சிலம்பினின்றும் உதித்த இந்நவசத்திகள் உன்சாபங் காரணமாக நெடுங்காலம் கருப்பத்தைச் சுமந்து மிக 
வருந்தினார்கள். இனிப் புதல்வர்களைப் பெறும்பொருட்டு அருள்செய்க" என்று பணித்தருளினார். உமாதேவியார் 
'நன்று" என்று அதற்கியைந்து, திருமுறுவல் செய்து, நவசத்திகளை நோக்கி, "இனி நீங்கள் புதல்வர்களைப் 
பெறக்கடவீர்கள்' என்று திருவாய் மலர்ந்தருள, அவர்கள் வயிற்றினுள் யோகஞ்செய்துகொண்டிருக்கும் வீரர்கள் 
அதனையறிந்து, யோகத்தை விடுத்து, மனமிகமகிழ்ந்து, சிவபெருமானுடைய திருவருளை நினைந்து தொழுது, 
பிறக்கும்பொருட்டு நினைந்தார்கள்.

    நவசத்திகள் உமாதேவியாருடைய பெருங்கருணைத் திருவாக்கைக் கேட்டலும், கவற்சி நீங்கி, 
மகாதேவரையும் தேவியாரையும் வணங்கித் துதித்து, விடைபெற்றுக்கொண்டு அங்குநின்று நீங்கி, ஓரிடத்தே 
சென்று, புதல்வரைப் பெற்றார்கள். மாணிக்கவல்லியிடத்து வீரவாகுவும், மௌத்திகவல்லியிடத்து வீரகேசரியும், 
புட்பராகவல்லியிடத்து வீரமகேந்திரரும், கோமேதவல்லியிடத்து வீரமகேச்சுரரும், வைடூரியவல்லியிடத்து 
வீரபுரந்தரரும், வைரவல்லியிடத்து வீரராக்கதரும், மரகதவல்லியிடத்து வீரமார்த்தாண்டரும், பவளவல்லியிடத்து 
வீராந்தகரும், இந்திரநீலவல்லியிடத்து வீரதீரரும், அவதரித்தார்கள். 

    இவ்வீரர்களொன்பதின்மரும், சிவபிரானுடைய திருவருளினாலே, தங்கள் தங்கள் அன்னையர்களுடைய
 நிறத்தையுடையர்களாய், பொன்னாடையுடுத்தவர்களாய், பலகாலம் வளர்ந்த உறுப்புக்களோடும் நவசத்திகளுடைய 
உந்தியின் வழியே பிரமதேவரைப்போல் உதித்தார்கள். இவ்வண்ணம் உதித்த வீரர்கள் சிவபெருமானையும் 
உமா தேவியாரையும் வணங்கி எழுதலும், சிவபெருமான் பார்ப்பதியாரை நோக்கி, "நம் மைந்தர்களாகிய 
இவர்கள் அறிவுடையர்கள், ஆற்றலுடையர்கள் மானமாகிய அருங்கலமுடையர்கள். இவர்கள் புதியர்களல்லர், 
நந்திகணத்தவர்கள்" என்று சொல்லியருளினார். தேவியார் அதுகேட்டு, அம்மைந்தர்களுக்குத் திருவருள்புரிந்தார். 
சிவபெருமான் அவர்களெல்லாருக்கும் தனித்தனி வாள்கொடுத்து, "ஓரிலக்க மைந்தர்களோடு நீங்களுங்கூடி, 
உங்களுக்கு நாயகனாகிய அறுமுகக்கடவுளை நீங்காது, அவன் பணித்த தொண்டுகளைச் செய்துகொண் 
டொழுகக்கடவீர்கள்' என்று அருளிச்செய்ய, அவர்களும் அதற்கியைந்து வணங்கினார்கள். இவ்வொன்பது 
வீரரும் இலக்கவீரர்களோடு கலந்து, எம்பெருமானுடைய திருக்கோயிலை அகலாது, அங்கிருந்தார்கள். 
சத்திகளொன்பதின்மரும் உமாதேவியாரை நீங்காது,அவர் பணித்த தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            சரவணப்படலம்.


    சிவபெருமான் உமாதேவியாரை நோக்கி, "உமையே, முன்னே நமது நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றிச் 
சரவணப்பொய்கையிலிருக்கும் உன் புதல்வனை நாம் போய் இங்கே கொண்டுவருவோம், வா" என்று திருவாய்
 மலர்ந்தருளினார்.உமாதேவியார் அதுகேட்டு, உவகையும் அன்புங்கொண்டெழுந்து, ''எம்பெருமானே,
நம்முடைய குமாரனை நாம் கொண்டு வருவேம், எழுந்தருளுக'' என்றார். உடனே சிவபெருமான் எழுந்து, 
உமாதேவியாரோடும் இடபமீது ஏறியருளினார். அதுகண்ட தேவர்கள் "நம்முடைய தீவினைகளெல்லாங் கழிந்தன'' 
என்று மனமிகமகிழ்ந்து, நந்திகணத்தோடு அணைந்து துதித்தார்கள். ஆலாலசுந்தரர் முதலிய கணத்தர்களும் 
உருத்திரர்களும் வந்து இருபக்கத்தும் நெருங்கித் துதித்தார்கள். ஞானாசிரியராகிய திருநந்திதேவர் விடுப்ப, 
பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்கள் பூமாரிபெய்து, திருவடிகளை வணங்கிக்கொண்டு சூழ்ந்தார்கள் 
பூதர்கள் நானாவிதவாத்தியங்களை முழக்கினார்கள். நான்கு வேதங்களும் பிரணவமும் பலகலைகளும் ஒலித்தன. 
விஞ்சையர்கள் கீதம்பாடினார்கள். சூரியர்கள் வெண்குடைபிடித்தார்கள். பூதர்கள் சாமரம் வீசினார்கள். 
நூறு கோடி பூதர்கள் சூழ்ந்தார்கள். இடபக்கொடிகள் நெருங்கிச் சென்றன. 

    அப்பொழுது உமாதேவியாரோடும்  இடபமேற்கொண்டருளிய சிவபெருமான் தமது திருக்கோயிலினின்று 
நீங்கி, திருக்கைலாசத்தைக் கடந்து இமைய மலைச்சாரலினுள்ள சரவணப் பொய்கையை அடைந்தார். கைலாச 
பதியும் பார்ப்பதியம்மையாரும் ஆறுருவங்கொண்ட முருகக்கடவுளுடைய தன்மையைப் பார்த்துத் திருவருள்செய்து, 
சரவணப் பொய்கைக் கரையிலே நின்றார்கள். அப்பொய்கையிலே ஆறுதிருவுருவங்கொண்டுலாவி வீற்றிருந்தருளும் 
குமாரக்கடவுள் சிவபெருமானையும் உமாதேவியாரையுங் கண்டு, திருமுகமலர்ந்து திருவுளங்களித்தார். அப்பொழுது 
மகாதேவர் உமாதேவியாரை நோக்கி, "நீ போய் உன்புதல்வனைக் கொண்டுவரக்கடவாய்'' என்று பணித்தருள, 
தேவியார் இடப வாகனத்தினின்றும் விரைந்து இறங்கி, திருவுள்ளத்தே கிளர்ந்த பேராசையோடு சென்று, 
சரவணப் பொய்கையில் எழுந்தருளியிருந்த தமது திருக்குமாரருடைய ஆறுருவங்களையும் இரண்டு திருக்கரங்களினாலும் 
அன்போடு எடுத்துத் தழுவி, ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருப்புயங்களுங்கொண்ட ஓருருவமாம் வண்ணஞ்
செய்தருளினார். அக்குமாரசுவாமி உமாதேவியாரால் ஆறு திருவுருவும் ஒன்றாகி, கந்தர் என்னுந் திருநாமத்தைப் 
பெற்றார். 

    உமாதேவியார் தம்மாலே தழுவப்பட்ட குமாரவேளுடைய முடிதோறும் மோந்து, முதுகைத் தடவலும், 
அவ்வம்மையாருடைய திருமுலைகள் சுரந்து பால்சொரிந்தன. சிவபெருமானது திருவருளாகியும் நிருமலமாகியும் 
பரஞானமாகியுமுள்ள தம்முடைய திருமுலைகள் பொழிந்த பாலை ஓரிரத்தினவள்ளத்திலேற்று, முருகக்கடவுளுக்கு 
அன்பினுடன் ஊட்டினார். ஊட்டியபின்பு, அக்குமாரக் கடவுளைக் கொண்டுபோய், எம்பெருமான்றிருமுன்னே 
வணங்குவிப்ப, அவர் தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, மார்பிலணைத்து, பெருங் கருணையோடும் 
தமது பக்கத்திருத்தி யருளினார். பின்பு உமாதேவியாரையும் திருக்கரத்தினால் எடுத்து, தமதிடப்பக்கத் திருத்தியருளினார்.

     இடபத்தின்மீது சிவபெருமானுக்கும் பார்ப்பதியம்மையாருக்கும் இடையே ஆறுமுகக்கடவுள் எழுந்தருளி 
யிருத்தலைக் கண்டு, பிரமா, விட்டுணு, இந்திரன் முதலிய தேவர்கள் கடல்போல் ஆரவாரித்து, அணுகி, பக்கத்தும் 
முன்னும் பின்னும் நெருங்கி, 'சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றியருளிய குமாரசுவாமியே, 
அடியேங்கள் சூரபன்மனால் மிகவருந்தினேம். இனிச் சிறியேங்களை ஆட்கொண்டருளும்' என்று விண்ணப்பஞ்செய்து, 
பூமழை பொழிந்து, வணங்கி எழுந்து, வாழ்த்தினார்கள். அப்பொழுது கார்த்திகை மகளிர்கள் சிவபெருமானைப் 
பேரன்போடு வணங்கி எழுந்தார்கள். கைலாசபதி அவர்கண்மீது திருவருணோக்கஞ்செய்து, "நம்முடைய 
குமாரனாகிய இவன், உங்களால் வளர்க்கப்பட்டமையால், கார்த்திகேயன் என்னும் பெயரைப் பெறக்கடவன். 
யாவராயினும் உங்கள் நக்ஷத்திரத்திலே இவனை மெய்யன்போடு வழிபடுவாராயின், அவர் வேண்டும் வரங்களைக் 
கொடுத்து, முத்தியை அருளிச்செய்வேம்'' என்று  திருவாய்மலர்ந்தருளினார்.

    உமாதேவியார் தம்முடைய திருக்குமாரரைச் சென்று தழுவியபொழுது சொரிந்த திருமுலைப்பால் 
நதிபோலப் பெருகிச் சரவணப் பொய்கையிலே புகுதலும், தங்கள் தந்தையாராகிய பராசரமுனிவருடைய 
சாபத்தினால் அப்பொய்கையுள் மீனாய்த் திரிந்த ஆறுசிறுவரும் அப்பாலைப் பருகினார்கள். பருகியபொழுது, 
மீன்வடிவம் ஒழிய முன்னை வடிவங்கொண்டு எழுந்து, பொய்கையை நீங்கி, சிவபெருமான் றிருமுன் சென்று 
வணங்கித் துதித்தார்கள். அப்பொழுது சிவபெருமான் அவர்களை நோக்கி, "நீங்கள் திருப்பரங்குன்றிலே 
தவஞ்செய்துகொண்டிருங்கள். சிலநாளாயபின், நம்முடைய குமாரனாகிய இவன்வந்து உங்களுக்கு அருள்செய்வன்'' 
என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அதுகேட்ட சிறுவர்களறுவரும் மனமகிழ்ந்து சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
சென்றார்கள். சிவபெருமான் கார்த்திகை மகளிர்களையும் பிரம விட்டுணு முதலிய தேவர்களையும் தங்கள் தங்கள் 
இடத்துக்குச் செல்லும் வண்ணம் விடுத்து, திருக்கைலாசமலையை அடைந்து, முருகக்கடவுளோடும் உமாதேவியாரோடும் 
இடபவாகனத்தினின்றும் இறங்கி நடந்து, செம்பொற் றிருக்கோயிலிற்சென்று, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தருளினார். 
நவவீரர்களும் இலக்க வீரர்களும் தங்கள் தமையனாராகிய முருகக்கடவுளை நறுமலர்களாலே பூசித்து வணங்கித் 
துதித்து, அவர்தொண்டின்வழி நின்றார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            திருவிளையாட்டுப்படலம்.


    மகாதேவருக்கும் தேவியாருக்கும் இடையே எழுந்தருளியிருந்த முருகக்கடவுள் தம்முடைய தம்பியர்களோடும் 
எழுந்து, பெருங்கருணையினாலே திருவிளையாடல் செய்யத் திருவுளங்கொண்டருளினார். திருவடிகளிலே 
தண்டையும் சிலம்பும் கழலும் சதங்கையும் ஒலிக்க, திருவரையிலே கிங்கிணி இசைக்க, திருச்செவிகளிலே 
குண்டலமும், திருமார்பிலே மதாணியும், திருநெற்றியிலே வீரபட்டிகையும் விளங்கத் திருவிளையாடல் செய்வார். 

    சபைதோறும் உலாவுவர், வாவிதோறும் உலாவுவர், பூஞ்சோலைதோறும் உலாவுவர், ஆறுதோறும் உலாவுவர், 
குன்றுதோறும் உலாவுவர், குளத்தில் உலாவுவர், ஆற்றிடைக்குறையில் உலாவுவர், ஆத்தீண்டு குற்றியையுடைய 
இடத்தில் உலாவுவர், அந்தணர் சாலையில் உலாவுவர், சிவதலந் தோறும் உலாவுவர், கடம்பமரம் நிற்கும் 
இடந்தோறும் உலாவுவர், வட மொழி தமிழ்மொழி கற்குங் கழகந்தோறும் உலாவுவர், பூமியில் உலாவுவர், 
திக்குக்களில் உலாவுவர், கடல்களில் உலாவுவர், ஆகாயத்தில் உலாவுவர், சூரியன் சந்திரன் முதலிய கிரகங்களும் 
நக்ஷத்திரங்களும் உள்ள இடங்களில் உலாவுவர், கந்தருவர் சித்தர் கருடர் முதலாயினோருடைய உலகங்களில் 
உலாவுவர், இந்திரனுடைய உலகத்தில் உலாவுவர், இருடிகளுடைய உலகத்தில் உலாவுவர், பிரமலோகத்தில் உலாவுவர், 
விட்டுணுலோகத்தில் உலாவுவர், சத்திலோகத்தில் உலாவுவர், சிவலோகத்தில் உலாவுவர், பிருதிவியண்டங்களெங்கும் 
உலாவுவர், அப்புவண்டங்களெங்கும் உலாவுவர், தேயுவண்டங்களெங்கும் உலாவுவர், வாயுவண்டங்களெங்கும் 
உலாவுவர், ஆகாயவண்டங்களெங்கும் உலாவுவர், மற்றைப்புவனங்களினும் உலாவுவர்.

    ஆறுதிருமுகங்களோடும் பாலராய்த் திரிவர்,ஒருதிருமுகத்தோடு குமாரராய்த் திரிவர், பிராமணராய்த் திரிவர், 
முனிவராய்த் திரிவர், வீரராய்த் திரிவர், காலாற் செல்லுவர், குதிரைமீது செல்லுவர், யானைமீது செல்லுவர், 
தேர்மீது செல்லுவர், சிங்கமீது செல்லுவர், ஆட்டுக்கடாமீது செல்லுவர், விமானமீது செல்லுவர், முகின்மீது செல்லுவர், 
மணியை அசைப்பர், குழலை ஊதுவர், கோட்டை இசைப்பர், வீணை வாசிப்பர், நானாவித வாத்தியங்களை முழக்குவர், 
இசைபாடுவர், கூத்தாடுவர்.

    இவ்வாறே முருகக்கடவுள் பலதிருவுருவங்கொண்டு எவ்விடத்தும் திருவிளையாடல் செய்யும்பொழுது, 
உலகமாதாவாகிய உமாதேவியார் அதனையறிந்து வியந்து, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி நின்று, 
"எம்பெருமானே, நம்முடைய குமாரன் சிறுகுழவிப் பருவத்தே செய்யும் ஆடற்றொழில் எனக்கு அத்தியற்புதமா           
யிருக்கின்றது.  ஆராயுங்கால், அவனுக்கு ஒப்பாவார் பிறரில்லை. மாயையில் உமக்கு ஒப்பாவன். அவனுடைய 
பெருமையை  அடியேனுக்குத் திருவாய் மலர்ந்தருளும்" என்று விண்ணப்பஞ்செய்தார். பார்ப்பதியம்மையார் 
தாம் அறியாதார்போல இவ்வாறு வினவுதலும், சிவபெருமான் அவரை நோக்கி, 'உமையே,எல்லாவுயிர்களும் 
அறிந்து உய்யும் பொருட்டு உன்குமாரனதியல்பை நீ நம்மிடத்து வினாவினாய். அவனியல்பைச் சொல்வேம்,கேள். 

    நமது நெற்றிக்கண்ணினின்றுந்தோன்றிய குமாரன் கங்கையிலே கொண்டுசென்று சரவணப் பொய்கையில் 
விடப்பட்டமையால் காங்கேயன் எனவும், சரவணத்திலே தோன்றினமையால் சரவணபவன் எனவும், கார்த்திகை 
மகளிர்களாலே பாலூட்டி வளர்க்கப்பட்டமையால் கார்த்திகேயன் எனவும், உன்னாலே ஆறுருவமுந் திரட்டி 
ஒன்றாக்கப்பட்டமையால் கந்தன் எனவும், பெயர் பெற்றான். நமக்கு ஆறுமுகங்களுண்டு. அவைதாமே கந்தனுக்கு 
முகங்களாயின. தாரகப்பிரமமாயுள்ள நமது ஆறெழுத்தும் ஒன்றாகி உன் குமாரனுடைய மந்திரமாகிய 
சடாக்ஷரமாயிற்று. ஆதலால், அறுமுகக்கடவுள் நமது சத்தியே. அவனுக்கும் நமக்கும் வேற்றுமையில்லை. 
அவன் நம்மைப் போல நீக்கமின்றி எங்கும் வியாபித்திருக்கின்றனன். பாலன்போலத் தோன்றுவன். 
எல்லாப்பொருளையும் புலப்படக்காணும் முற்றறிவுடையவன். தன்னை அன்போடு வழிபடுவோர்க்குச் 
செல்வத்தையும் ஞானத்தையும் முத்தியையும் கொடுக்க வல்லவன். 

    இனிமேல் அவன் பிரமனை வேதத்துக்கெல்லாம் மூலமாய் நின்ற பிரணவத்தின் பொருளை வினாவி, 
அவன் அதனை அறியாது மயங்கக் கண்டு, அவனைச் சிரசிலே குட்டிச் சிறைப்படுத்தி, தானே உயிர்களனைத்தையும் 
பலநாட் படைத்துக்கொண்டிருப்பன். அதன்பின் தாரகாசுரனையும், சிங்கமுகாசுரனையும், சூரபன்மாவையும், 
மற்றை யசுரர்களையுங்கொன்று, பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களுடைய இடுக்கணை நீக்கி, 
அவர்களுக்குப் பேரருள் -செய்வன். இவையெல்லாம் பின்னர் நீ காண்பாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
எம்பெருமாட்டியார் தமதருமைத் திருக்குமாரருடைய பெருமையைக் கேட்டுத் திருவுளமகிழ்ந்து, எழுந்தருளியிருந்தார். 
அது நிற்க.

    உலகங்களனைத்தினுஞ் சென்று திருவிளையாடல்செய்யும் சண்முகக் கடவுள் பின் ஒரு திருவிளையாடல் 
செய்வாராயினார். குலமலைகளனைத்தையும் ஓரிடத்து ஒருங்கு கூட்டுவர். அவைகளைப் பின்பு தலைதடுமாற்றமாக 
பூமியில் நிறுத்துவர். கடல்களனைத்தையும் ஒன்றாக்குவர். மகாமேருமலையைப் பாதாளத்திற்பொருந்த அழுத்துவர். 
கங்காநதியை அடைப்பர். பாதாளத்துள்ள எட்டு நாகங்களையும் பிடித்து மகாமேரு முதலிய மலைகளிலே பூட்டிக் கட்டி, 
உயிர்களுக்கு ஊறில்லாவண்ணம் சிறுதேர்களாகக் கொண்டு உருட்டிச்செல்வர். திக்குயானைகளை ஒன்றோடொன்று 
பொரும் வண்ணஞ்செய்வர். ஆகாயகங்காசலத்தால் வடவாமுகாக்கினியை அவிப்பர். கருடனையும் வாசுகியையும் பிடித்து, 
தம்முள் மாறுபட்டுப் பொரும் வண்ணம் இயற்றுவர். பாதாளத்துள்ள நாகர்களைப் பூமியிற்சேர்த்தி, பூமியிலுள்ள 
கடல்களனைத்தையும் பாதாளத்திற் புகும்வண்ணம் விடுவர். சூரியனைச் சந்திரமண்டலத்தில் எறிவர். 
சந்திரனைச் சூரியமண்டலத்தில் விடுவர். திக்குப்பாலகர்களுடைய பதங்களனைத்தையும் முன்னைத் 
தானத்தினின்றும் பறித்துப் பிறழ வைப்பர். முகில்களுள்ளிருந்த மின்களையும் இடியேறுகளையும் பற்றி, 
மாலைசெய்தணிவர். சூரியன் சந்திரன் முதலிய கிரகங்களும் பிறவும் ஆகாயத்துச் செல்லும் விமானங்களையும் 
தேர்களையும் பிணித்த கயிறுகள் துருவன் கையிலிருப்பன, அவற்றுள் வேண்டுவனவற்றை இடையில் 
அரிந்து, பூமியினும் திக்குக்களிலும் செல்லும் வண்ணம் விடுவர். 

     ஆகாயத்திற்செல்லும் விற்களிரண்டையும் பற்றி, கிரகங்களையும் நக்ஷத்திரங்களையும் உண்டைகளாகக் 
கொண்டு, தேவர்களுடைய தலையும் மார்பும் தோளும் கழுத்தும் முகமும் இலக்காக எய்து, வில்வன்மை காட்டுவர்.
சீவன்முத்தருக்கன்றிப் பிறருக்கு வெளிப்படாத நிருமலமூர்த்தியாகிய அறுமுகக்கடவுள், தேவர்கள் மனிதர்கள் 
முதலிய யாவரும் அஞ்சித் தங்கள் தங்கள் உள்ளமும் உடம்பும் தளர்தலன்றிச் சிதைவுறாவண்ணம், இவ்வாறே 
எண்ணில்லாத திருவிளையாடல்களைச் செய்தருளினார்.

    அப்பொழுது பூமியினுள்ள அசுரர்கள் அதனை நோக்கி, தாம் பெரும் பாவிகளாதலால், எம்பெருமானாகிய 
அறுமுகக்கடவுளுடைய திருமேனியைக் கண்டிலராகி, "இது செய்தவர் யாவர்" என்று தியக்கமுற்றார்கள்.
 அசுரர்கள் யாவரும் பின்னுஞ் சிலநாள் சீவிக்கும்வண்ணம் ஆயுள் பெற்றுள்ளமையால், முருகக்கடவுள் அவர்களுக்குத் 
தமது திருமேனியைக் காட்டாதுலாவினார். உலாவலும், அவர்கள் தேடித் தேடி ஒருவரையுங்காணாமையால், 
"பிரம விட்டுணுக்களாலும் காணப்படாத சிவபெருமானுடைய மாயமே இது" என்றார்கள். முருகக்கடவுளது 
செய்கையைப் பூமியினுள்ள மனிதர்கள் கண்டு, 'கொடுங்கோல் செலுத்தாநின்ற அசுரர்களெல்லாரும் இறப்பது திண்ணம். 
இது அதற்கு ஏதுவாய்த் தோன்றிய விம்மிதம் போலும்" என்றார்கள். திக்குப்பாலகர்களும் சூரியன் சந்திரன் முதலாயினோரும் 
சண்முகக் கடவுளுடைய செய்கையைக் கண்டு, அவருடைய திருவுருவத்தைக் காணாதவர்களாய், 'இது அசுரர்கள் 
செய்கையன்று. வேறியாரோ செய்தார்' என்றிரங்கி ஒருங்கு கூடி,"இந்திரன் சிலரோடும் மகா மேருமலையில் இருக்கின்றனன்; 
பிரமதேவரும் அங்கிருக்கின்றார். நாமெல்லாம் அவர்களிடத்தே சென்று இதனைச் சொல்வேம்' என்று துணிந்து கொண்டு, 
சூரனுக்கும் அஞ்சித் துயரத்தோடு சென்று, மேருசிகரத்தை அடைந்தார்கள். 

    அங்கே, அறுமுகக் கடவுளுடைய திருவிளையாடலைக் கண்டு அவர் திருவுருவத்தைக் காணாது வருந்தும் 
மனத்தனாய் இருந்த இந்திரனைக் கண்டு, அவன்முன் சென்று வணங்கி, இருந்துகொண்டு, 'பூவுலகத்தினும் 
வானுலகத்தினும் உள்ள முன்னை நிலைமைகளனைத்தையும் யாரோ மாறுபடச் செய்தனர். அவரை இன்னரென 
நாங்கள் அறிந்திலம். அசுரர்கள் இது செய்திலர்போலும், நிகழ்ந்த இப்புணர்ப்பு யாது" என்றார்கள். இந்திரன் அதுகேட்டு,
 "நானும் இதனை ஆராய்ந்துகொண்டே இருக்கின்றேன். சிறிதும் அறிந்திலேன். நாமெல்லாஞ்சென்று பிரமதேவரை 
வினவுவோம். எழுங்கள்" என்றான். உடனே, அவ்விந்திரன் முதலிய தேவர்கள் யாவரும்  மெய்த்தவஞ்செய்தமையால், 
அவர்கள் கண்ணுக்குத் தெரியும்வண்ணம்,  அறுமுகக்கடவுள் ஒருதிருமுகமுடைய பாலராய் அம்மலைமீது தோன்றி யருளினார்.

    தேவர்கள் கொண்ட மயக்கம் நீங்கும்வண்ணம் தமது செய்கையைக் காட்ட வந்த எம்பெருமான், 
மகாமேருமலையை அசைத்து, தாமரையிதழைக் கொய்து சிந்துதல்போலக் கொடுமுடிகளைப் பறித்து வீசினார்.
இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் அங்ஙனந்தோன்றிய குமாரசுவாமியைக் கண்டு, "ஐயையோ!  
பூவுலகத்தையும் வானுலகத்தையும் திரிவுசெய்தவன் இவனேயாகும்' என்று, சிங்கத்தையெதிர்ந்த விலங்குகள் 
போலக் கலங்கி, "இவனது வன்மையை ஆராயுங்கால், இவனைப் பாலனெனக் கொள்கின்றிலம்.அசுரரினும் இவன் 
மிகக் கொடியன். யாவரும் எய்தாத மாயமுடையன். இவனை இங்கே போர்செய்து வெல்வேம்' என்று துணிந்து சூழ்ந்தார்கள். 

    அப்பொழுது இந்திரன் முன்னாளிலே தந்தமொடிந்து திருவெண்காட்டிற்சென்று சிவபெருமானைப் 
பூசித்துத் தந்தம்பெற்றுக் கொண்டு அங்கிருந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தை நினைக்க, அது அங்கு வந்தது. 
உடனே இந்திரன் போர்க்கோலங்கொண்டு, குலிசம், வாள், வில், வேல் என்னும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, 
அவ்வைராவத மேலேறி, முருகக்கடவுளைத் தேவர்களோடு வளைந்து போர்செய்யத் தொடங்கினான். குமாரசுவாமி 
தம்மைத் தேவர்கள் பகைவராய் வளைந்தமையை நோக்கி, திருநகைசெய்து, யாதும் எண்ணாது முன்போலவே 
தமது திருவிளையாடலைச் செய்தார். இந்திரன் படைக்கலங்கள் பலவற்றைக் குமாரசுவாமிமேல் விடுப்ப, 
அவையெல்லாம் அவர்மீது மலர்போலப் பட்டன. அதுகண்டு, இந்திரன் குலிசத்தை விட்டு ஆரவாரித்தான். அக்குலிசம் 
எம்பெருமானுடைய திருமார்பிலே பட்டு, நுண்மணல்போலத் துகளாயிற்று. இந்திரன் அது கண்டு துயரத்தழுந்த,
 ஐராவதம் ஒலித்துக்கொண்டு குமாரசுவாமி திருமுன் சென்றது. முருகக்கடவுள் அது கண்டு, சங்கல்ப மாத்திரத்தால் 
ஓர் வில்லையும் பலபாணங்களையும் விரைந்து படைத்துக் கொண்டு, வில்லை வளைத்து நாணொலிசெய்து, ஒரு பாணத்தை 
அவ்யானையின் நெற்றியிற்புக விடுத்தார். உடனே ஐராவதம் புலம்பி வீழ்ந்திறந்தது. 

    அது கண்ட இந்திரன் "ஐயையோ'' என்று இரங்கி,அணுகி நின்று கோபத்தோடு தன்வில்லை வளைப்ப, 
முருகக்கடவுள் ஓரம்பை அவன் புயமீது விடுத்தார். இந்திரன் வருத்தமுற்றுத் தன்வன்மை இழந்து,                 
விற்றொழிலினீங்கித் தன்கையினிருந்த வேலொன்றைக் குமாரசுவாமி மீது விடுத்தான். அவ்வேல் ஒருசிறு 
புற்போலச் சென்று பட, அது கண்ட தேவர்கள் யாவரும் அற்புதமடைந்தார்கள். முருகக்கடவுள் இந்திரனுடைய 
முடியை ஓரம்பினாலும், கொடியை ஓரம்பினாலும், மார்பிற் கவசத்தை ஓரம்பினாலும் அழித்து, அவன்மார்பிலே 
ஏழம்பை விடுத்தார். உடனே இந்திரன் அழிந்து வீழ்ந்தான். அது கண்ட மற்றைத் தேவர்களெல்லாரும் 
கந்தசுவாமியை வளைந்து பொருதார்கள். அப்பொழுது சுப்பிரமணியக்கடவுள் வருணனை நான்கம்பினாலும், 
இயமனை ஐந்தம்பினாலும், சந்திரனை ஓரம்பினாலும், சூரியனை மூன்றம்பினாலும், வாயுவை இரண்டம்பினாலும்,         
அக்கினியை மூன்றம்பினாலும், கொன்று நின்றார். எஞ்சிய தேவர்களெல்லாரும் குமாரசுவாமியினுடைய 
நிலைமையை நோக்கி, ''இவனே இன்றைக்கு எல்லாரையுங் கொன்றுவிடுவன்' என்று துணிந்து, சரபத்தின் 
வன்மையைக் கண்ட சிங்கக்கூட்டம்போல, மனங்கலங்கி நடுநடுங்கி ஓடினார்கள். அதுகண்ட முருகக்கடவுள்     
அப்போர்க்களத்திலே தனிநின்றுலாவினார்.

    இச்செயலை நாரதமுனிவர் கண்டு, தேவகுருவாகிய பிருகற்பதியிடத்துச் சென்று, சொன்னார். 
பிருகற்பதி அது கேட்டு, "தேவர்களுடைய வாழ்க்கை இறந்ததுபோலும்" என்று சொல்லிக்கொண்டு, துயருற்று
 விரைந்துசென்று, போர்க்களத்தை அடைந்து, தேவர்கள் அங்கிறந்துகிடத்தல் கண்டு, மனங்கவன்று, குகப்பிரான்
 அங்கு நின்று செய்யும் திருவிளையாடலைத் தரிசித்தார். தரிசித்து, அவருடைய திருவடித்தாமரைகளை
 வணங்கித் துதித்து, "எம்பெருமானே, தாரகன், சிங்கமுகன், சூரன் என்னும் அசுரர்கள் தண்டிப்ப 
இந்திரன் நாடோறும் துன்பமுழந்து, தன்பதத்தை விடுத்து,இம்மேருமலையில் மறைந்திருந்தான். அவன்         
உம்முடைய திருவடிகளை அடைந்து வழிபட்டு, உம்மைக்கொண்டு தன்பகைவர்களையும் கொல்வித்து, 
முன்போலத் தன்னரசைப் பெற நினைந்திருந்தான். பல காலம் அருந்தவஞ்செய்து வாடினான். 

    சரவணத்தடத்திற் சென்று உமது திருவவதாரத்தை நோக்கி, தன்றுயரமெல்லாம் நீங்கினாற்போல 
உவகை பூத்தான்.உமக்குத் தொண்டுசெய்ய விரும்பிய இந்திரன் நீர் இவ்வாறு  திருவிளையாடல் செய்வதை அறிந்திலன். 
விட்டுணு முதலியோர் தேடியும் காணாத சிவபெருமானும் உமாதேவியாரும் அவர் திருவருள்பெற்றோர் 
சிலருமன்றி உமது திருவிளையாடலை அறியவல்லார் வேறியாவர்! அடியேம் பாசத்தையும் பசுவையும் 
பகுத்து இஃதித்தன்மையது என்று அறிந்திலேம். பாசத்தினின்று நீங்கிலேம். சிற்றறிவுடையேம். இவ்வியல்புடைய 
சிறியேம் பதிப்பொருளாகிய உமது பெருங்கருணைத் திருவிளையாடலை அறிய வல்லமா! ஆதலால், இந்திரன், 
தனது அஞ்ஞானங்காரணமாக உமது திருவிளையாடலைத் தீது என்று நினைந்து, உம்மோடு போர் செய்தனன்.        
நீதி சேர் தண்டமே நீர் புரிந்தீர். 

    மற்றைத்தேவர்களும் அஞ்ஞானத்தால் உம்மோடு பொருதிறந்தார்கள். தந்தை தாயர்களே தமக்குப் 
பிழைசெய்த தம் புதல்வர்களைக் கொல்வார்களாயின், அவர்களுக்கு வேறு யாவர் அருள் செய்குவர்! ஞானவடிவாகிய 
சுவாமீ, சரபமானது சிங்கத்தைக் கொல்வதன்றி மின்மினியைக் கொல்லுதல் வெற்றியாகுமா! அருட்பெருங்கடலே, 
வலியர்களாகிய அசுரர்கள் ஒழியும்வண்ணம் வேரோடறுத்தருளும். எளியவர்களும் உம்முடைய திருவடிகளை 
மறத்தலில்லாத அன்பர்களுமாகிய இவர்களுடைய பிழையைப் பொறுத்தருளும். மரக்கலத்தினாலே தாங்கப் 
பெறுவோரும் அதனாலே தங்கள் செல்வத்தை அடைதற்பாலருமாகிய வணிகர்கள் அதனைச் சாய்த்து அது 
கவிழ்ப்பத் தாம் இறத்தல்போல,உம்மாலே  தாங்கப்படுவோரும் உம்மாலே தங்கள் செல்வத்தை அடைதற்பாலருமாகிய             
 தேவர்கள் உம்மைப் பொருது நீர் கொல்லத் தாம் இறந்தார்கள். உம்முடைய அடித்தொண்டர்கள் செய்த பிழையைத் 
திருவுளங்கொள்ளா தாழிக. இவர்கள் இங்கு அறிவு பெற்றெழும்வண்ணம் திருவருள்செய்க'  என்று விண்ணப்பஞ் செய்தார்.

    முன்னவர்க்கெல்லாம் முன்னவராகிய முருகக்கடவுள் அது கேட்டுத்  திருமுறுவல் செய்து, இந்திரன் 
முதலிய தேவர்கள் ஐராவதத்தோடும் எழும்வண்ணம் திருவுளங்கொண்டருளினார். உடனே இந்திரன் முதலிய
தேவர்கள் எழுந்து, மெய்யறிவு தோன்ற, தாங்கள் முன்செய்த செயற்கையை அறிந்து, தாங்கள் போர்செய்தது 
கந்தசுவாமியோடென்று நினைந்து மனங்கலங்கி, வாடி, நடுநடுங்கி, ஒடுங்கினார்கள். அவர்கள் முருகக்கடவுள் 
திருவிளையாடல் செய்தலைக் காண்டலும், அவருடைய திருவடித் தாமரைகளைப் பலமுறை வணங்கி எழுந்து. 
துதித்து, சரீர நடுநடுங்கிக்கொண்டு நின்றார்கள். அதுகண்ட குமாரசுவாமி "வருந்தாதொழிமின் வருந்தாதொழிமின்' 
என்று திருவருள்செய்தார். 

    தேவர்கள் துயரமும் அச்சமுமாகி, முருகக்கடவுளை வணங்கி, "எம்பெருமானே, அமிர்தத்தோடு நஞ்சு 
கலந்து உண்பவரை அந்நஞ்சன்றி அமிர்தமா கொல்லும். அதுபோல உமது திருவருளினாலே செல்வத்தைப் 
பெறக் கருதிய அடியேங்கள் உம்மோடு பொருதமையால், நீர் எம்மைக் கொன்றீரல்லீர், அக்குற்றமே நம்மைக்
கொன்றது. முன்னாளிலே சிவபெருமானை இகழ்ந்த தக்கனுடைய யாகத்தில் தரப்பட்ட பாகத்தை யாம் உண்ட 
அதிபாதகம் இன்னும் முடிந்திலது . அதனோடு உம்மைப் பொருத அதிபாதகமுங் கூடிற்று. எம்பரம பிதாவே, 
நீர் பெருங்கருணையினால் இப்போது அடியேங்களைத் தண்டித்து, அப்பாவங்களைத் தொலைத்தருளினீர். 

    ஆதலால், அடியேங்களுக்கு நீர்செய்த திருவருளுக்கு நாங்கள் செய்யுங் கைம்மாறு யாது! எங்களை 
உமக்கு அடியர்களாகத் தருவேமெனின், அநாதிமலபெத்த பசுக்களாகிய நாங்கள் அநாதிமலமுத்த பதியாகிய 
உமக்கு என்றும் அடிமைகளேயன்றோ! அவ்வாறாக, அடியேங்களைப் புதிதாகத் தருவது எங்ஙனம்! சிறுவர்கள் 
தங்களைத் தங்கள் தந்தையர்களுக்குக் கொடுத்தல் தகுதியாமா! அறிவில்லாதேம் செய்த பிழைகளனைத்தையும் 
திருவுளத்திற்கொள்ளாது பொறுத்தருளும்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 

    முருகக்கடவுள் அது கேட்டு, "நம்மை நீங்கள் முன்னே ஒருபாலன்  என்று நினைந்து பொருதீர்கள். 
நமது வன்மையையும் பெருமையையும் இன்னும் நீங்கள் உணரும்வண்ணம், காட்டுவேம்" என்று திருவாய்மலர்ந்து, 
எட்டுத்திக்குக்களும், பதினாலுலகங்களும், எட்டுமலைகளும்,ஏழுகடல்களும், புறவேலையும், சக்கரவாளகிரியும், 
வெவ்வேறண்ட நிரைகளும்,சர்வான்மாக்களும், பிரமவிட்டுணு ருத்திரர்களும் அடங்கிய பாரமேசுர ரூபத்தைக் 
கொண்டருளினார். பாதாளமெல்லாம் திருவடிகளும், திகந்தமெல்லாம் திருப்புயங்களும், ஆகாயமெல்லாம் 
திருமுடிகளும், சோமசூரியாக்கினியெல்லாம் திருக்கண்களும், நடுவெல்லாம் திருமேனியும், வேதங்களெல்லாம் 
திருவாயும், ஞானமெல்லாம் திருச்செவிகளும், பக்கம் பிரமவிட்டுணுக்களும், சிந்தை உமாதேவியாரும்,
ஆன்மாச் சிவபெருமானுமாக இவ்வாறு முருகக்கடவுள் விசுவரூபங்கொண்டு நிற்ப, இந்திரன் முதலிய 
தேவர்களெல்லாரும் "இஃதற்புதம் இஃதற்புதம்' என்று வணங்கி, ஆகாயத்தை நோக்கினார்கள். 

    திருமேனி முற்றையும் அதனழகையுங் காணாது, முழந்தாள் வரையும் அரிதாகக் கண்டு புகழ்ந்து, 
''ஞானானந்தவடிவாகிய முழுமுதற் கடவுளே, அடியேங் கண்முன் நீர் கொண்டருளிய விசுவரூபத்தை முற்றும்
 தரிசித்திலேம். அடியேங்கள் முற்றும் தரிசிக்கும்வண்ணம் காட்டியருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். 
பெருங்கருணைக் கடலாகிய சுப்பிரமணியக்கடவுள் திருவுளமிரங்கித் தேவர்களுக்குத் திவ்விய நேத்திரத்தைக் 
கொடுத்து, அநந்தகோடி சூரியர்கள் திரண்டாற்போலப் பேரொளியை வீசிநின்ற தமது பாரமேசுர ரூபத்தைக் 
காட்டியருளினார். தேவர்கள் அறுமுகக் கடவுளுடைய திருவுருவமுற்றையும், அடிமுதன் முடிகாறும்
அவரது திருவருளினாலே தரிசித்து, அளப்பில்லாத அண்டங்களும், ஆன்மாக்களும், திரிமூர்த்திகளும் 
அவ்வடிவத்திருப்பக் கண்டு, ஆனந்தபரவசர்களாய் வணங்கித் துதித்து நின்று, "எம்பெருமானே, பிருதிவியண்ட 
முதலிய அண்டங்களும், அங்கங்குள்ள தேவர்களும், உயிர்ப்பொருள்களும், உயிரில்பொருள்களும், 
பிரமா விட்டுணு உருத்திரன் என்னும் திரிமூர்த்திகளும் உமது திருமேனியில் இருப்பக் கண்டேம். 

    உமது திருமேனியா அகிலமும் இருப்பது! விசுவமெல்லாம் நீரேயாய் இருக்கும் உண்மையை         
அடியேங்கள் இந்நாள்காறும் அறிந்திலேம். நீரே வந்து அறிவித்தமையால் இப்பொழுதறிந்தேம். 
உமது திருமேனியேயன்றிப் பிறிதொருபொருளையுங் காணேம். உமது திருவடிவத்தைச் சிறியேங்கள் 
காண வல்லமா! ஒரு பிரமன் இறந்தபோது விட்டுணு பேருருவங்கொண்டு திருப்பாற்கடலிலே துயில்செய்யும்     
அகந்தையை ஒழிக்கும்வண்ணம் சிவபெருமான் அண்டங்களெல்லாம் ஆபரணங்களாக ஓர் திருமேனி 
கொண்டருளினார் என்னுந் தன்மையை, எம்பெருமானே, உமது திருமேனியிற்கண்டேம். உமது திருவுருவம் 
பிரமாவும் விட்டுணுவும் பலகாலமுந்தேட அவர்களுக்குத் தோன்றாது அக்கினிவடிவாய் நின்ற சிவபிரானது 
திருவுருவமே போலும்.

    எம்பரமபிதாவே, இதனை யாவரும் அறிகிலர். எங்களைப்போல உமது திருவருளைப் பெற்று 
அடியையும் முடியையும் தெரிந்தவர் யாவர்! விட்டுணுவும் பிரமாவும் உலகத்தோடும் ஒருவரை ஒருவர் 
விழுங்கி உந்தியாலும் முகத்தாலும் தோற்றுவித்து இருவரும் மாறுபடும்பொழுது எடுத்த பேருருவங்கள் 
நீர் கொண்டருளிய திருவுருவத்துக்கு மிகச்சிறியனவேயாம். ஆதலால்,எம்பிரானே, நீர் அருவமும் உருவமுமாய் 
நின்ற ஏகநாயகரேயாகும். அடியேங்கள் செய்த தவத்தினாலே சூரன் முதலிய அவுணர்களைக் கொன்று 
அடியேங்களுடைய துன்பத்தை நீக்கும்பொருட்டுப் பாலராய்த் திருவவதாரஞ் செய்தருளினீர் . 
எவ்வுருவங்களுக்கும் ஒரிடமாயுள்ள உமது திருவுருவத்தைத் தரிசித்துச் சிறப்படைந்தேம். 

    இருவினைப் பயன்களை நுகர்தற்கெடுத்த சரீரத்துன்பம் நீங்கிவிடுவேம். இனி நாங்கள் 
பிறவித் துன்பமடையாது, நிரதிசயமுத்தியின்பத்தை அடைவேம்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 
பின்பு முருகக்கடவுளுடைய விசுவரூபத்தை நோக்கி மனம் மிகவெருவச் சரீரம் அலமர மயங்கி, "எம்பெருமானே,
உமது திருவுருவம் அளப்பில்லாத ஒளியையுடையது. இனிப் பார்த்தல் கூடாது.கண்களெல்லாம் ஒளியிழந்தன. 
அன்றியும் இதன்பெருமையை நோக்கி அஞ்சுகின்றேம். அடியேங்கள் உய்யும்வண்ணம், முன்னைத் 
திருவுருவங்கொண்டு தோன்றியருளுக என்று பிரார்த்தித்தார்கள்.

    முருகக்கடவுள் தமது விசுவரூபத்தை ஒழித்து, ஆறு திருமுகங்களோடும் முன்னைவடிவங்கொண்டு 
தோன்ற, இந்திரன் வணங்கித் துதித்து, "பெருங்கருணாநிதியே, சூரன் முதலிய அசுரர்களைக் கொன்று, 
அடியேனும் தேவர்களும் தொண்டுசெய்யச் சுவர்க்கத்தை அரசுசெய்துகொண்டிருத்தல்வேண்டும்" என்று 
பிரார்த்தித்தான். தம்மை வழிபடும் அடியார்களுக்கு அவரவர் வேண்டியவாறே இம்மை மறுமை வீடுகளைக் 
கொடுத்தருளும் பெருங்கருணைக் கடலாகிய அறுமுகக்கடவுளுக்கு இந்திரன் தன்னரசைக் கொடுப்பான் 
சொல்லிய வாசகம் அக்கினிதேவனுக்கு ஒருவன் ஒருதீபங்கொடுக்கச் சங்கற்பித்தமைபோலும். சுப்பிரமணியக் 
கடவுள் இந்திரனை நோக்கி நகைத்து, 'நீ நமக்குத் தந்த அரசை நாம் உனக்குத் தந்தேம். நீங்கள் சேனைகளாக
 நாமே சேனாதிபதியாகி அசுரர்களெல்லாரையும் கொல்வேம். வருந்தாதொழி" என்று அருளிச்செய்தார். 

    இந்திரன் அது கேட்டுத் தேவர்களோடும் மகிழ்ச்சியுற்று, முருகக்கடவுளை நோக்கி, சுவாமீ, 
இவ்வண்டத்துள்ள மலைகள், கடல்கள், உலகங்கள், உயிர்கண்முதலியனவெல்லாம் இந்நாளில் உம்மாலே 
முறை பிறழ்ந்தன. அவைகளை யெல்லாம் முன்புபோல நிறுவியருளும்" என்று பிரார்த்தித்தான். முருகக்கடவுள் 
திருநகை செய்து, "இவ்வண்டத்தில் நம்மாலே முறைபிறழ்ந்தனவெல்லாம் முன்னைநிலையை அடையக்கடவன" 
என்று திருவாய்மலர்ந்தருள, அவையெல்லாம் முன்னைநிலையை அடைந்தன. யாவரும் அது கண்டு,
அற்புதமடைந்து நின்றார்கள். 

    அப்பொழுது இந்திரன் முருகக்கடவுளை வணங்கி, "அநாதிபகவரே, வேதசிரசிலே விளங்காநின்ற 
உம்முடைய திருவடிகளைப் பூசிக்க விரும்புகின்றேம். அது செய்யும்வண்ணம் திருவருள் புரிக'' என்று வேண்டினான். 
முருகக்கடவுள் அதற்கியைந்து, தேவர்கள் பின்றொடர நடந்து, மகா மேருமலையை நீங்கி, திருக்கைலாசமலையின் 
பக்கத்துள்ள ஒருமலையை அடைந்தார். அப்பொழுது இந்திரன் தேவத்தச்சனை நினைக்க, அவன் இந்திரன் முன் வந்து, 
கைதொழுதுகொண்டு நின்றான். இந்திரன் அவனை நோக்கி "நீ இங்கே ஒரு திருக்கோயில் செய்யக்கடவாய்" என்றான். 
தேவத்தச்சன் அங்கே ஒருதிருக்கோயிலும், அதனுள்ளே ஒருதிவ்வியசிங்காசனமுஞ் செய்தான். தேவர்கள் பலர் 
இந்திரனுடைய ஏவலினாலே, திருமஞ்சனம்,சந்தனம், நறுமலர், தூபம், தீபம் முதலிய பூசோபகரணங்களெல்லாம் 
கொண்டுவந்தார்கள். அப்பொழுது இந்திரன் அறுமுகக்கடவுளை வணங்கி "சுவாமீ, உம்முடைய திருவடிகளை 
அடியேங்கள் பூசித்து உய்யும்பொருட்டு இத்திருக்கோயிலினுள் எழுந்தருளுக' என்று பிரார்த்தித்தான். 

    வேதப் பொருளாகிய சுப்பிரமணியக்கடவுள் அது கேட்டு, தேவர்களெல்லாரும் துதிப்பத் திருக்கோயிலினுள்ளே 
புகுந்து, திவ்வியசிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தருளினார். அப்பொழுது இந்திரனும் தேவர்களும் "ஞான நாயகரே, 
அடியேங்கள் உமக்குச் சேனையாக , நீர் சேனாதிபதியாகுக" என்று ஆகாய கங்கா சலத்தினாலே திருமஞ்சனமாட்டி, 
செம்பட்டாடை சாத்தி சந்தனக்குழம்பு மட்டித்து, திவ்வியாபரணங்கள் அணிந்து, திருமாலைகள் சூட்டி,
 தூபதீபங்காட்டி, பூசைசெய்து வலஞ்செய்து, வணங்கித் தோத்திரம் பண்ணினார்கள். அதன்பின் முருகக்கடவுள் 
அங்குநின்று மறைந்து திருக்கைலாசமலையை அடைந்தார். இந்திரனும் தேவர்களும் அற்புதத்துடன் அம்மலையை 
நீங்கினார்கள். கந்தசுவாமி தேவர்கள் பூசிப்ப எழுந்தருளியிருந்தமையால், அம்மலை கந்தவெற்பெனப் பெயர்பெற்றது.
கந்த வெற்பை நீங்கி, இந்திரன் மனோவதிநகரத்தை அடைந்தான்; மற்றைத்தேவர்களெல்லாரும் தங்கள் தங்கள் 
தானத்திற்சென்று, முன்போலிருந்தார்கள்.  திருக்கைலாசமலையை அடைந்த முருகக்கடவுள், இலக்கத்தொன்பது 
வீரர்களும் பூதர்களும் சேவிப்ப, அங்கெழுந்தருளியிருந்தார்.

 
                திருச்சிற்றம்பலம்.

                தகரேறுபடலம்.

    முருகக்கடவுள் திருக்கைலாசமலையில் எழுந்தருளியிருக்கும்பொழுது, நாரதமுனிவர், சிவபெருமானுக்குப் 
பிரீதியாம்வண்ணம், பூமியிலே தேவர்களும் முனிவர்களும் அந்தணர்களுஞ் சூழ, ஒரு யாகஞ்செய்தார். அந்த 
யாகாக்கினியினின்றும் ஓராட்டுக்கடாத் தோன்றியது. யாகத்துள்ளோர் யாவரும் அது கண்டு, அஞ்சியோடினார்கள். 
ஓடினவர்கள் யாவரையும் பூவுலகத்தினும் வானுலகத்தினும் துரந்து சென்று, சிலரைத் தாக்கிக் கொன்றது. 
எங்கெங்குந் திரிந்து மிக்க கோபத்தோடும் உயிர்களுக்கு நாசம் விளைத்தது. அப்பொழுது நாரதமுனிவரும் 
மற்றை இருடிகளும் தேவர்களும் திருக்கைலாசமலையை அடைந்தார்கள். அவர்கள் தாங்கள் திருமலைமீது 
ஏறிவரும்பொழுது, அறுமுகக்கடவுள் இலக்கத்தொன்பது வீரர்களோடு கூடி விளையாடல் கண்டு, "நாம் 
சிவபெருமானிடத்துச் செல்லவேண்டாம். நமது துயரத்தை நீக்கும் பொருட்டுக் குமாரசுவாமியே ஈண்டு 
நம்மெதிரே எழுந்தருளிவந்தார். இவர் சிறுவரல்லர். இந்திரனையும் தேவர்களையும் கொன்று மீண்டெழுவித்தவர். 
நமது குறையை முடித்தல் இவருக்கு எளிது. 

    நிகழ்ந்ததனை இவருக்கு விண்ணப்பஞ்செய்வேம் என்று தங்களுள்ளே தெளிந்துகொண்டு, 
எம்பெருமான்றிருமுன் சென்று, அவருடைய திருவடித்தாமரைகளை வணங்கித் துதித்தார்கள். கந்தசுவாமி 
அவர்களுடைய துயரத்தைக் கண்டு, " நீங்கள் மிக வருந்தினீர்கள். நிகழ்ந்தது யாது?  சொல்லுங்கள்" என்று 
திருவாய் மலர்ந்தருளினார். இருடிகளும் தேவர்களும் அது கேட்டு, "அடியேங்கள்  வேதவிதிப்படி ஒருயாகஞ் 
செய்தேம். யாகாக்கினியினின்றும் ஓராட்டுக்கடா எழுந்து, எங்களைக் கொல்ல நினைந்தது. 
அவ்வாடெழுங் கிளர்ச்சியைக் கண்டு, அடியேங்கள் யாகத்தை விட்டு இங்கே ஓடிவந்தேம். அது கோபத்தோடு 
துரந்து சிலரைக் கொன்றது. பூவுலகத்தினும் வானுலகத்தினும் அதனால் எண்ணிலுயிர்கள் இறந்தன. இன்னும் 
ஒருநாழிகையினுள்ளே எல்லாவுயிர்களும் இறந்து விடும். அவ்வாட்டின் வன்மையை அடக்கி, அடியேங்களுடைய 
அச்சத்தை நீக்கி, யாகத்தை முற்றுவித்தருளுக" என்று விண்ணப்பஞ்செய்தார்கள்.

    முருகக்கடவுள் அவர்கண்மீது திருவருணோக்கஞ்செய்து, "அஞ்சா தொழிமின்கள் அஞ்சாதொழிமின்கள்' 
என்று கையமைத்து, வீரவாகு தேவரை நோக்கி, "யாகாக்கினியினின்றுந் தோன்றி இவர்கள் யாகத்தை அழித்து 
உயிர்களைக் கொன்று கொன்று எங்குந் திரியாநின்ற ஆட்டுக்கடாவை, நீ விரைந்து சென்று, பிடித்துக்கொண்டு வா" 
என்று பணித்தருளினார். வீரவாகுதேவர் அத்திருப்பணியைச் சிரமேற்கொண்டு, முருகக்கடவுளுடைய திருவடிகளை 
வணங்கித் துதித்துக்கொண்டு, திருக்கைலாச மலையை நீங்கி, ஆட்டுக்கடாவைத் தேடுவாராயினார். பூமியினும் 
கீழேழுலகங்களினும் தேடிக் காணாமையால் மேலுலகங்களிலே தேடி, பிரமலோகத்தின் முன் அவ்வாட்டுக்கடாச் 
செல்லக் கண்டு, அது அஞ்சும்வண்ணம் ஆர்த்து விரைந்து சென்று, அதன் கோட்டைப் பிடித்து இழுத்துக்கொண்டு 
திருக் கைலாசமலையை அடைந்து, முருகக்கடவுடிருமுன் விடுத்து, வணங்கி நின்றார். முருகக்கடவுள் தேவர்களையும் 
இருடிகளையும் நோக்கி, "ஆட்டுக்கடா நம்மிடத்து வந்துவிட்டது. இனி நீங்கள் வருந்தாது பூமியிற்சென்று நீங்கள் 
தொடங்கிய யாகத்தை முடியுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அவர்கள் அது கேட்டு, "எம்பெருமானே, அடியேங்கள் உய்யும்பொருட்டு இவ்வாட்டுக்கடாவை வாகனமாகக் 
கொண்டருளும்" என்று பிரார்த்தித்தார்கள். முருகக்கடவுள் "நாம் இதனை வாகனமாகக் கொள்வேம். நீங்கள் போய், 
யாகத்தை முடியுங்கள்' என்று அருளிச்செய்தார். நாரதர் முதலாயினோர் யாவரும் முருகக்கடவுளை வணங்கிக்கொண்டு 
பூமியிற் சென்று, யாகத்தை முடித்தார்கள். அவர்கள் செய்த தவத்தினாலே முருகக்கடவுள் அன்றுதொட்டு அவ்வாட்டுக் 
கடாவைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            அயனைச்சிறைபுரிபடலம்.

    சுப்பிரமணியக்கடவுள் ஆட்டுக்கடாமேலேறி எவ்வுலகங்களினும் உலாவித் திருவிளையாடல் 
செய்துகொண்டு திருக்கைலாசமலையில் எழுந்தருளியிருக்கும் நாள்களில், ஒருநாளிலே பிரமதேவர் 
முதலாயினோர் திரு கைலாசமலையிற்சென்று, சிவபெருமானை வணங்கித் திருவருள்பெற்றுக்கொண்டு, 
மீண்டு திருவாயிலை அடைந்தார்கள். அடையும்பொழுது,அறுமுகக்கடவுள், அச்செம்பொற்கோயிலின் 
முதற்கோபுரத்துள்ளே இலக்கத்தொன்பது வீரரும் சூழ்ந்து துதிப்ப, எழுந்தருளியிருந்தார். அம்முருகக்
 கடவுள் சிவபெருமானை வணங்கிக்கொண்டு மீளும் தேவர்களுள்ளே தலைவராகிய பிரமதேவரை நோக்கி, 
"இங்கே வா" என்று விளிக்க, பிரமதேவர் சென்று, முருகக்கடவுளை நமஸ்கரியாது அஞ்சலிசெய்தார். 

    முருகக்கடவுள் பிரமதேவருடைய உள்ளக்கருத்தை நோக்கி, 'பிரமனே, இரு" என்று சொல்லி இருத்தி, 
"நீ யாதுதொழில் செய்கின்றாய்" என்று வினாவ, பிரமதேவர் "சிவபெருமானுடைய ஆணையினாலே நான் 
படைத்தற்றொழில் செய்கின்றேன்" என்றார். முருகக்கடவுள் அது கேட்டவுடனே திருமுறுவல் செய்து, 
 "நீ படைத்தற்றொழில் செய்வையாயின், வேதங்களெல்லாம் உனக்கு வருமா" என்று வினாவ, பிரமதேவர்
 "ஆதிகாலத்தில் என்னைப் படைத்தருளிய சிவபெருமான் வேதாகமங்களைச் செய்து, அவற்றுட் சிலவற்றை 
யான் உய்யும் பொருட்டு எனக்கு உபதேசித்தருளினார். அவற்றை நான் அறிவேன்" என்றார். 

    முருகக்கடவுள் "பிரமனே, அவற்றுள் ஓரிருக்குச் சொல்லக்கடவாய்'' என்று திருவாய் மலர்ந்தருள, 
பிரமதேவர் வேதங்களுக்கெல்லாம் முன் சொல்லப்படும் பிரணவத்தை முன்னே சொல்லிக் கொண்டு 
வேதஞ்சொல்லத் தொடங்கினார். தொடங்கலும், அப்பிரணவத்தைத் தம்முடைய திருமுகங்களுள் ஒன்றாகவுடைய 
முருகக்கடவுள் திருநகைசெய்து,"நில். நீ முன் சொல்லிய 'ஓம்' என்னுஞ் சொற்குப் பொருள் யாது! சொல்லக்கடவாய்'' 
என்றார். உடனே பிரமதேவர் பிரணவத்தின் பொருள் தமக்கு விளங்காமையால், கண்களை விழித்து நாணமுற்று 
விக்கித்  திகைத்திருந்தார். சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பீடமாயும் மற்றைத் தேவர்களுக்கெல்லாம் 
பிறப்பிடமாயும், எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் மூலமாயும்,காசியில் இறப்பவருக்கு எம்பெருமான் 
உபதேசித்தருளும் தாரகப் பிரமமாயும் உள்ள பிரணவத்தின் பொருளை ஆராய்ந்தார். பிரணவத்தைச் 
சொல்லுதன் மாத்திரமன்றி அதன்பொருளை அறிந்திலர். யாதுசெய்வார்! சிவபிரானது திருவருளினால் 
அதனை முன் பெற்றிலர். அதனால் மயங்குவாராயினார். அதன்பொருளை யாவர் சொல்ல வல்லவர்! 
வேதங்களுக்கெல்லாம் முதலினும் இறுதியினும் சொல்லப்படும் "ஓம்'' என்னும் ஒரெழுத்தின் உண்மைப்பொருளைப் 
பிரமதேவரும் அறியாது மயங்கினராயின், நாம் இனிச் சிறிது அறிந்தனம் என்பது நகையே.

    பிரமதேவர் பிரணவத்துக்குப் பொருள் இதுவென்று சொல்லாது மயங்கலும், அறுமுகக்கடவுள் 
'இதன்பொருளை அறியாத நீ படைத்தற் றொழில் செய்வது எங்ஙனம்'' என்று சொல்லி, பிரமதேவருடைய நான்கு 
சிரசுகளுங் குலுங்கும்வண்ணம் குட்டி, கீழே விழும்வண்ணம் திருவடியினால் உதைத்து, தம்முடைய பரிசனரைக் 
கொண்டு கந்தவெற்பிலே விலங்கு பூட்டிச் சிறையிடுவித்தார். அதன்பின் தாம் கந்தவெற்பிற்சென்று, ஒருதிருமுகமும் 
நான்கு திருக்கரங்களுங்கொண்டு, ஒருத்திருக்கரம் செபமாலையும், ஒருதிருக்கரம் கமண்டலமும் தாங்க, 
மற்றையிரு திருக்கரங்களும் வரதமும் அபயமுந்தர, பிரமதேவரைப் போலப் படைத்தற்றொழில் செய்து 
கொண்டிருந்தார். பிரம தேவரைச் சிறையிடுவித்தலும், அவரோடு வந்த தேவர்களெல்லாரும் மனநடுங்கி 
முருகக்கடவுளைத் தொழுதுகொண்டு, தங்கள் பதங்களை அடைந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            அயனைச்சிறை நீக்குபடலம்.

    உயிர்க்குயிராய், பரஞ்சுடராய், வேதமுடிவின் விளங்கும் மெய்ப் பொருளாய், படைத்தல் காத்தல் அழித்தல் 
மறைத்தல் அருளல் என்னும் ஐந்தொழிற்கும் இறைவராய் உள்ள சுப்பிரமணியக்கடவுள் இவ்வாறே அளப்பில்காலம் 
படைத்தற்றொழில் செய்துகொண்டிருப்ப, விட்டுணு பிரமதேவரைச் சிறைநீக்குவிக்கக் கருதி, தேவர்களையும் 
முனிவர்களையும் தம்மிடத்து வரும்வண்ணம் நினைந்தார். அதனை அறிந்து ஆதித்தர்களும், மருத்துவர்களும்,
 வசுக்களும், சத்தமாதர்களும், விஞ்சையர்களும், கருடர்களும், இயக்கர்களும், திக்குப்பாலகர்களும், சந்திரனும், 
மற்றைக்கிரகங்களும், நக்ஷத்திரங்களும், அகத்தியர் முதலிய முனிவர்களும், பிரமரொன்பதின்மரும், 
சேடனும், உரகர்களும் வந்தார்கள்.

    விட்டுணு அவர்களோடு சென்று,திருக்கைலாசமலையை அடைந்து, திருநந்திதேவர் விடுப்ப உள்ளே போய்,
 தமக்குத் தாமே ஒப்பாகிய சிவ பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்கி, உபநிடதங்களாலே தோத்திரஞ் 
செய்துகொண்டு நின்றார். நிற்றலும், சிவபெருமான் அவர்கண்  மீது திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் எந்நாளும் 
இல்லதொரு துயரத் தோடு இன்று நம்மிடத்து வந்தமை யாது' என்று வினாவியருளினார். அது கேட்ட விட்டுணு 
வாய்புதைத்து நின்று, "சருவலோகைக நாயகரே, உம்முடைய திருக்குமாரர் இங்கு வந்த பிரமனைப் பிரணவத்திற்குப் 
பொருள் கேட்டு, அவன் அஃதறியாது மயங்க, அவனைக் குட்டிச் சிறையிடுவித்து, அவனது படைத்தற்றொழிலுஞ் 
செய்கின்றார். கருணைக்கடலே,  முருகக்கடவுளைப்போலப் பிரமனும் உமக்கு மைந்தனேயன்றோ. அவன்
 ஊழினால் அளப்பில்காலம் சிறைப்பட்டு மனநொந்து வாடித் துயருறுகின்றான். எம்பெருமானே, அவன்சிறையை 
நீக்கியருளுக" என்று விண்ணப்பஞ்செய்தார்.

    உடனே கருணாகரராகிய பரமசிவன் திருநந்திதேவரை நோக்கி "நம்முடைய குமாரனாகிய கந்தன் 
பிரமனைச் சிறையிடுவித்தான் என்கின்றனர். நீ அவனிடத்து விரைந்து சென்று, நமது வாசகத்தைச் சொல்லி, 
பிரமனைச் சிறைவிடுவித்து, இங்கு மீளக்கடவாய்'' என்று பணித்தருளினார். திருநந்திதேவர் அத்திருப்பணியைச் 
சிரமேற்றாங்கி,எம்பெருமானை வணங்கிக்கொண்டு, அளப்பில் கணங்கள் சூழப் போய்க் கந்தவெற்பை
 அடைந்து, திருக்கோயிலிற்புகுந்து, சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடித் தாமரைகளை வணங்கி எழுந்து 
அஞ்சலிசெய்து துதித்துக்கொண்டு, வாய் புதைத்து நின்று, ''சுவாமீ, பிரமனைச் சிறைநீக்கும்பொருட்டு உமக்குச் 
சொல்லும்வண்ணம் எம்பெருமான் அடியேனை இங்கு விடுத்தருளினார். அவனைத் தடையின்றிச் சிறைநீக்கியருளுக. 
பிரணவப்பொருள் அவன் சொல்லுதற்கு எளியதா" என்று சொன்னார். சொல்லுமுன், முருகக் கடவுள் கோபித்து, 
''நான் பிரமனைச் சிறைநீக்கேன். நீ நிற்பாயாயின்,உன்னையும் சிறையிடுவிப்பேன். விரைந்து போய்விடு'' என்றார். 
உடனே திருநந்திதேவர் வேறொன்றும் பேசாது,அஞ்சி நடுநடுங்கி,முருகக்கடவுளை வணங்கிக்கொண்டு, மீண்டு 
திருக்கைலாச மலையை அடைந்து, எம்பெருமான் றிருமுன் சென்று, வணங்கி நின்று, முருகக்கடவுள் திருவாய் 
மலர்ந்த வாசகத்தை விண்ணப்பஞ்செய்தார்.

    அது கேட்டலும் எம்பெருமான் திருநகைசெய்து, சிங்காசனத்தினின்றும் விரைந்தெழுந்து, திருக்கோயிலை 
நீங்கி, இடபவாகனமீது ஏறியருளினார். விட்டுணுவும் தேவர்கள் முனிவர்கள் முதலாயினோரும் தொழுது
 கொண்டு எம்பெருமான் பின்னே சென்றார்கள். பூதர்கள் துதித்துக் கொண்டு பக்கத்தே சூழ்ந்தார்கள். 
சிவபெருமான் இவ்வாறே இடபமூர்ந்து திருக்கைலாசமலையை நீங்கி, கந்தவெற்பை அடைந்து, முருகக்கடவுளது
 திருக்கோயிலுக்கு முன் சென்றவுடனே இடபவாகனத்தினின்றும் இறங்கி உள்ளே புகுந்தருளினார். அது 
கண்டவுடனே குமாரசுவாமி விரைந்து இருக்கைவிட்டெழுந்து, எதிர்கொண்டு வணங்கி, அழைத்துக்கொண்டு
போய், தமது திவ்விய சிங்காசனத்தின்மேல் இருத்தி, ''உயிர்க்குயிராகிய எம்பெருமானே, நீர் இங்கு எழுந்தருளிவந்த 
காரியம் யாது" என்று விண்ணப்பஞ்செய்தார். சிவபெருமான் "நம் புதல்வனே, நீ பிரமனைச் சிறையிடுவித்தாய். 
நாம் அதனை நீக்கக் கருதி வந்தேம். அவனைச் சிறைவிடக்கடவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    எம்பெருமான் மிக்க அன்போடு திருவாய் மலர்ந்தருளிய இவ்வின்சொல்லைக் கேட்டபொழுது, 
முருகக்கடவுள் தமது திருமுடியை அசைத்து, "ஓரெழுத்தாகிய பிரணவத்தின் பொருளை அறியாதவன் 
உலகத்தைப் படைப்பன் என்பது பேதைமையே, அவன் வேதங்கள் வல்லனென்பதும் அதுபோலும். 
உமது திருவருள் அழகிது அழகிது. வேதத்துக்கு முன்னின்ற ஓரெழுத்தின் பொருளை அறியமாட்டாதவன் 
உமக்குப் பூசைசெய்யவும், நீர் படைத்தற்றொழிலாகிய பாரத்தை அவன்மீது சுமத்தினீர், இப்படைத்தற் றொழிலைப் 
பெற்றமையால், பிரமன் யாவரையும் சிறிதாயினும் மதிக்கின்றிலன். உம்மை அவன் வழிபடினும், அகந்தை 
சிறிதும் நீங்கிற்றிலன். ஆதலால், யான் அவனைச் சிறைநீக்கேன்'' என்றார். அப்பொழுது பெருங்கருணாநிதியாகிய 
கைலாசபதி "மைந்தனே,உன்செய்கை என்னை? நாம் பணித்தவாறே நந்தி வந்து  பிரமனைச் சிறைநீக்கும் 
வண்ணம் சொல்லவும் நீ கேட்டிலை. நாம் வந்து சொல்லினும் கேட்கின்றிலை. எதிர்மறுத்துப் பேசுகின்றாய்" 
என்று சற்றே கோபமுடையவர்போலத் திருவாய்மலர்ந்தருளினார். முருகக்கடவுள் சிவபிரானதியல்பை நோக்கி, 
வணங்கி நின்று, "எம்பெருமானே, உமக்குத் திருவுளம் இதுவாயின், பிரமனை விரைந்து சிறைநீக்கித் தருவேன்'' 
என்று விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான் அவர்மீது திருவருள் சுரந்தார். சண்முகக்கடவுள் தமது பக்கத்தினின்ற 
பூதர்களிற் சிலரை நோக்கி, "நீங்கள் விரைந்துசென்று பிரமனைச் சிறைநீக்கி நம்முன் கொண்டுவாருங்கள்'' என்று 
பணித்தருள, அவர்கள் போய், பிரமதேவரைச் சிறைவிடுத்துக் கொண்டுவந்து, குமாரசுவாமி திருமுன் விடுத்தார்கள். 
விடுத்தலும், முருகக்கடவுள் பிரமதேவரைக் கையிலே பிடித்து எம்பெருமான்றிருமுன் விடுத்தார்.

    உடனே பிரமதேவர் எம்பெருமானை மெய்யன்போடு வணங்கி, வெள்கி நின்றார். எம்பெருமான் 
அவர்மீது திருவருணோக்கஞ்செய்து, "நீ நெடுங்காலம் சிறையிருந்து இளைத்தனைபோலும்'' என்று திருவாய் 
மலர்ந்தருள, பிரமதேவர் "கருணாநிதியே, உம்முடைய திருக்குமாரர் அடியேனுக்குச் செய்த இத்தண்டம் தீதன்று. 
சிறியேனுக்கு மெய்யுணர்வைத் தந்து,யான் என்னும் அகந்தையை ஓட்டி, தீவினைகளையெல்லாங் களைந்து, 
சித்தசுத்தியை விளைத்தது' என்று விண்ணப்பஞ்செய்தார். அப்பொழுது கைலாசபதி பிரமதேவரை நோக்கி, 
'நீ இன்று தொட்டு உன்படைத்தற் றொழிலை முன்போலவே செய்துகொண்டிருக்கக்கடவாய்" என்று அருளிச்செய்தார். 
அதன்பின் முருகக்கடவுளை நோக்கித் திருமுறுவல் செய்து திருவருள் சுரந்து, "மைந்தனே, வா" என்று திருவாய்மலர்ந்து, 
அவரைத் தமது திருக்கரத்தினால் எடுத்து, திருத்தொடைமீது இருத்திக்கொண்டு,  உச்சிமோந்து, தமது அருமைத் 
திருக்கரத்தினாலே தழுவி, "பிரமனும் அறியாத பிரணவத்தின் பொருள் உனக்கு வருமா? வருமாயிற் சொல்வாயாக" 
என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    அப்பொழுது முருகக்கடவுள்  'முற்றொருங்குணர்ந்த முழுமுதற்கடவுளே, உலகமெல்லாம் பெற்றருளிய 
 மாதாவாகிய எம்பெருமாட்டிக்கு நீர் பிறரறியாவண்ணம் உபதேசித்தருளிய பிரணவப்பொருளை இரகசியமாகச் 
சொல்வதன்றி யாருங்கேட்பச் சொல்லலாமா' என்று விண்ணப்பஞ் செய்தார். செய்தலும், எம்பெருமான் திருநகை செய்து,
 "மைந்தனே, நமக்கு இரகசியமாகச் சொல்வாயாக' என்று திருவாய் மலர்ந்து, திருச்செவி கொடுப்ப, சண்முகக்கடவுள்
 எம்பெருமானுக்குப் பிரணவப்பொருளைச் சொன்னார். அது கேட்டு, ஞான நாயகராகிய கைலாசபதி திருவுளமகிழ்ந்து, 
திருவருள் செய்து, குமார சுவாமியை அங்கிருக்கும்வண்ணம் பணித்து, இடபவாகன மேற்கொண்டு, முன்போல 
யாவரும் துதிப்பச் சென்று, திருக்கைலாசமலையை அடைந்து,  பிரமவிட்டுணுக்களுக்கும் தேவர்களுக்கும் 
முனிவர்களுக்கும் விடை கொடுத்து, தமது திருக்கோயிலிற் புகுந்து, வீற்றிருந்தருளினார்.

    சுப்பிரமணியக்கடவுள், கந்தவெற்பினுள்ள திருக்கோயிலினுள்ளே திவ்வியசிங்காசனத்தின்மீதேறி, 
இலக்கத்தொன்பது வீரரும் பூதர்களுள் சேவிப்ப, எல்லையில்லாத பெருங்கருணையோடும் எழுந்தருளியிருந்தார்.
முற்றொருங்குணர்ந்த பரமாசாரியராகிய அம்முருகக்கடவுள் தம்மை மெய்யன்போடு விதிப்படி வழிபடலுற்ற 
நன்மாணாக்கராகிய அகத்தியமுனிவருக்குப் பிரணவப்பொருளையும், வேதசிவாகமங்களையும், உலகமெல்லாம்
 உய்யும்வண்ணம், உபதேசித்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            விடைபெறுபடலம்.

    முருகக்கடவுள் கந்தவெற்பில் எழுந்தருளியிருக்கும்பொழுது, விட்டுணுவின் புதல்வியர்களாகிய 
அமிர்தவல்லி சுந்தரவல்லி என்னும் இருவரும் முருகக்கடவுளுக்குப் பத்தினிகளாக விரும்பி, அவரைக் குறித்துச் 
சரவணப்பொய்கையில் அருந்தவஞ் செய்தார்கள். முருகக்கடவுள் அதனை அறிந்து, கந்தவெற்பை நீங்கிச் 
சரவணப்பொய்கையிற் சென்றார்.அது கண்ட கன்னியரிருவரும் அஞ்சி வணங்கி நின்று துதிக்க, 
முருகக்கடவுள் அவர்களை நோக்கி, "நீங்கள் யாது விரும்பித் தவஞ்செய்தீர்கள்'' என்று வினாவியருளினார். 
கன்னியரிருவரும் கைகுவித்து நின்று, "எம்பெருமானே, நீர் அடியேங்களைக் கல்யாணஞ்செய்துகொள்ளும்
பொருட்டுத் தவஞ் செய்தேம். திருவருள் செய்க" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். அறுமுகக்கடவுள் 
அவர்களை நோக்கி, "மூத்தாளாகிய அமிர்தவல்லியே, நீ இந்திரனுக்கு மகளாய் வளரக்கடவாய். 
இளையாளாகிய சுந்தரவல்லியே, நீ பூமியிலே சிவமுனிக்குப் புதல்வியாய் வேடரிடத்து வளரக்கடவாய். 
இவ்வாறு  வளரும்பொழுது, நாம் வந்து உங்களைக் கல்யாணஞ்செய்துகொள்வேம் . போங்கள்' என்று 
திருவாய் மலர்ந்தருள, கன்னியரிருவரும் கைதொழுது விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள்.

    அமிர்தவல்லி ஓர் குழந்தை வடிவங்கொண்டு மேருமலையில் இருந்த இந்திரன்முன் சென்று, 
"அரசனே, யான் உன்னோடு தோன்றிய உபேந்திரனுடைய மகள். ஆதலால், என்னை நீ வளர்க்கக்கடவாய்" என்றாள்.
 இந்திரன் அவளை நோக்கி, "தாயே, இங்கு வா" என்று சொல்லி, ஐராவதத்தை அழைத்து, 'இவள் நம்முடைய மகள். 
இவளை நீ அன்போடு வளர்க்கக்கடவாய். இவள்பொருட்டு இனி நமக்கு அளப்பில்லாத சிறப்புண்டாகும்" என்றான். 
ஐராவதம் அவளைப் பிடர்மேற் கொண்டு சென்று, மனோவதியில் இருத்தி வளர்த்தது. அதனால் அவள் தெய்வயானை 
எனப் பெயர் பெற்று, குமாரசுவாமியைத் தியானித்துக்கொண்டிருந்தாள். சுந்தரவல்லி தொண்டைநாட்டினுள்ள 
வள்ளிமலையிலே தவஞ்செய்துகொண்டிருந்த சிவ முனிவருக்கு மகளாகும்பொருட்டுச் சென்றாள்.

    சுப்பிரமணியக்கடவுள், விட்டுணுவின் புதல்வியரிருவருக்கும் வரங் கொடுத்தபின், கந்தவெற்பை அடைந்து, 
பெருங்கருணையோடும் அங்கெழுந்தருளியிருந்தார். சிலநாளாயபின், இலக்கத்தொன்பது வீரர்களும் 
பூதங்களும் சூழத் திருக்கைலாசமலையை அடைந்து, தாய் தந்தையரிருவரையும் வணங்கிக்கொண்டு, 
அவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருந்தார்.

    அறுமுகக்கடவுள் இவ்வாறு எழுந்தருளியிருக்கும்பொழுது, இந்திரன் முதலிய தேவர்கள் தங்கள் 
குறையைச் சொல்லி, பிரமதேவரையும் விட்டுணுவையும் முன்கொண்டு திருக்கைலாசமலையை அடைந்தார்கள். 
திருநந்திதேவர் "நில்லுங்கள்'' என்று அவர்களைத் தடுக்க, அவர்கள் தளர்ந்து, பல நாட்பெருந்துயரத்தோடு 
நின்றார்கள். அவ்வாறு நின்ற பிரமவிட்டுணு முதலிய தேவர்கள் ஒருநாள் திருநந்திதேவரை வணங்கித் துதித்து,
அவருக்குத் தங்கள் துயரத்தை விண்ணப்பஞ்செய்தார்கள். அதுகேட்ட திருநந்திதேவர் திருவுளமிரங்கி,
 "இனி உங்கள் கவற்சியை விடுங்கள். யான் எம்பெருமான்றிருமுன் சென்று, உங்கள் குறையை விண்ணப்பஞ் செய்து, 
உங்களை விரைவில் அங்கே கொண்டுபோய் விடுவேன். இங்கிருங்கள்' என்று சொல்லிக்கொண்டு, உள்ளே புகுந்து, 
சிவபெருமானை வணங்கி நின்று, "சுவாமீ, பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் திருக்கோயின் 
முதற்கடைவாயிலின் நிற்கின்றார்கள்'' என்று விண்ணப்பஞ்செய்தார். கருணாநிதியாகிய கைலாசபதி 
''அவர்களெல்லாரையும் நம் முன்னே அழைத்துக்கொண்டு வா'' என்று பணித்தருள, திருநந்திதேவர் மீண்டு சென்று,
 "எல்லீரும் வாருங்கள்' என்று அருளிச்செய்தார்.

    உடனே தேவர்களெல்லாரும் திருக்கோயிலினுள்ளே விரைந்து சென்று, கிருபாசமுத்திரமாகிய சிவபெருமானை 
வணங்கினார்கள். அதற்குள், இடருறு மனத்தினனாகிய இந்திரன் "அருட்சத்தியாகிய உமாதேவியாரோடும் 
எழுந்தருளியிராநின்ற முதற்கடவுளே, சிறியேங்கள் எண்ணில்லாத யுகங்களாகச் சூரன் முதலிய அசுரர்களால் 
வருந்தி ஒடுங்கினேம். அடியேனுடைய புதல்வனாகிய சயந்தனும் தேவர்களும் அரம்பையர்களும் சூரனுடைய 
நகரத்திலே சிறையிலிருக்கின்றார்கள். சுவர்க்கலோகம் அசுரர்களால் அழிந்தது. இவையெல்லாம் அடியேன் 
விண்ணப்பஞ்செய்தல் வேண்டுமா! முற்றறிவுடைய பதிப்பொருளாகிய நீர் இவையெல்லாம் அறிவீரே. 

    முன்னே அடியேன் தவஞ்செய்தபொழுது, நீர் எழுந்தருளிவந்து, 'நம்மிடத்தே ஒருகுமாரன் பிறந்து சூரன் 
முதலிய அசுரர்களைக் கொன்று உங்களைக் காப்பான்' என்று திருவாய் மலர்ந்தருளினீரே. அவ்வாறே திருக்குமாரரும் 
திருவவதாரஞ் செய்திருக்கின்றாரே. இந்நாள்காறும் எங்கள் துயரத்தை நீக்கத் திருவுளங்கொண்டிலீரே. அடியேங்கள் 
பவப்பயன் இன்னுந்தொலைந்திலதுபோலும். சூரனுடைய வன்மையைத் தொலைக்க வல்லவர் பிறரில்லை. 
அடியேன் என்றுயரத்தை உம்மிடத்தன்றி வேறியாரிடத்துச் சொல்வேன்! யாரை நோவேன்! கடனடுவே காகத்துக்கு 
மரக்கலமல்லது பிறிதோரிடம் இன்மைபோல, அடியேங்களுக்கு இத் திருக்கைலாசமன்றிப் பிறிதோரிடமில்லையே. 
அடியேங்களுடைய துயரத்தை நீக்கும் துணைவர் நீரன்றி ஒருவரும் இல்லை இல்லை. அக்கினியாயினும் 
அதன்மீது நித்திரைசெய்யலாம். நஞ்சாயினும் அதனை உண்ணலாம். பகைவராலே செய்யப்படும் துயரம் 
ஆற்றரிது ஆற்றரிது! இக்கீழ்மை போதும் போதும்!  புதல்வருக்குத் தீதை நீக்கவும் திருவைக் கொடுக்கவும் 
தாதையரன்றி வேறியாவருளர்! ஆதலால், கருணாநிதியே, இனிச் சிறியேங்களைக் காத்தருளும் 
காத்தருளும்'' என்று விண்ணப்பஞ்செய்து வணங்கினான். அப்பொழுது பிரமவிட்டுணுக்கள் "எம்பெருமானே, 
சூரபன்மன் உயிர்களுக்குச் செய்யும் வருத்தம் எம்மாலே சொல்வதரிது. இனிச் சிறிதும் தாழ்க்காது இப்பொழுதே 
அருள்செய்யும்" என்று வேண்டினார்கள்.

    சிவபெருமான் அவற்றைக் கேட்டலும் பெருங்கருணை கூர்ந்து  "இனி உங்கள் கவற்சியை விடுங்கள்'' 
என்று அருளிச்செய்து, அங்கெழுந்தருளியிருந்த அறுமுகக்கடவுளை நோக்கி, 'உலகத்துள்ள உயிர்களுக்குத் 
துன்பஞ்செய்து தேவருலகத்தை அழித்துக் கெடுதலில்லாத வலிமை கொண்டுற்ற சூரபன்மனை அசுரர்களோடு 
கொன்று, வைதிகமார்க்கத்தை நிறுவி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கி, இந்திரனுக்கு அவனரசைக் கொடுத்து, 
மீள்வாயாக" என்று பணித்தருளினார். முருகக்கடவுள் அது கேட்டு "எம்பெருமானே, அடியேன் இப்பணியைச் செய்வேன்" 
என்று விண்ணப்பஞ்செய்தார். அதன்பின் சிவபெருமான் பதினோரு ருத்திரர்களைத் திருவுளத்தில் நினைந்தருள, 
அவர்கள் வந்தார்கள். 

    சிவபெருமான் "நீங்கள் இவன் கையில் படைக்கலங்களாக இருக்கக்கடவீர்கள்' என்று திருவாய்மலர்ந்து, 
அவர்களைப் படைக்கலங்களாக்கி, முருகக்கடவுளுடைய திருக்கரங்களிற் கொடுத்தருளினார். பதினோரு 
ருத்திரர்களும் தோமரம்,கொடி, வாள் குலிசம், அம்பு, அங்குசம்,மணி,தாமரை, தண்டம், வில், மழு என்னும் 
பதினொரு படைக்கலங்களாகி, அறுமுகக்கடவுளுடைய திருக்கரங்களில் வீற்றிருந்தார்கள். பின்பு சிவபெருமான், 
ஏவியக்கால், ஐம்பெரும்பூதங்களை அழிப்பதும், சருவான்மாக்களையும் ஒருங்கு முடிப்பதும், யாவர்மேல் 
விடுக்கினும் அவருடைய வன்மையையும் வரங்களையும் கெடுத்து உயிரை உண்பதும், எவ்வெப் படைக்கலங்களுக்கும் 
நாயகமுமாகிய ஒர்வேலாயுதத்தைச் சிருட்டித்து, முருகக்கடவுளுடைய திருக்கரத்திற் கொடுத்தருளினார். 

    அதன்பின் தாம் ஏவினவற்றைச் செய்துகொண்டு தம்பக்கத்து நின்ற இலக்கத்தொன்பது குமாரர்களை 
நோக்கி, "நீங்கள் யாவரும் முதல்வனாகிய இக்குமரனோடு சென்று, அசுரர்களைக் கொல்லக்கடவீர்கள்" என்று பணித்து, 
அவர்களுக்குப் பல படைக்கலங்களையும் உதவி, முருகக்கடவுளுக்கு அவர்களைத் துணைப்படைகளாகக் 
கொடுத்தருளினார். பின்பு அண்டாபரணர்,நந்தி, உக்கிரர்,சண்டர், அக்கினிநேத்திரர், சிங்கர் முதலிய கணநாதர்களை 
நோக்கி, "நீங்கள் இரண்டாயிரம் வெள்ளம் பூதங்களோடு சண்முகனுக்குச் சேனாதிபதிகளாய்ச் செல்லக்கடவீர்கள்" 
என்று திருவாய்மலர்ந்து, முருகக்கடவுளுக்கு அவர்களைப் படைத்தலைவர்களாகக் கொடுத்தருளினார். 

    ஐம்பெரும்பூதங்களின் வன்மையையும் அங்கங்குள்ள பொருள்களின் வன்மையையும் பிரமன் முதலிய 
தேவர்களுடைய வன்மையையும் ஒருங்கு கொண்டதும், இலக்கங்குதிரை பூண்டதும், மனத்தினும் விரைந்து 
செல்வதுமாகிய ஒருதேரைத் திருவுளத்தினாலே சிருட்டித்து, முருகக்கடவுளுக்கு ஏறும்வண்ணம் கொடுத்தருளினார். 
இவ்வாறெல்லாம் சிவபெருமான் விரைந்துதவி, "இனி நீ போகக்கடவாய்” என்று பணித்தருளினார்.

    அறுமுகக்கடவுள் மகாதேவரையும் தேவியாரையும் தொழுதுகொண்டு வலஞ்செய்து, மும்முறை 
நமஸ்கரித்து எழுந்து, தோத்திரஞ்செய்து கொண்டு நிற்ப, எம்பெருமான் திருவுளத்திலே கிளர்ந்த பெருமகிழ்ச்சியோடு 
அம்முருகக்கடவுளைத் தழுவி, தமது அருமைத் திருக்கரத்தினால் எடுத்துத் திருத்தொடையில் இருத்தி, உச்சிமோந்து 
திருவருள்புரிந்து, எம் பெருமாட்டியாருடைய திருக்கரங்களிலே கொடுத்தருளினார். எம்பெருமாட்டியார் தமது 
அருமைத் திருக்குமாரரைத் தமது மடியில் இருத்திப் பெருங்கருணையோடு தழுவி, உச்சிமோந்து, 
"உன்னை அடுத்த இலக்கத்தொன்பது வீரர்கள் படைஞராய்ச் சூழச் சென்று, அசுரர்களைக் கொன்று, 
இத்தேவர்களுடைய குறையை முடித்து, மீள்வாயாக'' என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    உடனே அறுமுகக்கடவுள் எம்பெருமானையும் எம்பெருமாட்டியாரையும் வணங்கி எழுந்து, 
விடைபெற்றுக்கொண்டு, சென்றார். இலக்கத்தொன்பது வீரர்களும், பூதசேனாதிபதிகளும் சிவபிரானையும் 
உமாதேவியாரையும் மும்முறை வணங்கி, விடைபெற்றுக்கொண்டு, சென்றார்கள். அங்கு நின்ற பிரமா விட்டுணு 
இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் ''எம்பரமபிதாவே, நீர் அடியேங்களைக் காத்தருளினீர். இனி எங்கள் நெஞ்சத்து 
ஓர்குறையுமில்லை. உய்ந்தனம் உய்ந்தனம்'' என்று விண்ணப்பஞ் செய்துகொண்டு, சிவபெருமானையும் 
உமாதேவியாரையும் வணங்கி, எழுந்தார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அருள்செய்யும் 
நாயகனாகிய குமரனோடும் நீங்களும் நடவுங்கள்" என்று விடைகொடுத்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.


             படையெழுபடலம்.

    சிவபெருமானிடத்து விடை பெற்றுக்கொண்டு செல்லும்பொழுது விட்டுணு அயலில் வரும் வாயுதேவனை 
நோக்கி, "நீ அறுமுகக்கடவுளுடை தேர்மேல் ஏறி, முட்கோலும் மத்திகையுங்கொண்டு பாகனாய்ச் செலுத்தக்கடவாய்” 
என்று பணித்தார். வாயுதேவன் அதற்கிசைந்து, ஆகாயத்திற் செல்லும் தேர்மேலே பாய்ந்து, தன்னினமாகிய 
வாயுக்கள் பக்கத்து வர, மகிழ்ச்சியோடு செலுத்திக்கொண்டு குமாரசுவாமி திருமுன் விடுத்து  "எம்பெருமானே,
இத்தேர்மீது ஏறியருளுக" என்று விண்ணப்பஞ் செய்தான். முருகக்கடவுள் பேரருள் புரிந்து, அத்தேர்மீது ஏறியருளினார்.

    அது கண்ட இந்திரன் முதலிய தேவர்களெல்லாரும் "இனிச் சூரபன்மன் இறந்தான் இறந்தான்" என்று துள்ளி 
ஆர்த்தார்கள். இலக்கத்தொன்பது வீரர்களும் முருகக்கடவுளைச் சூழ்ந்தார்கள். தேவர்களும் முனிவர்களும்
அவ்வீரர்களைச் சூழ்ந்தார்கள். திருக்கைலாசமலையில் இருந்த அநந்தவெள்ளம் பூதங்களுள் இரண்டாயிரம் 
வெள்ளத்தர்கள் நூற்றெட்டுச்சேனாதிபதிகளோடும் முருகக்கடவுளிடத்து வந்து, வணங்கித் துதித்து, 
ஆரவாரித்தார்கள். அவர்களிற்சிலர் பலவிதவாத்தியங்களை முழக்கினார்கள். அதுகண்ட அறுமுகக்கடவுள் 
பூதசேனைகள் சூழத் திருக்கைலாசமலையை நீத்துப் பூமி மேற்சென்றருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            தாரகன்வதைப்படலம்.

    அறுமுகக்கடவுள் சேனையோடு செல்லும் நெறியிலே, தாரகாசுரனுக்கு உறையுளாய்த் தன்னை அடைந்தோரை 
வருத்தும் கிரௌஞ்ச மலை  சேர்ந்தது. அதனைக் கண்டவுடனே, தேவர்கள் மனம் பதைபதைத்தார்கள் .இந்திரன் கலக்கங்
கொண்டு நின்றான். அப்பொழுது நாரதமுனிவர் வந்து முருகக்கடவுளுடைய திருவடித்தாமரைகளை வணங்கி நின்று, 
"எம்பெருமானே, அந்தணர்களும் முனிவர்களும் இச்சுரத்திற் செல்லும்பொழுது தன்னுள்ளே வழிகாட்டி வரவரப் 
புணர்த்துக் கொன்று பின் அகத்திய முனிவருடைய சாபத்தினாலே இவ்வடிவமாய் நிற்கும் கிரௌஞ்சமலை இதுவே. 
 இம்மலைக்கு ஒருபக்கத்துள்ள மாயபுரியிலே, சூரனுக்கு இளவலும்,யானை முகத்தையுடையவனும், போரிலே 
விட்டுணுவுடைய சக்கரத்தைப் பதக்கமாகக் கொண்ட வீரனுமாகிய தாரகன் இருக்கின்றான். இவனைக் கொல்வீராயின், 
இவன்றமையனாகிய சூரனை வெல்லல் மிக எளிது' என்று விண்ணப்பஞ்செய்தார். அது கேட்ட குமாரசுவாமி 
"அவனை இங்கே கொல்வேம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்திரன் முதலிய  தேவர்களெல்லாரும் 
மனக்கவலை நீங்கி, "தாரகன் இன்றே இறந்தனன்" என்று மகிழ்ச்சியுற்றார்கள்.

    முருகக்கடவுள் தம்பக்கத்து நின்ற வீரவாகுதேவரை நோக்கி, "இளவலே, அம்மலை கிரௌஞ்சம். 
அதன் ஒருபக்கத்துள்ள மாயபுரியிலே தாரகாசுரன் அசுரசேனைகளோடு இருக்கின்றான். நீ உன்றம்பியர்களாகிய 
இலக்கத்தெண்மர்களோடும் ஆயிரம்வெள்ளம் பூதர்களோடும் பூதசேனாதிபதிகளோடும் போய், அவனுடைய 
நகரத்தை வளையக்கடவாய். தடுத்தெதிர்ந்து போர்செய்யும் அசுரசேனைகளைக் கொல்லக்கடவாய். 
எதிர்வானாயின், அவனோடு பொரக்கடவாய். உன்னாலரிதாயின், நாம் அவனைக் கொல்லவருவேம்.
நீ முன்னே போ'' என்று பணித்தருளினார். வீரவாகுதேவர் அதுகேட்டு, 'நன்று'' என்று சொல்லி, பூமியின்மேல் 
விழுந்து நமஸ்கரித்து, எழுந்து இருகைகளையுஞ் சிரமேற்குவித்துக்கொண்டு நின்றார். 

    பின்பு முருகக்கடவுள் இலக்கத்தெண்மரையும் பூதர்களையும் நோக்கி, "நீங்கள் அசுரர்களைப் 
பொரும்பொருட்டு வீரவாகுவோடு போங்கள்' என்று பணித்தருளினார். அவர்கள் யாவரும் எம்பிரானுடைய 
திருவடிகளை வணங்கிக்கொண்டு போதற்குன்னலும், உயிர்க்குயிராகிய சண்முகக்கடவுள் தம்பக்கத்து நின்ற 
தேவத்தச்சனை நோக்கி, "வீரவாகு முதலிய யாவருக்கும் கொடுக்கும் பொருட்டு நீ பலதேர்களைச் செய்யக்கடவாய் "
என்று பணித்தருளினார். தேவத்தச்சன் ஒருமாத்திரை ஒடுங்குமுன்னரே குதிரைகளும் சிங்கங்களும் பூதங்களும் 
பூண்ட பலதேர்களைச் செய்தான். எம்பெருமான் அத்தேர்களை வீரவாகுதேவர் முதலிய இலக்கத்தொன்பது 
வீரர்களுக்கும் பூதசேனாதிபதிகளுக்கும் கொடுத்தருளினார். வீரவாகுதேவர் முதலாயினோர்கள் எம்பெருமானை மும்முறை 
வலஞ்செய்து வணங்கி விடைபெற்று, அத்தேர்கண்மேல் ஏறிக்கொண்டு, ஆயிரம்வெள்ளம் பூதர்களோடு 
சென்றார்கள். வீரவாகுதேவர் பூதசேனாதிபதிகளுக்கும் இலக்கத்தெட்டு வீரர்களுக்கும் நாயகராய், நடுவே 
சென்றார். முருகக்கடவுள் வீரவாகுதேவரை முன்னே ஏவி, ஆயிரம்வெள்ளம் பூதர்கள் சூழவும், இந்திரன் முதலிய 
தேவர்கள் வணங்கவும், கடைக்கூழையிலே சென்றார்.

    நானாவித வாத்தியங்கள் முழங்க, வீரர்களும் பூதர்களும் சூழ, வீரவாகுதேவர் மாயபுரியைச் சேர்ந்தார். 
சேர்ந்தவுடன், பூதர்கள் போய்,  நகரத்தினுள்ளே புகுந்து, எதிர்ந்த அசுரர்களோடு போர்செய்துகொண்டு 
நின்றார்கள். அது கண்ட தூதர்கள் ஓடிப்போய்க் கோயிலினுள்ளே புகுந்து, தாரகாசுரனை வணங்கி நின்று, 
"அரசனே, 'சூரபன்மன் தேவர்களை இட்ட சிறையை நீக்கும் பொருட்டுச் சிவபெருமான் கந்தசுவாமி என்னும் 
பெயரையுடைய ஒருகுமாரரைப் பெற்றருளினார். அவர் அசுரர்களெல்லாரையும் கொன்றுவிடுவர்' என்று 
ஆகாயத்திலே செல்லும் தேவர்கள் சொல்லக் கேட்டேம். நாம் 'இவர்கள் வார்த்தை என்னை' என்றிருந்தேம். 
இப்பொழுது அவர்கள் கூறியவாறே இரண்டாயிரம் வெள்ளம் பூதங்கள் சூழக் கந்தசுவாமி வந்தார். 
முன்னுற்ற தூசிப்படை நமது நகரத்தை வளைந்தது" என்றார்கள். உடனே தாரகன் மிகக்கோபங்கொண்டு, 
சிங்காசனத்தினின்றும் நீங்கி, தூதர்களை நோக்கி, ''இந்நகரத்தை வளைத்த சேனையை உலர்ந்த புற்காட்டின் 
அக்கினி புகுந்தாற்போல விரைந்து கொல்வேம். நம்முடைய சேனைகண்முற்றையும் உழுந்துருளுமுன் 
கொண்டுவாருங்கள் " என்று பணித்தான். 

    அப்பணியைச் செய்யும்பொருட்டுத் தூதர்கள் செல்லலும், தாரகன் அங்கு நின்ற பரிசனரை நோக்கி, "நமது 
தேரைக் கொண்டுவாருங்கள்'' என்றான். அவர்கள் ஒருநொடியினுள்ளே தேரைக் கொண்டுவந்தார்கள். 
தாரகன் அத்தேர்மீதேறி, மந்திரிகள் துதிக்க, சாமரம் இரட்ட, புடைவைக்குஞ்சம் வீச, வெண்குடை நிழற்ற, 
வலம்புரிகள் ஒலிக்க, மகாமேருமலையைப் போலும் ஒரு வைரத்தண்டமும் பலபடைக் கலங்களும் பலசிங்கங்களால் 
இழுக்கப்படும் தேர்மீது செல்ல, தூதர்களாலே கூவப்பட்ட அசுரசேனைகள் யானை குதிரை தேர்களோடு வந்து நெருங்க, 
படைத்தலைவர்கள் பலதேர்கண்மீதேறிச் சூழ, தன்னகரத்தை  நீங்கிச் சென்றான். அது கண்ட பூதர்கள் 
ஆரவாரித்து எதிர்ந்து சென்று சண்முகக்கடவுளுடைய திருவடிகளைத் துதித்துக்கொண்டு, குன்றுகளையும், 
மரங்களையும், தண்டங்களையும், மழுக்களையும், சூலங்களையும் அசுரர்கண்மேல் வீச, அசுரர்கள் அம்புகளையும், 
வேல்களையும், சக்கரங்களையும் எதிர்வீசிப் போர்செய்தார்கள். இவ்வாறு பொரும்பொழுது, இரத்த நதி பெருக, 
தோள்களும் தலைகளும் துள்ள,குடர்கள் சிந்த, அசுரர்கள் பலர் இறந்தார்கள். பூதர்களுஞ் சிலர் மாய்ந்தார்கள். 

     பூதர்களாலே தன்சேனை இறத்தல் கண்ட தாரகன் மிகக்கோபங் கொண்டு, தேரினின்றும் பூமியிலே 
குதித்து, ஒருதண்டத்தை எடுத்து, பூதர்களைக் கொன்று, அண்டமும் குலுங்கும்வண்ணம் ஆரவாரித்து, கால்களால் உழக்கிச் 
சென்றான். தாரகன் பூதர்களைக் கொன்றமையையும் அவனை எதிர்க்கும்வன்மை தங்களிடத்தின்மையையும் 
மதித்து நோக்கி,  பூதசேனாதிபதிகள் மனந்தளர்ந்து, சிதறி ஓடினார்கள். அது கண்ட இலக்க வீரர்கள் மிகக்கோபங் 
கொண்டு, நானாவித வாத்தியங்கள் ஒலிக்க,வில்லை வளைத்து, அம்புகளைத் தொடுத்துக்கொண்டு, தாரகனை 
விரைந்து வளைந்தார்கள். அவர்கள் தொடுத்த அம்புகள் தாரகனுடைய சரீரத்தைப் பிளந்தில, ஊறேனும் செய்தில, 
வறுமையால் மிக்கான் ஒருவன் செல்வருக்குச் சொல்லும் சொற்போல வறிது மீண்டன. அம்புகளெல்லாம் தாரகன்
 மார்பிலே பொள்ளெனப்பட்டு மீண்டு, மலைமீது சிதறும் கன்மாரிபோலாயின. வீரர்கள் அது கண்டு வெகுண்டு, 
தெய்வப்படைக்கலங்களைச் செலுத்த, அவைகள் தாரகன்மீது பட்டுத் தம்வலி சிந்தி மறிந்து சென்றன. தேவர்கள் 
அதனை நோக்கிக் கைகுலைத்திரங்கினார்கள். அப்பொழுது தாரகன் தன்வைரத்தண்டத்தைச் சுழற்றி, 
தன்னைச் சூழ்கின்ற தேர்களெல்லாவற்றையும் அடித்து, புழைக்கையைநீட்டி, இலக்க வீரர்களையும்  வாரி
வில்லோடு வீழும்வண்ணம் கடலிலெறிந்தான். வீழ்ந்த வீரர்கள் வில்லோடெழுந்து, ஒருபக்கத்தே போனார்கள்.

    வீரகேசரி அதனை நோக்கிக் கோபத்தோடு சென்று, முருகக்கடவுளுடைய திருவடிகளை மனத்துட் 
கொண்டு, வில்லை வளைத்து, நூறம்புகளைத் தொடுத்து, தாரகனுடைய மகுடத்தைத் தள்ளி, கடலும் நாணும் 
வண்ணம் ஆரவாரித்தார். அவ்வோதை கேட்ட தேவர்கள் அவர்மீது பூ மாரி பொழிந்தார்கள். தாரகன் அது கண்டு, 
வேர்த்து மான முற்று, தன்கைத் தண்டத்தை வீரகேசரி மீதெறிந்துவிட்டு, தன்றேர் மீதேறி, ஓர் மகுடத்தைத் தரித்தான். 
தாரகன் எறிந்த தண்டம் தம்மார்பிலே படுதலும், வீரகேசரி மயங்கி வீழ்ந்தார். வீரவாகுதேவர் அது கண்டு வெகுண்டு, 
தாரகனெதிர் சென்று, வில்லை வளைத்து, அம்புகளைத் தொடுத்து, அவன் சரீரத்தே செறித்தார். தாரகன் 
ஒருவில்லை வளைத்து, வீரவாகுதேவர்மீது சரமழையைப் பொழிந்தான். அப்பொழுது வீரவாகுதேவர் 
பதினான்கு பாணந்தொடுத்து, தாரகனுடைய வில்லைத் துணித்தார். தாரகன் "இனி நீ இறந்தாய். இதற்கு 
ஐயமில்லை" என்று சொல்லி, ஒரு சூலத்தைச் செலுத்தினான். அச்சூலம் தம்மார்பிலே படுதலும், வீரவாகுதேவர்
 மயங்கி நிற்ப, தாரகன் அது கண்டு, இடிபோலார்த்தான். 

    வீரவாகுதேவருடைய தம்பியரெழுவர் தாரகனோடெதிர்ந்து பொருது, தோற்றார்கள். வீரவாகுதேவர் 
அது கண்டு, "நம்முடைய தம்பியர்களெல்லாரும் பொருது தோற்றார்கள்" என்று, தாரகனெதிர்சென்று, ஒருவில்லை 
வளைத்து, நாணொலியெடுத்தார். அப்பொழுது மலைகளெல்லாம் சுழன்றன. அசுரர்கள் இருகாதையும் 
பொத்திக்கொண்டு, ஏங்கி ஓடினார்கள். முகிலினது வரவைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர் பின் அதனதிடியொலி 
கேட்டலும் மயங்கித் தளர்தல்போல, வீரவாகுதேவரது வரவைக் கண்டு மகிழ்ச்சியுற்ற தேவர்கள் யாவரும், 
பின் அவரது நாணொலி கேட்டலும், அஞ்சி ஏங்கினார்கள். வீரவாகுதேவர் வில்லை வளைத்து, அக்கினிபோல 
வெகுண்டு, தாரகனை நோக்கி, "பூதர்களையும் வீரர்களையும் வன்மையால் வென்றாம் என்று நினைந்தனை 
போலும். நான் உன்னை விரைந்து கொல்வேன்'' என்றார். 

    அதுகேட்ட தாரகன் 'விட்டுணு விடுத்த சக்கரத்தை என் கழுத்திலே பதக்கமாகத் தரித்தேன். இவ்வாறு 
செய்த என்வலியை எண்ணாது 'நான் உன்னைக் கொல்வேன்' என்றாய். சிங்கத்தை நரி வெல்லுமா! இங்கு 
வந்த பூதப்படைகளெல்லாம் இறந்தன. வீரர்களெல்லாரும் தொலைந்தார்கள். நீயும் அயர்ந்து நின்றாய். 
இப்போது வீரம் பேசுகின்றாய். பார், என்வலியினால் உன்னைக் கொல்வேன்' என்றான். அப்பொழுது 
வீரவாகுதேவர் ஆயிரம்பாணங்களைத் தொடுக்க, தாரகன் தன் கைவில்லை வளைத்து, ஆயிரம் பாணங்களை 
விரைந்து எதிர்தூண்டி, அவற்றைச் சின்னஞ்செய்து, வேறு நூறு பாணங்களைச் செலுத்தினான். வீரவாகு தேவர் 
அத்துணைக்கணைகள் தொடுத்து, அவற்றை மாற்றினார். தாரகன் அது கண்டு, "வில்வன்மையில் ஒப்பில்லாத 
இவ்வீரனைத் தெய்வப்படைக் கலங்களாலே கொல்வேன்' என்று சிந்தித்து, அக்கினிப் படைக்கலத்தை விட, 
வீரவாகுதேவரும் வெகுண்டு அக்கினிப்படைக்கலத்தை ஏவி, அதனை அழித்தார். தாரகன் வருணப்படைக் 
கலத்தை விட, வீரவாகுதேவரும் வருணப்படைக்கலத்தை ஏவி, அதனைத் துண்டமாக்கினார். 

    தாரகன் சூரியப் படைக்கலத்தை விட, வீரவாகுதேவரும் சூரியப்படைக்கலத்தை ஏவி, அதனைத் 
தொலைத்தார். தாரகன் வாயுப்படைக்கலத்தை விட, வீரவாகுதேவரும் வாயுப்படைக்கலத்தை ஏவி, அதனைச் 
சிதைத்தார். தாரகன் பிரமப் படைக்கலத்தை விட, வீரவாகுதேவரும் பிரமப்படைக்கலத்தை ஏவி 
அதனை மாற்றினார். தாரகன் இவற்றைக் கண்டு, அற்புதங்கொண்டு, "நான் விடுத்த தேவப் 
படைக்கலங்க ளெல்லாவற்றையும் இவ்வீரன் வென்றான். இனி நான் இவனை மாயையினால் வெல்வேன்" 
என்று நினைந்து, மாயா மந்திரத்தை  உச்சரித்துக்கொண்டு, எண்ணில்லாத வடிவங்களைத் தாங்கி, 
அளப்பில்லாத படைக்கலங்களைச் செலுத்தினான். 

    இருட்குழாம் எங்கும் பரந்தாற் போல அவனொருவனே எங்குமாய் நின்று போர்செய்ய,தேவர்கள் 
அது கண்டு கலங்கி ஏங்கினார்கள். முன்னரே தூரத்தோடிநின்ற பூதர்கள் வெருண்டு பின்னரும் ஓடினார்கள். 
முன் போர்செய்து அயர்ந்த வீரர்களும் அச்சங்கொண்டு நின்றார்கள். அசுரர்கள் முறுவல்செய்து 
குணலையிட்டார்கள்.* தாரகன் செய்யும் மாயப்போரையும் அதுகண்டு யாவரும் அஞ்சுதலையும் 
வீரவாகுதேவர் அக்கினிப்பொறி சிந்த நோக்கி, வீரபத்திரப்படைக்கலத்தை விடும்வண்ணம் எடுத்தார். 
எடுத்தலும், சூரியன்முன் இருள்போலத்  தாரகனுடைய மாயைமுற்றும் அப்பொழுதே அழிந்தது. 
அழிதலும், தனித்து நின்ற தாரகன் வீரவாகுதேவரைப் பின்பு மாயையால் வெல்லும் வண்ணம் பிறிதோர் 
சூழ்ச்சியைக் கடைப்பிடித்து, தன்றேரை விட்டு விரைந்தோடினான். ஓடலும், வீரவாகுதேவர் 'தோற்றோடினவன் 
மேலே படைக்கலம் விடுத்தல் வீரமன்று' என்று சிந்தித்து, அவ்வீரபத்திரப் படைக்கலத்தைத் தூணியுள் இட்டார். 

* குணலை - வீராவேசத்தாற்கொக்கரித்தல்.

    அதன்பின் "யான் வலியிழந்தோடிய தாரகன் பின் விரைந்து சென்று, அவனைப் பிடித்துப் புயத்தைக் 
கயிற்றினாலே கட்டி, எம்பெருமானாகிய சண்முகக்கடவுடிருமுன் கொண்டு சென்று விடுப்பேன்' என்று நினைந்து, 
முருகக்கடவுளைச் சிந்தித்து, கடல்போல ஆரவாரித்து, வைதுகொண்டு, தாரகனைத் தொடர்ந்தணுகினார். 
அணுகலும், தாரகன் மாயைக்கு உறையுளாகிய கிரௌஞ்ச மலையின் குகையொன்றினுள்ளே சென்றொளித்தான். 
அவன் சென்ற குகையினுள்ளே வீரவாகுதேவர் புகுதலும், அம்மலை முற்றும் சூரியன் செல்லாத இருணிலம் 
போல் இருந்தது.  வீரவாகுதேவர் திருவடிகளினாலே தடவி நடந்து, தாரகனைக் காணாது, அம்மலையின் 
புணர்ப்பினாலே மீளுநெறியையுங் காணாது, வெகுண்டு, "இம்மலையின் மாயை இது' என்று சிந்தித்து 
நின்றார்.அப்பொழுது அசுரனாகிய கிரௌஞ்சமலை அது கண்டு, வீரவாகுதேவருடைய அறிவை மயக்க
 அவர் மயங்கி முன்னையறிவெல்லாம் இழந்து, துயின்றார்.

    இவ்வாறே அம்மலையினுள் வீரவாகுதேவர் துயிறலும், அவருடை தம்பியர்கள் இலக்கத்தெண்மரும் 
பூதசேனாதிபதிகளும் விம்மிச் சிறகில்லாப் பறவைபோல மெலிந்து, 'நமது நாயகர் தோற்றோடிய தாரகனைத்
 தொடர்ந்து சென்றார். இன்னும் மீண்டிலர். அவனோடு மலையினுள்ளே நின்று போர்செய்கின்றார்போலும். 
நாமும் அங்கே போவேம்" என்று நினைந்து, அங்கு நின்று நீங்கி, விரைந்து சென்று, வீரவாகுதேவர் புகுந்த
 குகையினுள்ளே புகுந்தார்கள். கிரௌஞ்சமலை வீரவாகுதேவருக்குப் போல எண்ணில்லாத மாயத்தைச் செய்தலும், 
அவர்கள் யாவரும் மயங்கித் துயின்றார்கள். தாரகன் வந்து அதனை நோக்கி, "நம் மாயையால் 
இவர்களெல்லாரும் ஒருங்கே இறந்தார்கள்' என்று மகிழ்ந்து, மலையின் மேல் எழுந்தான்.

    ஆகாயத்து நின்ற தேவர்கள் இவையனைத்தையுங் கண்டு, கண்ணீர் வார அழுது கலங்கிப் 
பதைபதைத்தோடினார்கள். பூதப்படைகள் தலைவரின்மையால் அச்சமுற்றன. மலைமீதெழுந்த தாரகன் 
ஒர்தேர்மேற்கொண்டு, அசுரர்கள் பலரும் வந்து வந்து ஆர்த்துச் சூழ,ஓர்வில்லை வளைத்துப் போர்க்களத்திற் 
சென்று, நாணோதைகொண்டு, கோடிகோடி பாணங்களை ஒரு தொடையாகவே பூட்டி, பூதர்கண்மேற் 
பொழிந்தான். பொழிதலும் பூதர்கள் சுழன்று திசைகளினும் ஆகாயத்தினும் சிதறியோடினார்கள்.

    நாரதமுனிவர் இவையெல்லாங் கண்டு இரங்கி, சரீர நடுநடுங்கி வெயர்த்து வழிக்கொண்டு 
விரைந்து போன தேவர்களோடு சென்று, தேவசேனாதிபதியாகிய சண்முகக்கடவுள் நின்றருளிய 
கடைக்கூழையை அடைந்து, அவருடைய திருவடித் தாமரைகளை வணங்கி நின்று, 'எம்பெருமானே, 
உம்முடைய படைவீரர்கள் பெரும்போர் செய்து, அசுரப்படைகளையும் மந்திரிகளையுங் கொன்று, 
தாரகனோடு பொருதார்கள். தாரகன் தன் சூழ்ச்சியினாலே வீரவாகுதேவரையும் இலக்கத்தெட்டு 
வீரர்களையும் பூதசேனாதிபதிகளையும் கிரௌஞ்சமலையினுள்ளே புகுவித்தான். புகுவித்தவுடனே, 
கிரௌஞ்சமலை மாயையைச் செய்ய, அவர்கள் யாவரும் மயங்கினர்கள் போலும். தாரகன் இதனை 
அறிந்து, மகிழ்ச்சியோடு போர்க்களத்தை அடைந்து, நம்முடைய சேனைகண்மீது சரமாரி பொழிய, 
அவைகள் தோற்றோடின. எல்லாவுயிர்களினும் நிறைந்திருக்கும் முழுமுதற்கடவுளாகிய நீர்
இவையெல்லாம் அறிவீரே'' என்று விண்ணப்பஞ்செய்தார். 

    அருட்பெருங்  கடலாகிய சண்முகக்கடவுள் நாரதமுனிவருடைய உள்ளத்தையும் தேவர்களுடைய 
துயரத்தையும் நோக்கி, "எல்லீரும் இது கேளுங்கள். நாம் போர்க்களத்திலே சென்று, தாரகனை வேலாயுதத்தினாலே 
கொன்று, கிரௌஞ்சகிரியைப் பிளந்து, வீரர்களை ஒரிறைப்பொழுதினுள்ளே மீட்டருள்வோம்' என்று திருவாய் 
மலர்ந்தருளினார். அதுகேட்ட யாவரும் மனத்துயரநீங்கி, முடிவில்லாத மகிழ்ச்சியுடன் கூத்தாடி, இசைபாடி, 
முருகக்கடவுளுடைய திருவடிகளை வணங்கினார்கள். அப்பொழுது முருகக்கடவுள் தமது சாரதியாகிய 
வாயுதேவனை நோக்கி, "மனசினும் விரைந்து செல்லும்வண்ணம் தேரைச் செலுத்துவாயாக'' என்று பணித்தருள, 
வாயுதேவன் "நன்று" என்று வணங்கி, தன்னினமாகிய வாயுக்கள் புடைசெல்ல, குதிரைகளைத் தூண்டி 
ஆர்த்தான். அப்பொழுது வானமும், பூமியும், அங்குள்ள மலைகளும், கடல்களும், திக்கயங்களும் நடுங்கின. 

    சண்முகக்கடவுளுடைய தேர் இவ்வாறே ஆகாயமார்க்கமாகச் சென்றது. பூதசேனைகள்  அவரைச் 
சூழ்ந்து சென்றார்கள். போரிலே தோற்றோடிய பூதர்களெல்லாரும் முருகக்கடவுளைத் தரிசித்தவுடனே 
வணங்கிக்கொண்டு, ஆற்றலோடும்  அவரைச் சூழ்ந்து சென்றார்கள். இவ்வாறே முருகக்கடவுள் 
தாரகனுடைய  போர்க்களத்தை அடைந்தார். பூதர்களோடு அசுரர்கள் போர்செய்து பலர் இறந்தார்கள்.
 மற்றவர்களெல்லாரும் வலியழிந்து தோற்றோடினார்கள்.


    தாரகன் தன்சேனைகள் தோல்வியடைந்தமையை நோக்கி, வில்லை வளைத்து, பல பாணங்களைத்
தொடுத்துக் கொண்டு நடந்து, தன்னோடெதிர்ந்த கணநாதர்களெல்லாரையும் பலபாணங்களைச் சொரிந்து, 
துரந்து கொண்டு, குமாரசுவாமி திருமுன் அடைந்தான். அடைந்தவுடனே, சிந்தையின்  கண்ணே கோபாக்கினி 
சொலிக்கத் தூதர்களை நோக்கி, "இவன்றானோ சிவனுடைய குமாரன்" என்று வினாவ, அவர்கள் "ஆம்,அரசனே"
என்றார்கள். உடனே தாரகன் தேரை விரைந்து செலுத்திக்கொண்டு சுவாமி திருமுன் சென்று, பூரணசந்திரர் 
போலும் ஆறுதிருமுகங்களையும் பன்னிரண்டு திருக்கண்களினின்றும்பொழியாநின்ற திருவருளையும்,
வேலாயுதம் முதலிய படைக்கலங்களையும், பன்னிரண்டு திருக்கரங்களையும், தண்டை ஒலிக்கும் 
செந்தாமரைமலர்போன்ற அருமைத்திருவடிகளையும் கண்டான். 

    இவ்வாறே சிற்பரமூர்த்தியாகிய முருகக்கடவுளுடைய திருவுருவனைத்தையும் நோக்கி, அற்புதமடைந்து, 
"இவன் நம்மேலே போர்செய்ய வந்தான் என்றால், கற்பனை கடந்த ஆதிக்கடவுளேபோலும்" என்றான். இவ்வாறு 
எண்ணியபின்பு, யாவருக்கும் முதல்வராகிய சிவபெருமான் தமக்குத் தந்த வரத்தையும், வீரத்தையும், 
வன்மையையும், செல்வத்தையும் நினைந்து கோபித்து,கந்தசுவாமியை நோக்கி, "கேள், பிள்ளாய். விட்டுணுவுக்கும் 
பிரமனுக்கும் இந்திரனுக்குமன்றிச் சிவபெருமானுக்கும் எமக்கும் போர்செய்தற்கு ஓர்காரணமுமில்லை. 
நீ வந்ததென்னை? சொல்' என்றான்.  அதற்கு முருகக்கடவுள் "உயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளை நாடி
அவற்றிற்கேற்ப அருளும் தண்டமுஞ் செய்யும் முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தேவர்களை நீங்கள் சிறையில் 
வைத்தமையைத் திருவுளங் கொண்டு, உங்கள் வீரத்தையும் வன்மையையும் அழிக்கும்பொருட்டு
நம்மை விடுத்தருளினர்" என்று திருவாய்மலர்ந்தார். 

    அது கேட்ட தாரகன் "கருடன்மேற்கொண்டு என்னோடெதிர்ந்து பொருத விட்டுணுவினுடைய
 சக்கரம் என்கழுத்தில் ஆபரணமாயிருத்தலை நீ காண்கிலையா? இந்நாள் காறும் எம்மோடு பகைத்துப் 
போர்செய்யப் புகுந்தவர்கள் யாவருள்ளும் சிறிதுபோழ்தினுள் இறந்தவர்களும் தோற்றோடினவர்களுமன்றி 
எம்மை வென்றவர்கள் இல்லை. இது நீ கேட்டிலையா? நீ என்னோடு பொரும்வண்ணம் விடுத்த தலைவர்களை 
நான் வென்று கிரௌஞ்சமலையினுள்ளே மாளும் வண்ணஞ்செய்தேன், பல கணங்களைக் கொன்றேன். 
இவற்றை நீ அறிந்திலையா? பிள்ளாய், நீ என்னோடு பொருது வருந்தாது உன்றந்தையாகிய சிவனிடத்தே 
போய்விடு" என்றான். 

    அறுமுகக்கடவுள் அது கேட்டு, "ததீசி முனிவன்மேல் விட்டுணு விடுத்த சக்கரம் தன்கூரை இழந்து 
போய்க் குயவன் கைச்சக்கரம் போலாயினதை நீ கேட்டிலையா? படைக்கலங்களுக்கெல்லாம் நாயகமாகிய 
நம்முடைய வேற்படை விட்டுணு கைச்சக்கரம் போலப் பழிப்படுமா? அது உன்னுயிரை விரைவின் உண்டுவிடும். 
பூமி முழுதையும் உண்டு பரந்த பேரிருள் சூரியன் உதிக்க அகலுதல்போல, இவ்வுலகனைத்தையும் வென்ற 
உங்கள் பேராற்றல் இங்கு நாம் வர இமைப்பின் மாய்ந்தது. மாயைகளெவற்றையும் தன்னிடத்தே காட்டிய கிரெளஞ்ச
வெற்பையும், கள்வனே, உன்னையும்,வேலாயுதத்தினாலே கொன்று, நமது சேனையை விரைவிலே மீட்கின்றேம்'' 
என்று திருவாய்மலர்ந்தார்.

    உடனே தாரகன் கோபங்கொண்டு வில்லை வளைத்து நாணொலியெடுக்க, தேவர்களும் 
தியக்கமடைந்தார்கள். அப்பொழுது அறுமுகக்கடவுள் தமது திருக்கரத்திருந்த வில்லை வளைத்து, 
நாணோதை கொண்டார். கொள்ளலும், பிரமா முதலாயினாரும் அஞ்சினார்கள். உலகமெல்லாம் ஏங்கின. 
தாரகனும் தலையசைத்தான். தலையசைத்த தாரகன் அளப்பில்லாத கணைகளைத் தூண்ட, அறுமுகக் 
கடவுள் ஆயிரம் பாணங்களைத் தூண்டி அவற்றைத் துணித்தார். தாரகன் கோபித்துப் பின்னும் 
ஆயிரம்பாணஞ் செலுத்த, முருகக்கடவுள் பத்துப்பாணஞ் செலுத்தி அவற்றை மாற்றினார். மீட்டும் தாரகன் 
அம்புகளை வில்லிலே பூட்டலும், முருகக்கடவுள் ஒருபாணந் தொடுத்து, அவன் வில்லைத் துண்டமாக்கினார். 
தாரகன் வேறோர்வில்லை வளைக்க, முருகக்கடவுள் ஆயிரம் பாணங்களை அவன்மீது செலுத்தினார். 
அது கண்ட தாரகன் ஆயிரம்பாணங்களைச் செலுத்தி, அப்பாணங்கள் யாவற்றையும் நீறாக்கி, வேறு 
அநந்தம் பாணங்களைச் செலுத்தினான். முருகக்கடவுள் அவைகளை அறுத்து, கோடிபாணங்களைத் தூண்டி, 
தாரகனுடைய சரீரமெங்கும் செறிவித்தார். செறிவித்தலும், தாரகன் கோபங்கொண்டு, இருகோடிபாணங்களைச் 
செலுத்த, முருகக்கடவுள் அவைகளைப் பாணங்களினால் மாற்றி, இரண்டு பாணங்களைச் செலுத்தி, தாரகனுடைய 
புழைக்கையையும் கோடுகளையும் துணித்து வீழ்த்தினார். 

    உடனே தாரகன் தளர்ந்து வெகுண்டு, ஆயிரம் பாணங்களைத் தொடுத்து, முருகக்கடவுளுடைய 
தேர்க்கொடியை அறுத்தான். அது கண்டு, முருகக்கடவுள் எட்டம்பினாலே தாரகனுடைய வில்லைத் துணித்து, 
ஆயிரமம்பு தூண்டி, அவனுடைய தேரையும், குதிரைகளையும், பாகனையும் அழித்தார். தாரகன் வேறோர் 
தேர்மீதேறி, ஓர் வில்லை வளைத்து, முருகக்கடவுளுடைய சாரதியாகிய வாயுதேவனுடைய புயங்களில் 
ஆயிரமம்பு தொடுத்தான். முருகக்கடவுள் தமது சாரதியுடைய வருத்தத்தை அறிந்து, ஆயிரம்பாணங்களைத் 
தாரகனுடைய நெற்றியிலே புகும்வண்ணம் செலுத்த, அவன் இரத்தம் பெருகத் தன்றேர்மீது புலம்பி மயங்கி வீழ்ந்தான்.

     தாரகன் வீழ்தலும், அவனுடைய படைவீரர் அதனை நோக்கி, கோபங்கொண்டு, எம்பெருமானை வளைந்து, 
சூலம் சக்கரம் தோமரம் முதலிய பல படைக்கலங்களை அவர்மீது பொழிந்து, ஆர்த்தார்கள். குமாரசுவாமி அது கண்டு, 
தம்வில்லை வளைத்து, சரமாரி பொழிந்து, அவுணர்கள் விடுத்த படைக்கலங்கள் யாவையும் அறுத்தார். 
மீட்டும் சரமாரி பொழிந்து, அசுரர்களுடைய தலைகளையும் மார்புகளையும் வாய்களையும் கைகளையும் 
தோள்களையும் தாள்களையுந் துணித்தார். இரத்தம் எங்கும் கடல்போலப் பெருகியது. முருகக்கடவுளுடைய 
பாணங்களினாலே அசுரர்களிற் பலர் இறந்தார்கள். சிலர் இரத்தக்கடலிலே பாய்ந்து நீந்தி, தத்தமுயிர் 
கொண்டோடினார்கள்.

    அப்பொழுது தாரகன் மயக்க நீங்கி எழுந்து, தன்னயலிலே நின்ற தன் சேனைகளைக் காணாது 
துன்பங்கொண்டு,நகைத்து,"பரமசிவனுடைய சிறுவனொருவன் போர்செய்ய, நான் என்புழைக்கையையும் 
கோடுகளையும் இழந்து, மயங்கி வீழ்ந்தேன். என்சேனைகளையும் இழந்தேன். இங்கே தனித்து நிற்கின்றேன். 
என்னாண்மை அழகிது அழகிது. வில்வன்மை கொண்டு எண்ணிறந்த பாணங்களைத் தூண்டி இப்பகைவனுடைய 
உயிரைக் குடித்தலும் வெல்லலும் அரிது. இனித் தேவப்படைக்கலங்களைச் செலுத்தக்கடவேன்" என்று சிந்தித்தான். 
சிந்தித்து, விட்டுணுப் படைக்கலம் பிரமப்படைக்கலம் முதலிய தேவப்படைக்கலங்கள் யாவற்றையும் விட விட 
அவையெல்லாம் வந்து வந்து, அஞ்சி நடுநடுங்கி, எம்பெருமான் பக்கத்தே ஒதுங்கித் துதித்துக்கொண்டு நின்றன. 

    தாரகன் அது கண்டு, அகந்தையை ஒழித்தான், சிறிதஞ்சினான், மிக விம்மிதமடைந்தான். 
அக்கினி சொலிக்குங் கண்ணினையுடையனாகி, "இவனை வெல்லல் அரிதுபோலும்" என்று மனசினினைந்தான். 
"இனிச் சிவப்படைக்கலத்தை விடக்கடவேன்'' என்று சிந்தித்து, அதனை எடுத்து, மனத்தினாலே பூசித்துக் 
கோபத்தோடு செலுத்தினான். அச்சிவப்படைக்கலம் நஞ்சையும், தேவப்படைக்கலங்களையும், பூதங்களையும், 
பாம்புகளையும், சூலங்களையும், அக்கினியையும் உண்டாக்கிக் கொண்டு, சருவாண்டங்களும் சருவான்மாக்களும் 
உலைந்து சுழலும்வண்ணம் உருத்துச் சென்றது. 

    சுப்பிரமணியக்கடவுள் அது கண்டு, தந்தையாராகிய சிவபெருமானைத் திருவுளத்திலே தியானித்துக் 
கொண்டு, ஒருதிருக்கரத்தை நீட்டி, அச்சிவப்படைக்கலத்தைப் பற்றிக்கொண்டார். தாரகன் அது கண்டு, "இன்றே எமது 
செல்வம் அழிந்தது' என்று ஏங்கினான். "தேவதேவராகிய சிவபெருமானுடைய படைக்கலத்தைச் செலுத்தினேன். 
அதனையும் எதிர்ந்து பற்றினான். இவ்வறுமுகக்கடவுளுடைய வன்மை ஒருவராலே சொல்லற்பாலதா! 
ஆயினும் இவன் தருமப்போரன்றி வஞ்சகப் போர் செய்ய நினையான். நான் மாயைகளைச் செய்து, மறைந்து 
நின்று போர் செய்வேன் " என்று சிந்தித்து, விரைந்து தேரோடு கிரௌஞ்சமலையின்முன் சென்று,  
"நீ வல்ல மாயைகளை விரைந்து செய்வாயாக செய்வாயாக" என்றான். 

    உடனே கிரௌஞ்சமலை மாயையினாலே முப்புரங்கள் பலவாய்வர, தாரகன் அப்புரங்களிலுள்ள 
அசுரர்களாய் வந்தான். கிரௌஞ்சமலை பலபல முகில்களாய் வர, தாரகன் அவற்றினுள்ளே இடியாய் வந்தான். 
கிரௌஞ்சமலை பல கடல்களாய் வர, தாரகன் அவற்றினுள்ளே வடவாமுகாக்கினியாய் வந்தான். கிரௌஞ்சமலை 
சக்கரவாளகிரியைச் சூழும் இருளாய் வர, தாரகன் அதனுள்ளே பூதர்களாய் வந்தான். கிரௌஞ்சமலை 
அட்டதிக்கயங்களாய் வர, தாரகன் குலமலைகளாய்ச்  சடசடவென்னும் ஒலியோடு வந்தான். கிரௌஞ்சமலை 
வாயுவாய் வர, தாரகன் அக்கினியாய் வந்தான். கிரௌஞ்சமலை நெருப்புக்கொள்ளிகளாய் ஆகாயத்து வர 
 தாரகன் ஆயிரகோடி சூரியர்களாய் வந்தான்.

    இவ்வாறே தாரகன் கிரௌஞ்சகிரியோடும் அளவில்லாத மாயையின் வடிவங்களைக் கொண்டு 
எங்குந் திரிதலும் , அறுமுகக்கடவுள் இவற்றைக் கண்டு, தமது திருக்கரத்திலுள்ள வேலாயுதத்தை நோக்கி, 
"நீ தாரகாசுரனையும் கிரௌஞ்சமலையையும் ஒரிறை செல்லுமுன் பிளந்து, உள்ளுயிருண்டு புறத்தே சென்று, 
இலக்கத்தொன்பது வீரர்களையும் பூதசேனாதிபதிகளையும் மீட்டுக்கொண்டு, இங்கு வருவாயாக" என்று 
பணித்து, அதனைச் செலுத்தினார். சருவசங்காரகாலத்தில் மாயையினாகிய உலகங்களையும் 
அவற்றின்கணுள்ள உயிர்களையும் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்றுந் தோன்றும் அக்கினி 
சுடுதல்போல, அவ்வேலாயுதம் தாரகனும் கிரௌஞ்சகிரியும் அங்கே செய்த மாயைகளனைத்தையும் 
விரைவின் அழித்தது. 

    எம்பெருமானுடைய ஆறுதிருமுகங்களினுநின்று எழுந்த கோபம் திரண்டொரு வடிவெடுத்துச் 
செல்லல்போலவும், சிவபெருமானுடைய முத்தலைச்சூலமிரண்டு ஒருபடையாய்ச் செல்லல்போலவும், 
அவ்வேற்படை சென்றது. செல்லலும், தாரகன் "இதனை நான் பிடித்து முறித்துவிடுவேன்' என்று 
கோபத்தோடு விரைந்து வந்தான். அச்சஞ் சிறிதும் இல்லாத தாரகன் கருடன்மேற்செல்லும் பாம்புபோலச் 
சீறி நணுகுதலும், அவ்வேலாயுதம் அவனது மார்பாகிய வைரமலையின் மீது இடிபோலப் பட்டு, 
அதனைக் கிழித்துப்போய்க் கிரௌஞ்சமலையிலே பட்டு, அதனை உருவிச் சென்று, வீரமும் புகழுங்கொண்டு 
விளங்கினாற்போல இரத்தமுந்துகளுமாடி, விரைந்து மீண்டது. மீண்ட வேலாயுதம் மலையினுள்ளே துயில்கின்ற 
வீரர்களை எழுப்பிவிட்டு,ஆகாயத்திலே போய்க் கங்கைநீராடிச் சுத்தவடிவாய், எம்பெருமானுடைய 
திருக்கரத்தில் வந்து, முன்போல் இருந்தது. 

    வேலாயுதம் தாரகனுடைய மார்பிலும் கிரௌஞ்சகிரியிலும் பட்டுருவிய பேரோசையைக் கேட்டு, 
உலகத்துள்ளோர்கள் "பூமி பிளந்தது' என்பாரும், "மகா மேருமலை வெடித்தது" என்பாரும், "அண்டம் உடைந்தது'' 
என்பாரும் ஆயினார்கள். வேலாயுதம் தன் மார்பை ஊடறுத்துச் செல்ல, தாரகாசுரன் அநந்தகோடி யிடிகள்போல 
ஆர்த்து, எழுந்து துள்ளிப் பூமியில் விழுந்து, பதைபதைத்து இறந்தான். அறுமுகக்கடவுள் செலுத்திய வேலாயுதம் 
மீண்டு அவரது திருக்கரத்து இருப்ப,தாரகன் இறந்தமையையும், கிரௌஞ்சகிரி பிளந்தமையையும், விட்டுணுவும் 
பிரமாவும் இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் நோக்கி, ஆரவாரித்தார்கள், கூத்தாடினார்கள், இருகைகளையும் 
சிரசின்மேற்குவித்துக் குமாரசுவாமியைத் துதித்தார்கள், பூமாரி பொழிந்தார்கள், வலஞ்செய்து பாடினார்கள், 
திருமுன்னே பலமுறை வணங்கி நின்றார்கள், பேரானந்தப்பெருங்கடலின் மூழ்கினார்கள். 

    கிரௌஞ்சகிரி அழிந்தவுடனே, அதனுள்ளே துயின்ற வீரவாகுதேவர் முதலிய வீரர்களெல்லாரும் மயக்கநீங்கி, 
விரைந்து சென்று, சண்முகக்கடவுளுடைய திருவடிகளை வணங்கித் துதித்துக்கொண்டு, அவர்பக்கத்தை அடைந்தார்கள். 

    பெருங்கருணாநிதியாகிய சுப்பிரமணியக்கடவுள் அவர்களை நோக்கி, ''நீங்களெல்லீரும் தாரகனுடைய 
கிரௌஞ்சகிரியுட்பட்டு, மாயையின் அழுந்தி அறிவிழந்து வருந்தினீர்கள்போலும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
தண்ணளியோடு கூடிய இவ்வருமைத் திருவாக்கைக் கேட்ட வீரர்கள் "எம்பெருமானே, உமது திருவருள் இருக்கும்
பொழுது அடியேங்கள் ஊறடைவதுண்டா? மையலுடன் உறங்குவோர் போல இன்பமடைந்ததன்றிக் கிரௌஞ்ச மலையினது 
மாயத்தினாலே சிறிதும் துன்பமடைந்திலேம்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள்.

    அப்பொழுது குமாரசுவாமி வீரவாகுதேவரை அழைத்து, முன்னே தாரகன் விடுப்பத் தாம் பற்றிய 
சிவப்படைக்கலத்தை  அவர்கையிற் கொடுத்து, 'இதனை நீ வைத்துக்கொள்ளக்கடவாய்" என்று திருவாய்மலர்ந்து, 
திருவருள் புரிந்தார். அதன்பின்பு, தாரகனுடைய யுத்தத்தில் இறந்த பூதர்களெல்லாரையும் 'நீங்களெல்லீரும் 
எழுங்கள்'' என்று எழுப்பி, பூதசேனைகள்  சூழ, தேவர்கள் துதிக்க, வீரர்கள் நெருங்க, செருக்களத்தினின்றும் நீங்கினார்

            திருச்சிற்றம்பலம்.

            தேவகிரிப்படலம்.

    முருகக்கடவுள் போர்க்களத்தை அகன்று, தேவர்களும் பூதர்களும் வீரர்களும் துதிக்க வந்து, அங்கு நின்ற 
இமையமலையைக் கடந்து, தென்றிசையின் நடந்து, சூரியன் அஸ்தமயனஞ் செய்யும்பொழுது தேவகிரியை அடைந்தார். 
அவ்விரவிலே அம்மலையின் ஒருபக்கத்தெய்தி, விட்டுணுவும், பிரமாவும், இந்திரனும், தேவர்களும் முருகக்கடவுளுடைய 
திருவடிகளை வணங்கி, ''பெருங்கருணாநிதியே, வன்கண்மையையுடைய தாரகாசுரன் வருத்த இந்நாள்காறும் 
சிறியேங்கள் வருந்தினேம். எம்மாட்டுள்ள பெருங்கருணையினாலே அவனைக் கிரௌஞ்சகிரியோடு 
கொன்றருளினீர். உம்மைப் பூசிக்க நினைந்தேம். இம்மலையில் எழுந்தருளியிருத்தல் வேண்டும்.இவ்வரந்தருக'' 
என்று விண்ணப்பஞ் செய்தார்கள். அருட்பெருங்கடலாகிய முருகக்கடவுள் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தருள, 
தேவர்கள் அது கண்டு, சரீரம் பூரிக்க உரோமஞ் சிலிர்க்கத் துள்ளிப் பேருவகைபூத்தார்கள். முருகக்கடவுள் 
சேனைகளோடும் தேவர்களோடும் தேவகிரி மேற் சென்று, தம்மைத் தொழுதுகொண்டு தம்பக்கத்து வந்த 
தேவத்தச்சனை நோக்கி, "நாமும், நம்முடைய தம்பியர்களும், தேவர்களும், கணங்களும் இருக்கும்பொருட்டு, 
இம்மலையின்கண்ணே ஒருநகரத்தை இப்பொழுதே விரைவின் உண்டாக்கக்கடவாய்'' என்று பணித்தருளினார். 

    அது கேட்ட தேவத்தச்சன் "சுவாமீ, அவ்வாறே செய்வேன்' என்று விண்ணப்பஞ்செய்து, திருவடிகளை 
வணங்கிக்கொண்டு போய், அவ்விடத்தே ஒருநகரத்தையும், அதனுள்ளே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் 
பொருட்டு ஒரு செம்பொற்றிருக்கோயிலையும், அதனுள்ளே ஓரிரத்தினசிங்காசனத்தையும் செய்து முடித்துக்கொண்டு, 
மீண்டு வந்து, விண்ணப்பஞ் செய்தான்.

    சண்முகக்கடவுள் தம்மைச் சூழ்ந்த யாவரோடும் அத்திருநகரத்தினுள்ளே போய், பூதசேனைகளைத் 
திருக்கோயிற்றிருவீதியிலே நிறுவி, தேரினின்றும் இறங்கி, செம்பொற் பாதுகைகளிலே தமதருமைத் திருவடிகளை 
வைத்து, வீரர்களும் தேவர்களும் சூழ,திருக்கோயிலினுள்ளே புகுந்து, சூரியர்கள் யாரும் ஒரோவழிக் கூடினாற் 
போலப் பேரொளி வீசும் இரத்தின சிங்காசனத்தின்மேல் எழுந்தருளியிருந்தார். அப்பொழுது பிரமா முதலிய 
தேவர்கள் யாவரும் எம்பெருமானைப் பூசிக்க நினைந்து, உமாதேவியாருடைய திருக்கரத்திற் றோன்றிய 
கங்கையை நினைப்ப, அஃதங்கு வந்தது. பின்னர் இரத்தினாபரணம், பீதாம்பரம், நறுமலர், சந்தனம், தூபம், தீபம் 
முதலிய பூசோபகரணங்களனைத்தையும் அங்கு வருவித்தார்கள். 

    முன்னே அமுதம் வைத்த குடங்களைக் கொணர்ந்து, வேதங்களைச் சொல்லிக் கங்கையிலே 
திருமஞ்சனமெடுத்தார்கள். பிரமா முதலிய தேவர்களும் முனிவர்களும் சண்முகக்கடவுள் பக்கத்தை 
அடைந்து, அவருடைய மந்திரத்தைச் சொல்லித் திருமஞ்சனமாட்டினார்கள். அதன்பின், முன்னே தரித்த 
பீதாம்பரத்தை நீக்கி, வேறுபீதாம்பரஞ் சாத்தி, வேறொரு சிங்காசனத்தின் மேல் எழுந்தருளியிருக்கச்செய்து, 
அவருடைய திருநாமத்தைச் சொல்லி, நறுமலர்களைச் சாத்தி, திருமாலைகளைச் சூட்டி, சந்தனக்குழம்பை 
அணிந்து, பச்சைக் கர்ப்பூரத்தை அப்பி, புழுகையும், கஸ்தூரியையும் மட்டித்து, திருமேனியெங்கும் 
திவ்வியாபரணங்களைச் சாத்தி, மணியொலியோடு தூப தீபங்காட்டி, மெய்யன்போடு வலஞ்செய்து 
வணங்கித் துதித்தார்கள். தேவர்களெல்லாருங்கூடி இவ்வாறு பூசிப்ப, அறுமுகக்கடவுள் பெருங்கருணையினாலே 
அதனை ஏற்றுக்கொண்டு, அங்கெழுந்தருளியிருந்தார். அது நிற்க, தாரகனுடைய புதல்வனாகிய அசுரேந்திரன் 
செய்ததும் பிறவுஞ் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            அசுரேந்திரன் மகேந்திரஞ் செல்படலம்.

     அறுமுகக்கடவுள் செலுத்திய வேலாயுதத்தினாலே தாரகன் இறந்தமையைச் சிலதூதர்கள் போய்ச் 
சொல்ல, அவனுடைய மனைவியாகிய சௌரி வருத்தமுற்று, மற்றைமனைவியர்களும் பிறரும் தன்னைச் சூழ்ந்து 
பதைத்திரங்க, துன்பத்துடனே சென்று, தன் கணவன்மேல் வீழ்ந்து, புலம்புவாளாயினாள்: "சிவபெருமானுடைய 
திருவருளைப் பெற்ற நீ விட்டுணு பதத்திற்சென்றாயல்லை, பிரமபதத்திற்சென்றாயல்லை, திருக்கைலாசத்திற் 
சென்றாயல்லது வேறெங்குச் சென்றாய்! தன்சக்கரத்தை உனக்காபரணமாகத் தந்த விட்டுணுவும் இந்திரனும் 
மற்றைத்தேவர்களும் இயமனும் மற்றனைவர்களும் இன்றன்றோ தங்கள் மனக்கவலையெல்லாம் தீர்ந்தார்கள். 
தேவர்கள் யாவரும் புலம்பும்வண்ணம் அசுரமன்னவர்களோடும் நீ வரும் பவனியைக் காணாதேன் 
பறவைக்கூட்டஞ்சூழத் துயிலும் உன்னை, எம் பெருமானே, இப்படியே காண்பேனாயினேன். நான் உன்னைத் 
தழுவுதல் கண்டும்,நீ என்னைத் தழுவாதிருந்தனை. 

    அது பலருங்காணிற் பழுதாமென் றொழிந்தாயாயின், மயங்காநின்ற எனக்கு ஓர்சொல்லாயினும் 
சொல்கின்றிலையே! வறிதே துயில்கின்றாய். என்மேல் யாதாயினும் வெறுப்புண்டா? கைலாசபதி உனக்குத் 
தந்த வரம் மெய்யென்றே இந்நாள்காறும் துணிந்திருந்தேன். அது பொய்யாய் விளைந்ததுவோ!  என்கணவா, 
இறந்தனையே.ஐயோ! இதற்கோ நீ முன் அருந்தவஞ் செய்தாய். உயர்வொப்பில்லாத சிவபெருமான் பெற்ற 
குமாரனோடு நீ ஏன் எதிர்ந்தாய் ! ஐயோ இறந்தாயே! விதிவலியை யாவர் கடந்தவர்! அசுரர்கள் சூழும்வண்ணம் 
சிங்காசனத்தில் வீற்றிருந்த நீ போர்க்களத் திறந்தாயே. என்னாயகனே, சொல்.  இதுவுஞ்சிலநாளோ. 
சிவபெருமான் உனக்குத் தந்த வரத்தை நீ நம்பினாயே. அவருடைய சூழ்ச்சியைச் சிறிதும் உணராது 
உயிருந் தொலைந்தாயே. இனி உன்னைத் தமியேன் காண்பது எந்நாளோ! சிவகுமாரன் வந்து போர்செய்ய 
நீ முன்னை வலியிழந்து இறந்தனையென்பது கேட்டும் பின்னும் உயிரோடிருந்தேன். என்னினும் பேரன்புடையோர் 
யாவர்!  இனி நான் யாது செய்வேன்" என்று இரங்கினாள். மற்றை மனைவியர்களும் வந்து நெருங்கித் 
தாரகனைச் சுற்றிப் புலம்பித் துயருற்றார்கள்.

    அப்பொழுது சிங்கமுகாசுரனுடைய ஆசுரபுரிக்குப் போயிருந்த புதல்வனாகிய அசுரேந்திரன் 
கேள்வியுற்று வந்து, தன்பிதாவாகிய தாரகன் இறந்ததனைக் கண்டு, பெருமூச்செறிந்தான், அழுதான், 
கைகுலைத்தான்,  சோகத்தழுங்கினான், விழுந்தயர்ந்தான், பின்பு தெளிந்தான். முன்னொருநாளும் அடையாத 
பெருந்துயரத் தழுந்திய புதல்வன் எழுந்து சென்று,  தன்மாதாவுடைய கால்களில் விழுந்து, 'அம்மே, உன்கணவன் 
எங்கே சென்றான்! சொல்வாயாக" என்று நின்று புலம்பினான், பின்பு தன்மாதா முதலாயினோரை "நீங்கள் 
ஒருபக்கத்தே போயிருங்கள்" என்று ஏவி,தன்னயலில் நின்ற அசுரர்களைக் கொண்டு அக்கினி விறகு முதலிய 
கருவிகள் பலவற்றையும் வருவித்தான். தந்தையாகிய தாரகனது சரீரத்தை முன் போலப் பொருத்தி, 
ஓர் தேர்மீதேற்றி, சுடுகாட்டிற் சேர்த்தி, சந்தனப்பள்ளிமீது கிடத்தி,ஈமக்கடன்களைச் செய்து, தகனம் பண்ணினான். 

    பண்ணும்பொழுது, மாதாவாகிய சௌரி சென்று, 'நான் என் கணவனுடன் செல்லுதற்கு அக்கினி 
வளர்க்கக்கடவாய்" என்று சொல்ல, அசுரேந்திரன் அது கேட்டு, நடுநடுங்கி, அவள் கால்களின் வீழ்ந்து, 
"தாயே,என்னை காப்பாற்றிக் கொண்டிருப்பாயாக" என்றான். சௌரி அதனை மறுத்துக் கோபித்துரைக்க,
அசுரேந்திரன் "அவ்வாறாகுக" என்றான். மற்றைத் தாயர்களும் 'நாங்களும் கணவனோடு செல்லும்வண்ணம் 
அக்கினி வளர்க்கக் கடவாய்" என்று சொல்ல, அசுரேந்திரன் அதற்கியைந்து அக்கினி வளர்க்க, 
தாயர்களெல்லாரும் அதில் வீழ்ந்தார்கள்.

    வீழ்ந்தபொழுது அசுரேந்திரன் புலம்பி, அந்நகரத்தை அக்கணமே நீங்கி,தன்கிளைஞர்சிலர் தன்னைச் 
சூழச் சென்று, தென்கடலினுள்ள வீரமகேந்திரபுரியை அடைந்தான். அங்கே சூரபன்மனுடைய கோயிலிற் புகுந்து, 
அவனுடைய கால்களின் வீழ்ந்து, தன்கைகளால் அவற்றைப் பிடித்துக்கொண்டு அழுதான். சூரன் அது கண்டு,
 "மைந்தனே, நீ புலம்பாதே. நிகழ்ந்தது யாது?சொல்வாயாக" என்றான். அப்பொழுது அசுரேந்திரன் 
"பிதாவே,இந்திரனுடைய புணர்ப்பினாலே பரமசிவனுடைய குமாரனாகிய கந்தன் பூதசேனைகளோடு வந்து, 
உன்றம்பியைக் கிரௌஞ்ச மலையோடு வேற்படையினாலே கொன்று, பூமியில் வந்தான்" என்றான். 
சூரன் அது கேட்டு, "நன்று நன்று' என்று இடிபோலச் சிரித்து, "கிரௌஞ்ச கிரியோடு தாரகனைச் சிவனுடைய 
குமாரனா கொல்வான்! இது பொய்வார்த்தை. மைந்தனே, அஞ்சாதே. உண்மை சொல்வாயாக" என்றான். 

    அதற்கு அசுரேந்திரன் "பிதாவே, இது உண்மை. என்றந்தையையும் கிரௌஞ்சகிரியையும் சிவனுடைய 
குமாரன் வேலாயுதத்தினாலே கொன்றுவிட்டுச் சென்றான்.நான் விதிப்படி ஈமக்கடன் செய்து முடித்துக்கொண்டு, 
பெருந்துயரத்தோடும் உன்னிடத்து வந்தேன்'' என்றான். அது கேட்டலும், சூரனுடைய மனசிலே கோபாக்கினி கிளர்ந்தது; 
கண்கள் அக்கினியைக் கான்றன; நாசிகள் புகையைத் தோற்றுவித்தன. சரீரத்து ரோமங்கள் பொறியைச் சிந்தின. 
நெறித்த புருவமிரண்டும் நெற்றிமேற் சென்றன. பற்கள் அதரத்தைக் கவ்விக் கடித்தன. உதடுகள் துடித்தன. 
மனம் ககனகூடத்தையும் இடிக்க நினைந்தது. இவ்வாறே கோபாக்கினி எழுந்து சொலிக்க, தாரகன்மீது தொடரும் 
அன்பினாலே சூரனிடத்துச் சேர்ந்த துன்பக்கடல் அவ்வக்கினியி னாற்றலை அவித்தது. கண்களினின்றும் 
பொழியாநின்ற நீர்  நதிபோலவும், சரீரத்திற்றோன்றிய வேர்வை கடல்போலவும், பெருகின. சூரபன்மன் இவ்வாறே 
துன்பக்கடலில் அழுந்திச் சிங்காதனத்தினின்றுந் தவறிப் பூமியில் வீழ்ந்து, இடிபோல் அழுதான். பக்கத்துநின்ற 
அசுரர்கள்  துன்பத்தழுந்தி, ஏங்கி வீழ்ந்தழுதார்கள். அந்நகரமெங்கும் அழுகையொலியே மலிந்தது.

    அப்பொழுது சூரபன்மன் முன் அவிந்த கோபாக்கினி பின் மனத்தின் மூள, மானமும் நாணமும் வருத்த, 
விரைந்தெழுந்து, தன்னேவலர்களை நோக்கி, "என்றம்பியைக் கொன்ற கந்தனை நான் சென்று பொருது வென்று 
வரல்வேண்டும். என்னுடைய தேரையும் படைக்கலங்களையும் கவசத்தையும் ஒருகணத்தினுள்ளே கொண்டுவாருங்கள்'' 
என்றான். உடனே ஏவலர்கள் யாவரும் அவ்வாறு செய்யும்பொருட்டுப் போனார்கள். அசுரர்கள் அதனை அறிந்து குறைவற்ற 
படைகளோடு வந்து சேர்ந்தார்கள். இவற்றைக் காண்டலும், மந்திரிகளுள் ஒருவனாகிய அமோகன் சூரனுடைய 
கால்களை வணங்கி நின்று, "மகாராசாவே, அடியேன் ஒருசொற் சொல்வேன். கோபங்கொள்ளாது அதனைக் கேட்க" 
என்று சொல்லலுற்றான்: 

    "படைத்தொழில் கற்றுப் பகைவரைத் தாங்கூறிய வஞ்சினப்படியே கொல்ல வல்ல வீரர்கள், தந்நகரத்தைப் 
பகைவர் வந்து வளைப்பினும், எண்ணியன்றிக் கோபத்தை மேற்கொண்டு விரைந்து போர்செய்யச் செல்லார். 
பகைவருடைய குலத்தையும், உட்கோளையும், வந்த நிலத்தையும், அவருடைய முன்னோரது நெறியையும், 
அவர்கொண்ட கோபத்தையும், அவருடைய படையையும், வலியையும், வினவியன்றிப் பிறிதொன்று 
மனங்கொள்வாரா? பகைவர் வரத்தின் வலியரோ, மாயையின் வலியரோ, படைக்கலக்கல்வியின் வலியரோ, 
உரத்தின் வலியரோ, ஊக்கத்தின் வலியரோ என்று இவற்றை ஆராய்வர். ஒற்றரைத் தூண்டி அவரது வலியை 
உணர்ந்தாராயினும், வேறோரொற்றனாலன்றி அவர் கூற்றை மனத்துட்கொள்ளார். 

     அப்பகைவரைச் சூழுஞ் சேனையன்றி அவருக்குப் பிறிதிடத்தும் சேனையுண்டோ என்று பின்னும் 
ஒற்றரை விடுத்தாராய்வர். வினையினது விளைவை ஓர்காலும் மெலிதென நினையார். அவரது சேனையையும்
 அவரது தன்மையையும் சிறுமையாகக் கருதார். தமக்குப் பகைவர் வரின், கொடுத்தல், இன்சொற்சொல்லல், 
வேறுபடுத்தல் என்னும் முன்னை மூன்றுபாயங்களையும் ஆராய்ந்து நிலைமையறிந்து செய்வர். இம்மூன்றின் 
வாராவழித் தம்மரசியன் மரபுக்கேற்பக் கொடுஞ்சினங்கொண்டு குற்றந்தீர்ந்த படைஞரோடும் படைக்கலங்களோடும் 
எதிர்ந்து சுற்றி, பகைவரதியல்பை அறிந்து, அதற்கேற்பப் பொருது வெற்றிகொண்டு மீள்வர். எதிர்க்க வலியில்லாதார் 
எதிர்ந்தவழியும், அரசராயினோர் அவரோடு போரைக் குறித்துச் செல்லல் பழியதன்றோ! அவரை வெல்லக் கருதினும், 
தம்படைஞரைத் தூண்டி வெல்வர். அதுவே பெறற்கரும்புகழ். உலகத்துள்ள அரசரதியற்கை இதுவே யாகும். 
அரசனே, உனக்கொப்பாரில்லை. நீ அழிவில்லாய். எவ்வுலகுமாளுவாய். குற்றமொன்றும் அடையாய். 
தேவர்கள் யாவரையும் ஏவல்கொண்டாய். 

    பிரமனுந் திருமாலும் நாடோறும் புகழுமாறிருந்தாய். இத்தன்மைத்தாய வலி பெற்றுள்ள நீ, எளியனாகிய 
இந்திரன்சொற்கேட்டுப் பூதமே படையாகப் பரமசிவன் நேற்றுப் பெற்ற பிள்ளை எதிர்ந்திடின், அவனை 
வெல்லக் கருதிச் செல்வையாயின், அது உனக்கு வசையன்றோ? நீ பகைவரது வன்மையை அறியாய். 
அவருடைய படைஞரது வன்மையை அறியாய். உனது அரும்பெருந்தலைமையை நினையாய். 
செயற்பாலனவற்றை அமைச்சரோடுஞ் சூழாய், வாளா கோபமேல்கொண்டு செல்லலும் வலியின்பாலதா! 
வீரமும் வலியும் மிக்கோராயினும், விதி வந்தெய்தின், வலியில்லாராலும் கொல்லப்படுவர். உன்னைப்போல 
அழியாவாற்றல்  பெறாமையால், தாரகன் மழலை தேறாத சிறுவனாலும் கொல்லப்பட்டான். தண்டை
 ஒலிக்கும் சீறடிகளையுடைய சிறுவன் தாரகனைக் கொன்றது அற்புதமன்று.  வலியரும் ஒருகாலத்து 
வன்மையை இழப்பர். மெலியரும் ஒருகாலத்து வீரராய் விளங்குவர். யாருமொப்பாகாது வைகும் இராசராசனாகிய 
நீ சிறுவன்மேற் போர்குறித்துச் செல்லல் புகழன்று. அவனது சிறப்பையும் வலியையும் அறிந்துகொண்டு, 
பின் அவனின் வல்ல வீரரைப் படைஞரோடேவி வெற்றிகொண்டிருக்கக்கடவை'' என்றான்.

    அமோகன் இவ்வாறு தேற்ற, சூரபன்மன் அது கேட்டு, "இது உறுதி" என்று தெளிந்து, கோபத்தை விடுத்து, 
சிங்காசனமீதேறி இருந்து கொண்டு, தன்னயலினின்ற ஏவலாளருட்சிலரை நோக்கி, "பகன், மயூரன், சேனன், 
சக்கரவாகன், சுகன் முதலிய தூதர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்று பணித்தான். அவர்கள் 
சூரபன்மனை  வணங்கித் துதித்துச் சென்று, அத்தூதர்களை அழைத்துக்கொண்டு வந்து விடுத்தார்கள்.
தூதர்கள் வணங்கி நிற்ப, சூரன் அவர்களை நோக்கி, "நீங்கள் விரைந்து போய், பூமியில் வந்த கந்தனதியல்பையும், 
அவனுடைய படைஞர்களாகிய பூதர்களுடைய தொகையையும், பிறவனைத்தையும் ஆராய்ந்தறிந்துகொண்டு 
இங்கு வருவீர்களாக'' என்று பணித்தான். தூதர்கள் அப்பணியைச் சிரமேற்கொண்டு, சூரனை வணங்கி, 
பூமியை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் சென்றபின்பு, சூரபன்மன் அசுரர்கள் துதிக்க வீற்றிருந்து 
அரசுசெய்தான். அது நிற்க, அறுமுகக்கடவுள் தேவகிரியை நீங்கிப் பூமியில் எழுந்தருளி வந்தமையைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            வழிநடைப்படலம்.

    தேவகிரியில் எழுந்தருளியிருந்த அறுமுகக்கடவுள், சூரியன் உதித்த பின்பு, அதனை நீங்கி, சேனைகளும் 
தேவர்களும் சூழத் தென்றிசை நோக்கிச் சென்றார். உமாதேவியார்தம்மை நீக்கி வலஞ்செய்யும் பிருங்கிமுனிவர் 
துணிந்த வேதமுடிவை உணர்ந்து சிவபெருமானுடைய இடப்பாகத்தைச் சேரவிரும்பிப் பூசித்த திருக்கேதாரத்தை 
முன்னே தரிசித்தார். விட்டுணுவுக்கும் சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை மானுடர்கள் 
தெளியும்வண்ணம் வியாசமுனிவர் எடுத்த கையே தெளிவித்த காசியம்பதியைத் தரிசித்தார். 
சிலாத முனிவருடைய குமாரராகிய திருநந்திதேவர் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்பொருட்டு 
ஓர்மலையாகுவன் என்று அருந்தவஞ்செய்து மலையாகிக் கைலாசபதியைத் தம்முடிமேற் புனைந்த 
திருப்பருப்பதத்தைத் தரிசித்தார். 

    உமாதேவியாரோடு முனிந்து சுவாமிமலையை விடுத்துப் பாதாளத்திற்சென்று ஓர்குகைவழியே
 முன்னே தாம் வந்ததும் சுவாமி புட்கரிணி தீரத்திலே விட்டுணு முதலிய தேவர்கள் தம்மைப் பூசித்ததுமாகிய 
திருவேங்கடமலையைப் பார்த்தார். சிலந்தியும் பாம்பும் யானையும் சிவகோசரியாரும் கண்ணப்பநாயனாரும் 
நக்கீரதேவரும் கன்னியரும் முத்தியடையும் தக்கிண கைலாசமாகிய திருக்காளத்திமலையைத் தரிசித்தார். 
காளியானவள் இப்பூமிமுழுதையும் அழித்தற்கு எழுந்த நாளிலே பிரமன் முதலியோர் யாவரும் அஞ்சலும் 
அவள் செருக்கழியும் வண்ணம் சிவபெருமான் தமது ஆடலால் வென்றருளிய திருவாலங்காட்டைத் தரிசித்தார். 
பிரளயகாலத்தும் அழிவில்லாததாய்ப் பிரமா விட்டுணு முதலிய தேவர்களுக்கு உறையுளாய்ச் சிவபெருமான் 
மாமரநிழலின்கண் வீற்றிருந்தருள்வதாய் உள்ள திருக்காஞ்சிநகரத்தைத் தரிசித்தார். அங்கே உமாதேவியார் 
பூசித்த திருவேகம்பத்தையும் விட்டுணுவும் பிரமனும் தேவர்களும் பூசித்த மற்றையாலயங்களையும் தரிசித்தார். 

    "யானே பரம்பொருள் யானே பரம்பொருள்" என்று பிரமனும் விட்டுணுவும் இகலும்பொழுது 
அவர்கணடுவே தோன்றி அவர்களால் அடிமுடி தெரியப்படாததாகித் தன்னைத் தியானித்தோர்க்கெல்லாம் 
முத்தியைக் கொடுத்துக்கொண்டு நிற்கும் திருவண்ணாமலையைத் தரிசித்தார். சிவபெருமான் ஒருவிருத்தப் 
பிராமண வடிவங்கொண்டு வந்து அடிமையோலை காட்டிச் சுந்தரமூர்த்தியை வழக்கில் வென்று விவாகத்தை 
விலக்கி ஆட்கொண்டருளிய திருவெண்ணெய் நல்லூரைத் தரிசித்தார். உமாதேவியார் புடைவையால் வீசச் 
சிவபெருமான்  தமது திருத்தொடையின் மேற்கிடத்தி இறந்த உயிர்கட்கெல்லாம் திருவைந்தெழுத்தினுண்மையை 
உபதேசித்துத் தமது சாரூப்பியத்தைக் கொடுத்தருளு மியல்பினாலே காசிபோலச் சிறந்த விருத்தாசலத்தைத் 
தரிசித்தார். 

     பதஞ்சலிமுனிவரும் வியாக்கிரபாதமுனிவருமாகிய இருவரும் தரிசிக்கும் பொருட்டு எல்லையில்லாத 
பெருங்கருணையினாலே சிவபெருமான் ஆனந்த நிருத்தஞ் செய்தருளும் திருத்தில்லை நகரத்தைத் தரிசித்தார். 
அங்கே கனக சபையின்கண்ணே சிவகாமியம்மையார் தரிசிக்கும்வண்ணம் சபாநாதர் செய்தருளும் 
உயர்வொப்பில்லாத ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்து திருவுளங் கனிந்துருக வணங்கிச்சென்றார். 
அகத்தியமுனிவருடைய கையினுள்ள கமண்டலத்தின் கணின்று நீங்கிப் பூமியின்கண் வேறுவேறாய்ப்
பெருகிப் பற்பலபெயர்களைத் தாங்கிச் செல்லும் காவேரியாற்றின் வட கரையிலுள்ள மண்ணியாற்றங் 
கரையை அடைந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            குமாரபுரிப்படலம்.


    அறுமுகக்கடவுள் மண்ணியாற்றங்கரையை அடைந்தபொழுது, சூரியன் அஸ்தமயனமானான். 
பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் முருகக் கடவுளை வணங்கி, "எம்பெருமானே, இவ்வாற்றங்கரையெல்லாம் 
மணற்குன்றுகள் மலிந்தன, சோலைகள் நிறைந்தன, சிவஸ்தலங்கள் எண்ணில்லாதன இருக்கின்றன. 
ஆதலால், இந்நதிக்கரையில் இருந்தருளுக" என்று பிரார்த்தித்தார்கள். அது கேட்ட முருகக்கடவுள் 
தேவத்தச்சனாகிய விசுவகன்மாவை நோக்கி, "இவ்விடத்தில் ஒரு கணத்தினுள்ளே நமக்கு ஒரு நகரம் செய்வாயாக" 
என்று பணித்தருளினார். உடனே தேவத்தச்சன் எம்பெருமான் தம்முடைய சேனைகளோடும் தேவர்களோடும் 
எழுந்தருளியிருக்கும்பொருட்டு மண்ணியாற்றின் றென்கரையிலே ஒரு திருநகரத்தை மனத்தால் உண்டாக்கிக் 
கொண்டு, முருகக்கடவுளை வணங்கி, "எம்பெருமானே, இந்நகரத்தினுள் எழுந்தருளுக" என்று விண்ணப்பஞ் 
செய்தான்.  

    முருகக்கடவுள் தேரினின்றும் இறங்கி, தேவர்களும் சேனைகளுஞ் சூழ நகரத்தினுள்ளே புகுந்து, 
அங்குள்ள வளங்களனைத்தையும் நோக்கி, நாம் இருத்தற்கு இது நல்லநகரம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 
அது கேட்டலும் தேவர்களெல்லாரும் அந்நகரத்திற்குத் 'திருச்சேய்ஞலூர்' * என பெயரிட்டார்கள். முருகக்கடவுள் 
தம்பியர்களும் பூதசேனாதிபதிகளும்  தேவர்களும் சூழும்வண்ணம் அங்குள்ள திருக்கோயிலிற்சென்று, 
எழுந்தருளியிருந்தார். பிரமன் முதலிய தேவர்கள், எம்பெருமான் விடுத்தருள, அத்திருக்கோயிலுக்குப் புறத்தே 
சென்று, தங்கள் தங்களுக்கு அமைக்கப் பட்ட இருக்கைகளை அடைந்தார்கள்.

* சேய்நலூர் என்பது சேய்ஞலூர் எனப் போலியாயிற்று. இது வடமொழியிலே குமாரபுரி எனப்படும்.

    இந்திரனானவன், தாரகாசுரன் கிரௌஞ்சகிரியோடு இறந்தமையால், தன்றுயர முழுதும் நீங்கிப் 
பெருமகிழ்ச்சியோடிருந்தான். அப்பொழுது சீர்காழியினுள்ள வனதேவதை இந்திரனை அடைந்து வணங்கி, 
அவ்விந்திரன் தன்னாபரணங்களையும் தன்மனைவியாகிய இந்திராணியுடைய ஆபரணங்களையும் பொதிந்து 
தன்னிடத்து வைத்த கிழியை அவனெதிரே வைத்து, "இறைவனே, நீ இந்திராணியோடு வந்து சீர்காழியிலே 
தவஞ்செய்த நாளிலே என்னிடத்து வைத்த ஆபரணக்கிழி இது. ஏற்றுக்கொள்க" என்று சொல்லி நின்றது. 
இந்திரன் அவ்வாபரணக்கிழியை விரலினாலே நீக்கலும், தன்மனைவியினுடைய ஆபரணங்கள் மேலே தோன்ற, 
அது கண்டு, அவளை நினைந்து, காமநோய்க் கவலை அடைந்து, தன்னேவலாளரை நோக்கி, "இக்கிழியை 
முன்போலக் கட்டிச் சேமித்து வையுங்கள்" என்று பணிக்க, அவர்கள் அவ்வாறு செய்தார்கள். 

    பின்னர் இந்திரன் வனதேவதைக்கு விடைகொடுத்து, காமாக்கினியால் வெதும்பிய உள்ளத்தையும் 
உடம்பையும் உடையனாய், குளிர்மையின்மேல் உளம்வைத்துச் சென்று, பூஞ்சோலையின் புறத்துள்ள ஓர்மணற் 
குன்றின்மீதிருந்து, காமநோயால் மிகவருந்திப் புலம்பினான்.

    இவ்வாறிருக்கும்பொழுது சூரியன் உதித்தது. உதித்தலும், இந்திரன் மனத்தெழுந்த காமாக்கினி தணிந்தது. 
தணிதலும், இந்திரன் பதை பதைத்து, விரைந்து எழுந்து, நகைத்து, வெள்கினான். "ஐயையோ! எனக்கு இது வருவதே" 
என்றான். "காமமானது தீமையென்பன யாவையும் விளைக்கும். சிறப்பையும் செல்வத்தையுங் கெடுக்கும், 
நல்லறிவைத் தொலைக்கும், நன்னெறியைத் தடுத்து நரகத்தில் விடுக்கும். ஆதலால், ஆராயுமிடத்துக் காமத்தின் 
மிக்க பகை இல்லை" என்று நினைந்து, அவ்விடத்து நின்று நீங்கி, தேவர்களெல்லாரும் சூழச் சென்று, அறுமுகக்கடவுள் 
சந்நிதியை அடைந்து பலமுறை வணங்கி எழுந்து, துதித்துக்கொண்டு நின்றான்.

    முருகக்கடவுள் இந்திரனை நோக்கி, "நாம் சிவபெருமானைப் பூசிக்க விரும்புகின்றோம். நீ அதற்குரிய 
உபகரணங்கள் பலவற்றையும் வருவிக்கக் கடவாய்" என்று பணித்தருளினார். உடனே இந்திரன் வணங்கிக்கொண்டு 
போய், தன்னேவலாளர் பலரை  வெவ்வேறிடங்களின் ஏவி திருமஞ்சனம், நறுமலர், பீதாம்பரம், திருவமுது,தூபம், தீபம், 
சுகந்தங்கள் முதலிய உபகரணங்களனைத்தையும் விரைவின் வருவித்தான். அறுமுகக்கடவுள் தேவத்தச்சனைக் கொண்டு 
ஒரு திருக்கோயில் செய்வித்து, சைவாகம விதிப்படி ஒரு சிவலிங்கந் தாபித்து, பூசைசெய்து, மும்முறை வணங்கித் 
துதித்தார். அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபமீது தோன்றியருளினார். அறுமுகக்கடவுள் 
எம்பெருமானை வணங்கி எழுந்து, சிரமேல் அஞ்சலிசெய்து நின்று, துதித்தார். 

    இலக்கத்தொன்பது வீரர்களும், தேவர்களும், பூதர்களும் சிவபெருமானைத் தரிசித்து, மெய்ம்மயிர் பொடிப்ப 
மனங்கசிந்துருக மும்முறை வணங்கி, எண்டிசையும் செவிடுபடும் வண்ணம் துதித்தார்கள். அப்பொழுது சிவபெருமான்
 குமார சுவாமியை நோக்கி, "உன்வழிபாட்டுக்கு உவகை செய்தாம். நீ இதனைக் கொள்ளக்கடவாய்" என்று, 
உலகமுற்றையும் ஓரிறைப்பொழுதினுள் முடிக்கும் உருத்திர பாசுபதப் படைக்கலத்தைக் கொடுத்து, "இது 
நம்மிடத்தே தோன்றிய படைக்கலம். பிரம விட்டுணுக்களும் இது பெற்றிலர். இதனைத்  தாங்க வல்லார் யாவர்! 
சூரனுடைய சேனைகளைச் சங்கரிக்கும் பொருட்டு,  மைந்தனே, நீ இதனைக் கொள்ளக்கடவாய்" என்று திருவாய் 
மலர்ந்து மறைந்தருளினார்.

            திருச்சிற்றம்பலம். 

            சுரம்புகுபடலம்.

    சிவபெருமான் மறைந்தருளலும், முருகக்கடவுள் அவரைத் துதித்துக்கொண்டு, தேர்மீதேறி, 
வீரர்களும், தேவர்களும், பூதர்களுஞ் சூழத் திருச்சேய்ஞலூரை நீங்கி, காவேரியாற்றைக் கடந்து, திருவிடைமருதூர்,
மாயூரம், திருப்பறியலூர் முதலிய சிவஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூரை அடைந்தார். 
அங்குள்ள திருக்கோயில்களைத் தரிசித்துக் கொண்டு, கொல்லனுடைய உலையினுள்ள அக்கினியிற் 
காய்ச்சிய இரும்பு  போலும் மிக்க வெப்பத்தையுடைய பாலைவனத்திலே சென்றார். செல்லலும்
அப்பாலைவனம் நறுமலர்ச்சோலைபோல மிகக்குளிர்மை யுடைத்தாயிற்று.

    முருகக்கடவுள் தன்வெம்மை நீங்கிய சுரத்திற்செல்லும் பொழுது,  திருப்பரங்குன்றிலே தவஞ்செய்து
கொண்டிருந்த பராசரமுனிவருடைய புதல்வர்களாகிய தத்தர், அநந்தர், நந்தி, சதுர்முகர், சக்கிரபாணி, மாலி
 என்னும் அறுவரும் ஞானநோக்கத்தினாலே அதனை அறிந்து, எம்பெருமானுடைய திருவருளை நினைந்து, 
திருப்பரங்குன்றினின்று நீங்கி, வடதிசையை நோக்கி நடந்தார்கள். பாலைநிலத்தெல்லைக்கு நேரே வரும்பொழுது, 
அறுமுகக்கடவுள் அணிமையின் எழுந்தருளிவந்தார். புதல்வர்கள் அறுவரும் முருகக்கடவுளைத் தரிசித்து, 
வணங்கித் துதித்து நின்று, 'தேவதேவரே அடியேங்களுக்குத் திருவருள் செய்க" என்று விண்ணப்பஞ்செய்தார்கள்.

     அப்பொழுது இந்திரன் முருகக்கடவுளை வணங்கி நின்று, "எம்பெருமானே, பராசரமுனிவருடைய 
புதல்வர்களாகிய இவர்களறுவரும் சிறு பருவத்திலே சரவணப்பொய்கையிற் பாய்ந்து முழுகி அலைக்கலுற்றார்கள். 
அப்பொழுது அங்குள்ள மீன்கள் இடந்தோறும் ஓட, இவர்கள் அது கண்டு,  அவைகளைப் பற்றிக் கரையில் விடுத்து, 
உலாவினார்கள். உலாவும் பொழுது, மத்தியானசந்தி முடிக்கும்பொருட்டுப் பராசரமுனிவர் அங்கு வந்தார். 
அவர் தம்புதல்வர்களாகிய இவர்களுடைய புன்றொழிலை நோக்கி, கோபங்கொண்டு, 'பிள்ளைகாள், நீங்கள் 
இப்பொய்கையிலே மீன்களாய்த் திரியக்கடவீர்கள்' என்று சபித்தார். உடனே இவ்வறுவரும் மீன்களாகி, அஞ்சி, 
'இம்மீனுருவம் நீங்குவது எந்நாள்? சொல்லியருளும்' என்றார்கள். பராசரமுனிவர் அது கேட்டு, 'இப்பொய்கையிலே 
அறுமுகக்கடவுள் சிவபெருமானது திருவருளினால் எழுந்தருளியிருக்கும்பொழுது அவரை எடுக்கும் உமாதேவியாரது 
திருமுலைப்பால் வெள்ளமாய்ப் பெருகும். அதனை நீங்கள் உண்ணும்பொழுது முன்னையுருவத்தை அடைவீர்கள்' 
என்று சொல்லி, மத்தியான சந்தியை முடித்துக்கொண்டு, சென்றார். 

    மீன் வடிவடைந்த இவ்வறுவரும் அன்று தொட்டு அளப்பில் காலம் மயக்கம் பொருந்திச் சரவணப் 
பொய்கையிற் றிரிந்தார்கள். எம்பெருமானே, நீர் அப்பொய்கையில் எழுந்தருளியிருத்தலும், எம்பெருமாட்டியார் 
கண்டு உம்மை எடுப்ப, அவருடைய திருமுலைகளினின்றும் சொரிந்தபால் வெள்ளமாய்ப் பெருகியது. 
அதனை இவர்கள் உண்டு, மயக்கநீங்கி, முன்னை வடிவத்தை அடைந்து, சிவபெருமானுடைய திருவருளினாலே 
திருப்பரங்குன்றத்திற்சென்று தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது எம்பெருமான் இங்கு எழுந்தருளுவதை 
அறிந்து, வந்தார்கள்'' என்று விண்ணப்பஞ்செய்தான்.

    முருகக்கடவுள் அது கேட்டு, பராசரமுனிவருடைய புதல்வர்களை நோக்கி, "நீங்கள் நம்மோடு வாருங்கள்" 
என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்களறுவரும் "எம்பெருமானே, உம்மைச் சரணடைந்தேம்" என்று வணங்கிச் செல்ல, 
சண்முகக்கடவுள் சுரத்தைக் கடந்து போயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            திருச்செந்திப்படலம்.

    முருகக்கடவுள் சுரத்தைக் கடந்து சென்று, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருச்செங்குன்றூரைத் 
தரிசித்துக்கொண்டு, கடற்கரையின் உள்ள அலைவாயாகிய திருச்செந்தூரை அடைந்து, தேவத்தச்சனைக் கொண்டு 
ஒரு திருக்கோயில் செய்வித்து, தேரினின்றும் இறங்கி, அதனுள்ளே புகுந்து, வீரர்களும் பூதசேனாதிபதிகளும் 
தேவர்களும் துதிப்ப, திவ்விய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தருளினார். வீற்றிருந்தருளியபின் இந்திரனை 
நோக்கி, "சூரன் முதலாயினோர் பிறந்ததும், தவஞ்செய்ததும், வரம்பெற்றதும், அரசுசெய்வதும், அவர்களுடைய 
மாயமும், வெற்றியும், வலியும்,  மேன்மையும், உங்களிடத்து இந்நாள்காறும் செய்த துன்பமுமாகிய எல்லாம் 
நமக்குச் சொல்லக்கடவாய்" என்று பணித்தருளினார். இந்திரன் குருவாகிய பிருகற்பதியை அன்போடு நோக்கி, 
"நீர் இவைகளைச் சொல்லியருளும் " என்றான். பிருகற்பதி அதற்கியைந்து, அறுமுகக்கடவுளுடைய திருவடிகளை 
வணங்கி, "எம்பெருமானே, நீர் உயிர்கடோறுஞ் செறிந்திருக்கின்றீர், எப்பொருளையும் அறிவீர். அடியேங்களுடைய 
துன்பத்தை நீக்கத் திருவுளங்கொண்டு பாலவடிவங்கொண்டருளினீர். உமது செயலை யாவர் அறியவல்லவர்! 
முன்னே எல்லையில்லாத புவனங்களும், மும்மூர்த்திகளும் உயிர்த்தொகைகளும் அடங்கிய விசுவரூபத்தைக் 
கொண்டு தோன்றியருளினீர். உமது மாயத்தை யாவர் அறியவல்லவர்! அசுரர்களுடைய தன்மையை நீர் வினாவியது, 
அதனையறிதற் பொருட்டன்று, சிறியேங்களுடைய துன்பத்தைக் களைந்து இன்பத்தை அருளும்பொருட்டே. 
ஆகையால், அசுரர்களுடைய தன்மைகளெல்லாவற்றையும் அடியேன் அறிந்தவாறே சொல்கின்றேன்'' என்று சொல்லலுற்றார்.

            திருச்சிற்றம்பலம்.

            உற்பத்திகாண்டமுற்றிற்று.

            இரண்டாவது

            அசுரகாண்டம்.

            மாயைப்படலம்.

    ஊரிலான் குணங்குறியிலான்செயலிலானுரைக்கும் 
    பேரிலானொருமுன்னிலான்பின்னிலான்பிறிதோர் 
    சாரிலான்வரல்போக்கிலான்மேலிலான்றனக்கு 
    நேரிலானுயிர்க்கடவுளாயென்னுளே நின்றான்.

    காசிப முனிவருடைய புதல்வர்களாகிய அறுபத்தாறுகோடி யசுரர்களுக்கு அரசனாகிய அசுரேந்திரன் 
மங்கலகேசியென்னும் அரக்கியை விவாகஞ்செய்து, சுரசையென்னும் மகளைப் பெற்றான். அவள் வளர்ந்தபின், 
அசுர குருவாகிய சுக்கிரன் மாயையின் கல்விகளனைத்தையும் அவளுக்குணர்த்தி, அவளுடைய கல்வித்திறத்தை 
நோக்கி, அவளுக்கு மாயையென்று பெயரிட்டார். பின்பு அசுரர்களுடைய சிறுமையையும், தேவர்களுடைய 
பெருமையையும், தேவர்கள் அசுரர்களால் வருந்தும்வண்ணம் திரு நந்தி தேவர் சபித்தமையையும் தம்முள்ளத்து 
நினைந்து, மேல்வருந் தன்மையையும் அறிந்து, மாயையை விளித்து, "மாயையே, கேள். விட்டுணுவாலும், 
இந்திரனாலும், இருடிகளாலும், தேவர்களாலும், அளப்பில்லாத அசுரர்கள் இறந்தார்கள். உன்றந்தையும் 
வலியிழந் தொடுங்கினான். இனி உன்னாற்றானே அசுரர்களுக்கு மேன்மை உண்டாகும். நீ இலக்குமியும் வந்து 
வணங்கற்பாலதாகிய பேரழகையுடைய ஒருருவத்தைக் கொண்டுபோய், காசிப முனிவரை அடைந்து, 
உன் வல்லபத்தைக் காட்டி, ஆசையூட்டி, இரவிலே அவரோடு புணர்ந்து, அசுரர்களை உண்டாக்கி, அவர்களுக்குப்     
பெயரிட்டு, அவர்கள் எல்லையில்லாத வளங்களைப் பெறும்பொருட்டு அவர்களுக்கியலும் யாகங்களையும் 
தவங்களையும் உணர்த்தி, மீளக்கடவாய்" என்று பணித்தார். 

    மாயை அதற்கியைந்து, சுக்கிரனை வணங்கிப் போய், தன்றந்தையாகிய அசுரேந்திரனுக்கு இதனைச் 
சொல்லி, விடைபெற்றுக்கொண்டு, மகாமேருவுக்கு வடதிசையிலே காசிப முனிவர் தவஞ்செய்யும் எல்லையை அடைந்தாள்.
மாயை காசிப முனிவருடைய இருக்கையிலே வாவிகளையும், பூஞ் சோலைகளையும், செய்குன்றுகளையும், 
மண்டபங்களையும், பூஞ்சயனங்களையும் உண்டாக்கினாள். காசிபமுனிவர் அவற்றையெல்லாங்கண்டு, அதிசய
மடைந்து, ஆசையினாலே அவற்றை நெடுநேரம் உற்று நோக்கி, "இவையெல்லாம் இங்கே செய்தவர் யாவர்' என்றெண்ணி, 
சுற்றெங்கும் பார்த்து, ஒருவரையுங் காணாது,சித்திரப்பாவை போலாகி, "வான நாடிழிந்ததோ! இந்திரனுடைய நாடிழிந்ததோ! 
குபேரன் முதலியோரது நாடிழிந்ததோ! இங்ஙனமன்றாயின், இவை இங்குத் தோன்றியவா றறிகிலேன். இது பிரமதேவருடைய 
செய்கையோ! விட்டுணுவினுடைய செய்கையோ! அவ்விருவரானும் அறியப்படாத சிவபெருமானுடைய செய்கையோ! 
பிறருடைய செய்கையோ! அறிகிலேன். 

    இக்காட்டிலே புகுந்த இத்திரு நன்மைக்கேதுவோ தீமைக்கேதுவோ! இதுவும் அறிகிலேன். இங்கே யாது 
நிகழினும் நிகழுக. அதனியற்கை நமக்கு மேலே விளங்கும். நம்மறிவு இங்ஙனஞ் சென்றது பழுது"  என்று சிந்தித்து, 
தம்மனத்தைத் தேற்றி, முன்போலத் தவஞ்செய்யப் புகுந்தார். புகும்பொழுது, அதுகண்ட மாயை ஒரிரத்தினக் குன்றின்
மேலே பேரழகோடு தோன்றி நின்றாள். காசிப முனிவர் அவளை நோக்கி, மையல் கொண்டு, தவத்தை விடுத்து, 
அவளெதிரே சென்று நின்று, "இலக்குமியினும் அழகிய மாதே, நின்வரவு நன்று நன்று. உன்குலம் யாது? உன் வாழ்பதி யாது? 
உன் பெயர் யாது? உன்னைப் பெற்றவர்யாவர்? சொல்லுக"  என்றார். மாயை அது கேட்டு, "முனிவரே, நீர் இவ்வாறு 
வினவிநிற்றல் தகுதியன்று. அன்றியும் நீர் என்னிடத்திற் றனித்து வந்தீர். தவஞ் செய்வார்க்கு இது நன்றா ? 
தவத்தை விடுத்து அறிவில்லாதார் போலப் பேசிக் கொண்டு என்னை யணுகுதல் நீதியன்று. உமது கடனைச் 
செய்யப்போம்" என்றாள். 

    காசிப முனிவர் "மங்கையே, கேள். எண்ணில் காலம் உடலம் வெம்ப உள்ளம் மெலியத் தவம்பல செய்தல் 
இங்கு வேண்டியவற்றை அடைதற்கன்றோ. நான்றவஞ் செய்தது உன்னைச் சேர்தற் பொருட்டேயாம். நீ இங்கு வந்தனை. 
ஆகவே, என்றவத்திற்குப் பயன் எய்தியது.  இனித் தவம் வேண்டுமோ! பேரும் ஊரும் பிறவும் வினவிய எனக்கு ஓர் விடையுஞ் 
சொல்கின்றிலை. ஆயினும், அவையெல்லாம் பின்னர் அறிந்து கொள்வேன். என்னைக் காமநோய் ஈர்கின்றது. 
இரங்கக் கடவாய்" என்றார். மாயை அது கேட்டு நகைசெய்து, "நீர் இவ்வாறு நெடுந்தவஞ் செய்தது என்பொருட்டா! 
அங்ஙனமன்றே. பொய்சொல்லல் முறையா" என்றாள். காசிப முனிவர் "நான் பொய் சொல்லிற்றிலேன். மெய்ம்மையே 
சொன்னேன். யான் நெடுங்காலந் தவஞ்செய்தது முத்திபெற்றுய்யும் பொருட்டு. அதனையே எனக்கருள் செய்ய வந்தாய்.
உன்னைப்  புணர்தலன்றோ முத்தியாவது. இதுவன்றி எனக்குப் பிறிதொரு பேறுமில்லை. ஆதலாலே உன்னையே     
அடைந்தேன்"  என்றார். மாயை அவரை நோக்கி, "நான் உத்தரபூமியினுள்ளேன். மேருமலைக்குத் 
தென்றிசையினுள்ள கங்காநதியிலே ஸ்நானஞ் செய்யச் செல்கின்றேன். நீர் இங்கு நில்லும்" என்றாள். 
அதற்குக் காசிபமுனிவர் "கங்கை முதலிய நதிகளேழையும், சிவதலங்கள் யாவையும், விட்டுணு தலங்கள் 
யாவையும், ஒரிமைப் பொழுதினுள் இங்கே அழைப்பேன். 

    பொன்னுலகையும், விஞ்சையருலகையும், திக்குப்பாலர்களுலகையும், பிறருலகையும், அங்கங்குள்ள 
தேவர்களோடும் வளங்களோடும், இப்பொழுதே இங்கு விரைந்தழைக்க வல்லேன். மும்மூர்த்திகளையும், 
மூவுலகத்துள்ளோர் யாவரையும், நீ காணவெண்ணினும், இங்கே வரும் வண்ணஞ்செய்வேன். நீ விரும்பினையாயின், 
தேவாமிர்தத்தையும் விரைந்து தருவேன். நீ எப்பொருளை விரும்பினும் அப்பொருள் யாவையும்  இமைப் 
பொழுதினுள்ளே தருவேன். அஃதன்றிப் புதல்வர்களை விரும்பினும் உண்டாக்குவேன். இவர்கட்கு ஒப்பில்லை 
என்று கூறும்வண்ணம் அவர்களை  வானுலகத்து விடுப்பேன். மேனகை அரம்பை முதலிய தேவ மகளிர்கள் 
வந்து உன்னேவல் புரியும் வண்ணஞ் செய்வேன். மையல் கொண்டு தியங்கும் எனதாவி உய்யும்வண்ணம் 
விரைந்தருள்செய்க" என்றார்.  மாயை முறுவலெய்தி, "தனித்தவளென்றா இவ்வாறு சொன்னீர். இனி இதனை 
ஒழித்துவிடும். மேலோருக்கு இது இசையுமா? நானும்  முன்னினைந்தவிடத்துச் செல்வேன். நீர் இங்கே
 தவஞ்செய்துகொண்டிரும்'' என்று சொல்லி, கங்கையின் றிசையை நோக்கி விரைந்து செல்வாள் போலச் 
சென்றாள். செல்லலும், காசிபர் தொடர்ந்து செல்ல, மாயை அரூபமெய்தி மறைந்து நின்றாள். காசிபமுனிவர் 
எங்கும் நோக்கிக் காணாது, வருந்திப் புலம்பினார்.


            திருச்சிற்றம்பலம்.

            அசுரர்தோற்றுபடலம்.

    காசிப முனிவர் மாயையைத் தேடி மயல்கொண்டு வாடும்பொழுது, சூரியன் அஸ்தமயனமானான். 
காசிபமுனிவர் அவ்விரவிலே காமநோயால் மிகவருந்தி, மாயையை நினைந்து , பலவாறு புலம்பிச் சோர்ந்தார். 
அப்பொழுது மாயை காசிபர் முன்பு வெளிப்பட்டு நின்றாள். அது கண்ட காசிப முனிவர் மகிழ்ச்சிகொண்டு, அவண்முன் 
சென்று, "நீ என்னை விரைந்தாள்வாயாக" என்று வேண்டினார். மாயை அவரை நோக்கி, 'அஞ்சாதொழிக. இங்கு நின்ற 
என்வடிவத்துக் கியையும் வடிவமும் இனி யான் கொள்ளும் வடிவத்தை ஒக்கும் வடிவமும் உடனே உடனே 
கொள்வீராயின் நான் உம்மைப் புணர்வேன்" என்றாள். காசிபமுனிவர் அது கேட்டலும் மன மகிழ்ந்து, 
பேரழகையுடைய  ஓர் தேவ வடிவங் கொண்டார். மாயை அது கண்டு வியந்து, நகைசெய்து, அவரைக் 
கைப்பற்றிக்கொண்டு சென்று, அங்குள்ள ஒரு மண்டபத்தினுள்ளே புகுந்து, தன்னாணையால் உளதாகிய 
சயனத்தின் மீது முதல்யாமத்தில் அவரோடு கூடினாள். அப்பொழுது சூரபன்மா அவளிடத்துப் பிறந்தான். 

    அப்புணர்ச்சிக்கண் இருவர் சரீரத்துந் தோன்றிய வேர்வையினின்றும் முப்பதினாயிரம்வெள்ளம் 
அசுரர்கள் உதித்தார்கள். மாயை அவ்வசுரர்களையும் சூரபன்மாவையும் அங்கே நிறுவி, காசிப 
முனிவரோடும் வேறொரு மண்டபத்தினுள்ளே புகுந்து பெண்சிங்க வடிவங்கொண்டாள். 
காசிப முனிவர் ஆண்சிங்கவடிவங்கொண்டு, இரண்டாம் யாமத்தில் அவளோடு புணர்ந்தார். அப்பொழுது 
ஆயிரஞ் சிங்க முகங்களும் இரண்டாயிரங் கைகளுமுடைய சிங்கமுகாசுரன் பிறந்தான். அப்புணர்ச்சிக்கண் 
இருவர் சரீரத்தினுந் தோன்றிய வேர்வையினின்றும் சிங்க முகத்தர்களாகிய நாற்பதினாயிரம்வெள்ளம் 
அசுரர்கள் உதித்தார்கள்.

    மாயை அவ்வசுரர்களையும் சிங்கமுகாசுரனையும் அங்கே நிறுவி, வேறொரு மண்டபத்தினுள்ளே புகுந்து, 
பெண்யானை வடிவங்கொண்டாள். காசிப முனிவர் ஆண்யானை வடிவங்கொண்டு, மூன்றாம் யாமத்தில் அவளோடு
புணர்ந்தார். அப்பொழுது நான்குகோடுகள் பொருந்திய யானைமுகத்தையுடைய தாரகாசுரன் பிறந்தான். 
அப்புணர்ச்சிக்கண் இருவர் சரீரத்தினும் தோன்றிய வேர்வையினின்றும் யானைமுகத்தையுடைய நாற்பதினாயிரம் 
வெள்ளம் அசுரர்கள் உதித்தார்கள்.

     மாயை அவ்வசுரர்களையும் தாரகாசுரனையும் அங்கே நிறுவி, வேறொரு மண்டபத்தினுள்ளே புகுந்து, 
ஆட்டுப் பிணா வடிவங்கொண்டாள். காசிப முனிவர் ஆட்டுக்கடா வடிவங்கொண்டு நான்காம் யாமத்தில் 
அவளோடு புணர்ந்தார். அப்பொழுது அசமுகி பிறந்தாள். அப்புணர்ச்சிக்கண் இருவர் சரீரத்தினும் தோன்றிய 
வேர்வையினின்றும் ஆட்டுமுகத்தையுடைய முப்பதினாயிரம்வெள்ளம் அசுரர்கள் உதித்தார்கள். மாயையும் 
காசிப முனிவரும் அவர்களை அங்கே நிறுவி,வேறுவேறுள்ள மண்டபங்கடோறும் புகுந்து, யாளி, புலி, குதிரை,
மான், கோழி,  கரடி, பன்றி,கூளி முதலிய வடிவங்களெல்லாங்கொண்டு, வைகறையிலே புணர்ந்து, அறுபதினாயிரம்         
வெள்ளம் அசுரர்களைப் பெற்றார்கள். அப்பொழுது சூரியன் உதித்தான். மாயையும் காசிப முனிவரும் 
தங்கள் தங்கள் முன்னை வடிவத்தைக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளான சூரன் முதலிய 
நால்வரையும் இரண்டிலக்கம் வெள்ளம் அசுரர்களையும் அற்புதத்தோடு கண்டு, அன்பினையுடையர்களாய் நின்றார்கள்.

                திருச்சிற்றம்பலம் .

                காசிபனுபதேசப் படலம்.

    சூரபன்மன் சிங்கமுகாசுரனும் தாரகாசுரனும் தன்னுடன் வரச் சென்று, காசிப முனிவர் மாயை என்னும்
 இருமுதுகுரவர்களுடைய  பாதங்களை வணங்கி, "நாங்கள் செய்வதென்னை? சொல்லுங்கள்" என்றனர்.
 அது கேட்ட  காசிபமுனிவர் சொல்வாராயினார்:

    "பிள்ளைகாள், நான் உங்களுக்கு ஓருறுதியை உணர்த்துகின்றேன். நீங்கள் மூவிரும் அந்நெறியே 
நிற்கக் கடவீர்கள். அறிவால் அமைந்த பெரியோர்கள் ஆராயத்தக்க பொருள்கள் பதி, பசு, பாசம் என மூன்று.        
வேதாகமங்களெல்லாவற்றாலும் உணர்த்தப்படுவன இவையே. நித்தியராய், வியாபகராய், ஞானானந்தமயராய்,         
உயிர்கள்பொருட்டுப் படைத்தல்,  காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்யுஞ் 
சிவபெருமானே பதியெனப்படுவர். வேண்டுதல் வேண்டாமை யில்லாத சிவபெருமானுடைய இலக்கணத்தைச் 
சொல்லுதல் யாவர்க்கும் அரிது. வேதங்களாலும் துணியப்படாத அவருடைய இலக்கணத்தை
இத்தன்மையதென்று நாம் பேசவல்லமா! 

    ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களாகிய பாசங்களாலே பந்திக்கப்பட்டுள்ள பசுக்களாகிய
 உயிர்கள் எண்ணில்லாதன. அவை அநாதியே உள்ளன. அவை தாம் தாம் செய்த நல்வினை தீவினைகளினாலே இடையறாது 
பிறந்திறந் துழலும்.பிருதிவி யண்டத்தும், அப்புவண்டத்தும், தேயுவண்டத்தும், வாயுவண்டத்தும் ஆகாயவண்டத்தும் 
உதிக்கும். அவற்றிற்கு ஓரிடமே நிலையென்று  சொலற்பாலதா! அவை தேவர், மக்கள், விலங்கு,புள், ஊர்வன, நீர் வாழ்வன,
 தாவரம் என்னும் எழுவகைத் தோற்றத்தையுடையனவாம். அவை பிறக்கு முன் கருப்பத்தினும் அழியும், பிறந்த பின்னும் 
அழியும், சிலநாளிருந்தும் அழியும்,காளைப் பருவத்தினும் அழியும், மூப்பினும் அழியும், அவற்றினிலையாமை             
இத்தன்மையதென்று சொல்லலாகுமா! உயிர்த்தொகை கதிரெழு துகளினும் மிகுதியுடைத்தென்று சொல்லுதலும்         
அறியாமையே. இறந்தவுயிர்களும் பிறந்தவுயிர்களும் இவ்வளவை யுடையனவென எண்ணற்பாலன. கல்வியும்,         
வீரமும், செல்வமும், வலியும், பிறவும் நீர்க்குமிழிபோல நிலை யில்லாதனவாம்.

     தருமமென ஒருபொருளுண்டு. அது இருமையின்பத்தை  எளிதிற்பயப்பது. அது அருமையினெய்தும் 
பொருள். அது ஒருமையுடையோர்க்கன்றிப் பிறர்க்கு அறிவரிது. இத்துணைச் சிறப்பினதாகிய தருமத்தை        
 ஓருயிர் செய்யுமாயின், அன்பும் அருளும் உண்டாகும். அவை உண்டாக, தவம் உண்டாகும். அது உண்டாக, 
அவ்வுயிர் சிவபிரானை  அடையும். அடையின், பிறவிக்குக் காரணமாகிய மும்மலங்களினின்றும் நீங்கி, 
பேரின்பத்தை அனுபவிக்கும். ஆதலால், தவம்போலச் சிறந்தது பிறிதொன்றுமில்லை. ஐம்பொறிகளை 
அடக்கித் தவஞ்செய்து, முத்தியின்பத்தைப்  பெற்றவர் சிலர், இம்மையின்பத்தைப் பெற்றவர் சிலர், 
இருமையின்பத்தையும் பெற்றவர் சிலர். 

    தம்முடம்பை வாட்டி நெடுங்காலந் தவஞ் செய்தவரல்லரோ தேவர்களாகி மேற்பதங்களைப் 
பெற்று வாழ்வோரெல்லாரும். பத்திமையோடு தவஞ்செய்து முத்தியின்பத்தைப் பெற்றவர்களையும் 
இவ்வளவினர்களென்று சொல்வதரிது, தவஞ்செய்து இருமையின்பத்தையும் பெற்றவர்கள் பிரமா
 விட்டுணு முதலியோர். தவஞ்செய்யாது பிறவுயிர்களுக்குத் துன்பஞ்செய்யும் பாவிகளுக்கு இருமையின்பமும் 
இல்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் பிறவித்துன்பத் தழுந்துவர்கள். இவ்வுண்மையை அறிந்து அறிவிப்பினும்,     
பூமியிலுள்ளோர் கொலை களவு முதலிய பாவங்களினின்றும் நீங்குகின்றிலர். 

    அதனால் முத்தியின்பம் பெறாது சனனமரணத் துன்பங்களை அடைகின்றனர். இருமையின்பத்துக்கும் 
ஏதுவாயுள்ள தவத்துக்கு உயர்வுமில்லை, ஒப்புமில்லை. தவத்தை ஒப்பது தவமேயாம் . ஆதலால், பிள்ளைகளே, 
நீங்கள் தருமத்தைச் செய்யுங்கள். பாவத்தை விலக்குங்கள். சிவபெருமானைத் தியானித்துப் பெருந்தவம் புரியுங்கள்.    
அதுவன்றிச் செயத்தக்கது யாது! உடம்பை வாட்டித் தவஞ்செய்வோர் உலகமெல்லாம் வியக்கும்படி வாழ்வர், 
அடைந்தாரைக் காப்பர், பகைவரை அழிப்பர், விரும்பிய பொருள்களெல்லாம் அடைவர், நித்தராய் இருப்பர்.
 இது உங்கண்மனத்தே திடம்பெறும்வண்ணம் உங்களுக்கு ஓர் கதை சொல்வேன்” என்று காசிபமுனிவர் 
சொல்வாராயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            மார்க்கண்டேயப்படலம்.


    "கடகமென்னும் நகரத்திலே பெருந்தவத்தினாற் சிறந்த குச்சகர் என்னும் பிராமணர் ஒருவருளர்.     
அவருடைய புதல்வராகிய கௌச்சிகர் என்பவர் வேதங்களின் மிக வல்லராய், பிறவிக்கடலினின்றும் 
நீங்கும்பொருட்டுச் சிவபெருமானைச் சிந்தித்துத் தவஞ்செய்யக் கருதி, அங்குள்ள ஓர் தடாகக்கரையை 
அடைந்து, உண்டியும் உறக்கமுமின்றி, மெளனம் பொருந்தி ஆத்தீண்டு குற்றிபோல அசைவின்றி         
இருந்துகொண்டு, சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தைச் சிந்தித்து, பேரின்பக்கடலின் மூழ்கித் 
தவஞ்செய்தார். செய்யும்பொழுது, மரை காட்டா முதலிய மிருகங்கள் தங்கள் தங்கள் உடம்பினுள்ள 
தினவு நீங்கும்வண்ணம் அவருடைய சரீரத்திலே உரைத்துக்கொண்டு போகும். 

    இவ்வாறு செய்யவும், கெளச்சிக முனிவர் இதுவொன்றும் அறியாது தவஞ்செய்துகொண்டிருந்தார். 
அதனை அறிந்த விட்டுணு, தேவர்கள் சூழ, அங்குவந்து, அவருடைய அருந்தவத்தைக் கண்டு, அற்புதங்கொண்டு, 
அவர்முன்சென்று, அவரது சரீரத்தைத் தனது திருக்கரத்தினாலே தடவி, 'முனிவனே, உன்பெயர் மிருககண்டூயன்'
என்றார். உடனே மிருககண்டூயர் எழுந்து, கைதொழுது நின்றார். விட்டுணு அவரை நோக்கி, 'அநாதிமுத்த 
சித்துருவாகிய சிவபெருமானது பெருங்கருணை உன்னிடத்தே பெருகுக. நீ முன் செய்த தீவினைகளெல்லாம்     
நீங்குக' என்று சொல்லி, தேவர்களோடு மறைந்தருளினார்.

    விட்டுணு மறைந்தருளலும், மிருககண்டூயர் தமது தந்தையாராகிய குச்சகமுனிவரிடத்தே சென்று, 
அவரை வணங்க, அவர் மனமகிழ்ந்து எடுத்துத் தழுவிக்கொண்டு, 'நீ தவஞ்செய்தபோது நிகழ்ந்ததனைச் 
சொல்வாயாக' என்று வினாவினார். மிருககண்டூயர் தமது தந்தையார் கேட்ப நிகழ்ந்தனவெல்லாம் 
விண்ணப்பஞ்செய்தார். அது கேட்ட குச்சகமுனிவர் மனமகிழ்ந்து, 'இத்தன்மைத்தாகிய தவம் உன்குலத்தார்களுள் 
உனக்குப் போல வேறியாவர்க்கு உளது! இத்தவஞ்செய்த உனக்கு அரியது  யாது? பூமி அந்தரம் சுவர்க்கமென்னும்     
மூவுலகத்தினும் உள்ளவர்களுள் உன் ஒப்பவர் யாவர்! நீ செய்த தவத்தைச் சிவபெருமானேயன்றி             
வேறியாவர் காண்பவர்' எனப் புகழ்ந்து கூறினார்.                                                                                                 

    பின்பு சிவபெருமானது திருவருளினாலே வேறொரு நினைப்பு வரலும், குச்சகமுனிவர் 
மிருககண்டூயரை நோக்கி , 'மைந்தனே, வேதத்திலே விதிக்கப்பட்ட பிரமசரியம், கிருகத்தம், 
 வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் நான்காச்சிரமங்களுள் முன்னையதை இன்றுகாறும் அனுட்டித்தாய். 
பின்னையவிரண்டும் பின் அனுட்டிக்கப்படுவனவாதலால், அவற்றை இங்கே பேசவேண்டுவதின்று. 
இரண்டாவதாகிய கிருகத்தாச்சிரமத்தை இனி நீ அனுட்டித்தல்வேண்டும்' என்றார். 

    மிருககண்டூயர் அது கேட்டு, 'எந்தையார் இனியதோருறுதி சொன்னார்' என்று உள்ளே முறுவலித்து, 
தந்தையாரை நோக்கி, 'அநாதியே பிணித்த பாசத்தை அறுக்கவேண்டிய சிறியேன் பின்னும் ஒருபாசத்தினாலே 
பிணிக்கப்படுவேனாயின், பசுபதியாகிய சிவபெருமானை எவ்வாறு அடைவேன்! ஐயையோ! பிறவித்துன்பமாகிய 
பெருங்கடலின் வீழ்ந்து உலைவேனே! தன்கைகளே பற்றுக்கோடாகத் தவழும் முடவனொருவன் அக்கைகளுக்கும் 
நோயொன்று வந்தக்கால் யாது செய்வான்! நானும் அவன்போலத் தளர்வேனே! தவவொழுக்கம் இருக்க 
இல்லொழுக்கம் பூண்டு வினைகளைப் போக்கக் கருதுதல் நல்ல நீர் இருக்கச் சேற்றிலே மூழ்கிச் சரீரத்தழுக்கை 
நீக்கக் கருதுதல் போலுமன்றோ ! பூமியினுள்ள அளப்பில்லாத பெரும்பாவங்களைப் பிரமதேவர் பெண்ணுருவமாகப் 
படைத்தனர். என்பிதாவே, உமக்கு அது விளங்கும். அவ்வியல்புடைய பெண்களை மனத்தே நினைக்கும் பாவம் 
ஏழுபிறப்பினும் நீங்காதே. 

    இச்சைகொண்டு  சுழலாநின்ற ஐம்புலன்களாகிய பூதங்கள் இழுக்கப் புலம்பாநின்ற சிறியேனைப் 
பெண்ணாகிய பேயும் வந்து பற்றியக்கால், யாது செய்வேன்! ஐயையோ எனக்கோ இது வரும்! பெண்ணாசையானது 
பலநாளும் பூமியின்கண்ணே, துன்பத்தின் மூழ்குவிக்கும், பின்னாளிலே நரகக்குழியில் வீழ்த்திவிடும், எந்நாளில் 
ஆடவருக்கு இன்பம் பயக்குமோ அறியேன். துன்பநுகர்தற்கு  ஏதுவாகிய தீவினையையுடையோர் இன்ப நுகர்வார்
போலப் பெண்கள்வயப்படுகின்றனர். 

    நாயானது தன் பற்கள் நடுங்கும் வண்ணம் தசையில்லாத  எலும்பைக் கறித்தால் சுவையைப்  பெறுமா? 
பெண்ணாசையானது ஒருவருள்ளத்தே புகுமாயின், அது பின்னர் நீங்குமியல்புடையதா! அது குன்றாது எந்நாளும் 
உயிரைப் பற்றி ஈரும். நஞ்சு மிக இனிது ; அது பின் ஒரு நாளும் நலியாது. பெண்களுடைய உள்ளக்கருத்துப் பிறரால் 
அறியப்படுவதா! அவரோடு நீக்கமின்றிப் பலநாட்பழகி அவருள்ளத் திருக்குந் தேவனும் உணர்தற்கரியதன்றோ! 
மனமொன்று வாக்கொன்று செய்கையொன்றாகப் பேதைமையையே கடைப்பிடித்துப் பெரும்பவஞ்செய்யும் 
பெண்கள் வலையிற்பட்டு மயங்கினோரல்லரோ பிறந்தும் இறந்தும் உழல்கின்றோர்! 

    அதனால் உலகத்தின்கண்ணே கற்பினையுடைய மகளிர் இல்லையோ என்பீராயின் , தத்தங்கணவர் வழி
 வழுவாதொழுகும் மகளிருஞ் சிலர் உண்டு. ஒரு மரக்கொம்பிலே தீயை மூட்டினால் அது மிகச் சுவாலித்துத் தான் 
பற்றல் கூடாத பலவற்றினும் போய்ப் பற்றும். அதுபோலவே, ஒருபெண்ணினிடத்தே காமமுடையராயின், 
அது வளர்ந்து தான் பற்றல்கூடாத பலரிடத்தும் போய்ப் பற்றும். பேரழகையுடைய மகளிர்கள் பலர் புடைசூழவும், 
இந்திரனுக்குக் கௌதம முனிவருடைய பன்னியாகிய அகலியையினாலே ஒருகாலும் நீங்காத பெரும்பழி 
வந்தெய்தியது. பிரமதேவர் தம்மாலே படைக்கப்பட்ட  திலோத்தமைமேல் மையல்கொண்டு நான்கு 
முகமுடையராயினமை நாம் உணராததன்று, மற்றைத்தேவர்களும் முனிவர்களும் காமத்தினால் 
அடைந்த துன்பங்களெல்லாம் சொல்லப்புகின், அளவுபடா. அவையெல்லாம் நிற்க. பிறவித்துன்பத்தை 
நீக்க விரும்பிய யான் அத்துன்பத்தை மேன்மேலும் வளர்க்குமியல்புடைய பெண்கள் கூட்டத்தை விரும்பேன். 
இந்திரன் முதலிய தேவர்களுடைய பதத்தையும் விரும்பேன் . இல்வாழ்க்கையென்னும் சிறையினும் வீழேன், 
ஐம்புலங்களின் மாயும் மயக்கத்தை ஒழித்து, தவமென்று சிறப்பித்துச் சொல்லப்படும் அழியாச் 
செல்வத்தைப் பெற்று இன்பமுற்றிருப்பேன்' என்றார்.

    குச்சகமுனிவர் அது கேட்டு, 'இவன் இல்லொழுக்கத்தை இகழ்கின்றான். வேதத்துணிவையும் 
கொள்கின்றிலன். தவமயல்  பூண்டான் " என்று துயரங்கொண்டு, மிருககண்டூயரை நோக்கி, 
"மைந்தனே ஓர் கன்னியை விவாகஞ்செய்து குலத்தொழிலை நடாத்தும்பொருட்டுக் குமாரரைப் 
பெற்ற பின்னன்றோ தவஞ்செய்து முத்தியடைதல் முறைமை. அறியாமையிற்  கட்டுண்ட உலகத்தார்
போல நீயும் காமவின்பத்தை நுகர்தற்பொருட்டா இல்லொழுக்கத்தை அனுட்டிக்கச் சொன்னேன். 
இறந்த மேலோர்களுடைய  துன்பத்தையும் நரகமடைதலையும் நீக்கும்வண்ணம் புதல்வரைப்
பெறும்பொருட்டு ஓர் கன்னியை நீ விவாகம் பண்ணல்வேண்டும், 

    புத்திரரென்னும் சொல்லின்பொருளை மறந்தாய்போலும். இவ்வுண்மையை  நீ ஆராய்ந்து 
இல்லறம் பூண்டு நிற்றலே உத்தமநெறி. தவத்தினதொழுக்கம் அதுவே. ஓர்மலையின் மீதேற விரும்பினோன்
 அதன் சாரலை அடைந்து படிப்படியே ஏறிப்போதலன்றி, கீழ் நின்று மேலே பாயுந்தன்மைக்கொக்கும்
நீ இப்போது தவஞ்செய்யக் கருதுதல். மரம் விலங்கு முதலியவற்றை  அவற்றால் வரும் பயனைக் 
கொள்ளுதற்கன்றோ, நீக்காது கொள்ளுவர். அவ்வாறே நீயும் இல்லறமும் மகப்பேறுமாகிய பயன்களின் 
பொருட்டே ஓர் கன்னியை விவாகஞ்செய்து பின்பு அருந்தவஞ் செய்யக்கடவாய். இவ்வில்வாழ்க்கையை முன்னாளே 
நினைத்திலை. இந்நாள்காறும் பிரமசரியத்தையே அனுட்டித்தாய். 

    தேவர்களுக்கு அவி முதலிய சிறப்புக்களைச் செய்யாது  மைந்தனே, நீ இப்பொழுதே தவஞ்செய்யக் 
கருதுதல் தகுதியா!இல்லொழுக்கத்தில் நிற்பவருக்குத் தத்தமொழுக்கத்திலே தவறுண்டாயினும், அதற்குப் 
பரிகாரமுண்டு. தவவொழுக்கத்திலே நிற்பவருக்குத் தவறுண்டாயின், உய்தலரிது. அது மலையுச்சியினின்றும் 
தவறுதல் போலும். நீ பிறவித் துன்பத்தினின்று நீங்க விரும்பினையெனினும், நாட்செல்லத் துறப்பதன்றி
விரைவிலே துறக்கலாமா! உன் முன்னோர்கள் போலவே நீயும் இல்லொழுக்கத்தை அனுட்டிக்கக்கடவாய். 

    பசுபதியாகிய சிவபெருமான் தாம் உமா தேவியாரோடு கூடி, பிரமா விட்டுணு முதலிய தேவர்களும் 
முனிவர்களும்  மற்றை யாவரும் மனைவியரோடு இல்லறத்தொழுகும்வண்ணம் பணித்தருளினார். 
அச்சிவபெருமான் நிறுவிய வரம்பை நீ மறுக்காதே. மகப்பேற்றை விரும்பி, என்சொல்லை வெறுக்காது 
கொள்ளக்கடவாய். உலகியலை விலக்காதே. இன்னும் மாறுபட்டு ஒன்றும் பேசாதே. இப்போதே எமர்களைத் 
துறவாதே. வசிட்டமுனிவர் அருந்ததியைத் தம்பக்கத்திருத்தியும் பழிபெறாது தவமேன்மையோடு இருக்கின்றாரே.         

    வேண்டுதல் வேண்டாமையில்லாத தூயோர்கள் பெண்களோடு புணரினும், தவஞ்செய்யினும், 
அவர்களுள்ளத்தறிவு வேறுபடுமா, வேறுபடாது. நற்குண நற்செய்கைகளையுடைய பெண்ணை  விவாகஞ்செய்யின், 
தானமும் தவமும் உளவாகும், மண்ணுலகத்தின்பமும் விண்ணுலகத்தின்பமும் எய்தும். தங்கணவரையே கடவுளராகக் 
கொண்டு வழிபடும் கற்பினையுடையாரது சொல்லின் வழியே தெய்வமும் முகிலும் நிற்குமாயின், 
ஆண்டகைமையோரும் அவர்களுக்கு நிகரல்லர். இல்லொழுக்கத்தை முன்னே அனுட்டியாது, தவவொழுக்கத்தைத் 
தொடங்குவையாயின், மாயமிகுந்த  காமவிடம் வந்தணுகின், விதி காக்கினும் அதனை விலக்கலாமா! 

    துறந்தவர்களுக்கு உணவு முதலியன கொடுத்து, இறந்தவர்களுக்குத் தீக்கடன் நீர்க்கடன்களைச் செய்து 
பல தருமங்களையும் இயற்றி, விருந்தோம்பும் இல்லறமன்றி, மானுடப்பிறவியாலாகும் பேருதவி வேறியாது! 
ஆடவர்களும் பெண்களும் நன்மை தீமை செய்தல் ஊழ்வழியன்றிப் பிறிதன்று. உழவர்கள் வயலின்கண்ணே 
வித்திய வித்தின் பயனேயன்றிப் பிறிது பெறுவார்களா! முன்னே நல்லறமாகிய இல்லறத்தை நடாத்திப் 
பின்றுறத்தலே துறவு. இவ்வாறு செய்வையாயின், உனக்குக் குற்றம் வாராது. இதனை நீ மறுத்துப் பேசாதே. 
'இது நமதாணை' என்றார். 

    அது கேட்ட மிருககண்டூயர் 'எந்தையார் இல்லொழுக்கத்தை வேதத்துணிவென்றார். சிவபெருமானது 
பணியுமாமென்றார். இனிச் சொல்வதென்னை' என்று நினைந்து வருந்தி, 'தங்கள் தங்கள் குரவர்கள் கடலின் 
வீழக்கடவீர்கள் என்றாராயினும், அன்போடும் அது செய்தலே புத்திரருக்குக் கடனாகும். அது புதுமையன்று. 
யானும் இதனை மறுக்காது செய்குவன். தாய் தந்தை குரு என்னும் மூவருடைய சொல்லை மறுத்தவரும், 
வேதநெறியை மாற்றினவரும், எரிவாய் நரகத்து வீழ்வர். ஆதலால், இவர்சொல்லை நான் விலக்குதல் 
முறையன்று' என்று துணிந்துகொண்டு, தந்தையாராகிய குச்சக முனிவருடைய திருவடிகளை வணங்கி, 
'பிதாவே, முனியாதொழிக. நீர் பணித்தபடி நிற்பேன். உமக்குச் சொல்வதொன்றுண்டு. தன்சொற்கு 
அமையாத மனையாளோடு கூடி வாழ்தலினும், நரகத்து வீழ்தலே இனிது. அவளோடு கூடி வாழும் 
ஆடவனுக்கு அவளையன்றிப் பின்னுமோரியமனும் நோயும் உண்டோ! அடியேன் கூறும் இலக்கணங்கள் 
சிறிதுங் குறைவின்றி நிறைந்த கன்னி கிடைப்பாளாயின், அவளை நான் விவாகஞ்செய்வேன்' என்றார்.

    குச்சகமுனிவர் அது கேட்டு மனமகிழ்ந்து, 'மைந்தனே,நீ என் சொல்லை மறாது உட்கொண்டமையால், 
நானும் உய்ந்தேன், உன்றாயும் உய்ந்தாள்,என் சுற்றங்களும் உய்ந்தன, தவங்களும் உய்ந்தன, மண்ணுலகத்தோரும் 
உய்ந்தனர், விண்ணுலகத்தோரும் உய்ந்தனர், இந்திரனும் உய்ந்தனன். உன்விருப்பத்தைச் சொல்வாயாக. நீ கூறிய 
இலக்கணங்களெல்லாம் பூண்டு, குற்றம் ஓர்சிறிதுமில்லாத ஓர் கன்னியைத் தேடி, உன்னிடத்தே புணர்ப்பேன். 
அது செய்யாதொழிவேனாயின், என்னுடைய தவம் குன்றுக' என்றார். குச்சகமுனிவர் இவ்வாறு சூளுரை சொல்லலும், 
மிருககண்டூயர் அவருடைய திருவடிகளை வணங்கி, உம்முடைய புதல்வனாகிய சிறியேன் உய்யும்பொருட்டு 
இது சொன்னீர். நீரோ தவத்தினிற் சிறந்த  முனிவரர். உமக்கு எய்துதற்கரியதொருபொருள் மூவுலகத்தினும் 
உண்டோ,இல்லை. 

    ஆயினும், நான் சொல்வதுண்டு. தந்தையை இழந்தவர், தாயை இழந்தவர், தமக்கையரில்லாதவர், 
தங்கையரில்லாதவர், ஆடவரோடு பிறவாதவர், இம்முத்திறத்தரை இழந்தவர், சுற்றமில்லாதவர், திருவற்றவர், 
உயர்குடியிற் பிறவாதவர், பிணியாளராகிய தாய் தந்தையரிடத்துப் பிறந்தவர், தேவர்களுக்குரிய பெயர் 
பெறாது விலங்குகளுக்குரிய பெயரைப் பெற்றவர், பிசாசின் பெயரைப் பெற்றவர், புறச்சமயப்படுகுழியின்
 வீழ்ந்தவர்,பிணியர், ஊமையர், முடவர், செவிடர், பிறர் வீட்டிற்செல்வோர், பொதுமகளிர்போல விழிப்பவர், 
பலமுறை ஆடவரை நோக்கித்  தலைக்கடையில் நிற்பவர், தம்மை அழகுபெற அலங்கரிப்பவர், 
பேருண்டியை உடையவர், பெருந்துயிலை யுடையவர், தன்னினும் மூத்தவர்,தன் கோத்திரத்துப் பிறந்தவர், 
நெடியவர்,குறளானோர், பருத்தவர், மெல்லிய உருவத்தையுடையவர், கருநிறத்தவர், பொன்னிறத்தவர், 
பசப்பையுடையவர், விளர்ப்பை யுடையவர், உதிர நிறத்தையுடையவர், நாணமில்லாதவர்,

 ஆடவர்புணர்ச்சியை நண்ணினவர், சிரிப்பவர்,நிலையில்லாதவர், வலிமிக்கவர், தாய்தந்தையருடைய 
ஆணையைக் கடந்தவர், கோபமுடையவர், பகையுடையவர், சண்டைசெய்பவர், கூத்து முதலியன காண 
விரும்புவோர்,  மன்மதனாற் கவல்கின்றவர், சிவபிரானிடத்து அன்பில்லாதவர், முனிவர்களை இகழ்பவர், 
உயிர்களிடத்து இரக்கமில்லாதவர், தங்குல நெறியிலே நில்லாதவர், தீக்குணத்தவர், நிறையில்லாதவர், 
ஆசாரியனை மனிதனென்று நினைப்பவர், தேவரைக் கல்லென்பவர், பத்து வயசின் மிக்கவர், 
பூப்புப் பருவம் வந்தணுகினவர், ஒத்த குணமில்லாதவர், அச்சமில்லாத மனத்தையுடையவர், 
இடிபோலப் பேசுவோர், தம்மைத் தந்தை தாயர் விவாகஞ் செய்துகொடுக்குமுன் ஒருவரிடத்து 
வேட்கை வைத்து அவரைச் சேர விரும்புவோர், பெருமிதமுடையவர், மடமும் பயிர்ப்புமில்லாதவர், 

பிறக்கும்போதே கண்ணில்லாதவர், பின்பு கண்ணிழந்தவர், மறுப் பொருந்திய கண்ணினையுடையவர்,
படலம் பொருந்திய கண்ணினையுடையவர்,மெல்லெனப் பார்க்குங் குருடர், சாய்ந்த கண்ணையுடையவர், 
பூனைக்கண்ணையுடையவர், பேய்போலச் சுழலுஞ் செங்கண்ணையுடையவர், தூறு மயிரையுடையவர், 
நரைத்த மயிரையுடையவர், பெருங்கூந்தலுடையவர், சிறுகூந்தலுடையவர், விரிந்த அளகமுடையவர், 
செம்மயிருடையவர், நிலத்தில் இறங்கிய கூந்தலையுடையவர், உதிர்ந்த மயிரையுடையவர், 
விலங்குபோல வலிய மயிரையுடையவர், சிறுத்த கண்ணையுடையவர், நெடுமூக்கையுடையவர், 
ஒன்றிய புருவங்களையுடையவர், குறிய காதையுடையவர், உயர்ந்த தந்தத்தையுடையவர், 

வளைந்த கழுத்தையுடையவர், மறுப்பொருந்திய முகத்தையுடையவர், தேமலில்லாத தனத்தையுடையவர்,
நுடங்கிய இடையில்லாதவர், கல்லுப்போலப் பருத்த வயிற்றையுடையவர், நல்லிலக்கணமில்லாத
 நிதம்பத்தையுடையவர், வாயும் உள்ளங்கைகளும் நகங்களும் உள்ளங்கால்களும் சிவப்பில்லாதவர்,
மயிர் பரந்த காலையுடையவர், அன்னம்போலும் மென்னடையில்லாதவர், விரல் பூமியிலே தோயாதவர் 
என்னும் இத்தன்மையராகிய மகளிர்களும் பிறரும் விவாகத்திற்கு உரியர்களல்லர். இத்தன்மையராயின், 
நான் விரும்பேன். இவ்வியல்பு முழுவதுமில்லாத கன்னி உண்டாயின், விரும்புவேன். நீர் ஆராய்ந்து 
விவாகஞ்செய்து தரக்கடவீர்' என்றார். குச்சகமுனிவர் அது கேட்டு, மகிழ்ச்சியும் முறுவலுங்கொண்டு, 
'நல்லிலக்கணமுடைய கன்னியைத் தேடி, உனக்குத் தருவேன்' என்றார்.

    இவ்வாறு கூறிய குச்சகமுனிவர் மிருககண்டூயரை நிறுவி, தாம் உலகெங்கும் ஒருகன்னியைத் 
தேடித் திரிந்து, தம்மெதிர்ப்பட்ட சில முனிவர்களால் சோழதேசத்திலே அநாமயமென்னும் வனத்திலே 
உசத்திய முனிவரிடத்திலே ஒரு கன்னிகை இருத்தலை அறிந்து, அவரிடத்தே சென்றார். உசத்தியமுனிவர் 
குச்சக முனிவரை வணங்க, குச்சகமுனிவர் உசத்தியமுனிவரை எதிருறத் தொழுது தழுவினார். 
உசத்தியமுனிவர் குச்சக முனிவரைத் தமதாச்சிரமத்திலே அழைத்துக்கொண்டு போய், ஆசனத்திருத்தி, 
தம்முடைய பன்னியையும் புதல்வியையும் அங்கே அழைத்து, அவரை வணங்குவித்து, அவரை விதிப்படி 
பூசித்து அமுது செய்வித்தார். 

    அதன் பின்பு அவரை நோக்கி, 'சுவாமீ,நீர் அடியேனிடத்து எழுந்தருளியதென்னை' என்று வினாவினார். 
குச்சகமுனிவர் மனமகிழ்ந்து, 'நீர் பெருந்தவஞ் செய்து பெற்ற புதல்வியை என்புதல்வனுக்கு மணம்பேசும் 
பொருட்டு வந்தேன்' என்றார். உசத்திய முனிவர் அது கேட்டு மகிழ்ந்து, 'என்புதல்வியாகிய விருத்தையை 
உம்முடைய புதல்வனுக்கு விவாகஞ்செய்து தரும்பொருட்டு நான் முன் செய்த தவம் யாதோ' என்று சொல்லி, 
விவாகத்துக்கு உடன்பட்டு, அம்முனிவரை அங்கே சிலநாளிருத்தி, வழிபடுவாராயினார்.

    ஒருநாள் உசத்தியமுனிவருடைய பன்னியாகிய மங்கலை விடுப்ப, மகளாகிய விருத்தை தன்னுடைய 
தோழியர்களோடு சென்று, கான்யாற்றிலே நீராடி, பக்கத்துள்ள சோலையிலே போய், மலர் கொய்து, 
விளையாடிக் கொண்டு திரும்பினாள். திரும்பும்பொழுது, மதயானையொன்று எதிரே வந்தது. அதனைக் 
கண்டோர் யாவரும் அஞ்சித் தனித்தனியே விரைந்தோடினார்கள். விருத்தை கண்டு துன்பமுற்று,'இனி யாது 
செய்யலாம்' என்றிரங்கி ஏங்கி, மிகவிரைந்தோடினாள். ஓடலும், புதர் மூடிய துரவொன்றணுக, அதில் 
விழுந்தழுந்தி இறந்தாள். யானை மலயமானாட்டைச் சார நடந்தது. தனித்தனியே ஓடிய தோழியர்கள் 
யாவரும் பின் ஒருங்கு கூடி, விருத்தையைத் தேடிக் காணாது, பெருந்துயரமடைந்து, உசத்திய முனிவருடைய 
ஆச்சிரமத்தை அடைந்து, மங்கலைக்கு இதனைச் சொன்னார்கள்.  மங்கலை அது கேட்டலும், கண்ணீர் வார 
வயிற்றினடித்து அழுதுகொண்டு,  தன் கணவருடைய பாதங்களின் வீழ்ந்து, நிகழ்ந்ததனைச் சொன்னாள். 
 உசத்தியமுனிவர் அது கேட்டு, மனங்கவன்றழுது, தன்புதல்வியோடு  சென்று பிரிந்த தோழியரை நோக்கி,
 'என்புதல்வியை யானை கொன்றதா? சொல்லுங்கள்' என்றார். 

    தோழியர்கள் முனிவரை நோக்கி, "நாங்கள் நீராடி மலர்கொய்து கொண்டு திரும்பும்பொழுது, 
யானை வந்தது கண்டு, எல்லோமும் தனித்தனி ஓடினோம். பின்பு விருத்தையைத் தேடிக்காணாது
திரும்பினோம்' என்றார்கள். உசத்திய முனிவர் அவ்வெல்லையிற் சென்று தேடித் தியக்குற்று நின்றார். 
தம்மகளுடைய ஆபரணங்கள் ஒருநெறியிலே ஓரொன்றாகச் சிந்திக் கிடப்பக் கண்டு, 'என்மகள் சென்ற 
நெறி இதுவே'  என்று துணிந்து, 'ஆபரணம் போகிய நெறியே தொட்டுப் புதல்வியைக் காண்போம்' என்று, 
பெண்களோடு போக, துரவொன்று வந்தணுகியது. அதிலே தம்மகளைக் கண்டு, நெடிதுயிர்த்து, 
கண்ணீர் பெருக அதனுள்ளே குதித்து, மகளை எடுத்துக் கரையிலே சேர்த்து, அழுதார். உடனே 
பெண்களெல்லாரும் விருத்தையைத் தழுவிக்கொண்டழுதார்கள். நற்றாயாகிய மங்கலை அது கேட்டு, 
பெருந்துயரக்கடலின் அழுந்தி, வயிற்றினடித்து, விருத்தையின்மீது வீழ்ந்து அழுதாள்.

    குச்சகமுனிவர் இவையெல்லாம் அறிந்து, அவ்விடத்துச் சேர்ந்து, அழுகின்ற பெண்களை நோக்கி, 
'இக்கன்னியை நான் உயிர்ப்பித்துத் தருவேன், அழாதொழிமின்கள்' என்று தேற்றி, வேறோரிடத்திருந்த 
உசத்தியமுனிவரைப் பார்த்து, 'கல்வியில்லாதவரும், சிறியரும், முதியரும்,பாலரும், மகளிரும்போல 
நீர் இவ்வாறு துன்புறுகின்றீர். ஊழ்வினை முறையை அறிகிலீர். அறிஞராகிய நீர் இவ்வியல்பினராயின், 
வேறியாவர் தெளியுமியல்பினர்! ஐயரே,கேளும். மனத்திற்றுன்பத்தை ஒழித்துவிடும். நான் இக்கன்னியை 
நாளை உயிர்ப்பித்துத் தருவேன். பின்பு என் புதல்வனுக்கு நீர் இவளை விவாகஞ்செய்துகொடும். 
இதனை ஐயுற்று  வருந்தாதொழியும் . விதியும் அதுவே. இதனை நான் ஞானநோக்கத்தினால் அறிந்தேன். 
விருத்தையினது சரீரத்தை எண்ணெய்த்தோணியில் வைத்திரும். நான் தவஞ்செய்து உயிரை மீட்டுத்தருவேன்' 
என்றார். அது கேட்ட உசத்திய முனிவர் தம்மகளுடைய சரீரத்தை எண்ணெயில் வைத்தனர்.

    குச்சகமுனிவர் போய், ஒருபொய்கையிலே மூழ்கி நின்று, இயமனை நினைந்து  தவஞ்செய்தார். 
அப்பொழுது, முன்னே பெண்கள் அஞ்சும் வண்ணம் வந்த மதயானை மீண்டணைந்து, அப்பொய்கையினுள்ளே 
புகுந்து, புழைக்கையினாலே துளாவி, அங்கு நின்ற குச்சகமுனிவரைப் பற்றித் தன்பிடர்மேல் ஏற்றிக்கொண்டு, 
நெடுந்தூரஞ்சென்றது. குச்சகமுனிவர் உணர்ந்து, பின்னர் மதயானையை நோக்கி, 'இது என்னைப் பற்றிச் 
செல்வதென்னை' என்றெண்ணி, ஞானநோக்கத்தினாலே அதனது ஊழ்முறையை நினைவாராயினார்:

    'கலிங்கநாட்டிலே அரிபுரத்திலே வணிகர்குலத்திலே தேவதத்தன் என்றொருவன் இருந்தான். 
அவனுடைய புதல்வனாகிய  தருமதத்தன் மிக்க செல்வத்தையுடையனாய், தருமங்களைச் செய்து 
பெரும்புகழ் பெற்றான். அவன் தன்னுடைய தந்தையும் தாயும் இறத்தலும், தமியனாகித் துயறுழந்து, 
பின் ஒருவாறு  தேறியிருக்கும் பொழுது, ஓரிரதவாதி முண்டிதமாகிய சிரசையும், குண்டலம் பொருந்திய 
காதையும், உபவீதம் அணிந்த மார்பையும், விபூதியைத் திரிபுண்டரமாகத் தரித்த நெற்றியையும், 
உருத்திராக்ஷ மாலையையும், பிரம்பு பொருந்திய கையையும் உடையனாய், அவனிடத்து வந்தான். 

    தருமதத்தன் அவ்விரதவாதியைக் கண்டு, வணங்கி, தன் வீட்டினுள் அழைத்துக்கொண்டு சென்று, 
அமுதுசெய்வித்து, முகமன் கூறி, பின்பு அவனை நோக்கி, 'சுவாமீ, நீர் இங்கு வந்ததென்னை' என்றான். 
வாதி அது கேட்டு, 'சிவபிரான் அருளிச்செய்த வித்தையொன்று நம்மிடத்துளது. அது எவருக்கும் 
பேசுந்தன்மையதன்று. குருபத்தியுடையார்க்கு மாத்திரம் சொல்லத்தக்கது. நெஞ்சிற்சிறிதும் 
மாசில்லாத உனக்கு நாம் அதை உணர்த்துவேம். சிவபிரானிடத்துத் தோன்றிய இரதமுண்டு. 
அதனாலே வேண்டிய பொன்னைச் செய்வோம். அது நமக்கு அரியதன்று. அது போல இன்னும் பலவுள.

     அவற்றைப் பெருந்தவமுடைய பெரியோர்களன்றி வேறியார் விரும்பாதவர்! காரிரும்பை 
நாகமாக்கு வோம். மீட்டும் அதனைப் பொன்னாக்குவோம். மகாமேருமலையும் திருக் கைலாசமலையுமாகிய 
இரண்டனையும் யாரும் நோக்கவே காட்டுவோம். இவை நமக்கரியனவா! ஈயத்தையும் இரதத்தையும் 
வெள்ளியாக்குவோம். வங்கத்தைப் பொன்னாக்குவோம். இரும்பிற் செம்புண்டாக்குவோம். ஈயத்தையும் 
அவ்வாறே செய்வோம். அளப்பில்லாத பிருதிவியண்டங்கள் யாவையும் பொன்மயமாக்குவோம். 
நமது வன்மையை உள்ளவாறு சொல்ல விரும்பினோமாயின், அளப்பில்லாத வருடங்கள் வேண்டும். 

    ஒருபொன்னைக் கோடிபொன்னாக்குவோம். கோடிபொன்னை மலைபோலக் கோடி கோடி 
பொன்னாக்குவோம். உன்பொருளனைத்தையும் தருவையாயின், உன் வீட்டிலே அப்பொருளை வைத்தற்கு 
இடமில்லையென்னும்படி செய்வோம்' என்றான். இவ்வாறு கூறிய வாதியைத் தருமதத்தன் வணங்கி, 
முன்னே தன்னிடத்துள்ள நிதியையும், பின்னே தன்னால் ஈட்டப்பட்ட நிதியையும், பேடகங்களில் உள்ள 
ஆபரணங்களையும் கொண்டுவந்து, அவன்முன் வைத்தான். வாதி அவற்றை நோக்கி, 'ஓகோ! 
வணிகரிற்றிலகனாகிய உன்னிடத்துள்ள செல்வம் இதுதானோ'  என்று கை தட்டிச் சிரித்து, 'இப்பொருள் 
நமது வித்தையில் இறைக்கும் போதாது. இது நாம் உருக்கு முகத்திலே சிந்துகின்ற அளவுங்காணாது. 
நீ நம்பின் றிரிவையாயின், அளப்பில்லாத பொருள் தருவோம். இதனை வைத்துக்கொள்வாயாக' என்றான். 

    அப்பொழுது தருமதத்தன் 'சுவாமீ, கோபியாதொழிக.நீர் வேண்டிய பெருநிதிமுழுதும் 
தேடிக் கொண்டுவருவேன். இரும்' என்று சொல்லிக் கொண்டு போய், வஸ்திரங்களையும், நிலங்களையும், 
இரத்தினங்களையும், ஆபரணங்களையும், வீடுகளையும், ஆடுமாடுகளையும் விற்று, மதிமயக்கத்தினாலே 
தருமத்தையும் விற்றான். இவ்வாறு தேடிய பெருநிதியனைத்தையும் கொண்டுவந்து, வாதிமுன் வைத்து 
நிற்றலும்,வாதி மனமகிழ்ந்து. அவையெல்லாவற்றையும் அக்கினியிலே உருக்கித் திரட்டி, ஒருருவாக்கி, 
அதனிரட்டி எடைகொண்ட இரதத்தை ஓரம்மியிலிட்டு, அப்பொன்முழுதையும் உரைத்து, அதனை உருட்டி, 
மட்குகையினுள்ளே மருந்தை உள்ளுறுத்திப் பொன்னை உள்ளிட்டு, அதனிடத்தே ஓர்களங்கத்தை இட்டு, சீலை
மண்செய்து, அக்கினியிலே நூற்றெட்டுக்குக் குடபுடமிட்டு, அதனைப் பார்த்து, 'மிகவும் மாற்று வந்தது. 
இனி ஒருவராகியிலே பழுக்கும். காற்றில்லாத ஒருறையுள் காட்டு' என்றான். 

    தருமதத்தன் ஒருறையுளைக் காட்டலும்,இரதவாதி அதனுள்ளே போய்,விறகின்மீது சுடலையக்கினி கொண்டு
வராகிமேலிட்டுப் புகைப்பித்தான். அதனாலே தருமதத்தன் கண்ணீர் பொழிய, சரீரம் வெதும்ப, எங்கும் வேர்ப்ப, 
ஊமைபோல ஒன்றும் பேசாமலும், போக முயலாமலும், வாளாவிருந்தான். அப்பொழுது இரதவாதி
பொற்குகையை எடுத்து, மெல்லெனத் தனது வஸ்திரத்தினுள்ளே மறைத்துக்கொண்டு, அதுபோலத் 
தன்னிடத்திருந்த வேறொரு குகையைப் பக்கத்து வைத்து, புகையைத் தணித்து, தருமதத்தனை நோக்கி, 
'இக்குகையை உன்கையினால் எடுத்து, இவ்வக்கினிமேல் வைப்பாயாக' என்றான்.

     தருமதத்தன் அவ்வாறு செய்தலும், இரதவாதி அதற்குரியன யாவற்றையும் அமைத்துச் 
சேமஞ்செய்து, தருமதத்தனை நோக்கி, 'நீ உணவில்லாமலும், ஒருவரோடும் பேசாமலும், பெண்களை 
விரும்பாமலும், பிறரைப் பாராமலும், மூன்றுநாள் நம்மையே சிந்தித்துக் கொண்டிருக்கக்கடவாய்.
 நாம் காளிசந்நிதியிலே ஒருயாகம் முடித்தல்வேண்டும். முடித்துக்கொண்டு நாலாநாள் இங்கே வருவோம்' 
என்றான். தருமதத்தன் 'அவ்வாறே செய்க' என்று சொல்லி, அவனை மும்முறை வணங்கி, அவன்பின் 
செல்லாது நின்றான். 

    இரதவாதி அங்குநின்றும் விரைந்து நெடுந்தூரம் போய், உருமாறி வேறோரிடத்தை அடைந்தான். 
தருமதத்தன் இரதவாதி விதித்தபடியே இருந்து,மூன்றுநாட்செல்லலும், 'பெரியவர் சொல்லிய நாளெல்லை 
சென்றுவிட்டதே. இன்று வந்திலர். அவர் சொற்றப்புவாரா' என்று தளர்ந்து காளிகோயிலினும் நகரத்தினும் 
அவனைத் தேடிக் காணாது மயங்கி வாடி வீட்டுக்குத் திரும்பினான். முன் வைத்த குகையை எடுத்துப் பார்த்து
அது இரும்பாயிருக்கக் கண்டு, மிகுந்த துயரமடைந்து வீழ்ந்திறந்தான். அவன் தருமத்தை விற்ற பாவத்தினாலே 
'யானையாய்ப் பிறந்தான்' என்றுணர்ந்தார். 

    இவ்வுண்மையை உணர்ந்த குச்சகமுனிவர் 'இவ்வியானைப் பிறப்பை விரைவிலே நீக்குவேன்' என்று 
சொல்லி, 'நான் முன் செய்த தவத்திலே ஒருநாட்டவம் இவ்வியானைக்கு எய்துக' என்றார். உடனே யானை வடிவத்தை 
ஒழித்து, தேவ வடிவத்தை அடைந்து, தேவ விமானத்தேறி, குச்சக முனிவரைத் தொழுதுகொண்டு, விண்ணுலகத்தை 
அடைந்தான். அதன் பின்பு குச்சகமுனிவர் பொய்கையிலே முன்போலத் தவஞ்செய்தலும் இயமன் வந்து, 
'முனிவரே, உம்முடைய தவத்தை நோக்கி மகிழ்ந்தனம். நம்மிடத்து வேண்டியது என்னை' என்றான். 

    குச்சகமுனிவர் இயமனை வணங்கி, 'உசத்திய முனிவருடைய புதல்வியை என்புதல்வனுக்கு 
மணம் பேச வந்தேன். அவள் நேற்றிறந்தனள். அவளை முன்போலத் தந்தருளும்' என்றார். அப்பொழுது இயமன் 
தன்றூதனொருவனை நோக்கி, இம்முனிவர் வேண்டிய கன்னியினது உயிரை வைத்தோமே. அதனை நீ 
விரைவின் இங்கே மீட்டுக் கொண்டுவந்து விடுவாயாக' என்று பணித்து, மறைந்தான். தூதுவன் அவ்வுயிரைக் 
கொண்டுவந்து, அவளுடைய சரீரத்துள் விடுத்தான்.உடற்குள் உயிர் வருதலும், விருத்தை துயிலுணர்ந்தாள்போல
எழுந்தாள். எல்லாரும் அவளைச் சூழ்ந்தார்கள். 

    மாதாவாகிய மங்கலை அவளைத் தழுவினாள். தந்தையாராகிய உசத்தியமுனிவர் அவளை 
எடுத்தணைத்துப் பலகால் உச்சிமோந்து, தன்னிருதொடைமீதிருத்தி, 'என்றவப்பயனாகிய குச்சகமுனிவர் 
நேற்றுக் கூறியவாறே தவஞ்செய்து இவளை உய்வித்தருளினர்' என்றார். பின்பு புதல்வியை நோக்கி, 
'நீ இங்கு நிகழ்ந்ததும், இறந்ததும், மீண்டதும் முறைப்படியே சொல்வாயாக' என்று சொல்ல, அவள் அது கேட்டு, 
தான் தோழியர்களோடு போனதும், கான்யாற்றிலே நீராடியதும், மீண்டதும், யானை வந்ததும், அதனைக் 
கண்டோடினதும்,தானொருத்தி தனித்ததும், துரவில் வீழ்ந்திறந்ததும், மீண்டதும், இயமலோகத்தில் 
நிகழ்வனவும் விரித்துச் சொன்னாள்.

    அது கேட்டு மகிழும்பொழுது, இயமனுடைய அருளைப் பெற்ற குச்சக முனிவர் வந்தார். வருதலும், 
உசத்தியமுனிவர் தம்முடைய பன்னியோடும் புதல்வியோடும் சுற்றத்தோடும் அவரை எதிர்கொண்டு, 
வணங்கித் துதித்து, 'என்னுடைய உயிரும், என்பன்னியுடைய உயிரும், சுற்றத்தாருடைய உயிரும், 
நண்பர்களுடைய உயிரும் நிற்கும்வண்ணம், நான் தவத்தினாலே பெற்ற விருத்தையுடைய 
உயிரைத் தந்தருளினீர். இது உமக்கு அரியதா! பூமியின்கண் உள்ள உயிர்களனைத்தையும் காத்தருளும் 
கடவுளும் நீரென்றே என்மனம் கருதுகின்றது. 

    உமது திருவுளத்தை யாவர் அறிவார்!  உம்முடைய புதல்வனுக்கு என் புதல்வியைக் 
கொள்ளும் பொருட்டு வந்தீரோ! இயமனாலே போன உயிரை மீண்டும் அழைத்துத் தரும்பொருட்டு வந்தீரோ! 
சொல்லும்' என்று முகமன்கள் பலவற்றை எடுத்துச் சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு தமதாச்சிரமத்தை 
அடைந்தார். பின்பும் சிலநாள் குச்சகமுனிவரை அங்கிருத்தி, 'சுவாமீ, உம்முடைய புதல்வரை இங்கே 
அழைத்துக்கொண்டு வாரும். என்புதல்வியை விவாகஞ்செய்து கொடுப்பேன்' என்றார். குச்சகமுனிவர் 
தம்முடைய புதல்வரை அழைத்துக்கொண்டு வரலும், உசத்தியமுனிவர் சுப தினத்திலே சுபமுகூர்த்தத்திலே, 
தம்முடைய புதல்வியாகிய விருத்தையை மிருககண்டூயருக்கு விதிமுறையே விவாகஞ்செய்து கொடுத்தார்.

    மிருககண்டூயரும் விருத்தையும் அன்பினோடு கூடி இல்லறம் நடாத்த, குச்சகமுனிவர் பலநாட் 
கண்டுகொண்டு, தவஞ்செய்யும்பொருட்டு உத்தரதேசத்துக்குப் போனார். மிருககண்டூயர் தமது பெருந்தவ 
வலியினாலே மிருகண்டு என்னும் ஒர்புதல்வரைப் பெற்று, அவருக்கு ஆறுவயசு சென்றபொழுது உபநயனம் 
முடித்துவிட்டு, தமது தந்தையார் போலத் தாமும் தவஞ்செய்யப் போயினார்.

    மிருகண்டு முனிவர் பிரமசரியம் அனுட்டித்து முடித்து, முற்கலமுனிவருடைய புதல்வியாகிய 
மருத்துவதியை விவாகஞ்செய்து, இல்லறத்தை நடாத்தினார். சிலகாலமானபின், புதல்வர் இல்லாமையால் 
மனம் வருந்தி, தம்முடைய மனைவியோடும் சுற்றத்தாரோடும் அநாமயவனத்தை நீங்கி, காசியை அடைந்தார். 
அடைந்து, கங்கா நதியில் ஸ்நானஞ்செய்து, மணிகன்னிகை என்னும் திருக்கோயிலிற் சென்று, சிவபெருமானை 
வலஞ்செய்து வணங்கித் துதித்தார். அத்திருக்கோயிலுக்கு அணித்தாகிய ஓரிடத்திலே சிவபெருமானைச் 
சிவாகமவிதிப்படி வழிபட்டார். 

    வெய்யில், பனி, மழை, காற்று என்பவற்றிற்கு அஞ்சாத மரம்போல,ஆறுபருவத்தும், 
புத்திர பாக்கியத்தை விரும்பிச் சிவபெருமானைச் சிந்தித்து, ஒருவருடம் தவஞ் செய்தார். அப்பொழுது 
சிவபெருமான் எழுந்தருளிவருதலும்,மிருகண்டு முனிவர் அவரை வணங்கித் துதித்தார். 
சிவபெருமான் மிருகண்டு முனிவரை நோக்கி, 'நீ யாது விரும்பினாய்' என்று வினாவியருளலும், 
மிருகண்டு முனிவர் 'எம்பெருமானே, அடியேன் புத்திரபாக்கியத்தை விரும்பினேன். தந்தருளுக' 
என்று விண்ணப்பஞ் செய்தார். சிவபெருமான் திருமுறுவல் செய்து, 'தீக்குணமே உடையவனாய், 
அறிவு சிறிதும் இல்லாதவனாய், ஊமையும் செவிடும் முடமும் குருடுமாய், வயசுநூறினும் நோயால்
வருந்துவோனாய் உள்ள ஒரு புதல்வனைத் தருவேமா? அழகு மிக்குடையனாய், உறுப்புக்குறைவு 
இல்லாதவனாய், நோய்களாலே சிறிதும் வருந்தாதவனாய், பலகலைகளினும் பயின்று வல்லனாய், 
நம்மிடத்து அன்புடையனாய்,  பதினாறு வயசுமாத்திரம் பெற்றவனாய் உள்ள ஒருபுதல்வனைத் தருவேமா?
உன்னெண்ணம் யாது? சொல்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 

    மிருகண்டு முனிவர் அவற்றை நன்காராய்ந்து துணிந்துகொண்டு, 'பெருங்கருணாநிதியே, 
வயசு குறுகினாலும், அறிவுடையனாய், உடற்குற்றம் சிறிதும் இல்லாதவனாய், எம்பெருமானே, 
உம்மிடத்து அன்புடையனாய், உள்ள ஒரு புதல்வனையே விரும்பினேன். தந்தருளுக' என்று 
விண்ணப்பஞ்செய்தார் . செய்தலும், சிவபெருமான் ' உனக்குச் சற்புத்திரனைத் தந்தேம்' என்று
திருவாய்மலர்ந்து, மறைந்தருளினார். மிருகண்டுமுனிவர் சிவபெருமானைத் துதித்துக்கொண்டு, 
மனமகிழ்ந்து, தஞ்சுற்றத்தாரோடும் காசியிற்றானே இருந்தார்.

    இவ்வாறிருக்கு நாளிலே, பூமியிலுள்ளோர் துன்பத்தினின்று நீங்கவும், சிவபுண்ணியம் ஓங்கவும், 
தவத்தையுடைய முனிவர்கள் உய்யவும், சற்சமயமாகிய வைதிக சைவம் வாழவும், இயமன் இறக்கவும், 
எம்பெருமானது திருவருளினாலே, மிருகண்டு முனிவருடைய பன்னியாகிய மருத்துவதியுடைய 
அருமைத் திருவயிற்றிலே ஒருகருப்பம் வந்தடைந்தது. அடைதலும், மிருகண்டு முனிவர் அதனை அறிந்து, 
அங்குள்ள சிவனடியார்கள் யாவருக்கும் வேண்டிய வேண்டியவாறே பலவளங்களையும் கொடுத்து 
மாசந்தோறும் செயற்பாலனவாகிய கடன்களைச் செய்துகொண்டிருந்தார். பங்குனி மாசத்திலே, 
இரேவதி நக்ஷத்திரத்திலே, மிதுன லக்கினத்திலே, சுக்கிரனும் குருவும் உச்சத்தானத்தில் இருப்ப, 
சூரியன் முதலிய மற்றைக் கிரகங்கள் நட்பும் ஆட்சியும் ஆகிய தானங்களில் இருப்ப, ஒரு சற்புத்திரர் 
*திருவவதாரஞ்செய்தார். அப்பொழுது, சுற்றத்தார்கள் இரத்தினங்களையும், பொன்னையும், 
பொற்சுண்ணத்தையும், நறுமலரையும், மகரந்தத்தையும், கலவைச்சாந்தையும், கஸ்தூரிச் சேற்றையும் 
இடந்தோறும் வீசி ஆர்த்தார்கள்.

* இவருடைய திருவவதார காலத்தையுணர்த்தும் "மீனமு முடிந்த நாளும்" என்னுஞ் செய்யுட்கு 
வேறு பொருள்கள் கூறுவாறுமுளர்.

    தேவதுந்துபிகள் ஒலித்தன. மும்மூர்த்திகளல்லாத மற்றையாவரும் ஆசி செய்தார்கள். 
திருக்காசி நகரமன்றி உலகமெல்லாம் களிப்புற்றன. தந்தையாராகிய மிருகண்டு முனிவர் கங்கா நதியிலே 
ஸ்நானஞ்செய்து, பிராமணர் முதலியோர்கட்கெல்லாம் தானம் கொடுத்து, சாதகர்மம் முதலியனவற்றைச் 
செய்தார். பிரமதேவர் வந்து, அச்சற்புத்திரருக்கு 'மார்க்கண்டேயர்' என்று நாம கரணஞ்செய்தார். 
பிள்ளை மறுவற்ற சந்திரன் போல வளர்தலும், உபநிட்டானம் அன்னப்பிராசனம் முதலியவற்றைச் செய்து, 
ஒரு வருடத்திலே சௌௗகர்மமும், இரண்டாம் வருடத்திலே, கன்னவேதனமும் செய்தார். ஐந்தாம்வயசிலே 
உபநயனஞ்செய்து, வேதம் முதலிய கலைகளெல்லாவற்றையும் உணர்த்துவிக்க, மார்க்கண்டேய முனிவர் 
அவைகளின் மெய்ப்பொருளை உணர்ந்து, சிவபெருமானே அநாதிமுத்த சித்துருவாகிய முதற்கடவுள் 
என்று துணிந்து, அவருடைய திருவடிகளே புகலிடமாகக் கொண்டார். சிவபெருமானையும், அவருடைய 
அடியார்களையும், தங்குருவையும், முனிவர்களையும், தாய்தந்தையர்களையும், சிரத்தையோடு வழிபடுவாராய், 
பிரமசரியத்தை வழுவாது அனுட்டித்தார்.

    இவ்வாறு ஒழுகும்பொழுது, பதினாறுவயசு சென்றது. தாய் தந்தையர்கள் அதனை அறிந்து, 
தங்கள் குமாரரை நோக்கி, தனித்தனியே இருந்து கொண்டு, பெருந்துயர்க்கடலின் மூழ்கி, அழுது 
வருந்தினார்கள். மார்க்கண்டேயமுனிவர் அது கண்டு, அவர்களை அணுகி, அவர்கள் பாதங்களை 
வணங்கி, 'நீங்கள் துன்பமுறுகின்றீர்கள். இது என்னை ! இன்னும் யான் யாதுமொன்றறியேன். 
இனித் துன்பத்தை ஒழிமின்கள். உங்களிடத்து நிகழ்ந்தது யாது? சொல்லுங்கள்' என்றார். 

    தந்தையார் அது கேட்டு, 'மைந்தனே, நீ இருக்க, நாம் வேறொரு துன்பம் எய்தி மெலிவதும் உண்டோ! 
முன்னாளிலே சிவபெருமான் உனக்குப் பதினாறு வயசு என்று அருளிச்செய்தார். அது சென்றதனால்,
துன்பமுறுகின்றோம்' என்றார். உடனே மார்க்கண்டேயர் அவர்முகத்தை நோக்கி, 'நீங்கள் சிறிதும் 
இரங்கவேண்டாம். உயிர்க்குயிராய் எங்கும் நிறைந்த சிவபெருமானைப் பூசைசெய்து, இயமனுடைய 
வலியைக் கடந்து, உங்களிடத்து விரைந்து வந்தடைவேன். நீங்கள் இங்கிருங்கள்' என்று சொல்லி 
அவர்களைத் தேற்றி, அவர்கள் பாதங்களின் வீழ்ந்து வணங்கி நின்றார். நிற்க, தந்தை தாயர் இருவரும் 
அவரை மார்பில் அணைத்து, உச்சிமோந்து, முன்னை வருத்தநீங்கி, மனமகிழ்ந்தார்கள்.

    மார்க்கண்டேய முனிவர் இருமுதுகுரவர்களுடைய ஏவலினாலே, சிவ பெருமானது திருவருளும் 
தமக்கு அவர்மாட்டுள்ள அன்புமே உடனுறு துணையாய்ச் செல்ல, பெருமகிழ்ச்சி பொங்க, விரைந்து போய், 
மணிகன்னிகை என்னும் திருக்கோயிலிற் புகுந்தார். என்புகள் நெக்கு நெக்குருக, ஆனந்தவருவி பொழிய, 
சிவபெருமானை வலஞ்செய்து, திருமுன்னே வணங்கி, தென்றிசையின் ஒரிடத்து இருந்துகொண்டு, 
சிவலிங்கந் தாபித்து, பலநாள் அன்போடு பூசித்துத் துதித்து, அருந்தவஞ்செய்தார். அன்புவலையிற் 
படுவோராகிய சிவபெருமான் வெளிப்பட்டு, 'நீ அருந்தவமும் பூசையும் செய்கின்றாய். நாம் அவற்றில் 
மிக விருப்பம் அடைந்தேம். நீ விரும்பியது யாது? இனிச் சொல்வாயாக' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

     மார்க்கண்டேயமுனிவர் 'பரமபிதாவே, அநாதி மலமுத்தரே, சித்தும் அசித்துமாகிய 
பிரபஞ்சமெல்லாம் நிறைந்த மெய்யரே, யாவருக்கும் மேலானவரே, மெய்யடியார்களுடைய மலத்தை 
ஒழித்தருளும் கருணாநிதியே, அக்கினியை ஏந்திய திருக்கரத்தை உடையவரே, சிறியேன் இயமன் 
கைப்படாது உய்யும்பொருட்டு நீர் எதிர்வந்து அருளல்வேண்டும்' என்று விண்ணப்பஞ்செய்தார். 
செய்தலும், கிருபா சமுத்திரமாகிய எம்பெருமான் 'இயமனுக்கு அஞ்சாதே அஞ்சாதே' என்று 
திருவாய்மலர்ந்து, தம்முடை அருமைத் திருவடிகளிரண்டையும் மார்க்கண்டேய முனிவருடைய 
சிரசில் வைத்தருளினார். வைத்தருளலும், மார்க்கண்டேய முனிவர் 'இனி உய்ந்தேன் உய்ந்தேன்' 
என்று சொல்ல, சிவபெருமான் முன்போலச் சிவலிங்கத்தில் மறைந்து எழுந்தருளியிருந்தார்.

    அதன்பின்பு மார்க்கண்டேய முனிவருக்குப் பதினாறு வயசெல்லை செல்லலும், ஒரு யமதூதன் 
தோன்றி, சிவபூசையைக் கண்டு அஞ்சி 'நான் மார்க்கண்டரை அண்டுவது அரிது' என்று மீண்டு போய், 
இயமனை வணங்கி நின்று, 'இறைவனே, காசியிலே மார்க்கண்டேயன் எனப்பெயர் பெற்ற ஓர் பிராமணன் 
இருக்கின்றான். அவன் சிவபெருமானிடத்தே பதிந்த சிந்தையை உடையவன், அவருடைய திருவடிகள் 
பொருத்திய சிரசை உடையவன், எந்நாளும் அவருடைய திருப்புகழையே பேசும் நாவினை உடையவன், 
அவன் சிவபூசை செய்கின்றான். அப்பாலனை அணுக அஞ்சினேன், அவன்முன்னும் சென்றிலேன். 
அவன் சிவபெருமானிடத்து இருக்கின்றனன்' என்றான். 

    உடனே இயமன் மிகக்கோபங்கொண்டு, பெருமூச்செறிந்து, 'அச்சிறுவன் நாசமில்லாத முதற்கடவுளோ'
 என்றான். பின்பு 'நம்முடைய கணக்கர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள்' என்று பணிக்க, அங்கு நின்ற 
தூதனொருவன் ஓடிப்போய், 'எம்மரசன் அழைக்கின்றான். வாருங்கள்' என்று கூவ, அவர்கள் வந்து 
இயமனை வணங்கினார்கள். இயமன் 'காசியிலே சிவபூசை செய்துகொண்டிருக்கும் மார்க்கண்டேயன் 
என்னும் சிறுவனுக்கு வயசெல்லை சொல்லுங்கள்' என்றான். சித்திரகுத்தர் என்னும் கணக்கர்களிருவரும் 
தங்கள்கையினுள்ள கணக்கைப் பார்த்து, 'அரசனே,சிவபெருமான் முன்னாளிலே பதினாறு வயசு என்று 
எல்லைகூறினார். அவ்வெல்லை சென்றது. அச்சிறுவன் செய்த சிவபூசை தருமத்தின்பாலது. 

    பெருந்தவத்தையுடைய முனிவர்களாயினும் பொதுவாகாது தமக்கே சிறப்பாயுள்ள ஐசுவரியத்தை 
உடையர்களாயினும், அறிஞர்களாயினும், வலியர்களாயினும், விதியை வெல்ல வல்லவர் யாவர்! ஆதலால்,
அச்சிறுவன் சுவர்க்கம் அடைதற்கு உரியன். நரகத் துன்பத்திற்குத் தப்பினான். இதுவே அவனிலைமை' 
என்றார்கள். இயமன் கோபங்கொண்டு தன்மந்திரியாகிய காலனை விளித்து, 'காசியிலுள்ள 
மார்க்கண்டேயன் என்னும் பிராமணனை இங்கே கொண்டுவரக்கடவாய்' என்று பணித்தான். 
பணித்தலும், காலன் காசியை அடைந்து, மார்க்கண்டேய முனிவர் இருக்கும் இடத்தே போய், 
அவருடைய சிவபூசையையும் குறிப்பையும் கண்டு, 'இவர் வருவது எங்ஙனம்' என்று எண்ணி ஏங்கி, அவர்
கண்ணுக்குத் தெரியும்வண்ணம் சென்று அவரை வணங்கினான். 

    வணங்கலும், மார்க்கண்டேயமுனிவர் 'நீ யார்? சொல்' என்றார். காலன் அது கேட்டு, 'இயமனுக்கு 
அடிமை செய்கின்ற காலன் யான். இங்கு வந்த காரணம் யாதென்பீராயிற் சொல்வேன். உமக்குச் சிவபெருமான் 
அருளிச்செய்த பதினாறு வயசெல்லை நேற்றே சென்றது. இனி நீர் தென்புலத்திற்கு வருதல்வேண்டும். 
இது தடுக்குந் தன்மையதன்று. பிரமதேவருக்கும் அடுக்குந்தன்மையது, இது புதிதாகப் புகுந்ததன்று. 
படைத்தல் காத்தல்கள்போல, இயமன் அழித்தலும் சிவபெருமான் இட்ட பணியேயாம். ஆதலால், அவன் 
உம்மை அழைக்கின்றனன். அன்றியும் நீர் சிவபூசை செய்வதைப் பலரும் சொல்லக் கேட்டு, மனமகிழ்ந்து, 
உம்மைக் காண விரும்புகின்றான். அவன் அழித்தற்றொழில் உடையனாதலால், அவனைக் கொடியன் 
என்பர் அறிவிலார். 

    அவன் உயிர்களெல்லாவற்றிற்கும் முடிவிலே அவ்வவற்றின் செய்வினை குறித்து, முறைசெய்குவன். 
அதனால், அவனை நடுவன் என்றே உலகமெல்லாம் கூறும். நீர் மனசிலே யாதும் எண்ணாதொழிமின். 
நீர் இயமபுரத்துக்கு வருவீராயின், இயமன் உம்மை எதிர்கொண்டு வணங்கித் துதித்து, இன்சொற்சொல்லி, 
உமக்கு இந்திர பதத்தைத் தருவன். வாரும்' என்றான். மார்க்கண்டேய முனிவர் அது கேட்டலும், 'யாவருக்கும் 
இறைவராகிய சிவபெருமானை வழிபடும் அன்பர்கள் இந்திரலோகத்துக்கும் போகார்கள், உன்னோடு 
இயமலோகத்துக்கும் வாரார்கள். எவ்வுலகங்களுக்கும் மேலாகிய சிவலோகத்தை அடைந்து இனிது 
வாழ்ந்திருப்பார்கள். நானும் சிவபெருமானுடைய அடியார்க் கடியவன்.ஆதலால், உங்கள் யமலோகத்துக்கு 
வரேன். பிரம விட்டுணுக்களுடைய பதங்களையும் விரும்பேன். விரைந்து போய்விடு போய்விடு' என்றார். 
அது கேட்ட காலன் ‘நன்று', என்று சொல்லிக்கொண்டு போய், இயமனை வணங்கி, நிகழ்ந்தனவெல்லாம் சொன்னான்.

    அப்பொழுது இயமன் உளம் பதைபதைக்க, உடலமெங்கும் வெயர்க்க, கண்கள் கனல் பொழிய, 
புருவக்கடை நிமிரக் கோபங்கொண்டு, 'எருமைக்கடாவைக் கொண்டுவாருங்கள்' என்று பணித்தான். 
பணித்தலும், எருமைக்கடா வந்தது. வருதலும், இயமன் அதன்மேல் ஏறிக்கொண்டு, குடை நிழற்ற,
கொடி பிடிக்க, வீரர்கள் சூழ்ந்து துதிக்கச் சென்று, காசியை அடைந்து, மார்க்கண்டேய முனிவர் 
இருக்கும் இடத்தே போய், சிவந்த குஞ்சியும், கரிய சரீரமும், கோபத்தினால் அக்கினி சொலிக்கும் 
கண்களும், பிடித்த பாசமும், கையில் ஏந்திய தண்டமும், சூலமுமாய் எதிர்த்தான். 

    எதிர்த்தலும், மார்க்கண்டேயமுனிவர் 'இயமன் வந்து அணுகினான்' என்று சிந்தித்து, அவன் 
செய்கையை நோக்கி, எம்பெருமானுடைய திருவடிகளைத் துதித்து வணங்கினார். அப்பொழுது இயமன் 
'மைந்தனே, நீ யாதுநினைந்தாய்! யாது செய்தாய்! முன்னையூழின் முறைமையையும் சிவபெருமானது 
திருவாக்கையும் கடக்கலாமா? ஊழ்வலியைச் சிறிதும் ஆராய்ந்திலை. உறுதி ஒன்றும் அறிந்திலைபோலும், 
இறப்புப் பிறப்பென்பன யாவரும் பெறுகுவர். அது பேசல்வேண்டுமா! பெருந்தவத்தை உடையோர்க்கும் 
இயலாத இது இயலும் என்று துணிந்து இவ்வாறு இருத்தல் கற்றுணர்ந்த ஆடவருக்குத் தகுதியா! 

    நீ சிவபெருமானுடைய திருவடிகளிலே மிக்க அன்புடையை என்பது சத்தியம். ஆயினும், நீ நாடோறும் 
செய்யும் சிவபூசை உன்பாவத்தைப் போக்குவதன்றி, நான் வீசும் பாசத்தை விலக்கவும் வல்லதா! கடலினுள்ள 
மணலை எண்ணினும், ஆகாயத்துள்ள நக்ஷத்திரத்தை எண்ணினும்,என்னாணையால் இறந்த இந்திரர்களை 
எண்ணலாமா! இறந்தவர்களாகிய தேவர்களையும் அசுரர்களையும் சொல்லப் புகின், முடிவு பெறாது. 
அவ்வாறாக,மற்றையோரைச் சொல்லல் வேண்டுமா! பிறப்பிறப்புக்கள் பிரமனுக்கும் உண்டு, 
விட்டுணுவுக்கும் உண்டு, எனக்கும் உண்டு. இங்ஙனமாயின், உனக்கும் உண்டென்பது உரைத்தல் வேண்டுமா! 
நான் சிவபெருமானை முன்னே பூசைசெய்தமையால், அவர் எனக்கு அருளிச்செய்தவை இவ்வரசியலும், 
நான் ஏந்திய பாசமும் சூலமும் மழுவும் தண்டும். தேவர்கள் காப்பினும், படைத்தல் காத்தல் அழித்தல்கள் 
செய்யும் மும்மூர்த்திகள் காப்பினும், மற்றை வலியோர் யாவர் காப்பினும் காக்க. நான் உன்னுயிரை 
இன்று கொண்டன்றி மீள்வேனா! நீ துன்பங்கொள்ளாதே. சிவனடியாராயினும், முடிவு வந்தெய்தினால், 
அவரைத் தென்புலத்திற் சேர்த்துவேன். இது திண்ணம். இனி நீ என்பின் வருவாயாக' என்றான்

    மார்க்கண்டேயமுனிவர் அது கேட்டு, 'இயமனே, கேள். முடிவென்பது எம்பெருமானுடைய 
அடியார்களுக்கு இல்லை. உண்டாயினும், உன்னுலகத்துக்கு வாரார்கள், திருக்கைலாசமலைக்குப் 
போவார்கள். அவர்களுடைய தன்மையைச் சொல்வேன். கேள். அவர்கள் துறவிகளாயினும், 
இல்வாழ்க்கையர்களாயினும், முத்தியின்பத்தை அடைவர்கள். அவர்கள் பதி, பசு, பாசமென்னும் 
முப்பொருள்களின் இலக்கணத்தையும் அறிந்தவர்கள். அவர்கள் பிறவித்துன்பத்தினின்றும் நீங்கினவர்கள்.
அவர்களுடைய திருவடிகளைச் சேர்தலே பரபதஞ்சேர்தல். 

    அவர்கள் உன்னை மதியார்கள். தேவர்களை மதியார்கள், தேவேந்திரனை மதியார்கள், 
பிரமனை மதியார்கள். விட்டுணுவையும் மதியார்கள். சிவபெருமானுக்கும் அவருடைய திருவடியார்களுக்கும் 
வேற்றுமை கருதுதல் அறியாமையே என்று வேதங்களெல்லாம் சொல்லும் உண்மைப்பொருள் பொய்க்குமா, 
பொய்யாது. சிவனடியார்கள் செம்மையாகிய சிந்தையை உடையவர்கள், யாவரினும் சிறந்தவர்கள், 
பற்றற்றவர்கள், தம்மையும் துறந்து நின்றவர்கள், சீவன்முத்தராகி இம்மையினும் பேரின்பத்தை 
அனுபவிப்பவர்கள், இன்மையாவது யாண்டும் இல்லாதவர்கள், நன்மையென்பதே 'இயல்பாகப் 
பொருந்தினவர்கள். இவ்வியல்புடையவர்கள் சுவர்க்கமுதலிய புன்பொருள்களை விரும்புவார்களா, 
விரும்பார்கள். அவர்களுடைய தன்மையை யாவர் சொல்ல வல்லவர்! 

    அவர்களுடைய வன்மையை நீ சிறிதும் அறிந்திலை. உலகத்தாரைப் போல அவர்களையும் 
நினைந்தாய். அவர்களை அடைந்த என்னுயிருக்கும் தீங்கு நினைந்தாய். இவையெல்லாம் உன்னுயிரும் 
இத்தலைமையும் ஒழிதற்குக் காரணமன்றோ! தீயசொற்களை என்செவி கேட்கச் சொல்கின்றாய். 
மேல் நிகழ்வதனை அறிகின்றிலை. மூடனே மூடனே, நீ இங்கே நிற்கப் பெறுவாயோ! போ போ' என்றார்.

    மார்க்கண்டேய முனிவர் இவ்வாறு கூறக் கேட்ட இயமன் அக்கினி சொலிக்குங் கண்ணையுடையனாய், 
'என்னை நீ அச்சுறுத்துகின்றாய். வலியில்லாதவனே, நம்முயிரை இயமன் கைக்கொள்ள மாட்டான் 
என்று நினைந்தாய் போலும்' என்றான். இடியேறுபோல ஆர்த்தான். 'இவன் நேரே நின்றால் வாரான்' 
என்று நினைந்தான். நீலமலைபோல மார்க்கண்டேயர்முன் சென்றான். பாசத்தை வீசி ஈர்த்தான். 
அப்பொழுது மார்க்கண்டேய முனிவர் எம்பெருமானைத் துதித்துக்கொண்டு, அவருடைய நித்தியானந்த 
வடிவாகிய திருவடிநீழலைப் பிரியாது நின்றார். 'இனி இம்மைந்தன் இறந்தானன்றோ' என்று தேவர்களும் 
மயங்கினார்கள். 

    இயமன் கைப்பாசம் தங்கழுத்தின் உற்றும், இடர் சிறிதும் உறாத மார்க்கண்டேய முனிவர் முன்பு 
திரி புராந்தகராகிய முதற்கடவுள் 'மைந்தனே, உனது துன்பத்தைத் தீர்க்கின்றோம். நீ அஞ்சாதே அஞ்சாதே' 
என்று திருவாய் மலர்ந்துகொண்டு தோன்றியருளினார். 'மதத்தினால் மிக்க இவ்வியமன் நம்மைந்தனுடைய 
உயிரைக் கொள்ள நினைந்தான்' என்று திருவுளங்கொண்டு, கோபித்து, தமது இடப் பாதத்தினாலே அவனைச் 
சிறிதுதைத்தார். உதைத்தவுடனே இயமன் பூமியில் வீழ்ந்திறந்தான். அவன் பக்கத்து நின்ற சேனைகளும் 
அவன் வாகனமாகிய எருமைக்கடாவும் ஏங்கி வீழ்ந்திறந்தன.

    அந்தக் காலத்திலே 'எம்முயிரைக் காக்கச் சிவபெருமான் உண்டு. இயமன் வந்து யாது செய்வான்' 
என்று வடமொழியினாலே தோத்திரஞ் செய்துகொண்டு தனிநின்ற மார்க்கண்டேய முனிவரைக் 
காலகாலராகிய எம்பெருமான் கண்டு, திருவுள மகிழ்ந்து,'மைந்தனே,நீ நம்மை மெய்யன்போடு 
பூசை செய்தமையால், நாம் உனக்கு முடிவில்லாத ஆயுளைத் தந்தோம்' என்று திருவாய் மலர்ந்து, 
சிவலிங்கத்தின் மறைந்தருளினார். சிவ பெருமானுக்கு மார்க்கண்டேய முனிவரிடத்தும் 
இயமனிடத்தும் விருப்பும் வெறுப்பும் இல்லை. அறிஞர்கள்,ஆராயுங்கால், எம்பெருமான் செய்தவை 
முறையேயாம் என்று துணிவர்கள். 

    அங்கு நின்ற மார்க்கண்டேய முனிவர் எம்பெருமானுடைய திருவுருவத்தை அன்பினோடு 
தியானித்துக்கொண்டு, மணிகன்னிகை என்னும் திருக்கோயிலினுள்ளே சென்று, எம்பெருமானை 
வணங்கிக்கொண்டு போய், தம்மைக்குறித்துக் கண்ணீர் பெருகப் புலம்பி நையும் தந்தைதாயர்களைப் 
பணிந்து, அவர்களுடைய துயரமுழுதையும் மாற்றினார். அத்திருநகரத்திலே சிலநாள் இருந்து, 
பின்பு அங்குநின்று நீங்கி,சிவதலங்கள் யாவையும் பத்தியோடு வணங்கித் துதித்து, சீவன் முத்தராயினார். 
அவர் விண்ணுலகத்தினும் உளர், மண்ணுலகத்தினும் உளர், தம்மை விரும்பித் துதிப்போர்கள் 
கண்ணினும் உளர், கருத்தினும் உளர். அவர் செயல் நினைக்கற்பாலதுமன்று, சொல்லற்பாலதுமன்று, 
அவர் கண்ட பிரம கற்பங்களும் விட்டுணு கற்பங்களும் கணக்கில்லாதன.

    மார்க்கண்டேய முனிவருக்குத் துன்பஞ்செய்த இயமன் இறந்தமையால், பூமியின்கண் உள்ள 
உயிர்களெல்லாம் நெடுங்காலம் இறப்பின்றி வளர்ந்து பெருகின. ஆதலால், பூமிதேவி பாரம் பொறுக்க லாற்றாது, 
விட்டுணுவை வணங்கித் தன்றுன்பத்தை விண்ணப்பஞ் செய்தாள். விட்டுணுவும் பிரமதேவரும் இந்திரன் 
முதலிய தேவர்கள் யாவரோடும் திருக்கைலாச மலையை அடைந்து, சிவபெருமானை அன்போடு வணங்கித் 
துதித்தார்கள். துதித்தலும், கைலாசபதி விட்டுணுவை நோக்கி, 'நீங்கள் வந்ததென்னை' என்று திருவாய் 
மலர்ந்தருளினார். அதற்கு விட்டுணு 'எம்பெருமானே இங்குள்ள பிரமன் முதலிய தேவர்களெல்லாரும் நீர் 
விதித்தவாறே தங்கள் தங்கள் அரசியலை இதுகாறும் வழுவாது நடாத்தினார்கள். 

    எனக்கு நீர் விதித்தருளிய காவற்றொழிலை உமது திருவருளே துணையாக நாடோறும் வழுவாது 
செய்கின்றேன். இதற்கு ஓர் குறை எய்தியது. அதனை விண்ணப்பஞ்செய்வேன், கேட்டருளும். உமது திருவருளை 
நினையாமையினால் இயமன் இறந்துபோயினான். அதனாலே பூமியினுள்ள உயிர்கள் வளர்ந்து பெருகின. 
அவற்றைச் சுமக்கும் பூமிதேவி துன்புறுகின்றாள். அவள் துன்புற, உயிர்களெல்லாம் பிறந்து பிறந்து பின் 
இறவாமலே பெருகுமாயின் என்காவற்றொழில் என்படும்! என்படும்! அழித்தற்றொழிலுக்குத் தலைவர்
 ஒருவரும் இல்லை. நீர் கோபியாது இயமன் செய்த தீமையைப் பொறுத்து அவனை உயிர்ப்பித்தருளும். 
இதனை மறுக்காதொழியும்' என்று திருவடிகளை வணங்கி வேண்டினார். 

    அப்பொழுது சிவபெருமான் 'இயமனே எழும்பக்கடவாய்' என்று திருவாய் மலர்ந்தருளினார். 
அருளலும், இயமன் உயிர்பெற்று வந்து, கைலாசபதியை வணங்கி, 'எம்பெருமானே, உம்முடைய திருவடி 
படுதலினால் அடியேன் உய்ந்தேன்' என்று விண்ணப்பஞ் செய்தான். சிவபெருமான் இயமனை நோக்கி,
 'நம்முடைய சின்னங்களாகிய விபூதி ருத்திராக்ஷங்களைத் தரித்துக்கொண்டு நம்மைத் தியானிக்கும் 
அன்பர்களிடத்தே 'நான் இயமன்' என்று சொல்லி நீ போகாதே. நம்மடியார்களை மனிதர்களென்று 
எண்ணாது, நாமென்றே எண்ணக்கடவாய். அவர்களைக் கண்டால், அவர்கள் கால்களின் வீழ்ந்து 
வணங்கக்கடவாய்.  மனமொழிமெய்களாலே புண்ணிய பாவங்களைச் செய்யும் மற்றையோர்களைச் 
சுவர்க்கநரகத்தில் இருத்தக்கடவாய், என்று திருவாய்மலர்ந்து, 'உன் படையோடு போவாயாக' என்று 
பணித்தருளினார். 

    இயமன் சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, முன் இறந்த எருமைக்கடாவோடும் 
சேனைகளோடும் தென்புலத்தை அடைந்து, தன்னரசியலை நடாத்துவானாயினான். விட்டுணு முதலிய 
தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானை மும்முறை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
திருக்கைலாச மலையை நீங்கித் தங்கள் தங்கள் பதங்களை அடைந்தார்கள். இயமன் 'முன் போல் இன்னமும் 
யாது விளையுமோ' என்று மார்க்கண்டேய முனிவருடைய சரித்திரத்தை ஓதுவோர் முன்னும் செல்லுதற்கு அஞ்சுவன்.

    தவவலியினாலே, குச்சகமுனிவர் ஒரு பெண்ணுக்கு உயிர்கொடுத்தார், ஒரு யானையைத் தேவனாக்கிச் 
சுவர்க்க பதத்திருத்தினார், அவர் புதல்வராகிய மிருககண்டூய முனிவர் பிரமவிட்டுணு முதலியோர் புகழும் 
முதன்மையைப் பெற்றார், அவர் புதல்வராகிய மிருகண்டு முனிவர் ஒப்பில்லாத ஒரு சற்புத்திரரைப் பெற்றார், 
அவர் புதல்வராகிய மார்க்கண்டேய முனிவர் விதியைக் கடந்து இயமனது வலியை அகற்றி, ஓர்காலும் 
இறப்பில்லாதவராயினார். இது சத்தியமென்றறியக்கடவீர்கள். இன்னும் தவத்தின் பெருமையைச் சொல்வேன்" 
என்று காசிபமுனிவர் சொன்னார்.

            திருச்சிற்றம்பலம்.

            மாயையுபதேசப்படலம்.

    காசிப முனிவர் இவ்வாறு சொல்லலும், மாயை நகைத்துக் காசிப முனிவரை நோக்கி, "முனிவரரே, நீர் 
உண்மையாகிய உறுதியையே சொன்னீர். ஆயினும், முத்திவிருப்புடைய முனிவர்களுக்கன்றி நாம் பெற்ற 
சிறுவர்களுக்கு இவ்வாறு சொல்லலாமா! இவர்கள் பெருஞ்செல்வத்தையும், வெற்றியையும், இன்பத்தையும், 
அழிவில்லாத ஆயுளையும், பெரும்புகழையும், குற்றமற்ற வாழ்க்கையையும் அடைதல்வேண்டும். 
அவையெல்லாம் விரைவின் அடைதற்பொருட்டு இவர்களுக்கு உபாயம் சொல்லும்" என்றாள். அது கேட்ட 
காசிபமுனிவர் "இதுவா உனதெண்ணம்! நீயே அதனை இவர்களுக்குச் சொல்லக்கடவாய்" என்றார். 
மாயை தன்புதல்வர்களை நோக்கி, "இம்முனிவரர் சொல்லியது, உண்மையேயாயினும், உங்களுக்கு 
ஆவதன்று. நான் சொல்வேன்,கேளுங்கள்" என்று சொல்லலுற்றாள்:

    "அறிவினையுடைய உயிர்களுக்கெல்லாம் பிறவியால் ஆகும் பயன் கல்விப்பொருள் 
செல்வப்பொருள் என இரண்டாம். உயிரானது இவ்விரண்டனுள் ஒன்றை அடையாதாயின், அவ்வுயிரிலும் 
பேய்ப் பிறப்பே மிகப் பெருமையுடையது. இவ்விருபொருளின் வன்மையையும் அறிஞர்கள் ஆராய்வராயின், 
கல்விப்பொருளினும் செல்வப்பொருளே சிறந்ததெனத் துணிவர். கலைகளெல்லாவற்றையும் நெடுங்காலம் 
விடாது கற்றவராயினும், வறியராயின், செல்வத்தை வேண்டித் தம்பகைவரையும் பணிந்து நிற்பர். அளப்பில்லாத 
கல்வியையும் பலவகை வளங்களையுங் கொள்ளுதற்கும், அவற்றைக் குறையாது வளர்த்தற்கும், அணிசெய்தற்கும், 
கருவியாதலால், செல்வப்பொருளே மேலாயது. 

    கல்வியறிவின் மிகச்சிறந்தவரும் செல்வமுடையரல்லாக்கால், உலகம் அவரைக் குற்றத்துட்படுத்தும். 
கல்வியையே யன்றி மேன்மையையும், தருமத்தையும், புகழையும், வெற்றியையும், பிறவற்றையும், ஆக்கலால், 
செல்வத்திற் சிறந்தது பிறிதொன்றுமில்லை. ஒருவர் செல்வத்தைப் பெற விரும்புவராயின், ஊக்கம் உடையராகுக.
அஃதுடை யராகச் செல்வம் உண்டாகும். அவ்வூக்கத்திலே இடையறாது நிலைபெறுவராயின், பெருஞ்செல்வம் 
விரைந்தெய்தும். அச்செல்வம் பலவகைப்படும். அவையனைத்தையும் ஒருவரும் பெற்றிலர். நீங்கள் அவையனைத்தையும்
பெற முயலுங்கள். இதுவன்றி உங்களுக்கு உறுதி பிறிதில்லை. நீங்கள் எங்களிடத்து நேற்றிரவு பிறந்தமையால், 
நிருதகதியின ராயினீர்கள். 

    உங்களுக்குப் பகைவர்கள் தேவர்கள் யாவரும். அவர்கள் தங்கள் முயற்சியினாற் றானே தலைமை 
பெற்றவர்கள். நீங்கள் அவர்களினும் தலைமை பெறுவீர்கள் போலும். ஆக்கம் அடையும்பொருட்டு நீங்கள் 
மூவிரும் முயலுங்கள், முயலுமுறைமையை நான் எடுத்துச் சொல்வேன். இத்திசை ஆலந்தீவெனப் பெயர்பெறும். 
இவ்விடத்துக்கு நேரே போன உத்தரபூமி அசுரர்கள் தவஞ்செய்தற்கு ஏற்றது. நீங்கள் இப்பரிசனங்களோடு 
அப்பூமியிற்சென்று, வேள்வியின்பொருட்டுக் குண்டமுதலியன செய்து, நச்சுச்சமித்திட்டு, அக்கினி சொலிப்பித்து 
ஓமத்திரவியங்களையும், இரத்தங்களையும் மாமிசங்களையும், பிறவற்றையும் தூவி, தேவதேவராகிய 
சிவபெருமானைத் துதித்து, வேள்வியைப் பற்பகல் செய்யுங்கள். செய்வீர்களாயின், எம்பெருமான் அருளோடு 
வெளிப்பட்டு, நீங்கள் விரும்பிய அனைத்தையும் தந்தருளுவர். நீங்கள் மூவிரும் இவ்வேள்வியை முயறற்பொருட்டு 
அங்குச் சென்றவுடனே, அதற்கு அவ்விடத்து வேண்டும் பொருள்களனைத்தையும் வேறுவேறாக நான் தருவேன். 
போங்கள்' என்று சொல்லி, அவ்வேள்வி செய்யும் விதியையும், அதற்கு வேண்டும் மந்திரங்களையும், சூரன் 
முதலிய மூவருக்கும் உபதேசித்தாள். அப்பொழுது சூரன் தன்றம்பியர்களோடும் தாய்தந்தையர்களை 
வணங்கி விடைபெற்றுக்கொண்டு, புறப்பட்டான்

            திருச்சிற்றம்பலம்.


            மாயை நீங்குபடலம்.

    சூரன் முதலிய புதல்வர்கள் சென்றபொழுது, மாயை தன்பக்கத்திருந்த காசிபமுனிவரை நோக்கி, 
"இனி நான் புதல்வர்களைப் பேணும்பொருட்டுப் போகின்றேன். நீர் கவலாதிரும்'' என்று நிறுவிப் போயினாள்.
 போதலும், காசிபமுனிவர் அவண்மேல் வைத்த ஆசை செலுத்த அவள் பின்னே போய், நீ என்னை விட்டுப் 
போதல் நீதியோ" என்றார். அது கேட்ட மாயை ''முனிவரரே, வருந்தாதொழியும். நான் இங்கு வந்தது புத்திரர் 
பொருட்டன்றி, உம்மோடிருத்தற் பொருட்டன்று. நான் மாயை,அறிந்துகொள்ளும்" என்று மறைந்து போயினாள். 
உடனே அற்புதத்தின் அங்கு வந்த பொருள்களெல்லாம் மறைந்துபோயின. காசிப முனிவர் மாயையைக் 
காணாமையால், கவலைகொண்டு மதிமயங்கிப் பொருமி ஏங்கி நின்றார்.

    பிரமதேவர் தம்புதல்வராகிய காசிபமுனிவருடைய துயரத்தை அறிந்து, அங்கு வந்தார். வருதலும், 
காசிபமுனிவர் பிரமதேவரை வணங்கினார். பிரமதேவர் ஆசிகள் கூறி, "காசிபனே, நீ உன்னருந்தவத்தை 
விடுத்து மெலிவதென்னை? சொல்'' என்றார். காசிபமுனிவர் நிகழ்ந்தனவெல்லாம் விண்ணப்பஞ்செய்தார். 
பிரமதேவர் அது கேட்டு மனங்கூசி, தம்புதல்வரை நோக்கி, 'வேதமுதலிய கலைகளை ஓதியுணர்ந்த முனிவனே,
அறிவில்லாதார்போல நீ ஒரு பெண்பொருட்டு மையல்கொண்டு வருந்துகின்றாயோ! கள்ளெனவும் 
காமமெனவும் தீப்பொருள் இரண்டுண்டு. அவற்றுள், கள்ளு உண்டவழி அறிவைக் கெடுக்கும்; காமம் 
நினைந்தவழி உயிரையுங் கொல்லும். காமாக்கினி நினைப்பினும் சுடும், கேட்பினும் சுடும், அணைந்து 
தள்ளினும் சுடும். ஆதலால் அது கள்ளினுங் கொடியது. 

    பிறப்புக்களையும் வினைகளையும் விளைப்பது காமமேயாதலால், மெய்யுணர்வினாலே 
அக்காமநோயை ஒழித்தவரன்றோ முத்தியின்பத்தை அடைந்தவர். அறிஞர்கள் காமத்தை நெஞ்சினும் 
நினைப்பர்களா! நினைந்தவர்களை இம்மையிலே துன்பத்தழுத்தி,மேலே பெரும்பவக்கடலின் வீழ்த்தும். 
அதனால் காமம் நஞ்சினுந் தீயது. ஆதலால், காமமுற்று வருந்தாதே. நீ புணர்ந்த பெண்ணும் வஞ்சகத்தையுடைய 
மாயை. நீ தீமை செய்தாய். அது தீரும்பொருட்டு முன்போலத் தவஞ்செய்யக்கடவாய்'' என்று அவருள்ளத்தைத் 
தேற்றி, அவரை அங்கு நிறுவிப் போயினார். காசிபமுனிவர் தமது தந்தையாருடைய வாய்மையினாலே தேறி, 
மையனோய் நீங்கி, வினையினின்று நீங்கும்பொருட்டுச் சிவபெருமானைச் சிந்தித்துத் தவஞ்செய்வாராயினார். 
அங்கு நின்று நீங்கிய மாயை தன் புதல்வர்கள் யாகஞ்செய்யும்பொழுது வேண்டியவற்றைக் கொடுக்கும் 
பொருட்டுச் சுக்கிரனுடைய ஏவலினாலே சிவபெருமானைத் துதித்துப் பெருந்தவஞ்செய்தாள்.

            திருச்சிற்றம்பலம்.

            அசுரர்யாகப்படலம். 

    தன்மாதாவாகிய மாயையினுடைய ஏவலினாலே யாகஞ்செய்யக் கருதிப் புறப்பட்ட சூரன் 
தன்றம்பியர்களை நோக்கி, "நாம் யாகஞ்செய்யும் பொருட்டு வடதிசைக்குச் செல்லும்பொழுது, நீங்களிருவிரும் 
நமது சேனையின் கடையினும் தலையினும் காவலாய்ச் செல்லுங்கள்'' என்று பணித்தான். பணித்தலும், சூரனை 
வணங்கி, தாரகாசுரன் "அடியேன் சேனைக்கடையிலே செல்வேன்'" என்றான்; சிங்கமுகாசுரன் "அடியேன் 
சேனைத்தலையிலே செல்வேன்" என்றான். தம்பியரிருவரும் இவ்வாறு கூறித் தமையனிடத்து விடைபெற்றுக் கொண்டு, 
தாங்கூறியவாறே போயினார்கள். அவர்கள் பணியினாலே சேனைவெள்ளம் பதினாயிரம் யோசனை யெல்லை 
ஆகாயத்தினும் பூமியினும் கலந்து, வடதிசைநோக்கி ஆர்த்துச் சென்றது. செல்லலும், பூமிதேவி ஆற்றாது வருந்தினள், 
ஆதிசேடன் நாகர்களோடும் அயர்ந்தனன். திக்கியானைகளும் குலமலைகளும் மேருமலையும் சலித்தன, 
ஆதிகூர்மமும் வருந்தியது, இந்திரன் முதலிய திக்குப்பாலகர்கள் எண்மரும் அஞ்சி நடுநடுங்கினார்கள். 
அசுரசேனை வெள்ளத்தின் முன்னணியிலே சிங்கமுகாசுரனும், பின்னணியிலே தாரகாசுரனும் செல்ல 
நடுவே சூரன் சென்றான். 

    அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன் அவர்களைக் காண நினைந்து, விமானமேற்கொண்டு 
வந்தணுகி, அவர்களுடைய விரைவையும், வலியையும், ஊக்கத்தையும் கண்டு, நடுங்கினார். நடுங்கி, 
"இவ்வசுரர்களுடைய கடுந்திறலைக் கண்டேன். முன்னே அசுரர்கள் அளப்பில்லாதவர்களைப் பார்த்தேன். 
இது சிவபெருமானுடைய திருவருளின் வண்ணமோ! இவர்களுக்கு நிகராவார் ஒருவர் உண்டோ!  
தங்களை எதிர்ந்த பகைவர்களுடைய ஊனையும் உயிரையும் ஒருங்குண்ணும் இவ்வசுரர்களுக்கு 
இந்திரனோடும் விட்டுணுவோடும் ஏனையரோடும் பொருது வெல்லல் ஒருபொருளாமோ! 

    இவர்களுடைய வன்மைக்கு இறுதி இல்லையாயினும், முன்னோர்களைப்போலத் தவவலியும் 
வரமும் படைக்கலங்களும் பெற்றிலர்கள். ஐயோ இவர்களுக்கும் குறையுளதாயிற்றே! இயமனைக் கடந்த 
தனியாற்றல் கொண்டுற்ற சிவபெருமானொருவருக்கே குறை கண்டிலம். மற்றைத் தேவருக்கும் யாவருக்கும் 
ஒவ்வோர் குறை உண்டு. அது யாவரும் அறிகுவர். இவ்வசுரர்களிடத்துள்ள குறை, சிலநாட் டவஞ் செய்வாராயின், 
ஒழிந்துவிடும். இது திண்ணம். தவத்தால் இழிந்தோரும் உயருவர். விசுவாமித்திரரே இதற்குச் சான்று" என்று 
இவ்வாறு பலவுங்கூறி நின்று, தாம் சூரபன்மன் முன் செல்லவும் முகமன் கூறவும் நினைந்தார். 

    நினைந்து, சூரபன்மன் முன் செல்லலருமையை நோக்கி உயிர்களை வசிகரிக்கும் ஓர்மந்திரத்தை 
விதிமுறையே சிந்தித்துக்கொண்டு, எதிர் சென்று, சேனைக் கடலினடுவே புகுந்தார். அவருடைய மாயமாகிய 
அக்கினியினாலே அசுரர்கள் தங்கள் வன்னெஞ்சமாகிய இரும்பு உருகப்பெற்று, அவரைக் கை தொழுதார்கள். 
சுக்கிரன் சூரன்முன் போய், " சூரபன்மனே ! நீ இந்திரன் முதலியோர் யாவருக்கும் மேலாகக்கடவாய். 
அசுரர்களுடைய துயரநோய்க்கு ஏலாதிகடுகமென்னும் மருந்து போலாகக்கடவாய்' என்று ஆசி சொன்னார்.

    அது கேட்ட சூரன் இந்திரலோகத்துள்ளீரோ! அதனின் மேலாய உலகங்களினுள்ளீரோ? 
பூலோகத்துள்ளீரோ? நாகலோகத்துள்ளீரோ? நீர் யார்? இங்கு வந்ததென்னை? உம்மிடத்தே என்மனம் உருகுகின்றது. 
அஃதன்றி என்புகளும் உருகுகின்றன. என்னை அறியாது அன்பு உதிக்கின்றது. அருந்தவஞ் செய்யும்பொருட்டு 
வனத்திற்குப் போதற்குக் கால்களும் எழுகின்றில. நீர் நன்னேயத்தோடு வந்தீர். உயிர்களெல்லாவற்றையும் 
அன்னைபோலக் காத்தருளும் இயல்புடையீர் போலும். இவ்வியல்புடைய உம்மை இப்பொழுது நான் எதிர்ந்தது 
முற்பிறப்பிலே வருந்திச் செய்த தவவலியானன்றோ " என்றான். 

    சுக்கிரன் அது கேட்டு "நான் ஆகாய நெறியிற்செல்வேன். உன்குலத்துக்கெல்லாங் குருவானேன் .
என்பெயர் சுக்கிரன். நான் உனக்கு ஒருறுதி சொல்லும்பொருட்டு வந்தேன்'' என்றார். சூரன் அது கேட்டு, 
மிக்க உவகையை யுடையனாகி,  "சுவாமீ, நான்  உய்ந்தேன்" என்று சொல்லி, சுக்கிரனை அணுகி நின்று 
கைதொழுது துதித்தான். துதித்தலும், சுக்கிரன் சூரனை நோக்கி,  அரசனே,  நீ தவஞ்செய்யும் பொழுது 
பகைவர்கள் ஊறு செய்வர்கள். அது உன்னை அணுகாவண்ணம் ஒருபாயம் சொல்வோம்" என்று சொல்லி, 
சிவ பெருமானுடைய மந்திரமொன்றை அவனுக்கு விதிப்படி உபதேசித்தார். 

    உபதேசித்து, "நீ நாடோறும் இம்மந்திரத்தைச் செபித்துக்கொண்டு, கொலை களவு காமம் பொய் 
முதலிய தீமைகள் சாராவண்ணம் ஐம்பொறிகளை அடக்கித் தவத்தைச் செய்யக்கடவாய்" என்று செவியறிவுறுத்தார். 
அப்பொழுது சூரன் சுக்கிரனுடைய பாதங்களை வணங்கி, "சுவாமீ, அடியேன் இப்பணியைச் செய்வேன்" என்றான். 
சுக்கிரன் அளப்பில்லாத ஆசிகளைக் கூறி, மீண்டு போயினார்.

    சூரபன்பன் அசுரர்கள் சூழ வடபுலத்தில் விரைந்து சென்று, அங்குள்ள ஆலவனத்தில் ஓர்பக்கத்தை 
அடைந்தான். அங்கே யாகஞ்செய்தற் பொருட்டுப் பதினாயிரம் யோசனைப் பரப்பை உள்வைத்து, அதனைச் 
சூழ அசுரர்களைக்கொண்டு மலைகளினாலே மதில்செய்வித்து, அதனைச் சூழ அளப்பில்லாத சேனைகளை 
அரணமாக நிறுவி,நான்கு திக்கினும் வாயில் செய்வித்தான். அவ்வாயில்கடோறும் காவல்செய்யும்பொருட்டு 
வீரமடந்தையை மந்திரத்தினாற் கூவி நிறுவினான். மதிலைச் சுற்றிக் காவல்செய்தற்பொருட்டுப் பூதங்களையும் 
பிசாசுகளையும் காளிகளையும் மந்திரத்தாற் கூவி நிறுவினான். பின் வைரவர் குழாத்தை மந்திரத்தாற் கூவி 
வணங்கி, யாகத்தைக் காக்கும்பொருட்டு வைத்தான். 

    மதிலினுள்ளே நடுவே ஆயிரம்யோசனை அகலமும் ஆயிரம்யோசனை ஆழமுமுடைய  ஒரோம குண்டமும் ,
அதனைச் சூழ நூற்றெட்டு ஓமகுண்டமும், அவற்றைச் சூழ ஆயிரத்தெட்டு ஓமகுண்டமும் செய்வித்தான். இவ்வாறு 
செய்வித்தபின்பு, யாகத்துக்கு உரிய உபகரணங்களை வேண்டி மாயையை நினைந்தான். நினைதலும், சிவபிரானது 
திருவருளினாலே மாயையானவள் சிங்கம் புலி யாளி கரடி யானை குதிரை ஆட்டுக்கடா முதலிய 
மிருகங்களின் மாமிசம், இரத்தம், எண்ணெய், நெய், பால், தயிர், மது ,கடுகு மிளகு முதலிய வெய்ய திரவியங்கள், 
நெய்யன்னம், யாகப்பசுக்கள், செந்நெலரிசி, அரிசனங்கலந்த அரிசி, மலர், கஸ்தூரி முதலிய சுகந்தம், 
சுருக்குச்சுருவம், தருப்பை, நெற்பொரி, முதிரைவர்க்கம், நச்சுச்சமித்து, கொள்கலங்கள் முதலியவற்றையும், 
ஒரு வச்சிர கம்பத்தையும் வருவித்து, மூவாயிரம் யோசனைப்பரப்பை அவற்றால் நிறைத்து, மீண்டனள்.

    அது கண்ட சூரபன்மன் யாகஞ்செய்யத் தொடங்கி, நடுவேதியின் மத்தியிலே வச்சிரகம்பத்தை 
நிறுவினான். மதிலின் நாற்றிசை வாயிறோறும் போய், வீரமடந்தையைச் சிந்தித்துப் பூசித்து, மாமிசபலி 
கொடுத்தான். மதினடுவினுள்ள பூதங்களுக்கும் பிசாசுகளுக்கும் பலிகொடுத்தான். ஆயிரத்தெட்டுக் 
குண்டங்கடோறும் நச்சு விறகிட்டு அக்கினி மூட்டி, தன்றம்பியர்களோடும் சிவபிரானது திருநாமத்தை 
உச்சரித்து, அவி கொடுத்தான். பின்பு தாரகனை நோக்கி, "நீ சிறிதும் தாழ்க்காது இவ்வேதிதோறும் 
சென்று சென்று, வேள்வியை உலவாது செய்யக்கடவாய்" என்று பணித்து, அவனை நிறுவி, அப்பாற்சென்றான். 

    சென்று நூற்றெட்டு வேதிகளை அடைந்து, முன்னையவற்றிற்போல அவற்றினும் வேள்வி செய்து, 
சிங்கமுகனை நோக்கி, "நீ இங்கு நின்று இவ்வேள்வியைச் செய்யக்கடவாய்'' என்று பணித்து, அவனை நிறுவி, 
அப்பாற் சென்றான். சென்று, நடுவேதியை அடைந்து, சிவபெருமானைத் தியானித்து, விதிப்படி பூசித்து, 
தன்யாகத்தைச் செய்வானாயினான். நச்சு விறகுத் துண்டங்களை ஓமகுண்டத்துள் இட்டு, நச்சுமரத்தினாகிய     
தீக்கடை கோலால் ஆக்கிய அக்கினியை இட்டுச் சொலிப்பித்து, அவ்வக்கினியிலே நெய்யை மந்திரத்தோடு     
சொரிந்தான். அதன்பின் மாமிசத்துண்டங்களையும் உதிரத்தையும் இட்டான். அன்னத்தை இட்டான். 
நெய்யையும், எண்ணெயையும், இரத்தத்தையும்,பாலையும், தயிரையும் விடுத்தான். நெற்பொரியை இட்டான். 
ஈற்றிலே தேனையும் கள்ளையும் சிந்தினான். தோரைநெல், மலைநெல், குளநெல், தினை, இறுங்கு, எள், 
முதிரைவர்க்கம் முதலியவற்றை உய்த்தான். நெய்யைச் சிந்தினான். கடுகு மிளகு முதலிய வெய்ய பொருள்கள் 
பலவற்றையும் இட்டான். நெய்யைச் சொரிந்தான். இவ்வாறே சிவபிரானைச் சிந்தித்துக்கொண்டு சூரபன்மன் 
வீரயாகஞ்செய்தலும், ஓமாக்கினி மிகச்சொலித்தெழுந்து, திசைகளையும் மேலுலகங்களையும் சுட்டது.

    சூரபன்மன் வீரயாகஞ்செய்தலைப் பிரமா விட்டுணு இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் 
கேள்வியுற்று, அஞ்சி நடுநடுங்கிப் பெருந் துயர்க்கடலின் அமிழ்ந்தினார்கள். இவ்வாறே சூரன் தன்னிளைஞர்களோடும் 
பதினாயிரம்வருடம் யாகஞ்செய்தான். செய்தும், சிவபெருமான் எழுந்தருளிவந்திலர். அதனாலே சூரன் "எம்பெருமான் 
இச்செயலுக்கு எழுந்தருளிவருவரோ'' என்று சொல்லி, அத்தொழிலைத் தன்றம்பியர்களிடத்தே பணித்து, தான் 
ஆகாயத்திற்சென்று, அங்கு நின்றுகொண்டு, வாளினாலே தன்சரீரத்துள்ள தசைகளனைத்தையும் அரிந்தரிந்து, 
ஓமாக்கினியிலே சிந்தி, இரத்தத்தை நெய்போலச் சொரிந்தான். தன்சரீரத்துள்ள தசைகள், அரியவரிய, முன்போல 
வளர்ந்தன. வளர்தலும், அது கண்டு விம்மிதங்கொண்டு, யாவரும் அஞ்சும்படி உரப்பிப் பெருமகிழ்ச்சியுடையனாய், 
"இச்செயல் எம்பெருமான் அன்புசெய்யுந் தன்மையதோ" என்றெண்ணிப் பின்னும் ஆயிரம் வருஷம் ஆகாயத்தில் 
நின்று தன்சரீரத்தினுள்ள தசைகளையரிந்து ஓமாக்கினியிற் சிந்தி யாகஞ்செய்தான். 

    செய்தும் சிவபெருமான் எழுந்தருளி வந்திலர். சூரபன்மன் அதனால் மனம் வருந்தி "இனி நான் 
மாண்டுபோவதே தகுதி' என்று உறுதிசெய்து, அக்கினியினாலே சூழப்பட்டதாய் அதனால் எரியாமல் 
ஆதிகுண்டத்திற் பொருந்திய வச்சிரகம்பத்தின்மேலே குதித்து, விரைந்து அதனுச்சியினின்றும் 
உருவி அடியிற் சென்று, எரிந்து சாம்பராயினான்.

    இதனைக்கண்ட சிங்கமுகன் மனம் பதைத்து, இரத்தக்கண்ணீர் விட்டழுது, வேள்வித்தொழிலை மறந்து, 
தன்னுயிர் உண்டோ வில்லையோ வென்று சொல்லும்படி யொடுங்கத் துயர்க்கடலுளாழ்ந்து, அறிவழிந்து
 மலைபோல விழுந்து, பின் ஒருவாறு அறிவுண்டாகப் பெற்றுப் பதைபதைத்துச் சுழன்று பெருமூச்செறிந்து, 
வாய்திறந்து புலம்புவானாயினான்.

    "மாயையினுடைய புத்திரனே, காசிப முனிவருடைய அன்புள்ள குமாரனே, அசுரகுலத்துக் கிறைவனே, 
யான் உன்னை உடம்போடு காணேன்! எங்கே யொளித்தாய்! தீய யாகத்தைப் பலநாட்செய்து பெற்ற பேறிதுவோ?
 தாயும் நீ; தந்தையும் நீ; அசுரர்களைக் காப்பாற்றும் அரசனும் நீ; எங்கள் உயிரும் நீ; என்று எண்ணியிருந்தோம். 
நீ அதனை நினையாதிறந்தாயே! மாய்கின்ற சிறியோர்க்கு இங்கே யாதாயினும் பற்றுண்டோ! வீரனே, 
அசுரர்களுக்குள் மேலானவனே, மிக்க புகழையுடைய சூரனே, உன்னைப் போல இந்த வேள்வியை அநேகநாட் 
செய்தவர் யாவர்! அன்பில்லாமல் எங்களை அகன்று போயினையே! முப்புரங்களையும் எரித்த வன்கண்ணராகிய 
பரமசிவன் உன்னிடத்து அன்பில்லாமையை யறியாது அவரைக் குறித்தோ யாகஞ் செய்தாய்! அவர் அதற்காகவோ 
உன்னுயிரையும் கவர்ந்தார்! உன்னைப்போல உயிரைவிட்டு உயர்வாகிய யாகத்தைச் செய்தவரும், 
பரமசிவனைப்போல அதற்கு அருள்செய்யாத பெரியோரும், இவைகளைக் கண்டு என்னைப்போல 
உயிரோடிருந்தவர்களும் இல்லை! 

    இம்மூவருள் வன்கண்ணர் ஆர் ஐயா! 'இவர்கள் யாகத்தைச் செய்து சிவபெருமானுடைய திருவருளினால் 
வலிமையைப் பெற்று நமது உயிரையும் செல்வங்களையும் நீக்குவார்கள்' என்று நமக்குப் பயந்திருந்த இந்திரனும் 
மனக்கவலை தீர்ந்தது இன்றைக்குத் தானோ! எல்லாரும் போற்றும்படி யாகத்தைச் செய்து பல்லாயிரநாட் பழகி 
நமக்கும் இதனைச் சொல்லாமலிறந்தாய், இவர் துணைவராய் நம்மோடு கூட வரமாட்டாரென்றெண்ணினையோ! 
எல்லாருங் காண வச்சிரகம்பத்தில் விழுந்துருவி அக்கினியில் எரிந்திறந்தாய். மிக்க வன்கண்மை பூண்டாய். 
உன்னுடம்பையுமொளித்தாய். புலம்பும் யாங்கள் இறந்தாயினும் உன்முகத்தைக் காண்போமோ" என்று இவை 
போல்வனவற்றைச் சொல்லித் தாய்ப்பசுவைக் காணாத கன்றைப்போலச் சிங்கமுகன் வீழ்ந்தழுதான். 

    அதனைக் கண்ட தாரகனும் கைகளையுதறி அரற்றி வீழ்ந்து, பெரு மூச்சுவிட்டு வேள்விக்களமுற்றும் 
புரண்டு, துதிக்கையால் நிலத்தைப் புடைத்துத், துயர்க்கடலுளாழ்ந்து புலம்பினான். இப்படிச் சிங்கமுகாசுரனுந் 
தாரகாசுரனுந் தங்கள் தமையன் இறந்ததுகண்டு புலம்ப, அதுகண்ட அவுணர்களும் கடல்போலப் புலம்பினார்கள்.

    இப்படி இவர்கள் எல்லாரும் புலம்புமொலியை இந்திரன் கேட்டு, சூரபன்மன் யாகாக்கினியில் 
வீழ்ந்திறந்தமையை ஒற்றுவராலறிந்து, துன்ப மெல்லாம் நீங்கி மிகுந்த மகிழ்ச்சியையுடையனாய், தேவர்கள் 
சூழ ஐராவத யானையில் ஏறி அவுணர்களுடைய துன்பத்தைக் காணும்படி ஆகாயத்தில் வந்து, நகைத்து, தன்னுடைய 
தவத்தை எண்ணி, இரங்குகின்ற அசுரர்களைக் கண்ணாரக்கண்டு களிப்புற்று நின்றான். அவுணர்களோடு மிகுந்த 
துயர்க்கடலுள் ஆழுகின்ற சிங்கமுகன் "என்னுயிர்போன்ற தமையன் இறக்க நான் உயிரோடிருக்கலாமா" என்று 
எண்ணி எழுந்து தன் ஆயிரந் தலைகளையும் வாளினால் அறுத்து, வீரம்பேசி, தன்றமையனுடைய ஆதிகுண்டத் 
தக்கினியில் இட்டான். இட இட அவை முன்போல வளர்தலும், பின்னும் அத்தொழிலைச் செய்துகொண்டு நின்றான். 

    அதனைக்கண்ட தாரகன் தன் தலையையும் அறுத்து அவ்வக்கினியில் இட இட அதுவும் முன்போல
 வளர்ந்தது. இவ்விருவருடைய செயலைக்கண்ட அவுணர்களிற் சிலர் தங்கள் சிரங்களையும் அறுத்து 
அவ்வக்கினியில் இட்டார்கள்; சிலர் அவ்வக்கினியில் வீழ்ந்து இறந்தார்கள். சிங்கமுகனும் அக்கினியில் 
வீழத்துணிந்து, ஆகாயத்தில் எழுந்து போம்படி எண்ணினான்.

            திருச்சிற்றம்பலம்.

            வரம்பெறுபடலம்.

    சிவபெருமான் அதனையறிந்து, ஒருவிருத்தப் பிராமண வேடங் கொண்டு தண்டைக் கையிலூன்றிக் 
கொண்டு வேதிகைக் கணித்தாகப் போய்ச், சிங்கமுகனைப் பார்த்து, "இங்கே நீங்கள் எல்லீரும் இரங்குகின்றீர்கள்; 
உங்கள் வரலாற்றைச் சொல்லுங்கள்'' என்றார். சிங்கமுகன் "பிதாவையொத்த இவர் எங்கள் துயரைக் கண்டு 
வந்து வினாவுகின்றார். இவர் அருள் சேர்ந்த மனத்தையுடையவர்' என்று எண்ணி, அக்கடவுளுடைய திருவடிகளில் 
வீழ்ந்து வணங்கியெழுந்து, "எங்களுடைய வரலாற்றையும் எங்களுடைய துன்பத்தின் வரலாற்றையும் சொல்லுவேன்" 
என்று சொல்லுகின்றான்:

    எங்கள் தந்தை காசிபமுனிவர். தாய் மாயை என்பவள். அவர்களுக்கு நாங்கள் மூன்றுபுத்திரர்கள். 
எங்களோடு பிறந்த புத்திரர்கள் இன்னும்  பலர் உளர். நாங்கள் மூவரும் எங்கள் தாயினுடைய ஏவலினாலே 
சிவபெருமானை நோக்கி இந்தவனத்திலே தவத்தைச் செய்தோம். பலவாண்டு தவஞ் செய்தும் சிவபெருமான் 
அருள் செய்திலர். எங்கள் தமையனாகிய சூரபன்மன் ஆகாயத்திற் போய் வாட்படையினாலே தன்னுடம்பிலுள்ள 
தசையை அறுத்து யாகாக்கினியிலிட்டான். இட இட அத்தசை பின்னும்  முன்போல் வளருதலும், 
வச்சிர கம்பத்தினது தலையில் வீழ்ந்து உருவி அக்கினியிற் புகுந்து நீறாயினான். 

    அதனை யாங்கள் கண்டு மிகத் துன்புற்று வெருவிப் புலம்பி, எமதுயிரையும் ஒருங்குவிட நினைந்தோம். 
உம்மைக்கண்டு ஓரிறைப் பொழுது தாழ்த்தேம். ''இதுவே எங்கள் வரலாறும் துன்பத்தின் வரலாறும்" என்று 
சிங்கமுகன் கூறினான். பிராமணவடிவங் கொண்ட சிவபெருமான் அதனைக்கேட்டு, " நீவிரும் நுந்தமையனைப் போல 
இறவாவண்ணம் யாகாக்கினியினின்றும் இப்பொழுதே அவனை எழுவித்தருள் செய்கின்றோம். மிகுந்த 
சோகத்தை விடுதிர்" என்று அருளிச்செய்து, தேவ கங்கையை வரும்படி திருவுளஞ் செய்தார். 

    அக்கங்கை மிகவிரைந்துவந்து எம்பிரானுடைய திருவடிகளை வணங்கி, அவருடைய பணியினால் 
நடுக் குண்டத்தினிடையே புகுதலும், சூரபன்மன் ஆர்த்தெழுந்தான் , எழுதலும், சிங்கனும் தாரகனும் தரித்திரர் 
பெருஞ் செல்வம் பெற்றாற் போல மகிழ்ந்து, எல்லையில்லாத வலிமையைப் பொருந்தி, விரைந்தோடிச்சென்று
சூரபன்மனுடைய கால்களை வணங்கினர். அவுணர்கள் "நம்மரசன் வந்தான் வந்தான் " என்று கூறி, பூரண சந்திரனுடைய 
வரவைக் கண்ட சமுத்திரம்போல "வாழிய" வென்று துதித்து ஆர்த்தார்கள். இவைகளைப் பார்த்த தேவர்கள் 
மேகத்தின் வரவைக்கண்ட குயில்போல அஞ்சித் துன்பத்தோடு ஓடித்தம்மூரை அடைந்தார்கள்.

    தம்பியர்கள் இருவரும் இருமருங்கும் நிற்ப அசுரர்கள் வாழ்த்தச் சூரபன்மன் நிற்கும்போது, 
சிவபெருமான் பிராமண வேடத்தை மறைத்து, உமாதேவி பாகமும் முக்கண்ணும் நாற்றோளும் உடையராய் 
இடப வாகனத்தின் மேற்கொண்டு, தாமாந்தன்மையை அறிதற்குரிய திருவுருவத்தோடு தோன்றினார். 
சூரபன்மன் துணைவர்களோடு ஆராத பெருமகிழ்ச்சியினனாய்ப் பூமியில் விழுந்து வணங்கி யெழுந்து, 
பலமுறை துதித்து நின்றான். சிவபெருமான் அவனுடைய முகத்தைப் பார்த்து, "நெடுங்காலம் நம்மை 
நினைத்துப் பெரிய யாகத்தைச் செய்து இளைத்தாய். வேண்டும் வரம் என்னை? சொல்லுதி" என்று அருளிச் 
செய்தார், அவன் பிரமா முதலிய தேவர்களெல்லாரும் "இன்றே எங்கள் பெருமைகளெல்லாம் போயின"
 என்று இரங்கும்படி இதனைச் சொல்வான்:

    "இப்பிருதிவியிலுள்ள அண்டங்களெல்லாவற்றிற்கும் யான் அரசனாயிருத்தல் வேண்டும்; 
அவைகளைக் காத்தற்குரிய ஆஞ்ஞா சக்கரமும் வருதல் வேண்டும்; நினைத்தவுடனே அவைகளுக்கெல்லாம் 
செல்லுதற்கு வாகனங்களையும் உதவல் வேண்டும்; எப்பொழுதும் அழியாமலிருக்கின்ற உடம்பையும் 
எனக்கு ஈதல்வேண்டும்; விட்டுணு முதலிய தேவர்கள் போர் செய்தாலும் அவர்களை வெல்லும் பேராற்றலையும் பல 
படைக்கலங்களையும் உதவல் வேண்டும்; என்றும் அழியாமலிருக்கவும் வேண்டும்'' என்று வேண்டினான். 

    வேண்டுதலும், சிவபெருமான் 'பிருதிவியிலுள்ள ஆயிரகோடி அண்டங்களுள் ஆயிரத்தெட்டண்டங்களை 
நூற்றெட்டு யுகம் ஆளுக'' என்று அருள் செய்து, அவ்வண்டப் பரப்பெங்குஞ் செல்லும் வண்ணம் மிகுந்த 
வலியையுடைய இந்திர ஞாலமென்னுந் தேரையும் அவ்வண்டங்களை என்றும் பாதுகாக்கும்படி 
ஒராஞ்ஞா சக்கரத்தையும் சிங்க வாகனத்தையும் கொடுத்து, அன்று முதலாகத் தேவர்கள் எல்லாருக்கும் 
முதல்வனாகும் மேன்மையையும், தேவர்களையும் அசுரர்களையும் மற்றையோர்களையும் வெற்றிகொள்ளும் 
வலிமையையும், பாசுபதப்படை முதலிய தெய்வப்படைகளையும், எந்நாளும் அழியாமலிருக்கின்ற 
வச்சிர யாக்கையையும் ஈந்தருளினார். அதன்பின் கங்கையாற்றை விண்ணுலகத்துக்குச் செல்லும்படி 
அனுப்பி, அக்கங்கை யாகாக்கினியோடு கலந்தமையாற் பிறக்கும்படி பதினாயிரகோடி வெள்ளம் என்னும் 
எண்ணைக் கொண்ட கச ரத துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகளை உண்டாக்கிச் சூரபன்மனுக்குச் 
சேனைகளாகக் கொடுத்தார். 

    இப்படிச் சூரபன்மனுக் கருள் செய்தலும், அவனுடைய தம்பியர்கள் வந்து சிவபெருமானுடைய 
திருவடிகளை வணங்க; ''நீங்கள் உங்கள் தமையனாகிய சூரபன்மனுடைய இரண்டு தோள்களையும் போல் 
அவனுக்குத் துணையாக வீரத்தைப் பொருந்தி விளங்கி நூற்றெட்டுகம் சிறப்போடு வாழுதிர்; 
தேவர்களெல்லாரையும் புறங்காணுதிர்; தேவர்களெல்லாராலும் வணங்கப்படும் உங்கள் மூவரையும் 
நம்முடைய சத்தி யொன்றேயன்றி வேறு யாவர் வெல்லுபவர்" என்று அருளிச் செய்து, அழியாத தேர்களையும் 
பாசுபதப்படையையும் கொடுத்து, வேறு வேறாக அவர்களுக்கு மிகவும் அருள்செய்து, பரமசிவன் மறைந்தருளினார். 

            திருச்சிற்றம்பலம்.

             சுக்கிரனுபதேசப்படலம்.

    அப்பொழுது, அவுணர்கள் தம்மரசன் மிகுந்த வலிமையைப் பெற்றான் என்று எண்ணி, மிக்க 
வலியுடையர்களாய், முன்னுள்ள துன்பங்கள் நீங்கி மிக மகிழ்ந்து ஆர்த்து, ஏழுகடல்களும் மேருமலையைச் 
சூழ்வது போலச் சூரபன்மனைச் சூழ்ந்தார்கள். அவன் அவுணப் படைத்தலைவர்களுட் சிலரைப் பார்த்து, 
"இந்நாள்வரையும் நீவிர் க்ஷேமமுடையீர்களா' என்று வினாவி நல்லருளைச் செய்ய, அவர்கள் மகிழ்ந்து, 
'"சிவபிரானுண்டு .நீயுண்டு. எங்களுக்கு ஓர் குறையுண்டோ! நிலையாகிய செல்வத்தையும் சிறப்பையும் 
பெற்றோம். தாயுண்டாயிற் பிள்ளைகளுக்கோர் தளர்வு முண்டோ!'' என்றார்கள். இப்படிச் சொல்லுகின்ற 
அசுரர்கண்மாட்டுச் சூரபன்மன் அன்புடையனாய், தம்பியர் இருமருங்கும் ஆக நின்றான். 

    இதனைக்கண்ட தேவர்கள் "இந்த அசுரன் வலியனாயினான், இனி நாம் செய்வதென்னை?'' என்று 
உயிர்துறப்பார் போல அஞ்சி ஏங்கினார்கள். சேனைகளினடுவே சூரபன்மன் நிற்றலை முன்னைய அசுரர்கள் 
விருப்பினோடு பார்த்து  தம்மரசனோடு விமானத்திலேறி வந்து பூக்களைத்தூவி, புடைவைகளை வீசி, 
"சூரபன்மன் வாழ்க' என்று ஆசிகூறி, ஆடிப்பாடிப் பெருமகிழ்ச்சியை அடைந்து, இந்திரனுடைய 
மனத்துயரத்தை நோக்கினார்கள். சூரபன்மன் சிவானுக்கிரகத்தினால் யாகாக்கினியிலிருந்து தோன்றிய 
அளவிறந்த படைகளுக்கெல்லாம் பல அசுரர்களைத் தலைவர்களாக்கி, சேனைகள் மண்ணுலகத்திலும் 
விண்ணுலகத்திலும் திக்குக்களிலும் செல்ல, தம்பியரோடு யாகசாலையை நீங்கி, பிதாவாகிய காசிப 
முனிவரிடத்திற் சென்று வணங்கி, சிவபிரானிடத்தே தாம்பெற்ற வரங்களைச் சொல்லி, "இனி யாங்கள் 
செய்வது என்னை?" என்று வினாவினான். 

    காசிபமுனிவர் அதனை கேட்டு, "இந்திரனுடைய வாழ்வுக்கு முடிவு வந்ததோ! தேவர்களுக்குத்
 துன்பம் வந்ததோ! எங்கள் வேதாசாரந் தவறியதோ! சிவபெருமானுடைய திருவருள் இவ்வாறாயிற்றோ!" 
என்று உள்ளத்திலே உணர்ந்து, 'உங்கள் குரு சுக்கிராசாரியர். அவரிடத்தே போங்கள்; அவர் உங்களுக்கு 
இந்தச் செல்வங்கள் இடையறாதவண்ணம் விருத்தியாதற்கு வேண்டும் புத்திகளை நன்றாகப் போதிப்பார்" 
என்று விடைகொடுத்தனுப்பினார். சூரபன்மன் விடை பெற்றுக்கொண்டு சுக்கிராசாரியரை அடைய, 
அவர் இவனுடைய வரவை யறிந்து, சீடர் கூட்டத்தோடு எதிர்கொண்டார். 

    சூரபன்மன் சேனைகளுக்கு முன்னே போய்த் தம்பிமார்களோடு அவரை வணங்கினான்.
ஆசாரியர் ஆசி கூறித் தழுவி, தமது மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போயினார். சூரபன்மன் 
சேனைகளைக் காக்கும்படி தாரகனுக்குப் பணித்துச் சிங்கமுகனோடு செல்ல, சுக்கிரன் ஆசனங் 
கொடுத்திருக்கச்செய்து, சற்கார வசனங்களைக் கூறி, 'நீங்கள் என்னிடம் வந்த காரணம் என்னை' 
என்று வினாவினார். சூரபன்மன் தாங்கள் நெடுங்காலம் வீரயாகஞ் செய்ததும் சிவபெருமான் 
எழுந்தருளிவந்து வரங்களையும் அளவில்லாத வளங்களையும் தந்ததும், பின் காசிபமுனிவரிடத்தில் 
வந்ததும், அவர் தங்களுக்குச் சொல்லியதும் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி, 'நாங்கள் இனிச் 
செய்யத்தக்க நீதிகளெல்லாவற்றையும் ஆசாரியராகிய நீர் உபதேசிக்க வேண்டும்" என்று வேண்ட, 
அவர் சொல்வாராயினார்:

    "பாசமென்றும் பசுவென்றும் இவற்றிற்கு மேலாகிய பதியென்றும் முப்பொருள்கள் உண்டென்றும், 
நல்வினை தீவினை என வினைகள் இரண்டு என்றும், அவை யேதுவாகப் பிறப்பிறப்புக்களையும் 
இன்பதுன்பங்களையும் பசுக்கள் அடையும் என்றும், ஊழினாலே ஒருபிறப்பிலன்றி மறுபிறப்பிலும் 
அப்பசுக்கள் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் என்றும், அவைகள் அங்ஙனம் அனுபவிக்கும்பொழுது 
மேல் வருபிறப்புக்காக இருவினைகளை ஈட்டும் என்றும், அவ்விருவினைகளினால் அவைகள் மாறிமாறிப் 
பிறத்தலைப் பதியறிந்து அவ்வினைகளைத் தப்பாது கூட்டுவார் என்றும், பதியும் பசுக்களும் ஒன்றென்னில் 
அதனால் அப்பதிக்குக் குற்றம் உண்டாகும் என்றும் சிலர் கூறுவர். சூரபன்மனே, இதற்கு நாம் சொல்வோம் கேட்பாய்:

     பாசம் உண்டென்று சொல்லுதல் பொய். பதியும் பசுவும் இரண்டல்ல ஒன்றே. உற்பத்தி நாச மில்லாதவரும் 
மலரகிதரும் சோதிசொரூபருமாகிய சிவபெருமான் திருவிளையாட்டினால் இச்சை கொண்டு தமது மாயையினாலே 
பூதங்களையும் பிறவற்றையும் உண்டாக்கி மாயையாலாகிய உடம்புகடோறும் கடாகாயம் போலத் தாம் கலந்து நின்று, 
அவ்வுடம்புகள் அழியுங் காலத்திலே தாம் முன்போல இருப்பர். இவ்வாறே அச்சிவபெருமான் எக்காலமும் 
திருவிளையாடலைச் செய்வர். இருவினைகளும் அவற்றின் பயன்களாகிய இன்பதுன்பங்களும் பொய்யாம். 
முத்தியென்று ஒன்று உண்டென்பதும் அதற்காக முயலவேண்டும் என்பதும் பொய்யாம். பொறிகளும் புலன்களும் 
பொய்யாம். ஆகவே அவைகளைக் காணும் பசு மெய்யாகுமோ! புத்தியும் வாக்கும் வடிவமும் செயல்களும் பொய்யாம். 
செயல்கள் பொய்யாகும்போது, அச்செயல்களால் வரும் துன்ப இன்பங்கள் மெய்யாகுமோ! இல்லனவாகிய 
வினைப்பயன்களை உள்ளனவாகக் கொள்ளினும், அவைகள் உடம்பிற்கன்றி நிருமலராகிய சிவபெருமானைச் 
சாருமோ! பிறப்பதும் இறப்பதும் வினைகளைச் செய்வதும் சிவபெருமானுக்கில்லை. உற்று நோக்கும்போது 
இவைகள் உடம்பிற்கேயாம். 

    போவதும் வருவதும் ஆவதும் அழிவதும் வினைகளைச் செய்வதும் எண்ணில்லாத கடங்கடோறும் 
பொருந்திய ஆகாயங்களுக்கு ஆகுமோ! அதுபோல எங்கும் உயிர் தானேயாய்ப் பொருந்திநிற்கும். சிவன் 
வேறுபாடு சிறிதுமின்றி ஒரேதன்மையுடையராயிருப்பர்; இது உண்மை என்று அறி. 'தருமம் நமக்குத் துணையாகும். 
அதனைச் செய்வது நன்று' என்று செய்வதும், 'பாவம் தீது அதனைச் செய்யலாகாது' என்று அஞ்சுகின்றதும் 
அறிவின்மையாம். யாது யாது செய்யும்படி நேர்ந்ததோ அதனை அதனை இது தீது இது நன்று எனச் சிந்தை
செய்யாது அவையெல்லாம் கடவுளுடைய மாயை என்று எண்ணிச் செய்தலே முறைமை. 'தருமத்தைச் செய்க.
 பாவத்தைச் செய்யாதொழிக' என்று சில மூடர் சொல்வர். இவ்விரண்டையும் யார் செய்தாலும் மேலே 
வருவதொன்றுமில்லை. மாயம் வித்தாகுமோ! கனவிலே நாம் இன்பமடையவும் துன்பமடையவும் கண்டவைகளை 
நனவிலே கண்டதில்லை. 

    அவை போல இப்பிறப்பிற் செய்யும் புண்ணிய பாவங்கள் மறுபிறப்பிற் பயன்படுதலில்லை. 
மறுபிறப்பொன்றிருந்தாலல்லவா இப்பிறப்பிற் செய்யும் இருவினைப்பயன் அனுபவிக்கப்படும். அம் மறுபிறப்பென்பது 
பொய்மையே. ஆதலால் அப்பொய்யில் உண்டாவது மெய்யாகுமோ! இத்தன்மைகளை யெல்லாம் பிறரறிவாரேயெனின் 
யாம் அடைந்த மேன்மைகளையெல்லாம் அப்போதே அடைவர். இவைகள் உறுதியாகக் கொண்டால் உண்மையாயிருக்கும். 
சிலரைச் சிறியர் என்றும் சிலரைப் பெரியர் என்றும் எண்ணுவது தகுதியன்று. 'உயிர்கள் எல்லாம் ஒன்றே' என்று 
அறிதல்வேண்டும். இது உண்மையே. இவைகள் ஞானிகள் அறியத்தக்க நுண்பொருள்களாம். இனி உங்களுக்கேற்ற 
வண்மைகளையும் வழக்கங்களையும் சொல்வோம்.கேட்பாய்: 

    தேவர்களினும் விட்டுணு முதலாகிய மற்றை எவர்களினும் மேலாகிய அரசுரிமையும் வெற்றியும் ஆணையும் 
அழியாத செல்வங்களும் உனக்கு வந்தன. இந்த மேன்மையினால் உன்னை நீயே பிரமமென்று தெளிகுதி. 
பிரமா முதலிய தேவர்களை மேலோரென்று எண்ணாதே, வணங்காதே. தேவர்கள் உங்களுக்குப் பகைவர். 
அவர்களுடைய செல்வங்களை அழித்துத் தண்டிப்பாய். இந்திரனென்பவன் தேவராசன். அவனே முன்னை
 நாளில் அளவிறந்த அவுணர்களுடைய உயிரைக் கவர்ந்தான். அவன் தப்பி ஓடாவண்ணம் விரைந்து 
அவனைப்பிடித்து விலங்கிட்டுச் சிறையில் வை, பல  தீமைகளையுஞ் செய். முனிவர்களையும் தேவர்களையும் 
திக்குப்பாலகர்களையும் ஏவல் கொள்ளுதி. அவர்களுடைய பதங்களை அவுணர்களுக்குக் கொடு.  கொலை களவு 
காமம் வஞ்சமெல்லாவற்றையும் உறுதியென்று செய். அதனால் உனக்கு வருந் தீதொன்றுமில்லை. அவைகளைச் 
செய்யாயாயின் விரும்பியவையெல்லாம் ஒருங்கு வாரா, உனக்கெவர் அஞ்சுவர்! சிவபெருமான் தந்த 
ஆயிரத்தெட் டண்டங்களையும் சேனைகளோடு இப்பொழுதே போய்ப் பார்த்துப் பார்த்து ஆங்காங்குச் செய்யும் 
கடன் முறைகளாகிய இறைமையைச் செய்து, எண்டிசையும் புகழும்படி மீண்டுவந்து இவ்வண்டத்தில் வீற்றிருப்பாய்." 
என்று சுக்கிராசாரியர் உபதேசித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            அண்டகோசப்படலம்.

    இவ்வாறாகிய தீய உபதேசத்தைச் சுக்கிராசாரியர் உபதேசித்தலும், சூரபன்மன் "இது நல்லது! ஆசாரியராகிய 
உம்முடைய பணியின்படி நிற்பேன். பரமசிவன் எனக்குத் தந்த ஆயிரத்தெட்டண்டங்களினிலைமைகளையும் நீர் சொல்லும்' 
என்றுகேட்ப அவர் சொல்வாராயினார்: "மூலப்பிரகிருதிக்கு மேலுள்ள அசுத்தமாயை சுத்தமாயையாகிய தத்துவங்களும் 
அவற்றிலே தோன்றுவனவும் நிற்க, இப்பால் அவற்றின் கீழுள்ள மூலப்பிரகிருதியிற் புத்தி தத்துவந் தோன்றும். 
அதில் அகங்கார தத்துவம் தோன்றும். அதில் சத்த முதலிய ஐம்புலன்களும் தோன்றும். அவற்றில் முறையே 
ஆகாசம் வாயு தேயு அப்பு பிருதிவி என்னும் ஐந்து தத்துவங்களும் தோன்றும். இவற்றுள் பிருதிவி தத்துவத்துக்கு 
ஆயிரகோடி அண்டங்கள் உள்ளன. அவை பொன்னிறமுடையனவாய்ப் பரந்திருக்கும்; ஒன்றற்கொன்று மேலுள்ளனவல்ல. 
இவ்வியல்பினவாகிய ஆயிரகோடி பிருதிவி யண்டங்களில் சூரபன்மனே நீ பெற்ற அண்டங்கள் ஆயிரத்தெட்டு. 
இவற்றுள் ஓரண்டத்தினியற்கையைச் சொல்லுகின்றேம் நன்கறிகுதி.

    கதிரெழு துகள் இருபத்து நான்கு கொண்டது ஒருமயிர்நுனி. மயிர்நுனி எட்டுக் கொண்டது ஒரு ஈர். 
ஈர் எட்டுக்கொண்டது ஒரு பேன். பேன் எட்டுக் கொண்டது ஒரு நெல்.நெல் எட்டுக் கொண்டது ஒரு அங்குலம். 
அங்குலம் இருபத்து நான்கு கொண்டது ஒரு முழம். முழம் நான்கு கொண்டது ஒரு தனு. தனு விரண்டு கொண்டது 
ஒரு தண்டம். தண்டம் இரண்டாயிரம் கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்கு கொண்டது ஒரு யோசனை. 
இப்படிப்பட்ட நூறுகோடி யோசனை தனித்தனி இந்த ஒரு அண்டத்தின் விசாலமும் உயர்ச்சியுமாம். ஒழிந்த 
பிருதிவியண்டங்களும் இந்த அளவையுடையன. பூமியின் மேற்பரப்புக்குக் கீழே ஐம்பதுகோடி யோசனையும், 
அதற்குமேலே ஐம்பதுகோடி யோசனையும், மேருமலையின் மத்தியிலிருந்து அண்டகடாகத்தினெல்லை வரையும் 
ஐம்பதுகோடி யோசனையுமாம். 

    கீழேயுள்ள அண்டகடாகம் ஒருகோடியோசனை. அதற்கு மேலே காலாக்கினி உருத்திரருடைய செம்பொற் 
கோயில் ஒருகோடி யோசனையும், அவருடைய அக்கினிச் சுவாலை பத்துக் கோடி யோசனையும், அதன் புகை ஐந்து 
கோடியோசனையும், அவருடைய சிங்காசனத்தினுயர்ச்சி ஆயிரம்யோசனையும், அதன் விசாலம் இரண்டாயிரம் 
யோசனையும், காலாக்கினி யுருத்திரருடைய அக்கினிமயமாகிய திரு மேனியினுயர்ச்சி பதினாயிர யோசனையுமாம். 
அவர் தம்மைப் போல்வாராகிய உருத்திரர் பதின்மரும் அவர்களுடைய பத்துக்கோடி பரிசனங்களும் தம்மைச் சூழ்ந்து 
சேவிக்க வாள் பரிசை வில் அம்பு என்னும் ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். ஆதிகூர்மம் அவரைத் துதித்துக்கொண்டு 
அந்தப் புவனத்திலிருக்கும். அதன்மேல் அடுக்குறு நிலைமையனவாகிய இருபத்தெட்டுக்கோடி நரகங்கள் உள்ளன. 
அவற்றின் உயர்ச்சி இருபத்தொன்பது கோடி யோசனை. அவற்றின் இடைவெளி பன்னிரண்டிலக்கம் யோசனை. 
அதன்மேல், கீழ்பாகம் மண்ணும் நடுப்பாகம் இரும்பும் மேல்பாகம் பசும்பொன்னும் மயமாகிய ஓர் புவனம் 
தொண்ணூற்றொன்பதிலக்கம் யோசனை உயர்ச்சியுடையதாயிருக்கும். 

    அம் மேல்பாகத்தில், கரியமுகத்தையும் சுழலுங் கண்களையும் காலாக்கினி போலும் திருமேனியையும் 
மழுப்படை பொருந்திய கையையுமுடைய கூர்மாண்ட வுருத்திரர் பொன்னாசனத்தில் வீற்றிருப்பர். அவரைச் சூழ்ந்து 
சேவித்துக் கொண்டிருக்கும் உருத்திரர் அளவில்லாதோர். இந்தக் கூர்மாண்ட புவனத்தின் மேலுள்ள ஆகாய வெளி 
ஒன்பதிலக்கம் யோசனை. அதன்மேலே சப்த பாதலங்களுள்ளன, பாதலம் ஒன்றற்கு ஒன்பதிலக்கம் யோசனையாக 
அவற்றினுயர்ச்சி அறுபத்து மூன்றிலக்கம் யோசனை. அவற்றின்மேலுள்ள கனிட்ட பாதலம் எட்டிலக்கம் யோசனை 
உயர்ச்சியுடையது. அப்பாதலங்களுக்குத் தனித்தனி அகற்சி பதினாயிரம் யோசனை. 

    அவை தனித்தனி மூன்றுபாகமுடையன .கீழ்பாகத்தில் அசுரரும், நடுப்பாகத்தில் நாகரும், மேல்பாகத்தில் 
அரக்கரும் இருப்பர். இப்பாதலத்துக்கு மேலுள்ள ஆடகேச வுருத்திரர் புவனம் ஒன்பதிலக்கம் யோசனை யுடையது. 
பாதலங்களுக்கெல்லாம் தலைவராய்ப் பாதுகாப்போர் இதிலுள்ள ஆடகேசவுருத்திரர். இவரைச் சேவிக்கும் சனங்கள் 
நாகரும் அவுணரும் அரக்கருமாம். இந்த ஆடகேசுர புவனத்தின் மேல் ஒரு கோடியே இருபதிலக்கம் யோசனை 
வெளியுண்டு. இதன்மேல் எட்டியானைகளாலும் எண்பெரும்பாம்புகளாலும் ஆதிசேடனாலுந் தாங்கப்படும் 
பூமியினுயர்ச்சி எண்பதிலக்கம் யோசனையாம். அண்ட கடாகமுதற் பூமியீறாக * ஐம்பதுகோடி யோசனையாம். 
இதனைக் கணித்தறிந்து  கொள்வாய்.

* காலாக்கினி யுருத்திரருடைய சிங்காசனவுயர்ச்சி ஆயிரயோசனையும், அவர் திருமேனியுயர்ச்சி பதினாயிர 
யோசனையும், அவருடைய திருமேனிச் சுவாலை பத்து கோடியோசனையுள் அடங்குதலால், அவ்விரண்டனையும் நீக்கி 
ஐம்பதுகோடி யோசனை கொள்க.
    
     பாதலங்கட் கெல்லாம் மேலாயுள்ள பூமியின் விரிவையும் அங்கேயுள்ளனவற்றையுஞ் சொல்வேன் 
சூரபன்மனே கேட்பாய். பூமியில் சம்புத்தீவு, சாகத்தீவு, குசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, கோமேதகத் தீவு, 
புட்கரத்தீவு என ஏழு தீவுகள் உள்ளன. உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல்,கருப்பஞ்சாற்றுக்கடல், 
தேன்கடல், சுத்தோதகக்கடல் என்னும் ஏழுகடல்கள் இத் தீவுகளை முறையே சூழ்ந்திருக்கும். சம்புத்தீவின் பரப்பும் 
அதனைச் சூழ்ந்த உவர்க்கடலின் பரப்பும் தனித்தனி ஓரிலக்கம் யோசனை. மற்றைத் தீவுகளுக்கும் கடல்களுக்கும் 
உள்ள பரப்பு முறையே இவற்றிலிருந்து ஒன்றற்கொன்று தனித்தனி இரட்டித்த யோசனை. அங்ஙனம் கணிக்கும்போது 
ஏழு தீவுகளுக்கும் கடல்களுக்கும் உள்ள பரப்பு இரண்டு கோடியே ஐம்பத்து நான்கிலக்கம் யோசனையாம். சுவர்ணபூமி 
இவற்றைச் சூழ்ந்திருக்கும். அதன் பரப்புப் பத்துக்கோடி யோசனை. அதனைச்சூழ்ந்த சக்கரவாளகிரியின் பரப்புப் 
பதினாயிர யோசனை. அதனைச் சூழ்ந்த புறவாழியின் பரப்பு ஒருகோடியே இருபத்தேழிலக்கம் யோசனை. 
அதனைச் சூழ்ந்த இருட்பூமியின் பரப்பு முப்பத்தைந்து கோடியே பத்தொன்பதிலக்கத்து நாற்பதினாயிரம் யோசனை. 
அதனைச் சூழ்ந்த அண்டச் சுவரின்கனம் ஒருகோடி யோசனை. இங்ஙனம் கணிக்கப் பூமியின் அகலம் * ஐம்பதுகோடி 
யோசனையாம். நாம் கூறிய இந்தக் கணிதத்தையுடையது ஒரு திசையே. இவ்வாறே மற்றைத் திசையையும் சேர்த்துக் 
கணிக்கில் பூமியின் அகலம் நூறுகோடி யோசனையாம்.

* பூமியின் மத்தியிலிருந்து கணிக்கவேண்டுதலால், ஏழுதீவுக்கும் நடுவிலுள்ள சம்புத் தீவின் பரப்பு ஓரிலக்கம் 
யோசனையில் ஐம்பதினாயிரம் யோசனையைக் கழிக்க ஐம்பதுகோடியாதல் அறிக.

    பிரமாவினுடைய வலப்புயத்திற் றோன்றிய சுவாயம்புவின் புத்திரனாகிய பிரியவிரதன் என்பான் 
இப்பூவுலக முழுதையும் ஆண்டான். அவனுக்கு அங்கிதீரன், மேதாதி, வபுட்டு, சோதிட்டு, துதிமான், அவ்வியன், சவநன் 
என ஏழு புத்திரரிருந்தனர். அவர் எழுவரும் முறையே சம்புத் தீவு முதலிய ஏழு தீவுகளையும் ஆண்டார்கள். 
சம்புத்தீவுக்கரசனாகிய அங்கிதீரன் தன்னுடைய புத்திரர்களாகிய பாரதன், கிம்புருடன், அரி, கேது மாலன்,
 பத்திராசுவன், இளாவிருதன், இரமியன், இரணியன், குரு என்னும் ஒன்பதின்மருக்கும் அத்தீவை ஒன்பது 
கண்டமாக்கிக் கொடுத்தான். மேருமலை சம்புத் தீவினடுவில் பூமிக்குமேலே எண்பத்து நாலாயிரம் யோசனை 
உயர்ந்தும், கீழே பதினாறாயிரம் யோசனை ஆழ்ந்தும், தலை முப்பத்தீராயிரம் யோசனையும் அடி பதினாறாயிரம் 
யோசனையும் அகன்றும் தாமரைப் பொகுட்டுப் போலிருக்கும்.

     அதில் மூன்று மேகலைகளுள்ளன. மேலுள்ள மேகலையிற் பல சிகரங்களிருக்கின்றன. அவற்றுள் 
நடுச்சிகரத்தில் பிரமாவின் புரமாகிய மனோவதியும், மேற்றிசைச் சிகரத்தில் விட்டுணுவின் புரமாகிய வைகுண்டமும், 
வடகீழ்த்திசைச் சிகரத்தில் பரமசிவனுடைய புரமாகிய சோதிட்கமும், இவற்றின் மருங்கே எட்டுத்திசைகளினுமுள்ள
சிகரங்களில் இந்திரன் முதலிய திக்குப்பாலகர் எண்மருடைய புரங்களுமிருக்கும். அம்மலையின் மருங்கில் 
தெற்கு முதல் வடக்களவும் நேர்மையான தேசமாய்ச் செவ்வே போகின்ற நெடிய குகையொன்றுள்ளது. சூரபன்மனே 
இதனை நினைப்பாய். அம்மேருமலையின் கீழ்த்திசையில் வெண்ணிற முடைய மந்தரமலையும், தெற்கில் 
பொன்னிறமுடைய கந்தமாதனமலையும், மேற்கில் நீலநிறமுடைய விபுலமலையும், வடக்கில் மாதுளம்பூ நிறமுடைய சுபார்சுவ 
மலையும் உள்ளன. இவற்றில் முறையே கடம்பும், நாவலும், அரசும் ஆலும்  நிற்கின்றன. நாவன் மரத்தினுயர்ச்சியும் பரப்பும் 
தனித்தனி இரண்டாயிரம் யோசனையும், மற்றை மூன்றுமரங்களினுயர்ச்சியும் பரப்பும் தனித்தனி ஆயிரம் 
யோசனையுமாம். மந்தரமலைக்குக் கிழக்கிலும், கந்தமாதனமலைக்குத் தெற்கிலும், விபுலை மலைக்கு மேற்கிலும், 
சுபார்சுவ மலைக்கு வடக்கிலும் முறையே அருணம் மானசம் அசிதோதம் மாமடு என்னும் நீர் நிலைகளும், முறையே 
இவற்றின் கிழக்குத் தெற்கு மேற்கு வடக்குத் திசைகளில் சயித்திரதம் நந்தனம் வைப்பிரசம் திருதாக்கியம் என்னும் 
வனங்களும், மேருமலைச் சாரலிற் பொருந்தும். மேருமலையின் தெற்கில் ஒரு நாவன்மரம் நின்ற காரணத்தாற்
பாரதவருட முற்றும் நாவலந்தீவென்னும் பெயர் பெற்றது. 

    இத்தருவின் பழச்சாறு ஆறாய் அம்மலையைச் சூழ்ந்து வடபாற் சென்று சாம்பூநதம் என்னும் 
பெயர் பெறும். அதனைப் பருகினோர் உடல முழுதும் பொன்மயமாய்ப் பதின்மூவாயிர மாண்டு வாழ்வர். 
நாற்றிசைகளினுமுள்ள மந்தர முதலிய மலைகளின் மேலகலம் தனித்தனி பதினாறாயிரம் யோசனையும், 
உயர்ச்சி தனித்தனி நாற்பத்தீராயிரம் யோசனையும், கீழ் அகலமும் ஆழமும் தனித்தனி எண்ணாயிரம் 
யோசனையுமாம். மேருவின் கிழக்கில் நீல நிறமுடைய மாலியவானும், தெற்கில் பதுமராக நிறமுடைய 
நிசதமும், பொன்னிறமுடைய ஏமகூடமும், பனி நிறமுடைய இமையமும், மேற்கில் 
பொன்னிறமுடைய கந்தமாதனமும், வடக்கில் நீல நிறமுடைய நீலமும் வெண்ணிறமுடைய சுவேதமும் 
சந்திரகாந்த நிறமுடைய சிருங்கமும், அதனைச் சூழ்ந்த எட்டுமலைகளாம். 

    முறையே கிழக்கிலும் மேற்கிலுமுள்ள மாலியவானும் கந்தமாதனமும் வடக்கில் நீலகிரியையும் 
தெற்கில் நிடதகிரியையுமுறத் தெற்குவடக்காகவும், தெற்கிலுள்ள நிஷதம் ஏமகூடம் இமையம் என்னும் 
மூன்றும் வடக்கிலுள்ள நீலம் சுவேதம் சிருங்கம் என்னும் மூன்றும் தனித்தனி கீழ்மேல் கடல்களைச் சாரக் 
கிழக்கு மேற்காகவும், நிற்கும். இவ்வெட்டு மலைகளும் தனித்தனி இரண்டாயிர யோசனை உயரமும், 
கந்தமாதனமும் மாலியவானும் தனித்தனி பதினாயிர யோசனை அகலமும், மற்றை ஆறுமலைகளும் 
தனித்தனி இரண்டாயிரயோசனை அகலமுமுடையனவாம். இனி, இச் சம்புத்தீவிலுள்ள நவகண்டங்களி 
னெல்லையைச் சொல்வோம்.

    வடகடல் முதற் சிருங்கமலை வரையும் குருவருடமும், சிருங்கமலை முதற் சுவேதமலைவரையும் இரணியவருடமும், 
சுவேதமலைக்கும் நீலமலைக்கும் நடு இரமியவருடமும், மேருமலையைச் சூழ்ந்த வருடம் இளாவிருதமும், 
மாலியவான் மலைமுதற் கீழ்கடல் வரையும் பத்திராசுவ வருடமும், கந்தமாதன மலைக்கும் மேல் கடலுக்கும் 
நடுக் கேதுமாலவருடமும்,நிடத மலைமுதல் ஏமகூடமலைவரையும் அரிவருடமும், ஏமகூடம் முதல் இமையம் 
வரையும் கிம்புருட வருடமும், தென்கடலுக்கும் இமையத்துக்கும்  நடுப் பாரதவருடமுமாம். கேதுமாலவருடமும் 
பத்திராசுவ வருடமும் தனித்தனி முப்பத்து நாலாயிரம் யோசனை விரிவும், ஒழிந்த ஏழு வருடங்களும்
 தனித்தனி ஒன்பதினாயிரம் யோசனை விரிவுமுள்ளன. பாரத வருட மொழிந்த மற்றை எட்டு வருடங்களும் 
தம்மிடத்து வசிப்பவர்க்குத் தேவருலகத்தை யொப்பனவாம். 

    குருவருடத்திலிருப்போர் ஓர் தாய்வயிற்றில் ஒரு பொழுதினுள் ஆணும் பெண்ணுமாய்ப் பிறந்து 
தம்முட் புணர்ந்து தேவதருவின் காய்கனிகளை யுண்டு பச்சை நிறமும் பதின்மூவாயிரம் வயசு முடையராய் 
வாழ்வர். அதன் வடபாகத்தில், படிக நிறமுடைய முனிவரும் சாரணரும் சித்தரும் வசிப்பர். அவர்க்கு வயசு 
பதின்மூவாயிரம். பத்திராசுவ வருடத்திலிருப்போர் செம்மைநிறமும் பதின்மூவாயிரம் வயசும் உடையர்; 
கனிகாய் புசிப்பர். இரணிய வருடத்திருப்போர் சந்திரன் போலும் நிறமும் பன்னீராயிரத் தைஞ்ஞூறு 
வயசு முடையர்; பழங்களைப் புசிப்பர். இரமிய வருடத்திலிருப்போர் கருங்குவளை மலர்போலும் நிறமும் 
பன்னீராயிரம் வயசுமுடையர்; ஆலம்பழம் புசிப்பர். இளாவிருத வருடத்திலிருப்போர் வெண்மை நிறமும் 
பன்னீராயிரம் வயசுமுடையர்; கருப்பஞ்சாற்றை யுண்பர். கேதுமால வருடத்திலிருப்போர் செங்கழுநீர்மலர் 
போலும் நிறமும் பதினாயிரம் வயசுமுடையர்; கண்டகிப் பழம் உண்பர். அரிவருடத்திலிருப்போர் சந்திரன்போலும் 
நிறமும் பதினாயிரம் வயசு கனிகாய் புசிப்பர். கிம்புருட வருடத்திலிருப்போர் வெண்ணி றமும் 
பதினாயிரம் வயசுமுடையர்; இத்திப்பழம் உண்பர். ஏமகூடத்துக்குத் தென்பாலும் இமையத்துக்கு வடபாலுமாகிய 
இக்கிம்புருடவருடத்தில், மேன்மை மிக்க திருக்கைலாசமலை நிற்கும். அதன்மீது சிவபெருமான் உமாதேவி சமேதராய் 
வீற்றிருப்பர். அம்மலை ஊழி காலத்தில் அண்டத்தின் அடிமுடியளவும் வளரும். 

    இந்த எட்டுக் கண்டங்களிலுமிருப்பவர் துன்பம் நோய் நரை திரை மூப்புக்களைச் சிறிதும் பொருந்தார். 
வலிமை நிறை அறிவு உடலம் ஆயுள் முயற்சி சீர் முதலிய எல்லாவற்றையும் கிருதயுகத்திற் போல மற்றை 
மூன்றுயுகங்களினும் அடைவர்; முன்பு பாரதவருடத்திற் பிறந்து செய்த நல்வினைப் பயன்களை அவைகளில் 
அனுபவிப்பர். அங்கே மழைபெய்யாது. 

    பாரத வருடத்திலிருப்பவர்கள் உழுது பயிர் செய்தும் மற்றும் பலவகைத் தொழில்கள் செய்தும் 
புண்ணிய பாவங்களையீட்டி, ஆதிபௌதிகம் ஆதிதைவிகம் ஆத்தியான்மிகம் என்னும் 
மூன்றினாலும் பெறற்பாலனவாகிய பயன்களைக் கொண்டு, ஈசுரனுடைய அருளினால் உய்வர். 

    பெருமை வலி சீர் அறிவு நிறை ஆயுள் உருவம் உண்டி செய்கை என்னுமிவைகளை யுகங்களுக்கேற்றபடி 
பெறுவர். மலைநென் முதலிய பயிரின் விளைவுகளையும் கனிகாய் கிழங்குகளையும் பிறவற்றையு முண்பர். மற்றை 
எட்டுக் கண்ட வாசிகளும் தேவர்களும் நரகவாசிகளும் பாரதவருடத்திற் போயிருந்து புண்ணிய பாவங்களைச் செய்து 
அவற்றிற் கேற்ற பயன்களை அனுபவிப்பர். ஆதலால், பாரதவருட மொன்றே நல்வினை தீவினைகளுக்கெல்லாம் 
காரணமாகிய இடமாம். முனிவர்களும் தேவர்களும் தமக்கேதும் குறையுண்டானால் அங்கே வந்து தவங்களையும் 
பூசைகளையுஞ் செய்து அவைகளை நீக்கிக் கொள்வர்.பாரதன் என்பவனுக்கு இந்திரன், கசேருகன், தாமிரபன்னன், 
கபத்தி, நாகன் , சவுமியன் , கந்தருவன், வருணன் என்னும் புத்திரர் எண்மரும், குமரி என்னும் ஒரு புத்திரியும் உளர். 
அவன் இவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆயிரம் யோசனையாகப் பாரதவருடத்தை ஒன்பது கண்டமாக்கிக் கொடுத்தான். 

    இவற்றுள், குமரிகண்ட மொழிந்த எட்டுக் கண்டங்களும் மிலேச்சரிடங்கள்; அவை வியப்பில்லன. கங்கை, 
கவுதமி, யமுனை, குமரி, வாணி, காவிரி, நர்மதை, பாலி, கம்பை, பம்பை, துங்கபத்திரை, குசை, கோமதி, 
பாஞ்சாலி, சூரி, சிகி, பாபகரை, தூதபாவை,சங்கவாகினி, சிகை, பாரத்துவாசி, சார்வரி, சந்திரபாகை,சரயு,
வேணி,பிங்கலை, குண்டலை, பொன்முகரி, பொருநை,வெஃகா, பெண்ணை முதலாகிய அநேக ஆறுகளையும், மகேந்திரம் 
மலையம் சையம் சத்திமான் விருட்சம் பாரியாத்திரம் விந்தம் என்னும் ஏழு மலைகளையும், காஞ்சி முதலிய முத்திநகரம் 
ஏழையும், சிவஸ்தலங்கள் ஆயிரத்தெட்டையும், பிராமணர்கள் வசிக்குந் தேயங்கள் பலவற்றையும், வேதாசார 
வொழுக்கத்தையும் பொருந்தி, மெய்நெறி சேர்ந்திருப்பது குமரி கண்ட மொன்றுமே. இவைகள் சம்புத்தீவின் இடங்களாம்.

    இதற்கப்பால், பாற்கடலாற் சூழப்பட்ட சாகத்தீவுளது. அதற்கரசன் பிரியவிரதனுடைய மகனாகிய மேதாதி 
என்பான். அவன் தன் குமாரர்களாகிய சாந்தவயன் சிசிரன் கோதயன் ஆனந்தன் சிவன் கேமகன் துருவன் என்னும் 
எழுவருக்கும் அவரவர் பெயரால் அத்தீவை ஏழுகண்டமாக்கிக் கொடுத்தான். அங்கே, சோமகம் சுமனம் சந்திரம் 
துந்துபி வப்பிராசனம் நாரதீயம் கோமதம் என்னும் ஏழு மலைகளும், சிவை விபாவை அமிர்தை சுகிர்தை மநுதத்தை 
சித்தி கிரமை என்னும் ஏழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் ஆரியரும் விந்தரும் குகுரரும். அவர்க்குத் தெய்வம் வாயுவாம்.

    இதற்கப்பால், தயிர்க்கடலாற் சூழப்பட்ட குசைத்தீவுளது. அதற்கரசன் பிரியவிரதனுடைய மகனாகிய வபுட்டு 
என்பான். அவன் தன் குமாரர்களாகிய சுப்பிரதன் உரோகிதன் தீரன் மூகன் சுவேதகன் சித்தியன் வைத்திதன் என்னும் 
எழுவர்க்கும் அவரவர் பெயரால் அத்தீவை ஏழு கண்டமாக்கிக் கொடுத்தான். அங்கே, உன்னதம் குமுதம் குமாரம் 
மேகம் சந்தகம் மகிடம் துரோணம் என்னும் ஏழு மலைகளும், சோனை வெள்ளி மதி தோமை நேத்திரை விமோசனை 
விருத்தி என்னும் ஏழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் தர்ப்பகர் கபிலர் சாரணர் நீலர் தண்டர் விதண்டகர் 
எனப்படுவோர். அவர்க்குத் தெய்வம் வாயுவாம்.

    இதற்கப்பால், நெய்க்கடலாற் சூழப்பட்ட கிரவுஞ்சத்தீவுளது. அதற்கரசன் பிரியவிரதனுடைய மகனாகிய 
சோதிட்டு என்பான். அவன் தன் குமாரர்களாகிய சாரணன் கபிலன் கிருதி கீர்த்தி வேணுமான் இலம்பகன் உற்பிதன் 
என்னும் எழுவர்க்கும் அவரவர் பெயரால் அத்தீவை ஏழுகண்டமாக்கிக் கொடுத்தான். அங்கே, குசேசயம் அரி 
வித்துருமம் புஷ்பாவருத்தம் இமம் துதிமானம் மந்தரம் என்னும் ஏழுமலைகளும், சிவை விதூதபாவை இமை 
புனிதை பூரணை சர்வபாபகரை தம்பை என்னும் ஏழுநதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் தபதர் சடாவகர் 
மந்தேகர் அநேகர் எனப்படுவோர். அவர்க்குத் தெய்வம் பிரமாவாம்.

    இதற்கப்பால், கருப்பஞ்சாற்றுக் கடலாற் சூழப்பட்ட சான்மலித் தீவாம். அதற்கரசன் துதிமான் என்பான். 
அவன் தன் குமாரர்களாகிய குசலன் வெய்யவன் தேவன் முனி அந்தகாரன் மனோரதன் துந்துபி என்னும் 
எழுவர்க்கும் அத்தீவை ஏழுகூறாக்கிக் கொடுத்தான். அத்தீவில் திமிரம் சுரபி வாமனம் விருத்தம் துந்துபி 
சம்மியத்தடம் புண்டரீகம் என்னும் ஏழுமலைகளும், குமுதை கவரி யாதி யாமை புண்டரிகை மனோபமை
சந்தியை என்னும் ஏழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் புட்கலாதர் புட்கரர் தனியர் சிசிரர் எனப்படுவோர். 
அவர்க்குக் கடவுள் சிவபெருமானாம்.

    இதற்கப்பால், தேன்கடலாற் சூழப்பட்ட கோமேதகத் தீவாம். அதற்கரசன் அவ்வியன் என்பான். 
அவன் தன் குமாரர்களாகிய விமோசனன் மோகன் சகலன் சோமன் சுகுமாரன் குமாரன் மரீசகன் என்னும் 
எழுவர்க்கும் அத்தீவை எழு கூறாக்கிக் கொடுத்தான். அத்தீவில் சிங்கம் அத்தம் உதயம் சலகம் கிரவுஞ்சம் 
ஆம்பிகேயம் இரமியம் என்னும் ஏழு மலைகளும், அயாதி தேனு கபத்தி சுகுமாரி குமாரி இக்ஷு மாயை என்னும் 
ஏழுநதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் மந்தகர் ஆமங்கர் மாகதர் மானசர் எனப்படுவோர். அவர்க்குத் 
தெய்வம் சந்திரனாம்.

    இதற்கப்பால், சுத்தோதகக் கடலாற் சூழப்பட்ட புட்கரத்தீவாம். அதற்கரசன் சவனன் என்பான். 
அவன் தன் குமாரர்களாகிய தாதகி மாபீதன் என்னும் இருவர்க்கும் அத்தீவை இருகூறாக்கிக் கொடுத்தான். 
அத்தீவில் இடபம் மகேந்திரம் வருணம் வராகம் நீலம் இந்திரம் மந்திரியம் என்னும் ஏழுமலைகளும், 
குடிலை சிவை உமை தரணி சுமனை சிங்கை குமரி என்னும் எழு நதிகளும் உள்ளன. அங்கு வாழ்வோர் நகரரும் 
நாகரும் எனப்படுவோர். அவர்க்குத் தெய்வம் சூரியனாம். இப்புட்கரத்தீவின் முடிவில் மானசோத்தரமென்னும் 
மலை ஐம்பதினாயிரயோசனை யுயர்ச்சியுடையதாய்ச் சகடக்கால்போல வளைந்து நிற்கும். 

    அதின் கீழ்த்திசை முதலிய எட்டுத்திசைகளினும் முறையே இந்திரன் முதலிய திக்குப்பாலகர் 
எண்மருக்கும் நகரங்கள் உள்ளன. இவ்வாறே ஒவ்வொரு கடல்களின் முடிவிலும் ஒவ்வோர் மலைகள் 
அவற்றைச் சூழ்ந்து நிற்பனவாம். சாகத்தீவு முதலிய ஆறு தீவுகளிலுமிருப்பார்க்கு நரை திரை மூப்புத் 
துன்பங்களில்லை; கலியுகத்தினும் கிம்புருட கண்டத்தவர்களைப் போலப் பொன்னிறமுடைமை 
முதலிய குணங்களோடு பதினாயிரம் வருடமிருப்பர். மானசோத்தரமென்னுமலையைச் சூழ்ந்து பொற்பூமியும் 
அதனைச் சூழ்ந்து மாணிக்க ரத்தினநிறமுடைய சக்கரவாளகிரியுமுள்ளன. அம்மலையின் உட்பக்கம் ஒளியும் 
வெளிப்பக்கம் இருட்படலமுமாயிருக்கும். அதில் வசிப்போர் இயக்கரும் இராக்கதரும் பேய்களுமாம். 

    திக்குப்பாலகர்களும் மேருவிலே தத்தமக்குரிய திசைகளிலிருத்தல்போல அம்மலையிலிருப்பர். 
சக்கரவாளகிரிக்கப்பாற் பெரும்புறக்கடலும், அதற்கப்பால் இருட்பூமியும். அதற்கப்பால் அண்டச் சுவருமுள்ளன. 
தம்முயிரை வலியவிட்டவரும் ஞானமென்பது சிறிதுமில்லாதோரும் அவ்விருட்பூமியிற் கிடந்துழல்வர். 
அண்டச்சுவரின் அணிமையில் அநாதிக்கடவுளாகிய பரமசிவன் வீற்றிருக்கின்ற மஹாகைலாசபர்வதம்
 இருக்கின்றது. அங்கே சிவகணங்கள் வசிக்கும். சம்புத்தீவு முதலாக அண்டச்சுவர்காறும் பூவுலகம் 
என்று பெரியோர் சொல்லுவர்.

    இப்பூமியின்மேல், கணரும் குய்யகரும் தசவாயுக்களும் சத்தமேகங்களும் கிம்புருடரும் கருடரும் 
சித்தர்களும் விஞ்சையர்களும் தேவகங்கையும் வழங்குமிடங்கள் முறையே ஒன்றற்கொன்று மேலுள்ளன. 
சத்தமேகங்களுள் ஒவ்வொன்றை முப்பதினாயிரகோடி மேகங்கள் சூழும். இதன்மேற் சூரியலோகம் பூமியிலிருந்து 
ஒரிலக்கம் யோசனையிலுள்ளது. அதில் சூரியனுடன் முப்பத்துமுக்கோடி தேவர்கள் சஞ்சரிப்பார்கள். 
அதன்மேல் ஓரிலக்கம் யோசனையிற் சந்திரலோகமும், அதன்மேல் ஓரிலக்கம் யோசனையில் நக்ஷத்திர 
லோகமும்,அதன்மேல் தனித்தனி இரண்டாயிரம்யோசனையில் முறையே புதன் சுக்கிரன் செவ்வாய் 
வியாழன் சனி என்னும் இவர்களுடைய உலகங்களும் உள்ளன. அதன்மேல் சத்த முனிவருடைய வுலகமும், 
துருவனுடைய உலகமும், ஒவ்வோரிலக்க யோசனையில் ஒன்றற்கொன்று மேலுள்ளன. 

    இதுகாறும் புவர்லோகம் எனப் படும். இங்கே எழுவகையாகிய மருத்துக்களும் வசிப்பர். 
இப்புவர்லோகத்தின் உன்னதம் பதினைந்திலக்கம் யோசனையாம். அதன்மீது சுவர்லோகம் எண்பத்தைந்திலக்கம் 
யோசனையிலுள்ளது. அதில் தேவர்களும் பிறருந் துதிக்க இந்திரன் வீற்றிருந்தரசு புரிவன். அப்பால் மகலோகம் 
இரண்டுகோடி யோசனையிலுள்ளது. அதில் மார்க்கண்டர் முதலிய முனிவர்களிருப்பார்கள். அதன்மேல் சனலோகம் 
எட்டுக்கோடி யோசனையிலிருக்கும் அதிற் பிதிர்தேவர்கள் இருப்பர். அதன்மேல் தவலோகம் பன்னிரண்டு
கோடியோசனையிலிருக்கும். அதில் சனகர் முதலிய மகாமுனிவர்கள் இருப்பார்கள். 

    அதன்மேற் சத்தியவுலகம் பதினாறுகோடி யோசனையிலுள்ளது. அது பிரமதேவரிருந்து படைப்புத்தொழில் 
செய்யுந்தானமாம். அதன்மேல் பிரமலோகம் மூன்றுகோடி யோசனையிலும், விட்டுணுலோகம் மூன்றுகோடி யோசனையிலும், 
சிவலோகம் நான்குகோடி யோசனையிலும், முறையே ஒன்றற்கொன்று மேலுள்ளனவாம். அதன்மேல் அண்டகோளகை 
கோடியோசனை உயரமுடையது. *இந்த அண்டத்தில் நூற்றெட்டுப் புவனங்கள் சிவபெருமானுடைய திருவருளை அடைந்த 
உருத்திரர்களுடைய தானங்களாம்

*பூமிமுதல் அண்டகோளகைவரையும் ஐம்பதுகோடியோசனையாதல் காண்க

     வேதாகமங்களும் அவற்றின் சார்புநூல்களும் பிறவும் அண்டத்தினியற்கையை வெவ்வேறாகச் சொல்லுகின்றன. 
அவை ஒன்றற்கொன்று மலைவாகுமோ எனின், சிருட்டிபேதம் பலவாமாதலால் அவை மலைவாகா. ஆதலால் 
அவற்றின் வேறுபாடுகளை நாம் யோசித்து, அறிந்த உனக்கு இந்தச் சிருட்டியிலிருக்கின்ற வியற்கையைச் சொன்னோம். 
முன் சிவபெருமான் உனக்குத் தந்தருளிய ஆயிரத்தெட்டண்டங்களும் இந்த அண்டத்தினியல்புடையன. மைந்தனே 
சென்று காண்பாய்” என்று சுக்கிராசாரியார் சொல்ல, சூரபன்மன் அளவில்லாத மகிழ்ச்சியோடு அறிந்தான். 

            திருச்சிற்றம்பலம்.

            திக்குவிசயப்படலம்.

    இங்ஙனம் பற்பல குணங்களையுபதேசித்த சுக்கிராசாரியருடைய பாதங்களைச் சூரபன்மன் 
சிங்கமுகனோடு வணங்கி, விடைபெற்றுக்கொண்டு, விரைந்து அவுணசேனா சமுத்திரத்தினுட் புகுதலும், 
தாரகன் சென்று சூரபன்மனை முன்வணங்கிப் பின் தன்றமையனாகிய சிங்கமுகனை வணங்கி முன்னிற்க, 
அவன் சுக்கிரன் தமக்குபதேசித்தனவற்றையெல்லாஞ் சொன்னான். அவைகளைத் தாரகன் கேட்டு 
மனத்துட்கொண்டு, ''தலைவனே இது நன்று. பகைவர்களை வெல்லுதற்கு நாம் இனி விரைவிற் 
போவதே கடன்'' என்றான். அப்பொழுது மாயையானவள் தன் புதல்வர் மூவரும் சிவபெருமானிடத்திற் 
பெற்ற வரங்களையும் வலியையும் அறிந்து, அன்போடு ஆகாயத்தில் வந்து தோன்றினாள். சூரபன்மன் 
அவளை முன்னே கண்டு, தம்பியரோடும் அசமுகியோடும் வணங்கினான். 

    அவள் பெற்ற அற்றைநாளினும் மகிழ்ந்து ஆசீர்வதித்து, "யாகத்தில் நிகழ்ந்தனவற்றையும் 
அதற்காகச் சிவபெருமான் கொடுத்தருளிய வரங்களையும் கேள்வியுற்று அன்போடு உங்களைக் காணும்படி
 வந்தேன். நீவிர் வலிமையினால் இந்திரன் முதலாயினோரை வென்று எவ்வுலகங்களையும் ஆண்டு 
பூமியில் என்றும் வாழுதிர். மாயைகள் வேண்டினால் என்னை அன்புடன் நினையுங்கள். அப்பொழுதே 
யான் வந்து நீர் விரும்பினவற்றைச் செய்து முடிப்பேன், விருப்பத்தோடு உம்மைக் காணும்படி வருவேன். 
நீவிர் ஒற்றுமையுடையராயிருக்குதிர்' என்று சொல்லிப் புத்திரர்கள் வணங்கப் போயினாள்.

    மாயை போதலும், சூரபன்மன் கோடி தேர்களோடு அசுரர்களை அழைத்து, 'நம்முடைய சேனைகள் 
குபேரனுடைய பட்டணத்துக்குச் செல்லும்படி பறையறைக' என்று பணித்தான். அவுணர்கள் அவ்வாறு 
பறையடித்தலும், சேனைகள் ஊழிக்கடல்போல் வடதிசையை நோக்கிச் சென்றன. பத்து நூறு ஆயிரம் 
முதலாகிய பல தலைகளையும் பலவகைப் படைக்கலங்களை யேந்திய கைகளையும் கொடுமைக் 
குணத்தையும் கடலொலியையுமுடைய அவுணப்படைகளும், விண்ணும் திசையும் கடலும் முதலிய 
இடங்களிற் பாய்வனவாகிய அளவில்லாத குதிரைகளும், ஆறுபோலும் மதத்தையும் பிளிற்றொலியையுமுடைய 
அளவில்லாத யானைகளும், மலை முதலாகிய இடங்களிற் செல்லுந் திறத்தனவாகிய அளவில்லாத தேர்களும், 
மூன்றுகோடி யோசனை விசாலத்திற் சென்றன; 

    தூசிப்படைகள் அளகையை அடைந்தன. அப்பொழுது சூரபன்மன் பஞ்சபூதங்களினும் 
வலி மிகவுடையதும், சூரியனுடைய தேரினும் சிறப்புடையதும், அவனிலும் ஒளியுடையதும், திக்குக்களை 
அகற்சியான் மறைப்பதும், பூவுலகையொத்த பரப்புடையதும், இமைப்பொழுதில் எங்குஞ் சென்று திரும்புவதும், 
பேருணர்வுடையதும், குறிப்பிற் செல்வதும், அழியாத ஒருகோடி குதிரை பூண்டதும், அழியாத பல சாரதிகளை
யுடையதும், சிறந்தனவும் அளவில்லனவுமாகிய படைக்கலங்களைத் தாங்கியதும், பகைவர்கள் கெடும்படி 
அவர்கள் தேரின்மேற் செல்வதும், முகில்களும் அஞ்சும்படி பல மணிகள் ஒலிக்கப்பெறுவதும், என்றும் 
அழியாதிருப்பதும், சிவபெருமானாற் கொடுத்தருளப் பெற்றதும் ஆகிய இந்திரஞாலம் என்னுந் தேரின்மேல், 
ஒரு பெரிய மலையில் சிங்கம் ஏறிச்செல்லுதல்போல அவுணர்கள் வணங்கப் போயினான். 

    ஆயிரமாயிரம் யாளிகளும் ஆயிரமாயிரம் குதிரைகளும் ஆயிரமாயிரம் பூதங்களும் பூண்ட 
ஓர் தேரின்மீது சிங்கமுகன் ஏறிச்சென்றான். தாரகன் பதினாயிரம் குதிரைபூண்ட ஓர் தேரிலேறி ஆலாகல 
விஷம்போலச் சென்றான். இவரிருவரும் சூரபன்மனுடைய இருமருங்கினுஞ் செல்ல அவுணப்படைத் 
தலைவர்கள் தேர்களிலேறியும், மற்றைப் படைவீரர்கள் யானைகளினும் குதிரைகளினும் ஏறியும், 
சூரபன்மனைத் துதித்துப் பக்கங்களிற் சூழ்ந்தார்கள். அளவில்லாத அவுணர்கள் பதினெண்வகைப் 
படைகளையுமேந்தி இடியும் அஞ்சுஞ் சொல்லினராய்க் கடல் கிளர்ந்தாற் போல் சூரன் முதலிய 
மூவருடைய பக்கங்களிற் போயினார்கள். 

    கச ரத துரக பதாதி யாகிய நால்வகைப் படைகளும் இவ்வாறே தன்னைச் சூழ்ந்துவரச் 
சூரபன்மன் நடுவே சென்றான். நால்வகைப் படைகளினொலியும் நானாவித வாத்தியங்களினோதையும் 
எங்கும் மிக்கன. அவுணவீரர்கள் ஏந்திய ஆயுதங்கள் ஒன்றோடொன் றுரிஞ்சுதலாற் பிறந்த நெருப்பினால் 
மலைகளும் பூமியும் பொடிந்தன.சூரனுடைய படைகளின் செலவினாற் பூவுலக முதலிய வுலகங்களும்             
மலைகளும் கடல்களும் நெருப்பும் நடுங்கின.

    இவ்வாறே சேனைகளோடு சூரபன்மன் சென்று, குபேரனுடைய நகரத்தை வளைந்தான். வளைதலும், 
தூதுவர்கள் அதனை வினவி, குபேரனுடைய கோயிலை விரைந்தடைந்து, அவனுடைய பாதங்களை வணங்கி,
"சூரபன்மன் நம்முடைய நகரத்தை வளைந்துகொண்டான். இப்பொழுதே யழியும்போலும், இனித் தாழ்த்திருத்தல்     
நன்றல்ல. சேனைகளோடு போருக்கெழுவாய்'' என்றார்கள். குபேரன் அதனைக் கேட்டுத் துன்பமும் நடுக்கமும்
 அடைந்து, "அவுணர்கள் சிவபெருமானிடத்தில் வரம் பெற்றிருக்கின்றார்கள். அவர்களை நாம் வெல்லுதல் கூடாது. 
ஆதலால் அவர்களைப் புகழ்ந்து ஆசிசொல்லும்படி போதலே கடன்" என்று விரைந்தெழுந்து புட்பக விமானத்திலேறிச் 
சென்று, இயக்கர்களுந் தானும் சூரனை வணங்கித் துதித்து ஆசிகளைச் சொல்லி, "யான் உமக்கடியவன்" என்று கூற, 
சூரன் "நீ  இந்நெறி தவறாதிருப்பாய்" என்று அவனை விடுத்தான். 

    அவுணப் படைகள் ஆரவாரித்தன. சூரபன்மன் தம்பியர்களோடு அதனைக்கண்டு மகிழ்ச்சி யடைந்தான். 
அவுணப்படைகள் அளகாபுரியினுட் புகுந்து, நிதிகளையும், மணிகளையும் விமானங்களையும் ஆயுதங்களையும் 
யானை தேர் குதிரையையும் கவர்ந்தார்கள். இச்செல்வங்கள் நீங்கப்பெற்ற அந்நகரம் திருமங்கலத்தையிழந்த 
கைம்மையின் வடிவு போன்றது. குபேரன் இவற்றைப் பார்த்து உள்ளம் நாணி, பெருமையிழந்த அளகையில் 
மீண்டும் போயினான்.

    சூரபன்மன் அங்குள்ள குபேரனை "இவன் நம்முடைய அடித்தொண்டு செய்வானாயினான்" என்று 
மனத்திலெண்ணிக்கொண்டு, பாகனை நோக்கி, "இமைப்பிற் றேரைத் தூண்டுதிர்' எனச் சொல்லி, 
அளகையின்  நீங்கி வடகீழ்த்திசையை அடைந்து, "இது காளகண்டராகிய ஈசான வுருத்திரர் வீற்றிருக்குந்தலம்' 
என்றெண்ணி, அந்நகரைவிட்டு இந்திரனிருக்கும் கீழ்த்திசையை யடைந்தான். அதனை யறிந்து மிக்கதுயருற்ற 
இந்திரன் மறைந்து சுவர்க்கத்துக்குப் போயினான். அவன் ஒளித்தோடியதை சூரன் அறிந்து, அப்புரம் 
முழுவதையும் கொளுத்தி, சேனைகளோடு அவ்விடத்தை நீங்கி, அக்கினிதேவனுடைய நகரை அடைந்தான். 
அதனை அக்கினிதேவன் அறிந்து, மிகுந்த கோபமுடையனாய்,  ஆயிரநூறு கோடி பேர் தன்னைச்
சூழ, போர்புரியும்படி வந்து  சேர்ந்தான் . 

    சேர்தலும் இருபக்கத்துச் சேனைகளும் போர்செய்த பொழுது, அக்கினி தேவனுடைய படைகள் 
தோற்றன. அவன் துன்பம்பொருந்திய மனத்தனாய், ஊழிக்காலத்தில் உலகங்களையெல்லாம் ஈறு செய்கின்ற 
வலிய பேருருவைத் தாங்கி, "சூரனுடைய சேனா சமுத்திரம் வற்றும்படி இத்தினமே யான் மாய்ப்பேன் " 
என்று அவுண வெள்ளங்களை நெருங்கி வளைந்து, அழிப்பானாயினான். சடசட என்னும் ஒலியுண்டாம்படி 
சேனைக்கடலை அக்கினிதேவன் கொல்லும்போது, தாரகன் விடம்போலக் கோபித்து தேருடன் 
வாயுவேகத்தோடு வந்து எதிர்ந்து, வில்லை வளைத்து, "அக்கினியையும் தேவர்களையும் பிறரையும் 
இப்பொழுதே முடிப்பேன்" என்று சிவப்படைக்கலத்தை வழிபாடு செய்து எடுத்தான். 

    அதனை அக்கினி கண்டு, " இவன் இதனைத் தொடுத்தால் உலகங்களை யெல்லாந் தொலைக்கும். 
என்னையும் முடிக்கும்;  பிரமா முதலாகிய தேவர்களையும் இன்றே கொல்லும்" என்று கவலையுற்று, மனநடுங்கித் 
தன்னுருவைச் சுருக்கி, ஒடுங்கி, தாரகனுக்கு முன்வந்து, கைகளைக் கூப்பி, "உலகங்களை யெல்லாம் 
படைத்தழிக்கின்ற சிவபெருமானுடைய  மாற்றமுடியாத படைக்கலத்தை என்மேல் விடும்படி வழிபாடு 
செய்து எடுத்தாய்; எப்புவனத்துள்ளவர்களுடைய வலியும் உயிர்களும் அதன்முன் நிற்குமோ? மிகுந்த சினங் 
கொள்ளற்க; சிவப்படைக்கலம் சிறந்தது. அதனை விடுப்பாயாயின் உலகமெல்லாம் அழியும்; அதுவன்றி, 
அப்படைக்கலத்துக்குத் தலைவராகிய கடவுளும் பழிபடுவார். என் பிழையைப் பொறுப்பாய்'' என்று துதித்து நின்றான். 

    நிற்றலும், தாரகன் சிவப்படைக்கலத்தை அவன்மேற் செலுத்தாது கோபம் நீங்கி மகிழ்ந்தான். 
அவுணர்கள் "இவனை எற்றுங்கள் எற்றுங்கள்; விரைந்து கொல்லுங்கள் கொல்லுங்கள்; இவன் மிகக்கொடியன் 
குற்றுங்கள் குற்றுங்கள்'' என்று அக்கினியைச் சூழ்ந்தார்கள். தாரகன் அவர்கள் எல்லாரையும் விலக்கி, 
''நீ நம்முடைய ஏவலின்வழிநிற்பாய். போன உன்னுயிரை நாம் உதவினோம். உன்னுடைய நகரத்திற் போதி போதி" 
என்று விடுத்தான். அவனை விடுக்கு முன்னே, அவுணர்கள் அவனுடைய நகரிற் புகுந்து செல்வங்களை யெல்லாம் 
வாரிக்கொண்டு மீண்டார்கள். அக்கினி தேவன் வெட்கித்துத் தன்னகரிற் போயினான். தாரகன் அந்நகரை நீங்கினான்.

    சூரன் அவற்றையெல்லாங்கண்டு,"பாகனே யமனுடைய நகரத்துக்குத் தேரைச் செலுத்துவாய்'' என்றான். 
என்னலும், பலிங்கனென்னும் பாகன் மற்றைப் பாகர்களோடும் அஞ்சலிசெய்து, ''அரசனே விரைந்து 
யமனுடைய திசைக்குத் தேரைச் செலுத்துவேன் காண்பாய்' என்று கூறி, விரைந்து தேரைத் தூண்டி ஆர்த்தான். 
சேனைகளும் முரசங்களும் ஆர்த்தன; துகள் கடலைத் தூர்த்தன; கொடிகள் விண்ணுலகத்தை அளாவின. 
தூசிப்படைகள் யமனுடைய ஊரை அடைந்தன. அதனைக் கண்டவர் தூதுவன் யமனிடத்திற்சென்று 
''சூரன் முதலிய அவுணருடைய சேனைகள் நம்முடைய நகரத்தை வளைந்தன" என்று சொன்னார்கள். 
யமன் இடியேறுற்ற பாம்புபோல ஏங்கி இரங்கி, "குபேரனும் அக்கினிதேவனும் சூரனை எதிர்கொண்டு 
துதித்துப் போயினார்கள். நானும் அதனைச் செய்வதே அழகிதாம்" என்று நினைத்து, தெளிவினுடன் எழுந்து 
படைஞர்கள் சூழ விரைந்து சென்று, சூரனைத் தொழுது ஆசி கூறினான். 

    அவனுடைய செய்கையைக் கண்டு சூரபன்மன் மகிழ்ந்து, "நம்முடைய பணிகளைச் செய்துகொண்டு 
உன் பரிசனங்களோடும் ஈண்டேயிருக்குதி" என்று ஏவினான். அவுணசேனைகள் யமனுடைய நகரத்தினுட் 
புகுந்து திரவியங்களை முறைமுறையாகக் கவர்ந்தன. யமன் பெருவலி குறைந்ததையும், தம்மைத்துதித்துப் 
போயதையும் சூரபன்மன் நினைத்து மிகவு மகிழ்ந்து, சேனைகளோடு தென்மேற்றிசையிலிருக்கும் நிருதியின்மேல் 
விரைவிற் சென்றான். நிருதி இந்நிழ்ச்சிகளையெல்லாம் அறிந்து, "நாம் இவரைப் பொருவது அரிது. 
போரியற்றினும் வசையேயன்றி வெற்றி வருவதில்லை" என்று அவர்களோடு கலத்தற் கெண்ணி, 
சேனைகளோடு சூரனுக்கெதிரே போய்த் தோத்திரஞ்செய்து வணங்கி "உன் சுற்றம் யான்'' என்று கூறித் 
தாரகனுக்குப் பக்கத்திலே போயினான். 

    சூரபன்மன் நிருதியினுடைய நகரத்தை நீங்கி அப்பாற் சென்றான். அவனுடைய வரவை யறிந்த 
வருணனும் வாயுவும் முறையே கடலினும் இருட்பூமியிலும் இமைப்பொழுதினுட் போயினார்கள். போதலும்,
 சூரபன்மன் அவர்களுடைய பதங்களைச் சூறை கொண்டு பழுது செய்வித்து, சத்தபாதலங்களுக்கும் போய், 
அங்கங்குள்ள அவுணர் முதலாயினோர் துதிக்க அவர்களுக்கு அருள்செய்து, நாகருலகத்துக்குப் போயினான். 

    ஆதிசேஷன் கோபத்தோடு யுத்தஞ் செய்தான். சூரபன்மன் சேனைகளால் அவனை வெற்றிகொண்டு, 
அவன் வியந்து துதிக்க அவனுடையவிருக்கையில்  ஒருநாள் இருந்து, அங்கே தேவர்கள் தர ஆதிசேஷன் 
வைத்திருக்கும் அமுதத்தை வலிதின் வாங்கித் தம்பியர்களோடு உண்டு, மற்றைப் பிலங்கள் தோறும் சென்று,
அங்கங்குள்ள புதுமைகளை வியப்போடு பார்த்து, போன போன திசைகளெல்லாவற்றினும் 
புகழை நாட்டி, பூவுலகில் வந்து, உவர்ச் சமுத்திரத்தையும் அதற்கப்பாலுள்ள சாகத்தீவையும் கடந்து, 
பூமிலக்ஷுமியும்,  மகாலக்ஷுமியும் துதிக்கச் சேஷசயனத்தின் மீது விட்டுணு அறிதுயில் செய்யும் பாற்கடலிற் 
சேனைகளோடு விரைந்து போயினான்.

    சூரனுடைய அவுணப்படைகள் "இங்கே விட்டுணு இருக்கின்றான்" என்று அப்பாற்கடலை மிகுந்த 
ஆரவாரத்தோடு கலக்கின. அந்த ஒலியைப் பூமிலக்குமியும் மகாலக்குமியும் கேட்டு, உடம்பு வேர்த்துப்பதைக்க 
அஞ்சி வெருவி விட்டுணுவினுடைய மார்பைத் தழுவ, அவர் பார்த்து, அவர்களை அஞ்சற்கவெனக்கூறி, 
விரைந்து துயிலை நீங்கிச் சேஷசயனத்தைவிட்டு எழுந்து, வடவாமுகாக்கினியும் அஞ்சும்படி உருத்துச் சீறி, 
"இத்தீயர் நம்மையும் பொரவும் வந்தார்போலும், இவர் வலியைக் காண்போம்' என்று கைதட்டிச் சிரித்துக் கருடனை 
நினைத்தார். உடனே அவன் வந்தான். அவனுடைய தோளின்மேல் ஏறிப் பஞ்சாயுதங்களையும் ஏந்தி, 
அசுரசேனைக்கெதிரே சென்று, சார்ங்கம் என்னும் வில்லை வளைத்து நாணோதைசெய்து, அவுணர்களுடைய 
மனசைக் கலக்கி, அவர்கள் கொண்ட செற்றத்தைக் கெடுத்துப், பாணங்களை மேன்மேற் பூட்டி விடாமழையைப் 
போலப் பொழிந்தார். அப்பொழுது அவுணசேனைகள் அழிந்து, கச ரத துரகங்கள் ஒழிந்து, வலியும் 
போரினூக்கமும் படையுமாகிய எல்லாங் கழிந்து சூறைக்காற்றாலடியுண்ட மேகங்கள் போலாயின. 

    சூழ்ந்த அவுணர்களுடைய சிரங்கள் துணிந்தன. தோள்களுந் தாள்களும் கரங்களும் வீழ்ந்தன. 
சிந்திய இரத்தவெள்ளம் கடல் முழுதும் பாய்ந்தன. பிணமலைகள் உயர்ந்தன. விட்டுணுவானவர் 
கருடவாகனாரூடராய் எண்ணில்லாத வுருவங்களைக்காட்டி அவுணர்கள் யாவரும் போகாவண்ணம் 
பாண மழைகளைச் சிந்தித் தேவர்கள் ஆரவாரிக்கும்படி இப்படிப் போர்செய்தார். தாரகன் அவற்றை 
உருத்து நோக்கி, உடைகின்ற  தன்சேனைகளை " ஒன்றும் நீர் அஞ்சற்க" என்று கூறி, மேருமலைபோலும் 
வில்லை யேந்தித் தேரின் மீது இமைப்பில் வந்து விட்டுணுவுக் கெதிரிற் புகுந்து, அவ்வில்லை வளைத்து, 
கடலின் மீது விடாமழை பொழிவதுபோலப் பாணங்களைத் துண்ணென்று தூவி ஆரவாரித்தான். 
அப்பொழுது, விட்டுணுவானவர் எண்ணில்லாத பாணங்களைத் தாரகன்மீது சொரிந்து, அவனுடைய 
தேரையும் பாகனையும் தொலைத்தார். 

    அவன் பிறிதொரு தேரிலேறி வில்லை வளைத்து விட்டுணுவின் மீது ஆயிரம் பாணங்களைச் 
செலுத்தி, கருடன் மீதும் ஆயிரம் பாணங்களை விடுத்தான். அப்பாணங்களினாற் கருடன் வருத்தமடைதலும், 
விட்டுணு அதனைப்பார்த்து, அளவில்லாத மாயா ரூபங்களை எடுத்து, தாரகனைச் சூழ்ந்து போர்செய்ய, அவனும் 
தன் தாய் உபதேசித்த மந்திரத்தைத் தியானித்துப் பல மாயாரூபங்களைக்கொண்டு, நான்குநாள் வரையும் 
பெரும்போர் செய்தான். பிரமதேவர் இதனைப்பார்த்து, "யார் இவனெதிரில் நிற்பார்" என்று அதிசயமடைந்தார். 
விட்டுணு தாரகனுடைய வில்லும் தேரும் குதிரைகளும் பாகனும் துணிந்து விழும்படி ஒருகோடி பாணங்களை 
விடுத்தார். இந்திரன் அதனைக் கண்டு மகிழ்ந்தான். 

    தாரகன் தன்னுடைய தேரும் குதிரைகளும் பாகனும் வில்லும் அழிதலும், ஓர் தண்டாயுதத்தை 
எடுத்துக் கொண்டு நிலத்திற்போய், தேவர்கள் தலைபனித்து அஞ்ச அண்டங்கள் குலுங்க ஆர்த்து, விட்டுணுவை 
எதிர்த்துச் சென்றான். அவர் எதிரேவரும் தாரகன் மேல் எண்ணில்லாத பாணமழைகளை வீசினார். அவைகளைத் 
தாரகன் தண்டினால் விலக்கிச் சிந்திக் கோபித்து அவருக்கு முன்னே செல்ல, விட்டுணு சக்கரப்படையை 
விடுத்தார். ஓரிமைப் பொழுதினுள் உலகங்களை யெல்லாந் தொலைக்கும் வலிமையையுடைய சக்கரப்படையும் 
தாரகனுடைய கண்டத்தை அணுகிச் செம்பொன்னாரமாயிற்று. இஃது என்ன அதிசயம் ! தவத்தினும் ஆக்கம் வேறுண்டோ!

    விட்டுணுவானவர் அதனைப் பார்த்துச் சிவபெருமானருளிய வரத்தை நினைத்து, அடங்காத 
அற்புதத்தினராய், "தாரகன் வலியன்'' என்று எண்ணி, ''பிரமாவும் ததீசி முனிவனும் என்னுடன் போர்செய்த 
அவுணர்களும் உனக்கொப்பல்லர். அவர்கள் சொல்லளவன்றிச் செயலளவில் உவமையாதல் இல்லை. 
வீரபத்திரக்கடவுள் மாத்திரம் உனக்கிணையாவர். சிவபெருமான் ஈந்தருளிய சக்கராயுதம் உன் கழுத்திற் 
பதக்கமாயிற்றென்றால் வெற்றியும் உனதேயன்றோ! இனி வேறு போருமுண்டோ! உன்வலிமை இதுவானால் 
உனக்குத் தமையன்மார்களாய் நிற்கின்றவர்களுடைய பெருமையைப் பேசவல்லார் யாவர்! 
சிவபெருமான் மகிழும்படி யாகத்தைப் பலநாட் செய்து உங்களைப் போல வலிபெற்றுள்ளார் 
அவுணரிலொருவருமில்லை; உங்களை வெல்வார் யார்! எமக்கும் நீர் சுற்றத்தார்களே' என்று எல்லையில்லாத 
ஆசிகளைச் சொல்லிப் போயினார். 

    அவைகளையெல்லாம் அவுணர்கள் பார்த்து ஆர்ப்பரித்தார்கள். தேவர்கள் வேர்த்து, இறப்பவர்களைப்போல 
மெலிந்து  துன்பமுற்றவராய் அஞ்சி ஓடினார்கள். தாரகன் பிறிதொரு தேரின்மீதேறிச் சூரபன்மனுக் கெதிரிற் போயினான். 
அவன் அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்து மிகமகிழ்ந்து தாரகனைத் தழுவி, சேனைகளோடு அப்பாற்போய்,
 பூவுலகத்தைச் சக்கரவாளகிரிவரையும் பார்த்து, ஆகாயவழிக்கொண்டு சென்று, சூரியன் முதலாயினோர் 
ஆசீர்வதிக்கச் சுவர்க்கத்திற் போயினான்.

    சூரபன்மன் சுவர்க்கத்துக்குச் செல்லுதலும், ஒற்றுவர்களிற் சிலர் ஓடிப்போய், "சூரன் என்னும் 
வலியன் வந்தான்' என்று இந்திரனுக்குச் சொல்ல, அவன் அஞ்சிப் பெருமூச்சுவிட்டு அலந்து தேம்பி அறிவு 
சோர்ந்து, 'இங்குவந்த சூரபன்மனோடு போரில் எதிர்ப்பேனாயின் என்னுயிற்கிறுதியாம். இங்கிருப்பேனாயின், 
துன்பத்தினும் பழியினும் மூழ்குவேன்.  புல்லிய செயலாய் எனக்கு வந்த இத்தீங்கு என்செயலால் வந்ததன்றிப் 
பிறர் செயலால் வந்ததன்று. பற்றற்ற பெரியோர்கள் பிறர் செய்கின்றனவற்றையுந் தஞ்செயல் என்பர்கள். 
அறிஞர்கள் செல்வம் வருங்கால் மகிழ்ந்தும் அது போங்கால் வருந்தியும் பிரபஞ்சத்தில் அழுந்துவார்களோ! 
வருவது வரும். அதனை மறுக்க முடியுமோ! ஆதலால் இவனோடு பொருது உயிரை விடேன்; வருத்தமுமடையேன். 
துன்பமுற்றவர் பின்னொருகாற் பெருமகிழ்ச்சியுமடைவர். இதனை, தீமைசெய்கின்ற இவ்வவுணர்களிடத்திற் 
காண்பேன். வெட்கத்தையும் பகைவர்களுடைய சிரிப்பையும் கொள்ளேன். சூரபன்மனைக் காண்பேனாயினும், 
கறுவுகின்ற மனத்தையுடைய  அவன் என்னைச் சிறைசெய்வான்" என்று எண்ணி விரைந்தெழுந்து இந்திராணியோடு 
குயிலுருக்கொண்டு ஆகாயத்திற் பறந்து போயினான். 

    அவுணர்கள் அவனைத்தேடிக் காணாராயினர். பொன்னுலக முழுதும் பொலிவிழந்தது. அவுணர்கள் 
தேவர்களைப் பிடித்து, அடித்துக் குற்றி அவர்களுடைய வஸ்திரங்களினாற் றோள்களைக் கட்டி, மிகவுந் 
துன்புறுத்தி, சூரனுக்குமுன் விடுத்தார்கள். தேவர்கள் அவனை வணங்கித் துதித்து, 'அரசனே நீ அவுணவமிசத்திற்
 பிறந்து, தவத்தைச் செய்து சிவனுடைய திருவருளைப் பெற்றுத் திக்குப்பாலகர்கள் முதல் எல்லாரையும் 
வென்றாய் என்றால், எளிய எங்களைத் துன்பப்படுத்துவதா உனக்கு நன்று. நீ ஒரு சிறிது சினஞ்செய்தால், 
யமனுமிருப்பானோ! மற்றைத் திக்குப்பாலகர்களும் இருப்பார்களோ! தேவர்கள் யாவரும் உய்வார்களோ! 
உலகம் இப்பொழுதேயழியுமே! இன்றுமுதல் எங்களுக்கு வழிபடுகடவுள் நீ; எங்களைப் பாதுகாக்கும் அரசனும் நீ; 
பற்றுள்ள உறவும் நீ; யாமெல்லோரும் உன்பணிகளை முறையிற் செய்வோம்." என்று சொல்லித் தோத்திரஞ் 
செய்தார்கள். அவர்களைச் சூரன் பார்த்து "நுஞ்செய்கை நன்று" என்று சிரித்து, கட்டிய கட்டுக்களை அவிழ்ப்பித்து,
"இனி நீர் நம்முடைய பணிகளைச் செய்துகொண்டிருக்குதிர்" என்று கூறி விடுத்தான். 

    அவுணர்கள் இந்திரனுடைய வளங்களெல்லாவற்றையும் கவர்ந்துகொண்டு சென்றார்கள். 
சூரன் அளவிடப்படாத மகிழ்ச்சிகொண்டு, தம்பியர்கள் பக்கங்களில் வர, மகலோகம், சனலோகம், தவலோகம் 
என்னும் மூன்றுலகங்களையும் அங்கங்குள்ள மார்க்கண்டேய முனிவர் முதலாயினார் புகழ நீங்கி, 
சத்தியவுலகத்திற் போயினான்.

    பிரமதேவர் சூரபன்மனுடைய வரவையறிந்து நடுக்கமுற்று, முனிவர்கள் தம்மைச் சூழ அவனையடைந்து, 
'நீடூழிகாலம் வாழுதி வாழுதி' என்று ஆசி கூறி, 'மகாராசனே நீ இங்கேவர யான் முன்னாளில் என்ன தவத்தைச் 
செய்தேனோவறியேன். அதனைச் சிவபெருமான் அன்றி வேறி யார் அறிந்தவர்! சிவபெருமானை நோக்கி
 அருந்தவத்தைச் செய்து இவ்வியல்பினவாகிய செல்வங்களெல்லாவற்றையும் பெற்றுள்ளாய்; பெரியவலிமையைக் 
கொண்டாய்; விட்டுணுவையும் தேவர்களையும் தம்பியாகிய தாரகனைக்கொண்டு வென்றாய்; உன்னையொப்பவர் 
உலகத்திலுளரோ! நீ  அன்பிற்சிறந்த என்மகனாகிய காசிபமுனிவனுடைய புத்திரனாதலால் யான் உன் பாட்டன்; 
உன் புகழ்களெல்லாம் என்புகழ்கள்; யான் பிறனன்று இது சத்தியம்" என்று பல உபசாரங்களைச் சொல்லி, 
தம்பிமார்களையடைந்து, அழியாத வில்லையும் தேரையும் தன்படையையும் தனித்தனி கொடுத்தார். 

    சூரபன்மன் அதனைப் பார்த்துப் பெருமகிழ்ச்சியினனாய் அன்புசெய்து, பிரமாவை அங்கே இருத்தி, 
வைகுண்டவுலகத்துக்குப் போய், அங்குள்ள விட்டுணுவானவர் வந்து "அழிவில்லாத வாழ்நாளோடு வாழ்வாய்" என்று பல 
ஆசிகளையும் இன்சொற்களையுஞ் சொல்ல மிகவும் மகிழ்ந்து, பரிசனங்களோடு அவ்வுலகமுழுதையும் பார்த்து, 
அவரை அங்கேயிருக்கும்படிவைத்து,சிவலோகத்துக்குப் போயினான்.

    அங்கே சூரன் பரிசனங்களை நீங்கித் தம்பியர்களோடும் சிவபெருமானுடைய திருக்கோயிற் 
புறங்கடைவாயிலினின்று, அக்கடவுளுடைய அருண்முறையை யறிந்த திருநந்திதேவர் உள்ளே விடுப்பச் சென்று, 
பார்வதி சமேதராய் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திவ்விய சந்நிதானத்திற்போய், அன்போடு வணங்கித் 
துதித்து நின்றான். சிவபெருமான் கருணைசெய்து, "இனி நீ ஏனை அண்டங்களிலுஞ் சென்று பார்த்து, 
ஆணையாலெண்டிசையும் புகழும்படி அரசு புரிந்திருப்பாய்" என்று அருளிச்செய்தார். 

    சூரன் அவருடைய திருவடித் தாமரைகளைத் துதித்து விடைபெற்றுக் கொண்டு புறத்துவந்து, 
சேனைகளைச் சேர்ந்து, அண்டகோளகையை அடைந்தான். அங்கே வைரவர்களாகிய உருத்திரர் 
அளவில்லாதோருளர். அவர்கள் சிவபெருமானுடைய திருவருளை உட்கொண்டு அப்பாலுள்ள 
அண்டத்துக்குச் செல்லும் வாயிலைக் காட்டி விடுக்க, சேனைகளோடு சூரபன்மன் சென்று, அங்கும் 
இவ்வண்டத்திற்போலவே பார்த்து, யாவரையும் வென்று, மற்றையண்டங்களினும் சிவகணங்களாயுள்ளோருடைய 
அருளினாற் போய், அங்குள்ள தேவர்களை வென்று, அவர்களுடைய வளங்களெல்லாவற்றையுங் கவர்ந்து, 
தன்மாட்டுள்ள அவுணர்களிற் பலரை அங்கே தன்னரசுரிமையை நடத்தும்படி வைத்து, தனக்கு உற்ற 
உறவினர்களாகிய அவுணர்களை அண்டங்கள்தோறும் அரசர்களாக வைத்து, துணைவர்களோடு மீண்டு 
இந்த அண்டப் பித்திகையில் வந்து, சுவர்க்கத்தை அடைந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            எதிர்கொள்படலம்.

    முன்னே தேவர்களால் வருத்தமுற்ற அசுரர்கள் சூரபன்மன் திக்கு விசயஞ் செய்துகொண்டு 
சுவர்க்கவுலகத்தை அடைந்தமையைக் கண்டு மகிழ்ந்து, களிப்பின் மூழ்கினார்கள். அச்சூரபன்மனுடைய 
வரவை அசுர ராசனாகிய அசுரேந்திரனுக்கு ஒற்றுவர் போய்ச்சொல்ல, அவன் களிப்பு மிகுந்து, 
சூரபன்மன் பெற்ற அளவில்லாத ஆக்கத்தையும் சிவபெருமானுடைய கருணையையும் மனத்திற்கொண்டு, 
சேனைகளோடு சுக்கிராசாரியரிடத்திற்போய், "நான் சூரபன்மனைக் காணும்படி செல்லுவேன். நீர் 
முன்னே சென்று நம்முடைய முறையையுஞ் செயல்களையும் அவனுக்குச் சொல்லுதிர்" என்று அனுப்பினான். 
அவர் விமானத்திலேறிக்கொண்டு முன்னே போயினார். அசுர ராசன் தன்கிளைஞர்களோடு அவருக்குப் 
பின்னே போயினான். சுக்கிராசாரியர் விமானத்தில் வரும்போது, சூரபன்மன் அவரைத் தூரத்திலே 
கண்டு எதிர்கொண்டு, அஞ்சலிசெய்தான். ஆசாரியர் மகிழ்ச்சியோடு நின்று, 'உனக்குச் செல்வமும் 
வெற்றியும் மேன்மேலும் விருத்தியாகுக" என ஆசீர்வதித்தார். 

    சூரனுக்குப் பக்கத்தில் வந்த சிங்கன் தாரகன் என்னும் இருவரும் அவரை வணங்கித் துதித்தார்கள். 
ஆசாரியர் அவர்க்கும் ஏற்றவாறு ஆசிகளைச் சொல்லி,சூரபன்மனை நோக்கி, அசுர ராசனுடைய வரவைக்காட்டி, 
''உனக்கு நாம் அறிவுறுத்துகின்ற ஓர் வார்த்தையுளது. அதனைக் கேள். இவன் காசிபமுனிவனுக்கு மனைவியாகிய 
உன்னுடைய தாயைப் பெற்றவன்; நுண்ணிய கேள்வியையுடையான்; அளவில்லாத அசுரர்களைப் பாதுகாத்தவன்; 
எங்களுக்கு ஓர் துணையென்னுந் தன்மையான்; இங்குள்ள இந்திரன் பலநாள் யுத்தஞ்செய்து வெற்றி கொண்டமையால் 
மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப்போல மாழ்கியிருந்தான் . விதைத்த பயிரினால் வரும்விளைவை எதிர்பார்த்துக் 
கொண்டிருக்கும் தரித்திரனைப்போலத் தன் சிறுமை நீங்கும்படி உன்னுடைய ஆக்கத்தையே நாடோறும் எதிர்பார்த்துக் 
கொண்டிருந்தான். 

    நீ யாகஞ் செய்ததையும் சிவபெருமான் உனக்குக்கொடுத்த வரங்களையுஞ் சொல்லக்கேட்டு உவந்து, துன்பத்தை 
ஒழிந்தான். இவனுடைய தோள்கள் இப்போது பூரித்தன. நீ சிவபெருமானிடத்திற் பெற்ற வரத்தோடு திக்குவிசயஞ் செய்து 
கொண்டு இங்கே வரும் மேன்மையைக் கேட்டு உன்னைக் காண வருகின்றான்"  என்று சொன்னார். சூரபன்மன் 
இவைகளைக்கேட்டு உவகையால் நிறைந்த மனத்தினனாய் நின்றான். அசுரராசன் தன்கிளைகளோடு  வந்து
சூரபன்மனைத் தொழுது துதித்து, பிரிந்து போய உயிரைப் பெற்ற உடல் போலாயினான். சூரன் அவனைப்பார்த்து,
 "நீ  சந்தோஷத்தோடிருக்கின்றாயா" என்று வினாவினான். அவன் "நுங்குலத்தலைமை விளங்கும்படி உதித்த 
நீ யிருக்கும்போது நம்மாட்டுத் தீயன அடையுமோ, சிறுமைகள் வருமோ" என்று உபசாரவார்த்தைகளைச் சொல்லிச் 
சூரனுக்குப் பக்கத்திற் போயினான். சூரன் அசுரசேனைகள் சூழ வெற்றியோடு விரைந்து பூமியில் மீண்டான்.

    பிரமாவும் இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் "சூரபன்மன் மண்ணுலகத்தினில் வந்தான்" 
என்னுஞ் சொல்லைக்கேட்டு, துண்ணென வந்து, விட்டுணு நித்திரைசெய்யும் பாற்கடலிற் புகுந்து, அவரை அணுகி 
நின்று கைகூப்பி வணங்கி, தாங்கள் சூரபன்மனால் அடைந்த சிறுமைகளெல்லாவற்றையும் சொல்லி, 
"இனிமேல் யாங்கள் செய்கின்றதென் கொல்? சொல்லும்" என்றார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகளை விட்டுணு 
கேட்டு, "புன்றொழிலையுடைய தக்கன் செய்த யாகத்திற் புகுந்த தீமையினால் இது நமக்கு வந்தது. இதனை 
விலக்குவார் யார்!  இனிச் செய்வதொன்றை நாம் சொல்லுகின்றோம். கேளுங்கள். சூரபன்மன் சிவபெருமானிடத்தில் 
வரம் பெற்றுள்ளான். அண்டங்கள் எவற்றையும் வென்றான். ஆதலால் அவன் நம்மால் வெல்லுந் திறத்தனல்லன். 
நாம் அவனைப் போய்க் கண்டுவருவோம். இதுவே காரியம்' என்றார். 

    பிரமாமுதலிய தேவர்களும் முனிவர்களும் "இதுவே செய்யத்தகுவது' என்று இசைந்தார்கள். விட்டுணு 
சேஷ சயனத்தை நீங்கி அவர்களோடு சூரபன்மனைக் காணும்படி வந்தார். அவர்கள் எல்லாரும் சூரனுக் கெதிரேபோய் 
நின்று ஆசிர்வதித்துத் துதித்தார்கள். சூரன் அவர்களுட் பதினொருகோடி யுருத்திரர்கள் ஒருங்கு நிற்பக்கண்டு, 
"சிவபெருமானைப்போல அமைந்த வடிவத்தினராய்த் தொகையான் மிகுந்த இவர் யாவர்" என்று வினாவ, 
விட்டுணு சொல்வாராயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            உருத்திரர் கேள்விப்படலம்.

    "இராசாதிராசனே, இவர்களுடைய வரலாற்றைச் சொல்வேன் கேள்: பிரமன் முன்னொரு கற்பகாலத்தில் 
மூவுலகங்களையும் உயிர்களையும் படைத்து அதனால் அகந்தை கொண்டு, தன்னையும் பரம் என்றுன்னிச் 
சிவபெருமானை மறந்து அதன்மேலும் படைத்தான். சராசரங்கள் அவன் முன்படைத்த வளவினன்றிப் 
பெருகாவாயின. அதனைக் கண்டு, 'நான்செய்த குறை யென்னை' என்று நோக்கி, 'எம்மை முன்னாளிலே 
பெற்றருளிய பஞ்சகிருத்திய முதல்வராகிய சிவபெருமானை அயர்த்தேன் போலும். இனி அவரருளைப் 
பெற்றாலன்றி இந்தப் படைத்தற்றொழில் கைகூடாது' என்று எண்ணி, அளவில்லாத காலம் சிவபெருமானை 
நோக்கித் தவஞ்செய்தான். சிவபெருமான் அவனிடத்து எழுந்தருளி வந்திலர். அவன் அதனை நினைத்து, 
'தீவினையேன் முன்பு பரமபிதாவாகிய சிவபெருமான் எங்ஙனம் வெளிப் பட்டருளுவர்' என்று ஏழைகள்போல் 
ஏங்கித் துன்பமுற்றுப் பெருமூச்சு விட்டழுதான். அவன் வேறென்செய்வான்! அப்பொழுது, அவன் கண்ணீர் விழவிழப் 
பேய்களாய் மிக எழுந்து நெருங்கிற்று. பிரமன் அப்பேய்களைக் காணுதலும், இடருழப்ப வீழ்ந்து, இறந்தனன்போலச் 
சோர்ந்தான். 

    உயிர்க்குயிராகிய சிவபெருமான் உணர்வைக் கொடுத்து, அவன் கனவில் வந்து, 'மைந்தனே இனி 
வருந்தாதே, எழுக. நீ உன்னைப் பரம்பொருளென்று மதித்து எம்மை மறந்தாய். அதனால் உனக்குச் சிருட்டித் தொழில் 
கைகூடிற்றில்லை. விரைவில் அது முடியும்படி நம்முடைய பதத்திலுள்ள உருத்திரரை உன்னிடத் தனுப்புவோம்' 
என்று அருளிச்செய்தார்.  உடனே பிரமன் கனாவிற்கண்ட அற்புதத்தோடெழுந்து, செம்மையாகிய நெறியைப் 
பொருந்தி,மனத்திற் றெளிவடைந்து, அக்கனாவை நினைத்தலும், சிவபெருமானுடைய திருவருளினாற் 
 பதினொரு உருத்திரர்கள் அவனுடைய நெற்றியினின்றும் வெளிப்பட்டு நின்றார்கள். அவர்களைப் பிரமன் பார்த்து, 
'நீர் நமது நெற்றித்தலத்தில் வந்த காரணம் என்னை'  என்று வினாவ, 'உன் படைப்புத்தொழில் கைகூடும்படி 
சிவபெருமான் எங்களை விடுத்தருளினார் ஆதலினால் வந்தோம்' என்று அவர்கள் கூறினார்கள் அதுகேட்ட 
பிரமன் 'என்பால் அன்போடு வந்த நீங்கள் விரைவில் உயிர்களைப் படைக்குதிர்' என்று கூற, அவர்கள் 
தம்மைப்போலப் பதினோரு  கோடி யுருத்திரர் கூட்டத்தைத் தந்தார்கள்.

     பிரமன் அதனைப் பார்த்து, 'உயிர்களை இருவினைக்கீடாகப் படைப்பதன்றி, நீங்கள் இவ்வாறு 
படைத்தல் நெறியல்ல' என்னலும், பதினோருருத்திரரும் 'நீ உயிர்களை முன்போலப் படைத்துக்கொண்டிருப்பாய், 
நாம் இப்பொழுதே எமது பதத்திற் போவோம்' என்று கூறி, பிரமன் யாவையும் படைக்கும்படி செய்து, தாம் படைத்த 
பதினொருகோடி யுருத்திரர்களையும் 'தேவர்களோடு இருக்குதிர்' என்று சொல்லி, சிவபெருமான் ஆதிகாலத்திலே 
தமக்குக் கொடுத்தருளிய புவனத்தையடைந்தார்கள். அவர்கள்  உண்டாக்கவந்த பவர் முதலிய பதினொருகோடி
 யுருத்திரராயுள்ளார் இவர்கள்.  இவர்கள் சிவபெருமானுடைய திருவருளினால் தேவர்குழுவோடு சேர்ந்துற்றார்" என்று 
விட்டுணு கூறினார். சூரபன்மன் அவர்களுடைய வரலாற்றைக் கேட்டு வியந்தான். 

            திருச்சிற்றம்பலம்.

            நகர்செய்படலம். 

     அதன்பின் சூரபன்மன் ஆண்டுள்ள தெய்வத்தச்சனை நோக்கி "நாம் வசித்தற்கேற்ற 
அழகிற் சிறந்த ஓர் நகரத்தை விரைவிற் செய்குதி" என்றான். அவன் நன்றென்று வணங்கி, "உங்களுக்காகச் 
செய்யும் நகரத்துக்கு எல்லை சொல்லுதி' என்ன, சுக்கிராசாரியர் அவ்வெல்லையைக் கூறினார். தெய்வத்தச்சன் 
அவ்வெல்லையைக் கேட்டறிந்து, தென்சமுத்திரத்தையடைந்து, சூரபன்மனுடைய நகரம் எண்பதினாயிர யோசனை 
விரிவுடையதாகக் கோலி, மலைகளினால் அதனைத் தூர்த்து, பாசறை கொண்டு சமமாக நிலம்படுத்து, 
செம்பொன்னால் மதிலையும் மதிலுறுப்புக்களையும் நான்கு வாயில்களையும் நான்குவாயில்களிலும் நான்கு     
கோபுரங்களையும் செய்து ஒவ்வொன்று நூறு யோசனையுடையனவாகப் பற்பல வீதிகளையும், மூன்று 
மதில்களையும், அளவிறந்த பொன்மாடங்களையும், அளவிறந்த நடன சாலைகளையும், மாளிகைகள் தோறும் 
தெற்றிகள்  மண்டபங்கள்  முன்றில்கள் கோபுரங்கள் செய்குன்றங்கள் சூளிகைகள் அரங்குகள் மன்றங்கள் 
மேன்மாடங்கள் சாளரங்கள் என்னுமிவைகளையும், சோலைகளையும், வாவிகளையும் தனித்தனி உண்டாக்கி, 
அதன் நடுவே பதினாயிர யோசனை யுடையதாகிய ஒரு மதிலைச் செய்து, அதனடுவே சூரபன்மன் இருத்தற்காக
 ஒரு கோயிலை அழகுறவியற்றினான். 

    கச ரத துரகங்கள் செல்லுதற்குரிய தோரணவாயில்களையும், கச ரத துரக பதாதிகளாகிய நால்வகைச் 
சேனைகளும் தங்குதற்குரிய இடங்களையும், அசுரத்தலைவர்களும் பிறருமிருக்கு மிடங்களையும், அரம்பையர்கள் 
பாடலாடல்கள் செய்யுமண்டபங்களையும், மயில் புறா முதலிய பக்ஷிசாதிகளும் கருங்குரங்கு மான்முதலிய 
மிருகசாதிகளும் இருக்கு மண்டபங்களையும், வேதாத்தியயன மண்டபங்களையும், யாகமண்டபங்களையும்,
 மந்திரிகள் இருக்கு மண்டபங்களையும், இந்திரன் முதலாயினோரிருக்கு மண்டபங்களையும், பெண்களிருக்கு 
மண்டபங்களையும், சூரன் அரசிருக்கும் அத்தாணி மண்டபத்தையும், பலவகைத் திரவியங்களிருக்கு 
மண்டபங்களையும், சிவபெருமான் கொடுத்தருளிய படைக்கலங்களிருக்கு மண்டபங்களையும், அன்ன 
மண்டபங்களையும், கஸ்தூரி முதலாகிய வாசனைத் திரவியங்களும் வெற்றிலைபாக்கு முதலாயினவும் 
இருக்கு மண்டபங்களையும், பலபெண்கள் இருக்கு மண்டபங்களையும், ஊசலாடு மண்டபங்களையும், நவரத்தின 
மண்டபங்களையும், சந்திரகாந்த மண்டபங்களையும், அரசருக்கேற்ற பிறவற்றையும் செய்து, சூரபன்மனும் 
அவனுடைய பட்டத்துத் தேவியும் இருத்தற்கு ஒருறையுளையும் அதனைச் சூழ அவன் மனைவியர்களாகிய 
மற்றைப்பெண்கள் இருத்தற்குரிய தானங்களையும், இவைகளுக்கருகில் வாவி ஓடை முதலிய நீர்நிலைகளையும், 
சோலைகளையும், செய்குன்றுகளையும், இவைபோன்ற பிறவற்றையும் இயற்றினான்.

    சமுத்திரம் அகழியாக அதன் மத்தியிலிருக்கும் இந்நகரத்திலுள்ள கோயிலின் ஒளியினாற் பொன்னுலகமும் 
பொலிவுகுன்றியது. தனக்கு நிகரில்லாத சூரபன்மன் வெற்றியும் பெருந்தலைமையும் பொருந்த இருத்தலால் 
அந்நகரத்திற்கு "வீரமகேந்திரபுரம்" என்று ஒர் பெயரைத் தேவத்தச்சன் சூட்டி, அதன் எண்டிசையினும் 
ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம் சுவேதபுரம் அவுணர்புரம் வாமபுரம் பதுமபுரம் என்னும் எட்டு 
நகரங்களையும் அழகுபெற வமைத்தான். இவ்வாறு வீரமகேந்திரத்தைச் செய்தபின்பு, வடசமுத்திரத்தினடுவில் 
எண்பதினாயிர யோசனை விசாலமுடையதாக ஆசுரம் என்றொரு நகரத்தைச் சிங்கமுகாசுரனுக்காகச் செய்தான். 

    மற்றைச் சமுத்திரங்கடோறும் தீவுகடோறும் சூரபன்மனுடைய சேனைகள் சுற்றங்களோடு 
வசித்தற்குப் பலநகரங்களை அமைத்தான். அதன்பின் விச்சுவகன்மன் மாணவகர்களோடு மேருமலையின் 
தென்பக்கத்திலுள்ள நாவலந்தீவில் ஏமகூடமலைக்கு ஒருசாரிற் போய், அவ்விடத்தில் தாரகாசுரனுக்காக 
மாயாபுரம் என்னும் ஓர் நகரத்தை அணிபெற உண்டாக்கி, சூரபன்மனுக்குச் சொன்னான். 
அவன் சேனைகளோடு தன்னகரத்துட் குடிபுகுந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            பட்டாபிடேகப்படலம்.

    சூரபன்மன் வீரமகேந்திரத்துட் புகுந்து, அந்நகரத்தை உற்றுப் பார்த்து, விச்சுவகன்மன் கற்ற 
வித்தையை வியந்து களித்து, தன்கோயிலை அடைந்தான். பிரமா முதலிய தேவர்கள் "அரசனுக்கு 
முடிசூட்டுதும்" என்று அதற்குவேண்டிய உபகரணங்களெல்லாவற்றையும் வருவித்தார்கள். கோயிலினுட் 
புகுந்த சூரபன்மன் ஓர் பீடத்திலிருந்து, தேவர்கள் சமுத்திர ஜலத்தாலாட்டச் சிறப்புடனாடி பீதாம்பரத்தை 
உடுத்து,புஷ்பத்தைச் சூடி,ஆபரணங்களைப் பூண்டு, தம்பிமார்கள் இருமருங்கும் வர, அவுணர்களும் 
அவர்க்கரசனாகிய அசுரேந்திரனும் தேவர்களும் வணங்கித் துதிக்க, இந்திரன் மனந்தளர, சுக்கிரனும் 
முனிவர்களும் புகழ, வந்து சிங்காசனத்திலேறினான். அப்பொழுது பிரமாவானவர் கிரீடத்தை எடுத்துச் 
சூட்டினார். அவுணர்கள் அதனைக்கண்டு, சூரனுடைய கால்களை வணங்கி அடங்காத மகிழ்ச்சியாற் 
சிறந்தார்கள். தேவர்களும் முனிவர்களும் அவனுடைய முடியின்மீது பொற்பூக்களை முறைமுறையாகத் 
தூவி வாழ்த்தினார்கள். 

    அதன்பின் தம்பியர்கள் பிரமாவையும் விட்டுணுவையும் "இருங்கள்"  என்று அநுமதிசெய்ய இருந்தார்கள். 
அத்தம்பியர்களுடைய ஏவலினால் இந்திரன் காளாஞ்சியை ஏந்தினான்; குபேரன் அடப்பையைத் தாங்கினான்; 
வாயு சாமரை வீசினான்; அவுணர்க்கரசனாகிய அசுரேந்திரன் உடைவாள் பிடித்தான்; சூரிய சந்திரர்கள் 
குடையை நிழற்றினார்: வருணனும் புத்திரர்களும் ஆலவட்டம் வீசினர் : கருடரும் கந்தருவரும் சித்தரும் 
இசைபாடினர்; யமனும் அக்கினியும் பிரம்பையேந்தி எவரையும் விலகும்படி கோபத்தோடு பார்த்து 
ஆரவாரித்துப் பத்தியாக நிறுத்தி, சூரனுடைய புகழ்களைத் துதித்து நின்றார்கள்; நிருதி கெண்டியை 
ஏந்தினான். தேவகுருவும் அசுரகுருவும் பல முனிவர்களும் பொற்கலத்திலுள்ள  கங்கா சலத்தை அறுகிற் றோய்த்துத் 
தூவி ஆசி கூறினார்கள். அரம்பை மேனகை முதலிய தெய்வப்பெண்கள் சுதியோடு பாடி யாடினார்கள். 
இவ்வாறே தேவர்களும் பிறரும் தத்தமக்குரிய ஏவல்களைத் தவறாது மேற்கொண்டு செய்ய
 சூரபன்மன் சிங்காசனத்தின்மீது ஐசுவரியத்தோடு வீற்றிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            அரசு செய்படலம்.

    பட்டாபிஷேகஞ் செய்யப் பெற்றுச் சிங்காசனத்தின் மீதிருக்கின்ற சூரபன்மன் விட்டுணுவை நோக்கி, 
"நீ என்பிதாவாகிய காசிப முனிவருக்குப் பாட்டன் ஆதலால் உன்னை நாம் அழைக்குந்தோறும் விரைந்து 
வருக" என்றும், பிரமாவை நோக்கி, "உன் புத்திரர்களோடு எந்நாளும் இங்குவந்து பஞ்சாங்கஞ் சொல்லிப் 
போகுக'' என்றும், சூரியனை நோக்கி, "நம்மூர் மதிலின் மேலாற் போதல் உனக்கரிது. ஆதலால் கீழ்மேற்றிசைகளிலுள்ள 
கோபுரவாயில்களின் வழியாற் புகுந்து ஆகாயத்திற் போய் எந்நாளும் இளங்கதிராய் எறித்துத் திரிதி" என்றும், 
சந்திரனை நோக்கி, "இனி வளர்தல் தேய்தல் சுருங்குதல் ஆகிய இவைகளை விடுத்துப் பூர்ணகலையோடு 
கீழ்மேற் கோபுரவாயிலாற் சஞ்சரிக்குதி" என்றும், அக்கினியை நோக்கி, "நம்மூரினுள்ளவர்கள் யாவர் 
நினைத்தாலும் அவரிடத்து வந்து அவர் பணிகளைச் செய்து யாவர் தீண்டினும் செந்தாமரை மலர்போலக் குளிருதி' 
என்றும், யமனை நோக்கி, ''உலகத்துயிர்களை நாளுங் கவர்வதுபோல நம்முடைய யானை குதிரைகளையும் 
அவுணர்களையும் கொல்வதைக் கனவிலுங் கருதாது அஞ்சித் திரிதி' என்றும், வாயுவைப் பார்த்து, "இந்நகரிலுள்ளார் 
யாவரும் அணிந்து நீக்கிய மாலையும் ஆபரணங்களும் சந்தனமு முதலாகிய குப்பைகளை அவ்வப்பொழுதில் நீக்குதி' 
என்றும், வருணனைப் பார்த்து, "பச்சைக் கருப்பூரம் கஸ்தூரி என்னுமிவற்றைச் சந்தனத்தோடளாவிப் பனிநீரிற் 
கலந்து காற்றுப் பெருக்கிய இடங்கடோறும் தெளிக்குதி" என்றும், இந்திரனை நோக்கித் தேவர்களோடும் 
திக்குப்பாலகர்களோடும் முனிவர்களோடும் வந்து நாம் சொல்லிய பணிகளைச் செய்து திரிவாய், இதிற்றவறாதே' 
என்றும் இவ்வாறே தன்பணியிற்றவறாதொழுகும்படி யாவர்க்கும் வெவ்வேறாகக் கட்டளையிட்டான். 
அவர்கள் அஞ்சி "உன்கட்டளைப்படி செய்வோம்'' என்று சொல்லி அவ்வாறொழுகினார்கள்.

    சூரபன்மன் இப்படி அரசுசெய்து, பின் மணஞ்செய்ய எண்ணி தெய்வத்தச்சன் மகளாகிய பதுமகோமளை 
என்பாளைச் சுக்கிரன் விதிப்படி மணஞ்செய்து கொடுக்க அவளோடு கலந்திருந்தான். அதன்பின் தேவர் கந்தருவர் 
முதலாகிய பலசாதிகளிலுமுள்ள அளவில்லாத பெண்களைக் காமக்கிழத்தியர்களாக மணஞ்செய்து, 
இன்பமனுபவித்தான். சிங்கமுகனுக்கு யமனுடைய மகளாகிய விபுதை என்பாளையும், தாரகனுக்கு நிருதியின் 
புதல்வியாகிய சவுரியையும் விவாகஞ்செய்து கொடுத்தான்.

    இவ்வாறு மணஞ்செய்து கொடுத்தபின், சூரபன்மன் இரண்டு தம்பியர்களையும் நோக்கி, 
"உங்களுக்காக விதித்த நகரங்களில் இரண்டு கோடி வெள்ளஞ் சேனைகளோடு போய் இருங்கள்" என்று அனுப்பி,
 சேனைத் தலைவர்களிற் பலரை நோக்கி, "நீங்கள் இரண்டு கோடிவெள்ளம் சேனைகளோடு தீவுகளிலும் 
சமுத்திரங்களிலும் செய்யப்பட்ட நகரங்களிற் போயிருக்குதிர்" என்று அனுப்பினான். எட்டுத்திசைகளினும், 
மேலுலகம் ஏழினும், கீழுலகம் ஏழினும், ஒழிந்த இடங்களினும் தன்னுடைய ஆணையை நடாத்தும்படி எல்லையில்லாத 
அசுரர்களை ஆறுகோடிவெள்ளஞ் சேனைகளோடு செல்ல ஏவினான். இவ்வாறு சூரபன்மனால் அனுப்பப்பட்ட 
அவுணசேனைகள் விண்ணுலகத்தினும், மண்ணுலகத்தினும், எண்டிசைகளினும், ஏழ்பிலங்களினும், 
மலைகளினும், ஆகாசத்தில் உதித்த அளவில்லாத நக்ஷத்திரங்கள்போல மலிந்தன. தன்சேனைகள் எங்கும் 
இடையறாது நெருங்குதலும், சூரபன்மன் தானிருக்கும் வீரமகேந்திரபுரியில் இலக்கம்வெள்ளம் அவுணர்களை 
மாளிகைகள்தோறும் முறையே இருக்க வைத்தான்: யானை குதிரை யாளி கரடி புலி பன்றி சிங்கம் மரை 
என்னும் முகங்களையுடைய அவுணத்தலைவர்கள் எண்மருக்கும் வீரமகேந்திரத்தின் எண்டிசையிலுமுள்ள 
எட்டுநகரங்களையுங் கொடுத்து, தனித்தனி பதினாயிரம் சேனைகளோடும் அதனைக் காக்க வைத்தான்; அந்நகரத்தைச் 
சூழ்ந்த மதிலிலுள்ள நான்கு வாயில்கடோறும், அந்நகரின் மதில்கடோறும், கோயில்கடோறும், காவல்செய்யும்படி 
எல்லையில்லாத வீரர்களை நிலையாக வைத்தான். இதன்பின் சூரபன்மன் துர்க்குணன், தருமகோபன், துன்முகன், சங்கபாலன், 
வக்கிரபாலன், மகிடன் முதலாயினோரை மந்திரிமார்களாகத் துணைக்கொண்டு, தேவர்கள் துதிக்க வீற்றிருந்து அரசுசெய்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            தேவரையேவல்கொள்படலம்.

    சூரபன்மன் இவ்வாறு அரசுசெய்யுங் காலத்தில், தேவர்களும் முனிவர்களும் அவனுடைய ஏவலின் 
வண்ணம் மகேந்திரபுரியிலும், சிங்கமுகனுடைய ஆசுரத்திலும், தாரகனுடைய மாயாபுரத்திலும், மற்றை 
அசுரர்களுடைய பல பதிகளிலும் சென்று, அவர் பணித்த பணிகளைச் செய்து ஊசல்போல உலைந்து திரிவர்.

    அக்காலத்தில் ஒருநாள், சூரபன்மன் இந்திரனையும் தேவர்களையும்  வலிந்தழைத்து,
 ''நீவிர் அவுணர்களுக்குத் தம்பியர் அவர்பணி நும்பணியன்றோ? கடலிலுள்ள மீன்களை நாடோறும் 
வாரிக்கொண்டுவந்து கொடுங்கள்'' என்று பணித்தான். தேவர்கள் அதனைக்கேட்டு மனநடுங்கிச்
சோர்ந்து வெள்கி, "கடலிலுள்ள மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்து  தருக என்றான்; இதற்கினி 
நாஞ்செய்வதேது; பிரமா நந்தலையில் இப்படியும் விதித்தாரே" என்று இரங்கி மறுத்தற்கஞ்சி, 
'அவ்வாறே செய்வோம்' என்று அவனை வணங்கிப் போயினார்கள். போகின்றவழியில் இந்திரனும் 
தேவர்களும் பொருமி ஏங்கி, "நமக்கு வருகின்றது ஓர் பழியன்றோ!. அது வருவதற்கு முன் சாகின்றதே 
மிகவும் இனிதாகும். நமக்கதுவும் வாராது. ஐயோ வேகின்ற மனத்தையுடையேம் செய்வதென்னை' 
என்று புலம்பிக்  கடலையடைந்தார்கள். 

    இந்திரன் வருணனையழைத்து, ''சமுத்திரத்துக்குத் தலைவன் நீயன்றோ; உன்னினும் 
வலியருளரோ. திமிங்கில முதலிய மீன்களை இக்கரையில் ஏற்றுவாயாயின், எம்மைத்துயர்க் கடலின் 
கரையில் ஏற்றினவனாவாய்" என்றான். வருணன் அதனைக்கேட்டு, "தேவர்க்கரசனாகிய நீயும் 
வருந்துகின்றனையோ, இத்தொழிலையான் செய்வேன்'' என்ற கூறிக் கடலுட்புகுந்து, கைகளாலலைத்து, 
அங்குள்ள மீன்களையெல்லாம் கரையிலே மலைபோல உயர்த்தினான். கடற்கரையில் வருணன் உயர்த்திய
 மீன்களை இந்திரன் பார்த்து, தேவர்களை அழைத்து, ''இவற்றை எடுப்பது உங்கள் தொழில்" என்றான். 
அவர்கள் நடுங்கி மனம்பதைத்துக் கண்ணீர்விட்டு நாணி, யமன் உயிரைக் கவரச் சூரியன் உலர்த்திய 
சின்னை திமிங்கல முதலிய மீன்களைப் பாம்புகளாற் கட்டினர். அச்சுமைகளை இந்திரன் தேவர்களுக்கு எடுத்த, 
அவர்கள் கொண்டு சென்று இரங்குகின்றார்கள்: 

    "சூரபன்மனாகிய தீயவனால் முன்னமுந் துயர்க்கடலின் மூழ்கி வலியழிந்தோம். பழியாகிய 
இத்தொழிலையுஞ் செய்தோம். இன்னும் நமக்கு வருங் தொழிலேதோ அறியேம் ! சூரனுடைய பணியினால் 
நமக்கு இன்று வருகின்றது பழிமொழியே. அஃது நம்முயிரை ஈர்கின்றது. விதியே நமக்கு இதுவும் தீர்கின்ற 
காலமுண்டா நீ சொல்லுவாய். பூவுலகில் வசிக்கும் மனுடரும் பாவமென்று நூலிற் சொல்லுகின்ற இத்தொழிலை 
எவர் செய்கின்றார். இது எமக்கோ வந்தெய்துவது! தேவகதியினும் நரகம் சிறப்புடைத்து. செய்யத்தகுவனவற்றை 
உணராத அசுரர்களினும் மனுடர்களினுந் தாழ்வாகிய வலைஞர் தொழிலைச் செய்தோம். இந்த விண்ணுலக 
வாழ்வை விரும்பி யாஞ்செய்த மிக்கதவமும் வினையாய் விளைந்ததே. 

    வேதா சாரத்தை விலக்கினோம். ஞானநெறிக்குப் புறம்பானோம். தீயவனாகிய சூரன் கோபத்தினாற் 
சொல்லுகின்ற இழிந்த செயல்களைச் செய்வோமாயின், எம்மினும் உயர்ந்தவர் எவர்! 'ஐந்தரு நீழலில் 
இன்புற்றிருக்கும் தேவர்கள்' என்று மதிக்குந் தகையேமாகிய யாம் எவர்களும் நகைக்கும்படி இழிவோடு 
மீன்சுமந்து அசுரர்களுக்கு முன் செல்வதினும், சாதல் மிக நன்று நன்று!" என்று இவ்வாறு தேவர்கள் சொல்லிப் 
புலம்பிக்கொண்டு சூரனுடைய நகரில் வந்தார்கள். 

    அவுணர்கள் அதனைப் பார்த்து, 'இவர் சமுத்திரத்தைக் கலக்கி இதோ சில மீன்களைத் தருகின்றார்' என்பாரும்,
"சூரியன் முன்னுண்ட வெறுங் கோதையோ எமக்குக் கொணர்கின்றார்'' என்பாரும், "கடலிலுள்ள மீனைச் 
சுமந்துகொண்டு வருகின்றார் இவர்க்குச் சிறிதும் நாணமில்லையோ" என்பாரும், "தீங்குசெய்தால் யாராயினும் 
செய்யாததேது' என்பாரும், 'இவர்கள் ஊமைகள் போல்வாரோ? ஒன்றும் பேசுகின்றிலர்' என்பாரும், 'பரதவர்களே 
செய்கின்ற இந்த இழிதொழிலும் இவர்க்கு வருமோ?" என்பாரும், "நாம் சிந்திப்பதென்ன இது விதியின் செயல்" என்பாரும், 
"வேதாசாரத்தை விட்டு நமக்குத் தொண்டு செய்யும் பேதைத் தொழிலையே கடைப்பிடித்தார்" என்பாரும், 
"வடுப்படாத நம்முடைய குலத்தை இவர் மிக வருத்தினார் இன்னும் என்னபாடு தான் படார்" என்பாரும் ஆயினார். 

    இவ்வாறு அவுணர்கள் பலருஞ் சொல்ல மனம்நொந்து புலம்புந் தேவர்கள் இந்திரனை முற்கொண்டு 
சூரனுடைய வாயிலை வந்தடைய, வாயிலாளர்கள் சூரனுடைய அனுமதிப்படி உள்ளே விடுத்தார்கள். தேவர்கள் 
மீன்களைக் கோயிலினுள்ளே சேர்த்தார்கள். சூரன் அதனைக்கண்டு களிப்புற்று, தேவர்காள், நாடோறும் 
மீன்களைக் கொண்டு வருகுதிர் என்று பணிக்க, அவர்கள் 'நன்று" என்று சொல்லிப் போய், எந்நாளும் 
இவ்விழி தொழிலைச் செய்து புலம்பித் துயர்க்கடலின் மூழ்கி, வைதிகாசாரத்தை இழந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            புதல்வரைப்பெறுபடலம். 

    சூரபன்மன் இப்படித் தேவர்களை ஏவல்கொண்டு அரசுபுரிந்து வருநாளில், அவன்செய்த தவத்தினாற் 
பதுமகோமளை என்னும் பட்டத்துத் தேவியினிடத்தில் ஓர் புதல்வன் பிறந்தான். அவனைச் சூரன் பார்த்து, 
தன் கிளைஞர்களுக்குச் செல்வங்களை வீசி மகிழ்ச்சியின் மிகுந்தான். இந்திரன் முதலாயினோர் 
துன்பமுற்றார்கள். அரம்பையர்களும் அசுரப்பெண்களும் அப்புதல்வனை ஆசிர்வதித்துத் தொட்டிலிலேற்றினர்.
 அவன் பிறைபோல வளர்ந்துவருநாளில், ஒருநாள் தொட்டிலிலே நித்திரை செய்யும்போது, அவனுடைய 
உடம்பிலே சூரியகிரணம் ஒரு நூழைவழியால் வந்து படுதலும் அவன் கோபித்துப் பார்த்து, தொட்டிலினின்றும் 
ஆகாயத்திற் பாய்ந்து, சூரியனைக் கையாற் பற்றிக்கொண்டு இறைப்பொழுதில் வந்து, தொட்டிலின் 
காலிற்கட்டி, முன்போல நித்திரை செய்தான். தேவர்கள் அதனைப்பார்த்து அச்சமுற்றார்கள். 

    சூரியன் ஆகாயத்திற் சஞ்சரித்தலின்றிப் பிழைபடுதலும், பிரமா அதனை நினைத்து, இந்திரன் முதலிய 
தேவர்களோடு சூரபன்மனிடத்தில் வந்து, ''மகாராஜனே, சூரியனை உன்புதல்வன் செய்த சிறையினின்றும் 
விடுவித்துத் தருதி' என்றார். சூரன் அதனைக்கேட்டு, "என்மகன் சூரியனைச் சிறைசெய்ததை யான் அறியேன். 
அவன் சிறைசெய்யும்படி சூரியன் செய்த குற்றம் யாது?'' என்றான். "உன் மகனுடைய முகத்திற் சூரியனுடைய 
வெய்யில் தீண்டியது. அதனால் அவனைப் பிடித்துச் சிறைசெய்தான்'' என்று பிரமதேவர் கூறினார். 

    சூரன் தன்புதல்வனுடைய வீரச்செயலைக்கேட்டு மகிழ்ந்து, "நீவிர் என்மகனை அடைந்து மிகவும் 
இனிய மொழிகளைக்கூறி அவன் விடுத்தபின் சூரியனை இங்கே கொண்டு வருதிர்" என்றான். பிரமா நன்றென்று 
விடைபெற்று, மேனகை முதலிய அரம்பையர்கள் பாடியாட்டுகின்ற பொற்றொட்டிலிற்கிடக்கும் புதல்வனிடத்தில்
 வந்து, அளவில்லாத ஆசிகளைச் சொல்லிப் புகழ்ந்து, முன்னிற்றலும் அவன் "நுமக்கு வேண்டுவது யாது சொல்லுதிர்' 
என்றான். பிரமா "  இந்தச் சூரியனுடைய சிறையை நீக்குதி' என்றார். புதல்வன் " உன்னுடைய படைக்கலத்தை 
எனக்குத் தருதியாயின் விடுவேன்' என்றான். அவர் தன் படையைக் கொடுக்க, அவன் சூரியனுடைய சிறையை 
விடுத்தான். பிரமா அப்புதல்வனைப் புகழ்ந்து மோகப்படையைக் கொடுத்தார். புதல்வன் சூரியனுக்கும் 
பிரமாவுக்கும் விடைகொடுத்தனுப்பினான்.

    சூரபன்மன் அவர்களால் அதனையறிந்து, அவ்விருவர்க்கும் விடைகொடுத்து, அந்த நல்லநாளில் 
தன்மகனுக்குப் பானுகோபன் என்று காரணப்பெயரிட்டான். பானுகோபன் அழகினால் மன்மதனையொத்தவனாய் 
வளர்ந்து விட்டுணுவோடு போர்செய்து அவரை வென்றான். சூரன், பானுகோபனைப் பெற்றபின்பு, 
அக்கினிமுகனையும், அதற்குப்பின் இரணியனையும், அதற்குப்பின் வச்சிரவாகுவையும் பதுமகோமளை பெற 
மகிழ்ந்தான். மற்றை மனைவியர்கள் மூவாயிரம் புதல்வர்களைப் பெற்றார்கள். மேற்சொல்லிய புதல்வர்க 
ளெல்லாரோடும் சூரபன்மன் மகேந்திரபுரியில் வீற்றிருந்தான்.

    சிங்கமுகனுக்கு விபுதை என்னும் பட்டத்துத் தேவியினிடத்தில் அதிசூரன் என்று ஒர்குமாரனும், 
மற்றை மனைவியர்களிடத்தில் நூறு புத்திரர்களும், மிகுந்த வலிமையுடையர்களாய்ப் பிறந்தார்கள். 
தாரகனுக்குச் சௌரி என்னும் பட்டத்துத் தேவியினிடத்தில் தபோபலத்தினால் ஓர் குமாரன்வந்து 
தோன்றி, குருவாகிய சுக்கிரனால் அசுரேந்திரன் என்று நாமகரணஞ் செய்யப்பெற்று, அழகிற் சிறந்தவனாய் 
வளர்ந்தான். அவன் சகலகலைகளினும் வல்லவனாயினும் தீங்குடைய ஓர்விஞ்சையையும் செய்யான்; 
பாதகங்களைப் புரியான்; பழியைப்பூணான்; நீதியையன்றி வேறெவற்றையும் நினையான்; 
வீரம்பேசித் தன்னோடெதிர்ப்பவர் உளராயின், அவர் கெடும்படி எதிர்த்து, தன் மார்பின்மேல் அவர் 
படைத்தழும்பை ஏற்க நினைக்குந் தகைமையான். கள்ளி அகிலைத் தந்தாற்போலத் தாரகன் இந்த 
நல்லபுத்திரனைத் தந்து மாயாபுரியில் அரசுசெய்திருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            வில்வலன் வாதாவிப் படலம்.

    சூரன் முதலிய மூவருக்குந் தங்கையாகிய அசமுகி என்று ஒருத்தி உளள். அவள் ஒரு புருஷனுக்கு 
மனையாள் என்னும் முறையில்லாதவள்; கற்பில்லாதவள்; தருமமில்லாதவள்; தேவர்களுடைய மனைவியர்களைத் 
தன் தமையன்மாருக்கு மனைவியர்களாகச் சேர்ப்பவள்; முனிவர்கள் செய்யும் யாகங்கள் கெடும்படி 
தீச்செயல்களைச் செய்பவள்; பாவமே வடிவானவள்; அசுரர் குலங்களை யெல்லாம் மாளச் செய்யும் 
தீவினைபோல எவ்விடத்திலும் எந்நாளும் உலாவுகின்றவள்; தன் சுற்றத்தாரை இகழுபவர்களைக் 
கொன்று தின்பவள்; அழகிற் சிறந்த ஆடவர்களைத் தேடி வலிந்து புணருகின்றவள். 

    இவ்வியல்புடைய அசமுகி ஒருநாள் துருவாச முனிவருடைய ஆச்சிரமத்தில் வந்து அம்முனிவரைப் 
பார்த்து,"இவன் செய்யுந் தவத்தை அழிப்பேன், அதுவன்றிப் புதல்வரையும் பெறுவேன்" என்று எண்ணி, 
அவருக்கெதிரே போயினாள். போதலும் துருவாசமுனிவர் அவளைப்பார்த்து, "பெண்ணே நீ தனித்து வந்த காரணம் 
என்னை? சொல்லுதி" என்ன, அவள் 'உம்மை மகிழ்வோடு சேர்ந்து புதல்வரைப் பெறும்படி வந்தேன்'' என்றாள். 
முனிவர் 'இவள் சூரனுடைய தங்கை' என்றறிந்து, "நான் உன்னைக் கூடுவேனாயின் என் தவமெல்லாம் அழியும், 
நீ இங்கே நிற்றல் பழி, நீதியுமல்ல" என்றார். முனிவர் இப்படிச் சொல்லுதலை அசமுகி கேட்டு, "நான் இனி 
உன்னைச் சேராது போகேன், தப்பிப்போம் நினைவை யொழி" என்று கூறி, அவரை வலாற்காரமாகத் தழுவி 
அதரபானஞ்செய்தாள். 

    அப்பொழுது அவளிடத்தில் வலிமை மிகுந்த இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களை 
அசமுகி நோக்கி, வருகவென்று மகிழ்ச்சியோடு தழுவி,"மைந்தர்காள், நீவிர் அசுரகுலத்தில் வந்தீர். 
சிறந்த தவத்தைச்செய்து வலியைப் பெறுகுதிர்" என்றாள். தந்தை தாயர்களின் வடிவாய் வந்த இருவரும் 
முறையே வில்வலன் வாதாவி என்னும் பெயரைப் பெற்று, தாயின் சொற்படி பிதாவாகிய துருவாசமுனிவருடைய 
பாதங்களை வணங்கி, அவர் "உமக்கு வேண்டிய தென்னை?' என்று கேட்க ''உம்முடைய தவம் முழுதையும் 
நாம் பெறும்படி அருள் செய்யும்" என்றார்கள். முனிவர் 'நான்செய்த தவம் முழுதையும் தரேன், வேறொரு
பொருள் என்னிடத்துள தாயின் அதனைக்கேளுங்கள் தருவேன்" என்றார். 

    புதல்வர்கள் கோபமுடையராய் "இப்பொழுதே இவனுடைய உயிரைக் கவர்வோம்' என்று 
விரைந்தெழுந்தார்கள். துருவாசமுனிவர் அவர்களுடைய செயலைப் பார்த்துக் கோபமுற்று, "நீவிர் 
நாடோறும் முனிவர்களுக்கே துன்பஞ் செய்யுங்கள். அதன்மேல் அகத்தியமுனிவர் உங்கள் உயிரைக் கவர்வார்" 
என்று சபித்து, "நம்மை இவர் கொல்வார்'' என்றெண்ணி மாயையினால் மறைந்து போயினார். வில்வலன் 
வாதாவி என்னுமிருவரும் தமது தந்தையைக் காணாதவராகி, தாயினிடத்து விடைபெற்றுக் கொண்டு 
அவ்விடத்தை நீங்கி, வேறொரு வனத்தையடைந்து, முனிவர்களைக் கொல்லுதலையே பொருளாகக்கொண்டு, 
பிரமதேவரை நோக்கி அக்கினியில் நின்று அளவிறந்த காலந் தவஞ்செய்தனர். செய்யவும் அவர் வந்திலர். 
அதுகண்டு பிறிதொன்று செய்யநினைத்து, வில்வலனானவன் தம்பியாகிய வாதாவியை வாளாற்றுணித்துக் 
கிழித்து, பிரமாவுடைய மந்திரத்தை உச்சரித்து, இரத்தத்தையுந் தசையையும் முறையே நெய்யும் அவியுமாக 
நெருப்பிற் சொரிந்து, ஒருயாகத்தைச் செய்தான். 

    அதுகண்டு பிரமதேவர் பூமியில் வந்து, "அருஞ்செயலைச் செய்வாய், "உனக்கு நாம் தரும் வரம் என்னை?"
என்று கேட்க, வில்வலனாகிய அவுணன் அவருடைய பாதங்களை வணங்கித் துதித்து, ''அக்கினியில் அவிப்பாகமாயிறந்த 
என்தம்பி, குறைவில்லாத வடிவத்தோடும் விரைந்தெழல்வேண்டும்" என்றான். என்னலும், " வாதாவி எழுக" என்று 
பிரமதேவர் சொல்ல உடனே அவன் ஆர்த்தெழுந்தான். அப்பொழுது வில்வலன் அதிசயித்து தீமையோடு 
ஒருசூழ்ச்சியை மனத்திலெண்ணி, பிரமாவைத் துதித்து " அடியேனுக்கு ஒரு வரந்தரல் வேண்டும்" என்று அதனை 
வேண்டுகின்றவனாய், "ஆட்டினுருவைக் கொண்ட வாதாவி என்னும்  என் தம்பி இன்னும் உடம்பு வெட்டுப்படுவானாயின், 
யான் 'தம்பியே எழுக' என்று சொல்ல முன்னை வடிவோடு தோன்றி என்முன் வரல்வேண்டும். இவ்வரமொன்றை அடியேன் 
பெறும்படி அருள்செய்க'' என்று பிரார்த்தித்தான். "அவ்வாறே பலகாலம் அது முடிக"  என்று பிரமதேவர் அருள் செய்து,
 ஆகாயவழிக்கொண்டு சென்றார்.

    வில்வலன் வாதாவியாகிய இருவரும் சூரன்முன் சென்று, " நாம் உன் மருகர், வேறல்ல" என்று சொல்லி, முனிவர்களைக் 
கொல்லுதற்குரிய வரத்தைப் பிரமாவினிடத்திற் பெற்றதையுஞ் சொன்னார்கள். சூரபன்மன் அவர்களை மகிழ்ந்து 
தழுவி, "மருகர்களே,இனிமையுடன் என்னோடிருங்கள்.'' என்று சொன்னான். அவர்களிருவரும் சிலநாள் அங்கிருந்து
 பின்பு நிலவுலகத்தில் வந்து, குடகநாட்டிலே, வளஞ்செறிந்த ஒரு காட்டிற் பொருந்திய நாற்சந்தியில் ஓராச்சிரமத்தைச் செய்து,
 எவர்களும் விரும்பும் எல்லாப் பொருள்களையும் வருவித்து வைத்துக்கொண்டு அங்கே இருந்தார்கள். 
அவ்வழியில்வரும் முனிவர்களுடைய உயிரைக் கவரும்படி நினைத்து, தம்பியாகிய வாதாவி ஆட்டுக் 
கடாவாய் நிற்ப,தமையனாகிய வில்வலன் முனிவர் வடிவங் கொண்டிருந்து, அங்கே வரும் முனிவர்களை 
விரைந்தெதிர்கொண்டு வணங்கி, "அடியேனுடைய ஆச்சிரமத்துக் கெழுந்தருளுக" என்று உபசாரத்தோடு 
அழைத்துக்கொண்டு சென்று, "சுவாமிகளுக்கு இன்றைக்கு இங்கே திருவமுது' என்று சொல்லி, உணவின் 
வகைகளை யெல்லாம் அப்பொழுதே சமைத்து, ஆடாய் நிற்கின்ற வாதாவியை வாளாற்றுணித்து, 
கறியாகத்தக்க ஊன்களை வகைப்பட அரிந்து, கறிகளாகச் சமைத்தபின், அம்முனிவர்கள் அவ்வூனை 
உண்ணும்படி செய்து, பின் வாதாவியாகிய தம்பியைக் கூவுவான். கூவியபொழுது ஆடாகிய அவன் உயிரோடுகூடிய 
உடம்பையுடையனாய், தன்னை உண்ட முனிவருடைய வயிற்றை வலியோடு கிழித்துக்கொண்டுவருவான். 
பின் இறக்கின்ற முனிவர்களுடைய தசைகளை அவரிருவரும் உண்டு, ஆடாகவும் முனிவனாகவும் பொருந்தி, 
முனிவர்கூட்டமெல்லாமிறக்கும்படி  நாடோறும் இதனையே செய்திருந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திரன்கரந்துறைபடலம்.


    இந்தப் பிரகாரம் இவ்வில்வலன் வாதாவியாகிய அசுரரும் பிறரும் முனிவர்களையுந் தேவர்களையும் 
வருத்த, சூரபன்மன் இந்திரஞாலத்தேரின் மீதேறி ஆயிரத்தெட்டண்டங்களினுஞ் சென்று, நாடோறும் அரசியலை 
நடாத்தியிருந்தான். ஒருநாட் பாதலத்திலிருப்பான்; ஒருநாள் திக்குக்களிலுலாவியிருப்பான்; ஒருநாள் 
விண்ணுலகங்கடோறுமிருப்பான்; ஒருநாட் சத்தியவுலகத்திலிருப்பான் ; ஒருநாள் வைகுண்டவுலகத்திலிருப்பான். 
சூரபன்மன் இவ்வாறு நாடோறும் எண்ணிறந்த உலகங்கடோறும் சென்று மாலைக் காலத்தில் விரைந்து மீளுவான். 
இவ்வாறு அரசு புரியுங்காலத்தில், மேலே தனக்கு வருங்கேட்டை அறியானாய், இந்திரனைச் சிறைசெய்து 
அவன் மனைவியாகிய அயிராணியைக் கவரும்படி நினைத்தான். நினைத்த சூரன், தன்னுடைய சேனைத் 
தலைவனொருவனை அழைத்து, "நீ இப்பொழுதே சென்று, இந்திரனைப் பிடித்துக்கொண்டுவந்து என்முன் 
விடுவாய்' என்று அனுப்பி, தன் கோயிலைக் காக்கின்றவர்களும் வாள் முதலிய படைக்கலங்களை ஏந்தினவர்களும் 
ஆகிய ஒன்பதுகோடி அசுரப்பெண்களை விரைந்தழைத்து, "நீங்கள் இந்திரன் மனைவியாகிய அயிராணியைப் 
பிடித்துக் கொண்டு வந்து தாருங்கள்'' என்று அனுப்பினான். 

    அவர்களெல்லாரும் கோபித்து ஊக்கத்தோடு விண்ணுலகத்திற் சென்றார்கள். செல்லுதலும், 
அதனைக் கண்ட தூதுவர்கள் விரைந்து சென்று இந்திரனை அடைந்து, ''அவுணர்களும் வீரத்தையுடைய பெண்களும் 
போர் செய்வாரைப் போல வந்தார்கள்; அவர்கள் கருத்தென்னையோ யாம் அதனை அறிந்திலோம்"  என்று 
இந்திரனறியும்படி கூறினார்கள். இந்திரன் அவர்களை விரைந்து அனுப்பி, அவுணர்களுடைய உபாயத்தை எண்ணி,
 தன் மனைவியோடு மாளிகையை அகன்று, மாயையினால் விரைந்து இப்பூமியிற் சென்றான். சூரபன்மன்விட 
விண்ணுலகத்துக்குச் சென்ற பெண்களும் வீரரும், இந்திரனிருக்கின்ற அமராவதி என்னும் நகரை அடைந்து, 
* ஆகரம் முதலிய இடங்களை ஆராய்வார்கள். 

* ஆகரம் - உறைவிடம்.

    இந்திரனைப் பிடித்துவரும்படி சென்ற வீரர்கள் அவனைத் தேடிக் காணாராயினார். இந்திராணியைப் 
பிடித்துவரும் படிசென்ற பெண்கள் அவளைத்தேடிக் காணாராயினார். அதனால் அவ்விரு பாலாரும் 
அறிவு சோர்ந்து, கவலைமிகுந்து, "நம்மரசன் இங்கே நம்மை அழைத்து ஏவிய பணியை முடியேமாயினேம்; 
இந்திரன் அயிராணியோடும் இவ்விடத்தை விட்டுப்போயினான்" என்று அவனுடைய நகரையெல்லாம் 
ஆராய்ந்தார்கள். நகரெங்குஞ் சுற்றிப்பார்த்துத் தேவர்களைப்பிடித்து, "இந்திரனைக் காட்டுக" என்று அடித்து, 
"இந்திராணி எவ்விடத்தாள்'' என்று வாய்கடோறும் இரத்தம் வடியும்படி குற்றினார்கள். அத்தண்டனையுற்ற 
தேவர்கள், "எங்களரசனாகிய இந்திரனும் அவன் மனைவியும் சென்றதை யாங்கள் அறியேம். 
எங்களை வருத்தன்மின். யாங்கள் துயருறுகின்றோம்" என்று அவ்வசுரர்களுக்கு அன்பு வரும்படி தளர்ந்து 
சொல்லினர். அசுரர்கள் அத்தேவர்களைவிட்டு, விண்ணுலகத்தை நீங்கி மகேந்திரபுரியை அடைந்து, 
சூரபன்மன் முன்சென்று "இந்திரனும் இந்திராணியும் விண்ணுலகத்தை நீங்கிப் புறத்தே போயினார்" என்று 
பழிபொருந்திய மனத்தினராய்க் கூறினார்கள். 

    சூரபன்மன் அதனைக்கேட்டு, அக்கினிபோலக் கோபித்து, தேடுதற்கரிய மணியை இழந்த நாகம் 
போலத் துன்புற்று, ஒற்றுவர்களிற் பலரை விரைந்தழைத்து, "இந்திரன் தன் மனைவியாகிய 
இந்திராணியோடிருக்குமிடத்தைத் தேடிப்பார்த்துவந்து சொல்லக்கடவீர்கள்" என்று தூண்டினான். 
ஒற்றுவர்கள் வேறுவேறாய் உலகமெங்குந் தேடிக் காணாது திரிவாராயினார். 
இனி விண்ணுலகத்தில் நிகழ்ச்சிகளைச் சொல்வாம்.

    இந்திரனானவன் மனைவியோடு நீங்க, விண்ணுலகம் சந்திரனும் நக்ஷத்திரங்களுமில்லாத 
இராக்காலம்போன்று சிறிதுஞ் சிறப்பின்றாய்ப் புல்லெனலாயது. வளங்களெல்லாம் அழிந்தன. துன்பம் மிகுந்தது. 
தேவர்களுடைய மனம் இன்பம் நீங்கி ஒடுங்கியது. அவ்வுலகமெங்கும் புலம்பலோசை எழுந்தது. 
எல்லாருடைய கண்களும் நீரைப்பொழிந்தன. பொன்னுலகம் உயிர்நீங்கிய உடலையொத்தது. 

    இவைகள் நிகழுதற்கு முன்னரே, இந்திரனுடைய தம்பியெனப்படும் உபேந்திரனாகிய விட்டுணுவானவர், 
விண்ணுலகத்தை நீங்கிப் பழைய வைகுண்ட பதத்தை அடைந்தார். இந்திரகுமாரனாகிய சயந்தன், தன் சிறிய
பிதாவாகிய அவரைக்காண எண்ணி வைகுண்டத்திற் சென்று சிலநாள் அங்கிருந்தான். இருக்கின்ற சயந்தன், 
இந்திரன் அயிராணியோடு மறைந்தோடியதையும், அவுணர்கள் சுவர்க்கத்தில் வந்து அவ்விருவரையுந் தேடி 
மீண்டபின் தேவர்கள் துன்பமுற்றிருந்த தன்மையும், வைகுண்டத்திலிருந்து அறிந்து, "பிதாவின் மெலிவைக் 
கண்டால், தங்குடித்தலைமைகளையெல்லாம் புதல்வர்கள் தாங்குதல் வழக்கமாம்; தருமமும் அதுவே ; 
என் பிதாவுமில்லை; யான் போய் என்னகரைக் காப்பேன்' என்று மனத்தில் நினைத்து, பொன்னுலகத்தில் வந்தான். 

    சயந்தன் பொன்னுலகத்தை அடைந்து, புலம்புகின்ற தேவர்களைக் கண்டு, தன்னுயிர்போலுந் 
தந்தை தாயர்களைக் காணானாய்த் துன்பக்கடலின் மூழ்கி, ஏங்கி இரங்கி, ஒருசெயலுமின்றிப் பித்தர் 
போலாயினான். அப்பொழுது, நாரதமுனிவர் அவன் மனத்தைத் தெளிவிக்க நினைத்து அங்கே செல்ல, 
அவன் நடுக்கத்தோடெழுந்து வணங்கி, ஆசனத்தை இட்டு அவரை அதிலிருக்கச்செய்து, பக்கத்தில் நின்று,
 "அடியேனைப் பெற்ற தந்தை தாயர்கள் சூரபன்மனுக்கஞ்சி ஒளித்தோடினர். அவர் சென்ற இடத்தை அறிந்திலேன். 
எங்களுக்கு இந்தத் தீமை எந்தக் காலம் நீங்கும். எம்பெருமானே சொல்லியருளுக." என்றான். 

    களிப்பை இழந்துநின்ற சயந்தன் இவ்வாறு கூற, நாரதமுனிவர் திருவருளாற் சிந்தித்தறிந்து, 
இரத்தினாசனத்தில் அவனை இருத்தி, பின்னர் இவைகளைச் சொல்லுவார்: "நன்மை தீமைகள் தாந்தாஞ் செய்த 
வினையினாலன்றிப் பிறராலே தத்தமக்கு வாரா. அமுதத்திற்கும் நஞ்சிற்கும் முறையே தித்திப்பும் கசப்பும் 
ஆகிய சுவைவேறுபாடுகளைக் கொடுத்தார் சிலருண்டோ? கற்றறிந்த பெரியோர் இன்பம் வந்தபொழுது 
அதனை இனிதென்று மகிழார்; துன்பம் வந்தபொழுது அதற்கு நடுங்கிச் சோரார்;' இன்பமுந் துன்பமும் 
இவ்வுடலுக்கே இயைந்தன' என்று பழவினையை ஆராய்வர். வறியவர் செல்வராவர்; செல்வர் பின் வறியராவர்; 
சிறியவர் உயர்ந்தோராவர்; உயர்ந்தவர் சிறியராவர்; இது முறை முறை மாறிமாறிவரும். இதனைப் 
பழையவினைப் பயனே யென்றறி. உலக வழக்கமுமிதுவே. செல்வமும் வறுமையும், துன்பமும் இன்பமும் 
என்னும் இவைகளெல்லாம் உயிர்களுக்கு என்றும் நிலையென்று கொள்ளும் பகுதியையுடையனவோ! 

    சந்திரனுடைய நிலாக்கற்றை தேய்தலையும் வளர்தலையும் நாடோறும் முறைமுறையே பொருந்தின. 
ஆதலினால், உங்களுடைய தாழ்வும் அவுணர்களுடைய உயர்வும் நிலைபெற்று நில்லா. இதனை 
மெய்யென் றெண்ணுதி. இந்நகரை நீங்கிச் சென்ற உன்பிதாவும் மாதாவும் தம்முருவை மறைத்துச் சென்று 
பூவுலகத்திலிருந்தார்போலும். சயந்தனே, அந்நாளில் நீ பிறத்தற்குமுன் தேவர்களுக்குத் துயர்புரிந்த 
கயமுகன் என்னும் அவுணனிறக்கும்படி உன்பிதா முயற்சி செய்தான். அதுபோல் இந்தக் கொடிய சூரனும் 
இறக்கும்படி இன்னும் முயல்வான்'' என்றிவைகள் பலவற்றையுஞ் சொல்லி, "இனிக் கொடிய சூரனும் இறப்பான்; 
உங்கள் துயரும் விரைவில் நீங்கும்; இதை நன்றாய்த் துணிதி' என்று நாரதமுனிவர் சயந்தனைத் தேற்றிச் சென்றார். 

    அவன்மனந் தெளிந்து வருந்திய தேவர்களைத் தெளிவித்து, நாடோறுஞ் சூரனுடைய ஏவல்களைச் செய்யும்படி 
அவர்களை ஏவி, விண்ணுலகத்திலிருந்தான். இனி, நிலவுலகத்திற்சென்ற இந்திரன் செய்த செயல்களைச் சொல்லுகின்றேன்.

     இந்திரன், ஐந்தரு நீழலிலிருந்தனுபவிக்குஞ் செல்வங்களை வெறுத்து, மனைவியோடு தக்ஷணதேயத்தில் 
* பன்னிரண்டு திருநாமங்களையுடைய சீர்காழியை அடைந்து, "இத்தலம் யாமிருத்தற்கு நன்று" என்று துன்ப நீங்கி 
இருந்தான். அதன்பின் "சிவபெருமானை மனமகிழ்வோடு எப்பொழுது அருச்சிப்போம்' என்றெண்ணி, 
அங்கே ஓர் திருநந்தனவனம் வைக்க நினைத்து, சந்தனம் அகில் முதலிய விருக்ஷங்களால் வேலி கோலி, 
சிறுசண்பகம் கோங்கு முதலாகிய தருக்களையும் மல்லிகை முல்லை செவ்வந்தி முதலாகிய புதல்களையும் 
பழுதறத் தெரிந்துவைத்து ஓர் நந்தனவனத்தை உண்டாக்க, அவைகள் மிகவும் மலர்ந்தன. இந்திரன் அம்மலர்களால் 
நாடோறும், சிவபெருமானுடைய திருவடிகளை அருச்சித்துக்கொண்டு, அங்கே மனைவியோடிருந்தான். 

*சீர்காழியின் பன்னிரண்டு திருநாமங்கள் -- பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், 
சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்பனவாம்.

    இருக்குநாளில், சூரபன்மன் விடுத்த ஒற்றுவர்கள் இந்திரனைப் பூவுலகமெங்குந் தேடிச்செல்ல, 
அவன் அதனை அறிந்து, மனைவியோடும் அங்கே மூங்கில்வடிவாய் மறைந்திருந்து தவஞ்செய்தான். 
ஒற்றுவர்கள் காணாராய்ப் போயினார்கள். அவுணர்களுடைய ஆணையினால், முகில்மழை பெய்யாதாக, 
தீப்பட்டாற்போல அத்திரு நந்தனவனம் வாடியது.  அதனை இந்திரன் அது கண்டு வருந்தி, பிறிதொரு செயலுமின்றி, 
பிரமவிட்டுணுக்களுந் தேடியறியாத சிவபெருமானைத் தியானித்திரங்கித் துதித்தான். அப்பொழுது, 'இந்திரனே 
நீ வைத்த நந்தனவனம் வாடிப்போயினவெனினும் அழியா; இந்த ஸ்தலத்திலே ஒரு ஆறு வரும்; வருந்தாதொழி'' 
என்று ஓரசரீரி வாக்கு ஆகாயத்திலெழுந்தது. அவ்வாக்கை இந்திரன் கேட்டு, "இது எம்பெருமானுடைய திருவருள்' 
என்று அஞ்சலி செய்து துதித்து, உரோமஞ் சிலிர்ப்ப, மனமகிழ, திட்பத்தோடிருந்தான். 
இனி,சீர்காழியில் ஒரு நதி வந்த வரலாற்றைச் சொல்வேன்.

            திருச்சிற்றம்பலம்.

            விந்தகிரிப்படலம்.

    இந்திரன் அசரீரி வாக்கைக் கேட்டு மனத்திட்பமுற்றிருக்க, சிவபெருமானுடைய திருவருளால், 
பின்னிகழ்வனவற்றை முன்னறிகின்ற நாரத மகாமுனிவர் விந்தகிரிக்கு முன்னே சென்று பல 
ஆசிகளைச் சொன்னார்.  சொல்லுதலும், தெய்வவடிவத்தைக் கொண்ட அம்மலை தொழுது,
" எம்பெருமானே, நீவிர் எழுந்தருளியது பேரதிசயம்." என்று உபசார வசனங்களைக்கூற, அந்நாரதமுனிவர், 
தம்முடைய வசனங்களால் அம்மலை ஏவப்படும்வண்ணம் இதனைச் சொல்லுவார்: "மேருமலையானது, 
தான் சிவபெருமானுடைய வில்லாகிய வலியினாலும், உலகங்களையெல்லாம் பெற்ற உமாதேவியார் 
தன்மரபிலே அன்போடுவந்து திருவவதாரஞ் செய்தமையினாலும், மலைகளுக்கெல்லாம் அரசாயிருத்தலினாலும், 
சூரியனைத் தொடும்படி ஆகாயத்தில் வளர்ந்திருத்தலினாலும், சங்காரகாலமளவும் நின்று இப் பூவுலகமுழுதையுங் 
காத்தலினாலும், ஆயிரங் கொடுமுடிகளையுடைமையினாலும், சிவபெருமானெழுந்தருளியிருக்கின்ற 
திருக்கைலாசமலை தன்னொரு பக்கத்திலே பொருந்தியிருத்தலினாலும், சூரபன்மனால் அழியாமையினாலும், 
சூரியனும் சந்திரனும் மற்றை ஏழுகிரகங்களும் நக்ஷத்திரங்களுமாகிய எல்லாருஞ் சூழும்படி நிற்கின்ற 
பழமையினாலும், தேவர்கள் குடிகொண்டிருத்தலினாலும், பொன்னைக் கொண்டுயர்ந்திருத்தலினாலும், 
பலமலைகள் தன்னைச் சூழ்ந்திருத்தலினாலும் தனக்கொப்பில்லை என்று செருக்குற்றது. 

    பரந்து ஆகாயத்தில் நிமிர்ந்த மேருமலை, தன் பெருந்தகைமையை மதிக்குந் தன்மையை நீ 
அறிந்திலை போலும்! யாம் அந்தச் செயல்களையெல்லாம் விரைந்து உனக்குச் சொல்லும் வண்ணம் வந்தேம்' 
என்று கூறினார். தெய்வ வடிவாய் வந்த விந்தகிரி இதனைக்கேட்டு, வீரத்தைப் பொருந்தி,பெருமூச்சுவிட்டு, 
"இது நன்று' என்று சிரித்துச்சொல்லும்: "இல்லாகிய இறுமாப்பு நீங்கப் பலருமிகழ, பெண்களைப் போல 
நாணமுற்று வில்லாய் வளைந்தது மேன்மையோ? எந்நாளும் எல்லாவற்றையும் பெற்ற உமாதேவியார், 
இமயமலையரசன் செய்த தவத்தால் அவனிடத்தில் வந்திருந்தாரன்றி, அவன் மகளாய்ப் பிறந்தனரோ? 
மேருவானவன் 'பூமியைத் தாங்குவேன்' என்று உயர்ந்தான். எவ்வுலகையுந் தாங்கியுற்றன இன்னும் பலவுள. 
அவற்றையுந் தாங்குவது சிவசத்தியே. சூரியன் முதலியோர் தன்னைச் சூழ்ந்தார்களல்லது நாடோறும் 
என்னைச் சூழ்ந்திலரோ, ஏழுதீவுகளிலுமுள்ள கற்களைச் சூழ்ந்திலரோ? அம்மேரு தனக்குப் பல கொடுமுடிகள் 
உள்ளன என்று நினைக்குமோ! 

    கள்ளிகளின் அளவிறந்த தலைகளைப் பார்த்தால், நான்கு தலைகளையுடைய பிரமதேவர் 
அவற்றை ஒப்பாகாரோ! கொடிய சூரபன்மன் 'இது கல்' என்று அம்மேருவைத் தாக்காமல் விட்டான். அவன், 
சூரபன்மனுக்கஞ்சியிருக்கின்ற சக்கரப்படையையுடைய விட்டுணுவிலும் வலியனோ!  மேருவானவன் 
'நாம் பொன்மயமாகிய உருவத்தைப் பொருந்தினோம்' என்று நினைத்தானோ ? அவன் மண்ணாற்செய்து 
அலங்கரித்த பாவையினழகை எண்ணினானில்லை. தன்னிடத்திலிருக்குந் தேவர்கள் பலரும் 
என்னிடத்திலிராமல் இகழ்ந்தார்களோ? சிவபெருமான் வீற்றிருக்கின்ற கைலாசமலைக்கு அருகிலில்லாதது 
எந்தமலை? ஆதிசேஷன் தன்னைவந்து மறைத்தநாளில் வாயுவானவன் கோபித்துத் தன்னுடைய மூன்று 
கொடுமுடிகளையும் பறித்து வீசியதை யான் அறிந்திலேனோ? வீரபத்திரக்கடவுளாகிய 
சரபப்பக்ஷி விட்டுணுவாகிய நரசிங்கத்தின் முன்னே தன்னுரு அண்ட மெல்லாம் பொருந்த வளர்ந்தபொழுது, 
ஒருபருக்கைக்கற்போல அதன்காலின்கீழ்ப் பொருந்தினான். இதனை அம்மேரு நினைத்திலனோ ! 
வீரபத்திரக்கடவுள் சரபப்பக்ஷி வடிவங் கொண்டபொழுது, அதன் சிறைக்காற்றினால் மின் மினிபோலத் 
திரிந்தான். அதனை அறிந்திலனோ! 

    விநாயகக்கடவுள் கயமுகாசுரன்மீது முறித்தெறிந்த கொம்பினாலே, பாரத சரித்திரமெல்லாம் 
அவன்மேல் எழுதப்படும் என்பது தவறுமோ! மேருவானவன் தானோர்மலையன்றி விட்டுணுவோ அல்லன்; 
பிரமாவோ அல்லன்; இந்திரனோ அல்லன்; அவன் தன்னை மேலென்றெண்ணியது ஏனோ?" என்று 
மேருமலையை இழித்துப்பேசி, "முனிவரே, அந்த மேருமலை தன்னை வியக்கின்ற செருக்கை யான் நீக்குவேன், 
பார்ப்பீராக" என்று, விந்தமலை பழைய வடிவையொழித்து, கோடிவிட்டுணுக்கள் எல்லையில்லாத மாயாசரீரங்களைக்
கொண்டு திரண்டு நிமிர்ந்தாற்போல ஓர் வித்தையினால் அகன்று ஆகாயத்திலுயர்ந்து, சத்தியவுலகம் வரையும் 
நிமிர்ந்து, இமயமலைவரையு மகன்று, நெருக்கியது. 

    விந்தகிரி இந்தப்பிரகாரம் அகன்று மேலே உயர்ந்து சென்று ஆகாய வழியைத் தடைசெய்ய,ஆதித்தன் முதலிய 
ஒன்பது கிரகங்களும் நக்ஷத்திரங்களும் பிறரும் பார்த்து மனநடுங்கி, 'இது அவுணர்களுடைய செயலோ' என்பார்; 
தருமமில்லாத கொடிய இராக்கதர்களுடைய செயலோ' என்பார்; அவர்கள் செயலல்லவாயின், பிரமவிட்டுணுக்களுடைய 
செயலோ என்பார்; இது மாயமாகும் என்பார்; மேலேயுயர்ந்த மலையன்றி வெளியிடம் இல்லைபோலும் என்பாராய், 
சிவபெருமானது திருவருள் துணையாக  ஞானத்தால் நோக்க, அது வெளிப்பட்டது. வெளிப்படுதலும், "விந்த மலையானது 
மேருமலையோடு பகைத்து, மண்ணுலகத்தினும் விண்ணுலகத்தினுஞ் செல்லும் வழியைத் தடுத்தது'' என்று சிந்தித்து, 
''அகத்தியமுனிவர் மேருமலைச்சாரலிற் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துத் தவஞ் செய்து
கொண்டிருக்கின்றனர். அவர் இங்கே வந்தால் மேலேயுயர்ந்து நின்ற விந்தம் ஒடுங்கும்'' என்று எல்லோரும் 
ஆராய்ந்து தெளிந்தார்கள்.


            திருச்சிற்றம்பலம்.

            அகத்தியப்படலம்.

    அகத்தியமுனிவரைக்கொண்டு விந்தமலையின் வலியை அடக்குவித்தல் வேண்டும் என்று துணிந்த 
சூரியன் முதலிய கிரகங்களும் பிறரும் அவரை நினைத்து, இவைகளைச் சொல்லித்துதிப்பார்கள்:-
"விட்டுணுவினுடைய பாதங்களை அருச்சிக்கும்படி பூவைக்கொய்த கசேந்திரனென்னும் யானையானது,
 தன்னை ஒருமுதலை பற்ற, 'என்னாயகனே' என்று கையை எடுத்தழைப்ப அவர் வந்துவிடுவித்ததை அறியீரோ? 
பிரமதேவர் தாம் படைத்த திலோத்தமையென்னும் பெண்ணினிடத்து ஆசை வைத்து, கிளியாய்த் 
தொடர்ந்துசெல்ல, அவள் 'பரம்பொருளே காத்தருளும்' என்று வேண்டுதலும், தேவாதிதேவராகிய 
சிவபெருமான் அவளுக்கருள் செய்ததை அறியீரோ? தேவர்க்காயினும்  மனிதர்க்காயினும் ஒரு துன்பம் 
வந்தால் அடைந்து அதனை நீக்குதல் காத்தற்குரியாருக்குக் கடனாம். அக்கடனை ஆராயின் அது 
அடைதற்கரிய முத்தியினுஞ் சிறந்ததன்றோ? வேதங்களைத் திருடிக்கொண்டு சமுத்திரத்திலொளித்த 
சோமுகாசுரனை அழித்த விஷ்ணுவாகிய மீனைப்போல, சமுத்திரத்தை உள்ளங் கையிலடக்கி அதில் மறைந்த 
விருத்திராசுரனைக் காட்டித்தந்து நம்மிடத்தில் வைத்த மிகுந்த கிருபை உலகமெல்லாவற்றையும் விழுங்கியது.

    எம் பெருமானே, விந்தமலை நாரதமுனிவருடைய சூழ்ச்சியினால் இப்பொழுது மேருமலையோடு பகைத்து, 
' ஊழிக்காலத்திலுயருகின்ற திருக்கைலாசமலைக் கிணையாவேன்' என்று நினைத்ததுபோலும். அது ஆகாயமெல்லாம் 
மூடி எழுந்து அண்டகடாகம் வரையும் மேலே உயருகின்றது. இதனைக் கிருபா நோக்கஞ் செய்தருளீரோ? 
விந்தகிரி ஆகாயவழியைத் தடைசெய்தலால் எங்களுக்குஞ் செல்லுதற்கரிதாயது. நிலவுலக முழுதும் பொழுது 
மயங்கின. முனிவர்பெருமானே இக்குறைகளை நீக்குதற்கு எழுந்தருளி வரல்வேண்டும்" என்று துதித்து 
அகத்திய முனிவரை நினைப்பாராயினார்கள்.

    சூரியன் முதலாயினோர் இவ்வாறு நினைத்தலும், மேருமலைச்சாரலிலே தவஞ்செய்துகொண்டிருக்கின்ற 
அகத்தியமுனிவர் அதனை அறிந்து, மேலேயுயர்ந்த விந்தமலையின் வலியை அடக்கி, ஆகாயவழியை முன்போலாக்கித் 
தேவர்களுடைய குறையை நீக்கும்படி முயன்றார். முயன்று, கண்களில் ஆனந்தபாஷ்பஞ் சொரிய, கைகளஞ்சலிக்க, 
மனமும் என்பும் நெக்குருக, மயிர்பொடிப்ப, சிவபெருமானைப் புகழ்ந்து தியானித்தார். தியானிக்கும்பொழுது, 
பரமசிவன் இடபவாகனமேற்கொண்டு பூதர்கள் சூழத் தோன்றியருளினார். அகத்தியமுனிவர் அச்சத்தோடெழுந்து 
அவரைத்தரிசித்து, அடியற்ற மரம்போலவீழ்ந்து பலமுறை வணங்கி, சந்நிதானத்திலே நின்று துதித்தார். 

    
    சிவபெருமான் "முனிவனே, நீ விரும்பியதென்னை? அதனை வேண்டுதி' என்று திருவாய்மலர்ந்தருளினார். 
அதுகேட்ட அகத்தியமுனிவர் "எம்பெருமானே, விந்தமலை மேருமலையோடு மாறுகொண்டு ஆகாயவழியை அடைத்தது. 
அதன்வலியை அடக்கும்படி அடியேனுக்குச் சிறிதருள்செய்க" என்று பிரார்த்தித்தார். சிவபெருமான்,"முனிவனே, 
உனக்குவலிமையைத் தந்தருளினோம். செருக்குற்ற விந்தத்தை அடக்கி, தெக்ஷிணதேயத்தை யடைந்து, 
பொதியமலையிலிருப்பாய்'' என்றருளிச்செய்தார். அகத்தியமுனிவர் அஞ்சலிசெய்து துதித்து, "தேவரீரை 
அருச்சனை செய்தற்கும், தடாகங்களினுங் கிணறுகளினும் நீர் குறைவற்றிருத்தற்கும் தென்றிசைக்கு ஒரு தீர்த்தத்தைத் 
தந்தருளுக'' என்று வேண்டினார். 

    அப்பொழுது சிவபெருமான், திருக்கைலாச மலையிலிருந்த ஏழு நதிகளுள்ளும் பரிசுத்தமாகிய காவேரிநதியை 
வரும்படி நினைத்தருள, அந்நதி அதனை அறிந்து அஞ்சி, மனவேகமும் பிற்படும்படி விரைந்து திரு முன்வந்து 
வணங்கியது. அதனைநோக்கி, "பெண்ணே, நீ குற்றமில்லாத தென்றிசைக்குச் செல்லுகின்ற அகத்திய முனிவனோடு 
போதல்வேண்டும்' என்று சிவபெருமான் பணித்தருளினார். "எம்பெருமானே இம்முனிவர் ஐம்பொறிகளையும் 
அடக்கிய இயல்பினராயினும், ஒரு ஆடவர்; யான் ஒரு பெண்; ஆதலினால் இவருக்குப் பின்னே செல்லுதல் முறையோ! 
ஆராயின், இதுமுறையன்று'” என்று காவேரியாகிய பெண்ணானவள் சொல்லினாள். சிவபெருமான் அதனைக்கேட்டு, 
''இம்முனிவன் மாறுபாடில்லாத மனத்தினன் ; நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக் கேடுகளிலே சமபுத்தி 
பண்ணும் மனத்தினையுடையன்; நம்முடைய அடியார்களுட்சிறந்தவன். இவன் பின்னே செல்வாய்' என்று அருளிச்செய்தார். 

    அந்நதி அதற்கிசைந்து, ''இன்றைக்கு அடியேன் இம்முனிவருக்குப் பின்னே செல்வேன். எம்பெருமானே இவரை 
அடியேன் நீங்குங்காலத்தைச் சொல்லியருளுக' என்று வேண்ட, “பெண்ணே, இது நன்று நன்று. இம்முனிவன் என்றைக்கு 
உன் பொருட்டாகப் பார்த்துக் கைகாட்டுவானோ அன்றைக்கு இவனை நீங்கிப் பூமியிற் சென்றிருப்பாய்' என்று சிவபெருமான் 
சொல்லியருளினார். அத்திருவாக்குத் தன் செவிக்கமுதம் போலாக, காவேரியாறு அகத்தியமுனிவருக்குப் பின்னே 
செல்லுதற்கு உடன்படுதலும், உயிர்க்குயிராகிய சிவபெருமான் அகத்தியமுனிவரைநோக்கி, "காவிரிநதியை 
உன் கமண்டலத்திலே ஏற்பாய்" என்று பணித்தருள, அந்நதியானவள் அகத்தியமுனிவரை அடைந்தாள். 
சிவபெருமான் ''முனிவனே தக்ஷிண தேயத்திற்குச் செல்லுதி'' என்று விடைகொடுத்து, பூதகணங்களோடு மறைந்தருளினார்.
அகத்தியமுனிவர் அவரிடத்து விடைபெற்றுக்கொண்டு தென்றிசையை நோக்கி நடந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            கிரவுஞ்சப்படலம்.

    அகத்தியமுனிவர் மேருமலையினின்றும் நிலவுலகத்தின் வழியாகத் தெக்ஷிணதிசையை நோக்கிச் 
செல்லும்பொழுது, தாரகாசுரன் வாழுகின்ற மாயாபுரி என்னு நகரம் சமீபித்தது. அங்கே இருக்கின்ற கிரவுஞ்சன் 
என்னும் அசுரன் அவருடைய வரவைக் கண்டான். அவன் வானுலகத்தை நிலவுலகமாக்குவான்; நிலவுலகத்தை 
வானுலகமாக்குவான்; கடலை மலையாக்குவான்; மலையைக் கடலாக்குவான். சூரியனைச் சந்திரனாக்குவான்;
சந்திரனைச் சூரியனாக்குவான். அணுவை மேருவாக்குவான்; மேருவை அணுவாக்குவான். பூமியைக் கடலாக்குவான்; 
கடலைப் பூமியாக்குவான். வடவைத்தீயைக் கடலாக்குவான். ஒருநாழிகையின் பதினாயிரத்திலொரு பங்கினுள், 
தேவர்களுக்காயினும் முனிவர்களுக்காயினும் பல மாயங்களைச் செய்து, பலநாட் கழிந்தபின் அவர்களைக் 
கொல்வானென்றால், அவன் வலிமைகளையெல்லாம் யாவரறிந்து சொல்லவல்லார். அந்தக் கிரவுஞ்சன் என்னும் 
அசுரன் அகத்தியமுனிவர் வரும்வழியில், பல சிகரங்களையுடைய ஒரு மலையாய், தன்னிடத்துய்க்கும் வழியைக்காட்டி 
நின்றான்.நிற்றலும், அகத்தியமுனிவர்  கண்டு வியந்து, "நல்லது! இம்மலையின் நடுவே இஃதோர் வழியுண்டு 
இவ்வழியே செல்வேம்" என்று அவ்வழியே போக, அது ஒரு கூப்பிடு தூரங் கழிந்தபின் இல்லையாக, வேறொருவழி வந்தது. 
அவ்வழியைக் கண்டு செல்லுதலும், அது பின்னர் இல்லையாக, திரும்பிச்சென்றார். செல்லும்பொழுது, முந்திய 
வழியையுங் காணாது மயங்கி, பிறிதொரு வழியைக் கண்டு வருத்தத்தோடு சென்றார். அவ்வழியாற் செல்லும்பொழுது, 
அக்கினி நெருங்கிச்சூழ, சுழல்காற்று வீச, மழைபெய்ய, இடிஇடிக்க, இருட்படலஞ்சூழ, அளவிறந்த மாயங்களைக் 
கிரவுஞ்சனென்னு மவுணன் இயற்றினார்.

அகத்தியமுனிவர் அதனை நோக்கி, "இது கொடியராகிய அவுணர்களுடைய வஞ்சனை" என்று ஞானத்தாலறிந்து, 
அக்கினிபோலக் கோபித்து,கையோடு கைதட்டிச் சிரித்து, "நல்லது நல்லது! இவ்வசுரனா நமக்கிதனைச் செய்வான். 
இன்றைக்கே இவன் வலிமையைக் கெடுப்பேன்" என்று அவன் மலை வடிவிலே திருக்கரத்தின்கணுள்ள தண்டினாற் 
குற்றிப் பூழைகளாக்கி, "நல்லறிவில்லாத கொடிய அசுரனே, நீ உன் பழைய அசுரவடிவை நீங்கி மலைவடிவாய் 
இங்கே நின்று, அவுணர்களுக்கிருப்பிடமாய், முனிவர்களுக்குந் தேவர்களுக்குங் கொடுந்தொழிலைப் புரிதி. உன்மீது நமது 
கையின்கணுள்ள தண்டினாற்செய்த முழைஞ்சுகளெல்லாம் பற்பல மாயங்களுக்கிருப்பிடமாகுக. பின்னாளில், 
சிவகுமாரராகிய குமாரசுவாமியினுடைய வேற்படையினால் நீ இறக்கக்கடவாய்' என்று சபித்து, கமண்டலத்திலுள்ள 
நீரை அள்ளி மந்திரத்தோடு தெளித்து, அவன் மாயத்தைக் கெடுத்து, அவ்விடத்தைநீங்கி, தென்றிசையை நோக்கிச் 
சென்றார். அந்தக்கிரவுஞ்சனென்னும் அவுணன் முந்தைநாள்வரையும் மலையின் வடிவாய் நின்றான். அவனைத் 
தேவரீரன்றி வேறியாவர் வதைபுரிய வல்லவர்.

            திருச்சிற்றம்பலம்.

            விந்தம் பிலம்புகு படலம்.

    அகத்தியமுனிவர் மேருமலையை நீங்கித் தேவகிரிச் சாரலையடைந்து, காசிப்பதியிற் சென்று, விசுவேசுரருடைய 
திருவடிகளை வணங்கித் துதித்து, அங்கு நின்று நீங்கி விந்தமலைச் சாரலையடைந்து அதனைப்பார்த்து, "மிக வுயர்ந்து 
ஆகாயத்திற் புகுகின்ற விந்தமலையே கேள்,யாம் பொதியமலையிற் போயிருக்கும்படி நினைத்துவந்தோம் .
அதற்கு நீ இப்பொழுது ஒரு சிறிது செல்லும் வழியைத் தருதி' என்று கூறினார். அதுகேட்ட விந்தமலை, "சூரிய 
சந்திரர்களும் செல்லுதற்கரிய தன்மையால் ஆகாயவழியை மறைத்து, நெடிய வடிவையுடைய விட்டுணுவைப் 
போல யான் நின்றேன். குறிய வடிவையுடைய உனக்கஞ்சி வழிகொடுப்பேனோ! எனது தோற்றத்தை நீயறிகிலை.
மீண்டுபோதி' என்று சொல்லியது. 

    அகத்தியமுனிவர் அதனைக்கேட்டுச் சிரித்து, சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்து, 
முன்னாளில் இந்திரன் வேண்டக் கடலில் நீட்டிய திருக்கரத்தைச் சத்தியவுலகம் வரையும் நீட்டி, தேவர்கள் 
அற்புதமடையும்படி விந்தமலையின் முடியின் மீது மிகவுயர்ந்த உள்ளங்கையை வைத்து, வலிபொருந்த 
ஊன்றினார். அது பூமியிற்றாழ்ந்து பாதலத்திற் புகுந்து,சேடனுடைய பதத்தை அடைந்தது. பின் அம்மலை 
அஞ்சி அகத்தியமுனிவரை நோக்கி, "வள்ளற்றன்மையையுடைய முனிவரே கேட்டருளுக. உம்மை வழிபாடு 
செய்யாது இகழ்ந்து மேன்மையை இழந்தேன். தமியேனுடைய குற்றத்தை மனத்துக்கொள்ளாது எழுங்காலத்தை 
அருளிச்செய்க" என்று கூறியது. அகத்தியமுனிவர் விந்தமலையின் வசனத்தைக்கேட்டு, "யான் சென்று பின்னர் 
இவ்வழியே மீண்டால் நீ எழுவாய்' என்று நாரதமுனிவருடைய சூழ்ச்சிக்கிசைய நகையோடு கூறினார்.

    விந்தம் பூமியினுள் மறைதலும், அகத்தியமுனிவர் கையை முன்போலச் செய்து, தேவர்கள் பூமழை
பொழியப் பொதிய மலைக்குச் செல்லக் கருதினார். விந்தம் பூமியினுள் அழுந்தினமையால் ஆகாயம் 
வெளியிடமாக  சூரியன் முதலாயினோருடைய ஒளிகள் எங்கும் பரந்தன. சூரியன் முதலிய தேவர்கள் விரைந்து அகத்திய 
முனிவரை அடைந்து, அஞ்சலித்துத் துதித்து, "தேவரீர் செய்த உதவியை யார்செய்வார். உம்மால் ஆகாயவழியிற் 
செல்லப்பெற்றோம். இனி நீர் எம்பொருட்டாற் பொதியமலையிற் சென்றிருத்திர்'' என்றார்கள். அகத்தியமுனிவர் 
நன்றென்று இசைந்து, தேவர்களை வானுலகிற் செல்லும்படி விடுத்து, தென்றிசையை நோக்கிச்சென்றார். 
குடக தேசத்திலிருக்கின்ற வில்வலன் வாதாவி என்னும் இருவரும் தம்முயிர் நீங்கநின்றவர்கள் அவருடைய 
வரவைக் கண்டார்கள்.


            திருச்சிற்றம்பலம்.

            வில்வலன் வாதாவி வதைப்படலம்.

    வில்வலன் வாதாவி என்னும் இருவரும் அகத்தியமுனிவர் வருதலைக் கண்டு, "இவன்போலும் அவுணர்களுடைய 
உயிரைக் கவர்ந்தவன். கடலைக் குடித்துமிழ்ந்தவன். இப்பொழுது தேவர்களுக்கருள்புரியும்படி அடைந்தான் போலும். 
அவனுக்கிப்பொழுதே உணவைக் கொடுத்து உடம்போடு உயிரையுங் கவர்வோம்" என்றார்கள். அவர்கள் இவைகளைத் 
தம்முள்ளே பேசிக்கொண்டபின்னர், தம்பியாகிய வாதாவி என்பவன், மலைச்சாரலிலே ஆட்டுக்கடாவின் வடிவத்தைக் 
கொண்டு சென்று, தழைகளையும் புதல்களையும் மேய்ந்தான். தமையனாகிய வில்வலன் சடையும், திரிபுண்டரமணிந்த 
நெற்றியும், சுந்தரவேடமணிந்த காதும், உருத்திராக்க வடமும்,உடம்பின் மீது உத்தூளித்த விபூதியும், தண்டையேந்திய 
கையும், மரவுரியுடையுமாக முனிவருக்குரிய தவவேடத்தைத் தாங்கி, அகத்திய முனிவரெதிரே விரைந்து சென்று, 
மும்முறை வணங்கி அஞ்சலித்துத் துதித்து, ''முனிவரே நீர் எழுந்தருளும்படி இந்நாள்காறும் அருந்தவஞ் செய்தேன். 
இன்றைக்கு முடிவுற வந்தீர். யானும் முனிவர் நிலைமையைப் பெற்றேன். பாவியேனுடைய இருக்கை இது. 
அது புனிதமாகும்படி எழுந்தருளுதிர்.'' என்ற கூறி, அவருடைய பாதங்களைப் பின்னும் பலமுறை வணங்கினான். 

    வணங்குதலும், அகத்தியமுனிவர் அவனுடைய தீய எண்ணத்தை நினையாது,மகிழ்ச்சியுண்டாக, 
"தவத்தினான் மிக்கவனே எழுதி" என்றருளிச்செய்து "நாற்பத்தெண்ணாயிர முனிவர்களிடத்தும், மற்றை 
முனிவர்களிடத்தும் உன் பெருந்தகைமைக் குணத்தில் ஓரணுவளவுதானும் இல்லை; இது மெய்யென்று தெளிதி. 
உன்னுடைய ஆச்சிரமம் யாது செல்வோம் வருக" என்றார். என்றுகூறிய அகத்தியமுனிவரை வில்வலன் நோக்கி,     
"இதுவே அடியேனுடைய குடிசை" என்று அழைத்துக்கொண்டு சென்று, ஆசனத்திலிருத்தி, பாதங்களைப் பூசித்து, 
"எம்பெருமானே நீர் யானும் என்குலத்தவர்களும் உய்யும்படி எழுந்தருளினீர்போலும். இன்றைக்கு அடியேனுடைய
குடிசையிலிருந்து வெந்த புற்கையையேனும் அமுதுசெய்து, அடியேனுக்குச் சேஷத்தைத் தந்தருளிச் செல்லுக' என்றான்.

    அகத்தியமுனிவர் வில்வலனுடைய வசனங்களைக்கேட்டு, "அன்பின் மிக்கானே அதுநன்று. உன்மாட்டு 
உன்னாற் றரத்தக்க உணவை உவந்து அமுதுசெய்து, பின்னர்ச் செல்வதே முறை" என்றுகூறினார். வில்வலன் 
வணங்கி, "எம்பெருமானே சிரத்தையோடு திருவமுதைப் பாகம் பண்ணுவேன் சிறிதுபொழுதிருக்குக' என்றுகூறி, 
அப்பொழுதே ஒரு தடாகத்தில் ஸ்நானஞ்செய்து மிகவும் பரிசுத்தனாய், மடைப்பள்ளியை அடைந்து, அதனைச் 
சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, சமையலுக்கு வேண்டிய உபகரணங்களைத் தேடி, அரிசியை நீரிலிட்டு 
மூன்றுதரங் களைந்து வேறொரு குழிசியிலிட்டு, தீக்கடைகோலிலே நெருப்பைக் கடைந்தெடுத்து அடுப்பினுள் 
மூட்டி, அதில் சந்தனமாகிய விறகுகளை மாட்டி, ஒரு செப்புப்பானையில் உலைப்பெய்து அடுப்பின்மேல் வைத்து, 
அரிசியையிட்டுப் பதமறிந்து சமைத்துப் பக்கத்தில் வைத்தான். பின்னர் முதிரைத் தானியங்களாற் சமைக்கப்படும் 
அன்னங்களைச் சமைத்து, பாயசான்னம் குளான்னம் முதலிய விதம்விதமாகிய உணவுகளையெல்லாஞ் சமைத்து 
புதுமணங்கமழுகின்ற புனிதமாகிய கறியையுஞ் சமைத்தான். 

    ஆட்டுக்கடாவாய் நின்ற தம்பியாகிய வாதாவியை அகத்தியமுனிவருக்கு முன்னே வலிந்திழுத்துக் 
கொண்டு வந்து அரிவாளினால் வெட்டி இருதுணியாக்கி, தோலையும் எலும்பையும் நீக்கி, வாளினாற் 
றுணிப்பனவற்றைத் துணித்தும், அரிவனவற்றை அரிந்தும்,சுவையையுடைய உறுப்பிலூன்களைக் 
குணிப்போடு அகழ்ந்தெடுத்துப் பலமிடாக்களிலிட்டு, மூன்றுதரம் நீரினாற் கழுவி, அக் கறிக்கு வேண்டிய 
 உப்பு முதலியவற்றையிட்டு, நெருப்பில் வைத்துச் சமைத்து, மிளகுபொடி முதலியவற்றைத் தூவி, நெய்விட்டுப் 
பொரிப்பனவற்றைப் பொரித்து, புகை போகாவண்ணம் மூடிவைத்து, மிளகுபொடியையும் மற்றை 
வாசனையையுடைய பொடிகளையும் புதிதாக வறுத்த அரிசிப்பொடியையும் தூவி, நெய்யை வார்த்துப் 
பல காயங்களைக் கூட்டிச் சிற்சில பாகுகள் செய்து, பின்னும் பலமுறை வேண்டியபடியே பொரித்து மூடி, 
முதலிற் படைக்கும்படிநின்ற பருப்புக்கறியையும் புளிங்கறியையுஞ் சமைத்தான். 

    அதன்பின் பலாப் பழம்முதலிய அளவிறந்த கனிகளைக் கீறி, சருக்கரையையுந் தேனையுங் கலந்து, 
வாசனைகளையும் மலர்களையுமிட்டு அளவிறந்தனவற்றைச் செய்து, சிவ பூசைக்குரிய உபகரணங்களை 
விரைந்து சம்பாதித்து, ஐவகையுணவுகளையும் அறுசுவைபொருந்தச் சமைத்து, பின்னும் வேண்டியனவற்றை 
நொடிப் பொழுதிலமைத்து முனிவரர் திருவமுது செய்தற்குக் காலாதீதமாயிற்றே என்கின்ற துக்கக்குறிப்பைப் 
புலப்படுத்தும் காரியநிகழ்ச்சியோடு சென்று, அகத்தியமுனிவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, 
"எம்பெருமானே, தேவரீர் பெரும்பசி வருத்த மிகவும் வருந்தினீர்போலும்; திருமேனி வாடினீர். தமியேன் இங்கே 
உணவுகளையெல்லாங் குற்றமறச் சமைத்தேன்; திருவமுது செய்தருளும்படி எழுந்தருளுக" என்று வேண்டினான். 

    அகத்தியமுனிவர் அதற்குடன்பட்டுச் சென்றார். வில்வலன் அவரை மடைப்பள்ளிக்கு அழைத்துக் 
கொண்டுசென்று, ஆசனத்திலிருத்தி, முகமன்கூறி, கபடமாக அருச்சனைசெய்து, அன்னம் பரிமாறத்தொடங்கி, 
பொன்வட்டிலைத் திருமுன்வைத்து, அதனைச்சூழ வரிசையாகக் கிண்ணங்களைவைத்து, நீரைவார்த்து அலம்பி, 
அன்னவகைக ளெல்லாவற்றையும் படைத்து, நெய்யை வார்த்தான். பின்பு படைக்கவேண்டிய முறையை ஆராய்ந்து, 
பருப்புக்கறியையும் ஆட்டுக்கறியின் வகைகளையும் மதுரமுடைய பிறவற்றையும் படைத்து, அகத்திய 
முனிவருடைய திருக்கரத்தில் நீரைவார்த்தான். அவர் அதனை இருதரம் உணவைச்சூழ மந்திரத்தோடு சுற்றி, 
ஒருதரம் ஆசமித்து, பலவாயுக்களுக்குமூட்டி, பின்னுஞ் செய்ய வேண்டியவைகளைத் தவறாது செய்து, மிகவிரும்பித் 
திருவமுது செய்வாராயினார். வில்வலனிடுகின்ற கறியின் வகைகளையும் பிறவற்றையும் முடியும்வரையும் உண்டு, 
பின்னர் அவன் நீரைக் கையிற்கொடுக்க நுகர்ந்தெழுந்து பொடியைத்தடவி நீரினாலே கைகழுவி, வாய் 
கொப்பளித்து, மூன்று தரம் ஆசமனஞ்செய்து, தொடுமிடந் தொட்டு, பின்னுஞ்செய்யவேண்டியவைகளை 
ஓரிடத்திலிருந்து செய்து, அங்கே வீற்றிருந்தார்.

    அப்பொழுது வில்வலனானவன் பிரமதேவர் தந்த வரத்தை நினைத்து, அகத்தியமுனிவருடைய 
உயிரைக்கவரும்படி எண்ணி, "வாதாவியே என்தம்பியே விரைந்து வருவாய்" என்று அழைத்தான். அழைத்தலும் 
வாதாவியானவன் அகத்தியமுனிவருடைய வயிற்றிலே ஆட்டுக்கடாவா யெழுந்து நின்று "அண்ணா வில்வலனே, 
முன்னே மதியாமற் கடலையுண்டதுபோல என்னுடம்பையுமுண்ட கொடிய இம்முனிவனுடைய உயிரையும்
 வலியையும் கவர்ந்து, குறிதாகிய வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவேன்'' என்று சிங்கம்போல முழங்கினான். 
அகத்தியமுனிவர், பதகர்கள்செய்த மாயத்தைத் தெரிந்து வெகுண்டு, "உயிர்நீங்கிக் கறியாயுண்ணப்பட்ட 
வாதாவியானவன் நாம் உண்டவாறே அழிந்துபோகக்கடவன்"  என்று கூறி, ஒருதரம் தமது திருவயிற்றைத் 
தடவினார். உடனே காட்டெரிமண்டிய சிறுபுதல்போல வில்வலன் அவர்வயிற்றினுட் பொடியாயினான். 
அதுகண்டு முன்னின்ற வில்வலன் தன்தம்பி இறந்தானென்றறிந்து, சொயவடிவங்கொண்டு வெகுண்டு, 
ஓர் தண்டாயுதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, அகத்தியமுனிவரைக் கொல்லும்படி நினைத்து வந்தான். 
 அவர் தமது கரத்திலிருந்த தருப்பையொன்றைச் சிவப்படைக்கலமாகப் பாவித்துச் செலுத்த, அதனால் 
வில்வலனுமிறந்தான். அகத்தியமுனிவர் அவ்விடத்தை நீங்கி, கொங்கதேசத்தை நோக்கிச் சென்றார்.

            திருச்சிற்றம்பலம்.

            காவிரிநீங்குபடலம்.

    அகத்தியமுனிவர் கொங்க தேசத்திற் செல்லும் பொழுது, இறந்த வில்வலன் வாதாவி என்னு மிருவரும் 
தவத்தர்கள் போலவந்து, கரிய மேனியும் சுழலுகின்ற கண்களும் உடையர்களாய், அவருக்கு அணிமையாகியும், 
அகன்றும், கண்முன்வந்தும், மறைந்தும், அவரைச்சூழ்ந்தும், ஆரவாரஞ்செய்துகொண்டு அணுகினார்கள். 
அகத்தியமுனிவர் இதனைக்கண்டு, இவர்களை நாம் முன்னமே கொன்றுவிட்டோம், இவர்கள் துருவாசமுனிவருடைய 
புத்திரர்களாதலாற் பிரமகத்தியாய் நம்மைத் தொடர்ந்தார்கள். இந்தத் தோஷம் நீங்கும்படி சிவபெருமானுடைய 
திருவடிகளை அருச்சனை செய்வோம்' என்று நினைந்து, கொங்க தேசத்துக்குச் சமீபமாகிய ஓரிடத்திலே 
'இது நல்ல வாசஸ்தானம்" என்று வீற்றிருந்து, சிவலிங்கந் தாபித்து, பூசைக்கு வேண்டும் உபகரணங்களைத் தேடி, 
மெய்யன்போடு பலநாள் அருச்சனை செய்துகொண்டிருந்தார். அதனால் அவரைத் தொடர்ந்த பிரமகத்தி தோஷம் தொலைந்தது.

    இது இப்படியிருக்க; அகத்தியமுனிவருடைய செயல்முழுதையும் நாரதமுனிவர் பார்த்துக்கொண்டு, 
சூரபன்மனுக்குப் பயந்து மூங்கில் வடிவாய்ச் சீர்காழியிலே சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்துகொண்டிருக்கும் 
இந்திரனிடத்தே போயினார்.இந்திரன் அவரைக்கண்டு விழுந்து வணங்கினான். நாரதமுனிவர், அவனை எடுத்து 
நெஞ்சோடணைத்துத் தழுவி,க்ஷேமத்தோடிருக்கின்றனையா?" என்று வினாவ; இந்திரன் தொழுத கையினனாய் 
''இந்நாள்வரையும் தேவரீருடைய திருவருளினால் இங்கே க்ஷேமமாயிருந்தேன். அடியேன் செய்யுஞ் சிவார்ச்சனைக்கு 
இப்பொழுது ஓரிடையூறு உண்டாயிருக்கின்றது. அதுயாதெனில், பூஞ்சோலை சிறிதும் நீரில்லாமையினால் வாடிற்று. 
பூசை செய்வதற்குப் பூவுமில்லை. இதுவே என்குறை.'' என்று சொல்லி, ஓராசனத்தின்மீது நாரத முனிவரையிருத்தி, 
தானும் அவருடைய அநுமதிப்படி இருந்தான். 

    இதைக் கேட்ட நாரதமுனிவர், ''இந்திரனே, உன்னுடைய சுவர்க்கவுலகம் அரசியல் முதலியவைகள் 
சிவபெருமானுடைய திருவருளினாலே இனிமேல் உனக்கு வரப்போகின்றன. அவற்றைக் குறித்து வருந்தாதே.
உன்னுடைய சிவார்ச்சனைக்கு ஒரூறுபாடுளது என்றாய். அதுவும் விரைந்து நீங்குங்காலம் வந்துவிட்டது. 
அதனைச் சொல்வேன் கேள். சிவபெருமான் அகத்திய முனிவரைப் பொதியமலையிலே போயிருக்கும்படி 
கட்டளையிட, அவர் போகும் வழியிலே விந்தமலையை அடக்கிப் பாதலத்தில் ஆழும்படி செய்து, வில்வலன் 
வாதாவி என்னும் இருவரையும் வதைத்து, அதனால் வந்த பிரமகத்தி தோஷம் நீங்கும்படி சிவபெருமானைப் 
பூசித்துக்கொண்டு கொங்க தேசத்திலிருக்கின்றார். நானும் பார்த்து வந்தேன். அவருடைய கமண்டலத்திலிருக்கின்ற 
காவேரியாற்றை இங்கே வரும்படி செய்தால் உன் மனக்குறை தீரும்." என்றார். 

    அப்பொழுது இந்திரன், ''அகத்திய முனிவர் கமண்டலத்தில் வைத்திருக்கின்ற நதியை இங்கே 
வரவழைப்பது எப்படி?" என்று வினாவினான். அவர், 'இந்திரனே, விநாயகக் கடவுளை மெய்யன்போடு பூசித்து
 வழிபாடு செய்து வேண்டிக் கொள்வாயாயின் அக்கடவுள் அந்நதியைக் கவிழ்த்து விடுவார்" என்று சொல்லினார். 
நாரதமுனிவர் இந்த உபாயத்தைச் சொல்லுதலும், இந்திரன் கவலையொழிந்து, தானிழந்த சுவர்க்க வுலக 
பாக்கியத்தைப் பெற்றவன் போன்று பேரானந்தத்தை யடைந்து, "தேவரீர் இந்த உபாயத்தை அருளிச் செய்தமையால்
அடியேன் கவலையெல்லாம் நீங்கியுய்ந்தேன். இனி அகத்திய முனிவரிடத்திலிருக்கின்ற காவிரிநதி இங்கே வரும்படி 
விநாயகக் கடவுளுக்குப் பூசனை செய்வேன்" என்றான். "அங்ஙனம் செய்க' என்று கூறி நாரதமுனிவர் தமது 
பதத்தையடைந்தார்.

    இந்திரன் விநாயகக் கடவுளுடைய திருவுருவத்தைத் தாபித்து, அருச்சனை செய்து, தேங்காய் தினைமா 
தேன் முக்கனி வெல்லப்பாகு மோதகம் கிழங்கு பால் பலகாரவகைகள் ஆகிய இவற்றை நிவேதித்து, தோத்திரஞ்செய்து 
வழிபட்டான். அப்பொழுது அநந்தகோடி கணங்கள் சூழ விநாயகக்கடவுள் பிரசன்னராயினார். அவரைத் தரிசித்த 
மாத்திரத்தில் இந்திரன் அஞ்சினான். அவர் ''அஞ்சற்க" என்று அருள்செய்ய, இந்திரன் அச்சம் நீங்கிப் பேருவகையடைந்து, 
"அடியேன் உய்ந்தேன்" என்று கூறி, அவருடைய உபய பாதார விந்தங்களிலும் சிரசுபடும்படி வணங்கினான். 
விநாயகக்கடவுள் பேரருளோடு அவனை நோக்கி, "இந்திரனே நின்பூசையை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டோம்.
 உனக்கு வேண்டிய வரம் யாது? கேட்பாய்'' என்றார். 

    இந்திரன் அதுகேட்டு, "எம்பெருமானே சிவபெருமானுக்குப் பூசனை செய்தற்காக ஈண்டு ஓர் நந்தவனத்தை 
வைத்தேன். அது நீரின்மையால் அக்கினி பட்டாற் போலக் கரிந்து போயது.'' என்றான். என்னலும், விநாயகக் கடவுள் கேட்டு, 
''இந்திரனே உனக்குச் சத்த பாதலங்களிலுமுள்ள கங்கைகளை அழைத்துத் தருதுமோ? தேவகங்கையையும் பிற 
நதிகளையும் அழைத்துத் தருதுமோ? சமுத்திரங்க ளெல்லாவற்றையும் அழைத்துத் தருதுமோ? இவற்றுள் நீ 
விரும்பியதைச் சொல்வாய்'' என்றார். இந்திரன் அதுகேட்டு, எம்பெருமானே, "இவைகள் ஒன்றையும் அடியேன் 
வேண்டேன். இவைகள் தேவரீருக்கு அரியனவல்ல. அடியேன் ஒன்று வேண்டிக் கொள்வேன். அது யாதென்னில்: 

    அகத்தியமுனிவர் இமயமலைச் சாரலினின்றும் புறப்பட்டு வரும்வழியிலே வில்வலன் வாதாவி 
என்னு மிருவரையுங் கொன்று, அப்பழி தீருமாறு சிவார்ச்சனை செய்துகொண்டு கொங்கதேசத்தில் இருக்கின்றார். 
அவருடைய கமண்டலத்தின் கண்ணே காவேரியென்னும் தீர்த்தம் உளது. தேவரீர் போய் அதனை நிலத்திற் கவிழ்த்து 
விட்டால் இந்த வனத்திலே வரும். அப்பொழுது அடியேனுடைய குறை தீரும். இதுவே அடியேன் வேண்டிக்கொண்டது" 
என்றான். விநாயகக் கடவுள் இந்திரனை நோக்கி, "அங்ஙனஞ் செய்வோம்" என்று மகிழ்வோடருள்செய்து, அவனை 
அங்கே நிறுத்தி, சிவபெருமானுடைய திருவருளினாலே அகத்திய முனிவருடைய கமண்டலத்திலே பொன்னியாறு 
வந்த தன்மையையும் அதற்கு அவர் வரங்கொடுத்த சூழ்ச்சியையும் நினைந்து, விரைந்து கொங்கதேசத்தையடைந்து, 
அகத்திய முனிவருடைய கமண்டலத்தின்  மீது காக வடிவாய் வீற்றிருந்தார். அகத்திய முனிவர் கண்டு, அவரை 
 விநாயகக் கடவுளென்று அறியாமல், ''நம்முடைய கமண்டலத்திலிருப்பது ஓர் காகமாகும்" என்று எண்ணி, 
அதனை ஓட்டும் பொருட்டுக் கையை யுயர்த்தி ஓச்சினார். உடனே காக வடிவாய்ச் சென்ற விநாயகக்கடவுள் 
குண்டிகையைக் கவிழ்த்து, காவிரியாற்றை நோக்கி,"நீ பூமியிற் செல்லக்கடவாய்" என்று பணித்தருளினார். 

    பணித்தலும், காவேரியானது விண்ணுலகமும் மண்ணுலகமும் நடுங்கும்படி ஆரவாரித்துக்கொண்டு 
விரைந்து நிலவுலகத்திலே பாய்ந்தது. விநாயகக்கடவுள் காக வடிவத்தை நீங்கி ஒரு பிராமணப் பிரமசாரி 
வடிவங் கொண்டு சென்றார். அத்தன்மையை அகத்திய முனிவர்கண்டு, சர்வசங்காரஞ் செய்யத் தோன்றும் 
உருத்திர மூர்த்தியைப் போல உருத்து.'இவன் தேவனோ, அவுணனோ,அரக்கனோ, அன்றி வேறெவனோ அறியேன்; 
நம்முடைய கமண்டலத்திலுள்ள நதியைச் சிந்திப்போக வல்லனோ, எவர்களையும் சிறிதும் மதியாத அகந்தையுடையன்
போலும்; இவன் யாவனோ, இவன் வலிமையை விரைந்து அறிவேன்;' என்று சொல்லிக்கொண்டு, பிராமண 
வடிவங்கொண்டு செல்லுகின்ற விநாயகக் கடவுளை வேகத்தோடு தொடர, விநாயகக்கடவுள் அது கண்டு 
அவருக்குப் பயந்தவர்போல ஓடினார். 

    அகத்தியமுனிவர் அவருடைய சிரசிலே குட்டும்படி நினைந்து தம்முடைய இருகைகளையும் கவித்தமாக்கிப் 
பிடித்துக்கொண்டு, அவரைத் துரத்தினார். அப்பொழுது விநாயகக்கடவுள், அகத்திய முனிவரைக் கிட்டுவார், 
ஆகாயத்திற் கிளருவார், திசைகளிற் செல்லுவார், பூமியில் வருவார், அவருடைய கைக்கும் எட்டுவார், 
தூரியராவார். இப்படி அகத்திய முனிவர் சீற்றத்தோடு உலையும்படி விநாயகக்கடவுள் அவர் கைகளுக்குத் 
தப்பித் திரிதலும், அவர் மிகவுந் தளர்ந்து, "இவன் மாயம் சொல்ல முடியாததா யிருக்கின்றது. இனி நான்
செய்வது என்னை" என்று நினைந்தார். அப்பொழுது ஓடித்திரியும் விநாயகக்கடவுள் அதனைத் திருவுளங் 
கொண்டு இரங்கி, தமது திருமேனியை விரைந்து அவருக்குக் காட்டியருளினார். 

    அகத்தியமுனிவர் தரிசித்து "ஐயோ விநாயகக்கடவுளோ ஈண்டெழுந்தருளிவந்தார். அவரை நாயேனா 
முதிர்ச்சியோடு துரத்தினேன்." என்று கலங்கி ஏங்கி இரங்கி, முன்னே விநாயகக் கடவுளைக் குட்டும்படி கவித்த 
தம் கைகளிரண்டையு மெடுத்து, மலையிலே இடிவீழ்ந்தாற்போல வருத்தமுண்டாகத் தம்முடைய நெற்றியிலே 
குட்டினார். அதனைப் பிரணவ சொரூபியாகிய விநாயகக்கடவுள் பேரருளோடு பார்த்து, ''அகத்தியனே உன்செயல் 
என்னை? சொல்லுதி'' என்றார். "எம்பெருமானே சிறிதும் அறிவில்லாத தமியேன் தேவரீரைப் பிராமணப் 
பிள்ளையென்று நினைத்துத் தேவரீருடைய சிரசிலே குட்டும்படி எண்ணிவந்தேன். அந்தப் பாவத்துக்குப் 
பரிகாரத்தை முன்னமே அடியேன் செய்துகொள்ளுகின்றேன்'' என்று அகத்தியமுனிவர் விண்ணப்பஞ் செய்தார். 

    விநாயகக்கடவுள் திருப்புன்முறுவல் செய்து, "அகத்தியனே, உன்மனத்துயரை யொழிவாய்" என்றருளிச் 
செய்ய, முனிவர் துயரம் நீங்கி,விநாயகக் கடவுளுடைய திருவடிகளிலே பன்முறை வணங்கித் தோத்திரஞ்செய்து, 
"தேவரீரை உள்ளபடி அறியாமையினால் தமியேன் செய்த பிழையைத் திருவுள்ளத்துக் கொள்ளாது அருள் செய்வீராக" 
என்று பிரார்த்தித்தார். விநாயகக்கடவுள் அகத்திய முனிவரை நோக்கி, 'அகத்தியனே, தேவேந்திரன் நமது பிதாவாகிய 
சிவபெருமானைப் பூசனை செய்தற்காக நிலவுலகத்திலே ஒரு நந்தவனத்தை உண்டு பண்ணினான்; அது 
நீரின்மையாற் பொலிவழிந்து கரிந்து போய்விட்டது; அதன் பொருட்டு நீரைவிரும்பி நம்மை இந்நாள் வழிபட்டு இரந்தான். 
ஆதலினால், யாம் காகவடிவாய் உன் கமண்டலத்தில் விருப்பத்தோடு வந்திருந்து மெல்லக் கவிழ்த்து, அந்நதியை 
நிலவுலகத்திற் போகும்படியும் கட்டளையிட்டோம். 

    அதனை நீ பொறாது செய்த தவற்றைச் சிறிதும் மனத்திற் கொள்ளோம். நீ செய்ததை நன்றென்று மகிழ்வோம். 
இங்கே நீ செய்தன வெல்லாவற்றையும் ஓர் விளையாட்டாகவே திருவுள்ளத்திற் கொண்டோம். உன்னிடத்துச் 
சினங்கொண்டோமல்லோம். நீ நம் பிதாவாகிய சிவபெருமானிடத்தே மெய்யன்புடையவன். ஆதலால் நமக்கும் 
அன்பனாவாய். நீ வேண்டிய வரங்களை விரைந்து கேட்பாய் தருவோம்' என்றார். அகத்தியமுனிவர் விநாயகக் கடவுளை 
வணங்கி, "தேவாதி தேவரே, தேவரீருடைய திருவருளைப் பெற்றமையால் அடியேன் உய்ந்தேன்" என்று கூறி, 
"தேவரீரிடத்தும் தேவரீருடைய பிதாவாகிய சிவபெருமானிடத்திலுமே எப்பொழுதும் அன்புடையனாயிருக்கும் 
வரத்தைத் தந்தருளல் வேண்டும். இப்பொழுது தமியேன் செய்ததுபோலத் தேவரீருடைய சந்நிதானத்திலே 
முட்டியாகப் பிடித்த இருகைகளினாலும் குட்டுபவர்களுடைய குறையைத் தீர்த்துத் தாய் போலவந்து அருள் 
செய்தல் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். 

    விநாயகக் கடவுள், ''அவ்வரங்களைத் தந்தோம்" என்று அருள்செய்து, "முனிவனே இத்தன்மையனவேயன்றி 
இன்னும் நீ விரும்பிய வரங்களைக் கேட்பாய்'' என்று கூற, அகத்தியமுனிவர் அதுகேட்டு, "சுவாமீ,அடியேனுடைய 
கமண்டலத்திலிருந்த நதியானது தேவரீர் கவிழ்த்தமையால் எள்ளளவுமின்றிப் பூமியிலே கவிழ்ந்துவிட்டது. 
உயிர்க்குயிராகிய சிவபெருமான் தந்தருளிய மிகுந்த விசிட்டமுடைய நதி போய்விட்டால் அதுபோல அடியேனுக்கு 
வேறுநதி யொன்றுண்டோ! ஆதலினால், குற்றமில்லாத ஒருநல்ல தீர்த்தத்தைத் தேவரீர் தந்தருளல் வேண்டும்" என்றார். 

    விநாயகக்கடவுள் தாம் கவிழ்த்துவிடச் செல்லுகின்ற காவிரியாற்றிலே, தம்முடைய ஒரு திருக்கரத்தை நீட்டிச் 
சிறிது ஐலத்தை அள்ளி, அகத்திய முனிவருடைய கமண்டலத்தில் விட்டார். விடுதலும், கமண்டலத்தை நிரப்பி 
ஒழிந்த நீர் முழுதும் ஆற்றுவெள்ளத்தோடு பூமியிற் பாய்ந்தது. அகத்தியமுனிவர் தமது கமண்டலநீர் குறையாதபடி 
முன்போலிருக்கக் கண்டு, "இந்தப்பெரிய வெள்ளத்திலே சிறிது ஜலத்தைத் தமது திருக்கரத்தால் மொண்டு விடுத்துக் 
குண்டிகையை நிரப்பினார். இப்படி யார் செய்ய வல்லவர்! ஆயினும், பிரம விஷ்ணு முதலிய தேவர்கள் வழிபட 
அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தருளுகின்ற பிரணவ சொரூபியாகிய விநாயகக் கடவுளுக்கு 
இதுபோலும் செயல்கள் அரியனவோ!" என்று நினைத்து, அவரை வணங்கி, "சிறியேன் இனி ஒரு குறையுமில்லேன். 
கவிழ்ந்த நதியையும் தேவரீர் முன்போலத் தந்தருளினீர். முழுமுதற் கடவுளே, சிறிதும் அன்பென்பதில்லாத சிறியேன் 
உய்ந்தேன். இன்னமும் தேவரீரை அடியேன் நினைக்கும்பொழுது எழுந்தருளிவந்து அருள் செய்க, அடியேனை மறவற்க.'' 
என்று வேண்டினார். விநாயகக் கடவுள் ''அவ்வாறே ஆகுக'' என்று அநுக்கிரகஞ் செய்து, தம்மைச் சூழ்ந்து வந்த
படைகளோடு மறைந்தருளினார், அகத்தியமுனிவர் விம்மிதராய்,விநாயகக் கடவுளுடைய திருக்கோலத்தைத் 
தியானித்துத் துதித்து, காவிரியாற்றைப் பார்த்து நகைத்து, வெகுண்டு, சிவபெருமானுடைய திருவருளைச் 
சிந்தித்துக்கொண்டு, தாமிருந்த கொங்கதேசத்தை விட்டுத் தென்றிசையை நோக்கி விரைந்து சென்றார்.

                திருச்சிற்றம்பலம்.

                 திருக்குற்றாலப்படலம்.

    அகத்திய முனிவர் செல்லும் வழியிலே விஷ்ணு ஸ்தலமாகிய திருக்குற்றாலமென்னும் நகரம் எதிர்ப்பட, 
சிவநாமங்களை யுச்சரித்துக்கொண்டு அந்நகரை அடைந்தார். அங்கே விஷ்ணுவாலயமொன்றுளது. அதனைத் 
திருமுற்றம் என்று எவரும் பாராட்டுவர். அளவிறந்த பிராமணர்களுௗர். அவர்கள் உண்மை நூல்களைப் படித்தும் 
மயக்கத்தினால் தமது மதத்தையே மேற்கொண்டொழுகுபவர்களும், சிவனடியார்களைக் கண்டால் 
வழிப்பகைவர்களைக் கண்டாற்போல அழன்று பொங்கி இகழ்ந்து அவர்களுடைய முகத்தையும் பாராராய்த் 
துன்மார்க்கத்தையே மேற்கொண்டொழுகுபவர்களும், மறையவர் என்னும் பெயர் மாத்திரம் வகித்து 
அதற்குரிய ஒழுக்க மொன்றையும் புரியாதவர்களுமாயிருந்தார்கள்.

    அகத்தியமுனிவர் அவர்கள் செயலை அறிந்து, அந்நகரின் வீதியிலே நடந்து விஷ்ணுவாலயத்தின் 
முன்னே வந்தார். வருதலும், வழியில் வந்த அவ்வாலயத்து வைணவர்கள் அவரை உற்றுப்பார்த்து, தம்பகைவர் 
வரக் கண்டு பதைபதைப்பவர் போலக் கோபங்கொண்டு பெருமூச்சுவிட்டு, "தகாத கண்டிகையையும் நீற்றையும் 
அணிந்தாய். அதனால் நீ எல்லாரும் அறியப் பிச்சையேற்ற சிவனுக்கடியவன். இங்கே செல்லுதல் தகாது. 
கையிலே ஒருகோலையும் வைத்திருக்கின்றாய். நீ மிக எளியை போலும். இங்கே நில்லாதே. எம்பெருமானுடைய 
கோயிலை அணுகாமல் நீங்கிவிடு" என்றார்கள். அகத்தியமுனிவர் அதனைக்கேட்டுக் கோபஞ்செய்யாது நகைத்து, 
'வேதநெறியை யிகந்த நீவிர் இங்கேயிருத்தலை நான் அறியேன். இதனை எவரேனும் எனக்குச் சொன்னாரில்லை.
 இது நல்ல வழியென்று கருதிவந்தேன். உங்களுடைய தன்மையை அறிவேனாயின் நான் இவ்வூரிற் செல்லுதற்கும் 
நினையேன். என்னை முனியற்க. நான் மீண்டுபோவேன்' என்றார். 

    வைணவர்கள் இதனைக்கேட்டுப் பின்னும் பொறாது. நீ இந்த ஊரில் வருவதும் பாவம். திரும்பிப் 
போகக்கடவாய்." என்றார்கள். அகத்தியமுனிவர் 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள். தொல்லோருடைய 
நூன்முறைமையும் இதுவே'' என்று கூறி, அவர்களை நீங்கி, "திருநந்திதேவரும், பிரமதேவரும், துருவாசர் 
பிருகு கவுதமர் கண்ணுவர் ததீசி ஆகிய முனிவர்களும், இவர்களுக்கு இட்ட பெருஞ்சாபங்களெல்லாம் 
பொய்படுமோ" என்று நினைத்துக்கொண்டு, மீண்டுபோயினார். போன அகத்திய முனிவர் "உயிர்க்குயிராகிய 
சிவபெருமானை இகழுகின்ற இந்த வைணவர்களுடைய அஞ்ஞானத்தினாலுண்டாகிய அகந்தையை முதலோடு 
களைவேன்'' என்றெண்ணி, தமக்குக் கைவந்த மாயையினாலே விஷ்ணுபத்தரைப்போலப் பாகவத வடிவங்கொண்டு, 
வைணவர்களிருக்கின்ற இடத்திற்கு மீண்டுஞ் சென்றார். 

    நெடுந்தூரத்திலே அவருடைய வரவைக் கண்ட வைணவர்கள் எதிர்கொண்டு சென்று துதித்து, 
பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள். அகத்திய முனிவர் 'இவ்வணக்கம் விஷ்ணுமூர்த்திக்குப் பிரீதியாகுக" 
என்று சொல்லி, அவர்களை நோக்கி, ''உங்களிடத்து விஷ்ணு பத்திக்கு முடிவில்லை என்று பலருஞ் சொன்னார்கள்; 
அதனைப் பார்க்க நினைத்து வந்தோம்; பூமியிலே உங்களுக்கு நிகராவார் ஒருவருமில்லை; உங்களைத் 
தரிசித்தமையால் நாமும் அருமையாகிய மெய்யுணர்வைப் பெற்றோம். நாம் முன்னம் அழகர் திருமலையினிடத்திருந்தோம்; 
இப்பொழுது அத்தி கிரியிலிருக்கச் செல்லுகின்றோம்; நம்பெருமான் வீற்றிருக்குந் திருக்கோயில் இத்தலத்திலே 
உளதென்று சொன்னார்கள். அதனை வணங்கும் விருப்புடையோம்'' என்றார். வைஷ்ணவர்கள் "அதோ தோன்றுகின்ற 
ஆலயம் விஷ்ணுவாலயம்' என்று கைவிரலாற் சுட்டிக்காட்டினார்கள். 

    காட்டுதலும் அகத்தியமுனிவர் அஞ்சலிசெய்து விரைந்து கோயிலையடைந்து, பிரதக்ஷிணஞ்செய்து 
விஷ்ணுவினுடைய பாதங்களை வணங்கித் துதித்து, தம்பக்கத்தில் நின்ற விஷ்ணு பத்தர்களை நோக்கி, 
'இவரைப் பூசனை செய்தற்கு என் மனம் விரும்புகின்றது. திருமஞ்சன முதலிய பூசைக்கு வேண்டும் உபகரணங்களை 
விரைந்து கொண்டு வருகுதிர்." என்றார். வைணவர்களிற் சிலர் நல்லதென்று சொல்லிக்கொண்டு போய்,திருமஞ்சனம் 
புஷ்பம் சந்தனம் வஸ்திரம் முதலிய உபகரணங்களைக் கொணர்ந்து கொடுத்தார்கள்.

    முனிவர் வைணவப்பிராமணர்களை நோக்கி, "இவரை யாம் அருச்சனை செய்யும் விதிமுறையை நீங்கள் 
எல்லீரும் பாருங்கள்'' என்று கூறி சிவபெருமானைத் தியானித்துக்கொண்டு விஷ்ணுவினுடைய திருமுடியின் மேலே 
தமது திருக்கரத்தை வைத்து, ''குறுகு குறுகு" என்று இருத்தி அக்கினியிற்பட்ட மெழுகுப் பாவைபோல அதனைக் 
குழையப்பண்ணி, ஓர் சிவலிங்காகாரமாகச் செய்து, தாபித்து, தாம் சுயவடிவங் கொண்டு, மந்திரங்களைச் சொல்லித் 
திருமஞ்சன முதலியவற்றைச் சுத்திசெய்து, சிவலிங்கப் பெருமானுக்குப் பூசனை செய்தார். அதனை வைணவப் 
பிராமணர்கள் கண்டு கோபித்து, "இவன் வடிவால் மிகக் குறியன். சிவனிடத்தில் மிகுந்த பத்தியுடையவன். 
முன்னம் இங்கே சிவவேடத்தோடு வந்தபொழுது 'நில்லாதே போய்விடு' என்று நாம் தூஷிக்கப்போய், இப்பொழுது 
பாகவத வடிவாய் வந்து நஞ்சமயத்தை அழித்தான். ஐயோ இவன் மாயத்தையுடையவன். இவனைப் பிடியுங்கள்' 
என்று சொல்லிக்கொண்டு அவரை வளைந்து கொண்டார்கள். தம்மைப் பற்றும்படி சூழுகின்ற அந்தணர்களை 
அகத்திய முனிவர் எரியெழப் பார்த்து, கோபாக்கினியை விடுத்தார். அது அவர்ளைச் சூழ்ந்து பொறிகளைக் கக்கித் 
துரத்த, அவர்கள் பொறாராய், அவ்விடத்தை நீங்கிப் பூமியெங்குஞ் சிதறி ஓடினார்கள். அந்தஸ்தலம் அன்று முதற் 
சிவஸ்தலமாயிற்று. அகத்திய முனிவர் அந்தச் சிவலிங்கப்பெருமானைப் பூசித்து வணங்கித் துதித்து, விடைபெற்றுப் 
பொதிய மலையைடைந்து, சிவபெருமானுடைய திருவடிகளை நினைத்துத் தவஞ்செய்து கொண்டிருந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திரனருச்சனைப் படலம்.

    அகத்திய முனிவருடைய கமண்டலத்தை விநாயகக்கடவுள் காக வடிவாய்க் கவிழ்க்கச் சென்ற காவிரி 
நதியானது பல காததூரம் அகன்று,சந்தன முதலிய விருக்ஷங்களையும் யானைத் தந்தம் முத்து பொன் முதலிய 
பொருள்களையும் வாரிக்கொண்டு, கிழக்குத் திசையை நோக்கி விரைந்து நடந்து இந்திரனிருந்து நோற்கும் 
சீர்காழி வனத்திலே சோலையிற் புகுந்தது. புகுதலும், இந்திரன் கண்டு கூத்தாடினான்: நகைத்தான்: 
சிவபெருமானுக்குச் செய்யும் பூசனை முடிந்ததென்று பாடினான்; சிவபெருமானுடைய திருவடிகளைத் துதித்தான்; 
கவலை நீங்கினான் : தனக்குப் பெருந்துன்பங்களைச் செய்யுஞ் சூரபன்மனை வென்றவனைப் போல நீங்காத 
மதர்ப்பு மிகுந்தான். இவ்வாறாக அவன் அடைந்த சந்தோஷத்தை யாரளவிடவல்லார்! இப்படி இந்திரன் மகிழும்படி 
காவிரிநதி பாய்தலும், மிகுந்த பசியால் வருந்தினோர் அமிர்தமுண்டு குளிர்ந்தாற்போல, நந்தனவனங் குளிர்ச்சியோடு 
தழைத்தது.புன்னை,சண்பகம், பாதிரி, கோங்கு முதலிய விருக்ஷங்களும், முல்லை மல்லிகை முதலாகிய கொடிகளும், 
தாமரை நீலோற்பல முதலியனவும் புஷ்பித்தன. இந்திரன் வைகறைக் காலத்திலே வண்டுகள் விழுமுன் பழுதில்லாத 
பூக்களைக் கொய்து, சைவாகமவிதிப்படி சிவபெருமானுக்குப் பூசனை செய்துகொண்டு சீர்காழியிலே யிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்,

            தேவர்புலம்புறு படலம்.

    இப்படி இந்திரன் சீர்காழியிலே சிவபெருமானைப் பூசித்துக் கொண்டிருக்குநாளிலே, சில தேவர்கள் 
சூரபன்மனுடைய ஏவல்களால் மெலிந்து, "இந்தச் சிறுமை எந்நாளில் எம்மைவிட்டு நீங்கும்' என்றிரங்கி, 
விண்ணுலகத்தை விட்டு மண்ணுலகத்திலே வந்து, தமிழ்நாடாகிய தக்ஷிணதேசத்திலே சீர்காழிப்பதியிலே 
இந்திரனைக் கண்டு, அவன் கால்களில் விழுந்து  வணங்கிப் புலம்புகின்றார்கள்: "எங்கள் அரசரே, தருமமென்பது 
சிறிதுமின்றி எவர்களையும் வருத்துகின்ற அவுணர்கள் வசத்தில் அந்நாளிலே எங்களைவிட்டு நீங்கினீர்; 
உமக்கிதுவும் நன்றா? எங்களை ஆளும் நாயகர் நீரன்றோ? தாரகனாகிய யானையோடும் சிங்கமுகனாகிய 
சிங்கத்தோடும் பூவுலகை வாட்டுகின்ற சூரனாகிய புலியின் சிறையிலே தேவர்களென்கின்ற பசுக்களையெல்லாங் 
காட்டிக்கொடுத்து, மகாராஜாவே நீர் மறைந்ததென்ன?

    பன்றி முதலிய மிருகங்களின் இறைச்சியும் கள்ளும் மீனுஞ் சுமந்து அசுரர்க் கேவல்செய்து, மானங் குலைந்து, 
கற்ற வேதங்களையும் மறந்துவிட்டோம். காளகண்டராகிய சிவபெருமானிடத்தே வரம்பெற்ற சூரபன்மனுக்குச் 
செய்யாத ஏவல்களெல்லாஞ் செய்தோம்; நீதிநெறியையும் மானத்தையுமிழந்தோம்; ஐயா மிகவும் அலுத்தோம், 
அலுத்தோம். முன்னேயும் பலநாள் கயாசுரன் என்பவனுக்கு ஏவல்செய்துழன்றோம்; சிவபெருமான் அதனை 
நீக்கியருளினார். இப்பொழுது திரும்பவும் சூரபன்மன் வருத்த உலைந்தோம்; இனி எங்களால் முடியாது. 
எந்நாளும் உம்மையே புகலிட மென்றிருந்த யாங்கள் அவுணர்களாலே துயருழந்துசோர, உம்முடைய உயிரைக் 
காத்துக்கொண்டு இங்கே ஒளித்திருந்தீர்.எங்களரசரே, உமக்கிது தகுமோ? இது வசையன்றோ? சூரன்முதலிய 
கொடிய அசுரர்கள் இறக்கும்படிக்கும், ஆரும் பழிக்கத் திரிகின்ற அடியேங்களுடைய துன்பங்கள் தீரும்படிக்கும்,
 ஓர் செயலைச் செய்யும்." என்றிவ்வாறு பலவற்றைச் சொல்லித் தேவர்கள் புலம்பியிரங்குதலும், இந்திரன் கேட்டு, 
அவர்களுடைய துயரைக்கண்டு, நெடுநேரம் யோசித்து அயர்ந்து பெருமூச்சுவிட்டு அவர்களுக்குச் சொல்லுகின்றான்: 

    "மாயவள் புதல்வனாகிய சூரபன்மன் செய்தற்கரிய பெரிய யாகத்தைச் செய்யத்தொடங்கின அன்றைக்கே 
எங்களுரிமை அழிந்தது; பொன்னுலகத்தையும் தோற்றோம் என்று ஓயும் உணர்வோடு உங்களுக்கு நான் 
சொல்லவில்லையா? நான் சொன்னபடியே சூரன் தவஞ்செய்து, சிவபெருமானிடத்திலே பெரிய வரங்களைப் பெற்று 
விண்ணுலகத்தையுங் கைக்கொண்டு, நம்மையும் தனக்குக் குற்றேவல்களைச் செய்யும்படி அடிமைகொண்டான். 
நாம் அவனுக்கு மீன் சுமத்தல் முதலிய தாழ்வாகிய குற்றேவல்களைச் செய்தும் 'உலகில் இன்னும் வாழ்வோம்' 
என்றே மதித்திருந்தோம். அந்தப் பதகன் அயிராணியைப் பிடித்தற்கும் என்னையும் அநீதியாகப் பிடித்துச் சிறையில் 
வைத்தற்கும் ஒரு தீய எண்ணங்கொண்டு, எங்களைப் பிடித்துக்கொண்டு வரும்படி சேனைகளைச் சுவர்க்கத்துக்கு 
அனுப்பினான். அதனை யூகத்தால் அறிந்து நானும் இந்த ஐராணியுமாக மறைந்து, சுவர்க்கவுலகத்தை விட்டோடினோம். 

    சூரபன்மனுக்கு மீனையுந் தசையையும் கள்ளையுஞ் சுமந்த பழியையன்றி நானும் என்மனைவியும் 
அவன்கையில் அகப்படுதலாகிய இந்தப் பெரிய பழியையுஞ் சுமந்தால், எங்கள் மானம் முழுதும் அழிய வருமே. 
அதுவுமன்றி அவன் சிறையும் நமக்கொரு காலமுந் தீராது சம்பவிக்குமே. பாவியர்களாகிய அசுரர்களுடைய 
சிறையில் அகப்பட்டால், நாங்கள் உய்யவும் அவர்கள் இறக்கவும் சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்தலும் 
முடியாதே. இவைகள் எல்லாவற்றையும் நான் யோசித்துக்கொண்டே, துயர்க்கடலில் ஆழும் உங்களையும் விட்டுப் 
பூவுலகில் வந்து, மறைந்து, சிவபெருமானை அருச்சித்துத் தவஞ்செய்து கொண்டிருந்தேன். தேவர்களே,நாம் 
அவுணர்கள் பணித்த ஏவல்களால் வருந்தி, பழைய மேன்மைகளைத் தோற்றுவிட்டோம். இனி நாமெல்லாம் 
திருக்கைலாசமலைக்குப் போய், பரமசிவனுக்குக் குறைகளை விண்ணப்பஞ்செய்து, நமது துயர்களை 
நீக்கிக்கொள்வோம் வாருங்கள்" என்றான்.

    என்றிப்படி இந்திரன் சொல்ல; தேவர்கள் கேட்டு, கார்காலத்தைக் கண்ட மயில்போலக் கூத்தாடி நகைத்து 
மகிழ்ந்து, 'மகாராஜாவே, எங்கள் அரசனும் நீரே. பிதாவும் நீரே. குருவும் நீரே. தெய்வமும் நீரே. செல்வமும் நீரே. 
எங்கள் தவமும் நீரே. அறிவும் நீரே. எங்களுக்கு வரும் இன்பதுன்பங்களும் நீரே. இப்படி நீர் இருந்தால் எமக்கு 
வருங் குறைகளுமுண்டோ? நீர் பார்த்துப் பணித்த பணிகளைச்செய்து, உம்மைத் துதித்துத் திரிதல் குடிகளாகிய 
எங்களுக்குக் கடனாம். எங்களுக்கு வருந் துன்பங்களை நீக்கி, நல்வழியிற் செலுத்திக் காத்தல் அரசராகிய 
உமக்குக் கடனாம். முன்னாளில் எங்களை வருத்திய அவுணர்களை வதைத்தீர். இப்பொழுதும் சூரன் முதலிய 
அவுணர்களை வதைசெய்தற்கு வழியை ஆராய்கின்றீர். உலகத்தை ஆளும் அரசர்களுக்கும் முனிவர்களுக்கும் 
தேவர்களுக்கும் நீரன்றி வேறி யார் துணையாவார். ஆதலினால் எங்கள் துயரத்தை நீக்கும்படி, சிவ பெருமானிடத்தே 
திருக்கைலாசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டு போவீராக" என்றார்கள். இந்திரன் தேவர்களை நோக்கி, 
"அப்படியே யாகுக" என்று சொல்லி, அவர்களை அவ்விடத்திலிருக்கச் செய்து, ஒரு சூழ்ச்சியை மனத்திற் கொண்டு, 
தன் மனைவியாகிய இந்திராணி யிருக்குமிடத்திற் போயினான்.

            திருச்சிற்றம்பலம்.

            அயிராணிசோகப்படலம்.

    இந்திரன் வருதலும், அயிராணி எதிர்கொண்டு அவனுடைய கால்களைப் பலதரம் வணங்கியெழுந்து, 
"என் பிராண நாயகரே, என்னை? இங்கே ஓரெண்ணத்துடன் வந்தீர்" என்று வினாவினாள். இந்திரன் 
அதனைக்கேட்டு, " கொடிய சூரனிட்ட பணிகளால் வருந்தின தேவர்கள் சிலர் என்னிடத்து வந்து, 
தங்களுடைய துன்பங்களைச் சொல்லிப் புலம்பினார்கள். அவர்களுடைய துயரத்தைப் 
பரமசிவனுக்கு விண்ணப்பஞ் செய்தால் இந்நாளிலே அவுணர்களைச் சங்கரித்து, பழைய பொன்னுலக 
பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளுவார் என்னுந் துணிவால் அத்தேவர்களோடு திருக்கைலாசத்துக்குப் 
போகின்றேன். என் பிராண நாயகியே, இதை உனக்குச் சொல்ல வந்தேன்." என்றான்.

    இந்திரன் இப்படிச் சொல்லும்பொழுதில், அயிராணி பாணம் ஏறுண்ட மயில்போல அவன் முன் 
மயங்கி வீழ்ந்து, துயர்க்கடலில் ஆழ்ந்து, அறிவிழந்தாள். இந்திரன் அவளைக் கையாலெடுத்தணைத்து,               
தொடைமீதிருத்தி அறிவுவரும் வழிகளைச் செய்தான். அயிராணி சிறிதே மயக்கந் தெளிந்து, மிக்க துயரால் 
நொந்து நடுநடுங்கி இந்திரனை நோக்கிச், சொல்லுகின்றாள்: "என் பிராணநாயகரே , அடியேன் 
பொன்னுலகை  விட்டுப் பூமியில் வனத்தில் வந்திருந்தும், உம்முடைய திருவருளினால் மகிழ்ந்திருந்தேன்.     

என்னை நீர்   பிரிந்தால், பின் யார் துணையாவார்? யான்  பிழைக்கும் வழியுமுண்டோ? சக்கரவாகப் 
பட்சிக்குச்  சந்திரனும், வானம்பாடிக்கு மேகமும் துணையாதல்போல, என் சோகத்தை நீக்க நீரே 
துணையாவீர். உம்மையொழிந்தால் வேறுதுணையுண்டோ? அதுவன்றி, உம்மைப் பிரிந்து உயிர்தாங்க 
வல்லேனாயினும், யானோ ஒருத்தி, துணையொருவருமில்லை. நீதியென்பது சிறிதுமில்லாத 
அவுணர்கள் என்றும் வருவர். அவர்கள் கண்டால், தீங்கு வருமன்றோ? சூரனாலே தேவருலகத்துச் 
செல்வத்தையிழந்து, இந்த வனத்தில்வந்து, மறைந்து தவஞ்செய்து பாடுபடுவதும் பழிக்கஞ்சியன்றோ? 
தீய அவுணர்கள்  திரிவார்கள் அவர்கள் இழிதொழிலாளர். பல மாயங்களினும் வல்லர். பாவத்தையன்றிப் 
புண்ணியமென்பதை அறியவுமாட்டார், பழிக்கஞ்சார். இது நீரும் அறியாததல்லவே. 

    உம்முடைய புத்திரனாகிய சயந்தனும் இங்கில்லை, தேவர்களுமில்லை, ஐராவத யானையுமில்லை, 
ஒருபெண்களுமில்லை. பிராண நாயகரே, பெண்பாலாகிய நானொருத்தி தன்னந்தனியே இந்த வனத்திலிருக்க 
அஞ்சேனோ? பலவாற்றானும் பாவத்தைச் செய்யும் அவுணர்கள் என்னைக் காணின், ஓடிவந்துபற்றி, அடாத 
காரியங்களைச் செய்வார்களானால், அதனால் வரும் பழியெல்லாம் உம்மிடத்தன்றி வேறாரிடத்துச் செல்லும். 
நாயகரே, நான் ஓர் துணிவைச் சொல்வேன். உம்மை விட்டு நான் இங்கே தனியே இரேன். பரமசிவன் வீற்றிருக்குந் 
திருக்கைலாசமலைக்கு உமது பின்னே வருகின்றேன். போதற்கு எழுந்திரும்", என்றிப்படிச் சொல்லி 
ஐராணி பெருந்துயரோடு எழுந்துநின்றாள்.

    இந்திரன் அதனைக்கண்டு, சிறிதுநேரம் யோசித்து, அன்பினோடு அவளைப் பார்த்து, 'பெண்ணே, 
உன்றிறம் நன்றாயிருக்கின்றது' என்று எடுத்துத் தழுவி, இதனைச் சொல்லுகின்றான்: "வாராய் அயிராணியே, 
வருந்தாதே. நான் தேவர்களோடு திருக்கைலாசத்துக்குப் போனால், உன்னைக் குறிக்கொண்டு காப்பவர் ஒருவரும் 
இல்லாதவிடத்தன்றோ நீ என் பின் வருவது. சிவபெருமானும் விஷ்ணுவும் கூடிப்பெற்ற ஐயனார் நமக்கு ஒப்பில்லாத 
காவலாயிருக்கின்றார். அவரும் இருக்க, பெண்ணே, நீ வருந்துதல் தகுதியாமோ? அந்த ஐயனாரை 'வருக' என்று 
அன்போடு துதித்துத் தியானித்தால், இங்கேவருவார். 'யான் திருக்கைலாசத்துக்குப் போய்த் திரும்பி வருமளவும் 
காத்துக்கொள்ளுதிர்' என்று உன்னை அவரிடத்து அடைக்கலமாகக் கொடுப்பேன். மிகுந்த வலியையுடைய அந்த 
ஐயனாரே உன்னைக் காத்தருளுவர். நீ அஞ்சாது ஈண்டிருப்பாய்'' என்று இந்திரன் சொல்லித் தேற்றினான். 
தேற்றுதலும், ''அந்த ஐயனாருடைய வரலாறு என்ன? சொல்லும்" என்று ஐராணி வினாவினாள். அதற்கு இந்திரன்
சொல்லுகின்றான்.

            திருச்சிற்றம்பலம். 

            மகாசாத்தாப்படலம்.

    "முன்னொருகாலத்திலே விஷ்ணு முதலிய தேவர்கள் சிவபெருமானுடைய திருவருளின்றிப் பாற்கடலைக் 
கடைந்தார்கள். அப்பொழுது அதினின்றும் ஆலாகலவிஷம் எழுந்தது. அதுகண்டு, அவர்கள் அனைவரும் நடுநடுங்கி 
ஓட்டெடுத்து, திருக்கைலாசத்தையடைந்து, சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தார்கள். திருக்கைலாசபதியானவர் 
'வருந்தற்க' என்று திருவாய் மலர்ந்து அந்த விஷத்தை உண்டு, அவர்களைக் காத்து, விஷ்ணு முதலிய  தேவர்களை 
நோக்கி 'இன்னும் பாற்கடலைக் கடையுங்கள் அமுதம் எழும்' என்று கட்டளையிட்டார். விஷ்ணு முதலிய தேவர்கள் 
விநாயகக் கடவுளை வழிபாடு செய்யாமல், முன்போலப் பின்னும் பாற்கடலைக் கடைந்தார்கள். கடையும்பொழுது, 
விநாயகக்கடவுளை வழிபாடு செய்யாமையால், மந்தரமாகிய மத்துக் குலைந்து, பாதலத்திலாழ்ந்தது. 
அதனைக் கண்டு, 'இது விக்கினேசுர வழிபாடின்மையால் வந்தது' என்றறிந்து, அவரை ஆராதனைசெய்ய, 
அவருடைய திருவருளினால் மந்தரமலை பாதலத்தினின்று வந்து முன்போல நிலைபெற்றது.

    விஷ்ணு முதலிய தேவர்கள் மகிழ்ந்து, பின்னும் பாற்கடலைக் கடைந்தார்கள். கடைதலும், பொற்குடத்தோடு 
அமிர்தம் எழுந்தது. அங்கு நின்ற தேவர்களும் அசுரர்களும் தனித்தனியே 'எங்களால் இதுவந்தது. ஆதலால் எங்களுக்கே 
உரியது எங்களுக்கே யுரியது.' என்று அதனை விரும்பி, கடல்போலார்த்து, தம்முண் மாறுபட்டுப் போர்செய்ய 
எண்ணினார்கள். அதனை விஷ்ணு கண்டு, ஓர் உபாயத்தால் அவர்கள் பிணக்கை ஒழிக்க நினைந்து, 
மூவுலகத்தாரும் விரும்பத்தக்க ஓர் மோகினிவடிவை எடுத்து நின்றார். அந்த மோகினியின் வடிவத்தைக் 
கண்ட அவுணர்கள் அமிர்தத்தைவிட்டு, காமப்பித்துக்கொண்டு அறிவழிந்து மயங்கி, தாருகாவனத்து ரிஷிகளினும் 
பார்க்க ஆசைமிக்கவராயினார். தேவர்களும் பெண்மயலுற்று நின்றார்கள். பெரியோர்களுக்கும் மண்ணாசை 
பொன்னாசைகளினும் பார்க்கப் பெண்ணாசை நீங்குதல் அரிதன்றோ?

    இப்படி இருதிறத்தாரும் மயங்கி நிற்கும்பொழுது, மோகினி வடிவங் கொண்ட விஷ்ணுவானவர் 
அவர்களை நோக்கி, 'போரை ஒழிமின். ஈண்டு யானுளன் அமுதமுமுளது. இவ்விரண்டுள் நீர் விரும்பியதொன்றை 
விரைந்து கைக்கொண்மின்.' என்றார். என்னலும், அவுணர்கள் மோகினியை நோக்கி, 'எங்களுக்கு நீயே வேண்டும்.' 
என்றார்கள். தேவர்கள் 'அமுதமே எங்களுக்கு வேண்டும்' என்றார்கள். தேவர்கள் அமிர்தத்தைக் கொண்டு ஓர்சாரிற் 
போயினர், அசுரர்கள் மோகினியைக்கொண்டு ஓர்சாரிற் போயினர். தம்மைக் கொண்டுசென்ற அசுரர்களை 
மோகினி வடிவங் கொண்ட விஷ்ணு பார்த்து, 'சயனத்தில் என்னைத் தழுவவல்லான் ஒருவீரன் உளன், அவனை 
இன்னங் கண்டிலேன்' என்றார். அவுணர்கள் பலரும் இந்த வார்த்தையைக் கேட்டு, 'எனக்கு நிகராய் ஒருவருமில்லை, 
நானே எவரினும் வலியேன், வீரனும் யானே' என்று தனித்தனி சொல்லி, 'என்னையே சேர்வாய்' என்று வந்து கூடி,
அதனாற் பகைகொண்டு தம்முட் பொருது இறந்தார்கள். 

    அவர்களுள்ளே இரண்டு அவுணர்கள் விஷ்ணுசெய்த மாயத்தை அறிந்து, 'யாமும் இவர்களோடு வீணாய் 
இப்பொழுது ஏன் இறக்கின்றோம்' என்று அசுரர்களை நீங்கி, தேவ வடிவங்கொண்டு அவர்களோடு கலந்து நின்றார்கள். 
அவுணர்கள் தம்மிற் பொருது இறக்கக்கண்ட விஷ்ணு மோகினி வடிவம் நீங்கிப் பழைய வடிவைக்கொண்டு, 
தேவர் குழுவுட்போய், அவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்தார். கொடுக்கும்பொழுது, தம் வடிவை 
மறைத்துத் தேவர்களோடு கலந்துநின்ற அவுணர்கள் இருவரும் தங்களுக்கு விஷ்ணு கொடுத்த அமிர்தத்தை 
மந்திரத்தோடு உட்கொள்ளாது, தேவர்களுக்கு முந்தி விரைந்து உண்பாராயினர். இதனை அருகில்நின்ற 
சூரியசந்திரர்கள் கண்டு, 'இவர் கள்வராம், அமிர்தத்தை விரைந்துண்டார்கள்.' என்று மனத்திற்கொண்டு, 
அவர்களிருவரையும் விஷ்ணுவுக்குக் கண்ணாற் காட்டினார்கள். விஷ்ணு அவர்களைக் கண்டு, 'இக்கள்வர்களா 
தேவர்களோ டுடனிருந்து அமிர்தமுண்பார்' என்று கோபித்து, கையிலிருந்த அகப்பையினால் அவ்வசுரர்களுடைய 
சிரசை வீழ்த்தி, தேவர்களுக்கு அமிர்தத்தை ஊட்டி விருந்து செய்தார்.

     உண்ட அமிர்தங் கண்டத்தில் வருமுன் விஷ்ணு சிரசைத் துணித்தமையால் அந்த இரு அசுரர்களுடைய 
உடல்கள் அழிய, சிரங்கள் அழியாதிருந்தன. சிரசு அழியாத அவரிருவரையும் விஷ்ணு நோக்கி, 'அமிர்தத்தையுண்டமையால் 
இவர்களிவரும் விண்ணுலகில் நிற்கத்தக்கார்' என்று சிந்தித்து, 'சிவாநுக்கிரகத்தினாலே கிரகங்களாகுதிர்' என்று பணித்தார். 
அவர்களிருவரும் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து, இராகு கேது என்னும் பெயரையுடைய கரும்பாம்பும் 
செம்பாம்புமாகி, தம்மைக் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை ஒவ்வோர் காலங்களிலே மறைத்து, சூரியன் 
முதலிய ஏழு கிரகங்களோடும் தாமும் ஒன்பதின்மர்களாக எண்ணப்பட்டிருந்தார்கள். இதுநிற்க.

    விஷ்ணுவானவர் முன் தாம் கொண்ட மோகினிவடிவத்தோடு திருப்பாற்கடலின் கரையிலிருந்தார். 
சிவபெருமானானவர், தம்முடைய நால் வகைச் சத்திகளுள் விஷ்ணுவும் ஒருசத்தியாயிருத்தலால் அதனை 
நம்மனோர்க்குத் தெரிவித்தருளும் பொருட்டு அழகிற் சிறந்த ஒரு திருவுருக் கொண்டு, அவ்விடத்தில் வந்தார். 
விஷ்ணு அவரைக் கண்டு ஆசைகொள்ள சிவபெருமானும் உன்னைப் புணரும் வேட்கை நமக்கும் உண்டு.
 நீ கொண்ட வேடம் இனிது என்றார். மோகினி வடிவங்கொண்ட விஷ்ணு அதுகேட்டு நாணி 'உலக மாதாவாகிய 
உமாதேவியார் தேவரீருடைய திருவுருவைக் காணியாகக் காதலித்திருக்க, பெருந்தகைமையையுடைய தேவரீர் 
அடியேனை விரும்புவதென்னை? தேவரீர் ஜகத்காரணர் ஆதலால், முன்னொரு காலத்திலே பிரமாவினுடைய 
சிருட்டித்தொழிலில் கைகூடுமாறு உமாதேவியைச் சேரும்படி வந்து வேண்டினோம். 

    தேவரீருக்கு அந்த உமையம்மையாரிடத்தும் ஆசையுண்டோ என்றால் இல்லை. தேவரீர் மேனோக்கிய 
வீரிய முடையரன்றோ? உமக்கு யாவரிடத்தும் விருப்பு வெறுப்பில்லை. அங்ஙனமாக, அடியேனைச் சேரும்படி 
வந்த விருப்பமும் உமக்கு உண்மையன்று. எம்பெருமானே, என்ன காரணத்தைக் கருதி வந்தீரோ அதனை யான்
அறியேன். உம்முடைய திருவிளையாடலை நீரேயன்றி வேறார் அறியவல்லார்? ஆடவர் ஆடவரோடு சேரும் 
வழக்கமில்லை. ஆதலால் முதல்வரே நீர் என்னை வன்போடு சேர்தல் நீதியோ?' என்றார். 

    சிவபெருமான் அதுகேட்டு, 'விட்டுணுவே நீயும் நமக்கொரு சத்தியாம். தாருகா வனத்துக்குச் சென்ற 
அந்த நாளிலும் நீ ஒர் பெண்ணானாய். பழைய பிரமன் இறந்து போதலும் உன்னை வந்து நாம் சேர இந்தப் பிரமனை 
நீ தாயாய் உந்தியினாற் பெற்றாயல்லையோ? ஆகையால் நீயும் நமக்கொரு சத்தியாதல் பற்றி உன்னைச் சேர வந்தனம். 
வருவாய்' என்று கையாற் பிடிக்கும்படி வந்தார். விஷ்ணு நாணி ஓடினார். சிவபெருமான் அவரைத் 
தொடர்ந்து பற்றி, நாவலந்தீவில் வடதிசையிற் சமுத்திர தீரத்தில் உள்ள சாலவிருக்ஷ நிழலிற் கொண்டு போய், 
அந்த மோகினி வடிவங்கொண்ட விஷ்ணுவுடன்  இன்புறக் கூடினார்.

    அவர்கள் இருவரும் சேருங்காலத்து, அவர்கள் கான்றுமிழ்ந்த நீரானது கண்டகி என்னும் நதியாய்ப் பாய, 
அந்த நீரிலே வச்சிர தந்தி என்னும் கீடங்கள் உள்ளும் புறமும் சக்கரக் குறியோடு பொன்வண்ணமாய் முறை முறையாக 
வந்துதித்தன. அக்கீடங்கள் அந்நதியிலுள்ள மண்ணினாற் கூடுகளையுண்டாக்கி, சிலநாள் அக்கூட்டினுள் வசித்து, 
இறக்கும். அவையிறந்த பின், அக்கூடுகள் சக்கரக் குறியுடையனவாய்க் காணப்படும். அவற்றைக் கண்டகிநதி 
கரையில் ஒதுக்கிவிடும். அக்கூடுகளை உலகத்தார்கள் கொண்டு சென்று அவற்றின் உள்ளேயிருக்கின்ற 
பொன்னை எடுத்து அவற்றின் அடையாளங்களைப் பார்த்து, 'இன்ன இன்ன மூர்த்தம்' என்று தெரிந்து கொண்டு, 
அவற்றை விஷ்ணுவாகப் பாவித்துப் பூசனை செய்வார்கள். அதன்பெயர் சாளக்கிராமம் என்பதாம்.

    சாளக்கிராமத்தின் வரலாறு இப்படியிருக்க, சிவபெருமானும் விஷ்ணுவும் சேர்ந்தபொழுது, கரியமேனியும் 
சிவந்த சடையும் செண்டுதரித்த கையுமாய் உக்கிரத்தோடு ஓர் குமாரர் அவதரித்தார். உடனே சிவபெருமான் 
விஷ்ணுவோடு கலத்தலை நீங்கி, அப்புதல்வருக்கு அரிகரபுத்திரன் என்னும் நாமத்தைச் சூட்டி, பல வரங்களையீந்து, 
உருத்திரர்களுள் ஒருவராக்கி, ஓர் புவனத்தைக் கொடுத்து, தேவர்களும் முனிவர்களும் வணங்கும் முதன்மையோடு 
அப்புவனத் தலைவராக வைத்து, அப்புத்திரருக்கும் விஷ்ணுவுக்கும் விடைகொடுத்து மறைந்தருளினார். 

    ஐராணியே, சிவபெருமானுடைய திருவருள் இத்துணைத்தென்று நம்மாற் புகழ்ந்து பேசத்தக்கதோ? 
விஷ்ணுவும் ஐயனாரும் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் காண்டு தத்தம் பதங்களை அடைந்தனர். 
அரிகரபுத்திரர் சிவபெருமான் தமக்குக் கொடுத்த பதத்திலே அளவிறந்த பூதகணங்களோடு இரவும் பகலும் 
காத்துக் கொண்டிருப்பார். அவர் மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் பிரமாவும் பூசிக்கும் விசிட்டமுடையார். 
இதுமட்டோ, விஷ்ணுவாலும் புகழப்படத்தக்கவர். அவருக்கு நிகரானவர் ஒருவருமில்லை. என் பிராண நாயகியே, 
இப்படிப்பட்ட விசேஷமுடைய அரிகரபுத்திரரே உன்னை வந்து காத்துக்கொள்வர்." என்று இவ்வாறு ஐயனாருடைய 
வரலாற்றையும் விசிட்டங்களையும் எடுத்துச் சொல்லுதலும், ஐராணி அங்கிருத்தற்கு உடன்பட்டாள்.

    இந்திரன் அவள் உடன்பட்டது கண்டு, அரிகரபுத்திரரை வரும்படி  தியானித்தான். அவர் அதனை 
அறிந்து, பூதகணங்கள் சூழ வெள்ளை யானை மேற்கொண்டு பூரணை புட்கலை சமேதராய் அங்கே வந்தார்.
 இந்திரன் அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கித் துதித்து நின்றான். ஐயனார் அவனை நோக்கி, 'நீ விரும்பியது 
யாது சொல்லுதி' என்றார். இந்திரன் "எம்பெருமானே,சூரபன்மன் செய்கின்ற வருத்தத்தைச் சகிக்கமாட்டாமல் 
விண்ணுலகத்தை நீங்கி மனைவியாகிய இந்த ஐராணியோடு இங்கே வந்து, மூங்கிலாக மறைந்து, சிவபெருமானை 
நோக்கித் தவஞ்செய்து கொண்டிருந்தேன். தேவர்கள் சூரபன்மன் செய்கின்ற துயரத்தைச் சகிக்கமுடியாமல் 
அடியேனிடத்திலே வந்து அழுது முறையிட்டார்கள். இதனைச் சிவபெருமானுக்கு விண்ணப்பஞ் செய்யுமாறு 
ஐராணியை இங்கே வைத்து அந்தத் தேவர்களோடு திருக்கைலாசமலைக்குப் போகின்றேன். இவள் 'அவுணர்கள் 
காணிற் பிடிப்பார்கள் என்று இவ்வனத்திலே தனித்திருக்க அஞ்சுகின்றாள். இவளை உம்மிடத்து அடைக்கலமாக 
வைத்தேன். திருக்கைலாசமலைக்குத் தமியேன்போய் மீண்டு வரும்வரையும் இவளைக் காத்தருளும்' என்று சொன்னான். 

    ஐயனார் ''இந்திரனே உன் மனையாளை ஒரு தீங்குமுறாத வண்ணம் நாம் நன்றாய்க் காத்துக் கொள்வோம். 
தனியே இருக்கின்றாள் என்று நீ அஞ்சாதே. அவளை இங்கே வைத்துத் திருக்கைலாசமலைக்குச் செல்வாய்' என்று 
அருளிச்செய்து, ஒரு சாரிற்போய், மகாகாளர் என்பவரை நோக்கி, "இந்திரன் திருக்கைலாசமலைக்குப் போகின்றான்; 
அவன் மனைவியாகிய ஐராணி தனித்திருக்கின்றாள்; அவளை ஒருதீங்கும் அணுகவிடாது நீ காத்துக்கொள்ளக்கடவாய்" 
என்று கற்பித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திரன் கயிலை செல்படலம்.

    இந்திரன் அப்பொழுது இந்திராணியை நோக்கி, "ஐயனார் உன்னைக் காத்துக்கொள்வர். வருந்தாதே' 
என்று தெளிவித்து, அவ்விடத்தில் அவளை இருக்கச்செய்து, தேவர்களை அழைத்துக்கொண்டு திருக் கைலாச 
மலைக்குப்போய், முதல் வாயிலைச் சேர்ந்து, நந்திதேவரை வணங்கித் துதித்து நின்றான்.நிற்றலும், நந்திதேவர் 
"இந்திரனே நீ வந்ததென்னை சொல்வாய்'' என்ன, வந்த சமாசாரத்தைச் சொல்லினான். நந்திதேவர் அதனைக் கேட்டு, 
"சிவபெருமான் சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானத்தை உபதேசித்துக் கொண்டிருக்கின்றார்; இப்பொழுது 
அங்கே யாவரும் செல்லுதல் தகாது' என்றார். அவ்வார்த்தை செவிப்புலப்பட்ட மாத்திரத்திலே இந்திரன் இறங்கின 
விஷம் மீண்டும் தலைக்கேறினாற்போலத் துயர்க்கடலில் ஆழ்ந்தான். தேவர்கள் தோணியோடு சமுத்திரத்திலாழ்ந்தவர் 
போலத் துன்புற்றார்கள். 

    இப்படித் தேவர்களோடு துன்புற்ற இந்திரன் திரு நந்திதேவரைத் தோத்திரஞ்செய்து,
"எம்பெருமானே சூரபன்மன் அருந் தவஞ்செய்தமையால் அவனுக்கு அளவுபடாத ஆயுளையும் வலியையும் 
செல்வங்களையும் சிவபெருமான் கொடுத்தார். நாங்கள் தீவினைப்பயனை அநுபவிக்குங்காலம் வந்தமையால் 
அவனுக்கு ஏவல்செய்து துன்பத்தை அநுபவித்தோம். இதுவும் இறைவன் செயலே. மீன் சுமத்தலாதியாகிய 
இழி தொழில்களைத் தந்து சூரபன்மன் நமக்குச்செய்யும் துன்பங்களை வந்து விண்ணப்பஞ்செய்வோம் என்றால், 
வேண்டுவார் வேண்டுவதே யீயும் கருணைக்கடலாகிய அவர் எங்கள் வேண்டுகோட்கிரங்கிச் சூரபன்மனை 
அவன் செல்வத்தோடும் அழித்தல் வேண்டும். எங்கள் பொருட்டு அங்ஙனம் செய்தால்,சூரன் தவஞ்செய்தகாலத்து 
அவர் அவனுக்குக் கொடுத்தவரம் அழியும். அஃதழிந்தால், கடவுள் சொற்றப்பினார் என்பர்கள். 

    இனி எங்கள் துயரத்தை நீக்காதொழியில், அருள்வள்ளல் என்னும் புகழுக்குக் குறைவுண்டாம்; 
வேதவாக்கும் குறைவுபடும். ஆதலினால், இவைகளெல்லாவற்றையும் நினைந்து, எங்களை ஆட்கொண்டருளும் 
பரிபாக காலத்தை நோக்கி, சனகாதி முனிவர்களுக்கு யோகநிலை காட்டிச் சிவபெருமான் வீற்றிருந்தார் போலும். 
இந்தத் திருக்கைலாசபதியேயன்றி இவ்வாறாகிய தீங்கை நீக்குதற்கு ஒருதேவருமில்லை. விஷ்ணு இத்துயரை 
நீக்கவல்லரோ என்றால், அவர் அந்த அசுரர்களோடு பொருது சக்கரப்படையையும் இழந்தார். ஆதலால், அவரால் 
முடியாது. 'சிவபெருமான் ஞானோபதேசம் செய்துகொண்டிருக்கின்றார்' என்று அடியேன் தேவர்களோடு 
பூவுலகத்துக்குப் போனால், அவுணர்கள் நம்மைப்பிடித்துச் சிறைசெய்வது நிச்சயம். 

    ஆதலின், இனிநாம் பூவுலகத்துக்குப் போதலில்லை. சிவபெருமானைத் தரிசிக்குங் காலத்தை எதிர்நோக்கிக் 
கொண்டு தேவரீர் வீற்றிருக்கின்ற இந்த வாய்தலின் ஓர்புடை இருப்பேன்' என்று கூறினான். 'உங்கள் துயரந்தீருமாறு 
நீங்கள் இங்கே இருங்கள்" என்று நந்திதேவர் அருள் புரிந்தார். அவ்வாய்தலின் ஓர் புடையிலே தேவர்களோடு இந்திரன் 
இருந்தான். இனி ஐராணியுடைய செய்கையையும் பிறவற்றையும் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            அசமுகிப்படலம்.

    இந்திரன் திருக்கைலாசமலைக்குப் போக, அவன் நினைத்த கருமம் இனிது முற்றுப்பெறும்படி, 
அரம்பையர் சூழச் சீர்காழி வனத்திலே தவஞ் செய்துகொண்டிருந்த இந்திராணியானவள், நெடுநாளாகத் 
தன் நாயகன் வரக்காணாமையால் நாளொரு வண்ணமாய்த் தன்னுடம்பு அழகு குறைய மெலிபவளாய், 
மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தாள். இவள் இப்படியிருக்க, பொறுமை நாணம் கற்பு முதலிய நற்குணங்கள் 
ஒன்றும் இல்லாதவளும், கொலை களவு பொய் முதலிய தீச்செயல்கள் எல்லாம் மிகப்பெற்றவளும், மிகுந்த 
காமத்தினால் எவரையும் வலிந்து பிடித்தணைபவளும், மூவுலகங்களையும் ஒருநாழிகையினுட் சுற்றிவரும் 
வேகம் உடையவளும், எத்துணை வலிமையுடையார் போர்செய்தாலும் தோல்வியடையாதவளும், சூரபன்மனுக்குத் 
தங்கையும் ஆகிய அசமுகி என்னுங் கொடியாள்,அவனுடைய கிளை முழுதையும் முடிவிக்கும் ஊழ்வினை 
போல்வாளாய், சூலப் படையை ஏந்தி, துன்முகியென்பாளோடு ஆலாகல விஷம்போல அங்கே வந்தாள்.

    வந்த அசமுகியானவள் அந்தச் சோலையின் அழகைத் தூரத்தே கண்டு, "ஆகா இந்தச்சோலை 
நன்றாயிருக்கின்றது ! இது பூவுலகத்ததன்று. இந்திரன் வானுலகத்து நந்தனவனத்தை இங்கே கொண்டு வந்து 
வைத்தான். இது தப்பாது. தோழியே நீ இதனைப்பார்' என்று வியந்து, துன்முகிக்குக் காட்டி, கோலாகலத்தோடு 
அந்தச் சோலைக்கருகில் வந்து, அதிலுள்ள பூக்கள் முதலானவற்றை நோக்கி, "இந்தச் சோலையினுள்ளே 
இருக்கின்றவர்களைப் பார்ப்பேன்" என்று சொல்லிக்கொண்டு உள்ளே புகுந்தாள். அவளுடைய வரவை 
மகாகாளர் கண்டு "இவள் அசமுகி என்னுங் கொடியாள். எதனைக் கண்டு இங்கே வருகின்றாள்? 
இவள் கருத்தென்னை? இவளுடைய செயல்களை மறைந்து நின்று பார்த்துக்கொண்டு இவள் செய்யுங் 
குற்றத்துக்குத் தக்க தண்டனையைச் செய்வேன்'' என்று மறைந்து நின்றார். 

    அதனை அசமுகி காணாதவளாய், மிகுந்த களிப்புடன் துன்முகியும் உடன் வர, அந்தச்சோலை 
எங்குந்திரிந்து பார்த்துக்கொண்டு வரும்பொழுது, இந்திராணி தவஞ்செய்து கொண்டிருத்தலைக் கண்டாள்.
கண்ட அசமுகியானவள், "அதோ இருக்கின்றவள் தான் ஐராணி. நம்மரசனுக்குப் பயந்து, பொன்னுலகத்தை 
விட்டு இங்கே வந்து தவஞ் செய்துகொண்டிருக்கின்றாள். நம்மரசன் இவள்மேல் ஆசைவைத்து, 'இவளைப் 
பிடித்து வரும்படி அநேக படைஞர்களை விண்ணுலகத்திற்கு ஏவினான். அவர்கள் அங்கே இவளைக் 
காணாமையினால் 'அங்கில்லை' என்று கூறச், சினந்து, பின்னும் இவளைத் தேடும்படி சிலரை விடுத்தான். 
அவர்கள் இவளை எங்குந்தேடிக் காணாமையால், திரிந்து வருந்தி யுழன்றார்கள். அவளை நான் இங்கே 
கண்டுகொண்டேன். 'இனி இவள்மேல்வைத்த ஆசையாற் கவலாதே' என்று கூறி என்றமையனுக்குக் 
கொடுக்கும்படி நானே இவளைக் கொண்டுசெல்வேன். இங்கே இவளை இந்திரன் தனியேவைத்து விட்டுப் 
போயினான். இவளுக்குத் துணையாக ஒரு தேவர்களுமில்லை. இதுவே சமயம். இந்திரன் வருதற்கு முன்பே 
இவளைக் கொண்டு போவேன்.' என்று, சூற்கொண்டமேகம் நிலத்தில் வந்தாற்போலத் துன்முகியுடனே 
துண்ணென வந்தாள்.

    அசமுகி கிட்டவருதலும், தவஞ்செய்துகொண்டிருந்த அயிராணி கண்டு, 'இவள் ஆரோ." என்று 
பயந்து விரைந்தெழுந்தாள். எழுகின்ற அவளை அசமுகி 'நில்' என்று எதிரேவந்து, 'அயிராணியே கேட்பாய்: 
உன்னுடைய யௌவனப் பருவமும் பேரழகும் வீணாகும்படி நீ தவஞ்செய்தல் முறையோ? இதனை விடுவாய். 
உலகத்தில் உனக்கு நிகராக யார் இருக்கின்றார்? இலக்குமியும் உனக்கு நிகராகாள். இப்படிப்பட்ட நீ பூமியிலே 
மறைந்திருந்து தவஞ்செய்கின்றாய். இஃதென்னை? சூரபன்மன் உன்னைச் சேரும்படி தவஞ்செய்து 
கொண்டிருக்கின்றான், இந்நாள் வரையும் உன்னைச் சேர்ந்த இந்திரன் உனக்கு நாயகனாதற்குத் தகுந்த 
அழகுடையவனல்லன். 'தன்னழகு தனக்குத் தெரியாது' என்று உலகத்தார் சொல்வர். அதனாற்றான் நீயும் உன் 
பேரழகை அறியாமல், பாகன் கையில் அகப்பட்ட யானைபோல இந்திரனோடு இருந்து வாழ்ந்தாய். இந்திரன் 
தவறுதலடையும் சுவர்க்கவுலகமொன்றை மாத்திரம் ஆள்பவன், என்றமையனாகிய சூரபன்மன் பல புவனங்களையும் 
பல அண்டங்களையும் ஒருங்கே அரசாள்வான்; அந்தச் சூரபன்மன் அழிவில்லாதவன், இவன் அஃதுள்ளவன்; 
அவன் பழியில்லாதவன், இவன் அஃதுள்ளவன்; அவன் என்றும் இன்பமுள்ளவன், இவன் மிக்க துன்பமுழந்தவன்; 
அவன் ஒருவரையும் வணங்கான், இவன் பலரையும் வணங்குவன். 

    ஐராணியே, இப்படி எல்லாவற்றாலும் மேற்பட்ட சூரபன்மனோடு இருந்து வாழ நினைக்கின்றாயில்லை. 
அவனுடைய குற்றேவல்களைச் செய்து திரியும் இந்திரனை நாயகனாகக் கொண்டு, இங்ஙனந் தவஞ்செய்து ஏன் 
மெலிகின்றாய்? உனக்கிது தகுமோ? உன்னுடைய அழகும் நெடுங்காலம் வீணே கழிந்தது; இது குணமாமோ? 
இனி யாயினும் சிந்தித்துப்பார். தேவர்களும் அவுணர்களும் அரம்பையர்களும் உன் குற்றேவல்களைச் செய்ய 
மும்மூர்த்திகளாலும் புகழப்படும் சூரபன்மனுக்கு உன்னை மனைவியாகச் செய்வேன். நீ அவனோடு உலகத்தை 
ஆண்டு சுகித்திருப்பாய். அவன் தன் பட்டஸ்திரீயாகிய பதுமகோமளையையும் மற்றைப் பெண்களையும் 
வெறுத்து உன்மேல் அளவுகடந்த ஆசை வைப்பன். இது உண்மை. விரைந்து என்னோடுகூட வருவாய்" என்று
சொன்னாள்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திராணி மறுதலைப் படலம்.

    அசமுகி சொல்லிய இத்தன்மையனவாகிய கொடுமொழிகளைக் கேட்டலும், இந்திராணி தன் 
செவித்துளையில் அக்கினியிற் காய்ச்சிய வேல் புகுந்தாற்போலப் பொருமி விம்மி, காதுகளைக் கைகளாற் 
பொத்தி, அக்கொடு மொழிகளைக் கேட்டமையினாலே தனக்கு வரும் பாவத்திற்குப் பரிகாரத்தைச் சிந்தித்து, 
பதகியாகிய அசமுகி கேட்கும்படி சில வசனங்களைச் சொல்வாள்: "ஏடி நீ இங்கே சொன்ன தீமொழிகளைக் 
கேட்டவர்கள் நரகத்தையடைவர். இவைகளைச் சொன்ன உனக்கு வரும் பாதகத்தை யார் இவ்வளவென்று 
வரையறுத்துச் சொல்வார். பிரமாவின் புத்திரராகிய காசிப முனிவருடைய மகளாகிய நீ அநீதியான 
மொழிகளை அறிவீனர் போலப் பேசலாமோ? தாம் துன்புறாமையை விரும்பினோர் அதனைப் பிறர்மாட்டுச் 
செய்யாமையையும், தாம் துன்புறுதலை விரும்பினோர் அதனைப் பிறர்மாட்டுச் செய்தலையும் நீ அறியாயோ? 

    நீ தருமம் தவம் கற்பு முதலிய ஒன்றையும் பாராமல் இழிந்தனவும் தீயனவுமாகிய இப்படிப்பட்ட சொற்களைச்
சொல்லலாமோ? செல்வமும் வலிமையும் ஆயுளும் கீர்த்தியும் என்னும் இவைகளை இழக்கின்றவர்களுக்கே 
இத்தன்மையாகிய சிந்தனை வரும். இதற்குச் சாட்சி உன் குலத்தவர்களாகிய அவுணர்களே. நீ இவற்றைத் 
துணியாதே வாழ்வாய். நான் இந்திரனையன்றி வேறொருவரையும் விரும்பேன். தீதில்லாத கற்பினையுடையேன். 
என்னிடத்து வந்து இதனைச் சொன்னாய். இவ்வார்த்தை உன்கிளையை வாழச்செய்வதன்று. கொடுங்கோல் செலுத்தும் 
அரசரும் அவரைச் சார்ந்தாரும் நரகத்துக்கு ஆளாவர். இது நிச்சயம் . எனது நாயகனாகிய இந்திரன் மீளுதலில்லாத 
துன்பக்கடலில் ஆழ்ந்தான் என்கின்றாய். அது நாளைக்கு உங்கள்பால் வாராதோ? இத்துன்பங்கள் எல்லாருக்கும் வரும். 
நீ நீதியில்லாதவளாதலால் மிகவும் புத்திமயங்கித் தீது பேசினாய். இது உனக்கு அழகன்று. நீ உய்யும்படி இதை மறந்து விடு. 
என்னை யார் வந்து சேரவல்லவர்? என் மனமானது என்னுயிரையும் ஐம்பொறிகளையும் காத்துக்கொள்ளும். 
எனக்கு எங்கும் காவலுண்டு. நீ விரைந்துபோவாய்'' என்றாள்.

    அயிராணி இவ்வாறு சொல்லுதலும், அசமுகி அதரத்தைக் கடித்து பெருமூச்சுவிட்டு, கையோடு கையைத்தட்டி 
"நன்று நன்று” என்று நகைத்துச் சீறினாள். அறிவீனனும் பேய்பிடியுண்டானும் பித்தனுமாகிய ஒருவனுக்குச் சொல்லிய 
உபதேசமொழி சிறிதும் பயன்படாதவாறுபோல, அசமுகிக்கு இந்திராணி கூறிய உறுதிமொழிகள் சிறிதும் பயன்படாவாயின.

    இங்ஙனம் கோபங்கொண்ட அசமுகியானவள் இந்திராணியை நோக்கி ''உன்னைக் கிட்டிவந்து இனிய 
வார்த்தைகளைச் சொன்னேன். என்னையொட்டிவந்தாயில்லை, மாறு சொல்கின்றாய். உன்னைக் கொன்று 
தின்று விடுவேன். என்றமையனாகிய சூரபன்மனுக்காக உன்னை விட்டேன். இது மெய்மை. விருப்பமெல்லாம் 
நிறைவேறும்படி என்றமையனிடம் வருவதை நீ நினைக்கின்றாயில்லை. பேரவிடாது பிடித்திழுத்துக்கொண்டு 
போகின்றேன். இது நிச்சயம். மும்மூர்த்திகளும் என்னோடு யுத்தஞ்செய்து தடுத்தாலும் விடமாட்டேன். இதோ 
உன்னைப் பிடித்திழுத்துக் கொண்டு செல்கின்றேன் பார்." என்று சொல்லி, அவள் கையைப் பற்றி விரைந்திழுத்துக்
கொண்டு போயினாள். 

    ஐராணி யமபாசம் போன்ற அசமுகியின் கைப்பட்டு, ஐயகோ வென்றாற்றி, அவசமாய், அறிவழிந்து, 
கண்ணீர் வடியத் தேம்பி, பூஞையின்வாயில் அகப்பட்ட புள்ளின் பெடைபோலப் பேதுற்றுச் சோர்ந்து, சுற்றிலும் 
பார்த்து, ஒருவரையுங் காணாமையால், ''விஷ்ணுவும் சிவபெருமானும் சேர்ந்து பெற்ற ஐயனே ஓலம்; தேவர்களுக்கு 
முதல்வரே ஒலம்; செண்டை ஏந்திய கரத்தரே ஓலம்; எங்கள் கடவுளே ஓலம்; மெய்யர்க்கு மெய்யரே ஓலம்; வீரரே ஓலம்; 
வேதங்கள் உருத்திரர் என்று துதிக்கும் காரணக் கடவுளே ஓலம்; கடல் வண்ணராகிய எந்தையே ஓலம் ; 
பூரணை மணாளரே ஓலம்; புட்கலை மணாளரே ஓலம்; வெள்ளை யானையின் மேற்கொண்டுவரும் பெருமானே ஓலம்" 
என்று ஐயனாரைக் குறித்து ஓலமிட்டாள்.

            திருச்சிற்றம்பலம்.

            மகாகாளர்வருபடலம்.

    இந்திராணி இவ்வாறு ஓலமிடுதலும், ஐயனாருடைய படைத்தலைவராகிய மகாகாளர் அதனைக்கேட்டு, 
"இவள் எங்கள் ஐயனாரைக் குறித்து ஓலமிடுகின்றாள் போலும்'' என்று எண்ணி, வாட்படையைச் சுழற்றி 
இடி போலார்த்து உரப்பி, "களவுசெய்து எங்கே போகின்றாய் நில்" என்று கழறிக்கூறி, விரைந்துவந்து, 
இந்திராணியை நோக்கி, "அம்மே வருந்தாதே. அசமுகியென்னும் பதகிக்குச் சிறிதும் அஞ்சாதே. உன்னைத் 
தீண்டிய இவள் கையைத் துணித்து விரைவில் விடுவிப்பேன். காணுதி" என்றார். 

    வீரமகாகாளருடைய வார்த்தையைக் கேட்டவளவில் இந்திராணி மழையின் வரவைக்கண்ட பயிர்போல 
உயிர்பெற்றாள். அசமுகி அவரைக்கண்டு, "மும்மூர்த்திகளும் இந்திரனும் திக்குப்பாலகர்களும் என்முன்னில்லார். 
தேவர்குழுவினுள்ளானொருவனோ என்னை இகழ்ந்து சீறி வருவான்' என்று வெறித்துப் பார்த்து, இதழை அதுக்கிப் 
பற்களைக் கறித்து ஆர்த்து, 'இவனை முறித்துத் தின்று இவனுடைய வலியைத் தொலைப்பேன்' என்று குறித்து நின்றாள். 
மகாகாளர் அவளை அணுகி, பெண்ணே "தவத்தைப் பூண்ட அயிராணியைத் தமியள் என்று வஞ்சனையாற் பற்றிச் 
செல்லுகின்றாய்; இவளை இப்பொழுதே விட்டுப் போதியாயின் நீ செய்த இந்தப் பெரும்பிழையைப் பொறுப்பேன்; 
உன்னைக் கொல்லுகின்றதில்லை, அஞ்சற்க" என்றார். தன்கிளையை நாசஞ்செய்யும்படி வந்த அசமுகி அதனைக் 
கேட்டு உருத்து, "இந்த வார்த்தையை என்முன் சொன்னாய்! 'வலிமையோடு இவளைக் காப்பாற்று' என்று இப்பணியை 
உனக்குத் தந்தவர் யாவர்? அவர் பெயரைக் கேட்க விரும்பினேன் சொல்வாய்" என்றாள். "பூவுலக முதலாகிய 
மூவுலகங்களையும் காப்பவன்; மேகம் போலக் கரியவன்; வெள்ளை வாரணமுடைய ஐயன் இதனைப் பணித்தான். 
என் பெயர் வீரரில் வீரனான வீரமகா காளன் என்று மகாகாளர் கூறினார்.

    இந்த வார்த்தை இந்திரனுக்கும் ஐயனாருக்கும் பொதுமையா யிருத்தலின், தேவர்கள் அசுரர்களால் 
வருந்துதற்குரிய ஊழ் உண்மையால், "இங்கு வந்தவன் இந்திரனுடைய ஏவலாள்' என்று அசமுகி எண்ணி, 
கோபாவேசமுடையளாய், 'இந்திரனுடைய ஏவலாளனா என்னைத் தடை செய்யுமியல்பினன்! இவனைக் 
கொல்வேன்" என்று கையிலுள்ள முத்தலைச் சூலத்தை எறிந்தாள். அது தன்முன் வருதலும், மகாகாளர் 
வாளினால் அதனை அக்கினி சிந்தும்படி இருதுணியாக்கினார். அசமுகி கோபங் கொண்டு தன்பக்கத்தில் 
நிற்குந் துன்முகியின் கையிலிருந்த சூலத்தைக் கடிதில் வாங்கி, இந்திராணியை அவள் கையிற் கொடுத்து, 
கூற்றுவனும் அஞ்ச ஆர்த்து, வேகத்தோடு வீரமாகாளர் மேல்வந்து, அவருடைய மார்பிலே குற்றும்படி 
சூலத்தை நீட்ட, மகாகாளர் அதனை வாட்படையினால் இரு துணியாம்படி வெட்டினார். 

    அசமுகி பின்வாங்கிப்போய், ஓர் மலையைப் பறித்து, "இப்பொழுதே முடிந்தாய்'' என்று அவர்மேல் எறிந்தாள். 
அவர் வாளினால் அதனையும் அழித்தார். அவ்வாட்படையும் ஒடிந்தது. அசமுகி அதனைப்பார்த்து இடிபோலார்த்து,
 'வீரமாகாளனே, கேட்பாய்: பிரமா முதலிய தேவர்கள் எல்லாரும் வந்து ஆசிர்வதிக்க எல்லாவுலகங்களையும் ஆளுகின்ற 
சூரனாகிய நந்தமையனுடைய புயங்களோடு சேர்க்கும்படி இவளைக் கொண்டுபோவேன். இதனை அறியாதவனாய்ப் 
பேதைமைத் தன்மையால் விலக்கினாய். நீ தடுத்தல் முறையன்று. என்றமையனாகிய தாரகாசுரனுடைய சேனாவீரர் 
வந்தால் உன்னைக் கொல்லுவர். அன்றி நானே உன்னை எடுத்துண்பேன், என்னுடைய பெரும்பசி தணியாதென்று 
விடுத்தேன். எளியனே வீணில் இறவாமற் பிழைத்துப்போ" என்றாள். 

    அசமுகியினுடைய வார்த்தைகளை மகாகாளர் கேட்டு, "வாளினால் உன் சூலப்படையை வெட்டினேன். 
உன்னைப் பெண்ணென்று கொல்லாது நின்றேன். இதை உணர்ந்து விரைந்து இவளைவிட்டுப் போய்விடு; 
உன் கையைப் போக்காதே" என்றார். அசமுகி கேட்டு, "இவன் வாளுமின்றி நிற்கின்றான். இவனோடு போர் செய்தல் 
முறையன்று. அன்றியும் இவனை வெல்லுதலரிது. இனி இந்திராணியைக் கொண்டு செல்லுதலே துணிபாம்.'' என்று 
எண்ணித் தோழியாகிய துன்முகியினிடத்தே திரும்பிப்போய், அவள் கைப்பட்டிருந்த இந்திராணியைப் பற்றி 
யிழுத்துக்கொண்டு வேகத்தோடு போயினாள்.

    அதனை வீரமாகாளர் பார்த்து, 'செல்லுகின்றாய் போலும். நில்' என்று அணுகி, அவளுடைய கூந்தலைக் 
கையாற்பிடித்து, உடைவாளை எடுத்து, அயிராணியைப் பிடித்த கையைத் துணித்து, அவளை விடுவித்து அசமுகியைத் 
தமதுகாலினாலுதைத் துருட்டி, அது கண்டு அஞ்சி அயலில் நின்ற துன்முகியை நோக்கி, "ஒரு குற்றமுமில்லாத 
அயிராணியை நீயுந் தீண்டினாய் போலும்' என்று அவள் கையிலொன்றையும் துணித்து, அவளையும் உதைத்துருட்டினார். 
இருவரும் ஓ என்று பதைத்துப் புலம்பி நிலத்தில் வீழ்ந்தார்கள். இரத்தம் ஒழுகாகின்ற அவர்களுடைய கைகள், 
சூரபன்மனுடைய செல்வத்தைச் சுடுங் கொள்ளிகள் போலிருந்தன.

            திருச்சிற்றம்பலம்.

            அசமுகி சோகப் படலம்.

    அசமுகியானவள், இரத்தம் ஆறுபோலப் பெருகும்படி கைவெட்டுண்ணுதலும், வீழ்ந்து வருந்தி 
அரற்றினாள்; மருண்டாள்; பதைத்தாள்; கையை உதறி வெருண்டாள்; கையை நிலத்தில் அறைந்தாள்; 
உருண்டாள்; ; முதுகும் மார்புந் தேயப் புரண்டாள். "அயிராணியை விரைந்து பிடித்து வாயிலிட்டுண்பேன்" 
என்று விரைந்தெழுவாள்; போவாள்; வருவாள்; வீழ்வாள்; இருப்பாள்; சாய்வாள்; இரங்குவாள்; சோர்வாள்; 
இதழைக் கடிப்பாள்; அதிலிருந்து இரத்தம் வெளிப்பட அதனைக் குடிப்பாள்; கொப்பளிப்பாள்; நிலத்திலிருந்து 
துடிப்பாள்; எழுவாள்; தலையை அசைப்பாள்; இடியொலியுண்டாகும்படி பல்வரிசைகளைக் கறிப்பாள்; 
திகைப்பாள்; 'நம்முடைய இந்தச் செய்கை நன்று' என்று நகைப்பாள்; விரலை மூக்கில் வைப்பாள்; 
புகைபோலப் பெருமூச்சு விடுவாள்; நிலத்தைக்  காலாலுதைப்பாள்; வாயினால் நெருப்பைக் கக்குவாள்; 

    உம்மென்று உரப்புவாள்; இடி கான்றாற்போல இம்மென்று சினப்பாள்; அக்கினிகாலப் பார்ப்பாள்; 
மகாகாளரை வியப்பாள்; உடம்பு வியர்ப்பாள்; வெள்குவாள்; அறுந்த கையை மற்றைக் கையினால் விரைந்து 
எடுப்பாள்; அதனை நன்றாய்ப் பார்ப்பாள்; கண்களில் ஒற்றிக்கொள்வாள்; இரத்தத்தை உகுப்பாள்; 
"என்னைப்போல இத்தன்மையாகிய துயரை யாவர் அனுபவித்தார்" என்பாள்; "இனி நான் இறப்பதே" என்பாள்; 
"வினையினேனுக்கு இஃதாவதோ' என்பாள்; ஐயகோவென்பாள்; "எவரும் புகழுகின்ற எங்கள் அண்ணர்பாற் 
போவதெவ்வாறு" என்று துன்புறுவாள்; பூமியில் வரும் கணவர்கள் கைதொடக் கூசுவார்களே'' என்பாள்; 

    "முடம் என்று பேசுவார்களே'' என்பாள்; "தேவர்களும் பிறரும் என்னை ஏசுவார்களே'' என்பாள்; 
"என் செய்வேன்'' என்பாள்; "தேவர்களனைவருஞ் சிந்தித்து என் கரத்தைப் போக்கினார்கள்,யான் இனி 
இறப்பேன், அதன்முன் அவர்களைக் கொன்று உலகெல்லாவற்றையும் முடிப்பேன்" என்று எண்ணிச் சீறுவாள்; 
"பூவுலகிலுள்ள உயிர்களெல்லாவற்றையும் அழிப்பேனோ'' என்பாள்; "வடவாமுகாக்கினியை அவிப்பேனோ" 
என்பாள்; "காற்றைப் பிடிப்பேனோ'' என்பாள்; "மேருமலையை அசைத்து வீழ்த்துவேனோ" என்பாள்; 
"சூற்கொண்ட மேகங்களைப் பிடித்து உண்பேனோ" என்பாள்;

    "நக்ஷத்திரங்களையும் கிரகங்களையும் கொறிப்பேனோ" என்பாள்; 'நான் கைவெட்டுப்பட்டு 
வருந்துவதை இந்தச் சூரியன் பார்த்து இகழுவான் போலும். தேரோடும் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு 
வருதற்கு எழுவேனோ' என்பாள்; 'சூரியனைக் கறித்துக்கொண்டு தேவர்களை அன்னமாக உண்டு எழுகடலையும் 
உறிஞ்சிக் கையைப் பெரும்புறக் கடலிற் கழுவித் திரும்புவேனோ" என்பாள்; "சந்திரனைப் பிடித்துக் கவ்வி 
அவனுடலிலுள்ள அமுதைக் குடித்து எறிவேனோ' " என்பாள்; "இந்திரனுடைய யானையையும் மற்றைத் 
திக்கு யானைகளையும் பாக்காகவும், ஐந்தருவை வெற்றிலையாகவும், அவற்றிலுள்ள வெண்மலர்களைச் 
சுண்ணமாகவுங் கொண்டு உண்பேனோ'' என்பாள்; 

    "பாம்புகளை அடித்துத் தலைகீழாகத் தூக்குவேனோ, பாதலவாசிகளை அவ்விடத்தினின்று நீக்குவேனோ, 
பூமியைச்சுழற்றி மேலுள்ளனவற்றைக் கீழாக்குவேனோ, அதனை விட்டுணு உண்டதுபோல உண்பேனோ'' என்பாள்.
சூரன்றங்கையாகிய அசமுகி வீரவலிமையை யுடையவளாதலால், மயங்கிய மனத்தினளாயும், இறக்கத் 
துணிந்தவளாயும், பெருந்துயரத்தையு டையளாயும், தொலையாத மானம் பூண்டவளாயும், இவ்வாறு சொல்லிக் 
கோபித்தாள். அப்பொழுது தோழியாகிய துன்முகி அதனைப்பார்த்து, தானும் அசுரகுலத்தினளாயினும், 
செய்யத்தகுவது இதுவென்றறியுமறிவு பொருந்திய மனத்தையுடையவளாதலினால் விரைந்து அசமுகிக்கு 
முன் வந்து, இவைகளைச் சொல்லுவாள்: 

    "தலைவியே நீ வீரமாகாளனாற் கையிழந்தாற் பூவுலகமென்செய்யும்! வானுலகமென்செய்யும்! 
தேவர்கள் என்ன செய்வர்! மலைகளென்செய்யும்! கடல்களென்செய்யும்! நீ உலகங்களையெல்லாம் அழிப்பது 
முறையோ! பூவலகத்தையும் வானுலகத்தையும் திசைகளையும் உயிர்களையும் நீ ஒருங்கே அழிக்க நினைத்தாய். 
அப்படிச் செய்தால் யாரும் உன்னை என்னசெய்வர்! அவைகளெல்லாவற்றையும் ஒருங்கேயுடைய சூரனே உன்னைக் 
கோபிப்பான். அவனுடைய செல்வங்களே அழியும். ஆதலால் இவைகள் ஒன்றையும் நீ எண்ணாதே. சூரபன்மனிடத்தில் 
நாம் போய் இவைகளெல்லாவற்றையுஞ் சொன்னால், அவன் தேவர் கிளைகளையெல்லாம் அழிப்பான். 
நாம் அவனிடத்திற் போதலே துணிவு' என்றாள். 

    பின்னும் 'ஞானமில்லாத  தக்கன் செய்த யாகத்தில் தேவர்களிலும் அரம்பையர்களிலும் அசுரர்களிலும் தத்தமுடம்பில் 
ஊனமில்லாதவர்களில்லை. பரமபதியாகிய சிவபெருமானுக்கும் அவரைச் சரண்புகுந்த மெய்யன்பர்களுக்குமன்றி 
மற்றை எவர்களுக்கும் எவைகளுக்கும் வினைவயத்தால் வருந்துயர் விட்டு நீங்குமோ! ஆதலால் தலைவியே நீ புலம்பாதே .
வெள்கிச் சோகமுங் கொள்ளாதே. துன்பமும் இன்பமும் அறியாமையும் உயிர்களுக்கெல்லாம் முறைமுறையாய் வரும். 
சூரனிடத்திற் போவோம் .எழுவாய்' என்று சொல்லித் தேற்றினாள்.

    இப்படிச் சொல்லித் துன்முகி தேற்றுதலும், அசமுகி நன்றென்று எண்ணி எழுந்து, துன்பமென்பது 
சிறிதுமில்லாமல் நின்ற அயிராணியைப் பார்த்து, அண்டங்களெல்லாவற்றினும் சூரபன்மனுடைய சக்கரமும் ஆணையுஞ் 
செல்லும். ஆதலால் அண்டத்தின் இப்புறத்திலொளிப்பினும் அதுவன்றி அப்புறத்திலொளிப்பினும் உமக்குப் 
பிழைப்பதரிது. மறைந்த  இந்திரனையும், இவ்வனத்திலிருக்கும் உன்னையும், ஒழிந்ததேவர்களையும் 
இறைப்பொழுதிற் பிடித்திழுத்துக் கொண்டுபோய் நம்மரசனைக்கொண்டு என்னகரிற் சிறைப்படுத்துவேன். 
இது நிச்சயம். உங்களைச் சிறைசெய்யேனாயின், உலக முழுதையும் ஆளுகின்ற சூரபன்மனென்னும் அரசனுடைய 
தங்கையல்லள் யான். என் மார்பில் எழுந்தனவுந் தனங்களல்ல. யான் பேடியே. இதனைத் தெரிந்துகொள்'' 
என்று சொல்லி, அவ்விடத்தை விட்டுப் போயினாள்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திரன் மீட்சிப்படலம்.

    அங்கே சிறிது தூரத்தில் நின்ற வீரமாகாளர் மகிழ்வோடு நிற்கும் இந்திராணியைப்பார்த்து, "அன்னையே, 
உன்னுளத்தில் அசுரர்களுக்கு அஞ்சாதே. உன் நாயகன் வருமளவும் உன்னைக் காப்பேன். இங்கேயிருப்பாய்" என்று 
சொல்லிப் போயினார். இந்திராணி,காட்டில் ஒரு பிணைமான் தன்னினத்தைப் பிரிந்திருந்தாற் போன்றவளாய், 
"தன்னுடைய நாயகன் நினைத்துச் சென்ற கருமம் நிறைவேறும்படி தவஞ்செய்துகொண்டு அவ்வனத்திலிருந்தாள். 
இதனை நாரதமுனிவர் அறிந்து, விரைந்து திருக்கைலாய மலையையடைந்து, சிவபெருமானைத் தெரிசித்தற்குக் 
காலம் பெறாமையால் தேவர்களோடு அங்கேயிருந்த இந்திரனிடத்துப்போய், பூவுலகத்திலிருந்த அயிராணிக்குச் 
சம்பவித்தவைகளையெல்லாஞ் சொன்னார்.

    இந்திரன் அதனைக் கேட்டுக் கவற்சியடைந்து, தேறிக் கோபித்து, பின்பு சிவபெருமானுடைய திருவருளை 
எண்ணி, அக்கடவுள் விதித்த விதியைச் சீர்தூக்கிப் பார்த்து, தன்னை நொந்து வருந்தி, சிவபெருமானுடைய 
புகழைத் துதித்து, தேவர்களோடு எழுந்துவந்து நந்திதேவருடைய பாதங்களை வணங்கி, "அடியேங்கள் இங்கே 
நமது கடவுளுடைய சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டு நெடுங்காலம் இருந்தோம். அக்கடவுள் முன்னே தமியேங்கள் 
செய்த தீவினைப் பகுதியைத் திருவுளஞ்செய்து எங்களுக்குத் திருவருள் புரிகின்றிலர். எங்களைக் காத்தற்பொருட்டுக்         
கறுத்த காளகண்டராகிய சிவபெருமான் எமக்கருள் செய்யும்படி மெய்மையாகிய தவத்தைச் செய்யுமாறு 
பூவுலகுக்குப் போவோம். அனுமதி தந்தருளும்'' என்று பிரார்த்தித்தான். நந்திதேவர் நன்றென்று விடைகொடுத்தருளினார். 

    இந்திரன் தேவர்களோடு சீர்காழியை அடைந்து, அங்குநின்ற வீரமாகாளரைக் கண்டு தழுவி, பல உபசார 
வார்த்தைகளைச் சொல்லி, "ஐய நீ போதி" என்று அவரை ஐயனாரிடத்திற்கு அனுப்பி, அபிராணி தவஞ்செய்து 
கொண்டிருக்குமிடத்தையடைந்து, அவளுடைய துன்பத்தை மாற்றி, அசமுகி கூறிய சபத மொழிகளை அவ்வயிராணி 
சொல்லக்கேட்டு, "இனிச் செய்வதென்னை" என்று வருந்தி, ஆலோசித்து, 'செய்வது இது" என்று துணிந்து, 
அயிராணியை யுடன்கொண்டு தன்பக்கத்திலுள்ள தேவர்களோடு மேருமலையிற்போய் மறைந்திருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            சூரனரசிருக்கைப்படலம்.

    இஃதிவ்வாறாக, வீரமாகாளராற் கைவெட்டுண்ட அசமுகியானவள் துன்முகியோடு சென்று மகேந்திரபுரியை
 அடைந்தாள். அவள் போங்காலத்திற் சூரபன்மன் அரசிருந்த சிறப்பைச் சொல்வாம்:

    தன்னுடைய ஆஞ்ஞா சக்கரமும் கீர்த்தியும் இரண்டுருக் கொண்டு இருபக்கங்களினும் வந்து நின்றாற்போல 
அவுணர்கள் சந்திரனையொத்த இரண்டு வெண்கொற்றக்குடைகளை நிழற்றவும், உவர்ச்சமுத்திரங்களும் 
பாற் சமுத்திரங்களும் இரண்டுருவாய் எழுந்து மேலோங்கியிருந்தாற் போலத் தாரகனும் சிங்கமுகனும் 
இருபக்கங்களினுமிருக்கவும், அக்கினி தேவர்களைப் போல அமைச்சர்களும் புதல்வர்களும் இருக்கவும், 
எல்லா வண்டங்களினு முள்ள வாயுக்களும் வருணர்களும் பலவுருவாய்ச் செவ்விதாகக்கூடி வேண்டுமளவிற் 
பனித்திவலைகளைச் சிதறித் தன்னடிகளை வணங்கி எழுந்திறம் போல அவுணர்கள் இரட்டும் சாமரங்கள் விளங்கவும், 
மூவுலகிலும் சிறந்தனவாயுள்ள வெற்றிலை பாக்குச் சுண்ணம் முதலியனவற்றைப் பொதிந்த தட்டையும் 
சில சூரியர்களைக் கொண்டு செய்தாற் போன்ற கெண்டியையும் பொன்னிலத்திற் செம்மணிகளைச் 
சொரிந்தாற் போலத் தம்பலமுமிழும் பொற் களாசியையும் பல ஏவலாளர்கள் ஏந்திநிற்கவும், நானாவிதமாகிய 
நிறங்களையுடைய அவுணத் தலைவர்கள் முன்னும் பின்னும் இருமருங்கும் கிளையோடு நெருங்கவும், 

இளந்தென்றலானது முகில்களின் வயிற்றில் அளாவிச் சந்திரனுடைய மெய்யிற்படிந்து பாற்கடலிலும் 
பெரும்புறக்கடலிலும் தோய்ந்து நிலவுலகத்தினும் வானுலகத்தினுமுள்ள சோலைகடோறும் உலாவி 
ஒளியின்றி மெல்லமெல்ல அசைந்து தண்ணென்று தன்முன்வரவும், மேகங்கள் சந்திரனிடத்துள்ள 
அமுதத்திவலைகளைப் பருகிக் கற்பகப் பூஞ்சோலையிலே அவற்றைக் கவிழ்த்துப் பலநாட்கழிந்தபின் 
கவர்ந்து கண்ணுக்குப் புலப்படாத பனித்துளிகள் போலும் துவலைகளை ஒழிவின்றிச் சிதறவும் உருப்பசி 
அரம்பை திலோத்தமை முதலிய தெய்வப்பெண்களும், இயக்கர் இராக்கதர் அசுரர் வித்தியாதரர் முதலாகிய 
பற்பல சாதிப்பெண்களும் வெவ்வேறாய் நடிக்கவும், 

பிரமதேவர் காலையிலே பஞ்சாங்கஞ் சொல்லுதற்குச் சமயம்பெறாமல் ஒருபுடையில் வந்தொதுங்கியிருக்கவும், 
அவருடைய குமாரர்கள் நீர்க்குடங்களில் நாழிகையைப் பார்த்து நாழிகைப் பறையை ஒலித்து ஒவ்வொரு 
நாழிகையையும் முறைமுறை சென்று சொல்லவும், புலிக் கூட்டங்களுக்கிடையே சிலமான்கள் சென்றாற்போல 
அவுணர்களுடைய நெருக்கில் உடம்புவேர்த்துப் பதைக்கவரும் முனிவர்கள் வெவ்வேறாய் ஆசிகளைச் சொல்லி
அவைகள் ஆரவாரத்தினாற் கேட்டிலவென்று அஞ்சித் தாம் நிற்குமிடத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் "வாழ்க" 
என்று ஆசீர்வதித்துக் கைகளை விரித்து நிற்கவும், 

மேருமலையில் மறைந்த இந்திரனை யொழிந்த தேவர்கள் யாவரும் அவுணர்கள் நெருக்கித்தள்ள வாயிலால் 
உள்ளே போயும் எதிரே வருவோர் வாயில் வரையுந்தள்ள அஞ்சி மீண்டும் பின்னும் அவ்வாறாய் வாயிற்காவலாளர்கள் 
அடிக்க உளங்குலைந்து சபையைக் காணப்பெறாது அங்குமிங்குந் திரியவும், சட்டையிட்டவர்களும் கோபத்தையே 
யுடையவர்களும் பொற்பிரம்பை ஏந்தினவர்களும் இடியொலி போலும் உரப்புதலையுடையவர்களும் 
பிறைபோலும் வக்கிர தந்தங்களை யுடையர்களும் பலதேவர்களுடைய மகுடங்கள் சிதறும்படி அடிப்பவர்களும் 
ஆகிய அவுணர்கள் வருவோர்களைத் தகுதிக்கேற்றபடி துரத்தியும் சூழநிறுத்தியும் இருத்தியும் அவரவர் 
பெயர்களைச் சொல்லித் தன்னைத் துதிக்கவும் பலபெண்கள் வாழ்த்தி ஆலத்திகளைச் சுற்றவும், கின்னரரும் 
சித்தரும் இயக்கரும் கந்தருவரும் பலவகைப் பண்களோடு மங்கலங்களைப் பாடவும், தான் யாகஞ் செய்ததையும் 
சிவபெருமானிடத்தில் வரம்பெற்று மீண்டதையும் திக்குவிசயஞ் செய்ததையும் ஆயிரத்தெட்டண்டங்களையும் 
பார்த்து வந்து ஐசுவரியத்தோடு அரசியற்றியதையும் பல அசுரர்கள் பக்கத்தில் நின்று முறைமுறை புகழவும், 
திக்குப்பாலகர்களும் பிறரும் கைதொழுது தூவும் மலர்களையும் சுக்கிரனும் முனிவர்களும் மந்திரத்தோடு 
ஆசீர்வதித்துத் தூவும் மலர்களையும் அக்ஷதைகளையும் வாயுவானவன் பெருக்கிக்கொண்டு திரியவும், 

ஆடுவோர்களுக்கும் பாடுவோர்களுக்கும் தன்மேல் அன்பு செய்யுந் தலைவர்களுக்கும் கிரீடம் அத்தகடகம் உபவீதம் 
முதலிய அணிகளையும் வஸ்திரங்களையும் நிதிக்குவைகளையும் பிறவற்றையும் அவர்கள் கைநீட்டுந்தோறும் 
தன்கை கொடுக்கவும், தேவர்களும் முனிவர்களும் பிறரும் குற்றஞ் செய்யாத தங்களிடத்தன்றி அதுசெய்த வேறு 
யாவரிடத்தாவது தான் ஒருகுற்றத்தை நோக்கி வெகுண்டால் அது தம்மாட்டு நிகழ்ந்தது என்று தம்முயிரை 
இழப்பவர்போல வெருவிப் புகழ்ந்தும் அவரை மகிழ்ந்தால் அதுதம்மாட்டு நிகழ்ந்தது என்று அவ்வுயிர் பிழைத்தார் 
போன்றும் நிற்கவும்;

ஆயிரகோடி பொற்றூண்களையும் பலநிறம்பொருந்திய ஓவியங்களையும் கண்ணாடிகளையும் விதானங்களையுமுடையதும், 
சாமரங்களும் புடைவைக் குஞ்சங்களும் இடையிடையே தொங்கப்பெற்றதும், ஆயிரம்யோசனை பரப்புடையதுமாகிய 
அத்தாணி மண்டபத்திலே, பொன்னாற் செய்து இரத்தினங்கள் அழுத்திய சிங்காசனத்தின்மீது, கூற்றுவர்களெல்லாரும் 
ஒரே வடிவெடுத்து ஆயிரகோடி யண்டங்களினுமுள்ள வடவாமுகாக்கினிகளையும் விடங்களையும் உண்டு அழியாத 
இயல்பைப் பொருந்திப் பலவித ஆபரணங்களைத் தாங்கி அவுணர்கள் துதிக்க வானளவும் நிமிர்ந்திருந்தாற்போல, 
ராசாதி ராசனாகிய சூரபன்மன் விற்றிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            அசமுகி நகர்காண் படலம்.

    இவ்வாறாகச் சூரபன்மன் அரசிருக்கும்போது, அசமுகியானவள் துன்முகியோடு மகேந்திரபுரிக் 
கணிமையாகப் போய், மூதேவி தன்தோழியோடும் அந்நகரின் செல்வ முழுதும் கெடுதற்காக வந்தாற்போல 
அதன் கீழ்த்திசை வாயிலைக் கிட்டினாள். மானமில்லாத அசமுகியானவள் மகேந்திரபுரி இனி அடையும் 
துன்பத்துக்கு ஒரு வழிகாட்டுதல் போல வெட்டுண்ட கை இரத்தஞ் சொரியச் செல்லும்பொழுது, 
அந்நகரத்திலுள்ள அவுணர்கள் யாவரும் அதனைப் பார்த்து, "இழிந்த இச்செயலை யார் செய்தார்?'' என்று 
மிகுந்த துன்பங் கொண்டு அக்கினி போலக் கோபித்தார்கள்.

    சூதாடிக்கொண்டிருந்தவர் சிலர் அதனைவிட்டு விரைந்து வந்தார்கள். ஆட்டுக்கடாக்களைச் 
சண்டைமூட்டி அதனைப் பார்த்துக்கொண்டு நின்றவர் சிலர் அதனைவிட்டு வந்தார்கள். யானைகள் 
ஒன்றின்கோடு ஒன்றினுடம்பின் மூழ்குதலால் இரத்தம் வடியும்படி சண்டை செய்வதைப் பார்ப்பவர் சிலர் 
அதனை விட்டு வந்தார்கள். கோழிச்சேவல்கள் தம்முயிர்போம்வரையும் வலிமையோடு செய்யும் சண்டையைப் 
பார்த்து நின்றவர் சிலர் அதனைவிட்டு வந்தார்கள். ஆகாயத்திலே பறக்கும்படி படங்களை விட்டுக்கொண்டு 
நின்ற சிலர் அவற்றைக் கைவிட்டு வந்தார்கள். கச ரத துரகங்களையும் விமானங்களையும் வண்டிகளையும் 
ஆசையோடு செலுத்தப் பழகுகின்ற சிலர் ''தகாத இஃதொன்று நமக்கு வருவது என்னை?" என்று அவற்றை 
விட்டு வந்தார்கள். தூண்களை நிறுத்தியும் வேறு அறிகுறிகளை எழுதியும் அவைகள் இலக்காக எறிவனவும் 
எய்வனவுமாகிய ஆயுதங்களைப் பயிலுகின்ற சிலர் அவற்றை விடுத்து வந்தார்கள். ஆசிரியர்களெதிரே 
வாள்வித்தை முதலியவற்றைக் கழகங்களிலே பயில்வோர் சிலர் துன்பம் மிகுந்து வந்தார்கள்.

     யாழ் வீணை முதலியவற்றினிசைகளையும் குழலிசையையும் கண்டப் பாடலையும் கேட்பவர் சிலர் 
அவற்றை விட்டு வந்தார்கள். சிலர் நாடகர்களும் கழாய்க் கூத்தர்களும் பிறரும் விளையாடுகின்ற கோட்டிகளை 
நீங்கி நிலைகுலையுமுடம்பினராய் வந்தார்கள். வேண்டும் பொருள்களெல்லாவற்றையும் சம்பாதித்துக்கொண்டு 
கிளைஞர்களோடு பலபல விவாகச் சடங்குகளைச் செய்கின்றவர்கள் சிலர் அவைகளை விட்டு வந்தார்கள். 
மற்றொரு பெண்ணினிடத்தே ஆசைவைத்து முன்பு கூடியிருந்த ஒரு பெண்ணிடத்திற் செல்ல, அவள் ஊடி 
மிகுந்த கோபத்தோடு சண்டைசெய்தலும் "இது நல்ல சமயம்" என்று எண்ணி அவளை நீங்கி வந்தார்கள் சிலர். 

    மாடங்களினிடையிடையே உள்ள தாமரைத் தடாகங்களிலும் நந்தனவனங்களிலும் பெண்களோடு 
விளையாடுதலை வெறுத்து அடைந்தார்கள் சிலர். காய்ந்த மீனைக் கறித்துக்கொண்டு கள்ளைக்குடித்து 
அதனாற் புலன்கள் ஊசல் போலத் திரியத் தள்ளாடித் தள்ளாடித் தளர்ந்து வந்தார்கள் சிலர்.
அசமுகியைக் கண்ட இவர்களும் இவர்களையொத்த வேறு பலரும் நீர்வடியுங் கண்களையும், பதைக்கும் 
மனத்தையும், நெருப்பையும் புகையையுங் காலும் உயிர்ப்பையும் உடையர்களாய்க் கோபத்தோடு பின்வருமாறு 
சொல்லுகின்றார்கள்: 

    "அந்தகனும் கயாசுரனும் புலிமுகனும் முதலாகிய அசுரர்களையும், தம்மை மதியாத திரிபுரத்தசுரர் 
முதலிய வலியோர்களையும், முப்புரங்களையும் அழித்து, எல்லாவற்றையும் இனிமேற் சங்கரிக்கநின்ற 
அக்கினி சொரூபராகிய சிவபெருமானுடைய செயலோ இது?' என்பார். ''மகிடாசுரன், நிசும்பன், சும்பன், 
இரத்தநேத்திரன், இரத்தபீசன், முன்னோர் காலத்திலே பூமியை ஆண்ட தாரகன், பண்டன் முதலாயினோருடைய 
உயிரைக் கவர்ந்த துர்க்கையின் செயலோ இது?" என்பார். "விட்டுணுவும் சிவபெருமானும் கூடிப்பெற்ற 
உருத்திரராகிய ஐயனாருடைய செய்கையே போலும் இது?" என்பார். "நங்குலத்தோனாகிய கயமுகன் என்னும் 
மேலோனுடைய மார்பிற் புகுந்து உயிரைப் பருகிய தந்தத்தையுடைய விநாயகருடைய செயலோ இது?" என்பார். 

    "பரம்பொருளாகிய சிவபெருமானை மதியாது 'யாம் முதற்கடவுள்' என்று வாதம்பேசும் பிரம விட்டுணுக்களுக்கு 
ஏற்ற பிரகாரம் தண்டங்களைச் செய்கின்ற சங்கு கன்னர் குண்டோதரர் பானுகம்பர் முதலாயினோர் செயலோ?" என்பார். 
"விட்டுணுவின் செயலோ இது?'' என்பார்; "அவன் இச்செயலைச் செய்தற்கு அஞ்சுவான்; ஆதலால் அது நினைக்கத் 
தக்கதன்று' என்பார். "பிரமன் இதனைச் செய்ய நெஞ்சினும் நினைப்பானோ?" என்பார். "இந்திரன் செய்த 
செயலோ இது?" என்பார்; "அவன் மறைந்து திரிவான்; ஆதலால் இதனைச் செய்ய வல்லனோ அது கருத்தன்று' என்பார். 

    'மற்றைத் தேவர்கள் செய்த செயலோ?'' என்பார்; "இடைவிடாது நம்முடைய பணிவிடையில் நிற்பவர்கள் 
இதனை நினைப்பார்களோ?" என்பார். "கட்குடித்துக் களித்து மதிமயங்கினவர் அல்லது பித்தர் இதனைச் செய்தார்' 
என்பார். ''வாழ்நாள் முடிவு வரப்பெற்றவர் யாவர் செய்தார்?' என்பார்.''முனிவர்களுடைய சாபத்தால் இவர்கள் 
கைகள் வீழ்ந்தனவோ?' என்பார். "இவர்கள் இருவருந் தங்களுள்ளே சபதமிட்டுப் போர்செய்து, ஒருவர் கையை 
மற்றொருவர் வெட்டினார்களோ? இவர் இருவர் கையும் வெட்டுண்டன காண்மின்" என்பார். 'இந்த அசமுகி கையில் 
ஒன்றை யாவர் துணிக்கவல்லவர்! இவள் யாவரிடத்திலோ பேராசை கொண்டு பெண்புத்தி மயக்கத்தால் 'என் சிறந்த 
உறுப்பிலொன்றை அடையாளமாய்த் தருவேன்' என்று உடை வாளினாற் கையை அறுத்துக் கொடுத்தாள் போலும்!" 
என்பார். 

    "கேட்டினை யடைந்த இவளை இனிநாம் கேட்பதென்னை?" என்பார். "நாம் கேட்டால் நம்மைக் கோபிப்பாள்' 
என்பார். "நாம் இவள் பக்கத்திற் போவதென்னை? பூமியின் எல்லை வரையும் நாம் ஓடி விசாரித்தறிவோம்' என்பார். 
இப்படி அசுரர்கள் சொல்ல, அசமுகியானவள் துன்முகியோடு விரைந்து போதலை அசுரப்பெண்கள் கேள்வியுற்று, 
அளகம் அவிழ்ந்து தொங்கவும், கண்ணீர் வடியவும், வீதிகடோறும், நெருங்கிச் சூழ்ந்தார்கள். அம்மகேந்திர புரத்திலுள்ள 
ஆடவர்களும் பெண்களும் தன்னைச் சூழ்ந்து இவ்வாறு இரங்கிச் சோர, அவள் துன்முகியோடு அந்நகரத்தினுட்போய்,
சூரபன்மன் அரசிருக்கின்ற அத்தாணி மண்டபத்துக்குச் சமீபித்தவளாயினாள்.

            திருச்சிற்றம்பலம்.

            அசமுகி புலம்புறு படலம்.

    அசமுகியானவள் சூரபன்மனுடைய அவைக் களத்தை அணுகி, தன்னுடைய தாயையும் சுற்றத்தாரையும் 
மருகர்களையும் தமையன்மார்களையும் நினைத்து, அந்நகரிலுள்ள சீதேவி நீங்கும்படி கதறிப் புலம்பலுற்றாள்:

    "சிவபெருமான் வரந் தந்தருளிய அந்நாளில் வந்து, 'உங்களைப் பிரியாது காத்துத் திரிவேன்' என்றாய்; 
அம்மொழியும் பிழைத்தாய் போலும்! என் கரம் போனதறியாயோ? 'அஞ்சாதே' என்றாயில்லை. இது தகுமோ ! 
அன்னையே அன்னையே, சிறியேனாகிய நானொரு பெண்பிறந்து பட்ட பரிபவம் எப்போ தீரும்! ஐயோ! 
'தந்தையர்கள் தம் புதல்வர்களிடத்தில் அன்பு வைப்பர்; தாயர்கள் தம் புதல்வியர்களிடத்தில் அன்பு வைப்பர். 
இஃது உலக வழக்கம்' என்று பெரியோர் சொல்வர். அம்முறைபற்றி என் துயரை நீக்க வந்தாயில்லை. அந்தோ! 
தமியேன் ஒரு துணையுமில்லாதவர் போலக் கையிழந்தும், இவ்வுயிரைத் தாங்கிக்கொண்டிருப்பதேயோ! 

    நம்மவர்களே 'நீவிர் எங்கும் வருவீர்' என்று கருதி, அஞ்சாது ஐராணியை வலாற்காரமாய்ப் பற்றிக்கொண்டு, 
மிகுந்த வீரத்தோடு வந்தேன். வீரமாகாளன் பின்னே வந்து என் கையைத் துணித்து, அவளையும் மீட்டுக்கொண்டு 
போயினான்.நீவிர் ஒருவரும் அக்காட்டிற் செல்லீரோ! நீவிரும் அத்தேவர்களுக்கொளித்தீரோ! புரத்தை அழித்தும், 
வலியைக் குறைத்தும், பழைய நிலைமையைக் குறைத்தும், வரத்தைக் குறைத்தும், புகழைக் குறைத்தும், 
வேதாசாரத்தைக் குறைத்தும், செல்வத்தைக் குறைத்தும் 'தேவர்களை ஏவல்கொண்டோம், என்றிருப்பீர்; ஒருவன் 
வந்து என்கையைத் துணித்ததை அறியீர். உங்கள் நாசியைக் குறைத்தான் போலும். காண்மின் காண்மின். 

    'இந்திரன் நமக்கு மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிப் போயினான் போயினான்' என்று சொல்வீர் போலும்; 
அவன் ஒருவனையே யனுப்ப, அவன் வந்து என்கையைத் துணித்தான். அவ்விந்திரனுடைய செயலும் வீட்டுக் 
கூரையில் நெருப்பு மறைந்திருந்த செயலாயிற்றே.'எட்பிளவை யொத்த சிறுமையை யுடைத்தேயாயினும், உட்பகை 
உளதாயின் எத்துணை வலியோர்க்கும் கேடுளதாம்' என்று, அறிஞர் கூறுவர். அஃதுண்மையாம். தள்ளுற்றுத் தள்ளுற்று 
நம்மேவல் புரிந்துழன்ற இந்திரன் கள்ளமாய் மறைந்திருந்தே எனது கரத்தைத் துணிப்பித்தான். காண்மின் காண்மின். 

    சமுத்திரத்தின் நடுவிலிருக்கும் வடவாமுகாக்கினி காலம்பார்த்துப் பூவுலகங்களையும் அச்சமுத்திரங்களையும் 
அழிப்பதுபோல, அங்கிருந்து என்கையைத் துணித்த வீரமாகாளனும் உங்களை இனிமேல் அழிப்பான் போலும். 
இங்கிருந்தென்ன செய்கின்றீர்! தேவர்களைச் சிறியர் என்று இகழ்ந்தீர்களே! இரணியனுக்கு மூன்று சிரங்களும், 
அக்கினிமுகனுக்கு இரண்டு சிரங்களும், வச்சிர வாகுவுக்குப் பத்துச் சிரங்களும் உள்ளனவே! அவைகளை வீணாக 
வளர்த்தார்களோ! இந்தச் சிரங்கள் என்ன செய்யும்! ஒருசிரசை யுடையோன் என்கையைத் துணித்துப் போயினான். 

    அந்தத் தேவர்களுக்கா இவர்கள் அஞ்சுவர்! பாதலத்திலுள்ள அரக்கர்கள் தாமா இவர்களுக்கெளியர்! 
குழந்தைப் பருவத்திலே சூரியனுடைய வெய்யில் உடம்பிற் படுதலும் அவனைச் சினந்து பற்றிக்கொண்டுவந்து 
சிறைசெய்த மருகாவோ மருகாவோ! ஒருவன் என் கையைத் தீண்டித் துணித்துப் போவதா! நீ வினவுகின்றாயில்லை, 
இஃதென்ன கொடுமை! பூமியை ஓரடியாக அளந்த விட்டுணு செலுத்திய சக்கரத்தை அந்நாளிற் பொன்னாரமாகத் 
தரித்தாய்; இந்நாளிலும் ஓர்பழியையே ஆரமாகப் பூணாநின்றாய். இப்பூமியிலே சிறுபகைஞர் என் கை போந்திறத்தைச் 
செய்ய நீ இனிதாக இந்நிலவுலகத்தை ஆண்டாய். 

    நந்தமையனாகிய தாரகனே, உன்னுடைய பெரிய வலிமை அபரபக்கச் சந்திரன் போலாயிற்றோ! 
'வச்சிராயுத கரனாகிய இந்திரனை ஐராவத யானையோடும் வானுலகத்திற் செல்ல ஒருகையாலெறிந்து 
அவன் வீழ்ந்து கிடப்ப உதைத்தாய்' என்று சொல்லுவர். அதனை மெய்யென்று வியந்திருந்தேன். அது பொய்யோ! 
அவ்விந்திரனுடைய தூதுவன் கோபித்து வந்து என் கையொன்றைத் துணித்தானே! சிங்கமுகவீரனே, இதனைக் 
காண்கிலாயோ! சூரன் என்னும் பெயரைப் படைத்த அவுணர்களுடைய பெருவாழ்வே, அண்டங்களையெல்லாம் 
ஒருங்கே யாண்டாய். 

    உன்னுடைய ஆஞ்ஞா சக்கரமும் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் எங்குஞ் செல்லாநிற்கும். தேவர்கள் 
எல்லாரும் அவற்றிற் கஞ்சுவர். அங்ஙனமாக, உனது பொன்னுலகிலிருக்கும் இந்திரனுடைய ஆணையை வகித்த 
வீரமாகாளனிடத்து அவ்வச்சத்தைக் கண்டிலேன். அவை மூன்றும் வலியாரிடத்துச் செல்லாவோ! முன்னாளில் 
ஒரு முனிவன் பகைவர்களுடைய சூழ்ச்சியினால் என் குமாரர்களுடைய உயிரைக் கவர்ந்து தான் உயிரோடிருக்கின்றான். 
அஃதன்றி இந்நாளில் ஒருவனைக்கொண்டு என்கையையும் அப்பகைவர்கள் இழப்பித்தார்களே! தங்கையாகிய யான் 
இவ்வருத்தங்களை அனுபவிக்க நீ நன்றாக அரசு செய்தாய்! இது பிழையன்றோ! மன்னாவோ மன்னாவோ! யான் பட்ட 
இழிவரவை நினைக்கிலாயோ! காவல்செய்து உலகங்களை ஆளும் அண்ணாவோ அண்ணாவோ! கரமிழந்தேன் காண்; 
எவர் எனக்குறவாவார்!  அங்ககீனர் உயிரோடிருப்பதும் பழுதன்றோ! நான் உயிரை விடுவேன்; அதன்முன் 
என் மானமே என்னைக் கொல்லுகின்றது ஐயோ! பாவியாகிய ஒருபெண் பிறந்த பயன் இதுவோ! விதிக்கு என்னிடத்து 
யாதும் பகையுண்டோ!" என்று அசமுகி பற்பலவற்றைச் சொல்லி ஆவலித்திரங்கி, தன்பின்னே வருகின்ற துன்முகியோடும் 
போய், அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கின்ற சூரபன்மனுடைய கால்களில் வீழ்ந்துபுரண்டாள்.

            திருச்சிற்றம்பலம்.

            சூரன்றண்டஞ்செய்படலம்.

    அசமுகியானவள் இவ்வாறு சகடைபோலப் புரளும்பொழுது, அவ் வவைக்களத்திலுள்ளவர்கள் அஞ்சி 
வருந்த, சூரபன்மன் இருகண்களினும் அக்கினியெழும்படி பார்த்து, "தங்கையாகிய அசமுகியே, ஏன் இங்கே 
புலம்புகின்றாய்? உன்னை இன்னாள் என்று யோசியாமலும், என்னையும் நினையாமலும், உன்கையையும் 
இவள் கையையும் வாளினால் வெட்டி முன் போல் உயிரோடிருந்தவர் யாவர்?" என்று வினாவினான். "இந்திரனுடைய
மனைவியாகிய இந்திராணி பூமியில் ஓரிடத்திலே தவஞ்செய்து கொண்டிருந்தாள். அவளை உனக்கென்று 
சென்று எடுத்தோம். ஒரு தேவன் விரைந்து வந்து கோபித்து எங்கள் கையை வெட்டி, அவளை மீட்டுக்கொண்டு 
போயினான்." என்று அசமுகி சொல்லினாள். 

    சொல்லுமுன், சூரபன்மனுடைய கண்கள் நெருப்பைச் சொரிந்தன; வாய் புகைப்படலத்தை உமிழ்ந்தது; 
மூக்கு அக்கினி மயமாகிய உயிர்ப்பை விடுத்தது; வக்கிர தந்தங்கள் அதரத்தை மறைத்தன; அண்டங்கள் 
வெடிக்கலுற்றன என்னும்படி வாய் இடியொலியைச் செய்தது; சிரிப்புண்டாயிற்று; அதரந் துடித்தது; புருவங்கள் 
துள்ளி நிமிர்ந்தன; பற்கள் கறகறவென்று கடிக்கலுற்றன; வியர்ப்பு மிகுந்தன; அவை வறழும்படி மயிர்க்கால் 
தோறும் தீப்பொறிகள் தோன்றின; மனத்தினின்றும் விரைந்து கோபாக்கினி உண்டாயிற்று. வெம்மையாகிய 
பெருங்கோபம் இவ்வாறு சூரபன்மனிடத்து உண்டாதலும், திசைகளினுள்ளார் ஓடுகின்றார்கள்; 

    முனிவர்கள் உலைந்தார்கள்; நடனஞ் செய்கின்ற தெய்வப்பெண்களும் அவனுடைய புகழ்களைப் 
பாடுகின்றவர்களும் பதைபதைத்தோடினர்; அட்டதிக்கு யானைகள் ஓடின; அட்டகுலமலையும் மேருமலையுங் 
குலைந்தன; நாகங்களெல்லாம் உலைந்தன; தேவர்கள் ஏங்கி நடுங்கினர்; சூரியன் இத்தீங்கைப்பார்த்து ஓடியும் 
மீண்டுந் திரிந்தான்; பூமி நடுங்கின; விண்ணுலகமெல்லாம் நடுங்கின; சமுத்திரஜலம் நடுங்கின; பிரமபதம் நடுங்கின; 
விட்டுணுபதம் நடுங்கின; அவுணரும் நடுங்கினர்; உலகில் யார்தாம் நடுங்காதவர்! அவனுடைய கோபம் சிறியதா! .

    தாக்ஷணியமில்லாத சூரபன்மா வென்னும் புல்லிய மனத்தையுடைய அசுரன் இவ்வாறு துண்ணென்று 
சினந்து, தேவர்கள் எல்லாரையும் தொலைக்கும்படி எண்ணி, அங்கேயிருக்கின்ற தம்பியர்களைப் பார்த்து, 
இவற்றைச் சொல்வான்:  "நம்முடைய ஏவலினால் மீன் சுமந்து திரிந்த இந்திரன் காட்டில் மறைந்திருந்து 
ஒருவனைக்கொண்டு இவர்களுடைய கைகளைத் துணிப்பித்தான் என்றால், இனி மனுடர்களும் நம்மைக் 
கொல்வார்களே! சிவனல்லன், பிரமனல்லன், விஷ்ணுவல்லன், நமக்குப் பயந்தோடிய இந்திரனல்லன், 
அவனுடைய ஏவலைச் செய்யும் ஒருவனாம் இவர்களுடைய கையைத் துணித்துவிட்டு உயிர் பிழைத்திருப்பான்! 

    எளிமையையுடைய தேவர்களைப் போரிலே வஸ்திரத்தினாற் கட்டிக்கொண்டு வருதலும், என் 
கண்முன்னிற்கின்ற அவுணர்களுடைய மிகுந்த பசியொழியும்படி 'நீர் உண்மின்' என்று கொடுத்திலேன்; அறத்தை 
நினைந்து அது செய்யாதிருந்தேன். மறைந்திருக்கின்ற இந்திரனையும் இந்திராணியையும் முன்னே சிறை 
வைத்தேனில்லை; அவர்களை எளியர் என்று எண்ணினேன்; தீயின் சேஷத்தை வைத்தவர்கள் போலாயினேன்; 
இத்தன்மையை எண்ணிலேன். தன் கையகப்படுத்திய உயிர்ப்பலியை விரைந்துண்ணாது தப்பவிட்ட 
மதயானையையொத்தேன். இந்நிலவுலகத்திலே இவர்களுடைய கைகளை வெட்டியது என்னுடம்பிற் செய்த 
ஊனமன்றி வேறுண்டோ! இந்திரனையும் இந்திராணியையும் தேடும்படி சென்ற தூதுவர்கள், அத்தேவர்கள் 
தமக்கொரு தீங்குமின்றிப் பூமியிற் குறும்பு செய்துகொண்டிருத்தலை இன்னும் கண்டிலர்போலும்,

    தம்பியர்களாகிய நீர் இருந்தீர்; புதல்வர்களுமிருந்தார்; இணையில்லாத இந்திரஞாலத் தேரிருந்தது; சிறிதே 
என்பேரிருந்தது; யானுமிருந்தேன். பின்னை யாரிருந்துமென்! மற்றையெல்லாருமிருந்து மாகின்றதென்! அந்தோ! 
வானுலகத்தை யளாவுகின்ற பஞ்சுமலை ஒரு சிறு தீப்பொறி பட்டமாத்திரத்தில் அழியுஞ் செயல்போல, இவர்களுடைய 
கைகளினின்று முதிர்ந்த சிறிய இரத்தத் துளியினாலே பலவண்டங்களையும் விழுங்கிய நம்முடைய புகழ் போனதே!
இவர்களுக்கு இழிவும் வருவதா! தேவர்கள் மாட்டு நின்ற துன்பமும் இங்கே வருமா! பழியும் என்னிடத்து வருமா! இப்பழி என்றும் 
ஒழிவதில்லையே! இதனை என்னுயிர் பொறுப்பதா! யானை குதிரை தேர்களும் எண்ணில்லாத அவுணர்களும் 
உலகமெங்குமிருக்க, அசமுகி படுவது இதுவா! என்னரசியன் முறைகள் நல்லன நல்லன!" என்று சிரித்தான்.

    சூரபன்மன் இவ்வாறு சொல்லிச் சிரித்தபொழுது, அவன் புதல்வர்களிற் பானுகோபன் என்னும் 
வலியோன் அக்கினிபோலக் கோபாவேசத்தனாயெழுந்து பிதாவுக்கு முன்போய் வணங்கிநின்று, 
இவ்வாறு சொல்வான்: "ஐயனே கேட்பாய்! இந்திரன் நமது குற்றேவலால் வருந்தி இளைத்த மனத்தோடு 
மறைந்தான். தேவர்களும் எளியர்; இத்தொழிலை நினைத்தலுஞ் செய்யார். உன் தங்கை கையிழந்தது 
என்னை! மாயமோ! இதனை அறியாது கவல்வேன். 'தேவரிலொருவனே இவர்களுடைய கையைத் 
துணித்துவிட்டு உயிரோடிருக்கின்றான்' என்று நீ சொல்வது, 'மலடிபெற்ற மகன் ஆகாயத்திற் செல்லுஞ் 
சந்திரனைக் கையினாற் பிடித்தான்' என்பதே. 

    ஒருவாறு அவர்கள் வலியராகியே இவர்களுடைய கையைத் துணித்தாரெனினும்,உன்னாற் 
கோபிக்கப்படுந் தகுதியுடையர்களோ! அவர்கள் மிகவும் மெலியர். கடலிலுள்ள மீனைச்சுமந்து உன்பணி செய்த
அவர்கள் பேடிகளன்றி ஆண்டகைமையுடையர்களோ! பிரமா விட்டுணு உருத்திரன் ஆகிய இவர்களைக் 
கோபித்தாலும் உனக்குத் தகுதியே. பெருமையிற் சிறந்த நீ சிறியோர்களையும் கோபிக்கின்றனையோ! 
மும்மூர்த்திகளன்றி வேறி யார் உன்கோபத்திற்கியைந்தோர்! உன்றம்பியர்களுக்கும் இவ்வாறே. உன் மனத்திற் 
கொண்ட கோபத்தைத் தீருதி. இவர்கள் கைவெட்டுண்ட இடத்திற்கு நான் கடிதிற் செல்வேன். 

    இவர்களுடைய கைகளை வெட்டின ஆடவனையும், உன் மனத்தில் ஆசையை மூட்டிய இந்திராணியையும், 
கள்வனாகிய இந்திரனையும், தம்முயிர்மேல் அன்பில்லாத தேவர்களையும் பிடித்துக் கொண்டு வருவேன். 
அவர்கள் அங்கேயில்லாமல் மறைகுவாராயின், சுவர்க்கத்தை அக்கினி கொளுத்தி, உலகமெங்குந் 
தேடிப்பார்த்து, அத்தேவர்களையும் அரம்பையர்களையும் ஒருநாழிகைப் பொழுதினுட் பிடித்துக்கொண்டு 
வருவேன். தமியேனுக்கு விடை ஈகுதி' என்று நின்றிரந்தான். பிதாவாகிய சூரபன்மன் சினந்தணிந்து, 
'மைந்தனே உன்படையோடு ஆண்டுச் செல்லுதி'' என்று கூறினான். 

    பானுகோபன் நன்றென்று மகிழ்ந்து, பிதாவினுடைய கால்களை வணங்கி, தன் சிறிய பிதாமார்களையும்
 வணங்கி, விடைபெற்றுத் தனது மாளிகைக்குப் போயினான். பானுகோபன் செல்லுதலும், சூரபன்மன் ஏவலாளரிற் 
சிலரை நோக்கி, "அந்தப் பிரமன் இங்ஙனம் வருவான் அவனை நமக்குமுன் கொண்டு வருவீராக" என்றான். 
அவர்கள் 'பிரமன் எங்குற்றான்' எனக் கூவிச் சென்று, அவரைக்கண்டு, "நம்மரசன் உன்னைக் கொண்டுவரும்படி 
பணித்தான்'' என்றார்கள். அவர் பஞ்சாங்கத்தோடு விரைந்து சூரன்முன் சென்று, திதிவார நக்ஷத்திரமுதலிய 
பஞ்சாங்கங்களையும் மேலுள்ளனவற்றையும் சொல்லினார். 

    சூரபன்மன் பிரமாவை நோக்கி, நுட்பபுத்தியால் எல்லாவற்றையும் படைத்த பிரமனே, இவர்களுடைய 
வெட்டுண்ட கையை விரைந்து உண்டாக்குவாய்" என்றான். பிரமதேவர் இசைந்து, "இவர்களுடைய கை கூடுக" 
என்னலும் ஒரு நொடிப்பொழுதினுள் வளர்ந்தன. சூரன் ''உன் வல்லபம் நன்று நன்று" என்று பிரமாவை வியந்து, 
அசமுகியை அந்நகருள் இருக்கும்படி செய்து, துன்முகியை 'ஐராணி முன்னிருந்த இடத்தைக் காட்டி வருகுதி'' 
என்று பானுகோபனோடு அனுப்பி, தன் மருங்கிலே திரிகின்ற பல ஏவலரை நோக்கி, 'சூரியனையும் 
நக்ஷத்திரங்களையும் கிரகங்களையும் இப்பொழுதே அழையுங்கள்' என்று பணித்தான்.

    ஏவலாளர்கள் பலர் விடைபெற்று விண்ணுலகத்துக்குப்போய், சூரியன் முதலிய யாவரையும் 
தேடிக்கொணர்ந்து, சூரபன்மனுக்கு முன்னே நிறுத்தினர். அவன் தன்மனத்தில் முன்பு தவிர்ந்திருந்த கோபாக்கினி 
பின்பு கிளர,வியர்க்கும் நெஞ்சினனாய், அவர்களை அழைத்து, 'அயர்ச்சியின்றி ஆகாயத்திற் சஞ்சரிக்கும் நீவிர் 
அறியாததொன்றுமில்லை. என்றங்கையினுடைய கையைத் துணித்தவனுடைய செய்கையைக் காணுதிர். 
கண்டும் வறிதே ஆகாயத்தில் இருந்ததென்ன? இவளுடைய கையைக் குறைத்த தேவனுடைய உயிரைக் 
கவர்ந்திலீர்; அல்லது அவனைக் கட்டித் தளை செய்து இங்கே கொணர்ந்திலீர்; அல்லது அவ்விடத்து நிகழ்ச்சியை 
நமக்கு வந்து சொன்னீரில்லை. நும் செருக்கு நன்று! 

    யோசிக்கின் ஓர் வலியவன் மறத்தன்மையினால் என்றங்கையின் கையைக் குறைத்தற்கு நீவிரும் அகத்தரே யல்லது 
புறத்தரன்று. நீங்கள் உங்களுக்குரிய தொழில்களை நம்மாணையாற் செய்வீர்; நுமக்கிது முறையா?'' என்று கூறினான். 
நீதியில்லாத சூரன் இங்ஙனஞ் சொல்ல, "மகாராஜனே, எங்களை ஏதும் வெகுளற்க. இவளுடைய கரத்தைத் துண்டித்தவனைக் 
கண்டிலேம்; எங்கள் கண்கள் இன்று செல்லுகின்ற கதியின்மீது சென்றன' என்று அவர்கள் சொன்னார்கள். ''இவள் கை துணிபட்ட 
இச்செய்கையைக் கண்டிலர்களாம்: கண்கள் கதியிற் சென்றனவாம்; இத்தேவர்களுடைய செயல் அழகிது!' என்று 
அவர்களெல்லாரையும் சூரன் நீங்காத சிறையிலிடுவித்தான். 

        சூரியன் முதலாயினோர் சிறையிற் புகுந்தபின்பு, சூரன் சில ஏவலாளரை அழைத்து, "நீர் போய் 
வாயுக்களைக்கொண்டு வாருங்கள்" என்று கோபத்தோடு சொல்லித் தூண்டினான். ஒற்றரிற் சிலர் விரைவிற்போய் 
வாயுக்களின் தொகுதியைக் கூவிப்பற்றிக் கொண்டுவந்து முன்னேவிட, பதைக்கும் நெஞ்சினனாய்,"விண்ணிலும் 
மண்ணிலும் திசைகளிலும் பாதலத்திலும் ஊனிலும் உயிரிலும் ஏனைய பொருளிலும் எங்கும் நிற்பீர்; என் 
தங்கையினுடைய கையை ஓர் தேவன் வாள்கொண்டு சேதித்ததைக் காணுதிர்; உமக்கு யாவர் மறைதற் பாலார்? 
இந்நகரில் வந்து இந்நிலைமையைச் சொன்னீரில்லை; பகைவர்களுடைய சூழ்ச்சியால் 'அவுணர்களுக்கு 
இப்பழி வருவது நன்று' என்று மகிழ்ந்து வாளாவிருந்தீர்; உங்கள் பெருமிதம் நன்று!" என்று சூரன் சொல்ல, 
அவர்கள் ஒருபதிலும் பேசாது நின்றார்கள். 

    வலியின்றி அச்சத்தோடு நின்ற வாயுக்களை ஓர் சிறைச்சாலையிலிடுவித்தான். உலகங்களுக்கு 
அழிவைச் செய்யவிருக்கின்ற வாயுக்களையும் சூரன் சினத்தோடு சிறையிலிட்டான். நாம் சொல்லின் 
உலகத்திலே தவத்தினால் வரும்பேற்றினும் பெருமையாயது வேறுளதோ!

    அதன்பின் சூரன் ஏவலரை அழைத்து, "இந்தவருஷம், இருது,மாதம் முதலிய காலவரையறைத் 
தெய்வங்களைத் தருதிர்" என்று பணிக்க, வணங்கிப்போய், அவரை அழைத்துப் பற்றிக்கொண்டுவந்து விட்டார்கள். 
சூரன் அவர்களைச் சீறி, "புல்லிய இந்திரன் புணர்த்த அச்செயல் தகுவதென்று அதற்கு ஒருப்பட்டு நீவிரெல்லீரும் 
மனமகிழ்ந்திருத்திர்; என்னோடுஞ் சொல்ல வந்தீரில்லை; நீர் எங்கும் உள்ளீர்; நம்முடைய ஏவல் வழியினின்றி 
நீர் இருந்ததிற் பயன் என்னை? நீர் இல்லாமையால் தவறு என்னை? நீவிர் தேவர்பக்கஞ் சார்ந்தீர்" என்று 
அவர்களையும் சிறைசெய்தான். 

    பின் சில ஏவலர்களை யழைத்து, 'இப்பூவுலக அரசர்களை விரைந்து கொண்டு வருதிர்" 
எனச்சொல்லித் தூண்டினான். அளவில்லாத தூதுவர்கள் ஓடி மிகுந்த அரசர் தொகுதியை நிலவுலகமெங்குந் 
தேடிப் பற்றிக்கொண்டு வந்து சூரனுடைய அவைக்களத்தில் விடுத்தார்கள். உடம்பில் வேர்வை மிகவும் அச்சமும் 
நாணமும் உயிரைத் தாக்கவும் மனம் மிகத்தளரவும் கைகூப்பி வணங்கும் அவ்வரசர் தொகுதியைச் சூரன் 
நோக்கி வெகுண்டு, "எளிமையின்றி நம்மேவலை நீங்கிக் களிக்கின்ற இந்திராணியோடும் இந்திரன் 
இவ்வுலகில் ஒளித்தான், தேவருலகிலில்லை. நீர் அரசியல் செய்தது மிகவும் அழகிது! கள்ள மனத்தினனாகிய 
இந்திரனுடைய ஆணையின் வழிநின்ற தூதுவன் என்றங்கையாகிய அசமுகியினுடைய கையை அறுத்து 
ஆண்டே இருந்தான். அதனையும் அறிந்திலீர்; நாடோறும் கள்ளுண்டு கலங்கினீர்களோ, அல்லது உறங்கினீர்களோ? 
அரசியலை விட்டீர்களோ? பெருஞ் செல்வத்தாற் பித்துற்றீர்களோ? என் பகைவர்களோடு உறவுற்றீர்களோ? 
அல்லது அவர்களுக்கு அஞ்சினீர்களோ? பெண்களைச் சேர்ந்து களிப்புற்றீர்களோ? நீங்கள் இருந்த நிலைமை 
என்னை?' என்று வினாவினான். 

    அவர்கள் "மகாராசனே,நீ சொல்லிய தன்மையில் ஒன்றையுங் கொண்டிலேம்; பூமியைப் பண்டுதொட்டுப் 
பரிபாலித்து வருகின்றோம்; உன் பகைவர்கள் யாரையுங் கண்டிலேம்; அவர்கள் ஒளித்திருக்குங் கதையையுங் கேட்டிலேம்; 
எங்கள் தாய்போலும் அசமுகி துன்முகியோடு நிலவுலகில் வந்ததையும், அவர்கள் கை வெட்டுண்டதையும் தெரிந்திலேம்; 
இது ஒருமாயமாகும்; இதனை உறுதியென்று மனத்துக் கொள்ளுதி" என்றார்கள். ''மிகுந்த செல்வத்தை அநுபவித்து 
அதனால் மயங்கிப் பூவுலகத்தை எங்கும் பரிபாலித்திலீர்; இடையிலே என்னிடத்து இத்தன்மையாயதோர் பழி 
அடைவதும் ஓர் மாயையாம்; இது அழகிதே!" என்று சூரன் சொல்லி, சங்கார காலத்திலே வடவாமுகாக்கினி 
எழுவது போலச் சினம் மேற்கொள்ள, வாளை உருவிக்கொண்டு தன் மருங்கில்நின்ற சேனைத்தலைவரை ஏவித் 
தனித்தனி தண்டஞ் செய்வானாய், சிற்சிலருடைய நாவையும் கையையும் சேதிப்பித்தான்; சிற்சிலருடைய மூக்கையும் 
காதையும் களைவித்தான்; சிற்சிலருடைய மார்பையும் முதுகையும் கொய்வித்தான்; சிற்சிலருடைய தாளையும் 
தோளையும் சிரத்தையும் அறுப்பித்தான்.

     சூரபன்மன் இவ்வாறே பலவகைத் தண்டங்களை முறைமுறை செய்வித்து, சிங்காசனத்தினின்று மிறங்கி, 
தம்பியர்கள் செல்ல விடைகொடுத்து, பிரமாவை நோக்கி "பிரமனே நீ போதி" என்றான். பிரமதேவர் "மகா ராஜனே 
கேட்பாய்; சூரிய சந்திரர்களும் நக்ஷத்திரங்களும் மற்றைக்காலக் கடவுளரும் ஆகிய எல்லாரும் உன் பணியின் 
வழி நிற்பர்; உலகம் அவர்களை யின்றி நடைபெறாது; அவர்களுடைய பழியை உட்கொள்ளாதே; அவர்களைச் 
சிறை விடுதி" என்று குறையிரந்து வேண்டினார். சூரன் அதனைக்கேட்டு நன்றென்று, ஒற்றுவரைநோக்கி,
 "நம்முடைய சிறைச்சாலையிலிருந்தோரைக் கொண்டு வருதிர்" என்ன, அவர்கள் கொண்டுவந்து விடுத்தார்கள். 

    சிறைப்பட்டிருந்த அவர்களைச் சூரபன்மன் பார்த்து, "என்றும் நம்முடைய பணியின்வழி நிற்கக்கடவீர்; 
இந்திரனோடு சேராதிருப்பீர்; சென்று உங்களுக்குரிய பழைய தொழில்களைச் செய்யுங்கள்' என்று சொல்லினான். 
அவர்கள் "மகாராஜனே நன்று, நீ பணித்தபடி செய்வோம்" என்று உபசாரங்களைச் சொல்லி, விடைபெற்றுக்கொண்டு 
போயினார்கள். போதலும், சூரன் பிரமாவுக்கும் தன்புத்திரர்களுக்கும் அமைச்சர்களுக்கும் முனிவர்களுக்கும் 
படைத்தலைவர்களுக்கும் விடைகொடுத்தனுப்பி, தானும் தன்னுறையுளிற் புகுந்தான். இனி, முன்பு சென்ற 
பானு கோபன் செய்த செயலினைச் சொல்லலுற்றேன்.

            திருச்சிற்றம்பலம்.

            அமரர் சிறைபுகு படலம்.

    சூரபன்மனிடத்தில் விடைபெற்றுக்கொண்டு தன்மாளிகைக்குச் சென்ற பானுகோபன் தன்னைப் 
பேரழகு பொருந்த அலங்காரஞ் செய்து படைக்கலங்களை யேந்தி, தும்பை மாலைசூடி, இரண்டாயிரங் குதிரைகள் 
பூண்ட ஒப்பில்லாத ஓர் தேரையூர்ந்து, முதற்கடைவாயிலிற் சென்றான். அப்பொழுது, ஆயிரம் வெள்ளம் 
அவுணசேனையும், ஆயிரம் வெள்ளம் குதிரைகளும், ஐஞ்ஞூறு வெள்ளம் தேர்களும், ஐஞ்ஞூறு வெள்ளம் யானைகளும் 
அவனை வந்து சூழ்ந்தன. அச்சேனைகளினின்றும் தூளிகளெழுந்து மகேந்திரபுரியை மறைத்தன. கொடிக்காடுகளும் 
குடைக்காடுகளும் மொய்த்தன. வீரர்களுடைய புயங்கள் வளர்ந்தன. தேவர்களுடைய மனங்கள் தளர்ந்தன. 
இங்ஙனம் நிகழப் பானுகோபன் மகேந்திரபுரியை நீங்கி அதனைச் சூழ்ந்த சமுத்திரமாகிய அகழியைக் கடந்து, 
பூமியினெல்லையை யடைந்து, தன் மருங்கில் வருகின்ற துன்முகியை நோக்கி, "உங்கள் கைகள் வாளால்
வெட்டுண்ட இடம்யாது? சொல்லுதி" என்றான்.

    அவள் ''அரசிளங்குமரனே, ஒர்வீரன் ஒருசோலையில் எங்களுடைய கையைத் துணித்து இருந்தான், 
அயிராணியுமிருந்தாள்; அந்த இடமும் இஃதே'' என்று விரலினாற் சுட்டிக் காட்டினாள். பானுகோபன் சீர்காழிப் 
பதியிலுள்ள அந்தச் சோலையுட்புக, அவனுடைய தூசிப்படைகள் முன் சென்று, அச்சோலையைத் துவைத்து 
வெளியாக்கின. பானுகோபன் அங்கே இந்திராணியையும் வாள்வீரனையும் தேடிக்காணானாய், பூவுலகமெங்குந் 
தேடிப் பார்த்து, பின்விண்ணுலகிற் போயினான். கோபாக்கினி சொலிக்கும் கண்களும் மடித்தவாயும் தேவர்கள் 
அஞ்சும் ஆரவாரமும் உடைய அவுணர்கள் ஒருங்கு சென்றார்கள். கச ரத துரக பதாதியாகிய நால்வகைச் 
சேனைகளும் பொன்னுலகைச் சூழ்ந்தன. இத்தன்மைகள் நிகழப் பானு கோபன் தேவருலகத்தை அடைதலும், 
தேவர்கள் அங்கு வந்தவன் பானுகோபன் என்று அறிந்து, அந்தோ என்று பதைபதைத்து அலமந்து ஏங்கி அறிவழிந்து 
நொந்து ஓடிப்போய், இந்திரகுமாரனாகிய சயந்தனுக்குச் சொல்லினர். அவன் அதனைக் கேட்டுச் சொல்லுகின்றான்:

    "எமது குரு இங்கில்லை; தேவர் குழுவிற் பலரில்லை; என்தாயும் தந்தையும் இங்கில்லை; தமியேன் 
உங்களோடு இருந்தேன். அந்தப் பானுகோபன் இங்கு வந்தமையும் நம்மைத் துன்பஞ் செய்தற்குப்போலும் 
முன்னை விதியை யான் அறிவேனோ? இன்றைக்கு யாது முடியுமோ? செல்வங்கள் அழியவும், தந்தை தாயர் 
ஒளிப்பவும், சுற்றத்தார் வருந்தவும் பழி நீங்காதிருப்பவும், சூரபன்மனுடைய ஏவல்களைச் செய்துகொண்டு
எல்லாப் பெருமையுமிழந்தும், இந்நாள்காறும் இந்த நகரத்தில் இருந்தேன். இன்று அதற்கும் கேடு வருகின்றது. 
இதற்கு என்செய்வேன்? தேவர்களே சொல்லுங்கள். 

    என்னுடைய தாயுந் தந்தையும் சுற்றத்தாராகிய தேவர்களும்  நிலவுலகத்தில் மறைந்தார்கள். 
அதனைப் பல அவுணர்கள் ஆராயும் படி திரிந்தனர். அவ்வாறாயிருக்கும்பொழுது, எளியவர்களாகிய யாமும் 
எங்கே போயிருப்போம்? எம்மையெல்லாங் காக்கும்படிக்கு ஒர் புகலிடம் உண்டோ! ஆதலால், இனி யாண்டும் 
போவதில்லை, புலம்புவதும் இல்லை, அப்படிப் புலம்புவதினால் ஆவதொன்றுமில்லை, வருவதெல்லாம் வருமன்றி 
வராதொழியுமோ? அவ்வசுரர்களுக்குப் புறங்கொடுப்பதில்லை, வணங்கிப் புகழ்வதில்லை. எதிர்ந்து சாவது 
அல்லது பிழைப்பது இந்த இரண்டே தமியேனுக்குறுதி, அவர்க்கு இனி யான் அஞ்சேன். தம்முயிரைப் பொருளாகக் 
கொள்ளாதவர் நஞ்சுபோலுந் தீங்குகள் தமக்கு வரினும் நடுக்கமடையார், துன்பத்திலாழார், தம்முடைய 
வீரத்தினெறி பிழையார். அது போல, யான் பானுகோபனுடைய கொடிய சேனைகளை எதிரேற்றுச் செல்வேன், 
பலரைக் கொல்வேன், போர்வீரத்துடன் அவ்வசுரரோடு பொரும் படி செல்வேன். நீரும் என்னைப் பாதுகாத்து வருதிர். 
வன்மையில்லாதீர் இப்பொழுதே விரைந்து வழிக்கொண்டு போமின். உங்களுள் ஒருவரன்றி எல்லாரும் மனம் பயந்து 
என்னைவிட்டு நீங்கி ஓடிப்போவீராயினும் நன்றே. துணிந்த தமியேன் சிறிதும் மனந்தளரேன்'' என்று சயந்தன் கூறினான்.

    தேவர்கள் அவற்றைக் கேட்டுத் துன்பமுற்று, 'உன்மனம் இதுவாயின், நமக்கு வேறோர் எண்ணமுண்டோ? 
அசுரர்களுடைய ஏவலைச்செய்து அழியாத துன்பத்தை அனுபவிப்பதினும், இறந்து விடுதல் நல்லது. விரைந்து 
போருக்குப் புறப்படுவாய்" என்றார்கள். சயந்தன் தேவர் குழுவை நோக்கி, "துன்பமடைந்த உங்கள் மனம் 
துணிந்தது போலும்" என்று வியந்து, சிங்காசனத்தினின்றும் இறங்கி, ஐராவத யானையை நினைக்க, அது அறிந்து 
அவனெதிரே வந்து வணங்கி நின்றது. சயந்தன் அதன் பிடரில் ஏறிச் செலுத்தித் தேவர்கள் சூழப் பெருங்கோபத்தோடு 
விரைந்து போயினான். பக்கத்திலுள்ள தேவர்கள் மிகுந்த துன்பங்கொண்டு, ஓடிப்போதற்கு ஓரிடமுங் காணாதவர்களாய், 
தாம் சயந்தனை நீங்குதல் வசை என்பதனை நினைந்து துணிவாகி, பல படைக்கலங்களையும் ஏந்தி, அச்சமில்லாதவர்கள் 
போல அவனோடு போயினர். ஐராவத யானையின் பிளிற்றொளியும் தேவர்களுடைய ஆர்ப்பும் முரசொலியும் ஒன்றாகச் 
சேர்ந்து, "எனக்குத் தவறு வரும்'' என்று பொன்னுலகம் வாய்விட்டுப் புலம்புதல் போன்றது. 

    தேவசேனைகள் செல்லும்பொழுது பொன்னுலகின் துகள் மேலே நிமிர்ந்தெழுதல் அது "என்னை அக்கினி 
பற்றி எரிக்கும்" என்று மேலே கிளர்ந்தெழுதல் போன்றது.

    இவைகள் நிகழச் சயந்தன் ஐராவதாரூடனாய், மனோவதி நகரத்தை நீங்கிப் பானுகோபனுடைய 
சேனையினெதிரே போயினான். அங்கே வந்த தேவர்களை அசுரர்கள் நோக்கி, "நேற்றை வரையும் 
இவர்கள் நம்முடைய தொண்டுகளைச் செய்தார். செருக்கோடு இன்றைக்குப் போர்செய்ய நினைத்து வருவாரோ! 
இஃதற்புதம் இஃதற்புதம்" என்று சொல்லலுற்றார்.

    தேவர்களும் அசுரர்களும் "போர் கிடைத்தது" என்று ஒருவரையொருவர் முட்டி உரப்பி, வேற்படைகளை 
விடுத்தும், வாட்படைகளால் வெட்டியும், விற்களை வளைத்து அம்புகளை விடுத்தும், எழுப்படைகளையும் 
தண்டுகளையும் மழுப்படைகளையும் குலிசங்களையும் முத்தலைச் சூலங்களையும் எறிந்தும், சக்கரங்களை 
உருட்டியும், இரத்தவெள்ளம் பெருகும்படி போர் செய்தார்கள். இருதிறத்தினரும் படைக்கலங்களையேந்தி 
இப்படிப் போர் செய்யும்பொழுது, தேவர்கள் வலியழிந்து ஓடினார்கள். அவுணர்கள் விரைந்து அவர்களைப் 
பின்றொடர்ந்து பற்றிக் குற்றிப் புயங்களைக் கயிற்றினாற் கட்டி இழுத்துக்கொண்டு சென்று,பானுகோபனுக்கு 
முன்னே விடுத்தார்கள். அவன் இவர்களை "வலிமையோடு காத்துக்கொள்ளுங்கள்'' என்றான். 

    சயந்தன் இவற்றைக்கண்டு வெகுண்டு, வில்லைக் கையிலெடுத்து வளைத்து நாணோசை செய்து, 
அசுரர்களுக்கு நேரே போய், அவர்கள் அஞ்சும்படி பாண மழைகளை ஆரவாரத்தோடு பொழிந்தான். அப்பொழுது 
அவுணவீரர்கள் மனோகதியும் பிற்பட வந்து யுகாந்த காலத்துச் சமுத்திரம்போல அவனேறிய ஐராவதத்தைச் 
சூழ்ந்து, சயந்தன்மீதும் வெள்ளையானையின் மீதும் கோடி பாணங்களைச் சொரிந்தார்கள். சயந்தன் மேன்மேலும் 
பாணங்களைச் சொரிந்து, அவர்கள் விடுத்த பாணங்களெல்லாவற்றையும் அழித்து, வில்லையும் அவர்களுடம்பையும் 
வீழ்த்தி, அவுண சேனைகளையும் யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் வீரர் கூட்டங்களையும் வாட்டி, 
நூறுவெள்ளஞ் சேனைகளை அழித்தான். அவனேறிய ஐராவதயானை பானுகோபனுடைய சேனைகளை வாலினால் 
அடித்தும், துதிக்கையினால் வாரியெறிந்தும் கால்களினால் மிதித்தும், கோடுகளினாற் குற்றியும், முகில்போலப் 
பிளிற்றொலி செய்தும் கொன்றது. 

    இவ்வாறு பானுகோபனுடைய நூறுவெள்ளஞ் சேனைகள் கணப்பொழுதினுள் அழிய, இரத்தவெள்ளம் 
நதிபோலப் பாய்ந்தது. சயந்தன் ஐராவதத்தின் மேலேறிக்கொண்டு அவுணப்படைகளை இப்படி அழிக்கும்பொழுது,
 நீலகேசனென்னும் படைத்தலைவன் “பேயா உன்னைப் பிடித்தது! மேல்வருந் தன்மையை நினையாய்; விளக்கில் 
விழும் விட்டிற்பறவையை நிகர்ப்பாய்; நம்முடைய சேனையை நீயா கொல்லுகின்றனை!" என்று சொல்லிக்கொண்டு 
அவனுக்கு முன்போய், வில்லை வளைத்து அம்பு மழையைச் சொரிந்தான். சயந்தன் அதற்கெதிராக அம்புகளைச் 
சொரிந்து அழித்து, பின்னும் நூறுபாணங்களை விடுத்து அவன் கவசத்தை யறுத்தான். நீலகேசன் வேர்த்துப் 
பெருமூச்செறிந்து, ஓர் பிறைமுகாஸ்திரத்தைச் செலுத்திச் சயந்தனுடைய வின்னாணை அறுத்து, ஆரவாரித்தான். 

    தன்னந்தனியாய் நிற்குஞ் சயந்தன் வின்னாண் அறுதலும், அவ்வில்லைக் கைவிட்டு, முன்னே தான் 
பயின்ற ஒரு மாயத்தை நினைத்து, அதனைச் செய்து பலவேறு வகைப்பட்ட உருவங்களைக் கொண்டு பலவாறு 
போர் செய்தான். நீலகேசன் குறிப்பினால் இது மாயமென்று நினைத்து, அவற்றை நீக்க யாதும் செயலில்லாதவனாய், 
எதிர்நின்று ஆர்ப்பரிக்கவும் வாயின்றி மயங்கித் தொலைந்தான். பானுகோபனுடைய சேனைகள் அலைந்து உலைந்து
பயந்து ஓடுவனவாயின. அப்பொழுது சோமாசுரன், மாயாபலி, சுரகேசரி, பதுமன், மாருதபலி, தண்டகன், வாமன், 
வருணன், மாகதன் முதலாகிய அவுணப் படைத்தலைவர்கள் "இது மாயமாகும்" என்று சொல்லிக் கொண்டு வந்து 
 அதனை அறியாராய், தாம் பயின்ற மாயைகளை நினைத்துப் போர் செய்து, சயந்தன் செய்த மாயம் அவற்றால் 
அழியாமை கண்டு மனந் தடுமாறி, "யாம் என்செய்வோம்" என்று நினைத்து ஏங்கினார்கள்.

    அப்பொழுது, பானுகோபன் தன் படைத்தலைவர்கள் மெலிவுற்றதையும், சயந்தனுடைய பெரிய 
வெற்றியையும், தன்னுடைய சேனாவெள்ளம் வீணாக அழிகின்றதையும் கண்டு, "இது சயந்தனுடைய மாயை போலும்'' 
என்று நினைத்து, முன்னே சுக்கிராசாரியர் தனக்குபதேசித்த ஞான மந்திரத்தை விதிப்படி நினைத்துக் கொண்டு 
சென்றான். சயந்தனுடைய மாயா ரூபங்கள் யாவும் அழிந்தன. அவன் தமியனாய் ஐராவதத்தின் மேற்றோன்றி, 
"இது சுக்கிரனுபதேசித்த மந்திரம்" என்றறிந்து, மானமுஞ் சினமுஞ் சுட மனமறுகி, ஐராவதத்தின் மேலிருந்தான். 

    பானுகோபன் தேரோடு அவனை அணுகி,"இந்திரகுமரனே வருதி. நான் ஒரு மந்திரத்தை நினைத்துக் 
கொண்டு வருமுன் உன்னுடைய மாயையும் வலியும் போயின காணுதி. சூரியனைச் சிறைசெய்தது போல 
உன்னையும் சிறைப்படுத்துவேன், விரைந்து போர்செய்குதி" என்றான். "வலிமையுடையோர் வெல்வதும்,
 அஃதில்லாதோர் தோற்பதுமில்லை. ஊழின் முறையைச் சிவபெருமானே அறிவர். உன்னை நீயே துதிக்கத்தகுமா?' 
என்றனன் சயந்தன். சயந்தன் மன உறுதியோடு இப்படிச் சொல்லுதலும், பானுகோபன் "வலியில்லாதவர் பேசுந் 
திறத்தைப் பேசினாய், உயர்ந்த வீரரும் இப்படிச் சொல்வாரோ?" என்று சொல்லி வில்லை வளைக்க, சயந்தனும் 
சினந்து வில்லை வளைத்தான். 

    பானுகோபன் பலபாணங்களைச் செலுத்த, சயந்தனும் அத்துணைப் பாணங்களைச் செலுத்தி, அவற்றை 
விலக்கினான். சயந்தன் விடும் பாணங்களைப் பானுகோபன் அறுத்தான். இவ்வாறு இருவரும் போர்செய்யும்பொழுது, 
சயந்தன் பானுகோபன் செலுத்தும் பாணங்களை விலக்கி, ஆயிரம்பாணங்களினால் அவனுடைய வின்னாணை அறுத்தான். 
பானுகோபன் அக்கினி போலக் கோபித்து வேறொரு வில்லை வளைத்துப், பாண மழைகளைச் சிதறி, சயந்தன் பின்னும் 
விடும் பாணங்களையழித்து, அவன் சரீரத்தில் ஆயிரம் பாணங்களையழுத்தினான். சயந்தன் ஆயிரம் அம்புகளைத் தூவிப் 
பானுகோபனுடைய தேரிற்கட்டிய குதிரைகளை அழித்து, இறப்பவர்கள் தம்மிடத்துள்ள பொருள்களெல்லாவற்றையும் 
யாவர்க்குங் கொடுத்தல்போல அவனுடைய சேனைகண்மீதும் அளவில்லாத பாணங்களைச் செலுத்தினான்.

    பானுகோபன் தன்னுடைய தேர் அழிதலும், வேறொரு தேரிற் பாய்ந்து, பெருமூச்சுவிட்டு வெகுண்டு 
பற்கறித்து இதழை யதுக்கி இடிபோல உரப்பி, வில்லை வளைத்து, நூறாயிரகோடி பாணங்களை விடாமழை 
போலப் பொழிந்து, சயந்தனுடைய வில்லையும் அப்பறாக்கூட்டையும் துணித்து, அவனுடைய உடம்பெங்கும் 
ஐராவத யானையினுடைய உடம்பெங்கும் பாணங்களை அழுத்தினான்.பாணங்கள் தன்னுடம்பிலும் மார்பிலும் 
மூழ்குதலும் சயந்தன் மயங்கி, பிறிது போர் செய்தற்குத் தெளிவில்லாதவனாகி, யானையின்மேல் வீழ்ந்து 
அறிவழிந்தான். அமுதமுண்டமையால் இறந்திலன். அவனுடம்பெங்கும் இரத்தம் வடிந்தது. அவனுடைய
கோபத்தை நாம் முற்றுஞ்  சொல்லமுடியுமோ! அறிவிழந்தபோதும், அவன் கண்ணிலிருந்து வந்த கோபாக்கினி 
உடம்பிலிருந்து வடிந்த இரத்த நீரை வற்றுவித்தது.  சயந்தன் அறிவிழந்து வீழ்ந்தபோது ஐராவத யானை அதனைக் 
கண்டு கலங்கித் துன்பமுற்று நின்று கோபித்து, பானுகோபனுக் கெதிரே போய், அவனுடைய தேரின்மீது பாய, 
அதிற்கட்டிய குதிரைகள்  பாகனோடழிந்தன. யானை பிளிற்றொலி செய்தது. தேரழிதலும்,பானுகோபன் 
நிலத்திற் குதித்து, அவ்வியானையைக் கோபிக்க, அது அவனுடைய மார்பில் முட்டியது. அதன் நான்கு 
கோடுகளும் மலையின்கட் குற்றிய ஊசிகளைப் போலச் சடசட என்னும் ஒலியோடு ஒடிந்தன. 

    பானுகோபன் அதன் துதிக்கையைப் பிடித்துக்கொண்டு கன்னத்தில் அடித்தான். யானை பாற்கடல் 
உடைந்தாற்போல அரற்றி வீழ்ந்தது. முன்னே அயர்ந்து வீழ்ந்த சயந்தன் அறிவு பெற்று, உண்மை நூற்றுணிபைத் 
தன்மனத்தில் நுண்ணிதாக ஆராய்ந்து, "நாம் செய்த மாயம் போயது; தனித்தோம்; வலிமை குறைந்தது; 'தீயர்களாகிய அவுணர்கள் 
நம்மைப் பற்றுவர், இந்நகர் அழியும்' என்று மனமே நீ இனிச் சிறிதும் இரங்காதே. ஆராயின் இவை விதிமுறையே காண்." 
என்று தன்மனத்தோடு சொல்லினன். சயந்தன் தனித்தமையையும் ஐராவத யானையோடு தளர்ந்து வீழ்ந்தமையையும் 
அவுணத்தலைவர்கள் பார்த்து, ஆரவாரித்து, அவனைச் சுற்றிப் பற்றினர். அப்பொழுது எல்லா அவுணர்களும் 
ஒன்றாகக் கூடி, "இவன் மிகவும் வஞ்சன் வஞ்சன். இவனை அடியுங்கள், குற்றுங்கள், இவனுயிரைக் குடியுங்கள்" என்றார்கள்.

    பானுகோபன் மற்றொரு தேரின் மேலேறிக்கொண்டு அவ்விடத்தில் விரைந்து வந்து, சயந்தனைப் பற்றிக்கொண்டு 
சூழ்ந்துநிற்கின்ற அவுணர்களை நோக்கி "யான் விடுத்த பாணங்களால் மயங்கி மிகவும் சரீரந் தளர்ந்தான், 
பேசவும் வலியிலன். ஆதலால் இவனைப் பகைவனென்று வருத்தஞ் செய்யாதொழிமின். விரைந்து தேவர்குழுவோடு 
சிறைசெய்யுங்கள்'' என்றான். அதுகேட்ட அவுணர்கள் சயந்தனுடைய தோள்களைக் கயிற்றினால் இறுகக்கட்டி 
முன் சிறைசெய்த தேவர்கூட்டத்தோடு ஒருங்கே சேர்த்தார்கள்.

    அப்பொழுது, பானுகோபன் தன்பக்கத்திலுள்ள அவுணப்படைத் தலைவர்களை நோக்கி, "இந்தத் 
தேவர்களும் சயந்தனுமல்லாத ஒழிந்த தேவர்களெல்லாரையும் விரைவில் இங்கே கொண்டுவந்து சிறைசெய்து, 
பின் இத்தேவருலகம் அழியும்படி அக்கினியைக் கொளுத்துங்கள்'' என்றான். அசுரர்கள் அவனை வணங்கி, 
சுவர்க்கம் எங்கும் போய்த்தேடி, தேவர்களையும் அரம்பையர்களையும் ஒருவரையும் தப்பவிடாமல் உடனே பிடித்து 
கயிறுகளினாற் றோள்களை இறுகக் கட்டிக்கொண்டுவந்து பானுகோபனுக்கு முன்னேவிட்டு, பொன்னுலகமெங்கும் 
அக்கினியைக் கொளுத்தினார்கள். சிவபெருமானுடைய திருப்புன்முறுவலால் முப்புரங்களும் எரிந்ததுபோல 
அவ்வுலகம் விரைந்து பொடியாயிற்று. ஊழிக்காலத்தினன்றி மற்றெப்பொழுதும் அழிவுறாத சுவர்க்கவுலக 
முழுதும் சாம்பராயிற்று; இந்திரன் வறியனாய் ஒளித்தோடிப் போயினான்; மற்றைத் தேவர்கள் எல்லாரும் 
சிறையில் வீழ்ந்தார் என்றால், யாரும் செல்வத்தை நிலையென மதிக்கலாமோ!

    சுவர்க்கமுழுதும் எரிந்து சுடலை போலாகி வேற்றுருவாதலும், அதனைக்கண்டு களித்த பானுகோபன் 
அவுணவீரர்களுட் சிலரை நோக்கி, "சயந்தனையும் அவனோடு கூடிவந்து நம்முடனெதிர்த்த தேவர்களையும் 
மற்றைத் தேவர்களையும் நீங்கள் முன்னே கொண்டு செல்லுங்கள்" என்றான். அப்படியே அவர்கள் கொண்டு 
சென்றார்கள். பானுகோபன் சேனைகளோடு பூமியில் வந்து மகேந்திரபுரியை யடைந்து, சூரபன்மனுடைய  
கோயிலுக்கு முன்னே போய்த் தேரினின்றும் இறங்கி, அங்கே நிறுத்தி, தேவச் சிறையைக் கொண்டு சென்று, 
சூரனுடைய கால்களை  வணங்கி" என் பிதாவே, இந்திராணியைக் கண்டிலேன்; இந்திரனையுங் கண்டிலேன்; 
சுவர்க்கவுலக முழுதும் நெருப்பைக் கொளுத்தி, சயந்தனையும் தேவர்களெல்லாரையும் 
கொண்டு வந்தேன் " என்றான். சூரன் அதனைக்கேட்டு மகிழ்ந்து, தன் குமாரனைத் தழுவினான்.

    பின்பு சூரன் தன்முன்னிட்ட சயந்தன் முதலாயினோரை மிகவுங் கோபித்து, வாட்படையை யேந்திய 
காவலர் சிலரை நோக்கி, 'இவர்களுடைய அங்கங்களெல்லாவற்றையுந் துண்டஞ் செய்யுங்கள்' என்றான். 
அச் சொல்லைக் கேட்ட அவுணர்கள் பலர், புல்வாய் மான் கூட்டத்தில் சிறையினின்றும் விடுபட்ட புலிகள் 
பாய்ந்தாற்போலத் தேவர்கள் பக்கத்தில் வந்து, அவர்களுடைய கைகளையும் கால்களையும் தோள்களையும் 
காதுகளையும் கண்டங்களையும் நாசிகளையும் அசமுகி காணத் துணிப்பாராயினர். தேவர்கள் சிறியரா! 
அவர்கள் செய்த தவத்தின் வலியினால் அவ்வங்கங்களெல்லாம் உடனுடனே பொருந்தலுற்றன. 

    சூரன் அதனைப்பார்த்து, "தேவர்களை யாருங் கொல்வதரிது; அங்கங்களைச் சிறிதும் குறைத்தலும் 
அரிது என்றால், இவருடைய வன்மையைச் சொல்லமுடியாது. இவர்கள் நமக்குத் தோற்றது நாம்பெற்ற 
வரத்தினாற்றான்." என்று மதித்துக் கோபித்து, "இவர்களை எக்காலத்தும் மீளவிடாத நரகத்தைப் போன்ற 
பெரிய சிறையில் இடுதிர்" என்று மிகுந்த வலியையுடைய ஏவலாளர்களுக்குப் பணித்தான். அவர்கள் 
சயந்தனையும் தேவர்களையும் பிடர்பிடித்துத் தள்ளிச் சிறைச்சாலைக்குக் கொண்டு போய், அதனைக் 
காவல் செய்வோரை நோக்கி, "நம்மரசன் இவர்களை அனுப்பினான், இவர்கள் யாவரையுங் காத்துக் கொள்ளுங்கள்" 
என்று சொல்லி நீங்கினார்கள். அக்காவலாளர்கள் சயந்தன் முதலிய தேவர்களை விலங்கு பூட்டி அரிய 
சிறையில் வைத்தார்கள்.

    அதன்பின் சூரபன்மன் பானுகோபனை அன்போடு பார்த்து, "உன்னுடைய நகரத்துக்குப் போவாய்' 
என்று சொல்லி, அனுப்பி, தானும் அவைக்களத்தை நீங்கி மாளிகையை அடைந்தான். சிறைப்பட்ட தேவர்கள் 
துன்பக்கடலில் ஆழ்ந்தார்கள். இந்திரன் சூரபன்மனுக்குப் பயந்து காட்டிலோடி மறைந்தான். பொன்னுலகம் 
எரிந்தழிந்தது. சயந்தனும் சிறையிலகப்பட்டான். தேவபதத்தின் செய்கை இது, நாம் ஆராயில் எம் பெருமான் 
தந்தருளும் மோக்ஷம் ஒன்றேயல்லாமல் துன்பமில்லாத ஆக்கம் வேறுண்டோ!

    தெய்வப்பெண்கள் அவுணர்களுடைய ஊரிலே சிறைப்பட்டு, வேடர்களிடத் தகப்பட்ட மயில்களைப் 
போல மிகவும் அஞ்சி, இழிவாகிய ஏவல்களைச் செய்து, தூக்கணங் குருவி தன் கூட்டிற் கொண்டுபோய் வைக்க 
அதினின்றும் பெயரமுடியாதிருக்கும் மின்மினியைப்போல வருந்தினார்கள். சயந்தனும் தேவர்களும் சூரனுடைய 
நீங்காத சிறையில் அகப்பட்டுத் துன்பக்கடலில் அழுந்தினார்கள். அவர்களுடைய துன்பத்தின்றிறத்தை 
யார் சொல்ல வல்லவர்! நம்மையெல்லாம் படைத்துக் காக்கும் முன்னவர்க்கு முன்னவராகிய முதல்வரே, 
அத்தேவர்களுடைய பெருஞ்சிறையை நீக்கித் துன்பக் கடலினின்றும் எடுத்துக் காக்கும் வலிமையுடையவர் 
தேவரீரன்றி வேறியாவர்?

    பானுகோபனோடு சயந்தன் விண்ணுலகிற் போர் செய்திளைத்த பொழுது அப்பானுகோபனுடைய 
மார்பிற் குற்றித் தன்கோடுகள் நான்கும் முரிந்து வீழ்ந்தயர்ந்த ஐராவதயானை அறிவு பெற்றெழுந்து, பூமியிலே 
திரு வெண்காட்டில் வந்து, சிவாகம விதிப்படி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிரத்தையோடு பூசித்து, 
அக்கடவுளுடைய திருவருளால் முன்போல அக்கோடுகள் வளரப்பெற்று, பெருமகிழ்ச்சியோடு அந்தத் தலத்திலிருந்தது, 
அந்நாளில் இந்திரன் அயிராணியோடு விண்ணுலகிற் போய், பானுகோபன் அந்நகரை அக்கினி கொளுவி எரித்து 
அங்கிருந்த தேவர்களையும் சயந்தனையும் பிடித்துச் சிறை செய்ததை அறிந்து தளர்ந்து, மேருமலையிற்போய்,
சிவபெருமானை நோக்கி நெடுநாளாகத் தவஞ்செய்தான். 

    அவர் வெளிப்பட்டு "உனக்கு வேண்டும் வரம் என்னை? சொல்லுவாய்" என்றருளிச் செய்தார். அவன் 
"நீதியில்லாத சூரபன்மனைக் கிளையோடழித்து எங்கள் துன்பத்தை நீக்கியருளும்" என்று வேண்டினான். 
"யாம் உமையை மணஞ் செய்து ஒரு குமாரனைத் தருவோம், அவனே சூரன் முதலாகிய அசுரர்களை வதைத்து 
உறுதியாக உங்களுரிமையைத் தருவான் வருந்தாதே! என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து, மறைந்தருளினார். 
[சாதலும் தோல்வியடைதலுமில்லாத சூரபன்மன் பிறரெவராலும் இறக்கமாட்டான் என்று சிவபெருமான் 
திருவுளத்திலெண்ணி, பரஞ்சோதி சொரூபராய்த் தோன்றிய முதல்வர் நீரே ஆகலின் அச்சூரனாதியரை நீர் 
சங்கரிப்பீர் என்று இந்திரனுக்கருளிச் செய்தார்.] அத்திருவாக்கை இந்திரன் கேட்டு, பிரமவிஷ்ணுக்களோடு 
யோசித்துச் சிவபெருமானிடத்து மன்மதனை அனுப்ப, அவன் அக்கடவுண்மீது பூம்பாணங்களைத்தூவி, 
அவருடைய நெற்றிக்கண்ணின் அக்கினியால் எரிந்து சாம்பராயினான். 

    தேவர்கள் யாவரும் தங்கள் குறையை நீக்கும்படி சிவபெருமானை வேண்டிக் கொண்டார்கள். 
பின் அவர் அதற்கு இரங்கிக் கருணைசெய்து, அரி பிரமேந்திராதி தேவர்களும் பூதகணத்தலைவரும் 
பிறரும் சேவிக்க இமயமலைக்கு எழுந்து தருளி, உமாதேவியாரைத் திருமணஞ்செய்து, திருக்கைலாசமலைக்கு 
மீண்டு வந்து, எங்களுடைய துயரத்தை நோக்கிக் கருணையினால் தேவரீரை நெற்றிக்கண்ணினின்றும் 
உண்டாக்கியருளினார்.

    எம்பெருமானே, தேவரீர் திருவவதாரஞ் செய்தபின்பு, இந்திரனுக்கும் பிரம விஷ்ணுக்களுக்கும் 
மற்றைத் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிறர்க்கும் நீங்கிப்போன தம்முயிர் வந்தது போன்றது; 
வலிமையுங் கொடுமையுமுடைய சூரனை வதைத்து அவனால் நீங்கிய தங்கள் அரசுரிமையை அவர்கள் 
அடைந்தவர் போலாயினார். ஆழமாகிய சமுத்திரத்திலே புகுந்து அதில் அமிழ்ந்தினோர்களுக்கு ஒருமேலான 
மரக்கலம் வர அதைப்பற்றிக் கரையேறி உய்ந்தாற்போல, துன்பக்கடலுள் ஆழ்ந்த அத்தேவர்கள் உம்மால் 
அதினின்று கரையேறுவாராயினார். 

    எம்மனோருடைய துன்பத்தை நீக்கத் தேவரீர் திருவவதாரஞ்செய்தபின், இந்திரன் முதலாயுள்ள 
தேவர்கள் துணிவுடையோராயிருந்தும், சூரன் தம்மைக் கண்டால், "கடுஞ்சிறையில் வைப்பான்" என்றெண்ணி, 
அவனுக்கஞ்சி ஒளித்திருந்தார்கள். எம்பெருமானே, இந்திரன் முதலாகிய தேவர்கள் உம்மையும் உமது பிதாவாகிய 
சிவபெருமானையும் வழிபடுதற்கு உங்கள் சந்நிதியில் வரும்பொழுது மாத்திரம் தங்களுடைய சுயவடிவங்கள் 
யாவருங் காண வருவர். ஒழிந்த காலங்களில் தம் வடிவங்கள் மறைந்துழல்வர். இத்தன்மையினராகிய அத்தேவர்கள் 
தாம் மறைந்திருக்குமிடங்களிற் சூரபன்மனுடைய படைத்தலைவர்களைக் கண்டால், நெஞ்சிடிக்கவும், மனம் நடுங்கவும், 
உடம்பு வியர்க்கவும், இறந்தவர் போல்வாராய், அவர் மறைந்தபின் உயிர்பெறுவர். அத்தேவர்கள் சூரபன்மனை 
நினைப்பினும் அவசமாவர். நித்திரை யில்லாமையால் அவர்களுக்குக் கனவு வருவதில்லை; வருமாயின், அக்கனவிற் 
சூரனைக் கண்டால் உயிரையுமிழப்பர். சூரபன்மன் இந்திரனுடைய சுவர்க்கத்தை அழிவுசெய்து, அவன் குமாரனாகிய 
சயந்தனைத் தேவர்களோடு சிறைப்படுத்துத் துன்பக்கடலுள் வீழ்த்தி, அழியாத செல்வங்களைக் கவர்ந்து, 
மனைவி யாகிய ஐராணியோடு ஒளித்துத் திரியும்படி செய்தும், இன்னும் அவ்விந்திரனுக்குத் துன்பங்களையே சூழுகின்றான். 

    செல்வத்தினாலும், வலிமையினாலும், வெற்றியினாலும், மேன்மையினாலும், அழியாமையினாலும், 
தேவர்களுக்குத் துன்பஞ்செய்யுங் கொடுமையினாலும் சூரனுக்கொப்பானவர் ஒருவருமிலர். சூரன் ஓரண்டத்திற் 
செய்தன இவை. மற்றை ஆயிரத்தேழண்டங்களினும் அவன் செய்த  தீங்குகளைச் சுத்தமாயாதீத சோதி சொரூபராய் 
எம்மைக் காக்கும்படி திருவுருக்கொண்டு வந்தருளிய தேவரீரன்றி வேறியாவர் அறிவார். "சூரபன்மனுடைய ஆணை" 
என்னில், விட்டுணுவும், பிரமாவும், தேவர்களும் முனிவர்களும், ஆயிரத்தெட்டண்டங்களிலுமுள்ள மற்றை உயிர்களும் 
அதனைக் கடவாரென்றால், அவனுடைய பெருமையை யார் சொல்லவல்லார்! அழியாத இவ்வளங்களைப் பெற்ற 
சூரபன்மன் சிவபெருமான் கொடுத்த வரத்தினால் அழியான். 

    அக்கடவுளுடைய குமாரராகிய பரஞ்சோதி சொரூபரே, நீரே அவனைச் சங்கரிப்பதன்றி வேறியார் 
அதுசெய்ய வல்லார். பிரமா சூரனுக்கு நாடோறும் பஞ்சாங்கஞ் சொல்லி உழல்வார். விஷ்ணு அவனோடு 
போர்செய்து தோற்றார். எவர்க்கும் மேலாகிய பரமசிவன் அவனுக்கு முன்னே வரத்தைக் கொடுத்தார்; அவர் 
பின்வந்து அவனைக் கொல்லமாட்டார். ஆதலால், நீரே அவனைக் கொல்லல் வேண்டும். சூரபன்மனையும் 
அவனுடைய தம்பிமாரையும் புத்திரர்களையுஞ் சங்கரித்து, சயந்தனையும் தேவர்களையுஞ் சிறையினின்று 
நீக்கி, பிரமவிஷ்ணு முதலாகிய உலக பாலர்களுடைய பதங்களை அவரவர்களுக்குக் கொடுத்து, நம்மைக் 
காத்தருளும் என்று வியாழகுரு சுப்பிரமணியக் கடவுளுக்கு விண்ணப்பஞ் செய்தார்.

    இவ்வாறு சுப்பிரமணியக் கடவுளுடைய திருவுள்ளத்துக்கேற்ப வியாழகுரு சிரத்தையோடு சொல்ல,
 அவர், தந்தை தாயர் முன் அறிந்ததொன்றை மழலைச் சொல் நீங்காத தங்கள் பிள்ளைகள் வாயாற் கேட்குந்
 திறம்போல அன்பினாற் கேட்டு, "புன்றொழிலையுடைய அவுணர்கள் தன்மையையும் மற்றையோர் 
செய்கைகளையும் ஒன்றும் விடாது முற்றும் உள்ளவாறு நம்முன் சொன்னாய். இது நன்று. கட்டுரைக்கும் 
வன்மைக்குத் தலைவன் நீயன்றோ' என்று திருவாய் மலர்ந்து, அவருடைய முதுகைத் தடவி, இனிதருள் புரிந்தார். 
"அறிவிற்கறிவாயிருக்கின்ற ஆறுமுகப் பெருமானே, 'கொடிய சூரபன்மன் அழியவேண்டும், என்று நீர் 
திருவுளஞ் செய்யின் அது ஆகும். ஓர் திருவிளையாடலை நினைத்து ஈண்டு எழுந்தருளி வந்தீர். அதுபோல 
அவனுடைய இயற்கைகளையும் தெரிந்தும் தெரியாதவர் போல அடியேனை வினாவினீர். முற்றறிவுடையராகிய 
தேவரீருக்கு ஓர் சிறியேன் சொன்னேன் என்னுந் தீய பிழையைப் பொறுத்தருளும்"  என்று வியாழகுரு கூறி, 
அவருடைய திருவடித் தாமரைகளை மறவாத அன்போடு பற்றிக்கொண்டு வணங்கி அஞ்சலித்துத் துதித்தார். 

    அவர் வியாழனே, 'நம்முடைய அனுமதிப்படி சொன்னாய், ஆதலால் உண்டாக்கத்தக்க பிழையில் 
ஒன்றையும் நினையாதே, இருக்குதி" என்று திருவாய் மலர்ந்தருளினார். சுப்பிரமணியக்கடவுள், தம்முடைய 
திருவருளைப்பெற்று வியாழகுரு இருந்த பின்னர், தமக்கயலினிற்கும் இந்திரன்மீது கிருபா நோக்கஞ்செய்து, 
"இந்திரனே கேட்பாய். மனத்தில் ஏதுமெண்ணற்க,  சூரபன்மன் கிளையோடு அழியவும் தேவர்கள் சிறை மீளவும் 
விண்ணுலகத்தை நீ ஆளவுஞ் செய்வோம், ஐயுறாதே" என்றருளிச் செய்தார். இம்மை மறுமையின்பங்களைத் 
தந்தருளுவாராகிய முருகக்கடவுள் இதனைத் திருவாய் மலர்ந்தருளுதலும், இந்திரன் தேவர்களோடு அவரை 
வணங்கித் துதித்து, துன்பமெல்லாம் நீங்கி, சந்தோஷ சாகரத்தில் அழுந்துவானாயினான்.

            திருச்சிற்றம்பலம்.

            அசுரகாண்டமுற்றிற்று.

            மூன்றாவது

            மகேந்திரகாண்டம்.

            வீரவாகு கந்தமாதனஞ் செல்படலம். 

    விரிஞ்சன்மாறேவராலும்வெலற்கரும்விறலோனாகிப் 
    பெருஞ்சுரர்பதமும்வேதவொழுக்கமும்பிறவுமாற்றி 
    யருஞ்சிறையவர்க்குச் செய்தவவுணர்கோனாவிகொள்வான் 
    பரஞ்சுடருருவாய்வந்தகுமரனைப்பணிதல்செய்வாம்.

    இந்திரன் முதலாகிய தேவர்களும் பிறரும் மனமகிழ்ச்சியோடு திருமருங்கி லொழுகித் துதிக்க, 
திருச்செந்தூரிலே திவ்விய சிங்காசனத்தின்மீது வீற்றிருந்தருளும் முருகக்கடவுள், திருவுள்ளத்தில் 
முகிழ்த்த பெருங்கருணையினால் இவ்வாறு கருதுவார்: "பிரமா முதலிய தேவர்களையும் முனிவர்களையும் 
போல அவுணர் கூட்டத்தாரும் எமது கடவுளாகிய சிவபெருமானுக்குப் புத்திரர்களாம் முறையை யுடையரேயாயினும், 
கொடியரை அழித்தல் நீதிநூன் முறையாம்: தருமநெறியும் அஃதே. இது துணிபேயாயினும், சூரனையும் அவன் 
சுற்றத்தாரையும் நாம் கொல்லுதல் முறையன்று. தேவர்களுடைய சிறையை விட்டு உய்யும்படி அவனுக்கு ஒர் 
ஒற்றனை விரைவில் அனுப்புவோம். அவ்வொற்றன் சொல்லைச் சூரபன்மன் கேட்டுத் தேவர்களைச் சிறையினின்று 
நீக்கிவிடுவானாயின், அவன் அழியாமல் இன்னும் வாழ்க. அதனை மறுத்தானாயின் நாம் ஆண்டே சென்று அவனைக் 
கொல்வோம். இதுவே தருமநெறி" என்று திருவுளங்கொண்டார். 

    சுப்பிரமணியக் கடவுள் இவ்வாறு திருவுளஞ்செய்து, தம்முடைய திருமருங்கிலுள்ள அரிபிரமேந்திராதி 
தேவர்களை நோக்கி, "அவுணர் கிளையையெல்லாம் அழிக்கும்படி நாம் நாளைக்குப் புறப்படுவோம். அதன்முன் 
ஓர் தூதுவனை அனுப்பி, சூரபன்மனுடைய கருத்தை அறிதல்வேண்டும்" என்றார். அத்திரு வாக்கைப் பிரமாவும் 
விஷ்ணுவும் கேட்டு, "எம்பெருமானே அங்ஙனஞ் செய்தலே தருமநெறி' என்றார்கள். என்னலும், குமாரக்கடவுள்
 ''நம்முடைய இந்த வீரர்களுள் சூரபன்மனிடத்தே வீரமகேந்திரத்திற்குத் தூது செல்ல யாரை அனுப்புவோம் 
சொல்லுங்கள்' என்று வினாவியருள,"வாயுவும் மெல்லவாக வீரமகேந்திரத்திற் செல்லுவது அரிது. 
அச்சூரபன்மனுக்குச் செய்யும் பணிவிடை காரணமாக அன்றி அங்கே செல்லுதல் அடியேனுக்கும் அரிது. 
விரைந்து வீரமகேந்திரத்துக்குச் சென்று பகைவர்களை வென்று மீளவல்லவர் இந்த வீரவாகு தேவரே" என்று 
பிரமதேவர் சுப்பிரமணியக் கடவுளுடைய திருவுள்ளத்துக் கேற்பக் கூறினார். 

    அக்கடவுள் நன்றென்று கருணைசெய்து, வீரவாகு தேவருடைய முகத்தைப் பார்த்து, மிகுந்த சந்தோஷத்தோடு 
இவ்வாறு சொல்லியருளுவார்: "வீரவாகுவே! நீ விரைந்து வீரமகேந்திரத்திற்குப் போய், சூரபன்மனை அணுகி, 
'சயந்தனையும் தேவர்களையும் தருமநெறியை நினைத்துச் சிறையினின்று விடுத்து இந்திர பாக்கியத்தோடிருக்குதி' 
என்று அவனுக்குச் சொல்லுதி. இந்த வார்த்தையை மறுத்தானாயின், 'அவுணனே, உன் கிளையையெல்லாம் 
விரைவிலழித்து உன்னையும் வேற்படைக் கிரையாகக் கொடுக்கும்படி பகை கொண்டு நாமே நாளைக்குச் 
செல்வோம். இது மெய்மை' என்று கூறி மீள்வாய்'' என்று கட்டளையிட்டருளினார். 

    அப்பணியைச் சிரமேற்கொண்ட வீரவாகுதேவர் எம்பெருமானே, '"மிக்க வலியையுடைய அவுணர்கள் 
நெருங்கிய வீரமகேந்திரத்தில் மேலாகிய செல்வத்தோடிருக்கும் சூரபன்மனுக்கு முன்னே போய், தேவரீர் 
அருளிச்செய்தவற்றையெல்லாம் சொல்லி, அவன் கருத்தையறிந்து வருகின்றேன்" என்று வணங்கி அஞ்சலித்து 
விடை பெற்றுக் கொண்டு போயினார்.

    இந்திரன் வீரவாகுதேவருக்குப் பின்னே போய், "வீரரே, வீரமகேந்திரத்திற் சென்று, அங்கே சிறையிலிருக்கின்ற 
சயந்தனையுந் தேவர்களையும் அடைந்து, அவர்களைத் தேற்றி, பின்பு நீர் தூதுசென்ற செயலை முடிப்பீராக" என்றான். 
வீரவாகுதேவர் "நீ கூறியது நன்று. அவ்வாறு செய்வேம். நீ நிற்பாய்'' என்று கூறி, தம்மைப் பின்றொடர்ந்து வந்த இலக்கத்தெட்டு
வீரர்களையும் பார்த்து, "யான் கடலைத் தாண்டி வீரமகேந்திரத்திற் சென்று, சூரனுக்கு முன்னே போய், எம்பெருமான் 
கட்டளையிட்டருளிய திருவாக்குக்களைச் சொல்வேன். மறுத்தானாயின், அவனுடைய நகரம் முழுவதையும் அழித்தபின் 
மீளுவேன்'' என்றார். 

    தம்பியர்கள் வியந்து அவரை வணங்கினார்கள். வீரவாகுதேவர் அவர்களை மார்போடு இறுகத் தழுவி, 
பூதப்படைத் தலைவர்களோடும் அவர்களை அங்கே நிற்கும்படி கட்டளையிட்டு, விரைந்து கடற்கரையை அடைந்து, 
அங்குள்ள கந்தமாதனமென்னு மலையினுச்சியில் ஏறி நின்றார். நிற்றலும், அவருடைய பாரத்தைத் தாங்கலாற்றாது 
அம்மலை பிளந்து பூமியில் ஆழ்ந்தது. அதிலிருந்த பக்ஷிகளும் விலங்குகளும் ஓடின. முன்போரிலே புறங்கொடுத்தோடி 
அம்மலை முழையில் ஒளித்திருந்த தாரகனுடைய படைவீரர்கள் சிலர் அவரைக் கண்டு ஏங்கி இறந்தார். 

    இவ்வாறு இன்னும் பல நிகழ வீரவாகுதேவர் மகேந்திரபுரிக்குச் செல்ல எண்ணி, எம்பிரானாகிய 
சுப்பிரமணியக் கடவுளுடைய திருவுருவத்தைத் தியானித்து, பிரமாவும் விஷ்ணுவும் நோக்கவும், பிரம விட்டுணுக்கள் 
மற்றைத் தேவர்கள் முனிவர்கள் கருடர் சித்தர் கந்தருவர் சந்திரசூரியர் முதலாயினோருடைய பதங்கள் பலவேறு 
வகைப்பட்ட ஆரங்களாய் விளங்கவும், ஒரு பெரிய திருவுருவத்தைக் கொண்டு நின்று, பூமி முழுதையும் எண்டிசைகளையும் 
எழுகடல்களையும் பெரும்புறக் கடலையும் சக்கரவாள கிரியையும் விண்ணுலகத்தையும் மற்றை யுலகங்க ளெல்லாவற்றையும் 
கண்பரப்பி நோக்கி, திருக்கைலாச மலையையுந் தரிசித்துக் கைகூப்பி வணங்கி, அதன்பின் விஷ்ணு முதலாகிய 
தேவர்களுடைய நகரங்களையும், திக்குப்பாலகர்களுடைய நகரங்களையும் பூமியிலுள்ள சிறந்த நகரங்களையும் 
வீரமகேந்திர நகரத்தையும் நோக்கி, 'சூரனுடைய இந்தப் பெரிய நகரத்துக்கு மற்றெந்த நகரங்களும் நிகர்த்தலில்லை' 
என்று வியந்து கூறி, அந் நகரத்தைப் பார்க்கும்பொழுது மேன்மேல் வளராநின்ற கோபத்தையுடையராய், 
"இந்நகரத்தில் ஒருகையை நீட்டிப் பகைவர்கள் யாவரும் இறக்கும் படி பிசைவேனோ'' என்று எண்ணி, அங்கே 
சிறையிலிருக்கின்ற சயந்தன் முதலாகிய தேவர்கள் பொருட்டு இரங்கி, அவ்வெண்ணத்தை மீட்டார். 

    விஞ்சையரும் இயக்கரும் சித்தரும் கருடரும் சூரியசந்திரர்களும் மற்றைக் கிரகங்களும் நக்ஷத்திரங்களும் 
தேவகணத்தரும் அவருடைய பேருருவைப் பார்க்கலாற்றாதவராய் அஞ்சினர். வீரவாகுதேவர் அவர்களை நோக்கி, 
"வருந்தாதொழிமின்" என்று கையமைத்தார். வீரமகேந்திரத்தில் உள்ள அவுணர்களும் வேறிடங்களில் உள்ள 
அவுணர்களும் அவருடைய பெரிய திருவுருவத்தை நோக்கி, "கிரவுஞ்சமலை முன் அழிந்ததென்பது பொய்யே. 
இப்பேருரு அம்மலையின் மாயமே. இன்னும் ஆராயவேண்டியதுண்டு" என்றார்கள். வீரவாகுதேவர் கந்தமாதன 
மலையை ஊன்றி இந்நிலைமையோடு நிற்றலும், பிரமாவும் இந்திரனும் இலக்கத்தெண்மரும் பூதர்களும் பிறரும் 
கண்டு, ஆச்சரியத்தோடு ஆரவாரித்தார்கள். தேவர்கள் முனிவர்கள் முதலாயினோர் தங்கள் தங்கள் பதங்களில் 
நின்றபடியே தத்தமக்குச் சமீபமாய்ப் பொருந்திய அவருடைய ஒவ்வோருறுப்புக்களிலும் கற்பகப்பூக்களைத் தூவி 
அஞ்சலிசெய்து, "தலைவரே சூரனுடைய நகருக்குத் தூதுசென்று எங்கள் துன்பத்தை நீக்கியருளும்" என்று பிரார்த்தித்தார்கள்.

    அப்பொழுது, வீரவாகுதேவர் "எம்பிரானுடைய பன்னிரண்டு திருப்புயங்களும் வாழ்க; ஆறு திருமுகங்களும் 
வாழ்க; பேரருளைப் பொழியும் பன்னிரண்டு திருக்கண்களும் வாழ்க; வேற்படை வாழ்க; மற்றைப் படைக்கலங்கள் 
வாழ்க; தேவாதிதேவராகிய சுப்பிரமணியக்கடவுளுடைய திருவடி வாழ்க"(ஆவதோர் காலையெந்தை யாறிரு 
தடந்தோள் வாழ்க - மூவிரு வதனம் வாழ்க முழுதருள் விழிகள் வாழ்க - தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை 
பிறவும் வாழ்க - தேவர்கடேவன் சேயோன் றிருவடி வாழ்க வென்றான்.) என்று தோத்திரஞ்செய்து, கைகளைச் 
சிரசின்மேற் கூப்பி, ஆனந்தபாஷ்பம் ஆறுபோலப் பெருகவும், உரோமாஞ்சம் திருமேனியெங்கும் மூடவும்,
நாத்தழுதழுப்பவும், என்பு நெக்குருகவும், கண்கள் செருகவும், ஐம்புலனு மனமும் ஒருவழிப்பட அம்முருகக் 
கடவுளுடைய பேரருள் வெள்ளத்தில் மூழ்கிக், குதூகலமடைந்தார். 

    அடைதலும், உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மகிழ்ந்தன. இவ்வாறு அன்பு நிகழ,சுப்பிரமணியக் 
கடவுளுடைய பேரருளைப் பெற்றுக் கந்தமாதனமலையில் நின்ற வீரவாகு தேவர் "மிகவும் பெரிய 
இவ்வுருவத்தோடு நாம் செல்லில் உயிர்கள் அழியும் ஆதலால் இது அழகன்று' என்றெண்ணி, அங்கே செல்லுதற்கு 
வேண்டுந் திருவுருவத்தைப் பொருந்தி, சிரசிலணிந்த இரத்தினகிரீடம் அண்ட கோளகையை உரோஞ்ச 
ஆகாயத்திற் கிளர்ந்தெழுந்து, மகேந்திரபுரியை நோக்கிப் போயினார்.

            திருச்சிற்றம்பலம்.


            கடல்பாய் படலம்.

    வீரவாகுதேவர், தாம் ஏறி நின்றமையாற் பூமியின் கீழ்ச்சென்று ஆழ்ந்த கந்தமாதனத்தை நோக்கி, 
"நீ மீண்டு எழுதி" என்று கூறினார். அது விரைவிற் கிளர்ந்து தோன்றிக் கடற்கரையில் முன்போல நின்றது. 
அவர் கந்தமாதனத்தினின்றும் வீரமகேந்திரத்தை நோக்கி எழலும், விசைக்காற்றினாற் பூமியிலுள்ள மலைகள் 
யாவும் பக்கத்திற் செல்லுதல், பூதத்தலைவரும் இலக்கத்தெண்மரும் முதலிய யாவரும் அவருடைய பக்கத்தில் 
அணி வகுத்துச் செல்லுதல் போன்றது. அவ்விசைக்காற்றினால் அண்டங்கள் திரிந்தன; உயிர்கள் யாவும் சுழன்றன; 
சூற்கொண்ட மேகங்கள் சுழன்றன; ஊழிக்காற்றும் ஆற்றாதோடியது. அவ்விசைக்காற்றுச் சூரியனையும் 
அக்கினியையும் குளிரச்செய்து வடவாமுகாக்கினியையும் அவித்தது; 

    அது தள்ளுதலாற் கடல் சுழித்து உள்வாங்கி மகேந்திரத்திற் செல்லுதல், சூரனுடைய சேனைகள் 
வீரவாகுதேவர் மேலெதிர்த்துச் சென்று அவரோடு போர் செய்தற்கு வலிமையின்றித் தோற்றுத் தம்மூரையடைதல் 
போன்றது; அக்காற்றுப் பூமியைக் கிழித்துப் பாதலவுலகத்தைக் காட்டிற்று. அக் காற்றோடு பெருமூச்சினுண்டாகிய 
அக்கினி கலந்து வீரவாகுதேவருடைய கொடிப்படைபோல மகேந்திரபுரியைச் சுற்றிப் புகைசூழக் கொளுத்தியது. 
அவ்விசைக்காற்று மகேந்திரபுரியிலுள்ள மதில்களையும் செய்குன்றுகளையும் சோலைகளையும் பூமியிலலைத்துத் 
தள்ளியது. அவருடைய மூச்சிலுண்டாகும் அக்கினி முன்பு ஓடிச்சென்று மகேந்திரபுரியைக் கொளுத்த, விசைக் 
காற்றினாற் றள்ளுண்ட சமுத்திரஜலம் சென்று முறைமுறை அந்நெருப்பை அவித்தது. விசைக்காற்றும், 
மூச்சுக்காற்றும், கண்ணிலும் சுவாசத்திலுமிருந்து வரும் நெருப்பும்,எதிர்செல்லாதோடுகின்ற கடலும்,
மகேந்திரத்திற் சென்று அப்புத்தேயுவாயுவாகிய மூன்று பூதங்களும் பொருதல் போலப் பூசல் விளைத்தன. 

    விசைக்காற்றினாற் சமுத்திரம் புறந்தர,அதிலுள்ள சின்னை,சுறா, பனைமீன், சூறை, திருக்கை, 
யானைமீன், திமிங்கிலம் முதலிய மீன்கள் ஓடிப்பாய்ந்தன. அக்காற்றினாற் கடல் எதிர்ந்தெழாது சாய்ந்து 
மீன்களைத் திரைக்கரங்களிற் றாங்கி மகேந்திரத்திற் செலுத்துதல், இறப்பவர்கள் விரும்பிய உணவுகளைச் 
சுற்றத்தார் மிகக் கொடுத்தல் போன்றது. விசைக்காற்றினால் நக்ஷத்திரங்கள் கடலிலுதிர, மறிந்து செல்லும் 
அக்கடலிலுள்ள மீன்கள் ஆகாயத்திற் சென்றன. அவ்வீரவாகு தேவருடைய திருக்கரத்திலிட்ட 
இரத்தின கடகத்தினொளி சென்று சக்கரவாளகிரியைச் சூழ்ந்த இருட்டை ஓட்டி, பொன்மயமான 
அண்டச்சுவரின் ஒளியோடு மாறுபட்டது.

    இவ்வாறெல்லாம் நிகழ, சிவபெருமான் முப்புரங்களின்மீது விடுத்த சிரிப்பாகிய அக்கினியைப் 
போலவும், அவருடைய கண்ணினக்கினியைப் போலவும், அவர் விடுத்த விஷ்ணுவாகிய அம்பைப்போலவும், 
சுப்பிரமணியக்கடவுள் சூரபன்மனைக் கிளையோடழிக்க விடுத்த வேற்படையைப் போலவும், விஷ்ணு வரும்படி 
நினைக்கப் பாற்கடலில் வந்த மந்தர மலையைப் போலவும், சிவபெருமானாலே திருக்கண்டத்தில் அடக்கி 
வைக்கப்பட்டு  அவரை வேண்டி அவர் விடுக்கக் கடலில்வரும் ஆலாகலவிஷத்தைப் போலவும், 
வீரவாகுதேவர் சமுத்திரத்தின்மீது பாய்ந்து, வீரமகேந்திரத்தின் வடபக்கத்திலுள்ளதும் யாளிமுகன் என்னும் 
அசுரனாற் காவல்செய்யப் படுவதும் ஆகிய இலங்கை நகரத்திற்குச் சமீபத்திற் சென்றார்.

            திருச்சிற்றம்பலம்.

            வீரசிங்கன்வதைப்படலம்.

    வீரவாகுதேவர் செல்லும்பொழுது, அந்நகரைக் காக்கின்ற யாளி முகனென்பவன் சேனைகளோடு 
சூரபன்மனைக் காணும்படி போக அதிவீரன் என்னும் அவன் குமாரன் ஆயிரம் வெள்ளஞ் சேனைகளோடு 
அவ்விலங்கையைக் காத்துக் கொண்டிருந்தான். அவன் கோயிலினுள்ளிருப்ப, அவனுடைய சேனைத் தலைவனாகிய 
வீரசிங்கன் என்பவன் அந்நகரின் வடக்கு வாயிலைக் காத்துக் கொண்டிருந்தான். அவன் வீரவாகுதேவர் விரைந்து 
செல்லுதலைக்கண்டு, "சிறிதும் நம்முடைய காவலை எண்ணாது தனித்தவனாய் வருவான், இவன்யார்?" 
என்று வடவாமுகாக்கினிபோலக் கோபித்து, 'இவனுயிரை விரைந்து உண்பேன்" என்றெண்ணி, மனோகதியும்
பிற்பட எழுந்து ஐந்நூறு வெள்ளஞ் சேனைகளோடும் வீரவாகுதேவருக்கு முன்னேபோய், அவரைநோக்கி, 
"இன்றளவும் எமது காவலுள் வந்தவரில்லை, நீயார்? உன் உயிர்க்கு அன்பில்லாய், ஆதலால் தனித்து வந்தாய் 
உன்னைக் கொல்லுமுன் நீ வந்த செய்தியைச் சொல்வாய்" என்றான். 

    வீரவாகுதேவர், அதனைக்கேட்டு, "யான் இலங்கையைத் தாண்டிச் சூரபன்மன் வசிக்கும் மகேந்திரபுரிக்குப் 
போய் மீளும்படி நினைத்து வந்தேன். இது என்செயல். நீ வலியவனாயின், இனி வேண்டியதொன்றைச்செய், காண்பேன்" 
என்றார். வீரசிங்கன் அவர் சொல்லியதைக் கேட்டு, "இவன் சிறிதும் நம் அவுணருடைய ஆணையை எண்ணுகின்றிலன்; 
வலியவன் போலும்; அதனை யறிவோம்; மீண்டுபோதல் நன்றன்று" என்று நினைத்து, தன் படைவீரரை நோக்கி, 
'இவனுயிரைக் கவருங்கள்' என்று சொல்ல, அவர்கள் ஒரு சிங்கத்தை வேட்டைக்காட்டில் வேடர்கள் சுற்றிப்பொருவது 
போல வீரவாகுதேவரை வளைந்து, வேல் தண்டு இருப்புலக்கை முதலாகிய ஆயுத வகைகளினாற் போர் செய்தார்கள். 
அவர் தளர்ச்சியடையாது, வாட் படையை உறையினின்றுங் கழற்றி அவ்வசுரர்களைக் கொன்று திரிந்தார். 

    இரத்தவெள்ளத்தினாற் சமுத்திரஜலம் மறைந்தது. கச ரத துரக பதாதிகள் அழிந்தன. நூறுவெள்ளஞ் சேனைகள் 
அழியும்படி வீரவாகுதேவர் இவ்வாறு கொல்ல, மற்றையவுணர்கள் யாவரும் மனநொந்திரங்கி, தம்முயிரைப் 
பாதுகாத்துப் புறங்கொடுத்தோடினர். அதனைக் கண்ட வீரசிங்கன் சினங்கொண்டு, வீரவாகுதேவர்மீது ஒரு 
சூலப்படையை விட, அவர் அதனை வாட்படையினால் இருதுணியாக்கி ஆர்ப்பரித்தார். வீரசிங்கன் அவருடைய 
வலிமையைப் பார்த்து, தன் கையிலுள்ள படைக்கலங்களுட் சிறந்த ஓர் குலிசத்தை வீசினான். அவர் அதனையும் 
வாளினால்வெட்டி, மீண்டு ஆயுதம் எடுத்தற்குமுன் அவனுக்கெதிரேசென்று, வாட்படையை வீசிக் கைகளை வெட்டி, 
முடியையும் அறுத்துக் கடலில் வீழ்த்தி, பின்பு எதிர்ப்பாரில்லாமையினால் வாளை உறையுட் புகுத்தி, முதலில் 
ஒருவெற்றியைக் கொண்டு அப்பாற் சென்று, இலங்கையிலுள்ள மூன்று சிகரங்களுள் நடுச் சிகரத்திற் பாய்ந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            இலங்கைவீழ்படலம்.

    வீரவாகுதேவர் மகேந்திரபுரியின் வடக்கிலுள்ள இலங்கையின் மீது பாய, அதனைக் காவல்செய்து கொண்டிருந்த 
அதிவீரனென்பவனும் மற்றை அசுரர்களும் இடியேறுண்ட பாம்புபோலக் கலங்கி ஏங்கி நடுங்கி, வீழ்ந்தார்கள். 
வீரவாகுதேவர் குதித்தமையினால் இலங்கை நிலைகுலைந்து அவுணர்களோடு கடலில் ஆழ்ந்தது. அவர் 
அதனைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். இலங்கை கடலுண் மூழ்க, கூட்டமாய் அதிலிருந்த அவுணர்கள் யாவரும் 
கலங்கிப் புலம்பி மருண்டு வெருண்டு, மிகவுந் துன்பமுற்றார். அவ்வசுரர்களை சுறா திமிங்கிலம் திமிங்கிலகிலம் 
முதலிய எண்ணில்லாத மீன்கள் சூழ்ந்தன.

    அவற்றுட் சில அவர்களுடைய கைகளை யிழுப்பனவும், சில கால்களை யிழுப்பனவும், சில தலைகளை 
யிழுப்பனவும், சில தோள்களை யிழுப்பனவும், சில மார்புகளை யிழுப்பனவுமாயின. சில அசுரர்கள் தந்தையையும் 
தாயையும் மனைவியையும் கூட்டத்தோடு கையிற்பற்றிக் கூவிக்கொண்டெழுகின்றார். வேறு சிலர் இளைப்படைந்து 
செய்வதின்னதென்றறியாது, ஆயுதங்களையும் கைவிட்டுத் தம்முயிரைக்கொண்டு தாம் மாத்திரம் எழுந்தார். 

    மீன்கள் தம்மை உண்ணும்படி வந்து அடித்தலும், வாள் வேல் முதலாகிய படைக் கலங்களைக் கொண்டு 
அவைகளோடு போர்செய்து நின்றார்கள் சில அவுணர்கள். சில அசுரப்பெண்கள் மீன்கள் ஒருகையைப் பிடித்துக்கொள்ள, 
மற்றொரு கையை அவுணர்கள் பிடித்திழுப்ப,வருத்தமுற்றார்கள். திருக்கை சுறா முதலாகிய மீன்கள் கடலில் ஆழுகின்ற 
தம்மைக்கண்டு தாக்க, அவைகளை வாட்படையினாற் றுணித்தெழுந்தார்கள் சில அவுணர்கள். சமுத்திரத்தில் 
எழுகின்ற அவுணர்கள் சிலர், வீரவாகுதேவருடைய செயலைக்கண்டு, "நின்றால் நம்மையும் வருத்துவான், நாம் 
விரைந்து ஓடிப்போவோம்" என்று விரைந்து அயலில் மறைந்தோடினார்கள். இவ்வாறாக இன்னும் பல நிகழ 
இலங்கை கடலில் ஆழ்ந்தது.

            திருச்சிற்றம்பலம்.


            அதிவீரன்வதைப்படலம்.

    இவ்வாறாக இலங்கை சமுத்திரத்திலாழ, அதனைக் காவல் செய்துகொண்டு கோயிலிலிருந்த அதிவீரன்
 அறிந்து, மிகத்துன்பமும் நாணமும் அடைந்து, கோபித்து, அக்கினி சிந்தச் சிரித்து, இப்படிச் சிந்திப்பான்: 
"சூரபன்மனோ அவன் தம்பியர்களோ அவர்களுடைய புத்திரர்களோ இதனைச் செய்தார்? வேறியார் இதனைச் 
செய்யவல்லவர்? அவர்கள் இப்படிச் செய்தற்கோர் ஏதுவுமில்லை. அவர் தம்மூர்க்குத் தாமே தீங்கைச் செய்யார். 
ஆதலால் இப்படி எண்ணுதல் புத்தியன்று. மாயையும் இதனைச் செய்யாள். மும்மூர்த்திகளும் இச்செயலை 
நினைத்தலுஞ் செய்யார். பின்னர் எந்தத்தேவர்கள் இதனைச் செய்ய வல்லார்? அவர்கள் எல்லாரும் எங்கள் 
சிறையிலுள்ளார். இந்திரனோவெனில், அவன் தன்னுயிரைக் காத்து ஒளித்தான். 

    மற்றைத் திக்குப்பாலகர்களும் பிரமவிஷ்ணுக்களும் விஞ்சையர் சித்தர் முதலாயினோரும் 
நம்மரசனுடைய பணியின் வழி ஒழுகுவாராயுள்ளார். அவர்கள் இத்தீங்கைச் செய்ய எண்ணுவார்களோ? இங்குள்ள 
அவுணர்கள் சரீரவலியும் மாயையும் மிகவுடையரேயாயினும், சூரபன்மனுடைய படைகளுக்கு அஞ்சி இத்தன்மையைச் 
செய்யார் போலும். அவர் செய்யாதொழியில், இதனைச் செய்தவர் யாரோ? பிதா விட்டு நீங்கிய காலத்தில் 
புதல்வனாகிய யான் அசுரர்களோடும் இந்நகரைக் காத்தது நன்று! பிரமதேவரை நோக்கி அருந்தவஞ்செய்து 
மாயைகளையும் படைக்கலங்களையும் வலிமையையும் அவர் தரப் பெற்ற என்செயல் நன்று. !

    'பிதா இல்லாமல் நீங்கியிருக்கும் பொழுது புத்திரன் நகரைக் காவல்செய்து அதனோடு கடலிலாழ்ந்தான்' 
என்றால், நம்முடைய சுற்றத்தார்கள் என்னைச் சிரிப்பார்களே. சூரபன்மன் இதனை அறிந்தால் என்னைக் கொல்வான். 
என் தகப்பனும் அப்படியே. பிறரெல்லாரும் இகழ்வர். இது இந்நகரத்தின் பாடானால் என்றன்மை நன்றாயிருந்தது!'' 
என்று எண்ணி, அதிவீரன் வருந்தி, கடலிலே ஆழ்கின்றவன் "யான் கடலின் மேலே போய் யார் இதனைச் செய்தார் 
என்று அறிந்து, அவரை விரைந்து கொன்று இரத்தத்தைக் குடிப்பேன்." என்று மீண்டு எண்ணி, ஆயுதங்கள் 
எல்லாவற்றையும் எடுத்து, தன்சேனைகளுள் அங்கு நின்றவர்களை அழைத்துக்கொண்டு ஆலாகலவிஷம் 
கடலினின்றும் எழுந்தாற்போலச் சமுத்திரத்தின்மீது வந்தான். 

    வந்து வீரவாகு தேவருடைய நிலையைக்கண்டு, இதழைக்கடித்துச் சிரித்து, "இவன் ஓர் ஆண்டகைமை 
உடையான். நம்மூரைக் கடலில் அமிழ்ந்தும்படி செய்தும் இங்கே நின்றான். எட்டுத்திக்கிலுள்ளாராலும் புகழப்படுகின்ற 
அசுரர்களுடைய ஆணை நன்று" என்று கூறி, ''இவனைக் கொன்று உயிரைக் குடிப்பேன்" என்று நினைத்து, அவருக்கு 
எதிரே போயினான். கடலில் ஆழ்ந்த அவுணர்களுடைய செயலைப் பார்த்துநின்ற வீரவாகுதேவர் அவன் வருதலைக் கண்டார்.

    அப்பொழுது அதிவீரனுக்குப் பக்கத்திலே வந்த அசுரர்கள் வீரவாகு தேவரைச் சூழ்ந்து போர்செய்ய, அவர் 
வாளை உறையினின்றுங் கழித்து அவர்களைக் கொன்றார். சிரங்களும் கரங்களும் புயங்களும் கால்களும் முதலாகிய 
உறுப்புக்கள் வெட்டுண்டு அவ்வசுரர்கள் யாவரும் இறந்தார்கள். அவர்களுடைய தலைகள் இரத்தவெள்ளத்தில் மிதந்தன. 
பிணத் தொகை மலைபோல் வளர்ந்தது. தன் சேனைகள் அழிந்து கடலினுள் வீழ, அதிவீரன் கோபித்து, அதனை நோக்கி, 
"என்பக்கத்திலுள்ளவர்களைக் கொன்றாய், விரைவில் உன்னைத் தின்பேன்,காணுதி" என்று போரை முயன்றான். 
அவன் வருகின்ற தோற்றத்தை வீரவாகுதேவர் கண்டு, "விரைவில் வருக'' என்று அழைப்ப, அவன் எதிர்த்து, "இவனை 
இப்பொழுதே கொல்லுக" என்று ஒரு வேற்படையை எறிந்தான். 

    அது மார்பை அணுகுமுன் வீரவாகுதேவர் வாட்படையினாலே இரண்டு துண்டாம்படி வெட்டினார்.         
வேற்படை வெட்டுண்ணுதலும், அதிவீரன் விரைந்து ஓர் தண்டாயுதத்தை எடுத்து "உன்னுயிரை இது கவரும்" 
என்று வீரவாகு தேவருடைய மார்பின்மீது எறிய, அவர் அதனை வாளினால் வெட்டாமல் மார்பில் ஏற்றார். 
அது அவருடைய மார்பிற்பட்டுப் பொடியாயது. அதிவீரன் கண்டு வருந்தி, மிகுந்த ஆச்சரியத்தனாய், வேறோர் 
முத்தலைச் சூலத்தை எடுத்து வீரவாகு தேவருடைய மார்பிற் செலுத்தினான். அவர் அதனைக் கையாற்பிடித்து 
ஒடித்தார். 

    அதிவீரன் கோபங்கொண்டு, "இவனைக் கொல்லுதல் அரிது'' என்று எண்ணி, வாட்படையை எடுத்துச் 
சுழற்றி இடசாரி வலசாரியாகத் திரிந்து, "இந்த வாட்படை பிரமதேவர் தந்தது. எவர்க்கும் வெல்லமுடியாதது .
அதைப் பிடித்தேன் ; நீ சாவாய். இது நிச்சயம். வருக'' என்று பெருமிதமான வார்த்தைகளைச் சொல்லி 
அவருக்கு முன்னே வந்தான். வீரவாகுதேவர் 'உன்னுடைய வலிமையும் ஆண்மையும் நன்று நன்று. நம்மை  நீ
வென்றாயெனில் இனி உன்னை யாவரும் வியப்பர். நீ தாமதித்து நின்று சிலவற்றைப் பேசுவது என்னை? 
விரைந்து எதிர்க்குதி; வெற்றியையுடைய வீரருந் தம்மைப் புகழ்வாரோ' என்றார். 

    என்னலும், அதிவீரன் எதிர்த்தான்; வீரவாகுதேவரும் எதிர்த்தார். இவரிருவரும் சிரம் கழுத்து 
செவி கதுப்பு கால் கை புயம் மார்பு முதலாகிய உறுப்புக்களை நாடி, அவைகளில் வாட்படைகளை வீசியும், 
அவற்றை மாற்றியும், ஒருவரையொருவர் நிகர்த்தவராய் இடசாரி வலசாரியாய்ச் சூழ்ந்தார்கள். இப்படிப் 
போர்செய்யும் பொழுதில், வீரவாகுதேவர் "வாட்போர் செய்யும் இவனை யான் வலாற்காரஞ் செய்தலியல்போ? 
முறையால் வெல்வதே அறநெறி'' என்று உட்கொண்டு, சமயம் பார்த்து இடையிலே புகுந்து, அதிவீரனுடைய 
கால்களையும் கைகளையும் முடியையும் மார்பையும் ஒரே முறையில் வாட்படையினால் வெட்டி வீழ்த்தினார். 
யமன்வந்து அவனுயிரைக் கவர்ந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            மகேந்திரஞ்செல்படலம்.

    வீரவாகுதேவர் வழியில்நின்று அவ்வதிவீரனைக் கொன்று, வாட்படையை உறையுட் செலுத்தி, 
போரையொழித்து, வீரமகேந்திரத்துக்குப் போவதை எண்ணி, இலங்கையின் எல்லையை நீங்கி எழுந்து ஆகாயவழிக்
கொண்டு சென்றார். சமுத்திரத்தில் ஆழ்ந்த இலங்கை விரைவில் மீண்டெழுந்தது. அவர் பின்னும் ஆயிரம் யோசனை 
ஆகாயத்திற்சென்று, மகேந்திர புரியின் முன்போய், அதின் மதிலையும் கோபுரங்களையும் முதலில் நுனித்துப்பார்த்தார். 
அம்மகேந்திரபுரியின் வடதிசை வாயிலில், கோபுரத் திண்ணையில், கோரன் அதிகோரன் என்னுங் கொடிய வீரர் 
இருவர் ஆயிரம் வெள்ளம் யானைகளும் ஆயிரம் வெள்ளந் தேர்களும் இரண்டாயிரம்வெள்ளங் குதிரைகளும் 
இரண்டாயிரம்வெள்ளம் காலாட்களும் ஆகிய சதுரங்க சேனா சமுத்திரத்தோடு அவ்வாயிலைக் காத்துக் 
கொண்டிருந்தார்கள். 

    மகேந்திர புரியினுள்ளே போகவேண்டுமென்னுங் கருத்தினையுடைய வீரவாகுதேவர் இந்தச் சேனா 
சமுத்திரத்தையும் மிகுந்த காவலையுங் கண்டு ஆச்சரியமுற்று, இவ்வாறு சொல்வார்: "இவ்வடதிசைவாயிலிற் 
செல்லில் இச்சேனைகள் சூழ்ந்து போர்செய்யும். யானும் மூண்டு போரைச் செய்யினும் இவைகளைக் கொல்ல 
இப்பகல் முழுதுங் கழியும். இச்சேனைகள் இறந்தாலும் பின்னும் ஒழியுமோ, இந்நகரிலிருந்து நால்வகைச் 
சேனாவெள்ளங்களும் பின்னும் வரும். வந்த வந்த அசுரப்படைகளோடு எம்பிரானாகிய முருகக்கடவுளுடைய 
திருவருளினால் யானொருவனும் போர்செய்து அழித்து நிற்பேனாயினும், இந்நகரத்திலுள்ள சேனைகளெல்லாம் 
அழிய அநேகநாட் செல்லும், அவுணர்கள் எளியரா? பலநாட் செல்லினுஞ் செல்லுக, இந்நகரிலுள்ள அவுணக்கடல்களை 
இயன்றபடி யான் கொல்லினும்,சூரன் பின்னும் தன் புதல்வர்களையும் துணையாயுள்ள பிறரையும் போருக்கு அனுப்புவான். 

    அவன் அனுப்பிய புத்திரர் மந்திரிமார் ஒழிந்தோர் ஆகிய எல்லாரையும் என்னால் வெல்ல முடியாது; 
சுப்பிரமணியப் பெருமானுடைய திருவருள் வலியைத் துணையாகக்கொண்டு பற்பல நாள்காறும் போர்செய்து 
அவர்களைக் கொல்வேனாயினும்,எவரானும் வெல்லுதற்கரிய சூரபன்மன் பின்பு வந்தெதிர்ப்பான்.
அவனோடு ஒழியாத வெவ்விய போரை யான் பற்பலநாட் செய்து நிற்பினும், முன்னாளிற் செய்த தவத்திற்காகத் 
தேவாதி தேவராகிய சிவபெருமான் கொடுத்த வரத்தினால் அவன் இறப்பதில்லை; அவனைப் பிரம விஷ்ணுக்களுக்கும் 
வெல்லமுடியாது; அவர்கள் இன்னும் அவனுடைய ஆணைக்குப் பயந்திருந்தார். பின்னை யார் அவனை வெல்வார்? 

    யான் பலநாள் எதிர்த்து நின்று யுத்தஞ்செய்யினும், அவன் சிறிதும் தோற்பதில்லை. அங்ஙனமாயின், 
அவனோடு எதிர்த்து யுத்தஞ்செய்த யான் எதிர்த்து மீளுதல் முறையன்று. ஆதலால் யான் அவனோடு போர்செய்து 
நிற்கவேண்டும். ஆயினும் துன்பத்தையடைகின்ற தேவர்களுடைய சிறை நீங்குமோ! இவ்வாறு பற்பல நாள் 
அவனோடு போர்செய்து இன்னும் வெற்றி அடைந்திலேன்' என்று இடையிலே போரை விடுத்துத் தூதுவந்த செய்தியைச் 
சொல்லுதல் தகுமோ? ஆதலால் எனக்கு என்றும் ஒழியாமற் போர் செய்யவேண்டும். 

    ஞானநாயகரும் பரம்பொருணாயகரும் ஒப்பில்லாத வேதநாயகரும் சிவபெருமான் தந்தருளிய நாயகரும் 
தேவர்களுக்கு ஆதிநாயகரும் அறுமுகநாயகரும் நிருமலமாகிய சோதிநாயகரும் ஆகிய எம்பெருமான் அன்றி 
வேறி யார் சூரனைச் சங்கரிப்பார். யான் இங்கே சூரனோடு போர்செய்து நிற்பேனாயின், எம்பெருமானாகிய 
அறுமுகக்கடவுள் பின்னொருநாள் இங்கு வந்து சூரபன்மனை வேற்படையினாற் சங்கரித்துத் தேவர்களைச் 
சிறையினின்று மீட்கவேண்டும். ஆதலால் யான் இங்கே போர்செய்தல் முறையன்று. அஃதன்றி அது 
எம்பெருமான் றிருவருளுமன்று. இத்தன்மையனவாகிய, போர் தூதர் செய்யத்தகுவனவா? ஆதலின், போர் நிகழாத 
திறத்தினாற் சூரனிடத்துப் போதலே முறைமை" என்று இவ்வாறு கருதினார், பேரறிஞராகிய வீரவாகுதேவர். 

    அவர் பின் 'இவ்வடக்குவாயிலில் அளவில்லாதனவும் வலியனவுமாகிய சேனைகள் நெருங்கி நிற்றலின், 
இவ்வழியால் உள்ளே செல்லுதல் அரிது. ஆதலாற் கீழ்த்திசைவாயிலை அடைவேன்'' என்று எண்ணி, அவ்வடக்கு 
வாயிலாற் செல்லாது கிழக்கு வாய்தலிற் சென்றார். மகிடாக்ஷன் வீரபானு என்னும் இரண்டு அவுணத்தலைவர்கள் 
வாட்படையை யேந்திய கையினராய் அவ்வாயிலைக் காத்துநின்றார். அவர்களோடு வட திசைவாயிலிற்போல 
அத்துணை நால்வகைச்சேனைகளும் அவ்வாயிலைக் காத்துநின்றன. இத்தன்மையாகிய கிழக்கு வாயிலிற் 
காவலையும் அங்குள்ள சேனாவெள்ளத்தையும் வீரவாகுதேவர் கண்டு, மிகுந்த ஆச்சரியமுடையராய், 
"அவ்வடக்குவாயிலிற்போல அளவில்லாத சேனைகளை இங்குங் கண்டோம். இங்கே அவைகள் இவ்வாயிலை 
ஆகாயத்திலும் பூமியிலும் நெருங்கிக் காக்கும். ஆதலால் இங்குஞ் செல்லுதல் அரிது. இனித் தெற்குவாயிலாற் 
போய்ப் பார்ப்பேன்" என்று கருதி, அவ்விடத்தினின்று நீங்கிப் போயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            கயமுகன்வதைப்படலம்.

    வீரவாகுதேவர் மகேந்திரபுரியின் தெற்குவாயிலை நோக்கிச் செல்லும் பொழுது, கயமுகன் என்பவன் 
ஆகாயத்திலிருந்து அவ்வாயிலைக் காப்பான். அவன் ஆயிரம் யானை முகங்களையும் அவைகளிற் காலபாசங்கள் 
போலத் தொங்குகின்ற ஆயிரந் துதிக்கைகளையும் இரண்டாயிரம் கைகளையும் இரண்டாயிரம் புயங்களையும் 
உடையான்; கோபம் பொருந்திய கொடிய மனத்தையுடையான் ; யமனுக்கும் ஒரு யமன் போன்றவன்; ஏமபுரத்துக் கரசன்; 
தன்னோடெதிர்த்துப் போர்செய்யப் பகைவரின்றி மனம் மெலிவான்; போரையே மேற்கொண்ட மனத்தையுடையான்; 

    சூற்கொண்ட மேகங்களைக் கடித்து நீரையுண்டு மீண்டு அவற்றை எறிபவன்; மிகப்பெரிய பாவங்களைச் 
செய்யும் இயல்பினன்; யானை கரடி புலி சிங்கம் யாளி என்னும் இவைகளில் ஐயாயிரத்தைப் பிடித்து உண்டு இரத்தம் 
சிந்தும் வாயினன். இவ்வியல்பையுடைய கயமுகன் இறக்குங்காலம் சமீபித்தவனாய், அத்திசையில் வரும் 
வீரவாகுதேவரைத் தூரத்திலே கண்டு, மிகவும் கோபித்து, இவ்வாறு சொல்லிக் கொண்டு வருவான்: 'நம்மவர் 
பலருடைய காவலை விலகி நீ இங்கு வந்தாய்; மாயங்களைக் கற்றாய் போலும்; வாயுவும் எங்கள் ஆணையைக் 
கடந்து எக்காலத்திலாயினும் வரவல்லதோ? 

    வறியர்களாய் மயங்குகின்ற எளிய தேவர்கள் இருக்கும் சிறப்பில்லாத ஊர் என்று எண்ணி இந்நகரில் 
வந்தாய்; நம்முடைய ஆணையின் வலியை அறியாயோ? யான் மிகுந்த சினம் மூண்டு வந்தேன், நீ விரைந்து 
மாண்டே போனாய்; இனித் திரும்பிப் போவதே இல்லை; உனக்குச் சாகவிதித்த இடம் இவ்விடமே; சூரபன்மன் 
ஆளுகின்ற பழமையாகிய பெரிய இந்நகரை அடைந்து நின்றாய்; சீறுகின்ற சிங்கம் இருக்கும் முழஞ்சில் ஒரு 
எளிய மான் பிணை வலிமையோடு அதனை ஆராய்தற்கு வருமோ ? சமுத்திரத்தைத் தாண்டி, இடையிலிருக்கின்ற 
இலங்கைமலையை நீங்கி, இம்மகேந்திர நகரைக் காண நினைத்து விரைந்து வருவாய்; தேவர் குழுவில் நீயார்? 

    நாகரிகமில்லாத தேவர்களுள்ளும் நீ புதியவன்போலும்; ஆதலாற்றான் ஒரு வாட்படையோடு மிகத் துணிந்து 
நீ ஒருத்தன் வந்தாய். மாயையைக் கற்றவனே, நீ இங்கே வருதற்குக் காரணம் என்னை? பரமசிவனோ ? விஷ்ணுவோ? 
பிரமாவோ? இந்திரனோ? இங்கே உன்னை அனுப்பினவர் யார்? இந்நகரத்தைச் சுற்றா நின்றாய்; ஒற்றுவனாய் 
வந்தாய் போலும். உன்னை அப்படி அனுப்பினவர் யார்? வந்த காரணம் என்னை? நீ இறந்தாய்; எவ்வாறு உய்வாய்? 
இங்கே சிறைப்பட்டு உழலுகின்ற தேவர்களுடைய செயலை இந்திரனுடைய ஆளாய் வந்து அறிந்து மீண்டு போக 
நினைத்து வந்தாய் போலும்; இதுவுங் குறிப்பா? 

    பெரு நெருப்புச் சுவாலிக்குமிடத்தில் ஒரு பூளைப்பஞ்சை வாயு செலுத்திவிட்டாற் போல, கொல்லும் 
ஊழானது நொய்மையையுடையவனாகிய உன்னை இவ்விடத்திற் கொண்டு வந்து விட்டது; நீ முன்னே 
நம்முடைய ஏவல்கள் எல்லாவற்றையும் செய்து துன்பத்தைக் கொண்டு மறைந்த இந்திரன் பக்ஷத்தைச் 
சார்ந்தவனல்லன்: இன்னும் அஞ்சுகின்றாயில்லை. என்னையும் மதியாய். கொல்லும் யமனைப் போலச் 
செல்லாநிற்கின்ற திண்மையுடையேனாகிய எனக்கு முன்னே நில்; எங்கடா போவாய்' என்று கயமுகன் 
உரப்பிச் சொல்லிக் கொண்டு போயினான்.

    வீரவாகுதேவர் 'இவன் சொன்ன வார்த்தைகள் நன்று” என்று சிரித்து நோக்கி, கயமுகனுக்கெதிரே 
போய், "விரைந்து இறப்பவனாய் என்னிடத்து வந்தாய் போலும் வா வா" என்றார். அப்பொழுது கயமுகன் ஓர் 
மலையை ஓர் கையினாற் பறித்து, 'உன் உடலையும் உயிரையும் இது உண்ணும்" என்று வீரவாகுதேவருக்கு முன் 
ஆர்த்து வீசினான். அம்மலை அவருடைய புயத்தின்மீது வந்து பட்டு, புழுதியுருண்டை உடைந்தாற் போலத் 
துகளாய் உடைந்து போயது. கயமுகன் வீரவாகு தேவருடைய வலிமையைக் கண்டு பெருங்கோபமுற்று, 
ஆயிரங் குன்றுகளைப் பறித்து அவர்மீது மழைபோல ஆர்த்து வீசினான். அம்மலைகள் புலிமுதலாகிய பல 
மிருகங்கள் ஆரவாரத்தோடு விம்மி விழவும், தேன் சொரியவும், ஊறுகின்ற ஜலம் கடல்போல வழியவும், 
வீரவாகு தேவருக்கு முன்னரே பம்பரம் போலச் சுழன்று கொண்டு வந்தன. 

    அவர் அவற்றைக் கண்டு, சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடிகளைத் தியானஞ் செய்து கொண்டு 
நின்றார். அம் மலைகள் அக்கடவுளுடைய திருவருளினால் இறைப் பொழுதிலே கற்றூணிற் பட்ட மட்பாத்திரங்கள் 
போல உடைந்து சிந்தி அழிந்தனவன்றி, அவரிடத்து வேறொன்றையுஞ் செய்தில. கயமுகன் தான் வீரவாகுதேவர்மேல்
விடுத்த மலைகள் யாவும் அவருக்கு ஓர் இடையூற்றையுஞ் செய்யாது அழிந்தமையைக் கண்டு, ஆச்சரியமுடையனாய்க் 
கோபித்து,ஓர் தண்டாயுதத்தை வீரவாகுதேவர்மேற் செலுத்தினான். அவர் வாளை உறையினின்றுங் கழற்றி, 
அது வீழும்படி துண்டாக்கி, கயமுகனுக்கெதிரே சென்றார். 

    அவன் வீரவாகுதேவருடைய வலியைக் கண்டு, துதிக்கையை நீட்டி, ஆயிரம் மரங்களைப் பிடுங்கி வீசினான். 
வீரவாகுதேவர் அவற்றை விரைந்து வாட்படையினால் வெட்டி ஆரவாரித்தார். கயமுகன் பின்னும் அவர்மீது விடும்படி 
பல மலைகளைப் பிடுங்கினான். வீரவாகுதேவர் அதனைக் கண்டு வாட்படையினால் அவனுடைய ஆயிரந் 
துதிக்கைகளையும் அறுத்தார். அறுத்தலும், கயமுகன் வருந்தி, "இவனைப் பிடித்து உணவாகக் கொள்வேன்" என்றெண்ணி, 
இரண்டாயிரங் கைகளையும் செறித்து வளைக்க, வீரவாகுதேவர் அதனைக் கண்டு, ஒரு பக்கத்தில் வந்த ஆயிரங் 
கைகளையும் வாட்படையினால் வெட்டினார். வெட்டுதலும், அவன் மற்றை ஆயிரங்கைகளினாலும் வீரவாகு தேவருடைய 
மார்பில் அடித்தான். அவர் மிகக் கோபித்து, வாட்படையினால் அக்கைகள் எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தினார். 

    மூவாயிரங் கைகளும் வெட்டுண்டு ஆயிரஞ் சிரங்களோடு நின்ற கயமுகன், விழுதுகள் முழுதும் போய்ப் 
பல சினைகளோடு நின்ற ஆலமரத்தைப் போன்றான். இவ்வியல்படைந்த கயமுகன் நாணி, "இவனைக் கொன்று 
நம்முடைய உயிரை இழப்போம்" என்று எண்ணி, மற்போர் செய்ய நினைத்து, புயத்தினால் வீரவாகுதேவருடைய 
புயத்திலே தாக்கி ஆர்ப்பரித்தான். வீரவாகுதேவர் அதனைக் கண்டு, "கைகள் எல்லாம் வெட்டுண்டு வலிமையிழந்து 
நின்ற இவனோடு இனி வாட்போர் செய்யேன்" என்று கருதி, வாட்படையை உறையினுட் செலுத்தி, அவனுடைய 
மார்பில் ஒரு பாதத்தினால் உதைத்தார். அவன் விரைவில் அரற்றி வீழ்ந்து பதைத்திறந்தான். பிளந்த மார்பினின்றும் 
இரத்த வெள்ளம் கடலிற் பாய்ந்தது.

    அதனைக் கண்ட அவுணர்கள் பலர் "நம்மவர்களாகிய அவுணர்களே பகைகொண்டு நின்று யுத்தஞ் 
செய்கின்றார்கள் போலும்; இவர்கள் இப்படிப் பொருதற்குக் காரணம் என்னை? அறிவோம்" என்று எண்ணி, 
பல நெறிகளிலும் வந்தார்கள். வீரவாகுதேவர் அவுணர்களுடைய வரவை பார்த்து, ''இந்தத் தீயோர்கள் என் செயலைக்
காணிற் கோபம் மிகுந்து பெரும்போரைச் செய்வர். நானும் இவரோடு நின்று பொருதல் வேண்டும்.
அங்ஙனம் புரியினும் இவர்களுடைய போர் இன்றோடு முடியுமோ? வேதங்களாலும் அறிதற்கரிய முழுமுதற் 
கடவுளாகிய சுப்பிரமணியக் கடவுள் பணித்தருளிய அருட்டிருவாக்கை மறந்து இந்த எளியர்களோடு எதிர்த்து 
போரைச் செய்துகொண்டு நிற்றல் புல்லிது; புத்தியன்று. சூரபன்மனுடைய நகரத்தினுள் விரைந்து செல்லுவேன். 

    எந்தெந்த வாயிலுக்குப் போனாலும் அங்கங்கெல்லாம் அவுணவெள்ளங்கள் காத்துக் கொண்டு நிற்றலால் 
அவைகளுக்குத் தப்பி மகேந்திரபுரியினுள் இவ்வடிவத்தோடு செல்லுதல் இயலாது. சுப்பிரமணியக் கடவுளுடைய 
திருவருளால் வேற்றுருவெடுத் அவுணர்களாற் காக்கப்படும் இந்தக் கீழ்த்திசைவாயிலை விரைவிற் கடந்து 
 மகேந்திரபுரியினுட் புகுவேன்" என்று எண்ணி, அணுவுக்கணுவாயும் பெரியதிற் பெரிதாயும் சர்வவியாபியாய் 
வீற்றிருக்கின்ற முருகக்கடவுளுடைய பாதாரவிந்தங்களை மெய்யன்போடு தியானித்துத் துதித்து, அவருடைய 
திருவருளினால் யாவருங் காணுதற்கரிய ஓர் அணுவுருவைக் கொண்டு, அவரைத் துதித்து, கயமுகனைக் 
கொன்ற போர்க்களத்தை நீங்கி ஆகாய மார்க்கமாகச் சென்று, மகேந்திரபுரியின் கிழக்குவாயிலில் நிற்கின்ற 
கோபுரத்தின் மீது போயிருந்தார்.

            திருச்சிற்றம்பலம்

            நகர்புகுபடலம்.

    அணுவுருக் கொண்டு கோபுரத்தின் மீதிருக்கின்ற வீரவாகுதேவர் நகரிலுள்ள அளவில்லாத வளங்களைப் 
பார்த்து, இவ்வாறு எண்ணுவார்: 

    "இந்நகரிலே தறிகளிற் கட்டப்பட்ட யானைகள் சிவபெருமான் சூரபன்மனுக்குக் கொடுத்த அண்டங்களும் 
அவற்றிலுள்ள சமுத்திரங்களும் ஒருங்கேவந்து மொய்த்தன போலும். மயூரகதி சரகதி சசகதி மற்கடகதி மல்லகதி என்னும்     
ஐவகைக் கதிகளைக் கொண்ட குதிரைச் சாதிகள், பஞ்சபூத அண்டங்களிலுமுள்ள முகிற்சாதிகளெல்லாம் ஓரிடத்தில்         
வந்து தொக்கனபோலாம். யானைகளும் தேர்களும் மதிக்கப்படும் மற்றைப்பொருள்கள் யாவும் இந்நகரில் இருந்தன. 
இவற்றைக் கண்டறிந்தவர்களல்லவா சமஸ்த லோகங்களையுங் கண்டவர். இந்த வாயிலில் ' ஓரிலக்ஷ வெள்ளஞ்சேனைகள்     
இருக்கும்' என்று  சுரகுரு சொன்னார்; அவை எண்ணிறந்தனவாய் நின்றன. சுக்கிரனுக்குக் கண்ணில்லாமை போல, 
வியாழனுக்கு அறிவில்லை போலும்; ஆதலாற்றான் தான் கேட்டதைச்சொன்னார். 

    சூரபன்மனுடைய ஆயிரத்தெட்டண்டங்களினுமுள்ள மலைகளினும் பல தேர்கள்; கடல்களினும் மிக்கன
யானைகள்; அக்கடற்றிரைகளிலும் மிக்கன குதிரைகள்; கரைகளினுள்ள நாணல்களினும் மிக்கன பதாதிகள். 
பிருதிவியண்டம் ஆயிரத்தெட்டினுமுள்ள வளங்களெல்லாம் எண்பதினாயிரம் யோசனையெல்லைக்குள் 
அடங்கியது அற்புதம்; சூரபன்மனுடைய தவத்தினால் அடங்கின போலாம். சூரன் தன்னுடைய 
ஆயிரத்தெட்டண்டங்களினுமுள்ள வளங்களையெல்லாம் இந்நகரிலே தொகுத்தான்; அவற்றை நாம் கண்டோம். 
தருமத்தையும் சத்தியத்தையும்  அன்பையும் மாத்திரம் கண்டிலோம்; அவற்றையுந் தந்து தேவர்களுடன் 
சிறையில் வைத்தான் போலும்! இந்நகரிற்றிரண்ட  பல வாத்தியங்களின் ஒலி ஏழ்கடலொலியினும் மிகுந்தன. 
அவற்றை ஒலிப்பவர் தொகையை யார் சொல்ல வல்லவர்! 

    அவரிருக்குமிடங்கள் இரண்டாயிரம் யோசனை உண்டு.  யானை துயிலிடம் பதினாயிரம் யோசனை. 
தேர்கள் நிற்குமிடம் பதினாயிரம் யோசனை. குதிரைகள் கட்டுமிடம் இருபதினாயிரம் யோசனை. 
பையவாக  ஆராய்ந்தால் இவைகளிருக்கு மிடத்தின்  யோசனைப்பரப்பு இன்னும் உண்டு போலும்.                           
 குதிரைகளின் வாயினின்று வரும் விலாழிநீரும் யானைத் துதிக்கையினின்று வரும் மதநீரும் கலந்து, 
இந்நகரத்துப் பெண்கள் அணிந்து தள்ளிய சந்தனத்தையும் மலர்களையும் வாரிக்கொண்டு அகழியிற் 
பாய்ந்து சமுத்திரத்தையடையும். வளப்ப மிகுந்த இம்மகேந்திரநகரை உண்டாக்க ஒரு பிரமாவால் முடியுமோ! 

    சூரபன்மனுக்குரிய ஆயிரத்தெட்டண்டங்களினுமுள்ள பிரமர்கள் யாவரும் வந்து உண்டாக்கினார்கள். 
பிரமர்கள் இந்திரனுடைய நகரமும் மற்றைத் திக்குப்பாலகர் நகரமும் முதலிய நகரங்களையெல்லாம் 
இந்த நகரத்தைப் படைத்தற்குமுன் கைகள் திருந்தப் படைத்தார்கள் போலும். பொன்னுலகமாகிய சுவர்க்கம், 
மற்றை மேலுலகங்கள், பூமி, பாதலம் முதலிய இடங்களை 'போகம் அநுபவித்தற்குரிய இடங்கள்' என்று மேலோர் 
கூறினர்; அது சமுத்திரத்தை அறியாதவர் சிறுகுளத்தைப் புகழ்தல்போலும். இன்பம் யாவும் உள்ள நகரம் இதுபோல் 
வேறியாதோ! கச ரத துரக பதாதியாகிய நால்வகைச்சேனைகளும், எல்லா வண்டங்களினுமுள்ள சமுத்திரங்களை
யெல்லாம் சூரன் இங்கே கொண்டு வந்து சிறைசெய்தால் அதைப்போலும்; வேறுவமை சொல்லுதற்கொன்று மில்லை. 

    துகளும் அகிற் புகையும் மிகவும் நொய்ய அணுக்களும் நுழைய வரிதென்னில், இந்நகர் வீதியெங்குஞ் 
செறிந்த நால்வகைச் சேனைகளின் மிகுதியை யார் சொல்ல வல்லவர்! இம்மகேந்திரபுரிக் கிணையாகச் சிறந்த 
நகரம் ஒன்றுமில்லை. 'இணையாகவுளது' என்று சொல்லுதற்கு, ஆயிரத்தெட்டண்டங்களினுமுள்ள வளங்களெல்லாம் 
இதுபோல வேறொரு நகரத்துளதோ! இம்மகேந்திரபுரியைச் சூழ்ந்த கடல், பொன்னாற்செய்து இரத்தினங்கள் 
அழுத்திய இந்நகரில் நிழல் தன்னிடத்திற் பிரதிவிம்பிக்கப்பெற்று இழிந்தவன்பெற்ற செல்வம்போல அப்பொன்களும் 
மணிகளும் ஒருவருக்கும் பயன்படாமையால் மற்றைக் கடல்களின் புகழையே தானுங் கொள்வது.

    கடலாற் சூழப்பட்ட இம்மகேந்திரபுரியிற் செல்வம், பேய்கள் சூழ்ந்த காளிகோயிலிற் கற்பகம் 
பிறர்க்குதவாதது போலப் பிறரெவர்க்கும் பயன் பட்டிலது. பானுகோபன் கொளுத்தச் சுவர்க்கம் எரிந்தது 
என்றது பொய்; தன்னிற் சிறந்த இம்மகேந்திரபுரியை நோக்கிச் சகித்தற்கரிய பெரிய நாணஞ் சுடத் தன்னலந் 
தேய்ந்து கரிந்ததுபோலும். சூரனுடைய ஆயிரத்தெட்டண்டங்களிலுமுள்ள சூரியர்களெல்லாரும் அவனுடைய 
பணியினால் வந்து தட்பமாகிய கிரணங்களை நடாத்தி நின்றாற் போல, இந்நகரில் எங்கும் பொருந்திய 
மாணிக்க ரத்தின சிகரங்கள் எண்ணில்லாதன. பூலோகம் முதலாகிய மேலேழு லோகங்களைப்போல 
ஏழ் நிலைகள் பொருந்திய கோபுரங்கள் எங்குஞ் செறிந்தன. 

    சூரியர் சந்திரர் முதலாகிய கிரகமண்டலங்களிற் பொருந்திய நிலைகளையுடைய மாடங்கள் 
நெருங்கியுள்ளன: நூறுயோசனை நீளமும் ஆறுயோசனை அகலமும் உள்ள வீதிகளிற் சதுரங்க சேனைகள் 
நெருங்கி, செல்லமுடியாமையினால் ஆகாயத்திலுஞ் செல்லும். விரைந்து செல்லும்படி அவுணர்கள் 
சவுக்கினாலடிப்பது போல, சூளிகையிற் கட்டிய கொடிகள் அடிக்க, சூரியனுடைய தேர்க்குதிரைகள் செல்வன. 
பளிங்குமாடங்கள் அகிற்புகையான் மறைதல், சீலமில்லாத அவுணர்களுடைய கீர்த்திகளெல்லாம் அவர்களுடைய 
பாவத்தினால் மறைதல் போலும். அளவில்லாத மாடங்கள் நவமணிகளாற் செய்து விளங்குவன.

    படிகத்தினாற் செய்த மாளிகையின் மேலே மயிலிருக்க, பக்கத்தில் அகிலம் புகை சேர்தல், முயற் களங்கத்தோடு 
கூடிய பூரண சந்திரனைச் சூழ்ந்து முகில் போதலைப் போலும். மாணிக்க மாளிகை மீதும் பளிங்கு மாளிகை மீதும் உள்ள 
பொன்னிலத்திலே பெண்கள் கள்ளைப் பருகிக் கொண்டிருத்தல், செந்தாமரைப் பொகுட்டின்மீதும் வெண்டாமரைப் 
பொகுட்டின்மீதும் வண்டுகளிருந்து தேனைப் பருகுதல் போலும். மறுவில்லாத வெண்மையாகிய அரிசியை 
வருணன் களைந்து தொகுப்ப, அவற்றை ஊன்களோடு அக்கினிதேவன் பாகம் பண்ண, அரம்பையர்கள் பரிமாற, 
நெய்கலந்த அவ்வுணவுகளை அவுணர்கள் தம்மனைவியர்களோடு மறு சிகை நீக்கி உண்பார்கள். 

    தலைவன் தலைவியாகிய இருபாலாரும் நெருங்கி நிகழ்த்துகின்ற காட்சி, புணர்தல், பிரிதல் முதலாகிய 
துறைகள் எவ்விடங்களினும் நிகழ்வன ; மன்மதனுடைய உலகம் இதுவே. காளையர்கள் முத்துவடம் மேகலை முதலாகிய 
ஆபரணங்களைத் தூதுவர்கள் வாயிலாகப் பரத்தையர்களுக்கு அனுப்பிவிட்டு, அப்பரத்தையர்கள் விரும்பி ஏற்றுக் 
கொண்டனவற்றையும் வெறுத்துத் தள்ளினவற்றையும் அறியும்படி வழிபார்த்தயருவார்கள். அவுணர்களுடைய 
மாலையிலும், பெண்களுடைய மாலையிலும், மாளிகையைச் சூழ்ந்த சோலைகளிலும், தடாகங்களிலும், 
யானை செல்வழியிலும், யாழ்வாசிக்குமிடத்திலும் போய்ப் போய், என்னுடைய மனத்தைப்போல வண்டுகளுந் 
திரியும். சூரபன்மனுடைய ஆணையால் வருந்தென்றல், கடலில் அளாவி, சோலையில் உலாவி, மாளிகைகளிலுள்ள 
பலகணி வாயில்கடோறும் கட்குடித்தவர்கள் போல மெல்ல மெல்ல அசைந்து செல்லும். 

    மாளிகைகளின் மேலிருக்கும் பெண்கள் தங்களை மிக அலங்காரஞ்செய்து அவ்வழகைப் பார்க்கக் கருதி, 
சூரியனைக் கையாற் பற்றிக் கண்ணாடி போலப் பார்த்து, மீட்டு ஆகாயத்தில் எறிவர்கள். மேன்மாடங்களிலே, 
பரத்தையர்கள் ஊடிக் குடுமியைப் பற்றி இழுத்துக் கால்களினால் உதைத்தலினாற் பொற் சரடு அற,ஆடவர்கள் 
தமது கைகளை முகிலிற் போக்கி மின்னலை வாங்கி, அவிழ்ந்த தங்குடுமியைக் கட்டினார்கள். சிலமாளிகைகளி 
னுச்சியிலுள்ள துன்பமென்பது சிறிதுமறியாத பெண்கள் ஆகாயத்திலியங்கும் கிரகங்களையும் 
இடியையும் பற்றி அம்மனையும் பந்துமாக எறிந்து விளையாடுவார்கள். 

    மாளிகைகளிலுள்ள சிலபெண்கள் தங்களுடைய பிள்ளைகள் அழுதலைக் கண்டு, அவர்கள் விளையாடும்படி 
சூரியனுடைய தேரிற்கட்டிய குதிரையைப் பிடித்துக் கொடுத்தலும், அவன் வந்து வேண்டிநிற்க, அக்குதிரைகளை 
அக்குழந்தைகளிடத்திலிருந்து மெல்ல வாங்கிக் கொடுப்பார்கள். மாளிகையில் வருஞ் சில பெண்கள் கையை நீட்டி 
இடியையும் மின்னலையும் பிடித்துத் தொடுத்துத் தம்புதல்வர்களுக்குக் கிங்கிணி மாலையாகக் கட்டியும், 
மேகத்தைப் பிடித்துச் சிற்றாடையாக உடுத்தியும் மகிழ்வர். மேன் மாடங்களின் மேலே சூரியன் போகக்கண்ட 
குழந்தைகள், அவனை ஒரு கனியென்று கையாற் பற்றிக் கறித்து, நெருப்பு உறைத்தலால் விட்டு அழ, அதனைக் 
கண்ட நற்றாயர்கள் கங்காஜலத்தை மொண்டு ஊட்டுவர். 

    தங்கள் குழந்தைகள் அழ, மேன்மாளிகையிலுள்ள பெண்கள் சூரியனுடைய கைகளிலுள்ள இரண்டு 
தாமரை மலர்களையும் வலிதாய்ப் பிடுங்கிக்கொண்டு வந்து அவர்கள் அழாவண்ணம் கொடுப்பர். 
மேல்மாளிகைகளிலுள்ள சிலபெண்கள் ஆகாயவழிக்கொண்டு செல்லுந் தேவர்களைத் தம்மைவந்து சேரும்படி 
அழைத்தலும், அவர்கள் மறுக்க, 'வஞ்சர் வஞ்சர்' என்று அரற்றி அத்தேவர்கள் பின்பு உடன்பட, அவ்வொலியைக்கேட்டு
அங்கு வந்தவர்களுக்கு 'நம்முடைய குழந்தைகளோடு விளையாடுகின்றோம்' என்பார். மாளிகைகளிலுள்ள 
அசுரப்பெண்கள் வலிந்து தம்மைப் புணர்வர் என்று எண்ணி, தேவர்கள் வரவும் அஞ்சுவர்; வராதிருக்கவும் அஞ்சுவர்.
அவர் கரவாகத் தம்மைப் புணர்தலை அவுணர்கள் காண்பார்களோ என்றும் வெருவுகின்றார்கள். அத்தேவர்கள் 
என்செய்வார்! 

    மாளிகைகளிலுள்ள அசுரப்பெண்கள் பலர் தம்முடைய பிள்ளைகள் ஓயாமல் அழ, சூரியனுடைய தேர் 
வரும்பொழுது 'சூரியனே நம்முடைய குழந்தைகளை வானுலகத்திற் சிறிதுதூரங் கொண்டுபோய் மீளக்கொண்டு 
வந்து தருவாய்' என்று அத்தேரில் ஏற்றிவிடுவார்கள். தெய்வப்பெண்கள் மூதேவிகளாகிய அவுணப்பெண்களுடைய 
கால்களைத் தோழிமார்போல வருடி ஏவல்செய்வர். ஆராயின் உலகத்தில் வேண்டியவற்றை வேண்டியாங்கு 
உதவும்படி நின்றன தவமேயன்றி வேறியாவையுள. ஐந்தருக்களும், சிந்தாமணியும், காமதேனுவும், பதுமநிதியும், 
பிறவும் இந்நகரில் ஆடவர்களும் பெண்களும் இருக்குமிடந்தோறும் வந்து, அவர்கள் மனத்தில் விரும்பியவற்றை 
விரும்பியபடி கொடுத்துத் திரியும். மாளிகைகளிலிருக்கும் சில அசுரப்பெண்கள் ஆகாயவழியிற் செல்லுவோர் 
சிலரை அசமுகியைப்போல ஆசையினாலே வலிந்து பிடித்து முறைமுறையாகக்கூடி, 'போங்கள்' என்று விடுவார்கள். 

    முன்னாளிற் பானுகோபன் சூரியனைச் சிறை செய்ததை நினைத்து  'இன்னும் யாது நிகழுமோ' 
என்று பயந்து, அவனுடைய கிரணங்கள் இந்நகரத்துப் பலகணிகள்தோறும் வந்து நுழைதல் இல்லை. வாயு மாடங்களைப் 
பெருக்க, வருணன் வாசனை கலந்த ஜலத்தைத் தெளிக்க, சூரியன் அதனையுலர்த்த, அவுணர்கள் விரும்பி இருந்தார்கள். 
விஷ்ணுவானவர் பாற்கடலில் இலக்ஷுமியைத் தழுவிக்கொண்டு நித்திரை செய்தல்போல, பளிங்கு மாடத்தின் மீது 
சூற்கொண்டமேகம் மின்னலோடு உறங்கும். குழலும்,யாழும், கொம்பும், முழவும் முதலாகிய வாத்தியங்களினொலியும், 
பாட்டொலியும், விழாவொலியும் கடலொலியினும் மிகும். 

    ஆடவர்களும் பெண்களும் வீதிகளிலே எறிந்து விளையாடும் கலவைச்சாந்து சேறாகும். அவர்கள் 
அணிந்து நீக்கிய ஆபரணங்கள், நக்ஷத்திரங்கள் தங்கள் பதங்களினின்று வழுக்கி விழுந்தன போலும். 
சில அசுரப்பெண்கள் மிகுந்த ஆசையை ஒருவனிடத்துவைத்து, அதனை வெளிப்படுத்தாமல் மெலிவடைதலும்,
 அதனை அவர்களுடைய அடையாளங்களே சொல்ல, ஆற்றாதவர்களாய், 'மனமே ஒளிப்பதென்னை? சொல்வாய்' 
என்று கிளிப்பெடைக்குச் சொல்வார்கள். சிறுவர்கள் மான்கன்றுகளைப் பூட்டிச் செலுத்துகின்ற தேருருளையின் 
பொன்னை இரத்தினங்கள் அழுத்திய நிலம் கவர்ந்து கொள்வன. மனிதரைப் பொருளாசையுடையர் என்று நாம் 
வெறுப்பதென்னை? முனிவரும் அதனை விரும்புவர். இப்பூவுலகினிற் பொருளாசையை நீங்கினோர் யாவர்?
ஆசை நீங்கிய தவத்தினராயினும், இம்மகேந்திரபுரியின் செல்வங்களை ஒருவர் சொல்லக் கேட்பினும், தாமும்
 'அசுரராகப் பிறத்தல் வேண்டும்' என்று தவஞ்செய்வர்; 

    ஏனையோர் செய்கையைச் சொல்வதென்? மிகப் பலநாட்டவஞ்செய்தவர்களே இந்நகரின் வளத்தைக் 
காண்பார். யானைகள் சொரியும் மதஜலம் ஆறுபோலப் பாய்ந்து, குழந்தைகள் எறிந்து விளையாடும் சுண்ணப் 
புழுதியினால் வற்றுவன. கங்கையும், சுத்தோதக சமுத்திரமும், இந்நகரத்துச் சனங்கள் பருகவும், ஸ்நானஞ் 
செய்யவும் மாளிகைகளிலும் வீதிகளிலும் சோலைகளிலும் மற்றும் வேண்டிய இடங்களிலும் வாவியும் 
பொய்கையும் பிற நீர்நிலைகளுமாயிருக்கும். வில் வாள் முதலாகிய பல படைக்கலங்களைப் பயில்வோரும், 
மற்போர் செய்வோரும், மாயஞ்செய்வோரும், மந்திராப்பியாசஞ் செய்வோரும் ஆகிய இவர்களுடைய 
இடங்கள் எங்கும் உள்ளன. 

    நரம்பு மேலே வெளிப்படத் தசையில்லாமற் காய்ந்து நரைத்துத் தண்டூன்றி மூத்துத் தள்ளாடுவோரையும், 
கூற்றுவனால் உயிர் நீங்குவோரையும், வியாதியாளரையும், வறுமையினால் வருந்துவோரையும் இந்நகரிற் 
கண்டிலேம். இது தவ வலியே. கருப்பஞ்சாற்றுக்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், மதுக்கடல், பாற்கடல் ஆகிய 
இவைகள் சூரபன்மனுடைய ஆணையினால் இந்நகரிலுள்ள வீடுகடோறும் வந்து பல பெரிய குளங்களாய்த் 
தனித்தனி யிருப்பன. சில பெண்கள் காய்ச்சின மதுவையும் காய்ச்சாத மதுவையும் பருகி, நாணத்தை விட்டவராய், 
உடுத்த பட்டு வஸ்திரங்களைக் கிழித்து, தம்மோடு பேசி, கைகொட்டிக் குரவைக் கூத்தாடுவர். 

    பெண்களும் ஆடவர்களும் சிறிதுநேரத்துட் பலமுறை அலங்காரஞ் செய்தலால் அணிந்தணிந்து நீக்குகின்ற
ஆபரணங்களும், வஸ்திரங்களும், மாலைகளும், வாசனைத் திரவியங்களும், பிறவும் நெருங்கி, பூமியிலுள்ள 
தேவருலகம் என்று சொல்லும்படி கடை வீதிகள் சிறப்புற்றிருக்கும். கொய்தலர்ந்த பூக்களையும் முத்துக்களையும் 
கொழித்து விளையாடும் சிறுமியர் சிறு முறங்களால் ஏற்றுகின்ற பொற்புழுதி இந்நகரளவில் மாத்திரம் பரக்குமோ,
 சமுத்திரத்தைத் தாண்டி அதன் கரையிலுள்ள கானலையடைந்து அதன்மேலும் நிமிரும்.செம்மலர்களாலும் 
வெண்மலர்களாலும் தொடுத்த பந்துகளைச் சிறுவர்கள் கரங்களிலேந்தி ஆகாயத்திற் போம்படி எறிய, 
அவைகள் சூரியசந்திரர்கள் வழுக்கி வீழ்தல் போல வந்து வீழ்வன. 

    மாலைக் காலத்திற் சந்திரன் வந்துதிக்க, அதன்பின் நக்ஷத்திரங்கள் ஒன்றொன்றாய் உதித்தல்போல, 
உபாத்தியாயர்கள் கல்லூரிகளில் முன்பு செல்ல கல்வி கற்குஞ் சிறுவர்கள் தனித்தனி வந்தடைவர். 
கட்குடித்துக் களிப்பவர் சிலர் அக்கள்ளைத் தமது கையிலிருக்கும் ஆண்கிளிக்கு ஊட்டி, அதற்குக் 
காமநோயை மிகுவித்து, சேவலன்னம் பார்த்திருந்து இரங்கப் பெடையன்னத்தை அது புணரும்படி செய்வர். 
சில ஆடவர்கள் வலிமையினாலே தேவர்களிடத்திற் றாம் கவர்ந்த கிரீடங்களிலுள்ள இரத்தினங்களைப் 
பறித்துத் தம் பரத்தையர்களுடைய பாதுகைகளிற் பதிப்பார்கள். சில அவுணர்கள் தமது மனைவியர்கள் 
வருந்தவும் அவரைச் சேராதவராயும், பரதார கமனத்தினாற் றம்முயிர் போமென்பதை நினையாராகியும், 
பிறர் மனைவியரை விரும்பி, கள்ள வழியால் அவரை அடைவர். இதனையும் என் கண் காண்பதே! 

    இந்நகரில் இயக்ஷப்பெண்களும், அரம்பையர்களும், அவுணப் பெண்களும், இராக்ஷதப் பெண்களும், 
பொதுப் பெண்களாயிருப்பர். பரத்தையர்களும் காமுகர்களும் வாசனை கலந்த களபச் சாந்துகளையும் 
சுண்ணங்களையும் பூம்பந்துகளையும் மாலைகளையும் சிவிறிநீரோடு எறிந்து விளையாடுதல், 
யாவருடைய உளத்தையும் மயக்கும். இந்த வீதியோ உருவமில்லாத மன்மதன் உருவமுடையனாய் வீற்றிருக்குமிடம், 
பொன்னன்னங்களும், புறாக்களும், மயில்களும், கிளியின் சாதிகளும், இவை போன்ற பல பறவைச்சாதிகளும் 
இந்நகரத்துப் பெண்களுடைய கைகள் தோறும் இருப்பன. 

    முதலில் விவாகஞ் செய்து கொண்டவர்களும், பின்பு விவாகஞ்செய்துகொண்டவர்களும், காந்தருவ விவாகஞ் 
செய்துகொண்டவர்களும், இசைபாடிக் கொண்ட இல்லப்பரத்தையரும் சேரிப்பரத்தையரும் ஆகிய இவர்களுடைய 
கூட்டத்தில், வண்டுகள் பலபூக்களிலும் சென்று சென்று தேனைப் பருகுதல் போல, ஆடவர்கள் சென்று சென்று புணர்வர். 
சிலபெண்கள் சில காளையர்களுடைய அழகின்னலத்தைப்பார்த்து அவரை விரும்பி, தம்முடைய சரீரம் விளர்க்க, 
அவரைக் கூடவேண்டும் என்று நினைத்து, கிழியைத் திருத்தி, பலநிறம் பொருந்திய கலவையைக் குழைத்து 
அதில் அவருடைய உருவத்தை எழுதுவார். சிலபெண்கள் அழகிற் சிறந்த சில ஆடவரிடத்தில் ஆசை வைத்து மனம் 
பரவசப்பட்டு, குஞ்சைப் பெற்று நீங்காத பெடைமயிலைத் தழுவித் தமது துயரைச்சொல்லி, அவரிடத்திற் றூது விடுத்து, 
அது வரும்வழியைப் பார்த்து வருந்துவார். 

    சில பெண்கள் தம்மை நீங்கிய நாயகரை நனவிலுங் கனவிலு மனத்தில் நினைத்துக் கண்ணீர் வடியவும், 
ஸ்தனங்களிலணிந்த சாந்துலரவும் வாட்டமுறுவர். சில பெண்கள் மேன்மாடங்களில் தமது இதழ் வேறுபட்டு 
முகம் வேர்ப்ப இரவுபகல் வேற்றுமை அறியாதவராய், நாயகர்களோடு புணர்வர். சில பெண்கள் ஆட்டினிரத்தத்தை 
அன்னத்தோடு பிசைந்து மேலேயெறிந்து, மலர்களைத் தூவி, தாம் வசிக்கும் வீட்டிலே தெய்வத்தை வழிபட்டு, 
பறையொலிக்க தெய்வத்தை ஆற்றுப்படுத்தி வெறியாட்டாடுவர். மாடங்களின்மேல் ஆடுகின்ற பெருங்கொடிகள் 
மரக்கலங்களிற் பொருந்திய பாய்மரங்களை ஒத்தன. 

    நால்வகைச் சேனைகளும் படைத்தலைவர்களும் பாகர்களும் சூழவும் முரசு முதலிய வாத்தியங்கள் 
முன்னே முழங்கவும், அளவில்லாத அரச யானைகள் கோயிலை வந்தடைவன. மாலைகளை முடித்த குடுமியை 
யுடையர்களும் சூற்கொண்ட மேகம்போலும் நிறத்தையுடையர்களும் ஆகிய சில வீரர் வில் வாள் முதலிய 
படைக்கலங்களிற் சாமரங்களைத் தொங்கக்கட்டி வெற்றி முரசடிக்க, முன் வருவர். யானையாளி, புலி, 
சிங்கம், ஆமா,யானை, மரை முதலாகிய மிருகங்களைக் கொன்று, அவற்றின் மாமிசக் குவைகளை 
வீதிகளிலுள்ளோர் வாங்கும்படி வண்டிகளிலேற்றிக் கொண்டு வருவார் பலர். 

    சிகரங்களும், சூளிகைகளும், உபரிகைகளினடுக்குக்களும், சோலைகளும், செய்குன்றுகளும், 
ஓடைகளும், வாவிகளும், தடாகங்களும், மாடங்களும் எங்கும் உள்ளன. முன்னே அடித்துச் செல்லும் 
முரசங்களையும், தீபங்களையும், மாலை தொங்கும் படைகளையும், ஒற்றைக் குடையையும், மூன்று குடையையும், 
இரட்டைச் சாமரங்களையும் உடையராகிய அளவில்லாத வீரர்கள் ஈண்டே வந்தார்கள். பூமிதேவி செய்த தவப்பயன்
 என்று சொல்லத்தக்க இம்மகேந்திரபுரியின் மிகுந்த வளத்தைக் காணுதல் அளவிறந்த கண்களைப் படைத்தவர்களுக்கன்றி, 
ஆயிரங்கண்களையுடைய இந்திரனுக்காயினும், இரண்டு கண்களையுடைய மற்றையோர்க்காயினும் எளிதாமோ! 

    அளவிறந்த கண்களையுடையவரும் விரும்பி இவ்வளங்களை நோக்கினாலும் அளவிடப்படுமோ! 
மேகங்கள் வந்து நாடோறும் பருகினாலும் பெரும்புறக்கடல் வற்றுமோ! இந்நகரத்திலுள்ள வளங்களோ அளவில்லாதன. 
எண்ணில்லாத கண்களையுடையோர்கள் இவற்றுள்ளே தாங் கண்டனவற்றைச் சொல்வாராயினும், 
ஒரு நாவினாற் சொல்லமுடியுமோ! அவர் ஆயிரகோடி நாக்களைப் பெறுவாராயிற் சொல்ல வல்லவராவர். 
அப்படி அவர் சொல்லினும், உடம்பு முழுதும் செவித் துவாரமில்லாதவர்கள் எங்ஙனங் கேட்பார்? ஆயிரம்
 பதினாயிரங்கோடி நாக்கு, அளவில்லாத ஆயிரங் கண்கள், ஆயிரமாயிரஞ் செவிகள், ஆயிரம் மனங்கள் 
ஆகிய இவற்றையுடையவர்க்கன்றி இந்நகர் வளங்கள் ஆயிரம் யுகம் கண்டு நினைத்துச் சொன்னாலும் அடங்கா. 

    இங்குள்ள அவுணர்கள் இவ்வளங்களைத் தமது ஐம்புலன்களினாலும் தவறுதலின்றி அனுபவிக்க 
விரும்பிப்போலும், தவஞ்செய்து பத்துநூறு ஆயிரம்கோடி என்னுந் தொகைகளையுடைய சிரசுகளைப் பெற்றார்கள். 
முன்னவர்க்கு முன்னவராகிய அறுமுகக் கடவுளுடைய திருவருள் வலியால் யான் அளவிறந்த உருவங்களை 
எடுத்து இந்நகர் வளங்க ளெல்லாவற்றையும் பார்ப்பேன்; இப்பொழுது பகைவர்களுக்கு என்னைக்காட்டுதல் 
தகாது என்று அதனை ஒழிந்தேன். இத்தன்மையவாகிய பெருவளங்கள் எல்லையின்றி உள்ளன. 

    இவைகளை மனத்தால் நினைப்பினும் அதற்குப் பற்பலநாட்செல்லும். இவை முழுதையும் நுண்ணிதாய் 
ஆராய்ந்து பார்க்க நினைத்தேனாயின், இவ்வொருபொழுதில் முடியா. பிரமதேவரறியாத பிரணவப்பொருளை 
அகத்தியமுனிவருக் குபதேசித்தருளிய எம்பெருமான் பணித்த ஏவலைச் செய்யாது இந்நகர் வளங்களைப் பார்த்துக் 
கொண்டிருந்து யான் காலதாமதஞ் செய்வது முறையோ'' என்று வீரவாகுதேவர் நினைத்தார்.

    பின்பு வீரவாகுதேவர் கீழ்த்திசைக் கோபுரத்தின் சிகரத்தினின்று அந்நகர் வளங்கள் சிலவற்றைப் 
பார்த்து, சூரபன்மன் இருக்கின்ற நகரியை அடையும்படி நினைத்து, இடையிலுள்ள வீதியிற் பரிசனங்கள் நெருங்கிப் 
பரவி நிற்றலைக் கண்டு, சூழ்ச்சியோடு கீழ்த்திசைச் சிகரத்தை நீங்கி, வேதங்களின் துணிபொருளாயும் 
ஞானநாயகராயு மிருக்கின்ற அறுமுகக் கடவுளுடைய திருவருளைத் துணையாகக்கொண்டு அந்நகரத்தின் 
நடுவே ஆகாய மார்க்கமாகச் சென்று, பானுகோபனுடைய கோயிலை அடைந்து அதனைப் பார்த்து, ஆச்சரியமடைந்து,
 அதனைநீங்கி, அக்கினி முகனுடைய கோயிலையும், அதன்பின் இரணியனுடைய கோயிலையும், அதன்பின் 
வச்சிரவாகுவினுடைய கோயிலையும், அதன்பின் மூவாயிரருடைய கோயிலையும்  கடந்து, முதன் மந்திரியாகிய 
தருமகோபனுடைய மாளிகைச் சிகரத்தின் மீதே தங்கி, சயந்தனும் தேவர்களும் அவுணர்கள் சூழத் துன்பமுற்றிருக்கின்ற 
சிறைக்களத்தை நாடிப் பார்த்தார். 

    யானைக்கூட்டங்கள் பிரிதலும், வேட்டுவர்கள் பிடித்துக் கொண்டுவந்து மறைவிடத்தில் அடைப்ப அதில்
அகப்பட்டு வருந்தும் யானைக் கன்றுகள் போல, இந்திரன் மறைந்து போய பின் அசுரர்களுடைய சிறையிலகப்பட்டு 
வருந்துகின்ற சயந்தன் முதலிய தேவர்களுடைய செய்கையிற் சிலவற்றை இனிச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            சயந்தன்புலம்புறுபடலம்.

    தேவர்களோடு சிறையிலிருந்த சயந்தன் வில்வித்தை பயின்றமையினாற் கன்றிய கையைப்போல இரண்டு 
கால்களினும் பலநாள் விலங்கு பூண்டமையினாலே தழும்படைந்தவனாய், மானமும் வலியும் நாணமும் நீங்க, 
பழியாகிய நெருப்புச் சூழ, பெருமூச்சாகிய வாயு நின்று உயிரை அலைக்க, மிக்கதுன்பக்கடலில் அழுந்திச் 
சோருவான். அவன் சகித்தற்கரிய சிறையினால் இறப்பான், அல்லது அநேக யுககாலம் துன்பத்திலாழ்ந்தமையால் 
மிக்கபழி நீங்கும்படி வலிய உயிரை விடுவான். அமுதம் உண்டமையினால் இவ்விரண்டு மில்லாதவனாயினான். 

    அவன் சிறையிலகப்பட்டு தம்முடல் துணிப்புறுவோர் போலத் துன்புற்று, ஓர் கணப்பொழுதை 
அளவிறந்த யுககாலம்போலக் கழித்திருப்பான்.மரகதத்தினாற் செய்த ஓவியம் அழுக்கடைந்தாற் போலவும், 
நீலோற்பலப் பூமாலை புலர்ந்தாற்போலவும் ஆயினான். சிறையிலகப்பட்டிருந்த நூற்றெட்டு யுகங்களில் ஓர் கணப் 
பொழுதாயினும் நித்திரை செய்வானாயின், அவனுடைய துன்பம் சிறிது நீங்கும். என்றும் நித்திரை செய்யாத 
இயற்கையினனாதலால் ஒழியாத துன்பத்தினனாயினான். அவன் மிகுந்த துன்பத்தில் நெடுங்காலம் இருத்தலினாலும்
இறவான், தன்னுயிரை வலிய விடவுமாட்டான், இறையளவும் இமையைக் கூட்டவுமாட்டான். மேலாகிய தவமுந் 
துன்பத்தை உண்டாக்குமோ? நாடோறும் சிறைக் காவலர்களாகிய அவுணர்களைக் கண்டுபயந்து, தன்னழகிழந்து, 
உய்யுந்திறமொன்றுங் காணாதவனாய்க் கலங்கினான். 

    மரகத ரத்தினம் போலுந் தன்வடிவந் துயருழத்தலால் வெய்துயிர்ப்பாகிய புகைபட மறைந்தும், கண்ணீர் 
சிந்தலால் உடனே விளங்கியுந் தோன்றுவான். தன்னுடைய பெருந்துன்பத்தை நினைத்து நினைத்து, அவுணர்களும் 
இரங்க ஏங்கி அழுவான். அதனைக் கண்ட காவலாளர்கள் அச்சுறுத்துதலும்  "இது பழுதுபோலும்" என்று கையால் 
வாயைப் பொத்துவான். 'அவுணர்கள் சிலர் இந்திரன் அயிராணியோடு மறைந்திருந்த இடத்திற்குப் போய் 
அவர்களைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்" என்று சில காவலாளர்கள் சொல்லிய பொய்மொழி முடிதற்குமுன் 
அயர்ந்து விழுவான்; ஐந்தரு நீழலை நினைப்பான்; பூஞ்சயனத்தை நினைப்பான்; தன்னைப்போலப் பாவிக்கின்ற 
அன்பிற் சிறந்த பெண்களுடைய புணர்ச்சியை நினைப்பான் ; மேலாகிய இந்திரபோகத்தை எண்ணிச் சோருவான்; 
"நிகரில்லாத ஐந்தரு நீழலிற் போகங்களை அனுபவித்து நாம் நாளும் இன்புறுகின்ற பொன்னகரம் பொடியாய்ப் 
போங்கொலோ" என்றெண்ணுவான்; "நாம் முன்போலச் சுகமாயிருப்பது என்று?" என்பான்; 

    "சூரபன்மன் பிடித்துக்கொண்டு வரும்படி அனுப்பிய சேனைகள் சுவர்க்கவுலகத்துக்குச் செல்ல, என்னுடைய 
இருமுதுகுரவரும் அவரைக் கண்டு தம்முருவை மறைத்து ஒளித்தோடினார். அவர் எவ்விடத்தினரோ?" என்பான்; 
"முன்னாளில் என் தந்தை, தாயோடு சுவர்க்கத்தை நீங்கிப் பூவுலகிற் போயினான் என்று சிலர் சொல்லக்கேட்டேன். 
அங்கே நிகழ்ந்தவற்றை அறியேன்" என்பான். "சில தேவர்கள் தம்முடைய துன்பத்தைச் சொல்லவெண்ணி 
என்றந்தை யினிடத்திற் போயினார்கள். அவர்கள் அவனைக் கண்டார்களோ, கூடினார்களோ, பிரிந்தார்களோ, 
நிகழ்ச்சி என்னையோ?" என்பான். 

    "என்பிதா சூரபன்மன் செய்கின்ற துன்பங்களெல்லாவற்றையும் சிவபெருமானுக்கு விண்ணப்பஞ் செய்யும்படி 
திருக்கைலாசமலைக்குச் சென்றானோ?" என்பான்; "என்னுடைய தாய் தந்தையர்கள் பகைவர்களாகிய அவுணர்கள் 
காணாத வண்ணம் ஒளித்தாரோ, அல்லது அவர்களிடத்து அகப்பட்டார்களோ, அல்லது எப்புவனங்களிலும் 
திரிந்தார்களோ? அறியேன்" என்பான்; ''அவுணர்கள் சூரபன்மனுடைய ஏவலால் என்னுடைய தாய் தந்தையர்களை 
இங்கே கட்டிக்கொண்டுவரும்படி போயினார்கள். அவர்கள் ஒளித்ததை அந்த அவுணர்கள் காண்கிலரோ 
அறியேன்" என்பான்; 

    "என் தாயும் தந்தையும் அவுணர்களுடைய வரவைக் காண்பார்களாயின், துன்பம்பொருந்திய மனத்தினராய் 
நடுங்கி என்ன பாடு படுவார்களோ அறியேன்' என்பான்; "பொன்னுலகம் எரிந்ததையும் புதல்வனாகிய என்னை 
அவுணர்கள் இந்நகரிற் கொண்டுவந்து சிறைசெய்த துயரத்தையும் கேட்டபின் என்னைப் பெற்ற தாய் என்ன 
நினைத்து இரங்குவாளோ?" என்பான்; மிகப்பெரிய மாயங்களில் வல்ல அவுணர்கள் என்னுடைய தாயையும் 
தந்தையையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து எனக்கு முன்பே விட்டால், என்னுயிர் பின்னும் இருக்குமோ?" என்பான்; 

    "என் தாய் தந்தையர்கள் உயிரோடிருந்த சொற்பிறந்ததில்லை, அவர்கள் ஆற்றாத துன்பத்தை அனுபவித்த 
காரணத்தினால் சிவபெருமானை நினைத்துத் தவஞ்செய்து முத்தியடைந்தார்களோ?" என்பான்; "யான் பானுகோபனோடு 
யுத்தஞ் செய்தநாளில், ஐராவத யானை என்னைச் சுமந்துகொண்டு சென்றபொழுது, தந்தங்கள் ஒடிந்து போர்க்களத்தில் 
வீழ்ந்தது. அதன்பின்பு அது எங்கே சென்றதோ அறியேன்" என்பான்; "யாவர்க்காயினும் பிறந்தநாண்முதல் இறக்குநாள் 
வரையும் உளவாகின்ற அனுபவங்களெல்லாம் ஊழின் வலியால் வரும். ஆதலால் வினையினேன் அவுணரை 
வெறுப்பதேன்" என்பான்; 

    "கெடுதலில்லாத நகரம் அழியவும், தந்தையும் தாயும் உயிரோடொளித்தோடவும், எளியேனாகிய 
யானொருமகன் நீங்காத சிறையிலகப்படவும் முன்னாளிற் செய்த தீவினையாதோ? அறியேன்" என்பான்; 
''சிவபெருமான் சூரபன்மனுக்கு அழியாத வரத்தைக் கொடுத்தமையினால் அவன் இறவான், நம்மை விடுதலுஞ் 
செய்யான், இச்சிறை எப்பொழுது தீரும்" என்பான்; '"மிகுந்த வளங்களையும் பொன்னகரையும் வாழ்வையும்
 இரு  முதுகுரவரும் விடுத்துப் போயினார் என்று மனந்தெளிந்து, பாவியேனும் நகரத்தை விட்டு ஓடிப் 
போயினேனில்லை;  உந்த அசுரர்கள் பிணிக்கச் சிறையில் அகப்பட்டேன்" என்பான்; 

    "இவ்வுயிரை நீக்குகின்றேனில்லை, வசையுறாவண்ணம் பாதுகாக்கின்றேனுமில்லை, 
தந்தை தாயர்களிடத்துண்டாகிய துன்பத்தைத் தெளிவிக்கின்றிலேன், தமியேனுந் தெளிகிலேன், ஐயகோ! 
இச்சிறையை ஆற்றேன் ஆற்றேன்" என்பான்; "அறம் தொலைந்ததோ பாவஞ் சிறந்ததோ, தவப்பயனுந் தேய்ந்ததோ,
 நன்னெறி குறைந்ததோ கலிகாலம் வந்ததோ, வேதம் அழிந்ததோ, சிவனும் இல்லையோ?'' என்பான்; 
"பகைவர்களாகிய அசுரர்கள் வருத்துதலால் என் பிதா மாதாக்களைத் தேடிச்சென்ற தேவர்களைப்போல 
ஒழிந்த தேவர்களையும் ஓடிப்போக விடாமல் நீங்காத இச்சிறையில் யான் வீழ்த்தினேனே" என்பான்; 

    "அந்தியில் வேதாத்தியயனத்தை மறந்திருந்தேன், சந்தியா வந்தனத்தையும் அக்கினி காரியத்தையும் 
விடுத்தேன், சிவபூசையை ஒழித்தேன், முன்னை அறிவையும் இழந்தேன்" என்பான்; "யான் உயிரோடிருப்பின் 
இச்சிறைத் துன்பம் நீங்கிச் சுகத்தோடிருக்கின்றிலேன், வெந்த வைக்கோற்புரி வடிவம்போலப் பொய்யாகிய 
இவ்வுடம்பைச் சுமந்து துன்பமுற்றேன்" என்பான்; "இனிவேறு சொல்லுவதென்னை? நாம் செய்த வினையினாலே 
காளகண்டராகிய சிவபெருமானே எல்லையில்லாத இத்துயரை நமக்குச் செய்தார்" என்பான்; 

    'இவ்வுலகமும் உயிர்களும் உயிரல்லவும் ஆகியும், இவையல்லவாயும், ஆன்மாக்கண் மீதுவைத்த 
பெருங்கருணையே திருமேனியாகக் கொண்டு, திருவிளையாடல் செய்கின்ற தேவதேவராகிய சிவபெருமானன்றி, 
வேறியார் என்குறையை நினைத்து இரங்குவார்" என்பான்.  ''பெறுதற்கரிய செல்வமெல்லாம் பிழைத்துச் சூரபன்மன் 
இறப்பதும் அவுணர்கள் அழிவதும், நம்முடைய இந்தச் சிறை நீங்குவதும், தீராதவசை போவதும், ஒருநாளைக்குக் 
கிடைக்குமோ?" என்பான்; "கல்விகேள்விகளையுடைய மெய்ஞ்ஞானிகளின் நுட்பமாகிய மனத்திலே வீற்றிருக்கின்ற 
சந்திரசூடராகிய சிவபெருமானது திருவருட்பேற்றை யுடையேனாயின், இந்தப் பெருந்துயர்க் கடலினின்றும் ஏறுவேன். 
வினையேனுக்கு அஃதில்லை போலும்' என்பான். சயந்தன் இவ்வாறு அளவில்லாதனவற்றை எண்ணி எண்ணி, 
துன்புற்றுப் பெருமூச்சுவிட்டு விம்மி, தன்னைச்சூழ்ந்த தேவர்கள் யாவரும் தத்தமிலிரங்க, சிறைக்களத்தி லிருந்தான்.

    வீரவாகுதேவர் சென்ற அந்நாளில், சிறைக்களத்தைக் காக்கின்ற கண்டகன், உதாவகன், கராளன், மாபலன், 
சண்டகன், நிசங்கன், சங்கன் முதலாகிய அவுணர்கள் கூடி, சயந்தனையும் தேவர்களையும் அக்கினி போலக் கோபித்துச் 
சூழ்ந்து, "நம்மரசனாகிய சூரபன்மனுடைய பணியின் வழிநில்லாத இந்திரனும் அயிராணியும் எங்கேயிருக்கின்றார்கள்? 
விரைந்து சொன்னால் உய்வீர். அல்லது உங்களுயிரைத் தொலைவிப்போம். முன்னாள்போல எண்ணாதொழிமின். 
உண்மையைச் சொல்லுங்கள்" என்றார்கள். அதனைக்கேட்ட சயந்தன் "எம்முடைய தாயுந்தந்தையும் சுவர்க்கத்தினின்றும் 
ஓடியதைக் கண்டோம், பின்பு அவர் அடைந்த தன்மையை அறியோம். துன்பநோயுள் அகப்பட்ட யாங்கள் இதனை 
ஆராய்ந்து சொல்வோம்' என்றான். தேவர்கள் "எம்மரசனாகிய இந்திரன் முன்னோர்  நாளிலே, தன்மனைவியையு -
மழைத்துக்கொண்டு ஓடிப் போயினான், போன இடம் இது என்று அறியோம், நாம் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, 
மனம் பரவசப்படப் புண்படும் யாங்கள் என்ன சொல்லுவது!' என்றார்கள். 

    சயந்தனுந் தேவர்களும் இவ்வாறு சொல்லிய பொழுதில், அக்காவலாளர்கள் "இவரெல்லாரும் 
மனமொருவழிப்பட்டுத் துணிந்தார் போலும். எந்தத் தண்டனையினால் இவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள்?'' 
என்று எண்ணி, அவர்களுக்குத் துன்பஞ் செய்கின்றார்: வெவ்விய நஞ்சைப் போலவும், நெருப்பைப் போலவும் மிகவுந்தீய 
சொற்களைச் சொல்லி வைவர்; உரப்புவர்; காதிலே செல்லும்படி தோமரத்தைச் சொருகிக் கடைவார்; உடம்பு 
முழுதையுஞ் சின்னஞ் செய்வார் போலச் சேதிப்பர்;கண்டதுண்டஞ் செய்த அங்கங்கள் பின்பு விரைவிலொன்றி 
உடம்பில் வந்து கூடுதலும், கோபித்து, கையில் வாட்படையை எடுத்து, மிக்க வலிமையினோடும் அவர்களுடைய 
மார்பைக் குடைவர்; தலைவெடிக்கும்படி தண்டத்தால் மோதுவர்.

    இத்தன்மையாகக் காவலாளர்கள் யாவரும் எண்ணில்லாத தண்டனைகளைச் செய்ய, சயந்தன் 
தேவர்களும் தானும் ஆற்றாதவனாய்க் குலைந்து, சிவபெருமானை நோக்கிப் புலம்புகின்றான். அவன் பல 
ஆயுதங்களினாலே காவலாளர்கள் தன்னைத் தண்டித்தபோதும், கூற்றுவனுடைய கையிலகப் பட்டுத் 
துயருழக்கும் பாவிகளைப் போல மிகுந்த துன்பத்தை அநுபவித்ததன்றி, உடம்பழிந்திறந்திலன். 
மெய்ஞ்ஞானிகள் ஐம்புலன்களின் வழியே நின்று பிராரத்த கன்மங்களைப் புசித்தாலும், அவை வாயிலாக 
மேலே ஆகாமியங்கள் அவர்களை அடையாதவாறு போல, காவலாளர்கள் தண்டனைகளைச் செய்யவும், 
சயந்தன் தேவர்களோடு இறந்திலன், தழும்புகளையும் பெற்றிலன். தன்னைச் சூழ்ந்த தேவர்களோடு 
சயந்தகுமாரன் சிறையிற் புகுந்தான்; இந்திரன் காட்டில் ஓடிப்போயினான்; மற்றைத்தேவர்களும் துன்பமுற்றார்; 
தேவருலகம் அழிந்தது. ஆதலால், சிவபெருமான் ஈந்தருளும் மோக்ஷமொன்றேயன்றித் துன்பமில்லாத 
செல்வம் வேறுண்டோ!

    காவலாளர்கள் வாள் தோமரம் வேல் தண்டம் முதலிய படைக்கலங்கள் யாவும் முரிய, தங்கள் கைகளும் 
வலிமைகுன்ற, நொந்து, சயந்தன் முதலிய தேவர்களைத் தண்டிப்பதை விடுத்து, 'இவர்கள் பின்னாளிலே 
தமக்கு விதித்த காலவரையறையிலன்றி அதற்கிடையில் வேறோருபாயத்தாலும் இறவார்; அங்கங்களுங் 
குறையார்; மேலான அமிர்தத்தை உண்டார்; தவத்தான் மிக்கார்; வருந்தார்; ஆவா! நாம் செய்த தண்டனைகளால் 
வருந்தி ஒன்றையுஞ் சொற்றிலர்" என்று ஆச்சரியமுற்றார். இந்தத் தண்டலாளர்கள் யாவரும் சயந்தனையும் 
தேவர்களையும் மெய்நோகும்படி செய்த தண்டனையினாற் கை நொந்து, வலிமையும் நீங்கி, பெரியோர்களுக்குச் செய்த தீங்கு
 உடனே தம்மைவந்து சூழ அதனால் வருந்துதல் போலத் தாம் கவற்சியுற்றார். இத்தன்மையாகிய காவலாளர்கள் 
அணிமையில் நெருங்கித் தம்மரசன் பணித்த ஆணை கடவாதவராய்த் தேவர்களைக் காப்ப, அவர்களுள்ளே 
சயந்தகுமாரன் தேவாதி தேவராகிய சிவபெருமானை நினைத்து இவ்வாறு புலம்புவான்:

    "வழிபடுவோருடைய பாவங்களை மாற்றுபவரே, எத்தேவர்களுடைய சிந்தைக்கும் எட்டாத சிவனே, 
செழுஞ்சுடரே. இந்தப் பிறவியில் அடியேங்களை இடருழப்பச் செய்தீரே! தேவரீருடைய புணர்ப்பை யார் கடந்தவர்!
யானைக்கும், கரிக்குருவிக்கும், நாரைக்கும், பாம்புக்கும், சிலந்திப்பூச்சிக்கும், இவைகளினுந் தாழ்ந்த 
பிறவுயிர்களுக்கும் முன்னாளிலே பேரருளைச் செய்தீர், எமக்கு ஏன் அருள்செய்கின்றிலீர்! 'கங்கையைத் 
தரித்தவரே காளகண்டரே, நெற்றிக் கண்ணையுடையரே, சந்திரனைத் தரித்தவரே, சிவனே சிவனே,' என்று 
இங்கே உம்முடைய அடியேங்களாகிய நாங்களெல்லோரும் அழுதலை எங்களுயிர்க்குயிராகிய நாயகரே 
நீர் கேட்கிலீரோ? 

    'பாசங்களினால் ஆன்மாக்களையெல்லாம் பந்திப்பவரும் அன்பினால் அப்பாசங்களை நீக்கி 
அருள்செய்வோரும் சிவபெருமானே' என்று வேதங்கள் சொல்லும். நீர்செய்த இத்தீமையை நீரன்றி வேறியார் 
தவிர்க்க வல்லவர்! பிரமாவும் விஷ்ணுவும் தேடிக் காண்டற்கரிய முதல்வராகிய கடவுளே, ஆராயில் 
உயிர்க்கெல்லாம் நீரன்றி வேறியார் துணையாவார்! தமியேனுடைய உயிரைப் பாதுகாக்க வந்தருளும் வந்தருளும். 
முன்னாளிலே தேவர்குழுவை வருத்தும்படி கோபங்கொண்டு கூற்றுவனைப்போல வந்த அந்தகாசுரன் 
வலிமையிழக்க அவனுடைய மார்பில் முத்தலைச் சூலத்தை அழுத்தினவர் நீரல்லவா? எமக்கு ஏன் இரங்கலீர்? 
தேவர்கள் ஏங்கிப் புறங்கொடுத்தோடும்படி துரத்திய குரண்டகாசுரனை வதைத்து, அடையாளமாக அவனுடைய 
ஓர்சிறையை வாங்கியணிந்த அருளை இங்கே அடியேனிடத்தில் வைத்திலீரே! 

    பிரமாவும் விட்டுணுவும் பிறரும் வணங்கித் துதிக்க, பாற்கடலினின்றும் உலகத்தைத் தொலைக்கும்படி 
வந்த நஞ்சையுண்ட அருளை இங்கே அடியேனிடத்து அயர்த்தீரோ? காளியானவள் உலகத்துயிர்களை உண்ணும்படி 
ஓடிவருதலும், அவள் பார்த்துப் பயந்து நாணிச் செருக்கு நீங்கும்படி, ஊர்த்துவ தாண்டவஞ்செய்த திருவருள் 
இங்கணுகாதோ? கைலாச மலையிலே சரண்புகுந்த தேவர்களைக் கோபத்துடன் கொல்ல வந்த சலந்தராசுரனைச் 
சக்கரப் படையினாற் பிளந்து, அத்தேவர்களை அஞ்சற்கவென்று காத்தவர் நீரன்றோ? கயாசுரன் காசிப்பதியில் 
முனிவர்களைத் துரத்திக் கொண்டுவர,கோபித்து அவனுடைய தோலையுரித்துப் போர்த்த அந்தக் கருணைக்கு 
அடியேந் தகுதியிலமோ? 

    பத்துச் சிரங்களையும் இருபது கரங்களையுங் கொண்ட பஞ்சராவணர்கள் உலகத்தை அலைப்ப, 
அவர்களை வீரஞ்செய்து கொன்ற நிருமலரே, எங்களை இந்த அவுணர் வருத்துகின்ற கொடுந்தொழிலைத் 
திருவுள்ளஞ் செய்யீரோ? தேவர்பெருமானே, முன் ஓர் இந்திரன் தக்கனைப் போல உம்மை அறியாது ஓர் யாகத்தைச் 
செய்ய, தேவர்களைத் துண்டஞ்செய்து, அவ்விந்திரனுடைய தோளை முரித்தீர்; அந்தத் தண்டனையை இப்போது 
இவ்வசுரர்களிடத்துக் காட்டீரோ? எம்பெருமானே, கொடிய அவுணர்களோடு முப்புரங்களையும் எரித்தீர்; 

    அசுரர்களோடு கூடிய இந்தப் புரத்தையும் அக்கினிக்குதவ வொண்ணாதோ? பாலசந்திரனைத்         
தரித்த கடவுளே, அன்புடையவர்களுக்கு அருள்  செய்கின்றீர்; அடியேனிடத்துப் பத்திநெறி சிறிதுமில்லை, எவ்வாறு 
அருள்செய்வீர்? அருளிற்சிறந்த உம்மிடத்தில் அன்பில்லாத அடியேன் மிகநொந்து சொல்லியது என்னுடைய 
பேதைமையே. ஆனாலும், தீயேன் வருந்தும்பொழுது, அருள்கொண்டு தேவரீர் தாமாக எழுந்தருளிவந்து 
தலையளிசெய்து ஆண்டீரேயானால், நீங்காத இத்துயரம் நீங்குமே; நீங்கினால், முன்னாள் போல 
அடியேன் சுவர்க்கவுலக போகத்தை விரும்பிலேன். நாம் ஒவ்வோர் தீவினைகளைச் செய்ய, அந்த ஒவ்வொன்றிற்கும் 
ஒவ்வொன்றாய், அரக்கர்களாலும் அவுணர்களாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் பிறராலும் மிகுந்த 
துன்பத்தில் ஆழ்ந்ததன்றி, என்றைக்கு மகிழ்வாய் இடரற்றிருந்தேம். 

    பால சந்திரனையும் பாம்பையும் கங்கையோடு தரித்த ஆதியே, உம்முடைய திருவருளால் மிகுந்த 
இத்துன்பம் நீங்கினால், இழிந்த விண்ணுலக பாக்கியத்தை விரும்பேன்; தவத்தைச் செய்வேன் செய்வேன். 
ஐந்தருநீழலில் வாழ்க்கையை விரும்பிப் பெருந்துயரைச் சம்பாதித்துக் கொண்டேன். வானுலகமும் 
கோதென்றே கண்டேன். பிரமா முதலிய பிறருடைய பதங்களின் அழிவையும் கண்டேன். சிவனே, 
தொண்டனேன் உம்முடைய பதத்தையே வேண்டுவேன். துன்பத்தைத் தரும்பிறவி அமையும் அமையும். 
விண்ணுலகத்திலிருந்து பழைய செல்வங்களை அனுபவிக்குந் துன்பமும் அமையும்  அமையும். 

    தில்லையிற்றிருநடனஞ் செய்யுந் தேவரே, இனித் தமியேனுக்கு நேர்ந்த இத்துன்பத்தை விரைவில் நீக்கி, 
உம்முடைய திருவடியைத் தந்தருளும். சிவமாயும், சிவமும் சத்தியுமாயும்,பஞ்ச சாதாக்கியமாயும், இருபத்தைந்து 
கேவல மூர்த்தங்களாயும், பின் இம்முறையே சங்காரக் கிரமமாகப் பஞ்ச சாதாக்கியமாயும், அளவிடப்படாமல் நின்றீர். 
இத்தன்மைகளெல்லாம் ஆன்மாக்களுடைய துன்பங்களை நீக்கி அவைகளுக்கு மிகவும் அருள் புரிதற்கேயன்றோ! 
கொன்றைப்பூ மாலையைத் தரித்த சடையையுடைய கடவுளே, இப்பொழுது நேர்ந்த இத்துன்பத்தை நீக்கி, பின்பு 
சுவர்க்கவுலகத்திற் றங்கவிடாது, மிகத்தவஞ்செய்து பெறுதற்கரிய தேவரீருடைய திருவடிகளின்கீழே பேரின்பத்தை 
ஒருதலையாகப் பொருந்தும்படி அடியேனுக்கு அருள்செய்யும்'' என்று பற்பலவற்றைச் சொல்லி இரங்கி, விஷந் 
தலைக்கேறினாற்போலச் சென்று சென்று துன்பம் மூடி அறிவு முழுவதையுங் கெடுக்க, சயந்தன் ஒன்றும் 
அறியாதவனாய் மயங்கி, உயிர் ஒளித்து உலைய, இறந்தவர்போல நிலத்தில் வீழ்ந்தான். 

    ஆலமரஞ் சாய்தலும், அதனைப் பக்கத்திற் சூழ்ந்து படர்ந்த கொடிகள் தியங்கி விழுந் தன்மைபோல 
அவனைச் சூழ்ந்த தேவர்களும் ஏங்கி உயிர்பதைக்க அறிவழிந்து வீழ்ந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            சயந்தன் கனவுகாண் படலம்.

    உயிர்க்குயிராய் வியாபித்திருந்து அருள்புரிபவரும், ஒரு துணையுமின்றித் தனித்தயருகின்ற சிறுவரைத் 
தழுவி அஞ்சற்க என்று பாதுகாக்க வருகின்ற பெற்ற தாயைப் போன்றவரும், ஒரு குமாரரைப் போலத் திருவுருக்கொண்டு 
திருச்செந்திற்பதியில் வந்து தேவர்களுடைய துன்பத்தை நீக்கும்படி வீற்றிருக்கும் நிருமலரும் ஆகிய அறுமுகக்கடவுள், 
தேவர்களும் சயந்தனும் மகேந்திர புரியிற் சிறைக்களத்தில் அவுணர்களால் மெலிந்து பெருந்துயரோடும் மயங்கிக் 
கிடத்தலைத் திருவுளஞ்செய்து, அவர்களுக்குத் திருவருள் செய்யக்கருதி, வலப்பக்கத்தில் கொடி, வச்சிரம், அங்குசம்,
பாணம்,வேல், அபயம் என்னும் இவைகளும், இடப்பக்கத்தில் வரதம், தாமரைப்புஷ்பம், மணி, மழு, தண்டு, வில் 
என்னும் இவைகளும் பொருந்திய பன்னிரண்டு திருக்கரங்களையும், ஆறு திருமுகங்களையும் கொண்டு, 
அவசமடைந்த சயந்தனுடைய கனவிலே எழுந்தருளிவந்து, அத்திருவுருவத்தைக் காட்டியருளினார். 

    சயந்தன் சூக்கும சரீரத்திலுள்ள ஞானக்கண்களால் அவரைத் தரிசித்து, "அடியேன்படுந் துன்பத்தைப்
 பார்த்து அதனை நீக்கும்படி திருவுள்ளத்திற் கொண்ட பேரருட்டிறத்தால் எழுந்தருளி வந்தீர். பார்க்கின் 
விஷ்ணுவுமல்லீர், பிரமாவுமல்லீர், தேவ நாயகராகிய சிவபெருமானுமல்லீர், நீர் வேறியாவர்? சொல்லியருளும்"
 என்று வினாவினான். இருவினைகளும் நீங்கி மனந்தெளிந்த மெய்ஞ்ஞானிகளுடைய அறிவினுளறிவா 
யிருப்போராகிய அறுமுகக் கடவுள்: "யாம் கொன்றை மாலையைச் சடையின் மீதே சூடிய பரமசிவனுடைய குமாரர்; 
உன்னுடைய துன்பத்தையும் இரக்கத்தையும் மயக்கத்தையும் அறிந்து, அவற்றை நீக்கும்படி வந்தேம்" என்று கூறி,
 பின்னரும் சொல்லியருளுவார். 

    உன் பிதா தன் குறையையும் உங்கள் குறையையும் வந்து சொல்லி நம்மை வேண்ட, அளவில்லாத 
சேனைகளோடும் இப்பூவுலகில்வந்து, கிரவுஞ்சம் என்னும் மலையையுந் தாரகனையுஞ் சங்கரித்து, 
செந்திற்பதியில் வீற்றிருந்தேம். பிரமாவும் விஷ்ணுவும் உன் பிதாவும் தேவர்களும் நம்முடனிருக்கின்றார். 
சயந்தனே வருந்தற்க; வாழ்வாய்; கேட்குதி. உன்னுடைய தாயும் மேரு மலையிலிருக்கின்றாள். வீரவாகுவென்பானை 
யாம் இந்நகரிற் சூரபன்மனிடத்துத் தூதாக அனுப்பினோம். அவன் இற்றைப் பகலில் சூரபன்மனுடைய குமாரனொருவனைப் 
பல அவுணர்களோடுந் தொலைத்து, இந்நகரத்தை அழித்து நீறாக்கி, மாலைக் காலத்தில் நம்மிடத்துக்குத் திரும்பிவரச் 
செய்வோம் . இற்றை நாட் கழிந்தபின் நாளையே செந்திற்பதியை நீங்கி இம்மகேந்திரபுரியில் ஒர் சாரில் 
வந்திருந்துகொண்டு, பத்து நாளில் அவுணர்கூட்டங்களும் நுமக்குத் துன்பஞ்செய்த சூரபன்மனும் முடியும்படி 
சங்கரித்து, உன்னைத் தேவர்களுடன் அவன் இட்ட சிறையை நீக்கி, உங்களுடைய சுவர்க்கவுலக வளங்களையெல்லாம் 
ஈவோம். சயந்தனே, உன்னுடைய துயரை இப்பொழுதே ஒழிவாய்" என்று அருளிச் செய்தார்.

    சுப்பிரமணியப் பெருமான் இவ்வாறு அருளிச்செய்த அருமைத் திருவாக்குக்களைக் கேட்டலும், 
சயந்தனுடைய மனத்திலுள்ள அஞ்ஞானமாகிய இருள் நீங்கியது; மகிழ்ச்சி குடிகொண்டன; மயிர்கள் சிலிர்த்தன; 
கண்கள் ஆனந்தபாஷ்பம் பொழிந்தன; புயங்கள் மலைபோல நிமிர்ந்தன; அவன் அமிர்தத்தை இலேசாகப் 
பெற்றுப் பருகினோரைப் போலத் தன்மெய் குளிர, கற்ற கற்ற வேதங்களைப் பாடினான்,ஆடினான், களித்தான். 
அவன் பெற்ற உவகையின் பெருக்கத்தை யார் இவ்வளவென்று சொல்ல வல்லார். முன்னுண்டாகிய அவசத்தை 
நீங்கி இவ்வாறு பெருமகிழ்வடைந்த சயந்தன் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிலே போய் வணங்கித் 
துதித்து "எம்பெருமானே தேவரீர் வலியவந்து, மிக நொய்ய அடியேங்களுடைய துன்பத்தை மாற்றி அருள்செய்தீர். 
நாயினுங்கடையேனாகிய அடியேன் தேவரீருக்கு விண்ணப்பஞ் செய்யுங் குறை சிறிதாயினுமுண்டோ! உம்மிடத்தே 
அடைக்கலம் புகுந்தேம், எங்களைக் காத்தருளும்" என்றான். 

    சயந்தன் இவ்வாறு விண்ணப்பஞ்செய்ய, எவர்க்கும் மேலோராகிய முருகக் கடவுள் அதனைத் 
திருச்செவிமடுத்து "அயர்ந்த உங்கள் குறை நீங்கும் வண்ணம் நாம் காப்போம், இது நிச்சயம் " என்று 
திருவாய் மலர்ந்து, பின்னும் அதற்கிசைய,  " இந்நகர்க்கு யாமனுப்பிய வீரவாகுவென்னுந் தூதுவன் 
உன்னையுந் தேவர்களையும் வந்து கண்டு இனிய மொழிகளைக் கூறி மீளும்படி அனுப்புவோம்; 
அதையுங் காண்பாய்" என்று அருளிச்செய்து மறைந்தார்.

    படைப்புத்தொழில் கைகூடாமல் அயர்ந்த பிரமாவினுடைய கனாவிலே வந்து, "உனக்கு அருள்செய்யும்படி 
பதினொரு உருத்திரரை  உன்னிடத்தனுப்புவோம்" என்று அருளிச்செய்து மறைந்த சிவபெருமானைப்போல, 
அசுரர்களால் வருத்தமுறுகின்ற சயந்தனுக்குச் சுப்பிரமணியக் கடவுள் இவ்வாறு திருவாய் மலர்ந்து மறைதலும், 
அவன் முன்னர் நீங்கிய ஐம்புலன்களும் பொறிகளிலே வெளிப்பட, கனவினை நீங்கி, பையப் பைய நனவையடைந்து, 
பாம்பின் விஷந் தலைக்கேறப் பெற்றுச் சாய்ந்தவர்கள் விஷவைத்தியருடைய மந்திரம் பலித்த பொழுது 
மனமயக்கந்தீர்ந் தெழுமாறு போல எழுந்து, கனவிற் கண்ட எல்லாவற்றையும் நினைவில் வருவித்து, 
நெஞ்சங் குளிர்ந்து, "நம்முடைய வினையெல்லாம் இவ்விடத்தே தொலைந்தனவோ!" என்று துன்பக் 
கடலிலாழ்ந்தவன் பின் சிவகுமாரராகிய சுப்பிரமணியக்கடவுளுடைய  திருவருளை நினைத்து 
ஆனந்தக் கடலில் ஆழ்ந்தான். 

    அப்பொழுது, அறுமுகக்கடவுள் அயர்ந்த தேவர்களுடைய கனவுதோறும் விரைந்துசென்று, முன் 
சயந்தனுக்குச் சொல்லியவாறே சொல்லி, மறைந்தருளினார். மறைதலும், அத்தேவர்கள் கனா நீங்கி விம்மிதத்தோடு 
விழித்தெழுந்திருந்து, கனாவைத் தம்முள்ளே யோசித்து, மிக மகிழ்ச்சியடைந்தார்கள். சயந்தனுக்கு 
அணிமையிலிருக்குஞ் சில தேவர்கள் வெவ்விய இழிமொழிகளைப் பேசும் காவலாளர்களாகிய அவுணர்கள் 
கேட்பார்களாயின் தம்மை வருத்துவார் என்று அஞ்சி, அக்கனாவை அவன் கேட்கும்படி மெள்ளச் சொன்னார். 
தேவர்கள் சொல்லிய அற்புதமாகிய கனாவைச் சயந்தன் நினைத்து, அக்கனா தான் முன்கண்டது போன்றிருக்கக் 
களித்து, உடம்பு பூரித்து, முதல்வராகிய அறுமுகக்கடவுள் விசுவாந்தரியாமியாய் வீற்றிருப்பதையும், அடியார்களுக்கு 
அவர் கருணை செய்யுந் திறத்தையும் நினைத்து, சிரத்தையோடு அவருடைய திருவடிகளை வழிபட்டுக்கொண்டு 
சிறைக்களத்திலிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            வீரவாகு சயந்தனைத் தேற்றுபடலம்.

    சயந்தன் தேவர்களோடு இவ்வாறு சிறையிலிருத்தலும், பேய் தான் கண்ட செல்வத்தைக் காக்குந் 
தன்மைபோல, அவர்களைக் கீழோர்களாகிய அவுணர்கள் அச்சிறைச்சாலையிலே காவல் செய்து கொண்டிருத்தலைப் 
பேரறிஞராகிய வீரவாகுதேவர் கண்டு, "கண்ணோட்டமின்றித் துன்பமாகிய பயிரின் வேலிபோல இவர்களைக் 
காக்கின்ற அவுணர்கள் என்னைக் காணாராய் அறிவின்றி மயங்கவும், சயந்தன் முதலிய தேவர்கள் என்னைக் 
காணவும், தமியேன் இச்சிறைக்களத்திற் செல்லவேண்டும்" என்று எண்ணி, பிரணவப் பொருளாய் 
உயிர்க்குயிராய் வியாபித்திருக்கும் குமாரக் கடவுளைத் தியானஞ்செய்து, அவ்விடத்திற்கேற்ற அக்கடவுளுடைய 
ஒரு திருமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, சிறைக்களத்துட் சென்றார். காவலர்கள் அம் மந்திரமாகிய 
வலையிலகப்பட்டு மயங்கி ஓவியம் போலாயினர்.

    சயந்தனுந் தேவர்களும் வீரவாகு தேவரைக்கண்டு, ''அவுணர்கள் இன்று காலையில் நம்மை வருத்த நாம் 
இறந்தவர்போல அவசமடைந்த சமயத்தில், தேறுதலடையும்படி எழுந்தருளிவந்து நமக்கருள்செய்த அறுமுகக் கடவுளுடைய 
தூதுவராமாம் இவர்" என்று எண்ணி, அன்பிற்சிறந்தார். வீரவாகுதேவர் அச்சிறைக்களத்துட் புகுந்து, முருகக்கடவுளுடைய 
நாயகமாகிய திருநாமத்தைச் சொல்லித் துதித்துக்கொண்டு, சயந்தனுக்கு முன்னே இருந்தார். அத்திருநாமம் அமுதம் 
போலத் தன்செவித் துளையுட் புகுதலும், துன்பத்திலாழ்ந்த சயந்தன் மகிழ்ந்து, முன்பு அறியாதவன் போல 
அவரை வணங்கி, "அவுணர்கள் பாவம் சூழ்வதுபோல எம்மைச் சூழ்ந்து வருத்திப் பாதுகாக்க அதனால் மிகுந்த 
துன்பத்தை யடைகின்ற எங்களிடத்து நீர் வந்ததென்னை? சொல்லும்" என்றான். 

    அதனைக் கேட்ட வீரவாகுதேவர் "சிவகுமாரராகிய அறுமுகக்கடவுளுக்குத் தம்பியாயுள்ளேன், அவருக்குத் 
தூதனானேன், நந்திகணத்தைச் சார்ந்தேன், என் பேர் வீரவாகு, உங்கள் சிறையை விடும்பொருட்டுச் சூரபன்மனிடத்துச் 
சொல்லும்படி அக்கடவுளுடைய ஏவலால் வந்தேன்'' என்றார். என்னலும், தேவர்களோடு சயந்தன் கேட்டு, 
ஞான சமாதியினாலே சிரசிலிருந்து ஒழுகும் அமுத தாரையை நுகர்ந்த பெரியோர் அதன்பின் பாற்கடலிலுள்ள 
அமிர்தத்தையும் பருகினாற்போல, முன்னே சுப்பிரமணியக் கடவுளைத் தரிசித்ததனால் அடைந்த மகிழ்ச்சியின் 
மேலும் முடிவில்லாத மகிழ்ச்சியைப் பெற்று, தலைவரே "துன்பம் மிகுகின்ற எங்களுடைய குறையை வினாவுதற் 
பொருட்டுவந்தீர். அதனால் இந்தச் சிறையும் நீங்கிற்று; யாங்கள் துன்பமெல்லாம் நீங்கி உய்ந்தோம்; பிறவிகள் 
நீங்கும் ஊதியத்தையும் அடைந்தேம்" என்றான். 

    வீரவாகுதேவர் அதனைக்கேட்டு, ''சூரனிடத்து என்னைத் தூதனுப்பிய ஞானசத்திதரராகிய அறுமுகப் 
பெருமான் உங்களை வலியவந்தாண்டிடுகின்றார்; பழைய சுவர்க்கவுலக வளங்களையும் பெறுதிர்; பின்னும் 
வேண்டியவற்றை அடைகின்றீர்'' என்று கூறி, பின்னும் சொல்லுவார்: "தேவர்காள், தம்மை வழிபட்ட அடியாருக்கு 
எல்லா நன்மைகளையும் கொடுத்தருளும் அறுமுகக்கடவுளினாலே பிரமா முதலிய தேவர்கூட்டமெல்லாம் 
உய்ந்ததென்றால், உமக்கொரு குறைவுண்டாகுமோ! தேவாதி தேவராகிய சிவபெருமான் வந்துவேண்ட, பிரமாவைச் 
சிறைவிடுத்துக் காத்தருளிய அறுமுகக்கடவுள் உங்களிடத்துப் பேரருளைச் செய்தார். உங்களுடைய பாவமும் பழியுந் 
தீங்கும் துன்பமும் பிறவுமாகிய எல்லாம் போவதோர் பொருளோ! பிறவிக்கடலையுந் தாண்டினீர். 

    பிரமாவைச் சிறைசெய்து மூவுலகங்களிலுமுள்ள உயிர்களைப் படைத்த முருகக்கடவுள், சூரபன்மன் 
உங்களைச் செய்த சிறையினின்றும் நீக்கும்படி திருவுளஞ்செய்து, தாமே இங்கெழுந்தருளி வந்தாரென்றால், 
நீங்கள் நெடுங்காலஞ் செய்த தவத்தை யார்செய்தார்? அளவிறந்த பாவங்களைச் செய்கின்ற அவுணர்கள் 
செறிந்த இந்நகரில் அறிஞர்கள் செல்லார். யான் எம்பிரான் றிருவருளால் சேற்றுநிலத்திற் செல்வோர் போல 
மனம்வருந்தி ஒருவாறு வந்தேன். உங்களை எதிர்ப்பட்டமையினால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தேன்" 
என்று வீரவாகுதேவர் கூறினார். சயந்தன் அதனைக்கேட்டு மகிழ்ந்து, 'யாங்கள் சிறையில் அகப்படு முன் 
என்னைப்பெற்ற இருமுதுகுரவரும் மறைந்துபோயினார். 

    அவர் அன்றுதொட்டு இன்றுகாறும் செய்தசெயல்களையும், அச்செயலால் உண்டாகிய பிரயோசனத்தையும்
 சொல்லும்" என்றான். வீரவாகுதேவர் அதனைக் கேட்டு, இந்திரன் முன்னாளில் ஐராணியோடு சுவர்க்கத்தை 
விடுத்துச் சீர்காழியை அடைந்தது முதல், திருச்செந்தூரிற் சுப்பிரமணிய சுவாமியை வந்துசேர்ந்த அந்நாள்காறுமுள்ள 
காரிய நிகழ்ச்சிகளை யெல்லாம் விரைவிற் சொல்லினார். சயந்தன் அவற்றைக் கேட்டு,"சுவாமீ உம்முடைய 
வார்த்தைகளைக் கேட்டு, என் தாயையும் தந்தையையும் குருவையும் முதல்வராகிய சுப்பிரமணியக்கடவுளையும் 
எதிர்ப்பட்டாலொத்தேன்" என்றான். பின் அறிஞரிலறிஞராகிய வீரவாகுதேவர் தேவர்களையும் சயந்தனையும் பார்த்து,
"அறுமுகக்கடவுள் உங்கள் சிறையை நீக்கும் நாள் சிறிதுளது. அதுகாறும் இங்கிருப்பீர்.' என்று பின்னும் சொல்லுகின்றார்:

    "தமக்கு நிகரின்றி மேலாய் ஞானசொரூபியாய் யாவரும் நினைத்தற்கரிய சுத்தமாயாதீதராய் 
நின்ற சிவபெருமானே ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருப்புயங்களுங்கொண்டு, ஒரு பாலகர்போன்று, 
கந்தர் என்னும் ஓர் திருநாமத்தையும் பொருந்தி, எல்லாருங்காண வந்தார். "நமது கடவுளாகிய சிவபெருமான் 
ஆறுதிருவதனங்களையும் பன்னிரண்டு திருப்புயங்களையுங் கொண்டு இப்படி எழுந்தருளிய காரணம் என்னை?"
என்னில் விஷ்ணு பிரமா இந்திரன் ஆகிய இவர்களுடைய துன்பத்தையும், உங்களுடைய சிறையையும் நீக்கி, உலகங்களை 
யெல்லாம் இரக்ஷித்தற் பொருட்டேயாம். சயந்த குமாரனே, இதனை அறிதி. 

    தக்கனுடைய யாகத்திற் புகுந்து தீய அவிப்பாகத்தை யுண்டமையால் உமக்கு உண்டாகிய பாவம் 
முறையாக வீரபத்திரக்கடவுள் தண்டஞ்செய்தும் இன்னும் முழுதுந் தீர்ந்ததில்லை; சில குறை இருந்தது. 
அதனால் உமக்கு இத்துன்பம் உண்டாயிற்று. அறுமுகப் பெருமானன்றி யார் இதனை நீக்கவல்லார்? சயந்தனே, 
சண்முகக்கடவுள் வேற்படையினாலே கிரவுஞ்ச கிரியினோடு தாரகனைச் சங்கரித்த போரானது சூரபன்மனைச் 
சங்கரித்தற்கு முதலில் நாட்கொண்ட தன்மையன்றோ? அவுணர்கள் யாவரும் சுப்பிரமணியக்கடவுள் வில்லைக் 
காலுறவளைத்து நாண்பூட்டி விடுகின்ற பாணத்திற்கு உணவாதற்கும் ஆற்றார். 

    அவர் திருக்கரத்திற் கொண்ட  வேற்படைக்கு இலக்கில்லை. அதனை விடுப்பது  மிகையாம் .
சமுத்திரங்கள் மலைகள் முதலாகிய பலவற்றைக் கொண்ட இப்பூலோக முதலிய 
பதினாலு லகங்களையும் தம்முளடக்கிய சகல அண்டங்களையும் ஓரிறைப் பொழுதிற் சங்கரிக்கவல்ல 
சுப்பிரமணியக் கடவுளுடைய வேற்படையானது சூரபன்மனை அவுணர்களோடு சங்கரிப்பது ஓர் விளையாட்டாம். 
சூரபன்மனுடைய மார்பில் வேற்படையை விடுத்து அவனை இருபிளவாக்கினாலல்லது நீவிர் சிறையினின்று 
மீளாமையைத் தாம் அறிந்தும், நமது கடவுளாகிய சுப்பிரமணியப் பெருமானானவர் நீதிநூலறிஞர் செய்யும் 
அறநெறியைச் சீர்தூக்கி அடியேனை அவனிடத்திலே தூதாக விடுத்தார். 

    எம்பெருமானுடைய திருவார்த்தையை 'இதனைக் கேட்பாய்' என்று சூரனுக்குச் சொல்வேன். 
அவன் கேட்டும் அதனை நீதியென்று கைக்கொள்ளான். யான் மீண்டு சென்று நிகழ்ந்தனவற்றை 
விண்ணப்பஞ்செய்வேன். எம்பெருமான் அவற்றைக்கேட்டு நாளைக்கே எழுந்தருளிவந்து, இச்சூரனாதியரை
யெல்லாம் நாமமுமறும் படி சங்கரிப்பார். விட்டுணுவினாலும் அறியப்படாத குமாரக்கடவுள் தமது வேற்படையை 
அங்கிருந்துகொண்டு விடுத்தும் இவ்வவுணர்கள் யாவரையுங் கொல்லுவார். அவர் தேரின்மேற்கொண்டு 
சேனைகள் மருங்கிற் காத்துச்சூழ இங்கேவந்து போர்செய்து கொல்லுதலும் ஓர் திருவிளையாடலாம். 

    நமது கடவுள் பத்துநாளைக்குள்ளே போரைமூட்டி அவுண சேனைகளையும் சூரபன்மனையுஞ் 
சங்கரித்து, உங்களை இந்தச் சிறையினின்று விடுவித்துப், பெருஞ்சிறப்புச் செய்தருளுவர். சயந்தனே 
வேறொன்றும் நினையற்க" என்று இவைகள் பலவற்றையும் சயந்தனும் தேவர்களும் அறியும்படி 
வீரவாகுதேவர் சொல்லித் தேற்றினார். அவர்கள் கேட்டு "பெருமையிற் சிறந்த வீரரே, மிகவும் 
வெற்றியைப் பெறுவீராக''என்று  தனித்தனி ஆசீர்வதித்தார்கள். சயந்தன் தேவர்களோடு கைகூப்பி 
அஞ்சலி செய்து, "வீரரே, எளியேங்களாகிய எங்களுடைய தன்மைகளையெல்லாங் கண்டீர்; இவைகளை 
என் பிதாவுக்குச் சொல்லும். இங்கே நீர் நினைத்துவந்த கருமத்தை முடிக்கும்படி செல்வீராக'' என்றான்.

     வீரவாகுதேவர் அத்தேவர்களை நீங்கி, சிறைக்களத்தைக் காவல்செய்வோருடைய மனத்தில் முன்பு 
செய்த மயக்கத்தை அகற்றிப் போயினார். அக்காவலாளர் முன்போலத் தேவர்களையுஞ் சயந்தனையுஞ் 
சூழ்ந்து காத்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            அவைபுகுபடலம்.

    வீரவாகுதேவர் சயந்தனுந் தேவர்களும் இருக்கின்ற சிறைக்களத்தை நீங்கி, ஆகாயவழிக் கொண்டுசென்று, 
சூரபன்மனுடைய கோயிலைச் சூழ்ந்த அகழியைத் தாண்டி, பதினாயிரம் வெள்ளமென்னும் தொகைக்கு மேற்பட்ட 
சேனைகள் சூழ்ந்த மதிலிற்போய், அதின் முன்பு பலநிலைகளோடு விளங்குகின்ற கோபுரத்தைக் கண்டு,
 அதனைப் பலவாறு தம்முள் வியந்து சொல்லி, அக்கோபுரவாயிலில் உக்கிரன் மயூரன் முதலாகிய அவுணவீரர்கள் 
சதுரங்க சேனைகளோடு காவல்செய்துகொண்டு நிற்பதைப் பார்த்து, அம்மதிலைத் தாண்டி, ஆகாய மார்க்கமாகச் 
சூரபன்மனுடைய கோயிலுக்குப்போய், அதன் முன்னுள்ள சூளிகையிலிருந்து, அவனுடைய மாளிகையிலுள்ள 
வளங்களெல்லாவற்றையும் கண்ணும் மனமும் மீளாமற் பார்த்து, பின் சூரபன்மன் அத்தாணி மண்டபத்திலே 
இரத்தின சிங்காசனத்தின் மீது அரசிருக்குஞ் சிறப்பைக் கண்ணுற்றார்.

    அப்பொழுது, சூரபன்மன் சிவபெருமான் கொடுத்த வளங்களைப் பெற்று உலகமெல்லாந் 
தன்கால்களை வணங்க அரசிருக்கின்ற சிறப்பைச் சொல்வாம்: ஆயிரம் யோசனை பரப்பினையுடையதாய்ப் 
பொன்னாற்செய்து நானாவித இரத்தினங்கள் இழைக்கப்பெற்று ஒளி வீசாநின்ற அத்தாணி மண்டபத்திலே, 
வயிர ரத்தினம் உடலும் வயிடூரியம் பற்களும் முத்து உச்சிமயிரும் நீலமணிகண்களுமாக அமைக்கப்பட்ட 
சிங்கத்தினாற் றாங்கப்படும் ஆசனத்திலே, மேனகை திலோத்தமை முதலாகிய தெய்வப்பெண்கள் 
ஆலவட்டங்களை அசைத்துச் சாமரங்களை வீசவும், சூரிய சந்திரர்கள் முத்துக்களால் வேய்ந்து முகட்டில் 
நீலம் இழைத்து உள்ளிடங்களில் மற்றை மணிகள் அழுத்திய குடைகளைத் தாங்கி இரண்டு பக்கத்திலும் 
நிற்கவும், அவுணர்கள் அடைப்பை கெண்டி பூந்தட்டு உடைவாள் ஆகிய இவைகளைத் தாங்கிக்கொண்டு 
பக்கங்களில் நிற்கவும், பானுகோபனும் அவனுடைய தம்பியர்களும் மற்றை மூவாயிரம் புதல்வர்களும் 
முறையாகப் பக்கத்திலிருக்கவும், 

பாவங்களையும் பழிகளையுமே செய்கின்ற காவிதிகளும் பிறதொழிலாளர்களும் ஒற்றுவர்களும் 
படைத்தலைவர்களும் ஆகிய எவரும் பக்கமெங்கும் நிற்கவும், அரம்பையர்கள் நடிக்கவும், வித்தியாதரர் 
கின்னரர் இயக்கர் முதலாயினோர் வீணைகளை வாசிக்கவும், துதிபாடர்கள் பிரம்பை ஏந்திக் கொண்டு 
நின்று துதிக்கவும், விலக்கமுடியாத சனங்கள் எள்ளிடவும் வெளியிடம் இல்லை என்னும்படி நெருங்கவும், 
இரத்தினகிரீடம் சிரசின் மீது ஒளியைச் செய்யவும், குண்டலங்கள் காதுகளிலே தொங்கவும், விபூதி 
நிறையப்பூசிய நெற்றி விளங்கவும், மார்பிலே முத்துமாலைகளும் பதக்கங்களினடுக்குக்களும் 
புயங்களிலே லாகுவலயங்களும் கரங்களிலே கடகங்களும் கழுத்திலே முத்துக்களாலாகிய கண்டசரங்களும் 
கால்களிலே வீரக்கழல்களும்   பிரகாசிக்கவும், உடம்பிலணிந்த களபச்சாந்தின் வாசனை அண்டங்களெங்கும் 
உலாவிக் கமழவும், அரையிலே உதரபந்தம் என்னும் அணியோடு பீதாம்பரம் விளங்கவும், பொன்னினாலும் 
மணிகளினாலும் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய சூற்கொண்ட மேகத்தைப் போலச் சூரபன்மன் வீற்றிருந்தான்.

    இங்ஙனம் சூரபன்மன் அரசிருத்தல் தமது கண்களுக்கு விருந்தாகிய அமிர்தம் போலாக, 
சூளிகையிலிருக்கின்ற வீரவாகுதேவர் வியப்போடு பார்த்து, அவன்மீது வைத்த அன்பினாலே இவ்வாறு சொல்லுவார்: 
"மும்மூர்த்திகளிலும் மேலோராகிய சிவபெருமானுடைய திருவடிகளை வழிபாடு செய்த தேவர்களுள்ளே சூரபன்மனைப் 
போல இந்தச் செல்வங்களெல்லாவற்றையும் யாவர் பெற்றார்! மனமடங்கத் தவஞ்செய்தவர்களில் இந்தச்
சூரபன்மனைப் போல உயிரைவிட்டுத் தவஞ்செய்தோருமில்லை, சிவபெருமானும் இவனுக்கு வரம் ஈந்ததுபோலப் 
பிறர்க்கீந்ததுமில்லை. இத்தீயோன் பெரிய யாகத்தைச் செய்து அவ்வக்கினியில் வீழ்ந்திறந்து மேலாகிய 
இவ்வளங்களையெல்லாம் பெற்றும், நெடுங்காலம் இருந்து வாழ நினைத்தானில்லை. இது அழிந்துபோகின்ற 
இவனுடைய விதியின் றிறனன்றோ! 

    கபடமில்லாத தூக்கணங்குரீஇயார் சிறிய நெருப்புக்கொள்ளியை மின்மினிப்பூச்சியென்று எண்ணிக்
 கூட்டினுள் வைத்து அழிந்த கதை போல, இந்தச் சூரபன்மன் பல தேவர்களை ஐயோ என்று கதறச் சிறைவைத்த 
பாவத்தினால் நாளைக்கு இறப்பான், இதற்கோரையமில்லை. மிகுந்த வீரம் வலிமை செல்வம் என்னும் இவைகளை 
மிகப்படைத்துளோரும் யாரிடத்தாயினும் சிறிது பகையுடையராய் வாழ்தல் பழுதேயன்றி நன்மையாகுமோ !
இவன் இந்திரனையும் இந்திராணியையும் நகரத்தை விட்டுத் துரத்தி, அவர்களுடைய குமாரனாகிய சயந்தனையும் 
தேவர்களையும் அகலாத சிறையில் வைத்த பாவத்தினால் அரசையிழப்பன். 

    இச்சூரபன்மன் தன்புத்திரர்களோடும் சுற்றத்தார்களோடும் நகரத்தோடும் நினைத்தற்குமரிய மற்றைச் 
செல்வங்களோடும் நாளைக்கு இறந்துபடுவானாயின், நாடோறும் பாவங்களைச் செய்துழன்ற இவனுடைய 
உயிருக்கு நிலை, முன்னவர்க்கு முன்னவராகிய அறுமுகக்கடவுள் ஈந்தருளும் முத்தியன்றி வேறென்னை உளது!" 
என்று இவ்வாறு வீரவாகுதேவர் அருளோடு சொல்லி, சூரபன்மனுக்கு முன்பு செல்லத் துணிந்து, சுப்பிரமணிய 
சுவாமியினுடைய திருவடிகளைத் தியானித்து, தாமிருந்த சூளிகையை நீங்கி ஆகாயவழிக்கொண்டு சென்று, 
சூரபன்மன் அரசிருக்கின்ற அத்தாணி மண்டபத்திற்போய், அளவற்ற பெரிய ஐசுவரியங்கள் நிகழ வீற்றிருக்குஞ் 
சூரபன்மனை அணுகி,அவ்வவைக்களத்திலுள்ளோர் யாவருங் காணும்படி தம்முடைய சொயரூபத்தைக் காட்டி, 
"சிவகுமாரராகிய சுப்பிரமணியக் கடவுளுடைய தூதுவன் யான்" என்று கூறி இவனுக்குக் கீழே யான் எளிமையாய் 
நிற்றல் எம்பெருமானுடைய பெருமைக்குத் தாழ்வாகும் . அவனிருக்கின்ற சிங்காசனத்தின் ஓர் பக்கத்திற் 
போயிருப்பதும் பெருமையன்று . அது எளியோர் செயலே; அதுவன்றி, இவனோடொருங்கிருத்தல் பாவம்'' 
என்று எண்ணி, முருகக்கடவுளுடைய திருவடிகளைத் தியானித்தார். 

    அப்பொழுது, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்குச் சிவபெருமான் கொடுத்தருள முத்துப்பந்தரும் 
முத்துச்சிவிகையும் வந்தவாறு போல, சுப்பிரமணியக் கடவுள் வீரவாகுதேவருக்குக் கொடுத்தருள ஆயிர கோடி 
சூரியப் பிரகாசத்தோடு இரத்தின சிங்காசனமொன்று விரைந்து அவ்வவைக்களத்தில் வந்தது. சுப்பிரமணியக் 
கடவுளால் விடுத்தருளப்பட்ட அச்சிங்காசனம் எப்புவனங்களிலும் தன்னுடைய ஒளியைப் பரப்புதலால், நாடோறும் 
பாவங்களையே பயிலுகின்ற அவுணர்களுடைய வடிவத்தையும் தெய்வ வடிவமாக்கியது; அவ்வவுணர்கள் 
அணிந்திருக்கின்ற ஆபரணங்களிற் பதித்த இரத்தினங்கள் சூரியனுடைய வெய்யிலிலகப்பட்ட மின்மினிகள் 
போல ஒளி குன்றின; செவ்வானம் சந்திரன் நக்ஷத்திரங்கள் இருள் மேகங்கள் ஆகிய இவைகளெல்லாம் செறிந்த 
மாலைக்காலத்தில் ஆகாயத்திலே சூரியன் வந்துதித்தாற்போல அச்சபையின் பொலிவை அச்சிங்காசனத்தின்
ஒளி தொலைத்தது; 

    இன்னும் அதனொளி சூரபன்மனுடைய கீர்த்தியையும் ஆஞ்ஞையையும் அவன் அணிந்திருக்கின்ற 
ஆபரணங்களின் ஒளியையும் விழுங்கியது. இவ்வியல்பினையுடைய சிங்காசனம் சூரபன்மனுக்கெதிரே வந்திருத்தலும், 
வீரவாகுதேவர் "எம்பெருமானாகிய சுப்பிரமணியக் கடவுள் இதனை விடுத்தருளினார் போலும்' என்று எண்ணி, 
மனமகிழ்ச்சியோடு அக்கடவுளுடைய திருவடிகளைத் துதித்து, மகிழ்ச்சியும் வீரமும் மிக, தாம் தூதுவந்த செயலை 
ஆராய்வாராய், அதன்மீது வீற்றிருந்தார். அங்ஙனம் சிங்காசனத்தில் வீற்றிருந்த வீரவாகுதேவர் சூரியனுக்கு 
நடுவே விளங்கும் சிவபெருமானையும், விஷ்ணுவாகிய நரசிங்கத்தைக் கொல்லும்படி சிங்காசனத்திலிருந்த 
வீரபத்திரக் கடவுளையும், சித்துவித்தை காட்டிய சிவபெருமானுக்கெதிரே பிரமா அகங்காரங் கொள்ளச் 
சிவபெருமானுடைய புகழ்களை எடுத்துக் கூறிய விஷ்ணுவையும் போன்றார்.

    வீரவாகுதேவருடைய நிலைமையைக் காணுதலும், அவ்வவைக் களத்திலிருந்தவர்கள் நடுங்கி ஆச்சரியமுற்று, 
இவ்வாறு சொல்லுகின்றார்கள்: "சூரபன்மனுக்கு முன்னரே சிங்காசனத்திலிருக்கின்ற இவன் வீரனும் போலும், 
இவன் வந்த காரணத்தையும் அறியோம் இவன் யார்?" என்று சொல்லுகின்றார்கள் சிலர். "இவனை முன்னே இங்குக்        
கண்டிலேம்; பேராற்றலையுடைய நம்மரசனுக்கெதிரிலே இப்பொழுது வந்திருக்கின்றான்; இவன் நம்மையெல்லாம் 
நீங்கி இங்கே நடுவில் வந்தது எவ்வாறு?" என்று சொல்லுகின்றார்கள் சிலர். 'மற்றைச் சனங்களோடு கூடி மறைந்து 
நம்மையெல்லாந் தப்பி இவன் தனித்து இங்கே வந்தானாயினும், இந்தப் பெரிய சிங்காசனம் இங்கே வந்திருந்தது 
மிகவும் ஆச்சரியம் ஆச்சரியம்!" என்பார் சிலர். 

    ''நம்மரசனுக்கு முன்னரே இச்சிங்காசனத்தோடு விரைந்து தோன்றினான்; ஆராய்பவர் உண்டானாற் 
சொல்வான்; இவன் நம்மினும் மாயங்களை யுடையவன்" என்று சொல்லுகின்றார்கள் சிலர். "கூட்டமாக நிற்கும் 
நீவிர் ஒரு வீரனைச் சபையிலே என்முன் வரவிடுத்தது என்னை? என்று நம்மரசன் எங்களை என்ன செய்வானோ 
அறியோம்'' என்று பதைத்து வருந்துவார் சிலர். "ஒரு பகைவனைத் தண்டஞ்செய்யாது இங்கே விட்டது என்னை? 
என்று நம்மரசன் நம்மைக் கோபிக்கு முன்னரே நாம் அவனை நெருங்கிச் சூழ்ந்து பிடித்துக் கொலைசெய்து
 வருவோம்'' என்று சொல்லுகின்றார் சிலர். 

    "அழியாத வலியையுடைய நம்மரசனுக்கெதிரே செருக்குற்ற மனத்தோடு விரைந்து வந்தவன் எவராலும் 
அறியப்படாத மாயையிலே வல்லவன்போலும், உங்களுக்கு அவன் எளியனோ?" என்பார் சிலர். 'நம்மரசனுக்கெதிரே 
வந்தவனை அவனுடைய பணியினாற் கொல்வதல்லது அதன் முன் கொல்ல நினைத்தாற் பின்பு பிழையாகும்" 
என்று சொல்லுவார்கள் சிலர். 'இவன் சூரனுடைய உறவை நினைத்து இங்கு வந்தானோ? அல்லது பகைவரைச் 
சார்ந்தவனாய் வந்தானோ? யார் இதனை அறிவர்? இனிமேல் அறிவோம்' என்பார் சிலர். "அசமுகி கைவெட்டுண்ட 
நாளில் நம்மரசன். காவலாளர்களைத் தண்டித்தான்; இவன் வரும் சூழ்ச்சியை நோக்கி இன்றும் பல காவலாளரைத் 
தண்டிப்பான்" என்று அச்சமுற்றார் சிலர்.

    "முன்னொருகாலத்தில் இந்திரன் முதலாயினோர் மயங்க விஞ்சைய வடிவங் கொண்டு வந்து, ஓர் துரும்பை 
நிறுத்தித் தம்முடைய வலிமையைக் காட்டிய சிவபெருமானே இவன்" என்கின்றார் சிலர். "காசிப முனிவரிடத்தும் 
அதிதியினிடத்தும் ஒரு குறளன் போல வந்துதித்துப் பூமியையும் ஆகாயத்தையும் அளந்த விட்டுணுவே இவன்' 
என்கின்றார் சிலர். விட்டுணுவோடு சபதஞ் செய்து விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் உண்டு 
உந்திக் கமலத்தாற் றோற்றுவித்த பிரமாவே ஓர் உபாயத்தால் இவ்வுருவைக்கொண்டார்" என்பார் சிலர். 
'மும்மூர்த்திகளுள் ஒருவனோ? திக்குப்பாலகருள் ஒருவனோ? முனிவர்களுள் ஒருவனோ? இவன் இவருள் யாவன்?'' 
என்பார் சிலர். "சிவபெருமானே நம்மரசனுக்கு இன்னமும் வரங்களைக் கொடுக்கும்படி இந்தக் கோலங்கொண்டு 
எழுந்தருளி வந்தாரோ? இனி அதனை அறிவோம்' என்பார் சிலர். 

    ''காற்றும் நெருப்பும் காலனும் கூற்றுவனும் ஓருருவங்கொண்டு இருந்த தோற்றம் இதுவன்றி, 
சூரபன்மனுக்கு முன்னே அஞ்சாதுவரும் வலிமையுடையவர்கள் வேறுயாவர்?' என்கின்றார்கள் சிலர். "கிரவுஞ்ச 
கிரியுந் தாரகனும் அழியும்படி ஒருவன் ஒரு வேற்படையைச் செலுத்தினான் என்றார்கள்; அவன்றான் இங்கே 
நம்மரசன் முன் வந்தானோ?'' என்று சொல்வார் சிலர். "பொன்னினாலும் மணிகளினாலும் செய்த 
இச்சபையினுடைய காந்தியும், இங்குள்ள அவுணர்களுடைய காந்தியும், இவன் அணிந்திருக்கின்ற 
ஆபரணங்களினதும் சிங்காசனத்தினதும் ஒளி படுதலாற் பகற்காலத்துத் தீபம்போலக் குறைந்தன' 
என்பார் சிலர். 

    "இந்நகரத்திலுள்ள அவுணர்கள் யாரும் இங்கே இப்படி வருதலை மறந்தும் நினையார். ஆராயில் இது 
நம்மரசன் செய்த மாயமே'' என்பார் சிலர். "நேற்றைத் தினம் இறந்த தாரகன் தன்னுடைய பழைய உருவம் அழிய 
இன்றைக்கு இந்த அழகிய உருவத்தைக் கொண்டு தன்றமையனிடத்தில் வந்தான் போலும்?" என்பார் சிலர். 
அவ்வவையிலிருந்தவர்கள் இவ்வாறு பலவற்றைப்பேச, வீரவாகுதேவர் முருகக்கடவுளைத் துதித்துக்கொண்டு, 
சூரபன்மன் தன்னுடைய சிங்காசனத்தின்மீது எத்துணை யுயர்ச்சியோ டிருந்தானோ அத்துணை யுயர்ச்சியோடு 
தமது சிங்காசனத்தில் வீற்றிருந்தார்.

    சூரபன்மன் வீரவாகுதேவர் வீற்றிருத்தலைக் கண்டு, தந்தவரிசைகளைக் கறித்து, கறுவி, நகைத்து, 
உரப்பி, சரீரம் வியர்வையெழ, கண்கள் அக்கினிப்பொறி சொரிய, புகையையுமிழ்ந்து, இவைகளைச் சொல்வான் :
''சுற்றத்தாரை நீங்கி, இலைகளையுண்டு, விலங்குகள் போலச் சுழன்று, காட்டிலிருந்து தம்முடம்பை வருத்துகின்ற 
சிற்றுணர்ச்சியுடையோர் வல்ல  சித்துவித்தை இது. சிறியோய் நீயும் அதனைக் கற்றிருக்கின்றாய் போலும், 
நமது முன் எல்லாருங் காணக் காட்டினை. யோகிகளல்லது நமக்குத் தோற்றோடித் திரிகின்ற தேவர்களும் 
இத்தொழிலில் மிகவன்மையுடையர். அவர்கள் உன்னைப் போல நம்மிடத்துச் சிறிதும் காட்டலர். நீ நம்முன்னர்க் 
காட்டிய நடனம் நன்று நன்று! 

    சித்தர்களும் விட்டுணு முதலிய தேவர்களும் இத்திறத்தனவாகிய செயல்களைத் தத்தமிடங்களிற் 
செய்வதல்லது என்முன்னே காட்டுதற்கஞ்சுவர். தமியோய் நமக்கிதனைக் காட்டுதற்கெண்ணினாய்,நீயொரு 
பித்தன் போலும். பேதையே, நீ செய்த இவ்வாடலை  இந்நகரத்திற் பெண்களுஞ் செய்வர்; கருவிலிருக்குங் குழந்தையுஞ் 
செய்யும்; விலங்குகளுஞ் செய்யும்; உணர்வில்லாத மலைகளுஞ் செய்யும். இஃதோரரியதல்ல. என்னை மதியாதவனாய் 
எனக்கெதிரேயிருந்தாய். ஆதலால் வாட்படையினால் உன்சிரசைத் துணிப்பேன். உன் செயல்முழுதையுந் தெரிந்து 
பின்பு அதனைச் செய்வேன் என்றெண்ணினேன். 

    பெருமையுடையோர் யாவராலும் துதிக்கப்படுகின்ற அவுணர்களும் யாமும் காணும்படி காட்டினை; 
நீ அறிந்த வித்தையைக் கண்டாம். இவ்வித்தையைக் காட்டி ஓர் பரிசுபெற்றாய்' என்று கண்டோர் சொல்லவரும் 
உனக்கு இத்துணைப் பொழுது தாழ்த்து உயிரைத் தந்தேன். அதுவே பரிசு. இந்திரன் எனக்குப் பயந்து ஒளித்தோடினான்; 
பிறர் இதனை எண்ணார்; விட்டுணுவும் இதனை நினைத்தலுஞ் செய்யான்; பிரமன் ஆசிசொல்லித் திரிவான். 
இவர்களுக்கு முதல்வராகிய சிவபெருமானோவெனில், அவர் என்னிடத்து வருகிலர்; நீ யார்? சொல்லுதி'' என்றான்.

    சூரபன்மன் இவ்வாறு சொல்லக்கேட்ட வீரவாகுதேவர், வெயர்வையெழக் கோபித்து, 'மாயங்களைச் 
செய்துழலுகின்ற வலியில்லார்போல என்னை நினைத்தாய், இந்த எண்ணத்தை விடு, நாம் சொல்வதைக்கேள்" 
என்று கூறி, "இந்திரனுடைய குறையையும் பிரமா முதலிய தேவர்களுடைய குறையையும் தேவர்களுடைய
 சிறையையும் நீக்கி அவர்களுடைய பழைய முதன்மைகளை உதவும்படி திருச்செந்தி மாநகரத்தில் வந்திருக்கின்ற 
முழுமுதற்கடவுளாகிய சுப்பிரமணியப் பெருமானுக்கு அடியேன் யான். அவ்வறுமுகக் கடவுளுடைய சேனைத் 
தலைவராய் அவருக்குப் பின்னர் வந்துள்ளோர் இலக்கத்தொன்பதின்மர் உளர். அவர்க்குள் யானொருவன்; 
நந்திகணத்தைச் சார்ந்தேன்; பகைவர் புகழுகின்ற வீரவாகு என்னும் பெயருள்ளேன். 

    தாரகன் என்னும் உன்றம்பியையும் கிரவுஞ்சமலையையும் ஓரிறைப்பொழுதினுட் கொன்ற வேற்படையையுடைய 
ஒப்பில்லாத அறுமுகக்கடவுள், சூரபன்மனெனப்படும் உன்னிடத்தில் வைத்த பேரருட்டிறத்தால் தமியேனைத் தூதாக 
அனுப்பியருளினார்" என்றார். அதனைக் கேட்ட சூரபன்மன் "அறுமுகக்கடவுள் நம்மிடத்து உன்னைத் தூதாக விடுத்த காரணம் என்னை? 
சொல்லுதி" என்னலும், வீரவாகுதேவர் சொல்வார்: "இந்திரனை இந்திராணியோடு துரத்தி, பொன்னுலகத்தைக் 
கொளுத்தி, அவன் குமாரனாகிய சயந்தனைப் பல தேவர்களோடு சிறையில் இருத்தினாய் என்று அறுமுகக்கடவுள் 
அறிந்து, அரிபிரமேந்திராதி தேவர்கள் பலமுறை வந்து வேண்ட அவர் குறையை நீக்கும்படி திருவுள்ளங்கொண்டு, 
அளவிறந்த பூதசேனைகளோடு பூமியில்வந்து, உன்றம்பியாகிய தாரகனையும் கிரவுஞ்சத்தையும் சங்கரித்து, 
நேற்றைத் தினமே திருச்செந்தூரில் வீற்றிருந்தார். உன்னையும் விரைந்துவந்து சங்கரிக்கும்படி திருவுளங் கொண்டார். 

    இன்று நும்மிடத்தே கொண்ட அருளினாற் சிலவற்றைச் சொல்லி என்னைத் தூதனுப்பினார். அதனைச் 
சொல்வேன் கேள். பூரண சந்திரனை இராகு விழுங்கினாற்போலத் தேவர்களை விலங்கிட்டுச் சிறைசெய்து வருத்தி, 
அவர்கள் செய்யும் வைதிகாசாரங்களையும் நீக்கினாய். அது அரச தருமமும் அன்று, வீரருடைய செய்கையும் அன்று.
உன் பிதா காசிபமுனிவர். நீ அவருடைய புதல்வன் ஆதலால், தேவரைச் சிறைசெய்வது அறனோ? வைதிகாசாரத்தையும் 
விட்டாய். இழி தொழிலை விரும்பினாய். நீதியோடு உலகத்தைப் பாதுகாப்பதே அரச தருமம். 

    சலந்தராசுரன், அந்தகாசுரன்,முப்புரத்தசுரர் முதலாயினோர் தேவர்களை வருத்தினமையால், 
விரைவில் அழிந்தார். கொடியோய் பொன்னுலகிலுள்ள தேவர்களை வருத்துதல் உனக்கு அழகிதா? சத்தியந் தவறி, 
கொலை களவுகள் செய்து, ஒழுக்கத்தையுடைய மேலோர்களைச் சினந்து, அவர்க்குத் துன்பஞ் செய்யுந் தீயோர் 
சகித்தற்கரிய பழியைச் சுமந்து சுற்றத்தாரோடு, விரைந்து அழிவர்: எழுமையினுந் துன்பத்தில் ஆழ்வர். பிறர்க்குத் 
துன்பஞ் செய்வோர் இம்மையிற் செல்வமெல்லாம் நீங்கித் துயருழந்து இறப்பர் மறுமையில் நெடுங்காலம் நரகத்தில்
 மூழ்குவர்; வருபிறப்பிற் பிறந்து துன்புறுவர்; என்றும் இத்துன்பம் நீங்கார்; 

    அவர் எங்ஙனம் உய்வரோ!  தீமை நன்மைகளைப் பகுத்தறிந்து பிறர்க்கு அவற்றைச் செய்வராயின் அவை 
தமக்கும் உடனே வரும். நீ பேதைமையுடையையாய், தேவர்களைச் சிறைசெய்த பிழையினால் மிகுந்த துன்பத்தை 
அனுபவிப்பதன்றி உனக்கு இறுதியும் வரும். உன்றம்பியாகிய தாரகனுடைய உயிரைக் குடித்த வெற்றி பொருந்திய 
வேற்படை இருந்தது. அதனை விடுத்தால் உன்னையுங் கண்டதுண்டமாக்கும். அறநெறியைக் கருதி விரைந்து 
உன்னைத் தண்டஞ் செய்யாது இத்துணையுந் தாழ்த்தார். கெடுதல் இல்லாத தேவர்களைப் பலயுகங்களாகச் சிறையில் 
இட்டாய். அவர்களை இப்பொழுதே விடுதல் உனக்கு உய்யுந் திறமாம். மறுத்தியாயின் விரைந்து இறத்தலே உனக்கு 
உறுதியாம். முறைமையும் அதுவே. 

    பல ஆண்டுகளாக வேள்விசெய்து யாகாக்கினியில் மூழ்கிய நீ, எம்பெருமான் முன்னாளில் ஈந்தருளிய 
நீண்ட வாழ்நாளையும், வளங்களையும், ஓர் புன்னெறியைச் செய்து இழுக்குதல் தகுதியோ? மிகுந்த வளங்களோடு 
நீயும் உன்கிளையும் உய்யவேண்டுமாயின், தேவர்களுடைய சிறையை விடுத்துத் தருமநெறியால் வாழுதி. இதனைச் 
செய்யா தொழிவாயெனின், அறுமுகக்கடவுள் இங்கே எழுந்தருளி வந்து, உன்னைச் சங்கரிப்பார். இது நிச்சயம். 
என்று இவைகள் எல்லாவற்றையும் சுப்பிரமணியக்கடவுள் உனக்குச் சொல்லும்படி கட்டளையிட்டருளினார்.
நீ தேவர்களுடைய சிறையை நீக்கி, இவ்வளங்களையெல்லாந் தருமநெறியால் அனுபவித்து, நெடுங்காலம் வாழ்வாய்.'' 
என்று வீரவாகுதேவர் வகுத்துக் கூறினார்.

    சூரபன்மன் அவற்றைக் கேட்டலும், கண்கள் பொறியைக் கக்கவும் உயிர்ப்பிற் புகையெழவும், 
கோபம் மூண்டு, கையோடு கையைத்தட்டி மிகவுஞ் சிரித்துச் சொல்வான்: "மேலாகிய ஆயிரத்தெட் 
டண்டங்களையும் வென்று ஏக சக்கராதிபதியாய் இருக்கும் எனக்கு இன்னமும் பல்முளையாத ஒரு 
பாலனாம் இவ்வாறாகிய புத்திகளைச் சொல்வான். வெற்றியில் மேம்பட்ட அவுணராம் வலியிலார், 
மிகவும் எளியராகிய தேவராம் வலியர்;  மழலைச்சொற் பேசுஞ் சிறுவராம் தனிமுதல்வற்கும் 
அமைச்சியல் செய்வார். இந்த உலக வழக்கம் நன்றாயிருந்தது.  தேவர்கள் நம்மவர்களாகிய 
அவுணர் குலத்தை வருத்தி, அவர்க்கு வறுமையைச் செய்தார்கள். ஆதலால் யான் அந்தத் தேவர்களுடைய 
செல்வத்தைக் கெடுத்துக் குற்றேவல்களையுஞ் செய்வித்தேன்; 

    அவர்களுடைய ஒழுக்கத்தையுங் கெடுத்தேன்; சிறையிலும் வைத்தேன்; நங்குடியிலுள்ள முன்னோர் 
செய்த முறையையே யானுஞ் செய்தேன். பிரம கற்பத்திற் சமுத்திரம் உலகங்களையெல்லாம் மூடினும், தேவர்களைச் 
சிறையினின்றும் விடேன், என்னுடைய அண்டத்தினுச்சியில் ஓரிடத்திற் கொண்டுபோய் வைப்பேன். தப்பி ஓடிய 
இந்திரன் முதலிய தேவர்களையும் இந்நகரிற் கொண்டுவந்து சிறைசெய்ய இருந்தேன். ஒப்பற்றவலியை யுடைய 
சூரன் என்று ஓர் பேரைப்படைத்த யான் அகப்பட்டசிறையை விடுவேனா? விடமாட்டேன். 

    வச்சிர யாக்கையையும் வேறுபல வரங்களையும் முன்னொருநாள் தன்றாதை எனக்கீந்த 
முறையைப் பின்பு யாவர் தவிர்ப்பவர். பெரிய போரைச் செய்து வலிமையினால் என்னை வெல்லுந் 
திறத்தினோர் யாவர்? என்றம்பியாகிய தாரகனைக் கொன்ற வேற்படையையுடைய அப்பாலகன் மீது 
போருக்குவர எண்ணினேன். 'பால்மணங்கமழும் வாயையுடைய சிறிய ஒருபாலகனோடு நீ போர்செய்தல் 
பழுதாம்' என்று என்னைத் தடுத்தார்கள். ஆதலால் அதனை யொழிந்தேன். என்றம்பியாகிய தாரகனையும் 
கிரவுஞ்சத்தையும் அவன் சங்கரித்ததை நேற்றைக்கே அறிந்தேன். நாளைக்கே என்மருங்கிலுள்ளோரை 
அப்பாலகன்மேல் அனுப்பி என்பழியையும் வாங்குகின்றேன், காணுதி. 

    எண்ணில்லாத விஷ்ணுக்களும் எண்ணில்லாத இந்திரர்களும் எண்ணில்லாத தேவர்களும் 
அண்டங்க டோறுந்தோறும் இருந்தார். அவரெல்லாரும் என்னோடு போர்செய்ய ஆற்றாராய், என்னைத் துதித்துப் 
போயினார். சிவபெருமானுடைய கண்ணில் நேற்றுவந்த சிறுவனோ என்னெதிர் நிற்பான். இனிப்பலவற்றைச் சொல்லி
என்ன? தேவர்களை விடுகிலேன். நீ பேதையாதலினால் உணர்ச்சி சிறிதுமில்லாத ஓர் குழந்தையின் புன்மொழியைக் 
கேட்டு ஒற்றனாய் வந்தனை. பிழைத்துப் போதி. நின்னுயிரைத் தந்தேன் யான்'' என்று சூரபன்மன் கூறினான்.

    சூரபன்மன் இவைகளைச் சொல்லுதலும், வீரவாகுதேவர் கோபாக்கினி சிந்தவும், மனம் சுடவும், 
உயிர்ப்பிற் புகையும் அக்கினியும் உண்டாகவும், மயிர்ப்புறம்பொடிப்பவும், சிரிப்புண்டாகவும், கண்கள் சிவக்கவும் 
கோபித்து, இவற்றைச் சொல்வார். "உய்யுந் தன்மையை உணராது உழலுகின்ற கீழ்மகனே கேட்பாய். பாம்பையுஞ் 
சந்திரனையும் அணிந்த சடா முடியையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணினின்று 
திருவவதாரஞ் செய்தருளிய நமது தலைவராகிய அறுமுகக்  கடவுளுடைய பெருமையை அறிந்திலை; 

    பாலன் என்று இழித்துச் சொன்னாய். மனுடரைத் தேவர் என்பர். அத்தேவர்களை மும்மூர்த்திகளென்பர். 
 பிரம விஷ்ணுக்களாகிய இருவரையும் பரம்பொருள் என்பர். இந்தச்  சொற்றிறங்களெல்லாம் உபசாரமே; 
உண்மையல்ல. அந்த எளிய உபசாரங்கள் போற் கொள்ளலை. ஞானிகளாலே தியானிக்கப்படுவது. யாவர்க்கும் 
எட்டாதது. தெளிந்தால், சுத்தமாகிய வீடுபேற்றைத் தந்தருளுவது.  உபநிடதத் துணிவாகிய உண்மைப் பொருளாயுள்ளது. 
சொல்வேன் கேள்'' என்று சொல்வார்: 

    அவ்வறுமுகக்கடவுள், திருவுள்ளத்து முகிழ்த்த பெருங்கருணையினால் விஷ்ணுவும் பிரமாவும் 
எண்ணில்லாத காலந் தேடியும் காணமுடியாத சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணினின்று பரஞ்சோதி சொரூபமாய்க் 
குழந்தையாய்த் திருவவதாரஞ் செய்தருளினார். முன்னவர்க்கு முன்னாகுவோர் தமக்கும் முற்பட்டு, தமக்கு 
ஒப்பின்றி ஈசன் என்னும் ஒப்பில்லாத திருநாமத்தைத் தாங்கி, உயிர்க்குயிராய், அருவுருவாய், எவர்க்குந் 
தாயுந் தந்தையுமா யிருக்கின்ற சிவபெருமானே அப்பாலகர். சிவபெருமானே தம்முடைய திருவிளையாடலால் 
ஓர் குழந்தை யாயினார். 

    சூரபன்மனே, குற்றமில்லாத அவருடைய அறுமுகங்களின் உண்மையினால் அதனை அறிகுதி. 
இரத்தினத்தினோடு அதனொளி வேறுபாடில்லாமைபோல, அப்பாலகர் சிவபெருமானோடு வேறுபாடுடையரல்லர் .
பஞ்சபூத அண்டங்களுள்ளே, கீழுள்ளதாகிய பிருதிவியிலுள்ள ஆயிர கோடி அண்டங்களுள், ஆயிரத்தெட்டண்டங்களையும், 
வளங்களையும், படைக்கலங்களையும் முன்னே உனக்குக் கொடுத்த முதற்கடவுளாகிய சிவபெருமானே 
அவ்வறுமுகக்கடவுள் என்றால், தந்த அவர் அவற்றை மாற்றுவது அரிதோ! பேதையே, 'பிருதிவி யண்டங்களிற் 
சிலவற்றை மாத்திரம் பெற்றேம்' என்று எண்ணினை. அப்பெருமானுடைய திருவருளைச் சிறிது பெறுவோர்கள் 
பஞ்சபூத அண்டங்களினும், மற்றை ஆன்ம தத்துவ அண்டங்களினும், வித்தியா தத்துவ அண்டங்களினும், 
இவற்றிற்கெல்லாம் மேலாகிய சிவதத்துவ அண்டங்களினும் அரசியல் புரிவார். எவற்றிற்கும் முதலாகிய 
பிரணவமும், ஸ்ரீபஞ்சாக்ஷரமும், நான்குவேதங்களும், இருபத்தெட்டுச் சிவாகமங்களும், மற்றைக் கலைஞானங்களும், 
இவற்றின் உணர்வாகிய ஞானங்களும் குமாரக் கடவுளுடைய ஒப்பில்லாத திருமேனியாம். 

    எங்கும் வியாபித்திருந்து அருள்செய்கின்ற அறுமுகக்கடவுளுக்கு எங்குந் திருமுகங்கள், எங்குந் திருக்கண்கள், 
எங்குந் திருச்செவிகள், எங்குந் திருக்கரங்கள், எங்குந் திருவடிகள், எங்குந் திருமேனி. பிரமா முதலிய தேவர்களும் 
பொருள்தெரியாது மயங்குவதும், வேதங்களுக் கெல்லாம் முதன்மை பெற்றிருப்பதும் ஆகிய பிரணவமே 
ஒப்பில்லாத சண்முகக் கடவுளுடைய திருமுகங்களுள் ஒன்றாம். அங்ஙனமாயின், அவருடைய பெருமையை யாவர் 
சொல்ல வல்லவர்! சிவபெருமானும் அவர்; விட்டுணுவும் அவர்; பிரமாவும் அவர்; திக்குப் பாலகர்களும் முச்சுடர்களும் 
முனிவர்களும் தேவர்களும் அவர்; இவர்கள் எல்லாருக்கும் மேலோரும் அவர்.  இருவினைகளையும் ஈட்டுகின்ற 
உயிர்கட்கெல்லாம் அவ்வினைப் பயன்களைக் கூட்டுபவர் அவர். 

    அவ்வுயிர்கட்கு இருவினையொப்புண்டாகிய காலத்தில் அவை விரும்பிய மேலாகிய மோக்ஷத்தைக் 
கொடுப்பவர் அவர். காண்பான் காக்ஷி காக்ஷிப்பொருள் காட்டுவான் ஆகிய திறங்கள் எல்லாம் அவர். 
பாலகர் போல்வர். விருத்தர் போல்வர். தினையிலுஞ் சிறியர் போல்வர். பெரியராவர். இவ்வாறு வேறு பல 
திருவுருவங்களைக் கொண்டும் விளங்குவர். ஞானிகளாலும் அறிதற்கரிய கந்தசுவாமியினுடைய திருவிளையாடலை 
யாவர் அறிவார்! சுப்பிரமணியக் கடவுள் சிவபெருமானுடைய திரு விளையாடலின் வடிவமாயிருப்பர். 
அவருடைய ஆணையினாலன்றி ஓரணுவும் அசையாது. அவருடைய ஆற்றலைக் கடந்தவர் யாவர்! 

    சூரபன்மனே நீ அவருடைய மாயையிலகப்பட்டு மிக மயங்கினாய். அக்கடவுள் எல்லா பொருள்களுமாவர், 
அவையல்லவுமாயிருப்பர். அருவமுமாவர், பலவேறு வகைப்பட்ட உருவங்களையுங் கொள்ளுவர். புதியவர் போல்வர், 
பழையவர் போல்வர். அநாதியுமாய்த் தோன்றுவர். குமார சுவாமியினுடைய திருமேனியிலுள்ள ஒரு உரோமத்தில்,
 புன்னுனியில் மழைத்துளிபோல அளவிறந்த அண்டங்கள் தோன்றும். ஆர் அவருடைய திருமேனியின் பெருமையையறிவார்! 
ஆன்ம கோடிகளும் பஞ்சபூதவண்டங்களும் மற்றைத் தத்துவ அண்டங்களும் சிருட்டி காலத்திலே குமாரக் கடவுளுடைய 
திருமேனியிலுள்ள உரோமத்தினின்று பிறக்கும், சங்கார காலத்தில் ஒடுங்கும். அந்தத் திருமேனியில் இவைகள் எல்லாம் 
பொருந்தியிருத்தலை, அவரல்லது வேறு யாவர் கண்டவர்! 

    அக்கடவுள் அதனைத் தேவர்களெல்லாருக்குங் காட்டிடச் சிறிது கண்டார்கள். ஒரு உரோமத்தின் நுனியில் 
எண்ணில்லாத அண்டகோடிகள் கோவைபட்டு அசைய மேருமலையில் முன்னொரு காலத்திலே சுப்பிரமணியக்கடவுள் 
கொண்ட விசுவரூபத்தை, அளவில்லாத பாவங்களைச் செய்கின்ற கொடியோனே நீ கண்டிலை போலும். உன்னுடைய 
ஆயிரத்தெட்டண்டங்களும் அந்நாளில் அக்கடவுள் கொண்ட விசுவரூபத்திலுள்ள ஒரு உரோமத்தி னிருந்ததற்காற்றா. 
இன்று நீ அதனை அறியாது அவரைப் பாலகன் என்று இகழ்ந்தாய். அளவிடப்படாத குணங்களையுடைய முழுமுதற் 
கடவுளாகிய அவர் தேவர்களுடைய சிறையை விடுவிக்கவும், பிரமா முதலாயினோருடைய துயரை நீக்கவும், 
துட்டர்களைச் சங்கரித்து உலகங்களெல்லாவற்றையும் பாதுகாக்கவும், திருவுருக் கொண்டு வந்தார். 

    உன்னுடைய வாழ்நாளையும், வலிமையையும், வரத்தையும், சுற்றத்தையும் புழுதிமலையிற்புகுந்த 
பிரசண்டமாருதம்போல அழிக்கும், எம்பிரானுடைய ஒரு வேற்படை. சூரபன்மனே, நீ இவைகளை அறியாதவனாய், 
ஒப்பில்லாம லிருக்கின்ற ஏகநாயகராகிய அக்கடவுளைப் பாலன் என்று இகழ்ந்தாய். கடினத் தன்மை பொருந்திய 
மனத்தையுடைய கல்வியில்லாத சிறியோய், போக .போக. யாம் இவ்வொரு பிழையையும் பொறுத்தாம். 
எளிய சொற்களினால் எம்பெருமானை இகழ்ந்தாய். கணப்பொழுதினுள் உன்னுடைய வெவ்விய நாவைத் 
துணித்து உயிரை வாங்குவோம்.  நம்மைத் தூதனுப்பிய கடவுளுடைய ஆணையன்று, அதனால் அவற்றைத் தந்தோம். 

    வேற்படைக்குணவா யிருப்பவனே, இற்றைநாள் உய்குதி. இன்னும் ஒருறுதியைச் சொல்வோம்: நீயும் 
உன்கிளையும் அழியாமல் உய்யவேண்டுமானால், தேவர்களுடைய சிறையை விடுக்குதி; போரைத் தவிருதி; 
சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடித் தாமரைகளைப் புகலிடமென் றெண்ணியிருக்குதி" என்றிவ்வாறு 
சுப்பிரமணியக் கடவுளுடைய பெருமைகள் பற்பலவற்றை வீரவாகுதேவர் எடுத்துக் கூறினார். புன்றொழிலையுடைய 
கீழோனாகிய சூரபன்மன் அவற்றைக்கேட்டு, கோபித்துப் பெருமூச்சுவிட்டு, "பல்லு முளைக்காத சிறிய பாலகன் 
விடுத்த தூதுவன் என்றெண்ணி உன்னுயிரை விடுத்தேன். இவ்விடத்தை விட்டுப் போகாமல் இன்னும் அவனுடைய 
பெருமையைச் சொல்லுகின்றாய்; உன்னுடைய வீரத்தையுஞ் சொல்லுகின்றாய். எனது வெவ்விய சினத்தை 
எண்ணுகின்றிலை. கொஞ்சு மொழிகளையுடைய அந்தப் பாலகன் அழியாத மேலோராகிய கடவுளாயினுமாகுக. 

    பலவண்டங்களினுமுள்ள தேவர்கள் எல்லாரையும் வென்ற யான் அவனுக்கஞ்சுவேனோ ! தேவர்களுடைய 
சிறையைக்  கனவிலும் விட நினையேன். எனக்கெதிரிலிருந்து பல இறுமாப்பான வார்த்தைகளைப் பேசினாய். 
அவைகளெல்லாவற்றையும் ஒரு கணப்பொழுதிற் காண்பேன்" என்று சொல்லி, தன்னருகில் நின்ற வீரர்களுள் ஆயிரம் பேரை 
நோக்கி, "தூதுவனைக் கொல்லுதல் பழி. இவனை விரைவிற் பிடித்துச் சிறையிடுதிர்" என்றான். என்னலும், அவ்வாயிரவரும் 
நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து, சிங்காசனத்தில் இருக்கின்ற வீரவாகுதேவரைப் பிடிக்கும்படி சூழ்ந்தார்கள். 

    அவர் விரைவில் எழுந்து, அவர்களுடைய ஆயிரங் குடுமிகளையும் ஒருகையாற் பிடித்து, சூரபன்மன் இருக்கின்ற 
அவைக்களத்தில் அடித்துக்கொன்று, மார்புகளும் புயங்களும் ஒடிந்து இரத்தம் வடிகின்ற அவர்களுடைய உடல்களைச்
 சூரபன்மனுக்கு முன்னே எறிந்து, அவனை நோக்கி, "எம்பெருமானுடைய வேற்படை இனி உன்னைச் சங்கரித்தல் 
நிச்சயம். நீ இறக்குமுன் உன்னுடைய ஐம்புலன்களும் விரும்புகின்ற பல போகங்களையும் விரைவாக வேண்டியமட்டும் 
அனுபவித்து மனத்தெளிவாயிரு. நான் போவேன்" என்று கூறி, அச்சபையை நீங்கிப் போயினார். அவர் வீற்றிருந்த 
சிங்காசனமும் மாயம் என்று சொல்லும்படி விரைவில் எழுந்து ஆகாய மார்க்கமாக மறைந்து போயது.

            திருச்சிற்றம்பலம்.

            சதமுகன் வதைப்படலம்.

    வீரவாகுதேவர் ஆயிரம் அவுண வீரர்களைக் கொன்று சூரபன்மனுடைய அவைக்களத்தை நீங்கிச் 
செல்லும்பொழுது, அவன் தன்பக்கத்திலுள்ள சதமுகனென்பானை நோக்கி, "இவன் அறுமுகனுடைய ஆள். 
இங்கே என்னுடைய வெற்றி முழுதையும் இகழ்ந்து, ஆயிரம் வீரர்களைக் கொன்று வெற்றிப்பாடுடையர்கள் 
போலப் பல மேன்மைகளைச் சொல்லி, தான் இருந்த சிங்காசனமும் வானிற் செல்லப் போவான். நம்முடைய 
வீரரைக் கொன்று போவானேயெனினும், தூதனோடு போர்செய்து அவனைக் கொல்லுதல் பழியாகும். 
ஆதலால், அவனுடைய வலியை அடக்கி, விரைவிற் கட்டிக்கொண்டு வருவாய்" என்று கூறினான். 

    சதமுகன் சூரனுடைய கால்களை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு, இலக்கம் வீரர்கள் தன்பக்கத்தில் வர, 
எண்ணில்லாத படைக்கலங்களை ஏந்தி, வடவாமுகாக்கினியோடு பிரசண்டமாருதம் சேர்ந்து செல்லுவதுபோல 
வேகத்தோடு சென்று, வீரவாகுதேவரை அடைந்து, "பல காவல்களை நீங்கி வருகின்ற கள்வனே, உலகத்தாரெல்லாராலும் 
புகழப்படும் எங்களரசனுக்கு முன் வந்திருந்து அவனை இகழ்ந்து சில வீரர்களுடைய உயிரைக் கவர்ந்து தப்பிப்போவ 
தெங்ஙனம்! நில். உனது போர் வலியை அழிப்பேன். கள்ள வேடங்கொண்டு ஓடிப்போதல் இயலாது. எட்டுத் திக்கினுள் 
நீ எங்கே ஓடிப்போனாலும் விடுவேனோ?" என்று சொல்லிக்கொண்டு பின்புறத்திற் போய்க் கிட்டினான். 

    வீரவாகுதேவர் அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, எதிர்த்து, சூரபன்மன், சுப்பிர மணியக் கடவுளுடைய 
திருவாக்குக்களை ஏற்றுக் கொள்ளாது இகழ்ந்து என்னைப் பிடிக்கும்படி ஆயிரம் வீரர்களை விடுத்தான். யான் அவர்களைக் 
கொன்று சபையை நீங்கி வரும்பொழுது பின்னும் இவ்வொருவீரனை என் மேல் அனுப்பினான். இனி இவனுடைய 
உயிரைக் கொன்று இந்நகரத்தையும் அழித்துச் செல்வேன்' என்றிவ்வாறு கருதி, சுப்பிரமணியக் கடவுளுடைய 
திருவடிகளைத் தியானித்து, சதமுகன் என்னும் காவலாளனை நோக்கி, "போர்செய்ய நினைத்து அறைகூவினாய். 
விரைந்து படையோடு வருதி" என்று போருக்கு அழைத்தார்.

    அப்பொழுது, சதமுகனைச் சூழ்ந்து இலக்கம்வீரரும் அவரை எதிர்த்து, பாணங்களும் வேற்படைகளும் 
சக்கரங்களும் முதலியவற்றை விடுத்தார்கள். அவர்கள் விடுத்த படைகள் துணிபட்டும் நெரிந்தும் எரிந்தும் துகளாயும் 
போயின. வீரவாகுதேவர் அவர்களுடைய செயலை நோக்கி, இருபதினாயிரம் முடிகளைக் கொண்ட ஓர் சூளிகையை 
விரைவிற் பிடுங்கி, அவர்கள் மேல் எறிந்தார். அச்சூளிகை மேருமலைபோல மேலேசென்று, இலக்கம்வீரர்கண்மீதும் 
பட்டு அவர்களுடைய உடம்பு முழுதையும் அழித்துப் பூமியில் வீழ்ந்து பிதிர்பட்டது. இலக்கம் வீரர்களையும் 
சூளிகையையும் வீரவாகு தேவர் நொடிப்பொழுதில் அழித்து நிற்றலைச் சதமுகன் பார்த்து, கலக்கமடைந்து,தன் 
கிளைஞரைக் காணாதவனாய் வருந்தி, பின் ஒருவாறு தெளிந்து, இருப்புலக்கை சூலம் வேல் முதலாகிய 
படைக்கலங்களை அவர்மீது விடுத்தான்.

     அவைகள் தம்மீது வருதலும், வீரவாகுதேவர் கோபங்கொண்டு, மலைபோன்ற ஒரு சிகரத்தைப் 
பிடுங்கி எறிந்தார். அவன் வில்லை வளைத்து ஆயிரம்பாணங்களைச் செலுத்தி அச்சிகரியை அழித்து, 
வீரவாகுதேவருடைய மார்பில் ஆயிரம் பாணங்களை விடுத்தான். அவர் போய் அவன் வில்லைப்பறித்து முறித்தெறிந்தார். 
அவன் ''இவனைப் பிடித்தற்கு இதுவே சமயம்' என்று எண்ணி, நூறுகைகளை நீட்டி அவரைப் பிடித்தான். அவர் அவனைப் 
புயத்தினாலே தாக்கி, பூமியில் வீழ்த்தி, அவன் பதைபதைத்தெழும்பொழுது பாதத்தினாலுதைத்து, வாய்கடோறும் 
இரத்தம் வடியும்படி மார்பில் ஒரு பாதத்தினால் அழுத்தி, மற்றொரு பாதத்தினாலே நூறு சிரங்களையும் இடறி 
உருட்டிக்கொன்று, அதன்பின்னும் மிகுந்த கோபங் கொண்டு, "அறுமுகப் பெருமானுடைய உறுதிமொழிகளை 
யிகழ்ந்த சூரபன்மன் இருக்கும் அவைக்களத்தை முன்பு அழித்துப் பின்பு இந்நகரத்தை அழிப்பேன்" என்று நினைந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            காவலாளர் வதைப்படலம்.

    வீரவாகுதேவர் முருகக்கடவுளுடைய திருவடிகளைத் தியானித்து, அவருடைய திருவருளினாலே 
புயங்கள் திசையை யளக்கவும், முடி வானுலகத்தை அளக்கவும், பாதம் பூவுலகத்தை அளக்கவும் மிகப் பெரியதோருருவங் 
கொண்டு நின்றார். அப்பாரத்தைத் தாங்கலாற்றாது. ஆதிசேஷன் முதலிய நாகங்களும் ஆதிகூர்மமும் பயந்தன; 
வீரமகேந்திரம் நடுக்குற்றது. அது சூரபன்மனுடைய ஆணையினால் இலங்கைமலை போலக் கடலில் ஆழ்ந்திருந்தது. 
அவர் பாதங்களினால் ஊன்றிய இடந்தோறும் நிலம் வெடிக்க அவ்வப்புழைகள்தோறுந் தோன்றுகின்ற சமுத்திரஜலம் 
சூரபன்மனுடைய கோயிலை வளைந்து, அவனுடைய அத்தாணி மண்டபத்திலும்போய், வீதியிற்பரந்து,யானை 
குதிரை தேர் காலாள் ஆகிய படைகளையும் பலமாளிகைகளையும் வாரிக்கொண்டு மீட்டும் கடலிற்போய்ப் 
பாய்ந்தது. வீரவாகு தேவருடைய பெரிய உருவத்தைக் கண்டவர்கள் யாவரும் கையை உதறி'"அம்மவோ" என்று 
அச்சமுற்று ஓடினார்கள்.

    சூரபன்மனுடைய கோயிலைக் காவல்செய்கின்ற ஐம்பது வெள்ளம் அவுணர்கள் அவரைக் கண்டு, 
"ஓ ஈதோர்வஞ்சன் இங்கே வந்தான்." என்று பயந்து கூச்சலிட்டுத் தம்முட்கூடி, "நாம் இவனோடு போர் செய்யாதொழியில் 
நம்மரசனே நம்மைக் கொல்வான், இது நிச்சயம்'' என்றெண்ணி, அவரோடு போர் செய்யும்படி வந்து நெருங்கி, 
எழு, தோமரம், பிண்டிபாலம், தண்டம் முதலாகிய படைக்கலங்களை வீசி, ஆரவாரித்தார்கள். அவர்கள் தம்மைச் 
சூழ்ந்து பொருவதை வீரவாகுதேவர் பார்த்து, ஆயிர கோடி இடியொலி போலப் புயத்திற்றட்டி ஆரவாரித்தார். 
அவ்வொலியைக் கேட்ட அவுணப்படைகள் இடியேறுண்ட அசுணப்புட்போன்றனவாய்க் கலங்கி அறிவழிந்தன. 

    அவுணவீரர்கள் வீரவாகுதேவர்மீது படைக்கலங்களை மழைபோல விடுத்தார்கள். அவைகள் வந்து படுதலும், 
அவர் செந்நிறமான விழுது தொங்க நிற்கின்ற ஆலமரம்போல இரத்தம் வடியநின்று அக்கினியைப்போலக் கோபித்து, 
"மானத்தையுடைய வீரர்கள் மேலன்றி வாட்படையை எடேன்'' என்று, அவுணசேனைகளுட் சிலரை மிதித்தும் சிலரைக் 
கொதித்தும், சிலரை நசுக்கியும், சிலரைப் புதைத்தும், சிலரைத் தகர்த்தும், சிலரைத் துவைத்தும், சிலரை உதைத்தும், 
சிலரைக் குதித்தும், சிலரை உருட்டியும், சிலரைப் புரட்டியும், சிலரைத் தலையை நெரித்தும், சிலரைப் புயத்தை ஒடித்தும், 
சிலரைக் கரத்தை முரித்தும், சிலரைக் கழுத்தைத் திருகியும், இன்னும் இவைபோன்ற பலகொடுஞ் செயல்களைச் 
செய்தும், பெருத்தும், சிறுத்தும், வேறுபல உருவங்கொண்டும், சூரபன்மனுடைய கோயிலைக் காவல்செய்து நின்ற 
ஐம்பதுவெள்ளஞ் சேனைகளையும் விரைவில் அழித்தார். மயில் அன்னம் புறா முதலிய பக்ஷிகள் வசிக்கும் மாடங்களின் 
மீது பருந்து காகம் பிசாசு முதலியவைகள் இறந்த அவுணர்களுடைய இரத்தத்தையும் மாமிசத்தையும் உண்ணும்படி 
வந்திருந்தன. இறந்த வீரர்களுடைய உடம்பிலுள்ள சத்த தாதுக்களும் வேறுபாடு தெரியாவண்ணஞ் சேறாய் ஒன்றுபட்டன.

            திருச்சிற்றம்பலம்.

            நகரழிபடலம்.

    ஐம்பது அவுணவெள்ளங்களை அழித்த வீரவாகுதேவர், ஐஞ்ஞூறு யோசனை அகன்று ஆயிரம் யோசனை 
உயர்ந்து ஓரிலக்கஞ் சிகரங்களைத் தாங்கி மேருமலை போலச் சூரபன்மனுடையகோயிலின் முன்னிற்கின்ற 
ஒரு வேரத்தைக்கண்டு, அதனைப் பறித்து ஒருகரத்திலேந்தி, சூரபன்மனுடைய அவைக்களத்தில் வீசி,இடியும் 
அஞ்ச ஆரவாரித்தார். அவ்வொலி அத்தாணி மண்டபத்திலிருப்பவர்களுடைய செவியிற் புகுமுன், அவர் எறிந்த 
வேரம் அம்மண்டபத்தில் வீழ்ந்து, சூரபன்மனும் புதல்வர்களும் வேறுசிலரும் இருக்கின்ற சிற்சில இடங்களொழிய 
அச்சபை முழுவதையும் அழித்தது. அச் சபையின்மேலிடம் சிதைந்தது; சுவர்கள் இடிந்தன; உத்திரங்கள் பொடிந்தன; 
போதிகைகள் பூழியாயின; தூண்கள் முரிந்தன; கபோதங்கள் வீழ்ந்தன; அழகழிந்தது. இவ்வாறு அத்தாணி மண்டபம் 
தகர்தலும், சூரனைச் சூழ்ந்த பரிசனங்களுட் சிலர் ஓடினர்; 

    சிலர் உடம்புகளில் ஊறுபாடுற்றனர்; சிலர் இறந்தனர்; சிலர்மிக மெலிந்து புலம்பலுற்றார். அழிந்த 
அச்சபையிலிருந்து எழுந்த பொற்றுகள் திக்குக்களிலும் பூமியிலும் வானுலகத்திலுஞ் செறிந்தன. இறவாமல் 
எஞ்சியிருந்த அவுணர்கள் கூட்டங் குலைந்து ஓடினார். தக்கனைப் போல அறிவில்லாத சூரன் இவற்றைக்கண்டு, 
வீரவாகு தேவருடைய வலிமையை நோக்கி, ஆயிரம் வடவாமுகாக்கினிபோலக் கோபித்து, தன்னயலில்நின்ற 
ஆயிரந்தோள்களையும் ஐஞ்ஞூறு முகங்களையுமுடைய ஆயிரம் அவுணவீரரைப்பார்த்து, "அறுமுகனுடைய தூதுவன் 
மிகவுயர்ந்த ஓர் வேரத்தைப் பறித்தெறிந்தான். அதனால் அத்தாணிமண்டபம் சிறிதிடமொழியத் தகர்ந்து வீழ்ந்தது. 
எனக்கிதன்மேலும் பழிப்புண்டோ! என்புகழும் அழிந்தது. ஒற்றுவனைக் கொல்லுதல் வெற்றியன்று. அவனைக் 
கொல்லாமற் போர் செய்தாயினும், தப்பிப் போகாவண்ணம் பிடித்து என்முன் கொண்டு வருதிர். அவனுடம்பில் 
ஊறு செய்து தேவர்களோடு சிறையிடுவேன்" என்றான்.

    ஆயிரம் அவுணர்களும் அதனைக் கேட்டு, "அரசனே இதனைக் கேட்டருள். முன்னமே தூதுவனுடைய 
இரத்தத்தை உயிரோடு பருகுதற்கென்றிருந்தோம். உன்னுடைய ஆணையை எதிர்பார்த்து இத்துணைப் பொழுதுந் 
தாழ்த்தோம். இனி அதனைச் செய்வோம்" என்று வணங்கி, சூரபன்மன் இனிதென்று விடுப்பச் சென்றார்கள். 
அவர்களுக்கு முன்னின்ற வீரவாகுதேவர், "சூரபன்மனுடைய நகரிலுள்ள வளங்களைத் தொலைத்து அவனைச் 
சூழ்ந்தவர்களுடைய இருக்கைகளையும் அழிப்பேன்" என்று எண்ணி, சோலை, செய்குன்று, தெற்றி, மண்டபம், 
கோபுரம், சூளிகை, கல்விபயில்களம் முதலியவற்றைப் பிடுங்கி எறிந்தும், பந்திகளிலும் சாலைகளிலும் 
நிற்கின்ற அளவில்லாத யானை குதிரை தேர்களை அள்ளியள்ளித் திசைகள்தோறும் வீசியும், மதில்களை 
உதைத்து வீழ்த்தியும், சூரபன்மனுடைய கோயிலை இவ்வாறு அழித்தபின், அதனைச் சூழ்ந்த அகழியையுந் தூர்த்தார். 

    சூரபன்மனுடைய கோயிலினின்றெறிந்த சிகரங்கள் சூளிகைகள் சோலைகள் முதலிய எல்லாம் ஆகாய 
மெங்குஞ் செறிந்து, தேவர்களுடைய பதங்களை அழித்து, தேவகங்கையைத் தூர்த்தன. அவைகள் மேலே வரக்கண்ட 
தேவர்கள் ஏங்கி, கூட்டங் குலைந்து ஓடினார்கள். திசைகளிலும் சமுத்திரத்திலும் மலைகளிலும் பிற இடங்களிலும் 
அவைகள் வீழ அங்கங்கே நெருங்கிய உயிர்கள் அஞ்சி ஓடின. சக்கரவாளகிரி மேருமலை முதலாகிய மலைகள் 
நிலைகுலைந்தன. திக்கு யானைகள் ஓடின. பூமியிற் சிந்தினவை யொழிந்த மற்றவைகளெல்லாம், எண்பதினாயிரம் 
யோசனையுடையதாகிய சூரபன்மனுடைய மகேந்திரபுரியில் இடியேறுபோல வீழ்ந்தன. அதனால் மாடங்கள் சிகரங்கள் 
வேரங்கள் முதலாகிய எல்லாம் அழிந்தன . 

    இவ்வாறு அந்நகரம் அழிதலும், ஆண்டுள்ள சனங்கள் உகமுடிவில் அண்டகூடம் உடைய இறக்கின்ற ஆன்ம 
கோடிகள் அரற்றுமாறுபோல அரற்றின. யானைகள் துதிக்கையை எடுத்துக் கதறியும் கோடு சிதற இரத்தம் உகுத்தும் 
வீழ்ந்தன. தேர்கள் கொடிக ளிற்றும் உருளை முதலிய உறுப்புக்கள் சிதைந்தும் பொடியாயின. குதிரைகள் கலங்கி 
உடல் நெரிந்து இரத்தம் வடியத் திசைகளிற் சிதறியோடின. அந்நகரத்துச் சனங்களிற் சிலர் யானைக்காலிலும் 
குதிரைக் காலிலும் அகப்பட்டு மூளைசிந்த இறந்தனர். சிலர் தோள் பிடர் கால் முதலிய அவயவங்கள் இழந்து 
வருத்தமுற்றார். 

    சிலர் இஃதென்னை என்று வெளியிடத்தில் வரநினைத்து, முற்றத்தில் வருமுன் இறந்தார். சிலர் ஒதுக்கிட 
மின்மையினால் நிலவறைக்குட் புகுந்து வருந்தினார். சிலர் மனைவி மக்களையும் தந்தை தாயர்களையும் தமது 
கையிற் பற்றிக்கொண்டு, மாளிகையினின்று வீதியில் வந்து, அஞ்சி நின்றார். சிலர் பயந்துபோய்க் கடலில் வீழ்ந்திறந்தார். 
வீரமகேந்திரத்துச் சனங்கள் இங்ஙனம் பலவாறாக அழிந்தபொழுது, இரங்கும் ஒலி எழுகடலொலியை வென்றது. 
இறந்த உயிர்களுடைய இரத்த வெள்ளத்தால் அந்நகர மெங்குஞ் சேறாகியது. கீர்த்தி மிகுந்த வீரமகேந்திரபுரம் 
இவ்வாறு அழிந்து பழைய வளங்களெல்லாம் நீங்கியது. தேவர்களெல்லாரையும் வருத்திய சூரபன்மனுடைய 
வளம் நன்றாயிருக்குமோ!

            திருச்சிற்றம்பலம்.

            சகத்திரவாகுகள் வதைப்படலம்.

    சூரபன்மனுடைய நகரம் இவ்வாறு அழிந்தபொழுது, நஞ்சுபோலும் உடம்பையும் வடவாமுகாக்கினி போலுங் 
குடுமியையும், சுடுகாடுபோலும் வாயினையும், ஐந்நூறு தலைகளையும், பற்பல படைகளையேந்திய ஆயிரங் கைகளையும், 
அண்டம்போல அகன்ற வயிற்றினையும் உடைய சகத்திரவாகுகள் இடியேறு போல ஆர்த்து, "இரண்டு கைகளையும் 
ஒரு முகத்தையுமுடைய ஒருதேவனை வெல்லுதற்கு, ஆயிரங் கைகளையும் ஐஞ்ஞூறு தலைகளையுமுடைய நாம் ஆயிரவர் 
செல்லுதல் பழி" என்று நினைத்து மனந்தளர்ந்து, "முன் மாயையினால் மறைந்து வந்தவன், ஆதலால் இவன் விரைவில் 
ஆகாயத்தில் மறைந்து விடுவான், இது பொய்யல்ல, விரைவிற் செல்லுமின் செல்லுமின்" என்று சொல்லிக்கொண்டு, 
வீரவாகுதேவரால் எறியப்பட்டு வீழ்கின்ற வேரம் மாளிகை முதலியவைகளைக் கைகளாலேற்றுத் துகள்செய்து, 
உடம்பு வியர்ப்பவும், கண்கள் அக்கினி சிந்தவும்,ஓடி வந்து, வீரவாகுதேவரை எதிர்த்து ஆரவாரித்தார்கள். 

    அவ்வோசை வீரவாகுதேவருடைய செவியிற் புகுதலும், முப்புரங்களையெரித்த சிவபெருமானைப் 
போலச் சிறிது நகைத்து, ஒரு மராமரத்தைப் பறித்துப் பன்முறை சுழற்றினார். சகத்திரவாகுகள் அவரைச் சூழ்ந்து, 
தோமரம் குலிசம் முதலாகிய அனேகம் படைகளை விடுத்தார்கள். அவைகளை வீரவாகுதேவர் மரா மரத்தினால் 
அடித்துப் பொடிபடுத்தினார். சகத்திரவாகுகள் வீரவாகுதேவரைக் கிட்டி, பின்னும் போர்புரியும்படி முயன்றனர். 
அவர் மரா மரத்தினால் புயம் சிரம் கபோலம் மார்பு முதலாகிய அங்கங்கள் சிதையும்படி அடித்து, அவர்களெல்லாரையும் 
கொன்றார். அவர்களுடைய உடம்பினின்று பாய்ந்த இரத்தவெள்ளம் அந்நகரினுள்ள வளங்களை வாரிக்கொண்டு 
சமுத்திரத்திற் பாய்ந்து பூமியிலும் மடுத்தது. வீரவாகுதேவர் தினைப்பொழுதினுள்ளே சகத்திரவாகுகள் எல்லாரையும் 
அழித்து, அப்போர்க் களத்திலே தனியே நின்றார்.

            திருச்சிற்றம்பலம்.

            வச்சிரவாகு வதைப்படலம்.

    ஆகாயத்தில் வந்து போரைப் பார்த்து நின்ற சூரபன்மனுடைய தூதுவர்கள் ஓடிப்போய், "மகாராசனே, 
உன்புடையிலுள்ள சகத்திரவாகுகள் சென்று தூதுவனோடு சிலபோர்களைச் செய்தார்கள். அவன் அதனைக்கண்டு, 
ஒரு மரா மரத்தைப் பறித்து அடித்தான்; எல்லாரும் இறந்து வீழ்ந்தார்கள். இதுவே நிகழ்ந்தவாறு'' என்றார்கள். 
அதனைக் கேட்ட சூரபன்மன் வடவாமுகாக்கினிபோலக் கோபித்து, பெருமிதமும் ஆணையும் வலிமையும் நீங்கிப் 
பெருந்துயருற்று, "உமாதேவி பெற்ற ஒரு சிறுபாலகன் அனுப்பிய தூதுவனொருவன் நம்முன்வந்து, அவமதிசெய்து 
சென்று, போரிலே எல்லாரையுங் கொன்று நின்று, இன்னமும் அகலுகின்றிலன். நமது வெற்றியும் நன்று நன்று' 
என்று சிரித்தான்.

    பத்துச்சிரங்களையுடைய வச்சிரவாகுவென்னும் இளைய குமாரன் சூரபன்மனுடைய கோபத்தைக் 
கண்டு, எழுந்து சென்று கால்களை வணங்கி, "பிதாவே, எளிய தூதுவன் பொருட்டு இவ்வாறு சொல்லுதல் 
உனக்குத் தகுமோ ! இறைப்பொழுது இங்கே இருக்குதி. யான் சென்று அவனுடைய வலிமையை அழித்து, 
அகப்படுத்திக் கொண்டுவந்து தருவேன். அதனைக் காணுதி'' என்று கூறினான். சூரபன்மன் மகிழ்ந்து,
 ''நீ அவ்வாறே செய்குதி" என்று சொல்லி வீரவாகுதேவரோடு போருக்குப் போம்படி பணித்தான்.

    வச்சிரவாகு விடைபெற்று, பிதாவினுடைய கால்களை வணங்கி, ஆயுதசாலையுட்போய், 
கவசத்தையிட்டு, வீரபட்டத்தை அணிந்து, விரற்புட்டிலைப்பூண்டு, அப்பறாத்தூணியைக் கட்டி, 
வில்முதலாகிய பிற படைக்கலங்களை யேந்தி, தும்பை மாலையைச்சூடி, போர்க்கோலம் முழுதுங் கொண்டு, 
ஏவலாளரை நோக்கி, "நம்முடைய சேனாவெள்ளங்களுட் சிலவற்றைப் போருக்குச் செல்லுதற்காக 
இந்தக் கணமே அழையுங்கள்'' என்றான். அவர்கள் அவ்வாறே செய்குதுமென்று போயினார். பின்னர் 
வச்சிரவாகு தன்னிழல்போல நீங்காத தோழர்களைப் பார்த்து, "அறுமுகன் விடுத்த தூதுவனைப் 
போரில் வென்று கயிற்றினாற் கட்டி ஓரிமைப்பொழுதினுள் என்பிதாவுக்கு முன்னரே கொண்டுவருவேன். 
நீவிரனைவரும் போர்க்கோலங் கொள்ளுதிர்'' என்றான். 

    தோழர்களும் மற்றை வீரர்களும் விரைந்து போர்க்கோலங் கொண்டு வந்து கூடினார்கள். வச்சிரவாகு 
ஆயிரங்குதிரை பூண்ட ஓர்தேரின் மீதேறினான். சேனாபதிகளுடைய புதல்வர்களும் மந்திரி மார்களுடைய 
புதல்வர்களுமாகிய அத்தோழர்களும் விரைந்து தேரின்மேலேறி வந்து சூழ்ந்தார்கள். ஏவலாளர்கள் யானை 
மேற்கொண்டு பறைசாற்றிச் சொல்லிய பணியைக் கேட்டு, ஐஞ்ஞூறு வெள்ளந்தேர்களும், ஐஞ்ஞூறு வெள்ளம் 
யானைகளும், ஆயிரம்வெள்ளங் குதிரைகளும், இரண்டாயிரம் வெள்ளங் காலாட்களும், கடல்போல ஒலித்து, 
வச்சிரவாகுவை வந்து சேர்ந்தன. 

    துந்துபி முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. இவ்வாறாகிய போர்க்குரிய அணிகளோடு வச்சிரவாகு 
விரைந்து சென்றான். அவனுடைய தேரில் பேய்கள் சூழ்ந்து சண்டையிட்டன; காகமும் கழுகும் பருந்தும் கூகையும் 
கூடி இரங்கின; அவன் கையிற்பிடித்த வில் வீழ்ந்தது; அப்பறாத்தூணி அறுந்து வீழ்ந்தது; இடக்கண்களும் 
இடப்புயங்களும் துடித்தன; அவனுடைய தேர்க்கொடிகள் அறுந்து வீழ்ந்தன; ஆகாயத்தில் முகிலின்றி 
இடியொலியுண்டாயின. இவ்வாறு அனேக துச்சகுனங்கள் நிகழ்ந்தன. வச்சிரவாகு இவைகளொன்றையுஞ் 
சிந்தியாதவனாய், மற்றோர் அப்பறாத்தூணியையும் வில்லையும் எடுத்துக்கொண்டு, சேனாவெள்ளங்களோடு 
புறப்பட்டு, வீரவாகுதேவர் நின்ற போர்க்களத்தை அணுகினான்.

    அவன் வருதலை வீரவாகுதேவர் கண்டு, 'இங்கு வருபவன் சூரபன்மன் அல்லன். அவன் புதல்வர்களில் 
ஒருவனாம். இவனைச் சேனைகளோடு அழித்து, இற்றை மாலைக் காலத்தின் முன் எம்பெருமானுடைய திருவடிகளைத் 
தரிசிக்கும்படி விரைந்து போவேன். அங்ஙனம் போகாதொழியில் யான் அறுமுகப் பெருமானுடைய தூதுவனாவேனோ?" 
என்று சொல்லி, முருகக் கடவுளுடைய திருவடித் தாமரைகளை மனசினால் வணங்கித் துதித்து, போர்செய்ய முயன்று, 
அண்டமுந் திசையும் வானுங் குலுங்கத் தோளைத்தட்டி ஆரவாரித்தார். கச ரத துரகங்களில் இருக்கின்ற அவுணர்களும் 
பதாதிகளாகிய அவுணர்களும் அவ்வொலியைக் கேட்டு, வியர்த்து மனம் வேறுபட்டு அஞ்சி, உலகங்களும் உயிர்களும் 
அழிய ஊழிகாலத்திற் றனியே நின்று ஆர்க்கும் உருத்திர மூர்த்தியினுடைய ஒலியோ! அன்றிப் பெரும்புறக்கடலின் 
ஒலியோ! ஏழ்கடலொலியோ! அண்டங்கள் பிளந்த ஒலியோ! இவ்வொலி' என்று ஐயமுற்றார். 

    அவ்வொலி வச்சிரவாகுவினுடைய இருபது செவிகளிலும் மலைமுழையிற் புகுந்த இடியேறுபோலப் 
புகுதலும், மனநடுங்கி, "பதினாலுலகங்களிலும் இன்றுகாறும் இப்பேரொலி கேட்டதில்லை. இவ்வொலியாதோ! அறிகுதிர்"
என்று ஏவலாளர்களுக்குச் சொல்ல, தேர்ப்பாகனாகிய விசயன் என்பவன் வணங்கி, "நம்மரசகுமரனே, தேர்ப்பாகன் 
சொல்லென்று என்சொல்லை இகழாது உறுதியாகக் கொள். நீ சேனைகளோடு போர் செய்ய வருவதைப்பார்த்த 
தூதுவன் போரைவிரும்பி ஆர்க்கும் ஒலி இது. இதனை இனிக் காணுதி" என்று கூறினான். அச்சொற் செவியில் 
நுழையுமுன் வச்சிரவாகு அக்கினி பொங்கச் சிரித்துப் பெருமூச்சுவிட்டு உரப்பி, "யான்போய் கணப்பொழுதினுள் 
அவனுடைய போர்வலியைக் கெடுத்துப் பற்றிக்கொண்டு வந்து என்பிதாவுக்கு முன்னே விடுவேன்" என்று சொல்லி, 
போருக்குப் போயினான். 

    அவனுக்கு முன்சென்ற அவுணவீரர்கள் வீரவாகு தேவரைச் சூழ்ந்து ஆரவாரித்து, விற்களை வளைத்து, 
அம்புகளையெய்தும், முசலம் கலப்பை தண்டம் சூலம் முதலாகிய படைக்கலங்களை விடுத்தும் போர்செய்தார்கள். 
அப்படைகள் வீரவாகுதேவருடைய செவ்வொளி பொருந்திய திருமேனியில் வந்துபடுதலும், விடியற்காலத்தில் 
உதிக்கும் சூரியனிடத்தினின்று கிரணங்கள் வருதல்போல இரத்தம் உண்டாயிற்று. வீரவாகுதேவர் மிகக் 
கோபங்கொண்டு, சில அவுணர்களுடைய குடுமியைப் பற்றிப் பூமியிலும் மலைகளிலும் அடித்தும், சிலருடைய 
படைக்கலங்களைப் பறித்து நெருப்பெழப் பிசைந்தும், சிலரைப் பாதங்களாற் றேய்த்தும், யானை குதிரை தேர்களை 
உதைத்தும், சிலரைக் கிழித்தும், சிலரைத் துவைத்தும், சிலரை அரைத்தும், சிலரை மரா மரத்தால் அடித்தும், 
சிலருடைய தலைகளின்மீது குதித்தும், நால்வகைச் சேனைகளையும் இவ்வாறே அழித்தார். 

    அப்பொழுது, வச்சிரவாகுவின் பக்கத்தில் வந்த அவனுடைய தோழர்கள் சதுரங்கசேனைகளோடு 
வீரவாகுதேவரைச் சூழ்ந்து,பல படைக்கலங்களினாற் போர் செய்தார்கள். அவர் தமது கரத்திலேந்திய மராமரத்
தண்டினால் அந்த வீரர்கள் படைகளோடு துகள்பட்டழியும்படி அடித்துத் திரிந்தார். யானைகள் மத்தகம் கால் 
முதலிய அவயவங்கள் சிதைந்தும், குதிரைகள் தலைமுதலிய அவயவங்கள் அழிந்தும், தேர்கள் தட்டு முதலாகிய 
உறுப்புக்கள் ஒடிந்தும் அழிந்தன. அவுணர்கள் வில் முதலாகிய படைகள் இழந்தும், சிரமுதலிய அங்கங்கள் 
சிதைந்தும் அழிந்தார்கள். சில அவுணர்களையும் குதிரைகளையும் யானைகளையும் தேர்களையும் வாரி 
ஆகாயத்திலும் பூமியிலும் கடலிலும் மலைகளிலும் ஆர்த்தெறிந்தார். சிலரை யமனுக்கு முன்னே எறிந்தார். 
வீரவாகுதேவர் வச்சிரவாகுவினுடைய சேனைகளையும் தோழர்களையும் இங்ஙனம் பலவாறாகக் கொன்றார். 
அவருக்குத் தப்பினவர்கள் மானமும் வலிமையுமின்றி வானுலகத்திலும் கடலிலும் திசைகளிலும் ஓடிப்போயினார்.

    இத்தன்மைகளை வச்சிரவாகு பார்த்து, 'நம்முடைய சேனைகளெல்லாம் அழிந்தனவோ!" என்று இரங்கி, 
கோபம் மேற்கொண்டு, பாகனை நோக்கி, இத்தேரைத் தூதுவனுக்குமுன் விரைந்து செலுத்துவாய்' என்று சொல்ல, 
அவன் வணங்கி, வீரவாகு தேவருக்கெதிரே செலுத்தினான். வச்சிரவாகு விரைந்து போர்செய்யும்படி வருதலை 
வீரவாகுதேவர் கண்டு, அடங்காத மகிழ்ச்சியடைந்து, மிகப் பெரியதோ ருருவத்தை எடுத்து இடிபோல
ஆரவாரித்து அக்கினியெழச் சிரித்தார். அவருடைய சிரிப்பையும் முழக்கத்தையும் வச்சிரவாகு கேட்டு அஞ்சி, 
சிரங்களையசைத்து, நெருப்பெழப் பார்த்துக் கோபித்து, "தூதுவனே உன்னுடைய வீரம் நன்று! ஆண்மையும் நன்று! 
பேரும் நன்று! பேராற்றலும் நன்று! நீ பெற்ற சீரும் நன்று! உன்னுடைய வித்தையும் நன்று! நீ செய்கின்ற போரும் நன்று! 
இவ்வொலி உனக்கேற்பதே! உன்னெதிர் வந்து பொருத வீரர்களையெல்லாம் கொன்றேம் என்று நினைத்தாய். 
அதனையெல்லாம் இனி விடு. உன்னுடைய வலியைக் கெடுத்து, உன்னைப் பிடித்துக்கொண்டுபோய் என் 
பிதாவின் முன்னே விடுவேன்" என்று கூறினான். 

    வீரவாகுதேவர் இதனைக்கேட்டு, "தமியேனும் உன்னை வெல்ல முயலுவேன், நீயும் என்னை வெல்ல 
முயலுகின்றனை. இருவரும் அதனைச் சொல்லி நிற்பதனாற் பயன் என்னை? விரைவிற் போரைச் செய்குதி. 
பின் வென்றவர் வெல்லுக' என்றார். என்னுமுன், வச்சிரவாகு வில்லை வளைத்து நாணொலி செய்து, ஆயிரம் 
பாணங்களைப் பூட்டி, வீரவாகுதேவர் மேல் விடுத்தான். அவைகள் தம்மீது வருதலும்,அவர் ஒரு கரத்தைநீட்டி 
அவைகளெல்லாவற்றையும் பிடித்துத் துகளாகும்படி பிசைந்தார். தன் பாணங்கள் துகளாதலும், வச்சிரவாகு 
கோபித்து, பதினாயிரம் பாணங்களை வீரவாகுதேவருடைய மார்பிற் படும்படி தூண்டினான். வீரவாகுதேவர் 
அதனை நோக்கி, போரிலே இறந்த அவுணர்கள் இட்ட ஓர் எழுப்படையை எடுத்து, அப்பாணங்களை அடித்து 
வீழ்த்தினார். 

    தன் பாணங்களழிதலும், வச்சிரவாகு பழுதடையாத பதினாயிரம் பாணங்களைத் தூண்டி, அவர் தாங்கிய 
எழுவைப் பொடிபடுத்தி, அவருடைய தலையிலும், கழுத்திலும், புயத்திலும், மார்பிலும், பாதத்திலும் தனித்தனி ஆயிரம் 
பாணங்களாகத் தூண்டினான். கையிலேந்திய எழுப்படை முறிந்து தம்முடைய மேனியெங்கும் பாணங்கள் புதைதலும், 
வீரவாகுதேவர் இறைப்பொழுது வருந்தி நின்று, அதன்பின்பு விரைந்துபோய் வச்சிரவாகுவினுடைய தேரை உதைத்தார். 
குதிரைகள் பதைத்து வீழ்ந்தன; பாகனும் உருண்டிறந்தான்; தேரும் அழிந்தது. வச்சிரவாகு அதனைக்கண்டு 
வேறொரு தேரிற்பாய்ந்து, ஆயிரம் பாணங்களைத் தெரிந்து வில்லிற்பூட்டி, தேவர்கள் இரங்கும்படி வீரவாகுதேவருடைய 
நெற்றியிற் செறித்தான். அவர் அவனுடைய தேரைக் கையாலெடுத்து ஆகாயத்திலெறிந்து, அதன்பின் அவன் 
ஏறும்படி அமைந்துநின்ற தேர்களெல்லாவற்றையும் விரைவில் அடித்தெறிந்து உதைத்தழித்தார். 

    தேரோடு எறியப்பட்ட வச்சிரவாகு பூமியிலிருந்து இலக்ஷம் யோசனை தூரம் வானிற்போய், வருந்தி 
மீண்டுவந்து, அழிந்த தேரோடு வீரவாகுதேவருக்கு முன்னே வீழ்ந்து, வில்லை வளைத்துப் போர்செய்யக் கருதினான். 
அதனை வீரவாகுதேவர் கண்டு, கையை நீட்டி அவ்வில்லைப் பிடித்திழுத்துப் பேரொலியுண்டாக முறித்தார். வில் முறிதலும், 
வச்சிர வாகு வாட்படையை ஏந்தி எதிர்த்து வந்தான். வீரவாகுதேவரும் வாட் படையை உறையினின்றுங் கழற்றி, வச்சிரவாகு 
வீசத் தம்முடைய புயத்தையடைந்த வாட்படையை விலக்கி, அவனுடைய வாட்படையை யேந்திய கையை வெட்டி 
வீழ்த்தினார். ஓர் கரம் வெட்டுண்ணுதலும், வச்சிரவாகு பிறிதோர் கரத்திலிருந்த தண்டாயுதத்தை எறிந்தான். 
வீரவாகுதேவர் அதனையும் அவனுடைய பத்துத்தலைகளையும் வாட்படையினால் அறுத்து, அவனைக் கொன்றார். 
வச்சிரவாகு இறத்தலும், பக்கத்திலுள்ள அவுணர்கள் அதனைக்கண்டு புலம்பித், திசைதோறும் புறங்கொடுத் 
தோடினார்கள். அப்பொழுது சூரியன் அஸ்தமயனமாயினான்.

            திருச்சிற்றம்பலம்.

             யாளிமுகன் வதைப்படலம். 

    வீரவாகுதேவர் வச்சிரவாகு இறந்ததையும், அவனுடைய சேனைகள் புறந்தந்தோடினமையையும், பின்பு 
போர்செய்ய வருவோர் இல்லாமையையும், சூரியன் அஸ்தமித்ததையுங்கண்டு, "எம்பெருமானாகிய சுப்பிரமணியக் 
கடவுளை இகழ்ந்த சூரபன்மனுடைய கோயிலை அழித்து மகேந்திரபுரியையும் சிறிதழித்தேன்; போருக்கு வந்தவர்கள் 
எல்லாரையும் சங்கரித்தேன்; என்மனத்தில் நிகழ்ந்த கோபத்திற் சிறிது போக்கினேன்; போர் செய்தற்கு வேறெவரும் 
வந்திலர்; சூரியனும் அஸ்தமித்தான்; மாலைக் காலமும் வந்துவிட்டது. பாவங்களைச் செய்கின்ற அவுணர்களுடைய 
ஊரில் ஒற்றுவனாக வந்த யான் இம்மாலைக் காலமளவும் அறுமுகப்பெருமானை மறந்திருத்தலாகுமோ! அவருடைய 
திருவடிகளைப் பிரிந்த தனிமையும், இங்கே சிறையிலிருக்கின்ற தேவர்களுடைய துன்பமும் நீங்கும்படி விரைந்து 
செல்வதே துணிவு" என்று எண்ணி, போர்க்களத்தை நீங்கி, காற்றையும் நெருப்பையும் காலனையும் கூற்றுவனையும் 
போல வீதியிற் போயினார். அவர் செல்லுதலைக் கண்ட அவுணர்கள், "இவன் நமக்கு ஓர் யமன்; இவனை அணுகன்மின் 
அணுகன்மின்; கொல்வான் கொல்வான்" என்று முறை முறையாக அரற்றி ஓடினார்கள். வீரவாகுதேவர் மூதேவி 
குடிகொண்டழிந்த வீதிகளைக் கடந்து, மகேந்திரபுரத்தை நீங்கி, ஆகாயத்திலெழுந்து வழிக்கொண்டு, 
முருகக்கடவுளைத் துதித்து, வடதிசையிலுள்ள இலங்கை மலையை அடைந்தார்.

    அப்பொழுது அதனைக் காவல் செய்பவனும், முப்புரத்தவுணர்களை யொத்த வலிமையை யுடையவனும், 
ஆயிரம் முகங்களையும் யமபுரத்தின் வாயில்கள் போன்ற வாய்களையும் இரண்டாயிரங் கைகளையும் அவைகளிலே 
பல படைக்கலங்களையும் ஆயிரம் மேருகிரிகள் ஒன்றாய்ச் சேர்ந்தாற் போன்ற உடலையும் வடவாமுகாக்கினியைக் 
காலும் கண்களையும் சிறிதுந் தண்ணளியில்லாத மனத்தையும் உடையவனும், அதிவீரனுடைய பிதாவும் ஆகிய 
யாளிமுகன் என்பவன், அன்றுகாலையிற் சூரபன்மனைப் போய்க் கண்டு திரும்பிவந்து, தன்மகனாகிய அதிவீரன் 
இறந்தமையைக் கேட்டு வருத்தமுற்று, அவ்விலங்கைமலையில் இருந்தான். 

    அவன் வீரவாகுதேவர் மிகுந்த வேகத்தோடு செல்லுதலைக்கண்டு, 'இவன் யார்? கள்வன் போலும், 
ஆகாயவழியைக் கடந்து வருவான்' என்றான். அதனைக்கேட்டு அவனுடைய ஏவலாளன் ஒருவன் சொல்லுவான்; 
"நம்மரசனே கேட்பாய். நீ இன்று காலையில் உன் மகனை இங்கே காவல் செய்ய வைத்துச் சூரபன்மனைக் 
காணும்படி மகேந்திரபுரத்துக்குப் போயினாய். அதன்பின், இவன் ஆகாய மார்க்கமாகக் கடலைத் தாண்டி 
இங்கு வந்தான். வீரசிங்கன் இவனைக் கண்டு கோபித்து, படைகளோடு சென்று போர்செய்ய, இவன் வாட் 
படையினால் அவனைக்  கொன்று ஒரு வெற்றியை யடைந்தான். 

    இந்த வீரன் இவ்விலங்கை மலையிற் பாய்தலும், அது இவனுடைய கால் வைப்பைப் பொறாது சமுத்திரத்தில் 
ஆழ்ந்தது. அதனால் அனேகர் இறந்தார். ஏனையோர் இவனைக் கண்டு ஓடினர். உன்மகனாகிய அதிவீரன் கடலினின்று 
எழுந்து விரைவில் வந்து இவனோடு போர் செய்தான். இவன் அவனுடைய மார்பு கால் கை தலை ஆகிய உறுப்புக்களை 
ஒரேமுறையில் வாட்படையினாற் றுணித்து, மகேந்திரபுரிக்குப் போயினான். கடலிலாழ்ந்த இலங்கைமலை மேலெழுந்தது. 
இவ்வீரன் சூரபன்மனுடைய நகரத்துக்குப் போய், அங்குள்ள வளங்கள் முழுவதையும் அழித்து, நம்மவர்களாகிய 
அவுண வீரர்களோடு போர்செய்து வென்று, அதன்பின் வந்தெதிர்ப்பாரில்லாமையினால் மீண்டான்" என்று 
ஏவலாளன் சொன்னான்.

    யாளிமுகன் இவ்வார்த்தையைக் கேட்டு, இடியைப் பார்க்கினும் இடித்த சொல்லும் அக்கினி காலும் 
உயிர்ப்பும் மடித்தவாயும் வியர்வையும் சுழலுகின்ற கண்களும் உடையனாய்க் கோபித்து, 'என்காவலைக் கடந்து 
என் மகனைக் கொன்று மகேந்திரபுரிக்குச் சென்று மீண்டு வருகின்ற இக்கள்வனைக் கொல்வேன்" என்று சொல்லி, 
ஒரு வாட்படையை ஏந்தி,சில சேனைகளோடு வீரவாகுதேவருக்கு முன்சென்று, "மதியில்லாதவனே, நீ என்னுடைய 
குமாரனைக் கொன்று, இந்தக் காவலைக் கடந்து மகேந்திரபுரத்துக்குப்போய் அழிவு செய்து, கடலைக் கடந்து 
போகின்றனை போலும். 

    இனிச் சமுத்திரத்தைத் தாண்டிச் செல்லுதல் உனக்கு அரிது. யான் போரில் எதிர்த்தேன்; உன்னைக் கொன்று 
வெற்றியடைவேன்; நீ இங்கே வல்லதைச் செய்குதி" என்றான். அதனைக் கேட்டலும், வீரவாகுதேவர் உயிர்ப்பும், சிரிப்பும், 
கோபமுங்கொண்டு, சிரசை யசைத்து, "தீயனே ஒருதலையையுடைய எனதுயர்வையும் ஆயிரந் தலைகளையுடைய 
உனதிழிவையும் யாம் இங்கே போர்செய்யும் பொழுது காண்போம்; பேருருவங் கொண்ட தோற்றத்தை மதியாதே; 
உன்னுடைய ஆயிரம் யாளி முகங்களையும் அறுத்து வீழ்த்தி நாய்கள் கவரும்படி இரையாகக் கொடுப்பேன். 
இது திண்ணம் திண்ணம்" என்றார். 

    வீரவாகுதேவர் இப்படிச் சொல்லும் பொழுது, யாளிமுகனுடைய சேனைகள் அவரைச்சூழ்ந்து பல படைக்கலங்களை 
ஏவிப் போர் செய்தார்கள். அவர் அச்சேனைக்கூட்டத்துள் வாட்படையோடு புகுந்து, முகம், மார்பு, கை, கால் முதலிய 
அவயவங்கள் வேறுவேறாகும்படி வெட்டி, சேனைகள் முழுதையும் கொன்றார். யாளிமுகன் அதனைப் பார்த்துக் 
கோபங்கொண்டு, ஆயிரங்கைகளினால் வீரவாகு தேவரை இடிபோல ஏற்றினான். அவர் அவனுடைய அடித்த ஆயிரங் 
கைகளையும் ஒருகையாற்பிடித்து வாட்படையினால் வெட்டினார். யாளிமுகன் ஆயிரங்கைகளும் அற, மற்றை 
ஆயிரங் கைகளினாலும் ஆயிரம் மலைகளைப் பறித்து வீரவாகுதேவர் மேல் வீசினான்.

    அவைகள் அவருடைய மேனியெங்கும்பட்டுப் புழுதியாய் உடைந்து வீழ்ந்தன. வீரவாகுதேவர் அவனுடைய 
மற்றை ஆயிரங்கைகளையும் வெட்டி வீழ்த்தினார். அவன் கூற்றுவனை அழைப்பது போல ஆர்த்து, வீரவாகுதேவரைப் 
பிடிக்கும்படி ஆயிரந் துதிக்கைகளையும் நீட்டினான். அவர் அவனுடைய ஆயிரஞ் சிரங்களையும் ஒருங்கே 
அறுத்து வீழ்த்தினார்.

            திருச்சிற்றம்பலம்.

            வீரவாகு மீட்சிப்படலம்.

    வீரவாகுதேவர் இவ்வாறு யாளிமுகனைச் சங்கரித்தபின்பு, வாட்படையை உறையுட் புகுத்தி, சமுத்திரத்தைத் 
தாண்டி, கந்தமாதனமலையின் பக்கத்திலே சமுத்திரக் கரையிற் பொருந்திய திருச்செந்திப்பதியை யடைந்தார். 
அவருடைய வரவைக் கண்ட பூதசைனியங்கள் பூரணசந்திரனுடைய வரவைக் கண்ட சமுத்திரம் போல ஆரவாரித்தன. 
பூதப்படைத் தலைவர்கள் யாவரும் வந்து அஞ்சலி செய்து தழுவி, உவகை மொழிகளைக் கூறினார்கள். வீரவாகுதேவர் 
தம்மைத் தழுவிய அவர்களைத் தாமுந் தழுவி, "இழிஞர்களாகிய அவுணர்களுடைய ஊருக்குச் சென்றதனால் வந்த 
பாவத்தை உங்களைக் கண்டமையால் நீங்கப்பெற்றேன்' என்று அன்போடு முகமன் கூறி, இலக்கத்தெண்மர்களும்
வந்து வணங்க அவர்களைத் தழுவி, அவர்களும் பூதப்படைத்தலைவர்களும் உடன் வரச் சுப்பிரமணியக்கடவுளுடைய 
கோயிலை அடைந்து, அரிபிரமேந்திராதி தேவர்களும் முனிவர்களுஞ் சேவித்துத் திருமருங்கில் நெருங்கிச் சூழ 
அக்கடவுள் வீற்றிருக்குந் திருக்கோலத்தை முன்பு தரிசித்துக் களிப்படைந்து, மனமும் என்பும் உருகவும், 
ஆனந்தபாஷ்பஞ் சொரியவும், சரீர நடுங்கவும், புளகம் அரும்பவும் அவருடைய திருவடித் தாமரைகளை 
மும்முறை வணங்கி அஞ்சலித்துத் துதித்து நின்றார். 

    குமாரக்கடவுள் "வீரவாகுவே, நீ சூரபன்மனுக்கு முன்பு சென்று நாம் சொல்லிய வார்த்தைகளைச் சொல்ல 
அவன் அதற்குப் பதிலாகச் சொல்லியவைகளையும், மீண்டு வந்ததையும் முறையாகச் சொல்லுதி" என்றார்.
"எம்பெருமானே தேவரீர் சொல்லியருளிய திருவாக்குக்களைச் சூரபன்மனுக்குச் சொன்னேன். அவன் 
தேவர்களுடைய சிறையை விடுதலே காரியம் என்று மனத்திற் கொண்டிலன். 'அவர்களுடைய சிறையை 
விடுகிலேன்' என்று வெகுண்டு கூறினான். ஆதலால் அடியேன் அவ்விடத்தை நீங்கி விரைவில் வந்தேன். 
இது நிகழ்ந்தது' என்று வீரவாகுதேவர் விண்ணப்பஞ் செய்தார். 

    எங்கும் வியாபித்திருப்பவரும் முற்றொருங்குணர்ந்த முழுமுதற் கடவுளுமாகிய முருகக்கடவுள் 
அதனைச் திருச்செவி மடுத்து, ''உன்னுடைய செய்கைகளுளொன்றையுஞ் சொன்னாயில்லை; நன்று! அதனைச் 
சொல்லுதி" என்றருளிச் செய்ய, "சூரபன்மனுடைய நகரத்துக்குச் சென்றபொழுதும் மீண்டபொழுதும் அடியேனைத் 
தடுத்தவர்களைத் தேவரீருடைய திருவடித் தாமரைகளின் வலிமையினாற் கொலைசெய்து வந்தேன்; இதுவே 
நிகழ்ந்தது" என்று விண்ணப்பஞ் செய்தார். சுப்பிரமணியக் கடவுள் வீரவாகுதேவரை நோக்கி, "பகைவர்களாகிய 
அவுணர்களால் மிகவும் வருந்தினைபோலும்!" என்று  பேரருள்புரிந்தார்.

    அப்பொழுது, சுப்பிரமணியப்பெருமான் விட்டுணுவையும் பிரமாவையும் இந்திரனையும் பார்த்து, 
"தேவர்களைச் சிறையினின்றும் விடுத்து நீ சுகமாயிருக்குதி என்று சூரபன்மனுக்குத் தூதுவனை அனுப்பிச் 
சொல்லுவித்தோம். பாவியாகிய அவன் அதனை உறுதி என்று உட்கொண்டிலன்; இறத்தலே அவனுக்குறுதி 
யாதலினால் 'தேவர்களுடைய சிறையை விடோம்' என்று கூறினான்; யாம் நாளைக்கு அவனோடு போர்செய்யப் 
போவோம்!' என்று சொல்லியருளினார். அறுமுகக்கடவுள் இவ்வாறு அருளிச்செய்யக் கேட்ட தேவர்கள், 
"கொடிய சூரபன்மன் மீது போருக்குப் போவோம் என்ற திருவாக்கின் தெளிவினால் நம்முடைய துன்பம் நீங்கியது" 
என்று மகிழ்ச்சியடைந்தார்கள். அப்பொழுது வீரவாகுதேவர் மகேந்திரபுரியிலே சிறையிலிருக்கும் சயந்தனைத் 
தாம் போய்க் கண்டதையும் பிறவற்றையு மெடுத்துச் சொல்லி இந்திரனுடைய மனத்தைத் தெளிவித்தார். 
வீரவாகு தேவர் மகேந்திரபுரியினின்று மீண்டதைச் சொன்னோம். இனி, சூரபன்மன் அடைந்த துன்பங்களையும் 
பிறவற்றையுஞ் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

             சூரனகர்புரி படலம்.

    சேனைகளோடு வச்சிரவாகு இறந்ததையும், வீரவாகுதேவர் மீண்டு சென்றதையும், தூதுவர்கள் 
சூரபன்மனுக்குச் சோகத்தோடு போய்ச் சொன்னார்கள். சூரன் அதனைக் கேட்டலும், நடுங்கித் துன்பக்கடலில்
வீழ்ந்து, புதல்வன்மாட்டு வைத்த அன்பு சென்று உயிரையீரவும், கண்ணீர் வடியவும், உயிர்ப்பாகிய புகைசூழவும் 
அளவிறந்த துன்பமடைந்து, ஏங்கிப் புலம்பினான். அவனுடைய சுற்றத்தார்களும் பரிசனங்கள் முதலாயினாரும் 
அழுதார்கள். பதுமகோமளை கூந்தலவிழத் தனங்களிலடித்துக் கையை உதறி அழுதாள். சூரபன்மனுடைய மற்றை 
மனைவியர்களும் சேடியர்களும் பிறபெண்களும் கட்டிக்கொண்டழுதார்கள். 

    அந்நகரில் மங்கல வொலிகளெல்லாம் அடங்கி அழுகையொலி மிகுந்தது. அப்பொழுது தருமகோபன் 
என்னும் துன்மந்திரி சூரபன்மனிடத்தில் வந்து வணங்கிச் சொல்வான்: ''மகாராஜனே, நீ பிருதிவியண்டங்கள் 
ஆயிரத்தெட்டை அரசாளும் மேன்மையினை உடையை; ஒப்பில்லாத செல்வங்களையுடையை; அழியாத 
வாழ்நாளையுடையை; சொல்லுதற்கரிய வலிமையையுடையை; சிறந்த கீர்த்தியையுடையை. இவ்வாறு வருந்துதல் 
தகுதியாகுமோ! இவ்வுலகமெல்லாம் அழியினும் அழிவின்றி வாழ்கின்ற வீரனே, உன்மனத்திட்பங் குன்றலாகுமா! 
எவரும் புகழுகின்ற மகாராஜனாகிய நீ ஓவென்றரற்றி வாட்டமடைவாயானால்,மும்மூர்த்திகளும் நகைப்பர், 
முன்னமே உன்னுடைய ஏவலைச் செய்கின்ற தேவர்களும் நகைப்பர், புகழுந்தேயும். 

    பூதப்படைகளல்ல சிவகுமாரனல்ல, அவன்சொல்லவிட்ட ஒரு தூதுவன் செய்த புன்றொழிலுக்காற்றாது, 
அழிவில்லாத பெருமையையுடைய நீ இப்படித் துன்புறலாமா? தந்தையர்கள் இறந்தாலும், சகோதரர்கள் இறந்தாலும், 
புதல்வர்கள் இறந்தாலும், தம்மைச் சார்ந்த பிறர் இறந்தாலும், வெற்றியிற் சிறந்த அரசர்கள் தம்மனவலி சிறிதாயினுங் 
குறைவார்களோ! இறக்கும் விதிவந்தால் மிகப் பெரிய வலியுடையவர்களையும் பெண்களும் வெல்லுவர். ஆதலினால்,
 உன் மகனுக்கு வாழ்நாள் குன்றுதலின், தூதுவனும் அவனைக் கொன்றவனாய்த் தோன்றினான். 

    பகைவர்கள் செய்யும் வினைகளையும் அவர்களுடைய வலிமையையும் தெளிய அறிந்து, 
செய்ய வேண்டிய காரியங்களை ஆராய்ந்து செய்யாமல், வருத்தமடைவதும் ஆண்மைக்குத் தகுமோ! 
வரங்களையும் வீரத்தையும் வரம்பின்றி அடைந்து,சூரன் என்று ஒருபேரைப் பெற்ற நீ இவ்வாறு 
துன்பமடைவதும் தலைமைக்கேற்குமோ! இரங்கலை இரங்கலை'' என்று தருமகோபன் தெளிவித்தான்.

    தருமகோபன் இவ்வாறு தெளிவித்தலும், சூரபன்மன் தெளிவுபெற்று எழுந்து, சகிக்கமுடியாத தன் 
துன்பத்தை அடக்கி, தன்பக்கத்திலுள்ள தூதுவரை நோக்கி, "என்மகனைக் கொன்று இந்நகரை அழித்த வலிய 
தூதுவன் நம்முடைய நகரத்தைத் தாண்டி அப்பாற் சென்றதை நீங்கள் பார்த்தீர்களோ? பிறர்சொல்லக் 
கேட்டீர்களோ? உண்மையைச் சொல்லுங்கள்'' என்றான். ''இங்கே தூது வந்தவன் இந்நகரை நீங்கி இலங்கை 
மலையை நோக்கி அப்பாற் போயினான். அதனைப் பார்த்தோம் இது உண்மை". என்று தூதுவர்கள் சொன்னார்கள். 

    சூரபன்மன் அதனைக்கேட்டு, தன்பக்கத்தில் நிற்கின்ற ஏவலாளரை நோக்கி, "நீவிர் விரைவிற்சென்று 
பிரமாவை அழைத்து வருதிர்" என்று கூற, அவர்கள் வணங்கி, "மகாராஜனே, இந்த அண்டத்துப் பிரமன், 'இந்திரன் 
முதலாகிய தேவர்களோடு கூடி, இப்பூமியிற் சேனைகளோடு வந்திருக்கின்ற அறுமுகனோடிருக்கின்றான்' என்று 
கண்டவர்கள் சொன்னார்கள்" என்றார்கள். இதனைக்கேட்ட சூரபன்மன் பெருமூச்சுவிட்டு, நன்றுநன்றென்று 
சொல்லி, நெருப்பெழச் சிரித்து, "மற்றையண்டத்துப் பிரமனை விரைவில் அழைத்து வருதிர்'' என்றான். 

    தூதுவர்கள் விரைந்து மற்றையண்டத்துக்குச் சென்று பிரமாவை அழைத்துக் கொண்டுவந்து விடுத்தார்கள். 
அவரைச் சூரபன்மன் பார்த்து, "அழிந்த இந்நகரை முன்போலச் செய்குதி'' என்றான். பிரமா அப்பணியைச் சிரமேற் 
கொண்டு, "மகாராசனே உன்னகரை முன்போல அழகுறும்படி இறைப் பொழுதிற் செய்வேன்" என்று கூறி, 
மதில்கள் மாடவீதிகள் சிகரங்கள் வேரங்கள் சோலைகள் மண்டபங்கள் வாவிகள் பொய்கைகள் முதலிய 
எல்லாவற்றையும் முன்போலத் தமது கைத்தொழில் வன்மையாற் படைத்து, அதன்பின் சூரபன்மனுடைய 
கோயிலையும் முன்போல அழகுபெறச் செய்தார். சூரபன்மன் அவைகளைப் பார்த்து மகிழ்ந்து, அவர்மேல் 
அன்பு செய்து, முன்போல இரத்தின சிங்காசனத்திலிருந்து, பிரமாவை நோக்கி, "நீ உன்னுடைய அண்டத்திற்குப் 
போய்ப் படைத்தற்றொழிலைச் செய்து கொண்டிருக்குதி' என்று சொல்லியனுப்பினான். பிரமா மற்றை 
அண்டத்துக்குப்போய், தானிருக்கும் சத்தியவுலகத்தை அடைந்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            சூரனமைச்சியற்படலம்.

    சூரபன்மன் வச்சிரவாகு இறந்த துன்பத்தினின்று ஒருவாறு தேறி  அத்தாணி மண்டபத்திலே சிங்காசனத்தில் 
இருக்கும் பொழுது, முன்னே அவனால் அனுப்பப்பட்டுச் சென்ற * பகன் மயூரன் முதலாகிய ஒற்றுவர்கள் சமுத்திரத்தைத் 
தாண்டித் திருச்செந்தூருக்குப் போய், சுப்பிரமணியக் கடவுளுடைய சேனைகளையும் பிறவற்றையும் அறிந்து, 
விரைவில் வந்து சூரபன்மனுடைய கால்களை வணங்கிச் சொல்வார்: 

* பகன் முதலிய ஒற்றுவர்களைச் சூரபன்மன் அனுப்பினமை அசுரேந்திரன் மகேந்திரஞ்செல் படலத் திறுதியிற் காண்க.

    ''சிவகுமாரராகிய அறுமுகக்கடவுள் இரண்டாயிரம்வெள்ளம் பூதசேனைகளோடும் படைத்தலைவர்
 நூற்றெண்மரோடும் அவரினும் மேலாகிய இலக்கத்தொன்பது வீரர்களோடும் பூவுலகில் வந்து, உன்றம்பியாகிய 
தாரகனையும் கிரவுஞ்ச மலையையும் வேற்படையினாற் பிளந்து சங்கரித்து, திருச்செந்தூரில் வந்திருந்தார். இஃதுண்மை. 
அவர் இங்கே ஒரு தூதுவனை அனுப்பினார். அவன் இலங்கையை அழித்து, இங்கு வந்து போம்பொழுது யாளிமுகனை 
வாட்படையினாற் சங்கரித்துக் கடலைத் தாண்டிப் போயினான். சிவகுமாரர் பூதகணங்களோடும் படைவீரர்களோடும் 
இங்கே வந்து போர்செய்யும்படி எண்ணியிருந்தால் மகாராசனே இதனைச் சந்தேகமென்றெண்ணற்க, உண்மை. 
நீ இதற்கேற்ப உபாயங்களை நினைத்துச் செய்குதி' என்றார்கள்.

    சூரபன்மன் ஒற்றுவர்களுடைய சொல்லைக்கேட்டு, தம்பியாகிய சிங்கமுகாசுரனையும் மந்திரிமார்களையும் 
சேனாதிபதிகளுட் டலைமையாயுள்ளோர்களையும் மிகவிரைவில் வருவித்தான். அவர்கள் யாவரும் வந்து அவனுடைய     
கால்களை வணங்கிப் பக்கத்திலிருந்தார்கள். அவன் அவர்களை நோக்கி, மிகக்கோபம் மூளப் பெருமூச்சுவிட்டுச் 
சொல்லுவான்: "நம் பகைவர்களாகிய தேவர்களை யான் நீங்காத சிறையில் வைத்ததை அறிந்த இந்திரன் 
சிவபெருமானுக்குப் போய்ச் சொன்னான். அக்கடவுள் ஓர் குமாரனைப் பெற்று, 'மைந்தனே நீ தேவர்களுடைய 
சிறையை நீக்கி வருக' என்று சொல்லி நம்மிடத்தில் அனுப்பினார். அக்குமாரன் நந்திகணங்களும் பூதகணங்களும் 
சூழவும் பிரமாவும் விட்டுணுவும் துதிக்கவும் பூவுலகில் வந்து, வேற்படையினாற் கிரவுஞ்ச மலையையும் 
தாரகனையுங் கொன்று அதன்பின் சமுத்திரக்கரையில் வந்திருந்து கொண்டு, என்னிடத்தில் ஒரு தூதுவனை 
அனுப்பினான். அத்தூதுவன் சமுத்திரத்தைத் தாண்டி இலங்கை மலையிற் பாய்ந்து, அதனை அழித்து, 
அங்குள்ள காவலைக்கடந்து, இந்நகரின்  நடுவில் வந்துலாவி, சிறிதுங் கலங்காது என்னுடைய சபைக்களத்தில் 
வந்து, வீரர்களைப்போல என்னெதிரிலிருந்து, தேவர்கள் பக்ஷமாகச் சில வார்த்தைகளைப் பேசி, என் கண்முன்னே 
சில அவுணர்களைக் கொன்று பின்னும் வலிமையோடு என்னை மதியாமல் எழுந்து போயினான். 

    போன அவன் இந்நகரைப் பொடிபடுத்தி, யான் பிடித்துவரும்படி அனுப்பிய வீரர்கள் யாவரையும் கொன்றான்.               
பின்னும் செருக்கு நீங்காதவனாய் என்னுடைய  இளைய குமாரனாகிய வச்சிரவாகுவையுங் கொன்றான். இந்த நகரம்
 அழிந்தது; அளவிறந்த சேனைகள் மடிந்தன; பிணங்கள் மிகுந்தன; அப் பாரத்தினாற் பூமிகிழிந்தது; இரத்தவெள்ளம் 
பாய்ந்தது; என்னுடைய ஆணையும் உயர்வும் நீங்கியது. ஒற்றுவனாக வந்த அவ்வொருவனைப் பிடித்துச் சிறையில் 
வைத்திலேன், கொலை செய்திலேன், அல்லது ஒரூறுபாட்டையேனுஞ் செய்திலேன். எனக்குவந்த வசைமொழிக்கு 
எவ்வாறு முடிவு கூறுவேன்!                                             

    இங்கேவந்து மேற்சொல்லிய தீங்குகளையெல்லாஞ் செய்த தூதுவன் மகேந்திரபுரியைத் தாண்டி, 
இலங்கை மலையிலிருந்த வலிய யாளிமுகனைக் கொன்று, சமுத்திரத்தைக் கடந்து, நிலவுலகத்தை யடைந்தான். 
சிவகுமாரன் சமுத்திரத்தைக் கடந்து இங்கே வந்து நம்மோடு போர் செய்ய எண்ணுவான் போலும். இவைகள் 
எல்லாவற்றையும் ஒற்றுவர்கள் சொல்லினர். இவைகள் உண்மையாம். யான் ஒருகலைப் பொழுதினுட் பூதர்களையும் 
மற்றை வீரர்களையும் கொன்று, சிவகுமாரனை வென்று வர வல்லேன். சூரன் என்று பெயர்பெற்ற யான் பூதர்களோடும் 
ஒரு பாலகனோடும் போரைச் செய்து வெல்லினும் வீரமன்றென்று வாளாவிருந்தேன். செல்வங்களினாலும் வலிமையினாலும் 
உபாயத்தினாலும் எத்துணைப் பெரியோரும் ஓர் வினையைச் செய்யக் கருதும் பொழுது, தமக்குத் துணையாயுள்ளவர்களோடு 
யோசித்து அதன்மேற் செய்வர். ஆதலினால், யானும் உங்களை வினாவினேன். செய்யத் தகுவதைச் சொல்லுங்கள்'' 
என்று சூரபன்மன் கூறினான்.

    சூரபன்மன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்தவர்களுள், மகிடன் என்பவன் சொல்வான்:         
'கிரவுஞ்சமலையையும், விட்டுணுவையும் வென்ற உன்றம்பியாகிய தாரகனையும், ஒரு நொடிப்பொழுதிற் 
சங்கரித்தவனைப் பாலகன் என்றுசொல்லுவதும் அறிவுடைமையாகுமோ! கடலைத் தாண்டி நம்முடைய 
நகரத்தை அழித்து உன்மகனாகிய வச்சிரவாகுவைக் கொன்ற கள்வனைத் தூதுவன் என்று சொல்லுவதும்
அறிஞர் சூழ்ச்சியோ!  பிரமா விட்டுணு இந்திரன் என்னும் இவர்கள் மூவரும் ஓருருக்கொண்டு வந்ததன்றி 
அவனிலைமையை வேறாக நினைக்கலாமோ! 

    உன்னுடைய தம்பியும் கிரவுஞ்சமும் இறந்த அன்றே நீ சிவகுமாரன்மேற் போருக்குச் சென்றிலை, 
அல்லது உன்சேனைகளை அனுப்பியாயினும் வென்றிலை, காலதாமதஞ் செய்து இங்கே வாளாவிருந்தாய். 
நெருப்புச் சிறிதாயினும், அறிஞர் அதனை ஏ! ஏ! இது சிறிதென்று இகழற்பாலரோ! அதனைத் தணியா             
தொழிவரேயெனின், அது இறைப்பொழுதினுட் பெரிய இப்பூவுலகமுழுதையும் அழிக்கும். பகைவர்களுடைய 
சூழ்ச்சியாயினும் அவர்களுடைய வேறு நிலைமைகளாயினும் தம்மை வந்தடையுமுன் அரசர் அதற்கு 
எதிர்சென்று காப்பரேயாயின், அவர்க்குத் துன்பங்கள் வந்தடையுமோ! அரசனே யாம் அழியாத வளங்களை 
அநுபவித்து, செய்யவேண்டுவனவற்றை மறந்தும், வலியோர்களைக் கொல்லும் வீரர்களை யிகழ்ந்தும், 
இவ்வாறு வாழ்வோமானால், சிறந்தவர் யாமல்லாமல் வேறு யாவர்! 

    முன்னமே அப்பாலகன்மேற் போருக்குச் சென்றாயாயின், உன்னகரத்துக்குத் தூதுவனும் வருவானா! 
நீ போருக்குச் செல்லாமல், புத்திரனோடு இந்நகரம் அழிந்ததென்று இரங்கற்பாலையோ! உன் மகன் இறந்ததும், 
இந்நகரம் அழிந்ததும், செய்யவேண்டுவனவற்றைத் தெரிந்து செய்யாத அறியாமையால் வந்தனவாம். 
கழிந்த பிழையை நினைத்து மிக மனமழிதல் அறிஞர்க்கு இயற்கையன்று. ஆதலால், போன பிழைகள் போக, 
யான் ஒன்று சொல்வேன் கேள். அதனை இழிந்தது என்று எண்ணாது விரைவிற் செய்குதி. 

    நான் சொல்வது பிறிதொன்றுமில்லை. அவுண வீரர்களோடும் சேனைகளோடும் விரைந்து 
சிவகுமாரனை வளைத்துப்   போர் செய்யச் செல்லுதி; முன்னை நாட்கள்போல நீ இனிக் காலதாமதம் செய்யற்க." 
என்று மகிடன் என்பவன் சொல்லினான். அவற்றைத் துர்க்குணன் என்னும் மந்திரி கேட்டு, இது நன்றென்று 
கையோடு கையைத் தட்டிச் சிரித்து, இவ்வாறு சொல்வான்: "மகாராசனே, விட்டுணுவின் மேலும் மற்றைத் 
தேவர்கண்மேலும் போர்செய்ய இதுகாறும் சென்றாயில்லை. தம்பியர்களால் வெற்றிகொண்டு வந்தாய். 
இன்றைக்கு ஒரு பாலகன்மேற் போருக்குச் செல்லலாகுமோ! அழியாத வாழ்நாளையும், வளங்களையும் 
ஆஞ்ஞா சக்கரத்தையும், வலியையும், வீரத்தையும், பிறவற்றையும் தவத்தாற் பெற்றாய். இவைகளைப் பெற்றது
ஓர் பாலகனோடு போர்செய்தற்கா! தேவர்களைப் புறங்கண்ட நீ,பசிநோய் வருத்த உணவில் ஆசைகொண்டு 
திரியும் பூதகணங்களையும் தூதுவனையும் தொடர்ந்து போர்செய்யப் போகின்றனையோ! இன்றைக்கு 
உன்னுடைய படைத்தலைவர்கள் யாவரையும் அனுப்புதி. அவர்கள் சிறிதுபொழுதினுட் சிவகுமாரனையும் 
பூதகணங்களையும் வென்று வருவர். இதுவே உபாயம்" என்று துர்க்குணன் கூறினான்

    அவன் சொன்ன முடிவில் தருமகோபன் என்னும் மந்திரி "இவை யொழிக" என்று கையமைத்துச் 
சொல்லுவான்: "அரசனே நீ சிறுபாலகனோடு யுத்தஞ் செய்தல் நவரத்தினங்கள் இழைத்துப் பொன்னாற்செய்த 
கலப்பையைக் கொண்டு புன்செய்யை உழுவது போலும், சிவபெருமானுமன்றெனில், விட்டுணுவுமன்றெனில், 
பிரமாவுமன்றெனில், யமனுமன்றெனில் எல்லாவுலகங்களையுங் காக்கின்ற வீரனாகிய நீ ஒரு பாலகனோடு 
போர் செய்யிற் பயனுண்டாகுமோ! 

    இனி அப்பாலகன்மீது போர்செய்யச் செல்லுவாயாயினும், அவன் உன்னுடைய பேராற்றலைக் காண்பானாயின், 
புறங்கொடுப்பானன்றி எதிர்ந்து போர் செய்ய வல்லனோ! தமக்கு ஒப்பாகாதவர்களை ஒத்தவர்களென்று போரைச்செய்து 
பெரிதும் அழிவதும் அறிவிலார் செயலன்றி அறிஞர் செயலாகுமோ! அவற்றைத் தெரிந்து செய்தலே அறிஞர் கடன். 
இலக்கத்தொன்பது வீரர்களும் பூதர்களும் சிவகுமாரனும் அக்கினிமுகன் இரணியன் என்கின்ற உன்னுடைய குமாரர் 
இருவருள் ஒருவனுக்கு ஆற்றார். நகங்கொண்டு கிள்ளத்தக்க ஒன்றை வாள்கொண்டு ஒருவன் வெட்டுவானோ! 
ஒரு ஆளைக்கொண்டு அழிப்பிக்கத்தக்க அவர்களை வெல்லுதற்கு நீண்ட வில்லைக் கொண்டு நீயுஞ் செல்கின்றனையோ! 

    கண்ணிமை கூடாத பாலகனோடும் பூதர்களோடும் நீ போர்செய்யப் போகின்றாய் என்னுஞ் சொல்லைக் கேட்டால், 
நம்மவர்கள் நாணுவர், தேவர்களும் சிரிப்பர். தாரகனையும் கிரவுஞ்சமலையையும் அழித்தான் என்று பாலகனையும், 
வச்சிர வாகுவைக் கொன்றான் என்று ஒற்றுவனையும் மதித்தாய்; ஊழை நினைத்திலை. சிவபெருமான் கொடுத்த 
வேற்படையைப் பாலகன் செலுத்துதலும் மாறான படையை விடுத்து அதனை மாற்றாமையினால் உன்றம்பியாகிய
தாரகன் இறந்தான். அகத்தியமுனிவர் முன்சொல்லிய சாபத்தினாற் கிரவுஞ்சமலை அழிந்தது. இவற்றையெல்லாம் 
நினைத்திலை. வலிமையில்லாத சிறுவனுடைய செய்கையையே நினைக்கின்றாய். 

    வச்சிரவாகுவாகிய உன்மகன், அழியாத தேர் கவசம் வில் என்னும் இவைகளைப் பெற்றிலன். அவன் போருக்குப் 
போகும்பொழுது நீயும் அவற்றைக் கொடுத்திலை. ஆதலால், அவனுந் தூதுவனால் இறந்தான். இனிப் பலவற்றைச் 
சொல்வது என்னை? உன்னுடைய படைத்தலைவருள் ஒருவனை அழைத்து, சேனைகளோடு முருகன்மேற் போர்செய்தற்கு 
அனுப்புவாயாயின், அவன் வெற்றிகொண்டு வருவான். அதனையே செய்' என்று தருமகோபன் கூறினான்.

    அவன் சொல்லியமுடிவில் காலசித்து என்பவன் சிரிப்புத் தோன்ற இவற்றைச் சொல்வான்: "நம்மரசனே, 
திருச்செந்தூரில் வந்திருக்கும் பாலகன் பூதசேனைகளோடு இங்கே போருக்கு வருவானாயின், சிலரை அவனோடு 
போர்செய்யும்படி அனுப்புவதல்லது, இதற்கும் ஆலோசனை வேண்டுமா! விட்டுணுவையும் இந்திரனையும் சயந்தனையும் 
பிறரையும் போர்செய்து வென்ற நாளில், எம்மை வினாவினாயில்லை. இன்றைக்கு ஓர் பாலகனுக்காக மிகப்பெரிய 
மந்திரம் வேண்டிற்றோ ! தேவர்கள் ஒடுங்கினர், இராக்ஷதர்கள் அஞ்சினர், திக்குப்பாலகர் எண்மரும் நம்முடைய 
ஏவலைச் செய்வர். போரில் அவுணர்களிலும் வலியவர் பூதராம்! கண்டனம் இன்று யாங் கலியின் வண்ணம்! 
தமியேனை அனுப்புதி; சிவகுமாரனையும் பூதகணங்களையும் காலபாசத்தாற் கட்டிக்கொண்டு வருவேன்" என்று 
காலசித்துப் பேசினான். 

    அதன்பின் சண்டன் என்றொருவன் சொல்லுவான்: "மிக்க பசிநோயால் வருந்தும் பூதரும், சிறுபாலகனும், 
அவனுக்குத் தொண்டு செய்கின்ற சிலரும் யோசிக்கப்படுந் தகுதியுடையரோ! அவுணர்களுடைய மந்திரம் மிக 
நன்றாயிருந்தது. பூதரைக் கொல்லுவேன், பாலகனையும் வெல்லுவேன், பிறரையுமழிப்பேன். இராசாதிராசனே, 
உன்னுடைய அநுமதியில்லையென்று இத்துணையும் சும்மாவிருந்தேன். தமியேனை அனுப்புதி, நொடிப்பொழுதிற் 
சென்று பூதர்களோடு அப்பாலகனை வென்று மீள்வேன்." என்று சண்டன் சொன்னான். 

    அதன்பின் அனலியென்னும் படைத்தலைவன் கோபமும் சிரிப்புமுண்டாக, "போரில் ஒரு சிறுவனாயினும் 
வந்தெதிர்த்தால் அவன்மேற் கோபித்துப் போர் செய்யச் செல்லாது எங்களோடு மந்திரத்தி லிருப்பாரேயானால் 
அம்மவோ சூரருக்கு வலிமை அழகிது!'' என்று வினயத்தோடு சொல்லினான். அவன் இப்படிச் சொல்லுதலும், 
சிங்கன் என்பான் எரிகின்ற கண்களையும் சிரிப்பையும் பெருமூச்சையும் கன்றிய மனத்தையும் உடையனாய், 
பற்களினாலே அதரத்தைக் கடித்துச் சொல்லுவான்: "அரசனே நீ வீரர்களை அழைத்ததும் யோசனையிலிருந்ததும் 
மனத்திற் கொண்ட சூழ்ச்சிகளும் இந்திரனுக்கு உதவி செய்கின்ற பாலகனுடைய வலிமையைக் கெடுக்கும்படி 
நினைந்த செய்கைபோலும்!  இப்பிருதிவியண் டத்திலிருந்தோரெல்லாம் எனக்குப் பகைவர்களாய் வருக. 
வந்தால், தனித்த யானொருவனும் போர்செய்து அவர்களெல்லாரையும் உலையச் செய்வேன். உனது அடியேனாகிய 
என்னுடைய வலியை அறிகிலை போலும்! என் வலிமையைச் சொல்லுவது தகுதியன்று. என்னைப் "போருக்குச் செல்' 
என்று அனுப்புதி. சேனைகளோடு போய் உன் பகைவர்களையழித்து வருவேன்'' என்று சிங்கன் கூறினான். 
கூற, அநீதியையுடைய மற்றை அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இவைபோல்வன பலவற்றையும் சொன்னார்கள்.

    பானுகோபன் அவர்களைக் கையமைத்துச் சொல்வான்: "பிதாவே, கிரவுஞ்சமலையையும் உன்றம்பியையும் 
பாலகன் வென்ற அன்றைக்கே என்னைப் போருக்கு அனுப்பினாயில்லை; அழைத்து ஒன்றையும் யோசித்தாயில்லை, 
இன்றைக்கு இதனை வினாவுவதென்னை! வஞ்சனாகிய ஒருதேவன் இங்கே தூதுவந்து போர்செய்தால், இன்னமும் 
பல் முழுதும் முளையாத ஒரு பாலகனைப் போருக்கனுப்பலாமோ! நீ மிகவும் பெரியை! உன் அறிவில்லாமையினால் 
'இழிவாகிய தூதுவனாற் றுன்பமடைந்தாய்' என்னும் பழியைப் பூண்டாய், பாலகனுடைய உயிரை ஒழித்தாய்; 
நகரம் முழுதையும் அழித்தாய். பொருளல்லாத ஒன்றைப் பொருளாகக்கொண்டு அதற்கஞ்சுவதும்,  செய்யுமுபாயத்தை 
யறியாது ஒருசெயலை விரைந்துசெய்து அதனாற் சோர்வடைந்து வாழ்தலும், பெரியோர் கடமையா! பேதைமைத் 
தன்மையே. 

    கிரவுஞ்ச மலையையும் உன்றம்பியையுமழித்த பாலகனுடைய வலிமையையும், பூதர்களுடைய வலிமையையும், 
ஒற்றுவனுடைய தன்மையையும் நீ அறியவேண்டினால், யான் போய் அவர்களைப் பாசத்தாற் கட்டிக்கொண்டு வந்து 
உனக்கு முன்விடுவேன். என் பிதாவே நீ ஆயிரத்தெட்டண்டங்களுக்கும் ஒரு தனி முதல்வன். சிவகுமாரனுடைய 
போரைக் குறித்து நீ புறப்படுதல் சிறப்பன்று. என்னை அனுப்பி அவனை வெற்றிகொண்டிருக்குதி. 
என்னை அனுப்புவாயாயின், போருக்கு வருகின்ற அவர்கள் எல்லாரையும் அழித்து, தேவர்களையும் வென்று 
மீளுவேன்" என்று இவ்வாறு சில வார்த்தைகளைப் பானுகோபன் கூறினான்.

    அதன்பின் இரணியன் சொல்வான்: '"பிதாவே மிகுந்த வெற்றியையுடைய சூரபன்மன் ஓர் பாலகனுடைய 
போர்வலிமையைக் கருதி இரங்கினான்' என்னும் வார்த்தை வெளிப்பட்டால், உன்னை நினைத்தாலுமஞ்சுந் தேவர்களும் 
இகழ்தற்கேதுவாம். இனி மந்திரத்தை விடுக்குதி. 'சிவகுமாரன் உன்னோடு போர்செய்வதற்குப் பூவுலகில் வந்தான்' 
என்று ஒற்றுவர் சொன்னவுடன் என்னை விரைவில் அழைத்து அவனோடு போர்செய்ய விடுத்தாயில்லை. என்னை 
வெறுத்தனையோ? பாவியேன் உனக்குச் செய்த தவறு ஒருசிறிதேனுமுண்டோ! சிவகுமாரன்மேலும், பசிப்பிணிக்காக 
மாமிசத்தை விரும்பி உழலுகின்ற பூதர்கண் மேலும், மற்றையோர்கண் மேலும் என்றமையனாகிய பானுகோபன் 
போருக்குச் செல்லுதலும் வசையே. யானே போர் செய்யப்போவேன். பெரும்போரைச்செய்து பகைவர்கூட்டத்தையும் 
தேவர்களையுங் கொன்றுவருவேன். இன்றிரவிலேயே என்னை அனுப்புதி' என்று கூறினான். 

    அதன்பின் அவன்றம்பியாகிய அக்கினிமுகன் இவ்வாறு சொல்லுவான்: " நீ ஒப்பில்லாத ஆயிரத்தெட்டண்டங்களுக்கும்
 அரசன். உனக்குத் துணைவனாக ஒரு வீரகேசரி  யுள்ளான். புத்திரர்களாய் எண்ணில்லாத யாங்கள் இருக்கின்றோம். 
அளவிறந்த யானை குதிரை தேர் காலாட்படை உள்ளன. அளவில்லாத விற்களும் அப்பறாக்கூடுகளும் உள்ளன. 
தெய்வப் படைக்கலங்கள் முற்றுமுள்ளன. ஆஞ்ஞாசக்கரமும் ஒன்று உண்டு. ஆயிரத்தெட்டண்டங்களையும் 
ஒருநாழிகையினுட் பார்த்துத் திரும்பும் இந்திர ஞாலத்தேரும் ஒப்பில்லாத ஓர் சிங்கவாகனமும் உள்ளன. விஷ்ணுவும் 
மயங்கத்தக்க மாயங்கள் பலவுமுள்ளன. 

    இத்தன்மையனவாகிய வளங்களைப்பெற்று அழிவில்லாதிருக்கும் ராசாதி ராசனே, உன்னையொத்தவர்கள் 
யாவர்! உமாதேவி பாலகனாகிய அறுமுகன் விடுத்த தூதுவனுடைய சிறுதொழிலை மனத்தில் எண்ணியெண்ணி 
உனக்கு இரங்கவுந் தகுவதோ! சிவகுமாரனையும் பூதர்களையும் மற்றையோர்களையும் வெல்லுதற்கு நம்மவர்களில் 
விருப்பமுடைய ஒருவரை விடுப்பதே யன்றி அழிந்திரங்கி இதற்காக யோசிக்கலாமோ! இதுவோ உன்னறிவு! 
போர்புரிந்த என்றம்பியாகிய வச்சிரவாகுவினுடைய பத்துத்தலைகளையும் வாட்படையினால் அறுத்த ஒற்றுவனையும் 
மற்றையோரையும் கிளையோடு கொன்றல்லது என்னகருக்குப் போகேன்.

    சிவகுமாரனோடு போர்செய்தலை விரும்பியிருந்த வீரர்கள் அளவில்லாதவர்களாயினும், இப்போரை 
எனக்கு நீ விரைந்து தருதி. முன்னாளில் பாதலத்திலுள்ள அரக்கர்கள்மேற் போர்செய்யச் சென்றதுபோலச் 
செல்லுவேன். முன்னாளிற் பிரமதேவர் தர வில்லும் வச்சிர கவசமும் படைக்கலங்களும் பெற்றுள்ளேன். 
இராக்ஷதர்களைக் குலத்தோடு சங்கரித்துப் புகழையடைந்தேன். யான் மெலியனன்று. என்னை அறுமுகன்மேற் 
போர்செய்ய விடுக்குதி" என்று இவ்வாறு அக்கினிமுகன் கூறினான்.

    சிங்கமுகன் அவனை விலக்கிக் கையமைத்து, சூரபன்மனை நோக்கி, "மந்திரிமாரும் சேனாதிபதிகளும் 
உன் புதல்வர்களும் தங்கள் தங்களுடைய வலிமைகளையே சொல்லியதல்லாமல், பெரிய இந்திரவளத்திலிருக்கின்ற 
உனக்கு ஏற்ற புத்திகளைச் சொன்னாரில்லை. யான் சொல்வதைக் கேள்' என்று சொல்லுவான்: "செல்வத்திற் பிறந்த 
வெவ்விய கோபம் கற்றவர்களுடைய அறிவையுங் கடக்கும். அது முதிருதற்குமுன் அன்புடையோர்கள் அவருக்கேற்ற 
புத்திகளைச் சொல்லித் தெளிவித்தல்வேண்டும். அரசர்களுடைய காதில் அக்கினியைக் கொளுவினாற்போல 
நன்னெறியைத் தரத்தக்க நடுவுநிலைமையாகிய நீதியைச் சொல்பவர்களே அமைச்சர்களும் துணைவர்களும் 
மேலோர்களுமாவர். 

    அரசர் விரும்பியவாறு சொல்கின்றவர்களே பகைவராவர். தொழின்முயற்சியையும், தொடங்கிய 
அத்தொழிலால் வரும்பயனையும், அதற்கு வருமிடையூறு முதலிய பிறவற்றையும் சீர் தூக்கித் தெளிந்து, 
பின் எவ்வினைகளையும் செய்வாராயின், அவ்வரசர் மாட்டுக் குற்றம் யாதாயினும் வந்தணுகவல்லதோ! 
மீன்கள் உணவை விரும்பி அறியாமையினாலே தூண்டின் முள்ளை விழுங்கி அதிலகப்பட்டு வருந்துதல்போல, 
நீ தேவர்களுக்குத் துயர்செய்தலால் வரும் இன்பத்தை விரும்பி மேலே வருந்துன்பத்தை ஆராயாது 
வருந்துகின்றனை. இந்திரன் முதலாகிய தலைவர்களையும் தேவர்களையும் வருத்திய தீயோர் முன்னுள்ள 
செல்வங்களோடழிந்ததல்லது உய்ந்தவரிவரென்று சொல்ல வல்லமோ! 

    தேவர்கள் யாவரையும் கடலிலுள்ள மீன்களைத் தருக என்று ஏவினாய். இது நல்லதா? இச்செய்கையைத் 
தம்முயிரில் விருப்பில்லாதவரன்றி வேறு யாவர் செய்வர்! இந்திரனுக்குத் துன்பத்தைச் செய்து, அரசியலை அழித்து, 
அவனுடைய நகரத்திலுள்ள வளங்களையெல்லாம் நீக்குவித்தாய்; தேவர்களெல்லாரையும் சிறையில் வைத்தாய். 
என்றமையனே, எங்களுக்கு அந்தத் தேவர்களாற்றான் இத்துணைத்துன்பம் வந்தடைந்தது. இது மெய்மை என்று 
விரைந்தெண்ணுகின்றாயில்லை. பித்தர் போல மயங்கினாய், பேதையாயினாய். சுவர்க்கவுலகம் அழிந்தநாளிற் 
சிறையிற் புகுந்த தேவர்களை இன்னமும் விட்டாயில்லை. இரக்கத்தை நீங்கினாய். அறுமுகக்கடவுள் உன்னுடன் 
போர்செய்ய வந்த தன்மை அதற்காக அல்லவா? நமக்கு வரங்களை ஈந்த சிவபெருமான் 'நீவிர் பெரிய 
செல்வங்களோடு நூற்றெட்டு யுக மிருக்குதிர்' என்று சொல்லியருளினார். அவர் விதித்த காலமுங் கிட்டியது. 

    அதனைத் தெளிகின்றிலை. விதிவலியை யாவர் கடந்தவர்! 'எத்துணைவலியுடையோரும் உங்களை 
வெல்லமாட்டார், எமது சத்தியே வெல்லும்' என்று சிவபெருமான் சொல்லியருளினார். அதனாலல்லவா 
அறுமுகக்கடவுள் செலுத்திய வேற்படை தாரகனுடைய உயிரையுண்டது. பேதைகளாகிய தேவர்களைச் 
சிறைசெய்தாய். அதனால் உனக்கானது துன்பமேயன்றி வேறுயாது? சிறிதும் பயனில்லாத எளியதொழிலைச் 
செய்து, அதனால் வேதனைப்படுகின்றது மேலோர் செயலோ! குரவர்களையும், பாலகர்களையும், பெண்களையும், 
தவத்திகளையும், பிராமணரையும், மற்றை மேலோர்களையும் தண்டித்தவர்களன்றோ நரகங்கள்தோறும்
சென்று சென்று வருந்துகின்றவர். என் அண்ணாவே, தேவர்களுடைய சிறையை நீக்குவாயாயின், குமாரக் கடவுள் 
இங்கு வந்து போர்செய்ய எண்ணார்; நமது குற்றத்தையுந் திருவுள்ளத்திற் கொள்ளார். நாளைக்கே இமைப்பொழுதினுட் 
கைலைக்கு மீண்டு செல்வார். மேலோர்களாகிய தேவர்களுடைய சிறையை நீ இன்னும் விடாதிருப்பாயேயானால், 
அசுரர்களுடைய முப்புரங்களையுஞ் சுட்ட சிவபெருமானுடைய குமாரராகிய முருகக்கடவுள் நம்முடைய குலமெல்லாந் 
தொலையும்படி சங்கரித்து, உன்னையுங் கொல்வார். இது நிச்சயம்'' என்று சூரபன்மனுடைய கருத்தை மறுத்துச் 
சிங்கமுகாசுரன் கூறினான். 

    சூரபன்மன் இவற்றைக் கேட்டு கைதட்டி, பெருமூச்சுவிட்டு உரப்பிச் சிரித்து, இதழை யதுக்கி, உடம்பினின்றும் 
அக்கினிப்பொறி காலக் கோபித்து, இவ்வாறு சொல்லுவான்: "மும்மூர்த்திகளாலும் வெல்லுதற்கரிய வலிமையையுடைய 
என்றம்பியே, நம்முடைய தொண்டுகளைச் செய்து இன்னமும் மறைந்த இந்திரனுக்கும் தேவர்களுக்கும், சிறிய பாலகனுக்கும், 
பூதர்களுக்கும் அஞ்சி மனமழிந்தனையோ! வாழ்நாளை வரையறுத்ததையும் 'நம்முடைய சத்தி உங்களை வெல்லும்' 
என்றதையும் சிவபெருமான் சொல்ல யான் முன்பு கேட்டிலேன். வஞ்சத்திலும் சூழ்ச்சியிலும் வல்லை வல்லைபோலும், 
என்றம்பியே நீ புதியதொன்றைக் கற்பித்தாய். 'நூற்றெட்டு யுகம் செல்வத்தோடு வீற்றிருந்து அரசுசெய்யுங்கள், என்று 
சிவபெருமான் சொன்னாராயினும் அவர் கொடுத்த அழியா வரத்தை விலக்குவார் யார்? அது பிழைபடுமோ? 

     சிவபெருமான் 'நம்முடைய சத்தியேயல்லாமற் பிறர் உங்களை வெல்லமாட்டார்' என்று சொன்னாலும், 
சத்தியும் அக்கடவுளும் பேதமோ? வரத்தைக் கொடுத்த அவர்தாமே நம்மைக் கொல்லுவார் என்பது பிழையே. 
'சத்தி வெல்லும்' என்று அக்கடவுள் கூறினாரென்பது ஓர் சொல்வழக்கே, அஃது உண்மையன்று. தாரகன் நம்மைப்போலப் 
பழுதின்றி யாகஞ் செய்து அழியாவரத்தைப் பெற்றிலன். அதனால் இறந்தான். வச்சிர வாகுவும் உணர்வில்லாத 
குழந்தையாதலால் இறந்தான். இதுவா நமக்கோர் குறை. ஆயிரத்தெட்டண்டங்களையுந் தனியரசாட்சி செய்திருந்தேன்; 
தேவர்களைக் குலத்தோடு தொண்டு கொண்டேன்; யார்வந்து எதிர்த்தாலும் புறங்கொடேன்; எனக்கொப்பாக ஒருவர் 
உளரோ! தவஞ்செய்துழன்ற தேவர்களிலும், இராக்கதர்களிலும், அவுணர்களிலும் ஆயிரத்தெட்டண்டங்களையும் ஒரு 
தனியே ஆண்டு என்னைப்போல அழிவில்லாதிருந்தவர் யாவர்? பிரம விஷ்ணு முதலாகிய முதியோர்கள் அளவில்லாத 
காலமாக யான் தேவர்களைச் சிறைசெய்ததைக் கண்டும், எனக்கு மிகவும் பயந்து சும்மாவிருந்தார். 

    தனித்தவோர் பாலகனோ என்னுயிரைக் கொல்வான்! வேறுபாடு பொருந்தாத வச்சிர யாக்கையையும், 
வலிமையையும், அழிவில்லாத வாழ்நாளையும் பெற்ற என்னை ஒருவர்க்கும் ஒரு ஊறுபாடும் செய்யமுடியாதென்றால், 
பாலகனோ போர்செய்து வெல்ல வல்லவன்! அறிவில்லாத ஓர் பாலகன் என்னை வெல்வான் என்று நீ சொல்வது, 
கண்ணில்லாதவன் சூரியனை ஒரு பழமென்று விரும்பிக் காட்டக் கையில்லாதவன்போய் ஆசையாற் 
பற்றுதலை யொக்கும்'' என்று இவ்வாறு சூரபன்மன் சொல்லினான். 

    தம்பியாகிய சிங்கமுகன் 'நன்று நன்று' என்று கேட்டு, "என் அண்ணாவே, இன்னமும் நான் ஒன்று சொல்வேன் 
கோபஞ் செய்யற்க. கேட்குதி" என்று சொல்லுவான். தமக்கு ஓர் மூலகாரணமில்லாத சுத்த மாயாதீதராகிய சிவபெருமான் 
பாலசந்திரனைத் தரித்த சடையையும், பவளம் போலுந் திருமேனியையும், மூன்று திருக்கண்களையும், நான்கு 
திருப்புயங்களையும், நீலகண்டத்தையுங் கொண்டு நின்றார். தமக்கொப்பில்லாத அக்கடவுள் இவ்வாறாகிய 
திருவுருவத்தைக் கொண்டது என்னகாரணம் என்று வினாவுவாயானால், பஞ்சகிர்த்தியத்தைச் செய்து ஆன்மாக்களைப் 
பந்தித்த பாசங்களை நீக்கி, வீடுபேற்றைத் தந்தருளும்படி திருவுள்ளத்திற் கொண்ட பேரருளேயாம். 

    இவ்வியல்பினையுடைய அந்தச் சிவபெருமானை நினைத்து அளவில்லாத காலம் பெருந்தவத்தைச் செய்தாய். 
அவர் அதனைக் கண்டு வெளிப்பட்டு ஒப்பில்லாத வரங்களைத் தந்து, அதற்கு ஒழிவையும் சொல்லிவைத்தார். நீ அதனை 
அறிந்திலைபோலும்! எவராலும் பெறுதற்கரிய செல்வங்களையுடைய நீ தருமத்தைப் பேணி நீதியைச் செய்யாது, 
வலிமையினாலே தேவர்களைச் சினந்து, சிறையில் வைத்தாய். எவர்க்குந் தலைவராகிய அக்கடவுள் அதனைக் கண்டு, 
உன்னைச் சங்கரிக்க நினைத்து, 'வரத்தைக் கொடுத்த யாமே அழிப்பது முறையன்று, வரத்தினாற் பெருமைபெற்ற 
சூரபன்மனைக் கொல்லுதல்  பிறர்க்கும் அரிது' என்று திருவுளஞ்செய்து, தம்முடைய திருவுருவாகிய  ஒரு திருக்குமாரரைக் 
கொண்டு கொல்ல நினைத்து, செந்நிறம்பொருந்திய திருமேனியும் ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருப்புயங்களுமாகத்
 தம்முடைய நெற்றிக்கண்ணினால் ஒரு ஒப்பில்லாத திருக்குமாரரைத் தந்தார். 

    மனுடர்களிலும் விலங்குகளிலும் பக்ஷிகளிலும் மற்றை யோனிகளிலும் புண்ணிய பாவங்களுக் கீடாகப் 
பிறந்து உழலுகின்ற உயிர்களைப் போல அக்குமாரரை நீ நினையாதே. அவர் பரஞ்சோதி சொரூபராகிய சிவபெருமானுடைய 
நெற்றிக்கண்ணிலே உதித்தார்; வேதங்களாலும் அறியப்படாத தலைவர். ஞானமில்லாதவர்களுக்கு அறிய முடியாத 
சிற்பர வஸ்துவாகிய அவரைப் பாலகன் என்றாய். சிறிய ஓர் ஆலம் வித்தில் அந்த விருக்ஷம் யாவும் ஒடுங்கியிருந்து 
தோன்றியவாறுபோல, எல்லாப் பொருளும் முன்னாளில் அவரிடத்தினின்றுந் தோன்றின. அவர் அருவமாகுவர், 
உருவமாகுவர், அருவுருவமாகுவர். நிமித்த காரணமுமாகுவர், செயப்படுபொருளுமாகுவர். 

    அக்கடவுளுடைய திருவிளையாடலை யாவரே சொல்ல வல்லவர்! அவர் வேதங்களின் ஞானத்துக்கும் 
உபநிடதங்களின் ஞானத்திற்கும் காணுதற்கரியவர், புதியர்க்குப் புதியர், மூத்தவர்க்கு மூத்தவர், முடிவிற்கு முடிவாய் 
ஆதிக்காதியாய் உயிர்க்குயிராய் நின்ற நிருமலர். ஞானமே திருமேனியாகவுள்ள அக்கடவுளுடைய இயல்பை யானும் 
நீயுமாய்ச் சொல்வோ மென்றால் அஃதெளிதோ! மோனநிலை நீங்காத முனிவர்களும் தெளிகிலர். தம்முடைய 
பெருந்தன்மையுந் தாமும் இன்னமும் முழுதுங் காண்கிலர். தங்கள் தங்கள் நூல்களையே மெய்யென்று தாபிக்கின்ற 
சமயிகள் பலரும் கத்துகின்ற எளிய சொல்லை வினாவினவர்கள் அவருடைய செயலை அறியார்; 

    சுத்தவாதுளம் முதலிய ஆகமங்களை ஆராய்ந்தறிந்தவர்களே ஒரு சிறிதறிவார். காண்பான் காட்சி 
காட்சிப்பொருள் காட்டுவான் என்னும் நான்கும், ஐம்பொறிகளும், இருவினைகளும், காலமும், இடமும், பயனுமாய் 
நின்றார் அக்கடவுள். 'நாமே பரம்பொருள்' என்று கூறுகின்ற பிரம விட்டுணுக்களாகிய இருவரும் மாயையுட் 
பட்டவராவர். முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து அப்பாற்பட்டு நிற்கின்ற தனிமுதல்வர் அக்கடவுளன்றி 
வேறுயாவர்! பிருதிவிமுதற் சுத்தமாயை வரையுமுள்ள அண்டங்களும் அங்குள்ள உயிர்களும் உயிரல்பொருளுமாகியும் 
நின்றார். அவருடைய மாயை யாவர் கடந்தவர்! வேதங்களும் மயங்கும். இத்தன்மையினராகிய முழுமுதற்கடவுளைப் 
பாலகன் என்றிகழ்ந்து பேசுகின்றாய். 

    அவுணர் கிளை முழுதையுஞ் சங்கரித்து உன்னையும் ஒருகணப்பொழுதிற் கொல்லுவார். அவர் தம்முடைய 
பேரருட்டிறத்தைக் காட்டும்படி போர்செய்ய எழுந்தருளி வந்தார். 'பிருதிவியண்டம் ஆயிரத்தெட்டைப் பெற்றேம்' என்று 
வியந்தாய். தத்துவ பேத முழுவதையும் உணர்ந்திலை. இப்பிருதிவி யண்டங்களோ அளவில்லாதன. மற்றைத் 
தத்துவங்களிலுள்ள அண்டங்களைக் கேட்பாயாயின் மருளுவை. 'அப்புவண்டம் முதல் சுத்தமாயா தத்துவ அண்டம் 
ஈறாக அளவில்லாத அண்டங்கள் உள்ளன' என்று அறிஞர் கூறுவர். 

    ஒவ்வோரண்டங்களினுமுள்ள புவனங்களின் பெருமையை யாவர் அறிந்தார். அளவிடப்படாத பொருளுக்கு 
ஓரளவு சொல்ல முடியுமோ! இத்தன்மையினவாகிய அண்டங்கள் அனந்தகோடியையும் தம்முடைய வல்லமையினால் 
ஓரிமைப்பொழுதில் உண்டாக்கவும் பின்னர் அழிக்கவும் வல்ல ஒப்பில்லாத முதற்கடவுளாகிய சிவபெருமானே 
உன்னோடு போர்செய்யவேண்டும் என்னுந் திருவிளையாடலாற் செந்திப்பதியில் வந்து வீற்றிருந்தார். ஒப்பில்லாத 
வச்சிர யாக்கையைப் பெற்றோம்' என்று மதித்தாய். இந்தச் சிரத்தையை விடுதி. 'இருவினைக்கீடாக உடம்பெடுத்துப் 
பிறக்கும் உயிர்களெல்லாம் இறக்கும்' என்று அறிஞர்கள் நிச்சயித்தார்கள்; நீயா அழிவுறாதிருப்பாய். 

    வானுலகத்தினும் நிலவுலகத்தினும் பிறந்தவர்களுடைய எந்தப் பெருமைபெற்ற உடம்பும் அழியும். 
இது நிச்சயம். பருமிதத்தையுடைய உன் வச்சிர யாக்கையும் பிருதிவி சம்பந்தமுற்றது ஆதலால் அழியாதிருக்குமோ! 
'அழியா வரத்தைப் பெற்றேம்' என்று கூறினை. அதற்குப் பொருளைக் கேட்குதி. மூவுலகங்களிற் பொருந்திய 
மற்றை யுயிர்களைப் போலச் சில நாள்களில் அழியாது மிக நெடுநாள் உயிரோடிருக்குந் தன்மை என்றே அறிகுதி.
* அச்சுதன் அயன் அமரர் என்னும் பெயர்கள் முறையே விட்டுணு பிரமா தேவர்கள் ஆகிய இவர்களுக்கு உபசாரமா 
யிருத்தல்போல, உன்னுடைய வச்சிர யாக்கையும் அழியா வரமும் பலயுக காலம் அழியாதிருத்தலாய் முடியும். 

* அச்சுதன் - அழியாதவன். அயன் - பிறவாதவன். அமரர் - மரியாதவர்.

    தேவர்களை நீ வருத்துவதை உயிர்க்குயிராகிய சிவபெருமான் திருவுளஞ்செய்து, தாம் ஈந்தருளிய 
வரத்தைத் தாமே தவிர்ப்பாராயின், 'ஏன்செய்தீர்?' என்று வினவி, 'இங்ஙனஞ்செய்க' என்று அவரைக் கற்பிப்பா 
ரொருவருளரோ! 'கெடுதலில்லாத வளங்களோடு நீயும் நின்கிளையும் இறவாமல் வாழுதி' என்று இவைகளைச் 
சொன்னேன். இப்பொழுதே தேவர்களைச் சிறையினின்றும் நீக்குதி" என்று கூறினான், அறிஞரில் அறிஞனாகிய 
சிங்கமுகாசுரன்.

    இவ்வாறு சிங்கமுகாசுரன் கூறிய வார்த்தைகளைச் சூரபன்மன் தன் காதில் அக்கினி புகுந்தாற்போலக் 
கேட்டு, கோபித்து, தலையை யசைத்து, பின்னருஞ் சிற்சிலவற்றைச் சொல்லுவான்: "காற்றிற் றள்ளுண்டும், 
நெருப்பிற் சூடுண்டும், கங்கை யாற்றிற் றாக்குண்டும், சரவணப் பொய்கையில் அலையுண்டும், தாயல்லாத 
வேறு பல பெண்களுடைய முலையை யுண்டும், அழுது விளையாடுகின்ற நேற்றைப் பாலகனையா பரம்பொருளென்று 
நினைந்தாய். சூரியன் ஒருவனே எண்ணில்லாத குடங்களிலுள்ள நீர்கடோறும் பிரதிவிம்பித்தாற்போல,
 பிரமப்பொருளொன்றே உயிர் என்னும் பெயரைப் பெற்று எண்ணில்லாத உருவங்களைக் கொண்டு, தன்னுடைய 
மாயையினாலே பற்பல வினைகளைச் செய்யும். 

    குடமுடைந்தவழிக் குடாகாயம் ஆகாயத்தோடு சேர்ந்தாற்போல, பல வேறுவகைப்பட்ட வடிவங்கள் 
அழிந்தபொழுது,வாக்கு மனாதீதமாகிய அப்பிரமப்பொருள் முன்போல அபேதமாம். 'இவர் பிரமம் இவர் 
பிரமமல்லாதவர்' என்று இருதிறமாகக் கொள்ளற்க. உடம்பே வேறு. பல ஆபரணங்களும் பொன் என்னும் 
ஒருலோகமாய் முடிந்தவாறுபோல, உயிர்களெல்லாம் ஒன்றே. வெற்றியும் வலிமையு மில்லாதவர்கள் தாழ்வர். 
இவற்றான் மேலாயினோர் உயர்வர். இது உலகத் தியற்கை. யான் அழிவில்லாத பெரியன். அறுமுகனென்பவன் 
சிறியன். ஆதலினால் யான் அவனை வெல்லுவேன். இது நிச்சயம். தொகுதியாயுள்ள  நங்குலத்து முதியோர்கள் 
பலரையழித்த பகைஞர்களாதலினாற் றேவர்களைச் சிறைசெய்தேன். 

    அரசன் குற்றஞ்செய்தவர்களைத் தேடிப் பிடித்துத் தண்டஞ்செய்தல் தகுதியே என்று மனுநூல்களுஞ் 
சொல்லும். தேவர்களுடைய சிறையை விடேன்; இந்திரனையுஞ் சிறைசெய்வேன். சிவபெருமான் வந்தாலும் 
எதிர்த்துப் போர்செய்வேன். ஆதலினால் தம்பியே இனி இந்தச் சிறிய மொழிகளை அயர்த்துவிடு. இனி நான் 
சொல்வதென்ன!  நீ என்னுடன் ஒருவயிற்றிற் பிறந்து, எல்லாப் பெருமைகளையுமடைந்து, நமது குலப்பகைவர்களாகிய 
தேவர்களை மிகவுநெருக்காது, அவர்களுக்குச் சார்பாயினாய். நீயேயிருக்க எனக்கு மற்றொரு பகைவரும் 
வேண்டுமோ!

    ஆயிரஞ் சிரங்களையும் பல தொகுதியாகிய புயங்களையுங் கரங்களையும் எதற்காகச் சுமந்தாய்! 
வலிமையையும் வீரத்தையுமிழந்தாய்; பித்துக்கொண்டவர்களிலும் பேதைமை கொண்டாய்; அசுரர்களுடைய 
குலாசாரங்களை விட்டாய்; தேவர்களைப் போன்றாய்; மேலாகிய திண்மையும் வெற்றியும் அழியப் பெற்றாய்; 
மௌனத்தோடு தவஞ்செய்யப் போகுதி; வெற்றியை யிழந்தாய்; மானத்தை நீங்கினாய்; சிறந்த அவுணர்களுடைய 
கீர்த்திகளெல்லா வற்றையுங் கெடுக்கப் பிறந்தாய்; நீ இருந்து இவ்வுலகில் ஓர் பயனையும் பெற்றிலை; 
இறந்தனை போலும்; உயிரோடிருந்தனையோ! தம்பியே நீ மந்திரியாகுதி; இதற்கும் பயந்தால், 'இதுவே நமக்குவலி' 
என்று ஆயுதங்களையும் எறிந்து விட்டு, பிரமரைப்போல ஒரு பஞ்சாங்கத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுதி; 

    சதுரக்கள்ளியின் கிளைகளைப்போலப் பல தலைகளையும் கைகளையும் நெடுங்காலமாக வளர்த்துச் 
சுமந்து இளைத்தாய்; வலியில்லாதவனே நீ யாது செய்வாய்! முன்னாளில் அறிவில்லாத குழந்தைப் பருவமாதலினால் 
யமனையும் வருணணையும் சிறை செய்தாய்; தேவர்களை அலைவு செய்தாய்; இப்போது அறிவுண்டானமையாற் 
பெண்களைப்போல நடுங்கினாய்;  நீயொரு பேடிபோலும்! உன்னை வருந்திப் பெற்ற தாய் பல தலைகளையுடைய 
புத்திரனாகிய உன்னுடைய வலிமையையும் போரையும் பார்த்தற்கு இன்னமும் வந்திலள். தாய் அருவமானது 
அவளுடைய குறையோ! 

     சிங்கமானது பகையென்றொன்று வந்தாற் பதைபதைத்தெழுந்து சீறி அதனை வெற்றிகொள்ளும். 
என்றம்பியே நீ பல சிங்கத் தலைகளைப் பெற்றதும் வீணோ !  பூதர்களையும் படைத்தலைவர்களையும் 
சிவகுமாரனையும் மற்றைப் பகைவர்களையும் யான் வெற்றிகொண்டு மீளுவேன். தம்பி! நீ வருந்தாதே; 
உன்னுடைய நகரத்துக்குப் போதி' என்று சூரபன்மன் கூறினான்.

    இவைகளைச் சூரபன்மன் சொல்லிய பொழுது, சிங்கமுகன் "இவனுடைய உணர்வு நன்று" என்று 
சிரித்து. கண்கடோறும் அக்கினி சிந்த  கோபத்தோடு கூடிய தன்மனத்தில் இவ்வாறு நினைப்பான்: "உறுதியைச் 
சொன்னேன். உணர்வில்லாத இவன் வீணாக என்னை இகழ்ந்தான். மேலே வருவதை அறியான். தான் அழிவதை 
ஆராய்ந்திலன். எந்தப் புத்தியை யாயினும் அறிவிலார்க்குச் சொல்லுபவர் அவரினும் அறிவில்லாதவராவர். 
தேன்மழையைச் சொரிந்து வளர்த்தாலும், காஞ்சிரங்காய் தன் கைப்பொழியுமோ! அறிவில்லாத ஒருவனுடைய 
மனந் தெளியும்படி ஒருவன் உபதேசிப்பது அத்தன்மையல்லவோ! 

    இந்தச் சூரபன்மனுடைய புத்தியைக் கலக்கினாலும் இவன் உய்யும்வகையைக் கருதுகின்றானில்லை. 
நாம் துன்பமுற்றிரங்கி ஆவதென்ன! விலக்கமுடியாத விதியை யாவர் வெல்ல வல்லவர்!. ஆகும் விதியிருந்தால் 
எல்லாம் ஆகும், அழியும் விதியிருந்தால் எல்லாம் அழியும். சிவபெருமான் ஒருவருக்கன்றித் தேவர்களுக்காயினும் 
அதனை நீக்கமுடியுமோ! சிவபெருமானீந்த காலவெல்லை கழிந்தது; இறக்குங்காலம் அணுகியது. இங்குள்ளார் 
யாவரும் இச்சூரபன்மனும் இறப்பார்கள். இந்திரன் செய்த தவமும் பொய்படுமோ! இறத்தல் நிச்சயம் . ஆதலாலும், அரசன் 
என்சொல்லை வெறுத்திகழுதலாலும், 'மகாராசனே என்பிழையைப் பொறுத்துக் கொள்ளுதி' என்று இனிய 
மொழிகளைச் சொல்வதல்லது, இன்னமும் யான் இவனை வேண்டி இவன்சொல்லை மறுத்துப் பேசேன். 

    அரசர்க்கரசனாகிய என்றமையன் சுப்பிரமணியக் கடவுளுடைய வேற்படையினால் இனி இறந்துவிடுவான். 
யான் இதனையும் பார்த்துப் பின் உயிரோடிருத்தல் பிழையாகும். இவனுக்கு முன்னம் இறப்பதே முறை'' என்று 
சிங்கமுகன் மனத்தில் உறுதிசெய்துகொண்டு, தன் பிதாவை யொத்த தமையனாகிய சூரபன்மனுடைய கால்களை 
வணங்கி அஞ்சலிசெய்து, என்னண்ணாவே, கோபஞ் செய்யற்க, அறிவில்லாத அடியேனுடைய பிழையைப் பொறுத்தல் 
வேண்டும். சிறியோர் ஓர் பிழையைச் செய்தாற் பெரியோர் அதனைப் பொறுத்துப் பின்னும் அவரைப் பாதுகாப்பதல்லது, 
சிறிதாயினும் அவர்மேற் கோபிப்பாரோ! யான் செய்த பிழையை அறிவினையுடைய நீயன்றி யாவர் தாங்குவார். 
அடியேன் செய்த இளிவரவைப் பொறுத்துக் கொள்ளுதி. என்னைக் கோபித்திகழற்க. யான் போருக்குப்போய்ப் பகைவர்களை 
எதிர்த்துப் பொருது கொலைசெய்து வருகின்றேன், அதனை அறிகுதி'' என்று சொல்லி, "பகைவர்கள்மேற் போருக்குச் 
செல்லுவேன் விடைகொடுக்குதி'' என்று கேட்டான்.

    "பகைவர்கள்மேற் போருக்குப் போவேன் விடை தருதி" என்று தன்றம்பி கேட்டலும், சூரபன்மன் மிகவும் 
மனமகிழ்ந்து, ஆசையினால் "என்றம்பியே வருதி" என்று மார்போடணைத்துத் தழுவி, "தம்பியே, மூவுலகங்களிலும் 
திசைகளிலும் அண்டங்களிலும் செய்யும் வெற்றிகளுள் உனக்கரிதாயது யாது! மிகுந்த கேள்வியையுடைய என்றம்பியே, 
நீ முன்பு எனக்குச் சொன்னவைகளை ஆராய்ந்து பார்த்தால், அவைகளெல்லாம் என்னுடைய மனத்துணிவையுந் 
திட்பத்தையும் ஊக்கத்தையும் அறிதற்கு நீ சொல்லியவைகளேயாம். நீ பகைவர்களாகிய விலங்குகளைக் கொல்லுகின்ற 
ஒரு சிங்கமல்லவா! 'பகைவர்கள் போருக்கு வந்தார்கள்' என்னுஞ் செய்தியைக் கேட்டால், அவர்களைக் கொன்றபின்பல்லது, 
அவர்கள் கும்பிட்டோட வென்றபின்பல்லது, நீ கோபந் தீருதியோ! 

    உன்னுடைய வலிமையை யான் அறிகிலேனோ! தம்பியே, நீ இன்றைக்கு உன்னுடைய நகரத்துக்குப் போய் 
அங்குள்ள சேனைகளையெல்லாம் ஒருங்கு சேர்த்திருக்குதி. சிவகுமாரன் இங்கே போருக்கு வந்தால் உன்னை அழைப்பேன் 
வருகுதி" என்றான். சிங்கமுகன் அவற்றைக் கேட்டு,அண்ணாவே, சிவகுமாரன் விரைவில் உன்னுடைய நகரத்துக்குப் போர் 
செய்ய வந்தாலும், நீ அவனோடு போருக்குப் போகாதே. அதனை ஓர் தூதுவனிடத்திற் சொல்லியனுப்பு.
யான் விரைவிற் போர்செய்ய வருகின்றேன்' என்றான். 

    என்னலும், சூரபன்மன் நன்றென்று  விடைகொடுத்தான். சிங்கமுகன் வணங்கித் தன்னுடைய நகரத்துக்குப் 
போயிருந்தான். அப்பொழுது, சூரபன்மன் ஆண்டிருந்த தன் புதல்வர்கள் படைத்தலைவர்கள் முதலாகிய யாவரையும் 
அவரவரிடங்களுக்குச் செல்லும்படி அனுப்பி, தானும் தன்னுடைய கோயிலில் இந்திர போகத்தை அனுபவித்திருந்தான்.

    இதுகாறும் சூரபன்மன் அமைச்சியல் செய்த கதையைச் சொன்னோம். இனி, இந்திரன் முதலிய தேவர்கள் 
துதிக்கத் திருச்செந்தூரில் வீற்றிருந்த சுப்பிரமணியக்கடவுளுடைய செயலைச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            மகேந்திரகாண்டமுற்றிற்று.

            நான்காவது

            யுத்தகாண்டம்.

            ஏமகூடப்படலம்.

    நாரணனென்னுந்தேவு நான்முகத்தவனுமுக்கட் 
    பூரணன்றானுமாகிப்புவிபடைத்தளித்துமாற்றி 
    யாரணமுடிவுந்தேறாவநாதியாயுயிர்கட்கெல்லாங் 
    சாரணனாயமேலோன் கழலிணைகருத்துள்வைப்பாம்.

    திருச்செந்தூரிலே திவ்விய சிங்காசனத்தின்மீது வீற்றிருக்கின்ற அறுமுகக்கடவுள் சூரியோதயத்தில் 
வீரவாகுதேவரை நோக்கி, "பாவங்களையே செய்கின்ற சூரபன்மனும் அவுணர்கள் யாவரும் அழியவும்,
 தேவர்களுடைய துன்பம் நீங்கவும், வீரமகேந்திரபுரிக்கு இப்பொழுதே நாம் போதல்வேண்டும். நம்முடைய 
தேரை விரைந்து கொணருதி" என்று அரிபிரமேந்திராதி தேவர்களும் முனிவர்களும் பிறருங் கேட்கும்படி 
ஆஞ்ஞாபித்தருளினார். சுப்பிரமணியக் கடவுளுடைய திருவாக்கை விட்டுணு முதலிய தேவர்கள் கேட்டு ஆனந்த 
சாகரத்தில் மூழ்கி, "எங்களுடைய துன்பந் தீர்ந்தது தீர்ந்தது" என்று துள்ளி, ஆடிப்பாடி, அவருடைய திருவடிகளை 
வணங்கினார்கள். 

    அப்பொழுது, நந்திகணத்தலைவராகிய வீரவாகு தேவர் மனவேகம் என்னுந் தேரோடு பாகனை 
அழைத்துக்கொண்டுவந்து குமாரக் கடவுளுடைய திருமுன்பு விடுத்தார். வாயுவினாலே தூண்டப்படுகின்ற 
அத்தேரின்வரவை முருகக்கடவுள் பார்த்தருளி, வேதங்கள் துதிக்கச் சிங்காசனத்தினின்று மிழிந்து, 
மேருமலையின் மீது பன்னிரண்டாதித்தர்களும் ஓருருவெடுத்து ஏறினாற்போல இவர்ந்து, தம்மைச் 
சூழ்ந்தவர்களை நோக்கி, "நாம் சூரபன்மனைச் சங்கரிக்கும்படி சமுத்திரத்தின் மத்தியிலிருக்கின்ற 
மகேந்திரபுரிக்குச் செல்லுகின்றோம். நீங்கள் உங்கள் வாகனங்களிலேறிக் கொண்டு நம்மோடு வருதிர்" 
என்று பணித்தருளினார். அப்பணியைச் சிரமேற்கொண்டு பிரமா அன்னத்திலும், விட்டுணு கருடனிலும், 
இந்திரன் விமானத்திலும், மற்றைத்தேவர்கள் தத்தம் வாகனங்களிலும், இலக்கத்தெண்மரும் வீரவாகுதேவரும் 
தேர்களிலும் ஏறி, தேவாதி தேவராகிய சுப்பிரமணியக்கடவுளைச் சூழ்ந்தார்கள். 

    கடுஞ்சினத்தை யுடையர்களும், எல்லாப் புவனங்களையும் அழிக்க எண்ணினும் ஒரு 
நொடிப்பொழுதில் அழிப்பவரும், போர்வலியுடையருமாகிய சுப்பிரர், மேகமாலி, சுவேதசீரிடர், கபாலி, 
அப்பிரசித்து, சித்திராங்கர், சுவாலதானு, வச்சிரர்,வீமர், உக்கிரர், உக்கிரேசர், பிப்பலர், நந்திசேனர், 
பிரமசர், பிரமசேனர், பதுமர், கராளர்,தண்டர், பத்திரர், பரிகநேமி, உதவகர்,புட்பதந்தர், உருத்திராகாரர், 
வீரர், மதிசயர், கேதுமாலி, வக்கிரர், பிரமகேசர், அதிபதி, கலிங்கர்,கோரர், அச்சுதர், அசலர், சாந்தர்,
சித்திர சேனர், பூரி, சுசீலர், மாசயர், சிங்கர், உத்தரசிங்கர், உபதிட்டர், சயர், ஈசர், மத்தகர், மதங்கர், 
சண்டி, மகாபலர், சுவேதர், நீலபத்திரர், சுவாகு, அண்டாபரணர், காகபாதர், பிங்கலர்,சமானர், மாயர், 
நிகும்பர்,கும்பர், சங்கபாலர், நிசாகர், சதநாவர், அயக்கிரீவர், சகத்திரவாகு, அயுதாக்ஷர், அனந்தர், வாமர், 
மங்கலகேசர், சோமர், வச்சிரமாலி, சண்டர், அசமுகர்,சரபர், குந்தர்,ஆடகர், கவந்தர், மேகர், விசயர், 
வித்துருமர், தண்டி, வியாக்கிரர், காலபாசர், தசமுகர், குமுதர், பானு, தனஞ்சயர், இடபரூபர், சுசிமுகர், 
அனலகேசர், சுபத்திரர், கேது, மோகர், மத்தர், உன்மத்தர், நந்தி, மனோபவர், வாயுவேகர், சகத்திரபாதர், 
பானுகம்பர், பதங்கர், சுத்தர், அனிகர்,சீதர், சுனாதர்,சுமாலி, மாலி, அத்திரி, அசுரகாலர், அரிகேசர், சுவாலகேசர் 
என்னும் படைத்தலைவர் நூற்றெண்மரும் சண்முகக் கடவுளைச் சூழ்ந்தார்கள். 

    இவர்களெல்லாரும் குமாரக்கடவுளைச் சூழ்தலும், இரண்டாயிரம் வெள்ளம் பூதசேனைகளும் 
அதனைக்கண்டு, ஆரவாரித்தெழுந்து எங்கும் நெருங்கின. தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். பூதர்களுடைய 
ஆரவாரம் ஆகாயத்தினும் திக்குக்களினும் பூமியினும் பரந்தது. பேரிகை, கரடிகை,துடி,காளம் முதலிய அநேக
வாத்தியங்களைப் பூதர்கள் இயம்பிச் சென்றனர். பூதசேனைகளினுடைய செலவினாலெழுந்த தூளி சூரிய 
சந்திரர்களுடைய ஒளிகளை மாற்றிச் சமுத்திரத்தைத் திடராக்கியது. இவ்வாறாகிய பூதவெள்ளம் தம்முடைய 
தலைவர்களோடும் சுப்பிரமணியக் கடவுளுடைய பாதங்களைத் துதித்துச் சூழ்ந்து சமுத்திரக்கரையிற்றங்கி, 
சமுத்திரத்தின் வழியாக நடந்தன. 

    பாரத்தைத் தாங்கலாற்றாது சேடனும் நடுங்கினான். பூதவெள்ளஞ் செல்லும் பொழுது, சமுத்திரம் 
அவைகளின் பரட்டினுள் அடங்கியது. சுறவு சின்னை திமிங்கில முதலாகிய மீன்கள் புழுக்கள் போல உலாவின. 
சமுத்திரத்திலுள்ள மலைகள் கால்களில் உறுத்துகின்ற பருக்கைக் கற்கள் போன்றன. அவர்கள் செல்லுதலாற் 
சமுத்திரங் கலங்கிச் சேறாகி, இறைப்பொழுதினுட் காய்ந்து புழுதியாக, அத்துகள் எவ்வுலகமும் நிமிர்ந்து சூழ்ந்தது. 
பூதவெள்ளங்கள் இவ்வாறு சமுத்திரத்தின் வழியாகச் செல்ல, சுப்பிரமணியக்கடவுள் துணைவர்களும் 
அரிபிரமேந்திராதி தேவர்களும் சூழத் தேரின்மேற் கொண்டு, ஆகாயவழியாகச் சமுத்திரத்தைக் கடந்து, 
இலங்கை மலையை நீங்கி, மகேந்திரபுரிக்கு முன்பு சென்றருளினார்.

    அப்பொழுது, பிரமாவும் விட்டுணுவும் இந்திரனும் தம்முள் யோசித்து,  சுப்பிரமணியக்கடவுளுக்குத் 
திருமருங்கில் வந்து அஞ்சலிசெய்து துதித்து, 'எம்பெருமானே, கேட்டருளும். சூரபன்மனுடைய ஊரில் 
வன்கண்ணர்களாகிய நீசர்கள் செறிந்திருத்தலால், அங்கே செல்லுதல் முறையன்று. அதற்கடுத்த எல்லையாகிய 
ஈண்டே பாசறையை யமைப்பித்து வீற்றிருந்துகொண்டு, பின்பு உபாயங்களை நாடி வேண்டியவாறு செய்தருளும்" 
என்று அன்பினோடு விண்ணப்பஞ் செய்தார்கள். சுப்பிரமணியக் கடவுள் அதனைக்கேட்டு நன்றென்று 
திருவுளமிசைந்து, அவர்கள் மீது திருவருணோக்கஞ் செய்து, தேவத்தச்சனை அழைத்து, 'விரைவில் இங்கே 
ஒரு பாசறையைச் செய்குதி'' என்றார். 

    அவன் மனமகிழ்ந்து திருவடிகளை வணங்கி, "தாரகனைச் சங்கரித்த வேலாயுதத்தை யேந்திய 
திருக்கரத்தையுடைய கடவுளே, தேவரீருடைய திருவருளினால் அடியேன் இங்கே அதனைச் செய்வேன்" என்று 
விண்ணப்பஞ் செய்து, மாடங்கள் கூடங்கள் மண்டபங்கள் சோலைகள் வாவிகள் கோபுரங்கள் வீதிகள் 
முதலியவைகள் கோடா கோடிகள் பொருந்த ஒரு பாசறையை மனத்தாற்செய்து, அதற்கு ஏமகூடம் என்று 
பெயரிட்டான். அந்தப் பாடிவீட்டைச் சுப்பிரமணியக்கடவுள் பார்த்துத் திருவுளமகிழ்ந்து, தேவத்தச்சனுக்கு 
அருள்செய்து, தேரினின்றும் இறங்கி உள்ளே போய், பூதசேனைகளை வீதிகளில் நிறுத்தி, இலக்கத்தொன்பது 
வீரர்களோடும், பிரமா முதலிய தேவர்களோடும் திருக்கோயிலினுட் புகுந்து, அவர்களும் பராசர முனிவருடைய 
புதல்வர்கள் அறுவரும் * தொண்டு செய்தொழுகத் திவ்விய சிங்காசனத்தின் மீது மகிழ்ந்து வீற்றிருந்தருளினார்.

* இவர்களுடைய சரித்திரத்தைச் சுரம்புகுபடலத்திற் காண்க.

            திருச்சிற்றம்பலம்.

            வரவுகேள்விப்படலம்.

    சுப்பிரமணியக் கடவுள் ஏமகூடம் என்னும் பாசறையில் வீற்றிருக்கும் பொழுது, தேவர்களிடத்தில்
 அன்பினையுடைய நாரதமுனிவர் இவைகளெல்லாவற்றையும் பார்த்து, மகேந்திரபுரியிற் சென்று, 
சூரபன்மனுடைய கோயிலையடைந்து, வாயிற் காவலாளர்கள் உள்ளே விடச்சென்று, அவன் பல வளங்களோடு 
வீற்றிருத்தலைக் கண்டு, "இவன் மூங்கில்போலத் தானே தன்கிளையோடழிக" என்று மனத்தில் நினைத்துக் 
கொண்டு, கைகளிரண்டையும் விரித்து நின்று, வாயினாற்றக்க ஆசியைச் சொல்லினார். அவரைச் சூரபன்மன் 
பார்த்து, "நீ யார்? எங்கேயிருப்பவன்? நீ இங்கே வந்த காரணம் என்னை?'' என்று வினாவினான். 

    நாரதமுனிவர் "யான் சிவபெருமான் வீற்றிருக்கின்ற உத்தர கைலாசத்தில் வாழ்வேன்; உங்களுடைய 
குலந் தலைமையாகும்படி நாடோறுந் தவஞ் செய்வேன்; வஞ்சகம் பேசேன்; காம முதலிய குறும்புகளை நீங்கிப் 
பல தவங்களைச் செய்வேன்; தேவர்களுக்குத் துன்பஞ் செய்வேன்; சுக்கிராசாரியரோடு சினேகமுள்ளேன்; 
நாரதன் என்னும் பேருள்ளேன்; உன்னிடத்து ஒன்று சொல்ல வந்தேன். சிவபெருமான் உன்னைக் கொல்லும்படி 
கந்தன் என்னுங் குமாரனை நெற்றிக்கண்ணிலிருந்து உண்டாக்க, உன்னுடைய தொண்டைச் செய்கின்ற 
இந்திரன் முதலாகிய தேவர்கள் அப்பாலகனிடத்திற்போய் வணங்கி உன்னாற் றமக்கு நிகழ்ந்த 
துன்பங்களைச் சொன்னார்கள். 

    அவன் அவர்களை அஞ்சற்க என்று கூறி, சிவபெருமானுடைய அருளினாற் பூதவீரர்களோடு 
பூமியில்வந்து, உன்றம்பியாகிய தாரகனைக் கிரவுஞ்ச மலையோடும் வேற்படையினாற் சங்கரித்து, 
பின் செந்திப்பதியில் வந்திருந்துகொண்டு, உன்னிடத்து ஓரொற்றுவனை அனுப்பி, அவன் விரைவில் 
வந்து மீண்டபின்பு எல்லா நிகழ்ச்சிகளையும் சீர்தூக்கிப் பார்த்து, சேனைகளோடு சமுத்திரத்தைத் 
தாண்டி இந்நகரின் வடதிசையில் வந்து, அங்கே ஓர் பாடிவீட்டைச் செய்வித்து, சேனைகள் சூழவிருந்தான். 
இவைகளெல்லாவற்றையும் நான் பார்த்தேன். இது நிகழ்ந்த வண்ணம்'' என்று கூறினார். 

    இவைகளைச் சூரபன்மன் கேட்டு, நெருப்புப் போலக் கோபித்துச் சிரித்துச் சொல்வான்: 
"இந்திரன் பிரமன் விட்டுணு என்னும் இவர்களுடைய ஊர்களைப் போல நினைத்தானோ! ஆயிரகோடி 
யண்டங்களையும் அரசாளுகின்ற என்னுடைய வீரமகேந்திரபுரியில் ஒரு பாலகனாம் போர்செய்ய 
வருவான்! சிங்கக் கூட்டங்கள் செறிந்திருக்கும் ஓர் காட்டில் ஓர் யானைக் கன்றானது புல்வாய் கலைமான் 
முதலாகிய மிருக சாதிகளோடு வந்தாற் போர்செய்து வெற்றிகொள்ள வல்லதா! முருகனும் நம்முடன் 
போர்செய்யும்படி சேனைகளோடு வந்தது அது போலல்லவா! 

    அவன் சமுத்திரத்தைக் கடந்து என்னுடைய ஆணையை யிகழ்ந்து பூத சேனைகளோடு இந்நகருக்கு 
வருவானாம்! இதுவே காலம், அவனுடைய வீரத்தையழிப்பேன்; புத்தியில்லாத பாலகனென்றும் விடேன்; 
வசையென்றும் பாரேன். முன்னே ஒரு சூழ்ச்சியினால் அசமுகியினுடைய கையைத் துணிப்பித்து நம் 
பகைவர்களாயிருந்த தேவர்களெல்லாரும் உய்ந்தாரோ! பாலகன் என்றம்பியாகிய தாரகனோடு கிரவுஞ்ச 
மலையை அழித்தோம் என்றெண்ணி, தன்னுயிர் போவதை யறியாமல் இந்நகரில் வந்தான்: 

    பாற்கடலைக் கடைந்த விட்டுணுவும், நூறுயாகாதிபனாகிய இந்திரனும்,தாமரை மலரிலிருக்கின்ற 
மேலோராகிய பிரமாவும் என்பெயரைச் சொல்லினும் அஞ்சி மறைந்தார்கள். சாம்பலைப் பூசுகின்ற 
சிவனுடைய குமாரனா நம்மோடு போர்செய்வான்! என்குமாரனாகிய பானுகோபனை நால்வகைச் 
சேனைளோடும் அனுப்பி, பூதர்களையும் மற்றை வீரர்களையுங் கொல்வித்து, கந்தனை விரைவில் 
வெற்றிகொள்வேன். முனிவனே இதனைக் காண்குதி" என்று சூரபன்மன் கூறினான். 

    நாரத முனிவர் இவைகளைக் கேட்டு, "இது நன்று நன்று. கால தாமதஞ் செய்யாதே; உன்னகரைச் 
சூழ்ந்து போர் செய்யும்படி வந்த பாலகனோடு போர் செய்தற்கு இனி உன்னுடைய படைகளை யனுப்புதி; 
உங்களுக்கு வெற்றியுண்டாகும்படி தவஞ்செய்யும் பொருட்டு நான் போவேன்" என்று சொல்லிப் 
புன்முறுவல் செய்துகொண்டு போயினார்.

    சூரபன்மன் தன்னுடைய அயலில் நின்ற கோரன் உற்கோரன் என்னும் ஒற்றுவர்களைப் பார்த்து, 
''சமுத்திர ராசனை விரைந்து கொண்டு வருகுதிர்' என்றான். அவர்கள் ஓடிப்போய் வருணனைக் கூவிப் 
பிடித்துக் கொண்டு வந்து முன்னே விட்டார்கள். அவன் கன்றிய மனத்தினனாய்க் கைகூப்பி வணங்கி, 
மிக்க துயரத்தோடு நின்றான். அவனைச் சூரபன்மன் நெருப்பெழப் பார்த்து, "வருணனே, பிரமவிட்டுணுக்கள் 
அறியாவண்ணம் ஒளித்த சிவனுடைய குமாரனையும் பூதவெள்ளங்களையும் நமக்கு மாறாக  நீ
இங்கே விடுத்ததென்னை?' என்று வினாவினான். 

    வருணன் சொல்லுவான்: "மகாராசனே கேட்பாய். பிரமா விட்டுணு இந்திரன் துணைவர்கள் 
ஆகிய இவர்களோடு சிவகுமாரர் ஆகாய மார்க்கமாகச் சென்றார்; பூதர்கள் என் மீது போயினார்கள்; யான் 
அவர்களுடைய பரடுவரையினும் அமைந்திலேன்; அவர்களை யானா தடைசெய்ய வல்லேன்; இது தகுமா ! 
ஊழிக்காலத்தினும் அழியாத பூதர்கள் விரைந்து செல்ல, அவர்களுடைய காலிலிருந் தெழும்புகின்ற 
புழுதியாற் சேறுபட்டு, ஓயாமற் புலம்பலுற்றேன். * ஆழியன் என்னும் பேரும் அற்றேன்; வசையையே பெற்றேன்; 
ஏழையேன் செய்வதென்னை? வலியவர்களுக் கெதிருண்டோ! அகத்தியமுனிவர் அள்ளி ஆசமனஞ் செய்ததுபோல 
என்னை ஆசமனஞ் செய்துவிடுவர். கொள்ளையாகநெருங்கிய பூதர்களுள் ஒருவர் ஒருள்ளங்கையில் அள்ளுதற்கும் 
ஆற்றேன், ஆதலால் உய்ந்தேன். இடியேற்றைப் பாம்பு விலக்க வல்லதா! சிங்கேற்றை யானை விலக்கிய துண்டா! 
விதியை மதி வெல்லுமா! அவ்வாறன்றோ எளியேனாகிய யான் வலியவர்களாகிய பூதர்களைத் தடுப்பது'' என்று 
இவைகளைச் சமுத்திர ராசன் சொல்லி, சரீரம் நடுங்கி நின்றான்.

* ஆழியன்-ஆழமுடையன்.

    அப்பொழுது, சில ஒற்றுவர்கள் சுப்பிரமணியக்கடவுள் மகேந்திர புரியை வந்தடைந்ததைக் கண்டு, 
விரைவில் ஓடிவந்து, சூரபன்மனை வணங்கி நின்று, "அரிபிரமேந்திராதி தேவர்கள் சூழவும், இலக்கத்தொன்பது 
வீரர்கள் போற்றவும், இரண்டாயிரம் வெள்ளம் பூதசேனைகளோடு சிவகுமாரர் நம்முடைய மகேந்திரபுரியின் 
வடதிசையில் வந்து, தேவத்தச்சனைக் கொண்டு சிறந்த ஓர் பாடிவீட்டைச் செய்வித்து, பக்கத்திற் பூதவீரர்கள் 
சூழ ஓர் கோயிலில் வீற்றிருந்தார். யாம் இதனைப் பார்த்தோம். இப்பொழுதே செயற்பாலதைச் செய்குதி" 
என்று சொன்னார்கள். 

    இதனைச் சூரபன்மன்கேட்டு, அண்டங்களும் புவனங்களும் சுழலும்படி அக்கினிபோலக் கோபித்து, 
புண்போலச் சிவந்த கண்களையுடையனாய், 'சிவகுமாரனுடைய வலிமையையும், பூதர்களுடைய வலிமையையும், 
தூதுவனுடைய வலிமையையும், பிறருடைய வலிமையையுந் தொலைப்பேன்; நீவிர் விரைவிற் போய்ப் 
பானுகோபனை யழைத்துக்கொண்டு வருதிர்" என்று தூதுவர்களுக்குச் சொன்னான்.

            திருச்சிற்றம்பலம்.

            முதனாட் பானுகோபன் யுத்தப்படலம்.

    சூரபன்மனுடைய பணியைக் கேட்ட தூதுவர்கள் நன்றென்று சொல்லிப் பானுகோபனுடைய 
கோயிலையடைந்து, அவனை வணங்கி, சூரபன்மனுடைய பணிவிடையைச் சொன்னார்கள். அவன் 
சிங்காசனத்தை விட்டெழுந்தான். மந்திரிமார்களும் படைத்தலைவர்களும் சுற்றமாயுள்ள பிறரும் 
விரைந்து பக்கங்களிற் சூழ்ந்தார்கள். வாத்தியங்கள் ஒலித்தன. பதாதிகள் சூழ்ந்தன.பானுகோபன் ஓர்
தேரிலேறி ஆயிரகோடி வீதிகளைக் கடந்து , தன்னைக் கண்ட வீரர்கள் வணங்கப்போய்ப் பிதாவினுடைய நகரத்தை 
யடைந்து, தேரினின்றிறங்கிக் கோயிலினுட்சென்று, அவனுடைய கால்களை வணங்கி, "வீராதி வீரனாகிய 
என்பிதாவே, என்னை நீ அழைத்ததென்னை?" என்று வினாவ, சூரபன்மன் சொல்வான்: 

    "முன்னே கிரவுஞ்ச மலையோடு என்றம்பியாகிய தாரகனைக் கொன்ற கந்தவேள் நந்திகணத் 
தலைவர்களோடும் பூதர்களோடும் செந்திப்பதியை நீங்கிச் சமுத்திரத்தைக் கடந்து இந்நகரின் வடக்குவாயிலில் 
வந்து தங்கினான். கள்வனாகிய விட்டுணுவும் பிரமாவும் என் பணியைக் கடந்த இந்திரன்முதலிய தேவர்களும் 
பிறரும் அவனுக்குப் பக்கத்தில் வந்திருக்கின்றார்களாம். எளிய தேவர்களும், சிவகுமாரனும்,நந்திகணவீரரும், 
பூதர்களும் வந்திருத்தற்கு இந்த வீரமகேந்திரபுரி அத்துணை எளிதாயிற்றா! நன்று நன்று!! 

    என்றம்பியையும், கிரவுஞ்சமலையையும், வச்சிரவாகுவையும், பிறரையும் கொன்ற நம்பகைவர்களைக் 
கொல்லுதற்கு நான் முன்பு போர்செய்யச் செல்லுதலே முறை. ஆயினும் அப்பகைவர் சிறியர், நான் ராசாதிராசன்,
ஆதலினால் வாளாவிருந்தேன். இந்திரன் பிரார்த்தித்தலும், சிவன் நம்மைப் பொரும்படி பூதத் தலைவர்களோடு 
தம்முடைய குமாரனை அனுப்பினார். ஆதலின் நானும் உன்னைக்கொண்டு வெற்றியடைந்திருத்தலே முறை. 
ஆதலால், இனி நீ சேனைகளோடு போருக்குப் போய், சிவகுமாரனையும் நந்திகண வீரர்களையும் பூதர்களையும் 
பொருதழித்து வெற்றிகொண்டு, நம்மிடத்தில் விரைந்து மீளுதி" என்று சூரபன்மன் சொன்னான்.

    பானுகோபன் இவற்றைக்கேட்டு, புயங்கள் மலைபோல வளர, உடல் புளகங்கொண்டு, "பிதாவே, 
சிவன் அனுப்பிய குமாரனையும், பூதர்களையும், பிறரையும் பொருதுவென்று மீளுவது ஓர் பொருளென 
நினைந்தோ இவைகளையெல்லாஞ் சொன்னாய். 'சிவகுமாரன் இந்நகர்க்கு வருமுன் எதிர்ந்து போர் 
செய்கின்றேன்' என்று நேற்றைத் தினமே உன்னை வினாவினேன்; நீ அதனை யோர்ந்தாயில்லை. பின்பு 
இதனைச் சொல்லுதல் பிழையாகும். இனிப் பேசியாவதென்ன! சேனைகளோடுஞ் சென்று கந்தவேளைப் 
போர்செய்து வென்று, பூதர்களையும் படைத்தலைவர்களையுங் கொலை செய்து, இங்கே வருவேன். 
பிதாவே, நீ இதனைக் காண்குதி. கந்தனை வென்றபின், அவனோடிருக்கின்ற விட்டுணுவையும் பிரமாவையும் 
இந்திரனாகிய கள்வனையும் நொடிப்பொழுதிற் பிடித்துக்கொண்டு வந்து தருவேன்; அவர்களுக்கேற்ற
 தண்டத்தைச் செய்குதி" என்று கூறி வணங்கினான். சூரபன்மன் "மைந்தனே நீ அவ்வாறு போய்ப் போர்செய்து 
வெற்றியோடு வருதி" என்றான்.

    பானுகோபன் நன்றென்று விடைபெற்றுக்கொண்டு, சேனைகளும் துணைவர்களும் சூழத் 
தேரின்மேற்கொண்டு தன்னுடைய மாளிகையை யடைந்து, தேரினின்றிறங்கி, பக்கத்திலுள்ள தூதுவர்களை 
நோக்கி, 'நம்முடைய சேனைகளை இங்கே கொண்டு வாருங்கள்'' என்று சொல்லி,பரிசனர்களெல்லாரையும் 
நிறுத்தி, ஆயுதசாலையிற்போய், வீரலக்குமியை வழிபட்டு, பீதாம்பரத்தை உடுத்து, அரைக்கச்சையைக் கட்டி, 
வாட்படையை மருங்கிற் சொருகி, வீரக்கழலைக் கட்டி, கவசத்தையணிந்து, கோதையைக் கையிற்சுற்றி, 
விரலிற்புட்டிலை அணிந்து, அப்பறாத் தூணியை முதுகிற் கட்டி, நெற்றியிற் பட்டத்தைச் சேர்த்தி, 
பல ஆபரணங்களையுந் தாங்கி, தும்பை மாலையை முடியிற் புனைந்து, வெற்றியுண்டாகுக' என்று 
ஒரு பெரிய வில்லை எடுத்து, தன்பகைஞர்களுடைய வலிமையை எண்ணாதவனாய்  மோகப் 
படைக்கலத்தையும் எடுத்துக்கொண்டு வாய்தலில் வந்தான். 

    பானுகோபன் இவ்வாறு போர்க்கோலங்கொண்டு வாய்தலில் வருமுன், முன்னே சென்ற தூதுவர்கள் 
'போருக்கெழுதிர்" என்று கூற, விசயன்,நேமியன், மாயன், முசலி, கண்டகன், முரன்,கரன், மூர்க்கன், தசமுகன், 
கனலி, சண்டன், விசண்டன், அசமுகன், மகிடன், அக்கிரவாகு,விசய சேனன், விடசேனன், விமோகன், சோமகன், 
மது, சசிசித்து, சுசிமுகன், அசனி, சூனியகேது, அசுரசேனன் முதலிய அவுணப்படைத்தலைவர்கள் பல 
தெய்வப் படைக்கலங்களை யேந்திப் 'போர் கிடைத்ததோ" என்று மகிழ்ந்து புறப்பட்டார்கள். 

    பதினாயிரம் வெள்ளம் அசுரசேனைகளும், பதினாயிரம் வெள்ளம் கசரததுரகங்களும் 
அவர்களுக்குப் பக்கத்தில் வந்தன. படைத்தலைவர்கள் இருபதினாயிரம் வெள்ளஞ்சேனைகளோடு 
பானுகோபனை அணுகித் தொழுது சூழ்ந்தார்கள். அவன் இவைகளைப் பார்த்து, ஏவலாளனை நோக்கி,
"ஒரு தேரைக் கொண்டுவருதி' என்று சொல்ல, முப்பதினாயிரங் குதிரைகள் பூண்ட ஒரு தேரைக் கொண்டுவந்து 
விடுத்தான். பானுகோபன் அத்தேரின் மீதேறினான். சேனைகள் ஆரவாரித்தன;

    பலர் அளவிறந்த சாமரங்களை வீசினர்; வேறுபலர் வெண்கொற்றக் குடைகளை யேந்தினர்; 
வேறுபலர் அடைப்பை, கோடிகம், காளாஞ்சி, வாள், பீலிக்குஞ்சம் முதலியவைகளை யேந்திச்சூழ்ந்தார்கள். 
இவ்வாறாகிய உபசாரங்கள் நிகழத் தேரிலிருக்கின்ற பானுகோபன் தூதுவர்களை நோக்கி, "அளவில்லாத 
ஆயுதங்களைக் கொண்ட ஒருகோடி சேமத்தேர்களைக் கொண்டு வருதிர்" என்றான். அவர்கள் சென்று 
அவ்வாறு ஒரு கோடி தேர்களைக் கொண்டுவந்து அவனைச் சூழ விடுத்தார்கள். பானுகோபன் தேர்ப்பாகனை 
நோக்கி, "நம்முடைய தேரைக் கந்தசுவாமியிருக்கின்ற இடத்துக்குத் தூண்டுதி" என்றான். பாகன் அவ்வாறு 
தூண்டினான். அதனைக்கண்ட அவுணசேனைகள் மிகவும் ஆரவாரித்தன; பேரிகை முதலாகிய வாத்தியங்களும் 
யானை குதிரை தேர்களும் ஆர்த்தன.

    பானுகோபன் சேனைகளோடு இவ்வாறு போருக்குப் புறப்பட்டுச் செல்ல, நாரத முனிவர் 
இவைகளெல்லாவற்றையும் பார்த்து, ஆகாயவழிக் கொண்டு பாசறைக்குப் போய்ச் சுப்பிரமணியக்கடவுளுடைய 
கோயிலையடைந்து, திவ்விய சிங்காசனத்தில் வீற்றிருக்கின்ற அக்கடவுளுடைய திருவடிகளைத் தரிசித்து 
அன்போடு வணங்கித் துதித்து, "எம்பெருமானே கேட்டருளுக" என்று விண்ணப்பஞ் செய்வார்: 

    "சுவாமீ தேவரீர் பூத சேனைகளோடு இங்கே எழுந்தருளிவந்து வீற்றிருத்தலைத் தூதுவர்கள் சொல்லச் 
சூரபன்மன் அறிந்து, கோபங்கொண்டு, தன் குமாரனாகிய பானுகோபனை யழைத்து, உம்மோடு போர்செய்யும்படி 
அனுப்பினான். அவன் போர்க்கோலங் கொண்டு கோபாவேசத்தனாய்ச் சேனாவெள்ளங்களோடு போருக்கு வந்தான். 
இவனுடன் போரில் எதிர்ப்பவர் நீரும் சிவனுமன்றித் தேவர்களில் வேறியாவருளர்! பிரமவிட்டுணுக்கள் புறந்தரவென்றவன்; 
பல போர்களை வென்று புகழ்படைத்தவன்; பல மாயங்களில் வல்லவன்; ஆதி சேடனிலும் வலிமையுள்ளவன் ; 
பிரமதேவர் கொடுத்த படைக்கலத்தை யுடையவன்; வருணனுடைய பாசத்தையும் யமனுடைய சூலத்தையும் கவர்ந்தவன்; 
முன்னே தன் சிறிய பிதாவாகிய தாரகன் பதக்கமாக அணிந்தானென்றமையால் விட்டுணுவினுடைய சக்கரத்தை 
விரும்பிலன். ஆதலால் அவனை ஆளைக்கொண்டு வெல்லுதலரிது. நீரே சேனைகளோடு சென்று கொல்லல்வேண்டும்" 
என்று நாரதமுனிவர் விண்ணப்பஞ் செய்தார். 

    நாரத முனிவர் இவ்வாறு சொல்லுதலும், சுப்பிரமணியக்கடவுள் திருப்புன்முறுவல் செய்து, பக்கத்தில் 
நின்ற வீரவாகுதேவரை அழைத்து, ''இங்கே நாம் பூதசேனைகளோடு போருக்குவந்த தன்மையைச் சூரபன்மனுணர்ந்து, 
சேனைகளோடு தன் குமாரனாகிய பானுகோபனை நம்முடன் போர்செய்யும்படி அனுப்பினான். இலக்கத்தெட்டு 
வீரர்களோடும் ஆயிரம்வெள்ளம் பூதசேனைகளோடும் நீ போய் மதிலைச்சூழ்ந்து, எதிர்த்து வருகின்ற சேனைகளைத் 
தொலைத்து, பானுகோபனோடு போர்செய்து வென்று மீளுதி'' என்று ஆஞ்ஞாபித்தருளி, இலக்கத்தெண்மரையும் 
பூதப்படைத் தலைவர்களையும் அவரோடனுப்பி, அதன்பின் நாரதமுனிவரை நோக்கி, "முனிவனே கேள், சரபப் 
பக்ஷிக்கூட்டத்திற் சில சிங்கங்கள் போனால், தாமிறப்பதன்றி அவற்றை அழிக்க வல்லனவா! முடிவைக் காட்டுவாம் 
காணுதி'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    வீரவாகுதேவர் சுப்பிரமணியக் கடவுளிடத்தில் விடைபெற்று, மேரு மலைபோலும் ஓர் வில்லையெடுத்து, 
கவசத்தையிட்டு, அப்பறாத்தூணியை முதுகிற்கட்டி, விரலிற் புட்டிலையும் கையிற் கோதையையும் தரித்து, 
ஓர் தேரிலேறினார். ஆயுதங்கள் செறிந்த அளவிறந்த சேமத்தேர்கள் பக்கத்தில் வந்தன. இலக்கத்தெண்மர்களும் 
பூதப்படைத் தலைவர்களும் போர்க்கோலங் கொண்டு அயலிற் சூழ்ந்தார்கள். "சூரபன்மனுடைய நகரிற் போர்செய்யப் 
போவதற்காக ஆயிரம்வெள்ளம் பூதசேனைகள் புறப்படுங்கள்'' என்று பூதவீரர் பறையறைந்த பொழுதில், 
ஆயிரம் வெள்ளம் பூதசேனைகள் சுப்பிரமணியக் கடவுளைச் சூழ்ந்து காத்து நிற்ப,மற்றை ஆயிரம்வெள்ளஞ் 
சேனைகளும் கடல்போல ஆரவாரித்து வந்துசூழ்ந்தன. 

    அப்பூதர்கள் பூமிமுழுதையும் ஓர்புயத்தில் வைக்குங் கையினர்; யமனையுங் கொல்லுந் தறுகண்மையினை
யுடையர்; கொடியர் யாரினும் கொடியர்; சிவந்த சடையினையுடையர்; படைக்கலங்களையேந்திய கரங்களையுடையர்; 
வீரக் கழலொலிக்குங் கால்களையுடையர்; வரத்திற் சிறந்தவர்; மாயங்களை வென்றவர்; அண்டங்களையும் 
உடைக்க வல்லவர். இவ்வாறாகிய பூதசேனைகளும் சேனாபதிகளும் இலக்கத்தெண்மர்களும் சூழ்ந்துவர, 
வீரவாகுதேவர் போருக்குச் சென்றார். திமிலை, பேரி, காகளம் முதலிய வாத்தியங்கள் கோஷித்தன. கொடிப்படைகள் 
எழுந்தன. பூதசேனையிலெழுந் துகள்கள் அவுண சேனையிலெழுந்த துகளோடு ஒன்றுபட்டன. இவ்வாறு நிகழ வீரவாகு 
தேவர் மகேந்திரபுரியின் மதிலின் புறத்து வந்தார். 

    அப்பொழுது சில அசுரர்கள் அதனைக் கண்டு, விரைந்து ஓடிப்போய்ப் பானுகோபனை வணங்கி, 
"ராசகுமாரனே, நீ போர்செய்ய வருதலையறிந்து முன்பு இங்கே தூதுவந்த வீரவாகு என்பானைச் சிவகுமாரர் 
உன்னோடு போர்செய்யும்படி அனுப்பினார்" என்றார்கள். பானுகோபன் அதனைக்கேட்டு, கைகொட்டிச் சிரித்துக் 
கோபித்துப் பெருமூச்சுவிட்டு, இவ்வாறு சொல்வான்: 

    "பாசறையிலிருக்கின்ற பாலகனையும், என்னோடு போருக்கு வந்தெதிர்த்த இந்தத் தூதுவனையும், 
பூதர்களையும் புறங்கொடுத்தோடும்படி தொலைக்கின்றேன். கந்தனும் தூதுவனும் ஆகாயத்தினும் எண்டிசைகளினும் 
சமுத்திரங்களினும் அவற்றிற்கப்பாலுள்ள சக்கரவாளகிரியினும் எனக்குப் பயந்து சிதறியோடக் காண்பேன். எளிய 
பூதசேனைகளும் வலியில்லாத தூதுவனும் பாலகனும் வலியின்றி எனக்குப் பயந்து ஓடிப்போனாலும், என்னுடைய 
மனத்திலுள்ள கோபம் ஆறுமோ! மேற்கூறிய இடங்களில் ஓடிப்போனாலும், தப்பவிடாமற் சூழ்ந்து பிடித்துக்கொண்டுவந்து 
நம்மரசனுக்குக்  காட்டி, எல்லாரும் என்புகழைத் துதிக்கும்படி இங்குள்ள தேவர்களோடு அவர்களையும் 
சிறையில் வைப்பேன்.'' என்றிவ்வாறு பற்பலவற்றைப் பானுகோபன் சொல்லி, கோபம் பொருந்திய மனத்தோடு 
விரைந்து போயினான். 

    அவுணவெள்ளங்கள் வடதிசைக் கோபுரவாயிலைக் கழிந்துசென்று, அங்கே வருகின்ற பூதசேனைகளின் 
வலிமையைப் பார்த்து, ''இவர்கள் முன்னே நம்முடைய போரைக் கண்டோடிய தேவர்களல்லர்; வலியர்போலும்; 
ஆயி னும் இவர்கள் எங்களோடு போர்செய்யத்தக்க வலிமையுடையர்களோ! அளவில்லாத மலைகளெல்லாம் 
மேருமலையை நிகர்ப்பனவாகுமா! மின்மினி சூரியனைக் காட்டிலும் பிரகாசிக்க வல்லதா!" என்று இவைபோன்ற 
பலவற்றைச் சொல்லி, பூதசேனைகளுக்கெதிரே சென்று உரப்பினர். பூதர்கள் அவர்களை நோக்கி, "உலகத்திலுள்ள 
உயிர்களை வருத்தினவர்கள் உவர்களோ!' என்று சொல்லிக் கோபித்து அதட்டினார்கள். இப்படி இருதிறத்துச் 
சேனைகளுக்கும் போர் மூண்டது. 

    அசுரவீரர்கள் யானைகளினுடைய துதிக்கைகளிலே தண்டாயுதங்களைக் கொடுத்து, "பகைவர்களை 
அடித்துக் கொல்லுதி" என்னுங் குறிப்பைக்காட்டிப் பூதர்கள்மீது அவைகளைத் தூண்டிவிட்டும், யானைகளிலும் 
குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிவந்து எதிர்த்து ஆயுதங்களை விடுத்தும் போர் செய்தார்கள். காலாட்படைகள் 
முத்தலைச்சூலம் தோமரம் முதலிய படைகளை வீசிப் போர்செய்தார்கள். படைக்கலங்களைச் செலுத்திப் 
போர்செய்த அசுரர்களைப் பூதர்கள் மரங்களினாலும் மலைகளினாலும் அழித்தார்கள். 

    இருதிறத்துச் சேனைகளும் இப்படி எதிர்த்துப் போர்செய்யும்பொழுது, இறந்த அவுணர்களும் பலர்; 
கை கால் முதலிய அவயவங்கள் இழந்து வீழ்ந்த பூதர்களும் பலர். இறந்த பிணங்கள் கரைபோலாக இரத்தவெள்ளம் 
கடல்போல நின்றது. பூதர்கள் கோபித்து, அசுரர்களுடைய தேர்களினாற் றேர்களையும், யானைகளினால் 
யானைகளையும், குதிரைகளினாற் குதிரைகளையும், ஆள்களினால் ஆள்களையும் அடித்தும், தங்களுடைய 
தோள்களினால் அவர்களுடைய தோள்களையும் கால்களினால் அவர்களுடைய தலைகளையும் தாக்கியும், 
அசுரர்களைக் கொன்றார்கள். அவர்கள் ஆற்றாது உடைந்தார்கள்.

    அதனை அனலி என்னும் அசுரப்படைத் தலைவன் கண்டு, தன்கையிலுள்ள வில்லை வளைத்து 
நாணோதை செய்தான். தேவர்கள் அவ்வொலியைக் கேட்டு ஐயகோ என்று துன்பமுற்றார்கள். அனலியென்பான் 
அவ் வில்லில் அக்கினி பாணங்களைப் பூட்டிப் பூதர்களுடைய உடம்பில் அழுத்தினான். அதனைச் சிங்கர் 
என்னும் பூதப்படைத்தலைவர் கண்டு, ''நீ எங்கே உய்வாய் ஈண்டேயிறந்தாய்'' என்று கூறிக் கோபத்தோடு 
ஆரவாரித்து, அனலியினுடைய தேரிற்கட்டிய குதிரைகளைத் தமது கையாகிய தண்டில் அடித்துக் கொன்றார். 
தேர் ஓடாது நின்றது. 

    குதிரைகள் இறந்தமையை அனலி கண்டு சினந்து, வில்லிற் பாணங்களைப் பூட்டி, "தடுக்க முடியாத 
இந்தப் பாணங்களை விடுத்து உன்னைக் கொன்று தேவர்கள் பார்க்கும்படி உன்னுயிரைத் 
தென்றிசைக்கனுப்பா தொழிவேனாயின் யான் போரில் வில்லையெடேன்' என்று சபதஞ் சொல்லி, 
அப்பாணங்களைத் தூண்டி, இரத்தங் காலும்படி சிங்கருடைய உடம்பை மறைத்தான். அவர் அதனைச் சிறிதும் 
மனத்துக் கொள்ளாமலும், துன்புறாமலும், சகித்துக் கொண்டு விரைந்துபோய், ஓடாமல் நின்ற அனலியினுடைய 
தேரிலேறி, அவனுடைய வில்லைப் பறித்து நிலத்தில் எறிந்தார். அனலி ஓர்தண்டினாற் சிங்கருடைய தலையில் 
அடித்தான். அதனைக்கண்ட அசுரர்கள் ஆரவாரித்தார்கள்; தேவர்கள் கலங்கினார்கள். 

    சிங்கர் தன்னையடித்த  தண்டோடு அனலியின் கையைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையினால் 
அவனுடைய மார்பொடியும்படி அடித்து,பிடித்த தண்டோடு அவன் மிகுந்த துன்பம் உறும்படி சுழற்றி, ஆர்த்து, 
அவன் பின்னும் அறிவிழந்து சோருஞ் சமயத்தில் தேரினின்றிறங்கி, நிலத்திலடித்தார். உடனே அனலி இறந்தான். 
சண்டன் என்னும் அவுணப் படைத்தலைவன் அனலி இறந்ததைக்கண்டு, மனம் வருந்தி, "இவனுடைய உயிரை 
இப்பொழுதே குடிப்பேன்'' என்று சொல்லிக்கொண்டு சிங்கர்மேற் போயினான். 

    சிங்கர் அதனைக்கேட்டு, நெருப்பெழப் பார்த்துச் சிரித்து, இறந்த அனலியின் கையிலுள்ள தண்டை 
எடுத்துக் கொண்டு சண்டனுடைய தேரிற் பாய்ந்து, அவனுடைய புயத்தில் அடித்தார். அவன் உயிர்த்துப் 
பொருமித் தேரில் வீழும்பொழுது தன்னுடைய கையிற் றண்டினாற் சிங்கருடைய மார்பில் அடித்தான். 
இருவரும் அயர்ந்து வீழ்ந்தார்கள். அப்பொழுது மாயனென்னும் அவுணப் படைத்தலைவன் அதனைநோக்கித் 
தேரினோடு வர,நீலர் என்னும் பூதப்படைத்தலைவர் எதிர்த்து, அவன்மேல் ஒருதண்டத்தை எறிந்தார். மாயன் 
இறந்தவன்போல மிக வருந்தி, ஒரு முத்தலைச் சூலத்தை எறிந்தான். அதுவந்து படுதலும் நீலருடைய மார்பினின்றும் 
இரத்தம் வடிந்தது. அவரும் அயர்ந்து நின்று, சிறிது பொழுதினுட் டெளிந்து, மாயனுடைய மார்பிற் கையினால் 
அடித்து, அவன் மிக வருந்துதலைக் கண்டு அவனுடைய தோள்களிரண்டையும் கைகளாற் கட்டிப் பிடித்துக்கொண்டு, 
கழுத்திற்கடித்து இரத்தத்தைக் குடித்துக் கோபந்தணிந்து நின்றார். மாயன் இறந்தான். 

    முன்பு போர்செய்து மயங்கி வீழ்ந்த சண்டன் சிங்கர் என்னும் இருவருந் தேறி,தண்டாயுதத்தைக்கொண்டு 
பொருதார்கள். சிங்கர் சண்டனுடைய தண்டம் பொடிபட அடித்தார். அதனைக்கண்டு அவுணர்கள் என்கொலாம் 
என்று அஞ்சினார்கள். சண்டன் இடியேறுபோலக் கோபித்து, "என்னுடைய தண்டாயுதம் ஒடிந்ததென்று செருக்கடையாதே; 
நான் புயமாகக் கொண்டதும் தண்டாயுதமே; யமலோகமும் மேலுலகங்களும் உலையும்படி முன்னாளிற் பொருதேன்; 
இங்கே உனக்கஞ்சேன்; போரைச் செய்குதி'' என்று சொல்லி, கையைப் படையாகக்கொண்டு எதிர்த்தான். 

    சிங்கர் கோபித்து, "நீ அத்துணை வலியுடையைபோலும் இந்தத் தண்டத்தைக் காத்துக்கொள்" என்று 
தண்டினால் அடித்தார்.சண்டன் அத்தண்டம் தன்மேற் படாதவண்ணம் கையினாற்றடுத்து, தோள் கொட்டி 
ஆரவாரித்தான். சிங்கர் அதனைப் பொறாது கோபித்து, அவனுடைய புயம் ஒடியும்படி தண்டினாலடித்தார். 
சண்டனுடைய புயமும் சிங்கருடைய தண்டும் முரிந்தன. சண்டன் தன்னுடைய தோள் ஒடிந்ததென்று எண்ணி 
வருந்தாமல், முரிந்த அத்தோளையே மற்றைக் கையினாற் பிடித்தொசித்துத் தண்டாகப்பற்றி, இடசாரி 
வலசாரியாகத் திரிந்தான். 

    தேவர்கள் "இவனே வீரருள் வீரன்" என்று வியந்தார்கள். சண்டன் ஒடிந்த கையாகிய தண்டினாற் 
சிங்கருடைய மார்பில் மோதினான். அவர் வருந்தாமல், "உவன்போல யானும் கையாலடியேன்" என்று காலினால் 
அவனுடைய மார்பில் உதைத்துச் சாய்த்தார். அதனைக் கண்ட தேவர்கள் கையெடுத்தார்த்து, ''சிவகணநாதராகிய 
நீரன்றிச் சண்டனையுதைப்பார் யாவர்! தாமதிக்காமல் இவனுடைய உயிரைக் கவருதிர்" என்று குறையிரந்தார்கள். 
சண்டன் அதனைக்கேட்டு,"இவனா என்னுயிரைக் கவர்வான்; தேவர்களே, இவனோடு உங்களையுங் கொன்று 
தின்பேன். இதனைக் காண்மின்'' என்றான். 

    சிங்கர் அதனைக்கேட்டு, அக்கினி காலுங் கண்ணினராய்க் கோபித்து, "எனக்குமுன் இப்படி வீரம் 
பேசுகின்றாய் இனி இறப்பாய்" என்று அவனுடைய கதுப்பு உடையும்படி கையினால் மோதினார். அவன் 
இடியொலியோடு கூடிய மேகம்போல வீழ்ந்திறந்தான். யமதூதுவர்கள் சண்டனை அணுகுதற்குப் பயந்து 
நின்றார்கள். சிங்கர் அவர்களை நோக்கி, "இந்தக் கீழ்மகனுடைய உயிரைக் கவர்ந்துகொண்டு செல்லுங்கள்" 
என்று கூறுதலும், அவர்கள் அணுகிவந்து கொண்டு போயினார்கள். சண்டன் இறந்துவீழ்ந்த இடம் 
இரத்தத்தினாலும், வக்கிர தந்தத்தோ டுதிர்ந்த பற்களினாலும், பாலசந்திரனை நக்ஷத்திரங்கள் 
சூழப் பெற்ற செவ்வானம் போன்றது. 

    இவ்வாறு சண்டன் இறந்ததை அசமுகன் என்னும் அசுர சேனாதிபதி கண்டு, "சற்று நில் நில் .
யான்வந்து உன்னுயிரை யுண்பேன். என்னை மற்றவர்களைப்போல எண்ணாதே" என்று தேர் மேல் விரைவில் 
வந்து சிங்கரை அணுகினான். அப்பொழுது மதுவென்னும் பூதசேனாதிபதி "நீ எங்கே தப்புவாய் இங்கே இறந்தாய்" 
என்று கூறி விரைவில் இடையிற் புகுந்தார். அசமுகன் வில்லை வளைத்து நாணொலி செய்து, அவர்மீது 
பாணங்களைச் சிதறினான். மது அவைகள் தன்முன் வரும்பொழுதும், உடம்பிற் படும்பொழுதும் அதனை 
லக்ஷியஞ் செய்யாமலும், கண்ணிமையாமலும், சிறிதும் நிறை தவறாமலும், அருகிலுள்ள மராமரத்தைப் 
பிடுங்கித் தன்மேல் வருகின்ற பாணங்களைச் சிந்தாமலும் அவைகள் தன்னுடம்பெங்கும் கவசம்போலப் 
படநின்று, பின்பு அசமுகனுடைய தேரில் விரைந்துபோய், இடிபோல ஆரவாரித்தார். 

    அசமுகன் அவ்வொலியைக் கேட்டு அயர்ந்து, வில்லையும் பாணத்தையும் நழுவவிட்டு வேர்த்துத் 
தேரின்மீது நின்றான். அதனை மதுவென்பவர் பார்த்து, 'நீ போர் செய்தற்கு வீரனுமல்லை, சூரனுமல்லை, 
தீரனுமல்லை, எவ்வாறு போர்செய்குதி! நீ உன்னுயிரைக்கொண்டு பிழைத்துப்போதி' என்று சொல்லி, அவனுடைய 
தேரினின்றும் இறங்கிப் போயினார். அசமுகன் வெட்கித்துப் பெருமிதமிழந்து, 'போரில் அஞ்சினேனென்று 
ஒரு வசையைப் பெற்றேன்; இனி யாவரிடத்தில் இதைத் தீர்வேன்; அவனோ என்னோடு போர்செய்யாமற் 
போயினான்; ஐயோ! இனி யான் இறத்தலே நன்று" என்று மானமாகிய நெருப்புச் சுடுதலால் மனம் வேகக் 
கோபம் மூண்டு, பின்பு போர்செய்யும் வலிமையைப் பெற்று, மதுவைத் தொடர்ந்து, "நீ எங்கே போனாலும் 
உன்னைக் கொல்லுவேன்: ஓடாதே நில்லு நில்லு'' என்று சொல்லி, திசைகள் செவிடுபட ஆர்த்தான். 

    மது அசமுகனுடைய வார்த்தையைக் கேட்டு, "நீ இப்பொழுது படித்ததும் உண்டோ! சிலவற்றைச் சொன்னாய். 
வீரமில்லாத நீ , என்னைத்தேடிப் போருக்கு வருதல் பிழையாயினும், என்னை  எதிர்த்தமையால் ஓர் கீர்த்தியைப் 
பெற்றாய்; எனக்கோர் பெரும்பழியைத் தருகின்றாய்" என்று கூறினார். அப்பொழுது அசமுகன் பல பிறைமுக
 பாணங்களை அவர் மீது விடுத்தான். மது அவைகளெல்லாவற்றையும் கையினால் வீசி நின்றார்.
அசமுகன் "இவன் இந்தப் பாணங்களினாற் சிறிதுமிளைத்திலன்' என்றெண்ணி,தன் கையிலுள்ள முத்தலைச் 
சூலம் வேல் முதலிய ஆயுதங்களெல்லாவற்றையும் அவர்மேல் விடுத்தான். 

    மது தளர்ந்து, அசமுகனுடைய தேரைக் கையாலெடுத்துச் சமுத்திரத்தில் எறிய, அவன் தேரினின்றும் 
பூமியிற் பாய்ந்து, மதுவின்முன் கோபத்தோடணுகி, தோளினால் மற்போர் செய்யத் தொடங்கினான். மது 
அவனைக் காலினால் வானுலகத்திற்குமப்பாற் செல்லும்படி உந்தியெறிந்தார். அவன் வானிற்போய் மீண்டு,
 மதுவின்முன் வந்து, அவருடைய மார்பிலடித்து,வைது,ஓர் வஞ்சனையை நினைத்து மறைந்து ஆகாயத்திற்போய், 
விட்டுணுவினிடத்திற் பெற்ற சக்கரப்படையைக் கையிலெடுத்து மனத்தாற் பூசித்து வணங்கி, தான் இறக்குந் 
தன்மையினனாய், மதுவின் மீது விடுத்தான். 

    மது நிராயுதராய் நின்றமையால். அவன் கைச் சக்கரப்படை மீண்டு அவன்றலையை வெட்டியது. 
"தன்னால் வாராத வினையில்லை" என்று பெரியோர் சொல்வது மெய்மை போலும். அசமுகன் இறந்து இடிபோல 
வீழ்ந்தான். அவுணர்கள் வருத்தமுற்றார். "இன்றோடு போர் தொலைந்தது" என்று தேவர்கள் துள்ளினார். 
சக்கரப் படை விட்டுணுவினிடத்திற் சென்றது. மற்றை அவுணப்படைத்தலைவர்கள் சதுரங்க சேனைகளோடு 
சென்று போர்செய்தலும், எதிர்ந்த பூதப்படைத் தலைவர்கள் புறங்கொடுத்தார்கள். இலக்கம் வீரர்களுள்ளே 
தண்டகர் என்பவர் அதனைக் கண்டு, வில்லை வளைத்துப் பாண மழைகளைப் பொழிந்தார். கசரததுரகபதாதியாகிய 
நால்வகைச் சேனைகளும் அழிந்தன. இரத்த வெள்ளம் ஆறுபோலப் பாய்ந்தது. இறவாது பிழைத்த அவுணர்கள் 
எண்டிசைகளினும் பூமியினும் வானுலகத்தினும் இரிந்தோடினர்.

    அவுணசேனைகள் இறந்தமையையும் சேனைத்தலைவர்கள் பலர் இறந்தமையையும் பானுகோபன் பார்த்து, 
'இந்திரன் முதலாகிய தேவர்கள் புறங்கொடுத்தோடும்படி போர்செய்து வென்ற நம்மவர்கள் சிவகுமாரன் விடுத்த 
சேனைகளால் இறந்தனர் போலும். சூரியனைச் சிறைசெய்த யானும் நிற்கப் பகைவர்கள் வலியுடையர்களாய் 
நம்முடைய சேனைகளைக் கொல்லுந் துணிவு நன்றாயிருந்தது! சிங்கமானது கோபமும் பகையுமில்லாமலும், 
தனக்குரிய கொலைத் தொழிலைச் செய்யாமலும் வாளாவிருந்து விடுமாயின், அதனையும் யானைகள் கொல்ல 
மாட்டாவோ! பூதர்கள் கொல்ல இறந்த அவுண சேனாவெள்ளம் இரண்டாயிரத்தினும் மிகுமன்றிக் குறைய மாட்டா. 

    என் பக்கத்தில் நிற்பன ஆயிரம் வெள்ளமே. ஒழிந்த சேனைகளெல்லாம் ஓடுகின்றன. யான் இந்த ஒரு 
வில்லைப் பிடித்துக்கொண்டு முன்னமே பகைவர்கள்மேற் போருக்குச்சென்று அவர்களை வதைத்திலேன்; என் 
சேனைகளெல்லாவற்றையும் யானே கொன்றேன்; அவைகளைப் போர்செய்யும்படி அனுப்பிவிட்டுப் பின்னணியில் 
நின்றேன்; இஃதோர் பொருளென்று நினைந்திலேன்; கழிந்ததை நினைந்தாவதென்ன! இனி யானே போருக்குப்போய் 
ஒரு நாழிகைப் பொழுதினுட் போரில்லை என்னும்படி தொலைப்பேன்; இதனைச் செய்யாதொழிவேனென்னில் 
யான் சூரபன்மனுடைய மகனல்லன்" என்று சபதங்கூறி, தேரைச் செலுத்திக் கொண்டு பூதசேனா வெள்ளத்துட் 
புகுந்து, வில்லை வளைத்து, பாணங்களைப் பூதர்கள் மீது மழை போலச் சொரிந்தான். 

    பூதர்கள் அதனைப் பார்த்து, எண்ணில்லாத மலைகளைப் பறித்தெறிந்தார்கள். பானுகோபன் அவற்றைப் 
பாணங்களாற் றுகள் செய்து, இடசாரி வலசாரியாகத் திரிந்து, ஓர்தொடையிற் பலதிறத்தனவாகிய ஆயிரகோடி
பாணங்களைத் தூண்டிப் பூதகணங்களை அழித்தான். இவ்வாறு பானுகோபன் போர் செய்தலும், அளவில்லாத 
பூதர்கள் இறந்தார்கள். எய்யுந் தொழிலில் அவனைக் காட்டிலும் வலிமையுடையவர்கள் யாவர்! அவனுடைய 
பாணங்களுக்குப் பயந்து வலிமையின்றிப் புறங்கொடுத்தோடுகின்ற பூதர்கள் “சுப்பிரமணியக்கடவுள் 
அங்கே பாசறையி லிருக்கின்றார்; வீரவாகுதேவரும் மற்றை வீரர்களும் பின்னணியில் நின்றார்கள்; நாமோ 
வலியில்லாதோம்; முன்னின்ற நம்மை இவன் கொல்வான்; நாம் இங்கே நிற்பானேன்" என்று இரிந்தோடி 
வீரவாகுதேவரைச் சேர்ந்தார்கள்.

    இத்தன்மைகளெல்லாவற்றையும் உக்கிரர் என்னும் பூதப்படைத் தலைவர் பார்த்துக் கோபித்து,ஓர் 
தண்டாயுதத்தையெடுத்து ஆரவாரித்து எதிர்த்தார். அவர் தனக்கெதிரே வருதலைப் பானுகோபன் கண்டு 
வில்லை வளைத்து, ஆயிரகோடி பாணங்களைச் செலுத்தி, அவருடைய உடம்பு முழுவதையும் மறைத்தார்த்தான். 
அவன் செலுத்திய பாணங்கள் அறத்தையும் அதனால் வரும் இன்பத்தையும் விரும்பாத உலோபியின் கைப்பொருள் 
அழியுமாறு போல உக்கிரருடைய உடம்பிற்றையாமல் நுதிமழுங்கி யழிந்து விழுந்தன. பானுகோபன் அதுகண்டு
 "இவனைக் கொல்வது எவ்வாறு?' என்று யோசித்து, ஓர் எழுப்படையைச் சுழற்றி யெறிந்தான். உக்கிரர் அதனை ஓர் 
இருப்புலக்கையால் அழித்து, பானுகோபனுடைய தேரை அணுகி, குதிரைகளை அடித்து வீழ்த்தினார். 

    தேவர்கள் பானுகோபனை ஏ என்று இகழ்ந்து ஆரவாரித்தார்கள். குதிரைகள் அழிதலும் பானுகோபன் 
கோபங்கொண்டு, பிறிதொரு தேரில் ஏறி, வில்லை வளைத்து, உக்கிரருடைய தண்டம் முறியும்படி நூறு மொட்டம்புகளை
விடுத்தான். தண்டம் துகளாயது. உக்கிரர் பானுகோபனுடைய தேரைக் கையாலெடுத்தெறிந்தார். அது சூரியமண்டலம் 
வரையுஞ் சென்றது. அதனைக் கண்ட சூரியன் "இவன் முன்னாளிற்போல இன்னும் என்னைப் பிடிக்க வருகின்றானோ,
அணியனாகின்றான், இன்னும் என்னவாகுமோ!" என்று நினைந்து ஓடிப் போயினான். 

    இவ்வாறு வானிற்சென்ற பானுகோபன் கற்பகத் தருவானது தூரோடு வானுலகினின்றுஞ் சாய்வதுபோலத் 
தேரோடு பூமியில் விழுந்து,தேரைவிட்டு உக்கிரரை யணுகிக் கையாலெற்றியெடுத்து, எழுகடல்களுக்குமப்பாற் 
செல்லும்படி எறிந்து, பிறிதொரு தேரிலேறி, வீழ்கின்ற உக்கிரர் மீது பிரமதேவர் கொடுத்த முத்தலைச் சூலத்தை 
எடுத்துச் செலுத்தினான். அது சூலம் உக்கிரருடைய மார்பிற் புகுந்து பிளந்து அப்பாற் போயது. அவர் வீழ்ந்து சிறிது 
அயர்ந்தார். அதனைத் தண்டி என்பவர் கண்டு, ஓர் மலையை எடுத்துப் பானுகோபன் மீது எறிந்தார். அவன் ஆயிரம் 
பாணங்களினால் அதனைக் கண்டதுண்டமாக்கினான். அது துகளாதலும் தண்டி மராமரமொன்றைப் பறித்துப் 
பானுகோபனுடைய தேர்க்குதிரைகளை யடித்தார். குதிரைகள் எல்லாம் அழிந்தன.பானுகோபன் முத்தலையையுடைய 
பல பதினாயிரம் பாணங்களை இரத்தஞ் சோரும்படி தண்டியினுடைய நெற்றியில் அழுத்த அவர் தளர்ந்தார். 

    அதனைப் பினாகியென்பவர் கண்டு, ஓர்மலையைப் பறித்து வீசும்படி முயலுதலும், பானுகோபன் 
ஆயிரம் பாணங்களை அவருடைய மார்பில் மூழ்கும்படி எய்தான். அவரும் தளர்ந்து நின்றார். அப்பொழுது, 
மற்றைப் பூதவீரர்களும் சென்று சென்று தனித்தனி சிறிதுபொழுது போர்செய்து, பானுகோபனுக்கு ஆற்றாராய்
உடைந்தார்கள். இவ்வாறு பூதகணத் தலைவர்கள் தொலைதலும் கபாலி, அண்டலோசனர், நிரஞ்சனர், உருத்திரர், 
அகண்டர், தண்டகர், முதலாகிய இலக்கம் வீரர்கள் கண்டு சினங்கொண்டு, தேரோடு பானுகோபனுக்கெதிர்சென்று, 
விற்களை வளைத்து நாணொலி செய்தார்கள். அவ்வொலியைக் கேட்டுத் திக்குயானைகள் பட்ட துயரைச் 
சொல்வதெங்ஙனம்! மேரு மலையுஞ் சலித்தது, வானமுந் திசையுஞ் செவிடு பட்டன. 

    பானுகோபன் அதனைக் கண்டு புன்முறுவல்செய்து, ஒரு பெரியவில்லையெடுத்து வளைத்து நாணொலி 
செய்தான். இலக்கம்வீரரும் பானுகோபன்மீது பாணங்களை மழைபோலச் சொரிந்தார்கள். அவைகள் எல்லாம் 
ஆறுகள் சமுத்திரத்திற் போவதுபோலப் பானுகோபன்மேற் சென்றன. அவன் ஆயிரகோடி பாணங்களை விடுத்து
 அவைகளெல்லாவற்றையும் அறுத்து, பின்னும் அத்துணைப் பாணங்களை இலக்கம் வீரர்கள்மேல் விடுத்தான். 
அவர்கள் அவைகள் முறிந்து பானுகோபன்மீது செல்லும்படி அவற்றிற்கெழுமடியாகிய பாணங்களைச் செலுத்தினார்கள். 

    பானுகோபன் கோபித்து அளவில்லாத பாணங்களை மேன்மேலுஞ் செலுத்தி, இலக்கம் வீரர்கள் செலுத்திய 
பாணங்கள் எல்லாவற்றையும் விலக்கி, அவர்கள் ஏந்திய இலக்கம் விற்களையும் அறுத்தான். விற்கள் அழிதலும், 
அவர்கள் பின்னுந் தேரிலுள்ள சேமவிற்களை எடுத்து வளைத்துப் பாணங்களைச் செலுத்தி, பானுகோபன் விடுகின்ற 
பாணங்களைத் துணித்து, அவனுடைய தேரிலும் குதிரைகளிலும் கொடியிலும் பாகன்மீதும் ஆயிரம் ஆயிரம் 
பாணங்களை விடுத்து அழித்தார்கள். தேரழிதலும், பானுகோபன் வேறொரு தேரிற்பாய்ந்து, கோபித்து, வில்லை 
வளைத்து, நூறு நூறாயிரம் பாணங்களைச் செலுத்தி, இலக்கம் வீரர்களுடைய தேர்களையும் விற்களையும் அறுத்து, 
அளவில்லாத பாணங்களை அவர்களுடைய உடம்பில் அழுத்தினான். 

    அப்பாணங்கள் சரீரம் எங்கும் பட்டு இரத்தம் வடிதலும், இலக்கம்வீரரும் வலிமை குறைந்து மிகவுந் 
துன்புற்று, ஆற்றாதவர்களாய், போரை நினையாது உடைந்து போயினார்கள். இலக்கம் வீரர்களும் வந்து 
போர்செய்ய, விற்பிடித்த ஒருவனே அவர்கள் எல்லாரையும் வென்றான். இது முன்னாளிற் செய்த தவப்பயன் 
என்போமோ, கல்வித்திறமை என்போமோ,நாம் என்ன சொல்வது! இலக்கம் வீரர்களும் உடைந்ததை வீரகேசரி 
கண்டு, வில்லை வளைத்துப் பானுகோபனுக் கெதிர்சென்று, விடாமழை போலப் பிறைமுக பாணங்களைப் பொழிந்தார். 

    பானுகோபன் அதனைப் பார்த்துத் தலையை அசைத்து,'இவனுடைய வலிமையும் வென்றியும் வில்வலியும் நன்று''
என்று சொல்லி, வில்லை வளைத்தான். தேவர்கள் நடுங்கினார்கள். அவன் அவ்வில்லில் நூறு நூறாயிரகோடி பாணங்களைத் 
தொடுத்து, வீரகேசரி விடுக்கின்ற பாணங்களையெல்லாம் அழித்து, அவருடைய புயங்கண்மீது அவர் நடுங்கும்படி 
ஆயிரம் பாணங்களை அழுத்தினான். வீரகேசரி அவன் செலுத்திய பாணங்களெல்லாவற்றையும் விலக்கி, அவனுடைய 
மார்பு பலகணி போலாக ஆயிரம் பாணங்களைத் தூண்டினார். 

    அவைகள் மார்பில் அழுந்துதலும், பானுகோபன் இரங்கித் துன்புற்று, மிகவுங் கோபித்து, "இவனை வில்லினால் 
வெல்லுதல் அரிது' என்று கருதி, விஷ்ணுப் படைக்கலத்தை எடுத்துவிட, அது விட்டுணுவி னுருவங்கொண்டு சென்று, 
வீரகேசரி விட்ட பாணங்க ளெல்லாவற்றையும் விழுங்கி, பூமியும் அண்டமும் நடுங்க மிகுந்த ஆரவாரத்தோடு அணுகியது. 
அதனை வீரகேசரி கண்டு, தாமும் விட்டுணுப் படையை விடும்படி எடுக்குமுன் பானுகோபன் விடுத்த அப்படைக்கலம் 
விரைவில் அவருடைய மார்பிற் புகுந்து, சுப்பிரமணியக்கடவுள் ஏந்திய வேற்படையினுடைய ஆணையினால் அவருடைய 
உயிரைக் கவருதற்கு அஞ்சி, இரத்தத்தைப் பருகி, உணர்வை அவசமாக்கி,தன்வலியையுஞ் சிறிதுகாட்டி, விரைந்து மீண்டு 
பானுகோபனிடத்திற் சென்றது. 

    வீரகேசரி இறந்தவர்போல வீழ்ந்து மயங்கினார். அதனை வீரமார்த்தாண்டர் கண்டு, வில்லை வளைத்து, 
கோபத்தோடு பானுகோபனை அணுகுதலும், அவன் ஆயிரம் பாணங்களினால் அவருடைய வில்லைத் துணித்து, 
ஆயிரம் பாணங்களை நெற்றியில் அழுத்தினான். தேவர்கள் அதனைக் கண்டு ஏங்கினார். வீரமார்த்தாண்டர் வேறொரு 
வில்லை எடுத்து வளைத்தார். அதன்முன் பானுகோபன் நூறுபாணங்களை விடுத்து அந்த வில்லையுந் துணித்து, ஆயிரம் 
பாணங்களால் அவருடைய தேரையும் குதிரையையும் அழித்து, புயங்களில் எழுநூறு பாணங்களை விடுத்தான். 

    தேரழியவும், வில்லழியவும், பேரழியவும் தனிமையாய் நின்ற வீரமார்த்தாண்டர், பரிவேடமழியத் தனித்த 
சூரியன்போன்று முகிலும் அஞ்ச ஆர்த்து, இராகுவின்மீது சூரியன் பாய்ந்தாற்போல வேகத்தோடு கிளர்ந்தெழுந்து 
பாய்ந்து, பானுகோபன் ஏந்திய வில்லைப்பறித்து இருதுணியாக்கி எறிந்தார். பானுகோபன் வெகுண்டு இடையிற் 
கட்டிய உடைவாளை உருவி, அவருடைய மார்பிற் குற்றி அதனை வாங்குமுன், அவருடைய வாட்படையொன்று 
அவனுடைய மார்பில் மாறாகக் குற்றியது போல அவருடைய மார்பிலிருந்தெழுந்த இரத்தம் பானுகோபனுடைய 
மார்பில்வந்து பட்டது. 

    பானுகோபன் தம்முடைய மார்பில் வாட்படையைக் குற்றி வாங்குமுன், வீரமார்த்தாண்டருங் கொதித்து, 
வாட்படையை உறையினின்றுங் கழற்றி, அவனுடைய மார்பிலுள்ள வச்சிர கவசம் அழியும்படி யாவரு மிரங்கக் 
குற்றினார். பானுகோபன் மீட்டும் உடைவாளினால் அவருடைய நெற்றியில் அழுந்தும்படி குற்றினான். அவ்வொரு 
குற்றில் வீர மார்த்தாண்டர் காற்றடிக்கச் சாய்ந்த கற்பக தருவைப் போலச் சாய்ந்தார். வடிகின்ற இரத்தமும் 
துன்பமும் மிகும்படி தேரில் வீழ்ந்த வீரமார்த்தாண்டரை இவன் இறந்தான் என்று பானுகோபன் விடுத்து,
மருங்கிலுள்ள சேனைகளோடு வந்து எதிர்த்தான். வீரராக்கதர் என்னும் வீரர் தமது துணைவர்கள் தொலைந்ததையும் 
பானுகோபன் போருக்கு வருதலையும் கண்டு, கோபம் மிகுந்து, வேகத்தோடு வந்து வில்லை வளைத்து, ஆயிரம் 
பாணங்களைப் பானுகோபன் மீது செலுத்தினார். 

    அவன் அத்துணைப் பாணங்களால் அவற்றை அழித்து, நூறுபாணங்களினால் வீரராக்கதருடைய 
தேர்ப்பாகனது தலையைத் துணித்தான். பாகன் இறத்தலும், அவர் வேறோர் பாகனைத் தேரில் நிறுத்தி, வெகுண்டு, 
அறுமுகக் கடவுளுடைய திருவடிகளைத் தியானித்து ஆயிரம் பாணங்களினாற் பானுகோபனுடைய கிரீடத்தை அறுத்தார். 
முடி வெட்டுண்ணுதலும் பானுகோபன் மிகவும் வெட்கித்து, எல்லையில்லாத பெருங்கோபம் மூள, கொடுமுடியில்லாத மலை
போலவும், மணியையிழந்த சர்ப்பம் போலவும், சூரியனையிழந்த ஆகாயம் போலவும் ,  கொம்பரையிழந்த கற்பகம் 
போலவும், கோடுகளையிழந்த யானைபோலவும், திருமங்கலியத்தையிழந்த பெண்கள் போலவும் அழகினையிழந்து 
வெட்டுண்ட மகுடத்தை நீக்கி ஏவலாளர்கள் கொடுத்த பிறிதோர் மகுடத்தை அணிந்து, வீரராக்கதர் விடுகின்ற 
பாணங்களெல்லாவற்றையும் விலக்கி, ஆயிரம்பாணங்களினால் அவருடைய வில்லை அறுத்து, அவர் பிறிதோர் 
வில்லையெடுக்குமுன் அவருடைய தேர்க்குதிரைகளை அழித்தான். 

    குதிரைகள் அழிதலும், வீரராக்கதர் பிறிதொரு தேரிற் பாய்ந்தார். பானுகோபன் அவருடைய கையிலுள்ள 
வில்லை ஆயிரம் பாணங்களால் அழித்தான். அவர் அவன்மீது ஒர் வேற்படையை விடுத்தார். அவன் அதனை 
நூறம்புகளால் அழித்தான். வீரராக்கதர் தேரினின்றிறங்கி, அறைகூவிச்சென்று, பானுகோபனுடைய தேரை எடுத்தெறிந்தார். 
அவன் விண்ணிற்சென்று பிரமதேவர் முன்கொடுத்த ஓர் வேற்படையையெடுத்து 'இவனுடைய உயிரை உண்ணுதி" 
என்று விடுத்துத் தேரோடு வீழ்ந்தான். அவ்வேல் சென்று வீரராக்கதருடைய உடம்பிற் பட, அவரும் வீழ்ந்து 
மிகத் தளர்ந்தார். முருகக் கடவுளுடைய ஆணையினால் அவருடைய உயிர் பிரிந்திலது. 

    முன்னே பானுகோபன் செலுத்திய விட்டுணுவினுடைய சக்கரப் படையினால் வீழ்ந்து அவசமடைந்த 
வீரகேசரி எழுந்து, போர்செய்வதற்கு வலிமையின்றி இடைந்து, பின்போயினார். பானுகோபன் வேறோர் 
தேரிலேறி, வில்லை வளைத்துப் பாண மழைகளைச் சொரிந்து, மற்றை வீரர்களையும் வெல்லும்படி எதிர்த்தான். 
வீரராந்தகர், வீரமாமகேச்சுரர், வீரதீரர், வீரமாமகேந்திரர், வீரபுரந்தரர் என்னும் ஐவரும் வில்லோடு சென்று, 
பானுகோபன்மீது பாணங்களை மழைபோலப் பொழிந்து, அளவில்லாத போர்த்தொழில்களைச் செய்து, 
பின்பு பானுகோபனுடைய பாணங்கள் உடம்புகளிற் புதைய, அவருள் இருவர் வருந்தி நின்றார்; ஒருவர் வீழ்ந்தார்; 
மற்றையிருவரும், தேரும் வில்லும் அழிந்து நொந்து புறங்கொடுத்துச் சென்றார். 

    பானுகோபன் இவ்வாறு வீரர்கள் யாவரையும் வேறுவேறாய்ப் பொருது வெற்றிகொள்ளும்பொழுது, 
முன்னே வலிமையின்றிப் புறங்கொடுத்த அவுணசேனைகள் யாவும் நாற்றிசைகளினும் வந்து அவனைச் சேர்ந்தன. 
பானுகோபன் சேனைகளோடு போருக்கு வருதலை வீரவாகுதேவர் பார்த்து, தேவாதி தேவராகிய சுப்பிரமணியப் 
பெருமானுடைய திருவடித் தாமரைகளை அன்போடு தியானித்துத் துதித்து, போர்செய்ய நினைத்து, அவனுக்கு 
முன்னே சென்று, பிரமாவும், விட்டுணுவும், இந்திரனும், தருமதேவதையும், வேதங்களும், சூரியசந்திரர்களும், 
வீரலக்குமியுங் கூத்தாட வில்லை வளைத்து, பிரசண்ட மாருதமும் வடவாமுகாக்கினியும் அஞ்சவும், சமுத்திரத்தின்
 ஒலி குன்றவும், அண்டங்களும் புவனங்களும் அழிந்து பிரதித்தொனி செய்யவும் நாணொலியை யெழுப்பி, 
போர்செய்யும்படி நடந்தார். 

    அவரைப் பானுகோபன் கண்டு ஒரு பெரிய வில்லை வளைத்து, தேவர்கள் நடுங்கும்படி நாணோதை செய்தான். 
முன்பு வீரவாகு தேவருடைய நாணொலியை அன்பினோடு கேட்ட தேவர்கள் அளவில்லாத மகிழ்ச்சியையடைந்து 
பொலிந்து, பின்பு பானுகோபனுடைய நாணொலியைக் கேட்டலும் இரங்கி, வருந்தி, "இங்கே இன்பதுன்பங்க ளிரண்டையும் 
ஒரிடத்திற் கண்டோம்" என்று கூறி, அமுதமுண்டவர் பின்பு நஞ்சத்தையுண்ட செயலைப் போன்றார். இன்பத்தின் 
முடிவிற் றுன்பம் வந்தடைவதோர் வழக்கன்றோ! அரிபிரமேந்திராதி தேவர்கள் இவர்களுடைய போர்த்தொழிலைக் 
காணும்படி வந்து நெருங்கினார்கள். அப்பொழுது, பானுகோபன் வீரவாகுதேவரை நோக்கி இவ்வாறு சொல்லுகின்றான். 

    "வேற்படையினாற் றாரகாசுரனைக் கொன்ற குமாரக்கடவுளல்லை; பன்றி வடிவங்கொண்டு 
பூமியையிடந்த விஷ்ணுவல்லை; பிரமாவல்லை; இந்திரனல்லை; தூதுவனாகிய நீயோ என்னோடு பொருந் 
தொழிலில் வல்லாய். நேற்றைத் தினம் நீ பயின்ற மாயையினால் நம்மரசனுக்கு முன்வந்து சில பழிகளைச் 
சொல்லி என்றம்பியைக் கொன்றாய், நகரத்தை யழித்தாய். யான் அதனை அறிந்திலேன், அதனாற் பிழைத்தாய். 
அன்றெனில் உய்ந்து இங்கே வரப்பெறுவாயோ! பொருது வெற்றிகொண்டு உன்னுயிரை யமபுரத்திற் புகுவிப்பேன்; 
இது நிச்சயம். 'பிறந்த நாளையிலே வெய்யிலை எறித்த சூரியனைச் சிறையிற் பிணித்தவன் ஒரு ஒற்றுவனைக் 
கொன்றான்' என்று ஒரு பெரும்பழியைக் கொள்வதன்றி அதனால் யான் புகழையடைவேனோ! 

    போரைச் செய்துமுடித்த உன்னுடைய துணைவர்களை வென்றேன்; படைத் தலைவர்களை வென்றேன்; 
சேனைகளையும் அழித்தேன்; தனியே வந்து எதிர்த்த உன்னைக் கொல்வேன்; உன்னை விடுத்த பாலகனையும் 
உலைவித்து என் சினத்தை முடிப்பேன்; இந்திரனையுஞ் சிறைசெய்வேன்' என்று இவ்வாறு கூறினான். 
வீரவாகுதேவர் இவற்றைக் கேட்டு, "யாவராயினுந் தம்மோடெதிர்த்து வந்து போர்செய்யும் வீரர்களை வெல்வதே 
வலிமையாம். புறங்கொடுப்போரைக் கொல்லுதலே வசையாம். வெற்றியடையும் வீரர் தம்முடைய வலிமையைச் 
சொல்வாரோ! விரைந்து போர் செய்குதி" என்றார். 

    அப்பொழுது பானுகோபன் பத்துப்பாணங்களை எடுத்து வில்லிற்பூட்டிச் செலுத்தினான். வீரவாகுதேவர் 
விரைந்து அத்துணைப்பாணங்களை விடுத்து அவற்றை அறுத்து, பின் நூறுபாணங்களை அவன்மீது விடுத்தார். 
பானுகோபன் தன்மீது வந்த பாணங்களைப் பார்த்து அத்துணைப் பாணங்களை விட்டு அவற்றை அறுத்து வீழ்த்தி, 
வீரவாகுதேவர்மீது ஆயிரம் பாணங்களைவிட, அவர் அவற்றை அத்துணைப்பாணங்களினால் அறுத்து, 
பதினாயிரம் பாணங்களை விடுத்தார். 

    பானுகோபன் அத்துணைப்பாணங்களினால் அவற்றை அழித்து, நூறாயிரம் பாணங்களை எய்தான். 
அவற்றை வீரவாகுதேவர் அத்துணைப்பாணங்களால் அறுத்து, பத்துலக்ஷம் பாணங்களைப் பானுகோபன் மேல்விட,
அவன் அத்துணைப்பாணங்களைத் தொடுத்து அவற்றை மாற்றி, கோடிபாணங்களை ஏவினான். வீரவாகுதேவர் 
அவற்றை அத்துணைப்பாணங்களால் மாற்றி நூறாயிரகோடி பாணங்களைச் செலுத்தினார். பானுகோபன் 
கூட்டமாகிய எண்ணிறந்த பாணங்களை யுகாந்த காலத்து மேகம்போலப் பொழிந்தான். இவர் இருவருடைய 
பாணமழைகள் நெருங்குதலால் பூமியும், திக்குக்களும்; சமுத்திரங்களும், குலமலைகளும், மேகமண்டலமும், 
வானுலகமும், சூரியனுடைய தேரும் மறைந்தன. 

    அவர்களுடைய தேர்கள் பூமியும், திக்குக்களும், சமுத்திரங்களும், புறவேலையும், வானுலகமும்,
 அண்டங்களும் ஆகிய எவ்விடங்களிலும் சாரிவட்டமாய்த் திரிந்தன. அவர்கள் பாணங்களை முறைமுறையாகச் 
சொரிதலால் அவற்றில் மறைவர்; அவற்றை அழிக்கும்பொழுது வெளிப்படுவர். இவ்வாறே ஓர் இமைப்பொழுதில் 
வேறுவேறாய் நிகழ்கின்ற அவ்விருவீரரும் உலகமெல்லாம் சூறைபோலச் சுற்றிப் போர்செய்தனர். அவர்கள் 
செலுத்தும் பாணங்கள் சூரியனுடைய தேரிலும், அதிற்கட்டிய குதிரையிலும், சந்திரனுடைய விமானத்திலும், 
திக்கு யானைகளிலும், விண்ணுலகத்திற் சஞ்சரிக்கின்ற தேவர்களிடத்திலும் சிதறிச் செல்லும். 

    அவ்வீரர்  இருவரும் போர் செய்வது எத்திசை என்று காண்டல் அரிது. அவர்கள் விடுகின்ற பாணங்க ளனந்தம் 
மேகமண்டலத்தில் நெருங்கி அதற்குமேலும் வரும். "நமக்கு இங்கே நிற்கமுடியாது" என்று தேவர்கள் ஓடினார்கள். அப்பாணங்கள் 
பூமியைக் கிழிப்பன; அண்டங்களைத் துளைப்பன; ஏழு சமுத்திரங்களையும் பருகுவன; புவனங்களைக் கடப்பன; 
வடவாமுகாக்கினியின் நாவையுந் துணிப்பன; வலிமை மிக்கன. யாவருந் தடுத்தற்கரியன. வீரவாகுதேவரும் பானுகோபனும் 
இவ்வாறு செய்த பெரும்போரின் வலிமையை யார் சொல்ல வல்லார். மிகுந்த பாணமழைகளை இடைவிடாது செலுத்துதலால் 
அவர்கள் கையிலுள்ள விற்கள் சக்கரம் போல வளைந்தன.

    இவ்வாறு இருவரும் போர் செய்யும் பொழுது, பானுகோபன் வீரவாகுதேவர் விடுகின்ற பாணமழைகளை 
அழித்து, அவருடைய திருக்கரத்திலிருக்கும் வில்லை விரைந்து நூறு அம்புகளால் அறுத்து, ஆரவாரித்தான். 
வீரவாகுதேவர் வேறொரு வில்லை யெடுத்து வளைத்து, மிகக்கோபித்து, ஆயிரம் பாணங்களை விரைவிற்றூண்டி, 
ஒர் முகூர்த்தத்தில் அவன் ஏந்திய வில்லை அறுத்தார். அவன் மிகவுங்கோபித்து வேறொரு வில்லை வளைத்து,
 ஆயிரம் பாணங்களை வீரவாகுதேவர் வருந்தும்படி அவருடைய மார்பில் விடுத்தான். 

    அவர் ஏழுபாணங்களினால் அவனுடைய கிரீடத்தைச் சாய்த்தார். அவன் முன்னாளையிலே சூரியனைப் 
பிடித்தமை போலப் பிறிதோர் இரத்தின கிரீடத்தை எடுத்துச் சிரசிற் கவித்தான். இதன்முன் வீரவாகுதேவர் 
ஆயிரம் பாணங்களைச் செலுத்தி அவனுடம்பில் அணிந்த கவசத்தை அழித்தார். அப்பொழுது தருமங்கள் 
ஆடிப்பாடின; சூரியனும் சிரித்தான்; பானுகோபன் ஆயிரம் பாணங்களை வீரவாகுதேவருடைய நெற்றியில் 
அழுத்தினான். அவைகள் இரத்தத்தைப் பருகி, உதிக்கின்ற சூரியனுடைய இளங்கிரணங்கள் விரிந்தெழுந் 
தன்மை போலக் கூட்டத்தோடுந் தோன்றின. 

    ஆயிரம் பாணங்கள் வந்து தமது நெற்றியில் அழுந்துதலும், வீரவாகுதேவர் சற்றும் நிறையினின்றும் 
நீங்கிலர்; வலிகுறைந்திலர்; அவற்றைக் கரத்தாற் பறித்து வீசினார். பதகனாகிய பானுகோபனுடைய 
கொடுங்கோல் அழிவின்றி நிற்குமோ! வீரவாகுதேவர் அப்பானுகோபனுடைய முகத்திலும், மார்பிலும், 
புயங்களிலும், கைகளிலும் தனித்தனி கொடிய ஆயிரம்பாணங்களைத் தெரிந்து ஒரு தொடையில் விடுத்தார். 
அவைகள் அவயவங்களிலே போய்ப் படுதலும், அவன் தளர்ந்து அவசமடைந்து, கையிலுள்ள வில்லே 
ஊன்றுகோலாக வறியனாய் நின்றான். 

    அவனுடைய உடம்பில் விரைந்து எழும் இரத்தம்,தோண்டிய தடாகத்தைப் போல ஊறி மேலே எழுந்தது. 
வந்துவந்து எழுகின்ற இரத்தவெள்ளம் தன் உடம்பு முழுதையும் மறைப்பவும் மனத்திலே கோபம் மூண்டெழவும் 
பொலிகின்ற பானுகோபன், அக்கினிப் பிழம்போடுயர்ந்த மலையையும், அந்திக்காலத்து மேகத்தையும் போன்றான்.
இவ்வாறு பானுகோபன் போர்செய்யும் வலியிழந்தமையை அவுணப் படைத்தலைவர்கள் யாவரும் பார்த்து, 
நால்வகைச் சேனா சமுத்திரங்களோடும் முன்சென்று வீரவாகுதேவரைச் சூழ்ந்து, சூலம் தண்டம் எழு சக்கராயுதம் 
முதலாகிய படைகளைச் செலுத்தி, சூரியனைச் சூழுகின்ற இருட்டைப் போல அவரை மறைத்தார்கள். 

    வீரவாகுதேவர் வில்லைவளைத்து ஆயிரகோடி பாணங்களை ஒருதொடையில் விரைவிற்றூண்டி, 
இருட்படலத்தைக் கிழிக்குஞ் சூரியனைப்போல அவுணர்கள் விடுத்த பாணங்களெல்லாவற்றையுஞ் சிந்தி, 
பின்னும் அனந்தகோடி பாணங்களைத் தவறில்லாதனவாக விட்டு, அவுணசேனைகளெல்லாவற்றையும் 
சமுத்திரத்தைப் பருகும் வடவாமுகாக்கினி போல விரைவில் அழிப்பாராயினார். அவர் விடுத்த பாணங்கள் 
பரிசை களையறுக்கும்; வாளைத் துணிக்கும்; வில்லின் காலை அறுக்கும்; மழுவை அறுக்கும்; அசுரர்களுடைய
 மார்பையும் புயங்களையும் கைகளையும் கால்களையும் வாய்களையும் சிரங்களையும் வச்சிர முதலிய 
ஆயுதங்களையும் துணிக்கும்; 

    யானைகளுடைய துதிக்கை கால் நெற்றி வாய்முதலிய அவயவங்களையும் அறுக்கும்; தேர்களினுடைய 
உருளைகள் பார்கள் கூம்புகள் முதலிய அவயவங்களையும் பாகனையும் குதிரைகளினுடைய கால்கள் தலைகள் 
மணிமாலைகள் முதலாயினவற்றையும் அறுக்கும். இன்னும் அவைகள் வெட்டிய சிரங்கள், காடு மலை கடல் 
வானுலகம் முதலாகிய எவ்விடங்களினுஞ் செல்லும். அப்பாணங்களில் ஒவ்வொன்று ஆயிரகோடி சிரங்களை 
அறுக்கினும் வெறுப்படையாதனவாயின. வரத்திற் சிறந்த அப்பாணங்களிற் சில அவுணவீரர்களுடைய 
சிரங்களைத் துணித்துக்கொண்டு மகேந்திரபுரத்திற் போய், அவர்கள் மனைவியர்களுடைய கைகளிலிட்டுச் 
செல்லும். 

    அவுண வீரர்களுடைய உடல்கள் புரண்டன; இரத்த வெள்ளம் பொழிந்தன; தேருருளைகள் உருண்டன; 
குதிரைகளும் யானைகளும் மடிந்தன; பிணங்கள் செறிந்தன; கூளிகள் திரண்டன; பருந்துகளும் காக்கைகளும் 
செறிந்தன ; திசைகளெல்லாம் இருண்டன; இறவாதொழிந்த சேனைகள் ஓடின. இரத்தவெள்ளம் பாய்ந்து 
கடலிற்புக அதனைச் சுறவுகள் குடித்துச் செருக்கின. யமதூதர்கள் வீரவாகுதேவருடைய அம்பினாலிறந்த 
அவுணர்களுடைய உயிரைக்கொண்டு சென்று காலோய்ந்தார்கள். போர் ஒழிந்தது. சிந்திய 
அவுணசேனைகளின் செய்தியையும், பானுகோபன் நொந்து தனித்து நின்ற தன்மையையும், முன் பானுகோபனுக்குப் 
பயந்து சாய்ந்த பூதசேனைகள் பார்த்துப் பார்த்து, 'நந்தலைவருக்குப் பக்கத்தில் நாம்போவோம்'' என்று மீண்டுவந்தன. 

    புறங்கொடுத்த பூதவீரர் யாவரும் மீண்டார். வருந்திநின்ற படைத்தலைவர்கள் வலியடைந்தார். துன்பத்தோடு 
வீழ்ந்தவர் உயிரோடெழுந்தார்.  இவர்களெல்லாரும் வீரவாகுதேவருக்குப் பக்கத்தில் வந்து சூழ்ந்தார்கள்.
அப்பொழுது, பானுகோபன் அயர்ச்சி நீங்கி,  உணர்வுதோன்ற உற்று நோக்கி, அளவின்றி மிகுந்த தன்னுடைய 
சேனைகளைக் காணாதவனாய், பருந்துங் கழுகும் ஆர்க்கும் பிணக்குவைகளைப் பார்த்து, ஒப்பில்லாத வில் வீரராகிய 
வீரவாகுதேவர் நின்றதையும் நோக்கி, "நம்முடைய பக்கத்தில் நின்ற சேனைகளெல்லாவற்றையும் இவனே கொன்றான்" 
என்றெண்ணி, "ஆகா! ஆரிடையடங்கிற்று, ஆண்மைக்கும் ஓரெல்லையுண்டோ! வீரன் இவனேயன்றி வேறில்லை 
போலும்' என்று வியந்து, பின்னும் "என்னெதிரில் வந்து போர்செய்த வீரர்கள் யாவரும் இறந்தவர்களன்றி வெற்றியைப் 
படைத்தோரில்லை; 

    வளைத்த வில்லோடு இவனொருவன் நின்றான்; இவனை வெற்றிகொள்வேன்; பானுகோபனுடைய 
வலிமை சீரிது சீரிது! ஒருநாழிகைப் பொழுதினுள் கந்தவேளுடைய ஒற்றுவனது சரீரத்தைச் சின்னபின்னங்களாகச் 
செய்வேன்; அங்ஙனஞ் செய்யாதொழிவேனாயின் பின்னர் இவ்வுயிர் வாழ்க்கையை வேண்டேன்; யான் 
பிறந்தேனுமல்லேன்; என்னுடைய ஒருவில்லும் யானும் நெருப்பிற் புகுவேன்" என்று சபதங் கூறி, மனத்திற் 
கோபாக்கினியும் மானமும் மிகவளர, சிவபெருமானுக்கு முன்னே சென்ற ஆலாகல விஷம்போலத் தேரோடு 
வீரவாகுதேவருக்கு முன்னே சென்று, கையிலிருந்த வில்லை முறுக வளைத்து, முத்தலைகளையுடைய ஆயிரம் 
பாணங்களை விடுத்தான். 

    வீரவாகுதேவர் அவ்வியல்பினவாகிய ஆயிரம் பாணங்களை விடுத்து அவற்றை அறுத்து, பின்னும் 
ஆயிரம் பாணங்களைச் செலுத்த, பானுகோபன் ஆயிரம் அம்புகளை விடுத்து அவற்றை விலக்கி, பதினாயிரம் 
பாணங்களைத் தொடுத்து வீரவாகுதேவருடைய தேரையும் பாகனையும் குதிரைகளையும் அழித்தான். 
தேவர்கள் அதனைக் கண்டு துன்பமுற்றார்கள். வீரவாகுதேவர் வில்லோடு வேறொரு தேர்மேற் பாய்ந்து, 
பதினாயிரம் பாணங்களைச் செலுத்தி, தேவர்கள் ஆரவாரிக்கும் படி பானுகோபனுடைய தேரும் குதிரைகளும் 
பாகனும் அழிந்துவீழப் பலதுண்டங்கள்  செய்தார். 

    பானுகோபன் வேறொரு தேரில் ஏறி ஓர் வில்லை ஏந்தி காதளவும் வளைத்து, எழுநூறு பாணங்களைப்பூட்டி 
வீரவாகுதேவருடைய மார்பிற் புகும்படி விடுத்து, ஆர்த்தான். அப்பாணங்கள் மார்பிற் றைத்தலும், முன்னே சோகத்தை 
அறிகிலாத வீரவாகுதேவர் துயரத்தின் சுவையையுங் கண்டு, 'இவனுடைய சிரசைக் காகத்திற்கு இடுவேன்" என்று 
காலன்போல வெகுண்டு, பதினாலு பாணங்களையேவி அவனுடைய வில்லையறுத்து, பின்னும் ஆயிரம் பாணங்களினால் 
அவனுடைய தேரையும் குதிரைகளையும் அழித்து, நூறம்புகளால் அவனுடைய மார்பைத் துளைத்தார். 

    பானுகோபன் அதற்கு வருந்தாமல், பக்கத்திலுள்ள ஒரு தேரில் ஏறினான். அதன்முன் வீரவாகுதேவர் முன்பு 
மார்பைத் திறந்தவழியால் ஆயிரம் அம்புகளைத் தூண்டி அவனுடைய முதுகிற்றூங்கும் அப்பறாக்கூட்டை அறுத்தார். 
அப்பறாக்கூடு  அறுதலும் பானுகோபன் "ஆ! வில்வித்தையினால் இவனை வெற்றிகொள்ளுதலரிது" என்று ஓர் 
உபாயத்தைக் கருதி, பிரமதேவர் கொடுத்த மோகப்படையைக் கையிலெடுத்து மனத்தினால் வழிபாடுசெய்து, 
'நீ சென்று சேனைகளோடு இப்பகைவனுடைய அறிவைக் கெடுத்துக் கொன்று வருவாய்" என்று சொல்லி விடுத்தான். 

    அப்படை கோபம்மிகுந்து சூரியனுடைய ஒளியைக் கெடுத்து இருட்படலத்தை வீசி, உயிர்களெல்லாம் 
அஞ்சி மயங்க விரைந்து சென்றது. அதனுடைய வரவைக் கண்ட பூதர்கள் யாவரும் மிகவும் அஞ்சி நடுங்கி வருந்தி 
அயர்ந்தார்கள். பூதப்படைத் தலைவர்கள் யாவரும் வெற்றியையிழந்து வருந்தித் தேம்பினார். இலக்கத்தெண்மரும் 
அதற்கெதிராகிய படைகள் ஒன்றையுஞ் செலுத்தாது, பாணங்களை விடுத்தார்கள். வீரவாகுதேவர் அப்படை எதிரே 
வருதலும் ஒன்றையுஞ் செய்யாது, "இப்படை எந்தப்படையாலழியும்'' என்று சிந்தித்து நின்றார். அப்பொழுது அந்த 
மோகப்படை ஆலாகலவிஷம்போலச் சென்று எல்லாருடைய உணர்வையு மயக்கியது. இலக்கத்தெண்மரும் பிறரும் 
கலங்கி வீழ்ந்தார்கள். 

    வீரவாகுதேவர் கருத்தழிந்து, நிலத்தில் நாட்டிய தம்பத்தைப் போல நின்றார். ஆகாயத்தில் நிற்கின்ற 
பானுகோபன் இதனைக் கண்டு, "எனக்கு நிகராயினோர் யாவருளர்! நல்ல காரியத்தை நினைத்தேன்'' என்று சிரித்து, 
வீரவாகுதேவர் முதலிய வீரர்கள் மயங்கியதையறிந்து மகிழ்ந்து, வெற்றியையடைந்து, நிகழாநின்ற சிறப்போடு 
நின்று, "வீரவாகுவும் மற்றையோரும் வலிமையின்றி உடல் சோர்ந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இறக்கும்படி 
வில்வன்மையினால் விரைந்து கொல்வேன்" என்று கருதி,வில்லை வளைத்து, அறிவு மயங்கிய வீரவாகுதேவர் 
மீதும் இலக்கத்தெண்மர்மீதும் பூதகணத்தவர்கண் மீதும் பாணங்களைச் சொரிந்து, அவர்களுடைய 
உடம்புகளைத் துளைத்தான்.

    அப்பொழுது ஆன்மாக்கடோறும் பரமான்மாவாய் வியாபித்திருந்து அருள்புரிகின்ற எம்பெருமானாகிய 
சுப்பிரமணியக்கடவுள் வீரவாகுதேவர் முதலாயினோர்கள் பானுகோபனால் அறிவிழந்து தீங்குற்ற தன்மையைத் 
திருவுளத்திலுணர்ந்து, விரைவில் அமோகப்படையை உண்டாக்கி, அதனை நோக்கி, "நீ நம்மவர்களாகிய வீரவாகு 
முதலாயினோர் அறிவிழக்கும்படி பானுகோபன் விடுத்த மோகப்படையை யடைந்து அதன் வலிமையைக் 
கெடுத்து மீண்டு வருதி" என்று பணித்து விடுத்தருளினார். அப்படைக்கலம் ஆகாயவழிக்கொண்டு சென்று, 
வீரர்கள் மயங்கிய போர்க்களத்தை யடைந்தது. 

    அடைதலும் பானுகோபன் விடுத்த மோகப்படைக்கலமானது சூரியனுதிக்க நக்ஷத்திரங்கள் 
மறைந்தாற்போல வலியழிந்து வீரர்களுடைய மனமயக்கந் தீரும்படி விரைந்தோடியது. மயக்கந் தீர்ந்து 
தேரின்மேல் நின்ற வீரவாகுதேவரும் மற்றை வீரர்களும் அப்படையைக் கண்டு மகிழ்ந்து, அதன் 
ஆற்றலைக்கண்டு புளகமுண்டாக வாழ்த்தி, "யாமெல்லாரும் பானுகோபனுடைய படைக்கலஞ் செய்த 
செயலால் மயக்கத்தையடைந்தோம்" என்பதை நினைத்து, வாயினாற்பேசும் வீரவார்த்தைகளை விட்டு, 
 "ஏ ஓ " என்று வெட்கமடைந்து, ''முற்றறிவுடைய நமது கடவுளாகிய சுப்பிரமணியப் பெருமானானவர் நாம் 
பானுகோபனால் அறிவிழந்தமையைத் திருவுளஞ்செய்து இப்படைக்கலத்தை விடுத்தருளினார்" என்று கருதி, 
அக்கடவுளைத் தியானித்து, அவருடைய திருவருட்டிறத்தை மனத்திலடைத்து வணங்கித் துதித்தார்கள். 

    அப்படைக்கலம் மின்போல மீண்டு சுப்பிரமணியக் கடவுளை அடைந்தது. போர்க்களத்தில் நின்ற 
வீரர்கள் பானுகோபனோடு போர்செய்ய முயன்றார்கள். வீரவாகுதேவர் நீங்காத மானமும் கோபமும் மூள, 
"இந்தப் பானுகோபன் ஓர் மோகப்படையாற் போர்செய்த வலிமை கெடும்படி இப்பொழுதே கொல்வேன்' என்று 
எண்ணி,சிவப்படைக்கலத்தை எடுத்தார். சுப்பிரமணியக்கடவுள் விடுத்த அமோகப்படை வந்ததையும், தன்னுடைய 
மோகப்படை மீண்டதையும், வீரவாகுதேவர் சிவப்படைக்கலத்தை எடுத்தமையையும் பானுகோபன் பார்த்து, 
விம்மிதமுற்று, வீரவாகுதேவரை எதிர்க்காது செருக்கு நீங்கி, அளவில்லாத துன்பமுற்று, இவ்வாறு எண்ணுவான்: 

    "பகைவர்களுடைய அறிவை மயக்கி நிலத்தில் வீழ்த்தினேன்; எல்லாரும் அறிவுபெற்றெழுந்தார்கள்; 
ஐயோ இனி நான் செய்வதென்னை! இனிக் கடவுள் செய்கைதான்; என் பகைவன் சிவப்படையை யெடுத்தான்; 
விடுவானாயின் அதுவந்து என்னுயிரைக் கொல்லும்; இதனை விலக்கும் வண்ணம் யான் அப்படையை 
எடுத்துக்கொண்டு வந்திலேன்; ஆதலால் இனி வீரவாகுவை வெல்லுதலரிது; நகரத்துக்குச் சென்று தெய்வப் 
படைக்கலங்களை மிகவுங் கொண்டுவந்து இவனுடைய வலியைக் கெடுப்பேன்; இனி இங்கே நிற்றல் பழுது" 
என்று எண்ணி, அருவமாகி,தேரினின்று ஆகாயத்திலெழுந்து தன்னகரிற் போயினான்.

    பானுகோபன் மறைந்தோடியதை அவனைச் சூழ்ந்த அசுரர்கள் கண்டு ஓடிப்போயினார்கள். 
அதனைப் பார்த்த தேவர்கள் இன்றை வெற்றி நம்மதென்று சொல்லி ஆர்த்து, "வஞ்சனாகிய பானுகோபன் 
மாயையினால் மறைந்து போயினான். நாளைக் காலையிலே போருக்கு வருவான். அவனை விரைந்து 
கொல்லுதிர்" என்று வீரவாகுதேவர்மீது பூக்களைச் சொரிந்தார்கள். பானுகோபன் அருவமாய் மறைந்து 
புறங்கொடுத்துப் போதலை வீரவாகுதேவர் பார்த்து, தான் குறித்த எண்ணம் முற்றுப்பெறாத மதயானை 
போலக் கோபத்தோடு நின்றார். 

    பானுகோபன் பயந்து புறந்தந்து ஓடுதலை இலக்கத்தெண்மரும் பூதப்படைத்தலைவருங்கண்டு, 
"பானுகோபன் போர்செய்தற்கு வலியில்லாதவனாயினான்; நாம் அவனைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டு 
வருவோம்' என்று கூறினர். அதனைக் கேட்ட வீரவாகுதேவர் "பேடிகளுடைய சிறுதொழிலைப் பேணி மனம் 
பயந்து ஓடிய பகைவனை நாம் தொடர்ந்து போய்க் கொல்வது நன்றாகுமோ! இனி அவன் போருக்கு வந்தாற் 
கொல்வேன், இது நிச்சயம்" என்றார். அதனைக் கேட்டு யாவரும் "இது நன்று' என்றார்கள். 

    பூதவெள்ளங்கள் அவற்றைப் பார்த்துப் புயங்களைத் தட்டி ஆரவாரித்தன. சூரியன் அஸ்தமயனமாயினான். 
அப்பொழுது, வீரவாகுதேவர் இலக்கத்தெண்மரும் படைத்தலைவர்களும் பூதசேனைகளுஞ் சூழப் போர்க்களத்தை நீங்கி, 
சுப்பிரமணியக்கடவுள் வீற்றிருக்கின்ற பாசறையை யடைந்து, துணைவர்களோடு அக்கடவுளுடைய சந்நிதியிற்போய் 
வணங்கியெழுந்து, அவர் வினாவியருள, பானுகோபன் வந்தெதிர்த்துப் போர்செய்து வலியின்றித் துன்பத்தோடு 
புறங்கொடுத்ததையும் பிறவற்றையும் விண்ணப்பஞ் செய்தார். 

    முருகக்கடவுள் அவர்மீது கிருபை பாலித்து, "தம்பியே, நீ இன்றைக்குப் பானுகோபனோடு போர்செய்தமையால் 
மிகவுந் துன்பமுற்றாய், துணைவர்களோடு உன்னுடைய இருக்கைக்குச் செல்லுதி' என்று திருவாய் மலர்ந்தருளினார். 
வீரவாகுதேவர் விடைபெற்றுக் கொண்டு தம்பிமார் முதலாயினாரோடு தமது இருப்பிடத்தை யடைந்திருந்தார். 
இனி மகேந்திரபுரியில் நிகழ்ந்தவற்றைச் சொல்லாம். 

    முன்னமே போரிற் புறங்கொடுத்தோடிய பானுகோபன் பெருமிதம் நீங்கி, மனத்திலே துயரமும் 
பழியும் மானமும் மிகுந்து, சூரபன்மனுடைய கோயிலுக்குப் போகாமல், தன்னுடைய கோயிலுக்குப்போய், 
ஊறு பாடடைந்தவர்கள்போல வாட்டமுற்று, மந்திரிமாரோடும் சேனைத்தலைவர்களோடும் 
கலத்தலில்லாதவனாயும், அத்தாணி மண்டபத்திலே சிங்காசனத்தில் இருத்தலையும் பெண்கள் 
செய்யும் ஆடலையும் பாடலையும் விரும்பாதவனாயும், தான் புணர்தற்குரிய பெண்களுடைய கூட்டத்தை 
நோக்காதவனாயும், ஊடிய பெண்களைக் கூடுதலை நினையாதவனாயும், அன்றிரா நீங்கியபின்பு 
"சுப்பிரமணியக்கடவுளையும் அவருடைய படைவீரர்களையும் போரில் வெற்றிகொள்ளவேண்டும்" 
என்று தன்மனத்தோ டுசாவிக் கொண்டு, பிறிதொரு முயற்சியுமின்றி யிருந்தான்.

    பானுகோபன் தன்னுடைய மாளிகையில் இவ்வாறிருக்க, தூதுவர்கள் போரினது நிகழ்ச்சிக 
ளெல்லாவற்றையும் பார்த்துச் சூரபன்மனுடைய கோயிலிற்போய் அவனை வணங்கி, 'மகாராசனே கேட்பாய்: 
உன்னுடைய குமாரனாகிய பானுகோபன் வீரவாகுவோடு போர்செய்து பல பூதர்களையழித்து இங்கே 
மீண்டுவந்தான். யாதேனும் உபாயமுண்டு போலும். அத்தன்மையை யாமறியோம். மேலே நீ அதனை அறிதி. 
அறுமுகனுடைய தூதுவனாகிய வீரவாகுவும் சேனைகளோடு பாசறைக்குப் போயினான். இதுவே விளைந்தது" 
என்று நிகழ்ச்சிகளையெல்லாம் சொன்னார்கள். 

    "பகைவர்களை வெல்லுதற்கு வலியில்லாதவனாய்ப் பானுகோபன் வந்தான்" என்ற சொல்லைக் 
கேட்குமுன் சூரபன்மன் கோபமுடையனாய், கண்கள் அக்கினிகால வெய்துயிர்த்து மிகவும் சிரித்து, 
''என்னுடைய புதல்வர்களும் துணைவர்களும் சுற்றமாயுள்ளோரும் போருக்குப் போகமாட்டார்கள். 
யான் நாளைக்குச் சேனைகளோடு சென்று கந்தனை வெற்றிகொண்டு விரைவில் மீளுவேன். நீவிர் 
இப்பொழுது போங்கள்!" என்றான். தூதுவர் வணங்கிப் போயினார். சூரபன்மன் பிறிதொன்றையுங் 
கருதாது பகைவர்களை வென்று கீர்த்தியடைதலில் அவாவுடையனா யிருந்தான். அற்றை இராக்காலமானது,
வலிமையோடு போர்செய்து வெற்றிகொள்ளும்படி எண்ணுகின்ற வீரர்களுக்கெல்லாம் நெடியதாயும்,
வலிமையில்லாத மனமுடையோர்களுக்கெல்லாம் குறுகியதாயுங் கழிந்தது.

            திருச்சிற்றம்பலம்.

        இரண்டாநாட்-சூரபன்மன் யுத்தப்படலம்.

    சூரியோதயமாதற்குமுன் சூரபன்மன் நித்திரை விட்டெழுந்து, நித்திய கருமத்தை முடித்து, அத்தாணி 
மண்டபத்தை யடைந்து, சிங்காசனத்திலிருந்து, பானுகோபன் முதனாட் போரிலடைந்த வசையை நினைத்து, 
மனத்திற் பெருஞ்சினமூள, "இனிமேற் போருக்கு யாரையும் விடுக்கிலேன். யானே சேனைகளோடு சென்று 
பகைவர்களுடைய வலிமையை யழித்து வெற்றிகொள்வேன்' என்றெண்ணி, அநேகம் ஒற்றுவர்களை அழைத்து, 
'நிலவுலகத்தைச் சூழ்ந்த சமுத்திரங்கடோறும் இருக்கின்ற நம்முடைய சேனைகளைக் கொண்டு வாருங்கள்'' 
என்று பணித்தான். 

    ஆயிரகோடி ஒற்றுவர்கள் வணங்கி எங்குஞ்சென்று சென்று சூரபன்மனுடைய பணியைச் சொன்னார்கள். 
முன்னாளிலே பலபோர்களையும் வென்ற இலக்கம் வெள்ளத்தின் மிக்க படைவீரர்கள் யானை குதிரை தேர்களில் 
ஏறிக்கொண்டு சூலம் கணிச்சி தண்டம் குலிசம் முதலாகிய பலவகைப் படைகளையேந்திவந்து மகேந்திரபுரியைச் 
சூழ்ந்து ஆரவாரித்தார்கள். சூரபன்மன் மேருமலை போன்ற ஒரு சிகரத்திலேறி அந்தச்சேனைகளெல்லாவற்றையும் 
பார்த்து, முன்பு மனத்திற்கொண்ட மிகுந்த துயரம் முழுவதையும் நீக்கி, வலிமைபெற்று, பகைவர்களை 
வெற்றியடைந்தவன்போல மகிழ்ந்து நின்றான். 

    பின்பு அவன் போருக்குச் செல்லக்கருதி, அச்சிகரியினின்றுமிறங்கி, வில்முதலாகிய ஆயுதங்களையும் 
தெய்வப் படைக்கலங்களையும் எடுத்து, கையிற் கோதையைக் கட்டி, விரலிற் புட்டிலைச் சேர்த்து, முதுகில் 
அப்பறாக்கூட்டைத் தூக்கி, குடுமியிற் றும்பை மாலையைத் தொடுத்து, இது மந்தரமோ மேருவோவென் றையுறத்தக்க 
ஒரு தேரிலேறி, யானை குதிரை தேர்கள் காவலாகப் பின்செல்லவும் அவுணவீரர்களும் அமைச்சர்களும் அயலிற் 
செல்லவும் கோயிலிலுள்ள வீதிகளைக்கடந்து, கோபுர வாயிலின்பக்கத்தில் வந்தான். அவனுடைய வரவைக்கண்ட 
இலக்ஷம்வெள்ளம் அவுண சேனைகளும் சூரியனுடைய வரவைக்கண்ட உலகம்போலச் சூழ்ந்து ஆரவாரித்தார்கள். 

    சிங்கமுகாசுரனுடைய குமாரனாகிய அதிசூரனும் தாரகாசுரனுடைய குமாரனாகிய அசுரேந்திரனும் 
சூரபன்மனை வந்தடைந்தார்கள். சூரபன்மன் அவர்களை நோக்கி, ''சமுத்திரம் போல நிறைந்த நீர்நிலையானது 
கரையில்லாதவிடத்து உடைந்துபோம். அது போல, சேனைகள் பலவுளவேனும் பாதுகாக்கும் அரசரில்லாதவழிப் 
போரில் நிற்கமாட்டாவா யழியும். ஆதலால், நீங்களிருவரும் நம்முடைய மிகுந்த சேனைகளுக்குத் தலைவராய் 
முன்பு செல்லுதிர்' என்றான். அவர்கள் நன்றென்று அவனை வணங்கித் தங்கள் தேர்களிலேறி, நால்வகைச் 
சேனைகளையும் அணிவகுத்துச், சேனைத் தலைவர்களாய்ச் சென்றார்கள். 

    இலக்ஷம் வெள்ளஞ்சேனைகளும் அதனைப் பார்த்து மகிழ்ந்து, அட்டமா நாகங்களும் ஆதிசேடனும் 
பொறையாற்றாம லிரங்கப் போர்க்களத்தை நோக்கிச் சென்றன. சூரபன்மன் சதுரங்கசேனைகளும் சேனைத் 
தலைவர்களும் தன்னைச் சூழ்ந்துசெல்ல, ஆலாகல விஷமானது சமுத்திரத்திலே வடவாமுகாக்கினி
சுற்றச் சென்றாற்போலத் தேவர்கள் மருளும்படி தேரின்மேலேறிச் சென்றான். தொண்டகம், துடி, பம்பை, 
தூரியம், முருடு, கொம்பு, படகம்  முதலாகிய பலவகை வாத்தியங்களும் முழங்கின. 

    தேர்களினொலியும், யானைகளினொலியும், குதிரைகளினொலியும், கொடிகளினொலியும், 
வீரர்களணிந்த வீரக்கழல்களினொலியும், வாத்தியங்களினொலியும் எட்டுத்திசைகளையும் எல்லாவுலகங்களையும் 
விழுங்கியெழுந்தன. அவுணசேனா வெள்ளஞ் செல்லும்பொழுது எழுந்த துகள் ஆகாயத்திற் செறிதலால், 
சூரியன் முன்பு சந்திரனைப் போல விளங்கி, பின்பு நக்ஷத்திரம் போலாகி மறைந்தான். அத் துகள் சென்று 
பொன்னுலகத்தையும் பூவுலகமாக்கியது. தேர்களின் மீதும் யானைகளின் மீதும் உள்ள கொடிகள் 
வானுலகத்திற் போய்க் கங்கையிற்றோய்ந்து, பூமியிலே திவலைகளைச் சிதறி ஆடிச் சுற்றுதல் "சூரபன்மன் 
இன்றைக்கு அழிவான் " என்று அழுதலைப் போன்றது. 

    வெண்மை முதலிய பலநிறங்களையுடைய குடைகளும், பீலிக் குச்சங்களும் எங்குஞ் செறிந்து 
சூரியகிரணங்களின் வரவை மாற்றி, ஊழிக்காலத்திருளை யுண்டாக்கின. இவ்வியல்புகள்  நிகழச் சூரபன்மன் 
சேனைகளோடு ஆகாய மார்க்கமாய்த் தேரிலேறிச் செல்ல, இந்திரன் அதனைத் தெரிந்து ஓடிப்போய் முருகக்கடவுளுடைய 
திருவடிகளை வணங்கி, "எம்பெருமானே, முன்னாளில் யாகாக்கினியிலே சிவபெருமான் உண்டாக்கிக் கொடுத்த 
அவுண சேனைகளோடு சூரபன்மன் போர் செய்யும்படி விரைந்து வருகின்றான். அவனை எதிர்த்துச் சென்று 
வெற்றிகொண்டு எங்களுடைய செல்வங்களை ஈந்தருளும்" என்றான். 

    சுப்பிரமணியக்கடவுள் அவ்விந்திரனுக்கு அருள் புரிந்து, தேர்ப்பாகனாகிய வாயுவை நோக்கி, 
"நம்முடைய தேரை விரைந்து கொண்டுவருதி" என்றார். அவன் நன்றென்று தேரைக் கொண்டுவந்து 
திருமுன்பு விடுத்தான். அவர் பிரமாவும் விட்டுணுவும் பூக்களைத் தூவித் துதிக்கத் தேரின் மீதிவர்ந்தார். 
சூரபன்மனோடு போர்செய்யும்படி சுப்பிரமணியக்கடவுள் செல்லுதலைத் தேவர்கள் சொல்லக்கேட்ட 
பூதர்கள் கடலுமஞ்ச ஆர்த்துக் கிளர்ந்து வந்தார்கள். அவர்கள் செல்லும்பொழுது பூதூளி எழுந்தது.

     தக்கை, உடுக்கை, சல்லரி, தடாரி முதலிய வாத்தியங்களைக் கோடிகண நாதர்கள் ஒலித்தார்கள். 
நாரதமுனிவரும், கருடரும், கின்னரர்களும் இசை பாடினர். தேவர்களும் முனிவர்களும் திருவடிகளைப் 
பலமுறை வணங்கிக் கூத்தாடினார்கள். வீரவாகுதேவரும், எண்மரும், இலக்கம் வீரரும், படைத்தலைவர்களும் 
போர் முயற்சியோடு பூதசேனைகளுக்கிடையே சென்றார்கள். பூதசேனைகளும் வீரவாகுதேவர் முதலாயினோரும் 
இவ்வாறு செல்ல, சுப்பிரமணியக்கடவுள் மாணிக்கமணிகள் இழைத்த தேரின்மேலிவர்ந்து, அசுரர்களுடைய 
போர்முனையை யடைந்தார். அவுண சேனைகள் வடவாமுகாக்கினியின் வலிமையைக் கெடுப்பேன் என்று 
கடல் பக்கத்தில் வந்து சூழ்ந்தாற் போல வந்து சூழ்ந்தார்கள். பூதர்கள் கிளர்ந்து உரப்பி அவ்வவுண சேனைகளை 
அடர்த்தார்கள். அவர்களுந் தாக்கினார்கள். இருதிறத்தார்க்கும் பெரும்போர் மூண்டது. 

    பூதர்கள் அவுணர்கள்மேலே மரங்களையும், மலைகளையும், தண்டம் கழுமுள் சக்கரம் வேல் முதலிய 
படைக்கலங்களையும் எறிந்தார்கள். அவுணர்கள் பூதர்கள் மீது அம்பு, கணிச்சி, தண்டு, சக்கரம், முத்தலைச்சூலம் 
முதலாகிய படைகளைச் சிதறினார்கள். பூதர்கள் யானைகளையும் குதிரைகளையும் பற்றிப் பூமியில் அடிப்பர்,
திக்குக்களிலெறிவர், விண்ணிற் சுற்றுவர்,கிழிப்பர், உடலையும் பிடரையும் முறித்துச் சிந்துவர். ஆயிரந் 
தேர்களையெடுத்து ஆயிரம் யானைகளை இறக்கும்படி மோதுவார். ஆயிரம் யானைகளை எடுத்து எற்றிப் 
பதினாயிரம் குதிரைகளைக் கொல்வார். பதினாயிரம் குதிரைகளை எடுத்து அடித்து ஆயிரகோடி அவுணர்களைக் 
கொல்வார். 

    அவுணர்கள் யானை குதிரை தேர்களிலேறிச் சென்றும், பதாதிகளாய்ச் சென்றும், பூதர்களை வளைந்து,
 பாணங்களையும் பிற படைக்கலங்களையும் விடுத்தும், மலைகளைச் சிந்தியும், பூதர்களுடைய கை தலை முதலிய 
அவயவங்களை அழித்துப் போர் செய்வார். இவ்வாறு இருதிறத்துச் சேனைகளும் மாறுபட்டுப் போர் செய்யும்பொழுது, 
பூதப்படைத்தலைவரால் அவுணசேனைகள் மிகவும் அழிந்தன. அவுணப் பிணக்குவைகள் இரத்தவெள்ளத்தில் 
மலைபோலச்சென்று சமுத்திரத்தைத் திடராக்கின. "நிர்மலராகிய சுப்பிரமணியக்கடவுள் காண இறந்தோம். 
யாமினிப் பிறப்பதில்லை' என்று மகிழ்ந்து கூத்தாடுமாறுபோல அனந்தகோடி உடற்குறைகள் கூத்தாடின. 

    அவுணப் படைகள் அழியும்படி இவ்வாறு போர்செய்கின்ற பூதசேனைகளின் வலிமையை 
சேனைத் தலைவனும் சிங்கமுகாசுரனுடைய மகனுமாகிய  அதிசூரன் பார்த்து, வெகுண்டு, இரண்டாயிரங் குதிரை 
பூண்ட ஒரு தேரின்மேல் ஏறி, மருங்கில் ஆயிரமாயிரம் சேமத்தேர்கள் செல்ல வலிமையோடு வந்து, 
வில்லை வளைத்துப் பாணங்களைச் செலுத்தி, எதிர்த்தவர்களைத் துணித்து நின்றான். பூதர்கள் அவனைக் 
கண்டு, 'ஒருவீரன் ஓர் வில்லோடு தனியே வந்து மிகுந்த போரைச் செய்கின்றான். வில்வீரன் இவனே' 
என்று புகழ்ந்தார்கள்.

    விட்டுணுவினுடைய சக்கரப் படையை உண்டுமிழ்ந்தவரும் போரில் வலியருமாகிய உக்கிரர் என்னும் 
பூதப்படைத்தலைவர் அதிசூரனுடைய போரைக்கண்டு, கண்கள் புகையையும் அக்கினியையும் காலக் கோபித்து, 
ஒரு தண்டப்படையை எடுத்து அவனுக்கெதிரே விரைவிற்சென்று, மார்பிலே எறிந்தார். அவுணர்கள் அதிசூரன் 
இறந்தான் என்று அஞ்சினார்கள். அத்தண்டம் அவனுடைய மார்பிலுள்ள சட்டையை அழித்தது. அதிசூரன் கோபித்து,
 "இப்போர்க்களத்தில் இவனைப் பலியூட்டுவேன்' என்று நூறாயிரம் பாணங்களை அவர்மீது ஓர்தொடையில் எய்தான். 

    அவைகள் அவர்மேற்படுதலும் இரத்தவெள்ளம் பெருகியது. உக்கிரர் துன்பமும் கோபமும் அடைந்து,
 ஒருமலையைப் பிடுங்கி, அதிசூரனுடைய தேரில் எறிந்தார். தேர் பொடியாயிற்று. அதிசூரன் பிறிதொரு தேரின்மேற் 
பாய்ந்தான். அத்தேரிற்கட்டிய குதிரைகள் பதைத்து வீழ்ந்தழியும்படி உக்கிரர் உதைத்தார். அதிசூரன் மிகவுந் துன்பமுற்று, 
"இந்தச் சிறியனை அழிப்பேன்' என்று நூறு பாணங்களை அவருடைய திருமேனி மறையும்படி தூண்டினான். அவைகள் 
தமக்கெதிரே வருதலை உக்கிரர் கண்டு, தண்டாயுதத்தினால் வீசிநின்று ஆரவாரித்தார். 

    அதிசூரன் விரைவில் வேறொரு தேரில் ஏறி, தான் செலுத்திய பாணங்களினால் ஓர் ஊறுபாடு மடையாத 
உக்கிரரைப் பார்த்து, "தெய்வப் படைக்கலங்களை விடுத்து உன்னை அழிப்பேன். இனி நீ இறந்தாய்'' என்று கூறி, 
அக்கினிப் படைக்கலத்தை எடுத்து மனத்தாற் பூசித்து அவர்மேல் விடுத்தான். திசைகள் தோறும் அக்கினி சிந்தும்படி 
வருகின்ற அப்படைக்கலத்தின் வீரத்தை உக்கிரர் நோக்கி,சிவகுமாரராகிய சுப்பிரமணியக்கடவுளுடைய 
திருவடித் தாமரைகளை அன்போடு தியானித்துத் துதித்தார். எவர்க்கும் முதல்வராகிய அக்கடவுள் அவருக்குத் 
திருவருள்புரிந்தார். உக்கிரர் தமக்கெதிரே வருகின்ற அக்கினிப் படைக்கலத்தைப் பிடித்துக் கெளவி, கண்கள் 
நெருப்புச் சிதற விழுங்கினார். அதிசூரன் அதனைக்கண்டு வருணப் படைக்கலத்தையும் யமப்படைக்கலத்தையும் 
செலுத்த, அவற்றையும் பற்றி விழுங்கினார். 

    பின் வாயுப்படைக் கலத்தைச் செலுத்த அதனையும் விழுங்கினார். நினைக்கும்பொழுது தவமேயன்றி 
உயர்ந்தபொருள் வேறியாது? அதிசூரன் அதன்பின் பிரமப்படைக்கலத்தை விடுப்ப, அதனையும் பற்றி விழுங்கினார். 
அதன்பின் விட்டுணுப் படைக்கலத்தை யேவ அது செல்லுதலும் அதனையும் விரைந்து கையாற்பற்றி விழுங்கி நின்றார். 
அப்பொழுது அதிசூரன் "யான் இனிச்செய்வது என்னை? இவன் மும்மூர்த்திகளுள் ஒருவனோ! அவர்களுள் ஒருவன் 
அல்லனாயின், இதனைச் செய்யவல்லவர் வேறுயாவர்! இவன் அவருள் ஒருவன் ஆவன் ஆவன்!!" என்று கூறினான். 
அவுணர்கள் உக்கிரருடைய ஏற்றத்தைக் கண்டு, யமனைக் கண்ட உயிர்போலக் கலங்கி ''யாம் இனி என்செய்வோம்!" 
என்றார்கள். 

    இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும் இச்செயலைப் பார்த்து, அங்கே போரைப் பார்த்து நின்ற பிரமாவை 
வணங்கி, ''எங்களுடைய படைகளும் உம்முடைய படையும் விஷ்ணுவினுடைய படையும் தமக்குமுன் அணுக 
இப்பூதப்படைத் தலைவர் பிடித்து விழுங்குமாறு என்னை? சொல்லும்'' என்று கேட்க, பிரமா சொல்வார்:
 இந்திராதி தேவர்களே கேண்மின்கள். "இவர் சிவபெருமானிடத்தே வரம், பெற்றவர். எம்பெருமானாகிய 
முருகக்கடவுளுடைய திருவடிகளைத் துதித்துக்கொண்டு எந்தவலிமையையு மாற்றுபவராய்ப் போருக்கு வந்தார். 
நம்மை ஆளாக உடைய சிவபெருமானது திருவருட் பெரும்பேற்றையுடையவர். அவருடைய திருவடிகளைத் 
திரிகாலங்களிலும் வழிபடுதலாகிய முத்தியைப் பெற்றவர். இவர் எம்மிலும் பெரியவர், என்றும் அழிவில்லாதவர். 
விட்டுணு செலுத்திய சக்கரப்படையை விழுங்கிய ததீசிமுனிவனிலும் மிகுந்த வலிமையுடையவர். வெற்றியிற் சிறந்தவர். 
உக்கிரர் என்னும் பெயரையுடையவர். இவர் நம்முடைய படைக்கலங்க ளெல்லாவற்றையும் உண்டதோர் வியப்போ. 
அளவிறந்த அண்டங்களையெல்லாம் விரைவில் அழித்து ஆக்கவல்லவர். இவர்கொண்ட புகழ் சொல்லத் தொலையுமோ!'' 
என்று பிரமதேவர் கூறினார். 

    அவற்றைக் கேட்ட தேவர்கள் நன்றென்று சிரசையசைத்து, 'இவருக்கு இன்னும் பெரிய வெற்றியுண்டாகுக" 
என்று வாழ்த்தினார்கள். ஆகாயத்தில் இது நிகழ்ந்தபொழுது, அதிசூரன் உக்கிரரை நோக்கி, "உன்னைக் கொல்வேன்; 
இதனைக் குற்றமுடைய மற்றைப் படைக்கலங்கள் போல் எண்ணற்க ; சிவப்படைக் கலத்தை விடுவேன்" என்று
கூறி, மந்திரத்தோடு பூசை முதலியவற்றைச் செய்து, மிகுந்த கோபத்துடன் அப்படைக் கலத்தைச் செலுத்தினான். 
அது சங்கார கருத்தாவாகிய உருத்திர மூர்த்தியினுடைய உருவம்போலத் தோன்றி நஞ்சையும்,பாம்பையும், 
யமனையும், பூதங்களையும்,பேய்களையும், ஆயுதங்களையும், அக்கினியையும் உண்டாக்கி, எவ்வுலகமும் 
அஞ்சும்படி நடந்தது. 

    அது வர, உக்கிரர் தமது கையிலிருந்த சக்கரப் படையை ஒழித்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை விதிப்படி உச்சரித்து, 
சிவபெருமானுடைய திருவடிகளை அன்பினோடு வணங்கித் தியானித்துக் கொண்டு நின்றார். நிற்றலும், "அப்படை 
இவன் வணக்கஞ் செய்கின்றான், தோத்திரஞ் செய்கின்றான், நிராயுதனாய் நிற்கின்றான், ஆதலால் யான் இவனைக் 
கொலை செய்யேன்" என்று எண்ணி விரைவில் மீண்டு சென்று, "இப்படையை நிராயுதர்மேல் விடுக்கின் 
அவரையடையாமல் நம்மிடத்தில் வந்துவிடும்" என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து கொடுக்க, அதிசூரன் 
பெறுதலால் கொடுத்த அக்கடவுளை அடைந்தது. 

    அதிசூரன் அதனைக்கண்டு, "இவன் பரமசிவனோ!" என்று சந்தேகித்து நடுங்கி நின்றான். பூதர்கள் 
மகிழ்ச்சியடைந்தார்கள். தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். அவுண வீரர்கள் கண்ணீர்விட்டழுது ஓடினர். 
ஓடுகின்ற அவுணர் கூட்டங்களை "நீவிர் ஏக்கத்தை விடுமின்' என்று அதிசூரன் சொல்லி, தேரினின்றும் இறங்கி, 
ஓர் தண்டத்தை எடுத்து உக்கிரருடைய தோளில் அடித்தான். அவர் வெகுண்டு அத்தண்டாயுதத்தைப் பறித்து 
அவனுடைய மார்பிற் பதைக்கும்படி அடித்தார். அவன் நிலத்தில் வீழ்ந்தான். யமன் உயிரைக் கொண்டுபோயினான்.

    இறந்து வீழ்ந்த அதிசூரனைத் தாரகாசுரனுடைய குமாரனாகிய அசுரேந்திரன்கண்டு, நஞ்சுபோலக் கொதித்து, 
அக்கினியெழச் சிரித்து, பூதர்கண் மேற்சென்று, பெரிய ஓர்வில்லை வளைத்து நாணொலி செய்தான். அதனைக் கேட்டுப் 
பூவுலகமும் வானுலகமும் குலைந்தன; உயிர்களெல்லாம் பதைத்தன . பூதர்கள் தண்டங்களையும் மலைகளையும் 
மரங்களையும் அவன்மீது விடுத்தார்கள். அவன் பாணமழைகளைச் சொரிந்தான். அவைகள் அவற்றை அழித்து 
அப்பூதர்களுடைய தலை கை கால் முதலிய அவயவங்களெல்லாம் இரத்தநீர்வடியும்படி உடம்பில் அழுந்தின. 

    அசுரேந்திரன் பின்னும் பாணங்களைச் சொரிந்தான். கைகால் முதலிய அவயவங்கள் வெட்டுண்டு 
பூதர்களிற் பலர் இறப்ப, பூதப்படைத்தலைவர்களிற் கனகர் என்பவர் வந்தெதிர்ந்தார். அவர்மீது அசுரேந்திரன் 
கூரிய ஓர் பாணத்தை அழுத்தினான். அவர் சொரிகின்ற இரத்த நீரோடு சூரியன் மீது வருகின்ற கேதுவைப்போல 
அசுரேந்திரனுடைய தேரிற் பாய்ந்து, பாகன் இறக்கும்படி உதைத்து, அவனுடைய வில்லின் நாணைப் பல்லினாற் கீறி, 
பூமியில் இழிந்து,ஓர்மலையைப் பறித்து, அசுரேந்திரன் மீது எறிந்தார். அவன் அழிந்த தன்வில்லை நீக்கி வேறோர் 
வில்லை எடுத்து வளைத்து, எட்டுப்பாணங்களைத் தொடுத்து, அறைகூவி அம்மலையை அழித்து, ஆயிரம் 
பாணங்களைக் கனகருடைய புயங்களில் அழுத்தினான். 

    அவைகள் வந்து படுதலும், அவர் துன்பத்தோடு நின்றார். அசுரேந்திரன் வேறொரு பாகனைத் தேரில் 
நிறுத்தி, பூதர்கண்மீது போருக்குப் போயினான். அப்பொழுது உன்மத்தர் என்னும் பூதப்படைத்தலைவர் ஓர்மலையை
அகழ்ந்தெறிந்து, ஆரவாரித்தார். அம்மலை வந்து தாக்குதலால் தேரிற்கட்டிய குதிரைகள் அழிதலும், அசுரேந்திரன் 
பிறிதொருதேரின் மேற்பாய்ந்து, அளவில்லாத பாணங்களைத் தூண்டினான். உன்மத்தர் அப்பாணங்களினாற் றம்முடம்பில் 
இரத்தநீர் வடிய மரணமடையாமல் மயங்கியிருந்தார். 

    அப்பொழுது மந்தர் என்னும் பூதப்படைத்தலைவர் அசுரேந்திரனுக்கெதிரே வருதலும், அவன் மந்தர்மீது 
பத்துப்பாணங்களை இரத்தம்வடியும்படி செலுத்த, அவர் கொதித்து, ஓர் பெரியமலையைப் பறித்தெறிந்தார். 
அசுரேந்திரன் அதைப்பார்த்துச் சென்று, மார்பில் ஏற்றலும், அம்மலை தெறித்து வந்தவழியே திரும்பி மந்தர்மாட்டுச் 
சென்றது. அசுரேந்திரன் அவர்மீது ஒன்று போல ஆயிரம் பாணங்களை விடுத்தான். அவற்றினால் மந்தரயர்ந்தார். 

    அசுரேந்திரனைச் சிங்கர் என்னும் படைத்தலைவர் எதிர்த்து, ஒரு பெரியமலையை எடுத்து மார்பிலெறிய, 
அவன் ஒரு பாணத்தினால் அழித்தான். சிங்கர் போர்க்களத்திற் பகைவர்கள் விடுத்தஓர் தண்டையெடுத்து எறிந்தார். 
அசுரேந்திரன் அதனை விலக்கி, நூறுபாணங்களை அவர்மீது அழுத்தினான். சிங்கருந் தோற்றார். மற்றைப் பூதப் 
படைத்தலைவர்கள் யாவரும் அசுரேந்திரனோடு போர்செய்து தோற்றனர். அவன் பாணங்களைப் பொழிந்து மற்றைப் 
பூதர்களை அழித்தான். 

    அப்பொழுது இலக்கம் வீரர்களுள், தண்டகர் என்பவர் மிகுந்த துன்பத்தோடு இவற்றைப் பார்த்து, 
தன் வில்லை வளைத்து, ஆயிரம் பாணங்களை அசுரேந்திரனுடைய முகத்திற் புகும்படி விட, அவன் துன்பமுற்று 
இரங்கி, வெகுண்டு,வில்லை வளைத்து, எட்டுப்பாணங்களைத் தண்டகருடைய நெற்றியிற் செலுத்தினான். 
அவர் இரத்தம்வடிய இளைத்துத் தேரின் மேல் நின்றார். அவருடைய தம்பியாகிய சோமுகர் அசுரேந்திரனுக்கெதிர் 
சென்றார். அசுரேந்திரன் அவருடைய மார்பில் நூறுபாணங்களை அழுத்தினான். அவர் கவன்று, வில்லை வளைத்து, 
விரைவில் ஆயிரம் பாணங்களைத் தூண்டி, அசுரேந்திரனுடைய தேரையும் பாகனையும் அழித்தார். 

    அவன் வேறொரு தேரிற்பாய்ந்து, ஓர் வேற்படையை யெடுத்து, "விரைவில் இவனுடைய உயிரை உண்குதி" 
என்று விடுத்தான். அது அவர் மார்பிற் படுதலும், வாடி இளைத்து மயங்கித் தேரின்மீதிருந்தார். அப்பொழுது, 
அவருக்குத் தம்பியும் விஷ்ணுவையொத்த வலிமையுடையவரும் ஆகிய விசயரென்பவர் விரைந்து வந்து, 
வில்லை வளைத்து ஆயிரம் பாணங்களை விடுத்து, அசுரேந்திரனுடைய தேர்ப்பாகனை அழித்து, அவன் கைவில்லையும் 
நாணையும் துணித்தார். 

    அசுரேந்திரன் தன்னுடைய தேர்ப்பாகன் இறத்தலும், முனிந்து, அறுந்த நாணோடுகூடிய விற்றுணியை 
மத்திகையாக ஏந்தி,தன்றேர்ப் பாகனைப்போல விளங்கி, பின்பு ஓர்பாகனைத் தேரில் நிறுத்தி, ஓர்தண்டத்தை 
எடுத்து விசயர்மீ தெறிந்தான். அதன் வரவைக்கண்ட விசயர் எல்லையில்லாத பாணங்களைத் தூண்டி விடவிட, 
அத்தண்டாயுதம் அவற்றை யெல்லாந் துகள்செய்து, விசயருடைய மார்பில்வந்து பட்டது. அவர் பதைத்து வில்லைக் 
கைவிட்டு இரத்தஞ்சொரிய வீழ்ந்தார். அப்பொழுது மற்றை இலக்கம் வீரர்கள் பாணங்களைப் பொழிந்து அசுரேந்திரனோடு 
போர் செய்து, எல்லாரும் தோற்றோடிப் போயினர்.

    அதனை வீரவாகுதேவர் கண்டு, துன்பத்தோடு விரைந்து வந்து,சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடிகளைத் 
துதித்து, ஓர் வில்லை வளைத்து, தேவர்கள் புகழவும் அவுணர்கள் அயரவும் நாணொலி செய்து, பாணங்களைச் செலுத்தி, 
அசுரேந்திரனை மறைத்தார். அவனுடைய உடம்பெங்கும் இரத்தம் வெளிப்பட்டது. அவன் ஓர்வில்லை வளைத்து, 
வீரவாகுதேவர்மீது ஆயிரம் பிறைமுக பாணங்களை அழுத்தினான். அவருடைய திருமேனியிலும் இரத்தம் உண்டாயிற்று. 
இருவரும் பாலசூரியர்களை ஒத்தார்கள். அசுரேந்திரன் ஏழுபாணங்களை விடுத்து வீரவாகுதேவருடைய வில்லைத் துணித்தான். 
அவர் மற்றொருவில்லை வளைத்து, நஞ்சு பாய்ச்சிய ஆயிரம் பாணங்களை இலக்குத் தப்பாமற் செலுத்த, அவைகள் 
சென்று அசுரேந்திரனுடைய வில்லை அறுத்து, பாகனுடைய உயிரையுண்டு, தேரையும் குதிரைகளையும் அழித்தன. 
அவன் வெற்றியின்றி வறியனாய் வேறொரு தேரில் ஏறினான். 

    தேவர்கள் அதனைக்கண்டு "வீரவாகுதேவர் அசுரேந்திரனை இனிப் போர் செய்து வெல்வார் போலும்' 
என்று புகழ்ந்தார்கள்.[அவர் வெல்லுதல் அரிய ஓரற்புதமோ! அசுரேந்திரன் யானையின் புதல்வன். இவர் சரபத்தின் 
புதல்வர்.] பிறிதொரு தேரிற்பாய்ந்த அசுரேந்திரன் வேறோர் வில்லை வளைத்து, நூறுபாணங்களை விடுத்து, 
வீரவாகுதேவருடைய தேரை அழித்தான். அவர் கோபித்து வானில் எழுந்து, அறுமுகக்கடவுளைத் துதித்து, ஆர்த்து, 
வாட்படையை உறையினின்றுங் கழற்றி, அசுரேந்திரனுடைய தேரிற் குதித்து, அவனுடைய கையில் ஒன்றை வெட்டினார். 
வெட்டுண்ட கையிலிருந்து இரத்தம் வடிதல் நீலமலையில் ஓர்புடையில் இருந்த ஓர் கரும்பாம்பு செம்மணியை 
உமிழ்ந்தாற்போன்றது, ஓர் கை வெட்டுப்படுதலும், அசுரேந்திரன் கோபித்து, ஓர் தண்டாயுதத்தை எடுத்து அவர்மீது 
மோதினான். அவர் விரைந்து ஒரு பாதத்தினால் அவனுடைய சிரசில் உதைத்து, வானில் எழுந்து சென்றார். 
அசுரேந்திரன் அவரைத் தொடர்ந்து வாட்படையை ஏந்தி வானில் எழுந்தான். அவர் கோபித்து, தமது வாட்படையினால்..
 அவனுடைய தலையை அறுத்தார். தலையும் உடலும் பூமியில் வீழ்ந்துருள அவனுடைய உயிர் நீங்கியது. 
விண்ணுலகத்திற் செறிந்த தேவர்கள் ஆரவாரித்தார்கள். இதனை அறிந்த அசுரசேனா வெள்ளங்கள் ஓடின.

    அதிசூரன் அசுரேந்திரன் என்னும் குமாரர்கள் இருவரும் இறந்ததனையும், பக்கத்திற் போர் செய்துநின்ற 
சேனைகள் ஓட்டெடுத்தமையையும், சூரபன்மன் பார்த்து, வடவாமுகாக்கினி உலகங்களையெல்லாம் எரிக்க எழுந்த 
தோற்றம்போல மிகுந்த கோபம்மேற்கொண்டு, "போர்செய்கின்ற பகைவர்களை விரைந்து கொல்வேன்" என்று 
எண்ணி, தேரில் விரைந்து வந்து, பூணிட்டிறுக்கிய வில்லை வளைத்து, நகத்தால் நாணோதையைக் காட்டினான். 
பூதகணங்கள் அதனைக் கேட்டலும், வலிமையும் வீரமும் அழிந்து, உடலும் சிரசும் நடுங்க, மரங்களையும் மலைகளையுஞ் 
சிந்தி, பலர் எங்குஞ் சிதறியோடினர். ஒழிந்தோரிற் சிலர் வீழ்ந்தார், சிலர் பதைத்து நின்றார், சிலர் வீழ்ந்திறந்தார், 
சிலர் மயங்கினார். பன்னிரண்டு வருஷகாலம் அந்த வில்லினுடைய நாணொலி ஒழிந்திலது. அவ்வொலியைக் கேட்டு 
விட்டுணு சிரசைத் துளக்கினார்; பிரமாவும் இந்திரனும் யமனும் அஞ்சினார்கள்; தருமம் அஞ்சின; பஞ்சபூதங்களும் அஞ்சின ; 
சீவராசிகள் அஞ்சின.

    (இரண்டாயிரம் வெள்ளம் பூதங்களும் அஞ்சி அங்கே நிற்கலாற்றாது இரிந்தோடின என்றால், அஞ்சுபூதங்கள் 
அஞ்சுவது ஓர் அற்புதமோ!)  பூதசேனா வெள்ளங்கள் இவ்வாறு அழிதலும், பூதப்படைத் தலைவர் நூற்றெண்மரும் அதனைப் பார்த்து, 
சூரபன்மன்மீது மலைகளையும் மரங்களையும் மழை போலச் சொரிந்தார்கள். அப்பொழுது அவன் பத்து நூறாயிர 
கோடிபாணங்களை முறைமுறையாகச் செலுத்தி, தன்மீது வருகின்ற மலைகளையும் மரங்களையும் அழித்து, 
பூதப்படைத் தலைவர்களுடைய முடிகளையும் அடிகளையும் முகங்களையும் புயங்களையும் மார்புகளையும் 
கைகளையும் மற்றையவ யவங்களையுந் துளைத்தான். அவர்கள் அயர்ந்தார்கள். அவருள் அதிபலர் இளைத்துநின்றார்; 

    வக்கிரர் களைத்து வீழ்ந்தார்; வச்சிரர் இரங்கினார்: கபாலி வலிமையிழந்தார்; உன்மத்தர் உலைந்தார்; 
அச்சுதர் மலையையேந்தி நின்றார்; மாபலர் ஓடாமலும் எதிர்க்காமலும் வருந்தினார்; மதிசயர் வாடினார்; 
மேகர் மருண்டார்; அண்டாபரணர் துன்பமென்பதனையறிந்தனர்; மேக மாலி மனநடுங்கினார்; சுப்பிரர் 
மெலிந்தார்; காகபாதர் மெய்பதைத்தார்; உதவகர் கவன்றார்; அசலர்  மார்பிலிருந்து வடியும் இரத்தத்துள் 
அழுந்தினார்; கவந்தர் நொந்திரங்கினார்; அத்திரி வீழ்ந்தார்; பத்திரர் சிறிது வருந்தினார்; பதுமர் உடைந்தார்; 
வியாக்கிரர் இளைத்தசைந்தார்; தனஞ்சயர் இரிந்தார்; மத்தர் வைது வெய்துயிர்த்தார்; பினாகி மெய்மறந்தார்; 

    சித்திராங்கரும் கனகரும் துன்பக்கடலுள் ஆழ்ந்தார்; மாலியும் நீலரும் மனமழிந்தார் ; கும்பரும் நிகும்பரும் 
கண் பஞ்சடைந்தார்; சண்டியும் தண்டியும் பதைப்புற்று அஞ்சி ஏங்கினார்; வாமருஞ் சோமரும் உயிர்நீங்குமவதியை
யடைந்தார்; உக்கிரர் எழுவதற்கு வலிமையின்றிக் கோபங்கொண்டார்; சிங்கர் ஓய்ந்தார்; சுவேத சீரிடர் வலிமை தீர்ந்தார்; 
சங்கபாலர் வீழ்ந்துருண்டார்; நந்தி சலித்தார்; பிங்கலர் உயிர்ப்பிழந்தார்; உரோமசர் ஓடினார். இவர் முதலிய நூற்றெட்டுப் 
படைத்தலைவரும் இத்தன்மையாகப் போர் வலியின்றித் தோல்வியடைதலும், இலக்கம் வீரர்கள் அதனைக்கண்டு, 
விரைந்து விற்களை வளைத்து, சூரபன்மன்மீது பாண மழைகளைச் சொரிந்தார்கள். 

    அவன் கோபித்து, பாணங்களை விடுத்து, அவர் விடுத்த அம்புகளை விலக்கி, ஆரவாரித்து, 
ஆயிரகோடி பாணங்களைச் செலுத்தி, ஒரு முகூர்த்தத்தில் அவர்களுடைய விற்களை முரித்து, அவர்கள் 
வேறுவிற்களை எடுக்கு முன் பின்னும் ஆயிரம் அம்புகளைச் செலுத்தி, அவர்களுடைய தேர்களை அழித்து, 
மார்புகடோறும் ஆயிர மாயிரம் பாணங்களைத் தூண்டினான். அப் பாணங்கள் மார்பைப் பிளத்தலும், 
இலக்கம்வீரர்களும் வருந்தி இளைத்து வீழ்ந்தார்கள்.

    வீரமார்த்தாண்டர் அதனைக்கண்டு இரங்கி, விரைந்துவந்து சூரபன்மனை எதிர்த்து,வில்லை வளைத்து 
நாணொலிசெய்து, கடல்களுமேங்க ஆரவாரித்து, பாண மழைகளைச் சொரிந்தார். சூரபன்மன் பாணங்களால் 
அவற்றையழித்து, கடிய ஆயிரம் பாணங்களை அவருடைய நெற்றியிற் செறித்தான். அவர் பின்னும் பாணங்களைவிட,
சூரபன்பன் ஆயிரமம்புகளைச் செலுத்தி அவர்விடுத்த அம்புகளையும் வில்லையும் அறுத்து, மார்பைப்
பிளந்து, அப்பறாக்கூட்டையுமழித்தான். வீரமார்த்தாண்டர் மனம் வருந்தி இறந்தவர் போல வீழ்ந்தார். 

    அதனை வீரராக்கதர் பார்த்து, "இப்பகைவனுடைய வலியை யான் அடக்குவேன்" என்று கோபித்து, 
தேரைச்  செலுத்திக் கொண்டு வந்து, வில்லை வளைத்து ஆயிரம் பாணங்களைச் செலுத்த சூரபன்மன் 
ஆயிரம் பாணங்களை விடுத்து ஆரவாரித்தான். அவைகள் வீரராக்கதர் விடுத்த பாணங்களை விலக்கி, 
அவருடைய வில்லைத் துணித்தன. அவர் வாட்படையை ஏந்தி ஆகாயத்தில் ஆர்த்தெழுந்து சூரபன்மனுடைய 
தேரிற்பாய்ந்து, அவனுடைய வில்லை வாட்படையினாலே துணித்தார். அது ஒடிந்திலது, வாள் ஒடிந்தது. 
ஒடிதலும், வீரராக்கதர் சூரபன்மனுடைய மார்பில் அடிக்கும்படி முயன்றார். அவன் "ஆயுதம் இழந்த இவனைக் 
கொல்வது பழி" என்றெண்ணி, காலின்மேற் படுத்து அண்டகோளகையிற் செல்ல எறிந்தான். அவர் அலமந்து 
இரங்கிப் பூமியில் வீழ்ந்தார். 

    இதனை வீரமகேந்திரர் பார்த்து, பாணமழைகளைச் சூரபன்மனுடைய தேர் மறையும்படி சொரிந்து 
வந்தெதிர்த்தார். அவன் அவற்றை விலக்கி அம்புகளைச் செலுத்த, வீரமகேந்திரர் அவற்றை அம்புகளாற் சிந்தி, 
சாரிவட்டமாய்த் திரிந்தார். சூரபன்மனும் பாணங்களைச் சிதறி அவருடைய தேரைச் சூழ்ந்து இடசாரி வலசாரியாகத் 
திரிந்தான். இவரிருவரும் அம்புகளைச் சிதறி வட்டணையாகத் திரிதலால், ஒருவரும் அவருடைய வடிவை வேறுபாடு 
தெரிந்திலர். இருவரும் வீரமாமகேந்திரர் என்றால் அறியமுடியுமோ!

    இவ்வாறு போர்செய்யும்பொழுது சூரபன்மன் கோபித்து, வீரமகேந்திரருடைய அம்புகளை அழித்து, அவருடைய 
பாதங்களில் முப்பது பாணங்களையும், மார்பில் இருபது பாணங்களையும், புயங்களில் முப்பது பாணங்களையும் 
விடுத்து வலியைத் தொலைக்க, அவர் வீழ்ந்தார். சூரபன்மன் விலங்குகளின்மேற் புலிசெல்வதுபோலச் சென்றான். 
அதனை வீரதீரர் கண்டு, வில்லை வளைத்துப் பாணங்களைச் செலுத்திச் சென்றார். சூரன்  அவர்விடுத்த 
பாணங்களையும் வில்லையும் ஆயிரம் அம்புகளால் அழித்து, அவருடைய தேரை ஏழுபாணங்களால் அறுத்தான். 
அவர் "நன்று நன்று"  என்று ஓர் தண்டத்தை எடுத்து அவன்மேல் நடந்தார். அவன் நான்கு பாணங்களைத் தொடுத்து 
அத்தண்டத்தைத் துணித்து, அவருடைய மார்பிலும் புயங்களிலும் பதினான்கு பாணங்களை விடுத்து, அவரைப் 
பூமியில் வீழ்த்தினான். 

    அப்பொழுது வீரமாமகேச்சுரர் "வில்லினால் இவனுடைய வலியைக் குறைத்தல் வீரவாகுதேவருக்கும் அரிது" 
என்று மனத்தில் எண்ணி, ஊனையும் உயிரையும் கவரத்தக்க தெய்வத்தன்மையாகிய ஓர் வேற்படையைச் சூரபன்மன்மீது 
செலுத்தினார். அதனை அவன் கண்டு, வில்லைவளைத்து ஆயிரம்பாணங்களை விடுத்தலும், அவ்வேற்படை 
அப்பாணங்களை அழித்து, சூரனுடைய மார்பில் வந்து பட்டு, நுண்ணிய துகளாகி விண்ணிலுந் திசைகளிலுஞ் 
சிதறியது. வீரமாமகேச்சுரர் சூரபன்மன் மீது ஓர்தண்டத்தை விடும்படி எடுத்தார். அவன் அதன்முன் முனிவர்களுடைய 
சாபத்திலும் முந்துகின்ற ஏழுபாணங்களைத் தொடுத்தான். அவை வீரமாமகேச்சுரருடைய புயத்தைத் துளைக்க, 
அவருடைய உடல் வீழ்ந்தது; உணர்வழிந்தது; உயிர் துரியநிலையை யடைந்தது. 

    வீரமாமகேச்சுரர் இவ்வாறு மயங்குதலும், வீரகேசரி அதனைக்கண்டு, சூரபன்மனை எதிர்த்து, வில்லை 
வளைத்து நாணொலி செய்தார். அந்தவில்லைச் சூரபன்மன் எழுபாணங்களினாற்றுணித்து, அவருடைய தேரை 
நூறுபாணங்களினால் அறுத்து, ஆயிரம் பாணங்களை நெற்றியில் அழுத்தினான். வீரகேசரி பெருகுகின்ற 
இரத்தவெள்ளத்தோடு பூமியிற் பாய்ந்து, பெரிய ஓர்மலையைப் பிடுங்கிச் சூரபன்மன் மீது எறிந்தார். அவன் ஓர் 
பாணத்தால் அதனை அறுத்து அவருடைய மார்பில் நூறுபாணங்களை அழுத்தினான். அவை மார்பிற் புகுதலும், 
வீரகேசரி மனநொந்து,சூரனுடைய தேரிற்பாய்ந்து, அவனுடைய மார்பில் அடித்தார். அடித்தகை பிளக்க, அதினின்றும் 
இரத்தம் வடிந்தது. வீரகேசரி துடித்துப் பெருமூச்சுவிட்டுத் துன்பத்தோடு அவனுடைய தேரில் வீழ்ந்தார். சூரன் 'இவனைக் 
கொல்வது பழி" என்று கருதி, அவரை ஒருகையினால் எடுத்து, தேவர்கள் மருளப் பாற்கடலில் எறிந்தான். 

    வீழ்ந்த வீரகேசரி பதைத்துத் துன்பமுற்று, ஆகாய மார்க்கமாக மீண்டு வந்து, தம்மினத்தைச் சேர்ந்தார். 
அதன்பின் வீரமாபுரந்தரர் சூரபன்மனை எதிர்த்து, "யான் பாணங்களைச் சொரிந்து இவனோடு போர் செய்வேனாயின் 
இவன் அவற்றை அழித்து என்னையும் வெல்வான்" என்றெண்ணி, யமப்படைக்கலத்தை விடுத்தார். அவன் அதன் 
வரவைப் பார்த்துச் சிரித்து, அதற்கெதிராக ஒருபடைக்கலத்தையுஞ் செலுத்தாதவனாய் அதனை இகழ்ந்து நிற்ப; 
அப்படை அவன்மீதுபட்டு அழிந்தது. அது அழிதலும், அவர் பிரமப் படைக்கலத்தைத் தொடுக்கும்படி எடுத்தார். 
அதன்முன் சூரபன்மன் வில்லைவளைத்து இலக்ஷம்பாணங்களை அவருடைய மார்பு பிளக்கும்படி விடுப்ப, 
அவை சென்று மார்பைப் பிளந்துபோயின. வீரமாபுரந்தரர் கையிலெடுத்த பிரமப் படைக்கலத்தோடு 
இரத்தஞ்சொரிய வீழ்ந்து மயங்கினார். 

    அதனைக் கண்டு வீரராந்தகர் வந்து, "தீரர்களாம் அவுணர்கள், பூதர்களாம் அவருக்கழிவார், சூரராம் 
விற்போரில்வல்லர், நம்மவரெல்லாம் அவருக்குத் தோல்வியடையுமியல்பினராம், இந்தப்போர் நன்று' என்று சொல்லி, 
அந்தகனும் வெருவச் சார்ங்கம் என்னும் வில்லை யொத்ததாய் வரைபொருந்திய ஓர் வில்லை வளைத்து, இடிபோல 
நாணொலி செய்து, பாணங்களைச் சிதறி நின்று ஆரவாரித்தார். அவ்வொலியைக் கேட்டுச் சூரபன்மன் அஞ்சினான். 
தேவர்கள் வியர்த்தார், விஞ்சையர் ஓட்டெடுத்தார், பக்ஷிகள் பெடைகள் வருந்தக் குஞ்சுகளை எடுத்துக்கொண்டு ஓடின. 
சூரபன்மன் வீரராந்தகர் விடுத்த அம்பு மழைகளை அம்புகளால் விலக்கி, ஆயிரம் பாணங்களை விடுப்ப, அவரும் 
அத்துணைப் பாணங்களை விடுத்து அவற்றைத் தடுத்தார். சூரபன்மன் சினந்து முத்தலையையுடைய ஆயிரம் பாணங்களை 
விடுப்ப, அவை வீரராந்தகர் விடுத்த பாணங்களெல்லாவற்றையும் சிந்தி, அவருடைய தேரை அழித்து, வில்லையொடித்து, 
வீரத்தைக் கலக்கி, மார்பிற் புகுந்து இரத்தத்தைப் பருகி, உணர்வைக் கெடுத்து, இந்திரனுடைய மனம் நடுங்கும்படி 
புறத்திற் போயின. அவர் வீழ்ந்து அறிவிழந்தார். அதனை வீரவாகுதேவர் பார்த்து, செற்றமும் மானமும் செலுத்தச் 
சூரபன்மன்மேற் சென்றார்.

    வீரவாகுதேவர் தேரைச் செலுத்திக்கொண்டு வந்தெதிர்த்தலும், சூரபன்மன் அவருடைய திருவுருவத்தை 
நோக்கி, "இவன் ஒற்றுவனாகும்" என்றெண்ணி, மிகவும் கோபமடைந்து, "நம்முடைய வீரமகேந்திரத்தை அழித்து, 
எண்ணில்லாத சுற்றத்தார்களையும் சேனைகளையும் குமாரர்களையும் கொன்று, உன் உயிர் பிழைத்து வந்தாய்; 
உன்னுடைய போர்வலியை இன்றோடு முடிப்பேன்; படிற்றொழுக்கம் பூண்டு அமைச்சர்களைப் போலப் பேசி 
ஒற்றுவனாகி இன்னும் வந்தாயாயின் உய்குதி; அதுவே உன்செயல், இப்பொழுது வில்லைப் பிடித்தாய்; இனி 
இறந்தாய்; இற்றைத் தினமோ உன்னுயிர்க்கிழைத்த நாள்" என்று கூறினான். 

    இதனைக்கேட்ட வீரவாகுதேவர் அவனைநோக்கி, "யான் தூதுவனுமாவேன்; அமைச்சனுமாவேன்; 
பகைவர்மேற்சென்று போருஞ் செய்வேன்; இன்னமும் அறுமுகக்கடவுள் கற்பித்தருளுகின்ற பணிகள் 
யாவையுஞ் செய்வேன்; உலகில் எத்தொழிலும் வல்லேன்; நீ விரும்பிய போரைச் செய்குதி" என்றார். 
என்று வீரவாகுதேவர் கூறுதலும், சூரபன்மனுடைய கண்கள் எரிந்தன; பற்கள் அதரத்தைக் கடித்தன; 
உரோமங்கள் சிலிர்த்தன; மிகுந்த கோபம் மனத்திலெழுந்தது. சூரன் இவ்வாறாகிய கோபக்குறிப்புக்கள் 
நிகழ மலையையொத்த வில்லை வளைத்து, நாணோதை செய்தான். பொன்மலைகள் நடுங்கின; 
பூவுலகங்கள் நடுங்கின; சமுத்திரங்கள் நடுங்கின; ஆதிசேஷன் தலைநடுங்கினான். அப்பொழுது வீரவாகுதேவர் 
தம்முடைய வில்லை வளைத்து நாணொலி செய்து, ஆர்த்தார். அவ்வொலி சூரபன்மனுடைய நாணொலியோடு 
கலந்து சென்ற பொழுது, ஒருமுகூர்த்த நேரம் மூவுலகங்களும் நிலைகுலைந்தன. 

    சூரபன்மன்  ஆயிரகோடி பாணங்களைத் தூண்டி ஆரவாரித்தான். வீரவாகுதேவர் பாண மழைகளால் 
அவற்றை விலக்கி நின்றார். சூரபன்மன் வெகுண்டு, "இவனுடைய உயிரைக் கலக்குவேன்" என்று கடிய இலக்ஷம் 
பாணங்களைவிட, வீரவாகுதேவர் ஆயிரகோடிபாணங்களை விடுத்து அவற்றைத் தடுத்தார். சூரன் பின்னும் 
கோடி பாணங்களைவிட, வீரவாகுதேவர் அவற்றை அழித்து, நூறுபாணங்களை அவனுடைய நெற்றியில் விடுத்தார். 
அவைகள் அவனுடைய நெற்றியையடைந்து வைரமலையின் உச்சியிற்றைத்த பொன்னூசிகள்போல ஒடிந்து வீழ்ந்தன. 
கூரிய நூறுபாணங்கள் போய் நெற்றியிற்றாக்கியும் சூரன் ஒரூறுபாடுமில்லாதவனாகி நிற்றலை வீரவாகுதேவர் 
பார்த்து, ''அறுமுகப் பெருமானுடைய வேற்படையன்றி வேறெந்தப் படையும் இவனுடைய உடம்பை அழிக்கவல்லதன்று' 
என்று பின்னும் பலகோடி பாணங்களைச் சொரிந்தார். சூரபன்மன் பாணங்களால் அவற்றைமாற்றி, எட்டம்புகளை 
அவருடைய புயத்தில் விடுத்தான். அவைகள் புயத்தில் மூழ்கி இரத்தத்தைப் பருகி, பிடரைப் பிளந்து, தேவர்கள் 
அஞ்சும்படி ஓடின. 

    வீரவாகுதேவர் மனம்வருந்தி, சூரபன்மனுடைய தேர்ப் பாகர்களின் மீது பலகோடிபாணங்களை விடுத்தார். 
அவைகள் உடம்பில் அழுந்துதலும், பாகர்கள் மிகவும் வருந்தி, புலாலும் இரத்தமும் புறத்திலே விளங்க முள்ளிலவமரம் 
மலர்ந்தாற்போல யாவருந் தேரின் மீதிருந்தார்கள். சூரபன்மன் அதனைக்கண்டு கோபித்து, ஐம்பது பாணங்களைச் 
செலுத்தி, வீரவாகுதேவருடைய தேரையும் குதிரைகளையும் அழித்தான். அவர் பிறிதொரு தேரில் ஏறி வாயுப் 
படைக்கலத்தையும் அக்கினிப்படைக் கலத்தையும் விடுத்தார். அதனைச் சூரன் அறிந்து மிகவுஞ் சிரித்து, 
அவற்றிற்கெதிராக ஓர் படைக்கலத்தையுஞ் செலுத்தாமல், வில்லோடு வாளா நின்றான். அப்படைக்கலங்கள் 
சூரன்மீது தாக்கி, ஊறுபட்டு நூறாயிரம் பிதிர்களாய் உதிர்ந்தன. 

    வீரவாகுதேவர் யமப்படைக்கலத்தையும் சூரியப் படைக்கலத்தையும் ஒருங்கு செலுத்தினார். அவைகளும் 
சூரபன்மன்மாட்டுச் சென்று பெருமையிழந்து விரைந்தழிந்தன. பின் வருணப்படையையும் நிருதிப்படையையும் 
இந்திரப்படையையும் சூரபன்மனுடைய புயங்களிலும் மார்பிலும் புகும்படி செலுத்தினார். அவை அவ்வங்கங்களையடைந்து 
அழிந்தன. பின் மாயப்படையையும் ஆசுரப்படையையும், விடுத்தார். அவையும் சூரபன்மனையடைந்து பொடியாயின. 
மேற்கூறிய படைக்கலங்களெல்லாம் அழிதலும், வீரவாகுதேவர் சூரபன்மனுடைய வலியைக் கண்டு மிகவும் விம்மிதமடைந்து, 
பிரமப்படைக்கலத்தையும் விட்டுணுப்படைக்கலத்தையும் விடுத்தார். அப்படைகளிரண்டும் கோபம் மிகுந்து, இடியையும் 
புகையையும் நெருப்பையும் சமுத்திரங்களையும் பல வகை ஆயுதங்களையும் உண்டாக்கி, எல்லாவுலகங்களும் 
நடுங்கும்படி சூரபன்மனுக்கெதிரே சென்று, 'இவனுடைய மார்பைப் பிளந்து அப்பாற் செல்லுவோம்" என்று மார்பிற்றாக்கி, 
வைரமலையைத் துளைக்கும்படி முயன்ற வண்டுகளைப்போல வலியழிந்து, அசுரர்களும் தேவர்களும் நோக்கி "ஏஓ" என்று 
இகழும்படி வசையையடைந்து இரிந்தன. இதனை வீரவாகுதேவர் கண்கள் நெருப்பெழப் பார்த்து, சிவபெருமான் 
கொடுத்தருளிய வரத்தை நினைந்து, மிகுந்த விம்மிதமடைந்தார். சூரபன்மன் சிரித்து அவரை நோக்கி இவ்வாறு சொல்வான்: 

    "மும்மூர்த்திகளிலும் முதல்வராய் அழிவில்லாதவராகிய சிவபெருமான் தந்தருளிய வரத்தினால் 
எந்தெந்தத் தேவர்களுடைய படைக்கலத்தை விடுப்பினும் அவைகள் என்னை வெல்ல வல்லன அல்ல; 
யான் அவற்றிற் கெதிராக எந்தப் படையையும் விடுத்துத் தடைசெய்யேன்; அவற்றின் வலிகளை யறிவேன்; 
பிரமவிஷ்ணு முதலிய தேவர்களுடைய படைகள் என்னை வந்தடையுந் தன்மை சமுத்திரங்க ளெல்லாவற்றையும் 
பருகுகின்ற வடவாமுகாக்கினியைத் தேனீக்கள் இது தசை யென்று சேர்ந்திறக்குந் தன்மைபோலும். 
நீ என்னிடத்தில் விடுத்த படைகளுள் மார்பையடைந்து, முரிந்தனவும், மறிந்தனவும், முடிந்தனவும், 
பொடிந்தனவும், எரிந்தனவும், கரிந்தனவும், இடைந்தனவும் அன்றி, அவைய டைந்த வெற்றி யொன்றுமில்லை; 
நீ அதனைத் தெரிந்தாய். நீ விடுக்கும் பாணங்களின் வலியையும், உன்னுடைய தெய்வப்படைக் கலங்களின் 
வலியையும், மற்றைப் படைக்கலங்களின் வலியையும், உன்னுடைய இயற்கை வலியையும் பார்த்து, தொலைவில்லாத 
ஓர் படையினாற் கொல்லுவேன் - என்று காலம் பார்க்குங் கூற்றுவன் போல நின்றேன்" என்று கூறினான். 

    இப்படிச் சூரபன்மன் சொல்லுதலும், வீரவாகுதேவர் 'இனி ஒரு படைக் கலத்தினால் இவன் வலியை யுணர்வேன்.' 
என்று நினைத்து, சிவப்படைக்கலத்தை மனத்தால் வழிபாடு செய்து விடுத்தார். அது நஞ்சும் நெருப்பும் இடியும் 
வாயுவும் இருளும் சூரியனும் கூற்றுவனும் பூதப்படைகளும் பாணங்களும் சூலங்களும் புடையிலே சூழ, சங்காரகாலம் 
இது என்று சொல்லும்படி மிக ஆரவாரித்து வந்தது. அப்படைக்கலத்தைச் சூரபன்மன் பார்த்து, ''இது என்மார்பிற்பட்டு 
எனக்குத் தோற்று அழிந்தபடை யல்ல, சிவப்படைக்கலம். யான் சிவபெருமானிடத்தே பெற்ற அப்படைக் கலத்தினால் 
இதனை விலக்குவேன்" என்றெண்ணி, அப்படையையெடுத்து, மனத்தாற் பூசைசெய்து விடுத்தான். 

    அது வீரவாகுதேவர் விடுத்த சிவப்படைக்கலத்துக் கெதிரே போய், உலகத்தார் அஞ்சும்படி எதிர்த்துப் 
போர் செய்தது. அவ்விரு சிவப்படைக் கலங்களும் நின்று பொருது, "இனி உலகமழியும்" என்று வானுலகத்தினுள்ளார் 
துதிக்க, தம்மை விடுத்தோரிடத்து மீண்டு சென்றன. அதனைச் சூரபன்மன் பார்த்து, "இவைகள்தாமா உன்னிடத்துள்ள 
வலிமைகள். உன்னுயிரை இனி ஒழிப்பேன் காண்' என்று தன் வில்லை வளைத்து, அம்புகளைச் சிந்தினான். 
வீரவாகு தேவரும் வில்லை வளைத்து அம்புகளைத் தூவினார்.சூரபன்மன் முத்தலையை யுடைய பதினைந்து 
பாணங்களை ஏவி, வீரவாகுதேவருடைய வில்லைத் துண்டமாக்கினான். 

    வில்லுத் துணிதலும், வீரவாகுதேவர் கோபித்து, ஒரு வேற்படையை எடுத்துவீச, அது சூரபன்மனுடைய 
மார்பாகிய மலையிற் பட்டு ஒடிந்தது. அவன் பிரமவிஷ்ணு முதலாகிய தேவர்களுடைய வலியையுங் கவரத்தக்க 
ஒரு தண்டாயுதத்தை எடுத்து வீரவாகுதேவர்மேல் எறிந்தான். அது அட்டநாகங்களோடு ஆதிசேஷன் ஓருருவெடுத்து 
ஆரவாரித்துச் சென்றாற்போல மணியொலிக்க வந்தது. வீரவாகுதேவர் அதற்கெதிராக ஓர் தண்டத்தைச் 
செலுத்தி நின்றார். சூரபன்மன் செலுத்திய தண்டாயுதம் அதனைப் பொடிபடுத்தி,துண்ணென்று வந்து, 
வீரவாகுதேவருடைய மார்பிற்பட்டது. 

    இரத்தத்தாரை நதிகளைப் போலத் திரைகொண்டு பெருக, வீரவாகுதேவர் அதில் ஆழ்ந்தவராயும், 
பிளந்த மார்பையுடையவராயும், புகையு மனத்தினராயும், குறைகின்ற வலியினராயும், தளருகின்ற 
திருமேனியினராயும் தேவர்கள் அஞ்சியோட வீழ்ந்தார். அவர் அங்ஙனம் வலிமையிழந்து வீழ்தலும், 
தேர்ப்பாகனாகிய விசாலியென்பவன் அவரைத் தெளிவிக்கக் கருதி விரைவிற்றேரைச் செலுத்திக்கொண்டு 
ஒரு பக்கத்திற்போயினான். "வீழ்ந்த வீரவாகு இறப்பான் இது நிச்சயம்'' என்று சூரபன்மன் நினைத்து, 
வில்லை வளைத்து, பூதகணங்கண்மீது பாணங்களைச் சொரிந்து கொன்றான். இறவாதொழிந்த சேனைகள் 
சூரியனைக்கண்ட பனிபோல ஓடின.

    இலக்கத்தெண்மரும், வீரவாகுதேவரும், இரண்டாயிரம் வெள்ளம் பூதசேனைகளும் சூரபன்மனால் 
வலியழிந்து உடைந்த தன்மையைச் சுப்பிரமணியப் பெருமான் பார்த்தருளி, தேர்ப்பாகனை நோக்கி, தேவர்கள் 
துதிக்க, "சூரபன்மன் மீது தேரைச் செலுத்துதி" என்று ஆஞ்ஞாபித்தருளினார். அவன் அதனைக்கேட்டு, 
தேரைச் சூரபன்மனுக்குமுன்பு விரைவிற் றூண்டினான். அப்பொழுது, சூரபன்மன் அனந்தகோடி சூரியர்கள் 
திரண்டு ஒன்றாகிப் பூமியிலுள்ள இருளையோட்டி ஆகாயத்தை நீங்கிப் போர்க்களத்திலே வந்தாற்போல 
நிர்மலராகிய சுப்பிரமணியக்கடவுள் போரிலே தோன்றிய தோற்றத்தைத் தரிசித்தான்: 

    செந்தாமரை மலர்ந்தாலொத்த ஆறுதிருமுகங்களும், பன்னிரண்டு திருக்கண்களும், குண்டல நிரைகளும், 
செம்பொற்கிரீடமும், திருமார்பும், பன்னிரண்டு திருக்கரங்களும், அவைகளிலே விளங்கா நின்ற படைக்கலங்களும், 
தண்டையும் சிலம்பும் ஒலிக்கும் திவ்விய சரணார விந்தங்களும் தெரியக்கண்டனன். (முண்டக மலர்ந்ததன்ன 
மூவிரு முகமுங் கண்ணுங் - குண்டல நிரையுஞ் செம்பொன் மவுலியுங் கோலமார்பும் எண்டரு கரமீராறு 
மிலங்கெழிற் படைகள் யாவுந்- தண்டையுஞ் சிலம்புமார்க்குஞ் சரணமுந் தெரியக் கண்டான்.) சூரனென்னும் 
அவுணராசன் முன்னாளிலே தவஞ்செய்தவாறும், பூமியிலே அழிவின்றிப் பலயுகமிருந்தவாறும், 
வேதங்களாலுமறியமுடியாத எம்பெருமானாகிய அறுமுகக் கடவுளுடைய பேரழகு பொருந்திய திருவுருவத்தைத் 
தரிசித்துப் பெருவாழ் வடைதற்கேயோ! 

    அழிவில்லாத சூரபன்மன், பரிசுத்தர்களாகிய மெய்ஞ்ஞானிகள் மனத்தாலுமளவிடுதற்கரிய நிர்மலராகிய 
குமாரக் கடவுளுடைய செவ்வொளி பொருந்திய திருவுருவத்தைத் தரிசித்துத் தீவினை நீங்கி உய்ந்தான். அவன் இங்ஙனம் 
போர்செய்து முருகக்கடவுளால் இறந்தா லென்ன! அவருக்குத் தோற்றாலென்ன! சூரபன்மனைத் தீவினையாளனென்றே 
அறியாதவர் சிலர் சொல்வர்; சிறப்பின் மிக்க அறுமுகக்கடவுள் தன்முன் எழுந்தருளிவரப் பெற்றான். ஆகா இவன் 
தவத்திற்கன்றி அறத்திற்கும் முதல்வனன்றோ! இன்னமும் முனிவரும் தேவரும் மற்றை யாவரும் இத்தன்மையினரென்று 
நினைத்தற்கரிய தலைமையினையுடைய ஒரு தனிமுதல்வராகிய குமாரக்கடவுளைச் சூரபன்மன் தன்னுடைய 
இரண்டு கண்களாலுந் தரிசித்தானென்றால், அவனுடைய தவத்தின்பேற்றை யார் அறிந்து சொல்ல வல்லவர்! 

    போரைச் செய்பவர்போல விரைந்து எழுந்தருளிவந்து சூரபன்மன் தன் இருகண்களாலுந் தரிசிக்கும்படி 
எளிதாகத் தம்முடைய திருவுருவத்தைக் காட்டி அவனுக்கு அருள்செய்தாரென்றால், முதற்கடவுளாகிய 
சுப்பிரமணியக்கடவுளுடைய மாயத்திருவிளையாடல்கள் யார்க்குந் தெரிகிலபோலும்!
மனத்தால் அறிதற்கரிய சுப்பிரமணியக்கடவுளுடைய திருவுருவைத் தன்கண்களாற் றரிசித்து அவருடைய 
திருமுன்பு நின்ற சூரபன்மன் "சங்காரகருத்தாவாகிய சிவபெருமானுடைய குமாரராகும் இவர்" என்று நினைத்து, 
மனத்திலே கோபம் தூண்ட அக்கடவுளை நோக்கி இவற்றைச் சொல்லலுற்றான்:-

    சேனைகளாய் உன்னைச் சூழ்ந்தவர்கள் போர்வலியிழந்து போன போன திசைகள் தெரிந்தில; 
பூதப்படைத்தலைவர்களும் அழிந்தார்; விற்போரில்வல்ல மற்றை வீரர்களும் என்னோடு பொருது இறந்தார்.
 உன்படைகளுக்கெல்லாந் தலைவனாய் என்னிடத் தொற்றுவனாக வந்த வீரவாகுவும் போர்செய்து உயிரொழிந்தான். 
மற்று நீ ஒருபாலகனோ என்னோடு பொருது வெற்றியடைகுதி. உன் உள்ளக்குறிப்பு நன்று நன்று. மேலாகிய 
உன் பிதாவும் பிரமவிஷ்ணுக்களும் என்னோடு போர்செய்யக் கருதிலர். மற்றோர் பாலகனாகிய நீ என்னோடு
போர்த்தொழில் செய்யவல்லையோ! முந்தைநாளில் வலியில்லா தழிந்த கிரவுஞ்சமலையையும் முன் யான்
 கொடுத்த செல்வத்தினால் மயங்கிய தாரகாசுரனையும் அறிவில்லாத அவர் படைத்தலைவர்களையும்போல 
மைந்தனே என்னையும் நின்மனத்தில் நினைந்தனை போலும். 

    நிறைந்த செல்வங்களை யுடையேனாகிய என்னுடைய வளத்தினியல்பை நினைத்திலை; அழியாத 
ஆக்கத்தை நினைத்திலை; பெரிய வலிமையை நினைத்திலை; வெற்றியின் பெருக்கத்தை நினைத்திலை; படைத்திறத்தை 
நினைத்திலை; போரினூக்கத்தை நினைத்திலை; சிறுவனே நீ என்னோடு பெரிய போருக்கு வந்தாய். பிரமாவும் விஷ்ணுவும் 
இந்திரனும் மற்றைத் திக்குப்பாலகர்களும் வருந்தவும், உமையம்மை வருந்தவும், ஓரிமைப்பொழுதினும் என்னுடைய 
ஒரு வில்லினால் நின்வலியை யழிப்பேன்' என்றிவ்வாறு  சூரபன்மன் வீரமும் வெற்றியும் சீரும் கோபமுங் கொண்டு 
சொல்லினான். அருளே திருமேனியாகக் கொண்டுநின்ற அறுமுகக்கடவுள் இவற்றைக் கேட்டுத் திருப்புன்முறுவலுஞ் 
சிறிதுதோன்ற இவ்வாறு சொல்லியருளுவார்:-

    "வெற்றியையுமுடையோம்; வலியின் மிகுதியையுமுடையோம்; மேன்மையையுமுடையோம்; எண்ணில்லாத 
படைகளையு முடையோம்; அழியாவியல்பையுமுடையோம்; பெரிய சேனா சமுத்திரங்களையுமுடையோம் என்று 
இனி அகந்தை கொள்ளாதே. இவற்றையெல்லாம் விரைந்து மாற்றுவோம். 'மிகுந்த வரத்தின் சிறப்பினை யுடையேமாகி 
நம்மை மிக இளைய ஓர் குமாரனோ பொருது வெல்ல வல்லவன்' என்று மனத்திற்கொண்டாய். நீ மிகவும் அறியாமையையுடையை. 
சிவபெருமானுடைய ஒப்பில்லாத நெற்றிநாட்டத்தில் உண்டாகின்ற ஒரு சிறுபொறியன்றோ உலகங்களெல்லாவற்றையும் 
அழிப்பது. இவர் அறிவினையுடைய முதியோர் என்றும், இவர் அஃதில்லாத இளையோர் என்றும், இவர் சிறியவர் என்றும், இவர் 
பெரியவர் என்றும், இவர் மிக்க வளங்களையுடையவர் என்றும், இவர் வறியவர் என்றும் வீரர்கள் மதியார்; யாவராயினும் 
போர்வலியுடையராய் வந்தெதிர்த்தால், அவரோடு போரைச் செய்வர். நூற்றெட்டு யுகங்காறும் செல்வத்தோடு 
இனிதாக இருக்கின்ற பெரிய உன்னுடைய வலியை, தெளிவில்லாத தன்மையையுடைய சிறிய நம்முடைய 
வலிமையினாற் பாலிற் புகுந்த உறையைப் போல இப்பொழுதே அழிப்போம்'' என்று சொல்லியருளினார். 

    சூரபன்மன் இவற்றைக் கேட்டு, அண்டமுகட்டைத் தொடுகின்ற மிகப்பெரிய ஓர்வில்லை வளைத்தான். 
அதனைச் சுப்பிரமணியக்கடவுள் பார்த்து, திருவாலங்காட்டிலே சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவஞ் செய்த 
அந்நாளில் அண்டமுகட்டைத் தொட எடுத்த திருவடியைப்போல ஓர் நெடியவில்லை யெடுத்து, அத்திருவடி 
அண்டத்தையழியாத வண்ணம் தடுத்த திருக்கரத்தைப்போல அதனை வளைத்து, எல்லாவண்டங்களும் உடைந்த
பேரோசைபோல நாணொலி செய்தார். சூரபன்மனும் சினந்து, அதற்கு மாறாகச் சமுத்திரங்கள் யாவும் உடைந்த 
தன்மைபோல நாணோதை செய்து, பாணமழைகளைத் தூவி, சுப்பிரமணியக் கடவுளையும் அவருடைய தேரையும் 
உலகங்களையும் மறைத்தான். அவர் ''இவனுடைய வித்தை நன்றாயிருந்தது" என்று சிந்தித்து, அநேகம் பாணங்களை 
விடுத்து அவற்றையெல்லாம் குறைத்தார். 

    சூரபன்மன் கோபித்து, நஞ்சு தோய்த்த அநேகம் பாணங்களைத் தொடுத்தான். குமாரக்கடவுள் பாணமழைகளால் 
அவற்றையறுத்து, அவனை மறைத்து, ஆகாய மார்க்கத்தை மாற்றினார். அப்பாணங்களின் படலங்களைச் சூரபன்மன் 
விடாமழைபோலும் அம்புகளாற் றுழைத்து வீழ்த்தி, பாசத்தை நீக்கி ஞானநாயகராகிய சிவபெருமானைக் காணும்
நல்ல தவத்திகளைப் போல அவரைக் கண்டு, பத்து லக்ஷம் பாணங்களை அவர்மீது விடுத்தான். அவற்றை அக்கடவுள் 
அம்புகளால் விலக்கி,சூரபன்மனுடைய புயத்தின்மீது பதினான்கு பாணங்களை விடுத்தார். அவைகள் அவனுடைய 
புயமலையையடைந்து, இருப்புமலையையடுத்து அதனையழியாத சூரியனுடைய கிரணங்களைப் போல அப்புயத்தைத் 
துளைத்தில. 

    சூரபன்மனுடைய வச்சிர யாக்கையின் வலிமையைச் சுப்பிரமணியக் கடவுள் பார்த்து, அக்கினியுண்டாகத் 
திருப்புன்முறுவல் செய்து, அவன் பின்னும் விடுகின்ற பாணங்களையெல்லாஞ் சிந்தி, ஆயிரமம்புகளால் அவனுடைய 
வில்லையறுத்தார். தன் வில்லுத்துணிதலும் சூரபன்மன் கோபித்து, பிரமதேவர் கொடுத்த ஒரு வேற்படையைச் 
சுப்பிரமணியக்கடவுண்மீது எறிந்தான். அவர் பதினான்கு பாணங்களால் அதனைக் குறைத்தார்; சூரபன்மன் வேறோர் 
வில்லை வளைத்துப் பாணமழைகளைச் சிந்தி, மாறுமாறாகச் சுப்பிரமணியக்கடவுள் விடுகின்ற பாணங்களெல்லாவற்றையும் 
மாற்றி, அவருடைய திருப்புயத்தில் ஏழுபாணங்களைச் செலுத்தி, ஆரவாரித்தான். அப்பாணங்கள் முருகக்கடவுளுடைய 
திருப்புயத்தையடைந்து நுண்ணிய துகளாகி  அக்கினித்திரளிற்பட்ட பூளைபோல அழிந்தன. 

    அவர் 'சூரபன்மனுடைய வலி நன்று நன்று' என்று கோபித்து, பத்துப்பாணங்களினால் அவனுடைய வில்லை 
அறுத்து, தேரையும் ஆயிரம் பாணங்களினால் அழித்து, பின் அவனுக்கு ஏமமாய்ப் போந்த பதினாலிலக்ஷந் 
தேர்களையும் ஓரிறைப் பொழுதிற் பாணமழைகளினால் அழித்தார். தன் சேமத்தேர்களெல்லாம் அழிதலும், 
புகையோடு கூடிய கோபாக்கினியைக் கக்கும் கண்களையுடைய சூரபன்மன் அதனைக் கண்டு, தான் காவலாய் 
வைத்திருக்கின்ற ஒரு முத்தலைச் சூலத்தை யெறிந்தான். முருகக் கடவுள் அதனை நான்கு பாணங்களினாற் றுணிபடுத்தி, 
ஏழுபாணங்களினால் அவனுடைய குடையையும் ஒருபாணத்தினாற் கிரீடத்தையும் அறுத்து, அவனுடைய உடம்பெங்கும் 
பாணங்களைப் பொழிந்து, ஆபரணங்களெல்லாவற்றையுந் துணித்தார். 

    சூரபன்மன் மானத்தோடு கூடிய வலிமையிற் குறைந்தான். அதனை அவனுக்குப் பக்கத்திலுள்ள படைத்தலைவர்கள் 
கண்டு, சதுரங்க சேனைகளோடு வந்து, விடாமழைபோலப் படைக்கலங்களை விடுத்து, எழுகடல்களும் மேருமலையை 
வளைந்தாற் போலக் குமாரக் கடவுளைச் சூழ்ந்தார்கள். அக்கடவுள் இங்ஙனஞ் சூழ்கின்ற மிகுந்த சேனைகளைப் பார்த்து,
 அவற்றை விரைவிற் சங்கரிக்கத் திருவுளங்கொண்டு, தம்முடைய ஒரு திருக்கரத்திலிருக்கின்ற சக்கரப்படையைச் 
சூரியனைப் போலச் செல்லும்படி விடுத்தார். சூரியன் நடுநிசியிற்சென்று அளவில்லாத பேரிருளை அழித்தாற்போல 
அச்சக்கரப்படை சென்று, அவுணர்களுடைய தலைகளையும், மார்புகளையும், கைகளையும், கால்களையும், புயங்களையும், 
அவர்கள் செலுத்திய படைக்கலங்களையும் துணிக்கும். இன்னும் அச்சக்கரம் தேர்களைத் துணிக்கும்; 

    யானைகளைத் துணிக்கும்; குதிரைகளைத் துணிக்கும்; படைத்தலைவர்களைத் துணிக்கும்; அவுணர்கள் 
போர்செய்ய நினைத்தால் அவர்களுடைய நெஞ்சைத் துணிக்கும்; இகழ்ந்தால் நாவைத் துணிக்கும்; உரப்பினாற் 
சிரசைத் துணிக்கும்; படைக்கலஞ் செலுத்தும் முயற்சிகளைச் செய்தாற் கைகளைத் துணிக்கும்; எதிர்த்தாற் 
கால்களைத் துணிக்கும்; குடைகளைத் துணிக்கும்; சாமரங்களைத் துணிக்கும்; கொடியின் றொடைகளைத் துணிக்கும்; 
தேரிற்கட்டிய குதிரைகளைத் துணிக்கும்; அவுணர்களுடைய கையிலுள்ள படைகளைத் துணிக்கும்; வாத்தியங்களைத் 
துணிக்கும். அச்சக்கரப்படை குயவன் சுற்றிவிட்ட திரிகையைப்போல விரைந்து சுழன்று பகைவர்களுடைய சேனைகளைப் 
பலதுணியாக்கி, இவ்வாறே உலாவித் திரிந்து, சுப்பிரமணியக்கடவுள் ஒரு திருவாக்கினால் அழித்த தன்மைபோலச் 
சூரபன்மனுடைய நூறாயிரம் வெள்ளஞ் சேனைகளையும் ஒரு முகூர்த்தத்தில் அழித்து, புகழோடு மீண்டது.

    போரில் இறந்த அவுணர்களுடைய உடற்குறை புகையாகவும், இரத்தம் நெருப்பாகவும், வெட்டுண்டு 
வீழ்ந்த குதிரைகளும் தேர்களும் யானைகளும் அவிகளாகவும் எம்பெருமானாகிய முருகக்கடவுளுடைய சக்கரப் படை 
ஒரு பெரிய வீரயாகத்தைச் செய்வதுபோல விளங்கிற்று. அப்படை அவுணர்களை அழித்து, அவர்களுடைய வஞ்சகமும் 
மாயமுமென்கின்ற பேரிருளைக் கெடுத்து, இரத்தநிறத்தை யடைந்து, சூரியனாயது. அச்சக்கரப்படை சென்று 
போர்செய்யுமியல்பை விட்டுணுவின் சக்கரப்படை பார்த்து வியந்தது. பலகுடைகள் இடையிலே காம்புகள் வெட்டுண்டு 
நிணச்சேற்றில் வீழ்ந்து நிற்றல் தடாகத்தில் மலர்ந்த பழைய தாமரைப்பூவின் கானங்கள்போல விளங்கும். 

    இயங்குதலற்று வீழ்ந்திறந்த அவுணர்கள், யானை, குதிரை ஆகிய சேனைகளின் பிணக்குவைகள், 
உலகத்திலுள்ள மலைகளெல்லாம் ஒழுங்காகி வந்து அங்கே தொக்கனவற்றையொக்கும். ஆகாய மளவுமுயர்ந்த 
பிணக்குவைகளின்மேல் கொள்ளிவாய்ப் பேய்க்கூட்டங்கள் பிணத்தையுண்டு சிரித்து ஆர்த்து நெருங்குதல் 
முகிற்கூட்டங்கள் மின்னி இடித்து மலைச்சாரல்களில் மொய்த்தல் போலும். யானைகளையும் அவுணர்களுடைய 
உடம்புகளையும் பிறவற்றையும் வாரிக்கொண்டு இரத்த வெள்ளம் பாய்தல் செம்பாம்பு சமுத்திரத்தை மறைக்க 
நினைத்து நஞ்சைக் கக்கி நிலத்திலே சென்றாற் போலும். 

    சில பேய்கள் பிணமலைகளிலே ஏறி இரத்தவாற்றிற் குதிக்க, அதனாலுண்டாகிய இரத்தத்துளி 
அரம்பையர்களுடைய வஸ்திரங்களிலே தெறிப்ப, கண்டோர் பூப்பென்று நினைத்து நகைப்பரென எண்ணி 
அவர் நாணுவர். சில அவுணர்கள் தலைவெட்டுண்டு விரைந்து மேலே எழுந்து ஆர்த்தலும், சூரியன் தங்களைத் 
துன்பஞ் செய்கின்ற இராகு கேதுக்களாகிய கிரகங்கள் இரண்டல்லது அவைகளைப் போல இன்னும் அளவில்லாதன 
இங்குவந்தன என்று ஓடுவான். சில காக்கைகள் கவந்தக்காட்டிற் புகுந்து தங்கள் தலைகளை மேலேகாட்டி, 
"போர்க்களத்திலே காக்கை முகரும் வந்தாரோ?" என்று சொல்லும்படி யானைப் பிணங்களைக் கொத்துவன. 
இறந்த அவுணவீரர்களுக்குச் சூரபன்மனுடைய ஆணையினால் உயிர் மீட்டும் வந்தாற்போல, பேய்கள் கைகொட்ட 
ஆடுகின்ற உடற்குறைகள் அனந்தகோடி.

    இவ்வாறாகிய போர்க்களத்திற் சுப்பிரமணியக்கடவுள் விடுத்த சக்கரப்படை வந்து தன்படைகளைச் 
சங்கரித்ததைச் சூரபன்மன் அறியாதவனாய், தன்னைச் சூழ்ந்த சேனாவெள்ளங்கள் இறந்ததைக் கண்டு மனம்வெருண்டு, 
ஒரு தமியனாய் நின்று, 'இந்தப் பாலகன் என் சேனைகளையெல்லாம் தன்னுடைய ஒரு வேற்படையை விடுத்து 
அழித்தானோ? சிவப்படைக்கலத்தை விடுத்து அழித்தானோ? 'இறந்துபோக' என்று ஒரு சொல்லாலழித்தானோ? 
இவன் என்படைகளையெல்லாம் அழித்தது எவ்வாறு?" என்று சொல்லி, தேரையிழந்தும், வில்லையிழந்தும், பேரையிழந்தும், 
சேனைகளையிழந்தும், ஆபரணங்களையிழந்தும், கிரீடத்தையிழந்தும்,குடையையிழந்தும், பூமியையிழந்த அரசரைப்போல 
நிலத்திலே நின்றான். 

    இங்ஙனம் நின்ற சூரபன்மன் மனத்திற் கோபம் மிகவும், மார்பு வியர்க்கவும், தலையையசைத்து, 
"ஒரு பாலகன் வலி நன்று நன்று" என்று சிரித்து, பிரமப்படைக்கலத்தை எடுத்துச் சுப்பிரமணியக்கடவுள்மேல் 
விடுத்தான். அது வந்து கிட்டும்பொழுது, அவருடைய திருக்கரத்திலுள்ள வேற்படை சென்று விழுங்கியது. 
அதனைக்கண்ட சூரபன்மன் மனம் வருந்தி, விட்டுணுப் படைக்கலத்தை எடுத்து அக்கினிபோலக் கோபித்து 
விட்டான். அப்படை அளவில்லாத விட்டுணுக்களுடைய உருவங்களை உண்டாக்கிக் கிட்டிய பொழுது, வேற்படை 
அதனையும் விழுங்கியது. தான் விடுத்த இருபடைக் கலங்களையும் வேற்படை விழுங்கியதைச் சூரபன்மன் 
கண்டு வருந்தி, "சிவப்படைக்கலத்தை யான்விடின் யார் அதனைத் தடுக்கவல்லவர்!" என்று மனத்திலெண்ணி, 
அதனை விடத்துணிந்து, அப்படையை எடுத்து அர்ச்சனைசெய்து, விரைந்து விடுத்தான். 

    அப்படைக்கலம் எல்லையில்லாத உருத்திர மூர்த்திகளுடைய கோலம் எத்திசைகளினும் உண்டாக 
ஆரவாரித்து, நெருப்பை வீசி, விரைந்து சென்றது. திக்குயானைகள் எட்டும் இறந்தனபோல வீழ்ந்தயர்ந்தன; 
வடவாமுகாக்கினி ஓடியது; ஆதிசேஷன் உட்கி உலைந்தான்; பூமி நெக்கது; பலவகை மேகங்களும் இடிகளைச் 
சிந்தி இரிந்தன; சூரியன் துடித்தது; சந்திரன் சுழன்றது; மேரு வெடித்தது; அண்டம் விண்டது; இலக்கம் வீரர்கள் 
நடுங்கினர்; மற்றை வீரர்களும் பூதர்களும் கலக்கமெய்தினர்; தேவர்கள் ''இதனை விலக்கல் அரிது" என்று ஓடினார்கள். 
சிவப்படைக்கலம் இவ்வாறாக வர, அதனைச் சுப்பிரமணியக்கடவுள் பார்த்து, "இது நமது பிதாவினுடைய படை' என்று 
திருவுளஞ்செய்து, ஒருதிருக்கரத்தை நீட்டி, தந்தவன் வாங்கிய தன்மையதென்னப் பற்றி ஏந்திநின்றார். 

    அதனைச் சூரபன்மன் பார்த்து, "இவன் யான் விட்ட விட்ட படைக்கலங்களுக்கெல்லாம் மாறாக 
வேறொரு படைக்கலங்களையுஞ் செலுத்திலன்; அப்படைக்கலத்தை விடுத்து அதனை மாற்றவுந் துணியான்; 
என்படைகள் தன்னைக் கிட்டும் பொழுது அவைகளெல்லாவற்றையும் கவர்ந்தான். கேடில்லாத சிவபெருமானுடைய 
குமாரன் என்பதைக் காட்டினான். என்னோடு பொருதற்கு இவனன்றி வேறொருவருமில்லை. இவனோடு பொருவதற்கு 
யானன்றி வேறொருவருமில்லை. அத் தன்மையில் எனக்கு நேர் இவனன்றி வேறுயாருளர்! இவனுடைய வேற்படையின் 
வலிமையையும், வில்லின் வலிமையையும், ஏனைவலிமைகளையுங் கண்டேன். இனி இந்தப்பாலகன் செய்வதனைப் 
பார்ப்பேன்" என்று நினைத்து,மௌனமாகி நின்றான்.

    தன்னுடம்பிலணிந்த ஆபரணங்களெல்லாவற்றையும் சுப்பிரமணியக்கடவுள் மாற்றுதலினால் இருள்போலப் 
பூமியில் நின்ற சூரபன்மன் அற்புதமெய்தி மயங்கியதை அருள்வள்ளலாகிய முருகக்கடவுள் பார்த்து, அவன்மேல் வைத்த 
திருவருளால் அவனை நோக்கி இவ்வாறு திருவாய்மலர்ந்தருளுவார். ''சூரபன்மனே, நீ இந்திரகுமாரனாகிய சயந்தனையுந் 
தேவர்களையும் அளவில்லாத காலம் சிறையிலிட்டாய். அதனை நீக்கிவிடும்படி முன்னே ஒரு ஒற்றுவனை அனுப்பினோம். 
அவனுடைய சொல்லையும் மனத்திற் கொண்டிலை, தேவர்களுடைய சிறையையும் விடுத்தாயில்லை. ஆதலினால் நாம் 
ஈண்டுவந்தோம். போரிற்றனக்கிணையில்லாத தாரகனை முன்னே சங்கரித்ததுபோல உன்னையும் இன்றைக்கே 
சங்கரிப்போமென்று வந்தோம். உன்னைச் சூழ்ந்த இலக்ஷம் வெள்ளஞ் சேனைகளும், உன்வில்வலிமையும், 
உன்னாற் றூண்டப்பட்ட தெய்வப்படைக் கலங்களும் தொலைந்து மாண்டு போயதைக் கண்டாய். வறியனாய் நின்றாய். 

    தாரகனைக்கொன்ற வேற்படை இருந்தது. இங்கே உன்னைக் கொல்லுதல் ஒருபொருளுமன்று, அரிதுமன்று. 
நிராயுதனாய் நிற்கின்ற உன்னைக் கொன்றாற் பழியாய் முடியுமென்று தருமமுறையினாற் றாழ்க்கின்றோம்." இன்னும் 
பற்பலவற்றைச் சொல்லுகின்றதென்னை? தேவர்களுடைய சிறையை விடுப்பாயாயின் உன்னைக் கொல்லேம்.
அதனை மறுப்பின் விரைந்து கொல்வேம். உன் எண்ணங்களென்னை? சொல்லுதி" என்றார். வெவ்வேறாய் நின்று 
உலகங்களையெல்லாம் பாதுகாக்கத் திருவுளஞ்செய்து ஆறுதிருமுகங்களையும் பன்னிரண்டு திருக்கரங்களையும் 
கொண்டருளிய சுப்பிரமணியக்கடவுள் சூரபன்மனுக்கு இவைகளைச் சொல்லியருள, அவன் மாறாக ஒன்றுஞ் 
சொல்லாதவனாய், மனத்தில் இவற்றை நினைப்பான்: 

    "பாலகன், 'இவன் படையையிழந்தான்' என்று நினைத்து என்னுடைய தௌர்பல்லியத்தை யறிந்தவன் 
போலத் 'தேவர்களுடைய சிறையை விடுகுதி' என்று சொல்லவும் வல்லனாயினன். தன்பிள்ளைமையினால் அழியாத 
என்னுடைய வீரத்தையும் வலிமையையுந் தெரிந்திலன். இவன் எல்லையில்லாத காலம் என்னோடு நின்று 
போர்செய்ய நான் வாளாநிற்பினும், தன்றந்தை முன்கொடுக்க என்றுமழியாத ஒரு வரத்தைப்பெற்ற என்னைக் 
கொல்ல வல்லனா! முடியும் குடையும் வெட்டுண்ண அவற்றாற் குறைவையடைந்த யான் தனித்து நிற்பினும் 
இவனுக்கழிவதில்லை, எனக்குப் புகழுண்டாவதுமில்லை, அதனாற் பழியொன்றுவரும்; அதைப் பாதுகாப்பேன். 

    வெள்ளங்கள் வேற்று நீரையுடைய சிறுதடாகத்தைக் கொள்வதன்றி, ஊற்று நீரையுடைய பெரியசமுத்திரத்தைக் 
கொள்வதற்கு முடியுமோ! இப்பாலகன் என்னுடைய சேனைகளையும் படைகளையும் அழிப்பதேயன்றி அழியாத 
வரத்தையுமழிப்பானோ! என்னை அவன் கொல்லுதலரிது, யானும் அவனையிப்பொழுது கொல்லுதலரிது. 
இந்நகரிலுள்ள பெரிய வளங்களோடும் படைகளோடும் யான் இனிவந்து போர்செய்து இவனை  வெற்றி கொள்வேன் ;
இது வசையன்று;

    போர்செய்யும் வீரர் பற்பலநாட்பொருது வெற்றிபெறினும் அது மேன்மையுமாம், வியப்புமாம், புகழுமாம். 
யானும் இச்செய்கையைச் செய்வதே கடன்; அறிஞருடைய சூழ்ச்சியுமிஃதே" என்று பற்பல உபாயங்களைச் சூரபன்மன் 
எண்ணி, ஒருமாயா மந்திரத்தை நினைந்து, மறைந்து அவ்விடத்தை நீங்கி, மகேந்திரபுரியிலுள்ள தன்கோயிலுட் 
போயினான். மறைந்துபோய அவனுடைய முயற்சியை உயிர்க்குயிராய் வியாபித்திருக்கின்ற சுப்பிரமணியக் 
கடவுள் தெரிந்து, தீயனாகிய அவன் அறிந்து இன்னும் உய்வானோ என்னுந் திருவருளால் தமது வேற்படையைச் 
செலுத்தி அவனுடைய உயிரைக்கவர நினைத்திலர்.

    அப்பொழுது, அரிபிரமேந்திராதி தேவர்கள் சுப்பிரமணியக்கடவுளை யடைந்து வணங்கி, "எம்பெருமானே 
இந்தச் சூரபன்மன் என்றைக்குக் காசிப முனிவரிடத்தில் வந்து பிறந்தானோ அன்றுமுதல் வெற்றியே கொண்டு 
வியப்போடிருந்தான்; இன்றுதான் தேவரீரோடு பொருது தோற்றோடினான். அவனுடன் நீர் போர்செய்தல் ஒரு 
திருவிளையாடலேயன்றி, அவனுடைய உயிரைக் கவரத் திருவுளஞ்செய்வீராயின், போர்செய்து தப்பியோடுவானோ! 
அவன் உய்யுந்திறமுமுண்டோ! வெற்றியையுடைய சூரபன்மனை வேற்படையினாற் சங்கரிப்பீர். அதன்முன்
அவனோடு அரிய போரைச் செய்தல் அடியேங்கள் மாட்டுவைத்த திருவருளன்றோ?" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். 
அறுமுகக்கடவுள் அதனை வினாவி, 'நன்று நன்று' என்று திருப்புன்முறுவல்செய்து, "சூரபன்மன் இனி நம்முன் வந்து
நின்று போர்செய்தால் விரைந்து சங்கரிப்போம்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    சூரபன்மனுடைய போரில் ஆற்றாது ஓடினவர்களும் துன்பமுற்று வீழ்ந்தயர்ந்தவர்களுமாகிய பூதப்படைத் 
தலைவரும் பிறரும் ஒருங்குவந்து கூடி, சுப்பிரமணியக் கடவுளுடைய திருமருங்கில் வந்தடைந்து, சூரபன்மன் 
வானில் மறைந்ததை அறிந்து ஆரவாரித்து, 'போரிலே நம்மை அவமதித்த சூரபன்மனுடைய நகரத்திலுள்ள 
இம்மதிலை அகழ்ந்து கோபுரத்தைக் கடலில் இட்டு மகிழ்ந்து மீளுவோம் வாருங்கள் வாருங்கள்' என்று ஒருவரை ஒருவர் 
விரைந்தழைத்து, இனத்தோடு மதிற் புறத்தையடைந்தார்கள்.

    சேனைகளோடு சோர்வின்றி அம்மதிலைக் காத்துநின்ற அதிகோரன் என்னும் அவுணவீரன் பூதப்படைகள் 
சென்றதைக் கண்டு, மிகக் கோபித்து, அதரத்தைக் கடித்து, திண்டி பேரி திமிலை முதலாகிய வாத்தியங்கள் ஒலிக்க, 
போர்செய்யும்படி சேனைகளோடு வந்தெதிர்த்தான். பூதர்கள் மிகுந்த இருள்கூடின இடத்தில் எண்ணில்லாத சூரியர்கள் 
புகுந்தாற்போல அசுரர்களோடு எதிர்த்தார்கள். அசுரர்கள் தோமரம் பரசு சூலம் முதலாகிய படைகளை ஏவியும், 
ஈட்டியாற் குற்றியும், வாளாற்றுணித்தும் போர் செய்தார்கள். பூதர்கள் மலைகளையும் மரங்களையும் விடுத்தும், 
யானைகளை எற்றியும், தேர்களை ஒடித்தெறிந்தும், குதிரைகளைப் பிசைந்தும், அவுணர்களைத் துகைத்தும் 
போர்செய்தார்கள். இரத்தம் பொங்கின; மூளை சொரிந்தன ; குடர்கள் சரிந்தன; பருந்துகளுங் காகங்களும் நெருங்கின. 
பூதர்கள் சிலரும் அவுணர்கள் பலரும் இறந்தார்கள். 

    இவ்வாறு போர்செய்யும் பொழுது, பூதர்கள் மிகவுங் கோபித்து வலிமையோடு தாக்குதலும், அவுணர்களெல்லாரும் 
நில்லாது பயந்தோடினர். அதனை அதிகோரன் கண்டு வெகுண்டு, ஓர் எழுப்படையை ஏந்திப் பூதப்படைகளை யெதிர்த்து,
 அவர்களுடைய தலைகளிலும் கைகளிலும் புயங்களிலும் மார்புகளிலும் முகங்களிலும் ஓடியோடி மோதி, ஓரிமைப்பொழுதிற் 
பலரைக்கொன்றான். அப்பொழுது பூதப்படைத் தலைவருள் மேகர் என்பவர் கண்டு கோபத்தோடு எதிர்சென்று,தமது 
கையிலுள்ள மலையொன்றை அதிகோரன்மேல் எறிந்தார். அவன் அதனைத் தன்கையிலுள்ள எழுவாற் காத்தான். 
மேகர் கோபத்தோடு அதிகோரனுடைய மார்பிலடித்தார். அவன் துன்புற்று, 'இவனுடைய உயிரை இப்பொழுதே முடிப்பேன்" 
என்று இடிவீழ்வதுபோல மேகருடைய புயத்தில் எழுப்படையினால் அடிக்க அது முரிந்தது. மேகர் அதிகோரனுடைய கதுப்பிற் 
கையாலடித்தார். அவன் இறந்தான். அதனைக் கண்ட பூதர்கள் ஆர்த்து, மதிலின் வாயிலையடைந்து, அங்கே ஆயிரம் 
யோசனை யுயர்ந்துநின்ற கோபுரத்தைப் பிடுங்கி, வாயுதேவன் மேருமலையின் சிகரத்தைப் பறித்தெறிந்தாற்போலச் 
சமுத்திரத்தில் எறிந்தார்கள். அப்பொழுது பூமியசைந்தது; ஆதிசேஷன் மனந் திகிலுற்றான்; மகேந்திரபுரியிலுள்ள 
அவுணர்கள் நடுங்கியயர்ந்தார்கள். 

    பூதர்கள் எறிந்த சிகரம் முன்னாளில் விட்டுணு கூர்மவடிவங்கொண்டு தாங்குமுன் பாற்கடலில் அமிழ்ந்திய 
மந்தரமலைபோலச் சமுத்திரத்திலாழ்ந்தது. அங்குள்ள மலங்கு சுறா திமிங்கிலகிலம் முதலாகிய மீன்களெல்லாம் இரிந்தன. 
அச்சிகரத்தில் வசிக்கின்ற அவுணர்கள் உண்ணும் மீன்கள் ஒருபகலின் முற்கூற்றிற்செய்த தீவினை அதன் பிற்கூற்றிற் 
றமக்குப்பலிக்குமென்று சொல்ல அந்த அவுணர்களையுண்டன. அச்சிகரி சமுத்திரத்தில் வீழ்ந்தமையாற் சமுத்திரசலம் 
மேற்சென்று அந்நகரத்தின் மதிலைச் சூழ்ந்தது. இவ்வாறு சிகரியழிய, பூதர்கள் மதிலின் வடபக்கத்தைப் 
பாதங்களினா லுதைத்தார்கள். அது இடிவிழச் சாய்ந்த சிகரம்போலச் சாய்ந்தது. 

    சாய்தலும், பூதர்கள் தாமரைத் தடாகத்திற் புகுந்த யானைகள் போல மகேந்திரபுரியுட்சென்று, 
தம்மோடெதிர்க்கின்ற அசுரர்களைக் கொன்றும், மாளிகைகளையும் சிகரங்களையும் உதைத்து வீழ்த்தியும், 
அழிவு செய்தார்கள். அப்பொழுது பூதப்படைத்தலைவர்கள் "யாம் சுப்பிரமணியக்கடவுளைப் பிரிந்து 
சூரபன்மனுடைய நகரத்தில் "இனிச் செல்வது தக்கதன்று" என்று சேனைகளுந் தாமும் மீண்டு, 
போர்க்களத்தையடைந்தார்கள். அச்சேனைகளைச் சுப்பிரமணியக்கடவுள் பார்த்துத் திருவருள் புரிந்து, 
அவர்களோடு பாசறையை யடைந்து, இந்திரன் முதலாகிய தேவர்களும் பிறரும் துதிக்கத் திவ்விய சிங்காசனத்தில் 
வீற்றிருந்தருளினார். அப்பொழுது சூரியன் அஸ்தமித்தான். இது நிற்க, இனிச் சூரபன்மன் முதலாயினோரிடத்து 
நிகழ்ந்த செய்கைகளைச் சொல்வாம்.

    போரில் ஒளித்தோடிய சூரபன்மன் மகேந்திரபுரியிலே தன் மனைவியாகிய பதுமகோமளை யிருக்கின்ற 
கோயிலில் அமளியைச் சேர்ந்து, நித்திரை செய்யாதவனாயும், ஒருவரோடும் பேசாதவனாயும், போருக்குரிய 
உபாயங்களையே நினைத்துக் கொண்டிருந்தான். அவன் போருக்குப் போனதையும், சுப்பிரமணியக் கடவுளோடு 
போர்செய்து புறந்தந்து வறியனாய் நகருக்கு மீண்டதையும், ஒற்றுவர்கள் பானுகோபனுக்குச் சொன்னார்கள். 
மந்திரங்களையும் மாயங்களையும் படைக்கலங்களையும் சாதனை செய்துகொண்டிருக்கின்ற அவன் அதனைக் 
கேட்டு, மனம் வருந்தி, பிதாவினுடைய கோயிலையடைந்து, அவனுடைய கால்களை வணங்கிச் சொல்வான்: 

    "என் பிதாவே நேற்றைத்தினம் 'பகைவர்களிறக்கும்படி போர்செய்வாய்' என்று எனக்குச் சொல்லியனுப்பினாய். 
தமியேன் சென்று வந்தெதிர்த்தவர்களோடு போர் செய்தேன்; அறுமுகன் போருக்கு வந்திலன். ஒழிந்த வீரர்கள் 
சூழ்ந்த படைகளோடு நெருங்கி வந்து என்னுடன் போர்செய்தார்கள். யான் மோகப்படையைத் தூண்டி அவர்களுடைய 
உணர்ச்சியையும் வலியையுங் கெடுத்து எல்லாரையும் வென்றேன். அறுமுகன் அப்பொழுது ஒருபடையை விடுப்ப 
என்னுடைய மோகப்படை வலிமை நீங்கி வருந்தி மீண்டது. அதனால் அந்த வீரர்களெல்லாரும் பின்பு உணர்வுவரப் 
பெற்று எழுந்து போயினார். 'இது என்ன வெற்றி' என்று யானும் மீண்டேன். 

    மனம் வெட்கித்து உன்னுடன் ஒன்றுஞ் சொற்றிலேன். 'சிவபெருமானும் பிறரும் முன்னாளில் எனக்குத் தந்த 
படைக்கலங்களினாலும் மாயங்களினாலும் பகைவர்களெல்லாரையும் நாளைக்குக் கொன்று வெற்றிபெறுவேன்' என்று 
மீண்டுவந்து, இன்று சூரியோதயத்தில் அப்பகைவர்களோடு போர்செய்யும்படி புறத்திற் சென்றேன். அதன்முன் நீ 
சேனைகளோடு விரைந்து போருக்குப் புறப்பட்டாய் என்று சொன்னார்கள். அழியா வரத்தையுடைய என் பிதாவே, 
பகைவர்களோடு போர்செய்தற்கு நீ ஒரு துணையையும் வேண்டிலை. அதனை நினைத்து, போருக்குப் புறப்பட்ட 
யான் மீண்டு வந்திருந்தேன்; இது என் செய்கை ; நீ போருக்குச் செல்லும் பொழுது, மந்திரிமார் முதலாயினாரோடு 
யோசித்தாயில்லை, என்னையு மழைத்துச் சொன்னாயில்லை. நால்வகைச் சேனைகளோடும் போருக்குப் புறப்பட்டாய். 
இது பெருமையோ! 

    தேவர்களுக்கு ஆக்கத்தையும், அவுணர்களுக்கு ஏக்கத்தையும், இந்திரனுக்கு இன்பத்தையும் கொடுத்தாய். 
மகாராஜனாகிய நீ பாலகனையும் பூதகணங்களையுங் குறித்துப் போருக்குச் செல்லுதல் தலைமையாகுமா? 
கீர்த்தியிற் சிறந்த மேலோர் சிறியரோடு போர் செய்வாராயில் வெல்லினும் புகழில்லை. அவரை யாவரும் இகழ்வர். 
இனிக் கழிந்தது போக, சிறியனாயினும் யான் இங்கே ஒன்று சொல்வேன் அதை மனத்துக்கொள். இன்றிரவு கழிந்தபின் 
யான்போய் எல்லாரையும் வெற்றி கொண்டு வருவேன், என்னை அனுப்புதி ; யான் பாலகனை வெற்றி கொள்வதையும், 
அவனைச் சூழ்ந்த படைகளை அழிப்பதையும், ஒற்றுவர்கள் பார்த்து வந்து சொல்ல, பிதாவே நீ மகிழ்ச்சியிற் சிறந்திருக்குதி. 
அறுமுகனை மற்றை வீரர்களோடு வெற்றிகொள்ளேனாயின் இங்கே வரேன்; நீ விரும்பி எனக்குக் கொடுக்கின்ற 
அரசாட்சியையும் வேண்டேன்'' என்று பானுகோபன் கூறினான். 

    சூரபன்மன் அவற்றைக் கேட்டு மகிழ்ந்து, பானு கோபனை நோக்கி, "மும்மூர்த்திகளும், மூவுலகங்களிலுமுள்ள 
தேவர்களும், திக்குப்பாலகர்களும் மற்றையெவரும் எதிர்த்தாலும், என்றம்பியைக் கொன்ற சிவகுமாரனை வெல்லுதல் அரிது. 
அவனோடு எதிர்த்துப் போர்செய்ய வல்லவர் என்னையன்றியில்லை. அவனைச் சிறியன் என்று நினையாதே; அவன் 
வலிமையில் ஒப்பில்லாதவன். கிரவுஞ்ச மலையைப் பிளந்த வேற்படையை ஏந்திய மிக்க வலியினனாகிய அப்பாலகனை 
யானே இனி மேல் வெல்லுகின்றேன். அது நிற்க, யான் இன்னுஞ் சொல்வதொன்றுண்டு. மகனே அதனைக் கேள். 

    நீ சேனைகளோடு சென்று ஒற்றுவனாக வந்து நம்முடைய நகரத்தை உலைவு செய்த சேனைத் தலைவனாகிய 
வீரவாகுவென்பானைத் தனியே அழைத்துப் போர்செய்து வென்று வருவாய்'' என்றான். சூரபன்மன் சொல்லியவற்றைப் 
பானுகோபன் கேட்டு, "என் பிதாவே உனது திருவுள்ளமிதுவாயின் நீ சொல்லிய இதனை முன்னமே ஓரிறைப் பொழுதில் 
முடிப்பேன்" என்றான். அவனை நோக்கிச் சூரன் மகிழ்ந்து, போருக்குச் செல்லும்படி விடைகொடுத்தனுப்பி, இடையிலே 
தான்செய்த சூழ்ச்சிகளெல்லாவற்றையும் விடுத்து, செல்வங்களை அநுபவித்துக்கொண்டிருந்தான். 

    பானுகோபன் பிதாவின் பணியைச் சிரமேற்கொண்டு தன்கோயிலை யடைந்தான். அவனிடத்துப் 
பலதூதுவர்கள் விரைந்து வந்து கால்களை வணங்கி நின்று, "அரச குமரனே இவற்றைக் கேட்பாய். நம்மரசன் இன்றைக்குப் 
போய்ப் போர்செய்து மீண்டபின், சிவகுமாரன் மாட்டுள்ள அளவில்லாத பூதர்கள் இந்நகரின் வடக்குப் பக்கத்தை யடைந்து 
அங்கே காவல்  செய்து நின்ற அதிகோரன் என்பானைக் கொன்று, சேனைகளையழித்து, அங்கு நின்ற சிகரியைப்பிடுங்கிக்  
கடலில் வீசி, அது ஆழ்ந்தபின் வடதிசை மதிலை முழுதும் அழித்து மீண்டார்கள். இந்த நகரம் கரையில்லாத சமுத்திரம் 
போன்றது" என்று சொன்னார்கள். 

    பானுகோபன் அவற்றைக் கேட்டு, தன் பக்கத்து நின்ற வீரர்களுட் சிலரை நோக்கி, "நம்முடைய அசுரத் தச்சனை 
ஓர் கணப்பொழுதிற் கொண்டு வருதிர்" என்றான். அவர்கள் விரைந்துசென்று அவுணத் தச்சனையடைந்து, ''நமது 
அரச குமாரனாகிய பானுகோபன் உன்னை யழைத்தான்" என்று சொல்லி அழைத்துக் கொண்டு வந்து,பானுகோபனுக்குமுன் 
விடுத்தார்கள். தச்சன் தன்கால்களை வணங்கி நிற்றலும், பானுகோபன் "நீ விரைந்து இந்நகரத்தின் வட மதிற் சிகரியையும் 
பிறவற்றையும் முன்போலச் செய்குதி" என்று சொல்லி யனுப்பி, அதன்பின் மாகாயன் என்னும் வலிய அவுணனை அழைத்து, 
'நீ வடமதிற் சிகரத்திற் போய்க் காவல்செய்துகொண்டிருப்பாய்'' என்று பதினாயிரஞ் சேனாவெள்ளங்களோடு அவனை 
அனுப்பி, தானும் தன் மாளிகையை அடைந்தான். அசுரத்தச்சன் அப்பொழுதே சென்று, வடதிசை மதிலிலுள்ள கோபுரத்தைச் 
சித்திரவுறுப்புக்களோடு மனத்தால் நினைத்துச் சாதுரியம் பொருந்த அமைத்துச் சென்றான். மாகாயனென்பவன் 
தீபங்கள்சூழ நால்வகைச் சேனைகளோடு அவ்வடதிசை மதில்வாயிலைக் காத்திருந்தான். இது நிகழும்பொழுது, 
இருட்காலம் நீங்கச் சூரியன் உதித்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            மூன்றாநாட் பானுகோபன் யுத்தப்படலம்.

    பானுகோபன் சூரியோதயத்தில் நித்திய கருமத்தை முடித்து, தான் போரிலே தோற்றோடிவந்த 
சிறுமையைச் சிந்தித்து, மாயையை வரும்வண்ணம் நினைத்துத் தோத்திரஞ்செய்ய, அவள் அவனுக்கு முன்னரே 
தோன்றி நின்றாள். பானுகோபன் கும்பிட்ட கையினனாய், பேற்றை நினைத்து, என்பாட்டியே கேட்பாய். 
அறுமுகனுடைய தூதுவனோடு போர்த் தொழிலைச்செய்து மானத்தையும் வலிமையையும் இழந்து மிகவும் 
வருந்தி,பகைவரோடு போர்செய்யத் தொடங்கி முடிவிற் பின்னிடுவாரடைகின்ற பிழையையும் பெற்றேன். 
இதற்குமேல் எனக்கு வரும் பழி யாது' என்றான். 

    அதனை மாயை கேட்டு, "பானுகோபனே நீ வேதாசாரத்தை விலக்கினாய் ; தேவர்களைச் சிறையில் வைத்து, 
இந்திரனுடைய அரசுரிமையை அழித்தாய்; முனிவர்கள் செய்கின்ற தவத்தைக் குறைவித்தாய்; கொடுமையைப் 
பேணினாய்; மும்மூர்த்திகளும் தேவர்களும் முனிவர்களும் மற்றை யாவரும் பகையானால் எங்ஙனம் வாழ்வாய்; 
கொடுமைகளையே பெரிதுஞ் செய்தலாற் பழியைப் பூண்டாய்; பகைவர்கள் இந்நகரத்தை யழித்துப் போர்செய்ய 
அவர்களுக்குத் தோற்றாய்; விதியைக் கடந்தவர் யாவர்? இனிப் பற்பலவற்றைச் சொல்லி ஆவதென்? மைந்தனே, 
நீ வேண்டுவனவற்றைச் சொல்லுதி, தருவேன்" என்றாள். 

    பானுகோபன் அவற்றைக்  கேட்டு மிக மகிழ்ந்து, ''முந்தை நாள் என்னோடு பொருது வெற்றியடைந்து 
சென்ற வீரவாகுவென்பானை இன்றைக்குச் சேனைகளோடு யான் கொல்லும்படி ஒரு படைக்கலத்தைத் தருவாய்'' 
என்றான். அதனை மாயை கேட்டு, மாயப்படைக்கலத்தை யுண்டாக்கி அவனுடைய கையிற்கொடுத்து, "இப்படையை
மந்திரத்தோடு விடுவாயாயின் இது வீரவாகுவையும் அவனைச் சேர்ந்த பிறரையும் அறிவைக் கெடுத்துச் சூழும்; 
வாயுவின்றொழிலையுஞ் செய்யும்; இற்றை நாள் வெற்றி உன்னதாகும், போருக்குச் செல்லுதி" என்று கூறி 
ஆகாயத்திற் போயினாள்.

    மாயப் படைக்கலத்தைப் பெற்ற பானுகோபன் முன்னைநாளிற் றானடைந்த பழியை நீங்கிப் பெருமிதமுற்று, 
அப்பறாக்கூட்டை முதுகிற்கட்டி, கவசத்தையிட்டு, வில்லையேந்தி, மற்றைய போர்க்குரிய கருவிகளையும் புனைந்து, 
வாயுப்படை, அக்கினிப்படை, யமப்படை, சந்திரப்படை, சூரியப்படை, பிரமப்படை, விஷ்ணுப்படை, சிவப்படை 
ஆகிய படைகளை யெடுத்துக் கொண்டு, வாயிலில் வந்து, அசுரர்கள் ''வெற்றியைப் பெறுக' என்று ஆசி கூற, 
சயந்தனோடு போர்செய்த நாளிற் கவர்ந்த ஓர் தேரிலேறினான். அவன் போருக்குச் செல்லுதலை ஒற்றுவர்களால் 
அறிந்த சேனைகள் எழுந்தன. பதினாயிரம் வெள்ளங் குதிரைகளும், பதினாயிரம் வெள்ளம் யானைகளும், 
பதினாயிரம் வெள்ளந் தேர்களும், இருபதினாயிரம் வெள்ளம் காலாட்களும் ஆகிய நால்வகைச் சேனைகளும் 
அவனை வந்து சூழ்ந்தன.

    பூதூளி சமுத்திரசலம் வற்றும்படி மொய்த்தன. முரசு, துடி, குடமுழா முதலிய வாத்தியங்கள் ஆர்த்தன. 
அவுணவீரர்கள் இடிபோல ஆரவாரித்துச் சூழ்ந்தார்கள். இவ்வாறாகச் சேனைகள் தன்பக்கத்துச் சூழச் சென்ற 
பானுகோபன் நகரை நீங்கி மதிலின்புறத்தில் வந்து, தன்பக்கத்தில் வருகின்ற ஒற்றுவர்களுள் ஆயிரங் 
குதிரைமுகங்களையுடைய ஓரொற்றுவனை நோக்கி, "நீ சிவகுமாரனிருக்கின்ற பாசறையிற் சென்று 
வீரவாகுவைக் கண்டு, 'சூரபன்மனுடைய பணியினாற் போர்செய்து தன்னை இன்றைக்குக் கொன்று புகழைப் 
பெறும்படி நினைத்து வந்தேன், விரைந்து வருகுதி; முன்னைநாட் போரென்று எண்ணற்க' என்ற வார்த்தையை 
என்சொல்லாக வெற்றியோடு அவனுக்குச் சொல்லி மீளுவாய்" என்று சொல்லியனுப்பினான். 

    அவன் நன்றென்று ஏமகூடமென்னும் பாசறையை யடைந்து, வீரவாகுதேவரைக் கண்டு, "பானுகோபன் 
இன்றைக்கு உன் உயிரைக் கவரும்படி சபதங்கூறிப் போருக்கு வருகின்றான். இதனை உனக்குச் சொல்லி உன்னை 
அழைத்துவரும்படி என்னை ஏவினான். வாக்கில் வல்லவனே விரைந்து போருக்கு வருகுதி' என்றான். 
வீரவாகுதேவர் சிரித்து, "யான் பானுகோபனுடைய உயிரைக் கவர வருகின்றேன். போய் அவனுக்குச் சொல்லுதி" 
என்றார். ஒற்றுவன் அதனைக் கேட்டு மீண்டான்.

    வீரவாகுதேவர் தம்பிமார் முதலிய சுற்றத்தோடு சுப்பிரமணியக்கடவுளுடைய திருமுன் சென்று, அவருடைய 
பாதங்களை வணங்கி, எழுந்து கைகூப்பி நின்றார்.சர்வ வியாபகராகிய அக்கடவுள் அங்கு நிகழ்ந்தவற்றை
அறிந்து, "முன்னை நாளில் உனக்குத் தோற்றோடிப் போன பானுகோபன் இன்றைக்கு உன்னோடு போர்செய்யும்படி 
வலிமையோடு வந்தான். நீ முன்னைநாளிற் போலச் சேனைத்தலைவர்களோடு போய் எதிர்த்துப் போர்செய்குதி. 
அவன் ஏவிய படைக்கலங்களுக்கு எதிராகிய படைக்கலங்களைத் தூண்டுதி. அந்த வஞ்சன் மாயையைச் செய்தால் 
நம்முடைய வேற்படை விரைந்துவந்து அதனை நீக்கும். போவாய்" என்று அருளிச்செய்தார்.

    வீரவாகுதேவர் அப்பணியைச் சிரமேற்கொண்டு, அவருடைய பாதங்களை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
துணைவர்களும் படைத்தலைவர்களும் தம்மை வந்துசூழத் தேரிலேறினார். ஆயிரம் வெள்ளம் பூதசேனைகள் 
மலைகளையும் மரங்களையும் படைக்கலங்களையும் கொண்டு சூழ்ந்து ஆர்த்தன. இவ்வாறு சேனைகள் சூழ வீரவாகுதேவர் 
பானுகோபன் நிற்கின்ற போர்க்களத்தை யடைதலும், பூதசேனைகளும் அவுணசேனைகளும் போரைச் செய்தன. 
அவுணர்கள் வேல், தோமரம், எழு, தண்டு முதலாகிய படைகளைச் சிந்தினர். பூதர்கள் முத்தலைச்சூலம் முசலம் மலை 
மரம் முதலியவற்றைச் சிந்தினார். அவுணர்கள் வாட்படையினாற் பூதர்களுடைய சிரங்களையும் தோள்களையுந் 
துணித்தும், சுரிகை முதலியவற்றாற் குற்றியும், தண்டு முதலியவற்றாற் றாக்கியும் போர் செய்தார்கள். 

    பூதவீரர்கள் அவுணர்களைப் பிடித்துக் கைகளால் அடித்தும், கிழித்தும், கழுத்தை ஒடித்தும்,
மிதித்துருட்டியும், எழுக்களால் அடித்தும், குதிரைகளையும் வீரர்களையும் கைகளால் அள்ளி அள்ளி யானைகளிலும் 
தேர்களிலும் அடித்தும் போர்செய்தார்கள். சமுத்திரங்களும் ஊழித்தீயும் மாறுபட்டுப் பொருதாற்போல இவ்வாறு 
அவுணர்களும் பூதர்களும் போர்செய்ய, இரத்தநீர் பாய்ந்தது. ஊனைவிரும்பிப் பக்ஷிகள் மொய்த்தன. பூதர்கள் 
சிலரும் அவுணர்கள் பலரும் இறந்தார்கள். இலக்கத்தெண்மரும் பாணமழைகளைச் சொரிந்து அவுணக்கடல்களைக் 
கலக்கினார்கள். இவ்வாறு அவர்கள் போர்செய்தலால் பல அவுணசேனைகள் இறக்க, இறவாதொழிந்தன தோற்றோடின. 

    அதனைக்கண்ட பானுகோபன் பெருமூச்சுவிட்டு நகைத்து, நெருப்பைப் போலக் கனன்று, போர்செய்யும்படி 
நினைத்து, ஓர்வில்லை யெடுத்து, பாகனை நோக்கி "தேரைச் செலுத்துதி" என்றான். அவன் நன்றென்று பூதசேனையின்மேற் 
செல்லும்படி தேரை விடுத்தான். பானுகோபன் பூதசேனையை வந்தடைந்தமையை வீரவாகுதேவர் பார்த்து, 
துணைவர்களோடு விரைந்து அவனுக்கெதிரேபோய், ஒரு வில்லையெடுத்தார். பானுகோபன் அவரை வந்தெதிர்த்து, 
வில்லை வளைத்து, நாணொலி செய்தான். அண்டங்கள் வெடித்தன. தேவர்கள் தலையைத் துளக்கினர். வீரவாகுதேவர் 
வில்லை வளைத்துப் பலகோடி இடியேறுகள் ஒன்றாய் ஒலித்தாற்போல நாணொலி செய்தார். 

    அவ்வொலி செவிப்புகுதலும், பானுகோபன் கோபித்து, அநேக பிறைமுக பாணங்களை விண்ணுலகிலும் 
மண்ணுலகிலும் திசைகளிலும் செறியும்படி விடுத்தான். வீரவாகுதேவர் அதனைத் தெரிந்து, அத்தன்மையினவாகிய 
எண்ணில்லாத பாணங்களை முகிலும் நாணச் சொரிந்தார். அவ்விருவருடைய பாணங்களும் ஒன்றனையொன்று 
எதிர்கவ்விச் சிந்துவனவாயின. அவர்களுடைய தேர்கள் தேவருலகத்தினும், பிரமவிஷ்ணுக்களுடைய உலகங்களிலும்,
சமுத்திரங்களிலும், எட்டுத்திசைகளிலும், சக்கரவாளகிரியிலும், அண்டங்களிலும் உலாவுவன. தேவர்கள் அத்தேர்களை 
எவ்விடத்தன என்று அறியாதவர்களாயினார். 

    இவ்வாறு இருவரும் போர்செய்யும்பொழுது, பானுகோபன் வீரவாகுதேவருடைய மார்பில் ஆயிரம் அம்புகளை 
எய்தான். அவர் வெகுண்டு, அத்துணைப் பாணங்களை ஏவி, அவனுடைய தேர்ப்பாகனையும், குதிரைகளையும், 
இரதத்தையும் ஒருங்கே அழித்தார். பானுகோபன் வேறொரு தேரின்மேற் பாய்ந்து வில்லை வளைத்தான். அதன்முன் 
வீரவாகுதேவர் ஆயிரம் பாணங்களை விடுத்து அவனுடைய மார்பைப் பிளந்தார். அவன் நடுங்கித் துன்பமுற்றான். 
அதனைக் கண்ட பூதர்கள் ஆரவாரித்தார்கள். பானுகோபன் காதில் நஞ்சு புகுந்தாற்போல அவ்வொலியைக் கேட்டுப் 
பொருமிக் கோபித்து, ''தெய்வப்படைக்கலங்களினாலே தூதுவனுடைய வலியைத் தொலைப்பேன்" என்று துணிந்து, 
வருணப் படைக்கலத்தை எடுத்து வில்லிற்பூட்டி,"நீ சென்று பூதப்படைகளையும் துணைவர்களையும் தூதுவனையும் 
கொல்லுதி" என்று சொல்லி விடுத்தான். 

    அது ஊழிக்காலத்துச் சமுத்திரம்போல வெள்ளமாய்ப் பரந்து, இடியொலிசெய்து, விண்ணுலகைத் தடவி 
விரைந்து சென்றது. அதனைக் கண்ட தேவர்கள் நடுங்கினர். பூதர்களும் கலக்கங்கொண்டு நின்றார்கள். 
துணைவர்களும் இன்னதென்றறியாது குலைந்தார்கள். வீரவாகுதேவர் அதனைப் பார்த்து, அக்கினிப் படைக்கலத்தைச் 
செலுத்தினார். புகையும் பொறிகளும் கொள்ளிகளும் சுடர்களும் வெம்மையும் எழுந்து வானமுந் திசையும் செறிந்தன; 
அண்டங்கள் வெடிக்கலுற்றன; கங்கை வற்றியது; மீன்கள் துடித்தன; சமுத்திரங்கள் சுருங்கின; மலைகள் பொடியாயின; 
பூமி பிளந்தது. இவ்வாறாக அக்கினிப்படைக்கலஞ் சென்று வருணப்படையைக் கெடுத்து, வெள்ளத்தையுண்டு, 
பானுகோபனுக்குப் புறத்திற் சூழ்ந்தது. 

    அவன் அப்படையைக் கண்டு வாயுப்படைக்கலத்தைச் செலுத்தினான். அது பிரசண்ட மாருதத்தின் 
உருக்கொண்டு, அண்டமும் உயிர்களும் நடுங்கும்படி நெருங்கி, அக்கினிப்படையைக் கெடுத்து, பூதசைனியங்களைக் 
கொல்லும்படி வந்தது. வீரவாகுதேவர் அதனைக்கண்டு, நாகப்படையைச் செலுத்த, அது எண்ணில்லாத பாம்புகளின் 
றொகுதியாய்ச் செறிந்து, ஆகாயமெங்கும் நிமிர்ந்து, விடத்தைக் கான்று, சூரியனையும் படத்தால் மறைத்து, 
நெருப்பையுமிழ்ந்து, வாயுப்படையை யுண்டு, பானுகோபன்மேற் சென்றது. அவன் அதனைக் கண்டு ''இதுவே இதற்கு எதிர்" 
என்று எண்ணி, கருடப்படைக்கலத்தை விடுத்தான். 

    அது செல்லுதலும், நாகாஸ்திரம் சூரியனைக்கண்ட பனிபோல ஓடியது. அக்கருடப்படை ஆரவாரித்து, 
எண்ணில்லாத கலுழன்களுடைய உருவத்தையுண்டாக்கி நேரே வர, வீரவாகுதேவர் கோபமுற்று, நந்திப்படைக்கலத்தைச் 
செலுத்தினார். அது அளவிறந்த இடபங்களினுருவங்களைக் கொண்டு, பெருமூச்சுவிட்டு, அண்டங்கள் அதிர 
ஆரவாரித்து, பாதங்களிலே சிலம்பொலிக்கவும், கிங்கிணி மாலைகள் கழுத்தில் ஆர்ப்பவும், முரிப்பு அண்ட 
கோளகையினை உரிஞ்சவும், கோடுகள் உலகங்களை அலைப்பவும் நடந்து, தன்முன் வந்த கருடப் படையை விழுங்கி, 
''பானுகோபனைக் கொல்லுகின்றேன்" என்று சென்றது. 

    அதனைப் பானுகோபன் பார்த்து யமப்படையைச் செலுத்தினான். நந்திப்படை அதனையும் அழித்தது. 
அதன்வலியைப் பானுகோபன் கண்டு, அதரத்தைக் கடித்து, பிரமப்படைக்கலத்தை விடுத்தான். அது வெகுண்டு 
ஆகாயவழிக்கொண்டு சென்று நந்திப்படையைக் கண்டு இடைந்து, "நீசனாகிய பானுகோபனுடைய ஏவலினால் 
வந்தேன். உம்முடைய வரவையறியேன்; என்மேற் கோபங் கொள்ளற்க " என்று சொல்லி வணங்கி மீண்டது. 
தேவர்கள் ஆரவாரித்தார்கள். அதனைப் பானுகோபன் கண்டு, விட்டுணுப் படையை விடுத்தான். 

    அது எங்கும் விட்டுணுக்களுடைய உருவமைந்து, பஞ்சாயுதங்களைத் தாங்கி, மாயத்தையுடையதாகி, 
நந்திப்படைக்கெதிரே சென்று, அதனோடு போர்செய்து நின்றது. அதனை வீரவாகுதேவர் கண்டு, வீரபத்திரப்படையை 
எடுத்து வழிபட்டு விடுத்தார். அது செல்லுதலும், நந்திப் படையோடு பொருத விட்டுணுப்படைக்கலம் தொலைந்தது. 
அதனைப் பானுகோபன் கண்டு, "சிவப்படைக்கலத்தை விடுப்பேன்' என்று சிந்தித்து, அதனையெடுத்து, மனத்தினாற் 
பூசனைசெய்து தோத்திரம்பண்ணி வணங்கி விடுத்தான். அதனை வீரவாகுதேவர் பார்த்து, உடனேதாமும் 
அப்படைக்கலத்தை எடுத்து, அன்பினோடும் மனத்தால் அருச்சனை செய்து, "பானு கோபனுடைய படைக்கு
 மாறாய்ப் போர்செய்து திரும்புதி' என்று பிரார்த்தித்து வணங்கி விடுத்தார். 

    பானுகோபன் விடுத்த சிவப்படைக்கலம் அதற்கெதிராகச் சென்றது. அவ்விருபடைக்கலங்களும் 
உருத்திர மூர்த்தியினுடைய வடிவத்தைக் கொண்டு ஊழிக்காற்றையும், வடவாமுகாக்கினியையும், புகையையும், 
நஞ்சையும் ஒவ்வோர் புடையிலுமிழ்ந்தன; பூதத்தொகைகளையும், காளித்தொகைகளையும், வைரவர் கூட்டங்களையும், 
வீரலக்குமிகளையும் தந்தன; பேயினங்களையும், இருட்டையும், மாயைகளையும், காலர்களையும் ஒவ்வோர் 
புடையிலுமிழ்ந்தன; அளவில்லாத சமுத்திரங்களையும், முகிற்கூட்டங்களையும், பாம்பின்கூட்டங்களையும், 
அளவில்லாத சூரிய மண்டலங்களையும் கான்றன; அனந்தகோடி ஐயனார்களையும், அனந்தகோடி யானை முகத்தர்களையும், 
அனந்தகோடி அரிமுகத்தர்களையும், அனந்தகோடி சரபவுருவினர்களையும் தந்தன; 

    யானை, குதிரை,தேர், விமானம், சிங்கம், யாளி முதலியவற்றிலேறிப் பலபடைக்கலங்களைச் செலுத்திக் 
கொண்டுவரும்படி வெவ்வேறாய் உருத்திர கணங்களை யுண்டாக்கின; பிரமா, விட்டுணு, இந்திரன், குபேரன்,வாயு, 
இயமன், வருணன், அக்கினி ஆகிய இவர்களுடைய படைகள் எண்ணில்லாதனவற்றைத் தந்தன; கற்களையும், 
கொள்ளிகளையும், இடிகளையும், மழு சக்கரம் வேல் பாணம் ஆகிய படைகளையும், பொழிந்தன. 
சிவப்படைக்கலங்க ளிரண்டும் இவ்வாறாகிய உருவங்களை உண்டாக்கி, சமுத்திரங்களையும் வானுலகத்தையும் 
திக்குக்களையும் பூமியையும் விழுங்கி, அண்டகோளகையைப் பிளந்து, அப்பாற்போய்,தம்முண் மாறுபட்டு நின்று 
போர்த் தொழிலைச் செய்தன. 

    இப்படி இவ்விரு சிவப்படைக்கலங்களும் போர்செய்தலால், சத்த சமுத்திரங்களும், தேவகங்கையும், 
புறவேலையும் வற்றின; அங்குள்ள உயிர்களெல்லாம் பதைபதைத் திறந்தன; பூமி எரிந்தது; வானுலகம் இடிந்தது; 
மேரு மலை பொரிந்தது; நக்ஷத்திரக் கூட்டங்கள் பொடிந்தன; சூரியர்களுடைய தேர்கள் எரிந்தன; 
எல்லாவண்டங்களிலும் புகை நிமிர்ந்தது; ஏழுமலைகளும் கரிந்தன; திக்குயானைகள் கவிழ்ந்தன; 
சூறைக்காற்றுக்கள் உலைந்தன; வடவாமுகாக்கினிகள் அவிந்தன; ஏழுபாதலங்களும் குலைந்தன; 
அண்டச் சுவர்கள் குலுங்கின; உயிர்கள் யாவும் உலைந்தன; தேவர்கள் ஓடினர்; ஆதி கூர்மம் தொலைந்தது; 
அட்டமாநாகங்கள் சுருண்டன; மேகங்கள் புரண்டன; பூமிலக்குமியும், மகாலக்குமியும், பொருமி விட்டுணுவைத் 
தழுவினர்; சரசுவதியும், காயத்திரியும், சாவித்திரியும் வெருவியோடிப் பிரமாவைத் தழுவிக்கொண்டார்கள்; 

    இரதி மன்மதனை இறுகப்புல்லிக் கலக்கமுற்றாள் : மற்றைத் தேவர்களும், இருடிகளும், தத்தம் 
மனைவியர்களைப் புல்லி நிற்கமுடியாதவர்களாயும் உய்யும்வழி ஒன்றுங் காணாதவர்களாயும் அச்சத்தாலோடினர்; 
பூதவீரர் தியங்கினர்; இலக்கரும் மருண்டனர்; துணைவர்கள் எண்மரும் மயங்கி வீரவாகுதேவரை வந்து 
சூழ்ந்தார்கள்; அவுணர்கள் யாவரும் புரண்டார்கள்; தேர்கள் யாவும் பொடிந்தன; யானைகளும் குதிரைகளும் 
உருண்டன; பானுகோபன் ஒருவன்மாத்திரம் பிழைத்து நின்றான். மகேந்திரபுரியிலிருக்கும் அவுணர்கள் 
யாவரும் இவ்வாறு நிகழுந் தீமையை நோக்கித் துண்ணென்று பயந்து,"பதினாலுலகங்களும் அழியும் 
ஊழிக்காலம் இதுவோ?" என்று குலைகுலைந்தார்கள். 

    "பேரொலி பிறந்தது; அண்டங்கள் பிளந்தன; சுழல்காற்று வளைந்தது; பேரழல் பரவிற்று; 
சூரியன் அழிந்தான்; நமது மகேந்திரபுரியிலுள்ள சனங்கள் யாவும் உலைந்தன; புகுந்ததியாதோ? அறிகுதிர்' 
என்று சூரபன்மன் ஒற்றுவர்களைத் தெரிந்துவரும்படி அனுப்பினான். அவ்வொற்றுவர்கள் செல்லுதற்குமுன் 
சிலதூதுவர்கள் போரினிகழ்ந்ததை யறிந்து, மனநடுங்கி ஆகாய மார்க்கமாய் வந்து, சூரபன்மனை வணங்கி 
நின்று இவ்வாறு சொல்லுவார்: ''மகாராசனே, கேட்பாய். உன்குமாரனாகிய பானுகோபன் வீரவாகுவென்பானோடு 
பெரும்போரைச் செய்து; பின்பு தெய்வப்படைக்கலங்களை விடுத்து, அதன்மேற் சிவப்படைக்கலத்தைத் 
தூண்டினான். வீரவாகுவும் அப்படையைத் தூண்டினான். அந்த இரண்டுபடைக்கலங்களும் உலகங்களையெல்லாம் 
ஒருங்கே அழிக்கவல்ல பல உருவங்களைக் கொண்டு யாவரும் அஞ்சும்படி சென்று அண்டங்கண் முழுதையுந் 
தொலைத்துப் போர்செய்தன. இது நாம் அறிந்தது." என்றார். 

    சூரபன்மன் அதனைக் கேட்டு, "பானுகோபன் சிவப்படைக்கலத்தை விடுத்தும் இன்னும் ஒற்றுவனை 
வென்றிலன். அவனைச் சிறியனாக நினைந்தோம். அந்தோ! ஒருவருடைய உருவத்தைக் கண்டு இகழாது 
அவருடைய வலிமையை நினைப்பதே புத்தி" என்று கூறினான். சிவப்படைக்கலங்களிரண்டும் திருவிளையாடலை 
நினைத்து, உருத்திரமூர்த்திகள் இரண்டு வடிவமாகிப் போர்செய்வது போலத் தம்மை விடுத்த வீரவாகுதேவரும் 
பானுகோபனும் காணும்படி போர்செய்து, தாம் உண்டாக்கிய உருவங்களெல்லாவற்றையும் ஒடுக்கி, தம்மால் 
மாறுபட்ட அண்டங்கள் வானுலகங்கள் சமுத்திரங்கள் மலைகள் முதலிய எல்லாவற்றையும் முன்போலாகச் 
செய்து, பகைவர்களைச் சார்ந்தனவல்லாத உயிர்களுக்கெல்லாம் அருள்செய்து, தம்மைச்செலுத்திய 
இருவர்மாட்டும் மீண்டுபோயின.

    தேவர்கள் அதனைக் கண்டு, ''பானுகோபன் இதனாலும் வெற்றி கொண்டிலன். இனி இப்பொழுதே இறப்பான்; 
எம்முடைய துன்பமும் நீங்கிற்று' என்றார்கள். பானுகோபன் தன்பக்கத்திலுள்ள நால்வகைச் சேனைகளையுங் 
காணாதவனாய், அவையெல்லாமிறக்கத் தான்றனித்தமையைக் கண்டு, ஏங்கி இரங்கி, "சிவப்படைக்கலமும் 
இவனுக்கெதிரேபோய் மீண்டதென்னில் இனிச் செலுத்த வேறு படையொன்றுண்டோ! என்னுடைய சேனைகள் 
முழுவதும் இறந்தன. யான் தனித்து நின்றேன். இனிச் செய்வதென்னை! இங்கே யான் நின்றால் இறக்கத்தான் நேரும். 
ஆதலாற் போர்செய்வதுஞ் செயலன்று" என்று எண்ணி, ஒர் சூழ்ச்சி செய்து, மாயத்தால் அரூபியாகி விரைந்தெழுந்து 
சென்று, ஆகாயத்தில் நின்றான். அதனைக்கண்ட பூதகணங்களெல்லாம் "பானுகோபன் பயந்து ஒளித்தோடினான் " 
என்று ஆரவாரித்தன; அப்பொழுது சூரியன் அஸ்தமயனமாயினான். 

    வீரவாகுதேவர் பானுகோபன் மறைந்ததைக் கண்டு, "இந்தக்கள்வன் இன்றைக்கும் இறந்திலன்; விரைவில் 
ஓடித்தப்பினான்; யான் இனிச் செய்வதென்னை? சொல்லுதிர்" என்று தம்பிமாரை வினாவினர். அவர்கள்
வணங்கி, "வந்தெதிர்ந்த அவுணசேனைகளெல்லாம் இறந்தன; பானுகோபன் தனித்தவனாய் மறைந்தோடிப் 
போயினான்; இனிப் போருக்கு வரும் வீரர் இல்லை: அந்திக்காலமும் அணுகியது; சேனைகளும் யாமும் மீண்டு
போய் எம்பெருமானாகிய சுப்பிரமணியக்கடவுளை வணங்கி நாளைக்கு வருவதே முறை  ' என்றார்கள். 
தம்பிமார் கூறியதைக்கேட்ட வீரவாகுதேவர் சுப்பிரமணியக்கடவுளுடைய திருவடிகளைப்போய்த் 
தரிசிக்கும்படி எண்ணினார்.

    ஆகாயத்தில் மறைந்து நின்ற பானுகோபன் அதனைத் தெரிந்து; இவ்வாறு சிந்திப்பான்: "முன்னைநாள் 
வீரவாகுவுக்கு நான் தோற்றேன் என்று ஓர்வசை பரந்ததன்றி, பின்னும் இற்றைத் தினத்திலும் யான் இவனுக்குத் 
தோற்றோடுவேனாயின் என்னை யாவருமிகழ்வர். போரிலே பயந்து புறங்கொடுத் தோடுபவரைத் துணைவர்கள் 
தந்தையர் தாயர் மக்கள் மனைவியர் ஆகிய இவர்களும் மறப்பார்களென்றால், பிறரிகழ்தலைச் சொல்லவும் 
வேண்டுமா? இன்றைக்கும் முன்னைநாட்போல யான் இவனுக்குத் தோற்றோடுவேனாயின்; பிதாவாகிய சூரபன்மன் 
என்னைக் கோபித்துத் துறப்பான்; சூரியனைச் சிறைசெய்த என்புகழ் அழியும்; என்பிதாவின் புகழ்களுமழியும். 
யாராயினும் ஒரு பகைவர் வந்தெதிர்த்தால் அவரோடு எதிர்த்து நின்று போர்செய்து அவரைக் கொல்லுதலே வலிமை, 
வஞ்சனையினால் வெல்லுதல் நீதியன்று; 

    அதுவும் முடியாதாயின், தாமிறத்தலே தகுதி. அதுவன்றிப் புறங்கொடுத்தல் நன்றோ!; 'இவன் எதிர்த்து 
நின்று போர்செய்து வருந்தி இன்றைக்கும் தோற்றோடினான்' என்னும் பழியையடைதல் தகுதியன்று. உபாயத்தையேனுஞ் 
செய்து விரைந்து பகைவர்களை வெல்லல் வேண்டும். இவனுக்கெதிரில் நின்று யாதாயினும் ஒருவலிமையையுடைய 
படைக்கலத்தை விடுவேனாயின், இந்த வீரனும் எதிரான படைக்கலத்தைத் தூண்டி அதனைச் சின்னமாக்குவன். 
'பானுகோபன் தோற்றோடினான், அவன் இனி இறந்தான்' என்று போர்க்களத்திலே என் பகைவர்கள் சொல்ல 
மறைந்து நின்று, இப்பொழுதே ஒரு படைக்கலத்தைச் செலுத்தி, சிறந்த வெற்றியைக்கொண்டு யான் மீளுதல் வேண்டும். 

    தெய்வப்படைக்கலங்களைச் செலுத்துவேனாயின், அவைகளெல்லாம் இவர்களிடத்து வெவ்விய உருவங்களைக் 
கொண்டு சென்று ஒன்றுஞ் செய்யாமல் மீள்வதன்றி இவர்களைக் கொல்லுவதில்லை. யான்விடுக்குந் தெய்வப்படைக்கலங்கள் 
எடுக்கின்ற கோலங்களை வீரவாகு தெரிவானாயின், அவற்றிற்கேற்ற படைகளைத் தூண்டி விரைவில் அழித்துவிடுவான்; 
யான் ஆகாயத்தில் மறைந்து நிற்பதும் வெளிப்படும். வெளிப்பட்டால், பகைவர்கள் இங்கும் வந்து சூழ்ந்து போர்செய்வர்; 
யான் இவர்களோடு பொருது இளைப்படைந்தேன். ஆதலால் இன்னும் நின்று போர் செய்யவும் முடியாது; முதனாட்போல 
ஒளித்தோடுதலுமரிது; பகைவர்கள் நிற்குமிடத்து விரைந்து சென்று அவர்களுடைய அறிவைக் கெடுத்து இறுதியைச் 
செய்கின்ற மாயப்படையை விடுதலே தகுதி" என்றிவ்வாறு பானுகோபன் நினைத்து, அற்றைத் தினத்தில் மாயவள் 
கொடுத்த மாயப் படையை விரைந்தெடுத்துப் பூசித்து, அப்படைக்கலத்தை நோக்கி, 'நீ செல்லும்பொழுது சத்தம் பரிசம் 
ரூபம் என்னும் மூன்றினாலும் மனத்தினாலும் யாவரும் அறியாவண்ணம் நம்பகைவரிடத்துச் சென்று, அவர்களுடைய 
அறிவைக் கெடுத்து, உயிரை நீக்கி, சுத்தோதக சமுத்திரத்தில் எறிவாய்" என்றுசொல்லி விடுத்தான். 

    விடுதலும், அப்படை தான் வந்தடைதல் ஒருவரும் அரிதற்கரிதாகி விரைந்து பூமியில் வந்து, பூதகணங்களையும் 
கணத்தலைவர்களையும் இலக்ஷம் வீரர்களையும் எண்மரையும் வீரவாகுதேவரையும் ஒருங்குசூழ்ந்து, உணர்வை ஒழித்தது. 
அதனால் யாவரும் மயங்கி வீழ்ந்து கிடந்தார்கள். அவர்களுடைய உயிரைக் கவர்ந்து தன்வலியைச் செய்யமுடியாமையை 
அம்மாயப்படைக்கலம் அறிந்து, துன்பத்தில் மூழ்கி, அவர்களைச் சமுத்திரத்திற் கொண்டுபோய் இட எண்ணி, 
ஊழிக் காற்றின் வடிவத்தைக் கொண்டு ஆலாகலவிஷம்போலப் பரந்து, வீரவாகு தேவர் முதலிய எல்லாரையும் 
ஆகாயவழியாக எடுத்துக்கொண்டு விரைந்துசென்று, உவர்ச்சமுத்திர முதல் ஆறுசமுத்திரங்களையுந் தாண்டி, 
அவற்றிற்கப்பாலுள்ள சுத்தோதக சமுத்திரத்தில் இட்டு, பிரியாமல் உடனிருந்தது. 

    ஆகாயத்தில் மறைந்துநின்ற பானுகோபன் இத்தன்மையைப் பார்த்து, "வீரவாகு இறந்தான்; 
பூதரும் பிறரும் இறந்தார்; இவர்கள் மீண்டுவர இது மலையன்று, சமுத்திரத்தில் ஆழ்ந்தார்; நம்முடைய 
சூழ்ச்சி நன்று" என்று பற்கள் விளங்கச் சிரித்து, அடங்காத களிப்பில் மிக்கவனாய், விரைந்து அவ்விடத்தை 
நீங்கி ஆகாயமார்க்கமாய் மகேந்திரபுரியை யடைந்து, தன் பிதாவைக்கண்டு வணங்கி நின்று, இவ்வாறு 
சொல்லுவான்: ''யான் இன்றைக்குச் சென்று பலதிறப்பட்ட போர்களைச் செய்து, அதன் பின் வீரவாகுவையும் 
அவன் பக்கத்திலுள்ள தம்பிமார் முதலாயினோரையும் ஆயிரம்வெள்ளம் பூதகணங்களையும் வென்று 
உயிரைப் பருகி, அவர்களுடைய உடம்பைச் சுத்தோதக சமுத்திரத்தில் இட்டேன். என்பிதாவே, நீ சிறிதுங் 
கவலை கொள்ளாதே. சேனைகளோடு நாளைக்குச் சென்று ஊழிக்காற்றைப்போல வளைந்து பாசறையை 
அழித்து, அறுமுகனையும் வென்று, விஷ்ணுவையும் பிரமாவையும் இந்திரனையும் பிடித்துக்கொண்டு 
வந்து தருவேன்'' என்றான்.

    இப்படிப் பானுகோபன் சொல்லும் பொழுது, சூரபன்மனுக்கு மகிழ்ச்சி யுண்டாயது; வலயங்கள் 
பூட்டறும்படி புயங்கள் நிமிர்ந்தன; கடகங்கள் நெரிந்து வீழ்ந்தன; உரோமங்கள் பொடித்தன; சிரிப்புண்டாயது. 
அவன் இருக்கை விட்டெழுந்து தன் எதிரில்நிற்கும் பானுகோபனை மார்போடு அழுந்தத் தழுவி, தன்னுடைய 
சிங்காசனத்திலேற்றி, குழந்தை நாளிற்போலத் தன் அயலில் இருத்திக்கொண்டு, "தந்தையராயினோர் 
மகிழ்ச்சியோடு வீற்றிருப்பது தம் புதல்வர்கள் குடியைத் தாங்கிய பின்னன்றி வேறுண்டோ? என் அப்பனே, 
நீவந்து நம்முடைய பழைய குலாசாரத்தைப் பாதுகாத்தலால் யானும் மனத்தில் ஓர்கவலையுமின்றி மகிழ்ச்சியிற் 
சிறந்தேன். யான் அந்நாளிற் றவஞ்செய்ததும் பற்பல நாளுண்டு. அதற்காக இந்த அரசையும் செல்வங்களையும் 
சிவபெருமான் கொடுத்தார் என்பது முன் சென்ற வார்த்தைகள். 

    அவை நிற்க, நீ இன்று அவற்றைத்தர யான் பெற்றேன்'' என்று பற்பல உபசாரங்களைச்சொல்லி, அவன் 
முன்னணிந்திருந்த ஆபரணங்களை மாற்றி, முடிமுதல் வீரக்கழல்வரையும் புதியனவாகத் தருவித்துத் தன்கையினால் 
அணிந்து, ''மகனே, நீ முன்சொன்னபடி நாளைக் காலையிற் சென்று, அறுமுகனை வென்று அவனைச் சூழ்ந்த 
பூதப்படைகளைக் கொன்று, அவனுக்குப் பின்னே நிற்கின்ற தேவர்களைச் சிறையிற் பிணித்து, என்பகையை 
முடிக்குதி" என்றான். இவற்றைக் கேட்ட பானுகோபன் "என்பிதாவே அவ்வாறு செய்வேன்' என்று கூறினான். 
சூரன் "மைந்தனே போரில் நொந்தாய்; உன்னுடைய மாளிகைக்குச் செல்லுதி" என்றான். அவன் விடைபெற்றுக்கொண்டு 
சதுரங்க சேனைகள் சூழ விரைந்து தன்கோயிலையடைந்து, வாழ்வோடிருந்தான். இது நிற்க; சுத்தோதக சமுத்திரத்தில் 
ஆழ்ந்த வீரவாகு முதலிய வீரர்கள் தேறி எழுந்தவாற்றைச் சொல்வாம்.

    பானுகோபன் மாயப் படைக்கலத்தை விடுத்ததையும், அது வீரவாகுதேவரையும் துணைவர்கள் 
முதலாயினாரையும் மயக்கிச் சுத்தோதக சமுத்திரத்திலிட்டதையும் தேவர்கள் கண்டு, பெருமூச்சுவிட்டு, 
மெய்குலைந்து, மனம் பதைபதைத்துக் கண்ணீர்விட்டழுது, நாவுலர்ந்து, கைகளை யுதறி, முகம் வெடிக்கும்படி 
கையாலறைந்து, வியர்த்து, அடங்காத துயரோடு அறுமுகக்கடவுளுக்கு விண்ணப்பஞ் செய்யும்படி 
ஓடிப்போயினார்கள். நாரதமுனிவர் இவைகளெல்லாவற்றையும் பார்த்து, அத்தேவர்களுக்கு முன்னே மிகுந்த 
வேகத்தோடு ஓடிச்சென்று, பாசறையில் வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானுடைய திருவடிகளை வணங்கி
 அஞ்சலி செய்து நின்று, "எம்பெருமானே பானுகோபன் ஓர் சூழ்ச்சியால் ஒளித்து நின்று மாயப்படையை விடுத்து, 
வீரவாகுதேவரையும் துணைவர்களையும் மற்றையோரையும் மயக்கி, அப்படையைக் கொண்டு சுத்தோதக 
சமுத்திரத்தில் இடுவித்தான்." என்று இந்திரனுடைய மனம் நடுங்கும்படி விண்ணப்பஞ் செய்தார். 

    அப்பொழுது, தேவர்கள் தனித்தனி சென்று சென்று அக்கடவுளுடைய திருவடிகளை வணங்கித் 
திருமுன்னின்று, தாமும் அதனை விண்ணப்பஞ்செய்தார்கள். அவ்வார்த்தைகளைத் திருச்செவிமடுத்த 
சுப்பிரமணியக்கடவுள் தமது வேற்படையை நோக்கி, "நீ சுத்தோதக சமுத்திரத்திற்போய், அங்கிருக்கின்ற 
மாயப்படையை அழித்து, வீரவாகு முதலாயினோருடைய மயக்கத்தை ஒழித்து, அவர்களை இங்கே விரைந்து 
தருதி. செல்வாய்" என்று பணித்து விடுத்தருளினார். அப்படை நன்று என்று அப்பணியைச் சிரமேற்கொண்டு, 
அவ்விடத்தை நீங்கி,பாம்புகளையும் விடத்தையும் கூற்றுவர்களையும் இடிகளையும் பலவகைப் படைக்கலங்களையும் 
புகையையும் அக்கினியையும் உமிழ்ந்து, சூற்கொண்ட மேகத்தினிருளையும் சக்கரவாளகிரிக்குப் புறத்திலுள்ள 
இருட்படலங்களையும் மற்றையிருள்களையும் விழுங்கி, அக்கினி யமன் வாயு வருணன் இந்திரன் பிரமா விஷ்ணு 
முதலாகிய இவர்களுடைய படைகள் சேவித்து உடன்செல்ல ஆயிரகோடி சூரியர்களைப்போல விரிந்து, விரைந்து சென்றது. 

    அவ்வேற்படையாகிய சூரியன் செல்லுதலால், தேவர்களுடைய முகமாகிய தாமரைகள் மலர்ந்தன; 
அசுரர்களுடைய முகமாகிய கருவிளங்கள் குவிந்தன. இவ்வாறாக அவ்வேற்படை தேவர்கள் துதிக்க விரைந்து 
ஆறுசமுத்திரங்களையுந் தாண்டிச் சுத்தோதக சமுத்திரத்தை யடைந்தது. அதனை மாயப்படைக்கலம் தெரிந்து, 
அஞ்சி, வீரவாகுதேவர் முதலியோரை விடுத்துத் தொலைந்துபோய்த் தன்வலிமைகெட்டு அழிந்தது. அப்பொழுது 
அந்தச் சமுத்திர ராசன் உடம்பு முழுதும் வியர்க்க வணங்கி இவ்வாறு சொல்வான்:-

    "அளவில்லாத வலியையுடைய பானுகோபன் மாயப்படைக்கலத்தைத் தூண்டி நம்முடைய வீரர்களையும் 
கணநாதர்களையும் மயக்கி, அறிவிழந்த அவர்களை என்னிடத்திலிட்டான். அம்மாயப்படைக்கலம் அவனுடைய 
பணியைச் செய்துகொண்டு என்னிடத்தில் இருந்தது. எம்பெருமானே, நீர் மருந்துபோல இங்கே எழுந்தருளினமையை 
அப்படைகண்டு துன்பமுற்று, வீரர்களை நீங்கி முரிந்து வீழ்ந்து இறந்தது. அடியேன் அம்மாயப்படையின் வலியைக் 
கெடுத்து அதனை அழிக்க வன்மையில்லேன். அசுரர்களாலே துன்புறுஞ் சிறியேன் என் செய்வேன். 'பகைவர்களாகிய 
அவுணர்களோடு போர்செய்ய வந்த வீரர்களும் அறிவிழந்து வீழ்ந்தார்கள். இவர்கள் எப்பொழுது எழுவார்களோ' 
என்று மனக்கவலையோடு அடியேனும் புலம்பிக் கொண்டிருந்தேன். 

    'சிவ குமாரராகிய அறுமுகக்கடவுள் அசுரத்தொகைகளையெல்லாம் ஓரிறைப் பொழுதினுட் சங்கரிப்பார். 
அக்கடவுள் போர்செய்யத் திருவுளங்கொண்டது ஓர் திருவிளையாடலாகும்' என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். 
'தாம் பாசறையில் வீற்றிருந்துகொண்டு பூதவெள்ளங்களோடு அனுப்பிய வீரர்களைப் பானுகோபன் வருத்துதல் 
அப்பெருமானுக்குத் திருவுள்ளம் போலும்' என்று எண்ணி அயர்ந்தேன். 'முருகக்கடவுள் அசுரர்களைச் சங்கரித்தால் 
உய்வேன்' என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற பேதையேன் செய்த பிழை ஒன்றுமில்லை. அடியேனைக் கோபஞ் 
செய்யாதொழிக' என்றான். வேற்படை சமுத்திர ராசனை நோக்கி "நீ வருந்தாதொழி" என்று அருளிச்செய்து, 
சமுத்திரத்தில் ஆழ்ந்துகிடக்கின்ற வீரவாகுதேவர் முதலிய வீரர்களை அடைந்தது. 

    அது அடையுமுன், அவர்களுடைய அறிவைக்கெடுத்த மாயப்படைக்கலம் நீங்கியது. அவர்கள் யாவரும் 
பாம்பின் நஞ்சு தலைக்கேறப் பெற்று மூர்ச்சித்தவர் மாந்திரிகனுடைய பார்வையினால் அதுநீங்கி எழுவதுபோலப் 
பதைபதைத்து உயிர்த்து, அயர்ச்சி நீங்கி, முன்னையறிவுதிக்கப் பெற்று எழுந்து, சுத்தோதக சமுத்திரத்தின் மேல்வந்து, 
சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடிகளை வணங்கித் துதித்தார்கள். பானுகோபனுடைய மாயம் அழிந்தது. 
பாவங்கள் ஒழிந்தன. பூமிதேவி சந்தோஷமுற்றாள். தரும தேவதை கூத்தாடியது. புவனங்களெல்லாம் ஆர்த்தன. 
முனிவர்களும் தேவர்களும் பூமாரி பொழிந்தார்கள். அப்பொழுது, வீரவாகுதேவர் முதலாயினோர் வேற்படை 
ஆகாயமார்க்கமாக வருதலைத் தரிசித்து, அடங்காத மகிழ்ச்சியுற்று, பலமுறை வணங்கித் துதித்து, சிரமீது 
கூப்பிய கரத்தினராய், அதனை எதிர்கொண்டு சென்று சூழ்ந்தார்கள். 

    அவர்களுள், அறிஞருளறிஞராகிய வீரவாகுதேவர் தங்களைப் பானுகோபனுடைய மாயப்படைக்கலம் 
சூழ்ந்ததையும்,அதனால் அறிவிழந்ததையும், அது சுத்தோதக சமுத்திரத்திலிடத் தாம் வீழ்ந்ததையும், 
வேற்படையினால் மீண்டதையும், பிறவற்றையும் அறிந்து, "வேற்படைப் பெருமானே, ஆறுதிருமுகமுடைமை 
பேரொளியுடைமை முதலிய காரணங்களாற் கந்தசுவாமியைப்போல உம்மைத் தரிசித்து மனக்கவலை நீங்கினோம். 
பானுகோபனுடைய மாயப்படை வருத்த அறிவிழந்த யாமெல்லாம் படைக்கலங்களுக்கு நாயகமாகிய நீர் 
எழுந்தருளி வருதலால் உணர்வும் உயிரும் பெற்று உய்ந்தோம். 

    தாரகாசுரன் கிரௌஞ்சமலையில் அடியேங்களை வீழ்த்தி வஞ்சனை செய்த அந்நாளிலும் எழுந்தருளிவந்து 
அறிவைத் தந்து இரக்ஷித்தருளினீர். அதுவன்றி இன்றும் வந்து ஆண்டருளினீர். அதனால் யாங்கள் உய்ந்தோம். 
உமக்கு யாங்கள் செய்யும் கைம்மாறு உலகத்தில் உண்டோ?'' என்று கூறினார். அவற்றை வேற்படை கேட்டு, "நீங்கள் 
அறிவிழந்தமையை நிருமலராகிய நமது கடவுள் அறிந்து என்னை அனுப்பியருளினார். அதனால் வந்தேன். 
யான் வருதலை அறிந்து மாயப்படை அழிந்தது. நீவிர் அங்கே வருதிர்" என்று கூறியது. வீரவாகுதேவர் நன்றென்று 
வணங்கி, மகிழ்ச்சியினால் மலர்ந்த திருமுகத்தினராய், துணைவர்களும் படைத்தலைவர் முதலாயினாரும் தம்மைச்சூழ 
அவ்வேற்படைக்குப் பின்னே சென்றார். அது முன் சென்று சுப்பிரமணியப் பெருமானுடைய திருக்கரத்தில் வீற்றிருந்தது.

            திருச்சிற்றம்பலம்.

            நகர்புகுபடலம்.

    வேற்படை முன்செல்ல, வீரவாகுதேவர் அறுமுகக்கடவுளுடைய திருவடித் தாமரைகளைத் தியானித்துக்கொண்டு, 
தம்பிமார் முதலாயினாரோடு உவர்ச் சமுத்திரத்தில் வந்து, மகேந்திர புரியைப் பார்த்து, பற்களைக் கடித்து, கண்கள் 
தீப்பொறி காலவும் வாய் புகையை உமிழவும் பெருமூச்சு விட்டு, வேர்வையுண்டாகக் கோபித்து இவ்வாறு சொல்வார்: 
"போர்செய்ய வலிமையின்றிப் பயந்தோடிப்போய் ஆகாயத்தில் நின்று கொண்டு வஞ்சனையைச் செய்து,மாயப் 
படைக்கலத்தால் நம்மை வென்று, மீண்டும் உயிரோடிருந்த கள்வனாகிய பானுகோபனுடைய உயிரைப்பருகி யன்றி, 
எம்பெருமானுடைய திருவடிகளைத் தரிசனஞ் செய்தற்கு யான் போவதில்லை. யான் நின்று அவனுடைய நகரத்தை 
அழிப்பேன். பானுகோபன் வந்தெதிர்த்தால் அவனையும் யானே கொல்வேன். அவனைக் கொல்லாதொழிவேனாயின், 
பின்னர் இவ்வுயிர்வாழ்க்கையை விரும்பேன், யான் பிறந்தேனுமல்லேன், என்னுடைய ஒரு வில்லும் யானும் 
நெருப்பிற் புகுவேன்" என்றார். 

    வீரவாகுதேவர் இவ்வாறு சபதங்கூற, தம்பிமாரும் பிறரும் அதனைக் கேட்டு, "வீரரே, பகைவர்களுக்குத் 
தோற்ற யாங்கள் வாளா மீண்டு செல்லுதல் பழியாம்; அவர்களை வெற்றிகொண்டன்றி எம்பெருமானுடைய திருவடிகளைப் 
போய்த் தரிசிப்பதுண்டோ! நீர் கூறிய இதுவே உறுதி'' என்றார்கள். அதனைக் கேட்ட வீரவாகுதேவர் "உங்களுடைய 
மனத்துணிவு நன்று; சேனைகளோடு சென்று பகைவர்களுடைய ஊரை அக்கினிக்குதவி, வந்தெதிர்த்தவர்களைக் கொன்று, 
பானுகோபனையுஞ் சங்கரிப்போம். எல்லீரும் வாருங்கள்'' என்றார். அவ்வார்த்தையை யாவருங் கேட்டு மகிழ்ந்து 
உடன்செல்ல, வீரவாகுதேவர் ஒரிமைப்பொழுதினுள் மகேந்திரபுரியின் மேற்றிசை வாயிலிற் போயினார். பூதவெள்ளங்கள் 
கடல் உடைந்தாற்போல ஆர்த்தன. அவ்வொலியைக் கேட்ட அவுணர்களுட் சிலர் "இஃதென்னவொலி?" என்று ஆகாயத்திற் 
போய்ப் பார்த்தார்கள்; சிலர் மனம் பதைத்தார்; சிலர் உடம்பு வேர்த்தார்; சிலர் 'இது நம்பகைவர்களுடைய ஒலி" 
என்று கோபித்தார்.

    மாயவளிடத்தே தோன்றினவனும், தன்னுடைய ஆணையைக் கடந்த கூற்றுவனுடைய முத்தலைச் சூலத்தையும் 
வருணனுடைய பாசத்தையும் பறித்து அவர்களைச் சிறைசெய்தவனும், அக்கினிச் சுவாலைபோலும் உடம்பையுடையவனும் 
ஆகிய புலிமுகனென்பவன் சதுரங்க சேனைகள் தன்னைச்சூழ, தீபப்பிரகாசத்தோடு மேற்றிசை வாயிலைக் காத்துக் 
கொண்டு சிங்காசனத்தில் இருந்தான். அவன் வீரர்களோடு பூதசேனைகள் ஆரவாரித்துக்கொண்டு அங்கு வந்ததைக் 
கண்டு, கோபித்து, இருக்கைவிட்டெழுந்து, சேனைகள் முன்செல்ல எதிர்த்துச் சென்றான். 

    பூதர்கள் வந்து, மலைகளையும் மரங்களையும் தண்டு முதலிய ஆயுதங்களையும் வீசிப் போர்செய்தார்கள். 
அவுணர்கள் பாணம், வேல், மழு முதலாகிய படைகளைச் சொரிந்து போர் செய்தார்கள். இங்ஙனம் போர் செய்யும் 
பொழுது, இருதிறத்துப் படைகளிலும் பலர் கெட்டார். இரத்தம் ஆறுபோலப் பெருகியது. அதனைப் பூதப்படைத் 
தலைவர்கள் கண்டு எதிர்த்து, தேர்களையும் குதிரைகளையும் யானைகளையும் ஒன்றின்மேலொன்றை அடித்தும், 
அவுணர்களுடைய மூளைகளைத் தகர்த்தும் அழித்தார்கள். தனக்கு முன்சென்ற சேனைகளெல்லாம் அழிந்ததைப் 
புலிமுகன் கண்டு, ஒரு சூலப்படையை எடுத்துக்கொண்டு பூதப்படைகளுக் கெதிரே சென்றான். 

    பூதர்கள் பலமலைகளைப் பிடுங்கி அவன்மேலெறிந்தார்கள். புலிமுகன் அவற்றையெல்லாம் சூலப் படையினாற் 
பலதுண்டமாக்கி, கடல் போல ஆரவாரித்துக் கொண்டு வந்தான். சிங்கர் என்னும்  பூதப்படைத் தலைவர் அவனுடைய 
வலியை நோக்கி, ஒரு முத்தலைச் சூலத்தை யேந்தி விரைந்து அவனுக்கெதிர் சென்று உரப்பினார். புலிமுகன் 
முத்தலைச் சூலத்தினாற் சிங்கருடைய மார்பிற் குத்தினான். அவரும் புலிமுகனுடைய மார்பில் முத்தலைச் சூலத்தினாற் 
குத்தினார். அச்சூலங்கள் அவ்விருவருடைய மார்பையும் பிளந்து முதுகிற் புறப்பட்டன. 

    உதயகிரியில் உதிக்குஞ் சூரியனைப்போல இருவருடைய உடம்புகளிலும் இரத்தம் பெருகியது. அவரிருவரும் 
முறை முறையாக அச்சூலங்களை வாங்கி வாங்கி அவயவங்கடோறும் குத்திப் போர்செய்தனர். அப்படைகளிரண்டும் 
ஒடிந்து வீழ்ந்தன. பின் மற்போர் செய்தனர். புலிமுகன் இளைத்து வீழ்ந்தான். சிங்கர் அவனைக் காலினால் 
உதைத்துருட்டிக் கொன்றார். தேவர்கள் சிங்கர்மீது பூமழை பொழிந்தார்கள். பூதர்கள் ஆரவாரித்தார்கள். 
வீரவாகுதேவர் அதனைப் பார்த்து மகிழ்ந்தார்.

    அப்பொழுது பூதர்கள், 'அவுணசேனைகள் அழிந்தன; மேலை வாயிலைக் காவல்செய்த புலிமுகனும் இறந்தான். இனி நாம் 
மேற்றிசைமதிலை யழித்து நகரத்தினுட் செல்வோம்'' என்று சொல்லி முந்திச்சென்று, அம் மதிலைக் கால்களினால் 
உதைத்துச் சிந்தியும், சிகரங்களைப் பறித்து மகேந்திரபுரிக்குள் வீசியும், மாளிகை நிரைகளைக் கால்களினால் 
உதைத்துருட்டியும், வீதிகளிலே தொக்கு நின்ற அவுணர்களை அழித்தும் உலாவினர். வீரவாகுதேவருடைய தம்பியர்கள் 
யானைகளும், குதிரைகளும், தேர்களும், அவுணர்களும், மாளிகைகள் சிகரங்கள் முதலாயினவும் அழியும்படி 
கோடாகோடி பாணங்களைச் செலுத்திச் சென்றார்கள். வீரவாகுதேவர் அக்கினிப் படைக்கலத்தையும் வாயுப் 
படைக்கலத்தையும் வில்லிற் பூட்டி, "நீவிர் சென்று இந்நகரத்தை அழியுங்கள்' என்று ஏவினார். 

    அப்படையிரண்டுங் கலந்து, சங்கார காலத்தில் உலகங்களையழிக்குந் தம்முருவை எடுத்து, "பகைவர்களாகிய 
அசுரர்கள் இனி நம்மைக் கோபித்துச் செய்வதென்னை? நம்மை விடுத்த வீரவாகுதேவர் இங்கே உளர்; நாம் இனி 
இவர்களுக்கு அஞ்சேம்' என்று அந்நகரமெங்குஞ் சூழ்ந்து, அக்கினியைக் கொளுத்தி அவுணர்கள் இரிந்து சிந்தும்படி 
சுட்டன. சில இடங்கள் எரிந்தன; சில இடங்கள் புழுதியாய்ப் பரந்தன; சில இடங்கள் வெடித்தன; சில இடங்கள் கரிந்தன ; 
சில இடங்கள் பொரிந்தன; சில இடங்கள் புகைந்தன.சிவபெருமானுடைய திருப்புன்முறுவலால் முப்புரம் எரிந்தாற்போல
இவ்வாறு அந்நகரம் எரிந்தது. அதனை ஒற்றுவர்கள் அறிந்து, சூரபன்மனுடைய கோயிலுட் புகுந்து, அவனை வணங்கி, 
வாய்வெருவிச் சொல்லுவார்கள்: 

    "உன் குமாரனாகிய பானுகோபன் வீரவாகு முதலியோரை மாயப்படையினாற் பொருது, சுத்தோதக 
சமுத்திரத்தில் இட்டான். மகாராஜனே நீயும் அதனை அறிவாய். அதன்பின் நிகழ்ந்தவற்றைக் கேட்குதி. நாரத முனிவன் 
பாசறையிற்சென்று இந்நிகழ்ச்சிகளைச் சிவகுமாரருக்குச் சொல்ல, அவர் வேற்படையைச் செலுத்தினார். அது 
சுத்தோதக சமுத்திரத்தை அடைந்தபொழுது, மாயப்படைக்கலம் அழிந்து போயது. வீரவாகு முதலிய யாவரும் 
முன்போல அறிவுண்டாகப் பிழைத்தெழுந்தார்கள். தேவர்கள் அதுகண்டு ஆரவாரித்தார்கள். வீரவாகு முதலாயினோர் 
தம்மிடத்து வேற்படை வந்ததைப் பார்த்து அதனைக் கைகூப்பி வணங்கினர். அது 'நீவிரெல்லாரும் வாருங்கள்' என்று 
பணித்து, அவருக்கு முன்னே ஆகாய மார்க்கமாக விரைந்து சென்று, அறுமுகக்கடவுளுடைய கரத்திலிருந்தது. 

    மாயப்படைக்கலத்தினால் ஒரூறுபாடுமடையாத வீரவாகு முதலாயினோர் விரைந்து வந்து நம்முடைய 
நகரின் மேற்றிசை வாயிலை யடைந்தார். அவ்வாயிலைக் காவல் செய்திருந்த புலிமுகன் என்பான் சேனைகளோடு 
போய் அவர்களை எதிர்த்துச் சிறிது போர் செய்தான். அவர்கள் அவனைக் கொன்றார்கள். அவனுடைய சேனைகளும்
 அழிந்தன. பூதர்கள் அம்மேலைத் திசை மதிலைக் கால்களினாற் றள்ளி வீழ்த்தி, அங்குள்ள சிகரத்தைப் பறித்து 
நம்மவர்கள் இறக்கும்படி நகரத்தின் நடுவே வீசினார்கள். வீரவாகுவும் அவனுடைய துணைவர்களும், பூதப்படைத் 
தலைவர்களும் நகரத்தினுட் புகுந்து மேற்றிசையில் அக்கினியைக் கொளுத்தி நின்று அழிப்பாராயினார். அவர்கள் 
கொளுத்திய நெருப்பு நகரிற் பதினாயிரம் யோசனை தூரத்தை எரித்தது. அவ்விடத்தை நாமும் பார்த்துவந்தோம். 
அரசனே நீ இதனை மனத்தில் ஐயமாகக் கொள்ளற்க" என்று ஒற்றர்கள் கூறினார்கள்.

    ஒற்றுவர்கள் இவ்வாறு கூறுதலும், சூரபன்மனுடைய மனத்திற் செற்றம் மிக்கது; உரோமங்கள் சிலிர்த்தன; 
புருவங்கள் நெற்றியில் ஏறின; முடி நிமிர்ந்தது; கண்கள் அக்கினியைக் கான்று சுழன்றன. இவ்வாறாகச் சூரபன்மன் 
கோபித்து, ஒற்றுவர்களை நோக்கி, "நீவிர் வானுலகிற் சென்று, ஊழிக்காலத்தில் உலகங்களையெல்லாம் அழிக்கச் 
செல்லும்படி அங்கே உறங்குகின்ற மேகங்களெல்லாவற்றையும் கொண்டு வருதிர்" என்று பணித்தான். அயலில் 
நின்ற தூதுவர்கள் ''அரசனே இப்பணியைச் செய்கின்றோம்" என்று வானுலகிற் சென்று, சத்தமேகங்களையுங் 
கண்டு, கைகளாற் புடைத்து நித்திரை விட்டெழச்செய்து, 'நம்மரசனாகிய சூரபன்மன் உங்களை யழைத்தான்'' 
என்று சொன்னார்கள் .மேகங்கள் அதனைக்கேட்டு, சூரபன்மனுக்கெதிரே வந்து வணங்கி நின்றன. 

    அவன் அவைகளை நோக்கி,   "இந்நகரத்தை எரிக்கின்ற அக்கினியைத் தணியுங்கள்'' என்று பணித்தான். 
அவைகள் நன்றென்று அவ்விடத்தை நீங்கி, புகையுருக் கொண்டு ஆகாயமெங்கும் பரந்து மின்னி, ஆயிரகோடி 
யிடிகளைக் கக்கி, அந்நகரை அக்கினி எரிப்பதையும் அதனால் அவுணர்கள் உலைவதையுங் கண்டு, "யாம் 
இந்நெருப்பைத் தணித்தால் தேவநாயகராகிய முருகக்கடவுளுடைய சேனைத் தலைவராயுள்ள வீரவாகுதேவர் 
நம்மைக் கொல்வார்; அவியாது மீண்டு போவேமெனில், சூரபன்மன் சிறைசெய்வான்; நாம் இதற்குச்
செய்வதென்னை" என்று இவ்வாறு நினைத்து, "சூரபன்மன் பலநாள் இடுகின்ற சிறையிலகப்பட்டுத் 
துன்பமனுபவிப்பதிலும், வீரவாகுதேவர் கொல்ல நாம் உயிரை விடுதல் இனிது'' என்று துணிந்து, ஒவ்வொரு 
துளியும் யானையளவினதாக ஒரிறைப்பொழுது மிக்க மழையைப் பொழிந்தன. 

    பொழிதலும், அந்நகரின் மேற்றிசையை எரித்த அக்கினி அழிந்தது. அக்கினி தணிந்ததை வீரவாகுதேவர் 
கண்டு, "இந்நெருப்பின் வலியை அழித்தவைகள் மேகங்களோ, அல்லது பகைவர்களாகிய அவுணர்களுடைய 
மாயமோ?'' என்று யோசித்தார். அப்பொழுது, நாரதமுனிவர் ஆகாயத்தில் வந்து, "வீரரே கேளும். இந்நெருப்பைத் 
தணித்தவைகள் யுகமுடிவில் வரும் மேகங்கள்; இவைகள் சூரபன்மனுடைய பணியினால் வந்தன; விரைவில் 
வடவாமுகாக்கினிப்படையை விடுக்குதிர்" என்று கூறி மறைந்தார். வீரவாகுதேவர் அதனைக்கேட்டு, அப்படையைச் 
செலுத்த அது விரைந்து சென்று,முகிற் கூட்டங்களைச் சூழ்ந்து, அவற்றின்கணுள்ள ஜலமெல்லாவற்றையும் உண்டு, 
வீரவாகுதேவரிடத்து மீண்டு வந்தது. மேகங்கள் வலியிழந்து வீழ்ந்து, அறுமுகக்கடவுளுடைய சடாக்ஷரத்தைச் 
சிரத்தையோடு உச்சரித்து, வலிபெற்று, உய்ந்தெழுந்து, புறவேலையில் ஓடின. அதுகண்ட பூத சேனைகள் துள்ளி 
ஆர்த்தன. தேவர்கள் பூமழை பொழிந்து கூத்தாடினர். 

    ஒற்றுவர்கள் இவற்றைக் கண்டு பொறாமல், மிகவிரைந்து சூரபன்மனுடைய கோயிலையடைந்து, அவனுடைய 
கால்களை வணங்கி, 'அரசனே, நீ அனுப்பிய ஏழுமேகங்களும் விரைந்து ஆகாயத்திற் சென்று மழையைப் பொழிந்து 
இந்நகரின் மேற்றிசையைச் சூழ்ந்த அக்கினியை அவித்தன. வீரவாகு அதனைக் கண்டு,அம்முகில்களின்மீது மற்றோர் 
அக்கினிப்படையைத் தூண்டினான். அவைகள் வலியிழந்து, மேற்றிசை வாய்தலில் விழுந்து, பின் எழுந்து புறவேலையை 
யடைந்தன. இந்நகர் அக்கினிபற்றி எரிந்ததென்று மாத்திரம் எண்ணாதே; பூதர்களும் மற்றை வீரர்களும் அதில் எண்மடங்காகப் 
போர் செய்கின்றார்கள்'' என்று கூறினார்கள். அதைக்கேட்ட சூரபன்மன் மயிர்பொடிப்ப, மார்பு வியர்க்க, கண்கள் 
அக்கினியைச் சிந்த, உயிர்ப்பிற் புகைவர, இடியைக் கான்றாற்போலக் கோபித்து, “போரைச்செய்கின்ற பூதர்களையும் 
வீரவாகு முதலிய வீரர்களையும் முன்புகொன்று பின் சிவகுமாரனை வென்று வருவோம். நம்முடைய தேரைக் கொண்டு 
வருதிர்" என்று ஒற்றுவரை நோக்கிக் கூறினான்.

            திருச்சிற்றம்பலம்.

            இரணியன்யுத்தப்படலம்.

    சூரபன்மன் "தேரைக் கொணர்திர்" என்று ஒற்றுவர்களை நோக்கிக் கூறுதலும், ஆயிரம் வேதங்களை 
யுணர்ந்த கேள்வியை யுடையவனும், தருமத்தையும் நீதியையும் அறிந்தவனும், மாயங்களையும் வஞ்சனைகளையும்
கற்றவனும், அவுணர்களுள்ளே வலிமையைப் பெற்றவனும், முன்னாளிற் பாதலத்திலுள்ள ராக்ஷதர்களோடு 
போர்செய்து வென்றவனும், மூன்று சிரங்களையுடையவனும் ஆகிய இரணியன் என்னுங் குமாரன் அங்கே ஓர் 
பக்கத்திலே புற்றினுளிருக்கும் பாம்புபோலப் புழுங்கும் நெஞ்சினனாயிருந்தவன் எழுந்து, பிதாவினுடைய 
கால்களை வணங்கி, "பிதாவே,ஏற்றதொன்றை யான் சொல்வேன் கேள்'' என்று அன்போடு இவற்றைச் சொல்வான்: 

    "நாம் தேவர்களைச் சிறைசெய்த தன்மையால் ஆவது பாவமே. ஆக்கம் வேறொன்றுமில்லை. எல்லாவற்றையும் 
உணர்ந்த என்பிதாவே, நம்முயிர் நீங்கிவிடும், செல்வமும் அழியும். அச்சத்தைத் தருங் காடுகளில் மறைந்து திரியும் 
புன்மை நீங்கி, பிருதிவியண்டங்கள் பலவற்றை அரசாண்டு இத்துணைச் செல்வங்களோடு வீற்றிருத்தலை நீ 
யாரிடத்திற் பெற்றாய். அதனைச் சிந்திக்குதி. முன்னாளில் விட்டுணுவை வென்றதும், பிரமாவையும் முனிவர்களையும் 
ஏவல்கொண்டதும், தேவர்களைத் துன்பஞ் செய்ததும், சிவபெருமான் ஈந்த வலியினால் அல்லவா! விட்டுணு போர்செய்ய 
வந்தாலும், இந்திரனும் பிரமாவும் வந்து எதிர்த்தாலும், பிறர் வந்தெதிர்த்தாலும் அவர்களைப் பொருவதும் வெல்வதும் 
புறந்தரச்செய்து மீள்வதும் நமக்கு எளிது. நாம் செயற்பாலதும் அதுவே. நாம் செய்த தவத்தை நோக்கி அளவிறந்த 
வரங்களைத் தந்தருளிய பரமசிவன் நம்மிடத்திலேயுள்ள ஓர் தீமை காரணமாக அவ்வரங்களை மாற்ற நினைப்பாராயின், 
பகைமை நீங்கி அவரை வணங்கித் துதிப்பதன்றி, அவரோடு போர்செய்யவுந் தகுமோ!

    தமக்கு ஓர் நன்றி செய்தோர் மனங்கன்றும்படி ஒரு தீமையை ஒருவர் புத்திபூர்வமாகச் செய்வாராயின், 
அவ்வெளியரை அவர் முன்செய்த நன்றி ஒன்றே கொல்லும். அல்லது அவரைக் கொல்ல வேறு கூற்றுவனும் வேண்டுமோ! 
கந்தசுவாமியைப் பெற்றருளிய பரமசிவனுடைய ஆணையை மனத்தால் மாறுபட்ட சிறியோர் யாவரும் இறந்தார்களேயன்றி, 
வலிமையினால் உய்ந்தவர் இவர் என்று சொல்லவல்லமோ! சிவபெருமான் மன்மதன் பொடியாகும்படி பார்த்ததையும், 
முப்புரங்களையுஞ் சுட்டதையும், அந்தகாசுரனைச் சுழலும்படி சூலத்தின் மேலிட்டதையும், என்பிதாவே, நீ கேட்டிலை 
போலும்! கூற்றுவனை உதைத்ததையும், கங்கையினுடைய செருக்கை நீக்கித் திருச்சடையில் அடக்கியதையும், 
பிரமவிட்டுணு முதலிய தேவர்கள் பயந்தோடும்படி வந்த ஆலாகலவிஷத்தை யுண்டதையும், அறிகிலாயோ! 

    ஒரு நரசிங்கமானது தேவர்களை அலைக்க, அதனைப் பரமசிவன் வீரபத்திரக்கடவுளாகிய சரபப்பக்ஷியைக் 
கொண்டு தண்டிப்பித்ததையும், அந்த வீரபத்திரக்கடவுளைக் கொண்டு தக்கனுடைய யாகத்தை அழிப்பித்ததையும் 
கேட்டிலையோ! பிரமதேவர் தம்மையிகழ, சிவபெருமான் வயிரவக் கடவுளை அனுப்பி அவருடைய உச்சிச் சிரசைக் 
கிள்ளுவித்ததையும், தம்மையிகழ்ந்த விஷ்ணுவினிடத்தில் அவ்வயிரவரை அனுப்பி இரத்தப்பலியை ஏற்பித்ததையும் 
நீ அறியாயோ! முன்னாளிலே செருக்குக் கொண்ட ஒரு இந்திரனுடைய புயத்தை முரித்ததையும், பஞ்சராக்கதர்களை 
அழித்ததையும், யானையையும் புலியையும் உரித்ததையும், என்பிதாவே, நீ அறிந்திலை போலும்! 

    உலகங்களையெல்லாம் அழித்த விட்டுணுவாகிய பன்றியின் கொம்புகளையும் அந்த விட்டுணுவாகிய 
ஆமையினோட்டையும் அணிந்ததையும், பிரமா முதலிய தேவர்களுடைய சிரங்களை அணிந்ததையும் அறியாயோ! 
தாருகாவனத்து ரிஷிகள் செய்த அபிசார ஹோமத்திற் றோன்றிய முயலகன் ஆர்த்தெழ, அவன் பதைபதைக்கும்படி 
உதைத்து மிதித்ததையும், பிறவற்றையும் நீ வினாவியதில்லையோ! தமக்கு நிகரில்லாத சிவபெருமான் பகைத்தன்மை 
பூண்டோர்களைத் தண்டஞ்செய்த சரித்திரங்கள் இன்னும் ஓர்கோடியுள்ளன. யான் இங்கே இருந்து சொன்னாலும் ஒழியா, 
பலயுகங்கழியும். ஆதலினால், சிவபெருமானைப் புகலிடமென்று அடைந்தவர் உய்வர், அல்லாத பேதையர் யாவராயினும் 
உய்யார். இவ்வுண்மை வேதமும் பிறநூல்களும் கூறும் சிறந்த பொருளாம். பிதாவே நீயும் தீயவழியினீங்கி இப்பொருளை
 அறிதி. இன்னம் ஒன்று சொல்வேன் கேள்: 

    நீ முன்னே பெருந்தவத்தைச் செய்ய இந்த மேலாகிய செல்வங்களையெல்லாந் தந்தருளிய சிவபெருமான் 
மாற்றவும் வல்லராவர். அந்தக்கடவுளுடைய குமாரரோடு நீ போர்செய்வது முறையோ! ஐயனே, தன்னினும் உயர்ந்தாரோடு 
போர்செய்யின் வெற்றி உண்டாகுமோ! முன்னாளிற் பூவுலகமும்,வானுலகமும், திக்குக்களும், சமுத்திரங்களும், 
மலைகளும் வேறுபாடுற்றதை நோக்கி, 'ஈது என்ன மாயமோ' என்று எண்ணினோம். 'அவைகளெல்லாம் 
சிவகுமாரராகிய சுப்பிரமணியக்கடவுள் செய்த திருவிளையாடல்' என்று பலரும் சொன்னார்கள். 'தேவர்கள் 
அந்தச் சிவகுமாரருடைய திருவிளையாடல்களை அறியாதவர்களாய் மயங்கும்பொழுது, அவர் அவர்களுடைய 
கண்களுக்கெதிரில் மற்றோர் வடிவத்தைக் காட்டி நின்றார். 

    தேவர்கள் அவரை இன்னார் என்று அறியாமல் வெகுண்டு போர்செய்தனர். குமாரக்கடவுள் அவர்கள் 
யாவரையுங் கொன்று பின்பு எழுப்பினார்' என்பர். 'அண்டங்கள் எல்லாமும், அவற்றிலுள்ள புவனங்களும், 
சீவராசிகளும், மற்றை வளங்களும், தேவர்களும், மும்மூர்த்திகளும், எல்லாமுமாகிய தம்முடைய விசுவரூபத்தை 
அந்நாளிலே தேவர்கள் காணும்படி கந்தசுவாமி காட்டினார்' என்பர். 'முன்னோர் நாளிலே பிரமனை விலங்கிட்டுச் 
சிறையில் வைத்து, தாமே உலகங்களைச் சிருட்டித்து, பின்பு பிதாவாகிய பரமசிவன் வந்து வேண்ட அவனைச் 
சிறை விடுத்தார்' என்பர். இவ்வாறு அறுமுகக்கடவுளுடைய செயல்களைக் கேட்பின் எல்லாம் அற்புதமாகும்! 

    'இனிமேற் பூமியை அகழுகின்ற விட்டுணுவாகிய பன்றியின் கோட்டை ஓர் கையாற்பற்றி வானுலகிற் சுற்றி, 
அக்கொம்பையொடித்து, தமது பிதாவாகிய சிவபெருமானுக்குச் சாத்தும்படி சுப்பிரமணியசுவாமி கொடுப்பார்' என்பர். 
பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த சிவபெருமானுடைய குமாரராகிய அறுமுகக்கடவுள் எல்லாரிலும் 
வலியவர் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ! விட்டுணுவினுடைய சக்கரப்படையைப் பதக்கமாகத் தரித்த 
தாரகாசுரனையுங் கிரவுஞ்சமலையையுங் கொன்றதே அதற்குச் சாட்சியன்றோ! மகாராஜனே, நிருமலராகிய 
அறுமுகக்கடவுளைச் சிவபிரானிடத்திலுதித்த சிறுவனென்று உருவத்தை நோக்கி இகழாதே; அவர் செய்கையாற் 
பெரியர். ஓர் கற்பகாலத்திற் சிவபெருமானுடைய திருப்புன்முறுவலிற் றோன்றும் சிறிய அக்கினியுமன்றோ 
உலகங்களெல்லாவற்றையும் அழிப்பது. 

    இந்திரனுடைய குறையையும், பிரமாவினுடைய குறையையும், விட்டுணுவினுடைய குறையையும் நீக்கி, 
அவர்களுடைய செல்வங்களைக் கொடுக்கும்படி சிவபெருமானே ஓர் குழந்தையைப்போல ஆறுதிருமுகங்களைக் 
கொண்டு வந்தாரென்பதன்றி வேறொன்றைச் சொல்லலாமோ! பிரமா முதலிய தேவர்களால் அறியப்படாத 
சோதிசொரூபராகிய அக்கடவுளைக் காங்கேயரென்றும், கார்த்திகேயரென்றும், மான்மருகரென்றும், தேவசேனா 
பதியென்றும், இப்படிப் பலநாமங்களைச் சொல்லி அழைப்பது அறியாமையன்றோ. பன்னிரண்டு புயங்களையுடைய 
அக்கடவுள் பானுகோபனுடைய மாயத்தினாலே தம்முடைய சேனைகள் மயங்கிய தன்மையை அறிந்து, உடனே 
அவர்கள் மீளும்படி சமுத்திரத்தில் விடுத்த வேற்படையை இந்த நகரத்திற் செலுத்தினால், யார் உயிரோடிருக்க வல்லவர். 

    வேற்படை தாரகனைக் கொன்றதென்றால், கிரவுஞ்ச மலையைப் பொடிபடுத்திய தென்றால், சுத்தோதக 
சமுத்திரத்திலிட்ட வீரவாகுமுதலிய வீரர்களை மீட்டதென்றால், அந்த ஒப்பில்லாத வேற்படையைத் துதித்துக் குமாரக் 
கடவுளுடைய திருவடிகளை வணங்குவதன்றி, அக்கடவுளோடு போர்செய்வோமென்பது அறிஞர் கடனாகுமோ! 
சிவகுமாரருடைய பணியினால் இங்குவந்த தூதுவன் முன்பு இந்நகரத்தை யழித்தான். பின்னொருநாட் சேனையுந் 
தானுமாய்வந்து, பானுகோபன் உலையும்படி பொருது வென்று, அவுணசேனைக் கடலையுங் கடந்து சென்றான். 
அந்தவீரன் இன்றைக்கு வந்து போர்செய்ய என்றமையனாகிய பானுகோபன் தப்பி மறைந்து, மாயப்படைக்கலத்தைச் 
செலுத்தி அறிவை மயக்கிச் சுத்தோதக சமுத்திரத்திலிட்டான். 

    அந்த வீரவாகு அறுமுகக்கடவுள் விடுத்த வேற்படையினால் உணர்வுபெற்று மீண்டுவந்து, உன்னுடைய 
இந்நகரத்தை யழிப்பானென்றால், அவனை யார் வெல்லவல்லவர்! அழிவையும் பொருந்தானென்னில், அறிவிழந்து 
மயங்கி வீழ்ந்தாலும் எழுவானென்னில், அவனுக்குப் பிறர்செய்யும் மாயங்களும் அழியுமென்னில், தெய்வப்படைக் 
கலங்களுக்கும் எதிராகிய படைக்கலங்களைச் செலுத்துவானென்னில், அறிஞர்கள் பின்னும் அந்த வீரவாகுவோடு 
போர்செய்யக் கருதுவார்களோ! வீரவாகுவென்னு மொருவனால் இந்த நகரம் முழுதும் அழியும், அவுணர்களும் 
அழிவாரென்னில், தோற்றமும் இறுதியுமில்லாத அறுமுகக்கடவுள் போர்செய்ய நினைத்து வருவாராயின், 
எல்லாப் புவனங்களும் அழிந்திடாவோ! 

    பன்னிரண்டு திருக்கரங்களைக் கொண்ட அக்கடவுள் போருக்கு வந்தெதிர்த்தால், நம்முடைய வரங்களும், 
படைக்கலங்கள் யாவும், மாயங்களும், வலியும், வெற்றியும், செல்வங்களும், கீர்த்தியுமாகிய இவைகளெல்லாம் 
ஊழிமுதல்வராகிய சிவபெருமானுக்கெதிர்ப்பட்ட முப்புரங்களையும் அவற்றிலுள்ள அசுரர்களையும் போலப் 
பொடிபட்டு அழியாவோ! சுப்பிரமணியக்கடவுள் தூரத்தில் இருந்துகொண்டு ஒற்றுவனை அனுப்பி நம்முடைய 
எண்ணத்தை ஆராய்ந்து, நாம் தேவர்களைச் சிறைவிடாமையை நோக்கி, இந்நகரத்தினுள் வந்திருந்து, தாம் நம்மீது 
போருக்கு ஒவ்வொருநாளும் வாராது, தம்முடைய சேனைகளோடு தூதுவனைப் போருக்கனுப்பி, பாசறையில் 
இற்றைநாள் வரையும் நம்மிடத்துக் கருணைசெய்திருந்தார். 

    இப்படி நம்மாட்டுக் கருணை கொண்டிருந்த அக்கடவுளுடைய திருவுள்ளத்தில் அழியாத கோபம் வருதற்குமுன், 
இப்பொழுதே தேவர்களுடைய சிறையை நீக்கி, நம்முடைய சுற்றத்தாரோடு விரைந்துசென்று அவருடைய திருவடிகளை 
வணங்கி, தீயேங்கள் செய்த பிழைகளைப் பொறுத்தருளும்' என்று பிரார்த்தித்தால், நிருமலராகிய அக்கடவுள் நாம் 
செய்ததீமைகள் பலவற்றையும் பொறுத்தருள்செய்து, தாமும் அளவில்லாத வரங்களைத் தந்து, சேனைகளோடும் 
இவ்விடத்தைவிட்டுப் போய்விடுவார். யாமும் உய்வோம் இதனைத் துணிந்து சொன்னேன். இதுவே உறுதி" என்று 
இரணியன் கூறினான்.

    இரணியன் அன்பினோடு இவ்வாறாகிய உறுதிகளைச் சொல்லுதலும், சூரபன்மன் வாயிலிருந்தெழுந்த 
புகைப்படலை திசையனைத்தும் போய் விழுங்கவும், உடல் வியர்க்கவும், பெருமூச்சுண்டாகவும்; இதழ்கள் துடிக்கவும், 
கண்கள் சிவக்கவும், மனம் பதைபதைக்கவும் கையோடு கையைத் தட்டிச் சிரித்து, கோபித்து, இவற்றைச் சொல்லுவான்: 
"ஒரு பாலகனுடைய வலிமையையும், தூதுவனாய் வந்த வீரவாகுவின் வலியினையும், என்னாற் செய்யப்படுவனவற்றையுஞ்
 சொல்லாநின்றாய். உனக்கு இதனைச் சொன்னவர் யாவர்! சொன்னவரை அறிவேனாயின் இப்பொழுதே அவருடைய 
உயிரைக் கவர்வேன்; அவருடைய குலமுழுதையுங் கொல்வேன். உலகமெல்லாவற்றையும் படைத்த பிரமன் எனக்குப் 
பஞ்சாங்கஞ் சொல்லிப் போவான். விட்டுணு என்றம்பியாகிய தாரகனுக்குத் தோற்றான்.

    இந்திரன் கடலிலுள்ள மீன்களை என்பணியினாற் கொண்டுவந்து தந்தான். சிவகுமாரனோ அழியாத 
என்னுடைய பேராற்றலை நீக்கவல்லனாவன். அரி பிரமேந்திராதி தேவர்களும், உலகிலுள்ள மற்றைக் கணத்தவர்களும், 
எல்லார்க்கு முதல்வராகிய பரமசிவனும் போரில் வந்தெதிர்த்தாலும், எனக்கழிவதன்றி, என்னை வென்று 
போவதுண்டோ! ஒரு சிறிதும் புத்தியில்லாத மைந்தனே, யான் பெற்ற வரத்தினை நீ யறிகிலையோ! வலியை 
விடுத்தாய், குலமுறை தவறினாய், அரசின் உயர்ச்சியை நீங்கினாய், பகைவர்களுக்குப் பயந்து இவற்றைச் 
சொன்னாய். இனி இப்படி ஒருவார்த்தையைச் சொன்னாயாயின், உன்னை விரைந்து யான் யமபுரத்திற் கனுப்புவேன்'' 
என்று கோபித்தான். 

    இரணியன் அவற்றைக்கேட்டு, "இக்கொடியவன் என்னுடைய சொற்களை உறுதியென்று கொண்டிலன். இவன் 
இறப்பது திண்ணம். இவ்வுலகில் யாவர் விதியை வென்றவர்! இவனுக்கு முடியுங்காலம் வந்தணுகியது. யாம் பல 
உறுதிகளைச் சொல்லியாவதென்னை?' என்று எண்ணி, "பிதாவே, நீ மிக்க அறிவுடையை. யான் சிலவறிந்தவன்போல 
உனக்குச் சொன்னேன். சிறுவனாதலின் என்பிழையைப் பொறுக்குதி" என்று சூரபன்மனுடைய கோபத்தையாற்றி, 
"இவன் இறக்குமுன் நான் இறப்பது நன்று" என்று துணிந்து, அவனுடைய கால்களை வணங்கி, கூறிய சபதத்தை 
யான் முடிப்பேன்" என்றான். அப்பொழுது, சூரபன்மன் "மகனே, நீ பகைவர்களுக்கு அஞ்சி நாம் பிழைக்கும் 
உபாயங்கள் பலவற்றையும் முன்பு சொன்னாய். பின் அவர்களை வெற்றிகொள்ளும்படி எண்ணியது என்னையோ?" 
என்றான். அதற்கு இரணியன் "உன்னுடைய மைந்தன் யான். அஞ்சுவேனோ?" என்று கூறினான். சூரபன்மன் அதனைக்
கேட்டு, இரணியனைத் தழுவி, "மகனே, இது நன்று நன்று! உன்னுடைய சேனைகளோடு புறப்பட்டுப் போருக்குச் 
செல்லுதி' என்றான்.

    இரணியன் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய கோயிலை அடைந்து, வச்சிர கவசத்தையிட்டு, 
தூணியைக் கட்டி, கோதையையும் புட்டிலையுந் தரித்து, வில்லையும் மற்றைப் படைக்கலங்களையும் எடுத்து, 
தும்பை மாலையைச்சூடி, ஆயிரம் சிங்கங்கள்பூண்ட ஓர்தேரில் எறி, போருக்குப் புறப்பட்டான். ஆயிரந்தோழர்களும், 
ஆயிரஞ்சேனாபதிகளும் போர்க் கோலங்கொண்டு சதுரங்க சேனைகளோடு தேர்களின் மேலேறிப் பக்கங்களில் 
வந்தார்கள். எண்ணூறு வெள்ளந்தேர்களும், எண்ணூறுவெள்ளம் யானைகளும், ஆயிரத்திருநூறு வெள்ளங் குதிரைகளும், 
ஆயிரத்திருநூறு வெள்ளம் பதாதிகளும் பக்கத்தில்வந்து சூழ்ந்தன. பேரிகை, துந்துபி, சங்கம் முதலிய வாத்தியங்கள் 
ஒலித்தன: கொடிப்புடைவைகளும் சேனைகளும் ஒலித்தன; பிசாசுகளும் காகங்களும் கழுகுகளும் கூத்தாடின. 
இரணியன் இவ்வாறு சேனா சமுத்திரங்களோடு தன்னகரத்தை நீங்கி, துயரம் மேற்கொளச் சென்று, பூதர்கள் 
நிற்கின்ற போர்க்களத்தை அடைந்தான். 

    முன்னாளிலே தம்முடைய நகரத்தைத் தேவர்களும் பிறரும் பார்த்துத் துண்ணென்று நடுங்குவதைக் 
கண்ட அவன் இப்பொழுது பூதர்களெல்லாரும் அஞ்சாது விரைந்து வந்து அதனை அழித்துக்கொண்டு நிற்பதையுங் 
கண்டு,நன்றென்று சிரித்து, தமது நகரம் அழிந்ததை நோக்கி, தணியாத கோபமடைந்து, வெய்துயிர்த்து, மிக வெயர்த்து, 
பக்கத்தில் வரும் சேனைத் தலைவர்களையுந் துணைவர்களையும் நோக்கி, "நீவிர் யாவரும் ஆயிரம்வெள்ளஞ் 
சேனைகளைத் தனித்தனி நாற்றிசைகளிலும் வகுத்து, நால்வகையாகப் பிரிந்து, பூதர்களை எதிர்த்துப் போர் 
செய்யுங்கள்' என்று ஏவினான். அவர்கள் அப்பணியைச் சிரமேற்கொண்டு, அவ்வாறே சேனைகளை நான்காகப் பிரித்து, 
பூதர்கண்மீது போர்செய்யப் போயினார். இரணியன் மேற்றிசையிற் செல்லும் ஆயிரம்வெள்ளஞ் சேனைகளை 
முன்னாகக் கொண்டு சென்றான்.

    இப்படி இரணியன் வருதலை வீரவாகுதேவர் கண்டு, "இங்கே போருக்கு வருகின்றவன் சூரபன்மனுடைய 
புதல்வர்களுள் ஒருவனோ, அல்லது அவனுடைய சுற்றமாயுள்ளானோ இவன் யாவன்?'' என்று ஐயுற்றார். அப்பொழுது 
நாரதமுனிவர் வந்து, "சூரபன்மன் இரணியன் என்னுந் தன் குமாரனை இங்கே போருக்கனுப்ப, அவன் மேற்றிசை, 
கீழ்த்திசை, வட திசை,தென்றிசையாகிய நான்கு திசைகளிலும் சேனைகளை முன்னே செலுத்தி வந்தடைந்தான். 
அவன் மாயையில் வல்லவன்; பல படைக்கலங்களை யுடையவன்; பற்பல மாயச் சூழ்ச்சி தெரிந்தவன். அவனை 
நீரல்லது வெல்கின்றவரில்லை. உமக்கு ஏற்றவாறு அவனோடு போர் செய்குதிர்" என்று கூறி மறைந்தார். 

    வீரவாகுதேவர் அதனைக் கேட்டு, "நன்று நன்று" என்று சிரித்து, இலக்கத்தெண்மரையும் படைத் 
தலைவர்களையும் பூதர்களையும் நோக்கி, "சூரபன்மனுடைய குமாரனாகிய இரணியன் தன்சேனைகளை 
நம்மெல்லாரையுஞ் சூழும்படி போருக்கு ஏவித் தானும் வருகின்றான். நீவிரும் விரைந்து நாற்றிசைகளிலும் 
போய் வெவ்வேறாக நின்று போர் செய்யுங்கள் என்று பணித்து, சேனைகளை நால்வகையாகப் பகுத்து, 
நான்கு திசைகளினுஞ் செல்ல ஏவி, தாம் இரணியன் வருகின்ற மேற்றிசையை நோக்கிச் சென்றார். 
அவுணசேனைகள் நான்கு திசைகளினுங் கடல்கள் சூழ்ந்தாற்போல ஒலியோடு வந்தணுகின. 

    பூதசேனைகள் போர்செய்யும்படி எதிர்த்தன. அவுணர்கள் மழு, கலப்பை, சக்கரம், தோமரம், தண்டம், 
குலிசம் முதலிய படைகளை விடுத்தார்கள். பூதர்கள் மராமரங்களையும், தண்டங்களையும்,மழுக்களையும், 
மலைகளையும் சிந்தினர். பூதர்கள் தலைகளும், கரங்களும், கால்களும் இழந்தார்கள். அவுணர்கள் கைமுதலாகிய 
அவயவங்கள் இழந்து, தேர்களும் குதிரைகளும் அழியப்பெற்று, இறந்து, இரத்தவெள்ளத்தின் மூழ்கினார்கள். 
பூதப்படைகளும் அவுணப்படைகளும் திசைகடோறுங் கலந்து இவ்வாறு போர்செய்யும்பொழுது, வீரவாகு தேவரால் 
முன்விடுக்கப்பட்ட வீரர்களும் அவுணப்படைத் தலைவர்களும் போர் செய்தார்கள். வீரவாகுதேவர் இரணியனுக்கு 
முன்வருஞ் சேனாசமுத்திரத்தைப் பார்த்துக் கோபித்து, வில்லை வளைத்து நாணொலி செய்து உரப்பினார். 
கடல்கள் நடுங்கின; ஆதிசேடன் தலை வளைத்தான்; அட்டதிக்கு நாகங்களுஞ் சலித்தன. 

    வீரவாகுதேவர் வில்லிற் பதினாயிரம் பாணங்களைத் தொடுத்து, காட்டின்மேல் மழைபொழிகின்ற 
மேகங்களைப் போல அவுண சேனைகளின்மேற் பொழிந்தார். யானைகளும், குதிரைகளும், தேர்களும், கொடிகளும், 
அவுணர்களுடைய தலை கை முதலாகிய உறுப்புக்களும் வெட்டுண்டன. சுழல் காற்றாற் கிளைகள் இற்று வீழ்ந்த 
சோலையைப் போல நால்வகைச் சேனைகளும் இவ்வாறழிந்தன. இரத்தவெள்ளம் கடலிற் பாய்ந்தது. நாய்களும், 
நரிகளும், உடற்குறைகளும், காளிகளும், பேய்களும் எங்கும் நெருங்கின. வீரவாகுதேவர் பாணமழையைச் சிதறி 
நிற்கும்பொழுது, அவுண சேனாவெள்ளங்கள் அக்கினியிற்பட்ட நெய்போல உடைந்து, குலை குலைந்து, 
உயிரும் உடம்புங் குறைந்தன.

    ஆயிரஞ் சிங்கங்கள் பூண்ட தேரின்மீது வருகின்ற இரணியன் இவ்வாறு தன்சேனைகள் அழிதலைக் 
கண்டு, வில்லில் ஆயிரம்பாணங்களை ஒரு தொடையிற் றொடுத்துச் செலுத்தி, ஆயிரகோடி பூதர்களை 
ஓரிறைப்பொழுதிற் கொன்றான். எஞ்சிய பூதப்படைகள் ஆலாகல விஷத்துக்குப் பயந்து ஓடிய தேவர்களைப் 
போலக் குலைந்து ஓடின. அதனைப் பூதப்படைத் தலைவர்களுள் நீலரென்பவர் கண்டு, வடவாமுகாக்கினி 
போலக் கோபித்து, இரணியனுக்கு முன்சென்று, அண்டங்களும் நடுங்கும்படி ஆர்த்தார். தேவர்கள் "இனிப் 
போர் உண்டு" என்றார்கள். 

    இரணியன் கோபித்து, ஒரு வேற்படையை நீலருடைய மார்பில் மூழ்கும்படி விடுத்தான். நீலர் வலிமை 
குறைந்து நில்லாதவராய், ஒரு மாமரத்தினால் இரணியனுடைய தேரை அழித்தார். தேர் அழிதலும், இரணியன் 
பிறிதோர் தேரிற்பாய்ந்து, வில்லை வளைத்து, நாண்பூட்டி, யுகமுடிவில் மேகங்களைப் போலப் பாணங்களைப் 
பொழிந்தான். அப்பாணங்கண் முழுவதும் நீலருடைய மார்பிற் புகுதலும், அவர் தோல்வியடையாதும், சிறிதும் 
அஞ்சாதும், அட்டகுலமலைகளன்றி ஒழிந்த மலைகளெல்லாவற்றையும் பறித்து இரணியன் மீதெறிந்து, 
கண்ணிமையாமல் உடம்பினின்றும் இரத்தம் வடிய நின்றார். இரணியன் தன்மீதெறிந்த மலைகளெல்லாவற்றையும் 
பாணங்களினால் அழித்தான். நீலர் கோபித்து, விரைந்துசென்று, இரணியனுடைய தேரை ஒருகையால் எடுத்தெறிந்தார். 

    அது விண்ணுலகிற் சென்றது. இரணியன் வேறோர் தேரின் மேற்பாயும்படி நினைத்துக்கொண்டு வந்தான். 
நீலர் அவனை எதிர்த்து, "நீ நிற்குதி நிற்குதி" என்று சொல்லிக்கொண்டு எதிரேசென்று, மார்பில் அடித்தார். 
அவன் நீலரைப் பற்றி வீசினான். நீலர் மீண்டுவந்து பாதத்தினால் அவனை உதைத்துருட்டி, இடியேறுபோல 
ஆரவாரித்தார். இரணியன் வழுக்கி வீழ்ந்த முகில்போல வீழ்ந்தான். நீலர் "இது இந்திரனுடைய வச்சிராயுதமோ?'' 
என்று கண்டோர் சொல்லும்படி இரணியன்மேற் பாய்ந்து, கால்களினால் மிதித்தார். அம்மிதியினால் நிலம் கிழிந்தது. 
இரணியனுடைய முடியும் மார்பும் பிளந்தன. அவன் வாயினின்று இரத்தம் வடிய மிகுந்த துயரமுற்று, 
செய்வதொன்றுமறியாதவனாய், வலிமையுங் கோபமும் இழந்து, உயிர்நீங்குநிலையை அடைந்து, 'நமக்கு 
இறுதிவந்தது. இனிச் செயற்பாலது யாது? எமக்கு ஓர் உறுதியாது?" என்று நினைத்து, "ஓர் மாயத்தைச் செய்வோம்' 
என்றெண்ணி,விரைந்து அதற்குரிய மந்திரத்தை உச்சரித்து, அன்பினோடு பூசனையை மனத்தாற்செய்து, தெய்வம் 
செய்யவேண்டியது இது என்று உறுதிசெய்து, அந்தத் தெய்வத்தைத் தியானித்தான். 

    அப்பொழுது, அவனை ஒத்த ஒருவடிவம் அப்போரில் வந்தணுகி, பல படைக்கலங்களை யேந்தி,
"என்னைப்போலப் போர் செய்பவர்கள் யார்?' என்று வீரம்பேசி, போர்செய்யும்படி வலிகொண்டு முன்வந்தது.
அந்த மாயவடிவம் வருதலை நீலர் கண்டு, விரைந்து அதற்கெதிர்சென்று, போரிலே அவுணர்கள் இட்ட ஒரு 
தண்டத்தை எடுத்து, அதனுடைய தலையில் மோதினார். தேவர்கள் அதனைப் பார்த்து, ''இரணியன் இவருக்குத் 
தோற்றான்" என்று நீலரை வியந்தார்கள். இரணியன் விடுத்த மாயம் அடியினால் வருத்தமுற்றவர்போல 
ஆகாயத்தில் எழுந்து சென்றது. நீலர் அதனைக் கண்டு பின்றொடர்ந்தார். அவ்வுரு மறைந்தது. 

    நீலர் மயங்கி, மிக யோசித்து, பின் அவ்வுருவைப் பூமியிற்கண்டு, "இது வஞ்சனையாகும்'' என்று 
அறியாதவராய், வெட்கத்தினால் மிகுந்த கோபத்தோடு அதனைக் கிட்டினார். அதுவும் தோள்களைக் கொண்டு 
போர்செய்யத் தொடங்கி, தூரித்ததாகும்; அணிமையதாகும்; எத்திசைகளினுந் திரியும்; பூமியிற்புகும்; வானுலகிற்புகும்; 
தேரிற்செல்லும்; குதிரையிற்செல்லும்; மலையிற்செல்லும்; சமுத்திரத்திற்செல்லும்; வடவாமுகாக்கினியிற் செல்லும்; 
மேகத்திற்செல்லும்; பாதலத்திற்செல்லும்; எழும்; முன்னேவரும்; பின்னேவரும்; இடத்தில்வரும்; வலத்தில்வரும்; 
போரைச் செய்யும்; நிலையின்றித் திரியும். அதனியல்பு முழுவதையும் யார் சொல்ல வல்லவர்! கண்டோர் மயங்கும்படி 
இவ்வாறு வருகின்ற மாயாசொரூபத்தை நீலர் தொடர்ந்து திரிந்து, வலிகுறைந்து உலைந்து, கால்களுந் தளர்ந்து, 
இரணியனுடைய கல்வித்திறத்தைப் புகழ்ந்து, "இனிச் செய்வதென்னை?'' என்றெண்ணி வெகுண்டு, தான்செய்யுமுபாயத்தை 
யோசித்துக்கொண்டு நின்றார். 

    அப்பொழுது ஒன்றாயிருந்த மாயாசொரூபம் பலவாகி, உலகமெங்கும் பரந்தது. அதனை நீலர் கண்டு,
''நன்று நன்று! இது மாயமாகும்" என்று நாணத்தோடு சொல்லி, சந்தேகந் தெளிந்தார். முன்பு நீலரால் உதையுண்டு 
இரத்தம்வடிய இறந்தவன் போலப் பூமியில் வீழ்ந்த இரணியன் வலிபெற்றெழுந்து, இதனைக்கண்டு, ஓர் தேரிலேறி, 
தன்னுடைய மாயத்தோடு கலந்து, ஓர் வில்லை வளைத்து, அக்கினியம்புகளைத் தெரிந்து நீலருடைய புயங்களிற் 
செலுத்தினான். அவர் அப்பாணங்கள்பட்டு, உடம்பு புண்படவருந்தி, மனம் மெலிந்து, போர்செய்தலுத்து மிகச்சலித்தார்.

    இரணியனுடைய மாயத்தையும், அதனால் நீலர் வருத்தமுறுவதையும் வீரவாகுதேவர் பார்த்து, கோபித்து, 
தேரைச் செலுத்திக்கொண்டு விரைந்து சென்று,வில்லை வளைத்து, நாணோதை செய்தார். அவ்வொலியைக் கேட்ட 
அவுணர்கள் இரிந்து ஓடினார்கள். வீரவாகுதேவர் அறுமுகப்பெருமானுடைய பாததாமரைகளைப் பலமுறை 
தோத்திரஞ்செய்து, அன்போடு அருச்சித்து ஞானப்படைக்கலத்தைத் திருக்கரத்தில் எடுத்து, இரணியனுடைய 
மாயையின்மீது செலுத்தினார். அந்தமாயம் சூரியன் எதிர்ப்பட அழிந்த இருட்டைப்போல நீங்கியது. மாயம்  
நீங்குதலும், தனித்தவனாய் வருந்தி நின்ற இரணியன் வில்லை வளைத்து, ஆயிரம் பாணங்களை வீரவாகுதேவர் 
மீது செலுத்தினான். அவைகள் அவருடைய மார்பிற்பட்டு நுண்ணிய துகளாய் மீண்டன. தேவர்கள் அதனைக் 
கண்டு கையெடுத்து ஆர்த்தார்கள். 

    வீரவாகுதேவர் நூறு பாணங்களைச் செலுத்தி, இரணியனுடைய கொடியையும், வில்லையும், கவசத்தையும் 
அழித்தார். இரணியன் வேறொருவில்லை எடுத்தான். வீரவாகுதேவர் ஆயிரம் அம்புகளைத் தூண்டினார். அவைகள் 
இரணியன் எடுத்த வில்லையும், பாணங்களையும், அப்பறாக்கூட்டையும், தேரையும், பாகனையும் அழித்து, 
அவனுடைய மார்பைப் பலதுளை செய்தன. இரணியன் பிறிதொரு தேரிற் பாய்தலும், வீராதி வீரராகிய வீரவாகுதேவர் 
பாணங்களால் அதனையும் அழித்து, அவன் பின்னரும் ஏறுதற்கமைந்து நின்ற தேர்களெல்லாவற்றையும் 
நூறுநூறு பாணங்களால் அழித்தார்.

    இரணியன் வலிமையிழந்து மயங்கி ஏங்கி, இதனை எண்ணினான்: "துன்பமுற்ற எனக்கு இப்பொழுது 
முடிவுவந்தது. இவனால் என்னுயிர் நீங்கும். இது என்னோடு தீர்வதோ! இனி என்றந்தையாரும் இறத்தல் நிச்சயம். 
அவர் இறந்தபொழுது அவருடைய அந்திய கருமத்தைச் செய்தற்கு யாருமில்லை. இந்நகரிலுள்ள நம் சுற்றத்தார்களும் 
இறந்தார். இறவாதிருக்கின்றோரும் இனி இறப்பர். இஃதுண்மையே. யான் உறுதிகள் பலவற்றைச் சொல்லவும் 
அவற்றைச் சிறிதும் உட்கொள்ளாத என்றந்தை இறக்குமுன் யான் இறத்தலே முறை. யான் இறவாதொழியின் 
என் மனத்துயர் நீங்குவதோ! ஆயினும், என்பிதா இனி இறந்தால் அந்தியகருமஞ் செய்வதற்கு ஒரு புதல்வரு 
மில்லாதொழியின், உலகத்தில் வசையுண்டாகுமே. புத்திரனைப் பெறுகின்றதும், மன அன்போடு வளர்ப்பதும், 
பிதா இறந்தபொழுது தம்முடைய குலாசாரத்துக்கேற்பத் தீக்கடன் முதலாயினவற்றைச் செய்தற்கேயன்றோ! 

    போரில் நான் இறந்தால் எனக்குக் கீர்த்தி உண்டாகும். இறவாதொழிவேனெனில், 'இவ்வுடம்பைப் 
பொருளென்று தாங்கி உய்ந்தான்' என்று வசையுண்டாகும்; என்னுடைய வலிமையும் அழியும். யான் போரில் 
இறத்தலால் எனக்குப் புகழ் உண்டாமேயாயின், 'இவன் தீக்கடன் முதலியன செய்யப் புத்திரன் இலனாயினான்' 
என்று என்பிதாவை வசைவந்தடையும். அது முறையன்று. என்னை வசையெய்தினுமெய்துக. பிதாவினிடத்து 
அது வருதல் அழகிதன்று" என்று இரணியன் தான் செய்யத் தகுவதை நினைத்து, "என்னுயிரைப் பாதுகாத்துப் 
போவதே முறை' என்று எண்ணி,விரைந்து மேலெழுந்து,மேகமண்டலத்தில் மறைந்து, ஒரு தெய்வ மந்திரத்தை 
நினைத்தான். 

    நினைத்தலும், தன் உருவம் அருவமாக, தன்னை யாவருந் தெரிதற்கரிய தன்மையால் மீனுருக்கொண்டு 
கடலுண் மறைந்து, "யான் இனி நகரத்துக்குச் செல்லேன். இனி நிகழ்கின்றவற்றைக் காண்பேன். என்றந்தையின்
கடனை முடிக்குமளவும் இக்கடலில் இருப்பேன்" என்றெண்ணி அங்கேயிருந்தான். அப்பொழுது சூரியோதய மாயிற்று.
வீரவாகுதேவர் ஒளித்தோடிய இரணியனுடைய தன்மையைப் பார்த்து, "நம் பகைவன் தோற்றுச் சமுத்திரத்தில் 
ஒளித்தோடினான்' என்று வெற்றிச்சங்கை ஊதினார். பூதர்கள் புகழ்ந்து, வாழிய என்று ஆர்த்தார்கள். தேவர்கள் 
ஆசிகூறினார்கள். பூதவீரர்கள் அங்குநின்ற அவுணசேனைகளைக் கொன்றார்கள். 

    போரைப்பார்த்து நின்ற தூதுவர்கள் மனோகதியும் பிற்படச் சூரபன்மனுடைய கோயிலையடைந்து, 
அவனை வணங்கி,"மகாராசனே, உன்னுடைய குமாரனாகிய இரணியன் போருக்கு ஆற்றாதவனாய், தான் உய்தற்கோ,
 வீரவாகு முதலிய வீரர்களை ஓர் சூழ்ச்சியாற் கொல்லுதற்கோ, சமுத்திரத்தில் ஓடி மறைந்தான்.'' என்று சொன்னார்கள். 
அதனைக் கேட்ட சூரபன்மன் குன்றி, வெள்கி, கொடுங் கோபங்கொண்டு, ஒரு வார்த்தையும் உரைத்திலன். 
அப்பொழுது குமாரனாகிய அக்கினிமுகன் அவனிடத்து வந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            அக்கினிமுகாசுரன் வதைப்படலம்.

    அந்த அக்கினிமுகன் திக்குப்பாலகர்களையும், திக்குயானைகளையும், சூரியனுடைய தேரையும், அதிற்கட்டிய 
குதிரைகளையும் முன்னாளிற் கொணர்ந்து வட்டாடிய வலிமையை உடையான்; கருப்பவதியான நாண்முதலாகப் 
பதுமகோமளை யென்னுந் தாயினுடைய உடல்முழுதும் அக்கினி சிந்துதலும், மாயவள் வந்து "இவளிடத்திற் பிறக்கின்ற 
இக்குமாரன் அக்கினிமுகன்'' என்று கூறிய காரணப்பெயரையுடையான்; பிரமவிட்டுணுக்களுடைய அன்னத்தையும் 
கருடனையும் விளையாடும்படி முன்னாளிற் கொண்டுவந்த வலியினையுடையான்; தன்றமையன் சூரியனைச் 
சிறையிட்டதை அறிந்து, சந்திரனைப் பிடித்துப் பலநாட் சிறைசெய்தவன்; தெய்வப் படைக்கலங்களையுடையவன்; 
பஞ்சராவணர்களிடத்துளதாகிய வலிமையினையுடையான்; வஞ்சனையிலும் மாயத்திலும் வல்லான்; எந்தப் 
படைக்கலங்களை விடுப்பினும் அழிக்கவல்லவன். 

    இவ்வியல்பினையுடையனாகிய அக்கினிமுகன் என்னுங் குமாரன் சூரபன்மனுக்கு முன்பு வந்து, 
அவனுடைய கால்களை வணங்கி, "என்பிதாவே, நீ என்ன காரணத்தினால் மெலிவுற்றாய்'' என்று வினாவினான். 
சூரபன்மன் மனத்துயரோடு இவற்றைச் சொல்லுவான்: "முன்பு மாயையினாலே தேவர்கள் பொருட்டு இங்கே தூதுவந்த 
வீரவாகு வென்பான் இப்பொழுது நம்மை யெண்ணாது மதிலைத் தாண்டி இந்நகரினுள் வந்து, அது வேகும்படி 
நெருப்பைக் கொளுத்தினான். யான் அதனைத் தணிக்கும்படி சத்தமேகங்களையும் அனுப்பினேன். அவைகள் 
மழையைப் பொழிந்து அந்நெருப்பைத் தணித்தன. வீரவாகு அதனைப்பார்த்து, ஊழித்தீப்படையை விடுத்து,
 அம்மேகங்களின் வலியை அழித்தான். நான் அதனை அறிந்து இரணியனைப் போருக்கு அனுப்பினேன். 
அவன் சேனைகளோடு சென்று போர்செய்து, பகைவர்களுடைய வலிமையைக் கண்டு அவர்களுக்குத் தோற்று, 
சமுத்திரத்திற் புகுந்தொளித்தான். நம்முடைய சதுரங்கசேனைகளும் அழிகின்றன. நகரத்தை உங்கு வந்த தூதுவன் 
அழித்தான். மகனே, இங்குள்ள நிகழ்ச்சி இது" என்று கூறினான்.

    அக்கினிமுகன் சூரன் சொல்லியவைகளைக் கேட்டு, "ராசாதி ராசனாகிய நீ மனத்தில் நினைத்து இவ்வாறு 
கோபஞ்செய்தற்கு அந்தத் தூதுவன் அத்துணை வலியனோ? எதற்காக அவனுடைய வலியை நீ ஒருபொருளாக 
மதிக்கின்றாய், தூதுவனையும் மற்றை வீரர்களையும் பூதர்களையும் வென்று, உன்னிடத்து மீண்டு வருவேன். 
விடைதந்தருளுதி" என்று கூறினான். ''மகனே, நல்ல காரியத்தைச் சொன்னாய், நீ போருக்குச் சென்று வீரவாகுவை 
வென்று வருவாய்'' என்று சொல்லிச் சூரன் விடைகொடுத்தனுப்பினான். அக்கினிமுகன் வணங்கி விடைபெற்றுக்கொண்டு, 
தன்னுடைய கோயிலை அடைந்து, கவசத்தையிட்டு, விரலிற் புட்டிலைத் தரித்து, தன்பிதாமகியாகிய மாயவள் 
கொடுத்த வில்லையும், தெய்வப்படைக்கலங்களையும் எடுத்து, விரைந்து தேரிலேறி, கண்களிற் கோபாக்கினி சிந்தப் 
புறப்பட்டு, நகர்ப்புறத்தில் வந்தான். 

    தூதுவர்களுடைய சொல்லைக்கேட்டு, ஆயிரம் வெள்ளம் யானைகளும், ஆயிரம்வெள்ளந்தேர்களும், இரண்டாயிரம் 
வெள்ளங் குதிரைகளும், அளவிறந்த அவுணவெள்ளங்களும் போருக்கெழுந்தன. அக்கினிமுகாசுரன் மானம் மேற்கொண்டு,
 'பகைவர் யாவரையும் யான் ஒர் நாழிகையிற் கொல்வேன்'' என்று கூறி, அணியிற்சிறந்த நால் வகைச் சேனைகளோடு 
போருக்குப் போயினான். பறையின் ஒலியினால் மேகங்கள் வீழ்ந்தன. பூதூளியினாற் கங்காசலம் வற்றியது. ஆயுதங்களும் 
ஆபரணங்களும் பிரகாசித்தன. கொடிகள் எங்கும் நெருங்கின. திசைகளெல்லாம் இருண்டன. சோமகண்டகன்,சோமன், 
சூரியசித்து, மேகன், பிங்கலன் முதலாகிய படைத்தலைவர்கள் பக்கத்திற் சூழ்ந்தார்கள். இவ்வாறாகிய சேனைகளோடு 
அக்கினிமுகாசுரன் பூதசேனைகளுக் கெதிரிற் சென்றான்.

    பூதர்களும் அவுணர்களும் எதிர்த்துப் போர்செய்தார்கள். பேரிகைகள் இடிபோல அதிர்ந்தன. துடிகளும் 
சங்கங்களும் ஆர்த்தன. ஆகாயத்திலுள்ள நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன. பூமி பிதிர்ந்தது. அண்டகோளகை பிளந்தது. 
அவுணர்கள் வேற்படைகளை விடுத்தார்; வாட்படைகளை வீசினார்; பிண்டிபாலம், மழு, தண்டம் முதலிய 
ஆயுதங்களை வீசித்தாக்கினர். பூதர்களில் அளவில்லாதவர்கள் இறந்தார்கள். இரத்த வெள்ளம் பாய்ந்தது. 
பூதர்கள் அவுணர்கள் மீது முத்தலைச் சூலம், தண்டம், முசலம், சக்கரம், மழு, மலை முதலாயினவற்றை எறிந்தார்கள். 
அவுணர்களும் அளவில்லாதவர்கள் இறந்தார்கள். குதிரைகளுடைய கால்களுந் தலைகளுந் தறிந்தன. தேர்கள் 
அச்சொடிந்தன. கொடிகள் அறுந்தன. யானைகள் வீழ்ந்தன. அவுணவீரர்கள் உடலம் வேறாய் இறந்தனர். 
கழுகுகளுங் காகங்களுஞ் செறிந்தன.பேய்களும் பூதங்களும் திரண்டன. இருதிறப்படைகளும் இவ்வாறு எதிர்த்துப் 
போர்செய்யும்பொழுது, இலக்கம் வீரர்களும் விற்களை வளைத்து, சரங்களைப் பொழிந்து சூழ்ந்தார்கள். 

    அவுணர்கள் ஒருவரும் நில்லாது உடைந்து ஓடிப்போயினார். அதனைக்கண்ட அக்கினிமுகாசுரன் 
சோமன், சோமகண்டகன், முதலாகிய படைத்தலைவர்கள் பலரை அனுப்பினான். அவர்கள் வந்து அம்புமழைகளைத்தூவி, 
இலக்கம் வீரர்கண்மேற்சென்று போர்செய்து நின்றார்கள். அதனை வீரபுரந்தரர் நோக்கி, அக்கினிதேவன் போலக் கோபித்து, 
இடியேறும் அஞ்ச ஒலித்து, தம்முடைய சேனைகளுக்கு முன்வந்து, கையிலுள்ள வில்லை வளைத்து, சரமழைகளைப் பொழிந்து, 
அவுணப் படைத்தலைவர்களுடைய தேர்களை அழித்து, சோமகண்டகனுடைய சிரசையறுத்துக் கொன்றார். மற்றை 
அவுணவீரர்கள் தேரின் மேல்வந்து வீரபுரந்தரரைச் சூழ்ந்து, அவருடைய திருமேனியெங்கும் இரத்தம் ஒழுகும் படி 
அம்புமழைகளைத் தூவினார்கள். வீரபுரந்தரர் கோபித்து, அவர்களுடைய விற்களையுந் தேர்களையும் அறுத்து வீழ்த்தி, 
நெற்றியிலும், மார்பிலும் தோள்களிலும் அம்புகள் பலவற்றை விடுத்தார். 

    அப்பொழுது, அக்கினிமுகனுக்கு ஆபத்துக்காலத்து உதவிசெய்யும்படி நின்ற வலியையுடையனாகிய 
மேகனென்பவன் ஓர் தண்டாயுதத்தைக் கையிலெடுத்து, வீரபுரந்தரருடைய தேர்ப்பாகனைக் கொன்று, ஆரவாரித்தான். 
வீரபுரந்தரர் தம்முடைய தேர்ப்பாகன் இறந்ததைப் பார்த்து, ஒரு வேற்படையை எடுத்து 'இதனால் இறப்பாய்' என்று ஏவினார். 
மேகன் அப்படையினாற் பூமியில் வீழ்ந்திறந்தான். மேகன் இறந்தமையைக் கண்ட அவுணப்படை த் தலைவர்கள் அஞ்சி 
ஓடிப்போயினார். அதனை அக்கினிமுகன் பார்த்து, சேனைகளோடு வந்து,வில்லை வளைத்து, நாணொலிசெய்து, 
பிறைமுகபாணங்களைத் தெரிந்து பூதசேனைகள் கெடும்படி பொழிந்தான். 

    பூதர்கள் தலை, கை, கால்,புயம்,மார்பு முதலாகிய அவயவங்களும், ஆயுதங்களும் அழியப்பெற்றார்கள். 
பூதப்படைத்தலைவருடைய தேர்கள் உருளை,கொடி,கூவிரம், குதிரை முதலாயின அழியப்பெற்றன. இரத்தவெள்ளம் 
ஒலித்துப் பாய்ந்தது. கவந்தங்கள் ஆடின. பேய்க்கூட்டங்கள் பாடின. நாய்கள் பரந்தன. காகங்களும், பருந்துகளும், 
கழுகுகளும் வந்து கூடின.இவ்வாறு பூதசேனைகள் அழியும்படி அக்கினிமுகன் போர்செய்தலை வீரபுரந்தரர் பார்த்து, 
அக்கினிகாலச் சிரித்து, வில்லை வளைத்து, கணைமழைகளைப் பொழிந்து, எதிர்த்தார். அக்கினிமுகனும் 
அவற்றிற்கெதிராக அம்பு மழைகளைப் பொழிந்தான். அவ்விருவருடைய பாணங்களுள்ளும் அக்கினிமுகன் 
செலுத்துகின்ற அம்புகள் வீரபுரந்தரர்மேல் வந்து படுகின்றன. வீரபுரந்தரர் அவன்மேல்விடுகின்ற அம்புகள் 
இரிகின்றன; அழிகின்றன. இவ்வாறு இருவரும் போர்செய்யும்பொழுது, அக்கினிமுகன் வீரபுரந்தரருடைய 
தேரையும் வில்லையும் அம்பறாக்கூட்டையும் அழித்து, நூறுபாணங்களை அவருடைய மார்பில் எய்து,
 அவுணர்கள் யாவரும் புகழும்படி ஆரவாரித்தான்.

    வீரபுரந்தரருடைய துணைவர்கள் எழுவரும் அக்கினிமுகனுடைய வலியையும், வீரபுரந்தரர் வலிமை 
குறைந்ததையும் கண்களிற் கோபாக்கினி யுண்டாகப் பார்த்து, வில்லை வளைத்து, அம்புகளைச் சிதறி, வசைகள் 
பலவற்றைச் சொல்லி, அவனுக்கெதிரே புகுந்தார்கள். அக்கினிமுகன் அவர்கள் விடுத்த பாணங்களெல்லாவற்றையும் 
விலக்கி, அவர்களுடைய புயங்களின்மேற் பல அம்புகளை மழைபோலச் சொரிந்து மறைத்தான். அப்பாணங்களால் 
மெலிவுற்ற ஏழுவீரரும் அக்கினிமுகனுடைய முகத்திலும் கைகளிலும் மார்பிலும் புயங்களிலும் ஆயிரமாயிரம் 
பாணங்களை அழுத்தி, அவனுடைய தேரையும் அறுத்தார்கள். அக்கினிமுகன் வேறொரு தேரிற்பாய்ந்து, ஏழுவீரர்களையுங் 
கோபித்துப் பார்த்து, ஒப்பில்லாத ஒரு படைக்கலத்தினால் உங்களுடைய உயிரைக் கூற்றுவனார் தெவிட்டும்படி 
கொடுத்து வீரவாகுவையுங் கொல்கின்றேன்'' என்று கூறினான். 

    அக்கினி முகாசுரன் இப்படிச் சொல்லிய பொழுது, வீரவாகுதேவருடைய தம்பியர்கள் எழுவரும் தனித்தனி 
அம்புகளைத் தூண்டி, அவனுடைய தேரையும் குதிரைகளையும் அழித்து, மார்பையுந் துளைத்தார்கள். அக்கினிமுகன் 
பிறிதோர் தேரிற்பாய்ந்து, விரைவிற் சிவப்படைக்கலத்தை எடுத்து, அன்பினோடு அருச்சனை செய்து தூண்டினான். 
அப்படைக்கலம் பூமியும் வானமும் வடவாமுகாக்கினியி னுருவமாக வந்தது. அதனை வீரர்கள் எழுவரும் பார்த்து, 
''இது அக்கினிப் படைக்கலம் போலும். இதற்கெதிராக வருணப் படைக்கலத்தை விடுப்போம்" என்று எண்ணி,
 தாமிறக்குஞ் செயலினராய்,யாவரும் அப்படையை விடுத்தார்கள். அந்த வருணப்படைக்கலங்கள் ஆகாயவழிக்கொண்டு 
செல்லுதலும், சிவப்படைக்கலம் எதிர்ந்து அவற்றை விழுங்கி,யாவரும் அஞ்சும்படி வலியுடன் சென்று, ஏழுவீரர்களையும் 
மெலிவுசெய்து, உயிரைக் கவர்ந்து மீண்டது. வீரர் எழுவரும் இறந்து திருக்கைலாச மலையை அடைந்தார்கள். 

    அக்கினிமுகன் அதனைப் பார்த்துக் களிப்பின் மிகுந்து ஆரவாரித்தான். வீரர்கள் இறந்தமையைப் பூதர்கள் 
நோக்கி, கைகளையுதறிக் கலங்கி வாய்புடைத்து இரங்கி வெருவி இரிந்துபோயினார். முன்னணியில் நின்ற வீரர்கள் 
அழிந்தமையையும், பூதர்கள் உலைந்து ஓடுவதையும், வீரவாகுதேவர் பார்த்து, வருந்தி, பூதகணங்களை "அஞ்சா தொழிவீர்" 
என்று திருக்கரத்தால் அமைத்து, நொடிப்பொழுதினுள் அக்கினிமுகனுக்குச் சமீபத்திற் போயினார். அக்கினிமுகன் 
அவரைப் பார்த்து வெகுண்டு, "பூதர்களையும் பிறரையும் யான் மதியேன், உன்னையே கொல்லும்படி வந்தேன். 
அந்தச்சமயத்தில் நீ இங்கே வந்தாய். விதியே உன்னை என்முன் கொண்டுவந்து விடுத்தது. போரிலே நம்மவர் 
பலரைக் கொன்றாய், பலரை வென்றாய். மிக்கதவறு செய்தவனாய் நின்றாய். வருதி. உன்னு டைய அரிய உயிருக்கு 
முடிவுகாலம் இன்றைக்கோ! முன்னே உன்னோடு போர்செய்து தோற்றவர்கள்போல என்னை எண்ணாதே. இனி 
ஓரிறைப் பொழுதில் உன்னுடைய இவ்வொருதலையையும் நம்மரசனாகிய சூரபன்மனுடைய பாதங்களிலே 
கொண்டுபோய் வைப்பேன். உன்னை யான் இங்கே வெல்லாதொழிவேனெனில், பெண்களுடைய கலவிப்போரில் 
அவர்க்கு வலியழிந்து தோற்கின்ற ஒரு ஆடவனல்லனோ!" என்று இவை போன்ற பலசொற்களைச் சொன்னான். 

    வீரவாகுதேவர் அதனைக்கேட்டு, கையோடு கையைத் தட்டிச் சிரித்து, அக்கினிமுகனுடைய முகத்தை நோக்கி, 
"முன் வந்தெதிர்த்த இரணியன் நம்மோடு போர்செய்து உருவத்தை மறைத்துச் சமுத்திரத்தில் ஓடியொளித்தான். 
அவன்றம்பியாகிய நீ எப்படி உய்ந்து போகின்றனையோ! நம்மோடு போர்செய்த அவுணவீரரெல்லாம் மாண்டார். 
பானுகோபன் ஒருவன் மாத்திரம் தப்பியோடினான்; அவனும் இனி இறப்பான். நீ உன்னுடைய அரிய உயிரைத் தோற்க
 இங்கு வந்தனையோ? நீ போரைச்செய்து இறக்கின்றனையோ? பேடித்தொழிலைப் படித்த இரணியனாகிய பிள்ளையைப் 
போலக் கடலிலோடி மறைந்து உயிர் பிழைக்கின்றனையோ? இவற்றுள் நீ செய்வதை விரைந்து யோசித்துச் சொல்லுதி. 

    இப் பூவுலகிலுள்ளார் காத்தாலும், அவுணர்கள் பலரும் வந்து காத்தாலும், நிலை பெற்றழியாத சூரபன்மன் 
வந்து காத்தாலும், தொலைவில்லாத வலியையுடைய மற்றெவர்வந்து காத்தாலும், உன்னைக் கொல்வேன்" 
என்றிவ்வாறு வீரவாகுதேவர் கூறினார். இப்படி வீரவாகுதேவர் சொல்லுதலும், அக்கினிமுகன் மிக்க கோபாக்கினி 
விரைவிற்சென்று மனத்தையலைக்க, திண்ணிய சிலையை வளைத்து, நாணோதை செய்தான். அவ்வொலியைக் 
கேட்ட சூரியனும் சந்திரனும் இரிந்தார்கள். நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன. ஆதிசேஷனும் உலைந்தான். 
"இவன் உலகமனைத்தையுங் கெடுத்தான்." என்று தேவர்கூட்டம் ஓடின. 

    அப்பொழுது அறுமுகக்கடவுளுக்கு அன்பராகிய வீரவாகுதேவர் தமது திருக்கரத்திலுள்ள வில்லைக் 
காலுற வளைத்து, நாணோதை செய்தார். அதனைக்கேட்ட பிரமா முதலிய தேவர்களும் அசுரர்களும் கலங்கி,
 "இக்காலந்தானோ உலகமுழுதும் அழியுங்காலம்" என்றார்கள். அக்கினிமுகன் பதினான்குபாணங்களை விடுத்து 
ஆர்த்தான். அவை தமக்கெதிரே வருமுன் வீரவாகுதேவர் பதினான்கு அம்புகளைச் செலுத்தி அவற்றை விலக்கி, 
இடிபோல உரப்பினார். அக்கினிமுகன் இருபது பாணங்களைத் தொடுத்தான். வீரவாகுதேவர் இருபதுபாணங்களைச் 
செலுத்தி அவற்றைத் தடுத்தார். அக்கினிமுகன் அதனைக்கண்டு, ஆயிரம் பாணங்களை வீரவாகுதேவருடைய 
நெற்றியிற் புகும்படி செலுத்தி, அவுணர்கள் புகழும்படி வெற்றிச்சங்கை வாயில் வைத்து ஊதினான். 

    வீரவாகுதேவர் ஆயிரம் அம்புகளை விடுத்து அக்கினிமுகனுடைய தேரையுங் குதிரைகளையும் வில்லையும் 
அழித்தார். அவன் அயலிலுள்ள வேறொரு தேரிற் பாய்ந்து,ஓர் தண்டாயுதத்தை வீரவாகுதேவர்மீது விடுத்தான். 
அவர் ஒர் மொட்டம்பைச் செலுத்தி, அது பொடியாய் விழும்படி பலதுண்டங்கள் செய்தார். அக்கினிமுகாசுரன்
 பிறிதோர் சிலையை வளைத்து வாயுப் படைக்கலத்தைச் செலுத்தினான். வீரவாகுதேவரும் அப்படையை விடுத்தார்.
 அக்கினிமுகன் யமப்படையை விடுத்தான். வீரவாகுதேவரும் அதனையே செலுத்தினார். அக்கினிமுகன் சூரியப்படையை 
விடுத்தான். வீரவாகுதேவரும் அப்படையை விடுத்து அதனை விலக்கி, நஞ்சு பாய்ச்சிய கூரிய நூறுபாணங்களை 
அக்கினிமுகனுடைய மார்பிற் செலுத்தி ஆரவாரித்தார். 

    அவைகள் மார்பிற் பட்டபொழுது அக்கினிமுகன் தேவர்கள் பாற்கடலைக் கடையும்பொழுது அதிற்கவிழ்ந்த 
மந்தரமலைபோல நிலைசோர்ந்து தேரின்மீது வீழ்ந்தான். அவனுடைய மார்பாகிய மலையினின்று இரத்தவெள்ளம்
 நதிபோலப் பெருகியது; உயிர் போகின்றதும் வருகின்றதுமாய் உலாவியது. மனத்தேற்றம் நீங்குகின்றது. அவனுடைய 
உயிரைக் கவர வருகின்ற யமன் அணுகுதற்கு அஞ்சினான். இப்படி இறந்தவன்போல மயங்கிய அக்கினிமுகன் பாம்பு 
இடியேற்றால் நெளிந்து அசைந்தாற்போலத் தேரினின்றும் எழுந்து, தெளிந்து இரங்கி, வலிமையில்லாதவனாகிச் 
சிறுமை அடைந்தான். இங்ஙனஞ் சிறுமையடைந்த அக்கினிமுகன் "பகைவர்களுடைய போரில் யான் தோல்வியடைந்தால் 
வந்து உதவிசெய்வாய்' என்று அற்றை நாட்காலையில் வெறியாட்டாடிப் பலியூட்டி வழிபட்ட தன்னகர்க் காளியை 
வரும்வண்ணம் நினைத்தான்.

    சூலப்படையையும் வாட்படையையும் ஏந்திய கைகளையும், சிவந்த கேசத்தையும், உங்காரத்தினால் 
உரப்புகின்ற சத்தத்தையும், கூற்றுவர்களும் அஞ்சுந் தோற்றத்தையும் உடைய காளியானவள், காளிகளும் 
கூளிகளும் செறிந்து தன்னைச் சூழவும், கூளிகளை எழுதிய கொடிகள் ஆகாயத்தை அளாவவும்,சங்கு முதலாகிய 
வாத்தியங்கள் ஒலிக்கவும், சிங்கவாகனத்தின்மேலேறி,விரைவிற் போர்க்களத்தையடைந்து, வீரவாகுதேவருடைய 
பாணங்களினால் வீழ்ந்தயர்ந்த அக்கினிமுகனையடைந்து, அவனை நோக்கி, "அஞ்சற்க' என்று அமைத்த 
கையினளாய், 'உன் பகைவர்களுடைய உயிரை யான் உண்பேன். நீ வருந்தாதே" என்று கூறி, பூதப்படைகள்மேற் 
சென்று போர்செய்ய நினைத்து, பஞ்சபூதங்களும் அஞ்சும்படி ஆர்த்தாள். 

    அவ்வொலியைக் கேட்டுப், பூதர்கள் வேர்த்து வருந்தி, மேற்சென்றெதிர்த்தார்கள். தேவர்கள் வெயர்த்து 
வருந்தினார்கள். அவளைச் சூழ்ந்த காளிகளும் கூளிகளும் சூலங்களையும் வேற்படைகளையும் மழுப்படைகளையும் 
பாணங்களையுஞ் சிந்தியும், மலைகளையும் மரங்களையும் எழுக்களையும் சக்கரங்களையும் வீசியும் போர்செய்தன. 
காளியானவள் இவ்வாறு இருதிறப்படைகளும் போர்செய்தலைப் பார்த்து, "பூதர்கள் யாவரையுங் கொல்வாய்'' என்று
 முத்தலைச் சூலத்தை வீசினாள். அப்படை அக்கினியையும் புகையையுங் கான்று,பல காளிகளையுண்டாக்கி, 
பூதசேனைகள் அஞ்சும்படி சென்றது. சூலத்தின் வலிமையை வீரவாகுதேவர் கண்டு, "இது பூதர்களுடைய உயிரை உண்ணும்' 
என்று கருதி, அதன்மேற் பதினான்கம்புகளைச் செலுத்தினார். அவைகள் அம்முத்தலைச் சூலத்தைப் பொடிபடுத்தின. 

    அதனைக் காளி பார்த்து, "இவன் யான் விடுத்த சூலத்தையும் பாணங்களினால் விரைவில் அறுத்து,
என்னுடைய வலிமையை மதியாதவனாய் இன்னும் உயிரோடு நிற்கின்றான். இவனுடைய உயிரை உண்பேன்" 
என்று கூறி, ஓரிமைப்பொழுதினுட் சிங்கவாகனத்தின் மேலேறிக்கொண்டு சேனைகளை நீங்கி, வீரவாகுதேவருக்கு 
முன்னே ஆர்த்துச்சென்று, "முன்னே யான் விடுத்த முத்தலைச் சூலத்தைப் பாணங்களாற் றடுத்து நின்றாய்;  
இன்னுமொரு சூலப்படை உளது; அதனைச் செலுத்துவேன்; இறப்பாய்; அதனைக் காத்தலரிது'' என்றாள். 
வீரவாகுதேவர் அதனைக் கேட்டுப் புன்முறுவல்செய்து, "சூலம் ஒன்றல்ல ஆயிரத்தை ஒருங்கே விடுத்தாலும் 
நின்று அவை முழுவதையும் பொடிபடுத்துவேன். பெண்ணே, நீ என்னுடைய வலிமையை அறிந்திலை' என்றார். 

    காளி கோபம்மூண்டு, உரப்பி, பூதசேனைகள் அஞ்சும்படி வேறுமோர் சூலப்படையை விரைந்து வீசினாள்.
 அப்படையைக் கண்ட தேவர்கள் இது நஞ்சமோ என்று ஓடினார்கள். சூரியசந்திரர்கள் பாம்போ என்று வருந்தினார்கள். 
சூலப்படை தம்முன் வந்ததை வீரவாகுதேவர் பார்த்து, ஆயிரம்பாணங்களைத் தூண்டி அதனைத் துணித்தார். 
சூலப்படை வெட்டுண்டு வீழ்தலும் காளி கோபித்து, "இவனுடைய சிரசை வாளினால் அறுத்து இரத்தத்தைப் பருகி 
உயிரைக் கவர்வேன்" என்று கூறி, சிங்கவாகனத்தினின்றும் இறங்கி, வீரவாகுதேவருக்கு முன்னே ஆரவாரித்து 
நஞ்சுபோலச் சென்று, கூரிய ஓர் வாட்படையைக் கையிலெடுத்துக் கொண்டு, அவருடைய தேரையடைந்தாள். 

    வீரவாகுதேவர் பார்த்து, "பெண்பாலாகிய இவளுடைய உயிரை நீக்குதல் தகுதியன்று" என்று நினைத்து, 
அவளுடைய வலியைத் தொலைக்க எண்ணி, இடிபோல உரப்பி, எட்டுக் கைகளையும் தமது ஒருகரத்தால் 
ஒடித்தாற்போலப் பிடித்து, மற்றொரு கரத்தால் மார்பில் அடித்தார். காளி வீழ்ந்து அவசமாயினாள். அவ்வடியினால் 
அவளுடைய மார்பு கிழிந்தது. அதினின்றும் வடிந்த இரத்த வெள்ளம் சமுத்திரத்தைப்போல ஒலித்துப் பெருகியது. 
அவள் அடைந்த துயரை யார் சொல்ல வல்லவர். வீரவாகுதேவர் அவளுடைய மார்பில் எற்றுதலும் பூமி கிழிந்தது, 
மலைகள் வெடித்தன, அண்டபித்திகையும் பிளந்தது. கடல்போலக் கான்ற இரத்தம் தன்னுடைய கரிய சரீரத்தை 
மறைத்தலால் அவள் காளி என்னும் காரணப் பெயரையும் மாற்றினாள். 

    பூமியில் அவசமாய் வீழ்ந்த அவள் ஐம்புலன்களும் மனம் முதலிய கருவிகளும் முன்போல வந்துசேரப்பெற்று, 
கண்விழித்து விம்மி, வீரவாகுதேவர் மார்பிலடிக்கத் தான் இறுமாப்பும் வீரமும் இழந்து வீழ்ந்ததையும் மிக மயங்கியதையும் 
மனத்தில் நினைந்து, நாணம் மிகுந்து, நடுங்கும் ஆவியினளாய், "நிர்மலராகிய அறுமுகக்கடவுளுடைய ஏவலால் வந்த 
வீரவாகுதேவரோடு போர் செய்தால் வெற்றியுண்டாகுமோ? புத்தியில்லாமல் யான் இங்கே போருக்கு வந்தேன்" 
என்று எண்ணி, வலிமையின்றி எழுந்தாள். எழுந்த அவள் தேரின்மீது நிற்கின்ற வீரவாகுதேவரைப் புகழ்ந்து,
"பெருமையிற் சிறந்த வீரரே, அக்கினிமுகன் இன்றைக்கு என்னை அருச்சித்துத் துதித்து எண்ணில்லாத பலிகளை 
யுதவி வேண்டினான். அந்த நன்றியை மறவாதவளாய் யான் இங்கே வந்தேன். உம்முடைய வலிமையையும் வீரத்தையும் 
சின்னங்களையும் உணர்ந்திலேன். போரில் முற்பட்டு உம்மோடு பொருது இந்த நிலைமையை அடைந்தேன். 
இனி இருந்த இடத்திற்குச் செல்வேன். இனிமேல் விரைந்து அக்கினிமுகனைக் கொல்லுதிர்; ஒழிந்துளோரையும் 
கொல்லுதிர்; அதன்மேல் பானுகோபனையும் சங்கரிக்குதிர் : அவுணர்களை வென்று அறுமுகக்கடவுளுடைய 
திருவருளைப்பெற்று மகிழ்ச்சி அடைகுதிர்; நீடூழிகாலம் வாழுதிர்; யான்கூறிய இவற்றையெல்லாம் பின்னே காணுதிர்' என்றாள். 

    இவ்வாறு காளி சொல்லி, வீரவாகுதேவரிடத்து விடை பெற்றுக்கொண்டு மீண்டு, சிங்கவாகனத்தின் மேலேறிச் 
சேனைகள்சூழத் தான் முன்னிருந்து வந்த இடத்திற்குச் சென்றாள். காளி வீரவாகுதேவரிடத்து விடைபெற்றுச் செல்லுதலும், 
அக்கினிமுகன் அங்கே நிகழ்ந்தவைகளெல்லாவற்றையும் பார்த்துக் கோபித்து, "இந்தக் கள்வனுடைய வலிமை நன்று" 
என்றுகூறி, மிகுந்தவலியை யுடையனாய், மேகமானது ஆகாயத்திற்கிடந்து இடியைக்கக்கி எழுந்தாற்போல விரைவிலெழுந்து 
சொல்வான்: "உயிர்கள் பலவற்றையுங் கொன்றுதின்று இரத்தத்தையும் கள்ளையும் பருகிச் சிறிதும் வயிறு நிறையப் 
பெறாமல் நீங்காத பசிப்பிணி மிகுந்து வந்த காளியாலோ பகைவர்களுடைய போர்களை யான்முன்வென்றேன். 
சூரன்சேய்க்குத் துணைகளும் வேண்டுமோ! சூலமும், தண்டும், வாளும், மழுப்படையும் கொண்டு பக்கத்திற் கூளிகள் 
சூழவிருக்கின்ற காளியினுடைய வலிமையைப் பரீக்ஷிக்கும்படி நினைத்து அழைத்ததன்றி, 'கந்தசுவாமியினுடைய 
படைகளை அவள் வெல்லுவாள்' என்று எண்ணினேனோ! 

    வாவிகளும், குளங்களும், நதிகளும், பிற நீர்நிலைகளும் நிறைவது பனியினாலல்லவே! அதுபோலத், 
தேவர்களை யேவல்கொண்ட சிறப்பையுடைய தமியேன் இங்கு வந்த காளியினாலோ வீரத்தன்மையை அடைவேன்! 
இனி ஒரு நொடிப்பொழுதினுள், என்றம்பியாகிய வச்சிரவாகுவைக் கொன்று தப்பியோடிய ஒற்றுவனுடைய 
வலிமையைக் கெடுத்து அவனுடைய உயிரை யமனுக்கு உணவாகக் கொடுப்பேன். அவனைக் கொன்றல்லது 
என்பிதாவாகிய சூரபன்மனுக்கு முன்பு செல்லுவதில்லை. இது என் வஞ்சினம்" என்றான்.

    அக்கினிமுகன் இவ்வாறுசொல்லி, சேனைகள் பக்கத்தில் வந்துசூழத் தேரிற்சென்று,ஓர் வில்லைவளைத்து, 
நூறுபாணங்களை வீரவாகுதேவர்மேற் றூண்டி ஆர்த்தான். அவனுடைய செயலை வீரவாகுதேவர் பார்த்து, 'இறக்கும்படி 
வந்தாய்போலும்; உன்முயற்சி அழகிது என்று கூறி, வில்லைக் காலுற வளைத்து, நூறு அம்புகளை விடுத்து, அக்கினிமுகன் 
விடுத்த பாணங்களெல்லாவற்றையும் அறுத்தார். அவன் சிறந்த நூறுசரங்களை விடுத்து, வீரவாகுதேவருடைய தேரையழித்து, 
தான் எண்ணிய வெற்றியையடைந்து, வெற்றிச் சங்கையூதினான். தேர் அழிதலும், வீரவாகுதேவர் வெகுண்டு, 
பதினான்கம்புகளை விரைவிற்றூண்டி, அக்கினிமுகனுடைய வில்லை முரித்தார். அவன் வேறோர் வில்லை வளைத்து, 
பற்களைக் கறித்து, 'இவனை இப்பொழுதே கொல்வேன்" என்று வஞ்சினங்கூறி, பிரமப்படைக்கலத்தையெடுத்து 
வீரவாகுதேவர்மேல் விடுத்தான். 

    வீரவாகுதேவர் அதனைப் பார்த்து, 'யானும் பிரமப்படைக்கலத்தைச் செலுத்தினால் எனக்கு வரும் 
ஊதியம் என்னை?' என்று சிந்தித்து, வீரபத்திரப்படையை யெடுத்து, மனத்தினால் வழிபட்டுச் செலுத்தினார். 
அது விரைந்துசெல்ல, பிரமப்படைக்கலம் நடுங்கி மிகவணங்கி, யாவரும் நகைக்கும்படி இரிந்தது. 
வீரபத்திரப்படை ஒரு தடையுமின்றிச் சென்று அக்கினிமுகனுடைய உயிரைக் கவர்ந்து தலைகளைத் தள்ளி, 
மின்போல வீரவாகுதேவரிடத்து மீண்டுசென்றது. அக்கினிமுகன் இறந்து வீழ்ந்தான். தேவர்கள் அதனைப்பார்த்து 
வீரவாகுதேவரை வாழ்த்தி, பூமழைகளைப் பொழிந்து, வஸ்திரங்களை வீசிநின்று கூத்தாடினார்கள். 
உடம்பிலணிந்த வஸ்திரங்களையும் நாணத்தையும் துறந்து உவகையால் உரையாடாமல் ஆர்த்த தேவர்கள் 
அற்றைநாட்பிறந்த குழந்தைகளைப் போன்றார்கள்.

    அக்கினிமுகன் இறப்ப, அவனுடைய படைவீரர்கள் இருபத்து நாலாயிரவர் வீரவாகுதேவரைச் சூழ்ந்து, 
கப்பணம் சக்கரம் வேல் மழு அம்பு முதலிய படைகளைச் சொரிந்து போர் செய்தார்கள். வீரவாகுதேவர் 
அதனைநோக்கி, கோபித்து, ஓர் வில்லை வளைத்து, விரைவில் ஆயிர நூறுகோடிபாணங்களை எய்து,அவுணர்கள் 
ஏங்க உரப்பினார். அவர் இவ்வாறு ஒருகணப்பொழுது இடைவிடாமல் ஊழிக்காற்றினும் வெம்மையாகப் 
பாணமழைகளைப் பொழிந்து திரிந்தார். அவுணப்படைத்தலைவர் எறிந்த படைகளும் எய்த அம்புகளும் முறிந்தன; 
துணிந்தன. புயங்களும்,மார்புகளும், கரங்களும், சிரங்களும், கால்களும் தறிந்தன. அவர்கள் இறந்தார்கள். 
யானைகளும் குதிரைகளுந் துணிந்து வீழ்ந்தன. தேர்நிரை முழுதும் அழிந்தன. சூழ்ந்த அவுணர்களும் அழிந்தார்கள். 
அப்போர்க்களத்தில் ஆகாயத்திலே பருந்துகள் மொய்த்தன. பூமியிலே தசைகளோடு இரத்த வெள்ளம் பாய்ந்தது. 

    அவுணர்கள் இறக்கும்பொழுது அவர்களுடைய வக்கிரதந்தங்களில் உண்டாகிய கோபாக்கினி காக்கைகளும் 
பேய்களும் உண்ணும்படி புலவோடுகூடிய நிணங்களைப் புழுக்கியது. யானைகள் காலும், துதிக்கையும்,தலையும்,
வாலும் வெட்டுண்ண, இரத்த வெள்ளத்துள் ஆமைபோலப் போவன. அவுணர்களுடைய உடம்பினின்று வடியும் 
இரத்தம் வெள்ளமாயெழுந்து, சங்கார காலத்தில் வடவாமுகாக்கினி சமுத்திரத்தை உண்டுலாவுவதுபோல 
அவர்களுடைய உடல்களை அள்ளிக்கொண்டு பாய்ந்தன. யானைகளினின்றும் குதிரைகளினின்றும் கால்கொண்டு 
பாயும் இரத்தம், மழைக்காலத்தில் மலைகடோறும் அருவிகள் பெருகிச்சென்றாற்போல ஆர்த்துச் செல்லும். 
இரத்தவெள்ளத்தில் வேல் வாள் முதலிய படைக்கலங்கள் மீன்கள்போல விளங்கக் கண்டு கடலிலுள்ள மீன்கள் 
அவற்றைத் தம்மினமென்றெண்ணி வந்தெதிர் கொள்வன. 

    காம்புகள் வெட்டுண்ட குடைகள் செவ்வானத்திற் பூரணசந்திரர்கள் செல்லுதல் போலச் செல்லும். 
இரத்தவெள்ளம் ஒலித்துக்கொண்டு செல்ல அதில் வாருண்டு போகின்ற தலைகளையும் தசைகளையும் 
உடல்களையும் பூதர்கள் தாம் கொன்ற அவுணவீரர்களுடைய குடராற்பின்னிய வலையையெறிந்து இழுத்தார்கள். 
நாய்களும் பேய்களும் பூதங்களும் காளிகளும் அப்போர்க் களத்தில் ஒவ்வோர் சாரிற்றிரிவன. தேரிலிறந்த 
அக்கினிமுகனுடைய சிரங்களினின்றும் இறந்த பாகனுடைய தலையினின்றும் இரத்தம் பாய்தல்,
அழிந்ததேரும் உயிருடையதாய் அவ்விரத்தத்தைப் பெற்றாற் போலும். அவுணர்களுடைய தேரிற்பூண்ட             
சிங்கங்கள் இறக்க, இரத்தவெள்ளம் அவற்றை வாரிக்கொண்டு கடலிற் சென்றது. அச்சிங்கங்களைத் தேரைகள் 
தம்மினமென்று எதிரேவந்து கூடிக் கத்துகின்றன. 

    இவ்வாறாகிய போர்க்களத்திற் பயந்து ஓடுகின்ற அவுணர்களிற் சிலர் இறந்த அவுணர்களுடைய 
தலை மலைகளில் தங்களுடைய கால்கள் தாக்குண்ணத் திரிந்தயர்ந்து இறந்தார். அவருட்சிலர் மழுக்களும், 
வேல்களும், வாள்களும், முத்தலைச்சூலங்களும் காலிற்பட வருத்தமுற்றார். சிலர் நிணமும், ஊனும் கலந்த புழுதியில் 
வழுகி அழுந்தியிறந்தார்கள். சிலர் பரந்த இரத்தவெள்ளத்தில் நீந்தி நீந்திப் பின் காலெழாது ஓய்ந்தார். சிலர் ஓடினார். 
சிலர் இறந்தார். சிலர் சிலர் காணுந்தோறும் காணுந்தோறும் வெளியிடமெல்லாம் வீரவாகுதேவருடைய 
உருவமாயிருத்தலால் மிகுந்த துன்பமாய் நிகழ ஏங்கி மாண்டார்கள். சிலர் பூதர்கள் தம்மைத் தொடர்ந்துவர அஞ்சி 
அவர்களுடைய கால்ளை வணங்கித் தம்மிடத்துள்ள படைகளெல்லாவற்றையு மெறிந்துவிட்டு ஓடிப்போய்ப் பின்பு 
இறந்தவர்களுடைய கையிலுள்ள படைகளை எடுத்துக்கொண்டு போயினார்கள். 

    மரணத்துக்குப் பயந்தவர்கள் சிலர் கையிலுள்ள படைக்கலங்களெல்லாவற்றையும் எறிந்துவிட்டு, 
தண்ணுமை உடுக்கை பேரி முதலாகிய பல வாத்தியங்களை ஒலித்துக்கொண்டு நின்றார்கள்.
தம்முயிரில் விருப்பமுடையர்களும், குதிரைமுகத்தையும் யானைமுகத்தையும் உடையர்களுமாகிய சில அவுணர்கள் 
இரத்தவெள்ளத்திற் றங்களுடைய சிரங்களை நீட்டி, மற்றை அவயவங்களெல்லாவற்றையும் அதனுள் மறைக்கின்றார்கள். 
வலியில்லாத சில அவுணர்கள் போரிலே தோற்றுப் போய் நரிகளினுருவத்தை யெடுத்து இறந்த அவுணர்களுடைய 
மாமிசத்தை உண்ணும்பொழுது நாய்கள் வந்து பற்ற நடுக்கமுற்றார்கள். பூதர்கள் தம்மைத் தொடர்தலும் அவருக்குப் 
பயந்தோடிய சில அவுணர்கள் நாயினுருவெடுத்துச் செல்ல, அங்குள்ள நாய்கள் வந்தடர்த்தலும் அஞ்சினார். 
இறந்த அவுணர்களன்றி எஞ்சிய அவுணர்கள் இன்னும் பலவாறாக அஞ்சியோடுதலும், மகேந்திரபுரி கடலுடைந்தாற்போல 
ஒலியுண்டாக அரற்றியது.

    இவ்வாறாக நிகழும்பொழுது, எங்கும் பிரிந்து போய் யுத்தஞ்செய்த இலக்கம் வீரர்களும், பூதர்களும் 
போர்க்களத்தினடுவே நிற்கின்ற வீரவாகுதேவரை வந்து சேர்ந்தார்கள். அக்கினிமுகன் எய்த அம்புகள் மார்பை 
ஊடுருவ வலிமையிழந்து துன்பத்தின் மூழ்கி அழிந்த வீரபுரந்தரர் எழுந்து ஒருபுடையில் வந்தார். 
வீரவாகுதேவருடைய மருங்கில் இவர்களெல்லாரும் நெருங்கிவந்து நிற்கும்பொழுது, அவர் தம்முடைய 
தம்பிமார்களெழுவரையுங் காணாதவராய் வருந்தி, "பகைவர்களோடு போர்செய்த என்றம்பியரெழுவரும் 
இறந்தனரோ, மயங்கினார்களோ, அவர்யாண்டுக் கிடந்தார்கள்? சொல்லுங்கள்'' என்று வினாவினார். 
அப்பொழுது, உக்கிரர் என்னும் பூதப்படைத்தலைவர் ''உம்முடைய தம்பியர்களெழுவரையும் அக்கினிமுகன் 
கொன்றான். அவர்களுடைய உயிரைக் கூற்றுவன் கொண்டுபோயினான். அவர்கள் இறந்தவிடத்தைச் சொல்வேன். 

    நாம் நிற்கின்ற இவ்விடத்திற்குமுன்னே நூறுயோசனைக்கப்பால், பெரிய ஒரு மரம் உளது. அங்கே 
உம்முடைய தம்பியர்கள் இறந்தார்கள். உண்மை" என்றார். வீரவாகுதேவர் அதனைக்கேட்டு மிகவுந்துன்புற்று, 
தம்மைச் சூழ்ந்தவர்கள் உடன்வர நூறுயோசனை தூரத்துக்கப்பால்  ஆலமரத்தினிழலிலே தம்பியர்கள் 
கிடக்குமிடத்தை அடைந்து, சிவந்த கண்கள் அக்கினிகால, பிணங்களாகிய சேக்கையின் மீது அவர்கள் இறந்து கிடத்தலைக் 
கண்டார். கண்டு, கண்கள் இரத்தநீரைக் கால வீழ்ந்து தழுவிக்கொண்டு, வாய்விட்டுக் கூவி, அரற்றி உயிர்த்து, 
திருமேனிவியர்த்து, கண்டோர் உயிர் உண்டோ இல்லையோ என்று சொல்லும்படி சோர்ந்து, பின் உணர்வுவரப்பெற்று, 
இவ்வாறு இரங்கலுற்றார்:

    " என்றம்பிமாரே தம்பிமாரே என்பார். 'என்றம்பியர்களே என்னைத் தழுவிக் கொள்ளும்' என்பார். 'ஐயோ 
எங்கே சென்றீர்' என்பார். 'யான் வெம்பினேன்' என்பார். 'என்னைவிட்டகன்றீரோ' என்பார். 'நான் உம்மை நம்பினேன்' என்பார். 
'நான் உமக்கு அயலோ' என்பார். 'அக்கினிமுகனா உங்களைக் கொல்லவல்லன்' என்பார். 'நீவிர் இவ்வாறு இறந்தீ ரென்றால்
 தமியேன் என்செய்வேன்' என்பார். 'மேலாகிய படைக்கலங்களை ஏந்தி என்னைச் சூழ்ந்து துணையாய்வந்த உங்களைத் 
தோற்று யானே உய்ந்தேன் போலும்' என்பார். 'அம்மவோ விதியே' என்பார். 'ஆ உனக்கு இது தகாது' என்பார். 
'என்னுயிரே விரைவிற் செல்லாது இன்னுமிருத்தியே' என்பார். 'நற்குணமுடையாரோடு சிலர் இவ்வுலகிற் பிறப்பரா' என்பார்.
 'எம்மை அடிமையாகவுடைய சுப்பிரமணியக்கடவுளுக்கு இனி என் சொல்வேன்' என்பார். 'சிறந்த என்றம்பியர்கள் இறக்க 
வில்லோடு யான் திரிவேனென்னில் ஆர் எனக்கு ஒப்புண்டு; என் ஆற்றல் அழகிது' என்பார். 

     "சூரருடைய கிளையை யெல்லாம் விரைவிற்சென்று சூழ்ந்து வேரோடு அழித்தாலன்றி என்கோபந் தீருமோ' 
என்பார். 'வில்வலிமையிற்சிறந்தவர்களாகிய என்றம்பியர்கள் இறக்கும்படி அக்கினிமுகன் எந்தப் படைக்கலத்தைத் 
தூண்டினானோ' என்பார். 'அந்தப்படைக்கலத்தை அவனுக்குக்கொடுத்த தேவர்யாரோ அறியேன்' என்பார். 
'பிழையாத வேற்படையையுடைய அறுமுகக்கடவுளுக்கு, தீவினையுடையோமாகிய யாமும் அடியரோ' என்பார்.         
'அசுரர்கூட்டங்களையெல்லாம் கொல்வேனோ' என்பார். 'இவ்வூரை அக்கினிக்குக் கொடுப்பேனோ' என்பார். 
'சிவப்படைக்கலத்தைச் சூரபன்மன்மீது விடுவேனோ' என்பார். 'அந்தோ! வேற்படைக்கு அஞ்சினேன்' என்பார். 
'யான் இத்துயரிற்படுவேனோ' என்பார். 'பாவியேன் செய்வதென்னை' என்பார். 'என்றம்பிமார்களைக் கொன்றமையினால்
 என்னோடு பொருதிறந்த அக்கினிமுகன்பாலதன்றோ வெற்றி' என்பார். 'என்னுடைய வீரம் மாசுண்டது' என்பார். 

    'யான் இறந்திலேன்,தம்பியரிடத்து அன்புடையர்போல வறிதாகப் புலம்பினேன்" என்பார். தமது வில்லைப் 
பார்ப்பார். வேற்படையைப் பார்ப்பார், மற்றை ஆயுதங்களைப் பார்ப்பார், பாணத்தைப் பார்ப்பார், வீரச்சொல்லைப் 
பார்ப்பார், வந்து சூழுகின்ற பழியைப்பார்ப்பார், கல்லென்னுமொலியுண்டாகப் பற்களைக் கறிப்பார், கவலைப்படுவார்.
இவ்வாறு சகித்தற்கரிய துயரையடைந்து வருந்திய வீரவாகுதேவர் எளியராயிருந்தாரல்லர்; ஏங்கி யாதுமோர் 
செயலுமின்றி வருந்தினாரல்லர்; காட்டில் மருந்தினுக் குழன்றாரல்லர்; விரைந்து தம்பியர்களை எழுப்புதற்கு ஓர் 
உபாயத்தை எண்ணினார். "அக்கினிமுகன் பிரமப்படைக்கலம் விட்டுணுப்படைக்கலம் முதலாகிய படைகளுள் 
ஒன்றை என்றம்பிய ரெழுவர்மீது விடுத்தானாயின், அவர்களுடைய உயிரையுண்டவன் யமனன்றோ" என்று 
நினைத்து இவற்றைச் சொல்லலுற்றார். 

    "கூற்றுவன் என்னுந் தமியோன் இவ்வுடலுக்கும் உயிருக்கும் இன்பத்தை விரும்பி உழலுகின்ற தேவர்களைப் 
போலவும், அசுரர்களைப்போலவும், நன்னெறியிலொழுகாத பிறரைப்போலவும் என்றம்பியர்களை நினைத்தானோ! 
நம்மவர்களுடைய உயிரை இவன்றானோ உண்பான். தேவர்களுடைய எந்தப்படைதானும் அறிவைக்கெடுப்பதன்றி 
நம்மவர்களுடைய உயிரையுண்ணமாட்டாது. என்றம்பியர்களைக் கொன்றவன் அக்கினிமுகனல்லன். பகைவனாய்க் 
கொன்றவன் தானல்லவா! ஞானத்திற் கிருப்பிடமாய் ஓரெழுத்தாய் ஞானிகளால் எண்ணப்படுகின்ற பிரணவத்தின் 
பொருளைக்கேட்டுப் பிரமாவைச் சிறையிலிட்டுப் படைப்புத் தொழிலைச் செய்த முதற்கடவுளாகிய சுப்பிரமணியப் 
பெருமானுடைய தம்பியர்களென்பதனை அந்த யமன் அறியானோ! 

    பதினாறு வயசில் சிவநாமங்களைச் சொல்லிச் சிவார்ச்சனையை விடாத மார்க்கண்டேயருடைய உயிரைக் 
கவரும்படி அணுகும்பொழுது, அக்கடவுள் சினந்து திருவடியினால் உதைத்த தழும்பு இன்னமுஞ் சிறிதும் மாறிற்றில்லை; 
கூற்றுவன் அதனையும் மறந்தானே! தவறி விழுந்த ஒரு பூவை அன்பினாலே 'இது சிவார்ப்பணமாகுக' என்று                 
சொல்லிப் பின் இறந்த பதிதனாகிய பார்ப்பானுடைய உயிரைக் கவர்ந்தமையினால், சிவபெருமான் சூலத்திலேற்ற             
அதிற்சுழன்று பலநாட்டூங்கியதை யமன் அறியானோ! முன்னோர் காலத்தில் ஓர் நாண்முழுதும் ஊணும் உறக்கமுமின்றிப் 
பரமசிவன் மீது வில்வத்தைச் சொரிந்த தீயனாகிய ஓர் வேடுவனைத் தன்னுடைய தூதுவர்கள் கடுமொழிகளைச் சொல்லிப் 
பற்றுதலும், அதனைக்கண்டு யாங்கள் மிக அடிக்க அவர்கள் அஞ்சி ஓடிப்போனதை யமன் அறியானோ! 

    முன்னாளிலே தன்புதல்வனுக்குத் தீமைகுறித்து ஹர வென்று மூன்று தரஞ் சொல்லியிறந்த வேடனை 
யமனுடைய தூதுவர்கள் வந்து பற்ற, இந்தக்காலினாலுதைத்து விடுவித்தவன் யானன்றோ! கொடிய துன்மதியினாலும் 
துச்சகனாலும் பிறராலும் முன்னாள்களிற் றன்னிறைமைத் தொழில் நீங்கித் துன்பமுற்று அஞ்சிப் பட்டபாட்டை யமன் 
மறந்தானோ!  விபூதி ருத்திராக்ஷ தாரணஞ் செய்பவர்களிடத்திலும், சிவநாமத்தை யுச்சரிப்பவர்களிடத்திலும் 
அணுகுவதற்கும் அஞ்சும் யமன், அறுமுகக்கடவுளுக்கு அடியர்களாகிய என்றம்பியர்களுடைய உயிரைக் கவர்ந்தானோ! 
சேற்றிலாழ்ந்த யானையை ஒரு சிறு புள்ளுங் கொல்லாதோ!" என்றிவ்வாறாகிய வாசகங்களைச் சொல்லி வீரவாகுதேவர் 
எழுந்து முதுகிற்கட்டிய தூணியில் ஓர்பாணத்தைப் பிடுங்கி, அதனது தலையில் யமன் காணும்படி தமது நகத்தினால்               
இங்ஙனம் எழுதுவார்: 

    "வேற்படையையேந்திய முழுமுதற்கடவுளாகிய அறுமுகப்பெருமானுக்குத் தம்பியாகிய வீரவாகு என்னும் 
யான் எழுதிவிடுத்தேன், கூற்றுவனென்பவன் காண்க. என்றம்பியர்களுடைய உயிரைக் கவர்ந்தாய், இது உனக்கு நன்றோ! 
அவர்களுடைய உயிரை விரைவில் விடுக்குதி" என்று எழுதினார். அதன்பின் வில்லைவளைத்து அப்பாணத்தைப் பூட்டி, 
முருகக்கடவுளைத் தியானித்துத் துதித்து, மின்போலச் சென்று யமபுரத்தை அடையும்படி தூண்டினார். அப்பாணம் 
விரைவிற் சத்தசமுத்திரங்களையுங் கடந்து, மானசோத்தரகிரிக்குத் தென்புறத்திலுள்ள யமபுரத்திற்சென்று, யமனுக்கு     
முன்புபோய் வீழ்ந்தது. யமன் விம்மிதமெய்திப் போய் எடுத்துப்பார்த்து, அது வீரவாகுதேவர் விடுத்ததாயிருக்கக் கண்டு, 
அதனிடத்துள்ள பாசுரத்து வாசித்தறிந்து, துன்பமுற்றஞ்சி, 'வீரவாகுதேவருடைய தம்பியர் இங்கே இலர். எங்ஙனஞ் 
சென்றாரோ" என்று சிந்தித்து, அவர்கள் கைலாசமலையிலிருப்பதாக உணர்ச்சியிற்கண்டு தேறினான். 

    பின் எருமைக்கடாவிலேறி, சேனைகள் சூழத் தன்னகரை நீங்கித் திருக்கைலாசமலைச் சாரலை யடைந்தான். 
அப்பொழுது வீரவாகுதேவருடைய தம்பியர்களெழுவரும் அக்கினிமுகனுடைய போரில் இறந்த சேனைவீரர்கள் சூழ
 அம்மலைச்சாரலில் விஞ்ஞையர்களுடைய பாடலைக் கேட்டுக்கொண்டு சிறந்து வீற்றிருந்தார்கள். யமன் 
அவர்களைக்கண்டு முன்சென்று வணங்கி, "எல்லாமறிந்த பெரியீர்காள்! நுந்தமையனாகிய வீரவாகுதேவர் 
உங்களைத் தேடுவார். நீவிர் அழகிதென்று இங்கிருப்பதென்னை? என்னையும் சந்தேகிப்பார். இந்தப் பூதர்களோடு             
நீவிரெழுவரும் விரைந்தெழுங்கள்'' என்றான். அவர்கள் அதனைக் கேட்டுப்  பூதர்கள் இருமருங்கும்வர அவ்விடத்தை 
நீங்கி, ஒரு நொடிப்பொழுதில் மகேந்திரபுரியிலுள்ள போர்க்களத்தையடைந்து, தத்தமுடலிற் புகுந்தார்கள். 

    பூதப்படைத்தலைவர்களும் விரைவிற் றத்தமுடல்களிற் புகுந்தார்கள். தேவர்கள் பூமழைபொழிந்து நின்று 
ஆர்த்தார்கள். எழுவரும் பதைபதைத்தெழுந்து நின்று வீரவாகுதேவருடைய பாததாமரைகளை வணங்கினர்.  அவர் 
அவர்களை யெடுத்து மார்போடணைத்துத் தழுவினார்; பாம்பு உண்டுமிழ்ந்த சூரியனைப்போல விளங்கினார்; 
இனி யான் அவுணர்களை வெல்வதோ அரிதென்று வீரமும் பேசினார் ; துன்பமும் நீங்கினார்; மகிழ்ந்தார். எழுவரும் 
பிறரும் உய்ந்தெழுதலை வீரபுரந்தரரும், பூதகணத்தவர்களும் இலக்கம்வீரரும் கண்டு மகிழ்ச்சியிற் சிறந்து, 
மேகத்தின் வரவைக்கண்ட சாதகப்பக்ஷி போல மனங்குளிர்ந்தார்கள்.

    அப்பொழுது, யமன் சேனைகளோடு அங்குவந்து வீரவாகுதேவரை வணங்கி, "வீரரே, தமியேனைக் 
கோபித்தீர். முன்னே நிகழ்ந்த வரன்முறையைக் கேளும்" என்று சொல்வான்: "ஏழுவீரர்களும் இங்கே தம்முடல் விட்டு 
ஒருங்குசென்று திருக்கைலாசமலைச் சாரலையடைந்து, தம்மை வழிபடுஞ் சில பூதர்கள் சூழ வீற்றிருந்தார். அறிவைக்         
கெடுக்கின்ற பெருந்துன்பத்தை யடைந்தமையால் நீர் அதனைத் தெரிந்திலீர். உடம்பில் விபூதி ருத்திராக்ஷங்களைத் 
தரித்தவர்கள்மாட்டும் செல்லுதற்கஞ்சுகின்ற தமியேன் உம்முடைய தம்பியர்களின் உயிரைக்கவர்வேனோ? 
யாவராயினும் பசி நோய் மிகுந்தால் அக்கினிப்பொறியை யுண்பார்களோ. நீர் விடுத்த பாணத்தை யான் பார்த்து, 
திருக்கைலாசமலைச்சாரலிற் போய், பூதர்களோடு உம்முடைய தம்பியர்களை இங்கே அழைத்துக் கொண்டுவந்து 
விடுத்தேன். தேவரே என்னிடத்துக் கோபஞ்செய்யாதொழிக" என்று கூறினான். 

     யமன் இவ்வாறு கூறி, வீரவாகுதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, மகிழ்வோடு தன்னகர்க்குப் போயினான். 
வீரவாகுதேவர் போரைவிரும்பிப்  பூதர்களுந் துணைவர்களுந் துதிக்கப் போர்க்களத்தில் நின்றார். 
அங்குநின்று இந்நிகழ்ச்சிகளைப் பார்த்த ஒற்றுவர்கள் சூரனுடைய கோயிலிற்சென்று அவனை வணங்கி, 
"அரசனே உன் குமாரனாகிய அக்கினி முகன் போர்செய்து வீரவாகுவிடுத்த வீரபத்திரப்படைக்கலத்தினால்
இறந்து வீழ்ந்தான்'' என்று கூறினார்கள். சூரபன்மன் உடனே பூமியில் விழுந்தயர்ந்து, எக்காலத்திலும் தானடையாத 
துன்பக்கடலுளாழ்ந்து, மெலிவோடு புலம்புவான்: என்னன்பினையுடைய உயிரே,உறவே, கண்ணே கண்ணுண்மணியே,         
அக்கினிமுகனே, விண்ணுலகிற்குச் சென்றாயோ? இங்கே மீள்கின்றாயில்லை. இனி இவ்வுயிர்வாழ்க்கையை எண்ணான்.
என்றந்தைக்கிளையவனாகிய வச்சிரவாகுவை இந்நகரில் வந்த தூதுவன் கொன்றதை நினைந்து நொந்து உடலம் 
மெலிந்தாய். அந்தத்துயரம் இப்பொழுதோ ஆறியது. என்பகைவர்களெல்லாரையும் மாறாத மகிழ்ச்சியடையும்படி         
வைத்து என்னிடத்து ஆறாத துயரை உண்டாக்கினாயே. இதுவுங் குமாரனுக்கியல்பா சொல்லு. 

    சிவகுமாரனோ, விட்டுணுவோ, பிரமாவோ,'ஒற்றுவன் கொல்ல நீ இறப்பாய்' என்று யாவர் கூறினார்? 
அதறிந்திலேன்.போரிலே நீ இறந்தாய் என்று தூதுவர்கள் சொன்னார்கள்.  வேற்படையை யேந்திய சிவகுமாரனுக்கு முன் 
என்னைக் கைவிட்டுப் போவதும் உனக்கு முறையோ. தூதுவன் செலுத்திய அம்பு துணிக்க நீ இறந்தாய் என்று 
தூதுவர்கள் சொன்னார்கள். அப்பொழுதே அதனையுணர்ந்து பொறுத்தேன். இன்னும் என்னுயிர் ஏதேதைப் பொறுக்கமாட்டாது
ஆவா! தமியேன் அயர அழியாத என்னிளமைந்தனே அழிந்தாயே. புத்தியைப் பெறும்படி தவஞ்செய்வோர்களும் இன்னும் உளரோ! 
உன்னை நம்புவதெங்ஙனம்! ஒன்றுஞ்சொல்லாமல் அகலுவாய். துன்புறும் யான் மலையொத்த அழகிய உன்மார்பைத் 
 தழுவும்படி விரைந்து வந்தருள் செய்யாய், கரியாய், என்திருவே, சிறுவா, என்னாருயிரே, விடலாய், வேற்கையாய், அரசே,         
களிறே, தமியேனுக்கு ஐயனே, என்னை நீயும் அயர்த்தனையோ !" என்றிவ்வாறு சொல்லிச் சூரபன்மன் புலம்பினான்.           
தாய்மாருங் துன்புற்று நடுங்கித் துன்பக்கடலுள் ஆழ்ந்தார்கள். அன்றைக்கு அந்நகரில் அழுகையொலி மிகுந்தது.

            திருச்சிற்றம்பலம்.

            மூவாயிரர் வதைப்படலம்.

    அக்கினிமுகன் இறந்தமையையும், சூரபன்மன் மிகுந்த துன்பத்தினாலும் பழியினாலும் பீடிக்கப் 
பட்டிருந்தமையையும், அவனுடைய குமாரர்களாகிய மூவாயிரருங் கேட்டு, தந்தையினுடைய கோயிலையடைந்து 
அவன் இருக்குமியற்கையை நோக்கி, எதிரில் வணங்கியெழுந்து, இவ்வாறு சொல்லுவார்கள்: "எம்பிதாவே, 
வலிமையில் மிகுந்த இலக்கம் வீரர்களும் எண்மரும் வீரவாகுவும் பிறரும் போருக்கு வந்தபொழுது, 
அக்கினிமுகனொருவனை யனுப்பினாய். அவனொருவன் அவர்களோடு போர்செய்ய வல்லவனோ? 
மெலியராயினும் மிகப்பலராயின் வலியரையும் வெல்லுவர். இஃதுலகவழக்கம். கலைஞானங்களில் வல்ல 
எம்பிதாவே, நீ இதனை அறியாயோ? பகைவர் குழுவினுள் ஒருவனைப் போருக்கு அனுப்பினாய், மேல்வரும் 
விநயத்தை ஓர்ந்தாயில்லை. அவ்வொருவன் போரில் இறந்தானென்றால், அதற்காக வருந்தற்பாலையோ? 

    அக்கினிமுகனொருவனுக்காக இரங்கித் தேம்பாதே. யாம் உளேம், இரணியன் இன்னுமுளன், 
பானுகோபன் உளன், உனக்கு ஒருகுறைவு உண்டாகுமோ! ஐயனே, பகைவர்கள் கொல்ல எண்ணில்லாத நால்வகைச் 
சேனைகளும் அழிந்தன என்று சிறிதும் வருந்தாதே. அதனைக்கேள். ஏழுகடல்களும் வறந்தாலும், உன் காற்றுணைகளைச்     
சூழ்கின்ற சேனைகளுக்கோ ரழிவுமில்லை. ஊழிக்காலத்திலுமழியாத மகாராஜனே, இங்ஙனம் நீ துன்பப்படுவதும் 
பெருமைப் பாலதோ! பகைவர்களுடைய போரில் இற்றை நாள்வரையும் இறந்தபேர்கள் மேருமலையில் ஒர்தினையளவு 
குறைந்ததுபோலும், வலியனாகிய நீ அந்த தலைமையையும் வலியையும் செல்வத்தையும் மறந்து உனக்குப் புறந்        
தருகின்ற தேவர்களைப்போல இறந்தவர்களை நினைத்து இரங்கற்பாலையோ ! உனக்கு உடன்பாடாயின், 
இந்திரனையும், பிரமாவையும், விட்டுணுவையும், யமனையும், வாயுவையும், அக்கினியையும், மற்றெல்லாரையும் 
விரைந்துசென்று யாங்கள் பிடித்துக்கொண்டு வருவேம். 

    அரசனே, நீ விண்ணுலகத்தை யலைக்கவும் மேருமலையையும் மண்ணுலகத்தையுந் தலைகீழாகவும், 
வடவாமுகாக்கினியைத் தணிக்கவும் எண்ணினை யென்னினும் யாங்கள் உன்னுடைய நினைவின்படி விரைவில் முடிப்பேம். 
இன்னும் பலவற்றைச் சொல்லியாவதென்? எங்களை ஏவுதி. யாங்கள் விரைந்து சென்று பூதர்களையும் மற்றை வீரர்களையும் 
பிறரையும் கந்தனையும் ஒருநாழிகையினுள் வென்று, உன்னுடைய பாதங்களைத் தரிசிப்போம்'' என்று மூவாயிரம் 
புதல்வர்களும் கூறினார்கள்.

    சூரபன்மன் இவ்வாசகங்களைக் கேட்டுத் துயரம் நீங்கி, "மைந்தர்காள், நீவிர் கூறியது நன்று போருக்குச் செல்லுங்கள்" 
என்றான். அவர்கள் சூரபன்மனை வணங்கி அவ்விடத்தைவிட்டு நீங்கி, கவசத்தையிட்டு,வில்லையெடுத்து, தூணியைக்கட்டி,               
புட்டிலைப் புனைந்து, ஆயுதங்களெல்லாவற்றையுங் கைக்கொண்டு, மார்பில் ஆபரணங்களை யணிந்து, தேரில் ஏறினார்கள்.             
சேனைகள் வந்தன. சங்கம், தண்ணுமை, படகம், பேரி முதலிய வாத்தியங்கள் இடிபோல வொலித்தன. எண்ணில்லாதனவாகிய 
கசரத துரகபதாதிகள் மொய்த்து ஆரவாரித்துப் பூவுலகத்தையும் வானுலகத்தையும் விழுங்கின. தேரிற்கொடிகள் ஆடின. 
மாலைகளில் வண்டுகள் பாடின. பருந்துகளும் காகங்களும் கூடின. பேய்கள் கூத்தாடின. பூதூளியெழுந்தது. இவ்வாறாகச் 
சேனைகள்வந்து நெருங்கிச்சூழ மூவாயிரவரும் விரைந்து போருக்குச் சென்றார்கள். தேவர்கள் இதனைக்கண்டு 
மனம்வெருவி ஆவாவென்று அஞ்சி வருந்தினர். மூவாயிரவரும் போர்க்களத்தை வந்தணுகினார்கள். 
பூதர்களும் அவுணர்களும் எதிர்த்தார்கள். 

    அவுணர்கள் வாள், எழு, தண்டு, வில்லு, சூலம் முதலிய படைகளைக் கொண்டு பூதர்கள் தளர்வடையும்படி 
பொருதார்கள். பூதர்கள் சூலம், தண்டம், சக்கரம் முதலிய ஆயுதங்களினாலும் மலைகளினாலும் அவுணர்கள் இறக்கும்படி 
போர்செய்தார்கள். இறந்த வீரர்களுடைய உடல்கள் வீழ்ந்தன. இரத்த வெள்ளம் கடலிற் பாய்ந்தது. பேய்களும் காக்கைகளும் 
மொய்த்தன. அவுணர்கள் யானை தேர் குதிரைகளோடு மடிந்தார்கள். இறந்த பூதகணங்களும் எண்ணில்லாதன.
மூவாயிரவர் அதனைக்கண்டு, கோபம்மூண்டு பூதர்களைக்கிட்டி, விற்களை வளைத்து, இடிபோலக் குணத்தொலிசெய்து, 
 சரமாரிகளைச் சொரிந்தார்கள். பூதசேனைகள் ஏங்கியிரிந்தன. பூதப்படைத்தலைவர்கள் அதனைக் கண்டு, மூவாயிரவர்களுக்                     
கெதிரே சென்று, சிலர் தண்டத்தினால் அவர்களுடைய தேரைத் தகர்ப்பார். சிலர் மரத்துண்டங்களாற் குதிரைகளைத்                 
தொலைப்பார். சிலர் பாகனுடைய தலை உருளும்படி உதைப்பார். சிலர் தேர்களையெடுத்தெறிவார். 

    சிலர் எழுப்படையினால் அவர்களுடைய மார்பிலடிப்பார். சிலர் மழுப்படையினால் விற்களை வெட்டுவார். 
சிலர் மலைகளினாற் சேனைகளைக் கொல்வர். சிலர் விற்களைப் பறித்து மரக்கொம்பர்களைப் போல முரிப்பார். 
பூதகணவீரர்கள் இவ்வாறு போரைச் செய்ய, மூவாயிரவர் முனிந்து விற்களை வளைத்து, யுகமுடிவில் இடி சொரிந்தாற்போல 
அக்கினி யையுமிழ்கின்ற பாணங்களைச் சொரிந்தார். அவர்கள் விடுத்த அக்கினியம்புகள் மார்புகளிலும் புயங்களிலும் 
முகங்களிலும் கைகளிலும் கால்களிலும் வந்துபட, பூதகணவீரர்கள் இரத்தம்வடியத் தளர்ந்து மனம் வருந்தி நின்றார்கள்.

    மூவாயிரவருடைய வில்லாண்மையையும், அவர்க்குப் பூதப்படைத் தலைவர்கள் அழிகின்றதனையும், இலக்கம் 
வீரர்களுள் ஒராயிரவர் கண்டு, அக்கினிபோலக் கோபித்து, வீரவாகுதேவர் முன்சென்று, அவரை வணங்கி, "இப்போரைச் 
சிறியேங்களுக்குத் தந்தருளும்'' என்று வேண்டினர். அவர் அதற்கு இசைந்து, 'இது நன்று. மூவாயிரவரோடு போர்செய்ய 
நீவிர் சென்மின்" என்று அனுமதி செய்ய விசயர்,  சயர்,இடபர், கரவீரர், அதிகோரர், அசலர், அதிகுணர், வாமனர், அந்தர், 
அகங்கர், அநகர், சதவலி, மாருதர், வருணர்,  சசிகண்டகர் முதலாகிய ஆயிரவர் மூவாயிரவரோடு போர்செய்யச்         
சென்றார்கள். சென்ற அவர்கள் முருகக்கடவுளை அன்போடு வணங்கித் துதித்து, விற்களை வளைத்து, யுகாந்தகாலத்து 
முகிலைப்போலப் பாணங்களை மூவாயிரவர்மேற் சொரிந்து ஆர்த்தார்கள். 

    அவர்களுடைய வில்வலிமையை மூவாயிரவர் கண்டு, அளவில்லாத பாணங்களைத் தொடுத்து, சூற்கொண்ட 
மேகங்களோடு மேகங்கள் போர்புரிந்தாற் போலச் சொரிந்தார்கள். மூவாயிரவர் விடும் அம்புகள் ஆயிரவர்கள் விடும் 
அம்புகளை அழிக்கும். ஆயிரவருடைய அம்புகள் மூவாயிரவர்களுடைய அம்புகளை அழிக்கும். இவ்வாறு இருதிறத்தினரும் 
போர்செய்யும்பொழுது, ஆயிரவருடைய தேரை மூவாயிரவர் பாணங்களால் அழித்தார். ஆயிரவர் மூவாயிரவருடைய 
விற்களையும் தேர்களையும் பாணங்களினால் அழித்தார். பின்னும் அவர்கள் மூவாயிரவர்களுடைய சேமத்தேர்களைப் 
பாணங்களால் அழித்து, அவர்களைப் பூமியிலே நிற்கும்படி செய்து, தாம் மலையிலேறும் சிங்கங்களைப்போலத் 
தேர்களிலேறி, விற்களும் தேர்களும் சேனைகளும் பெருமித நிலையும் கொலைத்தொழிலும் நீங்கிக் கோபத்தோடு 
பூமியிலே நின்ற மூவாயிரவரை வலையிலகப்படுத்திய மானைப்போலச் சூழ்ந்தார்கள். 

    தேரும் வலியுமழியப் பதாதிகளாய் நின்ற மூவாயிரவரும் ஈகையிற் சிறந்தோர் வறுமை வந்தவிடத்துத் 
துன்பத்தோடு தந்நிலை குறையுந் தன்மை போலத் தளர்ந்து மலைகளைப் பறித்தும், மரங்களை முறித்தும், 
ஆயிரவர் மேல் வீசி, ஆகாயத்தையும் திசையையும் பூமியையும் மறைத்தார்கள். ஆயிரவர் அவைகளை         
அரைமாத்திரையிற் பாணங்களால் அழித்து வீழ்த்தி, மூவாயிரவருடைய மார்புகளில் மூழ்கும்படி சரங்களை விடுத்து, 
அவர்களுடைய மற்றை அவயவங்களையுந் துளைத்தார்கள். அவருட்சிலர் இரத்தம்வடிய இளைத்தார்; சிலர் இரிந்தார்;     
சிலர் களைத்தார்; சிலர் கோபித்துநின்று போர் செய்தார்; சிலர் தேர்களைக் கரங்களால் எடுத்துத் தேவர்கள் ஒவென்று 
புலம்பியோடச் சமுத்திரத்தில் வீசி ஆர்த்தார். ஆயிரவர் அவர்கள் எடுத்து வீசிய தேர்களினின்றும் இறங்கிப் பூமியில் 
வந்து வில்லை வளைத்து, அம்பு மழைகளைச் சொரிந்து ஆர்த்துப் பொங்கினார். 

    மூவாயிரவரிற் பற்பலர் அதனைக்கண்டு வடவாமுகாக்கினிபோலக் கோபித்து, இடிபோல ஒலித்து, 
எதிரே புகுந்து, ஆயிரவருடைய கையிலுள்ள விற்களைப் பறித்து, வாயுக்கள் மரக்கொம்பர்களை முறிக்குந்தன்மை 
போல முறித்துப் பூமியில் எறிந்தார்கள். ஆயிரவர் அவர்கள் பதைக்கும்படி கையால் எற்றினார். அவர்கள் 
இடிபோலத் தாக்கினார். பாற்சமுத்திரமும் உவர்ச் சமுத்திரமும் எதிரெதிரே திரைகளைச்சிந்தி ஆர்த்துப் 
பொருவதுபோல இருதிறவீரரும் இவ்வாறு மற்போர் செய்யும்பொழுது, விசயரையொழிந்த மற்றைவீரர்கள் 
வலியிழந்து மூவாயிரவருக்குத் தோற்றார்கள்.

    தம்முடைய துணைவராயுள்ளாரெல்லாரும் இரிந்து போதலும், விசயரென்னும் வீரர் கோபித்து, 
'சூரபன்மனுடைய குமாரர்களாகிய மூவாயிரவரையும் யான் கொல்வேன்" என்று வஞ்சினங்கூறி, அழியாததும் 
சிவபெருமானாலே கொடுக்கப்பட்டதும் ஆகிய தூணியிலிருந்த வில்லை எடுத்து வளைத்து, வாயுவைப்போல 
ஓடிச் சூழ்ந்து மூவாயிரவரின் மேல் பாணமழைகளைச் சொரிந்தார். காட்டிலுள்ள மரங்களை அறுக்குந்தன்மை போலச்         
சிலருடைய கைகளை அறுத்தார்; சிலருடைய கால்களை அறுத்தார்; சிலருடைய மார்பை அறுத்தார்; சிலருடைய 
தோள்களையும்  சிரங்களையும் அறுத்தார்;

    அவர்களுடைய அற்ற உறுப்புக்களெல்லாம் பின்னும் தாமே வந்து கூடின. உணர்வும் உயிரும் நீங்கிய 
அவர்கள் எழுந்து, விசயர்மேல் மலைகளைப் பொழிந்து போர்செய்தார்கள். தலையுங் கைகளும் கால்களும் 
தோள்களும் வெட்டுண்ட மூவாயிரவரும் பிரமாவினிடத்திலே பெற்ற வரத்தின்றன்மையால் அவைகள் 
மீண்டுங் கூடப்பெற்றார்கள். அத்தன்மை, பிரசண்டவாயு அடிக்கப் பிரிந்து சிதறிய சமுத்திரஜலம் மீண்டும் 
ஒருங்கு வந்து சேர்தலையும், மின்னல் தோன்றியபொழுது அழிந்த இருள் பின்னர் வந்து வந்து திரண்டதையும் 
போன்றது. மூவாயிரவரும் விசயர் அறுக்குமுன் கைகால் முதலிய அவயவங்களெல்லாம் இவ்வாறே முன்புபோல் 
வந்து கூட விரைந்து எழுந்தார்கள். 

    ஆராயின்,உலகிற் றவத்தினுஞ் சிறந்ததுண்டோ! வெட்டுண்டு உயிர்போய் இறந்தவர்கள் எழுந்து போர் 
செய்வதை விசயர் கண்டு, விம்மிதங்கொண்டு, போர்வலிமை குறைந்து திகைத்து, ''இச்செய்கை வரத்தாலாயது" 
என்று புகை உண்டாக உயிர்த்துப் பொங்கி,"இவர் செயல் நன்று நன்று" என்று சிரித்து, 'பாணங்களினாற் றுணிந்து 
இறந்தவர்கள் எழுந்தார்கள். பின்னும் இவர்மேல் அம்புகளைவிடின், இதனால் ஆவதென்? இந்தப் பகைவர்களை 
இன்றைக்குக் கொல்லுதல் எனக்கு அரியதுபோலும், இவர்களை யான் கொல்லுதல் அரிதாயின், இவர்கள் 
படைகளோடு என்னைச்சூழ்ந்து பன்னெடுங்காலம் போர்செய்து நின்றாலும், என்னுயிரைக் கொல்லுவதும் 
இவர்க்கு எளிதன்று. நான் இவர்களை வென்றிலேன், அல்லது இவரோடு பொருது வலிமையிழந்து இறத்தலையும் 
பெற்றிலேன். இடையன் வெட்டின மரத்தின்றன்மையை யடைந்தேன். 'யான் பகைவர்களாகிய இவர்களைக் 
கொல்வேன்' என்று வெற்றி கொள்பவனைப் போல வஞ்சினம் பேசிவந்த யான் இவர்களைக் கொல்லாமல் 
வீரவாகுதேவரோடு போய்க் கூடலாகுமோ! 

    'பகைவர்கள் வரத்தையுடையர், மாயங்களையுடையர், மிகவும் வலியர்' என்று சொல்லி மீண்டு 
போவேனாயின்,' 'இவன் தோற்றான்' என்று நம்மவர் என்னைத் துறப்பர். அன்றியும் என் பகைவர்கள் நான் 
புறந்தந்து போகவும் விடுவார்களோ? யான் பித்தர் போல மயங்கினேனல்லேன்; உணர்வோடிருக்கின்றேன். 
இளைத்திலேன், இன்னும் வலியோடு நின்றேன். புகழை நிறுத்தினேனல்லேன், வசையொன்றையே யடைவேன். 
செத்திலேன், உயிரோடிருந்தேன். ஓர்செயலுமற்றேன்'' என்று கருதினார். அவர் மிகுந்த துன்பத்தோடு இவ்வாறு 
எண்ணும்பொழுது, அத்துயர்க் கடலைக் கடக்குந் தன்மையினராய், "ஒருசெய்கையால் எனக்கு உய்யுந் திறமுண்டு" 
என்று கண்டு "ஆறுமாமுகப் பிரானன்றி இவ்விடை வேறொரு துணையிலை, மெய்மையீதெனத் தேறி, அவருடைய 
அருமைத் திருவடிகளைச் சிந்தைசெய்து, மாறுமாறா யிழிகின்ற அருவிநீர் வழியுங் கண்ணினராய், 
அப்பெருமானைத் தியானஞ்செய்தார். 

    அப்பொழுது, அன்பர் யாவருக்கும் எண்ணிய வெண்ணியாங் கருள்புரியும் அருள்வள்ளலாகிய அறுமுகக் 
கடவுள் விரைந்து ஆகாயத்திலே விசையருடைய கண்ணுக்குத் தோன்றித் திருவாய் மலர்ந்தருளுவார்: 
"விசயனே, இதனைக் கேட்பாய். பகைவர்களாகிய இவர்களைக் கொல்ல நினைத்து இவர்களுடைய
 கால்களையுங் கைகளையுந் தலைகளையும் அறுத்தாய். வெட்டுண்ட அவைகளெல்லாம் மீளவுந் தோன்றின. 
இவர்கள் பெற்றவரத்தை நீ அறியாய், அதனாற் போரில் வெற்றியின்றி நின்றாய். இனி மனந்தளராதே. பல 
படைக்கலங்களைக் கொண்டு பலநாள் நின்று இவர்களுடைய அங்கங்களை வெவ்வேறாகத் துணிப்பினும் 
இவர் இறவார். இவரைக் கொல்லத்தக்க வலியையுடைய படையொன்றுளது. அதனை விடுப்பின் யாவருமழிவர். 
இது பிரமன் முன்னாளில் இவர்களுக்குக் கொடுத்த வரம்'' என்றருளிச் செய்து, வைரவப் படைக்கலத்தை யுண்டாக்கி 
விசயருக்குக் கொடுத்து, ''இவர்கள் இறக்கும்படி இப்படையை விடுக்குதி" என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.

    விசயர் முருகக்கடவுளுடைய திருவாக்கைக் கேட்டு மகிழ்ச்சியிற் சிறந்து, வைரவப்படைக்கலத்தை வாங்கி, 
மிகுந்த அன்பினால் அதனைப் பூசித்தார். அவற்றையெல்லாம் அவுணர்களுள் உன்மத்தன் என்பவன் அறிந்து,
 ''இங்கே இவன் நம்மவர்களெல்லாம் இறக்கும்படி ஓர் படையினாற் கொல்வான் போலும். அதன்முன் ஓர் மாயப் 
படையினால் இவனுக்கிறுதியைச் செய்வேன்" என்றெண்ணி, அப்படையை விடுத்தான். அதனை விசயர் பார்த்து, 
வைரவப்படையை விடுத்தார். அது சென்று, மிகுந்த இருளைப் பரப்பி எதிரே வருகின்ற மாயப்படையை யழித்து, 
மூவாயிரரையுஞ் சூழ்ந்து சங்கரித்து மீண்டது. மூவாயிரரும் ஒருகணப்பொழுதினுள் இறந்தனர். விசயர் அதனைக் 
கண்டு முருகக்கடவுளைத் துதித்து நின்றார்.

    பூதர்கள் பூரணசந்திரனைக் கண்ட சமுத்திரம்போல ஆரவாரித்தார்கள். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். 
இறவாமல் எஞ்சிய அவுணசேனைகள் திசைகளெங்கும் இரிந்து போயின. தூதுவர்கள் இவைகள் எல்லாவற்றையுங் 
கண்டு சூரபன்மனுக்கு முன்பு சென்று அவனுடைய கால்களை வணங்கி, "மகாராஜனே, உன்னுடைய மூவாயிரம் 
புதல்வர்களையும் இலக்கம் வீரர்களுள் ஒருவனே கொன்றான். இது பொய்யல்ல நிச்சயம்" என்றார்கள். சூரபன்மன் 
அதனைக் கேட்டுப் புலம்பி,  உடனே சிங்காசனத்தினின்றும் வீழ்ந்து,பதைத்துச் சோர்ந்து, வெய்துயிர்த் தசைந்து விம்மி, 
நிலத்தைக் கையாலடித்துப் புரண்டு, அருவிபோலக் கண்ணீர்த் தாரை வடியத் துன்பத்தின்மேற்றுன்பம் வைத்தான். 
அவனைச் சூழ்ந்தோரனைவரும் புலம்பினார்கள்; அப்பொழுது சூரியன் அஸ்தமயனமாயினான்.

            திருச்சிற்றம்பலம்.

            தருமகோபன் வதைப்படலம்.

    இறந்த மூவாயிரம் புதல்வர்களை நினைத்து நினைத்துத் துன்பத்தை யநுபவிக்கின்ற சூரபன்மனுக்கு 
முன்பு தருமகோபன் என்னும் மந்திரி சென்று, அவனுடைய கால்களை வணங்கி நின்று சொல்வானாயினான்: 
"இராசாதிராசனே, நீ மனத்தில் இவ்வாறு துன்பமுற்று மிகவுமிரங்குவாயாயின், நம்முடைய பகைவர்கள் மகிழ்வர்கள், 
தேவர்கள் நகைப்பார், நம்மவரும் வெள்குவர். பகைவர்களுடைய போர்முனையிலே தம்முடைய தந்தையர் இறப்பினும், 
மைந்தர்கள் இறப்பினும், சுற்றத்தார்கள் இறப்பினும்,மானத்தையுடைய வீரர்கள் மனவலிமையிற் சிறிதாயினும் 
நீங்குவார்களோ! எதிர்த்து யுத்தஞ்செய்த நம்மவர்களுடைய உயிரைக் கவர்ந்த யமன் உளன், முன்போலப் படைத்துக் 
கூட்டுதற்குப் பிரமனுளன், நாமுளோம், நம்முடைய வலிமையுளது. இங்ஙனமாக நமக்கு அயர்வும் வேண்டுமோ! 

    அரசனே, அளவில்லாத செல்வங்களும், அழியாத ஆயுளும், குறைதலில்லாத வலியும், ஆஞ்ஞா சக்கரமும், 
இந்திரஞாலத் தேருமிருக்க, நீ அறிவில்லாத தேவர்களைப் போலப் புலம்பலாகுமோ! தேவர்களுடைய சிறையை 
விடாது வைத்திருக்க விரும்பிய விரதத்தையும், மிகுந்த மானத்தையும், பகைவர்களை வருத்துந் தன்மையையும் 
எண்ணுகின்றிலை. இடையறாது துன்புறலாகுமோ! நம்முடைய பகைவர்களாகிய தேவர்களும், மனிதர்களும், 
பெண்களும், குழந்தைகளும் அடைகின்ற துன்பம் உனக்காவதன்று' என்று தருமகோபன் சூரபன்மனைத் தேற்றினான்.

    தருமகோபன் இவ்வாறு தன்னுடைய துன்பத்தை ஆற்றும்பொழுது, சூரபன்மன் சிறிது துன்பம் நீங்கி, 
"கூற்றுவன்போல யானே சென்று பகைவர் குழுவைக் கொல்வேன்" என்று கோபித்து எழுந்து சென்றான்.
அப்பொழுது தருமகோபன் அவனுடைய கால்களை வணங்கி, மகாராஜனே, நீ யிருத்தி. யான் சேனைகளோடு 
விரைவிற் சென்று பகைவர்களை வளைத்துக் கொல்வேன்' என்று வேண்டினான். எழுந்துசென்ற சூரபன்மன் 
மீண்டுவந்து சிங்காசனத்திலிருந்தான். தருமகோபன் விடைபெற்றுக்கொண்டு சூரபன்மனுடைய கோயிலை 
நீங்கி வெளியே வந்து, விரைந்து போர்க்கோலங் கொண்டு, "புண்டரீகம் என்கின்ற திக்கியானையைக் கொண்டு 
வருதிர்" என்று தூதுவர்களுக்குக் கூறினான். 

    அவர்கள் விரைவிற் சென்று பிணித்த சங்கிலியை நீக்கி அதனை அவனுக்குமுன்பு கொண்டு வந்து விடுத்து 
நின்றார்கள். தருமகோபன் பல ஆயுதங்களையேந்தி, அமைச்சர்கள் முதலாயினார் சூழ இந்திரனைப்போல 
அவ்வியானையில் ஏறினான். படகம் பேரி முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. தீபங்கள் செறிந்தன. யானைகளும் 
குதிரைகளும் தேர்களும் ஒலித்தன. அவுணசேனைகள் நிறைந்தன. கொடிகள் நெருங்கின. குடைகள் ஆகாயத்தை
 மறைத்தன. பூதூளி யெழுந்தன. திசைகள் இருண்டன. தருமகோபன் நால்வகைப்படைகளுஞ் சூழப் புண்டரீகமென்னும் 
கீழ்த்திசை யானையை யூர்ந்து, நகரைநீங்கிப் போருக்குப் போயினான். தேவர்கள் இதனைநோக்கி, "அம்மவோ! 
தருமகோபன் என்னுங் கீழ்மகன் வில்லையேந்திப் புண்டரீகம் என்னுந் திக்குயானையை யூர்ந்து போர்செய்வானாயின்; 
இவனை வெற்றிகொள்ளுதல் அரிது" என்று குலைந்த மெய்யினராய் இரங்கினார்கள். 

    தருமகோபன் சேனைகளோடு அனந்தம் வீதிகளை நீங்கி, வீரவாகுதேவர் கோபத்தோடு நிற்கின்ற 
போர்க்களத்தையடைந்தான். பகைவர்கள் எதிர்ந்தார்களென்று பூதர்கள் மலைகளையேந்தி ஆரவாரித்தார்கள்.
ஆர்க்கின்ற பூதர்களையும், இலக்கத்தெண்மர்களையும், வீரவாகுதேவரையும், அவர்களுடைய வலிமையையும் 
தருமகோபன் பார்த்து, "நம்முடையவாழ்வு அழிந்ததோ!" என்றிரங்கிச் சொல்வான்: "பகைவர்கள் நெருங்கித் 
தன்மேற்போர்செய்ய வருவராயின், இரங்கியேங்குதல் மிகுந்தபழியாகும். மனிதர்கள் இதனையறிந்தால் நகைப்பர். 
நான் போர்செய்வதே நன்றுபோலும். குறைவில்லாத சேனைகளும் ஆயுதங்களும் மிகவுள்ளன. கையில் வில்லிருந்தது. 
யானையுமொன்றுளது. அஞ்சுவதென்னை! ஆவதாகும். போருக்கஞ்சுவது வலிமையில்லாதவர்களுடைய செயலாம். 
யான் பகைவர்களை வெல்லினும் வெல்லுக, அவர்களுக்குப் புறங்கொடுக்கினுங் கொடுக்க, அல்லது இறக்கினுமிறக்க. 
இனியான் சேனைகளோடு பகைவர்கள்மேற் போருக்குச் செல்வதன்றி இரங்குதல் சீரிதோ! பகைவர்களுடைய 
சேனைகளைப் பார்த்துக் கருத்திற் கவலையுற்று யோசித்து நின்றயர்தல் வீரர்களுக்கு இயற்கையாகுமோ! 
பின்னர் வருவது வருக. நான் இனித் தளரேன்" என்று தேறிப் போருக்குச் சென்றான்.

    அப்பொழுது அவுணசேனைகளும் பூதசேனைகளும் இரவும் பகலும் மாலைக்காலமும் கலந்தாற்போலப் 
போரில் எதிர்த்தன. பூதர்கள் எழு தண்டு, சக்கரம், மழு, மலை முதலியவற்றாற் பொருதனர். அவுணர்கள் அம்பு,வேல்,
வாள், கழுமுள், தண்டு, பிண்டிபாலம், எழு முதலியவற்றாற் போர் செய்தார்கள். மந்திரிமார்களாகிய அவுணர்களும் 
இலக்கம் வீரர்களும் விற்களை வளைத்து அம்புகளை மழைபோலச் சொரிந்து போர்செய்தார்கள். இவ்விரு திறத்தினரும் 
உலகத்தார் "நாம் உய்வதெங்ஙனம்" என்று அஞ்சும்படி தெய்வப்படைக்கலங்களையும் மழைபோலச் சொரிந்து போர்
செய்தார்கள். கைகளுந் தலைகளும் சிந்தி அளவில்லாத அவுணர்கள் இறந்தார்கள். யானைகளும் குதிரைகளும் 
தேர்களும் அழிந்தன. பூதர்களும் இறந்தார்கள். இரத்தம் பாய்ந்தது. பேய்கள் பரந்தன. இலக்கம் வீரர்கள் 
வலிமையிழந்து நொந்தார்கள். 

    அமைச்சர் போரில் முயன்று நின்றார்கள். அப்பொழுது வீரமார்த்தாண்டர் அதனைநோக்கி 
வெகுண்டுசென்று, இடி போல உரப்பி வில்லை வளைத்து அவுணர்களுடைய உடல்களில் அவர்கள் தலை 
நடுங்கும்படி பாணங்களை அழுத்தினார். அமைச்சர்கள் துணிந்த கையினரும், வீழ்ந்த தலையினரும், 
அழிந்த மெய்யினருமாகி இறந்தார்கள். அவுண சேனைகளும் அழிந்தன. இறவாதெஞ்சிய அவுணர்கள் 
வருத்தமுற்று வந்து போர்செய்தார்கள். பூதர்கள் வெகுண்டு மேற்சென்று அளவில்லாத மலைகளை 
எடுத்து வீசினார்கள். அவுணர்கள் யாவரும் வருந்தி, மடைப்பள்ளியிற் சூடுண்ட பூஞைகள்போல 
உடைந்து போயினார்கள். பூதர்கள் அவர்களைத் தொடர்ந்து பற்றிக் கொன்றார்கள்.

    தருமகோபன் அவற்றைப் பார்த்து, பூதர்கள் மேற்சென்று, வில்லை வளைத்து, அளவில்லாத 
அம்புகளைத் தெரிந்து செலுத்தினான். அவன் செலுத்திய அம்புகள் சமுத்திரத்திற் பெய்யும் மழைபோலப் 
பூதர்கள் மேற்பட்டது. பூதர்கள் நடுங்கி மெலிந்தனர். தருமகோபன் ஏறிய யானையானது பூதர்களைத் 
துதிக்கையினால் வாரி எறிந்து உடம்புமுயிரும் வேறாகும்படி பொருதது. நான்கு கோடுகளினாலும் குத்தியது, 
கால்களினால் மிதித்துழக்கியது,வாலால் அடித்தது, துதிக்கையினால் எற்றியது. புண்டரீகம் என்னும் யானை 
இவ்வாறு போர்செய்யும்பொழுது, பூதர்கள் மலைகளை அதன்மேல் வீசினர்; மற்றைவீரர்கள் பாணங்களைச் 
செலுத்தினார்கள். அவற்றால் அதனுடம்பு முழுதும் இரத்தம் பெருகியது. யானை இவ்வாறு நொந்ததெனினும் 
தன்வலிமை குறையாததாகிப் பூதசேனைகளைக் கொன்றது. ஒழிந்த யானைப்படைகளும் பூதர்களைக் கொன்றன. 

    இவ்வாறு மற்றையானைகளோடு புண்டரீகமென்னும் யானை போர்செய்யும்பொழுது பூதசேனைகள் 
உடைந்தன. சேனைகள் உடைதலை வீரமார்த்தாண்டர் பார்த்துக் கோபித்து,வில்லை வளைத்து, புண்டரீகம் 
என்னும் யானையின் மீது அளவில்லாத அக்கினி அம்புகளைச் செலுத்தி ஆர்த்தார். யானை ஒரு முகூர்த்தம் 
அயர்வுற்றது. அதனைத் தருமகோபன் கண்டு, வீரமார்த்தாண்டருடைய நெற்றியில் நூறம்புகளைச் செலுத்தினான். 
அவர் வடிகின்ற இரத்தத்தோடு தேரிலிருந்தார். தருமகோபன் வீரமார்த்தாண்டர் மீது ஓர் வேற்படையைச் 
செலுத்தினான். வீரபுரந்தரர் அதனை நோக்கி வந்து, அந்தவேல் இருதுணியாம்படி ஒரு பாணத்தைத் தொடுத்து, 
அவுணர்கள் அஞ்சும்படி பாணமழைகளினாலே தருமகோபனை மறைத்தார். அவன் பாணமழைகளைப் 
பொழிந்து வீரபுரந்தரர் விடுத்த சரங்களைக் குறைத்தான்.

     தருமகோபன் விடுத்த எஞ்சிய கணைகள் போய் வீரபுரந்தரருடைய மார்பிற்பட்டுச் செருக்கின்றிக் 
கவசத்தை நக்கி வலியழிந்து வீழ்ந்தன. தருமகோபன் வீரபுரந்தரர் மீது "இவன் இறந்தான்' என்று யாவரும் 
அஞ்சும்படி ஓர் தண்டாயுதத்தை எறிந்தான். அது மார்பிற் படுதலும் அவர் மிகுந்த துன்பமுற்று விம்மினார்.
தருமகோபனுடைய செயலை வீரவாகுதேவர் உருத்துநோக்கி, தம்முடைய சொல்லும் மனமும் பிற்பட விரைந்து 
சென்று, ''தலைவரே நீர் நில்லும் நில்லும், நும்பகைவனுடைய புயங்களைக் கட்டிக்கொண்டு வந்து தருவோம்" 
என்று சொல்லுகின்ற வீரர் கூட்டத்தை நீங்கி, அவனுக்கெதிரே புகுந்தார். 

    அவரைத் தருமகோபன் அக்கினி சிந்தப் பார்த்து, "நீயோ வலியுடன் என்னைத் தாக்கும்படி வந்தாய், 
யானுன்னைக் கொல்லும்படி யமைந்து நின்றேன்.நீ காக்கவல்லையாயிற் காத்துக் கொள்ளுதி" என்றான். 
அதனை வீரவாகுதேவர் கேட்டு, "நீ கூறியது நன்று! எல்லாரிடத்தும் வெற்றியைப் பெற்றேன், உனக்குத்  
தோல்வியடைவேனோ! உன்னையும் வெற்றி கொள்வேன். கழியை நீந்துதல் கடலைநீந்துதல் போல்வதோ! 
உன்னுடைய வலிமையையும் மதர்ப்பையும் வெற்றியையும் வரத்தையும் இன்றைக்கே அழிப்பேன். நீ 
கற்ற போரை விரைந்து செய்குதி." என்றார். 

    தருமகோபன் யானையின் மீதிருந்து வில்லைவளைத்து இடிபோல நாணொலி செய்து, அம்புகளைத் 
தொடுத்து எய்து, வீரவாகுதேவருடைய திருமேனியிற் சிறிதும் வெளியிடமில்லையென்னும்படி மறைத்து ஆர்த்தான்.
 அந்த அம்புகள் அவருடைய திருமேனியிற்பட்டு, இரப்பவர்களுக்கு ஈயாது கரந்து இரவாத செல்வர்களுக்கு ஈந்த 
பொருள்போலப் பயனின்றி நுதிமழுங்கியழிந்து அயலில் வீழ்ந்தன. வீரவாகுதேவர் கோபித்து, ஓர் வேற்படையை 
யெடுத்துத் தருமகோபனுடைய மார்பில் எறிந்தார். அவன் அதற்கெதிராகப் பாணங்களை விடுத்தான். அவ்வேற்படை 
தருமகோபன் செலுத்திய சரங்களெல்லாவற்றையும் அழித்து, அவன் மனம் நடுங்கும்படி யணுகிக் கவசத்தைக் கிழித்து 
மார்பிற் புகுந்து புறத்திற் போயது. தருமகோபன் பொருமிப் புகைகால வுயிர்த்து, மார்பினின்றும் இரத்தம்வடிய 
அறிவிழந்திருந்தான். புண்டரீகம் என்னும் யானை தருமகோபன் அறிவிழந்திருந்ததை அறிந்து, வீரவாகுதேவரைக் 
கொல்ல நினைத்து அணுகி, அவருடைய தேரைக் கோடுகளினாற்றாக்கி, போர்க்களத்திற் கிடந்த ஓரெழுப்படையைக் 
கையிலெடுத்து, தேர்ப்பாகன் சிந்தும்படி அடித்தது. 

    தேரழிய, வீரவாகு தேவர் அதனைக் கண்டு கோபித்து, பிறிதோர் தேரிற்பாய்ந்து, தம்மேல்வரும் 
யானையினுடைய துதிக்கையை ஒருகரத்தாற் பற்றிக்கொண்டு, மற்றொரு கரத்தாற் கதுப்பிலடித்துத் தூக்கி 
அப்பாலுலகத்திற் செல்லவெறிந்தார். யானை விண்ணுலகிற் சென்று மீண்டு போர்க்களத்தில் வீழும்பொழுது 
தருமகோபன் முன்பு நீங்கிய அறிவு வரப்பெற்று, "யானையையிழந்தேன் போலும்" என்று அயர்ந்து, ஆபரணங்களுங்
 கிரீடமும் சிந்த யானையோடு விழுந்தான். வீழ்ந்த யானை மிகவும் வெருவிப் பதைபதைத்து வருந்தி ஒருசாரிற்போயது.
 தருமகோபன் எழுந்து ஓர் தண்டைக் கையிற்கொண்டு வீரவாகுதேவருடைய மார்பில் எறிந்தான். அவர் அதனை 
வாட்படையினாற் றுணித்தார். தண்டாயுதம் அழிதலும் தருமகோபன் குலிசத்தைவிட வீரவாகுதேவர் அதனைக் 
கையினாற்பற்றி, புலி கலைமானுக்கெதிரே புகுந்தாற் போலச்சென்று, தருமகோபனுடைய மார்பில் அடித்தார். 
அவன் வேர் வெட்டுண்ட விருக்ஷம்போலப் பூமியில் வீழ்ந்தான். வீரவாகுதேவர் திருவடியினால் ஒருதரம் உதைத்தார். 
தருமகோபன் இறந்தான். அவுணசேனைகள் கெட்டோடின.

    முன்விழுந்தயர்ந்த புண்டரீகமென்னும் யானை உயிர்த்து மெல்ல எழுந்து, தருமகோபன் இறந்தமையை 
நோக்கி, தான் ஆழ்ந்த துன்பக்கடலுக்குக் கரைகிடைத்தாற்போன்று, வீரவாகுதேவரையடைந்து சொல்லும்: 
''எம்பெருமானே, அடியேன்மீது கோபஞ் செய்யற்க. அருள்செய்து சிறியேன் சொல்வதனைக் கேளும். பொய்யென்று 
நினையாதொழிக. அடியேன் புண்டரீகமென்னும் பெயரையுடையேன். உலகத்தார் துதிக்குஞ் சிறப்பையுடையேன். 
திசையைக் காவல் செய்வேன். கீழ்மகனாகிய இந்தத் தருமகோபன் இட்ட கொடிய சிறையிற் பலநாள் அகப்பட்டேன். 
அங்ஙனமகப்பட்ட பாவியேன் புத்தியில்லாத தருமகோபனை இற்றைநாள் வரையுஞ் சுமந்து வாகனமாயினேன். 
அவனது ஏவல்கள் பலவற்றையுஞ் செய்தேன். அவனுடைய ஏவல் ஒன்றையாயினும் யான் மறுத்ததுண்டானால், 
என்னுயிரைக் குடித்து ஊனையுந் தின்பான் என்று பயந்து வேறொரு செயலுமின்றித் திரிந்தேன். 

    முன்னாளில் எண்டிசைகளினுமுள்ள இராக்ஷதர்கள் தன்னையிகழ்ந்தார்களென்று கோபம் மிகுந்து என்மேலேறிக் 
கொண்டு சென்று அவர்களெல்லாரையும் கிளையோடு கொன்ற தருமகோபனை நீரே கொன்றீர். வேறு யார் கொல்லவல்லார்! 
நீர் தருமகோபனைக் கொன்றமையினாலே தேவர்கள் கவலை தீர்ந்தார்கள், அடியேனும் உய்ந்தேன். அடியேனுக்கு 
இதன்மேலும் ஊதியமுண்டோ! பாசபந்தத்தை நீங்கி மோக்ஷத்தையடைந்தோரை யொத்தேன். முன்செய்த பாவத்தினால் 
அவுணர்களுடைய சிறையிலகப்பட்ட யான் இப்பொழுது உம்மை அணுகப்பெற்றமையினால் உய்ந்தேன். இதற்கு 
என்னதவஞ் செய்தேனோ! தமியேனுடைய திசையைக் காக்கும்படி போவேன்" என்று கூறிப் புண்டரீகமென்னும் 
யானை வீரவாகுதேவரை வணங்கியது. அவ்வாசகங்களைக் கேட்ட வீரவாகுதேவர் மிகமகிழ்ந்து, "உன்னுடைய 
இடத்துக்குச் செல்லுதி" என்றார். 

    யானை அவுணர்களுக்கஞ்சாது வழிக்கொண்டு தன்னுடைய திசையிற் போய், மகிழ்ச்சியோடிருந்தது. 
பூதர்கள் தருமகோபன் இறந்தமையை நோக்கி ஆர்த்து, வீரவாகுதேவருடைய புயவலியைப் புகழ்ந்தார்கள். தூதுவர்கள் 
அதனைக்கண்டு ஓடிச்சென்று சூரபன்மனை வணங்கி, "மகாராசனே கேட்பாய், தருமகோபன் என்னும் மந்திரி 
சேனைகளோடு சென்று போர் புரிந்து வீரவாகுவால் இறந்தான். சேனைகளும் அழிந்தன. அவன் ஏறிச் சென்ற 
புண்டரீகமென்னும் யானையும் போயது' என்றார்கள். சூரபன்மன் தருமகோபன் இறந்தமையைக் கேட்டுத் 
துன்பசாகரத்தி லாழ்ந்து, உடலும் உயிரும் பதைக்க அழுது உயிர்த்து அறிவிழந்து, சித்திரப்பாவை போலிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            பானுகோபன் வதைப்படலம்.

    சூரபன்மன் இவ்வாறு மிகுந்த துன்பத்தோடிருந்தபொழுது, மறுநாட்காலையில் ஒற்றுவர் சிலர் அதனைப் 
பார்த்து, பானுகோபனிடத்திற் சென்று இவ்வாறு சொல்வார்: "நம்மரசகுமரனே, முன்னே நீ மாயப்படைக்கலத்தைச் 
செலுத்தி வீரவாகுவை அவன் படைகளோடு அகப்படுத்திச் சுத்தோதக சமுத்திரத்திலிட்டாய். அதனைத் தேவர்கள் 
அப்பொழுதே அறுமுகக்கடவுளுக்குச் சொன்னார்கள். அவர் அதனை வினவி, பாசறையிலிருந்துகொண்டு தமது 
கையிலுள்ள வேற்படையைச் செலுத்த அது விரைந்து ஆறுசமுத்திரங்களையுந் தாண்டிச் சுத்தோதக சமுத்திரத்தை 
யடைந்தது. மாயப்படைக்கலம் அதன் வரவைக்கண்டு அக்கணமே தொலைவெய்தியது. வீரவாகுவும் மற்றைவீரர்களும் 
பூதர்களும் அயர்வுநீங்கி அறிவுவரப் பெற்று இங்கே மீண்டுவந்தார்கள். 

    வேற்படை அவர்களுக்கருள்செய்து மீண்டு கந்தவேளிருந்த இடத்திற்குச் சென்றது. வீரவாகு முதலாயினோர் 
போர்செய்யும்படி மதிலுட்புகுந்து இந்நகரத்தை அழித்தார்கள். அதனை உன் பிதாவாகிய சூரபன்மன் வினவி, 
தன்னயலில் நின்ற இரணியனையும், அக்கினிமுகனையும், மூவாயிரரையும், தருமகோபனையும் முறையே ஒருவர் 
பின் ஒருவராகப் போர்செய்ய அனுப்பினான். அவர்களுள் இரணியனை யொழிந்தோர் வீரவாகுவினாலும் 
மற்றையோர்களாலும் இறந்தார்கள். இரணியன் பயந்து மீனாய்க் கடலில் ஒளித்தான். நம்மரசன் இவைகளெல்லாவற்றையும் 
வினாவித் துன்பக்கடலுள் ஆழ்ந்து ஆற்றாது வருந்தினான். 

    இந்நகரத்திலுள்ள சேனைகளெல்லாம் அழிந்தன. பகைவர்கள் இன்னும் இந்நகரத்தில் நிற்கின்றார்கள்'' 
என்று ஒற்றுவர்கள் சொன்னார்கள். பானுகோபன் அவற்றைக்கேட்டு, 'நம்முடைய பெரிய வாழ்க்கை அழிந்தன போலும்" 
என்றிரங்கி, தன்மனத்திற் கோபமுந் துன்பமும் ஒன்றற்கொன்றெதிராய்ப் போர்செய்ய இருக்கைவிட்டெழுந்து, 
பிதாவினுடைய கோயிலுக்குச் சென்று, துன்பத்தோடிருக்கின்ற அவனுடைய கால்களை வணங்கி, எதிரில்நின்று 
''மகாராஜனே இவ்வுறுதிமொழிகளை நன்கு கேள்'' என்று ஆந்தரங்கமாகிய அன்போடு சொல்லுவான்: 

    "யான் மாயவள் தந்த படையினால் வீரவாகு முதலாயினோரை மயக்கிச் சுத்தோதக சமுத்திரத்திலிட்டேன். 
தேவர்கள் அதனைச் சொல்ல அப்பொழுதே வேற்படையை விடுத்து அவர்களை மீட்ட பாலகரை வெல்வது கனவிலும் 
முடியாது. எல்லாந் தெரிந்த உனக்கு யான் சொல்வதென்னை? முதனாள் நீ அறுமுகக்கடவுளோடு போர்செய்து வருந்தி, 
படைவலிமையுமிழந்து வறிதே புறந்தந்து ஈண்டு வந்தமையால் உய்ந்தாய். வில்லையிழந்து வரத்தினியல்புந் தொலைந்து 
மானமுமின்றித் தோற்று வந்தாய். முருகவேள் கோபஞ்செய்திலர்; அவர் கோபஞ்செய்தால், எல்லாப் புவனங்களும் 
எல்லாவண்டங்களும் ஆற்றுமோ! பிரமாவையும் உலகங்களையும் உண்டுமிழ்ந்த விட்டுணுவினுடைய ஒப்பில்லாத 
சக்கரப்படையைக் கண்டத்திலே பதக்கமாக அணிந்த தாரகாசுரனைக் கிரவுஞ்சமலையோடு சங்கரித்த வீராதிவீரரை 
மேன்மையால் வெல்பவர் யாவர்! 

    எளிய விலங்குகளைக் கொன்றவர்கள் புதலினுளிருக்கும் புலிக்குணவாயிறக்குங் கதைபோல, 
அளவில்லாத காலமாகத் தேவர்களையலைவு செய்கின்ற யாமும் குமாரக் கடவுளாற் பழைய வலியழிந்து 
தொலைந்தோம். யாவராலும் புகழப்படும் அந்தப் பாலகருடைய வலியைச் சொல்வதென்ன! அவருடைய 
பணியைச் செய்கின்ற வீரவாகுவை வெல்வதுமரிது. மிகப்பலநாள்கள் கழியினும், முற்றுப்பெறுவதொன்றை 
இடைவிடாமல் முயற்சி செய்தடைவது மேலோரியற்கை; பலநாள் உடம்பு வருந்தியும் தங்களால் முடிவு 
பெறாததொன்றை இதுமுடியுமென்று முயன்று இழப்பது கீழோரியற்கை. வலிமையையுடைய புத்திரர்களை 
யிழந்தாய், சதுரங்க சேனைகளின் பெருமையையிழந்தாய், என்னுடன் நீ ஒருவன் இருந்தாய். 

    மேலாகிய நின்குலத்தை வேரோடழிக்கக் கூற்றுவன் வந்ததையும் நீ அறிகிலை. பகையை மேற்கொண்டாய். 
யான் எதிர்த்துப் போர்செய்யவல்ல வீரர்கள் கிடைத்தால் மிகவும் மனந்தளிர்ப்பேன். அத்தன்மையினனாகிய 
யான் பகைவர்களுடைய போருக்கஞ்சினேனென்று கருதாதே. அரசனே, நீ இன்னும் உய்ந்திருத்தியோ என்னும் 
ஆசையால் இவைகளைச் சொன்னேன். இனி ஒர் உறுதியைச் சொல்வேன். தேவர்களுடைய சிறையை விடுக்குதி. 
அறுமுகக்கடவுள் நம்மிடத்துள்ள செற்றத்தை நீக்கி வந்தவிடத்துக்கு மீண்டுபோவார். அதன்பின் உன்னுடைய 
பெருவளங்கள் அளவில்லாத காலம் நிலைபெற்றிருக்கும்" என்று பானுகோபன் கூறினான்.

    சூரபன்மன் அவற்றைக் கேட்டு, முடியையசைத்து, புயங்களும் மார்புங் குலுங்கச் சிரித்து, "நம்பீ, 
உன் மந்திரச் சூழ்ச்சி நன்று!'' என்று இவ்வாறு சொல்வான்: "மைந்தனே,எவற்றைச் சொன்னாய்! இப்பொழுது யான் 
எளியனாகித் தேவர்களுடைய சிறையை நீக்கினால் இராசாதி ராஜனென்று யார் என்னை மதிப்பார்! அதுவுமன்றி 
நீங்காத வசையுமொன்றடையும். கூன், செவிடு, முடம், குருடு,ஊமை ஆகிய உறுப்புக் குறைவுகளினாலுண்டாகும் 
எளிமை அவ்வுடம்பொன்றுடன் ஒழியும். மானமழிந்து வலியிழந்து உலகில் உயிரோடிருப்போர்க் குளதாகும் வசையுரை 
எழுபிறப்பினும் நீங்குவதுண்டோ! யான் தேவர்களும் பிரமாவும் விட்டுணுவு முதலாகிய மற்றையெவரும் 
ஏவலைச் செய்ய இருந்தரசு செய்யலுற்றேன். மும்மூர்த்திகளுக்கும் மேலோராகிய சிவபெருமானுடைய வரத்தைப் 
பெற்றுள்ளேன். வலியில்லாதார் போலத் தேவர்களுடைய சிறையை இப்பொழுது விடுவேனோ! 

    கட்டழகு, இளமை,வலிமை, செல்வம், வீரம், சுற்றம், உடம்பு ஆகிய இவைகள் ஒன்றும் நிலையுடையனவல்ல; 
புகழென்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட ஒன்றன்றோ நிலைபெறுவது. பகைவர்களுடைய போரில் அரிய இவ்வுயிரை 
விடினும், தேவர்களுடைய அரிய சிறையை விடுவதுண்டோ! தமக்கு ஓர் துன்பம் வரினும், அல்லது இறக்கவரினும், 
தம்மோடுடன்பிறந்த மானத்தைப் பெரியோர் விடுவரோ! சூரன் என்று ஒரு பேர்பெற்ற யானும் சிறந்த இரண்டுநாளைச் 
செல்வத்தை விரும்பிப் பிடித்த கொள்கையை விடேன். இன்னும் ஒரூழிகாலமிருக்கினும் இறப்பதல்லால், பின்னும் 
இவ்வுலகில் உயிரோடிருப்பதுண்டோ! பிறந்தவர் இறத்தல் திண்ணம். விட்டுணுவையும் வென்ற யான் மின்போல 
நிலையில்லாத வாழ்வை விரும்பித் தேவர்களுக்குப் பயந்து இந்த உயிரைச் சுமக்கிலேன். மைந்தனே நீ அஞ்சினை 
போலும். உன்னுடைய எளிய மாளிகைக்குப் போய் நித்திரை செய்குதி. அழியாத வரத்தினையுடைய யான் அழிவதில்லை. 
இதற்காக இரங்கி மனத்தில் ஒன்றும் நினையாதே. பகைவர்களோடு போர்செய்வதற்கு யான் செல்வேன்" என்று 
சூரபன்மன் கோபத்தோடு கூறினான்.

    சூரபன்மன் சொல்லியவற்றைப் பானுகோபன் கேட்டு, "என்றந்தைக்கு உய்யுந்திறம் இல்லைப்போலும். 
யான் சொல்லிய ஒன்றையும் மனத்திற் கொண்டிலன். தப்பாத விதியை யார் வென்றவர்! அதற்கேற்ற செயலைச் 
செய்வேன்" என்று எண்ணி, ''என்பிதாவே, அறிவென்பது ஒருசிறிதுமில்லாத அடியேன் சொல்லிய தீயமொழிகளைச் 
சிறிதும் மனத்துக்கொள்ளாது பொறுத்துக்கொள். சிறிய பாலகர்கள் தீயமொழிகளைச் சொன்னார்களாயினும் 
மூத்தோர்கள் அதற்காகச் சிரிப்பதன்றி, அவரைக் கோபிப்பார்களோ! நீ என்மேற் கோபஞ் செய்யற்க. நம்முடைய 
நகரத்தை அலைவுசெய்கின்ற பூதகணங்களையும் சாதுரியமான வலிமையிற் சிறந்த வீரவாகுவையுங் கொன்று 
உன்மனமும் மகிழும்படி செய்வேன். என்னைப் போருக்கு அனுப்புதி' என்றுகூறி, சூரபன்மனுடைய கால்களில் 
வீழ்ந்து வணங்கினான். 

    சூரபன்மன் கோபந்தணிந்து சந்தோஷமுற்று, ''என்னுடைய குமாரனே, உன் மனம் போரிற் றுணிந்தது 
போலும். இது நன்று. பகைவர்களை வெல்லும்படி சேனைகளை அணிவகுத்துக்கொண்டு போருக்குச் செல்லுதி" என்றான். 
பானுகோபன் விடைபெற்றுக்கொண்டு மிகுந்த துன்பத்தோடு விரைவில் மீண்டு, தன்கோயிலையடைந்து, 
பல தேவர்களுந் தந்த படைக்கலங்களெல்லாவற்றையும் ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, மார்பிற் கவசத்தையிட்டு, 
விரலிற் புட்டிலைச் சேர்த்து, கைத்தோற்கட்டியைக் கட்டி,வில்லையேந்தி, அப்பறாக்கூட்டை முதுகிற்கட்டி, 
சேமமாயுள்ள எண்ணில்லாத படைகளுந் தேருஞ் சுற்ற வாயிலிற்சென்று, பொன்மலையிலே இடியேறு 
இவர்ந்தாற்போல ஓர் தேரிலேறினான். அப்பொழுது எண்ணில்லாத நால்வகைச் சேனாவெள்ளங்கள் சூழ்ந்தன. 

    வாத்தியங்கள் முழங்கின. கொடிகள் சூரியமண்டலத்தை மறைத்தன. இவ்வாறாகச் சேனைகள் சூழும்படி 
தேரின் மீதேறிய பானுகோபன் சூரபன்மனிடத்தே வைத்த அன்பும் அதுகாரணமாயெழுந்த துன்பமும் தன்மனத்தை 
விழுங்க, போர்செய்யுந் திசையை நோக்கி விரைந்து செல்வானாய், பலகோடி வீதிகளைக் கடந்து போர்க்களத்தை 
வந்தடைந்து, மூவாயிரரும் பிறரும் இறந்து கிடத்தலை நோக்கி, ஆவா என்றிரங்கி அழுது துன்பமுற்றான். துன்பமுற்ற 
அவன் தாங்கலாற்றாத துயராலழிகின்ற தன்மனத்தை ஒருவாறு தேற்றி, பகைவர்கள்மேற் பெருங்கோபங்கிளர்ந்து 
செல்ல, "யான் பூதர்களை இறக்கும்படி வாட்டி வீரவாகுவைக் கொல்லாதொழிவனேயெனின், வேசிகளுடைய 
காமவின்பத்தை விரும்பி அவர்களுக்குப் பின்னே செல்கின்ற தரித்திரனுக்கொப்பாகுக" என்று ஓர் சபதத்தைக் கூறினான். 

    அவனுடைய வரவைப் பூதர்கள் கண்டு, "இங்கே வருகின்றவன் சூரபன்மனாகும், அல்லது அவன் மகனாகிய 
பானுகோபனாகும். வேறியார் போருக்கு வருவார்" என்று பேசலுற்றார்கள். அப்பொழுது, அவுணசேனைகள் சென்று 
பூதசேனைகளோடு ஆர்த்து எதிர்த்தன. போர்ப்பறைகள் ஒலித்தன. பூதூளி எழுந்து ஆகாயத்தையுந் திசைகளையும் 
மறைத்தது. பூதர்கள் ஆரவாரித்து எதிர்த்து மலைகளையும் படைகளையும் மரங்களையும் எறிந்தார்கள். அவுணர்கள் 
எழு, கலப்பை, மழு, தண்டம், பாணம் ஆகிய இவைகளைச் செலுத்தினார்கள். பூதர்களும் அவுணர்களும் பகலுமிரவும் 
பூமியிலே போர்செய்து நின்றாற்போல இவ்வாறு மாறுபட்டு போர் செய்தார்கள். 

    பூதர்கள் செலுத்துகின்ற மரங்களையும் மலைகளையும் அவுணர்கள் பாணங்களால் அழித்தார்கள். அவுணர்கள் 
செலுத்துகின்ற வேல் தண்டம் எழு முதலாகிய படைகளைப் பூதர்கள் மலைகளால் அழித்தார்கள். தலைகளும் புயங்களும் 
நிலத்தில் வீழ இறந்த பூத சேனைகள் அனந்தம். புயம், மார்பு, கால், தலை முதலிய அவயவங்கள் அழிந்து இறந்த 
அவுணசேனைகளும் பல. பூதசேனைகளாற் குதிரைகளும் யானைகளும் தேர்களும் பூமியிலழிந்து சாய்ந்தன. 
இரத்தம் பெருகியது. பிணமலைகள் ஆகாயத்தை மறைத்தன. நாய்களும் நரிகளும் காக்கைகளும் பருந்துகளும் 
உலாவின. இவ்வாறு இருதிறத்துச் சேனைகளும் போர்செய்யும்பொழுது, பூதர்களுடைய தூசிப்படை முரிந்தது. 

    பின்னணியில் நின்ற பூதர்கள் சமுத்திரம் போல வந்து எதிர்த்து அவுணக்கடலைக் கலக்கி, நால்வகைச் 
சேனைகளையும் அழித்து உலாவினர். தன்சேனைகள் அழிதலைப் பானுகோபன் கண்டு, "குறள்களாய் வருகின்ற 
இந்தச் சில பூதர்களே நம்முடைய சேனைகளெல்லாவற்றையும் கொல்கின்றனரோ! ஆஆஇது இனிது' என்று தேரைச் 
செலுத்தி,வில்லை வளைத்துப் பாணங்களைச் சொரிந்து, தேவர்கள் வருந்தும்படி விரைவில் வந்தான். அவனுடைய 
வரவைப் பூதர்கள் கண்டு, எதிர்சென்று ஆர்த்து, மரங்கள், மலைகள், சூலம், எழு முதலாயினவற்றைச் சொரிந்தார்கள். 
அவற்றிற்கெதிராகப் பானுகோபன் அக்கினிபாணங்களைத் தூண்டினான். பூதர்கள் விடுத்த மரம் முதலியவெல்லாம்
 துணிந்து துகளாயின.

    பானுகோபன் பூதர்கண்மீது பின்னும் அக்கினியம்புகளைச் சிந்தினான். அவைகள் புற்றில் நுழையும் 
பாம்புகள் போலப் பூதர்களுடைய உடம்புகளில் நுழைந்து துளைத்தன. அவர்களுடைய உடம்பினின்று இரத்தம் 
வடிந்தது. அவர்கள் மனம் பதைபதைத்துப் பானுகோபனுக்குத் தோற்றோடினர். முன்னே பூதர்களுக்குத் தோற்றோடிய 
அவுணர்கள் பானு கோபனை வந்து கூடினார்கள். பூதர்கள் தோற்றோடியதையும் பானுகோபனுடைய வெற்றியையும் 
இலக்கத்தொன்பதின்மருள்ளே முதலில்நின்ற வீரவாகுதேவர்கண்டு, தேரோடு விரைந்துசென்று, சண்முகக்கடவுளுடைய 
திருவடிகளைத் தியானித்துத் துதித்து, அவுணசேனைகள் வருந்தும்படி ஒர்வில்லை வளைத்தார். 

    அதனைக் கண்ட அவுணசேனைகள் தண்டம்,தோமரம், சூலம் முதலாகிய படைகளை அவர்மீது 
சொரிந்தார்கள். வீரவாகுதேவர் அவைகள் அழியும்படி பாணங்களை விடுத்து, அவர்களுடைய கால் கை தலை 
முதலாகிய அவயவங்கள் துணியும்படி பின்னும் பாணங்களை விடுத்தார். அவர் செலுத்தும் அம்புகளால் 
தேர்களும் குதிரைகளும் யானைகளும் அழிந்தன. அவுணர்களுடைய போரொழிந்தது. இரத்தம் பெருகியது. 
பானுகோபன் அதனைப் பார்த்து, 'இவனுடைய வில்லால் நம்முடைய சேனைகள் அழிந்தனவோ!" என்று, 
கோபத்தோடு தேர்ப்பாகனை நோக்கி, "வீரவாகுவுக்கு முன்னே நம்முடைய தேரை விரைந்து செலுத்துதி" என்றான். 

    பாகன் தேவர்கள் நடுங்கும்படி தேரைச் செலுத்தி ஆர்த்தான். பானுகோபன் வில்லை வளைத்து, 
வீரவாகுதேவரை நோக்கி, "குறைவில்லாத என்னுடைய சேனைகளைக் கொன்றாய்; நீ இனி உய்ந்துபோதல் அரிது. 
உன்னைக் கொல்லும்படி யான் சபதஞ் செய்துகொண்டு வந்தேன்" என்றான். வீரவாகுதேவர் "இனிப் போர்செய்து 
இறப்பவர்களையும் வெற்றிகொள்பவர்களையுந் தேவர்கள் காண்பர். நின்று காலதாமதஞ் செய்யற்க, போரைச் செய்குதி" 
என்றார். கோபம் மிகுந்த பானுகோபன் வளைத்த வில்லில் ஆயிரம் பாணங்களைப் பூட்டி, வீரவாகுதேவருடைய 
மார்பைத் துளைக்கும்படி செலுத்தினான். அப்பாணங்கள் மார்பைத் துளைத்துப் புறஞ்செல்ல, வீரவாகுதேவர் 
சோகத்தோடு தம்முடைய வில்லை வளைத்து நாணொலிசெய்து, ஆயிரம்பாணங்களைப் பூட்டிப் பானுகோபனுடைய 
புயத்திற் செலுத்தினார். 

    அவைகள் தைத்தலாற் பானுகோபன் வருந்தி, நூறுபாணங்களினால் வீரவாகு தேவருடைய வில்லைத் 
துணிபடுத்தினான். அதனைக்கண்ட தேவர்கள் அஞ்சினார்கள். வீரவாகுதேவர் ஓர் வேற்படையை எடுத்துப் 
பானுகோபனுடைய நெற்றியில் எறிந்தார். அது நெற்றியிற் புகுதலும் இரத்தவெள்ளம் ஆறுபோலப் பெருகியது. 
பானுகோபன் ஓரிறைப்பொழுது அறிவிழந்து தேரில் நின்று, பின்னர் உணர்வு வரப்பெற்றான். வீரவாகுதேவர் 
விரைவில் வேறொரு வில்லை எடுத்து வளைத்து வாயுப் படைக்கலத்தைவிட, அவனும் அதனை விடுத்தான். 
வீரவாகுதேவர் அக்கினிப் படையை விடுத்தார். அவனும் அதனை விடுத்தான். வீரவாகுதேவர் விடுத்த அக்கினிப்படை 
அதனோடு போர்செய்து மீண்டது. 

    பானுகோபன் சூரியப் படைக்கலத்தை எடுத்து "இவனுடைய உயிரைக் கவருதி" என்று தூண்டினான். 
அதனை வீரவாகுதேவர் பார்த்து, தாமும் அதனை விடுத்து அழித்தார். பானுகோபன் பிரமப் படைக்கலத்தை 
விடுத்தான். வீரவாகுதேவரும் அதனைச் செலுத்த அது சென்று அவன்விடுத்த பிரமப்படையை நீக்கி மீண்டது. 
பானுகோபன் விட்டுணுப் படைக்கலத்தை விடுத்தான். வீரவாகுதேவர் அப்படையை விடுத்து விலக்கினார். 
பானுகோபன் அதனைக் கண்டு, "யான் விட்ட விட்ட படைகள் அழியும்படி இவனும் படைகளை விட்டான். 
இனிச் சிவப்படைக்கலத்தை யான் விடுப்பின், அது அவன்கையிலுமுள்ளது, நான் முன் கண்டது. ஆதலால் 
யான் அச்சிவப்படைக்கலத்தைச் செலுத்துவதாற் பிரயோசனமில்லை. இனி மாயையினால் இவனை வெல்வதே 
உபாயம்" என்று நினைத்து, மாயா மந்திரத்தை எண்ணித் தேரோடு மறைந்து, வீரவாகுதேவருக்கு நாற்புறத்திலும் 
தேருடன் சுற்றிவந்து பாணங்களை வருஷித்தான். 

    அப்பாணங்கள் வந்து படுதலும், அவருடைய திருமேனி ஊறுபட்டு இரத்தம் ஆறுபோலப் பெருகியது. 
அதனைத் தேவர்கள் பார்த்து மனமழிந்தார்கள். பூதர்களும் படைத்தலைவர் முதலாயினாரும் அஞ்சினர். 
அதனை வீரவாகுதேவர் கண்டு, "இவன் ஒருமாயையினாலே முன் வென்று போனான். இன்றைக்கும் அதனை 
யெண்ணினானோ? இவனுக்கு அது செய்து முடிக்கக் கூடுமோ? இது நன்று நன்று! நான் இவனை இப்பொழுதே 
கொல்வேன்" என்று எண்ணினார். இவ்வாறு கருதிய வீரவாகுதேவர் "இவனுடைய மாயம் அழியும்படி செய்வேன்" 
என்று ஞானாஸ்திரத்தை எடுத்துச் சிரத்தையோடு வழிபாடுசெய்து, பானுகோபனைக் குறித்துச் செலுத்தினார். 

    அது சூரியப்பிரகாசத்தோடு செல்லுதலும், பானுகோபனுடைய மாயை அழிந்தது. அவன் தேரும் தானுமாய் 
ஆகாயத்தில் வெளிப்பட்டு நின்றான். பானுகோபன் தன்மாயமழிந்ததையும், வீரவாகுதேவருடைய வலியையும் நோக்கி, 
அயர்ந்தான். முன் வருத்தமுற்ற தேவர்கள் யாவரும் மகிழ்ந்தார்கள். அப்பொழுது வீரவாகுதேவர் ஆகாயத்தில் நிற்கின்ற 
பானுகோபனுடைய இயற்கையை நோக்கி, 'வஞ்சனே,இனி நீ எங்கே போவாய். யான் இங்கே உன்னைக் கொல்வேன்" 
என்று கூறி, வில்லை வளைத்துக்கொண்டு தேரோடும் ஆகாயத்திற்போய்ப் பானுகோபனுக்கு முன் சென்று, 
பலகோடிபாணங்களைச் சொரிந்தார். 

    அவனும் கோபித்து வில்லை வளைத்து, தேவர்கள் அஞ்ச அம்பு மழைகளைச் சொரிந்தான். நீரும் நெருப்பும் 
ஒன்றற்கொன்று மாறாய்க் கோபத்தோடு நின்று போர் செய்வது போல இருவரும் போர்செய்து நின்றார்கள். 
அவர்களுடைய தேர்களிரண்டும் ஓரிறைப்பொழுதினுள் ஆயிரநூறுகோடி சாரிகைகள் திரிந்தன. 
அவ்விருவரும் எதிரெதிராய்ச் செலுத்தும் அம்புகள் அண்டச் சுவர்காறுஞ் சென்று சூரியகிரணங்களின் 
வரவை மாற்றி, எவ்வுலகிலுள்ளோர்க்கும் மிகுந்த துன்பத்தைச் செய்தன. இருவருடைய பாணங்களும் யாண்டுஞ்
செறியும்பொழுது, தேர்கள் அழிந்தன, குதிரைகள் அழிந்தன, யானைகள் அழிந்தன, அவுணர்களுடைய சிரங்கள் 
வெட்டுண்டன, பூதர்களுடைய உடம்புகள் வெட்டுண்டன. 

    இருவருடைய தேர்களும் ஒன்றையொன்று கிட்டுவன, தூரத்திற் செல்வன, மேலே யுயர்வன, பின்னுங்கிட்டி 
முட்டுவன, ஒன்றையொன்று இடம் வலமாகச் சூழ்வன, தேவர்கள் மனத்தால் நினைக்க அரியனவாவன, எட்டுத் 
திக்குக்களிலும் ஆகாயத்திலும் திரிவன. அவரிருவரும் ஒருவரையொருவர் இகழ்வர், கோபஞ்செய்வர், சபதஞ்சொல்லுவர், 
வலிமையை நோக்கிப் புகழ்வர், உரப்பி வீரம்பேசி அழைப்பர், ஒருவர் போரை ஒருவர் மகிழ்வர், நகைப்பர், 
வெற்றிச் சங்கை யூதுவர், பாணமழைகளைச் சிந்துவர். உரப்பிச் செல்வர். வீரவாகுதேவரும் பானுகோபனும் 
இவ்வாறு போர்செய்தபொழுது, முறைமுறையாகக் கோபத்தோடு செலுத்திய பாணமழைகள் உலகமெங்கும் 
நெருங்கிச் செல்லுதலாற் சூரியன் மறைந்தான்; சந்திரனுடைய கலைகளும் குறைந்தன ; 

    அவர்களுடைய பாணங்கள் வாயுவை யொப்பன, கூற்றுவனையொப்பன, அக்கினியை யொப்பன, 
நஞ்சையொப்பன, இடியையொப்பன, சிவபெருமானுடைய திருப்புன்முறுவலை யொப்பன, சூரியனை யொப்பன, 
சுப்பிரமணியக்கடவுளுடைய வேற்படையை யொப்பன. அப்பாணங்கள் மலையிற்புகுந்தன, வானிற்புகுந்தன, 
கடலிற்புகுந்தன, திசைகளிற் புகுந்தன, அண்டங்களிற்புகுந்தன, பாதலங்களிற் புகுந்தன. இருவரும் விடுகின்ற 
அக்கினியஸ்திரங்கள்பட்டு மேகங்கள் எரிகின்றன, எண்டிசை யானைகளும் கரிகின்றன, பூவுலகங்கள் வெடித்தன, 
கடல்கள் வற்றின, நக்ஷத்திரங்கள் பொரிந்தன. உலகமெங்கும் புகைமிகுந்தது. 

    வீரவாகுதேவர் செலுத்துகின்ற சரங்களைப் பானுகோபன் தன் சரங்களால் மாற்றுவான். அவன் விடுகின்ற 
சரங்களை வீரவாகுதேவர் தம்முடைய சரங்களால் மாற்றுவார். இரண்டு வீரர்களும் இவ்வாறு போர்செய்யும்பொழுது, 
பூவுலகத்துள்ளவர்களும் தேவர்களும் அதனைப்பார்த்து, "இவர்போலப் போர்செய்தவர் யாவருளர்! போர் வீரத்தில் 
இவர்க்கிணையாவார் யாவர்" என்று வியந்தார்கள். அப்பொழுது பானுகோபன் நூறாயிரம் பாணங்களால் 
வீரவாகுதேவருடைய தேரைப் பொடிபடுத்தி, சமுத்திரங்களும் அஞ்சும்படி இடி போல ஆரவாரித்தான். 
வீரவாகுதேவர் கோபித்து, ஆகாயத்தில் நின்று தம்முடைய வில்லைக் காலுறவளைத்து, ஆயிரம் பாணங்களைத் 
தூண்டி, பானு கோபனுடைய தேரைத் துகள்செய்தார். 

    தேரழிதலும், ஆகாயத்தில் நின்ற பானுகோபன் கோபித்து, வீரவாகுதேவருடைய மார்பில் அழுந்தும்படி 
நஞ்சு பாய்ச்சிய இருபத்தைந்து பாணங்களைத் தூண்டிப் புயங்களைத் தட்டி ஆரவாரித்தான். பானுகோபன் 
செலுத்திய பாணங்களால் மனம் நொந்த வீரவாகுதேவர் பதினான்கு பாணங்களைச் செலுத்தி அவனுடைய 
கிரீடத்தை அழித்தார். முடிசிதற வறியனாய் நிற்கின்ற பானுகோபன் பதினான்கு கணைகளைத் தூண்டி 
வீரவாகுதேவருடைய கவசத்தையறுத்தான். வீரவாகுதேவர் "இதுநன்று" என்று சிரித்து, ஏழு பிறைமுகாஸ்திரங்களைச் 
செலுத்தி, பானுகோபனுடைய வில்லைத் துணித்தார். அவன் கூற்றுவனைக்  காட்டிலும் கோபித்து, பிரமதேவர் முன்னாளிற் 
கொடுத்த வேற்படையை எடுத்து, ''இவனைக் கொல்" என்று சொல்லி வீரவாகுதேவர்மேல் விடுத்தான். 

    வீரவாகுதேவர் வலியையுடைய ஆயிரகோடிபாணங்களை அவ்வேற்படையைத் தடுக்கும்படி செலுத்தினார். 
அது அப்பாணங்களெல்லாவற்றையும் அழித்து ஆகாயவழிக்கொண்டு வந்தது. அதனுடைய வலிமையை வீரவாகுதேவர் 
நோக்கி, சிவபெருமான் தமக்குக் கொடுத்த வாட்படையை எடுத்து, கந்தசுவாமியினுடைய திருவடிகளைத் துதித்து, 
இருதுணியாம்படி வெட்டினார். அதனைக்கண்ட தேவர்கள் கூத்தாடினார்கள்; அவுணர்கள் ஏங்கித் திகைத்தார்கள். 
வீரவாகுதேவர் வாட்படையை உறையிலிட்டார். தான் விடுத்த வேற்படை துணிபட்டதைப் பானுகோபன் பார்த்து 
''அம்மவோ! என் வேற்படையின் வலிநன்று?" என்று சொல்லி, போர்செய்யும் படி விரைந்து வாட்படையை எடுத்துச் 
சுழற்றி, இடிபோல ஆவலங்கொட்டி, போர்மகிழ்ச்சியோடு வீரவாகுதேவருக்கு முன்செல்லுதலும், அவர் வில்லைக் 
காலுற வளைத்து, பல்லாயிரம் பாணங்களைச் செலுத்தி, பானுகோபனுடைய மார்பைக் கிழித்தார். 

    மலைப்பிளப்பினின்றும் வீழும் அருவி போல இரத்தம் வீழ்ந்தது. பானுகோபன் தன்மேல்வரும் 
பாணங்களைப் பாராதவனாயும், தன் மார்பு பிளந்ததனையும் அதினின்று இரத்தம் வீழ்தலையும் 
எண்ணாதவனாயும், மானமுந் தானுமாய் ஓடிப்போய், வீரவாகுதேவரைக் கிட்டி, அவருடைய வில்லை 
வாளினாற் றுணித்து, மேலே கிளர்ந்து இடி போல உரப்பி வாளைவீசித் திரிந்தான். அவனுடைய 
போர்வலியைக் கண்டு துன்பமடைகின்ற தேவர்கள் "இவன் இறந்தபின் போரென்பதில்லை." என்றார்கள்.

    அப்பொழுது வீரவாகுதேவர் உருத்திரமூர்த்தியைப் போலக் கோபித்து, தம்முடைய வாட்படையை 
உருவிக் கறங்குபோலச் சுற்றி, "எங்கே போகின்றாய்" என்று சொல்லிக்கொண்டு, பானுகோபனை எதிர்த்தார். 
அவனும் வாயுவேகத்தோடு வந்தெதிர்த்தான். இருவரும் யமனும் அக்கினியும் போர்செய்வதுபோலக் 
கோபத்தோடு வாட்போர் செய்தார்கள். இருவரும் மாறுமாறாய்ச் சென்று கால்முதலிய அவயவங்களைத் 
துணிக்கும்படி வாட்படையை வீசுவர். அதனை விலக்கித் தழும்பு செய்யுந் திறத்தை நாடுவர். இடைதெரிந்து 
அது உறாமையினாற் சூறைக்காற்றுப் போலச் சுற்றுவர். இவரிருவரும் இவ்வாறாக வாட்போர் செய்துகொண்டு 
நிற்கும்பொழுது, பானுகோபன் தான் கற்ற வாள்வித்தையின் வலியால் வீரவாகுதேவருடைய வாளை விலக்கி, 
அவருடைய திருத்தோளில் வெட்டினான். 

    அவருடைய தோளினின்றும் இரத்தவெள்ளம் பெருகியது. பானுகோபன் அதனைக்கண்டு செருக்கடைந்தான். 
தேவர்கள் நடுங்கி "இவனுக்கு வீரவாகுதேவர் தோற்பாரோ" என்று இரங்கினர். அப்பொழுது வீரவாகுதேவர் நிர்மலராகிய 
அறுமுகப்பெருமானுடைய திருவடித்தாமரைகளைத் தியானித்துத் துதித்து, விரைந்து வாளை வீசிப் பானுகோபனுடைய 
வலத்தோளைத் துணித்தார். அவன் தன் வலக்கையோடு வீழ்கின்ற வாட்படையை இடக்கையாற் பறித்து, அடங்காத 
கோபத்தோடும் பின்னும் போர்செய்ய முயன்றான். வீரவாகுதேவர் அவனுடைய முயற்சியைப் பார்த்து இடக்கையையுந் 
துணிப்ப, அவன் "மாயப்படைக்கலத்தை விடுவேன்'' என்று எண்ணினான். 

    அப்பொழுது வீரவாகுதேவர் அவனுடைய தலையை அறுத்தார். பானுகோபனுடைய தலையும் புயங்களும் 
உடம்பும் வீழ்ந்தன. அவன் இறந்தான். அவனுடைய உயிரை யமன் கவர்ந்து வீரவாகுதேவரைத் துதித்துத் தென்புலத்தை 
யடைந்தான். பானுகோபன் இறந்ததை முனிவர்களும் தேவர்களும் முதலாயினோர் பார்த்து, ஆடிப்பாடி ஆர்த்து, 
"வீராதிவீரர் நீரே" என்று வீரவாகுதேவரை வியந்து, பூமழைகளைப் பொழிந்தார்கள். பானுகோபனாற் றுன்பமுற்றழிந்த 
பூதர்கள் அவன் இறந்தமையை நோக்கி ஆர்த்து, வீரவாகுதேவரைத் துதித்தார்கள். சூரியன் கவலை நீங்கிக் களித்தான்.

    அப்பொழுது வீரவாகுதேவர் மகிழ்ச்சியடைந்து, ஆகாயத்தை நீங்கிப் பூமியில் வந்து, தமது 
துணைவர்களை அடைந்து, "பெரிய மாயங்களால் நம்மை முன் அலைவுசெய்த பானுகோபனைச் 
சங்கரித்தோம். நாம் சொல்லிய சபதமும் நிறைவேறியது. சேனைகளோடு இனி எம்பெருமானது 
திருமுன்பு செல்வோம். வருதிர்" என்றார். அதனைத் துணைவர்கள் கேட்டு, ''தலைவரே, நேற்றும் 
அறுமுகப் பெருமானுடைய திவ்விய சந்நிதானத்திற் போய் அவருடைய திருவடிகளை வணங்கினோமல்லேம். 
நீர் செய்யத் தகுவதையே சொன்னீர். இது தக்கதே" என்றார்கள். வீரவாகுதேவர் தம்பிமாரும் படைத் 
தலைவர்களும் பூதர்களும் சூழ்ந்துவரப் போர்க்களத்தை நீங்கிச் சென்று, பாசறையிற் புகுந்தார். 
அவர் துணைவர்களோடும் மற்றைப் படைத்தலைவர் முதலாயினாரோடும் போய் அறுமுகப்பெருமானை 
அன்பினோடு தரிசித்து, அவருடைய பாததாமரைகளைப் பலமுறை பணிந்து எழுந்தார். 

    அவரை முருகக்கடவுள் பார்த்தருளி, "தம்பியே,பானுகோபனோடு போர்செய்து வருந்தி அவனைக் 
கொன்றாய். ஆதலால் யாம் மகிழ்ந்தோம். வேண்டிய வரத்தை விரைந்து கேட்குதி தருவோம்' என்றருளிச் செய்தார். 
துதித்துக்கொண்டு நிற்கின்ற வீரவாகுதேவர் அதனைக்கேட்டு, "எம்பெருமானே தேவரீரையன்றி நாயினேன் 
செய்த செயலொன்றுமில்லை. ஆயினும், அடியேனுக்கு ஒருவரத்தைத் தந்தருளல் வேண்டும்'' என்று அதனை 
விண்ணப்பஞ் செய்வார்: "குபேரனுடைய  வாழ்க்கையையும் நினையேன்; இந்திரனுடைய அரசினைக் 
கனவிலும் விரும்பேன்; பிரமவிட்டுணுக்கள் பெறுகின்ற பதங்களையும் பொருளென மதியேன்; தேவரீருடைய 
திருவடித் தாமரைகளில் இடையறாத பேரன்பையே தமியேன் மிகவும் வேண்டுவேன். அந்த நல்லவரம் முத்தியினும் 
அரியது. அதனைத் தேவரீரைத் தியானிக்கின்ற தவத்தரும் பெறுகிலர். எளியேன் உய்யும் வண்ணம் அதனை 
ஈந்தருளல் வேண்டும்" என்று வீரவாகுதேவர் பிரார்த்தித்தார். 

    எம்பெருமானாகிய கந்தவேள் ''உனக்கு அதனைத் தந்தோம்" என்று அருளிச்செய்தார். யாவர்க்கும் 
முதல்வராகிய அக்கடவுள் வீரவாகுதேவருக்கு இவ்வரத்தை உதவி, தம்மை வணங்குகின்ற துணைவர்களுக்கும் 
நல்லருளைச்செய்து, அவர்கள் யாவரையும் அவரவர் இருக்கைக்குப் போயிருக்கும்படி விடைகொடுத்தனுப்பினார். 
வீரவாகுதேவர் முதலாயினோர் சண்முகக்கடவுளை வணங்கி, தங்கள் தங்கள் உறைவிடங்களுக்குப் போயினார்கள்.
இங்கே இது நிற்க, அங்கே சூரபன்மனிடத்துண்டாகிய நிகழச்சிகளை இனிமேற் சொல்வாம். 

    பானுகோபன் இறந்தமையைக் கண்ட தூதுவர்கள் 'இவர்கள் செய்தது இதுவாயின் நம்மரசனாகிய 
சூரபன்மனையுங் கொல்வார்கள்'' என்று எண்ணி, நடுங்குகின்ற மனத்தையுடையராய் மிகவிரைந்து ஓடிச்சென்று, 
முரசொலிகள் அடங்கி அழுகையொலி மிகுகின்ற மகேந்திரபுரத்து வீதியிற் போய், சூரபன்மனுடைய அவைக்களத்துட் 
புகுந்து, மிகவும் நீர்வடியுங் கண்களையும் நினைத்தற்கரிய துன்பத்தையும் உயிர்க்கின்ற நாசியையுமுடையராய், 
அவனுடைய கால்களை வணங்கி, "மகாராஜனே, முன்பு இங்குவந்த தூதுவனால் உன்னுடைய மகன் இறந்தான்" 
என்றார்கள். 

    சூரபன்மன் அதனைக்கேட்டலும், ஆழமாகிய துன்பக் கடலிலேயமிழ்ந்தி, ஒவென்று புலம்பி வீழ்ந்து, 
புரண்டு,உயிர்ப்பு மிகுந்து, உடம்பு வெயர்த்து நடுங்க மனம்நடுங்கி, அக்கணமே அறிவுசோர்ந்து மயங்கினான். 
உடம்பு வெதும்பவும், கண்ணீர் வடியவும், மனந்திரியவும், உயிர் ஊசலாடவும், இறந்தவர்போல வீழ்ந்து மயங்கிய 
அவன் பின் ஒருவாறு தெளிந்து இரங்கி, இவ்வாறு சொல்லிப் புலம்புவான்: "என் மைந்தவோ, என் மதகளிறோ, 
வினையேனுடைய சிந்தையோ, சிந்தை தெவிட்டாத தெள்ளமுதோ, என்றந்தையோ, தன்றந்தைக்குத் தந்தையில்லாத 
பாலகன் உன்னைக் கொன்றானோ! எந்தையோ, உன்னை இதற்கோ வளர்த்தேன். அழகிற் சிறந்த என்புத்திரர்கள்
 பலர் இறந்தார்கள். அவர்கள் இறந்தும், உன்னொருவனையும் துணையென்று மனத்தில் நினைத்திருந்தேன். 
எந்தையே என்னைத் தனியே வைத்துப் போயினாயாயில் பின்பு தமியேனுக்குப் பிழைக்கும் வகையுண்டோ! 

    'பகைவர்களுடைய சிறையை விட்டால் நமக்கு உய்வுண்டாம்' என்று முன்னே சொன்னாய். அதனையுமிகழ்ந்து 
உன்னைத் தோற்றேன். இனி அதனை எண்ணுவதனாற் பயனென்ன! யாவருக்குந் தன்னால் வராத வினையுளதோ தக்கோனே.
 'பகைவர்மீது போருக்குச் செல்வது நன்றல்ல' என்று ஈரமாகச் சொன்னாய். யான் அப்பகைவர்மேற் போருக்குப் போகாமல் 
'நீ செல்' என்று உன்னை அனுப்பி இழந்தேன். ஐயா உன்மாட்டுப் பிழையொன்றேனுமுளதோ! தேவர்களெல்லாரும் 
முப்பொழுதும் வந்து பூக்களைக் கையிலேந்தி உன்னை வழிபடுவார். அவர் உவமை சொல்லமுடியாத உன்மேலுள்ள 
பகையை இற்றைத் தினத்தோடு நீங்கிக் களிப்புற்றிருந்தாரோ! 

    உன்னுடைய ஆணைக்கஞ்சி நித்திரை செய்யாதுழலும் விட்டுணுவானவன் இன்றைக்கு நீ இறந்தாய் 
என்றதனைக் கேட்டு மகிழ்ந்து சேஷசயனத்திற்படுத்து இலக்ஷுமியும் பூமிதேவியும் தன் கால்களை வருட 
முன்னாள் போலக் கவலையின்றி நித்திரை செய்யானோ! நம்முடைய அசுரகுலத்துக்கு நாயகமே, 
வந்தடைந்திரந்தார்க்கு ஓர் சிந்தாமணியே, திருவே, என்றெள்ளமுதே, எந்தாய்,நீ தனியே போய் எங்கிருந்தாய்! 
அங்கே யான் வந்தாயினும் உன்னுடைய மதுரமொழியைக் கேட்பேனோ! என்னுடைய மந்திரிமார்கள் புதல்வர்கள் 
எல்லாரும் போருக்குப் போய்ப் பகைவர்களால் இறந்தார்கள்; என்றுயரை யாராய்ந்து தீர்த்தற்கு யாருமில்லை. 
புதல்வனே வாராய், கடிதோடி வாராய். 

    தன்கிரணங்களால் உன்னைத் தீண்டி, உன்சிறையிலகப்பட்டு, பிரமன் வந்துவேண்ட நீ விட்டபின்னர் 
வாடித்தளர்ந்து வசைபடைத்த சூரியனார் இனி மனமகிழ்ந்து ஆகாயத்திலோடிச் செல்லாரோ! நம் பகைவர்களாகிய 
தேவர்களுடைய குற்றேவல்களைச் செய்து அலமந்துழலுகின்ற ஒற்றுவன்றானோ உன்னைக் கொல்ல வல்லான்! 
போரிலிறந்த அவுணர்களுடைய உடலுக்கு உயிராய்ச் செல்லும்படி நீ கற்றால், என்னை மறக்கவுங் கற்றாயோ! 
மிகுந்த வெற்றியைப் படைத்த புத்திரன் இறந்தான் என்றுசொல்லக்கேட்டும் என்னுயிர் போனதில்லை, இன்னுமிருந்தது. 
மனம் வேகின்றது. மிகுந்ததுன்பம் வந்தவிடத்துச் சாகின்ற ஒர் வரத்தையும் சிவபெருமானிடத்துப் பெற்றேனில்லையே. 
வெற்றியையுடைய புதல்வன் இறந்தால் என்னுயிருங்கூட இறவாமலிருக்கின்றது. வலாற்காரமாக அதனைப் போக்குதலும் 
ஆகாது. என் செய்வேன், அழியாமலிருக்கும்படி பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததே. 

    என்னுயிரே, என் கண்ணே, என் அரசே, உன்னைப் போருக்கு அனுப்பிவிட்டு இவ்வாறு இரங்குதற்காகவா 
யான் இங்கே இருந்தேன். இந்தப் பதியில் வந்த தூதுவன் கூவியழைத்துக் கொண்டு சொல்லும் கூற்றுவனுடைய 
ஒற்றுவனோ? பாவியேன் அறியேன். நீ யமனுடைய நகரத்திற் போயினையோ, அன்றி வேறோரிடத்திற் சென்றனையோ? 
யான் ஒன்றையும் அறியேன். தனியே தியங்குகின்றேன். இத்துயரத்தை யாற்றேன். என் அரசே, என் ஆருயிரே, வாராயோ" 
என்று சூரபன்மன் இரங்கி வருந்தினான். 

    அவன் பக்கத்திலுள்ள அவுணர்களுட் சிலர் ஓடிச்சென்று போர்க்களத்திலே வெட்டுண்டு இறந்து கிடந்த 
பானுகோபனுடைய உடம்பை யெடுத்து, அழுதுகொண்டு வந்து சூரபன்மனுக்கு முன்னேயிட்டு, அவனுடைய 
கால்களைப் பற்றிக்கொண்டு புலம்பினார்கள். அவனும் பானுகோபனுடைய துணிந்த உடம்பைக் கண்டு அரற்றி 
அழுது கலங்கினான். சூரபன்மன் பானுகோபனுடைய வெட்டுண்ட சிரத்தைக் கையிலெடுப்பான்; அதனழகைப் 
பார்ப்பான்; கண்களில் ஒற்றுவான்; முத்தங் கொடுப்பான்; பாம்புபோல உயிர்ப்பான்; புரளுவான்; "வெட்டுண்டிறந்தும்
 பகைவர்கண்மாட்டு மனத்திற்கொண்ட மிகுந்த கோபந் தீர்கிலை, மிகுந்த மானமும் வீரமும் வலியும் இனி 
உன்னோடு அழியும் போலும்' என்பான்; 

    பானுகோபனுடைய கையிலொன்றை விரைந்தெடுத்துத் தன்னுடைய இரத்தக் கண்ணீரில் முழுக்காட்டி, 
"ஐயனே, ஆகாயத்தினின்றும் சூரியனைப் பிடித்துக் கொண்டுவந்தகை இதுவோ" என்று அரற்றுவான்; பாணங்கள் 
மூழ்குதலாற் சாளரங்கள் போலப் புழைதங்கிய தோளையும் மார்பையும் பார்ப்பான்; "பகைவர்க்குத் தோல்வியடையாத 
ஆள் நீயன்றி வேறு யாருளர்'' என்பான்; போர்க்களத்திலே உன்னுடலை வேறுவேறாகத் துணித்த வீரவாகுவினுடைய 
உயிரைப் பருகியன்றி என்மனத்துயர் ஆறுமோ" என்பான்; "பலபோர்களை வென்ற என்மகனாகிய பானுகோபன் 
இங்கேவந்த ஒரு தூதுவன் கொல்ல இறந்தான் என்று சொன்னால் யான் ஆண்ட அரசியலின்வலி நன்றாயிருந்தது' என்பான்; 

    சிரசையும் மார்பையும் கைகளையும் முன்போலப் பொருத்திப் பார்த்துப் புரளுவான்; "துயர் என்மனத்தை 
வருத்துகின்றது, அதனைக் கண்டும் உயிரே நீ இன்னுமிருக்கின்றனையோ" என்பான்; மருளுவான்; கைகளை யுதறுவான்; 
புத்திரனை அன்பினோடு பார்த்து அழுவான்; விழுவான்; சோர்வான் ; புரளுவான்; வாயிலடிப்பான்; பூமியில் உருளுவான்; 
பெருமூச்சு விடுவான்; வியர்ப்பான். 

    சூரபன்மன் இவ்வாறாகத் துன்பமெய்தி இரங்கும்பொழுது, அந்தப் புரத்தினுளிருந்த தாயாகிய பதுமகோமளை 
பானுகோபன் இறந்தமையைக் கேட்டு, நிலத்தில் வீழ்ந்து, அளகஞ் சோரக் கைகளையுதறி, வயிற்றிலடித்து, இரத்தக் 
கண்ணீர்விட்டு, ஆற்றாத துன்பத்தினளாய், வலையிலகப்பட்ட மயிற் பெடைபோல ஏங்கி, அந்தப்புரத்தைநீங்கி, 
"இறந்த என்மகனைக் காண்பேன்'' என்று ஆவலித்தோடி வந்தாள். அதனையறிந்த பெண்கள் பலரும் நம்மரசன் றேவியாகிய 
பதுமகோமளைக்குத் துன்பம் வந்தது. நீவிரும் இப்பொழுதே துன்பத்தையடைகுதிர்" என்றுகூவி ஆவலித்து, அவளுக்குப் 
பக்கத்திலே கூடி, ஸ்தனங்களில் அடித்து ஏங்கி இரங்கினார்கள். பதுமகோமளை அப்பெண்களோடு முந்திச்சென்று 
வெட்டுண்டிறந்த பானுகோபன்மீது வீழ்ந்து, மயங்கித் தியங்கி, பின் தெளிந்து, இடியேறுண்ட பாம்புபோலப் புரண்டு, 
இவ்வாறு புலம்பினாள்: 

    "சூரியனுடைய கிரணந் தீண்டுதலும் ஆகாயத்திற்சென்று கையோடு அவனைப் பற்றிக்கொண்டுவந்து 
என்கண்முன் சிறைசெய்த முருகாவோ , ஐயோ இன்றைக்கு நீ கூற்றுவனுக்கு இரையாவதை யான் அறியேனே.             
முன்னாளிலே தேவருலகத்தை நெருப்புமூட்டிப் பகைவர்களெல்லாரையுங் கொண்டு வந்தாய். அப்பொழுது
 உன் கோலத்தைக் கண்ட யான் இன்று இக்கிடையையுங் காண்பேனோ! பாவியேனாகிய யான் இவ்வுயிரை 
விட்டேனல்லேன். இலக்குமியினுடைய கையிலிருந்த ஒரு கிளிப்பிள்ளையை வேண்டுமென்று முன்னே 
உன்னைக்கேட்க, வலிமையினால் அதனை வாங்கித் தந்தாய். வருத்தமுற்றேனாகிய எனக்கு இன்றைக்கு ஒரு 
வார்த்தையாயினும் சொல்கின்றாயில்லை. அந்தோ அந்தோ செய்யும்வகை யொன்றையுமறியேனே. 

    பாபத்தினாலோ, தேவர்கள் பலருஞ் சொல்லிய சாபத்தினாலோ, எவரினும் மேலாகிய மும்மூர்த்திகளுடைய 
கோபத்தினாலோ, எவ்வகையாலோ, யான் அறியேன் உன்னைத் தோற்றுச் சோபத் தீயால் வாடினேன். பொன்போலும் 
மேனியையுடைய கந்தனை இவ்வூரிற் புகுவித்து, வீணாகப் போரை மூட்டி, குமாரர்களெல்லாரையுங் கொல்வித்து, 
இன்றைக்கு நீயும் இறக்கும்படி சூழ்ந்தார்களே. அந்தத் தேவ மகளிரனைவரும் என்போலாகுக. வச்சிரவாகு, அக்கினிமுகன், 
மூவாயிரவர் ஆகிய இவர்கள் 'எங்கள் எல்லாருக்கும் முன்வந்த தோன்றால்' என்று உன்னை வணங்கிச் சூழ்ந்தார்களோ? 

    மிகுந்த அழகினையுடைய வீரயாக்கையோடு மனந்துணிந்து சுவர்க்கத்தை அடைந்தாய். உன்னை வந்தடையும் வண்ணம் 
என்மனந் துணியாது உலைவெய்துகின்றது. என்மனமும் யானும் நண்பாயிருத்தல் நன்று நன்று! கருந்தேனின் மொய்க்கும் 
வண்டுகள் போலப் பெண்களுடைய கண்கள் வந்துசூழ அவற்றிற்கு விருந்தாகின்ற உன்னுடைய நடையைக் காணும் 
விதியற்றேன். அருமருந்துபோலும் மகனே, உன்னையிழந்தேன். இனி யான் இவ்வுலகில் உயிரோடிருந்தேனல்லேன், 
இறந்தேனன்றோ! வருந்துகின்ற தேவர்களுக்கு மிகுந்த துன்பத்தைச் செய்தல் நன்றல்லவென்று உன்பிதாவுக்குச் 
சொன்னேன். அவர் அதனை யோசியாமல், உன்னைத் தோற்றார். அவரும் இன்னும் தம்முயிரைத் தாமாக நீக்காமல் 
உய்ந்திருப்பாரோ" என்றிவ்வாறு சொல்லி, சூரபன்மனுடைய பட்டத்துத் தேவியாகிய பதுமகோமளை இரங்கினாள். 

    அவனுடைய மற்றை மனைவியர்களும், கிளைஞர்கள் யாவரும் ஈன்றண்ணிய கன்றையிழந்த பசுவைப் 
போலக் கதறினார்கள். மகேந்திரபுரி அன்றைக்கு வெற்றி நீங்கித் துன்பம் மிக்கது. 

    சூரபன்மன் அழுகை நீங்கி, பதுமகோமளை முதலாகிய பெண்களை அவரவர் இடங்களுக்குச் செல்லும்படி 
அனுப்பி, கோபமுடையனாய், தன் பக்கத்திலே வணங்கிநின்ற சில அவுணர்களை நோக்கி, "என் பகைவர்க ளெல்லாரையும் 
விரைவில் இன்றைக்கே கொன்று அவர்களுடைய இரத்தத்தைச் சொரிந்து ஓர் யாகத்தைச் செய்து இறந்த என்னுடைய 
மகனை எழுப்புவேன். அவனுடைய சரீரத்தை ஓர் சாரிலிட்டு நீங்காது பாதுகாக்கக் கடவீர்கள்" என்றான். 

    அதைப் பல அவுணர்கள் கேட்டு நன்றென்று பானுகோபனுடைய உடம்பை ஓர்பக்கத்திற் கொண்டுபோய்ப் 
பாதுகாத்தார்கள். அப்பொழுது சூரபன்மன் வெகுண்டு, "நம்பகைவர் கூட்டமுழுவதையும் என்றம்பியாகிய சிங்கமுகனுக்கு 
உணவாகக் கொடுப்பேன்' என்று எண்ணி,சில தூதர்களைப் பார்த்து, 'வடதிசைச் சமுத்திரத்திலுள்ள ஆசுரமென்னும் 
நகரத்திலிருந்து அரசுசெய்கின்ற என்றம்பியாகிய சிங்கமுகனை விரைந்து ஓடிப்போய் இங்கே அழைத்து 
வருதிர்" என்றான்.

            திருச்சிற்றம்பலம்.

            சிங்கமுகாசுரன்வதைப்படலம்.

    சூரபன்மன் சிங்கமுகனை அழைத்துவரும்படி சொல்லியதைத் தூதுவர்கள் கேட்டு, அவனுடைய 
கால்களை வணங்கி,மனோகதியிலும் முற்பட்டுச் சென்று, வடக்குச் சமுத்திரத்தை யடைந்து, ஆசுரத்திற்போய், 
வீதிகளைக் கடந்து கோயிலினுட் புகுந்து, சிங்கமுகாசுரனைக் கண்டு களித்து, அவனுடைய கால்களை வணங்கி 
நின்றார்கள். சிங்கமுகன் நீவிர் வந்ததென்னை சொல்லுங்கள்" என்றான். "நம்மரசனாகிய சூரபன்மன் உன்னை
அழைத்தான். விரைந்து வருக" என்று தூதர்கள் சொல்லினார். சிங்கமுகன் அதனைக்கேட்டு, "அங்கே நிகழ்ந்த 
சம்பவம் உண்டானாற் சொல்லுங்கள்'' என்றான். அவர்கள் அவனை வணங்கி, "அரசனே, சொல்லுகின்றோம் கேள்: 

    பூமியில்வந்து உன்றம்பியாகிய தாரகனை வேற்படையினாற் சங்கரித்த கந்தவேள் பிரமா முதலிய தேவர்கள் 
சூழ மகேந்திரபுரியை வந்தடைந்தார். புதல்வர்களும் மந்திரிமாரும் அவர் வந்திருக்குமிடத்திற்போய்ப் பொருது பையப் 
பைய இறந்தார்கள். இரணியன் உய்ந்து சமுத்திரத்தில் ஓடி ஒளித்தான். நமதரசனாகிய சூரபன்மன் இருந்தான். 
இதுவே அவ்விடத்து நிகழ்ச்சி" என்றார்கள்.

    தூதர்கள் சொல்லிய வார்த்தையைச் சிங்கமுகன் கேட்டு, கோபமும் மானமும் துன்பமும் தன்னெஞ்சைப் 
பிளக்க இருக்கை விட்டெழுந்து, அவுணர்களோடு கோயிலின் வாயிலையடைந்து, தூதுவர்களை நோக்கி "என்னுடைய 
மிகுந்த சேனைகளைக் கொண்டுவருதிர்" என்றான். அப்பணியைத் தூதுவர்கள் சொல்லுதலும் நால்வகைச் சேனைகளும் 
விரைவில் வந்து சேர்ந்தன. சிங்கமுகன் அவற்றைப் பார்த்து, கிளைஞர்களாகிய படைத்தலைவர்கள் பக்கத்திற்சூழ 
ஓர் தேரிலேறினான். சதுரங்க சேனைகளும் ஒலித்தன. சல்லிகை, முரசம்,காளம், சங்கு முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. 
கொடிகள் எங்கும் நெருங்கின. நால்வகைச் சேனைகளும் ஆகாயவழியாக விரைந்து செல்லுதலால் முகில்கள் அஞ்சி 
முழங்காமலும் புடைபெயராமலும் இருந்தன. இத்தன்மையாக நெருங்கிய சேனைகள் உடன்செல்ல, சிங்கமுகாசுரன் 
ஒருநாழிகைப் பொழுதினுள் ஆகாயமார்க்கமாக மகேந்திர புரியை வந்தடைந்தான். தேவர்கள் அதனைக்கண்டு 
அஞ்சி ஓடினார்கள்.

    சிங்கமுகன் சூரபன்மனுடைய கோயிலின் கடைத்தலை வாயிலையடைந்து, தேரினின்றும் இறங்கி 
உள்ளேபோய், சூரபன்மனுடைய சபையை அடைந்து, அவனுடைய கால்களிலே சிரங்கள் படும்படி அன்போடு 
வணங்கினான். சூரபன்மன் அவனைக் கையினால் எடுத்து மார்போடிறுகத் தழுவினான். சிங்கமுகன் அவனை 
நோக்கி "மகாராஜனே, உன்னுடைய செவ்விய முகம் வாடியது, உனக்கு வந்த துயரம் யாது? சொல்லுதி' என்றான். 
சூரபன்மன் அவனைத் தன்முன் இருக்கச்செய்து, என்றம்பியே, "என்னிடத்து நிகழ்ந்தனவற்றைச் சொல்வேன் கேள்; 
அன்று நீ அமைச்சியலுக்கு வந்து மீண்டபின்பு சிவகுமாரனென்பவன் சேனைகளுந் தானுமாய் இந்நகரில்வந்து, 
பாசறையிலிருந்தான். அவனுடைய சேனைகள் போர்செய்ய என் குமாரர்கள் இறந்தார்கள்; அமைச்சனாகிய 
தருமகோபனும் இறந்தான். சேனைகளும் அழிந்தன; இரணியன் தோற்றுச் சமுத்திரத்தில் ஓடி ஒளித்தான். 

    சிங்கமுகனே, இது இவ்விடத்து நிகழ்ந்தது. நீ அளவிறந்த படைகளோடு போருக்குச் சென்று சிவகுமாரனுடைய 
வலியைக் கெடுத்து மீளக் கடவாய். இதற்காகவே உன்னை இங்கே அழைத்தேன்'' என்றான். இவற்றைச் சிங்கமுகன் 
கேட்டு, மனத்திற் றுன்பமுண்டாகத் தமையனுடைய கால்களில் வீழ்ந்து வணங்கிநின்று, ''மகாராஜனே, புத்திரர்களையும் 
மந்திரிமாரையும் சுற்றத்தாரையும் மற்றையெல்லாரையும் இழந்து இருந்தாய். உன்மன எண்ணம் புல்லிது புல்லிது. 
உற்பத்தியும் நாசமுமில்லாத கடவுளைப் பாலகன் என்று எண்ணினாய்.மேல்வருவதனை அறிந்திலை. என்சொல் 
உனக்கு விஷமாயதே. முன்னை விதியை யார்வெல்லும் வலியினர். பெருகுகின்ற ஜலத்திற்குக் கரைகோலி யாவதென்ன? 
யான் இனி இப்பொழுதே சென்று பகைவர் கூட்டங்களைக் கொன்று உண்டு நிற்கின்றேன். நீயும் அதனைக் காண். 
கந்தசுவாமியாகிய அவ்வொருவரையும் யான் வெல்லப்பெறின் உன்னை வந்து காண்பேன். அஃதில்லையானால் 
யாவருமிறப்பர். அண்ணாவே, இனி நீ மனத்தில் நினைந்தனவற்றைச் செய்வாய்'' என்று கூறிப் பின்னரும் தமயனை 
வணங்கி, இறைப்பொழுதும் அவ்விடத்து நில்லாமல் விடைபெற்றுக்கொண்டு சேனைகளோடு மீண்டு 
தன்கோயிலையடைந்தான்.

    கோயிலையடைந்த சிங்கமுகன் மேருமலைபோலும் அன்னக்குவியலையும் அதனைச் சூழ்ந்த மற்றை 
மலைபோலும் மாமிசங்களையும், கடல்போன்ற இரத்தம் தேன் பால் தயிர் கள்ளு முதலானவற்றையும் நுகர்ந்து, 
வாசனைத் திரவியங்களைப் பூசி, புட்ப மாலையைத் தரித்து, புதிய ஆபரணங்களைப் பூண்டு, ஆயிரம் நெற்றிகளிலும் 
விபூதியை அணிந்து, தண்டத்தையும், சக்கரத்தையும், சிவபெருமான் கொடுத்த சூலப்படையையும், குலிசம் 
முதலாகிய தெய்வப்படைகளையும், தாயாகிய மாயவள் கொடுத்த பாசத்தையும், மற்றையெத்திறப்படைகளையும் 
கைகளில் ஏந்தி,பத்துலக்ஷம் குதிரைகள் பூண்ட ஒர் தேரில் ஏறி, மந்திரிமாரும் தன்புத்திரர்களும் யானை குதிரை தேர் 
முதலியவைகளும் சூழ நகரத்தின் வாயிலில் வந்தான். இலக்கம்வெள்ளம் சதுரங்க சேனைகள் வந்து சூழ்ந்தன. 

    தேவர்களுடைய உயர்வையும் மனிதர்களுடைய வாழ்வையும் அவுணர்களுடைய துன்பத்தையும் 
நீக்கினவர்களும், அக்கினிபற்றிய காடு போன்றவர்களும், போரிலே மார்பன்றி வடுப்படாதவர்களும், 
கூற்றுவனையொத்தவர்களும், அக்கினியைக் காலுங் கண்களையுடையவர்களும், விண்ணுலகத்தையேனும் 
விழுங்கவல்லவர்களும், எதிர்த்த பகைவர்களுடைய இரத்தம் தசை முதலியனவற்றையிட்டு நிரம்பாமையாற் 
கடல்போன்ற வாயையுடையவர்களும் ஆகிய அவுணவீரர்கள் பலர் தண்டம் மழு வேல் வில் முதலாகிய 
ஆயுதங்கள் பலவற்றையும் ஏந்தி, அண்டங்களும் உடைந்து அதிரும்படி ஆர்த்தார்கள். 

    யானைகள் சொரியும் மதஜலம் ஆறுகளாய்க் கதிகொண்டு கொடிப்படைகளுக்குமுன் சென்றன. 
குதிரைகள் துகள்களினால் விண்ணுலகத்தைப் பூமியாக்கின. படைவீரர்களிற் பலர் தேர்களிலும் பலர் குதிரைகளிலும் 
பலர் யானைகளிலும் பலர் பூமியிலுஞ் சென்றார்கள். சிங்கமுகாசுரனைப் போலத் தலைகளைக் கொண்டவனும், 
மாயவளுடைய மகனும், சிங்கன் என்னும் பெயரையுடையவனும் ஆகிய சேனாபதியானவன் கடல்போன்ற 
நால்வகைச் சேனைகளோடும் முன்னணியிற் போயினான். கொம்பு, பேரி, நிசாளம், உடுக்கை முதலாகிய 
வாத்தியங்கள் ஒலித்தன; கழுகுகளுங் காகங்களும் காளிகளும் கூளிகளும் ''போருண்டாயது, நமக்கு உணவு உண்டு" 
என்று ஆகாயத்தில் நெருங்கின. இவ்வாறாக ஏழ்கடல்களையும் போலச் சேனைகள் செல்லச் சிங்கமுகன் போரைக் 
குறித்துச் சென்றான்.

    சிங்கமுகன் போருக்குச் செல்லுதலைப் பிரமாவும், இந்திரனும், தேவர்களும் கண்டு, அச்சமடைந்து, 
வியர்த்து, மேனி அலசவும், உடை நெகிழவும், நெஞ்சிரைப்பவும், கையை விரித்துக்கொண்டு யாவரும் விரைந்தோடிச் 
சென்று, பாசறையில் உள்ள திருக்கோயிலிலே தேவர்கள் நெருங்கிய சிற்சபையில் வீற்றிருக்கின்ற முருகக்கடவுளுடைய 
திவ்விய சந்நிதானத்திற் போய், அவருடைய திருவடிகளை வணங்கி விண்ணப்பஞ் செய்கின்றார்கள்:- 

    'ஆயிரந்தலைகளையும் இரண்டாயிரங் கைகளையும் உடையவனும், ஆயிரத்தின் மேற்பட்ட அண்டங்களை 
வென்றவனும், ஆயிரம் யோசனை உயர்ந்த சரீரத்தினையுடையவனும், நினைத்தற்கரிய வஞ்சனையிலும் மாயையிலும் 
வலிமையிலும் சிறந்தவனும், இவ்வுலகமெல்லாம் அழியினும் இறவாதவனும், அட்டகுலமலைகளும் அட்டயானைகளும்
 அட்டநாகங்களும் ஆதிகூர்மமும் சுமத்தலை மாற்றி உலகங்களெல்லாவற்றையும் முன்னோர் நாளிலே ஒருகையாற் 
சுமந்தவனும், சிவபெருமான் ஈந்ததும் எல்லையில்லாத பகைவர்களைக் கொன்று இரத்தவெள்ளத்தில் மூழ்குவதும் 
ஆகிய சூலத்தை ஏந்தினவனும், எண்டிசைகளையும் பூமியையும் ஏழுபாதலங்களையும் விண்ணுலகத்தையும் 
அதன் மேலுள்ள வுலகங்களையும் இவைகளைக்கொண்ட அண்டங்களையும் ஒர் அகங்கையால் வாரியுண்டுமிழ்கின்ற 
வலியையுடையவனும், பூமி ஓர்பக்கந் தாழ்ந்து ஓர்பக்கம் உயர்தலாற் சமுத்திரங்கள் சிந்தி விண்ணுலகத்திற் றாக்கும்படி 
புடைபெயர்த்து நடக்கின்ற கால்களையுடையவனும், மேருமலையை இஃதோர் தண்டாயுதமென்று செருக்குடனெடுத்து 
அண்டகடாகத்தையடிக்க அது துகளாதலும் இது நொய்யதென்று அந்த மேருவை மீளவும் வைத்தவனும்,வீசினால் 
எவ்வுலகங்களையும் பிணிக்கத் தக்க இரண்டு பாசங்களை யேந்திய கையையுடையவனும், வடசமுத்திரத்திலுள்ள 
ஆசுரமென்னும் நகரத்தில் வாழ்பவனும், சூரபன்மனுக்குத் தம்பியும், அவனிலும் மிக்கவலியையுடையவனும், 
நம்மவர்களை நாடோறும் துன்பப்படுத்தினவனும் ஆகிய சிங்கமுகாசுரனென்னுங் கொடியோன் அளவில்லாத 
சேனாசமுத்திரங்கள் சூழத் தேவரீரோடு போர்செய்யும்படி மிக்க வலியுடன் வந்தான். எம்பெருமானே, அவனைக் 
கொன்று எங்களைக் காத்தருளும்'' என்றார்கள். 

    இவ்வாசகங்களைத் திருச்செவிமடுத்த அறுமுகக்கடவுள் தம்மயலில் நின்ற வாயுவைப் பார்த்து, "நம்முடைய 
தேரைக் கொண்டுவருதி" என்று பணித்தார். அவருடைய திருமருங்கில் நின்ற வீரவாகுதேவர் எம்பெருமானுடைய 
சந்நிதானத்திற்சென்று பாதங்களில் வீழ்ந்து வணங்கி, "எம்பெருமானே, இலக்கத்தெட்டு வீரர்களோடும் 
சேனைகளோடும் அடியேன் சென்று சிங்கமுகனைக் கொன்று மீண்டுவருவேன். அடியேனை அனுப்பியருளுக' 
என்று பிரார்த்தித்தார். சுப்பிரமணியக்கடவுள் திருப்புன்முறுவலோடு அதனைக்கேட்டு, ''வீரவாகுவே, இறக்கும்படி 
இங்கேவந்த சிங்கமுகாசுரனுடைய போரை நீ விரும்பினாய். நல்லது உனக்கு அனுமதி தந்தோம். சேனைகளோடு 
நீ முன்னே செல்லுதி' என்றார். 

    என்னலும், வீரவாகுதேவர் எழுந்து கைகூப்பிநின்று வணங்கி, அவர் எழுந்தருளியிருக்கும் சிற்சபையை 
நீங்கித் தம்முடைய மாளிகையை யடைந்து, வில்லையெடுத்து, விரலிற் புட்டிலைச் செறித்து, கையிற் கோதையைக் 
கட்டி, திருமேனியிற் கவசத்தையிட்டு, அப்பறாக்கூட்டை முதுகில் யாத்து, தெய்வப்படைக்கலங்களை யெடுத்து, 
தும்பை மாலையைச் சூடி, தேரில் ஏறிப் புறங்கடைவாயிலில் வந்தார். இலக்கத்தெண்மரும் போர்க் கோலங்கொண்டு 
தங்கள் தேர்களிலேறிக் கொண்டு ஆரவாரித்துச் சூழ்ந்தார்கள். ஆயிரம்வெள்ளம் பூதசேனைகள் மலைகளையும் 
மரங்களையும் படைக்கலங்களையும் ஏந்திப் பக்கத்தில் நெருங்கிச் சூழ்ந்தன. வாத்தியங்கள் முழங்கின. 
கொடிகள் மொய்த்தன. பூதூளி பரந்தது. இவ்வாறே ஆயிரம் வெள்ளம் பூதசேனைகளும் படைத்தலைவர்களும் 
இலக்கத்தெண்மர்களும் தம்முடன் செல்ல வீரவாகுதேவர் போர்க்களத்தை யடைந்தார். 

    அப்பொழுது சிங்கமுகாசுரனுடைய சேனைகளும் கங்காநதியைச் சேர்கின்ற சமுத்திரத்தைப்போலப் 
பூதசேனைகளோடு வந்து கலந்தன. கோடுகளும், கொக்கரைகளும், பேரிகைளும் முழங்கின. மயிற்பீலிகளும்,
மணிகளும், கொடிகளும் ஆர்த்தன. கடலொலியும் முகிலொலியும் போல யானைகளும், குதிரைகளும், 
தேர்களும் ஒலித்தன. இவ்வாறாகிய சமயத்தில், பூதர்கள் போரை முயன்றார்கள். அதனைக் கண்டு அவுணர்களும் 
போருக்கு மூண்டு, தண்டங்களையும், மழுக்களையும், பிண்டிபாலங்களையும், தோமரங்களையும் சொரிந்தார்; 
விற்களை வளைத்து பாணமழைகளையும் பொழிந்தார். பூதர்கள் மரங்களையும்,மலைகளையும், தண்டங்களையும், 
எழுப்படைகளையும்,மழுக்களையும் வீசினார். 

    இவ்வாறு பொருகின்ற அவுணரும் பூதரிற்சிலரும் கால்களும், கைகளும், புயங்களும், மார்புகளும், 
முடிகளும், சிரங்களும் சிந்தினர். அவர்களுடைய உடம்பினின்றும் வடியும் இரத்தவெள்ளம் பரத்தலாற் பூமி 
செவ்வானத்தை யொத்தது. ஊன்களும் பிணமலைகளும் செறிந்தன. கழுகுகளும் பிசாசுகளும் நெருங்கின. 
அவுணசேனைகளும் பூதசேனைகளும் இவ்வாறு போர் செய்யும்பொழுதில், அவுணப்படைத்தலைவர் வந்து 
தாக்குதலாற் பூதசேனையின் முன்னணி முரிந்தது. பூதர்கள் அழிதலைச் சிங்கரென்னும் பூதப்படைத்தலைவர் 
கண்டுகோபித்து, ஒரு தண்டத்தையெடுத்து, எதிர்த்த அவுணர்களுடைய பற்களும் தலைகளும் சிதறும்படி 
அடித்து வீழ்த்திச் சென்றார். 

    அவர் செல்லும் பொழுது, வலியினால் விட்டுணுவையொத்த தசமுக னென்னும் ஒரவுணன் "நீ எங்கே 
செல்கின்றாய் நில் நில்' என்று கூறி, அவருக்கெதிரே சென்று, வில்லை வளைத்து நாணொலிசெய்து, பாணங்களை
மழைபோலச் சொரிந்தான். சிங்கர் அவ்வம்புகள் அழியும்படி தண்டினால் அடித்து வீழ்த்தி,ஓரடியினால் அவனிட்ட 
கவசத்தையுமழித்தார். தசமுகன் "இந்தக் கொடியவனுடைய உயிரை மாற்றுவேன்" என்று ஓர் தண்டைச் சிங்கர்மீது 
எறிந்தான். அவர் அதனை மார்பில் ஏற்றார். தண்டம் ஒடிந்துவீழ்ந்தது. தசமுகன் அதனை நோக்கி, "வீராதிவீரனும் 
இவனே போலும் என்றெண்ணி, "யாமினிக் காண்போம். நீ வலியையாயில் இதனைக் காத்துக் கொள்' என்று 
ஓர் மழுவை எறிந்தான். அது தேவர்கள் அஞ்சும்படி அக்கினியோடும் வாயுவோடும் கூடிய நஞ்சைப்போலச் 
சிங்கர்மேற் சென்றது. 

    அவர் அதனைத் தண்டினால் அடித்துவீழ்த்தி, அத்தண்டினாலே தசமுகனுடைய வில்லைப் பொடியாக்கினார். 
அதுகண்ட அவுணர்கள் துன்பமுற்றார்கள். தசமுகன் அக்கினிமயமாகிய ஒரு வேற்படையைச் செலுத்த, சிங்கர்
 அதற்கெதிராக ஒரு சக்கரப்படையை விடுத்தார். அதுசென்று வேற்படையை அழித்தது. தசமுகன் ஓர் தண்டத்தை 
எடுத்தெறிந்தான். அது கணப்பொழுதினுட் சிங்கருடைய மார்பில்வந்து படுதலும், அவர் மார்பினின்றும் இரத்தம் 
மழைபோலவடியச் சோகித்து, பின் ஓடிப்போய், தசமுகனுடைய மார்பில் ஓர் கையால் அடித்தார். அவன் வீழ்ந்திறந்தான். 
தசமுகன் இறத்தலும், அவுணர்கள் யாவரும் பூதர்மேற்சென்று போர் செய்வாராயினார். அப்பொழுது இலக்கம்வீரர்களுள்
அநகரென்பவர் பெருங்கோபத்தோடு அதரத்தைக் கடித்து, வில்லையேந்தி அவுணசேனைகளை "எங்கே போகின்றீர்கள்' 
என்று எதிர்த்துத்தாக்கி, பாணங்களினால் அவுணர்களுடைய தலைக்குவைகளைச் சிந்தித் தரையில் வீழ்த்திக் கலக்கினார்.

    அநேகர் இவ்வாறு அவுணசேனைகளைக் கொன்று திரிதலும், ஒழிந்த அவுணர்கள் யாவரும் ஓடினார்கள். 
துன்முகன் என்னும் அவுணன் அதனை நோக்கி, ஓடுகின்ற அவுணர்களை "நீவிர் வருந்தாதொழிமின். மின்மினிக் 
கூட்டங்கள் சூரியனை வெல்லுமா! யான் கோபித்தாற் பூதர்கள் என்முன் நிற்பார்களா! பூதர்கள் போரைவிட்டார்கள். 
நீங்கள் நில்லுங்கள் நில்லுங்கள்" என்று சொல்லவும் அவ்வசுரர்கள் நில்லாதோடினர். சேனைகள் அழிதலைத் 
துன்முகன் பார்த்து, நெய் சொரிந்த நெருப்பைப் போலக் கோபித்து, பூதப்படைத்தலைவர்கள் "அந்தோ நம்சேனை 
அழிந்தன" என்று வருந்த வில்லை வளைத்து, விடாமழை போலப் பாணங்களைச் சொரிந்தான். 

    பூதர்களும் அவனோடு போர்செய்ய ஆரம்பித்து மலைகளையும் மரங்களையும் வீச, அவற்றாற் சிற்சில 
பாணங்கள் எரிந்தன,சில ஒடிந்தன, சில இரிந்துபோயின. துன்முகன் அதனைப் பார்த்து, "என்பாணங்கள் 
பூதர்களை அழித்தில. இவர்களோடு யானொருவன் தனிமையாகப் போர்செய்வது மரிது'' என்றெண்ணி, 
பல மாயங்களினாலே ஒவ்வொரு பூதர்க்கும் நூறு நூறு வடிவங் கொண்டு தாக்கினான். வீரவாகுதேவர் 
துன்முகனுடைய மாயாசொரூபங்களையும் அவைகள் பூதர்களோடு போர்செய்கின்ற வெற்றியையும் 
பார்த்து வருந்தி, வெகுண்டு, 'இது மாயம்போலும்" என்றெண்ணி, "இதனை மாற்றுவது எப்படைக்கலமோ!" 
என்று யோசித்து, ஞானப்படைக்கலத்தைச் செலுத்தினார். துன்முகன் காற்றையெதிர்ப்பட்ட பூளைபோலத் 
தன்மாயையின் வடிவங்களெல்லாம் மறையத் தானொருவனாய்க் கொதித்து, வில்லை வளைத்து, ஆயிரம் 
பாணங்களை ஒருதொடையாகச் செலுத்தினான். 

    வீரவாகுதேவர் தம்முடைய வில்லைவளைத்து ஆயிரம் அம்புகளால் அவனுடைய அம்புகளையும், 
ஏழுபாணங்களினால் அவனுடைய வில்லையும், ஓரம்பினாற் கவசத்தையும் அழித்து, அவனுடைய உடம்பெங்கும் 
அளவில்லாத பாணங்களை அழுத்தினார். துன்முகன் தன்னுடம்பைப் பாணங்கள் பிளத்தலும், இரத்தநீர்பாய 
இறந்தவன் போல வீழ்ந்து மயங்கி, பின்றெளிந்து, போர் செய்யப் பயந்து, "நான் இனிப்போர்செய்ய 
எதிர்ப்பேனாயின் மரணம் வரும். ஆதலால் ஓடிப்பிழைப்பதே முறை" என்று நினைத்து, மனத்தால் வழிபட்டு, 
ஒர் மாயா மந்திரத்தை நினைத்து, தேரினின்றுமிழிந்து, அருவமாய் ஆகாயத்திற் போயினான். 

    அதனைக்கண்ட பூதர்களுட் சிலர் "இவன் மாயையில் வலியன், வஞ்சன்,விரைந்தோடிப் போயினான். 
இவனைப்போய்ப் பிடிப்போம் வாருங்கள்'' என்றார்கள். அதனைக்கேட்ட வீரவாகு தேவர் "இதனைத் தவிருதிர், 
போருக்கஞ்சியோடின ஒருவனை நெருக்கி உயிர் கவர்தல் புகழோ, வன்மையோ? போருக்குப் பயந்தோடினவர்களையும், 
தம்மைச் சரணமென்றடைந்து வணங்கினவர்களையும், வாட்டமுற்றோர்களையும், வலிமையில்லாதவர்களையும் 
கொன்றவர்களல்லவா குற்றத்துட்படுவார். வீரரல்லாதாரைக் கோபியாதொழிமின்' என்று கூறினார். பூதர்கள் அதனை 
நீதியென்றெண்ணி, துன்முகனைத் தொடர்தலை நீங்கினார்கள்.

    இவைகளைச் சிங்கமுகாசுரன் பார்த்து, ' நம்முடைய சேனைகளெல்லாம் ஓடுகின்றன. நாம் பின்னே 
நிற்றலால் ஆவதென்ன" என்றுகூறி, பூதர்களை நோக்கி முனிந்து, முன்னே சென்றான். பூதர்கள் 'சிங்கமுகாசுரன்
நம்முன் போருக்கு வந்தான். யாம் அவனுடைய வலிமையை அழிப்போம்'' என்று மலைகளையும், மரங்களையும், 
மழுக்களையும், சூலங்களையும், தண்டங்களையும், எழுப்படைகளையும், கலப்பைப்படைகளையும் சொரிந்தார்கள். 
சிங்கமுகன் அவற்றை நோக்கி, அக்கினிகால உயிர்த்தான். பூதர்கள் வீசிய மரம் முதலிய யாவும் அம்மூச்சுக்கெதிரே
சென்று, சில கரியும், சில தீயும், சில பூழியாகும், சில ஆகாயத்திற்றிரியும், சில மீளும். அவைகள் செய்யுஞ் செயல் 
இவ்வாறாயின. 

    பூதர்கள் அதனைப் பார்த்து, "ஐயையோ? நம்முடைய படைகளெல்லாம் சிங்கமுகாசுரனுக்கெதிரே 
செல்கின்றில, அவனுடைய மூச்சுக்காற்றினால் அழிகின்றன. யாம் இனிச் செய்வதொன்றுமில்லை. இவனோடு 
யாம் போர்செய்வது என்னை என்னை! இவன் யாரினும் மேலானவன்' என்று கூறி, கோபங்கொண்டு, யாவரும் 
ஒருங்கேபோய், மலைகளையும் மரங்களையும் பறித்துக்கொண்டு வந்து, ஆரவாரித்து, சிங்கமுகன் மேற் 
செல்லவிடுத்தார்கள். அவைகளெல்லாம் ஒருங்குசென்று எத்திசைகளினுஞ் செறிந்து, ஆகாயவெளியைத் 
தூர்த்தன. அதனாற் சூரியன் மறைய இருள் உண்டாயிற்று. பறவைகள் இராக்காலம் வந்ததென்று 
கூடுகளையடைவனவாயின. 

    "சூரியன் பகல்கழியுமுன் ஓடினான். இஃதற்புதம் அற்புதம் பிரமகற்பம் வந்தது'' என்று அறிஞர்களும் 
கலக்கமெய்தினார்கள். பூதர்கள் எறிந்தமலைகள் ஆகாயவழியை மறைத்தலாற் சூரியன் அஞ்சிநின்றான். 
தேவர்கள் "யாம் இந்நாள்காறும் அவுணர்களால் வருந்தினோம். பூதர்கள் இங்கே மலைகளை வீசினார்கள். 
இங்குநின்றால் இவர்களாலும் வருத்தமடைவோம். இப்போர்நிகழ்ச்சிகளைப் பின்பு அறியலாம். இப்பொழுது 
நாம் போதலே துணிபு" என்று ஓடினார்கள். அம்மலைகளில் இடையிடையிற் பொருந்திய முகில்கள் மழையையும் 
இடியையும் மின்னலையுங் கான்று வீழ்ந்தன. அம்மலைகள் ஒன்றோடொன்று நெருங்கித் தாக்குதலால் எழுந்த 
நெருப்புச் சென்றவிடமெல்லாம் பொரியாய்ப் புகைந்தன. அதனால் உயிர்கள் அழிந்தன. 

    இப்படிப் பல இயல்புகள் பொருந்தப் பூதர்கள் எறிந்த மலைகளும் மரங்களும் சென்று 
கைலாசமலையைச் சூழ்ந்த மேகங்களைப் போலச் சிங்கமுகன்மேற்பட்டு, பொடிந்தில, ஒடிந்தில, 
பூழியடைந்தில; நொய்ய தன்மையனவாய்ப் பூமியில் வீழ்ந்தன. மலைகள் யாவும் அவனுடைய 
உடம்பிற்பட்டு, மலையிலே பருத்திப்பஞ்சு பட்டாற்போல வீழ்கின்றதைப் பார்த்துப் பூதர்கள் 
துன்பமுற்றார்கள்; தேவர்கள் ஏங்கினார்கள். பூதர்கள் இவ்வாறு தன்னோடு வந்து போர்செய்தலைச் 
சிங்கமுகாசுரன் பார்த்து, தேரினின்றும் பூமியிற் குதித்து, பூதர்களைக் கொல்லுதற்கு ஒரு ஆலாகலவிஷம் 
நடந்தாற்போல நடந்து, சிற்சிலரைப் பூமியிலெற்றுவான், சிற்சிலரைத் தேவருலகிலெற்றுவான், 
சிற்சிலரைச் சூரியனுடைய தேரில் எற்றுவான், சிற்சிலரைச் சமுத்திரத்தின்மேலெற்றுவான், சிற்சிலரை 
நீள எறிவான், சிலரைப் பற்றுவான், சிலரை வாயிற் குற்றுவான், சிலரைக் குழுவோடு வாரிச் சுற்றுவான், 

    சிலரை அண்டச்சுவரின்கண் எற்றுவான்,சிலரை அள்ளியெறிவான், சிலரைப் பிரமலோகத்தில் 
வீசுவான், சிலரை விட்டுணுலோகத்தில் வீசுவான், சிலரை இந்திரலோகத்தில் வீசுவான், சிலரை எண்டிசைகளில் 
வீசுவான், வீரம் பேசுவான், பலரை அக்கினிமண்டலத்தில் வீசுவான், பலரை வாயுமண்டலத்தில் வீசுவான், 
பலரைச் சமுத்திரங்களெங்கும் வீசுவான், பலரைப் பூமியெங்கும் வீசித்தூர்ப்பான். சிங்கமுகன் இப்படி 
அள்ளியெறிந்த செறிவினாற் பூமிமுதற் சுவர்க்கம் வரையும் எங்கும் பூதங்களாயின. இதுபற்றியா அறிஞர்கள்
 ''அங்கங்கெல்லாம் பூதம்'' என்று கூறினார்கள். 

    சிற்சிலரை மிதித்துக் கொல்வான், சிற்சிலரை மேலேயெறிந்து காலினாற் றள்ளிக்கொல்வான், 
சிற்சிலரை உடம்பை நசுக்கிக் கொல்வான், சிற்சிலரை உலாவி உதைத்துக் கொல்வான், சிற்சிலருடைய 
சிரங்களை விரல்களாற் றள்ளுவான், சிற்சிலருடைய சிரங்களைக் கிள்ளுவான், சிலரைத் தாக்கிக் கொல்வான், 
சிலரை வதைத்தற்குரிய ஊக்கத்தாற் கொல்வான், சிலரை இடிபோலும் வாக்கினாற் கொல்வான், சிலரை 
மருண்ட பார்வையாற் கொல்வான், சிலரை வாரி வாய்கடோறும் நிறைய இட்டுண்பான், வயிறுநிறைந்தபின் 
விளையாடுவான், சிலரை எழுவினாற் கொல்வான், சிலரை மழுவினாற் கொல்வான், சிலரைக் கலப்பைப் 
படையினாற்கொல்வான், சிலரைச் சூலத்தாற் கொல்வான், சிலரைக் கையாற் கொல்வான், சிலரைப் 
பாணங்களாற் கொல்வான், சிலரைத் தண்டத்தாற் கொல்வான், சிலரை யொடித்த மரத்தாற் கொல்வான், 
சிலரைப் பூமியில் வீழ்த்துவான். 

    இப்போரைப் பார்த்த தேவர்கள் "சிங்கமுகன் தேரின்கண்ணானோ, விண்ணுலகத்திலுள்ளானோ, 
திசையிலுள்ளானோ, பூமியிலுள்ளானோ, கடலிலுள்ளானோ, பிரமலோகத்திலுள்ளானோ, மேருவிலுள்ளானோ,
 பூதர்களுடைய போரிலுள்ளானோ'' என்றார்கள். பூதர்கள் கால்,கை, தோள்,சிரம்,மூக்கு, மார்பு ஆகிய இவைகள் 
அழிந்து வீழ்ந்து புரண்டார்கள். எண்ணில்லாத பூதர்கள் இரத்தம் சொரிய மிகுந்த துன்பத்தையுடையர்களாய் 
இறந்தார்கள். அவருட்பலர் தலையையிழந்து கூத்தாடுவாராயினார். இறக்குமுயிர்களையெல்லாம் அக்கினிதேவன் 
எரிக்குந்தன்மைபோலச் சிங்கமுகனொருவன்றானே நின்று இப்படிக் கொல்வானாயினான். 

    சிங்க முகன் இத்தன்மையினனாய்ப் பூதர்களைக் கொல்லும்பொழுது இரத்தவெள்ளம் எங்கும் பெருகிச் 
சமுத்திரத்தையடைந்து, அதனைச் செந்நிறமுடையதாக்கி,முந்நீர் என்ற பெயரை மாற்றிவிட்டது. தேவர்கள் 
சிங்கமுகனுடைய போரைக்கண்டு, "இவன் பூதர்களுக்கெல்லாம் கேடுசெய்பவனாய் நின்றான்" என்று 
கூட்டமாக ஓடி உலைந்தார்கள். சிங்கமுகன் தன்மீது மலைகளையும் மரங்களையுமெறிந்த பூதர்களை 
இப்படிக்கொன்று உலாவி பின் மேருமலைபோலுந் தேரிலேறினான்.

    சிங்கமுகாசுரனுடைய போர்விளையாட்டை அழற்கண்ணர் என்னும் பூதப்படைத்தலைவர் பார்த்து, 
மனங்கனன்று, சிங்கமுகனுக்கெதிரே போய், "தீயவனே, இப்பொழுதே போர்செய்து உன்னை முடிப்பேன்" என்றார். 
அப்பூதப்படைத் தலைவரைச் சிங்கமுகன் பார்த்து, "ஒன்றையும் நினைக்கின்றாயில்லை, பயப்படுகின்றாயுமில்லை. 
எனக்கெதிரே நின்று இதனைச் சொன்னாயாயின், உனக்கு ஒப்பாவார் யாவர்? உன் வலிமை நன்று' என்று தேவர்கள் 
அஞ்சச் சிரித்தான். அழற்கண்ணர் அதனைநோக்கி, வடவாமுகாக்கினிபோலக் கோபித்து, "உன்னுடைய போரைத் 
தொலைப்பேன் நீயும் காணுதி" என்று ஒரு சூலப்படையை விட்டார். 

    சிங்கமுகன் அப்படையின் வரவைநோக்கி, அதற்கெதிராக ஒருபடையையுஞ் செலுத்தாமல் நின்றான். 
தேவர்கள் "சிங்கமுகாசுரன் தோற்றான்' என்று ஆர்த்தார்கள். அவன் சூலத்தை மார்பிலேற்றான். அது மலையிற்பட்ட 
முள்ளுப்போல ஒடிந்தது. சூலப்படையின் வலியையும், அது சிங்கமுகனுடைய மார்பிற்பட்டு ஒடிந்தமையையும், 
அவன் ஒரூறுபாடுமின்றி நின்றதையும் அழற்கண்ணர் பார்த்து, "வரத்தைப் பெறுகின்றவர்களில் இவன் பெற்றதே பேறு" 
என்று மறுகுகின்ற மனத்தராய்,ஓர் தண்டத்தை விரைந்து செலுத்தினார். அது சிங்கமுகனுடைய தேர்ப்பாகனது 
தலையைச் சிந்தியது. சிங்கமுகன் அதனைக்கண்டு கோபித்து, தன்கையிலிருந்த தண்டாயுதத்தை எறிந்தான். 

    அது விரைந்துசென்று பொன்மலையிற் குலிசாயுதம் பட்டாற் போல அழற்கண்ணருடைய மார்பிற்றாக்க, 
அவர் ஓவென்று மனம் வருந்தினார். அப்பொழுது மார்பு பிளக்க அவருடைய உயிருக்கு உலைவு வந்தது. 
அழற்கண்ணருடைய மூக்கிலும் மார்பிலும் வாயிலும் நெருப்புமழை போல இரத்தஞ் சிந்தியது. அவர் 
அறிவிழந்தும் வலிமை தொலைந்திலர். அவர் தமக்கு ஓர்யமன் இன்மையினால் உயிர்நீங்கப் பெற்றிலர். 
அழற்கண்ணர் இவ்வாறு சோர்ந்து நிற்கும்பொழுது, சிங்கமுகன் தன்னுடைய தேரில் வேறொரு பாகனை நிறுத்தி,
 பூதப்படைத் தலைவர்கண் மீது போருக்குச் சென்றான். 

    அவனுடைய வரவைக் கோபத்தின் மிகுந்த சுமாலியென்பவர் கண்டு, மேருமலைபோலுயர்ந்த ஓர்மலையை 
யகழ்ந்துவீசி ஆரவாரித்தார். அம் மலையைச் சிங்கமுகன் ஒருகையாற் பந்துபோலப் பிடித்து மீட்டுமெறிய,அது 
சென்று மார்பிற் றாக்குதலாற் சுமாலி கோபமுந்தாமுமாய்ச் செயலற்று நிலத்தில் வீழ்ந்தார். அதனைத் 
தண்டியென்பவர் கண்டு, ஓர் தண்டையேந்திச் சிங்கமுகாசுரனுடைய தேரிற்போய், அவனுடைய மார்பில் அடித்தார். 
அத்தண்டாயுதம் காமுகனுக்குப் போதிக்கும் புத்திபோல அழிந்தது. அதைக்கண்டு தண்டி கோபித்து, தேரின் 
மேல் நின்ற சிங்கமுகாசுரன் மேல் இடியிடித்தாற்போலக் கையாலடித்தார். அவன் அக்கினியுண்டாகச் சிரித்து, 
அவரை ஓர்காலினால் உந்தியெறிந்து, தேவர்கள் அஞ்சும்படி ஆரவாரித்தான். 

    காலினாலே தூக்கியெறியப்பட்ட தண்டி ஆகாயத்திலெழுந்து போய்த் திரும்பி வருகின்றவர் "இவனைக் 
கொல்வேன்' என்னுங் கோபத்தினராய்ப் பெருமூச்சுவிட்டு, சிங்கமுகனுடைய பொன்மலைபோலும் இரண்டாயிரம் 
புயங்களிலும் குதித்து, மலையிலுள்ள சோலைகளிற் பாயுங் குரங்கு போல்வாராய், அவைகளைத் தம்முடைய 
கால்களால் ஓடித் துவைத்து, கால்களும் ஓய்ந்து, அவற்றைப் பார்த்துத் திரிந்தார். அவர் சிங்கமுகனுடைய 
கரங்களிற் பாய்வார், அவற்றிலுள்ள படைகளிற் பாய்வார், சிரங்களிற் பாய்வார், செவிகளிற் பாய்வார், 
மரங்களிற் பாய்ந்து செல்லுகின்ற வண்டையும் போன்றார். 

    சிங்கமுகன் என்ன சிறியனா!  தன்கரங்களிலும் தோள்களிலும் சிரங்களிலும் தண்டி உலாவித் திரிவதை 
அவன் அறியாதவனாய், "நம்முடம்பில் வீழ்ந்துலாவிச் சூழ்கின்ற ஒரு ஈயோ" என்று கருதிப் பின்பு கையாற் சொறிந்து 
உருட்டித் துடைத்துவிட்டான். அதனாற் றண்டி மிகவும் வருந்தி வலிமையிழந்து தோற்றுப்போயினார். பூதர்கள் 
யாவரும் ஒருசெயலுமின்றிப் பயந்து ஓடினர். அரிதாகச் செய்த தவமேயன்றி வலியது வேறொன்றுண்டோ!
பூதர்கள் பயந்து ஓடுவதை இலக்கத்தெட்டு வீரர்களும் பார்த்து, தேரைச் செலுத்திக்கொண்டு சென்று, 
விற்களை வளைத்துச் சிங்கமுகனைக் சூழ்ந்து, பூமழைகளைப் பொழிந்தாற்போலச் சரமழைகளைப் 
பொழிந்தார்கள். அவர்கள் பொழிந்த அம்புகளெல்லாம் சென்ற அடையாளமுமின்றி அழிந்ததுமின்றி, 
முன்போல அவனுக்குப் பக்கத்தில் வீழ்ந்தன. அதனை இலக்கத்தெண்மரும் பார்த்து, "நம்முடைய வலிமை 
இழந்தது'' என்று அஞ்சினார்கள். 

    சிங்கமுகாசுரன் தேரினின்றுமிறங்கி, இடிபோல உரப்பிச் சென்று, சிலர்தேரை எடுத்தெறிந்தான், 
சிலர்தேரை ஒன்றோடொன்று அடித்தான், சிலர்தேரைக் கையால் அள்ளி ஒடித்தான், சிலர் தேரை உதைத்தான், 
சிலர்தேரைப் பொடியாக்கினான், சிலர்தேரைப் புதைத்தான். இவ்வாறு சிங்கமுகன் தாக்குதலும், 
இலக்கத்தெண்மர்களும் தங்கள் உயிரைத் தாங்கி, வில்லையும் மற்றைப் படைகளையும் மானத்தையும் 
வலியையுஞ் சிந்தி ஓடினார்கள். சிங்கமுகன் தேரிலேறினான்.

    அவ்விடத்து நின்ற வீரவாகுதேவர் அதனைக் கண்டு, "நம்முடைய பூதர்களுள்ளே சிங்கமுகன் கொன்றது 
பாதியுண்டு. இலக்கத்தெண்மரும் போரில் அழிந்தார். பெரிய சேனைகளெல்லாம் இன்றொருநாளில் அழியும் போலும்' 
என்று கூறிக் கோபம் மிகுந்து மேருமலைபோலும் வில்லை வளைத்து, அனந்தகோடி பாணங்களைப் பூட்டி 
விடாமழைபோலச் சொரிந்து நின்றார். எதிர்த்துப் போர்செய்த அவுணர்கள் தலைகள் பாற, தாங்கிய படைகளைச் 
சிந்தி, பூமியில் வெட்டுண்டு வீழ்ந்தார்கள். எண்ணிறந்த குதிரைகளும் தேர்களும் யானைகளும் அழிந்தன. 
அளவில்லாத அவுணர்களும் இறந்தார்கள். பிணமலைகள் மிகுந்தன. பேய்கள் மொய்த்தன. இறவாதொழிந்த 
சேனைகளனைத்தையும் இரத்தவெள்ளம் வீரவாகுதேவருக்கு உதவியாய் வாரிக்கொண்டு போய்ச் சமுத்திரத்தில் 
விடுத்து அதனை நிறைத்தது. 

    போர்க்களமெங்கும் பேரிகையினொலியும், அவுணர்களுடைய வில்லின் நாணொலியும், சதுரங்க 
சேனைகளினொலியும், காக்கையினொலியும் பேய்களினொலியும், இரத்தவெள்ளத்தின் ஒலியுமாய் மிகுந்தன. 
வீரவாகு தேவர் விடுத்த ஒருபாணம் மலைகளையறுக்கும், வேற்படைகளையும் வாட் படைகளையும் அறுக்கும். 
விற்களை யறுக்கும், வீரர்களுடைய புயங்களை அறுக்கும், மார்புகளையறுக்கும், கோடிதலைகளை அறுக்கும். 
அப்பாணங்கள் அவுணர்களுடைய சிரம் கரம் தோள் மார்பு முதலிய அவயவங்களைக் கவ்விக்கொண்டு சென்று,
ஏழ்கடலையும் நீங்கி, எண்டிசை மலைகளையுந் தாண்டி, சக்கரவாளகிரியைப் போழ்ந்து, அப்பாலுள்ள 
அண்டத்தையும் பிளந்து செல்லும்.

    இவ்வாறு அவுண சேனைகள் இறக்கும்படி வீரவாகுதேவர் உலாவித் திரிந்து கொல்லுதலும், சிங்கமுகனுடைய 
புதல்வர்களாகிய நூற்றுவர்கள் அதனைக் கண்டு, கோபித்து அதரத்தைப் பற்களாற் கடித்து, "நம் முன் வெவ்விய 
போரைச் செய்யுமிவனை விரைந்து கொல்வோம்" என்று இனத்தோடு தேரைச் செலுத்திக் கொண்டுபோய், 
தனித்தனி விற்களை வளைத்து, வீரவாகுதேவர்மேற் சரமழைகளைச் சிந்தினார்கள். அப்பாணங்களை 
வீரவாகுதேவர் கண்டு, அனந்தகோடி யம்புகளைச் செலுத்தி அழித்து, தேவர்கள் புகழ ஆரவாரித்தார். 
சிங்கமுகாசுரனுடைய புதல்வர்கள் கோபித்துப் பின்னும் கோடாகோடி பாணங்களைச் செலுத்தினார்கள். 
வீரவாகுதேவர் அவைகளைப் பாணங்களினால் மாற்றி, அவர்களுடைய விற்களையும் தேர்களையும் 
பாணங்களினால் அழித்தார்.

     அப்புதல்வர்கள் தங்கள் தேர்களும் விற்களும் அழிய 'இந்தவீரனை விற்போரால் வெல்லுதல் 
அரியது போலும்; வாட்போராற் கொல்வோம்" என்று ஓர் சூழ்ச்சியோடு பூமியில் வந்து, "வீரனே, நீ விற்போரைப் 
பயின்றதேயன்றி, எம்மைப் போல வாட்படையையும் பயின்றிலைபோலும்! வாட்போரில் வல்லையாயின், 
எம்மோடு போருக்கு வருகுதி" என்று கூறிப் புயங்களிற்றட்டி, யமனும் நடுங்கும்படி ஆரவாரித்தார்கள். 
அவர்களுடைய வார்த்தையை வீரவாகுதேவர் கேட்டு, "நல்லவார்த்தையைச் சொன்னீர்கள்!'' என்று சிரித்து, 
சிவபெருமான் கொடுத்த வாட்படையை எடுத்துக்கொண்டு விரைந்து பூமியிற் பாய்ந்து போயினார். 

    அதனை நோக்கித் தேவர்களும் துன்பமடைந்தார்கள். வீரவாகுதேவர் வாட்படையை எடுத்துக்கொண்டு
வருதலைச் சிங்கமுகனுடைய புத்திரர்கள் கண்டு, 'இவன் இறந்தான். இவனை இப்பொழுதே கொல்லலாம்" என்று 
கூறித் தனித்தனி வாட்படைகளை எடுத்துக்கொண்டு சென்று, பூரணசந்திரனைச் சூழ்கின்ற இருளைப் போல 
வீரவாகு தேவரைச் சூழ்ந்து, அவருடைய புயங்களிலும், மார்பிலும், கைகளிலும், கழுத்திலும், சிரசிலும், 
ஆராய்ந்து இலக்குப் பார்த்து வாட்படைகளை வீசி நெருங்கினார்கள். அவற்றால் அவருடைய திரு மேனிக்கு 
ஊறுபாடு சிறிதும் நிகழ்ந்திலது. 

    அதனை அவர்கள் பார்த்து, "இவனை யாங்கள் மெல்லப்பிடித்துக் கொல்லுதலே கருமம்" என்று கூட்டமாகப் 
போய்க் கட்டிப்பிடித்தார்கள். அவர் கோபித்து, வாட்படையை வீசி, சிறிதும் உடம்பினுறுப்புக்கள் தெரியாவண்ணம் 
துணித்தனர் போலும் என்று சொல்லும்படி நூற்றுவரையுங்கொன்றார். நூற்றுவரையுங் கொன்ற வீரவாகுதேவர் 
தேவர்கள் துதிக்க மீண்டு தேரிலேறினார். சிங்கமுகாசுரன் தன் புதல்வர்களிறந்ததைப் பார்த்து அளவில்லாத 
துன்பத்திலாழ்ந்து, மானத்தாலிரங்கி, "சிங்கேறுபோலும் வலியையுடைய என்குமாரர்களை ஒருவன் ஏந்திய 
வாட்படை வதைத்ததென்று மனமே வசையுண்டு வருந்தாதே. இவ்வசையைச் சுமந்து நிற்கக் கால்களுண்டு, 
எண்ணில்லாத தோள்களுண்டு, தலைகளுமுண்டு, சுமக்கலாம் போலும். 

    என்குமாரர்களை யாவருங்காண இங்கே என்முன்னே ஒருவனோ கொன்று நிற்பான்! இனி இதற்குமேலும் 
வசையுமுண்டோ! பகைவர்களுக்கெல்லாம் ஒரு நகையினை விளைத்தேனன்றோ! இறந்தவர்களை நினைத்து 
வருந்திநின்றதினா லாவதுண்டோ! பகைவர் கூட்டங்களையெல்லாம் ஒரு நொடிப்பொழுதிற் கொன்று கூட்டத்தோடு 
வாரிவாரித் தின்று தேக்கெறிந்தாலன்றி என்கோபந் தணியுமோ! இந்தப்பகைவர் கூட்டங்களை விரைந்து கொன்று, 
வேற்படையையேந்திய பாலகனையும் வென்று தேவர்களென்று பெயர் பெற்றோர் யாவரையும் இன்றைக்கேயழித்து, 
மூவுலகங்களையும் யானே விரைவில் முடிப்பேன்" என்றான். 

    இப்படிச் சிங்கமுகன் சொல்லி, அக்கினியும் நடுங்கும்படி கோபித்து, தேர்ப்பாகனை நோக்கி, "என் 
குமாரர்களைக் கொன்றவனுக்கு முன்னே தேரைச் செலுத்துதி" என்றான். பாகன் "மகாராஜனே நன்று" என்று 
குதிரைகளை எழுப்பிப் பண்ணுறுத்தித் தேரைத் தூண்டினான். சிங்கமுகன் வருதலை வீரவாகுதேவர் பார்த்து 
மகிழ்ந்து, தேரோடு வந்தெதிர்த்தார். சிங்கமுகன் கண்கடோறும் அக்கினி சிந்த அவரைப்பார்த்து, கூட்டிலடைபட்ட 
சிங்கம் தன் பகையைக் கண்டாற்போல மிகுந்தகோபம் மேற்கொண்டு, "சிவகுமாரர் அறுமுகங்களையுடையவர், 
அவர் நீயல்லை. இலக்கம் வீரர்களுக்குத் தலைவனோ? எண்மர்களுள் ஒருவனோ? நம்மூர்க்குவந்த தூதுவனோ? 
இவருள் நீயார் சொல்லுதி'' என்றான். 

    வீரவாகுதேவர் அதனைக்கேட்டு, ''யான் சிவகுமாரராகிய அறுமுகக்கடவுளுக்கு அடியவனானேன். 
முன்னே உங்களுடைய மகேந்திரபுரியை யழித்துத் தூதுவனுமாய் மீண்டேன். எல்லையில்லாத நும்மவர்களையெல்லாம்
 இங்கே ஒருகணப்பொழுதினுட் சங்கரித்து உன்னையும் வெல்ல அமைந்து நின்றேன். என்பெயர் வீரவாகு" என்று கூறினார்.
வீரவாகுதேவர் கூறிய மொழிகளைத் தன்காதுகளில் நஞ்சுபெய்தாற் போலச் சிங்கமுகாசுரன் கேட்டுக் கோபித்து, 
'படைக்கலப்பயிற்சியில்லாத சிறுவர்களைப் பொருது வெல்வதையும், நகரிலுள்ள எளியர்களைப் பொருது 
வெல்வதையும் அறிவாய்; இதுவுமோராண்மைப்பாலதோ? என்னுடைய நூறு குமாரர்களை எளிதிற் கொன்ற 
உன்வலிமையைச் சிவகுமாரன் காணக் கெடுப்பேன்; உயிரை வாங்கிக் கூற்றுவனுக் குணவாகக் கொடுப்பேன்: 

    உடலைப் பருந்தினுக்குக் கொடுப்பேன். உன்வலியையும் உன்றலைவனாகிய பாலகனுடைய வலிமையையும், 
சேனைகளின் வலிமையையும், உங்களுக்குப் பின்னே நிற்கின்ற தேவர்களுடைய வலிமையையும் என்னுடைய 
வலிமையினால் இறைப்பொழுதில் நீக்குவேன். நீங்கள் தேவர்களுடைய சிறையை நீக்கவெண்ணிச் சேனைகளோடு 
என்முன் வந்தடைந்தீர்கள். உயிர் உடம்போடுகூடி வாழ்தலையும் விரைவில் நீங்குதிர். உமக்குக் கிடைத்த இலாபம் 
மிகவும் அழகிது! வினைவயத்தாலிறந்த உயிர் மீண்டும் தாமிருந்த உடம்பினுட் பொருந்துமாயினும், என்னோடு 
பகைத்துப் போர் செய்கின்றவர்கள் இறப்பதன்றி மற்றும் உய்வார்களோ!" என்று இடியைக்கக்கினாற்போலக் 
கூறினான். 

    இதனை வீரவாகுதேவர் கேட்டுச் சிரித்து வில்லை வளைத்து, பதினெட்டுப் பாணங்களைச் சிங்கமுகனுடைய 
மார்பிற் செலுத்தினார். விரைவிற் சென்ற அப்பாணங்கள் அவனுடைய மார்பிற்பட்டு யாசகர்கள் பொருளை ஈயாது 
மறைக்கின்ற உலோபிகளுடைய செய்கைகளைக் கருதி மீள்வதுபோல ஒசிந்து வீழ்ந்தன. சிங்கமுகன் தன்னுடைய 
ஓர் கையிலிருந்த தண்டாயுதத்தை வீரவாகுதேவர்மேற் செலுத்தினான். அதனை வீரவாகுதேவர் நான்குபாணங்களாற் 
றுண்டித்து, ஆயிரம் அம்புகளைச் சிங்முகாசுரனுடைய சிரத்தில் விடுத்தார். அவனுடைய சிரசிற்பட்ட அப்பாணங்கள் 
பலதுணிகளாய் வீழ்ந்தன. அப்பொழுது சிங்கமுகன் "நேற்றைத் தூதுவன் இன்னும் என்முன் நின்று போர்செய்வானோ! 
இது நன்று' என்று சிரித்து, தன்கையிலுள்ள சூலப்படையைச் சுழற்றி யெறிந்தான். 

    அக்கினி கிளர்ந்தாற்போல ஆகாயமார்க்கமாக வருகின்ற சூலத்தின் ஒளியையும் வலிமையையும் 
வெற்றியையும் வீரவாகுதேவர் பார்த்து, அதற்கெதிராக ஆயிரம் பாணங்களைச் செலுத்தினார். சூலப்படை ஆயிரம்
 அம்புகளையும் அழித்து அவர்மேல்வர, அவர் மனம் வருந்தி, பின்னும் ஆயிரம் பாணங்களைத் தூண்டினார். 
அவற்றையும் சூலப்படை சிந்தி, தேவர்கள் மருளும்படி வீரவாகுதேவர்மேற் சென்றது. இலக்கரும் நடுங்கினார்கள்; 
எண்மர் ஏங்கிக் கலக்கமடைந்தார்கள்; பூதர்கள் யாவரும் துன்பமுற்றிரங்கினார்கள்; தேவர்கள் "இப்படை 
விலக்குதற்கரியதுபோலும்" என்று உயிர்த்து விம்மினார்கள். 

    வீரவாகுதேவர் தாம்செலுத்திய பாணங்களெல்லாவற்றையும் அழித்துத் தம்முடைய புயத்தைக்கொண்டு 
செல்லும்படி வருகின்ற சூலத்தின் வலிமையைப் பார்த்து, சிவபெருமான் கொடுத்த வாட்படையை எடுத்து, 
அதனை இருதுணியாக்கினார். சூலம் வெட்டுண்ணுதலும், துணைவர்களும் பூதர்களும் மிகவும் மகிழ்ச்சியிற் 
சிறந்தார்கள். தேவர்கள் யாவரும் ஆலாகலவிஷம் தம்மை வந்தடர்க்கச் சிவபெருமான் அதனையுண்டு தம்மைக் 
காத்த காலம் போலத் துயரம் நீங்கி மகிழ்ச்சியிற் சிறந்தார்கள்.

    அப்பொழுது வீரவாகுதேவர் வடவாமுகாக்கினியிலும் கோபம் மிகுந்தவராய், 'இப்பொழுது இவனுடைய 
உயிரை யானே உண்பேன்” என்று சிவப்படைக்கலத்தை எடுத்து "யந்திரமாகப்பாவித்த மனமாகிய பீடத்தில் 
வைத்து, பூசைக்குவேண்டு முபகரணங்களைக்கொண்டு மந்திரத்தோடு விதிப்படி அம்மனத்தாற் பூசைசெய்து, 
தேவர்களுக்கும் பிரமவிஷ்ணுக்களுக்கும் வெல்லமுடியாத சிங்கமுகனைக் கொல்லுதி" என்று அதனை வணங்கி 
விடுத்தார். அப்படைக்கலம் உலகம் அஞ்சும்படி அக்கினியைக் கான்று வந்தது. சிங்கமுகாசுரன் "இது எப்படையோ?" 
என்று சிந்தித்து, பின் சிவப்படைக்கலம் என்று தெளிந்து, "அப்படைக்கலமா என்னைக் கொல்வது' எனக் கூறி, 
அண்டம் வெடிபடும்படி சிரித்து, தான்றவஞ்செய்து முன்னாளிற் சிவபெருமானிடத்தே பெற்றதாய்த் தன்னொரு 
கரத்திலிருந்த சிவப்படைக்கலத்தை மந்திரத்தால் வழிபாடுசெய்து தூண்டினான். 

    அப்படைக்கலங்களிரண்டும் ஒன்றோடொன்று வந்து கலந்து, சமானமுடைய இரண்டு மேலோர்கள் 
சிநேகத்தால் ஒருவரோடொருவர் விரைந்துவந்து கலந்து பின் மீளுதல் போலத் தம்மை விடுத்தவர்கள்மாட்டு 
மீண்டு சென்றன. தம்முடைய சிவப்படைக்கலம் மீளுதலும், வீரவாகுதேவர் துன்பம் பொருந்திய மனத்தினராய், 
"சூரபன்மனுடைய தம்பியாகிய சிங்கமுகாசுரனுக் கிணையாகச் சொல்லுதற்கு வலிமையையுடையவர் 
ஒருவருமில்லை" என்று நினைத்து, ''இவன் வலிமையிற் குறைவிலன்; அழியாதிருக்கின்ற வரத்திற் குறைவிலன்: 
பிறரைக் கொல்லுந்திறத்திற் குறைவிலன்; கோடிகூற்றுவர்கள் எதிர்த்துப் போர்செய்யினும் நொடிப்பொழுதிற் 
கொல்வான். இவனுடைய பெருமுயற்சியையே வலியதென்பேனோ? தவங்களின் வலியையே வலியதென்பேனோ? 
அத்தவத்திற்காகச் சிவபெருமான் கொடுத்தவரத்தையே சிறந்த தென்பேனோ? இவற்றுள் எதனைப் பெரிதென்று 
யான் சொல்லவல்லேன். 

    விடுகின்ற பாணங்களால் உடம்பில் ஊறுபாட்டைப் பொருந்தான்; வலிய தெய்வப்படைகளாலும் அழியான்; 
இப்பதகன் அறுமுகக்கடவுளுடைய திருக்கரத்திலுள்ள படைகளாலன்றி இறக்கமாட்டான்; என்னால் இவனுடைய உயிரைக் 
கொல்ல முடியாதாயினும் வெவ்விய போரைச்செய்து இவனுடைய தேரையும் படைக்கலங்களையும் சேனைகளையும் 
யான் விரைவிலழிப்பேன்'' என்றுகூறி, பதினான்கு பாணங்களைச் செலுத்தி, சிங்கமுகனுடைய தேர்ப்பாகனது 
தலையையழித்தார். சாரதிதலை வீழுமுன் சிங்கமுகன் கோபித்து, வீரவாகுதேவர்மீது ஓர் தண்டாயுதத்தை இடிபோலச் 
செலுத்தினான். அது அவருடைய மார்பிற்பட்டு, கதிரெழு துகள்போலப் பொடியாகிப் புகைபோலப் போயிற்று. 

    வீரவாகுதேவர் கோபித்து, ஆயிரம்பாணங்களைச் செலுத்தி, சிங்கமுகன் ஏறிய தேரையழித்தார். தேரழிதலும், 
பூதர்கள் "சிங்கமுகனுடைய உயிரைக் கொல்வோம். இதுவே சமயம்'' என்று மலைகளையும் படைக்கலங்களையும் வீசி 
அவனை வளைந்து, போரில் முந்தினார்கள். சிங்கமுகன் அதனைக் கோபத்தோடு நோக்கி, ஒர்தேரில் ஏறி, ஆயிரம் 
விற்களை ஆயிரங் கைகளில் எடுத்து வளைத்து, நாணொலி செய்தான். அவ்வொலியைக்கேட்ட உயிர்கள் யாவுந் துடித்தன; 
அண்டங்களும் நடுங்கின; பிரமாவுந் தலையசைத்தார். வளைத்த அவ்விற்களில் எல்லையில்லாத மேகங்கள் வானிலெழுந்து 
மழையைப் பொழிந்தாற்போலப் பாணங்களைத் தொடுத்துச் சிந்தினான். 

    போர் செய்து எதிர்த்த பூதர்கள் பிணக்குவைகளாயினர். அவர்கள் பிரசண்டமாருதம் அடிக்கப் பூளைப்பூச் 
சிந்தினாற்போலக் கால்களும் கைகளும் தலைகளும் சிந்தினர்; தசையும் இரத்தமும் சிந்தினர்; மூளைகள் சிந்தினர். 
சிங்கமுகன் ஆயிரங்கைகளாலும் பாணங்களைத் தூண்டுதல் பாற்கடல் தன்னுடைய திரைகளாகிய கரங்களினாலே 
துளிகளைச் சிந்துதல் போன்றது. அவனுடைய அம்புகள் பூமியில் நெருங்கின, ஆகாயத்தைத் தூர்த்தன, 
எண்டிசைகளையு மறைத்தன, மலைகளில் நெருங்குவன, சமுத்திரங்கள் எங்கும் செறிவன, அப்பாலண்டங்களிலும் 
போவன, திக்குயானைகளின் மார்பிற் பாய்வன, ஏழுமலைகளையும் பகிர்வன,மேருமலையையும் போழ்வன. 
வடவாமுகாக்கினிகளையும் தணிப்பன. 

    அவனுடைய பாணங்களால் அழியாத உயிரும் உடம்பு பிளவுபடாத உயிரும் ஊறுபாடடையாத உயிரும் 
இல்லை. அவனுடைய பாணமழைகள் போய்ப் பொதிந்து ஆகாயவெளி முழுவதையும் மறைத்து உலகமெல்லாவற்றையும் 
பூமியாக்கின. அப்பாணங்கள் சூட்டிறைச்சிகளைக் கோக்கின்ற சலாகைகள் போலப் பூதர்களுடைய உடம்புகளை 
உருவி இலேசாக எடுத்துக்கொண்டு செல்கின்றன. மெய்ந்நூற்பொருளை அறியாத மூடர்கள் பெற்ற செல்வம் 
அவர்கிளைக்குத் துன்பஞ்செய்தல்போல, சிங்கமுகனுடைய பாணங்கள் அளவின்றி ஓடுதலால் அவனுடைய 
சேனைகளையுங் கொன்றன. அப்பாணங்கள் ஆகாயவழியை மாற்றியதனாற் சூரியன் மேற்குத்திசைக்குச் 
செல்லாமல் மீண்டு புலம்பிநின்றான். 

    கொம்பு பேரி முதலாகிய வாத்தியங்களும் படைக்கலங்களும் அள்ளுண்டு மேற்செல்லவும், நீர்க்காக்கை 
முதலிய பக்ஷிகள் நெருங்கிச் சூழவும், இரத்தவெள்ளம் சமுத்திரத்திற் பாய்ந்தது. இவ்வாறாகச் சிங்கமுகன் செய்கின்ற 
போரை வீரவாகுதேவர் பார்த்து, அவனுக்கெதிரேபோய், வில்லைவளைத்து நாணொலி செய்தார். அதனால் அண்டமும் 
அலைந்தது, அவுணர்கள் ஏக்கமடைந்து இரிந்தோடினார். யானை குதிரை தேர்களில் இருந்த வீரர்கள் யாவரும் 
ஆயுதங்களும் வெற்றியும் சிந்தி உடம்புகள் நடுங்க வீழ்ந்தார்கள். இவ்வாறாக வீரவாகுதேவர் நாணொலிசெய்து, 
பாணமழைகளைச் சிந்தி, சிங்கமுகன் செலுத்துகின்ற அம்புகளெல்லாவற்றையும் இறைப்பொழுதில் அறுத்தார். 

    அளவில்லாத பிரமர்கள் படைக்கின்ற உயிர்களெல்லாவற்றையும் உருத்திரமூர்த்தி ஒருவர் சங்கார காலத்திலே 
அழித்தல்போல, ஆயிரம்விற்களாற் சிங்கமுகன் விடுகின்ற பாணங்களெல்லாவற்றையும் வீரவாகுதேவர் தம்முடைய 
அம்புகளால் அழித்தார். சமுத்திரங்களிலும், பூமியிலும், ஆகாயத்திலும், திசைகளிலும், மேருவிலும், மற்றை மலைகளிலும், 
சிங்கமுகனுடைய பாணங்கள் சென்ற சென்ற மற்றையிடங்களிலும், வீரவாகுதேவர் பாணங்களைச் செலுத்தி, 
அவ்வப்பொழுதே அறுத்தார். அதனைத் தேவர்கள் பார்த்து, சூரபன்மனுடைய கிளைகளெல்லாவற்றையும் சுப்பிரமணியக் 
கடவுள் சங்கரித்த நாளில் அடைகின்ற மகிழ்ச்சியைப் பெற்று, ஆரவாரித்து, "நமது வீரவாகுதேவர் சிங்கமுகனுடைய 
பாணங்கள் யாவையுமா அழித்தார்,    அவன்படைத்த புகழ்களெல்லாவற்றையுமன்றோ அழித்தார்" என்று கூறினார்கள். 

    இவ்வாறு தன்சரங்களை வீரவாகுதேவர் அழித்தலைச் சிங்கமுகன் கண்டு, "யான் வில்லெடுத்தது உன்பொருட்டாகும். 
விரைவில் உன் புயங்களையும், கரங்களையும், மார்பையும், தலையையும், நாசியையும், கால்களையும், நாக்கையும் சரங்களாற் 
றுணிப்பேன். தொகுதியாகிய கைகளையுடைய யான் சிலைத்தொழிலைக் காட்டுகின்ற போரில் இரண்டு 
கைகளையுடைய நீ ஒருவன்றானா என்முன் வந்தெதிர்ப்பாய். வில்லைத் தொட்ட உன்கையை வெட்டிக் காகம் 
உண்ணும்படி கொடுப்பேன். அதனை நீ முன்பே காணுதி. மகேந்திரபுரியில் முன்னிகழ்ந்த போர்களிலும் என் 
சேனைகளிலும் குமாரர்களிலும் நீ கொண்ட வெற்றிகள் எல்லாவற்றையும் உன்னைக் கக்குவிப்பேன்; 
உன்னுயிரை யான் உண்பேன்" என்று கூறினான். 

    அதனை வீரவாகுதேவர் கேட்டு, "நீ பற்பலவற்றைச் சொல்லுகின்றதென்! உன்னுடைய ஆயுதங்களையும் 
சேனைகளையும் அழித்து உன்னையும் வெல்வேன். என்னுடைய வில்வலிமையைப் பார்க்குதி'' என்றார். 
சிங்கமுகாசுரன் கண்கள் அக்கினிகால ஆயிரம் விற்களை வளைத்து, பத்துலக்ஷம்பாணங்களைப் பூட்டி, 
வீரவாகுதேவர் மேல் விடுத்தான். அவர் வலிமை மிகுந்த பத்துலக்ஷம் பாணங்களைத் தூண்டி அவற்றை அறுத்து, 
பின்னும் பத்துலக்ஷம்பாணங்களை விடுத்தார். வீரவாகுதேவர் விட்ட பாணங்களை அத்துணைப் பாணங்களாற் 
சிங்கமுகன் அழித்து ஆயிரகோடி பாணங்களை விடுத்தான். வீரவாகு தேவரும் அத்துணைப் பாணங்களைச் 
செலுத்தி அவனுடைய பாணங்களை அழித்தார். சிங்கமுகன் அதன்முன் இரண்டாயிரஞ் சரங்களைத் தொடுத்து 
வீரவாகுதேவருடைய வில்லை வெட்டி, அவர் வேறோர் வில்லை வளைத்தற்குமுன் அவருடைய மார்பில் 
நூறுகோடிபாணங்களை அழுத்தினான். 

    மார்பினின்று இரத்தம் ஆறுபோலப் பாய்ந்தது. அவர் வில்லை வளைத்து இலக்ஷம் பிறை முகபாணங்களைச் 
சிங்கமுகன்மேற் செலுத்தினார். அவன் அதனைக்கண்டு அத்தன்மையனவாகிய பாணமழைகளைத் தொடுத்து 
அவற்றையழித்து, பின்னும் பாணமழைகளைச் சொரிந்தான். வீரவாகுதேவர் அம்புகளால் அவற்றை மாற்றி 
ஆயிரங் கணைகளைச் சிந்தி, உருளைகளை அறுத்து அவனுடைய தேரை அழித்தார். சிங்கமுகன் வேறோர் 
தேரின்மேற் பாய்ந்து விற்களை வளைத்தான். வீரவாகுதேவர் அவனுடைய ஆயிரம் விற்களையும் பாணங்களால் 
நொடிப்பொழுதில் அறுத்தார். 

    சிங்கமுகன் விற்களும்,மானமும், வீரச்சொல்லும், பெருமிதமும், கீர்த்தியும் இழந்து, பல்லிழந்த பாம்பை 
யொத்து, மிகவுந் துன்பமுற்றான். பூதர்கள் அதனைப் பார்த்து ஆர்த்தார்கள்; தேவர்கள் ஆர்த்தனர்; 
பிரமர்கள் ஆர்த்தனர்; விஷ்ணுக்களும் ஆர்த்தனர். தன்னுடைய ஆயிரம் விற்களும் ஒருசேர வெட்டுண்டதையும், 
வீரவாகுதேவருடைய வில்வித்தையின் றிறமையையும், விஷ்ணுமுதலாகிய தேவர்கள் தன்னை இகழ்ச்சிசெய்வதையும்,
 பூதர்களுடைய வலிமையையும் சிங்கமுகாசுரன் கண்டு, "தேவர்களுடைய ஆர்ப்பையும், இந்தினுடைய ஆர்ப்பையும், 
திக்குப்பாலகர்களுடைய ஆர்ப்பையும், எம்மைக் கொல்லக் கருதும் மும்மூர்த்திகளுடைய ஆர்ப்பையும், பூதர்களுடைய 
ஆர்ப்பையும், முனிவர்களுடைய ஆர்ப்பையும் துன்பத்துக்குக் கொடுப்பேன் என்று எண்ணி, தாயாகிய மாயவள் 
கொடுத்த மாயாபாசத்தை எடுத்து, நீ விரைந்துசென்று எம்மோடு போர்செய்கின்ற பகைவர்களைக் கட்டி, 
உயிரையுண்டு உதயமனகிரியிற் கொண்டு போய்வைத்து, அவர்களை விட்டு நீங்காமல் அங்கேயே யிருப்பாய்'' 
என்று கட்டளை செய்து வீசினான். 

    அது ஏழுசமுத்திரங்களும் ஒன்றாய் வந்து செறிந்ததென்று சொல்லும்படி திக்குக்களிற் சூழ்ந்து, இருண்மயமாய், 
அக்கினியைச் சிந்திப்போயது. தேவர்கள் யாவரும் ஓடினர். பூதர்கள் யாவரும் பொருமினர். வீரவாகுதேவர் அதனைக் 
கண்டு ''ஈதோர் மாயமோ' என்று கருதி, 'இது சமுத்திரமோ? நம்மை மூடும்படி வந்த பரந்த இருளோ? புயங்களைக் 
கட்டியிழுக்கும்படி வந்த கயிறோ? யாதாயிருப்பினும் இதனை அழிப்பேன்" என்று துணிந்து, அதனைக் கெடுத்தற்குரிய 
படைக்கலத்தை எடுக்குமுன் அப்பாசம் விரைந்து காற்றுப்போல வந்து, குழுவோடு எல்லாரையும் கட்டியது. 

    பூதப்படைகளும், படைத்தலைவர்களும், இலக்கத்தெண்மரும், வீரவாகுதேவரும் ஆகிய எல்லோரும் 
அப்பாசத்தில் அகப்பட்டார்கள். அப்பாசம் ''இந்த வீரர்கள் அறிவோடிருந்தால் நம்மை மாற்றுவர். இவரை யான் 
ஆற்றாராகச் செய்வேன்" என்று சிறிதுநேரத்துள் அவர்களுடைய அறிவை மயக்கி, வலிமையிழந்து சோர்ந்த 
அவர்களெல்லாரையும் ஆகாயவழியாகத் தூக்கிக்கொண்டு வாயுகதியும் மனோகதியும் பிற்படச் சமுத்திரத்தைத் 
தாண்டி உதயகிரியிற்போய், உயிர்ப்பின்றி உறங்குகின்ற அவ்வீரர்களை வைத்துக்கொண்டிருந்தது. சிங்கமுகன் 
வீரவாகுதேவர் முதலிய யாவரும் இறந்து உதயமனகிரியையடைந்தார் என்பதைத் தெரிந்து, அதனைப் பார்த்து, 
"கூட்டத்தோடு நின்ற நம் பகைவர்களை விரைவிற் கொன்று உயிரைப் பருகினேன். என்வலி அழகிது" என்றான். 

    பின் ''சிவகுமாரன் ஓடிவிட்டானோ? நம்மோடு போர்செய்தற்கென்று வந்ததுமில்லையோ? அவனை 
எங்குந் தேடினேன், காண்கிலேன். அச்சிறுவன் யாண்டையான்? அவன் என்றம்பியைக் கொன்றான் கொன்றான் 
என்று சொல்வது பொய்யோ? என்றம்பி யிறந்திலனோ?" என்று அண்டங்கள் வெடிக்க ஆர்த்தான். சிங்கமுகன் 
இவ்வாறு சொல்லி ஆரவாரிக்கும்பொழுது, முன்னணியிற் சென்ற தூதுவனொருவன் வந்து, "ஆயிரம்வெள்ளம்
பூதசேனைகளோடு சிவகுமாரர் பாடி வீட்டில் இருந்தார். யானும் பார்த்து வந்தேன்'' என்றான். அவ்வார்த்தையைச் 
சிங்கமுகன்கேட்டு, வக்கிர தந்தங்கள் விளங்கச் சிரித்து, "சிவகுமாரன் என்னோடு போர்செய்யப் பயந்து 
புற்றினுளிருக்கும் பாம்புபோலப் பாசறையிலிருந்தானோ? இற்றைத் தினத்தில் யானே விரைந்துசென்று 
ஓர் கணப்பொழுதினுள் அவனுடைய போரை முடிப்பேன்" என்று கூறிப் போருக்குச் சென்றான்.

    இந்நிகழ்ச்சிகள் முழுதையும் தேவர்கள் பார்த்து, வாட்டமடைந்து ஓடிச்சென்றார்கள். அதனை வாயுவானவன் 
பார்த்து, சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடிகளை வணங்கி, "எம்பெருமானே கேட்டருளும். பூதர்களும் வீரவாகு 
முதலிய வீரர்களும் போய்ச் சிங்கமுகனோடு பெரும்போர் செய்ய, அவன் கோபித்துத் தன் கையிலிருந்த மாயா 
பாசத்தினால் அவர்களெல்லாரையும் கட்டி உதயமனகிரியிலிட்டான்" என்று விண்ணப்பஞ் செய்தான். அறுமுகக்கடவுள் 
வாயு சொல்லியவற்றைக்கேட்டு, ''அந்தச் சிங்கமுகன் யாண்டுளான் யாண்டுளான்?" என்று வினாவினார். 
'அவன் தேர்மேலேறி, சூழ்கின்ற படைகளோடு இறக்கும் விதியினால் இங்கே வருவான் போலும்" என்று வாயுதேவன் கூறினான். 

    சுப்பிரமணியக்கடவுள் அதனைக்கேட்டு, திருப்புன்முறுவல் செய்து, பல இரத்தினங்களிழைத்த 
செம்பொற்றிருப் பாதுகையிலே அருமைத் திருவடிகளை வைத்து, வீரக்கழலொலிப்பப் புறங்கடைவாயில்வரையும் வந்து, 
தம்முடைய திருமருங்கில் வந்த வாயுவை நோக்கி "நம்முடைய தேரைக் கொண்டுவருதி" என்று பணித்தார். அவன் 
அப்பணியைச் சிரமேற்கொண்டு, முன்பு சிவபெருமானாலே கொடுத்தருளப் பெற்ற மனவேகமென்னுந் 
தேரைக் கொண்டுவந்து, முட்கோலையும் கயிற்றையுந் தாங்கிச் செலுத்தினான். அறுமுகக்கடவுள் அதன்மேல் 
இவர்ந்தருளினார். தேவர்கள் யாவரும் ஆரவாரித்தார்கள். இந்திரன் சாமரத்தை இரட்டினான். தேவர்கள் 
ஆலவட்டங்களை வீசினார். சந்திரசூரியர் குடைகளைத் தாங்கினார். யமன் உடைவாளைப் பற்றினான். 
குபேரன் அடைப்பையைக் கொண்டான். வருணன் படிக்கத்தை ஏந்தினான். 

    இவ்வாறாகச் சுப்பிரமணியக்கடவுள் போருக்குச் செல்வதை ஆயிரம்வெள்ளம் பூதர்களுந் தெரிந்து, 
சமுத்திரமும் நாண ஆர்த்து, சூலம், மழு, தண்டம்,எழு, கலப்பை, மரம், மலை முதலாயினவற்றை ஏந்தி விரைந்து 
வந்து சூழ்ந்தார்கள்.அனந்தகோடி பூதர்கள் பறைகளை அடித்தார்; சங்கங்களை ஆர்த்தார்; முருகக்கடவுளுடைய 
கீர்த்திகளைப் படித்தார்; பக்கங்களிற் குடைகளையும் ஆலவட்டங்களையும் பிடித்தார்; இடபக் கொடிகளைத் 
தாங்கினார். தம்முடைய வீரத்தைப் பேசினார். "மும்மூர்த்திகளுக்கும் முதல்வர் வந்தார்; சிவகுமாரர் வந்தார்;
பகைவர்களுக்குச் சிங்கேறாயுள்ளவர் வந்தார்; வேற்படையையுடைய வீரர் வந்தார்; எவரும் அறிதலரிய 
தனிமுதல்வர் வந்தார்; தேவாதிதேவர் வந்தார்' என்று திருச்சின்னங்கள் பணிமாறின.

    பூதர்கள் சூழவும், தேவர்கள் வாழ்த்தவும், சுப்பிரமணியக்கடவுள் விரைந்து பாசறையை நீங்கிப் 
போர்க்களத்தையடைய, சிங்கமுகனும் படைகளோடு வந்து எதிர்த்தான். பூதர்கள் எழு, மரம், தண்டு, சூலம்,
 சக்கரம், மலை முதலியவற்றை வீசி, அவுணர்களையும் அவர்களுடைய யான் குதிரை தேர்களையும் 
அழிப்பாராயினார். அவுணர்கள் வேல், மழு,தண் குலிசம்,எழு, அம்பு, சூலம், இருப்புலக்கை, கவண்கல் 
முதலியவற்றை சிந்திப் பூதர்களைக் கொல்லலுற்றார். இருதிறத்துச் சேனைகளும் இவ்வாறு பொருத பொழுது 
அவுணர்கள் பலர் இரத்தம் வடிய மார்பு சிரம் தோள் முதலிய அங்கங்கள் வெட்டுண்டு சிவபெருமானுடைய 
திருப்புன்முறுவலாகிய நெருப்புப்பற்ற எரிந்த முப்புரம்போல வீழ்ந்து அழிந்தார்கள்.

    அதனைச் சிங்கமுகாசுரன் பார்த்து, அக்கினிசொரியுங் கண்ணினனாய்," நம் பகைவர்களை விரைவில் 
வாரியுண்டு என்னுடைய கோபந்தணிவேன்" என்று கூறி, ஆயிரஞ் சிரங்களும் அண்டமுகட்டை அளாவவும், 
இரண்டாயிரங் கைகளும் அண்டத்தின் பக்கங்களையலைக்கவும், பூமியுட் புதைந்த கால்கள் அண்டத்தினடியைப் 
பூழைசெய்யவும், மாயையினால் இவ்வாறு ஓர் பேருருவத்தையெடுத்து, ஆரவாரித்து வந்தான். யமன் அவனுடைய
தோற்றத்தை நோக்கி யசைந்து நின்றான்; சூரியன் ஓடினான்; இந்திரன் நடுங்கினான்; அக்கினி பதைபதைத்துச் 
சோர்ந்தான்; பிரமா முதலிய தேவர்கள் மனம் மருண்டார்கள். அப்பொழுது சிங்கமுகன் இரண்டாயிரங் 
கைகளையும் நீட்டி, நினைத்தற்குமுன் நீட்டிய ஒவ்வொரு கையும் ஆயிர கோடிபூதர்களை அள்ள, அவர்களை 
வாயிலிட்டு விழுங்கினான். 

    அவனுடைய வாய்கள் ஆயிரமண்டங்கள் ஒரு பக்கத்திலே வெடித்து வெவ்வேறாய் விளங்குவனவற்றைப் 
போலும். அவனுடைய வாயினுட் புகுகின்ற பூதர்கள் "இது மண்ணுலகம், அதுவன்றாயின் விண்ணுலகமாகும், 
அதுவுமன்றெனின் அசுரர்கள் இருக்கின்ற உலகமாகும்" என்று பார்த்தார்கள். அவன் வாயிலிட்டு விழுங்கும் 
பொழுது, சிலபூதர்கள் அவனுடைய மூக்கையும் காதையும் பார்த்து, இவைகள் முழஞ்சுகளோ என்று ஓடினார்கள். 
சில பூதர்கள் பூமியிலுள்ளவர்கள் பாதலத்துக்குச் செல்லுதல் போலச் சிங்கமுகனுடைய பெரிய வாயாற் போய்க் 
கழுத்தை நீங்கி நெஞ்சைக் கடந்து வயிற்றிற் புகுந்தார்கள். அவன் சுவாசத்தை உள்வாங்கும் பொழுது அதனால் 
உந்தியிற்புகுந்த சிலபூதர்கள் அவன் அதனை விடும்பொழுது மீண்டும் ஆயிரம் யோசனை வெளியே போயினார்கள். 

    அவன் விழுங்க வயிற்றிற் புகுந்த பூதர்கள் சிலர் மற்றையிடங்க ளெல்லாவற்றினும் சிவபெருமானைத் தியானித்தற்கு 
இவ்விடமே நன்றென்று கூறினர். சிலபூதர்கள் அவனுடைய வயிற்றிற் புகுந்து அதனைத் தங்கையிலுள்ள படைகளினாற் 
கிளைத்தும் கீறியும் துளைத்தும், அது கெடாமையினாலே வலிமையிழந்து இளைத்தார்கள். அவர்கள் யாதுசெய்வார்கள்! 
ஆயிரம் வெள்ளம் பூதங்களையும் வாயிலிட்டு விழுங்கித் தன்வயிற்றில் வைத்த சிங்கமுகனுடைய செயலைப் பலநாள் 
இடைவிடாமற் சொன்னாலும் ஒழியுமோ! இப்படிச் சிங்கமுகன் ஆயிரம்வெள்ளம் பூதங்களையும் கையால் வாரி 
வயிற்றிலிடுதலும், தேவர்கள் அதனைக்கண்டு, "இவன் பூதர்களை வாரி உண்டான்; இனிப் பூமியிலுள்ள 
பொருள்களையெல்லாம் வாரியுண்பான்; ஆகாயத்திலுள்ள நம்மையும் விரைந்து பிடித்துண்பான்'' 
என்று பயந்து ஓடினார்கள். 

    இவற்றைப் பார்த்த சூரபன்மனுடைய தூதுவர்கள் விரைந்து ஓடிச்சென்று, அவனுடைய கால்களை வணங்கி, 
சிரசில் அஞ்சலித்த கையினராய், ''மகாராஜனே, உன்றம்பியாகிய சிங்கமுகாசுரன் சிவகுமாரருடைய தூதுவனையும், 
மற்றை வீரர்களையும், பூதவெள்ளங்களிற் பாதியையும் மாயா பாசத்தினாற் கட்டிக்கொன்று உதயமனகிரியிலிட்டான். 
இதனை அப்பாலகன் அறிந்து வேற்படையோடு போரில் வந்தெதிர்க்க, உன்றம்பி மிகப் பெரிய ஓர்வடிவத்தை 
யெடுத்துப் பூதர்களெல்லாரையும் அள்ளியுண்டான். இங்கு மீளுமளவும் நிகழ்ந்தன இவைகளாம். 

    அவன் இப்பொழுது சிவகுமாரரோடு போரைச் செய்வான். ஒரு நாழிகைப் பொழுதினுள்ளே பகைவர்கள் இலர் 
என்று சொல்லும்படி செய்து மீளுவான்" என்று சூரபன்மனுக்குப் பக்கத்தில் நிற்கும் பரிசனங்களும் மகிழும்படி 
சொன்னார்கள். அவற்றைக் கேட்ட சூரபன்மன் சிங்காசனத்தினின்றும் இறங்கிப்போய்த் தூதுவர்களைத் தழுவி, 
பல உபசாரங்களைச் செய்து, அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்து, தன்பக்கத்தில் நின்ற ஒருவனை நோக்கி, 
சிவகுமாரனோடு என்றம்பியாகிய சிங்கமுகன் போர் செய்கின்றான்; முன் அவனோடு கூடச்சென்ற சேனைகளுட் பற்பல அழியும். 
இந்நகரத்திலுள்ள  சேனைகளெல்லாவற்றையும் அங்கே செல்லும்படி அனுப்புதி" என்றான். 

    அந்த ஏவலாளன் அவ்வுரையைக் கேட்டு மிக விரைந்துசென்று, சிவகுமாரரோடு போர்செய்யப் 
போமின் போமின்" என்று பறைசாற்றுவித்தான். அவ்வொலியைக் கேட்ட அம்மகேந்திர நகரத்துச் 
சேனாவெள்ளங்களெல்லாம் அணிவகுப்போடு ஆரவாரித்துச் சென்று, சிங்கமுகன் நிற்கின்ற 
போர்க்களத்தை யடைந்தன. சூரபன்மன் "என்றம்பியின் போர் வலியைக் காண்பேன்" என்று 
சிங்காசனத்தினின்றுமிறங்கித் தன் கோயிலினடுவேயுள்ள மேருமலைபோலும் ஒர் சிகரத்தில் ஏறி, 
சிங்கமுகன் கொண்ட பெரிய வடிவத்தையும் சுப்பிரமணியக்கடவுள் தனித்து நிற்பப், பூதர்கள் 
அவனுக்குணவாய்ப்போன தன்மையையும் அன்போடு தன் கண்களினாற் பார்த்து இடிபோலச் சிரித்து, 
மிகுந்த களிப்பும் ஆச்சரியமும் அடைந்தான்.

    சூரபன்மன் சிகரியிலே இவ்வாறு சிங்கமுகனுடைய போரைப் பார்த்துக்கொண்டு நிற்ப, முன்னே 
சிங்கமுகன் அளவில்லாத பூதசேனைகளை எடுத்து உண்டபொழுதில், அநந்த சத்தியையுடையரும், சங்கார 
காரணராகிய சிவபெருமானுடைய குமாரரும், செந்தாமரைக் கானங்களும் சூரியர்களுடைய தொகையும் 
செவ்வொளியைக் கான்றிருந்தாற் போன்ற பன்னிரண்டு திருக்கரங்களையும் ஆறு திருவதனங்களையுமுடையரும் 
ஆகிய அறுமுகக்கடவுள் அதனைப் பார்த்து, போர்செய்தலாகிய ஓர் திருவிளையாடலைத் திருவுளங்கொண்டு, 
வாயுதேவன் தேரைச்செலுத்தப் போர் செய்யும்படி வந்தார். 

    சிங்கமுகாசுரனுடைய சேனாவீரர்களெல்லாரும் பூதப்படைகள் யாவும் அழிந்ததைத் தெரிந்து, யானை 
குதிரை தேர்கள் நெருங்க வடவாமுகாக்கினியைச் சூழ்ந்த சமுத்திரம்போலச் சுப்பிரமணியக்கடவுளை வந்து சூழ்ந்து, 
படைகள் முழுவதையும் அவர்மீது இடி போலச் சொரிந்தார்கள். அதனை அக்கடவுள் கண்டு, மேருமலைபோலும்
 வில்லை வளைத்து, அதினின்று வீழும் அருவிபோலும் நாணில் ஒலியைச் செய்தார். ஆயிரகோடி பிருதிவியண்டங்களும் 
வெடித்தன, அப்புவண்டச் சுவர்கள் பகிர்ந்தன, தேயுவண்டங்கள் வெடித்தன, வாயுவண்டங்கள் விண்டன, 
ஆகாயவண்டங்கள் உடைந்தன. அந்த நாணோதை சிங்கமுகாசுரனுடைய சேனாவீரர்களின் காதினுட் 
புகுதலும் கைகளிலுள்ள ஆயுதங்களைச் சிந்தி வீழ்ந்தார்கள். யானைகளும் குதிரைகளும் கவிழ்ந்தன. 
தேர்கள் உடைந்தன. 

    அந்நாணொலியைக் கேட்டும் அதனாற் பூமியிற் கவிழ்ந்த தன்சேனைப் பரப்பைப் பார்த்தும் நின்ற             
சிங்கமுகன் "இந்த நாணொலியை யார் செய்யவல்லவர்! சிவகுமாரன் இவனாம். இதற்கு முன்னே தாரகனை 
வென்றானென்பது உண்மையே போலும்'  என்று கூறி, "இப்பாலகனுடைய வலிமையை யானே கெடுத்து மீளுவேன்,"
 என்று  தேரோடும் ஒருநொடிப் பொழுதிற் சுப்பிரமணியக்கடவுளுக்கெதிரேபோய், அவரை நோக்கி, "சிவகுமாரரே,
 யான் ஒன்று சொல்வேன், கேளும். தம் பகைவர்களுடைய வலிமையைக் கெடுத்தல் அரசர்களுக்குக்  கடனே. 
அதனால் நம்பகைவர்களாகிய தேவர்களை யாங்கள் தண்டித்தோம். நீர் அவருள்ளும் ஒருவரல்லீர். நமக்கு வேறு 
பகைவருமில்லை. இங்ஙனமாக நீர் நம்மோடு போருக்கு வந்ததென்னை?" என்று வினாவினான். "எளியவனை 
வலியவன் தண்டித்தால் அதனை ஆராய்ந்து அவ்வியல்பினுக்கு நீதிநூலிற் சொல்லிய தண்டத்தைச்செய்து 
அண்டங்கள் முழுவதுக்கும் இறைமைத் தொழிலை நாம் செய்வோம். ஆதலால் வலியர்களாகிய நீவிர் எளியர்களாகிய 
தேவர்களுக்கிட்ட சிறையை நீக்கவந்தோம். போரும் அதற்காகவே '" என்று சுப்பிரமணியக்கடவுள் சொல்லியருளினார்.

     சிங்கமுகன் அதனைக் கேட்டு, இடியேறுபோலக் கையோடு கையைத் தாக்கி அண்டங்களும் குலுங்கச் 
சிரித்து, நிகரில்லாத கோபத்தில் மிகுந்தவனாய் இவற்றைச் சொல்வான்: நீ இங்கே நம்மவர்களையும் வென்றாய்! 
தேவர்களும் இன்றைக்கே சிறையினின்றும் நீங்கினவராவர்! நீயும் அவரைச் சிறையினின்றும் நீக்குதி போலும் போலும்! 
நாங்களும் எளியர்தாமே! உன் உபாயம் நல்லதே! வலிமை உன்னிடத்திலேயே மிகுந்தது! உண்மை இதுவன்றியுண்டோ! 
இந்திரகுமாரனையும் தேவர் குழுவையும் வாரிக்கொண்டு வந்து விலங்கிட்டு வீழ்த்திய சிறையை நீக்குதற்குச் 
சந்திர சூடராகிய சிவபெருமானாலும் முடியாதென்றால், மைந்தனே நீ ஒருவன் கொல்லோ இதனைமுடிக்கவல்லை! 

    சிவபெருமான் உனக்குத் தந்த வேற்படையின் வலிமையினை எண்ணாமல் மறந்தவனாய் அதனை இகழ்ந்து 
போர்செய்த தாரகனுடையை உயிரைக் கவர்ந்தாய், ஓடிப்போனாற் பிழைப்பாய். நீ இங்கே வந்ததன்மை            
எங்கள் நல்வினையால் வந்தது. கடப்பமாலையைத் தரித்த பாலகனே கேள்.                        

    சிவபெருமான் றந்த வேற்படையின் வலிமையையும் உன்னுடைய வலிமையையும் பிறவற்றையும் 
யான் அறிந்திருக்கின்றேன். தாரகனைப்போல  யான் போரிலே அறியாமையைப் பொருந்துகின்றதில்லை. 
விரைந்து போரைச்செய்குதி. வீரவாகு முதலிய வீரர்கள் யாவரும் பூதர்களிற் பலரும் இறந்து உதயமன கிரியை 
யடைந்தார்கள். மற்றைப்பூதர்கள் நீயுங்காண விரைவில் என் வயிற்றிற் போயிறந்தார்கள். நீ தனித்தவனாய் 
நின்றாய். 'போரைச்செய்வோம்' என்னும் உன்னுடைய ஊக்கமே சிறந்தது! சயந்தனையுந் தேவர்களையும் 
சிறையினின்று நீக்கும்படி வந்த நீ துணைவர்களோடு பூதர்களையும் வாளா போக்கினாய். தனியனாய் நின்றாய். 
இலாபம் இதன்மேலும் உண்டோ! உனக்கு இப்பெரும்பேறு கிடைத்ததல்லவா!  நம்மோடு போருக்கு வந்திறந்தவர் 
அளவில்லாதார்; துன்பத்தோடு புறந்தந்து ஓடினவர் தொகையும் அவ்வாறே. அதனையறியாய் கொல்லோ! 
அதனாற்றான் போரைக்குறித்து இங்கே வந்தாய். தேவர்களுடைய சிறையைக் கனவிலும் விடுவதுண்டோ!" என்றான். 

     இவ்வாசகத்தைச் சிங்கமுகன் சொல்லிமுடிக்குமுன் அறுமுகக்கடவுள் "இவனுடைய உட்கோள் நன்று"
என்று திருப்புன்முறுவல் செய்து, ஒரேயொரு பாணத்தை வில்லிற்பூட்டி விரைந்து செலுத்தினார். அது 
சிங்கமுகாசுரனுடைய மார்பிற்புகுந்து புறத்தில் ஊடுருவிப் போயது. விந்தமலைபோலப் பெரிய வடிவத்தைக் 
கொண்டிருக்கின்ற சிங்கமுகன் அப்பாணம் மார்பிலே மூழ்குதலும் துன்பமுற்று இரத்தம் அருவிபோலச் 
சொரிய நின்றான். தேவர்கள் அதனைக் கண்டு ஆரவாரித்தார்கள். பாணம் ஊடுருவுதலால் மார்பும் முதுகும் 
வாயில்களாதலும், சிங்கமுகனுடைய வயிற்றிலிருக்கின்ற பூதகணங்கள் யாவும் அதனை நோக்கி, 
புற்றிலிருந்தெழுகின்ற கறையான்களைப்போல அவ்வழியை நாடி ஆரவாரித்துக்கொண்டு வெளியே புறப்பட்டு வந்தன. 

    அதனைச் சிங்கமுகன் பார்த்து, கைகளினால் அத்துவாரங்களை மாற்றி, சுப்பிரமணியக்கடவுள்கண்மீது 
ஒரு தண்டாயுதத்தை யெறிந்தான். அது மணித் தொகுதிகள் ஒலிப்ப வருதலும், அதனை அக்கடவுள்கண்டு, 
நொடிப்பொழுதில் நான்கு பாணங்களை விடுக்க, அவைகள் அத்தண்டாயுதத்தை அழித்து, சிங்கமுகனுடைய 
நெற்றியிற் புதைந்தன. அவன் களிப்பும் கடுஞ்சினமும் நீங்கி உணர்விழந்து, செங்கோல் செலுத்துமரசனுடைய 
ஆளுகையில்லாத உலகம்போல வருந்தி நின்றான். இரத்தம்வடிகின்ற துவாரங்களை முன்பு மூடிய கைகள் 
அருள்வரத் தொலைந்த மாயைபோலச் சோர்ந்தன. பூத கணங்கள் யாவும் திறந்த அவ்வழிகளால் கூட்டைவிட்டுப் 
பறக்கின்ற பக்ஷிகளைப்போல வெளியே புறப்பட்டுச் சுப்பிரமணியக்கடவுளுடைய திருமருங்கில் வந்தன. 

    அன்றைக்குச் சிங்கமுகன் விழுங்கினவைகளும் கொன்றவைகளும் எறிந்தவைகளும் ஆகிய பூதகணங்கள் 
யாவும் அவருடைய திருவருளால் முன்போல ஒருங்குவந்து கூடின. அப்பொழுது, அறுமுகக்கடவுள் வீரவாகுதேவர் 
முதலாகிய தம்பியர்களையும் படைத்தலைவர்களையும் பூதகணங்களையும் அழைக்கத் திருவுளஞ்செய்து, 
அவர்களிடத்தில் ஓர் பாணத்தைத் தொடுத்தார். அது பல சமுத்திரங்களைக் கடந்து உதயமனகிரியையடைந்து, 
அவர்களைச் சூழ்ந்த மாயா பாசத்தைச் சிந்தியது. அவர்கள் யாவரும் அறுமுகக்கடவுளுடைய திருவருளால் 
நித்திரை செய்பவர்போல உய்ந்தெழுந்து, நல்லுணர்வு வரப் பெற்று, சொல்லமுடியாத இன்பத்தை யடைந்தோர்களாய், 
அவருடைய திருவடிகளை வாழ்த்தினார்கள். 

    அப்பாணம் பிரமாவினால் உண்டாக்கப்பட்ட ஒரு புட்பக விமானத்தைப் போலாகி, வீரவாகுதேவர் முதலிய 
வீரர்களைத் சேனைகளோடும் முகந்து தாங்கி, உதயமனகிரியை நீங்கி ஆகாயவழியாகக் கொண்டுசென்று, 
சேனைகளோடு போர்க்களத்தில் நிற்கின்ற அறுமுகக்கடவுளுடைய திருவடிகளின்முன்பு விடுத்துத் தூணியுட் 
புகுந்தது. வீரவாகு தேவரும், இலக்கத்தெண்மர்களும், பூதர்களும், உயிர்க்குயிராய் வியாபித்து நிற்கும் 
அக்கடவுளுடைய திருவடிகளை வணங்கி, மிகுந்த வறிஞன் பெருஞ்செல்வத்தைப் பெற்றாற்போல மகிழ்ந்து 
தோத்திரஞ் செய்தார்கள். முருகக்கடவுள் மிகுந்த தண்ணளியினால் அவர்களை நோக்கி, "தொகுதியையுடைய 
நீவிர் யாவரும் சிங்கமுகன் வீசிய பாசத்துளகப்பட்டுப் புலனழிந்து சோர்ந்து உதயமனகிரியிற் புகுந்து 
கட்டுப்படவுந் தக்கவராய் இவ்வாறு மிகவும் நொந்தீர்கள் போலும்" என்றருளிச் செய்தார். 

    அவர்கள் "எங்கள் பழைய உணர்வு முழுதும் நீங்கினாலென்னை, உயிர்போய் அந்த நரகத்தில் அழுந்தி 
அயர்ந்தாலென்னை, வெவ்விய துயரத்தில் மூழ்கி வினை வயத்தாற் பிறவிகளிற் புகுந்தாலென்னை, எமது 
பரமபிதாவாகிய உம்முடைய திருவருள் உண்டானால் எமக்கென்னகுறை'' என்றார்கள். வேதங்களாலும் அறிதற்கரிய 
பிரணவத்தின் பொருளாயுள்ள அக்கடவுள் அதனைக்கேட்டுப் பேரருள்புரிந்தார். அவர்கள் யாவரும் பின்னரும் 
தோத்திரஞ் செய்தார்கள்.

    சுப்பிரமணியக் கடவுளுடைய நாணொலியைக்கேட்டு முன்னே சோர்வுற்று விழுந்த அவுணசேனைகள் 
அவர் ஒரு திருவிளையாட்டைத் திருவுளங்கொண்டமையால் விரைவில் எழுந்தன. எழுந்த சேனைகள் "இந்த ஒரு 
பாலகன் நம்மையெல்லாம் நாணோசையால் அழிக்கவல்லனோ?" என்று கோபங்கொண்டு ஆர்த்து, 
பல படைக்கலங்களையுஞ் சிந்தி, அவரைச்சூழ்ந்தன. அவர் திருப்புன்முறுவல் தோன்ற வில்லை வளைத்து, 
நாண்பூட்டி மிகுந்த கணைமழைகளைச் சிதறினார். அவைகள் அக்கினி போல்வன,நஞ்சு போல்வன, 
இருளையொப்பன, யமனையொப்பன, பாம்புகளையொப்பன சூரியனையொப்பன, மின்னிலும் ஒளியுடையன, 
இடியினும் வெவ்வியன. பொன்போலும் நிறத்தன, மணிகளைப்போல்வன, பலநிறத்தைப் பொருந்துவன, 
சூலத்தையொப்பன, தோமரத்தையொப்பன, கலப்பைப்படை போல்வன, வாட்படைபோல்வன, வேற்படை 
போல்வன, கழுக்கடை போல்வன, குலிசம் போல்வன, தருமத்தை உண்டாக்குதலாற் பிரமாவை யொப்பன, 
உலகங்களைப் பாதுகாத்தலால் விஷ்ணுவையொப்பன, அவுணர்களெல்லாரையும் சங்கரித்தலால் உருத்திரனை 
யொப்பன, வாயுவை போலச் செல்வன, மனவேகத்தினுங் கடியன, நூறுகோடி அக்கினிகள் நெருங்கினாலும் 
அவற்றை மாற்றத்தக்கன. ஒருபாணத்தைத் தொடுத்தாற் கோடியாம். அவை கோடாகோடியாம். மேலும் அவ்வாறே 
விருத்தியாமன்றி இத்தனை என்று எண்கொடுத்துச் சொல்பவர் யாவர்! 

    அநந்தமென்று சொல்வதே அவர்விடும் பாணங்களுக்கு இலக்கமாம். அவ்வம்புகள் மேகங்களைப் பிளக்கும், 
கடலைக் குடிக்கும், சூரியனுடைய தேரைப்பிளக்கும், வடவாமுகாக்கினியை விழுங்கும், தேவருலகத்தைப் பிளக்கும், 
மேருவைப் பிளக்கும், பூமியைப் பிளக்கும், ஆயிரகோடியண்டங்களை ஊடுருவியும் நில்லாது பின்னரும் ஓடுமென்று 
சொன்னால் இவைகளெல்லாம் அப்பாணங்களுக்கோர் வியப்போ! இவ்வாறு பாணங்கள் நெருங்குதலால் சூழ்ந்த
 அவுணர்களுடைய கால்களும், கைகளும், புயங்களும், மார்புகளும், முடிகளும் துணிந்தன; கொடிகளும் தேர்களும் 
துணிந்தன; அளவில்லாத நால்வகைச் சேனைகளும் அழிந்தன. முன்னாளில் நியமித்த பிருதிவியண்டங்கள் 
முழுவதையும் இப்பொழுது அப்புவண்டமே யாக்கிய தன்மையினால் உவமையில்லாத முருகக்கடவுள் 
ஒன்றையொன்றாக்கும் வலிய அற்புதத்தைத் தெரிந்தவர். அவர் விடும் பாணங்கள் அவுணர்களுடைய தலைகளை
அண்டத்தொகைகளெல்லாவற்றையும் உருவி அப்புறத்தினிற்கொண்டுபோய் இடும். 

    அதனைத் தேவர்கள் யாவருங் காண்கிலர். இது அவருக்குச் சொல்லத்தகும் ஓர் ஆச்சரியமன்று. 
அப்பாணங்கள் அவுணர்களுடைய உடல்களைப் பிருதிவியண்டமாயிரங்களையும் பிளந்து அப்புவண்டங்களிற் 
கொண்டுபோய்ச் சிதறி, அவ்வண்டங்களை இரத்தவண்டமாக்குவன. அவுணர்களுடைய இரத்தமும், சிரம் தோள் 
முதலிய அவயவங்களும்,யானை குதிரை தேர்களும், அண்டங்களெங்குஞ் செறிவன. அச்சரங்கள் ஆயிர கோடி
யண்டங்களிலுமுள்ள அவுணர்களையும் அழித்து உலாவும். அவைகள் வந்தெதிர்த்துப் போர்செய்த அவுணப் 
படைகளைக் கொல்வதோ அரிது. அச்சரங்கள் வந்து நெருங்குதலும், தேவர்கள் கூம்பிய முகமும் அஞ்சலித்த 
கரமும் உடையர்களாய், சுப்பிரமணியக்கடவுளை வணங்கிப் புகழ்ந்து, வானுலகத்தில் அப்பாணங்களுக்குத்  
தப்பிநின்று ஆரவாரித்தார்கள். பருந்துகளும் காகங்களும் நெருங்கின. உடற்குறைகளும் பிணமலைகளும் மலிந்தன.

    நால்வகைச் சேனைகளும் இவ்வாறு அழியச் சிங்கமுகன் ஒருவன் மாத்திரம் போர்க்களத்தில் நின்றான். 
அவன் சுப்பிரமணியக் கடவுளுடைய திவ்வியமாகிய பாணங்கள் பட்டு உணர்வழிதலால் முன் மாயத்தினாற் 
கொண்ட பேருருவம் அழிந்து தேரின்மேலே பழைய வடிவோடு நின்று, தானடைந்த அயர்ச்சியை நீங்கி, 
போருக்குச் சென்ற தன் சேனைக ளெல்லாவற்றையுங் காணாதவனாய், சிவகுமாரர் சங்கரித்தாரென்றறிந்து, 
மனங்கொதித்து, ஒன்றுபோல ஆயிரம்விற்களை எடுத்து வளைத்து, பத்துலக்ஷம் பாணங்களைத் தெரிந்து 
பூட்டி எய்தான். சுப்பிரமணியக்கடவுள் அதனைக் கண்டு திருப்புன்முறுவல்செய்து, ஆயிரஞ்சரங்களைத் தூண்டி, 
அவன்விடுத்த சரமாரிகளை விலக்கி, பின்னும் ஆயிரங்கணைகளைச் செலுத்தினார். 

    சிங்கமுகன் அவற்றை அத்துணைப் பாணங்களாற் சிந்தி,பத்துலக்ஷம்பாணங்களை எம்பெருமான்மேல் 
விடுத்தான். அவற்றை அத்துணைப் பாணங்களாலே முருகக்கடவுள் விலக்கினார். சிங்கமுகன் ஆயிரஞ்சரங்களைத் 
தூண்டி அறுமுகக்கடவுளுடைய தேர்ப்பாகனாகிய வாயுவின் மார்பில் அழுத்தினான். அக்கணைகள் மார்பில் 
மூழ்குதலாற் பாகன் இரத்தம் வடிய வலிமையிழந்து துன்பமுற்றான். அவனுடைய துயரைக்கண்ட அறுமுகக்கடவுள் 
வில்லை வளைத்து நூறுசரங்களை விடுத்துச் சிங்கமுகனுடைய தேரை அழித்தார். அவன் ஆர்த்துப் பூமியில் இழிந்து 
பலகணைகளைச் சொரிந்தான். அவற்றைச் சிவகுமாரர் சரங்களால் மாற்றி, ஆயிரஞ்சரங்களைத் தூண்டிச் 
சிங்கமுகனுடைய விற்களை அறுத்தார். அதனைக்கண்ட விஷ்ணுவும் பிரமாவும் தேவர்களும் கையெடுத்தார்த்தார்கள். 

    சிங்கமுகன் வடவாமுகாக்கினிபோலக் கோபித்து, ஆலாகலவிஷத்தைப் பாற்கடல் விடுத்தாற் போல 
ஒரு சூலப்படையைச் சுழற்றியெறிந்தான். அதனை முருகக்கடவுள் பதினான்கு பாணங்களால் அறுத்து, ஆயிரம் 
பாணங்களைச் செலுத்தினார். சிங்கமுகன் ஓர்தண்டாயுதத்தினால் அவற்றையழித்து, அண்டங்கள் வெடிக்க 
ஆர்த்துக்கொண்டு சென்றான். தாம் விடுத்த பாணங்களைச் சிங்கமுகன் அழித்ததையும் பிடித்த தண்டோடு 
வருவதையும் சுப்பிரமணியக்கடவுள் கண்டு, ஏழு பாணங்களைச் செலுத்தி, தண்டாயுதம் எடுத்த கையைப் பூமியில் 
வீழ்த்தினார். அது விழுமுன் அவனுடைய தோளினின்றும் வேறொருகை புறப்பட, பூமியில் விழுகின்ற அத்தண்டை 
அக்கையாற்பற்றி அறுமுகக்கடவுளின் மேல் ஆரவாரித்தெறிந்தான். 

    அவர் அத்தண்டின் மேல் ஆயிரஞ்சரங்களை விடுத்து அறுத்தார். தண்டந் துணிந்துவிழ அதனைக்
கண்டு சிங்கமுகன் கோபித்து, முன்னாளில் யமனிடத்திற் கவர்ந்த பாசத்தை வீசினான்.சுப்பிரமணியக்கடவுள் அதனை 
நோக்கி ஆயிரங்கணைகளை அதன்மேற் செலுத்துதலும், காய்ந்த கொடி அக்கினிச்சுவாலைபட எரிந்தாற்
போல அது பொடியாயது. பாசம் அழிந்ததைக் கண்ட சிங்கமுகன் நாணமடைந்து, சுப்பிரமணியக்கடவுளை 
இரண்டாயிரங் கைகளையுங் கொண்டு பிடிக்கும்படி நினைத்துக் கோபத்தோடு வந்தான். எம்பெருமான் அதனை
 நோக்கி, இரண்டாயிரங் கணைகளைத் தூண்டி அவனுடைய இரண்டாயிங் கைகளையும் அறுத்தார். அவைகள் 
வெட்டுண்டு பூமியில் விழுமுன் மீட்டும் புதிதாக முளைத்தெழுந்தன. பூமியில் விழுகின்ற கைகளை முளைத்தெழுந்த 
கைகளாற் சிங்கமுகன் பற்றிக்கொண்டு போருக்கு வந்தான்.

    அதனைச் சிவகுமாரர் பார்த்து, ஆயிரம் பாணங்களால் அவனுடைய ஆயிரந்தலைகளையும் விரைவில் அறுத்து, 
இரண்டாயிரம் பாணங்களினால் அவனுடைய இரண்டாயிரங்கைகளையும் வெட்டினார். அதனைப்பார்த்து மகிழ்ந்த 
தேவர்கள் அவைகள் மீட்டும் முளைத்தெழுதலைக் கண்டு நடுங்கித் துன்பமுற்றார்கள். அதனை அறுமுகக்கடவுள் கண்டு, 
"முன்னாளையில் ஆலவனத்திலே கரங்களையும் சிரங்களையும் கொய்து யாகாக்கினியில் ஆகுதிசெய்த தன்மையினால் 
இவைகள் முளைத்தெழுந்தன" என்று எண்ணினார். இதனைக்கண்ட தேவர்கள் யாவரும் "இவன் இறப்பது எவ்வாறு"
 என்று தளர்ந்தார்கள்

    அப்பொழுது சிங்கமுகன் கோபித்து, சுப்பிரமணியக்கடவுளுடைய சந்நிதானத்தில் நின்று "பாலகனே, 
நீ பாணங்களை விடுத்துப் பலயுககாலம் என்றலைகளையும் கைகளையும் அறுக்கினும் அவை முளைப்பதன்றி 
அழியுமோ ! இதனால் நீ இளைப்படைவாய். நீயா என்னைப் பொருவாய்! என்னுடைய வலிய தவத்தினியல்பை 
நினைத்திலை. உன் பிதா எனக்குத் தந்த வலியை யறிந்திலை. குழந்தையாகிய நீயொருவன் என்னோடு 
போர்செய்யும்படி வந்தாய்; உன்னுடைய ஊக்கமும் நீ உய்தற்கல்ல. தேவர்கள் யாங்கள் இட்ட சிறையினின்று 
மீண்டு ஆண்டுவருவதும், பேராற்றலையுடைய யான் ஈண்டழிகின்றதுமில்லை. நீ இவ்விடத்தினின்றும் மீண்டு 
செல்குதி. உன்னுயிரை விட்டேன்" என்று கூறினான். 

    இவற்றை முருகக்கடவுள் கேட்டு, ''உன்னுயிருக்கு வரையறுத்த காலம் நீங்கியது.கூற்றுவனும் வந்து 
உனக்குப் பின்னே நின்றான். உணர்வில்லாதவனே நீ ஏன் பிதற்றுகின்றாய். ஒரு கணத்தினுள் உன்னைக் கொல்வோம் 
காணுதி" என்று கூறினார். சிங்கமுகன் அதனைக்கேட்டு, இடிபோல ஆரவாரித்து, இரண்டாயிரம் மலைகளைப் 
பறித்து வீசினான். முருகக்கடவுள் அவற்றை நொடிப்பொழுதிற் றுகளாக்கி, அவனுடைய மார்பில் மூழ்கும்படி 
ஆயிரம்பாணங்களை விடுத்தார். அவைகள் மார்பைப் பிளக்க, அக்கினியைக் கக்குங் கண்களையுடையனாகிய 
சிங்கமுகன் அளவில்லாத பெரிய மலைகளைத் தேடிப் பிடுங்கினான். அறுமுகக்கடவுள் ஆயிரஞ்சரங்களை 
விடுத்து அவனுடைய தலைகளை அறுத்து வீழ்த்தினார். அவைகள் விழ மீட்டும் ஆயிரஞ்சிரங்கள் முளைத்தெழுந்தன. 

    சிங்கமுகன் முன்பறித்த மலைகளெல்லாவற்றையும் எறிந்து புயங்களிற்றட்டி, சூரியனும் தேவர்களும் 
பயப்பட ஆரவாரித்தான். முருகக்கடவுள் இரண்டாயிரம் பாணங்களால் அம்மலைகளை அழித்து அவனுடைய 
புயங்கள் முழுவதையும் வீழ்த்தினார். வீழ்த்துமுன் பின்னும் வந்தெழுந்தன. தவத்தினும் பெரியதொன்றுண்டோ! 
சோதி சொரூபராகிய முருகக்கடவுள் அதனைக் கண்டு இஃதோர் திருவிளையாடலாக எண்ணி, பாணங்களை 
முறைமுறையாகச் சொரிந்து ஆயிரத்தெட்டுத்தரம் சிங்கமுகாசுரனுடைய கரங்களையும் சிரங்களையும் 
கண்டதுண்டஞ் செய்தார். 

    வெட்டுண்ட கைகளும் தலைகளும் திசைகளிற் போகும், கடல்களிற்போகும், மலைகளிற்போகும், 
பூமியிற்போகும், சுவர்க்கத்திற்போகும், அவைகள் சுவர்க்கத்திற் சென்று வைகுண்டவுலகத்தைத் தாண்டி 
அண்டகோளகையிற் சென்றன. பாணங்கள் துணித்து வீசிய சிங்கமுகனுடைய சிரங்கள் இதழையதுக்கி 
விண்ணுலகத்தில் ஆவலங்கொட்டிச் செல்ல, அங்கே நின்ற தேவர்கள் அச்சமுற்று மயங்கிப் பூமியில் வீழ்ந்தார்கள். 
அவனுடைய புயங்களும் தலைகளும் எங்குஞ் சிந்தி வித்தியாதரர்கள் இருத்தற்குரிய வெள்ளிமலைகள்போல 
விளங்கின. சிலபேய்கள் வெட்டுண்ட அவனுடைய ஓர் சிரசோடு கூடிய வாயை நோக்கி, ஆயிரகோடி பிணங்களை 
அவ்வாய்க்குளிட்டு, இது பெரிய சிகர மாடம் என்று அதற்குளிருந்தன. 

    வெட்டுண்ட சிரசிலொன்று பதைத்து வாய்பிளக்க, அங்கே விளையாடுகின்ற கோடிபிசாசுகள் 
பிணக்குவைகளை அதற்குளிட்டு இது ஒரு மாடமென்று அதனுட் புகுந்து,அது விரைவில் மூடுதலும் அதனுளோடி 
உலைந்தன. மூடிய வாய்க்குளகப்பட்ட சிலபேய்கள் மூக்குவழியாகவும் செவிவழியாகவும் வெளியே புறப்பட்டன. 
சுப்பிரமணியக்கடவுள் சிங்கமுகனுடைய தோள்களையுஞ் சிரங்களையும் அறுக்க  அறுக்கப் பின்னரும் முளைத்தலும் 
அதனைப் பார்த்து, பலகணைகளைச் செலுத்தி, அவனுடைய ஒருதலையையும் இரண்டு கைகளையும் நிறுத்தி, 
மற்றைச் சிரங்களையும் கைகளையும் அறுத்தார். 

    மலைகளைச் சிந்தி நின்று போர் செய்கின்ற சிங்கமுகனுடைய வெட்டுண்ட தலைகளும் கைகளும் 
முன்போலத் தோன்றப்புகும்பொழுது, அறுமுகக்கடவுள் அதனைக்கண்டு கோபமுடையவர்போலச் சிறிதே உரப்பினார். 
முளைக்கின்ற சிரங்களும் புயங்களும் ஆமையினுறுப்புக்கள் அதனுடம்பில் ஒளித்தல்போல அவருடைய உங்காரத்தால் 
உடம்பினுள் ஒளித்தன. வெட்டுண்ட தலைகளும் தோள்களும் தோன்றாத தன்மையைச் சிங்கமுகன் பார்த்து, சிறிதுங் 
குறைவின்றி முன்பலநாட்படித்த கல்வி முழுதையும் அவைக்களத்திலே அயர்த்தவன்போல மானமுற்று வருந்தி நின்றான். 
அதனைச் சுப்பிரமணியக்கடவுள் நோக்கி, "சிங்கமுகனே, நம்முடைய பாணங்கள் பலவுஞ்சென்று வெட்டிய 
உன்றலையுங் கையும் இப்பொழுது தோன்றிற்றில்லை.  'எழுக' என்று சொல்லுதி. அவை நீ இங்கே இறந்தபின்னோ 
முளைக்கவிருக்கின்றன" என்று சொல்லியருளினார். 

    அவன் "பாலகனே என்னுடைய சிரங்களும் கைகளும் வெட்டுண்டன என்று எண்ணாதே. என்னுடைய பேராற்றலைத் 
தேவர்கள் யாவரும் அறிவர். ஒருதலையையும் இரண்டு கைகளையுங் கொண்டே உலகங்களையெல்லாம் அழிப்பேன்" 
என்றுகூறிப் போர்செய்ய நினைத்து, ஒரு மலையைப் பிடுங்கி எறிந்தான். அம்மலையைக் குமாரக்கடவுள் 
ஒருபாணத்தினாற் பொடியாக்கினார். இறக்கப்போகின்ற சிங்கமுகன் போர்க்களத்திலே கையோடு இட்ட 
ஒருதண்டத்தை எடுத்து வைத்துக்கொண்டு நின்று, "பாலகனே நீ பகைவர்களை வேற்படையினாற் கொல்வதும் 
பகைவர் விடுத்த ஒன்றைப் பாணத்தினால் அழிப்பதுமன்றி வேறுபடைக்கலங்களொன்றையும் பயின்றதில்லையோ?' 
என்று கூறி, மூலகாரணராய் நின்ற அறுமுகக்கடவுண்மேல் அத்தண்டப்படையை எறிந்தான். 

    சிங்கமுகாசுரன் சொல்லியதையும் அவன்விடுத்த தண்டாயுதத்தையும் அருள் வள்ளலாகிய 
அறுமுகக்கடவுள் திருவுள்ளத்தில் மதித்துப் பார்த்து, தம்முடைய ஒருதிருக்கரத்திலிருக்கின்ற குலிசப் 
படையை நோக்கி, "சிங்கமுகனுடைய உயிரையுண்டு வருதி" என்று விடுத்தார். குலிசாயுதம் விரைந்து 
சென்று தண்டத்தைத் துகள்செய்து, மலையிற் செல்லும் இடியேற்றின் கூட்டம்போலச் சிங்கமுகனுடைய 
மார்பிற்புகுந்து,அவனுடைய உயிரைப் பருகிப் புறத்தில் இரத்தநீரைக் கொப்பளித்துச் சென்றது. 
சிங்கமுகன் வீழ்ந்து பதைபதைத்து இரத்தநீர் அலைப்ப இறந்து கிடந்தான். 

    குலிசாயுதம் தேவகங்கையில் மூழ்கி, கற்பகப் பூந்தாதில் ஆடி,  தண்டமிழ்த்தலைச் சங்கப்புலவராகிய 
அறுமுகப்பெருமானுடைய திருக்கரத்தில் வந்து வீற்றிருந்தது.பிரமா முதலிய தேவர்கள் அதனைப் பார்த்து, 
ஆரவாரித்துச் சிரித்து ஆடிப்பாடி, பூமழைபொழிந்து மகிழ்ந்து தொழுது, எம்பெருமானாகிய முருகக்கடவுளுடைய 
திருமருங்கிற் சூழ்ந்து வணங்கித் துதித்தார்கள். எம்பெருமான் அத்தேவர்களெல்லாருக்கும்  பேரருள்செய்து, 
பூதர்களோடும் வீரவாகு முதலிய வீரர்களோடும் பாசறைக்குச் சென்று, பூதர்களும் பிரமா முதலிய தேவர்களும் 
சூழத் திவ்விய சிங்காசனத்தின்மீது சிவபெருமானைப்போல வீற்றிருந்தருளினார்.

    முருகக்கடவுள் பாசறையில் வீற்றிருப்ப, அவரோடு போர்செய்து சிங்கமுகன் இறந்ததை ஒற்றுவர்கள் 
தெரிந்து, மகேந்திரபுரத்துக்கு ஓடிச் சென்று, தன்றம்பி போர்க்களத்தில் வீழ்ந்ததைப் பார்த்து, "இறந்தானோ 
மயங்கினானோ?" என்று ஐயங்கொண்டு சிகரத்திலிருந்த சூரபன்மனுடைய கால்களை வணங்கி, துன்பமுற்று, 
அஞ்சலிசெய்து, "அரசனே, உன்றம்பியாகிய சிங்கமுகாசுரன் சிவகுமாரருடைய குலிசாயுதத்தால் இறந்தான். 
அவன் உண்ண இறந்த பூதர்களும், மாயாபாசத்தாற் கட்டி உதயமனகிரியிலிடப்பட்ட வீரவாகு முதலாயினோரும் 
பிழைத்துத் திரும்பிவந்தார்கள். இது உண்மை'' என்று சொன்னார்கள். 

    சூரபன்மன் ஒற்றுவர்களுடைய சொல்லைக் கேட்டு, உரோமங்கள் தீயும்படி அக்கினிப்பொறி சிந்தவும், 
கண்ணீர்பெருகவும், வாயிற் புகையுண்டாகவும் வாடிப் பதைபதைத்துத் துன்பமுற்று, நெருப்பை விழுங்கினவர்கள் 
போலச் சிகரத்தினின்றும் வழுவி மேகம் வீழ்ந்தாற்போலக் கண்ணீராகிய கடலிலே வீழ்ந்து, நிலத்திற் கையையடித்துச் 
சுழன்று, வலிமையும் வெற்றியும் அழகும் தொலையத் துன்பக்கடலுண் மூழ்கிப் புலம்புவான்: 

    "என்றம்பியேயோ, தாரகனுக்குத் தமையனேயோ, சிங்கமுகத்தவோ, அசுரர்கள் தாயோ என்று சொல்ல 
அவர்க்கருள்செய்யும் ஆண்டகையோ,தூதுவர்கள் உன்னையா இறந்தனை என்று கூறினார். இஃதென்னையோ! 
அந்நாளில் இந்திரன் முதலாகிய தேவர்களை வென்று தமியேனுக்கு வெற்றியைத் தந்தாய். இன்றைக்குப் போரிலே 
இளைய ஒரு பாலகன் உன்னைக் கொன்றானோ! உன்னுயிரைக் கூற்றுவனும் கொண்டு போனானோ! போருண்டு 
என்றால் மனங்களிக்கின்ற உன்னுடைய உயிரை இன்றைக்குக் கூற்றுவன் கொண்டுபோனான் என்று கேட்கில், 
விஷ்ணுவும் பிரமாவும் இந்திரனும் முன்போலத் தத்தம்பதிகளை ஆளப்போகாரோ! பொன்னையும், பூமியையும், 
புதல்வர்களையும், மனைவியர்களையும், மற்றைப்பொருள்களெல்லாவற்றையும் பெறலாம்; என்றம்பியே,இப்பிறப்பில் 
உன்னை இனியான் பெறுவதுண்டோ சொல்லுதி! பகைவர்களுக்கோர் சிங்கமே, சிங்கமுகனே, நீவிண்ணுலகத்தை 
யடைந்தாய் என்று சொல்கின்றார்கள். 

    யான் இங்கே அடைகின்ற துன்பத்தைக் காணாமல் உன்றம்பியாகிய தாரகனையும் மக்களையும் கண்டாயோ! 
சோற்றுக்கடனையும் சகோதரர் செய்யுங் கடனையும் எண்டிசைகளிலுமுள்ளார் துதிக்கும்படி நீ இன்றைக்குக் கழித்துப் 
போயினாய்; தேவர்களை அலைத்து வருகின்ற உன்னுடைய வெற்றியைக் கண்டிருத்தற்குத் தீயேனாகிய யானே 
கடனற்றேன். 'எனக்கு உற்றதுணை நீ,என்னுயிர் நீ, என்னுணர்ச்சியு நீ,  சுற்றமும் நீ, பிதாவும் நீ,என்றம்பியும் நீ, 
என்றவமும் நீ' என்று நான் நினைத்திருந்தேன். நீ அதனைச் சற்றும் நினையாமல் தனித்திருக்கக் கற்றாயோ! 
தாரகன் இறந்தபின் யான் ஒற்றைப்புயம்போய் மனந்தளர்ந்திருந்தேன். சிங்கமுகனே இன்றைக்கு நீயும் இறந்தாய்: 
மற்றைப் புயத்தையும் இழந்தேன். யான் வறியனாயினேன்" என்று தன்னுடைய ஆயிரத்தெட்டண்டங்களும் 
செவிடுபடும்படி சூரபன்மன் அழுதான். 

    அதனை அரிபிரமேந்திராதி தேவர்கள் கேட்டு மகிழ்ந்து ஆர்த்தார்கள். சூரபன்மன் இத்தன்மையாக இரங்கிப்
பின் ஒருவாறு தெளிந்து, சிங்காசனத்திலேறி யிருந்து, கோபங்கொண்டு சுப்பிரமணியக்கடவுளோடு போய்ப் 
போர்செய்ய எண்ணினான்.

            திருச்சிற்றம்பலம்.

            சூரபன்மன் வதைப்படலம்.

    சூரபன்மன் சுப்பிரமணியக்கடவுளோடு தான் போர்செய்ய நினைத்து ஆயிரகோடி ஒற்றுவர்களை நோக்கி, 
"என்னுடைய ஆயிரத்தெட்டண்டங்களினுமுள்ள சேனைகளெல்லாவற்றையும் விரைவிற் கொண்டுவருதிர்" என்றான். 
தூதுவர்கள் நன்றென்று வணங்கி, மிகுந்த வேகத்தோடு அண்டங்கள்தோறும் போய்ச் சூரபன்மனுடைய பணியைத் 
தெரிவிக்க, அங்குள்ள அசுரத்தலைவர்கள் சதுரங்க சேனைகளோடும் அண்டங்கள் தோறுமுள்ள வாயில்களால் 
இவ்வண்டத்தில் வந்தார்கள். அப்படி அவர்கள் வந்துநெருங்குதல் விஷ்ணு பிரமாவோடு மாறுபட்டு இவ்வுலகத்துயிர்க
 ளெல்லாவற்றையும் விழுங்க அவைகள் அவருடைய உந்திக்கமலத்தின் வழியே தோன்றுதலையும், பஞ்சபூதங்களும் 
அவற்றிலுள்ள உயிர்களும் புவனங்களும் வேதாகமங்களும் பிறவும் சிருட்டியாரம்ப காலத்திலே சிவபெருமானுடைய 
பாதாரவிந்தங்களினின்று உதிப்பனவற்றையும் போன்றன. 

    இவ்வாறாக ஆயிரத்தெட்டண்டங்களின் வாயில்களால் அவுணசேனைகள் வருதலும், சூரியனுடைய 
கிரணங்கள் மறைந்தன. அக்கினியும் நடுங்கினான். வாயுவும் நெருக்கமுற்றயர்வானாய் வியர்த்தான். அச்சேனைகளி
 னொலியால் உலகங்களெல்லாம் நடுங்கின. கரியமேனியினொளியால் ஆகாயம் இருண்டன. பூதூளியாற் சமுத்திரங்கள் 
வற்றின. அவர்கள் கால்களைப் பெயர்த்து வைத்து நடத்தலால் அண்டங்களும் பிளந்தன. இவ்வாறாக வந்து 
கூடுகின்ற சேனையை நோக்கித் தேவர்கள் மெய்குலைந்து ஓடுதற்கு இடமின்றி நின்றிரங்கினார்கள். இந்திரன் 
இறந்தவன்போல மருண்டான். பிரமாவும் விஷ்ணுவும் "முடிவதென்னையோ" என்று நினைந்தனர்.

     அவுணசேனைகள் பூமியிலும், ஆகாயத்திலும், திக்குக்களிலும், சமுத்திரங்களிலும், மலைகளிலும், 
வழிகளிலும், பாதலங்களிலும், மற்றையிடங்களிலும் சிறிதும் வெளியிடமின்றி நெருங்கிச் சென்றன. அச்சேனைகள் 
செல்லுதற்கு இடம்பெறாமையினால் பிரமபதம், விஷ்ணுபதம், முனிவர்களுடைய உலகம், இந்திரலோகம், சூரியன் 
முதலாயினோர் செல்லுமிடங்கள் முதலாகிய மேலுலகங்களிலும் பாதலங்களிலும் நின்றன. அண்டங்களிலிருந்துவந்த 
கொடிப்படைகள் சென்றவிடம் நூறுகோடி யோசனையென்று அறிஞர்கள் சொன்னார்கள். 

    அவற்றின்பின் வருகின்ற மற்றைச் சேனைகளின் பெருமையை யார்சொல்வார்! சில்வாழ்நாளை யுடைய 
பிறர்பெற்ற செல்வம்போல விரித்துச்சொல்ல இது சிறுமையை யுடையதோ! சூரபன்மனுடைய சேனைகள் அறிஞர்கள் 
சொல்லிய பெரிய எண்களிலும் அடங்கா. இதற்கு உவமை சொல்லுதற்கும் ஒன்றுமில்லை. முன்செல்லுந் தூசிப்படை 
பஞ்சபூதங்களும் பல உருவங்களையெடுத்து உயிர்பெற்று வந்தால் அவற்றை யொக்கும். அத்தூசிப்படைகள் 
மகேந்திர நகரத்தை மூடி இவ்வண்டங்களின் இடங்களினெல்லாம் இமைப்பொழுதில் நிறைந்தன; மற்றையண்டங்கள் 
தோறுமிருந்து இவ்வண்டத்தில் வருகின்ற ஏனைப்படைகளின் மிகுதியை யார் சொல்வார்! 

    இவ்வாறு சேனைகள் வருதலும், ஒற்றுவர்கள் போய்ச் சூரபன்மனுடைய கால்களை வணங்கி, "மகாராஜனே, 
உன்னுடைய சேனைகள் இங்கே வந்தன. தூசிப்படை முன்சென்று அண்டத்தை நெருக்கின" என்றார்கள்.
சூரபன்மன் அதனைக்கேட்டு நன்றென்று இருக்கைவிட்டெழுந்து, மாளிகையினுட்போய், ஸ்நானஞ்செய்து,
* ஐவகையுணவோடு அறுசுவை பொருந்திய அன்னத்தை உண்டான். அது நஞ்சோ மருந்தோ! நெற்றியிலே 
விபூதியை யணிந்தான். உடம்பிற் களபச்சாந்தைப் பூசினான்.குடுமியில் மாலையைச் சூடினான். 
முன்னணிந்திருந்த வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் மாற்றி வேறுவேறு நல்லனவாகத் தரித்தான். 
சிவப்படைக்கலத்தையும் மற்றையோர்களுடைய படைக்கலங்களையும் ஆயிரகோடி தேர்களிலே வைத்து 
அத்தேர்களையும், சிங்கவாகனத்தையும், இந்திரஞாலத் தேரையும் பரிசனர்களாகிய அவுணர்கள் கொண்டு 
செல்லும்படி பணித்தான். 

* ஐவகை உணவாவன:-உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது, சுவைக்கப்படுவது.

    அதன்பின் சூரபன்மன் தன்பக்கத்தில் வருகின்ற தேர்ப்பாகர்களுடைய கூட்டத்தைப் பார்த்து, 
"உயர்ந்த ஓர் தேரினைக் கொண்டு வருதிர்" என்று பணித்தான். அவர்கள் நன்றென்று வணங்கிப்போய், எழுபதினாயிரஞ் 
சிங்கங்களையும், எழுபதினாயிரங் குதிரைகளையும், எழுபதினாயிரம் பேய்களையும் பூட்டி ஓர் தேரை அலங்கரித்தார்கள். 
அத்தேர் பூமியினும் பெரிய இடத்தையுடையது; அதனைச் சூழ்ந்த புறவேலையைப் போல ஒலிப்பது; பிருதிவி யண்டம் 
ஆயிரகோடியையும் தன்னிடத்தே சுமந்துகொண்டு நிற்கும் வலியையுடையது; சிங்கக் கொடியையுடையது; 
பிரசண்ட மாருதத்தினும் முந்திச்செல்வது: செல்லும் விசையினால் அட்டதிக்கு மலைகளும் சுழலவும் சூரியர்களும் 
குளிரவும் வடவாமுகாக்கினிகளும் அழியவும் செய்வது; 

    ஏழ்கடல்களும் அவற்றின் இடையிடையேயுள்ள தீவுகளும் சக்கரவாளகிரியும் பொருந்தினாற்போல, 
பலமணிகள் இழைத்த ஓவியப்பத்திகள் அமையப்பெற்ற உருளைகளையுடைய ஓரண்டத்தைப் போல்வது; 
சூரபன்மன் யாகாக்கினியி லிறந்து எழுந்தபொழுது அவனுடன் றோன்றியது; பகைவர்கள் புறங்கொடுக்கும்படி 
துரத்துவது; பிரமகற்பத்தினும் அழியாதிருப்பது; அளவில்லாத படைகளைத் தாங்கியது; தேவர்களுக்குள்ள 
வலிமை முழுதையுங் கொண்டது; சிவபெருமான் முன்னாளிற் கொடுத்த இந்திரஞாலத்தேரையும் ஒத்தது; 
மிகுந்த அழகிற் சிறந்தது. இத்தன்மையதாகிய தேரைப் பாகர்கள் கொண்டுவந்து சூரபன்மனுக்கு முன்னே 
விடுத்தார்கள். அவன் அதில் இவர்ந்தான். அவுணர்கள் 'வெற்றியடைகுதி" என்று வாழ்த்திப் பூமழை பொழிந்தார்கள். 
பாகர்கள் அத்தேரில் ஏறிச் சூரபன்மனுடைய ஆணையினால் அதனைச் செலுத்தினர். 

    வாத்தியங்கள் முழங்கின. அவுணர்கள் ஆர்த்தார்கள். பணிவிடைக்காரராகிய அவுணர்கள் சூரபன்மனுடைய 
கீர்த்தியும் ஆணையும் அவனைத் தொடர்ந்து மங்கலத்தன்மையாகிய உருவத்தோடு சூழ்தல்போல படிக்கம், கெண்டி, 
அடைப்பை, வெண் கொற்றக்குடை, சாமரம் முதலிய உபசாரங்களைக் கொண்டொழுகினார்கள். சூரபன்மன் 
நகரத்தினெல்லையுட் பொருந்திய கோபுர வாயில்களை நீங்கி ஆயிரகோடி வீதிகளையுங் கடந்து தேரோடு 
முதற்கடைவாயிலில் வந்தான். அவன் அங்கே வருதலைப் பார்த்து அவுணசேனைகள் ஆரவாரித்தன. அச்சேனைகள் 
பாற்கடலினின்றும் நஞ்சு எழுந்து சென்றாற்போல ஒலித்துக் கொண்டுசெல்ல, அப்பாரத்தைத் தாங்கலாற்றாமையாற் 
பூமி சலித்தது. 

     நிசாளம், சல்லிகை, கொம்பு, தண்ணுமை, முரசம், காகளம்,துடி முதலாகிய வாத்தியங்கள் ஒலித்துச்சென்றன. 
செங்குஞ்சிகளையுடைய அவுணசேனா வெள்ளங்களிலெழுந்த பூதூளி வடவாமுகாக்கினி சமுத்திரத்தை 
மேற்கொண்டெழுந்தபொழுது அதிலிருந்தெழும் புகையைப் போன்றன. வானுலகத்திலும் பூவுலகத்திலும் 
திக்குக்களிலும் கடல்களிலும் நீக்கமன்றிப் பூழிகள் நெருங்கி, பின்பனித்துளிகள் போன்றன. பூதூளிகள் 
அந்நகரிலுள்ள அகிற்புகையோடும் பொற்சுண்ணத்தோடும் கலந்து மேற்போவது மேகங்கள் சமுத்திரத்தைப் 
பருகி மின்னலோடு செல்லுதல் போலும். யானைகளிலும் தேர்களிலும் உள்ள வெண்கொடிகள் பூதூளி நெருங்கிய 
ஆகாயத்திற் செல்லுதல் கார்காலத்திலே கொக்கின் வரிசைகள் மழைத்துளி வீழ்கின்ற இடங்களிற் பறக்குந் 
தன்மை போலும். 

    சைனியங்களுடைய நெருக்கத்தால் இருள் உண்டாகச் சூரபன்மன் அதனை அறிந்து அண்டங்கள்தோறும் 
உள்ள சூரியர்களை அழைக்க அவர்கள் வந்தாற்போலக் குடைநிரைகளெங்கும் நெருங்குகின்றன. 
குதிரைகளும் யானைகளும் உமிழ்கின்ற விலாழி நீரும் மதஜலமும் இப்பூவுலகமெங்கும் யாறுபோலப் 
பாய்தலாற் சூரபன்மனுடைய சேனைகள் ஆகாயத்திலன்றிப் பூமியிலே செல்லுதற்கரியவாயின. இவ்வாறு 
சேனைகள் நெருங்கிச்செல்ல மைநாகம் மேருமலையிலேறி வந்தாற்போலச் சூரபன்மன் பொன்மயமாகிய 
தேரில் ஏறிப் போர்க்களத்தை யடைந்தான். அவனுடைய தூசிப் படைகள் பூமியும் வானுலகமுமாய்ச் 
சுப்பிரமணியக்கடவுளுடைய பாசறையைச் சூழ்ந்தன. 

    தேவர்கள் யாவரும் அப்படையின்னெருக்கத்தைப் பார்த்து, இரத்தக்கண்ணீர் வடிய அரற்றி அஞ்சினார்கள். 
இந்திரன் வருந்தினான். பிரமவிஷ்ணுக்கள் மனம் விம்மினார். வீரர்கள் மனம் புழுங்கினார். பூதர்கள் நெருப்பிற்பட்ட 
விட்டிற் பறவைபோல ஏங்கினார். அப்பொழுது பிரமாவும், விஷ்ணுவும், இந்திரனும், மற்றைத் திக்குப் பாலகர்களும் 
சுப்பிரமணியக்கடவுளுடைய திருவடித்தாமரைகளை வணங்கி, 'மிகப்பெரிய சூரபன்மன் தேரின்மேற்கொண்டு 
ஆயிரத்தெட்டண்டங்களிலுமிருந்து வந்த அளவில்லாத சேனைகளோடும் போர்செய்யும்படி வந்தான். முன்வந்த 
தூசிப்படை நம்முடைய பாசறையை மொய்த்தது" என்றார்கள். 

    திவ்விய சிங்காசனத்தின்மீது வீற்றிருக்கும் சுப்பிரமணியக்கடவுள் அதனைக் கேட்டுத் திருப்புன்முறுவல்
செய்து, வாயுவைக் குறிப்பினோடு பார்த்தருளினார். அவன் அதனை அறிந்து, முட்கோலையும் கயிற்றையுந் தாங்கி, 
மனவேகமென்னுந் தேரை விரைவில் அவருடைய திருமுன்னே கொண்டுவந்து விடுத்தான். முருகக்கடவுள் விரைவில் 
எழுந்து, மழு, குலிசம், சூலம், வேல், வாள், பரிசை, சக்கரம், தண்டு,எழு, வில், அம்பு, கைவேல் ஆகிய இவற்றைத் 
திருக்கரங்களில் ஏந்தினார். ஆயின் அச்சூரபன்மனுடைய தவம் அளவிடற்பாலதோ! இவ்வாறு போர்க்கோலங்கொண்ட 
அறுமுகக்கடவுள் சூரியமண்டலத்தினடுவே வீற்றிருக்குஞ் சிவபெருமானைப்போல மனவேகமென்னுந்தேரில் 
இவர்ந்தருளினார். வீரவாகுதேவரும் இலக்கத்தெண்மரும் திருமருங்கிலே தோத்திரஞ்செய்து கொண்டு வந்தார்கள். 

    இரண்டாயிரம்வெள்ளம் பூதர்களும் மராமரங்களையும் மலைகளையும் அளவில்லாத படைகளையுந் 
தாங்கி நெருங்கிச் சூழ்ந்து சென்றார்கள். அரிபிரமேந்திராதிதேவர்கள் புடையிற்சூழ்ந்து பூமழைகளைப் பொழிந்து 
துதித்தார்கள். வேதங்களுக்குமெட்டாத நிருமலராகிய அறுமுகக்கடவுள் இவ்வாறாகத் தேரின்மேலிவர்ந்து, சங்கார 
கருத்தாவாகிய உருத்திரமூர்த்தியைப் போல அவுணர்கண்மீது போருக்குப் போயினார். அவரைச் சூழ்ந்த பூதர்கள் 
யாவரும் பூமியும் திசையும் வானுலகமுமாய் நீங்குதலின்றிச் சூழ்கின்ற சூரபன்மனுடைய சேனைகளை நோக்கி 
ஏங்கி, பழைய வலிமையிழந்து, இவ்வாறு சொல்வார்கள்: 

    "தீயனவற்றையே செய்கின்ற சூரபன்மன் தான்செய்த தவத்தாற்பெற்ற ஆயிரத்தெட்டண்டங்களிலுமுள்ள 
அவுணர்களும் வந்தார்கள். இவர்கள் ஓரண்டத்திலிருந்தவர்களல்லர். பூமியும் வானுலகமும் திசையும் செறிந்து 
நின்றார்கள். இவர் வரத்திற்பெரியர்; மாயத்திற்பெரியர்; வலிமையிற்பெரியர்; போரூக்கத்திற்பெரியர்; 
சிரங்களிற் பெரியர்; கரங்களிற்பெரியர்; கோபத்திற்பெரியர்; காலனிலும் பெரியர் : தேவர்களுடைய 
வலிமையினையும் வளங்களையுங் கவர்ந்து சோகத்தை விளைத்துப் போரைச் செய்து அவர்களைத் 
தொலைத்தவர்; மயக்கத்தினெல்லையாய் நின்றோர்; உயிர்களாகிய கடல்களைப் பருகுகின்ற மேகம் போன்றவர்கள்; 

    பிரமா எதிர்த்தாலும் வெல்லத்தக்கவர்; யமனுடைய கொலைத்தொழிலையும் பிரமாவினுடைய படைப்புத் 
தொழிலையும் மாற்றுஞ் செய்கையில் வல்லோர்; நிலவுலக முழுதையுமுண்டாலும் அடங்காத பசிநோய் மிகுந்தவர்; 
அண்டங்களை யலைக்குங் கைகளையுடையவர்; அக்கினியைச்சொரியுங் கண்களையுடையவர்; கடலையொத்த 
பிளந்த வாய்களையுடையவர்; வெற்றியை மேற்கொண்டோர்; பாவத்துக்கிருப்பிடமாயுள்ளோர்; சூரியசந்திரர்களைத் 
தொடுஞ் சிரங்களையுடையோர்; ஆதிசேஷனும் தாங்கலாற்றாது புடைபெயரக் கால்களைப் பெயர்த்துவைத்து 
நடப்போர். 

    அக்கினிமுகனைப்போல அடைந்தனர் பலர்; யாளிமுகனைப்போல வந்தனர் பலர்; தாரகனைப் போல 
வந்தனர் பலர்; சிங்கமுகனைப்போல வந்தனர் பலர்; மதுகைடபரைப் போல வந்தனர் பலர்;சுந்தோபசுந்தரைப்போலச் 
செறிந்தனர் பலர்; சலந்தரனைப்போல ஆர்த்தனர் பலர்; மகிடாசுரனைப்போல மொய்த்தனர் பலர். சிவப்படைக்கலத்தைத் 
தாங்கினவர் பலர்; பிரமப்படைக்கலத்தைத் தாங்கினவர் பலர்; விஷ்ணுப்படைக்கலத்தைத் தாங்கினவர் பலர்; 
யமப்படைக் கலத்தைத் தாங்கினவர் பலர்; வாயுப்படைக்கலத்தைத் தாங்கினவர் பலர். இவ்வாறாகிய அவுணவெள்ளம்
 அனந்தகோடி என்று சொல்வதன்றி வேறு சொல்வதற்கு அளவுமுண்டோ! 

    வானுலகமும் பூவுலகமும் திக்குக்களுமாகிய எங்கும் சேனைகளாய்ச் சூழில் யாம் என்னசெய்வது! 
ஓரண்டத்திலுள்ள அவுணர்களுடைய போரினால் உலைந்த யாங்கள் எல்லாவண்டங்களிலுமுள்ள அவுணர்கள் 
ஒருங்கேவந்து போர்செய்தாற் பிழைக்குந் தன்மையுமுண்டோ! சமுத்திரத்தைச் சாடி மலைகளைப் பிடுங்கியெறியும் 
வாயுக்கள் ஆமணக்கஞ் சோலையினுட் புகுந்தால், அவைகள் பின்னுமிருக்க வல்லனவோ! இவ்வவுணருள் ஒருவரே 
நம்மையெல்லாம் உரப்பித் துரத்துவர். பின் இருவரே சென்று தாக்கினால் யாவர் இங்கே உய்யவல்லவர்! 

    துருவர்களையொத்த வலியையுடைய அவுணர்கள் யாவரும் போர்செய்வராயின் யார் அவர்க்கெதிரேபோய்ப் 
போர்தொடங்க வல்லார்! அளவில்லாத வலியைக்கொண்ட எங்கள் தலைவர்கள் யாவரும் மற்றையிலக்கத்தெண்மரும்
 இவ்வவுணரை எதிர்க்கவல்லவரல்லர். கல்லினாலும் மரத்தினாலும் யாமோ இவருடைய வலியைக் கடக்கவல்லோம்! 
நம்முயிரும் இன்றே விரைவிலழிந்தன போலும். நால்வகைச் சேனைகளையுடைய அவுணர்களுந் தாக்கினால்
 நாமெல்லாம் அழிவோம். மற்றை வீரர்கள் வாயுவை யெதிர்ப்பட்ட பூளை போல விரைந்து புறங்கொடுத்தோடுவர். 

    வீரவாகுதேவர் நின்றாற் பழிபடுவர். இவர்களோடும் நமது அறுமுகக்கடவுளன்றி வேறியாவர் எதிர்க்க வல்லவர்! 
திசையும் வானும் நிலனும் வெளியிடமின்றி அவுணர்கள் வளைந்து கொண்டார்கள். அதனால் யாமும் ஓடியும் உய்யவியலாது. 
இயன்றவாறு இவ்வவுணர்களைத் தாக்கி யாமிறத்தலே உறுதி" என்று பூதர்கள் சொல்லி அசுரர்கண்மீது போருக்குப் 
போயினார்கள். அப்பொழுது பூதப்படைத் தலைவர்களும், இலக்கத்தெண்மரும், வீரவாகுதேவரும் நெருங்கிச்சூழுகின்ற 
அவுணசேனைகளை நோக்கி, "நம்முடைய வலிமை அழிந்தனவோ" என்று எண்ணினார்கள். இந்திரனும் தேவர்களும் 
நடுங்கி அஞ்சி வருந்தினர்.

    அவர்களுள் இந்திரன் விஷ்ணுவை நோக்கி, "அறுமுகக்கடவுள் மேல் ஆயிரத்தெட்டண்டங்களினுமுள்ள 
அசுரசேனைகளெல்லாம் போர் செய்யும்படி வந்தன. இவைகளோடு மூண்டு போர்செய்து வெல்ல ஊழிகாலஞ் செல்லும் 
என்றால், சூரபன்மன் இறப்பது எங்ஙனம்? போர் வலிமையைப் பெற்றுள்ள அவுணர்களாகிய இராக்காலம் விடிவதும் 
தேவர்களுடைய சிறை நீக்கமாகிய சூரியோதயமுண்டாவதும், பழைய செல்வங்களை நீங்கிய நம்முடைய துன்பம் 
முடிவதும் இல்லையோ ! முதல்வரே சொல்லியருளும்" என்றான். 

    இந்திரன் இப்படி வினாவ, விட்டுணு அவனுடைய மனக்கவலையைப் பார்த்து இவ்வாறு சொல்கின்றார் 
"இந்திரனே கேட்பாய். வியாபக வியாப்பியத் தன்மையினாலே காலங்களாயும் அவையின்றியும், தொழில்களாயும் 
அவையின்றியும், குணங்களாயும் அவையின்றியும், உலகங்களாயும் அவையின்றியும், அநாதியாய், நமக்கெல்லாம்
 மூலகாரணராயிருந்த சிவபெருமானே ஆறுதிருமுகங்களைக் கொண்டு வந்தார். குன்றுதோறாடல் செய்யும் குமாரக் 
கடவுள் அந்நாளில் மேரு மலையில் வந்து புவனங்கள் முழுதையும் அங்குள்ள சீவராசிகள் முழுதையும் தேவர்களையும் 
தம்மிடத்தே காட்டி ஒர்வடிவங்கொண்டதை அறிந்த நீயும் அயர்த்தனையோ? 

    அக்குமாரக்கடவுள் பிரமாவாகிப் படைப்பார்; என்னுருவமாகிக் காப்பார்; சிவபெருமானைப்போலச் சங்கரிப்பார். 
அவருடைய திருவுருவம் யார்க்கும் வெளிப்படை போலுமா! அது வேதங்களாலுஞ் சொல்லுதற்கரியது. சமுத்திரம்போலச் 
சூழ்ந்த பகைவர்களுடைய சேனைகள் முழுவதையும் மிகவிரைந்தழிப்பார். இந்திரனே, அவரைப் பாலகரென்றெண்ணாதே. 
அவர் ஆயிரகோடி யண்டங்களிலுமுள்ள உயிர்கட்கெல்லாம் தலைவர். நாம்செய்த நல்வினைப் பயனாற் போர் செய்ய 
வந்தார். அவர் சூரன் முதலிய அவுணர்களை விரைந்து சங்கரிக்கத் திருவுளஞ்செய்யில் திருப்புன்முறுவலாற் கொல்வர், 
கோபத்தாற் கொல்வர், திருவாக்காற் கொல்வர், திருநோக்காற் கொல்வர். ஆயின், ஒப்பில்லாத தனிமுதல்வராகிய 
அவருடைய வன்மையை யாவர் சொல்ல வல்லவர்! 

    பூதசேனைகளோடு போருக்கெழுந்தருளி வந்ததும், இலக்கத்தொன்பது வீரர்கள் மருங்கிற் காக்கநின்றதும், 
ஆயுதங்களை ஏந்திச் சூரபன்மனைக் கொல்லும்படிவந்த சூழ்ச்சியும் ஆராயில் வேதமுதல்வராகிய அச்சுப்பிரமணியக் 
கடவுளுக்கு இவைகளெல்லாம் ஓர் திருவிளையாடலேயாம். பரிசுத்தராகிய பாலகரைப் போலத் தோன்றிய கடவுளானவர் 
சூழ்ந்த வெவ்விய அவுணர்களையெல்லாம் விரைந்தறுத்து நீக்கி, திருக்கரத்திலுள்ள வேற்படையினாற் சூரபன்மனையும் 
வெல்வார். நீ சிறிதும் ஐயுறாதே. காணுதி" என்று இவைகள் பலவற்றையும் விட்டுணு கூறி இந்திரனுடைய மனத்தைத் 
தெளிவித்து, 'அவுணவெள்ளங்கள் ஒலியோடு விண்ணுலகத்திலும் வந்து சூழ்த்தன. நாம் சுப்பிரமணியக்கடவுளுடைய 
திருமருங்கில் நின்று போரின்றன்மையைப் பார்ப்போம்' என்று தேவர்களோடு அவருக்குப் பக்கத்திற் போயினார்.

    அத்தன்மைகளைச் சுப்பிரமணியக்கடவுள் பார்த்துத் திருப்புன்முறுவல் செய்து,போரை நினைத்துச் 
சென்றார். வானுலகமும் பூமியும் ஒன்றாய் நெருங்கிய அசுரசேனாவெள்ளங்கள் ஆரவாரித்துப் போரைத் தொடங்க, 
அவர்களோடு போர்செய்யும்படி முன்சென்ற பூதர்கள் யாவரும் தோற்றார்கள். பூதப்படைத் தலைவர்கள் 
போரைத் தொடங்கிப் புறந்தந்தார்கள். இலக்கத்தெண்மரும் போர்செய்து இரிந்து நீங்கினார்கள். 
இத்தன்மைகளையெல்லாம் வீரவாகுதேவர் பார்த்துச்சென்று வில்லை வளைத்து, பாணமழைகளைச் சிதறி, 
தம்மையெதிர்த்த அவுணர்களுடைய தலை புயம் மார்பு முதலிய அவயவங்கள் மலைகள் போலக்குவிய 
அறுத்துச் சிறிதுநேரம் போர்செய்தார். 

    ஆகாயமளவும் உயருகின்ற ஆயிரகோடி சமுத்திரங்களுள் ஒரு மதயானை சென்று அலைத்தாற்போலத்
 தாம் அவுணர்களுக்கெதிரேபோய்ப் போர்செய்து அச்சேனைகள் அழியாமையைக்  கண்டு வருந்தி, சுப்பிரமணியக் 
கடவுளுக்குப் பக்கத்தில் மீண்டுவந்தார். அப்பொழுது அவுணர்கள் பலரும் "பூதகணங்கள் நமக்குப் பயந்தோடின. 
பூதப்படைத் தலைவரும் சாய்ந்தார். மற்றை வீரர்களும் முரிந்தார். இனிச் சிறுபாலகனே நம்மோடு போருக்கு வருவான்" 
என்று சொல்லிச் சுப்பிரமணியக் கடவுளைச் சூழ்ந்து, தண்டு சக்கரம் குலிசம் சூலம் வேல் முதலாகிய ஆயுதங்களையும், 
தெய்வப்படைக் கலங்களையும் சொரிந்து நின்று ஆர்த்தார்கள்.

    பூதசேனைகள் யாவும் உடைந்ததையும், வீரவாகுதேவரும் தம்பியர்களும் வருந்தி மீண்டதையும், 
அவுணர்களுடைய செய்கையையும்,தேவ தேவராகிய சுப்பிரமணியக்கடவுள் பார்த்து, சிவபெருமானைப்போல 
சிறிது நகைத்து, மிகுந்த நீட்சியையுடைய வில்லைத் திருக்கரத்திற்பற்றி நாணொலிசெய்தார். அதனைக்கேட்டுத் 
தேவர்களும் குலைந்தார்கள்; சீவராசிகளெல்லாம் நடுங்கின; அவுணர் கூட்டங்கள் நெக்கன ; தேர்கள் பகிர்வன ; 
குதிரைகள் புரள்வன; யானைகள் மலைகள் வீழ்வன போல வீழ்வன. அகத்திய மகாமுனிவருக்குப் பிரணவப் பொருளை 
யுபதேசித்த பரமாசாரியராகிய அவ்வறுமுகக்கடவுள் அளவில்லாத பாணங்களை வில்லிற்பூட்டி  மழைபோலச் சொரிந்தார். 

    அப்பாணங்களுள் அளவில்லாதன கொடிகளைத் துணிப்பன; அளவில்லாதன குடைகளைத் துணிப்பன; 
அளவில்லாதன படைக்கலங்களை யழிப்பன; அளவில்லாதன குதிரைகளையழிப்பன; அளவில்லாதன யானைகளையழிப்பன : 
அளவில்லாதன தேர்களையழிப்பன; அளவில்லாதன அவுணர்களுடைய சிரங்களை வெட்டுவன. அப்பாணங்களால் 
விருக்ஷத்தொகுதிகள் விழுவனபோல அவுணசேனைகள் விழுவன; திரைகள் விழுவனபோலக் குதிரைகள் விழுவன; 
மலைகள் விழுவன போலத் தேர்கள் விழுவன; சூற்கொண்ட மேகங்கள் விழுவனபோல யானைகள் விழுவன; 
சூரியசந்திரர்கள் விழுவனபோலக் குடைகள் விழுவன; அப்பாணங்கள் அவுணர்களுடைய கால்களையும், படைக்கலங்களைச்
சிந்தும் கைகளையும், வீரம்பேசும் வாய்களையும், புயங்களையும், கண்களையும், கழுத்துக்களையும், கவசங்களையும், 
கொடிச்சீலைகளையும் அறுக்கும்; 

    அச்சரங்கள் அட்டகுலமலைகளிலும் திசையானைகளிலும் சக்கரவாளகிரியிலும் பட்டு ஊடுருவிப்போயின. 
அப்பாணங்களுக்குப் பகைவர்கள் உய்வது எவ்வாறு! அக்கணைகள் சுவர்க்கத்திலும் சத்தியவுலகத்திலும் வைகுண்ட
 வுலகத்திலும் மின்போலச் செல்லும்; பூமியைக் கிழித்துச்செல்லும்; பாதலத்திற் பரந்துசெல்லும்; அண்டமுகட்டை ஊடுருவும்; 
திக்குக்களிற் செல்லும். அக்கணைகள் எங்குஞ் சென்று பகைவர்களை மாத்திரங் கொல்லும் வேறெவரிடத்துஞ் சென்றில. 
அப்பாணங்கள் வெட்டிய அவுணர்களுடைய சிரங்கள் இராகு கேதுக்களைப்போல ஆகாயத்திற்செல்லும்; வாள் முதலிய 
படைகளை வீசிய அவுணர்களுடைய தோள்களை அக்கணைகள் துணித்தெறிய, அத்தோள்களோடு அப்படைகள் 
நெடுந்தூரஞ்சென்று, சுற்றத்தார்களாகிய அவுணர்களைக் கொன்றன. 

    ஆகாயத்திலும் திக்குக்களிலும் பூமியிலும் அப்போர்க் களத்திலும் பாசறையிலும் சூழ்ந்த சேனைகளை 
யெல்லாம் சுப்பிரமணியக்கடவுள் இவ்வாறு சங்கரிக்கும்பொழுது, பிரமாவும் விஷ்ணுவும் இந்திரனும் மனமகிழ்ந்து, 
"அசுரர்கள் அழிந்தார்கள்; நாம் துன்பத்தை நீங்கினோம்'' என்று சொன்னார்கள். ஆகாயத்திற் சஞ்சரிக்கின்ற 
ஏனையோர்கள் முன் அவுணர்கள் வந்து நெருங்கியதைப் பார்த்தார். பின் அறுமுகக்கடவுள் அவர்களைக் கொன்றதைக் 
காணாராய், அவர்கள் பூமியில் வீழ்ந்திறந்து கிடந்ததை மாத்திரங் கண்டு ஆச்சரியமடைந்தார்கள் அவ்வசுரர்களைக் 
கண்டு வருந்திய பூதப்படைத்தலைவர்களும் பிறரும் மிகுந்த அவுணப்படைகளைக் கொன்று வெற்றிபெற்ற வில்வீரராகிய 
சுப்பிரமணியக் கடவுளை ஆரவாரத்தோடு துதித்தார்கள். 

    அண்டமுகட்டிலே நெருங்கிய அசுரசேனைகள் சுப்பிரமணியக்கடவுளுடைய பாணங்கள் பட்டழிதலால் 
தேவர்களுடைய மனம் மகிழும்படி அவ்விடங்கள் வெளியாயின. அண்டகடாகத்துக்கு அப்பால் நிற்கும் அவுணர்கள் 
இவ்வண்டத்தில் நிற்கும் அவுணசேனைகள் அழிந்தமையைப் பார்த்து மனமகிழ்ந்து, 'நம்மரசனுடைய பாதங்களைத்
 தரிசித்தற்கு இனி நெறியுண்டு' என்றுகூறி கசரததுரகங்களோடு அண்டகடாகத்தின் வாயிலால் விரைந்துவந்து, 
இவ்வண்டமுழுதும் வெளியிடமில்லையென்னும்படி நெருங்கி, சூரபன்மன் போர்செய்யும்படி தேரில்வந்த 
செய்கையைத் தெரிந்து, அன்போடு ஆர்த்து,தமக்கு முன்னேவந்து போர்செய்த அவுணர்கள் பிணமலையாய் 
இரத்தவெள்ளத்தில் இழுக்கப்படுதலைக் கண்டு மனம்வருந்தி, "நம்மவர்களாகிய அவுணர்களை இறக்கும்படி 
செய்த இவனோடு போர்செய்து விரைந்து வெற்றி கொண்டு மீள்வோம்' என்று எண்ணி, மனத்தைத் தெளிவித்தார்கள்.

    அப்பொழுது தேவர்கள் துதிக்கவும், வீரவாகு முதலிய வீரர்கள் பக்கத்திற் சூழவும், பூதர்கள் ஆரவாரிக்கவும், 
சுப்பிரமணியக்கடவுள் வெளிப்பட்டருளினார். அவ்வசுரர்கள் அவரைக்கண்டு, "இவன் மிகச்சிறியன் ; யானைப்படைகளும்
 குதிரைப்படைகளுமில்லாதவன். ஏயே இவனா நம்முடைய பகைவன்; இந்தப்பாலகன் இவ்வண்டமுழுதும் நெருங்கிய 
நம்முடைய சேனைகளை இமைப்பொழுதிற் கொன்றான்; இதுதான் மிகுந்த அற்புதத்தன்மை. அது நிற்க. இவனோடு 
இராசாதிராசனாகிய நமது சூரபன்மன் வந்து போர்செய்தற்குமுன் யாம் பொருது இவனைக்கொல்வோம்' என்று 
அகங்காரத்தோடு கூறி ஆர்த்துச் சண்முகக் கடவுளைச் சூழ்ந்தார்கள். 

    அப்பொழுது, "பெரும்போர் மீட்டும் விளைந்தது' என்று தேவர்கள் வருந்தினர். பூதர்கள் உட்கி மனந் 
தளர்ந்தார்கள். வீரர்கள் சலித்தார்கள். முருகக்கடவுள் வாயுவைப்பார்த்து, "அவுணசேனைகள் நிற்கின்ற 
அணியின் முன்பின் பக்கங்கள் ஆகிய எவ்விடங்களிலும் தேரை விரைந்து செலுத்துதி'' என்றார். வாயு 
அதனைக்கேட்டு அஞ்சலிசெய்து, அவுணர்கள் நிற்கும் இடங்களெங்கும் தேரைச் செலுத்தினான். அத்தேர் 
பூமியிற் செல்லும்; திசைகளைக் கடக்கும்; ஆகாயத்திற் சூழும்; சமுத்திரத்திற்போகும்; வணங்குகின்ற 
தேவர்களுடைய எண்ணத்திற்கும் நாடுதற்கரியதாகும். 

    சுப்பிரமணியக்கடவுள் நெருங்கிய அவுணசேனைகள் இறக்கும்படி ஒரு தொடையில் அனந்தம் 
ஆயிரகோடிபாணங்களைச் செலுத்தினார். சூழ்ந்த அவுணர்களுடைய கரங்களும் சிரங்களும் துணிந்தன. 
இரத்தவெள்ளம் சொரிந்தன. பிணமலை நெருங்கின. அப்பாரத்தைத் தாங்கலாற்றாது பூமி நெரிந்தது: 
ஆதி சேடனும் நெளிந்தான். அவுணர்களுடைய பிணங்களை அவர்கள் வளர்த்த நாய்களே கடித்துண்டன. 
பொய்யுங் கொலையும் உடைய இழிஞர்களுக்கு யார் உதவி செய்வர்! சுப்பிரமணியக்கடவுள் ஏறிய தேர் 
அவுணர்கள்மீது அவர் செலுத்திய பாணங்கள் பிந்த அவற்றிற்கு முற்பட்டுச் செல்லுமானால், 
அத்தேரின் வேகத்தை யாவர் அளவிடுவார்! 

    அவருக்குப் பக்கத்திலுள்ளவர்கள் அவருடைய விற்பிடித்த திருக்கரத்தையும், தூண்டுகின்ற சரங்களையும்,
 அவர் ஏறிய தேரையும், அதனைச் செலுத்தும் பாகனாகிய வாயுவையும் புகழ்வார். அவருடைய பாணத்தின் 
வேகத்தையும் தேரின் வேகத்தையும் பார்த்தவர்கள் "சுப்பிரமணியக் கடவுளுடைய திருக்கரத்தின்விசையோ 
வாயுவின் விசையோ சிறந்தது" என்பார். அவர் சூலமோ மழுவோ, சக்கரமோ, குலிசமோ,வாயுவோடு கூடிச்சென்ற 
நெருப்பின் குழுவோ, வேற்படையோ என்று சொல்லும்படி பாணங்களைத் தூண்டினார். அப்பாணங்களால் 
அவருக்கு முன்னும் பின்னும் இருமருங்குகளினுமுள்ள நால்வகைச் சேனைகளும், அவுணர்கள் செலுத்துகின்ற 
படைகளும் அழிந்தன. பிணக்குவைகள் மண்ணுலக முழுதும் பரந்து விண்ணுலகத்தையும் விழுங்கின. 

    அவருடைய சரங்களால் பிடர்கள் இழந்து கூத்தாடின உடற்குறைகள் ஆயிரகோடியாகும்; ஆகவே 
இறந்தசேனைகளைச் சொல்ல வல்லவர் யாவர்! இரத்தவெள்ளம் கடல்போலப் பூமியிற் பெருகிச் சத்த பாதலங்களிலும் 
மண்டியது. இவ்வண்டமுழுதும் நெருங்கிய சேனைகள் இவ்வாறு அழிதலும் மற்றையண்டங்களிற் பொருந்திய சேனைகள் 
பின்னரும் வர, குமாரக் கடவுள் அவற்றைப்பார்த்து, பாணங்களினாற் றொலைத்து, பின்னும் மற்றையண்டங்களிலுள்ள 
சேனைகள் வந்துவந்தடையுமென்றெண்ணி, சர மழைகளால் அண்டகோளகையின் வாயிலையடைத்தார். 

    அதன்பின்,தம்முடைய பாணங்களினால் இறந்த சேனைகளின் இரத்தவெள்ளமும் பிணக் குவைகளும் 
பாதலத்தையும் சமுத்திரங்களையும் பூமியையும் மூடி நிமிர்ந்ததைக்கண்டு, பன்னிரண்டு திருக்கண்களையும் 
வடவாமுகாக்கினிபோல சுவாலிப்பித்து, உற்று நோக்கினார். பிணமலைகள் வெந்து சாம்பராக, இரத்தம் வறந்தது. 
சுவர்க்க மத்திய பாதலமாகிய மூவுலகங்களும் முன்போலாயின. அரிபிரமேந்திராதி தேவர்கள் அதனைக்கண்டு, 
குமாரக்கடவுளை துதித்து ஆரவாரித்தார்கள். அக்கடவுள் பிணக்குவைகளும் மிகுந்த இரத்தவெள்ளமும் வேகும்படி 
பார்த்து அவற்றை நீறாக்கினார். சூரபன்மனைச் சங்காரஞ் செய்யாது நின்றார். அவர் ஓர் திருவிளையாடலைத் 
திருவுளங் கொண்டார் போலும்.

    இவ்வாறாகிய சமயத்தில், போர்க்களத்தில் நிற்கின்ற சூரபன்மன் இத்தன்மைகளையெல்லாம் பார்த்து, 
''நம்முடைய மிகுந்த சேனைகளை அழித்த பாலகனைத் தேவர்களோடு அழிப்பேன்" என்று கூறி, மனத்தில் கோபம் மூள,
போர்செய்ய நினைத்து, தேரோடு வந்து எதிர்க்க, சுப்பிரமணியக்கடவுளும் அவனுக்கெதிரிற் போயினார். 
தன்கிளையுடன் கெடுவானாகிய சூரபன்மன் அவருடைய தோற்றத்தையும், பன்னிரண்டு திருக்கரங்களையும், 
அவைகளிலுள்ள ஆயுதங்களையும், வலிமையையும், வீரத்தையும், நோக்கி, தக்கனைப் போல இவ்வாறு சொல்வான்: 

    "பாலகனே சிவபெருமான் அருள்செய்த வரத்தினால் யான் இறக்கமாட்டேன், என்றும் இத்தன்மையாய் 
இருப்பேன். தேவர்களும் மறந்தும் என்னோடு போர் செய்திலர்; பொருது இறந்தவர் பலர். நீ இதனை உணர்ந்திலை 
போலும் ; மனம் நொந்து நொந்து என்பணிகளைச் செய்து உலைந்து வருந்துகின்ற தேவர்களுடைய சொல்லை 
மெய்யென்று நம்பி மிகுந்த சேற்றுநிலத்திற் புகுந்த யானைக்கன்றுபோல நொய்ய பிள்ளைமைப் புத்தியினால் 
இங்கே வந்தாய். என்னுடைய மிகுந்த சேனைகளை அழித்தாய். நீ புறங்கொடுக்கினும் பாலகன் என்று உன்னை 
யான் விடுவதில்லை; விரைவிற் கொல்வேன். தேவர்களையும் பூதர்களையும் கெடுப்பேன்" என்று கூறினான். 

    அவற்றைக்கேட்ட சுப்பிரமணியக்கடவுள் ''பிறர்க்குத் துன்பம் பயக்கும் கடுமொழிகளைப் பேசுதலில் 
நிகரில்லாத கீழோனே,  நீ வறிதே வம்புரைகளைச் சொன்னாய். இதனாலாவதொன்றுமில்லை. உன்மார்பு சிவந்த 
துவாரமாகும்படி யாம் விடுகின்ற வலிமையுங் கூர்மையுமுடைய ஓரம்பே உனக்கு மறுமொழி சொல்லும்" என்று 
திருவாய்மலர்ந்தருளினார். இதனைக் கேட்ட சூரபன்மன் விரைந்து கோபித்து, மேருமலைபோலும் வில்லையெடுத்து 
வளைத்து நாணேற்றினான். அதனைப் பூதர்கள் கண்டு, ஆலாகல விஷத்தைத் தேவர்கள் சூழ்ந்ததுபோல அவனைச் 
சூழ்ந்து, மதயானையை வலையை வீசி அகப்படுத்த நினைத்தவர்போல மலைகளையும், மரங்களையும், 
முத்தலைச் சூலங்களையும், ஒழிந்த படைகளையும் வீசினார்கள். 

    சூரபன்மன் பாணங்களை மழைபோலச் சிதறி, மெழுகுமலையை ஊழித்தீ உடைப்பது போலப்  
பூதகணங்களை அழித்தான். அப்பூதர்கள் இறந்தவர்களும், புயங்களும் கரங்களும் வெட்டுண்டு வாடினவர்களும்,
 மயங்கி விழுந்தவர்களும், ஓடவும் பயந்து வேற்றுருவடைந்தவர்களுமாயினார். இவ்வாறு பூதர்கள் அழிந்தபொழுது, 
இலக்கத்தெண்மரும் வீரவாகுதேவரும் அவனைச் சூழ்ந்து விற்களை வளைத்துச் சரமாரிகளைப் பொழிந்தார்கள். 
சூரபன்மன் பாணங்களை விடுத்து அவற்றை அழிக்காமல் நின்றான். அவர்கள் விடுத்த பாணங்கள் அவனுடைய 
சரீரத்திற்பட்டு அழிந்துபோயின, ஒன்றையுஞ் செய்தில. 

    சூரபன்மன் அவர்கள் தன்னைச் சூழ்ந்ததைப்பார்த்து, உரப்பி ஆவலங்கொட்டி, கோபமுடையனாய், 
வில்லைவளைத்து, நூறுகோடி பாணங்களை ஒரு தொடையாகச் செலுத்தி, அவர்கள் மாறுமாறாய்ச் செலுத்திய 
சரங்களைத் துணித்து, அவர்களேறிய தேர்களையும் விற்களையும் அழித்து, அவர்கள் பின்பு போர்செய்ய எண்ணுமுன் 
புயங்களிலும், மார்புகளிலும், சிரங்களிலும், கைகளிலும் ஆயிரமாயிரம் பாணங்களை இரத்தம் பெருகும்படி அழுத்தினான். 
இலக்கத்தெண்மரும் மேனியில் இரத்தம் வடிய மனம் வருந்தி, வலிமையிழந்து, வில்வலிமைநீங்கி, ஒருங்கே 
புறங்கொடுத்தோடினார்கள். 

    வீரவாகுதேவர் அதனைக்கண்டு, கோபத்தோடு சூரபன்மனுடைய தேரிற்பாய்ந்து, சிவபெருமான் கொடுத்த 
வாட்படையை உறையினின்றுங் கழித்து, அவனுடைய வில்லைத் துணித்தார். சூரபன்மன் அக்கினிபோலக் கோபித்து, 
அவருடைய மார்பில் இடியேறு போல ஓர் கரத்தால் அடித்தான். அவர் இரத்தவெள்ளம் அலைக்க வீழ்ந்தயர்ந்தார். 
சூரபன்மன் "தூதுவனைக் கொல்லுதல் எனக்கடாது" என்று அவரை எடுத்து ஆகாயத்திலெறிந்தான். எறிய ஆகாயத்திற் 
சென்ற வீரவாகுதேவர் உணர்வுவரப்பெற்று மீண்டுவந்து, அறுமுகக்கடவுளுடைய பக்கத்திற் போயினார்.

    சூரபன்மன் வெட்டுண்ட வில்லை யெறிந்து, கிரவுஞ்சமலைபோலப் பெரிதாய்ச் சிறந்த வேறோர் வில்லை 
எடுத்து வளைத்து, நீரும் நெருப்பும் வாயுவும் ஒருங்குசேர்ந்து ஒலிப்பதுபோல நாணொலி செய்தான். அதனைச் 
சுப்பிரமணியக்கடவுள் பார்த்து, கைலாசமலையை யொத்த ஒருவில்லையெடுத்துத் திருத்தோளுற வளைத்து, 
சீவராசிகளெல்லாம் இடியேற்றின் கூட்டமாய் ஆர்த்தாற்போல நாணொலி செய்தார். சூரபன்மன் வளைத்தவில்லில்
 இருபதுலக்ஷம் பாணங்களைச் செலுத்தினான். அவைகள் ஆகாயம், திக்குக்கள், நக்ஷத்திரங்கள், சூரியசந்திரர்கள்,
 சமுத்திரங்கள், பூமி, தேவருலகங்கள் முதலாயினவற்றை மறைத்தன. 

    அவைகள் காற்றைப் போலச் செல்வன; அக்கினியைப் போலச்செல்வன; யமனைப்போலக் கொல்வன; 
நஞ்சினும் கொடியன; பருந்துச்சிறகுகள் கட்டப்பட்டன; பலதலைகளையுடையன ; சூரபன்மனுடைய ஆணையின்படி 
செல்வன; செருக்கையுடையன; மேருவைத் துளைப்பன ; அதன்பக்கத்திலுள்ள மலைகளைக் கிழிப்பன; அண்டங்களைத் 
துவாரஞ்செய்வன; இடிகள் போல்வன; நஞ்சை யுண்டுமிழ்வன; கரியன; செய்யன. இவ்வாறாகிய பாணங்கள் எங்குஞ் 
செறிய, அதனைத் தேவர்கள் கண்டு, விட்டுணுவை அணுகி, கையையுதறி, "ஐய, நமக்கொளிப்பதோரிடமுண்டோ?" 
என்று கேட்டார்கள். 

    அவர்களுக்கு அவர் உத்தரங் கூறுதற்குமுன், அறுமுகக்கடவுள் அதனைப்பார்த்து, சூரபன்மன் தூண்டிய 
சரங்களெல்லாவற்றையும் சிலசரங்களால் அறுத்தார். அதனைத் தேவர்கள் கண்டு, சூரியோதயத்தைக் கண்ட 
உலகம்போல மகிழ்ச்சியிற் றழைத்தார்கள். சூரபன்மன் சுப்பிரமணியக் கடவுளுக்கெதிரே அளவில்லாத
சரமாரிகளைச் சிந்தினான். அவர் அப்பாணங்களைத் தமது சரங்களாலறுத்தார். பின்னும் சூரபன்மன் அவர்மேற் 
பாணங்களைச்சொரிய, கந்தசுவாமி அவற்றை நூறுபாணங்களால் அழித்து, எழுநூறு பாணங்களைச் சூரபன்மன்மீது 
செலுத்தினார். அவற்றை அவன் அத்துணைப்பாணங்களால் அறுத்து, இரண்டாயிரங் கணைகளை விடுக்க, 
அத்துணைப் பாணங்களாற் சுப்பிரமணியக்கடவுள் அழித்து, சூரபன்மனுடைய சேனைகள் வருந்தும்படி பின்னும் 
இரண்டாயிரங் கணைகளை விடுத்தார். சூரபன்மன் அவற்றை இரண்டாயிரங் கணைகளினால் நீக்கி, ஆதிசேடனும் 
பூமியும் வருந்தும்படி ஆரவாரித்தான். 

    சூரபன்மன் விடும்பாணங்கள் வர வர, நெருப்பானது தன்னிடத்திட்ட விறகுகளையெல்லாம் எரிக்குந் 
தன்மைபோலத் சுப்பிரமணியக்கடவுள் அழித்தார். அவர் விடுகின்ற பாணங்களைச் சூரபன்மன் அழித்தான். 
இவ்வாறு இருவரும் போர்செய்யும்பொழுது வெட்டுண்ட பாணங்கள் வானுலகமளவுமுயர்ந்தன. அப்பாணங்கள் 
தறி படும்பொழுது எழும் நெருப்புப் பூமியிற் பற்றியது. மலைகள்யாவும் பிளந்தன. சமுத்திரங்களுங் கங்கையும் 
வற்றின. சுப்பிரமணியக்கடவுளும் சூரபன்மனும் இவ்வாறாகப் போர்செய்தலை வீரலக்ஷுமி பார்த்து, மனம் வியந்து,
 'இவ்விருவருள் நாம் யாரிடத்திற் செல்வோம்'' என்று ஐயத்தோடு நின்றாள். 

    போரைப் பார்த்து நின்றவர்கள் அவர்கள் செலுத்தும் பாணமழைகளையன்றி அவர்களிருவரையும் கண்களாற் 
காணாராயினார். இவ்வாறு போர்நிகழும்பொழுது, சூரபன்மன் சுப்பிரமணியக்கடவுள் விடுகின்ற பாணங்க 
ளெல்லாவற்றையும் அழித்து, அவருடைய தேரிற்கட்டிய கொடியை அறுத்து, விரைந்து ஆர்த்து, தன்னுடைய கீர்த்தியை
யிசைத்தாற்போல வெற்றிச்சங்கை வாயில்வைத்து ஊதி, தாமதியாமற் பின்னும் பாணங்களைச் செலுத்தி, அவருடைய 
திருமேனியை மறைத்தான். அவர் அச்சரங்களைத் தமது சரங்களால் அழித்து, சூரபன்மனுடைய தேர்க்கொடியை 
ஏழுபாணங்களால் அறுத்துக் கடலில் இட்டார். 

    அதனைப் பானுகம்பர் என்னும் பூதப்படைத்தலைவர் பார்த்துக் களித்து, பெருமிதங்கொண்டு ஆர்த்துக் 
குதித்துக் கூத்தாடி, தம்முடைய ஆயிரம் வாய்களிலும் ஆயிரம்வெற்றிச் சங்குகளை வைத்து ஊதினார். அவ்வோசை
 யுகம்பல தங்கிற்று. பானுகம்பருடைய ஆயிரஞ் சங்குகளின் ஒலியைக்கேட்டு விஷ்ணுவினுடைய பாஞ்சசன்னியம் 
என்னும் சங்கு துண்ணென்று முழங்கிற்று. அப்பொழுது தேவர்கள் யாவரும் அக்கினிதேவனைப் பார்த்து, ''நமது 
அறுமுகப் பெருமானுடைய தேரின்மீது கொடியில்லை. நீ கொடியாயிருக்குதி'' என்று ஏவினார்கள். அவன் 
கோழிக்கொடியாகி, தேவாதிதேவராகிய சண்முகப் பெருமானுடைய தேரின்மீது ஏறி, அசுரர்களாகிய இரவின் 
விடியற்காலத்தை அறிவித்தல்போல அண்டம் வெடிபடக்கூவினான். 

    பானுகம்பர் சங்கையூதி ஆரவாரித்தலும், விஷ்ணு ஆரவாரித்தார்; பிரமா ஆரவாரித்தார்; சந்திர சூரியர்கள் 
ஆரவாரித்தார்கள்; யமன் ஆரவாரித்தான்; வாயு ஆரவாரித்தான்; இந்திரன் ஆரவாரித்தான்; வருணன் ஆரவாரித்தான்; 
குபேரனும் ஆரவாரித்தான். இவ்வொலிகளெல்லாஞ் சேர்ந்துபோய், அண்டகடாகத்தை முட்டி,சூரபன்மனுடைய 
செவித்துளையுட் புகுதலும், அவன் நஞ்சையுண்டவன்போலக் கடுங்கோபத்தினனாய்த் தேவர்களைப் பார்த்து, 
"நிகரில்லாத எனக்கு முன்னே வருதற்குப் பயந்து பருந்துக்கள் போன்று காடுகளிலே உலைந்த தேவர்கள் இப்பொழுது 
தேறிவந்து என்முன்னும் ஆரவாரஞ் செய்தார்கள்; அறுமுகனுடைய வலிமையைக் கொண்டு தான்போலும். 
இது நன்று நன்று! 

    இங்கு நிற்கின்ற பிரமா முதலிய தேவர்களுடைய நிலையை யழித்து விரைவிற் கொன்று, பின்பு 
சிவகுமாரனை வெல்வேன்'' என்றுகூறி, தேர்ப்பாகனை நோக்கி, 'பாலகனுடைய போர் இவ்வளவிலிருக்க, 
விண்ணுலகத்தில் நின்று செருக்கடைகின்ற தேவர்களுடைய வலிமையைக் கெடுக்கும்படி என்னுடைய தேரை 
ஆகாயத்திற் செலுத்துதி' என்று பணித்தான். அவன் நன்றென்று தொழுது 'வெற்றியாகுக' என்று தேரைச் செலுத்த, 
அது மேலெழுந்து தேவர்கள் நெருங்கி நிற்கின்ற விண்ணுலகத்திற் சென்றது. தேரோடு விண்ணுலகத்திற் சென்ற 
சூரபன்மன் மலைபோலும் வில்லை வளைத்து, தேவர் கூட்டம் இரிந்தோடும்படி பாணமழைகளை மிகவுஞ் சொரிந்தான். 

    அதனைச் சுப்பிரமணியக்கடவுள் பார்த்து, பூமியில் நின்றுகொண்டே எண்ணில்லாத சரங்களை விடுத்து 
அவன் விடுத்த சரங்களை அழித்து, அதன்பின் பாகனை நோக்கி, "நம்முடைய தேரை விரைந்து விண்ணுலகத்திற் 
செலுத்துதி" என்றார். வாயு நன்றென்று வணங்கித் தேரை விண்ணுலகத்திற் றூண்டிச் சூரபன்மனுக்கு முன்னே 
விடுத்தான். சுப்பிரமணியக்கடவுள் தேவர்கள் சூரபன்மனுக்குப் பயந்து அயர்ந்து ஓடுதலைப் பார்த்து, 
''வருந்தாதொழிமின் புலம்பாதொழிமின் நடுங்காதொழிமின்" என்று கூறி, அபயஹஸ்தம் செய்து கருணை 
புரிந்தார். அவருடைய திருவாக்கைத் தேவர்கள் கேட்டு, "எம்பெருமானே, நீர் இங்கே எழுந்தருளினமையால் யாம்
உயிர்பெற்று உய்ந்தோம்" என்று கூறி விரைந்து ஓடுவது நீங்கி மனமகிழ்ச்சியோடு திகந்தங்களில் நின்றார்கள். 

    அதனைச் சூரபன்மன் பார்த்து "பிரமன் முதலிய தேவர்கள் எனக்குப் பயந்து ஓடுவார்களாம். 
ஒரு தனித்த பாலகனா என்னை வந்தெதிர்க்குந் தன்மையுடையான். இது நன்று!"  என்று கோபித்துச் சிரித்து, 
அனந்தம்பாணங்களை விரைவிற்றூண்டினான். அறுமுகக் கடவுள் பலபாணங்களால் அவற்றை விலக்கி, 
அவனோடு எதிர்த்துப் போர்செய்தார். சூரபன்மனும் சுப்பிரமணியக் கடவுளுமாகிய இருவரும் ஒருவரையொருவர் 
கோபித்துப் பாணங்களைச் செலுத்தி ஆகாயத்தை மறைப்பதும் அறுப்பதுமாகி இவ்வாறு போர்செய்தார்கள். 

    அவரிருவரும் பாணங்களைப் பொழிந்து போர்செய்யும் பொழுது, திசைகள் எதிர்ந்தன; பூவுலகத்திலுள்ளார் 
இரங்கினர். அவர்களுடைய தேர்கள் காற்றாடிகள் போலவும், குலாலனுடைய சக்கரங்கள் போலவும், சூறைக் காற்றுக்கள் 
போலவும் பாதலத்திலும், பூமியிலும், திசைகளிலும், புறவேலையிலும், மலைகளிலும், சத்தியவுலகத்திலும், 
சக்கரவாளகிரியிலும், இருட்பூமியிலும், அண்டகடாகங்களிலுமாய்ச் சாரிகை திரிந்தன. அத்தேர்களினுடைய 
ஒளியைக்கண்டு பிரமர்கள் நடுங்கினார்கள்; சூரியர்கள் மயங்கினார்கள்; தேவர்கள் மருண்டார்கள்; 
பூவுலகத்துள்ளவர்கள் வாடினார்கள்; நாகர்கள் உலைந்தார்கள். 

    அத்தேர்களின் செலவினாற் பூவுலகமதிர்ந்தது; சமுத்திரங்கள் அலைந்தன; மலைகள் பிதிர்ந்தன; 
அண்டமுகடு பிளந்தது; நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன; மேகங்கள் உகுந்தன. இருதேர்களும் இவ்வாறு சாரிகை 
வரும்பொழுது, சூரபன்மன் சுப்பிரமணியக்கடவுண் மீது செல்லும்படி நெருப்பு மழைபோலச் சரமழைகளைச் 
சொரிந்து, அவற்றினிடையிடையே மழு, வச்சிரம், முத்தலைச் சூலம், கப்பணம், கலப்பை, குலிசம், வேல், எழு 
ஆகிய இப்படைகள் ஒவ்வொன்றும் அனந்தகோடியாக இடிபோலச் சொரிந்தான். முருகக்கடவுள் வாயுவைப் 
போல விரைந்து பாணங்களை முறை முறையாகச் சிந்தி அவைகளை அழித்து, அண்டமுழுதுந் திரிந்து, 
இடை தெரிந்து, பதினான்கு பாணங்களைத் தூண்டி, சூரபன்மனுடைய தேரையும் குதிரைகளையும் அழித்தார். 

    அவன் கையிலேந்திய வில்லோடு நிலத்தை அடைந்து,வில்லை வளைத்து, நஞ்சைக் கக்குகின்ற 
எண்ணில்லாத சரங்களைத் தூண்டி, எதிர்த்தான். அதனை அறுமுகக்கடவுள் கண்டு, வில்லை வளைத்து 
அம்பு மழைகளைத் தொடுத்து அவற்றைத் துணித்தார். சூரபன்மன் அனந்தகோடி பாணங்களை அவர்மேல் 
விடுத்தான். அக்கடவுள் அச்சரங்களையெல்லாம் தமது சரங்களால் மாற்றி, சூரபன்மனுடைய புயங்களின் மேல் 
ஆயிரம் கணைகளை விடுத்தார். அவைகள் அவனுடைய புயத்திற்பட்டு மலையின்மேல் வீழ்ந்த கன்மழைத் 
தாரை போலச் சிதறின. அவன் அதனைப் பார்த்து, கோபந்தோன்ற, இரண்டாயிரம் பாணங்களை எடுத்து 
மனவேகமும் பிற்படும்படி சுப்பிரமணியக்கடவுளுடைய திருப்புயங்களிற்றூண்டித் தேவரும் மருள ஆரவாரித்தான். 

    அவருடைய திருப்புயங்களிற் பட்ட அப்பாணங்கள் யாவும் சிவபெருமானுடைய நெற்றிநாட்டத்
தக்கினியினால் வெந்த மன்மதனுடைய உடம்புபோல வெந்து துகளாய்த் திசைகளிற் பரந்தன. குமாரக்கடவுள் 
அவன்மீது சரமாரிகளைப் பொழிந்தார். அவைகளைச் சூரபன்மன் சரங்களால் அழித்து, அவருக்குப் பக்கத்தில் 
நிற்கின்ற வீரர்கண்மீதும் பூதசேனைகள் மீதும் கணைகளையழுத்தினான். அறுமுகக்கடவுள் அதனைக்கண்டு, 
ஆயிரஞ் சரங்களைப் பூட்டிச் சூரபன்மனுடைய வில்லைத் துணித்தார். துணிக்குமுன், அவன் பின்னும் 
ஓர்வில்லையேந்தி முகிலுமஞ்ச ஆரவாரித்தான். 

    இப்படிப் பூமியில் நின்று போர்செய்த சூரபன்மன் விரைந்து அருவாய் ஆகாயத்திற் றோன்றினான். 
அதனைக் குமாரக்கடவுள் கண்டு, ஆகாயத்திற் சென்று தாக்க அவரோடு ஓரிறைப்பொழுது எதிர்த்து நின்று 
மாயங்களைச் சூழ்வானாய்,மீட்டும் மறைந்து பூமியில் வந்தான். அறுமுகக்கடவுள் விரைந்து பூமியில்வந்து 
போர்செய்தார். அவன் உருவை மறைத்துச் சுத்தோதக சமுத்திரத்தினடுவிற் சென்றான். அவரும் ஆண்டுச் 
சென்று போர்செய்தார். சூரன் மறைந்து திகந்தத்திற் றோன்றினான். அவர் ஆண்டுஞ் சென்று போர் செய்தார். 
சூரன் மறைந்து பாதலத்திற் போயினான். கடவுளும் அங்கே சென்று போர்செய்தார். 

    சூரன் மறைந்து மேருமலையின் கொடுமுடியில் நின்றான். கடவுளும் விரைவில் அங்கே சென்று 
போர்செய்தார். சூரன் அவ்விடத்தினின்று நீங்கி வைகுண்டத்திற் றோன்றினான். அறுமுகக்கடவுளுந் 
தொடர்ந்து போந்து போர்செய்தார். சூரன் அவ்விடத்தினின்று நீங்கி அண்டகோளகையின் வாயிலையடைய, 
சுப்பிரமணியக்கடவுளும் அங்கே சென்று அவனுடைய தேரைப் பாணத்தினால் அழித்து வெற்றிகொண்டார். 
தேரழிதலும், சூரபன்மன் இந்திரஞாலத்தேரை வரும்படி அழைப்ப அது வந்தது. அவன் அதன் மேலேறிப் 
போர் செய்தான்.

    இவ்வாறு போர்செய்யும்பொழுது, அறுமுகக்கடவுள் முன்பு பாணங்களினால் அண்டத்தின் வாயிலை 
யடைத்ததையும் அப்பாலுள்ள சேனைகள் வாராத தன்மையையும் சூரபன்மன் பார்த்து, "என்னிறைத்தொழிற் 
காவல் நன்று நன்று!" என்று வில்லை வளைத்து, அநந்தகோடி பாணங்களைத் தூண்டி, அண்டகடாகத்தின் 
வாயிலை மூடிய அஸ்திர கபாடங்கள் முழுவதையும் அறுத்து நுண்ணிய துகளாக்கி, அவற்றை ஆகாயத்திற் 
சுழலவிட்டு, அப்பாலண்டத்திலுள்ள கசரததுரக பதாதிகளாகிய நால்வகைச் சேனைகளும் வருக" என்று 
கூவிப் புயங்களிற்றட்டி ஆரவாரித்தான். 

    அப்பாலண்டத்திலுள்ள நால்வகைச் சேனைகளும் விரைவில் இவ்வண்டத்தில் வந்து போர்த் தொழிலை 
முயன்று, படைக்கலத் தொகுதிகளை வீசி ஆரவாரித்து, அறுமுகக் கடவுளைச் சூழ்ந்தன. அச்சேனைகளை 
விண்ணுலகத்தில் நின்ற பிரமா முதலிய தேவர்கள் பார்த்து, "சங்கார காலத்தில் உலகத்தை உண்ணும்படி 
எழுந்த ஒரு கரிய நெருப்பின் கோலமோ? இவ்வண்டத்திற் கப்பாலுள்ள சமுத்திரமோ? இடியோடுகூடிய 
ஆயிரகோடி முகிலின் கூட்டமோ? யாதோ?" என்று தலைநடுங்கி ஓடினார்கள். சோதி சொரூபராகிய 
அறுமுகக்கடவுள் அச்சேனைகளின் மீது அழலெழும்படி சிறிதே விழித்தார். அச்சேனைகளெல்லாம் சாம்பரின் 
மயமாய், அண்டத்தினுருவை யழித்தன. முன்வந்த சேனைகள் இவ்வாறு அழிய, அப்பாலண்டத்தினெருங்கி 
நின்ற சேனைகளுள் அளவில்லாதவைகள் மீண்டும் வந்து, சிவகுமாரர்மீது படைகளைச் சிந்திச் சூழ்ந்தன.

    அச்சேனா சமுத்திரத்தை எம்பெருமான் பார்த்து, நெருப்பை  உமிழ்ந்தாற்போல உயிர்த்துச் 
சிறிதே உரப்பினார். அவ்வுங்காரத்தால் பூளைப் பஞ்சுமலையில் நெருப்புப் புகுந்தாற் போல அச்சேனைகண் 
முழுதும் புழுதியாய் உலகத்தை மூடின. பின்னும் மற்றையண்டங்களில் நின்ற நால் வகைச் சேனைகளும் வந்துவந்து 
அறுமுகக்கடவுளைச் சூழ்ந்தன. அவர் அவைகளைக் கண்ணுற்று, தமது திருக்கரத்திலிருக்கின்ற மழு, சூலம், 
சக்கரம் தண்டு, எழு, என்னும் ஐந்து படைக்கலங்களையும் நோக்கி, "படைகாள் கேண்மின், நீவிர் பல உருக்கொண்டு 
விரைந்து ஒருங்குசென்று, நமது பக்கத்திற் சூழ்ந்த அசுரசேனைகளையும், இங்கு வருதற்கு வழிபெறாமல் 
அப்பாலண்டத்தில் நிற்கின்ற அசுரசேனைகளையும் கொன்று இங்கே வருதிர்" என்று கூறி அவற்றை விடுத்தார். 

    அவைகள் அநந்தகோடி சூரியர்களும் அக்கினிகளும் பாம்புகளும்போலத் தோன்றி, அரைநொடிப் 
பொழுதினுள்  சுப்பிரமணியக்கடவுளைச் சூழ்ந்த சேனைகளை முன்பு அழித்து, பின் மற்றை ஆயிரத்தேழு 
அண்டங்களிலுஞ் சென்று சென்று, அங்கங்குள்ள சேனைகள் முழுதையும் அழித்து உலாவித் திரிந்தன. 
சூரபன்மன் அதனைப் பார்த்து கோபித்து, ''இவ்வொரு கணப்பொழுதினுள் இவனுடைய உயிரை உண்பேன்" 
என்றுகூறி,முன்னாளிலே சிவபெருமான் கொடுக்கத் தான்பெற்ற சக்கரப்படையை எடுத்து வழிபட்டுத் துதித்து, 
சுப்பிரமணியக்கடவுண்மீது விரைந்து செல்லும்படி தூண்டினான். அந்தச்சக்கரம் யாவருமஞ்சும்படி 
விரைந்து சென்று அவரை அணுகியது. 

    அறுமுகக்கடவுள் ஓர்திருக் கரத்தை நீட்டி வருதி என்று அதனைப் பற்றினார். சூரபன்மன் அதனை 
நோக்கித் தேரின்மீது மனந்தளர்ந்து உயிர்த்து நின்று, அளவிறந்த உருவங்களை எடுத்துப் பாணமழைகளைச் 
சொரிந்தான். முருகக்கடவுள் அதனை நோக்கி "இவனுடைய மாயம் நன்று நன்று" என்று திருப்புன்முறுவல் 
செய்து மேலாகிய ஞானாஸ்திரத்தைத் தொடுத்து, "சூரபன்மன் செய்கின்ற மாயங்கள் முழுவதையும் 
நொடிப்பொழுதில் அழிப்பாய்" என்று பணித்து ஏவினார். அது விரைந்து சென்று அவனுடைய மாயங்கள் 
முழுவதையும் அழித்தது. அவன் வலியிழந்து மனமயங்கித் தனித்தவனாய்த் தேரின் மீது நின்றான். 
தேவர்கள் அதனைக்கண்டு அறுமுகக்கடவுளைத் துதித்துக் கடல்போல ஆரவாரித்துப் புஷ்பமழைகளைப் 
பொழிந்தார்கள். 

    சூரன் தேருந்தானும் விரைவில் மறைந்து, அண்டப்பித்திகையிலுள்ள வாயிலை அடைந்து, ஆர்த்து அறைகூவி, 
அப்பாலண்டத்துக்குச் சென்றான். சண்முகக்கடவுளும் தேரோடு அவனைத் தொடர்ந்து, அவன்நின்ற இடத்துக்குச் 
சென்றார். அவன் அங்கே அவரோடு போர்செய்து, மாயையினால் அப்பாலண்டத்துக்குப் போயினான். இவ்வாறே 
சூரபன்மன் பிருதிவியண்டம் முழுதும் மின்போலச் சென்று சென்று வெளிப்பட்டு, அங்கங்கே' போர்செய்து நின்று, 
பின்னரும் மறைந்துசெல்ல, எம்பெருமானும் அவ்வண்டங்கடோறும் அவனை விடாது தொடர்ந்து யுத்தஞ் 
செய்து கொண்டு போயினார்.

    அப்பொழுது, பிரமா முதலிய தேவர்கள் அன்பு மிகுந்த இருமுதுகுரவரை நீங்கிய குழந்தைகளைப் 
போல வருந்தி, விட்டுணுவை நோக்கிச் சொல்வார்கள்: "சூரபன்மன் அண்டப்புரையுட் போயினான். 
அறுமுகக் கடவுளுடைய போரில் விலகிப் போயினானல்லன். என்றுமழியான். மாயங்களில் மிகவும் வல்லவன். 
அவன் இவ்விடத்தைவிட்டுப் போயதன்மை ஆராயில் உபாயமேயன்றி வேறில்லை. நிருமலராகிய 
சண்முகக்கடவுள் அதனை அறிந்திலர் போலும். அவர் 'சூரபன்மன் வாடினான்' என்று கருதி அவனைத் 
தொடர்ந்து போயினார். அவனை அணுகினாரோ? அல்லது அணுகாதவராய்த் தேடினாரோ? நாம் அறியோம். 

    அக்கடவுள் சூரபன்மனோடு மற்றையண்டத்திலுஞ் சென்றார். 'இனி என்ன தான் விளையுமோ' என்றும் 
ஏழையோம் அஞ்சுகின்றோம்' என்று பிரமா முதலிய தேவர்கள் வினாவிய பொழுது,விட்டுணு அவர்களை நோக்கி, 
அன்போடு அவர்களுடைய மனத்திலழுந்தும்படி சொல்வார்: "தேவர்காள்,வஞ்சனையில் மிகுந்த சூரபன்மனுடைய 
வலிமையை மதித்து அஞ்சியஞ்சி யிரங்காதொழிமின். ஒப்பில்லாத அறுமுகக் கடவுளுடைய நிகரற்ற வில் 
வலிமையையும் வீரத்தையும் தெரிந்தும், நீவிர் மனத்தில் ஐயுறுகின்றதும் முறையோ. ஞானமாகியும், 
உணர்ந்தார்க்குமுணர்வரிய நீதியாகியும், நிர்மல சோதியாகியும், வழிபடுகின்ற எம்மனோர்க்கெல்லாம் 
ஆதியாகியும் நின்றவர் அறுமுகக் கடவுளன்றோ! அழிவின்றி என்றும் ஒரேதன்மையாயிருக்கின்ற பரமசிவனே 
ஓர்குழந்தையினியல்பாய் ஆறுதிருமுகங்களைக் கொண்டு திருவவதாரஞ் செய்தாரென்பதல்லது வேறு 
சொல்லுதற்கியையுமோ!

    மேலோராகிய அக்கடவுளுடைய தன்மையைப் பலமுறை தேறியும், உங்கள் மனமும் தெளிகின்றில. 
ஐயங்கொள்ளாதொழிமின். சூரபன்மன் ஆயிர கோடியண்டங்களிலும் சென்றாலும், சுப்பிரமணியக்கடவுள் 
அவனைத் தொடர்ந்து சென்று போரைச்செய்து துரத்திக் கொண்டு வருவார். தினைப்பொழுதில் கையில் 
நெல்லிக்கனிபோலக் காட்டுவேன் நீவிருங்காணுதிர்” என்று விஷ்ணு சொல்ல, பிரமா முதலிய தேவர்கள் 
யாவரும் நன்றென்று தெளிவுற்றார்கள். அப்பொழுது, சூரபன்மன் ஓரண்டத்திற்போல ஆயிரகோடியண்டங்களிலும் 
ஓடி நின்று நின்று, அறுமுகக்கடவுளை யெதிர்த்துப் போர் செய்து, மீட்டும் இவ்வண்டத்திலுள்ள மகேந்திரபுரியில் 
வந்தான். சுப்பிரமணியக்கடவுளும் நிழலைவிடாது செல்பவர்போலக் கோபித்து விரைந்து அவனைத் 
தொடர்ந்து வந்தார். 

    இவ்வண்டத்திலுள்ள அவுணசேனைகள் அவர் சூரபன்மனைத் தொடர்ந்து வருதலைப்பார்த்து, "சிவகுமாரர் 
நம்மரசனைத் தொடர்ந்தார்" என்று நெருப்புப்போலப் பொங்கிப் படைகளை வீசி, அவரைச்சூழ்ந்து ஆரவாரித்தன. 
கந்தசுவாமி அதனைநோக்கி, "இவர் முயற்சி நன்று நன்று" என்று கூறி, திருப்புன்முறுவல் செய்தார். சூரபன்மனுடைய 
சேனைகள் முப்புரம்போல வெந்து பொடியாயழிந்தன. தந்தை செய்கையை மைந்தன் செய்வது தக்கதன்றோ? 
தேவர்கள் அசுரசேனைகள் வெந்த சாம்பர் மலையை நோக்கி மகிழ்ந்து, புஷ்பங்களைத் தூவி முருகக்கடவுளைத் 
துதித்து நின்றார்கள். தன்னுடைய சேனைகள் முழுவதும் சுப்பிரமணியக்கடவுளுடைய திருப்புன்முறுவலாற் சாம்பராய் 
அழிந்துவீழத் தனித்துநின்ற சூரபன்மன், அகத்தியமுனிவர் உண்டமையாற் சலம்  வற்றிய சமுத்திரத்திற் றோன்றும் 
வடவாமுகாக்கினியை யொத்தான்.

    இவ்வாறு தனித்துத் துன்பமடைந்து நின்ற சூரபன்மன் அறுமுகக்கடவுள் திருப்புன்முறுவல் செய்தமையையும்,
 தன்சேனைகள் அழிந்தமையையும், தான் றனித்துநின்றமையையும், பூதர்களும் படைவீரர்களும் ஆரவாரிப்பதையும் 
பார்த்து, "பின்பிறந்த துணைவர்களும் புதல்வர்களும் மந்திரிமார்களும் பிறரும் முன்னே இறந்தார். இன்றைக்கு 
இறவாமலெஞ்சிய சேனைகளையெல்லாம் சிவகுமாரன் கொன்றான். யான் தனித்தவனானேன். இனி இங்கே 
செய்வதென்னை?'' என்று மனத்தோடு சொல்லி, பெருமூச்சுவிட்டு, எண்ணம் மிகுந்து, மாயவளை மனத்தில் 
நினைத்தான். அவள் வந்து தோன்றி, "பெறுதற்கரிய வலியையுடைய மகனே, நீ ஒருதமியனாகிநின்று மனந்தளர்ந்து 
என்னையழைத்தாய். நீ விரும்பியதென்னை? தெரியச் சொல்லுதி" என்றாள். 

        அதனைச் சூரபன்மன் கேட்டு, "சிவகுமாரனுடைய போரிலே தம்பியர்களும், புதல்வர்களும், 
மந்திரிமார்களும், சேனைகளுமாகிய யாவரும் அழிய யான் ஒருவன் எஞ்சினேன். இறந்த அவர்கள் எழுதற்கேற்ற 
உபாயத்தைச் சொல்லுதி' என்றான். அவள் நகைத்துச் சொல்வாள்: "மைந்தனே, நீ மிகுந்த படைகளும் சுற்றமும் 
இறக்கத் தனித்தவனாகியும், தேவர்களுடைய சிறையை விடுத்துய்யும்படி எண்ணினாயில்லை. அறுமுகக்கடவுளோடு
 இன்னும்போர் செய்தற்கெண்ணினையாயில் நிறைந்த பெருஞ்செல்வத்தோடு கூடியவாழ்வை நீங்கினாய்போலும். 
பன்னிரண்டு புயங்களைக்கொண்ட சுத்தசாட்குண்ணியராகிய அறுமுகக்கடவுளைப் பாலகன் என்றே எண்ணற்க. 

    அவருடைய கையிலுள்ள வேற்படையினால் விரைந்து இறப்பாய். அரிய உயிர் நீங்க  நின்றாய். என்சொல்லைக் 
கேட்பாயன்று. தலைவிதியை யாவராயினுந் தீர்ந்தாருண்டோ! அது நிற்க. உன்மனமகிழும்படி இறந்தோர் யாவரும் 
எழவேண்டு மானால், பெரும்புறக்கடலினோர்பக்கத்தில் அமுதசீதமந்தரகூடமென்று (சுதாமந்தரபர்வதம்) ஒர் மலையுளது. 
அதனை இங்கே கொணருதி. இறந்த யாவரும் எழுதல்கூடும்" என்று மாயவள் கூறி மறைந்தாள். சூரபன்மன் அதனைக்கேட்டு, 
"என்னுடைய தாயின் சூழ்ச்சி நன்று; போர்க்களத்தி லிறந்தோர் யாவரும் உய்யும்வகை இதுவே'' என்று நினைத்து, மிகமகிழ்ந்து, 
"சுதாமந்தரபர்வதத்தைக் கொண்டுவருதற்கு யாவரை யனுப்புவோம்" என்று சிறிதுநேரம் யோசித்து, இந்திரஞாலத் 
தேரினின்று மிறங்கி, சிங்க வாகனத்தின் எருத்திலேறி, அத்தேரை நோக்கி, நீ என்மனவேகத்திலும் விரைந்துசென்று 
பெரும்புறக்கடலையடைந்து, இறந்தவர்களுக்கு மீட்டு உயிரைக்கொடுக்கின்ற சுதாமந்தர பர்வதத்தை இங்கே 
அகழ்ந்தெடுத்துக் கொண்டு வருதி' என்று கூறினான். 

    இந்திரஞாலத்தேர் அதனைக்கேட்டு பெரும்புறக்கடலின் சாரிற்போய், அங்குநின்ற அமுதமந்தரத்தை 
எடுத்துக்கொண்டு வாயுகதியோடு மீண்டு மகேந்திரபுரியில் வந்தது. அம்மலையிலிருந்து வருங் காற்றுப் படுதலால்,
 அந்நாள்வரையும் போர்செய்து இறந்த சேனைகள் முழுதும் ஆலாகலவிஷமெழுந்தாற்போலத் துண்ணென்றெழுந்தன. 
குதிரைகளின் றொகைமுழுதும் உய்ந்தன; யானைகளின்றொகை முழுதுமுய்ந்தன; தேர்களையிழுக்குஞ் சிங்கங்களின் 
றொகைமுழுதும் உய்ந்தன; அவுணப்படைகள் முழுதும் உய்ந்தன. வடிவமழிந்து இறந்த உயிர்களும், மார்பு கால் கை 
தலை தோள் முதலிய அங்கங்கள் குறைந்து இறந்த உயிர்களும், சுப்பிரமணியக்கடவுளுடைய திருநோக்கு முதலியவற்றில் 
உண்டாகிய அக்கினி எரிக்கப் பொடிப்பட்ட உயிர்களும் உய்ந்தெழுந்தன. 

    இவ்வாறு உயிர்பெற்றெழுந்த சூரபன்மனுடைய சேனைகள் எண்டிசைகளும், பூமியும், பாதலமும், 
சமுத்திரங்களும் ஆகிய எங்கும் மண்டி, மேல் ஏழுலகங்களிலும் நிறைந்து,அண்டமுகடு வரையும் அடைந்து
 தண்டம், எழு, குலிசம், வாள்,வில் முதலாகிய படைக்கலங்களை எந்தி, யானை குதிரை தேர்களோடு அண்டம் 
வெடிக்கும்படி ஆர்த்தன. சிங்கமுகாசுரன் எழுந்தான்; பானுகோபன் எழுந்தான்; அக்கினிமுகன் எழுந்தான்; 
வச்சிர வாகுவுமெழுந்தான்; தருமகோபன் எழுந்தான்; அதிசூரன் அசுரேந்திரன் என்னும் இருகுமாரர்களும் 
எழுந்தார்கள்; மூவாயிரரும் எழுந்தார்; மற்றையோர்களும் எழுந்தார்கள்.

    கண்டோர் அஞ்சத்தக்க வடிவத்தோடு விரைந்தெழுகின்ற இவர்கள் யாவரும் சேனைகளைப்பார்த்து, 
வாய்திறந்து இடிபோல் ஆர்த்து, தம்முடைய வெற்றியைப் பேசி. "இன்றைக்கு நம்மேற் போருக்கு வந்தவர் யாவர்?" 
என்று வலிமையோடு கூறி, போர்க்களத்திலே கிடக்கின்ற ஆயுதங்களைக் தேடி எடுத்து, சூரபன்மனுக்குப் பக்கத்தில் 
வந்து கூடி, போர்செய்யுங் குறிப்பைக் கொண்டார்கள். மேற்சொல்லிய இவர்கள் யாவரும் உய்ந்து விரைந்தெழுந்து 
அளவிறந்த சேனைகளோடு ஆரவாரிக்கும்பொழுது, இந்திரஞாலத் தேர் சூரபன்மனுக்கு முன்னே வந்தது. 
அது அமுதமந்தரத்தோடு அங்கு வந்ததையும், சிங்கமுகாசுரன் முதலிய யாவரும் உய்ந்தெழுந்ததையும், 
அழிந்த சேனைகள் ஒலித்துக்கொண்டெழுவதையும், சூரபன்மன் தெரிந்து, மகிழ்ந்து, ஆரவாரித்து, 
தேவர்களை இகழ்ந்து, ஆச்சரியமடைந்து, தாயைப் புகழ்ந்து, உடல் புளகங்கொண்டு, மனம் விளக்கமுற்று, 
சிரித்து, உணவின்றி மிகுந்த தரித்திரத்திலாழ்ந்தவன் விரைவில் இந்திரபாக்கியத்தை அடைந்து 
சிங்காதனத்தி லேறினா லொத்தான். 

    சூரபன்மனுடைய சிரசு ஓங்கியது; புயங்கள் உயர்ந்தன; உடம்பு பருத்தது; மனத்திற் களிப்பு மிகுந்தது; 
உரோமங்கள் சிலிர்த்தன; அவன் அடைந்த மகிழ்ச்சியை யாவர் சொல்லவல்லார். சூரபன்மன் இவ்வாறு 
மனமகிழ்ந்து நிற்கும்பொழுது தேவர்கள் யாவரும் "பாற்கடலில் நஞ்செழுந்த நாளோ இது" என்று அஞ்சி 
நடுநடுங்கி, "பொன்னுலக வாழ்வும் மண்ணுலக வாழ்வும் மற்றைப் பெரிய பதங்களில் வாழ்கின்ற வாழ்வும் 
எந்நகர வாழ்வும் இப்பொழுதே நமக்கு வந்தன. பகைவர்கள் நம்மைக் கொல்லுமுன் ஓடுவோம்" என்றுகூறி, 
தாம் ஏறிவந்த வாகனங்கள் ஒருபக்கமும், தம்பக்கத்திலே வந்தவர்கள் ஒரு பக்கமும், தாம் ஒருபக்கமுமாகப் 
பின்னே திரும்பிப் பாராதவராய் ஓடுகின்றனர். 

    அவருட் சிலர் கிளி, புறா, மயில், அன்னம், காகம், குயில், ஆந்தை, வண்டு, நீர்க்காக்கை 
முதலாகிய பக்ஷிகளினுருவங்களைக் கொண்டு ஓடினார்கள். பூதகணவீரர்கள் அவுணர்கள் எழுந்தமையை 
நோக்கி, 'இறந்த அவுணசேனைகளும் மற்றை வீரர்கள் யாவரும் இங்கே உயிர் பெற்றெழுகின்றார்கள். 
யாம் இனி இறந்தோம். இதற்குச் சந்தேகமில்லை" என்று தளர்ந்தார்கள். இலக்ஷத்தெண்மரும் வீரவாகுதேவரும் 
துன்பமும், அச்சமும், ஆச்சரியமும், கலக்கமும், கடுங்கோபமுங் கொண்டு, உலைமுகத்தில் நெருப்புப்போலும் 
உயிர்ப்போடு நின்றார்கள்.

    சுப்பிரமணியக்கடவுள் இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் பார்த்தருளி "சூரபன்மனுடைய சூழ்ச்சியும், 
மாயவள் கூறிய உபாயமும், சுதாமந்தர பர்வதத்தின் வலிமையும், உயிர்பெற்றெழுந்த பரிசனர்களுடைய கூட்டமும் 
"நன்று நன்று' என்று திருக்கரத்தோடு திருக்கரத்தைத்தட்டி, நெருப்பெழத் திருப்புன்முறுவல் செய்தார். 
அப்பொழுது சிங்கமுகனும், பானுகோபனும், அக்கினிமுகன் முதலாகிய மற்றைப் புதல்வர்களும், 
தருமகோபனும்,சேனைத்தலைவர்களும், ஆகிய யாவரும் சூரபன்மனுக்கு முன்சென்று வீரத்தோடு 
வணங்கி நின்று "நம்மரசனே நீ இங்கே நிற்குதி. யாமெல்லேமும் சென்று கந்தவேளையும் அவருடைய 
படைவீரர்களையும் பூதர்களையுங் கொன்று மிகவிரைந்துவந்து உன்னுடைய பாதங்களை வணங்குவோம்'' 
என்றார்கள். 

    அதனைச் சூரபன்மன் கேட்டு, ''நம்மைப் பாதுகாக்கும்படி வந்த வீரர்களே நீர் கூறியது நன்று. 
நம்பகைவனாகிய பாலகனுடைய வலிமையையும் வீரத்தையுங் கெடுத்து எனக்கு வெற்றியைத் தருதிர்" 
என்று கூறி, அவர்களைப் போருக்குச் செல்ல விடுத்தான். சூரபன்மனிடத்து விடைபெற்றுச் சென்ற 
சிங்கமுகாசுரன் முதலாகிய அவுணர்கள் சேனைகள் தம்மைச் சூழ்ந்துவர விரைவிற் சென்று, 
பலவகைப் படைகளையுஞ் சொரிந்து, அக்கினிதேவனைச் சூழ்கின்ற இருட் கூட்டங்கள் போலச் 
சுப்பிரமணியக் கடவுளைச் சூழ்ந்தார்கள். அதனைக்கண்ட பூதர்கள் ஏங்கினர்; மற்றை வீரர்கள் யாவரும்
 'இப்படை எம்மாற் றாங்குதற்கரிது" என்று தளர்ந்தார்கள். 

    அவுணசேனைகளும் வீரர்களும் மிகுந்த வேகத்தோடு தம்மை வந்து சூழ்ந்ததைச் சுப்பிரமணியக்கடவுள் 
பார்த்து, எல்லாவுயிர்களையுஞ் சங்கரிக்கின்ற பாசுபதப் படைக்கலத்தைத் திருக்கரத்திலெடுத்து, திருவுளத்தால் 
வழிபாடுசெய்து, "சிங்கமுகாசுரன் முதலாகிய அவுணர் கூட்டங்களையும் அளவின்றி நிற்கின்ற அவுண சேனைகளையும் 
விரைவிற் சங்கரிப்பாய்" என்று கூறி விடுத்தார். அப்படை சர்ப்பங்களும், நஞ்சும், இடிக்கூட்டங்களும், உருத்திரர்களும், 
அக்கினியும் பூதகணத் தொகுதியும், அளவிறந்த தெய்வப் படைக்கலங்களுமாய் விரிந்து,அண்டமெங்கும் நெருங்கி 
ஆரவாரித்தெழுந்து, விரைவிற் சூழ்ந்து முன்னேயுய்ந்தெழுந்த அவுணசேனைகளையும் சூரபன்மனுக்குச் சுற்றமாயுள்ள 
யாவரையும் ஒருங்கே சங்கரித்து, இந்திரஞாலத்தேரின்மேலிருந்த சுதாமந்தரபர்வதத்தைப் பொடிபட அழித்து, 
அறுமுகக்கடவுண்மாட்டு மீண்டது. 

    சிங்கமுகாசுரன், பானுகோபன், அக்கினிமுகன்,வச்சிரவாகு,மூவாயிரர், சிங்கமுகனுடைய குமாரனாகிய 
அதிசூரன், அவன்றம்பியர்கள் நூற்றுவர், தாரகனுடைய குமாரனாகிய அசுரேந்திரன், தருமகோபன் முதலாயினோர் 
சேனைகளோடும் சுதாமந்தர பர்வதத்தோடும் இறந்து வீழ்ந்தார்கள். துணையில்லாத சூரபன்மன் அத்தன்மைகளை
யெல்லாங்கண்டு தளர்ந்து, வலிமைநீங்கிக் கவன்றிரங்கி, மெய்ம்மறந்து புன்மையடைந்து, உயிர்த்துக் கோபித்துவாடி, 
முன்போலத் தனித்தவனாயினான். சூரனுடைய படைகள்யாவும் அழிந்தமையைப் பூதர்களும் வீரர்களும் பிரமா 
முதலிய தேவர்கள் யாவரும் பார்த்து, துன்பம் நீங்கி மகிழ்ந்து ஆர்த்தார்கள். உயிர்பெற்றெழுந்த தன்கிளைஞரை 
யிழந்த சூரபன்மன்,தாமழுந்திக் கிடந்த நரகத்தைப் புண்ணிய வசத்தினாலே நீங்கிச் சுவர்க்கத்திற் செல்வோர் 
மிகுந்த ஓர் பாவ வசத்தால் மீட்டும் அந்நரகத்தில் வீழ்ந்ததேபோல மிகுந்த துன்பத்தோடு நின்றான்.

    இவ்வாறு நிற்கின்ற சூரபன்மன் மிகவும் கோபமுற்று, "என்சேனைகளை யெல்லாம் அழித்த பாலகனையும் 
தனிமை செய்து பின்பு வெல்லுவேன்' என்று எண்ணி, இந்திரஞாலத்தேரை நோக்கி, 'பாலகனைச் சூழ்ந்த பூத 
சேனைகளையும் வீரர்களையும் கவர்ந்து கொண்டுசென்று அண்டத்தினுச்சியிலே வைத்துக்கொண்டிருப்பாய்" 
என்று கூறினான். அத்தேர் அதனைக்கேட்டு, நன்றென்று ஓடிச்சென்று, வீரவாகுதேவர் முதலிய வீரர்களையும் 
பூதசேனைகளையும் மயக்கிக் கிளையோடும் வாரிக்கொண்டு அண்ட கோளகையிற்போய், சூரபன்மன் 
பணித்தபடி அவர்களை அங்கே வைத்துக் கொண்டிருந்தது. சேனைகள் நீங்கச் சுப்பிரமணியக்கடவுள் 
தனித்தவராயினார். 

    அதனைச் சூரபன்மன் பார்த்து, "நம்முடைய தேரின் வலி நன்று" என்று சிரித்தான். தேவர்கள் அதனை 
நோக்கிப் பின்னும் அயர்ந்தார்கள். அறுமுகக்கடவுள் சூரபன்மனுடைய சூழ்ச்சியையும், தமது துணைவர்களைப் 
பூதசேனைகளோடு வாரிக்கொண்டு சென்ற இந்திர ஞாலத்தேரின் வன்மையையும் தெரிந்து கோபித்து, 
ஓரம்பையெடுத்து வில்லிற்பூட்டி, "நம்முடைய சேனைகளைக் கவர்ந்து அண்ட கோளகையிற் கொண்டுபோய் 
வைத்திருக்கின்ற இந்திரஞாலத்தேரை விரைந்து இங்கே கொண்டு வருவாய்" என்று பணித்து விடுத்தார். 
அப்பாணம் வேற்படை போல ஒளியை வீசி மேலேழுலகங்களையுங்கடந்து, அவற்றிற்கப்பாலுள்ள தலங்களையும் 
நீங்கி, ஓர் கணப்பொழுதினுள் அண்டகோளகையினை அடைந்து, இந்திரஞாலத்தேரின் வலியைத் தொலைத்து, 
ஆகாயத்தில் நின்றும் மின்னலோடுகூடிய மேகத்தைக் கொண்டுவரும் பிரசண்டமாருதம்போல அத்தேரைக் 
கொண்டு தேவர்கள் துதிக்கப் பூமியில் மீண்டு, குமாரக்கடவுளுடைய சந்நிதியில் வந்தது. 

    இந்திரஞாலத்தேரிலிருந்த வீரவாகுமுதலிய வீரர்களும் பூதர்களும் அதினின்று பூமியிற் குதித்து, 
கந்தசுவாமியினுடைய திருவடித் தாமரைகளைப் பலமுறை வணங்கித் துதித்து, அவருடைய திருவருட் 
பெருங்கடலுண் மூழ்கி, மருங்கிற் சூழ்ந்து நின்றார்கள். அறுமுகக்கடவுள் இந்திரஞாலத்தேரைப் பார்த்து, '
'நீ சூரபன்மனிடத்து முன்போலச் செல்லாதே; அவன் இனி இறத்தல் நிச்சயம்; இங்கே நில்" என்றார். 
அத்தேர் அதனைக்கேட்டு, சூரபன்மனிடத்துச் செல்லுதற்கு அஞ்சி, முன்னை வலிமை நீங்கி, அறுமுகக்கடவுள் 
பணித்த படி அவருக்குப் பக்கத்தில் நின்றது.

    இந்திரஞாலத்தேர் சுப்பிரமணியக்கடவுளுடைய ஒருபாணத்தினாற் பூமியில்வந்து தன்பக்கத்தில் 
வராததையும், பூதர்களும் பிறரும் மீண்டதையும் சூரபன்மன் கண்டு, அக்கினி போலக் கோபித்து, ஒரு 
பெரியவில்லை விரைவில் வளைத்து, அறுமுகக்கடவுண்மீது பாணங்களை மீட்டும் சொரிந்தான். அவர் 
மிகுந்த கோபங்கொண்டு, ஒர் வில்லை வளைத்து, சரமாரிகளைச் சொரிந்து, சூரபன்மன் செலுத்திய 
பாணங்களையெல்லாம் விலக்கினார்.  அவனும் மிகக் கோபித்து, சுப்பிரமணியக் கடவுளுடைய 
தேர்ப்பாகனாகிய வாயுவின் சரீரமெங்கும் வெளியிடமில்லையாகப் பாணங்களையழுத்திப் போர்செய்தான். 

    வாயு சூரபன்மனுடைய பாணங்கள் படுதலால் வருந்திப் புலம்பி மயங்கி, குதிரைகளைத் தூண்டாமல் 
வறிதேயிருந்தான். கிருபா மூர்த்தியாகிய அக்கடவுள் பாகனுடைய இயற்கை முழுவதையுந் தெரிந்து, ஆயிரம் 
பாணங்களைத் தூண்டித் தேவர்கள் துள்ளத் சூரபன்மனுடைய வில்லைப் பலதுண்டங்களாக்கினார். அவன் 
தன்வில் முரிதலும், சிவபெருமான் றந்த ஓர் முத்தலைச் சூலத்தை ஏந்தி, சிங்கவாகனத்திலேறி, அதனைச் 
சுப்பிரமணியக்கடவுளுடைய தேரை அணுகத் தூண்டிச் சென்றான். அந்தச் சிங்கம் சூரபன்மனுடைய 
மனத்தைப் போலச் சென்று, அறுமுகக்கடவுளுடைய தேரைச் சுமக்கும் குதிரைகளை நகம் பொருந்திய 
கைகளாற் பதைக்கும்படி அடித்து, பூதர்கள் வருந்த ஆரவாரித்தது. 

    சிங்கத்தின்மேல் ஏறிச்சென்ற சூரபன்மன் தன்வலக்கையிலேந்திய சூலத்தைச் சுப்பிரமணியக்கடவுண்மீது 
சுழற்றியெறிந்தான். அது மின்போல ஒளிவீசி ஆகாயவழிக்கொண்டு சென்றது. அது செல்லும்பொழுது அக்கினி 
யுண்டாயது; இடிகள் உண்டாயின; பல படைக்கலங்களும் நெருங்கின ; பூதகணங்கள் நெருங்கி ஆர்த்தன. பூதர்கள் 
அதனை நோக்கி ஓடினர். உலகமுழுதும் அஞ்சின. சண்முகக்கடவுள் அதனை நோக்கி ஆயிரகோடி சரங்களை 
வில்லிற்பூட்டிச் செலுத்தினார். சூலப்படை அவற்றையெல்லாம் துணித்து வீழ்த்திச் சூரபன்மனுடைய கோபாக்கினியின்
 உருவம்போல நடந்தது. அப்படையின் வலிமையை முருகக்கடவுள் நினைத்து, தம்முடைய ஒருதிருக்கரத்திலிருக்கின்ற 
குலிசப்படையை நோக்கி  "சூரபன்மன் விடுத்த சூலப்படையைப் பிடித்துக்கொண்டு வருவாய்" என்று சொல்லி விடுத்தார். 

    அது, அக்கினிச் சுவாலையைக் கக்கிக்கொண்டு வருகின்ற சூலப்படையானது தன்னைக் கிட்டும்பொழுது, 
அதனுடைய மூன்று தலைகளையும் சூரபன்மன் வருந்தும்படி கௌவிப் பற்றிக்கொண்டு விரைந்து மீண்டுவந்து, 
மேருமலையின் கொடுமுடிகள் மூன்றையும் சமுத்திரத்திலிடும் வாயுவைப்போலச் சுப்பிரமணியக் கடவுளுடைய 
திருக்கரத்தில் உய்த்துத் தானுமிருந்தது. அதனைக்கண்ட தேவர்கள் யாவரும் கைகளை சிரமேற் கூப்பி, 
"இங்கே இவனைச் சங்கரித்து எங்களைக் காத்தருளும்"  என்று பிரார்த்தித்தார்கள். அதனை முருகக்கடவுள் 
கேட்டு, இரண்டாயிரஞ் சரங்களைப் பூட்டிச் சூரபன்மன் ஏறிவருகின்ற சிங்கவாகனத்தின் சிரசிலழுத்தினார். 
அது ஆகாயத்திற் கிளர்ந்து அரற்றி வீழ்ந்து உயிர் நீங்கியது.

    அதனைச் சூரன்கண்டு, பூமியிற்பாய்ந்து, சிவகுமாரருடைய திருக்கரத்திலே தன்னுடைய சூலம்போன 
தன்மையையும் தெரிந்து, ஊழித் தீயைப்போலக் கோபித்து, "இப்பாலகன் என்னுடைய இந்திரஞாலத்தேரையும் 
சூலப்படையையும் கவர்ந்து சிங்கவாகனத்தைக் கொன்று வலியன்போல நின்றான். இவனையும் பூதர்களையும் 
மற்றை வீரர்களையும் யான் ஒருருவத்தையெடுத்து விரைவில் விழுங்குவேன்'' என்று எண்ணி, மாயத்தினால் 
ஒரு சக்கரவாகப் பக்ஷியின் உருவையெடுத்து, சிறகுபெற்ற மலையையொத்துக் கடல்போல ஆர்த்து,பூமி பிளக்கும்படி 
சிறகுகளையடித்து ஆகாயத்திலெழுந்து, பூமி முழுதையும் சிறகினால் மூடிச் சூரியப்பிரகாசத்தை மாற்றிச் சுழலுவான்; 

    சமுத்திரத்திலுள்ள மீன்குப்பைகளைக் கவரும்படி முயன்றாற்போல விரைந்து பூதசேனைக் குழுவினுட்
 புகுந்து சிறகுகளை வீசுவான்; அவற்றால் அடிப்பான்; அவர்களைப்பிடித்து மூக்கினாற் குத்தி மிடற்றிற் செறித்து 
விழுங்குவான்; குமாரக்கடவுளுடைய தேரைச் சூழுவான்; அத்தேர்ப் பாகனை அடிப்பான்; அதன் கொடுமுடியை
முறிப்பான்; அதிற்கட்டிய குதிரைகளை மூக்கினாற் குற்றுவான்; அவற்றின் சிரங்களைக் கொய்வான்; பூதப் 
படைத்தலைவர்களைப் பற்றுவான்; அவர்களுடைய படைக்கலங்களெல்லாவற்றையும் பறித்து முறித்தெறிவான். 
சூரபன்மன் இவ்வாறு சக்கரவாகப்பக்ஷியின் உருவையெடுத்துச் சுற்றிப் பறந்துவந்து வீழ்ந்து ஆகாயத்திற் றிரிந்தான். 

    அதனை அறுமுகக்கடவுள் கண்டு, திருக்கரத்தோடு திருக்கரத்தைப் புடைத்துத் திருப்புன்முறுவல் செய்து,
"இவனுடைய கல்வித்திறமை நன்று' என்று கோபித்து, ஒரு பெரிய வில்லை வளைத்து, சக்கரவாகப்பக்ஷியின் 
வடிவாய்ச் செல்லுகின்ற சூரபன்மன் மீது அனந்தகோடி பாணங்களைத் தூண்டினார். அவன் அவற்றையெல்லாம் 
சிறகுகளினால் அடித்துச் சிந்திக் குறைப்பான்; மூக்கினாற் கொய்வான்; கால்களினாற் பற்றி முறிப்பான்; 
மேலெழுந்து ஆகாயமுழுதும் சூழந்து செல்வான்; சத்த சமுத்திரங்களிலும் செல்வான்; பூவுலகமெங்கும் பறப்பான்; 
விண்ணுலக முழுதும் பறப்பான்; பூதசேனைகளை அடித்துக் கௌவி எங்குஞ் செல்வான். 

    இவ்வாறு சூரபன்மன் சுற்றிப் பறந்து திரிதலும், சுப்பிரமணியக்கடவுள் அதனை நோக்கி, "பக்ஷியின் 
வடிவங் கொண்டு திரிபவனைத் தேரோடு தொடர்ந்து கொல்லுதல் பழியாகும்'' என்று திருவுளஞ்செய்து, 
அங்குநின்ற தேவர்களுள் இந்திரன்மீது திருக்கடைக்கண் சாத்தியருளினார். அவ்விந்திரன் எம்பெருமானுடைய 
திருக்குறிப்பையும் அவர் தன்மீது பேரருள் பாலித்துள்ள தன்மையையும் அறிந்து, அழகிய ஓர் மயிலினுருவை 
யெடுத்துவந்து, அக்கடவுளைத்துதித்து, அவர் சந்நிதியில் ஒரு மரகத மலைபோல் நின்று, பூமி கிழியவும், 
மேருமலையும் அதனைச் சூழ்ந்த மலைகளுங் குலையவும், திக்கு யானைகள் வீழவும், சமுத்திரஜலம் வறக்கவும், 
பாம்புகள் அஞ்சவும் சிறகால் மோதி, "எம்பெருமானே கேட்டருளும். பிரமவிஷ்ணு முதலாகிய தேவர்கள் யாவரும் 
தேவரீரை வழிபட, நாயினுங் கடையேனாகிய அடியேன்மாட்டுச் செம்மையாகிய பேரருளை வைத்தீர். ஆதலால்
 அடியேன் எல்லாச் சிறுமைகளுந் தீர்ந்தேன். உய்யு நெறியையுங் கண்டேன். உம்முடைய அருமைத் திருவடிகளைச் 
சுமக்கப்பெற்றேன். பொய்யாகிய மாயவாழ்விற் புக்குழலுகின்ற எளிமையையும் இனி நீங்குவேன். நம்மவர்களாகிய 
தேவர்கள் யாவரையும் சகித்தற்கரிய சிறைக்களத்தில் வீழ்த்தித் துன்பஞ்செய்து எல்லாவுலகங்களையும் ஆண்ட 
சூரபன்மனுடைய பறவை வடிவஞ் செல்லும் இடங்களிலெல்லாம் சென்று சென்று போர்செய்து வெல்லும்படி விரைவில்
 அடியேன்மேல் இவர்ந்தருளும்; அடியேன் சுமந்து செல்லுதற்கு" என்றான். 

    அதனைக்கேட்ட அறுமுகக்கடவுள் தமது தேரினின்றுமிழிந்து, சந்நிதியில் நிற்கின்ற இந்திரனாகிய மயிலின் 
மீது இவர்ந்து வீற்றிருந்து, சூரபன்மனுடைய செலவை நோக்கி, இடிபோலக் கூவியார்க்கின்ற அம்மயில்வாகனத்தை 
நடாத்தி, ஊழித்தீயை அவிக்கும்படி நினைத்துப் பிரசண்டமாருதம் சென்றாற்போல அவனைத் தொடர்ந்து சூழ்ந்தார். 
சக்கரவாகப்பக்ஷியின் வடிவங்கொண்ட சூரன் அதனை நோக்கி, சமுத்திரத்தைப்போல உரப்பிச் சென்று தாக்க, 
மயில் வடிவங்கொண்ட இந்திரனும் அவனோடு எதிர்த்துப் போர்செய்தான். பறவை வடிவங்கொண்ட இருவரும் 
மூக்கைநீட்டி உடம்பு முழுதையுங் கிழித்து இரத்தம் வாய்ப்படக் கௌவியிழுத்தும், சிறகுகளாற் புடைத்தும், 
கால்களாற் றாக்கியும் இவ்வாறு பெரும்போர் செய்தார்கள். 

    செய்யும்பொழுது, சக்கரவாகப்பக்ஷி வடிவங்கொண்ட சூரபன்மன் மயில்வடிவங்கொண்ட இந்திரனைத் 
தலையிற் பொருந்திய தூவியைப் பறித்து, முகம்முழுதிலும் குத்தி, இரத்தத்தை வீழ்த்தி, கலாபத்தை யிழுத்துத் 
துன்பஞ்செய்தான். அதனைக் குமாரக்கடவுள் பார்த்து அக்கினி போலச் சிரித்து, வில்லை வளைத்து, சூரபன்மனாகிய 
சக்கரவாகப் பக்ஷியினுடைய தலையிலும், முகத்திலும், கால்களிலும், மார்பிலும், சிறைகளிலும் எண்ணிறந்த 
பாணங்களைத் தொடுத்துச் செலுத்தினார். அவைகள் தன் அங்கமெங்கும் படுகின்றபொழுது, அவன் 
பதைபதைத்து உதறிச் சிந்தி எண்டிசைகளிலும், ஆகாயத்திலும், சமுத்திரங்களிலும், மற்றையெவ்விடங்களிலும் 
கோபாக்கினியைச் சிந்திச் சீறிக் கறங்குபோலத் திரிந்தான். 

    சுப்பிரமணியக்கடவுள் தேவர்கூட்டந் துதிக்க இந்திரனாகிய மயிலைச் செலுத்திக் கொண்டு சென்று, 
சரங்களைத் தூண்டி, எவ்விடங்களிலும் அவனைத் துரத்திப் போர்செய்யலுற்றார். அப்பொழுது, அவன் இளைத்து, 
மனம் மெலிந்து மிகத்துன்பமுற்றிரங்கி, அக்கினிபோலக் கோபித்து,அறுமுகக்கடவுளுடைய திருக்கரத்திலுள்ள 
வில்லைக் கறிக்கும்படி எண்ணிவந்தான். அதனை அக்கடவுள் கண்டு, திருக்கரத்திலுள்ள வாட்படையை வீசி 
அவனுடைய பறவை வடிவை இருதுணியாய் வீழ வெட்டினார். பிரமா விஷ்ணு முதலிய தேவர்கள் யாவரும் 
கூத்தாடினார்கள். 

    சூரபன்மன் தேவர்கள் யாவரும் வருந்த அண்டமுகட்டைத் தொடும்படி உயர்ந்து பூமியின் வடிவை 
யெடுத்து எழுகடலையுந் தூர்த்து, சூரியர்களுடைய தேரைத் தடைசெய்து, வாயுக்களியங்கும் வழியை மாற்றி, 
திசைகளை மூடிநின்றான். முருகக்கடவுள் அதனைப் பார்த்து வெகுண்டு, "சூரபன்மன் செய்கின்ற மாயத்திறம் 
நன்று" என்று கூறி, வில்லைவளைத்து ஏழுபாணங்களைத் தொடுத்து, 'சூரபன்மன் அழியுமியல்பினனாய் 
வானுலகமளவும் எழுந்து நிமிர்ந்து பூமியின் வடிவாய் என்முன் நின்றான். நீங்கள் ஏழுகடல்களின் உருவாகி 
விரைந்துசென்று அவ்வுருவை அழியுங்கள்'' என்று கூறி ஏவினார். அவ்வேழுபாணங்களும் உலகங்களைச் சூழ்ந்து 
அழிக்கின்ற ஏழுசமுத்திரங்களின் வடிவையெடுத்து, கோபத்தோடும் ஆரவாரத்தோடும் திரைகளை வீசிச்சென்று, 
சூரபன்மனுடைய பூமிவடிவத்தையழித்து இல்லையாக்கி, தாம் கொண்ட சமுத்திரங்களின் வடிவை நீங்கி, 
எம்பெருமான்மாட்டு மீண்டுவந்தன. 

    அதனைச் சூரன் கண்டு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அழித்தற்கெழுமாறுபோல 
மிகுந்த ஜலத்தின் வடிவாகி, விண்ணுலகம் வரையும் நிமிர்ந்து, சுப்பிரமணியக்கடவுளுக்கு முன்பு நின்றான். 
அவர் அதனை நோக்கி, நூறு பாணங்களைத் தொடுத்து, "நீவிர் ஊழித்தீயின் வடிவாய்ச் சென்று இதனை 
அழித்து வருதிர்" என்று விடுத்தார். அவைகள் பெரிய அக்கினியின் வடிவாய்ச் சென்று சூரனுடைய ஜலவடிவை 
இறைப்பொழுதில் உண்டுமீண்டன. சூரன் அதனைக் கண்டு அக்கினியின் வடிவையெடுத்து, அண்டங் காறும் 
நிமிர்ந்து விளங்கினான். முருகக்கடவுள் அதனைக்கண்டு திருப்புன் முறுவல்செய்து, ஆயிரம்பாணங்களைத் 
தொடுத்து, 'நீவிர் பிரசண்டமாருதத்தின் உருக்கொண்டு சென்று சூரனுடைய மாயங்கள் பலவற்றையும் 
அழித்து வாருங்கள்'' என்று செலுத்தினார். 

    அவைகள் விரைந்துசென்று, பிரசண்டமாருதத்தின் உருவையெடுத்து, சூரபன்மன் கொண்ட ஊழித்தீ 
வடிவையழித்து, அக்கடவுள்மாட்டு மீண்டுவந்தன. சூரபன்மன் மிகுந்த கோபங்கொண்டு வாயுவினுருவையெடுத்து 
ஆர்த்தான். அதனை அறுமுகக் கடவுள் திருப்புன்முறுவலோடு நோக்கி, இலக்ஷம் பாணங்களை யெடுத்து, "நீவிர் 
பாம்புகளின் வடிவாய்ச் சென்று சூரபன்மனுடைய மாயத்தையழித்து வருதிர்" என்று பணித்துத் தூண்டினார். 
அவைகள் அக்கினி போலெழுந்து பாம்புகளினுருவங் கொண்டு சூரபன்மனுடைய வாயுவடிவத்தையுண்டு, 
சுப்பிரமணியக்கடவுள்மாட்டு மீண்டன.

    சூரபன்மன் இவ்வாறாக நான்குநாள் வரையும் தொலையாது நின்று சுப்பிரமணியக்கடவுளோடு 
போர்செய்து, பின்னும் மாயங்களைச் செய்யக்கருதி, பல உருவங்களைக் கொண்டு தோன்றினான். ஒர்பக்கத்தில் 
மும் மூர்த்திகளைப்போல வருவான்;ஓர்பக்கத்தில் மற்றைத் தேவர்களையும் அசுரர்களையும் பிறரையும் 
போல வருவான்; ஓர்பக்கத்தில் இந்திரனைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் பூதங்களைப்போல வருவான்; 
ஓர்பக்கத்தில் யமனைப் போல வருவான் ;ஒர்பக்கத்தில் பேயைப்போல வருவான்: ஓர்பக்கத்தில் அக்கினியைப் 
போல வருவான்; ஓர்பக்கத்தில் வாயுவைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் சமுத்திரம்போல வருவான்; 
ஓர்பக்கத்தில் நஞ்சுபோல வருவான்; 

    ஓர்பக்கத்தில் பாம்புபோல வருவான்; ஓர்பக்கத்தில் முகில்போல வருவான் ; ஓர்பக்கத்தில் இடிபோல 
வருவான்; ஓர்பக்கத்தில் இருள்போல வருவான்; ஓர்பக்கத்தில் மலைபோல வருவான்; ஓர்பக்கத்தில் தன்னுருவாய் 
வருவான்; ஓர்பக்கத்தில் சூரியனைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் தன் சேனைகளைப்போல வருவான்;ஓர்பக்கத்தில் 
திக்குயானைகளைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் சிங்கம்போல வருவான்; ஓர்பக்கத்தில் சக்கரவாகப் பக்ஷிபோல 
வருவான்; ஓர் பக்கத்தில் தாரகனைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் சிங்கமுகனைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் 
பானுகோபனைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் அக்கினிமுகனைப்போல வருவான்; ஒர்பக்கத்தில் மற்றைப் 
புதல்வர்களைப்போல வருவான்; ஓர்பக்கத்தில் தருமகோபனைப் போல வருவான்; ஓர்பக்கத்தில் தன் படைத் 
தலைவர்களைப்போல வருவான். சூரபன்மன் இவ்வாறு பலவடிவங்களையெடுத்து யாண்டுஞ் செறிந்து 
முருகக்கடவுளைச் சூழ்ந்தான். 

    அதனை நோக்கிய தேவர்கள் உலகமழியுங்காலத்தில் அதனிடத்துள்ள உயிர்களைப்போல 
மனந்தளர்ந்து ஓடி உலைந்தார்கள். அறுமுகக்கடவுள் சூரபன்மனுடைய மாயங்களை நோக்கி, ஆயிரகோடி 
பாணங்களைத் திருக்கரத்தில் எடுத்து வில்லிற்பூட்டி, "அம்புகளாகிய தெய்வங்காள், நீவிர் சென்று 
சூரபன்மனாகிய ஒருவன் கொண்ட அவ்வவ் வுருவமனைத்தையும் கொண்டு அவனுடைய மாயம் 
முழுதையும் அழித்து நீக்கி வாருங்கள்'' என்று பணித்துச் செலுத்தினார். அவைகள் விரைந்துபோய், கோபம் மிகுந்து, 
சூரபன்மன் கொண்ட ஒவ்வோருருவிற்கும் எழுமடங்காகிய வடிவங்களையெடுத்து, எண்டிசைகளிலும் 
ஆகாயத்திலும் பூமியிலும் நெருங்கி அவனுடைய மாயத்தையழித்து வெற்றியடைந்தன. 

    சூரபன்மன் பெருங்கோபத்தோடு அப்போர்க்களத்திற் றனித்தவனாய் நின்றான். அப் பாணங்கள் 
ஆகாயவழிக்கொண்டு மீண்டு சுப்பிரமணியக்கடவுளுடைய தூணியிற் புகுந்தன. அப்பொழுது, சுப்பிரமணியக்கடவுள் 
சூரபன்மனை நோக்கி, "சூரபன்மனே, நீ மேகத்திற் றோன்றி உடனே யழிகின்ற மின்னலைப்போல இங்கே நமது 
முன்பு எல்லையில்லாத மாயா ரூபங்களைக் கொண்டாய். நம்முடைய அம்புகளினால் அவற்றையெல்லாம் அழித்தோம். 
அழியாத நம்முடைய பெரிய வடிவத்தைக் கொள்வோம் நீ செய்த தவத்தினாலே காணுதி" என்று சொல்லியருளி, 
''கடல், உலகம், திக்கு, புவனம்,அண்டம், தேவர்கள் உயிர்கள் ஆகிய எல்லாம் அறுமுகக்கடவுளுடைய திருமேனியில் 
அடங்கினவன்றி வேறில்லை' என்று சொல்ல மிகப்பெரிய ஓர் திருவுருவத்தைக் கொண்டார். 

    அத்திருமேனியில், உள்ளடியில் மலைகளும், புறவடியில் சமுத்திரங்களும், பாதவிரல்களில் இடியும் 
நக்ஷத்திரங்களும் கிரகங்களும் பரட்டில் வருணனும் சந்திரனும் நிருதியும் அரக்கர்களும், கணைக்கால்களில் 
முனிவர்களும் சிந்தாமணி முதலிய மணிகளும், முழந்தாளில் வித்தியாதரர் முதலாயினோர்களும், தொடையில் 
இந்திரனும் அவன் குமாரனாகிய சயந்தனும், தொடைமூலத்தில் யமனுங் காலனும், அரையின் முற்பக்கத்தில் 
அசுரர்களும், விலாப்புறங்களில் தேவர்களும், மூலாதாரத்தில் நாகர்களும், குறியில் அமிர்தமும்,நாபியில் 
சீவராசிகளும், மார்பில் சகல சாஸ்திரங்களும், உபவீதத்தில் ஞானமும், உரோமத்தில் அண்டங்களும் 
அகங்கையில் சகல போகங்களும், புயங்களில் விஷ்ணுவும் பிரமாவும், கைவிரல்களில் தெய்வப்பெண்களும், 
கண்டத்தில் ஒலியின் கூட்டங்களும் அக்கினியும், வாயில் வேதங்களும், பற்களில் அக்ஷரங்களும்,நாக்கில் 
சிவாகமங்களும், உதட்டில் சப்தகோடி மகாமந்திரங்களும், நாசியில் வாயுவும், கண்களில் சூரியசந்திரர்களும், 
காதுகளில் திக்குக்களும், நெற்றியில் பிரணவமும், சிரசில் பரமான்மாவாகிய பரசிவமும் இம்முறையே 
பொருந்தித் தோன்ற அநந்தகோடி சூரியர்கள் ஒருங்கே உதித்தாற்போலப் பேரொளியைக் காலுகின்ற 
ஒப்பில்லாத தம்முடைய விசுவரூபத்தைக் காட்டி நின்றார். 

    தேவர்கள் அத்திருவுருவைத் தரிசித்து மனம் நடுக்கமுற்று நின்றார்கள். அறுமுகக்கடவுள் அமைத்த 
திருக்கரத்தினராய், அவர்களை ''அஞ்சாதொழிமின் அஞ்சாதொழிமின்'' என்று திருவருள் புரிந்தார்.
தேவர்கள் யாவரும் அவருடைய அருண்முறையை வினாவி, முன்பு நம் மனத்தை விழுங்கிய நடுக்கம் நீங்கி, 
இடையீடின்றி மலைப்பரிமாணமுடைய துளிகளைச் சிதறும் ஊழிக்காலத்து மேகத்தின் வரவைப் பார்த்து 
மகிழும் மயிற்சாதிபோல மகிழ்ச்சியோடு தொழுது நின்றார்கள்.

    அந்தமும் ஆதியுமில்லாத இந்தப் பாரமேசுர வடிவத்தைச் சூரபன்மன் கண்டு, ஆச்சரியமுடையனாய் 
நிற்ப, முருகக்கடவுள் அவனுக்குச் சிறிது நல்லுணர்ச்சியைக் கொடுத்தருளினார். நல்லுணர்வுபெற்ற அவன் 
இவ்வாறு சொல்வான்: "இப்பாலகர் எண்ணில்லாத அவுணசேனைகள் யாவையும் ஒரு நொடிப்பொழுதிற் 
சங்கரித்து, அண்டங்கள்தோறும் என்னோடு போர்செய்து, என்னைச் சேர்ந்த வீரர்கள் யாவரையும் அழித்து, 
இந்திரஞாலத் தேரையும் என்னிடத்து மீண்டு வராவண்ணம் தடுத்து, மிகுந்த வலியையுடையேனாகிய யான் 
செலுத்திய படைக்கலங்க ளெல்லாவற்றையும் நீக்கி, யான்கொண்ட மாயம் முழுவதையும் சரங்களால் மாற்றி, 
அண்டங்களும் புவனங்களும் தேவர்களும் பிறவும் தம்மிடத்தே காணுகின்ற ஒரு வடிவத்தைக் காட்டி, என் 
கண்முன்னே நின்றார். 

    அழகிய மயில் வாகனத்தின்மீது விளங்கிய இந்தக் குமாரரை அந்நாளிற்  பாலகன் என்று  எண்ணியிருந்தேன், 
இத்தன்மைகளை யறிந்திலேன். பிரமவிஷ்ணுக்களுக்கும் மற்றைத் தேவர்களுக்கும் யாவர்க்கும் மூலகாரணமாய் 
நின்ற மூர்த்தி இம்மூர்த்தியன்றோ! முன்னே ஒற்றுவனாக வந்த வீரவாகு வேலாயுத கரராகிய இவரை 'விருப்பு 
வெறுப்பின்றி நின்ற பராபர முதல்வர்' என்றே சொன்னான். அவன் சொல்லியவற்றை யெல்லாம் உறுதியெனக் 
கொண்டிலேன். இன்றைக்கு இப்பொழுது இவரே ஈசன் என்னுந் தன்மையைக் கண்டேன். மிக உயர்ந்த வடிவத்தைக் 
கொண்டு நம்மிடத்து வந்த அத்தூதுவன் சொன்ன வார்த்தைகள் உண்மையாம்; 

    யான் பெற்ற ஆயிரத்தெட்டண்டங்களும் பிறவும் பெருமையிற் சிறந்த இவ்வறுமுகக்கடவுளுடைய 
திவ்விய சரணார விந்தத்திலுள்ள ஒரு உரோமத்திலே தோன்றி நிற்கின்றன. தேவர்களையும் முனிவர்களையும் 
பிறரையும் மற்றையெல்லாப் பொருள்களையுங் காட்டி இக்கடவுள் கொண்ட திருமேனி முழுவதையும் யாவர் 
குறித்தறியவல்லார்! உடம்பெங்குங் கண்களைப் படைத்தவர்களுக்கும் காண அனந்தகோடி கற்பகாலமும் 
கடக்கும். குமாரக் கடவுள் கொண்ட இந்தப்பேரழகு பொருந்திய விசுவரூபத்தில் உள்ள பேரொளியும் 
நன்குமதிக்கற்பாடும் இளமையும் கட்டழகும் ஆகிய இவைகளெல்லாம் உலகில் வேறு யாவரிடத்துள்ளன! 

    ஆகா! என் பார்வையும் அற்புதத்தோடு பலகாற் பார்க்கினும் இன்னும் தெவிட்டிற்றில்லை. சமானாதீதராய் 
இங்கே நிற்கின்ற இக்கடவுளுடைய விசுவரூபத்தை நோக்கி மிகவும் அஞ்சுவதன்றி, தேவர்களிலும் யார் இதனைக் 
காண வல்லார்! யான் அழியாத சிறந்த வரத்தைப் பெற்றுள்ளேனாதலாற் காண்கின்றேன். ஆயிரகோடி 
மன்மதர்களுடைய அழகெல்லாம் ஒருங்கு திரண்டு பொருந்தினவாயினும் இந்தக்கடவுளுடைய நிருமலமாகிய 
திருவடியின் திவ்விய சௌந்தரியத்துக்கு ஆற்றாதென்றால், இவருடைய விசுவரூபத்திற்கெல்லாம் உவமையை 
யாவர் விரித்துச் சொல்லவல்லவர்! 

    என்னுயிர்போன்ற தம்பியாகிய சிங்கமுகனும் குமாரனாகிய இரணியனும் 'வேலாயுதகரராகிய 
கந்தசுவாமியைப் பாலகர் என்று எண்ணாதே; அவர் அரிபிரமேந்திராதி தேவர்கள் காணாத சிவபெருமானேயாகும்' 
என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னவாறும் சத்தியமேயாயது. பெருமையிற் சிறந்த இக்குமாரக்கடவுளுடைய 
திருவடிமுதல் திருமுடிகாறும் எண்ணில்லாத ஊழிகாலம் எத்திறம் நோக்கினாலும் கண்களுக்கு அடங்காது; 
நினைத்தால் மனத்திற்கு அடங்காது. இவ்வியல்பையுடைய இக்கடவுள் என்மாட்டுப் போருக்கு வந்தாரென்பது 
என்னிடத்து வைத்த அருளென்றே நிச்சயிக்கலாம். என்னுடைய மாறுபாடாகிய சினம்முழுதும் தீர்ந்தன; 
போரினூக்கம் குறைந்தது; உரோமங்கள் பொடித்தன; கண்களில் ஆனந்தபாஷ்பம் உண்டாயிற்று: 
தமியேனுக்கு இவரிடத்தே அன்பு பிறந்தன; மனம் உருகியது; 

    அது மாத்திரமா, என்புகளும் உலைமுகத்து மெழுகுபோல உருகுகின்றன. அகந்தைகள் போயின. 
ஞானம் உண்டாயின; வலப்புயமும் வலக்கண்ணும் துடித்தன; எல்லாவண்டங்களும் அவற்றிலுள்ள பொருள்கள் 
முழுதும் வெளிப்படுதற்கிடமாகிய இத்தேவநாயகருடைய பாரமேசுர வடிவத்தைத் தரிசித்தேன். இது நான் 
முன்செய்த தவத்தின் பயனன்றோ! என்கால்கள் இக்கடவுளைப் பிரதக்ஷிணஞ்செய்தல்வேண்டும்; கைகள் 
தொழுதல்வேண்டும்; சிரசு வணங்கல் வேண்டும்; நாக்குத் துதித்தல் வேண்டும்; நான் தீமைமுழுதும் நீங்கி 
இவ்வாறு இவருக்கு அடிமையாய் வாழ்தலை என்மனம் விரும்பும்; மானம் ஒன்றே என்னைத் தடுத்தது. 

    என் பகைவர்களாகிய தேவர்கள் பொருட்டுவந்து மிகுந்த போரைச்செய்த இக்கடவுளுடைய உருவத்தைக் 
காணின், முனிவதே எனக்குத் தகுதியாம். அஃதின்றி என்னுணர்வும் உடலும் அக்கினியிற்பட்ட வெண்ணெயேபோல 
வலியழிந்து உருகினவென்றால், அவை இவர் வயத்தனவன்றி என்வயத்தனவா! மாலையை யணிந்த திருமார்பை 
யுடைய இப்பெருமான் என்னோடு இந்நாள்காறும் நீண்டபோரைச்செய்து பிரியாதவராய் நின்றதெல்லாம் 
இவருடைய ஓர் திருவிளையாடலின் இயற்கையென்றே யறிந்தேன். அஃதன்றி, இவர் என்னைக் கொல்லவேண்டுமென்று 
கருதினால், யார் அதனைத் தடுக்கவல்லார்! நம்மிடத்து ஓர் குற்றமும் செய்யாத தேவர்களை யான் சிறை 
செய்ததெல்லாம் தீது என்று பலரும் சொன்னார்கள். அத்தேவர்களைச் சிறை செய்தமையினாற்றான் வேதங்களும் 
அரிபிரமேந்திராதி தேவர்களும் காணப்பெறாத இக்கடவுள் இங்கு எழுந்தருளிவரப் பெற்றேன். யான்செய்த அது 
நன்றேயாயிற்று. 

    ஒருதனிமுதல்வராகிய இக்கடவுளுடைய திருமுன்பு நின்று இந்நாள்காறும் போர் செய்தேன். ஆகா! 
இனி மனந்தளரேன். மேலாகிய ஈதோர் பெருமையைப் பெற்றேன். வீரனும் நானேயாயினேன். என்றும் இப்புகழே 
நிலைபெறும். இவ்வுடம்பு நிலைபெறுவதுண்டோ! யான் தேவர்களுடைய சிறையை நீக்கி, அருள் வள்ளலாகிய 
இக்கடவுளை வணங்கி, உடம்போடு கூடிய இவ்வுயிரைப் பாதுகாத்து, எளியர்போல் இருப்பேனாயின், எனக்கு இது 
தகுவதா! ஆயிர கோடியண்டங்களிலும் பரந்த என்புகழும் வீரத்தன்மையும் அழிந்து விடாவோ!" என்று இவை 
போல்வனவற்றைச் சொல்லிச் சூரபன்மன் சுப்பிரமணியக்கடவுளுடைய சந்நிதானத்தில் நின்றான். 

    அப்பொழுது, எவர்க்கு மேலவராகிய அறுமுகக்கடவுள் யாவர்க்கும் நினைத்தற்கரிய பெருமையை 
யுடையதாய் நின்ற பாரமேசுர வடிவத்தை நீக்கி, மயில்வாகனத்தி லிவர்ந்திருந்த பழைய திருவுருவத்தைக் 
கொண்டு, சூரபன்மனுக்குக் கொடுத்த ஞானத்தை நீக்கி, அவனை முன்போல அகங்கார வயத்தனாகச் செய்தார்.
(மூலகாரணராகி, தாமே ஆன்மாக்கண்மீது வைத்த திருவருளினால் அவற்றிற்குத் தனு கரண புவன போகங்களைக் 
கொடுத்துப் பஞ்சகிருத்தியங்களையுஞ் செய்து, அவ்வுயிர்க்குயிராய் வியாபித்து நிற்கின்ற பரமசிவனுடைய 
திருக்குமாரராகிய சுப்பிரமணியக்கடவுள் முன்பு ஞானத்தைக் கொடுத்துப் பின்பு அதனை மாற்றிச் சூரபன்மனை 
மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரியது!)

    அப்பொழுது, ஆகாயத்திற் பாலசந்திரன் உதிக்க நீங்கிய இருள் அது மறைந்தபொழுது எழுந்தவாறுபோலச் 
சூரபன்மன் முருகக்கடவுளுடைய திருவருளினாலே தன்மனத்தில் உண்டாகிய ஞானம் நீங்கிப் பழைய கோபமும் 
பகையும் உண்டாகப்பெற்று, மயில்வாகனாரூடராய் நின்ற அக்கடவுளுடைய தோற்றத்தைக் கண்டு, தணித்தற்கரிய 
சினம் மேற்கொண்டு, போரில் ஊக்கஞ்செய்து, '"என்வலிமை அழகிது'' என்று கையோடு கையைத்தட்டி, 
தலையை யசைத்துச் சிரித்து, இவற்றைச் சொல்வான்: ''பாலகனாகிய இந்தக்கள்வன் என்னோடு போர்செய்தற் 
காற்றாதவனாய்த் தான் கற்ற மாயங்களுள் ஒன்றைக்காட்டி, என்னை இங்கே மயக்கிவிட்டான். அந்த மாயத்தைக் 
கெடுத்தேனென்றால் எனக்கு ஆர் ஒப்பாவார்! என்றும் காயமழியாத யான் கருத்தழிகின்றதுண்டோ! இந்தப் 
பாலகனோடு போர்செய்து இவனை இனிமேல் மெல்ல மெல்ல வெல்லுகின்றேன். அது நிற்க. இப்பொழுது இந்தப் 
பெரிய போரை மூட்டி நின்ற தேவர்களையெல்லாம் முன்னே தின்று உயிரைப்பருகி என் கோபத்தைச் சிறிது 
நீங்குவேன்' என்று கூறினான்.

    இதனைத் துணிவாகக்கொண்ட சூரபன்மன் பின்னும் தீயதாகிய ஓர் மாயா மந்திரத்தை உச்சரித்து, 
சூரியனும் மயங்கும்படி பூமியும் ஆகாயமும் ஆகிய எங்குமாக மிகப்பெரிய ஓர் அந்தகார வடிவங்கொண்டு, 
அதனுள் மறைந்துநின்று ஆரவாரிப்பானாயினான். பாற்கடலிலே நஞ்சமெழுந்தாற்போல எங்குமாய்ச் செறிந்த 
அந்தகாரவடிவைத் தேவர்கள் கண்டு, இது சூரபன்மனுடைய மாயமென்று கலக்கமுற்றார்கள். அப்பொழுது 
சூரபன்மன் அந்த இருளினிடையே பாய்ந்து, வரிசையாகிய மலைச்சிகரங்கள் போன்ற பல தலைகளையும் 
அளவில்லாத கைகளையுமுடைய ஓர் பெரிய வடிவத்தை விரைந்தெடுத்து, தேவர்கூட்டங்களை உண்ணும்படி 
நினைத்து, ஆகாயத்திற் கிளர்ந்து சென்றான். 

    அவன் எழுதலைத் தேவர்கள் ஞானத்தினாலுங் குறிப்பினாலும் அறிந்து, ''இவன் நம்மைக் கொல்லும்படி 
வருகின்றான்" என்று எண்ணி, இடமிடங்கள் தோறும் சிதறி நில்லாதோடி,யமனை எதிர்ப்பட்ட உயிர்களைப்போல 
இரங்குவாராய், ''அடைந்த அன்பர்களுக்கு இனியவரே அடைக்கலம்; ஞான முதல்வரே அடைக்கலம்; முனிவர்களுக்குத் 
தலைவரே அடைக்கலம்; சோதி சொரூபரே அடைக்கலம்; நினைத்தற்குமரிய கடவுளே அடைக்கலம். எல்லாவற்றையும் 
படைத்த கடவுளே அடைக்கலம்; நெற்றிநாட்டத்தையுடைய சிவபெருமான் பெற்றருளிய கடவுளே அடைக்கலம் 
அடைக்கலம்.

    தேவாதி தேவரே அடைக்கலம்; சூக்கும சித்தாயுள்ள கடவுளே அடைக்கலம்; பகைவர்களாகிய பாம்புகளுக்கு 
இடியேறு போல்பவரே அடைக்கலம்; வேற்படையையுடைய நிருமலரே அடைக்கலம்; பொய்யடிமையில்லாத
 புலவர்களுக் கெளியவரே அடைக்கலம்; பன்னிரண்டு திருப்புயங்களையுடையவரே அடைக்கலம்; மும்மூர்த்திகளுமாய் 
நின்ற முதல்வரே அடைக்கலம் அடைக்கலம்.(கண்ணினர்க் கினியா யோலம் ஞானநாயகனே யோலம் - பண்ணவர்க் 
கிறையே யோலம். பரஞ்சுடர் முதலே யோலம். எண்ணுதற் கரியா யோலம். யாவையும் படைத்தா யோலங் - 
கண்ணுதற் பெருமானல்குங் கடவுளே யோலமோலம். தேவர்க டேவே யோலஞ் சிறந்த சிற்பரனேயோலம் - 
மேவலர்க் கிடியே யோலம் வேற்படை விமலா வோலம் - பாவலர்க் கெளியா யோலம். பன்னிரு புயத்தா யோலம்-
மூவரு மாகிநின்ற மூர்த்தியே யோலமோலம்.) 

    சூரபன்மன் இராக்காலத்திலெழுந்த மேகம்போலச் செறிந்த இருளுருவில் மறைந்துவந்து எங்களை 
உண்ணும்படி செல்வான்; அடியேங்கள் அவனுக்குத் தப்பியோடவும் வலிமையில்லோம்; சுவாமீ இனி எங்கே 
உய்வோம்; இறைப்பொழுதும் நீர் தாமதஞ் செய்யாதொழியும்; அவனுடைய உயிரையுண்டு எங்களுயிரைக் 
காத்தருளும்" என்று பிரார்த்தித்தார்கள். "தேவரீர் சிறிது காலதாமதஞ் செய்தால் இருளில் மறைந்து நின்று 
எல்லாவற்றையுந் தானே யுண்பான். இதனைத் தேவரீர் திருவுள்ளஞ் செய்திலீர் போலும். இப்பகைவனுடைய
உயிரை விரைந்து கவருதிர்'' என்று மயிலுருவங்கொண்டு சுப்பிரமணியக் கடவுளைத் தாங்குகின்ற இந்திரன் 
அவரைத் துதித்தான்.

    அத்தேவர்களுடைய வேண்டுகோளையும் சூரபன்மனுடைய மாயையின் வலியையும் முருகக்கடவுள் 
திருவுள்ளத்தடைத்து, தம்முடைய ஒரு திருக்கரத்திலிருக்கும் வேற்படையை நோக்கி, 'இச்சூரபன்மனுடைய 
மார்பைப் பிளந்து விரைவில் மீள்வாய்" என்று அதனை அவன்மீது விரைவிற்றூண்டினார். அவ்வேற்படை 
ஆயிரகோடி சூரியர்களைப்  போலப் பிரகாசித்து, அக்கினிச் சுவாலைகளைக் கான்று செல்ல, 
சூரபன்மன் கொண்ட பெரிய இருள்வடிவ முற்றும் உடனே நீங்கியது. அவன் தன்னுடைய மாயம் அழிந்ததையும், 
வேற்படை எதிரே வருவதையும் நோக்கி, ''அழியாத வரத்தினையுடைய என்னை இப்பாலகன் விடுத்த 
வேற்படை என்ன செய்யும்" என்று நினைத்துச் சிரித்துப் பெருஞ்சீற்றங்கொண்டு, "பூமியையும் திக்குக்களையும் 
மேல்கீழுலகங்களையும் பிரமன் முதலாகிய உயிர்களோடு அழித்து அதன்மேல் இவ்வேற்படையை அழிப்பேன்" 
என்று, சமுத்திர மத்தியிற் சென்று, அக்கினிபோலத் தளிர்களையும் புகைபோல இலைகளையும் பொன்போலப் 
பூங்கொத்துக்களையும் ஈன்று மரகதமணிபோலக் காய்த்து, மாணிக்க மணிகள்போலப் பழுத்து, மேகங்களைப் 
போலக் கொம்பர்களைப் போக்கி, அண்டகூடமளவும் உயர்ந்து, திகந்தம் வரையும் வளார்களை நீட்டி, 
ஆதிகூர்மம்வரையும் வேர்களை ஓட்டி, பச்சிலைகள் நெருங்கி, கொம்பர்களின் சூழ்வினாற் சமுத்திரங்களிலும்
 விண்ணிலும் மண்ணிலும் நிழலைப் பரப்பி, முருகக்கடவுள் விடுத்த வேற்படைக்கு முன்னரே பருத்த அரையையுடைய 
ஒருமலைபோல இலக்ஷம் யோசனை அகன்ற அரையினையுடைய ஒரு மாமர வடிவாய் நின்றான். 

    இங்ஙனம் மாமரவடிவாய் நின்ற சூரபன்மன் தான் இறப்பதைச் சிந்தியாதவனாய், ஆதிசேஷன் 
பாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தவும், பிரசண்டமாருதம் வீசவும், கொம்பர்களால் ஆகாயத்தையும் 
திசைகளையும் மோதி, தலைமுதல் அடிவரையும் மிகவுந் தள்ளாடி, பலசிகரங்களோடு கூடிய மேருமலை 
அசைந்தாற்போலத் தன்வடிவை யசைத்தான். அதனாற் பூவுலகங்கள் இடிந்து சரிந்தன; ஏழுபாதலங்களும் 
பொடிந்தன; ஆதிகூர்மமும் நாகங்களும் புரண்டன; திக்குயானைகள் அழிந்தன; சமுத்திரங்கள் கரைபுரண்டு 
ஒன்றாயின; சீவராசிகள் மடிந்தன; மலைகள் மறிந்தன; நக்ஷத்திரங்கள் உதிர்ந்தன; கிரகங்கள் தலைநடுங்கி ஓடின; 

    சூரியன் தேரோடு குதிரையுந் தானுமாய்த் தியங்கினான்; சந்திரன் தான் ஏறிச்செல்லும் விமானத்தை 
நீங்கி ஓடினான்; மற்றைத் தேவர்கள் அஞ்சி மேருமலையிலும் கைலாச மலையிலும் புகுந்தார்கள்; பெருமையையிழந்த 
சுவர்க்க வுலக முழுதும் அழிந்தன; அதற்கப்பாலுள்ள தவலோகமும் சத்திய லோகமும் வைகுண்டலோகமும் 
பிளந்து வீழ்ந்தன; இனிச் சொல்வதென்னை? அண்ட முகடும் தகர்ந்தது. இவ்வாறாகச் சமுத்திரத்தின் மத்தியில் 
மாமரவடிவாய் நின்ற சூரபன்மனுடைய செயலையும் உருவையும் மனக்கொள்கையையும் வலியையும் சீரையும் 
தேவாதி தேவராகிய முருகக்கடவுள் விடுத்தவேற்படை நோக்கி, கொடிய கோபத்தை விளைத்து, தேயுவண்டங்களும் 
பிருதிவியண்டம் ஆயிரகோடியிலுமுள்ள அக்கினிகளும் ஒருங்கு சேர்ந்தாற்போல மேலேயுயர்ந்தொழுகி, 
பெரியோர்கள் அஞ்சத் தக்க தோற்றத்தைக் கொண்டு நடந்தது. 

    அது பிருதிவியண்டங்களையும் ஏனைப்பூதவண்டங்களையும் அவற்றிலுள்ள ஆன்மகோடிகளையும் 
அழிக்கும்படி தோன்றும் சங்கார கருத்தாவாகிய உருத்திர மூர்த்தியைப் போலவும், ''நாமே பரம்பொருள்" 
என்று தருக்குற்ற பிரமவிஷ்ணுக்களாகிய இருவரும் அஞ்சிநீங்க முடிவும் முதலுமின்றி யெழுந்த அருணாசலம் 
ஆகாயத்திற் சென்றாற் போலவும், சென்றது. பிரமவிஷ்ணுக்களுடைய வலிமையைச் சோதித்த சிவபெருமானுடைய 
சூலமேயென்பதல்லது, பிறவிப் பிணியையுடைய மற்றையெந்தத் தேவர்களுடைய படையை அதற்கு உவமையாகச் 
சொல்வது! 

    அவ்வேற்படை பூமியும், ஏழ்கடல்களும், பெரும்புறக்கடலும், வானுலகமும், மலைகளும், எண்டிசைகளும், 
அண்ட அடுக்குக்களும் ஆகிய எவ்விடங்களிலும் அக்கினிச் சுவாலைகளின் கற்றைகளை ஒருங்கே கக்கியது. 
அவைகள் பூமியிற் பரந்தன; சமுத்திரங்களைச் சுற்றின ; திசைகளிலும் ஆகாயத்திலும் சூழ்ந்தன. கைலாசமலை 
யொன்று தவிர மற்றைமலைகளெல்லாவற்றினுஞ் செறிந்தன; அண்டச்சுவரிலும் பற்றின. இவ்வாறாக 
அவ்வேற்படைக்கடவுள் கோபத்தோடு சென்று, சூரபன்மனாகிய மாமரத்தைச் சங்கரித்தது. 

    மாமரவடிவாய் அண்டகூடத்தையும் அலைத்த சூரபன்மன் அரற்றுதலோடு வெட்டுண்டு வீழ்ந்தும் 
முன்னாளிற் பெற்றவரத்தினால் இறந்திலன் என்றால், பெருமையாகிய தவமேயன்றி வலியது பிறிதொன்றுண்டோ! 
சூரபன்மன் தான் கொண்ட மாமரவடிவு அழிதலும், மனத்திற் கோபம் மிக விரைந்து தன் பழையவடிவைக்கொண்டு, 
உடைவாளை உறையினின்றுங் கழற்றி, போர் செய்ய எண்ணி, ஆர்த்து எதிர்த்துச் சீறினான். வேற்படை அவனுடை
 மார்பைப் பிளந்து உடம்பை யிருகூறாக்கிச் சமுத்திரத்தில் வீழ்த்தி, வேதங்கள் எங்கும் கோஷிக்க வானுலகிற்போய், 
தேவர்கள் துதித்துச் சிந்துகின்ற பூமழைகளுக்கிடையே சென்று, உக்கிரவடிவம் நீங்கி, அனுக்கிரக வடிவங்கொண்டு, 
தேவகங்கையில் மூழ்கி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கியருளிய எம்பெருமானாகிய முருகக்கடவுளுடைய 
திருக்கரத்தில் வந்து வீற்றிருந்தது.

    சிவபெருமான் கொடுத்த வரத்தினால் அழியாத சூரபன்மன் மீட்டுமெழுந்து, சுப்பிரமணியக்கடவுளுக்கு 
அடிமைப்படும் முறையிற் சேர்த்துகின்ற முன்னையூழ் செலுத்துதலினாலே பிளவுண்ட தன் இரண்டுகூறும் 
கோழியும் மயிலுமாகி, மாணிக்கமலையொன்றும் மரகதமலையொன்றும் கால்களையும் சிறைகளையும் 
பெற்று மேகங்கள் அழிய ஆர்த்து முறையே ஆகாயத்திலும் பூமியிலுஞ் சென்றாற்போல, தேவசேனாபதியும் 
அருட்பெருந்தகையும் ஞான நாயகருமாகிய அக்கடவுளை நாடி வைரம்பொருந்திய மனத்தனாய், தேவர்கள் 
அஞ்சி ஓடும்படி போர்ச் செருக்கோடு அவருடைய திவ்விய சந்நிதானத்தில் வந்தான். சுப்பிரமணியக்கடவுள் 
அவன்மீது திருவருணோக்கஞ்செய்தார். 

    அவன் ஞானிகளுடைய தரிசனவேதியினாற் காரிரும்பு செம்பொன்னானாற்போல அத்திருவருட் 
பார்வையாற் பகைமை நீங்கி ஞானம் பொருந்திய மனத்தினனாய் நின்றான்.(எத்துணைத் தீவினைகளைச் 
செய்தோராயினும் சுப்பிரமணியப்பெருமானுடைய திவ்விய சந்நிதானத்தில் வந்தால் தூயோர்களாய் 
மேற்கதியை யடைவாரென்பதை ஆகமப்பிரமாணங் கொண்டு ஆராயவும் வேண்டுமோ! அவரோடு 
இந்நாள்வரையும் போர் செய்த மாயையின் புதல்வனாகிய சூரபன்மனுமன்றோ அவருடைய எல்லையில்லாத்
 திருவருளைப்பெற்று உய்ந்தான்.) அப்பொழுது, அறுமுகக்கடவுள் தம்முடைய திருவருளினாலே ஞானத்தைப் 
பெற்ற கோழியை நோக்கி, "நீ விரைவிற் கொடியாய் நம்முடைய தேரிற்போய்க் கூவுதி'' என்று பணித்தார். 

    அது 'இப்பணி தக்கதே' என்று சொல்லி ஆகாயத்திலெழுந்து போய், இப்பிருதிவியண்டங்கள் இடியவும், 
இடியேறு அஞ்சவும், கொடியாகிய அக்கினி தேவனும் வெருவவும் ஆர்த்து, அத்தேரின்மீது கொடியாயிருந்தது. 
பின்ப முருகக்கடவுள் இந்திரனாகிய மயிலினின்றும் இறங்கி, ஞானத்தைப் பெற்றுத் தமது குறிப்பின் 
வழியொழுகிநின்ற சூரனாகிய மயிலின் மீதேறி, "நம்மைச் சுமப்பாய்'' என்றுகூறி, அதனை வாகனமாகக் 
கொண்டு பூமியிலும் திசைகளிலும் வானுலகத்திலும் நடத்துவாராயினார். அம்மயில் சமுத்திரங்கள் உடையவும், 
மேருமலை இடியவும், பூமி வெடிக்கவும், அக்கினி பதைபதைத்தொடுங்கவும், சுழல்காற்றுத் துடிக்கவும், 
அண்டகூடம் நடுங்கவும், ஆதிசேடனும் மற்றைப்பாம்புகளும் பதைக்கவும், இராகுகேதுக்கள் உட்கவும், கலாபத்தைவீசி, 
இடித்தொகைகள் புரள ஆர்த்து,உலாவியது. வேலாயுத கரராகிய முருகக்கடவுள் அனந்தகோடி சூரியர்கள் ஒன்றாய்த் 
திரண்டு சூற்கொண்ட மேகங்களையுடைய ஆகாயத்திற் செல்லுந் தன்மைபோல மரகதமணியொளிமிகுந்த 
மயில்வாகனத்தின்மீது வீற்றிருந்துகொண்டு அதனைச் செலுத்தினார். 

    விட்டுணுவானவர் பூமியையும் பிரமாவையும் படைக்கும்படி முகிலுருக்கொண்டு பலநாட் பரமசிவனைச்
சுமந்ததுபோலச் சூரனாகிய மயில் வீராதிவீரராகிய முருகக்கடவுளைச் சுமந்தது. ஏழுகடல்களிலும் பொருந்திய 
வடவாமுகாக்கினிகள் முழுதும் ஒரேவடிவாய் அக்கடல்களின் மீது வந்தாற்போல மயில்வாகனாரூடராய் 
எழுந்தருளிவந்த அறுமுகக்கடவுள் மீண்டு மகேந்திரபுரியிலுள்ள போர்க்களத்தை யடைந்து, மயிலுருவாயும் 
கோழியினுருவாயும் நின்ற இந்திரனையும் அக்கினியையும் நோக்கி, "விரைவில் உங்கள் பழையவடிவை யடைகுதிர்'' 
என்று அருளிச்செய்தார். 

    அவர்களும் அப்பொழுதே பழைய வடிவங்களைக் கொண்டு, அக்கடவுளுடைய திருவடிகளில் வீழ்ந்து 
பலகால் வணங்கித் துதித்து அஞ்சலித்து, மனமும் என்பும் உருகவும், கண்களில் ஆனந்தபாஷ்பம் சொரியவும், 
உரைதடுமாறவும், உடல் புளகமரும்பவும், மதுவையுண்ட வண்டுகள்போல மிகுந்த மகிழ்ச்சியிற் சிறந்து 
நின்றார்கள். வேற்படையையுடைய அறுமுகக்கடவுள் சூரபன்மனைச் சங்கரித்து மயிலை வாகனமாகச் 
செலுத்திக்கொண்டு வந்ததை அப்போர்க்களத்திலே நின்ற இதர கணங்களும் மற்றைவீரர்களும் வீரவாகுதேவரும் 
கண்டு, அவருடைய திருவடிகளைச் சென்று வணங்கி, ஆரவாரித்துச் சூழ்ந்தார்கள்.

        திருச்சிற்றம்பலம்.

        தேவர்கள் போற்றுபடலம்.

    தமக்கொரு சிறிதும் நிகரில்லாத நிருமலராகிய அறுமுகக்கடவுள் வேற்படையினாற் சூரபன்மனுடைய 
உடலைப்பிளந்து அழகிற்சிறந்த மயில்வாகனாரூடராய்த் தோன்றும்பொழுது, அரிபிரமேந்திராதிதேவர்கள் 
தங்கள் கண்களுக்கு ஓர் அரிய அமிர்தத்தைப் பெற்றாற்போல அவருடைய திருக்கோலத்தைத் தரிசித்து, 
ஆரவாரித்தெழுந்து, துள்ளி ஆடிப் பாடி, புளகரும்பி, புஷ்பமழைகளைப் பொழிந்து, திருவருளை நினைத்து 
அக்கடவுளைத் தொழுது வந்து சூழ்ந்து, மகிழ்ச்சியிற் சிறந்து, தோத்திரஞ் செய்வாராயினர்: 

    "எம்பெருமானே தேவரீர் வேற்படையை  விடுத்துச் சூரபன்மனைச் சங்கரித்தீரல்லீர்; வணங்குகின்ற 
அடியேங்களுடைய வினையின் வேரைச் சங்கரித்தீர். இனி எமக்கு வேறோர் குறையுண்டோ! வலிய அவுணர்கள் 
நூற்றெட்டு யுகங்காறும் ஒழியாமல் துன்பங்களையே செய்ய, தெளிவிக்கும் வாயில் ஒன்றுமின்றித் திரிந்த 
அடியேங்களை ஆளுதற்கன்றோ எம்பெருமானே தேவரீர் அறுமுகங்கொண்டு திருவவதாரஞ் செய்தருளினீர். 
எம்பரமபிதாவே, நீதியில்லாத அசுரர்கள் செய்த பல தீமைகளினின்றும் நீங்கினோம்; பழிகளை அகன்றோம்; 
வேதாசாரத்தையும் பழைய செல்வங்களையும் பெற்றோம்; எங்களுக்கு இனி யாதோர் குறையுமில்லை.
 அவுணர்கள் மிகவும் வருத்த இந்நாள்காறும் இறந்தவர் போலப் புலம்பித் திரிந்தோம். இன்றைக்குச் சூரபன்மனைக் 
கொன்று, தேவரீர் எமக்கு அருள் செய்தமையினால் நீங்கிப்போன உயிர் மீண்டு வந்த தன்மையையடைந்தோம். 

    காண்பானும் காட்சியும் காட்டுவானும் காட்சிப்பொருளும் ஆகிய இவையெல்லாம் தேவரீரேயென்பதை 
எம்பெருமானே அடியேங்கள் அறிந்தோம். அதனால் இனி வெவ்விய பிறவியினின்றும் நீங்கி மோக்ஷத்தையும் 
அடைவோம். எம்பெருமானே, எங்களுக்குத் துன்பத்தைச் செய்த அவுணர்கள் யாவரும் அழியும் வகையைச் செய்து 
அடியேங்களைக் காத்தருளினீர். இனி வேறொன்றையும் வேண்டோம். மேலாகிய தேவரீருடைய திருவடிகளுக்கே 
தொண்டு பூண்டோம்; இனிய பிறரைப் புகழோம்" என்று அரிபிரமேந்திராதிதேவர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு 
தோத்திரஞ் செய்தார்கள். வேலாயுத கரராகிய முருகக்கடவுள் அதனைத் திருச்செவிமடுத்து, அவர்களுக்குத் 
தம்முடைய பெருங்கருணையைப் பாலித்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            இரணியன் புலம்புறு படலம்.

    இவ்வாறாகிய சமயத்தில், மகேந்திரபுரியில் இறவாதொழிந்த அவுணர்களிற் சிலர் விரைந்து சென்று, 
"சுப்பிரமணியக்கடவுள் விடுத்த வேற்படையினாற் சூரபன்மன் இறந்தான்' என்பதனை அவன் பட்டத்துத் 
தேவியாகிய பதுமகோமளைக்குச் சொன்னார்கள். அவள் அவனுடைய மற்றை மனைவியர்களோடும் 
அவ்வார்த்தையைக் கேட்டு, அது செவியிற் புகுதற்கு முன் இடியேறுண்ட பாம்புபோல உயிர் நீங்கினாள். 
மனைவி நாயகன்மாட்டுச் செய்யும் அன்பினுள் தலையன்பு அதுவன்றோ! சூரபன்மனுக்கு மனைவியர்களாய் 
அங்குள்ள மற்றைப் பெண்கள் வயிற்றிலடித்தழுது, அக்கினிக்குண்டமொன்றை உண்டாக்கி, முன்பு இறந்த 
பதுமகோமளையினுடம்பை அதிலிட்டு, தாமும் வீழ்ந்திறந்தார்கள். அப்பொழுது மாலைக்காலமாயிற்று.         
அந்நகரலக்ஷுமி நீங்கினாள். இது நிற்க.

    இரணியன் தன்பிதா இறந்ததனையும், அவன் சேவலும் மயிலுமாய்ச் சுப்பிரமணியக்கடவுள்மாட்டு 
வந்ததனையும், கண்டு கலங்கி, மனநொந்து, ஆகாயத்தில் நின்று புலம்புவானாயினான்: "மகாராஜனே, 
நன்றென்பதை யறியாய். நான் சொன்ன வாசகங்களொன்றையும் சிறிதும் உறுதியெனக் கைக்கொண்டாயில்லை. 
நீ இறக்கும்படிக்கா சிவகுமாரரோடு போர்செய்தாய். நீ முன்போலிருக்க யான் காண்பது என்றைக்கு. முன்பு 
உன்பக்கமாய் நின்று பகைவர்களுக்கு அஞ்சாது போர்செய்து அதனாற் பெரும் பழியினின்றும் நீங்காதேனாய் 
என்னுயிரைப் பாதுகாக்கக் கருதி அவர்களுக்கு ஒளித்தோடிய யான், 'இவன் தன் பிதாவினிடத்து அன்புடையன்
போலும்' என்று அயலார் எடுத்துச் சொல்லுமாறு இப்பொழுது துன்புடையேன்போலத் துயரமுற்றயருகின்றேன். 

    பகைவர்களுடைய வலிமையைக் கண்டு உன்னைப் போரிலே பாதுகாவாதொளித்தோடிய 
அறிவிலியாகிய என்முன்னே வெளிப்படாமல் எங்கேயொளித்தாய். பிதாவே சொல்லுதி. பிறப்பாற் 
புத்திரன்போன்று செயலாற் கூற்றுவன்போன்ற என்னை இன்னுங்கூட எண்ணுகின்றனையோ! 
திருக்கரத்திலே அக்கினியையேந்திய சிவபெருமான் தந்தவரம் மெய்யாம். நீ ஒருக்காலும் இறவாய். 
அவருக்குப் புதல்வரென வந்து தோன்றிய கந்தசுவாமி அவையெல்லாம் பொய்யாகும் வண்ணம் 
உனக்குக் கூற்றுவராயினாரே. நிலையில்லாத உடம்பை நிலையெனக் கருதிப் பலருங்கண்டு பழிக்கும்படி 
உனக்குஞ் சொல்லாமல் ஒளித்தோடினேன். நீ இறந்தபின் வந்தேன். 

    ஆராய்ந்தால் நல்லவர்களுள்ளே நல்லவன் நானல்லவா! கொடியர்களாகிய அவுணர்களுள்ளே 
மிகவும் வஞ்சகனேயாகிய கொடியேன் நீ இறந்தபின்பு சிநேகன்போன்று இரங்கி மீண்டுவந்தேன். உனக்கு 
என்னைப் புத்திரனென்பது பூமிக்குப் பாரமன்றோ! அரிபிரமேந்திராதி தேவர்கள் "வாழ்க" என்று தோத்திரஞ் 
செய்ய வீற்றிருந்த நீ சிவகுமாரருடைய தேரிலே கோழியாய் நின்று விலாவொடியக் கூவுகின்றனையோ! 
அண்டத்திலுள்ள உயிர்களெல்லாம் வந்து வணங்க அதனாற் காழ்ப்படைந்த திருவடிகளையுடையனாய் 
வீற்றிருக்கும் நீ வேலாயுத கரராகிய சுப்பிரமணியக்கடவுளை மயில்வாகனமாய் நின்று சுமக்கின்றனையோ!

    தோன்றாலோ! இந்த அபஜயம் மேலே விளையுமென்று உனக்கு வினயத்தோடு முறையாகச் சொன்னேன். 
அதனைச் சிறிதுங் கேட்டிலையே. பகைவராய் வந்த சிவகுமாரரோடு போர்செய்து தோற்றாயே. அதனாற்றான் 
அவரை மயிலாய்ச் சுமக்கின்றனையோ! ஒப்பில்லாத வடிவத்தை இழந்து வேறுபட்ட பக்ஷிகளின் வடிவை எடுத்தாய். 
ஆதலால்,நீ இறந்தாயன்று. அதனால் யான் செயற்பாலதாகிய அந்திய கருமத்தைச் செய்யும் பேற்றையும் பெற்றிலேன். 
இவ்வுயிரை வீணாகப் பேணினேன். என்பிதாவே நீ சிவகுமாரரை மயிலாய்ச் சுமக்கும்போது, முன்னே நீ இகழ 
நான் உனக்குச் சொல்லியவைகளை உன்மனத்தில் எண்ணுகின்றனையோ எண்ணாயோ. 

    மிகுந்த கோபம், போர்க்குரிய பகை, மானம், வெற்றி, அகந்தை, வலிமை ஆகிய இவைகளெல்லாம் 
சிவகுமாரரிடத்துச் சென்ற உன்னை அடைந்தன வில்லை. அவையெல்லாம் எங்கே போயின! எனக்கு அதனைச் 
சொல்லுதி" என்று இரணியன் ஆகாயத்தில் நின்று புலம்பிப் பெருமூச்சுவிட்டு, "பூதர்கள் கண்டால் என்னைத் 
தின்று தங்கள் சினந்தீர்வார்கள்" என்று எண்ணி, முன்போலச் சமுத்திரத்திற்போயொளித்தான். அதன்பின் 
அவன் உடனே வருத்தத்தோடு சுக்கிராசாரியரை அடைந்து, இறந்த தந்தையர்களுக்கும், துணைவர்களுக்கும், 
தாயர்களுக்கும், ஏனையோர்க்கும் செயற்பாலனவாகிய உத்தரக்கிரியைகளை விதிப்படி செய்து, 
"துன்பத்திற்கோர் வித்தாகும்" என்று செல்வத்தை வெறுத்து, சிவபெருமானைத் தியானித்துத் தவஞ்செய்து 
மோக்ஷத்தையடையும்படி ஓர்சாரிற் போயினான்.

            திருச்சிற்றம்பலம்.

            மீட்சிப்படலம்.

    சூரனாகிய மயில்வாகனத்தின்மீது இவர்ந்தருளிய அறுமுகக்கடவுள் வீரவாகுதேவரை அன்பினோடு
 பார்த்து, "வீரனே, இதனைக் கேட்பாய் . சூரபன்மன் அரிதாக ஈட்டிய செல்வம்போலப் பெரிய சிறையிலே பாதுகாத்து 
வைப்ப அதனால் வருந்திய சயந்தனையுந் தேவர்களையும் அச்சிறையினின்றும் மீட்டுக்கொண்டுவருவாய்'" 
என்று கட்டளையிட்டருளினார். வீரவாகுதேவர் அதனைக்கேட்டு, நன்றென்று அவரை வணங்கி, மிகமகிழ்ந்து 
விடைபெற்றுக்கொண்டு போர்க்களத்தை நீங்கி, மகேந்திரபுரியினுட்போய், தருமநெறி தவறிய தீயோர்களாகிய 
அவுணர்கள் நெருங்கிய கோயிலினுட்புகுந்து, சயந்தனுந் தேவர்களும் வருத்தமுற்றிருக்கின்ற சிறைச்சாலையை 
அடைந்தார். 

    அடைந்த வீரவாகுதேவருடைய தன்மையை நோக்கித் துன்பந்தீர்ந்த சயந்தனுந் தேவர்கள் யாவரும் 
ஆச்சரியமடைந்து, கால்களிற் பூட்டிய விலங்குகள் ஒடிய அவரை அஞ்சலித்து, 'வீரரே சிறையிலகப்பட்ட நம்முடைய 
துன்பத்தை நீக்குதற்கு இங்கே வந்தீரோ" என்று ஆரவாரித்தெழுந்து கூறினார்கள். அதனை வீரவாகுதேவர் கேட்டு, 
தேவர்காள், நீவிர் யாவரும் வம்மின்கள் வம்மின்கள். நும்மை வருத்திய கொடிய சூரபன்மனை அவுணசேனைகளோடும் 
எம்பெருமானாகிய அறுமுகக்கடவுள் வேற்படையினால் இப்பொழுதே சங்கரித்தார்." என்று கூறினார். சயந்தன் 
முதலிய தேவர்கள் அதனைக் கேட்டு, சதேகமுத்தியடைந்தவர்போல மகிழ்ந்து, கால்களிற் பிணித்த விலங்குகளின் 
மூட்டுக்களை அறுத்து, மகேந்திரபுரியை நீங்கிச் சென்றார்கள்.

     சிறைக்களத்தினின்று நீங்கிய சயந்தன் முதலிய தேவர்களும் அரம்பையர்களும் அவ்விடத்தைவிட்டுப் 
போர்க்களத்தையடைந்து, அறுமுகக் கடவுளுடைய திருவடிகளை மும்முறை நமஸ்கரித்துத் துதித்து மகிழ்ந்து 
விளங்கினார்கள். அக்கடவுள் அவர்களுக்குப் பேரருள் புரிந்து நோக்கி, "கொடியனாகிய சூரபன்மனுடைய 
சிறையிலே பலகாலம் அகப்பட்டு மிகப்பெரிய துன்பத்தில் மூழ்கினீர். இனித்துன்பமின்றிச் சுவர்க்கலோக 
பாக்கியத்தில் என்றும் இருந்து வாழுதிர்' என்று அருளிச்செய்தார். இந்த அருமைத் திருவாக்கைக் கேட்ட தேவர்கள் 
களிப்படைந்து, "அடியேங்கள் உய்ந்தோம்" என்று மீட்டும் அவரை வணங்கினார்கள். 

    இந்திரன் உதைக்கண்டு, பழைய துன்பங்களெல்லாம் நீங்கி, மனத்திற் சந்தோஷமடைந்து, இந்திர பாக்கியத்தைப் 
பெற்ற அந்நாளிலும் இனிமையோடு இருந்தான். அவ்விந்திரனைச் சயந்தன் வணங்கினான். அவன் களிப்புற்றுச் 
சயந்தனைத் தழுவி முதுகைத் தடவி, "மகனே பல யுககாலம் சூரபன்மனுடைய சிறையிற்பட்டு இளைத்தாய் போலும்" 
என்றுகூறி, தேவர்கள் யாவரையும் முறைமுறையாகத் தழுவினான்.

    முருகக்கடவுள் சூரபன்மனுடைய போரிலே அந்நாள்காறும் இறந்த பூகசேனைகள் முழுதும் அங்கே 
வரும்வண்ணந் திருவுளஞ்செய்தார். இறந்த பூதகணங்களெல்லாம் வந்துகூடின. அங்ஙனங்கூடிய பூதசேனைகள் 
அறுமுகப்பெருமானுடைய சந்நிதியிலே வணங்கி, சமுத்திரத்திலே ஜலப்பிரவாகங்களெல்லாம் வந்து நெருங்குமாறு 
போலத் தம்மினத்தோடு வந்து செறிவனவாயின. கிருபா சமுத்திரமாகிய சண்முகக் கடவுள் சமுத்திர ராஜனாகிய 
வருணனை நோக்கி, "கொடிய சூரபன்மன் இருந்த மகேந்திரபுரியைப் பிரளயகாலத்திற் பூமியை அழித்தல்போல 
விரைந்து அழித்து நுகருதி'' என்றார். 

    வருணன் நன்றென்று இசைந்து, மேலெழுந்து, மகேந்திரபுரியை அங்குள்ள உயிர்களோடு சமுத்திரத்துள் 
அழுத்தினான். அறுமுகக்கடவுள் அரிபிரமேந்திராதி தேவர்களும் வீரவாகு முதலிய வீரர்களும் தோத்திரஞ்செய்து 
மருங்கில்வரவும், பூதசேனைகள் ஆர்த்து ஒருங்கு செல்லவும், போர்க்களத்தை நீங்கி மகேந்திரபுரியைக் கடந்து, 
இலங்கை நகரத்தையும் சமுத்திரத்தையும் தாண்டி, அழகிற்சிறந்த திருச்செந்திப்பதியை யடைந்து,  
மயில்வாகனத்தினின்றிழிந்து கோயிலிற்போய், இந்திரன் முதலாகிய தேவர்கள் வணங்கித் துதிக்க, 
உலகங்களுக்கு அருள்புரியுங் கருணையோடு திவ்விய சிங்காசனத்தின்மீது இனிதாக வீற்றிருந்தருளினார். 
அப்பொழுது சூரியன் அஸ்தமயனமாயினான்.

    அந்தவேளையில், பிரமா முதலிய தேவர்கள் அறுமுகக்கடவுளை நமஸ்கரித்து, 'தமியேங்கள் 
தேவரீருடைய திருவடித் தாமரைகளை அருச்சனை செய்வோம்" என்று பிரார்த்தித்தார்கள். அவர் நன்றென்று 
அதற்குடன்பட்டார். அத்தேவர்கள் திருமஞ்சனம், சந்தனம், புட்பம், தூபதீபம் முதலாகிய பூசைத்திரவியங்க 
ளெல்லாவற்றையும் கணப்பொழுதினுள் அங்கே தருவித்து, சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசித்த 
குமார தந்திர விதிப்படி சிரத்தையோடு அறுமுகக்கடவுளுக்கு கும்பம் விம்பம் யந்திரம் ஆகிய மூவகையிடத்திலும் 
அவர் திருவுளமகிழ்தற்கேதுவாகிய பூசனையைச் செய்து, திருவடிகளை வணங்கி அஞ்சலித்துத் துதித்தார்கள். 

    சுப்பிரமணியக்கடவுள் அவர்களை நோக்கித் திருவுளமகிழ்ந்து, பேரருள்புரிந்து, 'நீவிர் வேண்டுங் 
குறைகள் உண்டானாற் சொல்லுங்கள்'' என்றருளிச் செய்தார். அவர்கள் "எம்பெருமானே சூரபன்மனைச் 
சங்கரித்து எங்களைக் காத்தருளினீர். இதனால் உம்முடைய மிகுந்த திருவருளைப் பெற்றோம். இனி நமக்கு 
யாது குறையுளது. ஆயினும் இன்னும் அடியேங்களுக்கு ஈந்தருளும் வரம் ஒன்றுளது. தேவரீருடைய அடியேங்களாகிய 
எங்களுடைய உயிர் இவ்வுடம்பில் நிற்குமளவும் உம்முடைய உபயபாதாரவிந்தங்களில் மிகவுந் தலைமையான 
அன்பு எங்கள்மாட்டு இருக்கும்படி வரத்தைத் தந்தருளும்" என்று வேண்டினார்கள். அவர் நன்றென்று இரங்கி 
அருள்புரிந்தார். அரிபிரமேந்திராதி தேவர்கள் யாவரும் குமாரக்கடவுளைத் துதித்துக்கொண்டு அங்கே 
இருந்தார்கள். அற்றை இராக்காலம் விடியச் சூரியன் உதித்தான்.

    அப்பொழுது சர்வஞ்ஞராகிய குமாரக்கடவுள் அங்கே தேவத்தச்சனைக்கொண்டு ஒரு சிறந்த கோயிலை 
அமைப்பித்து, இலிங்கத்திலே சிவபெருமானைப் பிரதிட்டைசெய்து, பஞ்சகௌவியம், சந்தனம் முதலிய 
வாசனைத் திரவியங்கள், புட்பம், திருமஞ்சனம்,நிவேதனம், பீதாம்பரம், மணி, தூபதீபம், கண்ணாடி, சாமரை 
முதலாகிய உபகரணங்களைத் தேவர்கள் கொண்டுவரச் சிவாகமவிதிப்படி அவரைப் பூசித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            யுத்தகாண்டமுற்றிற்று.

 
            ஐந்தாவது

            தேவகாண்டம்.

            திருப்பரங்குன்றுசேர்படலம்.

    நிருமலராகிய அறுமுகக்கடவுள் மேற்கூறியவாறு சிவபூசைசெய்து திருச்செந்தூரை நீங்கி, தேவர்கள் 
முனிவர்கள் சேனைத்தலைவர்கள் முதலாயினார் திருமருங்கிற் சூழ மயில்வாகனத்திலிவர்ந்து, பிரமா 
விட்டுணு இந்திரன் படைவீரர்கள் ஆகிய யாவரையும் பார்த்து, "நீங்கள் உங்கள் உங்கள் வாகனங்களிலேறி 
நமக்குப் பக்கத்தில் வாருங்கள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்கள் யாவரும் தங்கள் தங்கள் 
வாகனங்களில் ஏறி வந்து சூழ்ந்தார்கள். இரண்டாயிரம் வெள்ளம் பூதர்களும் வந்து நெருங்கினார்கள். 
பூதூளியினாற் பொன்னுலகமும் பூழியாயது. குடைகளும் கொடிகளும் ஆலவட்டங்களும் நெருங்கின. 
கொம்பு காகளம் பேரிகை  முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. வாகனமாகிய மயில் கூவுந்தோறும் ஆதிசேடன் 
பயந்து அசைய அம்மயில் மூக்கினாற் பூமியைக்குத்தி அப்பாம்பை ஆராய்கின்றது. 

    கொடியாகிய கோழி மூக்கினால் முகிலைக் கீறி அதனிடத்துள்ள இடியை விதைகளைப் போலப் 
பற்றுகின்றது. யானைகள் பூத சேனைகளுடைய ஆர்ப்பினால் அஞ்சி மயங்கி வீழ்ந்தன. புலிகள் முரசினொலியைக் 
கேட்டு ஓடின. சிங்கங்கள் யானைமுகத்தையுடைய பூதவீரர்கள் செய்யும் பிளிற்றொலியினால் அயர்ந்தன. 
யாளிகள் மான்முகத்தையுடைய வீரர்களின் ஒலிக்குப் பயந்து குரங்குக்கூட்டங்களுட் புகுந்தன. வேதவொலியும் 
தேவர்களுடைய வாழ்த்தொலியும் மற்றையொலிகளும், முருகக்கடவுளுடைய வாகனமாகிய மயிலும் 
கொடியாகிய கோழியும் செய்கின்ற ஒலிகளால் மறைந்தன. மலைகள் பூதர்கள் செல்லுதலால் அசைந்தன. 
இவ்வாறாகச் சேனைகள் முன்னணியிலும் பின்னணியிலும் மருங்கிலும் நெருங்கிச் செல்ல; அறுமுகக்கடவுள் 
திருச்செந்தூரை நீங்கிக் குறிஞ்சி நிலத்தின்வழியாய்ச் சென்று, மதுரைத் திருநகரின் மேற்றிசையிலுள்ள 
திருப்பரங்குன்றத்தை யடைந்தார்.

    அப்பொழுது, அங்கே தவஞ்செய்துகொண்டிருந்த பராசரமுனிவருடைய புதல்வர்களறுவரும், 
பிரமா முதலிய தேவர்களும் சுப்பிரமணியக் கடவுளை வணங்கி, "தேவரீர் இம்மலையிலே வீற்றிருந்தருளும்; 
இது சிறந்த தானம்' என்று விண்ணப்பஞ் செய்தார்கள். அதனை முருகக்கடவுள் கேட்டு, "யாமும் இங்கே 
செல்ல நினைத்தோம், நீவிரும் அதனையே சொன்னீர். உம்முடைய கருத்தும் நம்முடைய சிந்தையும் 
ஒருப்பட்டது நன்று,'' என்று மகிழ்ச்சியோடு கூறி, அத்திருப்பரங்குன்றத்தின் சாரலிலேறினார். 
பூதசேனைகள் அச்சாரலைச் சூழ்ந்து அதன்மேல் ஏறின. தேவத் தச்சன் அம்மலையின்மீது அளவில்லாத 
வீதிகளையும், கோயில்களையும், சோலைகளையும், வாவிகளையும் அமைத்தான். 

    சுப்பிரமணியக்கடவுள் அவனுடைய சிற்பத்தொழிற்றிறமையை நோக்கிக் கருணை செய்து, 
வீதிகளிலே சேனாவீரர்களை இருத்தி, தாம் கோயிலையடைந்து, மயில்வாகனத்தினின்றும் இறங்கி, 
அரிபிரமேந்திராதி தேவர்களும் வீரவாகு முதலிய வீரர்களும் மருங்கில்வரச் சிற்சபையிற்போய்த் 
திவ்விய சிங்காசனத்தின் மீது வீற்றிருந்து, பிரமா முதலிய தேவர்களை அவரவரிடங்களுக் கனுப்பினார். 
வீரவாகுதேவரும், இலக்கத்தெண்மரும், பூதப்படைத்தலைவர்களும், பூதர்களும் அவருடைய திருவடிகளை 
வணங்கிப் பக்கத்தில் நெருங்கி, ஏவல்களைச் செய்துகொண்டு நின்றார்கள். 

    பராசரமுனிவருடைய புத்திரர்கள் அறுவரும் அவருடைய திருவடிகளைப் பூசனை செய்து துதித்து 
நின்றார்கள். முற்றொருங்குணர்ந்த முதற்கடவுளாகிய சண்முகப்பெருமான் அவர்கள் மீது கிருபை பாலித்து, 
சிவபெருமான் முன்னாளில் அவர்களுக்குச் சொல்லியருளிய திருவாக்கைத்* திருவுள்ளங் கொண்டு, 
அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்து, திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்தருளினார். அறுமுகக் கடவுள் 
மகேந்திர புரியை நீங்கிப் பூமியில் வந்ததைச் சொன்னோம். இனி அவர் இந்திரகுமாரியாகிய 
தெய்வயானையம்மையைத் திருமணஞ் செய்ததைச் சொல்வாம்.

*திருவாக்கின்னதென்பதனைச் சரவணப் படலத்திற் காண்க. 

            திருச்சிற்றம்பலம்.


        தெய்வயானையம்மை திருமணப்படலம்.

    இந்திரன் தம்பகைவனாகிய சூரபன்மனைச் சங்கரித்து விண்ணுலக அரசாட்சியைக் கொடுத்தருளிய 
வேலாயுத கரராகிய அறுமுகக்கடவுளுக்குத் தன்மகளாகிய தெய்வயானையம்மையைத் திருமணஞ்செய்து 
கொடுக்க எண்ணி, அவ்விருப்பத்தை விஷ்ணுவும் பிரமாவும் மற்றைத்தேவர்களும் அறியும்படி கூறினான். 
அவர்கள் அதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, "உன்னெண்ணம் நன்று" என்று வியந்து, 'உன்மகளாகிய 
தெய்வயானையும் அறுமுகக்கடவுளைத் திருமணஞ்செய்யும்படி சரவணப்பொய்கையில் முன்னாளிலே 
தவஞ்செய்துவைத்தாள். * அதன் பயன் இப்பொழுது கைகூடியதுபோலும். அவளை இத்திருப்பரங்குன்றத்திலே
திருமணஞ்செய்து கொடுத்தற்கு விரைந்து முயலுதி' என்று சொல்லி, அங்கே இருந்தார்கள். 

*இச்சரித்திரத்தை விடைபெறு படலத்திற் காண்க.


    அப்பொழுது இந்திரன் ஒரொற்றனை நோக்கி, "நீ விரைந்து சென்று மேருமலையிலிருக்கின்ற
 என்மனைவியாகிய அயிராணியை மகளாகிய தெய்வயானையோடு இங்கே அழைத்துவருவாய்'' 
என்று பணித்தான். தூதுவன் இசைந்து மேருமலையிற்சென்று அயிராணியை யடைந்து வணங்கி, 
"நின் மனக்கருத்துக் கிசைந்த நிகழ்ச்சியைக் கேள். சூரபன்மன் இறந்தான். சயந்த குமாரனோடு 
தேவர்கள் சிறையினின்று நீங்கினார்கள். சுப்பிரமணியக்கடவுள் சேனைகளோடு மீண்டுவந்து 
திருப்பரங்குன்றில் வீற்றிருந்தார். அது நிற்க.உனது நாயகர் உன்னை மகளோடு திருப்பரங்குன்றத்துக்கு 
அழைத்து வரும்படி என்னை அனுப்பினார். மகளோடு வருவாய்'' என்றான். 

    இந்திராணி அவ்வார்த்தையைக் கேட்டு ஆச்சரியமுற்று, துன்பம் நீங்கி, எப்பிறப்பிலும் அடையாத 
இன்பமுடையளாய், விரைந்து தன்மகளாகிய தெய்வயானையோடு எழுந்து ஐராவதயானையின்மேல் ஏறி, 
பக்கத்திலே அரம்பையர்கள் காக்க ஆகாய வழியாய்ச் சென்று திருப்பரங்குன்றத்தை யடைந்து, 
தன்னாயகனாகிய இந்திரனுடைய கோயிலிற்போய், தெய்வயானையம்மையோடு அங்கே இருந்தாள்.
மகேந்திரபுரியிலே சூரபன்மனுடைய சிறையினின்றும் நீங்கிய அரம்பையர்கள் மின்னலைக்கண்டு 
மகிழ்கின்ற மயிற்குழாங்கள்போல இந்திராணியினுடைய வரவைக் கண்டு, இன்பம் அடைந்தவர்களாய், 
'நம்முடைய அரசியைப் பெற்றோம். யாம் இனி உய்ந்தோம்'' என்று அஞ்சலித்து, முறைமுறையாக அவளை 
வணங்கினார்கள். 

    அயிராணி தன்குமாரனாகிய சயந்தனைக் கண்டு, தனங்களினின்றும் பாலொழுக அன்பினால் 
அவனைக் கட்டித் தழுவி மகிழ்ந்து, தரித்திரர்கள் முன் புதைத்துவைத்த சேமநிதியைப் பெற்றாற்போலக் 
கவற்சியை நீங்கினாள். மிக்க வறுமையினாற் பசிநோயுழந்தோர் பெருஞ்செல்வத்தைக் கண்டபொழுது 
பெருமகிழ்ச்சியினால் வயிறு நிறையப் பெற்றாற்போல, இந்திரன் தன்பக்கத்தில் வந்த அயிராணியின் 
வடிவத்தைக் கண்டவளவில் அவளைக் கூடினாற்போல மகிழ்ச்சியடைந்தான்.

     பின்பு இந்திரன் முருகக்கடவுள் தன்மகளைத் திருமணஞ்செய்து கொள்ள வேண்டுமென்பதை 
அவருக்கு விண்ணப்பஞ்செய்ய நினைத்து தேவர்களோடு சென்று, அவருடைய திருவடிகளிலே பூக்களைத் 
தூவி வணங்கித்துதித்து, 'எம்பெருமானே தேவரீர் அசுரர்களாகிய களைகளைக் களைந்து இந்தத் தேவர்களுடைய 
சிறையை மீட்டுத் தமியேனுக்குப் பழைய சுவர்க்கவுலக பாக்கியத்தைத் தந்தருளினீர். இவைகளெல்லாவற்றையும் 
சிந்தித்துத் தேவரீருக்குச் செய்நன்றியாகச் சிறியேன் செய்யத்தக்கது யாதாயினுமொன்றுண்டோ! ஆயினும், 
தமியேனுடைய மகளாகிய தெய்வயானை இத்திருப்பரங்குன்றத்தில் வந்திருக்கின்றாள். அவளைத் தேவரீர் 
திருமணஞ் செய்து கலந்தருளும். யாங்கள் உய்ந்து இப்பிறவியினாற் பயனைப் பெற்றவர்களானோம்'' என்று
 விண்ணப்பஞ்செய்தான். 

    சுப்பிரமணியக்கடவுள் இந்திரனை நோக்கி, "அந்த உன்மகளும் நம்மை மணஞ்செய்யும்படி முன்னே 
மிகத் தவஞ்செய்தாள். ஆதலால் நீ கருதியபடியே நாளைக்கு அவளை மணஞ்செய்வோம்" என்று அருளிச்செய்தார். 
அதனை இந்திரன் கேட்டு, அளவு கடந்த மகிழ்ச்சியுற்று, அதனாற் செருக்கடைந்து, அக்கடவுளுடைய 
திருவடிகளைச் சிரமேற்சூடி, 'முதல்வரே அடியேங்கள் சிறப்புற்றோம்" என்று கூறி, வாய்தலிலே வந்து, 
மிகவிரைந்து செல்லுகின்ற பலதூதுவர்களுடைய முகத்தை நோக்கினான். அவர்கள் அவனை வணங்கி நின்று, 
"நம்மரசனே, தமியேங்கள் செய்யும் பணி யாது?'' என்று வினாவினர். 

    அவன் அவர்களை நோக்கி, "திருக்கைலாச மலையிலிருக்கின்ற முசுகுந்தச் சக்கிரவர்த்தி முதலாகிய 
பூவுலக அரசர்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மற்றையெவ்விடங்களிலும் இருப்போர்க்கும், 
'எம்பெருமானாகிய சுப்பிரமணியக்கடவுளுடைய திருமணம் நாளைக்கு' என்று சொல்லி, அவர்கள் யாவரையும் 
விரைந்து இத்திருப்பரங்குன்றத்திற்கு அழைத்து வருதிர்' என்று பணித்தான். அத்தூதுவர்கள் நன்றென்று 
வணங்கிப் போயினார்கள். இந்திரன் தேவத்தச்சனை அழைத்து, அறுமுகக்கடவுளுடைய திருக்கல்யாணத்திற்கு 
ஏற்ற அலங்காரங்க ளெல்லாவற்றையும் செய்வாய்" என்றான். 

    விசுவகன்மன் அதனைக்கேட்டு, அத்திருப்பரங்குன்றத்தின் ஓர்சாரில் பசும்பொன்னால் நிலம் படுத்து, 
நவரத்தினங்களை இழைத்து அழகுபெற ஓர்மண்டபத்தை அமைத்து, மேலிடங்களிலே பலநிற விதானங்களைக் 
கட்டி, மாலை சாமரம் முதலியவற்றைத் தூக்கி, ஆலயத்தின் நடுவிலே அறுமுகக்கடவுள் வீற்றிருத்தற்குச் சிற்பநூல் 
விதிப்படி ஓராசனத்தை யமைத்தான். அதன்பின் அவருக்குப் பக்கத்தில் வருகின்ற விஷ்ணு பிரமா முதலிய 
தேவர்களும் பிறரும் இருத்தற்கு ஏற்ற ஏற்ற இடங்கடோறும் அளவில்லாத ஆசனங்களைச் செய்தான். திருக்கல்யாண
 மண்டபத்துக்குப் பக்கத்திலே பல கோபுரங்களை அமைத்தான். அனேக இரத்தினமண்டபங்களையும் எண்ணில்லாத
சபைகளையும் அமைத்தான். 

    கால நியதியின்றி யாவர்க்கும் நினைத்தபொழுதெல்லாம் தம்பயன்களைக் கொடுக்கின்ற சோலை, 
வாவி, சுனை ஆகிய இவைகளின் றொகுதிகளை இயற்றினான். அத்திருக்கல்யாணத்திற்கு வேண்டிய 
பிறவற்றையும் உண்டாக்கினான். இந்திரன் அவற்றை நோக்கி மகிழ்ந்து, திருக்கல்யாணத்திற்கு வேண்டும் 
உபகரணங்களெல்லாவற்றையும் விரைவில் வருவித்தான். இந்திரனுடைய இச்செய்கை நிற்க; அவனுடைய 
தூதுவர்கள் முன்னே சென்று திருமணம் சொல்லுதலும், அதனைத் தரிசிக்கும்படி முசுகுந்தச் சக்கிரவர்த்தி 
வருஞ்சிறப்பை இனிச் சொல்வாம்.

    முன்னொருநாளிலே திருக்கைலாசமலையிலுள்ள சோலையிலே சிவபெருமானும் உமாதேவியாரும் 
எல்லையில்லாத மகிழ்ச்சியோடு வீற்றிருந்தார்கள். அங்குள்ள வில்வமரங்களின் சினைகளிலே முசுவின் 
கூட்டங்கள் தங்கின. அவற்றுள் முனிவர்களைப் போல முள்காந்திருக்கின்ற ஒரு ஆண் முசு அவரிருவர் மீதும் 
அளவிறந்த வில்வ பத்திரங்களைப் பறித்துச் சொரிந்துகொண்டிருந்தது. அதனை உமாதேவியார் பொறாராய்ச் 
சிறிது சினஞ் செய்தார். அவருடைய செய்கையைச் சிவபெருமான் பார்த்து, "சத்தியே இங்கே நம்மை அருச்சனை 
செய்கின்ற இம்முசுவை நீ கோபிப்பதென்னை? இதனைத் தவிருதி." என்றார். என்னலும், உமையம்மையார் 
கோபமிலராகி அதற்கருள்புரிந்தார். 

    கைலாசபதி அம்முசுக்கலையின் மனத்திலுள்ள அஞ்ஞானத்தைக் கெடுத்து மெய்ஞ்ஞானத்தைக் 
கொடுத்தருளினார். ஞானமுதிக்கப் பெற்ற முசுக்கலை வில்வமரச் சினையினின்றும் விரைந்திறங்கி, 
மனநடுங்கி,  பரமபிதாமாதாக்களாகிய பார்வதிபரமேஸ்வரர்களை அன்போடு வணங்கி " பொய்யடியேனாகிய 
தமியேன் செய்த பிழையைப்  பொறுத்தருளும்" என்று பிரார்த்தித்தது. சிவபெருமான் அதனைக் கேட்டு, 
"நீ செய்த இதனைப் பிழையென்று சொல்லற்க, சிறந்த வில்வபத்திரங்களைக் கொண்டு நம்மைப் பூசனை செய்தாய்.
அதனால் நீ மனுவமிசத்திற் பிறந்து உலகமுழுதையும்  அரசாள்வாய் " என்று அருள்புரிந்தார். 

    முசு அத்திருவாக்கைக் கேட்டு, மிகுந்த துன்பத்தையடைந்து விம்மி இரங்கி, நடுங்கி எழுந்து, 
சிவபெருமானை வணங்கி நின்று, எம்பெருமானே, "அடியேன் உங்களை நாடோறும் தரிசனஞ் 
செய்துகொண்டு அழியாத பேரானந்தப் பெருஞ்செல்வத்தோடு இங்கே இருத்தலைவிட்டுப் பூமியிற்போய் 
அழியுமியல்பினையுடைய அச்செல்வ வலையில் அகப்படுவேனாயின், மீட்டு எவ்வாறு பிழைப்பேன்" என்றது. 

    அதனை எம்பெருமான் கேட்டு, "முசுவே, உன்மனக்கிடக்கை நன்று! நீ இப்போது பூமியிற் போய் 
அரசாண்டிருந்து, பின்பு நம்மிடத்து வருதி. வருந்தி வேறொன்றையும் நினையாதே" என்று திருவாய் மலர்ந்தார். 
அப்பொழுது அம்முசுக்கலை " எம்பெருமானே, பொய்யை மறைத்த புலால் மயமாகிய இவ்வுடம்பைப் பேணி அம்மானுடப் 
பிறப்பிலே செய்வன தவிர்வன அறியாது மயங்கா வண்ணம் இம்முசுவின் முகத்தோடு பிறக்கும்படி 
அடியேனுக்குத் திருவருள்புரியும்" என்று பிரார்த்தித்தது. சிவபெருமான் அவ்வரத்தை அதற்குக் 
கொடுத்தருளினார். 

    அம்முசுக்கலை திருக்கைலாசமலையை நீங்கிப் பூமியில் வந்து, வருவாய் குன்றச் செல்வங்கள் 
சுருங்கியும் அதனால் மிகுந்த துன்பத்தை அனுபவித்தும் சத்தியத்தை நிலைநிறுத்திப் பூமியை ஆண்ட
அரிச்சந்திர மகாராஜனுக்கு ஒர் வழித்தோன்றலாய், முகமொன்று மாத்திரம் முசுவினுருவும் மற்றை 
அவயவங்களெல்லாம் மன்மதனிற் சிறந்த அழகுமுடையதாகிப் பிறந்து, முசுகுந்தன் என்னும் நாமத்தைப் 
பெற்றிருந்தது. இவ்வாறு பிறந்த முசுகுந்தன் சோழநாட்டிலுள்ள கருவூரிலிருந்து கொண்டு, 
முடிசூடிப் பூவுலகிலுள்ள எல்லாத் தேயங்களையும் தன்னுடைய தோளின்மேற் சுமந்து, சூரியனிருக்குமிடத்தில் 
ஓரிளம்பிறை இருந்தாற் போலச் சூரபன்மனுடைய ஆணையைக் கடக்கமாட்டாதவனாய் அவனுக்கஞ்சி 
யொழுகினான். அவன் சுப்பிரமணியக்கடவுள் சூரபன்மனைச் சங்கரித்ததைக் கேட்டுப் பழைய கவலை 
நீங்கி மிகுந்த வலிமையைப்பெற்று, தன்னரசுரிமையைச் சிறப்புற நடாத்தியிருந்தான்.

    முசுகுந்தச் சக்கிரவர்த்தி அங்ஙனம் அரசியற்றிக்கொண்டிருக்கு நாளில், இந்திரனுடைய தூதுவர்கள் 
அவன் முன்சென்று வாழ்த்தி, 'மகாராஜனே, யாங்கள் உனது நண்பனாகிய இந்திரனுடைய தூதுவர்கள். உன்
சுற்றமும் நீயும் அழிவில்லாத செல்வத்தோடு வாழ்வாய். நாம் சொல்வதைக் கேள். உனக்கு நல்ல ஓர் 
சோபனத்தைச் சொல்ல வந்தோம். அறுமுகக்கடவுள் சூரபன்மனைச் சங்கரித்துத் திருச்செந்தூருக்கு 
வடதிசையில் வந்து மதுரை மாநகரின் மேற்றிசையிலிருக்கின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்தார். 
அக்கடவுளுக்கு இந்திரன் தன்மகளாகிய தெய்வயானையை நாளைக்குத் திருக்கல்யாணஞ் செய்து 
கொடுக்கின்றான். இந்தச் சோபனத்தை உனக்குச் சொல்லும்படி நம்மை அனுப்பினான். நிகரில்லாத 
அத்திருமணத்தைத் தரிசிக்கும்படி சேனைகளோடு புறப்பட்டுத் திருப்பரங்குன்றத்துக்கு வருவாய்" 
என்று சொன்னார்கள். 

    முசுகுந்தச் சக்கிரவர்த்தி அதனைக்கேட்டு, மனத்தில் மகிழ்ச்சி பொங்க ஆராமையினாலே 
மெய் பனிப்புற்றெழுந்து, தூதுவர்களைத் தழுவி, "இந்தச் சோபனத்திற்காக உமக்கு நான் செய்யும் 
உபகாரம் ஒன்றுமில்லை" என்று கூறி, "இங்குள்ள என் நிதிகளெல்லாவற்றையும் தருவேனோ! 
என்னுடைய குடை சாமரங்களாகிய விருதுகளைத் தருவேனோ! என் அரசியலைத் தருவேனோ! 
நீவிர் விரும்பியது யாது? சொல்லுங்கள்'' என்றான். அதனைக் கேட்டு மகிழ்ந்த தூதுவர்கள் அவனுடைய 
அன்பின் பெருக்கத்தை நோக்கி, ''மகாராஜனே, அரசனுடைய பணியைச் சொல்லுகின்ற தூதுவர்களுக்கு 
நீ சொல்லிய இவைகளெல்லாம் ஏற்பனவல்ல. நீ மிக விரைந்து நம்மரசனாகிய இந்திரனிடத்துச் செல்வதே
 நீ கூறிய இவற்றை நமக்கு உதவியதற்கு ஒப்பாகும்" என்று சொல்லி, அவ்விடத்தை நீங்கி,பூவுலகத்திலுள்ள 
மற்றை அரசர்கள் யாவருக்கும், திக்குப் பாலகர்களுக்கும், ஆகாயத்திற் சஞ்சரிக்கின்ற சூரியன் 
முதலாயினார்களுக்கும், முனிவர்கள் யாவருக்கும் திருக்கல்யாணத்தைச் சொல்லிப் போயினார்கள்.

    இந்திரனுடைய தூதுவர்கள் போய பின்பு, முசுகுந்தச் சக்கிரவர்த்தி தன்னகரவாசிகளும் சேனைகளும் 
சுப்பிரமணியக்கடவுளுடைய திருமணத்தைத் தரிசிக்கச் செல்லுமாறு யானையின்மீது முரசறையும்படி 
பணித்தான். திருவாரூரிலே தியாகராஜப் பெருமானுடைய திருவிழாவில் இந்திரன் யானை மீதேறி 
முரசறைந்து சாற்றித் திரிதல் போல அத்திருமணத்தை வள்ளுவன் கருவூரிலே யானைமீதேறி முரசறைந்து 
சாற்றித் திரிந்தான். அதனைக் கேட்ட அந்நகரத்துச் சனங்களும் அரசனுடைய சேனாவெள்ளங்களும் 
பெரும்புறக்கடலை நோக்கிச் செல்லும் மற்றைக் கடல்களைப்போல ஒருங்கே யெழுந்தன. 

    கசரததுரகபதாதியாகிய நால்வகைச் சேனைகளும் போயின. பல ஆயுதங்களை ஏந்திய 
படைத்தலைவர்களும் வீரர்களும் போயினார்கள். சுப்பிரமணியக் கடவுளுடைய திருக்கல்யாணத்தைத் 
தரிசிக்கவேண்டுமென்னும் ஆசையினாற் பல பெண்கள் பூமியில் நடந்து சென்றார்கள். பலபெண்களும் 
ஆடவர்களும் யானைகளிலேறிச் சென்றார்கள். பலர் பெண்களோடு தேர்களில் ஏறிச் சென்றார்கள். 
பல பெண்கள் பல்லக்குக்களிலும் சிவிகைகளிலும் சென்றார்கள். அத்திருக்கல்யாணத்திற்காகச் 
செல்கின்றவர்களுள், கைகால் முதலிய அவயவங்கள் இல்லாதவர்கள் அவற்றைப் பெற்றும், 
ஊமைகள் பேசப்பெற்றும், குருடர்கள் கண்களைப் பெற்றும், வலிமையில்லாதவர்கள் வலிமையைப் 
பெற்றும் சென்றார்கள். 

    முருகக்கடவுண்மாட்டு அன்பு வைத்தவர்களுக்கு இதுவா அரியது. பாணர்களும் விறலியர்களும் 
யானைகளிலும் தேர்களிலும் ஏறி யாழை வாசித்து இசைபாடிக் கொண்டு போயினார்கள். பலர் கொக்கரை, 
படகம், பேரி, குடமுழா முதலாகிய பலவகைப்பட்ட வாத்தியங்களை இயம்பிப் போயினார்கள். ஆகாயவழிக் 
கொண்டு செல்லுகின்ற தேவர்களும் முனிவர்களும் முசுகுந்தச் சக்கிரவர்த்தியின்மேற் பூமழை பொழிந்தார்கள்.
 இவ்வாறு சனங்கள் யாவும் எங்கும் நெருங்கிச் செல்லும்பொழுது முசுகுந்தச் சக்கிரவர்த்தி தன்னுடைய 
சுற்றத்தார்களும் மந்திரிமாரும் முன்னும் பின்னும் இருமருங்கும் மொய்த்துச் செல்ல; ஒர் தேரின்மேல் ஏறி,
சேனைகளோடும் தன்னகரத்துச் சனங்களோடும் முல்லை நிலத்தையும் மருத நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் 
யாறுகளையும் கடந்து, உச்சிக் காலத்திலே திருப்பரங்குன்றத்தை யடைந்தான். 

    அப்பொழுது மற்றைப் பூவுலக அரசர்கள் யாவரும் சேனைகளோடு அங்குவந்து சேர்ந்தார்கள். முசுகுந்தச் 
சக்கிரவர்த்தி முதலிய அவ்வரசர்கள் ஒருப்பட்ட மனத்தினராய், தம்முடைய நால்வகைச் சேனைகளையும் 
மற்றைச் சனங்களையும் திருப்பரங்குன்றத்தைச்சூழ நிறுத்தினார்கள். அச்சேனைகளெல்லாம் அம்மலையைச்சூழ 
மிக அழகுபெற நிறுத்தப்பட்டன. ஆடவர்களும் பெண்களும் அங்குள்ள சோலைகளிலே படாம்வீடுகளிற்றங்கினார்கள். 
அச்சோலையில் முசுகுந்தச் சக்கிரவர்த்திக்காக ஒருபடாம்வீடு அமைக்கப்பட்டிருந்தது. வணிகர்கள் 
நவரத்தினங்களையும் பொன்களையும் ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் பிறவற்றையும் திண்ணைகளின் 
மேல் வரிசை வரிசையாக வைத்து வியாபாரஞ் செய்துகொண்டிருந்தார்கள். அங்குவந்த சனங்கள் அனைவரும் 
புனல்விளையாடியும் பூக்கொய்தும் அற்றைப் பகற்காலத்தைக் கழிக்க, சூரியன் அஸ்தமயனமாயினான். 
அன்றிரவு ஆடவர்களும் பெண்களும் மது நுகர்ந்து, கூடி மகிழ்ந்து அங்கே தங்கினார்கள். 
இவர்கள் இவ்வாறு இருக்க.

    முசுகுந்தச் சக்கிரவர்த்தி முதலாகிய அரசர்கள் யாவரும் தேரினின்றும் இறங்கித் திருப்பரங்குன்றத்தில் ஏறி, 
தெய்வத்தச்சனால் அமைக்கப் பட்ட நகரத்தின் சிறப்பைப் பார்த்து, திருமணச் சாலையையடைந்து, இந்திரனுடைய 
பாதங்களை வணங்கிக் களிப்படைந்தார்கள். அவன் அவ்வரசர்கள் யாவருக்கும் அருள்செய்து, அவர்களுடைய 
க்ஷேமத்தை வினாவி, பல உபசாரங்களைச் சொல்லி அளவளாவினான். ஆகாயத்திற் சஞ்சரிக்கும் சூரியன் 
முதலிய கிரகங்களும் திக்குப் பாலகர்களும் முனிவர்களும் தேவர்களும் பாதலவாசிகளும் பிறரும் திருப்பரங் 
குன்றத்தை அடைந்து, அதன் மேலேறி, இந்திரனைக் கண்டு தொழுது, களிப்படைந்தார்கள். முனிவர்கள் ஆசிகூறி 
வந்தார்கள். வரையர மகளிர்களும், தேவமகளிர்களும், நீரரமகளிர்களும், திசைகளிலுள்ள பெண்களும், 
இருடி பத்தினிகளும், நாககன்னியர்களும் இந்திராணிக்குப் பக்கத்தில் வந்து நெருங்கினார்கள். 

    தெய்வப்பெண்கள் அயிராணியினுடைய பாதங்களை வணங்கி, தெய்வ யானையம்மையின் 
பக்கத்தில் வந்து, "தெய்வயானையே கேட்பாய், நீ சூரபன்மனுடைய உயிரைக் கவர்ந்த வேலாயுதகரராகிய 
அறுமுகக்கடவுளுக்கு மனைவியாகின்றாய்,எவ்வுலகிற்கும் நீ இறைவியாகும்'' என்று கூறி தனித்தனி 
அவ்வம்மையாருடைய பாதங்களை அன்போடு வணங்கித் துதித்தார்கள். அப்பெண்கள் இயற்கை 
யழகுடையராகிய அத்தெய்வயானை யம்மையாருக்குச் சிறிது செயற்கையழகுஞ் செய்ய நினைத்து, 
அவருடைய மயிர் முடியின் சூழலை விரல்களால் மெல்ல நீக்கி, நாவிநெய்யைப் பூசி, சாந்தையும்
 பச்சைக் கர்ப்பூரத்தையுந் தடவி, பனிநீரினால் அபிஷேகஞ்செய்து, மெல்லிய திருவொற்றாடையினால் 
அந்நீர் புலரும்படி கூந்தலையொற்றி, மாந்தளிர் போலும் அழகும் மென்மையும் காந்தியும் பொருந்திக் 
சாயமூட்டாமல் தெய்வத்தன்மையால் இயற்கையாய்ச் செம்பவளத்தி னிறத்தைக் கொண்ட வஸ்திரத்தை 
உடுத்தி, கூந்தலில் அகிற்புகையை ஊட்டி,சீதேவி,எதிர்முகமஞ்ஞை, வலம்புரி, மகரப்பகுவாய் என்னுந் 
தலைக்கோலங்களைச் சோபனஞ் சொல்லிச் சாத்தி, கோங்கம்பூவையும் வெட்சிப்பூவையுஞ் செருகி, 
வாசனையிற் சிறந்த தெரியல் தொடையல் என்னும் மாலை விசேடங்களைச் சூட்டி, கூந்தலைச் சுழியமாக 
முடித்து, கருஞ்சாந்துப் பொட்டிட்டு, அத்திலகத்தைச் சேரச் சுட்டியைப்பூட்டி, காதிலே புலிமுகப்பணியையும் 
கழுத்திலே முத்துமாலையையும் கரத்திலே வளையலையும் தோளிலே தொடியையும் சேர்த்தி, ஸ்தனங்களிலே 
கலவைச்சாந்தையப்பி, மாலையையும் மணிக்கோவைகளையும் அணிந்து, உத்தராசங்கத்தை அத்தனங்களின்மேற் 
சேர்த்து, பாதங்களில் பாடகம் சிலம்பு பாதசாலம் என்னும் அணிகளைச் சூழ்வித்து, இவ்வாறு அலங்காரஞ்செய்து, 
அவரைத் துதித்தார்கள். இனி இந்திரனுடைய செயல்களைச் சொல்வாம்.

    இந்திரன் பிரமாவை நோக்கி, "திருமணச்சாலை அமைக்கப்பட்டது. எல்லாத் தேவர்களும் வந்தார்கள். 
எம்பெருமானாகிய முருகக்கடவுளுக்குத் திருமணஞ் செய்தற்குரிய முகூர்த்தத்தை ஆராய்ந்து சொல்லும்.'' என்றான். 
பிரமதேவர் அதனைக்கேட்டு, "அறுமுகக்கடவுள் திருமணஞ் செய்தற்கு முகூர்த்தத்தைத் தெரிந்து சொல்வதென்ன! 
எந்த முகூர்த்த மாயினும் நல்லதே. ஆயினும், இந்த நேரம் ஒப்பில்லாத முகூர்த்தம்" என்று சொல்லினார். 
சிருட்டிகர்த்தாவே, ''இம்முகூர்த்தம் சிறந்ததாயின், என் மகளாகிய தெய்வயானையைத் திருக்கல்யாணஞ் 
செய்துகொடுத்தற்குத் தேவாதிதேவராகிய அறுமுகக்கடவுளை அழைத்துக்கொண்டு வரும்படி போவதே 
நமக்குக் கடன்'' என்று இந்திரன் கூறினான். 

    அப்பொழுது விட்டுணுவும் பிரமாவும் "நீ கூறியது நன்று. சுப்பிரமணியக்கடவுளை அழைத்து வரப் 
போவோம்'' என்று இந்திரனோடு எழுந்து, முனிவர்களும் தேவர்களும் சூழ்ந்து முன்செல்லச் சுப்பிரமணியக்கடவுள் 
வீற்றிருக்கும் ஆலயத்தினுட்போய், அவருடைய திருவடிகளை முடிமேற்சூடி வணங்கி, "எம்பெருமானே 
தெய்வயானையைத் திருமணஞ்செய்யும்படி தேவரீர் திருமணச்சாலைக்கு எழுந்தருளி வரல்வேண்டும்" 
என்று விண்ணப்பஞ் செய்தார்கள். முருகக்கடவுள் அதனைக் கேட்டு, "அவ்வாறாகுக'' என்றருள் புரிந்து, 
வீரவாகு முதலிய வீரர்களும் பூதப்படைத் தலைவர்களும் துதிக்கச் சிங்காசனத்தினின்றும் விரைந்தெழுந்து, 
சந்நிதானத்தில் நிற்கின்ற மயில் வாகனத்தின் மீதிவர்ந்து, பிரமா முதலிய தேவர்கள் விழுந்து வணங்கித் 
துதித்துப் பூமழைகளைப் பொழிந்து பக்கத்தில்வர, வீதியிற் சென்றருளினார். 

    சந்திரனும் சூரியனும் வெண்கொற்றக் குடையை எடுத்தார்கள்.வாயு சாமரங்களை வீசினான். 
வருணன் ஆலவட்டங்களை அசைத்தான். யமன் வாட்படையை ஏந்தினான். பிரமவிட்டுணுக்களுடைய 
வாகனங்களாகிய அன்னமும் கருடனும் "சிவபெருமானுடைய வாகனமாகிய இடபத்தின் ஒலியோ" என்று 
நடுங்கும்படி, கோழிக்கொடி எவ்வண்டமும் குலுங்கக் கிளர்ந்து ஆர்த்தது. பிரமர்கள் ஆரவாரித்தார்கள். 
வேதங்கள் ஆர்த்தன. அரம்பையர்கள் ஆர்த்தார்கள். முனிவர்கள் ஆர்த்தார்கள். பூதர்கள் ஆர்த்தார்கள். 
பஞ்சபூதங்களும் ஆர்த்தன. பூவுலகவரசர்கள் ஆர்த்தார்கள். திருப்பரங்குன்றும் பிரதித்தொனி செய்தது. 

    திண்டி, பேரிகை, தண்ணுமை,சல்லரி,திமிலை, குடமுழா, காளம், சங்கம் முதலாகிய வாத்தியத் 
தொகுதிகளைப் பல பூதர்கள் அண்டங்கள் வெடிக்கும்படி இயம்பினார்கள். மேனகை, உருப்பசி, அரம்பை, 
திலோத்தமை முதலிய பெண்கள் நெருங்கி, மஞ்சங்களிலும் விமானங்களிலும் நின்று பாடியாடினார்கள். 
வித்தியாதரர் முதலாயினோர் அரம்பையர்களுடைய நடனத்தோடு பாட்டும் அபிநயமும் பொருந்த 
இசைபாடினார்கள். வீரவாகு முதலிய வீரர்களும் பூதர்களும் இந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும்
பிறருமாய் நெருங்கி ஒருவருடம்பை ஒருவருடம்பு நெருக்கச் செல்லுதலால் வீதியும் முற்றமும் சிறிதும் 
இடம்பெறாவாயின. இத்தன்மைகளெல்லாம் நிகழ,முருகக்கடவுள் பொன்மயமாகிய வீதியின் வழியாய் 
இந்திரனுடைய திருமணச்சாலையின் முன்னர் வந்தருளினார். 

    முனிவர்கள் திரண்டு அவர்மீது கும்பத்தின்மேற் றருப்பை தோய்த்த நீரைப்புரோக்ஷித்து ஆசிகளைச் 
சொல்லி எதிர்கொண்டு துதித்தார்கள். அரம்பையர்களும் முனிவர் பன்னியர்களும் அட்டமங்கலங்களையும் 
ஏந்தி எம்பெருமானுக்கெதிரில் வந்து துதித்தார்கள். சிலபெண்கள் ஆலத்திகளைக் கையிலேந்தி அவருடைய 
சந்நிதியிற் பணிமாறினார்கள். உதிக்கின்ற சூரியன் சூற்கொண்ட மேகத்தை விட்டு நீங்கினாற்போலக் 
குமாரக்கடவுள் மயில்வாகனத்தின்று மிழிந்து, திருமணச்சாலையின் வாயிலிற் சென்றருளினார். 

    அப்பொழுது இந்திராணி அரம்பையர்களோடு எதிரேவந்து வணங்கி, பொற்பாத்திரத்தில் நிறைத்த
 காமதேனுவின்பாலினால் முருகக்கடவுளுடைய திருவடிகளுக்கு அபிஷேகஞ்செய்து, புட்பத்தையும் மாலையையும் 
சூட்டி, அத்திருவடிகளை வணங்கி, பல திரிகள் ஏற்றிவைத்த ஆலத்தியை மும்முறை சுற்றி, இவைபோன்றனவாய் 
அங்கே செயற்பாலனவாகிய பிறவற்றையுஞ் செய்து, வெட்கித்து, மற்றைப் பெண்களோடு தனது கோயிலை 
யடைந்தாள். முருகக்கடவுள் கண்டு அதற்கருள்செய்து, பிரமா விட்டுணு முதலாயினோர் கூடவரத் 
திருமணச் சாலையிற் புகுந்து, இந்திரனாலே தமக்காக இடப்பட்ட திவ்விய சிங்காசனத்தின்மீது 
வீற்றிருந்தருளினார். 

    அதன்பின் பிரமாவும் விட்டுணுவும் முனிவர்களும் தேவர்களும் வீரவாகு முதலிய வீரர்களும் அவருடைய 
ஏவலினாலே தத்தமக்கு ஏற்ற ஏற்ற இடங்கடோறும் இருந்தார்கள். அப்பொழுது முசுகுந்தச் சக்கிரவர்த்தி முதலாகிய 
பூவுலக அரசர்கள் யாவரும் வந்து வந்து வணங்கித் துதிக்க எம்பெருமான் கருணை செய்தார். அந்தச் சமயத்தில், 
சிவபெருமான் பூதசேனைகள் சூழ உமாதேவியாரோடு ஆகாயத்திலே தோன்றியருளினார். தமது தாயுந்தந்தையும் 
எழுந்தருளி வந்ததை முருகக்கடவுள் தரிசித்து, மிகுந்த மகிழ்ச்சியுடையராய், விம்மிதங்கொண்டு, பேரன்போடு 
மிகவிரைந்து இருக்கை விட்டெழுந்தார். 

    விட்டுணு முதலாகிய தேவர்களும் முனிவர்களும் "எம்பெருமானாகிய சிவபெருமான் இங்கே எழுந்தருளி 
வந்தார். நாம் உய்ந்தோம்" என்று கூப்பிய கரத்தோடு விரைவில் எழுந்தார்கள். சிவபெருமான் உமாதேவியாரோடு 
விமானத்தினின்று மிறங்கி, பூதகணங்கள் சூழ நிர்மலமாகிய திருமணச்சாலையுள்  வந்தருளினார். அறுமுகக்கடவுள் 
அதனைக்கண்டு விரைந்து எதிர்கொண்டு சென்று, மிகுந்த அன்போடு அவ்விருவருடைய திருவடிகளையும் 
நமஸ்காரஞ் செய்தார். அவரைச் சிவபெருமானும் உமாதேவியாருமாகிய இருவரும் தங்களுடைய அருமைத் 
திருக்கரங்களாலெடுத்து, தத்தம் மார்போடு தனித்தனி தழுவி, உச்சியை மோந்தார்கள். 

    விட்டுணுவும் பிரமாவும் இந்திரனும் மற்றைத் தேவர்களும் பரமபிதா மாதாக்களாகிய சிவபெருமான் 
உமாதேவியார் என்னும் இருவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் பிரதக்ஷிணஞ்செய்து, 'அடியேங்கள் 
வினைகளில் ஆழ்கின்ற எளிமை நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வடைந்தோம்" என்று தோத்திரஞ் செய்தார்கள். 
குமாரக்கடவுள் அவ்விருவரையும் திருக்கல்யாண மண்டபத்துள் அழைத்துக்கொண்டு சென்றார். அப்பொழுது 
திருவருளினாலே ஒரு திவ்விய சிங்காசனம் ஆகாயமார்க்கமாக அவ்விடத்தில் வந்தது. அதன்மீது சிவபெருமான் 
உமாதேவியாரோடு வீற்றிருந்தருளினார். வீற்றிருந்த அவ்விருவரும் முருகக்கடவுளை நோக்கி, "மகனே இங்கே 
வருக" என்று மகிழ்ச்சியோடு எடுத்துத் தழுவி, மடியின் மீது வைத்து, மிகுந்த தண்ணளியைச் செய்தார்கள். 
அந்தச் சமயத்தைப் பிரமதேவர் தெரிந்து, அவர்களை வணங்கி இவ்வாறு சொல்வார். 

    "எம்பெருமானே, முன்னொரு நாளில் அசுரர்களைச் சங்கரிக்கும்படி அறுமுகக்கடவுளை விடுத்தருளினீர். 
அவ்வாறே அவர் அவுணர் யாரையும் வதைபுரிந்து தேவர்களையும் சிறையினின்றும் நீக்கியருள்செய்தார். இந்த 
நன்றியைக் கருதி நாங்கள் செய்கின்ற கைம்மாறு ஒன்றுமில்லையாயினும், இந்திரன் தன்மனத்திலெழுகின்ற 
ஆசையினால் அறுமுகக்கடவுளுக்குத் தன்மகளைத் திருமணஞ்செய்து கொடுக்க எண்ணினான். சகல சீவராசிகளையும் 
பேரருளோடு காத்தருளுகின்ற அம்மையாரும் தேவரீரும் இந்தச் சமயத்தில் எழுந்தருளி வந்தீர்களென்றால், 
சிற்றடியேங்களாகிய எங்களுடைய செயல் சிறந்ததல்லவா!" என்றிவ்வாறு பிரமதேவர் விண்ணப்பஞ் செய்தலும், 
சிவபெருமான் நன்றென்று மகிழ்ச்சியடைந்து "நாமும் இதனைக்காணும்படி உமையோடு இங்கே வந்தோம். 
இனி இதற்குரிய சடங்குகளைச் செய்குதி" என்று அருளிச் செய்தார்.

    அதனைக்கேட்டுப் பிரமாவும் விட்டுணுவும் மிக மகிழ்ந்து, இந்திரனை நோக்கி, ''முருகக்கடவுள் 
வேதவிதிப்படி திருமணஞ்செய்தற்கு உன் மகளை இங்கே கொணருதி" என்றார்கள். இந்திரன் அதற்குடன்பட்டு, 
அந்தப்புரத்திற் சென்று, "நம்மைக் காத்தருளும் மகளே வருக" என்று அழைத்தலும் நமதன்னையாகிய அவர் 
எழுந்து, மலையிலே இவருடைய திருவடிகள் செல்ல வல்லனவா என்பனபோலச் சிலம்பரற்றவும், மெல்லிய 
இடை வருந்தும் என்பனபோல மேகலை இரங்கவும், கண்டோரெவரும் மன மகிழவும், இலக்ஷுமியும் சரஸ்வதியும் 
மற்றை மகளிர்களும் துதிக்கவும் இந்திரனுக்கு முன்னே நடந்துவந்தருளினார்.

    [ஞானசத்திதரராகிய அறுமுகப் பெருமானுடைய அருமைத் திருவடிகள் தீயேனாகிய அடியேனுடைய 
இந்த மனமாகிய மலையிலும் அனுதினமும் நின்றுலாவுமேயானால், பஞ்சிலும் மெல்லிய அருமைத் திருவடிகள் 
வருந்தும்படி திருப்பரங்குன்றத்தின் மீது தெய்வயானையம்மையார் நடந்த செயல் சொல்லும் புதுமைத்தாகுமோ! 
இந்திரன் தெய்வயானை யம்மையாரைத் திருக்கல்யாண மண்டபத்தின் முன் கொண்டுவர, அவரைக்கண்ட 
முனிவர்களும் தேவர்களும் "நமது தாயே வாழ்க' என்று அவருடைய திருவடிகளைத் துதித்தார்கள். அவர் அங்கே 
வீற்றிருக்கின்ற பார்வதீ பரமேஸ்வரர்களை நமஸ்கரித்து, முருகக்கடவுளை நோக்கித் துண்ணென்று வெட்கமுற்றார். 

    அப்பொழுது ஜெகன்மாதாவாகிய உமாதேவியார் முருகக்கடவுளையும் தெய்வயானையம்மையாரையும் 
அங்குள்ள இரத்தினசிங்காசனத்தின்மீது இருத்திவைத்தார். திருமணக்கோலங் கொண்ட வரனும் வதுவுமாகி 
அவரிருவரும் அங்கே வீற்றிருக்கின்ற சிவபெருமானும் உமாதேவியாருமாகிய இருவருடைய பிரதிவிம்பங்களும் 
எதிரெதிராய் விளங்கினாற்போல அவர்களுக்கெதிரே இரத்தினசிங்காசனத்தில் வீற்றிருந்தார்கள். அத்திருக்கல்யாண 
மண்டபத்திலுள்ள யாவரும் தெய்வயானை யம்மையாரோடு சுப்பிரமணியக்கடவுள் சிங்காசனத்தில் வீற்றிருத்தலைத்
 தரிசித்து வணங்கித் துதிக்க; பரமபிதா மாதாக்களாகிய பரமசிவனும் பார்வதிதேவியாரும் அவர்க்கெல்லாம் 
திருவருள் புரிந்தார்கள். 

    இந்திரன் அவர்களுடைய திருமணக்கோலத்தைத் தரிசித்துப் புகழ்ந்து, கைகளைச் சிரமேற்கூப்பி 
தேனைப்பருகிய வண்டிலும் மனம்மிக மகிழ்ந்தான். இந்திராணி அவனுடைய பணியினால் திருமஞ்சனம் புட்பம்
 முதலாகிய உபகரணங்களைக் குறைவற ஏந்தி, அக்கல்யாண மண்டபத்தில் வந்தாள். இந்திரன் சுப்பிரமணியக் 
கடவுளுடைய திருமுன்பிருந்து,அவருடைய திருவடிகளைப் பூசனை செய்வானாய், இந்திராணி மிகுந்த 
நாணத்தோடு கரகத்திலுள்ள திருமஞ்சனத்தை விடுப்ப, அவருடைய மெல்லிய திருவடிகளைப் பற்றி விளக்கி 
அபிஷேகஞ்செய்து, கலவைச் சாந்தையணிந்து, புட்பங்களைச் சூட்டி, தீபதூபங்களைப் பணிமாறிப் பூசனை 
செய்தான். அயிராணி அவருடைய திருவடிகளுக்கு அபிஷேகஞ்செய்த தீர்த்தத்தைச் சிரத்தையோடு ஏந்தி 
ஓரிடத்திற் சேமித்து வைத்தாள். 

    அதன்பின் இந்திரன் அறுமுகக்கடவுளுடைய திருக்கரத்திலே தெய்வயானை யம்மையாருடைய 
திருக்கரத்தை வைத்து, "தேவரீருடைய அடியேனாகிய தமியேன் இவளை உமக்குத் திருமணஞ்செய்து தந்தேன்" 
என்று வேதமந்திரத்தோடு நீரைவிடுத்துத் தத்தஞ்செய்தான். தம்முடைய திருவடிகளையடைந்த 
மெய்யன்பர்களுக்குப் போகமோக்ஷங்களைக் கொடுத்தருளும் அக்கடவுள் தமது திருக்கரத்தில் ஏற்றருளி பிரமதேவர் 
மனத்தினாற் படைத்துத் திருக்கரத்திற்றர வாங்கிய திருமங்கலிய சூத்திரத்தைத் தெய்வயானை யம்மையாருடைய 
திருக்கழுத்திற்றரித்து, அவருடைய முடியில் நறுமணம் பொருந்திய மாலையைச் சூட்டினார். 
முக்கனிகள் கரும்பு தேன் காமதேனுவின்பால் ஆகிய மதுவருக்கங்களை இந்திரன் சுப்பிரமணியக்கடவுளுக்கு
நிவேதித்தான். 

    மத்தளி தக்கை சங்கம் பேரிகை முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. இலக்கத்தொன்பது வீரர்களும் 
பூதகணநாதர்களும் ஆர்த்து அவரை வந்தித்துக் களித்தார்கள். விட்டுணுவும் பிரமாவும் திக்குப்பாலகர்களும் 
இந்திரனும் தேவர்களும் பிறரும் முருகக்கடவுள் தெய்வயானை யம்மையாராகிய இருவருடைய திருக்கோலங்களைத் 
தரிசித்து, "நமது கட்புலங்கள் சிறப்புற்றன'' என்றார்கள். அப்பொழுது பிரமதேவர் அக்கினியையும் வேண்டும் 
உபகரணங்களையும் தருவித்து, சுப்பிரமணியக்கடவுளைக் கொண்டு திருமணச் சடங்கை விதிப்படி செய்வித்தார். 

    சுப்பிரமணியக்கடவுள் தாம் உலகத்தாருக்குப் போகமோக்ஷங்களைக் கொடுக்குங் காரணராதலினால் 
பிரமாவினுடைய சிரசின்கண்ணே திருவடியை வைத்துச் சாம்பவி தீக்ஷையெனப்படும் விஞ்ஞானதீக்ஷை 
புரிந்தருளிய பரமாசாரியராகிய தாமே தெய்வயானை யம்மையாரோடும் சிவாக்கினியை வலஞ்செய்து, 
அவருடைய பாதத்தை அம்மியிற்றூக்கி வைத்து, இலக்ஷுமியும் சரஸ்வதியும் காளிகளும் துதித்துச் சூழ, 
அவ்வம்மையாருடன் அருந்ததி தரிசனஞ் செய்தார். இவ்வாறு திருமணச்சடங்கைச் செய்தபின், சுப்பிரமணியக்கடவுள் 
தெய்வயானை யம்மையாரோடு சிவபெருமானையும் உமாதேவியாரையும் பிரதக்ஷிணஞ்செய்து மும்முறை 
நமஸ்கரித்தார். அவரிருவரும் தம்மை வணங்கிய மகனையும் மருமகளையும் முறையே அன்போடு 
எடுத்தணைத்து அருள்செய்து, தமக்குப் பக்கத்தில் இருத்தி, உச்சிமோந்து, மகிழ்ச்சியின் மிக்க இயல்பினராய் ,
"உமக்கு எங்களுடைய முதன்மையைக் கொடுத்தோம் " என்று சொல்லியருளினார்கள். 

    அதனைக்கண்ட பிரமா முதலிய தேவர்களும் முனிவர்களும் அரம்பையர்களும் அவ்வறுமுகக் 
கடவுளையும் தெய்வயானை யம்மையாரையும் வணங்கினார்கள். சிவபெருமானும் உமாதேவியாரும் 
அவர்க்கெல்லாம் பேரருள்புரிந்து, பரிசனங்களோடு விரைவில் அந்தர்த்தானமாயினார்கள். 
ஆன்மாக்கடோறும் பரமான்மாவாய் வியாபித்துநின்ற மேலோராகிய அவ்விருவரும் மறைந்தபொழுது, 
திருமணச்சாலையிலிருந்து தேவர்களும் முனிவர்களும் அவர்களுடைய திருவருட் டிறத்தை நினைந்து 
வாயாற்றுதித்து அஞ்சலித்து அவர்களுடைய திருநாமங்களை யெடுத்துக் கோஷித்து, அவர்கள் 
மறைந்தமையால் வருந்தி, அவர்கள் வீற்றிருந்த சிங்காசனத்தின்மீது குமாரக்கடவுள் தெய்வயானை 
யம்மையாரோடு வீற்றிருத்தலைத் தரிசித்து, அக்கவற்சி நீங்கி, மகிழ்ச்சியிற்சிறந்து, அவர்களுடைய 
திருவடித்தாமரைகளை வணங்கித் துதித்தார்கள்.

    இவ்வாறாகிய சமயத்தில், அறுமுகக்கடவுள் சிங்காசனத்தினின்று மிழிந்து, அனைவரும் 
அஞ்சலித்து உடன்வரவும், மங்கல வாத்தியங்கள் ஒலிக்கவும், தெய்வயானை யம்மையாரோடு 
தமது திருக்கோயிலினுட்புகுந்து, இந்திரனுக்கும் விட்டுணு பிரமா முதலிய மற்றைத் தேவர்களுக்கும் 
விடை கொடுத்து, தமது பரிசனங்கள் கோயில் வாயிலைக் காவல்செய்யும்படி பணித்து, உலகிலுள்ள 
சீவராசிகளெல்லாம் உய்யும்படி செம்பொன் மஞ்சத்தின்மீது விரித்த மெல்லிய அமளியின்மேல் 
தெய்வயானையம்மையாரோடு கலந்திருந்தருளினார். 

    பிரமாவும் விட்டுணுவும் மற்றையோர்களும் அங்கே தமக்காக அமைக்கப்பட்ட கோயில்களை 
அடைந்தார்கள். இந்திரனும் பரிசனங்களோடு தன்கோயிலையடைந்து, முசுகுந்தச்சக்கிரவர்த்தி முதலாகிய 
பூவுலக அரசர்கள் யாவருக்கும் காமதேனுவினாற் றரப்புட்ட பல உணவுகளையும் ஊட்டி, வஸ்திரங்களையும் 
நவரத்தினங்களையும், மற்றை நிதிகளையும் மிகவுங் கொடுத்து, எல்லாரையும் அனுப்பினான். அவ்வரசர்கள் 
யாவரும் திருப்பரங்குன்றத்தை நீங்கி, முன்பு அம்மலைச் சாரலில் நிறுத்திய தமது சேனாசமுத்திரங்களைச் 
சேர்ந்து, சுப்பிரமணியப் பெருமானுடைய திருக்கல்யாண தரிசன விசேஷத்தால் மோக்ஷமடையுந் தொடர்போடு 
தத்தம் ஊர்களையடைந்திருந்தார்கள். இந்திரன் தன்மனைவியாகிய அயிராணியும் தானும் துன்பம் நீங்கிய 
போகத்தை அனுபவித்துக்கொண்டு அத்திருப்பரங்குன்றத்திலிருந்தான். அவ்வாறாகச் சிலநாள்கள் கழிந்தன.

            திருச்சிற்றம்பலம்.

            விண்குடியேற்றுபடலம்.

    அறுமுகக்கடவுள் திருப்பரங்குன்றத்திலே தெய்வயானை யம்மையாரைத் திருமணஞ்செய்து, அங்கே 
அவரோடு சிலநாள் வீற்றிருந்து, இந்திரனுக்குத் தாம்செய்த உபகாரத்தின் சேஷத்தைப் பூர்த்திசெய்யத் திருவுளங் 
கொண்டு, அவ்வம்மையாருந் தாமுமாய்த் திருக்கோயிலை நீங்கிக் கோபுர வாயிலில் வந்தருளினார். வீரவாகு 
முதலிய வீரர்களும் பூதர்களும் அவ்வரவைத் தெரிந்து, அன்போடு அவர்களுடைய திருவடிகளை வணங்கி நின்று 
ஆரவாரித்தார்கள். அரிபிரமேந்திராதி தேவர்களும் முனிவர்களும் அவ்வொலியைக் கேட்டு, "அறுமுகக்கடவுள் 
எழுந்தருளிவந்தார் வந்தார்" என்று கூறி, விரைந்து அவரோடு உடன் செல்லும்படி எண்ணிச் சென்று, அவருடைய 
திருவடிகளை வணங்கித் தோத்திரஞ்செய்து சூழ்ந்தார்கள். 

    முருகக்கடவுள் தம்மைவந்து வணங்குகின்ற வாயுவை நோக்கி, "நம்முடைய தேரைக் கொண்டு வருதி'' 
என்று பணிக்க, அவன் மனவேகமென்னும் தேரைக் கொணர்ந்தான். அக்கடவுள் சிவபெருமானும் உமாதேவியாரும் 
போலத் தெய்வயானை யம்மையாரோடு அத்தேரின்மீது இவர்ந்தார். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள். 
பூதவீரர்களும் படைத்தலைவர்களும் பராசர முனிவருடைய புத்திரர்கள் நால்வரும் தத்தமக்கு ஏற்ற 
திருப்பணிகளைச் செய்துகொண்டு அவருடைய திருமருங்கிற் சூழ்ந்தார்கள். அவருடைய வாகனமாகிய 
மயில் தேவர்கள் யாவரும் தன்னை வணங்க அவரவர்களுடைய சிரங்களின்மீது தன்னுடைய பாதங்களைச் 
சூட்டி அவ்வறுமுகப்பெருமானுடைய சந்நிதானத்தில் நின்றது. ஆகையால் தவம் வவிமையுடையதேயன்றோ. 

    முருகக்கடவுள் பிரமா முதலிய தேவர்கள் யாவரையும் பார்த்து, 'நீவிரெல்லீரும் உங்களுங்கள் 
வாகனங்களில் ஏறி எம்மோடு விண்ணுலகத்துக்கு வாருங்கள்'' என்று அருளிச்செய்தார். அதனைக்கேட்ட 
பிரமாவும் விட்டுணுவும் முறையே அன்னவாகனத்திலும் கருடவாகனத்திலும் ஏறிச் சுப்பிரமணியக்கடவுளை     
வந்தடைந்தார்கள்.  இந்திரன் ஐராவதத்தின்மேல் ஏறிவந்தான். மற்றைத் தேவர்களும் முனிவர்களும் 
தத்தம் வாகனங்களில் ஏறி அவரைச் சூழ்ந்து தோத்திரஞ் செய்துகொண்டு வந்தார்கள். "அறுமுகக்கடவுள் 
விரைந்து விண்ணுலகத்துக்கு எழுந்தருள்கின்றார்" என்று பலருங் கூறக்கேட்டு, இரண்டாயிரம் வெள்ளம் 
பூதங்களும் விரைந்து புறப்பட்டன. 

    பூதர்களிற் பலர் குடமுழா, முரசு,சங்கு, மிருதங்கம், படகம் முதலாகிய பலவாத்தியங்களை இயம்பினார்கள். 
இவ்வாறாகப் பரிசனங்கள் பக்கத்திற் செல்லச் சுப்பிரமணியக்கடவுள் திருப்பரங்குன்றத்திலுள்ள திருக்கோயிலை 
நீங்கி ஆகாய வழியாகச் சென்று, தமது மாதுலனாகிய இந்திரன் இருக்கின்ற அமராவதியை அடைந்தார்.
விண்ணுலகத்தையடைந்த அக்கடவுள் அந்நகரம் பானுகோபன் அக்கினி கொளுத்த எளிமையுற்றிருந்ததையும், 
இந்திரனுடைய  மனத்திலுள்ள அவாவையும் தெரிந்து, அவ்விண்ணுலகத்தைப் பாதுகாக்கத் திருவுளங் 
கொண்டு, தெய்வத்தச்சனை நோக்கி, "துன்பங்களை நீங்கிய இந்திரன் எல்லையில்லாத வளங்களோடு 
இருந்தரசு செய்தற்குச் சுவர்க்க வுலகத்தை முன்போல விரைந்து உண்டாக்குவாய்" என்று பணித்தருளினார். 

    அவன் வணங்கிப் போய், அத்தேவருலகத்தைச் சூழ மதிலையும், அதில் நான்கு வாயில்களையும், 
எழுநிலைக் கோபுரங்களையும், எண்ணில்லாத வீதிகளையும் நடுவிலே ஓர் கோயிலையும், செய்குன்றுகளையும், 
அளவில்லாத நீர்நிலைகளையும், மாடங்களையும், மாளிகைகளையும், மண்டபங்களையும், சிங்காசனத்தையும்
 அந்நகரின் விரிவை நோக்கி அதற்குத்தக உண்டாக்கி, இந்திரனுக்குரிய கோயிலையும், அறுமுகக்கடவுள்  
வீற்றிருத்தற்குரிய கோயிலையும் பிரம விட்டுணுக்களுடைய கோயிலையும், மற்றையோர்கள் வசித்தற்குரிய 
இடங்களையும் அமைத்து, வைகுண்ட வுலகத்தினும் சத்தியவுலகத்தினும் சிறந்ததென்று சொல்லுமாறு வளப்பம் 
மிகச் சிற்ப நூல்விதிப்படி அத்தேவருலகத்தைச் செய்தான். [பொன்னுக்கிருப்பிடமாக இந்திரனுக்கென்று செய்த 
அந்நகரத்தினழகைச் சரசுவதிக்குஞ் சொல்ல முடியாதானால், எனக்குச் சொல்ல முடியுமோ!]

    விசுவகன்மன் இவற்றையெல்லாம் மனத்தாற்செய்த திறமையை விட்டுணுவும் பிரமாவும் பார்த்து 
மகிழ்ச்சியடைந்து, "பிரமாவினுடைய சிருட்டித்தொழிலும் உனது தொழிலுக்கு நிகரில்லை'' என்று புகழ்ந்தார்கள். 
இந்திரன் அந்நகரத்தினழகைப் பார்த்து, விசுவகன்மனைக் கட்டித் தழுவினான். அவன் இவ்வாறு யாவரும் 
வியக்கும்படி அமராவதியை உண்டாக்கி, சண்முகக்கடவுளுடைய திருவடிகளை வணங்கி நிற்ப, அவர் 
அவனுக்கு அருள்புரிந்து, பக்கத்திலுள்ள கணங்களோடு நகரத்தினுட் போயினார். அப்பொழுது அயிராணி 
அரம்பையர்களோடு ஒரு விமானத்தில் வந்து, இந்திரனுடைய கோயிலையடைந்தாள். அறுமுகக்கடவுள் 
இந்திரனுடைய நகரத்தின் வாயிலிலே செல்ல, பிரமாமுதலிய தேவர்கள் தத்தம் வாகனங்களினின்றும் 
இறங்கி, அவரோடு உடன்சென்றார்கள். அக்கடவுள் தெய்வயானையம்மையாரோடு தேரினின்று மிழிந்து, 
பொன்மயமாகிய சபையையடைந்து, அங்குள்ள திவ்விய சிங்காசனத்தின்மீது வீற்றிருந்தருளி, 
பிரமா முதலிய தேவர்களுக்குப் பேரருள்புரிந்து நோக்கி, "இந்நகரை அரசுசெய்யும் வண்ணம் இந்திரனுக்கு 
விரைவில் முடிசூட்டுதிர்" என்று பணித்தார். 

    தேவர்கள் நன்றென்று அதற்குவேண்டிய அட்டமங்கலங்களையும், சாமரம்,குடை,வாள்,கிரீடம் 
முதலிய அரச அங்கங்களையும் மற்றையுபகரணங்களையும் வருவித்து, இந்திரனைக் கங்காசலத்தினால் 
அபிஷேகஞ்செய்து, பீதாம்பரம், ஆபரணம், சந்தனம், மாலை முதலியவற்றால் அலங்கரித்து, சிங்காசனத்திலேற்றி, 
வரிசையோடு அவனுக்கு முடிசூட்டினார்கள். தேவர்கள் யாவரும் முடி சூட்டப்பட்ட அவ்விந்திரனுடைய கால்களை 
வணங்கினார்கள். இருடிகள் யாவரும் ஆசிகூறினார்கள். அரம்பையர்கள் நடித்தார்கள். இந்திரன் அறுமுகப் 
பெருமானுடைய சந்நிதானத்திற் சென்று, அவரை வணங்கித் துதித்து, ''எம்பெருமானே, சுவர்க்கவுலகத்தையும், 
சூரபன்மனாலிழந்த பழைய அரசுரிமையையும், செல்வங்களையும், ஒருங்கே ஈந்தருளினீர். அடியேன் உய்ந்தேன். 
ஒருவருக்கு இதன்மேலும் பெறும்பேறு உண்டோ!' என்று விண்ணப்பஞ் செய்தான். 

    அறுமுகக்கடவுள் அவனுக்கு அருள்புரிந்து, ''இந்திரனே, இந்நகரரசுரிமையை நடாத்தி இங்கே 
க்ஷேமத்தோடிருப்பாய்" என்று அவ்விந்திரனை அங்கே வைத்து, மற்றைத்தேவர்களை அங்குள்ள அவரவர் இருக்கைக்குச் 
செல்லும்படி அனுப்பி, தெய்வயானையம்மையாருந் தாமுமாய்த் தமது திருக்கோயிலுட் புகுந்து, பூதர்களும் மற்றை 
வீரர்களும் மிகச்சிறிய அணுவும் உட்புகாவண்ணம் திருவாயிலைக் காவல்செய்ய, அவ்வம்மையாரோடு 
திருவிளையாடல்களைச் செய்துகொண்டு அங்கே வீற்றிருந்தருளினார். பிரமவிட்டுணு முதலிய தேவர்கள் 
தத்தம் இடங்களை யடைந்தார்கள். இந்திரன் விண்ணுலகத்தை யரசாண்டு இந்திராணியோடு இன்பமனுபவித்துக் 
கொண்டிருந்தான். தேவர்கள் யாவரும் இந்திரபாக்கியமன்றி மற்றை மேலுலக பாக்கியங்களும் ஒருங்கு பெற்றாற்போல
 மனமகிழ்ச்சியுற்று தத்தம் இருக்கைகளை யடைந்து விழாக்கொண்டாடியிருந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            கந்தவெற்புறுபடலம்.

    இப்படிச் சிலநாட்கழிய இதன்மேல் ஒருநாள், முருகக்கடவுள் கந்த வெற்பில் வீற்றிருக்கத் திருவுளங் 
கொண்டு, தேவருலகத்திலே தாம் வீற்றிருந்த திருக்கோயிலினின்றும் தெய்வயானையம்மையாரோடு 
புறப்பட்டார். அதனைப் பிரமா முதலிய தேவர்கள் அறிந்து அங்கே வந்தார்கள். அவர்களை அறுமுகக்கடவுள் 
நோக்கித் தத்தம் பதங்களுக்குச் செல்லும்படி விடை கொடுத்தனுப்பி, இந்திரனைச் சுவர்க்கவுலகத்திலிருந்து 
அரசியற்றும்படி நிறுத்தி, தெய்வயானையம்மையாரோடு தேரின்மேல் ஏறி, தமது பணியால் வீரவாகுதேவர் 
அத்தேரைச் செலுத்த இலக்ஷத்தெண்மரும் பூதர்களும் சூழத் திருக்கைலாச மலையிற்போய், தேரினின்றுமிறங்கி, 
சிவபெருமானையும் உமாதேவியாரையும் வணங்கி, அவர்களுடைய திருவருளையும் விடையையும் பெற்று, 
கந்தமலையிற்போய், வீரவாகு முதலிய வீரர்கள் பணிகளைச் செய்து நிற்கவும்,படைத்தலைவர்களும் 
பூதர்களும் துதிக்கவும், தெய்வயானை யம்மையாரோடு இரத்தினசிங்காசனத்தின்மீது வீற்றிருந்தருளினார்.

    துய்யதோர் மறைகளாலுந் துதித்திடற்கரிய செவ்வேள் 
    செய்ய பேரடிகள் வாழ்க சேவலுமயிலும் வாழ்க
    வெய்ய சூர்மார்பு கீண்டவேற்படை வாழ்கவன்னான் 
    பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்கவிப் புவனமெல்லாம்.

            திருச்சிற்றம்பலம்.

            இந்திரபுரிப்படலம்.

    முருகக்கடவுள் கந்தவெற்பிற்போய் வீற்றிருந்த கதையைச் சொன்னாம். இனி இந்திரனுடைய செய்கையையும் 
பிறவற்றையும் சொல்வாம். சண்முகப்பெருமானுடைய திருவருளால் விண்ணுலகத்தை யரசாண்டு கொண்டிருந்த 
இந்திரன் ஓர்நாள், தான் பகைவர்களாகிய சூரபன்மன் முதலாயினோர் பணித்த பலகுற்றேவல்களையுஞ் செய்து 
கொண்டிருந்ததையும், அநேக யுககாலம் அவர்களுக்கு ஒளித்துத் திரிந்ததையும், அதற்கிடையிடையில் நேர்ந்த 
தீமைகளையும், அவற்றால் அடைந்த துன்பங்களையும், பிறவற்றையும் நினைத்து, அயிராணியோடு கூடியின்புறும் 
வாழ்க்கையையும் செல்வங்களையும் அரசுரிமையையும் வெறுத்து, "தவஞ்செய்து மோக்ஷமடைவேன்'' என்று 
துறக்கும்படி நினைத்தான். 

    தேவர்களுக்கு மந்திரியாகியும் குருவாகியும் அரசனாகியும் இருக்கின்ற பிரகஸ்பதி இந்திரனுடைய 
அக்கருத்தை அறிந்து, அதனை மாற்றுதற்கு ஓர் உபாயத்தையெண்ணி, இழிந்த பொய்மையும் உயர்ந்த நன்மையைப் 
பயக்குமாயின் வாய்மையாம் என்னும் மேலோர் கொள்கையை உட்கொண்டு, இந்திரபதம் நிலைபெறும்படி 
அவன்மாட்டு வந்திருந்து, "அரசனே நாம் சொல்வனவற்றைக் கேட்பாய்' என்று இவ்வாறு சொல்வாராயினார்.

    ''மகாராஜனே, நீ அன்பில்லாத சூரபன்மனாற் பட்ட துன்பத்தை நினைத்து நினைத்து விண்ணுலக 
அரசையும் இல்வாழ்வையும் வெறுத்தாய். இவைகளை வெறுத்தனையாயின் பின்பு நீ ஐம்பொறிகளை அடக்கித் 
தவஞ் செய்து பெறும்பயன் யாதோ! மைந்தனே கேள். மிகவும் மனத்துன்ப மடைந்தவர்களல்லவா பெருஞ்செல்வத்தையும் 
பெருவாழ்வையும் அடைவர். அது யோசிக்கின் உன்னளவில் மாத்திரமன்று, இந்த மூவுலகங்களிலும் வழங்கிய இயற்கையாம். 
பெருந்தவங்களைச் செய்த முனிவர்களிலும் தேவர்களிலும் பாதலவாசிகளிலும் மும்மூர்த்திகளிலும் யாவர்தாம் 
பெண்களுடைய போகத்தை விட்டிருந்தவர்! 

    கழிந்துபோன துன்பத்துக்குப் பயந்து கிடைத்த இப்பெருஞ்செல்வத்தைக் குற்றமுடையதென்று நீ துறந்து 
தனித்தவனாய்த் தவஞ்செய்துழன்றால், அத்தவஞ் செய்தற்கண் மிகவும் உண்டாகும் துன்பத்திற்கு ஒரெல்லையுமுண்டோ! 
சிறிய கானலை நீந்தப் பயந்து கடலிற் போய் வீழலாமோ! உடம்பை நோகும்படி வருத்தி ஐம்புலன்களையும் அடக்கிக் 
காமம் முதலிய முக்குறும்புகளையும் நீக்கி யோகாப்பியாசம் செய்யும் பெரியோர்கள் பெறும்பயனைச் சொன்னால், 
அதுவும் போகமன்றி வேறொன்றில்லை. இதனை அறிகுதி. ஐம்புலன்களும் ஒடுங்குமாம்; மனமுதலிய கருவிகளும் 
செயலும் இல்லையாம்; உடம்பும் அழியுமாம்; இவ்வாறாக ஆண்டே ஓர் பேரின்பம் உண்டென்பர் சிலர். அதனை யாவர் 
அறிந்தவர். உலகிலுள்ள அறிஞர்கள் யாவரும் இவ்வுலகிற் கண்டதே மெய்யென்பர். 

    பொய்யாகிய கானலை மெய்யென்று விரும்பி கைநிறையக் கொண்ட அமிர்தத்தை நிலப்பிளப்பிற் 
சொரிந்தாற்போல, அறியார் சிலர் உள்ளதுபோலக் கூறுகின்ற மோக்ஷத்தை மெய்யென்றெண்ணி அரசனே நீ 
இம்மைப்பயனை இழக்கின்றாய். இந்த உன்னெண்ணம் நன்று நன்று! பெண்களோடு கூடியனுபவிக்கும் இன்பமே 
இன்பம், இவ்வுலகில் அவரோடு கூடி வாழும் வாழ்வே பெருவாழ்வு. அவர்களையடையும் செல்வமே பெருஞ்செல்வம். 
அவர்களுடைய ஸ்தனங்களைத் தழுவாத வறுமையே வறுமை. பூரண சந்திரன்போலும் முகத்தையுடைய அழகிற் 
சிறந்த அப்பெண்களுடைய புணர்ச்சியைச் சிலர் சிற்றின்பம் என்று சொல்லுவர். அவர் அதன்சிறப்பை உள்ளபடி 
அறிவாராயின், அதுவே பேரின்பமாகும். 

    மகாராஜனே, நீ அதனைக் கேட்க விரும்புதியாயிற் சொல்வேன்" என்று பிரகஸ்பதி கூறினார். இவற்றைக் 
கேட்ட இந்திரன் நகைத்து, அக்கினியிற்பட்ட நெய்போல மனமுடைந்து, காமம் மிகுந்த மனத்தனாய், ''அஞ்ஞானத்தை 
நீக்கி மெய்ஞ்ஞானத்தை யுதவுகின்ற அருமருந்து போலும் பரமாசாரியரே, நீர் பெண்களுடைய சிறப்பையும் நல்ல 
காமவின்பத்தையும் இன்றுகாறும் எனக்கு உபதேசியாமலிருந்த காரணம் என்னை?'' என்றான்.

    தேவகுரு இதனைக்கேட்டு, "இவன் என் சூழ்ச்சியினால் மனம் மயங்கினான்" என்று கருதி, மதன நூலைக் 
கற்றுணரவேண்டும் என்னும் ஆசையில்லாத அபக்குவர்களுக்குப் பெண்களுடைய மேன்மையை அறிஞர்கள் 
போதிக்கமாட்டார்கள். ஆதலினால் நானும் இந்நாள்காறும் உனக்கு அதனை உபதேசித்திலேன். யான் அக்காம 
நூற்கடல் முழுவதையும் நுட்ப புத்தியாற் கற்றுக் கரைகண்டுள்ளேன். அதன்றிறங்களெல்லாவற்றையும் உனக்குச் 
சொல்கின்றேன் கேள்."சமயங்கள் எல்லையில்லாதனவென்றும் ஆயிரத்தெட்டென்றும் வேறுமுள்ளனவென்றும் 
அவற்றுள் மெய்ச்சமயம் ஆறு என்றும் அறிவுடையோர்கள் சொன்னார்கள். அவற்றுள் தன்னையநுட்டிப்பவர்களுக்குத் 
தேவாமிர்தம்போல மிகவும் இன்பத்தைத் தருவதும் இம்மையில் வீடுபேற்றைத் தரவல்லதும் யாவராலும் விரும்பப்படுவதும் 
ஆகிய உலோகாயதம் என்று ஒர் சமயநெறியுளது. 

    அச்சமயநெறியில் முத்திபெற்றின்பமனுபவிப்போர் ஆடவர்களும் அம்முத்தியின்பத்தை கொடுப்போர் 
பெண்களும் ஆவர். அப்பெண்களுடைய இயற்கைகளையும் ஆடவர்களுடைய இயற்கைகளையும் அவ்வாடவர் 
பெண்களைச் சேருந்திறங்களையும் அம்மதனநூல் மெய்ம்மையாகச் சொல்லும்" என்று இவை முதலாக அவ்விரு 
பாலாருடைய சாதி, இயற்கை, தத்துவம், குணம் தேசம், அவத்தை, காலம், கருத்து, புணருந்திறம் முதலிய 
எல்லாவற்றையும் மதன நூலிற்சொல்லிய முறைப்படி தொகுத்தும் வகுத்தும் விரித்தும் போதித்துப்  
பிரகஸ்பதி வாளாவிருந்தார்.

    இந்திரன் அவற்றை அறிந்து, காமவின்ப நுகர்ச்சியிலே கவலைவைத்து, தன்குருவை வணங்கி, 
"பரமாசாரியரே, நீர் உபதேசித்த காமநூற் பொருள் முழுதையும் உறுதியாகக் கைக்கொண்டேன். இனி 
வேறொரு பொருளையும் விரும்பேன். எல்லையில்லாத இன்பத்தை யடைந்தேன்' என்று பெருமகிழ்ச்சியடைந்து, 
அவரிடத்து விடைபெற்றுக்கொண்டு போயினான். பிரகஸ்பதியும் தாம் எண்ணிய கருமம் முடிந்ததென்று 
மகிழ்ச்சியோடு போயினார். குருவினிடத்து விடைபெற்றுச் சென்ற இந்திரன் விண்ணுலக அரசாட்சியைத் 
தன் குமாரனாகிய சயந்தனிடத்தில் ஒப்பித்து, இந்திராணியின்மீது ஆசைவைத்து, மறுமையின்பங் கிடைப்பினும் 
அதனையும் வெறுக்குங் கருத்தினனாய், மதன நூல்விதிப்படி காமவின்பமொன்றையே அனுபவித்துக்கொண்டிருந்தான்.

    இந்திரன் இவ்வாறு இருக்குநாளில், அவனுடைய அரசுரிமைச் செங்கோல் நடாத்துகின்ற சயந்தகுமாரன் 
தன்னவைக் களத்தில் வந்திருக்கும் முனிவர்களுள்ளும் தேவர்களுள்ளும் தன்னெதிரிலிருக்கின்ற ஆசாரியராகிய 
பிரகஸ்பதியை நோக்கி, 'எம்பெருமானே பிரமா முதலிய தேவர்களும் முனிவர்களும் சூரபன்மனால் மிகுந்த 
துன்பமுற்றுத் தங்கள் பழைய மேன்மைகளிழந்து தாழ்வடைய வந்த காரணமென்னை? சொல்லியருளும்" 
என்று வினாவ,  "அது அத்தேவர்களும் முனிவர்களும் தக்ஷப் பிரஜாபதி திரிபுராந்தகராகிய சிவபெருமானை ஒழித்துச் 
செய்த யாகத்திற் புகுந்த பாவத்தால் வந்தது." என்று பிரகஸ்பதி கூறினார். 

    அது கேட்ட சயந்தன் "இது அதற்குக் காரணமாயின், அந்தப் புன்றொழிலையுடைய தக்கனது வாழ்வையும், 
அவன் சிவபெருமானையன்றிச் செய்த யாகத்திலே நிகழ்ந்தவைகளையும் ஒன்றும் ஒழியாமல் அடியேன் அறியும்படி 
சொல்லியருளல்வேண்டும்" என்றான். பிரகஸ்பதி சயந்தனை நோக்கி, "குமாரனே , வெற்றியடைந்து வாழுதி. நான் சொல்லும் 
அச்சரித்திரத்தைக் கேள்" என்று சொல்வன்மையோடு அத்தக்கனுடைய சரித்திரத்தை உபதேசிப்பாராயினார்.

            திருச்சிற்றம்பலம்.

            தேவகாண்டமுற்றிற்று.

            ஆறாவது

            தக்ஷகாண்டம்.

            உபதேசப்படலம்.

    
    மாயையின் வலியோனாகி மான்முதலோரை வென்றே 
    ஆயிரத்தோரெட்டண்டமரசு செய்துக நூற்றெட்டுக் 
    காயமதழிவின்றாகிக் கடவுளர்க் கலக்கண் செய்த 
    தீயசூர்முதலைச் செற்ற குமரன்றாள் சென்னி வைப்பாம்.

    பிரமதேவர் ஓர்நாள், சத்தியவுலகத்திலுள்ள கோயிலிலே முனிவர்களும் தேவர்களும் தம்முடைய 
புதல்வர்களும் பக்கங்களிற் றுதிக்க வீற்றிருந்தார். அப்பொழுது, அவர் படைப்புத்தொழில் செய்யும்படி 
முன்னாளிற்பெற்ற பத்துப்புதல்வர்களுள், புத்தியிற் சிறந்த மூத்த குமாரனாகிய தக்கனென்பவன் முன்செய்த 
தவவலியால் அப்பிரமாவை நோக்கி, "என் பிதாவே, தேவர்களில் முதல்வராகியும், ஞானத்திற் றலைவராகியும்,
மும் மூர்த்திகளில் உயர்ந்தோராகியும், அழிவில்லாதவராகியும், உயிர்க்குயிராகியும் உள்ள முழுமுதற்கடவுள் 
இன்னார் என்பதை அடியேன் அறியும்படி சொல்லியருளும்" என்று வினாவினான். 

    அதனைப் பிரமா கேட்டு "மகனே நீ வினாவிய இது நன்று. சொல்வேன் கேள். விட்டுணுவும் யானும் அந்நாளில்
 'நாமே பரம்பொருள்' என்று தருக்குற்றுப் போர் செய்தபொழுது சோதிசொரூபமாயெழுந்து வானுலகத்தில் 
உயர்ந்த சிவபெருமான் ஒருவரே எல்லார்க்கும் மேலாய கடவுள். இதனை நீ தெளிவாய்" என்று கூறினார். 
அதனைக்கேட்ட தக்கன் "முத்தொழில்களிலும் முதற்றொழில்களாகிய சிருட்டி திதிகளைச் செய்யும் 
நீவிரிருவரும் கடவுளரல்லராக, இறுதியதாகிய சங்காரத்தைச் செய்யும் பரமசிவன் உங்களுக்கிறைவரா 
யிருக்குந்தன்மை என்னை? என் மனமயக்கந் தீரும்படி சொல்லியருளும்'' என்றான். 

    சிவபெருமானுடைய திருவருளினால் அவருடைய உண்மை நிலையை யறிந்த பிரமதேவர் அதனைக் 
கேட்டு, 'தக்கனே, முன்னே நீ வேதங்களைக் கசடறக்கற்று உண்மைப்பொருள் தெரிந்தவாறு நன்று நன்று!" 
என்று சிரித்து, "மைந்தனே, 'இறுதித் தொழிலாகிய சங்காரத்தைச் செய்யும் சிவபெருமானைப் பரம்பொருள் 
எனக் கொள்ளுந்தன்மை என்னை' என்று வினாவினாய். பிரமவிட்டுணுக்களாகிய எங்களையும் தேவர்களையும் 
மற்றை உயிர்களையும் ஈற்றிற் சங்கரிப்பவர் அச்சிவபெருமான் என்றால், நம்மையெல்லாம் முன்னர்ச் 
சிருட்டித்தவரும் அவரேயன்றோ!  சங்கார காலத்தில் ஒருவராய், சீவராசிகளை முன்பு தோன்றியவாறே ஒடுங்கச் 
செய்து, தாம் அவிகாரியாயிருந்து, மீட்டும் அன்னையும் அத்தனுமாய் அவ்வுயிர்களுக்கேற்ற தனுகரணாதிகளைக் 
கொடுத்திரக்ஷிக்கின்ற பரமசிவனுடைய செய்கை முழுதும் எத்தன்மையதென்று சொல்லற் பாலதோ! 

    விட்டுணுவையும் என்னையும் முறையே தம்முடைய இடப்புயத்தினின்றும் வலப்புயத்தினின்றும் 
உண்டாக்கி, திதிசிருட்டியாகிய தொழில்களையுந் தந்து, 'யாமும் உங்கண்மாட்டு இருக்கின்றோம்' என்று 
எம்முயிர்க்குயிராய் நின்று, அந்தப் பரமசிவனே எல்லாஞ் செய்கின்றார். எங்களால் முடியுஞ் செய்கை 
ஒன்றுமில்லை. நம்முயிர்க்குயிராய் நின்றியற்றுதலன்றி, நம்முடைய மனத்தினுள்ளும் இருந்து நாம் 
பிழைபடாவண்ணம் காப்பார்; நம்முடைய இருகண்களினுள்ளும் உளர்; நாம் தம்மையறியாமல் மயங்கும் 
பொழுதும் எம்மிடத்து வந்தருள் செய்வார். 

    தாமும் ஓர் செயலைச் செய்கின்றவர்போல எம்மோடு ஒருவராக எண்ணப்படுவார்; எள்ளும் 
எண்ணெயும்போலவும், மணியும் நாதமும்போலவும், பூவும் மணமும்போலவும், இரத்தினமும் ஒளியும்போலவும் 
உலகமெங்கும் உள்ளும் புறம்புமாய் வியாபித்து நிற்பார். வேதாகம முதலிய மேலாகிய கலைகளையெல்லாம் 
முன்னாளில் அருளிச்செய்தவர் அந்தச் சிவபெருமானே.அவர் அவைகளை எங்களுக்கு உபதேசிக்க நாம் 
உணர்ந்தோம். இதனை நீ அந்த நூல்களிற் பார்த்தறிகுதி. இவ்வாறிருக்க, எல்லாரையும் ஒன்றாக மதித்தாய். 
நீ மிகவும் பேதையோ! ' என்று கூறினார். 

    தக்கன் அதனைக்கேட்டு, "சிவபெருமான் அருளிச்செய்த  வேதங்கள் பஞ்சபூதங்களையும் 
உயிர்களையும் மற்றைத்தேவர்கள் யாரையும் பிரமம் என்று சொல்வதென்னை? இதனுண்மையையறியாது 
என் மனம் கவற்சியடைகின்றது. என்பிதாவே விரைந்து அதனைச் சொல்லியருளும்" என்றான். 
பிரமதேவர் தக்கனை நோக்கி, ''மகனே, இது எல்லாராலும் அறிய முடியாத தன்மை" என்று கருதி நான் 
சொல்வதை நன்கு கேட்குதி. அழியாத முதல்வராகிய சிவபெருமானைக் குறித்து வேதங்கள் கூறியவைகள் 
மாத்திரம் விதிவாதமும் ஒழிந்தன துதிவாதமுமாம். ஆதலால் அச்சிவபெருமானை யொழிந்த மற்றைத் 
தேவர்களுக்கும் உயிர்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் வேதங்கள் முதன்மை கூறுதல் முகமனாம். 

    ஒரு பொருளைப் புகழவேண்டினால் அதன் நிலைமைக்கு மேலாகவும் புகழலாம். அது உலகத்திலுள்ளோர் 
பிராமணர்களைப் பிரமாவாகிய யான் என்று சொல்லுதல் போலும். யாதொரு பொருளை யாவர் வணங்கினாலும் 
அவ்வணக்கமெல்லாம் சிவபெருமானைப் போயடையும். அதுபோல, வேதங்கள் மற்றைத் தேவர்கள் முதலாயினார்க்குச் 
சொல்லுகின்ற புகழ்களெல்லாம் எல்லா நதிகளும் சமுத்திரத்தைச் சென்றடையுமாறு போலச் சிவபெருமானைச் 
சேர்வனவாம். மகனே, இன்னுங்கேள். நான் மேலே சொல்லுமவைகள் வேதசாகைகளெல்லாம் எடுத்துச் சொல்லுகின்ற 
சத்திய வசனங்களாம். அவற்றைக் கேட்பாய்: 

    எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்தழித்து மீண்டும் படைப்பவனும், ஆன்மாக்களுக்குத் திருவருள் 
பாலித்து அவைகளை ஆண்டருளும் தலைவனும், ஆதியந்தமில்லாதோனும் சிவனேயென்றும்; செகத்பிதாவும், 
சுத்தசாட்குண்ணியனும்,அருவும் உருவுமாகும் சுத்தனும், அறியவொண்ணாத சோதியும், எங்கும் வியாபித்திருக்கும் 
ஞானசொரூபியும், அநாதியாயுள்ளவனும், தேவாதிதேவனும், என்றுமழியாதோனும், ஆன்மாக்களுள் நீங்காதிருக்கின்ற 
பரமானந்த தாண்டவனும், சிவனேயென்றும்; மூவுலகங்களிலுந் தோன்றுகின்ற பொருள்களையெல்லாம் பெற்றருளும் 
பிதாவாகிய திரியம்பகனும், எல்லார்க்குஞ் சாக்ஷியாய் நிற்கின்றோனும், தாணுவும்,பரனும், தனக்கு ஒப்பாரும் 
மிக்காரும் இல்லாத கடவுளும், சிவனே என்றும்; 

    பெருமையிற் சிறந்தோனும், ஏகனும், அளவிடப்படாத குணத்தையுடையவனும், பிரமவிட்டுணுக்களால் 
அறியப்படாதோனும்,ஆண் பெண் அலியென்னும் மூன்று பாலுமில்லாதோனும், அன்பர் யாவர்க்கும் வேண்டியவற்றை 
வேண்டியாங்கு ஈபவனும் சிவனே என்றும்; பிரமா முதலாக நின்ற பசுவர்க்கங்கட்கெல்லாம் பதியாக நின்றருள் 
செய்யும் பசுபதியும், அவர்க்கெல்லாம் தான்றலைவனென்பதை யாவருந் தெளிய அவர்கள் இறக்க வெந்த சாம்பலையும் 
எலும்பையும் தரிப்பவனும் சிவனே என்றும்; உடம்பெடுத்துப் பிறக்குமெவரையும் தன்னுடைய குணத்துளொடுக்கி 
அவர்க்குத் தானே புகலிடமாகி நின்று அவர்களுடைய குணங்களிற் றான் புகுதலில்லாதோனும், தன்னுடைய இயற்கை 
இத்தன்மையதென்று யான் சொல்லுதற்கரிய தேவனும், ஈசனும் சிவனேயென்றும் அவ்வேதம் கூறும். 

    தக்கனே இன்னுமொன்றைக் கேள். பிரமா முதலாக நின்ற தேவர்களையெல்லாம் நீக்கி அந்தச் சிவனென்றுள்ள 
ஒரு தனிமுதல்வன் றானே முத்தியை விரும்பினாற் கொடுப்பனென்றும் அந்த வேதம் சொல்லிற்றென்னில், மற்று 
யாவர்தாம் தேவராவார். 'சீவராசிகள் பரசிவனையுணர்தலின்றிப் பிறவித் துயரை நீங்கி மோக்ஷத்தையடைவேமென்று 
சொல்லுதலானது உருவமில்லாத ஆகாயத்தின் தோலை உரித்துடுப்பதற்கு நிகராகும்' என்று உபநிடதம் சொல்லிற்றானால்,
 அச்சிவனே பரம்பொருள் என்பதற்கு வேறுசாக்ஷியும் உண்டோ! அச்சிவபெருமானே பரம்பொருள் என்பதனை 
வலியுறுத்துதற்குச் சொல்லிய வேதவாக்கியங்கள் இன்னும் பலவுள. 

    அவற்றை நினைத்துச் சொல்ல எனக்கும் முடியாது. ஒருவாறு சொல்வேனாயினும் சொல்லப் பல நெடுங்காலங் 
கழியும். அங்ஙனம் சொல்லினும் ஒழியா. நீ இதனை முன்னே என்னிடத் தறிந்தனை யாயினும் மகனே இப்பொழுது 
மறந்தனையோ! விட்டுணுவையும் என்னையும் வேறு பலரையும் புகழுகின்ற வேதமானது பரமசிவனைத் துதித்தது 
போல நமக்கு ஓர் உரையாயினும் சொல்லிய துண்டோ! நம்மைச் சொல்லியதும் உபசாரமேயென்று இவ்வுலகமெல்லாம் 
அறியும்படி நம்மை அவ்வேதம் முன்னும் பின்னும் விலக்கியதல்லவா?* நான்கு வேதங்களிலும் ஓர்பாகம் சிவபெருமானுடைய 
பெருமையை எடுத்துப் பேசும்; மற்றோர்பாகம் பிரமவிட்டுணுக்களாகிய எம்மையும் மற்றைத் தேவர்களையும் 
பஞ்சபூதங்களையும் மற்றைப் பலபொருள்களையும் பேசும். இது சத்தியம். தக்கோனே இதனை அறிகுதி. 

* வேதம் முன்னும் பின்னும் விலக்கினமையை, பெரியபுராணத்துத் திருமலைச் சிறப்புச் சூசனம் இரண்டாம்பாராவிற் காண்க.

    பிரமவிட்டுணுக்களாகிய நம்மையும் பரம்பொருள் என்று நினைத்துச் சிவபெருமானைப் போலச் சிறப்புச் 
செய்கின்ற தீய நெஞ்சினர்களாகிய பதகர்கள் தீராத துன்பத்தைத் தருகின்ற வெவ்விய நிரயப்படுகுழியில் வீழ்வார்கள். 
அவர்களை விழுங்கிய அந்நிரயம் உமிழாது. நம்மோடு அச்சிவபெருமானையும் சமமெனச் சொல்கின்றவர் 
எப்பிறப்பிலும் துன்பக்கடலுள் ஆழ்வார்கள். நம்மைச் சிவபெருமானுக்கு அன்பர்களென்றும், அவருடைய 
திருவடித்தொண்டைச் செய்து அவரருளால் வாழும் தேவர்களென்றும் நினைத்துத் தோத்திரஞ்செய்தவர்க்கு 
நாம் அருள்செய்வோம். இங்ஙனம் நினையாமல் நம்மையும் பரம்பொருள் என்று நினைக்கின்ற மற்றையோரை 
நமக்குப் பகைவரென்றெண்ணியே யிருப்போம். 

    'சிவபெருமான் பசுபதி. நாமெல்லாம் பாசத்தாற் பந்திக்கப்பட்டுழலும் பசுக்கள்' என்று விதிப்பொருட்டாக 
வேதங்கள் கூறுகின்ற உண்மைப் பொருளை மைந்தனே நீ தெளியவேண்டினாற் சொல்வேன் கேள். யாங்கள் படைத்தல் 
காத்தல்களாகிய இவ்வரசியலைச் செய்யும்படி சிவபெருமானுடைய திருவடிகளைப் பூசித்துத் துதித்த ஆலயங்கள் 
பலவற்றையும் காணுதி. அந்தச் சிவபெருமானுடைய திருவருளைப் பெறாது முத்தியடைந்தவர்களில்லை; 
அவருடைய அருளின்றி வாழ்கின்ற தேவர்களும் பிறரும் இல்லை; அவருடைய திருவருளைப் பெற்றால் அடைதற்கரிய 
அரும்பொருள்கள் ஒன்றுமில்லை; அவரன்றிப் பதிப்பொருளுமில்லை. இதுசத்தியம். ஆதலால் அக்கடவுளையே 
சரணென்றடைகுதி" என்று பிரமதேவர் தக்கனுக்கு உபதேசித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            தக்கன்றவஞ்செய் படலம்.

    பிதாவாகிய பிரமதேவர் இவ்வாறே சிவபரத்துவத்தை உபதேசிக்கக் கேட்டுணர்ந்த தக்கன், தீவினைப் 
பயனையனுபவிக்கும் ஊழுண்மையினால், மோக்ஷத்தை விரும்பாதவனாய், ''யான் சிவபெருமானைக் குறித்துத் 
தவஞ் செய்து, அவருடைய திருவருளினால் பிரமா முதலிய தேவர்களுடைய வளங்களினும் மேலாகிய வளங்களைப் 
பெறுவேன்" என்று எண்ணி,  அதில் ஆசையுற்று, பிரமாவை வணங்கி, "பிதாவே, நீர் உபதேசித்த பரமசிவனையே 
நான் பரம்பொருள் என்று துணிந்தேன்; அவரை நோக்கிப் பெருந்தவஞ் செய்து பலவளங்களைப் பெற விரும்பினேன். 
யான் தவஞ் செய்தற்குரிய ஓரிடத்தை விரைவிற் கற்பித்து விடைகொடுத்தருளும்' என்றான். 

    அவர் தம்முடைய மனத்தினின்றும் தோன்றிய மானசவாவியை அதற்குரிய இடமாகக் கற்பித்து அனுப்பினார். 
தக்கன் பிரமாவினிடத்து விடைபெற்று, அத்தடாகத்தை அடைந்து, அதன் ஓர்சாரில் இருந்து, காற்று மழை வெய்யில் பனி 
ஆகிய இவைகளுக்கஞ்சாமல், பிராண வாயுவைச் சுழுமுனைவழியாய் எழுப்பி மூலாக்கினியைச் சுவாலிப்பித்துப்
புருவமத்தியிலுள்ள அமிர்த தாரையை வீழ்த்தி, உடம்பை அன்பினால் அபிஷேகஞ்செய்து குளிர்வித்து, இருதய 
கமலத்திலுள்ள சிவபெருமானுக்குக் கொல்லாமை முதலிய அட்டபுட்பங்களைச் சாத்தி, ஒருப்பாட்டோடு மானசமாக 
ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை விதிப்படி செபித்துப் பூசனை செய்து, பாசம் நீக்கும் ஞானிகளைப்போல ஆயிரம் வருஷம் 
அருந்தவத்தைச் செய்தான். 

    அதனைச் சிவபெருமான் திருவுளஞ்செய்து, அவனுக்கு வரங்கொடுக்கும்படி உமாதேவியாரோடு ரிஷபாரூடராய் 
எழுந்தருளிவந்தார். தக்கன் அவருடைய வரவை அறிந்து, விரைவில் இருக்கைவிட்டெழுந்து, "என் மனக் கருத்தும் 
நிறைவேறின' என்று சொல்லி, மிகுந்த அன்பும் மகிழ்ச்சியும் உண்டாக,"எம்பெருமானுடைய திருவடிகளைத் துதிப்பேன்" 
என்று எதிர்கொண்டு அவருடைய திருவடிகளை வணங்கி, ஒன்றுபோல ஆயிரந் தோத்திரங்களைச் சொல்லி நின்றான். 
சிவபெருமான் அவனை நோக்கி, "தக்கனே உன்னுடைய வழிபாட்டை மகிழ்ந்தோம். உனக்கு வேண்டியதென்னை? 
சொல்லுதி" என்றார். 

    தக்கன் தன் விதி வழியே மதியுஞ் செல்லுதலால்,  மோக்ஷத்தை விரும்பாதவனாய், இவ்வாறு வரம் வேண்டுவான்: 
"எம்பெருமானே, இப்பூவுலகமும் விண்ணுலகமும் கந்தருவர் முதலாயினோர் இருக்குமிடங்களும் பிரமவிட்டுணுக்களுடைய 
பதங்களும் திசைகளும் என்னுடைய ஆஞ்ஞா சக்கரம் செல்லும்படி அருள்புரியும்; உம்மை வந்து துதிக்கும் உயிர்களெல்லாம் 
என்னைவந்து துதிக்கவும், யான் உம்மையன்றி மனத்தாலும் பிறரை வழிபடாதிருக்கவும், வரந்தந்தருளும்; தேவர்களும் 
அவுணர்களும் யான் பணித்த பணிகளைச் செய்யவும், எனக்கு அநேக புதல்வர்களும் புதல்விகளும் உண்டாகவும் 
அருள்செய்யும்; உம்முடைய சத்தியாகிய உமாதேவியார் எனக்கு மகளாக, நீர் மறையவராய் வந்து அன்பினோடு 
திருமணஞ் செய்தருளும்'' என்று இவ்வரங்களைத் தக்கன் வேண்டினான். 

    சிவபெருமான் அவற்றைக்கேட்டு, "தக்கனே இது நன்று.இவ்வரங்களை உனக்குத் தந்தோம். நீ நன்னெறியில் 
நிற்பாயாயின் இவ்வரங்கள்  நிலைபெறும்'' என்று அருள்செய்து, அந்தர்த்தானமாயினார். வரம் பெற்ற தக்கன் 
சிவபெருமானைத் துதித்துப் பெருமகிழ்ச்சியுற்று, பிரமாவை வரும்படி நினைத்தான். அவர் அதனைத் தெரிந்து, 
அவனுக்குச் சிவபெருமான் கொடுத்த வரங்களையும் இனிமேல் வரற்பாலன எல்லாவற்றையும் ஞானத்தால் அறிந்து, 
"தக்கன் நெடுங்காலம் சிவபெருமானை நினைத்துத் தவஞ்செய்தவாறு நன்று!" என்று பெருமூச்சுவிட்டுச் சிரித்து, 
"தக்கன் மோக்ஷமடைந் துய்யும்படி யான் உண்மையாகிய சிவபரத்துவத்தை உபதேசித்தேன். அவன் இத்தன்மைய 
னாயினான். ஐயோ இனி என்செய்வேன்! நாடோறும் அமிர்தத்தை ஊற்றி வளர்த்தாலும் வேம்பு கைப்பது போமோ. 
சிவனே பரம்பொருள் என்று அறிந்துபோய், இது நாள்காறும் மேலாகிய தவத்திலிருந்து, உலகில் என்றும் நீங்காத 
பழி பாவங்களைப் பெற்றான். விதியை யார் விலக்கவல்லார்! இனி யான் செய்வதென்னை?' என்று மனத்துயரமுற்று, 
விரைந்து ஆசி கூறிக்கொண்டு தக்கனையடைந்தார். 

    அவன் "இங்கே ஓர் நகரத்தைச் செய்குதி' என்றான். பிரமா "விரைவிற் செய்வேன்” என்று, தன்கைகளால் 
தக்ஷபுரி  என்று ஓர் நகரைப் பொன்னுலகமும் நாணும்படி பூமியிலே செய்தார். தக்கன் அந்நகரிற் சென்று, அதனைப் பார்த்து 
மனமகிழ்ந்து, "விண்ணுலகத்துள்ள நகரினுள் ஒன்றும் இதற்கு நிகரில்லை, இதற்கிணை இதுவே' என்று பிரமாவினிடத் 
தன்புசெய்து, கோயிலினுட்புகுந்து, முனிவர்கள் துதிக்கச் சிங்காசனத்தின்மீது ஐசுவரியங்களோடு வீற்றிருந்தான். 
சிவபெருமானிடத்தே தக்கன் வரம்பெற்றதைத் தமது குருவாகிய வியாழன் சொல்ல இந்திரன் முதலாகிய தேவர்கள் 
கேட்டு அஞ்சி, அவனிடத்து வந்தார்கள். 

    அசுரகுருவாகிய சுக்கிரன் தேவர்கள் யாவரும் தக்கனிடத்துப் போய் அவனை வழிபாடு செய்தமையைத் 
தெரிந்து, இந்திரனுக்குப் பயந்து மேரு மலையின் ஒரு சாரலிலிருக்கும் அசுரராசனை அடைந்து, 'அரசனே உனது 
துன்பம் நீங்கியது. இனி நீ அஞ்சாதே. இந்திரனுக்குத் தக்கன் தலைவனாயினான். இனி நீ அத்தக்கனை அடைகுதி " 
என்றான். அசுரராசன் அதனைக் கேட்டு மனத்தில் மகிழ்ச்சி மிகுந்து, கிளைஞர்களோடும் தக்கனிடத்துப் போயினான். 
சூரியன் முதலாகிய கிரகங்களும் நக்ஷத்திரங்களும் தேவர்களும் திக்குப்பாலகர்களும் பாதாளவாசிகளும் பிறரும் 
அவனிடத்து வந்தார்கள். இவர்கள் யாவரும் தக்கனுடைய கால்களை வணங்கி, சிவபெருமானுடைய 
திருவருட்டிறத்தைப் புகழ்ந்து நின்றார்கள். இவ்வாறு பிரமா முதலிய அனைவரும் தங்கள் தங்கள் கடமைத் தொழிலாக 
நினைந்து நாடோறும் வந்து வழிபட, செயற்பாலனவற்றை அறியாத தக்கன் தன் குடை நிழலும் ஆஞ்ஞா சக்கரமும் 
எவ்வுலகும் செல்ல இருந்தரசியற்றினான்.

            திருச்சிற்றம்பலம்.

            தக்கன்மகப்பெறுபடலம். 

    பிரமாவினுடைய பாதத்திற் பிறந்தவளும், கற்பினால் அருந்ததியினும் மேம்பட்டவளும், உலகுக்கெல்லாம் 
இறைவியும் அழகிற் சிறந்தவளும் ஆகிய வேதவல்லியென்பாளைத் தக்கன் விவாகஞ்செய்து, ஆதிசேஷன் ஆயிரம் 
இரத்தினங்களை ஈன்றாற்போல ஆயிரம் புதல்வர்களைப் பெற்று, அவர்களுக்கு உபநயனமும் வேதாத்தியயனமுஞ் 
செய்வித்து, அவர்களை நோக்கி, "நீவிர் யாவரும் மானச வாவியிற்போய்ச் சிவபெருமானைத் தியானித்துத் 
தவஞ்செய்து உயிர்களைச் சிருட்டிக்கும் வரத்தைப் பெற்று இங்கே வாருங்கள்' என்று சொல்லியனுப்பினான். 

    புதல்வர்கள் அவனை வணங்கி விடைபெற்றுக்கொண்டு மானச வாவியிற்சென்று, அதில் மூழ்கி, 
சிவபெருமானை நோக்கி நெடுங்காலம் தவஞ்செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது, நாரதமுனிவர் 
அவர்களிடத்து வந்து, "நீவிர் ஜலத்தினின்று தவஞ்செய்து மிக வருந்துகின்றீர்கள். நீவிர் விரும்பியது யாது? 
சொல்லுங்கள்'' என்று வினாவினார். அவர்கள் 'முனிவரே கேளும். எமது பிதாவின் அநுமதியினாற் படைத்தற் 
றொழிலைப் பெறும்படி சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்கின்றோம்" என்றார்கள். அதனைக்கேட்ட 
நாரதமுனிவர் கையோடு கையைத் தட்டிச் சிரித்து, "இதுதானா சிவபெருமானாற் பெறும் வரம்" என்றுகூறி, 
பின்னும் சொல்வார்: 

    'சிவபெருமானைத் திரிகரணங்களாலும் வழிபட்டு அருந்தவத்தைச் செய்து, முப்பாசங்களும் நீங்குதற்குரிய 
வழியைச் சிந்தியாமல், 'குற்றத்தையுடைய படைப்புத் தொழிலுக்கா ஆசை வைத்தீர்கள்! அருந்தவத்தைச் 
செய்து நீவிர் இனி அடைகின்ற சிருட்டித் தொழிலின் முறையைச் சொல்லக் கேட்குதிர். அதனால் பெருந்துன்பத்தைத் 
தருகின்ற பிறப்பும் இறப்புமே வருவது. அது உங்களுக்கு இனியதோ! இப்பொழுது நீவிர் விரும்பிய படைப்புத்தொழிலைச் 
செய்யும் பிரமாவினுடைய ஐந்து தலைகளுள் ஒன்று சிவபெருமான் திருக்கரத்தாற் கிள்ளும்படி அவரிடத்து நிகழ்ந்த 
* தீமையையும் பழியையும் நினைக்கிலீரோ. பிரமா முன்னொரு காலத்தில் 'என்னையல்லது கடவுளரில்லை, யானே 
யாவர்க்கும் முதல்வன்' என்று கூறி, விட்டுணுவோடு பலநெடுங் காலம் போர்செய்து, பின் சோதியைக் கண்டு, அதனைத் 
தேடும்படி அன்னப்பக்ஷி வடிவங் கொண்டதையும் அறிந்திலீர்களோ! 

* தீமை - சிவதூஷணம்.

    எள்ளுக்குளெண்ணெய்போல எங்கும் நிறைந்த சிவபெருமானே எல்லாவற்றையும் படைக்க, அப்பிரமா 
அக்கடவுளுடைய மாயவலையிலகப்பட்டு, 'எல்லாம் நம்மாலுண்டாயின' என்று அகங்காரங் கொண்டிருப்பார். 
ஆசையோடு உயிர்களைச் சிருட்டிக்குந் தன்மையாற் பெறும்பயன் ஒரு பெருமையல்லது வேறு யாது! 
முனிவர்களே நான் சொல்வதைக் கேண்மின். இது நல்லதென்று ஒருவர் ஒரு பொன்விலங்கைத் தமது காலிற் 
பூணலாகுமோ! ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு இன்பத்தை விரும்பினாரோ அவர்க்கு அவ்வளவுக்கு அவ்வளவு               
துன்பம் வந்தடையும். அது சத்தியம். நீவிரும் படைப்புத்தொழிலைச் செய்வீராயின், கையகப்படுகின்ற 
துன்பமென்னுங் கடலில் ஆழ்வீர்கள்; அன்றியும், சிவபெருமானை மறந்து 'யாமே பரம்பொருள்' என்று எண்ணுவீர்கள்; 
நுமக்கடாத தீவினைகள் பலவற்றையும் செய்வீர்கள்; மயக்கமடைவீர்கள்: பேருணர்வை நீங்குவீர்கள். 

    ஆதலால் இந்தப் படைப்புத்தொழிலை விட்டுவிடுங்கள். மோக்ஷத்தை அடைதற்குரிய மேலாகிய நிலைமையை 
முயன்றடைதிர். ஞானத்துக்கேற்ற வொன்றைக்காட்டி அது இத்தன்மையதென்று சொல்லமுடியுமோ! மேலாகிய 
தவத்தைச் செய்து அரிய மோக்ஷத்தையடைந்தவர் பலர்; அதனைப் பெறும்படியிருந்தவர் பலர்; உலகிலுள்ள 
சிற்சிலராகிய மற்றைத் திருத்தொண்டர்களுடைய இயல்புகளைச் சொல்லக் கேண்மின். அவர்கள் சிவனடியாரல்லது 
தமக்குச் சுற்றம் வேறில்லாதவர்கள்; அச்சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளேயன்றி வேறு பற்று இல்லாதவர்கள்; 
மிகவும் இனிய குணத்தினர்; எவ்வகைக் குற்றங்களும் இல்லாதவர்; அன்பினாற் சிவத்தை அடைபவர்: ஆணவ மலத்தின் 
வலியைக் கெடுத்துத் திருவருள் பொழிகின்ற அறிவிற் சிறந்தோர்; எப்பொழுதும் சிவபெருமானை அடைக்கலமெனச் 
சார்ந்து வாழ்பவர்; சொல்லமுடியாத பெருமையுடையோர். 

    ஆதலால் நீவிரும் அவர்களைப்போல எவ்வகைப் பற்றுமில்லாத மேலான நெறியையடைந்து,மோக்ஷத்தைப் 
பெறுதிர். பெருஞ்செல்வங்களைப் பெற்று அதனால் அறிவிழந்திருக்கின்ற உங்கள் பிதாவாகிய தக்கன் பணித்த 
பணியைத் தவிருதிர்" என்று நாரதர் உபதேசித்தார். மோக்ஷத்தைப் பெறுதற்குரிய ஊழினையுடைய தக்கனுடைய 
புத்திரர்கள் ஆயிரவரும் அவற்றைக் கேட்டு, ஓர் பக்கத்தில் வந்து தம்முள் யோசித்து, தமது பிதாவின் சொல்லினும் 
இது சிறந்ததே என்று உறுதிசெய்து, நாரத முனிவருடைய பாதங்களை வணங்கித் துதித்தார்கள். 

    அவர் அவர்களுடைய முதுகைத் தடவி, சிவபெருமானுடைய புகழ்களை யெடுத்துத் துதித்து, மோக்ஷத்தை 
விரும்புகின்ற ஞானிகளுடைய நிலைமையைத் தெளிவித்து, மந்திரங்களையுங் கிரியைகளையும் உபதேசித்து, 
அவர்களுடைய பழைய உணர்வை மாற்றி, வேறோருண்மை ஞானத்தை உதவி, "புதல்வர்காள் நீவிர் யாவரும் 
நாம் உபதேசித்தபடி மகா தவங்களைச் செய்து மோக்ஷத்தையடைமின்" என்று கூறி, ஆகாயத்திற் போயினார்.
தக்கனுடைய குமாரர்கள் ஆயிரவரும் அந்த நாரத முனிவரைப் புகழ்ந்து அவருடைய பாதங்களை வணங்கி, 
அவருபதேசித்த முறையைக் கடைப்பிடித்து, காமக் குரோத முதலிய குறும்புகள் எல்லாவற்றையும் பற்றறக் 
களைந்து, மௌனிகளாகி, மானச வாவியில் அருந்தவஞ் செய்து மோக்ஷமடைந்தார்கள்.

    புதல்வர்களைத் தவத்துக்கனுப்பிய தக்கன், "என் குமாரர்களுடைய செய்கைகள் இன்னும் தெரிந்ததில்லை" 
என்று சிந்தித்து, ஞானத்தினால் நோக்கி, "மானச வாவியில் என்சொற்படி போயிருந்து தவஞ்செய்த புதல்வர்கள்மாட்டு 
நாரதன் வந்து என்சொல்லைக் குற்றமென்றுகூறி அவர்கள் கருத்தை மாற்றி ஞானத்தையுபதேசித்து மோக்ஷத்தை 
யடைவித்து மீண்டு போயினான். அவர்கள் யாவரும் அவனுடைய உபதேச நெறியில் நின்று ஒருவரும் தப்பாமல் 
மோக்ஷமடைந்தார்கள். எனக்கு இனிப் புத்திரர்களில்லை'' என்று தெளிந்து, வருத்தமுற்றிருந்து, பின்னும் ஆயிரம் 
புதல்வர்களைப் பெற்று, வேதாத்தியயனஞ் செய்வித்து, நீவிர் மானசவாவியிற் போயிருந்து சிவபெருமானை 
நோக்கித் தவஞ்செய்து சிருட்டிக்கும் வரத்தைப் பெறுதிர்" என்று சொல்லியனுப்பினான்.

     அப்புதல்வர்கள் அதனைக் கேட்டு நன்றென்று, பிதாவினுடைய பாதங்களை வணங்கி விடைபெற்று, 
மானச வாவியிற்போய்த் தவஞ்செய்திருந்தார்கள். முன்பு சென்ற நாரத முனிவர் ஓர் உபாயத்தை யெண்ணி, 
அவர்களிடத்தும் வந்து, "நீவிர் யாவர்? எப்பொருளை விரும்பித் தவஞ்செய்கின்றீர்கள்? கபடமில்லாத 
மனத்தினையுடைய முனிவர்காள் எனக்கு அதனைச் சொல்லல்வேண்டும்" என்றார். அதைக் கேட்ட தக்கனுடைய 
குமாரர்கள் "நமது தந்தை தக்ஷப் பிரஜாபதி; அவனுக்குச் சிவபெருமான் கொடுத்த வரத்தினாற் பிறந்த புதல்வர்கள் 
யாங்கள். அவன் உடம்பும் உயிரும் வருந்தச் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து சிருட்டி செய்யும் வரத்தைப் 
பெறும்படி எங்களை இத்தடாகத்திற்கு அனுப்பினான்" என்று கூறினார்கள். 

    நாரதமுனிவர் அதனை வினாவி, "நீவிர் நல்ல தவங்களைச் செய்து பரமசிவனுடைய பாதார 
விந்தங்களையே புகலிடமாகக் கொண்டு அவற்றை அடைதலையே தவத்தின் பயன் என்று எண்ணினீரல்லீர். 
யாவர் தாம் குற்றத்தைப் பொருந்தாதவர்! எல்லாவற்றையும் அறிந்து தவஞ்செய்து சிருட்டித்தொழிலையே 
அடைவீர்! இதனாற் பிறப்பிறப்புக்களை நீக்குவீரல்லீர். அஞ்ஞானத்தைத் தானும் இதனால் நீங்குதிரோ ! 
இதனால் உமக்கு வரும் பெருமை யாது? நீங்கள் கைக்கொண்ட இந்நிலைமை, அழுக்குப் படிந்த சரீரத்தை
யுடையோர்கள் பரிசுத்தமாகிய நீர்த்துறையை அடைந்தும் அதனாற் றம்முடம்பிலுள்ள அழுக்கைக் கழுவிக் 
கொள்ளாது சேற்றில் மூழ்குதலைப்போலும். மேலாகிய இத்தவத்திற்கு விலையாக நீர்பெறும் சிருட்டித்தொழில், 
நெடுங் காலம் உலகத்திலே சிறப்போடிருத்தற் கேதுவாமன்றி, நிலையாகுமோ! நாசோற்பத்தியும் துன்ப 
இன்பங்களும் இல்லாத மோக்ஷமொன்றே உயிருக்கு உறுதி பயப்பதாகும். 

    நீவிர் அவ்வியல்பினையுடைய மோக்ஷத்தை விரும்புகின்றிலீர். பிறப்பிறப்புக்கள் உம்மைவிட்டு 
நீங்குமோ! குழந்தைகளுடைய மனமும், பெண்களுடைய மனமும்,பித்துற்றோர் மனமும், மெய்ந்நூல்களும், 
தாம்கொண்ட கோட்பாட்டையே சாதிக்கப் பெறுவனவா மன்றி வேறொன்றுளதோ! ஆதலினால், தவஞ்செய்து 
படைப்புத் தொழிலைப் பெறும்படி உங்களுக்குக் கற்பித்தவன் உங்கள் பிதாவாகிய தக்கனேயாயின், 
அவன் சிவபெருமானாற் பெரிய வரங்களைப் பெற்று அவருடைய பாத தாமரைகளைப் பத்திசெய்யாத 
தன்மையால் அறியாமையையுடையனாம். அவன் அத்தன்மையன் ஆதலால், அவனுடைய குமாரர்களாகிய 
நீங்களும் அத்தன்மையினரே. நன்னெறியைப் போதிக்கும் ஆசாரியனாவான் தன்னையடைந்து வழிபட்டவருடைய 
தீமைகளெல்லாவற்றையும் நீக்கி முத்தியடையும்படி பேரருளோடு உபதேசிப்பவனல்லவா! உமக்கு முன்பிறந்த 
ஆயிரம் புதல்வர்களும் தக்கனுடைய பணியினாற் படைப்புத் தொழிலை வேண்டி இத்தடாகத்தில் வந்து 
தவஞ்செய்தபொழுது, அவர்களுடைய அஞ்ஞானங் கெடும்படி உபதேசித்து, ஞானநெறியில் நிலைபெறச் செய்து, 
மோக்ஷத்தையடைவித்தேம்" என்று நாரதமுனிவர் கூறினார். 

    தக்கனுடைய குமாரர்கள் அவருடைய பாதங்களைச் சிரமேற்கொண்டு வணங்கி, "சிறியேங்கள் உய்ய 
வேண்டுமென்று திருவுளஞ்செய்து இங்கெழுந்தருளிவந்தீர்.நீர் உபதேசிக்கும் மெய்ந்நெறி இன்னதென்று அறியேம். 
எமக்கு அதனைச் சொல்லியருளும்'' என்றார்கள். நாரதமுனிவர் மிக்க அன்போடு அவர்களுக்கு அருள்புரிந்து, 
"யான் உமக்கு ஞானத்தைப் போதித்து நீவிர் ஐம்புலன்வழியே சென்று மதிமருண்டு இன்ப துன்பங்களை
யநுபவித்துழலுகின்ற பிறவியை இனித் தொலைப்பேன்" என்று அதனை உபதேசிப்பார்: "சிறுவர்காள். 
சிவபெருமானுடைய திருவடிகளை அவர் அருளால் வழிபடுகின்ற பெரியோர்கள் அநுட்டிக்கும் பாதங்களும்
 அவர்கள் அடையும் பதங்களும் நான்காம். அவற்றுள் ஞானபாதத்தில் நிற்போர் பெறுவது எல்லாவற்றிலும் 
உயர்ந்த ஓர்கதியாம். அதுவே முத்தியென்று சொல்லப்படும். 

    அது சிவநேசச் செல்வர்களாய் இருவினையொப்பு மலபரி பாகமுற்ற ஞானிகளால் அறியப்படுவதல்லது, 
தேவர்களுக்காயினும் அறிதற்பாலதோ! அந்த ஞானபாதத்தில் நிற்போர் சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்து, 
பின்பு துன்பமயமாகிய இந்தப் பிறவியிற்பொருந்தார்; சொல்லுதற்கரிய அருள் ஞானத்தோடு இயைந்து எந்நாளும் 
பேரின்பத்தை அநுபவித்திருப்பர். ஆதலால் நீங்களும் அந்த நெறியில் நின்று ஞான யோகத்தினால் மோக்ஷத்தை 
அடைகுதிர்" என்று சிவாகமத்தின் ஞானபாதம் பொருண் முழுதையும் நாரதமுனிவர் சிவபெருமானுடைய 
திருவருளினால் அவர்களுக்கு உபதேசித்து, அவர்கள் யாவரையும் அந்நெறியில் நிற்கும்படி நிறுத்தி, ஆகாயவழிக் 
கொண்டு சென்றார். தக்கனுடைய குமாரர்கள் ஆயிரவரும் ஒருப்பாடு பொருந்திய மனத்தோடு மேலாகிய 
ஞானமார்க்கத்தில் நின்று, சிவபெருமானுடைய திருவருளினால் மோக்ஷத்தையடைந்தார்கள்.

    இவ்வாறு நாரத முனிவருடைய உபதேசநெறியில் நின்று தன்புத்திரர்கள் ஆயிரவரும் மோக்ஷத்தையடைதலும், 
தக்கன், "தவஞ்செய்யச் சென்ற என்புதல்வர்கள் எங்கே போயினார்கள்? இன்னும் வந்திலர்' என்று அயர்ந்து,
ஞானத்தால் நோக்கினான். நோக்கும் பொழுது, "நாரத முனிவர் அவர்களையடைந்து ஞானத்தை யுபதேசிக்க 
அவர்கள் அதனை யுணர்ந்து அந்நெறியில் நின்று மோக்ஷமடைந்தார்கள்'' என்பது தெரிந்தது. தெரிதலும், 
தக்கனுக்குக் கோபம் மிகுகின்றது; மனம் வருந்துகின்றது; உயிர் பதைக்கின்றது; துன்பம் வளர்கின்றது; 
உடம்பு வியர்க்கின்றது. 

    இவ்வாறாகிய தக்கனுடைய கோபத்தினால் கிரகங்கள் ஆகாயத்தில் நின்று பயந்தோடின. 
நிலவுலகமெல்லாம் இரங்கின. தன்புதல்வர்களுடைய செயலை யறிந்து இவ்வாறு தளர்ந்து சோர்ந்த தக்கன், 
நாரத முனிவருடைய உபாயத்தை நினைத்துக் கோபங்கொண்டு, "பரமசிவனிடத்து வரத்தை வேண்டிய 
என் புதல்வர்களை எனக்கு இல்லாமற் செய்த நாரதன் இனி நாடோறும் எண்ணமிகுந்து உலகமெங்கும் 
உழன்று திரியக்கடவான்" என்று சபித்து, "இனித் தவஞ்செய்தற்காகப் புத்திரர்களைப் பெறேன்; புதல்வர்களைப் 
பெற்றது போதும். இனிப் பெண்களையே பெறுவேன்" என்று உறுதிசெய்து, சுபுத்தி, புத்தி, சுரசை, திருதி,துட்டை, 
கிரியை, கீர்த்தி, சிரத்தை, இலச்சை, மேதா, கத்தி, சாந்தை, வபு, கியாதி, சம்பூதி, நாரி சன்னதி,மிருதி, பிருதி, 
ஊற்சை, அனசூயை, சுவா,கமை, சுவதை என்னும் இருபத்துமூன்று பெண்களைப் பெற்று, அவர்களுள் 
சுபுத்தி முதலிய முதற் பதின்மூன்று பெண்களையும் தருமருக்கும், மற்றைக் கியாதி முதலிய பத்துப் பெண்களையும் 
பிருகு, மரீசி, புலத்தியர், அங்கிரா, புலகர், வசிட்டர், அத்திரி, அக்கினி,கிரது,பிதரா என்னும் பதின்மருக்கும் 
முறையே விவாகஞ்செய்து கொடுத்தான். 

    இவருள் தருமர் இருபத்தேழு புதல்வர்களைப் பெற்றார். பிருகு விதாதா, தாதா என்று இரண்டு 
புத்திரர்களையும் இலக்குமியையும் பெற்று, இலக்குமியை விட்டுணுவுக்கு மணஞ்செய்துகொடுத்து, 
தவத்திலிருந்தார். மரீசி நான்கு பெண்களைப் பெற்றார். இவர்கள் வழியிலே பலர் பிறந்தார்கள். 
புலத்தியர் பல பிள்ளைகளைப் பெற்றார். அங்கிரா அங்கிதீரன், பரதன் என்னும் இரண்டு புத்திரர்களையும் 
நான்கு புத்திரிகளையும் பெற்றார். அவர்கள் குடியிற் பிறந்த முனிவர்களும் பலர். புலகர் தத்தாத்திரியைப் 
பெற்றார். அவர் வமிசத்திற் கும்பர் பிறந்தார். வசிட்டர் ஒருபுத்திரியையும் ஏழுபுத்திரர்களையும் பெற்றார். 
அத்திரி சத்திநேத்திரன், சந்திரன், சனி, சங்கதானன் என்னும் புத்திரர்களைப் பெற்றார். அக்கினி மூன்று 
புதல்வர்களைப் பெற்றார். கிரது மூன்று புதல்வர்களைப் பெற்றார். பிதரா மேனை,பூமி என்னும் இரு 
பெண்களைப் பெற்றார். அந்த மேனையை இமயமலை யரசன் மணஞ்செய்தான். பூமியை மேருமலை மணஞ்
செய்து மந்தரகிரியைப் பெற்றது. அம்மந்தரம் தவஞ்செய்து சிவபெருமான் தன்னிடத்தில் எந்தநாளும் 
எழுந்தருளியிருக்கப் பெற்றது. மேருமலை பின்னர் வேலையென்பவளைப் பெற்றுக் கடலுக்கு மணஞ் செய்து
கொடுக்க, அது சரவணியென்னும் பெண்ணைப் பெற்றுப் பிராசினன் என்பானுக்கு மணஞ்செய்து கொடுத்தது. 
அவன் பத்துப் பிள்ளைகளைப் பெற்றான்.

            திருச்சிற்றம்பலம்.

            சந்திரசாபப்படலம்.

    இவ்வாறாகிய பலகிளைகள் பல்கவிருக்கின்ற தக்கன், அதன்பின் நாண்மீன்களுள் இருபத்தேழு 
பெண்களைப்பெற்று, அவர்களை அழகிற் சிறந்த சந்திரனுக்கு மணஞ்செய்து கொடுத்து, அவனை நோக்கி, 
"நீ இவ்விருபத்தேழு மனைவியர்களிடத்தும் ஒருதன்மையாகிய அன்புடையனாயிரு: சிலரை அன்பினோடு 
புணர்ந்து சிலரை இகழ்ந்து வெறுத்தல் செய்யாதே!' என்று கூறி, அப்பெண்களோடு அனுப்பினான். சந்திரன் 
மனைவியர்களோடு விமானத்தின் மீதேறித் தன்பதத்தையடைந்து, எல்லாரிடத்தும் சமத்துவமான அன்பு 
பாராட்டிக் கூட எண்ணி, ஒருநாளைக் கொருவராக அவர்களோடு புணர்ந்து கொண்டு வந்தான். வருநாளிலே, 
அவர்களுள் கார்த்திகையும் உரோகிணியும் பேரழகுடையவர்களா யிருந்தமையால், அவர்களிருவரை மாத்திரம் 
மிக்க ஆசையோடு புணர்ந்து, மற்றை இருபத்தைந்து மனைவியர்களையும் புணராமல் வெறுத்துத் திரிந்தான். 
அவர்கள் கோபங்கொண்டு வருந்தி, தந்தையாகிய தக்கனிடத்திற் போய், இந்நிகழ்ச்சியைச் சொன்னார்கள். 

    அவன் சினந்து, சந்திரனுடைய கலைகள் யாவும் தேய்ந்து இல்லையாகுக  என்று சாபங் கூறினான். 
இந்தச் சாபத்தினாலே பொய்ச் செல்வனுடைய புகழ் குன்றுமாறு போலச் சந்திரகலைகள் நாளுக்கொன்றாகக் 
குறைந்தன. இப்படிப் பதினைந்துநாட் கழிந்தபொழுது, தன் பதினைந்து கலைகளழிய, அவனே யென்பதற்குச் 
சாக்ஷி சொல்லுதல்போல ஒருகலை மாத்திரம் இருந்தது. அவன் மயங்கி மெலிந்து வெட்கித்து, இந்திரனை யடைந்து, 
"தக்கனுடைய சாபத்தால் என்னுடைய கலைகளனைத்தும் அழிந்து இந்தக் கலை யொன்றுமாத்திரம் நின்றது. 
இன்றைக்கு இவ்வொரு கலையும் அழியுமாயின் மேலாகிய என்னியல்பு குன்றும்; பேருந்தொலையும்; எங்கும் 
பரவிய என் புகழும் அழியும்; வசையாகும்; இனிச் செய்வதென், யான் ஒன்றையும் அறிகிலேன். அரசனே எனக்கு 
ஓர் நல்ல புத்தியைச் சொல்லுவாய்' என்று சொல்லி இரங்கி ஏங்கித் தாங்கற்கரிய துன்பக்கடலுள் மூழ்கினான். 

    இந்திரன் அவனைத் தழுவி, "என் பாங்கனே, அஞ்சாதே" என்று சிலவற்றைச் சொல்வான்: "நீ 
முன்னொரு காலத்திலே திருக்கைலாச மலையில் விநாயகக் கடவுளுடைய முதிரை வர்க்கங்களை உட்கொண்ட 
பெரிய திருவயிற்றையும் திருக்கரத்திலுள்ள மோதகத்தையும் பார்த்துச் சிரித்தாய். அவர் கோபித்து உன்னை 
யாருங் காணாராய் நிந்தைசெய்து அகலும்படி நீசர் போலாகுதி' என்று சபித்தார். அந்தச் சாபத்தால் அன்றுதொட்டு 
யாவரும் மிக நிந்தித்து உன்னை நோக்காராய் அகல நீ வெட்கித்து ஆகாயத்திற் சஞ்சரியாது ஒடுங்கினாய். 
பிரமா முதலிய தேவர்கள் அது கண்டு,கைலாசத்துக்குச் சென்று, விநாயகக் கடவுளுடைய திருவடிகளைப் பணிந்து, 
'சந்திரன் உம்முடைய மேன்மையைக் கருதாமல் உம்மை இகழ்ந்து நீர் கூறிய சாபத்தினால் நீசத்துவம் அடைந்து 
வருந்தி ஒடுங்கினான். அவன் இவ்வுலகத்திற்கு வேண்டும். தேவரீர் விதித்த சாபத்தை வருஷத்திலொருநாளைக்கு 
அவன் வகிக்கும்படி திருவருள் செய்யும்' என்று பிரார்த்தித்தார்கள். 

    விநாயகக் கடவுள் அவ்வாறு அருள்புரிய, ஆவணி மாசத்துப் பூருவபக்ஷ சதுர்த்தியில் உலகோர் அக்கடவுளுக்கு 
விசேஷபூசை செய்து உன்னைப் பாராத வண்ணம் நீ இருந்தாய். இந்தப் பழியொன்று முன்னமே யிருக்க, இப்பொழுது 
தக்கனாற் புதிய ஓர் குறையையும் பெற்றாய். பொலிவும் அழகும் தீர்ந்தாய். சந்திரனே நீ மதிகெட்டாய். இனி விரைந்து 
சென்று, நிகழ்ந்ததைப் பிரம தேவரிடத்துச் சொல்லுதி. அவர் தம்முடைய மகனாகிய தக்ஷப்பிரசாபதியை வேண்டி 
அச்சாபத்தை நீக்குவார்" என்று இந்திரன் கூறினான்.

    சந்திரன் அதனைக் கேட்டு, அப்பணியைச் சிரமேற்கொண்டு, "இது நன்று நீ கூறியபடியே செய்வேன்" என்று 
விரைவிலெழுந்து சத்தியவுலகத்தை அடைந்து, பிரமாவை வணங்கி, "தன் மாதுலனாகிய தக்கன் கூறிய சாபத்தை
 அவருக்குச் சொல்லி, "உமது குமாரனுக்குப் புத்தி புகட்டி என்னுடைய இச்சாபத்தை நீக்கிக் கவலையை யொழித்தருளும்'' 
என்று வேண்டினான். அதற்குப் பிரமா சொல்லுகின்றார். "தக்கனென்பான் தன் மனம் போன வழியன்றி மற்றொருவர் 
சொற்படி ஒன்றையுஞ் செய்யான்; என் சொல்லைச் சிறிதுங் கொள்ளான்; யான் அவன்மாட்டுஞ் செல்லேன்; அவன் 
முன்னைத் தக்கனல்லன்; எல்லார்க்குந் தலைவனாய் நின்றான்; இனி வேறு சொல்வதென்னை! அவன்,முன்னாளிலே 
பரமசிவனுடைய அரிய பெரிய குணங்க ளெல்லாவற்றையும் யானே உபதேசிக்க உணர்ந்து, அவரை நோக்கிப் பல 
காலஞ் செய்த தவத்தினால் இந்த எல்லையில்லாத செல்வத்திலிருந்து, பின் அக்கடவுளையும் சிறிதும் எண்ணான். 

    யாவரேயாயினும் தமக்குள்ள எந்தக் குறைகளையேனும் அக்கினி சொரூபராகிய சிவபெருமானிடத்துச் 
சொல்லி வேண்டலாம். இப்போது தக்கன் முன்னே ஒருவார்த்தையாயினுஞ் சொல்லலாகுமோ! அத்தக்கன், 
கண்ணில்லாதவனும் புத்தியில்லாதவனும் கள்ளுண்டு களித்தவனுமாகிய ஒருவன் பூமியில் விரைவில் 
வழிக்கொண்டு சென்றாற்போல, மேலாகிய செல்வத்தி லழுந்தி யாவரையும் மதிக்கின்றிலன்; நீதியைச் 
செய்ய அறிகின்றிலன்; அவன் மிகுந்த களிப்பையுடையன்; கறுவுகின்ற சிந்தையன்; அன்பில்லாத முகத்தினன்: 
அருளில்லாத சொற்களையுடையன்; தெளிந்த உணர்வில்லாதவன். இவன் இனிமேற் செல்வமெல்லாமழிந்து 
இறக்கும்பொருட்டே இம்மேன்மையைப் பெற்றுள்ளான். இவன் தான் கெடுதல் மாத்திரமன்றி எம்போலிகள் 
பூண்ட நன்னிலைகளையும் கெடுத்தலைச் சிவபெருமான் திருவுளஞ் செய்யாது, வேண்டிய வரங்க ளெல்லாவற்றையும்
இவனுக்கு விரைவிற் கொடுத்தார். அது நிற்க. 

    அத்தக்கனை யாம் வேண்டுவோமாயினும், எம்மையுங் கோபித்து இகழ்வான்; உன்னுடைய சாபத்தையும் 
நீக்கான். சந்திரனே இனிப் பிறிதொருவழி உளது. அதனைச் சொல்வோம் கேள். நடுவுநிலைமையுடையரும் 
நமக்கெல்லாந் தலைவரும் பரமாசாரியரும் நிருமலரும் அதிபரமாப்தருமாகிய பரமசிவனை அடைந்து, 
உன் உடற் குற்றத்தை விரைவில் நீக்குகின்றிலை. நீ அறிவிலியோ! இக்குறையை அவருடைய சந்நிதானத்திற் 
சென்று விண்ணப்பஞ் செய்தால், அவர் உடனே நீக்கியருளுவார். இதனை நாம் சொல்லவும் வேண்டுமோ! 
இருளினால் மறைந்த பொருளைச் சூரியன் காட்டுதற்கும் ஐயப்படுவார்களோ! நம்மையெல்லாம் பரம பிதாவாகப் 
பெற்றருளிய சிவபெருமானுடைய அருளுக்குரிய ரல்லாதாரையும், அவ்வருளைப்பெற்ற அடியார்கள் பெறாததொரு 
பொருளையும் பேசவல்லமோ.

    மெய்யன்பினோடு தம்முடைய பாதார விந்தங்களையே சரண் என்றடைகின்ற அடியார்களுடைய 
துன்பங்களை நீக்குதற்கல்லவா, சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு திருக்கைலாசமலையில் 
வீற்றிருப்பது. ஒருவர் தமக்கிடுக்கண் வந்த காலத்திற் பரமசிவனுடைய திருவடிகளே புகலிடமென்றடைவராயின், 
அக்கடவுள் அவருடைய இடுக்கணைத் துடைத்து, வினைகளையுந் தொலைப்பார். சந்திரனே நீ இப்பொருளைக் 
கடைப்பிடித்திலை; மிகவும் பேதையாயினாய். தம்முடைய பாதார விந்தங்களைத் தியானித்துப் பூசனைசெய்த 
மார்க்கண்டன்மேல் வந்த யமனைச் சிவபெருமான் உதைத்து அம்முனிவனுக்கு முன்வந்தருள் புரிந்ததை நீ 
மறந்தனை போலும். அந்நாளிலே பாற்கடலில் ஆலாகல விஷம் எழுதலும், நாமெல்லாம் பயந்து தஞ்சமென்று 
பரமசிவனுடைய திருவடிகளைச் சரண்புக, அவர் அதனைத் திருவமுதுசெய்து, அஞ்சற்கவென்று அருள் செய்தது 
அயர்க்கற்பாலதோ! 

    உமாதேவியாருடைய திருக்கரத்திற் றோன்றி ஆர்த்தெழுந்த கங்கை இவ்வுலகமுழுதையும் மூடியபொழுது, 
நாம் அஞ்சித் துதிப்ப, அதனைத் திருமுடியிற் சேர்த்தி, நம்மை இரக்ஷித்ததை அறியாயோ! அளவிடப்படாத 
இறைமைக் குணங்களையுடைய சிவபெருமான் தமதன்பர்களுக்குச் செய்த பேரருட்டிறங்கள் சொல்லில் 
அடங்குமோ! சொல்லிலடங்காவாயின், எண்ணில் காலம் நினைத்தாலும் முடிவு பெறாவாம். ஆதலால், 
சந்திரனே நீ இங்கு நின்று விரைந்து திருக்கைலாச மலைக்குப் போய், அச்சிவபெருமானுடைய திருவடிகளையே 
சரணமென் றடைந்து, உன்னுடைய சாபத்துயரை நீக்குதி" என்று பிரமதேவர் கூறினார்.

    சந்திரன் அவருடைய பாதங்களை வணங்கி,"எம்பெருமானே நல்ல புத்தியை உபதேசித்தீர். ஞான 
முதல்வராகிய பரமசிவனைப் போயடைவேன்'' என்று சொல்லி, திருக்கைலாச மலையை யணைந்து, 
செம்பொற்றிருக் கோயில் வாயிலிற் சென்று, திருநந்தி தேவரிடத்திலே தன்னுடைய குறையைச் சொல்லினான்.
 அவர் கடவுளுடைய அநுமதிப்படி உள்ளே விடுத்தார். சந்திரன் ஈசுர சந்நிதானத்திலே மிகுந்த அன்போடு 
வணங்கி, உபநிடதங்களைச் சொல்லித் துதித்தான். ஆன்மாக்கடோறும் அந்தரியாமியாய் நின்று வினைப் 
பயன்களை அறிந்து நுகர்விக்கும் சிவபெருமான், "சந்திரனே நீ இங்கே வந்ததென்னை? சொல்லுதி" என்று 
அறியாதார் போல வினாவியருளினார். 

    சாபத்தினாற் கருநிறங்கொண்டு வடிவம் வேறுபட்ட சந்திரன் "எம்பெருமானே, தக்கன் சொல்லிய 
சாபத்தால் அடியேனுடைய கலைகளெல்லாம் தேய ஒருகலைமாத்திரம் மிஞ்சியிருந்தது. இனி உதுவும் 
தேய்ந்துவிடும். பாவியேன் இனி யாது செய்வது! எஞ்சிய இக்கலையொன்றும் தேயாமல் இருக்கவும், 
தேய்ந்த கலைகளெல்லாம் வந்துகூடவும், அருள் புரியும். தேவரீரன்றி அடியேனுக்குப் புகலிடமில்லை' 
என்று விண்ணப்பஞ் செய்தான். கிருபா சமுத்திரமாகிய கடவுள் "சந்திரனே அஞ்சற்க' என்று அருள்புரிந்து,
தேய்ந்து போனவையொழிய மிஞ்சியிருந்த ஒருகலையைத் திருக்கரத்தால் எடுத்துத் தமது திருச்சடையின்மீது 
சேர்த்தியருளினார். 

    தக்கனுடைய சாபம் அவனை அடைந்திலது. சிவபெருமான் தம்மைச் சரணடைந்த அன்பருக்கு 
அருள் புரிகின்ற உண்மையைத் தெற்றென வுணர்த்துதல்போல, அவனுடைய அக்கலை அவருடைய சடையின் 
மீது அழகைச் செய்து பொலிந்தது. (மிக மேலவர்களாகிய தேவர்களை வருத்துகின்ற வினைகளையும் 
சாபங்களையும் நீக்குஞ் சிவபெருமான், இந்தச் சந்திரனுடைய சாபமொன்றைப் போக்கினார் என்பது
 அவருக்கு ஓர் புகழ்ச்சியாகுமோ!)  சர்வாந்தரியாமியாகிய பரமசிவன் அப்பொழுது, சந்திரனை நோக்கி, 
"இனி நீ கவற்சியடையாதே. நம்முடைய முடியிலணிந்த சிறப்பினால் இந்தக்கலை அழிவின்றியிருக்கும். 
அதனால் உன்னுடைய பழையகலைகள் யாவும் பதினைந்து நாளில் நிரம்பிப் பின்பு அம்முறையாகத் 
தேய்ந்து வந்து, ஓர்கலை மாத்திரம் தேயாதிருக்கும். இவ்வாறே எக்காலமும் நிகழும்'' என்றருளிச்செய்தார். 

    சந்திரன் அவருடைய பாத தாமரைகளில் வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்று, தன்பதத்தை 
அடைந்து, முன்போல வானுலகத்திற் சஞ்சரித்தான். அவன் தன்கலைகள் ஒருநாளைக் கொன்றாக வளர்ந்து 
நிரம்பிப் பின் அம்முறையே தேய்ந்து வந்து, ஒருகலை தேயாதாகி, என்றும் ஆவதும் அழிவதும் போன்றான். 
விட்டுணு முதலிய அனைவரும் சந்திரனுடைய இயற்கையை நோக்கி, "தக்கனாலே சந்திரனுடைய கலைகள் 
யாவும் தேய்வதும் வளர்வதும் இயற்கையாகச் சிவபெருமான் செய்தார். அவருடைய செயலை யார்தாம் 
அறிந்தவர்!" என்றார்கள்.

    சந்திரனுடைய செயல் முழுதையும் தக்கன் ஞானத்தினால் அறிந்து, யான் சந்திரன்மீது கோபமுற்றுச் 
சொல்லிய சாபத்தைப் பரமசிவனா தடுக்க வல்லவர்!" என்று சிரித்து, ''என்பிதாவாகிய பிரமாவும் அவருக்குத்
 தந்தையாகிய விட்டுணுவும் என்மருகனுக்கு யான் கூறிய சாபத்தை விலக்கிலர்; விலக்கும்படி என்முன் வந்தும் 
வேண்டிலர்; யாவரும் அச்சமுற்றிருந்தனர். அந்தத் தந்தை தாயில்லாத பரமசிவனாம் என் சாபத்தைத் தடுப்பவர். 
இது நன்று நன்று! அச்சிவன் 'நாமே பரம்பொருள், பிரமன் முதலாகிய உயிர்கள் யாவையும் சங்கரித்தும் நாம் 
அழிவின்றி நின்று ஐந்தொழில்களையும் செய்கின்றேம், எங்கும் வியாபித்திருக்கின்றோம்.' என்று தம் மனத்தில் 
அகந்தையுற்றாரோ! அதுவன்றி இன்னமொன்றுண்டு. 'பூவுலகத்தில் தனக்குத் தானே நிகராகிய தக்கனுக்கும் 
அவன்செய்த தவத்தினால் நேற்று இச்செல்வங்களைக் கொடுத்தோம்.' என்பதை நினைந்து என்னுடைய 
ஆணையை இகழ்ந்து இங்ஙனஞ் செய்தார். 'பரம்பொருள் யாமே என்பதைத் தெளிந்தும், இந்த வளங்களையெல்லாம் 
நம்மிடத்திற் பெற்றும், நம்முடைய பாதங்களைத் தக்கன் கையினால் வணங்குகின்றிலன்.' என்று எண்ணிப் 
போலும், யான் சந்திரனுக்குச் சொல்லிய சாபத்தைச் சிவன் நீக்கினார்." என்று வெகுண்டான். 

    நடுவுநிலைமையும் அன்பும் நீங்கிய கீழோனாகிய தக்கன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட புலகர் 
என்னும் முனிவர், "தமக்கு நிகரில்லாத சிவபெருமானை இகழாதே. அவரை இகழ்ந்தால் உன்னை யாவரும் 
இகழ்வர். உன் செல்வமும் அழியும்" என்றார். அவரைத் தக்கன் நோக்கி, "நான் செய்த தவத்தினால் என்னிடத்தில் 
நின்ற இச்செல்வங்கள் நீங்குமோ! விட்டுணு முதலாயினோர் என்பணி யொன்றையும் மறுத்திலர். அவர்கள் 
என்னை இகழ்வதுண்டோ! உம்முடைய புத்தி நன்று நன்று!" என்று நகைத்தான். புலகமுனிவர் "அரசனே, உன்னைப் 
பிறர் இகழும் இகழ்ச்சி சாராதாயினும், உன் பெருஞ்செல்வம் குறையாதாயினும், உனக்கருள்புரிந்த 
சிவபெருமானைப் பழிப்பது தகுமோ!' என்றார். 

    தக்கன் அவற்றைக் கேட்டு, தன்னுடைய அளவிறந்த ஆற்றலையும் பெருஞ்செல்வங்களனைத்தையும் 
நீங்குவானாய்ப் பெருமிதங்கொண்டு, "முன்னே யான் தவஞ்செய்து அதுவாயிலாகப் பெற்ற வளங்களை 
அநுபவிக்குமுன் அக்கடவுள் மாற்றுவாரல்லர். செய்த வினைக்குத் தக்கபடியன்றி அதற்கு மேலாக வலிதாய் 
அவரொன்றையும் செய்ய வல்லரல்லர். ஆதலால் என்னிடத்தே தம்முடைய வலிமையினாற் சிவன் செய்கின்றது
என்னை?' என்று கூறினான். புலகர் "நீ சொல்லியதே உறுதியாயினும், சிவபெருமானை இகழ்ந்தவர் உய்யார். 
இதனை வேதங்களெல்லாம் அறுதியிட்டன. அவரைச் சிறிதும் இகழற்க. இனி அவரைத் தியானித்துத் துதிக்குதி. 

    தம்மைச் சரணடைந்த அன்பர்களுடைய துன்பத்தை மாற்றி அவர்கள் எப்பொருளை விரும்பினாலும் 
கொடுத்தருளுகின்றதே அவரதியற்கையாம். அதனைச் சந்திரன் தெரிந்து அடைதலும், அம்முறைபற்றி உன்னால் 
நிகழ்ந்த அவனுடைய சாபத்தை நீக்கியருளினார். சந்திரனுடைய கலைகள் நிறைந்தபின் முன்னே நீ சொல்லிய 
சாபம் நிலைபெறும்படி மீண்டு அக்கலைகள் நாடொறும் சுருங்கவும் விதித்தார். இனி உனக்குக் கோபம் என்னை? 
சந்திரனோ உன்மருகன். அச்சிவபெருமானும் பின்னாள் உனக்கு அம்முறையினராவர்'' என்று இத்தன்மையினவாகிய 
மொழிகளைச் சொல்லினார். தக்கன் சினம் நீங்கி, பிரமா முதலிய தேவர்கள் யாவரும் புகழப் பல நெடுங்காலம் 
அரசியற்றி வீற்றிருந்தான். இனி, உமாதேவியார் அவனுக்கு மகளாய் வந்து திருவவதாரஞ்செய்த கதையைச் சொல்வாம். 

            திருச்சிற்றம்பலம்.

            உமைகயிலை நீங்கு படலம்.

    சிவபெருமான், பிரமவிட்டுணுக்களாலுங் காண்டற்கரிய தமது திருமேனியை அடியார்கள் தரிசிக்க 
நிருமலமாகிய திருக்கைலாச மலையில் வீற்றிருக்கும் பொழுதில் ஒருநாள், உமையம்மையார் அவருடைய 
திருவடிகளை வணங்கி, "உம்முடைய உண்மைத் தன்மையை எனக்குச் சொல்லியருளல்வேண்டும்' என்று 
பிரார்த்தித்தார்.

     திருக் கைலாசபதி மிகவும் அன்புசெய்து, அதனை அவருக்கு உபதேசிப்பாராய், பிரமா 
முதலிய மூவர் உருவங்களும் சாத்துவிகாதி முக்குணங்களும் படைத்தலாதி முத்தொழில்களும் ஆகிய 
ஒன்றுமின்றி நிஷ்களராய்ச் சிவன் நீக்கமற யாண்டும் நிறைந்து நின்றமையும், அச்சிவன் ஆன்மாக்களுடைய 
பாசங்களை நீக்குமாறு திருவருட்சத்தியாற் சங்கற்பித்ததும், "தமது அபின்னாபூதையாகிய பராசத்தி முதலிய 
ஐவகைச் சத்திகளைப் பிறப்பித்தமையும், யாவரும் நிஷ்கள சகளராகிய சதாசிவ நாயனாரைத் தியானித்து 
அருச்சித்து உய்யுமாறு அப்பராசத்தி முதலிய ஐந்து சத்திகளினின்று சிவசாதாக்கிய முதலிய பஞ்ச சாதாக்கிய 
வடிவங்கள் தோன்றினமையும், இருபத்தைந்து சகள மகேஸ்வர வடிவங்கொண்டமையும், குடிலையினின்று 
தோன்றிய சிவமுதலிய நவந்தரு பேதங்களும் சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதி என்னும் மும்மாயைகளினின்று 
முப்பத்தாறு தத்துவங்களுந் தோன்றுமாறு செய்தமையும், ஆன்மாக்கள் பொருட்டுப் பஞ்சகிருத்தியங்களைக் 
கருணையினால் நடாத்துஞ் செய்கையும், விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும் ஆன்மவர்க்கங்களும் 
முப்பத்தாறு தத்துவ சமூகங்களும் அத்தத்துவங்களிலுள்ளவர்களும் தோன்றிய முறையானே ஒடுங்கச் செய்து 
தாம் எக்காலமும் ஒரே பெற்றியாய் நிற்பதும் ஆகிய தம்முடைய இயல்புகளனைத்தையும் வேதசிவாகமங்களிற் 
கூறிய முறைப்படி தொகை வகைவிரியாக உமாதேவியார் கேட்க உபதேசித்தருளினார். 

    அம்மையார் அவற்றை உணர்ந்து, "நிருமலராகிய சுவாமீ, உமக்கு உருவமில்லையென்று முன்பு கூறினீர்; 
பின் பஞ்ச சாதாக்கியங்களோடு பல வடிவங்களை நீர் அடைந்ததென்னை?" என்று வினாவ; பரமசிவன், "சத்தியே, 
நமக்கு உருவமில்லை என்றது பொருந்தும். பின், நாம் உருவமென்று கூறிய அவை யெல்லாம் சத்தி காரியமே" என்று 
அருளிச்செய்தார். உமாதேவியார் அதனை ஓர் வாய்மை என்று  எண்ணி, பெருமகிழ்ச்சியடைந்து, 'அந்த 
வடிவங்களெல்லாம் சத்தி காரிய மாதலால் உம்முடைய அருள் யான் என்று சொல்வது உண்மையே. அவையெல்லாம் 
என்னுடைய உருவமே' என்று தம்மை வியந்து கூறினார். 

    அப்பொழுது சிவபெருமான், சத்தியே, நீ உன்புகழை நம்முன்னே வியந்தெடுத்துப் பேசினாய்'' என்று கூறி, 
பின்னும், நாம் ஆணவ மலத்தான் மறைப்புண்ட உயிர்கடோறும் வியாபித்திருந்து அவைகள் அறியுமாறு செலுத்துவேம். 
அச்செயலை நாம் ஒழிவோமாயின் சித்துக்களாகிய அவ்வுயிர்களெல்லாம் சடமாய் அழியும்: பின் ஏனைச் சடப்பொருள்கள் 
பொருந்து நிலைமையைச் சொல்லவும் வேண்டுமோ! சத்தியாகிய உன்னிடத்தும் யாம் இல்லாதவழி உன்னுயிரும் 
உணர்வைப் பொருந்தாது. அதனை உனக்குக் காட்டுவோம் காண்பாய்" என்று, பிரமா முதலிய உயிர்களைத் தாம் 
இயக்குஞ் செயலைச் சிறிதே நீங்கினார். 

    தேவநாயகராகிய சிவபெருமான் ஒரு செயலுமின்றி யிருந்தமையினால், பூவுலக முதலிய புவனங்களிலுள்ள 
உயிர்களெல்லாம் சடமாகிச் சித்திரம்போல உணர்வின்றி வாளாவிருந்தன. ஆட்டுவோன் அது செய்யாதவழிப் பாவைகள் 
குலைந்து வீழ்ந்தாற்போல உயிர்களெல்லாம் வலிகுன்றிச் சடமாய்க் கிடந்தபொழுது, உமாதேவியார் இதனைச் 
சிந்தித்துப் பயந்து நடுங்கி, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, "எம்பெருமானே, நீர் சரமசரமெங்கும் 
வியாபித்திருப்பதை யான் அறியேன். பிரளய காலத்திற்போல, சீவராசிகளெல்லாம் இருளின் கண்ணே மூழ்கிப்போக, 
நீர் அவற்றுள்ளே நின்று அவற்றின் அவற்றின் அறிவை இயக்கி நிற்பதை என்பொருட்டு நீங்கி நின்றீர். 
உமக்கு இஃது ஓர்  இறைப்பொழுதாகும். உயிர்களுக்கெல்லாம் அளவில்லாத பெரிய யுகங்களாகும். 
அடியேன் செய்த பிழையைத் திருவுள்ளத்திற், கொள்ளற்க. உயிர்கள் தெளிவுபெற்றெழுந்து தத்தந் தொழிலிற் 
பிரவிர்த்திக்கும்படி அருள்செய்யும்" என்று பலமுறை துதித்து வணங்கி நின்றார்.

    சிவபெருமான் அவ்வுமாதேவியாருக்கு ''அவ்வாறாகுக'' என்று அருள்செய்து, ஆன்மாக்கள் 
முன்போல வினைப்பயனை அநுபவிக்கச் செய்யும்படி திருவுளங்கொண்டு, தமது அருளைப்பெற்ற 
பதினோரு ருத்திரர்களுக்கு முன்பு உணர்வு வரும்படி செய்தார். அவர்கள் அப்பொழுது சிவபெருமானை 
நினைத்து, 'இச்செயல்யாது?" என்று ஞானத்தினால் ஆராய்ந்து ''அரிபிரமர்களுக் கெட்டாத சிவபெருமானுடைய 
செய்கை இது'' என்றறிந்து, இருளின்கண்ணே மூழ்கிச் சடமாய்க் கிடந்த சீவராசிகளை எழுப்ப நினைத்து, 
அக்கடவுளுடைய திருவடிகளை அர்ச்சனை செய்ய எண்ணி அவருடைய சுடர் விண்ணுலகத்திலின்மையாற் 
பொழுது தெரியாமலிருக்கின்ற பூவுலகத்திலே திருவிடைமருதூரில் வந்து, எங்குஞ் செறிந்த இருள் வீசுதலினால் 
இப்பொழுது இராக்காலமே போன்றது. 

    சிவபெருமானுக்கு ஏற்ற பூசையைச் செய்வோம்" என்று யோசித்து, பஞ்ச சாதாக்கிய வடிவங்களுள்ளே 
குண்டம் மண்டலம் வேதிகை என்னும் மூன்றனும் மண்டல விதியினால் அவருடைய வடிவை நிருமித்து, 
சோடசோபசாரங்களையும் வருவித்து,பிரமவிட்டுணுக்கள் செய்கின்ற சிவநிசிப்பூசையைச் சிரத்தையோடு 
செய்ய முயன்று, விபூதி ருத்திராக்ஷங்களைத் தரித்து, சோடச கலாப்பிராசாதத்தோடு ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் 
செபித்து, சிவபெருமானைத் தியானஞ் செய்து, பூதசுத்தி அந்தரியாக முதலியனவெல்லாம் விதிப்படி 
யாமங்கள் அகத்தே செய்து, பின்பு புறத்தே வில்வபத்திரம், தாமரையிதழ் ,சாதிப்புஷ்பம், நந்தியாவர்த்தம் 
ஆகிய இவைகளைக்கொண்டு முறையே நான்கு யாமங்களிலும் அர்ச்சனை செய்து, முற்கான்னம் பாயசான்னம் 
திலான்னம் சுத்தான்னம் ஆகிய நால்வகையன்னங்களையும் முறையே நான்கு யாமங்களிலும் நிவேதித்துத் 
துதித்து, பின்னும் செயற்பாலன யாவையும் விதி தவறாவண்ணம் குறைவற அன்போடு செய்தார்கள். 

    சிவபெருமான் அப்பூசையை உவந்து, அவ்வுருத்திரர்களுக்கு முன்னே அத்திருவிடைமருதூரில் 
வெளிப்பட்டு வந்து, அவர்கள் விரும்பியவாறு அருள்செய்வோராய், முன்போல் எவ்வுயிர்களையுந் தொழிற்படுத்தத் 
திருவுளஞ்செய்தார். செய்தலும், பிரம விட்டுணுக்கள் எழுந்தார்கள்; இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும் 
எழுந்தார்கள்; முனிவர்கள் எழுந்தார்கள்; ஏனையோர்களும் எழுந்தார்கள்; உலகிலுள்ள மற்றைச் சீவராசிகள் 
யாவும் உறங்கினவர் கண்விழித்து எழுந்தாற்போல விரைந்தெழுந்தன; அட்டதிக்கு யானைகளும் குலமலைகளும்
அட்டமா நாகங்களும் பூமியைத் தாங்கின; பாதாளத்திலே ஆதிகூர்மம் சுமந்தது. சூரியர் சந்திரர்களும் 
நக்ஷத்திரங்களும் பிறவும் ஆகாயத்திற் சஞ்சரித்தன. 

    இத்தன்மைகளெல்லாம் சிவாஞ்ஞையினாலே முன்போலமைந்த அந்நிலைமையைப் பிரமா முதலாயினோர் 
பார்த்து, 'இச்செயல்கள் யாவும் பரமசிவனுடைய செயலே வேறில்லை'' என்றார்கள். இது நிகழும்பொழுது, பதினோரு 
ருத்திரரும் "சிவபெருமானே உயிர்களுக்கு உணர்ச்சியைக் கொடுத்தார்' என்று உணர்ந்து, தமக்கெதிரே அக்கடவுள் 
எழுந்தருளி வர எதிர் சென்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் துதித்தார்கள். அக்கடவுள் நீவிர் இங்கே நம்மை 
அருச்சித்த தன்மையினால் உயிர்கட்கெல்லாம் உணர்வைக் கொடுத்தெழுப்பினோம். நீவிர் வேண்டிய வரங்கள் 
யாவையும் விரைந்து கேண்மின்கள்" என்றார். 

    அன்பிற் சிறந்த அவர்கள், "எம்பெருமானே, இராக்காலத்தில் எம்மைப்போல நாடோறும் உம்முடைய 
திருவடிகளை யாவராயினும் அன்போடு நான்கு யாமங்களிலும் அருச்சித்தால் அவர்களுக்கு மாசி மாசத்துக் 
கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி திதியாகிய சிவராத்திரியில் அடைதற்பாலதாகிய சிவபூசா பலத்தைக் கொடுத்தருளல் 
வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்கள். "நீவிர் செய்த பூசையை நாம் மிக மகிழ்ந்து ஏற்றுக்கொண்டமையால் 
உயிர்களெல்லாம் உய்ந்தன. உங்களைப் போலப் பூவுலகத்திலே என்றும் நம்மைப் பூசித்தவர்களுக்கெல்லாம் 
மோக்ஷத்தைக் கொடுப்போம்'' என்று அநுக்கிரகித்து மறைந்தருளினார். உருத்திரர்கள் யாவரும் முன்போலத் 
தம்முடைய பதத்தை அடைந்தார்கள்.

    அப்பொழுது, பிரமா முதலிய  தேவர்களனைவரும் கைலாச மலையை அடைந்து, சிவபெருமானை 
வணங்கி நின்று, ''உயிர்க்குயிராயுள்ள கடவுளே கேட்டருளும். யாங்களெல்லாம் உம்முடைய திருவருளைப் 
பெறாமையால் உணர்வு நீங்கிச் சடமாகிப் பலநெடுங்காலம் வாளா கிடந்து பாவத்தில் மூழ்கினோம். 
அதற்கு ஓர் பிராயச் சித்தத்தைச் சொல்லியருளும்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். சிவபெருமான் 
அவர்களை நோக்கி, "நீவிர் அறிவு மயங்கிச் சடமாகி, வேதாநுட்டானங்களைப் புரியாமையால் உங்கள்பால் 
வரும் பாவம் எல்லாம் உமையிடத்தாகும்.  நீர் இனி இன்று தொடங்கி உங்கள் கடன்களைச் செய்யுங்கள்" 
என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்கள் யாவரும் அவரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு போயினார்கள். 

    அப்பொழுது, உமாதேவியார் சிவபெருமானுடைய பாதங்களை வணங்கி, "முன்னாளிலே உயிர்களைப் 
பற்றிய பாவம் என்னை வந்து சார்தற்குக் காரணம் யாது? பணித்தருளும்'' என்றார். அதற்கு சிவபெருமான்,
 "உமையே, முன்பு நீ உன்னை வியந்தாய். அதுகண்டு நாம் உன்னைக் கோபித்து, உன்பொருட்டாக உயிர்களுடைய 
உணர்ச்சியை நீக்கி, பின்பு அதனைக் கொடுத்தோம். ஆதலால் அவைகள் அடைந்த பாவங்கள் யாவும் உன்னை 
வந்து சாரும். இது முறையாகும். இன்னும் ஒன்றுளது. இந்தப் பெரிய பாவம் உயிர்களையெல்லாம் பற்ற மாதாவாகிய 
உன்னாலல்லது அவற்றாற் றாங்குதற் கெளியதோ! ஆதலால் நீயே அப்பாவத்தைச் சுமக்குதி" என்று தாம் 
தக்கனுக்குக் கொடுத்த வரத்தைப் பூர்த்தி செய்வாராய் இவ்வாறு சொல்லியருளினார். 

    உமாதேவியார் அதனைக் கேட்டு நடுநடுங்கி, "பேதையேன் செய்யும் பிழையைப் பொறுத்து, அப்பாவத்தை 
அடியேன் நீக்கிக்கொள்ளும்படி ஓர் உபாயத்தை உணர்த்தியருளும்'' என்று அவருடைய பாதார விந்தங்களில் 
வீழ்ந்து வணங்கினார். அவர் "உமையே, நீ காளிந்தியென்னும் நதியிலே ஒரு சங்கினுருவாய் உலகங்களை இரக்ஷிக்குங் 
குறிப்போடு பலகாலமிருந்து தவஞ்செய்குதி. பிரமனுடைய குமாரனாகிய தக்கனென்பவன் அங்குவந்து உன்னை 
யெடுப்பான். அப்பொழுது ஒரு குழந்தையினுருவாகி, அவன் மனைவியினிடத்திற் சிறுமியாய் வளர்ந்து ஐந்து 
பிராயங் கழிந்தபின் அன்போடு எம்மைத் தியானித்து அருந்தவஞ் செய்குதி. யாம் அங்கே வந்து உன்னைக் கண்டு 
மணஞ்செய்து, கைலாச மலைக்கு அழைத்துக்கொண்டு வருவோம்” என்றுகூறினார். 

    அதனை உமாதேவியார் கேட்டு, அவருடைய பாதங்களிலே தமது அளகந் தோய வணங்கி, விடைபெற்றுக் 
கொண்டு, அவரைப் பிரிந்து பூமியில் வந்து, காளிந்தி நதியிற் போய், சங்கினுருவையெடுத்து, சிவமூல மந்திரத்தைத் 
தியானித்துக்கொண்டு ஒரு வெண்டாமரை மலரின் மீது தவஞ்செய்திருந்தார். தக்கன் மகிழ்ச்சியோடு அவரை 
எடுத்துக்கொண்டு போவானாய்க் காளிந்தி நதிக்கு வந்த கதையை இனிச் சொல்வாம்.

            திருச்சிற்றம்பலம்.

            காளிந்திப்படலம்.

    பலவகைச் சிறப்புக்களோடு கூடிய யமுனா நதியிலே, மாசிமக ஸ்நாநஞ் செய்தற்காக அத்தேசத்தார் 
யாவருஞ் செல்வாராயினார். தக்கனும் அதனையறிந்து, தான் சிவபெருமானிடத்திற் பெற்ற வரத்தின் 
பயனை யடையும் ஊழினால் தானும் அந்த நதியில் ஸ்நானஞ்செய்ய விரும்பி, மனைவியாகிய வேதவல்லியைப் 
பல பெண்களோடும் மற்றைப் பரிசனங்களோடும் முன்னே அனுப்பி, அரியணையினின்று மிழிந்து, பிரமாவும் 
முனிவர்களும் ஆசி கூறவும், தேவர்கள் துதிசெய்யவும் புறப்பட்டுப்போய், அந்நதியிலே மூழ்கி,மீண்டு வந்தான். 

    வரும்பொழுது, ஓர் சாரில் ஒரு வெண்டாமரைப் பூவின்மீதே உமாதேவியார் சங்கினுருவாய் வீற்றிருப்பக் 
கண்டு, மிக மகிழ்ந்து, கையிலெடுத்தான். எடுத்தலும், அது பேரழகினையுடைய ஒரு பெண்குழந்தையி னுருவமாயிற்று. 
அவன் அதனைக்கண்டு விம்மிதமுற்று, "சிவபெருமான் எனக்குத் தந்த வரத்தினால் உமாதேவியே ஒரு பெண் 
குழந்தையாய் வந்தாள்." என்று ஞானத்தினாலறிந்து, தன்னைச் சூழ்ந்த தேவர் குழாங்களை நீங்கி முன்னே 
தன்பணியினாற் கிளைஞர்களோடு சென்று அந்நதியிலே ஸ்நானஞ் செய்து வேதாத்தியயனத்தைக் கேட்டுக் 
கொண்டு கரையிலிருக்கின்ற மனைவியாகிய வேதவல்லியிடத்து வந்து, அக்குழந்தையை அவள் கையிற் கொடுத்தான். 
அவள் அதனை மகிழ்ந்து தழுவி தனங்களிலிருந்து ஒழுகும் பாலையூட்டி, அரமகளிர்கள் துதிப்ப விரைவிலே 
தன்மாளிகையிற் கொண்டு சென்றாள். தக்கன் தேவர்கள் சூழ மகிழ்ந்து கோயிலிற் புகுந்து,
முன்போல அரசியலை நடாத்தியிருந்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            உமை தவம்புரி படலம்.


    அளவில்லாத அண்டங்களையும் சீவராசிகளையும் தந்தருளிய உமாதேவியாராகிய குழந்தையை 
வேதவல்லி மாளிகையிற் கொண்டுசென்று மிக்க பேரன்போடு தனது மகளாக வளர்த்தாள். குழந்தையாகிய 
அப்பிராட்டியார் தவழ்ந்து தள்ளாடி நடைபயின்று பன்முளைத்து ஐந்துவயசு நிரம்பி, பின் ஆறாம்வயசு வருதலும், 
சிவபெருமான் தம்மைத் திருமணஞ் செய்து கொள்ளுதலைக் குறித்துத் தவஞ்செய்வேன் என்று எண்ணி, 
தாய் தந்தையர்களாகிய வேதவல்லியையும் தக்கனையும் நோக்கி, "என் இரு முது குரவீர்காள், இதனைக் 
கேண்மின். யான் சிவபெருமானுக்கே உரித்தாகும் பேறுடையேன். அவர் என்னை மணஞ்செய்து கொள்ளுதற் 
பொருட்டுத் தவஞ்செய்வேன். வேறோர் சாரிலே ஒருமாடத்தை அமைத்து அதில் என்னைத் தவஞ்செய்ய 
விடுக்குதிர்" என்று கூறினார். 

    தாய்தந்தைய ரிருவரும் நன்றென்று மகிழ்ந்து, தமது நகரின் புறத்திலே ஒருசாரில், காவலையுடைய 
ஒரு மாடத்தை அணி பொருந்த அமைப்பித்து, மகளென்னும் முறைமையினால் வாழ்த்தி அன்போடு நோக்கிப் 
பலமுறை உச்சிமோந்து உயிர்த்து, "அம்மையே, உன் மனத்தில் விரும்பிய தவத்தைச் செய்வாய்" என்று 
சேடியர்களோடு அங்கே அனுப்பினார்கள். தங்களிடத்து விடைபெற்றுக்கொண்டு தேவியார் விரைந்து 
செல்லுதலை, வேதவல்லி பார்த்து, நாயகனாகிய தக்கனை நோக்கி, "பேதைப் பருவத்தினளாகிய இவள் 
சிவபெருமானை அறிந்த தன்மை என்னை? சொல்லும்' என்று வினாவ; “அவளுடைய நிலைமை இதுவாகும்' 
என்று என்று அவன் மனைவிக்குச் சொல்கின்றான்: 

    யான் "மானச வாவியிலே செய்த தவத்தைக் கண்டு சிவபெருமான் அங்கே எழுந்தருளியபொழுது, 
அவரிடத்தே பலவரங்களைப் பெற்று, 'உமது சத்தியாகிய உமாதேவியார் என்மகளாகி வந்தவதரிக்க நீர் என் 
மருகராய்வந்து அவளை மணஞ்செய்க' என்று வேண்டிக் கொண்டேன். அவர் 'அது அவ்வாறாகுக' என்று அருள் 
செய்தார். அந்த வரத்தின் வண்ணமே சிவபெருமான் உமாதேவியைக் காளிந்தி நதியில் அனுப்ப, அவள் 
நம்மிடத்து மகளாய் வந்து எக்காலமும் உணர்வோடிருந்தாள். சிலகாலந் தவஞ்செய்து சிவபெருமானுக்கு 
அன்பினளாய் மனைவி ஆகின்றாள். எம்பெருமாட்டியைப் பேதைப்பருவத்தினளென நினையாதே" என்று 
கூறினான். வேதவல்லி அதனைக் கேட்டு ஆச்சரியமுற்று அளவில்லாத மகிழ்ச்சியிற் சிறந்தாள். 

    உமாதேவியார் இரு முது குரவர்களுடைய ஏவலினால் சேடியர்கள் சூழக் கன்னிமாடத்தை அடைந்து, 
சிவநாமத்தைத் தியானித்துக் கொண்டு நியமம் பூண்டு தவஞ்செய்வாராயினார். இவ்வாறு அவர் நாடோறும் 
தவஞ் செய்துகொண்டிருக்க, அவருக்குப் பன்னிரண்டு வயசு சென்றது. அப்பொழுது, அன்பர்களுக்கு வேண்டிய 
வேண்டியாங்குதவும் அருள்வள்ளலாகிய சிவபெருமான் அவர் செய்யுந் தவத்தைக் கண்டு, அவரை ஆட்கொண்டருளக் 
கருதி, கயிலாய மலையை நீங்கி, முந்நூலையும் கோவணத்தையும் தருப்பையையும் கட்டிய தண்டைத் திருக்கரத்திற் 
கொண்டு, ஓர் பிராமணப் பிரமசாரி வேடம் பூண்டு, தமது அருமைத் திருவடி பூமியிற்பட நடந்து தக்கமாபுரத்தை
அடைந்து, சங்கரி என்னும் பெயரையுடைய அம்மையார் தவஞ்செய்யும் மாளிகையிற் புகுந்து, சேடியர்கள் 
காவல் செய்கின்ற முதல் வாயிலிற் சேர்ந்து, அவர்கள் தம்முடைய பாதங்களை வணங்க "என்வரவை நும் 
தலைவிக்குச் சொல்லுங்கள்' என்று சொல்லி நின்றார். 

    வாயில்காக்கும் பெண்கள் சிலர், உமாதேவியாரிடத்துச் சென்று அவருடைய பாதங்களை வணங்கி,
"இங்கே தவவேடம்பூண்ட ஓரந்தணர் உம்மிடத்து வரவேண்டும் என்று சொல்லி எம்மை விடுத்தார்." என்று சொல்ல, 
அம்மையார்"அவரை இங்கே அழைத்துக்கொண்டு வருதிர்" என்றார். "சுவாமீ, எம்பெருமாட்டி உம்மை உள்ளே 
வரும்படி அருள்புரிந்தார்' என்றார்கள். அவர் விரைவிற் சென்று தேவியார் இருக்குமிடத்தை அடைந்தார். 
தேவியார் அவரை விரைந்தெதிர்கொண்டு சென்று ''இவர் எம்பெருமானுக்கன்பர்' எனக் கருதி அவருடைய 
பாதங்களை வணங்கிப் பூசித்து நின்றார். நின்ற தேவியாரை அவர் நோக்கி "அழகிற் சிறந்த பெண்ணே இங்கே 
யாம் வந்தது ஒன்றை விரும்பி. விரைந்து அருள்செய்வாயாயின் அதனைச் சொல்வோம்' என்றார். 

    அம்மையார் "எனக்கிசைந்த தொன்றைச் சொல்வீராயின் இப்பொழுதே உமக்கு அதனை யான் 
தரக்கூடும். நீர் நினைத்தது யாது? சொல்லும்" என்றார். அந்தணர் "உன்னை நாம் மணஞ் செய்துகொள்ள 
வந்தோம். அதுவே நீ எனக்கு அருள்புரிய வேண்டுவது. இதனைத் தடுத்து எதிர்வார்த்தை சொல்லாதே" என்றார். 
பிரமசாரி வடிவங் கொண்டு வந்த பரமசிவன் இதனைச் சொல்லுதலும், அம்மையார் உடனே கைகளாற் 
செவிகளைப் பொத்தி, கனன்று மனம் நொந்து பெருமூச்சுவிட்டு, " நீ இவ்வாறு சொன்னதென்னை? என்னை 
ஆளுகின்ற ஒப்பில்லாத சிவபெருமான் வந்து மணஞ்செய்யும்படி யான் பெருந்தவஞ் செய்துவந்தேன்'' என்றார். 

    அதற்குப் பிரமசாரியார் "யாவரும் எக்காலமும் எத்தன்மையினர் என்று நினைக்கமுடியாமல் 
நின்ற முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் உன்னைக் கலியாணஞ் செய்து சேருகின்றது அரியது போலும். 
கன்னியே நீ மகா தவங்களைச் செய்து வருந்தாதே' என்று கூறினார். அதனைக் கேட்ட உமாதேவி 'சிவபெருமானே
 விரும்பிவந்து என்னை மணஞ்செய்யும்படி அரிய மகாதவங்களைச் செய்வேன். அதற்கு அவர் வராதொழிவராயின்,
 யான் என்னுயிரை வலிய விடுவேன். இது நிச்சயம். நீ ஒரு பித்தனோ பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றாய். 
போ போ" என்று கோபித்து ஓர் சாரிற் போயினார். 

    சிவபெருமான் மகிழ்ந்து, "பெண்ணே உன்னுடைய அன்பும் மனவுறுதியும் நன்று" என்று கூறி, 
பிறரொருவரும் அறியாவண்ணம் அவருக்குத் தமது திருமேனியைக் காட்டினார். உமாதேவியார் அவரைக் 
கண்டு மெய்நடுங்கி,"பிறரென எண்ணி இகழ்ந்தேனே'' என்று அவருடைய பாத தாமரைகளில் வணங்கித் 
துதித்து, 'எம்பெருமான் மறைந்து வந்ததைப் பேதையேன் உணர்ந்திலேன். உம்முடைய திருவருணோக்கம் 
எய்துமாயின் யான் உணர்ச்சி எய்தி நிற்பேன். அஃதில்வழி எனக்கோர் செயலுமில்லை. அடியேன் பிழை 
செய்ததுண்டு. அதனைப் பொறுத்தருளும்" என்று வேண்டினார். அவரை எம்பெருமான் கண்ணுற்று, "உமையே
உன் இயற்கை நன்று நன்று, நீ அஞ்சாதே' என்றார். 

    என்று கூறிய எம்பெருமானை எம்பிராட்டியார் பின்னும் வணங்கி, தமது பக்கத்தில் நின்ற 
பெண்களைப் பாராமலும், வேறொன்றையும் நினையாமலும் ஆனந்தக் கண்ணீர் உகுத்து, பரமசிவனுடைய 
புகழ்களை மிகவும் துதித்துக்கொண்டு நின்றார். பக்கத்தில் நின்ற சேடியர்கள் "நம் தலைவி பலநாட் பயின்ற 
நம்மை நோக்குகின்றிலள். மிகுந்த ஆசையைக் கொடுத்த இவ்வந்தணன் மாயத்திலே வல்லவன் போலும். 
இவர்கள் நிலைமை முன்னே எதிர்ப்பட்ட ஒருவரையொருவர் சந்தித்த தன்மை போன்றது. மேலே யாம் 
ஆராய்தற்பாலது உளது"  என்று மனத்திற் சந்தேகங் கொண்டார்கள். 

    அவர்களுட் சிலர் மிக விரைந்து சென்று தக்கனுடைய கோயிலை அடைந்து, ''உன்மகளுடைய நிலைமை 
இது. கேட்பாய்" என்று நிகழ்ந்தன வெல்லாவற்றையும் முறையாகச் சொன்னார்கள். அவன் மனத்திலோர்ந்து, 
ஞானத்தால் ஆராய்ந்த பொழுது, சிவபெருமானே அங்கு வந்ததாகத் தோன்றுதலும், நிகரில்லாத மகிழ்ச்சியைப் 
பெற்று, எழுந்து துள்ளி, "யான் பெற்ற பெண்ணை அச்சிவபெருமானுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்" என்றான்.

            திருச்சிற்றம்பலம்.

            திருமணப்படலம்.

    திருக்கலியாணஞ் செய்தற்கேற்ற முகூர்த்தம் எப்பொழுதுளது என்று தக்கன் ஆராயும் பொழுது, நல்ல 
முகூர்த்தம் அன்றைக்கே வர, அடங்காத மகிழ்ச்சியினனாய், ஆசையான் மிகுந்து, "இற்றைத் தினத்தில் 
சிவபெருமானுக்கு என்மகளை மணஞ்செய்து கொடுப்பேன்" என்று உறுதி செய்து, அதற்காகத் தேவர்கள் 
யாவரும் விரைந்து வரும்படி ஒற்றுவர்களை அனுப்பி, தன்னகரத்தையும் கோயிலையும் திருக்கலியாணத்திற் 
கேற்பப் பொன்னுலகமும் நாணும்படி அலங்காரஞ் செய்வித்து, அந்நகரை நீங்கி, கௌரியுடைய தவச்சாலையில் 
வந்திருக்கும் சிவபெருமானாகிய அந்தணரை அடைந்து, அவருடைய பாதங்களை வணங்கி, "உம்மை மணஞ் 
செய்து கொள்ளும்படி நம்முடைய பெண் தவஞ்செய்தாள். அடியேனுடைய நகருக்கு வந்தருளும்" என்று வேண்டினான். 

    சிவபெருமான் நன்றென்று உமாதேவியாரோடு அவனுடைய மாளிகையை அடைந்தார். அவரெதிரே 
பெண்கள் அட்ட மங்கலங்களை ஏந்தி வந்தார்கள். பரமசிவன் மங்கலங்களை நோக்கி, உமாதேவியாருடன் 
மாளிகையை அடைந்து, ஓர் ஆசனத்தில் வீற்றிருந் தருளினார். அப்பொழுது தன்மகளாகிய கௌரியை வேதவல்லி 
கண்டு தழுவி, தன்கோயிலில் அழைத்துக் கொண்டு வந்து, தவத்திலிருந்தமையா லுண்டாகிய அவருடைய கூந்தலின் 
பின்னற் செறிவை மெல்ல மெல்ல ஆய்ந்து நீக்கி, நாவி நெய்யைப் பூசி,துவரையும் ஓமாலிகையையும் தடவி 
கங்கா சலத்தினால் அபிஷேகஞ்செய்து, மாலைசூட்டி, பீதாம்பரத்தை உடுத்தி, பலவகை ஆபரணங்களைப் பூட்டி, 
மங்கல வாத்தியங்களை இயம்பி யாவரும் வாழ்த்த எம்பெருமானுக்குப் பக்கத்தில் இருத்தினாள். அரிபிரமேந்திராதி 
தேவர்கள், தூதுவர்களுடைய வார்த்தையைக் கேட்டுத் திருக்கலியாணத்தின் பொருட்டு விரைந்து வந்து, 
சிவபெருமானை வணங்கினார்கள். 

    கின்னரரும் உவணரும் யாழ்வாசித்து மங்கலகீதம் பாடினார்கள். அரம்பையர்கள் தேவியாருக்குப் 
பக்கத்தில் நின்று கற்பக மலர்களைச் சிந்தி வணங்கி மங்கல கீதம் பாடினார்கள். தக்கன், வேதவல்லி கரக நீர்விட 
வேதமந்திரங்களைச் சொல்லிச் சிவபெருமானுடைய திருவடிகளை விளக்கி, சந்தனம் புஷ்பம் முதலாகிய 
உபகரணங்களைக் கொண்டு பூசை செய்து, அவருடைய திருக்கரத்தின் மீது உமாதேவியாருடைய திருக்கரத்தை வைத்து, 
"இவளை உமக்கு மணஞ்செய்து தந்தேன். நன்றாகப் பாதுகாத்தருளும்'' என்று கூறிக் கரகநீர் வார்த்துத் 
தத்தஞ் செய்தான். 

    தேவர்கள் முதலாகிய அனைவரும் அவருடைய திருமணக் கோலத்தைத் தரிசித்துக் கை தொழுது 
ஆரவாரித்தார்கள். பிரமதேவர் திருமணச் சடங்குக்கு வேண்டிய உபகரணங்களைக் கொண்டு வந்து, 
விஷ்ணு முதலாகிய தேவர்கள் வேதகோஷஞ்செய்ய, சாஸ்திர விதிப்படி விவாக கிருத்தியங்களைச் 
செய்தார். அப்பொழுது உருவமாய், உருவருவமாய், அருவமாய், இம்மூன்று திருமேனிக்கும் மேலாய், 
ஆன்மா அறிவுத் தொழின் மாத்திரையானே வழிபாடு செய்யும் அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் 
பிழம்பாய் நின்று உலகங்க ளெல்லாவற்றிற்கும் இதத்தைச் செய்கின்ற பரமசிவன் திருவருளால் தம்முடைய 
திருவுருவத்தை மறைத்தருளினார். 

    உமாதேவியார் அவரைக் காணாதவராய், தவஞ்செய்து பெற்ற சேமநிதியை இழந்தவர் போல 
உவகை நீங்கி வருந்த, விரைவில் இருக்கைவிட்டெழுந்து, இலக்ஷுமி முதலிய பெண்கள் நெருங்கிய 
கூட்டத்திற் போய், உலைமுகத்துருக்கிய பொன்னைப் போல உருகி விம்மி உயிர்த்து அழுது உணர்வு மாழ்கி
அயர்த்து வாடி அலமந்து வியர்த்து வெதும்பி, புளகமுண்டாக, சிவபெருமானுடைய திருக்கோலத்தையே 
தியானஞ் செய்து, "அரிபிரமேந்திராதி தேவர்கள் யாவரும் நெருங்கிய சபையிலே நடைபெற்ற மணச்சடங்கில்
 இருந்த கடவுள் மாயையினாலே விரைந்து போயினார். ஆதலின் அவர் கள்வர் போலும். வினையினேன் 
உடம்பு வருந்தச் செய்த தவம் சிறிதென் றெண்ணுதலின்றி, தாமாக வந்து என்னை மணஞ்செய்து கொண்ட
அக்கடவுளை யான் கள்வரென்று கருதலாகுமோ!" என்றென்று நினைத்து இரங்கினார்.

    இவ்வாறு இரங்குகின்ற உமாதேவியாருடைய செய்கையை வேதவல்லி நோக்கி, அவரைக் கட்டித்தழுவி, 
"மகளே மனந்தளராதே. உன் கணவர் உன்னிடத்து வருதற்குரிய வழி தவமே. இன்னும் அதனையே செய்குதி"
 என்று சொன்னாள். அங்கு நின்ற திருமகளும் நாமகளும் "அன்னையே வாழ்வாய். இதனைக்கேள். நீ உலக 
முழுதுந் தந்தாய். எப்பொருளும் உன் வடிவமே. எவ்விடத்தும் உன்னைவிட்டு நீங்காத உன்னாயகரை உன்னில்
நின்று மறைக்கும் மறைவிடம் உளதோ! தவத்தைக் காக்கும்படி நினைத்தனையோ! நினைத்தற்குமரிய 
உங்கள் திருவிளையாடல் முழுதையும் யார் அறியவல்லார்! 

    வாக்குமனாதீதர்களாகிய உன்னாயகரையும் உன்னையும் தரிசிக்கப் பெற்றோம்; வினைகள் யாவும் 
போக்கினோம்; பிறவியையும் நீங்கினோம். மனத்தில் ஞானம் நிறையப் பெற்றோம்; யாமெல்லாம் உய்ந்தோம்; 
யாம் செய்த தவமும் பெரிதே." என்று கூறி வாழ்த்தினார்கள். உமாதேவியார் அவர்களுக்கருள்செய்து, அவர்கள் 
கூட்டத்தை நீங்கி, தவஞ்செய்யும்படி முன்னைத் தவச்சாலையை அடைந்தார். இவைகளெல்லாவற்றையும் விட்டுணு 
முதலாயினோர் பார்த்து, மிகுந்த ஆச்சரியமுடையராய், சிவபெருமான் எங்கே போயினாரோ என்பாரும், 
இஃதோர் மாயமென்பாரும், அவர் தமது தேவியாருக்கொளித்ததென் னென்பாரும், இனி நிகழ்வதைப் 
பார்ப்போ மென்பாருமாகி, இவ்வாறு பலவற்றைச் சொல்லி அலமந்து ஏங்கி, இராக்காலத்திலே முகிலினால் 
மூடப்பட்ட சந்திரன் போல அறிவுமாழ்கிக் கவலையுற்றார்கள். 

    இத்தன்மைகளை யெல்லாம் தக்கன் பார்த்து, மிகவும் கோபித்து, கண்கள் சுழல உயிர்த்துக் கையோடு 
கையைத் தட்டி மூக்கிலே விரல்வைத்து மனம்புழுங்கச் சிரித்துத் தலையை அசைத்து, ''ஆக்கத்தோடு யாம்செய்த 
விவாகம் மிக அழகிதாம்!' என்றான், பின்னும் தக்கன், ''சிவன் எனக்கு வரந்தந்த காரணத்தால் என்மகளிடத்து
 வந்து தன்னை மணஞ்செய்து கொள்ளும்படி இரந்தான். யான் அதனைக் கேள்வியுற்று விவாகஞ்செய்து கொடுக்க 
நினைத்து, பலதேவர்கள் சமூகத்தில் முறைப்படி விவாகஞ்செய்து கொடுத்தேன். கொடுத்தபின் யாரும் மானமுறும்படி 
மறைந்தான். என்னிடத்து ஒருகுற்றத்தையேனும் கண்டானோ! அழகோடு செய்த விவாகச்சடங்கைப் புன்மையாக்கி 
ஊறுசெய்து, என்னையும் பழியின் மூழ்கப் பண்ணி, சிறிதும் எண்ணாமல் ஒளித்தானே. 

    தாயும் தந்தையும் உறவினருமாகிய யாருமின்றி பொது இடமே தனக்கு வீடென்று கொண்டு 
அங்கே கூத்தாடுகின்ற ஒருபித்தன் மறையோனாய்விடின் அவனுடைய மயக்கம் போமோ! ஆராயுமிடத்து 
அவனியற்கை தீயதே; இன்றைக்கு யான் அதனை அறிந்தேன்' என்று கூறி, அக்கினி பட்டாற் போல மனம் 
வெதும்பி, விட்டுணு முதலாகிய தேவர்களை "உங்கள் உலகங்களுக்குப் போங்கள்' என்று அனுப்பிவிட்டு, 
சிவபெருமான் செய்த மாயத்தை உன்னியுன்னி, கோபத்தின் மிகுந்தவனாகி யிருந்தான்.

    உமாதேவியார் முன்னைத் தவச்சாலையிற் போந்து, பலபெண்கள் தம்மைச்சூழ அங்கே வீற்றிருந்து, 
சிவபெருமான் தம்மை வந்தடையும்படி பலநாளாக வருந்தித் தவஞ்செய்தார். சிவபெருமான், ஒரு சுபதினத்திலே, 
வெண்டலை மாலையும் விபூதிப்பூச்சும் உருத்திராக்ஷ வடமும் காதணியும் சிலம்பும் சூலமும் சடையும் ஆகிய 
இவற்றைத் தரித்த ஒரு தவவேடம் பூண்டு, அவரிடத்து எழுந்தருளி வந்தார். அவரை உமாதேவியார் கண்டு, 
இவர் சிவபத்தர் எனக் கருதி, அன்பு செய்து வணங்கித் துதித்தார். அப்பொழுது அவர், இடபவாகனத்தின் மீது 
உமாதேவியார் இடப்பாகத்திலில்லாமல், தாமாந் தன்மையறிதற்குரிய வடிவத்தோடு வெளிப்பட்டார். 

    தேவியார் "பரமசிவன் நம்மிடத்து எழுந்தருளி வந்தார்" என்று தெரிந்து, முன்னைத் துயர்நீங்கி, மிகுந்த 
மகிழ்ச்சியோடு பலமுறை வீழ்ந்து வணங்கித் துதித்து எதிரே சென்று, "முன்னே என்னைவிட்டு நீங்கினீர்,
 இப்பொழுது அந்தக்குறையை நீக்கும்படி எழுந்தருளி வந்தீர் போலும்" என்று கூறினார். அவரைச் சிவபெருமான் 
வருக என்றழைத்து, திருக்கரத்தை நீட்டி இடப வாகனத்திலே ஏறச்செய்து, தமது இடப்பாகத்தில் வைத்துக்கொண்டு 
இடபத்தைச் செலுத்தித் திருக்கைலாசமலையை அடைந்தார். உமாதேவி யாருடைய சேடியர்கள் அதனைக் கண்டு 
வருந்தி இரங்கி, தக்கனிடத்திற் சென்று, 'சிவபெருமான் ஓர் தவவேடம் பூண்டு உன்மகளுக்கு எதிரே வர; அவள் 
அக்கபடத்தை அறியாமல் அணுகுதலும், அவர் விரைந்து பழைய உருவைக் காட்டி, அவளைப் பக்கத்தில் 
வைத்துக்கொண்டு செல்கின்றார்'' என்றார்கள். 

    தக்கன் அதனைக் கேட்டு, நெருப்பிலே நெய்யைச் சொரிந்தாற்போல அளவில்லாத செற்றத்தினனாய்ப் 
பெருமூச்சுவிட்டிருந்தான். அப்பொழுது தேவர்கள் யாவரும் வந்து அவனை வணங்கித் துதித்துப் பக்கத்திலிருந்தார்கள். 
அவன் அவர்களை நோக்கி இவ்வாறு சொல்வான். " நான் இனி என்ன சொல்வேன். என் மகளை முன்னே அன்போடு 
விவாகஞ்செய்த சிவன் அது செய்து முடிதற்குமுன் மறைந்தான். அதுவன்றி, அவன் என் மகளிடத்தில் ஒரு 
சிவவேடதாரியைப் போல வந்து, என்முன் வராமல் ஒளித்து அவளைக் கொண்டு செல்கின்றான். தாயுந் தந்தையும் 
அன்போடு தத்தஞ் செய்யவும் சுற்றத்தார் வாழ்த்தவும் விவாகமுடித்தபின் மகளைக் கொண்டு சென்றிலன். 
தாய்தந்தையரை மறைத்து இவ்வாறு செய்வது பெருமையோ! இதுபோலும் செய்கைகளை வேறுயார் செய்யவல்லார். 
சங்கரனானால் இதனைத் தான் செய்யலாமோ.எங்கள் குலத்தைக் குற்றத்துட்படுத்தினான்; அதுவுமன்றி 
என்னாணையையுங் கடந்தான்.  சிவன் பிக்ஷைவேண்டி இரந்தான் என்னும் ஓர்பழிமொழி எங்கும் பரந்தது; 

    அதுநிற்க, இங்கே களவுசெய்து கரந்தான் என்னும் மொழியும் பூமியெங்கும் பரந்தது. இதனால் வேறும் 
ஓர்பழியுண்டாயது. இக்கடவுள் முன்னே ஒருகன்னிகையை விவாகத்திலே தத்தஞ்செய்ய ஏற்றுக் கொண்டிலன் என்பதனையும், 
அங்ஙனம் ஏற்றுக் கொள்வோரைக் கண்டிலன் என்பதனையும் காட்டினான்" என்று இவ்வாறு பற்பலவற்றைச்
செய்ந்நன்றி கொன்ற தக்கனாகிய கயவன் கூறி, தன்பக்கத்திற் குழுமி நின்ற தேவர்களைத் தத்தம் உறைவிடங்களுக்குச் 
செல்ல அனுப்பி, அன்று தொட்டுச் சிவபெருமானை நினையாமல் இகழ்ந்து, கறுவுகின்ற மனத்தோடிருந்தான். 

            திருச்சிற்றம்பலம்.

            தக்கன் கயிலை செல்படலம்.

    தக்கனுடைய இச்செயலை அறிந்த பிரமா முதலிய தேவர்கள் வருந்தி, "தவத்தாற் செல்வங்களைப் பெற்று 
விளங்குகின்ற தக்கன் எம்பெருமானை எண்ணுகின்றிலன். விரைவில் உயிரை இழப்பன். அம்மவோ!  யாமும் 
அவனுடைய ஏவலைச் செய்கின்றோம். நம்முயிர்க்கும் இறுதி வந்தது போலும். ஆனால், இனி நாம் தக்கனை 
மதியேமாயின், அவன் முன்னாட் சிவபெருமானிடத்துப் பெற்ற வரத்தால் நிகரில்லாத கோபங் கொண்டு 
நம்முடைய பதங்களை மாற்றுவான். நாம் இனிச் செய்வதென்னை?" என்று இவ்வாறு நினைந்து, "தக்கன் 
சிவபெருமான் வீற்றிருக்கின்ற கைலாசமலைக்குப் போம்படி அவன் மனத்தைத் தேற்றினோமாயின், 
அவன் அன்போடு அவரைப் போய்த் தரிசிப்பான். அப்பொழுது அவனுடைய இச்செல்வங்களெல்லாம் 
நிலைபெறும். நமக்கும் நாசம் வராது.'" என்று நினைத்து, தக்கனிடத்திற் சென்று, "உன் தவத்தினால் மகளாய் 
வந்தவதரித்த உமாதேவியாரையும் சிவபெருமானையும் மறக்கின்றனை போலும். உனது பெருந்தன்மைக்கு 
இஃதோர் குணமென்னை! இது ஆச்சரியம். குற்றம் பார்த்தலே குணமென்று கொண்டால் ஒருவர்க்குச் சுற்றம் 
எவ்வாறுளதாகும். ஆனால் சுற்றத்தை வெறுத்து நீக்கிக் கோபஞ் செய்தற் கண்ணும் பின்பு ஒர்மகிழ்ச்சி உண்டு. 
இதனைச் சிந்தியா தொழிவையாயின், அரசனே உன்னை ஓர் வசை வந்து சூழும்" என்றார்கள்.

    தேவர்கள் கூறியவற்றைத் தக்கன் யோசித்து, "யான் செயற்பாலது யாது?' என்று கேட்க; "உமாதேவியையும் 
சிவபெருமானையும் திருக்கைலாசத்திற் போய்க்கண்டு மீளுதி" என்று கூறினர். அவன் அங்கே செல்லுதற்கு உடன்பட்டு, 
பிரமா முதலிய தேவர்கள் யாவரையும் அங்கிருக்க வைத்து, தன்னைப் பிரியாத் துணையாயுள்ளோர் சிலரோடு 
கைலாசமலையை அடைந்து, சிவபெருமான் வீற்றிருக்குஞ் செம்பொற்றிருக்கோயிலை அணுகி, நந்திதேவர் 
இருக்கின்ற கோபுர வாயிலைச் சார, அதனைக் காவல் செய்யும் பூதர்கள் உள்ளே புகவொட்டாது தடுத்தார்கள். 
தக்கன் அப்பூதர்களை வெகுண்டு, என்மகள் தன்னாயகனோடு இங்கு இருப்பதை யான் பார்த்தறிவேன். 
நீவிர் அதனைத் தடுக்கின்றதென்னை?" என்று கூறினான். 

    வாயில் காக்கும் பூதர்கள் அவனைக் கோபித்துப் பார்த்து, "மிகவும் மடமையையுடைய தக்கனே, 
முன்னாளில் நமது கடவுளாகிய சிவபெருமானை இகழ்ந்தாய். அத்தன்மையனாகிய நீ இங்கே எவ்வாறு 
வருகின்றனை? திரிபுரத்தசுரர்கள் பூவுலகத்தையும் வானுலகத்தையும் வருத்துவராயினும் எம்பெருமானுக்கு 
நல்லவர். அவர்களுடைய அன்பில் ஓரிறையளவாயினும் நின்பாற் பொருந்திற்றில்லை. இனி எங்ஙனம் 
வாழ்வாய். தேவர்கள் இறக்க வருஞ் சமயத்தில் நஞ்சையுண்டு அவர்களுடைய துன்பத்தை நீக்கிக் கறுத்த 
கண்டராகிய சிவபெருமான் தந்தருளிய மேலாகிய செல்வங்களை அநுபவித்து அவர் செய்த 
நன்றிகளையெல்லாம் மறக்கின்றாய். மாயையுட்பட்டாய். நீ இனி என்செய்குதி? சிவபெருமானுடைய 
திருவடிகளை மிகுந்த பத்தியோடு வணங்கித் துதியாத பாவிகளோடு சகவாசஞ் செய்தல் கூடாது. 
பாசத்துள் வீழ்ந்த கொடியோனே, உன் முகத்தைப் பார்த்து யாங்கள் பேசவுந் தகுமோ! பாவமன்றோ. 
அங்ஙனமாயினும் இன்னும் ஒருவார்த்தையுளது. நீ எம்பெருமானுடைய சந்நிதானத்திற் போய் அன்பினோடு
 அவரை வழிபடுவாயாயின் இங்கே நில். அன்றெனில் உன்னகருக்குச் செல்லுதி' என்றார்கள். 

    தக்கன் அவற்றைக்கேட்டு, அக்கினி கிளர்ந்தாற்போல மிகவும் கோபமுற்று, பல்லாயிரம் பூதர்கள் 
பாதுகாக்கின்ற திருக்கைலாசமலையின் வாயிலைக் கடந்து உள்ளே செல்லமாட்டாதவனாய், மிகவும் 
நாணி மனம் வருந்தி, அங்கே நில்லாது மீள்கின்றவன் அவ்வாயிற் காவலாளர்களை நோக்கி, "வாயில்காக்கும் 
பூதர்காள் கேளுங்கள். எந்த நாளிலாயினும் உங்கள் கடவுளாகிய சிவனை யான் வணங்கேன். அவன் என் 
மருகன். இதனை நீர் அறிந்திலீரோ! இந்த விட்டுணுவும் பிரமாவும் எனக்கு ஏவல் செய்வார்கள். ஒழிந்தோரெவரும் 
என்னுடைய தொண்டர்கள். பெரிய நிலவுலகத்தைப் பாதுகாக்கும் அரசன் யான். என் பெயர் தக்கன் என்பர். 
உங்களுடைய ஒப்பில்லாத பெரும் பித்தனை இன்றைக்கா நான் போய் வணங்கித் தொழுது துதிக்கின்றேன்! 
என்னைப் பார்த்து 'இங்கே நில்' என்று நீவிர் தடைசெய்த நிலைமை அந்த மருகனும் சிறுமியும் சொன்னபடி 
செய்ததல்லது, நீவிர் செய்த தன்மையோ! அவர்களுடைய தொண்டர்களாகிய நீவிர் செய்வதென்னை! 
அவர்களுக்கேற்றபடி செய்தல் உங்கட் குறுதியல்லவா? ஒன்றையும் யோசியாமல் இவ்வாறு செய்த உங்கள் 
கடவுளை யாவருந் தோத்திரஞ் செய்யாமலும், வந்து வணங்காமலும், புகழ்ந்து மேன்மைகளைச் சொல்லாமலும், 
இகழும்படி செய்வேன்" என்றும் கூறி, முன்செய்த வினை தன்னைப் பிடர் பிடித்துந்த மீண்டு தன்னகரை யடைந்தான்.

    மீண்டு சென்ற தக்கன் பிரமா முதலிய தேவர்களை நோக்கி, "என் மகளும் சிவனும் ஒருவர்க்கொருவர் 
அன்பினால் ஒருப்பட்டு ஒருபாயத்தை யெண்ணித் தங்களுடைய வாயிற் காவலாளர்களால் எம்மை உள்ளே 
விடாமற் றடுப்பித்தார். அவர்கள் நம்மைப் பேசுவித்தனவும் பல உண்டு. வெட்...அந்தோ! அதை என்னென்று 
வாயாற் சொல்வேன்! எண்ணினாலும் ..கம் அடைவேன். அவற்றை இங்கே சொல்வேனாயினும் அதனால் 
ஆவதென்னை! அவர்களிடத்துப் போன என்னை நோவதன்றி அவர்கள் மாட்டு யாதாயினுங் குறையுண்டோ! 
நன்று நன்று! என்னை மதியாத சிவனையும் உமையையும் நீங்கள் இன்றுமுதலாக என்றைக்கும் வணங்கித் 
துதியா தொழிமின். அன்றியும் அவர்களை மதிப்பீரல்லீர். இந்தப் பணியை மறுத்து தீராயின், நும்முரிமையை 
இன்றைக்கே விரைவில் மாற்றுவேன். இது நிச்சயம்'' என்றான். 

    இப்படிக் கோபங்கொண்டு சொல்லிய தக்கனைத் தேவர்கள் யாவரும் நோக்கி, "அரசனே எம்மை 
வெறுத்து இவ்வாறு சொன்னாய் போலும். முன்னும் உன்னுடைய ஏவலை மறுத்தனவும் உளவோ, இல்லையே. 
அப்படியே இப்பொழுதும் உன் பணியில் நிற்போம். எங்களைக் கோபியாதொழிவாய்" என்றுகூறி, 
தத்தம் உலகங்களை யடைந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            பிரமயாகப்படலம்.

    இப்படிப் பலகாலம் யாவரும் தக்கனுடைய ஆணைக்கு அஞ்சி அவனுடைய பணியைச் செய்து கொண்டு 
வர, பிரமதேவர் சிவபெருமானுடைய திருவருளினால் ஓர் யாகத்தைச் செய்ய எண்ணி முயன்று, அதற்கு வேண்டும் 
உபகரணங்கள் எல்லாவற்றையும் விதிப்படி சிரத்தையோடு சம்பாதித்து, தக்கன் சொன்னதை நினைத்து, 
'யானே இறக்கவரினும் பெருமானை யாகத்தில் வரித்து முதலில் அவருக்கு அவிப்பாகத்தைக் கொடுப்பேன். 
எனக்கு இது துணிபாம்' என்று சொல்லித் தன்மனத்தை யாப்புறுத்தி, ஏவலைச் செய்யும் புதல்வர் கூட்டத்தை 
அழைத்து, "விட்டுணு முதலாகிய அனைவரும் அவிப்பாகத்தைக் கொள்ளும்படி நீவிர் அழைத்துத் தருதிர்' 
என்று அவர்களை விரைந்து தூண்டி, தான் திருக்கைலாசமலையை அடைந்து, திருநந்தி தேவர் சிவபெருமானுடைய 
அநுமதிப்படி கோயிலினுள்ளே விடுப்பச் சந்நிதானத்திற்போய், அன்போடு வணங்கித் துதித்தார். 

    சிவபெருமான் "பிரமனே நீ இங்கு வந்ததென்னை?" என்று வினாவியருளினார். பிரமா,"சுவாமீ அடியேன் 
ஓர் யாகத்தைச் செய்வேன். தேவரீர் அங்கே எழுந்தருளிவந்து அது முடியும்படி அருள்செய்யும்'' என்றார். கடவுள் 
திருப்புன்முறுவல் செய்து, ''நமது வடிவத்தைக் கொண்ட நந்தி அங்கே வருவான் ,நீ போவாய்" என்றருளிச்செய்தார்.

    பிரமா சிவபெருமானிடத்தில் விடைபெற்றுக்கொண்டு தக்கனிடத்திற் போய்,"ஐயனே,யான் ஓர் 
யாகத்தைச் செய்வேன். முனிவர்களோடும் தேவர்களோடும் நீ வருதி" என்றார். தக்கன் "நன்று,நீ முன்போய்
 யாகத்தைச் செய்குதி" என்றான். பிரமதேவர் மேருமலையிலுள்ள மனோவதியை யடைந்து யாகத்தைச் 
செய்யலுற்றார். அதனை விட்டுணு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் ஆகிய யாவரும் அறிந்து, தக்கனிடத்து 
வந்தார்கள். தக்கன் அவர்களோடு கூடி, சிவபெருமானுக்கு அவிப்பாகத்தை விலக்கும்படி முயன்று, 
அத்தேவர்கள் யாவரும் தன்னைத் துதித்துச் சூழ யாகத்திற்குப் போயினான். பிரமா எழுந்து ஆசி கூறித் 
தமக்குப் பக்கத்திலே ஓர் ஆசனத்தில் அவனை இருத்தி, விட்டுணுவினுடைய பாதங்களை வணங்கி அவரையும் 
ஓராசனத்தி லிருத்தி, இந்திரன் முதலாகிய மற்றையோருக்கும் ஒவ்வோர் ஆசனங்களைக் கொடுத்துத்
தானும் ஓராசனத்தில் இருந்தார்.

    இங்கே இவ்வாறு நிகழ; பரமசிவன் நந்திதேவரைப் பார்த்து, “நீ பிரமனுடைய யாகத்திற் சென்று 
நம்முடைய அவிப்பாகத்தை வாங்கிக் கொண்டு விரைவில் இங்கு வருவாய்' என்று கட்டளையிட்டருளினார். 
அவர் இசைந்து, சிவபெருமானை வணங்கித் தியானித்துக்கொண்டு, நூறுகோடி பூதகணங்கள் சூழப் 
பிரமாவினுடைய யாக சாலையில் வந்தார். பிரமா விரைந்தெழுந்து வணங்கித் துதித்து, அவரை ஒரு 
இரத்தின சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்து, அவரோடு கூட வந்த பூதப்படைத்தலைவருக்கும் 
ஆசனங்களைக் கொடுத்து, பின்பு யாகத்தைச் செய்தார். 

    அப்பொழுது, நன்றியில்லாத தக்கன் அக்கினி காலப்பார்த்து, 'அந்தக் கைலாசத்திலிருக்கின்ற 
நக்கனுக்காளாகிச் சென்றவன் போலாம் இவன்" என்று நகைத்துக் கோபித்து, "விட்டுணு முதலாகிய தேவர்களும் 
இலக்குமி முதலிய தெய்வ மகளிர்களும் முனிவர் குழாங்களும் செறிந்திருக்கின்ற பிரமாவினுடைய யாகத்தில், 
நஞ்சையுண்டு கூத்தாடும் சிவனுடைய ஆளாகிய நந்தியும் பூதங்களுமோ நடுவே வந்திருப்பது ! இது தக்கதே! 
முப்புரங்களை எரித்த அக்கினிக் கண்ணனாகிய சிவனுடைய வெள்ளி மலையைக் காக்கும் காவலாளனாகும் 
நந்தியும் அவசியம் இங்கே வரவேண்டுமென்று அழைத்தவர் யாரோ!" என்று மனத்தில்  யோசித்துத் தெரிந்து, 
தேவர்கள் யாவரும் அஞ்சும்படி பிரமாவைக் கோபித்து, அவரை நோக்கி இவற்றைச் சொல்கின்றான்: 

    "நீயோ முதல்வனாகிய பிரமதேவன். நீ யாகஞ் செய்யப்போவதைச் சிவனுக்குத் தெரிவித்து அவன் 
அனுப்ப வந்த நந்தியை என் முன் அன்போடு தொழுது நடுவிலே கொண்டுவந்து இருத்தினாய். உனக்கு இது 
தகுவதோ! நீ பிதாவாதலிற் பிழைத்தாய். அல்லது உன்றலையை வெட்டேனோ. இன்னும் ஒன்று யான் சொல்வதுண்டு; 
மூடனே கேட்பாய். சுடலையே இடமாகப் பூதங்கள் சூழக் கங்காளத்தைச் சூலத்தில் ஏந்தி நெருப்பில் நின்றாடுஞ் 
சிவனுக்கு அவிப் பாகத்தை நீ முன் போலக் கொடாதே. இன்று முதல் அது அவனுக்குக் கிடையாது. எலும்பையும் 
பாம்பையும் தலைமாலையையும் தாங்கிச் சாம்பலைப் பூசிய பித்தன் யாகத்தில் அவிப்பாகம் ஏற்றற்குரியனோ! 
இந்நாள்காறும் யாவரும் வேதாசாரமென்று நினைத்து வேறொன்றையுங் கருதாமல் சுத்தம் மிகுந்த அவியை 
அவனுக்குக் கொடுத்தார்கள்; அதையே தொன்று தொட்ட வழக்கமாகக் கொள்ளலாமோ! அவ்வவியை மற்றைத் 
தேவர்களுக்கெல்லாம் கொடுக்குதி. இன்றுமுதல் விட்டுணுவையே கடவுளாகக் கொள்ளுதி. இவருக்கே அவியை 
முதலிற் கொடுக்குதி. சிவனே பரம்பொருள் என்று சொன்ன வேதசுருதிகளை விலக்குதி. இதனையே நீ துணிவாகக் 
கொள்ளல் வேண்டும்'' என்று தக்கன் கூறினான்.

    இவ்வாசகங்களைக் கேட்டலும், நந்திதேவர் இருகரங்களாலும் காதுகளைப் பொத்தி, மன அன்போடு 
சிவநாமங்களைத் தியானித்து, ''எம்பெருமானே, இன்றைக்கு இவ்வதிபாதகனுடைய சொல்லையும் கேட்கும்படி
 அடியேனை இங்கே அனுப்பினீரோ' என்று மிகுந்த துன்பத்தில் மூழ்கி துண்ணென்று வெகுண்டார். அவருடைய 
கோபத்தைக் கண்ட தேவர்கள் யாவரும் உட்கினர். அக்கினியும் வருந்தினான். அண்டங்கள் யாவும் நடுநடுங்கின. 
உயிர்களெல்லாம் அசைந்தன. பிரமாவும் விட்டுணுவும் "சிவபெருமானுடைய கீர்த்திகளுள் ஒரு சிறிதையும் 
நினையாது வலிமையோடு அவருக்குரிய அவியை விலக்கிய தக்கனுக்கஞ்சி அவன் வார்த்தைக் கெதிராக 
இங்கே ஒன்றையும் சொல்லுதல் தகாதென்று நாமும் இசைந்தோம். ஐயோ அதனைப் பொறாது தான் 
நந்திதேவர் சீற்றங்கொண்டார்" என்று எண்ணி,மனம் உட்கினார்கள். 

    இவ்வாறாகிய சமயத்தில், திருநந்திதேவர் தக்கனை அக்கினி காலப்பார்த்து, ''உமாதேவி பாகராகிய 
சிவபெருமான இகழ்ந்தாய். இங்கே உன் வாயைத் துளைத்திடுவேன். அது அக்கடவுளுடைய ஆணையன்றென்று 
விடுத்தேன். அதனால் நீ உய்ந்தாய். இனி எம் பெருமானைத் தூஷித்தாயாயின் விரைவில் உன் சிரசைத் துணிப்பேன்' 
என்று இவ்வசனங்களைத் தக்கனுடைய உள்ளமுந் துணுக்குறும்படி கூறி, பின்னரும், "யாகத்தில் எம்பெருமானுக்கு 
அவிப்பாகம் இல்லை என்று விலக்கினாய். யாகத்துக் கிறைவர் சிவபெருமானல்லராயின் உலகத்தில் அதற்கு 
இறைவர் வேறியாவருளர்! தக்கனே நீ விட்டுணுவைப் பரம்பொருளென்று கூறினாய். சிவபெருமானையன்றி 
யாகஞ் செய்வோருடைய சிரம் விரைந்து அறுக' என்று சாபங்கூறினார். 

    அதன் பின்னரும், "சிவபிரானுடைய இயல்புகளை மதியாத தக்கனே, உன்னுடைய வளங்களெல்லாம் 
விரைந்தழிக: அவரை வணங்குதலின்றி மாறுபட்டிகழ்ந்த வாயையுடைய உன் புன்றலையழிய வெறோர் இழிவாகிய 
தலை எவருங் காணும்படி விரைவிலுண்டாகுக. ஈரமில்லாத புல்லிய மனத்தையுடைய மடவோனே, உன்னைச் 
சார்ந்த தேவர்களும் ஓர்நாள் இறந்து மீண்டு எழுந்து, அளவில்லாத யுககாலம் சூரன் என்னும் அவுணனாற் 
றுன்பக்கடலில் மூழ்குக" என்று இந்தச் சாபங்களையுஞ் சொல்லி, எழுந்து, பூதகணங்கள் சூழத் திருக்கைலாச 
மலையை யடைந்து, சிவபெருமானுக்கு இந்நிகழ்ச்சிகளை விண்ணப்பஞ் செய்து, முன் போலக் கீழ்த்திசை 
வாயிலைக் காவல் செய்திருந்தார். 

    திருநந்திதேவர் பிரமாவினுடைய யாகத்தை நீங்கிப்போதலும், அவ்வியாகத்திலிருந்த தேவர்கள் 
யாவரும் இஃதென்னை நிகழ்ந்தது!" என்று இரங்கி ஏங்கினார்கள். பிரமா திருநந்திதேவர் கூறிய பொய்யா 
மொழியாகிய சாபத்தை நினைத்து ஏங்கித் தலை நடுங்கி, மகனாகிய தக்கனுடைய சொல்லையும் மறுத்தற்கஞ்சி, 
மிகவுந் துயருழந்து, முடிக்கும்படி எண்ணி முயன்ற வேள்வியை நடத்த அஞ்சி, சடங்குகளைக் கைவிட்டார். 
தக்கன் அதனைப் பார்த்து, ஒன்றும் பேசாதவனாயும், கோபம் பொருந்திய மனத்தினனாயும், கவற்சியுடையனாயும், 
உவகையிலனாயும், அச்சமுஞ் சிறிதுடையனாயும், தேவர்களோடெழுந்து தன்னகரிலுள்ள கோயிலையடைந்தான். 
அந்த யாகத்தில் வந்து கூடிய தேவர்கள் திருநந்திதேவர் கோபத்தாற் சொல்லிய சாபத்தைச் சிந்தித்து 
வருந்தித் தத்தமிடங்களை யடைந்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            சாலை செய்படலம்.

    அன்றுமுதல் அளவில்லாத காலமாக முனிவர்களும் தேவர்களும் அந்தணர் முதலாயினோர்களும் 
யாகங்களொன்றையும் செய்யாராயினார். ஊழினாலே தீவினையைச் சாருகின்ற தக்கன் அதனை நினைத்து, 
ஒருநாள் தன்முன் வந்த தேவர்களை நோக்கி, 'வேதத்தினியல்பு முழுதையும் அறிந்த தேவர்களே, நெடுங்காலமாக 
நீவிர் யாகங்களைச் செய்யாது விடுத்ததென்னை? அதனை எனக்குச் சொல்லுங்கள்' என்று ஈர்ந்தாற் போன்ற 
தீயதோர் வார்த்தையைச் சொல்லினான். 

    தேவர்கள், ''அரசனே, முன்னாளிற் பிரமதேவர் செய்த யாகத்திலே சிவபெருமானுக்கு அவிப்பாகத்தைக் 
கொடாதொழிக" என்று பணித்தாய். அதனாலும் நந்திதேவர் கூறிய பிழைபடாத சாபத்தாலும் யாங்கள் யாகஞ் 
செய்யாதிருந்தோம்" என்றார்கள். தக்கன் அவர்களை நோக்கி, "அந்நாளிலே சிவன் அனுப்ப வந்த நந்தி சொல்லிய 
சாபத்துக்கு இந்நாளிலும் நீவிர் அஞ்சி யாகங்களொன்றையுஞ் செய்யாது திரிவீராயினீர். முதலிலே வேதவிதிப்படி 
யான் ஓர் யாகத்தைச் செய்வேன். அது முடிவுபெறுமாயின், அதன்பின் நீவிரும் யாகங்களைச் செய்யுங்கள்" என்று 
கூறினான். அவர்கள் ''நீ முதலில் ஓர் யாகத்தைச் செய்தலே முறை" என்றார்கள்.

    தக்கன் தேவர்களை அனுப்பிவிட்டு, அதன்பின் ஒருநாள், விதிவசத்தால் ஓர் யாகஞ்செய்ய எண்ணி முயல்வானாய், 
விசுவகன்மனை அழைத்து, "யான் ஒர் யாகத்தைச் செய்வேன். முனிவர்களும் தேவர்களும் வந்திருக்கும்படி மிகுந்த 
விசாலமுடையதாக இன்றைக்கு ஓர் யாக சாலையை விதிப்படி செய்வாய்" என்றான். விசுவகன்மன் நன்றென்று 
அவனை வணங்கி, கங்கா நதிக்கரையிலுள்ள கனகலம் என்னும் சிறந்த ஓரிடத்திற்போய் அதனை அமைப்பானாயினான். 
ஆயிரம் யோசனை நீளமும் அகலமும் ஒத்ததன்மையாக இடத்தைக் கோலி ஓர் மதிலைச் சூழ்ந்து, அதன் நான்கு 
திசைகளிலும் நான்கு கோபுரங்களையும் உறுப்புக்களையும் செய்து, அம்மதிலை ஓர் அரணமாக்கி, அதனுள்
 அரம்பையர்களிருக்கு மிடங்களையும், தேவர்களும் அரம்பையர்களும் மருவி ஆடுதற்குரிய வாவிகள் 
சோலைகளையும், அன்னசாலை போசன சாலைகளையும், சந்தனம் புஷ்பம் முதலிய வாசனைத் திரவியங்களும் 
வெற்றிலை பாக்கு முதலாயினவும் வைக்குஞ் சாலைகளையும், வஸ்திராபரணம் பொன் மணி முதலியவற்றைக் 
கொடுக்குந் தானசாலைகளையும், யாகசாலைகளையும், குண்டங்களையும், வேதிகைகளையும், அரிபிரமேந்திராதி 
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தக்கனுக்கும் ஆசனங்களையும், இன்னும் வேண்டுமவைகளையும் உண்டாக்கி, 
தக்கனை வணங்கி, ''உன்னுடைய யாகசாலை முற்றுப் பெற்றது. வந்து காண்குதி" என்றான். 

    தக்கன் அதனைப் போய்ப் பார்த்து, அவன் மீது அன்புசெய்து மகிழ்ந்து, விம்மிதத்தனாகி, 
யாகஞ்செய்யத் துணிந்து, தன் மருங்கிலுள்ள முனிவர்கள் பலரை அழைத்து, 'சமித்துக்கள், சாகைகள், 
இலைகள், பரிதிகள், யூபம், கயிறு, பறப்பை, பசு, தீக்கடைகோல், முதிரைத் தானியங்கள் முதலியனவாக 
யாகத்திற்குரிய உபகரணங்களைக் கொண்டு வருதிர்" என்று விரைவில் அனுப்பினான். காமதேனுவையும் 
சங்கநிதி பதும நிதிகளையும் சிந்தாமணியையும் ஐந்தருக்களையும் அழைத்து, ''நம்முடைய யாகத்தைப் 
பார்க்கும்படி பூவுலகத்திலுள்ள அந்தணர்கள் வருவர். அவர்களுக்கு உணவுகளையும் மற்றைப் பொருள்களையும் 
கொடுங்கள்'' என்று பணித்தான். 

    அவைகள் விடைபெற்றுக்கொண்டு வேண்டும் பொருள்களைக் கொடுக்கும்படி ஏற்ற இடங்கள்தோறும் 
போயிருந்தன. தன்கிளைஞர்களாய்க் கோபமில்லாத முப்பதினாயிர முனிவர்களை "அன்னத்தையும் 
பிறவற்றையும் பரிமாறுதிர்" என்று ஏவினான். அறுபதினாயிர முனிவரை ''உணவுப்பொருள் தவிர மற்றும் 
வேண்டுவனவெல்லாவற்றையும் ஒழிவின்றிக் கொடுங்கள்'' என்று ஏவினான். அதன்பின் தூதுவரை நோக்கி, 
"சிவனை யொழிந்த தேவர்களையும் முனிவர்களையும் பிராமணர்களையும் திசைகளும் விண்ணுலகமும் 
பூமியுமாகிய எங்குஞ் சென்று அழைத்துக் கொண்டு வாருங்கள்' என்று தூண்டினான். முன்னே தக்கனால் 
அனுப்பப்பட்ட முனிவர்கள் யாகத்துக்கு வேண்டும் உபகரணங்களைக் கொண்டு வந்தார்கள். 

    அத்திரவியங்களைப் பார்த்து, அவற்றை வரிசையாக வைக்கும்படி கூறினான். இருத்துவிக்குக்களிற் 
பலர் வேதிகைகளிலே பல பண்டங்களையும் நிரைத்து, பறப்பையைச் சேர்த்தி, வேதியின் சமீபத்தில் ஓரிடத்திலே 
யூபங்களை நாட்டி, அவற்றிலே பாசங்களாற் பசுநிரைகளைக் கட்டி, பூசையை முறைப்படி செய்தார்கள்.
தக்கனுடைய யாக சாலையில் இவை நிகழ; அவனுடைய அநுமதியைத் தலைமேற்கொண்டுபோன தூதுவர்களிற் 
சிலர் பூவுலகத்துப் பிராமணர்களுக்குச் சொன்னார்கள்; சிலர் சூரிய சந்திரர்களுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் 
கிரகங்களுக்கும் சொன்னார்கள்; சிலர் கந்தருவர்களுக்குச்சொன்னார்கள்; சிலர் திக்குப்பாலகர்களுக்குச் 
சொன்னார்கள்; சிலர் இந்திரனுக்குச் சொன்னார்கள்; சிலர் விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குச் சொன்னார்கள்; 
சிலர் மேலுலகங்களிலுள்ள முனிவர்களுக்குச் சொன்னார்கள்; சிலர் மற்றையிடங்களிலுள்ள முனிவர்களுக்குச் 
சொன்னார்கள்; சிலர் சத்தியவுலகத்தையடைந்து, பிரமாவினுடைய கோயில்வாயிலிற் போய்க் காவலாளர் 
உள்ளே விடுப்பச் சென்று அவரை வணங்கி, "சுவாமீ, உமது குமாரனாகிய தக்ஷப்பிரஜாபதி யினுடைய யாகத்திற்குத் 
தேவரீர் வரவேண்டும்'' என்று சொன்னார்கள். 

    சிலர் வைகுண்டவுலகத்தை யடைந்து, விட்டுணுவினுடைய கோயில் வாயிலிற் போய், சேனைத் 
தலைவன் உள்ளேவிட விட்டுணுவை வணங்கி, "எம்பெருமானே,தக்ஷப்பிரஜாபதியினுடைய யாகத்துக்கு 
வரவேண்டும்'' என்று சொன்னார்கள். அவர் இருக்கைவிட்டெழுந்து பூமி லக்ஷுமியும் மகாலக்ஷுமியும் 
உடன்வரக் கருடனுடைய தோளின் மேலேறி, சேனைகள் சூழவும் சேனாபதி வணங்கவும் யாகத்துக்குச் 
சென்றார். பிரமா அதனை அறிந்து, சரசுவதி முதலிய மனைவியர் மூவரோடும் தாமரையாசனத்தை 
விட்டெழுந்து அன்னவாகனத்தின் மேற்கொண்டு, தம்முடைய குமாரர்களும் எல்லையில்லாத முனிவர்களும் 
துதித்துச் சூழப் போயினார். இந்திரன் ஐராவத யானையின் மேலிவர்ந்து தேவர்கள் சூழத் தங்கள் குரவருடன்
அவியை உண்ணும் விருப்பத்தோடு வந்தான். 

    விண்ணுலகிலுள்ள அரம்பை முதலாகிய பெண்கள் தேவர்களோடு வந்தார்கள். ஐராணி, தனது 
நாயகன் யாகத்துக்குச் சென்றான் என்று அரம்பையர்கள் காப்ப வந்தாள். திக்குப்பாலகர்களும், ஆதித்தர் 
உருத்திரர் வசுக்கள் மருத்துவர் என்னும் நால்வகைத் தேவர்களும், தாரகைகளும், சந்திரனும், கிரகங்களும், 
இயக்கர்களும், சித்தர்களும், வித்தியாதரர்களும், பிறரும் வந்தார்கள். தக்கனுடைய புத்திரிகளாகிய அசுவினி 
முதலிய இருபத்தேழுபேரும் வந்தார்கள். இவர்களெல்லாருடைய வரவையும் சோணிதபுரத்திலுள்ள அவுண 
ராசன் பார்த்து, தன் கிளைஞர்களோடு வந்தான்.

    மேற்கூறிய இந்திரன் முதலாகிய தேவர்களும் பிறரும் பிரமவிட்டுணுக்களுக்குப் பக்கத்தில் நெருங்கி, 
கனகலமென்னும் வனத்திலுள்ள யாகசாலையை அடைதலும், தக்கன் முனிவர்களோடு எதிர்கொண்டு நின்று, 
அவர்களுள் மேலோராகிய பிரமவிட்டுணுக்க ளிருவரையும் மிக்க அன்போடும் முறைமுறை தழுவியும், 
இந்திரன் முதலாயினோரைக் கண்ணாற் பார்த்தும், அவரவர் தாரதம்மியத்துக்கு ஏற்றபடி உபசாரஞ்செய்து
யாகசாலையில் அழைத்துக் கொண்டுபோய், பிரமவிட்டுணுக்களை முன்பு இரத்தினாசனங்களிலிருத்தி, இந்திரன்
முதலாகிய தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அவரவர்களுக்குத் தக்க ஆசனங்களைக் கொடுத்து, வேதங்கள் 
கோஷிக்கத் தான்  இவர்களெல்லாருக்கும் மத்தியில் இருந்தான். 

    பூமிலக்ஷுமியும், மகாலக்ஷுமியும், சரசுவதி காயத்திரி சாவித்திரி என்னும் மூவரும், நக்ஷத்திரங்களும், 
இந்திராணியும், மற்றைத் தேவமகளிர்களும் வேதவல்லி இருக்குமிடத்தை அடைந்து, தத்தமக்கு ஏற்ற இடங்களில் 
இருந்தார்கள். பூவுலகத்திலுள்ள பிராமணர்களும் முனிவர்களும் "நாம் தக்கனுடைய யாகத்தைப் பார்த்து நல் 
உணவுகளை உண்டு மீள்வோம்'' எனக் கருதி, தேவர்கள் இருக்குஞ் சபையை அடைந்திருந்தார்கள். அப்பொழுது, 
அழைக்கப்போன தூதுவரனைவரும் தக்கனை வணங்கி நிற்ப; அவன் அவர்களைக் கருணைசெய்து நோக்கி, 
"நீவிர் அழைத்தவர்களுள் இங்குவராமற் பிழைத்தவர்கள் உளரோ? உண்டானால் அவர்களை நமக்குச் சொல்லுங்கள்'' 
என்றான். அவர்கள் ''அகத்தியர், சனகாதிமுனிவர், அத்திரி,வசிட்டர், பிருகு, ததீசி, துர்வாசர், பராசரர் ஆகிய 
இவர்கள் நீ செய்யும் யாகத்தை இகழ்ந்து இங்கே வருகிலர் போலும்'' என்றார்கள். அதனைத் தக்கன் கேட்டு, 
'இதனைச் செய்தவர் யார்?  முனிவர்களுள் இவர்கள்தாமோ சிவனுக்கன்புடையார்!" என்று கூறி, தேவர்கள் 
யாவரும் அஞ்சும்படி கோபத்தோடு உயிர்த்துச்  சிரித்தான்.

            திருச்சிற்றம்பலம்.

            ததீசிப்படலம்.

    அப்பொழுது, ததீசிமுனிவர் முனிவர்களோடு அந்த யாகசாலையில் வந்தார். அவரைத் தக்கன் நோக்கி,
 "இம்முனிவர் பரமசிவனைச் சார்ந்தவரல்லர்; எனக்கஞ்சி இந்த யாகத்தைப் பார்க்கும் பொருட்டு வந்தார். 
இது தகும் தகும்' என்று தன்னுள் யோசித்துணர்ந்து, மகிழ்ந்து, மனங்குளிர்ந்து, "ஈண்டே வருக வருக!'' என்று 
உபசாரங் கூறி, அவருக்குப் பெரிய ஓர் ஆசனத்தை இட்டான். அவர் இருமருங்கும் முனிவர்களிருக்க அவ்வாசனத்தின்மீது 
வீற்றிருந்து, தன்னுடைய ஆக்கங்களை இழக்கின்ற தக்கனை நோக்கி, "நீ இங்கே எம்மை அழைத்ததென்னை? 
முயற்சித்த கரும மென்னை? இவைகளெல்லாவற்றையும் விரைந்து ஒன்றும் ஒழியாமற் சொல்லுதி" என்றார். 

    தக்கன் ததீசிமுனிவரை நோக்கி, "சிவன் ஓர்நாள்  என்மகளை மிகுந்த ஆசையோடு வந்து மணஞ்செய்து, 
தான் மறைந்து போய், பின்னொருநாள் வந்து அவளை இடபத்தின்மேல் ஏற்றிக்கொண்டு கைலாசத்துக்குப் 
போய், அவளுக்குப் பெரும் மாயத்தைச் செய்தான். அந்தச் சிவனையும் உமையையும் பார்க்கும்படி நான் 
கைலாசத்துக்குப் போயினேன். அவ்விருவரும் அதனையறிந்து, பூதர்களை அழைத்து, 'அத் தக்கனை நம்முன் 
வரவிடாமல் விலக்குங்கள்' என்று கட்டளையிட்டார்கள் போலும். நான் இதனை அறியேனாய் அங்குச் சென்றேன். 
பூதர்கள் என்னை உள்ளே புகவொட்டாது, 'நீ இங்கே நில்' என்று எண்ணில்லாத நிந்தனைகளைச் சொன்னார்கள். 

    நான் அப்பொழுதே கைலாசமலையை நீங்கி என்நகரை அடைந்தேன். நான் தங்கள் கைலாசத்துக்குப் 
போய்த் திரும்பிய  பொழுது, அங்கே எங்கள் மகளும் என்னை வந்து கண்டிலள். அவள் என் செய்வாள்! 
அந்தச் சிவனுடைய மாயையால் எல்லாப் பெருமையையும் நீங்கிவிட்டாள். இப்படியிருக்குங் காலத்தில், என் 
பிதாவாகிய பிரமதேவர் ஒரு யாகத்தைச் செய்தார். நான் அங்கே சென்று சிவனுக்கு முன்றொட்டுக்
கொடுத்துவந்த அவிப்பாகத்தைத் தடுத்தேன். அப்பொழுது நந்தி வந்து சாபஞ்சொல்லிப் போயினான். 
மிருதங்கம் அடித்தலாகிய அற்பத் தொழிலைச் செய்யும் நந்தி சொல்லிய சாபத்துக்குப் பயந்து பிரமா யாகத்தை 
முற்றுவியாது குறையில் விட்டுவிட்டார். நந்தி கூறிய சாபத்தையும் என்னுடைய விரதத்தையும் தெரிந்து அஞ்சி, 
இற்றை நாள்வரையும் ஒருவரும் யாகஞ் செய்தலை மனத்திலும் நினையாராயினார். அதனை யானறிந்து, 
பிச்சையேற்கின்ற அந்தச் சிவனுக்குரிய அவியை மாற்றுதற்காகவே ஒரு யாகத்தை நடத்துகின்றேன்; பிறிதொரு 
பிரயோசனத்தையும் விரும்பினே னல்லேன். அந்த யாகத்திற்காகத் தேவர்களும் முனிவர்களும் மற்றை யாவர்களும் 
வந்து நெருங்கினார்கள். முனிசிரேட்டரே உமக்கும் இதனைச் சொல்லியனுப்பினேன். இதுவே என்செயல்" 
என்று கூறினான்.

    தண்ணளியை யுடைய ததீசிமுனிவர் தக்கன் கூறியவற்றைக் கேட்டு, "பொருளால் யாதோர் புண்ணியப் 
பயனுமில்லை, அதனால் அடையற்பாலது பாவமே என்று எண்ணி அப்பாவங்களையே செய்கின்ற ஒர் கீழ்மகனுடைய 
இயற்கை போன்றிருந்தது இந்தத் தக்ஷப்பிரஜாபதியினுடைய செயலும்" என்று நினைத்து, பற்கள் தோன்றச் சிரித்தார். 
சிரித்தபொழுது, தக்கன் ஊழிக்காற்றினாற் கிளர்ந்தெழுகின்ற வடவாமுகாக்கினி போல வெய்துயிர்த்து உரப்பிச்சீறி,
 "நீ சிவனடியான்போலும்; ஆதலாற்றான் என்னைச் சிரித்திகழ்ந்தாய்' என்றான். 

    அதனைக்கேட்ட ததீசி முனிவர் கூறுவார்: "பிரமவிட்டுணு முதலாகிய அளவில்லாத உயிர்களை 
முன்னாளிலே தந்த பரமபிதாவாய் அவைகளை யெல்லாம் காத்தழித்து, உலகெலாமாகி நிற்றலால் ஒன்றாயும் 
(அபேதமாயும்), உலகுக்கு மேலாய் நிற்றலால் வேறாயும் (பேதமாயும்), உயிர்க்குயிராய் நிற்றலால் உடனாயும் 
(பேதாபேதமாயும்), விளங்காநின்ற பரமசிவனை நீக்கியோ தக்கனே நீ யாகமொன்றைச் செய்ய நின்றாய். 
தேவர்கள் யாவருக்கும் கொடுக்கும் அவிப்பாகங்களை ஏற்றுக்கொள்பவரும், அக்கினிக்கு முதல்வரும், 
யாகாதிபரும்,யாகரக்ஷகரும் சிவபெருமானே' என்று வேதங்கள் சொல்லும். யாகத்துக்கு முதல்வராய் இங்கே 
ஒரு தேவர் உளரானால், அவரை எழுக" என்று சொல்லுதி. 

    முன்னாளிலே பிரமவிஷ்ணு முதலிய தேவர்களுக்கு அளவிறந்த இச்செல்வங்களைக் கொடுத்தவரும், 
அநாதிமலமுத்தரும், இவர்களுக்கெல்லாம் மூலகாரணரும், இவர்களுக்குப் போலத் தமக்கு மற்றோர் மூலகாரண 
மில்லாதவரும், நமது கடவுளாகிய சிவபெருமானன்றித் தேவர்களில் யாவருளர்! 'தேவ தேவரும், மகாதேவரும், 
ஈசரும், நமது நாயகரும், மும்மூர்த்திகளுக்கும் முதல்வரும், ஏகரும்,பிந்துவனவெல்லாம் தமக்கு முந்தத் தாம் 
பிந்துபவரும், சர்வாந்தரியாமியும், அந்தணரும்,ஆதியும்' என்று எல்லையில்லாத வேதங்கள் வேறுயாரைத் துதித்தன. 
பிரமாமுதலிய யாவரும் பசுக்கள். சிவபெருமான் ஒருவரே பதி. இத்தேவர்களெல்லாரும் அவருடைய பணியையே 
வகித்தார்கள். 

    இதுவும் அவ் வேதவாக்கே. இவற்றையெல்லாம் அயர்த்து, வாளா மதிமயங்கி, மாயத்திலழுந்துகின்றாய். 
'அந்தணர்க்குக் கடவுள் சிவபெருமான்; மற்றையரசர் வணிகர் சூத்திரருக்குக் கடவுள் முறையே விட்டுணுவும் 
பிரமாவும் இந்திரனும்' என்று வேதங்கள் சொல்லின. இங்ஙனமாக, அந்தணர்கள் தங்கள் கடவுளாகிய சிவபெருமானை 
விடுத்து, முறைதப்பிப் பிறரைக் கடவுளராகக் கொண்டொழுகுதல், தன்னைப் பெற்ற தந்தையைத் தந்தையல்லன் 
என்று விலக்கி, வேறு தந்தையைத் தேடுவான்றன்மை யல்லவா! ஆதலினாலே, தக்கனே அவர்க்கெல்லாம் 
மேலாகிய பரமசிவனை நீ இகழ்ந்துநிற்றல் உன்னுடைய அறியாமையன்றி, உனக்கு இஃதோர் பெருமிதமன்று. 
மிகவும் துன்பப்படவேண்டுமென்று விரும்பி, யார்தாந் தவஞ் செய்பவர்கள். அவ்வியல்பினன் நீயே. வேதாசாரத்தை 
நீக்கி நீ இவ்வேள்வியைச் செய்ய முயன்றாய். அங்ஙனஞ் செய்யினும் முடிவுபெறாது. மேலே சிவாஞ்ஞை வந்து 
இதனைக் கலக்கிவிடும். 

    அதனைக் காணுதி. அக்கடவுளுக் கஞ்சாத வலியுடையவர் யாவரேனும் உளராயின் அவர் இறப்பர். 
வேதமும் அவரைச் 'சூலபாணியாகிய ஏகர்' என்று துதித்தது. உற்பத்தியும் நாசமும் இல்லாத சிவபெருமானுக்கு 
அவிப்பாகத்தைக் கொடுத்து, வேதாசாரந் தவறாது யாகஞ்செய்ய நினைக்கின்றிலை. தக்கனே, உன்னெண்ணந் 
தீயது" என்று ததீசி முனிவர் கூறினார். தக்கன், "சிவனுக்குக் கொடுக்கும் அவியை விட்டுணுவுக்குக் கொடுத்து 
யாகத்தைப் புரிவேன்' என்றான். அவ்வுரையைத் ததீசிமுனிவர் கேட்டு, "தக்கனே ஈதோர் பழுதைச் சொன்னாய். 
யாவரும் மேலாகச் சொல்லுகின்ற பெரியோரை விட்டுச் சிறியோரை உயர்த்துதல் உய்யும் வகையன்று. இது 
நும்மவர்களுடைய உயிர்க்கெல்லாம் முடிவுக்கேதுவாகும்" என்றார். 

    அதற்குத் தக்கன், 'உம்முடைய உருத்திரரைப் போலப் பதினொரு உருத்திரர் உளர். வடகீழ்த்திசையில் ஈசான 
உருத்திரர் உளர். அவர்களுக்கே முன்பு அவிப்பாகத்தைக் கொடுத்து வேள்வியை முடிப்பேன்' என்றான். அதற்குத்
ததீசிமுனிவர் சொல்வார்: "உலகங்க ளெல்லாவற்றையுஞ் சங்கரித்துத் தன்னுள் ஒடுக்கிப் பின்னும் அவற்றை யெல்லாந் 
தாதையாய்த் தந்து எவரும் நினைத்தற்குமரிய தன்மையோடிருக்கும் மகாவுருத்திரமூர்த்திக் கொப்பாவரோ, அவருடைய 
திருவருளால் அவர் வடிவத்தையும் பேரையும் பெற்ற உருத்திரர்கள். யாம் கூறிய உருத்திரமூர்த்தியென்பவர் உயர்ந்த 
பரம்பொருளாய் உயிர்க்குயிராய் நிருத்தஞ் செய்கின்ற நித்தியராம். அவருடைய திருவடிகளைத் தியானித்தோர் 
அவருடைய திருமேனியையும் திருநாமத்தையுந் தாங்குவர். அவர்களுடைய தொகையைச் சொன்னால் அளவுபடாது. 

    சிவபிரானுக்குரிய உருத்திரர் என்னும் நாமத்தைப் பெற்றவர் அப்பெயர்மாத்திரத்தால் அவருடைய இயல்பைப் 
பொருந்தார். அவர் கொண்ட வடிவமும் அவ்வாறே சிவசொரூபமாகாது. ஆயினும், அவர் பூவுலகத்தாரும் வானுலகத்தாரும் 
கடவுளரென்றே போற்ற இருப்பர்; இந்தப் பிரமாவும் புகழுந்தன்மையினராவர்; பரமாப்தர்களாயிருப்பர்; அளவில்லாத 
காலம் சிந்தையின்கண்ணே சிவபெருமானை நினைத்துத் தவஞ்செய்து அவருடைய சாரூபத்தைப் பெற்ற அடியார்களைப் 
போல்வர். இந்த உருத்திரர்கள் இந்திரன் முதலிய தேவர்களைப்போல இங்கே வரத்தகார். அவர் நீ சிவபெருமானிடத்து 
அன்பில்லாத தன்மையை நினைந்திலர் போலும்" என்றார்.  அதனைக் கேட்ட தக்கன் இது நன்று நன்று! சிருட்டி திதிகளைச் 
செய்யும் பிரமவிட்டுணுக்கள் முதற்கடவுளரல்லராக, சங்காரத்தைச் செய்யும் உருத்திரன்மாத்திரம் முதற்கடவுளாய் 
நின்றதென்னை? சொல்லும்' என்றான். பரம பதியாகிய சிவபெருமானுடைய இரண்டு திருவடிகளையும் தியானித்துச் 
சிவஞானத்திற் சிறந்தவராய் வீற்றிருந்த ததீசிமுனிவர் கூறுவார்:

     "தக்ஷப்பிரசாபதியே,  நமது முதற்கடவுளாகிய உருத்திரமூர்த்தி பிரமவிட்டுணுக்களோடு ஒருங்கெண்ணப் 
பட்டமையால் அவரைப் பெரியவரென்று கடைப்பிடித்தாயில்லை. அதனையும் தெரியச் சொல்வேன்; யூகித்துக் கேட்பாய். 
ஆதியந்தமில்லாத நமது கடவுளுக்கு நாமமும் உருவமுஞ் செயலுமில்லை. அதனை வேதங்கள் யாவும் அறுதியிட்டுச் 
சொல்லும். அக் கடவுள் அநாதியே ஆணவமலத்தாற் கட்டுண்ட ஆன்மாக்களுடைய வினைகளை நீக்கவேண்டும் 
என்று தமது திருவுளத்தில் முகிழ்த்த பெருங்கருணையினாலே பேரையும் உருவையுஞ் செயலையுந் தமது 
சிற்சத்தியினாற் கொண்டு, கலாதி தத்துவ வாயிலாக அவ்வுயிர்களின் இச்சா ஞானக் கிரியைகளை விளக்கி,
 பிரமா முதலிய தேவர்கள் யாவரையும் முன்போல உண்டாக்கி, அவர்களுக்குரிய சிருட்டி முதலிய தொழில்களைக்
கற்பித்து, அவற்றை நடாத்து முறைகளை உபதேசித்து, பின்பு சங்காரகிருத்தியம் 'நமக்கேயாகும்' என்று கூறி 
அதனைத் தாம் வகித்தார். 

    அஃது எதனாலெனின், அந்தமாதியின்றி உயிர்களெல்லாவற்றையும் இரக்ஷிக்கும் பரமபிதாவாகிய 
தம்மாலன்றித் தமது மைந்தர்களாகிய தேவர்களால் அந்தச் சர்வ சங்காரப் பெருந்தகைமைச் செயல் 
முடிவுறாமையினாலேயாம். அந்நாளிலே தேவர்கள் யாவரும் எம்பெருமானுடைய திருவடிகளில் வணங்கி, 
'எமக்குச் சிருட்டி முதலிய தொழில்களைத் தந்தீர், நாம் அவற்றைப் பரித்தற்கேற்ற வலியிலேம். 
இப்பாரம் எங்களை விட்டெப்பொழுது தீரும்?' என்றார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி,நாம் 
ஒன்று சொல்லுகின்றோம் கேண்மின். உங்கள் வாழ்நாளெல்லை வரையும் இச்செயல்களைச் செய்மின். 
இச்செயல்களைப் பாரம் என்று எண்ணினீர்கள். சிரௌத பாசுபத வித்தியாப்பிரகாரம் விபூதியை யுண்டாக்கித் 
தொழுது அதனை உடம்பிலணிந்து, மனத்திற் பஞ்சாக்ஷரத்தை யுன்னுதிர். இவைகளைச் செய்வீராயின், 
இத்தொழில்களைத் தாங்கும் வன்மையையடைவீர். அன்றியும், நும்மாட்டு முன்னமேயுள்ள நம்முடைய கலைகள் 
நீவிர் அறியாதனவற்றைக் காட்டி நின்றருளும்; தொலையாத நன்மையைப் பெறுவீர்' என்றருள் செய்தார். 

    அந்தத் தேவர்களைக் கொண்டே மற்றைக் கிருத்தியங்களைச் செய்வித்து, தாம் இறுதியதாகிய 
சங்கார கிருத்தியத்தையும் செய்வார். அந்தக் கடவுளையே வேதங்கள் பஞ்சகிருத்திய கர்த்தா என்று கூறும். 
இதனை அறிகுதி. தக்கனே இன்னுங்கேள். உருத்திரர் என்னும் நாமம் துரிய பரப்பிரம மகா உருத்திரருக்கும், 
அவர் குமாரர்களுக்கும், அவரைத் தியானிக்கும் கணங்களுக்கும், அவர் திருமேனியைத் தரித்த காலாக்கினி 
ருத்திரர் முதலியோர்க்கும் அக்கினி தேவனுக்குஞ் செல்லும். ஜனன சாகரத்திற் பட்டோர்களுடைய கவலைகளை 
உருக்கி ஒழித்து அவர்களை உயர்த்தி விடலாற் சிவபிரானுக்கு உருத்திரர் என்னும் நாமம் எய்திற்று.இங்ஙனம் 
அவரது திருநாமம் அவர் குமாரர்களுக்கும், அவர் திருவடிகளை அடைந்த அன்பர்களுக்கும், அவர் 
சாரூப்பியமுற்றோர்க்கும் எய்திற்று. 

    அக்கினி தேவனுக்கு உருத்திரன் என்னும் பெயர் எய்திய காரணத்தைச் சொல்வேன் கேட்குதி .
முன்னோர் காலத்தில் தேவர்கள் யாவரும் அவுணர்கண்மீது முனிந்து போர் புரிய முயன்று செல்லுங்கால்,
 அவர்கள் தமக்கு வாய்த்த பெருநிதியைப் பாதுகாக்குமாறு அக்கினிதேவனிடத்து வைத்துப்போய்ப் 
பகைவரோடு யுத்தஞ்செய்து மீண்டு வந்து நிதியைக் கேட்க, அக்கினி அதனை அபகரித்துக்கொண்டு
 கொடாது ஓடினான். தேவர்கள் அவனைத் தொடர்ந்து சூழ்ந்து வலிசெய்யலுற்றபோது, அவ்வக்கினி 
தேவன் ரோதனஞ் செய்தான். அதனால் அவனுக்கு உருத்திரன் என்னும் பெயர் எய்திற்று என்று சுருதி 
கூறுகின்றது. 

    வேதங்களிலே உருத்திரன் என்னும் பெயர் கொண்டு தாழ்ந்த மற்றையோர்களைக் கூறினமை, 
துரிய உருத்திரரைச் சாராது; அங்ஙனம் ஆதிநாயகராகிய இத்துரிய உருத்திரரைச் சுட்டி உரைத்த உருத்திர 
நாமமும் ஏனையோர்க்குச் செல்லாது. இவ்வேற்றுமை மேதாவியரே உணர்வர். வேதங்களில் உருத்திரன் என்னும் 
நாமத்தினால் அக்கினிதேவனையும் பிறரையுங் கூறியவாற்றை இங்கே எடுத்துச் சொல்லாதே; சிவபெருமானுக்குச் 
சொல்லிய இடங்களை ஆராய்ந்து அவருடைய தலைமையைக் காணுதி. இன்னுமொன்று சொல்லுகின்றேன் 
தக்கனே கேள். முன்னொரு காலத்திலே, முனிவர்கள் யாவரும் உற்பத்தி நாசமில்லாத பரம்பொருள் இவரென்றும் 
அவரென்றும் தங்களுள் வாதஞ் செய்து, அறிய முடியாமல் வருந்தி, பிரமாவை வினாவுவோம் என்று கூறி
மேருவின் மனோவதியிலிருக்கும் பிரமாவை யணுகி, 'பரம்பொருள் யாவரென்றறியேம். நமக்கதனைச் 
சொல்லியருளும்' என்று வேண்டினார்கள். 

     பிரமா அதனைக் கேட்டு, 'வேதவசனங்களை யெடுத்துக்காட்டி இவர்கள் தெளிவுறும்படி நாம் 
போதித்தாலும் தெளிவடையார். வேறோருண்மை யுபாயத்தால் இவர்களுக்குத் தெளிவிப்போம்' என்றெண்ணி, 
இருக்கை விட்டெழுந்து, சிவபெருமானுடைய சொரூபத்தைத் தியானஞ்செய்து கண்கள் ஆனந்தபாஷ்பஞ் 
சொரியவும் மெய்ம்மயிர் பொடிப்பவும் நெருப்பிற்பட்ட நெய்போல மனமுருகவும் கைகளை உயர்த்தி, 
முழுமுதற் கடவுள் சங்கரனே என மும்முறை சத்தியஞ்செய்து, உயர்த்திய கைகளை மீட்டு முனிவர்களை 
நோக்கிச் சொல்வார்: 

    'முனிவர்களே வாருங்கள், உமக்கொன்று சொல்வேன். அப்பரம்பொருள் தேவர்களையும் எங்களையும் 
உண்டு பண்ணினார். வேதங்களையுந் தந்தார். யாவர்க்கும் அவரவர்க்குரிய பணிகளையுதவினார். 
சிருட்டி முதலிய முத்தொழில்களையும் நமக்குக் கற்பித்தார். ஆன்மாக்கண்மீது வைத்த அளவுகடந்த 
திருவருளினால் ஐந்தொழில்களைச் செய்பவரும், அநாதி கடவுளும், நிருமலரும், காரணங்களுக்குக் 
காரணமாய பகவானும், ஒருவர்மாட்டும் பிறவாதவரும், அருவமும் உருவமும் ரூபாரூபமுமாயிருக்கும் 
அகண்டாகார நித்தவியாபகரும், யாவர்க்கும் ஈசரும், எல்லாமானவரும், சேதனப்பிரபஞ்ச முடிவிற்கும்
அசேதனப் பிரபஞ்ச முடிவிற்கும் முடிவாயுள்ளவரும், என்றுமுள்ளவரும், அனைத்தையுமுடையவரும், 
என்னாற் சொல்லுதற்கரிய கீர்த்தியையுடையவரும் தம்முடைய திருவடிகளையடைந்த ஞானிகளுக்கன்றி 
அறியவொண்ணாத பழையவரும் ஆகிய அந்தச்சிவன் ஒருவரே பரம்பொருள் என்று வேதங்கள் யாவும் 
எடுத்துச் சொல்லும். 

    விட்டுணுவும் யானும் இன்னும் அவருடைய நிலையை உன்னி ஆராய்ந்தும் காண்கிலம். அவரே பதி. 
மற்றையோர் பசுக்கள்' என்று கூறி, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, பிரமா இருந்தார். முனிவர்கள் 
அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் உதிக்கப்பெற்று, பிரமாவை நோக்கி, 'சுவாமீ தாதையாய் எங்களைப் பெற்றீர். 
யாங்கள் உம்முடைய புத்திரர்கள். ஆதலால் எங்களுக்கு இதனை உபதேசித்தீர். இந்தக் காரணத்தினால் நீர் 
எங்களுக்கு ஆசாரியரும் ஆயினீர்' என்று அவருடைய பாத தாமரைகளை வணங்கினார்கள். அவர்களைப் பிரமா 
பார்த்து, 'நீவிர் இன்றுதொட்டுப் பரமசிவனுடைய திருவுருவையே தியானஞ் செய்குதிர்; அவரையே பூசனை 
செய்குதிர்; விபூதியைத் தரித்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபிக்குதிர் ; பிறவியை நீங்குதிர்' என்று கூறி விடை
கொடுத்தனுப்பினார். 

    ஆதலால், எங்கள் சிவபெருமான் ஒருவரே பதிப்பொருள். அவரல்லாத பிறரெல்லாம் பசுக்களாகும். 
இதனை அக்கடவுளின்மேற் கொண்ட காதலாற் சொன்னேனல்லேன். இது சத்தியமே. இதனை வேதமுதலிய 
கலைகளெல்லாம் சொல்லும். அன்றியும், உன்பிதாவாகிய பிரமதேவர் முன்னே சிவபெருமானுடைய புகழ் 
எல்லாவற்றையும் ஐயந்திரிபற உனக்குப் போதித்தார். நீ அதனை அறிந்தே சிவபெருமானை நோக்கி 
நெடுநாட் டவஞ்செய்து இவ்வளத்தைப் பெற்றாய். உனக்கு அழியுங் காலம் வந்தமையால் அவரை மறந்தாய் 
போலும். பிரமா முதலிய யாவரும் இறக்குமியல்பினராய் வந்து உன்சபையிலிருந்தார். நீ மாயையினால் 
மருண்டாய். உய்யும்படி நினைத்தாயாயின் சிவபெருமானுக்கு அவியைக் கொடுத்து இந்தப் பெரிய யாகத்தைச் 
செய்குதி' என்று ததீசி மகாமுனிவர் கூறினார்.

            திருச்சிற்றம்பலம்.

            ததீசியுத்தரப்படலம்.

    இவ்வண்ணம் ததீசி மகாமுனிவர் சொல்ல; தக்கன் நகைசெய்து, ''முனிவரே, பரம்பொருளாகிய அச்சிவன் 
எலும்பையும் சிரமாலையையும் அணிவரோ? தேவர்களுடைய வெந்த சாம்பலைப் பூசுவரோ? கங்காளத்தை ஏந்தித் 
திரிவரோ? களைந்த கேசத்தைத் தரிப்பரோ? பன்றிக் கோட்டையும் ஆமையோட்டையும் அணிவரோ? உயிர்களைச் 
சங்கரிப்பரோ? புலித்தோலை உடுப்பரோ? யானைத் தோலைப் போர்ப்பரோ? அக்கினி மழு மான் முத்தலைச்சூலம் 
ஆகிய இவைகளை ஏந்துவாரோ? எங்கும் பிச்சை யேற்பாரோ? கூத்தாடுவாரோ? பூதசேனை சூழத் திரிவாரோ? 
பாம்புகளைப் பூண்பாரோ? வெண்டலையைத் தலையில் அணிவாரோ? நிருவாணி யாவாரோ? பலவேறுருவங்களைக் 
கொள்வாரோ? ரிஷபத்தில் ஏறுவாரோ? சுடலையில் ஆடுவாரோ? ஒருபெண்ணைத் தலையிற்சுமந்து மற்றொரு 
பெண்ணைப் பக்கத்திலிருத்துவாரோ? பிள்ளையையும் பெறுவாரோ? தாமத குணத்தைப் பொருந்துவாரோ? 
உங்கள் சிவன் ஓர் குணமும் இல்லாதவர். ஆதலால் அவருக்கு யாம் செய்கின்ற யாகத்தில் அவிப்பாகத்தைக்
 கொடுப்பதில்லை'' என்று கூறினான். 

    ததீசிமுனிவர் 'இவன் நமது கடவுளையா பழிப்பான்" என்று சிரித்து, அக்கினி போலக் கொதித்து, 
"இப்பதகன் மலரகிதராகிய பரமசிவனுடைய உண்மைத் தன்மைகளை அறியவல்லனல்லன். இவனோடு 
சிறிதும் வார்த்தை கூறுதல் தகாது. ஆயினும், பிரமவிட்டுணு முதலாகிய தேவர்கள் குழுமிய சபையில் 
எம்பெருமானை இகழ்ந்த இவனுக்கு மறுமொழி சொல்லும்படி என்மனம் என்னை ஈர்த்தது. ஆதலால் இவன் 
வினாவிய வினாக்களுக்குச் சிலவிடைகள் சொல்லுவேன்'' என்று அதற்கொருப்பட்டு, "புத்தியில்லாத கயவனே, 
எம்பெருமானுக்கு இங்கே நீ நிந்தைபோலச் சிலவற்றைச் சொன்னாய். நிருமலராகிய அக்கடவுளுக்கு அவைகள் 
வந்தவாற்றை ஓர் சிறிதும் உணர்ந்திலை,மருண்டாய். நான் சொல்வதைக் கேள். 

    தம்முடைய திருவருளே திருமேனியாகக் கொண்ட சிவபெருமான் பிரமவிட்டுணுக்களை முன்னே 
தந்து, தாம் அவர்களை அதிட்டித்து நின்று, முறையே உயிர்களைப் படைத்தல் காத்தல்கள் செய்து, 
அவ்வுயிர்களுக்கு வினைப்பயன்களை நுகர்வித்து, அவற்றுள் இரு வினையொப்பு மலபரிபாகம் வரப்பெற்ற 
ஆன்மாக்களை மோக்ஷமடையச் செய்து, மற்றைய உயிர்களையும் உலகங்களையும் பின்னர்ச் சங்கரித்து 
அதன்பின் பிரமவிட்டுணுக்களை ஒடுக்கி, தாம் முன்போல ஏகமாயிருப்பர். அதன்பின்னும் என்றும் இவ்வாறே 
பஞ்ச கிருத்தியத்தைச் செய்தருளுவர். சிவபெருமான் இவ்வாறு சங்கார கிருத்தியங்களைச் செய்யுந்தோறும் 
பிரமா முதலிய பலதேவர்களுடைய எலும்புகளைத் தரிப்பர்; அவர்களுடைய சிரங்களெல்லாவற்றையுந் 
தொடுத்து மாலையாகப் பூண்பர்; 

    அவர்களுடைய சிகைகளைத் தமது திருமார்பிலே பூணூலாக அணிவர்; அல்லது அவர்களை முத்தலைச் 
சூலத்திற்கோத்து ஏந்துவர்; அல்லது அவர்களை நெற்றிக்கண்ணாற் சாம்பராக்கி அச்சாம்பரைத் திருமேனியிற் 
பூசுவர். சிவன் இப்படியெல்லாம் செய்தல் அத்தேவர்கள் முன்னே மகாதவங்களைச் செய்தமையாலேயாம். 
ஆதலால் சிவபெருமான் அவற்றை அணிதல்  தம்மை யாவரும் புகழ்தற்கன்று. இதுவன்றி இன்னுமொன்றுளது. 
யாவரும் எவர்க்குந் தலைவர் இவரே என்றறிந்து தம்மையடைந்து பாவங்களை நீங்கி மோக்ஷத்தைப் பெற்று 
உய்தற்குரிய அருட்செயலேயாம். எலும்பு சாம்பல், கங்காளம், சிகை, தலை ஆகிய இவைகளைச் சிவபெருமான் 
முன்னாளில் அணிந்தமையை, அவர் எல்லாவுயிர்கள்மாட்டும் வைத்த திருவருட்செயலாம் என்று நீ அறிகுதி. 
அகந்தையாற் பெரிய தக்கனே, அக்கடவுள் பன்றிக்கோட்டைத் தரித்த காரணத்தையுஞ் சொல்வேன் கேள்.

    தேவர்கள் யாவருக்கும் நாடோறும் துன்பத்தையே செய்துகொண்டிருந்த இரணியாக்ஷனென்னும் 
அசுரன் முன்னோர் நாள், பூமியைக் கவர்ந்து கொண்டு வயிற்றில் மறைத்து, உலகமெல்லாம் நடுங்கும்படி
 பிலத்திற் புகுந்தான். தேவர்கள் அதனைக் கண்டு அஞ்சினர். விட்டுணு பிரமாவினுடைய நாசியில் 
ஒருபன்றியாயுதித்து,ஆகாயத்திற்போய், மேருமலை போல வளர்ந்து ஆரவாரித்து, நொடிப்பொழுதிற் பாதலத்திற் 
புகுந்து,கொம்பினாற் பாய்ந்து இரணியாக்கனைக் கொன்று, பூமியைக் கொண்டுவந்து முன்போலவே 
நிலைபெறச் செய்து, அந்த வீரத்தினால் தன்னையே பரமென்று மிகவும் மதித்து, அகந்தையுற்று, அறிவிழந்து, 
பூமிமுழுதையும் கோட்டினாலிடந்து, சமுத்திரத்தையும் உடைத்தார். 

    அப்பொழுது, சிவபெருமான் அதனைக் கண்ணுற்று, அங்கு வந்து, அவருடைய ஓர் கோட்டைத் தமது 
திருக்கரத்தாற் பிடுங்கினார். விட்டுணு முன்னை உணர்வு வரப்பெற்று, 'சிவபெருமான் இனி என்னுடைய மற்றைக் 
கொம்பையும் பிடுங்குவார்' என்று அஞ்சி, முன்னையுருவங்கொண்டு நின்று துதித்தார். சிவபெருமான் 
மறைந்தருளினார். அக்கடவுள் அன்றைக்குப் பறித்த பன்றிக்கோட்டை அடையாளமாக அணிந்தார். அது 
இன்றைக்கும் அவருடைய திருமார்பிற் பிறைபோல விளங்கும். இதனைக் கேட்டாய். ஆமையோட்டைத் தரித்த 
கதையையுஞ் சொல்வோம் நன்றாய் ஆராய்ந்து அறி. இதனை வேதங்களும் சொல்லும். 

    முன்னொரு காலத்திலே தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது, மத்தாகிய மந்தரமலை 
கவிழ, விட்டுணு ஆமையாய், அக்கடலுட் போய், முதுகினால் அம்மலையைத் தாங்கினார். பின்பு கடைந்தார்கள். 
பாற்கடலில் அமிர்தம் எழுந்தது. அதனைத் தேவர்களும் அசுரர்களும் கண்டு, இது நமது இது நமது என்று 
அவ்வமிர்தத்தின்மேல் வைத்த ஆசையாற் போர்செய்தார்கள். விட்டுணு அப்போரை விலக்காமல், 'இந்த மந்தர
மலையைப் பாற்கடலில் ஆழாமல் நிறுத்தி நாமே காத்தோம்' என்று பெரிதும் நினைத்தார். அதனால் அவருள்ளத்திலே 
பெரியதோர் அகந்தை உண்டாதலும், ஒன்றுமறியாராய், சமுத்திரங்களிற் போய் அவைகளை எத்திசைகளிலும் 
உழக்கித் திரிந்தார். 

    அதனாற் பூமிக்கு அழிவுண்டாயது. அப்பொழுது, சிவபெருமான் 'விட்டுணு தனது காவற்றொழிலை 
நீங்கினான் போலும்' என்று திருவுளஞ்செய்து, விரைவிற்போய், ஆமையினுருவை நோக்கி முனிந்து, தமது 
திருக்கரத்தாற் பற்றி, விட்டுணுவினுடைய அகந்தையையும் வலிமையையும் பறித்தார். அவர் அகந்தை நீங்கிப் 
பழைய வடிவங் கொண்டு துதிக்க, பரமசிவன் 'அவுணரைத் தவிர்த்துத் தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்குதி' 
என்று கூறி மறைந்தார். விட்டுணு மோகினி வடிவமெடுத்து, மாயையினால் அவுணர்களைக் கொன்று, தேவர்களுக்கு 
அமிர்தத்தைக் கொடுத்தார். அந்த விட்டுணுவாகிய ஆமையின் ஓட்டைச் சிவபெருமான் வாங்கி, முன்னே அணிந்த 
பன்றிக்கோட்டுடன் சாத்தியருளினார். பன்றிக் கொம்பையும் ஆமையோட்டையும் சிவபெருமான் அணிந்த 
கதையைச் சொன்னோம். அவர் தாருகாவனத்திலே பிக்ஷைக்குச் சென்றதையும் அங்கு நிகழ்ந்தவற்றையும் 
கூறுவோம். நீ அறியக்கடவாய்.

    முன்னொரு காலத்திலே, தாருகா வனத்திலுள்ள முனிவர்கள் யாவரும் சிவபெருமானிடத்தில் 
அன்பிலராய், கரும மாத்திரமே மோக்ஷத்தைத் தரவல்லதென்று, அவரை மறந்து, ஒருகடவுளின்றித் தாமே 
முத்தியடையலாமென்று நினைத்து, உடம்பு துன்புற அளவில்லாத தவங்களையும் யாகங்களையும் 
செய்து துணிவோ டொழுகுவா ராயினர். திருக்கைலாச மலையில் உமா சமேதராய் வீற்றிருக்குஞ் 
சிவபெருமான் அதனை அறிந்து, அங்கே விட்டுணுவை வரும் வண்ணம் நினைக்க, அவர் அதனை உணர்ந்து,
"எம்பெருமான் என்னையும் தம்மிடத்து வரும்படி பணித்தார்' என்றுட் கொண்டு, அங்கே வந்து, நந்திதேவர் 
உள்ளே விடுப்பக் கோயிலுட் புகுந்து, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, அவருடைய சந்நிதானத்தில் 
நின்றார். 

    சிவபெருமான், தாம் திருவுள்ளத்துட் கொண்டவற்றை அவருக்குக் குறிப்பாலுணர்த்தி, அவருடைய 
கைகளைப் பற்றிக்கொண்டு திவ்விய சிங்காசனத்தினின்று மெழுந்து, கைலாச மலையை நீங்கி, "விட்டுணுவே 
நீ முன்னொரு காலத்திற் கொண்ட மோகினி வடிவை எடுக்குதி" என்றார். விட்டுணு நன்றென்று, மிகுந்த அழகிற் 
சிறந்த ஓர் பெண்வடிவை யெடுத்து, மருங்கில் வந்தார். அப்பொழுது சிவபெருமான், உமாதேவியார் காணினும் 
தளர்ந்து விழும்படி தாமும் அளவில்லாத அழகு பொருந்திய ஓர் ஆணுருவை எடுத்து, அங்கே எழுந்தருளி வந்தார். 
அவருடைய திருவுருவத்தின் றன்மையை யாவர் புகழ்ந்து சொல்ல வல்லார். மோகினி வடிவங்கொண்ட விட்டுணு 
சிவபெருமானுடைய திருமேனி அழகு முழுவதையுங் கண்களாற் பருகி ஆசை மிகப்பெற்று, அதனை 
அக்கடவுளுடைய திருவருளினால் ஒருவாறு சகித்து, அவருக்குப் பக்கத்தில் வந்தார். சிவபெருமான் நிருவாணியாகி, 
முத்தலைச் சூலத்தையும் பிக்ஷா பாத்திரத்தையும் திருக்கரங்களி லேந்திக் கொண்டு, மோகினி  வடிவங் கொண்ட
 விட்டுணு பக்கத்தில் வர முனிவர்களிருக்கின்ற தாருகா வனத்திற் போய்,"நீ நம்மை யெண்ணாது முனிவர்கள் 
குழுமியிருக்கின்ற இடங்களையடைந்து, அவர்களை மிக மோகிப்பித்து விரதங்களைக் கெடுத்து, நம்மிடத்து 
வரக்கடவாய்'' என்று கற்பித்துச் சென்றார். 

    மோகினி வடிவங்கொண்ட விட்டுணு, தாருகாவனத்து இருடிகளிருக்குஞ் சபையை அடைந்து, அநேக 
மன்மதர்கள் விடுகின்ற பூம்பாணங்களைப் போலத் தமதிருகண்களையும் பரப்பி நின்றார். முனிவர்கள் 
மோகினியைக் கண்டு, விரைவிற் காமவேட்கை கொண்டு, தவவலிகுன்றி, யாகத்தை விடுத்து, 
காமநீர் பெருக மெலிந்து வெதும்பி,யானையுண்ட விளாங்கனிபோல உள்ளழிந்து உருகி, அவருடைய 
அழகிற் சிறந்த அங்கங்களெல்லாவற்றையுங் குறித்து நோக்கி நோக்கித் தமது சீலமுழுதும் அழிந்து, 
தீபத்தைக் கண்ட விட்டிற் பறவைகள் போல விரைந்து வந்து சூழ்ந்தார்கள். 

    சூழ்ந்த முனிவர்கள் மோகினியை நோக்கி, "நீர் இருக்குமிடம் பூவுலகமோ விண்ணுலகமோ 
சத்தியவுலகமோ மன்மதனுடைய உலகமோ இவற்றுள் யாது? அல்லவாயின் நீர்தானா தேவர்களுக்காக 
மோகினி வடிவங்கொண்டு வந்து அவுணர்களைத் தொலைத்தவர்? உம்மை யாவர் அறிய வல்லார்! 
அடியேங்களுக்குச் சொல்லியருளும்'' என்றிவை போல்வன பலவற்றைச் சொல்லி அக்கினியிற்பட்ட 
தளிர்போல விரகத்தீயால் வெதும்பி இறந்தவர் போன்று நின்றார்கள்.

    இனி, பிக்ஷாடன வடிவங்கொண்டு சென்ற சிவபெருமான், பிக்ஷா பாத்திரத்தையும் முத்தலைச் 
சூலத்தையும் ஏந்திக்கொண்டு, பிக்ஷை ஏற்பார் போன்று முனிவர்களுடைய வீதியிற்போய், இசையோடு 
வேதங்களைப் பாடினார். இருடி பன்னியர்கள் அவ்விசையைக் கேட்டு, "இங்கே வந்தவர் யாவர்? 
அவரைக் காணும்படி நம்முடைய கண்கள் ஆசையுற்றன. இப்பொழுதே விரைவிற் செல்வோம்" என்று கூறி, 
கூட்டமாக வீதியில் வந்து, பிக்ஷாடன வடிவங்கொண்ட சிவபெருமானைக் கண்டு, அவரை வந்து சூழ்ந்து, 
காமபாணங்களின் மூழ்கி உணர்வு மாழ்கி, உயிர் பதைத்துச் சோர்ந்து, ஆசைக்கடலில் ஆழ்ந்து, 
அம்மயக்கத்தாற் றம்வசமிழந்து, அவரை விளித்தும், தம்முள் வியந்து பலவாறு பேசியும், பிக்ஷையிட்டும், 
உடுத்த வஸ்திரங்களும் வளையல் முதலிய ஆபரணங்களும் நாணமுங் கற்பும் நழுவி, உயிரொன்றுந் 
தாங்கி, மயக்கத்தோடு அவரைப் பின்றொடர்ந்து போயினார்கள். 

    பிக்ஷாடனமூர்த்தி சிறிது தூரம் வீணை வாசித்தும், சிறிது தூரம் வேதங்களைப் பாடியும், 
சிறிது தூரம் ஆகமங்களை ஓதியும், சிறிது தூரம் தம்முடைய சுயரூபத்தைக் காட்டியும், சிறிது தூரம்
 பிக்ஷை கேட்டும், சிறிது தூரம் அடியார்களைப் போலத் தம்புகழ்களை எடுத்துச் சொல்லியும், 
திருவடித் தாமரை சிவக்க நிருமலமாகிய வீதியிலே நடந்து சென்றருளினார். இருடிபன்னியர்கள் 
அவரை வணங்கும் பொழுது, அவருடைய திருவடிகளில் இட்டமலர்களும் மாலைகளும் சங்கவளையல்களும்
 ஆபரணங்களும் நெருங்குதலால் அத்திருவீதி பொலிவடைந்தது. உயிர்க்குயிராகிய சிவபெருமான் 
கொண்டருளிய பிக்ஷாடன வடிவை நினைக்கில், விட்டுணுவும் மயங்கி இன்னுந் தளர்வாரென்றால், 
ஏனையோர் செய்கையை இனைத்தென்று சொல்லலாமோ! 

    அக்கடவுள் அவ்விருடி பன்னியர்களுக்கெல்லாம் இந்திர சாலம்போல எல்லையில்லாத 
திருவுருவைக் காட்டி, அவர்களுடைய கற்பாகிய சமுத்திரங்களைக் கடையும் எண்ணில்லாத மந்தரமலைகள்
போன்றார். அவர் மீது ஆசைவைத்த அப்பெண்கள் யாவரும் கருப்பமடைந்து, வயாவும் வருத்தமுமின்றி 
நாற்பத்தெண்ணாயிரம் புதல்வர்களைப் பெற்றார்கள். அப்புதல்வர்கள் யாவரும் சிவபெருமானுடைய 
திருவடிகளில் அன்போடு வணங்கித் துதிக்க, அவர் "நீங்கள் இங்கே நம்மைத் தியானித்துத் தவஞ்செய்து 
கொண்டிருங்கள்'' என்று கட்டளையிட்டருளினார். அந் நாற்பத்தெண்ணாயிர முனிவர்களும் அப்பணியைச் 
சிரமேற்கொண்டு விடை பெற்றுச் சென்று, அங்கே ஓர்சாரிற் றவஞ்செய்துகொண்டிருந்தார்கள்.

    பிக்ஷாடன வடிவங்கொண்ட சிவபெருமான், இருடிபன்னியர்கள் ஆசையோடு தம்மைப் பின்றொடர்ந்து 
செல்ல வீதியைக் கடந்து அப்பாற் சென்றருளினார். விட்டுணு அதனைநோக்கி, அக்கடவுளைத் தொடர்ந்து சென்றார். 
விட்டுணுவாகிய மோகினியைக் கண்டு மயங்கிய தாருகா வனத்து முனிவர்கள் யாவரும் அவரைப் பின்றொடர்ந்து 
சென்றார்கள். அம் முனிவர்கள் மிகத் தீவினை செய்த தன்மையினால், சிவபெருமான் அவர்களுக்குத் தம்முடைய 
திருவுருவை மறைத்து, வேறோர் வடிவோடு தோன்றி நின்றார். அக்கடவுளுக்குப் பின்னே செல்லுகின்ற 
தம் மனைவியர்களை அம் முனிவர்கள் நோக்கி, "இவர்களும் உடுத்த வஸ்திரத்தையும் நாணத்தையும் தோற்றார்கள். 
நாம் இந்தப் பெண்ணைக் கண்டு மயங்கியதுபோல இவர்களும் இவ்வாடவனைக் கண்டு மயங்கினார் போலும்" 
என்று கூறி, தம்மனைவியர்களுடைய ஈன ஸ்திதியை நோக்கினமையால் தாம் மோகினியிடத்துக் கொண்ட 
மயக்கம் சிறிது நீங்கி, இன்னலுற் றிரங்கி,மானம் மேற்கொண்டு, உயிரொன்றையுந் தாங்கி, "இப்பெண்ணொருத்தி 
நம்மிடத்துவந்து மயக்கி நம் தவத்தைச் சிந்தினாள். இவ்வோராடவன் வந்து நம்மனைவியர்களை மயக்கிக் கற்பைச் 
சிந்தி அகப்படுத்தினான். 

    அந்தோ இஃதென்ன மாயமோ! என்றெண்ணி, யாவரும் ஒருங்குகூடி யோசித்து, ஒருவாறு தெளிந்து
 "கைலாச மலையிலிருக்குஞ் சிவனாம் இந்தப் பெண்களுடைய கற்பினை அழித்தார். யாம் செய்த தவத்தை 
அழிக்கும்படி ஒரு பெண்ணாகி வந்தவர் விட்டுணுவாகும். அந்த விட்டுணு நம்முடைய தவத்தைக் கெடுக்கும்படி 
தாமாக வலியவந்தவரல்லர்; சிவனுடைய ஏவலினால் மாயத்தைச் செய்தார். அவர் செய்ததுதானென்னை! 
எங்கள் விரதம் அழியினும் நன்று; அங்ஙனம் அழிந்தால் அதற்குப் பரிகாரஞ்செய்து பின்னும் அந்நோன்பை 
இயற்றுகின்றோம். சிவன் தம்முடைய கையில் ஓர் கபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்பவர்போல வந்து, 
இத்தாருகாவனத்திலுள்ள பெண்களுடைய கற்பைக் கெடுத்த வசைமொழிக்கு அழிவுமுளதோ! 
அது சூரியசந்திரர்கள் சஞ்சரிக்குந் திசைகளினெல்லாம் பரவுமல்லவா! தான் ஒரு வடிவத்தை எடுத்தும், 
விட்டுணுவை ஒரு வடிவமெடுக்கச் செய்தனுப்பியும், நமக்கு இந்த நிந்தைகளையெல்லாஞ் செய்தவர் சிவனேயாகும்'' 
என்று கூறி, மானமாகிய நெருப்பும் கோபமாகிய நெருப்புங் கிளர நின்று, தமது மனைவியர் குழாங்களை 
நெருப்பெழப் பார்த்துக் கூவி, "நீவிர் இங்கே இறந்து விடுதலே நன்று, அன்றாயின் உம்முடைய ஊருக்குப் 
போய்விடுங்கள்" என்று கடிந்து கூறினார்கள். 

    இவற்றை அவர்களுடைய மனைவியர்கள் கேட்டு, "இந்த ஆடவரைக் கண்டவர் சீவன்முத்தரா 
யிருப்பதன்றி இறப்பாரோ! இம்முனிவர்களும் பித்தர்களோ!' என்று சொல்லி, அக்கடவுளுடைய திருவுருவை 
மனத்துட் கொண்டு, அவருடைய திருவருளால் மீண்டு, தமது நகரிலுள்ள இருக்கைகளை அடைந்தார்கள்.
அதன்பின், பிக்ஷாடன வடிவங்கொண்ட சிவபெருமானுக்கு அயலிலே மோகினி வடிவங்கொண்டு நின்ற 
விட்டுணு, அவருடைய திருவருளினால் ஆணுருவை எடுத்தார். அதனைக் காணும்படி பிரமா முதலிய தேவர்கள் 
யாவரும் வந்தார்கள். 

    அறியாமை மேற்கொண்ட தாருகாவனத்து முனிவர்கள், அழிவில்லாதவராகிய சிவபெருமானை 
முனிவோடு நோக்கி "இங்கே கொடிய ஒர் வேள்வியைச் செய்து இவரைக் கொல்வோம்' என்று யோசித்து, 
ஒரு அபிசார ஹோமத்தைச் செய்தார்கள். எவரும் நினைத்தற்கரிய தோற்றத்தையும், இடிபோலும் குரல் 
பொருந்திய பிளந்த வாயையும், தடுத்தற்கரிய கோபத்தையும், அக்கினி காலுங் கண்களையும், சிவந்த 
கால்களையும்,நகங்களையும், தறுகண்மையையுமுடைய ஒரு புலி அந்த யாககுண்டத்தினின்று விரைந்தெழுந்தது. 
முனிவர்கள் அதனை நோக்கி, 'நீ சென்று பரமசிவனைக் கொல்வாய்" என்று வணங்கி விடுத்தார்கள். 
அது யாவரும் நடுங்கும்படி வந்தது. 

    சிவபெருமான் அதற்கெதிரே போய், அதனைப் பிடித்துரித்து, அத்தோலை வஸ்திரமாக உடுத்துக் 
கொண்டார். அதன்பின் அவ்வோமகுண்டத்தில் ஒரு முத்தலைச்சூலம் தோன்றி, முனிவர்கள் விடுப்பச் 
சிவபெருமானுடைய திருமுன் சென்றது. அவர் அதனைப் பற்றித் திருக்கரத்திலேந்தி, "நீ நம்முடைய 
படை யாவாய்' என்று பணித்தார். பின்பு அக்குண்டத்தில் ஒரு மான் கன்று தோன்றியது. முனிவர்கள் அதனைச் 
சிவபெருமான்மீது விடுப்ப, அது ஆகாயத்தில் எழுந்து பாய்ந்து, பெருங்குரலினாற் சராசரங்களை 
அழித்துக் கொண்டு சென்றது. அதனால் உயிர்கள் அழிவுறாவண்ணம் சிவபெருமான் திருவருணோக்கஞ் 
செய்து, அதனை விரைந்தழைத்து, 'நம்முடைய காதுக்கணித்தாய் நின்று நாடோறுங் கூவுதி" என்றருள்செய்து, 
வலத்திருக்கரத்திலேந்தி நின்றார். 

    பின்னர் அந்த யாகாக்கினியினின்றும் அளவில்லாத சர்ப்பங்கள் எழுந்து முனிவர்களுடைய 
பணியினாற் கோபத்தோடு வந்தன. அவைகளை, முன்னே கருடனுக்கஞ்சித் தம்மிடத்துச் சரண்புகுந்த 
பாம்புகளோடு ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். அதன்பின் அவ்வக்கினியினின்றும் அளவில்லாத 
பூதவெள்ளங்கள் உண்டாயின. இருடிகள் "பரமசிவனுடைய வலிமையை மாற்றுங்கள்'' என்று சொல்லி 
யனுப்ப: சிவபெருமான் அவற்றை நோக்கி, "நீர் நம்மையகலாது நாடோறுஞ் சேனைகளாய்ச் சூழுதிர்' 
என்று கட்டளையிட்டார். அவைகள் அவ்வாறே அவரைச் சேவித்து மருங்கில் நின்றன. 

    அதன்பின் அவ்வேள்வித் தீயில் வெண்டலை யொன்று தோன்றி, உலகம் யாவுந் தொலையும்படி 
சிரித்துக்கொண்டெழுந்தது. முனிவர்கள் அதனையும் சிவபெருமான்மேல் விடுத்தார்கள். அது அணுகுதலும்,
 அவர் அதனால் உலகம் அழியாவண்ணம் அருள்செய்து, திருக்கரத்தாற்பற்றிச் சடைமேற்றரித்து, "உன் 
செயலைச் செய்குதி'' என்றார். சிவபெருமானை நோக்கி நோக்கி மனங்குலைந்த முனிவர்கள், தங்கள் 
மந்திரங்களை ஒன்றாக ஏவி, 'இவரைக் கொல்லுங்கள்'' என்று கூறினர். அவைகள் ஒரு டமருக வடிவாகி, 
புவனங்கள் செவிடாகும் படி ஒலித்துக்கொண்டு அவரை அணுகின. அந்த உடுக்கினோசையால் உலகத்
துயிர்கள் யாவும் இடியொலி கேட்ட பாம்புகள் போல மயங்கின; அவை சிவபெருமானுடைய திருவருளால் 
இறந்தில. சிவபெருமான் அவ்வுடுக்கை ஒரு திருக்கரத்திற்பற்றி, "நம்முடைய காதின் அருகே ஒலித்துக் 
கொண்டிருக்குதி" என்று ஏந்திநின்றார். 

    முனிவர்கள், 'இவ்வாறு யார் செய்ய வல்லார்!" என்று கூறி, சங்கார கருத்தாவாகிய சிவபெருமானுக்கு
 இறுதியில்லையென்பதனை அறியாதவர்களாய், தம்மைக் கோபம் பிடர்பிடித்துத் தள்ள, வினைவசத்தாற் பின்னும் 
அபிசாரஹோமஞ்செய்தார்கள். அவ்வக்கினியினின்று ஓர் முயலகன் எழுந்தது. அவர்கள் அதனை நோக்கி, 
உபசாரங்கூறி, யாகஞ் செய்தலை நீங்கி, அவ்வக்கினியையும் அழைத்து, அவ்விரண்டையும் நோக்கி, "நம்முடைய 
வலிமை கெடும்வண்ணம் செய்த சிவனைக் கொல்லுதிர்" என்று அனுப்பினர். அவைகள் மிக விரைந்து வந்தன. 
சிவபெருமான் யாகாக்கினியை ஒருதிருக்கரத்தி லேந்தி,முயலகனை மெல்லவாகத் திருவடியால் வீழத்தள்ளி,
 அத்திருவடியை அருளினால் அதன் முதுகின்மேல் ஊன்றிக்கொண்டு தேவர்கள் துதிக்க நின்றார். 

    முனிவர்கள் அவர் நிற்றலை அக்கினிகாலப் பார்த்து, "இவர் இன்னும் பிழைத்திருந்தார். அந்தோ! நாம் 
யாகஞ்செய்து அதிலிருந்து எழுப்பி விட்டவைகளெல்லாம் இவருக்கழிந்தனவோ!" என்று இரங்கி, "சிவன் அழிக" 
என்று எண்ணில்லாத சாபங்களைச் சொன்னார்கள். அந்தச் சாபங்கள் யாவும் அவர் திருமுன்பும் சென்றிலவாய், 
ஊழித்தீயின்மேற் செல்லும் பூளைபோல அழிந்தன. சாபமும் பயன்படாதாக, முனிவர்கள் தாம் கொண்ட கோபமும்
 நீங்கி, வலிகுறைந்து, ஒருசெயலுமின்றி, வாட்டமும் நாணமுங்கொண்டு நடுங்கி, தொலையாத பாவமும் பழியும் 
பூண்டு, பூமிக்குப் பொறையாய் வாளா நின்றார்கள். 

    பெருமையாவுமிழந்த அம்முனிவர்களுடைய ஏழைமையை என்னென்று சொல்வோம். அழிவில்லாத 
சிவபெருமானை அழிக்கும்படி அபிசார ஹோமஞ்செய்து, அதிலிருந்து பலவற்றையும் எழுப்புவிடுத்து, சாபத்தையுங் 
கூறினர். அவற்றால் அக்கடவுளை அழிக்க முடியுமோ! தங்கள் வலிமையுமிழந்தார்கள். அதுநிற்க.
சிவபெருமான் திருவடியினாலூன்றிய முயலகன் மெல்லமெல்லத் தலையை யெடுத்தெடுத் தசைப்ப, 
 அவர் அதனை நோக்கி, அநவரததாண்டவஞ் செய்தல் போல அதன்மேல் நின்று நடித்தார். அதனைத் 
தாங்கலாற்றாது உலகமெல்லாம் நடுங்கின; உயிர்கள் அஞ்சியிரங்கின; தாருகாவனத்து இருடிகள் நடுங்கி 
வீழ்ந்தார்கள். அந்நடனத்தைப் பிரமவிட்டுணுக்கள் தரிசித்துக்  கண்களித்துத் துதித்து மனமகிழ்ந்து, 
அவருக்குப் பக்கத்தில் நின்றார்கள். 

    இந்திரனும் தேவர்களும் வீழ்ந்தார்கள். ஆனந்த நிருத்தஞ் செய்யுஞ் சிவபெருமான், இவ்வுலகங்கள் 
யாவும் அஞ்சுதலையும் விழுந்த தேவர்களுடைய அயர்வையும் நோக்கி, திருநடனத்தை ஒழிந்து நின்றார். 
இந்திரனுந் தேவர்களும் எழுந்து கைதொழுது பக்கத்தில் வந்தார்கள். சிவபெருமான் தம்மை மதியாத 
முனிவர்கள் யாவர்க்கும் ஞானத்தைக் கொடுத்தருளினார். அவர்கள் விரைவில் எழுந்து, 'எம்பெருமானே, 
பொல்லாத பாவங்களையே யியற்றுகின்ற அடியேங்களுடைய பெரிய அபராதங்கள் எல்லாவற்றையும் 
பொறுத்தருள்புரியும்" என்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். 

    பகைவர்களுக்கும் திருவருள் புரியும் பரமகருணாநிதியாகிய சிவபெருமான் அம்முனிவர்களை நோக்கி, 
"நம்முடைய வேதாகம நெறியிலொழுகிப் பாவங்களை நீக்கித் தவத்தைச் செய்குதிர்" என்று கூறி, அவர்களை 
அங்கே நிறுத்தி, அரிபிரமேந்திராதி தேவர்கள் யாவரையும் அவரவரிடங்களுக்குச் செல்லும்படி விடைகொடுத்து, 
தாம் திருக்கைலாச மலையை அடைந்து, உமாதேவியாரோடு வீற்றிருந்தருளினார். தக்கனே, எம்பெருமான் 
புலித்தோல் முதலியவற்றைத் தரித்ததும், தாருகாவனத்தில் நிருத்தஞ்செய்ததும் பிறவும் விரித்துச் சொன்னோம். 
இனி யானைத்தோலைப் போர்த்த கதையையும் சொல்வோம் கேட்பாய்.

    யானை வடிவத்தையுடைய கயாசுரன் என்பவன் முன்னொருநாளில் " மேருமலையிற்போய்ப் பிரமாவை 
நினைத்து அருந்தவஞ் செய்திருந்தான். அவர் அதனை நோக்கி வெளிப்பட்டுவந்து, "நீ வேண்டிய வரம் யாது 
 சொல்லுதி" என்றார். கயாசுரன், "சுவாமீ அழியாத ஆயுளையும் வலிமையையும் வீரத்தையும் தந்தருளும்" என்றான். 
அவர் நகைத்து, "நீ வேண்டியவாறே வரத்தைத் தந்தோம். சிவபெருமானுக் கெதிரிற் செல்லாதே. செல்வாயாயின் 
இவ்வரம் அழியும். இதனைக் கடைப்பிடி." என்று கூறித் தமதுலகத்தையடைந்தார். 

    கயாசுரன் அவ்வரத்தை நினைத்து, "சிவபெருமானிடத்திற் செல்லேம், ஒழிந்தோரிடத்திற் சென்று போர் செய்து
 எவ்வுலகங்களையும் அழித்து யாவருக்குந் துன்பத்தையே செய்திருப்போம்'' என்றெண்ணி எழுந்து, வானுலகத்திற் 
றேவர்களிருக்கின்ற பதங்கடோறும் போய்ப் போய், அவர்கள் புறந்தரப் போர்செய்து, அவ்வூர்களெல்லாவற்றையும் 
அழித்து, பின் சுவர்க்கத்திற் போய், இந்திரனோடு யுத்தஞ்செய்து, அவன் புறந்தந்தோடும்படி துரத்தி, ஐராவத யானையின் 
வால் நுதியைப் பிடித்துச் சுற்றி இந்திரன் மயங்கும்படி அதனை எறிந்து, சுவர்க்கவுலகத்தை அழித்து, அங்குநின்று 
நீங்கி, திக்குப் பாலகர்களைத் துரத்தி, தன்னினங்களாகிய அவுணர்களையும் அரக்கர்களையும் வதைத்து, பூமியில் 
வந்து, மக்கட்டொகுதியைக் கொன்று, ஆலாகலவிஷம்போல எங்குந் திரிந்தான். 

    முனிவர்கள் அவனைக் கண்டஞ்சி ஓடி, சிவபெருமான் வீற்றிருக்குங் காசிப்பதியை யடைந்தார்கள். 
அம்முனிவர்களும் அந்நகரவாசிகளும் பயந்து மணிகர்ணிகை என்னும் ஆலயவாயிலை அடைந்து, இறப்பவர்கள் 
செவியின் கண்ணே தாரகப் பிரமமந்திரத்தை உபதேசித்துத் தமது சாரூப்பியத்தை அருளுகின்ற விசுவேசரை 
வணங்கி நின்று, "சுவாமீ, கயாசுரனென்பவன் பூவுலகத்தை அழித்து அடியேங்களையுங் கொல்லும்படி விரைந்து 
வருகின்றான். தேவரீருடைய திருவடிகளே புகலிடம் என்றடைந்தேம். அடியேம் உய்யும்படி அருள்புரியும்" என்று 
சொல்லித் தோத்திரஞ் செய்தார்கள். கயாசுரன் அதனைக் கண்டு முனிந்து, மணிகர்ணிகை வாயிலின்கண்ணே 
வந்து, இடிபோல உரப்பினான். கோயிலினுட்புகுந்த சனங்கள் யாவும் மனங் குலைகுலைந்து விசுவேசரைத் 
தழுவி மயங்கின.

    அவன் அதனைக் கண்டும், அவர்களைக் கொல்லும்படி கோபத்தோடு சென்றான். அதனைச் சிவபெருமான் 
கண்டு,சர்வ சங்காரஞ் செய்யும் உக்கிர உருவைத் தாங்கி, திருமுடி அண்டத்தினுச்சியைத் தொட நிமிர்ந்து,ஆயிர 
கோடி சூரியப் பிரகாசத்தோடு தோன்றினார். தேவர்களும் முனிவர்களும் அத்திருவுருவைப் பார்க்க முடியாதவர்களாய்க் 
கண்களைப் பொத்தி வருந்தினார்கள். உக்கிரவடிவங்கொண்ட கடவுள் ஒருதரஞ் சிரித்து, மெல்லவாக உரப்பினார். 
அதனால் உலகமெல்லாம் நடுங்கின. அத்தொனியைக் கேட்ட பிரமா முதலிய தேவர்களும் வெருண்டார்கள். 
எம்பெருமான் இத்தன்மையாகிய உக்கிரவடிவோடு தோன்றிக் கயாசுரனுக்கெதிரே போயினார். அவன் இவர் 
சிவபெருமான் என்றறிந்தும், பிரமா கொடுத்த வரத்தை மறந்து, அவரோடு போர் செய்யும்படி எதிர்த்து நின்றான். 

    சிவபெருமான் வடவாமுகாக்கினியும் அஞ்சும்படி அக்கினிகாலப் பார்த்து, ஒரு திருவடியினால் உதைக்க, 
அவன் கவிழ்ந்து பதைத்து வீழ்ந்தான். பரமசிவன் அவனுடைய சிரசை ஓர் திருவடியினாலும் தொடையை மற்றோர் 
திருவடியினாலும் மிதித்துக்கொண்டு, இரண்டு திருக்கரங்களின் நகங்களினால் முதுகிற் கிழித்து, நான்கு கால்களும் 
பக்கங்களிற் பொருந்தும்படி இரத்தம் பெருகத் தோலையுரித்தார். அதனைக்கண்டு உமாதேவியாருங் கலங்கினார். 
உலகத்துயிர்கள் யாவும் அக்கடவுளுடைய உக்கிரத் திருமேனியின் பேரொளியைப் பார்த்துத் தியங்கி, பார்த்த கண்கள் 
ஒளியிழந்து, பதைத்தன. சிவபெருமான் அதனையறிந்து, உயிர்கள் கண்ணொளி மழுங்கியதைத் தீர்க்கத் திருவுளங் 
கொண்டு, அநுக்கிரகார்த்தமாக அவ்வியானைத் தோலைத் தமது திருப்புயத்தின் மேற்கொண்டு போர்த்து, தம்முடைய
பேரொளியை மாற்றி, உயிர்களுக்குக் கண்ணொளியைக் கொடுத்து, அவைகளுடைய அச்சத்தையும் நீக்கிக் காத்தருளினார். 

    அப்பொழுது தேவர்கள் துதித்தார்கள். விசுவேசர் அத்துதியைக் கேட்டு மணிகர்ணிகை என்னும் ஆலயத்திற் 
போயினார். முன் மயங்கி வீழ்ந்த பரிசனர்கள் யாவரும் தெளிவுபெற்று, கயாசுரனுடைய இரத்தத்தையும் எலும்பையுந் 
தோலையுங் கண்டு  சிவபெருமானே அவனைக் கொன்றார் என்று எண்ணி, ஆடிப்பாடிக் களித்தார்கள். 
காசிப்பதியில் வாழ்பவர்களும் முனிவர்களும் அக்கடவுளை வணங்கி, அவருக்கு விசேடமாகப் பூசை புரிவித்துத் 
துதித்து, விடைபெற்றுக் கொண்டு போயினார்கள். தக்கனே,  சிவபெருமான் யானைத்தோலைப் போர்த்த கதை 
இதுவாகும். இனிப் பிரம கபாலத்தை யேந்திய கதையைச் சொல்வோம் கேள்.

    முன்னொரு நாளிலே, விட்டுணுவும் பிரமாவும் மேருமலையின் ஓர் கொடுமுடியில் இருக்கும்பொழுது,
 பல முனிவர்களும் தேவர்களும் வந்து அவர்களை வணங்கி அஞ்சலி செய்து நின்று, மும்மூர்த்திகளிலும் முதல்வரும், 
அநாதியாயுள்ளவரும், எல்லாவற்றையுஞ் சிருட்டிப்பவரும், பரதத்துவத்துக்கு மேற்பட்டவரும், உயிர்க்குயிரா 
யுள்ளவரும் ஆகிய கடவுள் யாவர்? நீங்களிருவரும் எங்களுக்குச் சொல்லுங்கள்'' என்று பிரார்த்தித்தார்கள். 
பிரமா சிவபெருமானுடைய மாயத்திலகப்பட்டு, "நானே அந்தப் பிரமப்பொருள். நீங்கள் இதனைத் தெளியுங்கள்" 
என்றார். விட்டுணுவும் அத்தன்மையினராய், "உன்னைத் தந்த யானே உன்னிலும் உயர்ந்த பிரமப் பொருள்" என்றார். 

    இவர்கள் இருவரும் இவ்வாறு கோபத்தோடு மாறுபட்டுத் தருக்கஞ்செய்ய; முனிவர்களும் தேவர்களும்
 "இவ்வாதம் நம்மாலுண்டாயது" என்று சொல்லி, ஒருவரும் நில்லாமல் நீங்கினர். பிரமவிட்டுணுக்கள் பின்னும் 
பூசலிட்டார்கள். அப்பொழுது வேதமும் பிரணவமும் வேறு வேறு உருக்கொண்டு வந்து, ''நீவிர் வாதஞ்செய்யா 
தொழிமின். உயிர்க்குயிராயும் பரமபிதாவாயும் உள்ள சிவன் ஒருவரே மெய்க்கடவுள்' என்று சொல்லின. 
அவர்கள் அவ்வாக்குக்களைக் கைக்கொண்டிலராய் மறுத்து, பின்னும் கொடிய போரைச் செய்தார்கள். 
யாவர்க்கும் ஆபத்துக் காலத்தில் வந்தருள்புரியும் பெருங்கருணைக்கடலாகிய சிவபெருமான் அதனைக்கண்டு, 
அவர்களுடைய கடிய போரைத் தொலைக்கத் திருவுளங்கொண்டு,அமலமாகிய சோதி வடிவாய் ஆகாயமத்தியிலே 
தோன்றியருளினார். 

    அகந்தையடைந்த விட்டுணுவும் பிரமாவும் அந்தச் சோதியைச் சிவனென்று அறிந்திலராய், "இந்தச் சுடர் 
யாதோ?" என மருண்டார். அதனைப் பரமசிவன் தெரிந்தருளி, நம்மையாண்டருளும்படி உமா சமேதராய்த் 
திருக்கைலாச மலையில் வீற்றிருக்கின்ற தமது திருக்கோலத்தோடு அச்சோதியினிடையே தோன்றினார். 
விட்டுணு, "நமது பரமபிதாவாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்தார்" என்று விரைவில் எழுந்து வணங்கினார்.
 ஓர் சிறிதும் மாயை நீங்காத பிரமாவானவர், விட்டுணுவைப் போல அன்புடன் எழுந்து வணங்காமல், தமது 
உச்சிச்சிரசிலுள்ள வாயினால் சிவபெருமானையும் இகழ்ந்தார். 

    ஐந்து முகங்களையுடைய  பிரமா தம்மையிகழ, அருட்கடலாகிய சிவபெருமானும் அவர்மேற்
சிறிதுஞ் சினங்கொண்டிலர். அங்ஙனஞ் சினங்கொண்டாரெனின், எல்லா அண்டங்களும் அவற்றிலுள்ள உயிர்களும் 
பின்னும் அழியாதிருக்குமோ! பிரமாவின் அகந்தையைக் கண்ட சிவபெருமான் அவருடைய பாவத்தைத் 
தொலைக்கவும், மற்றைத் தேவர்கள் முனிவர்கள் முதலாயினாருடைய அகந்தையைக் கெடுக்கவும் நினைத்து, 
பேரருளினாலே தமது திருவுள்ளத்தினின்றும் வயிரவக்கடவுளை உண்டாக்கினார். அவர் நீலநிறம்பொருந்திய 
திருமேனியும், சிலம்புகளொலிக்குந் திருவடியும், பாம்பு பொருந்திய திருவரையும், அனந்தகோடி சிரமாலைகள்
 அலையும் திருமார்பும், சூலமும் மழுவும் பாசமும் உடுக்கும் ஏந்திய திருக்கரங்களும், திரிநேத்திரங்களும், 
வக்கிரதந்தங்களும், செவ்வானம் போலும் திருச்சடையும், கோபக்குறிப்போடு கூடிய திருநகையும் உடைய 
உக்கிர வடிவுகொண்டு உதித்தார். 

    அந்த வயிரவக்கடவுளைக் கிருபாசமுத்திரமாகிய சிவபெருமான் நோக்கி, "நமது சிறுவனாகிய பிரமனுடைய 
உச்சிச்சிரசு நம்மை இகழ்ந்தது. அச்சிரசைக் கிள்ளிக் கரத்திலேந்தி, மீட்டு அவனுக்குயிரைக் கொடுத்து, தம்மைப் 
புகழுகின்ற முனிவர்களும் தேவர்களும் இருக்கும் நகரங்கள் தோறும் போய், அவர்களுடைய உடலிலுள்ள இரத்தத்தைப் 
பிக்ஷையாக ஏற்கக்கடவாய். ஏற்கும்பொழுது, இறந்தவர்களுக்கு மீட்டும் உயிரைக் கொடுத்து, அகந்தையை மாற்றி,
அண்ட முகட்டிற்போய், முன்னமே உனக்காக அமைந்த பைரவ புவன பதத்திலிருந்து, மனிதர்களையும் தேவர்களையும் 
துன்பம் நீங்கக் காப்பாய்' என்று அனுக்கிரகித்து, நிருமலமாகிய சோதியில் மறைந்தருளினார். 

    அந்தச் சோதியும் அவர்கள் காணாவண்ணம் மறைந்தது. விட்டுணு இவைகளைப் பார்த்து, நாம் இங்கே 
நிற்றல் முறையல்ல என்று சிவபெருமானை வணங்கி, விரைந்து வைகுண்டத்தை யடைந்தார். வைரவக்கடவுள் 
பிரமாவினுடைய உச்சிச்சிரசைத் தம்முடைய நகத்தாற் களைந்து ஏந்த, கால்கொண்டு பாய்ந்த இரத்தவெள்ளம் 
பூமியைச் சூழ்ந்தது. அவர் இறந்து வீழ்ந்தார். இரத்தவெள்ளம் உலகத்தை மூடி மேருமலையைச் சூழ்ந்தது. 
வைரவக்கடவுள் நெற்றிக்கண்ணின் அக்கினியினால் அவ்விரத்தம் முழுதையும் வறப்பித்து, பிரமாவுக்கு
 உயிரைக் கொடுத்தார். அவர் எழுந்து நல்லுணர்வு வரப்பெற்று, வைரவக்கடவுளுடைய பாதங்களை அன்போடு 
வணங்கி, "பாவியேன் சிவபெருமானுக்குச் செய்த குற்றங்கள் அளவில்லாதன. அதனால் இந்தப் பெரும்பழியைப் 
பெற்றுள்ளேன். இனி அடியேன் மீது கோபஞ் செய்யாதொழியும். 

    உலகங்களை நொடிப்பொழுதினுட் சங்கரிக்கும் வலியையுடைய கடவுளே,உம்முடைய பேரருள் நலத்தினாற் 
பழைய நல்லுணர்வைப் பொருந்தினேன். அடியேனுடைய பிழைகளெல்லாவற்றையும் தேவரீர் பொறுத்தருளல் 
வேண்டும். தீமையும் எளிமையுமுடைய இந்த உச்சிச்சிரசும் தூய்மையுடையதாம்படியும், அடியேன் உம்மைத் 
தரிசிக்கும்பொழுது மயக்கந்தீரும் படியும், சூலப்படையைப்போல இச்சிரசையும் திருக்கரத்தில் ஏந்தியருளும்" 
என்று இவை போல்வன பலவற்றைச் சொல்லித் துதித்தார். வயிரவக் கடவுள் நான்கு தலையைப்பெற்ற பிரமாவை 
நோக்கி,  ''அவ்வாறாகுக'" என்று அருள் செய்து, மேருமலையை நீங்கிப்போய், காலவேகன், அக்கினி முகன், 
ஆலகாலன், அதிபலன் முதலாகிய அநேகம் பூதப்படைகளை உண்டாக்கி, அக்கணங்கள் சூழ,தருக்குற்ற
 முனிவர்களிருக்கும் வனங்கடோறும் தேவர்களிருக்கும் மேலுலகங்கடோறும் விரைந்து சென்று சென்று, 
அவர்களுடம்பிலுள்ள இரத்தத்தைப் பிக்ஷையாக ஏற்று, பின்பு உயிரைக் கொடுத்து எழுப்பி, அவர்களுடைய 
மனங்களெல்லாவற்றையும் பரிசுத்தமுடையனவாக்கினார். 

    அதன்பின் வானுலகங்களை நீங்கி, விட்டுணுவினுடைய வைகுண்டத்திற் போயினார். அவருடைய 
பூதகணங்கள் முன்சென்றன. விட்டுணுவின் வாயிற் காவலாளனாகிய விடுவசேனன் என்னும் சேனாபதி 
அச்சேனைகளை உள்ளே விடாமற் றடுத்தான். காலவேகன் முதலாகிய பூதகணநாதர்கள் அவனோடு போர் 
செய்துகொண்டு நின்றார்கள். வயிரவக்கடவுள் வந்து, விடுவசேனனைத் தமது சூலத்திற் கோத்து, 
பூதகணங்களோடு உள்ளே போய், பூமிலக்ஷுமி மகாலக்ஷுமி சமேதராய்ச் சேஷசயனத்தின்மீது விட்டுணு 
வீற்றிருக்குந் தானத்தைச் சேர்ந்தார். 

    விட்டுணு மனைவியர்களோடு எழுந்து அவருடைய பாதங்களை வணங்கிநின்று, "தேவரீர் இங்கே 
எழுந்தருளிவந்த காரணம் யாது?" என்றார். ''நாம் இங்கே வந்தது பிக்ஷைக்கு; உன் சிரசிலுள்ள இரத்தத்தையே 
உதவுதி' என்றார். விட்டுணு நன்றென்று கூறி, தம்முடைய நெற்றியில் ஓர் நரம்பை நகத்தால் வாங்கி, இரத்தத்தைப் 
பிக்ஷாபாத்திரத்தில் உகுத்தார். இப்படிப் பதினாயிர வருஷ காலம் உகுத்தும், பிரம கபாலத்திற் பாதியும்
நிறைந்திலது. விட்டுணு வலிமை நீங்கிச் சோர்ந்தார். அதனைப் பூமிலக்ஷுமியும் மகாலக்ஷுமியும் பார்த்து இரங்கி, 
அவரை எழுப்பித் தரல் வேண்டும் என்று வயிரவரைச் சரணடைந்தார்கள். 

    அவர் அப்பெண்களை ''அஞ்சாதொழிமின்" என்று கூறி, விட்டுணுவினுடைய சோகத்தை நீக்கி 
உய்ந்தெழும்படி அருள்செய்து, அவ்விடத்தை நீங்கினார். விட்டுணு அவருக்குப் பின் சென்றார். அவரை நீ 
இங்கே இருக்குதி என்று கூற, தேவரீர் சூலத்தின்மீது கோத்த விடுவசேனனை விடுத்தருளவேண்டும்" என்று 
வேண்டினார். வயிரவக்கடவுள் அவனைச் சூல நுனியினின்றும் விடுவித்து, உயிரைக்கொடுத்து அருள்செய்து, 
கணங்களோடு அண்ட கடாகத்திலுள்ள தமது புவனத்தையடைந்து, அண்டங்களைப் பரிபாலித்துக் கொண்டு 
வீற்றிருந்தார். வயிரவக்கடவுள் சங்கார  காலத்திலே பரமசிவனுடைய ஆணையினாலே தேவர்களுடைய
சிரங்களையும் பிரமா முதலியோருடைய சிரங்களையும் துணித்து, உயிர்கள் எல்லாவற்றையும் சங்கரித்து,
 புவனங்கள் எல்லாவற்றையும் பொடியாக்குவார். 

    எல்லாம் அழியும் மஹாஸ்மஸானத்திலே வேதமாகிய நாய் வாகனத்திலிவர்ந்து பேரானந்தத்தோடு 
உலாவுவார். பரமசிவன் பிரம கபாலத்தை ஏந்தி வீடுகடோறும் பிக்ஷையேற்றதும், பிரமா முதலிய தேவர்கள் 
அகந்தையுற்ற காலங்களில் அவர்களைத் தண்டித்து நல்வழிப்படுத்திய பேரருளேயாம். சிவபெருமானின் 
வேறின்றி அவரிடத்தினின்றுந் தோன்றிய வயிரவக்கடவுள் இரத்தப்பலி ஏற்றதைச் சொன்னோம். இனி 
அக்கடவுள் வேற்றுருக்கொண்ட தன்மையைச் சொல்வோம். தக்கனே கேட்குதி.

    முன்னொருநாள், இந்திரன் திருக்கைலாச மலையிலே சிவபெருமானை வழிபட எண்ணி, மனத்தில் 
அகந்தையுடையனாய், செம்பொற்றிருக் கோயில் வாயிலிற் போயினான். அதனை யறிந்த சிவபெருமான் 
ஒரு பிரமதகண வேடங்கொண்டு அவ்வாயிலில் நின்றார். அவரை இந்திரன் நோக்கி, "மிகப்புதியனா  
யிருக்கின்றாய். இன்றைக்குத் தான் உன்னைக் கண்டேன். நீ யார்? நான் சிவபெருமானைத் தரிசிக்கும்படி 
வந்தேன். அவருடைய சமயம் யாது? சொல்லுதி" என்றான். சிவபெருமான் அவனுக்கு ஒரு பதிலுஞ் சொல்லாதவராய், 
அச்சந்தரும் நோக்கத்தோடு வாளாநின்றார். இந்திரன், தனக்கு இனிவரும் ஊறுபாடொன்றையும் நினையாமற் 
கோபங்கொண்டு, "இவன் ஒருவரிடத்துமில்லாத அகந்தையுற்றான்'' என்று,குலிசாயுதத்தை அவர்மேல் எறிந்தான். 
அது அக்கடவுள் மேற்பட்டு, நுண்ணிய துகளாய் விரைவிலழிந்தது. பூதகண வடிவங்கொண்ட பரமசிவன் 
அவ்வடிவத்தை நீங்கி, உருத்திர வடிவைத் தாங்கி, கோபாக்கினியும் புகையும் எழவும், புருவங்கள் நெற்றியில் 
ஏறவும், புன்முறுவல் தோன்றவும், இதழ் துடிக்கவும், கண்கள் சிவக்கவும், சிறிதே உரப்பி, பிரமா முதலிய 
தேவர்களும் மற்றையுயிர்களும் அஞ்சும்படி வெம்மையாகிய உக்கிரவடிவு கொண்டு, உருத்து நின்றார். 

    இவ்வாறு நிற்கின்ற எம்பெருமானுடைய பெருஞ்சீற்றத்தை இந்திரன் பார்த்து, மனம் நடுநடுங்கப் 
பதைபதைத்தஞ்சி, அவருடைய பாதங்களில் வீழ்ந்து, 'எம்பெருமானே, நாயினுங் கடையேனாகிய அடியேனுக்கு 
உம்முடைய மாயமெல்லாந் தெரியுமோ? பிரமவிட்டுணுக்களும் இன்னும் அறியார். பாவியேன் செய்த 
பிழைகளனைத்தையும் பொறுத்தருளும்" என்று கூறிப் பலமுறை துதித்து வேண்டினான். சிவபெருமான்
 அவ்விந்திரனை அஞ்சற்க என்று கிருபா நோக்கஞ் செய்து, தம்முடைய கோபத்தை மேற்குச் சமுத்திரத்தில் 
வீசி, அவனுக்கு விடைகொடுத்தனுப்பி, கோயிலினுட்போய், இரத்தின சிங்காசனத்திலே பார்வதி 
தேவியாரோடு வீற்றிருந்தருளினார்.

    பரமசிவன் மேலைச் சமுத்திரத்தில் வீசிய கோபமானது ஒர் பாலகனாயிற்று. அப்பாலகனைச் 
சமுத்திர ராசன் எடுத்து வாழ்த்தி வளர்த்தான். அக்குழந்தை சிறிது அழுதபொழுது, வானுலகமும் 
மண்ணுலகமும் எண்டிசைகளும் செவிடுபட்டன. அவ்வொலியைப் பிரமா கேட்டு, "இவ்வோசை ஆகாயத்தில் 
வருகின்றது" என்று கருதி, சமுத்திரத்தையடைய; வருணன் அவரை ஓராசனத்திலிருக்கச் செய்து, 
“இவன் யான்பெற்ற பாலகன், பார்ப்பீராக" என்று கையில் நீட்டினான். பிரமா வாங்கித் தம்முடைய 
மடியிற் கிடத்தினார். அப்பாலகன் அவருடைய நான்கு தாடிகளையும் தன் கைகளால் வலியோடு இழுத்துத் 
தூங்கினான். பிரமா அவனிடத்து விருப்பம் வைத்தார். 

    அவருடைய கண்களினின்றும் நீர் சிந்திச் சமுத்திரத்திற் பாய்ந்தது. பிரமா அப்பொழுது அப்பாலகனுடைய 
கையினின்றும் தம்முடைய தாடிகளை மெல்லவாக நீக்கி, பல கைகளால் அவனை எடுத்து, பெரு மூச்சுவிட்டு, 
வருணனுடைய கையிற்கொடுத்து, ஓரிறைப்பொழுது யோசித்து, அவனை நோக்கி, "யாம் ஒன்று சொல்வோம் 
கேள். இவன் பரமசிவனுடைய கோபத்தினின்றும் தோன்றினான். ஆதலால் ஒரு கடவுளையும் நினையான்; 
அவர்களிடத்து ஒருவரத்தையும் வேண்டான்; ஒருவராலும் அழியான். தேவர்களும் இந்திரனும் திக்குப்பாலகர்களும் 
இவனுக்குப் பயந்து ஓடுவார்களானால் இவனோடு போர்செய்யவல்லார் யாவர்! இவனை எதிர்த்தற்கு நீவிரும் அஞ்சுவீர்; 

    இவனெதிர் நிற்பார் யாவர்! தேவர்களுடைய சாபங்கள் இவனை வந்தணுகுமோ! இவனுடைய வெம்மையால் 
அக்கினியும் தீயும். இவனுக்கு நானும் அஞ்சுவேன்; விஷ்ணுவும் அஞ்சுவார்; இந்திரனும் அஞ்சுவான்: கூற்றுவனும்
 அஞ்சுவான்; வானுலகமும் அஞ்சும் மண்ணுலகமும் அஞ்சும். இவன் தன்பரிசனங்கள் துதிக்கப் பூவுலகிற் கொடுங்கோல் 
செலுத்தி அங்குள்ளார் யாவரும் ஆசிகூற நெடுங்காலம் அரசு செய்வான். பரமசிவனையன்றி வேறார் இவனைக் 
கொல்வார்' என்று கூறினார். கூறுதலும், வருணன் "நீர் இவனுக்கு நல்ல ஓர் நாமத்தை இடும்'' என்றான். 
''நீ தரித்தமையால் இவனுடைய பெயர் சலந்தரன்" என்று பிரமா பெயரிட்டு, தமதுலகை அடைந்தார். 

    வருணன் அச்சிறுவனைச் சீரோடு பலகாலம் வளர்த்தலும், அவன் காளையாகி, பூமியிலே அவுணர் 
பக்ஷத்திற் சேர்ந்து, அவர்களோடு சென்று, திசைகளை வென்று, இந்திரனும் தேவர்களும் பயந்து மேருமலையில் 
ஒளிக்கும்படி கொடுமை செய்து, அவர்களுடைய உலகமுழுதையும் அவுணர்களுக்குக் கொடுத்தான். பின் 
அசுரத் தச்சனைக்கொண்டு சாலாந்தரம் என்னும் பெயரையுடைய ஓர் நகரத்தைச் செய்வித்து, அரசர்கள் துதிக்க 
அதிலிருந்து அரசியற்றினான். அதன்பின், காலநேமி என்னும் அவுணனுடைய மகளாகிய விருந்தை யென்பாளைச் 
சுக்கிராசாரியர் சொற்படி விவாகஞ்செய்து, இன்பமநுபவித்துக்கொண்டு ஐசுவரியத்தோடு பலநாட் பூமியிலிருந்தான். 

    இருக்குநாளில் ஓர் நாள், தேவர்கள் யாவரும் மேருமலையில் மறைந்திருந்தார்கள், நாம் அவரோடு போய்ப் 
போர்செய்வோம்" என்று சொல்லி அங்கே போயினான். அதனை அறிந்த தேவர்கள், 'பதகனாகிய சலந்தராசுரன் 
இங்கும் வந்தான். என்செய்வோம்'' என்று சிங்கத்தைக் கண்ட யானைகள் போலத் தேம்பி, செய்வதின்னதென்று 
அறியாது, "நம்மைப் பாதுகாத்தருளும்" என்று விட்டுணுவைத் தியானித்தார்கள். அவர் கருட வாகனத்தின்மீதேறி 
நொடிப்பொழுதில் மேருமலையில் வந்து, சலந்தராசுரனோடு இருபதினாயிரம் வருடம் பல படைகளாலும் 
மாயங்களாலும் போர் செய்தும் அவனை வெல்லமாட்டாதவராய், அவனைப் புகழ்ந்து போயினார். விட்டுணு 
சலந்தராசுரனோடு போர் செய்யும்பொழுது, இந்திரனுந் தேவர்களும் பயந்து கயிலையங்கிரியை யடைந்தார்கள்.

    அப்பொழுது சலந்தராசுரன், தன் பகைவர்களாகிய தேவர்களை எங்கும் பார்த்துக் காணாதவனாய், 
"பரமசிவன் வீற்றிருக்குந் திருக்கைலாசமலைக்குப் போயினார்கள் போலும்'' என்று கருதி, கோபமுடையனாய், 
தன்னூரிற்போய், சிலகாலமிருந்து, பின் கைலாசமலைக்குப் போய்த் தேவர்களை வெல்லல் வேண்டும் என்று 
சேனைகளோடு புறப்பட்டான். புத்தியிற் சிறந்த அவன் மனைவியாகிய விருந்தை "என் பிராண நாயகனே 
பரமசிவனோடு போர் வேண்டாம் வேண்டாம்; அவருடன் பொருதால் நீ இறந்தாய்' என்றாள். 

    சலந்தரன் அவள் சொல்லைக் கேளாமலும், செய்யத் தகுவது இஃதென்று நினையாமலும், தனக்கு 
வருங்கேட்டைப் பாராமலும், கோபம் மேற்கொண்டு, சிறிதும் பொறுமையின்றி, சேனைகளோடு கைலையங்கிரியின்
 ஒரு புடையிற்போயினான். அதனை இந்திரன் கண்டு, "தீயனாகிய சலந்தராசுரன் நால்வகைப் படைகளும் சூழ 
இறப்பானாய் இங்கும் வந்தான்,இனி அதனைக் காண்போம்" என்று, தேவர்களோடு கைலாச மலையிலுள்ள 
கோயிலுட் புகுந்து, சிவபெருமானுடைய அநுமதிப்படி நந்திதேவர் உள்ளே விடுப்பச் சென்று, மகாதேவர் 
உமையம்மையாரோடு வீற்றிருக்கும் ஸ்தானத்திற் போய், அவரை வணங்கி, "சலந்தரனென்னும் பொல்லாத 
அவுணன் எங்களைப் பொருது வெல்ல அடியேன் அஞ்சிப் பொன்னுலகத்தை நீங்கி மேருவிற்போய் ஒளித்திருந்தேன். 
அவன் அங்கும் வர அடியேன் விட்டுணுவை நினைத்தேன். அவர் வந்து அவனோடு போர்செய்து தோற்று அவனை 
வியந்து போயினார். காளகண்டராகிய கடவுளே, தேவரீருடைய இம்மலையில் வந்து ஒளித்திருந்தேன். சலந்தரன் 
இங்கும் வந்துவிட்டான். எதற்காக வந்தானோ அதனை அடியேன் அறியேன். தமியேனுடைய துன்பமும் பதகனாகிய 
சலந்தராசுரனுடைய வலியும் வாழ்க்கையும் நீங்கும்படி திருவுளஞ் செய்தருளும்' என்று பிரார்த்தித்தான்.

    அதனைத் திருச்செவிமடுத்த கடவுள், "இந்திரனே உன் துன்பத்தை யொழிவாய்" என்றருள் செய்து, 
அவனை அனுப்பிவிட்டு, கருணையினால் ஒரு திருவிளையாடலை நினைத்து, கமண்டலத்தையும் குடையையும் 
ஏந்தி , தண்டை ஊன்றி, நரைத்த திருமேனியுடையராய், ஒரு விருத்தப் பிராமணவேடங் கொண்டு, இந்திரனும் 
தேவர்களும் மறைந்து தம் பின்னேவர, சலந்தராசுரனுக் கெதிரே போய், அவனை நோக்கி, "நீயார்? எங்குள்ளாய்? 
யாரைத் தேடி இங்கே வருகின்றாய்? சொல்லுதி' என்று வினாவினார். அவன், அந்தணரே "நான் சொல்வதைக் 
கேளும். நான் பூவுலகத்திலுள்ளேன். சமுத்திரத்தின் குமாரன். சலந்தரன் என்னும் பெயரினேன். தேவர்களை 
வென்று பரமசிவனையும் வெல்லும்படி ஈண்டு வந்தேன்' என்றான். 

    அதனைக் கேட்ட அந்தணராகிய கடவுள் "அரசனே உன்னெண்ணமும் நன்று நன்று ! இதனாலேதுந் 
தீதுண்டோ!'' என்று புகழ்வதுபோலப் பழித்துக் காட்டி நகைத்து, ''யான் கைலாசபதிக்குப் பக்கத்திலிருப்பேன். 
அவரோடு நீ போர்செய்ய முயன்றால் இறப்பாய். பிழைக்க நினைத்தால் மீண்டு செல்லுதி' என்று கூறினார். 
அதனைக் கேட்ட சலந்தரன் அக்கினி போலக் கோபித்து, கண்களிற் பொறியெழவும் வெயர்வை தோன்றவும் 
உயிர்த்து, 'பிராமணரே நீர் என்னைச் சிறியவன் போலச் சிந்தித்தீர். என்னுடைய வெற்றிகளையெல்லாம் 
உமக்குச் சொல்லியாவதென்! ஒருகணப்பொழுது நீர் இங்கே நின்று என்வலிமையை அறிகுதிர் அறிகுதிர்" 
என்று கூறினான். 

    அந்தணர் யாமும் ''உன்னுடைய மிகுந்த வலிமையைக் காணும்படி வந்தோம்' என்று கூறி, தமது 
திருவடியினாலே பூமியில் ஒருசக்கரத்தைக் கீறினார். அது ஒரு சக்கராயுதமாயிற்று. சலந்தரனை நோக்கி, 
"இதனை வலிமையினாற் சிரசிற்றூக்கி வைத்துத் தாங்கவல்லையோ?'' என்று வினாவினார். சலந்தரன் 
"தேவர்கள் யாரையும் புறங்கண்டேன்; பெருகுகின்ற கங்காநதியை அடைத்தேன்; சமுத்திரத்திலுள்ள 
வடவாமுகாக்கினியை அவித்தேன்; விட்டுணுவை வென்றேன். எனக்கு இதனைத் தாங்குவது அரிதோ!" 
என்று கூறி, சக்கரப்படையைக் கையிலெடுத்தான். 

    அது அதிபாரமாயிருத்தலினாற் பெருமூச்சுவிட்டு மார்பிலும் புயத்திலும் வைத்துத் தாங்கி, 
ஒருவாறு சிரசில் வைத்துச் சுமந்தான். அவனுடைய உச்சி முதல் உடம்பு முழுதும் கிழிந்தது. இரத்தவெள்ளம் 
பூமியெங்கும் பெருகியது. சக்கரப் படையாகிய தெய்வம் அப்பதகனுடைய உடம்பை இருபிளவாக்கி, 
சிவபெருமானிடத்திற் சென்றது. இரத்தக் கடல் பூமியெங்கும் வளைந்தது. சிவபெருமான் அவ்விரத்தத்தை 
நரகத்தில் விழும்படி பணிக்க அது அங்கே பாய்ந்தது. சலந்தரனுடைய சேனைகளை அக்கடவுள் 
திருநேத்திரத்தினின்று பொழிந்த அக்கினியினாற் பொடியாக்கி, தமது சுயவடிவத்தைக் காட்டி நின்றார். 
இந்திராதி தேவர்கள் அவரை வணங்கி, "எம்பெருமானே அடியேங்களுடைய துன்பத்தை நீக்கியருளினீர்'' 
என்று துதித்தார்கள். அவர்களுக்குப் பழைய அரசுரிமையை நடாத்தும்படி அநுக்கிரகித்து, தத்தமிடங்களுக்குச் 
செல்ல அனுப்பி,சிவபெருமான் தமது செம்பொற்றிருக் கோயிலிற் போய் வீற்றிருந்தருளினார்.

    இறந்த சலந்தராசுரனுடைய மனைவியாகிய விருந்தையை விட்டுணு இச்சித்து, ஒரு மகாவிரதி 
வடிவங்கொண்டு  அவனுடைய மாளிகையின் மருங்கிலுள்ள ஒரு சோலையிலே வஞ்சனையோடு இருந்தார். 
அவர் இருக்கும்பொழுது, கற்பிற் சிறந்த விருந்தை தன்கணவன் இறந்ததை அறியாளாய், அவனைக் காணாமையால் 
மனமிகநொந்து மெய்வருந்தி, பிழைக்கு நெறியறியாமல் இரங்கிப் பதைபதைத்துச் சோர்ந்து, தனித்திருக்க 
இயலாமலும், ஒருவரோடும் பேசாமலும், செய்வதின்னதென்றறியாமலும் இருதலைக் கொள்ளியினுள்ளெறும்பு 
போல அங்குமிங்கும் உலாவி, விட்டுணுவைப் புணரும் ஊழ் தனக்குண்மையினால் தன் மாளிகைக்குப் 
பக்கத்திலே விஷ்ணு இருக்கின்ற சோலையிற் போயினாள். 

    அப்பொழுது, வைகுண்டத்திலே விஷ்ணுவினுடைய வாயிலைக் காக்கும் காவலாளர் இருவர் சிங்க 
உருவம் எடுத்துக் கர்ச்சித்துக் கொண்டு எதிரே வந்தார்கள். சிங்கங்களைக் கண்ட அவள் இடியேறுண்ட பாம்புபோல
ஏங்கியோடி, சோலையிலே தவவேடம் பூண்டிருந்த விட்டுணுவை அடைதலும், அவர் "பெண்ணே அஞ்சாதொழி'' என்றார். 
சிங்கவடிவாய் அவளைத் துரத்திக்கொண்டு வந்த காவலாளர்கள் திரும்பி ஓடினார்கள். விருந்தை அத்தவத்தியினியல்பை 
நோக்கி, இவரியற்கை நன்றாயிருக்கின்றதென்று எண்ணி, அவரைப் பார்த்து, "பெருமையிற் சிறந்த என்றந்தையே 
கேளும். என் பிராண நாயகன் அழிவில்லாத சிவபெருமானோடு போர்செய்யும்படி போயினான்; இன்னும் வந்திலன். 
அக்கடவுளால் இறந்தானோ, அல்லது பிழைத்தானோ சொல்லும்' என்றாள். 

    அந்தச் சமயத்தில் விட்டுணுவினுடைய அக்காவலாளர் இருவரும் மாயையினாற் குரங்குகளினுருவெடுத்து, 
இறந்த சலந்தராசுரனுடைய உடலை விரைவிற் கொண்டு வந்து விருந்தையின் முன்னர் இட்டார்கள். அவள் அதனைக் 
கண்டு, வெருவிப் பதைத்து வீழ்ந்தரற்றி, இறந்தவள்போல உணர்வு நீங்கினாள். விட்டுணுவாகிய தவத்தர் 
அன்பினோடு கையை நீட்டி, பெண்ணே நீ வருந்தாதொழி வருந்தாதொழி" என்று கூறி, அவளை
எழுப்பினார். அவள் தேறி எழுந்து, அவரை வணங்கி நின்று, "உம்மை யொத்த மகாதவத்தர்கள் உலகத்திலில்லை.
 நீர் என்னுடைய உயிரைப் பாதுகாப்பீராயின், என்னாயகனுடைய பிளவுபட்ட உடலத்தைப் பொருத்தி 
அவனுயிரையும் அதனுட் புகுத்தித் தந்தருளும்" என்று வேண்டினாள். 

    விட்டுணு உடனே சலந்தரனுடைய உடலைப் பொருத்தி, தான் மாயமாகி மறைந்து, அவனுடைய உடம்பினுட் 
பிரவேசித்திருந்தார். குரங்கு வடிவ மெடுத்துவந்த காவலாளர்கள் விரைவில் மறைந்தார்கள். விட்டுணு சலந்தரனுடைய 
உடம்பினுட் புகுந்து சலந்தரனாய் எழுந்தார். விருந்தை கண்டு, என் கணவன் உயிர்பெற்றெழுந்தான் என்று எண்ணி, 
துன்பம் நீங்கி வியந்து துள்ளி, "என் பிராண நாயகனே நீ வந்தாய் போலும்" என்று கூறி, அளவிறந்த மகிழ்ச்சியோடு 
அவனைத் தழுவினாள். தழுவிய விருந்தையை விட்டுணு இரவும் பகலும் இறையளவும் பிரியாதவராய் மதன நூல் 
விதிப்படி பலநாட் புணர்ந்து காமவின்ப நுகர்ந்து, அவளோடு அந்தச் சோலையிலிருந்தார். 

    இருக்கு நாளில் ஒருநாள், சிவாஞ்ஞையினால் மாயத்தை மறந்து கண்ணுறங்கினார். அப்பொழுது, 
விருந்தை அவரைப்பார்த்து, "இவன் வஞ்சகன் வஞ்சகன், விட்டுணுவேயாகும்" என்று அஞ்சி, அழன்று நீங்கி, 
அருந்ததியை யொத்த தன் கற்புநிலை அழிந்ததற்காக வருந்தி உயிர்த்து, மாயங்கள் முழுதும் பொருந்திய 
தன்னுயிரின் கணுள்ள ஞானத்தினாற் றெளிந்து, விட்டுணுவை நோக்கி, "முன்பு இங்கே சிங்கவடிவங் கொண்டு 
வந்த இருவரும் உன்னுடைய காவலாளராகும். அவர்கள் உனக்குப் பகைவர்களாக நீ பூமியில் ஓரரசனாகி, 
குரங்குகளோடு அலைந்து திரிகுதி; என்னுடைய நாயகனைப்போல வந்து என்னைப் பலநாட் புணர்ந்த உன்னுடைய 
கற்பிற் சிறந்த மனைவியைப் பகைவர்கண் மாயையினாற் கவர்ந்துகொண்டு போக நீ அதனாற் பெரும்பழியைச் 
சுமக்கக் கடவாய்' என்று சாபமிட்டு, அக்கினிப் பிரவேசஞ் செய்தாள்.

    விட்டுணு விருந்தையின் பிரிவைச் சகிக்கலாற்றாதவராய், அவள் வெந்த சாம்பலிற்புரண்டு, ஆசைக்கடலின் 
மூழ்கிப் புலம்பி வாடினார். அப்பொழுது பிரமாவுந் தேவர்களும் திருக்கைலாசபதியை யடைந்து வணங்கி, 
விட்டுணுவின் னிலைமையை விண்ணப்பஞ் செய்தார்கள். அருகிலிருந்த உமாதேவியார் அதனைக் கேட்டுப் 
பேரருள்புரிந்து, ஓர் விதையை யுண்டாக்கி, அவர்களிடத்துக் கொடுத்து, 'இதை விட்டுணுவுக்கு முன்னே கொண்டு 
போயிடுங்கள்'' என்றார். அதனைப் பிரமா இருகையாலும் வாங்கிச் சிரமேற் கொண்டுபோய், ஈமத்தில் விருந்தை 
வெந்த சாம்பலின்மீது விதைத்து,அமிர்தத்தை ஊற்ற, அது விட்டுணுவின்முன் ஓர் துளவமாய் வளர்ந்து ஒரு 
பெண்ணுருவமாயிற்று. விட்டுணு அப்பெண்ணைக் கண்டு, விருந்தையின்மேல் வைத்த ஆசை நீங்கி, அந்தப் 
பெண்ணின் மீது ஆசையுற்றார். 

    தேவர்களும் பிரமாவும் அப்பெண்ணை விட்டுணுவுக்கு மணஞ்செய்து கொடுத்தார்கள். விட்டுணு 
துளவமென்கின்ற அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு தம்முடைய நகருக்குப் போய், அவளோடு பல 
போகங்களை அநுபவித்து, அவளை முடிமாலையாகவும் சூட்டிக்கொண்டார்.

    அந்த விட்டுணு, சிவபெருமானிடத்திலே சலந்தராசுரனைக் கொன்ற சக்கராயுதத்தை வாங்கும்படி 
அவருடைய திருவடிகளைப் பலநாள் ஆயிரமாயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து, ஓர் நாள் ஒரு தாமரை 
மலர் குறைதலும், தன் கண்ணையே தாமரை மலராக இடந்து சாத்தி, பரமசிவன் உவந்து ரிடபாரூடராய்த் 
தோன்றி அந்தச் சக்கரப் படையை உதவப்பெற்று, அதனால் உயர்வையடைந்தார். சக்கராயுதத்தைப் பெற்ற 
காரணத்தால், உலகம் அவ்விட்டுணுவை நேமியான் என்று சொல்லும். தக்கனே, பரமசிவன் வேற்றுருவடைந்த 
திருவருட்டிறத்தை உனக்குச் சொன்னோம். இனி அவர் ரிஷபத்தின் மேலேறுந் தன்மையை சொல்வோம்.

    இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் திரும்பினால் பிரமாவுக்கு ஒரு நாளும் அந்த நாள் முப்பது கொண்டது 
ஒரு மாசமும் அவை பன்னிரண்டு கொண்டது ஒரு வருடமும் ஆகும். இப்படி நூறுவருஷங் கழிந்தால் பிரமாவினுடைய 
ஆயுள் நீங்கும். அது விஷ்ணுவுக்கு ஒரு நாளாம். இவற்றை நூல்களெல்லாம் சொல்லும். கற்றுணர்ந்த பேதையே 
நீ இவற்றை அறிகுதி. இவ்வாறே விஷ்ணுவினுடைய ஆயுளுங் கழியும். அப்பொழுது உயிர்களும் அண்டங்களும் 
அழியும். எல்லா வுலகங்களையும் அக்கினி வியாபித்துண்ணும். அப்பொழுது உலகமெல்லாம் சுடலையாய்ப் 
பரிசுத்த முடையதாய்த் தோன்றும். அந்த மகாஸ்மஸானத்திலே ஞானமுதல்வராகிய பரமசிவன் உமையம்மையார் 
காண நடனஞ் செய்துலாவுவார். 

    இந்த அக்கினிப் பிரளயத்தில் தருமதேவதை அஞ்சி, "யாம் இங்கே இறப்போம். இனிச் செய்வதென்னை? 
என்று ஆலோசித்து, கங்காதரராகிய சிவபெருமானைச் சரண்புகுந்தால் என்றுமழியா திருப்போம்' என்று தேறி, 
இடபத்தினுருவை எடுத்து, சிவபெருமானுடைய சந்நிதியில் வந்து அவரைத் துதித்து, ''அடியேன் இப்பொழுது 
இறக்குந் தன்மையை மாற்றி  வலியையும் தேவரீருக்கு வாகனமாகும் பேற்றையுந் தந்தருளும்'' என்று பிரார்த்தித்தது. 
அவர் அதற்கு இறவாத தன்மையையும், வாகனமாய்த் தம்மைத் தாங்குந் தன்மையையும், ஒப்பில்லாத வலிமையையும்,
அன்பையும் மெய்யுணர்வையும் கொடுத்து, அதனை நோக்கி, 'கிருத யுகமுதலிய நான்கு யுகங்களிலும் தருமத்தின் 
றன்மை இதுவென்று யாவரும் அறியும்படி முறையே நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாகிய கால்களைப் 
பூமியில் ஊன்றிச் சஞ்சரிக்குதி. 

    உன்னிடத்தில் யாம் எக்காலமும் நீங்காமல் இருந்தோம். நீயும் நம்மை வந்தடைந்தாய். 
அன்போடு நம்மை வாகனமாய்த் தாங்குதி. நீ யாரினுந் தலைமையைப் பெற்றுள்ளாய். நம்முடைய தொண்டர்கள் 
இயற்றுகின்ற பாவமும் புண்ணியமாம். நம்மைப் புறக்கணித்தவர்கள் பண்ணிய புண்ணியமெல்லாம் பாவமாம். 
இது திண்ணம். இதனை வேதங்களும் சொல்லும். நம்மிடத்து மெய்யன்புடையவர்கள் செய்யும் பாவமும் 
அவ்வன்பில்லாதவர்கள் செய்யும் புண்ணியமும் முறையே  மாறி அறமும் மறமுமாகின்றது, யாம் உன்னுடலுக்கு 
உயிர்போல வியாபித்திருக்குந் தன்மையாலாம். உன்னிடத்து யாம் என்றும் உள்ளோம். நீயும் இடபவாகனமாய் 
நம்மிடத்திருக்குதி. இந்த வடிவையன்றி, மானுட வடிவத்தை எடுத்து நம்மைப் பூசிப்பாய்.  *அதனையும் அறிகுதி' 
என்று தரும தேவதைக்கு அருளிச்செய்து, அதனை வாகனமாகக் கொண்டார். 

*மானுடவடிவெடுத்துச் சிவபெருமானைப் பூசித்தமையை, "விட்டுணுவைத் தாங்குதலாற் றன்னின் மிக்காரில்லையெனத் 
தருக்குற்ற கலுழன் ஓர்நாள் அவரோடு திருக்கைலாசத்துக்குச் சென்றபொழுது இடபமானது தன்னுயிர்ப்பினாலே 
சிறகுகள் ஒடிந்து அங்குமிங்கும் உலையும்படி செய்து அதனை மிக வருத்தியது. அதனையறிந்த சிவபெருமான் 
இடபத்தை நோக்கி நம்முடைய கட்டளையின்றிக் கலுழனை வருத்தினமையால் இப்பாவந்தீருமாறு மானுட 
வடிவமெடுத்துக் காஞ்சீபுரத்திற் சென்று நம்மைப் பூசிப்பாய் எனப் பணித்தருளினார்'' என்னுங் காஞ்சிப் புராண 
சரித்திரத்தா லறிக.
    
    அந்த நாண்முதலாகப் பரமசிவன் தம்மை மெய்யன்போடு தியானிக்கும் அடியார்களுக்கு வரங்கொடுக்கும்படி 
அந்த ரிஷப வாகனத்தின் மேற்கொண்டு வந்து தோன்றுவார். அந்த ரிஷபத்துக்கே தன்னைத் தாங்கும் பேராற்றலைப் 
பரமசிவன் கொடுத்த செயலை அறிந்தல்லவா, அவர் முப்புர தகனஞ் செய்த காலத்து விட்டுணு இடபரூபங்கொண்டு 
எம்பெருமானைத் தாங்கினார். ஆதலினால், ரிஷபத்தைச் செலுத்துதல் சிவபெருமானுக்கோர் பழுதோ அன்று. இது நிற்க. 
தக்கனே, எம்பெருமான் நஞ்சையுண்டார் என்று சொன்னாய்; அதனுண்மையைக் கேட்குதி.

    முன் ஒருகாலத்தில், அவுணர்களும் தேவர்களும் ஒருவரோடொருவர் எதிர்த்துப் போர் புரிந்த பொழுது, 
இருதிறத்திலும் பற்பலர் விரைவி லிறந்தார்கள். அவர்கள் அதனைக் கண்டு, போரை விடுத்து, நெடுநாள் அழியாமலிருந்து 
போர்செய்யக் கருதி, சத்திய வுலகத்தை அடைந்து பிரமாவை வணங்கி, "சுவாமீ, சில் வாழ்நாளையுடைய யாங்கள் 
பலநாள் இறவாமலிருந்து பெரிய யுத்தத்தைச் செய்யும்படி பாற்கடலைக் கடைந்து அதிலுள்ள  அமிர்தத்தை 
எடுத்துத் தந்தருளும்" என்று வேண்டினார்கள். அவர் அதனைக் கேட்டு, "இதனை விட்டுணுவுக்குச் சொல்வோம். 
அவரே பாற் சமுத்திரத்தைக் கடைந்து அமிர்தத்தைத் தருவார். அதனை உண்டால் நமக்கு மரணம் விரைவில் வராது" 
என்று சொல்லி, அவர்களோடு பாற்சமுத்திரத்தை அடைந்து, அங்கே சேஷசயனத்தின்மீது அறிதுயில் செய்யும் 
விட்டுணுவைத் துதித்தார். 

    அவர் அதனை அறிந்து, கண்விழித்து எழுந்து, நீங்கள் "இங்கே வந்த காரணம் என்னை?" என்றார். பிரமா, 
தேவர்களும் அவுணர்களும் வேண்டிக்கொண்ட குறையைச் சொல்லினார். விட்டுணு அநுக்கிரகார்த்தமாய் 
''அவ்வாறாகுக" என்று கூறி, மந்தர மலையை மத்தாகவும் சந்திரனைக் கடைதறியாகவும் வாசுகியை நாணாகவும் 
கொண்டு, அந்த நாணை ஒருபுறத்திற் றேவர்களும் மற்றொரு புறத்தில் அவுணர்களும் பிடித்திழுக்கும்படி கற்பித்து, 
மத்தின் அடியையும் முடியையும் முறையே தமது முதுகினாலும் கரத்தினாலுந் தாங்கினார். இப்படி விட்டுணு 
மத்தைத் தாங்க, இந்திரனும் தேவர்களும் அவுண ராசனும் அவுணர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதனாற் 
றேவர்களும் உலைந்தார்கள்; உலகங்கள் குலைந்தன; மேருமலையுஞ் சலித்தது; அட்டயானைகள் ஒலித்தன; 
அட்ட நாகங்கள் பதைத்து வெய்துயிர்த்து ஒடுங்கின. 

    இவ்வாறாகப் பாற்கடலைக் கடையும்பொழுது, கயிறாகிய வாசுகி பொறுக்கலாற்றாது அயர்ந்து 
மிகுந்த துன்பத்தை அடைந்து வெய்துயிர்த்து மெய் பதைபதைத்து வெஞ்சினங்கொண்டு நாத்துடித்து 
ஆயிரம் வாய்கடோறும் ஆலாகல விஷத்தைக் கான்றது. அப்பொழுது பாற்கடலும் விஷத்தையுமிழ்ந்தது. அவ்விஷமானது 
உகமுடிவி லெழும் சூற்கொண்ட மேக சமூகங்கள்போல இருண்டு, அநேக கூற்றுவர்களுடைய கொலைத் தொழிலையும் 
அநேக வாயுக்களின் வேகத்தையும் பொருந்தி, அநேக வடவாமுகாக்கினி போல எங்கும் ஓடிப் பரந்து சூழ்ந்தது. 
அவுணர்களும் தேவர்களும் இந்திரனும் பிரமாவும் முனிவர்களும் முதலாயினோர் அதனைக் கண்டு ஓடுவாராயினார். 
விட்டுணு இதனைப்பார்த்து, மந்தரமலையைத் தாங்குவதைக் கைவிட்டு, கவற்சி கொண்டு, "நாம் இப்பொழுது இந்த 
நஞ்சைக் காப்போம்' என்றெண்ணி, விஷத்தின் எதிரே போயினார். அது வெகுண்டு அவரைத் தாக்கி, அவருடைய 
முன்னுள்ள வைர ரத்தின நிறத்தை மாற்றி, நீலநிறமேயாக்கியது. அவரும் நின்றிலர்.

    விட்டுணு முதலாகிய அனைவரும், உலகங்களை அழிக்கு மியல்பினை யுடைய அந்த நஞ்சின்முன் 
நிற்கலாற்றாதவர்களாய், உற்பத்தி நாசமில்லாதவரும் காலகாலருமாகிய பரமசிவன் வீற்றிருக்குந் 
திருக்கைலாச மலையை அடைந்தார்கள். ஆலாகல விஷஞ் சுடுதலால் இரிந்த அவர்கள் பரமபிதா மாதாவாகிய
 பரமசிவனும் பார்வதிதேவியாரும் வீற்றிருக்குந் திருக்கைலாசத்துக்கு ஓடிவந்தமை ஓர் அற்புதமோ! மைந்தர்கள்
பயந்தால் தந்தை தாயரிடத்தன்றி வேறெங்கே போவார்கள். அடைந்த அவர்கள் யாவரும் ஆலயத்தின் 
முதற்கடைவாயிலில் வீற்றிருக்குந் திருநந்திதேவரைக் கண்டு, "இனி நம்முடைய துன்பம் நீங்கியது" என்று
 துதித்து, நிகழ்ந்தவற்றைச் சொன்னார்கள். 

    அதனைக் கேட்ட திருநத்தி தேவர் அவுணர்களையும் தேவர்களையும் அவ்வாயிலில் வேறு வேறாக நிறுவி, 
பிரமாவையும் விட்டுணுவையும் திக்குப் பாலகர்களையும் அழைத்துக்கொண்டு உள்ளே போய், அவர்களுள்ளே 
திக்குப்பாலகர்களை ஐந்தாம் ஆவரணத்தில் நிறுத்திவிட்டு, திருக்கைலாசபதியின் அநுமதிப்படி பிரம 
விட்டுணுக்களை அவருடைய திவ்விய சந்நிதானத்தில் விடுத்தார். அவர்கள் இருவரும் கிருபா சமுத்திரமாகிய 
சிவபெருமானைத் தரிசித்துப் பலமுறை வணங்கித் துதித்து நின்றார்கள்.

    தம்மை மெய்யன்பினோடு வழிபடுபவர்களுக்கெல்லாம் உய்யுந் திறத்தைப் புரிபவரும் முற்றொருங் 
குணரும் முழுமுதற்கடவுளுமாகிய பரமசிவன் விட்டுணுவை நோக்கி, "விட்டுணுவே உன்மேனி வேற்றுருவாகிய
 காரணம் என்னை? என்று வினாவி யருளினார். நீலநிறத்தைக் கொண்ட விட்டுணு மனத்தில் மானம் உண்டாக
 அக்கடவுளை நோக்கிச் சொல்வார்: "எம்பெருமானே, தேவர்களும் அவுணர்களும் நெடுநாள் இறவாமலிருந்து 
போர்செய்ய விரும்பி அதனைப் பிரமாவுக்குச் சொல்ல அவர் அவர்களை அழைத்துக்கொண்டு அடியேனிடத்து 
வந்து சொல்லினார். அடியேன் தேவரீருடைய திருவருளைப் பெறுதல்வேண்டும் என்னும் எண்ணமில்லாதவனாய் 
அமிர்தத்தைப் பெற விரும்பி, அவுணர்களோடும் பிரமா முதலிய தேவர்களோடும் பாற்கடலை அடைந்து
 அதனைக் கடைந்தேன். 

    ஆலாகல விஷம் அக்கினியும் அஞ்சுமாறு சீவராசிகளெல்லாம் இறக்கும்படி அதினின்று மெழுந்துவந்தது. 
யாவரும் பயந்து ஓடினார்கள். அது, முன்னின்ற அடியேனுடைய உடம்பை வேற்றுருவாக்கித் தாக்குதலும், 
அதற்காற்றாதேனாய் அவர்களோடு ஓடிவந்தேன். கருணாநிதியாகிய தேவரீரன்றி அடியேங்களுடைய இடர்கள் 
யாவையும் மாற்றவல்லார் வேறு யாவர். உம்முடைய திருவருளைப் பெறாமற் பாற்கடலைக் கடையச் சென்றமையினால் 
இவ்வாறாகிய துன்பம் வந்தெய்தியது. ஆதலால் உம்முடைய திருவடிகளை அடைந்தோம். விடமானது அக்கினியைப் 
போல அழிக்கும்படி வருகின்றது. வேதங்கள் யாவும் அறிந்து நாடவொண்ணாத பரிபூரணரே, தேவரீர் உமாதேவி 
சமேதராய் இத்தன்மையதாகிய பேரழகு பொருந்திய திருவுருவைக்கொண்டு இங்கே வீற்றிருத்தல் அடியேங்களை 
ஆளுங்காரணமேயன்றி வேறு கருமம் யாது! அக்கினியைப் போலச் சீற்றத்தோடெழுந்த விஷத்தை மாற்றி 
எளியேங்களைத் தேவரீர் அருள்புரியும்" என்று விட்டுணு சொல்லித் துதித்து நின்றார். 

    அப்பொழுது, தேவர்களும் அவுணர்களும் தாம் தாம் முன் நின்ற இடங்களில் நின்றபடி கைலாசபதியைத் 
துதித்தார்கள். அவர் அதனைக் கேட்டு, "இவ்வோசை யாது?' என்று வினாவியருள; பிரமா, "எம்பெருமானே தேவர்களும் 
திக்குப்பாலகர்களும் அவுணர்களும் பிறரும் நஞ்சினால் வருத்தமுற்றுக் கோயிலின் வாயில்கடோறும் வந்து 
குழுமி நின்று தேவரீரைத் தோத்திரஞ் செய்கின்றார்கள். அதுவே இந்த ஓசை" என்று விண்ணப்பஞ் செய்தார். 
மகாதேவர் திருநந்திதேவரைக் குறிப்போடு நோக்கி, "அவர்களை இங்கே அழைத்து வருதி'' என்று அநுமதி செய்தார். 
அவர் வெளியிலே வந்து அவர்கள் யாரையும் கோயிலுட் புகவிடுத்தார். அவர்கள் வந்து கடவுளை வணங்கித் துதித்து, 
"அடியேங்கள் விஷத்தினால் மிகவும் நொந்தோம். விரைவில் அதனை அழித்து எமக்கு அருள்செய்யும்" 
என்று பிரார்த்தித்தார்கள்.

    இவற்றையெல்லாங் கேட்ட திருக்கைலாசபதி உமையம்மையாரை நோக்கி, "இவர்கள் கூறியது உன்மனத்துக் 
கியைவதாமோ? நீ சொல்லுதி" என்று வினாவியருளினார். அவர், "தேவர்கள் உம்மையே சரணென்று வந்தடைந்தார்கள். 
ஆதலால் அவர்களுக்கு விரைந்தருள்புரியும்" என்று கூறினார். அதனைக்கேட்ட கடவுள் மகிழ்ச்சியுற்று, தமது திருமருங்கிலே 
தொண்டுசெய் தொழுகுகின்ற சுந்தரரை நோக்கி, "அந்தக் கொடிய விஷத்தை இங்கே கொண்டு வருதி' என்று கட்டளை 
யிட்டருளினார். சுந்தரர் இனிதென்று அவரை வணங்கிச் சென்று, எங்கும் பரந்த விஷத்தைப் பற்றிக்கொண்டு வந்து 
கொடுத்தார். கடவுள் அதனை ஒரு திவலைபோல் ஒடுங்கத் திருக்கரத்தில் வாங்கி, தேவர்களை நோக்கி,
'இந்த நஞ்சையுண்போமோ? அல்லது தூரத்திற் செல்ல எறிவோமோ?'' என்று வினாவியருளினார். அப்பொழுது 
பிரமா முதலிய தேவர்கள் அவருடைய பாதங்களை வணங்கி நின்று, “எம்பெருமானே தேவரீரன்றி இவ்விஷத்தினைத் 
தாங்கவல்லார் யாவர்! 

    திருக்கரத்தி லேற்றமையால் இது சிறிதுபோலக் காட்டிற்று. கொடுமையையுடைய இதனை இப்பொழுதே 
விடுவீராயின், பின்னும் யாவராயினும் பிழைப்பாரோ! இப்பொழுது ஒருங்கே முடிந்திடாரோ! முதற்பாகமெல்லாம் 
உமக்கேயல்லவா, இது நஞ்சேயாயினும் அடியேங்கள் உய்யும்படி விரைந்து திருவமுது செய்தருளும். இதனையே 
வேண்டுகின்றோம்.' என்று பிரார்த்தித்தார்கள். திருக்கைலாசபதி அவர்களை நோக்கி, "இனி நீவிர் அஞ்சாதொழிமின்" 
என்றருள் புரிந்து, திருக்கரத்திலேந்திய விடத்தை உட்கொள்ள, அது திருமிடற்றிற் சென்றது. அதனை யாவரும் நோக்கி,
எம்பெருமானே, இன்றைக்கு எங்களுயிரை நீர் காத்ததற்குச் சான்றாக இது திருக்கண்டத்தில் நிற்கும்படி அருள் செய்யும்" 
என்று அவரைத் துதிப்பாராயினார். எம்பெருமான் ஒரு நீல ரத்தினாபரணம் போலிருக்கும்படி அவ்விஷத்தைத் 
திருக்கண்டத்தில் நிறுத்தி அருள்செய்தார். அவர்கள் யாவரும் உடனே இறந்து பின் பிறந்தவர்போலச் சொல்லுதற்கரிய 
மகிழ்ச்சியை யடைந்தார்கள்.

    அரிபிரமேந்திராதி தேவர்களைத் திருக்கைலாசபதி திருவருளோடு பார்த்து, பாற்கடலை இன்னுங் கடையுங்கள் 
அமுது எழும் இப்பொழுதே போங்கள்.' என்றநுமதி செய்தார். அவர்கள் யாவரும் அக்கடவுளை வணங்கித் துதித்துப்போய்ப் 
பாற்கடலைக் கடைந்தார்கள். அதினின்றும் அமிர்தமும் மேலாகிய வேறுபல பொருள்களும் தோன்றின. அவற்றைத் 
தேவர்களே பெற்றார்கள். பரமசிவன் ஆலாகல விஷத்தைத் திருவமுது செய்தமையே அவர்களுடைய உயிரைப் 
பாதுகாத்தது. விஷத்தைத் திருவமுது செய்த சிவபெருமான் பின் சங்காரஞ் செய்யுங்காலத்தில் உயிர்களும் அவற்றிற் 
காதாரமாகிய உடல்களும் ஒடுங்கிய இடமன்றோ சுடலையாகும். அந்தச்சுடலையே அக்கடவுள் திருநடனஞ்செய்யுந் 
தானமாம். அது யாவராலும் அறிதற்கருந் தகையது. அதுவுமன்றி எம்பெருமான் மகாசங்காரஞ் செய்யுங்காலத்தில் 
எங்கும் வெளியிடமாய்ச் சுடலையாகும். அந்தச் சுடலையில் உமாதேவியாருந் தாமுமாய் நிற்பர். இது தவறோ! 
அப்பெருமான் கங்கையைத் திருமுடிமேற் சூடிய சரித்திரத்தை இனிச் சொல்வாம். தக்கனே கேட்பாய்.

    முன்னொரு ஞான்று, உமாதேவியார், திருக்கைலாச மலையிலுள்ள சோலையிலே ஒரு விளையாட்டாக 
ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப் பின்புறத்தில் வந்து, அவருடைய இரண்டு கண்களையும் தமது 
திருக்கரங்களாற் பொத்தினார். அதனால் எவ்வுயிர்களும் வருத்தமடையும் படி புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. 
சிவபெருமானுடைய திருக்கண்களினாலேயே எல்லாச் சோதியுந் தழைத்த தன்மையினால், சூரியன் சந்திரன் 
அக்கினி ஆகிய இவர்களின் சுடர்களும் மற்றைத் தேவர்களின் ஒளிகளும் பிற ஒளிகளும் அழிந்து எல்லாம் 
இருண்மயமாயின. அம்மையார் சிவபெருமானுடைய திருக்கண்களைப் பொத்திய அக்கணமொன்றில், 
உயிர்கட்கெல்லாம் எல்லையில்லாத ஊழிகாலங்களாயின. அதனைப் பரமசிவன் நோக்கி, ஆன்மாக்களுக்கு 
அருள்செய்யத் திருவுளங்கொண்டு, தம்முடைய திருநெற்றியிலே ஒரு திருக்கண்ணை யுண்டாக்கி, அதனால் 
அருளோடு நோக்கி, எங்கும் வியாபித்த பேரிருளை மாற்றி, சூரியன் முதலாயினோர்க்கும் சிறந்த 
பேரொளியை ஈந்தார். 

    புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும் நீங்கினமையாற் சீவராசிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. 
பரமசிவனுடைய செய்கையை உமாதேவியார் நோக்கி அச்சமெய்தி, அவருடைய திருக்கண்களை மூடிய இரண்டு 
திருக்கரங்களையும் துண்ணென்று எடுத்தார். எடுக்கும் பொழுது, தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே 
வியர்வை தோன்ற, அதனை உமாதேவியார் பார்த்து, திருக்கரங்களை யுதறினார். அவ்வியர்வை பத்துக்கங்கைகளாய் 
ஆயிர நூறுகோடி முகங்களைப் பொருந்திச் சமுத்திரங்கள்போல எங்கும் பரந்தன. அவற்றை அரிபிரமேந்திராதி 
தேவர்களும் பிறருங்கண்டு, திருக்கைலாச பதியை யடைந்து வணங்கித் துதித்து, எம்பெருமானே இஃதோர் 
சலப்பிரவாகம் எங்குங் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள் முழுதையும் கவர்ந்தது. 

    முன்னாளில் விஷத்தையுண்டு அடியேங்களைக் காத்ததுபோல இதனையுந் தாங்கி எங்களைக் காத்தருளும்" 
என்று வேண்டினார்கள். திருக்கைலாசபதி அந் நதியின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அதனை அங்கே அழைத்து,
 தமது திருச்சடையிலுள்ள ஓர் உரோமத்தின் மீது விடுத்தார். அதனைக் கண்ட பிரமாவும் விஷ்ணுவும் இந்திரனும், 
"எம்பெருமானே, இவ்வண்டங்களை யெல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய உமாதேவியாருடைய 
திருக்கரத்திற் றோன்றினமையாலும், உமது திருச்சடையிற் சேர்த்தமையினாலும், நிரு மலமுடையதாகும். 
அதில் எங்கள் நகரந்தோறும் இருக்கும்படி சிறிது தந்தருளும்" என்று வேண்டினார்கள். 

    பரமசிவன் தம்முடைய திருச்சடையிற் புகுந்திருந்த கங்கையிற் சிறிதை அள்ளி, அம்மூவர்களுடைய 
கைகளிலும் கொடுத்தார். அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி, விடைபெற்றுக்கொண்டு தத்தம் நகர்களை 
யடைந்து அங்கே அவற்றை விடுத்தார்கள். அந்த மூன்று நதிகளுள், பிரமலோகத்தை யடைந்த கங்கை பகீரத 
ராசனுடைய தவத்தினாற் பூமியின் மீண்டுவர, சிவபெருமான் பின்னும் அதனைத் தமது திருமுடிமேற் றாங்கி, 
பின் இப்பூவுலகிற் செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் யாவரும் மேற்கதி பெற்றுய்யும் படி அவர்களுடைய 
எலும்பிற் பாய்ந்து சமுத்திரத்திற் பெருகியது. 

    இதனையொழிந்த மற்றை இரண்டு நதிகளும் தாம் புகுந்த இடங்களில் இருந்தன . நமது அருட்சத்தியாராகிய 
உமையம்மையாருடைய திருக்கரத்திற் றோன்றிய கங்காஜலம் உலகங்களை அழியாவண்ணம் அடக்கிய 
உண்மையை யல்லவா, முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் முன்னாளில் ஒரு பெண்ணைச் சடையிலே தாங்கினார் 
என்று நீ சொல்வது! தக்கனே, இன்னும் அவ்விறைவர் உமாதேவியாரைப் பாகத்தில் வைத்திருப்பார் என்றாய்.
 அவ்வம்மையார் அக்கடவுளுடைய திருவருளே. அவர் எல்லாவற்றையும் படைத்துக் காக்கும் வண்ணம் பின்னமாய், 
தாமோர் பெண்ணுருக் கொண்டு பொருந்துவார். ஆதலால் அவ்வுமாதேவியார் வந்த வரலாற்றைச் சொல்வேன் கேட்பாய்.

    முன்னே ஒரு பிரமா தோன்றியிருந்த காலத்தில், பல உயிர்களையும் படைக்கக் கருதி, முதலிலே சனகர் 
முதலாகிய நான்கு குமாரர்களையும் உண்டாக்கினார். அவர்கள் ஞானத்தையடைந்து நல்ல தவத்தர்களாயினார்கள். 
அதன்பின்பு பிரமாவினுடைய சிருட்டித்தொழில் விருத்தியடையாதாக; அவர் இனிச் செய்வதென்னை என்று 
துன்பமுற்றிரங்கி, சனகர் முதலிய நான்கு குமாரர்களோடும் விட்டுணுவை யடைந்து வணங்கி, தமது குறையைச் 
சொல்லி நின்றார். விட்டுணு அதனைக்கேட்டு, "இக்குறை சிவபெருமானாலன்றி நம்மால் முற்றுப்பெறாது'' 
என்று கூறி, அவர்களோடு திருக்கைலாசமலையை அடைந்து, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, 
"தேவநாயகரே கேட்டருளும். பிரமன் சிருட்டி செய்ய நினைத்தான். அது கைகூடிற்றில்லை. இக்குறையை
 நீக்கியருளும்'' என்று விண்ணப்பஞ்செய்தார். 

    திருக்கைலாசபதி விட்டுணுவையும் பிரமாவையும் சனகர் முதலிய நான்கு முனிவர்களையும் 
நோக்கித் துகளாக அழித்து, ஏகராயிருக்கின்ற தமது இடத்திருப்புயத்தை நோக்க, அதினின்றும் உமாதேவியார் 
தோன்றினார். அவரை இடப்பாகத்தில் இருத்தி, அவரோடு கலந்து வீற்றிருந்து, விட்டுணுவையும் பிரமாவையும் 
சனகாதி நால்வரையும் உண்டாக்கினார். அவர்கள் அக்கடவுளை வணங்கித் துதிப்ப, அவர் விட்டுணுவை 
நோக்கி, "நாம் நமது அருட்சத்தியாகிய உமையோடு சேர்ந்தோம். இனிப் பிரமனுடைய படைத்தற்றொழில் 
முன்போலக் கைகூடும் போவாய்" என்றருளிச் செய்தார். விட்டுணு முதலாகிய அவர்கள் அதனைக் கேட்டு, 
மகிழ்ச்சியுற்று, "யாம் இனி உய்ந்தோம்'' என்று கூறி பரமபிதாவாகிய சிவபெருமானையும் உமாதேவியாரையும் 
மீட்டும் வணங்கி, திருக்கைலாச மலையை நீங்கிப் போயினார்கள். 

    பின்பு பிரமா சீவராசிகளைப் படைப்பாராயினார். பரமசிவன் உமாதேவியாரோடு வீற்றிருந் தருளுதலால்
 ஆண்பெண்ணாகிய இருபால்களும் ஆசையோடு சேர்ந்து இன்பமெய்த, ஆன்மாக்கள் மிகவும் விருத்தியாயின. 
பிரமாவினுடைய படைப்புத் தொழில் நன்றாக நடந்தது. சிவபெருமான் பிரமாவினுடைய படைப்புத் தொழில் 
கைகூடும்படி தம்முடைய அருளையே ஒரு பெண்ணாகத் தந்து, நம்மிடத்து வைத்த திருவருளினால் அச்சத்தியோடு 
வீற்றிருப்பதை நீ அறியாய்,மதியில்லாத தக்கனே,  ஏனைத்தேவர்கள்போல நமது கடவுளையும் நினைத்தாய். 
அங்கப் பிரத்தியங்க சாங்க உபாங்கமாக எங்கும் காணப்படும் வடிவமெல்லாம் சத்தியே; அந்தந்த வடிவச் 
சத்திமயமாகி நிற்பவர் சிவபெருமானாம். இதனை வேதாகமங்கள் சொல்லும். இனி,சத்தியும் சிவமுமாகிய 
அவரிருவரும் ஒரு புத்திரனைப்பெற்ற வரலாற்றைச் சொல்வோம் கேட்குதி.

            திருச்சிற்றம்பலம்.

            கயமுகனுற்பத்திப்படலம்.

    முன்னொரு காலத்திலே, இந்திரன் தேவசேனைகள் சூழச் சென்று, அசுர ராசனாகிய அசுரேந்திரனோடு 
போர்செய்து வென்று, வித்தியாதரர் முதலாயினோர் வாழ்த்த மீண்டு விண்ணுலகத்திற் போயினான். போதலும், 
அவனுக்குப் புறங்கொடுத்த அசுர ராசன் பொறாமையினாற் புழுங்கி, மனம் மிகவாடி, "பாவியேனுக்கு இனிச் 
செய்யத் தகுவது என்னை?'' என்று உன்னி மிகவருந்தி, "அஞ்சும்படி என்னைப்பொருத தேவர்களைப் பொருது 
வெற்றி கொண்டு எனக்கும் அப்புகழைச் சூட்டுதற்கு நம்முடைய குலத்தில் ஒருவரும் இல்லையோ?" என்று கூறி, 
தங்கள் குருவாகிய சுக்கிராசாரியரை அடைந்து வணங்கி, "இந்திரன் தேவர்களோடு வந்து என்னுடன் போர் 
செய்த பொழுது யான் சேனைகளோடு அவனுடன் பொருது அவனுக்குத் தோற்றுப் புறந்தந்தேன்; 

    நம்முடைய மரபிலுள்ள வீரர்கள் யாவரும் இறந்தார்கள்; நாம் மிகவும் மாசடைந்தோம்; துன்பத்தையே 
கரையாகவுடைய பழியென்னும் சமுத்திரத்தில் ஆழ்ந்தோம்; முன்பு நமக்குடைந்த தேவர்கட்கு நாம் இப்பொழுது 
அழிவுற்றோம்; பேராற்றலையிழந்தோம்; அவுணர்கள் அழியுங்காலம் வந்தெய்தியதோ? எனக்கு அதனைச் சொல்லும். 
தங்கீழுள்ளோர் பெருமையிற் பிழைபடுவாராயின், அவர்களைத் தெளிவித்துப் பற்பல உறுதிகளைக் கொளுத்தி 
உயர்ந்த நெறியிற் செலுத்துதல் குருமாருக்குக் கடனாம். அதனை நீரே அறிவீர். ஆதலால் நாம் உய்யுந்திறத்தைச் 
சொல்லும்" என்று கூறினான்.

    அதனைக் கேட்ட சுக்கிராசாரியர் "அரசனே நீ மனவருத்தமடையாதே' என்று அவனைத் தேற்றி, 
மேல்வருவதனைக் கருத்திலுன்னித் தெரிந்து, அவன் மகிழும்படி ஒன்று சொல்வார்: "சிவபத்தியிற் சிறந்தவரும் 
ஐம்புலன்களை வென்றவரும் பிரமதேவருடைய மனத்திலுண்டானவரும் ஆகிய வசிட்டர் என்னும் முனிசிரேட்டர் 
ஒருவர் உளர். அவருடைய மரபில் வந்தவரும் சகலவேதங்களையும் அறிந்தவரும் அறிஞரிலறிஞரும் ஞானநெறியில் 
நிற்போரும் ஆகிய மாகதரென்னும் முனிவர் மோக்ஷத்தையடைதல் வேண்டுமென்னும் விருப்பத்தினாலே 
தவஞ்செய்து கொண்டிருக்கின்றார். 

    அவரிடத்தே ஓரசுர கன்னிகையைப் போய்ச் சேரும்படி அனுப்புவாயாயின், அவள் அம்முனிவரோடு 
புணருங்காலத்தில் யானை முகத்தையுடைய ஒரு பாலகன் உங்களுக்கு அரசனாகப் பிறந்து சிவபெருமானை நோக்கி 
அருந்தவம் புரிவான். பரமசிவன் வந்து அவனுக்கு மேலாகிய செல்வத்தையும் வலிமையையும் கொடுப்பார். 
வரம்பெற்ற அவ்வசுரன் தேவர்களுடைய செல்வங்களை மாற்றி எவ்வுலகங்களையும் ஆளும் அரசனாவான்' 
என்று சொல்லினார். அசுர ராசன் அதனைக் கேட்டு, ஆசாரியருடைய பாதங்களை வணங்கி, "இது நன்று நன்று. 
நீர் பணித்தவாறே செய்வேன்" என்று கூறி, விடைபெற்றுக்கொண்டு விரைவில் மீண்டு தன்னிருக்கையை அடைந்து, 
தன்குலத்திற் பிறந்தவளும் பேரழகிற் சிறந்தவளுமாகிய விபுதை என்னும் அசுர கன்னிகையை அழைத்து, 
''என் அன்னையே, என்சொல்லொன்றைக் கேட்டு என்னுடைய துன்பத்தை நீக்கக் கடவாய்'' என்றான். 

    அது கேட்ட விபுதை "உன் குற்றேவல் செய்யும் அசுரகுலத்திற் பிறந்த யான் உனக்குச் செய்வதென்னை? 
எனக்கிசைந்ததைச் சொல்லுதி செய்வேன்' என்றாள். அசுர ராசன் அவளை நோக்கி, "பெண்ணே உன் 
குலத்தோர்களைத் தேவர்கள் பொருது புறந்தரச்செய்து மீண்டுபோனதை நீயும் அறிவாயல்லவா? அந்தத் 
தேவர்களை வெல்லுதற்கு நங்குலத்தில் ஒருவருமில்லை. அது உன்னால் முடியவேண்டும். அது முடிதற்கேதுவைக் 
கேட்பாய். நீ மேருமலையின் தென்சாரிலே அருந்தவத்தைச் செய்துகொண்டிருக்கின்ற மாகதன் என்னும் 
முனிவன் பாற்சென்று, நீங்குதலின்றிப் பலநாள் அவன் குறிப்பறிந்தொழுகி, நல்ல சமயம் பார்த்து, அவன் 
செய்யுந் தவத்தைச் சிதைத்து, அவனைப் புணர்வாய். புணர்ந்தால், உன்னிடத்தில் ஒரு குமாரன் பிறந்து, 
பூவுலகங்களையும் வானுலகங்களையும் வலிதாகக் கவர்ந்து, வீராதிவீரனாய்ப் பகைவர்களை வென்று, 
எங்கள் துன்பத்தை நீக்குவான். தாயே நான் சொன்னவாறே செய்குதி" என்று கூறினான்.

    அசுரேந்திரனுடைய சொல்லைக் கேட்ட விபுதை மாகத முனிவரிடத்திற்போய், அவருடைய தவவலியை 
நோக்கி, "ஆகொடிது! இவனேயன்றி வேறுயார் இத்தவத்தைச் செய்யவல்லார்! நான் இவனை மயக்கிச் சேர்வது 
எவ்வாறு? சமுத்திரங்க ளெல்லாவற்றையும் உண்ணும்படி ஓங்கி யெழுகின்ற வடவாமுகாக்கினியை மேகந் 
தணிக்க வல்லதோ அது அப்படிச் செய்யவல்ல தென்னின், மன்மதபாணங்களெல்லாம் ஒருங்குசென்று 
இம்முனிவனை வாட்டி இவனுடைய துறவையும் மாற்றும். மிக மேலாகிய தவத்தில் நிற்கும் இம்முனிவன் 
யானே அல்ல,மேனகை என்பாள் வரினும் பார்க்கமாட்டான். 

    நமது அரசன் இதனை அறியான்போலும். அதனாற் றான் இவனைப் போய்ப் புணருதி என்று எனக்குக் 
கற்பித்தான். நான் அதற்கு இசைந்தவாறு நன்று நன்று!' என்று நகைத்து நின்று, "யான் திரும்பிப் போந்தேனாயின், 
பகைவர்களாகிய தேவர்களுக்குத் தோற்று வருந்துகின்ற நம்மரசன் ஏன் வாளா வந்தாயென்று மீளவும் என்னை 
அனுப்புவான். ஆதலால் இந்த முனிவனே என்னிடத்து ஆசை வைத்து வந்து எனக்கு நாயகனாகும்படி தவஞ்செய்து 
இவனுடைய அமயத்தையும் பார்ப்பேன்" என்று எண்ணி, தம்மை நம்பி வந்தடைந்தோர்க் கருள் புரிகின்ற 
திருக்கைலாசபதியினுடைய திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டு, மாகத முனிவருக் கெதிரேநின்று, 
நெடுங்காலம் அருந்தவத்தைச் செய்தாள். அநேக காலம் கழிந்தது.

    விபுதை செய்த தவத்தினாலும் வரன்முறை தவறாத ஊழினாலும் அங்கே ஒரு களிற்றியானை 
பெண்யானையோடு புணர; அதனை மாகத முனிவர் ஆசைமிகும்படி பலகாலும் நோக்கி, மந்திரச்செயலை 
மறந்து, முன்பு மனத்திற்கொண்ட பொருளை வாளாவிட்டு, காமவலையிற் சிக்கிச் சோர்ந்து, இறந்தவர் 
போல மயங்கி, உயிரொன்றை மாத்திரம் சுமந்து, "இத்தன்மையாகிய ஒரு புணர்ச்சியை இன்றைக்கு 
யான்பெறுவேனாயின் பிறவிப் பயனை அடைந்தவனாவேன்" என்று கூறி, முன்செய்த தவக்குறைக்கு 
இரங்கி, இதனால் எனக்குப் பழியே நிலைபெறுமாயினும் இன்னும் காலநீட்டிக்குமாயின் காமநோய் 
தின்று என்னுயிரைக் கொல்லும், ஐயோ இனிச் செய்வதென்னை?" என்று மனத்தோடுசாவி, விஷந் 
தலைக்கொண்டாற் போல வருத்துகின்ற காமாக்கினி சிறிதும் தணிதலின்றித் தம்முயிரையலைக்க,

     "இனி நம்மாலாவதென்! உயிரோடிருந்தாற் பின்னும் தவத்தைச் செய்யலாம். உயிர் நீங்கினாற் 
பயன்யாது?'' என்று புணர்ச்சியின்மேல் மனம்வைத்து, தவத்தை விடுத்து, விபுதையினிடத்திற் 
போதற்கெண்ணினார். அப்பொழுது அவள் மாகதமுனிவர் காமத்தினால் வருத்தமுறுவதையும் 
பிறவற்றையும் பார்த்து, நமதெண்ணம் முழுதும் முடிந்ததென்று எல்லையில்லாத மகிழ்ச்சியடைந்து,
 "இதுவே அதற்குத் தக்க காலமும் இடமும்; இதற்கு வேறு தீங்கில்லை. இந்தப் புணர்ச்சியைத் தவமே 
முற்றுவித்தது' என்று மிகவிரைந்தெழுந்து அம்முனிவரை யணுகி, அவருக்கு அன்புண்டாகும்படி 
அவருடைய பாதங்களை வணங்கி நின்றாள். 

    முனிவர் அவளுடைய உறுப்புக்கள் எல்லாவற்றையும் நோக்கி, பின்னும் ஆசை அதிகப் படப் 
பித்தர்போல மயங்கி, "இவள் கன்னிகையும் காந்தருவ மணத்திற் குரியளும் ஆனாலன்றோ என்னுயிர் உய்யும்'' 
என்றெண்ணி, "நீ யார் கன்னிகையோ?'' என்று வினாவினார். அவள் "அவ்வாறேயாம்' என்றாள். முனிவர் 
நீ "நம்மிடத்து வந்த காரணம் என்னை? விரைந்து கூறுதி" என்றார். அவள் "முனிவரே நீர் எனக்குக் கணவனாகும்படி 
பலநாட் பெருந்தவஞ் செய்தேன். இன்று அது முற்றுப்பெறுதலால் உம்மைத் தழுவும்படி வந்தேன்" என்றாள். 

    முனிவர், சிறிதும் வருத்தமின்றி அமிர்தத்தைப் பெற்ற மனிதர்களைப் போல மகிழ்ச்சியுற்று, 
"உன்பொருட்டாக நான் பல நாட்செய்த பெருந்தவமும் என்பொருட்டாக நீ பலநாட்செய்த பெருந்தவமுமன்றோ 
எங்களிருவரையும் இங்கே அன்புறக் கூட்டியது. நாமிருவேமும் யானையினுருவெடுத்துக் கூடி இன்புறுதல் 
வேண்டும். நீ பிடியினுருவைக் கொள்ளுதி" என்றார். அவளும் பெண்யானையாய்த் தோன்றிப் பின்னும் 
அளவில்லாத ஆசையை மூட்ட; அம்முனிவரும் களிற்றியானையாகித் துதிக்கையை நீட்டித் தழுவி இன்ப 
நுகர்ந்து ஆசை நீங்கினார். 

    அப்பொழுது, பிரமா முதலிய தேவர்களுடைய நித்திய கருமானுஷ்டானங்களைக் கெடுக்கும் வண்ணம் 
கயமுகனென்னும் அவுணன் உதித்தான். அவன் கேடகத்தையும் வாளையும் சுழற்றிப் பூமியைச் சூழ்ந்து, 
மலைகள் துகளாகும் வண்ணம் கால்களை உந்தி எற்றி, இடியும் அஞ்ச ஆர்த்து, கோபம் மிகுந்து,ஆலாகல 
விஷம்போலத் திரிந்தான். விபுதையாகிய பிடி யானையின் அளவில்லாத உரோமங்களினின்றும் அநேக 
அவுணவீரர்கள் கையிற் படைகளோடு தோன்றினார்கள். கயமுகாசுரன் அந்தச் சேனைகளோடு கூடி ஆரவாரித்தான். 
தாயுந் தந்தையும் அவர்களைக் கண்டு பயந்து ஓடி, முன்னையுருவங்களைக் கொண்டார்கள்.

    மாகதமுனிவர் முன்னுணர்வு தோன்ற நின்றிரங்கி ஏங்கி, ஊழ்முறையை நினைந்து வருந்தி, தன்முன் 
நின்ற விபுதையைக் கோபித்துப் பார்த்து,''நீ எக்குலத்தில் வந்தாய்? நினைத்தது யாது? சொல்லுதி" என்றார். 
அவள் தன்குலத்தையும் வந்த செய்கையையும் சொல்லி நின்றாள். முனிவர் அவ்வரலாற்றை அறிந்து, 
"பூமியிலுள்ள சராசரங்களுக்கும், மேலோராகிய தேவர் குழுவுக்கும் யானே துன்பத்தை உறுவித்தேன்'' என்று 
அக்கினியிற்பட்ட தளிர்போல வாடி, துன்பக்கடலுள் ஆழ்ந்து, சிறிதுபொழுது இரங்கி, பின் ஒருவாறு தேறி, 
"பெண்ணே,நும்மரசனாகிய அசுரேந்திரனுடைய மெலிவும், உன்னெண்ணமும், மோக்ஷத்தையடைந்துய்யும்படி 
யான் பலநாட் செய்த தவமும், பூவுலகமும், விண்ணுலகமும் முடிந்தனவே. இனி நீ விரைந்து போகுதி" என்றார். 
அவள் அம்முனிவரை வணங்கிச் சென்று, அசுரேந்திரனை அடைந்து, நிகழ்ந்தனவற்றை யெல்லாஞ் சொன்னாள். 
அவன் எல்லையில்லாத மகிழ்ச்சியுற்றிருந்தான். மாகத முனிவர் முன்போலத் தவஞ்செய்யப் போயினார்.

    கயமுகாசுரன் அவுணசேனைகளோடும் எல்லாத் தேசங்களிலும் சென்று, மனிதர் முதலாகிய உயிர்களை 
வாரியுண்டு, இரத்தத்தைப் பருகி திரிவானாயினான். கயமுகனும் அவனைச் சூழ்ந்த சேனைகளும் இவ்வாறாக 
நாடோறும் பல உயிர்களைக் கவர்ந்து உண்ணுதலால் அவைகள் அழிந்தன. முனிவர்களும் தேவர்களும் வருந்தினர். 
வேதாசாரம் இறந்தது. கயமுகாசுரனுடைய இயற்கைகளை அசுரேந்திரன் அறிந்து, குருவாகிய சுக்கிராச்சாரியரை 
அவனிடத் தனுப்பினான். அவர்போய், கயமுகனை நோக்கி, "யான் உங்கள் குலத்துக்குக் குருவாயுள்ளேன். 
வேதங்களின் நுண்பொருள்களை அறிந்துள்ளேன். வெள்ளியென்னும் பெயரினேன். உங்கள் குலத்தரசனும் 
சிங்கம்போன்ற வலியை யுடையனுமாகிய அசுரேந்திரன் அனுப்ப உனக்கேற்ற சன்மார்க்கங்களை உபதேசிக்கும்படி
 இங்குவந்தேன்" என்ற அன்போடு கூறினார். 

    கயமுகாசுரன் கேட்டு, அவருடைய பாதங்களை வணங்கி, "நம் குலத்தோர்க்கெல்லாம் குருவாகிய நீர் 
அருளினாலே அடியேனுக்கு உறுதியைப் போதிக்கின்றீர். இதனினுஞ் சிறந்ததாகப் பெறும் பேறொன்றுளதோ' 
என்று கூறினான். அப்பொழுது, அவனைச் சூழ்ந்த அவுணர்கள் யாவரும் மனத்துக்கொண்ட தீவினைகளை நீக்கி, 
நம்மரசருடைய ஆசாரியர் இவர் என்று வெள்ளியினுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள்.
குருவாகிய வெள்ளி கயமுகாசுரனுடைய முகத்தை நோக்கி சிவபெருமானுடைய திருவருளால் இவ்வாறு 
சொல்லுகின்றார்: 

    "நீ உயர்ந்த தவத்தைச் செய்கின்றிலை; சிவபெருமானை யுணர்கின்றிலை; பகைவருடைய 
மாயங்களையும் வெற்றியையும் சீரையும் வலிமையையும் சிறிதும் தேர்கின்றிலை; இவ்வுடலம் 
நில்லாதென்பதையுங் கருதுகின்றிலை; பலநாள்கள் வாளா கழிந்துவிட்டன. மதியில்லாதவனே நீ 
என்னத்தைச் செய்தாய் காம முதலாகிய பகைகளை வென்று தவஞ்செய்து சிறந்த வலிமையைப் 
பெற்று உன்பகைவர்களாகிய தேவர்களைச் செயித்துப் பழைய செல்வங்களை யடைந்தாயில்லை; 
இம்மையிலே இன்பத்தையும் புகழையும் இழக்கின்றாய் : கழிந்த பிறப்பிலும் இன்பமென்பதை 
அடைந்திலை . வருபிறப்பிலும் அதனை நீங்கினைபோலும். 

    ஆயின், பின்னை எப்பிறப்பிலே இன்பம் அநுபவிக்க இருக்கின்றாய்! ஆக்கமும், வலிமையும், 
சிறப்பும், ஆயுளும், அழகும், ஊக்கமும், மோக்ஷமும் ஆகிய இவைகளெல்லாம் தவங்காரணமாக 
உண்டாவனவன்றோ?வீணே கழிந்த இந்நாள்காறும் அத்தவத்தினைச் செய்யாது அப்பேறுகளையெல்லாம் 
நீ இழப்பதென்னையோ? தருமம்,வித்தை சந்ததி, கீர்த்தி, வலி, வெற்றி, திரவியம், பெருமை, இன்பம், 
விரதம், சீலம், ஞானம் ஆகிய இவைகளெல்லாம் யமன் நம்மை அழைக்குங் காலத்தில் நினைத்தால் 
வந்துகூடுமோ? யமனாகிய வலைஞன் காலமென்னும் வலையை வீசி, பூமியென்னுந் தடாகத்திலுள்ள 
உயிர்களாகிய மீன்களை வாரி, முன்னமே இழுத்துக்கொண்டு நின்றான். 

    அவைகள் வாழ்நாண் முடிவென்னுங் கரையைச் சேரும்பொழுது அவனுடைய கையிலகப்பட்டு 
மெலிவோடிறக்கும். இவ்வுடம்பு பெறுதற்கரிய தென்பதனை அறிந்திலை; அதில் இவ்வுயிர் நிலைத்து 
நில்லாதென்பதனையும் அறிந்திலை; இவ்வியல்புடைய உயிர் இவ்வுடம்பினுட் பலநாட்டங்கி யிருக்கவேண்டும் 
என்பதனையும் நினைத்திலை; பூமியிலுள்ள உயிர்களை இறக்கும்படி உண்டிருப்பது தானா நீ பிறந்து 
பெறும்பயன். உனக்கு மந்திரமுமில்லை, மாயமுமில்லை, ஒரு வரமுமில்லை, உபாயமுமில்லை, 
பெரியோர் தருகின்ற படைகளொன்றுமில்லை. தேவர்கள் யாவரும் சேனைகளாய்ச் சூழ இந்திரன் 
உன்மேற்போருக்கு வந்தால் நீ என்னசெய்வாய்? 

    பரிசம், ரசம், கந்தம் ஆகிய சிறுபயன்களை விரும்பி, பகைவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளை யறிகிலவாய், 
அவற்றில் அகப்படுகின்ற யானையும் மீனும் அசுணமும் போல, உன் பகைவர்களுடைய சூழ்ச்சியில் இப்பொழுதே 
நீ அகப்படுகின்றாய். வலிமையுஞ் சீரும் மேன்மையுமின்றி இருந்தாய். ஆதலினால் இனி எவர்க்கும் மேலோராகிய 
பரமசிவனைத் தியானித்து மிகப்பெருந் தவத்தைச் செய்குதி. அவர் நீ கேட்ட பலவரங்களையும் தருவார். 
அதன்பின் தேவர்கள் உன் குற்றேவலைச் செய்வார்கள்.  நீ உலகங்களுக்கெல்லாம் ஒரு பெரிய அரசனாயிருப்பாய்' 
என்று சுக்கிராசாரியர் கூறினார்.

    இவற்றைக் கேட்ட கயமுகாசுரன் அவரைக் கைதொழுது, "முன்னே இவற்றை யாவரேனும் எனக்குச் 
சொன்னாரில்லை. யானும் இவற்றைச் செய்ய அறிந்திலேன். இனி நீர் கூறியபடி தவத்தைச் செய்கின்றேன். 
அதனைச் செய்யுந் தன்மையைச் சொல்லியருளும்" என்றான். குருவாகிய வெள்ளி அறிவடங்குதற்கேற்ற 
மந்திரங்களையும் தந்திரங்களையும் அங்க நியாச கரநியாசங்களையும் சங்கற்பத்தையும் 
புறக்காவல்களையும் விரதவிதிகளையும் மற்றைக் கருமங்களையும் அவனுக்கு உபதேசித்து, 
"மேருமலையிலே தவஞ்செய்யச் செல்லுதி" என்றார். கயமுகாசுரன் அவுணர்களோடு அவருடைய 
பாதங்களை வணங்கி, "அங்ஙனஞ் செய்கின்றேன்" என்று கூறி, விடைபெற்றுக்கொண்டு, தவஞ் 
செய்யும்படி சென்றான். 

    அசுரகுரு அவன் இரண்டு காததூரம் செல்லுமளவும் நின்று பார்த்து, "இனி இவன் தவஞ்செய்யப் 
போவான்" என்று மகிழ்ந்து, மீண்டுபோய் அவுணர்களுடைய நகரத்தை அடைந்து, தன்னெதிரே வந்த 
அசுரேந்திரனுக்கு நிகழ்ந்தனவற்றையெல்லாம் சொல்லினார். அவன் "இக்காலந்தானன்றோ 
நமக்கருள் செய்தீர்" என்று கூறி, அவரைத் துதித்து வணங்கி, அநுமதிபெற்றுக் கொண்டு, முன்போலத் 
தன்னகரிற் போயிருந்தான். இந்திரனுந் தேவர்களும் இவற்றையறிந்து துன்பமுற்றார்கள்.

    சுக்கிராசாரியருடைய உபதேசத்தினாலே முன்னையியற்கை மாறித் திருத்தமுற்ற கயமுகாசுரன், 
அவர் கூறியவைகளை மனத்துட்கொண்டு, அவுணர்களோடு தவம் புரியும்படி மேருவி னோர்சாரிற் போய், 
தவத்திற்கு வேண்டு முபகரணங்களெல்லாவற்றையும் வருவித்து, ஸ்நானஞ்செய்து சந்தியாவந்தன முடித்து, 
பிராயச் சித்தஞ் செய்து, குருவின் உபதேசப்படி  ஐம்புலன்களை அடக்கி, காம முதலிய குற்றங்களை நீக்கி, 
ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைப் பிரணவத்தோடு செபித்து, அறிவுக்கறிவாயும் உயிர்க்குயிராயும் பரம்பொருளாயும் 
நிருமலராயும் சர்வாந்தரியாமியாயு மிருக்கின்ற பரமசிவனுடைய திருவடிகளைத் துதித்து, அவருடைய 
திருவுருவைத் தியானித்து, ஆயிரம் வருஷம் புற்களையும் இலைகளையும் நுகர்ந்தும், ஆயிரம் வருஷம் சிறிது 
சலத்தைப் பருகியும், ஆயிரம் வருஷம் வாயுவை நுகர்ந்தும் இங்ஙனம் மூவாயிரம் வருஷம் தவஞ்செய்து, 
பின்பு பிராணவாயுவை யெழுப்பி மூலாக்கினியைச் சுவாலிப்பித்து விந்துத்தானத்திலுள்ள அமிர்தத்தைப் 
பருகுவானாயினான். 

    இவ்வாறு கயமுகாசுரன் தவஞ்செய்தலைத் தேவர்கள் கண்டு மனம் வருந்தி,"மிக்க வலியையுடைய 
இவ்வசுரன் இத்தவத்தைச் செய்து முடிப்பானாயின் அண்டங்களையும் புவனங்களையும் அழிப்பானே' என்று 
நினைத்து, இந்திரனுக்குச் சொன்னார்கள். இந்திரன் அதனைக் கேட்டு, அயர்ந்து, "நம்முடைய வீரச்சொல்லும் 
வெற்றியும் ஆண்மையும் மாறினவோ" என்று மனம் மறுகி வாடி இரங்கிப் பொருமி உயிர்த்து அச்சங்கொண்டு, 
இறந்தவன்போன்று ஒடுங்கி உளங்குலைந்தான். அவன் அடைந்த துன்பச் செயலைச் சொல்ல முடியுமோ! கயமுகாசுரன்
அந்நாள்காறும் பரமசிவனைக் காணப்பெறாதவனாய், தன் குருவின் பணியினால் அக்கினியில் நின்று தவஞ்செய்ய 
நினைத்து, நாற்புறத்திலும் நான்கு அக்கினிசூழ நடுவிலுள்ள ஒரு பெரிய அக்கினியிற் காலைவைத்துப் பஞ்சாக்கினி 
மத்தியிலே நின்று, பதினாயிரவருஷந் தவஞ்செய்தான். 

    சிவபெருமான் அவனுடைய தவத்தை வியந்து நோக்கி அருள்செய்தார். கயமுகன் இவ்வாறாகத் 
தவஞ்செய்தபொழுது, அவனுடைய உடல் நெருப்பிற் காய்ந்த  இரும்புபோல மாசுநீங்கிப் பொன்னினும் மணியினும் 
பொலிந்து பிரகாசித்து, வைர ரத்தினத்தின் வலியையும் பெற்றது. அவனுடைய தவத்தைக்கண்ட அவுணர்கள்
"நம்முடைய குலாசாரந் தவறாவண்ணம் பாதுகாக்கும்படி வந்த இவனுடைய பெருமையும் தவத்தின் றிட்பமும்
சொல்லற்பாலவோ, இவன் மீது பூக்களைத் தூவுவோம்" என்று கூறி நறுமலர்களைத் தூவி, உபசாரங்களைச் 
சொல்லிப் புகழ்ந்து ஆசிர்வதித்து, தேவர்களுடைய துன்பத்தை நோக்கி அவர்களை ஏசினார்கள். 
பிரமா கயமுகாசுரனுடைய தவத்தை ஞானத்தாலறிந்து தலையையசைத்தார். தேவர்கள் நடுங்கினார்கள்.

    இவ்வாறாகக் கயமுகாசுரன் அருந்தவத்தைச் செய்யும்பொழுது, பரமசிவன் அதனைப் பார்த்து, 
இடபவாகனாரூடராய் அவனுக்கு முன்னே வந்து வெளிப்பட்டருளினார். கயமுகாசுரன் அவரைக் கண்டு, தவத்தை
விடுத்து, அன்போடு சிரசின்மேற் கைகளைக் கூப்பி நமஸ்கரித்து எழுந்து நின்று தோத்திரஞ் செய்தான். 
அப்பொழுது சிவபெருமான், "கயமுகனே, நீ இந்நாள்காறும் செய்த தவத்தினால் வருந்தினாய். இனி வேண்டும்
வரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்' என்று சொல்லியருள, அவன் சொல்வானாயினான்: 

    "எம்பெருமானே, அரிபிரமேந்திராதிதேவர்களும் மற்றை யாவரும் என்னோடு போரில் 
வந்தெதிர்ப்பாராயின், அவர்கள் யாவரும் எனக்குப் புறந்தரும்படி அருள்செய்தல்வேண்டும்; எற்றுவன எறிவன 
அறுப்பன எய்வன குற்றுவன முதலாகிய படைகள் யாவும் ஒருங்கே வந்தாலும் அவற்றால் யான் 
இறவாதிருக்கும்வண்ணம் பெருவலியைத் தந்தருளுதல் வேண்டும்; தேவர்களாலும் மனுடர்களாலும் 
மற்றையோர்களாலும் விலங்குகளினாலும் யான் இறவாதிருத்தல் வேண்டும்; ஒருவன் எனக்கு நிகராகி 
வந்து போர்செய்யினும் அவனுடைய ஆயுதங்களாலும் அழியாவண்ணம் செய்தல்வேண்டும்; தேவர்களும் 
முனிவர்களும் பிறரும் வசிக்கின்ற எல்லாவுலகங்களிலும் என்னுடைய ஆஞ்ஞா சக்கரமும் செங்கோலும் 
செல்லும்படி அடியேன் அரசியற்றல்வேண்டும்: அன்றியும், இன்னும் ஒன்றுளது,அடியேன் பிறருடைய சூழ்ச்சியால் 
இறந்தாலும் பிறவியுட் புகாதிருத்தல் வேண்டும்'' என்று கயமுகாசுரன் பிரார்த்தித்தான். 

    தம்மை நோக்கித் தவஞ்செய்தவர்க்கு எவ்வரங்களையும் ஈந்தருளும் கருணாநிதியாகிய கடவுள் 
"நன்று, அவற்றைப் பெற்றுக் கொள்வாய்'' என்று அவனுக்கு அவ்வரங்களைக் கொடுத்து மறைந்தருளினார். 
கயமுகாசுரன் ஆயுதங்களையும் மற்றை வரங்களையும் பெற்று, தன்கிளைகள் யாவும் சூழ நின்றான். 
அவனைக் கண்ட தேவர்கள் 'உவன் மற்றோர் கயமுகாசுரன்' என்று மயங்கினார்கள். அவன், மழையின்மையால் 
வேரோடு வாடிநின்ற காழ்ப்பையுடைய பெரிய விருக்ஷம் மழைக்காலத்திற் றழைத்தாற்போலத் தோன்றி, 
அற்புதமெய்தி உடல் புளகித்து, களிப்பின் மிகுந்து, சிவபெருமானுடைய கிருபை வெள்ளத்துள் மூழ்குவானாயினான். 
அச்சமயத்தில், அசுரேந்திரனும் குருவாகிய வெள்ளியும் அதனை அறிந்து, கயமுகாசுரனை வந்தடைந்து, 
"வெற்றியுண்டாகுக" என்று பல ஆசிகளைக் கூறினார்கள்.

    வரம்பெற்ற கயமுகன் இந்திரனையும் மற்றைத் தேவர்களையும் வென்று  மீண்டு பூமியில்வந்து, 
 அசுரத் தச்சனை நோக்கி, "இந்தச் சம்புத்தீவின் தென்றிசையிலே யான் வசித்தற்கு ஒரு நகரத்தைச் செய்வாய்'' 
என்று கூறினான். அவன் அங்கே ஒரு நகரத்தை வகுத்து, அதில் ஒரு கோயிலையும் அதில் ஒரு சிங்காசனத்தையும் 
மனத்தாற் செய்தான். அவற்றைக் குருவாகிய வெள்ளி பார்த்து மகிழ்ந்து, அந்நகர்க்கு மதங்கமாபுரமென்று 
பெயரிட்டார். கயமுகன் பத்துக்காத நீளமும் ஐந்துகாத அகலமுமுள்ள அந்நகரத்தின் வீதியை நோக்கி, 
ஆச்சரியமுற்று, அரக்கர்களும் அவுணர்களும் அசுரேந்திரனும் ஆகிய இவர்களோடு அந்நகருட் பிரவேசித்து, 
தன்றம்பியர்களாகிய அசுரர்களையும் மற்றையோரையும் அந்நகரிலிருக்கவைத்து, மங்கலங்களோடு தான் 
கோயிலுட்புகுந்து, சிங்காசனத்தின்மீது வீற்றிருந்தான். 

    அதன்பின் அசுரேந்திரனுடைய மகளாகிய விசித்திரகாந்தி என்பவளை நல்லநாளிலே விவாகஞ்செய்து, 
அரம்பையர்கள் அசுரப்பெண்கள் நாககன்னியர்கள் வித்தியாதர மகளிர்கள் முதலிய  பலரை மணஞ்செய்து, 
தேவர்கள் அசுரர்கள் முதலாயினோர் வந்து வணங்கவும், ஏழுலகங்களிலும் தன் கொடுங்கோலும் ஆஞ்ஞா சக்கரமுஞ்
செல்லவும், காமதேனுவும் சங்கநிதி பதுமநிதிகளும் ஐந்தருவும் சிந்தாமணியும் பிரமா முதலிய தேவர்களும் 
ஏவல் செய்யவும், அரசு செய்திருந்தான். சுக்கிராசாரியரும் அசுரேந்திரனும் அவனுக்கு மந்திரிகளாயிருந்தார்கள்.

    கயமுகாசுரன் இவ்வாறு அரசியற்றி வருங் காலத்தில் ஒருநாள், தன் முன்வரும் இந்திரன் முதலாகிய 
தேவர்களை நோக்கி, "நீவிர் நாடோறும் நம்முன் வரும்பொழுதெல்லாம் உங்கள் கைகளாற் சிரங்களில் மும்முறை குட்டி, 
பின் அக்கைகள் எதிரெதிராகக் காதுகளைப் பற்றக் கால்களாற் றாழ்ந்தெழுந்து, அதன்பின் நமது பணிகளைச் 
செய்யுங்கள்" என்றான். அதனைக்கேட்ட இந்திரனும் தேவர்களும் மறுத்தற்கஞ்சி, முன்பு நின்று அவன் சொன்னபடியே 
அப்புன்றொழிலையும் அவன்பணித்த பிற பணிகளையும் நாடோறும் செய்து பழியின் மூழ்கினார்கள். இவ்வாறு 
வருத்தமுற்ற இந்திரன், பிரமவிட்டுணுக்களுக்குத் தன்றுயரைச் சொல்லியிரங்கினான். அவர்கள் 'இந்திரனே நீ 
வருந்தாதொழி" என்று தெளிவித்து, இந்திரனுந் தேவர்களுந் தம்மைச் சூழத் திருக்கைலாசமலைக்குச் சென்று, 
அங்கே திருநந்திதேவர் கோயிலினுள் விடுப்பப் போய், சிவபெருமானைத் தரிசித்து அவருடைய திருவடிகளை 
வணங்கித் துதித்தார்கள். 

    அவர் விட்டுணுவை நோக்கி, "நீ தேவர்களோடு துன்பமுற்று இங்கேவந்த காரணமென்னை" என்று 
வினாவியருளினார். விட்டுணு திருக்கைலாசபதியை நோக்கி, "எம் பெருமானே, கயமுகனென்னும் ஓரசுரன் 
தவஞ்செய்து பெற்ற வலியினாலே தேவர்கள் யாவரையும் வருத்துகின்றான். அவனுடைய வலியை
நீக்குதல் எங்களுக்கரியது. எவர்க்கும் மேலோராகிய கடவுளே உமக்கு அஃதோர் பொருளன்று. ஆதலால் நீர் 
அவனுடைய உயிரைத் தொலைத்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பஞ் செய்தார். சிவபெருமான் அதனைக் 
கேட்டு, "யாம் இனி ஒரு புதல்வனைப்பெற்று, கயமுகாசுரனைக் கொன்று வெற்றிகொண்டு வரும்படி 
அனுப்புவோம்'' என்றருளிச் செய்தார். 

    விட்டுணு முதலிய தேவர்கள் அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு, தொழுத கையினராய் 
ஆடிப்பாடினார்கள். அத்தேவர்களைத் திருக்கைலாசபதி அன்போடு நோக்கியருளி, "இனி உங்கள் பதிகளுக்குச் 
செல்லுங்கள்"  என்று விடைகொடுப்ப, அவர்கள் வணங்கி விடைபெற்றுக்கொண்டு போயினார்கள்.
தேவர்கள் போயபின்பு, சிவபெருமான் உலகமாதாவாகிய உமா தேவியாரை நோக்கி, "நாம் செய்வித்த 
நந்தனவனத்தைப் பார்ப்போம் வருதி" என்றார். உமாதேவியாரும் "ஆந்தன்மையை அருளிச்செய்தீர், 
நந்தனவனத்துக்கு வருவேன்'' என்று கூறினார். வேதப்பொருளாயுள்ள கடவுள் உலகமாதாவாகிய 
தேவியாரோடு மிகுந்த பேரழகுடைய அந்நந்தனவனத்துக்குப் போய், அதனியல்புகளை அவரோடு 
கண்ணுற்று, ஓவியங்களையுடைய ஒரு மண்டபத்திற் சென்றார். 

    உமாதேவியார் அதிலுள்ள ஓவியங்களின் அழகுகளெல்லாவற்றையும் ஐம்புலன்களும் ஒருவழிப்படத் 
திருக்கண்களாற் பார்த்தார். பக்கத்தில் வருகின்ற சிவபெருமானுடைய ஆணையினாலே அம்மண்டபத்தினடுவே 
பிரணவ எழுத்து இரண்டுருவாய் யானைகளின் வடிவாய்த் தோன்றி, உமாதேவியார் காணும்படி புணர்ச்சியில் 
முயன்றன. அதனை அத்தேவியார் கண்ணுற்று, இஃதென்னையென்று எண்ணி, சிவபெருமானை வணங்கி, 
"பிரணவவெழுத்து யானை வடிவாய்ப் புணர்ச்சி செய்வதென்னை?' என்று வினாவினார். சிவபெருமான் அவரை 
நோக்கி, "உமையே கேட்பாய். எவற்றிற்கும் மூலமாகிய பெருமைபொருந்திய பிரணவவெழுத்தானது நீ முன்பு 
இச்சித்துப் பார்த்தமையினால் இரண்டாகி யானையினுருவு கொண்டு புணருகின்றது. ஆகையால் உன்னுடைய 
பெருந்தகைமையை நீயும் அறியாய். காட்சிமாத்திரத்தால் இதனைச் செய்தற்குக் காரணமாயுள்ள உன்னுடைய 
மாட்சிமையை யாமன்றி வேறியாவர் அறியவல்லார்! உன்னுடைய திருவருட்செய்கை வேதங்களுக்கும் எட்டாததாகும்" 
என்று முகமனாகச் சொல்லியருளினார். அந்த யானைகளிரண்டும் நிருமலமாகிய தமது புணர்ச்சியை விட்டு 
முன் போலப் பிரணவ சொரூபமாயின.

    அப்பொழுது, ஐந்து கரங்களையும் மூன்று கண்களையும் தொங்குகின்ற வாயினையும் சந்திரனைத் தரித்த 
செவ்வானம்போலுஞ் சடையினையும் மும்மதங்களையும் யானை வதனத்தையுமுடைய ஒரு பாலகர் தோன்றியருளினார். 
அவர் மெய்யன்போடு தியானிக்கின்ற அன்பர்களுடைய அறிவுக்கறிவாயுள்ளவர்; எங்கும் வியாபித்திருப்பவர்; 
யாவராலும் அறியப் படாதவர்; எவராலும் வணங்கப்படும் இயல்பினர்; சிவபெருமான் இருவர் என்று சொல்லும்படி 
நின்றருள் செய்பவர்; நான்கு வேதப்பொருளா யுள்ளவர்; உலகிலுள்ளோருடைய அஞ்ஞானத்தையும் மனத் 
துன்பங்களையும் நீக்குதற்காக ஓர் அருளுருக்கொண் டவதரித்தவர். இவ்வியல்புடைய அப்பாலகர் வந்து, 
சிவபெருமான் உமாதேவியார் ஆகிய இருவருடைய திருவடிகளில் மெய்யன்போடு நமஸ்கரித்தார்.

     இருமுது குரவர்களாகிய அவர்கள் அவரை எடுத்துத் தழுவி மார்போடணைத்துக் கருணை செய்து நோக்கி, 
'யாவரேயாயினும் யாதொரு கருமத்தைச் செய்யத் தொடங்குதற்குமுன் அது இடையூறின்றி முடிவுபெறவேண்டும் 
என்று உன்னை வழிபடுவாராயின், அவர் கருத்தின்படி அதனை முற்றுப் பெறச் செய்குதி; உன்னை முன்பு 
வழிபடாமற் செய்வோருடைய கருமங்களுக்கு இடையூறு செய்குதி. பிரமா விட்டுணு முதலிய தேவர்களுக்கும் 
மற்றை ஆன்மாக்களுக்கும் நம்முடைய பூதகணங்களுக்கும் பிறருக்கும் அருளோடு நாயகனாயிருக்குதி. 
கயமுகன் என்னும் அசுரனை வதைத்து விட்டுணுவினுடைய சாபத்தையும் நீக்கிவருதி'' என்று அருளிச்செய்து, 
அவருக்குச் சேனைகளாகப் பூதர்களை உண்டாக்கிக் கொடுத்து, உமாதேவியாரோடும் விநாயகக்கடவுளோடும் 
சோலையை நீங்கித் திருக்கைலாசமலைக்குப் போய், விநாயகக் கடவுளை நோக்கி, " நீ நம்முடைய கோபுரவாயிலிலே
 நாயகனாயிருக்குதி" என்று அன்போடு அவரை அங்கே யிருத்தி, தாம் உமாதேவியாரோடு கோயிலினுட்போய் 
வீற்றிருந்தருளினார். 

    விநாயகக்கடவுள் கோயிலின் வாயிலிற்போய், பூதசேனைகள் யாவும் நெருங்கிச் சூழவும், திருநந்திதேவர் 
வந்து வந்தனை செய்யவும், பிரமா முதலிய தேவர்கள் வந்து வந்து வணங்கவும், மகிழ்வோடு வீற்றிருந்தார். அதன்பின் 
ஒருநாள், விட்டுணு சிவபெருமானைத் தரிசிக்கும்படி திருக்கைலாச மலைக்குப்போய்க் கோயிலின்முன்பு அணுகி, 
திருநந்திதேவர் சிவபெருமானுடைய அனுமதிப்படி உள்ளே விடுப்பச்சென்று, அவருடைய திருவடிகளை வணங்கித் 
துதித்தார். மகாதேவர் அவரை இருக்கும்படி பணித்து, ஒரு திருவிளையாடலை யுன்னி, உமாதேவியாரை நோக்கி 
''உமையே நாம் ஒன்று சொல்வோங் கேள். நீ நம்மோடு சூதாடுவாய். நமக்குத் தோற்றால் நீ அணிந்திருக்கின்ற 
ஆபரணங்களெல்லாவற்றையுந் தருதி; நம்மைவென்றால் நம்மிடத்துள்ள சந்திரன் முதலிய பல அணிகலங்களையும் 
கைக்கொள்ளுதி" என்றார். உமாதேவியாரும் அதற்கிசைந்தார். விருப்பு வெறுப்பின்றி ஆன்மாக்களுடைய 
இருவினைகளை முற்றொருங்குணர்ந்து அவற்றிற்கேற்பத் தனுகரண புவன போகங்களைக் கொடுத்தருளும் 
சிவபெருமான் விட்டுணுவை நோக்கி, "நீ இதற்குச் சாக்ஷியாயிருப்பாய்" என்று பணித்தார். 

    அவர் நன்றென்று அதற்குடன்பட்டிருந்தார். சூழ்ந்து நிற்கின்ற ஆலாலசுந்தரர் முதலாயினோர் பரமசிவனுடைய 
அநுமதிப்படி சூதாடுகருவியையும் ஆடுதற்குரிய பலகையையுங் கொண்டுவந்தார்கள். திருக்கைலாசபதி விட்டுணுவை 
நோக்கி, "இக்காய்களை முறையாக வை' என்று கூற அவர் வைத்தார். கடவுள் அம்மையாரை "நமக்கெதிரே இருப்பாய் "
என்று இருத்தி, தாம் முன்பு கவற்றை உருட்டினார். பின்பு தேவியாரும் உருட்டினார். எவற்றினும் மேலோராகிய 
அவர்களிருவரும் பஞ்சென்றும், பாலையென்றும், ஈரஞ்சென்றும், அஞ்சென்றும், நடம் என்றும், துருத்தி என்றும், வெடியென்றும், 
இஃது அடியென்றும் இது பொட்டையென்றும், இவைபோன்ற சூதாட்டத்திற்குரிய குழூஉக்குறிகளை எதிரெதிராய் 
அளவிலவாகச் சொல்லி, கவற்றை  யெறிந்தும், கருவிகளை எதிரேறத் தள்ளியும், மகிழ்வோடு விளையாடினார்கள்.

    இவ்வாறு சூதாடும்பொழுது, யாது திருவருள் விளையாட்டாலோ நாம் அதனை அறியோம், பரமசிவன் 
தம்மோடு விளையாடிய தேவியாருக்குத் தோற்று , அவரை  நோக்கி, "உமையே உன்வலிமை நன்று!" என்று 
நகைத்து, " நீ நம்மை வென்றாயல்லை, தோற்றாய்; இனி முன்பு ஒட்டியபடி உன்னுடைய மாலையையும் 
ஆபரணங்களையும் எமக்குத் தருதி" என்றார். தேவியார் அதனைக் கேட்டு, தாம் அக்கடவுளோடு வாதாடுதற்கு அஞ்சி 
விட்டுணுவை நோக்கி, "சாக்ஷியாயிருந்த நீ இதனைச் சொல்லுதி" என்றார். விட்டுணு "சூது வென்றவர் சிவபெருமானே" 
என்றார். உமாதேவியார் "நீ நல்ல உண்மையைச் சொன்னாய். உன்திறம் நன்று நன்று!" என்று அவரைக் கோபித்து, 
"நீ இதனைப் பாராதவனுமல்லை,  கண்ணணுமாயினை,பக்கத்திலிருந்தாய்; நீ அறியாததொன்றுமில்லை; 
எவராலும் அறியப்படாத முதல்வராகிய கடவுள் பொய்சொல்லினும்  நீ இந்தப்பொய்யைச் சொல்லலாமோ !  
உன் உடல் கரிதென்பர், மனமுங் கரியாயோ! மாயையிலும் வஞ்சனையிலும் சிறந்து விட்டுணுவே, இறுமாப்பினால் 
இந்தப்  பொய்யைச் சொன்னாயாதலாற் பாம்பாவாய்' என்று சபித்தார். உடனே பாம்புருவ முண்டாயிற்று.

    விட்டுணு அதுகண்டு கவற்சியுற்று, சிவபெருமானுடைய பாதங்களை வணங்கி, "இவ்வுரு அடியேனுக்கு 
எவ்வாறு நீங்கும்? சொல்லியருளும்' என்றார். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூத 
தத்துவங்களாய் இவற்றிற்கு மேலாயுள்ள ஏனைய முப்பத்தொரு தத்துவங்களாய், எவற்றிற்கும் மூலகாரணமாய், 
நான்கு வேதப்பொருளாயுள்ள சிவபெருமான் விட்டுணுவை நோக்கி, "என்னிடத்துள்ள அன்பினால் நீ பொய் 
சொல்லி இப்பாம்புருவைப் பெற்றாய் ; நாம் உனக்கு வந்த இன்னலை நீக்குகின்றோம்; நீங்குகின்றாய்.தெக்ஷண 
திசையிலே தென்றேசத்திலே ஆலவனமென்று ஓரிடம் இருக்கின்றது. அதில் ஓராலமரமுளது, அதனை நீயும் 
பார்த்ததுண்டே. இனி நீ அங்கே விரைவிற்போய், அம்மரத்தின் அடியிலுள்ள பொந்தொன்றில் இச்சாபம் 
நீங்கும்படி பெருந்தவத்தைச் செய்துகொண்டிருக்குதி; அஞ்சாதே. நீ தவஞ்செய்திருக்குங் காலத்தில் நம்முடைய 
குமாரனாகிய விநாயகன் அங்கே வருவான். அவனை எதிர்கொண்டு தரிசிக்குதி. அப்பொழுது உன்னுடைய 
இப்பாம்பு வடிவம் நீங்கும்" என்று சொல்லியருளினார். 

    விட்டுணு சிவபெருமானை வணங்கித் துதித்து, விடைபெற்றுக்கொண்டு திருக்கைலாசமலையை நீங்கி 
விரைந்து சென்று, பெரியோர்கள் வசிக்கின்ற தென்றிசையை யடைந்து, ஆலவனத்திற் போய், எண்ணில்லாத 
விழுதுகளையுடையதும், சந்திரமண்டலத்தை அளாவுவதும், பூவுலகமெங்கும் நிழல் பரப்புவதும், ஏழுகாதம் 
அகன்ற அரையையுடையதுமாகிய மிகப்பெரிய ஆலமரத்தின் பொந்திற்புகுந்து, தவஞ்செய்துகொண்டிருந்தார். 
உமாதேவியாருடைய சாபத்தினால் விட்டுணு பாம்பான சரித்திரத்தைச் சொன்னோம். இனிக்கயமுகாசுரனை 
மூத்த பிள்ளையாராகிய விநாயகக்கடவுள் வென்ற கதையைச் சொல்வாம்.

    முன்னே கயமுகாசுரனுடைய ஏவலினால் நொந்து மனம்வருந்திய இந்திரன் முதலிய தேவர்கள் யாவரும் 
விநாயகக்கடவுள் திருவவதாரஞ் செய்தமையை யறிந்து மகிழ்ச்சியுற்று, திருக்கைலாசமலையை யணுகி, அவருடைய 
திருவடிகளை வணங்கித் துதித்தார்கள். அவர் கருணை  செய்து, "உங்களுடைய குறையாது? சொல்லுங்கள்' 
என்றார். அதனைக் கேட்ட இந்திரன், "சுவாமீ,முன்னாளிலே சிவபெருமானிடத்தில் எல்லையில்லாத வரங்களைப் 
பெற்ற கயமுகாசுரன் என்பவன் எங்களை மிகவுந் துன்பஞ் செய்தான்; பின்னும் நாங்கள் பெருமையிழந்து நாடோறும்
 தன்னைவந்து வணங்கும்படியுங் கற்பித்தான்; அதனைச் செய்தோம். அன்றியும் எங்களுக்குப் புதிதாக ஒருபணியையுங் 
கற்பித்தான். 

    அஃதென்னை யெனில், நாங்கள் தன்னிடத்துப் போகும்பொழுதெல்லாம் நெற்றியிற் குட்டிக் காதுகளைப் 
பிடித்துக்கொண்டு தாழ்ந்தெழும்படி சொன்னான். அத்துயரையும் பட்டுப்பட்டுப் பழியில் மூழ்கினோம். கோபத்தோடு 
அவன் சொல்லுகின்ற சொற்களை மறுக்கப் பயந்து, நமக்கு வரும் பழிகளையும் பொறுத்து, நாணமுமின்றி, 
இன்றுகாறும் அந்தக் குற்றேவலையும் செய்தோம். அவ்வசுரனுடைய உயிரையும் எங்களுடைய குறையையும் நீக்கும்படி 
தேவரீர் வருவீர் என்று பரமசிவன் எங்களுக்கு அருளிச்செய்தார். ஆதலால் உம்மை வந்தடைந்தோம். எங்களுடைய 
துன்பத்தை நீக்கியருளும்'' என்று மோதக முதலியவைகளை நிவேதித்து வழிபட்டான்.

     விநாயகக்கடவுள் ''அஞ்சற்க அஞ்சற்க, கயமுகாசுரனைச் சங்கரித்து உங்களுடைய துன்பத்தை நீக்குவோம்" 
என்று அருள்புரிந்தார். இந்திரனுந் தேவர்களும் "நம்முடைய சிறுமையும் துன்பமும் நீங்கின, மறுமையின்பங்களும் வந்தன, 
இனி நாம் பெறும் பேறுகள் யாவை! என்று பேசி மகிழ்ச்சியுற்றார்கள். 

    விநாயகக்கடவுள் கயமுகாசுரனைச் சங்கரிக்கத் திருவுளங்கொண்டு, திவ்விய சிங்காசனத்தினின்றெழுந்து, 
வாய்தலில் வந்து,சூரியப் பிரகாசத்தையுடைய அசலன் என்பவனுடைய தோளின்மீது திருவடியை வைத்து ஏறிப் 
போருக்குச் சென்றார். பூதர்கள் வந்து சூழ்ந்து அவருடைய புகழ்களைச் சொல்லித் துதித்தார்கள்; சாமரைகளை 
வீசினார்கள்; குடைகளை யேந்தினார்கள்; பூக்களைத் தூவினார்கள்; உடுக்கு தண்ணுமை முதலிய பல வாத்தியங்களை 
இயம்பினார்கள். இந்திரனுந் தேவர்களுங் கற்பகப் பூக்களைத் தூவி மிகுந்த மகிழ்ச்சியோடு அக்கடவுளைச் சூழ்ந்து 
போயினார்கள். விநாயகக்கடவுள் இவ்வாறு பூதசேனாவெள்ளங்களும் தேவர்களும் தம்மைச் சூழ்ந்துவரக் கயமுகனுடைய 
மதங்கமாபுரிக்கெதிரிற் போயினார். 

    அதனை ஒற்றர்கள் ஓடிப்போய்க் கயமுகனுக்குச் சொல்ல; அவன் கோபமுற்று, இருக்கை விட்டெழுந்து, 
ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு தேரிலேறி, வாத்தியங்கள் ஒலிக்கவும், கசரததுரகபதாதிகளாகிய ஆயிரம்வெள்ளம் 
சேனைகள் சூழவும் விரைவிற் புறப்பட்டு, விநாயகக்கடவுளுடைய சேனைகளுக்கெதிரே வந்தான். பூதசேனைகளும் 
அசுர சேனைகளும் கைகலந்து ஆயுதங்களினாற் பெரும்போர் செய்தார்கள். அசுரர்கள் பூதர்களோடு எதிர்த்துநின்று 
போர்செய்து, ஆற்றாதவர்களாய்ப்  புறங்கொடுத்தோடினவர்களும் இறந்தவர்களும் ஒளித்தவர்களுமாய் அழிந்தார்கள். 
கசரததுரகங்கள் அழிந்தன. இவ்வாறு அவுணசேனைகள் யாவும் அழியப் பூதர்கள் வெற்றியடைந்தார்கள். அதனைக் 
கயமுகாசுரன் கண்டு, அக்கினி போலக் கோபித்து, வில்லை வளைத்தான். பூதர்கள் அவனை வந்து சூழ்ந்து போர் 
செய்தார்கள். கயமுகன் பாணமழைகளைச் சொரிந்து அவர்களுடைய உடம்புகளைத் துளைத்தான். அவர்கள் யாவரும் 
வருந்தி வலிமை யிழந்து ஓடினார்கள். அதனைக் கண்ட இந்திராதி தேவர்கள் வருந்தினர்.

    பூதசேனைகள் புறங்கொடுத்ததை விநாயகக்கடவுள் கண்டு, அசலனை நடத்தி, கயமுகாசுரனை அணுகினார். 
அவன் அங்கு நின்ற தூதுவரை நோக்கி, "இங்கே என்னோடு போர்செய்யும்படி வருகின்ற இவன் யார்?' என்று வினாவ; 
அவர்கள் "மூன்று கண்களையும் ஐந்து கரங்களையும் யானைமுகத்தையுமுடையராய் ஒரு பூதன்மேல் ஏறிக்கொண்டு 
வருகின்ற இவர் சிவபெருமானுடைய மூத்தபிள்ளையாகும்" என்றார்கள். கயமுகன் அதனைக்கேட்டுக் கோபித்து, 
தேர்ப்பாகனை நோக்கி, "நம்முடைய தேரை அந்த யானைமுகவனுக்கு முன்பு செலுத்துதி' என்ன, அவன் விநாயகக் 
கடவுளுக்கு முன்பு தேரைச் செலுத்தினான். 

    கயமுகன் விநாயகக் கடவுளைக் கோபித்துப் பார்த்து, நெருப்புக் காலும்படி பற்களால் இதழை அதுக்கி, 
"மைந்தனே உன் பிதா யான் செய்த மகாதவத்தை நோக்கி எனக்குத்தந்த பெரிய வரத்தை நீ அறிகிலை; 
உன்னுயிரைக் கொண்டு உய்ந்து போ; என்னெதிரே வந்தாய், நீ சிறிதும் மதியில்லாதவனோ. அன்றியும் நீ 
என்னோடு போர்செய்ய அமைந்தாயாயினும் உனக்கு வலிமையில்லை. என்னோடு போர்செய்து இறந்தவரன்றி 
என்னை வென்றவர் இவரென்று நீ சொல்ல வல்லையோ. தேவர்களாலும் மனிதர்களாலும் அவர்களுடைய 
ஆயுதங்களினாலும் நான் இறக்கமாட்டேன். இது நான் பெற்ற வரத்தினியல்பு. சொல்லக் கேட்பாயாயின் நான் 
பெற்ற வரங்கள் இன்னும் பலவுள. என்னை வெல்பவர் யாவர்? பாலகனே, நீ இந்திராதி தேவர்களுடைய துன்பத்தைத் 
தணிப்பவர்கள் போல என்னுடன் போர்செய்ய வந்தாய். யான் உன்னை வென்று அவர்களுடைய உயிரையும் 
பருகுவேன். என்னோடு பொருது வெற்றிகொண்டு போகவல்லையாயின் வருதி" என்று கூறினான். 

    சிவகுமாரர் அவனை அருளோடு நோக்கி, "கயமுகனே, முன்னாளிலே உனக்குப் பலவரங்களையும் 
படைகளையுந் தந்த நமது பிதாவே விரைவில் உன்னுயிரைக் கவர்ந்து இந்திரன் முதலிய தேவர்களுடைய துன்பத்தை 
நீக்கி அவர்களுக்குப் பொன்னுலகைக் கொடுத்து வருவாய்" என்று எமக்குங் கட்டளையிட்டருளினார். உன்னுயிரைப் 
பாதுகாத்துக் கொள்வாயாயின் நாம் ஓருறுதியைச் சொல்வோம் கேள். பொன்னுலகத்தை இந்த இந்திரன் 
அரசுசெய்யும்படி கொடுத்து,நீ இம்மண்ணுலகத்தில் அரசு செய்திருக்குதி. அது உனக்கு இசையாதாயின் நாம் 
உன்னுயிரை வதைபுரியும்படி அமைந்து நின்றேம். உன்னுடைய எண்ணம் யாது? சொல்லுதி" என்றார்.

    என்னலும், கயமுகாசுரன் பொங்கி அக்கினி சொரியப் பார்த்து, விரைவிற்சென்று ஒரு பெரிய வில்லை 
வளைத்து நாணேற்றிப் பாணங்களைப் பொழிந்தான். விநாயகக்கடவுள் ஓர் எழுப்படையினால் அவற்றைச் சிந்தி, 
அவனுடைய வில் முரிந்து வீழும்படி அதனால் அடித்தார். அவன் மற்றோர் வில்லை வளைப்ப அதனையும் அழித்தார். 
கயமுகன் தன் வில் முரிதலும், ஒரு தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு சிவகுமாரரோடு எதிர்த்தான். அவர் அத்தண்டு 
ஒடிந்து வீழும்வண்ணம் தமது எழுவினால் அடித்து, அவனுடைய மார்பிலும் அதனாற் புடைத்தார். அவன் ஒரு 
செயலுமின்றி மனம் நடுங்கி ஒன்றும் பேசாதவனாய் நாணத்தினாலொடுங்கி, இறந்தவன்போல நின்றான். 
விநாயகக்கடவுள் அவனுடைய நால்வகைச் சேனைகளையும் கொல்ல நினைத்து, ஒரு பாசத்தை வீச அது அவனுடைய 
சேனைகளெல்லாவற்றையும் கட்டியது. 

    அதன்பின் மழுப்படையைத் தூண்ட அது அந்தச் சேனைகளைக் கொன்றது. தேவர்கள் மகிழ்ந்து கூத்தாடினர். 
கயமுகாசுரன் பதைபதைத்து உயிர்த்து நொந்து, தன் கையிலுள்ள படைக்கலங்கள் எல்லாவற்றையும் செலுத்தினான். 
அவைகள் யாவும் விநாயகக் கடவுளை வலஞ்செய்து துதித்து, அவருடைய ஏவலின் வழி நின்றன. 
கயமுகன் கோபாக்கினி மேன்மேலுஞ் சுட வாளாநின்றான். சிவகுமாரர் அவனை நோக்கி, "நாம் ஆயுதங்களை 
இவன்மேற் செலுத்தினால் நமது பிதாக்கொடுத்த வரத்தினால் அவைகள் ஒன்றும் இவனைக் கொல்லமாட்டா. 
இனிச் செய்வதென்னை?' என்று இறைப்பொழுது சிந்தித்து, தம்முடைய திருக்கோட்டிலொன்றைத் திருக்கரத்தால் 
முரித்துக் கயமுகன் மீது விடுத்தார். அது அவனுடைய மார்பைப் பிளந்து, உடம்பைப் பூமியில் வீழ்த்தி, விரைந்து சென்று, 
சுத்தோதக சமுத்திரத்தில் மூழ்கி அவருடைய திருக்கரத்தில் வந்து வீற்றிருந்தது. 

    கயமுகன் மேகக்கூட்டங்கள் ஒருங்கே பூமியில் வீழ்ந்தாற் போலவுங் கடலுடைந்தாற் போலவும் ஆர்த்துத் 
தேர் மேல் வீழ்ந்து மயங்கினான். அவனுடைய மார்பினின்றும் நதிகள்போலப் பெருகிய இரத்தவெள்ளம் 
பக்கத்திலுள்ள ஒரு காட்டிற் பரந்தமையால் அவ்விடம் திருச்செங்காடென்னும் பெயர்பெற்று இன்னும் 
யாவருங் காணும்படி இருக்கின்றது.

    பரமசிவனுடைய வரத்தினால் இறவாத கயமுகாசுரன் வீழ்ந்து இறந்தவன்போன்று பழைய வடிவைவிட்டு,
 ஒரு பெருச்சாளி வடிவங்கொண்டு, கோபாக்கினி கண்களிற் சிந்த விநாயகக்கடவுளைத் தாக்கும்படி வந்தான். அவர் 
அவனுடைய போர்வலிமையை இல்லையாக்கி, அசலன் என்னும் பூதனுடைய தோளினின்றும் இழிந்து,"நீ நம்மைச் 
சுமக்குதி" என்று அவனுடைய பிடரிற் றாவி வீற்றிருந்து, அந்த ஆகுவாகனத்தைச் 
செலுத்தியருளினார். அதனைக் கண்ட பிரமா இந்திரன் முதலிய தேவர்கள் "கயமுகாசுரன் இறந்தான், நம்முடைய 
இடர் போயிற்று, நம்முடைய பகையுந் தீர்ந்தது'' என்று ஆடிப்பாடி, உத்தரீயங்களை வீசி, முகிலின் வரவைக் கண்ட
 மயிற்குழாங்கள் போலக் கூத்தாடி, விநாயகக் கடவுளுடைய திருமேனி மறையும் வண்ணம் பூமழைகளைப் பொழிந்து 
நின்று, “சிருட்டியாதி பஞ்சகிருத்தியங்களைச் செய்யும் முதற்கடவுள் தேவரீரே. அடியேங்க ளுடைய மிக்க மனத்துயரை 
நீக்கக்கருதியன்றோ இந்த அருட்டிருமேனி கொண்டீர். 

    உம்மிடத்திலுண்டாகிய வேதமே உம்முடைய பெருந்தகைமை இன்னதென்றுணர்ந்ததில்லையானால் 
அடியேங்கள் உம்மை உணர்வது எங்ஙனம்! நமக்குப் பரமபிதாவும் மாதாவுமாயினீர். அதனால் மைந்தர்களாகிய 
யாங்கள் சொல்லும் புகழ்ச்சியை அன்போடு கேட்கின்றீர் போலும்." என்று சொல்லி வணங்கித் துதித்து, மலர்ந்த 
முகத்தினராய், மூத்தபிள்ளையாரை வந்து சூழ்ந்தார்கள். அக்கடவுள் அவர்கள் யாவருக்கும் கிருபா நோக்கத்தோடு 
பேரருள்புரிந்தார். பிரமாமுதலிய தேவர்கள் "இனி நாம் உய்ந்தோம்' என்று அவரைச் சூழ்ந்து நின்றார்கள். 
பிள்ளையார் கயமுகாசுரனுடைய போரிலிறந்த பூதர்களை நோக்கி "எழுதிர்' என்று அருளிச்செய்ய; அவர்கள் 
யாவரும் எழுந்து, ஹர ஹரவென்று துதித்து, அவரை வணங்கிச் சூழ்ந்தார்கள்.

    இவைகள் எல்லாவற்றையும் அசுரேந்திரன் என்னும் அவுணராசன் நன்றாய் அறிந்துகொண்டு, 
மந்திரியாகிய சுக்கிரனோடு யோசித்து, வருந்திப் புலம்பி, "யான் இனித் தப்பியோடுவேன்" என்றெண்ணி, 
இந்திரனுக்கும் பூதர்களுக்கும் அஞ்சி ஓர் பறவையாகி, மதங்கமாபுரியை நீங்கி, மேரு மலைச்சாரலில் 
விருக்ஷங்கள் அடர்ந்த ஒரு முழஞ்சிற் புகுந்து மறைந்திருந்தான். சுக்கிரனும் பறவை வடிவமெடுத்துத் 
தன்னுடைய உலகத்தை அடைந்து, தவமறைந்தல்லவை செய்து  வாழ்நாட் கழிப்பவர்போன்று, யோகாப்பியாசஞ் 
செய்வார்போல வஞ்சனையோடிருந்தான். பூதர்கள் மதங்கமா புரியிற்போய், ஆயுதபாணிகளாயுள்ள 
அவுணர்கள் யாவரையுங் கொன்று, போர்க்களத்துக்கு மீண்டுவந்தார்கள். பிள்ளையார் போர்க்களத்தை 
நீங்கித் திருச்செங்காட்டிற்போய், சிவலிங்கப்பிரதிட்டை செய்து பேரன்போடு பூசித்துத் துதித்தார். 
அந்தஸ்தலத்தை மேலோர் கணபதீச்சரம் என்பர். விநாயகக்கடவுள் அதன்பின் ஆகுவாகனத்திலிவர்ந்து, 
தேவர்கள் சூழ, விட்டுணு பாம்பினுருவாய்த் தவஞ்செய்துகொண்டிருக்கின்ற ஆலவனத்துக்கு எழுந்தருளினார்.

            திருச்சிற்றம்பலம்.

            அனந்தன்சாப நீங்குபடலம்.

    விநாயகக் கடவுள் ஆலவனத்திற் சென்றபொழுது, அங்கே ஓரால மரப்பொந்திலே சிவபெருமானுடைய 
திருவடிகளைத் தியானித்துத் தவஞ் செய்துகொண்டிருந்த விட்டுணு அவர் அங்கே வந்ததை அறிந்து, விரைவாக 
அப்பொழுதே அவரை எதிர்கொண்டு சென்று தரிசித்துத் துதிப்ப; உமாதேவியார் சொல்லிய சாபம் நீங்குதலும், 
சக்கரம் முதலிய பஞ்சாயுதங்களையுமேந்தித் தம்முடைய பழைய உருவத்தைப் பெற்று மகிழ்ந்து, சிவபெருமானுடைய 
திருவருளை உன்னித் துதித்து,"பராபரமாகிய சிவபெருமானுக்குப் பக்கத்திலுள்ளவராயும் ஓங்காரப்பொருளாயுமுள்ள
உமாதேவியார் சொல்லிய சாபத்தைத் தொலைத்த முதல்வரே, நிருமலரே, தேவரீர் அடியேனுடைய பூசனையை 
ஏற்றருள்புரிதல்வேண்டும். அடியேன் அதனைச் செய்தற்கு அநுமதி தந்தருளும்'' என்று பிரார்த்தித்தார். 

    பிள்ளையார் அதனைக்கேட்டு, "அவ்வாறு செய்குதி" என்று அருளிச்செய்து அங்கே வீற்றிருப்ப; விட்டுணு 
திருமஞ்சனம் சந்தனம் மாலை தூபதீபம் முதலிய உபகரணங்களைக் கொணர்ந்து, அவரைப் பூசித்து, பாயசான்னமும் 
பலகார வகைகளும் நிவேதித்துத் தோத்திரஞ் செய்து, ''சுவாமீ, மார்கழி மாசத்துப் பூர்வபக்க சட்டியாகிய இத்திதியிலே 
அடியேன் உம்மைப் பூசனை செய்ததுபோல யாவரும் உம்முடைய திருவடிகளையே சரணென்றுன்னிப் பூசனை 
செய்திடவும், அப்படிப் பூசிப்போருடைய துன்பங்களையெல்லாம் தேவரீர் அன்றைக்கே நீக்கி அழியாத செல்வத்தை 
அவர்களுக்குக் கொடுத்திடவும் வேண்டும். இவ்வரத்தை அடியேனுக்கு  தந்தருளும்'' என்றார். 

    விநாயகக்கடவுள் "அவ்வாறாகுக" என்று விட்டுணுவுக்கு அருள்புரிந்து, "உன் பூசையை மகிழ்ந்தோம்" 
என்றுகூறி,அந்த விட்டுணுவும் பிரமா முதலிய தேவர்களும் அன்போடு துதிப்ப ஆகு வாகனத்திலேறி, பூதகணங்கள் 
சூழத் திருக்கைலாச மலைக்குப் போய், பரமசிவனை வணங்கி அவருடைய திருவருளைப்பெற்று, அக்கோயில் 
வாயிலிலே தாமிருக்கும் இடத்தையடைந்தார்.

    அற்றைநாளில், அரிபிரமேந்திராதிதேவர்கள் சிவசந்நிதானத்திற் போய் அன்போடு வணங்கி, அருள்பெற்று 
நீங்கி, விநாயகக்கடவுளை வணங்கித் துதித்துத் திருமுன்னிற்ப, அக்கடவுள் அருள்புரிந்தார். பின்பு அத்தேவர்கள் 
அவர்மேல் வைத்த அன்பினால் ஒன்றை விண்ணப்பஞ் செய்கின்றார்கள்."எம்பெருமானே, எங்களை வருத்திய 
கயமுகாசுரனைத் தேவரீர் சங்கரித்தீர். அதனால் அடியேங்கள் உய்ந்து வந்து உமக்குச் செய்யுங் கைம்மாறு 
ஒன்றுமில்லை. ஆயினும்,நேற்றை வரையும் அந்தக் கயமுகாசுரனுக் கெதிரிலே தவறாமல் நாங்கள் செய்த 
தொண்டை இன்று முதலாகத் தேவரீருடைய சந்நிதானத்திற் செய்வோம்'' என்றார்கள். பிள்ளையார் 'அவ்வாறு 
செய்குதிர்' என்றார். 

    தேவர்கள் யாவரும் அன்பினோடு முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளையும் கபித்தமாக்கித் தத்தந் 
தலைகளில் மும்முறை குட்டி, இரண்டு கைகளையும் எதிரெதிராக மாற்றி இரண்டு காதுகளையும் பிடித்துக்கொண்டு 
கணைக்காலுந் தொடையும் ஒன்றையொன்று தொடும்படி மும்முறை தாழ்ந்தெழுந்து, வணங்கித் துதித்து நின்றார்கள். 
அதைப் பார்த்த பூதகணங்கள் ஆரவாரித்தார்கள். விநாயகக்கடவுள் மகிழ்சிறந்தார். தேவர்கள் அக்கடவுளை 
நோக்கி, "இன்றுமுதல் உலகத்திலுள்ளோரெவரும் எங்களைப்போல இத்தொண்டைத் தேவரீருடைய சந்நிதானத்திற் 
செய்துவரும்படி அருள் செய்யவேண்டும்" என்று வேண்ட அவர் ''அவ்வாறே ஆகுக" என்று அருள்புரிந்து, அங்கு நின்ற 
அரிபிரமேந்திராதி தேவர்கள் யாவர்க்கும் விடைகொடுத்தனுப்பினார். அவர்கள் தத்தம் பதங்களிற்போய் மகிழ்ச்சியோ 
டிருந்தார்கள். தக்கனே, பிரணவ சொரூபியாகிய விநாயகக்கடவுளுடைய உற்பத்தியை இதுகாறுஞ் சொன்னோம். 
சிவபெருமானுக்குத் தாமதகுணம் வந்தவாறு என்னை என்று வினாவினாய். இனி அதனையுஞ் சொல்வோம் கேட்பாய்.

    "ஞானிகளாலும் அறிதற்கரிய சிற்குணராகிய பரமசிவன் பரைக்குப் பரமாயுள்ளார். மூவகைக் குண 
சம்பந்தமில்லாத நிர்க்குணர். அவருடைய செயலைச் சொல்ல முடியுமோ! மலரகிதராகிய அக்கடவுள் 
ஆன்மாக்களுடைய பாசங்களை நீக்கவேண்டுமென்னுந் திருவருளினாலே பிரம விட்டுணுக்களுக்கு முறையே 
படைத்தல் காத்தல்களையும் சாத்துவிக ராசத குணங்களையும் உள்ளனவாக்கி, அழித்தற்றொழில் கோபத்தினால் 
முடித்தல் வேண்டுதலால் அத்தொழிலின்கண்ணே தாமதகுணத்தை வைத்தார். இதனைப் பலரும் அறிவர். 

    அக்கடவுள் தாமதகுணத்தினராயின் வேதசிவாகமங்களை அருளிச்செய்து கல்லாலவிருக்ஷ நிழலிலே 
சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசஞ் செய்யவல்லராவாரோ! வெண்மையும் நிர்மலமுமாகிய வடிவைப் 
பொருந்துவாரோ! வேதங்கள் வித்தையின் மூலம் என்று அவரையே சொல்லுமோ! இதனை ஞானமில்லாதவர்களுக்கு
எப்படித் தெளிவிப்பது! தேவநாயகராகிய பரமசிவன் இறுதிக்காலத்திலே சங்காரத்தைச் செய்யுந்தன்மையால் 
அவரைத் தமோகுணத்தர் என்றாய். அக்குணம் அவருக்குச் செயற்கைக்குணமாம். அவருடைய இயற்கைக் குணத்தை 
அறிய முடியுமோ! படைத்தல் காத்தல்களைச் செய்யும் பிரமவிட்டுணுக்களுக்குள்ள சாத்துவிக ராசதகுணங்கள் 
அவர்களுடைய அவ்வச்செயல்களுக்காக மாத்திரம் செயற்கையா யமைந்தனவன்றி, யோசிக்கின் இயற்கையாகச் 
சொல்லலாகுமோ! 

    அந்தப் பிரமவிட்டுணுக்களிடத்துச் சாத்துவிக ராசத குணங்களன்றி முக்குணத்தின்பாற்பட்ட முனிவர்கள் 
தேவர்கள்போல மற்றை இரண்டு குணங்களுஞ் சேரும். விட்டுணுவுக்கு வடிவமுழுதும் நீலநிறமாயதும் சமுத்திரத்தில் 
உறங்குவதும் அகந்தையும் பிறவும் உளவாமாயின், தாமத ராசத குணங்களும் அவரிடத் துளவாயின. அந்த விட்டுணு 
நல்லறிவுண்டாய காலத்திற் சிவபெருமானை வழிபட்டுத் துதித்து அவருடைய திருவருணெறியினிற்பதும் ஞானமும் 
பெறுதலினாற் சாத்துவிக குணமும் பெற்றுள்ளார். வடிவம் பொன்மயமா யிருத்தலினாலும், நானே பரம்பொருள் 
என்னும் மயக்கத்தினாலும், பரமசிவனை உணர்கின்ற தெளிவினாலும், தவத்தினாலும், பூசையினாலும் 
பிரமாவினிடத்தும் எல்லாக் குணங்களும் உளவாயின. 

    ஆதலினால் விருப்பு வெறுப்புடையோர் யாவரும் முக்குணவயத்தராவர். சிவபெருமானுக்கு அந்த விருப்பு 
வெறுப்புக்களில்லாமையினால் அவருக்கு ஒரு குணத்தைச் சொல்லுதல் அறியாமையாம். 'மும்மாயா தத்துவப் 
பொருளனைத்தையும் முன்னாளிலே தந்தவர் சிவபெருமானே' என்று நான்கு வேதங்களுஞ் சொல்லும். அதற்கு 
அவையே சான்றாம். தவத்திகளுக்காயினும் அளவிடப்படாத அவருடைய செயலை அறிய முடியுமோ! விட்டுணு 
முதலிய தேவர்களினிடத்தும் மற்றை உயிர்ப்பொருள் உயிரல்பொருள்களினிடத்தும் எங்குமாய் வியாபித்து 
எல்லாவற்றையும் இயற்றுகின்ற சிவபெருமான் ஒருகுணச்சார்பிற் பொருந்துவாரோ! சங்காரத் தொழிலொன்றைக் 
குறித்து மேலோர்கள் நிருமலராகிய அக்கடவுளுக்குத் தாமதகுணத்தைக் கூறினாரல்லது, வேறொரு செய்கையினால் 
அக்குணத்தைச் சொன்னாரில்லை'' என்று இவை போல்வன பலவற்றையும் ததீசிமகாமுனிவர் உபதேசித்தார்.

    தீயோனும் புன்றொழிலினனும் ஆகிய தக்கன், மிக்க வலிமையும் பெருஞ்செல்வமும் பெற்று மயங்குதலால், 
அவற்றை நன்றென்று மனத்துக் கொள்ளாதவனாயும் சகிக்கலாற்றாதவனாயும் ததீசிமுனிவரை நோக்கி, 
'முனிவரே கேளும். நீர் இங்கே பலவற்றையுஞ் சொல்லுவதனாற் பயனென்னை? கைலாசமலையிலிருக்கும் 
உங்கள் சிவன் அறுகுணங்களையுடைய கடவுளேயாயினும் ஆகுக. யான் அவருக்கு யாகத்தில் அவிப்பாகத்தை 
உதவேன். நீரும் இனி இவற்றைச் சொல்லாதேயும்,போம். யான் என் செயலை முடிப்பேன்" என்று சிலவற்றைச் 
சொன்னான். 

    செல்வச் செருக்கையுடைய தக்கன் இவ்வாறு சொல்லுதலும், ததீசிமுனிவருடைய மனத்திற் கோபம் 
விளைந்தது. அவ்வளவில் வடவாமுகாக்கினி அஞ்சியது. தேவர்களுடைய மனங்கள் தளர்ந்தன. மகாமேருமலையுஞ் 
சலித்தது. குலகிரிகளும் வருந்தின. எழுகடல்களும் ஒடுங்கின. உலகமெல்லாம் நடுங்கின. அப்பொழுதே 
அம்முனிவர் தம்முடைய பெருஞ்சீற்றத்தை நோக்கி, 'அந்தோ! தக்கனொருவன்பொருட்டாக நம்மால் எம்மலைகளும் 
எக்கடல்களும் எவ்வுலகங்களும் யாரும் யாவும் தளருமோ!' என்ற நினைத்து, முனிவு தணிந்து, தம்மைச் சூழ்ந்த 
முனிவர்களோடெழுந்து நின்று, தக்கனுடைய முகத்தை நோக்கி, "தக்கனே நீ இன்றைக்குப் பரமசிவனை விலக்கிப் 
புரிகின்ற யாகம் அழிக: இங்கே உன்னோடிருக்கின்ற தேவர்கள் யாவரும் இப்பொழுதே அழிக" என்று கூறி, 
அதன்பின்பு  அவ்வியாகசாலையிலிருக்கின்ற தேவர்களுடைய முகத்தை நோக்கி, “நீவிர் அந்தணர்களிற் 
பேடிகளாயினீர்; உங்கள் குலத்தலைமையை யிழந்துவிட்டீர்; நாம் சொல்வதைக் கேண்மின். 

    நீவிர் வேதங்கள் யாவும் 'பராபரன் நீயே' என்று புகழ்ந்து போற்றும் சிவபெருமானையும் அவருடைய 
அடியார்களையும் விபூதி ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்து, பூமியிலே எந்நாளும் மறையவராய்ப் பிறந்திறந்து, 
கதியடையாமற் பாசபந்தத்திற்பட்டு, வேதத்துக்குப் புறம்பான மார்க்கத்தை அநுட்டிப்பீர்கள்" என்றார். 
ததீசிமுனிவர் இவ்வாறாகப் பல சாபங்களைக் கூறி, இருமருங்கும் முனிவர்கள் சூழத் தாமிருக்கும் ஆச்சிரமத்தை 
நோக்கிச் சென்றார். தக்கனுடைய பெருந்தகைமையும் தவமும் கீர்த்தியும் செல்வமும் வலிமையும் மனச்செருக்கும் 
ஆகிய இவைகளெல்லாம் அம்முனிவருக்குப் பின்னாகப்போயின.

            திருச்சிற்றம்பலம்.

            தானப்படலம்.

    ததீசி மகாமுனிவர் மீண்டுபோதலும், தக்கனுடைய கொடி அறுந்தது. யாகத்தூணில் காக்கைகளுங் கழுகுகளும்
 நெருங்கின. வேதவல்லியினுடைய மங்கலநாணுந் தானே கழன்றது. இவ்வாறாகிய பல துந்நிமித்தங்கள் உண்டாயின.
 இறக்கின்றவன்மாட்டு அவை நிகழாவோ! தீயோனாகிய தக்கன் இவ்வாறாகப் பல துந்நிமித்தங்கள் நிகழ்ந்திடவும், 
அவற்றைச் சிறிதும் நினையாதவனும் அஞ்சாதவனுமாய், பிரமாவையும் விட்டுணுவையும் முகமன்கள் சொல்லிப் 
பூசித்து, மற்றைத் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேண்டியவற்றை வேண்டியவாறே கொடுத்து, அதன்பின் 
தான் பெற்ற பெண்களுக்கும் மருகர்களுக்கும் மங்கலமாகிய வரிசைகளை மிகவும் கொடுத்து, விட்டுணுவும் 
பிறரும் காவல்செய்ய, தீய யாகத்தைச் செய்யுஞ் சமயத்தைப் பார்த்துத் தொடங்கினான். இனி அந்த யாகசாலையில் 
நிகழ்ந்தனவற்றை யான் சொல்வேன்.

    முன்னமே தக்கனுடைய ஏவலின் வண்ணம் பணிசெய்ய வந்த காமதேனுவானது பொன்னாலாகிய ஒரு 
சாலையிலே பொன்மலையின் நடுவிலுள்ள வெள்ளிமலைபோல அன்னத்தைத் தந்து, பாற்சோற்றையும் பிற 
அன்னவகைகளையும் முதிரை வர்க்கங்களாலாகிய பல உணவுகளையும் வெவ்வேறாகக் குலமலைகள் போல 
வகுத்தது; நெய்யோடளாவி வாசனைப் பொடி தூவித் தாளித்த பொரிக்கறிகளைத் திக்குயானைகளைப்போல 
வழங்கியது; பிட்டு தோயவை நொலையல் * முதலிய பலகார வகைகளையும் பிற அரும்பண்டங்களையும் 
பல கனிவர்க்கங்களையும் குலமலைகளுக்குப் பக்கத்திலே பூவுலகிலுள்ள மலைகள் வந்திருந்தாற்போலத் 
தொகுத்தது; நெய் பால் தயிர் வெள்ளங்களைக் கங்கையும் யமுனையும் போல வருவித்தது. உண்ணுதற்குரிய 
பிற உணவுகளையெல்லாம் கொடுக்கின்ற காமதேனு தன்னிடத்துள்ள பால் முதலாயினவற்றைக் கொடுத்ததென்றால் 
அஃது அதற்கொரு புகழோ. 

*நொலையல் - எள்ளுண்டை, அப்பவர்க்கம்.

    அத்தேனு பச்சைக் கர்ப்பூரம் கஸ்தூரி சந்தனம் பனிநீர் நாவிநெய் வெற்றிலை பாக்கு புட்பம் ஆகிய 
இவற்றையும் ஏனைய பொருள்களையும் தந்தது. அத்தேனு இப்பணிகளைச் செய்துகொண்டு ஒருபாலிருக்க; 
சிந்தாமணியும் சங்கநிதியும் பதுமநிதியும் ஐந்தருக்களும் தக்கனுடைய ஏவலினாலே தானசாலையில் வந்து, 
பலவகை இரத்தினங்களையும் பொன்களையும் ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் மற்றும் வேண்டிய 
பொருள்கள் எல்லாவற்றையும் ஒவ்வோர் சாரில் உண்டாக்கி வைத்து, அங்கங்கே ஒவ்வோரிடத்தில் நின்றன. 
அப்பொழுது, தக்கனுடைய ஏவலின் வண்ணம் ஒழுகுகின்ற முனிவர்கள் யாவரும் "இவைகளெல்லாவற்றையும் 
யாம் கொடுப்போம்" என்று சொல்லினார்கள். இவற்றை முன்னேயுணர்ந்த பிராமணர்கள் மன அவாவோடு 
நெருங்கிவந்து அன்ன சாலையை யடைந்து, அதனை நோக்கித் தக்கனை வாழ்த்தி, பாலர்களைப் போலப் 
பாடியாடி, உத்தரீயங்களை வீசி நின்றார்த்தார்கள்.

     ஏவலாளர்களாகிய முனிவர்கள் அந்தப் பிராமணர்களை வாருங்கள் என்று அழைத்துக்கொண்டுபோய் 
இருத்தி, பொற்றட்டைகளை யாவர்க்குமிட்டு, உணவுகளைப் படைத்து, உறவினர்களைப்போல அன்பினுடன் 
ஊட்டுவித்தார்கள். உண்பவர்களுட் சிலர், பசிதீர நிறையவுண்டும் அவ்வுணவு சுவையுடையதாதலால் நினைத்து 
நினைத்து, "இந்த உணவுகள் இன்னும் அதிகம் வேண்டும்" என்று சொன்னார்கள். ''நம் மாட்டு ஒரு குறையுள்ளது. 
இனி அதனைச் சொல்லியாவதென். நாம் பிரமாவை நோக்கித் தவஞ்செய்து இங்குள்ள உணவுகளெல்லாவற்றையும்
 உண்ணும்படி ஒரு பசியைப் பெற்றிலேம்" என்று வருந்துவார் சிலர். "அதிகமாகிய இவ்வுணவுகளை யுண்ணுதற்கு 
வாய்கள் நூறு நூறு வேண்டும்" என்பார் சிலர். இப்படிச் சொல்லுகின்றவர்களை நோக்கி, இன்னும் வாய்கள் அதிகம் 
வேண்டும், நீர் சொன்ன கணக்கில் அமையா" என்று சீறிச் சண்டையிடுவார்கள் சிலர். 

    "தேவருலகிலுள்ள காமதேனு வந்து அளவில்லாத உணவுகளை உண்டாக்கியது" என்று சொல்வார் சிலர். 
அதற்கு "நிறைய வுண்மின் உலவியாதேயும்'' என்று சொல்லுவார்கள் சிலர். 'அறிவில்லாத தக்கனுடைய யாகம் 
இன்றைக்கழியும்' என்பார் சிலர். 'அப்படி நிகழ்ந்தாலும் இப்பேருணவே நமக்குறுதி, விரைந்துண்மின்" என்பார் 
சிலர். "இவ்வியாகத்தில் உண்டதுபோல எங்கும் உண்டிலேம், இதைப்போல ஒரு காட்சியையுங் கண்டிலேம், இந்த
 இன்பத்தைப் போன்ற இன்பத்தை அனுபவித்திலேம்,சிவபெருமானால் நாம் இறவாதொழிந்தால் இது மேலானதுவே" 
என்பார்கள் சிலர். "எல்லையில்லாத உண்டிகளை நமக்குதவுகின்ற இக்காமதேனுவை நல்ல கயிற்றினாற் பிணித்து 
விரைவில் நம்முடைய ஊருக்குக் கொண்டு போவோம்" என்று சொல்லுகின்றார்கள் சிலர். 

    "தன் மக்கள் யாவரும் சுற்றத்தாரும் தேவர்கள் யாவரும் உய்யும்படி வாழ்தலால் தக்கனுடைய தவத்தினுஞ் 
சிறந்த தவம் உண்டோ!" என்கின்றார்கள் சிலர். "மகனாகிய தக்கன் இட்ட உணவுகள் எல்லாவற்றையும் உண்ணுதற்குப் 
பிரமா நமக்கு அநேக வயிறுகளைத் தந்தாரில்லை, அவர் பொறாமையுற்றார்" என்று நொந்து நொந்து சொல்லுகின்றார்கள் 
சிலர். "தாளிதத்தோடு கூடிய இந்த உணவுகளெல்லாவற்றையும் ஆசையினுடன் மிகவும் உண்டோம், நாம் இந்தப் 
பக்தியிலுள்ளவர்களோடு எழுவதெப்படி" என்று சொல்லுவார்கள் சிலர். "இந்த நல்ல உணவுகளை இங்கே உண்ணுதற்கு 
நம்முடைய மனைவி மைந்தர்களை அழைத்துக்கொண்டு வந்திலேம், இனி நினைத்தால் வருமோ!"  என்று 
சொல்லுகின்றார்கள் சிலர்.

    இப்படிப் பற்பலவாறாகக் கடலொலி போலத் தம்முட் பேசிக்கொண்டு போசனஞ் செய்கின்ற பிராமணர்கள் என்னென்ன 
கேட்டார்களோ, அவைகளெல்லாவற்றையும் அவர்கள் உண்ணும்படி முனிவர்கள் ஊட்டி, எச்சிலகற்றி, வேறோரிடத்திலே 
ஆசனத்திலிருத்தி, பனிநீர்கலந்த கலவைச் சாந்தையும் வாசனைத் திரவியங்களையுங் கொடுத்து, வெற்றிலை, பாக்கு புஷ்பம் 
முதலியனவற்றைத் தாம்பாளங்களில் நீட்டினார்கள். சந்தனம் பூசிப் புஷ்பமாலை சூடித் தாம்பூலதாரணஞ் செய்த 
வேதியர்கள் அனைவரும் தெய்வம் ஏறிய விருக்ஷங்கள் போலச் சாய்ந்தார்கள். பின்பு அந்தப் பிராமணர்கள் 
தானசாலையை யடைய, தக்கனுடைய ஏவலினாலே பலமுனிவர்கள் பொன்களையும் ஆபரணங்களையும் 
வஸ்திரங்களையுங் கொடுத்தார்கள்; கன்னிப் பசுக்களையும், கறவைப் பசுக்களையும் கொடுத்தார்கள்; 
பொற்பாதுகைகளையும் குடைகளையும் குண்டிகைகளையும் கொடுத்தார்கள்; இன்னும் அந்தணர்கள் 
எவ்வெவைகளை விரும்பினார்களோ அவர் விரும்பிய எல்லாவற்றையும் கைகள் சிவக்கக் கொடுத்தார்கள். 

    இவ்வாறே முனிவர்கள் சிறிதுந் தாமதமின்றி அங்குவந்த அந்தணர்கள் யாவர்க்கும் அன்னத்தையூட்டிப் 
பலபொருள்களைக் கொடுக்க; அவர்கள் தாம் வாங்கிய பொருள்களெல்லாவற்றையும் மெல்லமெல்லவாகக் 
கொண்டு போய் ஓரிடத்தில் மலைபோலச் சேர்த்தார்கள். வலிமையிற் சிறந்த வேதியர் சிலர் சிரசிற் சுமந்து
 தமது ஊருக்குக் கொண்டுபோயினார்கள். விட்டுணுவினுடைய கருடனும், பிரமாவினுடைய அன்னமும், 
இந்திரனுடைய ஐராவத யானையும், அக்கினியினுடைய ஆட்டுக்கடாவும், யமனுடைய எருமைக்கடாவும், 
சூரியனுடைய குதிரைகளும் ஒருபுடையில் ஒலித்தன. தேவர்களும் பிறரும் வந்து நெருங்கினமையால் 
அவர்களுடைய விமானகோடிகள் ஒருபுடையிற் செறிந்தன. அரம்பையர்கள் வீணை வேய்ங்குழல் மிருதங்கம்
 ஆகிய வாத்தியங்களோடு தேவர்கள் காண ஒருபக்கத்தில் நடித்தார்கள். 

    ஒருசாரில் அரம்பையர்களும் தேவர்களும் யாகசாலைக்குப் பக்கத்திலுள்ள சோலைகளிலும் வாவிகளிலும் 
விளையாடினார்கள். வேதவல்லியின் குமாரிகளும் தேவமகளிர்களும் அயிராணியும் யாகத்தின் சிறப்புக்களைப் 
பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் அவ்வியாக சாலையிலே ஒருபுடையிலிருந்தார்கள். இவ்வாறாகிய 
நிகழ்ச்சிகள் எங்கும் நெருங்குதலினாலே தக்கனுடைய யாகத்துக்குச் சமுத்திரங்கள் யாவும் வந்து சூழ்ந்தாற்போலப் 
பேரொலியுண்டாயின. தேவர்களும் பூவுலகிலுள்ளாரும் நெருங்கினமை, தேவகங்கையும் பூவுலகிலுள்ள நதியும் 
கலந்தாற் போன்றது.

            திருச்சிற்றம்பலம்.

            வேள்விப்படலம்.

    இவ்வாறாகிய யாகசாலையிலே தக்கன் வேள்விசெய்ததையும் அஃது அழியவந்ததையும் இனிச் சொல்வாம். 
யாக கர்த்தாவாகிய தக்கன் தன்பக்கத்தில் இருக்கின்ற பிரம விட்டுணுக்களோடு யோசித்து, முன்னே தன்னால் 
வரிக்கப்பட்ட இருத்துவிக்குகளை நோக்கி, "விதிப்படி மூவகை அக்கினிகளையும் பிரதிட்டை செய்யுங்கள்'' என்றான். 
அவர்கள் நன்றென்று அரணியில் முறைப்படி கடைந்தெடுத்த அக்கினியை வேதிகையிலுள்ள  பறப்பையின்மேல் 
தாபித்து, மந்திரத்தினாற் பரிதிகளைச் சூழவைத்து, மற்றும் செயற்பாலனவற்றையெல்லாஞ் செய்து, 
அவ்வக்கினியை வளர்த்தார்கள். தக்கன் பக்கத்திலுள்ள இருத்துவிக்குகள் யாவரையும் பார்த்து, ''நீவிர் 
உங்களுங்களுக்கேற்ற கிரியைகளை நினைந்து சோர்வின்றி விரைவிற் செய்யுங்கள்'' என்றான். 

    அவர்களுள் பன்னிருவர் அவ்வேள்விக்குரிய அவிசுகளையும் வன்னி முதலாகிய சமித்துக்களையும் 
தருப்பையையும் இவை போல்வன பிறவற்றையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். ஒருவர் அவ்வேள்வியைச் 
செய்வித்தார். ஒருவர் பரமசிவனல்லாத மற்றைத் தேவர்கள் அவிகளை ஏற்கும்படி அவரவர்க்குரிய மந்திரத்தைச் 
சொல்லினர். ஒருவர் அவ்வத்தேவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் குறிப்பிட்டு அழைத்தார். ஒருவர் 
அவ்வத்தேவர்க்கமைந்த அவிகளைக் கையிலேந்தி அக்கினியில் ஆகுதிசெய்தார். ஒருவர் அச்செயலிற் குறைபாடு 
நிகழாவண்ணம் நோக்கியிருந்தார். 

    ஒருவர் அவ்வியாகத்திற்கு முதல்வராகிய கடவுளைப்போல இருந்து அருள்செய்தார். இருத்துவிக்குகளும் 
பிறரும் இவ்வாறு செய்யும்போது, யாககர்த்தாவாகிய தக்கன் அவர்கள் அவிகளை ஆகுதிசெய்யுந்தோறும் 
அத்தேவர்களைக் கருதி, "இதனையேற்று உண்ணுங்கள்" என்று சொல்லி, அவிகளை அமுதுபோல ஊட்டிக் 
கொண்டிருந்தான். அவ்வவிகள் நற்சுவையினாலும் தூய்மையினாலும் அமுதம் போன்றன வெனினும், 
உயிர்க்குயிராய் வியாபித்திருக்கின்ற சிவபெருமானையின்றி நுகர்ந்தமையால், தேவர்கட்கெல்லாம் 
உண்ணத்தகாத நஞ்சுபோலாயின. 

            திருச்சிற்றம்பலம்.

             உமைவருபடலம்.

    மேலே சொல்லப்பட்ட இவ்வியல்புடைய யாகத்தைத் தக்கன் நாசம் உண்டாகும்வழியை ஆராய்ந்து செய்ய; 
நாரத மகாமுனிவர் பூவுலகத்தில் வந்து அதனைப் பார்த்து, "தக்கன் பரமசிவனை நீக்கித் தேவர்களோடு யாகஞ் 
செய்கின்றான். இவ்வாறு செய்தல் இவனுடைய வலிமைதானோ?" என்று எண்ணி,திருக்கைலாசமலையை யடைந்து, 
திருநந்திதேவர் உள்ளே விடுப்பச் சென்று, பரமசிவனுடைய திருவடிகளை வணங்கித் துதித்துநின்றார். சர்வ 
வியாபியாகிய திருக்கைலாசபதி அவரைப் பார்த்து, 'நாரதனே நீ இங்கேவந்த காரணம் என்னை? இவ்வுலகத்தில் 
விசேடமென்னை? சொல்லுதி" என்று வினாவ; அவர் ''எம்பெருமானே கேட்டருளும். தக்ஷப்பிரசாபதி கங்கா நதிக் 
கரையிலே விட்டுணு பிரமா முதலாயினாரோடு புத்தியில்லாதவனாய் ஓர் யாகத்தைப் புரிகின்றான். இஃதோர் 
புதுமை' என்று சொல்லினார். 

    உமாதேவியார் அதனைக் கேட்டு, சிவபெருமானுடைய திருவருளினால் தக்கனுடைய யாகத்தைப் 
பார்த்தல் வேண்டும் என்று ஆசையுற்று, இருக்கைவிட்டெழுந்து, அக்கடவுளை வணங்கி அஞ்சலிசெய்து  நின்று, 
“எம்பெருமானே, தந்தையாகிய தக்கன் செய்யும் அந்த யாகத்தைப் பார்த்து விரைவில் மீண்டுவருகின்றேன் 
விடைதந்தருளும்' என்றார். சிவபெருமான் "உமையே தக்கன் உன்னை மதியான்; வலிமையடைந்து தேவர்களோடு 
மயங்கியிருக்கின்றான். இப்போது நீ அவனுடைய யாகத்துக்குச் செல்லாதே" என்றார். அதனைக்கேட்ட கிருபா 
சமுத்திரமாகிய அம்மையார் "சுவாமீ, பிரமாவின் குமாரனாகிய தீய தக்கன் அறிவில்லாதவன். அவனுடைய 
பிழையைப் பொறுத்தருளும்" என்று அவருடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டு, "விரைவிலே யாகத்தைப் 
போய்ப் பார்த்து மீண்டு வருவேன் விடையீந்தருளும்" என்று பிரார்த்தித்தார். "தக்கனுடைய யாகத்தைப் பார்க்குங் 
காதலுடையையேல் அதனைப் பார்த்துக்கொண்டு விரைவில் வருகுதி" என்று கடவுள் அனுமதி புரிந்தார்.

    அம்மையார் அவருடைய திருவடித் தாமரைகளை வணங்கி, விரைவில் நீங்கி,ஓர் விமானத்திலேறினார். 
சுமாலி மாலினி என்னும் பெண்கள் சந்திரவட்டக் குடையைத் தாங்கினார்கள். மங்கலை சுமனை முதலிய பெண்கள் 
சாமரங்களை யிரட்டினார்கள். வேறு பல பெண்கள் ஆலவட்டத்தையும் பீலியையும் வீசியும் மலர்களைத் தூவியும் 
சென்றார்கள். வேறுபலர் கோடிகம் அடைப்பை வாள் கண்ணாடி புஷ்பமாலை ஆகிய இவைகளை ஏந்திக்கொண்டு 
விமானத்திலேறிப் பக்கத்திற் சென்றார்கள். நந்திதேவியாகிய சுகேசை என்பவர் பாதுகையைக் கொண்டு பின்னே 
சென்றார். கமலினி அனிந்திதை என்னும் சேடியர்கள் இருவரும் அம்மையாருடைய அளகத்துக்கேற்ற புஷ்பமாலைகளை 
ஏந்திக்கொண்டு மற்றைச்சேடியர்களோடு சென்றார்கள். சிலமகளிர்கள் அம்மையாருடைய புகழ்களைப் படித்துக் 
கொண்டும் சில மகளிர்கள் இசைகளைப் பாடிக்கொண்டும் சில மகளிர்கள் நடித்துக்கொண்டும் சென்றார்கள். 

    பாங்கியர்களும் சிலதியர்களுமாகிய பலர் அளவிறந்த விமானங்களிலேறி அவருக்குப் பக்கத்திற் 
போயினார்கள். பலபெண்கள் நாவி நெய் சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களையும் ஆபரணங்களையும் 
வஸ்திரங்களையும் வைத்த பெட்டிகளைச் சுமந்து கொண்டு சென்றார்கள். பலபெண்கள் குயில் கிளி நாகணவாய் 
மயில் முதலாகிய பக்ஷிகளைக் கொண்டு போயினார்கள். பூதர்கள் பலர் இடபக்கொடியையும் குடைகளையும் 
ஏந்திக்கொண்டும் பற்பல வாத்தியங்களை இயம்பிக் கொண்டும் சென்றார்கள். சோமநந்தி அம்மையாருடைய 
பாதங்களைத் தொழுது அருள்பெற்று, பன்னிருகோடி பூதர்கள் சூழ இடபவாகனத்திலேறிக் கொண்டு, முன்னே 
சென்றார். மேற்கூறிய இவர்கள் யாவரும் இவ்வாறாக நெருங்கிவர; உலகமாதாவாகிய உமாதேவியார் விமானத்தின் 
மேற்கொண்டு விரைவிற்சென்று, தக்கனுடைய யாகசாலையை யணுகி, விமானத்தினின்றிழிந்து, யாகசாலையினுட் 
புகுந்து, தக்கனுக்கெதிரே போயினார். 

    சீலமில்லாத தக்கன் அவரை வெகுண்டு நோக்கி, "தந்தை தாயில்லாத சிவனுக்குப் பிரிய நாயகியாகிய நீ 
யான் இந்த வேள்வியைச் செய்யும் பொழுது என் மகளிர்களைப் போல வந்ததென்னை? வளப்பமும் பெருமையுமுடைய 
இந்த யாகத்துக்கு நீ விரைந்து வாவென்று நான் சொல்லிவிட்டது மில்லை, நீ வரலாமா? உன்னுடைய கைலாசமலைக்கு 
மீண்டு போ" என்று கூறினான். உமாதேவியார் அவற்றைக் கேட்டு, "நீ உன் மருகர்கள் யாவர்க்கும் என்னுடைய 
தங்கை மாருக்கும் இந்த யாகத்திலே தக்கதக்க சீர்களைச் செய்து உறவு கொண்டாடினாய், எங்களைச் சிறிதும் 
நினைத்தாயில்லை. அன்றியும் இங்கே வலியவந்த என்னையும் கோபித்து நோக்குகின்றாய். இது நல்லதா? இது 
குற்றமாகும். இனி உன்னுடைய எண்ணம் யாது? சொல்லுதி" என்றார்.

    தக்கன் அவற்றைக்கேட்டு, "உமையே, முக்குணங்களுள்ளே தீயதாகிய தாமத குணத்துக்குரிய சங்காரத் 
தொழிலைச் செய்து பேயோடாடும் பித்தனாகிய சிவனுக்கு மனைவியாகிய நீயும் அவனுடைய நிலைமையை யுற்றாய். 
அவனோடு நீயும் அகந்தையுற்றமையால் உன்னையிகழ்ந்தேன். உன்னுடைய தங்கையர்களும் என் மருகர்களும் எனக்கு 
என்னிலும் மிகவினியர். ஆதலால் யான் அவர்கள்பாற் பிரீதியுற்று, மேலாகிய சீர்களைச் செய்தேன், அவர்களுக்கு 
இந்த யாகத்தில் அவிப்பாகத்தையும் கொடுத்தேன், விட்டுணு பிரமா முதலிய யாவரும் வந்து என்னைப் புகழ்கின்றார்கள். 
சிவனும் நீயும் மாத்திரம் என்னைச் சிறிதும் மதிக்கின்றீர்களில்லை. ஆதலால் உங்கள்பால் எனக்குப் பிரீதியில்லை. 
மாட்டின் மேல் ஏறுகின்ற உன்னுடைய நாயகனுக்கு இந்த யாகத்தில் அவியையுங் கொடேன். அவனைப் புகழுகின்ற 
வேதவாக்கியங்களையும் என் வலிமையினால் மாற்றுகின்றேன். அதுவன்றி, இங்கே வலியவந்த உனக்கும் 
தினையளவாயினும் ஒரு சிறப்புஞ் செய்யேன்'' என்று சொல்லினான். 

    இவற்றைக் கேட்டலும், காற்றினோடு நெருப்புச் சேர்ந்தாற்போல எம்பிராட்டியார்மாட்டு உயிர்ப்போடு 
கோபாக்கினி தோன்றி, அண்டங்களையும் அவற்றிலுள்ள உயிர்களையும் அழிக்கும்படி வளர்ந்தன. அதனாற் 
பூவுலகமும் நடுங்கின, சமுத்திரங்களும் நடுங்கின, அக்கினியும் நடுங்கின, முகில்களும் நடுங்கின, திக்கு 
யானைகளும் நடுங்கின, தேவர்கள் யாவரும் நடுங்கினர், பிரமாவும் விட்டுணுவும் நடுக்கமுற்றார்கள். ஆயின்,
அவ்வுமாதேவியாருடைய மிகுந்த கோபத்தை யாவர் சொல்ல வல்லவர்! அப்பொழுது, உமாதேவியாருக்குப் 
பக்கத்தில் நின்ற விமலை என்னும் பாங்கி அவரை வணங்கி, "எம்பெருமாட்டீ, உலகமாதாவாகிய உனக்கு 
இத்தன்மையாகிய கோபம் ஏற்குமா! உயிர்களைப்பெற்று வளர்த்த தாயாகிய நீ சினங்கொண்டு அவற்றை 
அழிக்க நினைத்தால் அவை உய்யுந் திறமுண்டோ, இத்தக்கன் தருமத்தை நீங்கினான் என்று கோபிக்கின்றாய். 
இந்தக்கோபம் இறைப்பொழுதினுள் எல்லாவற்றையும் அழித்துவிடும். ஆதலால் இதனைப் பொறுத்தருள்'' என்று 
துதித்து நின்றாள். 

     உமாதேவியார் தம்முடைய சினத்தை அடக்கி, தக்கனை நோக்கிச் சொல்லுகின்றார்: "நீ இங்கே 
என்னை நிந்தித்ததனை நான் நினையேன். எனது நாயகராகிய கடவுளை இகழ்ந்தாய். அதனை யான் சகிக்கிலேன். 
அவ்விகழ்ச்சி என்காதிற் புகுகின்ற நஞ்சு போலும். நிருமலராகிய நமது கடவுள் சாத்துவிகாதி குணரகிதரே; அவர்
அருண்ஞான குணமுடையராய் விளங்குவர். சங்கார காலத்திலே அவரிடத்துத் தாமதகுணம் உளதாக நாம் நினைப்பதன்றி,
 அவர் ஒரு குணத்தின்பாற் பட்டவரோ?  நீ கூறியது நன்று நன்று! சங்காரஞ் செய்யுங்காலத்தில் தாமதகுணத்தினால் 
அதனைப் புரிவதன்றி, ஞானநாயகராகிய அக்கடவுளுக்கு அது என்றுமுள்ள குணமோ. 

    ஆன்மாக்கள் ஓயாமற் பிறந்திறந் துழலா வண்ணம் சங்கரித்து அவைகளுடைய வருத்தத்தைச் சிறிதுகாலம் 
மாற்றுதலாற் சங்கார கிருத்தியமும் தீயதன்று, அருட்செயலே. அதுவும் அழிவில்லாத ஞானநாயகராகிய 
சிவபெருமானுக்கன்றிச் சிருட்டி திதி கிருத்தியங்கள் போல அகந்தையையுடைய மற்றைத் தேவர்களாற் செய்யமுடியுமோ 
முன் எவற்றையும் சங்காரஞ் செய்த கடவுளே பின் அதுபோலச் சிருட்டியுஞ் செய்வர். அவரிடத்தினின்றே எல்லாந் 
தோன்றும். இவ்வியல்பு தான் பதிலக்ஷணத்துக்குரிய வாய்மை. வேதாகமங்களாகிய முதனூல்களை அருளிச்செய்து 
சகலவித்தைகளுக்குந் தலைவராய் ஞானத்தைக் கொடுக்கின்ற எம்பெருமானைத் தாமத குணத்தர் என்று சொல்லலாகுமோ. 
ஆதலால் அவர் அனைவருக்கும் ஒரே நாதர். வேதங்களெல்லாம் அவருக்கு அஞ்சி வியந்து துதிக்கின்றன. நீ அவருக்கு 
அவியைக் கொடாமல் இகழுகின்றாய். 

    சிவ என்னும் சிறந்த இரண்டெழுத்தையும் உச்சரிப்பவர்கள் யாவரோ அவர்கள் மோக்ஷத்தை அடைவர்கள். 
நீ அக்கடவுளை இகழ்ந்தாய். மடவோனே நீ எங்ஙனம் உய்குதி. "பிரமவிட்டுணுக்களாலே தேடிக்காண்டற்கரிய 
சிவபெருமானை முதற்கடவுளாகக் கொள்ளாமல் இகழ்ந்துளோர்க் கெல்லாம் தண்டம் வந்திடும்" என்று வேதங்கள் 
அறுதியிடும். தக்கனே நான் சொல்லும் இதனைக் கேள்.வேதநாயகராகிய அக்கடவுளை விலக்கி நீ ஓர்யாகத்தைப் 
புரிந்தாய். ஆதலால் உனக்கும் அத்தண்டம் வருக" என்று உமாதேவியார் சாபங்கூறி, தக்கன் சொல்லியவற்றை உன்னித் 
திருவுளம் புழுங்கி, பரிசனங்களோடு வேள்விச் சாலையை நீங்கி, விமானத்தின்மேற்கொண்டு, திருக்கைலாச
மலையையடைந்து விமானத்தினின்று மிழிந்து, சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, "சிறியனாகிய 
தக்கன் தேவரீரைப் பெரிதும் இகழ்ந்தான். அவன் அரிதாகச் செய்கின்ற வேள்வியைச் சங்கரித்தல் வேண்டும்" 
என்று கூறினார். கருணாநிதியாகிய கடவுள் சப்திக்கின்ற மானைத் திருக்கரத்துடைய நாதராதலின், அவ்வுரையைக் 
கேளாதொழிய; அம்மையார் அதுகண்டு திருவுளநொந்து, "என் பிராண நாயகரே, தேவரீருக்கு விருப்பும் வெறுப்புமில்லை; 
ஆயினும் அடியேனுக்காக அத்தீய யாகத்தைச் சங்கரித்தல் வேண்டும்" என்று கூறித் தோத்திரஞ்செய்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            வீரபத்திரப்படலம்.

    தக்கனுடைய யாகத்தைச் சங்கரித்தல் வேண்டுமென்று உமாதேவியார் பிரார்த்தித்த பொழுது, சிவபெருமான் 
அவருடைய அன்பை வியந்து, அவர் சிந்தித்த அச்செயலை முற்றுவிக்கும்படி சிறிதே திருவுளஞ்செய்தார். உடனே 
ஆயிரஞ் சிரங்களையும், ஆயிரம் முகங்களையும், அந்த முகங்கள்தோறும் மும்மூன்று கண்களையும், வக்கிர தந்தங்களையும், 
நாக கங்கணங்களை யணிந்த இரண்டாயிரம் புயங்களையும், நாக குண்டலங்களையணிந்த செவிகளையும், பிரம 
விட்டுணு முதலிய தேவர்களுடைய சிரங்களும் என்புகளும் பன்றிக்கொம்புகளும் ஆமையோடுகளும் இடையிடையே 
கலந்து கோத்த மாலையும் பூணூலும் அணிந்த மார்பையும்,வாள் பரிசை சூலம் வேல் குலிசம் சக்கரம் முதலாகிய பல 
ஆயுதங்களை ஏந்திய கரங்களையும், வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்கும் பாதங்களையும்,சர்ப்பாபரணத்தையும், 
காளகண்டத்தையும், செவ்வானம் போலுந் திருமேனியையும் உடையராய், கோபாக்கினி அண்டகோளகைக் 
கப்பாலுஞ் செல்லவும், சங்கார கர்த்தாவாகிய உருத்திர மூர்த்தியுடைய ஒலிபோலும் பேரொலி எண்டிசைகளிலும் 
பரவவும், சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணினின்றும் அவருடைய சொரூபமாய் வீரபத்திரக்கடவுள் தோன்றித் 
 திருமுன்பு நின்றார். 

    உமாதேவியார் அதனைக் கண்டு தமது கோபாக்கினியினின்றும் ஆயிரம் முகங்களையும் இரண்டாயிரங் 
கரங்களையுமுடைய பத்திரகாளியை உண்டாக்கினார். அந்தக்காளி வீரபத்திரக்கடவுளுக்குத் துணைவியாய் அவரை 
அடைந்தாள். எல்லாப் படைக்கலங்களுக்கும் அதிதெய்வமாகிய அஸ்திரதேவரையும் அவருடைய சத்தியாகிய 
அஸ்திரசத்தியையும் போல அவர்கள் இருவரையும் சிவபெருமானும் உமாதேவியாரும் பார்த்து மகிழ்ந்தார்கள்.
வீரபத்திரக்கடவுள் பத்திரகாளியுந் தானுமாய்ப் பரமசிவனையும் பார்ப்பதிதேவியாரையும் வலஞ்செய்து வணங்கி, 
அஞ்சலித்து நின்று, அவர்களை நோக்கி, "அடியேன் பிரமவிட்டுணுக்களை இங்கே பற்றிக்கொண்டு  வருவேனோ? 
யமனைக் கொல்வேனோ? அசுரர்களை வதைப்பேனோ ? தேவர்களை அழிப்பேனோ ? பூவுலக முழுவதையும் 
விழுங்குவேனோ? உலகங்களை நடுங்கச் செய்வேனோ ? சீவராசிகளைச் சங்கரிப்பேனோ? அண்டங்களைத் தகர்ப்பேனோ? 
நீவிர் எதனைப் பணிப்பினும் உங்கள் திருவடிகளைச் சிரமேற்கொண்டு அப்பணிகள் எல்லாவற்றையுஞ் செய்வேன். 
நீங்கள் என்னை உண்டாக்கியது எதற்காக? அதனைச் சொல்லுங்கள்' என்றார். 

    சிவபெருமான் அவரை நோக்கி, "தக்கன் நம்மையின்றி ஓர்யாகஞ் செய்கின்றான். நீ அந்த யாகத்திற் 
போய் நமக்குரிய அவியைக் கேட்குதி; அத்தீயோன் அதனைச் சிரத்தையோடு தந்தானாயின் இங்கே மீண்டு வருதி;
 தராதொழிவானாயின், அவனுடைய தலையைச் சேதித்து, அன்பினால் அவனைச் சார்ந்திருப்போரையும் வதைத்து, 
அவன் செய்யும் யாகத்தையும் கலக்குதி. அப்பொழுது நாமும் ஆண்டு வருவோம். நீ முன்பு செல்லுதி"  என்று 
கட்டளையிட்டார்.  

    வீரபத்திரக்கடவுள் பத்திரையுந் தானுமாக, தமது பிதாவும் மாதாவுமாகிய பரமசிவனையும் 
பார்வதிதேவியாரையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு, தக்கனுடைய யாகத்தை அழிக்க நினைத்து, 
மிகுந்த கோபமுற்று, தம்முடைய சுவாசத்தினின்றும் வேர்வையினின்றும், ரோம கூபங்களினின்றும், சொல்லினின்றும்,
கைகால் முதலாகிய அங்கங்களினின்றும் வாள் முதலாகிய ஆயுதங்களினின்றும் அளவில்லாத பூதகணங்களை 
யுண்டாக்கினார். அவர்கள் பலவித நிறங்களையும் பலவித உருவங்களையும் பலவித ஆயுதங்களையும் உடையர்கள். 
பத்திரகாளியும் அவ்வியல்புடைய பல காளிகளை உண்டாக்கினாள். இவ்விருதிறத்தினரும் வீரபத்திர உருத்திரர், 
பத்திரை என்னும் இருவருடைய பாதங்களை வணங்கித் துதித்து அவர்களுடைய மருங்கிற் சூழ்ந்து,ஆடிப்பாடித் 
துள்ளிக்கொண்டு போனார்கள். 

    இவர்களுள் பானுகம்பர் முதலிய பூதர்கள் வீரபத்திரக் கடவுளுக்கு முன்பு பல வாத்தியங்களை இயம்பிச் 
சென்றார்கள். தண்டன், பினாகி, சிங்கன் முதலாயினோர்கள் குடைகளைப் பிடித்துக்கொண்டும் சாமரங்களை 
வீசிக்கொண்டும் சென்றார்கள். பெண்கள் பலர் பத்திரைக்குப் பக்கத்திலே குடைகளைப் பிடித்தும், சாமரங்களை 
இரட்டியும், பூக்களைச் சிந்தியும், ஆசிகளைச் சொல்லியும் போயினார்கள். பூமி முழுதும் நெருங்கிய சேனைகள் 
ஆரவாரிக்கும் ஒலி எங்கும் செறிதலால் அண்ட முகடும் உடைந்தது. அங்குள்ளவர்கள் "எவ்வண்டம் உடைந்ததோ" 
என்று நடுக்கத்தோடு தம்முட் பேசுவாராயினர். பூதூளி யெழுந்து எல்லாவண்டங்களிலும் பரந்து இரவுபகல் 
தெரியாவண்ணம் மறைத்தது. இத்தன்மையாகிய சேனைகள் தம்மைச்சூழ, வீரபத்திர உருத்திரர் பெருங்கோபத்தோடு 
எழுந்து சென்று,தக்கனுடைய யாகசாலையை யணுகி, தமது பக்கத்தில் வருகின்ற படைத்தலைவர்களை நோக்கி, 
"தக்கனென்னுந் தீயோன் அழியுந் திறத்தினாற் சிற்றினமே பொருளென்றுன்னி இயற்றுகின்ற இவ்வேள்விச்சாலையின் 
வாயில்களையும் சுற்றுப் பக்கங்களையும் நன்றாகக் காத்துக்கொள்ளுங்கள்'' என்று பணித்தார். அவர்கள் மதிற்புறங்களினும்
ஆகாயத்தினும் வாயில்களினும் செறிந்து காத்து நின்று, தக்கனுடைய சேனைகளாய் வந்தெதிர்த்தோர்களைக் கொன்று, 
அவர்களுடைய ஊன்களைப் புசித்து, யமனும் நடுங்கும்படி ஆர்த்தார்கள்.

            திருச்சிற்றம்பலம்.

            யாகசங்காரப்படலம்.

    வீரபத்திரக் கடவுள் பத்திரகாளியோடு தக்கனுடைய யாகசாலையுட் போயினார். அவ்விருவரையும் 
பிரமா முதலாகிய அனைவரும் பார்த்து, உளந்துண்ணென்று பதைபதைத்து அச்சங் கொண்டு, சிங்கேற்றின் 
வரவைக்கண்ட மான்கூட்டங்கள் போலவும், இடியேறுண்ட பாம்புகள் போலவும் மனம் நடுங்கி, வலிமை இழந்து 
மகிழ்ச்சி நீங்கி முகம் வாடி உயிரில்லார்போல ஒடுங்கி, இங்கே சிவபெருமானும் உமாதேவியாருமே வந்தார்கள் 
என்பாரும், இவர்கள் அவர்களுடைய கடுஞ்சினத்தினின்றும் தோன்றினவர்கள் என்பாரும், ஐயையோ இவர்களுடைய 
கோபம் இத் தன்மையதென்று சொல்லுதற்கரிது என்பாரும், நம்முடைய உயிர்க்கெல்லாம் இன்றே நாசம் வந்துவிட்டது 
என்பாரும், தக்கனுக்கும் இன்றே அழிவு வந்ததுபோலும் என்பாரும், விதியை யாவர் விலக்க வல்லார் என்பாரும், 
சிவபெருமானை வெறுத்து இகழ்கின்றவர் அக்கணமே அழிவரென்பதற்கு ஐயமுண்டோ என்பாரும், 

    பரமசிவனை இகழுகின்ற தக்கன் ஏன் யாகத்தைச் செய்கின்றான் என்பாரும், நம்மையெல்லாம் 
பரம்பொருளென்றெண்ணி  இந்த யாகத்தைச் செய்தான் காணும் என்பாரும், தேவர்கூட்டங்களுக்கெல்லாம் 
இன்றைக்கே நாசம் வருமோ என்பாரும், இத்தீங்கெல்லாம் உமாதேவியார் காரணமாகவன்றோ உற்றன என்பாரும், 
பூதர்கள் எங்கும் வந்து வளைந்து கொண்டார்கள் என்பாரும், இங்கே ஓடிப்போகவும் முடியாதென்பாரும், 
ஒளித்தற்கிடமேது என்பாரும், நாம் இறந்தோங் காணும் என்பாரும், இனிச் செய்வதென்னை என்பாரும் ஆகி, 
நாற்புறத்தினும் அக்கினிசூழ அதன் னடுவுட்பட்ட யானைகள் போலப் பெருந் துன்பமடைந்தார்கள். 

    கடுங்கோபமுற்ற வீரபத்திரக் கடவுள் தம்மைப் பிரியாத சில பூதப்படைத்தலைவர்கள் சூழப் பத்திரையோடு 
சென்று, தீயனாகிய தக்கன் யாகஞ்செய்வதனைப் பார்த்து, இடியிடித்தாற்போலச் சிரித்துப் பொங்கி, அக்கினிகால 
விழித்து ஆர்த்து, கொம்பு வாத்தியத்தை ஊதினார். அவ்வொலியினால் மேருகிரி பிளந்தது. பூமி வெடித்தது. 
அண்டங்கள் துடித்தன. உயிர்கள் துளங்கின. தேவர்களும் முனிவர்களும் இடியேறுண்ட பாம்புகள்போலச் சோர்ந்து, 
பின் எழுகின்றவரும், பதைக்கின்றவரும், வாய்வெருவுகின்றவரும், ஏங்கி அழுகின்றவரும், ஓடுகின்றவரும், 
மீளுகின்றவரும், வேள்வியழிந்ததோ என்கின்றவரும் ஆயினார். தேவர்களும் முனிவர்களும் இப்படி வருந்தினராயின், 
ஏனையோர் பட்டபாட்டை நம்மாற் சொல்ல முடியுமோ! கோடைக்காலத்திலே இடியேறுண்ட அசுணமாவின் றன்மையை 
யடைந்தார்கள்.

    இவ்வாறு நிகழும் பொழுது, வீரபத்திரக்கடவுள் யாகசாலையின் முன்னே செல்லுதலும், சீலமில்லாத 
தக்ஷப்பிரசாபதி அவரைக்கண்டு ஏங்கி மிகவும் நடுங்கி உள்ளந் தளர்ந்து, தலைமை நீங்கி, பூதர்கள் யாகசாலையை 
வளைந்ததையும் அது அழிவுறுதலையும் தேவர்கள் அயர்தலையும் நோக்கி, பெருந்துயரடைந்து, பின்னர் ஒருவாறு 
தேறி, பேராற்றலுடையவன் போல வீரபத்திரக்கடவுளை நோக்கி, "நீ யார் இங்கே வந்ததென்னை?' என்று வினாவினான். 
அவர் தக்கனே யான் சிவனுடைய குமாரன். உன்னுடைய யாகத்தில் அவருக்குக் கொடுக்கற்பாலதாகிய அவிப்பாகத்தைத்
 தருதி. அதற்காக அந்தக் கடவுளுடைய பணியினால் ஈண்டுவந்தேன்" என்று கூறினார். தக்கன் அதனைக் கேட்டு, இனி 
"உங்கள் பிதாவாகிய சிவனுக்கு உலகிலுள்ளோர் யாகத்தில் அவியைக் கொடுக்க மாட்டார்கள்" என்றான். 

    அப்பொழுது, அங்கே யிருக்கின்ற நான்கு வேதங்களும் பிரணவமும் விரைவில் ஒருங்குகூடி எழுந்து, 
''உயிர்கட்கெல்லாம் ஒருதனிமுதல்வரும் ஒப்பில்லாதவருமாகிய சிவபெருமான் ஒருவரன்றி யாகத்துக்குத் 
தலைவனாக வேறோர் தேவனும் உண்டோ? தக்கனே யாகத்திலே நீ அந்தச் சிவனுக்குக் கொடுக்கற்பாலதாகிய 
அவிப்பாகத்தைக் கால தாமதஞ் செய்யாமற் கொடுக்குதி' என்று அறிவிலியாகிய தக்கன் கேட்கும்படி சொல்லின. 
அப்பொழுதும் அவன் அவியை அவருக்குக் கொடுத்திலன். அவைகள் அதனைக் கண்டு, சிவபெருமானுடைய 
புகழ்களை எடுத்துத் துதித்துக்கொண்டு, யாகசாலையை நீங்கித் தத்தம் உறைவிடங்களிற் போயின.

    வீரபத்திரக்கடவுள் தக்கனை நோக்கி, 'தக்கனே வேதங்களும் பிரணவமுஞ் சொல்லிய உண்மைப் 
பொருளைக் கேட்டாயன்றே. எம் பெருமானுக்குரிய அவியை ஈகுதி" என்றார். அவன் "சுடுகாட்டிலே ஒரு பெண்ணோடு 
நின்று கூத்தாடுகின்ற அந்தப் பித்தனுக்கு அவியை ஈயேன்' என்றான். வீரபத்திரக்கடவுள் அதனைக்கேட்டு, அவனுக்குப் 
பக்கத்தில் நெருங்கியிருக்கின்ற பிரமா முதலிய தேவர் குழுவை நோக்கி, "நீங்களும் இவன் பக்ஷமாயினீர். பரமசிவனுக்கு 
அவியைக் கொடாமல் இவன் அவரை இகழுந் தன்மை உங்களுக்கும் உடன்பாடாகுமோ?'' என்றார். என்னலும், தேவர்கள் 
ஊழின் றிறத்தால் அதனைக் கேளாதவர்கள்போல ஒன்றும் பேசாமலிருந்தார்கள். வீரபத்திரக்கடவுள் விரைவில் 
நெருப்பெழ விழித்துச் சினந்து, "இவர்களுடைய வலிமை நன்று'' என்று நகைத்துப் பல்லைக் கடித்துச் சீறி, ஒரு 
தண்டாயுதத்தினாலே விட்டுணுவினுடைய மார்பில் அடித்தார். அவர் தக்கன் வெருவும்படி எதிரே விழுந்தார். 

    வீரபத்திரக்கடவுள் அதன்பின்பு பிரமாவை நோக்கி, இடிவீழ்ந்தாற்போல அவருடைய சிரசில் ஒரு 
திருக்கரத்தாற் குட்டினார். பிரமா அவருடைய பாதங்களில் வணங்குபவர் போல உச்சிச்சிரஞ்சோர வீழ்ந்தார். 
அவருடைய மனைவியர்களாகிய சரசுவதி முதலாயினோரை மூக்கையும் ஸ்தனத்தையும் அறுத்தார். 
இவற்றைப் பார்த்து நின்ற தேவர்கள் யாவரும் ஓடி உலைந்து வீழ்ந்து ஒளிப்பிடந்தேடிக் கதறிச் சிதறினார்கள். 
இவ்வாறாகிய சமயத்திலே, தப்பியோடிப் போகின்ற பூரணசந்திரனை வீரபத்திரக்கடவுள் பார்த்து, தம்முடைய 
ஒரு பாதத்தினால் மெல்லவாகத் தள்ளி, அவனுடலைச் சின்னமுண்டாகத் தேய்த்து, அவனை விடுத்து, வெருவி 
ஓடுகின்ற சூரியனை இடியிடித்தாற்போலக் கதுப்பிலடித்துப் பற்களை உதிர்த்தார். அவன் உயிர்நீங்கி வீழ்ந்தான். 

    பின் பகனென்னும் சூரியனுடைய கண்களைப் பிடுங்கினார். இத்தன்மைகளை யமன் கண்டு, அஞ்சியோட, 
அவனுடைய தலையை வெட்டினார். இந்திரன் பயந்து குயிலுருக்கொண்டு ஆகாயத்திற் போயினான். அவனைக்கண்டு 
வாளினால் வெட்டி வீழ்த்தினார். பயந்தோடிய அக்கினியைக் கண்டு கரத்தைத் துணித்து வீழ்த்தி, "முதற்கடவுளாகிய 
சிவபெருமானைத் தூஷித்த தக்கன் கொடுத்த எல்லையில்லாத உணவுகளை வெறுக்காமல் உண்டாய்" என்று 
அவனுடைய ஏழு நாக்குக்களையும் அறுத்தார். அவன் வெட்டுண்ட நாவோடும் கையோடும் தள்ளாடி வீழ்ந்தான். 
அவன் மனைவியாகிய சுவாகாதேவியினுடைய நாசியை நகத்தினாற் கிள்ளினார். 

    ஆகாயத்தி லெழுந்தோடுகின்ற நிருதியைக் கண்டு "நிற்பாய்' என்று கூறி, தண்டினால் அடித்து வீழ்த்தினார். 
உருத்திரகணத்தோர்கள் தம்முடைய பாதங்களில் வீழ்ந்து வணங்க; அவர்களைத் தண்டனை செய்யாது, "போங்கள்' 
என்று சொல்லி, ஓடிப்போதற் குரிய வழியைக் காட்டி ஓட்டிவிட்டார். வருணனை எழுப்படையினால் அடித்தார். 
வாயுவை மழுப்படையினால் வதைத்தார். குபேரனை முத்தலைச் சூலத்தினாற் கொன்றார். ஈசான உருத்திரர் 
ஏங்கி வெட்கி, "இவர் நம்மைக் கொல்வாரோ'' என்று பயந்து துதிக்க; அவரையணுகி,வைது, ஒருகேட்டையும் 
செய்யாது, முன்பு உருத்திரர்கள் சென்றவழியாற் போகவிடுத்தார். அவர் நாணத்தோடு போயினார். 
சோணிதபுரத்துக் கரசனாகிய அசுரேந்திரன் பயந்தோட; அவன்றலையை ஓரம்பினால் வீழ்த்தினார். 
வேள்வித்தெய்வமாகிய எச்சன் பிணைமானுருக்கொண்டு ஓட, ஓரம்பைத் தொடுத்து அவன்றலையை வீழ்த்தினார்.

    தக்கன் இச்செய்கைகளெல்லாவற்றையும் துன்பத்தோடு பார்த்து, விரைந்தெழுந்து, வெருவுஞ் சிந்தையனாய், 
திட்பத்தை விடுத்து, வலையுளகப்பட்ட பிணைமான் போலப் பதைத்து, தன்மனத்தில் இவ்வாறு யோசிப்பானாயினான்: 
"அளவிடுதற்கரிய பெருமையையுடைய இந்தயாகமும் என் முன் இவ்வாறு அழியுமோ! என் பிதாவாகிய பிரமதேவர் 
உபதேசித்தபடி யான் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து, அழிவில்லாத பல வளங்களை அவரிடத்திற் பெற்று, 
அவற்றைத் தந்த அக்கடவுளை அன்பினோடு நினையாமலும் தோத்திரஞ் செய்யாமலும் செல்வத்தினால் மயங்கினேன்; 
உமாதேவியை மணஞ்செய்து கொடுத்து, அவரை மருமகன் என்று கருதி மிகவும் இகழ்ந்தேன்; வேதவிதிப்படி 
அச்சிவபெருமானுக்கு முதலிற்கொடுக்கற்பாலதாகிய அவிப்பாகத்தைக் கொடுக்கலாகாது என்று என் பிதாவினுடைய 
யாகத்திற்றடை செய்து,யானும் இந்தக் குற்றத்தையுடைய யாகத்தைச் செய்தேன்; 

    தந்தை சொல் என்று சொல்லத்தக்க அந்தத் ததீசி முனிவருடைய ஆப்த வாக்கியங்களையும் நிந்தைசெய்தேன்; 
இந்த வேள்வியிலே தானாக வந்த என் மகளை மறுத்துப் பின்னிகழ்வதை யறியாதேனாய்ப் பரமபதியாகிய சிவபெருமானை 
இகழ்ந்தேன்; அன்றியும், இந்த வீரபத்திரக்கடவுள் வந்து 'அக்கடவுளுக்குரிய அவிப்பாகத்தைத் தருவாய்' என்று சொன்ன 
பொழுது, இவருடைய எண்ணத்தை நோக்கியும், அது நன்றென்று கூறி அவிப்பாகத்தைக் கொடுத்திலேன்: வேதங்கள் 
வந்து சொல்லியதையும் நினைத்திலேன்; எனக்கு இந்தப் புத்திகளெல்லாம் நாசத்துக்கேதுவாய் வந்தன போலும். பிரமா 
முதலாயுள்ள தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அந்தணர்களுக்கும் ஏனையோர்க்கும் ஓர் இறுதியைத் தேடினேன்; 
வேதங்களின் பொருட்டுணிபை யறிந்தும், சிவபெருமானை மிகவும் நிந்தித்து, இப்பொழுது இறப்பதற் கேதுவாயினேன். 
விதிவழியே மதியுஞ் செல்லும் போலும்." என்று இவைபோல்வனவற்றைத் தன்மனத்தோடு சொல்லி வருந்தி, "இறக்குஞ்
 சமயத்தில் அறிவின்மையை நினைத்துப் பலவற்றையும் பேசி ஆவதென்னை? இனிச் செய்வது யாது?'' என்றெண்ணி, 
பக்கத்திலுள்ள பூதசேனைப் பரப்பையும் வீரபத்திரக்கடவுளுடைய வலிமையையும் சினத்தையும் பத்திரகாளியின் 
கோபத்தையும் பார்த்து, "யான் தப்பியோடுவது அரிது" என்று நினைத்து, அதன்மேல், "இங்கே அழிந்த தேவர்களைப்போல 
யான் ஓடுவேனாயினும் பிழைப்பதில்லை. ஆதலால் மிக்க வலியையுடைய இந்த வீரபத்திரருக்கெதிரே வன்மையுடையவர் 
போல நிற்றலே துணிபாம்" என்று அவ்வாறே நின்றான்.

    வீரபத்திரக்கடவுள் அவனது நிலையைக் கண்டு, சீற்றத்தோடு அவனைக் கிட்டி, "தக்கனே நீ தேவர்களோடு 
கூடிச் சிவபெருமானைத் தூஷித்தாய். அதனால் உனக்கு இதுவே தண்டனை' என்று வாட்படையினால் அவனுடைய 
தலையைத் துணித்து, அது விழுமுன் கரத்தாற்பற்றி, அக்கினியைப் பார்த்து, "இதனை உண்ணுதி" என்று கொடுத்தார். 
அது நொடிப்பொழுதில் உண்டது. தக்கன் மனைவியர்களாகிய வேதவல்லி முதலாயினோரும் அவனுடைய புத்திரிகளும் 
அதனைக் கண்டு, அளகஞ் சோரக் கைகளையுதறிப் புலம்பிக்கொண்டு அங்கே வந்தார்கள். 

    பத்திரகாளி வேதவல்லியினுடைய காதை அறுத்து, மற்றை மனைவியர்களுடைய தலைகளையும் அவன் 
புத்திரிகள் முதலாகிய மற்றைப் பெண்களுடைய தலைகளையும் வாட்படையினால் வெட்டி, அவைகளைப் பந்துகள்போல 
அடித்து விளையாடினாள். வீரபத்திரக்கடவுளும் பத்திரகாளியும் மற்றைத் தேவர்களையும் முனிவர்களையும் தனித்தனி 
கிட்டி, பாதங்களினாலும் கரங்களினாலும் ஆர்ப்பினாலும் படைக்கலங்களினாலும் கொன்றார்கள். ஊழிக்காற்றையும் 
ஊழித்தீயையும் போலவும், உமையையும் உருத்திரமூர்த்தியையும் போலவும், பத்திரகாளியும் வீரபத்திரக்கடவுளும் 
தனித்தனி திரிந்து இவ்வாறே தக்கனுடைய யாகத்தை அழித்தார்கள். அவர்களுடைய நிலைமையைத் தேவர்கள் சிலர் 
பார்த்து, 'இவர்கள் எங்குமாக நிற்கின்றார்கள்; எல்லாரையும் அழிக்கின்றார்கள். பத்திரையும் வீரபத்திரரும் 
எண்ணில்லாதவர்கள் போலும்' என்றார்கள்.

    இவ்வாறு வீரபத்திரரும் பத்திரகாளியும் யாகத்தைச் சங்கரிக்கும் பொழுது, பூதசேனாவீரர்களும் காளிகளும் 
அதனை நோக்கி, வீரபத்திரக் கடவுளுடைய கருத்தின்படி, யாகசாலையைச் சூழ்ந்த மலைபோன்ற மதிலையழித்து, 
உட்புகுந்து, தேவர்கள் தியங்கும்படி கோபத்தோடு ஆர்த்தார்கள். அவ்வொலியைக்கேட்டு அங்கிருந்த முனிவர்களும் 
தேவர்களும் அயர்ந்து, பார்த்த பார்த்த திசைகடோறும் ஓட; அவர்கள் பூமியை வளைத்த சமுத்திரம்போல வளைந்து 
கொண்டார்கள். அகப்பட்ட தேவர்களும் முனிவர்களும் சோர்ந்தனர், வெருண்டனர், திடுக்குற்றனர்,தளர்ந்தனர், 
வழுப்பட்டனர், தொலைந்தனர்,மயங்கினர், கலங்கினர், மனங்குழம்பினர், வாடினர். 

    வேள்விச் சாலையிலுள்ள பிராமணர்கள் தம்மைப்பெற்ற இருமுது குரவரையும் தமையன்மாரையும் 
தம்பிமாரையும் மக்களையும் மனைவியர்களையும் மற்றைச் சுற்றத்தார்களையும் நினைத்து அழைக்கின்றார்கள், 
பதைக்கின்றார்கள். வெருக்கொள்கின்றார்கள். பிணங்களுள் ஒளிக்கின்றார்கள். தேவர்களும் முனிவர்களும் 
அந்தணர்களும் சமுத்திரம் போலாக, வீரபத்திரருடைய படைஞர்கள் அதனுட்புகுந்த மந்தரமலைபோல அவர்களைக் 
கலக்கியும், கொதுகுகளை யானைகள் புடைத்தாற்போல அடித்து உதிர்த்துந் திரிந்தார்கள். அவர்கள் சிங்கம்போலக் 
கர்ச்சிக்கின்றார்கள், கலை மான்களைப் போலத் தேவர்களைப் பிடித்து அடிக்கின்றார்கள், பற்களால் அவர்களுடைய 
சிரங்களைக் கடிக்கின்றார்கள், கழுத்துக்களை யொடிக்கின்றார்கள், தோள்களை முறிக்கின்றார்கள், உடல்களைக் 
கறிக்கின்றார்கள்; அடிநாக்குக்களை அகழ்கின்றார்கள், கண்களைப் பறிக்கின்றார்கள், மிதிக்கின்றார்கள், 
சங்குகளை ஊதுகின்றார்கள், இரத்தத்தைக் குடிக்கின்றார்கள்,

    உடல்களைப் பிளந்தெறிகின்றார்கள், எதிரே போய்த் தடுத்து உதைக்கின்றார்கள், துகைத்துக் கொல்லுகின்றார்கள், 
தலைகள் சிந்தும்படி படைகளை விடுகின்றார்கள், ஊன்களைத் தமது வாய்களில் இடுகின்றார்கள், சிரங்களை 
மிதிக்கின்றார்கள், காலால் மிதித்துக்கொண்டு உடம்புகளை உரிக்கின்றார்கள், யாகாக்கினியிலே உடல்களை 
எரிக்கின்றார்கள், நெய்க்குடத்திலிட்டுப் பொரிக்கின்றார்கள், கரிக்கின்றார்கள், புகைக்கின்றார்கள், மார்பை 
அகழ்ந்து குடலையெடுத்து மாலையாகச் சூடி மகிழ்கின்றார்கள், களிக்கின்றார்கள், சிவனைப் புகழ்கின்றார்கள், 
இறக்கின்ற தேவர்களைக் கண்டு இகழ்கின்றார்கள், அவர்களைத் தூக்கியெறிந்து ஆயுதத்திலேற்கின்றார்கள், 
ஒளித்தோடுகின்ற முனிவர்களைக் கண்டு பின்றொடர்ந்தோடிப் பிடித்துப் பூமியிற்கிடத்தித் துடிக்கும்படி 
குன்றுகளால் அரைக்கின்றார்கள், 

    சில ஊன்களைக் கழுகுகளுக்குக் கொடுக்கின்றார்கள். நெய்யையுண்டார்கள், தயிரையுண்டார்கள், 
பாலையுண்டார்கள், மற்றையுணவுகளை யுண்டார்கள், தேவர்களுக்காக வைத்த அவிகளையுண்டார்கள். 
வடவாமுகாக்கினியைச் சமுத்திரஜலம் அவித்தாற்போல யாககுண்டங்களிலுள்ள மூவகையக்கினியையும் 
இது மிகப் பரிசுத்த முடையதென்று வியந்து மூத்திரத்தைப்பெய்து அவிக்கின்றார்கள். யாகசாலையின் 
கதவுகளை அடைத்து நெருப்பைக் கொளுத்தி அங்குள்ளவர்களை எரிக்கின்றார்கள். கலசங்களையும் 
கும்பங்களையும் உடைக்கின்றார்கள், தகர்க்கின்றார்கள், நக்ஷத்திரங்களை உதிர்க்கின்றார்கள். 

    வேள்வித்தூண்களிற் பிணித்த பசுநிரைகளை அவிழ்த்துக் கங்கையிற் செல்ல விடுகின்றார்கள், 
ஆகாயத்தி லெறிகின்றார்கள், ஆயுதங்களாற் கொல்கின்றார்கள். அரம்பையர்களுடைய தலைகளையும் 
மற்றை அங்கங்களையும் அறுக்கின்றார்கள், கறிக்கின்றார்கள், உமிழ்கின்றார்கள். எறிகின்றார்கள், 
இறக்கின்றோருடைய வாகனங்களையும் விமானங்களையும் தேர்களையும் சுடுகின்றார்கள், அவர் ஏந்திய 
படைக்கலங்களையும் அணிந்த முடி குண்டலம் முதலிய அணிகலன்களையும் அக்கினியிலிட்டுப் 
பொடிபடுத்துகின்றார்கள், யாகசாலையிலுள்ள வேதிகைகளைக் கால்களால் இடித்துப் பொடியாக்குகின்றார்கள்,
 தோரணங்களை ஒடிக்கின்றார்கள், கோபாக்கினியை உமிழ்கின்றார்கள், நடிக்கின்றார்கள், பாடுகின்றார்கள், 
தக்கனுடைய மருமக்களைப் பிடித்து வாயாற் சொல்லவுந் தகாத கருமத்தைச் செய்கின்றார்கள், 

    அவர்களுடைய மார்பைக் கையால் அடிக்கின்றார்கள், அவர்கள் உண்ட அவியை உமிழ்விக்கின்றார்கள். 
சில தேவரைத் தறிக்கின்றார்கள், சிலரைத் தலைமயிர் முழுதையும் பறிக்கின்றார்கள், சிலரைக் கயிறுகளால் 
யூபங்களிற் கட்டுகின்றார்கள், சிலரை நெருப்பில் வதக்கிக் கொறிக்கின்றார்கள், சிலரை நாற்றிசைகளிலும் 
எறிகின்றார்கள், சிலரை நிணச்சேற்றிற் புதைக்கின்றார்கள், சிலரை இரத்தவெள்ளத்தில் விடுகின்றார்கள், 
சிலரைப் பருந்துக்கிரையாக இடுகின்றார்கள். இடைந்தவரையும் விழுந்தவரையும் எழுந்தவரையும் 
எதிர்வந்தவரையும் இரிந்தவரையும் இருந்தவரையும் கிளர்ந்தவரையும் ஆகாயத்திற் சென்றவரையும் 
இறந்து கிடந்தவரையும் அவரவர்க்கேற்றபடி இங்ஙனம் பலவாறு தண்டித்தார்கள். 

    கணநாதரிற் சிலர், யாகத்தின் நிலையைக் கண்டு அழுது தளருகின்ற தெய்வப்பெண்களை வலிந்து 
பிடித்து இழுத்துத் தாமரைத் தடாகத்தை மதயானை புகுந்து கலக்கினாற்போலப் புணர்கின்றார்கள். குட்டென்பதும் 
பிளவென்பதும் கொல்லென்பதும் வெட்டென்பதும் குத்தென்பதும் முரியென்பதும் கட்டென்பதும் அடியென்பதும் 
உதையென்பதுமே அந்த யாகசாலையில் எவரும் பேசுஞ்சொற்களாயின. கையற்றவரும் காலற்றவரும் செவியற்றவரும்
 உடலற்றவரும் நாவற்றவரும் கண்ணற்றவரும் கழுத்தற்றவரும் அல்லது, தக்கனுடைய யாக சாலையில் அழிவைப் 
பொருந்தாதவர் ஒருவரும் இல்லை.

    வீரபத்திரக் கடவுளுடைய சேனையும் பத்திரகாளியுடைய சேனையும் தயிர்க்கடலிலே  பல மத்துக்கள் 
புகுந்துடைத்தாற்போல எங்கும் உலாவி இவ்வாறு யாவரையும் தண்டித்து யாகத்தை அழிக்க; முன்னே வீரபத்திரக் 
கடவுள் தண்டினால் அடிப்ப வீழ்ந்த விட்டுணு அயர்வு நீங்கி எழுந்து, கவலையோடு யாகத்தின் அழிவைப் பார்த்து, 
"யான் இந்த யாகத்தை அழிவின்றி அன்போடு காத்தது அழகிது" என்று மனத்திலுன்னி வெட்கி, மானம் நின்று 
மனத்தையீர உருத்து, "சிவபெருமானை இகழும் அதிபாதகர்க்கு இத்தன்மையாகிய தண்டம் வருவது முறை" 
என்னும் எண்ணமும் தெளிந்த உணர்வும் இல்லாதவராய், வீரபத்திரக்கடவுளோடு போர்செய்யக் கருதி, 
கருடவாகனத்தை நினைத்தார். அது யாகத்தில் இறந்ததாதலும், தம்முடைய கோபாக்கினியை ஒரு 
கருடவாகனமாக்கினார். 

    அது வணங்கி அவர்முன் நின்றது. நிற்றலும், அதன்தோளில் விரைவில் ஏறி, பஞ்சாயுதங்களையும் 
ஏந்தி, யாகசாலையைச் சூழ்ந்த பூதப்படைகள் மேல் முனிந்து சென்று, பாஞ்ச சன்னியம் என்னுஞ் சங்கை ஊதிக் 
கடலுடைத்தாற்போலப் பேரொலி செய்து, தேவர்கள் செய்த யாகத்தின் அக்கினிச் சுவாலை கொடுத்த வில்லை 
வளைத்து, எண்ணில்லாத பாணங்களை வீரபத்திரக் கடவுளுடைய சேனைகள்மேலே செலுத்தினார். பூதர்களும் 
காளிகளும் பேய்களும் ஒருங்கு குழுமி விட்டுணுவைச் சூழ்ந்து போர்செய்தார்கள். தம்முடைய சேனைகளோடு 
விட்டுணு வந்து போர்செய்தலை வீரபத்திரக் கடவுள் பார்த்து நகைத்தார். வேதங்களாகிய ஆயிரங் குதிரைகள் 
பூண்டதும், எண்ணில்லாத ஆயுதங்கள் பொருந்தப் பெற்றதும், கொடிமுதலியவற்றினால் அலங்காரஞ் செய்யப்பட்டதும் 
ஆகிய ஒரு பெரிய தேரைச் சிவபெருமான் வீரபத்திரக்கடவுளுக்காக அனுப்ப, அது அவர்முன் வந்தது. 

    முன்னே வீரபத்திரக் கடவுளாற் பூமியில் வீழ்ந்து அயர்ந்து கிடந்த பிரமா அறிவுபெற்றெழுந்து, யாகத்தின் 
நிகழ்ச்சியையும் விட்டுணு போர்செய்தலையும் வீரபத்திரக் கடவுளுடைய செற்றத்தையும் ஆகாயத்திலே அவருக்காகத் 
தேர் வந்ததையும் பிறவற்றையும் பார்த்து, "யான் உய்தற்கு இதுவே காலம்" என்று கருதி, தேர்ச்சாரதி வேடங்கொண்டு, 
முட்கோலை யேந்தி, வீரபத்திரக்கடவுளுடைய தேரில் ஏறி விரைவிற் றூண்டி, அவரை வணங்கி, "விபூதியை 
உத்தூளித்த செம்பவளத் திருமேனி யையுடைய நிருமலரே, பகைவர்களைச் சங்கரிக்கும் வீரரே, உமக்குப் 
பெருமைவாய்ந்த ஒரு தேரைக் கொண்டு வந்தேன். இதன்மீது துணைவியாரோடு இவர்ந்தருளும்" என்று 
துதித்து இரந்தார். 

    வீரபத்திரக்கடவுள் பிரமாவின் மேற்கொண்ட கோபத்திலொரு சிறிது நீங்கி, பத்திரையோடு அதன்மீது 
ஏறினார். பிரமா,"யாவராலும் வெல்லுதற்கரிய வலிமையையுடைய வீரரே, அடியேன் தேர்செலுத்துந் திறத்தைப் 
பார்த்தருளும்'' என்று கூறி, விட்டுணுவின் முன்பு தேரைச் செலுத்தினார். அதன்மேல் இருந்த வீரபத்திரக்கடவுள், 
பூமியாகிய தேரின்மீது ஏறி முப்புர தகனஞ் செய்யச் செல்லும் சிவபெருமானையொத்தார்.
வீரபத்திரக்கடவுள் ஏறிய தேர் தன்முன் வருதலும், விட்டுணு அவரைநோக்கி, "நீர் சிவபெருமானைத் தூஷித்த 
தக்கனை அழிப்பதல்லது, அவன்பாலிலுள்ள ஒரு தவறுஞ்செய்யாத தேவர்களை அழிப்பதென்னை? யாகத்தை 
அழிப்பதென்னை? சொல்லும்" என்றார். 

    வீரபத்திரக்கடவுள் இது நன்றென்று நகைத்து, 'சிவபெருமானை இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியில் 
அவிப்பாகத்தை உண்டோர்க்கெல்லாம் வேதஞ்சொல்லிய தண்டத்தையே புரிந்தேம். உன்னையுந் தொலைப்போம். 
நீ வன்மையுடையையாயின் அதனைக் காத்துக்கொள்'' என்றார். விட்டுணு அதனைக்கேட்டு வெகுண்டு, வில்லை 
வளைத்து நாணோதை செய்து, அஸ்திரங்களினாற் பூதர்களை மறைத்தார். அதனைக் கண்டு வீரபத்திரக்கடவுள் 
மகாமேரு மலையை நிகர்த்த வில்லை வளைத்துச் சிறிது நாணோதை செய்தார். அதனாற் சமுத்திரங்கள் ஒடுங்கின, 
புவனங்கள் நடுங்கின, மலைகள் வெடித்தன, சங்கார காலம் இதுவோ என்று எவரும் அயர்ந்தனர். வீரபத்திரக்கடவுள் 
அளவிறந்த பாணங்களைத் தூண்டி விட்டுணுவை மறைத்து, அவர் விடுஞ் சரங்களெல்லாவற்றையும் பொடிபடுத்தினார். 
விட்டுணு ஆயிரஞ் சரங்களைத் தொடுத்து வீரபத்திரக்கடவுளுடைய புயத்தில் எய்ய, அவர் அவற்றையெல்லாம் 
ஆயிரங்கணைகளால் விலக்கி, விட்டுணுவினுடைய நெற்றியில் ஒரு பாணத்தை விடுத்தார். அவர் தளர்ந்தார். 

    வீரபத்திரக்கடவுள் அவர் தளர்வு நீங்குமளவும் அவர்மேற் பாணங்களைச் செலுத்தாமல் தேரின்மீது வில்லை 
ஊன்றிக்கொண்டு நிற்ப,விட்டுணு தளர்வு நீங்கி வந்தெதிர்ந்தார். வீரபத்திரக்கடவுளும் எதிர்ந்தார். இருவரும் 
முறைமுறையாகச் சரமாரிகளைப் பொழிந்து பொருதார்கள். அவர்கள் செய்த போரை யார் புகழ்ந்து சொல்லவல்லவர். 
இவ்வாறு இருவரும் பொருகின்ற பொழுது, வீரபத்திரக் கடவுள் வடவாமுகாக்கினிப் படையை விட்டுணுவின்மீது தூண்ட, 
அஃது அவருடைய மார்பிற்பட்டது. அவர் மனம் பதைபதைத்திரங்கி வெய்துயிர்த்து அறிவிழந்து மெலிந்து, பின் 
ஒருவாறு தெளிந்தார். அந்த விட்டுணுவை வீரபத்திரக்கடவுள் நோக்கி, ''போரைச் செய்குதி" என்று கூற, அவர் 
தம்மிடத்துள்ள தெய்வப் படைக்கலங்க ளெல்லாவற்றையும் அவர்மேற் செலுத்தினார். வீரபத்திரக்கடவுள் 
அவ்வப் படைக்கலத்தை அவ்வப் படைக்கலத்தால் மாற்றினார். 

    விட்டுணு பிரமப்படைக்கலத்தைத் தூண்டினார். வீரபத்திரக்கடவுளும் அப்படைக்கலத்தைவிட்டு 
அதனை மாற்றினார். விட்டுணு அளவில்லாத அம்புகளைப் பொழிய, வீரபத்திரக்கடவுள் ஒரு பாணத்தால் 
அவற்றையழித்து, விட்டுணுவினுடைய சார்ங்கமென்னும் வில்லையும் துணிபடுத்தி, பின்னும் இரண்டம்புகளை 
விடுத்து, அவருடைய கருடவாகனத்தின் இரண்டு சிறைகளையும் வெட்டி வீழ்த்தினார். விட்டுணு மாயத்தினால் 
அளவில்லாத விட்டுணுக்களை உண்டாக்க, அவர்கள் யாவரும் வீரபத்திரக்கடவுளுக்கு முன்னே சூற்கொண்ட 
மேகங்கள்போல வந்து பரந்தார்கள்.

    அவர்கள் யாவரையும் வீரபத்திரக்கடவுள் நெற்றிக்கண்ணின் அக்கினியினாலே பொடிபடுத்தினார். 
விட்டுணு அவர்மீது சக்கரப்படையைத் தூண்ட அதனை வீரபத்திரக்கடவுள் கையாற்பற்றி விழுங்கினார். 
விட்டுணு தண்டாயுதத்தை எறிந்தார். அதை வீரபத்திரக்கடவுள் தமது தண்டினாற் றடுக்க அது அழிந்து வீழ்ந்தது. 
அதனை விட்டுணு கண்டு கோபித்து, வாட்படையை எடுத்து வீசும்படி சமீபத்தில் வர, வீரபத்திரக்கடவுள் 
விரைந்து கோபத்தோடு உங்காரஞ் செய்தார். விட்டுணு சித்திரப்பாவை போல ஒருசெயலுமின்றிக் கையும் 
வாளுமாய் அஞ்சிச் சும்மாநின்று தளர்ந்தார். வீரபத்திரக்கடவுள் யாது நினைந்தோ சிறிது கோபங்கொண்டார். 
அப்பொழுது, "மிகுந்த செற்றத்தை நீங்குதி" என்று சிவபெருமான் அருளிச்செய்த ஓரசரீரிவாக்கு ஆகாயத்திற் றோன்றியது. 

    அதனை வீரபத்திரக் கடவுள் கேட்டுச் சினந் தவிர்ந்து நிற்ப; சாரதியாகிய பிரமா அதனைப் பார்த்து, அவரை 
வணங்கித் துதித்து, "தருமநெறியை நீங்கிய பதகனாகிய தக்கன் நாசமடையும்படி செய்த யாகத்தில் வந்து அவிப்பாகத்தை 
உண்ட அறிவில்லாத அடியேனுடைய பிழைகளையெல்லாம் பொறுத்தருள் புரியும்'' என்று அவருடைய திருவடித் 
தாமரைகளைப் பற்றிக்கொண்டார். அவரை வீரபத்திரக்கடவுள் நோக்கி, "அவ்வாறாகுக" என்றருள் புரிந்தார்.
விட்டுணு அந்நிலையைக் கண்டு, ''இதுவே சமயம்'' என்று கருதி. வீரபத்திரக்கடவுளைத் துதித்து, இவ்வாறு சொல்லலுற்றார்: 
"வீரரே, தமியேனுடைய சார்ங்கமென்னும் வில்லையும் துணிபடுத்தி, பலபடைக்கலங்களையுஞ் சிந்தி, அநேக 
பகைவர்களுடைய உயிரையுண்ட சக்கரப்படை செல்ல அதனையும் பிடித்து விழுங்கி, அடியேனையும் வென்று, 
புகழைப் பூணாகத் தரிப்பீரென்றால் யார்தாம் உம்முடைய புகழை முடிவுறச் சொல்ல வல்லார்! அறிவில்லாதேனாகிய 
யான் சன்மார்க்கந் தவறிய தக்கன் செய்கின்ற பூசனையை விரும்பி அவனுடைய யாகத்திற் புகுந்தேன். அதனால் நீர்
 இத்தண்டனையைச் செய்யப்பெற்றேன். அந்தோ! 

    அறிவிற் சிறந்தோர், சிவனை இகழ்ந்த பாவிகள்மாட்டு இருப்பாரோ.சிவநிந்தனை செய்தோரும் அவரைச் 
சார்ந்தோரும் ஆகிய எல்லார்க்கும் வேதங்களே விதித்த பெரிய தண்டனையல்லவா நீர் செய்த இவைகளெல்லாம். 
ஆதலால்,எம்மனோர்மாட்டு நீர் செய்த இத்தண்டனைகளெல்லாம் நீதியாம். எம்மிடத்தன்றி உம்மிடத்து ஒருகுறை 
உண்டோ. கண்ணினாலும் சிரிப்பினாலும் உயிர்ப்பினாலும் ஆர்ப்பினாலும் சொல்லினாலும் புவனங்க 
ளெல்லாவற்றையும் அடியோடு அழிக்கவல்ல கடவுளே, நீர் இந்த யாகத்திற் பலரையும் படைக்கலத்தினாற் 
சங்கரித்தது உமக்கு ஒரு திருவிளையாடலன்றோ! தம்மை அடைந்த அன்பர்க்கு வேண்டிய வரங்களைக் 
கொடுத்தருளுகின்ற சிவ பெருமான் கட்டளையிட்ட முறையை நினைத்து, இந்த யாகத்தை அழிப்பதை 
ஒரு திருவிளையாடலாகக் கொண்டு, சிறிதுபொழுதினுட் சங்கரித்தீர். 

    நமது கடவுளே, நீர் இதனை அழிக்கத் திருவுளஞ் செய்தால் யார்தான் உமக்கு எதிர் நிற்கவல்லார். 
இலயசத்தி கோரசத்தி போகசத்தி புருஷசத்தி என்று சிவபெருமானுக்கு நான்கு சத்திகள் உள்ளன. அவற்றுள் 
இலயசத்தி துர்க்கையும் கோரசத்தி காளியும் போகசத்தி உமையுமாம். யான் புருஷசத்தியாம். இதனை வேதங்கள் 
சொல்லும், அத்தன்மையால் யான் சிவபெருமானுடைய சத்தியாயின், அவரின் வேறல்லேன், அவர் மாட்டு மிகவும் 
அன்புடையேன். இழந்த என்னுடைய வலிமையையுஞ் சக்கரப்படையையும் இன்னும் அக்கடவுளுடைய திருவடிகளைப் 
பூசனை செய்து மிகவிரைந்து பெற்றுக்கொள்கின்றேன். சுவாமீ, தேவரீர் கோபத்தோடு நீதியைச் செய்ததற்காக 
மனத்திற் றுன்பங்கொள்ளேன். உம்மால் இத்தண்டனையைப் பெறுதலால் இதனைப் புனிதமாகக் கொள்வேன். 
தண்டனையைச் செய்த தேவரீர் அடியேனுடைய குற்றத்தைப் பொறுத்து இனி அருள் புரியும்" என்று கூறி, விட்டுணு 
வீரபத்திரக்கடவுளுடைய பாதங்களை வணங்கினார். அக்கடவுள் விட்டுணு கூறியவற்றைக் கேட்டு, அவருக்கு 
அருள்செய்து நின்றார்.

    அப்பொழுது, பரமசிவன் இடபவாகனத்தின் மேற்கொண்டு, பூத கணங்கள் சூழவும், திருநந்திதேவர் துதிக்கவும் 
பார்வதி சமேதராய்த் தோன்றியருளினார். அதனைத் தெரிந்த வீரபத்திரக்கடவுள் அச்சத்தோடு கைகூப்பி வணங்கிப் 
பக்கத்தில் நிற்ப, விட்டுணுவும் பிரமாவும் சிவபெருமானை வணங்கி, பிரிந்த தாயை எதிர்ப்பட்ட குழந்தைகளைப்
போன்றார்கள். தேவர்களும் தக்கனும், யாகசாலையிலே கால் கை தலை மார்பு தோள் மூக்கு முதலாகிய அங்கங்கள் 
துணிந்து வீழ உயிர்நீங்கிக் கிடந்த தன்மையை உமாதேவியார் கண்டு, முன்னே கொண்ட சீற்றம் நீங்கி, அருள் உண்டாக, 
சிவபெருமானை நோக்கி, ''முன்னுள்ள பொருட்கெல்லாம் முன்னுள்ள கடவுளே, இந்திரனுக்கும் தேவர்களுக்கும் 
மற்றை யாவருக்கும் என்னால் முடிவு வந்ததென்று உலகம் பேசும். அவர்கள் மனம் மயங்கி உம்முடைய பெருமைகளைச் 
சிறிதும் அறியாது தவறுசெய்த தன்மையால் வீரபத்திரனாகிய உமது குமாரனால் இற்றைத்தினத்தில் பெறற்பாலதாகிய 
தண்டனையைப் பெற்றனரேயன்றோ. முன்னும் 'இவர்களைச் சங்கரிக்குதிர்' என்று அடியேன் விரும்பியதனையும் 
செய்து முடித்தீர். இப்பொழுது அவர்கள் உய்ந்து உயிர்பெற்றெழும் வண்ணம் இந்த வரத்தையும் அடியேனுக்குத் 
தந்தருளும்" என்று வணங்கிப் பிரார்த்தித்தார். 

    சிவபெருமான் "உன்னருள் நன்று" என்று திருப்புன்முறுவல் செய்து, தமது மருங்கில் நின்ற வீரபத்திரக்கடவுளை 
நோக்கி, "இந்த யாகத்தில் நம்மை இகழ்ந்து உன்னுடைய கோபத்தால் இறந்தோருடைய உயிர்களை மீண்டுங் கொடுத்து 
அவர்களுடைய உடல்களை முன்னாள் போலச் செய்குதி' என்றருளிச் செய்தார். வீரபத்திரக்கடவுள் அதற்கிசைந்து, 
''இறந்த அனைவரும் முன்போல எழும்புங்கள்" என்று சொல்ல; தேவர்களும் முனிவர்களும் அந்தணர்களும் 
உயிர்வரப்பெற்று, நித்திரை விட்டெழுந்தவர்போல எழுந்து, தாம் தக்கனுடைய யாகத்தில் வந்திறந்ததும் மீண்டுயிர்
பெற்றெழுந்ததும் கனவுகண்டதுபோல உணர்ந்து, வெருவி மனம் மருண்டு, சிவபெருமானை யிகழ்ந்ததனால் 
வந்த பழியை நினைத்து வருந்தி, மிக வெட்கமடைந்தார்கள்.

    உயிர்பெற்றெழுந்த தேவர்களும் முனிவர்களும், வீரபத்திரக்கடவுள் மருங்கிலே நிற்ப சிவபெருமான் 
பார்ப்பதி சமேதராய் ஆகாயத்தில் வெளிப்பட்டு நிற்றலைத் தரிசித்து அஞ்சி நடுங்கினர். அதனை அக்கடவுள் கண்ணுற்று, 
"நம்மையன்றி இவர்க்குத் தஞ்சம் யாவர்" என்று திருவுளங் கொண்டு, "தளராதொழிமின்" என்றருள் புரிந்தார். பிரமா 
விட்டுணு முதலிய தேவர்கள் அக்கடவுளுடைய திருவருளைப் பார்த்து, "எம்பெருமானுடைய பேரருள் இருந்தவாறு நன்று" 
என்று மிக மகிழ்ந்து, அவருக்கணித்தாய்ச் சென்று வணங்கி, இவ்வாறு விண்ணப்பஞ் செய்வார்கள்: 

    "எம்பெருமானே, மனம் மயங்கித் தக்கனுடைய வேள்வியில் உம்மையன்றி வந்திருந்த பாவியேங்கள் முன்னும் 
எழுந்தருளிவந்து கருணை புரிந்தீர். மைந்தர்க்குத் தந்தையல்லது வேறொருவர் சார்புண்டோ. அன்பில்லாத 
அடியேங்கண்மாட்டுத் தேவரீர் சினஞ்செய்தால், சிருட்டி முதலாகிய கிருத்தியங்களைக் கைக்கொண்டு முறைசெய்யும் 
பக்குவம் நமக்குளதோ. அஞ்சற்க என்று சொல்ல வேறோர் தஞ்சமுளதோ. எங்களுடைய உயிர்தானும் உளதோ. 
வேதநெறி கடந்த இந்தவேள்வியில் அவிப் பாகத்தையுண்ட பேதைகளாகிய சிறியேங்கள் நெடுங்காலம் 
தீவினையினாற் றுன்பப்படாமல் இமைப்பொழுதினுள்  அதனால் ஆகும் பாவத்தைத் தண்டனை செய்து தொலைத்த 
முதற்கடவுளே, உமக்கு அடியேங்கள் செய்கின்ற கைம்மாறு யாது. உம்முடைய திருவடிகளுக்குப் பிழைசெய்த 
அடியேங்க ளெல்லோமும் இங்கே வீரபத்திரக்கடவுளென்னும் சிங்கத்தின் கையாற் சிதைபட்டவாறெல்லாம் 
ஈனங்களல்ல, அவை பவித்திரமாய் எங்களுடைய அங்கங்கட்கெல்லாம் அணிந்த அணிகளன்றோ. 

    எம்பெருமானே, தேவரீர் முன்னாளிற் கங்கையைத் தரித்ததும், அக்கினியை ஏந்தியதும், விஷத்தைத் 
திருவமுது செய்ததும், உமையம்மையார் காண நடனஞ்செய்ததும் எங்கள்மாட்டுவைத்த திருவருளன்றோ. 
அறிவில்லாத அடியேங்கள் தேவரீருக்குச் செய்த பிழைகளைத் திருவுள்ளங் கொள்ளாது, அடியேம் உய்யும்படி 
அவற்றைப் பொறுத்தருளும் " என்று பிரமா விட்டுணு முதலிய தேவர்கள் பிரார்த்தித்தார்கள். சிவபெருமான் 
"நீவிர் செய்த பிழைகளைப் பொறுத்தோம்" என்றருளிச் செய்தார். தேவர்கள் அவருடைய திருவருளைத் 
துதித்துத் தொழுது, மனங் களிப்பெய்தித் தேறி, ஆடிப்பாடிச் சிறப்புற்றார்கள். 

    அப்பொழுது, சிவபெருமான் பிரமா முதலிய தேவர்கண்மீது திருவருட்கண் சாத்தி, "உங்களுங்கள் 
அரசுரிமையை உங்களுக்கே தந்தோம். முன்போல உங்கள் கிருத்தியங்களைச் செய்யுங்கள்'' என்று 
திருவாய் மலர்ந்தருளினார். அரிபிரமேந்திராதி தேவர்கள் யாவரும் அக்கடவுளுடைய அருட்டிறத்தைத் 
துதித்து மகிழ்ந்தார்கள். அவருள் பிரமா, வீரபத்திரக் கடவுளால் யாகத்தில் இறந்த பின்பு எழுந்த குழுவினுள் 
தம் மகனாகிய தக்கனைக் காணாதவராய், சிவபெருமானுடைய திருவடிகளின் முன் வீழ்ந்து வணங்கி, 
'எம்பெருமானே, தேவரீருடைய திருவாக்கை இகழ்ந்து யாகத்தைச் செய்த கீழ்மகனாகிய தக்கனுடைய 
அகந்தையை நீக்கும்படி அவனைத் தண்டஞ்செய்து நரகத்தில் வீழ்தலை மாற்றினீர். அவனும் எங்களைப் 
போலப் பிழைத்தெழுமாறு அருள்செய்யும்" என்று வேண்ட, சிவபெருமான் "அவ்வாறாகுக'' என்று கருணைசெய்தார். 

    வீரபத்திரக்கடவுள் அவருடைய திருவருளைக்கண்டு, "சிவபெருமானுடைய திருவடிகளைத் தரிசித்துத் 
துதித்து அவற்றினியல்பை யறிதலால் தாழ்வடையாத ஊழ் தக்கனுக்கு உளது'' என்றெண்ணி, அவனுக்குரிய 
புல்லிய தலையை அவனுடலோடு சேர்க்கக் கருதி, 'அக்குறையுடலைக் கொண்டு வருதி" என்று பானுகம்பருக்குக் 
கூறினார். அவர் அவ்வுடலை வீரபத்திரக்கடவுளுக்கு முன் கொண்டு வந்திடுதலும், வீரபத்திரக்கடவுள் யாகப்பசுக்களுள் 
இறந்த ஓர் ஆட்டின்றலையைக் கண்டு எடுத்து, வேதங்களாற் றுதிக்கப்படும் பரமபதியாகிய சிவபெருமானை இகழும் 
பாவிகள் இவ்வாறே யாவர் என்பதனை யாவர்க்கும் புலப்படுத்துவாராய், அத்தலையை அவ்வுடலிற் பொருத்தி,
''எழுக' என்றார். 

    என்னலும், உயிர்பெற்றெழுந்த தக்கன் எதிரில் நிற்கின்ற வீரபத்திரக்கடவுளைக் கண்டு, நெஞ்சந் துண்ணென்ன 
அஞ்சி, தன் பெருமையெல்லாம் இழந்து, அவ்வாட்டுத் தலையால் வணங்கி, நாணி, அன்று தான்செய்த செயல்களை 
நினைந்து இரங்கி, துன்பக்கடலுள் ஆழ்ந்து, உமாதேவியாரோடு இடப வாகனாரூடராய் நிற்கின்ற சிவபெருமானைத்
 தரிசித்து, விரைவில் வெருக்கொண்டு, மிக அச்சுற்றான். அப்பொழுது சிவபெருமான்"தக்கனே இனி நீ அஞ்சற்க" 
என்று அருள்புரிந்தார். அவன் எம்பெருமானுடைய திருவடிகளின் முன் வணங்கி, "பாவியேன் புரிந்த தீமை மனத்தாலும் 
அளவிடமுடியாது. ஐயனே, நினைக்குந்தோறும் சுடுகின்றது. தேவரீர் அவற்றை நீக்கித் திருவருள் புரிந்த தன்மையால் 
உய்ந்தேன். அடியேன் பிழைசெய்தது போல யார் பிழைசெய்யினும் அடியேனைப் போலத் தண்டிக்கப்படுவது 
துணிபாமன்றோ. உம்முடைய பெரிய மாயையினால் விட்டுணுவே துணையென்றெண்ணி உம்மை இகழ்ந்தேன். 
சிறியேன் யாதுமறிகிலேன்" என்று விண்ணப்பஞ்செய்தான். 

    உமாதேவியார் பத்திரகாளியோடு பக்கத்தில் நின்ற வீரபத்திரரை ''வருக'' என்று அழைத்து, அவ்விருவருடைய 
முதுகையுந் தடவி, அவர்களுக்குப் பல வரங்களைக் கொடுத்தார். அரிபிரமேந்திராதி தேவர்களும் தக்கனும் முனிவர்களும்
 தம்மைத் துதித்து வணங்கி நிற்ப, சிவபெருமான் அவர்களை நோக்கி, "தேவிர்காள்! வம்மின். யாகத்தில் நீவிர் யாவரும் 
நம்மை இகழ்ந்து குற்றத்துட்படக் கிடந்ததெல்லாம் முன்னை ஊழ்வலியாம். உமக்கு இப்பிறப்பில் யாம் இத்தண்டத்தைச் 
செய்தவாறும் முறைமையே. இதற்காக நாணமுற்று இரங்காதொழிமின்" என்றருளிச் செய்தார். தம் பகைவர்களா 
யுள்ளோரையும் நினைத்தருள் புரிகின்ற சிவபெருமான் இவ்வாறு அருளிச்செய்தலும், தேவர்கள் அவரையும் 
வீரபத்திரக் கடவுளையும் வணங்கித் துதித்தார்கள். 

    சிவபெருமான் வீரபத்திரக் கடவுளும் காளியும் பக்கத்தில் வரவும், திருநந்திதேவர் முன்புசெல்லவும், பூதசேனைகள் 
சூழவும், உமாதேவியாரோடு அவ்விடத்தை நீங்கித் திருக்கைலாச மலையை அடைந்து, கோயிலிலுள்ள செம்பொன்மன்றில் 
வீற்றிருந்து, வீரபத்திரக் கடவுளுக்கும் காளிக்கும் மேலுலகத்தில் ஒரு புவனத்தைக் கொடுத்தார். வீரபத்திரக்கடவுள் 
இருமுதுகுரவர்களுடைய பாதங்களை வணங்கி விடை பெற்று, யாகசங்கார காலத்திலே சிவபெருமான் கொடுத்தருளிய 
தேரின் மீது பத்திரகாளியோ டிவர்ந்து, பானுகம்பர் அதனைச் செலுத்த, சேனைகளோடு தமதுலகிற்போய்க் 
கோயிலை யடைந்து, பூதர்கள் சூழத் துணைவியோடு இனிதாக வீற்றிருந்தார். இது நிற்க.

            திருச்சிற்றம்பலம்.

            அடிமுடிதேடுபடலம்.

    சிவபெருமான் திருக்கைலாச மலைக்கு மீண்டுவந்தபின், யாகசாலையில் நின்ற தேவர்களுள்ளே 
பிரமதேவர், பெருமையை இழந்த தமது குமாரனாகிய தக்கனை நோக்கி, இவ்வாறு சொல்கின்றார்: ''மகனே, 
நீ எதனைப் படித்தாய்? எத்தொழிலைச் செய்தாய்? அதனால் எந்தப் பிரயோசனத்தை அடையக் கருதினாய்? 
அந்தப் பிரயோசனத்தை யாராற் பெற்றாய்? பெற்று அதன் பின் யாது செய்தாய்? அதனால் என்னபாட்டைப் 
பட்டாய்? பின் இங்கே என்னத்தைப் பெற்றாய்? இனி உன்னெண்ணம் யாது?* தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
 அந்தணர்களுக்கும் உயிரைக் கொன்று தின்கின்ற ஒரு கூற்றுவனாயினாய்;

* வேதங்களையுணர்ந்து, தவஞ்செய்து, மோக்ஷத்தைக் கருதாமற் செல்வத்தைக் கருதி, அதனைச் 
சிவபெருமானாற் பெற்று, பின் அவரைத் தூஷித்து யாகஞ்செய்து, இறந்து ஆட்டுத்தலையைப் பெற்றாய்.             
இனியேனும் இதற்கேற்ற பரிகாரத்தைச் செய்கின்றனையா?  என்பார் இவ்வாறு வினாவினார்.                

     சீரையும் தொலைத்தாய்; தக்கனென்னும் பேரையுந் தொலைத்தாய்; பேதையாய் உன்னுடைய 
அழகையுந் தொலைத்தாய்;  உன்னுடைய ஏவலைச் செய்கின்றவர்கள் எல்லாரையும் தொலைத்தாய்; 
துன்பத்தை யடைந்தாய்; உன்னுணர்வல்லது பெரியோர்கள் சொன்னதையும் உணர்ந்தாயில்லை; 
சிவபெருமானுடைய பெருந்தன்மை முழுதையும் அறிந்த நீ ஊழினால் அக்கடவுளை இகழ்ந்து 
இந்நிலைமையை யடைந்தாய்; 

    பெருஞ் செல்வங்களைப் பெற்று அவற்றை ஈந்தருளிய சிவபெருமானுடைய மேன்மைகளை 
அயர்த்தாய்; இந்த மயக்கம் உன்னளவில் மாத்திரமன்று, சீவராசிகளுக்கெல்லாம் உள்ளது. ஆதலால் நீயும் 
மயங்கினாய். நீ என்ன செய்குதி. முற்றுணர்வெய்தி எல்லாவற்றையும் படைத்துக் காக்கப்பெற்ற பிரம 
விட்டுணுக்களாகிய எங்கள் மாட்டும் முன்னாளிலே மயக்கம் வந்துற்றன. சிவபெருமான் அதனைக் கண்டு, 
இற்றை நாள்போல அருளினால் வந்து அம்மயக்கத்தை நீக்கினார். ஆதலால், தக்கனே நீ நிருமலராகிய 
அக்கடவுளுடைய திருவடிகளை அன்போடு அருச்சனை செய்குதி. அவர் மயங்குகின்ற இப்பிறவியை
 நீக்கி ஞானத்தையும் மோக்ஷத்தையும் கொடுப்பார்" என்று பிரமா சொல்லினார். 

    தக்கன் அதற்கிசைந்து, "பிதாவே, உய்யுந் திறத்தை எனக்கு உபதேசித்தீர். உங்கள் மாட்டும் முன்னாளில் 
உண்டாகிய மயக்கத்தையும், சிவபெருமான் வந்து அதனை நீக்கி உங்களுக்கு அருள்செய்ததனையும் தமியேன் 
அறியும்படி சொல்லும்" என்றான். பிரமா தக்கனை நோக்கி, ''இக்கதையை முன்னுஞ் சொன்னோம். இன்னமும் 
சொல்வோம்' என்று கூறி, முன்னாளிலே தாமும் விட்டுணுவும் நாமே பரம்பொருள் என்று போர்செய்த
 காலத்தில் சிவபெருமான் வெளிப்பட்டு வந்தருள் செய்த திருக்கோலத்தை நினைத்துத் தொழுது, சொல்வாராயினார்:

    "ஆயிரஞ் சதுர்யுகங் கழிந்தால் எனக்கு ஒரு பகற்காலமாகும். அப் பகற்காலங்கழிந்து இரவு வர நான் 
நித்திரை செய்வேன். அப்பொழுது, சூரிய சந்திரர் முதலாகிய கிரகங்களும், நக்ஷத்திரங்களும், இந்திரன் 
முதலிய தேவர் கூட்டங்களும், இப்பூவுலகமும், இங்குள்ள உயிர்களும் அழியும். மேலுலகங்களிலுள்ள முனிவர்கள் 
யாவரும் பயந்து நடுங்கி, சன லோகத்தையடைவர்கள். நாற்றிசைக் கடல்களும் விரைவில் எழுந்து, உமா தேவியார்
தவஞ்செய்கின்ற காஞ்சிப்பதி முதலாகிய தலங்களை ஒழிந்த வுலகத்தை விழுங்கி, சத்தபாதலங்களையும் மூடி 
மேலே உலாவி, தேவருலகத்தை அழித்து நிமிர்ந்து, அப்பாலுமாகி, இவ்வாறு உலகை அழிக்கும். அப்பொழுது, 
விட்டுணு பரமசிவனுடைய திருவடியைத் தியானஞ்செய்து கொண்டு, ஓராலிலையின் மீது குழந்தைவடிவாய் 
நித்திரை செய்வர். 

    அதனைச் சனலோகத்திலுள்ள முனிவர்கள் கண்டு புகழ, அவர் விழித்துப் பூவுலகத்தைத் தேடுதலும்,
 அது பாதலத்தில் ஆழ்ந்ததாக, அந்த விட்டுணு ஒரு பன்றியின் உருவுகொண்டு பாதலத்திற்போய்த் தேடி, அப்பூமியைத் 
தம்முடைய கொம்பினால் எடுத்துக்கொண்டு மீண்டுவந்து, முன்போல நிறுத்திப் போயினார். அப்பொழுது, 
அவ்வாயிரஞ் சதுர்யுகமுங் கழிய, எனக்கு மற்றொரு பகற்பொழுதாயது. நான் நித்திரை விட்டெழுந்து, 
சிருட்டித் தொழில் செய்யும்படி நினைக்க, சமுத்திரங்கள் யாவும் முன்னின்ற நிலையை யடைந்தன.

     விட்டுணு 'நாம் கொம்பினாலே பூமியை எடுத்து நிலைநிறுத்தினோம்' என்று நினைத்து, 
அகந்தையுற்று, பாற்கடலிலே சேஷ சயனத்தின்மீது அறிதுயில் செய்தார். அப்பொழுது யான், தேவர்களையும்
 அசுரர்களையும் மனுடர்களையும் விலங்குகளையும் மற்றைச் சீவராசிகளையும் சிருட்டித்து, 
வானுலகத்திலும் பூவுலகத்திலும் வைத்து, இந்திரனை விண்ணுலக அரசனாக்கி, மற்றைத் திக்குப் 
பாலகர்களை அவரவர் தானங்கடோறும் இருத்தி, இத்தன்மையாகிய சிருட்டியை மிகப்பெரிது என்றுன்னி, 
என்னையொழிய வேறோர் கடவுளும் இல்லையென்று எழுந்து, 'நான் உறங்கும்பொழுது உயிர்கள் யாவும் 
இறக்கும், நான் எழும்பொழுது அவ்வுயிர்களெல்லாம் எழும்பும். ஆதலால் யானே அவற்றிற்கெல்லாம் தஞ்சம். 
என்னையன்றி அவ்வுயிர்களுக்கு ஒருபிதாவுமில்லை. 

    எல்லாருக்கும் மேலான பரம்பொருள் யானே' என்று என்னை வியந்து, மேலுலகங்களையும் 
திக்குக்களையும் மற்றையுலகங்களையும் மேருமலையையும் ஏழுகடல்களையும் சீவராசிகளையும் 
மற்றைச் சடப்பொருள்களையும் போய்ப் பார்த்து, 'இந்தப் பொருள்களனைத்தும்  முன்னாளில் யான் 
உண்டாக்கினவைகளாயின் எனக்கு ஒருவரும் நிகரில்லை' என்று மனத்தில் மதித்து, விட்டுணு பாற்கடலில் 
அகந்தையோடு அறிதுயில் செய்தலைக் கண்டு, அவரை விட்டுணு என்று அறிந்தும், செருக்கோடு சென்று 
இலக்குமி வசிக்கின்ற அவருடைய மார்பிலே தாக்கி, 'நித்திரை விட்டெழும்பும்' என்று கூறினேன். அவர் எழுந்தார். 

    எழுந்த அவரை 'நீ யார்? சொல்லுதி' என்று யான் வினாவுதலும், அவர் 'மைந்தனே, நான் உனது பிதா. 
நீ என்னை அறியாயோ' என்றார். நான் நகைத்து, 'எழுப்பினாலும் நீ நித்திரையிட் டெழுந்திலைபோலும்? பிதாமார் 
தமது புத்திரர்களுக்குச் சொல்லுகின்ற வாசகம்போல நீ நமக்கு முன்னே இதனைச் சொன்னது முறையன்று. 
என்னை இவரே என்பிதா என்று நினைக்குதி. பரப்பிரமம் யாம் என்றறிக. உன்னுடைய உந்திக் கமலத்திலிருந்து 
வந்த உண்மையை உணராமல் நம்மை உன் மைந்தன் என்று நினைத்தாய். விறகானது தன்னிடத்திற் பிறந்த 
அக்கினிக்குத் தந்தையாகுமோ! நீ சொல்லிய இது பொய்யன்றோ! யான் உன்பிதா என்று நீ எனக்கு உன்னை 
வியந்து சொன்னாய்.இனி அந்த வியப்பை விட்டுவிடு. 

    நீ தவவலிமையினால் முன்னாளில் ஒரு தூணிலே உதித்தாய். அதனால் உன்னைக்காட்டிலும் அந்தத் 
தூணே உயர்ந்த பொருளாமோ. என் மகனாகிய பிருகு முனிவன் சொல்லிய சாபத்தால் அடிக்கடி பத்துப்பிறப்பை 
எடுத்தாய். உன்னுடைய அந்த உடம்புகளெல்லாவற்றையும் நாமே படைத்தோம். அப்படிப் படைத்து நம்முடைய 
கை சிவந்திருக்கின்றது. அதனைக் காணுதி' என்றேன். யான் விட்டுணுவுக் கெதிரிற் போந்து இப்படிச் சொல்லுதலும், 
அவர் கோபத்தினாலே நன்றென்று நகைத்துக் கையோடு கைதட்டிச் சிரித்து, இவ்வாறு சொல்வார்;

    உன்னுடைய உச்சிச்சிரசை நகத்தினாற் கிள்ளுதலும், நீ அஞ்சி வீழ்ந்தாய். அதை இன்னும் படைத்து வைத்தாயில்லை; 
இப்படிப்பட்ட நீ நம்மைப் படைப்பதென்பது நன்றாயிருந்தது! மைந்தனே, உன்னைப்பெற்ற தாயும் யாம், தந்தையும் யாம்,
 உனக்குத் தெய்வமும் யாம், குருவும் யாம். நீ அந்த நம்முடைய மாயையினால் மயக்கமடைகின்றாய். பொன்னில்லாமல்
 ஆபரணம் உண்டாகுமோ; அரசனின்றி நிலவுலகம் நிகழுமோ; பூமியில்லாமல் வளங்கள் உண்டாகுமோ; அவைபோல, 
என்னையின்றி எந்தச் சராசரங்களும் உண்டாகுமோ! எவ்வுயிர்களையும் எண்ணுவிப்போனும் யான், எண்ணுகின்றவனும் 
யான்,பதிப்பொருளும் யான், ஐம்புலன்களும் யான்,அணுகுதற்கரியவனும் யான், நாரணனாகிய கடவுளும் யான், 
இந்திரனும் யான், வேதமும் அவ்வேதப் பொருளும் யான், ஆதியும் யான், உருவும் யான், அருவும் யான், இருளும் யான்,
சோதியும் யான், ஜெகத் பிதாவும் யான், நிருமலனும் யான், மாயனும் யான், எல்லாம் யான், எல்லாரும் யான், 
பூதங்களும் யான், சிவனுடைய பாதியும் யான், அந்தப் பரசிவமும் யான், பரம்பொருளும் யான்.' என்று பற்பலவற்றைச் 
சொன்னார். 

    யான், அவருக்கெதிராய்ச் சென்று கோபித்து, 'நாமிருவரும் போரைச் செய்வோம். நம்மில் வெற்றிகொண்டவர்களே 
மேலோர்கள். போருக்கு எழும்புதி' என்றேன். விட்டுணு அதற்குடன்பட்டு எதிர்த்தெழுந்து, யமப்படைக்கல முதலாகிய 
கொடிய படைக்கலங்க ளெல்லாவற்றையும் என்மீது விடுக்க, யான் தருப்பையினால் அவ்வப்படைகளை உண்டாக்கி
 விடுத்து அவற்றை அழித்தேன். விட்டுணு அதனைக் கண்டு தன் படையை விட, யான் என்படையை விடுத்தேன். 
அது அவருடைய படைக்கலத்தைத் தடுத்து மீண்டது. தம்முடைய படை மீளுதலும்,விட்டுணு எல்லாப் படைகளுக்கும் 
மேலாகிய சிவப்படைக்கலத்தை எடுத்து வழிபட்டு என்மீது விட, அது நஞ்சினுங் கொடிதாக வந்தது. 

    நான் சிவபெருமான் எனக்குத் தந்தருளிய அப்படையை எடுத்து வழிபட்டு விடுப்ப அது நெருப்பின்மேல் 
நெருப்புச் சென்றாற்போலச் சென்றது. நாம் செலுத்திய அப்படைகளிரண்டும் தம்முள் விளையாடி, அக்கினிக் கற்றைகளை 
எங்குஞ் சிந்தி உலகங்களை அழித்து, உலாவித் திரிந்தன. அவைகள் சொரிந்த தீச்சுவாலைகள் வானுலகத்திலும்
 பூவுலகத்திலும் நெருங்குதலால், தேவர்கள் அவ்வெம்மையைச் சகிக்கலாற்றாமல் நடுங்கி ஏங்கினர். அவருள் சிலர் 
வெதும்பி மாண்டார், சிலர் வீழ்ந்தார், சிலர் சிவபெருமானுக்குச் சரணடைவோமென்று கைலையங்கிரிக்கு ஓடினார். 
மேகங்களெல்லாம் கரிந்தன, விண்ணுலகமும் மண்ணுலகமும் எரிந்தன, சமுத்திரஜலம் வறந்தன. பல சீவராசிகள் 
தொலைந்தன. பின்னும் போர் செய்தோம்.

    இவ்வாறு நாமிருவரும் போர் செய்தபொழுது, சிவபெருமானுடைய திருவருளினால் என்னுடைய முகத்தில்
 நாரதமுனிவன் தோன்றி, 'நீவிர் இருவரும் 'நாம் முதற்கடவுள், நாம் முதற்கடவுள்' என்று பேசிப் போர்புரிகின்றீர் போலும்.     
முதற்கடவுள் ஒருவரன்றி இல்லை. உங்களிருவரில் யார் முதல்வர்? இருவரும் முதல்வரல்லீர். யுத்தஞ் செய்யப் புகுந்தபொழுதும்     
உங்களுங்கள் படைகளையன்றி உலகங்களெல்லாவற்றையும் சங்கரிக்கின்ற சிவப்படைக்கலத்தை விடுத்தீர்கள். அப்படையை         
உங்களுக்குத் தந்த கடவுளை மறந்தீர்கள் போலும். மறந்தீராயினும், நீர் பெற்ற அப்படைகளின்பெயரையும் மறந்தீர்களோ! 
அப்பெயரை உங்கள் மனத்தில் நன்றாய் நினைத்துத் தெளிந்துகொள்ளுங்கள். இன்னும் நீங்கள் போர் செய்வீராயின், 
உங்களுக்கு முதல்வராயும் அருவுருவாயும் உள்ள பரமசிவன் ஒரு சோதிவடிவாய் அதன் நடுவே தோன்றுவார். 
அதனைத் தரிசியுங்கள்' என்று ஞானத்தினால் எமக்கிவற்றை யுபதேசித்துப்போயினான். 

    நாங்கள் அவன் சொல்லியவற்றை மனத்திற் கொள்ளாமலும், செருக்கு நீங்காமலும், உலகங்களும் 
உயிர்களும் அழியும்படி கோபத்தோடு ஆயிரம் ஆண்டு வரையும் போர் செய்தோம். மகா சங்கார காலத்திலே ஊழித்தீயின் 
நடுவில் நின்று திருநிருத்தஞ் செய்யும் பரமசிவன் இவைகளெல்லாவற்றையும் பார்த்தருளி, 'இந்தப் பிரமவிட்டுணுக்கள்
 தாமே பரம்பொருள் என்னும் புகழை விரும்பினவராய்த் தங்களிற் போர்செய்கின்றனர்; அறிவு அறை போயினர்; 
அகந்தையுற்றனர்; மேல்வருவதொன்றையும் அறிகிலர்; மெய்ப் பொருளைச் சிந்திக்கின்றிலர்; சிறுவர்களைப்போல 
இருவரும் கோபத்தோடு போர்செய்து உலகங்கள் யாவையும் அழிக்கின்றனர்; இவருடைய இச் செயலை நாம் இன்னும் 
பார்த்திருப்போமாயின், உலகு கெடும், உயிர்களெல்லாம் அழியும்; நம்முடைய மேலாகிய உண்மைத் தன்மையை 
உணர்த்தினால் அப்பொழுதே வெவ்விய இந்தப் போரைத் தணிந்து நிற்பர்; தம்மையே பரம்பொருள் என்று 
சொல்கின்றதையும் வெவ்விய கோபத்தையும் தாமாகவே விடுத்துச் செம்மையாகிய மனத்தினராய் விளங்குவர்.'
என்று திருவுளங்கொண்டார்.

    அப்பொழுது, மாசி மாசத்திலே அபர பக்ஷ சதுர்த்தசி திதியின் நடு நிசி வந்தது. அதில் யாங்கள் 
கண்டு நடுங்கும்படி, எங்களிருவருக்கும் நடுவில் சிவபெருமான் ஓர் அக்கினிமலை போலத் தோன்றினார். 
தோன்றிய அச்சோதி நாமிருவரும் செலுத்திய சிவப்படைக்கலங்களிரண்டையும் தன்னுளடக்கிக்கொண்டு, 
தாங்குதற்கரிய வெம்மைத் தன்மையதாயது. நாம் அதனை அணுகாமல் தூரப்போய், சீற்றத்தையும் போரையும் 
நீங்கி, அதனைப் பார்த்துக்கொண்டு நின்றோம். நிற்க; 'சிறுவிர்காள், உங்கள் வலிமையைத் திரிபுராந்தகராகிய 
சிவபெருமானே காண்பார். நீவிர் இருவரும் இந்தச் சோதியின் அடியையும் முடியையும் காணுங்கள்' என்று
 நாங்கள் கேட்கும்படி ஆகாயத்திலே ஓரசரீரி வாக்கு விரைவில் எழுந்தது, 

    அதனைக் கேட்டு, உள்ளத்திற் கிளர்ந்தெழுந்த கோபம் முழுதையும் நீங்கினோமாயினும், பின்னும் அகந்தை 
நீங்காதேமாய், 'நமது கடவுளாகிய சிவபெருமான் நும் வலியைக் காண்பார்' என்று பெருமையோடு ஆகாயத்திற் 
சொன்னவர் யார்கொல்!' என்றெண்ணி, பின்னும், 'நாமிருவரும் செய்யும் போருக்கிடையூறாக நிலவுலகத்தைக் 
கிழித்துக் கொண்டு நிமிர்ந்து விண்ணுலகத்திற் புகுந்து வளருகின்ற சோதியும் நாரதன் கூறியவாறு நாம் காணும்படி 
தோன்றியது. 'இது நம்மிலும் மேலாகிய பரம் பொருளோ' என்றையுற்று, 'இது வாயுவினின்றுந் தோன்றிய அக்கினியன்று.
இதன்றன்மை யொன்றையும் அறியோம். நாமிருவரும் இதனடியையும் முடியையும் தேடிக்காண்போம்' என்று 
சபதங்கூறி, 'அடிமுடிகளிலொன்றை யார்கண்டனரோ அவரே முதற்கடவுளாவர். இதுவே துணிவு' என உறுதி 
செய்துகொண்டோம். குழந்தைகள் ஆகாயத்திற் சஞ்சரிக்கும் சூரியனைக் கையாற் பற்றும்படி துணியுமாறுபோல, 
யான் சோதியின் முடியைக் காண்பேன் என்றேன்; விட்டுணு அடியைக் காண்பேன் என்றார்.

    உடனே திருமால், அஞ்சாமை விளங்குகின்ற சிவந்த கண்களையும் இமில் பொருந்திய எருத்தத்தையும் யாவரும் 
அஞ்சும் ஒலியையும் கூரிய வாயையும் வெள்ளிய தந்தங்களையும் குறிய தாளையும் வெண்மையாகிய குளம்பையும்
 ஆயிரம் யோசனை உயரமும் பருமையுங்கொண்ட மலைபோன்ற கரிய உடலையும் உடைய ஒரு பன்றியின் வடிவைக் 
கொண்டு, பூமியை யிடந்து, கீழேயுள்ள புவனங்கள் எங்கும் தேடிச்சென்றார். அவர் மிக நெடுங்காலம் முயன்று தேடியும் 
அதனடியைக் காணாராயினார். யானும் அத்தன்மையாகிய உயரமும் பருமையும் உடைய ஓர் அன்னப் பக்ஷிவடிவை 
எடுத்து, விரைந்து பறந்து மேலுள்ள புவனங்களிற் றேடிச் சென்றேன். அச்சோதி என் கண்ணுக்கு அகப்படாது மேன்மேற் 
போயிற்று. விட்டுணுவுக்குப் பற்கள் நொந்தன; உடம்பு ஒடுங்கியது; வலிமை முழுதும் அழிந்தன; தண்ணீர்த் தாகம் 
உண்டாயிற்று; பெருமூச்சும் துயரமும் வந்தன, சபதமும் அகந்தையும் அழிந்தன. பின்னர், பழைய ஞானம் முழுதும் 
உண்டாயிற்று. 

    தெளிவடைந்த அவர் பன்றியின் உருவத்தைத் தாங்கலாற்றாதவராயும், அதனை ஒழித்துவிட இயலாதவராயும், 
மீண்டு செல்ல வலியில்லாதவராயும், 'என்றுமுணர்தற்கரிய எம்பெருமானே, உம்முடைய திருவடிகளன்றி அடியேனுக்குப் 
புகலிடமில்லை. அவைகளை அருச்சித்தற்கும் வலிமையில்லை. அடியேன் ஒன்றும் உணரேன். அடியேன் செய்த 
பிழையைப் பொறுத்தருளும்' என்று உளம் நொந்து, சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துத் தோத்திரஞ் செய்து, 
அவருடைய திருவருளால் வலிமை உண்டாகப் பெற்று, பன்றி வடிவோடு மீண்டு, பூமியிலே அந்தச் சோதிக்கணித்தாக 
வந்து, வணங்கி நின்றார். அது நிற்க.

    யான் ஆயிரம் வருஷம் திரிந்து திரிந்து தேடியும், சோதியின் முடியைக் காணாமலும், மீண்டுவர நினையாமலும், 
'யான் மீண்டாற் சபதமுந் தவறும்; விட்டுணு சோதியின் அடியைக் கண்டு முதற்கடவுளாவார்; என்னை யாவரும் அவருக் 
கடியவனென்பார்; என்னுடைய இந்த வலிமை அழியும்; இன்னும் எத்தனைநாட் செல்லினும் செல்லுக; இன்னும் வானிற் 
பறந்து இச்சோதியின் முடியைக் கண்டபின்பல்லது மீண்டு போகேன்.' என்று நினைத்து, அதனைக் காணும்படி 
போயினேன். போதலும், உளம் வெதும்பி,உயிரும் உலைந்து, வலிமையும் அழிந்தது; கண்களும் சுழன்றன. சிறைகள் 
நொந்தன; கால்களும் ஓய்ந்தன; புத்தியும் தடுமாறியது.

    அப்பொழுது, அந்தச் சோதியில் நின்று சித்தர் போலப் பலர் தோன்றி வந்து "நீரிலுள்ள  மீனை உண்ணும்படி திரிகின்ற இந்த         
வெள்ளை அன்னப் பக்ஷிதானாம் உயர்ந்தெழுகின்ற பரஞ்சோதியின் முடியைக் காணவல்லது! தன் சிறையொடிந்து 
தளர்ந்து வலிமை நீங்கினாலும் தேட வருகின்றது போலும்! ஐயோ, இது அன்னப்பக்ஷியின் அறியாமையன்றி வேறொன்றுளதோ! 
இது துணிந்ததை நாம் சிந்திக்கின், இன்னும் சிறிதுபொழுது பறந்து போனால் இஃது இறக்கும். இந்தச் சுடரைப் பரமசிவமென்று 
மனத்திலெண்ணாதோ. விட்டுணு என்பவனும் நிலத்தைக் கிழித்துக் கொண்டுபோய், இச்சோதியின் அடியைக் காணமாட்டாமல் 
வலிமை நீங்கித் தன்சீலம் குன்றச் சிவனே சரண் என்று பையவாய்ப் பூமியில் மீண்டு வந்து, சோதிமலையை அணுகி நின்றான். 
முன்னே இப்பறவைக்கு இம்மயக்கத்தைக் கொடுத்த கடவுளே அதனைத் தீர்த்து அருள்புரிந்தால் இஃது உய்யும்' என்று கூறினார்கள். 

    சித்தர்கள் சிவானுக்கிரகத்தால் இப்படிச் சொல்லிக் கொண்டு செல்ல; யான் அகந்தை முதலாகிய குற்றங்களை 
நீக்கிச் சிவபெருமானுடைய புகழ்களை எடுத்துத் தோத்திரஞ் செய்து, அன்பினால் அவரை அருச்சனை செய்ய நினைத்து, 
மீண்டு, விட்டுணுவை அணுகி, 'நாமிருவரும் நாமே பரம்பொருள்' என்று நம்முள் மாறுபட்டுப் போர்செய்து நாரதனுடைய 
சொல்லையுந் தெளிந்திலேம்; பரமபிதாவாகிய சிவபெருமான் சோதி வடிவாய் எழுந்தருளி வந்ததை அறியாமல், அவருடைய 
அடிமுடிகளைத் தேடி, உயிர் நீங்குஞ் சமயத்தில் அவருடைய திருவருளால் அவரைப் புகழ்ந்து, மீண்டும் அவர் திருவருளால் 
வலிமைபெற்று, இடந்தும் பறந்தும் திரிந்தமையை விட்டு, இங்கு வந்தோம். இங்கே நாமிருவரும் சிவனைப் பூசனைசெய்து 
அவருடைய சொரூபத்தைத் தரிசிப்போம்' என்று கூறினேன். விட்டுணுவும் அதற்கிசைந்தார்.

    நாம் இருவரும் சிவலிங்கத்தை விதிப்படி தாபித்து, திருமஞ்சனம் புஷ்பம் சந்தனம் தூபதீபம் முதலிய பூசைக்கு 
வேண்டும் உபகரணங்க ளெல்லாவற்றையும் அமைத்து, அருச்சித்து வணங்குதலும், சிவபெருமான் காளகண்டமும், 
மான் மழு வரத அபயங்களோடு கூடிய திருக்கரங்களும், நான்கு திருப்புயங்களும், நாகயஞ்ஞோபவீதமும், பாலசந்திரன் 
பொருந்திய திருச்சடையும், பார்வதி பாகமுமாய் அந்தச் சோதிக்கணித்தாக யாங்கள் காணும்படி வெளிப்பட்டு, 
முன்னின்றருள் புரிந்தார். நாம் இருவரும் அங்கே அவருடைய பாதங்களை வணங்கி, அருள்வெள்ளத்துளாழ்ந்து, 
மெய்யுணர்வோடு நின்று, 'தேவரீருடைய இயல்புகள் உம்மிடத்து வைத்த மெய்யன்பின்றி விளங்கா ; வேதங்களும் 
இத்தன்மையென்று அறியமாட்டா; யாம் அறிதற்கெளியனவாகுமோ. அடியேங்கள் நாமே பரம்பொருள் என்று 
மனமயங்கிப் போர் செய்தபொழுது, சோதி சொரூபியாய் எழுந்தருளிவந்து, பழைய அறிவைத் தந்து உம்மையுணர்த்தி, 
போரையுந் தவிர்த்தீர். யாங்கள் சூத்திரப்பாவையும் தேவரீர் அவற்றை ஆட்டுகின்றவரும் அன்றோ! உம்மை உணரும் 
உணர்வை நீர் தந்தால் அதன்பின் உணர்வேம். சிறியேங்கள் செய்த எளிய செயல்களையெல்லாம் பொறுத்தருளும். 
தம்முடைய சிறுவர்கள் என்னசெய்தாலும் அவைகளெல்லாம் தந்தை தாயர்களுக்கு இனியன வன்றோ!

    வல்லோன் காரிரும்பைச் செம்பொன்னாக்கினாற்போல, எங்கள் மாட்டும் திருவருள் வைத்து எங்களைத் தலைவர்களாக்கினீர்.     
அப்படிச் செய்தருளிய உம்மையும் மறந்தோம். இவ்வியல்புடைய தமியேங்கள் அநாதியே எங்களுயிரைப் பந்தித்த 
பாசத்தை நீக்கவல்லோமோ' என்று சொல்லித் தோத்திரஞ் செய்தோம். சிவபெருமான் எங்களை நோக்கி, 'நீவிர்செய்த 
குற்றங்க ளொன்றையும் திருவுளத்துக் கொள்ளோம்; மனத்தில் ஒன்றையும் எண்ணாதொழிமின்; உங்கள் பூசனையை 
உவந்தோம்; அந்நாளில் உங்களுக்குத் தந்த பதங்களை இன்னும் தந்தோம்; வேண்டிய வரங்களைக் கேண்மின்' என்று 
அருளிச்செய்தார். 

    யாங்கள், 'சிதாகாசத்திலே, தாண்டவஞ் செய்கின்ற கடவுளே, தேவரீருடைய திருவடிகளே புகலிடமாகக் 
கொண்டு வழிபடுகின்ற தலையன்பைத் தந்தருளும்' என்று பிரார்த்திப்ப, அவர் அதனை யீந்து, விரைவில் அந்த 
அக்கினிச் சோதியிலே மறைந்தருளினார். பரமசிவன் மறைந்தபொழுது, யாங்கள் நமஸ்கரித்தெழ, வளர்ந்தெழுந்த
 அச்சோதி சுருங்கிச் சுருங்கி வந்து, உலகமெல்லாம் துதிக்கும் படி ஒரு மலையாயது. அந்தச் சிவலிங்கரூபமாகிய 
மலையை யாங்கள் அணுகி, மும்முறை பிரதக்ஷிணஞ்செய்து வணங்கித் துதித்து, எங்கள் பதங்களிற் சென்றேம்; 
அதன்பின் அக்கடவுளை மறந்திலேம், பெரிதும் வழிபடுகின்றேம். நாமிருவரும் தேடிய அம்மலை அருணாசலம் என்னும்
பெயருடையதாய் நின்றது. அந்தச் சோதி தோன்றிய இரவே சிவராத்திரி யாயது. அத்தினத்திலே பலரும் சிவபெருமானைப் 
பூசித்து உய்ந்தார்கள். 

    ஆதலால் அந்தப் பரமசிவனுடைய அருளைப் பெற்றால், அவருடைய இயல்பை அறியும் ஞானத்தைப் பெறுவர். 
அதனைப் பெறாதொழிந்தால், பல நூல்களைப் படித்தென், வேதங்களை ஆராய்ந்தென், சிறிதும் அவருடைய இயல்பை 
அறியமாட்டார். மூடரும் அவரல்லது வேறார்! இருவினைகளைச் செய்து பிறவிக்கடலில் மூழ்கும் அபக்குவர்களுக்கு 
அவருடைய திருவருள் கிடையாது; இருவினையொப்பு மலபரிபாகம் வரப்பெற்ற சத்திநிபாதர்க்கே அது கிடைக்கும். 
அவரே பரிபக்குவராவார். தக்கனே, நீயும் இப்பொழுது இருவினை நீங்கினமையால், எம்பெருமானுடைய நிலைமைகளை 
அறியத்தக்க மெய்ஞ்ஞானம் உனக்குண்டாயது. அந்தச் சிவபெருமானே நமக்குத் தாயும் தந்தையும் குருவும் கடவுளும் 
தவமும் செல்வமும் ஆவர். ஆதலால் அவரையே அடைகுதி' என்று பிரமதேவர் தக்கனுக்கு உபதேசித்தார்.

            திருச்சிற்றம்பலம்.

            தக்கன் சிவபூசைசெய்படலம்.

    பிரமா சொல்லியவற்றைக் கேட்ட தக்கன் மெய்யுணர்வு வரப்பெற்று ,  "நீர் கூறியவண்ணம் சிவபூசை செய்வேன்"     
என்று சொல்லி, அவருடைய திருவடிகளை வணங்கி, காசித் திருநகரை அடைந்து, கங்கைக்கரையிலே மணிகர்ணிகைக்கு 
ஒரு பக்கத்தில் ஓராலயத்தை அமைத்து, அதில் அருள்வடிவாய்ச் சேதனாசேதனப்பொருள்களைப் படைத்துப் பின் 
ஒடுக்குவதாய்த் தாணுவாயுள்ள அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தைத் தாபித்து, சிவாகமவிதிப்படி 
ஆயிரம் வருஷகாலம் அருச்சித்துத் தோத்திரஞ் செய்தான். சிவபெருமான் அவனுடைய அன்பைப் பார்த்து 
வெளிப்பட்டருளினார். அவன் அவரைக் கண்டு வணங்கித் துதித்து, தெளிவு பெற்று, "எம்பெருமானே, அடியேன்
 அகந்தையுற்றுத் தேவரீரை இகழ்ந்தேன். அதனால் அடியேன்மாட்டு எல்லையில்லாத பாவங்கள் வந்தடைந்தன. 
அவைகள் எல்லாவற்றையுந் தொலைத்து உம்மிடத்து மிகுந்த அன்பைத் தந்தருளும்" என்று பிரார்த்தித்தான். 

    சிவபெருமான் அவனுடைய பூசையை மகிழ்ந்து, பாவங்கள் எல்லாவற்றையுந் தொலைத்து அருள்புரிந்து, 
அவனைத் தம்முடைய பூதகணங்களுக்குத் தலைவனாக்கி, மறைந்தருளினார். தக்கன் புனிதனாயினான்.
தக்கன் கங்கைக் கரையிற் சிவபூசை செய்யும்படி போனபொழுது, அரிபிரமேந்திராதி தேவர்களும் அரம்பையர்களும் 
யாகசாலையை நீங்கி, வீரபத்திரக் கடவுளுடைய வீரத்தைத் துதித்து, தங்கள் தங்களுக்கேற்ற இடங்கடோறும் போய்ச் 
சிவபெருமானைப் பூசனைசெய்து, அவருடைய திருவருளைப் பெற்று, உடம்பிலுள்ள தீராத சின்னங்களுந் தீர்ந்து, 
சிறப்புற்று, தத்தம் பதங்கடோறும் போயிருந்தார்கள்.

     தக்கனுடைய யாகத்தில் வந்திருந்து, குற்றமுடைய அன்னத்தையுண்டு, தானமேற்று, பூதர்களாலிறந்து,
 பின் உயிர்பெற்றெழுந்த பேதைகளாகிய அந்தணர்கள் யாவரும் யாகசாலையை நீங்கிப்போயினார்கள்.
இச்சரித்திரங்கள் எல்லாவற்றையும் குருவாகிய பிரகஸ்பதி சொல்லக்கேட்ட சயந்த குமாரன் நன்றென்று 
தலையை அசைத்து மிக மகிழ்ந்து, சிறிதுங் கவலையின்றி, சுப்பிரமணியக் கடவுளாலே குடியேற்றப்பட்ட
அவ்விண்ணுலகத்திலிருந்தான். 

            திருச்சிற்றம்பலம்.

            கந்தவிரதப்படலம்.

    இனி, முசுகுந்தனென்னுஞ் சக்கிரவர்த்தியானவன் சுப்பிரமணியக் கடவுளுக்குரிய விரதங்களை அநுட்டித்து, 
அந்த வலியினாற் பூவுலகத்தை  ஆண்ட சரித்திரத்தைச் சொல்வாம். முசுகுந்தச் சக்கிரவர்த்தி ஒருநாள் வசிட்ட
முனிவரிடத்திற்போய், அவருடைய பாதங்களை வணங்கித் துதித்து, "சுப்பிரமணியக் கடவுளுக்குரிய 
விரதங்க ளெல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்'' என்று கேட்க, அவர் "மைந்தனே கேட்பாய்" என்று 
அவற்றைச் சொல்வாராயினார்: 

    'ஏழு வாரங்களுள்ளே சுக்கிரவார விரதம் கந்த சுவாமியினுடைய விரதமாகும். அதனை அநுட்டித்தோர்கள் 
மனத்தில் நினைத்தனவெல்லாம் விரைவில் முற்றுப்பெறும். பகீரதனென்னும் மகாராசன் தான் ஆண்ட பூவுலக 
முழுவதையும் கோரன் என்னும் ஓரிராக்கதன் கவர்ந்து கொள்ள, மனைவியும் மகனுந் தானுமாய்ச் சுக்கிரனிடத்திற் 
போய்த் தன்குறையைச் சொல்லி நின்றான். அவர் சுப்பிரமணியக் கடவுள் மகிழுமாறு சுக்கிரவார விரதத்தை 
மூன்றுவருஷகாலம் அநுட்டிப்பாயாயின் உங்களுக்குத் துன்பஞ்செய்த கோரனும் இறப்பான்; நீயே உலகமுழுவதையும்
 ஆளுவாய்" என்றார். 

    பகீரதன் நன்றென்று கேட்டு, வெள்ளி வாரத்தில் உபவாசஞ்செய்து, கண்விழித்திருந்து, அதற்கு முதனாள் 
மறுநாள் ஆகிய இரண்டு நாளும் பகலில் ஒருபொழுதுண்டு, அவ்விரதத்தை மூன்றுவருடங்காறும் முறைப்படி 
அநுட்டித்தான். அநுட்டிக்கும்பொழுது, அறுமுகக் கடவுளுடைய வேற்படை வந்து, பகைவனாகிய கோரனுடைய 
உயிரைக் கவர்ந்து மீண்டது. அரசன் அவ்வேற்படையைத் துதித்துத் தன்னுடைய ஊரிற் போய்ப் பழைய 
அரசுரிமையைப் பெற்றான். சுப்பிரமணியக்கடவுளுடைய விரதத்தில் இன்னுமொன்று சொல்வோம்.

    நாரதமுனிவர் நல்ல விரதாநுட்டான பலத்தினாலே ஏழு முனிவர்களுள்ளும் தாம் உயர்ந்த பதத்தையும் 
சிறப்பையும் பெறவேண்டும் என்று எண்ணி, விநாயகக்கடவுளுடைய பாதங்களை வணங்கித் துதித்து, 'ஏழு 
முனிவர்களுள்ளும் யானே மேம்பாடடையும்படி அடியேனுக்கு ஒரு விரதத்தைச் சொல்லியருளும்' என்றார். 
விநாயகக்கடவுள் அதனைக் கேட்டுப் பேரருள் புரிந்து, அவரை நோக்கி, 'முனிவனே நீ நமது தம்பியாகிய
சுப்பிரமணியனை வழிபட்டுக் கார்த்திகை நக்ஷத்திர விரதத்தைப் பன்னிரண்டு வருஷகாலம் சிரத்தையோடு 
அநுட்டிக்கக் கடவாய். நீ நினைத்த அதனைப் பெறுவாய், இது திண்ணம்' என்றருளிச்செய்தார். 

    நாரதமுனிவர் அதனை அநுட்டிப்பேன் என்று பூவுலகில் வந்து, பரணி நக்ஷத்திரத்திலே அபரான்னத்தில் 
ஒரு பொழுதுண்டு, கார்த்திகை நக்ஷத்திரத்தில் விடியற் காலத்திலே உடுத்த வஸ்திரத்தோடு ஸ்நானஞ்செய்து, 
வெள்ளை வஸ்திரந் தரித்து, நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்து, ஐம்புலன்களை அடக்கி, ஆசாரியரைத் 
தியானித்து, சுப்பிரமணியக் கடவுளைப் பூசித்து, அவருடைய புராணத்தை வாசித்து, சுத்த சலத்தை ஆசமித்து, 
பெண்ணாசை யென்பது சிறிதுமின்றித் தருப்ப சயனத்திலே படுத்து, முருகக்கடவுளுடைய திருவடிகளையே 
தியானஞ் செய்துகொண்டு, அன்றிரவு முழுதும் நித்திரையின்றி யிருந்து, அடுத்தநாட் காலையில் உரோகிணி 
நக்ஷத்திரத்திலே ஸ்நான சந்தியா வந்தனங்களை விரைவில் முடித்துக்கொண்டு, சுப்பிரமணியக்கடவுளைப் 
பூசித்து, வந்த முனிவர்களோடு பாரணைசெய்து, பாரணை செய்தவர்கள் அன்று பகற்பொழுதில் நித்திரை 
செய்தால் வேதத்தில் வல்ல நூறு அந்தணர்களை நிஷ்காரணமாகக் கொன்ற பாதகம் வரும் என்று தெளிந்தமையால் 
அன்று பகல் முழுதும் சிறிதுங் கண்ணுறங்காமல், அன்று சாயங்கால சந்தியாவந்தனாதிகள் யாவும் குறைவறச் செய்து,         
இவ்வாறு பன்னிரண்டு வருஷகாலம் கார்த்திகை விரதத்தை அநுட்டித்து, ஏழு முனிவர்களுக்கும் மேலாகிய 
பதவியைப் பெற்றார்.         

    இந்தக் கார்த்திகை விரதத்தைப் பூவுலகத்தில் ஓர் அந்தணன் அநுட்டித்து முதல் மநுவாகி, உலகமுழுதையும் 
ஆண்டான். வேறுமோர் அந்தணன் அநுட்டித்து, மனத்தில் நினைந்தனவெல்லாவற்றையும் அடைந்து, திரிசங்கு 
மகாராச னானான். இப்பூவுலகில் முன்னாளில் ஓர் அரசனும் வேடனும் இவ்விரதத்தை அநுட்டித்து, முதல்வள்ளல்களாகிய 
அந்திமான் சந்திமான் என்னும் பேர்பெற்றுப் பூவுலகத்தை ஆண்டார்கள் என்பர். இவர்கள் பின்னாளில் மோக்ஷமடைதல்
 நிச்சயமாம். இவ்வாறே கார்த்திகை விரதத்தைச் சிரத்தையோடநுட்டித்துத் திரிலோகங்களிலும் வேண்டிய வரங்களைப் 
பெற்றவர் தொகையை யாவர் அளவிட்டுச் சொல்ல வல்லார்.

    இதுவன்றி, சுப்பிரமணியக் கடவுளுக்குரிய ஒப்பில்லாத விரதம் வேறுமொன்றுளது. அதனையுஞ் சொல்வோம், 
முசுகுந்தனே கேட்பாய். "தேவர்களும் முனிவர்களும் துலா மாசத்துச் சுக்கில பக்ஷப் பிரதமை முதலாக ஆறுநாளும் 
காலையில் ஸ்நானஞ்செய்து, சுத்த வஸ்திரம் இரண்டு தரித்து, சந்தியா வந்தனமுடித்து, கிரெளஞ்சமலையையும்
 சூரபன்மனையும் சங்கரித்த வேலாயுதகரராகிய முருகக்கடவுளைத் தம்ப விம்ப கும்பம் என்னும் மூன்றினும் 
இரவிலே விதிப்படி பூசைசெய்து, வெல்லம் சேர்த்து நெய்யினாற் சமைத்த மோதகத்தை நிவேதித்து, பிற 
உபசாரங்களையும் செய்து, வணங்கித் துதித்து, அவருடைய புராணத்தைப் படித்து, சிறிது ஜலத்தை ஆசமித்து 
உபவசித்திருந்து, சப்தமி திதியில் முருகக்கடவுளுக்கு விசேஷபூசையியற்றி, விதிப்படி பாரணஞ்செய்து, 
இப்படிச் சிரத்தையோடு அநுட்டித்த சட்டிவிரத பலத்தினால் அவுணர்கள் கவர்ந்த தங்கள் பதங்களைப் பெற்றார்கள்." 
என்று வசிட்டமுனிவர் கூறினார்.

    இப்படி வசிட்டமுனிவர் சுப்பிரமணிய விரதங்களை உபதேசிக்கக் கேட்ட முசுகுந்தச் சக்கிரவர்த்தி, அவற்றில் 
மிக ஆசையுற்று, "ஐய, இந்த விரதங்களை யானும் அநுட்டிப்பேன்" என்று கூறி, அன்றுமுதல் அளவில்லாத காலம் 
முருகக்கடவுளைத் தியானித்து அவ்விரதங்களை அநுட்டிக்கவும் அவர் மயில்வாகனத்தின் மேற்கொண்டு, 
வீரவாகுதேவரும் இலக்கத்தெண்மரும் பூதகணங்களும் தேவர்களும் சூழ அவனுக்கு அருள் புரியும்படி வந்து 
தோன்றினார். முசுகுந்தன் அவரைக் கண்டு மகிழ்ந்து, திருவடிகளை வணங்கித் துதித்தான். அவர் அவனை 
நோக்கி, "அரசனே, நீ நம்மைக்குறித்து எண்ணில்லாத காலம் விரதங்களை அநுட்டித்தாய். உனக்கு வேண்டும் 
வரம் யாது? சொல்லுதி" என்று வினாவினார். 

    முசுகுந்தன் "எம்பெருமானே, பூமிமுழுதையும் அடியேன் ஆளும்படி வீரவாகு முதலிய வீரர்கள் யாவரையும் 
துணைவர்களாகத் தந்தருளும்'' என்றான். சுப்பிரமணியக்கடவுள் அவ்வேண்டுகோளைத் திருச்செவிமடுத்து, "அவ்வாறே 
 உதவுவோம்" என்று அருள்புரிந்து, வீரவாகு முதலிய சேனைத்தலைவர்களை நோக்கி, "தவத்திற் சிறந்த முசுகுந்தச் 
சக்கிரவர்த்தி நும்மைக்காட்டிலும் நம்மிடத்து மிகுந்த அன்புடையான். அவன் பூவுலகமுழுதையும் பொது கடிந்து 
அரசு செய்தற்கு நீவிர் அவனுக்குச் சுற்றமாய் வலியிற் சிறந்த துணைவர்களா யிருக்கக்கடவீர்" என்று கட்டளையிட்டார். 

    அவ்வீரர்களும் அனைவரும் அதனைக்கேட்டு, "எம்பெருமானே, அழிவில்லாத சூரனுடைய குலத்தை                
வதைத்த பேராற்றலையுடைய அடியேங்கள் சூரிய குலத்தில் வந்து உதித்த ஒர் அற்ப மனுடனுக்குக் கிளைகளாய் அவன் 
பணிக்கும் இழிதொழில்களைப் புரிகிலோம்'' என்று மறுத்துச் சொன்னார்கள். அறுமுகக்கடவுள் அதனைக் கேட்டு, 
"நீவிர் நம்முரையை மறுத்தீர்கள். அதனால் மானுட வடிவமெடுத்து, முசுகுந்தனுடைய சேனைகளாய்ப் பலகாலம் 
அவனைச் சூழ்ந்திருந்து, பின்பு தவஞ்செய்து நம்மிடத்தில் வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். அம்மொழியினால் 
வீரவாகுதேவர் முதலாயினோர் மானுட வடிவமெடுத்து, முன்னை வலிமை நீங்கி, உடல் வியர்ப்பப் பதைபதைத்தேங்கித் 
துன்பம் மிகுந்து, ''தமியேங்களுடைய பிழையைப் பொறுத்தருளும்'' என்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அவரிடத்தில் 
விடைபெற்றுக்கொண்டு, விட்டுணு உபேந்திரனாய் இந்திரனுக்குப் பின்சென்றவாறுபோல, முசுகுந்தச்சக்கிரவர்த்திக்குச் 
சுற்றமாய் ஒழுகினார்கள். முசுகுந்தன் சுப்பிரமணியக் கடவுளுடைய திருவடிகளை வணங்கி நிற்ப, அவர் அவனுக்கு 
அருள்புரிந்து, பூதப்படைகளோடு மயில்வாகனமும் தாமுமாய் மறைந்தருளினார்.

    முசுகுந்தச் சக்கிரவர்த்தி மகிழ்ச்சியோடு கருவூரென்னும் நகரத்தில் அரசுசெய்துகொண்டிருந்து, அந்நகரில் 
அநேக மாட வீதிகளை இயற்றுவித்து, அவைகளில் வீரவாகுமுதலிய வீரர்களை இருத்தி, அவர்களுக்கு வளங்கள்         
மிகுந்த நாடுகளையும் சதுரங்க சேனைகளையும் கொடி குடை முதலாகிய வரிசைகளையும் உதவி, சேனைத் 
தலைவர்களாக்கினான். அக்காலத்தில் அரம்பையர்கள் பூவுலக அரசர்கள்மாட்டு வந்து தோன்றி வளர்ந்தார்கள்.
அவர்களை வீரவாகு முதலிய வீரர்கள் யாவருக்கும் மணஞ்செய்வித்தான். 

    வீரவாகு புட்பகந்தி என்னும் கன்னிகையை மணஞ்செய்து, இந்திரவல்லியென்னும் பெண்ணைப் பெற்று, 
அவளை முசுகுந்தச் சக்கிரவர்த்திக்கு விவாகஞ் செய்துகொடுத்து, பின்னும் அனகன் சனகன் என்னும் இரு புதல்வர்களையும்
பெற்றார். மற்றை வீரர்களும் தாம் விவாகஞ் செய்த பெண்களோடு சேர்ந்து இல்லறத்தை நடாத்தி, பல புத்திரர்களையும் 
புத்திரிகளையும் பெற்று, மனு வமிசத்திற் கலந்திருந்தார்கள். அந்நாள் முசுகுந்தனுடைய மனைவியாகிய சித்திரவல்லி 
ஒரு கிளிப்பிள்ளையை வளர்க்க; அதனை யமனுடைய மனைவி விரும்புதலும், அவனுடைய தூதுவர்கள் வந்து 
அக்கிளியைப் பற்றிக்கொண்டு போய் அவளுக்குக் கொடுத்தார்கள். சித்திரவல்லி கிளியைக் காணாமல் அயர்ச்சியடைய;
 முசுகுந்தன் அதனை உலகமெங்குந் தேடி,யமனுடைய மனைவி கையில் இருப்பதை அறிந்து, வீரவாகு முதலாயினோரை
 அழைத்து அனுப்பினான். 

    அவர்கள் நால் வகைச் சேனைகளோடும் யமபுரத்தையடைந்து, அதனைச் சூழ்ந்து, யமன் வந்து எதிர்த்துப் 
போர்செய்ய அவன் வலியைத் தொலைத்து, கிளிப்பிள்ளையை வாங்கிக்கொண்டு மீண்டு வந்து, சித்திரவல்லி 
மனமகிழுமாறு கொடுத்து முசுகுந்தனுக்கு வெற்றியைச் செய்தார்கள். சித்திரவல்லி கருப்பவதியாய் உண்ணுதற்குரிய         
வயாப் பண்டமாகிய காய் கனிகளை விரும்பிக் கேட்க முசுகுந்தன் அவற்றைக் கொண்டுவருமாறு மலைநாட்டுக்கு         
அளவில்லாத ஏவலாளர்களை அனுப்பினான். மலைநாட்டார் அவன் ஆணைக்கு அஞ்சாதவர்களாய் இகழுதலும், 
வீரவாகுவும் மற்றை வீரர்களும் சென்று, அந்நாட்டிலுள்ள பதினெண் சுரங்களிலுள்ளாரையும் ஒரு பகலில் 
வென்று, சித்திரவல்லி விரும்பிய காய்கனிகளைக் கவர்ந்துகொண்டு வந்து கொடுத்தார்கள். 

    பின்பு அவர்கள் இப்பூவுலகமுழுதிலும் சென்று சென்று, அங்கங்குள்ள அரசர்களெல்லாரிடத்துந் திறை 
வாங்கி, அவ்விடங்களிலெல்லாம் முசுகுந்தச் சக்கிரவர்த்தியினுடைய ஆணை நடைபெறும்படி செய்தார்கள். 
சித்திரவல்லி கருப்பம் முதிர்ந்து, அக்கினிவன்மன் என்னுங் குமாரனைப் பெற்றாள். முசுகுந்தன் அதனைக் 
கண்டு மனமிக மகிழ்ந்து, பேரரசாட்சி புரிந்திருந்தான்.

    இப்படி முசுகுந்தச் சக்கிரவர்த்தி அரசு செய்திருக்குங் காலத்தில், வலன் என்னும் அசுரன் பல பெருஞ் 
சேனைகளோடு சென்று விண்ணுலகத்தைச் சூழ்ந்து அடர்க்க; இந்திரன் சிலநாள் அவனோடு போர் செய்து, 
அவனை வெல்லமாட்டாதவனாய், "முசுகுந்தச் சக்கிரவர்த்தியை அழைத்துக்கொண்டு வருதி' என்று ஒரு தூதுவனை 
அனுப்பினான். அவன் பூமியில் வந்து இந்திரனுடைய பணியைச் சொல்லுதலும், முசுகுந்தன் அதனைக் கேட்டு, 
நன்றென்று, வீரவாகு முதலிய வீரர் கூட்டத்தோடும் சுவர்க்கவுலகத்திற் போய், இந்திரனை வணங்கி, தேவசேனாபதி 
யாந் தலைமையைத் தாங்கி, அவுணசேனைகளெல்லாவற்றையும் அழித்தான். 

    அவுணசேனைகள் அழிதலும், இந்திரன் சிலநாள் வலாசுரனோடு எதிர்த்து நின்று போர்செய்து, 
குலிசாயுதத்தினால் அவனைக் கொன்று, வெற்றியடைந்து, அக்காரணத்தால் வலாரி என்னும் பெயரைப் பெற்றான். 
வலாசுரனை வென்ற இந்திரன் முசுகுந்தச் சக்கிரவர்த்தியை அமராவதியிலுள்ள தன் கோயிலினுள் அழைத்துக் 
கொண்டு போய், அவனை நோக்கி, "மகாராசனே, என் பகைவர்களைத் தொலைத்து என்னை விண்ணுலக 
அரசனாக்கினாய்; வீரத்தையும் மேலாகிய புகழையுந் தந்து எனக்கு உற்றதுணைவனுமாயினாய்; இதனால் 
எனக்கு அந்தரங்கமாகிய சுற்றம் நீயல்லையோ!" என்று பல உபசாரங்களைச் சொல்லி, ஸ்நானஞ் செய்து, 
வஸ்திரந்தரித்து, விஷ்ணுவினாலே பூசிக்கப்பட்ட தியாகேசப்பெருமானை அருச்சனை செய்தான்.

    சிவபெருமான், உமாதேவியாரும் சுப்பிரமணியக்கடவுளும் ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியோடு பொருந்தத் 
திருக்கைலாச மலையின்கண் வீற்றிருத்தல் போல அங்கே வீற்றிருத்தலும், அத்திருக்கைலாசபதியினிடத்திற் 
பயின்ற அன்பினனும், இடைவிடாது ஒரு பொருளைக் குறிக்கொண்டு பாதுகாத்திருப்பவன் சிறிது அவசமாய்க் 
கண்ணுறங்கியதுபோல முசு முகத்தை வாங்கியும் சிறிது மயங்கினவனும் ஆகிய முசுகுந்தன் அவரைக் கண்டு, 
பரவசப்பட்டு, தொழுது கூத்தாடி, திருவடிகளை முடிமேற்சூடி உளமுருகித் துள்ளி, வேதங்களைப்பாடி, கைகளைக் 
கொட்டி, சொல்ல முடியாத ஆனந்தமுற்று, மெய் புளகித்து, உரைதடுமாறி,"முன்பு கைலாசமலையின் மீது கிருபா 
நிதியாகிய சிவபெருமான் வீற்றிருந்த அருமைத் திருக்கோலத்தைத் தரிசித்துத் தரிசித்து உள்ளத்தே நிறைந்த         
பெருமகிழ்வெய்தியிருந்த தமியேன் இம்மானுடப் பிறப்பினால் மயங்கி நெடுநாள் அவரை மறந்தேன் கொல்லோ'         
என்று கூறி, அவரை நோக்கி இவ்வாறு சொல்லித் துதிப்பானாயினான்:

    ஏகனே போற்றி யார்க்கு மீசனே போற்றியம்மை 
    பாகனேபோற்றி மேலாம் பரஞ்சுடருருவேபோற்றி 
    மேகமார்களனேபோற்றி விடைமிசை வருவாய்போற்றி 
    மோகமார் தக்கன் வேள்வி முடித்திடு முதல்வாபோற்றி.

    அம்புயாசனன் மாலின்னுமளப்பருந்திறத்தாய்போற்றி 
    நம்பனே போற்றி யெங்கணாதனே போற்றி    கோதில் 
    செம்பொனே மணியே போற்றி சிவபெருமானே போற்றி 
    எம்பிரான்போற்றி முக்கணிறைவனே போற்றிபோற்றி.

    பொங்கராவணிகளாகப் புனைதரு புனிதாபோற்றி 
    அங்கராகத்திற் பூதியணிந்திடுமாதி போற்றி 
    வெங்கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் போற்றி 
    சங்கரா பரமா போற்றி தாணுவே போற்றி போற்றி.
    
    முன்னெனும் பொருளுக்கெல்லா முன்னவா போற்றி     முப்பான் 
    மன்னுயிர்க் குயிரே போற்றி மறைகளின் முடிவே போற்றி 
    என்னை முன் வலிந்தாட்கொண்டே யிருநிலம் விடுத்தாய்போற்றி
    நின்னுருக் காட்டியென்னை நினைப்பித்த நித்தா போற்றி.
    
    எவ்வெவர் தம்மையேனும் யாவரேயெனினும் போற்றின்
     அவ்வவரிடமாக் கொண்டே யவர்க்கருடருவாய் போற்றி
    மெய்வருதெளிவிலுன்னை வெளிப்படவுணர்ந்துளோர்க்குத் 
    தெய்வத போகமுத்தி சிறப்பொடு தருவாய் போற்றி.

    அம்புய மலர்மேலண்ண லச்சுதனாதி வானோர் 
    தம் பதமெமக்கு நல்குந் தற்பராவென்றே யாரும்
    நம்புறு பொருட்டால் வேத நவின்றிட வடைந்தோர்க்கெல்லா 
    உம்பர்தம் பதமுமீயுமுலகுடை முதல்வா போற்றி. 

    உறைதரு மமரர்யாரு முழையராய்ச் சூழநாப்பண்
    மறைபயில் பெரியோருற்று வழிபடவிருந்தாய் போற்றி 
    அறுவகை யைந்துமாறுமாகிய வரைப்பின் மேலாம் 
    இறைவனே போற்றி போற்றி யென்பிழை பொறுத்தியென்றான்.

    இவ்வாறு முசுகுந்தச் சக்கிரவர்த்தி துதிப்ப; எம்பெருமான் கருணை செய்து, அவனுடைய முகத்தை 
நோக்கி, "விட்டுணு அளவில்லாத காலம் நம்மை அன்போடு பூசித்து இந்திரனிடத்தில் வைத்தான். அரசனே, 
நீ நம்மைப் பூமியிற் கொண்டுபோய்ப் பூசனை செய்வாய்" என்று இந்திரன் கேளாவண்ணம் சொல்லியருளினார். 
முசுகுந்தன் மிக்க பெரு மகிழ்ச்சியுற்று, "சுவாமீ, உம்முடைய திருவுள்ளம் இதுவாயின், அடியேன் உய்ந்தேன்'' 
என்று ஆச்சரியமடைந்தான். இந்திரன் தன் சிவார்ச்சனையை முடித்து, பின் அக்கினிகாரியத்தையும் பிறவற்றையும் 
செய்து, வேறோர் கோயிலினுட்போய், காமதேனுவை அழைத்து, முசுகுந்தனுக்கு விருந்து செய்வித்து, விசித்திர             
வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் மணிகளையும் முத்துக்களையும் தெய்வப்படைக்கலங்களையும் பிறவற்றையும்
உதவி , "இன்னும் உனக்கு வேண்டியதைச் சொல்லுதி" என்றான்,                             

    முசுகுந்தன் "மகாராசனே, நீ பூசைசெய்கின்ற கடவுளை யான் பூவுலகிற் கொண்டுபோய் வைத்துப் 
பூசித்தற்காக அன்போடு கொடுக்குதி" என்றான். இந்திரன் அவனுக்கு இவ்வாறு சொல்வான்:
"முசுகுந்தனே கேட்பாய். விட்டுணு புதல்வர்ப்பேறின்மையினால் முன்னாளிலே சிவபெருமானுடைய 
திருவடிகளே தஞ்சம் என்று சிந்தை செய்து ஊழிகாலந் தவஞ்செய்தபொழுது, சிவபெருமான் பார்ப்பதியாருந் 
தாமுமாய்ப் பூதப்படைகள் சூழ வெளிப்பட்டார். விட்டுணு தவத்தை விடுத்து விரைவில் எழுந்து துதித்து வணங்கி நிற்ப; 
சிவபெருமான் மகிழ்ந்து அருள்செய்து, 'நீ நெடுங்காலம் நம்மை நோக்கித் தவஞ்செய்து நின்றாய். வேண்டிய வரம் 
யாது சொல்லுதி' என்று வினாவினார். 

    விட்டுணு எம்பெருமானே, அடியேனுக்கு அழியாத ஆயுளையும் காத்தற்றொழிலையும் சீதேவியோடிருக்கின்ற 
பெருஞ்செல்வத்தையும் ஈந்தருளினீர்; புதல்வற் பேறில்லாமல் வருந்தினேன். இனி அதனையும் தமியேனுக்கு ஈந்தருளும்' 
என்று வேண்டினார். சிவபெருமான் நன்றென்று, திருப்புன்முறுவல் செய்து, 'உனக்கு ஒரு புத்திரனை உதவினோம்' 
என்றருள் புரிந்தார். விட்டுணு உமாதேவியாரைத் தமக்குத் தங்கையென்று எண்ணியோ, சிவபெருமானுக்கு இவளும் 
நம்மைப்போல ஒரு சத்தியென்றெண்ணியோ, மலை மகளென வெண்ணியோ அறியோம், முன்செய்த வினையினால்
 அவரைச் சிறிதும் அன்புசெய்து வணங்கித் துதித்திலர். (ஐம்புலன்களையும் ஒருவழிப்படுத்தி, ஆசையைப் பற்றறக் 
களைந்து, இறக்கவரினும் தம் நிலைமை திரியாத உண்மையையே கடைப்பிடித்து, உலகமாதாவாகிய எம்பெருமாட்டியை 
நீக்கி எம்பெருமானையே வழிபடும் இயற்கை பிருங்கிமுனிவர் ஒருவருக்கன்றி ஏனையோர்களான் முடியுமோ முடியா.)

    அப்பொழுது, எம் பெருமாட்டியார் விட்டுணுவை நோக்கி, 'நீ இங்கே என்னை அவமதித்தாய். ஆதலால் 
எம்பெருமானிடத்தும் அன்புடையையல்லை. நீ பெறுகின்ற புத்திரனும் எம்பெருமானுடைய முனிவினால் விரைவில் அழிக' 
என்று சாபத்தைக் கூறி, சிவபெருமானை நோக்கி, 'பரப்பிரமமும் யானே யல்ல தில்லை என்று அறிவில்லாத மானுடப் 
பசுக்களை மருட்டித் திரிகின்ற வஞ்சகனாகிய இவனுக்கு முன், ஞானிகளுடைய அறிவினாலன்றி அணுகுதற்கரிய 
நீர் அணுகி நிற்கலாமா? உயிர்க்குயிராகிய கடவுளே, மீண்டு செல்வோம் வருக' என்று கூறி, எம்பெருமானை 
அழைத்துக்கொண்டு போயினார்.

    விட்டுணு அதனைக் கண்டு, துன்பமுற்று அஞ்சி அயர்ந்து மனந்தடுமாறி, மெய் நடுங்கித் தளர்ந்து, 
பல பொருள்களை ஏற்றிய மரக்கலத்தைச் சமுத்திரத்தின் கரைக்கணித்தாய்க் கவிழ்த்த ஒரு வணிகன்போல 
வருந்தி, 'உமாதேவியார் பொருட்டால் இங்கே இந்த இடையூறு வந்தது' என்று உன்னி,சிவபெருமானையும் 
உமாதேவியாரையும் குமாரக்கடவுளையும் ஒரு திருவுருவாக அமைத்து, வேதாகம விதிப்படி மெய்யன்பினால்
 பூசனை செய்து, பின்னும் வருந்திப் பல்லாயிர கோடி வருஷம் தவம் இயற்றினார். முனிவர்கள் அதனைக்கண்டு, 
'இன்னமும் சிவபெருமான் வருகின்றிலர்; இனித் தவஞ்செய்பவர் இல்லை' என்றார்கள்.                 

    அப்பொழுது சத்தியுஞ் சிவமுமாய் உலகங்களை யெல்லாந் தந்த உமாதேவியாரும் சிவபெருமானும் வெளிப்பட்டு 
வருதலும், விட்டுணு மனமகிழ்ந்து, ஓடிப்போய், முன்னே அம்மையாருடைய திருவடிகளில் வணங்கி, பின் எம்பெருமானுடைய 
பாதங்களை வணங்கி, அவ்விருவருடைய புகழ்களையும் வேதவசனங்களாலே துதித்தார். சிவபெருமான் அவருக்கு 
நல்லருள் புரிந்து, 'உமையே நீ இவனுக்கு அருள்செய்' என்று கூற; அவர் விட்டுணுவை நோக்கி, 'முன்னே எம்பெருமான் 
உனக்குத் தந்த வரமும் யான் முனிந்து கூறிய சாபமும் பிழைபடமாட்டா; இனி யார்தாம் அவற்றை மாற்ற வல்லார்! 
உன்மகன் எம்பெருமானுடைய நெற்றிக்கண்ணின் அக்கினியினால் இறந்து, பின்னர் முன்புபோலத் தோன்றி, 
உயிரோடு இருக்குக'' என்று கூறினார். சிவபெருமானும் 'அவ்வாறாகுக' என்றருளி, உமாதேவியாரோடு மறைந்தார். 

    விட்டுணு ஆச்சரியமுற்று, தமது பதிக்குப் போய் வீற்றிருப்ப; கரிய நிறத்தையுடைய மன்மதன் அவருடைய 
மனத்தினின்று தோன்றி, அழகிற் சிறந்த காளையாய், பூம்பாணங்களையும் கருப்புவில்லையும் கையிலேந்தி, 
ஆடவர்களும் பெண்களும் காமத்தின்மேல் மனம் வைக்கும்படி போர்புரிந்து உலாவினான். அவன் ஒருநாள் 
முதற்கடவுளாகிய சிவபெருமான்மீது பூம்பாணங்களைச் சிதறி, அவருடைய நெற்றிக் கண்ணினாற் பொடிபட்டு, 
பின் அவர் அருளால் அருவும் உருவும் அடைந்து, முன்னே தனக்குள்ள வளங்களோடு இருந்தான். உமாதேவியாருடைய 
திருவாக்குத் தவறுமோ! இந்தச் சரித்திரம் இவ்வளவிலிருக்க.

    விட்டுணு முன்னே தாம் அன்போடு பூசித்துவந்த சோமாஸ்கந்த மூர்த்தியைத் தம்முடைய மார்பில் 
வைத்துக்கொண்டு பாற்கடலிலே சேஷசயனத்தின் மீது பற்பலகாலம் துயின்றார். அவருடைய நெட்டுயிர்ப்பின் 
அசைவினாலும், சேஷசயனத்தின் உயிர்ப்பசைவினாலும், திரைகளையுடைய பாற்கடலின் அசைவினாலும், 
தியாகராஜசுவாமி அவருடைய மார்பில் ஆடிக்கொண்டிருந்தார். அக்காலத்தில், வாற்கலி என்னும் அவுணன் 
என்னையும் தேவர்களையும் போரிலே தோற்கச்செய்து வெற்றியடைந்தான். நான் தேவர்களோடு விட்டுணுவை 
அடைந்து வணங்கி, 'நாங்கள் வாற்கலி என்னும் அவுணனுக்குத் தோற்றோம். நீர் எம்மைக் காத்துக் கொள்ளும்' 
என்று வேண்டினேன். 

    அவர் சேஷசயனத்தினின்றும் அறிதுயில் விட்டெழுந்து, 'அஞ்சாதொழிமின்; உங்களுக்குத் துன்பத்தைச் செய்த 
வாற்கலியைக் கொல்லுவோம்' என்று அபயஹஸ்தம் செய்து, 'என்னுடைய மார்பிலே ஒரே மூர்த்தியாய் வீற்றிருக்கின்ற
 உமாதேவியாரையும் சுப்பிரமணியக் கடவுளையும் சிவபெருமானையும் பூசைசெய்து உன்னுடைய தீவினைப் பயனை 
நீங்குவாய்' என்று அன்போடு அம்மூர்த்தியைத் தம்முடைய மார்பினின்றும் எடுத்து என் கரத்தில் ஈந்தார். நான் 
தவவலிமையினால் அதனைச் சிரசின்மேற் றாங்கினேன். 

    அதன்பின் விட்டுணு பாற்கடலை நீங்கி, தேவசேனைகளோடு சம்புத்தீவிற்போய், எம்பெருமானாகிய  சிவன்        
பரமானந்த தாண்டவஞ் செய்தருளுகின்ற தில்லையிலுள்ள கனக சபையைத் தொழுது, பரவசமாய்த் திருமுன்னே 
வீழ்ந்திறைஞ்சி, அறிவு செயலிழந்தவிடத்து உளதாம் அன்பு மீதூர்ந்து, அது காரணமாகக் கண்கள் இரண்டினின்றும்             
ஆனந்த பாஷ்பம் பொழிய, சர்வான்மாக்களுக்கும் அந்தரியாமியாகிய சிவபெருமானது அகண்டாகார 
நித்தவியாபக எல்லையைத் தலைப்பட்டு, அதிலழுந்தி, நான்கு மாசம் எழுந்தாரல்லர். 

    விட்டுணு இங்ஙனம் பரமானந்தாவசமாய், ஆதிமத்தியாந்தரகிதமாகிய சிவபெருமானது பரமானந்த 
சாகரமாகிய திருவடியின் கீழே அடங்கிநின்று, பின் அவருடைய ஆஞ்ஞையினால் நின்மலதுரியாதீத சிவபோகநிலையை 
அடைந்த ஆன்மாவானது மீண்டு சகலாவஸ்தையை அடைய, சரீரவுணர்வுக்குரிய தத்துவங்களெல்லாம் முறைமுறையே 
அவரிடத்து வந்து கூடின. கண் துயின்றவன் எழுந்தாற்போல விட்டுணு எழுந்து, சிற்சபேசரது திருவடித் தாமரையை வணங்கித் 
துதித்து, புறத்தில் வந்து, வாற்கலியோடு பெரும்போர் செய்து, அவனுயிரையுண்டு, தேவர்களுக்கும் எனக்கும் 
விடை யீந்து, முன்போலப் பாற்கடலிலே சேஷசயனத்தின்மீது அறிதுயில் செய்தார். 

    யான் தேவர்களோடு சுவர்க்கத்துக்கு மீண்டுவந்து, அன்று முதல் இன்றளவும் விட்டுணுவின் மார்பில் வீற்றிருந்த 
சோமாஸ்கந்த மூர்த்தியை விதிப்படி அருச்சனை செய்துகொண்டு வந்தேன். மகாராசனே, நீ இந்த மூர்த்தியைப்  
பூசைசெய்தற்காகத் தரும்படி கேட்டாய். அப்படி உனக்குத் தருதல் என் சம்மதத்தைப் பற்றியதன்று; உனக்கு
விட்டுணுவின் சம்மதம் உண்டானால் அதன்பின் இவரைத் தருவேன்'' என்று இந்திரன் முசுகுந்தனுக்குக் கூறினான்.
முசுகுந்தன் அதனைக்கேட்டு, திருப்பாற்கடலிற் சென்று, விட்டுணுவை வணங்கி நின்று, சோமாஸ்கந்தமூர்த்தியை 
வேண்டுதலும், "நாம் இந்திரனிடத்தில் வைத்த நம்முயிர்க்குயிராகிய தியாகராஜமூர்த்தியை நீ பூமியிற் கொண்டு 
போய்ப் பூசிப்பாய்" என்று கூறினார். 

    முசுகுந்தன் நன்றென்று விட்டுணுவினிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, இந்திரனிடத்திற் போய், அதனைச் 
சொல்லினான். அவன் ஈன்றண்ணிய பசுவைப் பிரியும் கன்றுபோல மனந்தளர்ந்து இரங்கிப் புலம்பி, ஒரு சூழ்ச்சியைக் 
கருதி, தெய்வத்தச்சனைக் கொண்டு, தான் வைத்துப் பூசிக்கும் சோமாஸ்கந்தமூர்த்தி போன்ற ஆறு மூர்த்திகளை 
ஆறுதரம் செய்வித்து, ஒவ்வொன்றாக முசுகுந்தனுடைய கையிற்கொடுப்ப, அவன் அவற்றை வாங்கி, அவைகள் 
வீதிவிடங்கப்பெருமானைப் போல இருந்தும் தனக்கு ஒன்றுஞ் சொல்லா திருந்தமையால் வஞ்சனை என்று அறிந்து, 
"இவர் அவர் அன்று' என்று ஆறுதரமும் கூறினான். 

    இந்திரன் அதனைக் கேட்டு, விட்டுணுவினுடைய மார்பாகிய பொன்னூஞ்சலிலே ஆடிய சோமாஸ்கந்த 
மூர்த்தியைக் கொண்டு வந்து, "இவர் அவராமோ?" என்றான். இந்திரன் இவ்வாறு உரைப்ப ; சோமாஸ்கந்தமூர்த்தியானவர், 
அவன் அறியாவண்ணம் முசுகுந்தனுடைய முகத்தை நோக்கி, "நாம் உன்பால் வந்தோம். இனி நம்மைப் பூவுலகிற் 
கொண்டுபோய் மனமகிழ்ச்சியோடு பூசைசெய்குதி' என்றருள் செய்தார். முசுகுந்தன் ஒப்பில்லாத பெருமகிழ்ச்சியடைந்து, 
வணங்கித் துதித்து "விட்டுணுவினுடைய பூசையை ஏற்றிருந்தவர் இவராமாம்! அரசே இவரைத் தருக' என்று வாங்கினான். 
இந்திரன் முசுகுந்தனை நோக்கி   'இவரை, முன் யான் தந்த அறுவரோடும் பூமியிற் கொண்டு சென்று
திருவாரூர் முதலாகிய ஸ்தலங்களிற் பூசிப்பாய்'' என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினான்.

    முசுகுந்தன் நன்றென்று இந்திரனிடத்தில் விடைபெற்றுக்கொண்டு பூமியில்வந்து, திருவாரூரிலே 
வன்மீகப்பெருமான் வீற்றிருக்குங் கமலாலயத்தில் விட்டுணு பூசித்த சோமாஸ்கந்தமூர்த்தியைத் திவ்விய 
சிங்காசனத்தின்மீது விதிப்படி தாபித்து, மற்றை ஆறு சோமாஸ்கந்தமூர்த்திகளையும் திருநாகைக்காரோணம், 
திருநள்ளாறு, திருக்காறாயல், திருக்கோளரியூர், திருவான்மியூர், திருமறைக்காடு என்னும் ஆறு தலங்களிலும் 
ஒரு நாளிலே தாபித்து, விதிப்படி சிரத்தையோடு பூசைசெய்வித்து, அதன் பின் திருவாரூர்த் தியாகராஜப் 
பெருமானுக்குத் திருவிழாச் செய்யும்படி நினைத்தான். 

    அந்நாளில், இந்திரன் தான் பூசித்த கடவுளை முசுகுந்தனுக்குக் கொடுத்த பாவத்தால் விண்ணுலக 
பாக்கியத்தை யிழந்து, நீச வேடந்தாங்கி,"தியாகராஜப்பெருமானுடைய திருவிழாவைச் சேவித்தற்கு எத்தேசத்தாரும் 
வருக'' என்று யானையின் மீதேறித் திருவாரூர் வீதியைச் சூழ்ந்து முரசறைந்து சாற்றினான். முசுகுந்தன் முன்கருதியபடி 
தியாகராஜப் பெருமானுக்கு மகோற்சவத்தை நடத்தி, மற்றைத் திருப்பதிகளிற் றாபித்த தியாகேசர்களுக்கும் 
அதுபோலத் திருவிழாவைச் செய்வித்து, வீரவாகு முதலிய வீரர்களோடும் பூவுலகத்தை ஆண்டிருந்தான். இந்திரன் 
பலவருஷங்களாகத் தியாகேசருடைய திருவிழாவைச் சேவித்து, தவஞ்செய்து, புலையர் வடிவை நீங்கிப் 
பழையவடிவத்தைப் பெற்று, மீண்டு சுவர்க்கத்தையடைந்து, முன் இழந்த செல்வங்களைப் பெற்று வீற்றிருந்தான்.

    இந்திரன் போயபின்பு, முசுகுந்தன் கருவூரில் நெடுங்காலம் அரசு செலுத்தியிருந்து, பின் தன் மகனாகிய 
அக்கினிவன்மனுக்கு முடிசூட்டிப் பூமியை ஆளவைத்து, தவஞ்செய்து, திருக்கைலாசமலையை அடைந்தான். 
அதன்பின் வீரவாகுவும் இலக்கத்தெண்மர்களும் தங்கள் குமாரர்களுக்குத் தத்தம் வரிசைகளைக் கொடுத்து, 
அக்கினிவன்மனுக்குச் சுற்றமாக இருத்தி, அருந்தவஞ்செய்து, மானுடத்தன்மை நீங்கி, அருளினாலே பழைய 
வலியைப் பெற்று, கந்தகிரியிற்போய் முருகக்கடவுளுடைய திருவடிகளை அன்போடு வணங்கித் துதித்து 
இருந்தார்கள். பிரமனறியாத பிரணவத்தின் பொருளை அகத்திய முனிவருக்கு உபதேசித்த பரமாசாரியராகிய 
முருகக்கடவுளுக்குரிய விரதங்கள் இத்துணைப்பெருமை உடையனவாதலால், யாவராயினும் அவற்றை அநுட்டித்தவர் 
நினைத்த வரங்களெல்லாவற்றையும் விரைவிற் பெறுவர். தேவர்களும் அவரை வந்து வணங்குவர். 

            திருச்சிற்றம்பலம்.

            வள்ளியம்மை திருமணப்படலம்.

    திருக்கைலாசமலையின் ஒருசாரிலுள்ள கந்தமலையிலே செம்பொற் றிருக்கோயிலின்கண் 
தெய்வயானை யம்மையாரோடு இனிதாக வீற்றிருக்கின்ற சுப்பிரமணியக்கடவுள் வள்ளிநாயகியாரைத் 
திருமணஞ் செய்த கதையை இனிச் சொல்வாம். தொண்டைநாட்டிலுள்ள மேற்பாடி என்னும் ஊரின்பக்கத்திலே, 
பலவளங்களையுடையதும் மிக உயர்ந்ததுமாகிய வள்ளியங்கிரி என்று ஒரு மலையுளது. அதில் அறுமுகக்கடவுள் 
பிற்காலத்திலே தன்பால் வந்து தங்கும்படி சுவர்க்கவுலகம் பெருந்தவத்தைச் செய்து வந்திருந்தாற் போல, 
ஒரு சிற்றூர் பெருமையுற்றிருந்தது. அச் சிற்றூரில் வேடர்களுக்கு அதிபனும் முன்செய்த தவத்திற் 
சிறந்தவனுமாகிய நம்பியென்பான் ஒருவன் இருந்தான். 

    அவன் சில புத்திரர்களைப் பெற்று, மகட்பேறில்லாமையால் அதற்காகத் தன் குலதெய்வத்தை வழிபட்டுக் 
கொண்டிருக்குநாளில், அவ்வள்ளிமலைச் சாரலின்கண், ஒருவழிப் பட்ட ஐம்புலன்களையுடைய சிவமுனிவர் என்னும் 
மேலோர் ஒருவர் சிவபெருமானைத் தியானித்துச் சிவவிரதங்களை யநுட்டித்துத் தவஞ்செய்துகொண்டிருந்தார். 
அங்கே,பரிசுத்தமும் அழகும் பொன்னிறமுமுடைய ஒரு பிணைமான் சுப்பிரமணியக்கடவுளுடைய திருவருளினாலே 
கண்டோர் மயங்கும்படி வந்துலாவியது. அம்மான்பிணையைச் சிவமுனிவர் பார்த்தலும், அழகும் இளமையும் 
உடைய பிறன்மனையாளைக் கண்ட தூர்த்தனைப்போல மயங்கி, காமத்தாற் சுழன்று, கவலையினால் துன்பம் அடைந்து,
கருத்துடைந்து, பித்துக்கொண்டவராய், தெய்வப்புணர்ச்சி போலப் பார்வை மாத்திரத்தால் அம்மானிடத்து 
இன்பம் அனுபவித்து, ஆசைநீங்கி, பின்பு மெய்யுணர்வு வரப்பெற்று, முன்போலத் திட்பத்தோடிருந்து தவஞ் செய்தார். 

    அவருடைய பார்வையினால் மானின் வயிற்றிற் கருப்பஞ் சேர்தலும், விட்டுணுவின் மகளாகிய சுந்தரவல்லி,
முருகக்கடவுள் முன்னே தனக்குச் சொல்லிய *குறிப்பின் வழிச் செல்வாளாய், அந்த மானின் வயிற்றிலுள்ள கருவிற் 
புகுந்தாள். அப்பிணைமான் அவ்விடத்தை நீங்கித் தினைப்புனமெங்கும் உலாவி, சுனையில் நீர்பருகி, ஓரிடத்திற்றங்கி, 
வள்ளி மலையில் ஏறி, அங்குள்ள தினைப்புனங்களையெல்லாங் கடந்துபோய், வேட்டுவப்பெண்கள் வள்ளிக்கிழங்குகள் 
அகழ்ந்தெடுத்த குழிகளையுடைய புன் செய்யிற் புகுந்து, சூலின்பாரத்தினாற் றளர்ந்து தளர்ந்து போய், வயிறு நொந்து 
மயங்கி, வாய்விட்டுக் கதறி, நெட்டுயிர்ப்பெறிந்து, கருவையீன்று, அக்குழியில் இட்டது. 

*முருகக்கடவுள் சொல்லிய குறிப்பை விடைபெறுபடலத்திக் காண்க

    சுந்தரவல்லி குண்டலம் தொடி வளை முதலாகிய பழைய ஆபரணங்களைத் தரித்து, மரவுரியை உடுத்து, தன் 
முன்னையுணர்வின்றி, மானின் வயிற்றில் வந்து உதித்தாள். ஈன்ற மான்பிணை அக்குழந்தையை நோக்கி, இது 
நம்மினத்தது அன்று; வேறுசாதி வடிவத்தோடு என்னிடத்து வந்து பிறந்தது" என்றெண்ணி. மிக மருண்டு,அஞ்சி ஓடியது. 
ஓடுதலும், அவள் தனித்தவளாய், "கின்னரர்களுடைய ஒலியோ சரசுவதியின் இசையோ" என்று கேட்போர் 
சந்தேகம் உறும்படி ஏங்கி அழுதாள்.

    அந்தச் சமயத்தில், அறுமுகக் கடவுளுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவராசனாகிய நம்பி 
தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்துக்குச் சென்று, அவ்வழுகையொலியைக் கேட்டு, 
'இவ்வொலி எது?'' என்றெண்ணி, அவ்வறும்புனத்தில் வந்து, வள்ளிக்குழியிலிருக்கின்ற தூண்டாமணி 
விளக்குப்போன்ற குழந்தையை நோக்கி, "இந்தா இஃது ஓர் இளங்குழந்தை" என்று எடுத்து, மகட்பேறில்லாத 
மனக்கவலை நீங்கும்படி தன் தேவி கையிற் கொடுத்து, மகிழ்ச்சி மிகுதியினால் வில்லை நிலத்திலிட்டான்; 
எழுந்தோங்கிப் பாய்ந்தான்; பேரொலி செய்தான்; ஆனந்தசாகரத்தில் மூழ்கினான்; சிரித்தான்; 
தோள்களைத் தட்டினான்: "முற் பிறப்பிலே நாம் செய்த தவந்தான் நன்று போலும்" என்று கூறினான். 

    அவன் மனைவியாகிய கொற்றக்கொடிச்சி, அப்பொழுதே வயாவும் வருத்தமுமுற்றுப் பெற்றெடுப்பாள் 
போல அக்குழந்தையைப் பேணி, பெருமகிழ்வுற்று, தனங்களில் ஊறும் பாலை ஊட்டினாள். வேட்டுவராசன் 
பின்பு நிலத்திலிட்ட வில்லை எடுத்து, புனத்தை நீங்கி, குழந்தையோடு மனைவியை அழைத்துக்கொண்டு 
சிற்றூரிற் போய், சிறுகுடிலிற் புகுந்து, அருமருந்து போலும் மகளைப் பெற்றமையாற் பெருமகிழ்ச்சியடைந்து, 
கடாவை வெட்டித் தன் கிளையோடு இனிதாக உண்டு, குறிஞ்சிப் பறையொலிப்பக் குரவைக் கூத்தாடுவித்து, 
தெய்வத்துக்குப் பலியைச் செலுத்தி, வெண்மையாகிய அரிசியையும் மலரையும் மஞ்சளையுந் தூவி 
ஆட்டுக்கடாவை அறுத்து, சுப்பிரமணியக்கடவுளுக்கு விழாக்கொண்டாடி, வேலனைக்கொண்டு வெறியாட்டாடுவித்து, 
இவை போல்வன பிறவுஞ் செய்வித்தான். 

    கற்பிற்சிறந்த அவன் மனைவி தன் மகட்குக் காப்பிட்டு, மயிலிறகுகளை விரித்த பூந்தொட்டிலில் ஏற்றினாள்.
 மிகமுதிர்ந்த வயோதிபர்கள் அங்கு வந்து கூடி, ''இக்குழந்தை வள்ளிக்கிழங் ககழ்ந்த குழியிற் பிறந்தமையால் 
இவளுக்குரிய நாமம் வள்ளி" என்று பெயர் இட்டார்கள். வேட்டுவ ராசனாகிய நம்பி ஜெகன்மாதாவாகிய வள்ளி 
நாயகியைத் தன் மனைவியுந் தானுமாய் நம் மகள் என்று அன்போடு வளர்த்தான். தம்முடைய பிதாவாகிய விட்டுணு 
இடைச்சேரியிலே நந்தகோன் மகனாய் வளர்ந்தவாறு போல, வள்ளிநாயகியார் தாமும் வேட்டுவராசன் மகளாகி 
அவனுடைய சிறுகுடிலிற் சேர்ந்து வளர்ந்தார். [விட்டுணுமூர்த்தி முன்னாட்பெற்ற அரு மருந்து போல்பவரும், 
சிவகுமாரராகிய சுப்பிரமணியக்கடவுளுக்குத் தேவியாரும் ஆகிய வள்ளிநாயகியாரைத் தமது குறிஞ்சிநிலத்தில் 
மகளாக வளர்த்தலால்  ஆஆ! வேட்டுவர்கள் செய்த தவத்தை யார்தாம் அளவிடற் பாலார்.] 

    அவர் தொட்டிலை விட்டுப் பூமியிலே தவழக்கற்று, தளர்நடையுங் காட்டி, வேங்கை மர நீழலையுடைய 
முற்றத்தில் உலாவி, முறத்தினால் மணிகொழித்து, சிற்றில் இழைத்து, சிறுசோறு அட்டு, முன்னுணர்வு சிறிதுமின்றித்    
தந்தை தாயர் முதலாயினார் மனமகிழுதற் கேதுவாகிய வண்டலாட்டை இம்முறையாற் செய்து வருங்காலத்தில்,         
முருகக்கடவுளைத் திருமணஞ் செய்தற்கு இப்பருவம் ஏற்கும் என்று சொல்ல அவருக்குப் பன்னிரண்டு 
வயசு சென்றன.

    தாயுந் தந்தையும் அவருடைய அப்பருவத்தைக் கண்டு, தமது சாதி யாசாரப்படி அவரைப் புனத்திலே 
தினைக்கொல்லையைக் காக்க வைத்தார்கள். முருகக்கடவுளுக்குத் தேவியாகின்ற வள்ளிநாயகியை வேட்டுவர்கள் 
தினைப்புனங் காக்க வைத்தது, தூக்கணங்குரீஇ காட்டில் எளிதாகக் கிடைத்த தெய்வமணியைக் கொண்டுவந்து
 தன் கூட்டில் இருளோட்ட வைத்தவாறன்றோ. மெழுகைக் காய்ச்சி அதிலே பல மணிகளைப் பதித்த பழுப்பேணியிலே
 அவ்வம்மையார் பாதங்களை வைத்து மகிழ்ந்தேறி, தினைப்புனத்தில் எத்திசையையும் பார்க்கத்தக்க பரணில் 
இருந்து, தட்டை, குளிர், தழல் ஆகிய கருவிகளை ஏந்தி, கிளி முதலிய பக்ஷிகள் தினைப்புனத்தை அணுகாமல் 
ஓட்டியும், பன்றி, மான்,மரை முதலிய மிருகங்களுக்கு மணிக்கற்களைக் கவணில் வைத்து வீசியும், பூவைகாள் 
புறவங்காள் மயில்காள் கிளிகாள் குயில்காள் சேவல்காள் ஆலோலம் ஆலோலம் என்று தனித்தனி கூவியும், 
இவ்வாறாகத் தினைப்புனத்தைக் காவல் செய்திருந்தார்.

    வள்ளி நாயகியார் இப்படித் தினைப்புனத்தைக் காத்திருப்ப; முருகக் கடவுள் அவருக்கருள்புரியக் கருதி, 
கந்தமலையை நீங்கி, தனியே திருத்தணிகை மலையில் வந்திருந்தார். அந்நாளில் நாரதமுனிவர் பூமியிலே 
வள்ளிமலையில் வந்து, தினைப்புனத்தைக் காத்திருந்த வள்ளிநாயகியாரைக் கண்டு கைதொழுது, 
"உலக மாதாவாய் இங்கே வீற்றிருக்கின்ற இவரது பேரழகு முழுவதையும் நான் நினைத்துப் புனைந்துரைத்தாலும் 
சொல்லி முடியுமோ முடியா. இவர் எம்பெருமானாகிய அறுமுகக்கடவுளுக்குத் தேவியாய் இருக்கும்படி முன்னே 
தவஞ்செய்து வைத்தார்." என்று அளவில்லாத அற்புதத்தோடு இவ்வாறு தம்முட் கூறி, திருத்தணிகையிலே 
முருகக்கடவுளை அடைந்து, அவருடைய திருவடிகளைப் பலமுறை வணங்கி, "எம்பெருமானே, சிவமுனிவனுக்கு 
மானின் வயிற்றிற் பிறந்த வள்ளி நாயகியார் வேட்டுவர் மகளாகி வள்ளிமலையிலே தினைப்புனத்தைக் காத்துக் 
கொண்டிருக்கின்றார். அவருடைய திருமேனியின் அழகு இலக்குமிக்கும் இல்லை, இது பொய்யன்று. அடியேன் 
பார்த்துவந்தேன். தேவரீரும் போய்ப் பார்க்குதிர். எமது அன்னையாகிய அவர் முற்பிறப்பில் விட்டுணுவின் மகள்; 
உம்முடைய திருப்புயங்களைச் சேரும்படி தவஞ்செய்திருந்தார். தேவரீர் வள்ளி மலைக்கு எழுந்தருளி அவருக்கு
அருள்புரியும்" என்று விண்ணப்பஞ்செய்தார். 

    இப்படி நாரதமுனிவர் கூறியபொழுது, அறுமுகக்கடவுள் "முனிவனே நீ கூறியது நன்று நன்று" என்று 
அவரை அனுப்பிவிட்டு, காமநோய்க் கவலையைத் தமது திருவுள்ளத்தில் வைத்து, வள்ளி நாயகியாருக்கு 
அருள்செய்யுமாறு, தம்முடைய திருவுருவத்தை ஒரு மானுடத் திருமேனிகொண்டு, காலில் வீரக்கழலும் 
அரையில் கச்சும் தோளில் மாலையும் கையில் வில்லும் பாணமும் நீலநிறக் குடுமியும் உடையராய், ஒரு வேட்டுவக் கோலம்பூண்டு,     
வள்ளிநாயகியார் மேல் வைத்த மோகம் தம்முடைய மனத்தைத் தள்ளத் திருத்தணிகை மலையை நீங்கி வள்ளியங்கிரியில் 
வந்தெய்தி, ஒருவன் முன்னே ஓரிடத்திற் சேமித்து வைத்த நிதியைத் தான் நினைத்தபொழுதில் எளிதாகப் 
பெற்றவாறு போலத் தினைப்புனத்திலிருக்கின்ற வள்ளிநாயகியாரைக் கண்டார்.

    வள்ளிநாயகியைக் கண்ட முருகக்கடவுள் காமாக்கினி சுடச் சோர்ந்து வெம்பி, ஆசைமிகுகின்ற 
உள்ளத்தினராய், அவர் இருக்கும் பரணுக்கு அணிமையிற்சென்று, "மையுண்ட வாட்படைபோலும் கண்களையுடைய 
பெண்ணே கேள். பூவுலகத்துப் பெண்களெல்லாருக்கும் இறைவியாயிருக்கும் உன்னை வேட்டுவர்கள் தனியே 
தினைப்புனங் காக்க வைத்துப் போயினாரே. அவர்களுக்குப் பிரமதேவர் பகுத்தறிவைச் சிறிதும் படைத்திலர்
போலும்'' என்றும்; "மனந்தளருகின்ற எனக்கு உன்பெயரைச் சொல்லுதி, அதனைச் சொல்லாயெனின் உன் 
ஊரைச் சொல்லுதி, அதுவும் சொல்ல முடியாதாயின் உன் சிற்றூருக்குச் செல்லும் வழியைச் சொல்லுதி'' என்றும்; 
"நீ என்னோடு ஒன்றும் பேசாதொழியினும், புன்முறுவல் செய்யாதொழியினும், என்னைச் சிறிதும் கண்திறந்து 
பாராதொழியினும், விரகமிகுந்துழலும் யான் உய்யும்வழி யொன்றையும் காட்டா தொழியினும், மனமும் 
சற்றுருகாதொழியினும், நின்பாற் பழியொன்று வந்து சூழும். ஆதலால் என்னைப் பராமுகஞ் செய்யாதொழி" என்றும் கூறி, 
உலைமுகத்திற்பட்ட மெழுகுபோல உருகி, ஒரு பெண்ணின் மாட்டு வைத்த ஆசையாகிய வலையில் அகப்படுகின்றவர் 
போல வருந்தி இரங்கி நின்றார். அவ்வறுமுகக் கடவுளுடைய திருவிளையாடலெல்லாம், சலனமில்லாத சந்திரன் 
கலங்குகின்ற சலத்திலே சலனமுறுவதாகத் தோன்றுதல் போலுமன்றோ!

    குமாரக் கடவுள் வள்ளிநாயகியாருக்கு முன்னே நின்று, இயற்கையிற் றம்மாட்டில்லாத ஆசையின் மிகுதியை 
உள்ளதுபோலக் காட்டி, இவற்றைச் சொல்லிக் கொண்டு நிற்கும்பொழுது, வள்ளிநாயகியாருடைய தந்தையாகிய நம்பி, 
கொம்பு முதலிய வாத்தியங்கள் ஒலிப்ப வேடுவர்களோடு அங்கே வந்தான். அப்பொழுது முருகக்கடவுள், 
அடி வேதங்களாகவும்,  நடு சிவாகமங்களாகவும்,  கிளைகள் யாவும் கலைஞானங்களாகவும் தாம் ஒரு 
வேங்கைமரத்தின் உருவாகி நின்றார். வேட்டுவ ராசன் விரைவில் அங்கு வந்து, மகளாகிய வள்ளிநாயகியாரைக் 
கண்டு, வள்ளிக்கிழங்கையும் தினைமாவையும் தேனையும் காட்டாவின் பாலையும் பிற தின்பண்டங்களையும் 
அவருக்குக் கொடுத்து, தினைப்புனத்தில் நின்ற வேங்கை மரத்தைக் கண்டான். 

    அவனுக்குப் பக்கத்தில் நின்ற வேடுவர்கள் அவ்வேங்கை மரத்தின் நிலைமையை நோக்கி, ஆச்சரியமுற்று, 
"இது முன்னுள்ளதன்று. இப்பொழுதே உண்டாயினமையால் தீங்கு வருதல் நிச்சயம்'' என்று கோபித்து, இந்தப் பெரிய 
வேங்கைமரத்தை இப்பொழுதே முறியுங்கள் என்பாரும், வேரோடு வீழ நாற்புறத்திலும் குழிபறியுங்கள் என்பாரும், 
இதன் அரையை மழுவினாலே தறியுங்கள் என்பாரும், இனித் தாமதிக்காதீர்கள் என்பாரும் ஆயினார்.                 

    இப்படிச் சொல்லுகின்ற வேடுவர்கள் யாவரையும் அரசனாகிய நம்பி விலக்கி, வள்ளிநாயகியாருடைய 
முகத்தைப் பார்த்து, ''மகளே, இத்தினைப்புனத்தில் வேங்கை மரமொன்று புதிதாக உண்டாகிய காரணம் என்னை? 
உண்மையைச் சொல்லுதி' என்று வினாவினான்.வள்ளிநாயகியார் வெருவி, "தந்தையே, இது மாயம்போற் றோன்றிற்று; 
வந்த வரலாற்றை யான் அறியேன். 'நேற்றில்லாத ஈதோர் மரம் புதிதாய் முளைத்தது' என்று யானும் மனநடுங்கியிருந்தேன். 
இதுவே நிகழ்ச்சி" என்றார். அதனைக் கேட்ட வேட்டுவ ராசன் '"மகளே அஞ்சாதே. க்ஷேமத்தோடு இங்கே இரு. 
இவ்வேங்கைமரம் உனக்குத் துணையாய் வந்தெய்தியது'' என்றுகூறி, வேடுவர்கள் குழாத்தோடு போயினான்.

    அதனைக் கண்ட அறுமுகக்கடவுள் வேங்கை வடிவம் நீங்கி, வள்ளி நாயகியார் காணும்படி பழைய 
மானுட வடிவங் கொண்டு, எல்லையில்லாத ஆசையுற்று இரங்குபவர்போல அவருக்கருகே நின்று, அருளினால் 
அவரை நோக்கி, இவ்வாறு சொல்வாராயினார்: "கோங்கரும்பையொத்த தனங்களையுடைய குறவர் மகளே, 
இங்கே உன்னை வந்தடைந்தேன். எனக்கு உன்னுடைய கழல்களல்லது புகலிடம் ஒன்றுமில்லை. நின்னை யான் 
என்றும் நீங்கலன் நீங்கலன். பாவியேன் உன்னைப் பிரிந்து செல்ல வல்லனோ. உடம்பானது உயிரையகன்று 
அறிவு கொண்டெழுந்துபோக வன்மையில்லதென்பதனைச் சொல்லவும் வேண்டுமோ. உன்னுடைய கண்ணாகிய 
வலையில் அகப்பட்ட எனக்கு அருள்செய்தலின்றிச் சிறைக்கணித்தாய். 

    எனக்கு உய்யுந்திறம் வேறுளவோ. இங்கே உன் கையில் இவ்வுயிரைக் காத்துக்கொள். பெண்ணே நீ 
ஆடிய சுனையாயும் அணியுஞ் சந்தனமாயும் சூடிய மலர்களாயும் தோயப்பெற்றிலேன். வாடினேன். இனி யான் 
செய்யுந் திறம் யாது. நீ தினைப்புனத்தைக் காத்தல் உன் பெருமைக்குப் புல்லிது புல்லிது. நீ என்னோடு வருதி; 
அரம்பையர்கள் யாவரும் வணங்கி வாழ்த்த மேலாகிய பழைய நிலைமை தவறாத செல்வங்களை நீ 
அனுபவிக்கும்படி தருவேன்" என்று இவைபோல்வன பல குறிப்புரைகளைச் சொல்லி நின்றார். வள்ளிநாயகியார் 
அவருடைய மனக்கருத்தை உற்றுநோக்கி, "இவர் திறம் நன்று!'' என்று நாணி, "நான் இழிகுலமாகிய வேட்டுவ 
சாதிப் பெண்; நீர் உலகம் முழுவதிற்கும் அருள் செய்கின்ற முதல்வர். நீர் என்னைத் தழுவநினைத்து நும்பெருமைக்குத் 
தாழ்வாகிய வசனங்களைப் பேசுதல் பழியன்றித் தகுதியாமோ! 

    யான் தினைக் கொல்லையைக் காத்திருக்கும் ஓர் பேதை: நீர் உலகத்தைக் காக்கும் இறைவர். நீர் உளம் 
மயங்கி என்னுடைய கலவியை விரும்புதல் முறைமையன்று. புலியானது பசி மிகுந்தாற் புல்லையுந் தின்னுமோ!'' 
என்று பற்பலவற்றைச் சொல்லி நின்றார். அப்பொழுது வேட்டுவ ராசன் தொண்டகம் துடி முதலிய வாத்தியங்கள் 
ஒலிப்ப, வள்ளிநாயகியார் அஞ்சும்படி வேடுவர்கூட்டத்தோடு அங்கே வந்தான்.வள்ளிநாயகியார் அவன் வந்ததைக் 
கண்டு மனம் நடுநடுங்கி வெருவி, சுப்பிரமணியக்கடவுளாகிய வீரருடைய முகத்தை நோக்கி "மிக்கவலியையுடைய 
வேடுவர்கள் தீயர்கள். இனி நீர் பிழைக்க நினைத்தால்  இங்கே நில்லாமல் ஓடிப்போய்விடும்" என்றார். 

    அவர் அவற்றைக் கேட்டு அத்தேவியார் தம்மீது வைத்த அன்பிற்காக மிகமகிழ்ந்து, விருத்தராகிய ஒரு சிவனடியார்         
வேடம்பூண்டு வேடர்களுக்கெதிரிற் சென்று, வேட்டுவ ராசனை அணுகி நின்று, அவனுக்கு அன்போடு விபூதியைக்
கொடுத்து, ''அரசனே, உனக்கு வலிமை மிகுத்திடுக, வெற்றி பெரிதாகுக, வளங்கள் விருத்தியாகுக" என்று 
ஆசீர்வதித்தார். வேட்டுவ ராசன் அவருடைய பாதங்களை வணங்கி, "நீர் உயர்ந்த இம்மலையில் விருத்தராய் 
வந்தீர். உமக்கு வேண்டியதைச் சொல்லும்" என்றான். அவ்விருத்தர் 'மகாராசனே கேட்பாய். என்னுடைய மிகுந்த 
மூப்பு ஒழியவும் மனமயக்கம் நீங்கவும் இங்கே நும்வரைக் குமரி எய்தி ஆடவிரும்பி, மெலிந்து விரைவாக 
வருகின்றேன்." என்றார். 

    விருத்தர் கூறிய மொழியை அரசன்கேட்டு, "நமது முதியோரே, நல்லது. நீர் கூறிய தீர்த்தத்தில் நாடோறும் 
முழுகி நமது மகள் தனித்திருக்கின்றாள் அவளுக்கும் ஓர் துணையாகி இங்கே இரும்'' என்ன, முதியவர் 'அரசனே, 
நல்லது" என்றார். வேட்டுவ ராசன் வள்ளிநாயகியாரிடத்திற் சென்று, தினைமாவையும் கிழங்கையும் பழங்களையும் 
பிறவற்றையும் கொடுத்து, அவருக்குத் துணையாக அத்தவத்தரை வைத்து, வேடுவர்களோடு மீண்டு போயினான்.

    அரசன் சென்றதை விருத்தச் சிவவேடர் கண்டு, வள்ளிநாயகியாரை நோக்கி, "பெண்ணே நான் இனிச் 
செய்வதென்கொல்? என்னைப் பசி நோய் வருத்துகின்றது" என்றுகூறி, அவர் தேனுங் கனியும் மாவும் கையிற்கொடுக்க 
வாங்கி உட்கொண்டு, "வெய்யிலும் மிகுந்தது; தண்ணீர்த் தாகம் பெரிதும் உடையேன்' என்றார். அதனை வள்ளி 
நாயகியார் கேட்டு, "எந்தாய், இங்குள்ள மலைக்குமப்பால் ஏழு மலைகள் கடந்தபின் உப்புறத்தில் ஒரு சுனை உளது. 
அங்கே போய்த் தண்ணீர் பருகி வாரும்'' என்றார். விருத்தர் "பெண்ணே,யான் நாவரண்டு தண்ணீர்த்தாகம் உற்றேன்.
 புதியவன். மலைவழியைச் சிறிதும் அறியேன். உன் காற்றுணைகள் வருந்துமென்று சிறிதுந் தாமதஞ்செய்யாமல் 
விரைவில் வந்து சுனைநீரை எனக்குக் காட்டுதி" என்றார். 

    வள்ளிநாயகியார் அதனைக்கேட்டு, "சுவாமீ வாரும்'' என்று அவரை அழைத்துக்கொண்டு, தாம் முன்னே 
மலைகளைக் கடந்துபோய்ச் சுனைநீரைக் காட்ட ; அவர் வேனிலால் வெதும்பினவர் போலப் பருகி, பின்னர், 
"மேகத்தையொத்த அளகபாரத்தையுடைய பெண்ணே, என் உடம்பை வருத்துகின்றதும் சகித்தற்கரியதுமாகிய 
பசியைத் தணித்தாய், தண்ணீர்த் தாகத்தையுந் தணித்தாய், இன்னும் என் தளர்ச்சி தவிர்ந்திலது. பாவியேன் 
கொண்ட மோகத்தையுந் தணித்தாயாயின் என்குறை முடிந்தது" என்று இரங்கிக் குறையிரந்து வேண்டி மயங்கிக் 
கும்பிட்டு நின்றார். அப்பொழுது, வள்ளிநாயகியார் நகைத்து உயிர்த்து நடுநடுங்கிச் சீறி, "பெரியீரே, நீர் மேலாகிய 
தவத்தோர் வேடத்தைப் பூண்டு இங்கே உமக்குத் தகாதனவற்றையே செய்தீர். எல்லார் விழிக்கும் பாலாய்த் தோன்றிப் 
பருகினவருடைய உயிரைக் கவரும் ஆலாகல விஷத்தின் தன்மையதோ உம்முடைய இயற்கை! 

    தினைப்புனத்தைக் காக்கும் இழிந்த வேட்டுவர் மகளாகிய என்னை,குற்றமில்லாத மகாதவத்திற் 
சிறந்த நீர் தழுவும்படி நினைத்துப் பேசத்தகாத வார்த்தைகளைப் பேசி வணங்கி நிற்றல் தகுதியன்று.வேட்டுவர் இச்செய்கையை         
அறிந்தால் தீதாய்முடியும். நீர் சங்குபோல் நரைத்த முடியையுடைய முதியீராயிருந்தும், நல்லுணர்வு சிறிது மில்லீர். 
எதற்காக மூத்தீர்! இழிகுலத்தேனாகிய என்னை விரும்பிப் பித்துக்கொண்டார் போலப் பிதற்றுகின்றீர். இதனால் இவ்வேடர் 
குழுவுக்கெல்லாம் ஒரு கொடும்பழியைச் செய்தீர். நான் காக்கின்ற தினைப்புனத்திலே பக்ஷிகளும் விலங்குகளும் 
வந்து கதிர்களைக் கவரும்.நாவல்லோரே எனக்குப்பின் நீரும் நடந்தருளும். நான் முந்திப் போவேன்" என்று கூறி, 
வள்ளிநாயகியார் முன் சென்றார்.

    அவர் முன் செல்லுதலை எம்பெருமான் பார்த்து, இனி என்செய்வதென்று இரங்கி, "இவளுக்குமுன் 
வந்தருள் செய்யும்" என்று விநாயகக் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்பொழுது, விநாயகராகிய யானை அறுமுகக் 
கடவுளுடைய வேண்டுகோளுக்கு இரங்கி, கடல்போல முழங்கி, முன்பு செல்லுகின்ற வள்ளிநாயகியாருக்கு 
முன்னாக வந்தது. அவர் அவ்வியானையைக் கண்டு அச்சத்தோடு மீண்டு, தவவேடங்கொண்ட சுப்பிரமணியக் 
கடவுளைக் கிட்டி, ''நமது தலைவரே, என்னை அணுகவொட்டாமல் இந்த யானையைக் காத்தருளும். நீர் 
சொல்லியபடி செய்வேன்' என்று கூறி, அவருடைய பின்பக்கத்திற் சேர்ந்து தழுவிக்கொண்டார். 

    அப்பொழுது முருகக்கடவுள் தமது முன்பக்கத்தில் விநாயகக்கடவுளாகிய களிற்றி யானையின் 
கோடு ஒற்றவும், பின்பக்கத்தில் வள்ளிநாயகியாராகிய பிடியானையின் தனமென்னுங்கோடு ஊன்றவும், 
இவ்விரண்டிற்கும் நடுவே ஒரு வச்சிரதம்பம் போல நின்றார். அவர் விநாயகக்கடவுளை வந்தனைகள் 
செய்து, "எம்பெருமானே, நீர்வந்தமையால் மனமயக்கம் ஒழிந்தேன். வள்ளிநாயகியும் என்னைச் சேர்ந்தாள். 
இனி நீர் மீண்டெழுந்தருளுக'' என்றார். விநாயகக்கடவுள் நன்றென்று மீண்டு போயினார். முருகக்கடவுள் 
வள்ளி நாயகியாரை ஒர் சோலையிற் கூடி, மிகுந்த கருணைசெய்து, பன்னிரண்டு திருப்புயங்களும் 
ஆறுதிருவதனங்களும் வேற்படையும் குலிசமும் மற்றை ஆயுதங்களும் மயில்வாகனமுமாக வள்ளிநாயகியார் 
தரிசிக்கும்படி தமது திருவுருவத்தைக் காட்டி நின்றார். 

    தேவியார் வேலாயுத கரராகிய அக்கடவுளுடைய திருவுருவைத் தரிசித்து, வணங்கித் துதித்து, 
ஆச்சரியமுற்று, நடுநடுங்கி வியர்த்து, கைகுவித்து நின்று, "வேற்படையை ஏந்திய எம்பெருமானே, நீர் 
 இவ்வருமைத் திருவுருவத்தை முன்னமே காட்டி அடியேனைத் தழுவாமல் இத்துணையும் வீணே கழித்தீர். 
கொடியேன் செய்த குற்றங்களையெல்லாம் இப்பொழுதே தவிர்த்து அடியேனை ஆட்கொண்டருளும்" 
என்று தெவிட்டாத அன்பினோடு கூறினார். முருகக்கடவுள், "பெண்ணே நீ முற்பிறப்பில் விட்டுணுவின் மகள். 
நம்மை மணஞ்செய்யும்படி தவஞ் செய்தாய். அதனால் இப்பிறப்பில் உன்னை வந்து சேர்ந்தோம்" என்று 
அவரைத் தழுவி, அருள்புரிந்து, ''உங்கள் தினைப்புனத்தைக் காத்தற்கு முன்னே செல்லுதி யாமும் அங்கே 
வருவோம்" என்று கூற; வள்ளி நாயகியார் அவருடைய பாதங்களை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு 
தினைப்புனத்திற் போயிருந்தார்.

    அப்பொழுது அயற்புனத்திலிருந்த பாங்கி வந்து அவருடைய பாதங்களை வணங்கி, அவர் சூடிய பூ 
முதலியவற்றின் நாற்றமும், அவயவங்களின் தோற்றமும், பிறைதொழுதல் முதலிய ஒழுக்கங்களும், 
உணவின்கணுள்ள அற்ப மறுப்பும், வண்டலாட்டயர்தல் முதலிய செயல்களும், பேதைமைக்குத் தகச் செல்லும் 
மனமும், செவிலியிடத்துப் பயிறலுமாகிய இவ்வேழும் வேறுபட்டிருத்தலை உற்று நோக்கி, இவள் ஒரு 
தலைமகனோடு தலைப்பெய்திருத்தல் வேண்டும் என்னுந் தெளிவுடையளாய், அவ்வள்ளிநாயகியாரைப் 
பார்த்து "தலைவியே நீ இத்தினைப் புனமழிய எங்கே போயினாய்? சொல்லுதி" என்றாள். 

    வள்ளிநாயகியார் அதனைக்கேட்டு வெள்கி, தோழியே யான் வெய்யிலால் மெலிந்து அப்புறத்திலுள்ள 
சுனையிலே ஸ்நானஞ் செய்யும்படி போயினேன்" என்றார். அதற்குத் தோழி, "கண்சிவக்கவும் வாய்வெளுக்கவும் 
சரீரம் வேர்க்கவும் தனங்கள் விம்மவும் கைவளை கழலவுஞ் செய்கின்ற சுனை எவ்விடத்திருந்துளது? 
அதனைச் சொல்வாய்" என்றாள். இப்படி வினாவிய இகுளையை வள்ளிநாயகியார் கோபித்துப் பார்த்து, 
"உன்னை யான் உற்றதுணையாக மனத்திற் கொண்டு இங்கே இருந்தேன். எனக்கும் வந்து ஒரு குற்றங் 
கூறினாய். நீ கொடியை"  என்றார். 

    பாங்கியும் தலைவியும் இப்படிப் பேசிக்கொண்டு தினைப்புனத்தி லிருத்தலை முருகக்கடவுள் நோக்கி, 
இதுவே சமயம் என்று எண்ணி, வளைத்த வில்லையும் இலக்குப் பார்க்கின்ற அம்பையும் உடைவாளைச் செறித்த 
கச்சினையும் உடையராய், வேட்டை விளையாட்டால் வருந்தினவரைப்போல இரண்டு பாதங்களுஞ் சிவப்பத் 
தனியே வந்து, அவர்களை அணுகி, "காந்தண் மலர் போலும் கைகளையுடைய பெண்களே, யான் எய்த 
கணையினாற் பாய்ந்த இரத்தமும் முழங்குகின்ற பிளந்த வாயும் புண்பட்ட மேனியுமாய் ஓராண் யானை 
ஈண்டு வந்ததோ? சொல்லுதிர் சொல்லுதிர்'' என்று, வேழம் முதலியவற்றை வினாவி நின்றார். 

    இகுளை உமது வலிமையை உம்மையொத்த வீரர்களுக்குச் சொல்வதேயன்றி ஏழையேங்களுக்குச் 
சொல்வதென்னை?'' என்று கூறி, "இவ்விருவருடைய ஆசையை இவர்கள் கண்களே சொல்லும். இவர்கள் 
கோலம் பறவையை எய்கின்ற வேட்டுவர் கோலமே போன்றன. இத்தலைவர் வேட்டையாட வருகின்றதும் 
இத்தலைவி தினைப்புனத்திலிருந்து காக்கின்றதும் உண்மையாமோ" என்று மதித்து, அயற்புனத்திற் 
போயிருந்தாள். அப்பொழுது வேழம் வினாவி வந்த வீரர் "தோழியே யான் சொல்வதைக் கேள். தமியேனுக்கு 
உற்ற உறவினரும் நீங்களே. யான் நீர் விரும்பிய பொருளெல்லாவற்றையும் தருவேன். உங்கள் 
பணிகளெல்லாவற்றையுந் தேடிச் செய்வேன். நீவிர் என்மேல் வெறுப்பின்றிச் சிறிது அருள்செய்யும்" என்றார். 

    இகுளை அவர் கூறியதைத் தெரிந்து, "ஐயருடைய எண்ணம் இதுவோ! நம்முடைய பெருங்கிளைக்குப் 
பூமியில் ஈதோர் பழியை நாட்டவோ வந்தது! பெரியோர் மறவர்களுடைய பேதைப் பெண்ணையும் ஆதரிப்பாரோ!" 
என்றாள். அதனைக்கேட்ட தலைவர் "மகாவிஷ்ணு தந்த அமிர்தமும், வேடுவர்கள் செய்த மகாதவப்பயனும், பெண்களுக்கரசியும்,         
எனக்கு ஆசையைத் தந்து பேரருள்செய்த பேரழகியாகிய தலைவியைப் பேதை யென்பதே பேதைமை" என்று கூறினார்.

    அதனைக் கேட்ட தோழி, "தலைவரே இங்கே வேடர்கள் வருவர்; அவர் மிகக் கொடியோர்; செய்வது 
தவிர்வது ஒன்றுமறியார்; காண்பராயின் எம்முயிரைக் கொல்வார்; நீர் இங்கே நின்று ஆவதென்? போம்' என்று 
நெறிப்படுத்திக் கூறினாள். தலைவர் "தோழியே, தலைவியோடு என்னைக் கூட்டாதொழிவையே யெனின்.
 அவளுடைய வடிவத்தைப் படத்தில் எழுதிப் பனைமடல் ஏறி, நும்மூர்த்தெருவில் ஒட்டுவேன். இது நாளைக்கு 
யான் செய்வது' என்றார். அவர் சொல்லியவற்றைத் தோழி கேட்டுப் பயந்து, "தலைவராகிய உமக்கு மடலேறுதல் 
நீதியன்று. நீர் இக்குருக்கத்தி மரச் சோலையில் மறைந்திரும். தலைவியை அங்கே கொண்டுவந்து தருவேன்' 
என்று சொல்லிப் போயினாள். 

    எம்பெருமானாகிய தலைவர் மனமகிழ்ந்து, மாதவிச் சோலையிற்போய் வீற்றிருந்தார். பாங்கி விரைந்து 
தினைப் புனத்திற் சென்று, வள்ளிநாயகியாருடைய பாதங்களை வணங்கி, தலைவருடைய ஆசையையும் 
பிறவற்றையும் சொல்லித் தேற்றி ஒருப்படுத்தி, அவரை அத்தினைப்புனத்தினின்றும் மெல்லவாக அழைத்துக் 
கொண்டு மாதவிச் சோலையிற்போய், "அன்பின் மிக்க தலைவியே, யான் இம்மலையைச் சுற்றிப்போய் நீ கூந்தலிற் 
சூடுதற்குரிய காந்தண் மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து தருவேன். இங்கே நில்' என்று குறிப்பாகச் சொல்லி 
நிறுத்திப் போயினாள்.

    அறுமுகக்கடவுள் மிக மகிழ்ந்து, முன்போல வள்ளிநாயகியாரிடத்து வந்து, அவர் தம்முடைய பாதங்களில் 
வீழ்ந்து வணங்கத் திருக்கரங்களால் எடுத்துத் தழுவி, இன்பமுற்று, "பெண்ணே கேள், உன்றந்தையும் பிறரும் வந்து 
உன்னைத் தேடுவர். தினைப்புனத்தைக் காவல் செய்யும்படி தோழியோடு நீ அங்கே போவாய். நாம் நாளைக்கு 
வருவோம்" என்று கூறி மறைந்து போயினார். வள்ளிநாயகியார் அக்குருக்கத்திச் சோலையை நீங்கி வருதலும், 
தோழி அவரை எதிர்கொண்டு, சில காந்தண்மலர்களைக் காட்டி, அவருடைய கூந்தலிற் சூட்டி, அழைத்துக் கொண்டு 
சென்றாள். இவ்வாறு வழிபடுகின்ற தோழியோடு வள்ளிநாயகியார் தம்முடைய தினைப்புனத்தையடைந்து, அதனைக் 
காத்துக்கொண்டு, நாயகருடைய பிரிவாற்றாமையால் மனம் புலர்ந்து இருந்தார். இருக்க, தினைக்கதிர்கள் முற்றி 
விளைந்தன. 

    அதனைக் கண்ட குறவர்கள் யாவரும் வந்து கூடி,வள்ளிநாயகியைப் பார்த்து, "தினைகள் விளைந்தன. 
வேங்கைமரங்களும் அதற்குச் சாக்ஷி பகர்ந்தன. இதுகாறும் நீ இதனைப் பாதுகாத்து வருந்தினாய். இனி உன் 
சிற்றூருக்குச் செல்வாய்" என்று உரைத்தார்கள். வள்ளிநாயகியார் வேல்பட்ட புண்ணில் எரிநுழைந்தாற்போல 
அச்சொற்களைக் கேட்டு மனங்கலங்கி, இகுளையுந் தானுமாய் அப்புனத்தை நீங்கி, சிறுகுடிலுக்குச் சென்றார். 
செல்லுகின்றவர் மான்களையும், மயில்களையும், கிளிகளையும், புறாக்களையும், பிறவற்றையும் நோக்கி, 
"யாங்கள் இப்புனத்தை விட்டுச் சிற்றூருக்குப் போன செய்கையை நம் தலைவருக்குச் சொல்லுதிர் சொல்லுதிர்" 
என்று கூறி, சிறுகுடியிற் புகுந்து, கோயிலையடைந்து தம்முடைய தன்மை வேறுபட்டு, பாவையுங் கழங்கும் ஆடாமலும்        
எந்தப் பெண்களோடும் முன்போலப் பேசாமலும், புலம்பித் தனியேயிருந்தார்.                               

    அப்பொழுது, செவிலித்தாயும் நற்றாயும் வந்து மகளையுற்று நோக்கி, "உனக்கு மேனி வேறுபட்டது. 
குற்றம் வந்தவாறென்னை?'' என்று வற்புறுத்திக் கூறி, கோபித்து, அவரை இற்செறித்தார்கள். அவர் 
சுப்பிரமணியக்கடவுளைப் புணர்ந்து பிரிந்தமையினால் உடம்பு மெலிந்து, உள்ளம் வெம்பி, உயிரிழந்தவர் 
போலப் பரவசமாய் வீழ; பெண்கள் எடுத்துத் தழுவி, துன்பமுற்றுச் சூழ்ந்து, அவருடைய மெய் நுடங்குதலையும் 
கைவளை கழலுதலையும் கண்பனித்தலையும் குணங்கள் வேறுபட்டதையும் அச்சங் கொள்ளுதலையும் நோக்கி, 
சுப்பிரமணியக்கடவுள் தொட்டதை அறியாதாராய், "நம்பெண்ணைத் தெய்வம் தீண்டிற்றுப் போலும்'' என்றார்கள். 

    தந்தையாகிய நம்பியும் கிளைஞரும் மற்றை வேடுவர்களும் பிறரும் வள்ளி நாயகியாருடைய செயலை 
நோக்கி மனம் வருந்தி, தேவராட்டியையும் வெறியாட்டாளனையும் அழைத்து வந்து, சுப்பிரமணியக் கடவுளுக்கு 
வெறியாட்டியற்றுவித்தார்கள். அப்பொழுது குமரவேள் வெறியாட்டாளன் மேல் ஆவேசித்து, ''வள்ளிநாயகி 
தினைப்புனத்திற் றனியே யிருக்கும்பொழுது நாம் தீண்டினோம். பிறிதோர் காரணமுமன்று. நாம் மனமகிழுதற் 
கேதுவாகிய அவள் சிறப்பை நேர்ந்தால் இக்குறை நீங்கும்' என்று குறிப்பினாற் சொல்லினார்.

     அச்சொற் செவியிற் புகுதலும், வள்ளிநாயகியார் அவசம் நீங்கி, நன்கெழுந்திருக்க, செவிலித்தாய் 
அப்பொழுதே முருகக்கடவுளை நினைத்து, ''இவள் சிறப்பை நேர்வோம்', என்று சொல்லி அதனை நேர்ந்தாள்.
இவ்வாறு வள்ளிநாயகியார் சிறுகுடிலில் இருப்ப, வேட்டுவர்கள் விளைந்த தினைகளை அரிந்துகொண்டு 
சிறுகுடியிற் சென்றார்கள். குமரவேள் இதனைப் பார்த்து, தாள்களையுடைய தினைப்புனத்திற் போய், 
வள்ளி நாயகியைக் காணாதவராய்ப் புலம்பி, மேகத்தை வினாவுவார், மயில்களை வினாவுவார், 
தினைப்புனத்தை வினாவுவார், நாகணவாய்களை வினாவுவார், கிளிகளை வினாவுவார், 
யானைகளை வினாவுவார், மான்களை வினாவுவார், சோலைகளை வினாவுவார், மலைகளை வினாவுவார்; 
வாடினார், தளர்ந்தார், நெஞ்சம் வருந்தினார், மயங்கினார், வெய்துயிர்த்தார், வள்ளிநாயகியாருடைய 
சிற்றடிச்சுவட்டை நாடினார், திகைத்தார், நின்று நடுங்கினார், அவரைத் தேடித்திரிந்தார். 

    அப்பெருமானுக்கு இவைகளெல்லாம் திருவிளையாடல் போலாம். குமாரக்கடவுள் வள்ளிநாயகியாரைத் 
தேடுவார்போல இவ்வாறே பகற்பொழுதைக் கழித்து, வாடி, தினைப்புனத்தைச் சுற்றி, அர்த்தயாம சமயத்தில் 
வேடர்களுடைய சிற்றூரிற் புகுந்து, வேட்டுவராசனாகிய நம்பி யிருக்கும் சிறு குடிலின் புறத்திற் போய்நின்றார். 
பாங்கி அவரைக்கண்டு வணங்கி, "சுவாமிகாள், நீவிர் இராக்காலத்தில் இச்சிற்றூரில் வருதல் கூடாது. 
நமது தலைவியும் உம்மைப் பிரிந்தால் உய்யமாட்டாள். நீவிர் இருவரும் இவ்விடத்திற் கூடுதற்கேற்றதோர்
 இடமுமில்லை. ஆதலால் அவளை உடனழைத்துக்கொண்டு செல்லும்" என்று கூறி, அவரை அவ்விடத்து நிறுத்தி,                             
வள்ளிநாயகியாரை யடைந்து, "பெண்ணே உன்னுடைய தலைவர் உன்னைக் கொண்டு செல்லும்படி மனத்திற்றுணிந்து                      
ஈண்டு வந்தார். வருதி என்றழைக்க, அவர் நன்றென்று ஒருப்பட்டார்.                                          

    பின்பு,தோழி, நற்றாயின் நித்திரையையும் சுற்றத்தாருடைய நித்திரையையும் உறங்காத நாயின்
 நித்திரையையும் அந்நகரத்தாருடைய நித்திரையையும் அறிந்து,பேயும் உறங்குகின்ற அர்த்தயாமத்திலே 
வாசற்கதவை நீக்கி, வள்ளிநாயகியாரைக் கொண்டுவந்து சுப்பிரமணியக்கடவுளுடைய சந்நிதியில் விடுத்தாள்.
 அவ்வம்மையார் அக்கடவுளை நமஸ்கரித்து, 'தலைவரே புல்லிய இந்தவேட்டுவச்சேரியிலே பாவியேன் 
பொருட்டாக நறுநாற்றம் பொருந்திய தாமரைமலர்போலும் அருமைத் திருவடிகள் கன்ற அர்த்த யாமத்தில் 
நீர் நடப்பதா!" என்று இரங்கி, அஞ்சலி செய்து நின்றார். 

    அப்பொழுது அக்கடவுளைத் தோழி நோக்கி, "தீத்தொழிலையுடைய வேடுவர்கள் கண்டாற் றீமையாய் 
விளையும். இவளை இப்பொழுதே சிறப்பினை யுடைய நுமதூருக்குக் கொண்டுசென்று காத்தருள்புரியும்" என்று 
அவருடைய திருக்கரத்தில் அடைக்கலமாகக் கொடுத்து, அஞ்சலி செய்து நின்றாள். முருகக்கடவுள் அத்தோழியினிடத்துக் 
கருணைசெய்து, "தோழியே நீ நம்மாட்டுவைத்த கருணையை மறக்கமாட்டோம்" என்றருளிச் செய்தார். தோழி 
வள்ளிநாயகியாரை வணங்கி, இறுகத்தழுவி, 'விரைந்து செல்வாய்" என்று முருகக்கடவுளோடு கூட்டியனுப்பி, 
அவர் இருவரும் விடைகொடுத்தனுப்பத் தான் மீண்டு சிறுகுடிலிற் புகுந்தாள்.

    தோழி விடைபெற்றுக்கொண்டு செல்லுதலும், முருகக்கடவுள் வள்ளிநாயகியாரோடு அந்நடுநிசியிலே 
காவல்களையெல்லாங் கடந்து சிற்றூரை நீங்கி, ஒரு பசுமரக்காவுட் சேர்ந்து, அவரோடு அங்கிருந்தார். இருக்க; 
புலரிக்காலமாதலும், வேட்டுவ ராசனுடைய மனைவியானவள் நித்திரை நீங்கி விரைவிற்றிடுக்கிட்டெழுந்து, 
தன்மகளைக் காணாதவளாய் எங்குந்தேடி, பின்னர்த் தோழியை வந்து வினாவினாள். அவள் "அன்னையே, 
இவ்விரவில் அவளும் நானும் நித்திரை செய்ததுண்டு; அதன்பின் அவள் செய்ததை அறிகிலேன்" என்றாள். 

    தங்கள் மகளைக் காணாமையைத் தாய்வந்து சொல்ல, வேட்டுவராசன் கேட்டு, தெருமந்து செயிர்த்துப் 
பொங்கி, "மிக்கவன்மையுடைய யாவனோ ஒருவன் நம்மனையிற் காவல்களைக் கடந்து நம்மகளை விரைவிற் 
கொண்டு போயினான்" என்று கூறி, வாட்படையை இடையிற்கட்டி, வில்லையும் அம்பையும் ஏந்தி, "நமது 
குமரியைக் கவர்ந்த கள்வன் இருக்குமிடத்தைத் தேடுதற்கு விரைவிற் செல்வேன்" என்று கோபத்தோடு எழுந்து செல்ல; 
அச்சிற்றூரிலுள்ள வேட்டுவர்கள் அதனை அறிந்து, "பழித்தற்கரிய இந்தச் சிற்றூரிலே யாமத்தில் வந்து 
வள்ளிநாயகியைக் கவர்ந்துகொண்டு மாயையினால் மீண்டுபோன கள்வனைத் தொடருவோம்" என்று 
வில்லையும் அம்பையும் ஏந்திப் போர்க்கோலங்கொண்டு, விரைந்துபோய்த் தம்மரசனோடு கூடி, கொம்பு 
வாத்தியத்தை ஊதி, நெறிகடோறும் ஓடி, சோலையெங்கும் உலாவி புலங்களிற் புகுந்து தேடி, அடிச்சுவட்டை 
நோக்கி,எவ்விடங்களிலும் திரிந்தார்கள். 

    இவ்வாறு வேட்டுவராசன் வேடர்களோடு வள்ளிநாயகியாரைத் தேடிச் செல்ல; பக்கத்தில் ஒரு சோலையிலே
 முருகக்கடவுளோடு களவாக உடன்புகுந்திருந்த அவ்வம்மையார் அவர்கள் வருதலைக் கண்டு அஞ்சி, அக்கடவுளுடைய               
திருவடிகளில் வீழ்ந்து பொருமி, "எம்பெருமானே, வேடர் பலரும் அம்பு வில் வாள் வேல் முதலிய ஆயுதங்களை ஏந்தி நம்மைத்     
தேடிக்கொண்டு இச்சோலையின் பக்கத்து வந்தார்கள். என் மனம் நடுங்குகின்றது. யாம் இனிச் செய்வதென்னை? 
அதனை அடியேன் அறியேன். நீரே சொல்லியருளும்" என்றார். பெண்ணே வாழி. வருந்தாதே. முன்பு கிரௌஞ்ச 
மலையையும் சூரனுடைய மார்பையும் பிளந்த வேற்படை நம்மிடத்து இருந்தது. நும்மவர்கள் நம்மோடு போர் 
செய்யும்படி வந்து சூழ்ந்தாற் கொல்வோம். நீ அதனைப்பார்த்து நமக்குப் பின் இரு'' என்று சுப்பிரமணியக் 
கடவுள் வள்ளிநாயகியாருக்குக் கூறினார். 

    அதனை அவர் கேட்டு, எம்பெருமானுக்குப் புறத்தில் வருதலும், வேடுவர்கள் அத்தன்மையை உற்றுநோக்கி, 
விரைவில் நெருங்கிவந்து, சீறி வெய்துயிர்த்துப் பொங்கி, அந்தச் சோலையை வளைந்து கொண்டார்கள். வேட்டுவ ராசன் 
அதனைக்கண்டு, சோலையைக் கிட்டி, "நமது பெண்ணைக் கவர்ந்த கள்வன் தப்பிப் போகின்றிலன். அம்மா! இவன் 
நமது வலிமையைச் சிறிதும் அறிகின்றிலன். இவனுடைய வலியை அக்கினி பாய்ந்துண்ணுகின்ற கரிகாட்டைப்போல 
விரைவில் அழிப்போம்" என்றான். இப்படிக்கூறிய நம்பியும் வேட்டுவர்களும் கடல்போல ஆர்த்து வில் முழுவதையும் 
வளைத்து முறைமுறையாக அம்புகளை வீசி, சூரியனை மேகங்கள் மறைத்தாற்போல, முருகக்கடவுளை வளைந்து 
கொண்டார்கள். 

    வேட்டுவர்கள் பகைவர்களாய்ச் சூழ்ந்து மாறுபட்டு விட்ட வெவ்விய கணைகள்யாவும் பேரழகினையுடைய 
கிருபா சமுத்திரமாகிய சுப்பிரமணியப் பெருமான்மீது மலரின்றன்மையினவாய் வந்து படுதலும், வள்ளி நாயகியார் 
பதைத்து, 'எம்பெருமானே தேவரீர்மீது பாணங்களை விடுகின்ற கீழோர்களாகிய வேட்டுவர்களை உமது வேற்படையை 
விடுத்துக் கொல்லுதல் வேண்டும். மிருகராசனாகிய சிங்கம் கொலைத்தொழில் செய்ய நினையாதானால், எளிய 
மரையும் மானும் பன்றியும் யானையும் அதனைக்கொல்ல எண்ணி அணுகுமே" என்றார். இவ்வாறு வள்ளிநாயகியார் 
சொல்ல; முருகக்கடவுளுடைய திருவருளால் பக்கத்தில் நின்ற சேவற்கொடி நிமிர்ந்தெழுந்து கூவுதலும், வேட்டுவ ராசனும் 
அவன் குமாரர்களும் சுற்றத்தாரும் யாவரும் விரைவில் இறந்து வீழ்ந்தார்கள்.

    தமது தந்தையும் தமையன்மாரும் சுற்றத்தாரும் வீழ்ந்திறந்ததை வள்ளிநாயகியார் பார்த்து, 
பதைபதைத்திரங்கிச் சோர, கந்தசுவாமி அவருடைய அன்பைக் காணும்படி திருவுள்ளத்து முகிழ்த்த கருணையோடு 
அச்சோலையை நீங்கிச் சென்றார். வள்ளிநாயகியாரும் அவரைத் தொடர்ந்து சென்றார். செல்ல; நாரதமுனிவர் 
எதிரேவந்து, வள்ளி நாயகியாரோடு சுப்பிரமணியக் கடவுளை வணங்கி, "எம்பெருமானே, தேவரீருடைய 
செயல்களையெல்லாம் சொல்லியருளும்" என்று கேட்டார். அவர் தாம் வள்ளிநாயகியாரைக் கண்டது முதல்
 வேட்டுவர்களை வதைத்துவந்த அவ்வளவையும் சொல்லினார். 

    நாரத முனிவர் அதனைக் கேட்டு, "சுவாமீ, பெற்ற பிதாவையும் பிற சுற்றத்தாரையும்  தேவரீர் 
கோபத்தோடு வதை புரிந்து, அவர்களுக்கு அருளைச் செய்யாமல், அவர்கள் பெண்ணை அழைத்துக்கொண்டு        
 செல்லல் தகுமோ" என்று கூற, அருள்வள்ளலாகிய அக்கடவுளும் "முனிவனே நீ கூறியது ஏற்புடைத்தாகும்" என்று             
அருளிச்செய்து, சோலையில் மீண்டுவந்து, தம்மாட்டுப் பேரன்பினையுடைய வள்ளிநாயகியாரை நோக்கி, 
"நம்மேல்வந்து போர்செய்திறந்த நும் சுற்றத்தாரையெல்லாம் எழுப்புதி" என்றார். என்னலும், அவர் நன்றென்று 
அக்கடவுளை வணங்கி, "உயிர்நீங்கி யிறந்த நம் சுற்றத்தாரெல்லாரும் எழுங்கள்'' என்றருளிச்செய்தார். அப்பொழுது 
வேட்டுவராசனாகிய நம்பி, நித்திரை செய்வோர் பதைபதைத்து விழித்து எழுந்தாற்போலச் 
சுற்றத்தாரோடு எழுந்தான்.

     அவர்கள் எழுந்தபொழுது, சுப்பிரமணியக்கடவுள் கருணைவெள்ளம் பொழிகின்ற ஆறுதிருவதனங்களும் 
பன்னிரண்டு திருப்புயங்களும் வேற்படையும் ஒழிந்த படைகளுமாய்த் தம்முடைய திருவுருவத்தைக் காட்டியருளினார். 
வேடுவர்கள் அவரைத் தரிசித்து, ஆச்சரியமுற்று, "நமது வேட்டுவச் சேரியைக் காக்கின்ற நீரே எங்கள் பெண்ணைக் 
களவு செய்து வரம்பையழித்து எங்கள் குலத்துக்குத் தீராத பெரும்பழி யொன்றை நிறுத்தினீர். தன்புத்திரர்கள் 
உண்ணும்படி தாயானவள் நஞ்சை ஊட்டினால் அதனை விலக்குபவர்கள் உண்டோ! அது நிற்க.எம் பெருமானே, நீர் 
எங்கள் மகள்மேல் வைத்த ஆசையால் நாங்களும் உணராவண்ணம் நம்முடைய பெரிய காவல்களைக் கடந்து 
அவளைக் கவர்ந்து கொண்டு வந்தீர். இனி நமது சிற்றூருக்கு வந்து அக்கினிசாக்ஷியாக அவளை விவாகஞ் 
செய்துகொண்டு உம்முடைய  ஊருக்குச் செல்லும்'' என்றார்கள்.

    தமது மாதுலன் முதலாயினோர் இவ்வாறு சொல்லிய மணமொழிக்குச் சுப்பிரமணியக்கடவுள் இசைந்து,
 அவர்களுக்குப் பெருங்கருணை செய்து,வள்ளிநாயகியாரையும் அழைத்துக்கொண்டு நாரதமுனிவரோடு 
அச்சோலையை நீங்கி, திருவடித்தாமரைகள் நோவச் சிற்றூரை அடைந்தார். வள்ளிநாயகியாருடைய தந்தையும்
 சுற்றத்தார்களும் மனமகிழ்ந்து, முருகக்கடவுளோடு கூடச்சென்று, சிற்றூரிலுள்ளாரை நோக்கி, "நமது 
குலதெய்வமாகிய கந்தசுவாமியே நம்பெண்ணைக் கவர்ந்தார். அவர் நமது வேண்டுகோளின்படி மணஞ்செய்யவும் 
உடன்பட்டு வந்தார். இது நிகழ்ந்தது'' என்றார்கள். அதனைக்கேட்ட சிற்றூரிலுள்ளோர்கள் முன்பு தம் மனத்திலுண்டாகிய 
கோபமும் நாணமும் நீங்கி மகிழ்ச்சியுண்டாக நின்றார்கள். 

    வேட்டுவராசன் சுப்பிரமணியக் கடவுளையும் வள்ளிநாயகியாரையும் தனது மனையில் அழைத்துக்கொண்டு 
வந்து, புலித்தோலாசனத்தின் மீது வீற்றிருக்கச் செய்தான். அப்பொழுது, அறுமுகக்கடவுள் தமது திருமருங்கிலிருந்த 
வள்ளிநாயகியாரை அருளோடு நோக்க, அவருக்கு வேட்டுவக்கோலம் முழுதும் நீங்கி, பழைய தெய்வக்கோலம் 
முழுதும் ஒருங்கே வந்து பொருந்தின. வேட்டுவராசனாகிய நம்பியும், சுற்றத்தாரும், நற்றாயும், செவிலித்தாயும், 
தோழியும், மற்றைப்பெண்களும் வள்ளிநாயகியாருடைய தெய்வக்கோலம் முழுவதையும் நோக்கி, "இவள் 
எங்களிடத்தில் வந்தது நாம் செய்த பெருந்தவப்பயனே'' என்றார்கள். அந்தச் சுபமுகூர்த்தத்தில் வேட்டுவராசன்         
சுப்பிரமணியக்கடவுளுடைய திருக்கரத்தில் வள்ளிநாயகியாருடைய திருக்கரத்தை வைத்து, நம்முடைய தவப்பயனாய்         
வந்த குமாரியை அன்பினால் இன்று உமக்கு மணஞ்செய்து தந்தேன் ஏற்றுக்கொள்ளும்" என்று தாராதத்தஞ் 
செய்தான். அப்பொழுது நாரதமுனிவர் அறுமுகக்கடவுளுடைய பணியினால் அக்கினியையும் மற்றை 
யுபகரணங்களையும் வருவித்து, வேதவிதிப்படி திருமணச்சடங்கை இயற்றினார்.

    அந்த வேளையில், தேவாதி தேவராகிய சிவபெருமான் அரிபிரமேந்திராதி தேவர்களும் பிறரும் சூழ 
உமாதேவி சமேதராய் ஆகாயத்தில் எழுந்தருளிவந்து நின்று, சுப்பிரமணியக்கடவுள் வள்ளிநாயகியாரைத் 
திருமணஞ்செய்யும் சடங்குமுழுதும் பார்த்து, தண்ணளி புரிந்து நின்றார். விட்டுணு முதலிய தேவர்கள் மகிழ்ந்து,
பூமழைகளைச் சொரிந்து, முருகக்கடவுளை அஞ்சலித்துத் துதித்து, ஆர்த்தார்கள். அறுமுகக்கடவுள் அதனை 
நோக்கி, சிற்றூரிலுள்ளார் சிறிதும் உணராவண்ணம் சிவபெருமானையும் உமாதேவியாரையும் தொழுது,
மற்றை அரிபிரமேந்திராதி தேவர்களுக்கும் தனித்தனி அருள்புரிந்தார். அப்பொழுது பார்வதி பாகராகிய 
பரமசிவன் பிரமவிஷ்ணுமுதலாகிய தேவர்களோடு மறைந்தருளினார். நாரதமுனிவர் தாம் இயற்றிய திருமணச்சடங்கு 
முற்றுப்பெறுதலும், வள்ளிநாயகியாரையும் முருகக்கடவுளையும் வணங்கித் துதித்தார். 

    மாதுலனாகிய நம்பி அவ்விருவருடைய திருமணக்கோலத்தைத் தரிசித்து, 'இக் கண்களால் அடையற் 
பாலனவாகிய பயன்கள் எல்லாவற்றையும் இன்றே ஒருங்கு பெற்றேன்" என்றான். அவனுடைய மகிழ்ச்சியை 
யார் இவ்வளவென்று சொல்லற் பாலார். வேட்டுவப்பெண்கள் நமது மருகரும் வள்ளி நாயகியும் இன்றுபோல 
என்றும் வாழ்க" என்று ஆசிகளைச் சொல்லித் தூய மலரையும் அறுகையும் சொரிந்தார்கள். வேட்டுவர்கள்         
செந்தினைமாவும் தேனும் கனிகளும் காய்களும் கிழங்குகளும் பிறவுமாகத் தேக்கிலையாலாகிய கல்லையிற் 
படைத்து, வள்ளிநாயகியாரும் நீரும் இவற்றை அன்போடு உட்கொண்டருளும்'' என்று பிரார்த்திக்க, அவர் 
இருவரும் அருள்புரிந்து, அச்சிற்றுண்டிகளை நிவேதனங்கொண்டருளினர். அவர்கள் நிவேதனஞ் செய்தமை,
விட்டுணு முதலாகிய தேவர்கள்மாட்டும், முனிவர்கள்மாட்டும், மற்றைச் சராசரங்கள்மாட்டும் எவ்விடத்தும் வியாபித்தது.

    அதன்பின் அறுமுகக்கடவுள் எழுந்து நின்று, வேட்டுவராசனை நோக்கி, "யாம் வள்ளிநாயகியோடு 
திருத்தணிமலையிற் சென்று இனிது வீற்றிருப்போம்" என்னலும், அவன் நன்றென்று அதற்குடன்பட்டான். 
நற்றாயும் செவிலித்தாயும் பாங்கியும் வள்ளிநாயகியாரை நோக்கி, "உன்னுடைய நாயகருக்குப் பின்னே 
செல்கின்றனையா இது நன்று" என்று அன்போடு அவரைத் தழுவிப் பல ஆசிகளைச் சொன்னார்கள். 
அவர் முருகக்கடவுளோடு உடன்செல்லுதற்குத் துணிந்தார். அக்கடவுள் வள்ளி நாயகியாரோடு கோயிலை 
நீங்கி, வேட்டுவராசனை அழைத்து, "தேவர்களும் வணங்கும்படி நீ சிற்றூரை அரசியற்றி இங்கே இருக்குதி" 
என்று கூறி ,அவனை அங்கே நிறுத்தி, வள்ளிநாயகியாரும் தாமுமாய் வள்ளிமலையை நீங்கி ஆகாயவழிக் 
கொண்டு சென்று செருத்தணிமலையை அடைந்து, முன்னே தெய்வத்தச்சனால் அமைக்கப்பட்ட கோயிலிற்புகுந்து, 
இவ்வுலகத்துயிர்கள் யாவும் உய்யும்படி அவ்வம்மையாரோடு அங்கே வீற்றிருந்தருளினார்.

    அறுமுகக்கடவுள் வள்ளிநாயகியாரோடு செருத்தணிமலையில் வீற்றிருக்குங்காலத்தில், அவ்வம்மையார் 
அவருடைய பாதங்களை வணங்கி, "சுவாமீ, இந்தச் சிறந்த மலையின் பெருமைகளை அடியேனுக்குச் சொல்லி யருளும்'' 
என்று வினாவ; அவர் ஆன்மாக்கள் அறிந்து உய்தல்வேண்டுமென்னும் பெருங்கருணையினால் இவ்வாறு சொல்வார்:-
"வள்ளிநாயகியே.  யாம் சூரபன்மனோடு செய்த போரினும், நும்மவர்களாகிய வேடர்களோடு செய்த போரினும், 
கோபந்தணிந்து, இங்கேவந்து இருத்தலால், இம்மலை செருத்தணி என்று ஓர் காரணப்பெயரைப் பெற்றது. 
காமாக்ஷியம்மையார்  முலையினாலும் வளையலினாலும் ஏகாம்பரநாதசுவாமியை வடுப்படுத்தி வீற்றிருக்கின்ற 
காஞ்சீபுரத்திற்குச் சமீபமாய் நிற்றலால், இம்மலையினது தூய்மை சொல்லுந்தகைமையுடையதன்று. மலர்களுள் 
தாமரைமலர் சிறந்தது போலவும், நதிகளுள் கங்கை சிறந்தது போலவும், தலங்களுள் காஞ்சீபுரம் சிறந்தது போலவும், 
மலைகளுள் இச்செருத்தணிமலை சிறந்தது. 

    நாம் கொம்புவாத்தியத்தை இயம்பியும், வேய்ங்குழலை ஊதியும், யாழை வாசித்தும், ஏழிசைகளைப் பாடியும், 
மற்றைப் பல வாத்தியங்களை ஒலித்தும், இம்மலையிலே விளையாடுவோம். பிறதிருவிளையாடலையுஞ் செய்வோம். 
சிவ பெருமான் மந்தரமலை மேருமலைகளைக் காட்டிலும் திருக்கைலாசமலையையே விரும்பி வீற்றிருத்தல்போல, 
பூமியில் நமக்குச் சிறந்த பல மலைகளிருப்பினும் இந்தச் செருத்தணிமலையில் நாம் மிகவும் பிரீதியோடு வீற்றிருப்போம். 
அதற்குச் சான்றாக ஒன்றுளது. சொல்வோம் கேள். இந்திரன் நமக்கு நாடோறும் சாத்தும்படி மூன்று நீலோற்பலங்களை 
முன்னாளிலே இந்தச் சுனையில் வைத்து உண்டாக்கினான். அவைகளில் காலையில் ஒன்றும் உச்சியில் ஒன்றும் 
மாலையில் ஒன்றும் ஆக மூன்று நீலோற்பல மலர்கள் ஊழிதிரும்பினும் ஒழிவின்றி எந்நாளும் மலரும்; 
அவை தவிரா. வள்ளிநாயகியே, இந்த மலையின் பெருமையை யார் சொல்லவல்லார். ஐந்து நாள் இம்மலையில் 
வந்து வசித்து நம்முடைய பாதங்களையே தஞ்சமென்று எண்ணி வழிபடுகின்ற தவத்தர்கள். மனத்தில் விரும்பிய 
போகங்கள் எல்லாவற்றையும் அநுபவித்து, பின் மோக்ஷத்தை அடைவர். 

    தேவர்களாயினும் முனிவர்களாயினும் சிறந்த மற்றெவராயினும் பிறந்த பின்பு இம்மலையை வந்து 
வணங்காதவர் தாவர முதலிய கீழுள்ள பிறப்புக்களினும் இழிந்தோரே.பூப்பிரதக்ஷிணஞ் செய்தாலும் 
அவர்களுடைய பாவ சமூகங்கள் நீங்குமோ. பல பாதகங்களைச் செய்தவராயினும், பல பாவங்களை என்றுஞ் 
செய்பவர்களாயினும், நம்மிடத்து அன்புவைத்துச் செருத்தணி மலையை அடைந்து வழிபடுவாராயின், 
அவர்களே பிரமவிட்டுணுக்களிலும் மேலாயினோர்; எல்லாவற்றினுஞ் சிறந்தவர். இந்தக் கல்ஹாரகிரியில் 
வருவோர் ஒவ்வோர் தருமத்தைச் செய்தாலும், அந்த ஒவ்வொன்றும் பற்பல தருமங்களாய் ஓங்கும். 
பாவங்களிற் பலவற்றைச் செய்தாலும், அவை சிலவாய் ஒன்றாய்த் தேய்ந்துவிடும். 

    இதுவன்றி, இங்கே இன்னும் அனந்தகோடி அற்புதங்கள் உள்ளன" என்று இவ்வாறு செருத்தணிமலையின் 
பெருமைகளைச் சுப்பிரமணியக் கடவுள் கூற, வள்ளிநாயகியார் கேட்டு, நன்றென்று மகிழ்ச்சியுற்று, "பூமியிலுள்ள 
மலைகளுட் சிறந்த இச்செருத்தணிமலையின் பெருமையைத் தமியேன் உம்முடைய திருவருளால் அறிந்துய்ந்தேன்'' என்றார். 
அறுமுகக்கடவுள் வள்ளிநாயகியாருந் தாமும் இச்செருத்தணிமலையின் ஒருசாரிலே சிவபெருமானுடைய கர்மசாதாக்கிய 
வடிவமாகிய சிவலிங்கத்தை ஆகமவிதிப்படி தாபித்து, மிகுந்த அன்போடு பூசனைசெய்து துதித்து, தாம் வேண்டியாங்கு        
 அவருடைய திருவருளைப் பெற்று, அவ்வம்மையாருந் தாமுமாய்ச் சிலநாட் பிரீதியோடு அங்கே வீற்றிருந்தார்.

    செருத்தணிமலையில் வீற்றிருந்த முருகக்கடவுள் ஒரு நாள், வள்ளிநாயகியாருந் தாமுமாக ஒரு 
விமானத்திலிவர்ந்து, திருக்கைலாசமலைச் சாரலிலுள்ள கந்தமலையிற்போய், அவரோடு விமானத்தினின்றும் 
இழிந்து, ஆலயத்திற்சென்று, தெய்வயானையம்மையார் இருக்கின்ற அந்தப்புரத்திற் பிரவேசித்து, தம்முடைய     
வரவை நோக்கி எதிர்கொண்டுவந்து வணங்கிய அவருடைய தனங்களும் தமது திருமார்பும் பொருந்துமாறு 
அவரை யெடுத்துத் தழுவி, பூமியிலே தாம் பிரிந்து சென்றமையினால் அவருக்குளவாகிய தனிமைத்துயரை 
நீக்கியருளினார். அப்பொழுது,வள்ளிநாயகியார் தெய்வயானையம்மையாருடைய பாதங்களை வணங்கினார். 

    அவர் வள்ளிநாயகியாரை எடுத்துத் தழுவி,"இங்கே ஒரு தனித்தவளாயிருக்கும் எனக்கு இன்றைக்கு 
ஒரு துணைவி வந்தடைந்தவாறு நன்று” என்று அவ்வள்ளிநாயகியார்மீது மிகுந்த அன்பு பாராட்டினார். 
திருப்பாற்கடலிலுள்ள சேஷசயனத்திலே மகாலக்ஷுமியும் பூமிலக்ஷுமியும் தமது இருமருங்கும் பொருந்த, 
பவளவண்ணராகிய விட்டுணு கருணையோடு வீற்றிருத்தல் போல, சுப்பிரமணியக்கடவுள் தெய்வயானை
யம்மையாரும் வள்ளிநாயகி யம்மையாரும் தமது இருமருங்கும் பொருந்த, திவ்விய சிங்காசனத்தின்
 மீது கருணையோடு வீற்றிருந்தருளினார்.

    அப்பொழுது, தெய்வயானையம்மையார் சுப்பிரமணியக்கடவுளை நோக்கி "இவளுடைய வரலாற்றை 
அடியேனுக்குச் சொல்லியருளும்" என்னலும், அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வாறு சொல்வார்: "நீவிர் இருவரும் 
விட்டுணுவினுடைய புத்திரிகள். நம்மை மணஞ்செய்ய விரும்பிப் பன்னிருவருடகாலம் தவஞ்செய்தீர்கள். 
அப்பொழுது நாம் உம்மிடத்து வந்து, மிகமகிழ்ந்து, 'உம்மை நாம் விவாகஞ்செய்கின்றோம் நீவிர் இருவரும் 
தனித்தனி சுவர்க்கத்திலும் பூமியிலும் போய்த் தோன்றுங்கள்' என்று சொன்னோம். உங்களிருவருள் மூத்தாளாகிய 
நீ நாம் சொன்ன முறையை நினைத்து, சுவர்க்கத்திலே இந்திரன் மகளாய் வளர்ந்தாய். அப்பொழுது நாம் வந்து             
அன்போடு உன்னை மணஞ்செய்தோம். 

    உனக்கு இளையாளாகிய இவள் யாம் கூறிய முறையைச் சீர்தூக்கி, அக்கினியில் மூழ்கி, முன்னைத் 
தூலதேகத்தை விடுத்து, சூக்கும தேகத்தோடு வள்ளிமலை மரங்கள் செறிந்த ஓரிடத்திற்சென்று தவஞ்செய்து
கொண்டிருந்தாள். அந்தமலைச்சாரலில், விட்டுணுவின் அவதாரத்தினராகிய சிவமுனிவர் யென்பவர் நெடுங்காலந் 
தவஞ்செய்திருந்தார். அங்கே இலக்குமியின் அவதாரமாகிய பிணைமானொன்று போய் உலாவிற்று. 
அந்த மான்பிணையை அம்முனிவர் ஆசையோடு பார்த்தலும், அது கருப்பங்கொள்ள, இவள் அக்கருவிற் 
பிரவேசித்தாள். அந்தமான் இவளை வயிற்றிற் சுமந்து, அங்குள்ள வள்ளிக்கிழங் ககழ்ந்தெடுத்த ஒரு குழியிற் 
பெற்று நீங்கிற்று. 

    அங்கே வேட்டுவராசன் மனைவியோடு வந்து இவளைக் கண்டான். கண்ட வவ்விருவரும் இவளை அன்பினோடு 
எடுத்துக்கொண்டுபோய், வள்ளியென்று நாமகரணஞ்செய்து, தம்மகளாகச் சீராட்டி வளர்த்தார்கள். இவள் இங்ஙனம் 
வேடர்மகளாய் வளருங்காலத்தில், யாம் இவள்பாற்போய், ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், வாழ்த்தியும், 
புணர்ந்தும், பிரிந்தும், வருந்தியும், பல மாயங்களைச் செய்து, பின், முன்னுணர்ச்சி முழுதையுங் கொடுத்து,             
தந்தை தாயர்களும் உறவினரும் தத்தஞ்செய்யச் சிலநாட்களின்முன் இவளை மணஞ்செய்து, இவளோடு 
அவ்விடத்தை விட்டு நீங்கி செருத்தணிமலையிற் சிலநாளிருந்து, பின் இங்கே வந்தோம்" என்று இவ்வாறு 
வள்ளிநாயகியம்மையாருடைய வரலாறெல்லாவற்றையும் சுப்பிரமணியக்கடவுள் சொல்லியருளினார். 

    தெய்வயானையம்மையார் அவற்றைக் கேட்டு, நன்றென்று மகிழ்ந்து, "முன்னாளில் விட்டுணுவினிடத்திற் 
றோன்றிய இவளும் யானும் அளவில்லாத காலம் ஒருவரையொருவர் நீங்கியிருந்தோம். அவ்வாறு நீங்கியிருந்த 
எங்களை முன்போல இங்ஙனம் கூட்டி ஒருங்கிருக்கச்செய்த தேவரீருடைய வல்லபத்துக்கு அடியேங்கள் செய்யும் 
கைம்மாறு ஒன்றுமில்லை" என்று சொல்லினார். வள்ளிநாயகியார் தெய்வயானையம்மையார் சொல்லியதைக் 
கேட்டு, "முற்பிறப்பில் உமக்கு யான்  தங்கையாயிருந்தமையன்றி இம்மையிலுந் தங்கையாயினேன். ஆதலால் உய்ந்தேன்.         
உம்மை வந்து புகலடைந்தேன். என்னைக் காத்துக்கொள்ளும்" என்று கூறித் தமக்கையாகிய             
தெய்வயானையம்மையாருடைய பாதங்களை வணங்கினார். அவர் வள்ளிநாயகியாரை எடுத்துத் தழுவி, 
"இன்றைக்கு யான் உன்னைத் துணைவியாகப் பெற்றேன். எம்பிரானாகிய இவருடைய திருவருளையும் பெற்றேன். 
இனி என்மனத்திலே சிறந்ததும் பெரிதுமாகிய ஒருபொருள் உளதோ!" என்றார்.

    தெய்வயானையம்மையாரும் வள்ளிநாயகியம்மையாரும் இவ்வாறு தம்முள் வேறுபாடு ஒருசிறிதுமின்றி 
அன்போடு அளவளாவி, மனமும் உயிரும் செயலும் சிறப்பும் ஒன்றாக, மலரும் மணமும்போல வேற்றுமையின்றிக்         
கலந்து வீற்றிருந்தார்கள். இவர் இருவரும் உடலும் உயிரும் போலத் தங்களுள் வேறுபாடின்றி, கங்கையும் யமுனையும் 
கடலோடு சேர்ந்தாற்போலச் சுப்பிரமணியக்கடவுளைச் சேர்ந்து வழிபட்டு ஒழுகுவாராயினர். இந்த ஞானசத்தி 
கிரியாசத்திகளாகிய தேவிமார் இருவரும் தமது இருமருங்கிலும் வீற்றிருப்ப, சுப்பிரமணியக்கடவுள் அவர்களுக் 
கருள்புரிந்து, எல்லாவுயிர்கண்மாட்டும் வைத்த பேரருளினாலே அவரவர் வினைக்கேற்ற பிறவிகளைக் கொடுத்து, 
அவர்களுள்ளே பரிபக்குவமுடைய  அன்பர்கள் யாவர்க்கும் மோக்ஷத்தையுதவி, கந்தகிரியில் என்றும் வீற்றிருந்தருளினார்.        

    கொடியாகிய சேவலும் வாகனமாகிய மயிலும், மனவேகம் என்னுந் தேரும், நாரத முனிவருடைய 
யாகத்திலெழுந்த ஆட்டுக்கடாவும், வேலாயுதமும், மற்றை ஆயுதங்களும் அவ்வறுமுகக் கடவுள் ஏவிய 
பணிகளைச் செய்து, அவருடைய கோயிலின் பக்கங்களிலும் சந்நிதானத்திலும் அணுகி வீற்றிருக்கும்.


        ஆறிருதடந்தோள்வாழ்கவறுமுகம்வாழ்கவெற்பைக்
        கூறுசெய்தனிவேல்வாழ்ககுக்குடம்வாழ்கசெவ்வேள்
        ஏறியமஞ்ஞைவாழ்கயானைதன்னணங்குவாழ்க
        மாறிலாவள்ளிவாழ்கவாழ்கசீரடியாரெல்லாம்

        புன்னெறியதனிற்செல்லும்போக்கினைவிலக்கிமேலாம்
        நன்னெறியொழுகச் செய்தநவையறுகாட்சிநல்கி
        என்னையுமடியனாக்கியிருவினைநீக்கியாண்ட
        பன்னிருதடந்தோள்வள்ளல்பாதபங்கயங்கள்போற்றி

                வேறு

        வேல்சேர்ந்தசெங்கைக்குமரன்வியன்காதைதன்னை
        மால்சேர்ந்துரைத்தேன்றமிழ்ப்பாவழுவுற்றதேனும்
        நூல்சேர்ந்தசான்றீர்குணமேன்மைநுவன்றுகொண்மின்
        பால்சேர்ந்ததனாற்புனலும்பயனாவதன்றே

        பொய்யற்றகிரன்முதலாம்புலவோர்புகழ்ந்த
        ஐயற்கெனதுசிறுசொல்லுமொப்பாகுமிப்பார்
        செய்யுற்றவன்பாலுமைபூசைகொடேவதேவன்
        வையத்தவர்செய்வழிபாடுமகிழுமன்றே

        என்னாயகன்விண்ணவர்நாயகன்யானைநாம
        மின்னாயகனான்மறைநாயகன்வேடர்நங்கை
        தன்னாயகன்வேற்றனிநாயகன்றன்புராணம்
        நன்னாயகமாமெனக்கொள்கவிஞ்ஞாலமெல்லாம்

        வற்றாவருள்சேர்குமரேசன்வண்காதைதன்னைச்
        சொற்றாருமாராய்ந்திடுவாருந்துகளுறாமே
        கற்றாருங்கற்பான்முயல்வாருங்கசிந்துகேட்க
        லுற்றாரும்வீடுநெறிப்பாலின்புறுவரன்றே

        பாராகியேனைப்பொருளாயுயிர்ப்பன்மையாகிப்
        பேராவுயிர்கட்குயிராய்ப்பிறவற்றுமாகி
        நேராகித்தோன்றலுளதாகிநின்றான்கழற்கே
        ஆராதகாதலொடுபோற்றியடைதுமன்றே.

            
            தக்ஷகாண்ட முற்றிற்று

            கந்தபுராண முற்றிற்று

            திருச்சிற்றம்பலம்

            வேலுமயிலுந் துணை        

            கச்சியப்ப சிவாசாரியர் திருவடி வாழ்க

Related Content