logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம் - - தமிழ் உரையுடன்

சங்கரர் அருளிய

(துதியைச் சொல்லுகையிலேயே மானஸிகமாக ஒவ்வோர் உபசாரத்தையும் செய்து பூஜிக்க உதவுவதால் ‘மானஸிக பூஜா ஸ்தோத்ரம்’ எனப்படும்.)

 கைலாஸே கமநீய ரத்நகசிதே கல்பத்3ருமூலேஸ்தி2தம்

       கர்பூர ஸ்படி2கேந்து3 ஸுந்தரத3நும் காத்யாய நீ ஸேவிதம் |

க3ங்கா3 துங்க3 தரங்க3 ரஞ்சித ஜடாபா4ரம் க்ருபா ஸாக3ரம்

       கண்டா2லங்க்ருத சேஷ பூ4ஷணமமும் ம்ருத்யுஞ்ஜயம் பா4வயே ||     1

                 கயிலையங்கிரியில், கல்பவ்ருக்ஷத்தின் அடியில் அழகான ரத்தினங்களால் ஆன இருக்கையில் வீற்றிருப்பவரும்; கர்ப்பூரம், ஸ்படிகம், சந்திரன் ஆகியவை போன்ற வெளுத்த உடலையும் உடையவரும்; காத்யாயனீ தேவியால் வணங்கப் பட்டவரும்; பெரிய அலைகளுடைய கங்கையை இன்பத்துடன் கொண்ட ஜடை முடியை உடையவரும்; கருணைக் கடலும்; ஆதிசேஷனை மாலையாகக் கழுத்தில் கொண்டவருமான இந்த (காலனை வென்ற) மிருத்யுஞ்ஜய பரமேச்வரனை மனத்தில் எண்ணுகிறேன்.

ஆக3த்ய ம்ருத்யுஞ்ஜய சந்த்3ரமௌளே

       வ்யாக்4ராஜிநாலங்க்ருத சூலபாணே |

ஸ்வப4க்த ஸம்ரக்ஷண காமதே4நோ

       ப்ரஸீத3 விச்வேச்வர பார்வதீச ||                                         2

   காலனை வென்றவரே! சந்திரனை முடியில் கொண்டவரே! புலித்தோலால் அலங்கரிக்கப்பட்டவரே! சூலத்தைக் கையில் கொண்டவரே! தன் பக்தர்களைக் காப்பாற்றுவதில் விருப்பத்தைக் கொடுக்கிற காமதேனுப் பசு போன்றவரே! உலகத்திற்கெல்லாம் தலைவரே! பார்வதியின் கணவரே! வருகைதந்து அருள் புரியும்.

பா4ஸ்வன் மௌக்திக தோரணே மரகதஸ்தம்பா4யுதாலங் க்ருதே

       ஸௌதே4 தூ4பஸுவாஸிதே மணிமயே மாணிக்யதீ3 பாஞ்சிதே |

ப்3ரம்மேந்த்3 ராமரயோகி3 புங்க3வக3 ணைர்யுக்தேச கல்பத்3ருமை:

       ஸ்ரீம்ருத்யுஞ்ஜய ஸுஸ்தி2ரோ ப4வ விபோ4 மாணிக்ய ஸிம்ஹாஸநே || 3

   காலனை வென்றவரே! எங்கும் வியாபித்தவரே ! ஒளிவிடுகிற முத்துத் தோரணங்களாலும் பதினாயிரம் மரகதத் தூண்களாலும் அலங்கரிக்கப்பட்ட மணிமய மாளிகையில் தூபத்தின் நறுமணத்தோடு கூடியதும், மாணிக்க தீபங்களோடு கூடியதும், நான்முகன், இந்திரன், தேவர்கள், யோகி சிரேஷ்டர்களின் கூட்டங்களோடு கூடியதும், கல்ப மரங்களோடு கூடியதுமான, மாணிக்க அரியாசனத்தில் நன்கு வீற்றிருப்பீராக.

 மந்தா3ரமல்லீ கரவீர மாத4வீ

       புந்நா3க நீலோத்பல சம்பகாந்விதை: |

கர்பூர பாடீர ஸுவாஸிதைர்ஜலை -

       ராத4த்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய பாத்ய3 முத்தமம் ||                            4

 மந்தாரை, மல்லிகை, அரளீ, மாதவீ, புந்நாகம், கருங்குவளை, சம்பகம் ஆகியவைகளோடு கூடியதும், பச்சை கர்ப்பூரம், சந்தனங்களால் வாசனையுடையதுமான, கால் அலம்புவதற்கு வேண்டிய (பாத்ய) நீரை, காலனை வென்றவரே! ஏற்றுக் கொள்ளும்.

 ஸுக3ந்த4 புஷ்ப ப்ரகரை: ஸுவாஸிதை:

       வியன்நதீசீதள வாரிபி3: சுபை: |

த்ரிலோக நாதா2ர்தி ஹரார்க4ய – மாத3ராத்

       க்3ருஹாண ம்ருத்யுஞ்ஜய ஸர்வ வந்தி3த் ||                             5

  காலனை வென்றவரே! எல்லோராலும் போற்றப்படுபவரே! மூவுலகத்தின் துயரைப் போக்குபவரே! நல்ல வாசனையோடு கூடிய புஷ்பங்களோடு கூடி மணக்கும் குளிர்ந்த கங்கையின் மங்கள நீரைக்கொண்டு (என்னால்) கொடுக்கப்படும் அர்க்யத்தை அன்போடு பெற்றுக் கொள்வீராக.

 ஹிமாம்பு3 வாஸிதைஸ்தோயை: சீதளைரதிபாவனை: |

ம்ருத்யுஞ்ஜய மஹாதே3வ சுத்3தா4சம நமாசர ||                                6

 காலனை வென்றவரே! மஹாதேவனே! மிகவும் பரிசுத்தமானவைகளும் வாசனையோடு கூடியதும் பனி நீர்களால் கொடுக்கப்பட்டதுமான குளிர்ந்த நீரினால் தூய ஆசமனம் செய்யும்.

 கு3ட3த3தி4: ஸஹிதம் மது4ப்ரகீர்ணம்

       ஸுக்4ருதஸமன்வித தே4 நுது3க்3த யுக்தம் |

சுபகரமது3 பர்கமாஹர த்வம்

       த்ரிநயந ம்ருத்யுஹா த்ரிலோகவந்த்3ய ||                                7

  முக்கண்ணரே! காலனை ஒழிப்பவரே! மூவுலகாலும் போற்றப்படுபவரே! வெல்லம், தயிர், தேன், நல்ல நெய், பசுவின் பால் இவைகளால் ஆகிய மது பர்க்கத்தை நல்லதையே செய்கிற நீர் ஏற்றுக் கொள்ளும்.

 பஞ்சாஸ்த்ரசாந்த பஞ்சாஸ்ய பஞ்சபாதகஸம்ஹர |

பஞ்சாம்ருதஸ்நாநமித3ம் குரு ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ4 ||                        8

       ஐந்தம்புகளைக் கொண்ட காமனை அடக்கியவரே! ஐந்து முகத்தை உடை யவரே! பஞ்சமாபாதகமெனும் ஐந்து பெரிய பாவங்களைத் தொலைப்பவரே! ப்ரபுவான ம்ருத்யஞ்ஜயரே! பழம், பால், நெய், தேன், சர்க்கரை என்ற ஐந்து அம்ருதங்களாலான இந்தப் பஞ்சாமிருதத்தில் ஸ்னானத்தைச் செய்யும்.

 ஜக3த்ரயீக்2யாத ஸமஸ்த தீர்த2

       ஸமாஹ்ருதை: கல்மஷஹாரிபி4ச்ச |

ஸநாநம் ஸுதோயை: ஸமுதா3சரத்வம்

       ம்ருத்யுஞ்ஜயானந்தகுணாபி4ராம ||                                       9

 காலனை வென்றவரே! முடிவற்ற கல்யாண குணங்களை உடையவரே! மூவுலகிலும் புகழ் பெற்றவரே! எல்லா நீர்களிலிருந்து கொண்டு வரப்பட்டதும் பாவங்களைப் போக்கடிப்பதுமான நல்ல நீரினால் நீர் ஸ்நானம் செய்யும்.

 ஆநீதேநாதிசுப்4ரேண கௌசேயே நாமரத்3திருமாத் |

மார்ஜயாமி ஜடாபா4ரம் சிவ ம்ருத்யஞ்ஜய ப்ரபோ4 ||                           10

 சிவனே! காலனை வென்றவரே! ப்ரபுவே! தேவலோகத்திலுள்ள கல்பக மரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதும் மிகவும் வெளுத்ததுமான பட்டினால் உங்கள் ஜடைமுடியைத் துடைக்கிறேன்.

 நாநாஹேமவிசித்ராணி சீரசீ நாம்ப3ராணிச |

விவிதா4நிச தி3வ்யாநி ம்ருத்யுஞ்ஜய ஸுதா4ரய ||                              11

    காலனை வென்றவரே! பலவகையான தங்க வேலைப்பாடு உள்ள மரவுரி களையும், சீனப்பட்டுக்களையும், விதவிதமான தேவலோகத்து ஆடைகளையும் நன்கு அணிந்து கொள்ளுங்கள்.

 விசுத்3த4 முக்தாப2ல ஜால ரம்யம்

       மநோஹரம் காஞ்சநஹேமஸூத்ரம் |

யஜ்ஜோபவீதம் பரமம் பவித்ரம்

       ஆத4த்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய ப4க்திகம்3ய ||                                  12

   காலனை வென்றவரே! பக்தியினால் அடையக்கூடியவரே! தூய முத்துக் சரங்களால் அழகானதும், மனத்தைக் கவர்வதும், ஒளிரும் தங்க இழைகளாலானதும் மிகவும் புனிதமானதுமான யக்ஞோபவீதத்தை தரித்துக் கொள்வீராக.

 ஸ்ரீ க3ந்த4ம் க4னஸார குங்குமயுதம் கஸ்தூரிகா பூரிதம்

       காலேயே ந ஹிமாம்பு3நா விரசிதம் மந்தா3ர ஸம்வாஸிதம் |

தி3வ்யம் தே3வமனோஹரம் மணிமயே பாத்ரே ஸமாரோபிதம்

       ஸர்வாங்கே3ஷ விலேபயாமி ஸததம் ம்ருத்யுஞ்ஜய ஸ்ரீவிபோ4 ||      13

   எங்கும் நிறைந்தவரே, காலனை வென்றவரே! பச்சை கர்ப்பூரம் குங்குமப்பூ கஸ்தூரி கலந்ததும் இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கருஞ் சந்தனம் சேர்ந்ததும், தேவ விருக்ஷமான மந்தாரத்தால் வாசனை சேர்க்கப்பட்டதும், தேவர்களுக்குரியதும், தேவர் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுப் பதும் நவரத்ன மணிகளால் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டதுமான உயர்ந்த சந்தனத்தை உங்கள் உடலில் எல்லா அவயங்களிலும் எப் போதும் பூசுகிறேன்.

 அக்ஷதைர் த4வளைர்தி3வ்யை: ஸம்யக்தில ஸமன்விதை: |

       ம்ருத்யுஞ்ஜய மஹாதே3வ பூஜயாமி வ்ருஷத்4வஜ ||                     14

  காலனை வென்றவரே! மஹாதேவரே! காளைமாட்டுக் கொடியை உடையவரே! நல்ல பொறுக்கியெடுத்த எள்ளோடு கூடிய வெளுத்ததான அழகான அக்ஷதைகளால் உம்மைப் பூஜிக்கிறேன்.

 சம்பக பங்கஜ குரவக கரவீர மல்லிகா குஸுமை: |

       விஸ்தாரய நிஜமகுடம் ம்ருத்யுஞ்ஜயபுண்ட3ரீக நயநாப்தா ||           15

 காலனை வென்றவரே! தாமரைக் கண்ணனாகிய திருமாலன் நண்பரே! சம்பகம், தாமரை, குரவகம், அரளி, மல்லி ஆகிய மலர்களால் மணிமகுடம் பொருந்திய முடியை (அலங்கரித்துக்கொண்டு) மேலும் பெரிதாக்கிக் கொள்ளவும்.

 மாணிக்ய பாது3காத்3வந்த்3வே மௌநிஹ்ருதபதம் மந்தி3ரே |

       பாதௌ3 ஸத்பத்3மஸத்ருசௌ ம்ருத்யுஞ்ஜய நிவேசய ||                16

 காலனை வென்றவரே! முனிவர்களின் இதயக் கோயிலில் உள்ள, மாணிக்கத்தாலான இரண்டு காலணிகளில் நல்ல தாமரை போன்ற உன் இரு திருவடிகளை வைத்தருள் புரியும்.

 மாணிக்யகேயூர கிரீட ஹாரை:

       காஞ்சீ மணி ஸ்தா2பித குண்ட2லைச்ச |

மஞ்ஜீர முக்2யாப4ரணைர் மநோஜ்ஞை:

       அங்கா3நி ம்ருத்யுஞ்ஜய பூ4ஷயாமி ||                                    17

 காலனை வென்றவரே! மாணிக்கத்தாலான தோள்வளைகள், மகுடம், மாலைகள், அரைஞாண், மணிகள் இழைத்த குண்டலங்கள், காற்சிலம்புகள் ஆகிய சிறந்த அணிகலன்களை அலங்கரிக்கிறேன்.

க3ஜவத3ந ஸக3ந்த3த்4ருதே நாதிஸ்வச்சே2ந சாமரயுகே3 ந |

       க3லத3லகாநந பத்3மம் ம்ருத்யுஞ்ஜய பா4வயாமி ஹ்ருத்பத்3மே ||       18

  யானை முகத்தோனாலும், முருகனாலும் பிடித்து வீசப்பட்ட மிக வெண்மையான இரண்டு சாமரங்களினால் அலைகிற முன் மயிர்களை உடைய தாமரை போன்ற உம் முகத்தை என் இதயத் தாமரையில் எண்ணுகிறேன்.

 முக்தாதபத்ரம் சசிகோடிசுப்4ரம்

       சுப4ப்ரத3ம் காஞ்சந்த3ண்ட3யுக்தம் |

மாணிக்ய ஸம்ஸ்தா2பிதஹேமகும்ப4ம்

       ஸுரேச ம்ருத்யுஞ்ஜய தே (அ)ர்ப்பயாமி ||                                19

   தேவர் தலைவனே! காலனை வென்றவனே! கோடிக்கணக்கான சந்திரர்கள் போன்று வெண்மையானதும் தங்கப்பிடியோடு கூடியதுமான முத்துக் (குடையையும், மாணிக்கத்தில் வைக்கப்பட்ட பொன் குடத்தையும் உமக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

 மணிமுகுரே நிஷ்படலே த்ரிஜக3த் கா3டா4ந்த4கார ஸப்தாச்வே |

       கந்த3ர்ப கோடிஸத்3ருசம் மருத்யுஞ்ஜய பச்ய வத3 நமாத்மீயம் ||       20

 காலனை வென்றவரே! அழுக்கற்றதாயும் மூவுலகிற்கும், திரண்ட இருட்டைப் போக்கடிக்கிற ஸுர்யன் போன்றதுமான மணிமயமான நிலைக்கண்ணாடியில் கோடி மன்மதனுக்கொப்பான உம் முகத்தைப் பாரும்.

 கர்பூர சூர்ணம் கபிலாஜ்யபூதம்

       தா3ஸ்யாமி காலேயஸமந்விதைச்ச |

ஸமுத்3ப4வம் பாவந க3ந்த4தூ4பிதம்

       ம்ருத்யுஞ்ஜயாங்க3ம் பரிகல்பயாமி ||                                    21

  காலனை வென்றவரே! பச்சைக் கற்பூரம், கபிலைப்பசுவின் நெய், கருஞ் சந்தனம் இவைகளை நெருப்பில் இடுவதால் உண்டான புனிதமான தூப வாஸனையை ஸமர்ப்பிக்கிறேன்.

 வர்தித்ரயோபேதமக2ண்டதீ3ப்த்யா

       தமோஹரம் பா3ஹ்யமதா2ந்தரம்ச |

ஸாஜ்யம் ஸமஸ்தாமரவர்க3ஹ்ருத்யம்

       ஸுரேச ம்ருத்யுஞ்ஜய வம்ச தீ3பம் ||                                     22

 தேவர் தலைவ! காலனை வென்றவரே! மூன்று திரிகளோடு நிறைத்து ஒளிவிடுவதும், வெளி இருட்டோடு உள் இருட்டையும் போக்கடிப்பதும், நெய்யுடன் கூடியதும், எல்லா தேவக் கூட்டங்களுக்கு மனமகிழ்ச்சியைக் கொடுப்பதுமான அடுக்கு தீபத்தை ஸமர்ப்பிக்கிறேன்.

 ராஜாந்நம் மது4ராந்விதம் ச ம்ருது3ளம் மாணிக்யபாத்ரேஸ்தி2தம்

       ஹிங்கூ3 ஜீரக ஸன்மரீசி மிளிதை: சாகைரநேகை: சுபை4 |

ஸாகம் ஸம்யக3பூபஸூபஸஹிதம் ஸத்3யோக்4ருதே நாப்லுதம்

       ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய பார்வதீப்ரிய விபோ4 ஸாபோசநம்பு4ஜ்யதாம் ||       23

 காலனை வென்றவரே! பார்வதியிடம் அன்புள்ளவரே! எங்கும் நிறைந்தவரே! வெளுப்பான மதுரம் நிறைந்த, மென்மையான மாணிக்க பாத்திரத்தில் இருப்பதான அன்னத்தை, பெருங்காயம், ஜீரகம், மிளகோடு கூடிய பல நல்ல காய்கறிளோடும் அதோடுகூட ருசியான அப்பம், அப்பொழுதே நிறைய நெய் விடப்பட்ட பருப்புடனும் (விதிப்படி) ஆபோசனம் செய்து சாப்பிடுங்கள்.

 கூசமாண்ட3 வார்த்தாக படோலிகாநாம்

       ப2லாநி ரம்யாணிச காரவல்லயா |

ஸுபாகயுக்தா நி ஸஸௌரபா4ணி

       ஸ்ரீ கண்ட2 ம்ருத்யுஞ்ஜய ப4க்ஷயேச ||                                    24

 பூசணிக்காய், கத்தரிக்காய், புடலங்காய், (மற்றும்) மிகவும் அழகான பாகற் பழங்களாலும் நன்கு பக்குவமானதும் வாசனையுடன் கூடியதுமான இவைகளை, ஸ்ரீ கண்டரே! காலனை வென்றவரே! சாப்பிடும்.

 சீதளம் மது4ரம் ஸ்வச்ச2ம் பாவநம் வரஸிதம் லகு4 |

       மத்யே ஸ்வீகுரு பாநீயம் சிவ ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ ||                  25

 குளிர்ந்த; சுவையுள்ள, தெளிந்த சுத்தமான, வாசனையோடு கூடிய குடி நீரை, சிவனாகிய காலனை வென்ற ப்ரபுவே! நடுவே உட்கொள்ளும்.

 சர்கராமிளிதம் ஸ்நிக்3த4ம் து3க்3தா4ந்தம் கோ3க்4ருதாந்விதம் |

       கத3ளீப2ல ஸம்மிச்ரம் பு4ஜ்யதாம் ம்ருத்யுஸம்ஹர ||                    26

சர்க்கரை போட்டதும், பசையுடன் கூடியதும், பசுவின் நெய் கலந்து, வாழைப்பழத்தைச் சேர்த்ததுமான பால் அன்னத்தை, காலனை வென்றவரே! சாப்பிடும்.

 கேவலமதிமாது4ர்யம் து3க்3தை: ஸ்நிக்3தை4சச சர்கராமிலிதை: |

       ஏலா மரீசீ மிலிதம் ம்ருத்யுஞ்ஜயதே3வ பு4ங்க்ஷ்வ பரமாந்நம் ||        27

  மிகவும் தித்திப்பானதும், பசையுடன் கூடியதும், பாலோடு சர்க்கரை கலந்ததும், ஏலக்காய், மிளகு முதலியவைகளுடன் கூடியதுமான பரமான்னத்தை (பாயஸம்), ம்ருத்யுஞ்ஜயக் கடவுளே! சாப்பிடும்.

 ரம்பா4 சூத கபித்த2 கண்டகப2லைர் த்ரா3க்ஷாரஸ ஸ்வாதுமத்

       க2ர்ஜூரைர் மது3ரேக்ஷுக2ண்ட3சகலை: ஸந்நாரிகேளாம்பு3பி4: |

கர்பூரேணஸுவாஸிதைர் கு3ட3ஜலைர் மாது4ர்யயுக்தைர் விபோ4

       ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பூரய த்ரிபுவநாதா4ரம் விசாலோத3ரம் ||                28

       வாழை, மா, விளாம்பழங்களுடன் ருசியான திராக்ஷை ரஸத்தையும், பேரீச்சங்காய், இனிமையான கரும்புத் துண்டுகளுடனும், நல்ல இளநீருடனும் பச்சை கற்பூரத்தாலும் வாசனையுள்ள வெல்லம் கரைத்த நீரையும் (பாநகம்) எங்கும் நிறைந்த ம்ருத்யுஞ்ஜயரே! மூவுலகுக்கும் ஆதாரமாய் விளங்குகிற உமது விசாலமான வயிறு நிறையச் சாப்பிடும்.

 மநோஜ்ஞ ரம்பா4வந் க2ண்ட3 க2ண்டி3தாந்

       ருசிப்ரதா3ந் ஸர்ஷப ஜீரகரம்ச்ச |

ஸஸௌரபா4ன் ஸைந்த4வ ஸேவிதாம்ச்ச

       க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய லோகவந்த்3ய ||                               29

       மனதிற்கிஷ்டமானதும், வாழைத் தோட்டத்தில் வெட்டித் துண்டு போட்டு ருசியைக் கொடுக்கக்கூடியதும், கடுகு, சீரகம் கூடியதும், வாஸனை யுடையதும், கல் உப்பு கலந்ததுமான (ஊறுகாயை) உலகத்தால் போற்றப் படுகிற ம்ருத்யுஞ்ஜயரே ஏற்றுக்கொள்ளும்.

 ஹிங்கூ3 ஜீரக ஸஹிதம் விமலாமலகம் கபித்த4மதிமது4ரம் |

       பி3ஸக3ண்டான் லவணயுதான் ம்ருத்யுஞ்சய தே (அ)ர்ப்பயாமி ஜக3தீ3ச ||30

       உலகத்திற்கு ஈசனே! ம்ருத்யுஞ்ஜயரே! பெருங்காயம், சீரகத்தோடு கூடிய சுத்தமான நெல்லிக்காயும், இனிமையான விளாம்பழமும், உப்போடு கூடிய தாமரைத் தண்டுத் துண்டுகளும் உமக்குக் கொடுக்கிறேன்.

 ஏலா சுண்டீ2 ஸஹிதம் த3த்4யன்னம் சாருஹேமபாத்ரஸ்த2ம் |

       அம்ருத ப்ரதிநிதி4மாட்4யம் ம்ருத்யுஞ்ஜய பு4ஜ்யதாம் த்ரிலோகேச ||    31

  ஏலக்காய் சுக்குடன் கூடியதும் அம்ருதத்திற்கொப்பானதும், அழகான தங்கப்பாத்திரத்தில் நிறைந்திருப்பதுமான தயிர் சாதத்தை, மூவுலகத் தலைவரான ம்ருத்யிஞ்ஜயரே! சாப்பிடும்.

 ஜம்பீ3ர நீராஞ்சித ச்ருங்கி3பே3ரம்

       மநோஹராநாம்ல சலாடு க2ண்டா3ந் |

ம்ருதூ3 பத3ம்சாந்ஸஹஸோப பு4ங்க்ஷ்வ

       ம்ருத்யுஞ்ஜய ஸ்ரீ கருணா ஸமுத்ர ||                                     32

       எலுமிச்சம் சாறு கலந்த, இஞ்சி, அழகான மாங்காய், இவைகளோடு கூடிய சலாடு (மாகாளி?) துண்டம், மிருதுவானதும் ஜீர்ணசாலிகளுமான உபகரணங்களைக் கருணைக் கடலான ம்ருத்யுஞ்ஜயரே! சாப்பிடும்.

 நாக3ர ராமட2 யுக்தம்

       ஸுலலித ஜம்பீ3ரநீரஸம்பூர்ணம் |

மதி2தம் ஸைந்த4வ ஸஹிதம்

       பிப3 ஹர ம்ருத்யுஞ்ஜய க்ரதுத்4வம்ஸிந் ||                               33

   (தக்ஷயாகத்தையழித்த அரனே! காலனை வென்றவரே! இஞ்சி, பெருக காயம், அழகான எலுமிச்சை நீர் கலந்து நன்கு கடையப்பட்டு உப்பு கலந் ததை (மோரை)க் குடியும்.

 மந்தா3ர ஹேமாம்பு3ஜ க3ந்த4யுக்தை:

       மந்தா3கிநீ நிர்மல புண்யதோயை: |

க்3ருஹாண ம்ருத்யுஞ்ஜய பூர்ணகாம

       ஸ்ரீமத் பராபோசநமப்4ர கேச ||                                            34

    மந்தாரை, தாமரைகளால் வாசனையுடைய அழுக்கற்ற புண்யமான கங்கை நீரால் ஆன உத்தராபோசனத்தை, நிறைவு பெற்ற ஆசையை உடைய ம்ருத்யுஞ்ஜயரே. ஏற்றுக்கொள்ளும்.

 க3க3ந து4நீ விமஜலை:

       ம்ருத்யுஞ்ஜய பத்3மராக3பாத்ரக3தை: |

ம்ருக3மத3 சந்த3ந பூர்ணம்

       ப்ரக்ஷாளய சாரு ஹஸ்தபத3யுக3மம் ||                                   35

    பத்மராக பாத்திரத்திலுள்ளதும், புனுகு, சந்தனம் கலந்ததுமான ஆகாய கங்கையின் தூய ஜலத்தினால் கை கால்களை அலம்பிக் கொள்ளும், ஹே ம்ருத்யுஞ்ஜயரே!

 புந்நாக3 மல்லிகா குந்த3வாஸிதைர் ஜான்ஹவீஜலை: |

       ம்ருத்யுஞ்ஜய மஹாதே3வ புநராசம நம் குரு ||                          36

  காலனை வென்ற மஹாதேவரே! புன்னாகம், மல்லிகை, குந்தம் இவை களால் வாஸனையோடு கூடியிருக்கிற கங்கை ஜலங்களால் மறுபடி (புநராச மனம்) ஆசமநம் செய்யும்.

 மௌக்திக சூர்ணஸமேதை:

       ம்ருக3மத3 க4நஸார வாஸிதை: பூகை3:

பர்ணை ஸ்வர்ணஸமானை:

       ம்ருத்யுஞ்ஜய தே(அ)ர்ப்பயாமி தாம்பூ3லம் ||                             37

 காலனை வென்றவரே! முத்துச் சுண்ணாம் போடும் புனுகு, பச்சைக் கர்ப்பூரம் இவைகளோடும். கூடிய பாக்குப் பொடியும், தங்கத்திற்கொப்பான வெற்றிலையுமான தாம்பூலத்தை உமக்கு கொடுக்கிறேன்.

 நீராஜநம் நிர்மல்தீ3ப்திமத்3பி4:

       தீ3பாங்குரைருஜ்ஜ்வலமுச்ச்2 ரிதைச்ச |

க4ண்டாநிநாதே3ந ஸமர்ப்பயாமி

       ம்ருத்யுஞ்ஜயாய த்ரிபுராந்தகாய ||                                       38

 காலனை வென்றவரே! முப்புரத்தை அழித்தவரே! அழகற்ற ஒளியோடு கூடிய தீபவரிசைகளால் நன்கு எரிவதும் உயர்த்திக் காட்டப்பட்டதுமான தீபம் காட்டுவதை மணியின் ஓசையுடன் உங்களுக்குக் காட்டுகிறேன்.

 விரிஞ்சி முக்2யாமர ப்3ருந்த3வந்தி3தே

       ஸரோஜ மத்ஸ்யாங்கித சக்ரசிஹ்நிதே |

த3தா3மி ம்ருத்யுஞ்ஜய பாத3பங்கஜே

       ப2ணீந்த்3ர பூ4ஷே புநரர்க்4யமீச்வர ||                                     39

 ஈச்வரரே! நான்முகனை முதன்மையாகக் கொண்ட தேவர் கூட்டத்தால் வணங்கப்பட்டதும், தாமரை, மீன், சக்கரம் ஆகிய அடையாளங்களுள்ளதும், உயர்ந்த பாம்பை அணிகலனாய்க் கொண்டதுமான உன் திருவடித் தாமரையில் மறுபடி அர்க்யம் கொடுக்கிறேன்.

 புந்நாக3 நீலோத்பல குந்த3ஜாஜீ

       மந்தா3ர மல்லீ கரவீர பங்கஜை: |

புஷ்பாஞ்ஜலிம் பில்வத3ளை ஸ்துலஸ்யா

       ம்ருத்யுஞ்ஜயாங்க்4ரௌ விநிவேசயாமி ||                                40

  புன்னை, கருநெய்தல், குந்தம், ஜாதீ. மந்தாரை, மல்லி, அரளீ. தாமரை வில்வதளம், துளஸீ இவைகளால் ம்ருத்யுஞ்ஜயரின் திருவடிகளில் குவித்த இரண்டு கைகளாலும் வைக்கிறேன்.

 பதே3 பதே3 ஸர்வதமோ நிக்ருந்தினம்

       பதே3 பதே3 ஸர்வ சுபப்ர தா3யகம் |

ப்ரத3க்ஷிணம் ப4க்தியுதேந சேதஸா

       கரோமி ம்ருத்யுஞ்ஜய ரக்ஷ ரக்ஷ மாம் ||                                41

      காலனை வென்றவரே! ஒவ்வொரு அடியிலும் எல்லாவிதமான அறியாமை யைப் போக்குவதும், ஒவ்வொரு அடியிலும் எல்லா சுபங்களைக் கொடுப்பதுமான உன்னைச் சுற்றுதலை (பிரதக்ஷிணம்) பக்தியுடன் கூடிய மனத்துடன் செய் கிறேன். என்னைக் காப்பாற்றும்.

 நமோ கௌ3ரீசாயஸ்ப2டிக த4வளாங்கா3ய ச நமோ

       நமோ லோகேசாயஸ்துதவிபு3த4 லோகாய ச நம: |

நம: ஸ்ரீகண்டா2யக்ஷபித புரதை3த்யாய ச நமோ

       நம: பா2லாக்ஷாய ஸ்மரமத3விநாசாய ச நம: ||                         42

  கௌரியின் கணவருக்கு வணக்கம். ஸ்படிகம் போல் வெளுத்த உடலை உடையவருக்கு வணக்கம். உலகத்தின் தலைவருக்கு வணக்கம். தேவர்களால் துதிக்கப்பட்டவருக்கு வணக்கம். ஸ்ரீகண்டருக்கு வணக்கம். முப்புரங்களை அழித்தவருக்கு வணக்கம். நெற்றிக்கண்ணருக்கு வணக்கம். காமனையெரித்த வருக்கு வணக்கம். நமஸ்காரம்.

 ஸம்ஸாரே ஜநிதாபரோக3 ஸஹிதே தாபத்ரயாக்ரந்தி3தே

       நித்யம் புத்ர களத்ரவித்த விலஸத்பாசைர் நிப3த்3த4ம் த்3ருட4ம் |

க3ர்வாந்த4ம் ப3ஹுபாப க3ர்வ ஸஹிதம் காருண்ய த்2ருஷ்ட்யா விபோ4

       ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பார்வதீப்ரிய ஸதா3 மாம் பாஹீ ஸர்வேச்வர ||        43

       ஸம்ஸாரத்தில் பிறவியை அடைந்து மனத்துன்பமும் நோயும் உற்று, (அத்யாத்மகம் என்பதாகத் தன்னிலேயே ஏற்படுவதும், ஆதிபௌதிகம் என்ப தாகப் பஞ்ச பூதங்களாலுண்டாவதும். கடவுளின் கோபத்தால் உண்டாவதுமான) மூவகைத் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, தினமும் பிள்ளை, மனைவி, செல்வம் இவைகளாகிற பாசத்தால் நன்கு கட்டுண்டு, கர்வத்தால் கண் தெரியாமலும், அதனால் பல பாபங்களோடு கூடியுமிருக்கிற என்னை - காலனை வென்ற வரும், பார்வதியின் கணவரும், ஸர்வேச்வரனுமான நீர் எப்பொழுதும் கருணை நோக்கால் காப்பாற்ற வேண்டும்.

 ஸௌதே4 ரத்நமயே நவோத்பலத3ளாகீர்ணேச தல்பாந்தரே

       கௌசேயேந மநோஹரேண த4வளேநாச்சா2தி3தே ஸர்வச: |

கர்பூராஞ்சித தீ3பதீ3ப்திமிளிதே ரம்யோபதா4நத்3வயே

       பார்வத்யா: கரபத்3மலாலிதபத3ம் ம்ருதயுஞ்ஜயம் பா4வயே ||           44

       இரத்தினத்தினாலான மாடியில், மனதுக்கு இன்பம் தருகிற பட்டுகளால் முழுதும் மூடப்பட்டதும், கர்ப்பூரத்துடன் கூடிய தீபங்களின் ஒளியுடன் கூடி யதும், இரண்டு தலையணைகளையுடையதுமான புதிய தாமரை இதழ்கள் பரப்பப்பட்ட படுக்கையில் பார்வதீ தேவியின் கைகளால் வருடப்பட்ட திருவடிகளை உடைய ம்ருத்யுஞ்ஜயரை மனதில் தொழுகிறேன்.

 சதுச்சத்வாரிம்சத்3 விலஸது3 பசாரைரபி4மதை:

       மந: பத்3மே ப4க்த்யா ப3ஹிரபிச பூஜாம் சுபகரீம் |

கரோதி ப்ரத்யூஷே நிசிதி3வஸமத்4யேபி ச புமாந்

       ப்ரயாதி ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பத3மநோகாத்3 பு4தப3தம் ||              45

       காலையிலும், பகலிலும், இரவிலும் அறுபத்து நான்கு உபசாரங்களை முறைப்படி பக்தியுடன் இருதயத் தாமரையில் (மானஸீகமாகச்) செய்தும், (இந்த அகப் பூஜையோடு) வெளியிலும் சுபம் தரும் பூஜை செய்தும் வருகிற மனிதன், காலனை வென்ற (ம்ருத்யுஞ்ஜயரின்) வியக்கத் தக்க பதவிகளைக் கொடுக்கக் கூடிய திருவடியை அடைகிறான்.

 ப்ராதர்லிங்க3முமாபதே ரஹரஹ: ஸந்த4ர்சநாத்ஸ்வர்க3த3ம்

       மத்4யாஹ்னே ஹயமேத4துல்ய ப2லதம் ஸாயந்தநே மோக்ஷத3ம் |

பா4நோரஸ்தமயே ப்ரதோ3ஷ ஸமயே பஞ்சாக்ஷராராத4நம்

       தத்காலத்ரயதுல்ய மிஷ்ட ப2லத3ம் ஸத்3யோ நவத்3யம்த்3ருடம் ||      46

       தினமும் காலையில் உமாபதியின் லிங்கத்தை தரிசிப்பதால் ஸ்வர்க்கம் கிடைக்கும். நடுப்பகலில் அச்வமேதயாகம் செய்த பயன் கிட்டும். மாலையில் முக்தி கிடைக்கும். சூரியன் மறையும் பிரதோஷ சமயத்தில், பஞ்சாக்ஷரத்தினால் பூஜிப்பது மூன்று காலங்களும் சேர்ந்ததற்கு நிகரான இஷ்டப்பூர்ணமாயும், உறுதியாயும் உடனேயே கொடுத்தருள் செய்யும்.

Related Content

दशश्लोकि - Adishankara's dashashloki

வேதஸார சிவஸ்தோத்ரம் - உரை

அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை

சிவானந்த லஹரீ - தமிழ் உரையுடன் 

ஶ்ரீ சிவ பாதாதிகேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்