logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஶ்ரீ வேதஸார சிவ ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்

சங்கராச்சார்யர் அருளிய

       (பரமசிவனுடைய மகிமையை நன்கு எடுத்துக் காட்டும் பல நாமாக்களை கொண்ட பாடல்.)

 பசூநாம் பதிம் பாபநாசம் பரேசம்

       க3ஜேந்த்3ரஸ்ய க்ருத்திம் வஸானம் வரேண்யம் |

ஜடாஜூடமத்4யே ஸ்பு2ரத்3காங்க3வாரிம்

       மஹாதே3வ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம். ||                             1

       பசுக்கள் எனக் கருதப்படும் உயிர்களுக்கு தலைவரும் பாவத்தை ஒழிப்பவரும், பரமேச்வரரும் சிறந்த யானையினுடைய தோலை அணிந்து கொண்ட வரும், எல்லோராலும் சேவிக்கத்தக்கவரும், ஜடைக்கூட்டத்திற்கிடையே விளங்கும் கங்கை நீரை உடையவரும், தேவர்களுக்கு தேவரும், ஒப்பு உயர்வற்ற ஒருவருமான, மன்மதனை வென்ற சிவனை சிந்திக்கின்றேன்.

 மஹேசம் ஸுரேசம் ஸுராரரதி நாசம்

       விபு4ம் விச்வநாத2ம் விபூ4த்யங்கபூ4ஷம் |

விரூபாக்ஷமிந்த3வர்கவஹ்னி த்ரிணேத்ரம்

       ஸதா3னந்த3 மீடே3 ப்ரபு4ம் பஞ்சவக்த்ரம் ||                               2

       (ஈச்வரன் எனக் கருதப்படும் பிரம்மா முதலியவர்களுக்கும் தலைவரானதால்) மஹேச்வரனாயும், தேவர்களுக்கும் அரசனாயும், தேவர்களின் பகைவர்களை வெல்பவராயும், எங்கும் நிறைந்தவராயும், அனைத்திற்கும் அதிபராயும், திரு நீராலான உடம்பின் அணியை உடையவராயும்; இயற்கைக்கு விரோதமான (மூன்று) கண் படைத்தவராயும், சந்திரன், சூரியன். அக்னி இவைகளாகிய மூன்று கண்களை உடையவராயும், எப்பொழுதும் ஆனந்தராயும், ஐந்து முகம் படைத்தவராயு மிருக்கின்ற பிரபுவான பரமசிவனை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

 கி3ரீசம் க3ணேசம் க3லே நீலவர்ணம்

       க3வேந்த்ரா3தி4ரூட4ம் கு3ணாதீத ரூபம் |

ப4வம் பா4ஸ்வரம் ப4ஸ்மனா பூ4ஷிதாங்க3ம்

       ப4வானீ களத்ரம் ப4ஜே பஞ்சவக்த்ரம் ||                                  3

       மலைக்குத் தலைவரும், ப்ரமதகணங்களை அடக்கி ஆளுபவரும், கழுத்தில் நீல நிறமுள்ளவரும், சிறந்த எருதின்மேல் ஏறிக்கொண்டவரும், ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களைக் கடந்த உருவத்தை உடையவரும், உலகத்திற்குக் காரணரும், ஒளியோடு கூடியவரும், விபூதியால் அலங்கரிக்கப்பட்ட உடம்பை உடையவரும், பார்வதி பதியுமான ஐந்து முகமுடைய பரமசிவனை சேவிக்கிறேன்.

 சிவாகாந்த சம்போ4 சசாங்கார்த4 மௌலே

       மஹேசான சூலின் ஜடாஜூடதா4ரின் |

த்வமேகோ ஜக3த்3வ்யாபகோ விச்வரூப:

       ப்ரஸீத ப்ரஸீத3 ப்ரபோ4 பூர்ணரூப ||                                     4

       மங்கள வடிவமான பார்வதியின் மனதிற்கிசைந்த நாயகரும், நன்மைகள் அனைத்திற்கும் பிறப்பிடமானவரும். இளம் சந்திரனை தலைக்கு அணியாய் கொண்டவரும், மஹிமை பொருந்திய ஈசானரும், சூலத்தை கையில் வைத்திருப்பவரும், ஜடைக் கூட்டத்தைத் தாங்குபவரும், பரிபூர்ண உருவம் உடையவருமான பிரபுவே, நீர் ஒருவரே உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்றீர். (என்னிடத்தில்) தயவு செய்யும்; தயவு செய்யும்.

 பராத்மானமேகம் ஜக3த் பீ3ஜமாத்3யம்

       நிரீஹம் நிராகாரமோங்காரவேத்3யம் |

யதோ ஜாயதே பால்யதே யேன விச்வம்

       தமீசம் ப4ஜே லீயதே யத்ர விச்வம் ||                                    5

    பரமாத்மாவாயும், ஒன்றாயும், முதலாவதான உலகத்திற்கு முதலாயும் ஆசை அற்றவராயும், உருவமில்லாதவராயும் ஓம் என்ற அக்ஷரத்தால் அறியத் தகுந்தவராயும் (உள்ள) எந்த பரமேச்வரனிடமிருந்து உலகம் உண்டாகிறதோ, எவரால் (அந்த உலகம்) காப்பாற்றப்படுகிறதோ எந்த பரமேச்வரனிடத்தில் (அந்த உலகம்) நடுங்குகிறதோ அந்தப் பரமேச்வரனை சேவிக்கிறேன்.

 ந பூ4மிர்ந் சாபோ ந வஹ்நிர் ந வாயு:

       ந சாகசமாஸ்தே ந தந்த்3ரா ந நித்3ரா |

ந சோஷ்ணம் ந சீதம் ந தே3சோ ந வேஷோ

       ந யஸ்யாஸ்தி மூர்த்தி: த்ரிமூர்த்திம் தமீடே3 ||                          6

  (எந்த பரமசிவன்) பூமியாக இல்லையோ, ஜலமாக இல்லையோ, அக்னியாக இல்லையோ, காற்றாக இல்லையோ, ஆகாசமாகவும் இல்லையோ, சோம்பலாக இல்லையோ, தூக்கமாயில்லையோ, சூடாகவும் இல்லையோ, குளுமையாகவும் இல்லையோ, எவருக்கு இருப்பிடமில்லையோ, வேஷம் இல்லையோ, உருவமில்லையோ, பிரம்மா விஷ்ணு ருத்ரவடிவமான அந்தப் பரமசிவனை போற்றுகிறேன்.

 அஜம் சாச்வதம் காரணம் காரணானாம்

       சிவம் கேவலம் பா4ஸகம் பா4ஸகானாம் |

துரீயம் தம: பாரமாத்3யந்தஹீனம்

       ப்ரபத்3யே பரம் பாவனம் த்3வைதஹீனம் ||                              7

 பிறவி இல்லாதவரும், எப்பொழுதுமிருப்பவரும், காரணம் என்று கருதப் படுகின்றவைகளுக்கும் காரணமானவரும், ஒப்புயர்வற்றுத் தனித்திருப்பவரும், உலகை பிரகாசிக்கச் செய்யும் சூர்யன் முதலியவர்களையும் விளங்கச் செய்பவரும், மும்மூர்த்திகளையும் கடந்த நான்காவதானவரும், (ஆணவ) இருளுக்கு அக்கரை யானவரும், ஆதி அந்தம் அற்றவரும், மேலானவரும், பரிசுத்தியைச் செய்கிறவரும், வேற்றுமை (தன்மை) அற்றவருமான மங்கள வடிவமான சிவனை அடி பணிகிறேன்.

 நமஸ்தே நமஸ்தே விபோ4 விஸ்வமூர்த்தே

       நமஸ்தே நமஸ்தே சிதா3னந்த3மூர்த்தே |

நமஸ்தே நமஸ்தே தபோயோக3க3ம்ய

       நமஸ்தே நமஸ்தே ஸ்ருதிஜ்ஞானக3ம்ய ||                               8

 எங்கும் நிறைந்தவரும் எல்லாமாய் உருவெடுத்தவருமான பரமசிவனே உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம். ஞான ஆனந்த வடிவமானவரே உமக்கு நமஸ்காரம். உமக்கு நமஸ்காரம். தவத்தாலும் யோகத்தாலும் அடையத்தகுந்தவரே உமக்கு நமஸ்காரம். உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அடையும் ஞானத்தால் அறியத்தகுந்தவரே, உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.

 ப்ரபோ4 சூலபாணே விபோ4 விஸ்வநாத2

       மஹாதே3வ சம்போ4 மஹேச த்ரிணேத்ர |

சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே

       த்வத3ன்யோ வரேண்யோ ந மான்யோ ந கண்ய: ||                     9

  நாதனே! சூலாயுதத்தைக் கையில் ஏந்தியவரும், எங்கும் நிறைந்தவரும், அனைத்திற்கும் நாதனும், தேவர்களுக்கும் தேவனும், மங்களங்களுக்குப் பிறப்பிடமும், முக்கண் படைத்தவரும், மங்களரூபியாகிய பார்வதியின் கணவனும் சாந்த வடிவம் கொண்டவரும், மன்மதனை எரித்தவரும், திரிபுரர்களை வென்றவரும் மான மஹேச்வரனே! உம்மைத்தவிர மற்றொருவன் போற்றத் தகுந்தவனாயும் இல்லை; சிறந்தவனாக எங்களால் எண்ணக் கூடியவனாகவும் இல்லை.

 சம்போ4 மஹேச கருணாமய சூலபாணே

       கௌ3ரீபதே பசுபதே பசுபாசநாஸின் |

காஸீபதே கருணயா ஜக3தே3ததே3க:

       த்வம் ஹம்ஸி பாஸி வித4 தா4ஸி மஹேஸ்வரோSஸி ||        10

   கருணை வடிவம் கொண்டவரும், சூலத்தைக் கையில் ஏந்தியவரும், கௌரியின் கணவனும் உயிர்களுக்குப் பதியாயும், பசுவான உயிர்களுடைய பாசத்தை அகற்றுபவரும், காசிக்குப் பதியாயும் இருக்கின்ற மஹேச்வரனே! மங்களங்களைச் செய்யும் சம்புவே! நீர் ஒருவனே இந்த உலகத்தை அழிக்கிறீர்; காப்பாற்றுகிறீர்; படைக்கிறீர்; (ஆகவே நீர்) எல்லோருக்கும் மேலான மஹேச்வரனாக இருக்கிறீர்.

 த்வத்தோ ஜகத் ப3வதி தே3வ ப4வ ஸ்மராரே

       த்வய்யேவ திஷ்ட2தி ஜக3ன் ம்ருட3 விச்வநாத |

தவய்யேவ க2ச்சதி லயம் ஜக3தே3த்தீ3ச

       லிங்கா3த்மகே ஹர சராசரவிச்வரூபின் ||                               11

   தேவரும், மதனனை வென்றவருமான எல்லாவற்றிற்கும் மூலகாரணமாகிய பரமசிவனே! உம்மிடமிருந்து உலகம் உண்டாகிறது. அனைத்திற்கும் நாதனாகிய பரமசிவனே! உண்டாகிய உலகம் உம்மிடத்திலேயே (நிலைத்து) இருக்கிறது. யாவற்றையும் ஆளுபவரும், அசைகின்றதும் அசைவற்றதுமான எல்லாப் பொருளாயுமிருக்கின்ற ஸம்ஹார மூர்த்தியாக சிவனே! லிங்கவடிவங் கொண்ட உம்மிடத்திலேயே இந்த உலகம் லயத்தை அடைகிறது.

 

Related Content

Mahimnastotra

दशश्लोकि - Adishankara's dashashloki

அத்வைத பஞ்சரத்னம் - தமிழ் உரையுடன்

அபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Maha

அர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்