(ஆதிசங்கரர் நக்ஷத்திரங்களின் எண்ணிக்கையைக் கொண்டு 27 சுலோகங்களில் சிவபெருமானின் பெருமையை விளக்குகிறார். ஒவ்வொரு சுலோகத்தின் நான்கடிகளிலும் ‘நமச்சிவாய’ என்று கூறுவதால் 108 முறை இம்மந்திரத்தை உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும் வகையில் இந்த ஸ்தோத்திரத்தை அமைத்திருக்கிறார்.)
ஸ்ரீமதா3த்மனே கு3ணைகஸிந்த4வே நம: சிவாய
தா4மலேசதூ4 தகோகப3ந்த4வே நம: சிவாய |
நாமசேஷிதாநமத்3 ப4வாந்த4வே நம: சிவாய
பாமரேதரப்ரதா4னப3ந்த4வே நம: சிவாய || 1
பரமாத்மாவாகவும் குணப்பெருங்கடலாகவும் உள்ன சிவனுக்கு வணக்கம்; எவனுடைய ஒளிக்கீற்றினால் சூரியனே ஒதுக்கப்படுகின்றானோ அந்த சிவனுக்கு வணக்கம்; நிலையற்ற உலகவாழ்வாகிற பாழுங்கிணறு எவனுடைய பக்தர்களுக்கு இல்லை என்று ஆகிவிடுகிறதோ அந்த சிவனுக்கு வணக்கம்; மெய்ஞானம் பெற்ற மேன்மக்களுக்கு தலையாய சுற்றமாய் இருக்கிற சிவனுக்கு வணக்கம்.
காலபீ4தவிப்ரபா3லபால தே நம: சிவாய
சூலபி4ன்னது3ஷ்டத3க்ஷபா2ல தே நம: சிவாய |
மூலகாரணாய காலகால தே நம: சிவாய
பாலயாது4 நா த3யாலவால தே நம: சிவாய || 2
யமனைக்கண்டு அஞ்சிய அந்தணச் சிறுவனை (மார்க்கண்டேயனை) க் காத்த சிவனுக்கு வணக்கம்; எவனுடைய சூலத்தினால் கொடிய தக்கனுடைய தலை பிளக்கப்பட்டதோ அந்த சிவனுக்கு வணக்கம்; அனைத்திற்கும் மூலகாரணனாயும், காலனாகிற யமனுக்கும் காலனாகவும் இருக்கும் சிவனுக்கு வணக்கம்; அருளுக்கிருப்பிடமானவனே இன்றே காத்தருள்; சிவனாகிய உமக்கு வணக்கம்.
இஷ்டவஸ்து முக்2யதா3ன ஹேதவே நம: சிவாய
து3ஷ்ட தை3த்யவம்ச தூ4மகேதவே நம: சிவாய |
ஸ்ருஷ்டி ரக்ஷணாய த4ர்மஸேதவே நம: சிவாய
அஷ்டமூர்த்தயே வ்ருஷேந்த்3ரகேதவே நம: சிவாய || 3
வேண்டிய பொருளை சிறப்பாகத் தரு வோனாகிய சிவனுக்கு வணக்கம்; கொடிய அரக்கர் குலத்தை அழிக்கும் நெருப்பாக இருக்கின்ற சிவனுக்கு வணக்கம்; சிருஷ்டித் தொழிலையும் காத்தல் தொழிலையும் செய்து கொண்டு அறநெறியெனும் பாலமாக அமைந்துள்ள சிவனுக்கு வணக்கம்; (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயமானன், சந்திரன், சூரியன் ஆகிய) எட்டு உருவங்களைக் கொண்டவனாயும் இடபக்கொடியை உடையவனாயும் உள்ள சிவனுக்கு வணக்கம்.
ஆபத3த்3ரிபே4த3 டங்க ஹஸ்த தே நம: சிவாய
பாபஹாரிதி3வ்யஸிந்து4 மஸ்த தே நம: சிவாய |
பாபதா3ரிணே லஸந்நமஸ்ததே நம: சிவாய
சாபதோ3ஷ க3ண்டனப்ரசஸ்த தே நம: சிவாய || 4
இன்னலெனும் மலையை வெட்டித் தள்ளும் உளியாகிற (அபய) கரத்தை உடைய சிவனுக்கு வணக்கம்; பாவங்களைப் போக்கும் ஆகாய கங்கையைத் தலையிலுடைய சிவனுக்கு வணக்கம்; பாவங்களைப் போக்குகின்றவனாயும், நம: நம: என்று தொடர்ந்து வணங்கப்படுகின்றவனாயும் உள்ள சிவனுக்கு வணக்கம்; சாபங்களால் ஏற்படும் குற்றங்களைக் கடிவதில் புகழ் மிக்கவனான சிவனுக்கு வணக்கம்.
வ்யோமகேச தி3வ்யப4வ்ய ரூப தே நம: சிவாய
ஹேமமேதி3நீத4 ரேந்த்3ரசாப தே நம: சிவாய |
நாமமாத்ரத3க்3த4 சர்வபாப தே நம: சிவாய
காமனை கதானஹ்ருத்3து3ராப தே நம: சிவாய || 5
ஆகாயத்தையே செஞ்சடையாக உடையவனும், திவ்யமங்கள ரூபனாயும் உள்ள சிவனுக்கு வணக்கம்; பொன் மலையாகிற மேருவை வில்லாக உடைய சிவனுக்கு வணக்கம்; எவனுடைய பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அனைத்துப் பாவங்களும் பொசுக்கப்படுகின்றனவோ அந்த சிவனுக்கு வணக்கம். பொருள் வேட்கையிலே நாட்டம் கொண்ட இதயத்தோரால் அடையமுடியாத அச் சிவனுக்கு வணக்கம்.
ப்3ரம்ஹ மஸ்தகாவலீநிப3த்3த4 தே நம: சிவாய
ஜிம்ஹகே3ந்த்2ரகுண்டலப்ரஸித்3த4 தே நம: சிவாய |
ப்3ரம்ஹணே ப்ரணீத வேத3 பத்3த4தே நம: சிவாய
ஜிம்ஹகாலதே3ஹத3 த்தபத்3த4 தே நம: சிவாய || 6
பிரமனின் மண்டையோடுகளை மாலையாக அணிந்துள்ள சிவனுக்கு வணக்கம்; சிறந்த நாகங்களை குண்டலமாக அணிவதில் பிரசித்தனான சிவனுக்கு வணக்கம்; பிரம்மாவின் பொருட்டு வேத நெறிமுறையை வகுத்த சிவனுக்கு வணக்கம்; கோணல் புத்தியுள்ள யமனுடைய உடலைக் காலாலுதைத்த சிவனுக்கு வணக்கம்.
காமநாசனாய சுத்3த4 கர்மணே நம: சிவாய
ஸாமகா3ன ஜாயமானசர்மணே நம: சிவாய |
ஹேமகாந்தி சாகசக்யவர்மணே நம: சிவாய
ஸாமஜாஸுராங்க3லப்3த4 சர்மணே நம: சிவாய || 7
காமனைக் காய்ந்தவனும் தூய்மைப்படுத்தும் செயல்களைச் செய்கின்றவனுமான சிவனுக்கு வணக்கம்; சாமவேத கானத்தால் மகிழ்கின்ற சிவனுக்கு வணக்கம்; பொன்னொளியின் மினுமினிப்பால் சூழப்பட்ட சிவனுக்கு வணக்கம்; கஜாசுரனின் அங்கத்தினின்றும் பெறப்பட்ட தோலை (அணிந்தவனுக்கு) வணக்கம்.
ஜன்மம்ருத்யுகோ4ரது: க2ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூபதே3ஹதா4ரிணே நம: சிவாய |
மன்மனோரதா2வபூர்த்தி காரிணே நமசிவாய
ஸன்மனோக3தாய காமவைரிணே நம: சிவாய || 8
பிறப்பிறப்பென்னும் கோரமான துக்கத்தைப் போக்குகின்ற சிவனுக்கு வணக்கம்; ஞானமே உருவான உடலைத் தாங்கியுள்ள சிவனுக்கு வணக்கம்; எனது எண்ணத்தை நிறைவேற்றுகின்ற சிவனுக்கு வணக்கம்; நன்மக்களின் உள்ளத்தில் உறைபவனும் மன்மதனின் எதிரியுமாகிய சிவனுக்கு வணக்கம்.
யக்ஷராஜப3ந்த4வே த3யாலவே நம: சிவாய
த3க்ஷபாணிசோபி4 காஞ்சனாலவே நம: சிவாய |
பக்ஷிராஜவாஹஹ்ருச்ச2 யாலவே நம: சிவாய
அக்ஷபா2ல வேதபூததாலவே நம: சிவாய || 9
குபேரனுக்குச் சுற்றமாயும் அருள்புரிவோனாயுமுள்ள சிவனுக்கு வணக்கம்; வலது கரத்தில் விளங்கும் பொற்குடுவையை உடைய சிவனுக்கு வணக்கம்; கருடவாகனனாகிய திருமாலின் இதயத்தில் சயனித்திருக்கும் சிவனுக்கு வணக்கம்; நெற்றிக்கண்ணையும், வேதமோதுவதால் புனிதமான வாயையும் பெற்ற சிவனுக்கு வணக்கம்.
த3க்ஷஹஸ்தநிஷ்ட2 ஜாதவேத3ஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்3பி3டெள3ஜஸே நம: சிவாய |
தீ3க்ஷிதப்ரகாசிதாத்மதேஜஸே நம: சிவாய
உக்ஷராஜவாஹதேஸதாம் க3தே நம: சிவாய || 10
வலக்கரத்தில் அழலேந்திய சிவனுக்கு வணக்கம்; நித்திய பரமாத்மாவும் இந்திரனால் வணங்கப்பெற்றவருமான சிவனுக்கு வணக்கம்; தீக்கை பெற்றவர்களிடத்தே தன் பேரொளியைப் பிரகாசிக்கச் செய்யும் சிவனுக்கு வணக்கம்; இடப வாகனனும், நன்மக்களுக்குப் புகலிடமாயும் இருக்கும் சிவனுக்கு வணக்கம்.
ராஜதாசலேந்த்3ரஸா நுவாஸினே நம: சிவாய
ராஜமானநித்யமந்த3 ஹாஸினே நம: சிவாய |
ராஜகோரகாவதம்ஸ பா4ஸினே நம: சிவாய
ராஜராஜமித்ரதாப்ரகாசினே நம: சிவாய || 11
வெள்ளியங்கிரியின் பக்கலில் வசிக்கின்ற சிவனுக்கு வணக்கம்; பிரகாசிக்கின்றவனும் என்றும் புன் சிரிப்புடன் கூடியவனுமான சிவனுக்கு வணக்கம்; சந்திரப்பிறையைத் தலையில் சூடியவனான ஒளிபொருந்திய சிவனுக்கு வணக்கம்; குபேரனிடம் நட்பிலே பிரகாசிக்கும் சிவனுக்கு வணக்கம்.
தீ3னமானவாலிகாமதே4னவே நம: சிவாய
ஸூனபா3ண தா3ஹக்ருத்க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநுராக3 ப4க்தரத்னஸாநவே நம: சிவாய
தா3னவாந்த4 காரசண்ட3பா4னவே நம: சிவாய || 12
இரக்கத்திற்குரிய மக்கட் சமூகத்திற்கு காமதேனுவாக விளங்கும் சிவனுக்கு வணக்கம்; மலர்க்கணைகளை உடைய (மன்மதனை) எரியூட்டிய அக்கினியாய சிவனுக்கு வணக்கம்; தன்னிடத்து அன்பு செலுத்தும் பக்தர்களுக்கு மேரு மலை போன்றிருக்கும் சிவனுக்கு வணக்கம்; அரக்கரெனும் இருளைப் போக்கும் சூரியனாக விளங்கும் சிவனுக்கு வணக்கம்.
ஸர்வமங்க3ளாகுசாக்3ரசாயிநே நம: சிவாய
ஸர்வதே3வதாக3ணாதிசாயிநே நம: சிவாய |
பூர்வதே3 வநாசஸம்விதா4யிநே நம: சிவாய
ஸர்வமன்மனோஜப3ங்கதா3யிநே நம: சிவாய || 13
'ஸர்வமங்களா' என்னும் பார்வதி தேவியின் மார்பகத்திலே சயனித்துக் கொண்டிருக்கும் சிவனுக்கு வணக்கம்; எல்லா தேவதை கணங்களுக்கும் மேம்பட்டவனான சிவனுக்கு வணக்கம்; அசுரகுலத்தை அழித்த சிவனுக்கு வணக்கம்; காமத்தின் விளைவுகளனைத்தையும் முறியடிக்கின்ற சிவனுக்கு வணக்கம்.
ஸ்தோகப4க்திதோsபி ப4க்தபோஷிணே நம: சிவாய
மாகரந்த3ஸார வர்ஷிபா4ஷிணே நம: சிவாய |
ஏகபி3ல்வதா3னதோSபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்மபாபஜால சோஷிணே நம: சிவாய || 14
சிறிதளவு பக்தி இருந்தாலும் அத்தகைய பக்தர்களைப் போஷிக்கின்ற சிவனுக்கு வணக்கம்; தேன்ரசத்தைப் பிலிற்றும் இன்சொல்லை உடைய சிவனுக்கு வணக்கம்; ஒரு வில்வத்தை அளித்தாலும் அதனால் மகிழ்கின்ற சிவனுக்கு வணக்கம்; அனேக பிறப்புக்களில் சேர்ந்த பாபக்கூட்டத்தை வற்றச் செய்யும் சிவனுக்கு வணக்கம்.
ஸர்வஜீவரக்ஷணைகசீலினே நம: சிவாய
பார்வதீப்ரியாய ப4க்தபாலினே நம: சிவாய |
துர்வித3க்3த4தை3த்ய ஸைந்ய தா3ரிணே நம: சிவாய
சர்வரீசதா4ரிணே கபாலினே நம: சிவாய || 15
எல்லா உயிர்களையும் காப்பதையே நெறியாகக் கொண்ட சிவனுக்கு வணக்கம்; பார்வதியிடத்தில் பிரியமுள்ளவனும் பக்தர்களைக் காத்தருள்பவனுமான சிவனுக்கு வணக்கம்; கொடிய அசுர சேனைகளை அழித்த சிவனுக்கு வணக்கம்; இரவின் நாயகனான சந்திரனையும், கபாலத்தையும் தரித்துள்ள சிவனுக்கு வணக்கம்.
பாஹி மாம் உமாமனோஜ்ஞதே4ஹ தே நம: சிவாய
தேஹி மே வரம் ஸிதாத்3ரிகே3ஹதே நம: சிவாய |
மோஹிதர்ஷிகாமினீஸமூஹ தே நம: சிவாய
ஸ்வேஹிதப்ரஸந்ந காமதோ3ஹ தே நம: சிவாய || 16
உமையோடு கூடியதான அழகிய தேகத்தை உடையவனே என்னைக் காப்பாற்று; சிவனாகிய உமக்கு வணக்கம்; வெண் (பனி) மலையில் வசிப்போனே! எனக்கு வரமருள்வாய். சிவனாகிய உமக்கு வணக்கம்; ரிஷிபத்தினிக் கூட்டத்தை மோகமறச் செய்தவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; நீர் விரும்பியதை யெல்லாம் முடிப்பதனால் பிரசன்னனாயிருக்கிறீர், வேண்டியதையெல்லாம் தருகின்றவனாகிய சிவனாம் உமக்கு வணக்கம்.
மங்க3ளப்ரதா3ய கோ3துரங்க3 தே நம: சிவாய
க3ங்க3யா தரங்கி3தோத்தமாங்க3 தே நம: சிவாய
ஸங்க3ரப்ரவ்ருத்தவைரிப4ங்க3தே நம: சிவாய
அங்க3 ஜாரயே கரேகுரங்க3தே நம: சிவாய || 17
விரைவாகச் செல்லும் இடபத்தை உடையவனே! மங்களத்தைத் தருபவனான சிவனுக்கு வணக்கம்; கங்கையின் அலைபாயும் முடியை உடையவனே! சிவனாகிற உமக்கு வணக்கம்; போரில் ஈடுபட்ட எதிரிகளை ஒடுக்கியவனே; சிவனாகிற உமக்கு வணக்கம்; மன்மத விரோதியே, மானேந்திய கையனே, சிவனாகிற உமக்கு வணக்கம்.
ஈஹிதக்ஷணப்ரதா3ன ஹேதவே நம: சிவாய
ஆஹிதாக்னிபாலகோக்ஷகேதவே நம: சிவாய
தே3ஹகாந்திதூ4தரெளப்யதா4தவே நம: சிவாய
கே3ஹது: க2புஞ்ஜதூ4மகேதவே நம: சிவாய || 18
வேண்டியதை அக்கணத்திலேயே தரவல்லவனாகிய சிவனுக்கு வணக்கம்; தீயோம்பவோரைக் காப்பவனும் இடபக்கொடியோனுமாகிய சிவனுக்கு வணக்கம்; தனது தேககாந்தியினால் வெள்ளி உலோகத்தை வெல்லக்கூடிய சிவனுக்கு வணக்கம்; இல்வாழ்வின் துக்கத் தொகுதியினை அழிக்கும் தீயாகிய சிவனுக்கு வணக்கம்.
த்ர்யக்ஷ தீ3னஸக்த்ருபாகடாக்ஷ தே நம: சிவாய
த3க்ஷஸப்ததந்து நாசத3க்ஷ தே நம: சிவாய |
ருக்ஷராஜபா4நுபாவகாக்ஷ தே நம: சிவாய
ரக்ஷ மாம் ப்ரபந்நமாத்ர ரக்ஷ தே நம: சிவாய || 19
முக்கண்ணனே, எளியவருக்கு நன்மை பயக்கும் வண்ணம் திருவருட் பார்வையை நல்கும் சிவனுக்கு வணக்கம்; தக்கன் வேள்வியை அழிப்பதில் சமர்த்தனான சிவனுக்கு வணக்கம்; சந்திரன் சூரியன், அக்கினி ஆகியவற்றை (முக்) கண்களாக உடைய சிவனுக்கு வணக்கம்; சரணடைந்த மாத்திரத்தே காத்தருளுகின்றவனே, என்னைக் காத்தருள்வாயாக; சிவனாகிய உமக்கு வணக்கம்.
ந்யங்குபாணயே சிவங்கராய தே நம: சிவாய
ஸங்கடாப்3தி4தீர்ண கிங்கராய தே நம: சிவாய |
கங்கபீ4ஷிதாப4யங்கராய தே நம: சிவாய
பங்கஜாநநாய சங்கராய தே நம: சிவாய || 20
மானைக் கையில் தாங்குபவனே, மங்களத்தைச் செய்கின்ற சிவனாகிய உமக்கு வணக்கம்; இடரெனும் கடலைக் கடத்துவிப்பதில் பணியாளெனப் பணியாற்றும் சிவனுக்கு வணக்கம்; யமனிடம் அஞ்சுவோருக்கு அபயம் தருகின்ற சிவனுக்கு வணக்கம்; தாமரை போன்ற அழகிய முகத்தை உடையவனும் நல்லனவற்றையே செய்பவனுமான சிவனுக்கு வணக்கம்.
கர்மபாசநாச நீலகண்ட2 தே நம: சிவாய
சர்மதா3ய வர்யப4ஸ்ம கண்ட2தே நம: சிவாய |
நிர்மமர்ஷிஸேவிதோபகண்ட2 தே நம: சிவாய
குர்மஹே நதீர் நமத்3வகுண்ட2 தே நம: சிவாய || 21
கருமமெனும் பாசத்தை நாசம் செய்பவனும் திருநீலகண்டனுமான சிவனுக்கு வணக்கம்; சுகத்தை அளிப்பவனும் மன்மதன் சாம்பலை கண்டத்தில் அணிந்தவனுமான சிவனுக்கு வணக்கம்; 'எனது' என்ற பற்றற்ற ரிஷிகளால் அருகேயிருந்து சேவிக்கப்படுகின்ற சிவனுக்கு வணக்கம்; வணங்குவோரிடத்து சோம்பலின்றி (அருள்பவனாக) உள்ளவனே, உமக்கு வணக்கம் பல சிவனாகிய உமக்கு வணக்கம்.
விஷ்டபாதி4பாய நம்ரவிஷ்ணவே நம: சிவாய
சிஷ்டவிப்ரஹ்ருத3கு3ஹாசரிஷ்ணவே நம: சிவாய |
இஷ்டவஸ்துநித்யதுஷ்டஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்டநாசனாய லோகஜிஷ்ணவே நம: சிவாய || 22
தேவலோகத்ததிபனும் விஷ்ணுவால் வணங்கப்படுகின்றவனுமான சிவனுக்கு வணக்கம்; ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர்களின் இதயக்குகையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சிவனுக்கு வணக்கம்; வேள்வியில் இட்ட பொருளை ஏற்று என்றும் மகிழ்கின்றவனும் அனைத்தையும் வென்றவனுமான சிவனுக்கு வணக்கம்; இடர்களைவோனும் உலகியலை வென்றவனுமான சிவனுக்கு வணக்கம்.
அப்ரமேய தி3வ்யஸுப்ரபா4வதே நம: சிவாய
ஸத்ப்ரபன்னரக்ஷணஸ்வபா4வ தே நம: சிவாய |
ஸ்வப்ரகாச நிஸ்துலானுபா4வ தே நம: சிவாய
விப்ரடி3ம்ப4த3ர்சிதார்த்3ரபாவ தே நம: சிவாய || 23
அளவிடற்கரியனும், திவ்யமான நற்பெருமையுடையவனுமான சிவனுக்கு வணக்கம்; அடைக்கலமடைந்த நல்லோர்களைக் காக்கும் இயல்பை உடைய சிவனுக்கு வணக்கம்; சுயம்பிரகாசமாயும் இணையற்ற வீரியம் உடையவனாயும் இருக்கிற சிவனுக்கு வணக்கம்; அந்தணச் சிறுவனுக்கு (மார்க்கண்டேயனுக்கு) அருட்பான்மை காட்டிய சிவனுக்கு வணக்கம்.
ஸேவகாய மே ம்ருட3 ப்ரஸீத3 தே நம: சிவாய
பா4வலப்4ய தாவகப்ரஸாத3 தே நம: சிவாய |
பாவகாக்ஷ தேவபூஜ்யபாத3 தே நம: சிவாய
தாவகாங்க்4ரி ப4க்த த3த்தமோத3 தே நம: சிவாய || 24
கருணாமூர்த்தியே, அடியேனாகிய எனக்கு அருள்புரிய வேண்டும். சிவனாகிய உமக்கு வணக்கம்; பக்தியினால் பெறக்கூடியது உமது அருள்; சிவனாகிய உமக்கு வணக்கம்; அக்கினிக் கண்ணனே, தேவர்கள் வழிபடும் திருவடியுடையோனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; தங்கள் திருவடிப்பேற்றினால் பக்தர்களை மகிழ்விப்பவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்.
பு4க்தி முக்தி தி3வ்யபோ4கதா3யினே நம: சிவாய
சக்திகல் பிதப்ரபஞ்சபா4கி3னே நம: சிவாய
ப4க்தஸங்கடாபஹாரயோகி3னே நம: சிவாய
யுக்தஸந்மனஸ்ஸரோஜயோகி3னே நம: சிவாய || 25
இம்மையின்பம், முக்தியின்பம், தேவலோக இன்பம் ஆகியவற்றை அருளும் சிவனுக்கு வணக்கம்; (தனது மாயா) சக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சத்தை உடையவனான சிவனுக்கு வணக்கம்; பக்தர்களின் இடர்களைப் போக்குவதில் ஈடுபட்டுள்ள சிவனுக்கு வணக்கம். யோக நெறியில் நிற்கும் மேன்மக்களின் மனமாகிற தாமரையில் பொருந்தியிருக்கும் சிவனுக்கு வணக்கம்
அந்தகாந்தகாய பாபஹாரிணே நம: சிவாய
சந்தமாய த3ந்திசர்மதா4ரிணே நம: சிவாய |
ஸந்ததாச்ரிதவ்யதா2 விதா3ரிணே நம: சிவாய
ஜந்துஜாதநித்யஸௌக்2யகாரிணே நம: சிவாய || 26
கூற்றுவனுக்கும் கூற்றுவனாயும் பாபத்தைப் போக்குகின்றவனாயுமுள்ள சிவனுக்கு வணக்கம்; மேலான மக்கள் சொரூபனாயும் யானைத்தோலை தரிக்கின்றவனாயுமுள்ள சிவனுக்கு வணக்கம்; என்றும் தன்னிடம் புகலடைவோரின் துன்பத்தைப் போக்குகின்ற சிவனுக்கு வணக்கம்; எல்லா உயிர் வர்க்கங்களுக்கும் என்றும் நலம் புரிகின்ற சிவனுக்கு வணக்கம்.
சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சிமுண்ட3 மாலினே நம: சிவாய |
லீலினே விசேஷருண்ட3 மாலினே நம: சிவாய
சீலினே நம : ப்ரபுண்யசாலினே நம: சிவாய || 27
சூல மேந்தியவனே வணக்கம்; கபாலமேந்திய சிவனுக்கு வணக்கம்; காத்தற்றொழிலைச் செய்பவனே, பிரமனின் ஓட்டுமாலை யணிந்தவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; திருவிளையாடல் புரிகின்றவனே, விசேடமான கபந்தமாலை யணிந்தவனே, சிவனாகிய உமக்கு வணக்கம்; சீலம் பொருந்தியவனே வணக்கம்; மிகுதியும் புண்ணியசாலியாகிய சிவனுக்கு வணக்கம்.
சிவபஞ்சாக்ஷரமுத்3ரா சதுஷ்பதோ3ல்லாஸ பத்3யமணிக3டிதாம் |
நக்ஷத்ரமாலிகாம் இஹ த3த4து3பகண்ட2ம் நரோ பவேத்-ஸோம: || 28
எந்த ஒரு மனிதன் சிவபஞ்சாக்ஷரமான 'நமசிவாய' எனும் மந்திரத்தை முத்திரையாக ஒவ்வொரு அடியிலும் கொண்டதும், இரத்தினங்கள் போன்ற (இருபத்தேழு) பாக்களால் அமைக்கப்பெற்றதுமான இந்த நக்ஷத்திர மாலையை தனது கண்டத்தில் அணிகின்றானோ அவன் உமையொரு பாகனான சிவனே ஆவான்.