logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஶ்ரீ சிவ கேசாதிபாதாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்

(சங்கரர் இயற்றியது)

(கேசத்திலிருந்து பாதம் வரை ஒவ்வோர் அங்கமாக வர்ணிப்பதையே “கேசாதி பாதாந்த வர்ணன ஸ்தோத்ரம்” எனப்படும்.)

தே3யாத்ஸுமூர்த்4நி ராஜத்ஸரஸஸுரஸரித் - பாரபர்யந்த நிர்யத் -

       ப்ராம்சுஸ்தம்பா2: பிசங்காஸ்துலித-பரிணதாரக்த சாலீலதா வ: |

து3ர்வாராபத்திக3ர்தசரிதநிகி2லஜநோத் - தாரணே ரஜ்ஜுபூ4தா:

       கோ4ராகோ4ர்வீருஹாலீத3 ஹநசிகி2சிகா2: சர்ம சார்வா: கபர்தா3: ||     1

       கங்கைப் பிரவாகம் கரைபுரண்டு ஓடும்பொழுது அதன் இருகரையோரங்களில் முளைத்த புல்போல காட்சி அளிக்கின்றவைகளும், மஞ்சள் நிறம் பூண்டு பழுத்துச் சிறிது சிவப்போடிப் பாதி மடிந்து கிடக்கும் நெற்பயிர் போன்றவைகளும், தாளாத் துயரம் என்கிற படு குழியில் விழுந்து மேலேற வழி தெரியாமல் துன்புறும் மாந்தர் களைக் கரையேற்றுவதற்கு உகந்த கயிறு போன்றவைகளும். பாவமென்னும் விஷ மரங்களை எரித்துச் சாம்பலாக்குவதற்கு அக்னி சிகை போன்றவைகளுமான பரமசிவன் தலையில் விளங்கும் ஜடைகள் நமக்கு க்ஷேமத்தைக் கொடுக்க வேண்டும்.

குர்வந்நிர்வாணமார்க3ப்ரக3 மபரிலஸத்2 ரூப்யஸோபானசங்காம்

       சக்ராரீணாம் புராணாம் த்ரயவிஜயக்ருத–ஸ்பஷ்டரேகா2யமாணம் |

அவ்யா த3வ்யாஜமுச்சைரலிகஹிமத4ரா-தி4த்யகாந்தஸ்த்ரிதோ4 த்3யஜ்-

       ஜாஹ்நவ்யாப4ம் ம்ருடா3நீகமிதுருடு3பருக்-பாண்ட3ரம் வஸ்த்ரி-புண்ட3ரம்

                                                                                  || 2

      பரமசிவன் நெற்றியில் மூன்று பட்டையாய் அணிந்த திருநீறு. முக்திவழிச் செல்வோருக்கு எளிதாய் ஏறுவதற்குக் கட்டிய வெள்ளிப்படிக்கட்டு போன்றும், தேவர்களின் பகைவர்களாகிய புரர்கள் என்ற மூன்று அசுரர்களை வென்றதற்கு அடையாளமான மூன்று கோடுகள் போன்றும், நெற்றியென்னும் இமாலயத்தில் நின்று மூன்றாகப் பெருகும் கங்கையைப் போன்றும் விளங்குகிறது. சந்திரனைப் போன்ற வெளுப்பான அந்த முப்பட்டைகள் உங்களைக் கபடமின்றி எப்பொழுதும் இன்புறச் செய்யவேண்டும்

க்ருத்3த்4யத்3 கௌ3ரீப்ரஸாதா3நதிஸமய-பதா3ங்கு3ஷ்ட3 ஸங்க்ராந்தலாக்ஷா-

       3ந்து3 ஸ்பர்தி4 ஸ்மராரே: ஸ்படி3கமணித்3 ருஷந்-மக்3நமாணிக்ய-சோப4ம் |

மூர்த்4ந்யுத்3யத்3 தி3வ்யஸிந்தோ4: பதித-சபரிகாகாரி வோ மஸ்தகம் ஸ்தாத்

       அஸ்தோகாபத்திக்ருத்யை ஹூதவஹகணிகா-மோக்ஷரூக்ஷம்-ஸதா3zக்ஷி

                                                                                  || 3

     ஊடலால் கோபித்த பார்வதியைச் சமாதானம் செய்வதற்காக தேவியின் திருவடிகளில் தனது நெற்றி இடிக்கும்படி பணிந்து தவறுதலை மன்னிக்கும்படி கேட்டபொழுது, தேவியின் கால் பெருவிரலிலிருந்து ஒட்டிக்கொண்ட செம்பஞ்சுக் குழம்பு போன்றதும், நெற்றியாகிற ஸ்படிகக்கல்லில் புதைத்த மாணிக்கம் போன்றதும், தலையிலிருக்கும் தேவகங்கையிலிருந்து துள்ளிக்குதித்துத் தவறி வந்தப் பெண்மீனோ என்று வியக்கத்தக்கதும், எப்பொழுதும் நெருப்புத் துளியைக் கக்குவதால் பயங்கரமாயுமிருக்கின்ற சிவபெருமானுடைய நெற்றிக்கண் உங்களுடைய எவ்விதமான பெரும் ஆபத்தையும் அகற்ற உதவவேண்டும்.

பூ4த்யை த்3ருக்3பூ4தயோ: ஸ்யாத்3யத3ஹிமஹிமருக்3 பி3ம்ப3யோ: ஸ்நிக்த4-

                                                                     வர்ணோ

       தை3த்யௌக4த்4வம்ஸசம்ஸீ ஸ்பு3ட இவ பரிவேஷோzதவசேஷோ

                                                                     விபா4தி |

ஸர்க3ஸ்தி2யந்தவ்ருத்திர்மயி ஸமுபக3 தேzதீவ நிர்வ்ருத்தக3ர்வம்

       சர்வாணீப4ர் துருச்சைர்யுக3 லமத2 த3த4த்3 விப்4ரமம் தத்3 ப்4ருவோர்: || 4

       சந்திரனும், சூரியனும் பகவானுடைய கண்கள் என ஆகமங்களும், புராணங்களும் கூறுகின்றன. அவ்விருவர்களும் சிவபெருமானின் கண்ணானபொழுது தனித்திருக்கும் அவர்களுடைய பரிவேஷம் (சுற்றிலுமிருக்கும் வட்டம்) புருவங்களாகத் தோன்றுகின்றன. அவ்விதம் தனித்துக் காணப்படுவது இயற்கைக்கு மாறானதால் அதை ஒரு அபசகுனமாகக் கருதுவதுண்டு. ஆகவே, அசுராகளுக்குக் கேடுகாலம் நெருங்கிவந்த தன் அறிகுறியாக அந்தப் புருவங்கள் தோன்றுவதாகக் கூறுகிறார். எவை ஆக்கல், காத்தல், அழித்தல் என்கின்ற செய்கைகளைச் செய்துகொண்டிருக்கின்றன வோ, அசுரர்களிடத்தில் கட்டிலடங்கா கர்வங்கொண்டிருந்தபோதிலும் நீயே சரணம் என உனது திருவடியில் வீழ்ந்து கிடக்கும் ஏழையாகிய என்னிடத்தில் சற்றும் கர்வம் இல்லாததும், அழகின் லக்ஷணங்கள் பொருந்தியதுமான அந்தப் பரமசிவனின் இரண்டு புருவங்களும் ஐசுவரியத்தை அளிக்கட்டும்.

யுக்3மே ருக்மாப்3 ஜபிங்கே3 க்3ரஹ இவ பிஹிதே த்3ராக்யயோ: ப்ராக்3

                                                                     து3ஹித்ரா

       சைலஸ்ய த்4வாந்த நீலாம்ப3ரரசிதப்3ருஹத்-கஞ்சுகோzபூ4த் ப்ரபஞ்ச: |

தே த்ரைநேத்ரே பவித்ரே த்ரித3சவரக4டாமித்ர-ஜைத்ரோக்3ரசஸ்த்ரே

       நேத்ரே நேத்ரே ப4வேதாம் த்3ருதமிஹ ப4வதாமிந்த்3 ரியாச்வாந்-நியந்தும்

                                                                                  || 5

      பரமசிவன் கண்கள் சூரிய சந்திர வடிவமானதால், பார்வதி ஒரு சமயம் அவருடைய கண்களைப் பொத்திய போது, உலகம் கிரஹணம் முழுவதும் ஏற்பட்ட நேரத்தைப்போல - இருள் கவிந்து மூடிக்கொண்டு விட்டது. அசுரர்களை வெல்வதற்குச் சிறந்த ஆயுதமான அந்தப் பரமசிவனின் கண்கள் எனது புலன்களாகிய குதிரைகளை அடக்கும் சாரதிகளாக ஆகட்டும்.

குறிப்பு: -

       பரமசிவனிள் வலதுகண்ணானது திறந்தால் பகலும், மூடினால் இரவும் ஏற்படுகிறது என புராணங்களில் காணப்படுகிறது. அம்மாதிரியே கிரஹணங்கள் கூட பார்வதிதேவி சிவனின் கண்களை மூடுவதாலேயே உண்டாகின்றது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

சண்டீ3 வக்த்ரார்பணேச்சோ2ஸ்த்த3நு ப4கவத: பாண்டு3ருக்பாண்டு3 க3ண்ட3

       ப்ரோத்3 யத்கண்டூ3ம் விநேதும் விதநுத இவ யே ரத்ன கோணைர்விக்4-

                                                                           ருஷ்டிம் |

சண்டா3ர்சிர்மண்ட3லாபே4 ஸத்தந்தஜன - த் வாந்தக ண்டா திசௌண்டே '

       சாண்டீ3சே தே ச்ரியே ஸ்தாமதி4கம் அவனதாக2ண்ட3லே குண்ட3லே தே

                                                                                  || 6

      பரமசிவன் காதில் இரத்தினமிழைத்து சூரிய மண்டலம் போல் ஒளி வீசிக் கொண்டு தொங்குகின்ற எந்தக் காதணிகள் தனது ஒளியால் அவர் கன்னங்களை வெண்மையாகத் தோன்றச் செய்கின்றனவோ; சிவன் சண்டீச்வரியின் இதழைப் பருக ஆவலோடு அசைந்து அணுகியபொழுது கன்னத்தில் இருக்கும் தினவை அகற்றுவது போல எவை உராய்கின்றனவோ; தனது திருமலரடி பணிந்து சேவிப்போர் உள்ளத்தின் இருளை அகற்றுவதில் திறன் கொண்டவைகளும், தேவேந்திரன் பணிவதுமான சண்டீசுவரனுடைய அந்தக் காதணிகள் உங்களுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுப்பவைகளாய் இருக்கட்டும்.

க2ட்வாங்கோ3த3க்3ரபரணே: ஸ்பு2டவிகட புடோ வக்த்ரரந்த்4ரப்ரவேச-

       ப்ரேப்ஸூத3ஞ்சத்ப2ணோருச்வஸத3தி-த4வளாஹீந்த்3ரசங்காம் த3தா4ன: |

யுஷ்மாகம் கம்ரவக்த்ராம்பு2 ருஹ-பரிலஸத்கர்ணிகாகாரசோப4:

       ச்வத் த்ராணாய பூ4யாத3லமதி-விமலோத்துங்க3கோண: ஸகோண: || 7

       கையில் கட்வாங்கம் தாங்கி நிற்கும் பரமசிவனுடைய முகத்தில் விளங்கும் மூக்கு உயர்ந்திருப்பதால், வாய் என்னும் துவாரத்தில் நுழைய விருப்பங்கொண்டு படமெடுத்துச் சீறும் பாம்போவென ஐயத்தை உண்டாக்குவதும், முகமாகிய செந்தாமரைக்கிடையில் ஒளிரும் கர்ணிகார புஷ்பத்தின் வடிவம் கொண்டதும், நுனியில் சற்று மேல் தூக்கி முகத்திற்குக் கவர்ச்சியளிப்பதுமாக விளங்கும் அந்த மூக்கு உங்களை எப்பொழும் காக்க வேண்டும்.

குறிப்பு: - கட்வாங்கம் என்பது நுனியில் மண்டையோட்டையுடைய ஓர் தடி.

க்ருத்3த4 யத்யத்3தா4 யயோ: ஸ்வாம் தனுமதி லஸதோர் பி3ம்பி3 தாம்லக்ஷயந்தீ

       ப4ர்த்ரே ஸ்பர்தா4 திநிக்4நா முஹுரிதரவதூ4-சங்கயா சைலகன்யா |

யுஷ்மாம்ஸ்தௌ சச்வது3ச்சைப3ஹுலத3சமீ-சர்வரீசாதிசுப்4ரௌ

       அவ்யாஸ்தாம் தி3வ்யஸிந்தோ4: கமிதுரவனமல்லோகபாலௌ கபோ

                                                                           லௌ || 8

       அலம்பித் துடைத்து விளங்கும் ஸ்படிகக் கல்போன்ற சிவபெருமான் கன்னங்களில் பார்வதி அன்னை தனது நிழலையே கண்டு வேறு பெண் இருப்பதாய் நினைத்து கணவனிடம், சக்களத்தியிடம் உள்ள பொறாமையால் அதிகமாகக் கோபிக்க நேருகிறது. அத்தகைய சுக்லபக்ஷ தசமி சந்திரன் போல காணப்படுவதும், இந்திரன், விஷ்ணு முதலிய லோக பாலர்கள் வணங்குவதுமான, கங்காதேவியினிடம் அன்புகொண்ட பரமசிவனுடைய கன்னங்கள் நம்மைக் காக்க வேண்டும்.

யோ பா4ஸா பா4த்யுபாந்தஸ்தி2த இவ நிப்4ருதம் கௌஸ்துபோ4 த்ரஷ்டு-மிச்ச2ன்

       ஸோத்த2ஸ்நேஹாந்நிதாந்தம் க2லக2தக3ரலம் பத்யுருச்சை: பசூனாம் |

ப்ரோத்3யத்ப்ரேம்ணா யமார்த3ரா பிப2தி கி3ரிஸுதா ஸம்பத3: ஸாதிரேகா

       லோகா: சோணீக்ருதாந்தா யத3த4ரமஹஸா ஸோ த4ரோ வோ-

                                                                     வித4த்தாம் || 9

       பரமசிவனுடைய கழுத்திற்குச் சற்று உயரத்தில் இருக்கும் உதடு பாலாழியின் உடன் பிறந்த காலகூட விஷத்தைக்கண்டு இன்புற விரும்பி, கௌஸ்துபம்தான் வந்து விட்டதோ என்று காண்போரை நினைக்கச் செய்கிறது. உவகைப் பெருக்கால் மெய்மறந்து பார்வதி தேவி இந்த உதட்டையே பருகுகிறாள். இது தனது பரவிய ஒளியால் உலகனைத்தையும் சிவப்புறச் செய்கிறது. இத்தகைய பெருமைவாய்ந்த சிவபெருமானுடைய கீழ் உதடு நமக்கு எல்லாவற்றிலும் மேம்பட்ட செல்வங்களைஅளிக்க வேண்டும்.

அத்யர்த2ம் ராஜதே யா வத3னசசதராத் உத்க3லச்சாருவாணீ-

       பீயூஷாம்ப4: ப்ரவாஹப்ரஸரபரிலஸத்-பே2னபி3ந்த் வாவலீவ |

தே3யாத் ஸா த3ந்தபங்க்திச்சிரமிஹ த3நுதா3யாத3தௌ3வாரிகஸ்ய

       த்3யுத்யா தீ3ப்தேந்து3 குந்த3ச்ச2 விரமலதர-ப்ரோன்னதாக்3ரா முத3ம் வ: ||

                                                                                  10

      எந்தப் பல்வரிசை, முகமென்னும் சந்திரனில் நின்று பெருகும் அழகிய மொழி என்னும் அமிருதப் பெருக்கின் நுரைபோலத் தோன்றுகிறதோ; பூர்ண சந்திரன், குந்த மலர் இவைகளுக்கொப்பான சோபையுடையதும், வெளுத்துச் சுத்தமாய் கூரிய நுனியுடையதுமான, பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வருபவரு மாகிய பரமசிவனுடைய அந்தப் பல்வரிசை உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.

ந்யக்குர்வன்னுர்வராப்4 ருன்னிப4க4னஸமயோத்-கு4ஷ்டமேகௌ4க4 கோஷம்

       ஸ்பூ2ர்ஜத்3 வார்த்4 யுத்தி2 தோருத்4 வனிதம்பி பரப்3ரஹ்மபூ4 தோ க3பீ3ர: |

ஸுவ்யக்தோzவ்யக்தமூர்தே: ப்ரகடிதகரண: ப்ராணநாத2ஸ்ய ஸத்யா:

       ப்ரீத்யா வ: ஸம்வித3த்4யாத் ப2லவிகலமலம் ஜன்ம நாத2ஸ்ய நாத3: || 11

       மழைக்காலத்து மேகக்கூட்டங்கள் கர்ஜித்தலையும், கடலினுடைய அலைகளின் கொந்தளிப்பின் இரைச்சலையும் கீழடக்கிக்கொண்டும், பரப்பிரம்ம வடிவமாயும், ஆழமாயும், மிகத்தெளிவானதும், கேட்போரின் மனதிற்கு வெளிச்சமூட்டுவதுமான ப்ரக்ருதியைத் தனது உடலாய் ஏற்றுக்கொண்டவரும், உலகனைத்திற்கும் நாதனாயும். ஸதீதேவியின் ப்ராண நாதனுமாகிய பரமசிவனுடைய நாதம் அன்பினால் உங்களுடைய பயனற்ற இப்பிறவியை இத்துடன் போதுமான தாகச் செய்யட்டும்.

பா4ஸா யஸ்ய த்ரிலோகீ லஸதி பரிலஸத் பே2நபி3ந்த் வர்ணவாந்த:

       வ்யாமக்3 நேவாதிகௌ3ரஸ்துலிதஸுரஸரித்3 வாரிபூரப்ரஸார: |

பீனாத்மா த3ந்தபா4பிர்ப்4ருசமஹஹஹகா-ராதிபீ4ம: ஸதே3ஷ்டாம்

       புஷ்டாம் துஷ்டிம் க்ருஷீஷ்ட ஸ்பு2டமிஹ ப4வதாம்

                                                அட்டஹாஸோzஷ்டமூர்தே: || 12

       பஞ்ச பூதங்கள், சந்திரன், சூர்யன், ஆத்மா ஆகிய எட்டு உருவங்கொண்ட பரமசிவனுடைய எந்த அட்டகாசத்தில் மூவுலகும் நுரை நிறைந்த ஸமுத்திரத்தில் மூழ்கியது போல் இருந்துகொண்டு, ஒளியால் தேவகங்கைக்கு நிகராகத் தன்னைச் செய்துகொள்கிறதோ; பற்களின் ஒளியால் வளர்ந்து அஹஹஹ என்று சப்திப் பதால் பயங்கரமாயிருக்கும் அட்ட ஹாஸம் நமக்கு விரும்பியதைக் கொடுத்து மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்.

ஸத்3யோஜாதாக்2யமாப்யம் யது3 விமலமுத3க்3-வர்த்தி யத்3வாமதே3வம்

       நாம்னா ஹேம்னா ஸத்ருக்ஷம் ஜலத3நிப4-மகோ4ராஹ்வயம் த3க்ஷிணம்

                                                                           யத் |

யத்3பா3லார்கப்ரப4ம் தத்புருஷநிக3தி3தம் பூர்வமீசானஸம்ஜ்ஞம்

       யத்3தி3வ்யம் தாநி சம்போ4ர்ப4வதபிலஷிதம் பஞ்ச த3த்3யுர்முகா3நி || 13

       பரமசிவனுக்கு ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்பருஷம். ஈசானம் என்கிற ஐந்து முகங்கள் முறையே மேற்கு, வடக்கு, கிழக்கு. மேல் என ஐந்து திக்குகளை நோக்கி இருக்கின்றன. அவற்றில் ஸத்யோஜாதம் வெளுப்பாயும், வாமதேவம் தங்க நிறமாயும், அகோரம் மேகத்திற்கு நிகராயும், தத்புருஷம் இளங் கதிரவன் போன்றதாயும், ஈசானம் நெருப்புப் போன்றதாயும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பரமசிவனுடைய அந்த முகங்கள் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றட்டும்.

ஆத்மப்ரேம்ணா ப4வான்யா ஸ்வயமிவ ரசிதா: ஸாத3ரம் ஸாம்வனன்யா

       மஷ்யா திஸ்ர: ஸுநீலாஞ்ஜனநிப4-க3ரரேகா2: ஸமாபா4ந்தி யஸ்யாம் |

ஆகல்பானல்பபா4ஸா ப்4ருசருசிரதரா கம்பு3 கல்பாம்பி காயா:

       பத்யு: ஸாத்யந்தமந்தர்விலஸது ஸததம் மந்த2ரா கந்த4ரா வ: || 14

       தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது காலகூடம் என்னும் விஷம் வெளிக்கிளம்பி உலகையே அழிக்கத் தொடங்கியது. அப்பொழுது சிவபெருமான், விஷ்ணு முதலான தேவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி விஷத்தை உட்கொள்ளத் தொடங்கினார். பார்வதிதேவி தன் கணவனுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டுவிடுமோ என்று அஞ்சி விஷம் கீழே இறங்காவண்ணம் கழுத்தி லேயே தங்கிவிடும்படி நிறுத்தினாள். அதுதான் பரமசிவன் கழுத்தில் ஸாம்வனனீ என்கிற கருப்புமையால் வரைந்த கோடுகளோ என்று சந்தேகிக்கும்படி சிவன் கழுத்தில் மூன்று ரேகைகள் காணப்படுகின்றன. அணிந்த ஆயிரக்கணக்கான ஆபரணங்களின் ஒளியால் மிக அழகு வாய்ந்ததும், சங்கு போல் காணப்படுவதும், எழில் நிரம்பியதுமான, பார்வதி நாதனாகிய சிவபெருமானின் அந்தக் கழுத்து உங்கள் உள்ளத்தில் பிரகாசிக்கவேண்டும்.

வக்த்ரேந்தோ3ர்த3ந்தலக்ஷயாச்சிரமத4 ரமஹா-கௌஸ்துப4 ஸ்யாப்பு பாந்தே

       ஸோத்தா3னாம் ப்ரார்த2யந்ய: ஸ்தி2திமசலபு4வே வாரயந்த்யை நிவேசம் |

ப்ராயுங்க்தேவாசிஷோ ய: ப்ரதிபத3 மம்ருதத்வே ஸ்தி2த: காலசத்ரோ:

       காலம் குர்வன் க3லம் வோ ஹ்ருத3யமலமயம் க்ஷாலயேத் காலகூட: || 15

       பகவான் காலகூடத்தை உட்கொள்ளும் பொழுது கணவருக்கு கெடுதி நேர்ந்து விடுமே என்று அஞ்சி பார்வதி தேவி காலகூடத்திற்கு சிவன் உடம்பில் இடமளிக்காமல் தடுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் காலகூடம் தன்னுடன் பிறந்த பரமசிவன் முகசந்திரனோடும், பற்களின் ஒளியாகிற லக்ஷ்மியோடும்; இதழ் என்னும் கௌஸ்துபத்தோடும் சேர்ந்து வாழ விரும்பி தான் அமுதத்திற்கு ஒப்பான நிலையை ஏற்றுக்கொண்டது. (அதாவது அமுதம்போல எல்லோரையும் போல அழிவற்றதாக்குகின்றது.) பார்வதிக்கு என்றும் சுமங்கலியாயிருத்தலையும் தந்தது. பரமசிவன் கழுத்தைக் கறுப்பாகச் செய்த அந்தக் காலகூடம் உங்களுடைய உள்ளத்தின் அழுக்கை அகற்றவேண்டும்.

ப்ரௌட4 ப்ரேமாகுலாயா த்3ருடதரபரிரம்பே4ஷூ பர்வேந்து3முக்2யா:

       பார்வத்யாச்சாருசாமீகரவலயபதை3: அங்கிதம் காந்திசாலி |

ரங்க3ன்னாகா3ங்க3தா3ட4யம் ஸததமவிஹிதம் கர்ம நிர்மூலயேத் தத்

       தோ3ர்மூலம் நிர்மலம் யத் ஹ்ருதி5 து3ரிதம் அபாஸ்யார்ஜிதம்-தூ4ர்

                                                                     ஜடேர்வ: || 16

       உவகைப் பெருக்கால் பொங்கியெழும் ஆர்வத்தோடு பார்வதிதேவி இறுகத் தழுவும் தருணத்தில், தேவியின் கையில் அணிந்திருந்த தங்க வளைகள்'அழுந்தி அடையாளம் செய்ததும், காந்தி நிரம்பியதும், ஒளிரும் நகங்களால் செய்த தோள் வளைகள் நிரம்பியதும், பரிசுத்தமான துமான பரமசிவனின் கைகளின் அடிப்பக்கம் உங்கள் மனத்திலிருக்கும் காமம், வெகுளி, முதலியவற்றை விலக்கி, கூடாத செயலைச் செய்ததில் உண்டாகிய பாபத்தையும் வேரறுக்கவேண்டும்.

கண்டா2ர்ச்லேஷார்த2 மாப்தா தி3வ இவ கமிது: ஸ்வர்க3ஸிந்தோ4: ப்ரவாஹா:

       க்ராந்த்யை ஸம்ஸாரஸிந்தோ4: ஸ்படிகமணி மஹா ஸம்க்ரமாகார

                                                                           தீ3ர்கா4: |

திர்யக்3 விஷ்கம்ப4பூ4 தாஸ்த்ரிபு4வனவஸதே: பி4ன்னதை2த்யேப்4தே3ஹா:

       பா3ஹா வஸ்தா ஹரஸ்ய த்3ருதமிஹ நிவஹா நம்ஹஸாம் ஸம்ஹரந்து

                                                                                  || 17

      பரமசிவன் தாண்டவம் செய்யும்பொழுது ஆகாயத்தில் விரித்த நீண்ட நான்கு கைகள், தேவகங்கை தனது ஆசை நாயகனாகிய தேவலோகத்தைக் கழுத்தில் தழுவிக்கொள்வதற்கு ஆர்வத்தோடு நீட்டிய வெள்ளங்களாகிற கைகள் போலவும், சம்சாரம் என்கிற கடக்க முடியாத கடலைக் கடக்க ஸ்படிகத்தால் கட்டிய பாலம் போல் நீளமாகவும், மூன்று உலகமாகும் வீட்டிற்குக் குறுக்கே இடப்பட்ட விட்டங்கள் போலவும் துலங்குகின்றன. அந்தகாசுரனை வென்ற பரமசினுடைய அந்த நான்கு கைகளும் உங்களுடைய தீவினைகளை அழித்தருளட்டும்.

குறிப்பு: -    தேவகங்கை ஆகாயத்தில் பெருகுவதால் ஆகாயத்தை கங்கையின்            நாயகனாக கவிகள் வர்ணிப்பது வழக்கம்.

வக்ஷோ த3க்ஷத் விஷோzலம் ஸ்மரப4ர-வினமத்3த3க்ஷஜாக்ஷ்ணவக்ஷோ-

       ஜாந்தர் நிக்ஷிப்தசும்ப4ன்மலயஜ-மிலிதோத்3பா4ஸிப4ஸ்மோக்ஷிதம் யத் |

க்ஷிப்ரம் தத்3ரூக்ஷசக்ஷ: ச்ருதிக3ணப2ண-ரத்னௌக4பா4பீ4க்ஷணசோப4ம்

       யுஷ்மாகம் சச்வதே3ந: ஸ்படிகமணிசிலா-மண்ட3லாப4ம் க்ஷிணோது || 18

       உவகைப் பெருக்கோடு சற்று வணங்கிய பார்வதி அன்னையின் சந்தன மணிந்த கொங்கைகளைத் தழுவியதால் ஒட்டிக்கொண்ட சந்தனத்தை உடையதும், திருநீறு பூசியதும், அணியாயிருக்கும் பாம்புகளின் படங்களில் ஒளிரும் இரத்தினங்களின் கிரணங்களால் இரண்டு மடங்கு சோபிப்பதும், ஸ்படிகக் கற்களின் குவியல் போன்றதுமான சிவபெருமானுடைய மார்பு உங்களுடைய பாபத்தை அழித்து அருளட்டும்.

முக்தாமுக்தே விசித்ராகுலவலிலஹரீ-ஜாலசாலின்யவாஞ்சன்-

       நாப்4யாவர்தே விலோல த்3பு4ஜக வரயுதே காலசத்ரோர் விசாலே |

யுஷ்மச்சித்தத்ரிதா4மா ப்ரதிநவருசிரே மந்தி3ரே காந்திலஷ்ம்யா:

       சேதாம் சீதாம்சுகௌ3ரே சிரதரமுத3ர-க்ஷீரஸிந்தௌ4 ஸலீலம் || 19

       இந்தச் சுலோகத்தில் பரமாசார்யர் தான் பார்த்துச் சொல்லும் ஜனங்களுடைய மனதை மகா விஷ்ணுவாயும், பரமசிவன் வயிற்றைப் பாற்கடலாகவும் வர்ணித்துள்ளார். அதனால் சிவபெருமான் வயிற்றிற்குக் கூறும் அடைமொழிகள் பாற்கடலோடு பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றுக்கேற்ற கருத்தை நாம் இங்கு காணவேண்டும்.

      பாலாழி முத்துச்சிப்பிகள் நிறைந்தும், திரைதிரையாக தொடர்ந்துவரும் அலைகளோடு கூடியும், ஆழமான சுழல்கள் சூழ்ந்தும், பல பாம்பு முதலிய நீர்வாழ் ஜந்துக்கள் நிரம்பியும், லக்ஷ்மி தேவிக்கு இருப்பிடமாயும், சந்திரன் உள்ளடங்கி இருப்பதால் அவனுடைய ஒளியால் அதிகம் வெளுத்தும், புதிது புதிதான காந்தியை உடையதாயும் இருக்கிறது. பரமசிவன் முத்துமாலை அணிந்தும், அழகிய வயிறும் அலைகள் போன்ற மூன்று மடிப்புகள் அமைந்தும், சுழல்போல் ஆழமான நாபியோடு கூடியும், அணியாய் அணிந்த பாம்புகள் நிரம்பியும், ஒளிக்கோர் இருப்பிடமாயும், ஒளியெல்லாம் சந்திரன் போல் வெண்மையாயும், கணத்திற்கோர் அழகுவாய்ந்ததாயும் சிறப்புற்று விளங்குகிறது. இவ்விதம் பாற்கடல் போன்ற சிவபெருமான் வயிற்றில் உங்கள் மனது மகாவிஷ்ணுவிற்கு நிகராக இன்புற்று பள்ளிகொண்டிருக்கட்டும்.

வையாக்4ரீ யத்ர க்ருத்தி: ஸ்பு2ரதி ஹிமகிரே: விஸ்த்ருதோபத்யகாந்த:

       ஸாந்த்3 ராவச்யாயமிச்ரா பரித இவ வ்ருதா நீலஜீமூதமாலா |

ஆப3த்3தா4 ஹீந்த்3ரகாஞ்சீகு3ணமதிப்ருது3லம் சைலஜாக்ரீட3பூ4மி:

       தத்3 வோ நி: ச்ரேயஸே ஸ்யாஜ்ஜகனமதிக4னம் பா3லசீதாம்சு மௌலே: ||

                                                                                  20

       கறுப்பான புலித் தோல் உடுத்தி இமயமலையின் தாழ்வரையில் படர்ந்த நீருண்ட மேகம்போல் விளங்குவதும், பாம்பை ஒட்டியாணமாய்க் கட்டிக் கொண்டதும், பார்வதி தேவியின் இன்பக் கேளிக்கைக்கு இருப்பிடமாயும், பெருத்துக் கனமாயுமிருக்கின்ற இளம்பிறை சூடியின் பின்தட்டு உங்களுக்கு முக்தியின்பத்தைத் தந்து அருளட்டும்.

புஷ்டாவஷ்டம்ப4பூ4தெள ப்ருது2 தரஜக4னஸ்யாபி நித்யம் த்ரிலோக்யா:

       ஸம்யக்3வருத்தெள ஸுரேந்த்3ரத்3விரத3வர-கரோதா3ரகாந்திம்

                                                                     த3தா4னௌ |

ஸாராவூரூ புராரே: ப்ரஸப4மரிக4டா-க4ஸ்மரௌ ப4ஸ்மசுப்4ரௌ

       ப4க்தைரத்யார்த்3ரசித்தைர தி4கமவனதௌ வாஞ்சி2தம் வோ வித4த் தாம்

                                                                           || 21

       பெருத்துக் கனமான பின் தட்டையும், மூவுலகத்தையும் தாங்கும் தூண்போல் இருப்பவையும், ஐராவதத்தின் துதிக்கைபோல உருண்டு, பெருத்து நீண்டவையும், பலம் பொருந்திக் கொடிய சத்ருக்களையும் வலு விலேயே விழுங்கும் திறமை பூண்டவையும், விபூதி பூசியதனால் வெளுப்பானதும், பக்திமேலீட்டால் உருகிக் கரைந்த மனமுடைய பக்தர்களால் இடைவிடாது பணியப்படுவதுமான பரமசிவ னுடைய தொடைகள் உங்களுக்கு விருப்பத்தைக் கொடுக்கட்டும்.

ஆனந்தா3யேந்து3 காந்தோபலரசித: ஸமுத்கா3யிதே யே முனீனாம்

       சித்தாத3ர்சம் நிதா4தும் வித3த4தி சரணே தாண்ட3 வாகுஞ்சநாநி |

காஞ்சீபோ4 கீந்த்3ரமூர்த்4னாம் ப்ரதிமுஹு: உபதா4னாயமானே க்ஷணம் தே

       காந்தே ஸ்தாமந்தகாரேர்த்3யுதிவிஜித-ஸுதா4 பானுனீ ஜானுனீ வ: II 22

       பரமசிவன் முழங்கால்கள், மாமுனிவர்கள் தங்களது மனங்களைச் செலுத்தி தியானம் செய்வதால் அவர்களின் மனதை வைத்துப் பூட்டுவதற்கு சந்திரகாந்தக் கல்லினால் ஆக்கிய அழகிய இரண்டு பேழைகள் போல் இருக்கின்றன. தாண்டவம் ஆடும் போது காலை வளைக்கும் தருணத்தில் இடுப்பு ஒட்டியாணம்போல் கட்டப்பட்ட பாம்புகளுடைய தலைகள் நீட்டிக்கொண்டிருப்பதால் முழங்காலில் படுகின்றன; அதைப் பார்த்தால் இடுப்பில் கட்டிய பாம்புகள் சிறிது நேரம் முழங்காலை தலையணை போல் வைத்கிக்கொள்ளுகின்றன என்பது போல் தோன்றுகிறது. தனது ஒளியால் அமுதத்தையும், சூரியனையும் ஜயித்த பரமசிவனுடைய அத்தகைய முழங்கால்கள் உங்களுக்கு இன்பமூட்டக்கடவது.

மஞ்ஜீரீபூ4தபோ4கி3ப்ரவரக3ண2பணா-மண்ட3லாந்தர் நிதாந்த-

       வ்யாதீ3ர்கா4னர்க4 ரத்னத்3 யுதிகிஸலயிதே ஸ்தூயமானே த்3யுஸத்3 பி4: |

பி3ப்4ரத்யெள விப்4ரமம் வ: ஸ்ப3டிகமணி-ப்3ருஹத்3 த3ண்ட3வத்3 பா4ஸிதே யே

       ஜங்கே4 சங்கே2ந்து3சுப்4ரே ப்4ருசமிஹ ப4வதாம் மானஸே சூலபாணே: || 23

       தாண்டவம் செய்யும் போது சலங்கைகளாய் கட்டிக்கொண்ட பாம்புகளுடைய சிறந்த படங்களின் நடுவில் துலங்கும் இரத்தினங்களின் நீண்ட ஒளியால் தளிர் விடுகிறவைகள் போலவும், வானோர்கள் போற்றுவதும், பற்பல விலாஸங்களை உடையனவும், ஸ்படிகக் கல்லாலான பெரிய தண்டங்களைப் போல் (தூண்களைப் போல்) விளங்குகிறவைகளும், சங்கு, சந்திரன் போல வெளுத்தவைகளுமான சூல மேந்திய சிவபெருமானுடைய முன்னங்கால்கள் உங்கள் மனதில் மிகவும் ஒளியோடு பிரகாசிக்கட்டும்.

அஸ்தோகஸ்தோமசஸ்த்ரைரபசிதிமமலாம் பூ4ரிபா வோபஹாரை:

       குர்வத்பி4: ஸர்வதோச்சை: ஸததமபி4 வ்ருதெள ப்3ரஹ்மவித் தே3வ-

                                                                     லாத்யை: |

ஸம்யக் ஸம்பூஜ்யமானாவிஹ ஹ்ருதி3 ஸரஸீவானிசம் யுஷ்மதீ3யே

       சர்வஸ்ய க்ரீட3தாம் தெள ப்ரபத3 வரப்ரு3ஹத் கச்ச2 பாவச்ச2பா4ஸௌ ||24

       ஸ்தோமம், சஸ்த்ரம் என்பது முறையே யாகங்களில் கையாளப்படும் ஸாம ரிக்வேத மந்த்ர பாகங்கள். அவைகளை உச்சரித்து மனோபாவங்களை காணிக்கையாய் அர்ப்பணம் செய்து எப்பொழுதும் பூஜையைச் செய்கின்ற பிரம்ம ஞானிகளாகிய தேவலர் முதலிய மாமுனிவர்கள் சூழ்ந்திருப்பதும், உலகத்திலுள்ள எல்லாப் பெரியோர்களும் நன்றாய் வழிபடுவதுமான தூய ஒளியுடைய பரமசிவனுடைய ஆமைகள் போன்ற பாதத்தின் மேல்பாகங்கள் உங்களுடைய குளம் போன்ற மனத்தில் விளையாடட்டும்.

யா: ஸ்வஸ்யை காம்சபாதாத3 திப2 ஹல-கலைத்ரக்தவக்த்ரம் ப்ரணுன்ன-

       ப்ராணம் ப்ராக்ரோசயன் ப்ராங்நிஜமசலவரம் சாலயந்தம் தசாஸ்யம் |

பாதா3ங்கு2ல்யோ தி3சந்து த்3ருதமயுக3த்3ருச: கல்மஷப்லோஷகல்யா:

       கல்யாணம் பு2ல்லமால்யப்ரகரவிலஸிதா: வ: ப்ரண த3தா4ஹிவல்ய: || 25

       முன்னொரு காலத்தில் இராவணன், கைலயங்கிரி, தனது தேருக்கு வழிமறித்து நிற்கவே, அதைத் தூக்கி வேறுபக்கம் எறிய விருப்பங்கொண்டு மலையின் அடியில் தோளைக்கொடுத்துத் தூக்கினான். அக்காலத்தில் மலை அசைவதைக் கண்டு சிவபெருமான் கவனித்துப் பார்த்த பொழுது, இராவணனே அதற்குக் காரணம் என்று அறிந்தார். உடனே தனது கால் கட்டைவிரலால் மலையை அழுத்த இராவணன் அதனடியில் சிக்குண்டு நசுங்கி பகவானைக் கதறித்துதித்தான் என்பது புராணம். தனது மலையை அசைக்கின்றவனும், நசுங்கும் உயிரை உடையவனும்; வாயிலிருந்து கக்கிய ரத்தத்தையுடையவனுமான இராவணன் எந்த விரல்களின் ஒரு பாகத்தை அழுத்தமாய் ஊன்றியதால் கதறினானோ, எந்த விரல்கள் பாம்புகள் சுற்றியனவாயும், பாபங்களை எரித்து அருள்புரிவனவாயும், மலர்ந்த மல்லிகை மாலைகள் போலும் இருக்கின்றன வோ, அவ்முக்கண்ண னுடைய அந்த விரல்கள் தாமதமின்றி உங்களுக்கு மங்களங்களைச் செய்யட்டும்.

 ப்ரஹ்வப்ராசீனப3ர்ஹி: ப்ரமுக2 ஸுரவர-ப்ரஸ்பு2ரன் மௌலிஸக்த-

       ஜ்யாயோரத்னோத்கரோஸ்ரைரவிர தமமலா பூ4ரி நீராஜிதா யா |

ப்ரோத3க்3ராக்3ரா ப்ரதே3யாத் ததிரிவ ருசிரா தாரகாணாம் நிதாந்தம்

       நீலக்3ரீவஸ்ய பாதா4ம்புருஹவிலஸிதா ஸா நகா2லீ ஸுகம் வ: || 26

       தேவேந்திரன் முதலிய தேவர்கள் விழுந்து பணியும் பொழுது தலையிலிருக்கும் கிரீடங்களில் ஒளிரும் இரத்தினங்களின் கிரணங்களால் ஆரத்தி எடுக்கப்பட்டது போலத் தோற்றுவதும். பரிசுத்தமாய்த் துலங்குவதும், பாதத்தின் நுனியில் தலை தூக்கி நிற்பதும், நக்ஷத்திரங்களின் கூட்டத்தைப்போல் எழில் வாய்ந்ததும், தாமரையை ஒத்த பாதங்களில் பிரகாசிப்பதுமான நீலகண்டருடைய கால் நகங்களின் வரிசை உங்களுக்கு இன்பத்தை அளிக்கட்டும்.

ஸத்யா: ஸத்யாநநேந்தா2வபி ஸவித4க3தே யே விகாஸம் த3தா4தே

ஸ்வாந்தே ஸ்வாம் தே லப4ந்தே ச்ரியமிஹ ஸரஸீவாமரா யே த4தா4னா: |

லோலம் லோலம்ப3 கானாம் குலமிவ ஸுதி4யாம் சேவதே யே ஸதா ஸ்தாம்

பூ4த்யை பூ4த்யைணபாணேர்விமலதரருச: தே பதா3ம்போ4ருஹே வ: II 27

       இரவில் சந்திரோதயமாவதால் தாமரை மலர்வதில்லை என்பது உலகமறிந்த செய்தி. தாமரைகள் குளத்தில் தான் மலரும் என்பதும், வண்டினங்களே அவைகளில் மொய்த்துக்கொள்ளும் என்பதும் அனைவரும் உணர்ந்ததே. சிவபெருமான் திருவடிகளாகும் தாமரைகளோ, பார்வதி தேவியின் முகமென்னும் பூர்ணசந்திரன் அருகிலிருக்கும்பொழுதும் மலர்கிறது. வானோர்கள் இவைகளை உள்ளத்தில் தரித்தபோதிலும், தாமரை ஓடையில் உள்ள ஒளி குன்றாமல் அங்கும் வீசுகிறது. வண்டினங்களைப் போல் அறிவாளிகளின் தொகுதிகள் இடை விடாமல் இந்த பாதத் தாமரைகளில் மொய்த்துக்கொள்கின்றன. (அதாவது எப்பொழுதும் இவற்றை மனத்தில் தரிக்கின்றன) வேதத்தின் வேற்றுருவாகிய மானைக் கையில் தாங்கிய சிவனுடைய திருவடிகள் என்னும் தாமரைகள் உங்களுக்குச் செல்வத்தை அளிக்க வேண்டும்.

யேஷாம் ராகா3தி3 தோ3ஷாக்ஷதமதி யதயேர யாந்தி முக்திம் ப்ரஸாதா3த்

       யே வா நம்ராத்மமூர்தித்3 யுஸத்3 ருஷிபரிஷன்-மூர்த்4நி சேஷாயமாணா: |

ச்ரீ கண்ட3 ஸ்யாருணோத்3 யச்சரணஸரஸிஜ-ப்ரோத்தி2தாஸ்தே ப4 வாக்2யாத்

       பாராவராச்சிரம் வோ து3ரிதஹதிக்ருத: தாரயேயு: பராகா3: || 28

       புலன்களை அடக்கித் துறவறம் பூண்ட மகான்கள் எந்தப் பாததூளிகளின் அநுக்கிரகத்தால் விருப்பு, வெறுப்பு முதலிய குற்றங்களால் கெடுக்கப்படாத மனத்தோடு மோக்ஷத்தை அடைகிறார்களோ, எந்தத் தூளிகள் பரமசிவன் காலில் வணங்கிய தேவர்களின் தலையில் அலங்கார மாலைபோல சோபிக்கின்றன வோ, மலர்ந்த செந்தாமரை போன்ற கால்களினின்று உண்டாகிய சிவபெருமானுடைய அந்தப் பாததூளிகள் பாபத்தை ஒழித்து பிறவியென்னும் கடலினின்றும் உங்களைக் கரையேற்றவேண்டும்.

பூ4ம்நா யஸ்யாஸ்தஸீம்நா பு4வனமனுஸ்ருதம் யத் பரம் தா4ம தா4ம்னாம்

       ஸாம்னாமாம்னாயதத்வம் யத3பி ச பரமம் யத்கு3ணாதீதமாத்3யம் |

யச்சாம்ஹோஹன் நிரீஹம் க3ஹனமிதி முஹு: ப்ராஹுருச்சைர்மஹாந்தோ

       மாஹேசம் தன்மஹோ மே மஹிதமஹரஹ: மோஹரோஹம் நிஹந்து ||

                                                                                 29

       பரமசிவன் மேனி ஒளி உலகம் முழுவதுமளாவி சூரியன், சந்திரன் முதலிய தேஜே வடிவமாய் நமக்குத் தோன்றுகிறது. அது எல்லா தேஜஸுக்கும் மேற்பட்டதாய் விளங்குகிறது. வேதத்தின் மேலான கருத்தாக இருக்கிறது. ஸத்வம், ரஜஸ், தமஸ் என்று முக்குண முடைய ப்ரக்ருதியைக் கடந்து அது நிற்கிறது. அதைப் பெரியோர்கள் பாபங்களை அகற்றுவதாயும், ஆசை அற்றதாயும் இருப்பதாய் அடிக்கடி உரக்கக் கூறுகிறார்கள். அனைவரும் பூஜிப்பதான சிவ னுடைய அந்த காந்தி, தினமும் ஓங்கி வளரும் என்னுடைய மோஹத்தின் முளையை அகற்ற வேண்டும்.

“ஸ்ரீ சிவ கேசாதிபாதாந்த வர்ணன ஸ்தோத்ரம்'' முற்றிற்று.

Related Content

சிவ தண்டகம்

வேதஸார சிவஸ்தோத்ரம் - உரை

சிவாஷ்டகம் - உரை

அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை

திருவாசகம் தமிழ் உரை & Thiruvasagam English Translation