logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவாசக உண்மை

சிவமயம்


( இவ்விருபத்து நான்கு செய்யுட்களும் சுந்தரலிங்கமுனிவர் இயற்றிய திருப்பெருந்துறைப்
         புராணத்துள் காணப்படுகின்றன ) 

சிவபுராணம்


    தேசுறுமா ணிக்கமெனச் சிறந்ததிரு வாசகத்தில் 
    பேசுதிருச் சிவபுரா ணத்தகவற் பெருமைசொலில் 
    ஈசர்தமக் கியல்பான திருநாம முதலெவையும் 
    மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட்குறிப்பாம்.    (1)

கீர்த்தித்திருவகவல் - திருவண்டப்பகுதி


    புகழ்பெருகுஞ் செய்கையெலாம் புகல்அகவல் ஒன்றாகும்
    திகழ்திருவண் டப்பகுதித் திருவகவல் செப்பியது 
    தகுசிருட்டி திதியொடுக்கஞ் சாற்றுதிரோ தம்பொதுவாய் 
    அகலமுறத் தேர்ந்திடவே யருளியநற் பொருளாகும்        (2)

போற்றித்திருவகவல் - திருச்சதகம் - நீத்தல்விண்ணப்பம்


    முத்திபெறு நெறியறியு மொழிபோற்றித் திருவகவல் 
    சத்தியஞா னந்தருதே சிகர்மோகஞ் சதகமதாம் 
    மித்தையுல கினையகற்றி விடாமலெனை யாண்டருளென் 
    றத்தரறிந் திடநீத்தல் விண்ணப்பம் அறைந்ததுவாம்.        (3)

திருவெம்பாவை - திருவம்மானை


    மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரி பாகரருள்
    செலமுழுக வருகவெனச் செப்பல்திரு வெம்பாவை
    நலமுறு மந்தணர் வடிவாய் நாரணன்காண் பரியபதம்
    நிலமதில்வந் தாள்கருணை நினைந்தாட லம்மானை.        (4)

திருப்பொற்சுண்ணம் - திருக்கோத்தும்பி


    சத்திகளாற் றனுகரண புவனபோ கங்கள்தமை 
    அத்தனுக்குச் சுண்ணமவை யாயிடிக்கக் கூவுதலே 
    ஒத்ததிருச் சுண்ணமுயர் போதமொரு வண்டாகச் 
    சித்தவிகா ரத்தூது செப்பவிடல் கோத்தும்பி            (5)

திருத்தெள்ளேணம் - திருச்சாழல்


    பொன்னார்மெய் யண்ணலரும் போதவின்ப மேமிகுந்து 
    தென்னாதென் னாவெனவே தெள்ளேணங் கொட்டியதாம்
    முன்னாற் கலையுமுண ராமூகை யாமேடி 
    தன்னாற் பதிமுதன்மை சாற்றியதாந் திருச்சாழல்.        (6)

திருப்பூவல்லி - திருவுந்தியார்


    தேவரறி யாதசிவன் தேடியே யாண்டநலம் 
    ஆவலொடுஞ் சொல்லி யடியாரொ டுங்கூடிப் 
    பூவியந்து கொய்தல்திருப் பூவல்லி யாமரன்சீர் 
    பாவமுறு தீமையறப் பாடல்திரு வுந்தியதே            (7)

திருத்தோணோக்கம் - திருப்பொன்னூசல்


    சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே புண்ணியமாய்            
    அத்தன் செயுங்கருணைக் காராமை யுண்மிகுந்து 
    பொத்தியகை கொட்டிப் புகழ்தல்தோ ணோக்கமருள் 
    சத்தியிருந் தாடத்தா லாட்டியிடுதல் பொன்னூசல்.        (8)

திருவன்னைப்பத்து - குயிற்பத்து


    நேயம்மி குந்த நிலைகுலையக் கூடு தலை 
    ஆயவருட் டாய்க்கங் கறைதலன்னைப் பத்தாகும் 
    தூயவருட் குயிலேநற் சோதியெனைக் கூடுதற்குன் 
    வாயினாற் கூவெனமுன் வாழ்த்தல்குயிற் பத்தாமே.        (9)

திருத்தசாங்கம் - திருப்பள்ளியெழுச்சி


    பேர்நாடூ ராறுமலை பெயரூர்தி படைமுரசு
    தார்கொடியெ லாமரற்குச் சாற்றல் தசாங்கமதாம் 
    ஏர்மருவு திருப்பள்ளி யெழுச்சிபணி விடைகேட்
    டார்வமுட னாண்டவரற் கன்புசெயு மியல்பே.            (10)

கோயில் மூத்த திருப்பதிகம் - கோயிற்றிருப்பதிகம் - செத்திலாப்பத்து - அடைக்கலப்பத்து


    கோயின் மூத்த திருப்பதிகஞ் சிதம்பரத்தி லருளடையுங் குறிப்பதாகும் 
    ஏயுங் கோயிற் றிருப்பதிகம் பெருந்துறைத் தேசிகர் மோகமியம்பலாகும் 
    ஆயபசுபோதம் முற்றுங் கெட வேண்டலே செத்திலாப் பத்தாகும் 
    ஓதுவல்வா தனைகள்வந் தணுகாம லடைக்கலப்பத் துரைத்ததாமே    (11)

ஆசைப்பத்து - அதிசயப்பத்து


    கருவியறு மூனுடற்கண் வாராமற் றிருவருளிற் கலப்பதற்கே 
    அரனடியைப் புகழ்ந்துபெரு கார்வமொடு பாடுதலே யாசைப்பத்தாம் 
    வெருவிமலத் தினைச்சீலத் தொன்றாகு மடியர்குழாத் துடனேகூட்டும் 
    பரமரருட் பெருமை மிகுதியைப் புகழ்ந்துபாட லதிசயப்பத்தாமே     (12)


புணர்ச்சிப்பத்து - வாழாப்பத்து 


    ஆண்டகுரு வைப்பிரியா தணைந்துபணி புரிந்துமிகு மன்போடின்பம் 
    பூண்டுகிடக் கப்பெறுவ தென்றுகொலோ வெனும்வி ருப்பம் புணர்ச்சிப் பத்தாம்
    நீண்டவுல கத்தினிற்பற் றொன்றிலே னிவ்வுடற்க ணின்று வாழேன்
    மாண்டகுநின் பதநிழற்கீழ் வருக வருள் புரியெனுஞ்சொல் வாழாப்பத்தே.    (13)

அருட்பத்து - திருக்கழுக்குன்றப்பதிகம்


    சோதியருட் சுடர்விளக்கே துயர்பிறவிக் கூடல்விடுத்துன்றாள் சேர்தற் 
    காதரித்திங் குனையழைத்தா லதெந்துவெனக் கேளெனுஞ்சொல் அருட்பத் தாகும் 
    நீதிமறை பரவுதிருப் பெருந்துறையிற் குருவடிவாய் நிகழ்ந்த கோலம் 
    காதலொடுங் காட்டினை யேயெனுங் களிப்புப் பகர்தல்திருக் கழுக்குன்றாமே.         (14)

கண்டபத்து - பிரார்த்தனைப்பத்து


    இந்திரிய வயமயங்கா தேயெடுத்துத் தானாக்கு மெழிலா னந்தம் 
    கந்தமலி தில்லையினுட் கண்டேனென் றுவந்துரைத்தல் கண்ட பத்தாம் 
    அந்தமிலா வானந்தத் தகலாம லெனையழுத்தி யாள்வா யென்று 
    சிந்தைகலந் துரைத்ததுவே பிரார்த்தனைப்பத் தாய்ப்புகலுஞ் செய்கை யாமே        (15)

குழைத்தபத்து - உயிருண்ணிப்பத்து


    இழைத்தேனிவ் வாக்கைபொறுத் தினிக்கணமும் பொறுக்ககிலே னேழையேனைக் 
    குழைப்பதேன் பிழைபொறுத்தா ளெனவிரங்கிக் கூறுதலே குழைத்த பத்தாம்
    தழைத்துவளர் பேரின்பந் தானாகி யுயிர்தோன்றாத் தன்மை யாய்த்துன்
    பொழித்துநிறை வைப்பெறுத லுயிருண்ணிப் பத்தாயிங் குரைத்த தாமே.        (16)

அச்சப்பத்து - திருப்பாண்டிப்பதிகம்


    தரையில்வளர் வினைமுழுதும் வரினுமஞ்சேன் சிவசமயத் தவஞ்சா ராதார் 
    அருகின்வரக் காண்கின்மன மஞ்சுமென விகழ்ந்துரைத்த லச்சப் பத்தாம்
    புரவியின்மேற் பாண்டியன்முன் வரும் பதத்தை யாம்பெறுமற் புதம்போல் யாரும் 
    விரவுமின்க ளென்றடியார்க் குறுதிசொலல் திருப்பாண்டி விருத்த மாமே.        (17)

பிடித்தபத்து - திருவேசறவு


    மிக்கபிற வித்துயரெ லாமொழித்து விபுத்துவமிங் களித்த லாலே
    பிக்கறச் சிக்கெனப் பிடித்தே னின்னை யென்று துணிவுசெப்பல் பிடித்த பத்தாம் 
    தக்கபரி யாய்நரியை யாக்குதல்போ லெனைப்பெரிதாய்த் தாக்கித் தாட்கீழ் 
    அக்கணம்வைத் தனையேயென் றிரங்கல்திரு வேசறவென் றியம்பலாமே.        (18)

திருப்புலம்பல் - குலாப்பத்து


    கரைந்துருகும் பேரன்புன் கழலிணைக்கே கற்றாவின் மனம்போலென்றும் 
    திருந்தும்வகை யெனக்கருள்க வெனக்கேட்டல் திருப்புலம்ப லாகுமுள்ளம் 
    விரும்புசிவா னந்தவெள்ளம் விழைந்ததில்லை நாயகனை மிகக்கொண்டாடி 
    நிரம்புமனக் களிமிகுத்த விறுமாப்பே குலாப்பத்தாய் நிகழ்த்த லாமே.            (19)

அற்புதப்பத்து - சென்னிப்பத்து


    மாயவுருக் கொண்டுளத்தை மயக்குமின்னார் கண்வலையுண் மயங்கு வேற்கிங் 
    காயுமறி வளித்தாள லதிசயமென் றுரைத்த லற்புதப்பத் தாகும்
    தூயவருட் குருபதத்தைச் சூட்டுதற்குப் பெற்றவுயிர் சுகத்தை நோக்கிச்
    சேயமலர்ப் பதத்தருமை யடியரொடும் வியந்துரைத்தல் சென்னிப் பத்தே        (20)

திருவார்த்தை - எண்ணப்பதிகம்


    அறம்பெருகும் பெருந்துறையிற் றமையாண்ட செயன்முதலா வரன்சீ ராட்டின்
    திறமறிவா ரெம்பிரா னாவரென வுரைத்தல் திருவார்த்தை யாகும் 
    நிறம்வளரு மலர்ப்பொழில் சூழ்ந் தோங்குதிருத் தில்லைமன்று ணிமல னாமத் 
    திறம்பெருகு மின்பமரு ளென்றலெண்ணப் பத்தெனவும் நிகழ்த்த லாமே        (21)

யாத்திரைப்பத்து - திருப்படையெழுச்சி


    பொல்லாத பவத்தைவிட்டுச் சிவன்கழற்கீழ்ப் புகுங்காலம் புணர்ந்த தெற்கிங் 
    கெல்லாரும் வாருமெனக் கருணையினா லழைத்திடல்யாத் திரைப்பத் தாகும் 
    அல்லாத துர்க்குணமா யப்படைகள் விளையாம லருள்வா ளேந்தி
    நல்லோர்க ளியாரு மெம்மோ டெய்துமெனப் படையெழுச்சி நவிற லாகும்        (22)


திருவெண்பா - பண்டாய நான்மறை


    தொந்தமா மலமொறுத்துச் சுகம்பெருக்கிப் பெருந்துறைவாழ் சோதி யென்றன் 
    சிந்தனையே யூராகக் கொண்டிருந்தா ரென்றுரைத்தல் திருவெண் பாவாம் 
    எந்தைதிருப் பெருந்துறையை யேத்துநம ரேவாழ்வுற் றிடர்சேர் பாச
    பந்தமறுத் திடுவரெனப் பண்டாய நான்மறையும் பகர்ந்த தாமே.            (23)

திருப்படையாட்சி - ஆனந்தமாலை - அச்சோப்பதிகம்


    வாகுதிருப் பெருந்துறையா ரெழுந்தருளப் பெறிலெல்லா வளங்கள் முற்றும்
    ஆகுமெமக் கல்லாத தாகாதென் றியம்பல் படையாட்சி யாகும் 
    மோகமிகு மடியரொடுங் கூடவிரும்பிய தானந்த மொழியு மீசர் 
    போகசுக மெனக்களித்தா ரார்பெறுவா ரெனுமருமை புகற லச்சோ.            (24)

இவ்விருபத்து நான்கு செய்யுட்களும் சுந்தரலிங்கமுனிவர் இயற்றிய திருப்பெருந்துறைப்
         புராணத்துள் காணப்படுகின்றன

        
                திருச்சிற்றம்பலம்.

 

Related Content