logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

இரத்தினத்திரயம் மூலமும் விருத்தியுரையும்

சிவமயம்

அஷ்டப்பிரகரணங்களில் ஒன்றாகிய 

ஸ்ரீகண்டாசாரியாரா லியற்றப்பெற்ற

ஸ்ரீ அகோர சிவாசாரியரா லியற்றப்பெற்ற

இரத்தினத்திரயம் விருத்தியுரையும்

(தமிழ் மொழிபெயர்ப்பு)

            உரைமங்கலம்.

(1)     மங்களத்தைச் செய்பவனாயும் சித்தாந்தப் பொருள்களை விளக்கஞ் செய்பவனாயுமுள்ள 
பரமசிவனை நமஸ்கரித்து இரத்தினத்திரயத்தின் பொருளைச் சுருக்கமாக விளக்கஞ் 
செய்கின்றேன் என்பதாம். (1)

(2)     மூன்று இரத்தினமானது வேதத்தை அனுசரித்துச் சிலர்களாலும், சாத்தவாம தந்திரங்களை 
அனுசரித்துச்  சிலர்களாலும், நியாய சாத்திரத்தை அனுசரித்துச் சிலர்களாலும், அவரவர் அறிவுக்கு 
எட்டியவாறு மோகத்தால் அழுக்குடையதாகச் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் அந்த மூன்று 
இரத்தினமான இரத்தினத்திரயத்தை வித்வான்கள் காதில் அலகரித்துக் கொள்ளுதற் பொருட்டு 
மீண்டும் நல்ல வியாக்கியானமென்னும்  உரைகல்லில் உரைத்துச் சுத்தஞ்செய்து பிரகாசமுடையதாகச் 
செய்கின்றேன் என்பதாம்.     (2)

            நூல் மங்கலம்

            மூலம்

(1)     நித்தியப்பொருளான பரமசிவன் பொருட்டும், சிற்சத்தியின் பொருட்டும், மகாமாயையின் 
பொருட்டும், சற்குருவின் பொருட்டும், கணபதியின் பொருட்டும், புத்திமானான சுப்பிரமணியரின் 
பொருட்டும் நமஸ்காரஞ் செய்கின்றேன் என்பதாம்.

            உரை

    இந்தச் சுலோகத்தின் முற்பகுதியால் இந்தப் பிரகரணத்தில் சிவன், சிற்சத்தி, மகாமாயை என்னும் 
மூன்று இரத்தினங்களே விடயங்களாக கூறப்படுகின்றனவென்று அறிவிப்பாராய் அம்மூன்று 
பொருள்களையும் நமஸ்கரிக்கின்றார். பிற்பகுதியால் ஆகம சம்ஹிதைகள் அனைத்திற்கும், 
தோற்றுவிப்பவராயிருத்தலால் குருவாயிருக்கும் பகவானான ஸ்ரீகண்டநாதரையும், சகல 
விக்கினங்களையும் போக்குங் கணபதியையும், சித்தாந்த சாத்திரங்களை எப்பொழுதும் கேட்டு 
விசேஷ ஞானமடைந்த கார்த்திகேயரான சுப்பிரமணியரையும், இப்பிரகரணம் விக்கினமின்றி 
நிறைவேறுதற் பொருட்டு நமஸ்கரிக்கின்றார் என்க. (1)

            நூல்

    (அவதாரிகை) அந்த மூன்று இரத்தினமான பொருள்களையே விரிவாய்க் கூறுவதாகக் கூறுகின்றார்.

(2-3)     சித்தாந்தமென்னுங் கடலிலிருந்து, மார்பிலும் கழுத்திலும் காதிலும் பெரியோர்களணிந்து கொள்ளுதற் 
பொருட்டு, விந்து சத்தி சிவன் என்னும் மூன்று இரத்தினங்களை எடுத்து,  வாக்குக்களென்னும் நூல்களால் 
அவற்றை  நான் தொடுத்துக் கட்டுகிறேன். ஆகையால் பெரியோர்கள் என்னை  மன்னிக்க வேண்டும். 
தொண்டனாகிய என்னிடத்தில் அசூயை கொள்ளக்கூடாது என்பதாம்.

    (உரை) விந்து சத்தி சிவனென்னும் இரத்தினங்களைக் கேட்பது என்னும் பொருள் தோன்ற, 
காதில் தரிப்பது என்றும்,  கழுத்து என்னுஞ் சொல்லால் * இலக்கணா விருத்தியால் அறியப்பட்ட 
வாக்கிந்திரியத்தால் படிப்பது என்னும் பொருள் தோன்ற கழுத்தில் தரிப்பது என்றும், இருதயத்தில் 
நிச்சயித்தல் என்னும் பொருள் தோன்ற மார்பில் தரிப்பது என்றும் கூறப்பட்டன. இவ்வாறு 
பெரியோர்கள் தரிப்பதற்காக விந்து முதலிய மூன்று இரத்தினங்களைச் சித்தாந்த சமுத்திரத்திலிருந்து 
எடுத்து வாக்கு ரூபங்களான நூல்களால் அவை என்னால் கோக்கப்படுகின்றன. உலகத்திலும் 
காது முதலிய அவயவங்களில் தரிப்பதற்காக இரத்தினங்கள் நூல்களாற் கோக்கப்படுகின்றன. 
ஆகையால் பெரியோர்களை ஆராதிக்கும் விஷயத்தில் முயற்சித்த என்னிடத்தில் அசூயை 
கொள்ளக்கூடாது என்க.     (2-3)

*கழுத்து என்பது ஆகுபெயரால் கண்டத்தில் நிகழுந் தொனியை யுணர்த்தி 
வாக்கிந்திரியத்தைக் குறித்தது

    (அ-கை) இந்த விந்து முதலிய மூன்று பொருள்களும் இரத்தினத்தோடு ஒப்புமை உடைமை 
பற்றி இரத்தினமென்னுஞ் சொல்லால் கூறப்பட்டனவென்று கூறுகின்றார்.

(4-5)     தத்துவங்களனைத்தினுள்ளும் பிரகாசமாயிருத்தலாலும், அனந்தர் முதலிய ஈசுவரர்களுக்கும் 
சதாசிவர் முதலியோருக்கும் அதிகாரங்களில் விந்து முதலிய மூன்றால் ஆசை யுண்டாவதனாலும், 
புருடர்களுடைய அறிவால் தரிக்கத் தகுந்ததா யிருத்தலாலும், தடையற்ற அதிகப் பிரகாசத்துடன் 
கூடியிருத்தலாலும், பிரியத்தை உண்டுபண்ணுவதாயிருத்தலாலும் விந்து சத்தி சிவன் என்னும் 
மூன்று பொருள்கள் சிவ சாத்திரத்தில் இரத்தினங்களாகக் கூறப்படுகின்றன என்பதாம்.

    (உரை) உலகத்தில் இரத்தினங்கள் எவ்வாறு விலைமதிக்க முடியாமல் மிகப் 
பிரகாசமுடையனவாயும், அருகிலுள்ளவருக்கு ஆசையை யுண்டுபண்ணுகின்றனவாயும், 
புருடர்களால் சரீரத்தில் தரிக்கப்படுகின்றனவாயும், அழகுடையனவாயும், இஷ்டத்தைத் 
தருவனவாயும் இருக்கின்றனவோ, அவ்வாறே, விந்து முதலிய மூன்று பொருள்களும், 
சத்தி முதலிய தத்துவங்களனைத்திற்கும் முதற்காரணமாயும் அதிட்டாதாவாயும் 
இருத்தலால் பிரகாசிக்கின்றனவாயும், அனந்தர் முதலிய ஈசுவரர்களுக்கும் சதாசிவர் 
முதலிய பதங்களையடைந்த அணு சதாசிவன் முதலியோருக்கும் அனுக்கிரகஞ் செய்தல் 
அனுக்கிரகஞ் செய்யத்தகும் தன்மை முதலிய அதிகாரங்களில் ஆசையை
யுண்டுபண்ணுகின்றனவாயும் புருடர்கள் புத்தியால் தியானஞ் செய்யத் தகுந்தனவா 
யிருத்தலால் தரிக்கத் தகுந்தனவாயும், கெடுக்கப்படாத அதிகமான காந்தியை யுடையனவாயும், 
போக மோக்ஷரூபமான இஷ்டத்தைத் தருவனவாயு மிருத்தலால், சிவசாத்திரத்தில் 
இரத்தினங்களாகக் கூறப்படுகின்றன. இந்த இரத்தினங்கள் கொடுக்கப்படும் விசேஷ 
காந்தியை யுடையனவென்று கூறினமையால் உலகத்திலுள்ள இரத்தினங்களினின்றும் 
இவற்றிற்கு அதிக விசேஷம் காட்டப்பட்டது என்க.    (4-5)

(6)     தத்துவக்கூட்டமானது மூன்று இரத்தினங்களைப் பற்றி இருக்கின்றது. இந்த மூன்று 
இரத்தினங்களை அடைவதின் பொருட்டுப் பரமசிவனால் சாத்திரங்களில் ஆறுவிதமாக வழி
கூறப்படுகின்றது என்பதாம் .

    (உ-ரை) தத்துவக் கூட்டங்களுள் சுத்தமான தத்துவக் கூட்டமானது விந்துவை முதற்காரணமாகவும், 
சிவனைக் கருத்தாவாகவும், சக்தியைக் கரணமாகவும் உடையதாயிருக்கின்றது. எதனாலெனில், உலகத்தில் 
முதற்காரணம் கருத்தா கரணம் என்னும் இவைகளையின்றிக் காரியந் தோன்றுகிறதில்லை யாகையாலென்க. 
அசுத்தமான தத்துவக் கூட்டத்திற்கும் சிவனும் சத்தியுமே பரம்பரையாய் (அஃதாவது அனந்தர் வாயிலாய்) 
கருத்தாவாயும் கரணமாயுமிருக்கின்றனர். விந்துவோவெனில், நிவிருத்தி முதலிய கலைகளின் 
வழியாகப் பற்றுக்கோடாயிருப்பதென்று பின்னர்க் கூறப்போகிறோம். போகத்தில் ஆசையுள்ளவர்களா 
யிருத்தல்பற்றி பௌதிக தீக்ஷை பெற்றவர்களாயுள்ள சாதகர்களுக்கு அநேக புவன போக ரூபமாகப்
பரிணாமமடையும்  விந்துவானது அடையத் தகுந்த பதமாகும். மோக்ஷத்தில் ஆசையுடையவர்களாய் 
நைட்டிக தீக்ஷைபெற்ற சாதகர்களுக்குச் சத்தியுடன் விட்டுப்பிரியாத பரமசிவன் அடையத் தகுந்த 
பதமாவன். ஆகையால் விந்துவையுஞ் சிவனையும் அடைவதன்பொருட்டுக் கலை முதலிய 
ஆறுவிதமான அத்துவாக்களென்னும் வழிகள் பரமசிவனால் சாத்திரங்களிற் கூறப்படுகின்றன என்க     (6)

    (அ-கை) இந்த மூன்று இரத்தினங்களுக்கும் அத்துவத் தன்மையைப் பின்னர் நிச்சயஞ் 
செய்யப்போகின்றார். இப்பொழுது இந்த இரத்தினங்களுக்குத் தீக்ஷை முதலிய கிரியைகளில்
 உபயோகத்தைக் காட்டுகின்றார். 

    (சுஇ ) இந்த மூன்று இரத்தினங்களே தீக்ஷை பிரதிஷ்டை என்னுமிவற்றில் காரணங்களாக 
வித்துவான்களாற் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதாம்.

    (உரை)  இம்மூன்று இரத்தினங்களை அறியவில்லையானால் தீக்ஷை பிரதிஷ்டை முதலிய 
கிரியைகளை அனுட்டிக்கமுடியாதாகையால் அவற்றிற்கு இம்மூன்றுமே காரணமென்றறிக வென்க. (சுஇ)

    (அ-கை) மேற்கூறியவிஷயத்தையே வெளிப்படையாய்க் கூறுகின்றார்.

(எ-அ)     பலவாறான யோகங்களும், பலவாறான நித்தியம் நைமித்திகமென்னும் கிரியைகளும், 
ஞானங்களும், சித்திகளும் முத்திகளும் இந்த இரத்தினங்களையறிதலால் நிகழ்கின்றன அன்றியும், 
இந்த இரத்தின ஆராய்ச்சியே அணுவான ஆன்மாவிற்கு முத்தி என்னும் மேலான எல்லையாகுமென்பதாம்

    (உ-ரை) யோகமாவது, சாலம்பம் நிராலம்பம் முதலியன. நித்திய கன்மமாவது சிவபூஜை முதலியன. 
நைமித்திக கன்மமாவது, தீக்ஷை முதலியன. ஞானங்களாவன, இந்த நித்திய நைமித்திக கன்மங்களை 
அறியும் அறிவும் பதிபசுபாசங்களை அறியும் அறிவுமாம். சித்திகளாவன, அணிமா லகிமா முதலியன, 
முத்திகளாவன சிவசாமியமும் சதாசிவ முதலிய பதங்களையடைதலுமாம். இவ்வாறே முத்தி ஏழுவிதமென்று
 மதங்கத்திலுங் கூறப்பட்டுள்ளது. இவையனைத்தும் இம்மூன்று இரத்தினங்களை அறிதலால் சித்திக்கின்றன. 
அன்றியும், இந்த இரத்தினங்களையடைதலே ஆன்மாவிற்குப் பரமோக்ஷமாகுமென்க.      (7-8)

(9)     (ஆகையால்) சத்திநிபாதத்தால் விளக்கமுற்ற ஆன்ம சொரூபமுடையவர்களால்
 இம்மூன்று இரத்தினங்களும் ஆப்த வாக்கியத்தால் கேட்கத்தக்கன. யுக்திகளால் ஆராயத்தகுந்தன. 
யோகநெறியால் தியானஞ்செய்யத் தகுந்தன வென்பதாம்.

    (உ-ரை) மலபரிபாகத்துடன் விட்டு நீங்காத சத்திநி பாதத்தால் உயர்வான பதத்தை யடைவதில் 
தாற்பரியமுள்ள சித்தத்தையுடைய பெரியோர்களால், ஆப்தவாக்கியத்தால் கேட்கத்தக்கன என்பது 
முதலாக முறையே கண்டுகொள்க. இதனால் இந்த மூன்று இரத்தினங்களுக்கும், ஆப்த வாக்கியமென்றதனால் 
ஆகமங்களாலும், யுத்தி என்றதனால் அனுமானத்தாலும், யோக மென்றதனால் யோகிப்பிரத்தியக்ஷத்தாலும் 
அறியப்படுந் தன்மை உண்டென்பது காட்டப்பட்டது என்க.     (9)

    (அ-கை) ஆப்தவாக்கியமென்பது எது என்னும் கேள்விக்கு விடை கூறுகின்றார்

(10)     இவ்விடத்தில் ஆப்தவாக்கியமென்பது சித்தாந்தமேயாகும். யாதொரு காரணத்தால் சிவன் 
ஒருவனே **ஆப்தனாயிருக்கிறானோ, அந்தக் காரணத்தால் (அவன் வாக்கு சித்தாந்தமெனப்படும்). 
அந்தச் சித்தாந்தம் ஆப்தனாகிய அந்தப் பரம சிவன் என்னும் இருபொருள்களோடு சமானமாக 
வேறொரு பொருள் மேம்பாட்டை யுண்டுபண்ணுகிறதில்லை என்பதாம்.

**ஆப்தன்-உண்மையுரைப்போன். உள்ளன அனைத்தும் உணர்பவன் சிவனே யாதலின், 
அவனுக்கே உண்மை யுரைத்தல் கூடும்.

    (உரை) சித்தாந்தமென்னுஞ் சொல்லானது, பங்கஜம்  முதலிய சொற்களைப்போல்
 * காரண இடுகுறியாய் பரமசிவனால் அருளப்பெற்ற காமிக முதலிய இருபத்தெட்டு ஆகமங்களுக்குப் 
பிரசித்தமான உரிமையுடையது. ஆகையால் அந்தச் சிவாகமங்கள் தான் வேறு பிரமாணங்களால்
 பூர்வபக்ஷம் பண்ணப்படாமலிருப்பது பற்றிப் பிரமாணங்களாகுமென்பது கருத்து. இக்கருத்தினை, 
யாதொரு காரணத்தால் சிவனொருவனே ஆப்தனாயிருக்கின்றானோ என்பதனால் தெரிவிக்கின்றார். 

*சிவாகமங்கள், முடிந்த முடிபாயிருத்தல் பற்றியும், சித்தாந்தமென இடுகுறியாய் வழங்கப்படுதல் 
பற்றியும், காரண இடுகுறியாகச் சித்தாந்தமெனப்பட்டன.

    கணாதர் பதஞ்சலி முதலியோரும் ஆப்தர்கள்தானே யெனில், அது பொருந்தாதென்று 
சித்தாந்தம் பரமசிவன் என்னுந் தொடர்பினையுடைய பிற்பகுதியால் கூறுகின்றார். 
இதன் கருத்தாவது, கணாதர் பதஞ்சலி முதலியோரும் ஆப்தர்களென்பது உண்மைதான்.
ஆயினும் அவர்களறிவிற்கு விடயமான பொருள் மாத்திரத்திற்றான் அவர்களாப்தராவர். 
அன்றியும், அவர்கள் எல்லாவற்றையும் அறியுந்தன்மை இல்லாதவர்களாகையால் 
அவர்களாலியற்றப்பட்ட சாத்திரங்களும் அவர்களறிவிற்கு விடயமாகாத விந்து முதலிய 
பொருள்கள் விஷயத்தில் பிரமாணங்களாக ஆவதில்லை.

    சிவனோ எனில், எல்லாப் பொருள்களையும் விடயமாகக்கொண்ட  தனக்கு மேற்பட்டதொன்று 
இல்லாத ஞானக்கிரியையினை உடையவராதலால் மேலான ஆப்தராவர். அவராலருளப்பட்ட 
சாத்திரங்களோ வெனில், பிற மத நூல்களால் அடையத்தகுந்த பதங்களை யறிவிப்பதுடன் 
அந்த நூல்களால் அறிய முடியாத பொருள்களை அறிவிப்பதனாலும், அந்த நூல்களால்
பூர்வபக்கம் பண்ணப்படாமையினாலும் பிரமாணங்களேயாகும். இவ்வாறே வேறு பிரமாணங்களால் 
அறியப்படாததாயும், அவற்றால் பூர்வ பக்கம் பண்ணப்படாத தாயுமுள்ள விடயங்களை யுடையது 
பிரமாணமென்று பெரியோர்களுங் கூறியிருக்கின்றனர். 

    ஆகையால் அந்தப் பரமசிவனோடும் அவனாலருளப்பட்ட சிவாகமங்களேோடும்
சமானமாக வேறொரு பொருளும் நன்மையைத் தருவதாகக் காணப்படவில்லை.

    ஆகமங்கள் நித்தியமாயிருத்தல் பற்றிப் பிரமாணங்களே யன்றி ஆப்தனான 
பரமசிவனால் அருளப்பட்டமை பற்றிப் பிரமாணமில்லையென்று மீமாம்சகர் கூறுகின்றனர்.
அது பொருந்தாது.  செய்கை என்பது செய்பவனையின்றி நிகழாது.  கடம் முதலியன போலும் 
என்னும் விஷயம் நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றமையால் 
அவ்விடத்துக் கண்டுகொள்க என்க. (10)

    (அ--கை) அவ்வாறாயின், சைவம் என்றே பிரசித்தமாயுள்ள வாமம் முதலிய ஆகமங்களும் 
பரமசிவனால் செய்யப்பட்டனவாகையால் அவையும் பிரமாணந்தானோ வெனில், பிரமாணமில்லை. 
எதனாலெனின், பரமசிவன் அந்தவாமம் முதலிய ஆகமங்களை அதிகாரிகளை அனுசரித்து 
ஒன்றுக்கொன்று மாறுபாடுடையதாகவே செய்திருக்கின்றாராகையாலென்க.

    அவ்வாறே பெரியோர்களும், சுகதர் சர்வக்ஞரென்றால் கபிலர் சர்வக்ஞ ரில்லையென்பதில் 
பிரமாணமென்னை? இரண்டுபேர்களும் சர்வக்ஞரானால் அவர்களுக்குள் அபிப்பிராய வேறுபாடு 
நிகழ்தற்குக் காரணமென்னை என்று கூறியிருக்கின்றனர். அன்றியும், வாமம் முதலியன சிவனால் 
நேரே கூறப்படவில்லை. எதனாலெனில், சிவனால் அதிட்டிக்கப்பட்ட ஆன்மாக்களால் செய்யப்பட்டன 
எனப்பிரசித்தி யிருக்கிறபடியாலென்க. இந்த விஷயத்தையே கூறுகின்றார்.

(11)     சித்தாந்தம் ஒன்றுதான் சித்தாந்தமாகும். அஃதாவது முடிந்த முடிபாகும். மற்றவை எல்லாம் 
பூர்வ பக்கங்களேயாம்.  சிவன் ஒருவன் தான் ஆப்தன். ஏனையோர் சிவத்தன்மை இல்லாதவர்களென்று 
கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதாம்.

    (உரை) இவ்விடத்தில் சிவத்தன்மையாவது எல்லாவற்றையும் அறியுந்தன்மையும் 
எல்லாவற்றையுஞ் செய்யும் தன்மையுமாகும் என்க  (11)

(12)     சித்தாந்த சாத்திரமானது சத்திநிபாதத்தால் பரிசுத்தஞ் செய்யப்பட்ட சத்துக்களால் 
பூசிக்கப்படுகிறது. இஷ்டப்படி செய்கின்ற மற்றவர்களால், பசுக்களாற் செய்யப்பட்ட சாத்திரங்கள் 
போல நிந்திக்கப்படுகின்றது என்பதாம்.

    (உரை) பின்னர்க் கூறப்படும் அடையாளமே சத்திநிபாதத்திற்குரிய அடையாளமெனக் 
கூறப்பட்டிருக்கின்றது. எந்த ஆன்மாக்களுக்கு மறுபிறப்பு இல்லாமை காரணமாகச் 
சத்திநிபாதம் நிகழ்கின்றதோ அவர்களுக்குச் சத்திநிபாத அடையாளமாவது, முத்தியில் 
விருப்பமும், சம்சாரத்தில் வெறுப்பும், சிவபத்தரிடத்துப் பத்தியும் சிவ சாத்திரங்களில் 
சிரத்தையும் ஆகுமென்று மிருகேந்திரத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது. இவ்வித சத்திநிபாதத்திற்குப் 
பின் செய்யப்பட்ட தீக்ஷையால் சுத்தஞ் செய்யப்பட்ட புருடர்களால் சித்தாந்த சாத்திரமானது 
பூசிக்கப்படுகிறது. இவ்வாறே கிரணாகமத்திலும் தீவிரமான சத்திநிபாதம் நிகழ்ந்து குருவால் 
தீக்ஷை செய்யப்பட்டிருப்பானேயாயின், அவன் சருவஞ்ஞனான சிவனாகின்றான் என்று 
கூறப்பட்டிருத்தல் காண்க என்க. (12)

    (அ-கை) இந்தச் சித்தாந்த சாத்திரத்தை அறிவில்லாதவர்கள் நித்திப்பதனால் அந்தச் 
சாத்திரத்துக்கு  ஒருவிதமான பிராமாணியக் குறைவும் இல்லை என்பதைத் திருட்டாந்த 
மூலமாகக் கூறுகின்றார்.

(13)     கஸ்தூரியின் வாசனையானது புருடர்களால் வெறுக்கப்படுகிறதில்லை. அன்றியும் 
சாதனங்களால் சாதிக்கப்பட்டுத் தனவான்களால் எக்காலத்தும் முகரப்படுகிறது என்பதாம்.

    (உரை) சிவ தீக்ஷைக்கு உபயோகமாகச் சிவன் முதலிய பொருள்களின் அறிவை போக 
மோக்ஷத்தில் விருப்பமுள்ளவர்கள் செய்யத்தகுந்தது. அவ்வறிவோ எனில், சித்தாந்த சாத்திர 
ஆராய்ச்சியால் நிகழ்கின்றது. அவ்வாராய்ச்சியோ வெனில், சத்திநிபாதத்துடன் நிகழ்ந்த 
தீக்ஷையால் சித்திக்கின்றது என்று மேலைச் சுலோகத்தில் கூறப்பட்டிருக்கின்றது காண்க. (13)

    (அ-கை) பொய்ப் பொருள்களான சிவன் முதலிய பொருள்களைக் கூறுவதனாலும், பொய்ப் 
பொருள்களை அறிவதற்குச் சாதனங் கூறுவதனாலும் பயனில்லை. கண்களுக்குப் புலப்படும் 
பொருள்களனைத்தும் பிரமசொரூபமே. அது எல்லாவுயிர்களுக்கும் அந்தரான்மாவாய் 
ஒன்றாயிருக்கின்றது என்னுஞ் சுருதிகளால் பரமாத்மா ஒருவனே சச்சிதானந்த ரூபனாய் 
சிவன் முதலிய சொற்களால் கூறப்படுகின்றான். அவனைத் தவிர வேறு பொருள் கிடையாது.
பரமானந்த ரூபனான அவனையறியும் அறிவே முத்திக்குக் காரணமாகுமெனச் சிலர் கூறுகின்றனர்.
 அவர்களை நோக்கிக் கூறுகின்றார்.

(14)      வேதாந்தங்களாலும் சாத்தமான கெளள தந்திரங்களாலும் இவை போன்ற ஏனைய 
சாத்திரங்களாலும் ஆனந்த உபகிதமான (சொரூபமான) சைதன்னியமே மோக்ஷத்திற்குக் காரணமென்று 
கூறப்படுகின்றது. அந்தக்கூற்று ஆனந்தமென்னும் சொல்லின் பொருள் விஷயத்தில் ஏமாந்தவர்களுக்குத்தான்
அழகாயிருக்கின்றது என்பதாம்.

    (உரை) வேதாந்தம் முதலிய சாத்திரங்களாலும் வேறுவிதமான சாத்த முதலிய தந்திரங்களாலும் 
சைதன்னிய ரூபமான பொருளொன்றே உண்மையாகும்; பரமானந்த ரூபமான அந்தச் சைதன்னியத்தை 
அறியும் அறிவே மோக்ஷ சாதனமாகுமென்று கூறப்படுகின்றன. அந்தக் கூற்றானது ஆனந்தம் பிரமம் 
என்னும் சுருதியிலுள்ள ஆனந்தமென்னும் சொல்லிற்குப் பரிபூர்த்தி என்னும் பொருளைக் கொள்ளாது 
சுகம் என்னும் பொருளைக்கொண்டு ஏமாந்த மலபரிபாக மில்லாதவர்களுக்குத்தான் அழகாயிருக்கின்றதே 
யன்றிப் பரமசிவனால் அனுக்கிரகிக்கப்பட்ட நம்போன்றவர்கட்கு அழகாயில்லை என்பது கருத்து. 
எவ்வாறெனில், ஆன்மாவை அநேகமென்று கூறும் சுருதிகள் பல காணப்படுகின்றமையால் ஆன்மா 
ஒன்றென்று சாதிப்பது முடியாத காரியமாகும். ஆயின் ஆன்மா ஒன்றென்று கூறுஞ்சுருதிகளும் பல 
காணப்படுகின்றமையால் ஒன்றென்றே கொள்வோமெனில், அது கூடாது.

    ஆன்மாக்களுக்கு அநேகமாயிருக்குந் தன்மையை அறிவிக்கின்ற பிறப்பு இறப்பு முதலிய 
நியமத்தை மறுக்கமுடியாதாகையால் ஒன்றென்று கூறும் சுருதிகள்* வேறு கருத்துடையன என்க.
இத்தகைய ஆன்மாக்களுக்குச் சுதந்திரமின்மை காணப்படுதலால் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் 
போகமோக்ஷத்தைக் கொடுக்கும் சிவனும் முதற்காரண முதலியவையும் ஆகமானுமானங்களால் 
சித்தித்திருக்கின்றமை நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்க் காட்டப்பட்டிருக்கிறது .
மதங்கவிருத்தி முதலிய கிரந்தங்களிலும் ராமகண்டர் முதலியோர் விரிவாய்ச் சாதித்திருக்கின்றனர்.
விரிவை அந்த நூல்களிற் கண்டு கொள்க. விரியுமென்றஞ்சி இவ்விடத்தில் விரிக்கவில்லை என்க (14)

* ஒன்றென்று கூறும் சுருதிகளுக்குப் பரமான்மாவாகிய சிவம் ஒன்றென்பது கருத்து. 
இதனை, "ஒன்றென்ற தொன்றேகா ணொன்றேபதி", என்னும் சிவஞானபோதத்தாலும் தெளிக.

    (அ-கை.) ஆதலினாற்றான் ஆன்ம சொரூபத்தை விஷயமாகவுடைய ஆன்ம ஞானமும் 
அந்தச் சாத்திரத்தில் பற்றுடையவர்களுக்கு உண்மையாக நிகழ்கிறதில்லையென்று கூறுகின்றார்.

(15)     பரமானந்தப் பிராந்தியாகிற அலையானது அவர்களைத் தூக்கி எறியாமலிருக்குமாயின் 
அப்பொழுது ஆன்மவர்க்கமாகிய சமுத்திரத்தினுடைய கம்பீரத்தன்மையானது வித்துவான்களால் 
கிரகிக்கப்பெற்று நிச்சயிக்கப்படும் என்பதாம்.

    (உரை) மேலைச் சுலோகத்தில் கூறப்பட்டவாறுபோல் ஆனந்தமென்னுஞ் சொல்லுக்கு சுகமென்று 
பொருள் கொண்ட பிராந்தி என்னும் அலையானது அவர்களை தூக்கி எறியாமலிருக்குமாயின் அப்பொழுது 
ஆன்மவர்க்கமாகிய சமுத்திரத்தினுடைய கம்பீரமானது, அஃதாவது சருவஞ்ஞத் தன்மை சருவகர்த்துருத் தன்மை, 
நித்தியத் தன்மை, வியாபகத் தன்மை, அநேகத் தன்மை முதலியவை வித்துவான்களால் பிரமாணங்கள் 
வாயிலாய்க் கிரகிக்கப்பட்டு நிச்சயிக்கப்படும். அந்த அலையானது தூக்கி எறியுமாயின் நிச்சயிக்கப்
படமாட்டாது. அந்தச் சாத்திரத்தை இயற்றியவர்கள் சருவஞ்ஞத் தன்மையற்றவர்களாகையால் 
அவர்களுடைய வார்த்தையால் உண்மையான ஞானம் நிகழ்கிறதில்லை  என்க . (15)

    (அ-கை.) ஆன்ம சொரூபமானது எந்த நூலின் வழியாக அறியப்படுமென்னுங் கேள்விக்கு 
விடை கூறுகின்றார்.

(16)     அத்தகைய ஆன்ம சொரூபமானது பல வகையான சாத்திரப்பிரவாகங்களுள் உத்தமமான 
சித்தாந்தத்தில் மேல் நோக்கிய கண்களையுடைய பரமசிவனது மேல் முகத்தால் கூறப்பட்டது. ஆகையால்
அந்த சித்தாந்த சாத்திரத்தின் வழியாக அறிந்து கொள்ளத்தக்கது என்பதாம்.

    (உரை) அந்த ஆன்ம சொரூபமானது வாமம் முதலிய எல்லாச் சாத்திரப் பிரவாகங்களின் 
மத்தியில் மேலான சித்தாந்தமென்னும் பிரவாகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அந்தச் சித்தாந்தத்தின் 
வாயிலாகவே ஆன்ம சொரூபத்தை அறிந்து கொள்க.  சித்தாந்த சாத்திரம் பரமசிவனால் கூறப்பட்டதாகையால் 
அது ஏனைய சாத்திரங்களெல்லாவற்றினும் சிறந்ததென்று பிற்பகுதியால் சாதிக்கின்றார். எவ்வாறெனின், 
மேல்முகம் என்றவிடத்தில் முகமென்னுஞ் சொல்லால் வாக்கைக்காக்கும் பரமசிவனது சத்தி கூறப்படுகிறது. 
எதனாலெனில், உண்மையில் பரமசிவனுக்கு முகமுதலிய தேகமின்மையாலென்க. ஆகையால் 
அனுக்கிரகத் தொழில்புரிவதாயும் மேலேயுள்ளதாயும் இருக்கும் சத்திரூபமான பரமசிவனது முகத்தால் 
விந்து சத்தியிலிருந்து நாத முதலியவற்றின் வழியாய் முறையாய் ஆக்கப்பட்டுள்ள சாத்திரத்தில் 
விளக்கஞ் செய்யப்பட்டுள்ளதென்பது கருத்து. அவ்வாறாயின், சரீரமில்லாத பரமசிவன் சாத்திரங்களை 
எவ்வாறு உபதேசித்தல் கூடுமெனில், இந்தக்கேள்வி பொருந்தாது. எதனாலெனில், உலகத்தின் சிருட்டி 
முதலியவை சங்கற்ப மாத்திரத்தால் நிகழ்வது போல் வித்தியேசுவரர் முதலியோருக்கும் சங்கற்ப 
மாத்திரத்தால் உபதேசஞ் செய்கின்றாராதலினென்க.     (16)

(17)     அந்த ஆன்ம சொரூபத்தின் ஆராய்ச்சியின் பொருட்டு ஏதுக்களை அந்தச் சித்தாந்த 
சாத்திரங்களிலிருந்தே அறிந்து கொள்க. மனுடர்களுடைய அறிவு, விரிவாயும் பரிசுத்தமாயும் 
இருப்பினும், இந்த விஷயத்தில் சாமர்த்தியம் உடையதாகிறதில்லை என்பதாம்.

    (உரை) அந்த ஆன்ம சொரூபத்தின் ஆராய்ச்சியும் சித்தாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட 
ஏதுக்களைக்கொண்டே செய்யத்தகுந்ததென்பது கருத்தென்க. (17)

    (அ--கை) இவ்வாறு காரணம்பற்றி ஆன்ம சொரூபத்தைச் சித்தாந்தம் ஒன்றால் மாத்திரந்தான்
 அறிதல் கூடுமென்று சாதித்து விட்டு, தொடர்ச்சியான சிவன் முதலிய இரத்தினங்களைக் கேட்டல் 
சிந்தித்தல் தெளிதல் என்னுமிவையும் சித்தாந்த சாத்திரத்தின் வழியாகவே செய்யத்தகுந்தன 
என்று மேலே கூறியதை விரித்துக் கூறுகின்றார்.

(18-19)     உலக சம்பந்தம் அற்றனவாயும், சூக்குமங்களாயும், பரமசிவனாலேயே ரகசியமாய்க் 
காக்கப்பட்டனவாயுமுள்ள சிவன் முதலிய மூன்று இரத்தினங்களைச் சித்தாந்த சாத்திரமின்றி எவன் 
தானாகவே அறிகின்றான்? அதுபோல இகழத்தக்க தர்க்கங்களாகிய பெரிய இருளுக்கு எதிரிகளான 
குற்றமில்லாததுக்களையும், சபீஜம், நிர்ப்பீஜமென்னும் யோகத்தையும் தனது அறிவால் சித்தாந்தமன்றி 
எவனறிகின்றான்? என்பதாம்.

    (உரை)  இவ்விடத்தில் சபீஜயோகமாவது, சதாசிவம் முதலிய சகளமூர்த்தியை விடயமாகக்
கொண்டது. நிர்ப்பீஜ யோகமாவது, சதாசிவத்திற்கு மேற்பட்ட நிட்கள மூர்த்தியை விடயமாகக் கொண்டது. 
இதனால் இந்த மூன்று இரத்தினங்களும்,  ஆகமம் அனுமானம் யோகிப் பிரத்தியக்ஷம் என்னும் 
இம்மூன்றால் அறியத்தகுந்ததென்பது அறிவிக்கப்பட்டதென்க. (18-19)

(20)     (அன்றியும்) சித்தாந்தமானது பெரியோர்களால் பூசிக்கப்பட்டதாய்ச் சாதகன் 
விருப்பத்துடனெண்ணிய பொருள்களனைத்தையும் சிந்தாமணியாகிய இரத்தினம் போல் 
கொடுக்கின்றது என்பதாம். 

    (உரை) சித்தாந்தத்தினாலேயே, சாதகர்களுக்குச் சாதன ஞானமும், அந்தச் சாதனத்தை 
அனுட்டித்தலால் பயனும் உண்டாகின்றனவென்பது கருத்து என்க. (20)

    (அ-கை.) இவ்வாறு சித்தாந்த ஞானரூபமான பயனை அறிவித்துச் சித்தாந்தத்தால் 
கூறப்படும் பொருள்களை அறிவிப்பதால், இந்தப் பிரகரணத்திற்கும் அதுவே பயனென்று அறிவிப்பாராய்ப், 
பிரகரணத்தில் கூறப்படும் பொருள்களின் ஆராய்ச்சியை மேற்கொள்ளுகின்றார்.

(21)     அந்தச் சித்தாந்தத்தை அனுசரித்து, என்னாலும் ,விந்து, சத்தி, சிவம் என்னும் இவற்றை 
விடயமாகக்கொண்ட ஆராய்ச்சியானது செய்யப்படுகின்றது. அம்மூன்றனுள், முதலாவது விந்துவானது
 நிருபணஞ் செய்யப்படுகின்றது என்பதாம் (21)

     (அ-கை.) விந்து உண்டென்று சித்திப்பதைப் பற்றிக் கூறுகின்றார்.

(22)     சுத்தாத்துவாவானது எதனிடத்திலிருந் துண்டாகின்றதோ, எதனிடத்தில் நிலைத்திருக்கின்றதோ, 
எதனிடத்தில் ஒடுங்குகின்றதோ, அது, பரநாதமென்னும் பெயருடைய விந்துவாகும். அந்த விந்துவே, 
நாதம், விந்து, வர்ணம் என்னுமிவற்றிற்குக் காரணமாகின்றது என்பதாம்.

    (உரை) பின்னர்க் கூறப்படுமாறுபோல், சுத்தாத்துவாவானது அநேக விதமான புவன முதலிய 
ரூபமாயிருத்தலால் அது காரியப் பொருளெனப்படுகின்றது. ஆகவே, அதற்கு முதற்காரணமாக விந்துவுண்டென்பது 
சித்தித்தது. அன்றியும், சத்தத்திற்கு முதற்காரணமாயிருத்தல் பற்றியும் விந்து சித்திக்கிறதென்று, 
நாதம் விந்து வர்ணமென்னும் இவற்றிற்குக் காரணம் என்னும் பிற்பகுதியால் கூறுகின்றார். அவற்றுள், 
நாதமென்பது சொல்லுக்கு விடயமான பொருள்களை அறியும் அறிவிற்குக் காரணமானதாயும் விந்துவின்
முதலாவதான பரிணாமமாயும் உள்ள சூக்கும நாதமாகும். 

    இந்த சூக்கும நாதம் ஸ்ரீ காலோத்தரம் முதலிய ஆகமங்களில் சிந்தையற்றதெனக் 
கூறப்பட்டுள்ளது.  விந்துவோவெனில், அந்தச் சூக்குமநாதத்தின் காரியமாய் மயில் 
முட்டையினுள்ளிருக்கும் கருவினுள்ள நீர்த்துளிபோல் பிரித்தறியப்படாததாயும், ஆராய்ச்சி 
அறிவு ரூபமாயும் உள்ள அக்கர விந்துவாகும். அதுவும் சூக்குமமென்றே அந்தக் காலோத்தர 
ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.  வர்ணமென்பது ஆகாயம், வாயுவென்னு மிவற்றாற்றோன்றிக் 
காதுகளாலறியக்கூடிய தூலநாதமாகும். இவ்வாறே, தூலம் சத்தமென்றும், சூக்குமம் சிந்தனை
ரூபமாயிருக்கிறதென்றும், பரம் சிந்தையற்றதென்றும் அந்தக் காலோத்தர ஆகமத்தில் 
கூறப்பட்டுள்ளது என்க.    (22)

    (அ--கை) * சுத்தாத்துவாவிற்குப் புவனங்களுக்குப் பற்றுக் கோடாயிருக்குந் தன்மை 
உண்டென்று கூறத் தொடங்குகின்றார்.

*சுத்தாத்துவா வென்பது இவ்விடத்துச் சுத்த தத்துவங்களைக்  குறித்தது.

(23)     மாயை என்னும் சமுத்திரத்தைத் தாண்டினவர்களாயும், கன்மமென்னும் பெருந்தாழ்ப்பாளை 
நாசஞ் செய்தவர்களாயும், சிவபதத்தை அடையாதவர்களாயுமுள்ள விஞ்ஞான கேவலர்கள் 
மூன்று விதமாகின்றன ரென்பதாம். 

    (உரை) பசுரூபமான ஆன்மாக்கள், மலம் கன்மம் மாயைகளுடன் கூடின சகலர்களென்றும், 
பிரளயத்தில் கலையாதிகள் நீங்கினமையால் மலம் கன்மம் என்னு மிரண்டுடன் கூடின பிரளயாகலரென்றும், 
ஞானத்தால் கன்மம் நசித்து மலமாத்திரத்துடன் கூடின விஞ்ஞான கேவலரென்றும்,  மூன்று 
பிரிவினராயிருக்கின்றனர். அம்மூவருள், மலபரிபாகத்தின் வேறுபாட்டால் கன்ம மலம் மாயாமல மென்னும் 
இரண்டும் சிவானுக்கிரகத்தால் நாசம் அடையப்பெற்றவர்களாயும், சிறிது மிகுதியான அதிகார மலமிருத்தலால் 
சிவசாமிய மடையாதவர்களாயுமுள்ள விஞ்ஞான கேவலர்கள் மூன்றுவிதமாகின்றனர் என்க (23) 

    (அ-கை) அந்த விஞ்ஞான கேவலர்கள் இவரென்று கூறுகின்றார். 

    (24) வித்தைகளென்றும், வித்தியேசுவரர்களென்றும் அணுசதாசிவர்களென்றும், விஞ்ஞான கேவலர் 
மூன்று பிரிவினராவர். அவர்களுள், முதலாவதான வித்தைகள், வித்தியாதத்துவத்தைப் பற்றுக் கோடாக 
வுடையவர்கள். அவர்கள் மந்திரேசுவரர்களென்றும் வித்தைகளென்றும் பெயரையுடையவராகின்றனர் என்பதாம். (24)

(25)      அந்த மந்திரேசுவரர்கள் வித்தியேசுவரர்களால்  ஏவத்தகுந்தவர்கள் . ஏழுகோடி எண்ணிக்கை 
யுள்ளவர்கள். அவர்களுக்கு வித்தியா தத்துவத்தில்,வாமை, சுயேஷ்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, 
பலவிகரணி, பலப்பிரமதிநீ, சர்வபூத தமனீ, மநோன்மனீ என்னும் ஒன்பது புவனங்கள், தனுகரணாதிகளால் 
ஒன்றுக்கொன்று மேன்மை வாய்ந்தனவாய் விளங்குகின்றன என்பதாம்.

    (உரை) இந்த மந்திரேசுவரர்கள், வித்தியேசுவரர்கள் செய்யும் அனுக்கிரக மென்னுந் தொழிலுக்குச் 
சாதனமாயிருப்பது பற்றி ஏவத் தகுந்தவர்களாகின்றனர். எதனாலெனில், வித்தியேசுவரர்கள் ஐவகைத் 
தொழிலுக்கும் அதிகாரிகளாகையாலென்க.  வாமை முதலிய ஒன்பது புவனங்களும், ஒன்றினின்றும் 
மற்றொன்று மேன்மையான போகத்தைக் கொடுக்கக் கூடியனவென்பது கருத்து (25)

    (அ-கை) பின்னர் வித்தைகளாகிய மந்திரேசுவரர்களினின்றும் வித்தியேசுவர்கள் 
சிறந்தவர்களென்று கூறுகின்றார்.

(26-27)      விஞ்ஞானகலர் மூவருள், நடுவிலுள்ள வித்தியேசுவரர்கள், மலமொழிந்தவர்களாயும், 
சிருட்டி முதலிய ஐந்தொழிலுடையவர்களாயும், அதிகாரமலமாத்திர முடையவர்களாயும், சிவசூரியனுடைய 
கிரணச்சேர்க்கையால் மலர்ந்த ஆன்ம சக்தியையுடையவர்களாயும், ஈசுவர தத்துவத்தை இருப்பிடமாகக் 
கொண்டவர்களாயுமிருக்கின்றன ரென்பதாம்.

    (உரை) மலமொழிந்தமையும், அதிகாரமல முடைமையும் சிவானுக்கிரக முடைமையும் ஆகிய 
இம்மூன்றும் மந்திரேசுவரர்களுக்கும் உண்டு. ஐந்தொழில் புரியும் விஷயத்தில், படைத்தல், காத்தல்,
 அழித்தல் மறைத்தல் அனுக்கிரகித்தல் என்னும் ஐந்தொழில் புரிகின்றவர்கள் வித்தியேசுவரர்களென்னும் 
ரௌரவாகம வாக்கியம் பிரமாணமென்க (26-27)

(28)     வித்தியேசுவரர்கள், அனந்தர் முதலாக எண்மராவர். ஒருவருக்கொருவர் குணத்தால் சிறந்தவர்கள்,
 இந்த எண்மர்களுக்கும் மேலைச் சுலோகத்தில் கூறப்பட்ட ஈசுவர தத்துவத்திலேயே எட்டுப் புவனங்களுள்ளன.
 அவர்களுக்குள் அனந்தர் நாயகராவரென்பதாம். 

    (உரை) அனந்தர் முதலிய எண்மர் எவரெனின், அனந்தர் சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், 
ஏகவுருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீ கண்டர், சிகண்டி என்னும் பெயருடையவர்களென்க. இவர்களுக்கு ஈசுவர 
தத்துவத்தில் அனந்த சூக்கும சிவோத்தம என்பது முதலிய பெயர்களைக் கொண்ட எட்டுப் 
புவனங்களிருக்கின்றன. இவர்களுக்குள் அனந்தரே பரமேசுவரன் என்க.     (28)

(29)     அந்த ஈசுவர தத்துவ புவனங்களில் வித்தியேசுவரர்களுடைய மகிமை போன்ற 
மகிமையினையுடைய வேறு சில ஆன்மாக்களும் இருக்கின்றனர். மூன்றாவது விஞ்ஞான 
கேவலர்களான அணு சதாசிவர்கள், பதிகிருத்தியத்திற்கு அதிகாரிகளா யிருக்கின்றனரென்பதாம்.

    (உரை) அந்தந்தப் புவனபதிகளை வழிபாடு செய்தலினாலாவது, தீக்ஷையினாலாவது, 
சில ஆன்மாக்கள் அந்தந்தப் புவனங்களில் வாசஞ் செய்கின்றனர். இந்த நியாயத்தையே வித்தியா 
தத்துவ புவனங்களிலும் சதாசிவ தத்துவ புவனங்களிலும் அமைத்துக்கொள்க. அவ்வாறே சூக்கும 
சுவாயம்புவம் என்னும் ஆகமத்திலும், எவன் எந்தப் புவனத்தின் போகங்களை விரும்புகின்றானோ, 
அவன் அந்தப் புவனங்களிலேயே மந்திர சாமர்த்தியத்தால் ஏவப்பட்டவனாகிச் சித்தியடைந்தவனா
யிருக்கின்றான் எனக் கூறப்பட்டுள்ளது. சுலோகத்தின் பிற்பகுதியால் அணுசதாசிவர்களைப் பற்றிக் 
கூறுகின்றாரென்க (29)

(29இ)     அந்த அணுசதாசிவர்கள் பரமசிவனுடைய அனுக்கிரகங் கிடைக்குங்காலத்தில் 
அத்துவாவைக்  கடந்து முத்தியடைகின்றனரென்பதாம்   .

    (உரை) இவ்விடத்தில் சதாசிவராவார், அதிகாராவத்தையிலுள்ள சிவனேயாவர். 
அவருக்கு அதிகாரமுதலிய அவத்தைகள் உபசாரமாய் நிகழ்ந்தன. பரமசிவன் ஒருவனே, 
உபசாரத்தால் அதிகாரியென்றும், இலயி என்றும், போகி என்றும் கூறப்படுகின்றானென்று 
சாத்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது. சமஸ்காரம் செய்யப்படுதற்குரிய அணுசதாசிவருக்கு 
அதிகார முதலிய வேற்றுமை உபசாரமன்று. உண்மையே யாகுமென்க. (29இ)

     (அ-கை ) இந்த அணுசதாசிவர்கள் சதாசிவ தத்துவத்திலிருக்கும் புவனத்தில் 
வசிப்பவரெனக் கூறுகின்றார்.

( 30)     விந்துவானது அநேக போகங்கள் நிரம்பிய சதாசிவமென்னும் பட்டணத்தை உண்டுபண்ணுகின்றது. 
அந்தப் பட்டணத்திற்கு அதிட்டாதாவான சதாசிவனது பெயரை அனுசரித்து அதையடைந்த அணுக்களும் 
சதாசிவரென்றே கூறப்படுகின்றனரென்பதாம்.

    (உரை) ஆனதுபற்றியே இந்த அணுசதாசிவர்களுக்குத் தேகம் முதலியன உண்மையேயாகும். 
அதிட்டாதாவான பரமசிவனுக்குத் தேகம் உண்மையன்று. சாதகனுடைய லக்ஷியத்திற்காகப் பரமசிவனுக்கு 
வடிவங்கொாள்ளப் பட்டிருக்கிறதென்று பெளட்கரத்தில் கூறப்பட்டிருக்கிறது என்க (30)

    (அ-கை) சுத்தாத்துவா விஷயமாக இதுவரை கூறியதை முடித்துக் காட்டுகின்றார்.

(31)     சிவனைக் கருத்தாவாகவுடைய சுத்தாத்துவாவானது, பதினெட்டுப் புவனங்களோடும், 
போக்தாக்களோடும் மூன்று தத்துவங்களோடும் கூறப்பட்டுள்ளது என்பதாம்.

    (உரை) இந்தச் சுத்தாத்துவாவானது காரியப்பொருளாகையால் சிவனைக் கருத்தாவாக 
வுடையதென்பது கருத்து. நிவிருத்தி முதலிய கலைகளிலுள்ள புவனங்களுக்கும், சத்தி தத்துவம் 
சிவதத்துவங்களுக்கும், சதாசிவ தத்துவத்திலேயே அடக்கமென்றறியத்தகுந்தது என்க. (31)

    (அ-கை) சுத்தாத்துவாவானது காரியப் பொருளாகையால் இதற்கு நித்தியமான ஒரு 
காரணமிருக்கவேண்டும். அந்தக் காரணமே விந்துவென்னும் பெயர் பெற்றதெனக் கூறுகின்றார்.

(32)     சதாசிவம் முதலிய தத்துவக் கூட்டமானது விகாரத்துடன் கூடியிருத்தலால் நித்தியமான 
முதற்காரணத்தையுடையது. எது எது விகாரமுடையதோ, அது நித்தியமான முதற் காரணமுடையது; 
கடம்போலும். இதுவும் அது போல. ஆகையால் நித்தியமான முதற்காரணமுடையதே என்பதாம்.

    (உரை) இந்தச் சதாசிவம் முதலிய அத்துவாவும் விகாரப் பொருளாகையால் நித்தியமான 
முதற்காரணமுடையதென்பது கருத்து என்க .     (32)

    (அ-கை) கடத்திற்கு முதற்காரணமான மண்ணானது அநித்தியமாயிருப்பதால் 
சுத்தாத்துவாவிற்கு முதற்காரணமான இந்த விந்துவும் அநித்தியமாகவே யிருக்கவேண்டும்.
வேண்டவே, விகாரமுடைமையாலென்னும் ஏதுவானது தருமியான விந்துவின் நித்தியத் 
தன்மைக்கு விபரீதமான அநித்தியத் தன்மையைச் சாதித்துக் கொடுத்தலால் 
விரோதமென்னுங் குற்றமுடைய * விருத்தனென்னும் ஏதுப்போலியாகுமென்று 
ஆசங்கை நிகழ அதனைப் பரிகரிக்கின்றார்.

* விருத்தமென்னும் ஏதுப்போலியாவது:- துணிபொருள் இல்லாவிடத்து வியாபித்திருக்கும் ஏதுவாகும். 
உதாரணம் - சத்தம் நித்தியம், காரியப்பாட்டால் என்பது. காரியப்பாடு, நித்தியமல்லா அழிபொருளில் 
வியாபித்திருத்தல் காண்க.

(33) கடமானது மண்ணைச் சார்ந்ததாயிருந்தபோதிலும் மாயையை முதற்காரணமாக உடையதாக 
இருக்கின்றது என்பதாம்.

    (உரை)  கடத்திற்கு நேரே மண் முதற்காரணமாக இருந்த போதிலும் பரம்பரையாய் 
மாயையே முதற்காரணமென்பது கருத்தென்க.     (33)

    (அ-கை.) மண் முதற்காரணமா யிருந்தபோதிலும் பரம்பரையாய் மாயை முதற்காரண 
மென்பது எதனாலென்னும் ஆசங்கைக்குவிடை கூறுகின்றார்.

(33இ)     அழிதல் தோன்றுதல் என்னும் இவற்றுடன் கூடிப் பரிணாமமுடையதாயிருத்தலால்
 மாயையை முதற்காரணமாகவுடையது என்பதாம்.

    (உரை.) இதன் கருத்தாவது, கடம் கபாலம் முதலிய அழிதலும் தோன்றுதலுமுடைய 
பொருள்களுக்கு * அவாந்தர பரிணாமமிருப்பது பற்றி அவாந்தர காரிய காரணத் தன்மையிருப்பினும்,
பிருதிவி முதலிய தத்துவங்களுக்குப் பரம்பரையாய் மாயையென்னும் நித்தியமான முதற்காரணம் 
கொள்ளத்தக்கது. அவ்வாறு கொள்ளவில்லையாயின் வரம்பின்றி ஓடலென்னும் குற்றம் நிகழும். 
இவ்வாறே சுவாயம்புவ ஆகமத்திலும், நாசமற்றதான மாயையானது உலகத்திற்கு முதற்காரணமா 
யிருக்கின்றதெனக் கூறப்பட்டிருக்கிறது என்க. (33இ)

*அவாந்தரம் - இடைப்பட்டது. கடத்திற்குக் கபாலம் இடைப்பட்ட காரணம். கபாலத்திற்கு மண் 
இடைப்பட்ட காரணம். மண்ணுக்குத் தன்மாத்திரை இடைப்பட்ட காரணம். இவ்வாறே மேலுஞ்சென்று 
மாயையே காரியத்தன்மை யில்லாத காரணமாய் நிலைபெறும்.

    (அ--கை) இதனையே விரித்துக் கூறுகின்றார்

(34 )     எந்த எந்தப் பொருள் தோன்றுகின்றதோ அது மாயையை முதற்காரணமாகவுடையது. 
கலைபோலும் தோற்ற நாசங்களை மாயையைச் சார்ந்த தருமங்களாக மகேசுவரன் 
கூறியிருக்கின்றாரென்பதாம்.

    (உரை) ஆப்தனான பரமசிவனுடைய வாக்கியத்தாலும் மாயை முதற்காரணமென்று 
சித்தித்த தென்பது கருத்து என்க . (34)

    (அ-கை) இப்பொழுது சற்காரிய வாதம் பற்றிக்கலை முதலிய நிலைவேறுபாட்டால் 
தோற்றம் நாசம் என்னும் தொழிலையடைந்த மாயையே கலை முதலிய காரியத்தின் வழியாய்ப் 
பரிணமிக்கின்றதெனக் காட்டுதற்குப் பரிணாமமென்னும் சொல்லிற்குப் பொருள் கூறுகின்றார்.

(35-36)     பொருள்களுக்குப் பரிணாமமோ வெனில், முன் நிலையினின்று நழுவி வேறு 
நிலையை யடைதலாகும். பாலுக்குத் தயிர்த்தன்மை போலும், தயிருக்கு மோர்த் தன்மை போலுமாம். 
அவற்றுள், தயிர்த்தன்மை ரூபமான நிலை நிருபணஞ் செய்யப்படுகின்றது என்பதாம் .

    (உரை) அவற்றுள் என்பதனால் திருட்டாந்தத்தின் சொரூபத்தை நிரூபணம் செய்வதற்குத் 
தொடங்குகின்றாரென்க (35-36)

(36இ)      பால் நிலையும் தயிர் நிலையும் மோர் நிலைக்கு முந்தின நிலைகளாய்க் கொள்ளப் 
பட்டிருத்தலால், மோர் நிலையானது பால் நிலையிலும் தயிர் நிலையிலும் இல்லை என்பதாம்.

    (உரை) தயிர் நிலையிலாவது பால் நிலையிலாவது மோர் நிலை இல்லை என்பது கருத்து.
பாலே தயிர் முதலிய ரூபமாய்ப் பரிணமிக்கின்றது. பால் நசித்துத் தயிர் தோன்றிற்று என்னும் 
வழக்கும் காணப்படுகின்றது என்க (36இ)

    ( அ--கை)  இன்னும் இதனையே கூறுகின்றார் .

(37)     சத்துரூபமான நிலையையுடைய ஒரு பொருளே முன்னர்ப்பால் ரூபமாயிருந்து பின்னர்த்தயிர் 
ரூபமாயிருக்கின்றது. அதன்பின்னர் மோர் ரூபமாயிருக்கின்றது என்பதாம்.

    (உரை) அசத்துப் பொருளுக்குத் தோற்றம் கூடாது. ஆதலின் சத்தான தயிரே பாலிலிருந்து 
தோன்றுகிறது; சத்தான மோரே தயிரிலிருந்து தோன்றுகிறதென்பது கருத்து. இந்தச் சற்காரிய 
வாதமானது நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்க் கூறப்பட்டுள்ளது என்க (37)

    (அ-கை) தயிர் வெண்ணெய் முதலிய நிலை ரூபமான பரிணாம வேறுபாட்டால் வேறான 
பொருளையும் கிரியையினையுமுடைய காரியங்களுக்கு எவ்வாறு பாலே முதற்காரணமா யிருக்கின்றதோ? 
அவ்வாறே தத்துவம் புவனம் முதலிய வேறுபாட்டால் வேறு வேறான பரிணாமமுடையனவாயும், 
வேறு வேறான பொருளும் தொழிலுமுடையனவாயும் உள்ள கலை முதலிய காரியங்களுக்கும், 
நேராகவும் ஒன்றன்பின் ஒன்றாகவும் மாயையே முதற்காரணமென்று கூறுகின்றார்.

(38)     அவ்வாறே மாயையும் நானாவிதமான பரிணாமத்துடன் கூடியிருத்தலால் தத்துவங்கள் 
தாத்துவிகங்களென்னும் இவற்றிற்கு நித்தியமான முதற்காரணமாகின்றது என்பதாம்.

    (உரை ) அவ்வாறாயின் பால் போல முற்றும் பரிணமிக்கின்றமையால் மாயை 
அநித்தியமாகுமென்னில், ஆகாது. திருட்டாந்த மெல்லாம் அனைத்திற்குங் கூறமுடியாது. 
(அஃதாவது பொருள் நிறம் குணம் தொழிலென்னும் நான்கனுள் யாதானுமொன்று பற்றித் 
திருட்டாந்தம் கூறப்படுவதன்றி அனைத்திற்கும் ஒரு திருட்டாந்தம் கூறப்படுவதில்லை. 
படுமாயின் அது பொருளெனப் படுமேயன்றித் திருட்டாந்தமெனப்படாது என்பதாம்.)
ஆதலால் பரிணாம விடயத்தில் மாத்திரம் பால் திருட்டாந்தமாகக் கூறப்பட்டது. 
நெய் ஒருபாகத்தில் புழுவாகப் பரிணமிப்பது போல் மாயையும் ஒரு பாகத்தில் 
பரிணமிக்கின்றது . ஆகையால் குற்றமின்மை காண்க என்க (38)

    (அ-கை.) இவ்வாறு கடத்திற்கும் ஒன்றன் பின்னொன்றாய் நித்தியப் பொருளை 
முதற்காரணமாக உடையதாயிருக்குந் தன்மையைச் சாதித்து விட்டு விடயத்தைக் கூட்டி முடிக்கின்றார்

(38இ)     ஆகையால் பிரசித்தமாய் விளங்கும்படி கூறப்பட்ட நித்தியமான முதற்காரணத்தையுடையது 
என்னும் விசேடணத்தையுடைய கடம் என்னும் திருட்டாந்தம் பொருத்த முடையதேயாகும் என்பதாம் (38இ)

    (அ--கை) * பாரிசேட அனுமானத்தினாலும் விந்துவின் சித்தியைக் கூறுகின்றார் .

*பாரிசேடம்-மூவரில் இருவர் கள்வரல்லரெனின், மற்றவன் கள்வனென்பது.

(39)     சுத்தாத்துவாவிற்கு அசுத்தமாயையும் முதற் காரணமாதலில்லை.  ஈசுவரனும் 
முதற்காரணமாதலில்லை. பரமாணுவும் முதற்காரணமாதலில்லை. சிவசத்தியும் முதற்காரணமாத 
லில்லை.  எனவே பாரிசேடத்தால் விந்துவே (சுத்தமாயையே) முதற்காரணமென்பது சித்தித்தது என்பதாம். (39)

    (அ-கை.) அவற்றுள் அசுத்தமாயை முதற்காரணமாதலில்லை என்பதைச் சாதிக்கின்றார்.

(40)     முன்னர்க் கூறிய நான்கு பொருள்களுள் அசுத்த மாயையென்று யாதொன்று கூறப்பட்டதோ 
அது அனந்தேசருடைய சத்தியால் கலக்கப்பட்டுக் கலை முதல் பிருதிவி ஈறான தத்துவக் கூட்டத்தைத் 
தோற்றுவிக்கின்றது என்பதாம்.

    (உரை)     அவற்றுள், அசுத்தமாயை யென்று யாதொன்று கூறப்பட்டதோ அது அனந்ததேவருடைய 
சாமர்த்தியத்தால் கலக்கஞ் செய்யப்பட்டுத் தனது காரியத்தைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறே 
சுத்தாத்துவாவில் சிவன் கருத்தா ; அசுத்தாத்துவாவில் அனந்தேசுவரர் கருத்தாவென்று கிரணாகமத்திலும் 
கூறப்பட்டிருக்கின்றது என்க (40)

    (அ-கை.) மேற் கூறப்பட்ட விஷயத்திற்கு ஏதுக்களைக் கூறுகின்றார்.

(41-42)     அசுத்தமாயும் ஜடமாயும் இருத்தலாலும், அவ்வாறே மோகத்திற்குக் காரணமாயிருத்தலாலும், 
துக்கத்தின் சேர்க்கையாலும், மாயா சம்பந்தமான மலம் கன்மமலம் ஆணவமலம் என்னுமிவற்றின் சேர்க்கையாலும், 
எல்லா  ஆன்மாக்களுக்கும் போக்கியமாயிருத்தலாலும், பரிணாமத்தின் கூட்டமாயிருத்தலாலும், 
அசுத்த மாயையானது அனந்தேசுவரரால் கலக்கஞ் செய்யப்பட்டு அசுத்தாத்துவாவைத் தோற்றுவிக்கின்றது
என்பதாம். 

     (உரை) யாதொரு காரணத்தால் இந்த அசுத்தாத்துவாவிற்கு அசுத்தத்தன்மையும் சடத்தன்மையு 
மிருக்கின்றதோ அதனாலும், மோகத்தை யுண்டுபண்ணுதலாலும், துக்கத்தை யுண்டு பண்ணுதலாலும் 
மும்மலமுடைய உயிர்களுக்கே தேகம் இந்திரிய முதலியவற்றைத் தோற்றுவித்தலால், ஆன்மாவல்லாத 
பொருளை ஆன்மாவென எண்ணும்படி செய்வதான மாயேய மலம், சுகம் துக்கம் மோகமென்னும் 
இவற்றிற்குக் காரணமான மயக்கம் ஆசை முதலிய பாவப்பிரத்திய ரூபமான கன்மமலம்; 
அநாதியே ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் பசுத்தன்மை யெனப்படும் ஆணவமலமென்னும்
இம்மூன்று மலங்களின் சம்பந்தமிருத்தலாலும், மும்மலங்களின் சம்பந்தம் பற்றிப் புவன முதலியவற்றின் 
வாயிலாக எல்லா ஆன்மாக்களுக்கும் போக்கியப் பொருளாயிருத்தலாலும், பலவிதமான கன்ம பலன்களின் 
அனுபவத்திற்குச் சாதனங்களான பலவிதங்களான பரிணாமக் கூட்டத்தாலும், இவ்வாறு பல காரணங்களால் 
அசுத்தமாயையானது அனந்த தேவரால் கலக்கப்பட்டு அவ்விதமான காரியங்களைத் தோற்றுவிக்கின்றது. 

    சுத்தனான சிவனுக்கு அசுத்தமான அத்துவா விஷயத்தில் கருத்திருத்தன்மை கூடாதாகையாலென்க.
அவ்வாறாயின், சிவன் எல்லாவற்றிற்குங் கருத்தாவென்பது எவ்வாறு கூடுமெனில், இந்தக் கேள்வி பொருந்தாது.
சிவன் அசுத்தாத்துவாவை நேரே தோற்றுவிக்கவில்லை என்று இவ்விடத்தில் விலக்கப்பட்டதேயன்றி 
அனந்தர் வாயிலாகக் கருத்தாவாயிருக்கும் ஏவுதல்செய்யுங் கருத்திருத்தன்மை விலக்கப்படவில்லை. 
எதனாலெனின் அனந்ததேவருக்கும் சிவனுடைய அதிட்டானமின்றிக் கருத்திருத்தன்மை
யில்லையாகையா லென்க:    (41-42)

    (அ-கை)  இவ்விடயத்தையே விரிவாய்க் கூறுகின்றார்

(43-44)  அசுத்த மாயையானது யாதொரு காரணத்தால் வேறு சடப்பொருளால் வியாபிக்கப்பட்டும், 
பரிணாமத்துடன் கூடியும் இருக்கின்றதோ, அந்தக் காரணத்தால் கலை முதலியவற்றைத் 
தோற்றுவிப்பதில் தேகம் முதலியவற்றோடு கூடினவனாயும், பிறனொருவனுக்கு 
அடங்கினவனாயுமுள்ள புருடனை நிச்சயமாய் விரும்புகின்றது. எதுபோலுமெனின், 
பொன்னானது கிரீடத்தைத் தோற்றுவிப்பதில் தட்டானை விரும்புவது போலுமென்க என்பதாம்.

    (உரை)  அவ்வாறாயின் சுத்தாத்துவாவைத் தோற்றுவிப்பதில் சிவன் கருத்தாவாகையால் 
சிவனுக்கும் சரீரம் இந்திரிய முதலியவற்றின் சேர்க்கை வேண்டுமேயெனில், வேண்டுவதில்லை. 
எதனாலெனில், சிவன் நித்தியமாயும், நின்மலமாயும், அதிசயமற்றதாயுமுள்ள, எல்லாப் 
பொருள்களையும் விடயமாகக்கொண்ட ஞானகிரியைகளுடன் கூடியிருத்தலாலென்க. 
அன்றியும் சரீரமில்லாத ஆன்மாவிற்குத் தனது சரீரத்தைத் தொழிற்படுத்தும் விஷயத்தில் 
கருத்திருத்தன்மை காணப்படுவதாலும், சரீரமில்லாமலே சிவனுக்குக் கருத்திருத்தன்மை 
கூடுமென்க. அனந்த தேவருக்கோவெனில், அதிகார மலச்சேர்க்கை இருப்பது பற்றி அவருடைய 
கருத்திருத்தன்மை சரீரத்தோடு கூடியே நிகழுமென்க (43-44)

(45)      (ஆகையால்) அத்தகைய இந்த மாயையானது யாதொரு காரணத்தால் விகற்ப ஞானத்திற்கு 
விடயமாயிருக்கின்றதோ, அந்தக் காரணத்தால் குயவனால்  மண் போல அனந்ததேவரால் 
கலக்கப்படுகின்றது என்பதாம் .

    (உரை.) சவிகற்ப அறிவிற்கு விடயமான பொருளிற்றான் சரீரமுடையவர்களுக்குக் 
கருத்திருத்தன்மை காணப்பட்டிருக்கிறதென்பது கருத்து என்க.     (45)

    (அ-கை.) இவ்வாறு கூறியதனால் பயன் என்னை என்பார்க்கு விடை கூறுகின்றார்.

(45இ)     ஆன்மாவிற்குச் சவிகற்ப அறிவானது சொற்களை அனுசரித்தே உண்டாகிறது என்பதாம்.        

    (உரை) சவிகற்ப அறிவானது இது கடமென்னும் ஆராய்ச்சி ரூபமான சொல்லின் 
தோற்றத்தினாற்றான் ஆன்மாவினிடத்தில் நிகழ்கின்றது என்க. (45இ )

    (அ-கை.) இவ்வாறு கூறியதனால் என்னை பயனென்பார்க்கு விடைகூறுகின்றார்.

(46)     வாக்குரூபமான சொல்லானது அனந்த தேவருக்குப் பொருளினறிவு உண்டாவதன் பொருட்டு 
வைகரி முதலிய  வேறுபாட்டால் நான்கு வகையாக விந்துவின் கலக்கத்தாலுண் டாகின்றது என்பதாம்.

    (உரை) அனந்ததேவருக்குச் சவிகற்ப அறிவு உண்டாவதின் பொருட்டுச் சத்தம் அவசியம் 
வேண்டப்படுகின்றது. அப்பொழுது அசுத்தாத்துவா தோன்றாமையால் தூலாகாசத்திலிருந்து சத்தம் 
தோன்றிற் றென்பது கூடாது. ஆகையால் சிவனால் கலக்கப்பட்ட விந்துவிலிருந்தே சத்தந்தோன்றுகின்றது.
இந்தச் சத்தத்திற்கு வைகரி முதலிய நான்கு வேறுபாடுகளைப் பின்னர் கூறப்போகின்றார். ஆகையால் 
சத்தத்திற்கு முதற்காரணமாகவும் விந்து சித்தித்தது என்க. (46)

(47)     (அன்றியும்) சுத்தவித்தியா சரீரம் உடையவராயும் பகவானாயுமுள்ள அனந்த தேவர் 
அசுத்தமாயையைக் கலக்கஞ் செய்கிறவராகக் கொள்ளப்பட்டிருக்கின்றார். சுத்தவித்தை யானது 
விந்துவைச்சார்ந்த தத்துவமென வித்துவான்களாற் கூறப்பட்டிருக்கின்றது என்பதாம்.

    (உரை) அனந்ததேவருக்கு விந்துவின் சம்பந்தமான வடிவச்சேர்க்கை உண்டென்பது 
சாத்திரங்களில் கேட்கப்படுகிறது. ஆகையால், அனந்ததேவருடைய வடிவத்திற்கு முதற்காரணமாகவும் 
விந்துவென்பது சித்தித்ததென்க. (47)

    (அ--கை.) இவ்விஷயத்தைக் கூட்டி முடிக்கின்றார்.

(48)     ஆகையால் அசுத்த மாயையானது முதற்காரணமாக ஆகிறதில்லை. அவ்வாறே பரமசிவனும் 
முதற்காரணமாதலில்லை என்பதாம். 

     (உரை)  சுத்தாத்துவாவில் விந்துவே முதற்காரணமென்பது கருத்து. பிரசித்தமற்றதாய்ச் சொல்லப்பட்ட
 முதற்காரணமான விந்துவால் பயன் என்னை? பரமசிவனாவது ஆன்மாவாவது சிவசத்தியாவது 
முதற்காரணமாயிருக்கட்டும் என்பார்க்கு அது பொருந்தாதென “அவ்வாறே பரமசிவனும்” என்ற 
பிற்பகுதியால் கூறுகின்றார் என்க (48)

(49)     அறிவுடைப் பொருள்களாயிருத்தலாலும், விருத்தி பரிணாமமென்னும் இரண்டுமில்லாமையாலும், 
ஆன்மாவும் சிவசத்தியும் முதற்காரணமாதலில்லை என்று அறியத்தக்கது. இவ்விஷயத்தின் விரிவு பின்னர்க் 
கூறப்படப்போகின்றது என்பதாம்.

    (உரை)     மண் முதலிய முதற் காரணங்களுக்குச் சடத்தன்மை காணப்பட்டிருக்கின்றது. 
சிவன் ஆன்மா சத்தி என்னும் இம்மூன்றும் சேதனப் பொருளாகையால் அவை முதற்காரணமாதற்கு 
உரிமையுடையனவல்ல.  அன்றியும், முதற்காரணமோ வெனில் பால் தயிராய்ப் பரிணமிப்பதுபோல் 
பரிணாமத்தாலாவது, அல்லது ஆடை வீடாவதுபோல் விருத்தியினாலாவது காரியத்தைத் 
தோற்றுவிக்கவேண்டும். சிவன் ஆன்மா சத்தி என்னும் இம்மூன்றும் விகாரமில்லாப் 
பொருள்களாகையால் இவற்றிற்கு விருத்தியும் பரிணாமமும் நிகழ்கிறதில்லை. இம்மூன்று 
பொருள்களையும் விகாரமுடையதெனக் கொண்டால் சடத்தன்மை அநித்தியத்தன்மை முதலிய 
குற்றங்கள் நிகழும். இவ்விஷயத்தின் விரிவு இப்பிரகரணத்திலேயே பின்னர்க் கூறப்படப் போகின்றது. 
தத்துவப் பிரகாச வியாக்கியானத்திலும் நம்மால் கூறப்பட்டிருக்கின்றது என்க. (49)

    (அ--கை) வேறு வழியாலும் விந்துவுண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.

(49இ)     ஆன்மாக்களுக்கு அறிவில் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. இந்தக் காரணத்தாலும் 
விந்துவுண்டென்பது அறியப்படுகின்றது என்பதாம். (49இ)

    (அ-கை) ஏற்றத் தாழ்வைப் பற்றிக் கூறுகின்றார்.

(50)     சில ஆன்மாக்கள் சிற்றறிவும் சிறுதொழிலும் உடையராய்க் காணப்படுகின்றன. சிலர் மிகுதியான
 அறிவும் தொழிலுமுடையராய்க் காணப்படுகின்றனர். வேறு சிலர் எல்லாப் பொருளையு மறிந்தவராயும் 
எல்லாத்தொழிலையுஞ் செய்பவராயும் காணப்படுகின்றன ரென்பதாம் (50)

    (அ-கை.) இவ்விதமான ஏற்றத்தாழ்வுகள் அவர்களுக்குத் தானாகவே நிகழாதெனக் கூறுகின்றார்.

(51)     ஆன்மாவானவன் சேதனனாகவும் நித்தியனாகவும் விகாரமற்றவனாகவும் 
கொள்ளப்பட் டிருக்கின்றா னென்பதாம்.

    (உரை). எக்காலத்தும் அளவற்ற கடம் படம் முதலியவற்றை விடயமாகக்கொண்ட அறிவை 
அறிபவனாயிருத்தலால் ஆன்மா * சுவப்பிரகாசனாய்ச் சித்தித்திருக்கின்றமையாலும், மறு பிறப்பில் 
பயன்றரும் கன்ம பலன்களை அனுபவிப்பவனாயிருக்கின்றமையாலும், ஆன்மாவிற்குச் சேதனத் தன்மையும் 
நித்தியத் தன்மையும் சித்தித்தனவென்பது சிவாகமங்களிற் கேட்கப்படுகின்றது. அவ்விரண்டும் 
சித்தித்தமையினாலேயே அவனுக்கு விகாரமும் நிகழ்கிறதில்லையென்க. (51)

* சுவப்பிரகாசம் - தானே பிரகாசிப்பது

    (அ-கை) இவ்வாறன்றி ஆன்மாவை விகாரமுடையவனென்று கொள்ளில் குற்றமெனக் கூறுகின்றார் 

(51இ)     ஆன்மா விகாரமுடைய பொருளாயிருக்குமாயின் விகாரமுடைய கடம் சுவர் முதலியன போல் 
சடத்தன்மையும் அநித்தியத் தன்மையும் உடையதெனப்படும் என்பதாம். (51இ)

    (அ-கை.) இந்த நியாயம் சிற்சக்தியிலும் ஏற்றிக்கொள்ளத் தகுந்தது. தரும தருமிகளுக்கு 
வேறுபாடின்மையாலெனக் கூறுகின்றார்.

(52இ)     சித்து ரூபியான சத்தியும் அவ்வாறே நித்தியமாயும் விகாரமற்றதாயும் உள்ளது. விகாரமில்லாத 
ஆன்மாவிற்கும் சக்திக்கும் அநேக விதமாயிருக்குந் தன்மை உபாதியினாலுண்டாகின்றது என்பதாம்

    (உரை.) இவ்விஷயம் நம்மால் முன்னரே 49-வது சுலோகத்தில் காட்டப்பட்டிருக்கின்றது. 
அவ்வாறே நாதகாரிகையிலும், ஆன்மாவும் சத்தியும் விகாரமற்றவையாகையால் அவை அநேகவிதமாக 
ஆவதற்கு  உரியனவல்ல;  விகாரமுடையனவாயின், சேதனத்தன்மை இல்லாதனவாகுமென்று 
கூறப்பட்டிருக்கிறதென்க (52இ)

(53)     ஆன்மாவினுடைய சிற்சத்தியானது எதனோடு கூடி மாயா சம்பந்தமான பொருள்களை யறிவதில் 
முயற்சிக்கின்றதோ, எந்த உபாதியால் வேறாயுமிருக்கின்றதோ, அதுவே, அநேகம் விருத்தியையுடைய 
விந்துவாகுமென்பதாம்.

    (உரை) ஆன்மாக்களின் சிற்சத்தியானது, நாதரூபமாய்ப் பரிணமித்ததாயும் பெயரிட்டு வழங்கக்கூடிய 
பொருள்களை விடயமாகக் கொண்ட அறிவிற்குச் சாதனமாயுமுள்ள எந்தப் பொருளோடு சேர்ந்து மாயா 
காரியமான சவிகற்பப் பொருள்களையறிவதில் தொழிற்படுகின்றதோ, எதனுடைய ஒவ்வொரு ஆன்மாக்கள் 
தோறும் இன்றியமையாதனவாயும், வேறுவேறாயும், நாதமென்னும் பெயருடையனவாயும் உள்ள தொழில்
வேறுபாடுகளோடு கூடி வேறுவேறாகவே விளங்குகின்றதோ அதுவே விந்துவெனப்படும். இவ்விடயத்தைப் 
போற்றத் தகுந்த இராமகண்டர் நாதகாரிகையில்  விரிவாய்க் கூறியுள்ளார்.  ஸ்ரீ காலோத்தரத்திலும் 
நாதமென்னும் சிறந்த காரணமானது எல்லா வுயிர்களிடத்திலும் இருக்கின்றதெனக் கூறப்பட்டிருக்கிறதென்க. (53)

    (அ--கை) அவ்வாறாயின் ஒவ்வொரு ஆன்மாக்கள்தோறும் இன்றியமையாத கன்மத்தினால் 
போகானுபவத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிகழ்கின்றவாறுபோலக் கன்மத்தினாலேயே ஆன்மாக்களுடைய 
அறிவில் ஏற்றத்தாழ்வுகளும் நிகழ்கின்றனவெனக் கொள்வோமென்பார்க்கு அது பொருந்தாதெனக் கூறுகின்றார்

(54)     யாதொரு காரணத்தால் போகத்தினுடைய ஏற்றத் தாழ்வுகளும் பிறிதொன்றின் துணையோடு 
கூடிய கன்மத்தினாலேயே உண்டாகின்றனவோ, அந்தக் காரணத்தினால் அணுவான ஆன்மாவினுடைய 
அறிவு விஷயத்தில் ஏற்றத்தாழ்வுகளும் துணையை விரும்பாத கன்மத்தால் நிகழுமாறில்லை என்பதாம்.

    (உரை) கன்மமோவெனில், கலை முதலிய தத்துவ புவனங்களோடு கூடியே போகத்தில் 
ஏற்றத்தாழ்வுகளைச் செய்கின்றது. அவ்வாறு கொள்ளாவிடில் பிருதிவி முதலிய தத்துவங்கள் பயனற்றனவாகும். 
இவ்வாறு ஆன்மாக்களின் அறிவிலுண்டான ஏற்றத் தாழ்வுகளையும் நாதத்தைத் துணையாகக்கொண்டு தான் 
கன்மம் நிகழ்த்துகின்றது. தானே நிகழ்த்துகிறதில்லை என்க . (54)

    (அ-கை.) கன்மம் துணையைக்கொண்டு ஏற்றத்தாழ்வுகளை நிகழ்த்து மென்பதைப் 
பற்றியே இன்னுங் கூறுகின்றார்.

(55)     கன்மம் போகத்தைச் செய்கின்றது. சந்தனம் முதலியன அந்தப் போகத்தில் ஏற்றத் 
தாழ்வுகளைச் செய்கின்றன. கன்மமே ஏற்றத்தாழ்வுகளைச் செய்யுமாயின் சந்தனம் முதலியன 
பயனற்றனவாய் ஆகும் என்பதாம்.

    (உரை) கன்மமானது  போக ரூபமான பயனை மாத்திரம் தருமன்றிப் போகத்திலுண்டான 
ஏற்றத்தாழ்வுகளைத் தருவதில்லை. ஏற்றத்தாழ்வுகள் துணைக்கருவிகளின் ஏற்றத்தாழ்வுகளினாற்றான் 
நிகழ்கின்றனவென்பது கருத்து. அவ்வாறாயின் ஆன்மாக்களுக்கு ஏற்றத்தாழ்வான சரீரங்கள் 
கன்மத்தினாலுண்டாகின்றனவென்று கூறும் சுவாயம்புவ ஆகம வாக்கியத்தால் கன்மமே 
ஏற்றத்தாழ்வுகளையும் செய்கின்றனவென்று கொள்ளக்கிடக்கிறதே எனில், அஃதுண்மையே.
கன்மம் சாதனத்தில் ஏற்றத் தாழ்வையுண்டுபண்ணி அந்தச் சாதனத்தின் வழியாய் பயனில் 
ஏற்றத்தாழ்வுகளைச் செய்கின்றது. சாதனத்தையின்றித் தானே ஏற்றத்தாழ்வுகளைச் 
செய்யவில்லை * என்க.    (55)

*போகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்குச் சந்தன முதலியன போலச் சாதனமாகச் சரீரம் நிற்பதன்றிச் 
சரீரம் போகமன்று. சரீரத்தின் தோற்றத்தில் வேற்றுமையைச் செய்து போகத்தில் வேற்றுமையைச் 
செய்கின்றதென்பது கருத்து.

    (அ---கை) இவ்விஷயத்தையே நிச்சயஞ்செய்கின்றார் .

(55இ)     எல்லாப் பிராணிகளுக்கும் விலக்குதல் கூட்டுதல் என்னுமிவை காரணமாக 
முயற்சி நிகழ்கின்றது என்பதாம்.

    (உரை) விரும்பத்தகுந்த பொருளிருக்குமாயின் விலக்கத் தகுந்தவற்றை விலக்குதற்கும், 
கூட்டத்தகுந்தவற்றைக் கூட்டுதற்கும் ஆன்மாக்களுக்கு முயற்சி நிகழ்கின்றது. விரும்பத்தகுந்த 
பொருளில்லையாயின் முயற்சி நிகழ்கிறதில்லை என்க. (இதனால் பொருள்களே ஏற்றத் தாழ்வுகளைச் 
செய்கின்றனவென்பது கருத்து)     (55இ)

    (அ-கை.) வேறுவழியாகவும் விந்துவுண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.

(56-57)     ஐந்து பூதங்களுள் முதன்மையாயிருக்கின்ற ஆகாயமானது சூரியன் முதலிய 
சோதிக்கூட்டங்களுக்கு எவ்வாறு காரணமாயிருக்கின்றதோ, அவ்வாறே நிகரற்ற ஐசுவரியத்தை
யடைந்த சிவத்தன்மையுடைய வித்தியேசுவரர்களின் போகாதிகாரங்களுக்குக் காரணமான 
இந்த விந்துவை அழிவற்ற பரமாகாசமாகக் கூறுகின்றனர் என்பதாம்.                    

    (உரை)  எவ்வாறு ஐந்து பூதங்களுள் முதன்மையான ஆகாயமானது இடங்கொடுப்பதனாலும், 
தூலமான சொற்களை விளக்கஞ் செய்வதினாலும், சூரியன் முதலிய சோதிக் கூட்டங்களினுடைய 
போகாதிகாரங்களில் காரணமாயிருக்கின்றதோ அவ்வாறே சுத்தாத்துவாவில் வசிக்கின்றவர்களாயும் 
சருவஞ்ஞத்தன்மை சருவகருத்திருத்தன்மை என்னும் சிவத்தன்மை யுடையவர்களாயுமிருக்கும் 
வித்தியேசுவரர் முதலியோருக்கு இடங்கொடுப்பதனாலும், சத்தத்துக்கு இடமாயிருத்தலாலும்,
 இவர்களுடைய போகாதிகாரங்களுக்குக் காரணமாய் விந்துவென்னும் மகாமாயை உண்டென்பது 
சித்தித்தது. இந்த விந்துவையே அழிவில்லாமைபற்றி மேன்மையுடைய பரமாகாசமென்று ஆகம 
அறிவுடையோர் கூறுகின்றனர். அபராகாசத்திற்குச் சுத்தாத்துவாவில் சம்பந்தமில்லாமையால் என்க (56-57)

    (அ--கை.) விந்துவிற்கு முன்னர்க் கூறப்பட்ட சவிகற்ப அறிவிற்கு உபயோகமாயிருக்குந் 
தன்மையை இப்பொழுது முடித்துக் காட்டுகின்றார்.

(58)     விந்துவே, சவிகற்ப அறிவுகளில் தனது தொழில் வேறுபாடுகளுடைய சேர்க்கையால் 
அறிவைத் தோற்றுவித்து விகற்பமென்னும் பெயரை அடைகின்றது என்பதாம்.

    (உரை) விந்துவே சத்தத்திற்கு முதற்காரணமாயிருத்தலால், சூக்குமை முதல் வைகரி ஈறான 
சொல்ரூபமான தனது தொழில்களின் சேர்க்கையால் இந்தக்கடம் செம்மையாயிருக்கின்றது 
வட்டமாயிருக்கின்றதென்னும் ஆராய்ச்சி ரூபமான விகற்பத் தோற்றத்தால் ஆன்மாவிற்கு 
விகற்பத்துடன் கூடிய அறிவையுண்டு பண்ணுகிறது. அவ்வாறே ஒரு பொருளைப் பார்த்த
மாத்திரத்தில் நிருவிகற்ப அறிவு முதலிலுண்டாகின்றது. அந்த நிருவிகற்ப அறிவு பாலன் ஊமை 
முதலியோருடைய அறிவிற்குச்  சமானமாய்ப் பொருள் மாத்திரத்தை விடயமாகக் கொண்டிருக்கிறது. 
அதன்பின்னர்ப் பொருளின் தருமங்களான சாதி உருவ முதலியவற்றுடன் கூடி அப்பொருள் 
புத்தியாலறியப்படுகின்றது. அதுவும் பிரத்தியக்ஷமென்றே கொள்ளப்பட்டிருக்கின்றதெனப் 
பெரியோர்களுங் கூறுகின்றனர் என்க. (58) 

(59)     இந்தச் சவிகற்ப அறிவானது பிரத்தியக்ஷமாயிருத்தலால் இதனைப் பாவனை என்னும் 
பெயர் பூண்ட சமஸ்காரமாகக் கொள்ளக்கூடாது.  சமஸ்காரங்களோ வெனில் நினைவிற்கு ஏதுவாக
 இருக்கின்றன. நம்முடைய பிரத்தியக்ஷத்திற்கு விடயங்களல்ல என்பதாம்.

    (உரை)  இந்தச் சவிகற்ப அறிவானது முன்னனுபவிக்கப் பட்ட பொருளின் வாசனா ரூபமான 
சமஸ்காரமாகக் கொள்ளத் தகுந்ததன்று. எதனாலெனின், சமஸ்காரம் அனுமானத்திற்கு 
விடயமாயிருத்தலால் என்க. இதுவோ பிரத்தியக்ஷ அறிவாயிருக்கிறது. சமஸ்காரமின்றி நினைவு 
நிகழ்கிறதில்லை ஆதலால் நினைவு நிகழ்தற்குச் சமஸ்காரம் உண்டென்பது கொள்ளப்படுகின்றது என்க.(59)

    (அ-கை) அவ்வாறாயின் நிச்சயமானது புத்தியின் காரிய மாகையால் புத்தியின் பரிணாம 
பேதமே சவிகற்ப அறிவாகும் என்பார்க்குக் கூறுகின்றார்.

    (59இ)     இந்தச் சவிகற்ப அறிவானது மாயைக்கு மேலும் உண்டாகின்றமையால் புத்தியின் 
பரிணாமமாவதில்லை என்பதாம்.

    (உரை) புத்தியானது நிச்சய அறிவிற்கு ஏதுவாயிருந்தும் விந்துவின் காரியமான சொல்லின்
 துணையினாலேயே சவிகற்ப அறிவானது உண்டாகிறதென்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் சுத்தாத்துவாவில் 
புத்தியில்லாவிடினும் வாக்குச் சத்தியின் வழியாக வித்தியேசுவரர் முதலியோருக்குச் சவிகற்ப 
அறிவு நிகழ்கின்ற தென்க. (59இ)

(60-61)     (ஆகையால்) அவ்வாறே வித்தியேசுவரரான அனந்தர் அணுவாயிருந்து 
கருத்தாவாயிருத்தலால், நம்போன்றவர்களாலேவத் தகுந்த சேவகர்போல் சவிகற்ப அறிவோடு 
கூடினவராய் மாயையைக் கலக்கஞ் செய்து தனது சாமர்த்தியத்தால் படைத்தலைச் 
செய்கின்றாரென்பதாம்.

    (உரை) அனந்தர் அணுபக்கமாகையால் அதிகார மலத்தின் சேடத்தால் ஏவத்தகுந்தவரா 
யிருத்தலால், சவிகற்ப அறிவினுடைய சேர்க்கையினாலேயே அவருக்கு அசுத்த மாயையைக் 
கலக்குந் தன்மை நிகழ்கின்றது. நிருவிகற்ப மாத்திரத்தால் சிவன் விந்துவைக் கலக்குவது போல் 
அனந்தர் கலக்கஞ் செய்கிறாரில்லை யென்பது கருத்தென்க (60-61)

    (அ-கை.) இவ்வாறு அனந்த தேவருக்குச் சவிகற்ப அறிவினுடைய சேர்க்கையினாலேயே 
கருத்திருத்தன்மை யிருத்தலால், வித்தியேசுவரர் முதலியோருக்கு விந்துவானது சொல்லின் வழியாகச் 
சவிகற்ப அறிவிற்குக் காரணமாயிருத்தல் பற்றி விந்துவுண்டென்பது சித்தித்ததென்று கூறிவிட்டு, 
இனி இந்த விந்துவின் விஷயத்தில் பிறருடைய கொள்கையைக் கூறுகின்றார். 

(62)     விருத்தி பரிணாமமென்னு மிவற்றின் வேறுபாட்டால் வாதஞ் செய்கின்ற வேறு சில 
ஆசிரியர்களும் மேலே கூறப்பட்ட விசேடணங்களையுடைய இந்த விஷயத்தை வேறுவிதமாகக்
கூறுகின்றனர் என்பதாம்.

    (உரை ) மேலே கூறப்பட்டவாறு சவிகற்ப அறிவின் சேர்க்கையால் அனந்தருக்குக் 
கருத்திருத்தன்மை உண்டென்பதைப் பற்றிச் சிலர் வேறுவிதமாகச் சாதிக்கின்றனரென்க. (62) 

(62இ)     யாதொரு காரணத்தால் இந்த அனந்தர் பரிணாமத்திற்குக் கருத்தாவாயிருக்கின்றாரோ, 
விருத்திக்குக் கருத்தாவாயில்லையோ, அந்தக் காரணத்தால் அவ்வித சவிகற்ப அறிவோடு 
கூடினவராவர் என்பதாம். (62இ)

    (அ-- கை) இதனையே சாதிக்கின்றார்

(63)     இந்தப் பொருள் இவ்வாறு நம்மால் கலக்கஞ் செய்யப்பட்டு நம்முடைய விருப்பத்தை நிச்சயமாய் 
நிறைவேற்றுமென எவனறிகின்றானோ அந்தச் சத்திவாய்க்த புருடனே பரிணாமமடைதற்குரிய 
பொருள்களுக்குக் கருத்தாவாயிருக்கின்றா னென்பதாம் (63)

    (அ-கை.) விருத்தி கருத்தாவுக்கு இவ்வாறு சவிகற்ப அறிவின் சேர்க்கை கிடையாதெனக் கூறுகின்றார்.

(64)     பரிணாமமுடைய பொருள்களினுடைய இந்தத் தருமமானது, விருத்தியுடன் கூடிய பொருள்களில்
 வேறுவிதமாக நிகழ்கின்றது என்பதாம். (64 )

    (அ-கை.) இவ்விஷயத்தை விரிவாய்க்கூறத் தொடங்கிச் சவிகற்ப அறிவிற்குமுன் நிருவிகற்ப 
அறிவு இன்றியமையாது உண்டாகவேண்டுமெனக் கூறுகின்றார்.

(65)     அவ்வாறே அனைவரும் நிருவிகற்பத்தை யுடையதாயிருக்கும் வண்ணம் ஒரு பொருளை 
அறிந்து சவிகற்பமாயறிகின்றனர். இவ்வாறு கூறவில்லையாயின் வரம்பின்றி யோடுதலென்னும்
குற்ற நிகழுமென்பதாம்.

    (உரை.) நிருவிகற்ப அறிவின் நிகழ்ச்சிக்குப் பின் சவிகற்ப அறிவு நிகழ்கின்றதென 
முன்னரே கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சவிகற்ப ஞானத்திற்கு முன் நிருவிகற்ப ஞானத்தைக் 
கொள்ளவில்லையாயின், ஞானத்திற்கு வரம்பின்றியோடுதலென்னும் குற்றம் நிகழ்கின்றது. 
எவ்வாறெனில், நிருவிகற்ப அறிவானது பொருளை மாத்திரம் அறிகின்றமையாலும், 
இத்தன்மையுடைய பொருளென்று விசேடத்தை அறியாமையாலும், அத்தகைய அறிவு 
எல்லாப் பொருள்களிடத்தும் சமமாக நிகழுமாகையால், ஒரு பொருளினிடத்து நிலைபெறாமை
பற்றி ஞானத்திற்கு வரம்பின்றி யோடுதலென்னும் குற்றம் நிகழுமாறு காண்க. ஆகவே கட அறிவு 
பட அறிவென்னும் முறைமை பொருத்தமற்றதாகும் என்க .     (65)

(66-66இ)     சவிகற்ப அறிவானது அறிகிறேனென்னும் அறிவு ரூபமாயிருத்தலால், 
அனந்தராலும் சொல்லால் வியாபிக்கப்பட்ட அறிவான சவிகற்ப அறிவால் எல்லாப் பொருள்களும் 
அறியப்பட்டு இச்சிக்கப்படுகிறது. செய்யவும்படுகிறது என்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் சவிகற்ப அறிவானது அறிகிறேனென்னும் 
அறிவுரூபமாயிருத்தலால் ஆராய்ச்சி ரூபமாயும் உள்ளே சொல் ரூபமாயும் உள்ள சொல்லால் 
வியாபிக்கப் பட்டுத் தோன்றுகின்றதோ, அந்தக் காரணத்தால் சொல்லால் வியாபிக்கப்பட்ட 
சவிகற்ப அறிவு உண்டானபின்னரே, அனந்தர் அசுத்த மாயையை அறிந்து கலக்கஞ் செய்கின்றார். 
அறியாததொன்றைச் செய்யமுடியாதாகையா லென்க. (66-66இ)

    (அ-கை.) விருத்தி கருத்தாவான பரமசிவனுக்கு விந்துவைக் கலக்கஞ் செய்யும் விஷயத்தில் 
சவிகற்ப அறிவின் துணை கிடையாதெனக் கூறுகின்றார்.

(67-67இ )     விந்துவிற்கு ஆடை குடிலாய் விருத்தியடைவதுபோல் விருத்தியே கொள்ளப் 
பட்டிருக்கின்றது. ஆகையால், சிவபெருமான் நிருவிகற்ப அறிவோடு விந்துவை அதிட்டிக்கின்றான் 
என்பதாம் (67-67இ)

    (அ-கை.) பரிணாமத்தைச் செய்யும் அனந்தருக்குச் சவிகற்ப அறிவின் துணை உண்டென
 முடித்துக் காட்டுகின்றார்.

(68)     யாதொரு காரணத்தால் மாயை பரிணாமமுடையதாயிருக்கிறதோ, அந்தக் காரணத்தால் 
அனந்தர் மாயையைச் சவிகற்ப அறிவோடு கூடாமல் கலக்கஞ் செய்கின்றாரில்லை என்பதாம். (68)

     (அ-கை) இவ்வாறு புறமதத்தைக் கூறி, இனி அதற்குக் குற்றங் கூறுகின்றார்.

(69 )     யாதொரு காரணத்தால் குடிலைச் செய்பவனுடைய அறிவும் சவிகற்பமாகக் காணப்படுகின்றதோ,
அந்தக் காரணத்தால் விருத்தி பரிணாமங்களால் கருத்திருத்தன்மையில் வேறுபாடு நிச்சயிக்கப்படவில்லை 
யென்பதாம்.

    (உரை) இவ்வாறான குற்றமானது புறமதத்தை ஒத்துக் கொண்டு கூறப்பட்டது. சித்தாந்தமாகக் 
கூறப்படவில்லை. எதனாலெனின், விந்துவிற்கும் தத்துவம் புவனம் முதலிய ரூபமாய்ப் பரிணாம முண்டென்பது 
நூல்களிற் கேட்கப்படுதலானும் விருத்தி பரிணாமமென்னு மிவற்றிற்கு மிகுதியான வேறுபாடு 
இல்லாமையானுமென்க (69)

    (அ-கை.) இனி விந்துவின் பரியாயப் பெயர்களைக் கூறுகின்றார்.

(70-70இ)     சத்த தத்துவம், அகோஷை, வாக்கு, பிரமம், குண்டலிநி, துருவை, வித்தை, சத்தி, 
பரை, நாதம், மகா மாயை, ஆகாயம், அநாகதமென்று இவ்வாறாக வித்துவான்களால் விந்துவானது 
கூறப்படுகின்றது என்பதாம். (70-70இ)

    (அ-கை.) இனி விந்துவினுடைய சூக்குமை முதலிய சத்த விருத்திகளை ஒடுக்க முறையாகக் 
கூறுகின்றார்.

(71)     யாதொரு விந்துவினுடைய தொழில்களால் வியாபிக்கப்பட்டு அணுக்கள் மூன்று வகையினரா
யிருக்கின்றனரோ அவ்விதமான தொழில்கள் விந்துவிற்கு நான்கு உள்ளன என்பதாம்.

    (உரை) இவ்விதமான நால்வகைத் தொழில்களின் சேர்க்கையால் ஆன்மாக்கள் உத்தம அறிவு, 
மத்திம அறிவு, அதம அறிவு என்னும் இவற்றுடன் கூடினவர்களாக ஆகின்றனரென்க. (71)

    ( அ--கை) அத்தொழில்கள் இவையெனக் கூறுகின்றார் .

(71இ)     வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை எனத் தொழில்கள் நான்காகின்றன என்பதாம்.

    (உரை) ஆகையால் இந்த நான்கு வாக்குக்களுக்கு முதற் காரணமாக விந்து வுண்டென்று 
சித்தித்ததென்பது கருத்தென்க (71இ )

     (அ-கை ) வைகரியின் சொரூபத்தைக் கூறுகின்றார்

(72-73)    அந்த நால்வகை வாக்கினுள், எந்த வாக்குச் சுரோத்திர இந்திரியத்தால் அறியத் தகுந்ததாயும் 
அந்தந்தத் தானங்களில் வாயுவை அடக்குமிடத்துச் செய்யப்பட்ட எழுத்தின் தோற்றமுடையதாயும் 
இருக்கின்றதோ அதுவே வைகரியாம். இந்த வைகரியானது உபயோகிப்பவர்களுடைய பிராண வாயுவின் 
றொழிலை மிகுதியும் காரணமாகவுடையது என்பதாம்.

    (உரை) இவ்வாறே ஆகாயம் காற்று என்னுமிவற்றாற் றோன்றிச் சரீரத்திலிருந்து வெளியே வரும்
 நாதமானது முகத்தை யடைகின்றது. அது ஒவ்வொரு தானங்களிலும் பிரிக்கப்பட்டதாய் அக்கரமாயிருக்குந் 
தன்மையையடைகின்றது. அதுவே சொல்லெனப்படுமென்று பெரியோருங் கூறியிருக்கின்றனரென்க. (72-73)

    (அ-கை.) மத்திமையின் சொரூபத்தைக் கூறுகின்றார்.

(74-74இ)     புத்தியைப் பற்றினதாயும், புத்தியிலிருக்கும் எழுத்துக்களின் முறையை அனுசரித்ததாயும், 
உள்ளே சொல் ரூபமாயும் இருக்கும் வாக்கானது மத்திமையெனப் பெயர்பெறும். இந்த மத்திமை வாக்கானது 
செவிக்குப் புலப்படுவதில்லை.  பிராணவாயுவின் றொழிலைக் கடந்திருக்கின்றது என்பதாம்.

    (உரை) ஆராய்ச்சி அறிவுரூபமான இந்த மத்திமையானது  தூலமாகிய வைகரிக்குக் காரணமென்று 
கூறப்பட்டிருக்கிறதென்க.     (74-74இ)

    (அ-கை) பைசந்தியின் சொரூபத்தைக் கூறுகின்றார்

(75-75இ)     எழுத்துக்களின் பிரிவின்றி அடக்கப்பட்ட முறையை யுடையதாயும், * மயில் முட்டையி
னுள்ளிருக்கும் கருப்போன்றதாயும், ** சுயம்பிரகாசமாயுமுள்ள வாக்கு பைசந்தி எனப்படும் என்பதாம்.

*மயில் முட்டையினுள்ளிருக்குங் கருவானது வேறு வேறு பிரிக்கப்படாத கருப்பு, பச்சை, செம்மை, மஞ்சள்
முதலிய நிறமுடையதாயிருக்கின்றது போலப் புத்தியைப் பற்றுதற்குமுன் வெளிப்படையாகப் பிரிக்கப்படாத
 ககார முதலிய எழுத்துக்களின் கூட்ட விசேடத்தையுடையதாய் இருக்கின்றதென்பது கருத்து.

** சுயம்பிரகாசம் - பொருளை விளக்காது சூக்குமமாய் நிற்பது.

    (உரை) இந்தப் பைசந்தியே அக்கரவிந்துவென முன்னர்க் கூறப்பட்டது என்க (75-75 இ)

    (அ-கை) இனி, பொருள்களின் அறிவிற்குக் காரணமாக முன்னர்க் கூறப்பட்டதாயும் நாதமென்னும் 
மறுபெயர் கொண்டதாயும் உள்ள சூக்குமவாக்கின் நிலையைக் கூறுகின்றார். 

(76)     பொருள்களினுடைய சாமானிய சொரூபத்தை விளக்கஞ்செய்வதாயும், பைசந்தி முதலிய 
வாக்குக்களைப்போல் நாசம் இல்லாததாயும், புத்தியிலிருப்பதாயுமுள்ள வாக்கு சூக்குமையெனப்படு மென்பதாம்.

    (உரை) சுழுத்தி அவத்தையிலும் இந்தச் சூக்குமவாக்கு விளங்குவதுபற்றி இது நாசமற்றது எனக் 
கூறப்பட்டதன்றி, நித்தியமாயிருப்பதுபற்றிக் கூறப்படவில்லை. எதனாலெனின், ஒவ்வொரு புருடர்களிடத்தும் 
வேறுவேறாயிருத்தலின் அநேகமாயிருப்பதாலும் அசேதனமாயிருப்பதாலும் அது காரியப்பொருளாதலினென்க.
 காரியமாயிருப்பது பற்றித்தான் பரவிந்து இதற்குக் காரணமெனக் கூறப்பட்டதென்க (76)

    ( அ--கை) அந்தச் சூக்கும வாக்கையே விசேடித்துக் கூறுகின்றார்.

(76இ)      இந்தச் சூக்கும வாக்கின் சொரூபங் காணப்பட்டால் அதிகாரம் ஒழிவையடைகின்றது என்பதாம்

    (உரை) யாதொரு சூக்கும வாக்கின் சொரூபத்தை ஆன்ம சொரூபத்தின் வேறாகப் பிரித்து அறிந்த 
பின்னர் தான் புருடனுக்குப் போகாதிகாரம் நீங்குகின்றது. அவ்வாறாயின் சூக்கும வாக்கு ஆன்மா 
என்னுமிவற்றின் சொரூபத்தினுடைய பகுத்தறிவினாலேயே முத்தி நிகழுமாயின் தீக்கை பயனற்றதாகுமெனில், 
ஆகாது.  மலமானது திரவியமாகையால், திரவியமான கண்ணின் படலம் கண் வயித்தியனுடைய தொழிலால் 
நீங்குமாறுபோல, தீக்கையென்னும் பரமசிவனுடைய தொழிலினாலேயே மலம் நீங்குமென்க (76இ)

    (அ-கை) சத்தத்தையே பிரமமெனக் கூறுகின்றவர் சூக்குமவாக்கின் பகுத்தறிவின்மையால் 
இந்தச் சூக்குமவாக்கை ஆன்மாவிடத்துச் சமவாய சம்பந்தத்தில் இருப்பதாக எண்ணுகின்றனரெனக் 
கூறுகின்றார்

(77)     பதினாறு கலையினையுடைய புருடனிடத்தில் இந்தச் சூக்குமவாக்கை அமிருதையெனப் 
பெயர்கொண்டிருக்கிறதாகக் கூறுகின்றனர் என்பதாம் (77)

    (அ-கை) இந்த சத்தப் பிரமவாதிகளுக்கு உள்ள மயக்க மிவ்வாறெனக் கூறுகின்றார்.

(78-79)     யாதொன்றைப் பகுத்தறி வென்னுங் கத்தியால் பிளந்து ஆன்மாக்கள் சந்தேகம் 
நீங்கினவர்களாய் வெளிக்கிளம்புகின்றனரோ, அவ்விதமான சத்தப் பிரமமென்னுஞ் சூரியன், 
கேவலனாயும், பரமானந்த ரூபனாயும், தீரனாயும், எப்பொழுதும் விளங்கித் தோன்றுபவனாயும், 
நாசமற்றவனாயும், உற்பத்தியற்றவனாயும், சிரமமற்றவனாயும், விகாரமற்றவனாயும், 
எல்லாவுயிர்களினகத்தும் சஞ்சரிக்கின்றவனாயும் விளங்குகின்றானென்பதாம். 

    (உரை) யாதொரு சூரியனை உண்மை அறிவென்னுங் கத்தியால் பிளந்து (அதாவது         
ஆராய்ந்து உண்மையாய் அறிந்து) சம்சாரத்திலிருந்து ஆன்மாக்கள் வெளிக்கிளம்புகின்றனரோ, 
அவ்விதமான சத்தப் பிரமமென்னுஞ் சூரியன் கண்ணுக்குப் புலப்படும் சூரியனைவிட வேறாயுள்ளவனென்பது 
அவர்களுடைய மயக்கமென்க.     (78-79)

     (அ--கை) இவ்விஷயத்தில் சித்தாந்தங் கூறுகின்றார்.

(79இ)     ஆன்ம சொரூபத்தை அறிந்த புருடர்கள் அந்தச் சத்தத்தைச் சூக்குமையென்னும் பெயரினையுடைய 
வாக்கு விருத்தியேயென்று கூறுகின்றனரென்பதாம்.

    (உரை) வடமொழிமூலத்தில் அதனையே என்றவிடத்துள்ள ஏகாரத்தைப் பிரித்து வாக்குவிருத்தி 
என்றதனோடு கூட்டி உரை கொள்ளப்பட்டிருக்கின்றது.

    ஆன்மசொரூபத்தையறிந்த சைவர்களோவெனில், சூக்குமையென்னும் பெயர்கொண்ட 
அந்தவாக்கை விந்துவின் காரியமான சத்தவிருத்தியென்றே யெண்ணுகின்றனர். ஆன்மாவினிடம் 
சமவாய சம்பந்தத்திலிருப்பதாக எண்ணுகின்றனரில்லை. எதனாலெனின், அது விகாரமுடைய 
பொருளாகையாலும் சடப் பொருளாதலாலும் அதனுடைய சமவாய சம்பந்தத்தை ஆன்மாவிற்குக் 
கொண்டால் ஆன்மாவிற்கும் விகாரமுடையதாந் தன்மை சடத்தன்மை முதலிய குற்றங்கள் 
நிகழுமா தலாலென்க. (79இ)

    (அ-கை) இவ்வாறு விந்துவின் காரிய ரூபங்களான சத்த விருத்திகளைக் கூறிவிட்டு 
இவ்விஷயத்தைக் கூட்டி முடிக்கின்றார்.

(80)     இந்தச் சத்தவிருத்திகளான வாக்குக்கள் பந்தம் செய்வனவாய் ஒவ்வொரு ஆன்மாக்கள் 
தோறும் இன்றியமையாதிருக்கின்றன என்பதாம்.

    (உரை) இந்த வாக்குக்களுக்குக் காரியத்தன்மையும் சடத் தன்மையுமிருத்தலால் 
சித்துப்பொருளுடன் சமவாயம் பொருத்தமாகாது. ஆன்மாவைக் கட்டுப்படுத்துந் தன்மைதான் 
இவ்வாக்குக்களுக்குப் பொருத்தமாகும் என்க [80]

(80இ)      (அவ்வாறாயினும்) இந்த வாக்கு விருத்திகளினின்றும் ஆன்ம சொரூபத்தை வேறாகப் 
புத்கலர்கள் அறிகின்றனரில்லை என்பதாம்.

    (உரை) புத்கலர்கள் என்பது மலமுடைய ஆன்மாக்களைக் குறித்தது. ஆன்மாக்கள் மலத்தால் 
மறைக்கப்பட்டிருத்தலால் இவ்வாக்கு விருத்திகளைவிட ஆன்மசொரூபத்தை வேறாகப் பிரித்தறியாது
இவ்வாக்குக்களையே ஆன்மாவென மயங்குகின்றனரென்பது கருத்தென்க. (80இ)

    (அ--கை) அவர்களுக்கு இவ்வாறு மயக்கம் நிகழ்ந்தமைக்கு காரணம் இதுவெனக் கூறுகின்றார்.

(81)     பரமான்மாவென்பது வாக்கு ரூபமே. எதனாலெனின், வாக்கே ஆன்மாவெனச் சுருதி 
கூறுகின்றமையாலென்பதாம்.

    (உரை.) ஆன்மாவிற்கு வாக்குச்சத்தி முதலியவற்றுடன் உள்ள சேர்க்கை விஷயத்தில் 
அர்த்தவாத வாக்கியங்களாயுள்ள இந்தச் சுருதியின் பொருளையறியாமலிவ்வாறு மலமுடைய 
ஆன்மாக்கள் கருதுகின்றனரென்பது கருத்தென்க. (81)

(82)     வைகரி என்னும் வாக்கானது செவி இந்திரியத்தால் நிகழும் அறிவில் அறியப்படுகின்றது. 
மத்திமை வாக்கானது சவிகற்ப அறிவிலறியப்படுகின்றது. பைசந்தி வாக்கானது மத்திமை வாக்கைத் 
தோற்றுவிப்பதிலும் அதனுடைய உத்தியோகத்திலும் காரணமாயிருப்பது பற்றி 
அறியப்படுகின்றது என்பதாம்.

    (உரை) வைகரியானது செவியாலறியத் தகுந்தது. மத்திமையானது ஆராய்ச்சி ரூபமாகையால் 
சவிகற்ப அறிவில் காணப்படுகின்றது. இந்த மத்திமையைத் தோற்றுவிப்பதிலும் அந்த மத்திமைக்கு 
உத்தியோகஞ் செய்விப்பதிலும் பைசந்தி காரணமாயிருக்கின்றது என்க. (82)

    (அகை) அந்த மூன்று வாக்குக்களினின்றும்  வேறான சூக்கும வாக்கைப் பற்றிக் கூறுகின்றார்.

(83)     எப்பொழுது சித்தத்தைச் சார்ந்திருக்கின்ற எல்லா விருத்திகளும் ஒடுக்கத்தை யடைந்திருக்கின்றனவோ,
 அப்பொழுது சூக்குமையானது சுத்தமுடையதாய் ஆன்மாவை விட வேறாகப் பிரித்தறியவாராது சித்துப்போல் 
விளங்குகின்றது என்பதாம்.

    (உரை) சூக்குமையோவெனில், பொருள்களையறியும் அறிவிற்குக் காரணமாய் எல்லா 
வுயிர்களிடமுமிருந்து பைசந்தி என்னும் வாக்கு விருத்திக்குங் காரணமாய் ஆன்மாவோடு மிக நெருங்கி யிருப்பது 
பற்றி ஆன்மாவைப்போல் விளங்குகின்றது என்க, (83)

(84)     இதுகாறுங் கூறியவாற்றால் சொற்களின் சம்பந்தமில்லாமல் ஆன்மாவிற்கு அறிவு 
நிகழ்கிறதில்லை. எல்லாச் சவிகற்ப அறிவுகளும் சொல்லினாலேயே உண்டாகின்றன வென்பதாம் (84)

(85)     (அன்றியும்) அவ்விதமான இந்த நான்கு வாக்குக்களும் நிவிருத்தி முதலிய ஐந்து கலைகளைப் 
பற்றியிருத்தலால் மீண்டும் ஐந்து விதமாகப் பிரிக்கப்படுகின்றன. அந்தக் கலைகள்  விந்துவின் 
விருத்திகளாயிருக்கின்றன என்பதாம் .

    (உரை)  சொல் ரூபங்களான அந்த நான்கு வாக்குக்களென்னும் விந்துவின் விருத்திகளும் நிவிருத்தி
 முதலிய கலைகளைச் சார்ந்திருக்கும் ஆன்மாக்களுடைய வேறுபாட்டிற்குத் தக்கவாறு ஐந்துவிதமாக
 அறிவை விளக்குகின்றன. கலைகள் விந்துவின் விருத்திகள் என்பதனால் நிவிருத்தி முதலிய கலைகள் 
எதிலிருந்து தோன்றினவென்பார்க்கு விடைகூறுகின்றார். விந்துவின் அவத்தைகளே கலை முதலிய 
விருத்திகளாகும். ஆகையால் நிவிருத்தி முதலிய கலைகளுக்கு முதற்காரணமாகவும் விந்து சித்தித்ததென்க (85)

    (அ-கை) அந்தக் கலைகளின் பெயர்களைக் கூறுகின்றார்.

(86)     எந்தக்கலைகளால் ஐந்துவிதமான அத்துவாக்களும் வியாபிக்கப் பட்டிருக்கின்றனவோ, 
அந்தக் கலைகள் நிவிருத்தி யென்றும் பிரதிட்டை யென்றும் வித்தை யென்றும் சாந்தி யென்றும் 
சாந்தியதீதை யென்றும் பெயரினையுடையதாயிருக் கின்றன வென்பதாம்.

    (உரை) இவ்விதமான கலைகள் சதாசிவ புவனத்திற்குமேல் புவனரூபங்களா யிருக்கின்றனவாயினும்,
சத்தி ரூபமாய் நின்று எல்லா அத்துவாக்களையும் வியாபித்திருக்கின்றன வென்று'' எந்தக் கலைகளால் 
ஐந்துவிதமான அத்துவாக்களும் வியாபிக்கப்பட்டிருக்கின்றனவோ, என்பதனால் கூறுகின்றாரென்க. (86)

    (அ-கை) அத்துவாக்களைப் பற்றிக் கூறுகின்றார்.

(87)     தத்துவாத்துவா, புவனாத்துவா, வர்ணாத்துவா, பதாத்துவா, மந்திராத்துவா என்னும் ஐந்து விதமான 
அத்துவாக்களுக்கும் வியாபகமான கலாத்துவாவானது விந்துவா லதிட்டிக்கப்பட்டிருக்கிறது என்பதாம்.

    (உரை) தத்துவாத்துவா புவனாத்துவா முதலிய ஐந்துவிதமான அத்துவாக்களுக்கும் 
வியாபகமாயுள்ள மேலே கூறப்பட்ட கலாத்துவாவானது, விந்துவை முதற்காரணமாகவுடையதாய்
அவ்விந்துவால் அதிட்டிக்கப் பட்டிருக்கிறதென்பது கருத்து. அவ்வைந்து அத்துவாக்களுக்குள் 
தத்துவாத்துவா வென்பது சிவம் முதல் பூமி ஈறான சுத்தாசுத்த  தத்துவ வடிவமாயுள்ளது. 
புவனாத்துவா வென்பது அனாசிருத புவனமுதல் காலமீறான புவன வடிவமாயுள்ளது. 
வர்ணாத்துவா வென்பது அகாரம் முதல் க்ஷகாரமீறான முதலெழுத்துக்களாகும்.
பதாத்துவா வென்பது வியோம வியாபினி முதலிய பதங்களாகும். மந்திராத்துவா வென்பது 
சம்ஹிதா மந்திரங்களாகுமென்க ( 87)

    (அ--கை) இவற்றிற்கு அத்துவாக்களெனப் பெயர் வருவதற்குக் காரணங் கூறுகின்றார்.

(88)     யாதொரு காரணத்தால் ஆன்மாக்களால், கலை முதலியவற்றுள் ஒன்றைவிட்டு மற்றொன்றை 
யடைந்து, அவ்வாறு எல்லாம் நீங்கிய பின்னர், பிறப்பு இறப்பு இல்லாத தானமானது அடையப்படுகின்றதோ,
 அந்தக் காரணத்தால் கலைமுதலியன அத்துவாக்களென (வழிகளென) க்கூறப்படுகின்றனவென்பதாம்.

    (உரை) எவ்வாறு உலகிலுள்ள வழிகளுள் முறையே மனிதனானவன் ஒரு காலடியால் 
வரையப்பட்ட இடத்தை விட்டு மறுகாலடியால் வரையப்பட்ட இடத்தை யடைந்து இவ்வாறே 
மேலுஞ்சென்று கிராமத்தை யடைகின்றானோ, அவ்வாறே அசுத்த விடயங்களான கலை, 
தத்துவம், புவனம், வர்ணம், பதம், மந்திரமென்னுமிவற்றில் கன்மத்தின் பயனை அனுபவித்தற்காகவும்,
சுத்த விடயங்களான கலைமுதலிய வற்றில் சருவக்ஞத் தன்மை முதலியவற்றை யடைதற்காகவும்,
தீக்கையில் இவற்றிற்கு விசேடமான சேர்க்கை செய்யப்படுகின்றது. ஆகையால் கலை முதலிய 
பொருள்கள், கன்மபோகம் சருவஞ்ஞத் தன்மை என்னுமிவற்றை யடைதற்கு வழிகளாயிருத்தலின் 
வழியெனப் பொருள்படும் அத்துவா வென்னுஞ் சொல்லால் கூறப்படுகின்றன. என்க  (88 )

(89-89இ)  (அந்த அத்துவாக்களுக்குள்) கலாத்துவாவானது நிவிருத்தி முதலிய வேறுபாட்டால் 
முன்னர்ப் பிரிக்கப்பட்டது. இனி ஆதாரம் அடையாளம் அதிதேவதை என்னுமிவற்றுடன் கூடினதாயும், 
வடிவம் காரணம் முதலியவற்றுடன் கூடினதாயும், ஆன்மா விந்து சத்திசிவன் என்னும் பொருள்களைப் 
பற்றியிருப்பதாயும் உள்ள அந்தக் கலாத்துவாவின் வியாபித்தலைக் கூறுகின்றேனென்பதாம்.

    (உரை) ஆதாரங்கள் இருதயம் முதலியன. அடையாளங்கள் வச்சிர முதலியன. 
அதிட்டான தேவதைகள் சத்தியோசாதர் முதலியோர். வடிவங்கள் நாற்கோண முதலியன. 
காரணங்கள் அதாவது அதிபதிகள் பிரமன் முதலியோர். ஆன்மா விந்து சத்தி சிவன் என்னும் 
பொருள்களைப் பற்றியிருப்பதாவது, போகத்திற்கு இடமாயிருத்தலால் ஆன்மாக்களைப் 
பற்றியிருக்கின்றது. முதற்காரணமாயிருத்தலால் விந்துவைப் பற்றியிருக்கின்றது. 
தோன்றுதற்குச் சாதனமாயும் ஆதாரமாயுமிருத்தலால் சத்தியைப் பற்றியிருக்கின்றது. 
தோற்றுவிக்குங் கருத்தாவா யிருத்தலால் சிவனைப் பற்றியிருக்கின்றது என்க. (89-89இ)

    (அ-கை.) அவற்றுள் நிவிருத்தி கலையினுடைய வியாபித்தலை ஒடுக்க முறைபற்றிக் 
கூறுகின்றார். 

(90-91-92)      நிவிருத்தி கலையில் பிருதிவி தத்துவம் ஒன்று. புவனங்கள் நூற்றெட்டு.
அவற்றுள், காலாக்கினி முதலிய ஆறு புவனங்கள் பிரமாண்டத்திற்குள்ளிருக்கின்றன.  கிழக்கு முதலிய 
பத்துத் திக்குக்களிலும் ஒவ்வொரு திக்கிலும் பத்துப் புவனங்களாக நூறு புவனங்களிருக்கின்றன. 
அந்த நூறு புவனங்களும் நூறு உருத்திரர்களைச் சார்ந்திருக்கின்றன.  அதற்குமேல் வீரபத்திரற்கும் 
பத்திரகாளிக்கும் அப்பெயர் கொண்ட இரண்டு புவனங்களிருக்கின்றன. வர்ணங்களுள் இந்தக் 
கலையில் க்ஷகாரமொன்று என்பதாம்.

    (உரை)  உருத்திரர்களின் பெயரே புவனங்களுக்கும் பெயராகும். புவனம் முதலியவை நம்மால் 
'பத்ததியில்' விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றன. நூல் விரியுமென்னு மச்சத்தாலும் பத்ததிகளில் 
விளக்கமாயிருத்தலாலும் இவ்விடத்தில் அவை விரிவாய்க் கூறப்படவில்லை. இந்தக் கலையிலுள்ள 
எழுத்து க்ஷ என்பது என்க.

* குறிப்பு. பிரமாண்டத்திற்குள்ளிருக்கும் ஆறு புவனங்களாவன:-காலாக்கினி, கூச்மாண்டம், ஹாடகம்,
 பிராமம், வைஷ்ணவம், ரௌத்திரம் என்பன.

*குறிப்பு என்று வருவன வனைத்தும் மொழிபெயர்ப்பில் சேர்க்கப் பட்டவை

    கிழக்குத் திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன:--கபாலீசன், அஜம், புத்தினம், வச்சிர தேகம்,
 பிரமர்த்தனம், விபூதி, அவ்வியயம், சாஸ்தா, பினாகி, திரிதசாதிபம் என்பன.

    அக்கினி திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன:-அக்கினி ருத்திரம், உதாசம், பிங்களம், காதகம், 
ஹரம், சுவலனம், தகனம், பப்புரு, பஸ்மாந்தகம், சயாந்தகம் என்பன. 

    தெற்குத் திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன:-யாமியம், மிருத்தியு, ஹரம், தாதா, விதாதா, 
கருத்திரு, சம்யோக்தா, வியோக்தா, தருமம், தருமபதி என்பன.

    நிருதி திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன :- நிருருதி, மாரணம், அந்தா, குரூர திருட்டி,
 பயானகம், ஊர்த்துவசேபம், விருபாக்ஷம், தூமிரம், லோகிதம், தம்ஷ்டிரீ என்பன.

    மேற்குத் திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன :-- பலம், அதிபலம், பாசஹத்தம், மஹாபலம், 
சுவேதம், சயபத்திரம், தீர்க்கபாகு, சலாந்தகம், மேகநாதம், சுனாதம் என்பன.

    வாயு திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன:- சீக்கிரம், லகு, வாயுவேகம், சூக்குமம், தீக்ஷணம், 
க்ஷயாந்தகம், பஞ்சாந்தகம், பஞ்சசிகம், கபர்த்தி, மேகவாகனம் என்பன.

    வடக்குத் திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன:-  நிதீசம், ரூபவது, தன்னியம், சௌமிய தேகம், 
சடாதரம், லக்குமி திருக்கு, ரத்தின திருக்கு, ஸ்ரீ திருக்கு, பிரசாதம், பிரஹாமதம் என்பன.

    ஈசானிய திக்கிலிருக்கும் பத்துப் புவனங்களாவன:- நித்தியாதிபம், ஈசம், சர்வக்ஞம், ஞானபுக்கு, 
வேதபாரகம், சுரேசம், சர்வம், சேஷ்டம், பூதபாலம், பலிப்பிரியம் என்பன.

    பாதாளத்திலிருக்கும் பத்துப் புவனங்களாவன:--விருஷம், விருஷதரம், அனந்தம், குரோதனம், 
மாருதாசனம், கிரசனம்,  உதும்பரீசம், பணீந்திரம், வச்சிரம், தம்ஷ்டரீ என்பன.

    ஆகாயத்திலிருக்கும் பத்துப் புவனங்களாவன:-சம்பு, விபு , குணாத்தியக்ஷம், திரியக்ஷம், திரிதசேசுவரம், 
சம்வாஹம், விவாஹம், நபம், லிப்சு, திரிலோசனம் என்பன.

    வீரபத்திரம், பத்திரகாளி என்னுமிந்த இரண்டும் எல்லாப் புவனங்களுக்கும் மேலேயிருக்கின்றன.  (90--92)

(93)      தேவியான வியோமவியாபி சக்தியானது ஒடுக்க முறையில் எண்பத்தொரு பதங்களையுடையதா யிருக்கிறது. 
இந்த நிவிருத்தி கலையில் இருபத்தெட்டுப் பதங்களால் அந்த வியோம வியாபி சத்தி பிரதிட்டை 
செய்யப்பட்டிருக்கிறது என்பதாம்.

    (உரை) வியோம வியாபி ரூபமான சத்தியானது எண்பத்தொரு பதங்களையுடையதா யிருக்கிறது. 
அந்தச் சத்தி ஒடுக்க முறையில் பிரணவ முதல் இருபத்தெட்டுப் பதங்களால் இந்த நிவிருத்தி கலையில் 
நிச்சயிக்கப் பட்டிருக்கிறதென்க.

    குறிப்பு:  இருபத்தெட்டுப் பதங்களாவன :- ஓம் நம :  , ஓம் சிவாய நம :  ,  ஓம் நமோ நம: , 
சிவ சர்வதாய, சூக்கும சூக்குமாய, சப்த சப்தாய, ஞான ஞானாய, பிங்க பிங்காய, பதங்க பதங்காய, 
துருதுரவே, சாக்ஷி சாக்ஷிணே, பூர்வஸ்த்தித பூர்வஸ்த்திதாய, அஸ்து தாஸ்து தாய, அனர்ச்சி தார்ச்சி தாய, 
ருத்திர பராய, விஷ்ணவே, பிரம்மணே, சர்வசாநித்திய கராய, சர்வபூத சுகப்பிரதாய, பவோத்பவாய, 
பவபவாய, சர்வசர்வாய, பிரதமப் பிரதமாய, முஞ்சமுஞ்சாய, யோகாதிபதயே, மஹா தேஜ சே, 
சத்பாவேசுவராய, மஹா தேவாய என்பன. (93)

(94)     (அன்றியும்) அந்த நிவிருத்தி கலையில் சத்தியோ சாதம் இருதயமென்னு மிரண்டு 
மந்திரங்களிருக்கின்றன. அந்தச் சிறந்த நிவிருத்தி கலையானது புவன முதலிய ஐந்து 
அத்துவாக்களையும் வியாபித்து அவற்றிலேயிருக்கின்றது என்பதாம்.

    (உரை)      நிவிருத்தி கலையானது ஐந்து அத்துவாக்களை வியாபித்து அவற்றிலே 
யிருக்கின்றதென்பது கருத்து என்க.(94)

    (அ-கை) இவ்வாறு நிவிருத்தி கலையினுடைய வியாபித்தலைக் கூறிவிட்டு இதனுடைய 
வடிவம் முதலியவற்றைக் கூறுகின்றார்

(95)      மஞ்சள் நிறமாகவும் நாற்கோணமாகவும், கடினமாகவும், வச்சிரத்தை யடையாளமாக 
வுடையதாகவும், தோன்றிய அநேகம் காந்திகளால் நிறைந்ததாகவும், நிவிருத்தி கலையானது 
இருதய தாமரையில் தியானஞ்செய்யத் தகுந்தது என்பதாம்.  (95)

    (அ-கை) இந்த நிவிருத்திகலைக்கு நிவிருத்தி என்னும் பெயர் நிகழ்ந்ததற்குக் 
காரணங் கூறுகின்றார்

(96)      அந்த நிவிருத்தி கலையில் ஒடுங்கியிருக்கும் ஆன்ம வர்க்கத்தினுடைய சங்கற்பம் பயன்படாமல் 
நாசமடைகின்றமையால் இந்தக்கலை நிவிருத்தி என்று கூறப்படுகின்றது என்பதாம். (96)

(96 இ) (அன்றியும்) இந்த நிவிருத்தி கலையில் * காரணம் பிரம்மா. மந்திரம் சத்தியோசாதம். 
அதிதேவதை சத்தியோசாதர் என்பதாம் (96இ) 

* காரணம் - அதிபதி. மேல் 89-வது சுலோக உரை பார்க்க.

    (அ- கை) பிரதிட்டா கலையைப் பற்றிக் கூறுகின்றார்.

(97-103)     பிரதிட்டா கலையில் பூமி நீங்கிய ஏனைய நான்கு பூதங்களும், ஐந்து தன்மாத்திரைகளும், 
ஐந்து கன்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும், மனமும், அகங்காரமும், புத்தியும், அவ்வியத்தமும் 
என்னும் இருபத்து மூன்று தத்துவங்களிருக்கின்றன. கீழிருந்து எண்ணும் முறையில் ஹ காரமுதல் 
டகார மிறுதியான இருபத்து மூன்று எழுத்துக்களிருக்கின்றன. ஐம்பத்தாறு புவனங்களுள்ளன. 
அந்த ஐம்பத்தாறு புவனங்களும் அப்பு, தேயு, வாயு, ஆகாயம், புத்தி, பிரகிருதி, அகங்காரம் என்னும் 
இந்த ஏழு தத்துவங்களினும் ஒவ்வொரு தத்துவத்தில் எட்டுப் புவனங்களாக இருக்கின்றன.

     இருபத்தொரு பதங்களும் சிரோமந்திரம் வாமதேவ மந்திரம் என்னும் இரண்டு மந்திரங்களுமுள்ளன. 
விட்டுணு காரணமாகக் கூறப்படுகின்றனர். இந்தப் பிரதிட்டா கலையானது வெண்மை நிறமுள்ள 
பாதிமதியினுடைய காந்தி போன்ற காந்தியினையுடையதாயும், கருநெய்தலின் இதழைக் குறியாகவுடையதாயும், 
மிகுதியான பிரபையுடன் கூடினதாயும், கண்டத்திலிருக்கும் தாமரையில் தியானஞ் செய்யத்தகுந்தது. 
இந்தக்கலையில் ஒடுங்கிய ஆன்ம வர்க்கத்திற்குப் புருஷார்த்தமான மோக்ஷத்தில் நிலைத்திருக்கச் செய்தல் 
பற்றி இந்தக்கலை பிரதிட்டையெனப் பெயர் கொண்டது. இதற்கு அதிபதி வாமதேவர். இதற்கு வாச்சிய
மந்திரம் வாமதேவம் என்பதாம்.

    (உரை) மந்திரமென்னுஞ் சொல் மனனம் திராணமெனப் பிரிக்கப்படும்.  மனன மென்பது 
எல்லாம் அறிதல். திராண மென்பது சமுசாரிகளுக்கு அனுக்கிரகஞ் செய்தல். இவ்விரண்டு தொழிலுக்கும் 
தருமியாயிருப்பது பற்றி மந்திரமெனக் கூறப்படுகின்றது. இந்த முறையில் மந்திரமென்னுஞ் சொல்லானது 
சிவன், சத்தி, சிவசத்திகளால் அனுக்கிரகஞ் செய்யப்பட்டவர் ஆகிய இவர்களையே அறிவிக்கும். 
ஆயினும், சிவன் முதலிய பொருள்களை யறிவிக்கும் வாசகத்திலும் உபசாரமாய்ப் பிரசித்தமாயிருக்கின்றது. 
ஆகையால் இவ்விடத்திலும் சத்தியோசாதம் வாமதேவம் முதலிய சத்திவிசேடங்களே அதிதேவதைகளெனக் 
கூறப்பட்டன. இது பற்றியே புவனரூபங்களான நிவிருத்தி முதலிய கலைகளில் அப்புவனங்களையடைய 
விரும்புவோர்களால் சதாசிவம் முதலிய வடிவத்தோடு பரமசிவன் தியானஞ் செய்யத் தகுந்தவன் 
எனப் பெரியோர்கள் கூறுகின்றனர் என்க.

குறிப்பு:  பிரதிட்டா கலையிலுள்ள புவனங்களின் பெயரும் பதங்களின் பெயரும் வருமாறு :

    அப்பு தத்துவத்திலுள்ள எட்டு புவனங்களாவன :- அமரேசன், பிரபாசம், நைமிசம், புஷ்கரெளஷதி, 
டிண்டி, முண்டி, பாரபூமி, லகுளீசம் என்பன.

    தேயு தத்துவத்திலிருக்கும் புவனங்கள் எட்டாவன :-- அரிச்சந்திரம், ஸ்ரீசைலம், சலேசம், 
ஆமிராதகேசுவரம், மத்திய மேசம், மகாகாளம், கேதாரம், பைரவம் என்பன.

    வாயு தத்துவத்திலிருக்கும் புவனங்கள் எட்டாவன : கயை, குருக்ஷேத்திரம், நாகலம், நகலம், 
விமலேசம், அட்டகாசம், மகேந்திரம், பீமகேசுவரம் என்பன.

    ஆகாய தத்துவத்திலிருக்கும் புவனங்கள் எட்டாவன : வஸ்திராபதம், ருத்திரகோடி, அவிமுக்தம், 
மகாலயம், கோகர்ணம், பத்திரகர்ணம், சுவர்ணாச்சம், தாணு என்பன.

    அகங்கார தத்துவத்திலிருக்கும் புவனங்களெட்டாவன: சகலண்டம், துவிரண்டம், மகோடம், 
மண்டலேசுவரம், காலஞ்சரம், சங்குகர்ணம், தூலேசுவரம், தலேசுவரம் என்பன.

    புத்தி தத்துவத்திலிருக்கும் புவனங்களெட்டாவன:- பைசாசம், இராக்ஷசம், யாக்ஷம், காந்தர்வம், 
ஐந்திரம், சௌமியம்,  பிராஜேசம், பிராமம் என்பன. 

    பிரகிருதி தத்துவத்திலிருக்கும் புவனங்களெட்டாவன : அகிருதம், கிருதம், பைரவம், பிராமம், 
வைணவம், கௌமாரம், ஒளமம், சிரீகண்டம் என்பன. ஆகப்புவனங்கள் ஐம்பத்தாறுங் கண்டுகொள்க. 

    பதங்கள் இருபத்தொன்றாவன :- மகேசுவர, பரமாத்மன்,  சர்வ, சிவ, நிதனோத்பவ,  நிதன, 
அநிதன, ஓம்சுவ:  , ஓம்புவ: ,  ஓம்பூ :, தூ தூ தூ தூ, நாநா நாநா, அனாதயே, அபஸ்ம, அதூமா, 
அனக்கினி, அரூப, ச்யோதிர்ச்யோதி:, தேஜஸ்தேஜ :, பிரதம பிரதம, அரூபன்னரூபி என்பன. ( 97-103)

    (அ-கை) வித்தியா கலையைப் பற்றிக் கூறுகின்றார்.

(104-108)     வித்தியா கலையில் புருடன், அராகம், நியதி, வித்தை, கலை, காலம், மாயை என 
ஏழு தத்துவங்களும், வாமை முதலிய புவனங்களிருபத்தேழும், ஞகாரமுதல் நான்காவது ககார 
மிறுதிவரை மேல் நோக்கி எழுத்துக்கள் ஏழும், பதங்கள் இருபதும், சிகாமந்திரம் அகோர மந்திரமென்னும்
மந்திரங்களிரண்டும் இருக்கின்றன. உருத்திரன் காரணம். அகோரர் அதிதேவதை, இந்த வித்தியா 
கலையானது விளங்குகின்ற அனேகம் சுவாலையுடையதாயும், முக்கோண வடிவமாயும், சுவத்திகத்தை 
அடையாளமாகக் கொண்டதாயும், கருமையான மைக்குச் சமானமான காந்தியுடையதாயும், 
கன்னங்களிலுள்ள தாமரையில் தியானஞ் செய்யத் தகுந்தது. இந்த வித்தியா கலையில் ஒடுங்கியிருக்கும்
 ஆன்மவர்க்கத்தினுடைய அறிவானது எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்வது பற்றி இந்தக் கலை 
வித்தை எனக் கூறப்பட்டது என்பதாம். 

    (உரை) எல்லாப் பொருள்களையும் விளக்கஞ் செய்வது பற்றி என்பதற்கு இந்த வித்தியா கலையிலுள்ள 
புவனத்திற்குக் கீழ்ப்பட்ட எல்லா அத்துவாக்களையும் விளக்கஞ் செய்யுமென்பது பொருள். இவ்வாறன்றிப் 
பொதுவாய் எல்லாப் பொருள்களையுமென்று கொள்ளுதல் கூடாது. எதனாலெனின், எல்லாப் பொருள்களையும் 
அறியும் அறிவு மலமின்மையினாற்றான் நிகழுமாகையாலென்க.

    குறிப்பு:  வித்தியா கலையிலுள்ள புவனங்களும் பதங்களும் வருமாறு:

    புருட தத்துவத்தில் வாமம், பீமம், உக்கிரம், பவம் , ஈசானம், ஏகவீரம் என்னும் 
ஆறு  புவனங்களிருக்கின்றன. 

    அராக தத்துவத்தில் பிரசண்டம், உமாபதி, அஜம், அனந்தம், ஏகசிகம் என்னும் 
ஐந்து புவனங்களிருக்கின்றன

    நியதி தத்துவத்தில் குரோதம், சண்டம், சம்வர்த்தம், சுயோதி, சூரம் என்னும் 
ஐந்து புவனங்களிருக்கின்றன.

    வித்தியா தத்துவத்தில் பஞ்சாந்தகம், ஏகவீரமென்னும் இரண்டு புவனங்களிருக்கின்றன.

    கலா தத்துவத்தில் சிகேதம், மகாதேஜம் என்னும் இரண்டு புவனங்களிருக்கின்றன.

    காலதத்துவத்தில் வாமதேவம், பவமென்னு மிரண்டு புவனங்களிருக்கின்றன .

    மாயா தத்துவத்தில் உத்பவம், ஏகாங்குளம், ஏகேக்ஷணம், ஈசானம், அங்குட்ட மாத்திரமென்னும் 
ஐந்து புவனங்களிருக்கின்றன. 

    ஆகப் புவனங்க ளிருபத்தேழுங் கண்டுகொள்க.

    பதங்கள் இருபதாவன :-- வியோமந் வியோமந், அசேதந,  பரமேசுவரபராய, ச்யோதி ரூபாய, 
சர்வவித்தியாதிபாய, சர்வ யோகாதி கிருதே, அநிதனாய, கோப்திரே, குக்யாதி குக்யாய, 
ஓம் நமோ நம:, சத்தியோஜாத மூர்த்தயே, வாமதேவ குஹ்யாய, அகோர இருதயாய, தத்புருஷ வக்திராய, 
ஈசான மூர்த்தநே, சிகாய, சர்வப்பிரபவே, ஓம் நமசிவாய, ஓம்த்யானகராய, வியாபின்வியாபினே என்பன. (104-108)

    (அ-கை) சாந்தி கலையைப் பற்றிக் கூறுகின்றார்.

(109-113)     சாந்திகலையில் சுத்தவித்தை, மகேசுவரன் சதாசிவமென்னுந் தத்துவங்கள் 
மூன்றும், புவனங்கள் பதினெட்டும், மூன்றாவது ககரமுதல் முதலாவது ககரம் வரையிலுள்ள 
எழுத்துக்கள் மூன்றும், பதங்கள் பதினொன்றும், தத்புருடம் கவசம் என்னும் மந்திரங்களிரண்டும்
இருக்கின்றன. இந்தக் கலை புவன முதலிய ஐந்து அத்துவாக்களை வியாபித்திருக்கிறது. 
ஆறு புள்ளியை அடையாளமாகவுடையது. அறுகோண வடிவமாயுள்ளது. இந்தச் சாந்தி கலையானது 
பிரளய காலத்துதித்த சூரிய காந்தியை யுடையதாகப் புருவமத்தியிலுள்ள தாமரை நடுவில்
தியானஞ் செய்யத்தகுந்தது. இந்தக் கலையி லொடுங்கி யிருக்கும் ஆன்மவர்க்கத்திற்கு 
விருப்பு வெறுப்பு இல்லாமல் அறிவு சாந்தமாயிருப்பது பற்றி இந்தக் கலை சாந்தியெனக் 
கூறப்படுகிறது.  இதற்கு ஈசுவரன் காரணம். தற்புருடம் அதிதேவதை என்பதாம்.

    குறிப்பு:   சாந்தி கலையிலுள்ள புவனங்களும் பதங்களும் வருமாறு:

    சுத்தவித்தியா தத்துவத்தில் வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, 
பலப்பிரமதனி, சர்வபூத தமனி, மனோன்மனி என்னும் ஒன்பது புவனங்களிருக்கின்றன.

    மகேசுவர தத்துவத்தில் அனந்தம், சூக்குமம், சிவோத்தமம் ஏகநேத்திரம், ஏகருத்திரம்,         
திரிமூர்த்தி, ஸ்ரீகண்டம், சிகண்டம் என்னும் எட்டுப் புவனங்களிருக்கின்றன.

    சதாசிவ தத்துவத்தில் சதாசிவமென்னும் ஒரு புவனம், இருக்கின்றது.

     ஆகப் புவனங்கள் பதினெட்டுங் கண்டுகொள்க.

    பதங்கள் பதினொன்றாவன :-- நித்திய யோகிநே, லோகபீட, சாஸ்வதாய, துருவாய, 
அனாசிருதாய, அனாதாய, அனந்தாய, சிவாய, சர்வவியாபிநே, வியோமரூபாய, வியோமவியாபிநே என்பன. (109-113)

    (அ-கை) சிவதத்துவத்துள் மூன்று தத்துவங்கள் சாந்தி கலையில் அடங்கிவிட்டமையால் 
சத்தி தத்துவத்திற்குச் சிவதத்துவத்துள் அடக்கத்தை எண்ணினவராய்ச் சாந்தியதீத கலையின் 
வியாபித்தலைக் கூறுகின்றார்.

(114-118)     ஐந்தாவதான சாந்தி யதீதகலையானது பரகலையாகும். இதில் சிவதத்துவமொன்றும், 
புவனங்கள் பதினைந்தும், விசர்க்க முதல் அகரம் வரையுள்ள ஸ்வரம் என்று சொல்லக்கூடிய உயிரெழுத்துப் 
பதினாறும், ஓம் என்னும் பதம் ஒன்றும், சிவமந்திரம், ஈசான மந்திரம், அஸ்திர மந்திரமென்னும் 
மந்திரங்கள் மூன்றும் இருக்கின்றன. இந்தச் சாந்தியதீத கலையானது ஐந்து அத்துவாக்களையும் 
கருப்பத்திலுடையதா யிருப்பதுபற்றிப்  பரகலை யெனப்பட்டது. இந்தக் கலை மகா காயரூபமாகச் 
சிரசிலிருக்கும் தாமரையில் தியானஞ்செய்யத் தகுந்தது. காரணம் சதாசிவ தேவர். அதிபதி மந்திர 
ராஜனான ஈசானன். இவ்வாறு கூறப்பட்ட கலை என்னும் அத்துவாவானது புவன முதலிய அத்துவாக்களை 
வியாபித்திருக்கின்றது. இந்தக் கலை விந்துவால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. விந்துவானது சத்தியால் 
வியாபிக்கப்பட்டிருக்கிறது. சத்தியானது சிவனால் வியாபிக்கப்பட்டிருக்கிறது.  சிவன் ஒன்றாலும் 
வியாபிக்க படவில்லை என்பதாம். 

    (உரை ) புவனம் முதலிய ஐந்து அத்துவாக்களையும் வியாபித்திருக்கும் கலாத்துவாவானது 
விந்துவை முதற்காரணமாக வுடையது. கருத்தாவான சிவன், கரணமாகச் சித்தித்த சமவேதமாயிருக்கும் 
சிற்சத்தியால் விந்துவை அதிட்டிக்கின்றான். சிவனுக்கோ வெனில், அதிட்டாதா ஒருவருமில்லை 
யென்பது கருத்தென்க.

    குறிப்பு:  சாந்தியதீத கலையிலிருக்கும் புவனங்களாவன:-

    சிவதத்துவத்துளடங்கிய சத்திதத்துவத்தில் நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை 
என்னும் ஐந்து புவனங்களிருக்கின்றன. சிவதத்துவத்தில் இந்திகை, தீபிகை, ரோசிகை ,மோசிகை, 
ஊர்த்துவகாமிநி, வியாபிநி, வியோமரூபை, அனந்தை, அநாதை, அநாசிருதை என்னும் பத்துப் 
புவனங்களிருக்கின்றன. ஆகப்புவனங்கள் பதினைந்துங் கண்டுகொள்க (114-118)

    (அ--கை) இன்னும் இதைப் பற்றிக் கூறுகின்றார்

(119)     அந்தப் பரமசிவனோவெனில், தன்னினின்றும் வேறாகப் பிரித்தறிய முடியாத சத்தியால் 
எல்லாப் பொருள்களையும் மறைத்தும், எல்லாப் பொருள்களையும் வியாபித்தும், பின்னர் அந்தச் 
சத்தியினாலேயே எல்லாப் பொருள்களையும் அறிகின்றான் செய்கின்றானென்பதாம்.

    (உரை) ஆகையால் சத்திக்கு எல்லாப் பொருள்களையும் விடயமாகக்கொண்ட அறிவாயிருக்குந் 
தன்மையும், எல்லாப் பொருள்களையும் விடயமாகக்கொண்ட செயலாயிருக்குந் தன்மையும் சித்தித்தன என்க. (119)

    (அ--கை) இனி வியாப்தியின் சொரூபத்தைக் கூறுகின்றார்.

(120)      ஒரு பொருளுக்கு அதனினும் வேறான பிற பொருளில் எக்காலத்தும் பிறட்சி அடையாமல் 
இருக்கும் இருப்பானது; வியாப்தி யெனப்படும். அந்த வியாப்தியானது அடையப்பட்ட பொருளினுடைய 
தோற்றத்திற்கும் நிலைக்குங் காரணமாயிருக்கின்றது என்பதாம்.

    (உரை) பிற பொருளான ஆகாய முதலியவற்றிற்குப் பிற பொருளான சுவர் முதலியவற்றில் 
எப்பொழுதும் மாறுதலடையாத இருப்பானது வியாப்தியெனப்படும். அந்த வியாப்தியானது 
அடையப்பட்டபொருள் தோன்றுதற்கும் நிலைத்தற்குங் காரணமாயிருக்கின்றதென்க. (120)

(120இ)     (ஆகையினாலேயே) அந்த வியாத்தியானது இரண்டு வகையாயிருக்கின்றது. ஒன்று சங்கற்ப 
மாத்திரத்திலிருப்பது. மற்றொன்று ஆன்மாவினிடத்தில் காரிய ரூபமாய்ப் பரிணமித்திருப்பது என்பதாம் (120இ)

    (அ-கை) இதனையே விளக்கிக் காட்டுகின்றார். 

(121)     அவற்றுள் எவ்வாறு சூரியன், சன்னிதி மாத்திரத்தால் பகலில் நிகழும் செயல்களுக்கு உபகாரஞ் 
செய்கின்றானோ, அவ்வாறே சிற்சத்தியானது, சங்கற்ப மாத்திரத்தால் எல்லாவிதமான காரியங்களையுஞ் 
செய்கின்றது என்பதாம்.

    (உரை) பரமசிவனிடத்தில் சமவாய சம்பந்தத்திலிருக்கும் சிற்சத்தியானது, சூரியன், சன்னதி 
மாத்திரத்தால் தாமரையை மலரச் செய்வதுபோல், சங்கற்ப மாத்திரத்தால் சிருட்டி முதலியவற்றைச் 
செய்கின்றது. இது சத்தியின் வியாத்தியாகும். இவ்வாறே ஆன்மாவிற்கும் சரீரத்தை அசைத்தல் முதலிய
 காரியங்களில் சங்கற்ப மாத்திரமே கரணமென்றறிகவென்க. (121)

    (அ-கை) சடப்பொருளுக்குச் சித்துப் பொருளினுடைய அதிட்டானத்தினாற்றான் -ஆன்மாவினிடத்தில் 
காரியத்தைச் செய்தல் ரூபமான வியாத்தியென்று விந்துவின் வியாத்தியைக் கூறுகின்றார்.

    (122-123) விந்துவானது ஆன்மாவினிடத்தில்  நாத முதலிய ஆறுவிதமான அத்துவாக்களையும் 
முறையாக வேறான தனது பரிணாமங்களால் சிவனால் ஏவப்பட்டுச் செய்கின்றது. எவ்வாறு மண்ணானது 
குயவனால் அதிட்டிக்கப்பட்டுக் கலச முதலியவைகளாய்ப் பரிணமித்து அவற்றைச் செய்கின்றதோ 
அதுபோலு மென்றறிக வென்பதாம்.  

    (உரை) ஆறத்துவாக்களாகிய கலை, வர்ணம், பதம், மந்திரம், தத்துவம், புவனமென்பவற்றையும் 
விந்து தோற்றுவிக்கின்றது. ஆயினும் அவ்வாறனுள் சுத்தமான தத்துவாத்துவா புவனாத்துவாக்களைத்தான் 
விந்து தோற்றுவிக்கின்றது. எதனாலெனின், அசுத்தமான தத்துவாத்துவா புவனாத்துவாக்கள் மாயையிலிருந்து 
தோன்றுவனவாகையாலென்க.  (122-123)

(124)     (அன்றியும்) எந்தப் பொருளால் எந்தப் பொருள் தானாகவே பரிணாம ரூபமாக வியாபிக்கப் 
பட்டிருக்கிறதோ அந்த வியாப்தி அந்தப் பொருளினுடைய விகாரமாகக் கூறப்பட்டிருக்கின்றது. கிரீடமானது 
 பொன்னின் விகாரமாயிருப்பது  போலுமென்பதாம் . (124)

    (அ-கை) இந்த விஷயத்தை விந்துவாகியச் சாத்தியத்தில் காட்டுகின்றார்.

(125)     யாதொரு கலை முதலிய ஆறுவிதமான அத்துவாவானது விந்துவால் வியாபிக்கப்படுகிறதோ, 
அந்த வியாப்தி அந்த விந்துவினுடைய விகாரமாகும். நாதம் விந்து முதலியன விந்துவால் வியாபிக்கப்பட்டு 
அந்த விந்துவின் விகாரமாயிருத்தல் போலுமென்பதாம்.

    (உரை) அசுத்த தத்துவ புவனத்தினும் வேறான ஆறுவிதமான அத்துவாவானது காரியமா 
யிருத்தலால் நாதம் * விந்துவைப் போல் தனக்குக் காரணமாக மகாமாயை யென்னும் விந்து
வுண்டென்பதை அறிவிக்கின்றது என்க (125).

* இங்கே கூறப்பட்ட விந்துவானது காரிய ரூபமாய் நாதத்திற்குப் பின்னர்த் தோன்றும் அபரவிந்துவாகும். 
இது சத்தி தத்துவமெனவும் வழங்கப்படும்.

    (அ-கை) இனி விந்துவிற்குப் பரமசிவனிடத்தில் சமவாய சம்பந்தங் கூறும் வாதிகளின் 
மதத்தைக் கூறுகின்றார்.

(126)     யாதொரு காரணத்தால் குண்டலிநீ என்னும் விந்துவானது சிவனுடைய கிரியாசத்தி 
ரூபமா யிருக்கின்றதோ அந்தக் காரணத்தால் ஞான சத்தியைப் போல் இந்த விந்துவும் சிவனிடத்தில் 
சமவாய சம்பந்தத்தில் இருக்கின்றதென்று கூறுகின்றனரென்பதாம்.

    (உரை) ஞானசத்தியைப் போல் விந்து  ரூபமான கிரியா சத்தியும் சிவனிடத்தில் சமவாய 
சம்பந்தத்திலிருக்கின்றது  மாயையினைப்போல் சிவனை விட வேறாக இல்லை என்க (126)

(127)     (ஆகவே) பரமசிவனிடத்தில் ஞானக்கிரியா ரூபமான இரண்டு சத்திகள் சமவாய 
சம்பந்தத்திலிருக்கின்றன. அந்த இரண்டனுள் முதலாவதான ஞானசத்திக்கு சம்வித்து என்பதும் 
விஞ்ஞானமென்பதும் பெயர். கிரியா சத்திக்குக் கிரியை யென்பதும் குண்டலிநி யென்பதும் 
பெயர் என்பதாம்.

    (உரை ) ஞானசத்தியானது சம்வித்தென்றும் விஞ்ஞானமென்றுங் கூறப்படும்.  கிரியா சத்தியானது 
கிரியையென்றுங் குண்டலிநி யென்றுங் கூறப்படும் என்க. (127)

(127இ)      (அவ்விரண்டனுள்) ஞானசத்தியால் அறிகின்றான். கிரியா சத்தியால் உலகத்தைச் 
செய்கிறானென்பதாம்.

    (உரை) பரமசிவன் என்னும் பதத்தைச் சேர்த்து அறிகின்றான் செய்கின்றானென்று 
கொள்ளவேண்டுமென்க (127இ)

    (அ-கை) கிரியா சத்தியால் உலகத்தைச் செய்கிறானென்பதற்கு ஏதுக் கூறுகின்றார்.

 (128 )     யாதொரு காரணத்தால் புருடர்களுக்குக் கிரியையானது பயனை அளிக்கின்றதோ 
ஞானம் பயனை அளிக்கவில்லையோ ஆகையாலென்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் குயவன் முதலியவர்களின் முயற்சி ரூபமான கிரியாசத்தியே 
கடத்தோற்ற ரூபமான பயனை யளிக்கின்றதோ ஞானசத்தியானது அந்தப் பொருளை அறியச்செய்யும் 
மாத்திரத்தால் பயனடைந்ததா யிருக்கின்றதோ  அந்தக் காரணத்தால் பரமசிவனும் ஞானசத்தியால் 
உலகத்தை அறிந்து கிரியாசத்தியால் எல்லாவுலகத்தையுஞ் செய்கிறானென்க.     (128)

(128இ)         இந்தச் சத்திகளை விட்டுச் சிவன் நீங்கியிருப்பன். * சத்திகளோவெனில் சிவனை விட்டுத் 
தனித்திருப்பதில்லை என்பதாம். (128இ)

* நீங்கி இருப்பனென்பது சத்தியினால் செய்யுந் தொழிலைச் செய்யாதிருப்ப னென்பதாகும்.

    (அ-கை) இவ்வாறு புறமதத்தை அநுசரித்து விந்துவிற்குச் சிவனோடு சமவாய சம்பந்தம் உண்டென்று 
கூறிவிட்டுப் புறமதத்தை அநுசரித்தே சதாசிவம் முதலிய தத்துவங்களைக் கூறுகின்றார்.

(129 இ)     பரவுகின்ற இந்த ஞானக்கிரியா சத்திகள் ஏற்றத் தாழ்வின்றிச் சமமாயிருந்தால் சதாசிவ 
தத்துவமாகும். கிரியா பாகம் அதிகமாக இருந்தால் ஈசுவர தத்துவமாகும். ஞானபாகம் 
அதிகமாகவிருந்தால் வித்தியா தத்துவமாகு மென்பதாம்.

    (உரை) ஞானக்கிரியா சத்திகள் சமமாய் வியாபரிக்குங் காலத்தில் கிரியா சத்தியே 
சதாசிவ தத்துவ ரூபமாகப் பரிணமிக்கின்றது. கிரியா சத்தியின் மிகுதியால் ஈசுவர தத்துவமாகப் 
பரிணமிக்கின்றது. ஞானசத்தியின் மிகுதியால் வித்தியா தத்துவமாகப் பரிணமிக்கிறது என்க. (129இ)

(130-132)      (அன்றியும்) அந்த ஐந்து சிவதத்துவங்களிலும் மகான்களான விஞ்ஞான கேவலர்களுக்குப் 
பரமசிவன் தன்னை விட்டுப் பிரியாத கிரியா சத்தியால் விசித்திரங்களான புவனங்களையும், இயல்பாகவே 
அழகு வாய்ந்த நாயகிகளையும், மிகுதியான போகங்களையும், அப்போகங்களுக்குச் சாதனங்களான 
அழிவற்ற தனுகரணங்களையும், நாத முதலியவற்றையும் தோற்றுவிக்கின்றார். ஆகையால் இந்தப் 
பரமசிவன் சுத்தாத்துவாவிற்குக் கருத்தாவாகக் கூறப்பட்டிருக்கின்றார் என்பதாம். (130-132)

    (அ-கை) மேலே கூறிய விஷயத்தைக் கூட்டி முடிக்கின்றார்.

(133)     ஆகையால் இந்த விந்துவானது சிவசத்தியினின்றும் வேறானதில்லை. அன்றிச் 
சிவனுடன் சமவாய சம்பந்தத்திலிருக்கும் கிரியாசத்தியேயாகும். இவ்விஷயத்திற் 
கூறுகின்றோ மென்பதாம்.

    (உரை) ஆகையால் இந்த விந்துவானது சிவனிடம் சமவாய சம்பந்தத்திலிருக்கும் 
ஞானசத்தியினின்றும் அதிகமாய் வேறுபட்டதாயில்லை, அன்றிச் சிவனிடம் சமவாய 
சம்பந்தத்திலிருக்கும் கிரியா சத்தியேயாகும். இவ்வாறு சிலரெண்ணுகின்றனர். 
இவ்விஷயத்தில் கூறுகின்றோமென்பதால் சமாதானங் கூறுகின்றோமென்பது 
கருத்தாதலின் அது பொருந்தாதென்று கூறுகின்றாரென்க. (133)

    (அ-கை) சித்தாந்த முறையைக் கூறுகின்றார்.

(134-134இ)     அந்த விந்துவானது ஆன்மாவினிடத்தில் அநேக புவனக் கூட்டமுடைய 
தத்துவக் கூட்டத்தையும் அநேகவிதமாயும் அதிகமாயுமுள்ள தனுகரண போகங்களையும் 
தோற்றுவிப்பதாய்ப் பிரதானம் போல் பரிணாம முடையதாக யுக்தியால் கொள்ளப்படுகிறது 
என்பதாம்.

    (உரை) விந்துவானது தத்துவம் புவன முதலியவற்றிற்கு முதற்காரணமாய் நூல்களிற் 
கேட்கப்படுகிற படியால், அதற்குப் பிரகிருதியைப் போலாவது அல்லது மண் முதலியவற்றைப் 
போலாவது பரிணமிக்குந் தன்மையுண்டென்பது நிச்சயமாய்க் கொள்ளல் வேண்டும் என்க  (134-134 இ) 

    (அ-கை) விந்துவிற்குப் பரிணாமங்கொண்டால் சமவாய சம்பந்தத்தி லிருக்குமென்பதற்குக் 
குற்றமென்னை என்பார்க்குக் கூறுகின்றார்.

(135)     எந்தப் பொருள் பரிணாமமுடையதோ அந்தப் பொருள் நிச்சயமாகச் சடமாயிருக்கும். 
பால்போலும், ஆகவே இந்த விந்துவும் சடப் பொருளாகையால் இதற்குச் சிவனோடு சமவாய 
சம்பந்தம் எவ்வாறு பொருத்தமாகுமென்பதாம்.

    (உரை) இந்த விந்து பரிணாமமுடைய தாகையால் இதற்குச் சடத்தன்மை யுண்டென்பதுச் 
சித்தித்தது. சித்திக்கவே இதற்குச் சித்தோடு சமவாய சம்பந்தம் பொருத்தமில்லை என்று ''சடப்
பொருளாகையால்” என்பதாற் கூறுகின்றார் என்க . (135)

    (அ-கை) சடமான விந்துவிற்குச் சிவசமவாயங் கொண்டால் சிவனுக்குஞ் சடத்தன்மைச் 
சித்திக்குமெனக் கூறுகின்றார் .

(136)     சடப்பொருளோடு சமவாயமான தாதான்மிய சம்பந்தமானது, நிகரில்லாத அகண்ட 
சிற்கன ஏகரூபமான பரமசிவனுக்குச் சடத்தன்மையைக் கொடுக்குமென்பதாம் .

    (உரை) நித்திய முத்தனாகையால் நிகரில்லாததாயும், எல்லாப்பொருள்களையும் 
விடயமாகக் கொண்டிருத்தலால் அகண்டமாயும், ஞானக்கிரியா ரூபமான சரீரமொன்றையே 
சொரூபமாக வுடையனாகையால் சிற்கனமாயும் உள்ளவரென்பது கருத்து. சித்து ரூபமான 
சத்தியே சிவனுக்கு வடிவமாயிருக்கின்றது. வடிவ ரூபமான அந்தச்சத்தி ஒன்றாயிருந்தும் 
அறியத்தகுந்தபொருள் செய்யத்தகுந்த பொருளென்னும் உபாதி வேறுபாட்டால் உபசாரமாய் 
ஞானசத்தி கிரியாசத்தி என்னும் வேறு வேறு பெயரை யடைகின்றது. படைத்தல் முதலிய
ஐந்தொழில் புரியும் ஈசான முதலிய நிலை வேறுபாட்டால் சரீர காரியத்தைச் செய்வதனால் 
ஈசான முதலியன உபசாரமாய் சிவனுக்கு வடிவமென்று கூறப்படுகின்றன. ஆகையால் 
பரமசிவனுக்குச் சடரூபமான விந்துவினுடைய சமவாய சம்பந்தம் பொருந்தாது. சமவாய
சம்பந்தங்கொண்டால் சிவனுக்குச் சடத்தன்மை முதலிய குற்றம் நிகழுமென்க. (136)

    (அ-கை) பரமசிவன் சடப்பொருளாகவே இருக்கட்டும். இருந்தால் குற்றமென்னை 
என்பார்க்குக் கூறுகின்றார்.

(137 )     சடபுத்தியையுடைய எந்தப்புருடன் பரமசிவனைச் சடமாக எண்ணுகின்றானோ 
அவனுக்கு யுத்தி என்னும் அனுமானமும் சாத்திரமும் ஆன்மாவும் கடவுளும் இல்லையாகு மென்பதாம். 

    (உரை) பரமசிவனைச் சடப்பொருளெனக் கூறுவோரின் கொள்கையானது, உலகத்திற்குக் 
கருத்தாவாகப் பரமசிவனை நிச்சயித்துக் கொடுக்கும் அனுமானத்தினாலும், பரமசிவன் சித்துப் 
பொருளென்று அறிவிக்கும் ஆகமங்களினாலும் மறுக்கப்படும். அன்றியும், நியாயமானது 
பொதுவாகையால் சித்தென்னும் பொதுமையால் சிவனுக்குச் சமமான சித்துச்சாதியையுடைய                   
ஆன்மாக்களும் சடப்பொருள்களாக ஆகின்றன வென்பது கொள்ளவரும். வரவே, அந்த 
ஆன்மாக்களுக்குப் போகமோக்ஷமளிப்பதற்காகக் கடவுளும் சித்திக்கிறதில்லை என்க. (137 )

(138 )     பரமசிவனைச் சடமாகக் கூறுதலால் * ஆஸ்த்திகர்கள் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட 
புருடன் விசேடமாய் வித்வான்களால் தள்ளத் தகுந்தவனென்பதாம்.  (138)

* ஆஸ்திகர்-பதி பசு பாசங்கள்  உண்டென்றும் வேதசிவாகமங்கள் பிரமாணமென்றும் கொள்பவர் 
    
    (அ-கை) அங்ஙனமாயின் நுமது பக்கத்திலும் சிவனுக்குக் கருத்தாவாயிருக்குந் தன்மை 
கொள்ளப்பட்டிருக்கின்றது. கருத்தாவாயிருக்குந்தன்மை என்பது கிரியைக்குப் பற்றுக்கோடா
யிருக்குந் தன்மையாகும். கிரியைக்குப் பற்றுக்கோடாயிருத்தலால் பரிணாமமுடைமை 
சிவனுக்கும் நிகழுமென்பார்க்குக் கூறுகின்றார். 

(138இ)     யாதொரு காரணத்தால் கிரியைக்குக் காரணமா யிருத்தலால் ஞானசத்தியே 
கிரியாசத்தியென்று கூறப்படுகின்றதோ அந்தக் காரணத்தால் குற்றமின்மை காண்கவென்பதாம். 

    ( உரை) இவ்விடத்தில் கருத்திருத்தன்மை என்பது கிரியைக்குப் பற்றுக்கோடா யிருக்குந் தன்மையன்று.
 மற்றென்னையோ வெனில், கிரியையை நிகழ்த்துவதில் சாமர்த்தியமுடைமையே கருத்திருத்தன்மையாகும். 
ஆகவே, காந்தத்தின் சத்தி மாத்திரத்தால் இரும்பிற் கிரியை நிகழுமாறுபோல் சிவசத்தியின் சன்னிதி
மாத்திரத்தாலேயே விந்துவிற் கிரியை நிகழ்கின்றது. ஆகையால் விந்துவி னிகழுங் கிரியைக்குக் 
காரணமாயிருப்பது பற்றி ஞான சத்தியே கிரியாசத்தியென்று கூறப்படுகின்றமையால் குற்றமின்மை காண்க. (138இ)

    (அ-கை) இவ்விஷயத்தில் புறமதத்தினுடைய சங்கையைக் கூறிவிட்டு இனி எதிலிருந்து சுத்தாத்துவாத்
தோன்றுகின்றதோ அதுவே விந்துவென முன்னர்க் கூறியதனை நிச்சயஞ் செய்கின்றார்.

(139-141)     மாயைக்குமேல் அதனினும் வேறாய்ச் சடப்பொருளான விந்துவுள்ளதெனக் 
கொள்ளாவிடில் சுத்தாத்துவா எதனிடமிருந்து தோன்றுகின்றது; எதனிடத்தில் ஒடுங்குகின்றது; 
எதனால் தத்துவம் புவனம் முதலிய வேறுபாட்டால் ஆறு விதமாயிருக்கின்றது. விஞ்ஞான 
கேவலர்கள் எதனால் மூன்று பிரிவினையுடையவராவர். அவர்களுக்குள் வேறுபாட்டைச் 
செய்விக்கும் விந்துவையின்றி அவர்கள் எதிலிருந்து மீண்டும் விடுதலை யடைவார்கள் என்பதாம். (139-141)

    ( அ--கை) சித்துரூபியான சிவசத்தியே இவையனைத்திற்குங் காரணமாகட்டுமென்பார்க்குக் 
கூறுகின்றார்

(142)     சிற்சத்தியானது அவையனைத்தையும் பரிணாமத்தாற் செய்கிறதில்லை. எதனாலெனில், 
சேதனப் பொருளா யிருத்தலாலென்று பின்னர்ச் சத்தி விசாரத்தில் கூறப்போகின்றமையால் என்பதாம்.

    (உரை) இவ்விஷயம் முன்னரே கூறப்பட்டிருக்கின்றது. தத்துவப்பிரகாச விருத்தியிலும் என்னால் 
விரிவாய்க் கூறப்பட்டிருக்கிறதென்க (142)

     (அ-கை) இந்த விஷயத்தில் பூர்வபக்ஷியின் சங்கையைக் கூறுகின்றார்

(143)     அநேக சத்திகளையுடைய பரமசிவன் ஒருவனாயிருந்தும் தொழில் வேறுபாட்டால் கற்பிக்கப்பட்ட 
அநேக வேறுபாட்டையுடையவனா யிருக்கின்றானென்று கொள்வோமென்பதாம்.

    (உரை) முன்னர்க் கூறப்பட்டவாறுபோல் சேதனனான சிவனுக்குத் தத்துவம் முதலிய 
வடிவமாகப் பரிணாமம் பொருத்தமாகாது. ஆயினும் அநேக சக்திகளையுடைய சிவனொருவனுக்கே 
காரிய வேறுபாட்டால் சதாசிவம் முதலிய தத்துவ வேறுபாடு உபசாரமாய்க் கூறப்பட்டதேயன்றி 
உண்மையிலில்லை யென்பது உனது கருத்தாயின், அதிட்டிப்பவன் விஷயத்தில் அஃதுண்மையே. 
எதனாலெனில், அதிட்டிப்பவனான சிவனுடைய நிலை வேறுபாடானது அதிட்டிக்கப்படும் 
பொருளினுடைய வேறுபாட்டால் செய்யப்பட்டதாகையால் அவ்வேறுபாடு உபசாரமா யிருத்தலாலென்க. 
அதிட்டிக்கப்படும் சுத்தாத்துவாவிற்கோ வெனில், தத்துவம் புவனம் முதலிய வேறுபாடு உண்மையேயாகும்.
அவ்வாறு உண்மையெனக் கொள்ளாவிடில் உபசாரமென்பதே நிகழாதாகையாலென்க. (143)

     (அ-கை) சித்தினுடைய **விவர்த்தனமே விந்துவின் காரியமாகிய தத்துவம் புவனம் 
முதலியனவாகையால் அதிட்டிக்கப்படும் பொருளும் அசத்தியமேயெனில் அதன்மேல் கூறுகின்றார்

**விவர்த்தனம் - ஒன்று பிறிதொன்றாய்த் தோன்றல்

(143 இ)     யுத்தி சமமாகையால் மாயா சம்பந்தமான அத்துவாவும் அவ்வாறே அசத்தியமாகுமென்பதாம்.

    (உரை) சுத்தாத்துவாவில் விவர்த்தன வாதங்கொள்ளின் அந்த வாதத்தை அசுத்தாத்துவாவிலும் 
கொள்ள வருமாதலால் அந்த அசுத்தாத்துவாவும் அசத்தியத்தன்மையை யடையுமென்பது கருத்து என்க (143இ )

    (அ-கை) மாயா சம்பந்தமான அசுத்தாத்துவாவும் அசத்தியமா யிருக்கட்டும் .அதனால் குற்றமென்னை 
யெனில், அநேக அளவைகளால் நிராகரிக்கப்படுதலின் அசத்தியமாகக் கொள்ளுதல் கூடாதெனக் கூறுகின்றார். 

(144)     ஏதுக்களாலும் நூல்களாலும் யோகிகளுடைய காக்ஷியாலும் தனித்தனி அறியப்படும் சுத்தாத்துவாக்களை 
வித்துவான் எவ்வாறு நிராகரிப்பான் என்பதாம். 

    (உரை ) இவ்விடத்தில் சுத்தாத்துவாக்களென்பது அசுத்தாத்துவாக்களையுங் கொள்ளுதற்கு 
உபலக்கணமாய்க் கூறப்பட்டது. ஆகையால் சுத்தாசுத்த ரூபமான உலகத்தை அசத்தியமாகக் கொள்ளுதல் 
எல்லா அளவைகளோடும் முரணுதலால் அவ்வாறு கூறும் வாதிகள் துஷ்டபுத்தி யுடையவர்களென்பது 
கருத்து என்க. (144)

(145)     (அஃதெவ்வாறெனில்,) மேலான பதவியைக் கொடுக்கும் சிறந்தவனான பரமசிவன் 
உண்டென்று சித்தித்திருக்கும் பொழுது சாத்திரப் பிரகாரம் ஆன்மாக்களுக்குப் போகத்தின் 
பொருட்டும் மோக்ஷத்தின் பொருட்டும் பிரவிருத்தி கூறப்படுகின்றது என்பதாம்.

    (உரை) போக மோக்ஷத்தைக் கொடுப்பவனாகச் சிவனொருவன் சாத்திரத்தால் 
சித்திக்குங்கால் அந்தச் சாத்திரங்களில் உபதேசித்த முறையாக ஆன்மாக்களுக்கு 
அவரவர் அதிகாரத்திற்குத் தக்கவாறு போகத்தின் பொருட்டும் மோக்ஷத்தின் பொருட்டும்
பிரவிருத்தி காணப்படுகின்றது என்க (145)

    (அ-கை) போகானுபவத்திற்குரிய இடமானது சிவனால் நேரே செய்யப்பட்டதாய் 
மிகவுஞ் சுத்தமாயிருக்கிறதென்று நூல்களிற் கேட்கப்படுகிறதென்று காட்டுதற்காக 
ஸ்ரீமதங்க சூத்திரத்தைக் கூறுகின்றார்.

(146)     சதாசிவ பதமானது யோகத்தினாலும்  சரியையினாலும் தீக்ஷையினாலும் 
சித்தபேதத்தினாலும் அடையப்படுகின்றது. மோக்ஷமு மிந்த நான்கு 
காரணத்தா லடையப்படுகின்றது என்பதாம்.

    (உரை) சித்தபேதம் என்னுஞ் சொல்லால் இவ்விடத்தில் ஞானமென்னும் பொருள் 
கொள்ளத்தகுந்தது. சுத்தாத்துவாவில் கன்மத்திற்குப் பிரவிருத்தியில்லாமையாலும், 
கன்மத்தால்  நிகழும் போகம், சுகம் துக்கம் மோக ரூபமாயிருப்பது பற்றி அசுத்தமாகையாலும், 
சதாசிவம் முதலிய புவனத்தில் நிகழும் போகம் சுத்தபோகமாகும். அது அபரமோக்ஷமென்னும் 
பெயர் கொண்டது.  ஞானத்தால் அவ்வித சுத்தபோகம் அடையப் படுகிறது. 

    சிவசாமிய ரூபமான பரமோக்ஷமோவெனில், யோக முதலியவற்றோடு கூடிய 
தீக்ஷையாலடையப்படுகின்றது. இந்தப் பரமோக்ஷம் அபரமோக்ஷம் இரண்டனுள் சிறிது 
மலபரிபாகம் நிகழ்ந்து பௌதிக தீக்ஷை பெற்றவர்களுக்குப் போகானுபவத்திற்குப்
பின்னர்த்தான் மோக்ஷம் நிகழ்கின்றது. மலபரிபாகம் மிகுதியுமுடைய நைட்டிக தீக்ஷை 
பெற்றவர்களுக்குச் சரீர நாசத்திற்குப் பின்னர்த்தான் மோக்ஷம் நிகழ்கின்றது. 

    சத்தியோ நிர்வாண தீக்ஷை பெற்றவர்களுக்கும் சரீர நாசத்திற்குப் பின்னர்த்தான் 
மோக்ஷம் நிகழ்கின்றது. ஆனால் இந்தச் சூத்திரத்தில் தீக்ஷை சரியை யோகம் ஞானமென்னும் 
இந்த நான்கும் தனித் தனியே போக மோக்ஷங்களுக்குக் காரணங்களாயிருக்கின்றன வென்று 
தோன்றுதல் கூடும். அத்தோற்றம் வாக்கியப்பொருளை யறியாமையால் நிகழ்வது. இந்தச் 
சூத்திரத்தின் வாக்கியார்த்தப் பொருள் வருமாறு :-

    சதாசிவ பதமென்பது உபலக்ஷணமாய்க் கூறப்பட்டிருத்தலால், சதாசிவ புவனாதிபதிகளின் 
சாக்ஷாத்காரத்தைப் பயனாகவுடைய யோகத்தாலும், அப்புவனாதிபதிகளை ஆராதித்தல் ரூபமான 
சரியையாலும், அந்தப் புவனத்தில் சேர்த்தல் ரூபமான தீக்ஷையினாலும், அந்தப் புவனாதிபதிகளின் 
சொரூபத்தை யறிகின்ற ஞானத்தாலும், அந்தந்தப் புவனங்களில் இருத்தல் சித்திக்கும் என்பதாம். 
இவ்வாறன்றி நான்கு சாதனங்களுள் யாதாவதொரு சாதனத்தாலென்று கொள்ளுதல் கூடாது. 

     ஞான முதலியவற்றிலும் தீக்ஷையின்றி அதிகாரமின்மையால் தீக்ஷை பிரதான சாதனமாகும். 
ஆகையால் இந்த நான்கும் சேர்ந்து தான் போகத்திற்காவது மோக்ஷத்திற்காவது சாதனமா யிருக்கிறதென்று 
வாக்கியப்பொருள் கொள்ளல் வேண்டும் . கொள்ளவே, சரியை யோக மென்னுமிவற்றை ஞானமின்றி 
அனுட்டித்தல் பொருத்தமாகாது. எதனாலெனில் அறியப்படாத பொருளில் யோகமாவது சரியையாவது 
நிகழ்கிறதில்லையாகையா லென்க. 

    அந்த ஞானமும் மலமுதலிய பாசங்கள் திரவியமாகையால் கண்ணினுடைய படல ரோகம் 
கண் வைத்தியனுடைய வியாபாரத்தால் நாசமடைவதுபோல் தீக்ஷையென்னும் ஈசுவர வியாபாரமின்றிப் 
பாசங்களை நீக்கிப் புருடர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதற்குச் சமர்த்தமாகிறதில்லை என்று 
கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் தீக்ஷையே மோக்ஷத்திற்குக் காரணம். வேறு பிரகரணங்களிலும் 
" ஈசுவரனால் செய்யப்பட்ட முக்கியமான மந்திரக் கிரியையே போக மோக்ஷங்களைக் கொடுக்கக்கூடியதென்று,
 கூறப்பட்டிருக்கின்றது. 

    ஸ்ரீ ஷட் சாஹச் சரிகையிலும் " தீக்ஷையே புருடர்களுக்கு அறிவின் விளக்கத்தைச் செய்து மோக்ஷத்தைக் 
கொடுக்கின்றதென்று, கூறப்பட்டிருக்கிற* தென்க (146)

*ஞானமே மோஷத்திற்குச் சிறந்த சாதனமென்று நூல்களிற் கூறியிருக்கவும் இவ்விடத்தில் ஞானம் 
மோக்ஷத்தைத் தராது தீக்ஷையே மோக்ஷத்தைத் தருமென்றதன் கருத்தாவது-பரஞானம் அபரஞானமென்று 
ஞானம் இருவகைப்படும். அவற்றுள் அபரஞானம் நேரே மோக்ஷத்தைத் தராது. அதனையே இவ்விடத்துக் 
கூறினார், தீக்ஷையாலுண்டாகும் பரஞானம் நேரே மோக்ஷத்தைத் தரும் என்பதாம்.

    (அ-கை) போகத்திற்குப் பற்றுக் கோடாயிருக்குந் தன்மை சதாசிவ பதத்திற்கு உண்டென்று 
கேட்கப்படுகிறதென்று கூறுகின்றார்.

(147)     இவ்வாறு பெரிதான சதாசிவ பதமென்னும் போகமானது கூறப்பட்டது என்பதாம்.

    (உரை) இவ்விடத்தில் போகம் என்னுஞ் சொல்லால் உபசாரமாய்ப் போகத்திற்குப் பற்றுக்கோடு 
என்னும் பொருள் கொள்ளத் தகுந்தது. சதாசிவபதம் என்பதால் உபலக்ஷணமாய் சுத்தாத்துவ புவனங்களனைத்துங்
கொள்ளத்தகுந்தன என்க. (147)

    (அ-கை.) இந்தப் பதமானது புவனரூபமாயிருப்பது பற்றிக் காரியப் பொருளாகையாலும் 
சுத்தாத்துவாவா யிருத்தலாலும்  இதற்கு விந்துவே முதற்காரணமாகக் கூறப்பட்டதென்னுங் 
கருத்தால் கூறுகின்றார்.

(148)     அந்தச் சதாசிவ பதத்தில் சுத்தமாயிருத்தலால் மாயையை முதற்காரணமாகக் 
கொண்டு தனு கரண புவன போகம் முதலியன உண்டாவனவல்ல. ஆகையால் போகத்தின் 
பொருட்டுச் சுத்தாத்துவா சித்தித்தது என்பதாம் (148 )

    (அ-கை) வேறுவழியாகவும் சுத்தாத்துவாவைச் சாதிப்பதின் பொருட்டுக் கூறுகின்றார்

(149-149இ)     அன்றியும் அசுத்தமாயையானது ஏவப் படுபவனான யாராவதொரு கருத்தாவா 
லதிட்டிக்கப்பட்டதாயும் கலையால் வியாபிக்கப்பட்ட வடிவமுடையதாயும், கலை முதலியவற்றிற்கு 
முதற் காரணமாயிருக்கின்றது. எதுபோலுமெனின் மண்ணானது குயவனா லதிட்டிக்கப்பட்டதாய் 
கலசம் முதலியவற்றிற்கு முதற்காரணமாயிருப்பது போலுமென்பதாம்.

    (உரை) உள்ளது தோன்றுமென்னும் சற்காரிய வாதம் பற்றிக் கலைமுதல் பிருதிவி ஈறான 
காரியமனைத்தும் கலைகளேயாகும் . சத்தி ரூபங்களான கலைகளுக்கு மாயை பற்றுக்கோடாயிருப்பது
பற்றி கலைகளால் வியாபிக்கப்படுகிறது என்று கொண்டு கலையால் வியாபிக்கப்பட்ட வடிவமுடையதென்று 
கூறினார், இத்தகைய மாயையானது மண் முதலியனபோல் அசுத்தமாயிருத்தலால் சிவனால் ஏவப்படும் 
கருத்தாவால் கலக்கப்படுகின்றது. விந்துவைப் போல் சிவனால் நேரே கலக்கப்படவில்லை என்னுங் 
கருத்தால் சுத்தாத்துவாவில் சிவன் கருத்தா அசுத்தாத்துவாவில் அனந்ததேவர் கருத்தாவென்பதனால் 
கூறப்பட்டிருக்கின்றது என்க (149-149இ)

    (அ-கை) குலாலனுக்கும் சிவனால் ஏவப்படுந்தன்மை உண்டென்பதைப் பற்றிக் கூறுகின்றார்

(150)     இந்தக் குலாலனானவன் பசுவாயிருத்தலால் ஏவப்படுங் கருத்தாவாக வாகிறான். பரமசிவன் 
ஏவுதலைச் செய்யுங் கருத்தாவாகிறான் என்பதாம். 

    (உரை)     பசுவாயிருத்தலினாலேயே குயவன் ஏவப்படுங் கருத்தாவாக வாகிறான். 
நிர்மலனா யிருத்தலால் சிவன் ஏவுதலைச் செய்யுங் கருத்தாவாக வாகிறான் என்க. (150)

    (அ-கை) அஃதெவ்வாறெனில் கூறுகின்றார்.

(151)     காரியத்தைச் செய்வதில் சுதந்திரத்தன்மை யில்லாதவனாகவும், அறிவில்லாதவனாகவும், 
கூறப்பட்ட ஆன்மா, பரம சிவனால் ஏவப்பட்டவனாய் நல்ல காரியத்தையாவது தீய காரியத்தையாவது 
செய்வானென்பதாம். (151)

    (அ-கை) இவ்வாறு திருட்டாந்தத்தைச் சாதித்து விட்டு அதனைத் **தாஷ்டாந்தத்தில் காட்டுகின்றார்.

** தாஷ்டாந்தமென்பது, இவ்விடத்து அனந்ததேவர்

(152 - 152 இ) குலாலன் போல் அனந்ததேவரும் ஏவப் படுபவராயிருத்தலால் சரீர முதலியவற்றோடு கூடியே 
மாயையைக் கலக்கஞ் செய்கின்றார். அந்த அனந்த தேவர் எந்த அத்துவ சம்பந்தமான சரீர இந்திரியங்களோடும் 
எந்த அத்துவ சம்பந்தமான தேச முதலியவற்றோடுங் கூடினவராய் மாயையைக் கலக்கஞ் செய்கின்றாரோ, 
அந்த அத்துவாவே சிவசாத்திரத்தில் சுத்தாத்துவாவெனக் கூறப்படுமென்பதாம். 

    (உரை) எந்த அத்துவ சம்பந்தமான என்பதற்கு, எந்தச் சுத்தாத்துவ மயமான என்பது பொருள். 
எந்த அத்துவ சம்பந்தமான தேச முதலியவற்றோடு மென்பதற்குத் தனக்கிருப்பிடமான சுத்தாத்துவ புவனம் 
முதலியவற்றோடு மென்பது பொருள். முதலிய என்பதனால் முன்னர்க்கூறப்பட்ட சவிகற்ப அறிவிற்குக் 
காரணமான சத்தம் கொள்ளத் தகுந்தது என்க. (152-152 இ)

    இவ்வாறு புறமதங்களைக் கண்டித்துப் பரமசிவனுடைய பரிக்கிரக சக்தி ரூபியாயும், சுத்தாத்துவாவிற்கு 
முதற்  காரணமாயுள்ளதாயும், சடப்பொருளாயும் பரவிந்துவெனப் பெயர் கொண்டதாயுமுள்ள மகாமாயையைச் 
சாதித்துவிட்டுப் புறமதத்தை யனுசரித்து அசுத்தாத்துவாவைக் குறித்தும், விந்துவிற்கு முதற்காரணமாயிருக்குந் 
தன்மையையும் மாயைக்கு விந்துவின் காரியமாயிருக்குந் தன்மையையும் கூறுகின்றார்

(153)     யாதொரு காரணத்தால் மாயையானது கலைகளால் வியாபிக்கப்பட்ட வடிவமுடையதாயும், 
பசுவாகிய ஆன்மாவால் அதிட்டிக்கப்பட்டதாயு மிருக்கிறேதோ, அந்தக்காரணத்தால் வேறு சில 
வித்துவான்கள் அந்த மாயையையும் விந்துவினுடைய அவத்தையாகக் கூறுகின்றனரென்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் மாயையும் விந்து சம்பந்தமான கலைகளால் வியாபிக்கப்
பட்டதாயும், பசுவாகிய ஆன்மாவால்  அதிட்டிக்கப்பட்டதாயு மிருக்கிறதோ அந்தக்காரணத்தால் 
இந்த மாயையினையும் விந்துவின் காரிய ரூபமான சூக்கும பரிணாமமாகக் கூறுகின்றனரென்க.(153)

(154-155)     அவ்வாறே பிரகிருதியையும் மகாமாயையின் தூலபரிணாமமாகக் கூறுகின்றனர். 
அவர்களுக்கு மகாமாயையானது தூலம் சூக்குமம் பரம் என்னும் மூன்றுவிதமான வேறுபாடுடையதா 
யிருக்கின்றது. அம்மூன்றனுள் தூலாவத்தையாவது புருடனுக்குப் புத்திமுதலிய போக்கியப் பொருளை
யுண்டுபண்ணும் குண ரூபமான பிரகிருதியாகுமென்பதாம்.

    (உரை) பிரகிருதியையும் அந்த மகாமாயையின் தூலமான அவத்தையாகக் கூறுகின்றனர்.
 இவ்வாறு விந்துவொன்றையே முதற்காரணமாகக்கூறும் அவர்களுக்கு மகா மாயையாகிய அவ்விந்து, 
தூலம் சூக்குமம் பரமென்னும் மூன்றுவிதமாகப் பிரிக்கப்படுகிறது. தூலமான அந்த விந்துவின் 
அவத்தையே, சாத்துவிகம் இராசதம் தாமதமென்னும் முக்குண ரூபமாய்ப் புருடனுக்குப் போக 
சாதனங்களான புத்தி முதலிய தத்துவங்களையும் போக்கியப் பொருள்களான விடயங்களையும் 
உண்டுபண்ணுகின்ற பிரகிருதி என்று கூறப்படுகிறதென்க. (154-155)

(156)     சூக்குமை யென்னும் விந்துவி னவத்தையே மாயையெனப் பெயர் கொண்டது.  இந்த 
மாயையானது கலைமுதலிய தத்துவங்களின் சமஷ்டி ரூபமாய் அசுத்தாத்துவ காரியங்களான 
எல்லாவற்றிற்கும் முதற்காரணமா யிருக்கின்றது. மோகத்தைக் கொடுக்கக்கூடியதா யிருக்கின்றது 
என்பதாம்.

    (உரை) சூக்குமையோவெனில், மாயையென்னும் பெயருடையது. போக்திருத் தன்மைக்குக் 
காரணங்களான கலை முதலிய தத்துவங்களுக்கும், பிரகிருதி முதலியவற்றிற்கும், அதனுளடங்கிய 
தத்துவபுவன ரூபமான எல்லாவற்றிற்கும், நேராகவும் பரம்பரையாகவும் காரணமா                 
யிருக்கின்றதென்க. (156 )

(157)     (அன்றியும் ) குண்டலிநி என்னும் மகா மாயையே பரையென்று கூறப்படும்.  அது நித்தமாயுள்ளது. 
மந்திரங்களுக்கு முதற்காரணமாயும், வித்தியா வித்தியேசுவர ஆன்மாக்களின் சரீரங்களுக்கும் 
முதற்காரணமாயு மிருக்கின்றது என்பதாம். 

    (உரை) பரை என்னும் மகா மாயை, மாயைக்கும் முதற் காரணமாயிருக்கின்றதென்பது கருத்து, 
அது நித்தமாயுள்ளது; முதற்காரணமாயிருத்தலால் என்க (157)

(158)     யாதொரு காரணத்தால் அந்த மாயையானது பரிணாமத்துடன் கூடியதாய்க் காரிய ரூபமா 
யிருக்கின்றதோ, அந்தக்காரணத்தால் சரீரேந்திரியங்களையுடைய கருத்தாவைச் சாதித்துக் 
கொடுக்கின்றது என்பதாம் (158)

(159)     (அவ்வாறாயின்) சுத்தாத்துவா வுண்டென்பது தடையின்றிச் சித்தித்தது. எவர்களுடைய 
மதத்தில் கலை வித்தை முதலியவற்றிற்குக் காரணமான மாயை நித்தமெனக் கொள்ளப்பட்டதோ 
அவர்களுக்குக் கலையைச் சுத்தி செய்வதால் அசுத்தாத்துவா சுத்தஞ்செய்யப்படாததாக 
வேண்டும் என்பதாம்.

    (உரை) இவ்வாறு புறமதத்தை அனுசரித்து மாயைக்குக் காரியத் தன்மையைச் சாதித்து 
அம்மதத்தைத் தழுவியே மாயை நித்தியமெனக் கூறுவோரைக் குறித்து "எவர்களுடைய மதத்திலென்னுந்"
 தொடர்ச்சியால் குற்றங்கூறுகின்றார். மாயையை நித்தியமாய்க்கொண்டு சுத்தாத்துவாவை
 முதற்காரணமாய்க் கொள்ளவில்லையாயின், விந்துவின் காரியமான கலாத்துவாவின் 
சுத்தியால் மாயாகாரியமான அசுத்தாத்துவாவிற்குச் சுத்தி நிகழாது. ஒரு பொருளின் சுத்தியால்
 மற்றொரு பொருளுக்குச் சுத்தி நிகழாதாகையாலென்க. ஆகையால் அசுத்தாத்துவாவையும் 
விந்துவின் காரியமாய்க் கொள்ளவில்லையாயின், விந்துவின் காரியமான கலாத்துவாவின் 
சுத்தியால் அசுத்தாத்துவாவிற்குச் சுத்தி நிகழாதென்னும் அருத்தாபத்திப் பிரமாணத்தால் 
அசுத்தாத்துவாவும் விந்துவின் காரியமென்றே கொள்ளத்தக்கது என்க .    (159)

    (அ-கை) இவ்விஷயத்தையே கூறுகின்றார்.

(160)     யாதொரு காரணத்தால் தத்துவம் முதலியவற்றின் சுத்தியின் பொருட்டு நிவிருத்தி 
முதலிய ஐந்து கலைகள் சுத்தஞ் செய்யப்பட்டிருக்கின்றனவோ அந்தக் காரணத்தால் எல்லா 
அத்துவாக்களும் விந்துவினுடைய காரியங்களேயாகும் என்பதாம்.

    (உரை ) எல்லா அத்துவாக்களையும் விந்துவின் காரியமாய்க் கொள்ளவே முதற்காரணமான 
கலாத்துவாவின் சுத்தியால் எல்லாத் தத்துவங்களுக்கும் சுத்தி தடையின்றி நிகழுமென்பது கருத்து என்க - (160)

    (அ-கை) ஆனால் வியாபகமான கலையின் சுத்தியால் வியாப்பியமான தத்துவ முதலியவற்றிற்குச் 
சுத்தி நிகழும். ஆகையால் மாயை அநித்யமெனக் கொள்ளவேண்டாமெனில் கூறுகின்றார்.

(161-163)     வியாபகப் பொருளின் சுத்தி மாத்திரத்தால் வியாப்பியமான அத்துவாக்கள் 
விஷயத்தில் சுத்தி கொள்ளப்பட மாட்டாது, எதனாலெனில், முதற்காரணமா யில்லாதனவாயுள்ள
கலைகட்கு எப்பொழுதுஞ் சுத்தமாயுள்ள சிவன் சிற்சத்தி என்னும் இவர்களினுடைய சுத்தியினாலேயே 
எப்பொழுதுஞ் சுத்தி நிகழ வேண்டுமாதலாலென்க. இவ்வாறு எல்லா அத்துவாக்களுக்கும் 
காரியத்தன்மையைக் கூறுவதில் சாமர்த்தியமுடைய ஆசிரியர்களால் எல்லா அத்துவாக்களுக்கும் 
முதற்காரணமாகப் பரை என்னும் மகாமாயை கூறப்பட்டது என்க. (161-163)

    (அ-கை) இவ்விஷயத்தில் மாயை அநித்தியமென்பதில் பிரமாணமின்மையாலும், 
சுத்தமான விந்துவிற்கு அசுத்தாத்துவாவைக் குறித்து முதற்காரணமாயிருக்குந் தன்மை 
பொருத்த மாகாமையாலும், மாயை நித்தியமென்று கூறும் சுருதியோடு முரணுதலாலும், 
இந்தப்பக்கமானது ஒதுக்கப்பட்டதென்றெண்ணிச் சித்தாந்த அறிவுடன் கூடிய 
ஆசிரியர்களின் கருத்துப் பற்றி மாயைக்கு நித்தியத் தன்மையைச் சாதிக்கின்றார்.

(164)     இவ்விஷயத்தில் வேறு சில ஆசிரியர்கள் அத்துவாக்களுள் மாயையை 
அழிவற்றதாகவும் கலை முதலிய தத்துவங்களுக்கு முதற் காரணமாகவும், விந்துவால் 
வியாபிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனரென்பதாம்.

    (உரை) சுவாயம்பு வாகமத்தில் மாயா தத்துவமானது நித்தியமாய் உலகத்திற்கு 
முதற்காரணமா யிருக்கின்றதென்றும், ரெளரவாகமத்தில் வித்தியா ராஜராஜேஸ்வரராயும் 
மந்திரேசுவரராயுமிருக்கும் அனந்ததேவர் மாயையைக் கலக்கஞ்செய்து கலையைத் 
தோற்றுவித்தாரென்றும் கூறப்பட்டிருக்கிறதென்க (164)

    (அ-கை) ஆனால் மாயைக்குக் காரியத்தன்மை யில்லையாயினும் அசுத்தாத்துவாவிற்கு 
வியாபக மாத்திரமான கலாசுத்தியால் சுத்தி நிகழுமேயென்ற ஆசங்கைக்கு அவ்வாறாயின் 
எப்பொழுதுஞ் சுத்தமான சிவசக்திகளுடைய சுத்தியினால் எப்பொழுதுஞ் சுத்தி நிகழட்டுமென்று 
கூறப்பட்ட அதிப்பிரசங்கத்தைப் பற்றிக் கூறுகின்றார்.

(165)      உலகத்தில் யாதொரு காரணத்தால் வியாப்பியப் பொருளின் சுத்தியானது 
வியாபகப்பொருளின் சுத்தியால் நிகழ்கின்றதோ, அந்தக் காரணத்தால் கலையின் சுத்தியினால் 
அசுத்தாத்துவாக்களுக்கும் சுத்தியானது ஆகமமறிந்தவர்களால் அறியத்தகுந்தது என்பதாம்.

    (உரை) வியாபகமான கலையின் சுத்தியால் வியாப்பியமான அத்துவா எல்லாவற்றிற்கும் 
சுத்தியானது தீக்ஷையில் கன்மானுபவத்தின் வழியாய் நிகழ்கின்றதென ஆகமங்களிற் கேட்கப்படுகின்றது. 
இதன் கருத்தாவது--கன்மமிருக்குங்கால் ஆன்மாக்களுக்குக் கலை முதலிய அசுத்தாத்துவாவானது 
பந்தஞ்செய்யுந் தன்மையுடனிருக்கிறது. பந்தஞ் செய்வதான அந்தக்கலை முதலிய அத்துவாவிற்குச் 
சுத்தியாவது ஆன்மாக்களுக்குப் பந்தமாயிருக்குந் தன்மையின் நிவிருத்தியேயாகும். அவ்விதமான 
சுத்தியானது மலபரிபாகம் நிகழ்ந்தவனுக்குத் தீக்ஷையால் நிகழுங் கன்மநாசத்தா லுண்டாகிறது . 

    அவ்வாறே கிரணாகமத்திலும் யாதொரு பிராரத்த கன்மத்தால் அநேகம் பிறவிகளில் 
ஆன்மாக்களால் சம்பாதிக்கப்பட்ட* கன்மமும் ** வருங்கன்மமும் தீக்கையால் வறுக்கப்பட்ட 
வித்துப்போல் தடைசெய்யப் பெற்றிருக்கின்றனவோ, அந்தப் பிராரத்த கன்மம் போகானுபவத்தால் 
நசிக்கின்றதெனக் கூறப்பட்டிருத்தல் காண்க. சுவாயம்பு வாகமத்திலும் தருமா தருமங்களுக்கு 
நாசத்தைச் செய்யுந் தீக்ஷையென்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் எல்லா அத்துவாக்களிலும் 
தனித்தனியே ஒவ்வொரு அத்துவாக்களின் அடக்கத்தால் போகானுபவ ரூபமான தீக்ஷையானது 
பொருத்த மடைகிறது என்பதால் வியாபகமான  கலாத்துவாவின் சுத்தியால் வியாப்பியமான 
தத்துவபுவன ரூபமாயும் பொதுவாயுமிருக்கும் அசுத்தாத்துவாவிற்கும் பந்தத்தன்மையின் 
நிவிருத்தி ரூபமான சுத்தியானது பொருத்தமடைகிறதென்பதில் ஒருவிதமான 
குற்றமுமில்லை யென்க. (165)

*சம்பாதிக்கப்பட்ட கன்மம், சஞ்சித கன்மம்

**வருங்கன்மம், ஆகாமிய கன்மம்

    (அ--கை) இவ்வாறு மாயைக்கு நித்தியத்தன்மையிலும் குற்றமின்மையைக் கூறிவிட்டு 
மீண்டும் விந்துவையே விசேடித்துக் கூறுகின்றார்.

(166)     யாதொரு மகாமாயையானது சிவனுக்குப் பரிக்கிரக சத்தியாய் இருக்கின்றதோ, 
எந்தச் சத்தியால் எல்லாப் பசுக்களும் வியாபிக்கப்பட்டிருக்கின்றனவோ அந்த மகாமாயையானது 
மந்திரங்களுக்கு முதற்காரணமாயிருக்கின்றது என்பதாம்.

    (உரை ) மந்திரங்கள் வாச்சியமந்திரம் வாசகமந்திரமென இருவகைப்படும். அவற்றுள் 
மந்திரங்களுக்குப் பொருள்களான மந்திரேசுவரர்கள் வாச்சிய மந்திரங்களாகும். இவர்களுக்கு 
உற்பத்தியின்மையால் இவ்விடத்தில் மந்திரங்களென்பது வாசக மந்திரத்தைக் குறிக்கும். 
சத்தத்திற்கு முதற்காரணமாகையால் வாசக மந்திரங்களுக்கு மகாமாயை முதற்காரணமாயிருக்கின்றது.
இதுவே பரமசிவனது பரிக்கிரகசத்தியாகக் கூறப்படுகிறது. இந்த மகாமாயையினாலேயே எல்லாப் 
பசுக்களும் முன்னர்க் கூறப்பட்டவாறுபோல் நாத முதலியவற்றின் வழியாய் அதிட்டிக்கப் 
பெற்றிருக்கின்றனவென்க. (166)

(167)     (அன்றியும்) அவ்விதமான இந்த மகாமாயையானது எக்காலத்தும் விளங்குவதாய் 
ஈசுவரனுடைய கிரியா சத்தியாக விருக்கின்றது. அது பசுக்களிடத்திலேயே  நிலைத்திருத்தல் பற்றிப் 
பாசமென நிச்சயிக்கப்பட்டது என்பதாம். 

    (உரை) இந்த மகாமாயையானது எக்காலத்தும் ஆன்மாக்களுக்குச் சுத்த காரியங்களை 
யுண்டுபண்ணும் பொருட்டு ஈசுவரனுடைய கிரியாசத்தியால் அதிட்டிக்கப் பட்டிருத்தலாலும் 
கிரியா சத்தியோடு கலந்து ஒன்றாயிருத்தலாலும், சிலரால் இது ஈசுவரனுடைய கிரியாசத்தியே 
யாகுமென்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த மகாமாயை சித்தான பரமசிவனிடத்தில் 
சமவாய சம்பந்தத்திலிருக்கவில்லை. எதனாலெனின், இந்த மகாமாயை முதற்காரணமாகையால் 
சடப்பொருளென்று முன்னரேயே கூறப்பட்டிருத்தலாலென்க. ஆனதுபற்றியே இந்த மகாமாயை
முத்தான்மாக்களிடத்தில் பிரவிருத்திக்கிறதில்லை.  பசுக்களினிடத்திலேயே இருத்தலால் 
இதுவும் பாசத்தன்மை யுடனேயே கூடியிருக்கின்றது. அவ்வாறன்றிப் பாசங்களைக் கடந்த 
பரமசிவனிடத்தில் சமவாய சம்பந்தத்தி லிருக்கவில்லை யென்க (167)

(167இ)     (ஆனதுபற்றியே) இந்த மகா மாயையானது இவ்வாறிருக்கிறதென்று நிச்சயிக்கப் 
படாமையினால் பசுக்களை அசுத்தமான யோனிகளில் எக்காலத்து மிருக்கச் செய்கின்றதென்பதாம்.

    (உரை ) அவ்வாறான இந்த மகாமாயையானது கிரியா சத்தியினின்றும் வேறாகப் 
பிரித்தறியப் படவில்லையாயின் பசுக்களை அசுத்தயோனிகளிற் சேர்க்கின்றது. கிரியா சத்தியினின்றும் 
வேறாகப் பிரிந்திருக்குமென்று அறியப்படுமாயின் அசுத்த யோனிகளில் பசுக்களைச் 
சேர்க்கிறதில்லை என்க (167இ)

(168)     (அன்றியும்) இந்த மகா மாயையானது, தனது ஆராய்ச்சி அறிவு ரூபமான வீரியத்தால் 
போக மோக்ஷங்களைக் கொடுக்கின்றது என்பதாம்.

    (உரை ) மகாமாயைத் தன்னைப்பற்றி நிச்சயிக்கும் ஆராய்ச்சி அறிவுரூபமான வீரியத்தால் 
போக மோக்ஷங்களைக் கொடுக்கின்றது. அஃதாவது போக மோக்ஷங்களுக்குப் பரம்பரையாய் 
உபகாரஞ் செய்கிறதென்பது கருத்து.  மாயையோவெனில், ஆன்மாவல்லாத பொருள்களில் 
ஆன்மாவென்னும் அறிவிற்குக் காரணமாயிருத்தலால் போகத்திற்கு மாத்திரம் உபகாரஞ் 
செய்கின்றதென்க. (168)

    (அ--கை) போக மோக்ஷ மிரண்டனுள் விந்துவிற்குப் போகத்திற்குபகாரஞ் செய்யுந் 
தன்மை உண்டென்பதைக் காட்டுகின்றார்.

(169)     ஆராய்ச்சி செய்யப்படாமையால் அந்த மகா மாயை, போகத்திற்குச் சாதனமான 
பொருள்களினறிவிற்கு உபாயமான சவிகற்ப அறிவின் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள சத்தத்தின் 
சேர்க்கையால் எக்காலத்தும் பசுக்களை மோகிக்கச் செய்கின்றதென்பதாம் (169)

(170)     (மோகத்தைக் கொடுக்கவே) விடயானுபவத்தா னிகழக்கூடிய சுகத்தில் மிக விருப்பங் 
கொண்ட மனதையுடைய புருடனுக்கு எவ்வாற்றாலும் மோக்ஷமடைய முடியாமலிருக்குந் 
தன்மையைச் செய்கிறதாயிருக்கிறது என்பதாம். 

    (உரை ) விடயானுபவத்தில் சிரத்தையுடைய புருடனுக்கு எவ்வாற்றாலும் மோக்ஷமடைதற்கு 
முடியாமலிருக்குந் தன்மையைச் செய்கிறதென்பது கருத்து (170)

    (அ-கை) மோக்ஷத்திற்கு உபகாரஞ் செய்யுந் தன்மையும் விந்துவிற்குண்டென்பதைக் 
காட்டுகின்றார்.

(170இ)     ஆன்மாவிற்கு இந்த விந்துவை யறிதலே பரமோக்ஷத்திற்குபாயமான தீக்ஷை முதலியவற்றிற்குக் 
காரணமா யிருக்கின்றது என்பதாம்.

    (உரை) பரமோக்ஷமடைதற்கு உபாயமான தீக்ஷைக்கும், தீக்ஷைக்குப்பின் அனுட்டிக்கத்தகுந்த
நித்திய நைமித்திக முதலிய கன்மத்திற்கும் இந்த விந்துவின் நிச்சய அறிவே காரணமாயிருக்கின்றது. 
எதனாலெனில், அறியாத விஷயத்தை அனுட்டிக்க முடியாதாகையாலென்க. நிர்ப்பீஜ தீக்ஷையிலும் 
ஞானப் பிரதானனான * ஆசிரியனுக்கே  காரணத்தன்மை என்றறிகவென்க.  (170இ)

* நிர்ப்பீஜ தீக்ஷையுடையவனுக்கு நித்தியம் நைமித்திக முதலிய கன்மங் கிடையாவாகலின் 
அறியாத விஷயத்தை அனுட்டிக்க முடியாதென்னும் ஏது சித்திக்காதென்பார்க்கு ஆசிரியன் 
அறிந்து செய்கின்றானென்று கூறினரென்க.

(அ-கை) அந்தச் சிவன் முதலிய பொருள்களை அறியும் அறிவைச் சாத்திரவாயிலாக 
இந்த விந்துவே உண்டுபண்ணுகிறதென்று கூறுகின்றார்.

(171-172)     அந்தச் சிவன் முதலிய பொருள்களை அறியுமறிவானது சொற்களைத் 
தொடர்ந்திருத்தலால் சொற்களின் கூட்டத்திலிருந்து தோன்றுகின்றது. அந்தச் சொற்கூட்டமானது 
விந்துவிலிருந்து தோன்றுகின்றது. இந்த விந்துவானது நாதத்திலிருந்து  தோன்றுகின்றது. இந்த நாதமானது 
அநாகத விந்துவிலிருந்து தோன்றுகின்றது. இந்த அநாகத விந்துவே சுத்தாத்துவாவிற்குக் 
காரணமாகின்றது என்பதாம்.

    (உரை)  அநாகத விந்து என்பது சுத்தாத்துவாவிற்குக் காரணமான மகாமாயையை அறிவிக்கும் 
பெயர். அந்த மகா மாயையிலிருந்து நாதமும், நாதத்திலிருந்து விந்துவும், விந்துவிலிருந்து சொல்லும், 
தோன்றுகின்றனவென்பது கூறப்பட்டது (171-172)

(173)     இந்தச் சுத்தாத்துவாவிலிருப்பவர்களுக்குப் போக் திருத்தன்மை இருப்பதனால் சரீரம் 
இந்திரியமென்னும் இவற்றிற்கு விடயமான போகங்களினால் மலம் கன்மம் மாயை என்னும் இம்மூன்றும் 
சுத்தமாயிருக்கின்றதென ஊகிக்கப்படுகிறது என்பதாம்.

    (உரை ) இந்தச் சுத்தாத்துவாவிலுள்ள வித்தியேசுவரர் முதலியோருக்குப் போகத்தை 
யனுபவிக்கிறவராயிருக்குந்தன்மை உண்டென்று சாத்திரங்களிற் கேட்கப்படுதலாலும், 
போகமானது சரீர இந்திரியம் இல்லாதவருக்கு நிகழாதாகையாலும், அசுத்த போகத்திற்குக் 
காரணமான சரீர முதலியவற்றிற்குக் காரணமாயுள்ள மலமாயா கன்மங்கள் அந்தச் 
சுத்தாத்துவாவில் கூடாவாகையாலும், சுத்த போகத்திற்குச் சாதனமான சரீர முதலியவற்றால் 
போகத்தை யனுபவிக்குந் தன்மைக்குக் காரணமாயுள்ள சுத்தமான அதிகார மலமும், 
துணைக்காரணமான பரமசிவ வழிபாடு ரூபமான சுத்த கன்மமும், சரீர முதலியவற்றிற்கு 
முதற்காரணமான சுத்த மாயையும் உண்டென அனுமானஞ் செய்யப்படுகின்றது. மறைக்கும் 
மலத்தை நாசஞ் செய்தவர்களாயும், மாயையைத் தாண்டினவர்களாயு முள்ளவர்களுக்கே 
மகாமாயா புவனங்களில் வாசமிருப்பது பற்றி அந்த மகாமாயா புவன வாசமாவது அதற்குக் 
காரணமான தீக்ஷையாவது அவர்களுக்குச் சுத்தமான அதிகார மலத்தையும், பரமசிவ வழிபாடு 
என்னும் சுத்தமான கன்மத்தையும் சம்பாதித்துக் கொடுக்கிறதென்க. (173)

    (அ--கை) இன்னும் இவ்விஷயத்தையே கூறுகின்றார். 

(173இ)     சுத்தமான மல கன்மங்களுக்குச் சுத்தமாயையே காரணமாகின்றது என்பதாம் (173இ)

    (அ--கை) ஆன்மாவல்லாத பொருள்களில் ஆன்மாவென்னும் அறிவைத் தோற்றுவித்த 
அசுத்தமான புருடத் தன்மையென்னும் மலத்திற்கும், அசுத்த போகத்திற்குக் காரணமான 
அசுவமேதயாகம் பிராமணக்கொலை முதலிய கன்மத்திற்கும், அசுத்த மாயா காரியங்களின் 
சேர்க்கையே காரணமென்று கூறுகின்றார்

(174) அசுத்தமான மல கன்மங்களுக்கு அசுத்த மாயையே காரணமாகின்றது. ஆகையால் 
மாயை இருவகையாகக் கூறப்பட்டிருக்கிறது என்பதாம்.

    (உரை) இவ்விடத்தில் அசுத்த மலமென்னுஞ் சொல்லிற்கு நம்மால் அவதாரிகையில் 
கூறப்பட்டவாறு புருடத்தன்மை என்னும் பும்ஸ்த்துவ மலமென்றுதான் பொருள்கொள்ள வேண்டுமேயன்றி 
ஆணவமலமென்று கொள்ளுதல் கூடாது. எதனாலெனின், ஆணவமலம் அனாதியாகவே மறைத்தலைச் 
செய்கிறதென்று சாத்திரங்களிற் கேட்கப்படுகிறபடியாலும், இடையே வந்து கூடினதாகக் கொண்டால் ,
கூடி மறைத்தற்குக்  காரணமின்மையாலுமென்க. ஆனால் கன்மமும் அனாதியெனச் சாத்திரங்களிற் 
கேட்கப்படுகிறதாலும், கன்மம் உள்ள காலத்திற்றான் மாயை தொழிற்படுகிறபடியாலும், கன்மத்திற்கு 
மாயை காரணமென்றது எவ்வாறு கூடுமெனில், கன்மத்திற்குஞ் சரீரத்திற்குமுள்ள தொடர்ச்சியானது 
பிரவாக அனாதியாகவிருக்கின்றது. 

    கன்மமின்றி மாயை தொழிற்படுகிறதில்லை யென்பது உண்மைதான். ஆயினும் கன்மங்களைச் 
செய்தல் சரீரமுடையோருக்கே கூடுமாகலானும், வாசனா ரூபங்களான கன்மங்கள் புத்தியின் வழியாய் 
மாயையி லிருக்கின்றனவாகலானும், கன்மத்திற்கும் மாயை காரணமாகக் கூறப்படுகின்றது. ஆகையால் 
குற்றமின்மை காண்க. கன்மமும் புருடனுக்குச் சுத்தத்தைச் செய்கிறதில்லை. புருடனுக்குச் செய்கிறதாகக் 
கொண்டால் அவனுக்கு விகாரம் நிகழுமாகையாலென்க. உழவுமுதலிய தொழில்கள் அத்தொழிலுக்குப் 
பற்றுக்கோடான பூமியைச் சுத்தஞ் செய்வது போல் கன்மமும் அதற்குப் பற்றுக்கோடான புத்தியைச் 
சுத்தஞ்செய்வதால் அந்தக் கன்மம் புத்தியின் குணமாக விருக்கிறதென்று மதங்க முதலிய ஆகமங்களிற் 
கூறப்பட்டிருத்தல் காண்க. ஆகையால் சுத்தமாயை அசுத்தமாயை யென்னும் இரண்டு மாயைகள் 
நித்தியமாய்ச் சித்தித்திருக்கின்றன. அசுத்த மாயையானது சுத்தமாயையினின்றும் மாறான வேறு 
காரியத்தைச் செய்கிறபடியால் அந்த அசுத்த மாயையானது சுத்தமாயையின் காரியமாக ஆகிறதில்லை 
யென்பது கருத்து என்க. (174)

(174இ)     விந்துவிற்கும் புருடனுக்குமுள்ள பேதத்தையறியும் விவேக ஞானம் உண்டானவுடன் மலமென்னும் 
முளை நாசமடைகின்றது என்பதாம்.

    (உரை) மலம் திரவியமாகையால் அது ஞானத்தால் அழிவடையாதென்று முன்னர்க் 
கூறியிருக்கின்றமையாலும், தீக்ஷையால் மலநாசமுடையவர்களுக்கே சுத்தாத்துவ புவனத்தில் வாசம் 
நிகழ்கின்றமையாலும், சாத்திரத்தின் வாயிலாய் மகா மாயைக்கும் புருடனுக்குமுள்ள விவேக 
ஞானமுண்டாகின்றமையாலும், அதிகார மலநாசம் மகாமாயா புருட விவேக ஞானமுண்டாகவே 
உண்டாகின்றதென்க. (174இ)

(175)     மாயைக்கும் புருடனுக்குமுள்ள பேதமறியப்படவே தரும அதருமங்களென்னும் 
உமி நசிக்கின்றதென்பதாம்

    (உரை) ஞானாக்கினியானது எல்லாக் கன்மங்களையும் சாம்பலாகச் செய்கிறதென்று         
கீதையிலுங் கூறப்பட்டுள்ளது. ஆகையால் கன்மம் நாசமடைந்தும் பரிபாகமடைந்த மலமுடையவருக்கு 
விஞ்ஞான கேவலத் தன்மையே இருக்கின்றது. பிரகிருதி புருஷ விவேகத்திலோவெனில், அந்த 
விஞ்ஞான கேவலத் தன்மையுஞ் சித்திப்பதில்லை. அவ்வாறே சித்தகுருவால் பரமோக்ஷ நிராச 
காரிகையில் "சாங்கியர் கொள்ளும் கைவல்லியமென்னும் முத்தியும் பொருத்தமற்றது. எதனாலெனில்,
குண தத்துவத்திற்கு மேல் அவர்களுக்கு அனுபவமில்லாமையினால் அக்குண தத்துவத்திற்குமேல் 
அனுபவிக்கத் தகுந்ததாயுள்ள கன்மத்துக்கு நாசமின்மையால்” எனக் கூறப்பட்டிருக்கிறதென்க (175)

(176)     (ஆகையால்) மாயா மலத்தைக் கடந்தவனாயும் மகாமாயா சம்பந்தம் பெற்றவனாயுமுள்ள 
ஆன்மாவைக் குறித்துத் திரோதானசத்தி யென்னும் சிவசத்தியானது, விந்துவின் கலக்கத்தின் பொருட்டுப் 
பிரவிருத்திக்கின்றது என்பதாம்.

    (உரை) சாதக தீக்ஷை பெற்றுச் சுத்தாத்துவ புவனங்களில் போகத்தைக் கருதும் ஆன்மாவிற்குக் 
கலக்கமடைந்த விந்துவிலிருந்து திரோதான சத்தியென்னும் சிவசத்தியானது சரீர முதலியவற்றைத் 
தோற்றுவிக்கின்றது. அந்த விந்துவைக் கலக்கஞ்செய்வதும் அந்தத் திரோதான சத்தியே யாகுமென்க (176)

(177)     எவ்விதம் சமுத்திரமானது காற்றினாலுண்டான அசைதலால் மேல்பாகத்திலேயே 
விகாரமடைகின்றதோ அது போல விந்துவும் சத்தியால் ஏகதேச பாகத்தில் விகாரமடைகின்றது ; 
சகல புவனங்களையும் வியாபித்திருக்கின்றது என்பதாம்.

    (உரை) சத்தியின் ஏவுதலால் விந்துவானது நெய் புழுவாவது போல் ஏகதேசத்தில் விகாரமடைகின்றது. 
பால் தயிராவது போல் முழுப்பாகமும் விகாரமடைகிறதில்லை. முழுப்பாகமும் விகாரமடைகிறதாகக் 
கொண்டால் விந்துவிற்கு அநித்தியத் தன்மையும், அநித்தியத்தன்மையினால் அதற்குக் காரணமாகப்
பிறிதொன்று வேண்டுமெனப்பட்டு அவ்வாறே மேலுஞ் சென்று வரம்பின்றி யோடலென்னும் அநவத்தையும் 
நிகழுமென்க. ஆகையால் ஏகதேசத்திற்றான் விகாரமடைகின்றது. அன்றியும் விந்துவானது தனது 
காரிய ரூபமான கலை முதலியவற்றால் முன்னர்க்கூறிய உலகத்தையும் வியாபிக்கின்றதென்க. (177)

    (அ--கை) இவ்விதமான நியாயத்தையே மற்ற இடத்திலுங் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார்.

(178)     இவ்வாறே மாயையும் ஏகதேச பாகத்தில் விகாரமடைகின்றது. அந்த விந்துவைப் போல         
தனது காரிய வருக்கம் அனைத்தையும் வியாபிக்கின்றது. இவ்வாறே அவ்வியத்தமென்னும் 
பிரகிருதி மாயையும் ஏகதேச பாகத்திற்றான் விகாரமடைந்து தனது காரிய வருக்கத்தை 
வியாபித்திருக்கின்றது என்பதாம்.

    (உரை ) இவ்விடத்தில் விந்துவினின்றும் மாயை பிரகிருதி என்னுமிவற்றிற்கு 
விசேடமொன்றுண்டு. அதாவது, மாயை பிரகிருதி என்னுமிவை தனது காரிய வருக்கங்களை 
மட்டும் வியாபிக்குமேயன்றிப் பிறிதொன்றின் காரியத்தை வியாபிப்பதில்லை. விந்துவாகிய 
சுத்தமாயையோவெனில், வியாபகமாயிருப்பது பற்றி அசுத்த மாயா காரியத்திலும் 
வியாபிக்கின்றதென்க. (178)

    (அ-- கை) இனி, சிவனுக்குண்டான இலயம் முதலிய அவத்தையின் வேறுபாடானது 
விந்துவினுடைய வெவ்வேறு அவத்தைகளை அதிட்டித்தல் பற்றி உபாதிச் சேர்க்கையால் 
நிகழ்ந்ததெனக் கூறுகின்றார்.

(179)     ஆனந்தரூபமான விந்துவானது கலக்க மடையாமலிருக்குங் காலத்து சிவனுக்குப் 
போகமும், அந்த விந்துவானது கலக்க மடைந்திருக்குங் காலத்தில் அதிகாரமும், விந்துவிற்கு 
மேற்பட்டிருக்குங் காலத்தில் இலயமும் நிகழ்கின்றன என்பதாம்.

    (உரை) ஆனந்த ரூபமாயும், எங்கும் அதிக வியாபக முடையதாயுமிருக்கும் விந்துவானது 
சிவசத்தியால் கலக்கஞ் செய்வதின் பொருட்டு விடயமாகச் செய்யப்பட்டுக் காரியங்களைத் 
தோற்றுவிக்க நேர்முகமாயிருக்குங் காலத்தில் சிவசத்தியின் உத்தியோகத்தால் காத்தலென்னும் 
போகம் நிகழ்கிறது. அந்த விந்துவானது கலக்கஞ்செய்யப்பட்டுக் காரியங்களைத் தோற்றுவிக்கும்போது 
சத்தியானது வியாபாரத்துடன் கூடியிருத்தலால் அதிகாரம் நிகழ்கிறது. விந்துவானது தனது 
காரியங்களை ஒடுக்கிக்கொண்டு காரண ரூபமாயிருக்குங் காலத்தில் சத்தியும் வியாபாரமின்றி 
யிருத்தலால் இலயம் நிகழ்கின்றது என்க . (179)

    (அ-கை) ஆகையால் சிவசத்திகளுக்கு வியாபார வேற்றுமைபற்றி உபசாரமாய் வேற்றுமை 
நிகழ்ந்ததெனக் கூறுகின்றார்.

(180-181)     சிவனிடம் சமவாய சம்பந்தத்திலிருக்கும் சத்தியானது ஒன்றேயாகும். அது உபாதி
வேறுபாட்டால் இலயம் போகம் அதிகாரமென்னும் மூன்று தருமத்துடன் கூடி மூன்று விதமாயிருக்கின்றது. 
சிவனொருவனாயிருந்தும் அம்மூன்று விதமான சத்தியின் சேர்க்கையால் இலயம் போகம் அதிகாரமென்னும் 
மூன்று நிலையுடன் கூடி முறையே சிவன் சதாசிவன் மகேசுவரனென்னும் மூன்று பேதமாக 
விளங்குகின்றா னென்பதாம்.

    (உரை) இவ்வாறே வேறு நூல்களிலும் சிவன் அதிகாரியென்றும், இலயியென்றும், போகி யென்றும் 
உபசாரமாய்க் கூறப்படுகிறானென்று கூறப்பட்டிருத்தல் காண்க. இந்த விந்து என்னும் இரத்தினத்தின் 
சோதனையால் சத்தி என்னும் இரத்தினம் சோதிக்கப் பெற்றதென்றறிந்து கொள்க என்க. (180-181)

    (அ--கை) சிற்சத்தியின் சொரூப இலக்கணம் கூறுகின்றார்.

(182-184)      தடையற்ற மிகுதியான கிரணக் கூட்டத்தின் சொரூபமாயும், அழிவில்லாத 
தோற்றமுடையதாயும், கால தேசங்களால் பிரிக்கப்படாததாயும், நிருவிகற்பமாயும், ஆவரணமற்றதாயும், 
(அஃதாவது ஆணவ மலமற்றதாயும்) கன்ம சம்பந்தம் மாயா சம்பந்தமான துவந்துவமற்றதாயும், 
உபாதானத்தன்மை ரூபமான மகிமையற்றதாயும், அநேகவிதங்களான உபாதிகளின் சேர்க்கையா 
லுண்டானதாயும், ஒன்று பிறிதொன்றாய்த் தோன்றும் விவர்த்தமென்னும் மயக்கத்தினும் வேறாயுமுள்ள இலயம் 
முதலிய பேத சுபாவமுடையதாயும், ஒடுங்கியிருக்கும் உலகம் தோன்றுகின்றவுலகம் நிலைத்திருக்கும் 
உலகங்களாகப் பரிணாமமடைந்த விந்துவை அதிட்டிப்பதில் சாமர்த்தியமுடையதாயும் பிறபொருளைத் 
துணையாகக் கொள்ளாததாயும், அதுபற்றியே சுயம்பிரகாசமாயும், எங்கும் வியாபகமாயும், 
முதல் இடை கடை யற்றதாயும், எல்லாப்பாசங்களினின்று விலகியதாயும், அளவிலடங்காததாயும், 
மிகுதிக்கு எல்லையாயும், (அஃதாவது இதற்கு மேலில்லாததாயும்) மிகச் சூக்குமமாயும், அனைவருக்கும் 
அனுக்கிரகஞ் செய்யுந்தன்மை வாய்ந்ததாயும் உள்ளது சிற்சத்தி என்பதாம் . 

    (உரை) இவ்விடத்தில் கிரணத்தின் கூட்டமென்பது, இச்சா ஞானக் கிரியைகளின் கூட்டமேயாகும். 
இந்தச் சத்திக்கு இலயாவத்தையிலுங்கூட உபசாரமாகவேனும் வேறுபாடில்லாமையால் இதனை 
நிருவிகற்ப வடிவமென்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். இந்தச்சத்தி அநேக விதங்களான 
காரிய ரூபமாயுள்ள உபாதிகளின் சேர்க்கையால் பொய்யான வேறுபாட்டுடன் கூடியது. 
அஃதாவது காரியங்களின் வேறுபாட்டால் அதிகார முதலிய அவத்தையில் வேறுபாடுடையது போல் 
காணப்படுகிறதென்பது கருத்து. அன்றியும், இந்தச் சிவசத்தி யானது கூறப்பட்ட வுலகங்கட்கு 
முதன்மையான மகாமாயையைச் சார்வதில் சாமர்த்தியமுடையது. மலமின்மையால் பிற 
பொருளின் துணையின்றித் தானாகவே விளக்கமுடையது. அது பற்றியே ஆன்ம சிற்சத்தியினும் 
வேறாய் எல்லாப் பாசங்களாலும் சாரப்படாமை முதலிய குணங்களையுடையது. அளவற்றது .
அளவுக்கு எல்லையாயுள்ளது. மிகச் சுக்குமமாயுள்ளது. அனைவருக்கும் அனுக்கிரகிக்குந் 
தன்மையுடையது. இவ்வாறு சிற்சத்தி அறியத்தகுந்தது என்க. 

    குறிப்பு - உலகத்தில் ஒவ்வொருவரும் செய்யத்தகுங் காரியத்தை அறிந்து இச்சித்துச் 
செய்து முடிப்பது இயல்பு. அவ்வாறே பரமசிவனுடைய சத்தியும் அறிவு இச்சை செயல் ரூபமாய் 
இருத்தலால் சத்தியின் மாத்திரத்தா லனைத்தையுஞ் செய்கின்றான். உயிர்களின் சத்தியானது 
பிற பொருளின் துணையைக் கொண்டு தொழிற்படுவது போல் சிற்சத்திக்கும் துணை 
வேண்டுமென்பாரையும், விந்துசத்தி சமவேதமாயிருந்து முதற்காரணமாவது போல, 
சமவேதமாயிருக்கும் இந்தச் சிற்சத்தியும் முதற்காரணமாதல் வேண்டுமென்பாரையும் 
விலக்குவதற்காக ஆணவ மலமற்றதாயும் மாயை கன்மங்களற்றதாயும், முதற்காரணத் 
தன்மையற்றதாயும் என்னும் விசேடணங்கள் கூறப்பட்டன. மாயையின்றிக் கன்மம் போகத்திற்குக் 
காரணமாயில்லாமையாலும், கன்மமன்றி மாயை சரீர முதலியவற்றைத் தோற்றுவிக்காமையாலும், 
அவையிரண்டுஞ் சேர்ந்தே தொழில் புரிகின்றமைபற்றி அவை துவந்துவமெனக் கூறப்பட்டன. 
சத்திக்கு காரியங்களின் சேர்க்கையால் நிகழ்ந்த இலய போக அதிகாரத் தன்மை, ஒன்று பிறிதொன்றாய்த் 
தோன்றும் விவர்த்தமாகிய மயக்கமன்றென்பதறிவித்தற்கு வேறாயுள்ள இலய முதலிய பேத
சுபாவ முடையதெனப்பட்டது என்க. (182-184)

    (அ-கை) இந்தச் சிற்சத்தியானது பரமசிவனுடைய ஞானக்கிரியா ரூபமான அறிவேயன்றி 
வேறு பொருளன்றெனக் கூறுகின்றார்.

(184இ)     இந்தச் சிற்சத்தியே பரமசிவனுக்கு அழிவற்ற மகிமையாகக் கூறப்பட்டிருக்கிறது 
என்பதாம் . (184இ)

    (அ-கை) கருத்தாவான பரமசிவனுடைய சன்னிதானத்தில் கரணமான சிற்சத்தியின் 
சேர்க்கையால் விந்துவானது காரியங்களைத் தோற்றுவிக்கின்றதெனக் கூறுகின்றார். 

(185-187)     எவ்வாறு சமுத்திரமானது சூரியனுடைய சன்னிதானத்தில் சந்திரனுடைய 
சேர்க்கையால் அசைகின்ற அலைகளால் ஆகாயத்தைச் சத்திக்கச் செய்து விகாரத்தை யடைகின்றதோ, 
அவ்வாறே விந்துவும் புதிதான விசேடத்தால் வியாபிக்கப்படாத பரமசிவனுடைய சன்னிதானத்தில் 
அழிவற்றதாயும், பரமசிவனுடைய மகிமை ரூபமாயுமுள்ள சிற்சத்தியின் சேர்க்கை விசேடத்தால் 
அணுசம்பந்தமான அறிவென்னும் ஆகாயத்தை விசித்திரங்களான நாத முதலிய விருத்திகளால் 
அடிக்கடி நிறையச் செய்து விகாரத்தையடைகின்ற தென்பதாம்.

    (உரை) விந்துவானது ஒவ்வொரு புருடர்களிடத்தும் வெவ்வேறான நாதங்களினால் 
அப்புருடர்களின் அறிவைப்பூர்த்தி செய்கிறதென்று முன்னரே கூறப்பட்டிருக்கின்றது. 
ஆனால் பரமசிவனுக்கு இந்திரிய முதலிய கருவிகளில்லாமையினால், கருவியில்லாதவனுக்குக் 
கருத்திருத்தன்மை சித்திக்காதே யெனில், இந்தக் கேள்வி பொருத்தமற்றது. எதனாலெனில், 
உயிர்களிடத்து தனக்குக் கருவியான தேகத்தை அசைத்தலில் தனது சத்திமாத்திரம் கரணமாய்க் 
காணப்படுகிறபடியாலென்க. எனவே சத்தி மாத்திரத்தால் பரமசிவனுக்குக் கருத்திருத்தன்மை 
சித்திக்கு மென்பது கருத்தென்க. (185-187)

    (அ-கை) இந்தச்சத்தியானது பரமசிவனிடத்தில் பிரிக்கமுடியாத சம்பந்தத்திலிருப்பதால் 
பரிணமிப்பதில்லை. ஆகவே, இதற்குண்டான இச்சை ஞானம் கிரியை முதலிய வேறுபாடு 
காரியங்களின் வேறுபாட்டால் உபசாரமாய் நிகழ்ந்ததெனக் கூறுகின்றார். 

(188-189)     எவ்வாறு ஒரே சூரியனுடைய சத்தியானது நீரைக்கொடுத்தல் இழுத்தல் 
என்னுங்காரிய வேறுபாட்டால் வேறுபாட்டை யடைந்திருக்கின்றதோ, அவ்வாறே விவர்த்தமற்றதாயும், 
பலத்துடன் கூடியதாயும் உள்ள சிவசத்தியும், தான் ஒன்றாயிருந்தும் காரிய வேறுபாட்டால் 
வேறுபாட்டையடைகின்றது என்பதாம். (188-189)

    (அ-கை) இவ்விஷயத்தையே விரித்துக் கூறுகின்றார்.

(190)     அழிவில்லாத இந்தச் சிற்சத்தியானது தான் இச்சா ரூபமாயில்லாவிடினும் இச்சையென்னுங்
காரியத்தைச் செய்வதால் இச்சா சத்தியென்றும், தான் * ஞான ரூபமா யில்லாவிடினும் ஞானமென்னுங் 
காரியத்தைச் செய்வதால் ஞான சத்தியென்றும், தான் கிரியா ரூபமாயில்லாவிடினும் கிரியை யென்னுங்
காரியத்தைச் செய்வதால் கிரியாசத்தி யென்றும் கூறப்படுகிறது என்பதாம்.

*ஞானரூபமா யில்லாவிடினு மென்பதற்குச் சிறப்பான ஞான ரூபமாயில்லாவிடினு மென்பது கருத்து

    (உரை) அறியத் தகுந்தபொருள் செய்யத் தகுந்தபொருள் முதலிய உபாதி வேறுபாட்டால் 
ஞானம் கிரியை முதலிய வேறுபாட்டை யடைகிறதென்பது கருத்து என்க (190)

    (அ-கை) இவ்விஷயத்தை மிகுதியாகக் கூறுவதால் என்ன பயனென்று சுருக்கிக் கூறுகின்றார்.

(191)     சாத்திரங்களாலும், உலகத்திலுள்ளவர்களாலும் இது இதனுடைய காரியமென்று எந்தக் 
காரியம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தக் காரியமனைத்தையும் எண்ணமுடியாத 
மகிமையையுடைய சிற்சத்தியே செய்கின்றது என்பதாம்.

    (உரை) இதனால் இந்தச்சிற்சத்தியானது எல்லாப்பொருள்களுக்கும் அதிட்டானமாயிருக்கிறதென்று 
கூறப்பட்டதாக முடிந்தது. அவ்வாறே வேறு நூல்களிலும், சிவகலையானது எந்தப் பாவகலையில் 
வியாபித்து அதிட்டிக்கவில்லையோ, அவ்விதமான இரண்டு சந்தானத்திலிருக்கும் பாவகலை 
ஒன்று கிடையாதெனக் கூறப்பட்டிருக்கின்றதென்க (191)

    (அ-கை) சிற்சத்தியானது தான் விகாரமடையாமல் எல்லாப் பொருள்களையும் செய்வதென்னும் 
விஷயத்தைத் திருட்டாந்த மூலமாக நிச்சயம் செய்கின்றார்.

(192-193)     எவ்வாறு மனதினால் கவரமுடியாத மகிமையையுடைய கற்பக விருக்ஷமும், சிந்தாமணி
யென்னும் இரத்தினமும், தான் ஒரு பொருளாக இருந்து கொண்டே அநேக விதமான விரும்பப்படும் 
பொருள்களைப் பிறருக்குக் கொடுக்கின்றனவோ, அவ்வாறே மதிக்கமுடியாத பரமசிவனுடைய 
சிற்சத்தியும் ஒருவிதமான விசேடமுமற்றதாய் ஒரு பொருளாகவிருந்து கொண்டே, எல்லாப் 
பொருள்களையுந் தோற்றுவிப்பதில் சாமர்த்திய முடையதாகின்றது என்பதாம் (192-193)

    (அ-கை) சிற்சத்தி அறிவுடைப் பொருளாகையால் விகாரத்தை
யடைகிறதில்லையெனக் கூறுகின்றார்.

(194)     இந்தச் சிற்சத்தியானது ஒளி ரூபமாயும் சடப் பொருளன்றி அறிவுடைப் பொருளாயு
மிருக்கின்றமையால், இது உண்டாகிறதில்லை. அதுபற்றியே நசிக்கிறதுமில்லை. குறைவை 
யடைகிறதில்லை. அதுபற்றியே விருத்தியடைகிறதுமில்லை என்பதாம். (194)

    (அ-கை) இவ்விஷயத்தையே எதிர் மறைத் திருட்டாந்தத்தில் வைத்துச் சாதிக்கின்றார்.

(195-195இ)     எந்தப்பொருளானது தோற்ற நாசங்களுடனும் குறைதல் அதிகத்தன்மைகளுடனும் 
கூடியிருக்கின்றதோ, அந்தப்பொருள் ஒளி வடிவமற்றதாயும் சடப்பொருளாயுங் காணப்படுகின்றது. 
சரீரம் முதலியன போல சிற்சத்தி அவ்வாறு காணப்படவில்லை. ஆகையால் விகாரமற்றதாகுமென்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் இந்தச் சிற்சத்தியானது ஒளிவடிவமாயில்லாமலும், 
சடப்பொருளாயும் இருக்கவில்லையோ, அந்தக் காரணத்தால் இது விகாரத்தை யடைகிறதில்லை 
என்பது கருத்து என்க. (195-195இ)

    (அ--கை) இவ்வாறு இந்தச் சிற்சத்திக்கு பால் தயிராவது போல், முழுப்பாகத்திலும் விகாரம் 
இல்லை எனப்பட்டது. இனி மேலே கூறப்பட்ட இரண்டு காரணங்களைக் கொண்டே ஏகதேச 
பாகத்திலும் விகாரமில்லையெனக் கூறுகின்றார். 

(196)     யாதொரு காரணத்தால் அறிவற்ற சடப்பொருளுக்கே உலகத்தில் பரிணாமங் 
காணப்படுகின்றதோ, அந்தக் காரணத்தால் சிற்சத்திக்குமேலே கூறப்பட்டவாறு 
ஒளிவடிவமா யிருத்தலாலும், அறிவுடைப் பொருளாயிருத்தலாலும் என்னும் இரண்டு 
உபதேசங்களாலும் ஏகதேச பரிணாமமுங் கிடையாது என்பதாம் (196 )

    (அ-கை) இவ்விஷயத்தையே விரித்துக் கூறுகின்றார்.

(197)      பரிணாமத்தால் வாட்டமடையாதவனாயும், நித்தியனாயுமுள்ள பரமசிவனைச் 
சமவாய சம்பந்தத்தால் சார்ந்திருக்கும் சிற்சத்தியும், சிவனோடு தாதான்மியமாயிருப்பது 
பற்றிப் பரிணமிக்கிறதில்லை என்பதாம்.

    (உரை) பரிணாமமற்றவனாயும், நித்தியனாயும், சேதனனாயுமுள்ள பரமசிவனைத் 
தாதான்மிய ரூபமான சமவாயச் சேர்க்கையால் பற்றியிருக்கும் சிற்சத்தியும் பரிணாமத்துடன் 
கூடாதது. அவ்வாறே வேறு நூல்களிலும் சித்தினுடைய சத்தியானது அசேதனமாகாது எனக் 
கூறப்பட்டிருக்கிறதென்க. (197)

(198)    இந்தச் சிற்சத்தியானது எல்லாக் காரியங்களுக்கும் காரணமாயிருத்தலால், 
பரமசிவனைப்போலும், தானுண்டாவதற்கு வேறு காரணமின்மையால் விந்துவைப்போலும் 
நித்தியமாகக் கொள்ளப்படுகிறது என்பதாம். 

     (உரை) இதனை அநித்தியமெனக்கூறின் அதற்குக் காரணம் வேண்டப்படும். 
அக்காரண மநித்தியமெனில், அதற்குங் காரணம் வேண்டப்படும். இவ்வாறே மேலுஞ்சென்று வரம்பின்றி
யோடலென்னுங் குற்றத்திற் கிடனாமென்பது கருத்தென்க.  (198) 

 (199-200)     அவ்வாறே சிற்சத்தியை ஆதாரமாகக் கொண்டே எல்லாப் பொருள்களுந் தோன்றுகின்றன.
 அந்தச் சிற்சத்தியானது உற்பத்தி இல்லாதது. இந்தச் சிற்சத்தி இருந்தாற்றான் உலகமிருக்கின்றது. 
சிற்சத்தி இல்லையாயின் உலகம்  ஒருபொழுதுமிருக்கிறதில்லை. ஆகையால் அந்தச் சிற்சத்தியினுடைய 
இருப்பானது எவருக்கு எந்தப் பிரமாணத்தால் சாதிக்க முடியும், எந்தப் பிரமாணத்தால் அதன் சொரூபம் 
அறிவிக்கப் படும் என்பதாம்.

    (உரை ) உலகத்திற்கு முதற்காரணமான விந்துவை அதிட்டிக்கின்ற யாதொரு கருத்திரு 
சத்தியான சிற்சத்தியினுடைய இருப்பினாற்றான் காரியமான சுத்தாசுத்த உலகங்களிருக்கின்றனவோ, 
அவ்விதமான சிற்சத்தியின் இருப்பு வேறு எந்தப் பிரமாணத்தால் நிச்சயிக்கமுடியும். சிற்சத்தி 
இல்லையாயின், காரியப் பிரபஞ்சத்தின் தோற்றமே இல்லையாகு மாகையால், சிற்சத்தி இன்றியமையாது 
சித்தித்திருக்க வேண்டுமென்னும் அருத்தாபத்திப் பிரமாணத்தால் சிற்சத்தி சித்தித்ததென்பது 
கருத்து என்க . (199-200) 

    (அ-கை) இவ்வாறு சிற்சத்தியைச் சாதித்துவிட்டு சிற்சத்திக்கும் அசித்துக்கும் அத்துவிதங்கூறும் 
வாதிகளின் மதத்தைக் கூறுகின்றார்.

(201)     சில வித்துவான்கள் இந்தச் சிற்சத்தியைச் சத்துப் பொருளாகவும் அசத்துப்பொருளாகவும் 
விவர்த்திக்கும் உல்லாசமுடையதெனவும், அத்துவிதமெனவுங் கூறுகின்றனரென்பதாம். 

     (உரை) சில வித்துவான்களென்றதனால் அந்தக் கொள்கை மறுக்கப்படுமென்பது அறிவிக்கப்பட்டது. 
அவர்கள் சித்துரூபமான சத்தியே மெய்ப்பொருள். அச்சத்தி தனது விவர்த்தத்தால் சுத்தாசுத்த புவன ரூபங்களான 
பொய்ப் பொருள்களை விளக்கஞ் செய்கின்றது. ஆகையால் இரண்டான  பொருளின் தோற்றம் இரண்டு 
சந்திரனென்னும் அறிவு போல் மயக்க அறிவு யாகுமென்று கூறுகின்றனரென்க. (201)

    (அ--கை) இவ்விஷயத்தையே திருட்டாந்த மூலமாக விளக்குகின்றார்.

(202-202இ)     கயிறானது எவ்வாறு பாம்பென்றும், உலைந்த மாலையென்றும் மயக்கத்தைச் 
செய்வதாய், அசத்தியமான பாம்பு, மாலை முதலிய பொருள்களை யுண்டுபண்ணுகிறதில்லையோ, 
அவற்றின் தோற்றத்தைமாத்திரஞ் செய்கிறதோ, அவ்வாறே சிற்சத்தியும் தான் ஒரு 
பொருளாயிருந்துகொண்டு அநேக பொருள்களாகத் தோன்றுகின்றது. அத்தோற்றம் 
மயக்கமாகும் என்பதாம் . (202-202இ)

(203- 205 இ )     இந்த மயக்கமானது ஆதாரமற்றதாயும், எல்லா நியாயங்களோடும் முரண்படுவதாயும், 
ஆராயுங்கால் காரணமற்றதாயு மிருக்கின்றமையால் இது பந்தமோக்ஷங்களுக்குக் காரணமாகிறதல்லை. 
ஆகையால் பந்தமும், பந்தமுடையவனும் பந்தத்தைச் செய்பவனும் ஆராயுங்காலில்லையாகும். 
 நித்திய முத்தமாயும், இரண்டற்றதாயும், அறிவற்றதாயுமிருக்கும் சத்தி என்னும் அறிவு ஒன்றே 
உண்மைப் பொருளாகும். ஆனால் உலகத்தில் பேத அறிவுங் காணப்படுகின்றதே அது எவ்வாறு 
பொருந்துமெனில், உலகத்திற் காணப்படும் பேதவியவகாரம், இந்த ஆலமரத்தின்கண் 
பூதமிருக்கிறதென்று சொல்லுபவர் அது இருக்கிறதாகத் தானறியாது கூறும் பழமொழிபோல் 
பிரமாணமற்ற தாகுமென்பதாம். (203-205இ)

    (அ--கை) பேத அறிவு பிரமாண மற்றதாகுமென்றல் எவ்வாறு கூடுமென்பார்க்கு அவன் 
கூற்றைக் கூறுகின்றார்.

(206)     அவ்வாறே காணப்படும் பொருள்களினுடைய வேற்றுமையானது பிரத்தியக்ஷத்தாலறியத் 
தகுந்ததில்லை. எதனாலெனில், பிரத்தியக்ஷ அறிவானது கற்பிக்கப்பட்ட பொருளை விடயமாகக்கொண்டு 
நிகழ்கின்றதாகையாலென்க. ஆதலால் இது பாலர்கள் ஊமையர்களின் அறிவிற்கு நிகராகவே ஆகுமென்பதாம்.

    (உரை) பொருளின் சாமர்த்தியத்தாலுண்டாகும் நிருவிகற்ப அறிவுதான் பிரத்தியக்ஷ அறிவாகும். 
ஆகையால் அதற்குத்தான் பிரமாணத் தன்மையுண்டு. பேத அறிவோவெனில், விகற்ப ரூபமாகையால்  
அது பிரத்தியக்ஷமாகச் சித்திப்பதில்லை என்பது கருத்து என்க. (206)

(206இ)     (அன்றியும்) பிரத்தியக்ஷ அறிவானது பொருள்களைத் தோற்றுவிக்குமேயொழிய ஒரு 
பொருள்களையும் விலக்குகிறதில்லை என்பதாம்.

    (உரை ) அவ்வாறே வேறு நூல்களிலும் “ஓ அறிஞர்களே! "  பிரத்தியக்ஷமானது 
தோற்றுவிக்குமேயொழிய விலக்குகிறதில்லை எனக் கூறப்பட்டிருத்தல் காண்க. பேதமென்பது 
ஒரு பொருளின் தன்மை பிறிதொரு பொருளினிடத்து இல்லாமையை யறிதலை முன்னிட்டு 
நிகழக் கூடியதாகையால், காணப்படும் பொருளை விடயமாகக் கொண்ட பிரத்தியக்ஷத்தால் 
அபாவமான பேதத்தை யறிதல் கூடாதென்பது கருத்தென்க. (206இ)

    (அ-கை) சவிகற்ப அறிவைப்பற்றிக் கூறுகின்றார். 

(207-208)     சத்தத்தின் சம்பந்தத்தை முன்னிட்டு உண்டாகும் விசேடண அறிவானது தேச 
காலங்களைத் துணையாகக் கொண்ட இந்திரியங்களால் உண்டுபண்ணப்படுகிறது. ஆகையால் 
அந்த அறிவு பொருளின் சாமர்த்தியத்தால் உண்டான அறிவாக ஆகிறதில்லை. அன்றியும், 
அதுநினைவு சங்கற்பம் முதலிய அறிவுபோல் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாம்.

    (உரை) சொல்லின் சேர்க்கையை முன்னிட்டு யாதொரு சவிகற்ப அறிவானது 
தேசகாலங்களைத் துணையாகக்கொண்டு இந்திரியங்களால் உண்டுபண்ணப்படுகிறதோ, 
அந்த அறிவு தேசகாலங்களைத் துணையாகக் கொண்டதனால், பொருளின் சாமர்த்தியத்தால் 
நிகழ்ந்ததில்லை. நினைவு சங்கற்பம் என்னுமிவைபோல அது பிரமாணமாகக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறே பெரியோர்களும் கற்பனையற்றதாயும், மயக்கமற்றதாயுமிருக்கும் அறிவே
பிரத்தியக்ஷமெனக் கூறுகின்றனரென்க. (207-208) 

(208இ)         (அதுபற்றியே) பேதத்திற்குப் பிரத்தியக்ஷப் பிரமாணமின்மையால்,
 அனுமானப் பிரமாணமும், ஆகமப் பிரமாணமும் சம்பவிக்கிறதில்லை என்பதாம்.

    (உரை) காணப்படும் பொருள்களின் பேதங்களுக்குப் பிரத்தியக்ஷத்திற்கு விடயமாயிருக்கும் 
தன்மை இன்மையால் அவ்விஷயத்தில் அனுமானமும் ஆகமமும் பிரமாணமாகாவென்க (208இ)

    (அ-கை) அஃதெவ்வாறென்பார்க்குக் கூறுகின்றார்.

(209)     அந்த அனுமானம் ஆகமமென்னும் இரண்டு பிரமாணங்களும் பிரத்தியக்ஷப் பிரமாணத்தால் 
சித்தித்த பொருளிலேயே விகற்பத்தைத் தோற்றுவிக்கின்றமை பற்றிப் பிரமாணமாகின்றன வென்பதாம்.

    (உரை ) யாதொரு காரணத்தால் அந்த அனுமானம் ஆகமமென்னும் இரு பிரமாணங்களும் 
பிரத்தியக்ஷப் பிரமாணத்தால் சித்தித்த பொருளிலேயே விகற்பத்தை யுண்டுபண்ணுகின்றமை பற்றிப் 
பிரமாணங்களாகின்றனவோ, அந்தக்காரணத்தால் அனுமானம் ஆகமமென்னும் பிரமாணங்களால் 
பேதத்தை அறிய முடியாதென்க. சம்பந்த அறிவானது பிரத்தியக்ஷத்தை முன்னிட்டு நிகழ்கின்றமையாலும், 
விகற்ப ரூபமாயிருத்தலாலும், பிரத்தியக்ஷ சித்தமான பொருளிலேயே அனுமான ஆகமப் பிரமாணங்கள் 
பிரவிருத்திக்கின்றன. பேதத்தைப் பிரத்தியக்ஷத்தால் அறிய முடியாதென்ற விஷயம் முன்னரே
 கூறப்பட்டிருக்கிறது. அது பற்றி காணப்படும் பொருள்களினுடைய பேதத்தில் ஒருவிதமான பிரமாணமும் 
இல்லாமையால் பேதத்தோற்றம் சொற்பனத் தோற்றம்போல் அசத்தியமே யாகுமென்க (209)

(210)     (அதுபற்றியே) மூடபுத்தியுடைய புருடனானவன் தானாகவே தோன்றிய சந்தேகமென்னும் 
பாசங்களாலே கட்டப்படுகின்றான். பின்னர் அவைகளாலேயே விடுதலையடைகிறான்.  ஆகையால் 
பந்தமும் மோக்ஷமும் சத்தியமில்லை என்பதாம்.(210)

    (அ--கை) இவ்வாறு சத்தியொன்றே உண்மைப்பொருளென்று கூறும் அத்துவிதிகளின் 
மதத்தைக் கூறிவிட்டு இனிச் சித்தாத்தத்தைக் கூறுகின்றார்

(211)     இவ்வாறு அத்துவிதமென்னும் பிசாசினால் பிடிக்கப்பட்டவர்களாய்ப் புலம்புகின்ற வாதிகள் 
தயையுடன் கூடினவர்களாயும், சித்தாந்தவறிவைக் கொடுப்பவர்களாயுமுள்ள ஆசிரியர்களால் 
அறிவிக்கப்படுகின்றன ரென்பதாம். (211)

    (அ-கை) எவ்வாறு அறிவிக்கப்படுகின்றா ரென்பார்க்குக் கூறுகின்றார்.

(212)     அறிவு ரூபமான சிற்சத்திக்கு ஒன்றாயிருக்குந் தன்மை வியவகார சித்தங்களான 
பிரமாணங்களால் சாதிக்கப்படுமேயானால் அந்தப் பிரமாணங்களாலேயே, அந்தச் சிற்சத்திக்கு 
இரண்டுடன் கூடியிருக்குந்தன்மை நிச்சயமாய்ச் சித்தித்தது என்பதாம். 

     (உரை) சம்வித்து என்னும் சிற்சத்தியானது ஒன்று என்ற விடயம் உலக வியவகார 
விடயங்களான பிரமாணங்களாலே நும்மால் சாதிக்கப்படுமேயானால், அந்தப் பிரமாணங்கள் 
உண்மையாயிருத்தல்பற்றி இரண்டாவது பொருளில்லை என்னும் அத்துவிதத் தன்மை சித்திக்காது. 
அந்தப் பிரமாணங்களும் அசத்தியமென்று கொண்டால், அசத்தியமான அவை சம்வித்து ரூபமான
சிற்சத்திக்குச் சத்தியமான ஒன்றாயிருக்குந் தன்மையை எவ்வாறு சாதித்துக்கொடுக்கும். 
ஆகையால், எவ்வாற்றானும் நும்மால் கூறப்படும் அத்துவிதத்தன்மை சித்திக்காதென்பது 
கருத்து என்க.  (212) 

    (அ-கை) இவ்விடயத்தையே விரிவாய்க் கூறுதற் பொருட்டு அனுமானத்தின் 
வடிவத்தைக் காட்டுகின்றார்.

(213)      வெளிப்படையான தருமி, (அஃதாவது பக்கம்) திருட்டாந்தம், ஏது என்னுமிவை, 
உடனிகழ்ச்சியால் விருத்தி செய்யப்பட்டுப் புலப்படாத தருமத்தினுடைய (அஃதாவது துணி 
பொருளினுடைய) சித்தியின் பொருட்டுச் சாமர்த்திய முடையனவாகவாகின்றன என்பதாம்.

    (உரை) திருட்டாந்தமான அடுக்களையில் புகைக்கும் நெருப்பிற்கும் உண்டான 
விட்டுப்பிரியாமை யென்னும் வியாத்தியை யுணர்ந்து பின்னர்த் துணிபொருளுக்குப் பற்றுக்கோடான
மலை முதலியவற்றில் புகையுடைமை என்னும் ஏதுவால் கண்ணுக்குப் புலப்படாத தீயுடைமையென்னும் 
துணிபொருளானது ஊகிக்கப்படுகின்றது. ஆகையால், துணிபொருளினின்றும் ஏது திருட்டாந்த 
முதலியன வெளிப்படையாய் அறியப்படுவனவாயும் வேறானவையாயும் இருக்கின்றனவாகக் 
கொள்ளத்தகுந்தது  என்க (213)

(214)     துணியப்பட்ட பொருளானது உலகத்தில் சாதனங்களால் சாதிக்கப்படுகிறதில்லை. 
அவ்வாறே துணியப்படாத ஏது திருட்டாந்தங்களாகிய சாதனங்களாலும் நிச்சயமான பொருள் 
சாதிக்கப்படுகிறதில்லை. துணிவும் துணியாமையுஞ் சேர்ந்து ஓரிடத்தில் இருப்பனவல்ல வென்பதாம்

    (உரை) துணியப்பட்ட பொருள் துணியப்படுதற்காக வேறு பொருளைத் துணையாகக் 
கொள்ளுகிறதில்லை. அவ்வாறே துணியப்படாத ஏது திருட்டாந்தங்களும் துணிவைச் செய்யாதென்பது 
கருத்து என்க (214)

(215-216)      (ஆகையால்) நிச்சயிக்கப்பட்ட துணி பொருளையுடைய சபக்கமும், சந்தேகத்துக்கு 
விடயமான துணி பொருளையுடைய பக்கமும் வேறாயிருக்குமானால், அனுமானமானது பிரமாணமாகும். 
அவை இரண்டும் ஒன்றாயிருக்குமேயானால், ஏதுவும் துணிபொருளும் சேர்ந்து ஓரிடத்திலிருக்கக்கூடிய 
திருட்டாந்தமில்லாமற் போய்விடும். திருட்டாந்த மில்லையாயின் எந்தப் பொருளுக்கு எந்தப் பொருளுடன் 
எவ்விடத்தில் வியாத்தியுணர்ச்சியுண்டாகும். இவ்வித தோஷங்கள் நிகழ்கின்றமைபற்றி, அத்துவித 
சித்தியின் பொருட்டு உபயோகிக்கப்பட்ட அனுமானப் பிரயோகம், தான் நிறைவேறுதற்காக 
நிச்சயமாய்ப் பேதத்தைக் கூறுகின்றது என்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் நிச்சயிக்கப்பட்ட துணி பொருளுக்கிடமான சபக்கமும், 
சந்தேகத்திற்கு விடயமான துணிபொருளுக்கிடமாயுள்ள பக்கமும், ஒன்றாயிருக்குமாயின்
துணியப்பட்ட புகையென்னுமேதுவுடன் துணியப்படும் தீயென்னும் பொருள் ஓரிடத்திலிருக்குமென்பது 
திருட்டாந்த மூலமாகச் சித்திக்கிறதில்லையோ, அந்தக் காரணத்தால் முன்னர்க் கூறப்பட்ட பக்க 
சபக்கங்கள் ஒன்றாயிருக்குமாயின், அனுமானத்தால் துணி பொருளின் நிச்சயம் உண்டாகிறதில்லை, 
திருட்டாந்தமின்மையால் விட்டு நீங்காத உடநிகழ்ச்சி உணர்வும் உண்டாகிறதில்லை என்று 
" திருட்டாந்தமில்லையாயின் என்பதனாற் கூறுகின்றார். இவ்வாறாகவே அத்துவிதம் சித்திப்பதின்
பொருட்டு அனுமானப்பிரயோகஞ் செய்யுங்கால் பேதம் இன்றியமையாது வேண்டுமென்று "
அத்துவிதசித்தியின் பொருட்டு என்பதனாற் , கூறுகின்றார். தான் நிறைவேறுதற் பொருட்டு 
என்பதற்குத் தனது சாதனங்களான ஏது முதலியவற்றின் சித்தியின் பொருட்டு என்பது கருத்தாகக் 
கொள்கவென்க. (215-216)

    (அ-கை) அன்றியும், சிற்சத்தி ஒன்றே என்னும் வாக்கியத்தால் பிறிதொரு சிற்சத்தி இல்லை 
என்று விலக்கப்படுமே யன்றிச் சிற்சத்தியின் வேறான சடப்பிரபஞ்சம் இல்லையென 
விலக்கப்படாதென்று கூறுகின்றார்.

(217-217இ)     சம்வித்து என்னுஞ் சிற்சத்தியானது இரண்டற்றதென்ற விலக்கும் அவர் 
மதத்தில் பிறிதொரு சிற்சத்தி இல்லையென்று சிற்சத்தி விஷயத்திற்றான் பொருத்தமடைகின்றது. 
அதனினும் வேறான சடப்பொருள், விஷயத்தில் பேதத்தன்மை சித்திக்கின்றது. சித்திக்கவே, 
ஆசை மாத்திரத்தால் விருத்தியடைந்த அவர்களுடைய மேற்கோள் பிளக்கப்பட்டது என்பதாம் (217-217இ)

    (அ-கை) ஆகமப் பிரமாணத்தால் அத்துவிதம் சித்திக்கிறதென்று கூறுவோமெனில், அதனாலும் 
அத்துவிதஞ் சித்திக்காதெனக் கூறுகின்றார்.

(218- 219)     ஆகமமானது சிற்சத்தி இரண்டற்ற தென்று கூற இச்சிக்குமாயின், அந்த ஆகமமும் 
அந்தந்தச் சொற்களால் அறிவிக்கப்பட்ட பொருள் விசேடத்தினுடைய கூட்டத்தாலுண்டாகும் 
பொருளை எவ்வாறு கூறுமென்பதாம்.

    (உரை) ஆகமம், சிற்சத்தி இரண்டற்றதென்று கூற இச்சிக்குமாயின், அந்த ஆகமமானது, 
சாதி, குணம், கிரியை, திரவிய மென்னும் இவற்றையறிவிக்கும் பதங்களால், அறிவிக்கப்படும் 
பொருள்களின் சேர்க்கை ரூபமாய் இந்தப் பசுவானது கிராமத்தை நோக்கிச் செல்லுகிறதென்னும் 
அறிவை எவ்வாறு தோற்றுவிக்கும். * இதன் கருத்தாவது - உண்மையான ஆகமத்தைப் 
 பிரமாணமாகக்கொள்ளின், அந்த ஆகமமும், அவ்வாகமத்தின் அவயவங்களான பதங்களும், 
அப்பதங்களின் பொருள்களான திரவியம் குணம் முதலியனவும் சத்தியமாகச் சித்திக்கின்றன.
சித்திக்கவே, அத்துவித விரோதமாகுமென்பதாமென்க (218-219)

* பசு, சாதியையும், வெண்மை , குணத்தையும், கிராமம், திரவியத்தையும், செல்லுதல், கிரியையினையும்
 அறிவிக்கும் பதங்களாம்.  

(220)     ஆகமமும், அனுமானமும் அத்துவிதத்தைத் தடை செய்வதில் சாமர்த்தியமாயுள்ள 
அவற்றி னங்கங்களான திரவியம் குணம், கிரியை, ஏது திருட்டாந்தம் என்னும் இவை முதலியவற்றால் 
தடுக்கப்பட்டு அத்துவிதத்தை எவ்வாறு சாதித்துக் கொடுக்குமென்பதாம். (220)

    (அ -கை) இனி, சிற்சத்தி ஒன்றே என்று கூறும் சுருதிகள் ஏனைய பிரமாணங்களுடன் 
முரணுதலால், அவற்றிற்கு முக்கியப்பொருள் கொள்ளக்கூடாதெனக் கூறுகின்றார்.

(221-221 இ)      அன்றியும், பசுப்பிராமணன், ஆதித்தன் ** யூபஸ்தம்பம் என்பது முதலாக உலகத்திலும் 
வேதங்களிலுமுள்ள சொற்கள் முக்கியப் பொருளைத் தள்ளிவிட்டுக் கௌணமான பொருளில் 
இருக்கின்றனவாகக் காணப்படுகின்றன வென்பதாம். (221-221இ)

** பசுப்பிராமணனென்பது உலகச்சொல். ஆதித்தன் யூபஸ்தம்ப மென்பது வேதச்சொல். பிராமணன்
 பசுவாகானாகையாலும் யூபஸ்தம்பம் ஆதித்தனாகாதாகையாலும், முக்கியப் பொருள் கொள்ளுதல் 
பொருந்தாது. ஆகையால் பிராமணன் பசுவிற்குச் சமானன்.யூபஸ்தம்பம் ஆதித்தனுக்குச் சமானமென்னும் 
உபசாரப்பொருள் இலக்கணையால் கொள்ள வேண்டுமென்பது கருத்து. 

    (அ-கை) அனுமானமோவெனில் விட்டுப்பிரியாமையென்னும் வியாத்தி யுணர்ச்சி
யிருக்கும்போதுதான் பிரமாணமாகுமாகையால், பொருள் சாதித்துக் கொடுக்கும் தன்மை 
அனுமானத்திற் கில்லையென்று ஒதுக்க முடியாதெனக் கூறுகின்றார்.

(222)     வியாத்தியானது குற்றமற்றதாயிருக்குமாயின், ஏதுவானது துணிபொருளை நிச்சயித்துக் 
கொடுக்காமலிருப்ப தில்லை என்பதாம்.     (222)

    (அ-கை) ஆகையால் பேதத்தைச் சாதித்துக் கொடுக்கும் அனுமானத்தோடு 
முரண்படுகின்றமைபற்றிச் சிற்சத்திக்கு ஒன்றாயிருக்குந் தன்மையை யறிவிக்கும் வேதங்கள் 
அதற்கு நித்தியத் தன்மை வியாபகத்தன்மை முதலிய ஒப்புமையைத் தோத்திரஞ் செய்வதில் 
கருத்துடையனவெனக் கூறுகின்றார்.

(223)     ஆகையால் ஏதுரூபமான பலத்தால் வியாபிக்கப் பட்ட சுருதிகள், அத்துவித ரூபமான 
முக்கியப் பொருளையும் விட்டுச் சிற்சத்தியினுடைய தோத்திரத்தைச் செய்கின்றன வென்பதாம் (223)

(224-226)     ( அன்றியும்) பெயர் முதலிய விசேடத்தின் நினைவை முன்னிட்டுத் தோன்றுவதாயும், 
ஐயமற்றதாயும், பிறட்சியற்றதாயும், அதுபற்றியே பிரமாணமாயுமிருக்கும் சவிகற்பப் பிரத்தியக்ஷ
அறிவானது தனக்கு முன்னர்  தோன்றிய யாதொரு நிருவிகற்பப் பிரத்தியக்ஷத்தால் தோன்றுகின்றதோ,
அந்த நிருவிகற்பப் பிரத்தியக்ஷமும், ஒரு பொருளுக்குப் பிற பொருளினின்றும் வேற்றுமை ரூபமான 
பேதத்தைக் கொள்ளுகிறது. அவ்வாறில்லையாயின், வேற்றுமையில்லாத நிருவிகற்ப அறிவிற்குப்பின் 
பெயர் முதலிய விசேடணத்துடன் கூடிய சவிகற்ப அறிவும் தோன்றுகிறதில்லையாகு மென்பதாம்.

    (உரை) இவ்விஷயத்தில் பெயர் பிரமாணம் முதலிய விசேடங்களின் நினைவை முன்னிட்டுத் 
தோன்றும் சவிகற்ப அறிவும் ஐயமற்றதாயும், பிறட்சியடையாமை முரண்படாமை முதலியவற்றுடன் 
கூடியதாயுமிருத்தலால், பிரத்தியக்ஷப் பிரமாணமென்றே கொள்ளப்படுகிறது.  அவ்வாறே பெரியோர்களும் 
அதன் பின்னர்ப் பொருளின் தருமங்களான சாதி உருவ முதலியவற்றுடன் கூடி அப்பொருள் புத்தியாலறியப் 
படுகிறது ; அந்த அறிவும் பிரத்தியக்ஷ அறிவெனக் கொள்ளப்பட்டிருக்கிறதெனக் கூறுகின்றனர். ஆகையால் 
அவ்வாறே பிரமாணமான பிரத்தியக்ஷ அறிவும் தனக்கு முன்னர்த் தோன்றிய யாதொரு நிருவிகற்ப 
அறிவால் தோன்றுகின்றதோ, அந்த நிருவிகற்ப அறிவும் ஒரு பொருளுக்குப் பிறபொருளின் வேற்றுமை 
ரூபமான  பேதத்தை அறிகின்றது. எதனாலெனின், காரியங்களில் காரணத்தினுடைய குணங்களின் 
சேர்க்கை இருத்தலாலும் சற்காரிய வாதத்தைக் கொண்டிருத்தலாலுமென்க.

    நிருவிகற்ப அறிவிற்குப் பேதத்தை அறியுந் தன்மை கொள்ளவில்லையாயின் அதற்குப் 
பின்னர் பேதத்தோடு கூடியதான சவிகற்ப அறிவு தோன்றுகிறதில்லையென்று, அவ்வாறில்லையாயின் 
என்ற தொடரால் கூறுகின்றார். ஆனால் பேதமானது ஒன்றினிடத்துப் பிறிதொன்றின் இன்மையையறியும்
 அறிவை முன்னிட்டு நிகழ்கின்றமையால், காணப்படும் பொருளை விடயமாகக் கொண்ட பிரத்தியக்ஷத்தால் : 
அறியப்படமாட்டாதன மேலே கூறப்பட்டிருக்கிறதேயெனில், அது பொருந்தாது. எதனாலெனின், பேதம் 
சித்தித்த பின்னர்த்தான் ஒன்றினிடத்துப் பிறிதொன்றினின்மை அறியப்படுதலாலென்க. அவ்வாறு 
கொள்ளவில்லையாயின், நீர் வேண்டுபவன் தீயைத் தொடர்வான். ஆகையால் நீ கூறிய அனைத்தும் 
பொருத்தமற்றவையே யாகுமென்க (224-226)

(227)     பேத அறிவு நிகழ்ந்தாற்றான் அனுமானத்திற்கும் பயனுடன் கூடியிருக்குந்தன்மை இருக்கின்றது. 
வியாத்தியுணர்ச்சியின் சம்பந்தமானது பொதுவாயிருந்தால் அப்பொழுது முடிந்ததைச் சாதித்தலென்னும் 
சித்த சாதனமாகிய குற்றம் நிகழு மென்பதாம்.

    (உரை) வியாத்தி அறிவின் பொருட்டுப் பேத அறிவு இன்றியமையாதாகையால், அப்பேதவறிவு 
இருந்தாற்றான் அனுமானம் நிகழ்கிறதென்பது கருத்து. பேத அறிவின்றிப் பொதுவாய்ப் பொருள்களின் 
அறிவுமாத்திரமிருந்தால் அவ்வறிவு முன்னரே இருப்பது பற்றிப் பொருளின் நிச்சயமிருக்கின்றது. 
இருக்கவே, ஒரு பொருளில் ஒரு தருமத்தைச் சாதித்தற்பொருட்டு அனுமானம் நிகழ்கிறதில்லையென, 
'பொதுவாயிருந்தாலென்பதனாற் கூறுகின்றார்' என்க (227)

    (அ-கை) வேறு வழியாகவும் பேதமுண்டென்பதைக் கூறுகின்றார்.

(228)     அன்றியும், அத்துவிதத்திற்கும் பேதத்திற்கும் பேதங் கொள்ளப் படுமாயின் அப்பொழுது 
பேதமுண்டென்பது சித்திக்கின்றது. இரண்டும் ஒன்றென்று கூறில் நம்மாலுமதுவே 
சாதிக்கப்படுகின்றது என்பதாம்.

    (உரை) அத்துவிதமென்பதைத் துவிதமென்னும் பேதத்தினின்றும் வேறாகக்கொள்ளின் 
துவிதம் அத்துவிதமென இரண்டு பொருள் சித்திப்பதுபற்றிப் பேதஞ் சித்திக்கின்றது, துவித
அத்துவித ரூபங்களாயுள்ள துவிதத்தையும் அத்துவிதத்தையும்  ஒன்றெனக் கொண்டால் அப்பொழுது 
பேதத்திற்கே அத்துவித மென்னும் பெயர் நும்மவர்களால் கூறப்படுகின்றதென்பது பற்றி எங்களுக்கும் 
பெயரில் விவாதமில்லையாதலால் அது சம்மதமேயாம். எதனாலெனில் எங்களாலும் இவ்விதமான 
பேதமே சாதிக்கப்படுகிற தாகையாலென்க (228)

    (அ-கை) ஆனால் ஒரே கயிற்றில் பாம்பு முதலியவற்றின் மயக்கம் நிகழ்வதுபோல் 
சத்தியமாயும் ஒன்றாயுமுள்ள சிற்சத்தியில் அசத்தியமான பொருள்களின் பேதவறிவு 
உண்டாகின்றதென மேலே கூறப்பட்டிருக்கின்றதே எனில், அது பொருத்த மற்றதெனக் கூறுகின்றார்,

(229)     திருட்டாந்த மாத்திரத்தால் துணியப்படும் பொருளின் நிச்சயம் உண்டாகிறதில்லை. 
ஆகையால் கயிறு பாம்பு திருட்டாந்தமானது  சீடனுக்கு மோகத்தை மாத்திரமே விளைவிக்கு மென்பதாம் .

    (உரை) ஏது முதலியனவின்றித் திருட்டாந்த மாத்திரத்திற்குப் பொருளை யறிவிக்குந் தன்மை 
இல்லையாகையால், திருட்டாந்த மாத்திரத்திற்குச் சத்தியத்தன்மை இருப்பினும் அத்து விதத்துடன் 
முரண்படுவது பற்றி அசத்தியமெனக் கொள்ளில் தாட்டாந்திகமான சிற்சத்திக்கும் அசத்தியத்தன்மை 
சம்பவிக்கும். ஆகையால் கயிறு பாம்பு திருட்டாந்தம் பயனற்றதேயாகு மென்க. (229)

(230)      (அன்றியும்) விசேடம் விளங்கித்தோன்றாமையால் சிவஞான மாத்திரத்தால் நசிக்கக் 
கூடியனவாயுள்ள அந்தந்த உள் பொருள்களோடு விவர்த்திக்கின்ற ஆன்ம ரூபமான 
சிற்சத்தி யானது கயிற்றுக்கு நிகராக ஆகின்றதில்லை என்பதாம்.

    (உரை) கயிறு முதலியவற்றினுண்டான பாம்பு முதலியவற்றின் மயக்கங்கள் இது கயிறு 
என்னும் உண்மையறிவால் நசிக்கின்றன. அவ்வாறு உண்மையறிவால் நசிக்கின்றமையால் 
திமிரரோகம் முதலிய குற்றத்தானிகழ்ந்த பாம்புத் தோற்றம் அசத்தியமேயாகும். கடம் படம் 
முதலிய பொருள்களின் தோற்றமோவெனில், வேறு காலங்களிலும் வேறு தேசங்களிலுங்கூட 
விசேடங் காணப்படாமையால் சிவஞானம் தோன்றவில்லையாயின், எக்காலத்தும் 
விளங்கிக் கொண்டிருப்பனவாயும், ஒன்றாலும் நாசஞ்செய்யப்படாமை பற்றிச் சத்தியங்களாயுமிருக்கும். 
அவ்வாறான உள்பொருள்களான உபாதிகளோடு விவர்த்தித்துத் தானும் கடம்படம்போல் வெவ்வேறாகத்
தோன்றுகின்ற ஆன்மரூபமான சிற்சத்தியானது கயிற்றோடு சாம்மியமடைகிறதில்லை. இதனால் 
கூறப்பட்ட பொருளாவது- கடம்படம் முதலிய வெளிப் பொருள்களின் பேதம் உண்மையே யாகும். 

    ஆன்மரூபமான சிற்சத்திக்குண்டானதாயும் அந்தந்தப்பொருள்களின் முன்னிலையில் 
அந்தந்தப்பொருள் வடிவமாகத் தோன்றுதல் ரூபமாயுமுள்ள புத்தியின் நிச்சயபேதமானது 
உபாதியால் நிகழ்ந்ததாகும். இவ்விஷயம் பின்னர் விரிவாகக் கூறப்படுகின்றது.  ஆகையால் 
அந்தந்தப் பொருள்களின் முன்னிலையில் தோன்றுகிறதாயும் அந்தந்தப் பொருள்களின் 
வடிவமாயுமுள்ள புத்தியின் நிச்சய ரூபமான அறிவிற்கு அடிக்கடி பேதமிருப்பினும், அவ்வித 
நிச்சயத்தின் கருத்தா ரூபமாயும், எக்காலத்தும் ஒரேவிதமாய்த் தோன்றுகிறதாயும், அறிபவன் 
ரூபமாயுமிருக்கும் சிற்சத்திக்கு வேறு ரூபமாக மாறுதல் பொருந்தாது. அன்றியும் அது நித்தியமேயாகும். 

    எதனாலெனின், சேதனமாகையாலும், விகாரமின்மையாலுமென்க.  ஆகவே ஆன்மரூபமான 
சிற்சத்திகள் அநேகமேயாகும். ஒன்றென்றால் எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே காலத்தில் போகாநுபவமும் 
அவ்வாறே ஒரே காலத்தில் மோக்ஷமும் நிகழுமெனக் குற்றம் நம்மால் வேறிடத்தில் கூறப்பட்டிருக்கிறதென்க. (230)

    (அ-கை) இனி பசுவாகிய ஆன்மாக்களுக்குப் புத்தி சம்பந்தமான நிச்சயத்தினின்றும் 
ஆன்ம ரூபமான சிற்சத்தியை வேறாகப் பிரித்தறியாமையால் நிகழ்ந்த ஆன்மரூபமான சிற்சத்தி 
அநேக ரூபமென்னும் மயக்கம் மலத்தைக் காரணமாகக் கொண்டதெனக் கூறுகின்றார்.

    (231)     படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணையுடைய புருடனுக்குச் சந்திரன் போல் 
மலத்தால் மறைக்கப்பட்ட ஞான சக்தியையுடைய பசுவிற்கு அந்த சிற்சித்தியானது 
அறியப்படாததாய் அந்தந்த உள்பொருள்களோடு அவ்வப்பொருள்கள் போல் வேறுவேறாகத் 
தோன்றுகின்றது என்பதாம்.

    (உரை)     எவ்வாறு திமிரரோகத்தால் மறைக்கப்பட்ட கண்களையுடைய புருடனுக்குச் 
சந்திரன் ஒருவனாயிருந்தும் இரண்டாகத் தோன்றுகின்றானோ, அவ்வாறே மலத்தால் மறைக்கப்பட்ட 
ஞான சத்தியையுடைய புருடனுக்குச் சேதன ரூபமான சிற்சத்தி ஒன்றாயிருந்தும் அநேக ரூபம் போல் 
தோன்றுகின்ற தென்க. (231 )

    (அ-கை) எவ்வாறு வேறு பிரமாணங்களால் நிச்சயிக்கப் பட்ட ஒரு சந்திரன் பல சந்திரனாகத் 
தோன்றுதல் திமிரமென்னும் நோயைக் காரணமாகக் கொண்டிருக்கிறதோ, அவ்வாறே சாத்திரம் 
முதலியவற்றால் நிச்சயிக்கப் பட்டதாயும், ஒன்றாயும் அறிபவன் ரூபமாயுமுள்ள சிற்சத்திக்கும் 
அநேக ரூபத்தன்மை யுண்டென்ற மயக்கம் தனக்குக் காரணமாக மலம் உண்டென்பதை 
அறிவிக்கின்றது என்று கூறுகின்றார்.

(232-235இ )     எவ்வாறு திமிர ரோகமுடைய புருடன் அநேக யுத்திகளால் ஊகிக்கின்றவனாயிருந்தும் 
ஒரே சந்திரனைப் பல சந்திரனாக அடிக்கடிப் பார்க்கின்றானோ, எவ்வாறு பித்தத்தால் குற்றமடைந்த 
நாவையுடைய புருடன் பால் தித்திப்பென்று ஊகிக்கிறவனாயிருந்தும் கரண தோஷத்தால் தித்திப்பான 
பாலைக் சுசப்பாகவே யறிகின்றானோ, எவ்வாறு மையுடன் கலந்ததாயும் கொதிப்புடையதாயும் 
உள்ள நீரில் அறிஞர்களுக்கும் அவிவேகத்தால் நீர் சூடெனவும் நீர் கறுப்பெனவும் தோன்றுகின்றனவோ 
அவ்வாறே சிற்சத்தியானது யுத்திகளுடன் கூடிய அநேக ஆகமங்களால் ஆராய்ச்சி செய்யப்பெற்றிருந்தும் 
அந்தச் சிற்சத்தியானது விவர்த்திக்கின்றது. தோற்றமுடையது. அழிவையுடையது . அநேக ரூபமான 
தன்மையையுடையது என்ற அறிவுகளின் நாசமின்மை யானது மலமென்னுங் காரண முண்டென்பதை 
அறிவிக்கின்ற தென்பதாம். (232-235இ)

    (அ-கை) அந்த மலமானது திரவியமாயிருப்பதால் கண்ணினுடைய படலம் போல் 
அறிவுமாத்திரத்தால் நிவிருத்தியடைகிறதில்லை. கண் வைத்தியனுடைய தொழிலால் படலம் நீங்குமாறு 
போல் பரமசிவனது தீக்ஷையென்னுந் தொழிலால் மலம் நீங்குகின்றதெனக் கூறுகின்றார்.

(236-237)   எவ்வாறு திமிர முதலிய ரோகம் ஆரோக்கிய சாத்திரங்களில் கூறப்பட்ட கன்மத்தினாலே 
நீங்குகின்றதோ அவ்வாறே அந்த மலமும் சிவசாத்திரங்களிற் கூறப்பட்ட சிவத்தியானத்துடன் 
கூடிய தீக்கை யென்னுங் கன்மத்தினாற்றான் நீங்குகின்றது. அவ்வாறன்றிக் கோடி 
ஞானங்களினாலும் நீங்குகிறதில்லை * என்பதாம்.

* இவ்விடத்தில் விலக்கப்பட்ட ஞானம் ஆராய்ச்சி ஞானமாகிய அபர ஞானமாம். அநுபவ அறிவில்லாத 
வைத்தியன்றொழில் பயன்படாதவாறு போல் அனுபவ ஞானத்தோடு கூடாத தீஷை பயன்படாதென்பது 
கருதியே சிவத்தியானத்துடன் கூடிய தீக்கை என்றது கவனிக்கத்தக்கது.

     (உரை) அந்த மலமானது சிவசாத்திரங்களில் கூறப்படுஞ் சிவத்தியானத்தைத் துணையாகக் 
கொண்ட அந்தத் தீக்கை என்னுந் தொழிலால் நீங்குகின்றது. அவ்வாறே ஸ்ரீசுவாயம்புவாகமத்திலும் 
தீக்கையே ஆன்மாவை மலத்தினின்றும் விடுதலையடையச் செய்கின்றது. மேற்பட்டதான சிவபதத்தையும் 
அடையச் செய்கின்றதென்று கூறப்பட்டிருத்தல் காண்க. இவ் விஷயத்தில் அனுமானப் பிரயோகமாவது-- 
மலம் ஞானத்தால் நீங்குகிறதில்லை; ஆன்மாக்களுடைய கரணமான சத்தியை மறைப்பதனால் ; 
ஆன்மாக்களுடைய கரணமான கண்ணை மறைக்கும் திமிரரோகம் போலும். மலம் உண்மைப் பொருள்; 
மறைப்பைச் செய்தலென்னும் காரியத்தைச் செய்தலினால் ; மயக்கமென்னுங் காரியத்தைச் செய்யும் 
காசம் திமிரம் முதலியன போலும் என்க . (236-237)

    (அ-கை) இவ்வாறு அறிதலைச் செய்யும் அறிபவன் ரூபமான சிற்சத்திக்கு நித்தியத்தன்மையைக்
கூறும் முறைபற்றி மலத்தையும் அதன் நீக்கத்துக்குண்டான காரணத்தையும் கூறிவிட்டு  அறிவிற்கு 
விடயமான பிரபஞ்சத்தின் பேதம் உண்மையெனக் கூறுகின்றார்.

(238-238இ)     மறுக்கப்படாத பிரமாணங்களால் தேசம், காலம், மானுடர் என்னும் பேதங்கள் 
வெவ்வேறாகவிருந்தும் ஒன்று பிறிதொன்றாகத் தோன்றுதலில்லாத உலகமானது எவ்வாறு 
சித்தினுடைய விவர்த்தமாக ஆகும். அன்றியும் அவ்வுலகமானது மாயையின் காரியமென்ப.
 பிரமாணங்களாலே சாதிக்கப்பட்டிருக்கிறது என்பதாம். (238-238இ)

    (அ--கை) சிற்சத்திக்கு அநேக வடிவங்களாய்த் தோன்றுந் தன்மையுண்டென்பது 
மயக்கத் தானிகழ்ந்ததென முன்னரே கூறப்பட்டிருக்கிறதெனக் கூறுகின்றார்

(239)     ஆகையால் அணுக்களுக்குப் பந்தஞ் செய்யும் மலத்தால் சிற்சத்தி விவர்த்திப்பதாகத் 
தோன்றுகின்றது என்பதாம் (239)

    (அ-கை) இவ்விஷயத்தையே விரிவாய்க் கூறுகின்றார்.

(240)     சிற்சத்தியின் விவர்த்தமாவது யாதொரு பரிணாமத்தால் விடய வடிவமாயில்லாவிடினும் 
விடய வடிவமாய்த் தோன்றுகின்றதோ அந்தப் பொய்யான பரிணாமமேயாகு மென்பதாம். (240)

    (அ--கை ) அவ்விதமான விவர்த்தமும் ஆன்மாக்களுக்குச் சிற்சத்தியைப் புத்தியினின்றும் 
வேறாகப் பிரித்தறியாமையால் நிகழ்ந்ததெனக் கூறுகின்றார்.

(241)     ஒன்றுக்கொன்று சம்பந்தம் பற்றியும் சித்துப் பொருள் சடப் பொருள்களை விடயமாகக் கொண்டும் 
இருக்கின்ற அந்த விவர்த்தமானது சித்தைச் சடமாகவும் சடத்தைச் சித்தாகவும் நினைத்தலென்னும் 
அத்தியாசத்தால் உண்டாகின்றமையால் சித்துச் சடங்களுக்குண்டான பகுத்தறிவின்மையால் 
தோன்றுகின்றது என்பதாம். (241)

    (அ-கை) இதனையே விரிவாய்க் கூறுகின்றார்.

(242-245 )     சித்தானது தன்னுடன் சார்ந்திருக்கும் புத்தி தத்துவத்தைத் தன்னினும் வேறாகப் 
பிரித்தறியாமல் தான் விகாரமற்றிருந்தும் புத்தி விருத்தியின் விகாரங்களான தோற்றம் 
முதலியவற்றைத் தன்னிடத்தில் ஏற்றிக்கொண்டு தோற்றமுடைய தென்றும், அழிவையுடைய தென்றும், 
அநேகத்தன்மை யுடையதென்றும், சுகத்துடன் கூடியதென்றும், துக்கத்துடன் கூடியதென்றும்
 தன் வடிவத்தை அணுவிற்குக் காட்டுகின்றது. அதுபோல் ஆன்மாவினிடத்தில் சித்தின் குணமான 
சைதன்னியத்தையும் சடத்தன்மையையும் ஏற்றிக்கொண்டு அவற்றைப் பகுத்தறியாமல் நான் 
பாலனென்றும் நான் இளைத்தவனென்றும் அறிகின்றது. இவ்வாறு எல்லா அணுக்களுக்குமுண்டான 
இந்தச் சிற்சடப்பொருள்களின் பகுத்தறியாமையானது மலத்தைக் காரணமாகக் கொண்டது. 
மயக்கக்கூட்டங்களுக்கு முளையாயுள்ளது என்பதாம்.

    (உரை) அநித்தியமாயும், அசுத்தமாயும், துக்கமாயுமிருக்கும் ஆன்மாவல்லாத பொருள்களில் 
நித்தியமாயும் சுத்தமாயும் சுகரூபமாயுமிருக்கும் ஆன்மத் தோற்ற ரூபமான யாதொரு அவிவேகம் 
புருடர்களுக்கிருக்கின்றதோ, அந்த அவிவேகமானது காரணமற்றதில்லை. காரணமற்றதாயிருந்தால் 
முத்தி பெற்ற ஆன்மாவிற்கும் அவிவேகம் உண்டாக நேரும். ஆகையால் அந்த அவிவேகத்திற்கு 
அனாதியாயொரு காரணமிருக்கவேண்டும். அவிவேகம் அனாதியாகையால் அதற்குக் காரணமான 
மலமும் அனாதியே யென்பது கருத்து என்க.  (242-245)

    (அ-கை) இவ்விஷயத்திற்குக் காரணங்கூறுகின்றார். 

(246)     சிற்சத்தி விசேடங்களுக்கு, விசேடணங்களுடன் கூடிய சடப்பொருள்களோடு விவர்த்த 
பேதங்கள், பலமான பந்தமின்றிப் பொருத்தமடைகின்றனவல்ல வென்பதாம்.

    (உரை ) இவ்விடத்துக்கூறிய கருத்தாவது-ஆன்மாக்களுடைய அறிவு முதலியவை மலத்தால் 
மறைக்கப்பட்டிருத்தல் பற்றிக் கலை முதலியவற்றின் வழியாய்த்தான் விளக்கமடைகின்றன. 
அவ்வாறு கலைமுதலியவற்றால் தோற்றுவிக்கப்பட்ட தோற்றமும் ஆன்மாவல்லாத பொருள்களில் 
ஆன்மாவென்னும் தோற்றமேயாகும். எதனாலெனில், கலை முதலியவை மோகத்தைச் செய்யும் 
அசுத்தமாயையின் காரியமாகையாலென்க. (246)

    (அ-கை) விவர்த்த பேதத்திற்குப் பந்தத்தைக் காரணமாய்க் கொண்டிருக்குந் தன்மையை
 விரித்துக் கூறுகின்றார். 

(247)     யாதொரு காரணத்தால்  நானென்னும் அறிவு தேகத்திற்றான் தோன்றுகின்றதோ, 
ஒட்டிற்றோன்றுகின்ற தில்லையோ, அவ்வித அறிவும் சிற்சில அணுக்களுக்குத்தான் இருக்கின்றதோ, 
எல்லா அணுக்களுக்கும் இல்லையோ, அந்தக் காரணத்தால் அவற்றிற்குக் காரணமாய்ப் 
பந்தங்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதாம் . 

    (உரை )     அந்தச் சிற்சடங்களுக்கு ஒன்றை ஒன்றிலேற்றுதற்குப் பந்தமே காரணமென்பது 
கருத்து என்க. (247)

(248-250)     (அன்றியும்) எந்தப் புருடனுடைய அறிவு தொழில்களில் எந்த இந்திரியங்கள் 
சாதனங்களோ, அந்த இந்திரியங்கள் வேறு புருடனுடைய அறிவு தொழில்களில் சாதனங்களாகவில்லை. 
அவ்வாறே எல்லாருடைய எல்லா விசிட்ட புத்தியும் சித்து விசேடத்தினுடைய விவர்த்தத்தின் பொருட்டுச் 
சாமார்த்திய முடையதாகிறதில்லை, ஆகையால் இந்த விவர்த்தத்திற்குக் காரணமாகப் பந்தத்தை 
ஒப்புக்கொள்ள வேண்டும். புத்தியைப் பற்றிய சில சுகதுக்கங்களானவை சில புருடர்களால் 
அனுபவிக்கப்படுகின்றன. எல்லாராலும் அனுபவிக்கப்படவில்லை. ஆகையால் அச்சுகதுக்கங்களுக்குக்
 காரணமாகப் பந்தம் ஒப்புக்கொள்ளத் தகுந்த தென்பதாம்.

    (உரை ) இவற்றால் கூறப்பட்ட பொருளாவது--சாத்திரங்களிற் கேட்கப்பட்ட சருவஞ்ஞத் தன்மை 
என்னும் ஆன்மாவின் சொரூபம் * சம்சாரவத்தையில் காணப்படாமையினால் அந்த அவத்தையில் 
அதனை விளங்கவொட்டாமல் மறைக்கும் பொருளான மலம் ஒன்றுண்டென்பதை நிச்சயமாகக் 
கொள்ளல் வேண்டும். 

* சிவனோடு அநாதியே பிரிப்பின்றி நிற்பது பற்றி சிவனுக்குரிய சருவஞ்ஞத் தன்மை சார்ந்ததன் 
வண்ணமாந் தன்மையுடைய ஆன்மாவின் சொரூபமெனப்பட்டது.

    சம்சாரவத்தையில் ஆன்மாக்களுக்குச் சிற்றறிவுடன் கூடியிருக்குந் தன்மை காணப்படுதலால், 
கலை முதலியவற்றின் வழியாய் அச்சிற்றறிவிற்குக் காரணமாயும், மோகத்திற்குக் காரணமாகையால் 
மயக்கத்தை யுண்டுபண்ணுவதாயும் உள்ள மாயையென்னும் பந்தம் அவர்களுக்குண்டென்று 
கொள்ளல் வேண்டும். சுக துக்க ரூபமான போகமும் அப்போகத்திற்குச் சாதனங்களான 
சரீரேந்திரியங்களும் ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் இன்றியமையாது வேறு வேறாயிருத்தலால் 
அவ்வித வேற்றுமைக்குக் காரணமாகக் கன்மமுண்டென்பதும் நிச்சயமாய்க் கொள்ளல் 
வேண்டுமென்க. (248-250)

    (அ-கை) இது விஷயத்தில் சாங்கிய மதத்தைச் சார்ந்து அவிவேகமே முன்னர்க் 
கூறியவற்றிற்குக் காரணமாகட்டும் ஆன்மாவிற்கு அப்பிரசித்தமான மலமென்னும் பந்தம் 
உண்டென்று கூறுதலால் யாது பயன் எனப் பூர்வ பக்ஷியின் சங்கையைக் கூறுகின்றார்

(250வ)     அவிவேகமே காரணமாக இருக்கட்டும் என்பதாம். (250வ)

    (அ-கை) அது கூடாதென்று கூறுகின்றார்.

(250இ)      ஆன்மாக்களுக்கு அந்த அவிவேகம் எதனாலுண்டாயிற்று என்பதாம்.

    (உரை) அந்தப் புத்தி அறிவு என்னுமிவற்றிற்கு ஒன்றுக்கொன்றுள்ள வேற்றுமையை 
யறியாமையானது எதனாலுண்டாயிற்று. அந்த அவிவேகம் காரணமன்றி நிகழ்ந்திருந்தால்
முத்தனுக்கும் நிகழநேரும். ஆகையால் அந்த அவிவேகத்திற்குக் காரணமாக அனாதியே 
மறைத்தலைச் செய்யும் மலம் உண்டென்பது கொள்ளத் தகுந்தது. அவ்வித மலமில்லாமையாற்றான் 
முத்தனுக்கு மீண்டும் அவிவேகமுண்டாகிறதில்லை என்க (250இ)

    (அ-கை) ஆகையினாற்றான் அவ்விதமான மலபந்தத்தை நீக்குதற் பொருட்டுப் 
பரமேசுவரன் உண்டென்று சித்தித்திருப்பதாகக் கூறுகின்றார்.

(251)     மலமிருத்தலால் பந்தமிருக்கின்றது. அந்த மல பந்தமும் பரமசிவனினின்றும் வேறாகவே 
கொள்ளப்பட்டிருக்கிறதென்பதாம். (251)

(252-252இ )     (ஆகையால்) அறிவில்லாமல் மோகத்தை யடைந்த ஆன்மா அந்தப் 
பந்தத்திற்கு ளகப்பட்டிருக்கிறான். அவனுடைய பந்தத்தை நீக்குவதே முத்தியாகும். 
எல்லாவிதமான பந்தமும் நீங்கவே ஆணவ மலமும் நீங்குகின்றது. பின்னர் எல்லாப் 
பொருள்களையும் அறியும்படி செய்யும் சிவசத்தியானது விருத்தி யடைகின்றது என்பதாம்.

    (உரை ) இதனால் பந்தத்தினுடைய நீக்கமானது பரமசிவனுடைய அனுக்கிரக 
விசேடத்தாலேயே உண்டாகின்றதென்பது கூறப்பட்டதாகும் என்க. (252-252இ)

(253 )     எல்லா மறைப்புக்களினின்றும் விடுபட்டதாயும் பூஜிக்கத் தகுந்ததாயுமுள்ள 
இந்தச் சிற்சத்தியே ஏகதேசமான விடயத்தை மறைத்து எல்லாவிடயங்களையும் அறியும்படி 
செய்கின்றது என்பதாம்.  (253இ ) 

    (அ-கை) எவ்வாறு அறியும்படி செய்கின்றதென்பார்க்குக் கூறுகின்றார்.

(254)     பர சம்வித்து ரூபமான சிற்சத்திக்குப் பந்தமில்லையாகவே, எக்காலத்தும் 
முத்தான்மாக்களுக்குப் பிறபொருள்களின் இருப்புமாத்திரம் விளங்குமென்பதாம்.

    (உரை) முத்தான்மாவினுடைய அறிவில் மலமின்மையால் தன்னையும் பிறபொருளையும் 
அறியும்படி செய்யும் அந்த அறிவானது பிறபொருள்களின் இருப்பு மாத்திரத்தை அறியும்படி 
செய்கின்றது. பெத்தான்மாவிற்குப்போல் முத்தான்மாவிற்குச் சிறப்பாகவும் (அதாவது வேறு வேறாகவும் ) 
போக்கியப் பொருள்களாகவும் பிற பொருள்களை அறியும்படி செய்கிறதில்லை என்பது கருத்து. 
அவ்வாறு அறியும்படி செய்யுமாயின் முத்தனுக்கும் சுக துக்க அறிவு நிகழுமாகையால் போகத்தை 
அனுபவிக்குங் கருத்தாதன்மை நிகழக்கூடுமென்க. (254)

(255 )     ஆகையால் எல்லா மறிந்தவர்களே முத்தான்மாக்களாவர். சித்து ரூபனான தன்னை மாத்திரம் 
அறிந்தவர்கள் முத்தான்மாக்களாகார் என்பதாம்.

    (உரை) தன்னையறியும் அறிவுமாத்திரையி லிருப்பவர்கள் * முத்தர்களில்லை. 
சிவன் போல் எல்லாமறிந்தவர்களே முத்தர்களென்பது கருத்து என்க (255)

* புத்தி விருத்தியின் வேறாகத் தன்னையறிந்த விவேகஞான மாத்திரமுடையவர்கள்.

(255 இ)     (ஆகையால்) வெளிப் பொருள்களிருந்தும் அவற்றை அறியாமையானது 
தமசு என்னும் மலத்தால் நிகழ்ந்தது என்பதாம்.

    (உரை) வெளிப்பொருள்களிருந்தும் அவற்றைப் பெத்தான்மாக்கள் அறிகிறதில்லை. 
அதற்குக் காரணம் மலமேயாகும் என்க.(255இ)

    (அ-கை) ஆகையால் எல்லாவற்றையும் அறியாதவர்கள் முத்தராகாரெனக் கூறுகின்றார்.

(256)     தமசால் மறைக்கப்பட்ட ஆன்மாக்கள் முத்தர்களாக ஆகின்றனரில்லை என்பதாம்.(256)

    (அ-கை) சொல்லின் சேர்க்கையைத் துணையாகக் கொண்ட சவிகற்ப அறிவும் பந்தத்திற்குக் 
காரணமாயிருக்கிறதென்று கூறுகின்றார்.

    (257)     மலத்தால் மறைப்புண்ட உயிர்களுக்குப் பொருள்களை அறியும்படி செய்வதில் 
அவ்வுயிர்களின் அறிவுகளுக்கு விந்துவின் கலக்கத்தாலுண்டான சொல்லின் சேர்க்கையோடு 
கூடிய விகற்பமானது உண்டாகிறது. மலமற்ற ஆன்மாக்களுக்கோ வெனில், விந்துவின் கலக்கமான 
சொல்லின் சேர்க்கை இல்லாமையினால் பந்தம் நீங்கினமைபற்றி அன்று பிறந்த பாலனுக்குப் போல் 
விகற்பமற்ற நிருவிகற்பத் தோற்றமே நிகழ்கின்றது என்பதாம்.

    (உரை) முத்தான்மாக்கள் மாயாகாரியங்களாயும் விந்துவின் காரியங்களாயும் உள்ள 
பாசங்களைத் தாண்டினவர்களாகையால், சொற்களின் சேர்க்கையைத் துணையாகக் 
கொண்டதாயும் புத்தியைச் சார்ந்ததாயுமிருக்கும் சவிகற்ப அறிவு அவர்களுக் குண்டாகிறதில்லை. 
பிற பொருளைத் துணையாகக் கொள்ளாத சிற்சத்தியே அறியத்தகுந்த எல்லாப் பொருள்களையும் 
அறியும்படி செய்கின்றது. அன்று பிறந்த பாலனை உவமையாகக் கூறியது சத்தம் முதலியவற்றின் 
விகற்பமின்மைக்கு மாத்திரமென்று கொள்க. எதனாலெனில், உண்மையில் பாலனுக்கும் 
மல மறைப்பு இருத்தல்பற்றி உண்மைத்தோற்ற மின்மையாலென்க. (257)

    (அ--கை) முத்தான்மாக்களுக்கு மலமின்மையால் அவர்களுடைய சத்தியே எல்லாப் 
பொருள்களையும் உள்ளவாறறியும்படி செய்கின்றதெனக் கூறுகின்றார்.

(258)     எந்த உள்பொருளானது எக்காலத்திருக்கின்றதோ எக்காலத்திருந்ததோ எக்காலத்திருக்கப் 
போகின்றதோ அக்காலங்களிலெல்லாம் அந்த உள்பொருளைச் சுயம்பிரகாசமான அழிவற்ற 
அறிவானது உள்ளவாறறிகின்றது என்பதாம்.

    (உரை) இவ்வாறே (மோக்ஷ காரிகையிலும் ) சிவனென்னுஞ் சூரியனுடைய சத்தி என்னுங் 
கிரணத்தால் விருத்தி செய்யப்பட்ட அறிவென்னுங் கண்ணால் மறைப்பில்லாத ஆன்மா, சத்தி 
முதலியவற்றோடு பரமசிவனைப் பார்க்கின்றானென்று கூறப்பட்டிருக்கிறதென்க . (258)

    (அ-கை) இந்த முத்தான்மாக்களுக்குச் சருவஞத் தன்மை சருவ கருத்திருத்தன்மை 
இருந்தும் தொழில் கிடையாதெனக் கூறுகின்றார்.

(258இ)     முத்தான்மாக்கள் உலகத்திற்குக் கருத்தாக்களாகவாகிறதில்லை. சிவனொருவனே 
உலகத்திற்குக் கருத்தாவாவன் என்பதாம். (258இ)

    (அ-கை) சிவனொருவனே உலகத்திற்குக் கருத்தாவென்பது எதனாலென்பார்க்குக் கூறுகின்றார். 

(259)     அநேகர்களுக்குக் கருத்திருத்தன்மை உண்டென்பதற்கு ஓரிடத்திலாவது 
பிரமாணமறியப்படவில்லை யாதலா லென்க என்பதாம்.

    (உரை) அநேகம் கருத்தாக்களையுடைய தேர் முதலியவற்றிற்கும் ஸ்தபதி என்னும் 
ஒருவனுடைய இச்சையையின்றி நிறைவேறாமை காணப்பட்டிருக்கிறது. அவ்வாறே வேறு 
நூல்களிலும் எந்தக் காரியத்தை அநேகர் பெருமையை விரும்பித் தங்களைப் பண்டிதர்களாக 
எண்ணிக்கொண்டு நடாத்துகின்றனரோ, அந்தக் காரியம் உலைந்து முடிவை 
யடைகின்றதில்லையெனக் கூறப் பட்டிருத்தல் காண்க.  ஈசுவரத் தன்மையாவது 
சொரூபத்தின் பிரகாச லாபமே ஆதலால் அது எக்காலத்துங் கெடுதலில்லை. ஆதலால், 
பிரவாகேசுவர பக்கமும் ஒதுக்கப்பட்டது. ஆகவே நித்திய முத்தனான அந்தச் சிவனாலேயே 
படைத்தல் முதலிய காரியங்கள் நிகழ்கின்றன. முத்தர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்களாதலால்,
 படைப்பு முதலிய தொழில்களைச் செய்கின்றனரில்லை என்க (259)

    (அ-கை) இன்னும் இவ்விடயத்தையே கூறுகின்றார்

(260-261)      நித்திய முத்தமாயும், கருதமுடியாத மகிமையுடையதாயும், சத்தியென்னும் 
பெயர்கொண்டதாயுமிருக்கும் சிற்சத்தியானது பரமகாரணரான பரமசிவனைப்பற்றியிருக்கின்றது. 
இந்தப் பரமசிவனும் அந்தச் சத்தியால் சடப்பொருள்களை வியாபித்து ஆன்மாக்களின் பொருட்டுப் 
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையுஞ் 
செய்கின்றானென்பதாம். 

    (உரை) இவ்வாறு சிவசத்தியின் ஆராய்ச்சியின் முடிவால் அச்சத்திக்குப் பற்றுக் கோடான 
பரமசிவனுடைய ஆராய்ச்சியும் செய்யப்பட்டதாக அறியத்தகுந்தது. எவ்வாறெனில், உலகம்
அவயவப்பகுப்புடன் கூடியிருப்பது பற்றிக் காரியப் பொருளாகையால் அவ்வுலகத்திற்குக் 
கருத்தாவாகவும், ஆன்மாக்கள் மலத்தால் மறைக்கப்பட்டிருத்தலால் அம்மறைப்பை நீக்கி 
முத்தியைக் கொடுப்பவராகவும், பரமசிவன் உண்டென்பது சித்தித்தது. இவ்வாறே 
பெரியோர்களும் ஆராய்ச்சிக்கு முன்னிலையாயிருக்கின்ற உலகமானது அவ்வுலகத்தை 
யறிந்து செய்யும் கருத்தாவையுடையது; காரியமாயிருத்தலால்; பிரத்தியக்ஷத்திற் காணப்படும் 
கடம் முதலியவை போலுமென்று கூறுகின்றனர் என்க.(260-261)

     (அ-கை) இனி அந்தப் பரமசிவனுக்குக் காரிய வேற்றுமையால் வேற்றுமையுண்டென்று கூறுகின்றார்.

(262)     அந்த ஐந்தொழில்களிலும் பரமசிவன் சத்தியோடு கூடிச் சத்தனென்றும், உத்தியோகஞ்செய்யும் 
முறைபற்றி உத்தியுத்தனென்றும், பிரவிருத்தனென்றும் ஆசிரியர்களால் மூன்று விதமாய்க் 
கூறப்படுகின்றான் என்பதாம் . (262)

    (அ-கை) இதனையே விரித்துக் கூறுகின்றார்.

(263)     அம்மூவருள் முதலாவதான சத்தன் நிட்கள சிவனென்னும் பெயர்கொண்டவனாகின்றான். 
அவனிடத்தில் கிரியையென்னும் பெயர்கொண்ட சிவசத்தியானது விளக்கமடையாமல் 
மூடுதலையடைந்தது போலிருக்கின்றது என்பதாம்.

    (உரை) சத்தி ஒன்றாகையாலும், ஞானத்திற்கே கிரியா ரூபமாயிருக்குந்தன்மை நிச்சயமா
யிருத்தலாலும், அந்தச் சத்திக்கு ஞானம் கிரியையென்ற வேறுபாடு உபாதியானிகழ்ந்ததென 
அறிவிப்பதற்காகக் கிரியையென்னும் பெயர் கொண்ட சத்தியென்று கூறப்பட்டது . அந்தச் 
சத்தியானது எல்லா வியாபாரங்களையும் தன்னுளடக்கிக்கொண்டு தான் மாத்திரமாக இருக்குங்கால் 
அந்தச் சத்தியை யதிட்டித்த பரமசிவன் சத்தனென்று கூறப்படுகிறான், அவ்வாறு சத்தி தனித்திருக்கும் 
நிலையே பரவிந்துவை யதிட்டிக்கும் பரமசிவனுக்கு இயலாவத்தையெனக் கூறப்படுகின்றது என்க. (263)

    (அ-கை) பின்னர்ப் போகாவத்தையில் உத்தியுத்தனென்னுஞ் சொல்லால் கூறப்படுகின்றானெனக் 
கூறுகின்றார்.

(264)     அந்தக் கிரியாசத்தியே விளக்கமாயும், அடையப் பட்ட விந்துவின் கருப்ப பாரத்தால் 
வாட்டமடைந்ததாயும் நின்று பதியான பரமசிவனுடைய பரமானந்த சந்ததியை விளங்கும்படி 
செய்கின்றது என்பதாம்

    (உரை) அந்தக் கிரியாசத்தி, மகா மாயையின் கலக்கத்தால் காரியங்களைத் தோற்றுவிப்பதில் 
நேர்முகமாகிப் பதியினுடைய பரமானந்த சந்ததியென்னும் ஞானக்கிரியைகளின் ஆக்கத்தை 
எப்பொழுது காரியங்களைத் தோற்றுவித்து வெளிப்படுத்துகின்றதோ, அப்பொழுது அந்தச் சிவனுக்குக் 
காத்தலென்னும் போகம் நிகழ்கின்றது. இவ்விடத்தில் சிவனுடைய பரமானந்த சந்ததி என்பதற்கு 
ஞானக்கிரியைகளின் ஆக்கமென்றும், காத்த லென்பதற்குப் போகம் என்றும் பொருள் கொள்ளாமல்,
 ஆனந்த சந்ததி என்பதற்குச் சுகத்தின் மிகுதி என்றும், போகமென்பதற்குச் சுகதுக்க அறிவென்றும் 
பொருள் கொள்ளக்கூடாது. எதனாலெனில், நிர்மலனான பரமசிவனுக்கு உபாதிகளான சுகதுக்கங்கள் 
சம்பவியாதாகையாலென்க (264)

    (அ--கை) அப்பொழுது உத்தியோகமென்னும் முயற்சியோடுகூடிய சத்தியையுடைய 
பரமசிவன் உத்தியுத்தனென்னுஞ் சொல்லிற்குப் பொருளாய் விளங்குகின்றானெனக் கூறுகின்றார்.

(265)     சகள நிட்களராயும், ஐந்து மந்திரங்களை வடிவமாகக் கொண்டவராயும், பிரகாசமுடையவராயும் 
இருக்குஞ் சதாசிவதேவர், முயற்சியையுடையவராய் முயற்சியையுடைய சத்தியோடுகூடி 
விளங்குகின்றார் என்பதாம்.

    (உரை) தொழில் ரூபங்களான உபாதிகளின் வேறுபாட்டால் வேறுபாட்டையடைந்த ஈசான 
முதலிய ஐந்துமந்திர வடிவங்களான சத்திகளே சரீரத்தின் றொழிலைச் செய்கின்றமைபற்றி 
அம்மந்திரங்கள் பரமசிவனுக்குச் சரீரமாகக் கூறப்படுகின்றனவேயன்றி உண்மையில் 
அவனுக்குச் சரீரமில்லை. அவ்வாறே மிருகேந்திரத்திலும் ஐந்தொழில்களுக் குபயோகங்களான        
ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து மந்திரங்களால் 
சிரசு முதலாகப் பரமசிவனது சரீரம் கற்பிக்கப் பெற்றிருக்கிறதென்று கூறப்பட்டிருத்தல் காண்க. 
ஆகையால் பரமசிவனுக்கு ஆகமங்களிற் கூறப்பட்டிருக்கும் வடிவங்கள் தியானத்தின் பொருட்டேயாகும்.

     அவ்வாறே பௌட்கரத்திலும்  பூஜை செய்பவனுடைய லக்ஷியத்திற்காகப் பரமசிவனுக்கு 
வடிவங் கொள்ளப்பட் டிருக்கின்றதெனக் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விடத்தில் சிவன் சத்திகளுக்குண்டான 
இலயம் முதலிய வேறுபாடானது விந்துவினுடைய நிலை வேறுபாட்டால் உண்டானதாகையாலுஞ் 
சாந்தியதீதகலை ரூபமான அந்த விந்துவை இலயாவத்தையாகச் சாத்திரங்களிற் கேட்கப்படுகிற
தாகையாலும், சாந்தி முதலிய நான்கு கலைகளின் பரிணாமமே போகத்திற்கு அதிட்டானமாகும். 

    அந்தப் போகாதிட்டானத்தை அதிட்டித்த பரமசிவனுக்கும் போகங்கூறப்படுகின்றது. 
இவ்வாறே மதங்க பாரமேசுவரத்திலும் சாந்தி முதலிய நான்கு கலைகள் ரூபமாயும் நிர்மலமாயுமிருக்கும் 
சகள நிட்களத்தில் உலகத்திற்குப் பதியான பரமசிவனுக்குப் போகங்கூறப்பட்டிருக்கிறதெனக்
கூறப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் சதாசிவ புவனங்களை அதிட்டிக்குங் காலத்திற்றான் 
பரமசிவன் ஐந்து மந்திரங்களை வடிவமாக வுடையவனாய் சதாசிவ மூர்த்தியாயிருத்தலால் 
போகாவத்தையில் சதாசிவ தேவரைக் கூறியது என்னையெனில், நிவிருத்தி முதலிய புவனங்களிலும் 
தனித்தனியே சத்தியோசாத முதலிய மந்திர வடிவமாகப் பரமசிவன் தியானிக்கத் தகுந்தவனாகையால் 
இவ்வாறு கூறப்பட்டதென்க. 

    அதிகாராவத்தை யினையுடைய பிரவிருத்தனுக்கு ஐந்து மந்திரங்களினுடைய கூட்டம் 
வடிவமாயிருத்தல் சதாசிவ புவனத்திற்றானென்று பின்னர்க் கூறப்போகிறார். இவ்விஷயமானது 
மதங்க பாரமேசுவரத்தில் விரிவாய்க் கூறப்பட்டிருத்தலால் விரிவை அவ்விடத்திற் கண்டு
கொள்கவென்க. (265)

    (அ-கை) இனி, சிவசத்திக்கு மந்திரத்தன்மை யுண்டென்று கூறுகின்றார்.

(266)     எல்லா உள்பொருள்களையும் அறிதலினாலும், சம்சாரக் கடலினின்று நீங்கும்படி 
செய்து காப்பதினாலும், மனனத்துக்கும் திராணத்திற்கும் தருமியான அந்தச் சிவசத்தியானது 
மந்திரவடிவமா யிருக்கின்றதென்பதாம்.

    (உரை) அவ்வாறே மனனமென்பது எல்லாமறிதல்; திராண மென்பது சமுசாரிகளைக் 
காத்தல். இவ்விரண்டுக்குந் தருமியா யிருப்பதுபற்றி மந்திரமென கூறப்படுகின்றானென்று 
சாத்திரங்களில் கூறப்பட்டிருத்தல் காண்க. இவ்விதமான பொருளானது சிவனுக்கும் சத்திக்கும் 
வித்தியேசுவரர்களுக்கும் பொதுவாகும். ஆகையால் வாசகமான சொற்களுக்கும் உபசாரமாய் 
மந்திரமென்னும் பெயர் கூறப்படுகிறதென்க. (266)

    (அ-கை) இந்தச் சிற்சத்திக்கு உபாதி வேறுபாட்டால் மந்திர வேறுபாடெனக் கூறுகின்றார்

(267)     அந்தச் சிற்சத்தியானது காரியவேறுபாட்டாலும் அதிட்டித்தலாலும் தானொன்றாயிருந்தும் 
ஐந்தாக வேறுபாட்டை யடைந்திருக்கின்றது. அது அதிட்டிக்கத்தகுந்த விந்துவென்னும் சாந்தீ யதீதகலை 
சாந்திகலை முதலிய ஐந்து பொருள்களை விடயமாய்க் கொண்டு பிரகாசிக்கின்றது என்பதாம்.

    (உரை) விந்து, சாந்தி முதலிய புவனங்களை யதிட்டித்தலால் சிவனுக்கு ஈசானமுதலிய 
வேறுபாடு நிகழ்கின்றதென முன்னரே கூறப்பட்டிருக்கின்ற தென்க (267)

    (அ-கை) இதனையே விரிவாய்க் கூறுகின்றார்.

(268 )     விந்து, சாந்தி, வித்தை , பிரதிட்டை , நிவிருத்தி என இவ்வைந்து கலைகளும் போகத் 
தானங்களாகும். இவற்றிற்கு விந்துவென்னும் பெயர் பரமசிவனால் கூறப்பட்டிருக்கின்றது என்பதாம்.

    (உரை ) அவ்வாறாயின் சாந்தி முதலிய நான்கு புவனங்கள் தானே முன்னர்ப் 
போகத்தானமாகக் கூறப்பட்டிருக்கின்றனவெனில், அஃதுண்மையே. சாந்தியதீத ரூபமான 
விந்து இலயத்தான மாயிருந்தும் சிருட்டியாரம்பத்தில் அக்கலையிலும் புவனங்கள் 
தோன்றுகின்றமைபற்றி அதுவும் போகத்தானமெனக் கூறப்பட்டது. ஆதலால் 
விரோதமின்மை கண்டுகொள்க வென்க (268)

    (அ-கை) அதுபற்றியே இந்த விந்து கலைகளுக்குக் காரணாவத்தையில் 
இலயரூபமாக யிருத்தலால் பரவிந்துவெனப் பெயர் நிகழ்ந்ததெனக் கூறுகின்றார்.

(269)     ஐந்து கலைகளினுடைய சூக்கும அவத்தையே பரவிந்து வெனப்படும். அந்தப் 
பரவிந்துவை விடயமாகக்கொண்ட பரமசிவனது மூர்த்தி பரமூர்த்தியாகும். காரியத்தை 
விடயமாகக் கொண்ட பரமசிவனது மூர்த்தி அபரமூர்த்தியாகுமென்பதாம்.

    (உரை) பரமசிவனது பரமூர்த்தியாவது விந்துவை அதிட்டிக்கும் இலயாவத்தையான 
சத்தியேயாகும். அபரமூர்த்தியாவது காரியங்களை யதிட்டிக்கும் சத்தியேயாகுமென்க (269)

(270)     நிர்மல ரூபியான யாதொரு சிவசமவேத சத்தியுண்டோ அதுவே தொழில் வேறுபாட்டால் 
பரமசிவனுக்குச் சாதாக்கிய வடிவமாகக் கூறப்படுகின்றதென்பதாம்.

    (உரை ) சிவனோடு பிரிக்கமுடியாத சமவாய சம்பந்தத்திலிருக்கும் சமவேதசத்தியே,
விந்துவின் பரிணாமமாயும், நிவிருத்தி புவனம்வரை கீழே வியாபித்திருப்பதாயும் உள்ள 
சதாசிவ புவனத்தை அதிட்டித்து அதிகாரஞ்செய்வதுபற்றி உபசாரமாகப் பரமசிவனது 
சாதாக்கிய வடிவமாய்க் கூறப்படுகின்றதென்பது கருத்தென்க. (270)

    (அ- கை) தீக்ஷை முதலியவற்றால் அந்தந்தப் புவனங்களை அடைந்தவருக்குண்டாம் 
வேறுபாடு உண்மையேயாகும்.  அவர்களை யதிட்டிக்கும் சிவசத்திகளுக்குத் தொழில் வேறுபாட்டால் 
வேறுபாடு கூறப்பட்டிருக்கிறதெனக் கூறுகின்றார்.

(271-272)     ஆற்றலுடன் கூடிய பரமசிவனால் அதிட்டிக்கப்பெற்ற மகாமாயையானது, 
மலமற்றவர்களாயும், போகத் தானத்திலிருப்பவர்களாயும், அதுபற்றிச் சிவரூபர்களாகவுமிருக்கும் 
ஆன்மாக்களுக்குச் சரீரம் போகம் இந்திரியம் இடம் விஞ்ஞானம் முதலிய காரியத்தைச் செய்கின்றதோ, 
அந்தக் காரியமாகவே பரமசிவனது கிரியாசத்தியும் பரமசிவனும் கூறப்படுகின்றன ரென்பதாம். 

    (உரை)   சிவசத்தியால் கலக்கஞ் செய்யப்பட்ட மகாமாயையானது எந்தெந்த காரியத்தைத் 
தோற்றுவிக்கின்றதோ, அந்தந்த காரியத்தை அதிட்டிக்கும் சிவன் சத்திகளுக்கும் தொழில் 
வேறுபாட்டாலும், இட வேறுபாட்டாலும்,  உபசாரமாய் அந்தந்தப் பெயர் உண்டாகின்றது. 
எவ்வாறெனில், சாந்தி புவனத்தை அதிட்டித்து அதனைத் தோற்றுவிக்குங்கால் சிவசத்தியானது 
சாந்தி என்னும் பெயரை யடைகின்றது. சிவன் சாந்தனென்னும் பெயரையடைகின்றான். 
இவ்வாறே மற்ற இடங்களிலும் அறிந்துகொள்க. அவ்வாறே மிருகேந்திரத்திலும், “நூல்களிற் 
கூறப்பட்டிருக்கும் பதிபேதமானது  சாதி வேறுபாடு போல் காரிய வேறுபாட்டால் உபசாரமாய் 
நிகழ்ந்தது. காரிய வேறுபாடானது தொழில் வேறுபாட்டால் நிகழ்ந்ததெனக்” 
கூறப்பட்டிருக்கின்ற தென்க. (271-272)

    (அ-கை) இதனையே விரிவாய்க் கூறுகின்றார்.

(273)     காரியங்களைக் காரணமாகக் கொண்ட இச்சா ஞானக் கிரியைகள் எதிலிருந்து 
உண்டாயினவோ அந்த ஞானக் கிரியா ரூபமான பரமசிவனது சிற்சத்தி ஒன்றேயாகு மென்பதாம்.

    (உரை) எதிலிருந்து உண்டாயினவோ என்பதற்கு இச்சா ஞானக் கிரியைகள் எதனுடைய 
அவத்தைகளாக இருக்கின்றன வோவென்பது கருத்து.  காரியங்களைக் காரணமாகக்கொண்ட 
என்பதற்குக் காரிய ரூபங்களான உபாதிகளால் நிகழ்ந்ததென்பது கருத்தென்க.     (273)

    (அ-கை) இவ்வாறு காரியங்களை விடயமாகக்கொண்ட சத்தியே பரமசிவனுக்கு வடிவமா 
யிருக்கிறதென்று கூறப்பட்டது.  இனி, போக தத்துவம் அதிகார தத்துவமென்னும் இவற்றில் 
வசிப்பவர்களின் சரீரங்களும் விந்து சம்பந்தங்களேயென்று கூறுகின்றார். 

(274)     ஈசுவரர்களுடையவும் அபரமுத்த சீவன்களுடையவுமான தேகேந்திரியங்கள், சுத்தங்களாயும்,     
மிக அழகுடன் கூடினவையாயும், அதிகாரத்தைச் செய்கின்றனவாயும் இருத்தல் பற்றி மகாமாயா 
மயங்களாயிருக்கின்றன வென்பதாம். (274)

(275)      கிரியா ரூபமான அந்தச் சிவசத்தியானது சிவனை விட்டுப் பிரியாததாயிருக்கின்றது. 
அதன் சேர்க்கையால் பரமசிவனும் எல்லாக் காரியங்களுக்கும் காரணமாகக் கூறப்படுகின்றான் (275)

    (அ-கை) அதிகாராவத்தையைப் பற்றிக் கூறுகின்றார்.

(276-276இ)     அந்தப் பிரபுவான பரமசிவன், விந்துவிலிருந்து இறங்கி, அணுசதாசிவர்களால் 
சூழப்பட்டவராயும், பதியின் றொழில்களான அதிகாரங்களில் சதாசிவர் மந்திரமகேசுவரர்களை 
ஏவுகிறவராயும், எல்லா அத்துவாக்களினுடைய சிரசில் விளங்குகின்றாரென்பதாம்.

    (உரை)  விந்துவிலிருந்து இறங்குதலென்பதற்கு உத்தியோக அவத்தையினின்றும் நீங்கிப் 
பிரவிருத்தியுடன் கூடியிருக்குந் தன்மையென்பது பொருள். பிரவிருத்தியாவது சுத்தஞ் செய்யத் தகுந்த 
சதாசிவர்களையும் வித்தியேசுவரர்களையும் முறையே அவரவர்களுக்குரிய புவனங்களிலும் அசுத்தாத்துவ 
அதிகாரத்திலும் ஏவுதலாகும். அதுபற்றியே பிரபுத்தன்மை யுடையவராயும் எல்லா அத்துவாக்களையும் 
அதிட்டிப்பவராயும் விளங்குகின்றார். அஃதாவது சதாசிவ வடிவமுடையவராகத் தியானஞ் செய்யத் 
தகுந்தது என்பது கருத்து என்க. (276-276இ)

    (அ--கை) இனி, தியானஞ் செய்யத்தகுந்த வடிவங்களி னதிட்டானத்தைக் காட்டுகின்றார்.

(277-279)     பிரவிருத்தியுடன் கூடிய தேவனான பரமசிவன், ஐந்து சுரோதசுடன் கூடினவராயும், 
பிரபுத்தன்மை யுடையவராயும், சத்தியைச் சிரசாகவும் ஞானம் கிரியை இச்சை என்னும் மூன்றனையும் 
விரிந்த மூன்று கண்களாகவும் உடையராயும், விஞ்ஞானமென்னும் சந்திர கலையுடன் கூடினவராயும் 
ஈசான மந்திரத்தைச் சிரசாகவும் தற்புருட மந்திரத்தை முகமாகவும் உடையராயும், பத்துத் 
திக்குக்களிலும் கைவரிசைகளை யுடையவராயும், அகோர மந்திரத்தை இருதயமாகவும் 
வாமதேவ மந்திரத்தை குஹ்யமாகவும் கொண்டவராயும், சத்தியோசாத வடிவத்தால் 
விளங்குகின்றவராயும், எல்லாவற்றையும் பரிசுத்தஞ் செய்பவராயும், சகளமூர்த்தியாயும் 
விளங்குகின்றாரென்பதாம்.

    (உரை) இவ்விடத்தில் ஐந்து சுரோதஸ் என்னுஞ் சொல்லால் மந்திரரூபமான சத்தியின் 
ஐந்து அவத்தை வேறுபாடுகள் கூறப்படுகின்றனவென்க. (277-279)

    (அ-கை) இவ்வாறு விந்துவின் அவத்தைகளை அதிட்டித்தலால் வேறுபாடிருப்பினும், 
உண்மையில் சிவனுஞ் சத்தியும் ஒன்றெனக் கூறி இவ்விடயத்தைக் கூட்டி முடிக்கின்றார். 

(280)     பரமசிவன் ஒருவனாகவேயிருக்கின்றான். அவனது சத்தியும் விகாரமற்றதாயிருக்கின்றது.
 அவ்விருவரும் இலயம் போகம் அதிகாரமென்னுமிவற்றிலும் சின்மாத்திர வடிவமுடையவரா 
யிருக்கின்றனரென்பதாம் (280) 

    (அ-கை) இனி, சிவனுக்குஞ் சத்திக்கும் அநேகத் தன்மையென்னும் வேறுபாடு உபசாரமாய் 
நிகழ்ந்ததென்னும் விடயத்தை வேறு வழியாய்க் காட்டுதற்பொருட்டு இலய போக அதிகாராவத்தைகளை 
யடைந்த ஆன்மாக்களுக்கு வேறுபாடு உண்மையெனக் கூறுகின்றார். 

(281)     அவ்வாறே அந்தப் பரமசிவனால் அதிட்டிக்கப் பட்ட சில ஆன்மாக்கள் நிர்மலமாயும் மிகக் 
கம்பீரமாயுமிருக்கும் சைதன்னிய சமுத்திர ரூபமான தனது சொரூபத்தில் இலயத்தை 
யடைந்திருக்கின்றனரென்பதாம்.

    (உரை) மல பரிபாகமடைந்த சிற்சில ஆன்மாக்கள் அனுக்கிரகஞ்செய்யும் அந்தப் பரமசிவனால் 
அனுக்கிரகஞ் செய்யப்பட்டவர்களாய்; அதாவது அனுக்கிரக சத்தியால் விடுதலை செய்யப்பட்டவர்களாய் ; 
மிக நிர்மலமாயும், அதிக கம்பீரமாயுமிருக்கும் சருவக்ஞத் தன்மை,  சர்வகருத்திருத் தன்மை என்னும் 
சமுத்திர ரூபமான தனது சொரூபத்திலிருக்கின்றனர். பரமசிவனது அனுக்கிரகத்தால் அவனது 
சாமிய ரூபமான மோக்ஷத்தையடைகின்றன ரென்பது கருத்து. சிவனிடத்தில் இலயமடைகின்றன
ரென்பதற்கு ஐக்கியத்தை யடைகின்றனரென்று பொருள் கொள்ளுதல் கூடாது. அத்துவிதமானது 
முன்னரேயே ஒதுக்கப்பட்டிருக்கிறதாகையாலென்க.  இலயா வத்தையையுடைய சிவனுடன்
சாமியத்தை யடைந்தமையால் இவர்களும் இலயாவத்தையை யுடையவர்களெனக் கூறப்படு 
கின்றனரென்க. (281)

    (அ-கை) விஞ்ஞான கேவலர்களும் பரிபாகமடையாத மலமாயைகளைத் தாண்டி யிருத்தலாலும், 
மகாமாயையைப் பற்றியிருத்தலாலும், போகமில்லாதிருத்தலாலும், தொழிலற்றவரா யிருத்தலாலும்,
இலயாவத்தையை யடைந்தவர்களாகக் கூறப்படுகின்றனரெனக் கூறுகின்றார்.

(281இ )     வேறு சிலர்களும் பரமசிவனால் அடக்கப்பட்ட  சத்தியுடன் கூடினவர்களா 
யிருக்கின்றனரென்பதாம், (281இ)

    (அ-கை) போகாவத்தையை அடைந்தவர்களைப் பற்றிக் கூறுகின்றார். 

(282 )     வேறு சிலர் பரிணாமத்துடன் கூடிய மகாமாயையை ஆலிங்கனஞ் செய்து கொண்டு போகத்தில் 
ஆசைகொண்டவர்களாயும், அந்த மகாமாயையினுடைய சேர்க்கையாலுண்டான  சுகத்தில் பற்றிய 
மனதுடையவர்களாயுமிருக்கின்றனர் என்பதாம்.

    (உரை ) சாந்தி முதலிய புவன ரூபமாகப் பரிணமித்த மகா மாயையைப் பற்றி 
யிருக்கின்றனரென்பது கருத்து என்க. (282)

    (அ-கை) அதிகார அவத்தையை அடைந்தவர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

(283)     அவ்வாறே வேறு சிலர் பரமாகாசமென்னும் மகாமாயையைச் சார்ந்து 
அத்துவாக்களினுடைய சிரசிலிருந்துகொண்டு பரமசிவனுடைய ஆணையைப்பெற்று 
ஐந்தொழில் செய்கின்றனரென்பதாம்.

    (உரை ) அனந்தர் முதலியோர் சுத்தாத்துவாவின் சிரசிலுள்ள மகாமாயா புவனங்களைச் 
சார்ந்து பரமசிவனுடைய ஆணையால் ஐந்தொழில் புரிகின்றவராய் இருக்கின்றனரெனக்
கூறப்பட்டிருக்கின்றது என்க. (283)

(284-285)      இலயம் போகம் அதிகாரமென்னும்  இவற்றுடன் கூடிய ஆன்மாக்களை 
அதிட்டித்தலால், பரமசிவன்  ஒருவனாயிருந்தும் உபசாரமாய் வேறுபாட்டையடைகின்றான். 
அதுபோலவே சத்தியும் வேறுபாட்டை யடைகின்றது. இனி, சிவனுக்கும் சத்திக்குமுண்டான
வேறுபாடு கூறப்படுகின்றது என்பதாம். (284-285)

    (அ-கை) சிவசத்திகளின் வேற்றுமையைப் பற்றிக் கூறுகின்றார்.

(286)     சுத்தாத்துவாவில் சிவன் கருத்தாவாகவும் சத்தி கரணமாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றது. 
தன்னிடமிருக்கும் நிறைந்த சைதன்னிய வடிவமான அந்தப் பரமசிவன் அந்தச் சத்திக்குப் 
பற்றுக்கோடாக இருக்கின்றானென்பதாம். (286)

    (அ-கை) தரும தருமித்தன்மை பற்றி இந்தச் சிவசத்திகளுக்கு வேறுபாடு நிகழ்ந்தது. 
அந்தத் தரும தருமி இரண்டனுள் தருமி சொருபமான அறிவு தன்னிடத்திலேயே யிருக்கின்றது.
 விடயங்களை அறிவதில் சாமர்த்திய ரூபமான அறிவானது தருமமாகக் கூறப்படுகிறதெனக் 
கூறுகின்றார்.

(287)     அந்த அறிவானது எல்லாப் பொருள்களையும் அறிவதில் சாமர்த்தியம் பொருந்திய 
தோற்றமுடையதாயும் வியாபிக்கும் சொரூபமாயும் இருக்கும் பரமசிவனுடைய 
மகிமையாகின்றது என்பதாம். (287)

(288--288இ)     மகத்தன்மை பொருந்திய பரமசிவன் எல்லாப் பொருள்களிலும் வியாபகமா
யிருக்கின்றான். அந்தச் சத்தி சிவமென்னும் இரண்டனுள் சிவமென்னும் பெயர் கொண்ட அறிவைப் 
பிறபொருளைத் துணையாகக் கொள்ளாத வடிவமென்றும், அவனது சத்தியைப் பிறபொருளைத் 
துணையாகக் கொண்டிருக்கும் வடிவமென்றும் வித்துவான்கள் கூறுகின்றனரென்பதாம்.

    (உரை) எல்லா விடயங்களிலும் வியாபகமான சாமர்த்தியத்துடன் கூடியிருப்பது பற்றிப் 
பரமசிவன் எல்லாப்பொருள்களையும் வியாபித்தவனாகின்றான். சிவமென்னும் பெயர் கொண்ட 
வென்பதனால் இப்பொருளையே விளக்கஞ் செய்கின்றார். பிற பொருளைத் துணையாகக் 
கொண்டதென்பதற்கு விடயங்களைத் துணையாகக் கொண்டதென்பது பொருளென்க. (288-288இ)

    (அ-கை) எதனாலிவ்வாறு கற்பிக்கப் படுகிறதென்பார்க்குக் கூறுகின்றார்.

(289)     எல்லாப்பொருள்களுக்கும் பிற பொருளைத் துணையாகக் கொள்வதனாலும், துணையாகக் 
கொள்ளாமையாலும் இரண்டு வடிவம் அறியப்படுகின்றது. ஆகையால் சிற்சத்தியானது 
சிவனைப்பற்றி யிருக்கின்றது என்பதாம்.

    (உரை) சடப்பொருளில் சுடுதலைச் செய்யும் அக்கினிக்குச் சுடப்படும் பொருள்களான 
விறகு முதலிய பிறபொருள்களின் சம்பந்தத்தில் சுடுதலென்னும் சாமர்த்தியம் காணப்படுகின்றது.
பிறபொருள்களின் சம்பந்தமில்லையாயின் அந்தச் சாமர்த்தியம் விளங்கித் தோன்றுகிறதில்லை. 
சித்துப் பொருளில் ஆன்மாவினிடத்தில் விடயங்களைத் துணையாகக் கொள்ளும் விடய அறிவு 
ரூபமான அறிவும், அறிபவன் ரூபமான சுயம்பிரகாச அறிவும் இருக்கின்றன.  ஆகையால் எல்லாப் 
பொருள்களுக்கும் இரண்டு வடிவமுண்டு. அதுபற்றிச் சிவனிடமும் பிறபொருள்களைத் துணையாகக் 
கொள்ளும் சத்தியென்னும் வடிவமிருக்கின்றது என்க . (289)

    (அ--கை) அவ்வாறாயின் ஆன்ம சத்தியினின்றும் சிவசத்திக்கு விசேடமென்னை 
என்பார்க்குக் கூறுகின்றார். 

(290-291)     யாதொரு காரணத்தால் எக்காலத்தும் விளங்கித் தோன்றுகின்றதாயும்,
காலதேசங்களால் வரையப்படாததாயுமான மகிமைபொருந்திய பரமசிவனுக்கு அறியத்தகுந்த 
பொருள், அதிட்டிக்கத்தகுந்த பொருள், செய்யத் தகுந்த பொருள் என்னுமிவற்றில் சத்தியென்னும்
 வடிவத்தைத் தவிர வேறான பொருள் கரணமாயிருக்கவில்லையோ, அந்தக்காரணத்தால் 
சத்தியானது பரமசிவனுடைய பிறபொருளைத் துணையாகக் கொள்ளும் வடிவமாகின்றது என்பதாம்

    (உரை) பரமசிவன் நித்தியமுத்தனாகையால் பொருள்களை அறியும் விடயத்தில் சத்தியைத் 
தவிர வேறான புத்தி முதலிய கரணங்களையும் ஒளி முதலிய துணைக்கருவிகளையும் துணையாகக் 
கொள்ளவில்லை. அதுபற்றிச் சத்தியே அவனுடைய பிறபொருளைத் துணையாகக் கொள்ளும் 
வடிவமாகின்றது. வேறொன்றும் ஆகின்றதில்லை என்க (290-291)

    (அ-கை) பெத்தான்மாக்களுக்கு விடயங்களைத் துணையாகக் கொள்ளும் சத்தியானது 
தனது சொரூப மாத்திரமாய் (அஃதாவது சுதந்திரமாய்) காரியங்களைக் குறித்து கரணமாகின்ற தில்லை. 
எதனாலெனில், அந்தப் பெத்தான்ம சத்திகளுக்குப் புத்தி முதலிய கரணங்களின் துணை 
காணப்படுதலாலென்று கூறுகின்றார்.

(292)      அனைவருக்கும் இந்தச் சத்தியானது விடயத்தைத் துணையாகக் கொள்ளும் 
ரூபமாத்திரமாயிருந்து கொண்டு காரியங்களுக்குக் கரணமாகின்றதில்லை. காரியமான புத்திரன்
 முதலிய ரூபங்கள் வேறுவிதமாக அறியப்படுதலால் என்பதாம்.

    (உரை) அனைவருக்கும் என்றவிடத்தில் சிவனுக்கு என்று பாட பேதமுண்டு. அந்தப்பாடத்திற்குக் 
கேவலனான பரம சிவனுடைய ஞானமானது சொரூப மாத்திரமாயிருந்து கொண்டு காரியங்களுக்குக் 
கரணமாகின்றதில்லை. விடயங்களைத் துணையாகக் கொண்ட கரணமாகின்றது என்று பொருள் கொள்க. 
பெத்தான்மாக்களுக்கு அவ்வாறில்லை. எதனாலெனில், பார்க்கப்பட்ட காரிய ரூபமான புத்திரன் 
முதலியோருக்கு, விடயம் முதலியவற்றைத் துணையாகக் கொண்ட பிதா முதலியோரின் ஞானமுதலிய*
வற்றாற்றான் உற்பத்தி காணப்படுதலால் என்பது பொருளாகக் கொள்கவென்க. (292)

* முதலிய என்றதனால், கன்மங் காலம் தத்துவங்கள் கொள்ளப்படும்.

    (அ-கை) ஆகையால் பரமசிவனுக்கும் விடயங்களைத் துணையாகக் கொள்ளாத அறிதல் 
ரூபமான அறிவு சம்பவிக்க வில்லையெனக் கூறுகின்றார்.

(292இ) விடயமற்ற அறிவுகிடையாது. அதுவே விடய அறிவாதலால் என்பதாம்.

    (உரை ) அவ்வாறாயின் விடயங்களின் சேர்க்கையிலேயே அறிவு நிகழ்கின்றமையால் 
பரமசிவனுடைய தரும சொரூபத்திற்கு அநித்தியத்தன்மை வருமேயெனில், வராது.  எதனாலெனில், 
பரமசிவனுக்கு எக்காலத்தும் விந்து முதலிய நித்தியப் பொருள்கள் விடயமாயிருத்தலாலும், அறியுஞ் 
சாமர்த்தியமானது அறிபவனிடத்தில் சமவாய சம்பந்தத்தால் எப்பொழுது மிருத்தலாலுமென்க. (292இ)

    (அ-கை) அவ்வாறாயின் ஆன்மாக்களுக்கு இது கருமை யாயிருக்கின்றதென்னும் அறிவு நீங்கி 
இது பொன்மையாயிருக்கின்றதென்னும் அறிவுமுறையே உண்டாகின்றமையால் அறியுஞ் சாமர்த்தியமும் 
அநித்தியமாகவே அறியப்படுகின்றதென்பார்க்குக் கூறுகின்றார்.

(293)     யாதொரு காரணத்தால் சிறிது காலத்தில் வேறு விதமாய்த் தோன்றுதலே அழிவுடைய 
பொருள்களின் தருமமாக விருக்கின்றதோ, அந்தக் காரணத்தால் கருமை பொன்மை என்னும் 
இவற்றை விடயங்களாகக் கொண்ட அறிவுகள் ஒன்றுக்கொன்று மாறுதலா யிருக்கின்றமைபற்றி 
அழிவுடையனவே.  அவ்வறிவுகளை அறியும் ரூபமான சாமர்த்தியம் அழிவில்லாதது என்பதாம்.

    (உரை ) கருமையாயிருக்கின்றதென்னும் நிச்சயத்தினின்றும் வேறான பொன்மையா 
யிருக்கின்றதென்னும் நிச்சய ரூபமான புத்தி விருத்தியானது அழிவினை யுடையதாகையாலும்
ஒன்றுக்கொன்று விரோதமாதலாலும் முறையே வெவ்வேறாய்த் தோன்றினும் சுகதுக்க ரூபமான
புத்தியை யறிதலென்னுஞ் சாமர்த்தியம் எக்காலத்தும் அறிபவனிடத்தில் சமவாயச் சேர்க்கையா 
லிருக்கின்றதாக அறியப்படுதலால் அந்தச் சாமர்த்தியம் அழிவில்லாததே. ஆகையால் வெவ்வேறான 
தோற்றங்களெல்லாம் புத்திவிருத்தியின் பரிணாமங்களே ஆகுமென்க. (293)

(294)     ஆகையால், அழிவில்லாத ஆன்ம சாமர்த்தியம் நித்தியமாகவே யிருக்கின்றது. இதுபோலவே 
சிவசத்தியானது தனக்குப் பற்றுக்கோடான பரமசிவனினின்றும் வேறாயிருக்கின்றது. அந்தப் பரமசிவனும் 
அந்தச் சத்தியினின்றும் வேறாயிருக்கின்றான். ஆகையால் சிவனுஞ் சத்தியும் தருமியும் தருமமும் 
ஆகுமென்பதாம்.

    (உரை ) அந்த ஆன்ம சாமர்த்தியமான சத்தியையும் சிவ சாமர்த்தியமான சத்தியைப் போல்
 நித்தியமாகக் கொள்ளல் வேண்டும்.  இவ்வாறாகவே சிவனுக்குஞ் சத்திக்கும் சொரூபத்தில் 
வேற்றுமை இல்லையாயினும், தரும தருமி ரூபமான வேற்றுமை உண்மையேயாகும். ஆகையால் 
சிவசத்தி சிவனுடைய தருமமேயாகுமென்க.  (294)

    (அ-கை) இவ்விடயத்தில் பூர்வபக்ஷியின் சங்கையைக் கூறுகின்றார்.

(295)      ஞானவடிவினனான பரமசிவனிடத்தில் தொழில் ரூபமான உபாதிபற்றிச் சத்தியென்னும்
 பெயர் நிகழ்ந்திருக்கிறதேயன்றி உண்மையில் பிறபொருளைத் துணையாகக் கொண்டிருக்கும் சத்தி 
என்னுந் தருமம் அவனிடத்திலில்லை யென்று சிலர் கூறுகின்றனரென்பதாம்.

    (உரை ) தருமியின் சொரூபந்தான் உண்மை. தரும சொரூபம் உண்மையில்லையென்பது 
கருத்தென்க. (295) 

    (அ-கை) பூர்வபக்ஷிக்கு விடை கூறுகின்றார்.

(296)     கரணமில்லாது காரியத்தைச் செய்பவன் கருத்தாவா யிருக்கின்றானென்னும் யுத்திக்கும் 
பிரத்தியக்ஷத்திற்கும் மாறுபட்ட இவர்களுடைய புத்தியானது மிகப்பொருத்தமற்ற தென்பதாம்.

    (உரை) குலாலன் முதலியோருக்குத் தண்டம் முதலிய கரணங்களின்றிக் கருத்திருத்தன்மை 
காணப்படாமையால் கருத்தாவான சிவனுக்கும் கரணம் நிச்சயமாய் வேண்டும். அந்தக் கரணம் 
சத்தியேயாகும். அவ்வாறே மிருகேந்திரத்திலும், " பரம சிவனுக்குச் சத்தியைத் தவிர வேறு 
கரணங்கிடையா”தென்று கூறப்பட்டிருக்கின்றமை காண்க. இவ்வாறே ஆன்மாக்களுக்கும் 
அவர்களுடைய தேகத்தின் அசைதலில் சத்தியே கரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும்
 அறிவு ரூபமான சத்தியை உண்மையாகக் கொள்ளவில்லையாயின் திதி காலத்திலும் உபாதியான 
சதாசிவ தத்துவம் முதலிய விந்து காரியங்களை விடயமாகக் கொள்ளாமையால், இந்தப் 
பரமசிவனுக்குச் சதாசிவம் முதலிய வேற்றுமையைக் கற்பித்ததும் பொருத்தமற்றதாகின்றதென்க (296)

    (அ--கை) விந்து காரியமான சதாசிவ தத்துவ முதலிய உபாதிகளின் அறிவு இல்லையாயினும் 
உபசாரமாய்ச் சதாசிவ முதலிய வேற்றுமையைக் கொள்வோமெனில், பரமசிவனுக்கு எக்காலத்தும் 
அதிகார அவத்தை தானிருக்கும். இலயாவத்தை இராது. எதனாலெனில், விசேடமின்மையாலென்று
கூறுகின்றார். 

 (297)     அன்றியும், அறிவிற்கு விடயமாகாத காரியமே பரமசிவனுக்கு உபாதியென்று கொண்டால் 
எக்காலத்தும் உபாதியுடன் கூடியிருத்தலால் உபாதியற்றவனாகப் பரமசிவன் எக்காலத்துமிருக்க 
மாட்டானென்பதாம். (297)

    (அ-கை) விந்து முதலியவற்றைப் பரமசிவன் அறிய வில்லையாயின், அவற்றைக் 
கலக்கஞ்செய்வனென்பதும் பொருத்த மற்றது; அறியப்படாததைச் செய்ய 
முடியாதாகையாலென்று கூறுகின்றார்.

(298)     காரணத்தினுடைய அறிவில்லாதவன் எவ்வாறு கருத்தாவாக விருப்பன் என்பதாம். (298)

    (அ--கை) அன்றியும் ஆன்மாக்களையும் சிவனுக்குச் சமமான குணமுடைமை பற்றித் தருமி 
ரூபமாய்க் கொண்டு தரும ரூபமான அறிவைக் கொள்ள வில்லையாயின், அவர்களுக்குச் சுகம்
முதலியவற்றின் அறிவு ரூபமான போகமும் நிகழ்கின்றதில்லையெனக் கூறுகின்றார்.

(298இ)     புருடன்றான் தருமரூபமான சத்தியையின்றிச் சுகதுக்க ரூபமான புத்தியை எவ்வாறு 
அறிவன் என்பதாம். (298இ)

(299)      (இவ்வாறாகவே) இந்த எல்லாவுலகங்களும் சத்தியென்னும் தீபமில்லையாயின் அஞ்ஞானமென்னும் 
பெரிய இருளுடன் கூடினவையாகும். அன்றியும் சத்தியற்ற பரமசிவனுக்குத்தான் என்ன செய்யமுடியும் என்பதாம்.

    (உரை) சத்தியைக் கொள்ளவில்லையாயின் போக மோக்ஷத்தின் பொருட்டு ஒருவித 
முயற்சியுமின்றிச் சூனியமாக உலகமாகின்ற தென்பது கருத்து என்க  (299)

(300)     ஆகையால் சிவனுடைய சத்தியானது சிவனோடு விட்டுப் பிரியாததா யிருந்தபோதிலும் 
மசூரை யென்னும் தானிய விசேடம் அங்குட்ட மென்னும் தானிய விசேடத்தினின்றும் எவ்வாறு 
வேறாயிருக்கின்றதோ அவ்வாறு வேறாயிருக்கின்றது.  அவ்வாறு வேறாயிருப்பினும் 
முன்னர்க்கூறப்பட்ட தரும தருமியென்னுங் காரணங்களால் வேறாகவுமில்லை என்பதாம் . 

    (உரை) எவ்வாறு மசூரை யென்னும் தானியவிசேடமும் அங்குட்டமென்னும் தானியவிசேடமும் 
ஒரே இனமாயிருந்தும்  சில வடிவ வேறுபாட்டால் வேற்றுமை யடைகின்றனவோ, அவ்வாறே சிவனும் 
சத்தியும் வெவ்வேறு பொருள்களா யில்லையாயினும் தரும தருமித் தன்மையால் வேறுபாடுடையனவா
யிருக்கின்றன. இவ்விடத்தில் மசூரை அங்குட்டங்களைத் திருட்டாந்தமாகக் கூறியது  சாதியொருமைபற்றி 
ஒன்றென்னும் விடயத்தில் கூறப்பட்டது. உண்மையில் அங்குட்டத்திற்கும் மசூரைக்கும் வேற்றுமையுள
தாகையாலென்க. இவ்வாறே சிவனுக்குஞ் சத்திக்கும் தரும தருமி ரூபமான வேற்றுமையிருந்தும் 
தாதான்மியச் சேர்க்கையால், வேறான ஆன்மாவைப்போல் வேற்றுமை கிடையாதென்று, “முன்னர்க் 
கூறப்பட்ட காரணங்களால்"  என்பதனால் கூறுகின்றாரென்க, (300)

    (அ-கை) சத்திக்கும் சத்திமானுக்கும் வடிவத்தில் வேற்றுமை யில்லையாயினும் தரும தருமித் 
தன்மைபற்றி வேற்றுமை யுண்டென்பதைக் கூறிவிட்டு இவ்விடயத்தைக்கூட்டி முடிக்கின்றார்.

(301)     இந்தச் சத்தியானது பரமசிவனோடு பிரிக்க முடியாத அபின்னத்திலிருந்தும் சூரியனுடைய 
கிரணம் போல் நிர்மலமாயும் சுபாவசித்தமாயும் பரமசிவனைப் பற்றுக்கோடாய்க் கொண்டதாயும் 
வேறாயுமிருக்கின்றது என்பதாம். (301 )

    (அ-கை) பரமசிவன் விந்துவென்னும் சடசத்தியினாலேயே காரியத்தைச் செய்யட்டும்; 
சிற்சத்தியினால் யாது பயனென்பார்க்குக் கூறுகின்றார்.

(302)     இந்தப் பரமேசுவரன் தன்னினின்றும் மிக வேற்றுமையை யுடையதான விந்துவென்னும் 
சத்தியைக் கொண்டு ஒருபொழுதும் ஒரு பொருளையும் செய்கின்றானில்லை. அறிகின்றானில்லை 
என்பதாம்.

    (உரை) விந்துவானது முதற்காரணமாயிருப்பது பற்றி வெளிச் சாதனமா யிருத்தலாலும்
முதற்காரணமாயிருப்பது பற்றியே அசேதனப் பொருளாயிருத்தலாலும், சித்து ரூபமாயும் தன்னிடத்தில் 
சமவாயச் சேர்க்கையால் இருக்கின்றதாயுமுள்ள சத்தியையின்றி விந்து முதலிய பொருள்களை விடயமாகச் 
செய்வதற்கும் அவற்றைக் கலக்கஞ் செய்வதற்கும் சிவன் சமர்த்தனாகின்றானில்லை . உலகத்திலும் 
குலாலன் முதலியோர் சிற்சத்தியோடு கூடியே கடம் முதலிய காரியங்களைச் செய்கின்றவர்களாகக் 
காணப்படுகின்றன ராகையாலென்க. (302)

    (அ-கை.) அவ்வாறாயின் சத்தியையின்றிப் பரமசிவனுக்கு ஒரு காரியத்தையுஞ் செய்யுந் 
தன்மை இல்லாமையால் இந்தச் சத்தியே உலகத்திற்கு நிமித்த காரணமாக விருக்கட்டும்.  பெரியோர்களும் 
"சத்தியே யாதொரு உன்னையின்றிப் பரமசிவனும் சருவஞ்ஞனாயில்லையோ அத்தகைய உன் 
பொருட்டு நமஸ்கார" மென்று சத்தியைப் புகழ்ந்திருக்கின்றனரெனில், அது பொருந்தாது. 
எதனாலெனில், சத்தியானது தருமமாகையால் அது தருமியைவிட்டு இராமையால் அச்சத்திக்குத் 
தருமியாகச் சங்கற்ப மாத்திரத்தால் உலகத்திற்குக் கருத்தாவான பரமசிவன் நிச்சயமாய் 
வேண்டுமென்று கூறுகின்றார்.

(303)      ஒருவிதமான விசேடமற்றவனாயிருந்தும் பரமசிவனே உலகத்திற்கு நிமித்த காரணனா 
யிருக்கின்றானென்பதாம். (303)

    (அ--கை)  இனி, கருத்திரு சத்திக்கு உபசாரமாய்க் கூறப்பட்ட வேற்றுமை விஷயத்தில் உபாதியாயுள்ள
காரியங்களின் வேறுபாடு உண்மையென்று  கூறுகின்றார். 

(303இ)     காரிய வேறுபாடானது காரியங்களின் அவத்தை வேறுபாட்டால் நிகழ்கின்றது என்பதாம். (303இ )

    (அ--கை.) இதனையே விரியாய்க் கூறுகின்றார். 

(304-305)      ஒடுங்கிய காரியங்களையுடையதாயும் சிவசத்தியா லேவப்பட்டதாயுமிருக்கும் விந்துவானது 
சிருட்டியின் பொருட்டும் நிலைத்தலின் பொருட்டும் படைக்கப்பட்ட உலகத்தின் ஒடுக்கத்தின் பொருட்டும் 
அவத்தையின் வேறுபாட்டை யடைந்து நீண்ட நாளாக இருக்கும்படி செய்யப்பட்ட உலகத்தையுடையதாய்ப் 
பிரவிருத்திக்கின்றது என்பதாம்.    (304-305)

    (அ--கை)    இவ்விஷயத்தையே திருட்டாந்த முகத்தால் காட்டுகின்றார்.

(306)     எவ்வாறு மண்ணானது வேறுவிதமான அவத்தையால் கடத்தைத் தோற்றுவிக்கின்றதோ, 
அவ்வாறே இந்த விந்துவும் தோற்றுவிக்கின்றது என்பதாம் (306)

(307-309)      (அன்றியும்) இந்த விந்துவானது பரமசிவன் விகாரமற்றவனாயிருந்தும் 
அவனிடத்தில் அவனுடைய சத்தியால் கலக்கஞ் செய்யப்பட்டதாய் அந்தந்த விருத்தி விசேடத்தால் 
காரிய வேறுபாட்டின் பொருட்டுச் சேருகின்றது. பரமசிவனும் தான் ஒருவிதமான விகாரமில்லாதவனா
யிருந்தும் மேலே கூறப்பட்ட முறையாகத் தோன்றுவனவாயும் அவத்தை வேறு பாட்டால் 
உண்டானவை யாயுமிருக்கும் படைத்தல் முதலிய காரியங்களைச் சூரியன் விகாரமற்றவனாயிருந்து 
தாமரைகளை மலரச் செய்வதுபோலச் செய்கின்றான் என்பதாம். (307-309)

    (அ--கை.) ஆனால் அந்தப் பரமசிவன் என்ன பயனைக்கருதி படைத்தல் முதலிய தொழில்களைச் 
செய்கின்றானென்பார்க்குப் பசுக்களுக்கு அனுக்கிரகஞ் செய்வதின்பொருட்டுச் செய்கின்றானென்று 
கூறுகின்றோம். அவ்வாறாயின் பரமசிவன் அனைவருக்கும் அனுக்கிரகஞ் செய்யவேண்டியதாயிருக்கச் 
சிலர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கின்றான். சிலர்களுக்குக் கொடுக்கவில்லை. இவ்வாறு செய்வது 
அவனுடைய இயல்பானால் அப்பொழுது சில ஆன்மாக்களிடத்தில் விருப்பும் சில ஆன்மாக்களிடத்தில் 
வெறுப்புமுடையனாகின்றா னென்பார்க்குக்  கூறுகின்றார்.

(310-311)      எவ்வாறு சூரியனானவன் தான் ஒருவிதமான விகாரமற்றிருந்தும், விருப்பு வெறுப்பற்று, 
மெழுகை உருகவும் மண்ணை உலரவும் செய்கின்றானோ, அவ்வாறே பரமசிவனும் தான் ஒருவிதமான 
விகாரமற்றவனாயிருந்தும் புண்ணிய பாவரூபமான வினைகளின் ஒப்பையடைந்த ஆன்மாக்களுக்கு 
மோக்ஷத்தையும் அந்த இருவினை யொப்பைப் பெறாத ஆன்மாக்களுக்குப் பந்தத்தையுஞ் 
செய்கின்றானென்பதாம்.

    (உரை) பரமசிவன் அனைவருக்கும் அனுக்கிரகஞ் செய்கின்றானென்பது உண்மையே. 
ஆயினும் அவனுக்கு விருப்பு வெறுப்பு கிடையா. எதனாலெனில், அனாதியே மலமற்றவனா 
யிருத்தலாலென்க. உரிமை இருப்பதுபற்றி ஆன்மாக்களுக்கே பந்தமோக்ஷங்களுக்குக் கருத்தாவாயிருக்குந் 
தன்மை யிருக்கின்றது. ஆகையால் எவ்வாறு சூரியன் தானொருவனாய் விகார மடையாமலிருந்து தனது 
சன்னிதானத்தால் உருக உரிமையுடைய மெழுகுக்கு உருகுதலையும், உலர உரிமையுடைய மண்ணுக்கு 
உலர்தலையும் செய்கின்றானோ, அவ்வாறே பரமசிவனும் மோக்ஷத்திற் குரியவர்களான மலபரிபாகமுடைய 
ஆன்மாக்களுக்கு மோக்ஷத்தைச் செய்கின்றான். பந்தத்துக் குரியவர்களான மலபரிபாகமில்லாத 
ஆன்மாக்களுக்கு மலபரிபாகம் நிகழ்வதின் பொருட்டுப் பந்தத்தைச் செய்கின்றான். 

    இவ்வாறு கொள்ளின் ஒரு விதமான முரணுதலுமில்லாமை காண்க. இவ்விடத்தில் புண்ணியம் 
பாவமென்னுஞ் சொல்லால் எவனொருவன் உபகாரத்தில் மகிழாமலும் அபகாரத்தில் வெகுளாமலும் 
எல்லாவுயிர்களிடத்தும் ஒரேவிதமாயிருக்கின்றானோ அவனே சீவன் முத்தனென்று கூறப்படுகின்றானென்ற 
நீதியை அனுசரித்து உபகாரம் அபகாரமென்னும் இரண்டு கன்மங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறான 
உபகாரம் அபகாரமென்னு மிவற்றிற்கு மலபரிபாகத்தால் ஒப்பு நிகழவே மோக்ஷம் நிகழ்கின்றது. 
அவற்றின் ஒப்பு இல்லையாயின் பந்தம் நிகழ்கின்றதென்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றிப் 
புண்ணியம் பாவமென்பது அசுவமேதம் பிராமணக்கொலை முதலியனவென்றும், ஒப்பு என்பது 
அவ்விரண்டின் ஒப்பு யென்றும் பொருள் கொள்ளுதல் கூடாது. 

    எதனாலெனில், சாத்திர விரோதமாதலாலும், அசுவமேதம் பிராமணக் கொலை முதலிய 
கன்மங்களூக்கு ஒப்பு சம்சாரவத்தையிலும் இருக்கின்றமையாலும், அந்தக் கன்ம ஒப்பு கன்ம நாசத்தினாலேயே 
உண்டானதாயிருத்தலால் மோக்ஷத்திற்குக் காரணமாகாமையாலும், முன்னர்க் கூறப்பட்ட கன்ம ஒப்பு ரூபமான
குறியால் ஊகிக்கப்பட்ட மலபரிபாகமே தீக்கையின் வழியாய் மோக்ஷத்திற்குக் காரணமா 
யிருக்கின்றமையாலுமென்க. இன்னும் இது போன்றவற்றை நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் 
விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றமையால் அவ்விடத்துக் கண்டுகொள்க வென்க. (310-311)

(312)     ஒன்றுக்கொன்று விரோதத்தால் தடுக்கப்பட்ட பரிபாகமுடைய கன்மங்களுக்குச் 
சம்பந்தமேற்படுங்கால் அணுவினிடத்தில் சிவசத்தி விழுகின்ற தென்பதாம்.

    (உரை) ஒன்றுக்கொன்று மாறுதலான பயன்களையுடைய அசுவமேதம் பிராமணக்கொலை 
முதலிய புண்ணியபாவ ரூபங்களான கன்மங்களுக்காவது,  அல்லது சுவர்க்கலோகம், பிரமலோகம் 
என்னுமிவற்றைப் பயன்களாகக்கொண்ட புண்ணிய ரூபமான கன்மங்களுக்காவது, அல்லது அவீசீனம் 
ரௌரவம் என்னும் நரகங்களைப் பயனாகக்கொண்ட பாவரூபமான கன்மங்களுக்காவது 
ஆன்மாவினிடத்தில் சம்பந்தமிருப்பின், அந்த ஆன்மாவினிடத்தில் சிவத்தன்மையைக் 
கொடுப்பதாயும், அனுக்கிரகஞ் செய்வதாயுமுள்ள சிவசத்தியானது விழுகின்றதில்லை. 

    எதனாலெனில் அனுக்கிரகஞ் செய்யுஞ் சத்தியானது மலபரிபாகம் நிகழ்ந்த பின்னர்த்தான் 
விழுகின்றதாகச் சாத்திரங்களில் கேட்கப்படுதலாலென்க. அன்றி, திரோதான சத்தியே நியதியின் 
வழியாய் மாறுபட்ட கன்மங்களுடைய நாசத்தின் பொருட்டு விழுகின்றது. அவ்வாறே மதங்காகமத்தில், 
புண்ணிய பாவங்களுக்குப் பரிபாகமேற்படுங்கால் என்ற தொடக்கத்தால், மலபரிபாகத்தை         
இன்றியமையாத தீக்ஷைக்கே கன்ம நாசத்தின்வழியாய் மோக்ஷத்திற்குக் காரணமாயிருக்குந் 
தன்மை கூறப்பட்டிருத்தல் காண்க. 

    இவ்வாறே கிரணாகமத்திலும் எந்தப் பிராரத்த கன்மத்தால் அநேகம் பிறவிகளில் சம்பாதிக்கப்பட்ட 
கன்மமும் வருங் கன்மமும் வறுத்த வித்துப் போல் தடைசெய்யப்பட்டிருக்கின்றனவோ, அந்தக் கன்மமும் 
போகத்தால் நசிக்கின்றதென்று கூறப்பட்டிருக்கின்றது. மலபரிபாகம் நிகழ்ந்த பின்னர் அனுக்கிரக 
சத்தி விழுகின்றது என்க (312)

(313)     அந்தச் சிவசத்தி விழுந்தமாத்திரத்தில் நெருக்கமான மறைப்பினின்றும் விலகினவனாய் 
மலத்தாலுண்டாகிய கலக்கத்தினின்றும் நீங்கிய தனது சொரூபத்தைப் பார்க்கின்றானென்பதாம். 

    (உரை) மலமென்னும் மறைப்பினின்று நீங்கிய ஆன்மாவுக்குச் சருவஞ்ஞத்தன்மை முதலிய 
அவனது உண்மைச் சொரூபம் விளங்குகின்றதென்பது கருத்து என்க (313)

(313 இ)     எப்பொழுது சிவனுடைய இச்சாரூபமான சிவசத்தியால் சம்பந்திக்கப்பட்டானோ அப்பொழுதே 
முத்தனாகின்றா னென்பதாம் (313இ )

    (அ-கை.) தீக்ஷையென்னும் சிவசத்தியினால் சம்பந்திக்கப்பட்டவன் முத்தனாயிருந்தாலும் 
பிராரத்த பந்தத்தை நீக்குதற்காக அவன் கன்மங்களை அனுட்டிக்கின்றானென்று கூறுகின்றார்.

(314)     இந்த முத்தனும் நித்தியகன்மம் நைமித்திக கன்மமென்னும் இவற்றோடு மாத்திர 
மிருக்கின்றானென்பதாம். (314)

(315)     (அந்த முத்தர்களுள்ளும்) மிகத்தீரர்களான சிலர் இந்தச்சரீரத்துடனேயே மேலான 
வியாத்தியை யடைகின்றனர். அவர்கள் மிகப்பெருமை வாய்ந்த சிவயோகிகளாவரென்பதாம்.

    (உரை) யோகாப்பியாசத்தால் இவ்விடத்திலேயே சருவஞ்ஞத்தன்மை முதலியன 
அவர்களுக்குத் தோன்றுகின்றனவென்பது கருத்து என்க (315)

    (அ-கை) எடுத்துக்கொண்ட விஷயத்தை அனுசரித்துச் சிவயோகியின் மகிமையைக் கூறுகின்றார்.

(316-316இ)     சிவயோகியானவன் தனது லீலையாக பார்வையாலும், வாக்காலும், காலாலும், கையாலும், 
நதிகள், கிராமங்கள், உத்தியானங்கள், பட்டணங்க ளென்னுமிவற்றைப் பரிசுத்தஞ் செய்கின்றான்.
 அவ்வாறாயின் சம்சாரத்திற்கு அஞ்சிச் சரண மடைந்தவர்களைக் காக்கும் விஷயத்தில் சொல்ல 
வேண்டியதில்லை என்பதாம். (316-316இ)

    (அ-கை.) இனி இந்தப் பிரகரணஞ்செய்த ஆசிரியர் தனது குருவுக்கு நமஸ்காரத்தைச் செய்கின்றார்.

(317-318)     மிகப் பிரசித்தி பெற்றவராயும், அதிகமான பலன்களைத் தரக்கூடிய யோக இரத்தினங்களுக்கு 
இருப்பிடமாயும், சிவயோகியாயுமிருக்கும் எனது குருவின் பொருட்டு நமஸ்கரிக்கின்றேன் என்பதாம் (317-318)

    (அ--கை,) இனி இந்தப்பிரகரணம் இன்னாரால் செய்யப்பட்டதெனக் கூறுகின்றார்.

(319)     ஸ்ரீ ராமகண்டரால் செய்யப்பட்ட ஆலோகமென்னும் வியாக்கியானத்தால் நிர்மலமாகச் 
செய்யப்பட்ட மனதையுடைய ஸ்ரீ கண்டரென்னும் வித்துவானால் இந்த இரத்தினத் திரயங்களின் 
பரீக்ஷை செய்யப்பட்டது என்பதாம். 

    (உரை) இராமகண்டருடைய அழகான விருத்தியை அனுசரித்து என்னால் மூன்று இரத்தினங்களுடைய 
ஆராய்ச்சி சுருக்கமாய்ச் செய்யப்பட்டது என்க. (319)

    அழகிய சொற்களையுடையவராயும் கவிகளுக்கெல்லாம் மேற்பட்டவராயுமுள்ள யாதொருவரால், 
மதுரம் பொருந்திய ஆச்சரிய சாரமென்னும் நூலும், பாஷண்டாபஜயம் என்னும் நூலும், பக்தப் பிரகாசம் என்னும் 
நூலும், நாட்டியாப்புயதயம் என்னும் நூலும், சிவாகமங்களுக்கு அநேகம் விருத்திகளும் செய்யப்பட்டனவோ, 
அத்தகைய அகோர சிவாசாரியரால் இந்த இரத்தினத் திரயத்திற்கு உல்லேகினி என்னும் கடைதலும் 
நன்றாய்ச் செய்யப் பெற்றது என்க.

        இரத்தினத்திரயம் மூலமும் விருத்தியுரையும் முற்றுப்பெற்றன.

            சிவபெருமான் றிருவடி வாழ்க.

 

Related Content

தத்துவப் பிரகாசிகை மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விரிவுரைய

பரமோக்ஷ நிராச காரிகை மூலமும் விருத்தியுரையும்