logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

போககாரிகை மூலமும் விருத்தியுரையும்

சிவமயம்

ஸ்ரீ சத்தியோஜ்யோதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்ற

ஸ்ரீ அகோர சிவாசாரியாராலியற்றப்பெற்ற

போககாரிகை விருத்தியுரையும்

            (தமிழ் மொழிபெயர்ப்பு)

                       உரைமங்கலம்.

(1)     போக மோக்ஷங்களை அளிப்பவரான சிவபெருமானை நமஸ்கரித்து மந்தாதிகாரிகளின் 
நன்மையின் பொருட்டுப் போக காரிகை யென்னும் நூலுக்குச் சிறிது விளக்கமான உரையைச் 
செய்கின்றேன் என்பதாம். (1)

            நூல் மங்கலம்

    (அவதாரிகை) பூசிக்கப்படுபவரான சத்தியோ ஜ்யோதி சிவாசாரியார் இப்பிரகரணத்தில் 
கூறப்படும் போக மோக்ஷ ரூபமான பொருள்களின் குறிப்புடன், நூல் விக்கினமின்றி முடியும் பொருட்டு 
முதலாவது பரமசிவனை நமஸ்கரிக்கின்றார்.

            மூலம்

(1-2)     மூன்று பந்தங்களையுடைய ஞான சொரூபமான ஆன்மாக்களுக்குக் கலையினுடைய 
சேர்க்கையால் போகத்தையும் அதன் நீக்கத்தால் மோக்ஷத்தையுங் கொடுக்கிறவராயும், காலம்
மூன்றனையும், பொருள்களனைத்தையும் அறிபவராயும், பிறவியற்றவராயும், விகாரமில்லாதவராயுமுள்ள 
பரமசிவனை நமஸ்கரித்துச் சாதகர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு யுத்தியினால் நிர்ணயஞ் 
செய்யப்பட்டவையாயும், ரௌரவாகமத்தினால் சித்தித்தவையாயும், சாதனங்களுடன் கூடினவையாயும் 
உள்ள போக மோக்ஷங்களை ரௌரவாகமத்தை அனுசரித்தே சிறிது கூறுகின்றேனென்பதாம். 

            உரை .

    மூன்று பந்தங்களாவன, மல கன்ம மாயைகள். இவை எவர்களுக்கிருக்கின்றனவோ 
அவர்களே மூன்று பந்தங்களையுடையவர்கள். அந்த மூன்று பந்தங்களையுடைய சகல வருக்கத்து 
ஞான சொரூபமான ஆன்மாக்களுக்குச் சூக்கும தேகத்தை யுண்டு பண்ணக்கூடிய கலை முதல்
பிருதிவி ஈறான தத்துவ ரூபமாயும், அந்தந்தப் புவனங்களினின்றுண்டான தேகரூபமாயுமுள்ள 
மாயையைச் சார்ந்த அவயவங்களுடன் சேர்க்கையால் போகத்தையும், இவற்றின் நீக்கத்தால் 
மோக்ஷத்தையும் கொடுக்கிறவரென்றதனால் சிவன் அனாதி முத்தனென்பது பெறப்படும். 

    அதுபற்றி அனைவருக்கும் அநுக்கிரகஞ் செய்யுந் தன்மையும், எவற்றிற்குங் 
கருத்தாவாயிருக்குந் தன்மையும் சிவனுக்குள்ளன வென்பது குறிப்பிக்கப்படுகின்றது. 
அதுபற்றிய அவர் இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் காலங்களையும், அவ்வவக் காலங்களி 
லுண்டாகும்  எல்லாப் பொருள்களையும் அறிகின்றவராகின்றார். இவ்வாறு கூறியவாற்றால் 
சிவன், நின்மலன், சர்வகருத்தா வென்பது பெறப் படுதலால் எப்பொழுதும் இவருக்கு 
எல்லாவற்றையும் அறியுந் தன்மை இருக்கின்றதென்பது கூறப்படுகின்றது. இன்னும் சிவன் 
நின்மலனா யிருப்பதினாலேயே சரீர முதலியவற்றின் சம்பந்த ரூபமான பிறவியற்றவராயும், 
விகாரமில்லாதவ ராயுமிருக்கின்றார். 

    விந்து முதலியவற்றிற்குப் போலப் பரிணாமியாயிருக்குந் தன்மை இவருக்கில்லை. 
விகாரியாயிருக்கிறாரென்று கூறில்  ஈசுவரனுக்குச் சடத்தன்மை யுண்டென்பது சித்திக்கும். 
முதலாவது சுலோகத்தில் இத்தகைய சிவபெருமானை நமஸ்கரித்து என்று எச்சமாகக் கூறி 
இரண்டாவது சுலோகத்தில் போக மோக்ஷங்களைக் கூறுகின்றேனென்று முடிக்கின்றார். 

    போகமோக்ஷங்களைச் சாதித்துக் கொடுத்தல் பற்றிச் சாதகரென்னும்  பதத்தால் 
ஆசிரியர் முதலியோரையுங் கொள்ளல் வேண்டும். அவர்களுக்குப்போக மோக்ஷங்களுக்குச் 
சாதனங்கள் தீக்ஷை முதலியவை யென்பது அறிவித்தற் பொருட்டு யுத்தியினால், அதாவது 
அனுமானத்தால் நிச்சயிக்கப்பட்டவையாயும், ரௌரவாகமத்தினால் சித்தித்தவையாயும், 
சாதனத்துடன் கூடினவை யாயுமுள்ள போக மோக்ஷங்களை ரௌரவத்தை அனுசரித்தே 
சுருக்கமாகக் கூறுகின்றேன் என்றாரென்க. (1-2)
        
                நூல்

    (அ-கை) சாதனத்துடன் கூடின போகத்தை யறிவித்தற்பொருட்டு, போகத்தில் அதிகாரம் 
இத்தன்மையருக் குண்டெனக் கூறுகின்றார்

(3)     மலத்துடன் கூடியிருத்தலால் ஈசனாலேவப்படுந் தன்மையுடைய ஆன்மாக்களுக்குச் 
சம்சார நிலையில் கன்மத்தை அனுசரித்துப் போகத்தில் ஆசையுண்டாகிறது என்பதாம்.

    (உரை) மலத்துடன் கூடியிருத்தலால், ஈசனாலென்றவற்றால், அதிகாராவத்தையிலிருக்கும் 
சிவனால் அனந்தர் வாயிலாக போகத்துடன் கூடியிருக்கும் ஆன்மாக்களுக்கு மலம் காரணமாக 
சம்சார நிலையில் கன்மங்களின் பக்குவத்திற்கு ஏற்பப் போகத்தில் இச்சையானது உண்டாகின்றதென்பது 
அறிவிக்கப்பட்டது.  சாங்கியர்கள் ஆன்மாவை நின்மலனாகக் கூறுகின்றனரே எனில், அது பொருந்தாது. 
ஆன்மா நின்மலனாயின் அவனுக்குப் போகத்தில் பற்றுதல் கூடாது. நின்மலனுக்கும் பற்றுதல் உண்டென்று 
கூறின் முத்தனுக்கும் போகத்தில் ஆசையுண்டாகவேண்டும் . ஆசைக்குக் காரணம் மலமன்று. 
அராகமேயெனில், அஃதுண்மையே. ஆயின், அராகமும் மலமுள்ளவனுக்குத்தானுண்டு. இதற்குப் பிரமாணம் 
" புருடனுக்கு மலமில்லையாயின் போகத்தில் ஆசையானது எதனால் நிகழும்." என்னும் 
சுவாயம்புவாகமமே யாகுமென்க. (3)

    (அ-கை) பின்னர் போகமென்பது எது? அது எந்தச் சாதனங்களால் அடையப்படுகிறதென்பதைப் 
பற்றிக் கூறுகின்றார்.

(4)     ஈசுவரனுடைய இச்சையினால் கலக்கப்பட்ட ஜகத் பீஜத்தினின்றுண்டான சாதனங்களால் 
யாதொரு போகமானது சாதிக்கப்படுகின்றதோ, அந்தப் போகமானது ஆன்ம சைதன்னியத்திற்குப் 
புத்தியின் வியாபாரத்தாலுண்டாகும் ஆசையின்  ரூபமாக இருக்கின்றது என்பதாம்.

    (உரை) ஈசுவரனென்பது இவ்விடத்து அனந்த தேவரைக் குறித்தது. அவருக்கே மாயையைக் 
கலக்குந் தன்மையுண்டு . "சுத்தாத்துவாவிற் சிவனும்  அசுத்தாத்துவாவி லனந்தரும் கருத்தா"  என்று 
கிரணாகமத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது. அவருடைய இச்சையினால் கலக்கப்பட்ட ஜகத்பீஜமென்பது 
அசுத்தமாயை யாகும், அந்த மாயையினின்றுண்டான சிறப்பான சூக்கும தேக ரூபமாயும், பொதுவான 
புவனமுதலிய ரூபமாயும், பொதுச் சிறப்பான தூலதேக ரூபமாயும் உள்ள சாதனங்களால் யாதொரு 
போகம் உண்டுபண்ணப் படுகின்றதோ, அந்தப் போகமானது சுகதுக்க மோகமென நிச்சயிக்கும் 
ரூபமான புத்தி வியாபாரத்தால் ஆன்ம சைதன்யத்திற்கு ஆசையின் ரூபமாக இருக்கின்றது. 

    ஆசையாவது, சுகத்தை நிச்சயிக்கும் ரூபமான புத்தி வியாபாரத்திலிருக்கும் ஞானம் .
ஞானமாவது சுகானுபவமே. புத்தி விருத்தியில் ஆன்மாவிற்குப் பிரதி பிம்பங் கிடையாது. 
உண்டென்று கொள்ளின் பரிணாம தோஷம் நிகழும். இவ்வாறே சுவாயம்புவத்திலும் "போகமாவது 
சுக துக்கங்களை அறிவிக்கும் புருடனுடைய ஞானம்” என்று கூறப்பட்டிருக்கிறது என்க. (4)

    (அ--கை) பூதங்கள் போகத்திற்குச் சாதனமென்று கூறுகின்றார்.

(5)     காரணமான தன்மாத்திரைகளால் விருத்தியடைந்த பூமி, ஜலம், அக்கினி, வாயு, ஆகாசங்க
ளென்னுமிவை, இவற்றின் குணங்களும், விருத்திகளும், இந்திரியங்களுக்கு ஆதாரமாயிருக்குந் தன்மையும்
 ஆகிய இவற்றால் போகத்திற்கு அங்கமாயிருக்கின்றன என்பதாம்.

    (உரை) இவ்விடத்தில் பூமிமுதலிய பூதங்களினுடைய குணமுதலியவையே அந்தப்பூதங்களுக்குப் 
போகத்திற்கு அங்கமாயிருக்கும் தன்மையைச் சாதித்துக் கொடுக்கின்றன. அவற்றுள், குணங்கள் 
கந்தமுதலியன. விருத்திகள் தரித்தல் முதலியன. இவை பின்னர் விளக்கமாய்க் காட்டப்படும். 
ஆகவே குணங்கள், விருத்தி, இந்திரியங்களுக் காதாரமாயிருக்குந் தன்மையென்னு மிவற்றால், 
பூமி முதலிய பூதங்கள் போகத்திற்குச் சாதனமா யிருக்குந் தன்மையை யடைகின்றன வென்பது 
கருத்து. 

    பூமி முதலியன எத்தன்மையுடையவை யென்பது அறிவித்தற்குக் காரணமான தன்மாத்திரைகளின்            
கூட்டத்தால் விருத்தி செய்யப்பட்டனவென்றார். செய்யப்படாததைச் செய்தலும், செய்ததை விருத்தி செய்தலும்
 முதற்காரணத்தின் றொழிலாதலால், காரணமான தன்மாத்திரைகளால் பூதங்கள் விருத்தி செய்யப்பட்டனவாம்.

    இந்தப் பூதங்கள் தமக்குக் காரணமான தன்மாத்திரைகளுடன் கூடி தூலமாயும், சூக்குமமாயும், 
இந்திரியங்களுக்கு ஆதாரமாயிருக்கின்றன. இவ்வாறே "தன்மாத்திரைகள் கடம் போலும், மகா பூதங்கள் 
பூச்சுப்போலும் இருக்கின்றன"  என்று மதங்கத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது. இந்தப் பத்துக் காரியங்களும் 
கரணங்களுடன் சேர்ந்து தொழிற்படுகின்றன.  கரணங்களுக்குத் தானே தொழிற்படுஞ் சாமர்த்திய மின்மையால் 
இந்தப் பத்துக் காரியங்களையும் ஆதாரமாகக் கொண்டே தொழிற்படுகின்றன வென்பது தத்துவ 
சங்கிரகத்திலுங் கூறப் பட்டிருக்கின்றது. (5)

    (அ-கை.) இவ்வாறாகவும் சூக்கும தேகத்திலிருக்கும் பூதங்களுக்கு இந்திரியங்களுக் காதாரமாயிருக்குந் 
தன்மையும், தூல தேகத்திலிருக்கும் பூதங்களுக்கு விருத்தி செய்யுந் தன்மையும் பொதுவாயிருப்பினும், 
அந்தப் பூதங்களுக்குத் தரித்தல் முதலியன சிறப்பான தொழில்களெனக் கூறுகின்றார்.

(6)     கரணங்களுக்கு ஆதாரமாயிருக்குந்தன்மை சித்தித்திருக்கும்பொழுது தரித்தல், சேர்த்தல், 
பாகஞ்செய்தல், அவயவங்களைத் திரட்டல், இடங்கொடுத்த லென்னுமிவை பூமி முதலியவற்றின் 
தொழில்களாக இருக்கின்றன என்பதாம்.

    (உரை) அவற்றுள், தரித்தல் பூமியின்றொழில்.  சேர்த்தலாவது உண்டையாகச் செய்தல். 
இது ஜலத்தின்றொழில். பாகஞ் செய்தல் அக்கினியின்றொழில், அவயவத்தைத்திரட்டல் 
வாயுவின்றொழில். இடங்கொடுத்தல் ஆகாயத்தின்றொழிலென்க. (6)

    (அ--கை) பின்னர்ச் சூக்கும தேக ரூபமாக இந்திரியங்களுக் காதாரமாயிருக்குந்தன்மை 
பூமிமுதலிய பூதங்கட்குப் பொதுவெனக் கூறுகின்றார்.

(7)     ஆதி வாகிகமான தேகத்திலிருந்து கொண்டே இந்திரியங்கள் தொழிற் செய்கின்றன. 
அந்த இந்திரியங்கள் புருடார்த்தத்தைக் கொடுக்கின்ற கன்ம வசத்தால் புருடனுக்குப் போகத்தை 
யுண்டுபண்ணும் பொருட்டு ஒரு யோனியிலிருந்து மற்றொரு யோனியை யடைகின்றன என்பதாம்.

    (உரை) ஆன்மாக்களுடைய கன்மங்களைப் போகானுபவத்தால் நாசஞ் செய்வது பற்றி 
ஆதிவாகிக சப்தத்தால் சூக்கும தேகத்தைக் கொள்ளல் வேண்டும். ஆதிவாகிக மென்பது, நாசஞ் 
செய்வதென்னும் பொருள் குறித்தது. அந்தச் சூக்கும தேகத்திலிருந்து கொண்டே இந்திரியங்கள் 
தொழிற்செய்கின்றது. இந்திரியங்களுக்குச் சாமர்த்தியமின்மையால் பற்றுக்கோடின்றித் 
தொழிற் செய்யாது. அதுபற்றிச் சூக்கும தேகத்திலிருக்கும் பூதங்கள் தன் மாத்திரைகளென்னு
 மிவற்றை ஆதாரமாகக் கொண்டே இந்திரியங்கள் தொழிற் செய்கின்றனவெனக் கூறப்பட்டது. 

    அன்றியும் அந்தச் சூக்கும தேகத்திலிருக்கும் இந்திரியங்கள் புருஷார்த்தத்தைக் 
கொடுக்கக்கூடிய கன்ம வசத்தால் அதே புருஷனுக்குப் போகத்தை யுண்டுபண்ணுதற் பொருட்டு 
ஒரு யோனியினின்றும் பிறிதொரு யோனியை யடைகின்றன. தத்துவ சங்கிரகத்திலும் 
“பூமி முதல் கலை யீறான தத்துவக்கூட்டம் ஒவ்வொரு உயிர்தோறும் இன்றியமையாதிருந்துகொண்டு 
கன்மத்துக் கீடாகப் புவனத்திலிருந்தும் உண்டான தூல தேகங்களில் சஞ்சரிக்கின்றது." எனக் 
கூறப்பட்டிருக்கின்றது. (7) 

    (அ-கை) இந்தச் சூக்கும தேகம் சூக்குமமாயிருத்தல் பற்றிப் பிசாசுகள்போல் நம் 
போன்றவருக்குத் தோன்றாது. ஆனால் யோகிகளின் பிரத்தியக்ஷத்தால் அறியத்தகுந்தது 
எனக் கூறுகின்றார்.

(8)     இந்திரியங்களுக் காதாரமான இந்தச் சூக்கும தேகம் பிரத்தியக்ஷத்தால் அறியத்தகுந்ததில்லை. 
சாமர்த்தியமில்லாதார் பிசாசுகளை அறிய முடியாதவாறுபோலு மென்பதாம். (8)

    (அ-கை) பூதங்களின் குணங்களைக் கூறுகின்றார்.

(9-11)     பூமியில் கந்த குணமிருக்கின்றது. ஆறுவித சுவையுண்டு. பூமி, ஜலமென்னு மிவற்றில் 
இரதமிருக்கின்றது.  பூமி, ஜலம், அக்கினி என்னுமிவற்றில் உருவமிருக்கின்றது. பூமியில் வெளுப்பு 
முதலிய பேதத்தால் அனேகவிதமான உருவமிருக்கும். ஜலத்தில் வெளுப்பு ரூபமொன்றே. 
அக்கினியில் பிரகாசிக்கும் ரூபமிருக்கும். பூமி வாயு வென்னுமிவற்றில் தட்ப மின்மையான 
பரிசமும், வெப்பமின்மையான பரிசமுந் தனித்தனி யிருக்கின்றன. ஆனால் அவை முறையே 
பாகத்தாலுண்டாம் பரிசம், பாகமின்மையாலுண்டாம் பரிசமென்னும் பேதத்தால் வேறுபடுகின்றன. 
ஜலத்தில் சீதள பரிசமும், அக்கினியில் உஷ்ண பரிசமுமுண்டு. பிருதிவி முதலிய பூதங்களா 
லுண்டுபண்ணப்பட்டது சத்தம். அது பிருதிவி முதலிய நான்கினுமிருக்கும். ஆகாயத்தில் எதிரொலி 
வடிவாயிருக்கும். இவ்வாறு வித்துவான்கள் கூறுகின்றனரென்பதாம்.

    (உரை) அவற்றுள், கந்தம் நறுநாற்றம் தீநாற்றமென இருவகையாகப் பூமியிற்றானுண்டு. 
இரதம், பூமி ஜலமென்னும் இவற்றிலுண்டு. பூமியில் உறைப்பு, புளிப்பு, கைப்பு, தித்திப்பு, கசப்பு, துவர்ப்பு 
முதலிய ஆறுவகை இரதமுமுண்டு.  ஜலத்தில் தித்திப்பு ஒன்றுதான். உருவம் பூமி, ஜலம், அக்கினி 
என்னும் மூன்றினுமுண்டு. பூமியில் வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என்னும் 
உருவங்களிருக்கின்றன.  ஜலத்தில் வெண்மையொன்றுதானுள்ளது. அக்கினியில் பிரகாசிக்கும்
 ரூபமிருக்கின்றது. வாயுவில் பரிசமிருக்கின்றது. 

    பூமி, வாயுவென்னுமிவற்றில் குளிரின்மையான பரிசமும், வெப்பமின்மையான பரிசமும் 
உண்டு. பூமியிலிருக்கும் பரிசம் பாகத்தாலுள்ளது.  வாயுவிலிருக்கும் பரிசம் பாகமின்மையாலுள்ளது. 
பூமி, வாயுவென்னும் இரண்டினுமுள்ள பரிசத்திற்கு வேற்றுமை பாகமுண்மையும் பாகமின்மையுமேயாம். 
பரிசத்திற்குக் கூறிய இவ்வேற்றுமையை உபலக்கணமாக வைத்துக்கொண்டு பூமியின் குணங்களான 
உருவ முதலியவையும் பாகத்தாலுள்ளன வென்று கொள்ள வேண்டும். நீரில் தட்பமென்னும் 
பரிசமொன்றுதான் இயல்பாகவுள்ளது. நெருப்பில் வெப்பமென்னும் பரிசந்தானுள்ளது. 
சத்தம் பூமி முதலிய நான்கினும் இருக்கின்றது. பூமி முதலிய திரவியங்களில் ஒன்றுடனொன்று 
அடிபட்டுச் சத்தமுண்டாகின்றது. ஆகாசத்தில் எதிரொலி வடிவாகவிருக்கின்றது.

    வைசேடிகர் சத்தத்துக்குப் பற்றுக்கோடான பேரிமுதலிய வற்றினும் வேறான ஆகாயத்தில் 
சத்தங் காணப்படுதலால், ஆகாசத்திற்கு மாத்திரந்தான் சப்தகுண முண்டென்று கூறுகின்றனர். 
அது பொருந்தாது. பிரத்தியக்ஷம் ஆகமமென்னும் பிரமாணங்களுடன் முரணுதலால் வைசேடிகர் 
கூறிய ஏது, பாதிதமென்னும் குற்றத்தால் கண்டிக்கப்படுகின்றது. பேரி முதலியவற்றிலுண்டாகும் 
சத்தமும், அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டுதான் உண்டாகின்றது. அன்றியும், பூமியில் 
கடகடவென்றும், நீரில் சலசலவென்றும், நெருப்பில் தமதமவென்றும், வாயுவில் சகசகவென்றும், 
ஆகாயத்தில் எதிரொலி ரூபமாயும் சப்தமிருக்கின்றது. 

    வைசேடிகரால் கூறப்பட்ட கொள்கையின் மறுப்பு மிருகேந்திர விருத்தி தீபிகையில் 
விரிவாகக் கூறியிருக்கின்றோம். மிருகேந்திரத்திலும் "சப்தம் ஐந்து பூதங்களிலும், பரிசம் நான்கு 
பூதங்களிலும், சீதளமின்மையான பரிசமும், உஷ்ணமின்மையான பரிசமும்,  பூமி வாயுக்களிலும், 
சீதபரிசம் ஜலத்திலும், உஷ்ணபரிசம் அக்கினியிலும், பிரகாசிக்கும் ரூபம் அக்கினியிலும், 
வெண்மை ரூபம் நீரிலும், வெண்மை முதலிய அனேக ரூபம் பூமியிலும்,  தித்திப்பு இரதம் நீரிலும், 
ஆறுவகை இரதமும் நறுநாற்றம் தீநாற்றமும் பூமியிலும் உண்டென்று வித்துவான்களாற் 
கூறப்பட்டிருக்கின்றது.'' எனக் கூறப்பட்டிருக்கின்றது. (9-11)

    (அ-கை.) பூதசம்பந்தமாகக் கூறப்பட்ட விஷயத்தை முடித்துக் காட்டுகின்றார்.

(11இ)     இவ்வாறு கூறப்பட்ட கந்தம் முதலிய குணசமூகத்துடன் கூடின பிருதிவி முதலியவை 
உலகத்தில் பிரசித்தமாயுள்ளனவென்பதாம்.

    (உரை) கந்தம் முதலியவற்றிற்குப் பற்றுக்கோடாகப் பிருதிவி முதலியன உலகத்தில் 
பிரசித்தமாயுள்ளன. (11இ)

    (அ-கை.) இந்த ஐந்து பூதங்களும் நம்மனோருடைய வெளியிந்திரியங்களால் அறியப்படுங் 
குணத்தையுடையனவா யிருத்தல்பற்றிக் கடமுதலியவற்றிற்குப் போல் இப்பூதங்களுக்குக் 
காரியத்தன்மையுண்டென்பது சித்தித்தலால் அவற்றின் காரணமாக ஐந்து தன்மாத்திரைகள் 
சித்தித்தனவெனக் கூறுகின்றார். 

(12)     அனுமானத்தால்  தன்மாத்திரைகள் சித்தித்தன வென்பதாம். (12)

    (அ-கை.) இனி, குணங்களை யறிந்ததினாலேயே குணங்களினின்றும் வேறுபடாத குணிகளையும் 
அறிந்ததாக ஆகின்ற தென்பதைக் காட்டுதற்காகக் கூறப்பட்ட பூதங்களுக்குக் குணங்களினின்றும் 
வேறுபடாமலிருக்குந் தன்மையைச் சாதிக்கின்றார்.

(13)     குணங்களால் வேறுபாடடைந்த முன்னர்க் கூறப்பட்ட பிருதிவி முதலியன பலவிதமான 
இயல்பினையுடையன.  சுற்றப்பட்ட ஆடையிலுள்ள சித்திர ரூபம் எவ்வாறு முறையாக அறியத்தகுந்ததாக 
ஆகின்றதோ, அவ்வாறே பிருதிவி முதலியவையும் முறையாக அறியத்தகுந்தனவா யாகின்றனவென்பதாம்.

    (உரை) கந்தம் முதலிய குணங்களால் வேறுபாட்டையடைந்த பிருதிவி முதலியன தரை, கல், 
மலை, நதி, கடல் முதலியரூபமான வேறுபாட்டால் பலவிதமான இயல்பினையுடையனவாய்க் 
காணப்படுகின்றன. ஆதலால் இந்தப் பூதங்கள் மடிக்கப் பட்ட ஆடையிலிருக்கும் சித்திர ரூபம்போல் 
முறையாகவே அஃதாவது ஒவ்வொன்றாகவே அறியத்தகுந்தனவாக ஆகின்றன.  காணப்படுகின்ற 
உட்பிரிவால் வேறுபாடடைந்ததாயும் * சமீபத்திலுந் தூரத்திலுமிருப்பதாயுமுள்ள பிருதிவி முதலியவற்றின் 
சொரூபத்தை ஒரே சமயத்திலறியமுடியாது. இந்திரியங்களாலும் அனுமானத்தாலும் ஒவ்வொன்றாக 
அறியப்படுகின்றது (13)

* சமீபத்திலிருப்பது மண்ணுலகத்துள்ள பிருதிவி முதலியவற்றின் சொரூபம் தூரத்திலிருப்பது அப்புலோக 
முதலியவற்றிலுள்ள அப்பு முதலியவற்றின் சொரூபம்.

    (அ--கை) இவ்வாறு கூறியதன் கருத்து இன்னதெனக் கூறுகின்றார்.

(14)     இந்தப் பூதங்கள் முறையாக அறியத்தகுந்தமை பற்றிப் பலவிதமான ஞானங்களுக்கும், 
விசேடண விசேடியத் தன்மையைக் குறிப்பதற்கும் விஷயமாக ஆகின்றன என்பதாம்.

    (உரை) இந்தப் பூமி முதலிய பொருள்கள் முறையாக அறியத்தகுந்தமை பற்றி நறுநாற்றமுடைய 
பிருதிவி யென்பது முதலில் விசேடண விசேடிய ரூபமான ஞானபேதங்களுக்கும் விசேடண விசேடியத் 
தன்மையைக் குறிப்பதற்கும் விஷயங்களாக ஆகின்றன என்க. (14)

(15-15இ)     கந்த முதலிய குணங்களின் ஞானமின்றி பூமி விஷயமான ஞானம் உண்டாகிறதில்லை. 
நீர் முதலிய பொருள்களின் ஞானமில்லாமலே உண்டாகின்றது. ஆகையால் பூமியானது கந்த 
முதலியவற்றினின்றும் வேறில்லை; நீர்முதலியவற்றினின்றும் வேறு என்பதாம். 

    (உரை) யாதொரு காரணத்தால் விசேடண ரூபமாயிருக்கும் கந்த முதலிய குணங்களை யறியாது 
குணி ரூபமாயிருக்கும்  விசேடியமான பூமி விஷயமான அறிவு எக்காலத்தும் உண்டானதில்லையோ, 
நீர் முதலியவற்றின் ஞானமின்றிப் பூமி விஷயமான ஞானம் உண்டாகின்றதோ, அந்தக் காரணத்தால் 
கந்த முதலிய வற்றினின்றும் பூமி வேறில்லை. நீர் முதலியவற்றினின்றும் பூமி வேறுதான் என்க. (15-15இ)

    (அ-கை) இவ்வாறே ஏனைய பூதங்களிலும் அறிந்து கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார்.

(16)     இந்த ஏதுவானது நீர் முதலியவற்றில் புத்திமான்களால் இவ்வாறே அறியத்தகுந்தது என்பதாம். (16)

    (அ-கை) படிகமானது செவ்வரத்தையின் சமீபத்திலிருக்கும்பொழுது சிவப்பு வர்ணத்தை 
யடைந்திருக்கும். அந்தப் படிகமணியை அதன் குணமான வெளுப்பு வர்ணத்தைக்கொண்டு அறியாது
 பிரதிபலித்த சிவப்பு வர்ணத்துடன் கூடினதாக அறிகிறோம். ஆதலால், குணியை யறிவதற்கு அதன் 
குணத்தினறிவு வேண்டுமென்பது சித்திக்கா தென்னும் ஆசங்கைக்கு விடை கூறுகின்றார்.

(17)     உருவமானது வடிவமாயும், நிறமாயும், இருவகைப்படும். இதுகொண்டு குணியை யறிவதற்குக் 
குணத்தையறிய வேண்டாமென்று சொல்லுதல் கூடாது.  செவ்வரத்தை பிரதிபலித்த படிகத்தை, 
வடிவரூபமான குணத்தை அறிந்தபின்னரே அறிகின்றோமென்பதாம்.

    (உரை) பொருள்களின் நிறத்தை எவ்வாறு குணமாகக் கொள்கின்றோமோ, அவ்வாறே 
வடிவரூபமான உருவத்தையும் குணமாகக் கொள்ளல் வேண்டும். ஆதலால், செவ்வரத்தை பிரதிபலித்த 
படிகத்தையறியுமிடத்து அப்படிகத்தில் வெளுப்பு ரூபமான குணத்தை அறியவில்லையாயினும், 
வட்டமாயும், நான்கு முக்குச் சதுரமாயும், இன்னும் இவைபோன்றிருக்கும் வடிவ விசேடத்தை அறிந்தே 
செவ்வரத்தையினறிவு உண்டாகின்றது.  ஆகையால் குணியை யறிவதற்குக் குணத்தை யறிதல் 
இன்றியமையாததென்பது சித்தித்தது என்க. (17)

    (அ-கை) இவ்வாறு பூதங்கள் போகத்திற்கு அங்கங்களெனச் சாதித்துவிட்டு, இனி 
அனுமானத்தால் சித்தித்தனவென்று முன்னர்க் கூறப்பட்ட தன் மாத்திரைகள் உண்டென்று 
சித்திப்பதைக் கூறுதற்குப் பூதங்களுக்குக் காரியத்தன்மை யுண்டென்று கூறுகின்றார்.

(18)     குணங்களுக்குக் காரியத்தன்மை  உண்டென்பது சித்திப்பதற்காக எந்த ஏதுவானது 
கூறப்படுகின்றதோ, அதே ஏதுவைக்கொண்டு பிருதிவி முதல் கலை ஈறாகவுள்ள தத்துவங்களும் 
காரியங்களென்று  கொள்ளல் வேண்டும். எதன்பொருட்டெனின், பிருதிவி முதலியவற்றிற்குக் 
காரணமான தன் மாத்திரைகள் உண்டென்பது சித்தித்தற்பொருட்டு என்பதாம்.

    (உரை) குணங்களுக்கு அறிவின்மையும் அநேகத்தன்மையும் இருப்பது கொண்டு 
கடம் முதலியவற்றிற்குப் போல் காரணத்தை முதன்மையாகக் கொண்டிருக்குந் தன்மை உண்டென்று
கூறப்படுகின்றது. ஆகையால் அதே ஏதுவைக்கொண்டு பிருதிவி முதலியவற்றிற்கும் காரியத்தன்மை
யுண்டென்று சித்திக்கின்றது.  பலவிதமான போகங்கள் காணப்படுவது கொண்டு பிருதிவி முதல் 
கலை ஈறாகவுள்ள முப்பது தத்துவங்களின் ரூபமாயும், ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் இருக்கிறதாயுமுள்ள 
சூக்கும தேகமுண்டென்று கூறப்பட்டது. ஆகமங்களிலுமிவ்வாறு கேட்கப்படுகின்றது. ஆகையால் பிருதிவி 
முதலியன ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் இன்றியமையாதிருத்தலாலும், அறிவின்மையும் 
அனேகத்தன்மையும் அவற்றிற்கிருத்தலாலும், அப்பூதங்களுக்குக் காரணமான 
தன்மாத்திரைகளுண்டென்பது சித்திக்கிறது  (18)

    (அ-கை) பூதங்களுக்குக் காரணமாகத் தன்மாத்திரைகள் சித்திப்பதால் தன்மாத்திரை ரூபமான 
அந்தந்தக் குணங்களின் பேதத்தினாலேயே பிருதிவி முதலியவற்றின் முறை சித்திக்கிறதெனக் கூறுகின்றார்.

(19)     சத்தம் முதலிய ஒவ்வொரு குணத்தை அதிகமாகக் கொண்டவையாயும், குணங்களினின்றும் 
விசேடமின்மையால் காரணங்களாயுமிருக்கும் தன்மாத்திரைகள், குணிகளான ஆகாச முதலியவற்றின் 
தோற்ற முறையைச் செய்கின்றன வென்பதாம்.

    (உரை) இதன் கருத்தாவது:- வெளிப்படாத விசேட சத்தத்தை மாத்திரம் சொரூபமாகவுடைய 
சத்த தன்மாத்திரை  ஆகாசத்திற்குக் காரணம். சத்தம் பரிசமென்னும் இரண்டையும் சொரூபமாகவுடைய 
பரிச தன்மாத்திரை வாயுவுக்குக் காரணம்.  சத்தம், பரிசம், உருவமென்னும் மூன்றையும் சொரூபமாக 
வுடைய ரூபதன்மாத்திரை அக்கினிக்குக் காரணம். சத்தம், பரிசம், உருவம், இரதமென்னும் நான்கையும் 
சொரூபமாகவுடைய இரத தன்மாத்திரை ஜலத்திற்குக் காரணம். சத்தம், பரிசம், உருவம், இரதம், 
கந்தமென்னும் ஐந்தனையுஞ் சொரூபமாகவுடைய கந்த தன்மாத்திரை பூமிக்குக் காரணம்.

    ஆகாசம் முதலியனபோல் சத்தம் முதலிய ஒவ்வொரு குணத்தை அதிகமாகவுடையனவாயும், 
வெளிப்படையாயில்லாத விசேட சத்தம் முதலியவற்றின் சொரூப மாத்திரத்தால் ஆகாயம் முதலியவற்றிற்கு 
முறையே முதற்காரணங்களாயுமிருக்கும் சத்த முதலிய தன்மாத்திரைகள், விசேட குணங்களையுடையனவாயும், 
குணிகளாயுமிருக்கும் இந்த ஆகாசம் முதலிய பூதங்களின் தோற்ற முறையைச் செய்கின்றன. குணங்கள் 
அதிகமாயிருக்கும் முறையினால் குறைந்த குணமுடைய தன்மாத்திரைகள் காரியங்களான 
பூதங்களுக்கும் குறைந்த குணங்களைச் செய்கின்றனவென்பது பொருள். (19)

    (அ--கை) இந்தத் தன்மாத்திரைகள் எவ்வாறு போகத்திற்கு அங்கங்களாக ஆகின்றன 
என்பதைப் பற்றிக் கூறுகின்றார்.

(20)     யாதொரு காரணத்தால் எல்லா முதற்காரணங்களினிடத்தும் தனது காரியத்தை 
உண்டுபண்ணுவதும் அதன் விருத்தியைச்செய்வதும் காணப்படுகின்றனவோ, அதே காரணத்தால் 
தன்மாத்திரைகளிடத்தும் புருடார்த்தத்திற்குச் சாதனமாயிருக்குந் தன்மை யிருக்கின்றதென
நிச்சயிக்கப்பட்ட தென்பதாம்.

    (உரை) தோன்றாததைத் தோற்றுவித்தலும் தோற்றுவித்ததை விருத்தி செய்தலும் 
எல்லா முதற்காரணங்களினிடத்தும் இருக்குமாறு போல, காரியங்களுக்கு முதற்காரணங்களான 
தன்மாத்திரைகளுக்கும் மாயைக்கும் போகத்திற்குச் சாதனங்களான தத்துவங்களைத் 
தோற்றுவித்தலாலும், அவற்றை விருத்தி செய்தலாலும், போகத்திற்கு அங்கமாயிருக்குந்
 தன்மை சித்தித்தது என்க. (20)

    (அ-கை) இந்திரியங்களும் போகாங்கங்கள் என்பது அறிவித்தற்காக முதலாவது 
கன்மேந்திரியங்கள் உண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.

(21)     ஆனந்தித்தல், நடத்தல், மலங்கழித்தல், சொல்லுதல், வாங்குதலென்னும் கிரியைகளுக்காக 
முறையே உபஸ்த்தம், கால், பாயு, வாய், கை என்னும் இந்திரியங்கள் உண்டென்பது சித்திக்கும் என்பதாம்

    (உரை) ஆனந்தித்தல் முதலிய கிரியைகளின் ஏதுவால் உபஸ்தம் முதலிய கன்மேந்திரியங்க
ளுண்டென்று சித்தித்தனவென்பது பொருளென்க. (21) 

    (அ-கை)  உபத்த முதலிய இவை  தானங்களேயல்லது இந்திரியங்களல்ல வென்பாரை 
மறுத்துரைக்கின்றார்.

(22)     தானங்களிருந்தும் கிரியைகளின் உண்மையினையும் இன்மையினையும் மேற்கொண்டிருத்தல் 
காணப்படுதலால் உபத்தம் முதலிய ஐந்தும் கன்மேந்திரியங்களென்று சித்தித்தன என்பதாம்.

    (உரை) இவ்வுலகில் சிலருக்குக் கால் முதலிய தானங்களிருந்தும் அந்தந்த இந்திரியங்களின் 
சத்தியில்லாமையால் செல்லுதல் முதலிய காரியங்கள் நிகழவில்லை. ஆகையால் தானங்களிருந்தும் 
கிரியைகளின் உண்மையின்மைகள் எவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றனவோ, அவை அந்தத் 
தானங்களிலிருக்கும் சத்திகளேயாகும். இந்தச் சத்திகளை ஐந்து இந்திரியங்களாக அறிய வேண்டும். 
இவ்வாறு கூறியவாற்றால் கன்மேந்திரியங்களை ஒப்புக்கொள்ளாத நையாயிகர் மறுக்கப்பட்டனரென்க. (22)

    (அ-கை) கன்மேந்திரியங்கள் ஐந்தாயின் புருவநெரித்தல் முதலியவையும் கிரியைகளாதலால் 
கன்மேந்திரியங்கள் மிகுதியாக வேண்டுமே யென்பார்க்கு விடை கூறுகின்றார்.

(23)     சொல்லப்பட்ட ஆனந்தித்தல் முதலிய இந்தக் கன்மங்களால் கன்மேந்திரியங்கள் சித்தித்தன. 
தொழில்களின் வசத்தால் ஐந்திற்கு மேல் உண்டென்ற தோஷம் இல்லை என்பதாம்.

    (உரை) கன்மேந்திரியங்களைச் சரீரத்தின் ஏகதேசத்தில் மாத்திரம் இருப்பனவாக 
நாம் கொள்ளும் விஷயத்தில் இந்தத் தோஷம் நேரிடும். தோல் இந்திரியம் போல் சரீரமுற்றும் 
வியாபித்திருப்பதாகக் கன்மேந்திரியங்களைக் கொண்டிருப்பதால் புருவ நெரித்தல் முதலிய 
தொழில்கள் கையினுடையதேயாம். ஜீரணமானவற்றை வெளியில் தள்ளுதல் முதலியன பாயு 
முதலியவற்றிற்கு இருப்பது போலாம்.  

    ஆகவே புருவ நெரித்தல் முதலியவையும் ஆனந்தித்தல் முதலியவற்றுள் அடங்குதலால் 
கன்மேந்திரியங்கள் ஐந்திற்கு மேல் இல்லை. அன்றியும் இந்த ஆனந்தித்தல் முதலியனவாய் 
முன்னர்க் கூறப்பட்ட பிரதானமான கன்மங்களினாலேயே ஐந்து கன்மேந்திரியங்களும் 
சித்திக்கின்றமையால், அதிகமென்னும் தோஷங்கிடையாது. பாணி  முதலிய கன்மேந்திரியங்கள் 
புருவ முதலிய ஏனைய உறுப்புக்களையும் அதிட்டிக்குமாயின் பாணி முதலியனவாய்ப் பெயரிடுதல் 
எவ்வாறு கூடுமெனின், அந்தந்தத் தானங்களில் அந்தந்தக் கிரியைகள் விசேடமாக அதிட்டிப்பது 
பற்றிக் கூடுமென்க.  (23)

    (அ--கை) இனிஞானேந்திரியங்களுண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.

(24)     சத்த முதலியவற்றை அறியும் விஷயத்தில் கருத்தாவான புருஷனுடைய கிரியையானது 
கரணமின்றி நிகழாது. யாதொரு காரணத்தால் அபேக்ஷையானது நிவிர்த்தியாகவில்லையோ அந்தக் 
காரணத்தால் கரணம் ஒன்றென்று சொல்லவும் முடியாது என்பதாம்.

    (உரை ) சத்தம் முதலியவற்றை அறிதலும் கிரியை யாதலால், அறுத்தலென்னுங் கிரியையானது 
எவ்வாறு கரணமின்றி நிகழாதோ, அவ்வாறே இந்தக் கிரியையும் கரணமின்றி நிகழாது. இந்த ஐந்து 
கிரியைகளும் காது முதலியவற்றுள் யாதானுமொரு கரணத்தினின்று நிகழ்கிறதில்லை. எதனாலெனின்
 யாதொரு காரணத்தால் வேறு கரணங்களை விரும்புதல் நீக்குகிறதில்லையோ, அதே காரணத்தாலென்க. 
சத்தத்தை யறிதற்குக் கரணமாகிய செவியிருப்பினும் பரிச முதலியவற்றை யறியும் விஷயத்தில் 
தோலிந்திரிய முதலிய கரணங்களை விரும்புதல் காணப்படுதல் காண்க. (24)

    (அ--கை) அந்த ஞானேந்திரியங்கள் இவையெனக் கூறுகின்றார்.

 (24இ )     செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்னும் இவைகளே ஞானேந்திரியங்களென்பதாம் . (24இ)

    (அ-கை) சத்த முதலியவற்றைக் கிரகித்தல் வேறு வழியாக நிகழாமையின் அவ்விந்திரியங்கள் 
உண்டென் றறியப்படுகின்றன வென்னும் அபிப்பிராயங்கொண்டு கூறுகின்றார்.

(25)     சத்த முதலியவற்றின் சன்னிதியில் அவற்றை யறிதல் அந்த ஞானேந்திரியங்களின் 
தொழில் என்பதாம்.

    (உரை ) சன்னிதி என்று பாடங்கொள்ளாது சன்னிபா யென்று பாடங்கொள்ளின் வெளியிலிருக்கும் 
சத்த முதலியவற்றின் சொரூபத்திற்குச் சமானமான உள்ளிருக்குஞ் சொரூபத்தை நிச்சயிக்கும் புத்தியுடன் 
கூட மனதாலதிட்டிக்கப்பட்ட இந்திரியங்கள் வித்தையென்னும் தத்துவத்திற்கு விஷயமாகச் சேர்க்கின்றன
வென்பது பொருள். இந்திரியங்களால் சமீபத்தில் வைக்கப்பட்டுப் புத்தியினால் நிச்சயிக்கப்பட்ட 
சொரூபத்தை வித்தை யென்னும் பெயருடைய உட்கரணத்தால் புருடன் கிரகிக்கின்றான் என்று பின்னர்க் 
கூறப்போகின்றோம். " புத்தியினால் நிச்சயிக்கப்பட்ட பொருளைப் புருடன் கிரகிக்கின்றான்” என்று 
பிறிதோரிடத்திலுங் கூறப்பட்டிருக்கின்றது.  (25)

    (அ-கை) செவி முதலிய இடங்களிலிருக்கும் முறுக்குப் போன்ற வடிவங்களை மாத்திரம் 
இந்திரியங்களெனக் கொள்ளலாகாது. யாதொரு காரணத்தால் அந்தந்தத் தானங்களிருந்தும் 
கன்மங் காரணமாக அந்தந்தத் தானங்களுக்குரிய சத்தியின்மையால் சத்த முதலியவற்றின் 
அறிவு நிகழ்கிறதில்லையோ, அந்தக் காரணத்தால் செவி முதலிய தானங்களிலிருக்கும் சத்திகளைத் 
தான் இந்திரியங்களாகக் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார்.

(26)     இந்தத் தானங்களை மாத்திரம் ஞானேந்திரியங்களாகக் கொள்ளக் கூடாது. தானங்களிருப்பினும் 
சத்தியின்மையால் ஞானம் நிகழாமையே தானங்கள் இந்திரியமாகாமைக்குக் காரணமென்பதாம். (26)

    (அ-கை) பின்னர் அந்தக்கரணம்  உண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.                  

(27)     இச்சை, சம்ரம்பம், போதமென்னும் வியாபாரங்கள் மேலே கூறப்பட்ட சாதனங்களால் 
சித்திப்பதில்லை. ஆகையால் சொல்லப்பட்ட இந்த வியாபாரங்கள் சித்திப்பதின் பொருட்டு மனம், 
அகங்காரம், புத்தி என்னும் அந்தக் கரணங்கள் வேண்டப்படு மென்பதாம்.

    (உரை) பிருதிவி முதலிய தத்துவங்கள் தத்தம் காரியங்களினாலேயே சித்திக்கின்றன. 
ஏனைய காரியங்களை ஏதுவாகக் கூறுவதில் பிரமாணமில்லை. அன்றியும், அனேக தத்துவங்களில்லாமல் 
போய்விடும். அதுபோல இவ்விடத்தும் இச்சை முதலியன சித்திக்கும் விஷயத்தில் எவை சாதனங்களோ,
அவை மனம், அகங்காரம், புத்தி என்னும் இவைகளே என்று அந்தக் கரணங்களுண்டென்பது சித்திக்கிறது. 
இச்சை என்னும் பதத்தால் கவன மென்னும் ரூபமான சங்கற்பத்தைக் கொள்ளவேண்டும். மனத்தின் றொழில்.
சம்ரம்பமாவது அகங்காரத்தின் பிரயத்தினம். போதமாவது, புத்தியினுடைய நிச்சயம். இவை பின்னர் 
விரிவாய்க் கூறப்படுகின்றன (27) 

    (அ-கை) உட்கரணங்கள், வெளிக்கரணங்க ளென்னுமிவை ஒன்றுக்கொன்று உபகரித்துப்
 புருடார்த்தத்திற்குச் சாதனங்களாக வாகின்றனவெனக் கூறுகின்றார்.

(28-29)     உள்ளேயிருக்கும் கரணங்களும் வெளியிலிருக்குங் கரணங்களும் சிவிகை தூக்கும் 
மனிதர் போல் சேர்ந்து இச்சை முதலியவற்றிற்குச் சாதனங்களாக ஆகின்றன. ஆகையால் ஆன்மாவிற்குப் 
போகப் பயனைச் சாதித்துக் கொடுக்கின்ற உட்கரணங்கள் வெளிக்கரணங்களென்னு மிவற்றுள் யாதானு 
மொன்று இல்லையாயின், வெளியிலுள்ள சத்த முதலியவற்றின் அறிவுடன் கூட இச்சை முதலிய 
கிரியைகள் புருடார்த்தத்தைச் சாதித்துக் கொடுக்கமாட்டா என்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் உட்கரணங்களும் வெளிக்கரணங்களும் சிவிகை சுமப்பவர்போல் 
சேர்ந்தே இச்சை முதலிய கிரியைகளுக்குச் சாதனங்களாக ஆகின்றனவோ, அதே காரணத்தால் 
வெளியிலிருக்கும் பொருட்களைப் பார்த்த பின்னரே நிச்சயம் முதலியன காண்டலாலும், ஒரே 
கவனமாயிருத்தல் முதலியனவின்றி வெளியிலிருக்கும் பொருள்களை அறிய முடியாமையாலும், 
சேர்ந்தே போகத்திற்குச் சாதனமெனக் கூறப்பட்டது.  ஆதலால் ஆன்மாவிற்குப் போகமாகிய பயனைச் 
சாதித்துக் கொடுக்கின்ற உட்கரணங்கள் வெளிக்கரணங்களென்னும் இவற்றுள் யாதானுமொரு 
கரணமில்லையாயின் இச்சை முதலிய கிரியைகளாவது வெளியிலுள்ள சத்த முதலியவற்றை 
யறிதலாவது புருடார்த்தத்திற்குச் சாதனமாக ஆகிறதில்லை. சிவிகை சுமப்பவருள் 
ஒருவனில்லையாயினும், சுமத்தற்றொழில் காணப்படாதவாறு போலுமென்க. (28-29)

    (அ-கை) இவ் விஷயத்தில் பிறருடைய அபிப்பிராயத்தைக் கூறுகின்றார்.

(29இ)     சிலர் வெளிப்படையான சேதனத்தன்மையினை யுடைய பிராண வாயுவையே 
அந்தக் கரணமாக எண்ணுகின்றன ரென்பதாம்.

    (உரை) உலகாயதருள் சிலர் மேலே செலுத்துதல் முதலிய வியாபாரங்களினால் 
சீவித்தல் முதலியவற்றிற்குக் காரணமாயும் பூதங்களின் பரிணாம விசேடத்தால் 
வெளிப்படையான அறிவை யுடையதாயும் இருக்கும் . பிராணனென்னும் பெயருடைய 
உள்ளிருக்கும் வாயுவையே அந்தக் கரணமாகக் கூறுகின்றனர் என்க. (29இ)

    (அ--கை) இந்த அபிப்பிராயத்திற்கு மறுப்புக் கூறுகின்றார்.

(30)     அந்த வாயு பிரயத்தினமின்றி நிகழ்கிறதில்லை. அந்தப் பிரயத்தனம் சித்திப்பதற்குக் 
கரணம் எது என்பதாம்.

    (உரை ) பிராண வாயு சில சமயத்தில் மாத்திரம் தொழிற்படுவதால், பிரயத்தனத்தை 
முன்னிட்ட தொழிற்பாடு அதனிடத்தில் காணப்படுகின்றது. இவ்வாறே “ஏவுதல் இழுத்தலென்னும் 
தொழில்கள் பிரயத்தனமன்றி வாயுவுக்கு எவ்வாறு நிகழும்” என்று பிறருங் கூறுகின்றனர். 
ஆகையால் சம்ரம்ப ரூபமான பிரயத்தினம் சித்திப்பதின் பொருட்டு யாதானுமொரு கரணம் 
வேண்டப்படும் என்பது கொண்டு அந்தக்கரணம் உண்டென்பது சித்திக்கின்றது. நூலாசிரியரும் 
"சம்ரம்பம் அகங்காரத்தின் றொழில்” என்று பின்னர்க் கூறப்போகின்றாரென்க (30)

    (அ--கை.) அன்றியும் பிராணனுக்குச் சைதன்னியத்தின் உற்பத்தி உண்டென்று உன்னால் 
ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்தச் சைதன்னிய உற்பத்திக்குக் கரணம் இதுவென்று
நீ கூற வேண்டுமெனக் கூறுகின்றார்.

(31)     இந்தப் பிராணனுக்குச் சைதன்னியம் உண்டென்று நீ கூறுவதற்குக் கரணம் இன்னதென்று 
கூறுவாயாக. இந்தப் பிராணனுக்குச் சைதன்னியம் நிச்சயமாக இல்லை; வாயுவாயிருக்கிறபடியால்; 
வெளியிலிருக்கும் வாயுப்போலென்பதாம்.

    (உரை ) சடத்திற்குச் சைதன்னியத்தின் தோற்றம் பொருந்தாது. எதனாலெனின், எல்லாவற்றிற்கும் 
சைதன்னியத்தின் தோற்றம் உண்டாய்விடும் ஆதலாலென்க. இதற்குப் பிரமாணமாக "இதற்குச் 
சைதன்னியமில்லை; வாயுவானபடியால், வெளியிலிருக்கும் வாயுப் போலும்” என்று கூறப்பட்டதென்க. (31)

    (அ-கை.) இவ்வாறு பிராணனையே அந்தக்கரணமென்னும் கொள்கையை மறுத்து விட்டு 
மேலே கூறப்பட்ட அந்தக்கரணம் மூன்றனுள் மனம் உண்டென்று சாதிப்பதற்காகக் கூறுகின்றார்.

(32 )     இச்சைக்குக் காரணமாயும், விரைவில் செல்லுகிறதாயும், வெளியிலிருக்கும் இந்திரியங்களைத் 
தொழிற்படுத்துகிறதாயும் இருப்பது மனம், இதுவேகமாய்ச் சுழல்கிறபடியால் ஒரே காலத்தில் 
ஐம்பொறிகளும் தொழிற்படுகிறதில்லை என்பதாம்.

    (உரை) இந்திரியங்களிடத்தும் பொருள்களிடத்தும் உள்ள சம்பந்தம் ஆன்மாவிற்கிருந்தும் 
எல்லா இந்திரியங்களும் ஒரே காலத்தில் தொழிற்படுகிறதில்லை. ஒவ்வொரு இந்திரியங்களாகத்தான் 
தொழிற்படுகின்றன. அந்த ஒரு இந்திரியமும் எப்பொழுதும் தொழிற்படுகிறதில்லை. ஆகையால் 
இந்திரியங்களைத் தொழிற்படுத்துவதில் எது கரணமோ அதுவே இச்சைக்கு அதாவது சங்கல்ப 
ரூபமான கவனத்திற்கு ஏதுவாயும், வெளியிலுள்ள பொறிகளைத் தொழிற்படுத்துகிறதாயுமுள்ள 
மனமென அறிந்து கொள்ளல் வேண்டும். அது கொண்டே மனம் உள்ளிருக்கும் பிற அந்தக் 
கரணங்களை அதிட்டித்துச் சுக முதலியவற்றைச் சங்கற்பிக்கின்றமையாலும், வெளி 
இந்திரியங்களை அதிட்டிக்கின்றமையாலும், இரண்டு விதமான அதிகாரமுடையதாக 
ஆகுமென்று மதங்கத்தில் கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:-

    "ஆன்மாவிற்குப் போகத்தை யுண்டுபண்ணுகின்ற மனம் வெளியிலிருக்கும் கரணத்தாலும் 
தன்னிடத்திலிருக்குஞ் சங்கற்பத்தாலும் உள்ளிருந்து கொண்டு இந்திரியங்களுக்குச் சாமர்த்தியத்தை 
யுண்டுபண்ணுகின்றது.  இதுபற்றியே மனம் அந்தக் கரணமெனப் பட்டது” என்பதாம். மிருகேந்திரத்திலும்
“மனம் இந்திரியங்களைத் தொழிற்படுத்துகிறதாயும், விரைவில் செல்லுகிறதாயும், சங்கற்பத்தைத் 
தருமமாகக் கொண்டுமிருக்கின்றது'' எனக் கூறப்பட்டிருக்கின்றது.

    சுவையாயும், நல்லமணமுடையதாயும், அழகாயும், மர மர வென்னும் சப்தத்துடன் 
கூடினதாயுமுள்ள முறுக்கென்னும் உணவுப்பொருளை யுண்ணுங்கால் ஒரேகாலத்தில் 
ஐம்பொறிகளுக்கும் அறிதற் றொழில் நிகழ்கின்றதே யெனின், அவ்வாறன்று. அநேகம் 
இதழ்களை ஒன்றாகச் சேர்த்து அடுக்கி ஊசியினால் குத்தின் ஒரே கணத்தில் எல்லா 
இதழ்களிலும் குத்துப்படுகின்றது. இவ்விடத்தில் ஒவ்வொரு இதழாகச் செல்லும் முறையைச் 
சூக்குமமாக அறியவேண்டுமாறு போல மேலே கூறப்பட்ட உணவுப்பொருளை யுண்ணும் 
பொழுது ஒவ்வொரு இந்திரியமாகவே தொழிற்படும் முறை சூக்குமமாக அறியத்தக்கது. 
(விரைவு பற்றி ஒரே காலத்தில் எல்லாம் தொழிற்படுதல் போலக் காணப்படுதலேயன்றித்
தொழிற்படுமாறில்லை.) இது பற்றியே மனம் விரைவிற் செல்லும் தொழிலையுடையதெனக் 
கூறப்பட்ட தென்க. (32)

    (அ- கை) இவ்வாறே அகங்காரத்தையும் சாதிக்கின்றார். 

(32இ )     ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாயுவினுடைய சீவனத்தின் பொருட்டுப் 
பிரவிருத்திக்கின்ற சம்ரம்ப மென்னு முயற்சி அகங்காரத்தின் றொழில் என்பதாம்.

    (உரை) சீவனத்தின் பொருட்டு அஃதாவது சரீரத்தைத் தரித்தற் பொருட்டுப் பிரணயனம் 
அபனயனம் முதலிய ஐந்தொழில்களைச் செய்கிறதாயும், அந்த அந்தத் தொழில்களின் பேதத்தால் 
பிராணன் அபானன் முதலிய பெயரை அடைகிறதாயுமுள்ள வாயுவைத் தொழிற்படுத்துகிற 
சம்ரம்ப ரூபமான யாதொரு பிரயத்தனமுண்டோ , அது, அகங்காரத்தின் தொழில்  என்று 
அகங்காரம் உண்டென்பது சித்திக்கின்றது. ஸ்ரீ மிருகேந்திரத்திலும் " பின்னர் உள்ளிருக்கும் 
வியக்தமான புத்தியினின்றும் ஆன்மாவிற்குக் கரணமாகக் கருவம் உண்டாயிற்று. யாதொன்றினுடைய 
சம்ரம்பத்தால் சரீரத்திலுள்ள ஐந்து வாயுக்களும் தொழிற்படுகின்றனவோ'' என்று கூறப்பட்டிருக்கின்றது.            

    பிரணயனமாவது, சூக்கும தேகத்தை மேலுங் கீழுமாகக் கொண்டுபோதல். இது, 
பிராணன் என்னும் வாயுவின் றொழில்.

    அபனயனமாவது, மல முதலியவற்றைக் கீழே தள்ளுதல். இது 
அபானனென்னும் வாயுவின்றொழில்.

    சாமானனென்னும் வாயுவின் றொழிலாவது, ரசரூபமான அன்ன முதலியவற்றைச் 
சமமாகச் சரீரமெங்குங் கொண்டுசேர்த்தல்,

    வியானனென்னும் வாயுவின் றொழிலாவது, அங்கங்களை வணங்கும்படி செய்தல்.

    உதானனென்னும் வாயுவின் றொழிலாவது, உள்ளிருக்குந் தொனியை எழுத்து 
ரூபமாகச் சேர்த்தல்.

    பிரதானமாக ஐந்து தொழில்களையும் செய்வதுகொண்டு ஐந்தொழில்களைச் செய்வது 
வாயுவெனக் கூறப்பட்டது. வெளியில் கக்குதல் முதலிய தொழிற்பாடுகள் வாயுவுக்கு உண்டென்று 
காணப்படுகின்றது. ஸ்ரீ காலோத்தரத்திலும் ''வெளியில் கக்குதல் ரூபமான கிரியையில் நாகனென்ற 
வாயுவும், விழித்தலில் கூர்மனென்ற வாயுவும், தும்முதல் அழுதல்களில் கிரிகரனென்ற வாயுவும், 
ஒடுதல் இழைத்தல்களில் தேவதத்தனென்ற வாயுவும் இருக்கின்றன. தனஞ்சயனென்ற             
வாயு உயிர் நீங்கினும் நீங்குகிறதில்லை” என்று கூறப்பட்டிருக்கின்றது (32இ)

    (அ-கை) அன்றியும் புத்தியின் காரியமாயும், இந்தக் கடம் என்பது முதலியவாய்க்
கிரகிக்கத் தகுந்த பொருள்களின் நிச்சயரூபமாயும், ஒவ்வொரு பொருள்தோறும் வேறு வேறான 
சொரூபத்தை யுடையதாயுமுள்ள ஞானத்தினின்றும் மிகவும் வேற்றுமையுடன் விளங்குகிறதாயும்,
 பொருள்களனைத்தையும் கிரகித்தலில் ஒரே ரூபமாயுமுள்ள நானென்னும் நிச்சய ஞான 
ரூபமான அறிவு அகங்காரத்தின் றொழிலென்று கூறுகின்றார்.

(33)     அகங்காரத்தின் தொழில் ரூபமான ஞானம், பொருள் விஷயமான அறிவினின்றும் வேறு என்பதாம். 

    (உரை ) அகங்காரத்தின் வியாபார ரூபமான ஞானம் பொருள் விஷயமான ஞானத்தினும் 
வேறென்பது பொருளென்க. (33)

    (அ-கை) சத்தத்தை அறிதல் முதலிய தொழில்கள் காது முதலிய இந்திரியங்களுக்குச் சிறப்பாக 
இருக்கின்றன. சம்ரம்பமோவெனின், அதே யிந்திரியங்களின் பொதுவான தொழிலென்று கொள்ளாமல் 
அகங்காரமுண்டென்று அதனைப் புதிதாக ஏன் கொள்ளல் வேண்டுமென்று ஆசங்கை செய்வார்க்கு விடை
கூறுகின்றார்.

(34)     இந்திரியங்களின் பொதுத் தொழிலாக சம்ரம்பத்தைக் கொள்ளக்கூடாது. எதனாலெனில் 
இந்திரியங்களுள் ஓரிந்திரிய மில்லாதிருப்பினும் அகங்காரம் நிகழுகின்றது என்பதாம்.

    (உரை) பொதுவான காரியத்தைச் செய்கிறவர்களுள் ஒருவரில்லையாயின், அந்தச் செயல் 
நிகழாது. இது முன்னரே கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்ரம்ப ரூபமான தொழில் இந்திரியங்களுள், 
ஒன்றில்லையாயினும் நிகழ்கின்றது. ஆகையால் நானென்னும் இந்த அறிவு அகங்காரத்தின் 
காரியமென்க. (34)

    (அ-கை) இவ்விடத்தில் சந்தர்ப்பத்தை அநுசரித்து மனதுடன் கூட ஞானேந்திரியம், 
கன்மேந்திரியம், தன்மாத்திரைக ளென்னுமிவை, அகங்காரத்திலிருந்து உண்டாகின்றனவென்று 
கூறுகின்றார்.

(35)     இன்னும் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் தன்மாத்திரை ஆகிய இவற்றை          
உண்டுபண்ணும்ஏனைய சாத்துவீக முதலிய அகங்காரங்கள் முறையே தைசச முதலிய 
பெயரை வுடையனவாக ஆகின்றன வென்பதாம்.

    (உரை) சத்துவம், ரஜசு, தமசு, என்னுங் குணங்கள் நிரம்பப்பெற்ற சாத்துவிக அகங்காரம், 
இராசத அகங்காரம், தாமச அகங்காரமாகிய இம்மூன்றும், முறையே தைசசம், வைகாரிகம், 
பௌதிக மென்னும் பெயர்களை யடைகின்றன. சத்துவ முதலிய குணங்கள் மிகுதியாயிருத்தலால், 
சாத்துவிக முதலியவாய்க் கூறப்பட்டன. "கலப்பில்லாதது பரிணாமத்தை யடையாது"  என்னும் 
நியாயத்தால், வேறு குணங்களின் சேர்க்கையும் இந்த அகங்காரங்களுக்கு இருக்கின்றதென்க. (35)

    (அ-கை) எந்தத் தத்துவங்கட்கு எந்த அகங்காரத்திலிருந்து உற்பத்தி யென்பதைப் பற்றிக் 
கூறுகின்றார்.

(36)     யாதொரு காரணத்தால் விளக்குகின்றதோ அந்தக் காரணத்தால் தனக்குரிமையான 
சாத்துவிக அகங்காரத்திலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் தோன்றுகின்றன வென்பதாம் (36)

    (அ-கை) இவ்விடத்தில் நையாயிகருடைய மதத்தை அநுவாதஞ்செய்து மறுக்கின்றார்.

(37)     சிலர், விஷயங்களுக்கு நியமமிருத்தலால், ஞானேந்திரியங்களைப் பவுதிகங்களாகக் 
கொள்ளுகின்றனர்.  அது பொருந்தாது. அந்த விஷய நியமம் அசித்தமான ஏதுவால் 
கற்பிக்கப்படுகின்ற தென்பதாம்.

    (உரை) காது, சத்தம் ஒன்றை மாத்திரம் அறியக்கூடியது. தோல், பரிசம் ஒன்றை மாத்திரமறியக் 
கூடியது. இவ்வாறே பிற இந்திரியங்களுமாம். ஆதலால் இந்திரியங்கள், சப்தம் முதலியவற்றிற்கு 
ஆதாரமான ஆகாசம் முதலிய பூதங்களினின்றும் உண்டாயின.  அகங்காரத்தினின்று உண்டாயினவென்று
கூறின், காரணமான அகங்காரம் ஒன்றாதலின் காரியமான இந்திரியங்களும் ஒரே ரூபமாயிருக்கவேண்டும்; 
தனித்தனி விஷய நியமம் சித்திக்காதென்று நையாயிகர் கூறுகின்றனர். இந்தக் கூற்று அசித்தமான ஏதுவால் 
கற்பிக்கப்படுகிறது. எதனாலெனின், முதற்காரண நியமத்தைச் சாதிக்கும் விஷய நியமம் இந்திரியங்களுக்குச் 
சித்திக்காமையாலென்க. இந்திரியங்களை நியதமான விஷயங்களையுடையனவாகக் கொள்ளின் 
அவ்விந்திரியங்கள் தனக்குக் காரணங்களான பூதங்களை மாத்திரம் குணத்துடன் அறியவேண்டும். 
வேறு திரவியங்களையும் அவற்றின் குணங்களையும் அறிதல் கூடாது.  கண் முதலிய இந்திரியங்கள் 
ஏனைய திரவியங்களையும் அவற்றின் குணங்களையும் அறிகின்றன. (ஆதலால் இந்திரியங்கள் 
பூதகாரியங்களாகாமை காண்க) (37)

(38)     (எவ்வாறெனின்) வாயுவைச் சேர்ந்த தோலிந்திரியம் வாயுவுடன் கூடவே பிருதிவி, அப்பு,
 தேயுவாகிய திரவியங்களையும், அந்தத் திரவியங்களிலுள்ள பரிசங்களையும் கட்டுப்பாடின்றி 
அறிகின்றதென்பதாம்.

    (உரை) நையாயிகர் பக்கத்தில் தோலிந்திரியமானது வாயுவின் காரியமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
 வாயுவுடன் கூட பிருதிவி, அப்பு, தேயுவென்னும் இவற்றையும், அவற்றினிடத்துள்ள பரிசங்களையும், 
தோலிந்திரியமானது அறிகின்றதென்க. (38)

(39)     (அன்றியும்) கண்ணிந்திரியமானது அக்கினியின் காரியமாக ஒப்புக்கொள்ளப்பட்டது. 
இது பிருதிவி, அப்பு தேயுவென்னு மிவற்றையும், இவற்றின் ரூபங்களையும் அறிகின்றது. ஆகையால் 
இந்திரியங்களைக் கட்டுப்பாடான விஷயங்களை யுடையனவாகக் கூறலாகாது. (39)

    (அ-கை) இன்னுமொரு குறை கூறுகின்றார்.

(40)     பூதகாரியத்துக்காக நியமத்தை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் கன்மம், சாமான்யம், சமவாய 
மென்னும் இவற்றின் அறிவு இந்திரியங்களால் உண்டாகக்கூடாது என்பதாம்.

    (உரை)      இந்திரியங்கள் பூதகாரிய மென்பதைச் சாதிப்பதற்காக அவற்றிற்கு விஷய நியமத்தை 
ஒப்புக்கொண்டால் பூதகங்களில் நின்றும் குணங்களில் நின்றும் வேறாக உங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட 
கன்மம் சாமான்யம் சமவாயமென்னும் பதார்த்தங்களினறிவு இந்திரியங்களில் நின்றும் உண்டாகக் கூடாது. (40)

    (அ-கை) அகங்காரத்தில் நின்றும் இந்திரியங்கள் உண்டாகுமாயின் இந்திரியங்களுக்குக் 
காரியபேதம் எவ்வாறு கூடுமென்று முன்னர்க் கேட்கப்பட்டது. அந்தக் கேள்வி பொருந்தாது. 
உற்பத்தியின் பேதத்தால் கரும்பின் விகாரங்களான வெல்லம் சருக்கரைகள் போல் காரிய 
பேதங் கூடும். செவி முதலியன விசேடமாக சத்த முதலியவற்றை அறியும் விஷயத்தில் புருடார்த்தத்தைக் 
கொடுக்கக்கூடிய கன்மமே நியமிப்பதாக எங்களால் ஒப்புக்கொள்ளப் படுகிறதெனக் கூறுகின்றார்.

(41)     விஷய நியமத்திற்குக் காரணமாக அகங்காரத்தில் நின்றும் தோன்றுவதை நாங்கள் 
கொள்ளவில்லை. புருடார்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாயும், சிவனால் அதிட்டிக்கப்பட்டதாயும் 
இருக்கும் கன்மமும், விஷய நியமத்திற்குக் காரணமென்பதாம். 

    (உரை ) அகங்காரத்தில் நின்றும் உண்டாவதையே விஷய நியமத்திற்குக் காரணமாக 
நாங்கள் கூறவில்லை. சிவனாலதிட்டிக்கப்பட்ட கன்மமும் அதற்குக் காரணமென்க. (41)

    (அ--கை) சரீரத்திலிருக்கும் துவாரத்துடன் கூடின ஆகாசம் சத்தத்தை வெளிப்படுத்துகிறதாக 
ஒப்புக்கொள்ளின், மூக்குத் துவாரமும் செவியாய் விடுமென்பதுபற்றி, செவியிலிருக்கும் ஆகாசந்தான் 
சத்தத்தை அறியுமென்னும் நியமத்தில் கண்ணுக்குப் புலப்படாத கன்மமே நியமிப்பதாக இந்திரியங்களைப் 
பூத காரியமாய்க் கூறுகிறவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார்.

(42)     அநேகஞ் செவிகள் ஏற்பட்டு விடுமென்னும் அச்சத்தால் செவியின் துவாரத்திலிருக்கும் 
ஆகாசமே சத்தத்தை அறியுமென்னும் நியமத்திற்குக் காரணமாக புருஷார்த்தத்தைக் கொடுக்கக்கூடிய     
கன்மம் உன்னாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது என்பதாம்.

    (உரை) சரீரத்திலிருக்கும் ஆகாசம் சத்தத்தை அறிகிறதாகக் கூறுமிடத்தில் அனேகஞ் 
செவிகள் ஏற்பட்டு விடுமென்பது கொண்டு செவியிலிருக்கும் ஆகாசமே சத்தத்தை யறியுமென்று 
கொள்வதில், புருஷார்த்தத்தைக் கொடுக்கக்கூடிய கன்மமே காரணமென்று உன்னாலும் ஒப்புக்கொள்ளப் 
படுகின்றதெனக் கூட்டி முடித்துக்கொள்ள வேண்டும் என்க. (42)                    

    (அ-கை) இவ்வாறே கன்மேந்திரியங்களும் அகங்காரத்தினின்று உண்டாகின்றனவென்று 
கூறுகின்றார்.

(43)     இராசதமான வைகாரிக அகங்காரத்தினின்றும் கன்மத்தைச் செய்யும் கன்மேந்திரியங்களின் 
கூட்டமானது உண்டாயிற்று. காரியத்திற்குக் காரணத்தை யநுசரித்திருக்குந் தன்மையானது யாதொரு 
காரணத்தால் காணப்படுகின்றதோ என்பதாம்.

    ( உ-ரை) இரசோ குணத்தைத் தொழிற் படுத்துவதால் இராசதமான வைகாரிக அகங்காரத்தினின்றும்     
கிரியைக்கு ஏதுவான கன்மேந்திரியக்கூட்டம் உண்டாயிற்று. யாதொரு காரணத்தால் காரணத்தை            
யநுசரித்திருக்குந் தன்மை காரியத்திற் காணப்படுகின்றதோ, அந்தக் காரணத்தால் சத்துவகுணம் 
பிரகாச ரூபமாயிருப்பது பற்றிப் பிரகாச ரூபமான ஞானேந்திரியக்கூட்டம் சாத்துவிகமான 
அகங்காரத்தினின்றும் உண்டாயிற்றென்று முன்னர்க் கூறப்பட்டது. இவ்வாறின்றி மாறுபட்ட 
இயல்புடைய இந்த இரண்டிந்திரிய வர்க்கங்களும் ஒன்றிலிருந்தே உண்டாயினவெனக் கொள்ளின் 
காரணத்திற்கு நியமமின்மையைக் குறிப்பிடக் கூடிய வரம்பின்றி யோடலென்னும் குற்றம் நேருமென்க. (43) 

    (அ--கை) வரம்பின்றியோடலென்னுங் குற்றத்தைக் காட்டுகின்றார்.

(44)     சாத்துவிகத்தினின்றும் இரு வர்க்கங்களும் உண்டாயினவென்று கொள்ளின், சத்துவத்தின் 
விகாரம் இரசசின் விகாரம் பற்றி உண்டாயினவென்று கூறும் வரம்பில்லையாய் விடும் என்பதைத் 
தடுக்க முடியாது என்பதாம். (44)

(45)     (ஆகையினாலேயே) கூறப்பட்ட இருவர்க்கங்களுக்கும் மாறுபட்ட தன்மாத்திரைகளின் 
கூட்டமும் தாமசமான பவுதிக அகங்காரத்தினின்றும் உண்டாயிற்று என்பதாம். (45 ) 

    (அ-கை) இனி, புத்தியானது அத்தியவசாய முதலியவற்றிற்கு ஏதுவாகுமெனக் கூறுகின்றார்.

(46)     விஷய சொரூபமான அறிவும் இந்திரியங்களை வாயிலாக உடையது . சில விடங்களிலில்லை. 
புருடனுடைய அறிவு விளங்குவதற்கு இடமாயிருத்தலால், அந்த அறிவானது, புத்தியினுடைய 
வியாபாரமாகு மென்பதாம்.

    (உரை) இந்திரியங்களை வாயிலாகக் கொண்டு இந்தக் கடம் என்பது முதலியனவாய் 
வெளியிலிருக்கும் விஷயங்களை நிச்சயிக்கும் ரூபமான அறிவும், இந்திரியங்களை வாயிலாகக் 
கொள்ளாது உள்ளிருக்கும் நினைவு கூர்மை என்னும் இவற்றினறிவும், பாவப் பிரத்தியய ரூபமான 
அறிவும், ஆன்மாவிலிடத்துத் தோன்றுதற்குப் புத்தி யிடமாய் யிருத்தலால் இவை அனைத்தும் 
புத்தியின் வியாபார மென்றறிந்து கொள்க.  ஆகையால் நிச்சயம் நினைவு என்னும் இவற்றை 
அடையாளமாகவுடைய புத்தியுண்டென்பது சித்திக்கின்றது. ஸ்ரீ மிருகேந்திரத்திலும் "பாவப் பிரத்தியய 
ரூபமான புத்தியின் பிரகாசமானது புருடனுக்கு அறிவு தோற்று மிடமாகையால் அந்த அறிவு 
புத்தியின் வியாபாரமென்று சொல்லப்படும்"  என்று கூறப்பட்டிருக்கின்றது. (46)

    (அ-கை) இந்தப் புத்தியினுடைய அறிவு மூன்று விதமாயிருக்குமென்று கூறுகின்றார் 

(46இ)     க்லுப்தி, மதி, ஸ்மிருதி என்று (புத்தியின் போதம் மூன்றுவித மென்பதாம்)

    (உ-ரை) க்லுப்தி யென்பது கற்பித்தல். அதாவது கூர்மை யென்பதாம். மதியாவது மனனம் 
அல்லது ஞானம்.  அஃதாவது நிச்சயம் என்பதாம் (46இ)

    (அ--கை) இவ்வாறு இச்சை முதலிய காரிய பேதத்தால் அந்தக் கரணங்களின் பேதம் 
சித்திக்கின்றதென்று முடித்துக் காட்டுகின்றார்.

(47)     இச்சை, சம்ரம்பம், போதமென்னும் வியாபார வேறுபாட்டால் அந்தக் கரணம் மூன்று 
விதமாயிற்றென்பதாம்.

    (உ-ரை) நினைப்பு முதலியவற்றிற்குத் தம்முட் பேதமிருப்பினும், அறிவிக்குந் தன்மையென்ற 
ஒற்றுமை இருப்பது கொண்டு ஒரே பொருளாயிருத்தலால் அவற்றைப் புத்தியிலிருப்பதாகக் கொள்ளவேண்டும். 
இச்சை முதலிய வியாபாரங்களோ வெனின், வேறு வேறான பொருளையுடையனவா யிருத்தலால் 
வேறு வேறான காரணங்களையுடையன வென்பது பொருள். (47)

    (அ-கை) பிருதிவி முதலியன விடயமாயிருத்தல் பற்றிப் போக்கியமாயிருத்தலாலும், இந்திரியங்கள் 
அந்த விடயங்களை யறிதற்கு ஏதுவாயிருத்தலாலும், இந்தப் பிருதிவி முதலியவைகளும் இந்திரியங்களும் 
போக சாதனமாயிருக்கட்டும்.  புத்தியோவெனின், இந்திரியம் பொருள் என்னும் இவற்றின் சம்பந்தத்தால் 
ஆன்மாவினிடத் துண்டாகும் ஞான ரூபமாயிருத்தலால் போக சாதனமெனக் கொள்ளக்கூடாது . ஆன்மாவின் 
குணமென்றே கொள்ளல் வேண்டுமென்று கூறும் நையாயிகர் கொள்கையை மறுக்கின்றார். 

(48)     குணங்களுடன் கூடியிருக்குந் தன்மை சமமாயிருப்பது கொண்டு புத்தியை அறியப்படும் 
பொருளாகவே கொள்ளல் வேண்டும். நீயோ புத்தியை அறியப்படாததென்று கொள்கின்றாய். 
மிக நன்றாயிருக்கின்ற தென்பதாம்.

    (உரை ) இதன் கருத்தாவது - அறிவு, அநத்யவசாயமென்றும் அத்யவசாய மென்றும் 
இருவகைப்படும். அநத்யவசாய அறிவானது எப்பொழுதும் அறியும் ரூபமாகவே விளங்கிக் 
கொண்டிருப்பதால் ஆன்மாவிற்கு இயல்பாகும். அத்யவசாய அறிவானது தோற்ற நாசங்களைத் 
தருமமாக உடையதாய் விளங்கிக் கொண்டிருப்பதால் ஆன்மாவிற்கு இயல்பாகாது. 
எதனாலெனில் நித்தியப்பொருளுக்கு அநித்தியத் தன்மையின் சேர்க்கை கிடையா தாதலாலென்க.

     அத்யவசாயத்தை ஆன்மாவின் இயல்பென்று கொள்ளின் ஆன்மாவிற்கு அநித்தியத்தன்மை 
வந்து விடும். இந்த அத்யவசாயம் நித்தியமாக அநுபவிக்கப்படுகிறதில்லை. ஆகையால் புருடனுடைய 
இயல்பில்லை. இது எதனுடைய இயல்போ அதுவே புத்தியாகும். இந்தப் புத்தி, பதார்த்தங்களை 
நிச்சயிக்கிறதாயும் தருமம் ஞானம் முதலிய எண் குணங்களையுடையதாயுமிருக்கும். ஆகவே 
விஷயங்களை நிச்சயித்தலாலும், பாவங்கள் பிரத்திய யங்களென்னும் இவற்றின் ரூபமாயும் 
சத்துவமுதலிய முக்குணங்களுடன் கூடினதாயுமுள்ள சொரூபத்தால் போக்கியமாயிருத்தலாலும், 
புத்தியானது அறியப்படுவதாகவே இருக்கின்றது. ஆன்மகுணமாக இருக்கவில்லை.

    இவ்வாறே தத்துவ சங்கிரகத்திலும் “விஷய ரூபமாயும் சுகம் முதலியவற்றின் ரூபமாயும்
 இருக்கும் புத்தி சுருக்கமாகப் போக்யமாகும்'' என்று கூறப்பட்டிருக்கின்றது. புத்தி அறியப்படுவதாகும்; 
சத்துவம்  முதலிய முக்குணங்களுடன் கூடியிருத்தலால்; பிருதிவி முதலியன போலென்று பிரயோகமும் 
காணப்படுகின்றது. விஷயங்களை நிச்சயிக்கும் ஏதுவால் இந்திரியம் போல புத்திக்குக் கரணத்தன்மையும் 
சித்தித்ததென்று கூறப்பட்டிருக்கின்றது.

    தர்மமுதலிய பாவங்களும் ஆன்ம குணங்களென்றே எங்களால் ஒப்புக்கொள்ளப்படுகின்ற 
தென்பையாயின், அது பொருந்தாது. தர்ம முதலிய குணங்கள் ஆன்மாவிற்குச் சமஸ்க்காரமாக 
ஆகிறதில்லை. சோதிஷ்டோம முதலிய கன்மங்களின் சமஸ்க்காரம் ஆன்மாவினிடத்துச் 
சம்பவிக்கிறதில்லை. எதனாலெனில், ஆன்மா விகாரியாகாமையாலென்க. அன்றியும் உழுதல் முதலிய 
தொழில்களின் சமஸ்க்காரம் உழுதவனிடத்து நிகழ்கிறதில்லை. அத்தொழிலுக்கிடமான பூமியிற்றான் 
காண்கின்றோம். எந்த விடத்தில் கன்மங்களின் சமஸ்க்காரங்கள் காணப்படுகின்றனவோ அந்த இடமே 
புத்தி யெனப்படும். இவ்வாறே ஞானமுதலியவற்றின் சமஸ்க்காரத்திலும் கூறிக்கொள்க. இந்தச் சமஸ்காரம் 
பற்றியே சொப்பனம், நினைப்பு, கூர்மை என்னுமிவற்றில் பொருளில்லையாயினும் தோற்றங் 
காணப்படுகின்றது. (48)

(49)     (ஆகையால்) உள்ளிந்திரியம் வெளி இந்திரியமென்னும் இவை போகத்திற்கு நேரே கரணமாக 
இருக்கின்றன. போக்கியமின்றிப் போகமில்லை யாகையால் போக்கியமானது போகத்திற்குச் சாதனம் என்பதாம்.

    (உரை) உள்ளே இருக்குங் கரணங்களும் வெளியிலிருக்குங் கரணங்களும் சுக முதலியவற்றின் 
ரூபமான போகத்திற்கு நேரே கரணமாக  இருக்கின்றன. இவ்வாறே ஸ்ரீ சுவாயம்புவத்திலும் “புருஷனுடைய 
சுக துக்க ரூபமான அறிவே போகம் " எனக் கூறப்பட்டிருக்கின்றது. அந்தப் போகமானது மாலை சந்தனம் 
முதலிய போக்கியப் பொருள்களின்றி உண்டாகா தாகையால் அவற்றின் அறிவை முன்னிட்ட 
சுக முதலியவற்றின் நிச்சயத்திற்கும் போக்கியங் காரணமாகக் கொள்ளப்படுகின்றது. (49)

    (அ-கை) இதனையே திருட்டாந்தத்தில் வைத்துக் காட்டுகின்றார்.

(50- 52இ )     அரசனானவன் வெற்றியின் பொருட்டுச் சேனைகளை எவ்வாறு ஏவுகின்றானோ, 
அவ்வாறே சீவனானவன் அறிவு முதலியவற்றின் பொருட்டுக் குணதத்துவ முதலியவற்றை ஏவுகின்றான். 
வெற்றியானது சேனையிடத்திலிருப்பினும் கருத்தாவாயிருக்குந் தன்மை அரசனுக்கு எவ்வாறு 
ஏற்படுகின்றதோ, அவ்வாறே அறிவு முதலியன புத்தி முதலியவற்றிலிருப்பினும் கருத்தாவாயிருக்கும் 
தன்மை ஆன்மாவுக்குச் சித்திக்கின்றது. சேனைகளின் வெற்றி அந்தச் சேனைகளுக்கு ஆகாதவாறு 
போல மகதத்துவ முதலியவற்றால் உண்டான அறிவுமுதலியன அத் தத்துவங்களுக்கு ஆகிறதில்லை. 
சேனைகள் போல இத்தத்துவங்கள் சாதனங்களாக நிச்சயிக்க பட்டனவென்பதாம்.

    (உரை ) கரணங்கள் அசேதனங்களாகையால் அவற்றின் வியாபாரம் அவற்றின் பொருட்டாக 
இல்லை. சேதனான ஆன்மாவின் பொருட்டாகவே என்பது கருத்து (50-52இ)

 (53)     ஆகையால் அறிவு முதலிய வியாபாரங்களுக்குக் குணதத்துவ முதலியன             
சாதனங்களாகு மென்பதாம்.  (53)

    (அ-கை) இனி, போக்கியத்தைப் பிரித்துக் கூறுகின்றார்.

(54)     மோகம், துக்கம், சுகமென்னும் இவற்றின் சொரூபமாயும், ரூபமென்னும் பெயருடையதாயுமுள்ள 
தரும முதலிய பாவ வருக்கமும் அவற்றிலிருந்தும் உண்டான சித்தி முதலிய பிரத்யய வருக்கமுமான 
இந்த இரண்டு விதமாயுள்ள புத்தி போதமும் புருஷனுக்கு நேரே போக்கியமாய் இருக்கின்றது. மாயை 
முதலியன அதற்காக ஏற்பட்டுள்ளன என்பதாம்.

    (உரை) வெளிப்பட்ட குணத்துடன் மோக முதலியவற்றிற்கு ஏதுவாய் பாவப் பிரத்திய 
யங்களிருக்கின்றமையால் மோக முதலியவற்றின் ரூபமாயும் ரூபமென்னும் பெயருடையதாயுமுள்ள 
தரும முதலிய பாவ வருக்கமும், அவற்றிலிருந்து உண்டான சித்தி முதலிய பிரத்தியயவருக்கமும் 
என்னும் இந்த இரண்டு விதமான புத்தியிலுள்ள போதமும் புருடனுக்கு நேரே போக்கியமாக இருக்கின்றன.
 மாயை முதலியனவும் புவன முதலிய பொருள்களும் அந்தப் போக்கியத்துக்காக ஏற்பட்டுப் போகத்திற் 
கிடமாயிருத்தலால் பரம்பரையாகப் போக்கியமாயிருக்கின்றன. (54)

    (அ-கை) ரூபமென்னும் பெயருடையது என்றால் என்னை யென்பதை பற்றிக் கூறுகின்றார்.        

(55)     தமோ குணம் பற்றிய அதர்மம் முதலிய மூன்றும் இராசதகுணம் பற்றிய இராகம் ஒன்றும், 
சாத்துவிக குணம் பற்றிய தரும முதலிய நான்குமாகிய இந்த எட்டு விதமான ரூபமும் புத்தியில் 
குணமாக இருக்கின்றன. இந்த ரூப முதலியன முதற் காரணமான கன்மத்தினின்றும் 
உண்டாயின வென்பதாம். 

    (உரை) அதர்மம், அஞ்ஞானம். அனைஸ்வரிய மென்னும் மூன்று ரூபங்களும் தமோ குணம்
 பற்றி நிகழ்வன. அவைராக்கியம் இராசத குணம்பற்றி நிகழ்வது. தருமம், ஞானம், வைராக்கியம், 
ஐஸ்வரியமென்னும் நான்கும் சத்துவ குணம்பற்றி நிகழ்வன.  இந்த எட்டும் புத்தியினிடத்துக் 
குணமாக இருக்கின்றன. முதற் காரணமான கன்மத்தினின்றும் உண்டாயின. தத்துவம், புவனம் 
சரீர மென்னும் இவையோவெனில், துணைக்காரணமான கன்மத்துடன் முதற் காரணமான 
மாயையில் நின்றும் நேராயும், பரம்பரையாயும் உண்டாயின.இவ்வாறு சுவாயம்புவம் முதலிய
 ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றது.  (55)

(56)     (இவை) முத்தியில் முற்றும் அற்றுப்போவன வாதலாலும், எங்கும் வியாபகமாய் வெளிப்பட்டுத் 
தோன்றுவன வாதலாலும், ஆடை முதலியவற்றின் ஞானம் வியாபகமாயில்லாததாலும், அதர்மம் முதலியன 
ஆன்மாவின் குணங்களாக ஆவனவல்ல வென்பதாம். 

    (உரை) யாதொரு காரணத்தால் முத்தியில் தர்மம் முதலியவற்றிற்கு முற்றும் நாசத்தை 
அன்னியர்களும் ஒப்புக் கொள்ளுகின்றனரோ, யாதொரு காரணத்தால் நித்தியமாயும் வியாபகமாயுமிருக்கும் 
ஞானக்கிரியா ரூபமான ஆன்ம சுபாவத்திற்கு முத்தியில் எவ்விடத்தும் வியாபகத் தன்மையுடன் வெளிப்பட்டு 
விளங்குதல் கேட்கப் படுகின்றதோ, யாதொரு காரணத்தால் நிச்சய ரூபமான ஆடை முதலியவற்றின் 
ஞானங்கட்கு வியாபகமில்லாதிருக்குந் தன்மை காணப்படுகின்றதோ, அந்தக் காரணங்களால்
 அநித்தியமாயும் வியாபகமில்லாததாயு மிருக்கும் அதர்மம் முதலியன, நித்தியமாயும் வியாபகமாயுமிருக்கும் 
ஆன்மாவின் குணங்களாக ஆவனவல்ல. ஆன்மாவிற்கு அநித்தியங்களின் சேர்க்கை உண்டாயின் 
பரிணமிக்குந் தன்மை முதலிய தோஷங்கள் நேருமாதலாலென்க.

    இந்த அதர்மம் முதலியன சாமுசித்திகம், வைநயிகம், பிராகிருதமென்னும் பேதத்தால் 
மூன்று விதமாய் ஆன்மாவினின்றும் தோன்றுகின்றன. இவ்வாறே மிருகேந்திரத்திலும் 
கூறப்பட்டிருக்கின்றது. அது வருமாறு:-
    
    ' இந்தப் பாவங்கள் ஆன்மாவினிடத்து சாமுசித்திகம் வைநயிகம் பிராகிருதமென 
மூன்று விதமாயிருக்கும். விசேடமான தரும சமஸ்காரத்தால் பிரகாசிக்கப்பட்ட சித்தத்தை 
யுடையாருக்குத் தேகம் நீங்கிய பின்னரும் முன் போலவே பிரகாசிக்கும் குணம் சாமுசித்திக 
மெனப்படும்.  உலகத்தார் புத்தியாலும் குருமுகத்தாலும் சாத்திரத்தாலும் பிரகாசிக்குங்குணம் 
வைநயிகமெனப்படும். இது மனம் வாக்குக் காயங்களால் உண்டாவது.  சொப்பனம் முதலியவற்றைப் 
போல் தேகமிருக்கும் பொழுது மாத்திரம் தோன்றிக் கொண்டு பின்னர்த் தோன்றாமலிருக்குங்
 குணம் பிராகிருதமெனப்படு மென்பதாம் (56) 

    (அ-கை) இவ்வாறே மூன்றுவிதமான அதர்மம் முதலியவற்றிலிருந்தும் உண்டாகும் 
பல பேதங்களைக் கூறுகின்றார்.

(57-58-59)     பிராகிருத ரூபத்திற்கும், வைநயிக ரூபத்திற்கும், கீழே போதல், பந்தம், தடை, 
சம்சாரம் சுவர்க்கம், முத்தி பிரகிருதிபாவம், தடையின்மை யென்னும் பலன்களும், சாமு சித்திக 
ரூபத்திற்கு சம்சாரம், தனது தானத்தினின்றும் நீங்குதல், விக்கினம், போகத்தைக் கடத்தலின்மை, 
தனது தானத்திற்குக் கீழுள்ளவர்களை யதிட்டித்தல், அந்தந்த விஷயங்களில் நன்றாக ஞானமிருத்தல், 
போகத்திலாசையின்மை, தன்னால் நினைக்கப் பட்ட விஷயங்களில் விக்கினமின்மை யென்னும் 
பலன்களும் உண்டாகுமென்பதாம். 

    (உரை) வைநயிகமாயும் பிராகிருதமாயுமுள்ள அதர்மம் முதலியவற்றினின்றும் 
கீழே செல்லுதல் முதலிய பலன்கள் உண்டாகின்றன.  சாமுசித்திகத்தினின்றும் சமுசாரமுதலிய
பலன்கள் உண்டாகின்றன. கீழே செல்லுதலாவது நரகத்தையடைதல். பந்தமாவது ஆன்மாவல்லாத 
பொருள்களில் ஆன்ம பாவனை செய்தல். சம்சாரமாவது பல பிறவிகளையடைதல். முத்தியாவது 
ஏனைய மதத்தினருடைய முத்தியடைதல். பர முத்தியை தீக்கைக்குப் பலனாக மோக்ஷ காரிகையில் 
கூறப்போகின்றமையால் இவ்விடத்து முத்தியென்பதற்கு மேலே கூறியவாறு கொள்க. பிரகிருதி 
பாவமாவது பிரகிருதியில் ஒடுங்குதல், போகத்தைக் கடத்தலின்மையாவது போகத்திலிச்சையுடைமை .     
மற்றவை வெளிப்படை (57-58-59)

    (அ-கை) இவ்வாறு பாவங்களைக் கூறிவிட்டு இனிப் பிரத்திய யங்களைக் கூறுகின்றார்.

(60)     இராசதமான அவைராக்கியத்துடன் கூடின சாத்துவிகமான தரும முதலிய நான்கினின்றும் 
குணம் முதலியவையும் பிரகிருதியும் புருஷனுமென்னும் இவற்றின் விஷயமான ஞான ரூபமாகிய 
சித்தி யுண்டாகின்றதென்பதாம்.

    (உரை) இவ்விடத்தில் புத்தியில் வாசனா ரூபமாக இருப்பனவாய் தரும முதலிய எட்டுப் பாவங்கள் 
கூறப்படுகின்றன.  "யாதொரு காரணத்தால் லிங்கங்களாயிருந்து கொண்டு புத்தியைச் சாதித்துத் 
தருகின்றனவோ, அந்தக் காரணத்தால் பாவங்களெனக் கூறப்பட்டன"  என்று பிறருங் கூறுகின்றனர் . 
அந்தப் பாவங்களே மேலான அவத்தை யடைந்து தூல ரூபமாகப் போக்கியா வத்தையு மடைந்து 
சம்சாரிகளுக்கு அறிவையுண்டு பண்ணுவதால் பிரத்திய யங்களென்று கூறப்படுகின்றன. 
இவ்வாறே "யாதொரு காரணத்தால் புருடனுக்கு அறிவையுண்டு பண்ணுகின்றனவோ அந்தக் 
காரணத்தால் பிரத்திய யங்களென்று கூறப்பட்டன'' என்று கூறப்பட்டிருக்கின்றது. 

    ஆகவே இராசத சம்பந்தமான அவைராக்கியத்துடன் சிறிது சேர்ந்த சாத்துவிகமான தரும 
முதலிய பாவங்கள் நான்கினின்றும் சித்தியானதுண்டாகின்றது. அது, குணம், பிரகிருதி, புருடனென்னும் 
இவற்றின் விஷயமான ஞானத்தின் மேலான அவத்தையெனக் கூறப்படுகின்றது, இவ்வாறே 'புருடன் 
பிரகிருதியென்னுமிவற்றை விஷயமாக உடைய யாதொரு அறிவுண்டோ அதுவே இவ்விடத்துச் சித்தியாகும்"
என்று கூறப்பட்டிருக்கின்றது. குணம்,  பிரகிருதியென்னும் இவை விஷயமான புத்தியினுடைய அறிவில் 
அவற்றை யறிவிப்பவனான புருடன் தனியாகவே யிருந்து கொண்டு தானாகவே பிரகாசிக்கிறான். 
இவ்வாறே “அப்பொழுது அறிபவனுக்குத் தனது சொரூபத்திலிருப்பு” என்று பிறருங் கூறுகின்றனர். 
இவ்வாறன்றி ஆன்மாவைப் புத்தி அறிவிப்பதில்லை. எதனாலெனில், போக்கியத்தன்மை முதலிய 
குற்றங்கள் நேரிடுமாகையாலென்க. “புத்திக்கு விஷயமாக புருடனாகும் விஷயத்தில் புருடனுக்குப் 
பரிணாமத்தன்மையும் போக்கியத்தன்மையும் வந்துவிடும்" என்று மோக்ஷ காரிகையிலும் 
கூறப்போகின்றார். (60)

(61)     தரும முதலிய ரூபத்துடன் கூடிய அதர்ம முதலிய மூன்றினின்றும் துஷ்டி, உண்டாகின்றது. 
சித்தியினால் ஆன்மாவிற்கு ஞானம் உண்டானபொழுது கிருதார்த்தனாய்விட்டேனென்ற ஞானந்தான் 
துஷ்டியெனப்படுமென்பதாம். 

    (உரை) சிறிது சத்துவ சம்பந்தமான தரும முதலியவற்றுடன் சேர்ந்த தமசின் சம்பந்தமான 
அதர்ம முதலிய மூன்றினின்றும் துஷ்டி உண்டாகின்றது. முன்னர்க் கூறப்பட்டவாறு பூத தன்மாத்திரை 
முதலியவற்றை அறிதல் ரூபமான சித்தியினால் அந்தந்த மதத்திற் கூறப்பட்ட சொரூபத்தின்படி 
ஆன்மாவிற்கு அறிவு உண்டாகும் பொழுது குறைந்த வைராக்கியத்தினால் கிருதார்த்தனாகாதிருந்தும் 
கிருதார்த்தனாய்விட்டதாகத் தோன்றும் புத்தி துஷ்டியெனப்படும். இவ்வாறே “அகிருதார்த்தனிடத்தில் 
கிருதார்த்தனாய்விட்டேனென்னும் யாதொரு புத்தியுண்டோ அதுவே துஷ்டியெனப்படும்'' என்று 
கூறப்பட்டிருக்கிறது. (61)

(62)      சுகம் முதலியவற்றில் இந்திரியங்களின்மையா லுண்டான யாதொரு சத்தியின்மையுண்டோ 
அது சிறிது அராகத்துடன் கூடின அதர்மம் முதலிய மூன்றினின்றும் உண்டாகின்றது என்பதாம்.

    (உரை) சுகம் என்னும் சொல்லால் இவ்விடத்தில் உபத்தேந்திரியத்தின் தொழிலான 
ஆநந்தம் கூறப்படுகிறது. அந்த ஆநந்த முதலியவற்றில் இந்திரியங்களில்லாமையாலாவது, 
அல்லது இந்திரியங்களிருத்தற்குரிய சரீரத்தின் உறுப்பு இல்லாமையினாலாவது உண்டான 
அலித்தன்மை செவிட்டுத்தன்மை ரூபமான யாதொரு சாமர்த்தியமின்மையுண்டோ அதுவே 
சத்தியின்மை யெனப்படும். இது இராசசத்துடன் சிறிது சேர்ந்த தாமச வருக்கத்தினின்றும் 
உண்டாகிறது. இவ்வாறே "அசத்தியென்பது விடயப்பிரவர்த்தி யில்லாமையால் தாமசமாகவும் 
துக்கமாவதால் இராசசமாகவும் சொல்லப்படும்.  காரணத்தின் குணம் காரியத்திற் றோன்றுமாதலால் 
இரசசின் குணமாகிய துக்கம் அசத்தியில் தோற்றுவதால் இராசசமென்றும் சொல்லல் வேண்டும்” 
என்று கூறப்பட்டிருக்கின்றது. (62)

(63)     அராகமில்லாததாயும் சிறிது தரும முதலியவற்றுடன் கூடினதாயுமுள்ள அந்தத் தாமச 
வருக்கத்தினின்றும் உள்ளதை உள்ளவாறு அறியாமையென்னும் விபர்யயம் உண்டாகின்றதென்பதாம்.

    (உரை ) இராச சம்பந்தமில்லாததாயும் சிறிது சாத்துவிகத்துடன் கூடினதாயுமுள்ள அந்தத் 
தாமச வருக்கத்தினின்றும் உள்ளதை உள்ளவாறு அறியாமை ரூபமான விபர்யமுண்டாகின்றது. 
அது தமசு, மோகம், மகாமோகம், தாமிச்ரம், அந்த தாமிச்சிரமென்னும் இவற்றின் ரூபமாக 
இருந்து கொண்டு தோன்றுகின்றது. இவ்வாறே " சிறிது பொதுத்தன்மையைக் கொண்டு ஒரு 
பொருளினிடத்தில் பிறிதொரு பொருளினறிவானது விபர்யயம்” என்று கூறப்பட்டிருக்கின்றது  (63)

    (அ-கை) இவ்வாறு மிகச்சுருக்கமாகக் கூறப்பட்ட பாவப்பிரத்தியய ரூபமான 
புத்தியினறிவை முடித்துக் காட்டுகின்றார்

(63-வ)      இந்தப் புத்தியின் தருமம் சிறிது கூறப்பட்டதென்பதாம்.

    (உரை) இந்தப் பாவங்கள், பிரத்தியயங்க ளென்னுமிவற்றின் விரிவு மதங்க முதலியவற்றில் 
கூறப்பட்டிருக்கின்றது. மிருகேந்திர விருத்தி தீபிகையில் எம்மாலுங் கூறப்பட்டிருக்கின்றது. ஆதலின் 
விரிவை அவ்விடங்களிலறிந்து கொள்க. விரியுமென்றெண்ணி இவ்விடத்துக் கூறவில்லை. (63-வ)

(63இ)     (இது) சேதனனால் அநுபவிக்கப் படுகின்றதென்பதாம்.

    (உரை) போக்கியமா யிருக்கின்றமையாலென்பது மூலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். (63இ)

    (அ-கை) புத்தியின் தருமத்திற்குப் போக்கியத் தன்மையைச் சாதிக்கின்றார்.

(64)     யாதொரு காரணத்தால் தோன்றியனுபவிக்கப்படுகின்றதோ அந்தக் காரணத்தால் 
இந்தப் புத்தியின் தருமத்திற்குப் போக்கியத் தன்மை சித்தித்தது என்பதாம்.

    (உரை) இந்தப் புத்தியினுடைய ஞானமானது தோன்றியழிதல் பற்றிப் போக்கியத் 
தன்மையை உடையதாய் இருக்கின்றது. இந்தப் புத்திக்குப் போகத்தையனுபவிக்கும் கருத்தாவா 
யிருக்குந்தன்மை கிடையாது. அந்தக் கருத்தாத் தன்மையோ வெனின், நிலைபேறுடையதாய் 
அறிவிக்கும் ரூபமாயிருந்து கொண்டு தன்னுடைய அறிவால் அறியக்கூடியதாயிருக்கும். (64)

(65)     (ஆகவே) அந்த அநுபவமே போகம். அது கருத்தா உண்டென்பதைச் சாதித்துக் கொடுக்கின்றது. 
யாதொரு காரணத்தால் போகக்கிரியையின் சித்தியானது அநுபவிக்கிறவனையின்றி நிகழாதோ, 
அந்தக் காரணத்தால், வேண்டப்படுங் கருத்தா ஒருவனுண்டென்று சாதித்துக்  கொடுக்கின்றது என்பதாம்.

    (உரை ) இவ்விடத்தில் புத்திக்குச் சைதன்யத் தன்மை கூறும் பௌத்தர்களால் போக்தாவாக 
ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தப் புத்தி சம்பந்தமான ஞானமானது நிலைபேறில்லாமையானும், 
கடம் முதலியனபோல் அசேதனமாயிருப்பதாலும், வேறு காலத்தில் நிகழப்போகுங் கன்மபலனை 
அநுபவித்தல் கூடாமை யானும், மேலே கூறியவாறே போக்கியமா யிருத்தலாலும், அந்தந்த 
விஷயங்களிலுள்ள சுக முதலியவற்றின் அநுபவ ரூபமான போகமே போக்தாவைச் சாதித்துத் 
தருகின்றது. யாதொரு காரணத்தால் போகக்கிரியையின் சித்தியானது சேஷ்டிக்கிற 
போக்தாவன்னியில் உண்டாகாதோ, அந்தக் காரணத்தால் போகமும் கிரியையாதலால் 
அதற்குக் கருத்தாவாக ஆன்மா சித்திக்கின்றது. (65)

    (அ--கை) இவ்விடத்து வேறு மதத்தைக் கூறுகின்றார் . 

(65இ)     காணப்பட்ட வியாப்தியின்றி அநுமானமும் பிரமாணமன்றென்பதாம். 

    (உரை) புகையினால் அநுமானஞ் செய்யப்பட்ட அக்கினியானது அநுமானஞ் செய்கிறவனால் 
முன்னரே பிரத்தியக்ஷமாகச் செய்யப்படுகிறது.  அதனால் அநுமானத்திற்கு ஏனைய பிரமாணங்களுடன் 
ஒற்றுமையைக் காண்கின்றோம். அதுபற்றியே அந்த அநுமானத்திற்குப் பிராமாண்யமுண்டு.
 சுழற்றப்படும் சக்கரத்தின் சிரசில் புகையிருந்தும் அக்கினி காணப்படவில்லை. ஆகையால் 
இவ்விடத்தும் அநுபவ ரூபமான ஞான மாத்திரங் காணப்பட்டு அறிபவனுக்கும் அறிவிற்கும் 
சொரூப பேதமறியப் படாமையால் போகம் நிகழ்வது கொண்டு போக்தா உண்டென்று
சாதிக்கில் பிறட்சி நேரிடுமேயென்னும் சங்கை நிகழுமாதலின் இந்த அனுமானத்திற்குப்
 பிராமாண்யங் கிடையாது. ஆகையால் ஞானத்தைத் தவிர போக்தாவான ஆன்மா ஒன்று 
சித்திக்காதென்று பௌத்தர் கூறுகின்றனர். அவ்வாறே "அறிவு ரூபமான இந்த ஒன்றையே 
சுகந்துக்கம் முதலிய அனேக ரூபமான பரிணாமத்தையுடையதாகப் பார்க்கின்றோம். 
அந்த ஞானத்திற்கு விருப்பப்படி பெயர்களிட்டுக் கொள்ளட்டும்' என்று பௌத்தர் கூறுகின்றனர். (65இ)

    (அ--கை) பௌத்தர் கூற்று பொருந்தாதெனக் கூறுகின்றார் . 

(66)      யாதொரு பிரத்தியக்ஷத்தோடு ஒற்றுமையிருப்பது பற்றி அந்த அநுமானத்திற்குப் 
பிரமாணத்தன்மை யிருக்கின்றதோ, அது போல் பிரத்தியக்ஷமாய்ப் பார்க்கப்பட்டதற்கு 
எதனுடன் ஒற்றுமை வேண்டுமென்பதாம்.

    (உரை ) இதன் கருத்தாவது - விஷயங்களின் அறிவு ரூபமான அனுபவம் போகம். அந்தப் 
போகத்திற்குச் சுழுத்தி முதலியவற்றில் வெளியிலுள்ள விஷயங்களின் சம்பந்தமில்லையாயினும், 
உள்ளிருக்கும் தேகத்தின் பரிசமாத்திரம் விடயமாக இருத்தலால் போகரூபமான அந்த அறிவு 
நிலைபேறுடையதாகவே இருக்கிறது. ஆதலால் தன்னுடைய அந்த அறிவுப் பிரத்தியக்ஷத்தால் 
சித்தமாயும் அறியும் ரூபத்துடன் கூடினதாயும் ஆன்மா உள்ளதென்பது கூறப்பட்டது. பௌத்தர் 
க்ஷணிகமான ஞானத்திற்குப் பிறபொருள்களினிடத்தில் கிரியை நிகழுமேயன்றித் தன்னிடத்துக் 
கிரியை நிகழாதாதலால் நிலைபெற்றிருக்குந் தன்மையை ஞானத்தால் தன்னிடத்தில் கற்பித்தல் 
பொருத்தமன்று; 

    அன்றியும் நிலைத்திருக்கும் பொருளுக்கு ஒன்றன் பின் ஒன்றாகவும் ஒரேகாலத்திலும்
கிரியை நிகழவுமாட்டாது; ஆகையால் எது சத்தோ அது க்ஷணிகம் என்று கூறுகின்றனர். அவருடைய 
அந்தக் கூற்றும் நன்றன்று, எதனாலெனில், ஒளியையுடைய இரத்தின முதலியன நிலைத்திருந்து 
முறையாகக் கடம் முதலிய பொருள்களை விளக்கிக்கொண்டும், ஒரே காலத்தில் ஒரே வீட்டிலுள்ள 
பொருள்களை விளக்கிக் கொண்டு மிருப்பதாக அனுபவத்துடன் காண்கின்றமையாலென்க. 
இதுவன்றி க்ஷணிகமானது தோன்றும் பொழுதே நசிக்குமாகையால் அதற்கு அனேக க்ஷணத்தில் 
நிகழக்கூடிய கிரியையின் நிகழ்ச்சி சம்பவிக்காது. இந்த விஷயம் மதங்கவிருத்தியில் 
ஆசிரியர்களால் விரிவாய்ச் சாதிக்கப்பட்டிருக்கின்றது. (66)

    (அ--கை) ஆகவே ஆன்மா தனது ஞானத்தால் சித்தமாயினும் அனுமானத்தாலறியக்
 கூடுந்தன்மையை ஒப்புக்கொண்டு கூறுகின்றார்

(66இ)     பிரத்தியக்ஷத்திற்குப் பிராமாண்ய மிருக்கிறபடியால் இவ்விடத்தில் பிரமாணத்துடன் 
ஒற்றுமை கிடையாது என்பதாம்.

    (உரை)  இவ்விடத்தில் பிரமாணத்திற்கு வேறு பிரமாணங்களுடன் ஒற்றுமை 
வேண்டுமென்பது கிடையாது. எதனாலெனின், பிரத்தியக்ஷப் பிரமாணத்திற்கு வேறு 
பிரமாணங்களுடன் ஒற்றுமை யில்லையாயினும் அறியப்படாத விஷயங்களின் ஞானத்தை 
யுண்டுபண்ணும் வழியால் பிராமாண்யமிருத்தலாலென்க. இவ்வாறே " அறியப்படாத 
பொருளை யறிவிப்பது பிரமாணம்.'' என்று பிறருங் கூறுகின்றனர் . (66இ)

    (அ-கை) சக்கரத்தின் சிரசில் புகை காணப்பட்டும் நெருப்பில்லாமையாகிய 
பிறட்சி காணப்படுகின்றதே என்பதைப் பற்றிக் கூறுகின்றார்.

(67)     உடன்பாட்டானும் எதிர் மறையானும் பிறட்சி நீங்கி விடுகின்றதென்பதாம்.

    (உரை) எந்தப் புகை முதலியவற்றிற்கு எவற்றுடன் விட்டுப் பிரியாத சம்பந்தமானது 
உடன்பாடு எதிர்மறைகளால் நிச்சயிக்கப்பட்டதோ, அவற்றிற்கு அவற்றினிடத்துப் பிறட்சி
காணப்படுகிறதில்லை. எதுபோலுமெனின், நன்றாய் ஆராய்ச்சி செய்யப்பட்ட புகை 
முதலியவற்றிற்கு அக்கினி முதலியவற்றினிடத்தில் பிறட்சி காணப்படாதது போலுமென்க.
சக்கரத்தின் சிரசில் உண்டானதோ வெனின், சொரூப ஆராய்ச்சியின்மையால் புகை யென்னும் 
மயக்கத்தைத் தோற்றுவிக்கின்றதென்க. ஆகவே எவ்விடத்தும் கிரியையானது கருத்தாவை
முன்னிட்டதாகக் காண்டலால் இவ்விடத்தும் போகக்கிரியையினால் போக்தாவை யனுமானஞ் 
செய்து கொள்ளல் வேண்டும். (67)

    (அ-கை) உங்களாலும் தனது தேகத்தில் புத்தி பூர்வமாக உண்டான காரிய முதலியவற்றால் 
அன்னியருடைய சரீரத்தில் புத்தியுண்டென்பது வேறு பிரமாணங்களுடன் ஒற்றுமை யின்றியே 
அநுமானத்தால் ஊகிக்கப்படுகிறதென்று கூறுகின்றார். 

(67இ)     சரீர தர்மத்திற்குப் பிராமாண்யமிருக்கும் பொழுது அதுகொண்டு அன்னியருடைய 
சரீரத்திலும் புத்தியுண்டென்பது நிச்சயிக்கப் படுகின்றதென்பதாம்.                 

    (உரை) சேட்டை முதலியவற்றின் ரூபமான சரீர தர்மம் புத்தியை நிச்சயிப்பதற்கு 
ஏதுவாயிருப்பது கொண்டு பிறருடைய சரீரத்திலும் சேட்டை முதலியவற்றிற்குக் காரணமான 
புத்தி யுண்டென்பது சாதிக்கப்படுகின்றதென்பது பொருள். அவ்வாறே "தனது சரீரத்தில் 
புத்திபூர்வமான கிரியையைப் பார்த்து அன்னியருடைய சரீரத்திலும் அதே ஞானத்தால் 
புத்தியானது அறியப்படுகின்றது” என்று பிறருங் கூறுகின்றனர் (67இ )

    (அ-கை) ஆகவே, எவ்வாறு ரூபம் முதலியவற்றின் காட்சி வேறு வழியாக யேற்படாதது 
கொண்டு கண் முதலிய இந்திரியங்கள் சித்திக்கின்றனவோ, அவ்வாறே இவ்விடத்தும்  
போக்தாவன்னியில் போகம் ஏற்படாதது கொண்டு போக்தா சித்திக்கிறதென்னும் 
கருத்துடன் கூறுகின்றார்.

(68)     பொதுவாகக் காணப்பட்ட இந்தக் காரணத்தால் அநுமானத்திற்கும் பிராமாண்யம்         
சித்தித்ததென்பதாம்.

    (உரை) சாருவாகன், போக்தா ஒருவனிருக்கட்டும்; ஆனால் அவன் காணப்படும் பிருதிவி 
முதலிய நான்கு பூதங்களுடைய விகாரங்களின் கூட்ட ரூபமாயிருக்கும் சரீரந்தான்; மதுவைத் 
தோற்றுவிக்கும் பாளை முதலியவற்றின் விகாரமாகிய மதுவால் மதசத்தி தோன்றுமாறுபோல் 
அந்தச் சரீரத்தின் பரிணாம விசேடத்தினாலேயே அறிவின் தோற்றம் ஏற்படுகின்றது. பிராணன் 
முதலிய வாயுக்களின் பலத்தால் போகமுதலிய கிரியைகள் காணப்படுதலாலும் சரீரத்தின் 
வேறாகப் போக்தா உண்டென்று சொல்லுதல் கூடாது. எதனாலெனின், பிரத்தியக்ஷப் பிரமாணத்தால் 
அந்த போக்தாவை அறிய முடியாதாகையாலென்க. "காணப்பட்டது சம்பவிக்கும் பொழுது 
காணப்படாததைக் கற்பிப்பது நியாயமில்லை” யென்று பிறருங் கூறுகின்றனர். (68)

    (அ--கை) அந்தச் சாருவாக மதமும் ஒதுக்கப்பட்டதென்று கூறுகின்றார். 

(69)     இதே காரணத்தினாலேயே புத்தி போதத்தை யனுபவிக்கின்றவன் சேதனனென்பது 
பிரமாணத்தால் நிச்சயம்  செய்யப்பட்டது. பிருதிவி முதலியவற்றின் கூட்டம் போக்தாவா 
யிருக்கட்டுமென்று சொல்லுவது பொருந்தாதென்பதாம்.

    (உரை) இதன் கருத்தாவது, யாதொரு காரணத்தால் சரீரத்தினுள்ளே  சூலமுதலிய 
நோய்களின் ரூபமான பரிசத்தாலும் வெளியில் மிருதுவாயும் கடினமாயுமுள்ள பரிசத்தாலும் 
சரீரத்தில் போக்கியத்தன்மை காணப்படுகின்றபடியால் கடமுதலியனபோல் சரீரத்திற்குச் 
சேதனத்தன்மை பொருந்தாதோ, அந்தக் காரணத்தால் இந்தச் சரீரத்தை அனுபவிக்கின்றமையால் 
ஆன்மா சித்தித்ததென்பது கொண்டு இந்தச் சரீரத்திற்கு ஒரு பிரமாணத்தாலும் சேதனத்தன்மை 
சொல்லமுடியாதென்க. (69)

(70)     சரீரத்திற்குச் சைதன்யத்தன்மை எந்தக் காரணத்தால் உன்னால் நிச்சயிக்கப் பட்டதென்பதாம். (70)

    (அ-கை) சுக்கிலம், இரத்தமென்னும் இவற்றின் ரூபமான சரீரத்தை யுண்டுபண்ணும் 
பூதங்களிருக்கும் பொழுதுதான் சைதன்யம் தோன்றுகின்றது. அவை இல்லாத பொழுது 
தோன்றுகிறதில்லை. ஆதலின் சைதன்யம் சரீர ரூபமாகவே இருக்கின்றதென்று சொல்லுவாரை
நோக்கிக் கூறுகின்றார்

(70-வ)     பூதங்களிருந்தும் பிறட்சி காணப்படுகின்றதென்பதாம்.

    (உரை) பிணசரீரத்திலும் கருப்பமுதலியவற்றிலும் தேக ரூபமான பூதங்களிருப்பினும் 
சைதன்யந் தோன்றாமையால் தேக ரூபமாயிருப்பது சைதன்யமென்று கூறுதல் பொருந்தாது. (70வ)

    (அ-கை) ஆகையால் சரீரத்தை ஆன்மாவாகக் கூறும் கூற்றுப் பிரமாணத்திற்குப் 
பொருந்தாதெனக் கூறுகின்றார்.

(70இ)     ஆகையால் சரீரத்தை யான்மாவாகக்கூறும் கூற்று காகத்தின் கரைதலுக்கு ஒக்குமென்பதாம். (70இ)

    (அ--கை.) போக்கியமாதலின் இந்தச் சரீரத்திற்கு அசேதனத்தன்மை உண்டென்று கூறுகின்றார்.

(71)     சர்க்கரை முதலியன சீவனுடைய சாயையினால் போக்கியமாயிருத்தல்பற்றி அவற்றில் 
சைதன்யத் தன்மை தோன்றாதவாறுபோல் சரீர ரூபமான பூதக்கூட்டமும் சீவனுடைய சாயையினால் 
போக்கியமாயிருப்பதுபற்றிச் சருக்கரை முதலியவற்றுடன் ஒக்குமென்பதாம்.

    (உரை) சாயை என்பது அநுபவ ரூபமான ஞானம். சருக்கரை முதலியன சீவனான 
ஆன்மாவினுடைய அநுபவ ரூபமான ஞானத்தினால் போக்கியமாக அறியப்படுந்தன்மையுடன் 
விடயமா யிருத்தலால் எக்காலத்தும் அவை சேதனத்தன்மையுடையனவாய்க் காணப்படாதவாறுபோல் 
சரீர ரூபமான பூதக்கூட்டமும் முன்னர்க்கூறியவாறு அறியப்படுந்தன்மையுடன் போக்கிய ரூபமாக 
விஷயமாயிருத்தலால் அசேதனமென்பதுபற்றி அந்தச்சரீரத்திற்குப் போக்திருத்தன்மைப் 
பொருந்துகிறதில்லை. அன்றியும் சரீரத்தைச் சேதனனாகக் கூறின் அந்தச் சரீரம் அடிக்கடி 
பரிணாமத்தையடைந்து நாசத்தை யடைவதால் பாலிய நிலையில் அனுபவிக்கப்பட்டதை 
விருத்த நிலையில் நினைத்துப்பார்த்தால் ஞாபகத்திற்கு வராமலிருக்க வேண்டும். இவ்வாறு 
விரிவாக இந்தப்பட்சம் மிருகேந்திரவிருத்தி தீபிகையில் எம்மால் விலக்கப்பட்டிருக்கின்றது (71)

    (அ-கை.) சரீரத்தினும் வேறான இந்திரியங்களே போக்தாவாயிருக்கட்டும். அவற்றின் வேறான 
பொருள்களுக்குப் போக்திருத்தன்மை யில்லையென்றும் இந்திரியங்களுக்குச் சைதன்யத் தன்மை 
உண்டென்றும் கூறுவோர் கூற்றுப் பொருந்தாதெனக் கூறுகின்றார்.

(72)     போக்கியத் தன்மை கரணத் தன்மையென்னும் இவற்றால் இந்திரியங்களுக்குச் சைதன்யமின்மை 
சித்தித்தது. ஆகையால் ஞான சுபாவனான புருடன்றான் போக்தா வாவனென்பதாம்.

    (உரை)  முன்னர்க் கூறியவாறு இந்திரியங்களும் போகத்திற்காக ஏற்பட்டமைபற்றிப் 
போக்கியமாயிருத்தலாலும், ஆயுதம் முதலியனபோல் கரணத்தன்மையுடன் கூடியிருத்தலாலும் 
இதற்குச் சேதனமின்மை மறுக்க முடியாததாகும். ஆகையால் இந்திரியங்களுக்குக் கருத்தாவா 
யிருக்குந் தன்மை கிடையாது . ஞான சுபாவனான ஆன்மாவிற்கே கருத்தாவாயிருக்குந் தன்மையுண்டு. 
ஏனையகாரகங்களின் பிரவிருத்தியிலும் நிவிருத்தியிலும் ஆன்மாவே யேதுவாக இருக்கின்றமையால் 
அவனுக்கே கருத்தாவா யிருக்குந்தன்மை பொருந்துகின்றது. இவ்வாறே "காரகங்களைத் தொழிற்படும்படி 
செய்வதிலும் தொழிற்படா திருக்கச் செய்வதிலும் எவன் சமர்த்தனாயிருக்கிறானோ அவனே 
கருத்திருகாரகன். அவன் பிரவிருத்தி யில்லாதவனாகவாவது பிரவிருத்தி யுடையவனாகவாவது 
இருக்கலாம்” என்று பிறருங் கூறுகின்றனர். (72).

(73)     போக்கியத்தினுடைய சாயையினால் சம்பந்தஞ் செய்யப்பட்ட அறிவின் தோற்றமே 
போக்தாவிற்குப் போகமாகும் என்பதாம்.                                

    (உரை) போக்யமென்பது சுகம் முதலியவற்றின் ரூபமான புத்தியாகும். சாயையென்பது 
இவ்விடத்தில் புத்தியின் சொரூபம். இந்த புத்தி சொரூபத்துடன் சம்பந்தித்த அறிவின் தோற்றமே 
போக்தாவிற்குப் போகமாகும், இவ்வாறே சுவாயம்புவத்திலும் “இந்தப்புமானுடைய சுகதுக்கங்களைக் 
குறிக்கக்கூடிய ஞானமே போகம்" என்று கூறப்பட்டிருக்கின்றது. (73)

(73இ)     (அவ்வாறாகவும்) அசேதனமான போக்கியமானது அந்த ஆன்மாவின் சைதன்ய சம்பந்தத்தால் 
சேதனம் போல் பிரகாசிக்கின்றதென்பதாம்.

    (உரை) புத்தி முதலிய போக்கியமானது அசேதனமாயினும் அந்த ஆன்மாவின் சைதன்ய 
சம்பந்தத்தால் சேதனம் போல் பிரகாசிக்கின்றது. அவ்வாறே சாங்கியர்களும் " அசேதனம் சேதனம் 
போலிருக்கின்றது" என்று கூறுகின்றனர். (73இ)

(74)     (இவ்வாறாகவும்) பசுக்களுக்கும் பாசங்களுக்கும் ஒன்றுக்கொன்று சேதன மசேதனமென்னும் 
இவற்றின் சாயா சம்பந்தமானது போக்கியம் வாயிலாக மிகவும் பிரகாசிக்கின்றது என்பதாம்.

     (உரை ) சித்தத்தா லதிட்டிக்கப்பட்ட ஞானேந்திரியங்களின் சமூகமானது போக்கிய 
வஸ்த்துக்களை ஆன்மாவிற்கு விஷயமாகும்படி சேர்க்கின்றது. புத்தியினால் நிச்சயிக்கப்பட்ட 
அந்தப் போக்கியப் பொருளை ஆன்மா அறிகின்றான். இவ்வாறே “புத்தியினால் நிச்சயிக்கப்பட்ட 
பொருள்களைப் புருடன் கிரகிக்கின்றான் '' என்று பிறருங்கூறுகின்றனர். 

    ஆகவே பிரகாச ரூபமாயிருத்தலால் கண்ணாடி போலிருக்கும் புத்திபோத ரூபமான 
போகம் வாயிலாக போக்தாவான ஆன்மாக்களுடையனவும், விஷயரூபமாகப் பரிணாமத்தை 
யடைந்த போக்கியங்களான பாசங்களுடையனவும் ஆகிய பிரதிபிம்பிக்கப்பட்ட சேதனாசேதன 
ரூபமான சாயைகளின் சொரூபத்தினுடைய சம்பந்த மாத்திரம் எப்பொழுதும் ஒரே ரூபமாகப் 
பிரகாசிக்கின்றது. 

    அதுகொண்டே ஆன்மாவல்லாத பொருள்களில் ஆன்மாவென்னும் மயக்கமானது 
சம்சாரிகளுக்குண்டாகின்றது. ஆன்மாவைப் பற்றிய விவேக ஞானம் உண்டாகும் பொழுது 
சம்சாரிகளுக்குப் பிரகிருதி லயமென்று கூறப்பட்டிருக்கின்றது. அதுவே சாங்கியர்களுக்கு 
முத்தியாகும். (74)

(75)     (ஆகவே) பிரபுவினுடைய போக்கியத்தை விடயமாக உடைய போகமானது நீரில் 
சந்திரனுடைய சாயை எவ்வாறோ அவ்வாறிருக்கின்றதென்பதாம்.

    (உரை) பிரபு என்பது இவ்விடத்திலான்மாவைக் குறித்தது. போக்கியத்தை விஷயமாக 
உடைய போகமானது வியாபகனான ஆன்மாவினுடையதாகும். அந்த ஆன்மா போகத்தின் நிச்சய 
ரூபமான புத்தி போதத்தில் நீரில் சந்திரனுடைய சாயை போலிருக்கின்றது. சந்திரபிம்பம் சடமாயுந்
தூலமாயுமிருப்பதால் சைதன்யத்தின் தோற்றத்திற்குத் திருட்டாந்தமாகாது.  சொரூபத் 
தோற்றத்திற்கு மாத்திரம், திருட்டாந்தமாகக் கொள்ளல் வேண்டும். ஆகவே சேதனனுக்குப் 
போக்திருத்தன்மை யிருப்பதுகொண்டு புருடனுக்குத்தான் கருத்திருத்தன்மை சொல்லல் வேண்டும்.
அசேதனங்களாயும் போக்கியங்களாகவுமிருக்கும் புத்தி முதலியவற்றிற்குக் கருத்திருத்தன்மை 
கூறுதல் பொருந்தாது.(75)

    (அ-கை) கருத்திருத்தன்மையாவது கிரியையை நிகழ்த்துதல். அது புருடனுக்கிருப்பின் 
அவனுக்குப் பரிணாமத்தன்மை வந்துவிடும். புருடன் விகாரமற்றவனல்லவா.  ஆகையால் இந்தப் 
புருடனுக்குக் கருத்திருத்தன்மை யுண்டென்பது பொருந்தாது. ஆனால் பிரகிருதிக்குக் கருத்திருத்தன்மை 
கூறவேண்டும். அந்தப் பிரகிருதியானது விவேக ஞானம் வருமுன்னர் மகத்து முதலியவற்றின்
ரூபமாகப் போக்கியமா யிருந்துகொண்டு புருடனுக்குப் போக்கிய ரூபமாய்த் தன்னைக்காட்டுகின்றது. 
ஆதலால் இந்தப் பிரகிருதி சம்சாரமென்று கூறப்படுகின்றது. 

    பிரகிருதி புருடவிவேகம் உண்டான பொழுது புருடனிடத்தினின்றும் பிரகிருதி நீங்குதலே 
முத்தியென்று சொல்லத் தகுந்தது.  இவ்வாறு சாங்கியர் கூறுகின்றனர். இதற்கு “நாட்டியத்தலத்தி
லிருப்பவர்க்கு நடனஞ்செய்பவள் தன்னுடைய நடனத்தைக் காட்டியபின்னர் அந்தத் தலத்தினின்றும் 
நீங்குவதுபோல, பிரகிருதியானது தனது சொரூபத்தைப் புருடனுக்குக் காட்டிய பின்னர் 
அவனிடத்தினின்றும் நீங்குகின்றது " என்று திருட்டாந்தமும் அவர் காட்டுகின்றனர். 
இதைப்பற்றிக் கூறுகின்றார்.

(76)     புத்தி முதலியவற்றை அறியும் ரூபமான போகத்தில் புருடனுக்குப் பரிணாமத் தன்மை 
வந்துவிடுமென்னுமச்சத்தால் போகத்தைக் கொள்ளாத விஷயத்தில் பெத்தான்மா முத்தான்மாவாகிய         
இருவருக்கும் விசேஷமில்லாமற் போய்விடுமென்பதாம்.

    (உரை ) இதன் கருத்தாவது, கருத்திருத்தன்மையாவது தொழிற்பாடுடைமையன்று; 
தொழிற் செய்யுஞ் சக்தியுடைமை யேயாம். காந்தத்தின் சன்னிதியில் இரும்பு தொழிற்படுமாறு போல்
 ஆன்மாவின் சன்னிதியில் சரீர முதலியவற்றிற்கே அலைத்தல் முதலிய ரூபமான தொழிற்பாடு 
காணப்படுகின்றது. ஆகையால் புத்தி முதலியவற்றை அறியும் ரூபமான போகவிடயத்தில் புருடனுக்குப் 
பரிணாமத் தன்மை கிடையாது. புத்தி முதலியவற்றிற்கு வேறாயிருந்து அவற்றை யறியுந் தன்மை 
புருடனுக்கிருக்கின்றது. நின்பக்கத்திலோவெனின், புருடன் நின்மலனாகையாலும், புத்தி 
முதலியவற்றிற்கு வேறாயிருப்பதென்பதை ஒப்புக் கொள்ளாமையாலும், போக்தாவிற்கும் முத்தனுக்கும் 
விசேட மில்லாமற் போய்விடும். எதனாலெனின் இருவருக்கும் மலமின்மை சமமாகையாலென்க. (76)

    (அ-கை) பிறிதொரு காரியத்திற்காகப் பிரவிருத்தித்த பிரகிருதியே புருடனுடைய மோக்ஷத்தின் 
பொருட்டுப் பிரவிருத்திக்கின்றதென்று கூற வேண்டும். "கன்றின் விருத்தியின் பொருட்டு அசேதனமான 
பாலுக்கு எவ்வாறு பிரவிருத்தி காணப்படுகின்றதோ அவ்வாறே புருடனுடைய மோட்சத்தின் பொருட்டுப் 
பிரகிருதிக்குப் பிரவிருத்தி காணப்படுகின்றது"  என்பாரை நோக்கிக் கூறுகின்றார். 

(76இ)     புருடனுடைய மோட்சத்தின் பொருட்டுப் பாசங்களின் பிரவிருத்தி தடுக்கப்பட்ட தென்பதாம்.

    (உரை) பிரகிருதி சடமாயிருத்தலால் அதற்குப் புருடனைக் குறித்துப் பிரவிருத்தி யுண்டென்பது 
பொருந்தாது. பாலுக்கும் சேதனனான பசுவா லதிட்டிக்கப்பட்டே பிரவிருத்தி காணப்படுகின்றது. 
பாசங்கள் சடம்; சேதனனால் அதிட்டிக்கப்பட்டுப் பிரவிருத்திக்கின்றமையால் என்னும் இந்த 
அனுமானத்தில் வாயு நீர் என்னும் இவையும் பக்கமாகின்றமையால் இவை சேதனனை யதிட்டித்தே 
தொழிற்படுகின்றன. அன்றியும் பிரகிருதிக்குப் பிரவிருத்தியை ஒப்புக்கொள்ளும் விடயத்தில் 
மலமில்லாதவனான ஆன்மாவைக் குறித்து பிரகிருதியின் றொழிற்பாடு பொருந்தாது. பொருந்துமெனின், 
முத்தனிடத்தும் பிரகிருதிக்குப் பிரவிருத்தி உண்டாகும் (76இ)

    (அ-கை) ஆகவே பெத்தான்மா ஆசையுடன் கூடியிருக்கும்பொழுது போகத்திற்காக முயற்சித்தலால், 
அந்த ஆன்மாவினிடத்தில் விகாரத்தை ஒப்புக்கொள்ளாத விஷயத்தில் போகமும் பொருந்தாதெனக் கூறுகின்றார் .

(77)     போக்தாவினிடத்தில் விகாரத் தன்மையை ஒப்புக் கொள்ளாத விஷயத்தில் முத்தனிடத்துப்போல் 
அவனிடத்திற் போகம் பொருந்துகிறதில்லை யென்பதாம்.

    (உரை) பிரகிருதியைத் தொழிற்படுத்துவதற்கு அவிவேகமே காரணம். பிரகிருதி புருடவிவேக 
ஞானம் உண்டாயின் பிரகிருதியானது புருடனிடத்தில் தன்னதிகாரத்தினின்று நீங்கினமையால் 
பிரவிருத்திக்கிறதில்லை. ஆகையால் பெத்தன் முத்தனிருவருக்கும் விசேடமில்லை யென்பது கூடாது. 
இவ்வாறே " பிரகிருதியைவிட நல்ல பொருளானது வேறொன்றுமில்லை யென்பது எனது அபிப்பிராயம். 
எந்தப் பிரகிருதியானது பார்க்கப் பட்டு அதன் பின்னர் மீண்டும் புருடனுடைய பார்வையை 
அடைகிறதில்லையோ” என்று கூறுகின்றனர். அது பொருந்தாது. எவ்வாறெனின், நின்பக்கத்தில் 
புருடன் நின்மலனாகையால் அவிவேகம் உண்டென்பது பொருந்தாது. மலமாகிய காரணமின்றி 
அவிவேகமிருப்பின் எப்பொழுதும் விவேகமுண்டென்பது சித்திக்காது. ஆகையால் வேறு வழியால் 
அவிவேக முண்டென்பது பொருந்தாதது கொண்டு புருடனுக்கு மலத்தன்மை அராகத் தன்மைகளை 
ஒப்புக்கொள்ள வேண்டுமென்று கூறப்போகின்றோம். (77)

    (அ-கை) இவ்வாறாயின் மலத்தன்மையுடன் கூடியிருத்தலால் ஆன்மாவிற்கு அஞ்ஞான 
சுபாவத்தையும், சரீரத்துடன் கூடியறியுந்தன்மை யிருத்தலால் விகாரத்தையும் ஒப்புக்கொள்ளும் 
விஷயத்தில், பிறிதொன்றன் சுபாவத்தின் சேர்க்கையால் ஆன்மாவிற்கு அநித்தியத்தன்மை 
வந்துவிடுமென்னும் புறமதத்தின் ஆசங்கையைக் கூறுகின்றார்.

(77வ)     விகாரத்தன்மை யிருத்தலால் அநித்தியனென்று கூறின் என்பதாம்.

    (உரை) போக்தாவானவன் என்பது சேர்த்துக் கொள்ளல் வேண்டும். (77வ)

    (அ-கை) அந்த ஆசங்கையை நீக்குகின்றார். 

(77இ )     மாயையினால் சாதிக்கத்தகுந்த விசேடத்தை நீரறியவில்லை யென்பதாம்.

    (உரை) மாயாகாரியங்களால் உள்ளிருக்குஞ் சரீரம் வெளியிலிருக்குஞ் சரீரங்களின் வழியாகச் 
செய்யப்படும் விசேடத்தை நீரறியவில்லை. ஆகையால் அநித்தியத்தன்மை முதலிய தோஷங்கள் கிடையாவென்க. (77இ)

    (அ--கை) அநித்தியத்தன்மை முதலிய தோஷங்கள் இல்லை யென்பது எவ்வாறென்று கூறுகின்றார்.

(78)     சொரூபத் தோற்றத்தை யடைதலால் விகாரத்தன்மை அநித்தியத்தன்மை கிடையாவென்பதாம் .

    (உரை ) நையாயிகர் முதலாயினாரைப் போல் ஆன்மாவைச் சடப்பொருளாக நாங்கள் 
கொள்ளவில்லை. ஆனால் அறியுஞ் சுபாவத்தை யுடையவனாகவே கொள்கின்றோம். அவனுடைய 
அந்தச் சுபாவமானது சரீர முதலியவற்றின் சேர்க்கையின்றித் தோன்றாமையின், அனாதியான 
யாதோ ஒன்றால் கட்டுப்பட்டவனென்று நம்மால் அந்த ஆன்மா நிச்சயிக்கப்படுகின்றான். யாதோ 
ஒன்றென்ற அது மலமென்றே கூறப்போகின்றோம். ஆகவே மாயாகாரியங்களான கலை முதலியவற்றால் 
மலத்தினுடைய ஏக தேச மறைப்பு நீக்கத்தில் ஏகதேசமாக சொரூபத்தோற்றம் ஆன்மாவிற்குண்டாகின்றது.
மலபரிபாகம் வந்த பின்னரோவெனின், தீக்கை யென்னும் பெயருடைய சிவசத்தியினால் எல்லா 
விடயங்களின் தோற்றமும் உண்டாகின்றது. ஆகையால் இவனுக்கு விகாரத்தன்மையும் அநித்தியத் 
தன்மையுங் கிடையா வென்க. (78)

(78இ )     ( இவனுக்கு) போக்கியப் பொருள்களின் சேர்க்கையினால் உண்டான அராகமும் இவன் 
சுத்தனா யிருக்கிற படியால் இவனிடத்தில் தோன்றுகின்றது. பரிணாமமென்னுங் காரணத்தாலன்று என்பதாம்.

    (உரை ) ஆகையால், போக்கியப் பொருள்களின் சம்பந்தத் தாலுண்டான அராகமென்னும் 
சுகதுக்க மோகரூபமாகிய பிரகாசமும், இவன் படிகம்போலப் பிரகாச ரூபமாயிருத்தலால் இவனிடத்தில் 
தோன்றுகின்றது. முன் கூறப்பட்ட பரிணாமமென்னுங் காரணத்தாலன்று. அந்தப் பொருள்களினுடைய 
சம்பந்தமும் இவன் அந்தப் பொருள்களுக்கு வேறாயிருந்து அவை இவனுக்கு விஷயமாதலே யென்று 
முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. (78இ)

    ( அ--கை) ஆகவே போக்கியமான சரீரத்திற்கு அடிக்கடி பரிணாம மேற்படினும் போக்தாவான 
ஆன்மாவிற்குப் பரிணாமத்  தன்மை கிடையாதென்று கூறுகின்றார்.

(79)     சரீரம் பரிணாம தன்மை யடைவதால் ஆன்மா பரிணாமி என்று கூறலாகாது. கூறின் புத்தி 
முதலியனபோல் பரிணாமத்தன்மையை யடைவதுபற்றி ஆன்மாவிற்கு அசேதனத் தன்மையும் 
போக்கியத்தன்மையும் வந்துவிடுமென்பதாம்.

    (உரை) ஆன்மாவிற்கும் பரிணாமத் தன்மையை ஒப்புக் கொள்ளும் விஷயத்தில் புத்தி 
முதலியன போல் போக்கியத்தன்மையும் அசேதனத்தன்மையும் நேரிடுமென்பது பொருள். (79)

     (அ-கை) இவ்விடயத்தில் பிறருடைய மதத்தைக் கூறி மறுக்கின்றார்.

(80)     குணமான ஞானம் சமவாய சம்பந்தத்துடன் கூடி உண்டாகின்றது. அந்த ஞானமே புருடனுக்குச் 
சைதன்னியமாகும். வேறன்றென்பது பொருந்தாதென்பதாம்.

    (உரை) ஆன்மா சடசுபாவமுடையவன். அவனுக்கு மனத்தின் கூட்டத்தால் குணமாக ஞானம் 
சமவாய சம்பந்தத்துடன் தோன்றுகின்றது. தோன்றிய அந்த ஞானமே அவனுக்குச் சைதன்யம். இயல்பாக 
அறியுந்தன்மை கிடையாது. இவ்வாறு நையாயிகர் கூறுகின்றனர். அது பொருந்தாது. ஆன்மாவிற்குச்
சடத்தன்மையுண்டென்று கூறின் கடம் முதலிய சடப்பொருளில் ஞானத்திற்குச் சமவாய சம்பந்தம் 
பொருந்தாதவாறுபோல் ஆன்மாவிற்கு ஞானத்துடன் சமவாய சம்பந்தம் பொருந்தாது. (80)

    (அ-கை) ஞானத்துடன் சமவாய சம்பந்தத்தைக் கன்மமே நியமனஞ் செய்வதாயிருக்கின்றது ; 
கன்மத்துடன் பற்றுக் கோடுடைய புருடனிடத்திலேயே சமவாய சம்பந்தத்துடன் ஞானம் 
உண்டாகின்றமையாலும், கன்மத்தைப் பற்றுக்கோடாக உடைத்தாகாத கடம் முதலியவற்றில் 
உண்டாகாமையாலுமென்பார்க்குக் கூறுகின்றார்.

(81)     அறியாமையை யுடையவனான மனிதனிடத்திலேயே ஞானமுண்டாகின்றது; ஏனைய கடம் 
முதலியவற்றில் ஞானமுண்டாகிறதில்லை யென்னுமிந்த விடயத்தில் கன்மம் நியமனம் செய்வதென்பது 
பொருந்தாது. அந்தக் கன்மம் வேறிடத்தி லிருக்கின்றமையா லென்பதாம்.

    (உரை) உழுதல் முதலியன பூமியினிடத்திலிருக்குமாறு போல, கன்மமும் பிரகிருதியி னிடத்திலிருக்கும். 
ஆன்மாவினிடத்திலிருப்பதாக ஆகாது. ஆகுமெனில் ஆன்மாவிற்கு விகாரத் தன்மை வந்துவிடுமென்று 
முன்னரே கூறப்பட்டிருக்கின்றது.  ஆகவே கன்மமும் இவ்விடத்தில் நியமனஞ் செய்வதாக ஆகாது. (81)

     (அ-கை) ஆகவே சைதன்யத்தின் சமவாயத்தால் ஆன்மா ஞானசுபாவனாகவே 
சித்தித்தானென்று கூறுகின்றார்.

(82)     மோகத்தன்மையினின்றும் மோகமானது எவ்வாறு வேறில்லையோ அவ்வாறே 
சைதன்யத்தினின்றும் ஆன்மா வேறில்லை யென்பதாம்.

    (உரை) சைதன்ய ரூபமான ஞானமானது ஆன்மாவின் தருமமானபடியால் தருமத்திற்கு 
நாசமுண்டான பொழுது தருமத்தினின்றும் வேறுபடாமையினால் தருமிக்கும் நாசமுண்டாகுமென்பது 
கொண்டு எப்பொழுதும் ஞான சுபாவனாகவே ஆன்மாவை ஒப்புக்கொள்ளல் வேண்டும், அந்த ஆன்மா 
மலத்தால் மறைக்கப்பட்டிருத்தலால் மனம் புத்தி முதலியன ஆன்மாவினறிவை ஏகதேசத்தில் 
விளக்குகின்றவையாகச் சித்தித்தனவென்பது கூறப்பட்டது (82)

    (அ-கை) இந்த ஆன்மாவிற்குப் போகக் கிரியையில் உபகாரஞ் செய்வதற்குத் துணையாகச் 
சித்தித்த கிரியையிற் செலுத்துதல், கரணம், ஆசையை யுண்டுபண்ணுதல் என்னும் இவை ரூபமான 
கலை வித்தை அராகமென்னும் மூன்று சட்டைகளும் பிரகிருதியைச் சாதித்த பின்னர்க் கூறப்படப் 
போகின்றனவென்று கூறுகின்றார்.

(83)      போகக்கிரியையில் கருத்தாவான இவனுக்குத் துணையாயுள்ள கிரியையிற் செலுத்துதல், 
கரணம், போக்கியப் பொருளில் ஆசையை யுண்டுபண்ணுதலாகிய மூன்றும் பிரகிருதியைச் சாதித்த 
பின்னர்க் கூறப்படப் போகின்றனவென்பதாம். (83)

    (அ--கை) இவ்வாறு சம்பந்தம் பற்றிப் போக்தாவைச் சாதித்துவிட்டு எடுத்துக்கொண்ட 
புத்தியினின்றே அகங்கார முண்டாகின்றதென்று கூறுகின்றார்.

(84)     யாதொரு காரணத்தால் புத்தியினுடைய கூர்மை முதலிய வியாபாரங்களில் காரியத்தை 
யுண்டுபண்ணுங் குணங்கள் காணப்படுகின்றனவோ, அந்தக் காரணத்தால் புத்தியினுடைய 
மற்றொரு பாகமானது குணத்துடன் கூடி அகங்காரத்தை யுண்டுபண்ணிற்றென்பதாம்.

    (உரை) அந்தப் புத்தியினுடைய கூர்மை முதலிய வியாபாரங்களில் முன்னர்க் கூறியவாறே 
ஒன்றோடொன்றெதிர்த்துப்  பற்றியிருத்தலாலும், சமமாகப் பற்றியிருத்தலாலும், காரியத்தை 
யுண்டுபண்ணுங் குணங்கள் காணப்படுகின்றன. இவ்வாறே சாங்கியரும் "குணங்கள் 
ஒன்றோடொன்றெதிர்த்துப் பற்றியிருத்தலாலும், சமமாகப் பற்றியிருத்தலாலும் 
பிரவிருத்திகளையுடையன"  என்று கூறுகின்றனர். ஆதலால் நிச்சயிப்பதற்கு ஏதுவான 
புத்தியினுடைய மற்றொரு பாகம் குணத்துடன் சேர்ந்து அகங்காரத்தை யுண்டுபண்ணிற்று. 
“ஒன்று தனிமையாயிருந்து ஒன்றை யுண்டுபண்ணாது” என்னும் நியாயத்தால் குணங்கள் 
ஒன்றோடொன்று சேர்ந்தே காரியங்களை யுண்டுபண்ணுகின்றனவாக ஆகின்றன. 
அவ்வாறே எல்லாப் பொருள்களினிடத்தும் குணங்கள் சேர்ந்திருக்கின்றன. இது சத்துவ 
சம்பந்தம் என்னும் வியவகாரங்கள் சத்துவ குணம் அதிகமாயிருப்பது பற்றியேயாம். (84)

     (அ-கை) புத்தியானது நேரே குணத்தின் காரியமா யிருத்தலினாலேயே அந்தப் 
புத்தியினிடத்தில் குணத்தின் சேர்க்கை காணப்படுகின்றது. கட முதலியவற்றில் மண்ணின் 
சொரூபம் சம்பந்திப்பது போலுமென்று கூறுகின்றார்.

(85)     புத்தியானது குணதத்துவத்தின் முதலாவது விகாரமாகும். ஆகையால் அதனிடத்தில் 
உண்டாதல், ஒன்றோடொன்றெதிர்த்தலாகிய இவற்றுடன் நியமமாகக் குணங்களிருத்தல் 
பொருந்துகின்றதென்பதாம். 

    (உரை) புத்தியினிடத்தில் குணங்கள் நியமமாக ஒன்றோ டொன்றெதிர்த்துக்கொண்டு 
தோன்றிச் சித்தி முதலியவற்றை யுண்டுபண்ணுகின்றனவென்று முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. (85)

    (அ-கை) இவ்வாறாயின் அகங்காரத்திற்கும் குணத்தின் சேர்க்கையிருத்தலால் 
குணங்களினின்றே அகங்காரந் தோன்றினதாகக் கொள்ள வந்துவிடுமென்பார்க்குக் கூறுகின்றார். 

(86)     அகங்காரத்திலும் இந்த நியாயத்தைக் கொள்ளக் கூடாது. ஒன்றில் நின்று ஒன்று தோன்றுதலால் 
தன்மாத்திரைகளிடத்தும் குணத்தின் சேர்க்கை சம்பந்திக்கின்றதென்பதாம்.

(உரை ) அகங்காரமுதல் பூதமீறாக உள்ள அனைத்தும் ஒன்றில் நின்று ஒன்று தோன்றுதலால்
பரம்பரையாக குணத்தின் காரியமாயிருக்கின்றன. அகங்காரமாத்திரம் அன்று. தன்மாத்திரைகளிடத்தும் 
என்ற உம்மையால் இந்திரியங்கள் பூதங்களென்னு மிவற்றினிடத்தும் குணத்தின் சேர்க்கை சம்பந்திக்கின்றது. 
கடங் கபாலங்களில்  மண்ணின் சொரூபம் சம்பந்திப்பது போலும். ஆகவே இவற்றிற்குக் குணத்தின் 
சேர்க்கை இருப்பது கொண்டு குணங்களினின்றும் பரம்பரையாக உற்பத்தியிருப்பினும் நேரே 
உற்பத்தியில்லாமையால் மேலே கூறிய நியாயம் அகங்காரத்திற்கு வந்துவிடுமென்னுங் குற்றமில்லை . (86)

    (அ-கை) இனி அந்தக் குணங்கள்  இவை யென்பதும் எந்தவியாபாரங்களால் அவை சித்திக்கின்றன 
வென்பதும் கூறுகின்றார்.

(87)     புருடனுக்குப் போக்கியப் பொருளை எவை தோற்றுவித்தனவோ, புத்திக்குக் காரணங்களான 
அத்தகைய சத்துவம் ரஜஸ் தமசு என்னும் குணங்கள், பிரகாசம் வியாபாரம் நியமமென்னும் 
வியாபாரங்களால் சித்திக்கின்றன வென்பதாம்.

    (உரை) மேலே கூறியவாறு புத்திமுதலியவற்றின் வாயிலாகப் புருடனுக்குப் பாவங்களும் 
பிரத்தியயங்களுமான போக்கியப் பொருளைச் சிருட்டியின் ஆரம்பத்தில் எவை தோற்றுவித்தனவோ, 
இப்பொழுதும் தோற்றுவிக்கின்றனவோ, அவை குணங்களாகும்.  அவை புத்திக்குக் காரணங்களாகும்.
அந்தக்குணங்கள் ஒன்றினின்றும் மற்றொன்று பிரிக்கப்படாமையின் ஒரே தத்துவமாகும். 
அவ்வாறே “ஒன்றினின்று மற்றொன்று பிரிக்கப்படாமையின் குணங்கள் மூன்றாயினும் தத்துவம் 
ஒன்றே"  என்று கேட்கப்படுகின்றது. ஆகவே புத்திக்குக் காரணமாயிருக்குந் தன்மையால் பிரகாசம் 
தொழில் நியமமென்னும் வியாபாரங்களால் சத்துவ முதலிய குணங்கள் சித்திக்கின்றன. பிரகாச 
முதலிய இவை முக்கியமாயிருப்பது பற்றிக் காட்டப்பட்டன . சலியாதிருக்குந் தன்மை, ஊக்கம், 
சூரத்தன்மை, குரூரத்தன்மை, இரமித்தலின்மை, மந்தமாயிருக்குந்தன்மை யென்னும் இவையும் 
குணத்தின் காரியங்களாக ஆகமங்களில் படிக்கப்பட்டிருக்கின்றன. (87)

     (அ- கை) குணங்களே பிரகிருதியென்னும் பெயருடன் நித்தியமாயிருக்கின்றனவென்று 
சாங்கியர் கூறுவது பொருந்தாதெனக் கூறுகின்றார்.

(88)     சடத்தன்மையும் அநேகத்தன்மையும் குணங்களுக்கிருத்தலால் அந்தக் குணங்களுக்குக் 
கடம் முதலியன போல் காரணத்தை முன்னிட்டிருக்குந் தன்மை சித்தித்திருப்பதை யறிந்துகொள்க
வென்பதாம்.

    (உரை ) யாதொரு காரணத்தால் இந்தக் குணங்களுக்கு அநேகத்தன்மை இருக்கின்றதோ, 
அந்தக் காரணத்தால் அநேகத் தன்மையும் சடத்தன்மையுமிருப்பது கொண்டு கடமுதலியன போல் 
காரியத்தன்மை சித்திக்கின்றது. (88)

    (அ --கை) இந்தக் குணங்களுக்கு முதற்காரணமிதுவென்று கூறுகின்றார்.

(89)     எதனிடத்தில் குணங்கள் சூக்கும ரூபமாகவும் பிரிவுபடாததாகவுமிருந்து கொண்டு 
தோன்றுகின்றனவோ, அத்தகையதாயும் சிவனாலேவப்பட்டதாயுமுள்ள பிரகிருதியே குணங்களுக்கு 
முதற்காரணமாகுமென்பதாம்.

    (உரை) எதனிடத்தில் சூக்கும ரூபமாகவும் பிரிவுபடாததாகவு மிருந்துகொண்டு குணங்கள் 
சிவனுடைய ஏவுதலால் தத்தம் வியாபாரத்தின் பிரிவுகளுடன் தூலங்களாகத் தோன்றுகின்றனவோ, 
அதுவே பிரகிருதியாகும். சிவனாலேவப்பட்டது என்றதனால் இந்தப் பிரகிருதி சடமாயிருத்தலால்
 இதற்குச் சுதந்திரமாகப் பிரவிருத்தி கிடையாதென்பது அறிவிக்கப்பட்டது. இந்தப் பிரகிருதி 
ஒவ்வொரு மனிதனிடத்தும் சூக்கும தேக ரூபமாயும் அநேகத் தன்மையுடனும் இருத்தலால் 
இதற்குக் காரியத் தன்மை யுண்டெனக் கூறப்போகின்றோம். (89 )

    (அ--கை) இனி, கலை முதலிய ஐந்து சட்டைகளுடன் கூடிய புருடனுக்குப் போக்திருத்தன்மை 
யிருத்தலால் பும்சத்துவமலம் இருப்பது கொண்டு தீக்கையில் அம்மலத்தைச் சுத்திசெய்யும் பொருட்டு 
ஆகமங்களில் பிரகிருதி தத்துவத்திற்கு மேல் புருட தத்துவத்தைக் கூறியிருப்பினும், அந்தப் புருடதத்துவம் 
வியாபகமாயும் சேதனமாயுமிருத்தலால் போக்திருத்தன்மையுடன் கூடியிருப்பது கொண்டு 
அத்துவரூபமாயும் போக  சாதனமாயும் ஆகாமையின் அதனை யிவ்விடத்தில் விலக்கி புருடனுக்கு 
ஆசையையுண்டு பண்ணுவதாக முன்னர்க் கூறப்பட்ட அராக தத்துவத்தைச் சாதிக்கின்றார்.

(90)     போக்கியப் பொருள்களின் சமீபத்தை யடைந்து அப்பொருள்களில் பற்றுதலானது 
நிகழ்கின்றது. புருடனுக்கு அந்தப் பற்றுதல் சித்திப்பதின் பொருட்டுப் போகத்தில் ஆசையை 
யுண்டுபண்ணும் அராகத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதாம்.

    (உரை ) சம்சார நிலையில் போக்கியப்பொருளைப் பார்த்து அதனிடத்தில் புருடனுக்குப் 
பற்றுதல் நிகழ்கின்றது. அந்தப் பற்றுதல் காரணமின்றி நிகழ்கிறதில்லை. காரணமின்றி நிகழுமாயின் 
முத்தியிலும் பற்றுதலிருக்கவேண்டும். ஆகையால் அந்தப் புருடனுக்குப் பற்றுதல் சித்திப்பதின் 
பொருட்டுப் போகத்திலாசையை யுண்டுபண்ணும் அராகத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். (90)

    (அ--கை) இவ்விடத்தில் பிறருடைய கருத்தைக் கூறுகின்றார்.

(91)    சத்துவ ரஜஸ் தமோ குணங்களுடன் கூடினதாயும் புத்தியிலிருப்பதாயுமுள்ள போக்கியமே 
புருடனுக்கு விடயத்திலாசையை யுண்டுபண்ணும். ஆகையால் அந்தப் போக்கியத்தின் வேறாக அராகத்தை 
யொப்புக்கொள்வது பிரயோசன மில்லை யென்பதாம் (91)

(92)     புருடனுடைய புத்தியில் போக்கியப் பொருள் இருக்கின்றது. அந்தப்பொருளில் புருடனுக்கு 
ஆசையை யுண்டு பண்ணுவது எதுவோ அதையே அராகமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அராகம் 
போக்கியப் பொருளினும் வேறு. வைராக்கியமின்மையை யிலக்கணமாகவுடைய புத்திதருமமாகிய 
ரூபத்தை அராகமாக வொப்புக்கொண்டால் இந்தக் குற்றம் நேருமென்பதாம். 

    (உரை) சாத்துவிக முதலிய போக சாதனங்களான விடயங்களின் சொரூபத்தை நிச்சயிக்கும் 
வாயிலாகப் புத்தியிலுண்டானதாயும், சுக துக்க மோக ரூபமாகப் பரிணாமத்தை யடைந்ததாயு முள்ள 
சத்துவ முதலிய மூன்று குணங்களே நேரே போக்கியமா யிருத்தலால் அந்தப் போக்கியப் பொருளில் 
புருடனுக்கு எது ஆசையை யுண்டுபண்ணுகிறதோ, அதனை, விடயம் குணம் முதலியன ரூபமாகப் 
புத்தியிலுண்டானதாயும், போக்கிய ரூபமாயு மிருக்கும் சத்துவமுதலிய முக்குணங்களின் வேறான 
அராகமாக ஒப்புக்கொள்ள வேண்டும். 

    போக்கியப் பொருளே ஆசையை யுண்டுபண்ணுகிறதென்று கூறின், ஆசையற்றவனாக 
ஒருவனும் ஆகமாட்டான். இவ்வாறே தத்துவ சங்கிரகத்திலும் "போக்கியப் பொருள்களால் 
ஆசையுண்டாகுமெனில் ஆசையற்றவனாக ஒருவனுமாகமாட்டான்'' என்று கூறப்பட்டிருக்கின்றது. 
அவ்வாறாயின் அவைராக்கியத்தை இலக்கணமாகவுடைய புத்தி தருமமே அராகமாக இருக்கட்டுமென்று 
கூறுவார்க்கு ரூபத்திலும் இந்தக் குற்றம் நேருமென்று கூறுகின்றார். 

    இதன் கருத்தாவது அவைராக்கியத்தை இலக்கணமாகவுடைய ரூபமானது வாசனா ரூபமாயிருப்பதால் 
ஆசையென்னும் காரியத்தைச் செய்யாது. செய்யுமெனின், புத்தியினிடத்தில் அநேக வாசனைகளிருத்தலால் 
ஒரே காலத்தில் மாறுபட்ட அநேக ஞானங்கள் புருடனுக்குத் தோன்றி அவற்றிற்கு நாசமுண்டாகும். 
போக்கிய நிலையை அடைந்ததாயும் தூலரூபமாயுமுள்ள பிரத்தியய ரூபமாக அராகத்தை 
ஒப்புக்கொண்டால் முன் போல் வைராக்கியமுடையா ரில்லாமற்போய் விடுவர். 

    ஆகையால் புத்தி தருமங்களினும் வேறான அராகத்தை யொப்புக்கொள்ளவேண்டும். 
கன்மமே ஆசையை யுண்டுபண்ணுகின்றதெனின், அதுவும் பொருந்தாது.  கன்மமானது உழுதல் 
முதலியன போல் பலனை யுண்டுபண்ணி ஒழிவை யடைகின்றமையால் மற்றக் காரியங்களுக்கு 
ஏதுவாவதிற் பிரமாணமில்லை. அன்றியும் அநேக தத்துவங்களி னுண்மையு மில்லாமற் போய்விடும்.  (92)

    (அ-கை) இனி வித்தையுண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.

(93)     புத்திபோத ரூபமான கன்மத்தில் கரணமின்றிக் கருத்தாவினுடைய கிரியை 
காணப்படுகிறதில்லை. அது கொண்டு புத்தியின் போதத்தை விளக்கும் வித்தை சித்தித்ததென்பதாம்.

    (உரை) மேலே கூறியவாறு இந்திரியங்களுக்கு விடயங்களைப் புத்தியின் சமீபத்தில் 
சேர்க்கும் மூலமாக உபயோகமிருத்தலால் அந்தப் புத்தி போத ரூபமான அறிதற்றொழிலில் 
புருடனுக்கு யாதானுமோர் கரணமிருத்தல் வேண்டும். எது கரணமாகின்றதோ அதுவே வித்தையாகும்.  ( 93)

    (அ-கை) இந்த வித்தை விஷயத்தில் பிறருடைய அபிப்பிராயத்தைக் கூறுகின்றார்.

(94 )       அந்தப் புருடனுக்குத் தன்னையும்  ஏனையவற்றையும் விளக்கக்கூடிய தீபம் போலுள்ள 
புத்தியானது கரணமாக இருக்கின்றது.  ஆகையால் வித்தையால் பிரயோசனமில்லை யென்பதாம்.

    (உரை) புத்தியானது பிரகாச ரூபமாயிருத்தலால் தீபம் போல் விஷயரூபமான தன்னையும் 
விளக்குகின்ற தென்பது கொண்டு வேறு கரணஞ் சித்திக்கிறதில்லை. (94)

    (அ-கை) வித்தை விடயமாகப் பிறர் கூறிய கூற்றை மறுக்கின்றார் . 

(95)     தூண் முதலிய பொருள்களை யறியும் விஷயத்தில் புருடனுக்குத் தீபமானது சாதனமாயிருக்கின்றது. 
தீபத்தையறியும் விஷயத்திலோ கண் சாதனமாயிருக்கின்றது. இவ்வாறே புத்தியிலும் ஒப்புக்கொள்ள 
வேண்டுமென்பதாம்.

    (உரை ) புத்தியானது அறியப்படுவதா யிருத்தலால் செயப்படு பொருளாயிருத்தல்பற்றி 
அந்தப் புத்திக்குச் சாதனத்தின் விருப்பமான திருக்கிறதென்பது கருத்து. இவ்வாறே தத்துவ சங்கிரகத்திலும்
“புத்தியானது சூரியன் போல் பிரகாச ரூபமாயி ருப்பினும் தான் செயப்படு பொருளாயிருத்தலால் 
வேறான சாதனத்தைக் கொண்டே தன்னையறிவதற்குச் சக்தியுள்ளதாக ஆகின்றது" என்று 
கூறப்பட்டிருக்கின்றது. (95)

    (அ--கை) இதனையே விளக்கிக் கூறுகின்றார்.

(96-97 )     புத்தியானது முக்குண ரூபமாயிருத்தலால் விடய சொரூபமான தன்னை 
விவேகத்தினால் விளக்குதற்குச் சக்தியுள்ளதாக ஆகாது. எதனாலெனின், புத்தியானது தான் 
தனிமையாக வில்லாமையாலென்க. குணத்தினும் வேறான வித்தையானது தான் தனிமையாக 
இருந்துகொண்டு விவேகத்தினால் புருடனுக்கு அறியப்படுவதை யறிவித்தற்குச் சக்தியுள்ளதாக 
ஆகின்றது. இவ்விடயத்தில் பொறாமை கூடாதென்பதாம். 

    (உரை) அந்தப் புத்தியானது முக்குண ரூபமாயிருத்தலால் போக்கிய சொரூபத்தின் 
தோற்றமாயிருந்து செயப்படு பொருளாயிருப்பது கொண்டு தன்னைத்தான் விளக்கமுடியாது; 
தீப முதலியன போலும். வித்தையோவெனில், புத்தியைக் கடந்திருக்கின்றமையால் 
போக்கியப் பொருளிலும் வேறாய்த் தான் தனிமையாயிருந்து கொண்டு புருடனுக்கு அறிய 
வேண்டிய பொருள்களை வேறு சாதனங்களின் துணையின்றி அறிவிக்கின்றது.  (96-97)

     (அ-கை) இனிக்கலையின் தொழிலைக் கூறுகின்றார்.

(98)     போக்கியஞ் சித்திப்பதின் பொருட்டுக் கன்ம முதலிய காரக சமூகங்களை ஏவுகின்றவனாயும் 
சுதந்திரனாயுமுள்ள புருடன் கருத்தாவாகின்றான்.  கலையோவெனில் அப்புருடனைத் 
தொழிற்படுத்துகின்றதென்பதாம்.

    (உரை) போக்திருத்தன்மை யிருப்பது கொண்டு போகத்திற்காகப் புத்தி முதலிய 
காரகக் கூட்டங்களை ஏவுகின்றமையால் புருடன் கருத்தாவென்று கூறப்பட்டான். இவ்வாறே 
"காரகங்களைத் தொழிற்படச் செய்வதிலும் தொழிற்படாதிருக்கச் செய்வதிலும் எவன் 
சமர்த்தனாகின்றானோ, அவன் தொழிற்பட்டாலும் தொழிற்படாதிருந்தாலும் கருத்திரு 
காரகனாவன்'' என்று பிறருங் கூறுகின்றனர். அந்தப் புருடனுக்குப் போகக் கிரியையில் 
பின்னர்க் கூறப்போகின்றவாறு சாமர்த்தியத்தை விருத்தி செய்வதால் தொழிற்பாட்டைச் 
செய்விக்கின்ற கலையுண்டென்பது நூல்களிற் கூறப்படுகின்றது (98)

    (அ--கை) சாங்கியர் புருடனுக்குக் கருத்திருத்தன்மை கிடையாதென்று கூறுகின்றார். 
அது பொருந்தாதென்று கூறுகின்றார்.

(99)     புருடனுக்குக் கருத்திருத்தன்மை யில்லையென்று கொண்டால் போக்தாவென்னும் சொல் 
பயனற்றுப் போய்விடும்.  பிரகிருதியின் வியாபாரமும் பயனில்லாமற் போய்விடுமென்பதாம். 

     (உரை) போகமானது கிரியையானபடியால் போக்திருத் தன்மையினாலேயே புருடனுக்குக் 
கருத்திருத்தன்மை சித்திக்கின்றது. அந்தப் புருடனிடத்தில் கருத்திருத்தன்மை யில்லையென்று 
கொண்டால் அதனுடைய போகத்திற்காக வுண்டான பிரகிருதியின் தொழிற்பாடும் பயனற்றுப் 
போய்விடும்: கருத்திருத்தன்மை யில்லாதவனிடத்தில் கரண முதலியவற்றின் சம்பந்தமானது 
வீணாகுமாகையாலென்க. (99)

(100)     (அன்றியும்)  கன்மேந்திரிய முதலியன உளி முதலியனபோல் கிரியைக்குச் சாதனமா 
யிருக்குந் தன்மையால் கருத்தாவுடன் கூடியிருக்கின்றன. அது கொண்டு புருடனை வியாபகனான 
கருத்தாவாக அறிந்து கொள்ளல் வேண்டுமென்பதாம்.

    (உரை) ஆன்மாவை வியாபகனாக ஒப்புக்கொள்ள வில்லையாயின் ஆகாசம் முதலியன 
போல் ஆன்மா வடிவமற்றவ னாகையால் வேறு தேசத்திற்குச் செல்லுதல் சம்பவியாது. அது கொண்டு 
தெற்குத் தேசத்திலுள்ளவனுக்கு காச்மீர முதலிய வடக்குத் தேசங்களிற் காணப்படும் பலத்தின் 
அநுபவம் பொருந்தாது. இந்த அநுபவம் வியாபகத் தன்மையின்றிப் பொருந்தா தாகையால் 
ஆன்மாவை வியாபகனாக ஒப்புக்கொள்ள வேண்டும். 

    இவ்வாறே பராக்கியம் முதலிய நூல்களில் "கலையானது புருடனுக்குக் கருத்திரு சத்தியை 
விளக்குகின்றது. ஆகையால் கலை, புருடனுக்குத் தொழிற்பாட்டைச் செய்கின்றதாக ஆகின்றது.
பின்னர் புருடன் கலையுடன் கூடிக்கொண்டு போகத்தில் கருத்திரு காரகனாக ஆகின்றான்"
என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்தக் கருத்தாவான புருடனுடைய கருத்திரு சத்தியென்பது
சத்தி ஒன்றானமையால் ஞானக்கிரியா சத்தியாகும். அந்தச் சத்தி  பின்னர்க் கூறப்படுமாறு 
மலத்தால் மறைக்கப் பட்டமையால் விடயங்களில் தொழிற்படுகிறதில்லை. ஆகையால் தீபம் போல் 
பிரகாச ரூபமான கலையானது ஏக தேசத்தில் மலத்தை விலக்கிப் புருடனுடைய கருத்திரு சக்தியைத் 
தோற்றுவிக்கின்றது. 

    இந்தக் காரணத்தால் அந்தக் கலையானது ஏவுதற் றொழிலைச் செய்கிற கருத்தாவென்று 
கூறப்படுகின்றது. அந்த அணுவான புருடன் கலையுடன் கூடி அதிக வேற்றுமையின்றிப் பிரகாசித்துக்
கொண்டு போகக்கிரியையில் கருத்திரு காரகனாகக் கூறப்படுகின்றான், புருடன் போக்தா 
வானபடியால் அவன் கருத்தா.  கலையோவெனின், அந்தப் புருடனை யேவுகின்றமையால் காரகமென்று 
கூறப்படுகின்றது. இவ்வாறே மிருகேந்திரத்திலும்  "ஒன்றுடனொன்று வேறு படாதவாறு போல் 
இவ்விரண்டு மிருந்து கொண்டு ஆன்மாவிற்குப் போகக் கிரியையைச் செய்யும் விஷயத்திற் 
கருத்தாவாகவும் காரகமாகவுமிருக்கின்றன” என்று கூறப்பட்டிருக்கின்றது. (100)

(101-102)     (இவ்வாறின்றி) தோற்றத்தைச் செய்யும் கலையைத் துணையாகக் கொள்ளாது 
ஆன்மாவிற்குக் கருத்திருத் தன்மையை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் கலையின் சேர்க்கைக்கு 
முன்னரே ஆன்மாவிற்குச் சர்வ கருத்திருத் தன்மையுண்டாக வேண்டும் சர்வ கருத்திருத்தன்மையின்
சம்பந்தத்தால் ஈசுவரன் போல் ஆன்மா சர்வஞ்ஞனாகவேண்டும். ஆகவே தன்னுடைய துக்கத்தின் 
பொருட்டு ஆன்மாவிற்குக் கருத்திருத்தன்மை யுண்டென்பது பொருந்தாதென்பதாம்.

    (உரை) ஆன்மா நின்மலனானமையால் கலையைத் துணையாகக் கொள்ளாது இவனுக்குக் 
கருத்திருத்தன்மையை ஒப்புக் கொண்டால், பரமசிவன் போல் கலை முதலிய பாச ரூபமான சரீர 
சம்பந்தமின்றியே சர்வ கருத்திருத் தன்மையும், அறிவில்லாதவனுக்குச் செய்யமுடியாதாகையால் 
சர்வஞ்ஞத் தன்மையும் வந்துவிடும். மறைப்பின்றிச் சிவனால் அதிட்டிக்கப்படாதவனாயும் 
சுதந்திரனாயுமுள்ள இந்த ஆன்மாவிற்குத் தன்னுடைய துக்கத்தின் பொருட்டே சரீர 
முதலியவற்றிற்குக் கருத்தாவாயிருக்குந் தன்மையும் பொருந்துகிறதில்லை. 

    அவ்வாறின்றிச் சுகத்தையுண்டுபண்ணுதல் முதலியவற்றில் இவனுக்குப் பிறிதொன்றைத் 
துணையாகக் கொள்ளுதல் காணப்படுகின்றமையால் பெத்தத் தன்மையும் மலத்துடன் கூடியிருக்குந் 
தன்மையும் இருக்கின்றன வென்பது நிச்சயிக்கப்படுகின்றது.  மலத்துடன் கூடியிருப்பது கொண்டே
இவனுக்குச் சர்வ கருத்திருத்தன்மை யின்மையும் சர்வஞ்ஞத் தன்மையின்மையும் சம்சார நிலையில் 
காணப்படுகின்றன. (101-102)

    (அ--கை) ஆகையால் இந்தப் புருடன் மலத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றா னென்பது கொண்டு 
போகத்திலுள்ள கிஞ்சிக்ஞத் தன்மைக்கும் கருத்திருத் தன்மைக்கும் கலையின் உபகாரத்தை விரும்புதலானது 
இவனுக்குச் சித்தித்ததென்று கூறுகின்றார்.

(103)     பசு காளை முதலியனபோல் இவன் கட்டுப் பட்டவனாயிருக்கின்றமையால் இந்தப் புருடனுக்குச் 
சர்வ கருத்திருத்தன்மை கிடையாது. ஆகையால் கலையின் உதவியைக் கொண்டே போகத்தில் 
கருத்திருத்தன்மை இவனுக்கிருக்கின்ற தென்பதாம்.(103)

     (அ-கை) இவ்வாறு கலையைச் சாதித்த பின்னர் அதனினின்றும் வித்தை அராகம் பிரகிருதி 
யென்னும் இவையுண்டாகின்றனவென்று கூறுகின்றார்.

(104)     கலையின் ஒரு பாகத்தினின்றும் வித்தை யராக மென்னுமிவை ஒன்றன்பின் ஒன்றாகவும் 
பிரகிருதி தத்துவம் தனியாகவும் தோன்றுகின்றனவென்பதாம். 

    (உரை) அராகம் வித்தை யென்னுமிவை ஒன்றன்பின் ஒன்றாகவே தோன்றுகின்றன. 
பிரகிருதியானது தனியாகத் தோன்றுகின்றது. ரௌரவத்தில்  “கலாதத்துவத்தினின்றும் அராகம்
வித்தை யென்னுமிரண்டும் சேர்ந்தே தோன்றுகின்றன. அவ்வியத்தம் தனிமையாய்த் தோன்றிற்று” 
என்று கூறப்பட்டிருக்கின்றது. இவ்விடத்தில் கன்மத்தின் பல போகமானது காலம், போக்தா வென்னும் 
இவற்றின் நியமமின்றி உண்டாகாதாகையால், காலம் நியதியென்னும் இரண்டு தத்துவங்களும் 
ஆகமங்களிற் படிக்கப்படினும், அருத்தத்தாற் சித்தித்தமையால் இந் நூலாசிரியரால் கொள்ளப்படவில்லை .

    எவ்வாறெனின், அரசனுடைய ஆணையில்லையாயின் உழுதற்றொழிலின் பலன்கள் 
திருடரா லபகரிக்கப்படுமாறு போல, சோதிட்டோம முதலிய கன்ம பலன்களின் விஷயத்திலும் 
போக்தாவை நியமஞ்செய்யும் விஷயத்தில் யாதானு மொன்றிருக்க வேண்டுமென்பது கொண்டு 
நியதி தத்துவஞ் சித்தித்தது. கன்மமே புருடனைக் கட்டுப்படுத்துகிறதென்று கூறலாகாது. 
பலத்தை யுண்டுபண்ணுதலினாலேயே கன்மத்தின் காரியம் சித்திக்கின்றமையாலென்க. 
இது முன்னரும் கூறப்பட்டிருக்கின்றது. 

    ஈசுவர சக்தியும் மற்றத் தத்துவங்களால் மறைக்கப்பட்டே போக விடயத்தில் காரியத்தைச் 
செய்யும். இன்றேல் எல்லாத் தத்துவங்களும் சித்திக்காமற் போய்விடும். அன்றியும் நீண்ட காலம் 
சுருங்கின காலமென்னும் அறிவு வழியாக நீண்டநேரமுண்ணுகிறான் என்பது முதலியன போக்கிய 
முதலியவற்றை யறிவிக்கின்றமையால் காலதத்துவமும் சித்தித்தது. இந்தக்கால தத்துவம் 
இறந்தகால முதலியவற்றின் ரூபமாக அநேகமாயும் அசேதனமாயுமிருத்தலால் நையாயிகர் 
முதலியோரால் ஒப்புக்கொள்ளப்பட்டவாறுபோல் நித்தியமன்று. 

    இவ்வாறே மிருகேந்திரத்திலும் “நொடி கணம் நாழிகையென்பது முதலான வியவகாரத்திற்கு 
நிமித்தமான கால தத்துவம் மாயையினின்றுந் தோன்றித் தான் தோன்றின காலமுதல் சங்கார காலம் 
வரை நியதி தத்துவத்தால் நியமித்து அடக்கப்பட்ட ஆன்மாவைப் போகத்தில் பிரவிருத்திக்கச் 
செய்கின்றமையால் காலமென்னும் பெயர் பெற்றிருக்கின்றது'' என்று கூறப்பட்டிருக்கின்றது. (104)

    (அ-கை) இவ்வாறு சூக்கும தேக ரூபமான தத்துவக் கூட்டத்தைக் கூறிவிட்டு இனி அந்தச் 
சூக்கும தேகம் ஒவ்வொரு புருடனிடத்தும் இன்றியமையா திருக்குமென்று கூறுகின்றார்.

(105)     போகத்திற்குச் சாதனங்களான பிருதிவி முதல் கலை யீறான தத்துவக்கூட்டம் ஒவ்வொரு 
புருடனிடத்தும் கட்டுப்பட்டிருப்பதாக வித்துவான்களறிந்து கொள்ள வேண்டுமென்பதாம்.

    (உரை) இவ்வாறே தத்துவ சங்கிரகத்திலும் “பூமிமுதல் கலையீறான தத்துவக்கூட்டம் 
ஒவ்வொரு உயிர்களிடத்தும் இன்றியமையாத சூக்கும உடம்பாகும்;  இந்தச் சூக்கும உடம்பு 
கன்மவசத்தால் உலக சம்பந்தங்களான தூல சரீரங்களிற் சஞ்சரிக்கின்றது” என்று 
கூறப்பட்டிருக்கின்றது. (105)

    (அ-கை) சூக்கும தேகம் ஒன்றாயின் அனைவருக்கும் வெவ்வேறாகக் காணப்படுகின்ற 
போகம் பொருந்தாதெனக் கூறுகின்றார்.

( 106)     சூக்கும தேகங்கள் பலவுள்ளனவென்று கொள்ள வில்லையாயின் வெவ்வேறாகக் 
காணப்படுகின்ற சுகம் முதலியன பொருந்தாதென்பதாம் (106)

    (அ--கை) சூக்கும தேகமொன்றாயினும் கன்மங்களின் பேதத்தினாலேயே அவற்றின்
 பலமான போகங்களின் பேதமும் உண்டாகின்றது என்று கூறின் அது பொருந்தாதென்று கூறுகின்றார்.

(106 இ)     கன்மங்களின் பேதத்தால் போகங்களின் பேதமும் போகங்களின் பேதத்தால் கன்மங்களின் 
பேதமும் சித்திக்கின்றனவென்பதாம். 

    (உரை) கன்மங்களின் பேதத்தினாலேயே போகங்களின் பேதஞ் சித்திக்கின்றது ; 
போகங்களின் பேதஞ் சித்தித்த பின்னர் கன்மங்களின் பேதம் அநுமானஞ் செய்யப்படுகின்றதென்பது 
ஒன்றையொன்று பற்றுதலென்னும் குற்றத்திற் கிடனாகு மென்பது பொருள் (106இ)

    (அ-கை) கருத்தாவின் பேதத்தினாலேயே கன்மங்களின் பேதம் சித்தித்துவிட்டது. 
கன்மங்களின் பேதத்தால் போகங்களின் பேதஞ் சித்திக்கின்றது. ஆகையால் ஒன்றையொன்று 
பற்றுதலென்னும் குற்றங்கிடையாதென்று கூறின் அது பொருந்தாதென்று கூறுகின்றார். 

(107)     ஒரே காலத்தில் எல்லாக் கருத்தாக்களுடனும் சம்பந்தித்துக் கன்மத்தைச் செய்யும் 
அந்தச் சூக்கும சரீரமானது எவ்வாறு ஒவ்வொரு கருத்தாவினிடத்தும் வேறு வேறான கன்மங்களைச்
செய்யுமென்பதாம். 

    (உரை) ஆன்மாக்கள் மலத்தால் மறைக்கப்பட்டிருக்கின்றமையால் கலை முதலிய சூக்கும 
தேகத்தின் சம்பந்தமின்றிக் கன்மங்களைச் செய்வது , பொருந்தாதாகையால், ஒரே காலத்தில் எல்லாக் 
கருத்தாக்களுடனும் சம்பந்தித்துக் கன்மங்களைச் செய்யும் அந்தச் சூக்கும தேக ரூபமான தத்துவம்
ஒன்றாயிருந்து கொண்டு எவ்வாறு வேறு வேறாயும் விசித்திரமாயுமுள்ள கன்மங்களைச் செய்யும். 
ஒரு நாளுஞ் செய்யாது. ஒவ்வொரு புருடனிடத்தும் காரியங்களைச் செய்வதில் இச்சையானது வேறு
வேறாயிருக்கின்றமையால் கன்மத்தின் பேதஞ் சித்திக்கின்றதென்று கூறலாகாது. 

    எதனாலெனின், அந்த இச்சையும் சூக்கும தேகத்தின் சம்பந்தத்தினாலேயே உண்டாகின்றது. 
அந்தச் சூக்கும தேகம் ஒன்றென்று கொள்ளின் காரியத்தைச் செய்யும் இச்சையின் பேதம் பொருந்தாது. 
ஆகையால் காணப்படும் போகத்தின் வேற்றுமை வேறு வழியாகப் பொருந்தாதது கொண்டு ஒவ்வொரு 
புருடனிடத்தும் சூக்கும சரீரம் வெவ்வேறாக இருக்கின்றதென்று ஒப்புக்கொள்ள வேண்டும். (107)

    (அ-கை) ஆன்மா வெவ்வேறாயின் சூக்கும சரீரமும் வெவ்வேறாகும். அந்த ஆன்மாவோ 
ஒன்று தானென்று வேதாந்திகள் கூறுகின்றனர். அது பொருந்தாதெனக் கூறுகின்றார். 

(108)     இந்தக் காரணங்கொண்டே ஆன்மாக்க ளனேகமென்று அறியப்படுகின்றதென்பதாம். 

    (உரை) ஆன்மா ஒன்றாயின் பலவிதமான சுகதுக்கங்களும் பலவிதமான ஜனன மரணங்களும் 
பொருந்தாதென்பது கொண்டு பலவிதமான போகங்களுண்டாகையால் ஆன்மாக்கள் பலவென்பது 
சித்தித்தது. இந்த அத்வைத மதமானது மிருகேந்திர விருத்தி தீபிகையில் எம்மால் விரிவாய் 
நிராகரிக்கப் பட்டிருக்கின்றது (108)

    (அ-கை) இனி, சூக்கும தேக ரூபமான இந்தத் தத்துவக் கூட்டம் ஆன்மாவைப்போல் வியாபகமா? 
அல்லது வியாபக மில்லையா? என்று ஆசங்கிப்பார்க்கு விடை கூறுகின்றார்.

(108இ)     ஒரே காலத்தில் வியாபாரம் நிகழாதது கொண்டு அதற்கு வியாபகத்தன்மை யில்லையென்பது 
சித்தித்ததென்பதாம். 

    (உரை) ஞானங்கிரியை யென்னும் இவற்றின் தோற்ற ரூபமான அந்தச் சூக்கும தேகத்தின் 
காரியமானது எவ்விடத்தும் ஒரேகாலத்தி லுண்டாகாமையின் அந்தச் சூக்கும தேகத்திற்கு வியாபகத் தன்மை 
யில்லையென்பது சித்தித்தது. (108 இ)

    (அ-கை) எந்த விடத்தில் பலத்தை யுண்டுபண்ணக் கூடியதாயும் துணையாயுமிருக்கும் 
கன்மமிருக்கின்றதோ அந்த விடத்திலேயே இந்தச் சூக்கும சரீரம் ஆன்மாவிற்குச் சைதன்னியத்தைத் 
தோற்றுவிக்கும் பொருட்டுத் தோற்றுவித்தல் ரூபமான காரியத்தைச் செய்கின்றது. அதுபற்றியே இந்தச் 
சூக்கும சரீரத்தின் காரியம் எவ்விடத்தும் ஒரே காலத்திலுண்டாகிறதில்லை.  இவ்வாறன்றி வியாபகத்தன்மை 
யில்லாமையினால் ஒரே காலத்திற் காரியம் நிகழவில்லையென்றல் கூடாதெனின், அதுவும் பொருந்தாது. 
எதனாலெனின், அந்தச் சூக்கும சரீரம் காரியமா யிருத்தலின் அநித்தியமாதலால் கடம் முதலியன போல் 
வியாபக மாயிருத்தல் கூடாதாகையாலென்க. இந்தக் கருத்துக்கொண்டு கூறுகின்றார்.

(109)     கன்மமிருக்கு மிடத்து ஞானங்கிரியை யென்னுமிவற்றின் தோற்றம் உண்டாகின்றதென்று 
கூறுதல் கூடாது. ஒரேகாலத்தில் சூக்குமதேகத்தின் காரியங்களுண்டாகாமையின் அந்தச் சூக்கும 
தேகத்திற்கு வியாபகத்தன்மை கிடையாதென்பதாம்.

    (அ-கை) சிறிது பாகத்தில் நிகழும் இந்தச் சைதன்னியத் தோற்றமானது தோற்றுவிக்கும் 
சூக்கும தேகம் வியாபகமா யில்லாமை பற்றி நிகழ்ந்ததா? அல்லது ஆன்மா வியாபகமா யில்லாமைபற்றி 
நிகழ்ந்ததா? வென்பார்க்கு விடை கூறுகின்றார்.

(110)     முத்தியில் சிவனைப்போல் எல்லாவற்றையும் அறியுஞ் சுபாவமுள்ளவனாதலின் ஆன்மா வியாபகன். 
சம்சார நிலையில் வியாபகத்தன்மை யின்மையும் முத்தியில் வியாபகத்தன்மை யுண்மையுங்கூறின் 
விகாரத்தன்மை முதலிய தருமங்களையுடையவனாக ஆன்மா ஆய்விடுவன். சுருதியுடன் முரண்படுமென்பதாம்.

    (உரை) ஆன்மாவிற்கு வியாபகத் தன்மை யில்லையென்று கூறின் வேறு தேசங்களிலுண்டாகும் 
பலனை யனுபவித்தல் கூடாதென்று முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. அன்றியும் சிவனைப் போல் , 
சர்வஞ்ஞத் தன்மை சர்வகருத்திருத்தன்மை யென்னுமிவை ஆன்மாவிற்கு முத்தி நிலையிலிருக்கின்றமையால் 
வியாபகத் தன்மை யுண்டென்பதை நிச்சயமா யொப்புக் கொள்ளல் வேண்டும். சம்சாரநிலையில் 
வியாபகத்தன்மை யின்மையும், முத்தியில் வியாபகத்தன்மை யுண்மையும் உண்டென்று கூறின் 
பரிணாமத் தன்மையும் அசேதனத் தன்மையுமாகிய குற்றங்கள் ஆன்மாவிற்கு நேரும். 

     நித்தியத்தன்மையும் வியாபகத்தன்மையும் ஆன்மாவிற்கு உண்டென்று கூறும் சுருதியுடன் 
முரண்படும். இவ்வாறே மிருகேந்திரத்திலும் "ஞானக்கிரியா ரூபமாயிருப்பதே சைதன்யம், இது 
ஆன்மாவினிடத்து எப்பொழுதும் எவ்விடத்து மிருக்கின்றது. முத்தியில் இந்த ஆன்மாவின் ஞானக்கிரியா 
சத்திகள் எங்கும் வியாபகமாயிருப்பதாக நூல்களிற் கூறப்படுகின்றன. அன்றியும் ஆன்மாவிற்கு 
வியாபகத் தன்மையில்லை யென்பது கிடையாது. ஆன்மா க்ஷணிகமில்லை. ஒன்றில்லை. சடமாயுமில்லை” 
என்று கூறப்பட்டிருக்கின்றது. (110)

    (அ-கை) இவ்வாறு சூக்கும தேக ரூபமான சிறப்புத் தத்துவங்களின் தோற்றத்தைக் கூறிவிட்டு
 இனி புவன ரூபமான பொதுத் தத்துவங்களின் தோற்றத்தைக் கூறுகின்றார்.

(111)     தத்துவங்களினுடைய ஏனைய பாகங்கள் சம்சாரியாகிய ஆன்மாவிற்குப் போகத் 
தானங்களாகு மென்பதாம்.

    (உரை ) சூக்கும தேக ரூபமான போகத்தினும் வேறாயுள்ள பலவிதமான புவனங்களின் 
ரூபமாகிய தத்துவங்களின் பாகங்கள் சம்சாரியாகிய ஆன்மாவிற்குப் போகத்தானங்களாகும் (111)

(111 இ)     (ஆகவே) அந்தத் தத்துவக் கூட்டம் அந்தந்தப் புவனங்களிற்றோன்றிய சரீரத்திற் பிரவேசித்து 
அந்தப் போகத்திற்குரிய பூமிகளில் பலத்தையுண்டுபண்ணு மென்பதாம் . 

    (உரை ) சூக்கும தேக ரூபமான தத்துவக் கூட்டம் தான் செய்ய வேண்டிய காரியத்திற்காகக் 
கன்ம வசத்தால் போகபூமிகளுள் அந்தந்தப் புவனங்களிலுண்டான தேகங்களிற் பிரவேசித்துப் 
புருடனுக்கு ஏகதேசத்தில் ஞானக்கிரியைகளின் சாமர்த்தியத்தைத் தோற்றுவிக்கின்றது. இவ்வாறே 
தத்துவ சங்கிரகத்திலும் ' இந்தச் சூக்கும உடம்பே கன்ம வசத்தால் உலக சம்பந்தங்களான 
தூலவுடம்புகளிற் சுற்றுகின்றது” என்று கூறப்பட்டிருக்கின்றது. மிருகேந்திரத்திலும்" "கன்மங்களை 
யனுபவித்து நீக்குவதாயும், சேதனனான ஆன்மாவின் சேர்க்கையால் சேதன ரூபமாயும், மாயா கருப்பத்திற் 
சுற்றுகிறதாயுமுள்ள இந்தச் சரீரமானது ஆன்மாவிற்குண்டென்று கூறப்பட்டது . இத்துடனமையாதெனக் கருதி 
ஆதாரம் தேகம் விஷயமென்னும் இவற்றின் விருத்தியின் பொருட்டுப் புவனங்களிலுள்ள தத்துவ பரம்பரையைக் 
கூறுகின்றேன்'' என்று கூறப்பட்டிருக்கின்றது. (111இ )

    (அ-கை) அந்தப் புவனத் தோற்றத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றார்.

(112 )     தத்தம் புவனங்களிலிருக்கும் காலர், ஹாடகர், தேசிகரென்னு மிவர்களால் முதல் நடு விறுதிகளில் 
அதிட்டிக்கப் பட்டதாயும் நரகத்தை முதலாகவும் சத்தியலோகத்தை யிறுதி யாகவும் உடையதாயுமுள்ள 
புவனங்களின் முறையானது பூதங்களி லிருக்கின்றதென்பதாம்.

    (உரை)   காலரென்பவர் காலாக்கினி உருத்திரர். ஆடகரென்பவர் பாதாளத்திற்கு 
அதிபதியாவர். தேசிகரென்பவர் எல்லாச் சாத்திரங்களையும் உபதேசஞ் செய்பவராகையால் 
உலகாசாரியர். இவர் சத்தியலோகத்திற்கு மேலிருக்கும் விட்டுணு லோகத்திற்கு மேலுள்ள 
உருத்திரலோகத்திலிருப்பவர். இவர் தான் அனந்தரின் சீடரான ஸ்ரீகண்டரென்பவர். 
இவருக்கே பிரமாண்டத் துளதிகாரமுண்டு. ஆகவே அவரவர் புவனங்களிலிருப்பவரான 
காலர், ஹாடகர், தேசிகரென்னு மிவர்களால் முதல் நடு விறுதிகளில் அதிட்டிக்கப்பட்டதாயும், 
நரகம் பாதாளம் பூமியாகிய உலக ரூபமாயுமுள்ள புவனங்களின் முறையானது பிரமாண்டத் 
துள்ளிருக்கும் தூலபூதங்களி லிருக்கின்றது (112இ )

(113)     (ஆகவே) வீரபத்திரர் எட்டு எட்டாக ஐந்து புவனங்களுடன் தன்மாத்திரைகளி 
னின்று முண்டான பூதங்களிலும், பூதங்களைத் தோற்றுவிக்கும் தன்மாத்திரைகளிலும், 
சித்தவருக்கங்களிலும் இருக்கின்றா ரென்பதாம்.

    (உரை) பிரமாண்டத்தைத் தரிப்பவரான சதவுருத்திரர்களை அதிட்டிக்கும் வீரபத்திரர், 
முன்னர்க் கூறப்பட்ட தூல பிருதிவிக்குக் காரணமாயும் தன்மாத்திரையினின்றும் உண்டானதாயுமுள்ள 
சூக்கும பிருதிவி தத்துவத்தில் இருக்கின்றார். அவ்வாறே தூலமான நீர் முதலியவற்றிற்குக் 
காரணமாயும் தன்மாத்திரையினின்றும் உண்டானதாயுமுள்ள சூக்குமமான நீர் முதலிய நான்கு 
பூதங்களிலும், சித்தவருக்க மென்னுஞ் சொல்லால் அந்தக்கரணங் கொள்ளப்படுமாதலால் 
தன்மாத்திரை முதற் கொண்டு அகங்கார மீறாகவுள்ள தத்துவங்களிலும் குஹ்யம், அதி குஹ்யம், 
குஹ்யதரம், பவித்ரம், ஸ்தாணு வென்னும் பெயருடன் எட்டு எட்டாக ஐந்து புவனங்களிருக்கின்றன. 

    இவ்வாறே ஸ்ரீ நந்திகேசுவர காரிகையில் “ பிரமன் தூல தத்துவங்களை யதிட்டித்திருக்கிறார்.
 சூக்குமமான ஆதார தேகத்தை யனுபவித்தற்  பொருட்டு சதவுருத்திரர் க்ஷேத்ரபதிகளான நாற்பதுபேர் 
ஆகிய இவர்கள் சூக்கும பூதங்களையும், தன்மாத்திரை, மனம், அகங்காரம் ஆகிய இவற்றையும்,
 பைசாசம் முதலிய எண்மர் புத்தியையும், சில யோகிகள் குணதத்துவத்தையும் அதிட்டித்திருக்கின்றனர்; 
வாமதேவர் முதலாயினர் புருட தத்துவத்தையும், குரோதர் முதலாயினார் பிரகிருதி தத்துவத்தையும், 
மண்டலிகள் கலா தத்துவத்தையும் அதிட்டித்திருக்கின்றனர்'' என்று கூறப்பட்டிருக்கின்றது. (113)

    (அ-கை) அது பற்றியே இவ்வாறு நியாசஞ் செய்ய வேண்டுமெனக் கூறுகின்றார்.

(114, 115, 116)       புத்தி தத்துவத்தில் முறையே பைசாச முதலிய எட்டுப் புவனங்களையும், குணதத்துவத்தில்
 அகிருதம் முதலிய புவனங்களையும், குணத்தன்மையை யடையாததாயும் சுத்தமாயும் பிரகிருதியின் 
விகாரமாயுமிருக்கும் குண தத்துவத்தின் மத்தகமான புருட தத்துவத்தில் வாமதேவர் முதலியோருக்கு 
இருப்பிடமான புவனங்களையும், பிரகிருதியில் குரோதேசுவரர்களின் புவனங்களையும் நியாசஞ் 
செய்ய வேண்டுமென்பதாம். 

    (உரை) வாமதேவர் முதலிய பதின்மூன்று ருத்திரர்கள் பிரகிருதிக்கு அதிபர்களான குரோதர் 
முதலிய எண்மருடன் குண தத்துவத்தின் மத்தகத்திலுள்ள புவனங்களிலிருக்கின்றனர் . பிரகிருதி 
சூக்கும ரூபமாயிருப்பதால் புவனங்களுக்கு ஆதாரமாயிருக்குந் தன்மை அந்தப் பிரகிருதிக்குப் 
பொருந்தாதென்று ஆகமத்தையறிந்தவர் கூறுகின்றனர் (114,115,116)

(116 இ)     (அவ்வாறே) கலாதத்துவத்தில் எவ்வெட்டாக எட்டு மண்டலங்க ளிருக்கின்றன வென்பதாம்.

    (உரை) அராகம் வித்தை யென்னுமிவற்றுடன் கூடிய கலா தத்துவத்தில் எட்டு எட்டாக 
எட்டுப் புவனங்களுடைய மண்டலங்களிருக்கின்றன. இவ்வாறே மிருகேந்திரத்தில் “அராகம் 
வித்தையென்னும் இவற்றை மத்தியிலுடைய கலா தத்துவத்திலுள்ள அறுபத்துநாலு புவனங்களில்            
மண்டலாதிபர்களிருக்கின்றனர்” என்று கூறப்பட்டிருக்கின்றது.                         

    காலம் நியதியென்னும் தத்துவங்களில் இரண்டு புவனங்களிருக்கின்றனவென்று 
அவ்விடத்திலேயே கூறப்பட்டிருக்கின்றது. அஃதாவது நியதி தத்துவத்தில் நியமனஞ் செய்யும் 
புவனமும் கால தத்துவத்தில் எண்ணைச் செய்யும் புவனமும் இருக்கின்றன வென்பதாம்.  இந்தப் 
புவனாத்துவாவானது பத்ததி முதலிய நூல்களில் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் 
இவ்விடத்து விரித்துக் கூறப்படவில்லை. சில புவனங்களில் சில புவனங்கள் அடங்கி யிருப்பது 
கொண்டு இடையிலுள்ள புவனங்களின் எண்ணின் பேதம் காணப்படுகின்றது (116 இ)

    (அ-கை) இவ்வாறு புவனரூபமான தத்துவங்களின் தோற்றத்தைக் கூறிவிட்டு இனி மேலே 
கூறப்பட்ட கலை முதலியவற்றின் ரூபமான உலகத்திற்கு முதற்காரணமான  மாயையைச் 
சாதிக்கின்றார்.

(117)       மகா மாயையானது உலகத்திற்குக் காரணமாயுள்ளது.  காரிய சத்திகளையும் அசேதனத் 
தன்மையையு முடையது.  இந்த மாயையினுடைய கலை முதலியவற்றின் றோற்றமானது 
போகத்தை யனுபவிக்கும் சம்சாரிகளுக்கு அந்தப் போகத்தை யுண்டுபண்ணுதற் பொருட்டு 
உண்டாகின்றதென்பதாம்.

    (உரை) எண்ணிறந்த பிரவாக ரூபமான தனது காரியங்களை வியாபிக்கின்றமையால் 
மகத் என்னுஞ் சொல் உபயோகிக்கப் பட்டது. (இவ்வளவேயன்றி மகாமாயை யென்பது சுத்தமாயையைக்     (திருத்: சுத்தமாயைக்/சுத்தமாயையைக்)    
குறிக்காது.) பிரளயத்தில் இந்த அசுத்த மாயையினிடத்தில் எல்லா அசுத்த உலகங்களும் ஒடுங்குகின்ற 
காரணம் பற்றி மாயை யெனப்பட்டது. கலை முதலிய தத்துவங்கள் ஒவ்வொரு புருடனிடத்தும் 
வேறு வேறாக விருப்பதால் அநேகமாதலானும் புவனங்களுக்காதாரமா யிருத்தலானும் அந்தக் கலை 
முதலியவற்றின் ரூபமான உலகத்திற்கும் முதற்காரணமான இந்த அசுத்த மாயையானது 
காரிய ரூபமான எல்லாவற்றிற்கும் நேராகவும் பரம்பரையாகவும் முதற் காரணமாயிருக்கின்றது. 
அது பற்றியே சத்காரியவாத முறையில் எல்லாக் காரியங்களும் சத்தி ரூபமாக மாயையினிடத்திலிருப்பது 
கொண்டு இந்த மாயை சூக்கும ரூபமான தனது காரிய சத்திகளின் கூட்ட ரூபமாக விருக்கின்றது. 
இது முதற் காரணமாயிருப்பது கொண்டே மண் முதலியன போல் அசேதனமாயிருக்கின்றது . 
ஆகையால் கலை முதலிய போகங்களுக்கு மாயை சாதன மென்பது கூறப்பட்டது. (117 )

    (அ-கை) இந்த மாயையானது சத்திக் கூட்ட ரூபமா யிருக்கிறதென்று கூறுகின்றார்.

(118)     விசித்திரமாயும் அளவிறந்ததாயுமுள்ள காரியங்கள் காணப்படுகின்றமையால் இந்த அசுத்த 
மாயை விசித்திரமாயும் அநேகமாயுமுள்ள சத்திகளுடன் கூடினதென்று அறியப்படுகின்றது என்பதாம்.

    (உரை)   விசித்திரமாயும் அளவிறந்ததாயுமுள்ள காரியங்களின் தோற்றங் காணப்படுகின்றமையால், 
இந்த அசுத்த மாயை விசித்திரமாயு மளவிறந்ததாயுமுள்ள காரிய சத்திகளின் கூட்ட ரூபமாக விருக்கின்ற
தென்றறியப்படுகின்றது. (118)

    (அ-கை) இந்த அசுத்த மாயைக்கே அநேக காரியங்களையுண்டு பண்ணக்கூடிய அநேக சத்திகளைத் 
தோற்றுவித்தல் கூடுமென்று சொல்லக்கூடாது. எதனாலெனின், இந்த மாயை யானது சத்தி ரூபமாயிருத்தலால் 
சத்திக்கு வேறு சத்தியைத் தோற்றுவித்தல் பொருந்தாமையாலென்க. முக்கிய காரணமா யிருப்பது கொண்டே    
இந்த மாயைக்கு நித்தியத்தன்மை சித்தித்தது. இன்றேல் வரம்பின்றி யோடலென்னும் குற்றம் 
வந்து விடுமென்னு மபிப்பிராயத்துடன் கூறுகின்றார். 

(119)     சடமாயும் அநேகமாயுமிருப்பது நாசமுடையதெனக் கண்டிருக்கின்றோம். இந்த அசுத்த மாயை 
யநேக மன்று. அநேக மன்றென்பது கொண்டே சடமாயினும் இந்த மாயை அழிவற்றதாக ஆயிற்றென்பதாம் (119)

(120)     (அன்றியும்) எல்லாவற்றையும் வியாபிக்கும் இந்த அசுத்த மாயை, ஆன்மாக்க ளனேகமாதலால் 
அவற்றின் போகத்தின் பொருட்டு எவ்விடத்தும் எல்லாக் காரியங்களையும் பிரவாக ரூபமான 
எல்லா மகிமைகளுடன் தோற்றுவிக்கின்ற தென்பதாம்.

    (உரை) இவ்வாறே பிரகஸ்பதி ஆசிரியரும் “எல்லாச் சித்தர்களுடைய வாக்குக்களும் 
நீண்ட காலம் கூறப்பட்டு நாசத்தை யடையும். மாயை அளவற்ற சத்திகளுடன் கூடினதாகையால் 
பிரவாகங்களினளவு கூறப்படவில்லை"  என்று கூறுகின்றனர்.  இந்த மாயை பால் தயிராவது போல் 
முற்றும் பரிணாமத்தை யடைகிறதில்லை. நெய்யிற் புழுவுண்டாதல் போல் ஏக தேசத்தில் 
பரிணாமத்தை யடைகின்றதென்று அறிந்து கொள்க. (120)

(121 )     சிருட்டி, திதி, லயம் என்னுமிவை மாயையி னிடத்திலிருக்கின்றன. புவனத்தை 
முடிவாக வுடைய விகாரமானது தத்துவ முதலிய வற்றின் ரூபமாக தன்னிடத்திலேயே 
இருக்கின்றதென்பதாம்.

    (உரை) இவ்வாறு மேலான முதற்காரணமா யிருப்பதால் மாயையி னிடத்திலேயே 
உலகத்தின் சிருட்டி முதலியன இருக்கின்றன. புவன முதலிய விகாரமானது தத்துவ முதலிய 
சொரூபமாகத் தன்னிடமிருக்கின்ற தென்பது கொண்டு தத்துவம் பாவம், பூதம், புவனமென்னும் 
இவை ரூபமான எல்லாக் காரிய வுலகங்களும் மாயையின் விகாரமென்றே அறிந்து கொள்ள 
வேண்டும். சுத்த ரூபமான தத்துவ முதலியனவும் அவற்றிற்கு முதற்காரணமான சுத்த மாயையும் 
ஆகமங்களிற் கூறப்படுகின்றனவே யெனின், அஃதுண்மையே. அவற்றை யடைதலானது 
வித்தியேசுவரர் முதலாயினாருக்கு உரியதாயிருத்தலால் அபர மூர்த்தியாகும். ஆகையால் 
போகத்திற்குச் சாதனங்களாக இவ்விடத்தில் அவை கூறப்படாமைபற்றி விரோத மின்மை காண்க. (121)

(122)      (இவ்விடத்தில்) சிருட்டி திதி யிரண்டுங் கூறப்பட்டன.  இலயமானது சிருட்டிக் கெதிர்மறையாக 
உண்டாகின்ற தென்பதாம்.

    (உரை ) ஒவ்வொரு தத்துவங்களுக்கும் தோற்றமுறை கூறினமையாலும் தொழிலைக் 
காட்டினமையாலும் சிருட்டியுந் திதியுங் கூறப்பட்டன. இலயமாவது சிருட்டிக் கெதிர்மறையாகத் 
தத்தங் காரணங்களில் ஒடுக்கத்தை யடைவதேயாகு மென்பது பொருள் (122)

(122இ)      சம்சாரம் அநாதியானமையால் இந்தச்சிருட்டி முதலியவை யளவிடப்படவில்லை யென்பதாம்.

    (உரை) இந்தச் சம்சாரம் அநாதியென்பது பொருள், சிருட்டி திதி இரண்டும் போகத்திற்குச் 
சாதனங்களானமையால் ஆன்மாக்களுக்கு உபகாரமாகின்றன. இலயம் ஈசுவரனால் எதற்காகச் 
செய்யப்படுகின்ற தெனின், கூறுதும். புருடனுக்கு அளவற்ற போகங்களை யிடைவிடாது 
உண்டுபண்ணினமையால் மாயை குறைந்த சத்தியையுடையதாக விருக்கின்றது. 

    ஆகையால் புருடர்களுக்குப் போகத்தைக் கொடுத்தமையால் சிரமத்தை யடைந்த 
பெண்ணினது குறைந்த சத்தியானது நித்திரையினால் எவ்வாறு நீங்கி அச்சத்தி வலிமையை 
யடைகின்றதோ, அவ்வாறே மாயைக்குக் குறைந்த சத்தியை விருத்தி செய்தற் பொருட்டும், 
ஆன்மாக்களுக்குப் போகானுபவத் தாலுண்டான இளைப்பு நீங்குதற்பொருட்டும், கன்மம் 
பக்குவமாதற் பொருட்டும், சங்காரம் நிகழ்கின்றமையால் ஆன்மாவிற்கு உபகாரமில்லையென்னுந் 
தோஷமில்லாமை காண்க. 

     இவ்வாறே மிருகேந்திரத்திலும் “சம்சாரத்தினால் வருத்தமுற்ற ஆன்மாக்களுக்கு இளைப்பு 
நீக்குதற்பொருட்டு அனைவருக்கும் நன்மை புரியும் சிவபெருமான் தநுகரணாதிகளை 
ஆன்மாக்களுடன் கூட மாயையில் ஒடுக்கி அந்த மாயையினையும் கடந்திருக்கின்றார். 
அந்த ஒடுக்க நிலையிலும் பக்குவத்திற்குத் தக்கவாறு அறிவிக்க வேண்டியவர்களை அறிவித்துக் 
கொண்டும், தடுக்க வேண்டியவர்களைத் தடுத்துக்கொண்டும் கன்மஞ் செய்தவர்களுடைய 
கன்மங்களைப் பக்குவமாகச் செய்து கொண்டும், மாயா சத்திகளைத் தோற்றுதற்குரியதாய்ச் 
செய்து கொண்டும், சித்தாயும் அசித்தாயுமுள்ள எல்லாப் பொருள்களையும் முறையாகப் 
பார்த்துக்கொண்டு மிருக்கின்றார்'' என்று கூறப்பட்டிருக்கின்றது (122 இ )

    (அ--கை) இவ்வாறு கூறப்பட்ட ஆன்மாக்களுடைய சாதனத்துடன் கூடின போகத்தை 
முடித்துக் காட்டுதற்காக அந்த ஆன்மாவிற்கே மலரூபமான பாசத்தின் சம்பந்தம் உண்டென்று 
கூறுகின்றார்.

(123)      புருடர்களுடைய போக்கியமானது மாயையின் விகாரமாகும். இது சேதனமன்று, சேதனனான 
புருடன் சுத்தனல்லாமையால் மாயையினின்று முண்டான சாதனங்களுடன் கூடியே அந்தப் 
போக்கியத்தை யனுபவிக்கின்றானென்பதாம்.

     (உரை) மேலே கூறியவாறு சுக முதலியவற்றின் ரூபமாயும் புத்திபோத ரூபமாயுமிருக்கும் 
போக்கியமானது மாயையின் காரியமேயாகும். இவ்வாறன்றி ஆன்மாவினிடத்துக் குணரூபமாகவில்லை. 
எதனாலெனின், ஆன்மா அறிவுடைப் பொருளாக விருக்கின்றான்; போக்கியமானது குணரூபமாக 
ஆன்மாவினிடத்தில் சமவாய சம்பந்தத்துடன் இருக்கின்றதென்று கூறின், பரிணாமத்தன்மை 
முதலிய குற்றம் ஆன்மாவிற்கு வந்துவிடுமாதலா லென்க, அந்தப் போக்கியத்தைச் சேதனனான 
ஆன்மாவே அனுபவிக்கின்றான். அந்தப் புருடனானவன் பின்னர்க் கூறப்படுமாறு சுத்தனல்லாமையாலும், 
மறைக்கப்பட்ட ஞானக்கிரியா சத்திகளையுடையவ னாகையாலும், மாயையினின்று முண்டான 
கலை முதலிய தத்துவங்களுடன் கூடிக்கொண்டே போக்கியத்தை யறிவதற்குச் சத்தனாகவாகின்றான். 
எதனாலெனின், காரியமான கரணமின்றிச் சிற்றறிவு முதலியனவும் காணப்படாமையா லென்க. (123)

     (அ-கை) இனி யாதுகாரணத்தால் இவனசுத்தனாக விருக்கின்றானென்பதைப் பற்றிக் கூறுகின்றார் .

(124)      ஆன்மா  விடயங்களையுடைத்தாயிருக்குந் தன்மை  ரூபமான மலத்தினால் மறைக்கப்பட்ட 
சர்வ விடயமான ஞானக் கிரியா சத்திகளை உடைத்தாயிருக்கின்றமையால் அசுத்தனென்பதாம். 

    (உரை) இந்த ஆன்மாவானவன் சிவனைப்போல் எல்லாவற்றையும் விடயமாகக்கொள்ளும்
 ஞானக்கிரியா சத்திகளுடன் கூடினவனாயினும் ஏகதேச விடயமான விஞ்ஞான முதலியவற்றிற்காகக் 
கலாதிகளைத் துணையாகக் கொள்கின்றான். முத்தனுக்குப் போக்திருத்தன்மை யின்மையும் 
எல்லாவற்றையும் விடயமாகக் கொள்ளும் ஞானக்கிரியா சத்திகளுடன் கூடியிருக்குந் தன்மையுங் 
கேட்கப்படுகின்றது. அதுகொண்டு இந்த ஆன்மாவானவன் விடயங்களை யுடைத்தாயிருக்கும் 
தன்மையாகிய போக்திருத்தன்மைக்கு மலம் ஏதுவானமையால் விடயங்களை யுடைத்தாயிருக்குந் 
தன்மை ரூபமான மலத்தினால் சூழப்பட்டவனென்று நிச்சயிக்கப்படுகிறான். இவ்வாறே " மலத்தினால் 
போக்திருத்தன்மைக் கூறப்பட்டது"  என்று கூறப்படுகின்றது.  அதுகொண்டே இந்த ஆன்மா அசுத்தன். 
இவ்வாறே ஸ்ரீசுவாயம்புவத்தில் “புமானுக்கு அசுத்தியில்லையாயின் அவனுக்கிருக்கும் போகத்திலுள்ள 
பற்றுதலானது எதனாற் செய்யப்பட்டதாகும்"  என்று கூறப்பட்டிருக்கின்றது. (124)

(124இ)     (ஆகவே) மாயையிலிருக்கும் கன்மரூபமான விருப்பத்தின் வழியாக இந்தப் புருடன் 
மாயையை யனுசரிக்கின்றானென்பதாம்.

    (உரை) கன்மமானது உழுதல் முதலியவை போல் ஆன்மாவிற்குச் சுத்தஞ் செய்வதாக 
வாகாமையால் சம்சார நிலையில் புத்தியை யடைந்ததாயும், பிரளயத்தில் புத்தி நசித்தாலும் 
உலகத்திற்குப் பீஜமான மாயையில் இயங்கிக்கொண்டிருத்தலால் அதிலிருக்கிறதாயும், 
பரிபாகத்தால் போகத்தை யுண்டுபண்ணுகிற தாயுமுள்ள கன்மரூபமான விருப்பத்தின் 
வழியாகப் போக சாதன முதலியவற்றின் ரூபமாகப் பரிணமித்த மாயையை யிந்தப் 
புருடனனுசரிக்கின்றான். (124இ)

    (அ-கை) இவ்விடத்தில் கன்மமே யமையும்.  மலம் வேண்டாமென்னும் புறமதத்தைக் 
கூறுகின்றார்.

(125)     சென்மாந்திரத்தில் செய்யப்பட்ட கன்மமானது சாதி முதலிய பலன்களை மனிதருக்குக் 
கொடுக்கக் கூடியது, புருடனுக்குக் கற்பிக்கப்பட்ட மலமானது அந்தக் கன்மமிருக்கும்
பொழுது அதிகப்படுகின்ற தென்பதாம்.

    (உரை) காரியமான சரீரத்தின் பந்தமானது வித்து முளைகளின் நியாயத்தை யனுசரித்து 
அநாதியா யிருக்கின்றமையால் சாதி ஆயுள் போக மென்னுமிவற்றைக் கொடுக்கக்கூடிய கன்மங்களே 
தனது பலனான போகத்திற்காக ஆன்மாவிற்குச் சரீரச் சேர்க்கையைச் செய்யட்டும். மலஞ் செய்வதாகக் 
கொள்ள வேண்டாம். உம்மாலும் மலத்தை யொப்புக்கொண்டு விசித்திரமான போகங்கள் வேறு வழியாகப் 
பொருந்தாமையால் கன்மமு மொப்புக் கொள்ளப்படுகின்றது. படவே மிகையென்னுங் குற்றம் 
உண்டாகின்றமையால் கன்மமே அமையும்.  இன்றியமையாமற் கொள்ளத்தகுந்தது பிறிதொன்று 
கொள்ள வேண்டுமென்பதைத் தடுக்குமென்று கூறுகின்றனர். (125)

    (அ-கை) மலம் வேண்டாமென்னும் புறமதத்தை மறுக்கின்றார்.

(126)     கன்மத்திற்கும் பிறப்பு முதலியவற்றை யுண்டு பண்ணும் சத்தியானது மலத்தை யின்றி இல்லை. 
அஞ்ஞான மற்ற முத்தான்மாவிற்குப் பிறப்பு உண்டென்பது ஓரிடத்துங் காணப்படுகிறதில்லை யென்பதாம்.

    (உரை) அஞ்ஞானத்திற்கு ஏதுவான மலமில்லாத முத்தான்மாவிற்குப் பிறப்புக் 
காணப் படாமையாலும், கன்மானுட்டானமுங் காணப்படாமையாலும், மலமுள்ளவனுக்கே 
கன்மத்தைச் சம்பாதித்தலும் அதன் போகமு முபயோகப்படுகின்றன. (126)

    (அ-கை) இவ்வாறாயின் மலமே பிறப்பு முதலியவற்றிற்கு ஏதுவாகட்டும்; 
கன்மத்தினாற் பயனென்னை யென்னும் புறமதத்தைக் கூறுகின்றார்.

(127)     விடயங்களை யுடைத்தா யிருக்குந்தன்மை ரூபமான மலமொன்றே ஆன்மாவிற்கமையும். 
கன்மத்தைக் கொள்ளுதலாற் பயனில்லை.  பிறப்பு முதலியவற்றின் சம்பந்தத்தை மலத்தினாலேயே 
நிச்சயமாக அடைகின்றமையாலென்பதாம். (127)

      (அ-கை) கன்மம்  வேண்டாமென்னும் புறமதத்தை மறுக்கின்றார். 

(128)      கன்மமில்லாத விஞ்ஞான கேவலர்களுக்கு மலமிருந்தும் பிறப்பு முதலியன 
காணப்படவில்லை. ஆகையால் இவ்விடத்தில் மலமுங் கன்மமுமாகிய விரண்டும் பிறப்பு 
முதலிய வற்றிற்குக் காரணங்களாகும் என்பதாம் . 

    (உரை ) மலமிருந்தும் கன்மமில்லாத விஞ்ஞான கேவலர்களுக்குப் பிறப்பு முதலியன 
காணப்படாமையால் மலங் கன்ம மிரண்டும் மாயையின் சேர்க்கைக்குக் காரணமாகு மென்பது 
பொருள் (128 )

    (அ-கை) சிருட்டிக்கு முன்னர் நிட்களத்தன்மையும் சேதனத்தன்மையும் ஆன்மாவிற்கிருப்பதால், 
சிவனுக்குப் போல் ஆன்மாவிற்கும் அஞ்ஞானத்தன்மை பொருந்துகிறதில்லை யென்னும் 
பிறர் கூற்றை மறுக்கின்றார்.

(129)     ஆன்மா, ஞானங்கிரியை யென்னுங் குணங்களை யுடையனாகையால் சிருட்டிக்கு முன்னர் 
நிட்களனாக விருக்கின்றான். அவ்வாறாகையால் அஞ்ஞான சம்பந்தம் ஆன்மாவிற்கில்லை. இவ்வாறு 
கூறுவது பொய் என்பதாம்.

    (உரை) நிட்களனாயின் சிவனுக்குப் போல் கலை முதலிய தத்துவங்களின் சம்பந்தமும் 
ஆன்மாவிற்குப் பொருந்தாது.  கலா சம்பந்தங் காணப்படுகின்றமையால் அச்சம்பந்தம் வேறு 
விதமாகப் பொருந்தாமைக் கொண்டு ஆன்மாவிற்கு மலமுண்டென்பது ஒப்புக்கொள்ள வேண்டும் (129 )

    (அ-கை) இன்னும் புறமதத்தையே கூறுகின்றார்.

(130)     ஆன்மா எங்குஞ் செல்லுகின்றமையால் எல்லா வற்றையும் அறியும் ஞானக்கிரியைகள் 
இவனுக்குண்டென்பது ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகையால் இந்த ஆன்மா சர்வஞ்ஞனாயும் 
சர்வ கருத்தாவாயுமிருந்து கொண்டு காரணமான கலா சம்பந்தமின்றி மகிட்சியுள்ளவனாக 
இருக்கிறான் என்பதாம் (130 )

    (அ-கை) சிற்றறிவு முதலியவற்றிற்கும் கலாதி சம்பந்தம் வேண்டப் படுவதால் இவ்வாறு 
கூறுதல் பொருந்தாதென்று கூறுகின்றார்.

(131)      கலை முதலிய துணைகள் இல்லாமையால் ஆன்மாவினுடைய ஞானக்கிரியா சத்திகள் 
விளங்கித் தொழிற் படுகிற தில்லை யென்பதாம். (131)

    (அ-கை) மறைப்பில்லாத பொருளுக்கு இந்தக் கலா சம்பந்தம் பொருந்துகிறதில்லை 
யென்று கூறுகின்றார்.

(131இ )     மறைப்பில்லாத சூரியனொளியானது பிறிதொரு ஒளியை யெதிர் பார்க்கிறதில்லை 
யென்பதாம். (131இ)

(132)     (ஆகவே) மலமானது அநாதியாயும், அநாதியான சம்பந்தத்தை யுடையதாயும் 
அனைவருக்கும் பொதுவாயும் நித்தியமாயு மிருக்கின்றதென்பதாம் . 

    (உரை)   இந்த மலம் ஆன்மாக்களுக்கு அநாதியாயும், அநாதியான சம்பந்தத்தையுடையதாயும், 
அநாதியாயே மறைக்கிறதாயும், அனைவருக்கு மொன்றாயுமிருக்கிறது. ஆகையால் இந்த மலத்தை 
நித்தியமெனவு மொப்புக் கொள்ள வேண்டும். (132)

    (அ--கை) இவ்வாறாயின் மலம் நித்தியமானமையால் எக்காலத்தும் ஆன்மாக்களை 
விட்டு நீங்காது. நீங்கினும் மலமொன்றாகையால் ஒரு புருடனுக்கு முத்தியுண்டாகும்பொழுது 
அனைவருக்கும் முத்தியுண்டாக வேண்டும். இவ்வா றாசங்கிப்பார்க்குக் கூறுகின்றார்.

(132இ.)     ஒவ்வொரு புருடனிடத்தும் நியமமாயும், தத்தங் காலவெல்லையில் நீங்குஞ் 
சத்திகளை யுடையதாயு மிருக்கின்ற தென்பதாம்.

    (உரை.) மலமானது ஒவ்வொரு புருடனிடத்தும் நிச்சயமாயும் அளவற்ற சத்திகளுடன் 
கூடினதாயு மிருக்கின்றமையால் ஒரு சத்திக்குப் பரிபாக வசத்தால் தடையேற்பட்ட பொழுது 
அந்த ஆன்மாவிற்குத் தான் முத்தியடைதல் கூடும். ஏனையவற்றிற்குக் கூடாது. இவ்வாறே 
“ஒவ்வொரு புருடனிடத்தும் இருக்கிறதாயும் தத்தங்காலத்தின் முடிவில் நசிக்குஞ் சத்திகளை 
யுடையதாயு மிருக்கின்றது'' என்று பிறருங் கூறுகின்றனர். (132இ)

    (அ-கை.) பிரகிருதி சம்பந்தமான மலமே விபரீத ஞான ரூபமாயும், மகாமோகமென்னும் 
 பெயருடனு மிருக்கின்றது. அந்த மலமிருப்பது கொண்டே கலை முதலிய துணையை விரும்புதலும்,
கன்மா னுட்டானமும் அந்தச் சத்திக்குப் பொருந்துகின்ற தென்பார்க்குக் கூறுகின்றார்.

(133)     மகாமோக முண்டாவதற்கு முன் இந்த ஆன்மா நின்மலனாயிருக்கின்றான். அதனால் 
சிவனைப் போல் மறைப்பில்லாத புருடனானவன் பிரகிருதி சம்பந்தமான மலத்தை நீக்குதற்கு 
முடியாதவனாக விருக்கின்றானென்பதாம்.

    (உரை.) கலை முதலியவற்றின் சம்பந்தம் ஏற்பட்டபின்றான் மகாமோகமுண்டாகின்றது, 
உன்மதத்தில் சிருட்டியினாரம்பத்தில் ஆன்மா நின்மலனாயிருக்கின்றமையால், சிவனைப்போல் 
மறைப்பில்லாத ஆன்மாவானவன், கலை முதலியவற்றின் றுணையால் பிரகிருதி சம்பந்தமான 
அந்தமலத்தை நீக்குதற்கு முடியாதவனாக விருக்கின்றான். ஆகையால் அனாதியான மலத்துடன் 
அநாதியாகவே ஆன்மாவிற்குச் சம்பந்தமுண்டென்பது ஒப்புக்கொள்ள வேண்டும். (133)

(134-135)     ஆன்மாவிற்கும் மலத்திற்குமுள்ள சம்பந்தத்தை இடையில் உண்டானதாகக் கொள்ளின் 
அவ்வாறுண்டாதற்கும் ஒரு காரணஞ் சொல்ல வேண்டும். அவ்வாறே மேலுஞ் சென்று முடிவின்மையென்னுங்
 குற்றத்திற்கிடனாம், ஆன்மாவிற்கும் மலத்திற்குமுள்ள சம்பந்தமானது ஏதுவின்றி யிடையே யுண்டாகிறதென்று 
சொல்லின் கலையின் சம்பந்தமும் ஏதுவின்றியே இடையில் உண்டாக வேண்டும். ஆகவே ஆன்மாக்களுக்கு 
முத்தியே இல்லாமற் போய்விடும். ஈசுவரனுக்கும் ஈசுவரத்தன்மை இல்லாமை நேரிடுமென்பதாம் .

    (உரை.) மலத்தின் சேர்க்கையானது ஏதுவின்றியே இடையிலுண்டாவதென்று கொள்ளின், 
சரீர முதலியவற்றின் சேர்க்கையும் ஏதுவின்றியே இடையிலுண்டாகின்றதென்று கொள்ள வேண்டு
மாகையால், முத்தனுக்கும் மீண்டுஞ் சம்சாரச் சேர்க்கையுண்டாகி முத்தியில்லாமற் போய்விடும். 
ஈசுவரனுக்கும் மலத்தின் சேர்க்கையுண்டாகி ஈசுவரத் தன்மையில்லையாய் விடும்.  ஆகவே 
சம்சாரத்திற்கேதுவான மலசம்பந்தம் அநாதியாகவே ஆன்மாவிற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமென்க. (134-135)

    (அ-கை) இவ்வாறு மலத்திற்கு ஒவ்வொரு புருடனிடத்தும் இருக்கும் அசாதாரணத்தன்மை பற்றி 
அநேகத்தன்மையை யொப்புக்கொள்ளின், சடமாயு மநேகமாயு மிருப்பது பற்றிக் கடமுதலியவற்றிற்குப்
போல் இதற்கு அநித்தியத்தன்மை வந்துவிடும். விடவே அநாதி யென்பதில்லையாய் முன்னர்க் கூறப்பட்ட 
முடிவின்மை முத்தியின்மையென்னும் குற்றங்கட் கிடனாமென்று கூறுகின்றார். அசாதாரணம் - சிறப்பு.

(136)     மலம் ஒவ்வொரு புருடனிடத்தும் இருப்பதாகக் கூறின் சடத்தன்மையும் அநேகத்தன்மையு 
மிருப்பதுபற்றித் தோன்றி யழிவதாக ஆகிவிடும். விடவே முன்னர்க் கூறப்பட்ட குற்றங்கள் நேரிடுமென்பதாம். (136)

    (அ--கை) ஆன்மாவிற்கும் மலத்திற்குமுண்டான இந்தச் சம்பந்தம் அநாதியா 
யிருக்கின்றமையால் இதற்கு நாசங்கிடையாது. நாசமுண்டென்று கொள்ளின் எல்லாவற்றிற்கும் 
அநித்தியத் தன்மை வந்து விடுமென்று கூறுகின்றார்.

(137)     அநாதியான மலத்துடன் அநாதியாகவே ஆன்மாவிற்குண்டான சம்பந்தத்தை யநித்தியமாகக் 
கொள்ளின் உற்பத்தியில்லாத அநாதியான மாயை, சிவன், ஆன்மாவென்னும் பொருள்களுக்கும் 
நாசமேற்படுமென்பதாம். (137)

    (அ--கை) இவ்வாறு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மலத்திற்குண்டான அநாதித் தன்மையினையும், 
சாதாரணத் தன்மையினையும், நசிக்காம லிருக்குந்தன்மையினையும் சாதித்துவிட்டு,  இனி 
அம்மலத்திற்கு அளவற்ற சத்தியுடன் கூடி யிருக்குந் தன்மையினையும் சாதிக்கின்றார்.

(138)     ஆன்மாவின் குணத்தைத் தடுக்கும் இந்த மலத்தின் சத்திகள் ஒவ்வொரு புருடனிடத்தும் 
இன்றியமையாததா யிருக்குமென்பதாம்.

    (உரை) ஆன்மாவின் குணமென்பது ஆன்மாவின் ஞானக் கிரியாசத்திகள்.. இது முன்னரே 
கூறப்பட்டிருக்கின்றது. (138)

    (அ-கை) காணப்படும் போகவேறுபாடானது வேறுவழியாகப் பொருந்தாமையால் 
அந்த மலசத்திகளுக்குப் பரிபாக காலத்தில் வேறுபாடானது சித்திக்கின்றதென்று கூறுகின்றார்.

(139)     மறைத்துக்கொண்டிருக்கும் இந்த மலசத்திகள் கெடுதற்குக் காலம் நியதிகள் கிடையா. 
 இவ்வாறு கூறவில்லையாயின்  எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரேகாலத்தில் முத்தி கிடைக்கவேண்டும். 
முத்தியோ அவ்வாறு கிடைக்கவில்லை. ஆகையால் அந்த மலசத்திகள் சூக்கும ரூபமாக இருக்கின்றனவென்று 
ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதாம். 

    (உரை) மலம் அநாதியாகவே மறைக்கின்றமையால் அந்த மலமே ஆன்மாவிற்கு உடன்றோன்றிய
பாசமாகும். மாயை முதலியனவோ வெனின், “ஆன்மாவிற்கு உண்டாகும் மாயா காரியங்களனைத்தும் 
மலமிருத்தலால் உண்டாகின்றன” என்பது முதலிய  சுவாயம்புவ வாக்கியங்களால் இடையில் 
வந்தனவாகவே அறிந்து கொள்ள வேண்டும்..  (139)

    (அ-கை) மதங்க முதலிய நூல்களில் மோகம், மதம், அராகம், துக்கம், சோஷ மென்னும் இவை 
மலத்தின் காரியமாய் இருக்கின்றனவென்றும் இவையே உடன் தோன்றிய மலமாயிருக்கின்றனவென்றும் 
கூறப்படுகின்றதே என்பார்க்குக் கூறுகின்றார்.

(140)     மோகமுதலிய வைந்தையும் மலத்தின் காரியமாகக் கொள்ளக்கூடாது. கலை முதலியவற்றின் 
சம்பந்தமில்லாத ஆன்மாக்களிடத்தில் மலமிருந்தும் அதன் காரியங்களான மோக முதலியன 
எக்காலத்தும் காணப்படாமையா லென்பதாம்.

    (உரை) விஞ்ஞானாகலர் பிரளயாகலர்களுக்குக் கலை முதலியவற்றின் சம்பந்தமில்லாமையால் 
மலமிருந்தும் மோகம் முதலியன காணப்படவில்லை. சகலரிடத்தில் மோகம் முதலியன காணப் படுகின்றன. 
ஆகையால் ஞானக்கிரியைகளை மறைத்தல் மலத்தின் காரியமாதல்போல, மோகமுதலியன மலத்தின் 
காரியமென்பது கூடாது. மதங்க முதலியவற்றில் கூறப்பட்டதன் கருத்தாவது--மாயையை முதற்காரணமாகக் 
கொண்டதாயும், ஆன்மா வல்லாத பொருள்களில் ஆன்மாபிமானஞ் செய்வதாயுமுள்ள இந்த மோக முதலியன 
மலமிருக்கும் பொழுதே உண்டாகின்ற மையாலும், கலை முதலியவற்றின் சேர்க்கையிருக்கும்பொழுதும் 
நின்மலர்களான மாயா கருப்பாதிகாரிகள் முதலானவரிடத்தில் அந்த மோகமுதலியன காணப்படாமையாலும், 
துணைக் காரணமான அந்த மலத்துடன் தோன்றுகின்றனவென்பது கொண்டு சகசமலத்தை யேதுவாக 
வுடைத்தா யிருக்கின்றபடியால் சகச சப்தத்தாற் கூறப்படுகின்றன. மலத்தை உபாதானமாய்க் கொண்டிருக்குந் 
தன்மைபற்றி யிவற்றிற்குச் சகச மலத்தன்மை கூறப்படவில்லை. ஆகையால் விரோதமின்மை காண்க. (140)

    (அ-கை) மோக முதலியவற்றிற்கு மலம் முதற்காரணமா யிருப்பினும் இவை பிரளய கேவல 
நிலையில் வெளிப்பட்டுத் தோன்றவில்லை. பின்னர்க் கலை முதலியவற்றின் சம்பந்தத்தால் 
வெளிப்பட்டுத் தோன்றுகின்றன வென்று கொண்டால் குற்ற மென்னை யென்பார்க்குக் கூறுகின்றார்.

(141-142)      போக சாதனங்களின் சம்பந்தத்தால் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன வென்பது 
பொருத்தமன்று. உன்னால் குணங்களின் றொழில்களினின்றும் மோகம் முதலியன வேறாகக் 
கொள்ளப்படவில்லை யென்பதாம்.

    (உரை ) மதம் முதலியன, குணங்களின் றொழில்களினின்றும் வேறாக உன்னால் ஒப்புக்கொள்ளப் 
படாமையால் அவை போக சாதனங்களின் சம்பந்தத்தால் பின்னர் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன வென்று 
கூறுதல் பொருந்தாது. மத முதலியவற்றிற்கு மலத்தை முதற்காரணமாகக் கொள்ளின் அந்த மலம் எக்காலத்தும் 
ஒரே ரூபமாயிருத்தலால் தோற்றந் தோற்றமின்மை யென்னும் பேதமுண்டாகாமைபற்றி ஞானக்கிரியைகளை 
மறைக்கும் அதன் காரியம் சங்கார நிலையிலும் இருத்தல் போல மதம் முதலியவையும் அந்தச் சங்கார 
நிலையி லறியப்படவேண்டும்.  அவையோ அந்நிலையிலறியப்படவில்லை. போக சாதனங்களின் 
சம்பந்தத்துக்குப் பின்னர் புருடர்களுடைய அந்தக் கரணத்தில் இருக்கின்றவையாகவே அறியப்படுகின்றன. 
ஆகையால் துணைக்காரணமான மலத்துடன் மாயாகாரியங்களை முதற்காரணங்களாகக் கொண்டு 
மத முதலியன தோன்றுவனவா யொப்புக்கொள்ள வேண்டும். (141-142)

    (அ-கை) இனி இந்த மத முதலியன குண சொரூபமாகவே இருக்கின்றனவென்று கூறுகின்றார்.

(143)     மதம் மோகமென்னு மிவை தாமசங்களாயும் பற்றுதல் சாத்துவிகமாயும், தாபம் மயக்கமென்னும் 
மிவை இராசதங்களாயுமிருக்கின்றன வென்பதாம்.

    (உரை) ஆகவே அந்தக் கரணத்திலிருக்கும் குணங்களின் தொழில்களே இந்த மதம் முதலியனவாகும். 
இந்தக் குணங்களினும் வேறான மலத்தின் தொழில்களாக மத முதலிய பெயருடன் ஒன்றும் ஒரு நிலையிலும் 
ஆன்மாவினிடத்துக் காணப்படவில்லை (143)

    (அ-கை) ஆகையால் குணங்களினும் வேறாக மத முதலியனவில்லை யென்று கூறுகின்றார்.

(143இ )     இந்தக் குணங்களின் வேறாக மூலமாகிய மலத்தின் தொழில்களாக மத முதலியன 
வில்லையென்பதாம். (143இ )

( 144)     ஆகவே தடுக்குஞ் சத்திகளைத் தவிர ஒரு  தருமமும் மலத்திற்குக் கிடையாது.  
கன்ம சமஸ்காரத்துடன் கூடின  மலத்திற்குச் சம்சாரத்திற்கு ஏதுவாயிருக்குந் தன்மை 
சித்திக்கின்றதென்பதாம்.

    (உரை) மலமாத்திரத்திற்கு ஞானக்கிரியைகளை மறைக்குந் தன்மையும், கன்ம 
வாசனையுடன் கூடியிருக்கும் மலத்திற்கு சம்சாரத்திற் கேதுவாயிருக்குந் தன்மையும் 
யுத்தியினால் சித்திக்கின்றன. பிறிதொரு காரியமுமில்லை யென்பது பொருள். (144 ) 

    (அ-கை) இவ்வாறு மல சொரூபத்தைக் கூறி யிவ்விடயத்தை முடித்துக் காட்டுகின்றார்.

(145)     யாதொன்றின் சம்பந்தத்தால் ஆன்மா பசுவா யிருக்கின்றதோ அத்தகைய பசுவானது 
இவ்வாறு கூறப்பட்டதென்பதாம். 

    (உரை ) பசுவென்னுஞ் சொல் மலமென்னும் பொருளை அறிவிப்பதாக ரௌரவ 
முதலியவற்றில் காணப்படுகின்றது. இந்த மலம் தனிமையான ஒரு தத்துவமாதலில்லை . 
பசு தத்துவத்தினுள்ளேயே இது  அடங்குகின்றது. எதனாலெனின், இம்மலத்தையின்றி 
ஆன்மாக்களுக்குப் பசுத்தன்மை பொருந்தாமையாலும், மலத்தினால் அநாதியாகவே 
மறைக்கப்பட்டிருக்கின்றமை யாலுமென்க. அன்றியும் சிவபெருமானுடைய சிருட்டி 
முதலியவற்றால் ஆன்மாக்கள் போகத்தை யனுபவித்தலும், போக சாதனங்களான 
கலை முதலியவற்றைத் தோற்றுவித்தலும், அவற்றை விருத்தி செய்தலுமாகிய 
மாயையின் வியாபாரமும் , போக்கியங்களை யனுபவித்தல் ரூபமான பசுக்களின் 
வியாபாரமும் இந்தப் பிரகரணத்திற் கூறப்பட்டவையாகும். இவற்றினுடைய இந்த 
வியாபாரங்கள் ஆன்மாவை மறைக்கும் மலத்தினாலேயே நிகழ்கின்றன. 
எதனாலெனின்; மலமிருக்கும் பொழுது தான் இவையனைத்தும் நிகழுமாதலாலென்க (145 )

    (அ--கை) மத முதலிய துன்பங்கள் புருடர்களிடத்தில் இருக்கின்றன வென்னு மிவ்விடயத்தை 
முடித்துவிட்டு அதிகார பேதத்தினால் இந்த மத முதலியவற்றின் வியாபார பேதங்களைக் 
கூறுகின்றார்.

(146)     மாயா தத்துவத்திலிருப்பவருக்கு மத முதலிய துன்பங்கள் காரியத்தைச் செய்வனவல்ல. 
யோகிகளுக்கு இடையில் இவற்றின் வியாபாரங்கள் தடுக்கப்படுகின்றன. விடயப் பற்றுள்ளவருக்குப் 
பலவிதமாயும் கம்பீரத்தோடு கூடியும் காரியத்தைச் செய்கின்றன வென்பதாம்.

    (உரை ) மாயா தத்துவத்தி லொடுங்கிய பிரளயாகலருக்குக் குணமுதலிய தத்துவங்கள் 
நீங்கி மாயையினிடத்து ஒடுங்கியிருத்தலால் இந்தக் கிலேசங்கள் ஒரு காரியத்தையும் செய்வனவல்ல. 
யோகிகளுக்கோவெனின், கிலேசங்களிருப்பினும் யோகவலிமையால் இடையே தடுக்கப்படுகின்றன. 
விடயப்பற்றுள்ள சகலர்களான பசுக்களுக்கோவெனின், பலவிதமான தனது வியாபாரங்களை 
யுடையனவாயிருக்கின்றன. மூலத்தில் பலவிதமென் னும் பொருள் குறித்த விசித்திரமென்னுஞ் 
சொல்லை விச்சின்ன மென்று பாடபேதங் கொள்ளின், தோன்றுதல் அழிதல் ரூபமாயுமென்று 
பொருள் கொள்ளல் வேண்டும்.

    இவ்வாறு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சாதனத்துடன் கூடிய போகம் மோக்ஷமிரண்டனுள் 
போகமானது இந்தக் காரிகையிற் கூறப்பட்டது. அதுபற்றியே போககாரிகை யென்னும் பெயருடன் 
இந்நூல் முற்றுப்பெற்றது.  மோக்ஷமோவெனில் சாதனத்துடன் கூட மோக்ஷகாரிகை யென்னும் 
வேறு பிரகரணத்தில் கூறப்போகின்றார்

    ஸ்ரீமத் கேடகரின் புதல்வரான சத்தியோஜ்யோதி சிவாசாரியார் இந்தப் போக காரிகையால் 
சித்தாந்த சாத்திரத்தில் சித்தித்த போகத்தைச் சாதனங்களுடன் சுருக்கமாகவும் நன்றாகவுங் கூறினார். 
அவருடைய வாக்குகளை யாராய்ந்து அஞ்ஞானம், நீங்கினவராயும் ஆசிரிய சிரேட்டராயுமுள்ள 
அகோர சிவாசாரியரால் இந்த விருத்தியுரை செய்யப் பெற்றது.

        போக காரிகை மூலமும், விருத்தியுரையும் முற்றுப்பெற்றன.

Related Content

நாதகாரிகை மூலமும் விருத்தியுரையும்