சிவமயம்
(தமிழ் மொழிபெயர்ப்பு)
உரைமங்கலம்.
நாதத்தைக் கடந்த சிவபெருமானை நமஸ்கரித்து நாதஞானஞ் சித்திப்பதின் பொருட்டு
ஸ்ரீ பட்டராமகண்டரா லியற்றப் பெற்ற நாதகாரிகைக்கு விருத்தியுரை செய்யத்
தொடங்குகின்றேனென்பதாம்.
நூல்மங்கலம்.
மூலம்
(1) புத்தி, அஸ்மித்தன்மை , மனம், வித்தை , அராகம், கலை, மாயை, புருடன், சத்தியென்னுமிவற்றினும்,
தொனிகளினும் வேறாக நாதமென்பதொன்று அறியப்படுகின்ற தென்பதாம்.
உரை
அஸ்மித்தன்மையென்பது அகங்காரம். புத்தி முதல் மாயை யீறாகவுள்ள தத்துவங்கள் தமது
காரியங்களுக்காகச் சித்திக்கின்றமையானும், பிறிதொரு காரியத்திற்கு ஏதுவாவதில் பிரமாண
மில்லாமையானும், புருடனும் அதன் சத்தியும் அவிகாரியானமையால் அவற்றிற்கு வாக்குடன்
சமவாய சம்பந்தம் பொருந்தாமையானும், தூலமான தொனிகள் உற்பத்தி நாசங்களுடன்
கூடியவையாகையால் வேறு காரணத்தை விரும்புகின்றமையானும், தொனிகளினும்
என்றவும்மையால் அந்தத் தொனிகளி னின்று முண்டான அக்கரங்கள் முறையே
ஒன்றன்பினொன்றாய் உண்டாகின்றமையால் அவ்வக்கரங்களுக்கு அறிவிக்குந்தன்மை
யுண்டென்பது பொருந்தாமையானும், அறிவிப்பதற்குக் காரணமாக நாதமொன்றுண்டென்பது
பிரமாணத்தால் நிச்சயிக்கப்படுகின்றதென்க. (இது பொருளியல்புரைத்தலென்றும் மங்கலமாகையால்
நூலாரம்பமாகவே கொள்க.) (1)
(அவதாரிகை) அக்கரங்களுக்கு அறிவிக்குந் தன்மையில்லை யென்பதைக் காட்டுகின்றார்.
(2) செவியால் கொள்ளத் தகுந்தவையாயும், உச்சரித்து நாசமடையத் தகுந்தவையாயும்,
ஒன்றன் பின் ஒன்றாக நிலைத்திருப்பவை யாயுமுள்ள அக்கரங்கள் ஒன்றுக்கொன்று உபகாரஞ்
செய்யக்கூடாதனவா யிருக்கின்றன. ஆகையால் சேர்ந்திராத அவ்வக்கரங்கள் பொருளை
யறிவிக்க மாட்டாவென்பதாம் (2)
(அ-கை) பதங்களே பகுதி விகுதிகளென்னும் பிரிவுடன் பொருளை யறிவிப்பதற்குக்
காரணங்களாகட்டும்; அல்லது கிரியை காரகமென்னும் இவற்றின் தொடர்ச்சியுடன் கூடிய
வாக்கியமாவது பொருளை யறிவிப்பதற்குக் காரணமாகட்டு மென்பார்க்குக் கூறுகின்றார்.
(2இ) அக்கரங்களினும் வேறாக பதமாவது வாக்கியமாவது கேட்கப்படுகிறதில்லை யென்பதாம். (2இ)
(அ-கை) பதம் வாக்கியமென்னுமிவற்றின் ஏகதேசமான அக்கரங்கள் நொடிப்பொழுதில்
நாசத்தையடைகின்றமையால் ஒன்றுக்கொன்று உபகாரஞ் செய்வனவல்லவென்பது முன்னர்க்
கூறப்பட்டது. ஆகையால் அக்கரங்களினும் வேறாக பதமாவது வாக்கியமாவது காணப்படாமையால்
அந்தப்பத வாக்கியங்களுக்கும் பொருளையறிவிக்குந் தன்மை கிடையாதென்பது பிரத்தியட்சப்
பிரமாணத்தால் சித்தித்தமையால் அநுமானத்தினாலும் அப்பத வாக்கியங்களுக்குப் பொருளை
யறிவிக்குந் தன்மையில்லை யென்று கூறுகின்றார்.
(3) யாதொன்று பிரத்தியட்சப் பிரமாணத்தால் மறுக்கப் பட்டதோ அதனையுண்டென்பது
அநுமானத்தாலுங் கூடாதென்பதாம் (3)
(அ-கை) இவ்விடயத்தையே ஆசங்கையை முன்னிட்டு விரித்துக்கூறுகின்றார்.
(4) * கௌ : என்னும் பெயர் முதலிய பதமானது செவியால் கொள்ளத்தகுந்ததா யிருக்கின்றதே
யெனின், அன்று எதனாலெனின், ககாரம் ஔகாரம் விசர்க்கமென்னுமிவற்றின் வேறாக கெள :
என்பதொன் றில்லாமையா லென்பதாம்.
*கெள :-பசு
(உரை) பெயர் முதலிய வென்றதனால் செம்மை முதலிய விசேடண பதங்களும், செல்லுதல்
முதலிய கிரியா பதங்களும் கொள்ளப்படும். (4)
(5) (ஆகையால்) அந்த அக்கரங்கள் ஒரேகாலத்திலிருத்தலால் பின்னுள்ள வக்கரங்களினறிவு
முன்னுள்ள வக்கரங்களின் அறிவைக் கொண்டு பொருளை நிச்சயிக்க வேண்டும். பின்னுள்ள
விசர்க்கமென்னும் அக்கரத்தினால் மாத்திரம் குளம்பு கம்பள மென்னுமிவற்றையுடைய
சித்தின் றோற்றமானது உண்டாகிற தில்லை யென்பதாம்.
(உரை ) சித்தின் தோற்றமென்பது பொருளினுடைய அறிவின் தோற்றமாகும். பின்னுள்ள
விசர்க்கமென்னும் அக்கரத்தினால் மாத்திரம் அலைதாடி முதலியவற்றினறிவு உண்டாகுமாயின்,
அசுவ: புருஷ : என்பன முதலியவற்றிலும் பின்னுள்ள விசர்க்கத்தால் பசுவினறிவு உண்டாக வேண்டும். (5)
(அ-கை) பின்னுள்ள அக்கரத்தால் மாத்திரம் பொருளினறிவு உண்டாகிறதில்லை. முன்னுள்ள
அக்கரங்களாலுண்டான வாசனையுடன் கூடி பொருளினறிவு உண்டாகின்றது. அக்கரங்களுக்கு
நொடிப்பொழுதில் நாசமுண்டாயினும் வேறு காலங்களில் நினைவு காண்கின்றமையால்
அக்கரங்களின் வாசனைக்கு நாசமில்லை யென்னும் ஆசங்கையைக் கூறுகின்றார்.
(6) முன்னுள்ள அக்கரங்களால் உண்டான வாசனையைத் துணையாகவுடைய பின்னுள்ள
அக்கரத்தால் பொருளினறிவு உண்டாவது உண்மைதான். முன்னுள்ள அக்கரங்களா லுண்டான
வாசனையுடன் கூடாமல் பொருளினறிவு உண்டாகிறதில்லை யென்பதாம். (6)
(அ-கை) இந்தக் கொள்கையை மறுக்கின்றார்.
(7) இவ்வாறு கூறுவது பொருந்தாது, வாசனைகள் முன்னரனுபவிக்கப் பட்ட எந்தப் பொருள்களால்
புத்தியில் ஏறியிருக்கின்றனவோ, அதே பொருள்களினறிவுக்குக் காரணங்களாகும். ஆகையால்
பொருளினறிவு உண்டாகிறதில்லை யென்பதாம்.
(உரை ) வாசனைகளோவெனின், முன்னரனுபவிக்கப்பட்ட எந்தப் பொருள்களால்
புத்தியினிடத்தில் ஏற்றப்பட்டிருக்கின்றனவோ, அந்தக் கடம் முதலியவற்றின் நினைவுக்குக் காரணங்களாக
காணப்படுகின்றன. அநுபவிக்கப்படாத கடம் முதலியவற்றில் வாசனை காணப்படவில்லை. ஆகையால்
இவ்விடத்தும் எந்த அக்கரங்களினால் வாசனைகள் புத்தியில் வைக்கப்பட்டனவோ அந்த வாசனைகள்
அந்த அக்கரங்களினறிவுக்குக் காரணங்களாகுமென்பது பொருந்தும். இவ்வளவேயன்றி அக்கரங்களின்
வாசனைகள் பொருளினறிவுக்குக் காரணமாகுமென்பது பொருந்தாது.
ஆகையால் பதத்திற்காவது வாக்கியத்திற்காவது பொருளை யறிவிக்குந்தன்மை சம்பவிக்கிறதில்லை.
இவ்வாறே "எந்தச் சமஸ்காரங்கள் எந்தப் பொருளின் வடிவத்தினுடைய தோற்றத்தினால் பாவனை செய்யப்
பட்டனவோ, அந்தப் பொருளின் வடிவு விடயமான அறிவிற்கு அந்தச் சமஸ்காரங்கள் காரணங்களாக ஆகும்.
பொருளினறிவிற்குக் காரணமாவனவல்ல" என்று பிறருங் கூறுகின்றனர்.
நினைக்கப்படுவனவாயும் அநுபவிக்கப்படுவனவாயும் உள்ள அக்கரங்களின் கூட்ட ரூபமான
பதம் பொருளை அறிவிக்கின்றதாக ஆகின்றதென்று கூறின், அது பொருந்தாது. நினைக்கப் படுந் தீபங்களுக்குப்
பொருளை விளக்குதல் காணாமையா லென்க.
முன்னர்க் கூறப்பட்டவாறு அக்கரங்கள் பொருளை யறிவிக்காமையாலும், பொருளை யறிவித்தல்
வேறு வழியாகப் பொருந்தாமையாலும் அக்கரங்களால் தோன்றத் தகுந்ததாயும், அக்கரங்களுக்கு வேறாயும்,
வெளிப்படையா யில்லாததாயும், மயில் முட்டையின் நீர்போல் அநேக அக்கரங்களாகப் பிரகாசிக்கிறதாயும்,
முறையே பதரூபமாயும் பதத்தின் வேறான வாக்கிய ரூபமாயும், எல்லா உலகத்திற்கும் ஒரே முறையாகவோ
அல்லது ஒன்றன் பின் ஒன்றாகவோ பொருளை யறிவிப்பதற்கு ஏதுவாயிருக்கின்றமையால் வியாபகமாயும்,
நித்தியமாயுமிருக்கும் ஸ்போடத்தைப் பொருளை யறிவிப்பதற்குக் காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
வையாகரணர்களும் அந்த ஸ்போடமே சொல்லுகிறவர்களுக்குப் பொருளை யறிவிக்கிறதென்று
கூறுகின்றார். இது பொருந்தாது. எவ்வாறெனில், அவ்விடத்தில் அக்கரங்களினும் வேறாக
ஸ்போட முண்டென்று எந்த மதங் கூறப்பட்டதோ, அந்த மதம் பொருந்துகிறதில்லை. எதனாலெனின்,
அக்கரங்களினும் வேறாக அந்த ஸ்போடமானது அந்த அக்கரங்களை யறிவிக்கும்
பதவாக்கியங்களினடுவே இருக்கிறதில்லை யாகையா லென்க.
அந்த ஸ்போடமானது அக்கரங்களினும் வேறா? வேறன்றா? வேறெனின், அறிவு ரூபமான
அந்த ஸ்போடமானது அக்கரங்களினும் வேறாக அறியப்படுகிறதில்லை. அறியப்படாமையெது
போலுமெனின், முயற்கொம்பு முதலியன போலுமென்க. இவ்வாறு பிரத்தியட்சத்தால் அக்கரங்களின்
வேறாக ஸ்போடமில்லை யென்பது சித்திக்கவே அநுமானத்தால் அக்கரங்களின் வேறென்றலும்
பொருந்தாது. ஸ்போடமென்பது அறிவு ரூபமாயில்லை யென்று கூறக்கூடாது;
ஞாபகமா யிருக்கின்றமையா லென்க. (ஞாபகம் - அறிவிப்பது.) அறிவிப்பதாகிய இந்திரிய
முதலிய காரகங்களோவெனின், பிரத்தியக்ஷத்தா லறியப்படாமலிருந்தும் சத்தியினால் காரியத்தை
யறிகின்றன; செய்கின்றன. எது போலுமெனின், சம்ஸ்காரமும் முளையும், பிரத்தியக்ஷத்தா லறியப்
படாமலிருந்து கொண்டு காரியத்தைச் செய்கின்றவாறு போலுமென்க.
ஞாபகமென்பது கண்சாடை முதலியவற்றிருப்பது போல் ஸ்போடத்திலில்லாமையால்
அநுமானத்தினால் ஸ்போடத்தைச் சாதிக்கலாமெனின், ஞாபகத்திற்கு வரம்பின்றி யோடலென்னுங்
குற்றம் நேரும். ஆகையால் ஞாபகமாயில்லாத ஸ்போடத்தை யொப்புக்கொள்ளக் கூடாது. கண் சாடை
முதலியவற்றில் முன்னிலைச் சம்பந்தமிருப்பதுபோல் ஸ்போடத்திற் கில்லாமையால் ஞாபகமா யில்லாத
இந்த ஸ்போடமானது இந்திரிய முதலியன போல் பிரத்தியக்ஷத்தால் அறியப்படாமலிருந்து கொண்டு
அநுமானத்தா லறியப்படுமென்று விகற்பித்து கூறுதற்கு எவ்வாறு கூடும்.
இனி ஸ்போடமானது அக்கரங்களின் வேறன்றெனின் அவ்வாறு கூறுமிடத்தில் ஸ்போடமானது
அக்கரங்களே யாகுமன்றி அக்கரங்களினும் வேறாக ஆகாது. அஸ்தம், கரம் என்னும் பதங்கள் கையென்னும்
ஒரு பொருளைக் குறிப்பதற்குப் பிரதி பதங்களாயிருக்கின்றவாறு போல் அக்கரங்களென்பதும்
ஸ்போடமென்பதும் பிரதி பதங்களாகும். ஆகவே, ஸ்போடமே அக்கரங்களென்று மேற்கொண்டதாக
முடியும் ஒரே பொருளைக் கூறும் சொல்லின் பேதத்தால் பொருட்பேதங் கிடையாது (ஆகையால்)
அக்கரங்களால் பொருளினறிவு உண்டாகின்றதென்பது பொருந்துகின்றது.
அக்கரங்களால் ஸ்போடம் அறியப்படுகின்ற தென்பதும் பொருந்தாது. எதனாலெனின்,
ஸ்போடமானது அநேக அக்கரங்களால் தோற்றப்பட்டுப் பொருளினறிவுக்குக் காரணமாகின்றதா?
அல்லது ஒவ்வொரு அக்கரத்தால் தோற்றப்பட்டுப் பொருளினறிவுக்குக் காரணமாகின்றதா? அநேக
அக்கரங்களால் தோற்றப்பட்டுக் காரண மாகின்ற தெனின், அக்கரங்கள் உச்சரிக்கப் பட்டவுடன்
நாசத்தை யடைவதால், இறுதி யெழுத்தை உச்சரிக்கும் பொழுது முதலெழுத்துக்க ளில்லாமையால்
இறுதியெழுத்து மாத்திரத்தால் ஸ்போடத்தின் தோற்றமானது உண்டாகாதென்று முன்னர்க் கூறப்பட்ட
குற்றம் நேரும். இவ்வாறன்றி முந்தின எழுத்துகளின் சமஸ்காரத்துடன் கூடின இறுதி யெழுத்தானது
ஸ்போடத்தைத் தோற்றுவிக்கின்ற தென்று கொள்ளினும் அதே குற்றம் நேரிடும். ஆகையால், மிகவும்
பிரசித்தமில்லாத ஸ்போடத்தை யெதற்காகக் கற்பிக்க வேண்டும்.
இனி ஒவ்வொரு அக்கரத்தால் ஸ்போடமானது தோற்றப் பட்டுப் பொருளினறிவிற்குக் காரணமாகின்றது
என்ற இரண்டாவது பக்கத்தைக் கொள்ளின், முதலாவதாயிருக்கும் ககார முதலிய ஓரெழுத்தால் ககனம்,
கவயம், கோவென்பது முதலிய அநேக ஸ்போடங்கள் தோற்றுமாதலால் அந்த ஸ்போடங்களில்
ஒன்றுக்கொன்று வேற்றுமை யில்லாமையால் அநேக பொருள்களினறிவு உண்டாகி விடும்.
அன்றியும் ஸ்போடமானது வியாபகமென்று கொள்ளின் ஒரு புருடனாலுச்சரிக்கப்பட்ட அக்கரங்களால்
ஸ்போடமானது தோற்றப்பட்டவுடன் ஸ்போடத்தில் வேற்றுமையின்மையால் வேறு தேசத்திலுள்ளவர்கட்கும்
பொருளினறிவு உண்டாக வேண்டும்.
அவ்வாறே ஸ்போடம் நித்தியமென்று கொள்ளின், இருப்பில் வேற்றுமையின்மையால் வேறு
காலத்திலும் பொருளினறிவு உண்டாக வேண்டும். அவ்விதமே உண்டாகிறதில்லை.
ஆகையால் வியாபகமாயும் நித்தியமாயும் இருப்பதாகிய ஒன்றும் (அக்கரங்களையின்றி)
ஒரு பொருளையும் அறிவிக்காது இவ்வாறிருக்க ஸ்போடத்தைக் குறித்துக் கேட்க வேண்டியதில்லை . (7)
(அ-கை) இன்னுமொரு முறையாக பிறருடைய அபிப்பிராயத்தைக் கூறுகின்றார்.
(8) புத்தியில் ஏறின பதங்களுடன் கூடினதாயும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டான தூல சத்தக்
கூட்டத்திற்குக் காரணமாயுமிருக்கும் அறிவானது குற்றமின்றி ஒன்றன் பின் ஒன்றாக வாசகமாக
இருக்கட்டு மென்பதாம்.
(உரை ) குளம்பு கம்பள முதலியவற்றை யிலக்கணமாக வுடைய பொருளை நன்றாக
புத்தியினால் நிச்சயித்து, அதன் பின்னர் அதற்கனு குணமாக பசு முதலிய பதத்தைச் சிந்தையினாலனு
சந்தானஞ்செய்து, அதன் பின்னர்த் தூல சத்தத்தை யுச்சரிக்கின்றான். ஆகவே புத்தியில் ஏறின பசு
முதலிய பதங்களுடன் கூடினதாயும், சொல்லுதற்காக விரும்பப்பட்ட அந்தப் பசு முதலிய பொருள்களின்
முறையாக அந்தந்தப் பொருள்களின் சொரூபமாக வுண்டாகிறதாயும், அந்தந்தத் தூல சத்தத்தை
யுச்சரிப்பதற்குக் காரணமாயுமிருக்கும் அந்த அந்தப் புத்தி விருத்தி ரூபமாகவே உள்ள அறிவானது
இந்தப் பசு முதலிய பொருள்களுக்கு முறையாகக் குற்றமின்றி வாசகமாக இருக்கட்டும் (8)
(அ-கை) புத்தி விருத்தி ரூபமான அறிவு, வாசகமென்னும் இந்தக் கொள்கையினையும் மறுக்கின்றார்.
(9) இவ்வாறே ஆராய்ச்சி ஞானத்திற்கும் வாசகத்தன்மை யிருக்கட்டும். ஆகவே, (1) வாச்சியங்களினின்றும்
(2) வாசகங்கள் வேற்றுமையை யடைகிறதில்லை. எதனாலெனில் அலைதாடி முதலியவற்றின் ரூபமான
எல்லாப் பொருள்களும் வேற்றுமையின்றி புத்தியில் சம்பந்தித்திருக்கின்ற மையாலென்க.
1. வாச்சியம் - பொருள். 2. வாசகம் - சொல்.
(உரை) உள்ளிருக்கும் ஆராய்ச்சி ஞானத்திற்கும் வாசகத் தன்மையைக் கொண்டால் வாச்சிய
வாசகங்களுக்கு வேற்றுமை யில்லாமற் போய்விடும் ; இரண்டற்கும் அலை தாடி முதலிய ஒரே சொரூப
மாதலால் அந்த அலை தாடி முதலிய ரூபமான எல்லாப் பொருளும் வெளியிலிருக்கும் சொரூபத்திற்கு
வேறுபடாமல் புத்தியில் சம்பந்தித் திருக்கின்றமையால் என்க. (9)
(அ-கை.) இதே விடயத்தில் பூர்வபட்சியினுடைய ஆசங்கையைக் கூறுகின்றார்.
(10) ஆராய்ச்சி ரூபமாயிருப்பது கொண்டே வாச்சியத்தினின்றும் வாசகத்திற்கு வேற்றுமை
இருக்கின்றது. ஞான வேற்றுமைகளால் சொரூப வேற்றுமைகள் ஆராய்ச்சி செய்வதற்கு யோக்கியமாக
வாகின்றன. சொரூப வேற்றுமைகளே வாச்சியங்களென்பதாம்.
(உரை ) வெளியிலுள்ள சொரூபம் வாச்சியம். புத்தியிலுள்ள சொரூபம் வாசகம். வாச்சிய
வாசகங்களுக்கு இதுவே வேற்றுமையாகும். புத்தியிலிருக்குஞ் சொரூபம் வெளியிலிருக்குஞ் சொரூபத்தை
ஆராய்ச்சி செய்யும் ரூபமாயிருத்தலால் வாசகமெனப்பட்டது. ஆகவே வாசகங்களான ஆராய்ச்சி
ஞானங்களின் வேற்றுமையால் பசு முதலிய வெளியிலிருக்குஞ் சொரூப பேதங்கள் ஆராய்ச்சி
செய்தத் தகுந்தவையாய் வாச்சியங்களாக இருக்கின்றன. வாச்சிய வாசகங்களுக்குள்ள வேற்றுமை
இதுவாகும். (10)
(அ--கை) பூர்வபட்சியினுடைய ஆசங்கைக்கு விடை கூறுகின்றார்.
(11) இது உண்மை. ஆயின் உருவம், இரதம், கந்தம், சத்த முதலிய பொருள்கள் எதனால்
ஆராய்ச்சி செய்யுந் தன்மையை யுடையனவா யிருக்கின்றனவோ, அதுவே உள்ளோசை ரூபமான
நாதமாகச் சித்தித்தது . விடயத் தன்மையாகச் சித்திக்கவில்லை என்பதாம்.
(உரை) நீ சொல்லுவது உண்மை . ஆராய்ச்சி ரூபமான அறிவு, வாச்சியத்தினும் வேறாயும்
உள்ளே யிருப்பதாயு மிருக்கின்றது. அந்த அறிவு காரணமின்றி யுண்டாகிறதில்லை. எதனாலெனின்
எப்பொழுதாவது ஒரு சமயத்தி லுண்டாகின்றமையா லென்க. புத்தியானது கண் முதலியவற்றால்
அறியப்பட்ட வெளியிலிருக்கும் பொருளை நிச்சயிக்கிறதாகக் கண்டிருக்கின்றோம். கண் முதலிய
வற்றாலறியப்படாத பொருளை நிச்சயிக்கிறதில்லை. எதனாலெனின் எல்லாப் பொருள்களையும்
நிச்சயிக்கட்டுமென்னும் அதிப்பிரசங்கம் நேரிடுகின்றமையாலென்க. அதுபோல், புத்தியானது
யாதானு மொன்றால் அறியப்பட்ட உள்ளேயிருக்கும் பொருளிற்றான் ஆராய்ச்சியைச் செய்கின்றது.
இன்றேல் எக்காலத்தும் எல்லாப் பொருள்களையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்.
ஆகையால் உருவம் இரத முதலிய பொருள்கள் எதனால் கூறுபவனுடைய புத்திக்கு ஆராய்ச்சி
செய்வதற்கு உரியனவாந் தன்மையை யடைகின்றனவோ, அதுவே இவ்விடத்து நாதமாயிருக்கின்றது.
அது உள்ளோசை ரூபமாக விருக்கின்றது. அஃதாவது நாதத்தின் காரியமாக விந்துவின் வடிவம்
இருக்கின்றது. அந்த நாதம் ஆராய்ச்சியறிவிற்குக் காரணமா யிருந்துகொண்டு வாசகமாகச்
சித்தித்ததாகும். விடயாகாரமாகப் பரிணமித்த தூல சத்தம் அவ்வாறு சித்திக்காது. சொல்லுபவ
னிடத்திலுள்ள நாதம் கேட்பவனுக்குப் பொருளினறிவை யெவ்வாறு உண்டுபண்ணுகிறதெனின்,
சொல்லுபவனால் உச்சரிக்கப்பட்ட தூல சத்தங்களால் கேட்பவனிடத்தில் உள்ள நாதந் தோற்றப்பட்டு
அவனுக்குப் பொருளினறிவையுண்டு பண்ணுகின்றதென்பது இந்நூலின் முடிவில் கூறப்படுமென்க (11)
(அ-கை.) இன்னுமிதனையே கூறுகின்றார்.
(12) இந்த நாதமானது சொல் பொருள் ஆகிய அனைத்தையும் அறியும்படி செய்துகொண்டு வாசகமா
யிருக்கின்றது. சத்தாயும் அசத்தாயுமிருக்கும் எல்லாப் பொருள்களும் நாதத்தினால் ஆராய்ச்சி செய்யப்
படுவனவாகக் காணப்படுகின்றமையா லென்பதாம் .
(உ-ரை.) இவ்வாறே உலகத்தில் நாதத்தின் சம்பந்தமின்றி ஒருவித அறிவும் உண்டாகிறதில்லை.
எல்லா அறிவும் நாதத்துடன் கூடியே உண்டாகின்றதென்று கூறப்படுகின்றது. இவ்வாறாயின் ஸ்ரீ பராக்கியத்தில்
''முந்தின எழுத்துக்களாலுண்டான சமஸ்காரத்துடன் கூடிய இறுதியெழுத்து வாசகமாயிருக்கின்றது'' என்று
கூறியது எவ்வாறு பொருந்துமெனின், அந்த இறுதி யெழுத்து நாதத்தைத் தோற்றுவிப்பது பற்றி யுபசாரமாக
வாசகமாய்க் கூறப்பட்டதென்க (12)
(அ-கை.) இவ்வாறு நாதத்திற்கு வாசகத்தன்மையைச் சாதித்துவிட்டு இனிமுன்னர்
மேற்கொள்ளப்பட்ட புத்தி முதலியவற்றிற்கு அறிவிக்குந் தன்மை யில்லையென்பதைக் கூறுகின்றார் .
(13) இந்தக் காரணத்தால் வாசகத் தன்மையானது புத்தியின் சொரூபமாக இருக்கிறதில்லை.
மனம் அகங்காரம் என்னுமிவற்றின் காரியமாகவுங் கூறக்கூடாது. எதனாலெனில் புத்தி மனம்
அகங்காரங்களின் காரிய ரூபமான நிச்சயம், கவனம், சம்ரம்பங்களினும், கரணரூபமான
சரீர இந்திரியங்களாகிய விகாரத்தினும் வேறாகவே நாதமிருக்கின்றமையால் என்க. இவ்வாறே
அவ்வியத் தத்தினும் வேறாகவிருக்கின்றதென்பதாம்.
(உரை.) இந்த வாசகத்தன்மை இந்தக்காரணத்தால் புத்தியின் சொரூபமாயில்லையென்று
கூறப்பட்டது. மனம் அகங்காரங்களின் சொரூபமாகவுமில்லை. இவ்வாறே அவ்வியத்தத்திற்கும்
வேறாகவே நாதம் இருக்கின்றது. அவ்வியத்தத்திற்கு அறிவிக்குந் தன்மை கிடையாது.
எதனாலெனின், குணத்திற்குக் காரணமாகச் சித்திக்கின்றமையாலும் அறிவித்தலென்னுங்
காரியத்திற்குக் காரணமாவதில் பிரமாணமின்மையாலு மென்க. (13)
(14) (இந்த நாதம்) யாதொரு காரணத்தால் அறிபவர்களிடம் பொருளினறிவிற்குக் கலப்பின்மை
காணப்படுகின்றதோ அந்தக் காரணத்தால் ஒவ்வொரு புருஷனிடமும் வாக்கியம் பதமென்னுமிவற்றில்
வாசகத்தன்மையுடன் வெவ்வேறு ரூபமாயிருந்து அவ்வியத்தமா யிருக்கின்றமையால் சூக்குமமாயும்,
வாசகமா யிருக்கின்றமையால் தூலமாயுமிருக்கின்ற தென்பதாம்.
(உரை) அறிபவர்களிடத்தில் கடத்தினறிவிற்கு ஆடையறிவின் கலப்பின்மை
காணப்படுகின்றமையால், ஒவ்வொரு புருடனிடத்தும் வாக்கியம் பதமென்னு மிவற்றில் வாசகமாக
வெவ்வேறு ரூபமாயிருக்கும் இந்த நாதம் வெளிப்படையாய்த் தோன்றாது அவ்வியத்தமா
யிருக்கின்றமையால் சூக்குமமாயும், வெளிப் படையாய்த் தோன்றி வாசகமாயிருக்கின்றமையால்
தூலமாயு மிருக்கின்றதென்க. (14)
(அ-கை) இவ்வாறு நாத சொரூபத்தைக் கூறிவிட்டு இனியதற்குக் காரணமான
மகாமாயையைக் கூறுகின்றார்.
(15) அவ்வாறே இடையர் பெண்கள் குழந்தைகள் ஆகிய இவர்களாலும் நாதம் வெவ்வேறாகவே
இருக்கின்றது என்று அறியப்படுகின்றது. ஆதலால் அந்த நாதங்கள் தோன்றுதலழிதல் ரூபமான
தருமத்துடனிருக்கின்றன வென்பதாம்.
(உரை ) இவ்விடத்தில் ஒரு புருடனுடைய ஆராய்ச்சிக் காலத்தில் அனைவருக்கும் அந்த
ஆராய்ச்சியுண்டாகாமையின், ஒருவருக்கொருவர் வேறு வேறான சுபாவத்தை யுடையராயும் ,
காரணங்களாயுமிருக்கும் ஆன்மாக்களிடத்து ஒவ்வொரு நிலையினும் வேறுவேறாகவே
நாதங்களிறியப்படுகின்றன. பொருள் விடயமான அறிவு நாதமின்றி வேறொன்றாலுண்டாகாமையாலும்
சாஸ்திரத்தாலும் அந்த நாதங்கள் வேறு வேறாக இருக்கின்றன வென்பது அறியப்படுகின்றது.
இவ்வாறே “இடையர், பெண்கள், குழந்தைகள், மிலேச்சர், பிராகிருதச் சொற்களை யுச்சரிப்பவர்,
நீரினுள்ளிருக்கும் பிராணிகள் ஆகிய இவையனைத்தும் எப்பொழுதும் பேசுகின்றன” என்று கூறப்பட்டிருக்கின்றது.
இதனால் தோன்றுத லழித லென்னும் தர்மங்களையுடையன வாயிருக்கின்றன. அஃதாவது இந்த நாதங்களுக்குக்
காரியத் தன்மை சித்தித்ததென்பது பொருள். காரியத் தன்மையிருப்பது கொண்டு இவற்றிற்கு முதற்காரணமாக
ஒன்றைக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு முதற்காரணமாகச் சித்தித்த பொருளானது **நாதம், சுவரம்,
சுமங்கலை, மாலினி, மகாமாயை, சமனை, அநாகதம், விந்து, அகோஷா வாக்கு, பிரமம், குண்டலினி தத்துவம்,
வித்தியா தத்துவம் என்றிவ்வாறாக அந்தந்த ஆகமங்களில் கூறப்பட்டிருக்கின்றது. (15)
** நாதமென்பதர்க்குப் பரநாதமென்பது பொருள்.
(அ-கை) இனி பிறருடைய அபிப்பிராயத்தை அநுவாதஞ் செய்து மறுக்கின்றார்.
(16) சத்தங்களின் இருப்பை யறிந்த சிலர் இது கிரியா சத்தியின் நிலையென்று கூறுகின்றனர்.
புருடனிடம் வாக்கானது சமவாய சம்பந்தத்துடன் இல்லாமையால் இவ்விடத்தில் கிரியா சத்தியினும்
வேறாகக் கூறப்பட்ட தென்பதாம்.
(உரை) ஒவ்வொரு புருடனிடத்தும் வாக்கு சமவாய சம்பந்தத்தினா லில்லாமையால் அந்த
வாக்கானது நாத முதலியவற்றின் முறையாகச் சத்தங்களையுண்டுபண்ணுதல் பொருந்தாது.
பொருந்துமெனின், சமவாய சம்பந்தத்திலிருப்பதற்குப் பரிணாமத் தன்மை வந்துவிடும்.
ஆகையால் சமவாய சம்பந்தத்திலிருக்கும் கிரியா சத்தியினவஸ்த்தையாக இந்த வாக்கைக்
கொள்ளக் கூடாதென்க. (16)
(அ-கை) இதனையே விரித்துக் கூறுகின்றார்.
(17-17இ) புருடன் விகாரமில்லாதவன். அவனுடைய சத்தியும் விகாரமில்லாதது. ஆகையால்
அவ்விரண்டும் அநேக விதமாக இருப்பதற்கு உரியனவாக ஆவனவல்ல. ஆகுமெனின் விகாரமுடையன
வெனப்பட்டுச் சேதனத் தன்மையின்றிச் சடத் தன்மையுடையன வெனப்படும். ஆகையால் புருடன் அவனுடைய
சத்தியென்னும் இரண்டின் வேறான குண்டனீ தத்துவமானது நாதத்திற்கு முதற் காரணமாகச்
சித்தித்ததென்பதாம்.
(உரை ) புருடனிடத்தில் சமவாய சம்பந்தமா யில்லாமையால் ஒவ்வொரு புருடனிலும் அவனுடைய
சத்தியிலும் வேறான குண்டனீ தத்துவமானது நாதத்திற்குக் காரணமாகச் சித்தித்தது. ( 17-17இ)
(அ-கை) இவ்வாறாயின் பரிணாமத்தை யுடைய அசுத்த மாயையே நாதத்திற்கு முதற்காரணமாக
இருக்கட்டுமென்பார்க்குக் கூறுகின்றார்.
(18) மகா மாயையானது சடமாயிருப்பினும் சுத்தமா யிருத்தலால், அசுத்த மாயையினும் வேறாயும்,
அசுத்தமாயைக்கு மேலிருப்பதாயு முள்ள அந்தச் சுத்தமாயையே நாதத்திற்கு முதற்காரணமாகக்
கூறப்பட்டதென்பதாம்.
(உரை) இவ்வாறே அசுத்தமாயைக்குமேல் மகாமாயை யுண்டென்று நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றது (18)
(அ--கை) இந்தச் சுத்தமாயையானது சுத்தாத்துவாவிற்கு முதற்காரணமா யிருக்கின்றதென்பது
ஆகமப் பிரமாணத்தால் சித்தித் துள்ளதெனக் கூறுகின்றார்.
(19) வித்தியேசுவரர்களுக்குப் போகத்தைக் கொடுக்கக் கூடிய சுத்த வித்தியா தத்துவமும், புவனமும்,
அத்துவாவாக ஆகமங்களில் கூறப்பட்டிருக்கிறது. வித்தியேசுவரர்களுடைய அபரமுத்தியின் பொருட்டுச்
சுத்தாத்துவாவிற்கு முதற்காரணமாகச் சுத்தமாயையாகின்ற தென்பதாம் (19)
(19இ) வாக்குப்பிரமத்தில் தேர்ச்சி யடைந்தவன் சித்பிரமத்தை யடைவானென்று கூறுகின்றனர் என்பதாம்.
(உரை) இவ்வாறே " சத்தப் பிரமத்தில் தேர்ச்சியடைந்தவன் மேலான பிரமத்தை யடைகின்றான்''
என்று பிறருங்கூறுகின்றனர். (19இ)
(20). (அன்றியும்) சித்தி, பரமுத்தி, கிரியை யென்னுமிம் மூன்றும் நாதஞானத்தால் சித்தித்திருக்கின்றன
வென்று கூறுகின்றன ரென்பதாம்.
(உரை) வடமொழி மூலத்தில் கூறுகின்றாரென்பதில்லை . உரையிற் சேர்க்கப் பட்டிருக்கின்றது.
இவ்வாறாயினும், நாத ஞானத்தினாலேயே பரமுத்தி சித்திக்கும் பொழுது தீக்கை முத்தியைக் கொடுக்குமென்று
சுவாயம்புவம் முதலிய ஆகமங்களில் எவ்வாறு கூறப்பட்ட தெனின், நாத ஞானமும் தீக்கைக்கு அங்கமாகவிருந்து
கொண்டு முத்திக்குச் சாதனமா யிருக்கின்றதுபற்றி யென்க. தீக்கையில்லாத தனிமையான நாத ஞானத்திற்கு
முத்திக்குச் சாதனமாயிருக்குந் தன்மை கிடையாதென்று பின்னர்க் கூறப்போகிறோம், (20)
(அ-கை) அன்றியும் தூலமாயும், பாச ரூபமாயும், மாயா காரிய மாயுமிருக்கும் சத்தத்திற்குச்
சிவன் முதலிய சுத்தப் பொருள்களை யறிவிக்குந் தன்மை கிடையாது. ஆகையால் மந்திர தந்திர ரூபமாயும்
சுத்தமாயுமிருக்குஞ் சத்தத்திற்குங் காரணமாக இந்த மகா மாயை சித்தித்ததென்று கூறுகின்றார்.
(20வ) மந்திர முதலியவற்றிற்குக் காரணமாயிருப்பதால் என்பதாம்.
(உரை) ஆகவே தணல் போன்ற இந்தச் சத்தங்களில் தோன்றுகின்ற அக்கினி போன்ற சூக்குமமான
மந்திர சத்தங்கள் காரியத்தைச் செய்கின்றவையாக ஆகின்றன வென்று ஸ்ரீ மதங்கம் முதலியவற்றில்
கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் முன்னர்க் கூறப்பட்ட நாதம் அந்த மகாமாயையின் காரியமாயிருக்கின்றது (20வ)
(21) மகா மாயையின் காரியமான இந்த நாதமானது இச்சை ஞானம் கிரியை யென்னும் மூன்றினின்றும்
வேறுபட்டிருப்பதால் அராகம் வித்தை கலை யென்னுஞ் சட்டைகளின்றும் வேறு பட்டிருக்கின்ற தென்பதாம்.
(உரை) அராகம் வித்தை கலை யென்னுமிவை தமது காரியங்களுக்காக உண்டாயிருக்கின்றமையானும்,
பிறிதொரு காரியத்தை யுண்டு பண்ணு மென்பதற்குப் பிரமாண மின்மையானும், உண்டுபண்ணு மென்னில்
அநேக தத்துவங்கள் வேண்டுவதின்றாய் முடியுமாதலானும், இந்த நாதம் அராகம் முதலியவற்றின் வேறு என்க (21)
(22) மகா மாயையினின்று முண்டான நாதந்தான் உண்மையான வாசக மென்பது பொருந்தும்.
தூலமாயுள்ள மந்திர தந்திர ரூபமான சத்தங்கள் நாதத்தினால் தொழிற் படுகின்றமையா லென்பதாம்.
(உரை) தூலமான சத்தத்திற்கோ வெனில், நாதத்தைத் தோற்றுவிக்கின்றமையால் வாசகத்
தன்மை யுண்டென்பது முன்னர்க் கூறப்பட்டது (22)
(அ-கை) இதனையே முடித்துக் காட்டுகின்றார்
(23) அந்த வாக்குச் சத்தியானது ஒவ்வொரு புருடனிடத்தும் வேறு வேறாயிருந்து கொண்டு
வாசகமா யிருக்கின்றமையால் உள்ளே வாசகக் கூட்டத்தைத் தோற்றுவித்து வெளியிலுந்
தோற்றுவிக்கின்றது என்பதாம் (23)
(24) தூலமான சத்தங்களால் தோன்றுவதாயும், நாத ரூபமாயுமுள்ள சூக்குமத்தொனிகள், பொருளினால்
வேறு பட்ட அறிவு யுண்டு பண்ணி சனங்களுடைய தொழிலை விருத்தி செய்கின்றன வென்பதாம் .
(உரை) இந்த முறையாக மந்திர சத்தங்களும் சிவன் முதலிய பொருள்களை அறிவிக்கின்றன
வென்பது கூறப்பட்டதாகும். (24)
(25) இவ்வாறு நாராயண கண்டரின் புதல்வரான ஸ்ரீ பட்டராம கண்டர் காச்மீர தேசத்தில் இருபத்தைந்து
சுலோகங்களுடன் இந்த நாத காரிகை யென்னும் நூலைச் செய்தாரென்பதாம் (25)
சிரேஷ்டர்களான ஆசிரியர்களால் பிரார்த்திக்கப்பட்ட அகோர சிவாசாரியாரால் இந்த நாத
காரிகைக்குப் பரஜன்யை யென்னும் வியாக்கியானம் செய்யப் பட்டது.
நாதகாரிகை மூலமும் விருத்தியுரையும் முற்றுப்பெற்றன.
சிவபெருமான் றிருவடி வாழ்க.