logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மோக்ஷகாரிகை மூலமும் விருத்தியுரையும்

சிவமயம்

ஸ்ரீ ஸத்யோஜ்யோதி சிவாசாரியாரால் செய்யப்பெற்ற 

ஸ்ரீ பட்டராமகண்டரால் செய்யப்பெற்ற

மோக்ஷகாரிகை விருத்தியுரையும்

(தமிழ் மொழிபெயர்ப்பு )

                உரைமங்கலம்.

(1-2)     சித்தாந்த சாத்திரத்திற்கு முடிவான பொருளுடன் வழிகாட்டியவராயும், ஆசிரியராலும் பூசிக்கத் 
தகுந்தவராயுமுள்ள ஸத்யோஜோதி சிவாசாரியரையும், பிரகஸ்பதி சிவாசாரியரையும், போக மோக்ஷங்களைத்
தருபவரான சங்கரரையும், போகமோக்ஷங்களின் பொருட்டு வணங்கி, மோக்ஷகாரிகைக்குச் சுருக்கமாக 
உரை செய்கின்றேன் என்பதாம்.         (1-2)

                நூல்

    (அவதாரிகை) இரௌரவாகமத்தினால் சித்தித்தனவாயுள்ள சாதனத்துடன் கூடின போகமோக்ஷ
மிரண்டனையும் கூறுகின்றேனென்ற மேற்கோளில், போககாரிகையில் “சுக, துக்க, மோக ரூபமான புத்தியின் 
சொரூபத்தால் சம்மந்திக்கப்பட்ட சைதன்னியத்தோற்றமே போக்தாவின் போகம்” என்பது முதலியவற்றால் 
போகமும், போக்தாக்களான பசுக்கள் சுதந்திரமில்லாதவ ரென்பதும், அந்தப் பசுக்களுடைய போகத்திற்குச் 
சாதனமாயும், காரியம், கரண முதலியவற்றின் ரூபமாயும், உள்ள பூமி முதல் கலையீறான உலகமும், 
உலகத்திற்கு முதற்காரணமான மாயையும் ஆகிய இவை கூறப்பட்டன.  இந்த நூலில் இப்பொழுது போகம் 
சித்திப்பதின் பொருட்டுள்ள அந்தப் போகசாதனம் தானாகவே தொழிற்படுகின்றதா? அல்லது, 
கருத்தாவினால் ஏவப்பட்டுத் தொழிற்படுகின்றதா? என்னுங் கேள்வியில், போக காரிகையிற் கூறப்பட்ட 
போகசாதனத்தின் வேறான சாதனமான கருத்தாவினிலக்கணம் கூறப்படுகின்றது.

                மூலம்

(1-2)     மலசம்பந்தமற்றவராயும், எல்லாவற்றையுமறிபவராயும், எல்லாவற்றையுஞ் செய்பவராயும், 
வியாபகராயும், சகளராயும், நிஷ்களராயும், நாசமற்றவராயும், தனது இச்சையின் வழி காரியத்தைச் 
செய்பவராயும், அளவற்ற ஐசுவரியத்தையுடைய வராயுமுள்ள பரமசிவன் போகிகளினுடைய 
போகத்தின் பொருட்டுத் தனது சத்திகளால் மாயையைக் கலக்கி உலகத்தை விசித்திரமாகச் 
செய்கின்றார் என்பதாம்.

    (உரை) மாயையை முதற்காரணமாகக் கொண்டதாயும் போகசாதனமாயும் அறியப்படாத 
கருத்தாவையுடையதாயும் உள்ள உலகம், விசேட ஞானக்கிரியைகளையுடைய கருத்தாவை யுடையது ; 
வேறு வேறான காரியமாயிருத்தலால்; குயவன் முதலியோராற் செய்யப்பட்ட கடம் முதலியவற்றைப் 
போலும் என நிச்சயிக்கப்பட்டது.

    பக்கமான உலகில் வேறு வேறான காரியமாயிருத்தலால் என்னும் ஏது இல்லை. ஆதலால், 
ஏது சித்திக்காமையாகிய அசித்தம் என்னுங் குற்றம் உண்டாகாதோ வெனின் ; உண்டாகாது. யாது யாது 
அவயவங்களுடன் கூடியிருக்கின்றதோ, அது அது காரியமா யிருக்குமென்னும் * வியாத்தியால் 
இவ்வுலகத்திற்குக் காரியத்தன்மை சித்திக்கின்றமையாலென்க.

* இது அடித்ததன்று- உடனிகழ்ச்சி.

    அறியப்படாத கருத்தாவையுடைய வனத்திலுள்ள பூக்கள் முதலிய யாவுமே பக்கமாயிருக்கின்றமையால் 
வியபிசாரம் கிடையாது. வியபிசாரமாவது:- துணி பொருளில்லாதவிடத்தும் ஏதுவிருத்தல். வனத்திலுள்ள 
பூக்கள் முதலியன ஒருவனாலுண்டு பண்ணப்படாமையின் அவற்றில் கருத்தாவையுடையது என்னுந்
துணி பொருளில்லை. வேறு வேறான அவயவங்களுடன் காரியமாயிருத்தல் என்னும் ஏது இருக்கின்றதென்பது 
பூருவ பக்கம்.  வனத்திலுள்ள பூக்கள், முதலிய யாவுஞ் சேர்ந்து பக்கமாயிருக்கின்றமையால் அந்தக் 
குற்றமில்லையென்பதாம்.

    வனத்திலுள்ள பூக்கள் முதலிய யாவும் பக்கமாயிருப்பது கொண்டே விபரீத வியாத்தி யில்லாமையால் 
விருத்த மென்னுங் குற்றமுமில்லை. விருத்தமாவது:- கருத்தா உண்டென்று சாதித்தற்குரிய ஏதுவே கருத்தா 
இல்லை யென்று சாதிப்பதாகும். 

    திருட்டாந்தத்தில் குயவன் அஞ்ஞானத்தோடு கூடினவனாதலால், உலக கருத்தாவும் அஞ்ஞான 
முடையனெனப்பட்டு எல்லாமறிபவன் என்னும் நம்முடைய எண்ணங் கெடுமோ வெனின்; கெடாது. 
எதனாலெனின், குயவனும் மல சம்பந்த மில்லாதவனாகவே யிருக்கின்றான்; அவனுக்கும் தன் 
காரியத்தைச் செய்யும் விஷயத்தில் அஞ்ஞான சம்பந்த மில்லாமையாலென்க. அவனிடத்தில் 
அஞ்ஞானமாவது, மயக்கமாவது இருப்பின் குடத்தைச் செய்ய மாட்டான். அஞ்ஞான மிருப்பின், 
செங்கல்லைக் கொண்டு சில அவயவங்களற்ற குட முதலியவற்றைக் காரியத்திற்கு உபயோகப் 
படாதவாறு செய்வன். 

     ஆகையால், எல்லா அவயவங்களோடும் கூடிய குடத்தைப் பார்த்துக் குயவன் நல்ல அறிவுடன் 
கூடினவனென்று அநுமானஞ் செய்யப் படுகின்றான்.  அஞ்ஞான முடையவனாயும், மயக்க முடையவனாயும் 
இருப்பவனாகக் குயவனை நாம் அநுமானஞ் செய்கிறதில்லை. அவ்வாறே, ஈசுவரனும் உலக ரூபமான 
தனது காரியத்தால் அநுமானஞ் செய்யப்பட்டு மல சம்பந்த மில்லாதவனாகவே அநுமானஞ் செய்யப் 
படுகிறான். ஆகையால், ஈசுவரன் முற்றறிவுடையவன் என்னும் நம்முடைய எண்ணத்திற்குக் கேடு 
நேரிடாதென்க. 

    குயவனுக்குத் தனது காரிய விஷயத்தில் அஞ்ஞான மில்லையாயினும், வேறு விஷயத்தில் 
அஞ்ஞான மிருக்கின்றதே யெனின்; இருக்கட்டும். குடம் செய்யும் விஷயத்தில் அஞ்ஞான மில்லை 
யென்பதை மாத்திரம் எடுத்துக் கொண்ட விஷயத்தில் திருஷ்டாந்தமாகக் கொள்ளவேண்டும். 
இவ்வாறே, ஈசுவரனுக்கும் தனது காரியத்தினும் வேறான விஷயத்தில் அஞ்ஞான முண்டெனக்        
கொள்ளலாகாது. எதனாலெனின், அவனுக்குக் காரியமாயும், போக மோக்ஷங்களுக்குச் 
சாதனமாயு மிருக்கும் உலகத்தினும் வேறாக ஒரு காரியமுமில்லாமையாலென்க.  வேறொன்று 
மில்லையென்று எவ்வாறு கூறுவது; இருக்கிறதென்றே கூறுவோமே யெனில்; இருக்கட்டும். 

    இருக்குமாயின், அது போக சாதனமாயிருப்பின் காரியம் கரண முதலியன போல் 
காரியமாகவே யாகும். போக சாதனமாயில்லையாயின் அது பயனற்றிருத்தலால் அதையறியாதிருத்தல் 
முயற்கொம்பை யறியாதிருப்பது அலங்காரமாவது போல் அலங்காரமாகும். இவ்வாறே  “எவனொருவன் 
தள்ளக் கூடியவை கொள்ளக் கூடியவை யென்று ஒப்புக் கொள்ளக் கூடிய பதார்த்தங்களை அறிகின்றானோ, 
அவன் பிரமாணமாக ஒப்புக்கொள்ளப்படுவன். இவ்வாறன்றி, இவ்விரண்டினுளகப்படாத எல்லாவற்றையுமறிபவன் 
பிரமாணமாகக் கொள்ளப்படான்" என்று பிறருங் கூறுகின்றனர்". 

     ஆகையால், உலகத்தினின்றும் வேறாக ஒன்று மில்லாமையால் உலக கருத்தா சர்வஞ்ஞனாகவும், 
சர்வ கருத்தாவாகவு மிருக்கின்றான். குயவனுக்கும் தனது காரியத்தில் சர்வஞ்ஞத் தன்மையும், 
சர்வகர்த்திருத்தன்மையும் சித்திக்கின்றன.  அவனுக்கு ஒரு அம்சத்திலாவது குடத்தைச் செய்யும் விஷயத்தில் 
அஞ்ஞானமாவது சத்தியின்மையாவது இருக்குமாயின் குடமுண்டாகாது. அவ்வாறே, ஈசுவரன் குயவனைப் 
போல் தனது காரியத்தில் வியாபகமாயிருப்பதால் (எவ்விடத்தும்) வியாபகனாய் இருக்கின்றான்; காரியம் 
(எவ்விடத்தும்) வியாபகமா யிருக்கின்றமையாலென்க.

    குயவனும் தனது காரியமான பெருத்த வயிறு முதலிய கடத்தின் அவயவங்களில் வியாபியாம 
லிருப்பானாகில், மலைக்குக் குயவன் கருத்தாவாக மாட்டாதவாறு போலக் கடத்திற்கும் 
கருத்தா வாகமாட்டான்.

    ஈசுவரனுக்குக் காரியமிருத்தலால் சரீரமுமிருக்கவேண்டு மெனின், இந்தச் சங்கை பொருந்தாது. 
குயவன் முதலியவர்களுக்கும் தனது தேகத்தைத் தொழிற்படுத்துங் காரியம் வேறொரு தேகத்தைக் கொண்டு 
நிகழுகிறதாகக் காணப்படுகிறதில்லை. அதுபோல், தனது சரீர ரூபமான உலகத்தைத் தொழிற் படுத்துதற்கு 
வேறொரு சரீரம் ஈசுவரனுக்கு வேண்டியதில்லை.

    குயவனுக்குத் தன் சரீரத்தின் றொழிற்பாடு இச்சையினால் நிகழ்கின்றதெனின், அஃதுண்மை. 
இச்சையினால் காரியங்கள் நிகழ்வது பற்றியே காரியக் கூட்டங்களனைத்தும் ஈசுவரனையே காரணமாகக் 
கொண்டு இருத்தலால் உலக கருத்தாவும் இச்சைக்குப் பின்னர் காரியத்தைச் செய்பவராக அநுமானஞ் 
செய்யப் படுகிறார் என்பது பற்றிக் குற்றமில்லை.

    இச்சையும் மனத்தின் றொழிலாதலால் உலக கருத்தாவுக்கு அது எவ்வாறு பொருந்துமெனின், 
இந்தக் கேள்வி பொருந்தாது. நமக்கும் இச்சையானது மனத்தின் றொழிலன்று.  ஞான சத்தி 
புத்தியினிடத்துத் தோன்றுமாறுபோல, மனத்தினிடத்துத் தோன்றும்.  கிரியாசத்தியே இச்சையென்று 
மந்திரவார்த்திகடீகையில் நம்மால் கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறெனின், "சத்தி ரூபமான 
அவருடைய மனத்திற்றோன்றுகின்ற கிரியா சத்தியே இச்சையாகும்" என்பதாம்.

    ஆகையால், ஈசுவரன் மறைக்கப்படாத சத்தியையுடையவனா யிருத்தலால், அவனுக்குத் 
துணை வேண்டியதில்லை. வேறு சரீரத்தைத் துணையாக வேண்டாது இச்சையினா லதிட்டிக்கப்பட்ட 
சரீரத்தின் றொழிற்பாட்டிற்குக் கருத்தாவா யிருக்குந் தன்மை இச்சைக்குக் காணப்பட்டிருக்கிறது. 
மண் முதலிய வற்றாலுண்டான வெளியிலுள்ள கட முதலியவற்றில் கருத்தாவா யிருக்குந்தன்மை 
காணப்படவில்லையே யெனின், அஃதுண்மை. அதுபற்றியே உலகம் ஈசுவரனால் அதிட்டிக்கப் 
படுவதாயிருத்தலால் அவனுக்குச் சரீரம் போல்  அநுமானஞ் செய்யப்படுகின்றது.

    இந்தக் காரியம் காணப்படுதலால் ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியா சத்திகளின் 
நிறைவே ஈசுவரனுக்கு உண்டென அநுமானஞ் செய்யப்படுகின்றது. ஆகையால் கலை, 
அராகம், வித்தை முதலிய மாயா சரீர சம்பந்தம் ஈசுவரனுக்கில்லை.  உண்டென்னில், 
ஈசுவரத் தன்மைக்குப் பிறழ்ச்சி நேரிடும். சகளராயும், நிட்களராயும் உலக கருத்தா 
விளங்குகின்றாரென்பது பின்னர் வெளிப்படையாக விளங்கும். அன்றியும், அறியுந்தன்மை 
முதலிய சத்திகளின் சேர்க்கையால் ஆன்மாவைப்போல் நாசமற்றவராயுமிருக்கின்றார்.
ஆன்மாக்களுக்கு அநேகமாயிருக்குந்தன்மையும் , வியாபகமா யிருக்குந் தன்மையும்
போக காரிகையிற் சாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் ஈசுவரன் வியாபகராயுமிருக்கின்றார்.

    கடம், ஆடை முதலிய அநேக காரியங்கள் அநேக கருத்தாக்களையின்றிச் சித்திக்காதவாறுபோல்,
பூமி முதல் கலை யீறான அநேக தத்துவக்கூட்டங்கள் உலகமென்று சொல்லுதற்குரிய காரியங்களா 
யிருக்கின்றமையால், உலக கருத்தாக்களும் அநேகர் இருக்கவேண்டுமென்று ஊகிக்கலாமெனின் ; 
உண்மை.  பூமி முதல் கலையீறாகவுள்ள அனைத்தும் போகரூபமான ஒரே பிரயோஜனமுடையதாக 
ஆகாதாயின் நீ கூறியது பொருந்தும்.  அவ்வாறே, "கலையினால் சாமர்த்தியத்தையடைந்த 
சைதன்யத்தை யுடையவனாயும், வித்தையினாலறிவிக்கப்பட்ட விடயங்களையுடையவனாயும்” 
என்பது முதலிய இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது.  மேடை முதலியன வேறு வேறாயிருப்பினும் 
ஒரே பயனுடையனவாக இருந்து ஒரே கருத்தாவினால் செய்யப்பட்டிருக்குமாறு போலக் கலை 
முதலிய அனைத்தும் போகமென்னும் ஒரே பயனுடையனவாய் ஒரே கருத்தாவினால் தோற்றுவிக்கப்
பட்டனவென நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.

    அந்த ஒரு கருத்தாவே எல்லா உலகங்களையும் தோற்றுவிக்கின்றமையால் அளவற்ற 
ஐசுவரியத்தை யுடையவன் என்றும், பரோபகாரத்தின் பொருட்டே பிரவிருத்திக்கின்றமையால் 
பரம சிவனென்றும் மூலத்திற் கூறப்பட்டவாறாம். எனவே, இத்தகைய தருமத்துடன் கூடியிருக்கின்றவன் 
சிவன் என்பது பிரமாணத்தினால் நிச்சயிக்கப்பட்ட தென்க. (1-2)

    (அ-கை) இவ்விடயத்தில்  சாங்கியர் கொள்கையைக் கூறுகின்றார்.

(3)     பலநிற முடைய நூலிலிருந்து பலநிறமுடைய ஆடை தோன்றுவதாகக் காணப் பெற்றிருக்கின்றது. 
சங்கரரிடமிருந் துண்டாவதாகக் காணப்படுவதில்லை.  இவ்வாறே பலவேறு வகையான உலகமும் 
பலவேறு வகையான வித்தினின்றும் உண்டாயிற்றே யன்றிச் சங்கரரிடமிருந் துண்டாவதில்லை என்பதாம்.

    (உரை) ஆடைக்குக் கருத்தாவான சேணியனை மறைத்து நூலிலிருந்து ஆடையுண்டாவதாக 
நாங்கள் கூறவில்லை . அவ்வாறு கூறின், அநேக விரோதம் நேரிடுமாகையாலென்க. ஆனால்
சேணியன் இருப்பினும் உலக கருத்தா சிவன் என்பதற்குக் கூறப்பட்ட காரியத்தன்மை யென்னும் 
ஏது ஆடையென்னும் திருட்டாந்தத்திலிருந்தும் சேணியனிடமிருந்து தோன்றாமையால் வியாத்தி 
சித்திக்காமல் பிறழ்ச்சி நேரிடும். ஆடை நூலிலிருந்துண்டாவது போல், உலகம் மாயையி 
லிருந்துண்டாவ தென்பது பொருந்தும். முதற் காரணத்தையின்றிக் காரியம் உண்டாகா 
தாகையா லென்க.    (3)

    (அ-கை)  காரியமானது கருத்தாவினிடமிருந்து தோன்றுகிறதில்லை யென்னுங் குற்றம் 
நேரிடாதெனக் கூறுகின்றார் . 

(4-5)     சடமாகிய  நூலென்னும் முதற் காரணமானது சேணியனுடைய ஞானக்கிரியைகளையின்றி 
ஆடைக்குக் காரணமாகக் காணப்படவில்லை. அது போல் சடமாயும், முதற்காரண மாயுமிருக்கும் 
மாயையானது ஈசுவரனுடைய ஞானக்கிரியைகளை யின்றி உலகத்திற்குக் காரணமாக ஆகாது என்பதாம்.

    (உரை) நூல் முதலியன முதற் காரணமாயிருப்பினும் ஆடை முதலியவற்றைச் செய்யும் 
விசேட ஞானக்கிரியைகளுடன் கூடின சேணியனையின்றித் தனது காரியத்தைத் தோற்றுவிப்பதாகக் 
காணப்படுவதில்லை.  இதனால் காரியமனைத்தும் முதற் காரணத்தோடு கூடிய கருத்தாவினால் 
வியாபிக்கப் படுவனவாய்ச் சித்தித்தன. உலகமும் முதற்காரணத்தை யுடையதா யிருப்பதாலும், 
காரியமாயிருப்பதாலும் கருத்தாவை யுடையதென்பது சித்திக்கின்றது.     (4-5)

    (அ--கை) இனி மீமாம்சக மதத்தை யநுசரித்து உலகத்திற்குக் கருத்தா வுண்டென்று 
கூறுதல் சித்த சாதன மென்னும் குற்றமாகுமென்று கூறுகின்றார். சித்தசாதனம்--சித்தித்ததைச்  சாதித்தல்.

(6)     பலவிதமான கன்மங்களினால் உலகமும் பலவிதமாக இருக்கும். கன்மத்தினாற்றான் புருடனுக்குப் 
பலனுண்டாகின்றது. ஆகையால், ஈசுவரன் செய்யக் கூடியது எது வென்று பிறரொருவர் கூறுகின்றனர் என்பதாம்.

    (உரை) காரியமா யிருத்தலால் கருத்தாவை மாத்திரங் கொள்ளல் வேண்டும். தருமா தரும ரூபமான  
கன்மமே உழுதல் ரூபமான கன்மம்போல் காரியத்தை யுண்டுபண்ணு மென்பது உங்களாலும் ஒப்புக் 
கொள்ளப்பட்டது. ஆகையால்  வேறொரு கருத்தாவை எதற்காக அநுமானிக்க வேண்டும்.  (6)

(7)     இது உண்மை ஆயினும், இந்தக்கன்மமானது சடமாகக் காணப்பட்டிருக்கின்றது. ஆகையால் 
உழுதல் முதலியன போல அறிவுள்ள, கருத்தாவைத் துணையாகக் கொண்டிருக்கின்றது என்பதாம்.

    (உரை) உழுதல் முதலிய தொழில்கள் அறிவுடைய கருத்தாவையின்றிப் பலத்தை யுண்டுபண்ண 
மாட்டா ; புருடர்களின் பொருட்டுப் போகங்களைக் கொண்டுவந்து கொடுப்பதற்குச் சாமர்த்திய 
முடையனவாகவுமில்லை. * இவ்வாறே, தருமா தருமங்களும் கன்மமாயிருக்கின்றமையால் 
தன் பலனைக் கொடுப்பதற்காக விசேட ஞானத்துடன் கூடினவனாயும், அநுமானத்தினால் 
முன்னர்ச் சித்திக்காதவனாயுமுள்ள உலக கருத்தாவைச் சாதிக்கின்றமையால் சித்த 
சாதனமென்னுங் குற்றமில்லை யென்க. (7)

* உழுதற்றொழில் பலன் தருவதற்கு மாத்திரம் உவமையாகும். தொழிலின் நிகழ்ச்சிக்கு உவமையாகாது. 
நிகழ்ச்சிக்கும் உவமையாகக் கொள்ளின், வினை செய்த  உயிரே வினையின் பலனைத் தோற்றுவிக்கு 
மென்றாகிக் குற்றமாகுமென்க .

    (அ-கை) காணப்படும் ஒன்றைக் கொள்ளுதல் பொருந்தும். காணப்படாத தொன்றைக் கொள்ளுதல் 
பொருந்தாது என்பார் கூற்றைக் கூறுகின்றார்.

(8)     அநேக சேதனர்களான புருடர்களுடன் கூடின மாயையே உலகத்தைத் தோற்றுவிக்கும். 
பரமேசுவரரால் என்ன பிரயோஜனம்? என்று சிலர் கூறுகின்றனர். அது சரியன்று என்பதாம்.

    (உரை) உழுதல் முதலியன பலர் கூடிச் செய்யப் படுவனவாய்க் காணப்படுவது போல், 
அறிவுடைய புருடர்கள் பலர் கூடி மாயையினின்று கலை முதலிய காரியங்களைத் தோற்றுவித்தல்
கூடுமாகையால், உலகம் அநேக கருத்தாக்களை யுடையதாயிருக்கும். வேறு கருத்தா உண்டென்று 
சாதித்தல், காணப்படுவதை இழத்தல் காணப்படாததைக் கொள்ளுதல் என்னுங் குற்றங்கட் கிடனாம். 
இவ்வாறு கூறும் பிறருடைய கூற்றுப் பொருந்தா தென்க .

    பிரகிருதி, புருடன் என்னும் இரண்டின் பொதுவான சம்பந்தம் மாத்திரம் புருடர்களுக்குக்         
கலை முதலிய காரியங்களைத் தோற்றுவிப்பதற்கு ஏதுவாயிருக்கின்றதா? அல்லது, போக்ய போத்திரு 
இலக்கணமான விசேட சம்பந்தம் புருடர்களுக்கு அக்காரியங்களைத் தோற்றுவிப்பதற்கு 
ஏதுவாயிருக்கின்றதா? (8)

(9)     (அவற்றுள்) பிரகிருதி புருடன் என்னும் இவற்றின் சாமான்ய சம்பந்தமே உலகத்தைத் 
தோற்றுவிப்பதில் காரணமென்னில், எப்பொழுதுமே கலை முதலிய காரியங்களுண்டாக 
வேண்டும் என்பதாம்.

    (உரை) பிரகிருதி, புருடன் என்னும் இவ்விரண்டும் வியாபகமா யிருக்கின்றமை பற்றி 
கைவல்ய நிலையிலும் அவ் விரண்டும் சேர்ந்திருத்தலால் சம்பந்தம் மாத்திரமிருப்பது கொண்டு 
கலை முதலிய காரியங்கள் எக்காலத்தும் உண்டாகும் நிமித்தமாக முத்தி என்பதில்லாமற் 
போய்விடும் என்க (9)

    (அ-கை) இனி இரண்டாவது பக்ஷத்தைப் பற்றிக் கூறுகின்றார்.

(10)     பிரகிருதி, புருடன் என்னும் இரண்டின் போக்ய போக்திரு இலக்கணமான சம்பந்தம் கலை 
முதலிய காரியங்களை உண்டுபண்ணுதற்குக் காரணமென்னில், காரணமின்றி ஒரு காரியமும் 
ஓரிடத்துங் காணப்படாமையால் போக்ய போக்திரு சம்பந்தத்திற்குக் காரணமொன்று கூற 
வேண்டும் என்பதாம்.

    (உரை) பிரகிருதியானது  பிரகிருதி சொரூபமாகவே  இருந்துகொண்டு போக்கியமா 
யிருக்கவில்லை. புருடனும்   புருடசொரூபமாகவே இருந்து கொண்டு போக்தாவா யிருக்கவில்லை.
இருப்பின், எக்காலத்தும் போக்தாவெனப்பட்டு முத்தியென்ப தில்லையாய் முடியும். ஆகையால், 
கலை முதலிய காரியங்களின் வாயிலாக பிரகிருதி போக்கியமாயும், புருடன் போக்தாவாயும்
ஆகின்றன. ஆகவே கலை முதலியவற்றின் உற்பத்தியா லுண்டானதாயும்,  சையோக ரூபமாயும், 
பிரகிருதி புருடர்களின் போக்கிய போக்திரு ரூபமான சம்பந்த விசேஷமாயுமிருக்கும் அந்தக் 
கலாதிகளின் சம்பந்தத்திற்குக் கருத்தா ஒருவன் வேண்டும். கருத்தாவின்றிக் காரியம் 
சம்பவிக்காதென்று கூறப்பட்டிருக்கின்றமையா லென்க. (10)

    (அ-கை) பிரகிருதிக்கும், புருடனுக்குமே இவ்விடத்தில் கருத்தாவாயிருக்குந் தன்மையைக்         
கொள்ளுவோம். வேறு ஒரு கருத்தாவைக் கொள்ளுவதால் பயன் யாதெனின், இந்தக் கொள்கை 
பொருந்தாது என்று கூறுகின்றார். 

(10இ)     புருடன் தானாகவே சக்தனாகவில்லை. பிரகிருதி யானது புருடனைக் குறித்துச் 
செல்கிறதில்லை என்பதாம். 

     (உரை) புருடன் அசக்தனாயிருக்கின்றமையால், தானாகவே பிரகிருதியினின்றும் 
கலை முதலிய காரியங்களைத் தோற்றுவிப்பதற்குச் சாமர்த்திய முடையவனாக ஆகமாட்டான். 
பிரகிருதி அறிவற்றதா யிருக்கின்றமையால், இத்தகைய காரியத்தைக் கன்ம நிமித்தம் புருடனின் 
பொருட்டுச் செய்ய வேண்டுமென்னும் ஞானமுடையதாக ஆகமாட்டாது.  ஆகையால் போக்கிய 
போக்திரு சம்பந்த விஷயத்தில் கருத்திருத்தன்மை புருடனுக்கும் பிரகிருதிக்கும் கிடையாதென்க. 
ஆனால், சம்பந்தத்தை மாத்திரம் கொள்ள வேண்டும். (10இ)

(11)     ஆகையால், போக்கிய போக்திருத்தன்மைகளின் சேர்க்கையிலும் அவற்றின் நீக்கத்திலும் 
பரமேசுவரரே காரணராவர் என்பதாம் .

    (உரை) ஆகையால், போக மோக்ஷமென்னும் இவற்றின் சாதனங்கள் வேறு வழியாகக் 
காணப்படாமையால் சருவஞ்ஞ ராயும், சருவகருத்தராயும் உள்ள பரமேசுவரரே காரணராவர் .
வேறு எவரும் காரணராகாரென்று கூறவேண்டும் என்க . (11) 

    (அ-கை) இனி, உலகாயத மதத்தை அநுசரித்துக் கூறுகின்றார்.

(12 )     உலக பீஜமானது உலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையதெனக் கொள்வோம். 
பரமசிவனைக் கொள்வதனால் பயன் யாது? நீவிரும் வெகு தூரஞ் சென்றும் இயல்பென்று தான் 
சொல்லவேண்டும் என்பதாம்.

    (உரை ) பரமேசுவரர் உண்டெனக் கொண்டு அவருக்கு உலகத்தைத் தோற்றுவிக்கும் 
இயல்பையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்வதினின்றும் இருவர் மதத்தினும் 
சித்தித்துள்ள முதற்காரணத்திற்கே உலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்பைக் கொள்ளுவது உத்தமம். 
இவ்வாறு பிரகிருத்திக்கு இயல்பைக் கொள்ளுமிடத்தில் பரமேசுவரனையும் அவனது இயல்பையும் 
கொள்வதான அதிகமென்னுங் குற்றமுண்டாகாது. (12)

    (அ-கை) முதற்காரணமே உலகத்தைத் தோற்றுவிக்கு மென்பது பொருந்தாது என்று கூறுகின்றார்.

(12இ)     (முதற்காரண ரூபமாயிருக்கும்) உலக கருத்தாவின் இயல்பானது விசேடத்துடன் கூடியதா? 
என்பதாம்.     (12இ)

    (அ-கை) இது என்ன கேள்வி? உலகத்தைத் தோற்றுவிப்பதே முதற்காரண ரூபமாயிருக்கும் 
கருத்தாவுக்கு இயல்பு எனில், பொருந்தாதென்று கூறுகின்றார்.

(13)     அந்தத் தொழிலானது அந்நியனால் ஏவப்பட்ட அந்த உலக கருத்தாவினுடையதா? அல்லது, 
சுதந்திரனான அந்த உலக கருத்தாவினுடையதா? என்பதாம்.

    (உரை) உலக காரண ரூபமாயிருக்கும் அது அறிவுடைய கருத்தாவினால் ஏவப்பட்டு உலகத்தைத்         
தோற்றுவிக்கும் இயல்புடையதா யிருக்கின்றதா? அல்லது சுதந்திரமாகவே அந்த இயல்புடையதா 
யிருக்கின்றதா?  (13)

(13 இ)     (அவற்றுள்) சுதந்திர மாகவே உள்ளதென்று கூறில் அதற்குப் பிரமாணமில்லை யென்று முன்னரே 
சாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதாம்.

    (உரை) சடத்திற்குக் கருத்தாவாயிருக்குந் தன்மை உண்டென்பதற்குப் பிரமாணமில்லை யென்பது                (திருத்: டென்பதற்குக்/டென்பதற்குப்)
முன்னரே சாதிக்கப்  பட்டிருக்கின்றது. (13இ)

    (அ-கை) எவ்வாறு சாதிக்கப்பட்டிருக்கின்ற தென்று காட்டுகின்றார்.

(14)     சடமான முதற்காரணமானது சுதந்திரமாக ஓரிடத்தும் காரியத்தைச் செய்கிறதாக ஆகாது என்பதாம் (14)

    (அ-கை) இரண்டாவது பக்கமாயின் அது பொருந்துமென்று கூறுகின்றார்.

(14இ)     அறிவுடைய புருடனது சத்தியினால் ஏவப்பட்ட அந்த முதற்காரணத்தின் தொழில் பிரமாணத்தாற் 
சாதிக்கப் பட்டிருக்கின்ற தென்பதாம்.

    (உரை) அறிவுடையவனது கிரியாசத்தியினால் ஏவப்பட்ட அந்த முதற்காரணத்தின் தொழில் 
பிரமாணத்தாற் சித்தித்திருக்கின்றமையால் ஒப்புக் கொள்ளப் படுகின்றது. (14இ)

(15)     (ஆகவே) எந்த அறிவுடைய புருடன் முதற்காரணத்தை ஏவுகின்றானோ அந்த அறிவுடைய புருடனே 
ஈசுவரனென்று அறிந்து கொள்ள வேண்டும் என்பதாம்.

    (உரை) அறிவுடைய எவன் தனது சக்தியினால் முதற் காரணத்தை ஏவுகின்றானோ அவனே 
ஈசுவரனாகச் சித்தித்தனன்.  ஆகையால், முதற் காரணத்திற்கே உலகத்தைத் தோற்றுவிக்கும் 
இயல்பு உண்டென்று சொல்லுதல் கூடாது.     (15)

    (அ-கை) இவ்வாறாயின் கிரியா சத்தி மாத்திரம் இவ்விடத்தில் பிரகிருதி புருடர்களை ஏவுகிறதாக 
ஆகட்டும்.  ஈசுவரனால் பயன்யாது? அவனுக்கும் அந்தச் சக்தியையின்றிக் கருத்திருத்தன்மை சித்திக்கிறதில்லை. 
அவ்வாறே, “ஹே சண்டிதேவி! நீ கருத்தாவான ஈசுவரனுடைய கிரியா சத்தியாக இருக்கின்றமையாலும், 
ஈசுவரனுக்கு உன்னையின்றிக் கருத்திருத்தன்மை யில்லாமையாலும் அத்தகைய உன்னை வணங்குகின்றேன் "
என்று பெரியோருங் கூறுகின்றனர் என்று கூறுகின்றார்.

(15இ- 16இ )  பரா சக்தியான இச்சா சத்தியே நிச்சயமாய்க் காரணமாயிருக்கின்றது. ஈசுவரன் இல்லை. 
மாயையினிடத்துக் கலக்கத்தால் பகற் காலமாகிய சிருட்டி காலத்தில் அந்தச் சத்தி தொழிற் 
படுகின்றமையாலும், இராக்காலமாகிய பிரளய காலத்தில் மாயையினிடத்துத் தொழிற் பாடின்றி 
யிருக்கின்றமையாலும், அந்த இச்சா சத்தியே நிச்சயமாயிருக்க ஈசுவரன் எதற்காக வேண்டுமென்பதாம்.

    (உரை ) அந்தச் சக்தியே மாயையினிடத்திலிருந்து கொண்டு அதனை ஏவிய பின்னர்க் 
கலக்கத்துடன் கூடிச் சாமர்த்திய ரூபமா யிருக்கும் அந்த மாயையினின்றும் உலகத்தைத் தோற்றுவிக்கும் 
பொருட்டுத் தொழிற்படுகின்றது. ஆகையால், இந்தச்சத்தியினும் வேறாக ஈசுவரன் வேண்டுவதில்லை
யென்க. (15இ-16இ) 

    (அ-கை) இந்தக் கூற்றுப் பொருந்தாதென்று கூறுகின்றார்.

(17)     கலக்கத்தைச் செய்தற்குக் காரணமாக ஈசுவரனை யின்றி வேறொன்றுமாகிறதில்லை என்பதாம்.

    (உரை ) சடத்திற்குத் தானாகவே தொழிற்படவும், தொழிற் படாமலிருக்கவும் சாமர்த்தியங் 
கிடையாதென்பது முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால், வேறு வழியாகப் பொருந்தாதது 
கொண்டு முற்றறிவுடன் கூடின பரமேசுவரனே மாயையைத் தொழிற்படுத்தும் விஷயத்தில் 
கருத்தாவாவன் என்க (17)

    (அ-கை)     சத்தியே முற்றறிவுடையதாய் இருக்கட்டும் என்பார்க்குக் கூறுகின்றார்.

(17இ)     சத்தியே முற்றறிவுடைய தென்னில் பெயரில் வாதமே யொழியப் பொருளில் வாதமில்லை என்பதாம்.

    (உரை) சத்தியே முற்றறிவுடையதாயின், பெயரில் வாதமிருக்கின்றது. பெயரின் பேதத்தால் 
பொருள் பேதத்தை யடையாது. ஆகையால் கூறியவாறு நீ கூறும் சக்தியே ஈசுவரனாக இருக்கட்டுமென்க (17இ)

    (அ-கை) இனி முற்றறிவு முதலிய தருமங்களையுடைய ஈசுவரனே முதற்காரணம் என்று கூறும்         
வேதாந்திகள் கூற்றைக் கூறுகின்றார்.

(18இ-19இ)     ஞானக்கிரியா சத்திகளையுடைய பரமாத்மாவான பரமேசுவரரிடமிருந்து போக்திருத் 
தன்மையையுடைய  சேதனப் பிரபஞ்சமும், போக்கியத்தன்மையையுடைய அசேதனப் பிரபஞ்சமும் 
உண்டாகும். ஆகையால், அந்தப் பரமாத்மாவினும் வேறான உலக கருத்தாவினால் யாதுபயன் ? 
வியாபகனான பரமேசுவரன் ஒருவனையே போக்தாவான உயிராகவும் கொண்டிருக்கின்றோம் என்பதாம்.

    (உரை) போக்திருத்தன்மையால் சேதனமென்றும், போக்யத் தன்மையால் அசேதனமென்றும் வேறுபட்ட 
உலகரூபமான காரியத்தால், முற்றறிவு, முற்றுத்தொழில்களுடன் கூடினதாயும், காரியத்தின் வழியாகப் 
போக்திருத்தன்மை, போக்கியத் தன்மை யென்னும் இயல்பினை யுடையதாயும், ஒன்றாயும், துணை வேண்டாததாயும், 
பரமாத்மாவென்னும் பெயருடையதாயுமிருக்கும் ஈசுவர ரூபமான முதற்காரணத்தை அநுமானஞ் செய்து
கொள்ளல் வேண்டும் . 

    வேண்டவே, இதனினும் வேறான ஈசுவரனைக் கூறுதல் பொருந்தாது. சேதனங்கள் நித்தியங்களென்று 
போககாரிகையில் முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றமையால் அவற்றிற்குக் காரியத்தன்மை உண்டென்பது 
சித்திக்காதெனின், இந்தக் கூற்றுப் பொருந்தாது. சேதனமானது பிறிதொரு சேதனத்துடன் கூடியிருத்தலால்
 அதற்குக் காரியத் தன்மை சம்பவிக்கலாம். அசேதனங்களுக்குச் சேதனத்துடன் சேர்க்கையிருப்பது போலச் 
சேதனங்களுக்கும் பிறிதொரு சேதனத்துடன் சேர்க்கையிருத்தலால் இவ்விரண்டிற்கும் முதற் காரணமாகச் 
சேதனம் சித்திக்கவே செய்யும். (18 இ-19இ)

    (அ--கை) இதுவும் பொருந்தாது எனக் கூறுகின்றார் . 

(20இ)     பரமான்மாவினிடமிருந்து சித்தாயும் சடமாயுமுள்ள உலகம் உண்டாகின்றதெனில், அந்தப் பரமான்மாவும் 
சித்தாயும் சடமாயும் ஆகும். காரியமானது காரணத்தின் தருமத்தைப் பொருந்தியிருக்குமாதலா லென்பதாம்.

    (உரை) பரமான்மாவினிடமிருந்து சித்தாயுஞ் சடமாயுமுள்ள உலகம் தோன்றுகின்றதெனக் 
கூறுமிடத்து அந்தப் பரமான்மா சித்தும் சடமுமான இயல்பையுடையவனாக  ஆகவேண்டும். 
முதற்காரணத்தின் சொரூபத்தை அநுசரித்தே  சுவர்ணம் மண் முதலியவற்றாலுண்டான 
காரியங்களான கடம் முதலியவற்றின் சொரூபங்கள் சித்திக்கின்றவாறு போலும் .     (20இ)

    (21இ) (ஆகவே) மாறுபட்டவையாயும், ஒரே காலத்தி லிருக்கின்றவையாயும், ஒரே பற்றுக்கோட்டை
யுடையனவாயுமுள்ள இரண்டு தருமங்கள் ஒன்றாலொன்று நாசத்தையடைந்து தமக்கே நாசத்தைச் 
செய்கின்றன என்பதாம் .

    (உரை.) மாறுபட்ட இரண்டு தருமங்கள் ஒன்றையொன்று கெடுக்குமாகையால், கடத்தின் 
உண்மையும் அதன் இன்மையும் ஓரிடத்தில் ஒரே காலத்தில் இருக்கமாட்டாதவாறு போல சித்துத்தன்மையும்
சடத்தன்மையும் ஒரு பொருளினிடத்தில் ஒரே காலத்திலிருக்கமாட்டா. ஆனால், ஒரு பாகத்தில் 
சித்தாயும் மற்றொரு பாகத்தில் சடமாயும் பரமான்மா இருக்கின்றான் என்று கூறின், அவயவத்துடன்
கூடிக் கடமுதலியன போல் காரியமா யிருத்தலால் முதற்காரணமாயிருக்குந் தன்மை பொருந்தாதாய் 
விடுமென்க. (21இ)

(22)     (அன்றியும்) முதற்காரணத்தன்மையிருத்தலால் மண் போல் பரமான்மா சடப்பொருளாக 
ஆவன் என்பதாம்.

    (உரை.) முதற்காரணங்களனைத்தும் சடமென்று மண் முதலியவற்றைக்கொண்டு நிச்சயிக்கப் 
பட்டிருக்கின்றது. ஆகவே பரமான்மாவுக்கு முதற்காரணமா யிருக்குந்தன்மை இருப்பின் சடத்தன்மை 
வந்துவிடும்.  சித்தாயிருக்கின்றானென்று கொள்ளின், முதற்காரணமாயிருக்குந்தன்மை கிடையாது என்க. (22)

(22இ)     (அன்றியும்) சிற்சட ரூபமான முதற்காரணத்தி னின்றும் உண்டான போக்தாக்களாகிய ஆன்மாக்கள் 
தோற்றுவிக்கத் தகுந்தவையாயிருத்தலால் கட முதலியனபோல் அசேதனங்களாக ஆகும் என்பதாம்.

    (உரை)     முதற்காரணத்திலிருந்து உண்டாகும் கடம் முதலியன சடங்களென்று 
சித்தித்திருக்கின்றது. அதுபோல், பரமான்ம ரூபமான முதற் காரணத்திலிருந்து 
உண்டாகும் போக்தாக்களான ஆன்மாக்களும் அசேதனங்களென்று சித்தித்துவிடும். 
நீங்களோ தன்னையும் பிற பொருளையும் அறிகின்றமையால் சுயம் பிரகாசங்களாகவும்,
சேதனங்களாகவும் ஆன்மாக்களைக் கொண்டிருக்கின்றீர்கள். அவ்வாறாயின், 
முதற் காரணத்தினின்றும் உண்டாக மாட்டா. ஆகையால், பரமான்மாவைப் போல் 
ஆன்மாக்களையும் நித்தியங்களாகக் கொள்ளல் வேண்டும். 

     ஆன்மாக்களுக்குப் பிறிதொரு சித்துப்பொருளுடன் சம்பந்தமிருத்தலால் 
சித்துப் பொருளைச் சம்பந்தித்திருக்கும் சடங்களுக்குப்போல் காரியத் தன்மையுண்டென்று 
கூறுவோமெனில், அவ்வாறு கூறலாகாது.  எதனாலெனின், சித்துப்பொருள் பிறிதொரு 
சித்துப்பொருளைச் சம்பந்தித்து இராதாகையாலென்க. தனக்கே தான் கிரகிக்கத் தகுந்த 
பொருளாக ஆகின்றதெனின், அவ்வாறாகாது. தன்னிடத்தில் தனக்குத்தொழிற்பாடு 
நிகழாதாகையாலென்க. ஆனால், ஞான ரூபமாக இருந்து கொண்டு எக்காலத்தும் ஆன்மாக்கள் 
பிரகாசிக்கின்றன என்று நம்மால் பரமோக்ஷ நிராச காரிகையில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. 
ஆகையால், அவ்விடத்துக் கூறியிருப்பதை யறிந்து நிச்சயித்துக் கொள்க. (22இ)

(23 இ)     (ஆகவே) பரமான்மா சடமாயும் உண்டுபண்ணும் தருமத்துடனும் இருப்பின் மண் முதலியன 
போல் தனது காரியத்தை உண்டுபண்ணுதற்பொருட்டு அறிவுடையவனது தொழிலை 
விரும்புவதாயிருக்கின்றது என்பதாம்.

    (உரை) பரமான்மா முதற் காரணமாயிருத்தல் பற்றி அதற்குச்சடத்தன்மை கூறப்பட்டிருத்தலால் 
தனது காரியத்தை உண்டுபண்ணுதற் பொருட்டு மண் முதலியவற்றிற்குப் போல் புத்திமானான 
கருத்தாவினால் ஏவப்பட்டிருக்குந் தன்மையை அந்தப் பரமான்மாவிற்கு ஒப்புக்கொள்ளல் வேண்டும். 
ஆகையால், அத்துவிதம் பொருந்தாது.     (23இ)

(24இ)      ஆகையால், முன்னர்க் கூறப்பட்ட குற்றங்களின் நிவிர்த்தியின் பொருட்டுப் போக்தாக்களான 
ஆன்மாக்களையும், உலக வித்தான மாயையினையும், சக்தியுடன் கூடின மகேசனையும் 
தனித்தனி ஒப்புக்கொள்ளல் வேண்டும் என்பதாம்.

    (உரை) ஆகையால் போக்தாக்களான ஆன்மாக்கள் ஒன்றிலிருந்தும் உண்டாகவில்லை. 
உலக வித்தான முதற்காரணம் சடம். முற்றறிவு முதலிய தருமங்களுடன் கூடின பரமசிவனே 
உலகத்திற்குக் கருத்தா. இவ்வாறு ஒவ்வொன்றையும் வேறு வேறாகவும் நித்தியமாகவும் 
ஒப்புக்கொள்ளல் வேண்டும். அவ்வாறே தத்துவத்திரய நிர்ணயத்திலும், சம்புவாகிய பரமசிவனும்,         
புருடனும் நித்தியராயும், வியாபகராயும், கருத்திரு சத்தியுடன் கூடினவராயும் இருக்கின்றனர். 
மாயை நித்தியமாயும், வியாபகமாயும் சிவனுடைய கருத்திரு சத்தியால் அதிட்டிக்கப் 
பட்டதாயுமிருக்கின்றது. இம்மூன்று தத்துவங்களும் விகாரமான காரியங்களனைத்தும் 
ஒடுங்குங் காலத்தும் ஒடுங்காது விளங்கிக் கொண்டிருக்கின்றன ; என்று கூறப்பட்டிருக்கின்றது. 
ஆகவே, முதற்காரணத்திலும் வேறாகப் பரமேசுவரன் சித்திக்கின்றது பற்றி யாதொரு 
குற்றமுமில்லை என்க.     (24இ)

    (அ-கை) சிவ சத்திக்குப் பரிணாமங் கிடையாதாகையால் ஞானசத்தி கிரியாசத்தி என்ற பிரிவு 
எவ்வாறு பொருந்து மெனின், அப்பிரிவு உண்மையாக இல்லையெனக் கூறுகின்றார்.

(25)     (எவ்வாறெனில்) பரமசிவனுடைய சக்தி ஒன்றே சர்வஞானக்கிரியா ரூபமாக இருக்கின்றது என்பதாம்.

    (உரை ) ஞான சத்தியின் வேறாகக் கிரியா சத்தியைக் கொண்டால் சடமாயும் வாமை முதலிய 
பிரிவால் பரிணாமத்தை யுடையதாயும் ஆகும். அது கொண்டு இந்தக்கிரியா சத்திக்கு மாயைக்குப்போல் 
ஈசுவரனிடம் சமவாய சம்பந்தம் பொருந்தாது. இந்தக் கிரியாசத்தியோ பரிணாமத்தையடைகிறதில்லை. 
இந்தக் கிரியா சத்தியில்லையாயின், ஈசுவரன் கருத்தாவாக ஆகமாட்டான். கருத்தாவின்றியோ 
உலகத்தைத் தோற்றுவித்தல் பொருந்துகிறதில்லை. 

    ஆகவே, நிச்சயமாக ஞானக்கிரியா சத்திகளுக்கு ஒற்றுமையை ஒப்புக்கொள்ளல் வேண்டும். 
அறியப்படும் பொருள் செய்யப்படும் பொருள் என்னும் இவற்றிற்கு வேற்றுமையிருத்தலால் 
சத்தியினிடத்து எதனால் வேற்றுமை கிடையாதெனில், அறியப்படும் பொருள் செய்யப்படும் பொருள் 
என்னும் இவற்றிற்கும் வேற்றுமையில்லை யாகையாலென்க. எவ்வாறெனின், * அறியப்படுந் தன்மையானது 
செய்யப்படுந் தன்மையினின்றும் வேறாகிறதில்லை. அந்த அறியப்படுந்தன்மையை அறிவுடைய 
ஒருவனால் பொருளுக்குள்ளது என்று கொள்ளாது பொருளின் இயல்பாகவே கொள்ளின், எல்லாப்பொருளும்
எக்காலத்தும் அறியப்பட்டுக்கொண்டே யிருக்குமென்றாகி அனைவருக்கும் சருவஞ்ஞத்தன்மை வந்துவிடும்.
இனிச் செய்யப்படுந் தன்மையும் அறியப்படுந் தன்மையினின்று வேறாகிறதில்லை. ஆகவே ஞானக்கிரியா
சத்திகளுக்கு உண்மையில் வேற்றுமை கிடையாது. ஆனால், சொல்ரூபமான வேற்றுமைதானுண்டு.    (25)

* அறியப்படாமல் செய்ய முடியாதாதலின் செய்யப்படுந் தன்மையின் வேறாக அறியப்படுந் தன்மையில்லை 
யென்பது கருத்து.

(25 இ)     (அவ்வாறே கிரியா சத்தியும்) தொழிற் பாட்டின் வேற்றுமையினால் வாமை முதலாக மூன்றுவிதமாய்க் 
கூறப்பட்டது என்பதாம்.

    (உரை) வாமை முதலாகக் கூறப்படும் கிரியாசத்தியும் தொழிற்பாட்டின் பேதத்தால் வாமை, 
சேஷ்டை, ரௌத்திரி யென்று மூன்றுவிதமாக வேற்றுமையடைகின்றது. உண்மையில் கிரியா சத்தி 
ஒன்று தான். இவ்வாறு கூறவில்லையாயின் அறியப்படும் பொருள்களின் வேற்றுமையால் ஒவ்வொரு 
பொருள்களையும் அறிகின்ற அறிவின் வேற்றுமைபற்றி ஒவ்வொரு பரமாணுவிடத்தும் அதனையறியும் 
முறையில் வேறு வேறான அறிவு உண்டாக வேண்டும். உண்டாகவே, அந்தச்சத்திகட்குப் பலவாயிருக்குந் 
தன்மைபற்றிச் சடத்தன்மை நேரிடும். இவ்வாறன்றி ஒரே ஞான சத்தியால் அநேக பொருள்களையறிவது
அநுபவசித்தம். அதுபோல, உத்தியோக ரூபமான கிரியா சத்திக்கு அநேக காரியங்களைச் செய்தல் 
குற்றமின்றிச் சித்தித்தது. காரிய பேதம் பற்றிச் சத்திபேதமும் கூறப்பட்டது. (25இ )

    (அ-கை) இவ்வாறாயின், தொழிற்பாட்டின் பேதம் எவ்வாறு உண்டாகுமென்பார்க்குக் கூறுகின்றார்.

(26 இ)     பரமேசுவரர் அநாதியாகவே மலத்துடன் கூடிய பசுக்களைக் கிரியா சத்தியினால் கட்டுப்படுத்துகிறார். 
ஆகையால் மலத்துடன் கூடிய அவர்களைக் கன்மத்தை யநுசரித்து ஏவுகின்றார் என்பதாம்.

    (உரை) முன்னரே பரமேசுவரர் அநாதியாகவே மலத்துடன் கூடிய பசுக்களைத் தமது 
கிரியா சத்தியால் கட்டுப்படுத்துகின்றார். ஆகையால், கட்டுப்பட்ட அப்பசுக்களைக் கன்மத்தின் 
பக்குவங்காரணமாக ஏவுகின்றார். (26இ)

    (அ--கை)  ஆன்மாக்களோ வியாபகப் பொருள்கள். அவற்றை எவ்வாறு ஏவுதல் கூடும்? 
என்பார்க்கு அஃதுண்மை என்று அநுவதித்துக்கொண்டு விடைகூறுகின்றார்.

(27இ)     (ஆயினும்) பதியினாலேவப்பட்ட ஆன்மாக்களுக்குப் போக சாதனங்களின் சம்பந்தத்திற்கு 
உரிமையான போக இச்சையானது மிகவும் உண்டாகின்றது என்பதாம்.

    (உரை)  விஞ்ஞான கேவலர்களின் வேறான ஆன்மாக்களுக்குக் கன்மங் காரணமாகக் 
காரியம், கரணமென்னுமிவற்றின் சம்பந்தத்தில் உரிமையை யுண்டுபண்ணுதலே ஈசுவரனுடைய 
ஏவுதலாகும் .    (27இ)

(28இ)     சுத்தாசுத்த புவனங்களின் அதிகாரத்திலிருக்கும் வித்தியேசரான அநந்தேசுவரர் வாயிலாக
 உலக பீஜமாகிய மாயையைக் கலக்கி உலகத்தைத் தோற்றுவிக்கின்றார் என்பதாம்.

    (உரை)  சுத்தாசுத்த புவனங்களுக்கு அதிகாரியாயும், மந்திரேசுவரர்களுக்கு நாயகராயும்
 இருக்கும் அநந்தரை ஏவி மாயையினின்றும் உலகத்தைத் தோற்றுவிக்கின்றார். இவ்வாறே 
"வித்தியேசுவரர்களுக்கு நாயகரான அநந்தர் இச்சையினால் உலகத்தைச் சிருட்டிக்கின்றார்” 
என்று பிறருங் கூறுகின்றார்.     (28இ)

(29இ )     (பின்னர்) இச்சையையுடைய அந்தப் புருடர்களை இந்த உலகத்துடன் சேர்த்துப் போகத்திற்காகச் 
சாதன ரூபமான திதியை ஈசுவரன் செய்கின்றார் என்பதாம்.

    (உரை) கன்மத்திற்கு ஏற்றவாறு காரியம், கரணமென்னு மிவற்றுடன் அந்தப் பசுக்களைச் சேர்த்து 
அவர்களுடைய போகத்திற்காகச் சாதன  ரூபமான திதியை ஈசுவரன் செய்கின்றார். (29இ)

(30-31)     (பின்னர்) திதியின் முடிவில் சம்சாரத்தினா லுண்டான இளைப்பு நீக்கத்தின்பொருட்டும், 
இடைவிடாது  தொழிற்படும் பசுக்களுக்கும் மாயைக்கும் சத்தியை யுண்டுபண்ணுதற்பொருட்டும், 
ஈசுவரன் எல்லாவற்றையும் ஒடுக்குகின்றார் என்பதாம்.    (30-31)

    (அ--கை) சிருட்டி , திதி, சங்காரம், திரோபவம் என்னுந் தொழிற்பாடுகள் வேறுவேறாகக் கூறப்பட்டன. 
இனி அநுக்கிரகத்தையுங் கூறுகின்றார்.

(31இ)     மலத்திற்கும் ஈசுவர சத்திக்கும் அதிகாரம் நீங்குங் காலத்தில் தீக்ஷையினால் விடுவிக்கின்றார் என்பதாம்.

    (உரை) பின்னர்க் கூறப்படுமாறு மலத்திற்கும் ஈசுவர சத்திக்கும் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தும் 
அதிகாரம் எப்பொழுது இல்லாமல் நீங்குகின்றதோ, அப்பொழுது ஈசுவரன், ஆன்மாக்களைத் தீக்ஷையினால் 
மலத்தினின்றும் நீக்குகின்றான் என்பதாம் ( 31இ)

(32இ)  வாமை, சேஷ்டை, ரௌத்திரி யென்று மூன்று விதமான கிரியா சத்தியானது தான் பிரிவுபடாமலிருப்பினும் 
தடை, சங்காரம், அநுக்கிரகமென்னும் தொழில்களால் பிரிவு பாட்டை யடைந்ததாக ஆகின்றது என்பதாம்.

    (உரை) சிருட்டி, திதி, திரோபவமென்னும் தொழில்கள் சம்சாரத்தில் ஆன்மாவைக் 
கட்டுப்படுத்துவதால், கட்டுப்படுத்துதல் வாமையென்னுங் கிரியாசத்தியின் றொழிலாகும். 
சங்காரம் சேஷ்டையின் றொழிலாகும். பாசத்தை யபகரித்தல் ரூபமான அநுக்கிரகம் 
ரௌத்திரியின் றொழிலாகும். இவ்வாறான இந்தத் தொழில்களால் கிரியா சக்தியானது 
அபின்னமாயிருப்பினும் பிரிவுபாட்டையுடையதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் ஒன்று தான். 
வேறிடத்திலும் ''சர்வ ஞானக்கிரியா ரூபமான சிவனது சத்தி ஒன்று தான்"  என்று கூறப்பட்டிருக்கின்றது. 
 ஆகையால் குற்றமொன்றும் இல்லை. (32இ)

(33 இ)     இவ்வாறு ஈசுவரனுக்குச் சருவகருத்திருத்தன்மையுண்டென்பது சித்தித்தது. இதனால், 
சருவஞ்ஞத் தன்மை யுடையவனாக ஆகின்றான் என்பதாம்.

    (உரை) சேணியர் முதலாயினார்க்கு ஞானமின்றிக் கருத்திருத்தன்மை காணப்படாமையால் 
ஈசுவரனுக்குச் சருவ கருத்திருத்தன்மை யிருப்பதுகொண்டு சருவஞ்ஞத் தன்மை சித்திக்கின்றதென்று 
முன்னர்க் கூறப்பட்டது.     (33இ)

(34இ-35இ)     (எவ்வாறெனில்) முதற்காரணம், நிமித்தம், பயன் என்னுமிவற்றுடன் கூடின ஆடையைச் 
சேணியன் அறிகின்றவாறுபோல, ஈசுவரனும் முதற்காரணம், நிமித்தம், பயன் என்னுமிவற்றுடன் 
கூடிக்கொண்டு எல்லாவற்றையும் உள்ளவாறு அறிகின்றான் என்பதாம்.

    (உரை) சேணியன் நூல்களால் தேவதத்தன் பொருட்டுப் பொருள் வருவாய் காரணமாகத் தறி,
 தண்ட முதலியவற்றால் ஆடையைச் செய்கிறவனாயும் அந்த ஆடையைச் செய்யும் விஷயத்தில் முக்காலத்தும் 
மலம் நீங்கினவனாயும் இருக்கின்றவாறு போல, உலக கருத்தாவும் மாயையினால் பலவிதமான கன்ம நிமித்தம் 
பசுக்களுக்குப் போக மோக்ஷத்தின் பொருட்டு உலகத்தைத் தோற்றுவிக்கின்றவராயும், அவ்வாறு தோற்றுவிக்கும் 
விஷயத்தில் முக்காலத்தும் மலமில்லாதவராயும் நிச்சயிக்கப்படுகின்றார் என்பது கொண்டு அவருக்குச் 
சருவஞ்ஞத் தன்மை சித்திக்கின்றது. (34 இ-35 இ)

(36இ-37இ)  இவ்வாறு  எல்லாப் பொருள்களையும் தோற்றுவிக்கின்றமையால்  பரமான்மாவான ஈசுவரனிடத்தில் 
இரண்டுவிதமான சத்திகள் இருக்கின்றன. அவை நித்தியமாகவும் இருக்கின்றன. அவை கலாசரீரம்போல் 
தோன்றுகின்றன. எந்தச் சக்தியுடன் கூடிக்கொண்டு ஈசுவரன் எல்லாவற்றையும் அறிகின்றானோ, 
எல்லாவற்றையுஞ் செய்கின்றானோ, அந்தச் சக்தியுடன் கூடியிருக்கும் காரணத்தால் தத்துவங்களை 
யறிந்தவர்களால் சகளரென்று கூறப்படுகின்றான் என்பதாம். 

    (உரை) மேலே கூறியவாறு சர்வ ஞானக்கிரியா ரூபமான அதே சத்தியே நித்தியமாயிருந்து 
அநேக வடிவம்போற் றோன்றிக்கொண்டு ஈசுவரனுக்குச் சரீரமாக உபசரிக்கப்படுகின்றது. 
சத்தி சரீரமாயிருப்பது பற்றி ஈசுவரன் சகளரென்று கூறப்படுகின்றான். (36இ-37இ)

(38இ)     இந்தப் பசுவானது கலாமயமான சரீரத்துடன் கூடுமாறு போல, ஈசுவரன் எக்காலத்தும்
கலாசரீரத்துடன் கூட மாட்டான். அதுபற்றி (சகளரென்று மேலே கூறப்பட்ட ஈசுவரனே
நிட்களரென்று கூறப்படுகின்றான்) என்பதாம் . 

    (உரை) பசுக்களுக்குப் போலக் கலை முதலியவற்றின் ரூபமான  சரீரம் இல்லாமையால் 
ஈசுவரன் நிட்களன் என்பது முன்னர்க் கூறப்பட்டது.     (38இ)

    (அ-கை) இவ்விடத்தில் பிறருடைய ஆசங்கையைக் கூறுகின்றார்.

(39இ )     ஈசுவரனுக்கு நிட்களத்தன்மை யுண்டென்று கூறின், ஞானமும் கர்த்திருத்தன்மையும் 
சித்திக்கமாட்டா. எதனாலெனின், கலா சம்பந்தத்துடன் கூடிய சேதனர்களுக்கே
அவை காணப்படுகின்றமையால் என்பதாம் .

    (உரை) கலை முதலியவற்றின் சேர்க்கையினாற்றான் பசுக்களுக்கு ஞான முதலியன 
காணப்படுகின்றன என்பதுகொண்டு ஈசுவரனுக்குக் கலை முதலியன இல்லாமையால் ஞான முதலியன 
இல்லாமற் போய்விடுமென்க.     (39இ)

    (அ-கை) ஈசுவரனுக்குக் கலை முதலியன இல்லாமை குற்றமன்றெனக் கூறுகின்றார்.

(40இ)     பசுக்களுடைய ஞானக்கிரியைகள் மலத்தால் தடுக்கப்பட்டிருத்தலின் அறிவு விளக்கத்தின்
பொருட்டுக் கலையின் சேர்க்கையை விரும்புகின்றன. ஈசுவரனுடைய ஞானக்கிரியைகள் கலையின்    
 சேர்க்கையை விரும்புகிறதில்லை ; மலத்தின் தடையில்லாமையால் என்பதாம்.

    (உரை) முன்னர்ப் போககாரிகையில் பசுக்களுடைய ஞானக் கிரியைகள் மலத்தால் தடுக்கப் 
பட்டிருத்தலால் கலை முதலிய துணைகளைக்கொண்டு விடயங்களிற் றொழிற்படுகின்றன என்று
கூறப்பட்டிருக்கின்றது. பரமேசுவரன் அநாதியாகவே மலத்தால் மறைக்கப்படாமையால் அவருக்குத் 
துணைகளில் விருப்பங் கிடையாது. ஆகையால், அவருக்கு எல்லாப் பொருள்களின் சம்பந்தமான 
ஞானக்கிரியைகள் இருக்கின்றன என்க. (40இ)

(40தெ)     ஈசுவரனுக்கும் விருப்பத்துடன் கூடியவையாகவே யிருக்கின்றன என்பதாம்.

    (உரை) அஞ்ஞானமிருக்கின்றமையால் பசுவுக்குப்போல ஈசுவரனுடைய ஞானக்கிரியைகளும்
 கலை முதலிய துணைகளை விரும்புகின்றன. (40தெ) 

(41)     (இவ்வாறாயின்) அப்பொழுது ஈசுவரன் பசுவாகவே  ஆகின்றான் என்பதாம்.

    (உரை) கலை முதலியவற்றின் சேர்க்கையால் தேவதத்தன் முதலாயினார்போல் ஈசுவரன் 
பசுவாக ஆய்விடுவன் என்க. (41)

    (அ-கை) ஈசுவரன் பசுவாக ஆகட்டும் ; அதனால் கேடு என்னை என்பார்க்குக் கூறுகின்றார். 

(41இ)     ஈசுவரனையின்றிக் காரியமில்லை. ஆகையால் வேறு ஈசுவரனைக் கொள்ளல் வேண்டும் என்பதாம்.

    (உரை) ஈசுவரனையின்றி உலக ரூபமான காரியம் உண்டாகிறதில்லையாகையால், வேறு 
ஈசுவரனைச் கொள்ளல் வேண்டும்.  அவனும் பசுவெனப்படின், அவனினும் வேறாக ஈசுவரன் ஒருவனைக் 
கொள்ளவேண்டுமென்றாகி அவ்வாறே மேலுஞ் சென்று வரம்பின்றி ஓடல் என்னுங் குற்றத்திற் கிடனாகுமென்க. (41இ) 

(42)     கலை முதலியவற்றைத் தோற்றுவித்து அவற்றுடன் கூடி ஈசுவரன் காரியத்தைச் செய்கின்றான் என்பதாம்.

    (உரை ) கலை முதலிய தனது காரிய கரணங்களைத் தோற்றுவித்துப் பின்னர் அவற்றுடன் கூடி 
ஈசுவரன் எல்லாக் காரியங்களையும் செய்கின்றான் என்று கொள்வோமென்க. (42)

(42 இ)     (இவ்வாறாயின்) நிட்களனான ஈசுவரனுக்கு ஞானக் கிரியைகள் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. 
கலை முதலியவற்றால் என்ன பயன்? என்பதாம்.

    (உரை) ஈசுவரன் கலை முதலியவற்றை விரும்பாது நிட்களராகவே இருந்துகொண்டு தன்னிடமிருந்து 
காரிய கரணங்களையும் அவ்வாறே உலகத்தையுந் தோற்றுவிக்கின்றான். ஆகவே, அவனுக்குக் கலை 
முதலியவற்றைக் கூறவேண்டாம். இவ்விஷயம் நரேசுவர பரீக்ஷை யென்னும் நூலில் விரிவாகக் 
கூறப்பட்டிருக்கின்றது. (42இ)

(43இ )     ஆகையால் கூறியது அமையும். போக மோக்ஷங்களைச் சாதித்துத் தருபவனாயும், மேலே 
கூறப்பட்ட இலக்கணம் வாய்ந்தவனாயுமுள்ள பரமசிவன் முத்தி விருப்பமுடைய முமுட்சுக்களால் 
வழிபடத்தகுந்தவன் என்பதாம்.

    (உரை) ஆகையால் சருவஞ்ஞத்துவ முதலிய இலக்கணங்களையுடைய பரமேசுவரனே 
பசுக்களின் பொருட்டுப் போக மோக்ஷங்களைத் தருபவனாவன். மோக்ஷத்தை விரும்புகிறவர் 
எக்காலத்தும் பரமேசுவரனையே ஆராதிக்க வேண்டும். வேறொருவரையும் ஆராதிக்கக்கூடாது. 
இவ்வாறு சாதனத்துடன் கூடின போகம் முடிந்தது (43 இ)

    (அ-கை)   இனி, சாதனத்துடன் கூடிய மோக்ஷத்தைக் கூறுகின்றார் .

(44இ--45இ) மலம் முதலிய பாசங்களின் நாசமும் எல்லா  ஞானக்கிரியைகளின் தோற்றமும் மோக்ஷமாகும். 
அதற்குக் காரணம் ஈசுவரன். அந்த ஈசுவரனான பிரபுவுக்குத் தனது சத்தி கரணமாகும். பசுவாகிய 
ஆன்மா விடுவிக்கப்படுகிறவனாயிருத்தலால் செயப்படுபொருளாவன். மோக்ஷத்தைக் கொடுத்தல்
 நித்திய முத்தனாயிருத்தலால் கருத்தாவைச் சேர்ந்தது. பசுவாகிய செயப்படுபொருளைச் 
சேர்ந்ததன்று என்பதாம்.

    (உரை) முன்னர்ப் போககாரிகையில் விஞ்ஞான கேவலர்கட்கு ஆணவ மலமொன்றும், 
பிரளய கேவலர்கட்கு ஆணவம் கன்மமிரண்டும், சகலர்கட்கு ஆணவம் கன்மம் மாயை மூன்றுமான 
பாசங்கள் உண்டென்பது கூறப்பட்டது. அவரவர்களுக்குரிய காலங்களில் அந்தப்பாசங்கள் தகுதிப்படி 
நாசமடைகின்றன. சர்வஞ்ஞத்தன்மை சர்வகர்த்திருத்தன்மைகளின் தோற்றமே ஆன்மாக்களுக்கு 
மோக்ஷமாகும். ஏனைய சமயிகளுக்குப்  போல யாதானுமோர் பாச நீக்கமும், ஒன்று மறியாமையும்,
கருத்திருத் தன்மையின்மையும், சங்கிராந்தியும் முத்தியாகாதென்று கூறப்போகின்றோம். ஆத்மஞானத்திற்கு 
ஆத்மா கர்த்தாவாக ஆவது போல், மோக்ஷத்திற்கு ஆத்மா கர்த்தாவாகின்றானில்லை.

     ஆத்மாவானவன் ஈசுவரனால் சமஸ்காரஞ் செய்யப்படுகின்றவனா யிருக்கின்றமைபற்றி 
எக்காலத்தும் அவனுக்குச் செயப்படு பொருட்டன்மையே உள்ளதாகையாலென்க.  மாயை முதலிய பாசமும் 
முத்திக்குக் கர்த்தாவாக ஆகிறதில்லை. ஆனால், ஈசுவரனே கர்த்தாவாக ஆகின்றான். அந்த 
ஈசுவரனுக்குத் தீக்ஷையாகிய தனது சத்தியே கரணமாகும். முத்தியாவது பாசநீக்கமும் சர்வஞ்ஞத் தன்மை 
முதலியவற்றின் றோற்றமுமாம். 

    ஆகவே, விடுவிக்கப்படுகிற ஆன்மாவினிடமே முத்தியிருக்கின்றது. இவ்வாறன்றி, சாங்கியருடைய 
மதம் போல் மோக்ஷமானது விடுவிக்கிற பொருளிடமிருக்கும் தர்மமாக இருக்கவில்லை, விடுவிக்கிறவன் 
நித்திய முத்தனாயிருக்கின்றமையால், முத்தி, முத்தியின்மை யென்னும் இரண்டற்கும் விசேடமில்லாமற் 
போய்விடுமாகையா லென்க. இவ்வாறே "பிரகிருதியானது புருடனுக்குப் போக்கியப் பொருளாயிருந்து 
சம்சாரத்தைக் கொடுக்கின்றது . அதன் நிவிர்த்தியுண்டாயின் மோக்ஷத்தைக் கொடுக்கிறதாக ஆகிறது.
அதன் நிவிர்த்தி ரூபமான நாசமானது பிரகிருதியைச் சார்ந்ததேயன்றிப் புருடனைச் சார்ந்ததன்று. 
பிரகிருதியானது தானாகவே அறிகிறதில்லை.'' என்று சாங்கியர் கூறுகின்றனர். இவ்வாறு விசேடமுத்தி, 
சாமானிய முத்தியென்னும் எல்லா முத்திகளும் கூறப்பட்டன. முத்திக்குச் சாதனங்கள் பின்னர்க் கூறப்படும். (44இ-45இ)

    (அ-கை) மோக்ஷ சாதனங்களுள் புருடனே மோக்ஷத்தைச் செய்கின்றானென்று, ஞானமே 
மோக்ஷமென்று கூறும் தன்னைச் சார்ந்த சிலர் கூறுவதாகக் கூறுகின்றனர்.

(46இ)     எந்தக் காரணத்தால் போகம்போல் மோக்ஷமும் புருஷார்த்தமாயிருக்கின்றதோ அந்தக் 
காரணத்தால் ஆன்மா மோக்ஷத்தைச் செய்பவனாவன். விவேக முதலியன சாதனங்களாகச் 
சித்திக்கின்றன என்பதாம்.

    (உரை) ஈசுவரன் உலக கருத்தாவாக இருக்கட்டும். புருடர்கள் தன்னாற் செய்யப்பட்ட 
தருமாதருமங்களினால் சுபாசுபமான போகங்களை யநுபவிக்கின்றனர். அவ்வநுபவம் ஈசுவரனால் 
செய்யப்பட்ட தருமா தருமங்களாலன்று. புருடனிடமும் பரமேசுவரனுக்கு அதிட்டிக்குந் தன்மையிருக்கின்றதே 
யெனில், இருக்கட்டும். ஆயினும் பரமேசுவரனுக்குக் கருத்திருத்தன்மையில்லை. ஆகையால், புருடர்கள் 
அஞ்ஞானத்தைச் செய்யும்  மலத்தாற் கட்டுப்பட்டு மயக்கத்தால் சம்சாரத்தையும் அடைகின்றனர். 
அதற்கு மாறான அப்பியாசத்தால் பிரிதொன்றை விரும்பாது தனக்கு ஞானமுதித்தவுடன் அஞ்ஞானம் 
நீங்கிச் சர்வஞ்ஞத் தன்மை முதலியன உண்டாதலால் ஆன்மாவே மோக்ஷத்தைச் செய்யட்டும். ஈசுவரன் 
செய்கிறதாகக் கொள்ள வேண்டாம்.    (46இ)

    (அ-கை) இந்தக் கூற்றுப் பொருந்தாதென்று கூறுகின்றார்.

(47-52 இ )     ஆராய்ச்சியின்மையா லுண்டான அறியாமையானது ஆராய்ச்சி ஞானத்தால் 
நீங்கிவிடுகின்றது. காசமென்னும் கண் வியாதி முதலிய பொருள் காரணமாக நிகழ்ந்த அஞ்ஞானமானது 
ஆராய்ச்சி ஞானத்தால் நசிக்கிறதில்லை. அந்த அஞ்ஞானத்துக்குக் காரணமான பொருளின் 
நாசத்தினாலேயே அது நசிக்கின்றது. வேறெவ்விதத்தாலும் பொருள் காரணமாக நிகழ்ந்த அஞ்ஞானம் 
நாசத்தையடையாது. அந்த அஞ்ஞானத்திற்குக் காரணமாயிருப்பது எதுவோ, அதுவே மலமாகும். 

    அஞ்ஞானமே மலமெனக் கொள்ளின், அது *துச்சமாக ஆவது, அல்லது ஆன்மாவின் தர்மமான 
உள்பொருளாகவாவது இருக்கவேண்டும். துச்சமாய்க்கொள்ளின் இந்த மலத்தை நீக்குதற்காகச்
செய்யும் புருடனுடைய ஞான முதலியவற்றிற்கு ஒருவித பயனுமில்லாமற் போய்விடும். ஆன்ம 
தருமமாகக் கொள்ளின் அது எக்காலத்தும் நீங்காது.  நீங்குமென்று  கொள்ளின் ஆன்ம தர்மமாக ஆகாது. 
ஆகையால் ஆன்மாவின் ஞானத்தை அநாதி யாகவே மறைத்துக்கொண்டிருப்பது மலமாகும். 
தீக்ஷையினாலேயே அந்த மலத்திற்கு நிவிர்த்தியுண்டாகின்றது. 

* துச்சம் - முயற்கோடு போலும் பொய்

    சிவன் மலம், மாயை என்னும் இவற்றிற்கு வசப்பட்டவனாக ஆன்மா இருக்கின்றான். இத்தகைய 
ஆன்மா இயல்பாகவே அவற்றின் வசப்பட்ட    தன்னை எவ்வாறு விடுவித்துக்கொள்வான்? தன்னை 
விடுவித்துக் கொள்வதில் தனக்குச் சக்தி கிடையாது. இயல்பாகவே பாசங்களுக்கு வசப்படுகின்றமையால். 
ஆகையால் அனைவரையும் தன் வசப்படுத்துகின்றவனான ஈசுவரனே மோக்ஷத்தைச் 
செய்கின்றவனாவன் என்பதாம்.

    (உரை) புருடர்களுக்குக் கலை முதலியவற்றால் மலம் சிறிது நீங்கி அவற்றின் சம்பந்தத்தால்
ஞானக்கிரியைகள் சிறிது விளங்குவது கொண்டு, தர்மம், அதர்மம் முதலியவற்றைச் செய்யுந்தன்மை 
உண்டாகின்றது என்பது பொருந்தும்.  மலம் முதலியன நிவிர்த்தியடைந்த பின்னர் சாமர்த்தியமின்றிக் 
கிடந்த அறியுந் தன்மையான ஈசுவரத்தன்மை ஆன்மாக்களுக்கு முத்தியிலுண்டாகுமென்று கூறுவது 
பொருந்தாத கூற்று. கிளிஞ்சலில் வெள்ளி யென்பது போன்ற மயக்கங்களில் ஞானத்தினால் அஞ்ஞானம் 
நீங்கிவிடுகின்றது என்பது பிரமாணத்தினால் சித்தித்திருக்கின்றது. ஆன்மாக்களுக்கு அநாதியாக 
வுண்டான அஞ்ஞானமே மலமெனக் கொள்ளுகின்றனர். ஆகையால் ஞானத்தால் நீங்குகின்றது எனின், 
அது பொருந்தாது. 

    அஞ்ஞானம் மலமாகாது. அஞ்ஞானத்திற்குக் காரணமெதுவோ அதுவே மலமாகும். 
மலமே அஞ்ஞானமெனக் கொள்ளின் அஞ்ஞானமானது துச்சமாக ஆவது, ஆன்ம தருமமாக 
ஆவது ஆகவேண்டும். துச்சமெனக் கொள்ளின், அது ஒருவித காரியத்தையுஞ் செய்யாமையால் 
அதனைப் போக்கும் ஞானமுதலியவற்றிற்கு யாதொரு பயனுமில்லையாய் முடியும். ஆன்மாவின் 
தருமமாகக் கொள்ளின் நித்தியத்தன்மை வியாபகத்தன்மை யென்னும் ஆன்ம தருமங்களை 
நீக்கமுடியாதவாறுபோல, அஞ்ஞானத்தையும் நீக்கமுடியாது . ஆகவே, முத்தியே யில்லாமற்போய்விடும். 
இந்த அஞ்ஞானமானது நீக்குதற்குரியது எனக்கொள்ளின் ஆன்ம தர்மமாக ஆகாது. ஆகையால், 
கண்ணினுடைய அறிவின்மைக்குப் படலம் முதலிய நோய்கள் காரணமாதல்போல, ஆன்மாவினறிவை 
அநாதியாகவே தடுப்பதற்கு ஏதுவாயிருப்பது பற்றி அஞ்ஞானத்திற்குக் காரணமாகப் பிறிதொரு 
பொருளைக்கொள்ளல் வேண்டும். அதுவே மலமாகும். 

    கண்ணின் றொழிலை மறைத்தற்குக் காரணமான படலம் முதலிய திரவியங்களும் 
இவை போன்ற வேறு திரவியங்களும் ஞானத்தால் நசிப்பனவல்ல . எதனாலெனின் திரவியங்களுக்கு 
ஞானம் விரோதியாக இல்லாமையாலென்க. அவ்வாறாயின் கிளிஞ்சலிலுள்ள வெள்ளித்தோற்றமாகிய
அஞ்ஞானமானது ஞானத்தினால் எவ்வாறு நசிக்கின்றதெனின் கூறுதும்.  அஞ்ஞானம் இரண்டுவிதமாகும்.
 எவ்வாறெனின், முன்னர் அநுபவிக்கப்பட்ட பொருளின் தர்மம், சமமான பிறிதொன்றில் ஆராய்ச்சி
யின்மையால் நிச்சயரூபமாக நிகழ்வதொன்று. இதுவே கிளிஞ்சல் முதலியவற்றில் வெள்ளி முதலியவற்றின் 
தோற்றம், காசம், காமாலை முதலிய திரவியத்தால் நிகழ்வது மற்றொன்று. இதுவே இரண்டு சந்திரன் 
முதலிய தோற்றம். அவற்றுள் முன்னையது இது வெள்ளியன்று என்னும் நிச்சயமான ஆராய்ச்சி 
ஞானத்தால் நீங்கிவிடும். 

    இரண்டாவதாகிய திரவியத்தாலுண்டான அஞ்ஞானமானது தனக்குக் காரணமாகிய 
திரவிய நாசத்தினாலேயே நாசத்தையடையும். ஞானத்தால் நாசத்தை யடைகிறதில்லை. திரவிய ரூபமான 
மலத்தினாலேயே ஆன்மாக்களுக்கு அஞ்ஞானமுண்டாகிறதெனக் கூறப்பட்டிருக்கின்றது. வேறுவிதமாகக் 
கூறப்படவில்லை. காசம், காமாலை முதலிய திரவியங்களாலுண்டான அஞ்ஞானம் புத்தியினா 
லுண்டாகாமையினால் ஞானத்தால் நிவிர்த்தியடைகிறதில்லை, படல முதலிய நோய்கள் கண் வைத்தியனால் 
நீங்குமாறு போல ஈசுவரனாலேயே அந்த மலத்திற்கு நிவிர்த்தியுண்டாகின்றது. ஆகையால், மோக்ஷத்தை 
ஈசுவரன் செய்கின்றானேயல்லது ஆன்மா செய்யவில்லை யென்க. 

    இவ்வாறே " சிவனிடமிருந்தே ஆன்மாக்களுக்கு மோக்ஷமுண்டாகின்றது"  என வேறு நூல்களிலுங் 
கூறப்பட்டிருக்கின்றன. சுருதியும் " எவனை இந்த ஆன்மா ஆசிரயிக்கின்றதோ அவனால் மோக்ஷமானது 
அடையத்தகுந்தது" என்று கூறுகின்றது. ஆகையால், படலரூபமான திரவியம் கிரியையினால் விலக்கப்படுமாறு 
போல, மலரூபமான திரவியம் ஈசுவரனது கிரியையினால் விலக்கப்பட்டு மோக்ஷ முண்டாகின்றது. 
இவ்வாறே தீக்ஷையே பாசத்தை நீக்குகின்றது. மேலான சிவனது தானத்தையடையும்படியும் 
செய்கின்றது என்று கூறப் போகின்றோம். (47-52 இ)

    (அ-கை) ஈசுவரனுக்கு மோக்ஷத்தைச் செய்யும் தன்மையைக் கொண்டு அப்பொழுதே பாசங்களுக்கு
 நிவிர்த்தியாகுந் தன்மையினையுங் கொள்ளல் வேண்டும். எதனாலெனின், பாச நீக்கத்தாலன்றி மோக்ஷம்
 சித்திக்காமையாலென்க. ஆகவே, பாசங்களே தத்தமியல்பினின்று  நீங்கிப் புருடர்களுடைய 
மோக்ஷத்திற்கு ஏதுவாக ஆகின்றன. ஈசுவரனுக்குக் கருத்திருத் தன்மையைக் கொள்வதால் பயனென்னை 
யென்பார்க்கு  அது பொருந்தாதென்று கூறுகின்றார். 

(53இ)     கயிறு முதலியன தானாகவே கட்டுண்டு நீங்குமாறில்லாதவாறுபோல உயிர்களின் பாசங்களை 
விலக்குதற்குப் பாசங்களுக்கும் தனக்காகவே சத்தி கிடையாதென்பதாம்.

    (உரை) சீவனுக்குத் தொழிற்படுவதிலும், தொழிற்படாம லிருப்பதிலும் தனக்காகவே 
சாமர்த்தியம் கிடையாதென்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகவே, பாசங்களைச் சிவன் நீக்குகின்றமையால் 
சிவனே புருடர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பவனாவன். (53இ)

    (அ-கை) " காணப்படுவது சம்பவிக்கும் பொழுது காணப் படாததைக் கொள்வது 
பொருந்தாதென்னும் நியாயத்தால் பூர்வபக்ஷியின் ஆசங்கையைக் கூறுகின்றார்.

(54இ)     அறியுந்தன்மை கருத்திருத்தன்மை யென்னும் இவற்றின் அநேக விதமான தோற்றத்தைப் 
பாசங்கள் செய்கின்றன.  இவற்றின் தோற்றமே மோக்ஷமாகும்.  ஆகவே,மோக்ஷம் பாசங்களால் 
செய்யப்படுவதாகுமென்பதாம். 

    (உரை) சம்சார நிலையில் காரியம் கரணமென்னும் இவற்றின் சொரூபமாகவே காணப்படும் 
பாசங்கள், ஆன்மாக்களுக்கு அறியுந்தன்மை செய்யுந்தன்மை யென்னுமிவற்றின் அநேகவிதமான 
தோற்றத்தைச் செய்கின்றன. மோக்ஷமாவது ஞானக் கிரியைகளின் தோற்றமாகும். ஆகவே, 
அத்தோற்றத்தைக் காணப்படும் சாமர்த்தியத்தையுடைய அந்தப் பாசங்களே செய்யும். ஆகையால் 
காணப்படாத ஈசுவரனை மோக்ஷத்தின் பொருட்டு எதற்காகக் கற்பிக்கவேண்டும். (54இ)

    (அ-கை) பாசங்கள் மோக்ஷத்தைச் செய்யுமென்பது பொருந்தாதெனக் கூறுகின்றார்.

(55-56 இ)      பாசங்களுக்கு தனக்காகவே அறிவில்லாமையால், அவை ஈசனாலேவப்பட்டுப், 
பாசங்களின் சொரூபத்தால் ஆசையுடன் கூடினவையாயும், அவற்றின் தொழிற்பாட்டால் 
ஆசையை யுடையவையாயும், ஒன்றன்பின் ஒன்றாகக் கூடினவையாயும், அழிவை யுடையவையாயும், 
சிலவற்றை விடயமாகக் கொண்டவையாயுமுள்ள ஞானக்கிரியைகளின் தோற்றத்தைச் செய்கின்றன. 
பாசத்தாலுண்டாகும் ஞானக்கிரியைகளின் தோற்றத்திற்கும், பாசநீக்கத்தாலுண்டாகும் 
ஞானக்கிரியைகளின் தோற்றத்திற்கும் வேறுபாடிருக்கின்றமையால், மோக்ஷரூபமான
தோற்றத்தைப் பாசங்கள் செய்யமுடியாவென்பதாம்.

    (உரை) தீபம் முதலியன எவ்வாறு காணப்பட்ட பொருள்களை விளக்குஞ் சத்திகளுடன் 
கூடி விளக்குகின்றவையாய்ச் சித்தித்தனவோ, அவ்வாறே காணப்படாத ஏனைய விடயங்களிலும் 
அதே தீபமுதலியன அவ்வித சத்திகளுடன் கூடியவையாகவே அறியப்படுகின்றன. அதுபோல, 
காரியங் கரண முதலியவற்றின் ரூபமான துணைகள் கூறியவாறு ஈசுவரனால் ஏவப்பட்டவையா 
யிருப்பினும், சரீர முதலியவற்றை ஆன்மாவெனக் கொள்வதற்கு ஏதுவாயிருத்தலால், சம்சாரிகளுடைய 
ஞானக்கிரியைகளின் தோற்றம் பாசத்தின் சொரூபத்தினால் சம்பந்தித்ததாயும் பெண் முதலிய 
விடயங்களில் பற்றுடையதாயும், சில விடத்தில் சில சமயம் சிலவற்றை விடயமாக வுடையதாயும், 
விருப்பு வெறுப்புக்களால் கெடுக்கப்பட்டதாயும், காரியமாயிருத்தலால் சரீர முதலியவற்றிற்கு 
நாசமுண்டானபொழுது நசிக்கிறதாயும்  உள்ளதாகக் காணப்பட்டனவென்பது கொண்டு, 
காணப்படாத அத்தகைய விடயத்திலேயே அந்தப் பாசத்திற்குத் துணையா யிருக்குந்தன்மை 
சித்திக்கின்றது. இவ்வாறன்றி, முத்தி மிகவும் வேற்றுமையுடையதாதலால், அந்த முத்தியிலும் 
ஞானக்கிரியைகளின் தோற்றத்தை பிரமாண்டத்தைத் தீபம் விளக்காதவாறு போலப் பாசங்கள் 
செய்யா. இதுபற்றியே மோக்ஷத்திலுள்ள ஞானக்கிரியைகளுக்கு விசேடங் கூறப்படுகின்றது. (55-56இ)

(57இ)     பாசங்களைத் தோல்வியடையச் செய்யும் ஞானக்கிரியை யென்று பெயர்கொண்ட சத்தியானது 
சித்தர்களுக்கிருக்கின்றது. ஆகையால் பாசக்கூட்டங்களா லுண்டான சம்சார விடயமான ஆசையை 
இந்தச் சித்தன் அடைகின்றானில்லையென்பதாம். 

    (உரை) சித்தனுக்கு (முத்தனுக்கு) எல்லாப்பாசங்களும் விலகுகின்றமையால் ஈசுவரனது 
ஞானக்கிரியாசத்திகள் போல் இந்த சித்தனுடைய ஞானக்கிரியாசத்திகள் பாசங்களை நீக்கக் கூடியன. 
ஆகையால், பாசங்களால் தோன்றும் பசுவினுடைய ஞானக்கிரியா சத்திகள் போல் சித்தனுடைய 
ஞானக்கிரியா சத்திகள் சரீர முதலியவற்றில் ஆன்மாவென்ற எண்ணத்தைச் செய்வனவல்ல என்க. (57இ)

(58இ)     (அன்றியும்) தோன்றி நசிக்கும் பாசங்களுடன் சித்தனுடைய சத்தியைச் சேர்த்துப் பாசமாக 
வகுக்கவில்லை. அதனால் சித்தனுடைய சத்தியானது பாசங்களின் சேட்டைகளால் அநுசரிக்கப் 
படுகிறதில்லையென்பதாம். 

    (உரை) சித்தனுடைய சத்தியானது பசுவினுடைய சத்தி போல் அராகம் முதலிய பாசச்சேட்டைகளால் 
அநுசரிக்கப்பட்டுச் சம்சார விடயங்களில் ஆசையுடையதாக இருக்கவில்லை. எதனாலெனின், பாசங்கள் 
நாசத்தையடைந்த பின்னரும் விகாரமற்ற சொரூபத்துடன் ஈசுவரனது சத்திபோல் இருக்கின்றமையாலென்க. (58இ)

(59இ)     (அன்றியும்) சித்தனுடைய சத்தியானது எல்லாவற்றையும் விடயமாகக் கொண்டது. அதனாற்றான் 
அந்தச் சத்தி சிலவற்றை விடயமாகக் கொண்டதில்லை. அந்தச் சத்தியானது அறியக்கூடிய விடயங்கள் 
செய்யக்கூடிய விடயங்களென்னு மிவற்றில் ஒரே காலத்தில் தொழிற் படுவதால் ஒன்றன் பின் ஒன்றாகத் 
தொழிற்படவில்லை யென்பதாம்.

    (உரை) அந்தச்சித்தனுடைய சத்தியானது மறைப்பில்லாமையால் எக்காலத்தும் எவ்விடத்தும் 
எல்லாவற்றையும் அறியவும் செய்யவுங் கூடியது.  பசுவினுடைய சத்திபோல் ஒரு காலத்தில் ஓரிடத்தில் 
ஒன்றை விடயமாகக் கொண்டிருக்கவில்லை (59இ)

(60)     அந்தச் சித்தனுடைய சத்தியானது, அதனின் மேம்பட்ட சத்தியில்லாமையால் மறுக்கப்படுகிற
தில்லையென்பதாம். 

     (உரை) வித்தியேசுவரர்களுடைய சத்தியின் தோற்றமானது, பரமுத்தி ரூபமான வேறொரு 
தோற்றத்தால் மறுக்கப்படுமாறு போல், சித்தனுடைய சத்தியானது மறுக்கப்படுகிறதில்லை. 
எதனாலெனின், சித்தனுடைய சத்தியானது சிவனுடைய சத்திபோலிருப்பதால், அதனின் மேம்பட்ட 
சத்தியில்லாமையாலென்க.    (60)

(60இ)     (அன்றியும்) அந்தச்சித்தனுடைய சத்தியானது சிவசாமியத்தை யடைந்திருத்தலால், (ஏனையவற்றை) 
அறிதல் செய்தல் என்னும் விடயங்களில் தொழிற்படுகிறதில்லை யென்பதாம்.

    (உரை) ஈசுவரனுடைய இச்சையினால் வித்தியேசுவரர்களுடைய சத்தி தொழிற்படுமாறுபோல், 
சித்தனுடைய சக்திக்குக் காரியத்தில் தொழிற்படுதலும், தொழிற்படா திருத்தலுமில்லை. எதனாலெனின், 
அந்தச் சத்தியானது சிவசாமியத்தை யடைந்திருத்தலால் ஈசுவரனால் ஏவப்படுதலின்றித் தானாகவே 
தொழிற்படும் சத்தியுடன் கூடியிருக்கின்றமையாலென்க (60இ)

(61இ)     பாசங்கள் சித்தனுடைய சத்தியை விளக்க மாட்டா. சிவனுடைய இச்சையினால் அந்தப் 
பாசங்களின் பீஜங்கள் தகிக்கப்பட்டிருத்தலால் அந்தப் பாசங்களால் சித்தனுடைய சத்தியானது 
மீண்டுங் கெடுதலடைகிறதில்லை. அதனால் அவனுடைய சத்தி நசிக்காததா யிருக்கின்றதென்பதாம்.

    (உரை) பின்னர்க் கூறப்படுமாறு காரிய காரண ரூபமான பாசங்களால் பசுவினுடைய 
சத்தி தோன்றுமாறுபோல் சித்தனுடைய சத்தியானது தோன்றுகிறதில்லை. கெடுக்கப்பட்ட பீஜங்களையுடைய 
பாசங்கள் சிவசத்தியினால் தோற்றப்பட்ட சித்தனுடைய சத்திக்கு மீண்டுங் கெடுதலைச் செய்கிறதில்லை. 
ஆகையால் பசுவினுடைய சத்திபோல் சித்தனுடைய சத்தியானது நசிக்கிறதில்லையென்க . (61இ)

    (அ-கை) சித்தனுடைய சத்திக்கு நேரிடும் நசிக்குந் தன்மையை வேறுவழியாகப் பரிகரிக்கின்றார். 

(62-63இ)     துணையின் சன்னிதி யிருக்கும் வரை பொருள் விளங்கிக் கொண்டிருக்கின்றதென்னும்
 இந்த நியாயம் சித்தனுடைய சத்தியில் பொருத்தமடைகின்றதில்லையெனில் கூறுகின்றோம். விளக்கத்தைச் 
செய்து கொண்டிருக்கும் சிவசத்தியின் சன்னிதானத்தைச் சித்தனுடைய சத்தியானது எப்பொழுதும் 
தரித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால் சித்தனுடைய சத்தி நாசமடைகின்றதில்லை யென்பதாம். 

    (உரை) சித்தர்களுக்கு ஈசுவரனா லதிட்டிக்கப்பட்டுத் தொழிற்படுதல் எவ்விதத்திலுங் கிடையாதென்பது 
முன்னர்க் கூறப் பட்டிருக்கின்றது. ஆகவே, சித்தனுடைய சத்தியானது துணையினா லதிட்டிக்கப்படாமையால் 
தீபமில்லாதபொழுது கடம் முதலியவற்றின் தோற்றம் இல்லாதவாறுபோல் தோற்றமின்றி  நசிக்கக்கூடியதென 
முடியுமெனின், நசிக்காதென்று கூறுகின்றார். தீபம் பொருளின் மறைப்பைச் சிறிது நீக்குமாறுபோல் 
பரமேஸ்வரரை நாம் கொள்ளவில்லை. 

     படலநோயைக் கண் வயித்தியன் முற்றும் நீக்குமாறுபோல முற்றும் மறைப்பின் நீக்கத்தைப் 
பரமேசுவரர் செய்து, சித்தாந்த ஞானத்தின் தோற்றத்தைச் செய்கிறதாயும், சிவனாயிருக்குஞ் சித்தனுக்குள்ள 
சமவாய சம்பந்தத்தால் சிவசம்பந்தமாயுமுள்ள தனக்குச் சமமான ஞானக்கிரியா சத்திகளைச் சித்தர்களுக்குத் 
தோற்று விக்கின்றார். ஆகையால், அந்தச் சித்த சத்தி வேறு துணைகளை யெதற்காக விரும்பும். 
    
    சிவசத்திக்குத் தனக்காகவே சருவஞ்ஞத் தன்மை முதலிய சொரூபம் இருப்பது போல் இந்தச் சித்த
சத்திக்கு மிருக்கின்றது. இந்தக் காரணத்தானுஞ் சித்த சத்தி நசிக்காதென்று கொள்ள வேண்டும். 
பாசங்களால் மறைக்கப் படாமலிருப்பது மாத்திரங்கொண்டு இந்தச் சித்த சத்தி நசிக்காமலிருக்கவில்லை .
முத்திக்குக் காரியத் தன்மையாலுண்டாம் அநித்தியத்தன்மை கிடையாது; வியங்கியமாயிருத்தலால். 
வியங்கியம் - இருப்பது விளங்கித் தோன்றுதல். முன் இருந்த ஞான சத்தியே மறைப்பு நீக்கத்தால் 
விளங்கித்தோன்றி எல்லாவற்றையும் விடயமாகக் கொண்டிருக்கின்றதென்க. அந்த ஞானசத்தியின் 
சொரூபம் புதிதாக உண்டுபண்ணப்படவில்லை. இவ்வாறு எல்லாவற்றிற்கும் வேறான மோக்ஷம் கூறப்பட்டது. (62-63இ )

(64இ)     பாசங்கள் நீங்கியும் சித்தனுடைய சத்தி யிருக்கின்றது கொண்டு, அந்தச் சித்த சத்தியானது 
வேறாயிருக்கின்றமையால் அந்தப் பாசங்கள் சித்தனுடைய சத்தியைத் தோற்றுவித்தற்குச் சாமர்த்திய 
முடையனவாகா என்பதாம். 

    (உரை ) முத்தியில் சித்தனுடைய சத்தியானது பாசங்களால் தோன்றும் பசு சத்தியினின்றும் 
மிகவும் வேறாயிருக்கின்றமையானும், பாசங்களில்லாவிடத்து இருத்தலானும், அந்தச்சத்திக்குப் 
பாசங்களால் விளங்குந்தன்மை சித்திக்கிறதில்லை. சித்தனுடைய சத்தியைத் தோற்றுவிக்கும் ஈசுவரனே 
மோக்ஷத்திற்குக் காரணரென்பது முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. (64இ)

    (அ-கை) யோகமாவது சித்தத்தின் தொழிற்பாட்டைத் தடுத்தலாகும். ஆகையால் யோக முதலியவற்றால் 
சுத்தஞ் செய்யப்பட்ட அந்தக்கரணமே ஆன்மாக்களின் மோக்ஷத்திற்குக் காரணமாகும்; ஈசுவரன் காரணன் 
ஆகானென்று சாங்கியர் கூறுகின்றனர். அது பொருந்தாதென்று கூறுகின்றார். 

(65இ)     யோகமும், பிரகிருதி புருடவிவேக ஞானமும், தபசை முன்னிட்டுப் போக சாதனங்களான 
கன்மமும் ஆகிய இவை கூறியவாறு பாசங்களா யிருக்கின்றமையால் மோக்ஷத்திற்குச் சாதனங்களாக 
ஆகாவென்பதாம்.

    (உரை) வாயுவைப்போல் மேலே கூறியவாறு சித்தஞ் சடமாகையால் அந்தச் சித்தம், யோக 
முதலியவற்றால் சுத்தியடைந்த நம்மால் ஆன்மாவினிடமிருக்கும் மாயை விலக்கத்தக்கது; அவ்வாறு 
சுத்தியடையாவிடில் அந்தமாயையை விலக்க முடியாதென்னும் அறிவின்றித் தானாகவே மாயையை 
விலக்குவதாயிருந்தால் எப்பொழுதுமே விலக்கவேண்டும். யாதானுமொரு சமயத்திற்றான் விலக்கு 
மென்பது கூடாது. ஆகவே மோக்ஷமே யில்லையாகவேண்டும். அல்லது எக்காலத்தும் மோக்ஷமிருத்தல் 
வேண்டும். சாத்திரோபதேசத்தைப் பெற்று யோகமுதலியவற்றை யனுட்டிக்கின்றவன் யார்? 
ஆன்மா எனின், அந்த ஆன்மாவைக்  கருத்திருத்தன்மை யில்லாதவனாக நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். 
சித்தமெனின், அதுவோ சடமென்க. (65இ)

(66 இ)     (அன்றியும்) உபாயங்கள் சாமர்த்தியமுடையனவாயினும் தனக்கே கெடுதலைச் 
செய்கின்றவையாக ஆகா. கத்தியின் முனை மிகவுங் கூர்மையாயிருப்பினும் தன்னையே 
சேதிக்கிறதாக ஆகாதவாறுபோலு மென்பதாம்.

    (உரை ) சித்தத்திற்கு, தனது தொழிற்பாட்டைத் தடை செய்வதற்காக யோக முதலியவற்றை
யநுஷ்டித்தல் தனக்கே பொருந்துகிறதில்லை. எதனாலெனின். தன்னிடத்திலேயே தன்னைக்
கெடுக்குங் கிரியை நிகழாதாகையாலென்க. இந்தக் காரணத்தைக் கொண்டும் பிரவிருத்தி 
நிவிருத்திகளுக்குக் காரணரான பரமேசுவரரே எவ்விடத்தும் மோக்ஷத்திற்குக் காரணராவர். 
பரமேசுவரர் யாதானுமொன்றை விரும்பி மோக்ஷத்தைச் செய்யாதவராகையால் அனைவருக்கும் 
ஒரே காலத்தில் ஏன் மோக்ஷத்தைச் செய்யவில்லையெனின், மோக்ஷத்திற்குக் காரணமாக மலபரிபாகத்தை 
ஈசுவரர் விரும்புகின்றமையால் இந்தக் கேள்வி பொருந்தாது. இன்றேல் மோக்ஷத்திற்கு நியமமில்லாமற் 
போய்விடும்.  

    இவ்வாறே “அந்த மலமானது தீக்ஷையினால் நசிக்குஞ் சமயத்தில் சத்தியானது 
மோக்ஷத்தின் பொருட்டுத் தோன்றுகின்றது"  என்று நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றது. மலமானது பரிபாகம் 
அடையக்கூடியதாயும் சடமாயுமிருத்தலால் சிலருக்குச் சிற்சில சமயத்தில் பரிபாகமடைகின்றது. ஆகையால் 
அனைவருக்கும் ஒரே காலத்தில் ஈசுவரர் மோக்ஷத்தை யேன் கொடுக்கவில்லை யென்னுங் கேள்வி 
பொருந்தாது.  இவ்வாறே தத்துவத்திரய நிர்ணயத்திலும் “மலமானது பக்குவமடையுங் காலத்து ஆன்மாக்களின் 
ஞானக்கிரியைகளை மறைப்பதினின்றும் நீங்குகின்றது. பரிபாக விசேடத்தின் சேர்க்கையால் அந்த மலம் 
ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமாக நீங்குகின்றது” என்று 
கூறப்பட்டிருக்கின்றது.  (66இ)

(67இ-68இ)     (இவ்வாறாயின்) மறைக்குஞ் சத்தியின் அதிகாரத்தினுடைய காலமானது நீங்கினவுடன் 
தானாகவே பசுவினின்றும் மலம் நீங்குகின்றது. அப்பொழுது எஞ்சிய பாசக்கூட்டமும் விலகுகின்றது. 
விலகியவுடன் எல்லாவற்றையும் விடயமாகக் கொண்ட சுத்தமான ஞான கிரியா சத்தியானது தானாகவே 
ஆன்மாவினிடத்துத் தோன்றுகின்றது. ஆகையால் ஈசுவரன் மோக்ஷத்தைச் செய்பவனாக ஆகமாட்டானென்பதாம்.

    (உரை) புருடர்களுடைய ஞானம் முதலியவற்றின் வலிமையினால் மறைக்குஞ் சத்தியையுடைய மலத்தின் 
பரிபாகம் ஏற்பட்டு, அதனால் மலத்தினுடைய மறைக்கு மதிகாரத்தின் நாசமேற்பட்டது கொண்டு, தானாகவே 
மலம் நீங்கியவுடன், அதனிமித்தமாக ஏனைய பாசக் கூட்டங்களும் நீங்கியவுடன், புருடர்களுடைய ஞானக்கிரியா 
சத்தியானது சுத்தமாக இருக்கின்றமையால், முத்தியில் தானாகவே தோன்றும். ஆகையால் ஈசுவரனுக்குக் 
கருத்திருத்தன்மையைக் கொள்வதினால் பயன் என்னை? (மலபரிபாக முதலியவற்றை விரும்பாது) சுதந்திரராக 
இருந்து மோக்ஷத்தைச் செய்பவராக ஈசுவரரைக் கொள்ளின் இந்தக் குற்றம் நேரிடாது. தனது இச்சையினால் 
கட்டுப்படுத்துவதனால் *அதிப்பிரசங்கமுமில்லை. வித்தியாதிபதியும் “பசுக்களுக்கு மோக்ஷத்தைச் செய்கின்றதாயும், 
சிவசம்பந்தமாயுமிருக்கும் இந்தச் சத்திபாதமானது சுதந்திரமாயிருக்கின்றது; யாதானுமொன்றை 
விரும்புகிறதாகக் கொள்ளின் பரமேசுவரர் அசத்தராவர்” என்று கூறுகின்றாரெனின், இந்தக் கூற்றுப் 
பொருந்தாது. எதனாலெனின், இவ்வாறு சம்பவியாமையாலென்க (67இ-68இ)

* அதிப்பிரசங்கமாவது - அனைவருக்கும் ஒரேகாலத்தில் மோக்ஷத்தைக் கொடுக்கட்டுமென்பது.

    (அ-கை) மலபரிபாகத்தை விரும்பாது தானாகவே ஈசுவரன் மோக்ஷத்திற்குக் கருத்தாவாதல் 
சம்பவியாமை யெவ்வாறென்பார்க்குக் கூறுகின்றார்.

(69இ )     திதியைச் செய்யவேண்டிய சமயத்தில் சங்காரத்தையும், சங்காரத்தைச் செய்யவேண்டிய 
சமயத்தில் திதியையும், கன்மத்தைச் செய்யாதவனுக்குப் போகத்தையும் ஈசுவரன் 
செய்கிறானில்லை யென்பதாம்.

    (உரை) கன்ம முதலியவற்றை விரும்பாது ஈசுவரனுக்குச் சுதந்திரத் தன்மையைக் கொள்ளின் 
எக்காலத்தும் உலகத்துச் சிருட்டி சங்காரங்களையும், கன்மஞ் செய்யாதவனுக்குப் போகத்தையும், 
தீய கன்மங்கள் செய்தவனுக்கு மோக்ஷத்தையும், முத்தனுக்குச் சம்சாரத்தையும் அவர் செய்வர். 
ஆகவே, உலகம் உன்மத்தனுடைய சேட்டைபோல் சேட்டையை யுடையதாய்ப் பொருத்தமில்லாததாக 
ஆகும். ஆகையால் போகத்தின் பொருட்டும், மோக்ஷத்தின் பொருட்டும், பாவங்களை நீக்குவதன் பொருட்டும் 
ஒருவனும் முயற்சிக்க மாட்டான். ஈசுவரர் உபதேசித்தருளிய சாத்திரங்களனைத்தும் பயன்படாமல் 
உலாகாயத மதத்தை அநுட்டிக்க வேண்டியதாக உங்களுக்கு நேரிடும். 

    இந்தக் குறையை நீக்கும் பொருட்டுக் கன்ம முதலியவற்றின் பரிபாகத்தை விரும்புகிறவனாகவே 
சர்வ கருத்தாவான ஈசுவரனைக் கொள்ளல் வேண்டும். கன்ம முதலியவற்றை விரும்புதலால் ஈசுவரனுக்குச் 
சுதந்திரத்தன்மை கெடாது. வேறு ஈசுவரருக்கு உட்பட்டிருந்தாற்றான் சுதந்திரத் தன்மை கெடும்.
இந்த ஈசுவரர் பரமேசுவரரா யிருத்தலால் வேறு ஈசுவரருக்குட்பட்டிருக்கவில்லை. ஆகையால் ஈசுவரர் 
சுதந்திரராவார். திதியிருக்கும்பொழுது சங்கார முதலியவற்றையும், கன்மஞ் செய்யாதவனுக்குக் 
காரணமின்றிப் போக முதலியவற்றையும் ஒரு காலத்தும் ஈசுவரன் செய்கிறதில்லை. ஆகையால் 
சத்தி பதிதலென்பது கன்மத்தை விரும்பவே செய்கின்றது. இவ்வாறாயின், மோக்ஷத்தின் பொருட்டுக் 
கன்மத்தின் ஒப்பை ஈசுவரர் விரும்புபவராக ஆவரெனின், அவ்வாறன்று. 

    கன்மஞ் செய்யாதவருக்கு ஈசுவரர் போகத்தைச் செய்யாதவாறுபோல மலபரிபாக மில்லாதவருக்கு 
மோக்ஷத்தையுஞ் செய்கிறதில்லை. எதனாலெனின், மோக்ஷமானது மலபரிபாகத்தை விரும்புகின்றமையாலென்க.
இவ்வாறின்றேல், மலத்தைக் கொள்ளுதல் பயனற்றதாக முடியும். ஆன்மாக்களுக்குக் கன்மத்தினும் வேறாக 
மலம் ஒன்று உள்ளதென முன்னர்ப் போக காரிகையில் கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறெனில், “மலபரி பாகம் 
ஆகாமல் கன்ம நாசமேற்பட்டது கொண்டு அந்த ஆன்மாவிற்கு விஞ்ஞான கேவலத்தன்மையே சித்திக்கின்றது "
என்பதாம். ஆகையால் சத்தி பதிதலுக்கு மலபரிபாகமே இன்றியமையாத காரணமெனக்  கூறவேண்டுமென்க.     (69இ)

    (அ-கை) மலமானது பரிபாகத்தால் தானாகவே நீங்கிப் புருடர்களுடைய மோக்ஷத்திற்குக் காரணமாக 
ஆகும்.  ஆகையால் மோக்ஷத்திற்குச் சத்திநிபாதத்தைக் கொள்ளுதலால் பயனென்னை யென்பார்க்கு 
அது பொருந்தாதென்று கூறுகின்றார்.

(70இ - 71இ)     சேதனாசேதனங்கள் யாவும் ஈசுவரனுக் குட்பட்டவையென நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. 
ஆகையால் ஈசுவரர் அந்த ஆன்மாக்களின் பிரவிருத்தியிலும் நிவிருத்தியிலுங் காரணராவார். அவர் 
சத்தியாகிய சூலத்தால் ஆன்மாக்களின் பாசக்கூட்டத்தைப் பிளந்து சர்வஞானக் கிரியாரூபமான 
இரண்டுவித சக்தியையுந் தோற்றுவிக்கின்றாரென்பதாம். 

    (உரை) சடத்திற்குத் தானாகத் தொழிற்படுவதிலும், தொழிற் படாமலிருத்தலிலும் சாமர்த்தியங் 
கிடையாதென்பது முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் பக்குவமான விடத்தும் மலமானது 
திரவியமாயிருத்தலால் படல முதலிய நோய்கள் போல் புத்திமானான கருத்தாவால் நீக்கத் தகுந்தது.
 ஆதலின் ஈசுவரரே மலநிவிருத்தியைச் செய்து புருடர்களுக்குச் சர்வஞ்ஞத்தன்மை முதலியவற்றைத் 
தோற்றுவித்து மோக்ஷத்திற்குக் காரணராக ஆகின்றார். வேறெவருமாகார் என்க. (70இ-71இ)

    (அ-கை) எல்லா ஆன்மாக்களுக்கும் ஈசுவரர் நேராகவே மோக்ஷத்திற்குக் காரணராக 
இருக்கின்றாரா? அல்லது எவரையேனும் அதிட்டித்துக் காரணராக இருக்கின்றாரா? என்பார்க்கு 
இரௌரவ ஆகமத்தின் சித்தாந்தத்தால் சித்தித்த முறையைக் கூறுகின்றார்.

(72இ)     ஈசுவரர், சிருட்டியினாரம்பத்தில் சகளமான எட்டு அணுக்களைத் தனது இச்சையால் 
நிட்களர்களான அநந்தர் முதலிய மந்திரேசுவரர்களாக அநுக்கிரகிக்கின்றாரென்பதாம்.

    (உரை) சிருட்டியினாரம்பத்திலேயே சகளமான எட்டு அணுக்களுக்குப் பரி பக்குவமான 
மல நீக்கத்தைச் செய்து எல்லா ஞானக்கிரியைகளின் தோற்ற ரூபமான மோக்ஷத்தை நேரே கொடுத்து, 
அநந்தர் முதலிய பெயரையுடைய வித்தியேசுவரர்களாகச் செய்கின்றார். ஆகையால் வித்தியேசுவரர்கள்
அணுபக்கத்தைச் சார்ந்தவரேயன்றிச் சத்தி பக்கம் சம்பு பக்கங்களைச் சார்ந்தவரல்ல ரென்றறிந்து கொள்க. (72இ)

(73இ)     (பின்னர்) சகளர்களான அணுக்களை ஏழுகோடி யெண்ணுடன் கூட எல்லாவற்றையும் 
விடயங்களாகவுடைய ஞானக்கிரியா சக்திகளின் தோற்றத்தால் நிட்களர்களான மந்திரர்களாகச் 
செய்கின்றாரென்பதாம்.

    (உரை)     சகளர்களான அணுக்களை ஏழு கோடி யெண்ணுடன் பகவானானவர் அவ்வாறே 
நேராக அநுக்கிரகித்து மந்திரர்களாகச் செய்கின்றார். (73 இ)

    (அ--கை) மந்திரர், மந்திரேசுவரராகிய இவர்கள் முத்தர்களாதலால் இவர்களுக்குச் சிவனுடன் 
ஒப்புமையுண்டோ வென்று ஆசங்கிப்பார்க்கு ஒப்புமை கிடையாதென்று கூறுகின்றார்.

(74இ)     உருத்திரருடைய சத்தியின் கீழ் மந்திரம் மந்திரேசுவரம் என்னும் பெயருடைய இரண்டு 
தத்துவங்களிருக்கின்றன. எதனாலெனில், உண்டாகின்றனவாயும், ஏவப்படுவனவாயு 
மிருக்கின்றமையா லென்பதாம்.

    (உரை) உருத்திரரென்றது பரமேசுவரரைக் குறித்தது. சத்தியென்றது வாமை சியேஷ்டை 
இரௌத்திரிகளைக் குறித்தது. இந்தச் சத்திகளின் கீழ் வித்தியா வித்தியேசுவரர் ரூபமான இரண்டு 
தத்துவங்களிருப்பனவாக அறிந்துகொள்க. எதனாலெனின், “இந்த இரண்டு தத்துவங்களும் சிவனது 
இச்சையினால் ஏவப்பட்டன” என்று சாத்திரத்தில் கூறப்படுதலால் அந்தச் சிவசத்தியினால் 
உண்டுபண்ணப்பட்டுத் தமது அதிகாரத்தில் ஏவப்படுகின்றன வென்னும் பொருள் 
கிடைக்கின்றமையாலென்க. இவர்களிடம் ஏவப்படுந் தன்மையிருத்தலால் சர்வஞ்ஞத் தன்மை
யிருப்பினும் அதிகார மலமிருப்பது கொண்டு பரமேசுவரரை நோக்கக் கிரியா சத்தியானது 
முறையே *அம்சத்தினால் குறைந்ததென்று அறியப்படுகின்றது. தத்துவ சங்கிரக முதலிய நூல்களிலும் 
"வித்தியா வித்தியேசத் தன்மையானது அபரமுத்தியாகும். பரமுத்தியானது சிவசாமியமாகின்றது” 
என்று கூறப்பட்டிருக்கின்றது. முத்தியினாலும் குறையிருத்தலால் இவர்களுக்குச் சத்தி தத்துவத்திற்குக் 
கீழிருக்குந் தன்மையிருக்கின்றது. தேசத்தினாற் கூறப்படும் மேன்மை தாழ்மைகள் இவர்களுக்குக் 
கிடையா. எதனாலெனின், ஆன்மாக்கள் வியாபகர்களாகையாலென்க. கெளரவத்தாலுண்டாகும் 
மேன்மை தாழ்மைகளே யிவர்களுக்குண்டு . (74இ)

*அம்சம் - இவ்விடத்தில் கருத்திருத்தன்மையைச் செய்வது

(75 இ)     (கௌரவத்தால் மேன்மையாயிருப்பது கொண்டே)  இந்த இரண்டு தத்துவங்களும் நிட்களமாயும், 
அசுத்த மாயைக்கு மேல் அதிகாரத்தையுடையனவாயும் இருத்தலால், கிரியைகளைக் கூறுஞ் சாத்திரத்தில் 
தீக்ஷைக்காக வித்துவான்களால் அசுத்த மாயைக்குமேல் இந்த இரண்டு தத்துவங்களும் சுத்தியின் பொருட்டு 
ஆலோசிக்கப்படுகின்றன என்பதாம்.

    (உரை) வியாபகங்களான இந்த இரண்டு தத்துவங்களும் அசுத்த மாயைக்குமேல் அதிகாரத்தை 
யுடையனவாயிருத்தலாலும், கலை முதலிய காரிய கரணங்களினின்றும் நீங்கியிருத்தலாலும், 
அத்துவாக்களைப்பற்றிக் கூறுஞ் சாத்திரத்தில் அசுத்த மாயைக்கு மேல் சுத்தியின் பொருட்டு 
ஆலோசிக்கப்படவேண்டு மெனக் கூறப்பட்டிருக்கின்றது (75இ)

(76இ)     (அவ்வாறே) இரண்டாவதாக உண்டான மந்திரர்கள் அனைவரும் ஏவப்படுகின்றவராயும், 
பதித்தன்மையற்றவராயும் ஆவர். முதலாவதாக உண்டான மந்திரேசுவரர்கள் ஏவுகிறவர்களாயும், 
பதிகளாயும், மந்திரர்களுக்குமேல் இருப்பவர்களாயும் ஆவரென்பதாம்.

    (உரை) அநந்தர் முதலிய வித்தியேசுவரர்கள் மந்திரர்களுக்குப் பதிகளாயும், மந்திரர்களுக்கு 
முன் உண்டானவர்களாயும் இருத்தலால், அவர்களை மந்திரர்களுக்குமேல் இருப்பவர்களாக அறிந்துகொள்க. 
மந்திரர்கள் கீழேயிருத்தலாலும், மந்திரேசுவரர்களால் ஏவப்படுகின்றமையாலும் அவர்களுடைய 
கிரியா சத்திக்குக் குறைவு சித்தித்தது. (76இ)

(77இ)     (அதன் பின்னர்) பரமேசுவரர் கலைகளைத் தோற்றுவித்து, அவற்றுடன் அணுக்களைச் சேர்த்து 
அவ்வணுக்களை மாயா கர்ப்பத்தில் அதிகாரத்தைச் செய்யும் மந்திரேசுவரர்களாக 
அநுக்கிரகிக்கின்றா ரென்பதாம்.

    (உரை) வித்தியேசுவரர்களை யதிட்டித்து அசுத்தமாயையினின்றும் கலை முதலிய தத்துவம், 
புவனம், சரீரம், பொருள்களென்னும் இவற்றைத் தோற்றுவித்து, அவற்றுடன் அணுக்களைக் கன்மத்தை 
யனுசரித்துச் சேர்த்து, அந்த அணுக்களுள் மலபரிபாகமுடையவரை மாயா கருப்பத்தில் அதிகாரத்தைச் 
செய்யும் வித்தியேசுவரர்களாகப் பரமேசுவரர் நேரே யனுக்கிரகிக் கின்றனர். (77இ)

    ( அ--கை)  அவர்களின் பெயரையும் தொகையையும் கூறுகின்றார்.

(78இ)     மண்டலங்களுக்கதிபதிகளான எண்மரையும், அவ்வாறே எண்மரான குரோதேசர் முதலியோரையும், 
வீரபத்திரர் முதலிய சத உருத்திரர்களையும், தனது இச்சையினா லனுக்கிரகிக் கின்றாரென்பதாம்.

    (உரை)  ஸ்ரீகண்டருடன் கூடின குரோதேசர், எண்மருக்குள் முதன்மையாயிருக்கின்றார். 
தத்துவ சங்கிரகத்திலும் “மண்டலேசுவரர், ஸ்ரீகண்டர், குரோதேசர்'' என்று கூறப்பட்டிருக்கின்றது. 
இவ்வாறே நூற்றுப்பதினெட்டு ருத்திரர்களையு மனுக்கிரகிக்கின்றனர். (78இ)

(79இ)     ஆன்மாக்களுக்கு அநுக்கிரகஞ் செய்தற் பொருட்டு மந்திரர்களை யேவுகின்றவர்களாக இருப்பது 
பற்றி இவர்கள் மந்திரேசுவரர்களாகின்றனர். மந்திரர்களுக்கு மேலிருப்பதுபற்றி மந்திரேசுவரத்தன்மை 
யிவர்கட்குக் கிடையாதென்பதாம்.

    (உரை ) இந்த மாயா கருப்பாதிகாரிகளான மந்திரேசுவரர்கள், மந்திரர் மந்திரேசுவரர்களுக்குப் 
பின்னர்த் தோன்றுகின்றமையாலும், மாயா கருப்பத்தில் அதிகாரமுடையராயிருத்தலாலும்
இவர்கள் மந்திரர்களுக்குக் கீழேயிருப்பினும், ஆசிரியர் முதலாயினாரைப் போல் பசுக்களுக்கு 
அநுக்கிரகஞ் செய்தற் பொருட்டு மந்திரங்களைச் செலுத்துகின்றமையால், இவர்கள் 
மந்திரேசுவரர்களாகின்றனர். மந்திரர்களுக்குமேல் இவர்களில்லாமையால், மேலிருக்கும் அநந்தர் 
முதலியோருக்கு உண்டாம் மந்திரேசுவரத்தன்மை யிவர்களுக்குக் கிடையாது (79 இ)

(80இ)     அன்றியும், மந்திரர்கள்  முதலாவது தோன்றினவர்களாயும் நிட்களராயுமிருக்கின்றனர். 
இந்த * மந்திரேசுவரர்களோ கூறப்பட்ட இலக்கணத்திற்கு மாறுபட்டவர். ஆகையால் இவர்கள் மந்திர 
தத்துவத்திற்குக் கீழே மாயா கருப்பத்தில் அதிகாரத்தைச் செலுத்துபவராக இருக்கின்றனரென்பதாம்.

*இவ்விடத்தில் மந்திரேசுவரரென்போர், குரோதேசர் முதலிய நூற்றுப் பதினெண்மராவர்.

    (உரை) மந்திரர்களை நிட்களர்களாயும், இந்த மந்திரேசுவரர்களைச் சகளர்களாயும் 
கூறினதுபற்றி, இவர்கள் குறைந்த சத்தியை யுடையவர்களாயிருத்தலால், கீழேயுள்ள 
மாயா கருப்பத்திலேயே இவர்களுக்கதிகாரமுண்டு. இவ்வாறு அதிகார பேதமிருப்பது கொண்டு 
மந்திரர்கள் மந்திரேசுவரர்களாகிய இவர்கள் ஒருவருக்கொருவர் சத்தியினால் பேதத்தையடைகின்றனர். 
மல மறைத்தலாலுண்டாம் பேதம் இவர்களுக்குக் கிடையாது. இவ்வாறே வார்த்திகக்காரரும் 
'' இம்மூவரும் மேலான ரூபத்தினால் விசேடமற்றிருப்பினும் உற்பத்தித்தானத்தின் பெருமை சிறுமையின் 
பேதத்தால் ஒருவருக்கொருவர் விசேடத்தையடைகின்றனர்" என்று கூறியிருக்கின்றனர். (80இ)

    (அ-கை) இந்த வீரபத்திரர் முதலியவர் எந்த அத்துவாவில் இருக்கின்றனரென்பார்க்குக் கூறுகின்றார்.

(81இ)     சிவசத்தியினுடன் கூடின இவர்கள் மாயாகருப்பத்திலதிகாரத்தையும், சகளத்தன்மையையும் 
உடையராயிருத்தலால், மாயாதத்துவத்திற்குக் கீழே யிருக்கின்றனரென்பதாம்.

    (உரை) யாதொரு காரணத்தால் அவர்களுக்கு மாயா கருப்பத்திலதிகாரமும் சகளத்தன்மையும் 
கூறப்பட்டனவோ அந்தக் காரணத்தால் பிரமன் முதலியவரைப் போல் மாயா தத்துவத்திற்குக் கீழிருக்கும் 
கலை முதலியவற்றினுள்ள புவனங்களில் இவர்களிருக்கின்றனர் என்க. (81இ)

    (அ--கை) இந்த மந்திரேசுவரர் சகளராகையால், இவர்கள் பசுக்களைப்போல் கலை 
முதலியவற்றால் ஏகதேசமாய் விளங்கும் ஞானக்கிரியாசத்தியை யுடையராயிருத்தல்பற்றி, 
மாயா கருப்பத்தில் அதிகாரத்தைச் செய்யும் விடயத்தில் எவ்வாறு சிவ சத்தியுடன் இவர்கள் 
கூடியிருக்க முடியுமென்பார்க்குக் கூறுகின்றார்.

(82-83)     கலைகளின் சேர்க்கை இவர்களுக்கிருப்பினும் பசுக்கள் கலைகளுக்கு 
வசப்படுவது போல் இவர்கள் வசப்படுவதில்லை. இவர்கள் முறையே கலைகளுக்கு மேலிருக்கின்றமை 
பற்றி இவர்களுக்குப் பசுக்கள் வசப்பட்டிருக்குமாறு போல் கலைகளும் வசப்பட்டிருக்கின்றன வென்பதாம்.

    (உரை ) பசுக்களுங் கலைகளும் இந்த மந்திரேசுவரர்களால் ஏவப்படுகின்றமையால், இவர்களுக்கு 
வசப்பட்டிருக்கின்றன. அதனால் இவர்கள் கலை முதலியவற்றுடன் பொருந்தியிருப்பினும் அவற்றிற்கு 
வசப்படுகின்றனரில்லை. ஆகையால் இவர்களுக்குச் சர்வஞ்ஞத் தன்மையும் மாயா கருப்பத்தி 
லதிகாரமுடைமையும் உண்டென்பது பற்றி யெவ்வித விரோதமுமில்லை என்க. (82-83)

(84)     அநந்தர் முதலிய பர மந்திரேசுவரர்களுக்கும், குரோதர்   முதலிய  அபர மந்திரேசுவரர்களுக்கும், 
தனது சத்தி தோன்றிய பின்னர் அதிகாரமுண்டாகின்ற தென்பதாம்.

    (உரை) அநந்தர் முதலிய மந்திரேசுவரர்களுக்கும், குரோதர் வீரபத்திரர் முதலியோர்களுக்கும், 
எப்பொழுது ஈசுவரனால் பாசநீக்கங் காரணமாக உரிமையான ஞானக்கிரியா சத்தியானது 
தோற்றுவிக்கப்படுகிறதோ, அப்பொழுதே அந்த ஞானக்கிரியா சத்தியானது தனக்குரிமையான 
அதிகாரத்தைச் செய்கின்றது. வேறு காலத்தை யெதிர்பார்க்கிறதில்லையென்க. (84 ) 

    (அ-கை) மந்திரர்களின் ஞானக்கிரியாசத்தி வேறு காலத்தை யெதிர்பார்க்கிறதென்று கூறுகின்றார்.

(85)     மாயாபந்தத்தை நீக்குதற்பொருட்டு ஏழுகோடி மந்திரர்கள் தமக்குக் காரணரான சிவனிடமிருந்தும் 
வித்தியேசுவரர்களுக்குப் பின்னர் உண்டாயினர். இதற்குப் பிரமாணம் “வித்தியேசுவரர்களுக்குப் பின்னர் 
ஏழு கோடி மந்திரர்கள் உண்டாயினர்'' என்று கூறுமாகமங்க ளாகுமென்பதாம்.

    (உரை) மந்திரர்கள் வேறு காலத்தில் காரியத்தைச் செய்கின்றனரென்பது பேதம். (85)

    (அ-கை) மந்திரர்களின் அதிகாரம் நித்தியமோ வென்பார்க்கு இல்லையென்று கூறுகின்றார். 

(86)     தொழிற்பாட்டுக்குப் பர தந்திரர்களான மந்திரேசுவரர்களும் மந்திரர்களும் முத்தர்களாயினும், 
இவர்களுடைய அதிகாரம் அளவுக்குட்பட்டிருக்கின்ற தென்பதாம். 

    (உரை ) இவர்கள் முத்தர்களாயினும் பசுக்களைப்போல் தமது தொழிற் பாட்டிற்குச் சுதந்திர
மில்லாமையால் பின்னர்க் கூறப்படுமாறு இவர்களுடைய அதிகாரம் அளவுடன் கூடியேயிருக்கின்றது. (86) 

    (அ-கை) இனி அநந்தர் முதலியோருள்ளும் ஒருவரைக் குறித்து மற்றொருவருக்குள்ள பிரதானத்தன்மை 
அப்பிரதானத் தன்மைகளைப் பற்றிக் கூறுகின்றார்.

(87)     சூக்குமர் முதலியோருக்கு நாயகரான அநந்தர் சூக்குமர் முதலியோருடன் கூடிச் சிவனாலதிட்டிக்கப்பட்டு 
உற்பத்தி, திதி, சங்காரம், திரோதானம், அநுக்கிரகமென்னுங் கிருத்தியங்களைச் செய்கின்றாரென்பதாம்.

    (உரை) சிவனை நோக்கக் கிரியாசத்தி சிறிது குறைந்தவரான அநந்தர் சிவனாலதிட்டிக்கப்பட்டுச் 
சிருட்டி முதலிய ஐந் தொழில்களையும் செய்கின்றவாறுபோல, அநந்தரை நோக்கக் கிரியாசத்தி 
குறைந்த சூக்குமரும் ஐந்தொழில்களையுஞ் செய்கின்றார். சூக்குமர் முதலியோரை நோக்க அநந்தர் 
மேலானவரென்பதற்கு "அவர்களுள் அநந்தர் பரமேசுவரராவர் '' என்னும் பொருளுடைய சுருதியே 
பிரமாணமாகும். அவ்வாறே சூக்குமரை நோக்க சிவோத்தமர் குறைந்த சத்தியை யுடையராவர்.
ஆகவே முன்னவரை நோக்கிப் பின்னவருக்குக் குறைந்த தன்மையை யறிந்து கொள்க. (87) 

    (அ--கை) இனி மந்திரர்கள் எவ்வளவு காலம் அதிகாரஞ் செய்கின்றனர் என்பதைப்பற்றியும் 
மந்திரர்களுக்குள்ள வேற்றுமையைப் பற்றியுங் கூறுகின்றார்.

(88-89)     மந்திரர்களின் முற்பாதியாயுள்ளோர், சிருட்டிக்குப் பின்னர் அதிகாரத்தின் 
விசித்திரத்தன்மையால் சிவனாலதிட்டிக்கப்பட்டு, அச்சமயம் தமக்குக் காரணரான சிவனதிச்சையினால் 
அநுக்கிரகிக்க வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட அணுக்களுக்கு அநுக்கிரகஞ் செய்து, அதன்பின்னர் 
அதிகாரத்தைச் செலுத்தி, எக்காலத்தும் நழுவாத சிவ சாயுச்சியத்தை யடைகின்றனரென்பதாம்.

    (உரை) ஏழு கோடி மந்திரர்களுள் முன்னவர்களான மூன்றரைக் கோடி மந்திரர்கள் 
மலபரிபாகமுடையவர்கள். இவர்கள் பிறவிநோய் முதலியவற்றால் கேடுறுதற்குச் சம்சாரங் 
காரணமென்றறிந்து ஈசுவரனை நோக்கி நாங்கள் சம்சாரத்தின் சேர்க்கையையும் பசுக்களால் 
ஏவப்படுந் தன்மையையும் பொறுத்தற்கு முடியாதவர்களா யிருக்கின்றோமென்று அறிவித்துக் 
கொண்டனர். ஆகையால் ஈசுவரனுடைய ஏவலால் வித்தியேசுவரர்களுடைய ஆணையை 
நோக்காது சிவசத்தியால் கொண்டுவரப்பட்ட அணுக்களுக்கு, அச்சமயம் தாமே நேராகக் கருத்தாவாக 
இருந்து கொண்டும், ஈசுவரனை நோக்கத்தாம் கரணங்களாக இருந்து கொண்டும், ஈசனதிச்சையை 
யனுசரித்து அநுக்கிரகஞ் செய்தனர்.  பின்னர் விசித்திரமான அதிகாரத்தைச் செலுத்தி சிவசாம்மிய
மென்னும் பரமுத்தியையடைந்தனர். (88-89)

    (அ-கை) இரண்டாவது பாதி மந்திரர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

(90)     எஞ்சியுள்ள பாதி மந்திரர்கள் தொழிற்பட்டு உயிர்கள் சித்தி முத்தியடைதற் பொருட்டுப் 
பரிவாரங்களாக அணுக்களையும், இருதய முதலிய அங்கங்களையும், சம்பரம் என்னும் சத்தங்களையும், 
மண்டலங்களையும் பரமசிவன் சிருட்டித்தா ரென்பதாம்.

    (உரை) பின்னர் எஞ்சியுள்ள பாதி மந்திரர்கள் தொழிற் பட்டு அதனால் உலகத்துள்ளார் 
இதமடையும் பொருட்டு அந்த மந்திரர்களுக்குப் பரிவாரங்களாக வேறு சில அணுக்களையும்
இருதய முதலிய அங்கங்களையும், சத்தியின் சேர்க்கையையும் * சம்பரம் என்னும் சத்தங்களையும், 
மண்டலங்களையும், அஃதாவது நவநாப முதலிய பூஜா ஸ்தானங்களையும் பரமேசுவரர் செய்தருளினர். (90)

* சம்பரம் - மந்திரர்களை யறிவிக்கும் வாசகமந்திரம்.

    (அ-கை) முற்பாதி மந்திரர்கள் அநுக்கிரகத்தைச் செய்வது போல் இந்தப் பிற்பாதி மந்திரர்களும் 
அநுக்கிரகத்தைச் செய்கின்றனரா என்பார்க்கு அவ்வாறில்லை யென்று கூறுகின்றார்.

(91)     பரிவாரங்கள், அங்கங்கள், சம்பரம் என்னுமிவற்றுடன் கூடிய அந்த மந்திரர்கள், ஆசாரியரை 
யதிட்டித்த ஈசுவரனால் ஏவப்பட்டவர்களாய், பரிவார முதலியவற்றைவிட்டு மோக்ஷத்தை யடைகின்றனரென்பதாம்.

    (உரை)   பரிவார முதலியவற்றுடன் கூடிய இவர்கள் தீக்ஷை முதலியவற்றில் ஆசாரியரை யதிட்டித்த  
ஈசனால்  ஏவப்படுகின்றமையால் அநுக்கிரகஞ் செய்தற்குக் கரணங்களாகவே யிருக்கின்றனர். அநுக்கிரகத்தைச் 
செய்கிறவர்களாக ஆகார்  என்க . (91)

(92)      போகமோக்ஷங்களைக் கொடுக்கக் கூடிய எஞ்சிய மந்திரேசுவரர்கள், ஈசுவரனது சத்தியால் ஏவப்பட்டவர்களாய்,
 தம்முடைய புவனத்திற்குக் கீழுள்ள ஆன்மாக்களுக்கு அவரவர்க்குத் தக்கவாறு அநுக்கிரகத்தைச் 
செய்கின்றனரென்பதாம்.

    (உரை) எஞ்சியவர்களாய் முக்கியரல்லாத வித்தியேசுவரர்களான வீரபத்திரர் முதலாயினோர், 
சாத்திரங்களிற் கூறப்பட்ட தமது புவனங்களுக்குக் கீழுள்ள ஆன்மாக்களுக்கும், தமது புவனத்திலுள்ள 
பிரமன் விட்டுணு முதலிய சிலருக்கும் அநுக்கிரகத்தைச் செய்கின்றனர். அநந்தர் முதலியவர்களைப்போல் 
புவனங்களின் சிருட்டி முதலியவற்றைச் செய்யவில்லை. (92)

    (அ-கை.) மந்திரர் மந்திரேசுவரர்களின் அதிகாரத்திற்கு எல்லை வரையறுக்கப்             
பட்டிருக்கிறதென்று கூறுகின்றார்.

(93)     இந்த உருத்திரர்களும், சூக்குமர் முதலியோரும் மந்திரர்களும் அநந்தருடன் தமது அதிகாரத்தின் 
முடிவில் சிவனது ஏவலால் சிவசாமியமான முத்தியை யடைகின்றனரென்பதாம்.

    (உரை.) சூக்குமர் முதலியவர்களும், மந்திரர்களும், அவர்களுக்கு நாயகர்களான வீரபத்திரர்
முதலியவர்களும் ஆகிய அனைவரும் அநந்தர் எப்பொழுது ஒழிவையடைகின்றாரோ, அப்பொழுதே 
ஒன்றாகச் சிவசாமிய ரூபமான மோக்ஷத்தையடைகின்றனர். இவ்வாறே இரௌரவத்தில் "அநந்தர் 
ஒழிவை யடையுங் காலத்தில் சக்கிரவர்த்திகளாயும், மகான்களாயுமிருக்கும் அவர்களுக்குச் சருவ 
கருத்திருத் தன்மைக்குக் காரணமான மேலான ஸ்தானமானது விதிக்கப்பட்டிருக்கின்றது'' என்று
கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால் ஒருவர் பின் ஒருவராக மோக்ஷத்தை யடைதலில்லை. 

    இவ்வாறே வார்த்திகக்காரரும் “அநந்தருடைய அதிகாரம் நீங்கிய பின்னர் அந்த அநந்தருடைய 
ஸ்தானத்தைச் சூக்குமரடைந்து அந்த அதிகாரத்தைச் செலுத்துகின்றார். இவ்வாறு முறையே ஒருவர்பின் 
ஒருவராக முன்னுள்ளவர்களின் ஸ்தானத்தையடைந்து அதிகாரத்தைச் செலுத்துமுறையில் இறுதியில் 
சிகண்டியின் தானத்திலிருந்து அதிகாரத்தைச் செய்யும்படி உருத்திரர்களில் ஒருவரைப் பரமசிவன் 
நியமிக்கின்றார்"  என்று கூறுகின்றனர். (93)

    (அ--கை) இனி அநந்தர் எப்பொழுது ஒழிவையடைகின்றா ரென்பதைப் பற்றிக்  கூறுகின்றார்

(94)     அநந்தேசுவரர் சிருட்டிமுதலிய ஐந்தொழில்களையுஞ்செய்து அதன் பின்னர்ப் பரதந்திரத் 
தன்மையினின்றும் விடுபட்டு ஈசுவர சாமியத்தை யடைகின்றாரென்பதாம்.

    (உரை.) அநந்தர் எப்பொழுது அசுத்த மாயா சம்பந்தங்களான சிருட்டி முதலிய 
ஐந்தொழில்களையும் செய்து** விட்டனரோ, அப்பொழுது மாயாகாரியங்க ளனைத்தும் 
ஒடுங்கினமையால் பிரயோசனத்தைச் செய்தவரான அநந்தர் மகாப் பிரளயத்தின் ஆரம்பத்திலேயே 
ஈசுவர சாமியமாகிய பரமுத்தியை யடைகின்றனர். (94)

**அநந்தர் செய்துவிட்டனரென்பதற்கு அநந்தருடைய தானத்தில் வரும் ஒவ்வொருவரும் 
செய்துவிட்டனரென்பது பொருளாகக் கொள்க.

    (அ-கை) இவ்வாறாயின் அநந்தர் முதலாயினார் ஒடுங்கினமையால் மாயையினின்றும் 
வேறு சிருட்டி முதலியவற்றை ஈசுவரர் எவ்வாறு செய்கின்றாரென்பார்க்குக் கூறுகின்றார்.

(95 )     இவ்வாறே சென்ற சிருட்டிகளிலும் புருடர்களுடைய பாசத்தைப் பகவான் நீக்கினார். 
இனி வருஞ் சிருட்டிகளிலும் நீக்கப்போகின்றாரென்பதாம்.

    (உரை) ஒவ்வொரு சிருட்டிதோறும் முன்னர்க் கூறியவாறு போல் அநந்தர் முதலாயினாரைத்     
தோற்றுவித்தே புருடர்களுக்குப் போகத்தைச் செய்து பகவான் மோக்ஷத்தைக் கொடுக்கின்றாரென்பது 
பொருள் (95).

(96)     (இவ்வாறே) ஈசுவரன் ஆசிரியரைப் பற்றுக்கோடாகக்கொண்டு சாதனங்களாகிய மந்திரங்களால் 
சாதிக்கக்கூடிய தீக்ஷாசத்தியினாலேயே தனது சத்தி பதிந்த புருடர்களுக்குப் பாசங்களை
 நீக்குகின்றாரென்பதாம்.

    (உரை) பரமேசுவரரே ஆசிரியரைப் பற்றுக்கோடாகக் கொண்டு மந்திரர்கள் மந்திரேசுவரர்களாகிய 
இவர்களையொழிந்த ஏனைய மலபரிபாகமுடைய ஆன்மாக்களுக்கு மந்திரங்களால் சாதிக்கக்கூடிய 
தீக்ஷையினாலேயே பாசங்களை நீக்குகின்றார். ஞானத்தினால் நீக்கவில்லை . முன்னர்ச் சாதனத்துடன் 
கூடிய மோக்ஷத்தைக் கூறுகிறேனென்று மேற்கொள்ளப்பட்ட மோக்ஷமானது இவ்வாறு நிர்ணயஞ்
 செய்யப்பட்டது (96)

    (அ-கை) இவ்வாறாயின் மாயா மலத்தைக் கடந்த மலபரி பாகமுடைய அணுக்களுக்கு 
மோக்ஷமெவ்வா றுண்டாகின்றதெனின், ஒவ்வொரு புவனந்தோறும் ஆசிரியரிருத்தலால் 
ஆசாரியரைப் பற்றுக்கோடாகக் கொண்ட ஈசுவரனே அவ்வணுக்களுக்குத் தீக்ஷையைச் செய்து 
மோக்ஷத்தைக் கொடுக்கின்றாரென்று கூறுகின்றார்.

(97-98)     மந்திரேசுவரரே முன்னவரான ஆசிரியராவர்.  அவர்க்குப் பின்னர் உருத்திரர் ஆசிரியராவர்.
 அவர்க்குப் பின்னர் தேவர்கள் ஆசிரியராவர். அவர்களுக்குப் பின்னர் முனீசுவரர்கள் ஆசிரியராவர். 
மந்திரேசுவரர்களால் உருத்திரர்களும், உருத்திரர்களால் தேவர்களும், தேவர்களால் மானுட 
இருடி சிரேஷ்டர்களும், மானுட இருடி சிரேஷ்டர்களால் மானுடர்களும், மானுடர்களால் ஏனையமானுடர்களும் 
உபதேசிக்கப்பட்டு முறையே பின்னவர் முன்னவரை யாசிரியராகக் கொண்டவராவர். பிராமணர்களால் 
வருணங்கள் நிலைநிறுத்தப்பட்டன என்பதாம்.

    (உரை) உருத்திரர்கள் என்னும் பதத்தால் இவ்விடத்தில்  ஸ்ரீகண்டர் முதலாயினாரைக் கொள்ளல் 
வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் ஏற்படுகின்றமையால் அவரவர்களால் செய்யப்பட்ட தீக்ஷையினால், 
மாயாமலத்தைக் கடந்தவராயும், சிவசத்தி பதிந்தவராயும் உள்ள ஆன்மாக்களுக்கு மோக்ஷம் ஏற்படுகின்றது. (97-98)

    (அ-கை.) பிராமணர்களால் வருணங்களின் தருமங்கள் நிலை நிறுத்தப்பட்டன என்று கூறப்பட்டதைச் 
சாதிக்கின்றார்.

(99)     தீக்ஷை, சாதகம் என்னுமிவற்றிற்கு நான்கு வருணத்தவரும் அதிகாரியாவர். ஆசிரியத்தன்மைக்குப் 
பிராமணரே உரியவராவரென்பதாம்.

    (உரை.) சாதகம், தீக்ஷை முதலியவற்றிற்குப் பிராமணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களாகிய 
இவர்கள் அதிகாரிகளாவரெனக் கேட்கப்படுதலால், நான்கு வருணத்தவரும் அதிகாரியாவர். “இலக்குமியின் 
கிருபையை யுடையவராயும், மிருதுவான இயல்பை யுடையவராயுமுள்ள அந்தணரே ஆசிரியராவர்" என்று 
சுருதியிருத்தலால் ஆசிரியத்தன்மைக்கு அந்தணரே உரியவராவரென்க. (99)

    (அ-கை.) பிராமணர்களுள்ளும் எல்லாப் பிராமணரும் ஆசிரியராகாரென்றும் ஆசிரியராதற்கு 
உரியராவா ரிவரென்றுங் கூறுகின்றார்.

(100)     தீக்ஷையைப் பெற்ற எவன், சிவபெருமானைச் சத்திகளுடன் கூடினவராயும், அதிட்டிப்பதற்குரிய 
புவனங்களையுடையவராயும், போக மோக்ஷங்களைச் செய்பவராயும் அறிகின்றானோ, அவன் ஆசிரியனால் 
ஆசிரியத்தன்மையில் ஏவப்பட்டு ஆசிரியனாவனென்பதாம்.

    (உரை) பரமேசுவரனுக்கு ஞானக்கிரியைகள் சத்தி யென்றும், அனாசிருதமுதல் காலாக்கினி 
உருத்திர புவன மீறாகவுள்ள தத்துவம், புவனம், பூதம், பொருளென்னும் இவையனைத்தும்  அதிட்டேயங்களாய்ப் 
பரமேசுவரனுடையதேயென்றும், பசுக்களுக்குப் போக மோக்ஷங்களைச் செய்பவர் பரமேசுவரனே யென்றும், 
இவ்வாறு பரமேசுவரனை ஆகம சம்கிதைகளாலறிந்து, வியாகரணம் தருக்கமென்னும் இவற்றால் 
அவ்விடயத்தில் விபரீத ஞானத்தை நீக்கி, நிச்சயமாகப் பரமேசுவரனைத் தீக்ஷையை யுடைய எவன் 
அறிகின்றானோ, தீக்ஷையில் **வேறு ஆன்மாவைப் பெறுதற்பொருட்டும், அருச்சனை செய்தற்பொருட்டும் 
பரமேசுவரனையே பாவனை செய்கின்றானோ, அத்தகைய பிராமணன் ஆசிரியனால் ஆசிரியத்தன்மையில் 
ஏவப்பட்டு ஆசிரியனாவன். ஏனையோர் ஆசிரியராக மாட்டார். இவ்வாறே 'அறிவில்லாதவனும், 
மயக்கமுள்ளவனும், ஐயமுள்ளவனும், அன்பில்லாதவனும், தத்துவஞானமில்லாதவனும், கிரியாமார்க்கத்தில் 
பயிற்சி இல்லாதவனும் ஆசிரியனாகக் கொள்ளப்படமாட்டான்” என்று கூறப்பட்டிருக்கின்றது.    (100)

**வேறு ஆன்மா-சுத்தான்மா

    (அ-கை) தீக்ஷையை யுடையவர்களால் ஈசுவரன் புத்திக்கு விடயமாக அறியப்படுகின்றனரா? 
அல்லது புத்திக்கு விடயமாகாது அறியப்படுகின்றனரா என்பவற்றுள் முதலாவது பக்கத்தைப் பற்றிக் 
கூறுகின்றார்.

(101)     பசுசாத்திரத்தை மாத்திரமறிந்து பதியான சிவனது சாத்திரத்தை அறியாத சிலர், புத்தியின் போதத்தால் 
சிவன் அறியப்படுகின்றானென்று கொள்கின்றன ரென்பதாம்.

    (உரை ) புருடன், புத்திக்கு விடயமான பொருள்களையே யறிகின்றான். அவ்வாறின்றி நேரே அறிவதில்லை. 
எதனாலெனின், புத்தி முதலியவற்றிற்குப் பயனின்மை நேரிடுமாதலா லென்க. பரமேசுவரர் புத்தியினும் வேறாக 
இருப்பினும் புத்திக்கு விடயமாக இருந்துகொண்டே யறியப்படுகின்றார். இவ்வா றன்றித் தனிமையாக 
அறியப்படவில்லை. எவ்வாறெனில், ஈசுவரனது அநுக்கிரகத்தால் ஒருவனுடைய புத்தியானது இரஜஸ் தமோ
 மலங்களினின்று நீங்கி நின்மலமான சத்துவ விருத்தியுடன் கூடினதாக இருக்கின்றது. அந்தப் புத்தியில் 
பரமேசுவரன் பிரதிபிம்பம் போல் விளங்குகின்றான். ஆகையால் அந்தப் பிரதி பிம்ப ரூபமாக அறியப்படுபவனா
யிருக்கின்றானென்று சாங்கியரை யனுசரித்த சிலர் கூறுகின்றனர் (101)

    (அ-கை) ஈசுவரன் புத்தியாலறியப்படுவனென்று கூறில் பிறழ்ச்சி நேரிடுமாகையால் அவ்வாறு 
கூறுதல் பொருந்தாதென்று கூறுகின்றார்.

(102)     போக்கியமாயிருத்தலால் எந்தப் புத்திக்குப் போக்தாவான ஆன்மாவும் விடயமாகவில்லையோ, 
அத்தகைய இந்தப் புத்தியானது தானே பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஈசுவரனை எவ்வாறு அறிவிக்குமென்பதாம்.

    (உரை)  அறியப்படுவனவெல்லாம் புத்திக்கு விடயமாக வேண்டுமென்ற நியமங்கிடையாது. புத்தியை 
ஆன்மா அனுபவிக்கின்றமையால் அந்தப் புத்தியில் ஆன்மா விடயமாய் இல்லாதிருந்தும் அறியப்படுகின்றது. 
ஆகையால் அறியப்படுவன அனைத்தும் புத்திக்கு விடயமாக வேண்டுமென்ற உடனிகழ்ச்சி சித்திக்காமை 
காண்க. ஆகவே, பின்னர்க் கூறப்படுமாறு தானே பிரகாசிப்பவனான ஈசுவரன் எவ்வாறு புத்திக்கு விடயமாவன்.(102)

    (அ-கை) புருடன் புத்திக்கு விடயமாயிருந்துகொண்டே யறியப்படுகின்றான். கபிலப் பிரமத்திற்கும்
 புத்திக்கு விடயமாகாமல் ஆன்மா அறியப்படவில்லை. ஆகவே கண்ணாடி போன்ற புத்தியில் ஆன்மாவும் 
விடயங்களுமாகிய இவற்றின் பிரதிபிம்பச் சேர்க்கையே போகமாகையால் புத்தியினால் நிச்சயிக்கப்பட்டே 
அனைத்தும் அறியப்படுகின்றனவென்று சாங்கியர் கூறுவது பொருந்தாதென்று கூறுகின்றார்.

(103)     இந்தப் புருடனானவன் எப்பொழுதும் புத்தி விருத்தியிற் றங்கியவனாக அனுபவிக்கப் படுகின்றானில்லை. 
புருடன் எந்தக் காலத்தில் புத்தி விருத்தியி லேறியவனாக அனுபவிக்கப்படுகின்றானோ அவ்வித 
காலமொன்றில்லை யென்பதாம்.

    (உரை) புத்தியிற்றோன்றும் புருடப் பிரதிபிம்பத்தாலும் புருடன் அறிகின்றானில்லை. ஆகையால் 
பிரதி பிம்பத்தைக் கற்பித்தது பயனற்றதாகும். (103)

(104)     (அன்றியும்) ஆன்ம போதத்துக்கும், ஆன்ம போதத்தை விடயமாகக்கொண்ட பிரகாசத்துக்கும்,
 முற்பிற்பாடிருக்குமாயின் பிரகாசத்துக்கு விடயமாயிருத்தல், பிரகாசத்தைச் செய்தலென்னும் வேற்றுமை 
பொருந்தும். அவ்வித முற்பிற் பாடின்மையால், பிரகாசத்துக்கு விடயமாயிருத்தல் பிரகாசத்தைச் 
செய்தலென்பது பொருத்தமற்ற தென்பதாம்.

    (உரை)  ஆன்மா பிரதி பிம்ப ரூபமாயிருந்தால் அதற்கு விடயத்தன்மையும் போக்கியத்தன்மையு 
மிருக்கவேண்டும். அதை விடயமாகக் கொண்டிருத்தலால் புத்திபோதத்துக்குப் போக்திருத்தன்மையும் 
நிகழ வேண்டும். அவ்வாறு நீங்கள் கொள்ளவில்லை யாதலால் புத்தியால் விடயமாகச் செய்யப்பட்டுப் 
புருடனறியப்படுகின்றானென்று கூறுவது பொருத்தமற்றது.(104)

(105)     (அன்றியும்) புத்தி போதத்திற்கு ஆன்மா விடயமாயின், ஆன்மாவிற்குப் போக்கியத்தன்மையும், 
அதுபற்றிப் பரிணாமித் தன்மையும் வந்துவிடும், இதற்கு விபரீதமாகப் புத்திக்குப் போக்திருத்தன்மையும் 
பரிணாம மின்மையுமிருத்தல் வேண்டும். ஆகவே உன் மதத்துக்கு விரோதப்படுமென்பதாம்.

    (உரை ) இவ்வாறு ஆன்மா புத்திக்கு விடயமாயின் போக்கியமா யிருத்தலால், விடயங்களுக்குப்போல் 
பரிணாமித்தன்மை ஆன்மாவிற்கு நேரிடும், புத்திக்கு ஆன்மாவை யறியுந் தன்மை யிருப்பது கொண்டு 
போக்திருத்தன்மை யிருத்தலால் நித்தியத் தன்மை உண்டென்று கொள்ளவரும். ஆகவே உன்னுடைய 
கொள்கையானது உன் மதத்திற்கு விரோதமாகும். ஆகையால் போக்தாவின் போதம் வேறு விதமாகப் 
பொருந்தாமையால் புருடன் புத்திக்கு விடயமாகாமலிருந்து கொண்டே தனது ஞானத்தாலறியப் 
படுகிறானென்று கொள்ள வேண்டும். 

    இவ்வாறாயின் முன்னர்ப் போக காரிகையில் * ''குண தத்துவம் பிரகிருதி புருடன் ஆகிய இவர்கள் 
விடயமான அறிவே சித்தி" யென்று கூறியிருத்தலால், சித்தி முதலிய புத்தி போதத்தால் புருடன் அறியப் படுபவனாகக் 
கூறப்பட்டதேயெனில், அவ்வாறு கூறப்படவில்லை. அவ்விடத்தில் அறிவிப்பவனாகவே கூறப்பட்டிருக்கின்றது 
எவ்வாறெனில், "அப்பொழுது அறிபவனுடைய சொரூபத்தில் இருப்பு” என்னும் வாக்கியத்தால் குணதத்துவம், 
பிரகிருதி யென்னுமிவற்றை விடயமாகவுடைய புத்தி போதத்தில் மிகவுந் தனிமையாயிருக்கும் புருடன் 
அதனையறிவித்துக் கொண்டு தானே பிரகாசிக்கின்றான் என்று கூறப்பட்டிருக்குமாறு காண்க.    (105)

* போககாரிகை, 6.  60

     (அ-கை) இது நிற்க. சூரியன் முதலாயினாரைப் புத்திக்கு விடயமாகக் கொண்டு அறியுமாறு 
போல் ஈசுவரனைப் புத்திக்கு விடயமாகக் கொண்டே அறிய வேண்டு மென்பார்க்கு அவ்வாறு சம்பவியா 
தாகையால் அது பொருந்தாதெனக் கூறுகின்றார்

(106)     போத ரூபமான அந்தக் கரணத்தின் றொழிலானது விலங்கு முதலியன போல் பாசமா 
யிருக்கின்றமையால் மகேசுவரனை யறிவிப்பதற்குஉரிமையுடையதாக ஆகாது. அளவற்ற ஈசுவரனுக்கு 
அளவுடைய புத்தியில் பிரதி பிம்பமானது கத்தியில் சூரியனுக்குப் போல் பொருத்தமற்றது. ஈசுவரனுடைய 
அம்சத்துக்குப் பிரதி பிம்பமெனின், அது மயக்கமே யாகு மென்பதாம்.

    (உரை) நன்மையை வெகு தூரத்திலிருந்தே தடுப்பது எதுவோ அதுவே பாசமாகும். அப்பாசத்தின் 
தன்மையானது புத்தி முதலியவற்றிற்கிருக்கின்றது.  ஆகையால் சிவ ரூபமான மேலான பரமுத்தியைப் 
புத்தி போதமெவ்வாறு அறிவிக்கும்.  புத்தி பாசமாயிருத்தலால் அளவிடுதற்கு முடியுமாறு விளங்கும்.
ஈசுவரனோ திக்குக்கால முதலியவற்றால் அளவிடப்படாதவன். கத்தி முதலியவற்றில் சூரியன் 
முதலாயினாருடைய பிரதிபிம்பம் கூடாதவாறுபோல், அத்தகைய ஈசுவரனுடைய பிரதிபிம்பம் 
புத்தியில் விளங்குமென்பது எவ்வாறு கூடும்?  ஈசுவரனுடைய ஏகதேசமானது பிரதிபிம்பிக்கிறதென்று 
கொள்வோமெனில், அது மயக்கமேயாகும். எதனாலெனின், பகவான் அவயவமில்லா தவனாகையால் 
ஏக தேசமாய்ப் பிரதி பிம்பிப்பனென்பது பொருந்தா தாதலினென்க. இதே விடயமானது எம்மால் 
பிறிதொரு இடத்திலும் கூறப்பட்டிருக்கின்றது (106)

(107-108)     (அன்றியும்) தகிக்கப்படுவது, தோல்வி யடையப்படுவது என்னுந் தருமங்களையுடைய பாசங்கள், 
தகித்தல் தோல்வியடையச் செய்தல் என்னும் இவற்றைச் செய்யும் ஈசுவரனை அறிவிக்கமாட்டா. 
தகிக்கப்படும் விறகுகளால் தகித்தலைச் செய்யும் அக்கினியானது அறியப்படுகிறதில்லை. தோல்வியடையப் 
படுங்கொள்ளிக் கட்டைகளால் சூரியன் தோல்வியடைகிறதில்லை யென்பதாம்.

    (உரை ) தகிக்கப்படுவதும், தோல்வியடையப் படுவதுமாகிய விறகு முதலியன, தகித்தல் 
தோல்வியடைதலென்னுமிவற்றைச் செய்யும் அக்கினி முதலியவற்றின் பிரதிபிம்பத்தை யேற்று அந்த 
அக்கினி முதலியவற்றிற்குப் பிரகாசத்தைச் செய்கிறதாகக் காணப்படவில்லை. புத்தியானது பகவானால் 
அறியப்படுவதாயும் தோல்வியடையப் படுவதாயுமிருக்கின்றது. ஆகையால் அந்தப் புத்தி 
ஈசுவரனை யறிவிக்காது (107-108)

    (அ-கை) நாசஞ்செய்யப் படுவனவாயினும், கண்ணாடி முதலியன பிரதிபிம்பத்தை யேற்றுப் 
பிரகாசத்தைச் செய்கின்றன. ஆகையால் இவ்விடத்தில் நீ சொன்ன யுத்திக்குக் குற்றமில்லை யென்பதை 
மனதில் வைத்துக்கொண்டு ஆகம விரோதம் நேரிடுமென்று கூறுகின்றார்.

(109-109இ)     சிவசத்தியால் விளக்கஞ் செய்யப்பட்ட ஞானசத்தியை யுடையவனாயும், அதுபற்றிச் 
சுத்தனாயுமிருக்கும் ஆன்மாவால், சிவபெருமான் தியானஞ் செய்யப்படுபவரென்று இரெளரவ             
சூத்திரக்கார் எமக்குக் கூறிப், பரமேசுவரர் பாசங்களுக்கு விடயமாகாரென்பதை யறிவித்துள்ளாரென்பதாம்.

    (உரை ) சிவசத்தியினால் விளங்கப்பட்ட நின்மலமான ஞான சத்தியைக் கொண்டே தீக்ஷை 
பெற்றவரால் சிவன் தியானஞ் செய்யப்படுகின்றானென்று இரௌரவ சூத்திரக்காரர் கூறியுள்ளார். 
 பகவான் புத்தியினால் தியானஞ் செய்யப்படுபவரென்று அவர் கூறவில்லை. அவர் கூற்று வருமாறு:-
"சாதகர்களுடைய சுத்தமான இந்த * ஆன்ம தத்துவமானது சிவ சத்தியால் விளங்கினதாகவும், 
எல்லா மலங்களினின்றும் விடுபட்டதாகவும் கூறப்பட்டது. அந்தச் சிவசத்தி கலையிலிருந்து கொண்டு 
அக்கலையில் ஒடுங்கிய தனது சொரூபத்தால் அக்கலையை வித்துவான் சிந்திக்க வேண்டும்” என்றவாறாம் (109-109இ)

(110)     (ஆகவே) அணுக்களைப் பந்திக்கின்றவைகளால் சிவன் தியானஞ் செய்யப்படுபவனாகவாவது, 
அறியப்படுபவனாகவாவது ஆகின்றானில்லை யென்பதாம்.

*ஆன்ம தத்துவமென்பது ஆன்மாவென்னும் பொருள் குறித்தது.

    (உரை) ஆகவே தீக்ஷிதர்கள் சிவனைப் புத்தி முதலியவற்றால் அறிவதற்கும், புத்தி முதலியவற்றிலிருத்தித் 
தியானிப்பதற்கும் முடியாவென்க. (110)

    (அ-கை) ஆயின் சிவன் எவ்வாறு அறியப்படுவன் என்பார்க்குக் கூறுகின்றார். 

(111 )     மறைப்பு நீங்கிய ஆன்மாவானது, சிவசூரியனது சத்தியாகிய கிரணத்தால் விளங்கப்பட்ட 
அறிவாகிய கண்ணைக் கொண்டு, சத்தி முதலியவையுடன் கூடின சிவனையறிகின்ற தென்பதாம்.

    (உரை) சூரியகிரணத்துடன் கூடிய கண்ணால் உயிர்கள் சூரியனை யறிகின்றவாறுபோல, 
பரமேசுவரருடைய அருளால் மறைப்பு நீங்கினதாயும் விளக்கம் அடைந்ததாயுமுள்ள ஞான சத்தியைக் 
கொண்டே, பரமேசுவரரால் அநுக்கிரகிக்கப்பட்டவர்களாயும் ஞான நிஷ்டர்களாயுமுள்ள பக்தர்கள் 
பரமேசுவரனை யறிகின்றனர். குடம் முதலியவற்றைப் போல் ஈசுவரனைச் செயப் படுபொருளாக 
அறிகின்றார்களாவெனில், அறிபவன் அறியப்படுபவனாகிய இருவரும் வியாபகர்களா யிருக்கின்றமையால் 
அவ்வா றறிதல்  கூடாமையின் செயப்படு பொருளாக அறியவில்லையென்க.    (111)

(112)     (இவ்வாறே) பாசங்களால் அறியமுடியாத சிவனிடத்தில் யோக முதலிய சாதனங்களின் 
றொழிலாலும், சத்தத்தாலும், சகல வருக்கத்து உயிர்கட்குச் சிவனைப்பற்றிய ஞானம் உண்டாகின்றது. 
அது எவ்வாறு உண்டாகுமென்பதாம் . 

    (உரை) பகவான் பாசங்களுக்கு விடயமாகா தவனென்று கூறின், பகவானைச் சாத்திரத்தாலறிதல் 
தீக்ஷை பெற்றவர்கட்கு எவ்வாறு பொருந்தும். சத்தமானது ஆகாசம் வாயுவென்னுமிவற்றை ஏதுவாகக் 
கொண்டிருத்தலால் பாசமாயிருக்கின்றது. ஆகையால் அத்தகைய சத்தத்தினின்றும் (ஆகமத்தினின்றும்) 
பகவானைப் பற்றிய அறிவு எவ்வாறுண்டாகும். (112)

    (அ-கை)  இதற்கு விடைகூறுகின்றார்.

(113)     மந்திர தந்திர ரூபமான சத்தங்களிலும், கலைகளிலும், சிவன் தோன்றி ஞானமாகிய கண்ணை 
யுண்டுபண்ணுகின்றார். ஆகையால் சிறிதும் விரோதமில்லை யென்பதாம்.

    (உரை) பகவானானவர் எவ்விடத்தும் எக்காலத்தும் அதிட்டித்திருத்தலால் அவர் எல்லாவற்றுடனும் 
கூடினவராகவேயிருக்கின்றார். லிங்கங்களிடத்தும், மண்டலங்களிடத்தும், ஆசிரியர்களிடத்தும், விசேடமாய் 
விளங்கித் தோன்றுபவராகக் கூறப்படுகின்றார். அதுகொண்டே பூசை நமஸ்காரம் முதலியன, லிங்கம்,
மண்டலம், ஆசிரியரென்னும் இவ்விடத்துச் செய்யப்பட்டு, செய்கிறவர்களுக்குப் பலனை யுண்டுபண்ணுவதற்குக் 
காரணங்களாக ஆகின்றன. இவ்விடங்களிலன்றி வேறிடங்களிற் செய்யப்பட்டுப் பலனை யுண்டுபண்ணுதற்குக் 
காரணங்களாக ஆவனவல்ல. இவ்வாறே “பாசரூபமான தூலமாகிய மந்திர தந்திர ரூபமாயுள்ள சத்தத்திலும், 
நாதம் விந்து முதலிய கலைகளிலும், பகவான் தோன்றி அறிவை யுண்டுபண்ணிப் புருடர்கட்குத் தன்னைக் 
காட்டுகின்றார். ஆகையால் மந்திரங்களுக்கு உண்டான இந்த அறிவிக்குந் தன்மையானது கடமுதலியவற்றை 
அறிவிக்குஞ் சத்தங்களினும் வேறாகவே யிருக்கின்றது'' என்று எம்மால் மந்திரவார்த்திகடீகையில் 
கூறப்பட்டிருக்கின்றது. (113) 

(114)     (எவ்வாறெனில்) உயிர்களைப் பந்திக்கும் சத்தமுதலியவற்றில், பந்தத்தைச் செய்தலினும் 
வேறான காரியத்தால் சிவன் தோன்றி விளங்குவதாக அறியப்படுகின்றான். சரீரத்தில் தேவதை 
தோன்றி யறியப்படுமாறு போலென்பதாம்.

    (உரை) மனிதர்களுள் சிலருடைய சரீரமானது தேவதைகளா லதிட்டிக்கப்பட்டதென்பது, 
மூன்று காலங்களிலுமுள்ள பொருள்களை அறிவிப்பதால் குற்றமின்றி யறியப்படுகின்றது. அவ்வாறே 
மந்திர சத்தங்களை உச்சரித்தலாலும், எழுத்து ரூபமான அக்கரங்களின் நியாசத்தாலும், சத்தத்தினால் 
மந்திரம் சம்பவிக்கக்கூடாத வசியம் முதலிய வேறு வேறான காரியங்கள் காண்டலால், ஈசுவரர் 
பிரதிமை முதலியவற்றில் தோன்றுமாறு போல் மந்திர சத்த முதலியவற்றிலும் தோன்றுகிறாரென்பது 
அறியப்படுகின்றது (114)

    (அ-கை.) இவ்விடத்தில் ஓர் பூர்வபக்கத்தைக் கூறுகின்றார். 

(115)     அணுக்களைப் பந்திக்கும் பிரகாசமற்ற யாவற்றிலும் தன்னையும் பிறபொருளையும் 
பிரகாசிக்கச்செய்யும் ஈசுவரன் தோன்றுகிறார். இது எவ்வாறு பொருந்துமென்பதாம்.

    (உரை) சடப்பொருளில் (சிவமாகிய) சித்து ரூபத்தின் தோற்றம் பொருந்தாதென்பது பொருள் (115)

    (அ-கை.) சடத்தில் சித்தின் தோற்றம் குற்றமாகா தெனக் கூறுகின்றார்.

(116)     எரிக்கப்படுந் தயிலம் முதலியவற்றில் எரிக்குந் தீபம் தோன்றுமாறுபோல, சித்தாகிய 
ஆன்மாக்களின் உபகாரத்திற்காக, பிரகாசமற்ற பிரதிமை முதலியவற்றில் தன்னையும் பிற பொருளையும் 
பிரகாசிக்கச்செய்யும் ஈசுவரன் தோன்றுகிறார் என்பதாம்.

    (உரை) தீப உவமையை இவ்விடத்தில் உபலக்கணமாக வைத்துக்கொள்ளவேண்டும்.  ஆகவே, 
சடமான மனிதர் முதலியவர்களின் சரீரத்தில், தன்னையும் பிற பொருளையும் பிரகாசிக்கச் செய்கிறதாயும் 
வியாபகமாயுமிருக்கும் ஆன்மாவானது, அறிவுடைய இந்த மனிதர் முதலியவர்களின் உபகாரத்திற்காகக் 
கன்மத்திற்கேற்றவாறு தோன்றுமாறு போல, பரமேசுவரர் பிரதிமை முதலியவற்றிலும், சித்திரம் 
முதலியவற்றிலும், மந்திர சத்தங்களிலும், பசுக்களின் உபகாரத்திற்காக விசேடமாய் விளங்கித் 
தோன்றுகின்றார். ஆகையால் பிரகாசமற்றவைகளில் சிவன் எவ்வாறு தோன்ற முடியும் என்று 
கூறலாகாது. தீக்ஷை பெற்றவர்களுக்கு இவ்வாறான ஞானத்தால் இந்தப்பாசம் நசிக்கின்றது. (116)

    (அ-கை.) தீக்ஷை பெற்றவர் சிவசாமியத்தை யெப்பொழுது அடைகின்றனர் என்பார்க்குக் கூறுகின்றார் 

(116இ)    ஆசிரியரும் தீக்ஷைபெற்றவரும் சரீரம் நசிக்குங் காலத்தில் சிவசாமியத்தை யடைகின்றன ரென்பதாம்.

    (உரை) பிராரத்தமல்லாத சஞ்சித ஆகாமிய கன்மங்கட்குத் தீக்ஷையினால் நாசமேற்படுகின்றது. 
பிராரத்த கன்மத்திற்குத் தீக்ஷையினால் நாசமேற்படுவதில்லை. இவ்வாறே "தீக்ஷை பெற்றவர்கள் சரீரம் 
நாசமாகுங் காலத்தில் சாந்தமாயும் மேலானதாயு மிருக்குந் தானத்தை யடைகின்றனர்” என்று கூறப்பட்டிருக்கின்றது. 
பிராரத்த கன்மத்திற்குச் சத்தியோ நிர்வாண தீக்ஷையினாற்றான் நாசமேற்படும். அவ்வித தீக்ஷை பெற்றவனுக்குப் 
போகத்தால் நாசமில்லையென்க.  (116இ)

(117)     அவ்வாறே போகானுபவத்தின் முடிவில் சாதகன் நிச்சயமாகச் சித்தியை யடைவனென்பதாம். 

    (உரை.) அவ்வாறே பெரியோர்களும் "அநேகந் தேவப் பெண்களுடன் கூடி வெகுகாலம் போகங்களை 
யனுபவித்த பின்னர் விருப்பம் நீங்கிச் சிவபதமான மேலான ஐசுவரியத்தையடைகின்றனர்'' என்று கூறுகின்றனர். 
இவ்வாறு சாதனத்துடன் கூடிய மோக்ஷங் கூறப்பட்டது ( 117)

    (அ-கை.) இனி இந்த மோக்ஷத்தை நிர்ணயிக்கும் முறையில் பிறருடைய மோக்ஷங்களை விலக்க 
எண்ணி அவற்றுள் மாவிரதரின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றார்.

(118)     சித்தர்கள் சிவசாமியத்தை யடைகின்றனரென்று கூறின் காரணர்கள் அநேகராவர். 
ஆகவே அவர்களனைவரும் சமமான அறிவையடையாதவர்க ளாகையால் காரியங்களுண்டாகா வென்பதாம்.

    (உரை) ஈசுவரனுக்குப் போல் முத்தர்களுக்கும் சர்வ கருத்திருத்தன்மையிருப்பின் அந்த முத்தர்கள் 
வேறு வேறான அறிவையுடையவர்களா யிருத்தலால், இது புதிதாக இருக்கட்டும் இது பழையதாக இருக்கட்டும் 
என்னும் வேறுபாடுபற்றி ஒரு காரியமும் உண்டாகாமற் போய்விடும். ஆகையால் முத்தர்களுக்குச் சர்வஞ்ஞத் 
தன்மை மாத்திரமுண்டு. சர்வகருத்திருத் தன்மை பரமேசுவரனுக்குத்தானுண்டு என்று ஒப்புக்கொள்ளல் வேண்டும். (118)

    (அ-கை.) இது ஒரு குறையாகாதென்று கூறுகின்றார். 

(119)     மனிதர்கள் விருப்பு வெறுப்புக்களுடன் கூடியிருத்தலால் அவர்களுக்குச் சமமான ஞானமில்லை. 
சித்தர்களுக்கோ சமமான ஞானமிருக்கின்றது. ஆகையால் சமமான ஞானமின்மையால் நிகழக்கூடிய 
வெவ்வேறான இச்சையானது அவர்களுக்குக் கிடையாதென்பதாம். 

     (உரை) பசுக்கள் விருப்பு முதலியவற்றுடன் கூடியிருத்தலால் அவர்களிடத்தில் வேறுவேறான 
இச்சையிருக்கின்றது. அதனால் அவர்களுக்குக் கொள்கையின் பேதமேற்படுகிறதென்பது பொருந்தும். (119)

    (அ-கை) சித்தர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

(120-121)     சித்தர்களுக்கு விருப்பு முதலிய குற்றங்கள் கிடையா. அவர்களுடைய ஞானம் எல்லாவற்றையும்
 அறியும்.  ஆகையால் அவர்களுக்கு வேறு வேறான இச்சைகள் கிடையா.  சித்தர்களைச் சிவனுடன் சமமான 
அதிகாரத்தை யுடையவர்களாக வித்துவான்கள் கூறுகின்றனர். ஆகையால் ஒரு காரியமும் உண்டாகாதென்று 
சொல்லக்கூடாதென்பதாம். 

    (உரை) சித்தர்களாயிருக்கின்றமையால் விருப்பு முதலியன இல்லாதவர்களாயும், முறையாக எல்லா
விடயங்களையும் அறிந்தவர்களாயும், சர்வகருத்திருத் தன்மையுடன் கூடியிருத்தலால் சிவனுடன் சமமான
 அதிகாரத்தை யுடையவர்களாயும் இருக்கின்றனர். ஆகையால் அவர்களுக்கு ஒருவரிடத்தும் விருப்பு வெறுப்பு 
ஏற்படாவாகையால் அபிப்பிராயபேதங் கிடையாது. ஆகையால் ஒரு காரியமும் உண்டாகாதென்ற குறை 
இவ்விடத்தி லில்லை யென்க. (120-121) 

    (அ-கை) மகாவிரதரின் மதத்தில் முத்தி சித்திக்காதென்று கூறுகின்றார்.

(122)     சர்வ கருத்திருத்தன்மை முத்தனுக்கு இல்லையாயின் அவன் சர்வஞ்ஞனாவனென்பது உண்மையன்று. 
சர்வ கருத்திருத் தன்மையில்லாத குறையால் பசுவானது எவ்வாறு சர்வஞ்ஞனாகமாட்டாதோ அவ்வாறே 
முத்தன் சர்வஞ்ஞனாகமாட்டான் என்பதாம்.

    (உரை) பரிபூரணமாயிருப்பதே முத்தியாகும். முத்தனுக்குச் சர்வகருத்திருத் தன்மையில்லையாயின் 
சர்வஞ்ஞத் தன்மையும் பசுவுக்குப்போல் இல்லையாதல் வேண்டும் ( 122)

(123)     ** சித்தின் தோற்றமிருத்தலால் ஈசுவரனுக்குச் சர்வ கருத்திருத்தன்மை யிருக்கின்றதென்று 
எவ்வாறு கொள்கின்றோமோ, அவ்வாறே சித்தர்களுக்கும் சித்தின்றோற்றமிருத்தலால் சர்வகருத்திருத் 
தன்மையுண்டு. இன்றேல் சித்தனுக்குப் போல் ஈசுவரனுக்கும். சர்வகருத்திருத் தன்மையில்லையாதல் 
வேண்டும் என்பதாம்.

**சித்தின் தோற்றமென்பது சருவஞ்ஞத்தன்மை.

    (உரை) சித்தின் தோற்றத்தால் ஈசுவரனுக்குச் சர்வகருத் திருத்தன்மையிருப்பதுபோல் சித்தருக்கு 
மிருக்கின்றது. இல்லையென்று கூறின் ஈசுவரனுக்கும் சர்வ கருத்திருத்தன்மை யில்லையென்றாகும். 
ஆகவே உலகம் உண்டாகாது. (123)

( 123 இ)     (அன்றியும்) கருத்தாவின் ஞானக்கிரியா ரூபமான சத்தியில் ஞானாம்சத்திற்குத் தோற்றமும் 
கிரியாம்சத்திற்குத் தோற்றமின்மையும் கூறுவது யுத்திக்குப் பொருத்தமில்லை யென்பதாம். 

     (உரை) அந்தச் சத்தியானது ஞானக்கிரியாரூபமாக ஒன்றாகவே யிருக்கின்றதென்று முன்னரே 
கூறப்பட்டிருக்கின்றது. அத்தகைய சத்திக்கு ஞானாம்சத்தில் தோற்றமும் கிரியாம்சத்தில் தோற்றமின்மையும் 
ஒப்புக்கொள்ளக்கூடாது. எதனாலெனின் அவயவமற்றிருத்தலாலென்க. ஈசுவரனுக்குச் சித்தின் தோற்ற 
மிருத்தலால் சர்வகருத்திருத் தன்மை உண்டென்று எவ்வாறு கொள்கின்றோமோ, அவ்வாறே சித்தர்களுக்கும் 
சித்தின் தோற்ற மிருத்தலால் சர்வகருத்திருத் தன்மை யிருக்கின்றதென்று கூறிய நுமது கூற்று, வித்தியேசுவரர்கள் 
விடயத்தில் பொருந்தாது; அவர்களிடம் சித்தின் தோற்றமிருந்தும் சர்வகருத்திருத்தன்மை காணாமையால் 
என்று அவர் கூறுவராயின், அது பொருந்தாது. எதனாலெனின், அவர்களுடைய சிற்சத்திக்கு எப்பொழுதும் 
தோற்றமில்லாமையாலென்க (123இ)

    (அ-கை) இனி, புருடர்கட்குக் கருத்திருத்தன்மை முன்னருமில்லையெனச் சாங்கியர்போற் 
கூறுவையாயின் அதுவும் பொருந்தாதெனக் கூறுகின்றார்.

(124இ)     சித்தருக்குச் சருவ கருத்திருத் தன்மை உண்டென்று போககாரிகையில் முன்னர்ச் சாதிக்கப் 
பட்டிருக்கின்றது. கருத்திருத்தன்மை யில்லையென்று கூறுவையாயின் நிட்களனான முத்தன் 
எல்லாவற்றையும் அறியும் ஞானக்கிரியா சத்திகளற்ற பசுவாக ஆய்விடுவன் என்பதாம்.

    (உரை) முன்னர்ப் போக காரிகையில் சித்தருக்குக் கருத் திருத்தன்மை உண்டென்று 
சாதிக்கப்பட்டிருக்கின்றது. சத்தி ஒன்றாகையால் அந்தக் கருத்திருத் தன்மைக்குத் தோற்றமில்லையாயின்
ஞான சத்தியும் தோன்றாதிருக்க வேண்டும். ஆகவே, எல்லாவற்றையும் விடயமாகக் கொள்ளும் 
ஞானக்கிரியா சத்திகளின்மையால் முத்தன் பசுவாகவே ஆய்விடுவன் .. (124இ)

    (அ--கை) இவ்விடத்தில் பிறருடைய  கொள்கையைக் கூறுகின்றார்.

(125இ)      சித்தனிடமுள்ள ஞான சக்திக்கு எவ்வாறு தோற்றமிருக்கின்றதோ, அவ்வாறு கருத்திரு 
சக்திக்குந் தோற்றமுண்டு. ஆனால் சருவகருத்தா இருக்கின்றானென்றெண்ணிச் சித்தன் செய்ய 
வேண்டியவற்றைச் செய்யாம லிருக்கின்றானென்பதாம்.

    (உரை ) சித்தனிடத்துள்ள கருத்திருத் தன்மை ஞானம் போலன்று. எங்கும் சருவ கருத்தா 
இருக்கின்றமையால் நாம் எதற்காக அதிகமாகச் செய்யவேண்டுமென்றெண்ணிச் செய்ய வேண்டியவற்றைச் 
செய்யாமலிருக்கின்றான். (125இ)

    (அ-கை) இதனை மறுக்கின்றார்.

(126இ)     சித்தனிடத்துள்ள சருவ கருத்திருத் தன்மையானது எல்லாக் காரியங்களையும் செய்யவில்லை
யென்பையாயின் சித்தனிடத்து விளங்கித் தோன்றும் கருத்திருத்தன்மைக்கும் பசுவினிடத்து விளங்கித் 
தோன்றாதிருக்கும் கருத்திருத்தன்மைக்கும் விசேடம் யாதென்பதாம்.

    (உரை) சித்தனிடத்திலிருக்கும் கருத்திருத்தன்மை விளக்கமாயிருந்தும் காரியத்தைச் செய்கிறதில்லை 
என்பையாயின், பசுவினிடமிருக்கும் விளக்கமில்லாத கருத்திருத்தன்மையினும் சித்தனிடத்துள்ள 
கருத்திருத்தன்மைக்கு விசேடம் யாதென்று கூறுவாயாக. (126இ)

    (அ-கை) இதனை விளக்கிக் காட்டுகின்றார்

(127இ )     எல்லாக் காரியங்களையும் செய்வதற்காக உண்டான தொழிற்பாடு விளக்கமெனப்படும். 
கிரியைக்கு விளக்கமென்பது, இதனினும் வேறாகக் கிடையாது. எல்லாவற்றையும் அறியும்பொருட்டுண்டான 
ஞானம், ஞானத்துக்கு விளக்கமெனப்படும் என்பதாம்.

    (உரை)  பசுவினிடத்துள்ள கருத்திருத்தன்மையினும் சித்தனிடத்துள்ள கருத்திருத்தன்மைக்கு 
விசேடமாவது, சித்தனிடத்துள்ள ஞானசக்தி போல் கருத்திரு சக்தியும் எவ்விடத்தும் தொழிற்பாடுடைமையேயாம். (127இ)

(128இ)     (இவ்வாறே) கிரியா சத்தியானது எல்லாக் காரியங்களையும் செய்கிறதாகக் கொள். அல்லது 
கிரியா சத்தியே இல்லையென்றாவது கொள். அல்லது ஞான சத்தியின் விளக்க மின்மையே மோக்ஷமென்றாவது 
கொள். அல்லது மோக்ஷமற்ற பரமசிவனிடத்துக் குற்றத்தையாவது கொள் என்பதாம்.

    (உரை ) சித்தனது கிரியா சத்தி விளக்கமாயிருக்கின்றதென்று கொள்ளின், அதனை எல்லாக் 
காரியங்களையுஞ் செய்வதாகவே ஒப்புக்கொள்ள வேண்டும். விளக்கமாயிருப்பினும் காரியத்தைச் 
செய்கிறதில்லையென்று கொள்ளின், பிரதி பிம்பத்திற்குள் உயிர்ச் சத்தியில்லாதவாறுபோல் 
கிரியா சத்தியில்லை யென்றே சொல்லல் வேண்டும். கிரியா சத்தி விளங்கித் தோன்றவில்லை 
யென்று கொள்ளின், ஞானக்கிரியா சக்திகள் ஒன்றாகையால் ஞானசத்தியின் விளக்கமின்மை 
மோக்ஷமென்று சொல்லல் வேண்டும். கிரியா சத்தி விளங்காமலிருந்தும், ஞான சத்தி விளங்கித் 
தோன்றுகின்றதெனில், இடையே மோக்ஷமடையாத பரமசிவன் சர்வஞ்ஞனா யிருக்கின்றமையால் 
முத்தனிடத்துப்போல் அவனிடத்தில் கருத்திருத் தன்மையில்லை யென்னுங் குறையைக் கொள்ளல் 
வேண்டும். இவ்வாறான பக்கம் நான்கனுள் யாதானுமொன்றைக் கொள்ளல் வேண்டும். இவ்விடத்து 
முதலாவது பக்கத்தில் ஒரு குறையுமில்லை. ஆகையால் சர்வஞ்ஞத் தன்மை சருவகருத்திருத் தன்மை 
ரூபமான சிவ சாமியத்தையே முத்தியாக ஒப்புக்கொள்ளல் வேண்டுமென்க. (128இ) 

    (அ-கை) இனி, சங்கிராந்தியைக் கூறும் பாசுபதர்கள் முத்தியில் ஈசுவரகுணங்கள் உயிரினிடத்து 
வந்து கூடுகின்றமை பற்றிச் சித்தர்களுக்குச் சிவசாமியமுண்டென்று கூறுகின்றமையால் அது 
பொருந்தாதெனக் கூறுகின்றார். 

(129இ)     சித்தனிடத்தில் ஈசுவர குணங்கள் வந்து கூடுகின்றன என்று கொள்ளின், ஈசுவரன் அநீசுவரத் 
தன்மையுள்ளவனாக ஆவன். குணங்களின் அம்சம் வந்து கூடுகின்றதெனக் கொள்ளின், குணம் 
அவயவத்துடன் கூடினதாக ஆகும் என்பதாம்.

    (உரை) சித்தனிடத்து ஈசுவர குணங்கள்தான் வந்து கூடுகின்றன என்று கொள்ளின், 
ஈசுவரன் சர்வஞ்ஞத் தன்மை முதலிய குணங்கள் இல்லாதவனாக ஆவன். குணங்கள் அவயவங்க
ளற்றிருத்தலால் குணங்களின் ஏகதேசம் வந்து கூடுகின்றன வென்பதும் பொருந்தாது. (129இ)

(130இ)     (அன்றியும்) குணங்கள் தனது குணியைவிட்டு நீங்க வேறு குணியை யடையாது. அடைகிறதென்னும் 
இந்த முடிவானது உலகில் வழங்கும் பொருள்களில் விரோதப்படுகின்றது என்பதாம்.

    (உரை) குணங்கள் தமது குணியை விட்டு நீங்கி வேறு குணியை அடைகின்றன என்று ஒப்புக் 
கொள்ளுமிடத்தில் எல்லாப் பொருளும் எல்லாக் குணங்களையும் உடையனவாக ஆகிவிடும் ஆகவே, 
பிரித்தறியப்பட்ட நியமம் பொருந்தாது. முத்தன் பெத்தனாகவும் பெத்தன் முத்தனாகவும் ஆகிவிடுவன். 
ஆகையால் குணங்களின் சங்கிராந்தி (வந்து கூடுதல்) பொருந்தாமைபற்றி அதுகொண்டு சிவசாமியத்தை 
யொப்புக்கொள்ளலாகாது. (130இ)

    (அ-கை) வேதாந்திகள் ஆன்மா பரமசிவனிடத் தொடுங்குதலால் சிவசாமிய ரூபமான முத்தியைக் 
கூறுகின்றனர் ; அதுவும் பொருந்தாதெனக் கூறுகின்றார்.

(131இ)     எவ்வாறு பரமசிவன் முன்னர்க் கூறப்பட்ட குறையை யுடையவனாக இருக்கின்றானோ அவ்வாறே 
அவனிடம் ஒடுக்கமடைந்த சித்தனும் குற்றமுடையவனாக ஆவன். எதனா லெனில், சித்தன் சிவனை விட 
வேறாயில்லாமையாலென்பதாம்.

    (உரை) பரமசிவனை *உபாதான காரணமாகக் கொண்டால் அவனுக்கு அசேதனத்தன்மை முதலிய 
குறைகள்  நேரிடுமென்று  **முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. சித்தர்கள் பரமசிவனிடத்து ஒடுக்கத்தை 
யடைகின்றனரென்று கூறின், பரமசிவன் உபாதான காரணமாக ஆவன். எதனாலெனின், உபாதானங்களிற்றான் 
ஒடுக்கம் ஏற்படுமாகையாலென்க. ஆகவே உபாதான காரணமான ஈசுவரனுக்கு  அசேதனத் தன்மை முதலிய 
குறைகள் ஏற்படுமாறுபோல, ஈசுவரனின்றும் வேற்றுமையில்லாத சித்தருக்கும் அசேதனத்தன்மை முதலிய 
குறைகள் நேரும். ஆகையால் உங்களுடைய மோக்ஷம் அத்துவிதமேயாகும்  (131இ)

* உபாதானம் - முதல் . ** சுலோகம் 22

(132இ)     (அன்றியும்) ஒன்றாயிருக்கும் தன்மையை அறிதலே முத்திக்குச் சாதனமென்று கூறிய நுமது கூற்று, 
தன் சொரூபத்தினாலேயே மறுக்கப்பட்டிருக்கின்றது. எதனாலெனின் விடுவிக்கப் படுகிறவன் விடுவிக்கிறவனென்னும் 
இவர்களுக்கு அபேதத்தன்மை இருக்கின்றமைபற்றி முத்தியே யுண்டாகிறதில்லை யாகையாலென்பதாம்.

    (உரை) * சசாதீய **விசாதீய பேதமற்ற பிரமம் ஒன்றே உண்மை. ஆகையால் பிரம ஞானமே 
முத்திக்குச் சாதனமென்று கூறும் இந்தக் கூற்று என்னுடைய தாயார் மலடியென்ற கூற்றுப் போல் தன் 
கூற்றாலேயே மறுக்கப்படுவதாயிருக்கின்றது. ஒன்றென்று கொள்ளுமிடத்தில் சாத்திய சாதனத் 
தன்மை சித்திக்கிறதில்லை. அவற்றைக் கொள்ளுமிடத்தில் அநேகத்தன்மை சித்திக்கின்றமையால் 
(ஒன்றென்பது பொருந்தாது.) (132 இ)

(133இ)     (அன்றியும்) பிரமாணமானது பிரமேயத்தினும் வேறாக இருந்தாற்றான் பிரவிருத்தியேற்படும். 
இன்றேல் ஏற்படாது.  பிரமாணமற்ற அபேதம் அறிவாளர்களால் எதற்காகக் கூறப்படல் வேண்டுமென்பதாம்.

    (உரை) பிரமம் ஒன்றே உண்மையென்பது உங்களுக்கு எந்தப் பிரமாணத்தால் சித்தித்ததோ, அந்தப் 
பிரமாணம் அசத்தியமாயின், சொப்பனத்திற் பார்க்கப்பட்டது அசத்தியமாவது போல், அசத்தியமான அந்தப் 
பிரமாணத்தால் சத்தியமான பிரமம் எவ்வாறு சித்தித்தது. குறித்த பிரமாணம் உண்மையாயின், பிரமாணம், 
அறிபவன், அறியப்படும் பொருள், அறிவு ஆகிய இவையனைத்தும் உண்மையாதலால் ஒன்றென்பது 
பொய்யாய் விடும் . ஆகவே, அதனை யடைதல் மோக்ஷமென்பது எவ்வாறு பொருந்தும்?   (133இ)

* சசாதீயம் -- சமமானது. ** விசாதீயம் -- வேற்றுமையானது.

    (அ-கை) சாங்கியர் கொள்கையைக் கூறுகின்றார் 

(134இ)     சிலர் மனதிற்கு விருப்பமான யோக பலனையும், சம்சாரத்திலுள்ள போகங்களையும் விட்டு நீங்கி, 
எவ்வாறு சைதன்னியமில்லாத கைவல்யத்தையே மோக்ஷமாகக் கூறுகின்றனரென்பதாம்.

    (உரை ) சதாசிவ சம்பந்தமான தேகமே யோகமாகும்.  அந்த யோக ரூபமான பலமாவது சர்வஞ்ஞத் 
தன்மை முதலியவற்றின் ரூபமான மோக்ஷம். அந்த மோக்ஷத்தையும், பலவிதமான விடயங்களை அறிதலையே 
பலனாக உடையனவாயும், அணிமா முதலிய எட்டு ஐசுவரியங்களால் சாதிக்கப்படுபவையாயுமிருக்கும் 
சம்சார போகங்களையும் விட்டு நீங்கிக் கைவல்லியத்தில் ஆசை கொண்டு பிரகிருதியின் பிரிவாலுண்டாம் 
ஆன்ம நாசத்திற்குச் சமமான அஞ்ஞானத் தன்மையையே தங்கட்கு மோக்ஷமாகச் சாங்கியர் கொண்டார். 
புருடார்த்தமாயில்லாத அதனிடத்தில் ஒருவருக்கும் பிரவிருத்தி பொருந்துகிறதில்லை. (134இ)

(135 இ)     (எவ்வாறெனில்) ஓ சத்துக்களே ! தனது சைதன்னியத்தை நாசஞ் செய்யும் பொருட்டு எந்த 
வித்துவான்கள் ஞானயோக அப்பியாசங்களில் முயற்சியை யிடைவிடாது செய்வார்கள் என்பதாம்.

    (உரை) எந்த வித்துவான்கள்தான் தமது ஞானத்தின் நாசத்தின் பொருட்டுத் தினந்தோறும் 
ஞானம் யோகம் முதலிய அப்பியாசங்களில் முயற்சியைச் செய்வார்கள்? (135இ)

(136 இ)     (அன்றியும்) விவேகமாவது, குணங்களும் புருடனும் வேறு வேறான தருமத்தோடு கூடியிருத்தலால் 
அவற்றின் சம்பந்தமான ஞானமாகும். ஆராய்ந்து பார்க்கில் இது பொருந்துகிறதில்லை யென்பதாம்.

    (உரை ) சாங்கியர்கள் கொண்ட குணங்களையும் புருடனையும் பகுத்தறியும் ஞானமானது, 
குணங்கள்  புருடனுக்கு விவேகத்தைக் காட்டுகின்றனவா? அல்லது புருடன் தானாகவே அறிகின்றானா 
என்று ஆராய்ந்து பார்க்கில் பொருந்துகிறதில்லை யென்க. (136இ)

(137இ)     (அவ்விரண்டனுள் முதலாவது பக்கத்தைக் கொள்ளுமிடத்தில்) குணங்கள், கருத்திருத்தன்மை
காரியங்களுடன் கலந்திருக்குந் தன்மை என்னும் தர்மங்களையுடையவையாக நாங்களிருக்கின்றோம் ; 
புருடனாகிய நீ அவ்வாறில்லை யென்று புத்தியிலிருந்துகொண்டு புருடனுக்கு அறிவிக்கின்றன.
(என்று அவர் கூறல்வேண்டும்) என்பதாம்.

    (உரை ) சிற்சத்தியானது பரிணாமத்தையடையாததாயும் கலப்பில்லாததாயும் அறிவிக்கப்பட்ட 
விடயங்களை யறிகிறதாயும், சுத்தமாயும், அளவற்றதாயுமிருக்கின்றது . ஆகவே புத்தியினால் அறிவிக்கப்பட்ட 
விடயங்களைத்தான் புருடனறிகின்றான். ஆகையால் புத்தியிலிருக்குங் குணங்கள், நாங்கள் கருத்திருத்தன்மை 
முதலிய குணங்களுடன் கூடியிருக்கின்றோம்; புருடனாகிய நீயோ அவ்வாறில்லை யென்று புருடனுக்கு 
அறிவிக்க வேண்டுவது இன்றியமையாததா யிருக்கின்றது என்பது அவர் கொள்கை. ( 137இ)

    (அ-கை) இதனால் குற்றமென்னை யென்பார்க்குக் கூறுகின்றார்

(138இ)     அவ்வாறு புருடனுக்கு அறிவிக்கப்பட்டதை யறியுந்தன்மையிருப்பின், புருடன் பொய்யை யறிபவனாவன்.
மோக்ஷமானது பொய்ஞ்ஞானத்தால் சாதிக்கப்படுவதென்பது மிகவும் பொருத்தமற்ற தென்பதாம்.

    (உரை) இவ்வாறே, புருடன் புத்தியிலிருக்குங் குணங்களைத்தான் அறிகின்றானென்று கொள்ளின், 
புத்தியானது அளவிலடங்கியதாகையால் அதில் அளவில்லாத குணங்கள் விடயமாக  ஆகா. இவ்வாறே 
நும்மவர்களும் "கபிலப் பிரமத்திற்கும் குணங்கள் பிரத்தியக்ஷமில்லை” என்று கூறுகின்றனர்.  ஆகவே, 
ஏகதேசமான குணங்கள் புத்தியிலிருக்குமென்று கொள்ளல் வேண்டும். அவ்வாறு கொண்டால் அந்த 
ஏகதேச விடயமான ஞானம் தத்துவ ஞானமாகாது. எதுபோலெனில், நீலமலை யென்பதில் ஏகதேசமான 
மலை யென்னும் பதத்தால் மாத்திரம் இமயமலையைக் கொள்ளுதல் போலுமென்க. அவ்வாறு கொள்ளுதல் 
பொய்ஞ்ஞானமேயாகும். பொய்ஞ்ஞானத்தாலோ மோக்ஷ முண்டாகாது. எதனாலெனில், பொருந்தாமையாலென்க. (138இ)

(139 இ )     இந்தக் குணங்கள் கருத்திருத்தன்மை **முதலிய தருமங்களையுடையனவாக இருக்கின்றன. நான் 
அவ்வாறில்லை யென்ற இவ்வாறான ஞானத்தைப் புருடனுக்குக் கொள்ளுமிடத்தில், புத்தியால் அறியப்பட்டதையே 
புருடனறிகின்றானென்பது கெட்டுவிடுமென்பதாம்.

**முதலிய என்பதால், காரியங்களுடன் கலந்திருத்தல் என்னும் தர்மமுங் கொள்ளத் தகுந்தது.

    (உரை) புத்தியினாலறியப்பட்ட பொருளையே புருடன் அறிவானென்று கூறும் நுமது கூற்று, 
தன்னினும் வேறாகக் குணங்களைப் புருடன் அறிகின்றானென்று கொள்ளுமிடத்தில் மறுக்கப்பட்டுப் 
போய்விடும். இதுவன்றி, புருடன் குணங்களை நேராக அறியவில்லை; குணங்கள் புத்தியில் ஏறித் தன்னைப் 
புருடனுக்கு அறிவிக்கவில்லை ; முன்னர்க்கூறிய குறை நேரிடுமாகையால். ஆனால் குணம் புருடனென்னும் 
இவற்றிற்குள்ள வேற்றுமையை  மாத்திரம் குணங்களறிவிக்கின்றன என்பையாயின் அதுவும்  பொருந்தாது. (139இ)

(140-141)      (எதனாலெனில்) குணங்கள் வேறு புருடன் வேறு என்பதைக் குணங்கள் அறிவிக்கமாட்டா. 
எதனாலெனில் புத்தியின் இருப்பிடமான குணதத்துவத்தினும் வேறாகக் குணங்களில்லாமையால் என்க. 
ஆன்மாவும் குணங்களுக்கு விடயமாகிற தில்லை யென்று முன்னரே கூறப்பட்டிருக்கின்றதென்பதாம்.

    (உரை) குணங்கள் தம்மைப் புருடனுக்கு அறிவிக்கவில்லை யாயினும், குணங்களுக்கும் புருடனுக்குமுள்ள 
வேற்றுமையை யறிவிக்கின்றன என்று கூறுமிடத்தில், தன்னினும் வேறான குணங்களுக்கு வேற்றுமையை 
யறிவிக்கின்றன என்று கூறல் வேண்டும். புத்தியினிருப்பிடமான தன்னினும் வேறான குணங்கள் சித்திக்கவில்லை. 
அவற்றிற்கு ஆன்மாவும் விடயமாகாது.  விடயமாகுமெனின் ஆன்மாவிற்குப் பரிணாமத் தன்மையும் 
போக்கியத்தன்மையும் நேரிடுமென்று முன்னரே கூறப்பட்டிருக்கின்றது.  இவ்வாறிருக்கக் குணங்கள் தமக்கு 
விடயமாகாத ஆன்மாவினிடத்தில் ஆன்மா வேறு குணங்கள் வேறு என்பதை எவ்வாறு அறிவிக்கும் (140-141)

(141இ)     ஆகையால் விவேக  விடயமான ஞானம் பொருந்துகிறதில்லை யென்பதாம்.

    (உரை ) இவ்வாறு விவேக ஞானம் பொருந்தாமையால் கைவல்யத்தை யடைதலான 
மோக்ஷம் எவ்வாறு பொருந்தும், பொருந்தாது. ஆகையால் சர்வஞ்ஞத் தன்மை முதலியவற்றின் 
ரூபமான மோக்ஷத்தையே நீ ஒப்புக்கொள்ளல் வேண்டும். (141இ)

(அ--கை) சாத்தர் முதலாயினாருடைய மதத்தின் முத்தியைப்பற்றிக் கூறுகின்றார். 

(142 இ)     கூறப்பட்ட பசு பாச விடயத்தில் சாத்தியத் தன்மை சாதனத்தன்மைகள் இல்லாமையால் 
எதிரிகளுடைய மதங்கள் பாசரூபமாக இருக்கின்றன. ஆகையால் அந்த மதங்களை வித்துவான்கள் 
விலக்கவேண்டுமென்பதாம்.

    (உரை ) பிரமாணத்தால் சித்தித்தனவாயுள்ள கூறப்பட்ட பசு விடயத்தில் சாத்தியமான முத்தியையும், 
பாச விடயத்தில் பாச நீக்கத்தாலுண்டான அறிவென்னுஞ் சாதனத்தன்மையையுஞ் சாதித்துக் கொடுக்கிறதில்லை ; 
அந்த மதங்களில் இவை கொள்ளப்படவில்லையாதலால். ஆகையால் மேலான முத்தியை விரும்புகிறவர்கள் 
அந்த மதங்களை விலக்கிவிடல் வேண்டும். (142இ)

(143இ)     (ஆகையினாலேயே) பசு பாச முதலியவற்றின் விசேடத்தை அறிவிக்குஞ் சைவ சாத்திரம் மறுக்கப்படாம 
லிருக்கின்றது. சைவமானது ஏனைய மதங்களினும் விசேடமான பயனையுடைத்தாயிருத்தலால் எந்த 
வித்துவானுக்குத்தான் பிரியமாக ஆகிறதில்லை யென்பதாம்.

    (உரை) ஏனைய சாத்திரங்களால் பசு பாச முதலியன அறவே அறியப்படவில்லை யென்பதில்லை. 
(உள்ளவாறறியப்பட வில்லை யென்பது கருத்து.) ஆகையால் இந்தச் சைவ சாத்திரம் உள்ளவாறு விளக்குகின்றது. 
அதுபற்றியே ஏனைய சாத்திரங்களால் அறியப்படாத பொருளை அறிவிப்பதாயிருக்கின்றது. ஆதலால் 
பிரத்தியக்ஷம் அநுமானமென்னும் பிரமாணங்களுடன் ஒற்றுமைப்படுகின்றது. ஆகையால் இந்தச் சைவாகம 
ரூபமான பிரமாணம் பிரத்தியக்ஷ முதலிய பிரமாணங்கள் போல் எவருக்குத் தான் உடம்பாடாக ஆகாது. (143இ)

    (அ-கை) ஏனைய ஆகமங்களும் பிரமாணங்களாதலால் அவற்றுடன் விரோதப்படின் இந்தச் 
சைவாகமத்திற்கு எவ்வாறு பிராமாண்யம் சித்திக்கும் என்பார்க்குக் கூறுகின்றார்.

(144 இ)      முத்தனுக்கு இந்தச் சைவசாத்திரத்தில் பாசங்கள் முற்றும் நீக்கப்படுபவையாய் இருக்கின்றமையால் 
பாச ஞானத்தை விளக்குஞ் சாத்திரங்களுடன் முரண்பாடாய்  இந்தச்  சைவ சாத்திரம் பிரவிருத்தித்தாலும் 
பிரமாணத் தன்மையை விடுகிறதில்லையென்பதாம்.

    (உரை) இந்தச் சைவ சாத்திரத்தால் ஏனைய மதங்கள் நீக்கப்படவில்லை. ஆனால் பாசரூபங்களான 
அந்த மதங்களிலுள்ள பொருள்களை இது இவ்வாறன்று என்று ஞானத்தால் மறுப்பதற்காகவே இந்தச் சாத்திரம் 
தோன்றிற்று. ஆகவே, (சிப்பியைக் கண்டு மயங்காது)  இது வெள்ளியன்று சிப்பியே என்ற ஞானத்தை யொத்து 
இந்தச் சைவசாத்திரமிருத்தலால் ஏனைய மதங்களுடன் விரோதித்துப் பிராமாண்யத்தைக் கெடுத்துக்கொள்ளாது. (144இ)

    (அ-கை) ஏனைய மதங்களுடன் சைவாகமம் விரோதப் படுகிறதில்லையென்று கூறுகின்றார்.

(145)     இந்தச் சைவசாத்திரமானது ஏனைய மதங்கள் விடயத்தில் அவற்றின் பிரமாணத் தன்மையைக் 
கெடுக்கிறதில்லை யென்பதாம்.

    (உரை) இந்தச் சைவசாத்திர ரூபமான பிரமாணமானது ஏனைய மதங்கள் பொய்யான பொருளையுடையன 
என்று கூறவில்லை. அவ்வாறு கூறின் ஏனைய மதங்களுடன் விரோதப்படும் (என்பது கருத்து.) ஆனால் அம்மதங்கள் 
பிரத்தியக்ஷம் முதலியவற்றைப் போல் சில பொருள்களை யறிவித்தாலும், தமக்குத் தக்கவாறு அடையத்         
தகுந்ததை  அடையச் செய்கின்றது என்பது பற்றி அவற்றிற்குப் பிராமாண்யமுண்டென்று சர்வாகமப் 
பிராமாண்யத்தில்  எம்மால் கூறப்பட்டிருக்கின்றது. (145)

(145இ)     (அன்றியும்) அந்த அன்னிய மதங்களில் கூறப்பட்டுள்ள வருணாச்சிரமத்தைச் சைவ சாத்திரம் 
ஒப்புக்கொண்டிருக்கின்றதென்பதாம்.

    (உரை)  " வருணங்கள் ஆச்சிரமங்களென்னும்  இவற்றின் ஒழுக்கங்களை மனத்தானுங் கடத்தல் 
கூடாது.  எவன் எந்த ஆச்சிரமத்திலிருந்து கொண்டு சிவசாத்திரத்திற் கூறியவாறு தீக்ஷை செய்யப் 
பெற்றிருக்கின்றானோ அவன் அதே ஆச்சிரமத்திலிருந்து கொண்டு சிவதருமத்தைக் காக்கவேண்டும்'' 
என்று பெரியோரும் கூறுகின்றனர். இந்தச் சைவ சாத்திரம் வேதத்தோடு முரண்படாமையால் 
உன்மதத்தை யனுசரித்தும் இதற்குப் பாசண்டத் தன்மை கிடையாது.  வேதத்தையறிந்தவர்களும் சிவாகம
விதிகளை அநுட்டித்திருக்கின்றனர். 

    புராணம் இதிகாசம் முதலியவற்றிலும் சுவேதர், உபமன்னியு முதலிய மகரிஷிகள் சைவாகம
 விதிகளை அநுட்டித்துள்ளாரெனக் கேட்கப்படுகின்றது. மகாபாரதத்தில் "இவர்களால் சிவலிங்கத்தில் 
பரமேசுவரன் பூசிக்கப் பட்டான். உன்னால் ஒவ்வொரு யுகத்திலும் பூசையில்” என்பது முதலிய 
வாக்கியங்களால் நரநாராயணர்கள் அசுவத்தாமா ஆகிய இவர்கள் சிவாகம முறையை 
அநுஷ்டித்ததாகவும், சுவர்ணாக்ஷத்திலும் பரமேசுவர ஆராதனையால் பகவானான வாசுதேவர் 
அநுக்கிரகம் பெற்றதாகவும் காணப்படுகின்றன. அன்றியும் "ஓ கிருஷ்ணா ! சிவாராதனத்தைத் 
தவிர வேறு பிரியம் எனக்கென்ன இருக்கின்றது. உன்முகத்தில் எல்லா உலகங்களும் உண்டாகப் 
போகின்றன. இவ்விடயத்தில் சந்தேகமில்லை"  என்று கூறப்பட்டிருக்கின்றது. 

    அன்றியும், இராமாயணம் கார்த்தவீரிய ஸ்மிருதி என்னும் இவற்றில் ''பக்குவங்களான 
செங்கல்களால் சிவாலயத்தை எவன் கட்டுவிக்கின்றானோ" என்பதனால் பிரதிட்டை முதலிய 
சிவதருமங்கள் கூறப்பட்டிருக்கின்றன.  சிவ சூத்திரத்திலும் சிவாகமங்களின் மோக்ஷ சொரூபம் 
கூறப்பட்டிருக்கின்றது. பிருதுகேசுவரம், இராமேசுவரம் முதலிய க்ஷேத்திரங்கள் சைவாகம முறைப்படி 
பிரதிட்டை செய்தவையாகக் காணப் படுகின்றன. வேதத்தில் சுவேதாசுவதரம் முதலிய சாகைகளிலும், 
அதர்வ சிரசு முதலிய மந்திரங்களிலும், சைவாகம சம்பந்தமான ஞானங் காணப்படுகின்றது. 
ஆகையால் ஒருவித குறையுமில்லை. சிவாகமங்கள் மூலமற்றவையாயு மிருக்கவில்லை. 
சிற்சிலர்களால் மாத்திரம் அநுட்டிக்கப்படவுமில்லை.  ஆகையால் உன்மதப்படியும் 
அப்பிராமாண்யமில்லையென்க. (145இ)

(146இ)     (அன்றியும்) சைவசாத்திரத்திலுள்ள பொருள்கள் ஏனைய பிரமாணங்களால் மறுக்கப்படவில்லை. 
ஆகையால் அவற்றினும் அதிகமான பலத்தைக் கொடுக்கும் இந்தச் சைவ வைதிகர்களால் இன்றியமையாது 
கிரகித்துக்கொள்ளப்படல் வேண்டும் என்பதாம். 

    (உரை) பிரத்தியக்ஷத்தாலாவது அநுமானத்தாலாவது இந்தச் சைவ சாத்திரம் மறுக்கப் 
படுகிறதில்லையென்பது முன்னரே போக காரிகையில் கூறப்பட்டிருக்கின்றது. “அக்கினியினால் 
நனைக்க வேண்டும்'' என்பது முதலிய வாக்கியங்கள் பிரமாணமாகாதவாறு போல் இது ஆகிறதில்லை. 
ஆகவே இந்தச் சைவ சாத்திரம் முற்றும் விரோதமின்றிப் பரமுத்திக்குக் காரணமாயிருந்து கொண்டு 
வேதத்தையறிந்த வைதிகர்களாலும் பிறராலும் பிரமாணமாகக் கொள்ளத்தக்கதாக இருக்கின்றது. 
ஏனைய மதங்களால் இந்தச் சைவசாத்திரம் மறுக்கப்படுகிறதில்லை. (146இ)

(147இ)     (எதனாலெனில்) தோல்வியடையப்படுவதாயும், சாமான்யமாயுமிருக்கும் அந்த ஏனைய 
மதங்களால் இந்தச் சைவ சாத்திரம் மறுக்கப்படுகிறதில்லை. ஏனைய மதங்களின் வேறாயிருக்கின்றமையாலும், 
சைவ சாத்திரத்திற் கூறியவாறு ஏனைய மதங்களில் விடயங்களில்லாமையாலும் என்பதாம்.

    (உரை) இரணியகருப்பன் முதலியோர் வேத முதலியவற்றிற்குக் கருத்தாக்களென்று பெரியோர் 
கூறுகின்றனர். ஆகையால் வேத முதலியவற்றிற்குக் கருத்தாக்கள் இல்லையென்று கூறலாகாது . 
கீதைகளிலும் 'வேதாந்தத்தைச் செய்த நான் வேதத்தை யறிந்தவனாகவே யிருக்கின்றேன்'' என்று 
கூறப்பட்டிருக்கின்றது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள்களை யுடையதாகச் சாத்திரங்களை 
உபதேசித்தமையால் அவர்கட்குச் சர்வஞ்ஞத் தன்மை கிடையாது. அவ்வாறே பௌத்தர் சர்வஞ்ஞராக 
இருப்பின் கபிலர் ஏன் சர்வஞ்ஞராகமாட்டார் ; இருவரும் சர்வஞ்ஞராக இருப்பின் கொள்கையில் 
வேற்றுமையானது எக்காரணங்கொண்டு நிகழ்ந்தது"  என்று பிறருங்கூறுகின்றனர். 

    சர்வஞ்ஞனல்லாத  சாமான்ய கருத்தாக்களால் செய்யப்பட்ட மதங்களும் எல்லாப் பொருள்களையும் 
விடயமாகக் கொண்டன என்று சொல்லமுடியாது. சர்வஞ்ஞனால் செய்யப்பட்ட சாத்திரத்தால் அந்த மதங்கள் 
தோல்வியடைய பட்டவையாயும் ஆகும். இவ்வாறாகவும் ஏனைய மதங்களைத் தோல்வியடையும்படி 
செய்கிறதாயும், சர்வஞ்ஞனால் செய்யப்பட்டிருத்தலால் பின்னர்க் கூறப்படுமாறு எல்லா ஆகமப்பொருள்களையும் 
விளக்குகின்றமை பற்றி ஏனைய மதங்களினும் வேறாயு மிருக்கும் இந்தச் சைவசாத்திரம் ஏனைய மதங்களால் 
எவ்வாறு மறுக்கப்படும். இந்தச் சைவ சாத்திரம் எவ்வாறு பொருள்களைக் கொண்டிருக்கின்றதோ அவ்வாறு 
ஏனைய மதங்கள் கொள்ளவில்லை யென்க . ( 147இ)

(148 இ- -149இ )     இந்தச் சைவசாத்திரமானது எவ்வாறு ஏனைய மதங்களின் விடயம் பயன் இவற்றை அனுவாதஞ்
 செய்து கொண்டு தனது விடயம் பயனிவற்றிலுள்ள விசேடத்தை விளக்கஞ் செய்கின்றதோ, அவ்வாறு ஏனைய 
மதங்கள் சைவசாத்திரத்தின் விடயம் பயன் இவற்றை அனுவாதஞ்செய்து கொண்டு தனது விடய பயன்களின் 
விசேடத்தை விளக்குவனவாயில்லை. ஆகையால் இந்தச் சைவ சாத்திரம் ஏனைய மதங்களுக்கு விடயமாக 
ஆகிறதில்லை யென்பதாம்.

    (உரை) எவ்வாறு ஏனைய மதங்களின் விடயம் பயனிவற்றை விடயமாகக் கொண்டு, தன் விடயம் 
பயனிவற்றின் விசேடத்தை  "பெளத்தர்கள் புத்தி தத்துவத்திலும், சைனர்கள் குணதத்துவத்திலும் 
இருக்கின்றனர்” என்பது முதலியவற்றால் அநுவதித்து எல்லாவற்றையும் விடயமாகக்கொண்டு 
விளங்குகின்றதோ, அவ்வாறு ஏனைய மதங்கள் சைவசாத்திரத்திற் கூறப்படும் பலன்களை 
விடயமாகக் கொள்வதற்கு முடியாமலிருக்கின்றன. ஆகையால் தமக்கு விடயமாகாத சைவசாத்திரம் 
அந்த அன்னிய மதங்களால் எவ்வாறு மறுக்கப்படும்.(148இ-149இ)

(150இ)     ஆகையால் சைவசாத்திரத்தால் ஏற்றுக்கொள்ளப்படுதலும், விலக்கப்படுதலும் ஏனைய மதங்களுக்கு 
நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன. சைவ ஞானத்திற்கு விடயமாயுள்ள பொருள் ஏனைய மதங்களுக்குச் சமமான 
தன்மையையுடைய ஞானத்திற்கு விஷயமாக ஆகிறதில்லை என்பதாம்.

    (உரை) ஏனைய மதங்கள் சர்வஞ்ஞனல்லாதவர்களால் செய்யப்பட்டமை பற்றி வலிமையற் 
றிருக்கின்றமையால் சைவாகமத்திற்கு விரோதப்படாமல் தத்தம் விடயங்களை யனுட்டிப்பதில் சைவ 
சித்தாந்தம் அநுமதி கொடுக்கின்றது. எதனாலெனின், வருணாச்சிரம ஆசாரங்களை மனத்தாலும் 
தாண்டக்கூடாது என்ற வாக்கியம் பிரமாணமாயிருக்கின்றமையாலென்க. சைவாகமத்துடன் எவ்விடத்தில் 
விரோதங் காணப்படுகின்றதோ, அவ்விடத்தில் விலக்கையே கொள்ளல் வேண்டும். (விலக்கவேண்டு மென்பதாம்.) 

    எதனாலெனில், வைதிக சந்தியைச் செய்யினுஞ் சரி , செய்யவில்லையாயினும் சரி ; சைவ சந்தியை 
ஆணையால் அநுட்டிக்கவேண்டும் என்றமையாலென்க. இவ்வாறன்றிச் சர்வஞ்ஞ னல்லாதவரால் செய்யப்பட்ட 
ஏனைய மதங்களுடன் சமானமான தன்மையையுடைய ஞானத்திற்கு, சைவ ஞானத்திற்கு விடயமாகிய பொருள் 
எக்காலத்தும் விடயமாக ஆவதில்லை.    (150இ)

    (அ-கை) இந்தச் சைவசாத்திரம் காரியத்தன்மையுடன் கூடியிருக்கின்றமையால் இதற்கு அநித்தியத்தன்மை 
யுண்டென்று கூறலாகாதெனக் கூறுகின்றார்.

(151இ)     ஈசுவர சம்பந்தமான ஞானமானது ஈசுவரனுக்குக் குணமாக அனாதியாகவே சித்தித்திருக்கின்றது .
அந்த ஞானம் நன்றாய் நிச்சயிப்பதா யிருக்கின்றதென்று கூறப்பட்டிருக்கின்றதென்பதாம்.

    (உரை) ஆகமமானது சொல் பொருள் என்னும் இவற்றின் ரூபமாயிருக்கின்றது. அவற்றுள், 
தந்திர (சொல்) ரூபமான ஆகமம் ஈசுவரனால் செய்யப்படினும், அதன் பொருளான ஞான முதலிய 
குணங்கள் பரமேசுவரனிடத்துச் சமவாய சம்பந்தத்தா லிருப்பது பற்றி நித்தியமா யிருக்கின்றமையால் 
சைவ சாத்திரத்திற்கு நித்தியத்தன்மையுண்டு. அதுபற்றியே சைவ சாத்திரம் பிரமாணமாகுமென்க.    (151இ)

(152இ)     (ஆகையினாலேயே) இந்தச் சைவசாத்திரமானது கெடுக்கப்படாத சத்தியையுடையதாயிருப்பது 
பற்றிப் பதியான ஈசுவரனுக்கு விரோதமாக ஆகிறதில்லை. இதே காரணத்தால் சைவ சாத்திரமானது 
அன்னிய மதங்களோடு சமமான பலன்களையுடையதென்று கூறலாகாது. இவ்வாறாகவே பயனற்றிருக்குந் 
தன்மை இதற்கு எவ்வாறு உண்டாகுமென்பதாம்.

    (உரை) இந்தச் சைவ சாத்திரம் பயனற்றதாகவாவது ஏனைய மதங்களோடு சமமான பலனை 
யுடையதாகவாவது, விரோதிக்கப்படும் பலனையுடையதாகவாவது இருக்கவில்லை. ஆனால் இதற்குப் 
பிரமாணத் தன்மையுண்டென்பது முன்னர்க் கூறப்பட்டிருக்கின்றது. ஈசுவரன் கெடுக்கப்படாத 
சத்தியுடையவராய் இருக்கின்றமைபற்றி அனைவருக்கும் மேலானவராகையால் அவரால் சொல்லப்பட்டமை 
பற்றிப் பிராமாண்யம் உண்டென்க. ஏனைய மதங்களுடன் சமானமாக இந்தச் சைவ சாத்திரத்தைக் கொண்டாலும், 
இதனையும் ஏற்றுக்கொள்ளலாம். ஏனைய மதங்களையும் ஏற்றுக்கொள்ளலாமென்று கூறலாகாது. (152இ )

(153இ)     (எதனாலெனின்,) இந்தச் சைவசாத்திரம் ஏனைய மதங்களுடன் சமமான பலனையுடையதாயிருப்பினும் 
இந்தச் சைவ மதத்தில் தீக்ஷையினாலேயே முத்தியுண்டாகின்றது. இலகுவான உபாயத்தால் புருடர்களுக்கு 
முத்தியைக் கொடுக்கின்றமையால் இந்தச் சைவ சாத்திரத்தையே கைக்கொள்ளல் வேண்டுமென்பதாம்.

    (உரை) அறியப்பட்ட இலகுவான சாதனத்தை நீக்கி விட்டு வருத்தத்திற்குக் காரணமாயும் மிகப் 
பெரிதாயுமிருக்கும் சாதனத்தைக் கொள்வதில் எவன்றான் பிரியப்படுவன். அவ்வாறே "இங்கேயே தேன் 
கிடைக்குமாயின் எதற்காக மலைக்குச் செல்லல் வேண்டும் ; தனக்கு விருப்பமான பொருள் கிடைத்த பின்னர் 
எவன்றான் முயற்சியை மேற்கொள்வன் ” என்று பிறருங் கூறுகின்றனர் . (153இ)

(154இ)     எந்தச் சாத்திரத்தில் தொழிற்பாட்டினின்றும் விடுபட்ட சித்தியும், மேலானதாகிய முத்தியும், 
வேத பூஷணமாகிய சாதனமும் காணப்படுகின்றனவோ அந்தச் சாத்திரத்தை எவன்றான் 
கொள்ளமாட்டானென்பதாம்.

    (உரை) எந்தச் சாத்திரத்தில் எல்லாவற்றினும் மேலான பலன் காணப்படுகின்றதோ 
அந்தச் சாத்திரத்தை எவன்றான் ஏனைய சாத்திரங்களையெல்லாம் தள்ளிவிட்டு மேற்கொள்ளமாட்டான். 
ஆகையால் இந்தச் சைவ சாத்திரமானது ஏனைய மதங்களுடன் சமமான பலனையுடையதா யிருப்பினும், 
இந்தச் சாத்திரத்தில் பிரவிருத்தியானது செய்யவுங் கூடும் ; செய்யாது விடவுங் கூடுமென்று 
வேற்றுமைப்படுகிறதில்லை.    (154இ)

    (அ--கை) இந்தச் சைவ சாத்திரம் பரமேசுவரனால் செய்யப்பட்டதென்று யாது காரணத்தால் 
கூறப்படுகின்ற தென்பார்க்குக்  கூறுகின்றார். 

(155-156-157)      பரமசிவனிடத்திலிருந்து பரம்பரையாய் வந்தவையாயும், சாதனத்துடன் கூடியவையாயுமிருக்கும்
போக மோக்ஷங்கள், ஆத்ரேய மகரிஷியின் பொருட்டு ருரு மகரிஷியினா லறிவிக்கப்பட்டன. ஈசுவர பத்தராயும், 
ஆசிரியராயும் ஸ்ரீமானாயும், எல்லா வித்தைகளுக்குங் கடலாயுமிருக்கும் உக்கிர ஜோதி சிவாசாரியரால் 
அநுக்கிரகிக்கப் பெற்ற சத்தியோசாத சிவாசாரியர் சிற்றறிவுடையார்க் கறிவித்தற்பொருட்டுச் சுருக்கமாக              
இந்த விடயங்களைத் தொகுத்து அருளிச் செய்தனரென்பதாம்.

    (உரை) குரு பரம்பரையாக இடைவிடாது சிந்திக்கப்படுவதுகொண்டு இந்தச் சாத்திரம் பரமேசுவரனால்
செய்யப்பட்டமைபற்றி எல்லா மேன்மைகளுக்கும் காரணமென்றறியப்படுகின்றது.    (155-156-157) 

    இவ்வாறு நாராயண கண்டரின் புதல்வரான பட்டராம கண்டரால் சீடர்களின் நன்மையின் பொருட்டு 
மோக்ஷ காரிகைக்குச் சுருக்கமாக விருத்தியுரை செய்யப்பெற்றது.

        மோக்ஷகாரிகை மூலமும் விருத்தியுரையும் முற்றுப்பெற்றன. 

            சிவபெருமான் திருவடி வாழ்க.

Related Content

சிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)

பரமோக்ஷ நிராச காரிகை மூலமும் விருத்தியுரையும்

நாதகாரிகை மூலமும் விருத்தியுரையும்

श्रीशान्तिविलासः - ஸ்ரீ சாந்தி விலாஸ: - ஸ்ரீ நீலகண்ட தீக்ஷித