சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
என வழங்கும்
விநாயக வணக்கம்
------------------
எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின் றருளுங் கற்பகமே ! -நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு. 1
நூற் சிறப்பு*
-----------
ஆரணங் காணென்பர் அந்தணர்;
யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர்
காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர்
எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக்
கோவையைச் செப்பிடினே. 2
*இச்செய்யுட்கள் இரண்டும் பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டன என்பர்.
1. எண் - புகழ். கற்பகம் - கற்பக விநாயகர், நானூறு - நானூறு செய்யுட்கள்
2. ஆரணம் - வேதம், யோகியர்- சிவயோகியர், ஏரணம்- தருக்கம், எண்ணர் - தருக்க நூலார்,
எழுத்து - இலக்கண நூல், அணங்கு - தெய்வத் தன்மை காண் மூன்றும், அசைகள்.
அதிகார வரம்புகள்
-----------------
இயற்கை பாங்க னிடந்தலை மதியுட
னிருவரு முளவழி யவன்வர வுணர்தன்
முன்னுற வுணர்தல் குறையுற வுணர்த
னன்னிலை நாண நடுங்க நாடன்
மடல்குறை நயப்பு வழிச்சேட் படுத்த
லிடமிகு பகற்குறி யிரவுக் குறியோ
டொருவழித் தணத்த லுடன்கொண் டேகல்
வரைவு முடுக்கம் வரை பொருட் பிரிதன்
மணஞ்சிறப் போதல் வார் புவி காவ
லிணங்கலர்ப் பிரிதல் வேந்தற் குற்றுழி
பொருள்வயிற் பிரிதல் பரத்தையிற் பிரிதலென்
றருள்வயிற் சிறந்த வகத்திணை மருங்கி
னிருளறு நிகழ்ச்சி யிவையென மொழிப.
இதன் பொருள் : இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன்படுத்தல்,
இருவருமுளவழி யவன் வரவுணர்தல், முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், நாணநாட்டம்,
நடுங்க நாட்டம், மடல், குறைநயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல்,
உடன் போக்கு, வரைவு முடுக்கம், வரை பொருட்பிரிதல், மணஞ் சிறப்புரைத்தல், ஓதற்பிரிதல்,
காவற்பிரிதல், பகை தணிவினைப் பிரிதல், வேந்தற் குற்றுழிப்பிரிதல், பொருள் வயிற் பிரிதல் ,
பரத்தையிற்பிரிதல் என விவ்விருபத்தைந்தும் இந்நூற்குக் கிளவிக் கொத்தெனப்படு
மதிகாரங்களாமென்று கூறுவர் அகத்திணை யிலக்கண* முணர்ந்தோர் என்றவாறு. அவற்றுள்,
* அகத்திணை இலக்கணம் - இன்பமாகிய ஒழுக்கத்தின் இலக்கணம். அகம்-இன்பம். திணை- ஒழுக்கம்,
ஒத்த அன்பினராகிய ஒரு தலைவனும் தலைவியும் தம்முட் கூடுகின்ற காலத்துப் பிறந்து ,அக்கூட்டத்தின்
பின்பு அவ்விருவராலும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய்
எப்போதும் அகத்துணர்வாலே அறியப்படும் இன்பம் அகம் எனப்பட்டது. இன்பம் பற்றி அகத்தே நிகழும்
ஒழுக்கத்தை அகம் என்றது ஆகுபெயர்.
1. இயற்கைப் புணர்ச்சி *
-----------------------
*இதன் பேரின்பக்கிளவி, "இயற்கைப் புணர்ச்சித் துறையீரொன்பதுஞ் சத்திநிபாத மொத்திடுங் காலத்(து),
உத்தம சற்குரு தரிசனமாகும்" என்பதாம் (திருக்கோவையார் உண்மை ).
இயற்கைப் புணர்ச்சி என்பது பொருளதிகாரத்திற்** கூறப் பட்ட தலைமகனும், தலைமகளும்,
அவ்வாறொரு பொழிலிடத்தெதிர்ப்பட்டுக் தெய்வமிடை நிற்பப் பான்மை வழியோடி ஒராவிற் கிருகோடு
தோன்றினாற்போலத் தம்முளொத்த வன்பினராய் அவ்விருவரொத்தார் தம்முட்டாமே கூடுங் கூட்டம்.
அது நிகழுமாறு-
**பொருளதிகாரம் இங்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும்.
காட்சி யையந் தெளித னயப்பே
யுட்கோ டெய்வந் துணிதல்கைக் கிளையொடு
கலவி யுரைத்த லிருவயி னொத்தல்
கிளவி வேட்ட னலம்புனைந் துரைத்தல்
பிரிவுணர்த் தல்லொடு பருவர லறித
லருட்குண முரைத்த லணிமை கூற
லாடிடத் துய்த்த லருமை யறிதல்
பாங்கியை யறித லெனவீ ரொன்பா
னீங்கா வியற்கை நெறியென மொழிப.
இதன் பொருள்: காட்சி, ஐயம், தெளிதல், நயப்பு, உட்கோள், தெய்வத்தை மகிழ்தல், புணர்ச்சி துணிதல்,
கலவியுரைத்தல், இருவயினொத்தல், கிளவிவேட்டல், நலம் புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பருவரலறிதல்,
அருட்குணமுரைத்தல், இடமணித்துக்கூறி வற்புறுத்தல், ஆடிடத்துய்த்தல், அருமையறிதல், பாங்கியையறிதல்,
எனவிவை பதினெட்டும் இயற்கைப் புணர்ச்சியாம் எ-று அவற்றுள் -
1. காட்சி *
---------
* இதன் பேரின்பப் பொருள் "குருவின் திருமேனி காண்டல்'' என்பதாம்.
காட்சி : என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொரு வியப்பென்னென்றல் .
அதற்குச் செய்யுள்
திருவளர் தாமரை சீர்வளர்
காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள் கொண் டோங்கு தெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் றொளிர்கின்றதே
மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது**
**இஃது அகவின்பக் கொளு ஆகும். இதுபோல் ஒவ்வொரு செய்யுளின் கீழும் அகவின்பக் கொளு
தரப்பெற்றுள்ளது; பழைய உரையில் செய்யுளுக்கு முன் காணப் பெறுகின்றது.
திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக்கொண்டா ரோவெனின்,
அறிவோ னறிவில தெனவிரண் டாகு
நெறியினிற் றொகைபெற்று நிரல்பட விரிந்த
மண்புன லனல்வளி மாவிசும் பெனாஅ
வெண்மதி செஞ்சுடர் வேட்போ னெனாஅ
வெண்வகை நிலைஇய வெவ்வகைப் பொருளுந்
தோற்ற நிலை யிறுதி கட்டுவீ டென்னு
மாற்றருஞ் செயல்வழி மாறாது செயப்பட்டு
வெருவா வுள்ளத்து வேட்போன் றான்செய்
யிருவினைப் பயன் றுய்த்து மும்மல னொரீஇப்
பொருவறு சிவகதி பொற்பினிற் பொருந்தவு
மேனைய தத்தங் குணநிலை யுணரவு
நிலைஇ யவ்வயி னிமித்த மாகி
யலகு தவிர்த்த பலவகை யண்டமு
மின்னுழை வெயிலின் றுன்னணுப் புரைந்து
தன்னு ளடங்கவுந் தானவற் றுள்ளு
நுண்ணுணர் வாயு நோக்கரு நுழையிற்
சிறுமை பெருமைக் கிருவரம் பெய்திப்
போக்கும் வரவும் புணர்வு மின்றி
யாக்கமுங் கேடு மாதியு மந்தமு
நடுவு மிகந்து ஞானத் திரளா
யடியு முடியு மளவா தயர்ந்து
நெடியோ னான்முக னான்மறை போற்ற
வெரிசுடர்க் கனலியி னீங்காது விரிசுடர்
வெப்பமும் விளக்கமு மொப்பவோர் பொழுதினிற்
றுப்புற வியற்றுவ தெனவெப் பொருளுங்
காண்டலு மியற்றுலு மியல்பா மாண்டுடன்
றன்னினீங் காது தானவின்று விளங்கிய
வெண்ணெண் சுலையுஞ் சிலம்புஞ் சிலம்படிப்
பண்ணமை தேமொழிப் பார்ப்பதி காண
வையா றதன்மிசை யெட்டுத்தலை யிட்ட
மையில் வான்கலை மெய்யுடன் பொருந்தித்
தில்லை மூதூர்ப் பொதுவினிற் றோன்றி
யெல்லையி லானந்த நடம்புரி கின்ற
பரம காரணன் றிருவரு ளதனால்
திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்
ஐம்பொறி கையிகந் தறிவா யறியார்
செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென
இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர் :
ஆங்கவ் விரண்டனுள்,
ஆகம நூல் வழியி னுதலிய ஞான
யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரி
துலக நூல் வழியி நுதலிய பொருளெனு
மலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்
புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி
துலையா மரபி னுரைக்கற் பாற்று.
அஃதியாதோவெனின் எழுவாய்க்கிடந்த பாட்டின் பொருளுரைக்கவே விளங்கும்.
அஃதேல், இப்பாட்டென் னுதலிற்றோவெனின் அறம் பொருள் இன்பம் வீடென்னு நான்கு பொருளினும்
இன்பத்தை நுதலி இத்திருக்கோவையின் கணுரைக்கின்ற களவியற் பொருளினது பொழிப்பிலக்கணத்தையும்
அதற்குறுப்பாகிய கைக்கிளைத்* திணையின்கண் முதற்கிடந்த காட்சி யென்னும்
ஒருதலைக்காம**த்தினையும், உடன்னிலைச் சிலேடையாக வுணர்த்து தனுதலிற்று.
*கைக்கிளை ஒருமருங்கு நிகழும் கேண்மை, **ஒருதலைக்காமம்- ஓரிடத்துள்ள காமம்.
திருவளர்தாமரை போன்றொளிர்கின்றதே.
மதிவாணுதல் கண்ணுற்றது.
இதன் பொருள் : திருவளர் தாமரை - திருவளருத் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் -
அழகு வளரு நீலப்பூக்களையும்; ஈசர் தில்லை குருவளர் பூ குமிழ்-ஈசர் தில்லை வரைப்பின் கணுண்டாகிய
பூங்குமிழினது நிறம் வளரும் பூவினையும் கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு; -
செவ்விக் காந்தட் பூக்களையும் உறுப்பாகக் கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலை ஓர் வல்லியின் ஒல்கி -
மேம் பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒரு வல்லி போல நுடங்கி அன நடை, வாய்ந்து- அன்னத்தினடை
போல நடை வாய்ந்து; உருவளர் காமன் தன்வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது-வடிவு
வளருங் காமனது வெற்றிக் கொடி போன்று விளங்கா நின்றது; என்ன வியப்போ ! எ-று.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் எ-று. திருமகடங்குத் தாமரையெனினு
மமையும். பூங்குமிழென்பது முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்றதோ ராகுபெயர்.
ஈசர் தில்லை யென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால்
நில மயக்கங் கூறியவாறாயிற்று.
ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்குமின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே
துய்ப்பரென்பது போதரும், போதர இம்மையின் பத்திற்குத் தில்லையே காரண மென்பது கூறியவாறாயிற்று.
ஆகவே ஈசர்தில்லை, யென்றதனான் மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும் .
செய்யுளாதலாற் செவ்வெண்ணின் றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலை யெனவியையும்.
தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றான் இயன்ற பிறமாலையோடு
இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு
முதல் வினையோடு முடிந்தது. உருவளர் காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத் தோற்று
உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை, அனநடைவாய்ந் தென்பதற்கு
அவ்வவ்வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும்.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை. நோக்கமென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோ
வெனின், யாவனொருவன் யாதொருபொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற
விருப்பத்தோடே கூடியவழகு. அதன் மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும்
ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால் திருவென்றது - அழகுக்கே பெயராயிற்று.
அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோ வெனின், உண்டு;
கோயிலைத் திருக்கோயிலென்றும்; கோயில் வாயிலைத் திருவாயிலென்றும், அலகைத் திருவலகென்றும்,
பாதுகையைத் திருவடி நிலையென்றும் வழங்கும் இத்தொடக்கத்தன வெல்லாந் திருமகளை நோக்கி
யெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக.
அதனாற் றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே அல்லதூஉந் தான் கண்ட வடிவின் பெருமையைப்
பாராட்டு வானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம்.
ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானமெனக் கொள்க.
வளரென்பதற்கு வளருமென் றும்மைகொடுத்து உரைவாய்பாடு காட்டிய தெற்றிற்கு, மேலாலோ
வளரக்கடவ தென்பது கடா. அதற்கு விடை, வளர்ந்த தாமரை வளரா நின்ற தாமரையென்று கழிகாலத்தையும்
நிகழ்காலத்தையுங்கூறாது, மேல் வருங் காலத்தைக் கூறவேண்டியது. கழிகாலத்தைக் கூறினாற் கழிந்ததனைக்
கூறிற்றாம். நிகழ்காலத்தைக் கூறினால் முன்னும் பின்னுமின்றி இப்பொழுதுள்ளதனைக் கூறிற்றாம் . ஆகலான்
வளருமென்று வருங்காலங் கூறியவாறன்று; மூன்று காலத்திற்கும் பொதுவாகிய சொற்றோன்றவே கூறினார்.
ஆயின் உம்மைச் சொன் மூன்று காலத்திற்கும் பொதுவாகி வந்தவாறென்னை? இது செய்யுட் சொல்லாதலால்
வந்தது. செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; அது ஞாயிறு திங்களியங்கும்,
யாறொழுகும், மலை நிற்கும் என்றற்றொடக்கத் தனவற்றானறிக. அன்றியும் "முன்னிலைக் காலமுந் தோன்று
மியற்கை - யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து - மெய்ந் நிலைப் பொதுச் சொற் கிளத்தல்வேண்டும்''
(தொல் - சொல் - வினை, 43) என்றாராகலின், உம்மைச்சொல் வருங்காலத்தையே காட்டாது மூன்று காலத்திற்கும்
பொதுவாய் நிற்குமென்றே யறிக.
இனித் திருமகடங்குந் தாமரை யெனினு மமையுமென்று அமைவுரைத்த தென்னை , இதனை
யுவமையாக்கக் குறையென்னை யெனின், திருமகளாலே தாமரையுயர்ந்த தாம், தாமரையினது சிறப்புக்
கூறிற்றில்லையாம். என்னை எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்குண்டாகையாலே திருமகளென்று
பெயராயிற்று. அங்ஙனம் பெருமையுடையவளும் இதன் சிறப்பு நோக்கியே யிதனிலிருந்தாளல்லது
தன்னாலே யிதற்குச் சிறப்புப்பெற வேண்டியிருந்தாளல்லள் . ஆகலாற் றாமரைக் கொத்ததும் மிக்கதுமில்லை.
அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாகலான் திருவென்பது கண்டாரால்
விரும்பப்படுந்தன்மை நோக்கமென்பது பெற்றாம்.
இனித் திருவளர் தாமரை சீர்வளர்காவி யென்றன போல இதனையுங் குருவளர் குமிழென்னாது
பூங்குமிழென்ற தெற்றிற்கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவை நோக்கி யன்று
ஈண்டுச் செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகு பெயரை நோக்கியுமென வறிக. அஃதென் போலவெனின்,
"தளி பெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று-முளிமுதற் பொதுளிய முட்புறப்பிடவமும்”
(கலித்தொகை, முல்லை, 1 ) என்பது போல. கோங்கென இதனையொழிந்த நான்கிற்குமடை கொடுத்து
இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுத னோக்கி, என்னை, பாலைக்கு நிலமின்றாதலான், ஆயின்
மற்றைய நிலம் போலப் பாலைக்கு நிலமின்மையாற் கூறினாராகின்றார். மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய
முலைக்குவமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற்
பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம்.ஆதலான் இதற்கடை கொடாமையே முலைக்கேற்றத்தை
விளக்கி நின்றது. அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு நாயகராகிய
நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க.
இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது.
அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்க ணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடி போன்று
விளங்கி அன்னநடைத் தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப் பூக்களாற்
றொடுக்கப்பட்டோங்குந் தெய்வமரு வளர் மாலையின் வரலாறு விரித்துரைக்கப்படுகின்றதென்பது;
என்றது என் சொல்லியவாறோவெனின், தாமரை மருத நிலத்துப் பூவாதலான் மருதமும், நெய்தல்
நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லை நிலத்துப் பூவாதலான் முல்லையும்,
கோங்கு பாலை நிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற்
குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார்.
ஆகலாற் றாமெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமை கூறாது தில்லைநகரின் பெருமை கூறினார்.
நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்தலென்னுந்
தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார். என்னை பைங்காந்தளென்று
குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான் அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக் கோவையின்கண்
முன்னர்க் "குறப்பாவை நின்குழல் வேங்கை யம்போதொ டுகோங்கம்விராய்” என்னும் ( திருக்கோவை 205)
பாட்டினுட் கண்டுகொள்க. அல்லதூஉஞ் ''சினையிற்கூறு முதலறிகிளவி" (தொல். வேற்றுமை மயங்கியல், 31) என்னு
மாகுபெயரானுமாம்,
ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற் கெனின், ஓரிடத்தொரு
கலியாண முண்டானால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத்துக் கூடி
அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக் குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன.
உருவளர் காமன்றன் வென்றிக்கொடி யென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச்
சுட்டினார். யாருங் கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கக்தையே யொத்த
களவொழுக்கத்தையே சுட்டினார். ஈசர் தில்லையென்றமையின், வீடு பேற்றின் பயத்ததெனச் சுட்டினார்.
களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்
பொருணுதலிக் கந்தருவரொழுக்கத் தோடொத்துக் காமனது வென்றிக்கொடி போன்று ஐந்திணையின்கண்ணும்
வென்று விளங்கா நின்ற கடிமலர் மாலையின் வரலாறு இத்திருக்கோவையின் கணுரைக்கப்படுகின்றதென்றவாறு.
களவொழுக்கத்தினை ஒரு மாலையாக வுட்கொண்டு உருவக வாய்பாட்டானுணர்த்தினா ரென்பது. இன்பத்தை
நுதலிய தென்றாராயினும், இன்பத் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையு நுதலிற்று.
அவற்றுள் வீடு நுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலியவாறென்னையெனின்,
ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாரு மில்லை
இழிந்தாரல்லது; இவளுமன்னள், இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான் இவர்
கண்ணே அம்மூன்றுமுளவாம், இவ்வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவுவிடுத்த விழுமியோருள்ளமும்
விழைவின் கட்டாழுமாதலின், காமனது வென்றிக்கொடி யெனவே வென்றி கொள்ளா நின்ற தென்றானென்பது
முதற்கட்கிடந்த இப்பாட்டுக் காட்சியின் மேற்று, இப்பாட்டால் வேட்கை இவன்க ணுண்டாயவாறென்னை
பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக் கொடி யென்றமையிற் பெற்றாம்.
உவகை மிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம் ;
அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக் குறி; உவப்பித் தலி னுவகையாயிற்று
உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடி
யோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையா மாறு. "பூப்புனைமாலையு மாலைபுனை மாதருந்-
தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங்- கோச்சேரன் பெயருங் கோதையென்றாகும்” ( திவாகரம். 11ஆவது)
என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் ,
பாதாதி கேசமாதல் வருணிக்க வேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப்பட்டது.
என்னை திருவளர் தாமரை யென்று முகமுதலாக வெடுத்துக்கொண்டு அன்ன நடையென்று பாதத்திலே முடித்தலான்.
ஆயின், இதில் நடை கண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவாமெனின் இவன் நடை கண்டானல்லன்.
இம்மாலை நடக்குமாயின் அன்ன நடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின்வினை யாகலிற்
சினை வினைப் பாற்பட்டு முதல் வினையோடு முடிந்ததென்றது ; அன்னத்திற்குச்சினை கால்,
காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை.
அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற் பயன் மகிழ்தல் என்னை "சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறுதல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல். பொருள். அகம், 50) என்று அகத்திணையியற் சூத்திரத்திற்
சொன்னாராகலினென்பது. அஃதேல் உவகையென்னு மெய்ப்பாட்டானே மகிழ்ச்சிபெற்றாம்- இனி யிச்சொற்கள்
விசேடித்து மகிழ்வித்தவா றென்னையெனின் நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து தான் வேட்டபொருள்வயிற்றன்
குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்; நிகழுந்தோறு மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின்,
ஒருவன் தான் வழிபடுந் தெய்வத்தைப்பரவிய செய்யுட்களை யோதி யுணர்ந்திருந்தா னெனினும் அவற்றான்
அத்தெய்வத்தை வழிபடும் போழ்து கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும்;
அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது
துன்பமீதூரக்கலுழக் காண்டும்; இவைபோல வென்பது. ஆகலின் நினைப்பின்வழிய துரையாயினும் நினைப்பின்
உரைப்பயன் விசேடமுடைத் தென்பது. நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து சொன்னிகழு மென்பதனை இக்கோவையின்
எண்வகை மெய்ப்பாட்டின் * கண்ணுந் தந்துரைத்துக்கொள்க.
* எண்வகை மெய்ப்பாடு - நகை,அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி என்பன.
பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன் வயினிகழ்ந்த சொல்லானெய்துவது.
மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின்கட் டோன்றிய விகாரத்தின் விளைவு.
எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான் புகின்
வரம்பின்றிப் பெருகு மென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பிறையை ஒத்து ஒளி சிறந்த நெற்றியினையுடைய
இளைய வஞ்சிக் கொம்பை நிகரானவளை ஒளிசிறந்த வேலினையுடையவன் கண்டது.
செய்யுள்: அழகுமிக்க தாமரைப் பூவையும் சிறப்புடைய நீலப் பூவையும் சிவனுடைய சிதம்பரத்தில்,
நிறமிகுந்து பொலிவினையுடைத்தாகிய குமிழம் பூவையும் கோங்கரும்புகளையும் செவ்விக் காந்தட்பூக்களையும்
இப்புட்பங்களை அவயவமாகக் கொண்டு (எங்ஙனமெனில், தாமரைப்பூவை முகமாகவும், செங்கழுநீர்ப்பூக்களைக்
கண்களாகவும் குமிழ மலரை நாசியாகவும், கோங்கரும்புகளை முலைகளாகவும், செவ்விக்காந்தட் பூவைக்
கரங்களாகவும், இப்படி அவயவமாகக் கொண்டு) உயர்ந்த தெய்வ வாசனைமிக்க மாலை ஒரு வல்லி சாதகக்
கொடிபோல் நுடங்கி அன்னத்தின் நடை போல நடையும் வாய்ந்து வடிவு மிகுந்த மாரவேளின்
வெற்றிக் கொடியை ஒத்து விளங்காநின்றது, என்ன அதிசயமே.
2. ஐயம் *
-------
*பேரின்பப் பொருள்: 'திருமேனியை வியந்து ஐயமுறுதல்'
ஐயம் என்பது கண்ணுற்றபின்னர் இங்ஙனந்தோன்றா நின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ
அன்றி மக்களுள்ளாள் கொல்லோவென் றையுறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
போதோ விசும்போ புனலோ
பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
நின்றவர் வாழ்பதியே
தெரியவரியதோர் தெய்வமென்ன
அருவரைநாடன் ஐயுற்றது
இதன் பொருள்: யமன் விடுத்த தூதோ -யமன் விடுக்கப்பட்ட தூதோ; அனங்கன் துணையோ -
வசித்தற்கரியாரை வசித்தற்கு அனங்கற்குண்டாயிற்றோர் துணையோ இணையிலி - தொல்லைத்தில்லை
மாதோ- ஒப்பில்லாதானது பழையதாகிய இத்தில்லைக்கண் வாழ்வாரோர் மாதரோ; மடமயிலோ என நின்றவர்
வாழ்பதி - மடப்பத்தையுடைய மயிலோ வென்று சொல்லும் வண்ணம் நின்றவரது வாழ்பதி;
போதோ -தாமரைப் பூவோ; விசும்போ -ஆகாயமோ; புனலோ - நீரோ; பணிகளது பதியோ - பாம்புகளது பதியாகிய
நாகருலகமோ; யாதோ ஏதும் அறிகுவது; அரிது - யாதோ சிறிதுந் துணிதலரிது எ-று.
யமன் தூதும், அனங்கன்றுணையும், மடமயிலும் ஐயநிலை யுவமைக்கணுவமையாய் நின்றன.
தில்லைமாது; உவமிக்கப் படும் பொருள் ஐய நிகழ்ந்தது திருமகள் முதலாகிய தெய்வமோ மக்களுள்ளாளோ
வென்றென்க. மக்களுள்ளாளாதல் சிறுபான்மையாகலிற் கூறிற்றிலர்.
தில்லைமாதோ வென்பதற்குத் தில்லைக்கண் வாழ்வாரோர் மானுட மாதரோ வென்றுரைப்பாருமுளர்.
தில்லை மானுடமாது மகளிர்க்குவமையாகப் புணர்க்கப்படுவனவற்றி னொன்றன்மையால் உவமையாகாது.
உவமிக்கப்படும் பொருளெனின் ,ஐயமின்றித் துணிவாம். அதனால் தில்லை மாதோவென்பது மானுடம்
தெய்வமென்னு வேறுபாடு கருதாது மகளிரென்னும் பொதுமை பற்றி நின்றது. தில்லை நின்றவரெனக்
கூட்டினுமமையும்.
தெய்வமென்ன- தெய்வமோ அல்லளோவென. மெய்ப்பாடு : உவகையைச் சார்ந்த மருட்கை .
என்னை, "புதுமை பெருமை , சிறுமை யாக்கமொடு - மதிமைசாலா மருட்கை நான்கே (தொல், பொருள்,
மெய்ப்பாட்டியல் 7) என்றாராகலின். ஈண்டு வனப்பினது பெருமையை வியந்தானென்பது.
அவ்வியப்பு மருட்கைப் பாற்படும், பயன்: ஐயந்தீர்தல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: (அறிவதற் கருமையானதொரு) தெய்வமென்று
(அரிய மலை நாட்டையுடைவன் ) சந்தேகித்தது.
செய்யுள்: பூமியிலுள்ள இளைஞரை யெல்லாம் கொல்ல வேண்டிக் காலன் வரவிட்ட தூதோ?
வசித்தற்கரியாரை வசிக்க அனங்கற்கு உண்டாயிற்றோர் துணையோ? தன்னை நிகரில்லாத
திருவம்பலவாணனுடைய சிதம்பரத்தில் வாழும் மாதரோ? மடப்பத்தையுடைய மயிலோ? என்று யாம்
சொல்லும்படி - நின்ற இவர் வாழுமிடம், தாமரைப் பூவோ ஆகாயமோ நீரோ பாம்புகளின் பதியாகிய
நாகருலகமோ இன்னவிடம் என்று அறிதற்குச் சிறிதும் அறியாதிருந்தது.**
** இச்செய்யுளின் பொருள் ஏட்டில் மிகவும் சிதைந்துள்ளது; கிடைத்த பகுதி, பேராசிரியருரையின்
துணை கொண்டு எழுதப்பட்டுள்ளது என்று பழைய உரைப்பதிப்பிலுள்ளது.
3. தெளிதல்*
------------
*பேரின்பப் பொருள்: " பார்வை போலும் வடிவென்றறிந்தது"
தெளிதல் என்பது ஐயுற்ற பின்னர் அவயவ மியங்கக்கண்டு இவள் தெய்வமல்லளென்று
தெளியா நிற்றல், அதற்குச் செய்யுள்
பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே
அணங்கல்லளென் றயில்வேலவன்
குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.
இதன் பொருள்: பாயும் விடை அரன் தில்லை அன்னாள் - பாய்ந்து செல்லும் விடையையுடைய
அரனது தில்லையை யொப்பாளுடைய; படைகண் இமைக்கும்- படைபோலுங் கண்கள் இமையா நின்றன;
நிலத்து அடிதோயும் - நிலத்தின் கண்அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும் - தூய மலர்கள் வாடா நின்றன;
ஆதலின்; துயரம் எய்தி ஆயும் மனனே- துயரத்தை யெய்தி ஆராயும் மனனே; அம்மா முலை சுமந்து -
அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல் தேயா நின்ற மருங்குலையும்;
பணைபெருந்தோள் - பணைபோலும் பெரிய தோள்களையுமுடைய. இச்சிறு நுதல் அணங்கு அல்லள் -
இச்சிறு நுதல் தெய்வமல்லள் எ-று.
துயரமெய்தி யாயுமனனே யென்றதனால், தெளிதல் கூறப்பட்டதாம். மெய்ப்பாடு மருட்கையினீங்கிய
பெருமிதம் என்னை, கல்வி தறுகணிசைமை கொடையெனச் - சொல்லப்பட்ட பெருமித நான்கே'
(தொல், பொருள், மெய்ப்பாட்டியல், 9) என்றாராகலின் தெளிதலுங் கல்வியின் பாற்படும், பயன்: தெளிதல்.
அவ்வகை தெய்வங்கொல்லோவென் றையுற்று நின்றான் இவ்வகை குறிகண்டு தெய்வமல்லள்
மக்களுள்ளாளெனத் துணிந்தானென்பது. எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் இனையன குறியே
வேற்றுமையில்லை யென்பது துணிவு.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : தெய்வமல்லள் என்று கூரிய வேலினை உடையவன்
அவயவங்களை ஆராய்ந்து கருதிச் சொன்னது.
செய்யுள்: பாய்ந்து செல்லுகின்ற இடபத்தை உடைய சிவனின் சிதம்பரத்தை நிகரானவள் வேல் போலும்
கண் இமையா நின்றது; பாதங்களும் பூமியிற் பொருந்தா நின்றன; செவ்விப்புட்பங்களும் வாடா நின்றன;
வருத்தமுற்று ஆராய்கின்ற மனமே! தெய்வமல்லள் காண்: அழகிய பாரதனங்களைச் சுமந்து தேயாநின்ற
இடையினையும்: பெருத்து வளர்ந்த வேயினை நிகர்த்த தோளினையும் உடைய இந்தச் சிறு நெற்றியினை
உடையவள் தெய்வமல்லள் காண் .
4. நயப்பு*
---------
* பேரின்பப் பொருள்; "திருமேனியாற் பயன் பெறலா மென்றறிந்தது"
நயப்பு என்பது தெய்வமல்லளென்று தெளிந்த பின்னர் மக்களுள்ளாளென்று நயந்து
இடையில்லைகொலென்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையுங்காட்டி இடையுண்டென்று சென்றெய்த
நினையாநிற்றல், அதற்குச் செய்யுள் :
அகல்கின்ற வல்குற் றடமது
கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
னம்மன்ன பல்வளைக்கே
வண்டமர் புரிகுழ லொண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது
இதன்பொருள் : அகல்கின்ற அல்குல் தடம் அது-அகலாநின்ற வல்குலாகிய் தடம் அது:
கொங்கை அவை-முலை அவை ; நெஞ்சு அவம் நீ புகல்கின்றது என்னை- நெஞ்சே காரணமின்றி நீ
சொல்லுகின்றதென்; அடையார் புரங்கள் இகல் குன்றவில்லில் செற்றோன்-அடையாதார் புரங்களது
இகலைக் குன்றமாகிய வில்லாற் செற்றவன்; தில்லை ஈசன் - தில்லைக்கணுளனாகிய வீசன்;
எம்மான்-எம்முடைய விறைவன்; எதிர்ந்த பகல் குன்ற பல் உகுத்தோன்-மாறு பட்ட ஆதித்தனது
பெருமைகுன்றப் பல்லை யுகுத்தோன்; பழனம் அன்ன பல்வளைக்கு இடை உண்டு - அவனது
திருப்பழனத்தை யொக்கும் பல்வளைக்கு இடையுண்டு எ-று
தடம்-உயர்ந்தவிடம், அல் குற்றடமது கொங்கை யவை என்புழி அல்குற்பெருமையானும்
முலைப்பெருமை யானும் இடையுண்டு என்றவாறன்று, அல்குலும் முலையுமுண்மையான் இடையுண்டு
என்றவாறு: அல்குற்றடமது வென்றும் முலையவையென்றும் பெருமைகூறியது அவை விளங்கித்
தோன்றுதனோக்கி, இகல் குன்ற வில்லிற் செற்றோ னென்பதற்கு இகல் குறைய வில்லாற் செற்றோனெனினும்
அமையும். நயந்த அண்ணல் - மக்களுள்ளாளென்று துணிதலால் நயந்த அண்ணல், உள்ளியது-கூட்டத்தை
நினைந்தது. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை வியந்துரைத்தலின் பயன்: ஐயந்தீர்ந்து மகிழ்தல்.
இந்நான்கு பாட்டும் ஒருவருள்ளக் கருத்தை யொருவரறியாத வொருதலைக் காமமாதலிற்
கைக்கிளைப்பால, அகத்திணையின்கட் கைக்கிளை வருதல் திணை மயக்காம். பிறவெனின் கைக்கிளை
முதற் பெருந்திணையிறுவாயெழு திணையினுள்ளுங் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச்சார்ந்த
புறமாயினும் கிளவிக் கோவையின் எடுத்துக்கோடற்கட் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமை
நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை* தழுவுதல் சிறப்பின்மையினீக்கினார். இது நலம் பாராட்டல்.
*பெருந்திணை-பொருந்தாக் காமம்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வண்டுகள் ஆர்க்கின்ற நெறித்த கூந்தலினையும் அழகிய
வளைகளையுமுடைய நாயகியை விரும்பி நாயகன் அதிசயப்பட்டு நின்றது.
செய்யுள்: அகலா நின்ற அல்குலின் பெருமை இருந்தபடி அது. தனங்களும் அங்ஙனே கதித்திருந்தன;
நெஞ்சமே! ஒரு காரணமு மின்றியே நீ சொல்லுகின்றதென்ன? தன்னைச்சேராத அசுரர்களுடைய
திரிபுரங்களினுடைய மாறுபாடு கெட வில்லாலே அழித்தவன் திருவம்பலத்திலே உள்ளவனாகிய பரமேசுவரன்
(எம்முடைய இறைவன்) (மாறுபட்ட சூரியனுடைய) வலியழியப் பல்லைத் தகர்த்தோன். அவனுடைய
திருப்பழனமென்ற திருப்படை வீட்டையொத்த பலவளைகளை உடையாளுக்கு இடை உண்டோ ? 14
5. உட்கோள்**
**பேரின்பப் பொருள் "தன்னிடத்திற் கருணையுண்டென்றறிந்தது"
உட்கோள் என்பது மக்களுள்ளாளென்று நயந்து சென்றெய்த நினையா நின்றவன்
தன்னிடத்து அவளுக்குண்டாகிய காதல் அவள் கண்ணிற்கண்டு தன்னுட்கொள்ளா நிற்றல்.
அதற்குச் செய்யுள் -
அணியு மமிழ்துமென் னாவியு
மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
தோளி படைக்கண்களே
இறைதிருக் கரத்து மறிமா னோக்கி
யுள்ளக் கருத்து வள்ள லறிந்தது.
இதன்பொருள் : மின்னும் பணியும் புரைமருங்குல் பெருந்தோளி படை கண்கள் - மின்னையும்
பாம்பையுமொக்கு மிடையினையும் பெருந்தோளினையுமுடையாளது படை போலுங் கண்கள்
பிறழ பிறழ பிணியும் பிறழுந்தோறும், பிறழுந்தோறும் பொது நோக்கத்தாற் பிணியும்;
அதற்கு மருந்தும் - உள்ளக்கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு
மருந்து மாகாநின்றன எ-று; அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்- எனக்காபரணமும்
அமிழ்தும் என்னுயிருமாயவன்; தில்லைச் சிந்தாமணி-தில்லைக்கட் சிந்தாமணி போல் அன்பர்க்கு
நினைத்தவை கொடுப்போன்; உம்பரார் அறியா மறையோன் - அன்பரல்லாத தேவர்களறியாத
வந்தணன்; அடிவாழ்த்தலரின் பிணியும் - அவனுடைய திருவடிகளை வழுத்தாதவரைப் போல
உறும் பிணியுமெனக் கூட்டுக.
அணி யென்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழிபெருஞ் சுவையோடுறுதி பயத்தலுடைமையான்.
ஆவியென்றார் காதலிக்கப்படும் பொருள்களெல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கு மிறைவனோடு
சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவேயாயினும், "பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின்,
மருளற வரூஉ மரபிற்றென்ப" என்பதனான் ஈண்டுச் சொல்லுவானது கருத்துவகையானும், உலகத்துப் பொருள்களுள்
அவற்றினூங்கு மிக்கனவின்மையானும், உயர்ந்தனவா யுவமையாயின. உம்பராலென்பது ** பாடமாயின்,
உம்பரானறியப் படாதவெனவுரைக்க . பிறழப் பிறழுமென்பது பாடமாயின், பிணியுமருந்தும் மாறி மாறி வரப்
படைக்கண்கள் பிறழுமெனவுரைக்க, இஃது உட்கோள் இவை யைந்துங் கைக்கிளை.
**இது பழையவுரைகாரர் கொண்டபாடம்.
திணை: குறிஞ்சி. கைகோள் : களவு. கூற்று: தலைமகன் கூற்று. கேட்பது: நெஞ்சு நெஞ்சென்பது
பாட்டின் கண் இல்லையாலோ வெனின் எஞ்சிற்றென்பதாம்; வறிதே கூறினானெனினுமமையும்.
இடம்: முன்னிலை. காலம்: நிகழ்காலம், எச்சம்: இப்பெருந்தோளி படைக்கண்களென்புழி இவ்வென்னுஞ்
சுட்டுச் சொல்லெஞ்சிற்று. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம் ஈண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள்
கண்ணினான் யாப்புற வறிதல் என்னை. "கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதினுணரு-முணர்வுடை
மாந்தர்க்கல்லது தெரியி-னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே" (தொல், பொருள் மெய்ப்பாட்டியல், 7 )
என்றாராகலின். பயன்: தலைமகளது குறிப்பறிந்து மகிழ்தல். பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி
படைக்கண்களென்றமையின், அவளுடம்பாட்டுக் குறிப்பு அவள் நாட்டத்தானுணர்ந்தனனென்பது. என்னை ,
'நாட்டமிரண்டு மறிவுடம் படுத்தற்குக் - கூட்டி யுரைக்குங் குறிப்புரையாகும்'' (தொல், பொருள், களவியல், 5 )
என்றாராகலின்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: சுவாமியினுடைய திருக்கரத்து மான் மறி(யின் நோக்கினை உடையாளின்)
மனத்தின் நினைவை நாயகன் அறிந்தது.
செய்யுள் : * தேவர்களாலும் அறியப்படாத வேதிய வடிவன் பாதங்களை வாழ்த்த மாட்டாதாரைப் போலப்
பார்க்கப் பார்க்க நோயுமாய் நோய்க்கு மருந்து மாகாநின்றன, மின்னையும் அரவின் படத்தையும் நிகர்த்த
இடையினை உடையளாய்ப் பெரிய தோளினை உடையாள் வேல்போலும் கண்கள்.
*இச்செய்யுள் உரையின் முற்பகுதி ஏட்டில் சிதைந்திருந்தது.
கண்கள் (பிறழப் பிறழ) பார்க்கப் பார்க்க நோயும் அதற்கு மருந்துமாக நின்றது: எங்ஙனென்னின்,
பொது நோக்கத்தாலே பார்க்க நோயாகாநின்றது; உள்ளக் கருத்து வெளிப்படு (வத) னோடு கூடிய நோக்கத்தாலே
பார்த்தபோது அதற்கு மருந்தாக நின்றது. 5
கைக்கிளை முற்றிற்று
6. தெய்வத்தை மகிழ்தல்**
---------------------
**பேரின்பப்பொருள்: “தன்றவத்தினை வியந்தது"
தெய்வத்தை மகிழ்தல் என்பது உட்கொண்டு நின்று என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத் தந்த
தெய்வத்தையல்லது வேறொரு தெய்வத்தை யான் வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்:
வளைபயில் கீழ்கட னின்றிட
மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன் தெய்வ மிக்கனவே
அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது
இதன் பொருள் : வளை பயில் கீழ் கடல் நின்று இட-சங்கு நெருங்கின கீழ்த்திசைக் கடலிலே நின்று இட;
நேர்கழி மேல் கடல் வான் நுகத்தின் துளைவழி கோத்தென அவ்வொத்த கழி மேற்றிசைக் கடலிலிட்ட பெரிய
நுகத்தினது துளைக்கட்சென்று கோத்தாற்போல; தில்லைத் தொல்லோன் கயிலை கிளை வயின் நீக்கி
தில்லையிடத்துப் பழையோனது கைலைகண் ஆயத்தாரிடத்து நின்று நீக்கி; இக்கெண்டை கண்ணியைக்
கொண்டு தந்த விளைவை அல்லால் - இக்கண்டை போலுங் கண்ணையுடையாளைக் கைக்கொண்டு தந்த
நல்வினையின் விளைவாகிய தெய்வத்தையல்லது; மிக்கன தெய்வம் வியவேன் நயவேன் - மிக்கனவாகிய
பிற தெய்வத்தை வியப்பதுஞ் செய்யேன்; நயப்பதுஞ் செய்யேன் எ-று.
கைலைக்கட் கொண்டு தந்த வெனவியையும், இவளைத் தந்த தெய்வத்தையல்லது நயவேனென்று
அவளது நலத்தை மிகுத்தமையின், இதுவும் நலம் பாராட்டல். பயந்தோர் பழிச்சற்* பாற் படுத்தினுமமையும்.
மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை பயன்: மகிழ்தல்
*பயந்தோர் பழிச்சல்-தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு; அன்னத்தின் நடையைப் போன்ற மதுர நடையினையுடைய
நாயகியைக் கூட்டின நிலைபெற்ற பெரிய தெய்வத்தைச் சந்தோஷித்துச் சொன்னது.
செய்யுள்: சங்கு செறிந்த கீழைச் சமுத்திரத்தினின்று கழியைப் போக்கிட மேலைக்கடலிலே
போகட்ட பெரிய நுகத்தின் துளை இடத்தே அத்துளை கோத்த கழி சென்று கோப்புண்டா போலப்,
பெரும்பற்றப்புலியூர்க்குப் பழையவனாகி முதலியாருடைய ஸ்ரீ கயிலாயத்திருமலையின் ஆயக்
கூட்டத்தாரிடத்து நின்றும் பிரித்துக் கெண்டை போலும் நயந்த கண்ணினையுடையாளை
நான் கண்டு கூடுவதாகக் கூட்டின இப்படிக்கு விளைந்த விளைவையல்லது கொண்டாடுவதில்லை:
வேறு தெய்வங்களையும் விரும்புவதில்லை .
7. புணர்ச்சி துணிதல்*
---------------------
*பேரின்பப் பொருள்: " இன்பம் பெற நினைந்தது"
புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சியெனத்
தன்னெஞ்சிற்குச் சொல்லி அவளோடு புணரத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள்;
ஏழுடை யான்பொழி லெட்டுடை
யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
பொன்னிவ் வுயர்பொழில் வாய்ச்**
சூழுடை யாயத்தை நீக்கும்
விதி துணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
காய்வந் தகப்பட்டதே
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது
** 'வுயர்வரைவாய்ச்' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: பொழில் ஏழு உடையான்- பொழிலேழுடையான் ;புயம் எட்டு உடையான் -புயமெட்டுடையான்
முன் என்னை ஆள் ஊழ் உடையான் - எனக்கு ஆட்படுந்தன்மை யுண்டாவதற்கு முன்னே என்னையாள்வதொரு
புதிதாகிய முறைமையை யுடையான்; புலியூர் அன்னபொன் - அவனது புலியூரை யொக்கும் பொன்னனையாள்;
இஉயர் பொழில் வாய் சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணை ஆக - இவ்வுயர்ந்த பொழிலிடத்து ஒரு பொழுதும்
விடாது சூழ்தலையுடைய ஆயத்தை நீக்குதற்குக் காரணமாகிய விதி துணையாக; மனனே- மனமே;
யாழ் உடையார் மணங்காண் அணங்கு ஆய் வந்து அகப்பட்டது - கந்தருவர் மணங்காண் முன் வருத்துவதாய்
வந்து அகப்பட்டது; இனிக்கூட்டத்துக்குடன் படுவாயாக எ-று
பொன்னீக்குமெனவியையும் ஆகவென்பது ஆவெனநின்ற செய்யுண் முடிபு; புறனடையாற் கொள்க.
அணங்காய் வந்தென்றான். உள்ளஞ்செல்லவும் இது தகாதென்று விலக்குதலால் முன் வருத்தமாயினமையின்;
தெய்வத்தன்மையுடைத்தாய் வந்தெனினுமமையும். அகப்பட்டதென்று இறந்த காலத்தாற் கூறினான்,
புணர்ச்சிதுணிந்தமையான். இதுவும் உட்கோட்பாற்படும்.
இவை யிரண்டும் ஒருதலைக் காமமல்லவெனினும் புணர்ச்சி நிகழாமையிற் கைக்கிளைப்பாற்படும்.
புணர்ச்சி நிகழாமை தெய்வப்புணர்ச்சி செம்மல் துணிந்த தென்பதனானறிக. பேதையைப் புணர்ச்சி துணிந்தது.
விதி துணையாகக் கந்தருவர் மணம் ஒரு பெண் வடிவு கொண்டு எனக்கெய்திற் றென்றமையின்.
இவனோ டிவளிடையுண்டாய அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம். பாங்கற் கூட்டந்
தோழியிற் கூட்டமென்று இவற்றில் அவர் துணையாயவாறு போல விதியும் இவரை ஆயத்தினீக்கிக் கூட்டின
மாத்திரையே யன்றி அன்பிற்குக் காரணமன்றென்பது. அல்லதூஉம்; விதியாவது செயப்படும் வினையினது
நியதியன்றே, அதனானே அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவுஞ் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும்;
அது மறுத்தற்பொருட்டன்றே தொல்லோரிதனை இயற்கைப் புணர்ச்சியென்று குறியிட்டது. அல்லதூஉம்,
நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும், இவர்களன்பு துய்த்தாலு முடிவெய்தாது, எஞ்ஞான்று மொரு பெற்றியே
நிற்குமென்பது. அல்லதூஉம் "பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்'' (திருக்கோவை. 205)
என்றலானும், இவர்களன்பிற்குக் காரணம் விதியன்றென்பது. பல பிறப்பினுமொத்த அன்பென்றாராகலின்,
பல பிறப்பினுமொத்து நிற்பதோர் வினையில்லை யென்பது. அஃதேல், மேலைச் செய்யுளில் வினை விளைவே
கூட்டிற்றாக விசேடித்துச் சொல்லவேண்டிய தென்னையெனின். இம்மையிற் பாங்கனையுந் தோழியையுங்
குறையுற அவர்கள் தங்களினாகிய கூட்டங்கூட்டினார்கள்; உம்மை நல்வினையைக் குறையுற்று வைத்து
இம்மை அதனை மறந்தான் ;
மறப்புழியும், அது தான் மறவாது இவர்களையுங் கண்ணுறுவித்து இவர்க்குத் துப்புமாயிற்றாகலான்,
விசேடிக்கப்பட்டது. அல்லதூஉம், “பாங்கனை யானன்ன பண்பனை' (திருக் கோவை. 19) என்று அவனை விசேடித்தும்
"முத்தகஞ்சேர் மென்னகைப் பெருந்தோளி" (திருக்கோவை 106) என்று அவளை விசேடித்தும், அவர்களினாலாய
கூட்டத்திற்குக் கூறினமையின், நல்வினைப் பயனும் அம்மாத்திரையே விசேடித்த தென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொவ்வைக் கனியை ஒத்த சிவந்த வாயினையும் கொடி போலும்
இடையினையுமுடைய நாயகியைக் கந்தருவ மணமென்று நாயகன் அறுதியிட்டது .
செய்யுள்: புவி ஏழுக்குமுடையவன், எட்டுத் திக்கையும் திருக்கரங்களாக உடையவன். நான் தனக்கு
அடிமை செய்வதற்கு முன் விதியுடையவன் சிதம்பரத்தை ஒத்த பொன் போன்றவளை இந்த உயர்ந்த
மலையிடத்துச் சுற்றிப் பிரியாத ஆயக் கூட்டத்தாரிடத்தினின்றும் நீக்கின விதியே துணையாகிய
நெஞ்சமே (கந்தருவ மணம் கை கூட ஒரு பெண்ணாக வந்து என் கைக்குள்) சிக்கிக் கொண்டது.
8. கலவியுரைத்தல்**
-------------------
**பேரின்பப் பொருள்: "பெற்ற வின்பத்தை வியந்தது".
கலவியுரைத்தல் என்பது தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் புணர்ச்சி யின்பத்தியல்பு
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
சொற்பா லமுதிவள் யான்சுவை
யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
புனிதன் பொதியில் வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
தோட்ட களவகத்தே,
கொலைவேலவன் கொடியிடையொடு
கலவியின்பங் கட்டுரைத்தது.
இதன் பொருள்: சொல்பால் அமுது இவள் யான் சுவை துணிந்து என்ன இங்ஙன் நல்பால் வினை
தெய்வம் தந்து எ-து, சொல்லும் பகுதியில் அமுதிவள் யானதன் சுவையென்று துணிந்து சொல்ல
இவ்வண்ணமே நல்ல கூற்றின் வினையாகிய தெய்வந்தர எ-று. என்றது சுவையையுடைய பொருட்குஞ்
சுவைக்கும் வேறுபாடில்லாதவாறு போல எனக்கும் இவட்கும் வேறுபாடில்லை எ-று. இன்று நான் இவள் ஆம்
பகுதி பொற்பு ஆர் அறிவார் எ-து. இவ்வாறு வேறுபாடில்லையாயினும் புணர்ச்சியான் வரும் இன்பந்துய்த்தற்
பொருட்டாக இன்று யானென்றும் இவளென்றும் வேறுபாட்டோடு கூடிய அழகையாரறிவார். இதனை
யனுபவிக்கின்ற யானே யறியினல்லது எ-று. புலியூர் புனிதன் பொதியில் வெற்பில் கல்பாவிய வரை வாய்
கடி தோட்ட களவகந்து எ- து .புலியூர்க் கணுளனாகிய தூயோனது பொதியிலாகிய வெற்பிற் கற்பரந்த
தாழ்வரையிடத்துக் காவலை வாங்கிய களவிடத்து எ-று.
களவகத்துப் பொற்பெனக் கூட்டுக. தந்தென்பது தரவெனத் திரிக்கப்பட்டது. தந்தின்றென்பது
தந்ததென்னும் பொருள் படாமையறிந்து கொள்க. தந்தன்றென்பதூஉம் பாடம் போலும் . கடிதோட்ட
வென்பதற்குக் கடியப்பட்ட தொகுதியையுடைய களவென் றுரைப்பினுமமையும். தோட்ட வென்றது
தலைமகளாயத்தையுந் தன்னிலைஞரையும், கடி தொட்ட வென்பது பாடமாயின், மணந் தொடங்கிய
களவென்றுரைக்க. கொடியிடையொடு கலவி-கொடியிடையொடு நிகழ்ந்த கலவி. மெய்ப்பாடு உவகை.
பயன்: மகிழ்ச்சி; தலைமகளை மகிழ்வித்தலுமாம், நல்வினைத் தெய்வம் இவளைக் களவின்கட் கூட்ட
அமுதமும் அதன்கட் கரந்து நின்ற சுவையுமென்ன என்னெஞ்சம் இவள் கண்ணே யொடுங்க
யானென்பதோர் தன்மை காணாத தொழிய இருவருள்ளங்களும் ஒருவே மாமாறு கரப்ப ஒருவே மாகிய
ஏகாந்தத்தின் கட்பிறந்த புணர்ச்சிப்பேரின்ப வெள்ளம் யாவரானறியப்படு மென்று மகிழ்ந்துரைத்தான்;
உரைப்பக் கேட்ட தலைமகளும் எம் பெருமான் என்கண்வைத்த அருளினானன்றோ இவ்வகையருளியதென்று
இறப்பவு மகிழ்வாளாம்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: (விலங்குகளின் ) உயிரை வேட்ட வேலினை உடைய நாயகன்
பொன் மருங்குலையுடைய நாயகியுடனே கூட்டத்தால் படும் இன்பம் இசையச் சொன்னது.
செய்யுள் : சொல்லு பகுதியில் அமுது இவள் (யான் அதன் சுவை யென்று) சொல்லும்படி அறுதியிட்ட
படியே நகல் கூறு பாட்டையுடைய விதியாகிய தெய்வம் தந்தின்று (தந்தது): நான் என்றும் இவள் என்றும்
வேறுபட்ட இவ்வழகை யாராலே அறியப்படும்? பெரும்பற்றப் புலியூரிலே உளனாகிய தூயவன் அவனுடைய
பொதியமா மலையில் கல் பாய்ந்தகன்ற மலையிடத்துக் காவலை நீங்கின களவகத்தே (தொட்ட களவகத்தே
என்பது இவர் பாடம்).
நானென்றும் இவளென்றும் வேறுபட்ட இவ்வகை, யாராலே அறியப் படும் என்ன, ஓருயிர்க் கோருடம்பானால்
இன்பம் அனுபவிக்க ஒண்ணா தென்று ஓருயிர்க்கிரண்டுடம்பானால்: இவ்வாழ்க்கை யாராலே அறியப் படும்?
அனுபவிக்கிற நானே அறியு மித்தனை என்றுபடும்.
9. இருவயினொத்தல்*
--------------------
* பேரின்பப் பொருள்: "பெற்ற வின்பம் புதிதாய்ப் பேணியது''
இருவயினொத்தல் என்பது புணராத முன்னின்ற வேட்கை யன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே
நின்று வளர்ந்து சேறலால் தலைமகளை மகிழ்ந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -
உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும் பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே
ஆராவின்பத் தன்புமீதூர
வாரார்முலையை மகிழ்ந்துரைத்தது.
இதன் பொருள் : உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன். ஒருகாற் றன்னையுணர்ந்தவர்கட்குப்
பின்னுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியு மொடுங்குதலான் மீட்டுணர் வரியோன் ; தில்லை
சிற்றம்பலத்து ஒருத்தன். தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளானாகிய ஓப்பில்லாதான்; குணம்
வெளிப்பட்ட கொவ்வை செவ்வாய் இகொடி தோள் புணர்ந்தால்- அவனது குணமாகிய ஆனந்தம்
வெளிப் பட்டாற்போலுங் கொவ்வைக் கனிபோலுஞ் செவ்வாயையுடைய இக்கொடியிடை தோளைக்
கூடினாலும் : புணருந் தொறும் பெரும் போகம் பின்னும் புதிது ஆய்-கூடுந் தோறும் பெரிதாகிய வின்பம்
முன்புபோலப் பின்னும் புதிதாய் மணம் - தாழ்புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றது- மணந்தங்கிய
சுருண்ட குழலையுடையாளது அல்குல் போல வளரா நின்றது எ-று.
உணர்ந்தார்க்குக் குணந்தான் வெளிப்பட்ட வென இயைத்துரைப்பினு மமையும். உணர்ந்தார்க்
குணர்வரியோனென்பதற்குத் தவத்தானுந் தியானத்தானும் எல்லாப் பொருள்களையு முணர்ந்தவர்க்கும்
உணர்வரியோனெனினுமமையும் . இப்பொருட்டு - உணர்ந்தார்க்குமென உம்மை வருவித்துரைக்கப் பட்டது.
குணந்தான் வெளிப்பட்ட கொடியிடை யென்புழி உவமையோடு பொருட் கொற்றுமை கருதி உவமைவினை
உவமிக்கப்படும் பொருண்மேலேற்றப்பட்டது. புணர்ந்தாற் புதிதாயென வியையும். புணர்ந்தாலுமென
இதற்கும் உம்மை வருவித் துரைக்கப்பட்டது . இன்பத்தன்பு-இன்பத்தான் வந்த செயற்கை யன்பு மெய்ப்பாடும்
பயனும் : அவை புணர்ச்சிக்கட் டோன்றி ஒரு காலைக்கொருகாற் பெருகாநின்ற பேரின்ப வெள்ளத்தைத்
தாங்கலாற்றாத தலைமகன் ஆற்றுதல் பயனெனினுமையும்.
வளர்கின்ற தென்றமையிற் புணர்ந்ததனாற் பயனென்னை யெனின், புணராத முன்னின்ற வேட்கை
புணர்ச்சிக்கட் குறைபடும். அக்குறைபாட்டைக் கூட்டத்தின்கட் டம்மிற் பெற்ற குணங்களினானாகிய அன்பு
நிறைக்கும், நிறைக்க எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்பது. அல்குல் போல வளர்கின்ற தென்ற வழி
ஒரு காலைக் கொருகால் வளருமென்றாரல்லர், என்னை குறை பாடுள்ளதற்கன்றே வளர்ச்சியுண்டாவது;
அல்லதூஉம் எஞ்ஞான்றும் வளருமெனின், அல்குற்கு வரம்பின்மையுந் தோன்றும்; மற்றென்னை கருதியதெனின்,
இயற்கைப் புணர்ச்சி புணர்கின்றகாலத்து இவள் பதினோராண்டும் பத்துத் திங்களும் புக்காள் ஆகலின்
இவளது அல்குல் இலக்கணக் குறைபாடின்றியே வளராநின்றது; வளர்ந்து பன்னீராண்டு நிரம்பினால் ஒரு
பெற்றியே நிற்கும்; அதுபோல இவன் காதலும் உள்ளமுள்ளளவு நிறைந்து பின்னைக் குறைபாடின்றி
ஒருபெற்றியே நிற்குமென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அமையாத இன்பத்தாலே அன்பு மிகுந்து செல்லக் கச்சார்ந்த
தனங்களை உடையாளை விரும்பிச் சொன்னது.
செய்யுள்: தன்னை உணர்ந்தவர்களுக்கு உணர்வானவன் ; அத்தன்மை உணராதார்க்கு அரியவன்;
பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தேயுளனாகிய ஒப்பில்லாதவன்; அவனுக்குக்குணமாகிய சிவானந்த
மகிமை வெளிப்பட்டாற்போல வெளிப்பட்ட கொவ்வைக் கனிபோல் சிவந்த வாயினை உடைய வஞ்சிக்கொடி
போன்ற இடையினையுடை இவளுடைய தோள்கள் கூடினால் கூடுந்தோறும் பெரிய போகமானது. பின்னும்
ஒரு காலைக் கொருகால் புதிதாய் மணம் செறிந்த அளகத்தினை யுடையவள் அல்குலினது பெருமைக்குவமை
இல்லாததுபோல இவ்வின்பத்திற்கு உவமையில் (லாமல்) பெருகாநின்றது: இதென்ன வியப்போ? 9
10. கிளவிவேட்டல்*
-----------------
*பேரின்பப் பொருள்; "குருமொழி வேண்டிக் குறையிரந் துரைத்தது.''
கிளவி வேட்டல் என்பது இரு வயினொத் தின்புறாநின்ற தலைமகன் உறுதன் முதலாகிய
நான்கு புணர்ச்சியும் பெற்றுச் செவிப்புணர்ச்சி ** பெறாமையின் ஒருசொல் வேட்டு வருந்தா நிற்றல்,
அதற்குச் செய்யுள் -
** இதனை. ''கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள"
என வரும் திருக்குறளால் அறிக.
அளவியை யார்க்கு மறிவரி
யோன்றில்லை யம்பலம் போல்
வளவிய வான் கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியெனறற்
கிளவியை யென்றோ வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே
அன்னமன்னவ ளவயங்கண்டு
மென்மொழிகேட்க விருப்புற்றது.
இதன் பொருள் : அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம்போல் வான்கொங்கை வளவிய-
அளவை யார்க்கும் அறிவரியவனது தில்லையம்பலம்போலப் பெருங்கொங்கைகள் வளத்தையுடையன;
தடங்கண் வாள் - பெரியகண்கள் வாளோடொக்கும் நுதல் மாமதியின்பிளவு இயல்-நுதல் பெரிய மதியின்
பாகத்தினியல்பை யுடைத்து இடைமின் -இடைமின்னோ டொக்கும் ; தோள் பெருஅமைதோள்கள் பெரிய
வேயோடொக்கும்; பெற்றி இது என்றால்-இவற்றது தன்மை இதுவானால் ,கிள்ளை யார்வாயில் கிளவியை
இனி கேட்கின்றது என்- கிள்ளை போல்வாள் வாயின் மொழியை இனிக்கேட்க வேண்டுகின்றதென் ?
இப்பெற்றிக்குத் தக்கதேயிருக்கும் எ-று.
துறவு துறவியென நின்றாற்போல அளவு அளவியென நின்றது மொழி கிளிமொழியோ
டொக்குமென்பது போதரக் கிள்ளையாரென்றான், வயினென்பது பாட மாயின் வாயினென்பது குறுகி
நின்றதாகவுரைக்க. வயின் இடமெனினுமமையும் அவயவங்கண்டென்புழி உறுதன் முதலாகிய
நான்கையுங் கண்டென்றார் மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப்புணர்த்துதல்
(பழைய வுரைப் பொழிப்பு) கொளு: நடையால் அன்னத்தை ஒத்தவள் அவயத்தைப்பார்த்து
மெல்லிய வார்த்தையினைக் கேட்டதாக விரும்பினது.
செய்யுள்: தன்னுடைய திருவெல்லை யாவராலும் அறிதற்கு அரியவன் திருவம்பலத்தை ஒத்த
வளப்பத்தை உட்கொண்டிருந்தன கனதனங்களும்: பெரிய கண்கள் வாள் போன்றிருந்தன; நெற்றியும்
பாதிமதியின் இயல்பாய் இருந்தன. இடையும் மின் போன்று இருந்தது; பெரிய தோள்களும் வேய்தாமாகி
இருந்தன. அவயவங்களின் இயல்புகள் இவையானால் கிளியை ஒப்பார் வாயில் வார்த்தையைக் கேட்கும்
தரந்தான் என்ன ? அவயவங்களின் இயல்புகள் இவையானால் அவர் வார்த்தையும் இவற்றிற்குத்
தக்கன வல்லவோ ? 10
11. நலம்புனைந்துரைத்தல் *
-------------------------
*பேரின்பப் பொருள்: "அன்பால் நலங்கொண்டாடியது"
நலம்புனைந்துரைத்தல் என்பது கிளவிவேட்டு வருந்தக் கண்ட தலைமகள் மூரன்முறுவல்
செய்யத் தலைமகன் அது பெற்றுச் சொல்லாடாமையா னுண்டாகிய வருத்த நீங்கி, நுமதகன்ற
மருத நிலத்துக் குறிஞ்சி நிலத்து இவள் வாய் போல நாறும் ஆம்பற் பூக்களுளவோவென அந்நிலத்து
வண்டோடு வினவா நிற்றல் அதற்குச் செய்யுள்: -
கூம்பலங் கைத்தலத் தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.
பொங்கிழையைப் புணைநலம்புகழ்ந்
தங்கதிர்வேலோன் அயர்வு நீங்கியது.
இதன் பொருள் : அளிகாள் நும்அகன் பணை- வண்டுகாள் நுமதகன்ற மருத நிலத்து; தேம்பு சிற்றிடை
ஈங்கிவள் - தேம்புஞ் சிறிய விடையையுடைய இவளது; தீம் கனி வாய் கமழும் ஆம்பல் போது உளவோ -
இனியதாகிய கனிந்த வாய் போல நாறும் ஆம்பற் பூக்களுளவோ? சொல்லுமின் எ-று. கூம்பு கைத்தலத்து
அன்பர் என்பு ஊடு உருக குனிக்கும்-கூம்புங் கைத்தலங்களையுடைய அன்பரது என்பும் உள்ளுருகக்
கூத்தாடநின்ற; பாம்பு அலங்காரப் பரன் தில்லை அம்பலம் பாடலரின் தேம்பு- பாம்பாகிய அணியையுடைய
பரமனது தில்லையம்பலத்தைப் பாடாதாரைப் போலத் தேம்புமெனக் கூட்டுக.
அல்லும் அம்மும் : அல்வழிச் சாரியை. பாம்பலங் காரம் மெலிந்து நின்றது. ஈங்கிவளென்பது ஒரு சொல்,
கனிவாய்-கனி போலும் வாயெனினுமமையும், புனைநலம் என்றது புனையப் பட்ட வியற்கைநலத்தை.
அயர்வு நீங்கியது- சொல்லாடாமையி னுண்டாகியவருத்த நீங்கியது. மெய்ப்பாடு: உவகை. பயன்.
நயப்புணர்த்துதல் . இயற்கை யன்பினானும் அவள் குணங்களாற்றோன்றிய செயற்கையன்பினானும்
கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனதன்பு மிகுதியை யுணர்த்துதல் நயப்புணர்த்துதல் என்பது.
(பழைய வுரைப் பொழிப்பு) கொளு: மிகுந்த ஆபரணங்களை யுடையாளை (அவள் புனைந்த
நலன்களைப் புகழ்ந்து) அழகிய ஒளியினையுள்ள வேலினையுடையவன் வருத்த மகன்றது.
செய்யுள்: கூம்புதலை யுடைத்தாகிய அழகிய கைத்தலங்களையுடைய அடியார் என்புகளெல்லாம்
கரைந்து உருகும்படி ஆடி அருளுகின்ற அரவாபரண அலங்காரச் சிவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரில்
திருவம்பலத்தைப் பாடமாட்டாதாரைப் போலத்தளர்ச்சியையுள்ள அழகிய சிற்றிடையினையுடைய
இவளுடைய நெய்த்த நிறமுடையதாகிய கனிவாய் விரிமை (?) போலே நாறுவன ஆம்பற் பூவும் சிலவுண்டோ ?
வண்டுகாள்! நும்முடைய அகன்றமருத நிலத்துண்டாகிற் சொல்லுவீராக. 11
12. பிரிவுணர்த்தல்*
-------------------
* பேரின்பப் பொருள், "திருமேனிப் பிரிவான் மயங்கியது."
பிரிவுணர்த்தல் என்பது ஐவகைப்புணர்ச்சி**யும் பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்தபின்னும்
ஒத்தவன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமாறென்னையெனின், இப்புணர்ச்சி நெடுங் காலஞ்செல்லக்
கடவதாக இருவரையுங் கூட்டிய தெய்வந்தானே பிரியாமற் பிரிவிக்கும். அதுபிரிவிக்குமாறு. தலைமகன்
தனதாதரவினா னலம்பாராட்டக் கேட்டு. எம்பெருமான் முன்னின்று வாய் திறந்து பெரியதோர் நாணின்மை
செய்தேனெனத் தலைமகள் நாணி வருந்தாநிற்ப, அதுகண்டு இவள் வருந்துகின்றது யான் பிரிவேனாக
நினைந்ததாக வேண்டுமென் றுட்கொண்டு, அவளுக்குத்தான் பிரிவின்மை கூறாநிற்றல், அதற்குச் செய்யுள் -
** ஐ வகைப் புணர்ச்சி - கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிதல் என்பன.
சிந்தா மணிதெண் கடலமிர்
தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே
பணிவளரல்குலைப் பயிர்ப்புறுத்திப்
பிணிமலர்த்தாரோன் பிரிவுணர்த்தியது.
இதன்பொருள்: சிந்தாமணி தெள்கடல் அமிர்தம் தில்லையான் அருளால் வந்தால்-ஒருவன்
தவஞ்செய்து பெறுஞ் சிந்தாமணியும் தெளிந்த கடலினமிர்தமும் வருத்தமின்றித் தில்லையானருளாற்
றாமே வந்தால் : இகழப்படுமே - அவை அவனாலிகழப்படுமா; மடமான் விழி மயிலே - மடமான் விழி
போலும் விழியையுடைய மயிலே; அம் தாமரை அன்னமே - அழகிய தாமரைக்கண் வாழு மன்னமே :
நின்னை யான் அகன்று ஆற்றுவனோ - நின்னை யான் பிரிந்தாற்றி யுளனாவனோ?: சிந்தாகுலம்
உற்று என்னை வாட்டந் திருத்துவது என்னோ- சிந்தையின் மயக்கமுற்று என்னை வாட்டுவதென்னோ? எ.று
அந்தாமரையன்னம் திரு வென்பாரு முளர், நின்னை யென்புழி உயிரினுஞ் சிறந்த நின்னையென்றும்,
யானென்புழி இரு தலைப் புள்ளினோருயிரேனாகிய யானென்றும், அச்சொற்களான் விளங்கின.
வாட்டந்திருத்துவதே யென்னுஞ்சொற்கள் ஒரு சொன்னீரவாய், வாட்டுவதேயென்று பொருள்பட்டு,
இரண்டாவதற்கு முடிபாயின. வாட்டத் திருத்துவதென்று பாடமாயின் வாட்டத்தின் கணிருத்துவதென்றுரைக்க,
பயிர்ப்பு - பயிலாத பொருட் கண் வந்த அருவருப்பு. ஈண்டுப் பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல்-
அகன்றாற்றுவனோவெனப் பிரிவென்பது மொன்றுண்டென்பதுபட மொழிதல். மெய்ப்பாடு அச்சத்தைச்
சார்ந்த பெருமிதம் பயன்: பிரிவச்ச முணர்த்துதல்.
(பழையவுரை பொழிப்பு ) கொளு : பாம்பினது படத்தை ஒத்து மிக்க அல்குலையுடையாளைப்
பயிலாத பொருளாகிய பிரிவுக்கு அருவருக்கப் பண்ணிக் கட்டப்பட்ட மாலையையுடையவன் பிரிவு அறிவித்தது.
செய்யுள்: சிந்தாமணி என்கின்ற வள்ளலும், தெளிந்த கடலிலே உண்டாகிய அமுதமும்,
திருவம்பல நாதன் திருவருளினாலே இவை சிலர்க்குண்டானால் வேண்டா என்று இகழப்படுமோ?
மெல்லிய மானோக்கம் போன்ற நோக்கினையுடையாய்! சாயலால் மயிலை ஒப்பாய். அழகிய தாமரைக்கண்
வாழும் அன்னமே! உயிரினும் சிறந்த நின்னை இருதலைப் புள்ளின் ஓருயிரன்ன யான் பிரிவாற்றுவனோ?
சிந்தையானது வருத்தமுற்று ஏன்தான் என்னை நோய் செய்கிறது? சொல்லுவாயாக வேண்டும். 12
13. பருவரலறிதல்*
-----------------
*பேரின்பப் பொருள் : ''திருவுளத் திரக்கங் கண்டது"
பருவரலறிதல்: என்பது பிரிவின்மை கூறக்கேட்ட தலைமகள், பிரிவென்பது மொன்றுண்டு போலுமென
வுட்கொண்டு முன்னாணினாற் சென்றெய்திய வருத்த நீங்கிப் பெரியதோர் வருத்த மெய்த அதுகண்டு,
'இவள் மேலு மேலும் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதலரிதென்று நினைந்தோ, நெடும்பொழு திவ்வாறிருந்தால்
அவ்விடத்துக் குடிப்பழியாமென்று நினைந்தோ, அறிகிலேனென் அவள் வருத்தமறியா நிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
அறியே னயர்கின்றதே.
பிரிவுணர்ந்த பெண் கொடிதன்
பருவரலின் பரிசு நினைந்தது.
இதன் பொருள்: கோங்கின்பொலி அரும்புஏய் கொங்கை பங்கன் - கோங்கின்க ணுண்டாகிய பொலிந்த
வரும்பை யொக்கு முலையையுடையாளது பங்கையுடையான்; குறுகலர் ஊர் தீங்கில் புக செற்ற கொற்றவன் -
குறுகாதார் புரங்கள் **பாசண்ட தருமமாகிய தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியை யுடையான்;
சிற்றம்பலம் அனையாள் அயர்கின்றது நீங்கின்புணர்வு அரிது என்றோ - அவனது திருச்சிற்றம்பலத்தை
யொப்பாள் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதலரிதென்று நினைந்தோ; நெடிது இங்ஙன் இருந்தால் ஆங்கு
இற்பழி ஆம் எனவோ. நெடும் பொழுதிவ்வாறிருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியா மென்று
நினைந்தோ; அறியேன் - அறிகிலேன் எ-று.
**பாசண்டம் - வேதாசார விரோதம்
தீங்கிற்புக வென்பதற்குத் துன்பமறியாதார் துன்பத்திற்புக வெனினு மமையும், ஆங்கென்றது
சுற்றத்தாரிடத்தும் அயலாரிடத்தும்; ஆங்கு: அசைநிலையெனினு மமையும் பிரியலுறுகின்றானாகலின்,
இற்பழியாமென்று வேறுபட்டாளாயின் நன்றென்பது கருத்து. மெய்ப்பாடு. அச்சத்தைச் சார்ந்த மருட்கை,
பயன்: ஐயந்தீர்தல் அவ்வகை தலைமகளது ஆற்றாமைத்தன்மை தலைமகற்குப் புலனாயிற்று; புலனாகத்
தலைமகன் இவ்வகை தன்னெஞ்சோடுசாவி ஆற்றானாயினானென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: தன் பிரிவை அறிந்து பெண்ணுருக் கொண்ட வல்லிசாதகக்
கொடியைப் போன்றவளுடைய துன்பத்தின் இயல்பை விசாரித்தது
செய்யுள்: கோங்கினது பொலிவு பெற்ற அரும்பை ஒத்த திருமுலைத் தடங்களையுடைய
ஈசுவரியாரைப் பக்கத்திலேயுள்ளவன், தன்னை வந்து சேராதவருடைய முப்புரங்கள் தீங்காகிய புத்த சமயத்திலே
புகுதலாலே அழித்த வெற்றியினை உடையவன் அவனுடைய திருச்சிற்றம்பலம் போன்றவள் பிரிந்தால்
தன்னைக் கூடுதற்கு அரிதென்றோ , நெடும் பொழுது இங்ஙனம் தாழ்க்க இருந்தால் அவ்விடத்து
(ஆவது, சுற்றத்தாரிடத்தும் அயலாரிடத்தும்) குடிப்பழியாம் என்றோ அறிகிலேன்; வருந்துகின்றது. 13
14. அருட்குணமுரைத்தல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: அருட்குப் பிரிவில்லை யென்றறிந்தது.
அருட்குணமுரைத்தல் என்பது இற்பழியாமென்று நினைந்தோவென்று கூறக்கேட்ட தலைமகள்
இது நந்தோழியறியின் என்னாங்கொல்லோவென்று பிரிவுட்கொண்டு பிரிவாற்றாது வருந்தா நிற்ப,
அக்குறிப்பறிந்து அவள் பிரிவுடம்படுவது காரணமாகத் தலைமகன் யாம்பிரிந்தேமாயினும்
பிரிவில்லையெனத் தெய்வத்தினருள் கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள் -
தேவரிற் பெற்றநஞ் செல்வக்
கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப் புலம்புவதே
கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம்
வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.
இதன் பொருள் : தேவரில் பெற்ற நம் செல்வக்கடி - முயற்சியும் உளப்பாடுமின்றித் தேவராலே
பெற்ற நமதழகிய மணத்தை ; வடிவு ஆர் திருவே - வடிவார்ந்த திருவே ; இனி யாவரின் பெற்று யார் சிதைப்பார் -
இனிச் சிதைத்தற் கீடாகிய தன்மையை யாவராலே பெற்று யாவர் சிதைப்பார்; இமையாத
முக்கண் மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி-இமையாத மூன்று கண்ணையும் மூவராலே பெற்றவரது
சிற்றம்பலத்தை யழகு செய்த; மொய் பொழில் வாய் பூ அரில் பெற்ற குழலி - செறிந்த பொழிலிடத்
துளவாகிய பூக்களது பிணக்கத்தைப் பெற்ற குழலையுடையாய்: வாடிப் புலம்புவது என் - நீ பொலி
வழிந்து துன்பப்படுகின்ற தென்னோ? எ-று.
மூவர்- சந்திராதித்தர் செந்தீக்கடவுள். பிரிவுணர்த்தினானாகலின் பிரிந்தாலென்னா
மென்னும் ஐயநீங்கக் கூறினான். இக்கடியை யாவராற் பெற்றெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: வன்புறை பெரியதோருவகை மீதூர இவ்வகை வற்புறீஇயினானென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு* : ( தெய்வத்தின் அருளினது செய்திக்குக் குறைவிலாமை உரைத்தது.)
* இக்கொளுவின் பொருள் ஏட்டில் சிதைந்துள்ளது.
செய்யுள்: தேவர் தரப்பெற்ற நம் செல்வமுடைத்தாகிய மணத்தை அழகார்ந்த இலக்குமியை ஒப்பாய்!
இதனை அழித்தற்கு யாவரிடத்திலே பதம் பெற்று யாவராலே அழிக்கலாம்? இமையாத மூன்று திருநயனங்களும்
சந்திராதித்தர் அக்கினி தேவன் என்கிற மூவராலே யுடையவர், அவருடைய திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்து
சேர்ந்த பொழிலிடத்து. (பூவினால் துற்றவள் அளகத்தினையுடையாய் என் தான் மெலிந்து வருந்துகின்றது.) 14
15. இடமணித்துக் கூறி வற்புறுத்தல்*
---------------------------------
* பேரின்பப்பொருள்: பிரிதல் போலன்றிப் பிரிவில்லை என்றது
இடமணித்துக் கூறி வற்புறுத்தல் என்பது அருட்குண முரைத்து வற்புறுத்தவும் ஆற்றாமை
நீங்காத தலைமகட்கு நும்மூரிடத்திற்கு எம்மூரிடம் இத்தன்மைத்தெனத் தன்னூரினணிமை கூறி
வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள் -
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே
மடவரலை வற்புறுத்தி
இடமணித்தென் றவனியம்பியது
இதன் பொருள்: வரும் குன்றம் ஒன்று உரித்தோன்- இயங்கு மலையொன்றை யுரித்தவன்:
தில்லை அம்பலவன்- தில்லை யம்பலத்தை யுடையான்: மலயத்து இரு குன்ற வாணர் இளங்கொடியே -
அவனது பொதியின் மலையிடத்துப் பெரிய குன்றத்தின் கண் வாழ்வாருடைய மகளே; இடர் எய்தல்-
வருத்தத்தை விடு; கனங்குழையே கனங்குழாய்; எம் ஊர் பரு குன்றம் மாளிகை நுண் கல பத்து
ஒளி பாய எம் மூரிடத்துப் பெரிய குன்றம்போலு மாளிகைகளின் நுண்ணிய தாகிய சாந்தினொளி பரந்து:
நும் ஊர் கரு குன்றம் வெண் நிறம் கஞ்சுகம் ஏய்க்கும் - நும்மூர்க் கணுண்டாகிய கரிய குன்றம்
வெள்ளை நிறத்தையுடைய சட்டையிட்டதனோடொக்கும் எ-று.
கருங்குன்ற வெண்ணிறமென்பது *பாடமாயின் நுண் களபத்தொளிபரப்ப அவ்வொளி நும்மூர்க்
கருங்குன்றத்திற் கிட்ட வெண்ணிறக் கஞ்சுகத்தோ டொக்குமென்று உரைக்க. ஈண்டுரைத்தவாற்றால்,
தலைமகன் மிக்கோனாதல் வேண்டும். வேண்டவே ஒப்பு என்னை பொருந்துமா றெனின்
"மிக்கோனாயினுங் கடிவரையின்றே" என்பது (தொல், பொருள், களவியல், 2) ஓத்தாகலிற் பொருந்துமென்க.
வற்புறுத்தி - வலியுறுத்தி, இடமணித்தென்றலே வற்புறுத்தலாக வுரைப்பினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம்,
பயன்: இடமணித்தென்று வற்புறுத்தல்.
*என்பது பழையவுரைகாரர் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மடப்பத்தை வெற்றியாக உடையவளை வலியுறுத்தி,
'உங்கள் இடத்துக்கு எங்கள் இடம் அண்ணிது', என்று நாயகன் சொன்னது.
செய்யுள்; இருஷிகள் யாகத்திலே தோன்றி, மலைகால்படைத்தாற் போலே மேல்வருகின்ற யானையை
உரித்தவன். பெரும் பற்றப் புலியூர்க்கு உளனாகிய திருவம்பலநாதன் வரையிடத்துப் பெரிய மலைக்குக்
கர்த்தராகிய றெவாணர்க்கு மகளாகிய வஞ்சிக்கொம்பே! துக்கிக்க வேண்டா: எங்கள் ஊர்ப் பெரிய
குன்றத்தையொத்த மாளிகைகளில் நுண்ணிய வெண் சாந் குதாளி பரக்க உங்கள் ஊர்க் கரிய குன்றத்துக்கிட்ட
வெள்ளை நிறச் சட்டையை ஒக்கும், கனத்த குழையினை யுடையாய்! வருந்தாதே என்றது.
16. ஆடிடத்துய்த்தல்**
--------------------
** பேரின்பப் பொருள் ; ''சிவமருளுடனே சேர்தலறிந்தது'.
ஆடிடத்துய்த்தல்: என்பது அணிமை கூறி யகலாநின்றவன். 'இனி நீ முற்பட்டு விளையாடு,
யான் இங்ஙனம் போய் அங்ஙனம் வாரா நின்றே' னென அவளை ஆடிடத்துச்
செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள் -
தெளிவளர் வான் சிலை செங்கனி
வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய் முன்னி
யாடு பின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகு பெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துவங்ங
னேவந்து தோன்றுவனே
வன்புறையின் வற்புறுத்தி
அன்புறுமொழியை யருககன்றது.
இதன் பொருள் : வளர் வான் சிலை செம்கனி வெள்முத்தம் திங்களின் வாய்ந்து அளி வளர்
வல்லி அன்னாய்-கால் நிமிர்ந்த பெரிய சிலைகளும் சிவந்த கொவ்வைக்கனியும் வெள்ளிய முத்தங்களும்
ஒரு திங்களின் கண்ணே வாய்ப்ப அளிகள் தங்கும் வல்லியை யொப்பாய்; தெளி - யான் சொன்னவற்றைத்
தெளிவாயாக, முன்னி ஆடு-இனிமுற்பட்டு விளையாடுவாயாக; ஒளிவளர் தில்லை அளவா ஒருவன்
கயிலை உகுபெரு தேன் துளி வளர் சாரல் கரந்து - ஒளி வளராநின்ற தில்லைக்கணுளனாகிய அளக்கப்படாத
ஒருவனது கைலையிடத்து உகா நின்ற பெருந்தேன்றுளிகள் பெருகுஞ் சாரற் பொதும்பரிலொளித்து,
யான் பின் உங்ஙன் வந்து தோன்றுவன் - யான் பின்னும் உவ்விடத்தே வந்து தோன்றுவேன் எ-று.
தெளிவளர் வான்சிலை என்பதற்கு ஒளிவளருஞ் சிலையென் றுரைப்பினு மமையும் , திங்களை
வல்லிக்கண்ணதாகக் கொள்க. வாய்ந்தென்பது வாய்ப்பவென்பதன் றிரிபாகலின் அளிவள ரென்னும்
பிறவினை கொண்டது. சாரலென்பது ஆகுபெயர், வன்புறையின் - வற்புறுத்துஞ் சொற்களால்,
மெய்ப்பாடு; அது, பயன்: இடங்குறித்து வற்புறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : வலியுறுத்தும் வார்த்தைகளாலே வலியுறுத்தி , விரும்பத்தக்க
வார்த்தையினையுடையாள் அருகினின்று நீங்கியது. 16
செய்யுள்: நான் முன்பு சொன்ன வார்த்தைகளைத் தெளிவாயாக; கால் நிமிர்த்த பெரிய
சிலைகளையும், சிவந்த கொவ்வைக் கனியையும், வெண்மையுடைய முத்து நிரையினையும்
ஒரு திங்களிடத்தே வாய்க்கக் கண்டு வண்டுச் சாதிகள் மிக்க வல்லிகாரத்தை ஒப்பாய்! முற்பட்டு
விளையாடுவாயாக; அதற்குப் பின்னே நான் அளவிடப்படாத ஒளியாயுள்ளவன் மிக்க
பெரும்பற்றப்புலியூரிலே ஒப்பில்லாதவன் அவனுடைய ஸ்ரீ கைலாயத்தில் உகா நின்ற பெரிய
தேன் துளிகளால் மிகுந்த வரைச் சாரலிடத்து ஒளித்து ஒரு பக்கத்தாலே வந்து தோன்றக்கடவேன்.
17. அருமையறிதல்*
------------------
* பேரின்பப் பொருள்: கண்டவின்பங் கனவென வியந்தது.
அருமை யறிதல் என்பது ஆடிடத் துய்த்து அகலா நின்றவன் ஆயவெள்ளத்தையும்
அவ்விடத்தையும் நோக்கி, இவளை யானெய்தினேனென்பது மாயமோ கனவோ? இன்னதென்று
அறியேன்; இனியிவள் நமக்கு எய்தற்கு அரியவ' ளென அவளது அருமையறிந்து வருந்தா நிற்றல்,
அதற்குச் செய்யுள்;-
புணர்ப்போன் நிலனும், விசும்பும்
பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில் வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே.
சுற்றமு மிடனுஞ் சூழலு நோக்கி
மற்றவ ளருமை மன்ன னறிந்தது
இதன் பொருள்: போது இணர் அணி குழல் ஏழை தன் நீர்மை இந்நீர்மை என்றால்
பூங்கொத்துக்களை அணிந்த குழலையுடைய ஏழை தனது நீர்மை இத்தன்மையாயின்;
நிலனும் விசும்பும் பொருப்பும் புணர்ப்போன்- மண்ணையும் விண்ணையும் மண்ணின் கணுள்ள
மலையையும் படைப்போன்; தன் பூ கழல் துணர்ப்போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் -
தன்னுடைய பொலிவினையுடைய திருவடியாகிய துணர்ப்போதுகளை எனக்கு முடியணி யாக்கும்
பழையோன்; தில்லை சூழ் பொழில் வாய் புகுந்தது - அவனது தில்லைக்கணுண்டாகிய
சூழ்பொழிலிடத்து இவள் புகுந்தது; புணர்ப்போ கனவோ பிறதோ அறியேன் - மாயமோ கனவோ
இரண்டு மன்றி வேறொன்றோ! இன்னதென்றறியேன் எ-று.
பூங்கழலென்பது பூப்போலுங் கழலென உவமைத் தொகையாய்க் கழலென்னுந் துணையாய்
நின்றதெனினுமமையும்; வீரக்கழலை யுடைய துணர்ப் போதென்று உரைப்பினுமமையும் .
பொழில்வாயிணர்ப்போதென்பாருமுளர் * . பிரிதோ வென்பதற்கு நனவோ வென்பாருமுளர்-
புகுந்ததுவே யென்பதில் ஏகாரம் விகாரவகையான் வந்தது, சுற்றம்: ஆயம், இடம்: அந்நிலம்,
சூழல்: அந்நிலத்துள்ளும் புகுதற்கரிய அப்பொழில், மெய்ப்பாடு - மருட்கை பயன்: தலைமகள தருமையுணர்தல்.
*என்பவர் பழைய வுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஆயக் கூட்டத்தாரையும் மடவரார் புகுதற்கரிய இடத்தையும்;
சூழ்ந்த பொழிலையும் பார்த்து மற்றந்த நாயகியுடைய அருமையை நாயகன் அறிந்தது.
செய்யுள்: பூமியையும் ஆகாயத்தையும் மலைகளையும் படைக்கின்றவன், தன் பொலிவினை
யுடைத்தாகிய ஸ்ரீ பாதங்களாகிய இணையொத்த பூக்களை என் முடிக்கு அணியாக்கும் தொல்லோன்,
அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சூழ்ந்த பொழிலிடத்தே கொத்துப்பூ அணிந்த கூந்தலினையுடைய
நாயகி தன்மை இத்தன்மையாயிருந்தது: ஆன பொழுது மாயமோ? தரிசனங் கண்டோமோ? அன்றி
நாமறியாதன சிலவோ? இவளுடன் கூடின பின்பு தோன்றினது இன்னபடி என்று அறிகிலேனில்லை. 17
18. பாங்கியையறிதல்*
---------------------
* பேரின்பப்பொருள் : சிவமறிவிக்கத் திருவருளைக்கண்டது.
பாங்கியை யறிதல் என்பது அருமையறிந்து வருந்தா நின்ற தலைமகன்
ஆயத்தோடு செல்லாநின்ற தலைமகளை நோக்க, அந்நிலைமைக்கண் அவளும்
இப்புணர்ச்சி இவளுக்குப் புலனாங்கொல்லோவென உட்கொண்டு எல்லாரையும்
போலன்றித் தன்காதற்றோழியைப் பல்காற் கடைக்கண்ணாற் பார்க்கக்கண்டு,
'இவள் போலும் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பா' மென வுட்கொண்டு
அவள் காதற்றோழியை அறியா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
உயிரொன் றுளமுமொன் றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள் படைக் கண்கள் விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே
கடல்புரை யாயத்துக் காதற் றோழியை
மடவரல் காட்ட மன்ன னறிந்தது.
இதன் பொருள்: என்னொடு இவட்கு உயிர் ஒன்று ,உளமும் ஒன்று, சிறப்பு ஒன்று என்ன-
என்னோடு இவட்கு உயிருமொன்று மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும்
ஒன்றென்று சொல்லி; பணிமொழிக்கு - தாழ்ந்த மொழியை யுடையாட்கு: செவி உற நீள்படை கண்கள்
சென்று பயில்கின்ற - செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலுங் கண்கள் இவள்கட் சென்று பயிலா
நின்றன: அதனால் இவள் போலு மிவட்குச் சிறந்தாள் எ- று. விண் வாய் செயிர் ஒன்று முப்புரம்
செற்றவன்-விண்ணிடத்துக் குற்றத்தைப் பொருந்தின மூன்று புரத்தினையுங்கெடுத்தவன் :
தில்லை சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன்- தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடைவிடாதாடுகின்ற
கூத்தை யுடையான் ; அருள் எனல் ஆகும் பணிமொழிக்கு - அவன தருளென்று துணியலாம்
பணிமொழிக்கெனக் கூட்டுக.
அருளென்றது அவளான் வரும் ஆனந்தத்தை, மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.
இப்பதினெட்டுப் பாட்டும் இயற்கைப் புணர்ச்சியையும் அது நிமித்தமாகிய கிளவியையும் நுதலின.
இதனை இயற்கைப் புணர்ச்சியெனினும், தெய்வப் புணர்ச்சியெனினும், முன்னுறு புணர்ச்சி யெனினும்,
காமப் புணர்ச்சி யெனினும் ஒக்கும்.
இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கடலையொத்த ஆயக் கூட்டத்தாரிடத்து அன்புடைய தோழியை
மடப்பத்தையுடையவள் காட்ட நாயகனறிந்தது.
செய்யுள்: விசும்பிடத்தே குற்றமுடைய மூன்றுபுரத்தை வழித்தவன். பெரும்பற்றப்புலியூர் -
திருவம்பலத்தே ஆடி யருளுகிற திருக்கூத்தை யுடையவன், அவனுடைய திருவருளென்று சொல்லா நிற்கின்ற
தாழ்ந்த வார்த்தையினை யுடையாளுக்குக் காதை மோதி நீண்ட வேல் போலுங் கண்கள்; எனக்கும் இவளுக்கும்
உயிரொன்று இவளுடைய கருத்தும் ஒன்று பட்டிருக்கும்: உடன் பயில்கின்ற இருவருக்கும் மாதா பிதாக்களால்
செய்யப்படும் சிறப்புக்களும் ஒன்றுபட்டிருக்கும்,
அதனால் இவளே தலைவிக்குச் சிறந்தவள் போலும் என உட்கொண்டான். 18
இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று
2. பாங்கற் கூட்டம் *
------------------
*பேரின்பக்கிளவி. "பாங்கற் கூட்டம் பதினெட்டின்பந், தாங்குதற் போதந் தான்கண் டகறல்', (திருக் . உண்மை)
இனிப் பாங்கற் கூட்டம் வருமாறு. தெய்வப் புணர்ச்சி புணர்ந்த தலை மகன், தெருண்டு வரைதல் தலை ;
தெருளானாயின், தன் பாங்கனானாதல் இடந்தலைப்பாட்டானாதல் இரண்டனுளொன்றாற் சென்றெய்தல்
முறைமையென்ப அவற்றுள் பாங்கற் கூட்டமாவது: -
நினைதல் வினாத லுற்ற துரைத்தல்
கழறன் மறுத்தல் கவன்றுரைத் தல்லே
வழியழி வுரைத்தல் விதியொடு வெறுத்த
னொந்து கூற னோத னீங்கி
யியலிடங் கேட்டலிய லிடங் கூறல்
வற்புறுத்தல் குறிவழிச் சேறல் காண்டல்
வியந்து ரைத்தலம் மெல்லிய றன்னைக்
கண்டமை கூறல் கருத்துக் கேற்பச்
செவ்வி செப்ப லவ்விடத் தேக
லீங்கிவை நிற்க விடந்தலை தனக்கு
மாங்கவண் மெலிதல் பொழில்கண்டு மகிழ்த
னீங்கா மகிழ்வொடு நிலைகண்டு வியத்த
றளாவகன் றுரைத்தன் மொழிபெற வருந்தல்
கண்புதை வருத்தங் காவ னாண்விட
னண்பொடு சென்று நன்மருங் கணைத
லின்றியமை யாமை யாயத் துய்த்த
னின்று வருந்த னிகழா றைத்துந்
துன்று பாங்கற் றுறையென மொழிப,
இதன் பொருள்: பாங்கனை நினைதல். பாங்கன் வினாதல், உற்றுதுரைத்தல், கழறியுரைத்தல்,
கழற்றெதிர் மறுத்தல், கவன்றுரைத்தல், வலியழிவுரைத்தல், விதியொடுவெறுத்தல், பாங்கனொந்துரைத்தல்,
இயலிடங்கேட்டல், இயலிடங்கூறல் , வற்புறுத்தல், குறிவழிச்சேரல், குறிவழிக்காண்டல், தலைவனை வியந்துரைத்தல்,
கண்டமைகூறல், செவ்விசெப்பல், அவ்விடத்தேகல் இப்பதினெட்டுக் கிளவியு நிற்க, இடந்தலை தனக்கும்
மின்னிடைமெலிதல், பொழில் கண்டு மகிழ்தல், உயிரௌவியத்தல், தளர்வகன்றுரைத்தல், மொழிபெறவருந்தல்;
நாணிக்கண் புதைத்தல், கண்புதைக்க வருந்தல், நாண்விட வருந்தல், மருங்கணைதல், இன்றியமையாமை கூறல்,
ஆயத்துய்த்தல், நின்று வருந்தல் எனவிவை முப்பதும் பாங்கற் கூட்டமாம் எ-று. அவற்றுள் -
1.பாங்கனை நினைதல்*
-----------------------
*பேரின்பப் பொருள். அருள்போற் போத மாமென நினைந்தது.
பாங்கனை நினைதல் என்பது தெய்வப்புணர்ச்சிய திறுதிக் கட்சென்றெய்துதற்கருமை
நினைந்துவருந்தா நின்ற தலைமகன் அவள் கண்ணாலறியப்பட்ட காதற்றோழியை நயந்து,
'இவள் அவட்குச் சிறந்த துணையன்றே: அத்துணை எனக்குச் சிறந்தாளல்லள்; எனக்குச் சிறந்தானைக்
கண்டு இப்பரி சுரைத்தாற் பின்னிவளைச் சென்றெய்தக் குறையில்லை' யெனத் தன் காதற்பாங்கனை
நினையாநிற்றல், அதற்குச் செய்யுள் -
பூங்கனை யார்புனற் றென்புலி
யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே
எய்துதற் கருமை யேழையிற் றோன்றப்
பையு ளுற்றவன் பாங்கனை நினைத்தது
இதன் பொருள்: பூ கனை ஆர் புனல் தென்புலியூர் அம்பலத்துள் புரிந்து - பூக்களையுடைத்தாய்
முழங்குதனிறைந்த புனலை யுடைத்தாகிய தென்புலியூரம்பலத்தின் கண் விரும்பி; ஆங்கு எனை
ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடித் தாமரைக்கே பாங்கனை - அவ்வாறென்னை யாண்டு கொண்டு
ஆடும் பிரானுடைய அடியாகிய தாமரைகட்கே பாங்காயுள்ளானை ; யான் அன்ன பண்பனை - என்னை
யொக்கு மியல்புடையானை; கண்டு இப்பரிசு உரைத்தால்- கண்டு நிகழ்ந்த விப்பரிசை யுரைத்தால்:
மடம் பாவையை எய்துதற்கு ஈங்கு எனை தடுப்பார் யார் - மடப்பாவையை எய்துதற்கு இவ்வுலகத்தின் கண்
என்னைத் தடுப்பார் யாவர்? ஒருவருமில்லை எ-று.
அம்பலத்துளாடும் பிரானெனவியையும் தென்புலியூர் புரிந்தம்பலத்துளாங்கெனை யாண்டு
கொண்டென்பதற்குப் பிறவு முரைப்ப. ஆங்கென்றார் ஆண்டவாறு சொல்லுதற் கருமையான்.
ஏழையினென்புழி, இன்: ஏழனுருபு; அதுபுறனடையாற் கொள்ளப்பட்டது . பையுள்: நோய்; மயக்கமெனினு
மமையும், மெய்ப்பாடு: அசைவு பற்றி வந்த அழுகை. என்னை " இளிவே யிழவே யசைவே வறுமையென ,
விளிவில் கொள்கை யழுகை நான்கே" என்றாராகலின் (தொல், பொருள், மெய்ப்பாடு, 5) பயன்: ஆற்றாமை
நீங்குதல், மேற்றோழியால் என் குறை முடிக்கலாமென்று கருதிப் பெயர்ந்த தலைமகன் பாங்கனால்
முடிப்பதெனக் கருதினானென்பது. என்னை, தமரான் முடியாக் கருமம் முளவாயினன்றே பிறரைக்
குறையுறவேண்டுவதென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கூடுதற்கரியபடி நாயகியிடத்தே தோன்ற அதனாலே
கிலேசமுற்றவன் தோழனை நினைந்தது .
செய்யுள் ; பொலிவினையும் ஆரவாரத்தையும் உடைத்தாகிய நிறைந்த நீராலே சூழப்பட்ட
தெற்குத் திருப்பதியாயிருந்துள்ள பெரும் பற்றப்புலியூரில் திருவம்பலத்திடத்தே அப்படியே என்னை
அடிமை கொண்டு விரும்பி ஆடுகிற சுவாமி, அவனுடைய திருவடித் தாமரைகளிலே சார்புள்ளவனை,
எனக்கு என்னையொத்த செய்தியுடையவனை, அவனைக்கண்டு இங்குப் புகுந்தபடியைச் சொன்னால்
இவ்விடைத்து என்ன யாராலே தகப்படும்! மடப்பமுடைத்தாய ஓவியம் போன்ற இவளைக் கூடுமிடத்து.
* உரைப்பவர் பழைய வுரைகாரர்
2. பாங்கன் வினாதல்*
--------------------
*பேரின்பப்பொருள்: மனத்தாற் கண்டிஃ தென்னென வருந்தல்.
பாங்கன் வினாதல் என்பது தன்னை நினைந்து வாரா நின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு
அடியிற்கொண்டு முடிகாறு நோக்கி, 'நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ யிவ்வாறாதற்குக் காரணமென்னோ'
வென்று பாங்கன் முந்துற்று வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே
கலிகெழு திரள் தோள் மெலிவது கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது
இதன் பொருள்: சிறைவான் புனல்தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்
காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச் சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய
தீயவிடத்தும் ஒப்பத் தங்குமவனது; உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய்
நுழைந்தனையோ- உயர்ந்த மதிலை யுடைய கூடலின்கண் ஆராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து
நுழைந்தாயோ அன்றி ஏழிசையினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா - இறைவனே ; தடவரை தோட்கு
புகுந்து எய்தியது என்கொலாம் - பெரிய வரை போலு நின்றோள்கட்கு மெலியப் புகுந்தெய்தியது
என்னோ? எ று
தமிழின் றுறைகளாவன ஈண்டு அகமும் புறமுமாகிய பொருட்கூறு. ஏழிசையாவன குரல் முதலாயின **
சூழலென்றது அவற்றானியன்ற பண்ணும் பாடலு முதலாயினவற்றை. கொல்: கொலாமென வீறுதிரிந்தது;
ஆம் அசைநிலை யெனினுமமையும் கலி- புகழான் வரு மாரவாரம்; தழைத்த வெனினுமமையும்
மெய்ப்பாடு அணங்கு பற்றி வந்த அச்சம், என்னை, "அணங்கே விலங்கே கள்வர் தம்மிறையெனப்
பிணங்கல் சாலா வச்ச நான்கே'' (தொல், பொருள், மெய்ப்பாட்டியல், 8) என்றாராகலின்.
பயன்: தலைமகற்கு உற்றதுணர்தல்.
**குரல் முதலாயின - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : புகழார்வம் பொருந்தின தோள்கள் இளைத்தது. கண்டு
இனிதாகிய சீவனை ஒத்த தோழன் நாயகனைக் கேட்டது.
செய்யுள்: வான நீராலே ஊரைச் சுற்றிச் செய்யப்பட்ட மிக்கசெல்வம் பொருந்தின தில்லைச்
சிற்றம்பலத்திலும், என்னுடைய மனமாகிய தூய்தலான விடத்தும், இவ்விரண்டிடனும் ஒக்க உறைபவன்
அவனுயர்ந்த மதிலால் சூழப்பட்ட திருவாலவாயிலில் இருந்து ஆராய்ந்த அகமும் புறமும்.... தாயோ ?
அதுவல்லாதாகில் ஏழிசைச் சூழ்ச்சியாகிய பாடலு மாய்ந்தா ...........கொலோ சுவாமி. உன்னுடைய
பெருவரை நிகர்த்த தோளுக்கு என்னதான் வந்துற்றது 20
3. உற்றதுரைத்தல்*
------------------
*பேரின்பப்பொருள்: உயிருளத் துடனே யுற்றதுரைத்தது
உற்றதுரைத்தல் என்பது எதிர்ப்பட்டு வினாவா நின்ற பாங்கனுக்கு , நெருநலைநாட் கைலைப்பொழிற்கட்
சென்றேன்: அவ்விடத்து ஒரு சிற்றிடைச் சிறு மான்விழிக் குறத்தியால் இவ்வா றாயினே' னெனத் தனக்குற்றது
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பாற் றடமலர் சூடுமென்
னாற்ற லகற்றியதே
மற்றவன் வினவ உற்ற துரைத்தது.
இதன் பொருள் : கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை- ஓந்திக் கொதுங்கிப் புறப்பட் டிரை
கவராத மயில்; குஞ்சரம் கோள் இழைக்கும் பாம்பைப் பிடித்துப் படம் கிழித்தாங்கு- குஞ்சரத்தைக்
கோளிழைக்கவல்ல பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போல ; மான் மடம் நோக்கி
அப்பணை முலைக்கு தேம்பல் துடி இடை -மானின் மடநோக்குப் போலும் நோக்கை யுடையாளுடைய
அப்பணை முலையானே தேய்தலையுடைய துடிபோலுமிடை; தில்லை சிவன் தாள் ஆம் பொன்
தடமலர் சூடும் என் ஆற்றல் அகற்றியது தில்லைக்கணுளனாகிய சிவனுடைய தாளாகிய
பொன்போற் சிறப்புடைய பெரிய தாமரைப் பூவைச் சூடுகின்ற எனது வலியை நீக்கிற்று எ-று.
குஞ்சரம் தான் உவமையன்றி உவமைக்கடையாய் அதனாற்றல் விளக்கி நின்றது.
தடமலர் தான் உவமிக்கப்படும் பொருளன்றி உவமிக்கப்படும் பொருட்கடையாய் அதனாற்றல்
விளக்கி நின்றது. அப்பணைமுலைக்கே யென்று இழித்தது, இவள் முலையை நோக்கியன்று
முலையென்னுஞ் சாதியை நோக்கி. துடியிடையை யுடைய மான் மடநோக்கி என்னாற்ற லகற்றியது
மஞ்ஞை பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற் போலுமெனக் கூட்டியுரைப்பாருமுளர்**
மெய்ப்பாடு! அழுகை . பயன்: பாங்கற் குணர்த்துதல்.
** உரைப்பவர் பழைய வுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (வருந்தியதற்குக் காரணத்தைப் பாங்கன் வினவத் தலைவன்
தலைவியால் தனக்குற்றதைக் கூறியது)
செய்யுள் மானின் மெத்தென்ற நோக்கத்தினை உடையவளுடைய அந்தப் பணைத்த தனங்களின்
பொறை ஆற்றாது தேம்புதலை உடையதாய் தமருக மொத்த இடையானது திருவம்பலநாதனுடைய
சீ பாதங்களாகிய அழகிய பெரிய மலர்களைச் சூட்டவல்ல என் வலிமையை அழித்தது. பச்சோந்திக்குப்
பயப்பட்டு ஒதுங்கிப் புறப்பட்டு இரை கவர மாட்டா மயில் யானையைக் கோட்செய்து கொல்லவல்ல
பாம்பைப் பிடித்து அதனுடைய படத்தைக் கிழித்ததனோடொக்கும். 21
4. கழறியுரைத்தல்*
-----------------
*பேரின்பப் பொருள் ; மனமுயிருடனே மயங்கியுரைத்தது.
கழறியுரைத்தல் என்பது உற்றதுரைப்பக் கேட்ட பாங்கன். இஃது இவன்றலைமைப்பாட்டிற்குப்
போதாதென உட்கொண்டு. 'நீ ஒரு சிறுமான் விழிக்கு யான் இவ்வாறா யினேனென்றல் நின் கற்பனைக்குப்
போதா' தெனக் கழறிக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
உளமாம் வகைநம்மை யுய்யவந்
தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர் வஞ்சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே
வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன்
கற்பனையிற் கழறியது
இதன் பொருள்: உளம் ஆம் வகை உய்ய வந்து நம்மை ஆண்டு-உளமாயும் இலமாயும்
மாறி வாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான் வந்து
நம்மையாண்டு; உம்பர் உய்ய- உம்பரெல்லாந் தன்கட் சென்று பிழைக்க; களம் ஆம் விடம் அமிர்து
ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை மிடற்றின் கணுளதாகு நஞ்சை யமிர்தமாக்கிய
தில்லைக்கணுளனாகிய பழையோனது கைலையில்; வளம் மாபொதும்பரின் வஞ்சித்து நின்று-
வளவிய மாஞ்சோலைக் கண் வருத்துவதென்றறியாமல் நின்று, வஞ்சி மருங்குல் ஒரு இளமான்
விழித்தது என்றோ எம் அண்ணல் இன்று இரங்கியது - வஞ்சிபோலும் மருங்குலையுடையதோ ரிளமான்
விழித்ததென்றோ எம் மண்ணல் இன்றிரங்கியது! இது நின் பெருமைக்குத்தகாது எ-று.
நம்மையென்றது தம்மைப்போல்வாரை. களமார்விட மென்பதூஉம் பாடம் * மெய்ப்பாடு எள்ளல்
பற்றி வந்த நகை. என்னை, "எள்ள லிளமை பேதைமை மடனென்றுள்ளப்பட்ட நகை நான் கென்ப"
(தொல். பொருள், மெய்ப்பாட்டியல், 4) என்றாராகலின். பயன் : கழறுதல்.
*என்பது பழையவுரைகாரர் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் தன் மெய்யான தோழன் நெருங்கிச் சொல்லும்
வார்த்தைகளாலே மறுத்தது.
செய்யுள்: உள்ளோமாயும் இல்லோமாயும் பிறந்தும் இறந்தும் திரிகின்ற நம்மை (எப்பொழுதும்
உள்ளோமாம்படி) பிழைக்கும்படி தானே வந்தாண்டு (அடிமை கொண்டு) தன்னிடத்திலே சென்று தேவர்கள்
பிழைக்கும்படிகண்டத்திலே நிறைந்த விடத்தைத் திருவமுதாகக் கொண்ட பெரும்பற்றப் புலியூரிற்
பழையவன், அவனுடைய கயிலாய வரையின் வளமுடைத்தாய மாமர நெருக்கத்திடத்தே துன்பம்
செய்கிறவடிவை இன்பம் செய்கிற வடிவு போலே கரந்து நின்று வஞ்சிக் கொம்பினையொத்த
இடையினையுடையாள் ஒருநோக்கத்தால் இளையமான் போல்வாள் பார்த்தாள் என்றோ,
இப்பொழுது என்னுடைய நாயகன் வருந்தியது. 22
5. கழற்றெதிர் மறுத்தல்*
----------------------
* பேரின்பப் பொருள் : 'போதத்தாற் காணும் பொருளன்றென்றது
கழற்றெதிர் மறுத்தல் என்பது காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கை
வயத்தனாய் நின்று 'என்னாற் காணப்பட்ட வடிவை நீ கண்டிலை; கண்டனையாயிற் கழறா' யென்று
அவனொடு மறுத்துரைத்து வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை**
மென்றோட் கரும்பினையே
ஆங்குயி ரன்ன பாங்கன் கழறிலை
வளந்தரு வெற்பனுளந்தளர்ந் துரைத்தது
** கழறிலை, என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள் : சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லைச்சிற்றம்பலத்து சேய்மைக்கண்
விளங்கித் தோன்றா நின்ற செம்பொனானியன்ற மாளிகையையுடைய தில்லைச் சிற்றம்பலத்தின்
கணுளனாகிய மாணிக்கம் கூத்தன் வட வான் கயிலைமயிலை - மாணிக்கம்போலுங் கூத்தனது
வடக்கின்கணுண்டாகிய பெரிய கைலைக்கண் வாழு மயிலை. மன்னும் பூணின் பொலி கொங்கை
ஆவியை-பொருந்திய பூண்களாற் பொலிகின்ற கொங்கையை யுடைய என்னுயிரை ஓவியம்
பொன் கொழுந்தை காணின் கழறலை ஓவியமாகிய பொற் கொழுந்தைக் கண்டனையாயிற்
கழறாய் மென்தோள் கரும்பினை கண்டிலை - மென்றோளையுடைய கரும்பைக் கண்டிலை எ-று.
மாணிக்கக் கூத்த னென்புழி மாணிக்கத்தைக் கூத்திற்குவமையாக வுரைப்பினுமமையும்
பொற்கொழுந்து - பொன்னை வண்ணமாகக் கொண்டெழுதிய கொழுந்து மென்றோட் கரும்பினை
யென்பதற்கு மெல்லிய தோளிலெழுதிய கரும்பை யுடையாளை யெனினுமமையும். மெய்ப்பாடு :
அழுகையைச் சார்ந்து வருத்தம்பற்றி வந்த விளிவரல், என்னை , 'மூப்பே பிணியே வருத்த மென்மையோ,
டியாப்புற வந்த விளி வரனான்கே" (தொல். பொருள், மெய்ப்பாட்டியல், 6) என்றாராகலின், பயன்: பாங்கனை
யுடம்படுவித்தல், பாங்கன் கழறவும் இவ்வகை மறுத்துரைத் துரைத்தானென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவ்விடத்தை உயிரை நிகர்த்த தோழன் மறுத்துச் சொல்ல
எல்லா வளப்பத்தினையும் தருகிற வரையினை யுடையவன் மனஞ்சலித்துச் சொன்னது.
செய்யுள் : அதிதூரத்தே பொலிந்து தோன்றுகிற செம்பொன் மண்டபங்களை உடைத்தாகிய
பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் மாணிக்கம் போலும் அழகிய திருக்கூத்தினையுடையவன்
அவனது வடக்கின்கண் உண்டாகிய கயிலாயத்தின் மயிலின் சாயலொப்பாளை நிலைபெற்ற
ஆபரணங்களால் சிறந்த முலைகளையுடைய என் உயிரையொப்பாளைச் சித்திரமாகப் பொன்னாலெழுதிய
வல்லிசாதம் போல்வாளைக் கண்டாயாகில் இங்ஙனே வெறுத்துச் சொல்லமாட்டாய்; மெல்லிய
தோள்களையுடையாளாய், அக்கரும்பை ஒப்பாளைக் கண்டிலை காண் . - ஆனபடியால்
சொன்னாயித்தனை. 23
6. கவன்றுரைத்தல்*
-------------------
* பேரின்பப்பொருள் : பின்னும் போதந் தன்னிலை சொன்னது.
கவன் றுரைத்தல் என்பது மறுத்துரைத்து வருந்தாநிற்பக்கண்ட பாங்கன் ஒரு காலத்துங்
கலங்காதவுள்ளம் இவ்வாறு கலங்குதற்குக் காரண மென்னோவெனத் தலைவனுடன் கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள்--
விலங்கலைக் கால்விண்டு மேன்மே
லிடவிண்ணு மண்ணு முந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றை துன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றி தென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே
கொலைக்களிற் றண்ணல் குறைநயந் துரைப்பக்
கலக்கஞ்செய் பாங்கன் கவன்று ரைத்தது.
இதன் பொருள்: விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட-மலைகளைக் காற்றுப்பிளந்து மேலுமேலுமிட ;
விண்ணும் மண்ணும் முந்நீர் கலங்கலை சென்ற அன்றும் கலங்காய்-வானுலகும் மண்ணுலகும் முந்நீராற்
கலங்குதலையடைந்த விடத்துங் கலங்குந் தன்மையை யல்லை ; கமழ் கொன்றை துன்றும் அலங்கலை சூழ்ந்த
சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல் துலங்கலை சென்று - கமழாநின்ற கொன்றைப்பூ நெருங்கிய
மாலையை முடிமாலையாகச் சுற்றிய சிற்றம்பலத்தானது அருளை யுடையரல்லாதாரைப் போலத்
துளங்குதலை யடைந்து; வள்ளல் உள்ளம் துயர்கின்றது இது என்னோ - வள்ளலே நினதுள்ளந் துயர்கின்றது
இஃதென்னோ! எ-று
விண்டென்பது பிளந்தென்பதுபோலச் செய்வதன் றொழிற்குஞ் செய்விப்பதன் றொழிற்கும் பொது.
இவனது கலக்கத்திற்குக் காரணமாய் அதற்கு முன்னிகழ்தனோக்கிச் சென்ற வன்றுமென இறந்தகாலத்தாற்
கூறினான். வள்ளலென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்தது. இதென்னோ வென்பது வினாவுதல் கருதாது
அவனது கவற்சியை விளக்கி நின்றது . கலக்கஞ் செய் பாங்கன் - கலங்கியபாங்கன்; தலை மகனைக் கலக்கிய
பாங்கனெனினுமையும், மெய்ப்பாடு: இளி வரல். பயன்: கழறுதல். மேற்பொதுவகையாற் கழறினான்,
ஈண்டு விசேட வகையாற் கழறினானென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொலைத் தொழிலை உடைய யானை அனைய நாயகன்
குறைபெற விரும்பிச் சொல்ல அதற்குக் கலக்கம்செய் பாங்கன் கிலேசத்தைச் சொன்னது.
செய்யுள்: மேரு முதலாகிய மலைகளைக் காற்றானது மேல் கீழாக்கி ஒடித்து பென்மேல் போகட
ஆகாயமும் பூமியும் கடலே கலங்குதல் அடைந்த அந்நாளினும் உனக்கொரு சலிப்பற்றிருப்பை நறு நாற்றம்
கமழ்கின்ற கொன்றைப்பூவாலே நெருங்கின மாலையை அணிந்த திருச்சிற்றம்பலவன் அவனுடைய
அருளில்லவர் போல் நடுக்கத்தை அடைந்து இங்ஙன் ஏன் தான் வள்ளலே! உன்னுடைய மனம் வருந்துகின்றதே ! 24
7.வலியழிவுரைத்தல் **
------------------
**பேரின்பப் பொருள்: உயிர் நெஞ்சுடன்பட் டுருகியுரைத்தது.
வலியழி வுரைத்தல்: என்பது பாங்கன் கவன்றுரையா நிற்ப, முன்பு இத்தன்மையேனாகிய யான்
இன்று ஒருசிறு மான்விழிக்கு இவ்வாறாயினேனெனத் தலைமகன் தன் வலியழிந்தமை கூறி வருந்தாநிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
தலைப்படு சால்பினுக் குந்தள
ரேன்தசித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே*
* இப்பாடலைப் பழையவுரைகாரர் 26 ஆவதாகக்கொண்டார்.
நிறைபொறை தேற்றம் நீதியோடு சால்பு
மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.
இதன் பொருள்: தலைப்படு சால்பினுக்கும் தளரேன் - முன் தலைமையாய அமைதியானு முள்ளந் தளரேன்;
சித்தம் பித்தன் என்று மலைத்து அறிவார் இல்லை - பிறழவுணர்ந்தாயென்று மாறுபாட்ட றிவாருமில்லை;
யாரையும் எத்துணையும் தேற்றுவன்-பிறழவுணர்ந்தார் யாவரையும் மிகவுந் தெளிவியா நிற்பேன் ;
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினன்
இப்பொழுது ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது கைலை மலைக்கணுண்டாகிய
சிறுமானினது விழியால் அழிந்து மயங்கினேன் எ-று.
சால்பழிந் துள்ளந்தளரே னென்பான் சால்பினுக்குந் தளரேனென்றான்; தலைப்படு சால்பென்பதற்கு
எல்லாப் பொருளுஞ் சிவனைத் தலைபட்டுச் சென்றொடுங்கும் ஊழியிறுதி யென்றுரைப்பினுமமையும்.
நிறையும் பொறையுஞ் சால்பும் தலைப்படு சால்பென்றதனாற் பெற்றாம். பித்தனென்று மலைத்தறிவா
ரில்லை யென்றதனால் தேற்றம் பெற்றாம், யாரையுந் தேற்றுவனென்றதனால் நீதிபெற்றாம். கலங்கினாரைத்
தெளிவித்தல் நீதியாகலான். ஈண்டுத் தன்னையுயர்த்த லென்னுங் குற்றந்தங்காது, சால்பு முதலாயினவற்றை
இப்பொழு துடையே னென்னாமையின் சால்பு “அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடைந்து சால்
பூன்றிய தூண்" என்பதனானறிக. நோக்கிற்கு - நோக்கினால். மெய்ப்பாடு : அழுகை . பயன் : ஆற்றாமையுணர்த்தல்,
இதுவும் மேலதேபோல மறுத்துரைத்தானென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நிறைந்த புலன்களை நிறுத்தலும் பொறையுடைமையும்
தெளிவுடைமையும் உலகத்தோடு ஒழுக்கமும் அமைவுடைமையும் இவ்வைந்து குணங்களையும் மான்
கன்றின் நோக்கம் பெற்றவள் நயனா விகாரத்தாலே இழந்தேனென்றது.
செய்யுள் : தலைமையான சால்புடைமையானும் உள்ளம் குறைவு - படேன்; (தலைமையான சால்பென்னை?
நிறையும் பொறையும் கூடிய சால்பென்றுபடும்): வேறுபட விசாரித்தாய் காண் என்று மாறுபட்டு அறிவாருமில்லை;
தெளிவுடைமை தோன்றுகின்றது). எங்ஙனே கலங்கினவர்களையும் எவ்வளவும் செல்லத்தெளிவிப்பேன்.
(கலங்கினாரைத் தெளிவிக்கை உலக நீதியாகையால், நீதியுடைமை தோன்றுகிறது). ஒரு கலையாகிய
சிறு பிறையைச் சூடின திருச்சிற்றம்பல நாதனுடைய கயிலாயத் திருமலையில் இளையமான் விழியால்
(அயர்ந்து மயங்கினேன்) 25
8. விதியொடு வெறுத்தல்*
------------------------
* பேரின்பப் பொருள் : பின்னு மனத்தொடு பேதுற்று நின்றது
விதியொடு வெறுத்தல் என்பது வலியழிந்தமை கூறி வருந்தாநின்ற தலைமகன்
பாங்கனொடு புலந்து வெள்கி, யான் செய்த நல்வினையும் வந்து பயன்றந்த தில்லையெனத்
தன் விதியொடு வெறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
நல்வினை யும்நயந் தந்தின்று **
வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன* கோங்கரும்
பாமென்று பாங்கன் சொல்ல
வில்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
தாருயிர் துப்புறவே.
கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.
**நல்வினை யுன்னை நயந்தின்று லவன்' என்பன பழையவுரைகாரர் பாடம்
* கழறிட என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: கொல்வினை வல்லன நடுங்கு மின்மேல் கோங்கு அரும்புஆம் என்று பாங்கன்
சொல்ல-கொல்லுந் தொழிலை வல்லன நடுங்கு மின்மேலுண்டாகிய கோங்கரும்புகளாமென்று யான்
பற்றுக்கோடாக நினைந்திருந்த பாங்கன் றானே இகழ்ந்து சொல்லுதலால்; வெள்கிதொல்வினையால்
துயரும் எனது ஆர் உயிர் துப்புற-நாணிப்பழையதாகிட தீவினையாற் றுயருறாநின்ற எனதரிய வுயிர்
வலியுறும் வண்ணம் நல் வினையும் வந்து நயம் தந்தின்று-யான் உம்மைச் செய்த நல் வினையும் வந்து
பயன்றந்ததில்லை எ-று
வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி-வில்லின்றொழிலினை
மேருவின் கண் வைத்தவனது தில்லை தொழாதாரைப்போல வெள்கியெனக் கூட்டுக.
உம்மை எச்சவும்மை, கல்வியேயுமன்றி யென்றவாறு; நல்வினை தீவினையைக் கெடுக்குமாயினும்
யான் செய்த நல் வினை அது செய்ததில்லை என்பது கருத்து. நாணினார்மேனி வெள்குதலான்
வெள்கியென்றான். துப்புறவென்னு மச்சம் தந்தின்றென்பதில் தருதலென்பதனோடு முடிந்தது,
துப்புறத் துயருமென்றியைத்து மிகவுந் துயருமென முற்றாகவுரைப்பினு மமையும். நல்வினையுந்
நயந்தந்ததென்பது பாடமாயின் குறிப்பு நிலையாகக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கல்வியான் மிக்கபாங்கன் மறுப்பச் செல்வத்தாலே மிக்க
மலையினையுடையவன் ஆராய்ந்து சொல்லியது.
செய்யுள்: *துளும்பா நின்ற மின்போன்ற இடையின் மேலே கொலைத் தொழிலைக் கற்ற ..ஒத்த
முலைகளாங்காணும் என்று பாங்கன் என்னைத் துவளச் சொல்ல வில்லினது கொல்லுந் தொழிலை
மேருவென்னும் மலையிடத்தே உண்டாக்கினவன். அவனுடைய திசை நோக்கிக் கும்பிடமாட்டாரைப்
போல் மேனி வெளுத்து முன்பு செய்த தீவினையாலே வருந்துகிற எனது பெறுதற்கரிய உயிர் வலியுறும்படி,
நான் இம்மையிற் செய்த புண்ணியமும் வந்து பயன்பட்டதில்லை.
*இப்பாடலைப் பழையவுரைகாரர் 25 ஆவதாகக் கொண்டார். முதல் வரியில் 'உன்னை' என்பதற்கேற்ப உரையுமில்லை
முற்பிறப்பிற் செய்த தீவினையை இப்பிறப்பிற் செய்த நல்வினை கெடுக்கும் என்பார்கள்;
என் அளவில் அதுவும் கண்டிலேன் என்பது கருத்து. 26
9. பாங்கனொந்துரைத்தல்*
-------------------------
*பேரின்பப் பொருள்: போதம்பின்னும் புகன்றுதானழிந்தது.
பாங்கனொந் துரைத்தல் என்பது விதியொடு வெறுத்து வருந்தா நிற்பக் கண்ட பாங்கன்,
அமிர்தமும் மழையும் தங்குணங் கெடினும் நின்குணங்கெடாதநீ ஒருத்தி காரணமாக
நின்சீலத்தை நினையாதவாறு இவ்வாறாகிய எனது தீவினையின் பயனாம் இத்தனை
யன்றோவெனத் தானும் அவனோடு கூட வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள் -
ஆலத்தி னாலமிர் தாக்கிய
கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட் டாக
வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
தொழிவதென் தீவினையே
இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
நின்னது தன்மை நினைந்திலை யென்றது.
இதன் பொருள்: ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போற் கோலத்தினாள்
பொருட்டு ஆக நஞ்சால் அமிர்தத்தை யுண்டாக்கிய இறைவனது தில்லையம்பலம் போலும் அழகையுடையா
ளொருத்தி காரணமாக; அமிர்தம் குணம் கெடினும் காலத்தினான் மழைமாறினும்- அமிர்தம் தன்குணங்
கெடினும் பெய்யுங் காலத்து மழை பெய்யாது மாறினும்: மாறாக் கவிகை நின் பொன் சீலத்தை - மாறாத
வண்மையை யுடைய நினது பொன் போலப் பெறுதற்கரிய ஒழுக்கத்தை; நீயும்- அறிவதறிந்த நீயும்;
நினையாது ஒழிவது என் தீவினை - அறியா தொழிகின்றது எனது தீவினைப்பயன் எ-று,
நஞ்சின் றன்மையொழிந்து அமிர்தஞ் செய்யுங்காரியத்தைச் செய்தலின். அமிர்தாக்கிய வென்றார்.
ஆலத்தினாலென்னு மூன்றாவது பாலாற்றயிராக்கிய வென்பது போல நின்றது. நஞ்சினாலோர்
போனகத்தையுண்டாக்கிய வெனினுமமையும் அம்பலம் போலுமென்னு முவமை பட்டாங்கு சொல்லுதற் கண்வந்தது;
புகழ்தற்கண் வந்ததென்பார் அம்பலம் போற் கோலத்தினாள் பொருட்டே யாயினுமாக வெனமுற்றாக வுரைப்ப.
மாறாக் கவிகையென வண்மை மிகுத்துக்கூறினான். தானுமொன்றிரக்கின்றானாகலின். மாறாக் கவிகை
நீயுமெனக் கூட்டினுமமையும். மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகனைத் தெருட்டல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரை சிதைந்துள்ளது).
செய்யுள் : ** நஞ்சையமுதஞ் செய்யும் [படி திருவுள்ளத்] துக் கொண்ட சுவாமி' அவனுடைய பெரும்பற்றப்
புலியூரில் திருவம்பலத்தை [யொத்த] அழகினையுடையாள் காரணமாக அமுதமானது தன் சுவைமாறிக் கைப்பினும்,
பெய்யும் (காலத்து) மழை [பெய்யாதொ] ழியினுந் தவிராத கொடையினை யுடைய உன்னுடைய அழகிய ஆசாரத்தை
நீயும் நினையாது மறக்க வேண்டினது நான் செய்த பாவம் இத்தனையென்றது.
**இவ்வுரை சிதைந்திருந்தது; இங்கு இருதலைப்பகரத்துள்ளவை இப்பதிப்பாசிரியரால் ஊகித்துச் சேர்த்தவையாம்
10. இயலிடங் கேட்டல்*
---------------------
* பேரின்பப் பொருள் ; "உறுதிகண் டின்பிட மெங்கென்றுரைத்தது.'
இயலிடங்கேட்டல் என்பது தலைமகனுடன் கூட வருந்தா நின்ற பாங்கன், 'யானும் இவனுடன் கூட
வருந்தினால் இவனை ஆற்றுவிப்பாரில்லை'யென அதுபற்றுக்கோடாகத் தானாற்றி நின்று அது கிடக்க,
'நின்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் யாது? இடம் யாது? கூறுவாயாக?வென அவளுடைய இயலும்
இடமுங் கேளா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
நின்னுடை நீர்மையும் நீயுமிவ்
வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே
கழும லெய்திய காதற் றோழன்
செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது
இதன் பொருள்: நின்னுடை நீர்மையும் இவ்வாறு- நின்னுடைய இயல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று:
நீயும் இவ்வாறு-ஒரு காலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையை யாயினாய்; நினைத்தெருட்டும் என்னுடைய
நீர்மையிது என் என்பதே - இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடைய வியல்புயாதென்று சொல்வதோ! அதுகிடக்க:
சிலம்பா-சிலம்பா; நின்னை இன்னே செய்த ஈர்ங்கொடிக்கு - நின்னையித் தன்மையாகச் செய்த இனிய கொடிக்கு;
தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது- தில்லைக் கணுளனாகிய
அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய சைலை மலையோ தாமரைப் பூவோ வானோ
இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக எ-று.
என்னென்பதே யென்னும் ஏகாரம் வினா: அசைநிலை யெனினு மமையும், பிறர் கண் போலாது
மூன்றாயிருந்தனவாயினும் அவை தாம் ஓரழகுடையவென்னுங் கருத்தால், ஏர்கொண் முக்கணென்றார்.
கழுமல்- மயக்கம். மெய்ப்பாடு : அச்சம். பயன் : தலைமகனை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாயகன் கிலேசித்ததற்கு வருத்தமுற்ற காதற்றோழன்
வளப்பமுடைய மலையின் மேலுண்டாகிய நாட்டினை யுடையவனை ஆராய்ந்து கேட்டது.
செய்யுள்: நின்னுடைய தன்மையும் நீயும் இத்தன்மையாய் விட்டன என்றால் உன்னைத்தெளிவிப்பேன்
என்கின்ற என்னுடைய தன்மை இது எதனில் ஏற்பட்ட தொன்று? பெரும்பற்றப்புலியூரிலே உளனாகி அழகுக்கு
அழகு கொண்ட மூன்று திருநயனங்களையுடைய பெருமலையோ? (வரையர மகளிர் என்றுபடும்);
தாமரைப் பூவோ? (இலக்குமி என்றுபடும்) ஆகாயமோ? (வானவர் மகளிர் என்றுபடும்); நாயகனே இவையிற்றிலே
அவளுக்கு இடம் எந்த இடம் தான்? அவளுடைய இயல்பு எது? சொல்லுவாயாக . 28
11. இயலிடங்கூறல்.*
* பேரின்பப் பொருள் : "மகிழ்ந்திட நெஞ்சுக்கு வாழ்வெடுத்துரைத்தது".
இயலிடங்கூறல் என்பது இயலிடங்கேட்ட பாங்கனுக்குத் தான் அவளை யெய்தினாற் போலப்
பெரியதோ ராற்று தலையுடையனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் இவை, இடம் இது
என்று இயலும் இடமுங்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -
விழியாற் பிணையாம் விளங்கிய
லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கயிலை முத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே
அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.
இதன் பொருள்: முதுவானவர் தம் முடித் தொகைகள் கழியாக் கழல் - தலைவராகிய இந்திரன் முதலாகிய
தேவர்களுடைய முடித்திரள்கள் நீங்காத கழலையுடைய; தில்லைக் கூத்தன் கயிலை- தில்லைக் கூத்தனது
கைலை மலையிடத்து; முத்தம் மலைத்தே கொழியாத்திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வம் -
முத்துக்களைப் பெருந்தேன் கொழித்து விளங்கும் பொழிற்கு அழகாம் எம்முடைய நல்லதெய்வம்;
விழியான் பிணை ஆம் - விழிகளாற் பிணையாம்; விளங்கு இயலான் மயில் ஆம் - விளங்கா நின்ற
இயலான் மயிலாம் ; மிழற்று மொழியான் கிளியாம்- கொஞ்சு மொழியாற் கிளியாம் எ-று.
இயல் இன்னவென்றும் இடம் கைலைப் பொழிலென்றுங் கூறப்பட்டனவாம். முத்தம் -
யானைக்கோட்டினும் வேயினும் பிறந்த முத்து. அழுங்கல் - இரக்கம், செழுமை- வளமை
மெய்ப்பாடு- உவகை. பயன்: பாங்கற் குணர்த்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகனுடைய துக்கத்துக்கு வருந்தின அரிய உயிர்த்தோழனுக்கு
வளமையும் ஒளியுமுள்ளதொரு வேலையுடையவன் ஆராய்ந்து சொன்னது.
செய்யுள்: நோக்கத்தால் மானென்று சொல்லலாம். விளங்குகின்ற சாயலால் மயிலெனலாம்;
கொஞ்சும் மழலையால் கிளி எனலாம்; மிக்க தேவர்கள் பலரும் வந்து வணங்குகையாலே' அவருடைய
முடித்திரள்கள் மரபு (தவறாமையையு) டைய கழலையுடைய பெரும்பற்றப் புலியூரில் முதலி யாருடைய
கயிலாய மலையில் தோன்றும் தேன் அருவியானது முத்துக்களைக் கொழித்தாற் போல விளங்குகின்ற
காவுக்கழகாய் நிற்பவள் எம்முடைய குலதெய்வம். 29
12. வற்புறுத்தல்*
----------------
*பேரின்பப் பொருள்: "போதம் போய்க் காணும் பொலிவெடுத்துரைத்தது"
வற்புறுத்தல் என்பது இயலிடங்கூறக் கேட்ட பாங்கன் நீ சொன்ன கைலையிடத்தே சென்று
இப்பெற்றியாளைக் கண்டு இப்பொழுதே வருவன்; அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத்
தலைமகனை வற்புறுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்
தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான் போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பளிக்கறையே.
பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.
இதன் பொருள்: சிலம்ப - சிலம்பனே ; குயிலை - குயிலை; சிலம்பு அடிக்கொம்பினை -
சிலம்படியை யுடையதோர் கொம்பை; தில்லை எம் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில்
பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செவ்வாய் மயிலை-தில்லைக்கணுளனாகிய எம்முடைய
கூத்தப் பிரானது கைலையாகிய சிலம்பின்கட் பைம்பூம்புனத்தைக் காக்குங் கரிய கண்ணையுஞ்
சிவந்த வாயையுமுடையதோர் மயிலை; வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பு எதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் , பளிக்கு அறையான் போய்-வளவிய பூவையுடைய கொடிகள் போலும் ஆயத்தார் நெருங்க
அவரோடு சிலம்பிற் கெதிர்கூவித் தான் விளையாட்டைப் பொருந்தும் பளிக்கறைக்கண் யான் சென்று;
கண்டு வருவன் -கண்டு வருவேன், நீ யாற்றுவாயாக எ-று.
கூத்தப்பிரான் என்பது கூத்தனாயினும் பிரானாயுள்ளான் என்றவாறு, பெயர்ந்துரைத்தல் -
கழற மறுத்துரைத்தல்; ஆற்றாத் தன்மையனாய்ப் பெயர்ந்து இயலும் இடனுங் கூறிய வெனினுமமையும்,
வயமென்னு முரிச்சொல் விகார வகையால் வயமென நின்றது; சிறுபான்மை மெல்லெழுத்துப்
பெற்றதெனினு மமையும். கெழு: சாரியை, மெய்ப்பாடு: பெருமிதம். பயன் : வற்புறுத்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஆற்றாமையின் நீங்கி இடனியல்பு சொன்ன பெரிய மலை
மேலுண்டாகிய (நாட்டிற்குத் தலைவனைப்) பூமியிலே பொருந்தின புகழுடைய பாங்கன் வலியுறுத்தியது.
செய்யுள்: வார்த்தையிற் குயிலை யொப்பாளை, சிலம்பை அடியிலே யுடையதொரு வஞ்சிக்
கொம்பினை ஒப்பாளை, பெரும்பற்றப் புலியூரிற் கூத்தனாகிய எமது சுவாமியுடைய ஸ்ரீ கைலாய மலையில்
பச்சென அழகிய புனங்காக்கிற கரிய கண்களையும் சிவந்த வாயினையும் உடையளாய மயிலைப் போன்ற
சாயலையுடையாளை நாயகனே நான் போய்க் கண்டுவரக்கடவேன். வளவிய வல்லிசாதத்தை யொத்த
பாங்கிமார்கள் பல காலம் சிலம்பெதிர் கூவிக் களிக்கிற விளையாட்டுப் பொருந்தின பளிக்கறை யிடத்து
நான் போய்ப் பார்த்து வருவேன் நீ கிலேசியா தொழிக வேண்டும். 30
13. குறிவழிச் சேறல்*
-------------------
* பேரின்பப் பொருள் : நெஞ்சாற் கண்ட வின்பந்தேடல்.
குறிவழிச் சேறல் என்பது தலைமகனை வற்புறுத்தி அவன் குறிவழிச் செல்லாநின்ற
பாங்கன் இத்தன்மையாளை யான் அவ்விடத்துக் காணலாங் கொல்லோவென அந்நினைவோடு
செல்லாநிற்றல், அதற்குச் செய்யுள் -
கொடுங்கால் குலவரை யேழேழ்
பொழிலெழில் குன் றுமன்று
கடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலந் தண்புனத்தே
அறைகழ லண்ணல் அருளின வழியே
நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது.
இதன் பொருள்: கொடுங் கால் குலவரை ஏழு ஏழ்பொழில் எழில் குன்றும் அன்றும்
நடுங்காதவனை- கொடிய காற்றாற் குலமலைகளேழும் பொழிலேழும் அழகுகெடும் ஊழி யிறுதியாகிய
அன்றும் நடுங்காதவனை; நடுங்க நுடங்கும் நடுஉடைய விடம் கால் அயிற் கண்ணி- நடுங்குவிக்கும்
இடையையுடைய நஞ்சைக் காலும் வேல் போலுங் கண்ணையுடையாள்; தில்லை ஈசன் வெற்பில்
தடம் கார் தரு பெருவான் பொழில் நீழல் தண் புனத்து மேவும் கொலாம்- தில்லைக்கணுளனாகிய ஈசனது
வெற்பிடத்துப் பெரியமுகில் போலும் மிகவும் பெரிய பொழிலினீழலையுடைய குளிர்ந்த புனத்தின்கண்
மேவுமோ மேவாளோ? எ-று
கொடுங்காலெனச் சந்தநோக்கித் திரியாது நின்றது, கொடுங் காலுமென வெண்ணினுமமையும்.
நடுங்க நுடங்கு மென்னுஞ்சொற்கள் ஒரு சொன்னீரவாய் நடுக்குமென்னும் பொருள் பட்டு இரண்டாவதற்கு
முடிபாயின. ஐகாரம்: அசை நிலை யெனினுமமையும். தருவென்பது ஒருவமை வாய்பாடு. தடங்கார் தரு
பெருவான் பொழிலென்பதற்குக் கார் தங்கும் பொழிலெனினுமமையும் . நிறை-ஐம்பொறிகளையு மடக்குதல்.
மெய்ப்பாடு: பெருமிதஞ் சார்ந்த மருட்கை, பயன்: உசாவி யுணர்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஆரவாரிக்கின்ற வீரக் கழலையுடைய நாய (கன்) ஏவிய (வழியே)
புலனை நிறுத்தவல்ல பாங்கன் (நினைவொடு சென்றது)
செய்யுள்: கொடிய காற்றாலே அழகிய மலைகளேழும் பூமிகளேழும் அழகழிக்கின்ற ஊழியிறுதிக்
காலத்தும் அன்றும் தனக்கொரு பயமில்லாதவன் ஒருவனை அவனும் நடுங்குவதாக அசைகின்ற
இடையினையுடைய விடத்தைக் கான்று கொண்டிருக்கிற வேல் போன்ற கண்களையுடையவள் நிற்பள்
கொல்லோ? (என்கிற ஐயத்தாலே நில்லாளோ என்றும்படும்), திருவம்பலநாதனுடைய மலையில் பெருங்கார்
தங்குகிற பெரிதாகி நீண்ட பொழிலின் நிழலுடைத்தாகிய அழகிய குளிர்ந்த புனத்திடத்தே நிற்பளோ
நில்லாளோ என்ற ஐயத்தில் போனான்.
14. குறிவழிக்காண்டல்*
----------------------
*பேரின்பப் பொருள்: போதமருளாற் போயின்பங் கண்டது
குறிவழிக் காண்டல் என்பது குறிவழிச் சென்ற பாங்கன் தன்னை அவள் காணாமல்
தானவளைக் காண்பதோ ரணிமைக்கணின்று. 'அவன் சொன்ன இடமும் இதுவே ; இயலும் இவையே;
இவளும் அவளே' யென்று ஐயமறத் தெளியக் காணா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
வடிக்க ணிவை **வஞ்சி யஞ்சும்
இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேவிவ
ளேஅப் பணிமொழியே .
குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று
தளிர்புரை மெல்லடித் தையலைக் கண்டது
**வடுக்கணிவை என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: வடிக்கண் இவை- அவன் கூறிய வடுவகிர் போலுங் கண்களும் இவையே,
வஞ்சி அஞ்சும் இடை இது-வஞ்சிக் கொம்பஞ்சு மிடையும் இதுவே; வெற்பன் சொற் பரிசே-
வெற்பன் சொற்பரிசே; வாய் பவளம் துடிக்கின்றவா - வாய்பவளந் துடித்தாற்போலத் துடிக்கின்றவாறென்!
அதனால்; யான் தொடர்ந்து விடா அடிச்சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம்
போல் படிச்சந்தமும் இதுவே- ஓருணர்வு மில்லாத யானும் பற்றிவிடமாட்டாத அடியாகிய சந்த மாமலரை
யுடைய தலைவனது விண்ணோர் வந்து வணங்கும் அம்பலம் போலும் ஒப்பும் இதுவே;
அப்பணி மொழியும் இவளே; எ-று.
வெற்பன் சொற்பரிசே யென்றது. இதனை யவன் தப்பாமற் கூறியவாறென்னை என்றவாறு.
வடியென்பது வடுவகிருக்கோர் பெயர். அதரத்திற்குத் துடித்தல் இயல்பாகக் கூறுப. பவளந்
துடிக்கின்றவா என்பதற்குப் பவளம்போலப் பாடஞ் செய்கின்றவாறு என்னென்றுரைப் பாருமுளர்.
படிச்சந்த மென்பது வடமொழித் திரிபு. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தெளிதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: குளிர்ந்த மலைமேலுண்டாகிய நாட்டினை யுடையவன்
குறித்த இடத்து ஏறச்சென்று தளிரை ஒத்த மதுரமான அடியினையுடைய நாயகியைக் கண்டது.
செய்யுள்: அவன் சொன்ன மாவடு ஒத்த கண்களுமிவையே வஞ்சிக் கொம்பைத் தோற்கச் செய்த
இடையின் அழகும் இதுவே: வாயானது பவளம் போலும் துடிக்கின்றது; நாயகன் சொன்னபடியா விருந்தது :
நான் பற்றிவிடாத திருவடியாகிய பெரிய மலர்களையுடைய சுவாமி அவனைத் தேவர்கள் வணங்குகின்ற
திருவம்பலத்தை.. அது எய்துவான் ... இவளே : தாழ்ந்த வார்த்தையினை உடையாளும் இவளே ஆகவேண்டும். 32
15. தலைவனை வியந்துரைத்தல்*
*பேரின்பப்பொருள் : நெஞ்ச முயிர்நினை வறிவெனப் புகழ்ந்தது.
தலைவனை வியந்துரைத்தல் என்பது குறிவழிக்கண்ட பாங்கன் இவ்வுறுப்புக்களையுடைய
இவளைக்கண்டு பிரிந்து இங்கு நின்று அங்குவந்து யான் கழறவும் ஆற்றி அத்தனையுந் தப்பாமற் சொன்ன
அண்ணலே திண்ணியானெனத் தலைமகனை வியந்து கூறாநிற்றல் அதற்குச் செய்யுள் -
குவளைக் களத்தம் பலவன்
குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே
நயந்தவுருவும் நலனுங்கண்டு
வியந்தவனையே மிகுத்துரைத்தது
இதன் பொருள்: குவளைக் களத்து அம்பலவன் குரை கழல் போற் கமலத்தவளை- குவளைப்பூப்
போலுந் திருமிடற்றையுடைய அம்பலவனுடைய ஒலிக்குங் கழலையுடைய திருவடி போலுந்
தாமரைப் பூவிலிருக்குந் திருமகளை ; பயங்கரம் ஆக நின்று ஆண்ட அவயவத்தின் இவளைக் கண்டு
இங்கு நின்று அடிமை கொண்ட உறுப்புக்களையுடைய இவளைக் கண்டு பிரிந்து இங்கு நின்றும்
அவ்விடத்து வந்து; அத்துணையும் பகர்ந்த கவளக் களிற்று அண்ணலே இக்கடலிடத்துத் திண்ணியான் -
யான் கழறவும் ஆற்றி அவ்வள வெல்லாங் கூறிய கவளக் களிற்றை யுடைய அண்ணலே இவ்வுலகத்துத்
திண்ணியான் எ-று.
இவளைக் கண்டென்றது இவளுடைய நலத்தைக் கொண்டாடியவா றன்று; முன்னங்கே
தலைவனுடைய பொலிவழிவு கண்டு இங்கே வந்தவன் இங்கு மிவளுடைய பொலிவழிவுகண்டு
கிலேசித்து இவள் இத்தன்மையளாக இங்கே இவளைப் பிரிந்து அங்கே வந்து அத்துணையும்
பகர்ந்தவனே திண்ணியானென்று இருவருடைய அனுராகமுங் கூறியவாறு. கவளக்களிறு தான்
விரும்புங் கவளம் பெற்று வளர்ந்த களிறு. நயந்த- தலை மகனயந்த. மெய்ப்பாடு : மருட்கையைச்
சார்ந்த அச்சம். பயன்: தலைமகனை வியத்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் விரும்பிய வடிவையும் நன்மையையும்
பார்த்து ஆச்சரியப்பட்டு நாயகனையே மிகுத்துச் சொன்னது.
செய்யுள்: நீலம்பூவை யொத்த திருமிடற்றையுடைய திருவம்பல நாதன் அவனுடைய
திருவீரக்கழல் ஆரவாரிக்கிற சீ பாதங்களை யொத்த தாமரைப் பூவில் உயர்ச்சியுடைய
சீதேவியைப் பயப்படும்படி நின்று அடிமை கொண்ட அவயவங்களையுடைய இவளைப் பார்த்து
இவ்விடத்தே நின்று, அவளை அம் சொல் ஆற்றிவந்து நான் கழறவும். எவ்வளவு மறுத்து சொன்ன
வேண்டிய கவளம் கொள்ளுகிற யானையையுடைய நாயகனே, இந்தக் கடல் சூழ்ந்த புவியில்
திடநெஞ்சன் அவனேயாய் இருந்தான் (என்றுபடும்). 33
16. கண்டமை கூறல்*
-------------------
*பேரின்பப் பொருள்: "போத நம்மாற் பொருந்துவ தன்றென ஆதர வாயுயிர்க் கறிய வுரைத்தது.
கண்டமை கூறல் என்பது தலைமகனை வியந்துரைத்த பாங்கன் விரைந்து சென்று, தான்
அவளைக் கண்டமை தலை மகனுக்குப் பிடிமிசை வைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் :
பணந்தா ழரவரைச் சிற்றம்
பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே
பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது
இதன் பொருள் : வாய் நிணம் தாழ்சுடர் இலை வேல வாய்க் கணிணந்தங்கிய சுடரிலை
வேலை யுடையாய்; பணம் தாழ் அரவு அரைச் சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை -பணந் தாழ்ந்த
அரவையணிந்த அரையையுடைய சிற்றம்பலவரது பசும்பொன்னையுடைய கைலைக்கண்;
புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னி-கூடி அவ்விடத்து நின்று மகன்ற பொருகரியை நினைந்து;
புனத்து அயலே மணம் தாழ் பொழிற் கண் வடிக்கண் பரப்பி மடப்பிடி ஒன்று நின்றது கண்டேன்-
புனத்திற்கயலே மணந் தங்கிய பொழிற்கண் வடுவகிர் போலுங் கண்களைப் பரப்பி மடப்பிடி
யொன்று நின்றதனைக் கண்டேன் எ-று.
பணந்தாழ்தல் : முடிந்து விடுதலாற் றொங்கல் போலத் தாழ்தல்; தங்குதலெனி னுமமையும்
ஆங்ககன்றவென்புழி நின்றென ஐந்தாம் வேற்றுமைப்பொருளுணர நிற்பதோர் இடைச் சொல்
வருவித் துரைக்கப்பட்டது. புனத்தயலே யென்றான். புனத்து விளையாடும் ஆயத்தை நீங்கி
நிற்றலின் வடிக்கண்பரப்பியென்றான் இன்ன திசையால் வருமென்றறி யாது சுற்றெங்கு
நோக்குதலின் கைலைக்கணெண்பதூஉம் புனத்தய லென்பதூஉம் பொழிற்க ணென்பதூஉம்
நின்றதென்னுந் தொழிற்பெயரோடு முடியும். நின்றதுவே யென்புழி வகாரஞ் சந்தநோக்கு வந்தது;
விரிக்கும் வழி விரித்தற்பாற்படும். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : ஒரு பிடியானையைச் சொல்லுவாரைப்போல
நாயகியுடைய நிலைமையைக் கொல்லும் வினயம் வல்ல வேலினையுடைய நாயகனுக்குச் சொன்னது.
செய்யுள்: படம்மிக்க பாம்பைத் திரு அரைநாணாகவுடைய திருவம்பல நாதருடைய
சோலையாற்பசுத்துப் பொலிவினை யுடைய கயிலை மலையில், தன்னுடனே கூடி ஆங்கு அகன்ற,
பொருதல் இயல்பினையுடைய களிற்று யானையை நினைந்து, புனத்தின் ஒரு பக்கத்தே,
மணமிகுந்த பொழிலிடத்தே! மாவடுவகிரை யொத்த கண்களாலே பார்க்கப்பார்த்து, ஒரு மடப்பிடியானை
வாயிலே நிணமிக்குக் கொலைத் தொழிலாற் சிறந்த வேலினையுடையவனே! நிற்கக்கண்டேன் காண்:
எனவே, அவ்விடத்து ஏறச் செல்க என்றுபடும். 34
17. செவ்வி செப்பல்*
-------------------
*பேரின்பப் பொருள்: "இன்ப மறியு மியல்பன்றெனினும், நெஞ்ச மணியெலா நின்றெடுத் துரைத்தது."
செவ்வி செப்பல்: என்பது பிடிமிசை வைத்துக் கூறச்கேட்ட தலைமகன் அது தனக்குச்
செவ்வி போதாமையிற் பின்னும் ஆற்றாமை நீங்கானாயினான்; அது கண்டு அவனை ஆற்றுவிப்பது
காரணமாக அவனுக்கு அவளவயவங்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -
கயலுள வேகம லத்தலர்
மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
பாநின தீர்ங்கொடிமேற்
புயலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே
அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்
கவ்வுருக் கண்டவன் செவ்வி செப்பியது.
இதன் பொருள் ; வெற்பா - வெற்பா; நினது ஈர்ங்கொடி மேல் கமலத்து அலர் மீது கயல் உளவே -
நினது ஈர்ங் கொடிக் கண் தாமரைப் பூவின் மேற் கிடப்பன சிலகயல்களுளவே; கனி பவளத்து அயல்
ஒத்த நிரை முத்தம் உளவே- கனிந்த பவளத்திற்கு அயல் இனமொத்த நிரையாகிய முத்துக்களுளவே;
இணைச்செப்பு அரன் அம்பலத்தின் இயல் உளவே - இணையாகிய செப்பு அரனது அம்பலத்தினியல்பை
யுடையன வுளவே. மலர் சூழ்ந்து இருள் தூங்கிப் புரள்வன புயல் உளவே - மாலை சூழ்ந்து இருள் செறிந்து
கிடந்து புரள்வன புயலுளவே? உளவாயின் யான்கண்ட வுருவம் நீ கூறிய வுருவமாம் எ-று.
அரனம்பலத்தினியல்: ஆறாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
சூழ்ந்தென்பதூஉம், தூங்கியென்பதூஉம் சினை வினைப்பாற்பட்டு முதல் வினை கொண்டன.
மலர் சினை போலக் குழற்கின்றி யமையாமையின் சினைப்பாற்பட்டது. புயல் திரண்டாற் போலு
மென்பது போதரப் புரள்வனவெனப் பன்மையாற் கூறினான். மெய்ப்பாடும் பயனும்: அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அழகிய முதலியாருடைய ஸ்ரீ கயிலாயத் திருமலையில்
வளப்பமிக்க மலையினையுடைய நாயகனுக்கு அவன் சொன்ன உருவைக்கண்டு வந்த பாங்கன் தான்
கண்ட செவ்வி செப்பியது .
செய்யுள்: (உரை சிதைந்துள்ளது ) 35
18. அவ்விடத்தேகல் *
-------------------
*பேரின்பப் பொருள் : " போத நீங்கப் பொற்பாங் குரவன் தெரிசனங் காணச் சென்ற தன்மை"
அவ்விடத்தேகல் என்பது செவ்வி செப்பக்கேட்ட தலைமகன் இவ்வாறு காணப்பட்டதுண்டாயின்
அது வென்னுயிரெனத் தானவ்விட நோக்கிச் செல்லா நிற்றல், அதற்குச் செய்யுள் -
எயிற்குல மூன்றிருந் தீயெய்த
வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தநிரைக்
தயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
வென்னுடை மன்னுயிரே
அரிவையது நிலைமை யறிந்தவனுரைப்ப
எரிகதிர் வேலோ னேகியது
இதன் பொருள்: எயில் குலம் மூன்று இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து-எயிற்சாதி மூன்றும்
பெரிய தீயை யெய்த அவற்றை யெய்தவனது தில்லையை யொத்து: குயில் குலம் கொண்டு - குயிலாகிய
சாதியைக் கொண்டு: தொண்டைக் கனி வாய்க் குளிர் முத்தம் நிரைத்து-தொண்டைக் கனியிடத்துக்
குளிர்ந்த முத்தங்களை நிரைத்து; அயில் குலவேல் கமலத்தில் கிடத்தி - கூர்மையையுடைய நல்லவேலைக்
கமலத்தின்கட் கிடத்தி; அனம் நடக்கும் மயில் குலம் கண்டது உண்டேல் - அது என்னுடை மன் உயிர்
அன்னம் போல நடப்பதோர் மயிற்சாதி காணப்பட்டதுண்டாயின் அது எனது நிலைபெறுமுயிர் எ-று
எயிற்குலமூன்றென்றார், அவை இரும்பும், வெள்ளியும், பொன்னுமாகிய சாதி வேறுபாடுடைமையின்,
குயிற்குலங் கொண்டென்றான், மொழியாற் குயிற்றன்மையை யுடைத்தாகலின். தொண்டைக்கனிவாயென்பதற்குத்
தொண்டைக்கனி போலும் வாயென்பாருமுளர்.** மெய்ப்பாடு : உவகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
** என்பவர் பழைய உரைகாரர்.
இவை நிற்க இடந்தலை தனக்குமாமாறு சொல்லுமாறு.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: 'நாயகியுடைய நிலைமையை அறிந்து வந்த பாங்கன்
சொல்ல, மிகுந்த பிரகாசத்தையுடைய வேலினையுடையவன் போனது.
செய்யுள்: மதிற் சாதிகள் மூன்றையும் மிகுந்த தீயை அவை எய்தும் படி எய்தவனுடைய
சிதம்பரம் போன்று, வார்த்தையால் குயிலை ஒத்துக் கொவ்வைக்கனி போன்ற வாயிலே மதுரமாகிய
முத்தைநிரைத்துக் கூரிதாகிய அழகிய வேலினைக் கமலத்தின் மேலே கிடத்தி, அன்னம் போல் நடக்கிற
சாயலால் மயிலை ஒப்பாளைக் கண்டாயாகில், அவளை என்னுடைய நிலைபெற்ற உயிர் ஆகும். 36
19 மின்னிடை மெலிதல்*
------------------------
* பேரின்பப்பொருள் ; சிவமுயிர் நோக்கித் திருவுளத்தெண்ணல்.
மின்னிடை மெலிதல் என்பது நெருநலைநாளில் தலையளி செய்து நின்னிற் பிரியேன்
பிரியினும் ஆற்றேனென்று கூறிப் பிரிந்தவர் வேட்கை மிகுதியால் இடமறியாது ஆயத்திடை வருவார்
கொல்லோ வெனும் பெருநாணினானும், ஆற்றாமையான் இறந்து பட்டார் கொல்லோ வென்னும்
பேரச்சத்தினானும் யாருமில்லொரு சிறைத் தனியே நின்று, தலைமகனை நினைந்து
தலைமகள் மெலியா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
ஆவியன் னாய்கவ லேல்அக
லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக் கவாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
சேர்வர்கொ லம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத் தருவரையே
மன்னனை நினைந்து. மின்னிடை மெலிந்தது
இதன் பொருள்: அளித்து அன்னாய் கவலேல் அகலேம் என்று என்று ஒளித்த ஆவி அன்னார் -
தலையளிசெய்து ஆவியையொப்பாய் கவலாதொழி நின்னை நீங்கேமென்று சொல்லி மறைந்த
என்னாவியை யொப்பார்; மிக்க அவாவினர் ஆய்க்கெழுமற்கு அழிவுற்று மிக்க விருப்பத்தையுடையராய்க்
கெழுமுதல் காரணமாக நெஞ்சழிதலான் இடமறியாது; அம்பலத்து எம் ஆவி அன்னான் பயிலும்
கயிலாயத்து அருவரை - அம்பலத்தின் கணுளனாகிய எம் மாவியை யொப்பான் அடுத்து வாழுங்
கைலாயத்தின் கட்பிறரானெய்துதற்கரிய தாழ்வரையிடத்து; ஆவி அன்னார் மன்னி ஆடு இடம்
சேர்வர் கொல்-ஆவியை யொக்கும் ஆயத்தார் நிலைபெற்று விளையாடும் அவ்விடத்து அவர்
காண வந்து பொருந்துவரோ! எ - று.
அளித்தல், பிரிகின்ற காலத்துச் செய்த தலையளியெனினு மமையும் மிக்கவென்பது
கடைக் குறைந்து நின்றது. ஆயத்திடை வருவார் கொல்லென ஐயத்துள் ஒரு தலையே
கூறினாள், பெருநாணினளாதலின் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை .
பயன்: உசாவி ஆற்றாமை நீங்குதல். ஆயவெள்ளத்துள்ளே வருவர் சொல்லோ வென்னும்
பெரு நாணினானும், ஆற்றாமையால் இறந்து பட்டனர் கொல்லாவென்னும் பேரச்சத்தினானும்
மீதூரப்பட்டுத் தன்றன்மை யளன்றி நின்று இவ்வகை உசாவினாளென்பது .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாயகனை நினைந்து மின்போன்ற இடையுடையாள் வாடியது.
செய்யுள்: என் ஆருயிரை ஒப்பாய்! கவலேல், நாம் நம்மிற் பிரியோம் காண்' என்று தலையளி செய்து
இப்பொழுது ஒளித்துப்போன அருஞ்சுரத்திலே நீர்வேட்டற்கு உதவும் தாமரைத்தடாகம் போன்றவர்,
என் பேரிலே மிகுந்த ஆசையுடையராய் என்னுடைய காரணமாக நெஞ்சழிந்து, என்னுடைய உயிர்த்
தோழிமார்கள் நிலை பெற்று விளையாடுகிறவிடத்திலே செல்வரோ இங்கேற வருவரோ?
கொல் என்ற ஐயத்தால் இங்கேற வருவரோ என்றுபடும் திருவம்பலத்தே உளனாகி
என் உயிரையொத்த முதலியார் வாழ்கின்ற ஸ்ரீ கயிலாயமாகிய அரிய இடத்தே செல்வரோ?
இங்கே வருவரோ? என்னும் நினைவுடனே நின்றான் (வாவியன்னார் என்பது இவ்வுரைகாரர் பாடம்) 37
20. பொழில்கண்டு மகிழ்தல்*
--------------------------
*பேரின்பப் பொருள்; பார்க்கு மிடமெங்கும் பரனாக் கண்டது.
பொழில்கண்டு மகிழ்தல் என்பது தலைமகளை நோக்கிச் செல்லா நின்ற தலைமகன்
முன்னைஞான்று அவளைக் கண்ணுற்ற பொழிலைச் சென்றணைந்து, அப்பொழிலிடை
அவளுறுப்புக்களைக் கண்டு , இப்பொழில் என்சிந்தனைக்கு அவள் தானேயெனத் தோன்றா நின்றதென்று
இன்புறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
காம்பிணை யாற்களி மாமயி
லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
வான்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே
மணங்கமழ்பொழிலின் வடிவுகண்
டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது
இதன் பொருள்: காம்பு இணையால் - வேயிணையானும் : களிமா மயிலால் - களிப்பையுடைய
கரிய மயிலானும்; கதிர்மா மணியால்- ஒளியையுடைய பெரிய நீலமணியானும்; வாம் பிணையால் -
வாவும் பிணையானும்; வல்லி ஒல்குதலால் - வல்லி நுடங்குதலானும்; கயிலைப் பயில் புனமும் என்
சிந்தனைக்குத் தேம்பிணை வார்குழலாள் எனத் தோன்றும் - கைலைக்கணுண்டாகிய அவள் பயிலும் புனமும்
இன்புறுத்துதலால் என் மனதிற்குத் தேம் பிணையையுடைய நெடிய குழலையுடையா ளென்றே தோன்றா நின்றது எ-று.
மன்னும் அம்பலவன் பாம்பு இணையாக்குழை கொண்டோன் கயிலை - நிலைபெறு மம்பலத்தையுடையவன்
பாம்பை ஒன்று மொவ்வாத குழையாகக் கொண்டவன் அவனது கைலையெனக் கூட்டுக.
பாம்பையிணைத்துக் குழையாகக் கொண்டவனெனினுமமையும். தேம்பிணை - தேனையுடைய தொடை.
தேம்பிணை வார் குழலாளெனத் தோன்று மென்பதற்கு அவளைப்போலப் புனமும் யானின்புறத் தோன்றா நின்ற
தென்பாருமுளர்*. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்தல். நெருநலை நாளில் தலை மகளைக் கூடின பொழிலிடம்
புகுந்து இவ்வகை சொன்னானென்பது.
*என்பவர் பழையவுரைகாரர்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நறுநாற்றம் கமழ்கின்ற பொழிலின் வடிவை ஆராய்ந்து
தெய்வத்தை ஒத்த தன் நாயகியாக நினைந்து வருத்தம் நீங்கியது.
செய்யுள்: வேய் இணைந்து நிற்றலால் தோள்களை ஒத்தும், களிப்பையுடைய கரிய மயில்களால்
சாயலை ஒத்தும், ஒளியுடையதாகிய நீல மணிகளால் கூந்தலை ஒத்தும், இளமான் நோக்கத்தால் விழியை
ஒத்தும் (இருத்தலானும்) வல்லிசாதத்தின் இடமாதல் இடை நுடங்கலானும், நிலைபெற்ற புலியூர்த்
திருவம்பலவன் பாம்பைத்தன் குழையாபரணமாகக் கொண்டவனுடைய கயிலாயத்தில் இவள் வாழ்கின்ற
புனமும், தேனையுடைத்தாகிய மாலையினையணிந்த நீண்ட குழலை யுடையவள் என்னும்படி தோன்ற
என் மனத்தை இன்புறுத்தா நின்றது 38
21. உயிரென வியத்தல்*
----------------------
* பேரின்பப் பொருள் ''அநாதி யின்பம் அரனெனக் காண்டல்"
உயிரெனவியத்தல் என்பது பொழில் கண்டு மகிழ்ந்து அப் பொழிலிடைச் சென்று புக்கு
அவளைக் கண்ட துணையான் என்னுயிர் இவ்வாறு செய்தோ நிற்பதென வியந்து கூறாநிற்றல்
அதற்குச் செய்யுள் :-
நேயத்த தாய்நென்ன லென்னைப்
புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
நின்றதென் மன்னுயிரே.
வெறியுறுபொழிலின் வியன்பொதும்பரின்
நெறியுறுகுழலி நிலைமைகண்டது.
இதன் பொருள்: நென்னல் நேயத்தது ஆய் என்னைப் புணர்ந்து - நெருநல் உள்ள மகிழ்ச்சியை
யுடைத்தாய் என்னைக் கூடி ; நெஞ்சம் நெகப் போய்-பின் நேயமில்லது போல என்னெஞ்சு உடையும்
வண்ணம் நீங்கிப் போய்; ஆயத்தது ஆய் ஆயத்தின் கண்ணதாய்; அமிழ்து ஆய்-இன்பத்தைச் செய்தலின்
அமிர்தமாய்; அணங்கு ஆய்-துன்பத்தைச் செய்தலின் அணங்காய் அரன் அம்பலம் போல்
தேயத்தது ஆய்-புலப்பாட்டான் அரன தம்பலம் போலும் ஒளியை யுடைத்தாய்: என்றன் சிந்தையது ஆய்-
புலப்படாது வந்து என் சிந்தைக்கண்ணதாய்; தெரியின் பெரிதும் மாயத்தது ஆகிவந்து நின்றது இதோ
என் மன் உயிர் - ஆராயிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் வந்து நின்றது இதுவோ எனது மன்னுயிர் எ-று.
நேயமுடைமையும் நேயமின்மையும் இன்பஞ் செய்தலும் துன்பஞ் செய்தலும் புலப்படுதலும்
புலப்படாமையும் ஒரு பொருட்கியையாமையின், பெரிது மாயத்ததாகியென்றான், தேயம்: வடமொழிச் சிதைவு.
அம்பலம் போலுந் தேசத்தின் கண்ணதா யென்றுரைப்பினுமமையும். ஓகாரம்: அசைநிலை யெனினுமமையும்.
என்மாட் டருளுடைத்தாய் முற்காலத்து என்னை வந்துகூடி அருளில்லதுபோல என்னெஞ்சுடையும் வண்ணம்
போய்த் தன் மெய்யடியார் குழாத்ததாய் நினைதோறும் அமிர்தம் போல இன்பஞ் செய்து கட்புலனாகாமையிற்
றுன்பஞ் செய்து அம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என்மனத் தகத்ததாய் இத்தன்மைத்
தாகலிற் பெரிதும் மாயத்தை யுடைத்தாய் எனது நிலைபெறுமுயிர் வந்து தோன்றா நின்றதென
வேறு மொரு பொருன் விளங்கியவாறு* கண்டு கொள்க. பொழிலின் வியன்பொதும்பர்- பொழில்
மரஞ்செறிந்தவிடம். மெய்ப்பாடும் பயனும் அவை:
* இது சைவ சித்தாந்தப் பொருள் ஆகும்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நறு நாற்றமிக்க கானிடத்து அகன்ற சோலையிடத்து
நெறித்தல் பொருந்தின கூந்தலையுடையவள் நின்ற படியைக் கண்டது.
செய்யுள்: அன்புடைத்தாய், நேற்று என்னுடனே கூடி என் நெஞ்சு நெகிழும்படி கூடிப்போய்
ஆயக்கூட்டத் .....தாய.... இப்பொழுதே....தாய் வந்து நின்ற இதுவோ என்னுடைய நிலை பெற்ற உயிர்
என்றது. (இப் பாடலுரை மிகவும் சிதைந்துள்ளது) 39
22. தளர்வகன்றுரைத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்- நிருவி காரமாய் நிலைபெறல் கண்டது
தளர்வகன் றுரைத்தல் என்பது உயிரென வியந்து சென்று, பூக்கொய்தன் முதலிய
விளையாட்டை யொழிந்து யாரு மில்லொரு சிறைத் தனியே நின்று இவர் செய்யா நின்ற
பெரிய தவம் யாதோ'வென அவளைப் பெரும்பான்மை கூறித் தளர்வு நீங்கா நிற்றல்,
அதற்குச் செய்யுள்:-
தாதிவர் போதுகொய் யார்தைய
லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
சுனைப்புன லாடல் செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை யெய்துதற்கே.
பனிமதிநுதலியைப் பைம்பொழிலிடைத்
தனி நிலைகண்டு தளர்வகன்றுரைத்தது
இதன் பொருள் : தாது இவர் போது கொய்யார் - தாது பரந்த பூக்களைக் கொய்கின்றிலர்;
தையலார் அங்கை கூப்ப நின்று சோதி வரிப்பந்து அடியார்- ஆயத்தாராகிய தையலார்
அங்கைகளைக் கூப்ப நின்று ஒளியையும் வரியையும் உடைய பந்தை அடிக்கின்றிலர்;
சுனைப் புனல் ஆடல் செய்யார்-சுனைப்புனலாடுதலைச் செய்கின்றிலர் ; போது இவர் கற்பக நாடு
புல்லெனத் தம் பொன் அடிப் பாய் அம்பலத்தான் மலை எய்துதற்கு இவர் மாதவம் யாது . அதனாற்
போதுபரந்த கற்பகங்களையுடைய தேவருலகம் பொலிவழிய நிலந்தோயாத தமது பொன் போலு
மடியை நிலத்தின் கட்பாவி அம்பலத்தானது கைலையை யெய்துதற்கு இவர் செய்யக் கருதுகின்ற
பெரிய தவம் யாது! எ-று.
தவஞ் செய்வார் புறத்தொழில்களை விட்டு அகத்தா னொன்றை யுன்னி
மலைக்கட்டங்குவரன்றே. இவளும் பூக் கொய்தல் முதலாகிய தொழில்களை விட்டு
மனத்தாற்றன்னை நினைந்து வரையிடத்து நிற்றலான் யாதிவர் மாதவ மென்றான்.
மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: குளிர்ந்த மதிபோன்ற நெற்றியை உடையாளை
அழகிய பொழிலிடத்தே தனியே நிற்கின்ற நிலையைக் கண்டு சலிப்பறுத்துப் பேசினது.
செய்யுள்: அல்லி பரந்த பூக்களைக் கொய்யார்: பாங்கிமார் அழகிய கைகளைக் கூப்ப நின்று
ஒளியும் அழகுமுடைய பந்தடிக்கிறாரில்லை; சுனையில் நீர் குடைந்து விளையாடுகிறாரில்லை ;
பூக்கள் பரந்த கற்பக முடைத்தனைய தெய்வலோகம் இவர் போதுகையினாலே அழகு அழியத்
தம்முடைய பொலிவு பெற்ற அடிகள் நிலத்திலே பரவித் திருவம்பலநாதன் திருமலைக்கே வந்து
தங்குதற்கு, இவர் பண்ணப் புகுகின்ற தவம் எதுதான் என்ன, எல்லாத் தவமும் முடித்தன்றோ ?
இலக்குமி என்ற அதிகாரம் பெற்றார் எதுவெ ... பண்ணுகின்றார் எனப்படும் ...... ஒத்தபடி
என் என்னின் , தவம் பண்ணுவாரும் எவ்லா நினைவுகளையும் போகவிட்டு, மனத்திலே ஒரு
நினைவாகி ......(பண்) ணுவார்கள்; அப்படியே விரும்பும் பூப்ப (றித்தல் முதலிய நினைவுகளை யெல்லாம்
போக விட்டு மனத்திலே ஒரு நினைவுடனே நிற்கையாலே............. இவர் பெரிய தவமென்றாரெனக் கொள்க
.......................அரிதென மெலிந்துரைத்தது. 40
23. மொழிபெறவருந்தல்*
------------------------
* பேரின்பப்பொருள் : திருவாய் மலராவிடின் உய்யேன் என்றது
மொழிபெற வருந்தல் என்பது தளர்வு நீங்கிய பின்னர்ச் சார்தலுறா நின்றவன் ஒருசொற்
பெறுமுறையாற் சென்று சாரவேண்டிப் பின்னும் அவளைப் பெரும்பான்மை கூறி ஒரு சொல்வேண்டி
வருந்தாநிற்றல் அதற்குச் செய்யுள் --
காவிநின் றேர்தரு கண்டர்வண்
தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே.
கூடற் கரிதென, வாடி யுரைத்தது.
இதன் பொருள்: மா இயன்றன்ன மெல் நோக்கி மானோக்கத்தான் இயன்றாற்போலும்
மெல்லிய நோக்கையுடையாய்; காவி நின்று ஏர் தரு கண்டர் வண் தில்லை கண்ஆர் கமலத் தேவி
என்றே ஐயம் சென்றது அன்றே- நஞ்சாகிய நீலப்பூ நின்று அழகைக் கொடுக்கும் மிடற்றையுடையவரது
வளவிய தில்லைக்க ணுண்டாகிய கண்ணிற்கு ஆருந் தாமரைப் பூவின் வாழுந் தேவியோவென்று
ஐயநிகழ்ந்தது: அறியச் சிறிது நின் வாய் திறவா விடின்- தெளிந்தறியச் சிறிதாயினும் நின்வாய்
திறவா தொழியின் அமிழ்தே - அமிழ்தமே, அணங்கே -அணங்கே; இன்று அழிகின்றது. என் ஆவி அன்றே
இப்பொழுதழிகின்றது என்னுயிரன்றே இதனை நீ கருதா தொழிகின்ற தென்னை ! எ-று.
தேவி யென்பது பெரும்பான்மை யாகலின், தேவியென்றே யையஞ் சென்றதென
ஐயத்துள் ஒருதலையே பற்றிக் கூறினான். அறியவென்னும் வினையெச்சமும் சிறிதென்னும்
வினை யெச்சமும் திறவாவிடி னென்னு மெதிர் மறையிற் றிறத்தலோடு முடிந்தன.
அமிழ்தே யணங்கே யென்றான், இன்பமுந் துன்பமும் ஒருங்கு நிகழ்தலின். மெய்ப்பாடு- அழுகை.
பயன் : ஆற்றாமையுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: ** சார்தற்கு அரிதெனமனம் வாடி யுரைத்தது.
** இத்துறையின் கொளுவும், அதனுரையும் ஏட்டிற் காணப்பெறவில்லை என்று பழையவுரைப்
பதிப்பில் எழுதப்பெற்றுள்ளது .
செய்யுள்: நீலமலர் நின்று ஒளி செய்கின்ற திருமிடற்றையுடையவர் அவருடைய வளமுடைய
தில்லையில் இடமார்ந்த செந்தாமரைப் பூவிலுள்ள சிதேவி என்றே எனக்கு ஐயம் செல்லா நின்றது:
அல்ல வென்னும் இடமறியும்படி சிறிதாகினும். மான் நோக்கத்தால் இயன்றாற் போலவே பார்க்கின்ற
பார்வை யினையுடையாய்! உன்வாயால் ஒரு வார்த்தை சொல்லாத பொழுது, என் உயிர் அல்லதே;
எனக்கு இன்பமும் துன்பமும் ஒருக்காலே செய்தலால் அமுதத்தையும் வருத்தத்தையும் ஒப்பாய்!
இப்பொழுது அழிகின்றது என் உயிரன்றோ ?
வேறொரு பொருள் அழிந்தால் மீட்டுக் கொளலாம். உயிர் அழிந்தால் யாராலே மீட்டுக்
கொள்ளலாகும்? என்று படும். 41
24. நாணிக்கண்புதைத்தல்*
-------------------------
* பேரின்பப் பொருள்: இன்ப நாணுதல் போலுயிர் இன்னல் எய்தியது.
நாணிக் கண்புதைத்தல் என்பது தலைமகன் தன் முன்னின்று பெரும்பான்மை கூறக்கேட்ட
தலைமகள் பெருநாணினளாதலின் அவன் முன்னிற்கலாகாது நாணி , ஒரு கொடியினொதுங்கித்
தன் கண்புதைத்து வருந்தா நிற்றல் அதற்குச் செய்யுள் -
அகலிடந் தாவிய வானோ
னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்
றொழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொதுங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே
ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது*
*பாடம்--அடைந்தது
இதன் பொருள்: அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின் இகல் இடம்
தாவிடை ஈசன் தொழாரின் - உலகத்தைத் தாவியளந்த வானவன் வணங்கப் படுவதென்றறிந்து
வணங்கும் அம்பலத்தின் கணுளனாகிய இகலை யுடைய விடங்களிலே தாவும் விடையையுடைய
ஈசனைத் தொழா தாரைப் போல ; இன்னற்கு இடம் ஆய் உகல் இடம் தான் சென்று எனது உயிர்
நையா வகை-துன்பத் திற்கிடமாய் அழியுமளவைத் தானடைந்து எனது உயிர் நையாத வண்ணம் :
பொழில்வாய் எழில் வாய் தரு பூங்கொடியே- பொழிலிடத் துளவாகிய அழகு வாய்த்த
பூவையுடைய கொடியே; ஒதுங்கப் புகலிடம் தா-யானொதுங்குதற்குப் புகலிடந் தருவாயாக எ -று
உகலிடம் - உகுதற்கிடம்; உகுதலையுடைய விடமெனினுமமையும். ஆயிடை--தலைவன்
அவ்வாறு கூறிய விடத்து, தனி நின்று- ஆற்றுவிப்பாரையின்றி நின்று, ஆற்றாது- நாணினா னாற்றாது,
வேய் - வேய்த் தன்மை, மெய்ப்பாடு: அச்சம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் சொன்னவிடத்தில் தனியே நின்று ஆற்றாது
அழிந்து வேயின் தன்மையால் சிறந்த தோள்களை யுடையவள் ஒரு வல்லி சாதக் கொடியில் ஒதுங்கியது.
செய்யுள்: பூமியைத் தாவியளந்த புருஷோத்தமன், அவன் நம்மால் வணங்கப்படுவான் ஒருவன்
என்று அறிந்து வணங்குகிற திருவம்பலத்தின் மாறுபாடுடைய இடங்களிலே தாவிச்செல்லுகிற
இடபத்தினையுடைய முதலியாரைத் தொழாதவரைப் போலே கிலேசத்துக்கு ஒரு கொள்கலமாய்
விசனப்படும் இடத்துச் சென்று என்னுடைய உயிரானது கிலேசியாபடி நான் ஒதுங்கும்படி எனக்குப்
புகலிடம் தருவாயாக, பொழிலிடத்தே அழகு வாய்க்கப் பூத்தவல்லி சாதமே!
எனக்குப் புகலிடம் தருவாயாக என்று அந்த வல்லிசாதத்து ஒதுங்கியது. 42
25. கண்புதைக்க வருந்தல்*
-------------------------
பேரின்பப் பொருள் : உயிர்தன் வருத்த முற்றுற் றுரைத்தது.
கண் புதைக்க வருந்தல் என்பது தலைமகள் நாணிக் கண் புதையா நிற்ப
'இவள் கண் புதையா நின்றது தன்னுடைய கண்கள் என்னை வருத்தத்தைச்
செய்யுமென்றாகாதே'யென உட்கொண்டு, யான் வருந்தாதொழிய வேண்டுவையாயின்
நின்மேனி முழுதும் புதைப்பாயாக' வெனத் தலைமகன் தன் வருத்த மிகுதி கூறா நிற்றல்,
அதற்குச் செய்யுள் ;
தாழச்செய் தார் முடி தன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கைத்
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே
வேற்றருழி கண்ணிணை மிளிர்வன வன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக் கென்றது.
இதன் பொருள்: தாழச் செய்தார் முடி தன் அடிக்கீழ் வைத்து - தன் கட் டாழ்ந்தவர்களுடைய
முடிகளைத் தன் திருவடிக்கீழ் வைத்து; அவரை விண்ணோர் சூழச்செய்தான் அம்பலம் கைதொழாரின்-
அவர்களை விண்ணோர் பரிவாரமாய்ச் சூழும் வண்ணஞ் செய்தவனது அம்பலத்தைக் கைதொழாதாரைப்
போல: உள்ளம் துளங்க போழச் செய்யாமல் வைவேல் கண் புதைத்து - நெஞ்சந்துளங்கப் போழாமற் கூரிய
வேல்போலுங் கண்களைப் புதைத்து : பொன்னே - பொன்னே: நீ என்னை வாழச்செய்தாய்-நீ என்னை
வாழும் வண்ணஞ் செய்தாய்' வாள் நுதலே-வாணுதலையுடையாய்; நின்னைச் சுற்று முற்றும் புதை-
என்னுள்ளந் துளங்காமை வேண்டின் நின்னைச் சுற்று முழுதும் புதைப்பாயாக எ-று
தாழச்செய்தா ரென்பதனை ஒரு சொல்லாக்காது தாழும் வண்ணம் முற்றவஞ்
செய்தா ரென்றானும், தம்மைச் செய்தா ரென்றானும் ஒரு சொல் வருவித்தும் போழச் செய்யாம
லென்புழியும் போழும் வண்ணமொரு தொழிலைச் செய்யாமலென் ஒருசொல் வருவித்தும்
விரித்துரைப்பினுமமையும் . வாழச்செய்தா யென்பது குறிப்பு நிலை. புதைத்த வென்பதூஉம்* பாடம் .
வேற்றருங்கண் - வேல்போலுங்கண். மெய்ப்பாடு: அழுகை. பயன் : ஆற்றாமை யுணர்த்தல்.
* என்பது பழையவுரைகாரர் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வேலொத்த கண்ணிணைகள் உலாவுவனவே அல்ல;
கொல்லுதற்கரிய மேனியே எனக்குக் கூற்றுவனாகா நின்றது (என்றது)
செய்யுள்: தன்னை வந்து வணங்கினவர்கள் தலையினைத் தன்னுடைய திருவடி நிழலிலே
வைத்த அவர்களுக்குத் தேவர்களைப் பரிவாரமாகச் செய்தவன் திருவம்பலம் தொழாதவர்களைப்
போல மனம் நடுங்கப் போழும் வண்ணம் செய்யாமல் கூரியவேல் போன்ற கண்களை மூடிக்கொண்ட
பொன்னை ஒப்பாய்! நான் பிழைக்கும்படி செய்தாய்: ஒளி சிறந்த வெற்றியினையுடையாய்;
என் மனம் நடுங்காமல் செய்யவேண்டியிருந்தாயாமாகில் மேனி முழுதும் புதைப்பாயாக. 43
26. நாண்விடவருந்தல்*
---------------------
* பேரின்பப்பொருள்: இன்ப நாணின்றி யெய்தல் கண்டின்புறல்
நாண்விடவருந்தல் என்பது தலை மகன் தனது ஆற்றாமை மிகுதி கூறக்கேட்டு, ஒரு ஞான்றுந்
தன்னை விட்டு நீங்காத நாண் அழலைச் சேர்ந்த மெழுகுபோலத் தன்னை விட்டு நீங்கா நிற்பத்
தலைமகள் அதற்குப் பிரிவாற்றாது வருந்தா நிற்றல், அதற்குச் செய்யுள் -
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை யேத்தலர் போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணி போன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன் வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்*
மெழுகொத் தழிகின்றதே
ஆங்ங னம்கண் டாற்றா ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது
* ணழியத் தழல்சேர்' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: என் கண்மணி போன்று இன்றியமையாமையால் என் கண்மணியையொத்து:
உயிரின்பழகி - உயிர் போலச் சிறப்புடைத்தாய்ப் பழகி; ஒரு நாள் பிரியாது- ஒரு பொழுதும் பிரியாது;
உடன் வளர்ந்த- என்னுடனே வளர்ந்த: அரு அளிய நாண்- பெறுதற்கரிய அளித்தாகிய நாண்:
அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றது- அழலைச் சேர்ந்த மெழுகை யொத்து என்கணில்லாது
அழியாநின்றது. அதனான் குருநாள் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர் போல்
வருநாள் பிறவற்க - நிறத்தையுடையவாகிய நாண் மலர்களையுடைய பொழில்களாற் சூழப்பட்ட
தில்லைக்கணுளனாகிய கூத்தனை யேத்தாதார் துன்புறும் பிறவியிற் பிறப்பாரன்றே:
அவர்களைப்போல மேல் வரக்கடவ நாளில் யான் இவ்வாறு பிறவா தொழிக எ-று,
வருநாள் பிறவற்க வென்பதற்கு ஏத்தாதாரைப் போல வருந்த இவ்வாறு பயின்றாரைப்
பிரியவரு நாட்கள் உளவாகாதொழிக வெனினுமமையும். வாழியென்பது இத்தன்மைத் தாகிய
இடுக்கணின்றி இந்நாண் வாழ்வதாக வென்றவாறு. அரோவும் மற்றும் அசை நிலை.
ஆங்ஙனங்கண்டு - அவ்வாற்றானாகக் கண்டு. மெய்ப்பாடு- அழுகை. பயன்-ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் அங்ஙனம் சொன்ன படியைக்கண்டு ஆற்றாத்
தன்மையுடையளாய் நாண் நீக்கத்துடனே நுண் தொழிலாற் சிறந்த ஆபரணங்களையுடையாள் நின்றது.
செய்யுள்: நிறமுடைத்தாகிய செவ்வி மலருடைத்தாகிய சோலை சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரில்
கூத்தனாகிய முதலியாரை வாழ்த்தாரைப் போலே மேல்வரும் நாள்கள் இங்ஙனே நாணழியப்
பெறாதொழிவேனாக; மற்றும் என் கண்ணினுள் சோதி போன்று ஒருநாளும் என்னை விட்டு நீங்காதே
என் உயிர்போலப் பின்னமறப் பழகி நான் வளரத் தான் வளர்ந்த பெறுதற்கரிய நாணமானது
அழியத்தக்க அக்கினியைச் சேர்ந்த மெழு (கைப்போல்) உருகி அழியா நின்றது.
ஆதலால் மேல்வரு நாட்கள் இங்ஙனே நாணழியப் பிறவா தொழிய வேண்டும் என்றது.
வாழியும் அரோவும் அசைகள் . 44
27. மருங்கணைதல்*
------------------
* பேரின்பப் பொருள்: திருவுருப் பரிவாற் பெருகு சுகம்பெறல்.
மருங்கணைதல் என்பது தலைமகள் நாணிழந்து வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையின்
தலைமகன் தன்னாதரவினால் அவ்வருத்தந் தணிப்பான் போன்று முலையொடு முனிந்து ஒருகையால்
இறுமருங்குறாங்கியும், ஒருகையால் அளிகுலம் விலக்கி அளகந்தொட்டும் , சென்று அணையா
நிற்றல், அதற்குச் செய்யுள்:-
கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
லேஞ்சிவன் தில்லையன்னாள்
நூலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண் டீர்வண்டு
காள் கொண்டை சார்வதுவே.
ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம்விலக்கிக்
கரு களிற்றண்ணல் மருகணைந்தது.
இதன் பொருள்: கோலத் தனிக் கொம்பர் உம்பர்புக்கு அஃதே குறைப்பவர் தம் சீலத் தனகொங்கை-
அழகையுடைய தனியாகிய கொம்பின் மேலேவேறி அதனையே அடிக்கட் குறைப்பார் தமது
தன்மையை யுடையாயிருந்தன கொங்கைகள். தேற்றகிலேம் - இவை இத் தன்மையவாயிருத்தலான்
இது வீழுமென்றியாந் தெளிகின்றிலம். அதனால் ; வண்டுகாள்- வண்டுகாள்; சிவன் தில்லை அன்னாள்
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது-சிவனது தில்லையை யொப்பாளுடைய நூலையொத்த
நேரிய விடையினது நொய்ம்மையைக் கருதாது; நுண் தேன் நசையால் கொண்டை சார்வது சாலத் தகாது -
நுண்ணியதேன் மேலுண்டாகிய நசையால் நீயிர் கொண்டையைச் சார்தல் மிகவுந் தகாது எ-று.
தேற்றகிலே மென்பது ''தேற்றாப் புன்சொ னோற்றிசின்' புறநானூறு (202) என்பதுபோலத்
தெளிதற்கண் வந்தது முலைகளைத் தெளிவிக்கமாட்டே மென்பாரும்* உளர், பின் வரு மேதத்தை
நோக்கின் நீயிர் பயனாக நினைக்கின்ற இஃது இறப்பச் சிறிதென்னுங் கருத்தால், நுண்டேனென்றான்.
கண்டீரென்பது: முன்னிலையசைச்சொல். அளிகுலம் வடமொழி முடிபு. விலக்கியணைந்தது-
விலக்கா நின்றணைந்தது. மெய்ப்பாடு உவகை. பயன்: சார்தல், அவ்வகை நின்றமை குறிப்பினா
னுணர்ந்த தலைமகன் இவ்வகை சொல்லிச் சார்ந்தானென்பது
* என்பது பழையவுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒளியே மிகுத் (திருக்கின்ற) நீண்ட அளகத்தின்
வண்டுச் சாதிகளை ஓட்டுவாரைப் போலே கரிய யானையையுடைய நாயகன் பக்கத்தே சென்று சேர்ந்தது .
செய்யுள்: அழகிய தனிக் கொம்பின் உச்சியின் நெறியிருந்து அடிக்கொம்பை
வெட்டுகிறவருடைய அந்தச் செய்தி போன்று இருந்த தனங்களும் இவையிற்றைத் தெளிவிக்கப்
போந்தோமுமில்லை முதலியாருடைய திருவம்பலத்தை யொப்பவள் நூல் போன்ற இடையின்
கனமில்லாதலை விசாரியாதே அற்புதத்தேனின் இச்சையாலே, சாலவும் தகாது காணும்
வண்டுகாள் கொண்டையிலே சார்ந்திருக்குமது.
நீங்(குங்) களென்று வண்டுச் சாதிகளை ஓட்டுவாரைப் போலே சென்று அருகு சேர்ந்தது.
28. இன்றியமையாமை கூறல் *
----------------------------
* பேரின்பப் பொருள்; "சித்தி யெவையுஞ் சேர்ந்திடு மாயினும் இத்தகை யின்ப மிகழேன் என்றது."
இன்றியமையாமை கூறல் : என்பது புணர்ச்சி யிறுதிக்கண் விசும்பும் நிலனும் ஒருங்குபெற
வரினும் இக்கொள்கைகளை மறந்து அதன்கண் முயலேனெனப் பிரிவுதோன்றத் தலை மகன்
தனது இன்றியமையாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்: -
நீங்கரும் பொற்கழற் சிற்றம்
பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல் வையமு
மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்து செப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே
வென்றிவேலவன் மெல்லியல்தனக்
கின்றியமையாமை யெடுத்துரைத்தது .
இதன் பொருள்: நீங்கரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடுவிசும்பும் வாங்கு இரும் தெண்கடல்
வையமும் எய்தினும் விடுதற்கரிய பொன்னானியன்ற கழலையுடைத்தாகிய திருவடியையுடைய
சிற்றம்பலவரது நெடிதாகிய தேவருலகையும் வளைந்த பெரிய தெண்கடலாற் சூழப்பட்ட நிலத்தையும்
ஒருங்கு பெற வரினும் தீங் கரும்பும் அமிழ்தும் செழுதேனும் பொதிந்து-இனிய கரும்பின் சாற்றையும்
அமிர்தத்தையும் கொழுவிய தேனையும் உள்ளடக்கி; செப்பும் கோங்கு அரும்பும் தொலைத்து செப்பையுங்
கோங்கரும்பையும் வென்று என்னையும் அடிமை கொண்ட கொங்கைகளை; யான் மறவேன்- யான் மறவேன் எ- று
விசும்பும் நிலனும் ஒருங்கு பெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன் கண் முயலுமா
றில்லையெனத் தன் னின்றியமையாமை கூறிய வாறாயிற்று. என்னையு மென்றவும்மை எச்சவும்மை;
தொழிற்படுத்தலொற்றுமையால் தன்வினையாயிற்று. மெய்ப்பாடு அது. பயன்: நயப்புணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வெற்றி வேலையுடையவன் மெல்லிய இயல்பினை
யுடையாளை யின்றித் தனக்கொரு பொழுதும் சொல்லாமையை மிகுத்துச் சொன்னது.
செய்யுள்: கண்டால் விட்டு நீங்குதற்கரிய அழகிய சீபாதங்களையுடைய திருச்சிற்றம்பலநாதன்
அவனுடைய மிக்க தெய்வலோகமும் வளைந்த பெரிய கடலால் சூழப்பெற்ற பூலோகமும் பெறினும்
நான் மறக்கப்படாது. தீங்கரும்பு அமிழ்து செழுந்தேன் இவற்றைப் பரிகரித்துக் கொண்டு வடிவினால்
பொற்செப்பையும் கோங்கரும்பையும் தோற்பித்து என்னையும் வசமாக்கிக் கொண்ட கொங்கைகளை.
கொங்கைகளைத் தெய்வலோகமும் பூலோகமும் நான் பெறினும் மறவேன் என்றவாறு. 46
29. ஆயத்துய்த்தல்*
-----------------
*பேரின்பப் பொருள்: "மெய்யடி யாரிடை வேறறக்கலந் தையமின்றி யமர்தலை யறிதல்''
ஆயத் துய்த்தல் என்பது இன்றியமையாமை கூறிப்பிரியலுறா நின்றவன், 'இனிப் பலசொல்லி
யென்னை? என்னுயிர் நினக்கு அடிமையாயிற்று; இனிச் சென்று நின்னாயத்திடைச் சேர்வாயாக' வெனத்தன்
பிரிவின்மை கூறித்தலைமகளை ஆயத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள் -
சூளா மணியும்பர்க் காயவன்
சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னைதுன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே.
தேங்கமழ் சிலம்பன், பாங்கிற் கூட்டியது
இதன் பொருள் : உம்பர்க்குச் சூளாமணி ஆயவன் சூழ்பொழில் தில்லை அன்னாய்க்கு
என் ஆர் உயிர் ஆளாயொழிந்தது - வானவர்க்கு முடிமணியாயவனது சூழ்ந்த பொழிலையுடைய
தில்லையை யொக்கும் நினக்கு எனதாருயிர் அடிமையாயிற்று; பல சொல்லி என்னை - ஆதலாற்
பலசொல்லிப் பெறுவதென்; ஆர் அமிழ்தே - நிறைந்த வமிர்தே; அணங்கே-அணங்கே; தோளா மணியே -
துளைக்கப்படாத மாணிக்கமே ; பிணையே - மான் பிணையே: துன்னும் ஆர் நாள் மலர்ப் பொழில்வாய்
எழில் ஆயம் நணுகுக-நீ பலகாலுஞ் சேர்ந்து விளையாடும் நிறைந்த நாண்மலரை யுடைய பொழிற்கண்
விளையாடும் அழகிய ஆயத்தை இனிச் சேர்வாயாக எ-று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நறுநாற்றம் கமழ்கின்ற மாலையினை யுடையவன்
பாங்கிமாரிடத்தே சேர விட்டது.
செய்யுள்: தேவர்களுக்கு முடிமணியாய் உள்ளவன் பொழில் சுற்றிய சிதம்பரத்தின் இயல்பை
உடையாட்கு (நினக்கு) என்னுடைய பெறுதற்கரிய உயிர் வசமாகி விட்டது. பெறுதற்கரிய அழகே போல்வாய்;
தெய்வமாக நிற்பாய்; துளைக்கப்படாத இரத்தினத்தை யொப்பாய்; நோக்கத்தால் மான் பிணைக்கு
இறுப்பல சொல்லுவது என்னை? செறிந்த நாட்செவ்வி மலரால் மிக்க சோலையிடத்தே (அழகிய)
கூட்டத்தாரிடத்தே சேர்வாயாக.
அடுக்கிய விளிகளாற் காதற்சிறப்பு விளங்கும். பலசொல்லி யென்னை யென்றது உயிர்
நினக்கு ஆளாகியபின் வேறுபல சொல்லுதல் பயனில கூறலன்றே யென்றவாறு. சொல்யென்னும்
வினையெச்சத்திற்குப் பெறுவதென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. பொழில் வாய் நணுகுகவென
இயைப்பினு மமையும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன்: பிரியலுறுந் தலைமகன் வற்புறுத்தல். 47
30. நின்று வருந்தல் *
-------------------
*பேரின்பப் பொருள்: திருவுரு நீங்குத் திறமரி தென்றது.
நின்று வருந்தல் என்பது தலைமகளை ஆயத்து உய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்தியல்பு
கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
பொய்யுடை யார்க்கரன் போல்க
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண் முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே
பாங்கிற் கூட்டிப் பதிவயிற் பெயர்வோன்
நீங்கற் கருமை நின்று நினைந்தது
இதன் பொருள்: மை உடை வாட்கண் மணி உடைப்பூண் முலை வாள் நுதல் - மையையுடைய
வாள் போலுங்கண்ணையும் மணியையுடைய பூணணிந்த முலையையுடைய வாணுதல்
வான் பை உடை வாள் அரவத்து அல்குல் - பெரிய படத்தை யுடைத்தாகிய ஒளியையுடைய
அரவுபோலும் அல்குலையுடையாள்; காக்கும் பூம் பைம் புனம்- அவள் காக்கும் பூக்களையுடைய
பசிய புனம் அகன்றால்-தன்னை யானகன்றால்; பொய் உடையார்க்கு அரன் போல் அகலும்-
பொய்யை யுடையவர்க்கு அரன் றுன்பத்தைச் செய்து சேயனாமாறு போல மிக்க துயரத்தைச்
செய்து எனக்குச் சேய்த்தாம் ; புணரின் - அணைந்தால் ; மெய் உடையார்க்கு அவன் அம்பலம் போல
மிக நணுகும்- மெய்யை யுடையவர்க்கு அவனது அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்தாமாறுபோலக்
கழியுவகை செய்து எனக்கு மிகவும் அணித்தாம்: ஆதலான் நீக்குதல் பெரிதும் அரிது எ-று.
வாணுதலையு மென்றெண்ணினும் அமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீக்குதல்.
பாங்கற் கூட்டம் முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பாங்கிமாரிடத்தே (அவளைச் சேரச் செய்து தன் பதியை நோக்கிப்
பெயர்வோன் ) அவள் தன்னால் விட்டு நீங்குதற்கு அரிய படியை விசாரித்தது.
செய்யுள்: (விட்டு நீங்கினால்) பொய்யன்பு பூண்டவர்க்கு மகாதேவர் அகன்றாற் போலே
அகலாநிற்கும்; அணைந்தால், மெய்யன்பு உடையவர்க்கு அவன் அம்பலம் போல மிகவும்
அணுகா நிற்கும் மை எழுதப்பட்ட ஒளி சிறந்த கண்ணினையும் முத்துமணி யணியப்பட்டு
ஆபரணங்களாற் சிறந்த முலையினையும் பிரகாசம் செய்த நெற்றியினையுமுடைய பெரிய
படத்தை யுடைய ஒளி பொருந்திய அரவம் போன்ற அல்குலினை யுடையவள் அவள் காவல்
பச்சென்று பொலிவுடைத்தாகிய புனம் இப்படிச் செய்யாநின்றது.
3. இடந்தலைப்பாடு*
------------------
*பேரின்பக் கிளவி: 'இடந்த லைப்பா டீராறு மொன்று, மருட்குரு தரிசனத் தன்பு மிகுதியாற்,
பேரா னந்தம் பெற்றனு பவித்தல் "(திருக்கோவையார் உண்மை ).
பொழிலிடைச் சேற லிடந்தலை சொன்ன
வழியொடு கூட்டி வகுத்திசி னோரே
இதன் பொருள்: பொழிலிடைச்சேற லொன்றும் இடந்தலைப்பாட்டிற்கே யுரியது.
இதனையும் மேலைப் பாங்கற்கூட்ட முணர்த்திய சூத்திரத்தில் "ஈங்கிவை நிற்க இடந்தலை தனக்கும்''
எனக் கூறியவாறே மின்னிடை மெலிதல் முதல் நின்றுவருந்துதலீறாகக் கூறப்பட்ட கிளவிகளோடு
கூட்டி இடந்தலைப்பாடா மென்று வகுத்துரைத்துக்கொள்க. அவை பாங்கற்கூட்டத்திற்கும்
இடத்தலைப் பாட்டிற்கும் உரிய வாமாறு என்னை யெனில், பாங்கற் கூட்டம் நிகழாதாயின்
இடந்தலைப்பாடு நிகழும், இடந் தலைப்பாடு நிகழாதாயின் பாங்கற் கூட்டநிகழும் ஆதலின்.
1. பொழிலிடைச் சேறல்*
-----------------------
*பேரின்பப் பொருள் : "கைம்மா றின்றிக் கருணை செய்தலால் இன்னமு மிவ்விடை யின்புறு மென்றது.''
பொழிலிடைச்சேறல் என்பது இயற்கைப் புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்து தற்கருமை
நினைந்து வருந்தா நின்ற தலை மகன், 'இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான்
வந்ததன்று; தெய்வந்தர வந்தது; இன்னும் அத்தெய்வந் தானே தரும்: யாம் அப்பொழிலிடைச் செல்வே' மெனத்
தன் நெஞ்சொடு கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
என்னறி வால்வந்த தன்றிது
முன்னும்இன் னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லை முந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.
ஐயரிக் கண்ணியை யாடிடத் தெசென்
றெய்துவ னெனநினைந் தேந்தல் சென்றது
இதன் பொருள்: இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று - இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு
கூடிய முயற்சியான் வந்ததன்று, தெய்வந்தர வந்தது; முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று -
இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னுமிருந்தது;
அது முடிக்கும்,அதனான், நெஞ்சே நெஞ்சமே, வருந்தல்- வருந்தா தொழி; மின் எறிசெம் சடைக்கூத்தப் பிரான்
வியன் தில்லை முந்நீர்- மின்னை வெல்கின்ற சிவந்தசடையையுடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச்
சூழ்ந்த கடற்றிரை: பொன் எறிவார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச்சென்றும் பொன்னைக் கொணர்ந்
தெறிகின்ற நெடிய துறை யிடத்து மின்னையுடைய முகிலைத் தோயும் பொழிற்கட் செல்லுதும் எ-று.
இன்னு மிருந்தன் றெனக்கூட்டி முயன்றா லென்னும் வினையெச்சத்திற்கு முடிக்குமென ஒருசொல்
வருவித் துரைக்கப்பட்டது. மின்போலுநெறித்த சடை யெனினும் அமையும். கரையிற் பொன்னைத்
திரையெறியுந்துறை யெனினுமமையும்) இருந்தின்றென்பது* பாடமாயின், இருந்தின்றோவென ஓகாரம்
வருவித்து இருந்ததில்லையோ வனவுரைக்க, மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடந்தலைப்படுதல்**
*என்பது பழையவுரைகாரர்.
** இடந்தலைப்படுதல் - இடத்திலே எதிர்ப்படுதல்; தலைவன் முன்னாட் கூடின விடத்திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல்;
இதற்குமின்னிடை மெலிதன்முதலாக நின்றுவருந்த லீறாக வருங்கிளவி யெல்லாம் எடுத்துரைத்துக்
கொள்க. என்னை இவ்விரண்டனுள்ளும் ஒன்றே நிகழுமாகலின்.
இடந்தலைப்பாடு முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: 'அழகிய வரிபரந்த கண்ணினை யுடையாளை விளையாடிடத்தே
சென்று சேரக் கடவேன்' என்று நினைந்து நாயகன் போனது.
செய்யுள் : முன்பு நான் இதுவேண்டுமென்ன என்னுடைய நினைவினாலே வந்ததொன்றன்று:
இன்னமும் நான் உற்சாயித்தால் நிலைபெற்ற இந்நெறியைத் தந்த தெய்வம் இருந்தது; ஆதலால் நெஞ்சமே!
நீ வருந்தாதே கொள்: ஒளியுடைத்தாகிய நெறித்த சிவந்த திருச்சடையினையுடைய கூத்தனாகிய
சுவாமி இணையில்லாத திருவம்பலத்தைச் சூழ்ந்த கடலிடத்துப் பொன் கொழிக்கப்பட்ட நீண்ட
துறையுடைத்தாகிய (இடத்தே) மின்னை அடைந்த காவிடத்தே சென்று இன்னும் உற்சாயிக்கக் கடவேன்.
உற்சாயித்தால் நிலைபெற்ற இந்நெறியைத் தந்த தெய்வம் இருந்தது. அது முடித்துத் தரும்
என்பது கருத்து: 49
இடந்தலைப்பாடு முற்றிற்று.
4. மதியுடம்படுத்தல்*
-------------------
*பேரின்பக் கிளவி : ' மதியுடம் படுத்தல் வருமீ ரைந்துங், குருவறிவித்த திருவருள் அதனைச் சிவத்துடன்
கலந்து தெரிசனம் புரிதல்' (திருக்கோவையார் உண்மை ),
மதியுடம்படுத்தல்** வருமாறு: இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய பின்னர்த்
தெருண்டுவரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழியை
வழிப்பட்டுச் சென்றெய்துதல் முறைமை யென்ப. வழிப்படுமாறு: தெற்றெனத் தன்குறை கூறாது
இரந்து வைத்துக் கரந்தமொழியாற் றன்கருத்தறிவித்து அவளை ஐயவுணர் வினளாக்கி அது
வழியாக நின்று தன் குறை கூறுதல்,
**மதியுடம்படுத்தல் : அறிவை யொருப்படுத்தல்
சேற றுணிதல் வேழம் வினாதல்
கலைமான் வழிபதி பெயர்வினா தல்லே
மொழிபெறா துரைத்தல் கருத்தறி வித்த
லிடைவி னாதலோ டிவையீ ரைந்தும்
மடவரற் றோழிக்கு மதியுடம் படுத்தல்
இதன் பொருள்: பாங்கியிடைச்சேறல், குறையுறத்துணிதல், வேழம் வினாதல், கலைமான் வினாதல் ,
வழிவினாதல், பதி வினாதல், பெயர் வினாதல், மொழிபெறாது கூறல், கருத்தறிவித்தல், இடைவினாதல்
என விவை பத்தும் மதியுடம்படுத்தலாம் எ-று அவற்றுள்-
1. பாங்கியிடைச்சேறல்*
-----------------------
* பேரின்பப்பொருள்: திருவரு ளாற்சிவம் பெறுத லறிந்தது.
பாங்கியிடைச்சேறல் என்பது இரண்டனுள் ஒன்றாற்சென் றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன்,
'இனியிவளைச் சென்றெய்துதல் எளிதன்று; யாம் அவள் கண்ணாற்காட்டப்பட்ட காதற்றோழிக்கு
நங்குறையுள்ளது சொல்வேம்' என்று அவளை நோக்கிச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்-
எளிதன் றினிக்கனி வாய்வல்லி
புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
வாழி யறிவிப்பனே
கரந்துறை கிளவியிற் காதற் றோழியை
இரந்து குறை யுறுவலென் றேந்தல் சென்றது.
இதன் பொருள்: கனி வாய் வல்லி புல்லல் இனி எளிது அன்று-தொண்டைக்கனிபோலும் வாயையுடைய
வல்லியைப் புல்லுதல் இனி எளிதன்று அதனால்; எழில் மதிக்கீற்று ஒளி சென்ற செம்சடைக் கூத்தப்பிரானை
உன்னாரின்-எழிலையுடைய மதியாகிய கீற்றினொளிபரந்த சிவந்தசடையையுடைய கூத்தப்
பிரானை நினையா தாரைப் போலவருந்த; என் கண் தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம்-
என்னிடத்துத் தெளிதலையடைந்த வேல் போலுங் கண்கள் வருவித்த இன்னாமை முழுதையும் ; அளி சென்ற
பூங்குழல் தோழிக்குத் தெளிவித்து அறிவிப்பன்- வண்டு அடைந்த பூங்குழலை யுடைய தோழிக்குக்
குறிப்பினாலே தெளிவியா நின்று சொல்லுவேன் எ-று
இரண்டாவது விகாரவகையாற் றொக்கது; வல்லியது புல்ல லெனினு மமையும். வருந்தவென
வொருசொல் வருவித் துரைக்கப்பட்டது. கண்ணோடாது பிறர்க்குத் துன்பஞ் செய்தலின், உன்னாதார்
கண்ணிற்கு உவமையாக வுரைப்பினு மமையும். செல்ல லெல்லாந் தெளிவித் தென்பதற்குச்
செல்லலெல்லாவற்றையு நீக்கியென்பாருமுளர். வாழி: அசைநிலை கரந்துறைகிளவி உள்ளக் குறிப்புக்
கரந்துறையுமொழி. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம், பயன்: தோழிக்குணர்த்தி
அவளான் முடிப்பலெனக்கருதி ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கரந்து சொல்லும் வார்த்தையினாலே உயிர்த்தோழியைத்
தொழ ஒழுகி, 'என் குறையைச் சொல்லக் கடவேன்' என்று நினைந்து நாயகன் போனது.
செய்யுள்: தொண்டைப் பழத்தை யொத்த வாயினையுடையளாய் வல்லிசாதம் போல்வாளைக்
கூடுவது இனி எளியதன்று. அழகிய மதியின் பிளவாகிய திரு இளம்பிறையின் பிரகாசம் பரந்து சிவந்த
திருச்சடையினையுடைய கூத்தனாகிய சுவாமியை நினையாதாரைப்போல் என்னிடத்துத் தெளியக்
கடைந்த வேலை ஒத்தகண்கள் உண்டாக்கின் வருத்தம் எல்லாம் தாழ வொழுகி நறுநாற்றத்தாலே
வண்டுகள் சென்றடைந்த பொலிவுடைய கூந்தலையுடைய தோழிக்கு அறிவிக்கக்கடவேன். 50
2 குறையுறத் துணிதல்*
----------------------
* பேரின்பப் பொருள்: சிவமே காட்டத் திருவருளையுணர்தல்
குறையுறத்துணிதல் என்பது பங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தினருளால்
அவ்விருவரும் ஓரிடத்தெதிர் நிற்பக் கண்டு 'இவள் இவட்குச் சிறந்தாள்; இனியென்குறையுள்ளது
சொல்லுவேனெனத் தன்குறை கூறத்துணியா நிற்றல். அதற்குச் செய்யுள் -
குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே
ஓரிடத்தவரை யொருங்குகண்டுதன்
பேரிடர்பெருந்தகை பேசத்துணிந்தது.
இதன் பொருள் : குவளைக் கருங்கண் கொடி ஏர் இடை இக்கொடி கடைக்கண் - குவளைப்பூப்போலுங்
கரிய கண்ணிணையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது கடைக்கண்;
உவளைத் தனது உயிர் என்றது- உவளைத் தன்னுடையவுயிரென்று சொல்லிற்று, அதனால்;
தன்னோடு உவமை இல்லாதவளைத் தன்பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர்போல்
துவளத் தலைவந்த இன்னல் - தனக்கொப்பில்லா தவளைத் தன்னொருகூற்றின் கண் வைத்த
சிற்றம்பலத்தானது அருளை யுடையரல்லாதாரைப் போல் யான் வருந்தும் வண்ணம் என்னிடத்துவந்த
இன்னாமையை; இனி இன்னே சொல்லுவன்- இவட்கு இனி இப்பொழுதே சொல்லுவேன் எ-று.
கடைக்கணுவளை யுயிரென்றது எனக்கிவ்விடர் செய்த கடைக்கண் இடர் நீந்தும் வாயிலுந்
தானேகூறிற்றென்றவாறு. இன்னேயென்பது இவர்கூடிய இப்பொழுதே என்றவாறு. இனியென்றது
இவளிவட் கின்றியமையாமையறிந்த பின்னென்பது படநின்றது. ஒருங்குகண்டு - ஒருகாலத்துக் கண்டு,
மெய்ப்பாடு- அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: மதியுடம்படுத்தற் கொருப்படுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஓரிடத்தில் நாயகியையும் பாங்கியையும் உறவிருக்கக்கண்டு
தன்னுடைய பெரிய கிலேசத்தைப் பெரிய தலைமைப் பாட்டையுடையவன் சொல்லுவதாக அறுதியிட்டது.
செய்யுள்: நீலமலர்களை யொத்த கரிய கண்களையும் வல்லிசாதக் கொடியை யொத்த
இடையினையுமுடைய இந்த வல்லி சாதத்தை ஒப்பாளுடைய கடைக்கண்களானவை தன் பக்கத்திலே
இருக்கிறவளைத் தனது உயிர் என்றது. தனக்கொப்பில்லாத தம்பிராட்டியைத் தன்னுடைய பாகத்திலே
வைத்த திருச்சிற்றம்பலநாதன் அவருடைய திருவருளில்லாதவரைப் போலே நான் வாடும்படி
விதிவந்து என்னிடத்திலே உண்டான என் கிலேசத்தை இனிச் சொல்லக் கடவேன். 51
3. வேழம் வினாதல் *
-------------------
* பேரின்பப் பொருள்: அருள் சிவங் கலந்த அருமையுயிர் தேர்தல்.
வேழம் வினாதல் என்பது குறைகூறத் துணியா நின்றவன் என் குறை யின்னதென்று
இவளுக்கு வெளிப்படக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, என் குறை இன்னதென்று
இவடானேயுணரு மளவும் கரந்தமொழியாற் சில சொல்லிப்பின் குறையுறுவதே காரியமென,
வேட்டை கருதிச் சென்றானாக அவ்விருவருழைச் சென்று நின்று, தன்காதறோன்ற இவ்விடத்தொரு
மதயானை வரக் கண்டீரோவென வேழம் வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் -
இருங்களி யாயின் றியானிறு
மாப்ப இன் பம்பணிவோர்
மருங்களி யாவன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொரு நீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.
ஏழையரிருவரு மிருந்தசெவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.
இதன் பொருள்: பணிவோர் மருங்கு இரும் களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா
அனல் ஆடவல்லோன்-அடியவரிடத்தே அவரொடு கூடிப் பெரியகளிப்பையுடையேனாய்
யானின்றிறுமாக்கும் வண்ணம் இன்பத்தை யெனக்களித்துத் தீயாடவல்லோன்; தில்லையான்-தில்லையான்;
மலைஈங்கு- அவனது மலையின் இவ்விடத்து; அளி ஒருங்கு ஆர்ப்ப - அளிக ளொருங்கார்ப்ப;
உமிழ் மும்மதத்து இருகோட்டு நீள் கரும் களி ஆர் ஒரு மதயானை வரக்கண்டது உண்டோ -
உமிழப்படா நின்ற மூன்றுமதத்தையும் இரண்டு கோட்டையுமுடைய நீண்ட கரிய களிபார்ந்த
ஒருமதயானை வாரா நிற்பக் கண்டதுண்டோ ? உரைமின் எ-று.
மருங்கிறுமாப்பவெனக் கூடிற்று. அனலாடலென்பது அனலோடாடவென விரியும்
ஆர்ப்ப வரவெனக் கூட்டுக. ஆர்ப்ப வுமிழு மெனினுமமையும் நீட்சி - விலங்குண்டாகிய நெடுமை,
களி - உள்ளச் செருக்கு மதயானை மதமிடையறாத யானை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகியும் பாங்கியும் இருந்த பக்குவத்தே ஆனையை
வினாவி நாயகன் சென்றது.
செய்யுள்: சிவாநந்த மகிமையாகிற பெரிய களிப்பையுடையவனாய் இப்பொழுது நான்
செம்மாந் திருக்கும்படி வணங்குவாருடைய பக்கமாகிய இன்பத்தை எனக்குத்தாரார்: அக்கினியை
ஏந்திக் கொண்டு ஆடவல்லோன் சிதம்பரத்திலே உள்ளவன். அவனுடைய திருமலையாகிய
இடத்து ஒருவழிப் பட்டு வண்டுகள் ஆரவாரித்துச் செல்லச் சொரியா நின்ற மூன்று மதத்தினையும்
இரண்டு கொம்பினையும் உயரத்தினையும் கருத்துக் களித்துச் செல்லும் ஒரு யானை
உண்டோ வரக்கடவது? உண்டாகில் சொல்லுவீராக வேண்டும், 52
4.கலைமான் வினாதல்*
----------------------
*பேரின்பப் பொருள் : அருள் விடை பெறாமற் பின்னும் புகறல்
கலைமான் வினாதல் என்பது வேழம் வினாவி உட்புகுந்த பின்னர்த் தான் கண்ணாலிடர்ப்பட்டமை
தோன்ற நின்று 'நும்முடைய கண்கள் போலுங் கணை பொருதலா னுண்டாகிய புண்ணோடு இப்புனத்தின்
கண் ஒருகலைமான் வரக் கண்டீரோ வென்று கலைமான் வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:--
கருங்கண் ணனையறி யாமைநின்
றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண் ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான் கலையே
சிலைமா ணண்ணல், கலைமான் வினாயது.
இதன் பொருள் : கரும்கண்ணனை அறியாமை நின்றோன் தில்லைக்கார்ப் பொழில்வாய்-
கரியமாலை அவனறியாமற் றன்னை யொளித்து நின்றவனது தில்லை வரைப்பி னுண்டாகிய
கரிய பொழிலிடத்து; வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இளவல்லி அன்னீர்-புறப்படா நின்ற
கள்ளாற்றம்மேனி நனையும் வண்ணம் வண்டுகளாடும் வளரா நின்ற இளையவல்லியை யொப்பீர்;
இரும்கண் அனையகணை பொரு புண்புணர் ஒருவான் கலை அனையது இப்புனத்தின் மருங்கண்
ஈங்கு வந்தது உண்டோ- நும்முடைய பெரிய கண்கள் போலுங் கணைபொருதலா லுண்டாகிய
புண்ணைப்புணர்ந்த ஒருவான் கலை- அத் தன்மையது இப்புனத்தின் மருங்கு ஈங்கு வந்ததுண்டோ?
உரைமின் எ-று.
கண்ணன் என்பது: கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு
குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங்கண்ணனென்றார். சேற்றிற் பங்கயமென்றாற்போல
அறியாமை நின்றோனென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் ஒளித்தோ னென்னும் பொருள் பட்டு,
இரண்டாவதற்கு முடிபாயின, ஐகாரம்: அசைநிலை யெனினுமமையும் .வருங்கண்ணனைய வென்பதற்கு
உண்டாகக்கடவ கள்ளையுடைய அரும்புகளை யுடைமையான் வண்டு காலம் பார்த்து ஆடுமாறுபோல,
நும்முள்ளத்து நெகிழ்ச்சி யுண்டாமளவும் நுமது பக்கம் விடாது உழல்கின்றேனென்பது பயப்ப
வருங்கண்ணனை யையுடையவென்று ரைப்பினுமமையும். மருங்கென்பது மருங்கண்ணென
ஈறு திரிந்து நின்றது. அணித்தாக வென்னும் பொருட்டாய், அணி அண்ணெனக் குறைந்து நின்ற
தெனினுமமையும். மருங்கண் ணனையதுண்டோ வென்பதற்கு அண்ணல் நைய தென்று,
புனத்தின் மருங்கு தலைமை நைதலையுடைய தெனினுமமையும்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சிலைத் தொழிலினாலே மாட்சிமைப்பட்ட நாயகன்
கலையாகிய மான் வந்ததோ என்று கேட்டது
செய்யுள்: கரிய நிறத்தையுடைய புருஷோத்தமனையும் அறியாமல் ஒளித்து நின்றோன்
அவனுடைய திருவம்பலஞ் சூழ்ந்த இருண்ட சோலையிடத்து உண்டாகிற மதுவிலே மேனிமுழுதும்
நனையும்படி வண்டுகள் வியாபாரிக்கிற வளர்கிற இளைய வல்லிசாதம் போல்வீர்! உங்கள் பெரிய
கண்களை ஒத்த அம்புபட்ட புண்பொருந்தின இந்தப் புனத்தின் பக்கத்து அத்தன் மையது
(அப்படி வந்தது என்றுமாம்; அப்படி என்றது தன் தலைமையழிந்தது) ஒரு பெருங்கலை வந்ததுண்டோ?
(உண்டாகிற் சொல்லவேண்டும்) (அண்ணனைய என்றது அண்ணலை நைந்தது என்றபடி )
5. வழிவினாதல்*
----------------
*பேரின்பப் பொருள் : வழிமேல் வைத்துப் புகலிலை யென்றது
வழிவினாதல் என்பது கலைமான் வினாவா நின்றவன், இவன் கருத்து வேறென்று தோழியறிய,
அதனோடு மாறுபட நின்று, அது கூறீராயின் நும்மூர்க்குச் செல்லுநெறி கூறுமினென்று வழிவினாவா நிற்றல்.
அதற்குச் செய்யுள் : -
சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
பங்கன் றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே
கலைமான் வினாய கருத்து வேறறிய**
மலைமானண்ணல் வழிவினாயது
** 'கருத்து முற்றிய' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் சிலம்புதானழகு பெற்ற செய்யசிறிய
அடியையுடையாளது கூற்றையுடையான்; தன் சீர் அடியார் குலம்பணி கொள்ள எனைக் கொடுத்தோன் -
தன் மெய்யடியாரது கூட்டங் குற்றேவல் கொள்ள என்னைக் கொடுத்தவன் ; தான் கொண்டு அணியும்
கலம் பணிகொண்டு அம்பலம் இடம் கொண்டவன் - தான் கொண்டணியும் அணிகலம் பாம்பாகக்
கொண்டு அம்பலத்தை இடமாகக் கொண்டவன்; கார்க் கயிலைச் சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்குச்
செல்நெறி உரைமின்கள் - அவனது முகில்களையுடைய கைலைக்கட் சிலம்பழகு பெற்ற நுமது
சிறியவூர்க்குச் செல்லு நெறியை உரைமின் எ-று.
கொண்டு கொடுத்தோனென இயைப்பாரு முளர். தனக்குத் தக்க தையலை இடத்து வைத்தானென்றுந்
தன்னடியார்க்குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும், அணிதற்குத் தகாத பாம்பை
அணிந்தானென்றும், தனக்குத் தகுமம்பலத்தை இடமாகக் கொண்டானென்றும் மாறுபாட்டொழுக்கங்
கூறியவாறாம். கருத்து வேறறிய வினாயதற்கு மறுமொழி பெறாது பின்னு மொன்றை வினவுதலான்
இவன் கருத்து வேறென்று தோழியறிய. சின்னெறியென்று பாடமாயின் சிறிய நெறி யென்றுரைக்க.
சின்னெறியென்பது அந்நிலத்துப்பண்பு.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: 'கலையாகிய மான் வந்ததோ என்று கேட்ட கருத்து முற்றிய
நினைவுவேறுபட்ட படியை அறிய மலையை ஒத்த நாயகன் வழிகேட்டது.
செய்யுள்: சிலம்பு தன் அழகு பெற்ற சிற்றடியையுடைய ஈசுவரியை வாமபாகத்திலே யுடையவன்.
தன் சீரடியார் திரள என்னை ஏவல் கொள்ளும்படிக்கு அடிமையாக என்னைக் கொடுத்தவன்,
தான் கொண்டு அணிகிற ஆபரணமாகப் பாம்பைப் பண்ணிக் கொண்டு சிதம்பரம் இடமாகக்
கொண்டவன். தழைந்து இருட்சியுடைய சோலையதனால் கார்பரந்த ஸ்ரீ கயிலாயத் திருமலையில்
அழகு கொண்ட உங்கள் ஊர்க்குச் செல்லும் வழியைச் சொல்லுவீராக 54
6. பதிவினாதல்*
---------------
* பேரின்பப் பொருள் : அருளறி யாவிடின் அறியேன் என்றது
பதிவினாதல் என்பது மாறுபட நின்று வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை
எதிர்முகமாக நின்று 'வழிகூறீராயின் நும்பதி கூறுதல் பழியன்றே; அது கூறுவீராமின் ' என்று
அவர்பதி வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
ஒருங்கட மூவெயி லொற்றைக்
கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே.
பதியொடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.**
**இதற்குப் பழைய உரைகாரர் பாடம் வேறு.
இதன் பொருள்: மூவெயில் ஒருங்கு அட ஒற்றைக் கணை கொள் சிற்றம்பலவன் - மூவெயிலையும்
ஒருங்கே அடவேண்டித் தனியம்பைக்கொண்ட சிற்றம்பலவன்; கரும் கடம் மூன்று உகு நால்வாய்க் கரி
உரித்தோன் - கரிய மத மூன்று மொழுகா நின்ற நான்றவாயையுடைய கரியையுரித்தவன்; கயிலை
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே வருங்கள் - அவனது கைலைக்கட்
பெரிய காட்டான் மூடப்படும் பொழிற் கணிற்கின்ற எழிலையுடைய கொம்பை யொப்பீராகிய
நீங்கள் இங்கே வாரும்; தம் ஊர் பகர்ந்தால் இங்கு வாழ்பவர்க்குப் பழியோ- தமதூரை
யுரைத்தால் இம்மலை வாழ்வார்க்குப் பழியாமோ? பழியாயின் உரைக்கற்பாலீரல்லீர் எ-று
இரண்டு மதங் கடத்திற் பிறத்தலிற் பன்மைபற்றிக் கடமென்றார், கொம்பரன்னீர்களென்பது:
முன்னிலைப்பெயர். இன்னே வருங்களென்பது எதிர்முக மாக்கியவாறு, வாருமென்பது குறுகி நின்றது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பதியொடு பிறவினாய். மொழிபல மொழிந்தது.
ஊருடனே பலவற்றையும் வினவி வார்த்தையைப் பலகாலும் சொன்னது:
செய்யுள் ; (எயில் மூன்றையும்) ஒருக்காலே அழிப்பதாக அம்பை வாங்கின திருச்சிற்றம்பலநாதன்,
பெருமதம் மூன்றும் சொரியப்பட்ட நான்ற வாயினையுடைய யானையை உரித்தவன். அவனுடைய
கயிலாய மலையின் பெருங்காட்டினால் சூழப்பட்ட பொழிலிலுண்டாகிய கொம்பை ஒப்பீர்காள்!
இங்ஙனே வாருங்கள்: (என்று எதிர்முகமாக்கிக் கொண்டபடி) தங்கள் ஊரின் பெயரைச் சொன்னால்
இந்த நிலத்தில் வாழ்பவர்க்குக் குற்றமாமோ!- குற்றமாகிற் சொல்ல வேண்டுவதில்லை. 55
7. பெயர் வினாதல்*
------------------
* பேரின்பப் பொருள்; "இன்பரு ணாம மேதென வினாயது.
பெயர் வினாதல் என்பது பதிவினாவவும் அதற்கொன்றுங் கூறாதாரை, 'நும்மதிகூறுதல்
பழியாயின் அதனை யொழிமின்; நும்பெயர் கூறுதல் பழியன்றே; இதனைக் கூறுவீராமின் என்று
அவரது பெயர் வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள் ;-
தாரென்ன வோங்குஞ் சடைமுடி
மேற்றனித் திங்கள் வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே
பேரமைத் தோளியர் பேர்வி னாயது
இதன் பொருள் : ஓங்கும் சடை முடிமேல் தார் என்னத்தனித் திங்கள் வைத்த உயர்ந்த
சடையா னியன்முடி மேல் தாராக ஒரு கலையாகிய திங்களை வைத்த; கார் என்ன ஆரும் கறைமிடற்று
அம்பலவன் கயிலை கொண்டலென்று சொல்லும் வண்ணம் நிறைந்த கறுப்பையுடைத்தாகிய
மிடற்றையுடைய அம்பலவனது கைலைக்கண் ; ஊர் என்ன என்னவும் வாய்திறவீர் - நும்முடைய
ஊர்கள் பெயர் முதலாயினவற்றான் எத்தன்மையவென்று சொல்லவும் வாய்திறக்கின்றிலீர்;
பழியேல் ஒழிவீர் - ஊர் கூறுதல் பழியாயின் அதனை யொழிமின். பேர் என்னவோ விரை ஈர்ங் குழல்
பேதையரே உரையீர் - நும்முடைய பெயர்கள் எத்தன்மையவோ? நறு நாற்றத்தையும் நெய்ப்பையு
முடையவாகிய குழலையுடைய பேதையீர், உரைப்பீராமின் எ-று.
தனித் திங்கள்: ஒப்பில்லாத திங்களெனினு மமையும். ஓகாரம் வினா. தலைமகளுந்தோழியும்
ஓரூராரல்லரென்று கருதினான் போல ஊரென்னவெனப் பன்மையாற் கூறினான். என்னை "இரந்து
குறையுறாது கிழவியுந் தோழியு' மொருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப், பதியும் பெயரும் பிறவும்
வினாஅய்ப் புதுவோன் போலப் பொருந்த புகிளந்து, மதியுடம் படுத்தற்கு முரியனென்ப” (இறையனார்
அகப்பொருள், 6) என்பதிலக்கண மாதலின். பேதையரேயெனச் சிறுபான்மை ஏகாரம் பெற்றது.
ஊருஞ் சொல்லாதாரைப் பெயர் கேட்கவே வேறு கருத்துடைய னென்பது விளங்கும்.
வாய்திறவா தொழிவீரென்பதூஉம் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பெருத்த வேயொத்த தோளியர் பெயர் கேட்டது
செய்யுள் . நெற்றிமாலை என்னும்படி உயர்ந்த சடைமுடி மேலே ஒரு கலையாகிய திரு இளம்பிறையை
வைத்த மேகமென்னும் படி நிறைந்த கரிய திருமிடற்றை உடைய திருவம்பலநாதன், 'அவனுடைய கயிலாயத்தில்
உங்கள் ஊர் எத்தன்மையது' என்று கேட்கவும் வாய் திறவாமல் இருக்கிறீர்களே. (உங்கள் ஊரின் பெயர் சொன்னால்
அது பழியாமாகிலும்..... பெயராகிலும் சொல்லுங்கள்; நறு நாற்றத்தையுடைய கூந்தலினையும்
பேதைத் தன்மையும் உடையீர்) 56
8. மொழிபெறாதுகூறல்*
---------------------
* பேரின்பப்பொருள்: திருவாய் மலராத் திறமெடுத் துரைத்தது
மொழிபெறாது கூறல் என்பது பெயர் வினாவவும் வாய்திற வாமையின், இப்புனத்தார்
எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு வாய்திறவாமையை விரதமாக வுடையராதல். அதுவன்றி
வாய் திறக்கின் மணி சிந்து மென்பதனைச் சரதமாகவுடையராதல். இவ்விரண்டனு ளொன்று
தப்பாதென்று கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்**
## வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே
தேமொழியவர் வாய்மொழிபெறாது
மட்டவிழ் தாரோன் கட்டுரைத்தது
** ரெம்முடைய' என்பது பழையவுரைகாரர் பாடம்
## இரண்டாவது வரியில் 'வரதா நம்முடைய' என்பது பழையவுரைகாரர் கொண்ட பாடம் போலும்
இதன் பொருள் : இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர்-- இனிமையை யுடைய கூத்தாட்டை
யுடையவர்; எம் உடையவர்-எம்முடைய தலைவர்; வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப் புனத்தார்
விருந்தொடு பேச்சின்மை விரதம் உடையர்-அவரது வரதமுடைய அழகிய தில்லையை யொப்பராகிய
இப்புனத்து நின்ற இவர்கள் எதிர்கொள்ளத்தக்க விருந்தினரோடு பேசாமையை விரதமாகவுடையார்;
அது அன்றேல்-அதுவன்றாயின் ; மீட்டு வாய் திறக்கின் சலக்கு என்ப மணி சரதம் உடையர்-
பின் வாய்திறக்கிற் சலக்கென விழுவன முத்தமணிகளை மெய்யாக வுடையார் எ-று.
இரத மென்றது நாட்டியச் சுவையையன்று, கட்கினிமையை நடமென்றது நாட்டியத்தையன்று,
கூத்தென்னும் பொதுமையை. மீட்டென்பது பிறிதுமொன்றுண்டென்பது பட வினைமாற்றாய்
நிற்பதோரிடைச்சொல். இவையாறற்கும் மெய்ப்பாடு இளிவரலைச் சார்ந்த பெருமிதம்,
பயன்: மதியுடம்படுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: தேனையொத்த வார்த்தையினை யுடையவர்களிடம்
ஒரு வார்த்தையும் பெறாதபடியாலே, மதுவிரிகின்ற மாலையினை யுடையவன் இயல்பைச் சொன்னது.
செய்யுள்: கண்டார்க்குக் கண்ணுக்கினிதாகிய திருக்கூத்தினை யுடையவர். எம்முடைய மேலானவர்
அவருடைய திருவம்பலத்தை ஒத்தவர்கள் இப்புனத்திடமாக இருக்கும் அவர்கள் விருந்தினராய்
வந்தாருடனே பேசாமைக்கு விரதம்பூண்டு ஒழுகினார்களாக வேண்டும்; திரியவும் அதுவல்லாமல்
நிசிதமாகவுடையவர்கள் சலக்கென விழுபவ முத்துமணிகளைச் சாதகமாக வுடையவர் : (ஆகையாலே வாய்
திறவா (மல் வா) ழ்கிறார் (கள்) அல்லது... வாய்திறந்துவாயு குற்றமாமோ வென்று
.....வாயாது கருத்த....தது . 57
9. கருத்தறிவித்தல்*
------------------
*பேரின்பப் பொருள்: "சாத்தும் பச்சிலை தான் கொண்டருளி,அருளுந் திறத்தை அறியவுரைத்தது".
கருத்தறிவித்தல் என்பது 'நீயிர்' வாய் திறவாமைக்குக் காரணமுடையீர்; அது கிடக்க,
இத்தழை நும்மல்குற்குத் தகுமாயின் அணிவீராமின்' எனத்தழைகாட்டி நின்று தன் கருத்தறிவியா
நிற்றல், அதற்குச் செய்யுள் :-
வின்னிற வாணுதல் வேனிறக்
கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம் போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே
உரைத்த துரையாது, கருத்தறி வித்தது .
இதன் பொருள்: வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்லியலை வில்லினியல்பையுடைய
வாணுதலையும் வேலினியல்பையுடைய கண்களையுமுடைய மெல்லியலை; மல்லல் தன் நிறம்
ஒன்றில் இருத்திநின்றோன் தனது அம்பலம் போல் அழகையுடைய தன் திருமேனி யொன்றின் கண்
இருத்தி நின்றவனது அம்பலத்தை யொக்கும்; மின் நிற நுண் இடைப்பேர் எழில் வெள் நகைப்
பைந்தொடியீர்- மின்னினியல்பை யுடைய நுண்ணிய இடையையும் பெரிய வெழிலையும்
வெள்ளிய முறுவலையு முடைய பைந்தொடியீர்; மணி நிறபூந் தழைபொன் நிற அல்குலுக்கு ஆமோ-
மணியினது நிறத்தையுடைய இப்பூந்தழை நும் பொன்னிற அல்குலுக்குத் தகுமோ?
தகுமாயின் அணி வீராமின் எ-று.
பொன்னிறத்திற்கு மணி நிறம் பொருத்தமுடைத் தென்பது கருத்து. பொன்னிறவல்குலென்று
அல்குலின்றன்மை கூறியவதனான், முன்னமே புணர்ச்சி நிகழ்ந்தமையு முண்டென்பது கூறியவாறாயிற்று.
ஆமோ வென்ற ஓகாரம் கொடுப்பாரதுண் மகிழ்ச்சியையும் கொள்வாரது தலைமையையும் விளக்கி
நின்றது. மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒரு (முறை) சொன்ன வார்த்தையைப் பின் ஒருகால்
சொல்லாது, தன் கருத்தினை அறிவித்தது.
செய்யுள்: வில்லையொத்த ஒளி சிறந்த நெற்றியினையும், வேலை யொத்த திருநயனங்களையும்,
மதுரவியல்பினையும் (உடைய) தம்பிராட்டியை வளவிய தன்னுடைய திருமேனியில் ஒரு பாகத்தில்
வைத்து நின்றோன்; அவனுடைய திருவம்பலத்தை ஒத்த வாக்கினால் உரைக்கவும் அரிதாகிய நுண்ணிய
இடையினையும் கனகத் தனங்களையும் அழகிய வளைகளையுமுடையீர்! பொன்னை யொத்த
அல்குலுக்கு மாணிக்கம் போன்ற பூந்தழையாமோ? (ஆமாகில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது கருத்து).
எனவே,பொன்னுக்கு மாணிக்கம் பொருந்துதலானும் உங்களுடைய அல்குலுக்கும்
இந்தத்தழை பொருந்தும் காண் என்றவாறு. 53
10. இடைவினாதல்*
------------------
*பேரின்பப் பொருள் : "சிவத்திடையன்பு செல்லுத லன்றி வேறிலையென்று விரும்பி யுரைத்தது.''
இடைவினாதல் என்பது தழை காட்டித் தன் கருத்தறிவித்து அது வழியாக நின்று,
நும்மல்குலும் முலையும் அதிபாரமாயிரா நின்றன! இவை இவ்வாறு நிற்றற்குக் காரணம் யாதோ' வென்று
அவரிடை வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் -
கலைக்கீ ழக லல்குற் பாரம
தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
றாதன் றிலங்கையர் கோன்
மலைக்கீழ் விழச் செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்க யிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எது நுங்கள் சிற்றிடையே .
வழிபதி பிற வினாய், மொழிபல மொழிந்தது
இதன் பொருள்: கலைக் கீழ் அகல் அல்குல் பாரமது -மேகலைக்குக் கீழாகிய அகன்றவல்குலாகிய
பாரமது; ஆரம் கண் ஆர்ந்து இலங்கு முலைக் கீழ்ச் சிறிது இன்றி நிற்றல் முற்றாது - முத்து வடம்
கண்ணிற்கு ஆர்ந் திலங்கா நின்ற முலையின் கீழ் இடை சிறிதின்றித் தானே நிற்றல் முடிவு பெறாது;
அன்று இலங்கையர் கோன் மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்பலவர் - இவ்வரைக்கயை யெடுத்த அன்று
இலங்கையர்கோன் இவ்வரைக் கீழ் வீழும் வண்ணஞ் செற்ற சிற்றம்பலவரது; வண் பூ கயிலைச் சிலைக்
கீழ்க்கணை அன்ன கண்ணீர் - வளவிய பொலிவையுடைய கைலையினிற்கின்ற சிலையின்
கீழ்வைத்த கண்ணையுடையீர்; நுங்கள் சிற்றிடை எது- நும்முடைய சிற்றிடை யாது?
கட்புலகின்ற தில்லை எ- று
பாரமது நிற்றலெனவியையும். பாரம் அதுவென எழுவாயும் பயனிலையுமாக்கி,
முலைக்கீழ்ச் சிறிதாயினும் ஒன்றின்றி இவ்வுரு நிற்றல் முற்றாதென்றுரைப்பாருமுளர் *.
அதுவென்றும் எதுவென்றும் சாதி பற்றி ஒருமையாற் கூறினான். மெய்ப்பாடு அது.
பயன்: விசேடவகையான் மதியுடம்படுத்தல்.
* உரைப்பவர் பழையவுரைகாரர்.
மேலைப் பட்டாறனானும் வம்பமாக்கள் வினாவும் பெற்றியே கதுமெனத் தனது
குறைதோன்றாவகை வினாவினான், இப்பாட்டிரண்டினானும், இவன் குறை நங்கண்ணதே
யென்பது தோழிக்குப் புலப்பட இத்தழை நல்ல கொள்ளீரென்றும், நும்மிடை யாதென்றும்
வினாவினானென்பது.
மதியுடம்படுத்தல் முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வழிபதி பிற வினாய். மதியுடன் படுக்க மன்னன் மலிந்தது :
வழியையும் பதியையும் பிறவற்றையும் வினாவித் தன் புத்தியை ஒருப்படுத்துவதாக நாயகன் அறுதியிட்டது.
செய்யுள்: மேகலா பாரத்திடத்து அகன்ற அல்குலின் பாரம் இருந்தபடியது; முத்து வடம்
கண்ணுக்கு நிறைந்து விளங்குகிற முலையின் கீழே ஏதேனும் சிறிது இடையில்லாத பொழுது
நிற்றல் முற்றுப்பெற மாட்டாது: அன்று இலங்கைக்கு அரசனாகிய இராவணன் மலைக்கீழ் விழும்படி
அடர்த்த திருச்சிற்றம்பலநாதனின் வளவிய பொலிவினை யுடைத்தாகிய ஸ்ரீ கயிலாயத்தில்
வில்லோடே சேர்ந்த அம்புகளை யொத்த கண்களை யுடையீர்! உங்களுடைய சிறிய இடை எதுதான்?
சொல்லுவீராக வேண்டும். 59
5. இருவரு முள்வழி அவன் வரவுணர்தல் *
-------------------------------------
*பேரின்பக் கிளவி. "இருவரு முள்விழி யவன்வர வுணர்தற் றுறையோ ரிரண்டுஞ்
சிவமுயிர் விரவிய, தருளே உணர்ந்திட லாகுமென்ப'
இருவருமுள்வழி யவன்வரவுணர்தல் என்பது தலைமகளுந் தோழியு முள வழிச் சென்று,
தலைமகன் கரந்த மொழியாற்றன் கருத்து அறிவிக்கத் தோழி அவனினைவறியா நிற்றல் .
அது வருமாறு-
ஐய நாட லாங்கவை யிரண்டு
மையறு தோழி யவன்வர வுணர்தல்
இதன் பொருள் : ஐயுறுதல், அறிவுநாடல் எனவிவை யிரண்டும் இருவருமுள்வழி
யவனவரவுணர்தலாம் எ - று அவற்றுள்:
1. ஐயுறுதல்**
-------------
**பேரின்பப் பொருள்: சிவமுயிர் கலத்த லருடேறி வினாயது
ஐயறுதல் என்பது தலைமகன் தழை கொண்டு நின்று கரந்த மொழியாற் றன்கருத்தறிவிக்க,
மேனியொளியிலனாய் இப்புனத்தினின்றும் போகாது யானையோடு ஏனம் வினாவி இவ்வாறு
பொய் கூறா நின்ற இவன் யாவனோ வெனத் தோழி அவனை யையுற்றுக் கூறா நிற்றல். அதற்குச்செய்யுள் -
பல்லில னாகப்ப கலைவென்
றோன் தில்லை பாடலர் போல்
எல்லிலன் நாகத்தொடேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே
அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித்
தையற் பாங்கி ஐய முற்றது
இதன் பொருள்: பல் இலன் ஆகப் பகலை வென்றோன் தில்லை பாடலர் போல் எல் இலன் -
பல்லிலனாம் வண்ணம் பகலோனை வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல் ஒளியை
யுடையனல்லன்; வினா நாகத்தொடு ஏனம் - ஆயினும் வினாவப்படுகின்றன யானையும்
ஏனமுமாயிருந்தன; வில் இலன்- வில்லையுடையனல்லன்: கையில் நாகத் தழை-கையின் நாக
மரத்தின்றழைகளாயினும், கொண்டாட்டம் வேட்டை- கொண்டாடப் படுகின்றது வேட்டை -
மெய் ஓர் சொல் இலன்; கண்ட வற்றான் மெய்யா யிருப்பதொரு சொல்லையு முடையனல்லன்;
கற்றவா ஆ - இவன் பொய்யுரைப்பக் கற்றவாறு எ பொய்யுரைத்து வறிது போவானுமல்லன்;
இச் சுனை புனம் கடவான் - ஈண்டொரு குறையுடையான் போல இச்சுனைப் புனத்தைக் கடவான்;
இவன் யாவன் கொலாம் - இவன் யாவனோ ? எ-று.
வினாவென்பது : ஆகுபெயர். ஆ : வியப்பின்கட் குறிப்பு ஆகத்தொரனமென்று பாட மோதி
ஆகத்தொளியிலனென வுரைப்பாருமுளர். வினாய் என்பது பாட மாயின், வாரா நின்றவென ஒரு சொல்
வருவித்து முடிக்க, வினாய்க்கடவா னென்று கூட்டுவாருமுளர். தையல் -புனையப்படுதல்.
மெய்ப்பாடு : மருட்கை, பயன்: உசாவி யையந்தீர்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வெற்றியினையும் ஒளியையும் உடைத்தாகிய வேலினை
யுடையவன் இடை விடாது வருகிற வரவைப் பார்த்து ஒப்பனையுடைய பாங்கி சந்தேகித்தது.
செய்யுள்: ஆதித்தனைப் பல்லிழக்கும் படி வெற்றி செய்தவன் அவனுடைய சிதம்பரத்தைப்
பாடமாட்டாதாரைப்போல ஒளி இழந்தான்; யானையுடனே கருவாவினையும் வினாவி வந்தான்;
இவன் யாவன் தான்? கையில் வில்லுடையவனு மல்லன்; இவன் கையில் சுரபுன்னைத் தழை இருந்தது;
இப்படி இருகையிற்றிலும் கொண்டாட்டம் வேட்டையாயிருந்தது; உண்மையாகச் சொல்லுவதொரு
வார்த்தையு முடையனல்லன்; ஐயோ, இவன் கற்ற மரம்பென் தான்? இந்தச் சுனைப் புனத்தை
நீங்குகிறானுமில்லை. 60
2. அறிவுநாடல்*
---------------
*பேரின்பப் பொருள் : "உயிர் சிவங் கலந்த தருளே தேறியது''.
அறிவுநாடல் என்பது இவன் யாவனோவென் றையுறா நின்ற தோழி பேராராய்ச்சிய ளாதலின்,
அவன் கூறிய வழியே நாடாது வந்து தங்களிடைக்கே முடிதலின், இவ்வையர்வார்த்தை இருந்தவாற்றான்
ஆழமுடைத்தாயிருந்ததென்று அவனினை வறியா நிற்றல். அதற்குச் செய்யுள் :
ஆழமன் னோவுடைத் திவ்வையர்
வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே
வெற்பன் வினாய சொற்பத நோக்கி
நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது
இதன் பொருள் :முன் அனங்கன் நைந்து வீழநோக்கிய அம்பலத்தான் வெற்பின் இப்புனத்து -
முற்காலத்து அனங்கன் அழிந்து பொடியாய்வீழ நோக்கிய அம்பலத்தானது வெற்பின் இப்புனத்தின்
கண்ணே கூறுவது; முன் வேழமாய்-முன் வேழமாய்; கலையாய்- பின் கலையாய்; பிறவாய்- பின் வேறு சிலவாய் ;
பின்னும் மெல் தழையாய்- பின்னும் மெல்லிய தழையாய். வந்துவந்து - வந்து வந்து; மாழை மெல் நோக்கி
இடையாய்க் கழிந்தது - முடிவிற் பேதைமையை யுடைய மெல்லிய நோக்கத்தை யுடையாளது இடையால் விட்டது;
இவ்வையர் வார்த்தை ஆழம் உடைத்து - அதனால் இவ்வையர் வார்த்தை இருந்த வாற்றான் ஆழமுடைத்து எ- று
மன்னும் ஓவும் : அசைநிலை, இப்புனத்தே யென்றது இவளிருந்த புனத்தே யென்றவாறு. மெல்லிய
நோக்கத்தை யுடையாள் இடைபோலப் பொய்யாய்விட்ட தென்பாருமுளர். பின்னுமென் முன்னை
வினாவே ஐயந்தரா நிற்பப் பின்னுமொன்று கூறினா னென்பதுபட நின்றது. தன்கண் வந்து முடிதலின்
வந்து வந்தென்றாள். சொற்பதம் - சொல்லளவு. அறிவுநாடியது - அறிவானாடியது.
மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயந்தீர்தல்.
இருவருமுள்வழி அவன்வரவுணர்தல் முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் கேட்ட சொல்லினது முடிவைப் பார்த்து
நெறித்த கூந்தலினையுடைய பாங்கி புத்தியினால் விசாரித்தது.
செய்யுள்: இந்தச் சுவாமிகளுடைய வார்த்தை மிகவும் ஆழமுண்டாயிருந்தது: முற்காலத்துக்
காமன் பொடியால் வீழும்படி பார்த்த திருவம்பல நாதனுடைய திருமலையின் இந்தப் புனத்திடத்தே
முன்பு யானையை வினாவி- அதற்குப்பின்பு கலையை வினாவிப் பின்பு (பிறவற்றைப் பேசி) பின்பு
மெல்லிய தழைகளையும் உடுப்பீர்களோ? என்னும்படியாய் மெல்லமெல்ல வந்து குளிர்ந்த மெல்லிய
நோக்கினையுடையாளுடைய இடையை வினவும்படியாய் விட்டது இந்தச் சுவாமிகளுடைய
வார்த்தை மிகவும் ஆழமுடையதாயிருந்தது.
6. முன்னுறவுணர்தல் *
--------------------
*பேரின்பக் கிளவி; "முன்னுற வுணர்த லெனவிஃ தொன்றுஞ், சிவமுயிர் கூடலருள்வினா வியது"
வாட்டம் வினாதன் முன்னுற வுணர்தல்
கூட்டி யுணருங் குறிப்புரை யாகும்
இதன் பொருள்: வாட்டம் வினாதல் எனவிஃதொன்றும் முன்னுறவுணர்தலாம் எ-று
அது தலைமகன் இங்ஙனம் வினாயதற்கெல்லாம் தோழி மறுமொழி கொடாளாகத்
தலைமகன் வாடினான்; வாடவே தலைமகளும் அதுகண்டு வாடினாள்; ஆதலால் இருவரது வாட்டமும்
வினாவப்படுதல். அன்றியும் முன்னர்த் தலைமகனது வாட்டத்தைப் பாங்கன் வினாயது போலத்
தலைவியது வாட்டத்தையும் பாங்கி வினாதலாம்.
முன்னுற்றதனை யுணர்தலானே இதற்கு முன்னுறவுணர்தல் என்று பெயராயிற்று. அஃதாவது
தலைமகனைப் பாங்கன் வினாயவாறு போலத் தலைமகளையும் யாதனானோ இவள் வாடியதென
ஐயுற்றுணர்தல். இவள் தலைமகளை வினாவுவது இயற்கை யிறுதி இடந்தலை யிறுதியி னெனக்கொள்க.
என்னை தோழியும் பாங்கனைப் போலப் பிற்றைஞான்றே தலைமகளை வினாவப்பெறாளோவெனின் ,
வினாவாள். எற்றிற்கு? தலைமகளை ஒரு பொழுதும் விடாத தோழி இவளை இத்தினங்காறுங்
காணாளோ வெனின், காணும்.
காணின், இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்து இவளது வாட்டம் தோழி காணாதொழிவாளே னெனின்,
இவரைக்கூட்டி முடித்த விதி தோழிக்குத் தலைமகளது வாட்டம் புலனாகாமை மறைக்கும். என்னை?
பாங்கற் கூட்டமும் இடந்தலைப்பாடும் நடக்க வேண்டி. அல்லதூஉம், தலை மகனுக்குந் தலைமகளுக்கும்
வாட்டம் ஒக்க நிகழினும் இயற்கைப்புணர்ச்சியது இறுதிக்கட் டலைமகனைப் பாங்கன் கூடியும்
தலைமகளைப் பாங்கி கூடியும் செய்தாராயினும், தலைமகனது வாட்டத்தைப் பாங்கன் வினாவுதல்
தலைமையாதலான் முன் வினாவப்படும். பாங்கன் வினாவிய பின்னர்ப் பாங்கி வினாவப் படும் .
ஆதலால் இடந்தலைப்பாட்டினிறுதியே தோழிக்கு வாட்டம் வினாதற்கு இடமாயிற்றெனவறிக.
கூட்டியுணருங் குறிப்புரையாகு மென்றது இந்த வாட்டம் வினாதற்குப் பக்கக்கிளவியாகச்
சேறல் துணிதல் முதலாக முன்னுரைக்கப்பட்ட கிளவியெல்லாங் கூட்டியுரைத்துக் கொள்ளப்படு மென்றவாறு.
என்னை பக்கக்கிளவியாமாறு? தலை மகன் தனது வாட்டத்தால் அங்ஙனம் பலவும் வினாயனவெல்லாம்
தலைமகள் தனது வாட்டத்தாலுரைத்தாற் போலாயின் என்னை அவ்வளவெல்லாம் அவன் வினாயற்குத்
தோழி மறுமொழி கொடாது நிற்றலா னெனவறிக.
1. வாட்டம் வினாதல்*
--------------------
*பேரின்பப் பொருள் : சிவனது கருணையு முயிரது தெளிவும், அருளே கண்டின்பதனுடன் வினாயது...
வாட்டம் வினாதல் என்பது தலைமகன் மதியுடம் படுத்து வருந்தா நிற்பக் கண்டு. எம்பெருமான்
என் பொருட்டான் இவ்வாறு இடர்ப்படாநின்றானெனத் தலைமகன் தன்னுள்ளே கவன்று வருந்தாநிற்க;
அதுகண்டு சுனையாடிச் சிலம்பெதி ரழைத்தோ பிறிதொன்றினானோ நீ வாடிய தென்னோ வெனத்தோழி
தலைமகளது வாட்டம் வினாவா நிற்றல் அதற்குச் செய்யுள்-
நிருத்தம் பயின்றவன் சிற்றம்
பலத்து நெற்றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே.
மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது
இதன் பொருள்: சிற்றம்பலத்து நிருத்தம் பயின்றவன். சிற்றம்பலத்தின் கண் நிருத்தத்தை யிடை
விடாதேயாடியவன்! நெற்றித் தனிக்கண்- ஒருத்தன் நெற்றியிலுண்டாகிய தனிக் கண்ணையுடைய
ஒப்பில்லாதான்; பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி - அவன் பயிலுங் கைலையாகிய மலையினது
உயர்ந்த வுச்சியில் திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி-புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக்
குடைந்தாடி சிலம்பு எதிர் கூய் சிலம்பிற் கெதிரழைத்து : வருத்தம் பயின்று சொல்லோ-இவ்வாறு
வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப் பயின்றோ பிறிதொன்றினானோ; வல்லி மெல்லியல் வாடியது-
வல்லி போலும் மெல்லிய வியல்பினை யுடையாள் வாடியது எ-று.
வருத்தம் ஆகுபெயர். மெய்ப்பாடு : மருட்கை பயன்: தலைமகட்குற்ற வாட்டமுணர்தல்
முன்னுறவுணர்தல் முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மின்னை ஒத்த இடையினையுடைய நாயகி தன்னுடைய
இயல்பைப் பார்த்துப் போதுக்குப்போது விம்முகிற மதுரமான முலையினையுடைய பாங்கி சொன்னது
செய்யுள் : திருச்சிற்றம்பலத்திலே நடனமாடுகிறவன். நெற்றியிலே ஒரு திருநயனத்தையுடைய
ஒப்பில்லாதவன். அவன் வாழ்கிற ஸ்ரீ கயிலாய மலையில் உயர்ந்த உச்சி நின்று நதியாக நீர் அறாமல்
விழுகிற சுனைநீர் குடைந்து விளையாடியும், வரையெதிர் நின்று அழைத்தும் இவற்றினாலே
வருத்தம் மிக்கோ தான். வல்லிசாதத்தை ஒத்து மெல்லிய இயல்பினை உடையாள் வாடியது? 62
7. குறையுறவுணர்தல் *
--------------------
*பேரின்பக் கிளவி, 'குறையுற வுணர்தற் றுறையொரு நான்கு முயிர்சிவத் திடைச்சென் றொருப்படுந் தன்மை,
பணியாற் கண்டு பரிவால் வினாயது''.
குறையுற வுணர்தலாவது தலைமகன் குறையுறத் தோழி அதனைத் துணிந்துணரா நிற்றல்,
அது வருமாறு....
குறையுற்று நிற்ற லவன்குறிப் பறித
லவள் குறிப் பறிதலோ டவர் நினை வெண்ணல்
கூறிய நான்குங் குறையுற வுணர்வெனத்
தேறிய பொருளிற் றெளிந்திசினோரே.
இதன் பொருள்: குறையுற்றுநிற்றல், அவன் குறிப்பறிதல், அவள் குறிப்பறிதல், இருவர் நினைவு
மொருவழி யுணர்தல் என விவை நான்கும் குறையுறவுணர்தலாம் எ-று அவற்றுள் -
1. குறையுற்றுநிற்றல் *
--------------------
*பேரின்பப் பொருள் : 'ருதிவுளப் பணியைச் செய்வே னென்றல்'
குறையுற்று நிற்றல் என்பது தலைமகளது வாட்டங் கண்டு ஐயுறா நின்ற தோழியிடைச் சென்று,
'யான் உங்களுக்கெல்லாத் தொழிலுக்கும் வல்லேன்; நீயிர் வேண்டுவ தொன்று சொல்லுமின்; யான் அது
செய்யக் குறையில்லை' யென இழிந்த சொல்லால் தலைமகன் தன்னினைவு தோன்ற ஐயுறக்
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் ---
மடுக்கோ கடலின் விடுதிமி
லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லை முன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நுஞ் சுரிகுழற்கே ..
கறையுற்ற வேலவன் குறை யுற்றது.
இதன் பொருள்: விடு திமில் கடலின் மடுக்கோ -விடப்படுந் திமிலைக் கடலின்கட் செலுத்துவேனோ;
அன்றி மறிதிரை மீன் படுக்கோ-அன்றிக் கீழ்மேலாந் திரையையுடைய கிளர்ந்த கடலிற் புக்கு
மீனைப்படுப்பேனோ; பலபணிலம் குளிக்கோ-ஒரு குளிப்பின்கட் பல பணிலங்களையு மெடுப்பேனோ;
பரன் தில்லை முன்றில் வளை கொடுக்கோ - பரனது தில்லை முற்றத்திற் சென்று எல்லாருங்காணச்
சங்க வளைகளை விற்பேனோ; மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றவேல் செய்கோ - அன்றி நும் மையன்மார்க்குப்
பொருந்தின குற்றேவல்களைச் செய்வேனோ; அணி ஈர் மலர் நும் சுரி குழற்குத் தொடுக்கோ-அணியப்படுந்
தேனாலீரிய மலரை நுஞ்சுரி குழற்குத் தொடுப்பேனா; பணி நீயிர் வேயீண்டியது சொல்லுமின் எ- று
மற்று: வினைமாற்று, இவன் உயர்ந்த தலை மகனாதலின் அவர் தன்னை வேறுபட வுணராமைக்
கூறியவாறு. முன்னிரந்து குறையுறுதற் கிடங்காட்டிக் குறையுற வுணர்தற்கு இயைபுபடக் குறையுறுமாற்றை
ஈண்டுக் கூறினான். இது திணை மயக்கம் என்னை, ' 'உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே''
(தொல். பொருள். அகத்திணையியல். 13) எ-ம். , புனவர் தட்டை புடைப்பி னயல, திறங்குகதி ரலமருங்
கழனியும், பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே' ( புறநானூறு, 49) எ-ம் சொன்னாராகலின்.
மெய்ப்பாடு: இளிவரல். பயன்: குறையுறுதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: இரத்தம் பொருந்தின வேலை உடையவன் தன் குறையைச்
சொன்னது (வேவன் என்றது இவர் பாடம்.)
செய்யுள்: விடக்கடவ தொரு மரத்தோணியைக் கடலிலே விடுப்பேனோ? அதுவன்றாகில்
கீழது மேலதுவாக மறுகு திரையிலே புக்கு மீன் படுப்பேனோ? முத்துக்கள் பலவற்றையும் ஒரு குளியிலே
எடுப்பேனோ? சிவனுடைய புலியூர் முற்றங்களிலே புகுந்து வளை விற்று வருகேனோ? மற்றும்
உங்களுடைய அண்ணன் மார்க்குப் பொருந்தின குற்றேவல் செய்து நிற்பேனோ? அணியத்தக்க
தேனிருக்கும் மலர்களை உங்களுடைய நெறித்த கூந்தலுக்குத் தொடுப்பேனோ? இந்த ஊழியங்களிலே
ஒன்றேனும் எனக்கு ஏவுங்கள். 63.
2. அவன் குறிப்பறிதல்
---------------------
பேரின்பப் பொருள்: "பளிங்குபோன்ற சிவத்திடைப் பதிந்ததுயிரென்றது"
அவன்குறிப்பறிதல் என்பது குறையுறா நின்றவன் முகத்தே தலைமகளது செயல் புலப்படக்கண்டு.
இவ்வண்ணல் குறிப்பு இவளிடத்ததெனத் தோழி தலைமகனது நினைவுதுணிந் துணரா நிற்றல். அதற்குச் செய்யுள் -
அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே
பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப்பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்பறிந்தது
இதன் பொருள்: அரன் தில்லை அன்னாள் மன்னும் கிளியை கடியச் செல்ல நிற்பின் - அரனது
தில்லையை யொப்பாள் புனத்து மன்னுங்கிளியைக் கடிவதற்குச் சிறிதகல நிற்பினும், கிளர் அளகத்து
அளி அமர்ந்து ஏறின் - இவளுடைய விளங்கா நின்ற அளகத்தின்கண் வண்டுகள் மேவியேறினும்;
வறிதே இருப்பின் இவள் வாளாவிருப்பினும்; ஒளிமுகத்து பளிங்கு அடுத்த ஒளி * அமர்ந்தாங்கு -
இவன தொளியையுடைய முகத்தின் கண்ணே பளிங்கு தன்னிறத்தை விட்டுத் தன்னையடுத்த
நிறத்தை மேவினாற்போல ; ஒன்று போன்று ஒன்று தோன்றும்-முன் வேறொன்று போன்றிருந்து
பின்னிவள் குறிப்பாகிய வேறொன்று தோன்றா நின்றது அதனால்; அளிய அண்ணல் எண் மன்னும்
ஒன்று உடைத்து -அளிய அண்ணலது குறிப்பு மன்னுமொன்று உடைத்து; அஃதிவள் கண்ணதே போலும் எ-று;
* பளிங்கு அடுத்த ஒளி;- ''அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்'' (திருக்குறள்-706)
கிளியை மன்னுமென்புழி மன்னும்: அசை நிலையெனினுமமையும். ஒன்றுபோன்றொன்று
தோன்றுமென்றது கிளியைக் கடியச் சிறிது புடைபெயரின் நெட்டிடை கழிந்தாற்போல ஆற்றானாகலானும்
வண்டு மூசப் பொறாளென்று வருந்தி வண்டையோச்சுவான் போலச் சேறலானும், வாளாவிருப்பிற்
கண்டின்புறுதலானும், இவள் கண்ணிகழ்ச்சி இவன் , முகத்தே புலப்படா நின்றது என்றவாறு.
ஏறிவறிதேயிருப்பினென்பது பாடமாயின், அளியேறி அளகத்தின்கட் சிறிதிருப்பினுமெனவுரைக்க.
ஒளிர்முகமே யென்பதூஉம் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அழகிய வளைகளையுடையாளுடைய சிறிய இடையையுடைய
தோழி நறுநாற்றமுடையத்தாகிய பூக்களாற் சிறந்த மாலையையுடையவன் நினைவையறிந்தது.
செய்யுள்: அளிக்கத் தக்கவ னுடைய விசாரமானது நிலைபெற்ற ஒன்றை உடைத்தாயிருந்தது:
அரனுடைய சிதம்பரத்தைப் போன்றவள். புனத்திலே நிலைபெற்று வாழ்கிற கிளிகளை ஓட்டுவதாகச்
சிறிதேறச் சென்றாலும் விளங்குகிற கொண்டையிலே வண்டுகள் விரும்பி ஏறினும், இவை இரண்டும்
செய்யா தொழுகினும், ஒளி சிறந்த முகத்திலே அன்பிலாதாரைப் போலே இருக்கையிலும்,
இவற்றில் இரண்டிலும் அன்பு தோன்றா நின்றது.
எங்ஙனே என்னின், அப்புனத்திலே நிலைபெற்று வாழ்கின்ற கிளிகளை ஓட்டுவதாகச்
சிறிதே நீங்கில், 'இவள் வருந்துகின்றாள். என்று கொண்டும். கொண்டையிலே வண்டுகள் விரும்பி ஏறின்.
'இடை ஒடிந்திடும்' என்றும், வருந்தாநின்றது. இவை இரண்டும் செய்யாத இனி ஒரு கிலேசமில்லை
என்று வாடா நின்றது. 64
3. அவள் குறிப்பறிதல்*
--------------------
*பேரின்பப்பொருள்: ''கருணை யுயிரிடத்துக் கண்டரு டேறல்.''
அவள் குறிப்பறிதல் என்பது தலைமகளது நினைவறிந்த தோழி இவனிடத்து இவள் நினைவேயன்றி
இவளிடத்து இவன் நினைவுமுண்டோவெனத் தலைமகளை நோக்க, அவண் முகத்தேயும் அவன் செயல்
புலப்படக்கண்டு, இவ்வொண்ணுதல் குறிப்பு மொன்றுடைத்தென அவணினைவுந் துணிந் துணரா நிற்றல்.
அதற்குச் செய்யுள் -
பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன் செல் லாமைநின்
றம்பலத்தாடு முன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
பயின்ற எம் மொண்ணுதல்மாந்
தழை கொண் டொருவனென் னாமுன்ன
முள்ளந் தழைத்திடுமே
ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது
இதன் பொருள்: பிழை கொண்டு ஒருவிக் கெடாது ஒருவன் அன்பு செய்யின் பிழைத்தலைப்
பொருந்தித் தன் கட் செல்லாது நீங்கி இவ்வாறு கெடாதே ஒருவன் அன்பு செய்யுமாயின் பிறவி
என்னும் முழை கொண்டு செல்லாமை - அவன்; பிறவி யென்னா நின்ற பாழியை யடைந்து
செல்லாத வண்ணம்; அம்பலத்து நின்று ஆடும் முன்னோன் - அம்பலத்தின்க ணின்றாடும்
எல்லாப் பொருட்கும் முன்னாயவனது; உழை கொண்டு - உழைமானை மருணோக்கத்தாலொத்து;
இரு நோக்கம் ஒருங்கு பயின்ற எம் ஒண்ணுதல் - வெள்ளை நோக்கமும் அவ்வுழைக்கில்லாத
கள்ளநோக்கமு மாகிய இரு நோக்கத்தையும் ஒருங்கே செய்யக்கற்ற எம்முடைய ஒண்ணுதல்;
மாந்தழை கொண்டு ஒருவன் என்னாமுன்னம் - மாந் தழையைக் கொண்டொருவனென்று
சொல்லாதவன் முன் உள்ளம் தழைத்திடும்-உள்ளந் தழையா நின்றாள்; அதனால் இவள் குறிப்பு
இவன் கண்ணதே போலும் எ-று
அடைந்தார் பிழைப்பின்' தலையாயினார் பிழையையுட் கொண்டமைதலும்,
இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக் கெடுத்தலும் உலகத்துண்மையின்
அம் மூவகையுஞ் செய்யாதெனினுமமையும். பிறிதுரைப்பாருமுளர். ஒருவி யென்னும்
வினையெச்சம் கெடாதென்னும் எதிர்மறை வினையெச்சத்திற் கெடுதலோடு முடிந்தது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவ்விடத்து நாயகியுடைய நினைவைத் தோழி சொன்னது.
செய்யுள்: பிழையவான காரியத்தைக் கொண்டு, தன்னை விட்டுக் கெட்டுப் போகாதே அன்பு
செய்வானாகில், பிறத்தற்கிடமாய்க் கர்ப்பக் கொள்கையை இடங்கொண்டு செல்லாதபடி திருவம்பலத்தில்
நின்றாடி அருளுகிற பழையவன் ஸ்ரீ அத்தத்திலே ஏந்தின மானின் நோக்கத்தை ஒத்து ஒரு காலே
இருவகைப் பார்வையும் கற்ற எம்முடைய அழகிய நெற்றியினை யுடையவள், மாந்தழை கொண்டு
வாராநின்றான் என்று நான் சொல்லுவதற்கு முன்னே, தானே கண்டு உள்ளம் தழையாநின்றாள். 65
4. இருவர் நினைவு மொருவழி யுணர்தல் *
--------------------------------------
* பேரின்பப் பொருள் : இன்புயி ரொன்றென் றருளதி சயித்தது
இருவர் நினைவு மொருவழி யுணர்தல் என்பது இருவர் நினைவுங்கண்டு இன்புறா நின்ற
தோழி இவ்விருவரும் இவ்விடத்து வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக்கண் இவள் கண்ணாகிய
வண்டு இன்பத்தேனையுண்டு எழில் பெற வந்த அத்துணையல்லது பிறிதில்லை' யென அவ்விருவரது
நினைவுந் துணிந்துணரா நிற்றல். அதற்குச் செய்யுள் -
மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினைக் காப்ப
திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே
அன்புறுநோக் காருகறிந், தின்புறுதோழி யெண்ணியது
இதன் பொருள்: இறை புலியூர் அனையாள் மை ஏர் குவளைக் கண் வண்டு இனம் - இறைவனது
புலியூரை யொப்பாளுடைய மையழகையுடைய குவளை போலுங் கண்ணாகிய வண்டினம் வாழும் செந்தாமரை வாய் .
தான் வாழ்வதற்குத் தகும் இவன் முகமாகிய செந்தாமரை மலர்க்கண்; எய்யேம் எனினும் யாமறியேமாயினும்;
குடைந்து இன்பத்தேன் உண்டு - குடைந்து இன்பமாகிய தேனையுண்டு; எழில் தரும் எழில்பெறா நின்றது. அதனால் ;
இவற்கு மெய்யே வேட்டையின் மேல் மனம் இல்லை; இவற்கு இவளும் புனத்தினைக் காப்பது பொய்யே.
மெய்யாகவே வேட்டையின் மேலுள்ளமில்லை இவளும் புனத்தினைக் காப்பது பொய்யே எ று
மீட்டென்பதற்கு மீட்ட தன்றே லென்புழி கூரைத்த துரைக்க (செ. 57) ஏர்குவளை யென்னுமியல்பு
புறனடையாற் கொள்க. வண்டினமென்றாள். நோக்கத்தின் பன்மை கருதி. எய்யேமெனினு மென்பதற்கு
ஒருவரையொருவ ரறியே மென்றிருப்பினு மெனினுமமையும். எழிறருதல் - எழிலைப் புலப்படுத்துதல்.
இன்புறு தோழி இருவர் காதலையுங் கண்டின்புறு தோழி ஐய நீங்கித்தெளிதலான் இன்புறு மெனினுமமையும்.
அன்றியும் இவளுடைய நலத்திற் கேற்ற நலத்தையுடைய தலைமகனைக் கண்டின்புறுந்தோழி
என்னை களவொழுக்கத்தில் எழினல முடையா னொருவனைக் கண்டு இன்புறக் கடவளோ வெனின்.
எழினலமேயன்று. பின் அறத்தொடு நிலை நின்று கூட்டுகை. அகத்தமிழின திலக்கணமா தலால்
தன் குரவர் வினவத் தானறத்தொடு நிற்குமிடத்துக் குரவர் தாமே சென்று மகட் கொடுக்குங்
குடிப்பிறப்பினால் உயர்ச்சியை யுடையனா தலானும் இன்புற்றாள் . இவை மூன்றற்கும் மெய்ப்பாடு :
பெருமிதம். பயன்: துணிந்துணர்தல். இவை மூன்றும் குறையுறவுணர்தல் என்னை, "இருவரு முள்
வழியவன் வரவுணர்தன், முன்னுறவுணர்தல் குறையுறவுணர் தலென்றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி' ;
( இறையனாரகப் பொருள், 7) என்பவாகலின் :
குறையுறவுணர்தல் முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அன்புமிக்க பார்வையை அவ்விடத்திலே அறிந்து
இத்தன்மையாலே இன்புற்ற தோழி விசாரித்தது
செய்யுள்: உண்மையாக இவர்க்கு வேட்டையின் மேல் மனமில்லையாயிருந்தது: மீண்டு இவளும்
புனத்தினைக் காப்போம் என்னுமிது வெறும் பொய்யாயிருந்தது; சுவாமியினுடைய பெரும்பற்றப் புலியூரை
யொப்பாள் மை யெழுதப்பட்ட நீல மலர்களை யொத்த கண்களாகிய வண்டுச் சாதிகள் வாழும்
தாமரைப் பூவிடத்தே நாமொன்றை அறியே மாகிலும், அந்தப் பூவை மலர்க்கதிர் (?) இன்பத் தேனுண்டு
அழகினை விளக்கா நின்றது. 66
8. நாணநாட்டம்*
----------------
*பேரின்பக் கிளவி. ''நாண நாட்டத் துறையோ ரைந்து மருளே சிவத்தை யதிசயத் துயிரின்,
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது. "
இனி முன்னர் ** "நன்னிலை நாணம்" என்றோதப்பட்ட நாண நாட்ட மென்பது இருவர் நினைவும்
ஐயமறத்துணிந்த தோழி அவரது கூட்ட முண்மை அறிவது காரணமாகத் தலைமகளை நாண
நாடா நிற்றல். நன்னிலை நாணமென்றது நல்ல நிலை பெற்ற நாணம். நல்லநிலையாவது
நாணவும் நடுங்கவு நாடுதல். அகத்தமிழிலக்கண மன்றாதலான் இக் கோவை இஃதாமென்னுமிடம்
பெற்றதாம். என்னை, தலை மகள் தனக்குத் தலைமகனோ டுண்டாகியபுணர்ச்சியொழுக்கத்துக்கு
இவள் காவற்றோழி யாகையான் இடையூறாமென்னும் உள்ளத்தாளாய் நின்று இவ்வொழுக்கத்தைத்
தோழியறியின் நன்றென்னும் நினைவு வாராநிற்க, அவ் விடத்திலே இவள் நாண நாடுகையின்,
நன்னிலை நாணமென்றார். என்னை, நாணவு நடுங்கவு நாடா டோழி, காணுங் காலைத்
தலைமகடேத்து" என்பவாகலின்.
**பக்கம் 2 அதிகார வரலாறு 4 அடி
பிறைதொழு கென்றல் பின்னு மவளை
யுறவென வேறு படுத்தி யுரைத்தல்
சுனையாடல் கூற றோற்றங் கண்டு
புணர்ச்சி யுரைத்தல் பொதுவெனக் கூறி
மதியுடம் படுதல் வழிநாண னடுங்கல்
புலிமிசை வைத்தல் புகலுங் காலே.
இதன் பொருள்: பிறைதொழுகென்றல்; வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறிநகைத்தல்,
புணர்ச்சியுரைத்தல், மதியுடம்படுதல் என விவையைந்தும் நாணநாட்டமாம் ; புலி மிசை வைத்தல்
எனவிஃதொன்றும் நடுங்கநாட்டமாம் எ- று அவற்றுள் -
1. பிறைதொழுகென்றல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: "அருள்சிவத் திடையுயி ரார்ந்த தன்மை வெளிப்பட நின்று வினாவி யுரைத்தது''
பிறைதொழு கென்றல் : ஒன்பது பிறையைக் காட்டித் தான்றொழுது நின்று, நீயும் இதனைத்
தொழுவாயாக வெனத்தோழி தலைமகளது புணர்ச்சி நினைவறியா நிற்றல் அதற்குச் செய்யுள்-
மைவார் கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறந்து மற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிறைக்கே
பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது
இதன் பொருள்: மறந்தும் பொய் அவ் வானவரில் புகாது மறந்தும் பொய்ம்மையையுடைய
அவ்வானவரிடத்துப் புகாதே; தன் பொன் கழற்கே அடியேன் உய்வான் புக- தன்னுடைய பொன்னானியன்ற
கழலையுடைய திருவடிகளிலே அடியேன் உய்ய வேண்டிப்புக- ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது
ஒத்து விளங்குந் தில்லைக்கட் கட்புலனாய் நின்றவனுடைய சடைக்கண்ணதாகிய பிறையை யொத்து;
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறு பிறைக்கு - செக்கர்வானை யடைந்த செவ்விக் கதிரையுடைய
வெள்ளையாகிய சிறிய பிறைக்கு; மைவார் கருங்கண்ணி -மையையுடைய நெடிய கரிய கண்ணினை யுடையாய்;
செங்கரம் கூப்பு - நினது செய்ய கைகளைக் கூப்புவாயாக எ-று
மறந்துமென்து ஈண்டு அறியாதுமென்னும் பொருட்டாய் நின்றது. மற்று அசை நிலை.
மற்றை யென்பது பாடமாயின் அல்லாத பொய்வானவரென்றுரைக்க, இனமல்லராயினும்
இனமாக உலகத்தாராற் கூறப்படுதலின் அவ்வாறு கூறினார், "மூவரென்றே யெம்பிரானோடு மெண்ணி"
(திருவாசகம், திருச்சாழல், 4) என்பதூஉம் அக்கருத்தே பற்றிவந்தது. பிறர் கூறும் பெருமை அவர்க்கின்மையிற்
பொய்வானவரென்றார். எனக்குப் பொறியுணர்வல்ல தின்மையிற் கண்கவருந் திருமேனி காட்டி என்னை
வசித்தானென்னுங் கருத்தான் உய்வான் புகத்தில்லை நின்றோனென்றார். சடை: செக்கர் வானத்திற் குவமை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பிறையைத் தொழுவாயாக என்று பேதைத் தன்மையையுடைய
நாயகியை நல்ல நெற்றியினை யுடைய தோழியை நாணும்படி சொன்னது.
செய்யுள்: மையெழுதப்பட்ட கரிய கண்களை யுடையாய்! சிவந்த கைகளைக் கூப்பித்
தொழுவாயாக. அரிதேயும் மறந்தும் பொய்யான தேவர்களிடத்தே செல்லாது தன்னுடைய அழகிய
திருவடிகளிலே அடியேன் பிழைப்பது காரணமாக ஆட்புகவிளங்கா நின்ற பெரும்பற்றப் புலியூரிலே
எழுந்தருளி நின்றவன். அவனுடைய திருச்சடைமேலே வைத்த திருவிளம்பிறையை நிகர்த்துச் செக்கர்
வானத்திலே சேர்ந்த செவ்விக் கதிர்களை யுடைத்தாகிய வெள்ளிய சிறுபிறைக்கு நின்னுடைய சிவந்த
கைகளைக் கூப்பித் தொழாய் நாயகியே! 67
2. வேறுபடுத்துக் கூறல்*
----------------------
*பேரின்பப் பொருள்: உயிர்க்கின் பிச்சைகண்டு வந்தருள் வினாயது.
வேறுபடுத்துக் கூறல் என்பது பிறைதொழாது தலைசாய்த்து நாணி நிலங்கிளையா நிற்பக் கண்டு,
பின்னும் இவள் வழியே யொழுகி இதனை யறிவோமென உட்கொண்டு, நீபோய்ச் சுனையாடி வாவென்ன,
அவளும் அதற்கிசைந்து போய் அவனோடு தலைப்பெய்துவர, அக்குறியறிந்து அவளை வரையணங்காகப்
புனைந்து வேறுபடுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்-
அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகு முனக்கவளே.
வேய்வளைத்தோளியை வேறுபாடு கண்
டாய்வளைத்தோழி யணங்கென்றது
இதன் பொருள்: அக்கு தவா மணிசேர் கண்டன் - அக்காகிய நல்ல மணிபொருந்திய
மிடற்றையுடையான்: அம்பலவன்- அம்பலவன்; மலயத்து இக்குன்றவாணர் கொழுந்து செழும்
இத்தண்புனம் உடையாள்- அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்றவாணருடைய
மகளாகிய வளவிய இத்தண்புனங் காவலுடையாள்: அக்குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்றாள் -
அக்குன்றத்தின்க ணுண்டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள். அங்கம் அவ்வவையே ஒக்கின்ற ஆறு -
நின்னுறுப்புக்கள் அவளுறுப்புகளாகிய அவற்றையே யொக்கின்றபடி : அணங்கே - என்னணங்கே,
உனக்கு அவள் இணங்கு ஆகும் -நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக எ - று.
இன்: அல்வழிச் சாரியை , மலயத்திக்குன்றமென்று இயைப்பாருமுளர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மூங்கில் போன்று வளைகளை அணிந்த தோள்களையுடையாளை
மேனி வேறுபாடானது கண்டு அழகிய வளைகளை அணிந்த தோளினையுடையவள் தெய்வமென்றது.
செய்யுள் : அக்கினது மணிநீங்காது பொருத்தின திருமிடற்றை உடையவன் திருவம்பலநாதன்,
அவனுடைய பொதியின் மலையிடத்து இக்குன்ற வாணரா நிலையவர் பெற்ற இளையவல்லி சாதத்தை
யொப்பாள். இந்த அழகிய குளிர்ந்த புனத்தையுடையவள் அந்த மலையருவியை விரும்பி ஆடுவதாகப்
போனால் அவளுடைய அவயவங்கள் தன்மை ஒக்கின்...... தெய்வமே உனக்கவள்........ ஆதலால்,
அவள் நீ நின்று அவனைக் கண்டு போவாயாக. 68
3. சுனையாடல் கூறி நகைத்தல் *
------------------------------
* பேரின்பப் பொருள் : "கருணை யுயிர்க்குக் காட்டும் பரிவு, தானறிற் தறியாத் தன்மை யுரைத்தது.'
சுனையாடல் கூறி நகைத்தல் என்பது வேறுபடுத்துக்கூற நாணல் கண்டு, 'சுனையாடினால்
இவ்வாறு அழிந்தழியாத குங்குமமும் அளகத்தப்பிய தாதும் இந்நிறமுந் தருமாயின் யானுஞ்
சுனையாடிக் காண்பே' னெனத் தோழி தலைமகளோடு நகையாடா நிற்றல், அதற்குச் செய்யுள் -
செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே
மாண நாட்டிய வார்குழற்பேதையை
நாணநாட்டி நகை செய்தது.
இதன் பொருள்: செந்நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல் - செய்ய
நிறத்தையுடைய மேனிக்கண் வெள்ளிய நீற்றை அணிவோனது தில்லையம்பலத்தை யொக்கும்;
அம் நிறமேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும் - அழகிய நிறத்தை யுடைத்தாகிய
மேனியையுடைய நின்னுடைய கொங்கைகளில் அவ்விடத்தழிந்த குங்குமத்தையும் மைநிற வார்குழல்
மாலையும் - மையைப் போலு நிறத்தையுடைய நெடிய குழலின் மாலையையும் ; தாதும் - அளகத்தப்பிய
தாதையும்; வளாய் மதம் சேர் இந்நிறமும் பெறின் - மேனி முழுதையுஞ் சூழ்ந்து மதத்தைச் சேர்ந்த
இந்நிறத்தையும் பெறுவேனாயின்; இருஞ்சுனை யானும் குடைவன் - நீ குடைந்த பெரிய சுனையை
யானுங் குடைவேன் எ-று.
அம்பலம்போன் மேனியெனவியையும் அங்கழிகுங்கும மென்றது முயக்கத்தான் அழியும்
அவ்விடத்தழிந்த குங்குமம் என்றவாறு மைந்நிறவார்குழற்கண் மாலையுந் தாதும் வளாவ
இதனையும் பெறினென எச்சந் திரித் துரைப்பினும் அமையும் வளாவுதல் புணர்ச்சிக் காலத்தில்
மாலையின் முறிந்தமலரும் அளகத் தப்பிய தாதுஞ்சிதறிக் குங்குமத்தினழுந்தி வாங்குதற்
கருமையாக விரவுதல் மதமென்றது காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பை .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : மாட்சிமை உடைத்தாகச் சொல்லப்பட்ட
நீண்ட கூந்தலினையுடைய நாயகியை நாணும்படி சொல்லிச் சிரித்தது.
செய்யுள்: சிவந்த திருமேனியிலே வெள்ளிய திருநீற்றைச்சாத்தி யருளுகிறவன்
பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தை ஒத்த அழகிய மேனியை யுடையாய்! நின்
கொங்கையிடத்துக் கூட்டமாகிய அவ்விடத்தே யழிந்த குங்குமமும், இருண்ட நிறமுடைய
கூந்தலிலே யணிந்த மாலையும், செருகுழுவும் (தாதும்) உன் மேனி முழுதும் சூழ்ந்த கந்தம் சேர்ந்த
மணவொளியும், யானும் பெறுவனாகில் நீ ஆடினேன் என்கிற பெரிய சுனையை யானும் ஆடக்கடவேன்.
என்ன, இது சுனையாட்டில் வந்ததன்று காண். 69
4. புணர்ச்சியுரைத்தல் *
----------------------
* பேரின்பப் பொருள் ; ''சிவனது கருணை யருளே தேறி , இந்த அதிசயம் எங்குமில் லென்றது"
புணர்ச்சியுரைத்தல் என்பது சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, 'அது கிடக்க நீயாடிய
அப்பெரிய சுனை தான் கண் சிவப்ப வாய் விளர்ப்ப அளிதொடரும் வரை மலரைச் சூட்ட வற்றா
சொல்வாயாக' வெனப் புணர்ச்சி உரையா நிற்றல். அதற்குச் செய்யுள்-
பருங்கண் கவர்கொலை வேழப்
படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
தோன் தட மால் வரை வாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே
மணக்குறி நோக்கிப், புணர்ச்சி யுரைத்தது.
இதன் பொருள்: பருங்கண் கவர் கொலை வேழப்படை யோன்படபரிய கண்ணையும்
விரும்பப்படுங் கொலையையு முடைய கருப்புச் சிலையாகிய படையையுடையவன் மாள;
படர்த்தீ தருமகண் நுதல் தில்லை அம்பலத்தோன் தடமால்வரை வாய்- செல்லுந் தீயைத்தருங்
கண்ணையுடைத்தாகிய நுதலையுடைய தில்லையம்பலத்தானது பெரியமால் வரையிடத்து
அவ்வான் சுனை - நீயாடிய அப்பெரிய சுனை கருங்கண் சிவப்ப கனிவாய் விளர்ப்ப- கரியகண்
சிவப்பத் தொண்டைக் கனிபோலும் வாய் விளர்ப்ப அளி பின்வரும் கண் ஆர்கள் மலைமலர்
சூட்டவற்றோ-அளிகள் பின்றொடர்ந்துவருங் கண்ணிற்கு ஆருங் கள்ளையுடைய மலை
மலரைச்சூட்ட வற்றோ சொல்வாயாக எ-று
பருங்கண்ணென மெலிந்து நின்றது. தடமும் மாலும் பெருமையாகலின் மிகப்பெரிய
வென்பது விளங்கும். தடம் தாழ் வரை யெனினுமமையும், வருங்கண் வரை மலரென்பது* பாடமாயின்
அளிதொடருமிடத்தையுடைய வரைமலரென்க. இடமென்றது பூவினேகதேசத்தை. இன்னும்
வரைமலரென்பது ஒரு பூவை முழுதுஞ் சூட்டினானாயின். தலைவி அதனையறிந்து பேணவேண்டி
வாங்குவதாகச்கூடும். ஆகையால் இவளிஃதறியா மற்றோழியறிவது பயனாக ஒரு பூவின் முறித்ததொரு
சிறிய விதழைச் சூட்டினான்; ஆகையான் வரைந்த மலரென்றாளாம். மற்று அசைநிலை . இவை நான்கும்
நாணநாட்டம். மெய்ப்பாடு- நகை. பயன்: கரவுநாடியுணர்தல்.
*என்பது பழைய வுரைகாரர் பாடம்.
இவை முன்னூறவுணர்தலின் விகற்பம், இவை நான்கும் பெருந்திணைப் பாற்படும்
என்னை அகத்தமிழ்ச் சிதைவாகலான்; என்னை, 'கைக்கிளை பெருந்திணை யகப்புறமாகும்".
இவற்றுள் கைக்கிளை யென்பது ஒரு தலைக்காமம்; பெருந்திணை யென்பது பொருந்தாக் காமம்.
என்னை, "ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமுஞ், செப்பிய வகத் தமிழ்ச் சிதைவும் பெருந்திணை'
என்பவாகலின். நாண நாடலாகாமை; இவள் பெருநாணினளாதலான், தான் மறைந்து செய்த
காரியத்தைப் பிறரறியின் இறந்துபடும்; ஆதலான் நாண நாட்டமாகாது நடுங்க நாட்டமுமாகாது
இருவர்க்கும் உயிரொன்றாகலான் இறந்துபடு மாதலின். ஆதலால், அகத்தமிழிற்கு இவை வழுவாயின.
இனி இதற்கு வழுவமைதி "நன்னிலை நாணம்" என்பதனானறிக.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மணவொளியைப் பார்த்துக் கூட்டம் உண்டென்று சொன்னது.
செய்யுள்: பரிய கண்ணினையும் விருப்பத்தாலே கொல்லும் கொலையினையுமுடைய
நெற்றியிலே யுடைய பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தே யுள்ளவன் மிகவும் பெரிய மலையிடத்துக்
கரிய கண்கள் சிவப்பவும், கனிவாய் வெளுப்பவும், கண்ணுக்கு நிறைந்த வண்டுகள் பின்தொடர்கிற
தேனுடைத்தாகிய மலர்களைச் சூட்டத்தக்கதோ அப் பெரியசுனை?
5. மதியுடம்படுதல் *
------------------
*பேரின்பப் பொருள்; உயிர்சிவ மொன்ற றொழிலா வறிந்தது.
மதியுடம்படுதல் என்பது பலபடியும் நாண நாடிக்கூட்ட முண்மை யுணர்ந்த தோழி ,
'இம் மலையிடத்து இவ்விருவர்க்கும் இன்ப துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால்
இவ்விருவர்க்கும் உயிரொன்றே' யென வியந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
காகத் திருகண்ணிற் கொன்றே
மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே.
அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென
மயிலியற் றோழி மதியுடம் பட்டது.
இதன் பொருள்: யாவையும் ஆம் ஏகத்து ஒருவன் - எல்லாப் பொருள்களுமாய் விரியும்
ஒன்றையுடைய வொருவன்; இரும் பொழில் அம்பலவன் - பெரிய பொழில்களாற் சூழப்பட்ட
அம்பலத்தையுடையான்; மலையில் தோகைக்கும் தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் ஒன்றாய் வரும்.-
அவனது மலையில் இத்தோகைக்கும் இத்தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் பொதுவாய்* வாரா நின்றன.
அதனால்; காகத்து இரு கண்ணிற்கு மணி ஒன்றே கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர்** யாம் இன்று
கண்டனம் - காகத்திரண்டு கண்ணிற்கும் மணியொன்றே லந்தாற் போல இருவர் யாக்கையுள்
ஓருயிரை யாமின்று கண்டேம் எ.று.
*'இன்ப துன்பம் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வருதலின் தன்றுயர் காணா வென்றார்''
(சிலப்பதிகாரம்- அடைக்கலக்காதை 141-ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை).
**தலைவியுடனே தலைவனுக்கும் ஓருயிராயிருக்க உடம்பு மட்டும் இரண்டாயிருத்தல்;
" ஆனந்த வெள்ளத் தழுந்துமா ராருயிரீருருக்கொண் டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும்''
(திருக்கோவையார். 307): ''பாவை நீ புலவியி னீடல் பாவியேற் காவியொன்றிரண்டுடம் பல்லது (சீவக. 1017).
யாவையுமாமேகம்: பராசத்தி. அம்பலவன் மலையில் இன்று யாங்கண்டன மென்று கூட்டி,
வேறோரிடத்து வேறொரு காலத்து வேறொருவர் இது கண்டறிவ ரில்லை என்பது படவுரைப்பினுமமையும்.
கலந்தா ரிருவரென்பது பாட மாயின், 'காகத்திரு கண்ணிற் கொன்றே மணி* யென்பதனை
எடுத்துக் காட்டாக வுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: மதியுடம்படுதல்.
*இவள்வயிற் செலினே இவற்குடம்பு வறிதே. இவள் வயிற்செலினே இவட்கு மற்றே, காக்கை யிருகணி
னொருமணி போலக், குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கு, மொன்றுபோன் மன்னிய சென்று வாழுயிரே"
(தொல் களவியல், சூ. 114 மேற்கோள்)
நாணநாட்டம் முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கூரிய வேல்களை ஒத்த கண்களையுடையாளுடனே நாயகனுக்கும்
ஓருயிர் என்னும்படியை மயில் போன்ற பாங்கி அறுதியிட்டது.
செய்யுள் : காக்கையி னுடைய இரண்டு நயனத்துக்கும் ஓரொளி கலந்து, நின்றாற்போல இருவருடம்பிற்கும்
ஓருயிர் என்கின்றதை இப்பொழுது திட்டமாகக் கண்டோம். அதுவன்றியும், எல்லாப் பொருளுமாகிய ஒன்றாகிய
பராசக்தியையுடைய ஒப்பில்லாதவன். பெரிய காவினால் சூழப்பட்ட திருவம்பலநாதனுடைய திருமலையில்
மயிலை ஒத்த சாயலையுடையாளுக்கும் நாயகனுக்கும் இன்பம் துன்பம் ஒருப்பட்டு வாராநின்றன.
என்று பொருளாகி ஒருகாலத்து ஒருவரும் கண்டறியாத இந்தப் புதுமையை இப்பொழுது
சிதம்பர நாதன் திருமலையிடத்துக் கண்டோம் என்றுபடும். 71
9. நடுங்க நாட்டம்*
-----------------
*பேரின்பக் கிளவி:"நடுங்க நாட்ட மொன்றுஞ் சிவமே, யுயிரிடைக் கருணையென் றுற்றருணோக்கல் "
மேல் ''நடுங்கல், ', புலிமிசை வைத்தல் புகலுங்காலே''** என்றோதப்பட்ட நடுங்கநாட்ட மென்பது
கூட்ட முண்மை யுணர்ந்தனளாயினும், தலைமகள் பெருநாணினளாகலானும் தான் அவள் குற்றேவன்
மகளாகலானும் பின்னும் தான் சொல்லாடாது அவடன்னைக் கொண்டே கேட்பது காரணமாக
நெருங்கி நின்று, ஒரு புலி ஒருவனை யெதிர்ப்பட்டதெனத் தோழி அவளை நடுங்க நாடாநிற்றல்,
அதற்குச் செய்யுள்-
**பேரின்பப் பொருள் : "கருணை யளவின்மை யருள் கண்டு மகிழ்தல், ' பக்கம்-128, சூத்திரம் அடி 5-6
ஆவா விருவ ரறியா
அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே
நுடங்கிடைப் பாங்கி, நடுங்க நாடியது.
இதன் பொருள்: இருவர் அறியா அடி மூவாயிரவர் வணங்கத் தில்லை அம்பலத்து நின்றோனை
உன்னாரின் - அயனும் அரியுமாகிய இருவரறியாத அடியை மூவாயிரவரந்தணர் வணங்கத்
தில்லையம்பலத்து எளிவந்து நின்றவனை நினையாதாரைப்போல வருந்த; முன்னித் தீ வாய்
உழுவை கிழித்தது - எதிர்ப்பட்டுத் தன் கொடியவாயை உழுவை அங்காந்தது, அங்காப்ப; சிறிதே
பிழைப்பித்து இன்று ஒரு ஆண்டகை மணிவேல் பணி கொண்ட ஆறு - அதனைச் சிறிதே தப்பு வித்து
இன்றோராண்டகை மணியையுடைய வேலைப்பணி கொண்டவாறென் எ-று.
அயனும் அரியுந் தில்லையம்பலத்திற் சென்று வணங்குமா றறிந்தில ரென்னுங்
கருத்தினராகலின். ஆவா வென்பது அருளின் கட் குறிப்பு இரக்கத்தின் கட் குறிப்பாய்த்
தீவா யுழுவை கிழித்த தென்பதனை நோக்கி நின்றதெனினுமமையும் வருந்தவென
ஒரு சொல் வருவித்து உரைக்கப்பட்டது. கொடிய வுள்ளத்தராகலின் உன்னாதார்
புலிக்குவமையாக வுரைப்பினு மமையும். தீவாயையுடைய வுழுவை அவனைக்
கிழித்ததெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டதெனினு மமையும்.
அந்தோ வென்பது இரக்கத்தின் கட்குறிப்பு. இறுதிக்கண் ஆவா வென்பது
வியப்பின் கட் குறிப்பு. இதனுள் தலைமகளை நடுங்க நாடிய தெவ்வாறெனின் :
தன் கொடிய வாயைப் புலி அங்காந்தது, உழுவையினது தீவாயை வேறொன்று கிழித்தது,
உழுவையினது தீவாய் பிறிதொன்றனைக் கிழித்தது, என இம்மூன்று பொருளும் படுகையான்,
இது நடுங்க நாட்டமா யிற்று.
என்னை, தலைமகள் இங்ஙனம் நடுங்கியாராயும் வண்ணம் தோழி நாடுகையான்.
தீவாயுழுவை கிழித்ததென்ற இம்மூன்று பொருளும் வினா இங்ஙனந் தோழி யுரைப்பத் தலை.
மகள் நாடி நடுங்காநிற்கக்கண்டு, ஓராண்டகை வேலை பணி கொண்டவாறென்னென
நடுங்கத் தீர்த்தாயிற்று. இது கரவு நாடுதல். அஃதாவது வெளிப்படச் சொல்லுஞ் சொல்லன்றிப்
பிறிதொன்றன் மேல் வைத்துச் சொல்லுதல். இதுவும் பெருந்திணைப்பாற்படும்.
மெய்ப்பாடு: நகை, பயன்: நடுங்கநாடிக் கரவு நாடி யுணர்தல்;
நிருத்தம்பயின்றவன் (62) என்பது தொட்டு மெய்யேயிவற் கில்லை (66)
என்பதன் காறும் வர ஐந்துபாட்டினும் முன்னுற வுணர்தலையும் ஐயுறவாக்கி, இருவருமுள்வழி
யவன்வர வுணர்வினைத் துணிந்துணர்வாக்கினார். மைவார் (67) என்பது தொட்டு இதன்காறும்வர
இவையாறினும் முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவருமுள் வழி அவன் வரவுணர்தலென்னும்
மூன்றனையுந் துணிந்துணர்வாக்கினார். ஈண்டிவ்விகற்பங் கண்டு கொள்க.
நடுங்க நாட்டம் முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தளர்கின்ற இடையினை யுடைய பாங்கி
நாயகி நடுங்கும்படி சொல்லியது
செய்யுள்: ஆவா! ஐயோ! ஐயோ! பிரம விட்டுணுக்கள் அறியாத ஸ்ரீ பாதங்களைப்
பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்திலே மூவாயிரம் இருடிகள் வணங்கும்படி அளியனாகி
நின்றவனை நினையாதாரைப்போல அவனை எதிர்ப்பட்டுப் புலியானது தன்னுடைய பொல்லாத
வாயை அங்காத்து, 'ஐயோ' (என்னுமளவில் நாயகி அறிந்து படும்படி ஆனது)
(இனி மீளும்படி சொல்லுகிறாள் ) "சிறிது போதிலே. இதனைத் தப்புவித்து -
(ஆவா என்றது கொண்டாட்டம் :) "இப்பொழுது ஓர் ஆண்மைப்பட்டுத் தக்கவன் மணி பொருந்திய
வேலைப் பணி கொண்டபடி! (என்ன அவன் புலியை எறிந்தான் எறிந்தான் என்றுபடும்) 72
10. மடற்றிறம் *
---------------
*பேரின்பக் கிளவி: ' 'மடற்றுறை யொன்பதுஞ் சிவத்திடை மோகமுற்ற வுயிரருள் பற்றி யுரைத்தது.''
மடற்றிறம் என்பது நடுங்க நாடவும் பெருநாணினளாதலின், தலைமகள் தன் குறை
சொல்லமாட்டாது நிற்ப, இனி இவளிறந்து படவுங்கூடுமென உட்கொண்டு தலைமகனுடன்
சொல்லாடத் தொடங்காநின்ற தோழி, தானும் பெருநாணினளாதலிற் பின்னுந் தலைமகன்
குறையுறவேண்டி நிற்ப, அந்நிலைமைக்கட் டலைமகன் சென்று, 'இந்நாளெல்லாம் என் குறை
நின்னான் முடியுமென்று நின்னை வந்திரந்தேன்; இது நின்னான் முடியாமையின், யான்
மடலூர்ந்தாயினும் இக்குறைமுடித்துக் கொள்வே' னெனத் தோழிக்குக் கூறா நிற்றல்.
என்னை , "முன்னுறவுணரினு மவன் குறையுற்ற, பின்னரல்லது கிளவி தோன்றாது''
(இறையனாரகப் பொருள்,9) என்பவாகலின்.
ஆற்றா துரைத்த லுலகின்மேல் வைத்த
றன்றுணி புரைத்த லொடுவகை யுரைத்த
லருளா லரிதென னடையா லரிதென
லவயவ மெழுத லரிதென விலக்க
லுடம்படாது விலக்க லுடம்பட்டு விலக்க
றிடம்பட வொன்பதுஞ் செப்புங் காலை
வடம்படு முலைமேன் மடலா கும்மே.
இதன் பொருள்: ஆற்றா துரைத்தல், உலகின் மேல் வைத்து உரைத்தல், தன்றுணிபுரைத்தல்,
மடலேறும் வகை யுரைத்தல் , அருளாலரிதென விலக்கல், மொழி நடையெழுதலரிதென விலக்கல்,
அவயவமெழுதலரிதென விலக்கல், உடம்படாது விலக்கல், உடம்பட்டு விலக்கல் எனவிவை ஒன்பதும்
மடற்றிறமாம் எ-று அவற்றுள் -
1. ஆற்றாதுரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள்: அருளை நம்பியுயிர் மிகவு மிரங்கியது
ஆற்றாதுரைத்தல் என்பது தலைமகண்மேன் மடற்றிறங் கூறுகின்றானாகலின் அதற்கியைவுபட
அவ்விருவருழைச் சென்று நின்று, 'நீயிர் அருளாமையின் என்னுயிர் அழியாநின்றது; இதனை அறிமி' னெனத்
தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
பொருளா வெனைப்புகுந் தாண்டு
புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் தெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே
மல்லற்றிரள் வரைத்தோளவன்
சொல்லாற்றாது சொல்லியது
இதன் பொருள்: புகுந்து என்னைப் பொருளா ஆண்டு தானே வந்து புகுந்து என்னைப் பொருளாக மதித்தாண்டு;
புரந்தரன் மால் அயன்பால் இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம் - இந்திரன் மால் அயனென்னும்
அவர்களிடத்து இருளாயிருக்கின்ற ஒளி தங்கிய சிற்றம்பலமென்று சொல்லத்தகும்; சுருள் ஆர் கருங்குழல்
வெள்நகைச் செவ்வாய்த் துடி இடையீர் - சுருளார்ந்த கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்ய
வாயினையுமுடைய துடியிடையீர்; அருளா தொழியின் என் ஆருயிர் ஒழியாது அழியும் - நீயிர் அருளாதொழியின்
என தாருயிர் தப்பாமலழியும்: அதனான் அருளத் தகும் எ-று.
தொகையின்மையிற் பாலென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. சிற்றம்பலம் துடியிடையார்க்குவமை
மடற்றிறங் கூறிகின்றானாகலின், அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறுதல் கூறினான். சொல்லாற்றாது. சொல்லுதற்கும்
ஆற்றாது. மெய்ப்பாடு; அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வளப்ப முடைத்தாகிய திரண்ட மலையை நிகர்த்த தோள்களையுடையவன்
தன் குறையைச் சொல்லுதற்கு மறாமல் சொன்னது.
செய்யுள்: ஒரு பொருளல்லாத என்னை மதித்து வந்து அடிமை கொண்டு, தேவேந்திரனிடத்திலும்,
அரி, அயனிடத்திலும், அவர்களிடத்து இருளாய்த் தோன்றுகிற ஒளியாயுள்ளவன் எழுந்தருளி நிற்கின்ற
திருச்சிற்றம்பலமென்று சொல்லத் (தகும்) நெறித்த மிகக்கரிய குழலினையும், வெள்ளிய முறுவலினையும்,
சிவந்த வாயினையும், துடியொத்த இடையினையுமுடையீர் நீங்கள் அருளாதே விடின் என்னுடைய
பெறுதற்கரிய உயிர் தப்பாமே அழியும் . 73
2. உலகின் மேல் வைத்துரைத்தல்*
-------------------------------
*பேரின்பப் பொருள் : இன்பம் பெறார்க்குடல் வம்பெனவுரைத்தது
உலகின் மேல் வைத்துரைத்தல் என்பது ஆற்றாமை கூறி அது வழியாக நின்று, 'ஆடவர் தம்முள்ளமாகிய
மீன் மகளிரது கண்வலைப்பட்டால் அதனைப் பெறுவதற்கு வேறுபாயமில்லாத விடத்து மடலூர்ந்தும்
அதனைப் பெறுவர்' என உலகின் மேல் வைத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -
காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே
புலவேலண்ணல் புனைமடலேற்
றுலகின்மேல்வைத் துய்த்துரைத்தது
இதன் பொருள்: காய்சினவேல் அன்னமின் இயல் கண் வலை - காய்சினத்தையுடைய
வேல் போலும் ஒளியியலுங் கண்ணாகிய வலையை; கலந்து வீசினபோது உள்ளம் மீன் இழந்தார்
மகளிர் கலந்து வீசின போது அவ்வலைப்படுதலான் உள்ளமாகிய மீனை யிழந்தவர்கள் ; வியன்
தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து- பெரிய தென்புலியூர்க் கணுளனாகிய - ஈசனுடைய
நீற்றையும் எருக்கம் பூவையும் அணிந்து, ஓர் கிழி பிடித்து- ஒரு கிழியைக் கையிற் பிடித்து;
பாய் சினமா எனப் பனை மடல் சீறூர் ஏறுவர்-பாய வல்ல சினத்தையுடைய மாவெனப் பனை மடலைச்
சீறூர்க் கணேறுவர். தம்முள்ளம் பெறுவதற்கு வேறுபாய மில்லாத விடத்து எ-று.
மின்னியல் வேலென்று கூட்டினுமமையும். இன்: அல்வழிச்சாரியை. கண்ணென்வலையென்பதூஉம்
பாடம்: மகளிரென ஒரு சொல்வருவியாது கருவி கருத்தாவாக உரைப்பினுமமையும் . உள்ளமிழந்தவர்
உள்ளம் பெறுமளவும் தம்வயமின்றி மடலின் வயத்தராய் நிற்றலால் கருவி கருத்தா வாகக் கொள்க.
சாந்தும் எருக்கு* மென இரண்டாகலின் ஈசனவெனப்பன்மையுருபு கொடுத்தார். பாய் சினமென்புழிச் சினம்:
உள்ளமிகுதி. உய்த்துரைத்தது - குறிப்பாலுரைத்தது.
*மடலேறுவார் எருக்கமாலையை அணிதல் முறை : ''மடலே காமந் தந்த தலரே, மிடைபூ வெருக்கி
னலர்தந் தன்றே'' (நற்றிணை, 152) "எருக்கின் பிணையலங் கண்ணிமிலைந்த மணியார்ப்ப, ஓங்கிரூம்
பெண்ணை மடலூர்ந்து" (கலித்தொகை, 139, 8-10) : ''எருக்கங் கண்ணியுஞ் சூடி விருப்புடை இடப்பான்
மடந்தை நொடிப்போழ்து தணப்பினும், மடலூர் குறிப்புத் தோன்ற (திருவாரூர் நான்மணிமாலை 24-12-4).)
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: புலாலை நாறும் வேலினையுடைய நாயகன் செய்யப்பட்ட
மடலின் மேல் ஏறுகின்றதனை உலகத்தார் மேல் வைத்து உற்சாகத்தினைச் சொன்னது.
செய்யுள்: கொல்லும் சினத்த வேலையொத்த ஒளியுடைத்தாகிய கண்ணாகிய வலையைக்
கலந்து மகளிர் வீசினபோது உள்ளமாகிய மீனை இழந்தவர்கள். பெரிய பெரும்பற்றப் புலியூரையுடைய
சிவன் அணியும் சாந்தும் (திருநீறும்) எருக்க மாலையும் இவற்றாலே அலங்கரித்து ஒரு கிழியும்
கையிலே பிடித்துப் பாய்ந்து செல்லுகிற சினத்துப்பிரவியென்னும் படி சீறூரிடத்தும்
பனை மடலேறநிற்பார்கள்.
3. தன் துணிபுரைத்தல்*
---------------------
*பேரின்பப் பொருள்: "சிவம் பெறாவிடில் உய்யேனென்றருளுடன் செப்பல்"
தன்துணிபுரைத்தல் என்பது முன்னுலகின் மேல் வைத்துணர்த்தி அது வழியாக நின்று,
'என்னையும் ஒரு பெண் கொடி பிறரிகழ மடலேறப் பண்ணா நின்றது' என முன்னிலைப்
புறமொழியாகத் தன்றுணிபு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:
விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர் போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே.
மானவேலவன் மடன்மாமிசை
யானுமேறுவ னென்னவுரைத்தது
இதன் பொருள்: விண் மடங்க -விண் மடங்கவும்; விரி நீர் பரந்து வெற்புக் கரப்ப- விரிநீர்
பரத்தலான் வெற்பொளிப்பவும் : மண் மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் அண்ணல்
மண் மடங்கவும் வரும் ஊழியிறுதியாகிய ஒரு காலத்தின் கண்ணும் நிலைபெற்று நிற்கும் அண்ணல்:
மடங்கல் அதன் அம்பலவன் - சிங்கத்தினது தோலையுடைய அம்பலவன்; அருள் இலர்போல்
பெண்ணை மடல் மிசை யான்வரப் பண்ணிற்று ஓர் பெண் கொடி - அவன தருளில்லா தாரைப்
போலப் பிறரிகழப் பனை மடன்மேல் யான்வரும் வண்ணம் அறிவின்மையைச் செய்தது ஒரு பெண் கொடி எ-று.
விண்ணை மண்ணை என்புழி ஐகாரம்: அசை நிலை. மடங்குதல் - தத்தங் காரணங்களி னொடுங்குதல்
மடங்கல் - புலி எனினுமமையும். மானம் - கொண்டாட்டம் வேலையுடையவனது மானமாகிய குணம் மேன்
மேலேற்றப்பட்டதெனினுமமையும். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு : இளிவரல், பயன்: ஆற்றாமையுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வீரவேலை யுடையவன் பனை மடலாகிய புரவியின் மேலே
நானும் ஏறக்கடவேன் என்று சொன்னது.
செய்யுள்: தேவலோக மழியவும், விரி நீரான் பரந்து மலைகளழியவும், இந்த மண்ணுலகழியவும்,
இப்படிக்கு வருகிற ஊழி இறுதியான காலத்தும் (அன்று) நிலைபெற்று நிற்கும் சுவாமி சிங்கத்தின்
தோலைத் திருவுடையாக வுடைய திருவம்பலநாதன் திருவருளில்லாதாரைப் போலப் பனை மடற்
புரவியினாலே நானும் ஏறுவதாகப் பண்ணுவித்தது, ஒருபெண் வடிவாகிய வல்லிக்கொடிச்சாதி.
4. மடலேறும் வகையுரைத்தல்*
---------------------------
*பேரின்பப் பொருள்; "இவன் சிவ னடிமையென் றெவருஞ் செப்ப, இழிபா யெங்குந் திரிவே னென்றது" .
மடலேறும் வகையுரைத்தல் என்பது துணிபுகூறவும் பெரு நாணினளாதலிற் சொல்லாடாத
தோழிக்கு வெளிப்படத் தான் நாணிழந்தமை தோன்ற நின்று, 'யான் நாளை நின்னூர்த் தெருவே
மடலுங்கொண்டு வருவேன்; பின் வருவது காண்' எனத் தலைமகன் தான் மடலேறும் வகை கூறா நிற்றல் .
அதற்குச் செய்யுள்:-
கழிகின்ற வென்னையும் நின்றநின்
கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சிறூர்த் **
தெருவிடைப் போதுவனே
அடல்வேலவ னழிவுற்று
மடலேறும் வகையுரைத்தது.
** பாடம்: சீருர்த்
இதன் பொருள்: கழிகின்ற என்னையும் - கழியா நின்ற என்னையும்; நின்ற நின் கார் மயில்
தன்னையும் - யானித்தன்மையனாகவுந் தன்றன்மையளாய் நின்ற நின்னுடைய கார்மயிறன்னையும்;
கிழி ஒன்ற நாடி எழுதி - கிழிக்கட் பொருந்த ஆராய்ந்தெழுதி; யான் கைக்கொண்டு - யான் அதனைக்
கையிற்கொண்டு - என் பிறவி இன்றுகெட்டு அழிகின்றது ஆக்கியதாள் அம்பலவன் கயிலை- என்பிறவியை
இன்று கெட்டழியா நின்றதாகச் செய்த தாளை யுடைய அம்பலவனது கைலையின்; அம்தேன் பொழிகின்ற
சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவன் - அழகிய தேன் பொழியா நின்ற சாரற்கணுண்டாகிய நுமது
சீறூர்த் தெருவின் கட்டிரிவேன்; பின் வருவது காண். எ-று.
தனக்கு அவளயலென்னுங் கருத்தினனாய் நின்கார் மயிலென்றான். என்னையும் நின்
கார்மயிறன்னையும் மடலிடத் தெழுதுவே னென்றது என்னை, கார்மயினை யெழுதுவதன்றித்
தன்னையு மெழுதுமோ : வெனின், மடலெழுதிக் கையிற் கொண்டால் உரையாடுகை யின்றி இவனும்
ஓவியமாகலின் மடலின் றலையிலே தன்னூரையுந் தன்பேரையும் அவளூரையும் அவள் பேரையும்
எழுதுகையால் என்னையு மென்றான். கார்மயில் - கார் காலத்து மயில் . அழிகின்றதென நிகழ்காலத்தாற்
கூறினார், பிறத்தற்குக் காரணமாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே
வினை நின்றமையின் மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வெற்றி வேலினையுடையவன் நெஞ்சழிந்து மடலேறும்
கூறுபாட்டைச் சொன்னது.
செய்யுள்: நெஞ்சழிகின்ற என்னையும், இதற்குச் சிறிதும் இரங்காதே நின்ற நின்னுடைய
கார்காலத்து மயிலை ஒப்பாளையும் நான் கிழியிலே பொருந்தும்படி (க்கீடாக). அவருடைய
அவயவங்களுக்கு உறுப்பானவற்றை விசாரித்தெழுதி என் கையிலே பிடித்துக்கொண்டு. என் சனனம்
கெட்டழியும்படி செய்த சீபாதங்களையுடைய திருவம்பலநாதனுடைய ஸ்ரீ கயிலாயத்தில் அழகிய
தேன் பொழின்ற சாரலின் உம்முடைய சிறிய ஊர்த் தெருவுக்கு நடுவே போதக்கடவேன். 76
5. அருளாலரிதென விலக்கல்*
---------------------------
*பேரின்பப் பொருள் : ''அருளே யுயிரை யழுத்தி நிந்தை, வருமோ பக்குவ வகையா லென்றது''.
அருளாலரிதென விலக்கல் என்பது தலைமகன் வெளிப்பட நின்று மடலேறுவேனென்று
கூறக் கேட்ட தோழி, இனியிவன் மடலேறவுங்கூடுமென உட்கொண்டு, தன்னிடத்து நாணினை
விட்டுவந்து எதிர் நின்று, நீர் மடலேறினால் உம்முடைய அருள் யாரிடத்ததாமென்று அவன தருளை
யெடுத்துக்கூறி விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள் -
நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே.
அடல்வேலண்ண லருளுடைமையின்
மடலேற்றுனக் கரிதென்றது
இதன் பொருள்: நடன் - கூத்தன்; நாம் வணங்கும் தொல்லோன்- நாம் வணங்கும் பழையோன்;
நான்முகன் மால் எல்லை அறியாக் கடன் ஆம் உருவத்து அரன் - நான்முகனும் மாலும் முடியும் அடியுமாகிய
எல்லைகளை அறியாத இயல்பாகிய வடிவையுடைய அரன் ; தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை - அவனது
தில்லைக் கணுண்டாகிய வளத்தையுடைய கண்ணிற் சார்ந்த பெண்ணைக்கண்; உடன் ஆம் பெடையொடு
ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடல் நாம் புனை தரின் - உடனாகும் பெடையோடும் ஒள்ளிய
சேவலையும் முட்டையையுங் காவலை யழித்து மடலை நாம் பண்ணின்: மன்ன-மன்னனே; இன் அருள்
யார் கண்ணது- இனிய அருள் இவ்வுலகத்தில் யார் கண்ணதாம்? எ-று
அறியாவுருவமென வியையும்; அறியாத அக்கடனுளதா முருவமெனினுமமையும். மடல்விலக்கித்
தழீஇக் கொள்கின்றாளாதலின் நாமென உளப்படுத்துக் கூறினாள். நின்னருளென்பது பாடமாயின்,
யார் கண்ணருளுவையென்றுரைக்க, அண்ணல்; முன்னிலைக்கண் வந்தது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வெற்றி வேலையுடையவனே? நீ அருளுடையை யாகையாலே
மடலேறுமது உனக்கு அரிது என்றது.
செய்யுள்: திருக்கூட்டத்தாடி அருளுகிறவன் நம் போல்வாரும் வணங்குதற் கெளிய பழையவன்.
அவனுடைய திருமுடி திருவடியினெல்லையும் அயனும் மாலும் அறியப்படாத அந்தக் கடப்பாட்டற்
சிறந்த தலைவன், அவனுடைய பெரும்பற்றப் புலியூரில் அழகிய இடம் மிக்க பனையில் அதனுடன்
ஒன்றப்பட்ட பெடையுடனே அழகிய சேவலையும் முட்டையையும் காவலழித்து, நாமே மடல் பண்ணுவோமாகில்,
மன்னனே! இனிதாகிய அருள் யாவரிடத்துண்டு? என்று சொல்லியது. 77
6. மொழிநடை யெழுதலரிதென விலக்கல் *
---------------------------------------
*பேரின்பப் பொருள்: ''அருள் சிவத் தருமை யறியப்படாதெனல் (அருமை-குணம், குறி முதலியன.)
மொழிநடை யெழுதலரிதென விலக்கல் என்பது அருள் எடுத்து விலக்கவும் தன்வழி நில்லாமை கண்டு
அவன் வழி யொழுகி விலக்குவாளாக 'நுமதருள் கிடக்க மடலேறுவார் மடலேறுதல் மடலேறப்படுவா ருருவெழுதிக்
கொண்டன்றே: நுமக்கு அவள் மொழி நடையெழுதல் முடியா தாகலின் நீயிர் மடலேறுமாறென்னோ ' வென
விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்-
அடிச்சந்த மால்கண் டிலாதன
காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே
அவயவ மரிதின் அண்ணல் தீட்டினும்
இவையிவை தீட்ட லியலா தென்றது
இதன் பொருள்: சந்தம் மால் கண்டிலாதன அடிகாட்டி வந்து ஆண்டு கொண்டு - மறையும்
மாலுங் கண்டறியாதன வாகிய அடிகளை எனக்குக் காட்டித் தானே வந்தாண்டு கொண்டு; என் முடிச்சந்த
மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும் அவ்வடிகளை என் முடிக்கு நிறத்தையுடைய பெரிய
மலராகக் செய்யும் முன்னோனது புலியூரையொக்கும்; சடிச்சந்த யாழ் கற்ற மென்மொழி-சிறந்த
நிறத்தையுடைய யாழோசையின் றன்மையைக் கற்ற மென்மொழியையுடைய ; கன்னி அன நடைக்கு-
கன்னியது அன்னத்தினடைபோலு நடைக்கு ; படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்து-
படிச்சந்தமாகப் பண்ணப்படும் படங்கள் உளவோ நுமது சித்திர சாலையின் கண் எ-று.
கடுச்சந்த யாழ் கற்ற மென்மொழி யென்பதற்குச் சிறந்தவோசையையுடைய யாழ் வந்தினிதாக
வொலித்தலைக் கற்ற மென்மொழி யென்றுரைப்பாருமுளர். படிச்சந்த மென்பது ஒன்றன் வடிவை யுடைத்தாய்
அதுவென்றே கருதப்படு மியல்பையுடையது. படிச்சந்த மென்பது : பிரதிச்சந்தமென்னும் வடமொழிச்சிதைவு.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவயவங்களை அரிதாக நாயகனே! நீ எழுதினாய்; ஆகிலும்
இவற்றை உன்னாலே எழுதவொண்ணாது என்றது .
செய்யுள்: வேதமும் மாலும் கண்டறியாத ஸ்ரீ பாதங்களை எனக்குக் காட்டி என்னை வந்து அடிமை
கொண்டு அத்திருவடிகளை என் தலைக்கே பெரிதாகிய மலர்களாகச் செய்கின்ற பழையவன். அவனுடைய
புலியூரை யொத்த சிறந்த நிறமுடைத்தாகிய யாழோசையைக் கற்ற மென்மொழிக் கன்னி அன்னம் போலே
நடக்கிற நடைக்கும் (அது எழுத வராது) எழுதுகிற சித்திரங்களுமுண்டோ உன்னுடைய சித்திரசாலையிடத்து?
உண்டாமாகில், கடுக மடலேறும்படி கொண்டு வருவாயாக. 78
7. அவயவமெழுத லரிதென விலக்கல்*
-----------------------------------
* பேரின்பப் பொருள். சிவனது கருணையுஞ் செயலுமொருவரால், அறியப்படாதிஃதரிதே யென்றது.
அவயவ மெழுதலரிதென விலக்கல் என்பது 'அவளது மொழிநடை கிடக்க இவை தாமெழுத
முடியுமோ? முடியுமாயின் யான் சொன்ன படியே தப்பாமலெழுதிக் கொண்டு வந்தேறும்' என்று
அவளதவயவங் கூறா நிற்றல் , அதற்குச் செய்யுள் -
யாழுமெழுதி யெழின்முத்
தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே.
அவயவ மானவை. யிவையிவை யென்றது
இதன் பொருள்: யாழும் எழுதி - மொழியாக மொழி யோடொக்கும் ஓசையையுடைய
யாழையு மெழுதி ; எழில் முத்தும் எழுதி -முறுவலாக எழிலையுடைய முத்துக்களையுமெழுதி;
இருளில் மென்பூச் சூழும் எழுதி குழலாக இருளின் கண் மெல்லிய பூவானியன்ற குழையு மெழுதி:
ஓர் தொண்டையும் தீட்டி-வாயாக ஒரு தொண்டைக் கனியையுமெழுதி, இளமாம் போழும் எழுதிற்று
ஓர் கொம்பர் உண்டேல் -- கண்ணாக இளையதாகிய மாவடுவகிரையும் எழுதப்பட்டதோர் கொம்ப
ருண்டாயின்; கொண்டு போதுக - அதனைக்கொண்டு எம்மூர்க்கண் மடலேற வாரும் எ-று.
என் தொல் பிறவி ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இளமாம் போழும் - என்னுடைய
பழைய வாகிய பிறவிகளேழையும் கூற்றுவன் தன் கணக்கிலெழுதாத வண்ணஞ் சிதைத்தவனது
புலியூரிளமாம் போழுமெனக் கூட்டுக.
முத்து மென்னு மும்மை விகார வகையாற் றொக்கு நின்றது. சூழென்றது சூழ்ந்த மாலையை .
செய்தெனெச்சங்கள் எழுதிற் றென்னுத் தொழிற் பெயரின் எழுதுதலோடு முடிந்தன. எழுதிற்றென்பது
செயப்படுபொருளைச் செய்தது போலக் கூறி நின்றது. வினையெச்சங்களும் அவ்வாறு நின்றவெனினு
மமையும். மொழியும் இவளதாகலின் அவயவமென்றாள். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு நகை.
பயன்: மடல் விலக்குதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவளுக்கு அவயவங்களாவன இன்னதின்ன தென்று
குறித்துச் சொன்னது.
செய்யுள்: அவர் வார்த்தைக்கு ஒக்க இசை எழுகிற யாழோசையும் எழுதி முறுவலாக அழகிய
முத்து நிரையும் - எழுதி, கூந்தலும் மாலையுமாக இருளிடத்தே மெல்லிய பூவாலே தொடுக்கப்பட்ட
மாலையும் எழுதி வாயாக ஒருவகைக் கோவைக் கனியும் எழுதி, என்னுடைய பழைய பிறவிகள்
ஏழையும் கூற்றுவன் கணக்கிலே எழுதாதபடி அழித்தவன் அவனுடைய புலியூரில் இளமாவடு
வகிரையும் எழுதினதொரு வஞ்சிக் கொம்புண்டாமாகில் கடுக மடலேறும்படி கொண்டு வருவாயாக . 79
8. உடம்படாது விலக்கல்*
-----------------------
*பேரின்பப் பொருள் : ''சிவத்திடை யாமே சேர்த்து மென்று, வன்மை யொழியும் வகையை யுரைத்தது".
உடம்படாது விலக்கல் என்பது எழுதலாகாமை கூறிக் காட்டி 'அதுகிடக்க. நும்மை யாம்
விலக்குகின்றே மல்லேம்; யான் சென்று அவணினைவறிந்து வந்தாற் பின்னை நீயிர் வேண்டிற்றைச்
செய்யும்; அவ்வளவும் நீயிர் வருந்தா தொழியு' மெனத் தானுடம்படாது விலக்கா நிற்றல், அதற்குச் செய்யுள் -
ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே
அடுபடையண்ண லழிதுயரொழிகென
மடநடைத்தோழி மடல்விலக்கியது.
இதன் பொருள்: உயர் பெண்ணைத் திண் மடல் ஊர்வாய்; உயர்ந்த பெண்ணையினது திண்ணிய
மடலையூர்வாய் - ஒழிவாய்-அன்றியொழிவாய்; சீர்வாய் சிலம்ப - அழகு வாய்த்த சிலம்பை யுடையாய்;
நின் குறிப்புத் திருத்த இருந்திலம் நின் கருத்தை யாந்திருத்த விருந்தேமல்லேம்; ஈச; தில்லைக் கார்வாய்
குழலிக்கு உன் ஆதரவு ஓதி- ஈசரது தில்லைக் கணுளளாகிய கருமை வாய்த்த குழலையுடையாட்கு உனது
விருப்பத்தைச் சொல்லி; கற்பித்துக் கண்டால் - இதற்கு அவளுடம்படும் வண்ணஞ் சிலவற்றைக் கற்பித்துப்
பார்த்தால்; வாய்தரின் ஆர் அறிவர்- இடந்தருமாயினும் யாரறிவார்; பின்னை அறிந்தன செய்க-
இடந்தாராளாயிற் பின் நீயறிந்தவற்றைச் செய்வாயாக எ-று.
கார் போலுங் குழலெனினுமமையும். வாய்தரினென்பதற்கு வாய்ப்பினெனினுமமையும்,
பின்னைச் செய்கவென்றது நீ குறித்தது செய்வாயாயினும் என் குறிப்பிது வென்றவாறு.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொல்லுகின்ற படைகளை வுடைய அண்ணலே உன்னை
அழித்தற்குக் காரணமான வருத்தத்தை ஒழிப்பாயாக' என்று மடப்ப நடையை உடைய தோழி கூறி
மடல் விலக்கியது.
செய்யுள்: "உயர்ந்த பனையிற் சிக்கென்ற மடலை நீ ஊரினும் ஆம்; ஒழியினும் ஆம்
நின்னுடைய நினைவை: சிறப்பு வாய்ந்த மலையினை யுடையவனே! நாங்கள் திருத்த
விருந்தோமல்லோம்; முதலியாருடைய தில்லையில் கருமை மிகுந்த கூந்தலையுடையாளுக்கு
உன் ஆசையைச் சொல்லி, அவள் உடன்படும்படி கற்பித்துப் பார்த்தால், அவள் அதற்கு இடம் தரினும்,
யாராலே அறியப்படும்? பின்பு நீ அறிந்தனவற்றைச் செய்து கொள்'' என்று மடல் விலக்கினது.
நான் போய் அவள் நினைவு அறிந்து வருவேன். அது வரையில் நீ வருந்தாதொழி
என்றது கருத்து. 80
9. உடம்பட்டு விலக்கல்*
---------------------
*பேரின்பப் பொருள் : ''என் வழிச் சிவமே யிருத்தலால் உன்றன் குறையுங் கூறிக் கூட்டுவ னென்றது."
உடம்பட்டு விலக்கல் என்பது உடம்படாது முன் பொதுப்பட விலக்கி முகங்கொண்டு பின்னர்த்
தன்னோடு அவளிடை வேற்றுமையின்மை கூறி, 'யான் நின் குறை முடித்துத் தருவேன்: நீவருந்த வேண்டா'
வெனத்தோழி தானுடம்பட்டு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள் -
பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயா
னழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.
அரவரு நுண்ணிடைக் குரவரு கூந்தலென்
னுள்ளக் கருத்து விள்ளா ளென்றது.
இதன் பொருள்: பை நாண் அரவன் - பையையுடைய அரவாகிய நாணையுடையான்;
படு கடல்வாய் படு நஞ்சு அமுது ஆம் மை நாண் மணிகண்டன் - ஒலிக்குங் கடலிடத்துப் பட்ட
நஞ்சம் அமுதாகும் மை நாணு நீலமணி போலுங் கண்டத்தையுடையான்; மன்னும் புலியூர்
மணந்த பொன்- அவன் மன்னும் புலியூரைப் பொருந்திய பொன் போல்வாள்; நாள் மொய்
இம் முது திரை வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும் - நாட்காலத்தாடும் பெருமையையுடைய
இம்முதிய கடற்கண் யானழுந்தினேனாயினும் தான் என்னின் முற்பட்டழுந்தும்; மது வார் குழலாட்கு
என்கண் இன் அருள் இந் நாள் இது - தேனையுடைய நெடிய குழலாட்கு என் கணுண்டாகிய இனிய அருள்
இப்பொழு தித்தன்மைத்தாயிரா நின்றது எ-று
அமுதாமென்னும் பெயரெச்சம் கண்டமென்னு நிலப்பெயர் கொண்டது, மைந்நாணுங்
கண்டமெனவியையும், மணிகண்டனென்பது வடமொழி யிலக்கணத்தாற் றொக்குப்பின் றிரிந்து
நின்றது. மொய் வலி; ஈண்டுப் பெருமை மேனின்றது. குற்றேவல் செய்வார்கட் பெரியோர் செய்யும்
அருள் எக்காலத்து மொருதன்மைத்தாய் நிகழாதென்னுங் கருத்தான் இந்நாளிது வென்றாள்,
எனவே தலைமகளது பெருமையுந் தன் முயற்சியது அருமையுங் கூறியவாறாயிற்று. அரா குரா
வென்பன குறுகி நின்றன. வருமென்பது : உவமைச்சொல். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன் : தலைமகனை யாற்றுவித்தல்.
மடற்றிறம் முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பாம்பின் படம் போன்ற அல்குல் சேர்ந்த நுண்ணிய
இடையினையும், மணம் பொருந்தின கூந்தலையு முடையவள் எம்மனத்து நினைவை நீங்காள்
எனச் சொல்லியது.
செய்யுள்: படமுடைய பாம்பைத் திருவரை ஞாணா உடையவன் சத்திக்கிற கடலிடத்தே
யுண்டாகி நஞ்சமுதாகிற கருமை நாணத் தக்க நீலமணியை யொத்த திருமிடற்றை யுடையவன்.
அவன் நிலைபெற்ற பெரும்பற்றப்புலியூரிலே பொருந்தின பொன்னை யொப்பாள்; நாட்கடலாடுமிடத்தே
இந்தச் செறிந்த முதிர்ந்த திரையுடைத்தாகிய கடலிடத்தே நான் அழுந்தினும், எனக்கு முற்பட்டுத்
தான் அழுந்தா நிற்பாள்: இற்றைவரை (தேன் ஒழுகும் கூந்தலையுடையாளுக்கு என்னிடமுள்ள
இனிய அருள்) இப்படியிருக்கும், இனித் தெரியாது. 81
11. குறைநயப்புக் கூறல்*
-----------------------
*பேரின்பக் கிளவி: "குறைநயப் புத்துறை யவையிரு நான்குஞ் சிவத்தோ டுயிரைச் சேர்க்க வேண்டி.
உயிர்ப்பரி வெடுத்தெடுத் துரைத்தறி வுறுத்தல்".
குறைநயப்புக் கூறல் என்பது தலைமகனை மடல் விலக்கிக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக்
குறைநயப்பிக்க அவன் குறை கூறா நிற்றல், அது வருமாறு:-
குறிப்பறித லோடு மென்மொழி கூறல்
விரவிக் கூற லறியாள் போறல்
வஞ்சித் துரைத்தல் புலந்து கூறல்
வன்மொழி கூறன் மனத்தொடு நேர்தல்
சொன்னவிரு நான்குந் துறைகுறை நயப்பென
மன்னிய பொருளியல் வகுத்திசி னோரே
இதன் பொருள்: குறிப்பறிதல், மென்மொழியாற் கூறல், விரவிக்கூறல், அறியாள் போறல்,
வஞ்சித்துரைத்தல், புலந்து கூறல், வன்மொழியாற் கூறல், மனத்தொடு நேர்தல் எனவிவை யெட்டுங்
குறை நயப்பித்தலாம் எ.று அவற்றுள் :
1. குறிப்பறிதல்*
---------------
*பேரின்பப் பொருள் : ''சிவத்தோ டுயிரைச் சேர்பரி வுரைத்தவ், வருள்சிவக் குறிப்பை யாராய்ந்தது"
குறிப்பறிதல் என்பது தலைமகனது குறைகூறத் துணியா நின்றதோழி தெற்றெனக் கூறுவேனாயின்
இவள் இதனை மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, 'நம்புனத்தின் கட்சேயினது வடிவை யுடையராய்ச்
சினவேலேந்தி ஒருவர் பலகாலும் வாரா நின்றார்: வந்து நின்று ஒன்று சொல்லுவதுஞ் செய்கின்றிலர்:
அவரிடத்து யாஞ் செய்யத்தக்க தியாது' எனத்தான் அறியாதாள் போலத் தலைமகளோடு உசாவி,
அவணினை வறியா நிற்றல். என்னை, ' ஆங்குணர்ந்தல்லது கிழவோ டேத்துத், தான்குறை யுறுத
றோழிக்கில்லை" (இறையனாரகப் பொருள், 8) என்பவாகலின். அதற்குச் செய்யுள் : -
தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே
நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற்
குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.
இதன் பொருள்: மாதே - மாதே, தாது ஏய் மலர்க்குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி -
தாது பொருந்திய மலரையுடைய குஞ்சிகளின் கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள்
தண்டேனைப் பருகி: தேதே எனும் தில்லையோன் சேய் என -தேதேயெனப்பாடுந் தில்லையையுடை
யானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சினவேல் ஒருவர் புனத்திடை
வாளா வருவர்- சினவேலையுடையா ரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாரா நிற்பர்;
வந்து யாதும் சொல்லார் - வந்து நின்று ஒன்று முரையாடார்; மதுவார் குழல் ஏந்திழையே-
மது வார்ந்த குழலையுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே - அவரிடத்து
நாஞ்செய்யத் தக்கது யாதென்றறி கின்றிலேன் எ-று.
குஞ்சி- தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென் றுரைப்பினு
மமையும். சேயோடொத்தல், பண்பு வடிவு முதலாயினவும், சின வேலேந்தி வரையிடத்து வருதலுமாம்.
வேட்டை முதலாகிய பயன் கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம் புகுகின்றாளாதலின்,
பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்கு நின்றது; என்னை,
மேலே 'புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள் கொல்" (திருக்கோவையார், 83)
என வருதலான் யாதே யென்னுமேகாரம்: வினா. மாதே ஏந்திழையே என்புழி ஏகாரம்; விளியுருபு.
அறிகுற்ற வென்பது அறியவேண்டிய வென்னும் பொருட் கண் வந்த ஒரு மொழிமுடிபு.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நறு நாற்றமிக்க மாலையினை யுடையாளைக் குறையை
விரும்ப விருப்பது காரணமாக மனத்தின் நினைவை அறிவதாகவுற்ற அழகிய ஆபரணங்களை
யுடையாள் சொன்னது.
செய்யுள்: பெரும்பற்றப்புலியூரி வாழ்வாருடைய மயிரிலேயுள்ள அல்லி பொருந்தின பூக்களிலே
அழகிய நிறத்தை யுடைத்தாகிய வண்டுச் சாதிகள் குளிர்ந்த தேனையுண்டு 'தே தே' என்று இசை
யெழுப்புகிற பெரும்பற்றப் புலியூரில் முதலியாருடைய மகனாகிய கந்தச்சுவாமி என்னும் படி
சினத்த வேலையுடையார் ஒருவர், "மாதே! நம்புனத்திடத்தே வேட்டை முதலாயின வொன்றும் குறியாதே
வருவர்; வந்து ஒரு மாற்றமும் சொல்லார்; அவர் திறத்து நாம் செய்யக் கடவதெது? தேனார்ந்த கூந்தலினையும்
மிக்க ஆபரணங்களையும் உடையாய்!" (வேலினையுடையவர் தளர்ச்சியுறுகின்றமையை அவர் திறந்து
நாம் செய்யக் கடவதெது? சொல்வாயாக.)
2. மென் மொழியாற் கூறல்*
-------------------------
*பேரின்பப்பொருள்: அருள்பணி மொழியா லரற்கறி வுறுத்தல்.
மென்மொழியாற் கூறல் என்பது நினைவறிந்து முகங் கொண்டு அது வழியாக நின்று,
'ஒருபெரியோன் வாடிய மேனியனும் வாடாத தழையனுமாய் நம்புனத்தை விட்டுப் பேர்வதுஞ்
செய்கின்றிலன்; தன் குறை இன்னதென்று வெளிப் படச்சொல்லுவதுஞ் செய்கின்றிலன்;
இஃதென்ன மாயங் கொல்லோ: அறிகின்றிலே' னெனத் தோழி தான் அதற்கு நொந்து
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
மிக்கென்ன மாயங்கொலோ
எரிசோ தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன் கொல்
பூங்கணை வேள் கொலென்னத்
தெரியே முறையான் பிரியா
னொருவனித் தேம்புனமே
ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை
இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.
இதன் பொருள் : வரிசேர் தடங்கண்ணி- வரிசேர்ந்த பெரிய கண்ணையுடையாய்; ஒருவன் மம்மர்
கைம்மிக்கு- ஒருவன் மயக்கங் கைம்மிக்கு; எரிசேர் தளிர் அன்ன மேனியன் எரியைச் சேர்ந்த தளிரை யொக்கும்
மேனியையுடை யனுமாய் ஈர்ந்தழையன் -வாடாத தழையையுடையனுமாய்; இத்தேம் புனம் பிரியான்-
இத் தேம்புனத்தைப் பிரிகின்றிலன்; உரையான் ஒன்றுரைப்பதுஞ் செய்கின்றிலன்; புலியூர்ப் புரிசேர்
சடையோன் புதல்வன் கொல் பூங்கணை வேள் கொல் என்னத் தெரியேம் - அவன்றன்னைப்
புலியூர்க்கணுளனாகிய புரிதலைச் சேர்ந்த சடையை யுடையோனுடைய புதல்வனோ பூவாகிய
அம்பையுடைய காமவேளோ வென்று யாந் துணிகின்றிலேம் ; என்ன மாயம் கொலோ - ஈதென்ன மாயமோ! எ-று.
அவ்வாறு இறப்பப் பெரியோன் இவ்வாறு எளிவந்தொழுகுதல் என்ன பொருத்த
முடைத்தென்னுங் கருத்தால் என்னமாயங்கொலோ வென்றாள். புலியூர்ப் புரிசேர் சடையோன்
புதல்வன் கொலென்றதனால் நம்மை யழிக்க வந்தானோ வென்றும், பூங்கணை வேள்
கொலென்றதனால் நம்மைக்காக்க வந்தானோ வென்றும் கூறியவாறாயிற்று. புரிசேர் சடையோன்
புதல்வனென்றதனை மடற்குறிப்பென்றுணர்க. கொல்:ஐயம். மேனியன் தழையனென்பன
வினையெச்சங்கள். மென்மொழி மொழிந்தது - மென்மொழியான் மொழிந்தது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : விளக்க மிக்க வேலினை யுடையவன் தளர்ச்சி
யுறுகின்றமையை இனிய வார்த்தையுடைவளுக்கு மெல்லிதாகச் சொல்லிக் குறையை நயப்பித்தது.
செய்யுள்: வரி பொருந்தின பெரிய கண்களையுடையாய்! மயக்கம் மிகுந்து, இதுவென்ன
மாயந்தான் ! நெருப்பைச் சேர்ந்த தளிரை யொத்த நிறத்தையுடையனாய்க் குளிர்ந்த தழையையு
முடையனாய்ப் பெரும்பற்றப்புலியூரில் நெறித்த திருச் சடையினை யுடைய முதலியார் புத்திரனாகிய
முருகவேளோ? பூவினை அம்பாக வுடைய காமவேளோ?' என்னத்தெளியேம்; இருவரில் ஒருவராக;
நிச்சயித்தறிய மாட்டோம். தன் குறை இன்னதென்று சொல்லான் இத்தன்மையனான ஒருவன்
இத்தேனுடைத்தாகிய புனத்தை விட்டு நீங்குவதும் செய்திலன்; (இது என்ன மாயந்தான்!) 89
3. விரவிக்கூறல்*
--------------
*பேரின்பப் பொருள் : உயிர்ப்பரி வுவமையா லுவந்தரு ளுரைத்தது,
விரவிக் கூறல் என்பது வன்மொழியாற் கூறின் மன மெலியுமென்றஞ்சி ஓரலவன் தன்பெடைக்கு
நாவற் கனியை நல்கக்கண்டு ஒரு பெருந்தகை பேய்கண்டாற் போல நின்றான்; அந்நிலைமையை நீ
கண்டாயாயின் உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலான் ஆற்றி யுளேனாய்ப் போந்தே'னென
மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் - -
நீகண் டனையெனின் ** வாழலை
நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு*
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே
வன்மொழியின் மனம் மெலிவதஞ்சி
மென்மொழி விரவி மிகுத்துரைத்தது
**பாடம்- டனையென்னில், *நல்கல் கண்டு
இதன் பொருள்: நேர் இழை- நேரிழாய், அம்பலத்தான் சேய் கண்டனையன்-அம்பலத்தான் புதல்வனைக்
கண்டாற் போன்றிருக்கும் ஒருவன்; ஆங்கு ஓர் அலவன் தன் சீர்ப் பெடையின் வாய்கண்டு அனையது ஓர் நாவல்
கனி சென்று நனிநல்கக் கண்டு - அவ்விடத்து *ஓரலவன் தனதழகையுடைய பெடையின் வாயின்கண்
வண்டனையதொரு நாவற்கனியைச் சென்று மிகவுங் கொடுப்ப அதனைக்கண்டு- அப்பெருந்தகை
பேய் கண்டனையது ஒன்று ஆகிநின்றான்- அப்பெருந்தகை பேயாற் காணப்பட்டாற் போல்வதோர்
வேறுபாட்டை யுடையனாகி நின்றான்; நீ கண்டனை எனின் வாழலை-அந்நிலையை நீ கண்டாயாயின்
உயிர் வாழ மாட்டாய்; யான் வன்கண்மையேனாதலின், அதனைக் கண்டும் ஆற்றியுளேனாயினேன் எ- று
*இதனோடு திருக்கோவை, 155-ஆம் பாடல் ; அகம் 380, வரி 4-7 ஒப்பிடுக.
பேய்கண்டனைய தென்பதற்குப் பேயைக் கண்டாற் போல்வதோர் வேறுபாடென்
றுரைப்பினுமமையும்.பேய் கண்டனைய தொன்றை யுடையனா யென்னாது ஒற்றுமை நயம்பற்றி
ஒன்றாகி யென்றாள். நாவற்கனியை நனி நல்கக்கண்டு தன்னுணர்வொழியப் போயினான். இன்று
வந்திலனென்னாது பேய்கண்டனைய தொன்றாகி நின்றானென்று கூறினமையான் வன்மொழியும்,
சேய்கண்டனைய னென்றதனால் மென்மொழியும் விரவியதாயிற்று . மிகுத்தல்- ஆற்றாமை மிகுத்தல்
இவை மூன்றற்கும் மெய்ப்பாடு; இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை
மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வலிதாகச் சொல்லிக் குறை நயப்பிக்குமிடத்து ,
நாயகியுடைய மனம் வாடுமென்று பயப்பட்டு மென்மையினையும் கலந்து நாயகனுடைய
ஆற்றாமையைச் சொன்னது .
செய்யுள் : நேரிழை! நுண் தொழில்களாற் சிறந்த ஆபரணங்களையுமுடையாய் ! நான் முன்பு
சொன்ன பெரிய தகைமைப் பாட்டையுடையவன் , திருவம்பல நாதனுடைய பிள்ளையாகிய
முருகவேளைக் கண்டாலொப்பன்; அவனுடைய சன்னதியிலே ஒரு சேவல் நண்டு தன்னுடைய
சீரிய பெடை நண்டின் வாயிலே வண்டு போல் கரியதொரு நாவற்கனியைக் கொடுக்கக் கண்டு,
பேயைக்கண்டவர்கள் தங்கள் உணர்வு இழந்து நின்றாற்போலத் தன்னுணர்வு இழந்து நின்றான்;
காண் இத்தன்மையை; நீ கண்டாயாமாகில் உயிர் வாழமாட்டாய் காண்.
சென்று-தான் பழமெடுத்த இடத்தினின்றும் சென்று நனி உணர்விழத்தலும் கூடும் (?) 84
4. அறியாள் போறல்*
--------------------
* பேரின்பப் பொருள்: சிவமருட் கறியமற் றொன்றாற் செப்பல்
அறியாள் போறல் என்பது பேய்கண்டாற்போல நின்றானெனத் தலைமகனிலைமை
கேட்ட தலைமகள் பெரு நாணினளாதலின் இதனையறியாதாளைப்போல, "இஃதொரு கடல்
வடிவிருந்தவாறு காணா' யெனத் தானொன்று கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -
சங்கந் தருமுத்தி யாம்பெற
வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லை ப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே
அறியாள் போன்று, குறியாள் கூறியது .
இதன் - பொருள்: ஏந்திழை ஏந்திழாய்; பல்மா வங்கம் மலி தொல்லைக் கலி நீர் தில்லை
வானவன் நேர் வரும் இத் தன்மைத்தாகலிற் பலவாய்ப் பெரியவாகிய மரக்கலங்கள் மிகப் பெற்ற
பழையதாகிய கடல் தில்லைவானவற் கொப்பாம் எ - று; சங்கம் தரு முத்து யாம் பெற வான்கழிதான்
கெழுமி- சங்கு தரு முத்துக்களை யாம்பெறப் பெரிய கழிகளைத் தான் பொருந்தி; பொங்கும் புனற்
கங்கை தாங்கி -பொங்கும் புனலையுடைய கங்கையைத் தாங்கி; பொலி கலிப்பாறு உலவு துங்கம்
மலிதலை ஏந்தலின் - பொலிந்த ஆரவாரத்தையுடைய பாறாகிய மரக்கலங்க ளியங்குந்
திரைகளின் மிகுதியை யுடைத்தாகலின், எனக் கடலிற்கேற்பவும்-
சங்கம் தரும் முத்தி யாம் பெற வான் கழி தான் கெழுமி. திருவடிக்கணுண்டாகிய
பற்றுத் தரும் முத்தியை யாம் பெறும் வண்ணம் எல்லாப் பொருளையும் அகப்படுத்தி நிற்கும்
ஆகாயத்தையுங் கடந்து நின்ற தான் ஒரு வடிவு கொண்டுவந்து பொருந்தி; பொங்கும் புனற்கங்கை
தாங்கி- பொங்கும் புனலையுடைய கங்கையைச் சூடி; பொலி கலிப்பாறு உலவு துங்கம் மலிதலை
ஏந்தலின்- மிக்க ஆரவாரத்தையுடைய பாறாகிய புட்கள் சூழா நின்ற உயர்வுமிக்க தலையோட்டை
யேந்துதலின், எனத் தில்லை வானவற் கேற்பவும் உரைக்க.
வான்கழி - சிவலோக மெனினு மமையும். குறை நயப்பாற்றலை மகனிலைமை கேட்ட
தலைமகள் பெரு நாணினளாகலின், மறுமொழிகொடாது பிறிதொன்று கூறியவாறு.
ஒரு சொற்றொடர் இரு பொருட்குச் சிலேடையாயினவாறு போலத் தோழிக்கும்
ஓர்ந்துணரப்படும். ஓர்ந்துணர்தலாவது இவ்வொழுக்கங் களவொழுக்க மாகையாலும்
தலைமகள் பெருநாணின ளாகையாலும், முன்றோழியாற் கூறப்பட்ட கூற்றுகட்கு
வெளிப்படையாக மறுமொழி கொடாது, ஓர்ந்து கூட்டினால் மறுமொழியாம்படி கடலின்
மேல் வைத்துக் கூறினாள்.
என்னை , முன்னர் நீ புரிசேர் சடையோன் புதல்வனென்றும், பூங்கணைவேளென்றும்
உயர்த்துக் கூறியவெல்லாம் அவனுக்குரிய, அங்ஙனம் பெரியவன் தன் மாட்டுண்டான புணர்ச்சியான
பேரின்பத்தை நாம்பெறுகை காரணமாக இங்ஙன மெளிவந்து உன்னை வந்து சேர்ந்தான்;
அஃதென் போலவெனின், பெறுதற்கரிய சங்கு தருகிற முத்தை நாம் பெறுவான் எளிதாகக் கடல்
பெரியகழியை வந்து பொருந்தினாற்போல, இனி உனக்கு வேண்டியது செய்வாயாகவென
மறுமொழி யாயிற்று. மெய்ப்பாடு : மருட்கை, தோழி சொன்ன குறை யறியாள் போறலிற்
பயன்: அறியாள் போறல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பாங்கி சொன்ன வார்த்தையை அறியாதாள் போன்று
தன் நெஞ்சில் நினையாதொன்றைச் சொல்லியது.
செய்யுள்: மிக்க ஆபரணங்களையுடையாய் ! பழையதாய்ப் பலவாய மிக்க மரக்கலங்களால்
சிறந்த கடல் பெரும்பற்றப் புலியூரில் தேவனாகிய முதலியாரை ஒக்கும் காண்:
அதற்குக் காரணம் என் எனில், சிலேடையினாலே ஒக்கும்:
அன்பு தருகிற முத்தியை அன்பிலாத நாமும் பெறும்படி ஆகாயத்தையும் கழிந்துள்ளதான
ஒரு திருவடியிலே பொருந்தி மிக்க நீருடைத்தாகிய கங்கையையும் திருச்சடையிலே தரித்துப்
பொலிந்தவர் வார்த்தை யுடைத்தாகிய பற்றென்னும் புட்கள் உலாவப்பட்ட பெருமை மிக்க
தலையோட்டைத் தரித்தலானும்:
சங்குதரும் முத்துக்களை முத்துக் கொழிப்பாரே யன்றி நாமும் பெறும்படி மிக்க கழிகளைத்
தான் பொருந்தி மிக்க நன்னீரை யுடைத்தாகிய கங்கை முதலாகிய ஆறுகளையும் தரித்து மிக்கவர்
வார்த்தை உடைத்தாகியவாறு படகுகள் உலவப்பட்ட பெருமை மிகுதலையும் தரித்தலாலே: -
தில்லை வானவனையொக்கும். 85
5. வஞ்சித்துரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள் : சிவமுயிர்க் கொன்றாற் பின்னுஞ் செப்பல்
வஞ்சித்துரைத்தல் என்பது நாணினாற் குறை நேரமாட்டாது வருந்தா நின்ற தலைமகள்,
'இவளும் பெருநாணின ளாதலின் என்னைக் கொண்டே சொல்லுவித்துப் பின் முடிப்பாளாயிரா நின்றாள்;
இதற்கியானொன்றுஞ் சொல்லா தொழிந்தால் எம்பெருமான் இறந்துபடுவனென உட்கொண்டு,
தன்னிடத்து நாணினை விட்டுப் பாங்கற்கூட்டம் பெற்றுத் தோழியிற் கூட்டத்திற்குத் துவளா
நின்றானென்பது தோன்றப், பின்னும் வெளிப்படக்கூறமாட்டாது மாயவன் மேல் வைத்து வஞ்சித்துக்
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் : -
புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந்தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே
நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித் திவையிவை
செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக் குரைத்தது.
இதன் பொருள்: புரம் கடந்தான் அடி காண்பான்- புரங்களைக் கடந்தவனது அடிகளைக்
காணவேண்டி; 'புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு எந்தாய் என்று இரப்ப- நெறியல்லா நெறியான்
நிலத்தைப் பிளந்து கொண்டு புக்குக் காணாது பின் வழிபட்டு நின்று எந்தாய் அருள வேண்டுமென்றிரப்ப,
தன் ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான் ஒன்று காட்ட - தன்னுடைய இரண்டு திருவடிகளையுந்
தொழுதற்கு என்னுடைய இரண்டு கரங்களையுந் தந்தவனாகிய அவன் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்ட;
மற்று ஆங்கதும் காட்டிடு என்று தில்லை அம்பல முன்றில் அம் மாயவன் வரம் கிடந்தான்- மற்றதனையுங்
காட்டிடல் வேண்டுமென்று தில்லையம்பல முற்றத்தின் கண் முன்னர் அவ்வாறு யானென்னுஞ் செருக்காற்
காணலுற்ற மாயவன் வரங்கிடந்தாற் போலும் எ-று.
விண்டென்பதற்கு முன்னுரைத்ததே (திருக்கோவையார், 24) உரைக்க. மாயவன் முதலாயினார்க்கு
அவ்வாறரியதாயினும் எம்மனோர்க்கு இவ்வாறெளிவந்தன வென்னுங் கருத்தால், - தன்னடிக் கென்னிரண்டு
கரங் கடந்தானென்றார். ஆங்கதென்பது ஒரு சொல், இன்னும் வரங்கிடக்கின்றானாகலின், முன்கண்டது
ஒன்று போலு மென்பது கருத்து, புரங்கடந்தா னடிகளைக் காணுமாறு வழிபட்டுக் காண்கையாவது:
அன்னத்திற்குத் தாமரையும், பன்றிக்குக் காடுமாதலால் இவரிங்ஙனந் தத்த நிலைப்பரிசே தேடுதல்.
இவ்வாறு தேடாது தமதகங்காரத்தினால் மாறுபட்டுப் பன்றி தாமரையும், அன்னங் காடுமாகப்
படர்ந்து தேடுதலாற் கண்டிலர். இது நெறியல்லா நெறி யாயினவாறு. இனி இது தோழிக்குத் தலைவி
மறுமொழியாகக் கூறியவாறு என்னை? ஒன்று காட்டவென்றது முன்னர்ப் பாங்கற் கூட்டம் பெற்றான்.
அதன் பின் நின்னினாயகூட்டம் பெறுகை காரணமாக நின்னிடத்து வந்திரந்து குறையுறா நின்றான்;
அஃதென் போல வெனின், மற்றாங்கதுங் காட்டிடென்று மால் வரங்கிடந் தாற்போல என்றவாறு.
வஞ்சித்தல்- மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது பிறிதொன்றாகக் கூறுதல்.
இவையிவை - முன்னர்ப் பாட்டும் இப்பாட்டும். இதனைத் தோழி கூற்றாக வுரைப்பாருமுளர்.
இவையிவையென்னு மடுக்கானும், இனி 'உள்ளப்படுவன வுள்ளி' எனத் தலைமகளோடு புலந்து
கூறுகின்றமையானும் இவ்விரண்டு திருப்பாட்டும் மகள் கூற்றாதலே பொருத்தமுடைத் தென்பதறிக.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நெஞ்சத்தில் நிகழ்கிற படியைக் கரந்து செஞ்சடையோன்
புகழாகியவற்றைத் தோழிக்குச் சொன்னது.
செய்யுள்: முப்புரங்களையும் செயித்தவனுடைய திருவடிகளைக் காண வேண்டிப் பூமியை இடந்து
புகுந்து, அகங்கார முகத்தினால் அறியப்படாமையாலே திருவம்பலத்திலே புகுந்து' நீயே இரங்க வேண்டும்,
எந்தாய்' என்று வேண்டிக் கொள்ளத் தன்னுடைய இரண்டு திருவடிகளையும் (தொழுவதற்கு எனக்கு இரண்டு
கைகளையும் கொடுத்தவன் ) அவனுக்குச் சிறிதிரங்கி ஒரு திருவடியைக் காட்டியருள, மற்றத் திருவடியையும்
காட்டியருள வேண்டுமென்று அங்ஙனே அகங்கரித்த மாயவன் தில்லையம்பல முன்றில் புகுந்து வரங்கிடந்தான். 89
6. புலந்து கூறல்*
---------------
*பேரின்பப் பொருள் : அருடனை வெறுத்தரற் கறிய வுரைத்தது
புலந்து கூறல் என்பது வெளிப்படக் கூறாது வஞ்சித்துக் கூறுதலான், 'என்னோடிதனை வெளிப்படக்
கூறாயாயின் நின்காதற் றோழியர்க்கு வெளிப்படச் சொல்லி அவரோடு சூழ்ந்து நினக்குற்றது செய்வாய்;
யான் சொன்ன அறியாமையை நின்னுள்ளத்துக் கொள்ளாது மறப்பாயாக ; யான் வேண்டுவதிதுவே' யெனத்
தோழி தலைமகளோடு புலந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் : -
உள்ளப் படுவன வுள்ளி
யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
தறிவிலென் கூற்றுக்களே.
திருந்திய சொல்லிற் செவ்வி பெறாது
வருந்திய சொல்லின் வகுத்துரைத்தது
இதன் பொருள் : உள்ளப்படுவன உள்ளி-இதன் கண் ஆராயப்படுவனவற்றை ஆராய்ந்து;
உரைத் தக்கவர்க்கு உரைத்து- இதனை வெளிப்படவுரைத்ததற்குத் தக்க நின் காதற்றோழியர்க்குரைத்து ;
படிறு மெள்ளத்துணி - அவரோடுஞ் சூழ்ந்து நீ படிறென்று கருதிய இதனை மெள்ளத் துணிவாய்; துணியேல் -
அன்றித் துணியாதொழிவாய்; கள்ளப் படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல் - நெஞ்சிற்
கள்ளத்தையுடைய வஞ்சகர்க்கு அருள் செய்யாத அரனது தில்லையை ஒருகாற் காணாதாரைப்போல;
அறிவிலென் கூற்றுக்கள் கொள்ளப் படாது - அறிவில்லாதேன், சொல்லிய சொற்களை உள்ளத்துக்
கொள்ளத்தகாது: மறப்பது- அவற்றை மறப்பாயாக; யான் வேண்டுவல் இது-யான் வேண்டுவதிதுவே எ-று.
தில்லை காணலர் தோழிகூற்றிற்குவமை. கொள்ளப் படாதென்பது வினை முதன் மேலுஞ்
செயப்படு பொருண் மேலுமன்றி வினை மேனின்ற முற்றுச் சொல்: "அகத்தின்னா வஞ்சரை யஞ்சப்படும்''
(திருக்குறள் - கூடா நட்பு 4) என்பது போல. மறப்பதென்பது; வியங்கோள். வருந்திய சொல்லின் -
வருத்தத்தை வெளிப்படுக்குஞ் சொல்லான்; சொல்லி யென்பதூஉம் பாடம். வகுத்துரைத்தது -
வெளிப்படச் சொல்ல வேண்டுஞ் சொற்கேட்குமளவுஞ் சொல்லுஞ்சொல்: அஃதாவது நீ சொல்லத் தகுங்
காதற்றோழியர்க்கு வெளிப்படச் சொல்லென்று புலந்து கூறியது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: திருந்திய சொற்களால் இடம்பெறாது வலிதாகச் சொல்லுகிற
சொற்களினாலே கூறுபடுத்துச் சொன்னது
செய்யுள்: என்னைக் கரந்து போகிற காரியத்துக்கு விசாரிக்கத் தகுவனவற்றையும் விசாரித்து,
உரைக்கத்தக்க போக்குரைத்துச் சொல்லத் தக்க நின் காதற்றோழிமார்க்கும் சொல்லி, எனக்கு வஞ்சித்துப்
போகிற இதனை மெல்லத்துணிவாய்; (அல்லது துணியாது) ஒழிவாய்; வஞ்சகராய் வஞ்சகந்தன்னை
ஒளிப்பார்க்கு ஒருநாளும் அருளாத கர்த்தர், அவனுடைய திருவம்பலத்தைத் தெரியாதாரைப் போல
அறிவில்லாது என்னுடைய வார்த்தைகளை மனத்திற் கொள்ளாதே மறப்பாயாக; இத்தனையும் உன்னை
வேண்டிக் கொள்கின்றேன் யான், 87
7. வன்மொழியாற் கூறல் *
------------------------
*'பேரின்பப் பொருள் "அருள்செயா விடிலுல கலராமழிவா மலரெனல் ' (மலர் அருள்செய்.)
வன்மொழியாற்கூறல் என்பது புலந்து கூறாநின்ற தோழி ' அக்கொடியோன் அருளுறாமையான்
மெய்யிற் பொடியுங் கையிற்கிழியுமாய் மடலேறத் துணியா நின்றான்; அக்கிழிதான் நின்னுடைய வடிவென்று
உரையுமுளதாயிருந்தது; இனி நீயும் நினக்குற்றது செய்வாயாக; யானறியே'னென வன்மொழியாற்
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
மேவியந் தோலுடுக் குந்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல் செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே.
கடலுல கறியக் கமழலந் துறைவன்
மடலே றும்மென வன்மொழி மொழிந்தது
இதன் பொருள்: மெய்யில் மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி-மெய்க்கட் பூசியது
விரும்பி நல்ல தோலைச் சாத்துந் தில்லையானுடைய நீறு; கையில் ஓவியம் தோன்றும் கிழி-கையின்க
ணுண்டாகியது சித்திரம்விளங்குங்கிழி; நின் எழில் என்று உரை உளது- அக்கிழி தான் நின் வடிவென்று
உரையுமுளதாயிருந்தது; தூவி அம் தோகை அன்னாய், தூவியையுடைய அழகிய தோகையையொப்பாய்.
என்ன பாவம்-இதற்குக் காரணமாகிய தீவினை யாதெனின்றறியேன்; சொல் ஆடல் செய்யான் -ஒன்றுமுரையாடான் :
பாவி - இருந்தவாற்றான் அக் கொடியோன்; அந்தோ பனைமா மடல் ஏறக் கொல் பாவித்தது-அந்தோ
பனையினது பெரிய மடலேறுதற்குப் போலு நினைந்தது எ-று .
கிழியென்றது கிழிக்கணெழுதிய வடிவை, தன்குறை யுறவுகண்டு உயிர் தாங்கலேனாக
அதன் மேலும் மடலேறு தலையுந் துணிய நின்றா னென்னுங் கருத்தால் பாவியென்றாள். எனவே,
அவனாற்றாமைக்குத் தானாற்றாளாகின்றமை கூறினாளாம். கமழலந்துறைவ னென்பதற்குக்
கூம்பலங் கைத்தல மென்பதற் குரைத்தது உரைக்க.(திருக்கோவையார், 11 ) இவை மூன்றற்கும்
மெய்ப்பாடு: இளி வரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கடல் சூழ்ந்த உலகத்திலுள்ள (மக்கள் அறிய)
நறுநாற்றம் கமழ்தலை யுடைத்தாகிய அழகினையுடைய துறைவன் மடலேறப் புகாநின்றான்
என்று வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது.
செய்யுள் : விரும்பி, அழகிய தோலையுடுக்கிற திருவம்பல நாதனுடைய திருநீற்றை
மெய்முழுதும் பூசிக் கையிற் பிடிக்கிற சித்திரம் விளங்குகிற படம் உன் வடிவாயிருந்ததென்று
வார்த்தை உண்டாகியிருந்தது: ஆதலால், தூவியாற் சிறந்த அழகினையுடைய மயிலையொப்பாய்
தன் குறை சொல்வதும் செய்யானாய்த் தான் என்னை வந்து குறை வேண்டவும் நான் மறுக்கும்
பாவத்தைப் பண்ணினவன், பனைத் துண்டாகிய மிக்க மடலேறுவதாகவோ நினைந்து நின்றது:
ஐயோ. பாவி. 88
8.மனத்தொடு நேர்தல் *
---------------------
*பேரின்பப் பொருள்: "சிவமுயிர்க் கின்பஞ் சேர விரங்கல்,
மனத்தொடுநேர்தல் என்பது ஆற்றாமையான் மடலேறத் துணியா நின்றானெனத்
தோழியால் வன்மொழி கூறக் கேட்ட தலைமகள் அதற்குத் தானாற்றாளாய்த் தலைமகனைக்
காணவேண்டித் தன் மனத்தொடு கூறி நேரா நிற்றல். அதற்குச் செய்யுள் :--
பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரி நோய்
என்னா லறிவில்லை யானொன்
னுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசு துன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே
அடல்வேலவ னாற்றானெனக்
கடலமிழ்தன்னவள் காணலுற்றது.
இதன் பொருள்: பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என- பொன் போலும் நிறைந்த
சடையை யுடையவனது புலியூரைப் புகழாதாரைப்போல வருந்த; புரி நோய் என்னால் அறிவு இல்லை -
எனக்குப் புரிந்த நோய் என்னா லறியப்படுவதில்லை; யான் ஒன்று உரைக்கிலன்- ஆயினும் இதன் றிறத்து
யானொன்றுரைக்க மாட்டேன்; துணை மனனே - எனக்குத் துணையாகிய மனனே; வந்து அயலார்
சொன்னார் எனும் இத்துரிசு துன்னாமை - அயலார் சொன்னாரென்று இவள் வந்து சொல்லுகின்ற
இக்குற்றம் என் கண் வாராமல்; என் ஆழ் துயர் வல்லையேல்- அவராற்றாமை கூறக் கேட்டலா னுண்டாகிய
என தாழ் துயரை உள்ளவாறு சொல்ல வல்லையாயின் ; நீர்மை இனியவர்க்குச் சொல்லு- நீர்மையையுடைய
இனியவர்க்கு நீ சொல்லுவாயாக எ.று.
புரிதல் - மிகுதல். அயலார் சொன்னாரென்றது, ஓவியந் தோன்றுங்கிழி நின்னெழிலென் றுரையுளதால் ”
( செ.88) என்றதனைப்பற்றி அயலார் சொன்னாரென்பதற்கு யானறியாதிருப்ப அவராற்றாமையை
அயலார் வந்து சொன்னாரென்னும் இக்குற்றமென்றுரைப்பினு மமையும். இப் பொருட்கு அயலாரென்றது
தோழியை நோக்கி, ஆழ்துயர் ஆழ்தற்கிடமாந் துயர். இவ்வாறு அவராற்றாமைக்கு ஆற்றாளாய் நிற்றலின்:
தோழி குறை நேர்ந்தமை யுணரு மென்பது பெற்றாம்; ஆகவே இது தோழிக்கு வெளிப்பட மறுமொழி
கூறியவாறாயிற்று. சொல்லு நீர்மை யினியவர்க்கென்றவதனால் தன்றுயரமும் வெளிப்படக் கூறி
மடலால் வருங் குற்றமுந் தன்னிடத்து வாராமல் விலக்கச் சொன்னாளாயிற்று. மெய்ப்பாடு- அச்சம்.
ஆற்றானெனக் கேட்டலிற் பயன்: குறை நேர்தல்.
குறைநயப்புக் கூறல் முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : கொலைத் தொழிலாற் சிறந்த வேலினையுடையவன்
ஆற்றான் என்று சொல்லக்கேட்டுக் கடலிற் பிறந்த அமுதத்தை ஒப்பாள் காண நினைந்தது.
செய்யுள் : பொன்னை யொத்த திருச்சடையினை யுடையவன் அவனுடைய புலியூரை
வாழ்த்தாதாரைப் போலே வருந்தும்படி வந்த நோயானது என்னால் அறியப்பட்டதில்லையாகிலும்
(இதற்கு நான் அல்லன் என்று) யான் மறுமாற்றம் சொல்லேன்; அயலார்கள் வந்து சொன்னார்கள் என்ற
இக்குற்றம் என்னிடத்துச் சேராதபடி, துணையாகிய மனமே, குணங்களாலே நல்லவற்கு, நான் அழுந்த
நின்ற கிலேசத்தை நீயே அறிவிப்பாய். 89
12. சேட்படை*
--------------
*பேரின்பக் கிளவி: சேட்படை யிருபத் தாறு துறையுங் கிடையா வின்பங் கிடைத்தலாலுயிரை,
யமை காட்டி யறியாள் போலப் பலபல வருமை பற்றி யுரைத்த, வருளே சிவத்தோ டாக்கவருளல்!..
சேட்படை யென்பது தலைமகளைக் குறைநயப்பித்துத் தன்னினாய கூட்டங் கூட்டலுறுந்
தோழி தலைமகளது பெருமையும் தனது முயற்சியதருமையும் தோன்றுதல் காரணமாகவும்,
இத்துணை யருமையுடையாள் நமக்கெய்துதற் கருமையுடையளென இதுவே புணர்ச்சியாக
நீட்டியாது விரைய வரைந்து கோடல் காரணமாகவும். தலைமகனுக்கியைய மறுத்துக்
கூறா நிற்றல். அது வருமாறு:-
தழை கொண்டு சேற றகாதென்று மறுத்த
னிலத்தின்மை கூற னினைவறிவு கூறல்
படைத்து மொழிதலொடு பனிமதி நுதலியை
யெடுத்துநா ணுரைத்த லிசையாமை கூறல்
செவ்வியில ளென்றல் சேட்பட நிறுத்த
லவ்வினிய மொழி யவட்குரை யென்றல்
குலமுறை கிளத்தல் கோதண்டத் தொழில்
வலிசொல்லி மறுத்தன் மற்றவற் கிரங்கல்
சிறப்பின்மை கூறல் சிறியளென் றுரைத்தன்
மறைத்தமை கூறி நகைத்துரை செய்த
னகைகண்டு மகிழ்த ளானவ டன்னை
யறியே னென்ற லவயவங் கூறல்
கண்ணயந் துரைத்தல் கையுறை யெதிர்தன்
முகம்புக வுரைத்தன் முகங்கண்டு கூறல்
வகுத்து ரைத்தலொடு வண்டழை யவட்கு
மிகுத்துரை செய்து விரும்பிக் கொடுத்த
றழைவிருப் புரைத்த றானிரு பத்தா
றிழை வளர் முலையா யிவைசேட் படையே
இதன் பொருள்: தழைகொண்டுசேறல், சந்தனத் தழை தகாதென்று மறுத்தல், நிலத்தின்மைகூறி மறுத்தல்,
நினைவறிவு கூறி மறுத்தல், படைத்து மொழியான் மறுத்தல், நாணுரைத்து மறுத்தல், இசையாமை கூறி மறுத்தல்,
செவ்வியிலன் என்று மறுத்தல், காப்புடைத்தென்று மறுத்தல், நீயே கூறென்று மறுத்தல் , குலமுறை கூறி மறுத்தல் ,
நகையாடி மறுத்தல், இரக்கத்தொடு மறுத்தல், சிறப்பின்மை கூறி மறுத்தல், இளமை கூறி மறுத்தல்,
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல், நகை கண்டு மகிழ்தல், அறியாள் போன்று நினைவு கேட்டல்,
அவயங்கூறல், கண்ணயந்துரைத்தல், தழையெதிர்தல், குறிப்பறிதல், குறிப்பறிந்து கூறல்,
வகுத்துரைத்தல், தழையேற்பித்தல், தழைவிருப்புரைத்தல் என விவையிருபத்தாறும் சேட்படையாம் எ-று.
அவற்றுள் -
1. தழைகொண்டுசேறல்*
-----------------------
*பேரின்பப் பொருள் : மலரெடுத் துயிரருள் வழியே சென்றது
தழை கொண்டுசேறல் என்பது மேற் சேட்படை கூறத் துணியா நின்ற தோழியிடைச் சென்று
அவளது குறிப்பறிந்து, பின்னுங் குறையுறவு தோன்ற நின்று நும்மா லருளத் தக்காரை அலையாதே
இத் தழை வாங்கிக்கொண்டு என் குறை முடித்தருளுவீரா'மென்று , மறுத்தற்கிடமறச்
சந்தனத் தழை கொண்டு தலைமகன் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள் -
தேமென் கிளவிதன் பங்கத்
திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமப் போதுங்கொள்
ளீர்தமி யேன்பு லம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.
கொய்ம்மலர்க்குழலி குறைநயந்தபின்
கையுறையோடு காளை சென்றது.
இதன் பொருள்: தேமென் கிளவி தன் பங்கத்து இறை உறைதில்லை அன்னீர் - தேன் போலும்
மெல்லிய மொழியை யுடையானது கூற்றையுடை யுய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; பூமெல்
தழையும் அம்போதும் கொள்ளீர் - யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய
பூக்களையும் கொள்கின்றிலீர்; தமியேன் புலம்ப அருங்கொடும் பாடுகள் ஆம் என்று செய்து- உணர்விழந்த
யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகுமென்று துணிந்து செய்து
நும் கண்மலர் ஆம் காமன் கணைகொண்டு அலை கொள்ளவோ முற்றக் கற்றது. நுங்கண் மலராகின்ற
காமன் கணை கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது.
நும்மால் அருளுமாறு கற்கப்பட்டதில்லையோ! எ-று.
பங்கத்துறையிறை யென்பதூஉம் பாடம்' தமியேன் புலம்பவென்பதற்குத் துணையிலாதேன்
வருந்தவெனினுமமையும். மேற் சேட்படை கூறுகின்றமையின் அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறவு
கூறினான். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல். அவ்வகை தோழிக்குக் குறைநேர்ந்த
நேரத்துத் தலைமகன் கையுறை யோடுஞ் சென்று இவ்வகை சொன்னா னென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பறித்த பூவை அணிந்த அளகத்தினை உடையவள்
இறைக்கு உடன்பட்டபின், கையுறை ஏந்திக் கொண்டு காளையாகிய நாயகன் எதிர் சென்றது.
செய்யுள்: தேனை ஒத்து மெத்தென்ற திருவார்த்தைகளையுடைய பரமேசுவரியை
பாகத்திலேயுள்ள சுவாமி, அவன் வாழ்கின்ற புலியூரை யொப்பீர்! பூவுடைத்தாகிய மெல்லிய
தழையையும் அழகிய பூவையும் வாங்கிக் கொள்ளுகின்றீரில்லை; அஃதிருக்க இழிந்து தனித்து நான்
வருந்த 'இது பொறும்' என்று பொறுத்தற்கரிய கொடுமைப் பாட்டினைச் செய்து, உங்களுடைய
நயன (மலர்களாகிய) காமபாணத்தைக் கொண்டு வருத்தும் அதுவேயோ முழுதும் கற்றது'
(துறையுறை என்பது இவர் பாடம் ) 90
2. சந்தனத்தழை தகாதென்று மறுத்தல்*
------------------------------------
*பேரின்பப் பொருள்: "உன்னறி வாமல ரொவ்வா தென்றது."
சந்தனத் தழை தகாதென்று மறுத்தல் என்பது தலைமகன் சந்தனத் தழை கொண்டு செல்ல,
அதுவழியாக நின்று, சந்தனத் தழை இவர்க்கு வந்தவாறென்னோ வென்று ஆராயப்படுதலான் இத் தழை
எமக்காகாதெனத் தோழி மறுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :--
ஆரத் தழையராப் பூண்டம்
பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
றோன் சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழை கொடு வந்தா
ரெனவரும் ஐயுறவே
பிறைநுதற் பேதையைக் குறைநயப்பித்தபின்
வாட்படை யண்ணலைச் சேட்படுத்தது.*
*இதற்குப் பழையவுரைகாரர் பாடம் வேறு
இதன் பொருள்: ஆரத் தழை அராப்பூண்டு அம்பலத்து அனலாடி- ஆரமாகிய தழைந்த அரவைப்பூண்டு
அம்பலத்தின் கண் அனலோடாடி : அன்பர்க்கு ஆரத் தழை அன்பு அருளி நின்றோன் - அன்பராயினார்க்குத்
தானும் மிக்க அன்பைப் பெருகச்செய்து நின்றவன்; சென்ற மாமலயத்து ஆரத் தழை அண்ணல் தந்தால்-
சேர்ந்த பெரிய பொதியின் மலையிடத் துளவாகிய சந்தனத் தழைகளை அண்ணல் தந்தால்: இவை அவள்
அல்குற் கண்டால் - இத்தழைகளைப் பிறர் அவளல்குற்கட் காணின்; அத்தழை கொடு வந்தார் ஆர் என
ஐயுறவு வரும்- ஈண்டில்லாத அத்தழை கொண்டுவந்தார் யாவரென ஐயமுண்டாம். அதனால் இவை கொள்ளேம் எ-று.
ஆரத்தழையரா பூண்ட காலத்து ஆரத் தழைத்த அரவெனினுமமையும். அன்பர்க்காரத் தழையன்பருளி
நின்றோ னென்பதற்கு அன்பர்க்கு அவர் நுகரும் வண்ணம் மிக்க அன்பைக் கொடுத்தோ னெனினுமமையும்,
அன்பான் வருங் காரியமேயன்றி அன்பு தானும் ஓரின்பமாகலின் நுகர்ச்சி யாயிற்று. அண்ணலென்பது ஈண்டு
முன்னிலைக் கண்வந்தது, அத்தழையென்றது அம்மலயத்தழை எ-று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பிறை நுதற் பேதையைக் குறை நயப்பித்தது உள்ளறி குற்றம்
ஒள்ளிழை யுரைத்தது: பிறையைப் போன்ற நெற்றியினையுடைய நாயகியைக் குறையை விரும்புவிப்பது
காரணமாக, மனத்து நினைவை அறிவதாக உற்று அழகிய ஆபரணங்களை யுடையாள் சொன்னது,
செய்யுள் : ஆரமாகிய தழைந்த அரவைப் பூண்டு திருவம்பலத்திலே அனலை அங்கையிலே ஏந்தி
ஆடியருளித் தனக்கன்பு செய்வார்க்கு மிகுதியாகத் தழைத்த அன்பைக் கொடுத்து அவருடைய இருதயத்திலே
நிலைத்து நின்றவன். அவனுடைய திருவுள்ளம் சென்றிருக்கின்ற பொதியின் மலையிடத்துச் சந்தனத்
தழையை நாயகனே ! நீ தந்தாயாமாகில் இந்தத் தழையை அவள் அல்குலிலே கண்டகாலத்து யார்தான்
அப்பொதியமலையில் (உள்ள ) தழை (களை) இங்கே கொண்டு வந்து கொடுத்தவர்கள்' என்று பலர்க்கும்
ஐயம் தோன்றும் (ஆதலால் இத்தழை தகாது.) 91
3. நிலத்தின்மை கூறி மறுத்தல்*
-----------------------------
*பேரின்பப் பொருள்: உன்னறி வடியார் உருவாகா தென்றது.
நிலத்தின்மை கூறி மறுத்தல் என்பது சந்தனத் தழை தகாதென்றதல்லது மறுத்துக் கூறியவாறன்றென
மற்றொரு தழை கொண்டு செல்ல, அது கண்டு. 'இக்குன்றிலில்லாத தழையை எமக்கு நீர் தந்தால் எங்குடிக்கு
இப்பொழுதே பழியாம் ; ஆதலான் அத்தழை யெமக்காகாது' என்று, மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-
முன்றகர்த் தெல்லா விமையோரை
யும்பின்னைத் தக்கன் முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
மூடுமென் றெள்குதுமே:
கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக் கேலா தென்றது.
இதன் பொருள் : முன் எல்லா இமையோரையும் தகர்த்து முன் வேள்விக்குச் சென்ற எல்லாத் தேவர்களையும்
புடைத்து; பின்னைச் சென்று தக்கன் முத்தீ அகத்து இல்லாவகை சிதை த்தோன் - பின்சென்று தக்கனுடைய
மூன்று தீயையும் குண்டத்தின்கண் இல்லையாம் வண்ணம் அழித்தவன்; திருந்து அம்பலவன்-திருந்திய
வம்பலத்தை யுடையான்: குன்றகத்து இல்லாத் தழை அண்ணல் தந்தால் - அவனுடைய இம்மலையிடத்
தில்லாத தழையை அண்ணல் தந்தால், கொடிச்சியருக்கு அகத்து இல்லாப் பழி இன்று வந்து மூடும்
என்று எள்குதும். கொடிச்சியருக்கு இல்லின்கண் இல்லாத பழி இன்று வந்து மூடுமென்று கூசுதும்;
அதனால் இத்தழை கொணரற்பாலீரல்லீர் எ-று
குன்றகத்தில்லாத் தழை யென்றது குறிஞ்சி நிலத்தார்க்கு உரிய வல்லாத தழையென்றவாறு.
அண்ணலென்பது முன்னிலைக்கண்ணும், கொடிச்சியரென்பது தன்மைக் கண்ணும் வந்தன.
இல்லாவென்பது பாடமாயின், இல்லையாம் வண்ணம் முன்றகர்த் தென்றுரைக்க.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அல்லி விரிகின்ற மாலையை யுடையவனே! நீ
கொண்டு வந்த கொய்யப்பட்ட தழை எம் குடியிலுள்ளார்க்குப் பொருந்தாது என்றது.
செய்யுள்: எல்லாத் தேவர்களையும் முற்பாடு இல்லா வகைச் சங்கரித்துப் பின்பு சென்று
தக்கனுடைய மூன்று அக்கினிகளையும் குண்டத்திலே இராதபடி அழித்தவன். அழகிய திருவம்பல நாதன்,
அவனுடைய திருமலையிலே இல்லாத தழை, நாயகனே! நீ தந்தால் குறத்தியராகிய எங்களுக்கு
இப்பொழுது எங்கள் குடியிலில்லாத பழிவந்து சூழ்ந்து கொள்ளும் என்று பயப்படா நின்றோம்;
அல்லது தழை ஏற்கக் குற்றமில்லை . 92
4. நினைவறிவு கூறி மறுத்தல்*
----------------------------
*பேரின்பப் பொருள்: சிவத்துளங் கண்டுனைத் தேற்றுவேனென்றது.
நினைவறிவு கூறி மறுத்தல் என்பது இத்தழை தந்நிலத்துக் குரித்தன் றென்ற தல்லது
மறுத்துக் கூறியவாறன்றென உட்கொண்டு அந்நிலத்திற்குரிய தழை கொண்டு செல்ல ,
அது கண்டு தானுடம்பட்டாளாய், 'யான் சென்று அவணினைவறிந்தால் நின்னெதிர் வந்து கொள்வேன்;
அதுவல்லது கொள்ள அஞ்சுவே' னென மறுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
யாழார் மொழிமங்கை பங்கத்
திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
சிலம்ப தருந்தழையே.
மைதழைக் கண்ணி மனமறிந் தல்லது
கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது
இதன் பொருள்: யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் - யாழோசை போலும்
மொழியையுடைய மங்கையது கூற்றையுடைய இறைவன்; எறி திரை நீர் ஏழ் ஆய்எழு பொழில்
ஆய் இருந்தோன் - எறியா நின்ற திரையையுடைய கடலேழுமாய் ஏழுபொழிலுமாயிருந்தவன்.
நின்றதில்லை அன்ன சூழ் ஆர்குழல் தொண்டை எழில் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால் -
அவனின்ற தில்லையை ஒக்குஞ் சுருண்ட நிறைந்த குழலினையுந் தொண்டைக்கனி போலும்
எழிலையுடைய செவ்வாயினையு முடைய நவ்வி போல் வாளது மாற்ற மறிந்தால் ;
சிலம்ப தரும் தழை தாழாது எதிர் வந்து கோடும் - பின் சிலம்பனே நீ தருந்தழையைத் தாழாது
நின்னெதிர்வந்து கொள்வோம் ; அவள் சொல்வது அறியாது கொள்ள வஞ்சுதும் எ-று.
சூழாரென்புழிச் சூழ்தல் சூழ்ந்து முடித்தலெனினுமமையும், தில்லையன்ன நவ்வியென வியையும்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கருமை மிக்க கண்களை யுடையாள் மனமறிந்தல்லது
கொய்யப்பட்ட தழையைத் தந்தாலும் வாங்கிக் கொள்ளோம் (என்றது).
செய்யுள்: யாழிசை போன்ற வார்த்தையுள்ள பரமேசுவரியைப் பாகத்திலே உடைய சுவாமி,
கரையை மோதப்பட்ட திரையினையுள்ள கடலேழுமாய்ப் பூமிகளேழுமாய் இருந்தோன். அவன் எழுந்தருளி
யிருந்த சிதம்பரம் போன்ற மாலையணிந்து, சுருண்டு நீண்ட குழலினையும் கொவ்வைக்கனி போன்று
அழகும் சிவப்பும் உடைய வாயினையும் மானின் (நயனம் போன்ற நயனத்தையும் பெற்ற ) அவளுடனே
பேசிக்கொண்டு வந்தபின் (பல்லது) சற்றும் தாழாது எதிரே வந்து வாங்கிக் கொள்ளக் கடவோம்( அல்லோம்)
நாயகனே, நீ தருகின்ற தழையை. 93
5. படைத்து மொழியான் மறுத்தல்*
-------------------------------
*பேரின்பப் பொருள்; சிவங்கொளு முன்னுணர் வாகா தென்றது.
படைத்து மொழியான் மறுத்தல் என்பது நினைவறிந்தல்லது ஏலேமென்றது மறுத்துக்
கூறியவாறன்று; நினைவறிந்தால் ஏற்பேமென்றவாறா;மென உட்கொண்டு நிற்பச் சிறிது
புடை பெயர்ந்து அவணினை வறிந்தாளாகச் சென்று 'இத்தழை யானேயன் றி அவளும் விரும்பும்;
ஆயினும் இது குற்றாலத்துத் தழையாதலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோ வென்று
ஆராயப்படும்: ஆதலான் இத்தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
எழில்வா யிளவஞ்சி யும்விரும்
பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே
அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப்
படைத்து மொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.
இதன் பொருள்: எழில்வாய் இள வஞ்சியும் விரும்பும் நின்பாற்றாழை கோடற்கு யானேயன்றி
எழில் வாய்த்த இளைய வஞ்சியை யொப்பாளும் விரும்பும்; மற்று இறை சிறிது குறை உண்டு; -
ஆயினுஞ் சிறிது குறையுண்டு; அழல்வாய் அவிர் ஒளி - அழலிடத்துளதாகிய விளங்கு மொளியாயுள்ளான்:
அம்பலத்து ஆடும் அம்சோதி - அம்பலத்தின் கணாடும் அழகிய சோதி; அம் தீம் குழல் வாய் மொழி
மங்கை பங்கன் - அழகிய வினிய குழலோசை போலும் மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்;
குற்றாலத்துக் கோலப் பிண்டிப் பொழில்வாய்- அவனது குற்றாலத்தின் கணுளதாகிய அழகையுடைய
அசோகப் பொழில் வாய்த்த தடவரைவாய் அல்லது இப்பூந்தழை இல்லை பெரிய தாழ்வரையிடத்தல்லது
வேறோரிடத்து இப்பூந்தழையில்லை; அதனால் இத் தழை இவர்க்கு வந்தவாறென்னென்று ஆராயப்படும்;
ஆதலான் இவை கொள்ளோம் எ-று.
இத்தழையை யிளவஞ்சியும் விரும்பு மெனினுமமையும் அவிரொளியையுடைய அஞ்சோதி
யென்றியைப்பினுமமையும் பிறவிடத்து முள்ளதனை அவ்விடத்தல்லது இல்லையென்றமையின்,
படைத்து மொழியாயிற்று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அரிய தழையை மேன் மேலும் பெரிய தகைமைப்
பாட்டையுடையவன் கொண்டு வரச் சிவட்டித்து (சிருட்டித்து) ச் சொல்லும் வார்த்தையாலே
அத்தழையை வாங்காது விலக்கிப் பாங்கி சொல்லியது.
செய்யுள்: அழகினால் வாய்ந்த இளைய வஞ்சிக் கொம்பினை யொப்பாளும் விரும்புவாள்:
சுவாமி! மற்றோர் குறையுண்டு; அழலிடத்தே வாய்ந்த பாடம் செய்கிற பிரகாசத்தினை நேரானவன்.
திருவம்பலத்திலே ஆடியருளுகிற அழகிய ஒளியாயுள்ளவன், அழகினையும் இனிமையையும் உடைய
குழலினோசையை நிகர்த்த சங்கரி பங்கன்; அவனுடைய குற்றாலத் துண்டாகிய அழகிய அசோகின்
பொழில் வாய்ந்த பெரியமலைச் சாரலி லல்லது இல்லைகாண், இந்தப் பொலிவுடைத்தாகிய தழை. 94
6. நாணுரைத்து மறுத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்: அடியா ரறிவுக்குன் னறிவுபிறி தென்றது.
நாணுரைத்து மறுத்தல் என்பது பலபடியுந் தழை கொண்டு செல்ல மறுத்துக்
கூறிய வழி இனித் தழையொழிந்து கண்ணியைக் கையுறையாகக் கொண்டு சென்றால் அவள்
மறுக்கும் வகையில்லை'யெனக் கழுநீர் மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்ல,
அதுகண்டு, 'செவிலியர் சூட்டிய கண்ணியின்மேல் யானொன்று சூட்டினும் நாணா நிற்பள் :
நீர் கொணர்ந்த இந்தக் கண்ணியை யாங்ஙனஞ் சூடுமெனத் தலைமகள் நாணுரைத்து
மறுத்துக் கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள் :
உறுங்கண்ணி வந்த கணையுர
வோன் பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே.
வாணுதற் பேதையை , நாணுத லுரைத்தது.
இதன் பொருள்: நிவந்த உறும் கள் கணை உரவோன் பொடியாய் ஒடுங்க எல்லார் கணையினும்
உயர்ந்த மிகுந்த தேனையுடைய மலர்க்கணையையுடைய பெரிய வலியோன் நீறாய்க்கெட;
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன்- தெறவல்ல கண்ணோங்கிய சிற்றம்பலவனது; மலைச் சிற்றிலின் வாய்
-மலைக்கணுண்டாகிய சிற்றிலிடத்து; நறுங் கண்ணி சூடினும் என் வாணுதல் நாணும் - செவிலியர் சூட்டிய
கண்ணி மேல் யானோர் நறுங்கண்ணியைச் சூட்டினும் அத்துணையானே என்னுடைய வாணுதல் புதிதென்று
நாணா நிற்கும்; இக்குன்றிடத்து நாகத்து ஒண்பூங்குறுங் கண்ணி வேய்ந்து இளமந்திகள் நாணும் மகளிரைச்
சொல்லுகின்றதென் ! இக் குன்றிடத்து நாகமரத்தினது ஒள்ளிய பூக்களானியன்ற குறுங் கண்ணியைச்
சூடி அச் சூடுதலான் இள மந்திகளும் நாணா நிற்கும் எ.று
கண்ணிவந்தவென்பதற்குக் கள் மிக்க கணையெனினுமமையும். தெறுங்கண் ணிவந்தவென்றார்,
அக்கண் மற்றையவற்றிற்கு மேலாய் நிற்றலின் மேனோக்கி நிற்றலா னெனினுமமையும். முதலொடு
சினைக்கொற்றுமை யுண்மையான் நிவந்தவென்னும் பெயரெச்சத்திற்குச் சிற்றம்பலவனென்பது
வினைமுதற் பெயராய் நின்றது. மந்திகணாணுமென்பது பெயரெச்சமாக மலைக்கண் இக்குன்றிடத்துச்
சிற்றிலின் வாயெனக் கூட்டியுரைப்பினுமமையும் . இப்பொருட்கு குன்றென்றது சிறுகுவட்டை. யானொன்று
சூட்டினும் நாணும் பெருநாணினாள் நீர் கொணர்ந்த இக்கண்ணியை யாங்ஙனஞ் சூடுமென்பது கருத்து.
நாணுதலுரைத்த தென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்பட்டு இரண்டாவதனையமைத்தன.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஒளி சிறந்த நெற்றியையுடைய நாயகி மிகவும் நாணுவள்
என்று சொன்னது.
செய்யுள்: மிக்க தேனுள்ள புறப் (புஷ்ப) பாணத்தாலே அதிகமான காமன் நீறாகி வீழ்ந்தொடுங்கச்
சுடுகிற திருநயனம் நின்று விளங்குகிற திருச்சிற்றம்பலநாதன், அவனுடைய மலையில் நாங்கள்
சிற்றிலிழைத்து விளையாடுகிற விடத்துச் செவிலித்தாய்மார் சூட்டின மாலையொழிய நாங்கள்
நறு நாற்ற முடையதொரு மாலையைச் சூட்டினோமாகிலும் எம்முடைய ஒளி சிறந்த நெற்றியினை
யுடையாள் 'இது புதுமை என்று அதற்கு நாணா நிற்கும். இவள் நாணுவதற்குக் கேட்கவேண்டுமோ?
இம் மலையின் இயல்புதானிப்படி இருக்கும்.
சுரபுன்னையில் அழகிய பூவினாலே தொடுத்த நெற்றி மாலையைச் சூட்டினபொழுது இளைய
மந்திக் குரங்குகள் முதலாக இலச்சியா நிற்கும் (இலஜ்ஜை அடையும் இம்மலையிடத்து என்றால் இவள்
நாணுவதற்குக் கேட்க வேண்டுமோ?
7. இசையாமை கூறி மறுத்தல்*
---------------------------
* பேரின்பப் பொருள் : அடியார் அறிவு போலுன்னறி வாகாதென்றது.
இசையாமை கூ றி மறுத்தல் என்பது தலைமகணாணுரைத்து மறுத்த தோழி அவணாணங்கிடக்க
யாங்கள் வேங்கை மலரல்லது தெய்வத்திற்குரிய வெறி மலர் சூட அஞ்சுதும்; ஆதலான் இக்கண்ணி
எங்குலத்திற் கிசையாது' என மறுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
நறமனை வேங்கையின் பூப்பயில்
பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சு மஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே.
வசை தீர் குலத்திற் கிசையா தென்றது
இதன்பொருள்: நற மனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகம் நண்ணி-தேனிற்கிடமாகிய
வேங்கைப் பூக்கள் பயின்ற பாறையை யானை சென்றணைந்து மறம் மனை வேங்கை என நனி அஞ்சும்
மஞ்சு ஆர் சிலம்பா-அதனைத் தறுகண்மைக்கிடமாகிய புலியென்று மிகவுமஞ்சும் மஞ்சாருஞ்
சிலம்பையுடையாய்; நிறம் மன் வேங்கை அதன் அம்பலவன் நெடுவரை - நிறந்தங்கிய புலியதளையுடைய
அம்பலவனது நெடிய இவ்வரைக்கண்; குறம் மனை வேங்கைச் சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ -
குறவர் மனையிலுளவாகிய வேங்கையினது சுணங்கு போலும் பூவோடு தெய்வத்திற்குரிய கழுநீர்
முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ? கூட்டார் எ-று.
நறமனை வேங்கை யென்பதற்கு நறாமிக்க பூவெனினு மமையும். குறமனை கூட்டுபவோ
வென்பதற்குக் குறக்குடிகள் அவ்வாறு கூட்டுவரோவென் றுரைப்பாருமுளர். நிறமனை யென்புழி
ஐகாரம் அசை நிலை : வியப்பென்பாருமுளர் நிறம் அத்தன்மைத்தாகிய அதளெனினுமமையும்
ஒன்றனை ஒன்றாக ஓர்க்கு நாடனாதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவோமாக
ஓர்ந்தாயென்பது இறைச்சிப் பொருள் ஒப்புமையான் அஞ்சப்படாததனையும் அஞ்சும் நிலமாகலான்
எங்குலத்திற் கேலாத அணங்கலரை யாமஞ்சுதல் சொல்ல வேண்டுமோ வென்பது இறைச்சி
யெனினுமமையும். இப்பொருட்கு ஒருநிலத்துத் தலைமகளாகக் கொள்க. வேங்கைப் பூவிற்குச்
சுணங்கணிந்திருத்தல் குணமாதலால் சுணங்கணியப்பட்டதனைச் சுணங்கென்றே கூறினாள்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: குற்றமற்ற எங்கள் குலத்துக்கு இது பொருந்தாது என்றல்.
செய்யுள்: தேனுக் கிடமாகிய வேங்கைப்பூ நெருங்குதலுள்ள பாறையை யானையானது
குறுகித் தறுகண்மைக் கிடமாகிய கொடுவரியையுடைய புலியென்று மிகவும் பயப்படுகின்ற
மேகங்கெட வளர்ந்த வரையினை யுடையவனே! குறவரிட மனையிடத்து நிற்கிற வேங்கையில்
சுணங்கையொத்த பூவோடே தெய்வத்துக்குரிய செங்கழுநீர் மலரைச் சூட்டப்பெறுமோ?
நிறம் நிலைபெற்ற புலித்தோலுடைய திருவம்பல நாதனுடைய நீண்டு பெருத்த வெற்பிடத்து:
(இங்ஙனே செய்யாது செய்யத்தகுமோ என்பது கருத்து ).
நாலாம் அடியில் ஐகாரம் அசைநிலை!
8. செவ்வியிலளென்று மறுத்தல்*
-----------------------------
*பேரின்பப் பொருள் : ''சிவக்கனி பழுத்த திலையுனக் கென்றது.''
செவ்வி யிலலென்று மறுத்தல் என்பது அணங்கலர் தங்குலத்திற் கிசையாதென்றதல்லது
மறுத்துக் கூறியவாறன்றென மாந்தழையோடு மலர் கொண்டு செல்ல, அவைகண்டு உடம்படாளாய்,
'அன்னம் பிணைகிள்ளை தந்தொழில் பயில இன்று செவ்வி பெற்றனவில்லை; அது கிடக்க,
என்னுழை நீர்வந்த வாறும் யானுமக்குக் குறை நேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்;
அதனாற் செவ்வி பெற்றாற் கொணரு'மென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
கற்றில கண்டன்னம் மென்னடை
கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே
நவ்வி நோக்கி, செவ்வியில ளென்றது.
இதன் பொருள்: கண்டு அன்னம் மெல் நடை கற்றில - புடை பெயர்ந்து விளையாடாமையின்
நடை கண்டு அன்னங்கள் மெல்லிய நடையைக் கற்கப் பெற்றனவில்லை; கண்மலர் நோக்கு அருள
மென்பிணை பெற்றில - தம்மாற் குறிக்கப்படுங் கண்மலர் நோக்குக்களை அவள் கொடுப்பமென்
பிணைகள் பெற்றனவில்லை; பேச்சுக் கிள்ளை பெறா- உரையாடாமையின் தாங் கருதுமொழிகளைக்
கிளிகள் பெற்றனவில்லை; பிள்ளை இன்று ஒன்று உற்றிலள் - இருந்த வாற்றான் எம்பிள்ளை இன்றொரு
விளையாட்டின் கணுற்றிலள்; ஆகத்து ஒளி மிளிரும் புற்றில் வாள் அரவன்-அதுவேயுமன்றி ஆகத்தின்
கட்கிடந்தொளி விளங்கும் புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பையுடையவனது ;
புலியூரன்ன பூங்கொடி-புலியூரை யொக்கும் பூங்கொடி: உற்றது அறிந்திலள் -என்னுழை நீர் வந்தவாறும்
யானுமக்குக் குறை நேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்வி பெற்றுச் சொல்லல் வேண்டும். எ-று.
கண்டென்பது கற்றலோடும், அருளவென்பது பெறுதலோடும் முடிந்தன. புற்றிலவென்பதற்கு
வேள்வித் தீயிற் பிறந்து திருமேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடையவல்லாத அரவென்றுரைப்பினு மமையும்.
ஆரத்தொளி யென்பதூஉம் பாடம். இவை யேழிற்கும் மெய்ப்பாடு; அச்சத்தைச் சார்ந்த பெருமிதம்;
முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடும் எனும் அச்சமும், முடிக்கக் கருதலின் பெருமிதமும் ஆயிற்று.
பயன்: செவ்வி பெறுதல், மேற்றலை மகளைக் குறை நயப்பித்து அவளது கருத்துணர்ந்து தன்னினாகிய
கூட்டங் கூட்டலுறுந் தோழி தலைமகன் றெருண்டு வரைந்தெய்துதல் வேண்டி, இவை முதலாக
முன்னர் விண்ணிறந்தார் (107) என்னும் பாட்டீறாக இவையெல்லாங் கூறிச் சேட்படுத்தப் பெறுமென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மானினது நோக்கம் போன்ற பார்வையினை யுடையவள்
பக்குவி யல்லாள் என்றது.
செய்யுள்: இவள் புறம் போந்து விளையாடாத படியாலே இவள் நடையைக் கண்டு இப்படி நடக்கக் கற்றன
வில்லை அன்னங்களும்; கண்ணாகிய மலர்கள் பார்வையைக் கொடுக்க இப்படிப் பார்க்கக் கற்றன வில்லை
மானினமும்; இவள் வார்த்தையைக் கேட்டு அப்படியே பேசக் கற்றனவில்லை கிளிகளும்; இளையவளாகையாலே
இன்னொரு விளையாட்டினு முயன்றிலள்: நீ குறையுற்றாயாகவும் யானதற்கு மறுத்தேனாகவும் இப்படிப்
புகுந்தவனையறிந்திலள்; திருமார்பிலே கிடந்து ஒளி மிளிறும் புற்றிலிருக்கப்பட்ட பெரிய பாம்பை ஆபரணமாக
உடையவனுடைய புலியூரை நிகர்த்துப் பூத்த வல்லிசாத மொத்த மின்னிளயாள், 97
9. காப்புடைத்தென்று மறுத்தல்.*
-----------------------------
*பேரின்பப் பொருள்: மேலா மின்பத்துக்குக் காலமிலையென்றது.
காப்புடைத்தென்று மறுத்தல் என்பது செவ்வியிலளென்றது செவ்விபெற்றாற் குறையில்லை
யென்றாளாமென உட்கொண்டு நிற்ப, "கதிரவன் மறைந்தான்; இவ்விடம் காவலுடைத்து; நும்மிடஞ் சேய்த்து ;
எம் மையன்மாருங் கடியர் ; யாந்தாழ்ப்பின் அன்னையு முனியும்; நீரும் போய் நாளை வாரு" மென இசைய
மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
முனிதரு மன்னையு மென்னையர்
சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே
காப்புடைத் தென்று, சேட்படுத்தது.
இதன் பொருள்: சுடர்க் கொற்றவன் சுடர்களுட்டலைவன் : தாழ் சடை மேல் பனிதரு திங்கள்
அணி அம்பலவர் - தாழ்ந்த சடைமேற் குளிர்ச்சியைத் தருந் திங்களைச் சூடிய அம்பலவர்; பகை
செகுக்கும் குனிதரு திண் சிலைக்கோடு சென்றான். பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய
சிலையாகிய மேருவினது கோட்டை யடைந்தான்; அன்னையும் முனிதரும்-இனித் தாழ்ப்பின்
அன்னையும் முனியுங், என்னையர் சாலவும் மூர்க்கர் - என்னையன்மாரும் மிகுவுமாராயாது
ஏதஞ்செய்யுந் தன்மையர் ; இன்னே தனிதரும் - இவ்விடமும் இனி யியங்குவா ரின்மையின்
இப்பொழுதே தனிமையைத் தரும்' ஐய-ஐயனே; குன்றமும் இந்நிலத்து அன்று-நினது குன்றமும்
இந்நிலத்தின் கண்ணதன்று; அதனால் ஈண்டு நிற்கத் தகாது எ-று.
அம்பலவர் பகைசெகுத்தற்குத் தக்க திண்மை முதலாகிய இயல்பு அதற்கெக்காலத்து
முண்மையால், செகுக்குமென நிகழ்காலத்தாற் கூறினார். இந்நிலைத் தன்றென்பது பாடமாயின்,
இக்குன்றமும் இவ்வாறு மகளிரும் ஆடவருந் தலைப்பெய்து சொல்லாடு நிலைமைத் தன்றென வுரைக்க,
மெய்ப்பாடும் பயனும் அவை. இவ்விடம் மிக்க காவலையுடைத்து இங்கு வாரன்மினென்றாளென
இவ்விடத்தருமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட் கிடந்த பரிவினானன்றே; இத்துணையும்
பரிவுடையாள் எனதாற்றாமைக்கிரங்கி முடிக்குமென ஆற்றுமென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இவ்விடம் காவலுடையதென்று நீளம் பார்த்துச் சொன்னது.
செய்யுள்: சுவாமியே! நீ இவ்விடத்தில் தாழ்க்கத் தாயாரானவரும் குரோதம் பண்ணுவார்கள்;
எங்கள் ஐயன்மார்கள் மிகவும் மூர்க்கராய் இருப்பார்கள். இவ்விடந்தான் இயங்குவாரில்லாத
இடமாகையாலே இப்பொழுதே தனிக்கும்; சுவாமி, உன்னுடைய மலையும் இந்நிலத்திலுள்ள
தொன்றன்று; நீண்டு தாழ்ந்த திருச்சடாபாரத்தின் மேலே குளிர்ந்த திருவிளம்பிறையைச்
சாத்தியருளுகிற திருவம்பலநாதர் நமக்குப் பகையாகிய முப்புரங்களையும் அழித்த வளைந்து
சிக்கென்ற சிலையாகிய மேருவிற் சிகரமிடமாகச் சென்றடைந்தான், சுடர்களின் தலைவனாகிய
சூரியன்; ஆதலால் இவ்விடத்தில் நிற்க வொண்ணாது. 98
10. நீயே கூறென்று மறுத்தல் *
---------------------------
*பேரின்பப் பொருள்; "உன்னறி வாலின் புறுவைநீ யென்றது'',
நீயே கூறென்று மறுத்தல் என்பது, 'இவள் இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது
என் கட் கிடந்த பரிவினானன்றே ! இத்துணைப் பரிவுடையாள் எனக்கிது முடியாமையில்லை' யெனத் தலைவன்
உட்கொண்டு போய்ப் பிற்றைஞான்று செல்லத்தோழி, 'யான் குற்றேவன் மகளாகலிற் றுணிந்து சொல்ல
மாட்டுகின்றிலேன்; இனி நீயே சென்று நின்குறை யுள்ளது சொல்லெனத் தானுடம்படாது மறுத்துக்
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே
அஞ்சு தும்பெரும பஞ்சின்மெல்லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது
இதன் பொருள்: அந்தியின் வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் -அந்தியின்க ணுண்டாகிய
செவ்வா னெழிலை யுடைய அம்பலத்தின் கணுளனா கிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது
அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து; பந்தியின் வாய்ப் பைந்தேனொடும் பலவின் சுளை - பந்தியாகிய
நிரையின்கட் செவ்வித் தேனொடும் பலாச்சுளையை: கடுவன் மந்தியின் வாய்க் கொடுத்து ஓம்பும் சிலம்ப -
கடுவன் மந்தியின் வாயின் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்; மனம் கனிய
முந்தி இன் வாய்மொழி அம் மொய் குழற்கு நீயே சென்று மொழி-அவள் மனநெகிழ விரைந்து நாவினிய
வாய்மொழிகளை அம்மொய்த்த குழலை யுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக எ-று
எல்லாப்பொருளையுங் கடந்தானாயினும் எமக்கண்ணியனென்னுங் கருத்தான், எம்பரனென்றார்.
வெற்பிற் சிலம்ப வெனவியையும் பந்தி, பலாநிரை யென்பாருமுளர். சிலம்பு என்றது வெற்பினொரு
பக்கத்துளதாகிய சிறு குவட்டை . வாய்மொழி, மொழி யென்னுந் துணையாய் நின்றது. மனங் கனியு
மென்பதூஉம் நின் வாய்மொழியென்பதூஉம் பாடம். மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக்
கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல, அவள் உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய
நின் வார்த்தைகளை நீயே கூறி அவளை மன மகிழ்விப்பாயாகவென உள்ளுறையுவமங் கண்டு கொள்க.
மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரியோனே! நாங்கள் அஞ்சாநின்றோம்; பஞ்சு போன்ற
மெல்லிய அடியினையுடையாளுக்குச் சொல்லக் கடவன வெல்லாம் நீயே சொல்வாயாக என்றது .
செய்யுள்: அந்திச் செக்கரின் எழிலையொத்த திருவம்பலத்தே உளனாகிய எம்முடைய சுவாமி,
அவனுடைய அழகிய பொதியின் மலையில் குரக்கு நிரையிடத்துப் பலாப்பழங்களின் இனிய சுளைகளைச்
செவ்வித் தேனிலே கொடுத்துக் கடுவன் குரங்கானது பெண் குரங்கின் வாயிலே கொடுத்துப் பரிகரிக்கின்ற
மலையினையுடைய நாயகனே ! மனம் நெகிழும்படி அவளை எதிர்ப்பட்டு உன்னுடைய இனிய வார்த்தைகளை
அந்தச் செறிந்த கூந்தலினையுடையாளுக்கு நீதானே சென்று சொல்லுவாயாக. 99
11. குலமுறை கூறி மறுத்தல் *
---------------------------
*பேரின்பப் பொருள்: உன்றனக்கின்ப மொக்குமோ வென்றது.
குலமுறை கூறி மறுத்தல் என்பது நீயே கூறெனச் சொல்லக் கேட்டு, 'உலகத்து ஒருவர்கண் ஒருவர்
ஒரு குறை வேண்டிச் சென்றால் அக்குறை நீயே முடித்துக்கொள் ளென்பாரில்லை ; அவ்வாறன்றி
இவளிந்நாளெல்லாம் என் குறைமுடித்துத் தருவெனென்று என்னை யுடையையுழற்றி இன்று நின் குறை
நீயே முடித்துக்கொள் ளென்னா நின்றாளெனத் தலைமகன் ஆற்றாது நிற்ப, அவனை யாற்றுவிப்பது
காரணமாக ' நீர் பெரியீர்; யாஞ்சிறியோம்' ஆகலான் எம்மோடு நுமக்குச் சொல்லாடுதல் தகாது' எனக்
குலமுறை கூறி மறுத்துரையா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றனன் மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.
தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தே மெனவுரைத்தது
இதன் பொருள் : தெங்கம்பழம் கமுகின் குலை சாடி- மூக்கூழ்த்து விழுகின்ற தெங்கம்பழம் கமுகினது
குலையை உதிர மோதி; கதலி செற்று - வாழைகளை முறித்து; கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ -
பூந்தாதையுடைய பழனத்துக் கிடந்து விளங்குங் குளிர்ந்த நாட்டினுள்ளாய் நீ எம் தேமொழி - எம்முடைய
தேமொழி; உமைகூர்பங்கு அம்பலவன் பரங்குன்றில்- உமை சிறந்த பாகத்தையுடைய அம்பலவனது பரங்குன்றிடத்து;
குன்று அன்னமா பதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி- மலைபோலும் யானைகள் நடுங்கச் சிங்கங்கள்
வேட்டந் திரியுஞ் சீறூர்க் கணுள்ளாள் ஓர் சிறியாள்; அதனால் எம்மோடு நீ சொல்லாடுதல் தகாது எ.று.
நாட்டினை யென்பதற்கு நாட்டையிடமாக வுடையை யென இரண்டாவது பொருள்பட உரைப்பினுமமையும்.
பரங்குன்றிற் சீறூரெனவியையும், பெருங்காட்டிற் சிறுகுரம்பை யென்பது போதரச், சிங்கந் திரிதரு சீறூரென்றாள்.
மெய்ப்பாடும் பயனும் அவை;
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: "தொழத்தக்க உயர்ந்த குலத்துள்ளீர்! நீர் சொல்லுகிற சொற்களுக்கு
நாங்கள் போதோம். நாங்கள் இழிகுலத்தவர்' என்று சொன்னது.
செய்யுள்: தென்னம் பழமானது கமுகந்தாறுகளை மோதி வாழைக் குலைகளை முறித்துப்
பூந்தாறுகளை யுடைத்தாகிய தடாகங்களிலே கிடந்து விளங்குகிற குளிர்ந்த மருத நிலத்தினையுடையன்
ஒருத்தனாக விருந்தனை நீ; பரமேசுவரி சிறந்த பாகத்தினையுடைய திருவம்பலநாதன் திருப்பரங் குன்றின்
மலை யொத்த யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டமாக உலாவுகிற சிறுமலையிடத்திருந்தாள், எம்முடைய
தேனை நிகர்த்த வசனத்தையுடையவள் என்றாக இறப்ப உயர்ந்தார்க்கு இறப்ப இழிந்தோருடனே என்ன
பொருத்தமுண்டு என்றுபடும். 100
12. நகையாடி மறுத்தல்*
----------------------
*பேரின்பப் பொருள்: உன்னறி வின்ப முறலரி தென்றது
நகையாடி மறுத்தல் என்பது இவள் குலமுறை கிளத்தலான் மறுத்துக்கூறியவா றன்றென
மன மகிழ்ந்து நிற்ப, இனி யிவனாற்றுவானென உட்கொண்டு, பின்னுந் தழை எதிராது,
'எம்மையன் மாரேவுங் கண்டறிவோம்; இவ்வையர் கையிலேப்போலக் கொலையாற் றிண்ணியது
கண்டறியேமென அவனேவாடல் சொல்லி நகையொடு மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத்தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையென்று திண்ணிய வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே
வாட்டழை யெதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி யின்னகை செய்தது.
இதன் பொருள்: சிலை ஒன்று வாணுதல் பங்கன்-சிலையை யொக்கும் வாணுதலை யுடையாளது
கூற்றையுடையான் ; சிற்றம்பலவன் - சிற்றம்பலவன் ; கயிலை மலை ஒன்று மாமுகத்து எம் ஐயர் எய்கணை
மண்குளிக்கும் - அவனது கைலைக் கண் - மலையையொக்கும் யானைமுகத்து எம்மையன்மார்
எய்யுங்கணை அவற்றையுருவி மண்ணின்கட் குளிப்பக் காண்டும்; கலை ஒன்று வெம் கணையோடு
கடுகிட்டது என்னில் - அவ்வாறன்றி ஒரு கலை இவரெய்த வெய்யவம்பினோடு விரைந் தோடிற்றாயின்
ஐயர் கையில் கொடுஞ் சிலைகெட்டேன் கொலை ஒன்று திண்ணிய ஆறு இவ்வையர் கையில் வளைந்த
சிலை, கெட்டேன், கொலையாகியவொன்று திண்ணியவாறென்! எ-று.
கைலைக்கண் மண் குளிக்கு மெனவியையும், கொடுஞ்சர மென்பதூஉம் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : ஒளி சிறந்த தழையைப் பெற்றுக் கொள்ளாதே தூரத்த
னாக்குவதாகப் புன்முறுவலையுடைய பாங்கி இனிமை தோன்றச் சிரித்தது.
செய்யுள்: வில் போன்று ஒளி சிறந்த நெற்றியினையுடைய உமா தேவியைப் பாகத்திலேயுடையவன்
திருச்சிற்றம்பலநாதன் கயிலாய வரையிடத்துத் திரண்ட யானை அணியிலே எங்கள் அண்ணன்மார் எய்த
அம்பு யானை அணியில் பட்டுருவி மண்ணிலே மூழ்கும்; கலை தான் ஒன்(று) இருந்தது; அது தான் எய்த
பொழுதே விழுகையற்று எய்த அம்பையும் கொண்டு கடுக ஓடிற்றாயிருந்தது; என்றால் இந்தச்
சுவாமியினுடைய கையில் வளைந்த வில்லானது கொலைத்தொழிலான ஒன்றுக்குத்
திண்ணிய படி! (எனத்தான் கொண்டாடுகின்றாள்.)
கயிலை மலையொக்கும் யானை முகத்தென் றுமாம் 101
13. இரக்கத் தொடு மறுத்தல்*
--------------------------
*பேரின்பப் பொருள்: என்னறி விலையென்றெய்த்தற் கிரங்கியது.
இரக்கத்தொடு மறுத்தல் என்பது இவள் என்னுடனே நகை யாடுகின்றது தழை வாங்குதற் பொருட்டென
உட்கொண்டு நிற்பப் பின்னையுந் தழையேலாது, 'இவ்வையர் இவ்வாறு மயங்கிப் பித்தழையா நிற்றற்குக்
காரணமென்னோ ' வென்று அதற்கிரங்கி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
மைத்தழை யாநின்ற மாமிடற்
றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே
கையுறை யெதிராது காதற் றோழி
யைய நீபெரி தயர்ந்தனை யென்றது.
இதன் பொருள் : மைத்தழையா நின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே - கருமை மிகா நின்ற கரிய மிடற்றை
யுடைய அம்பலவனது கழற்கண்ணே : தழையா நின்ற மெய்அன்பினர் போல விதிர் விதிர்த்து - பெருகா நின்ற
மெய்யன்பை யுடையவரைப் போல மிகநடுங்கி; கை தழை ஏந்தி- கைக்கண்ணே தழையை ஏந்தி: கடமா வினாய் -
இதனோடு மாறுபடக் கடமாவை வினாவி' கையில் வில் இன்றியே - தன் கையில் வில்லின்றியே: பெரியவர்
பித்தழையா நிற்பர் - இப் பெரியவர் பித்தழையா நின்றார்; என்ன பாவம் - இஃதென்ன தீவினையோ! எ-று
மா-கருமை மாமிடறென்பது. பண்புத்தொகையாய் இன்னதிது வென்னுந் துணையாய் நிற்றலானும்,
மைத்தழையா நின்ற வென்பது அக்கருமையது மிகுதியை உணர்த்தி நிற்றலானும், கூறியது கூறலாகாமை
யறிக. அது "தாமரை மீமிசை" எனவும் "குழிந்தாழ்ந்த கண்ண " (நாலடியார் - தூய்தன்மை, 9) எனவும்,
இத்தன்மை பிறவும் வருவன போல. மெய்த்தழையா நின்ற வன்பென்பதற்கு மெய்யாற் றழையா நின்ற
அன்பெனினுமமையும் பித்தென்றது ஈண்டுப் பித்தாற் பிறந்த அழைப்பை. அழைப்பு - பொருள் புணராவோசை
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கையுறையை ஏற்றுக் கொள்ளாதே சுவாமி மிகவும்
மயங்கினையோ என்றது.
செய்யுள்: இருள் தழைத்துச் செல்லா நின்ற காள கண்டத்தையுடைய திருவம்பலநாதன்
அவனுடைய சீர்பாதங்களிலே சத்தியம் தழைந்துச் செல்லுகிற அன்பரைப் போல மிகவும் நடு நடுங்கிக்
கையிலே தழையையும் ஏந்திக் கொண்டு, அதற்கு மறுதலையாக மதம்பட்ட யானையையும் வினவிக்
கையில் வில்லு மின்றியே இப்பெரியவர் பித்தான வார்த்தைகளைச் சொல்லா நின்றார்,
இப்பாவத்திற்குக் காரணமென்ன? (என்றுபடும்)
பெரியோரிடத்துத் தீவினை வந்தால் அதற்குக் காரணம் ஆராயப்படு மாதலால்,
இதற்குக் காரணம் என் என்றது 102
14 சிறப்பின்மை கூறி மறுத்தல்*
-----------------------------
*'பேரின்பப் பொருள் : சிவத்திடைச் சேருந் திறமுயிர்க்கிலையெனல்',
சிறப்பின்மை கூறி மறுத்தல் என்பது 'என் வருத்தத்திற்குக் கவலா நின்றனள் இவளாதலின்
எனக்கிது முடியாமையில்லை' யென உட்கொண்டு நிற்பத் தோழி, 'இக்குன்றிடத்து மாவுஞ் சுனையும்
இவள் வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா ஆதலான் ஈண்டில்லாதனவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவர்”
என மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே
மாந்தளிரும் மலர்நீலமும்
ஏந்தலிம்மலை யில்லையென்றது
இதன் பொருள்: மஞ்சு ஆர் சிலம்பா- மஞ்சார்ந்த சிலம்பையுடையாய்; அக்கும் அரவும் அணி மணிக்
கூத்தன் சிற்றம்பலம் ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி அக்கையும் அரவையும் அணியும் மாணிக்கம் போலுங்
கூத்தனது சிற்றம்பலத்தை யொக்கும் இவளது விளங்காநின்ற வடிவையஞ்சி கொக்கும்* சுனையும்-
மாக்களுஞ் சுனைகளும் குளிர் தளிரும் கொழும் போதுகளும் - குளிர்ந்த தளிர்களுங் கொழுவிய போதுகளும்.
இக்குன்றில் என்றும் மலர்ந்து அறியா இயல்பின- இக்குன்றில் எக்காலத்தும் விரிந்தறியாத தன்மையையுடைய,
அதனால் ஈண்டில்லாத இவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவர் எ.று.
* கொக்கு-மாமரமுமாம்.
தளிர் மலர்ந்தறியாத வென்னுஞ் சினைவினை முதன் மேலேறியும், போது மலர்ந்தறியாத வென்னும்
இடத்து நிகழ்பொருளின் வினை இடத்து மேலேறியும் நின்றன .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரை கிடைக்கவில்லை)
செய்யுள்: அக்குவடத்தையும் பாம்பையும் சாத்தியருளுகிற மாணிக்கம் போலும் அழகிய
திருக்கூத்தினையுடையவன் அவனுடைய திருவம்பலத்தை ஒக்கின்ற இவளுடைய விளங்கா நின்ற
மேனிக்கு நிகர் வருமோ வென்று, மேகங்களார்ந்த மலையினையுடையவனே! மாமரங்களும் சுனையும்
குளிர்ந்த தளிரும் அழகிய புட்பங்களும் இந்த மலையிடத்து இவள் தோன்றின நாளே தொடங்கி
எந்தக்காலத்திலும் தளிர்த்து அலராத இயல்பின; (இவள் மேனிக்குப் பயந்து மரங்களும் தளிரீன்றறியா;
ஆதலால் இந்நிலத்தி லில்லதொன்றை நாங்கள் ஏற்றால் பலர்க்கும் வினாவுதற்கிடமாகும்.) 103
15. இளமை கூறி மறுத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள் : ''இன்ப முதிர்ந்த திலையுனக் கென்றது.
இளமை கூறி மறுத்தல் என்பது 'அவளது வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா வென்றதல்லது மறுத்துக்
கூறியவாறன்று; சிறப்பின்மை கூறியவாறு என உட்கொண்டு சிறப்புடைத் தழை கொண்டு செல்ல,
அதுகண்டு குழலும் முலையுங் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறிது
மியைபுடைத்தன்று' என அவளதிளமை கூறி மறுத்து உரையாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே
முளையெயிற் றரிவை, விளைவில ளென்றது.
இதன் பொருள்: உருகுதலைச் சென்ற உள்ளத்தும்- அன்பருடைய உருகுதலை யடைந்த
உள்ளத்தின் கண்ணும்; அம்பலத்தும் - அம்பலத்தின் கண்ணும்; ஒளிபெருகுதலைச் சென்று நின்றோன் -
இரண்டிடத்து மொப்ப ஒளி பெருகுதலை யடைந்து நின்றவனது; பெருந்துறைப் பிள்ளை - பெருந்துறைக்
கணுளளாகிய எம்பிள்ளையுடைய; கள் ஆர் முருகுதலைச் சென்ற கூழை முடியா , தேனார்ந்த நறுநாற்றம்
தம்மிடத் தடைந்த குழல்கள் முடிக்கப்படா; முலை பொடியா - முலைகள் தோன்றா; ஒருகுதலைச் சின்மழலைக்கு -
ஒருகு தலைச் சின்மழலை மொழியாட்கு ; ஐய-ஐயனே; ஓதுவது என்னோ- நீ சொல்லுகின்றவிது யாதாம்!
சிறிதுமியைபுடைத்தன்று எ- று
ஏகாரம்-அசை நிலை. கள்ளார்-கூழையெனவியையும், குதலை மை-விளங்காமை, மழலை-இளஞ்சொல்,
சின்மழலை திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்த தெனினுமமையும்.
இவை நான்கற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: முளைக்கின்ற பல்லுடைய நாயகி விளைவையறியாள் என்றது.
செய்யுள்: உருகுதலைச் செய்து தன்னை நினைந்தவர்களின் நெஞ்சினும் அம்பலத்தினும்
ஒளி பெருகும் தன்மையினையுடையனாய் எழுந்தருளி நின்றவன், அவனுடைய திருப்பெருந்துறையிலே
உள்ள இளையவளுடைய தேனிடத்தே உண்டாகிய நிறைந்த நாற்றம் உண்டாய மயிரும் கடைமுடிய
எழுந்ததில்லை; முலைகள் இன்னும் புறப்படவில்லை. எப்போது பேசினாலும் ஒரு சொற்போல இருக்கிறது....
(ஒரு குதலை) மழலைச் சொல்லையுடையாளுக்குச் சுவாமி சொல்லுகிறது ஏதோ தான்? 104
16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் *
-------------------------------------
* பேரின்பப் பொருள்: "அருளன்றிச் சிவம் அமையா தென்றது''
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் என்பது இவளதிளமை கூறுகின்றது தழை வாங்குதற்
பொருட்டன்றாக வேண்டும்; அதுவன்றி இந்நாளெல்லா மியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று
இயையாமை கூறி மறுக்க வேண்டிய தென்னை? இனியிவ் வொழுக்கம் இவளையொழிய வொழுகக் கடவேன்'
என உட்கொண்டு நிற்ப, நீயென்னை மறைத்த காரியம் இனி நினக்கு முடியாது' என அவனோடு நகைத்துக்
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
பண்டா லியலு மிலைவளர்
பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
கொல்லோ கருதியதே
என்னை மறைத்தபின் எண்ணியதரிதென
நன்னுதல் தோழி நகை செய்தது
இதன் பொருள்: பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன்-முற்காலத்து ஆலின்கணுளதாம்
இலையின் கட்டுயின்ற பாலகனாகிய மாயோன்; பார்கிழித்து தொண்டால் இயலும் சுடர்க் கழலோன்-
நிலத்தைக் கிழித்துக் காணாமையிற் பின் றொண்டா லொழுகுஞ் சுடர்க் கழலையுடையானது; தொல்லைத்
தில்லையின் வாய் வண்டு - பழையதாகிய தில்லை வரைப்பினுண்டாகிய வண்டுகள் ; ஆல்இயலும் வளர்பூந்
துறைவ- ஆலிப்போடு திரிதரும் மிக்க பூக்களையுடைய துறையையுடையாய்; கண்டால்- ஆராய்ந்தால்;
என்னை மறைக்கின் கருதியது இயலும் கடன் இல்லை கொல்-என்னை மறைப்பின் நீ கருதியது
முடியுமுறைமையில்லை போலும் எ-று.
பண்டு தொண்டாலியலு மெனவும், தில்லைவரைப்பிற் றுறை யெனவுமியையும். தில்லைகட் டுறைவ
னெனினுமமையும். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த நகை. இவள் நகுதலான் என் குறை யின்னதென
உணர்ந்த ஞான்று தானே முடிக்குமென நினைந்து ஆற்றுவானாவது பயன்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: எனக்குக் கரந்தவிடத்து நினைத்த காரியம் முடிக்கை
அரிதென்று நல்ல நெற்றியினையுடைய பாங்கி சிரித்தது,
செய்யுள்: முற்காலத்து வட (விருக்ஷ) த்தினின்றும் புறப்படுகிற தளிரிலே கண் வளர்ந்த
புருஷோத்தமன் பூமியையிடந்து கொண்டு புக்கு , அங்ஙனம் அகங்கார முகத்தானறியப் படாமையாலே
அவன் தொண்டு செய்து காண்கைக்கு முயல்கிற சுடர்க் கழலோன், அவனுடைய பெரும்பற்றப் புலியூரிடத்து
வண்டுகள் ஆலித்தலைச் செய்கிற மிக்க பூவுடைத்தாகிய துறையினையுடையவனே! எனக்கு மறைத்தவிடத்து,
விசாரித்துப் பார்த்தால், நீ நினைத்த காரியம் முடித்துப் போகை அரிது போல இருந்தது,
என்றதால் எனக்கு மறைப்பதேன் என்றுபடும். 105
17. நகை கண்டு மகிழ்தல்*
------------------------
*பேரின்பப் பொருள் ; அருணோக்க மின்றியின் பாமோ வென்றது
நகை கண்டு மகிழ்தல் என்பது "இவள் தன்னை மறைத்தால் முடியாதென்றது, மறையா தொழிந்தால்
முடியுமென் றாளா 'மெனத் தலைமகன் உட்கொண்டு நின்று, 'உன்னுடைய சதுரப்பாட்டைச் சேர்ந்த
மெல்லென்ற நோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை அல்லது வேறு துணையுண்டோ'வென அவனது
நகை கண்டு மகிழா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
றோன் தில்லை யொத்திலங்கு
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே.
இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வேலண்ண லுரைத்தது.
இதன் பொருள்: மத்தகம் சேர் தனி நோக்கினன் - நெற்றியைச் சேர்ந்த தனிக்கண்ணையுடையான்;
வாக்கு இறந்து ஊறு அமுது ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் - சொல்லளவைக் கடந்து
ஊறுமமுதத்தையொத்து மனத்தைச் சேர்ந்து என்னையுய்ய நின்றவன்; தில்லை ஒத்து இலங்கு -
அவனது தில்லையை யொத்திலங்கும்; முத்து அகம்சேர் மெல்நகைப் பெருந்தோளி - முத்துப் போலும்
எயிறுக ளுள்ளடங்கிய மூரன் முறுவலையுடைய பெருந்தோளியது ; முகமதியின் வித்தகம்சேர் மெல்லென்
நோக்கம் அன்றோ என் விழுத்துணை - முகமாகிய மதியின் கணுண்டாகிய சதுரப்பாட்டைச்
சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ எனது சிறந்த துணை! அதனால் ஆற்றத்தகும் எ-று .
வாக்கிறந் தென்பதூஉம், அமுதொத் தென்பதூஉம் அகஞ்சேர்ந் தென்பதனோ டியையும்
உய்ய நின்றோனென்னுஞ் சொற்கள் உய்வித்தோனென்னும் பொருளவாய் ஒரு சொன்னீர்மைப்பட்டு
இரண்டாவதற்கு முடிபாயின. இலங்கு முகமதியெனவியையும், மறுத்தாளாயினும் நங்கண்மலர்ந்த
முகத்தளென்னுங் கருத்தான் இலங்கு முகமதியினென்றான் உள்ளக்குறிப்பை நுண்ணிதின் விளக்கலின்
வித்தகஞ்சேர் மெல்லெனோக்க மென்றான். உள்ளக் குறிப்பென்றவா றென்னை?
முன்னர்ச் “சின்மழலைக் கென்னோ ஐய வோதுவது" (திருக்கோவை, 104) என்று இளையளென
மறுத்த விடத்து இந்நாளெல்லா மியைய மறுத்து இப்பொழுது இவளிளைய ளென்று இயையாமை மறுத்தாள்;
இவ்வொழுக்கம் இனி இவளையொழிய வொழுகக் கடவே' னென்று தலைமகன் தன் மனத்திற் குறித்தான்;
அக்குறிப்பைத் தோழி அறிந்து கூறினமையின் 'வித்தகஞ்சேர் மெல்லெனோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை,
பிறிதில்லை' யெனத் தனதாற்றாமை தோன்றக் கூறினான், மெய்ப்பாடு: உவகை, பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரிய மூங்கிலை நிகர்த்த தோளினையுடைய பாங்கி (யின்)
மெல்லிய சிரிப்பைப் பார்த்து அழகினையும் ஒளியினையும் உடைத்தாகிய வேலினையுள்ள நாயகன் சொன்னது.
செய்யுள்: திருநெற்றியிலே சேர்ந்ததொரு திருநயனத்தையுடையவன் சொல்லளவைக் கடந்து வந்து
ஊறுகின்ற அமுதத்தை யொத்து என் நெஞ்சிலே பொருந்தி யென்னைப் பிழைக்கும்படிக்கு ஈடாக நின்றோன்
அவனுடைய சிதம்பரத்தை யொத்து விளங்கும், முத்து நிரையை ஒத்து உள்ளடங்கின வெள்ளிய
முறுவலினையுடைய பெரிய தோள்களையுடையாய்! உன் முகமாகிய சந்திரனில் சதுரப்பாடு பொருந்தின
மெத்தென்ற பார்வையல்லவோ எனக்குரிய துணையாவது?
என்றால், உனக்கு நான் மறைப்பேனோ என்றது.
உள்ளக்கருத்து நுண்ணிதின் விளக்கலின் வித்தகஞ்சேர் மெல்லிய நோக்கமென்றார். 106
18. அறியாள் போன்று நினைவு கேட்டல் *
------------------------------------
*'பேரின்பப் பொருள் : இன்பம் பலவதி லெங்ஙனஞ் சிவமெனல்.
அறியாள் போன்று நினைவு கேட்டல் என்பது தலைமகனது மகிழ்ச்சிகண்டு 'இவன் வாடாமற்
றழைவாங்குவே 'னென உட்கொண்டு, 'என்னுடைய தோழியர் எண்ணிறந்தாருளர்; அவருள் நின்னுடைய
நினைவு யார் கண்ணதோ'வெனத்தான் அறியாதாள் போன்று அவனினைவு கேளா நிற்றல். அதற்குச் செய்யுள்:
விண்ணிறந் தார்நிலம் விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர்** யார்கண்ண
தோமன்ன நின்னருளே
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியே னென்றது.
**' எண்ணிறந்தாரிவர்' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: விண் இறந்தார் நிலம் விண்டவர் என்று மிக்கார் இருவர் கண் இறந்தார் - விண்ணைக்
கடந்தவர் நிலத்தைப் பிளந்தவரென்று சொல்லப்படும் பெரியோரிருவருடைய கண்ணைக் கடந்தார்:
தில்லை அம்பலத்தார்- தில்லையம்பலத்தின் கண்ணார்; கழுக்குன்றில் நின்று தண் நறுந் தாது இவர்
சந்தனச் சோலைப் பந்து ஆடுகின்றார் எண் இறந்தார் - அவரது கழுக்குன்றின் கணின்று தண்ணிதாகிய
நறிய தாது பரந்த சந்தனச் சோலையிடத்துப் பந்தாடுகின்றார் இறப்பப்பலர்: மன்ன-மன்னனே: நின் அருள்
அவர் யார் கண்ணதோ - நினதருள் அவருள் யார் கண்ணதோ? கூறுவாயாக எ-று.
விண்டவரென்பதற்கு முன்னுரைத்ததுரைக்க (திருக் கோவை, 24) அன்னோர்க்கு அரியராயினும்
எம்மனோர்க்கு எளிய ரென்னுங் கருத்தால் தில்லையம்பலத்தா ரென்றார், சோலைக்க ணின்றென்று
கூட்டினு மமையும். எண்ணிறந்தார் பலரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு மருட்கையைச் சார்ந்த பெருமிதம்,
நும்மாற் கருதப்படுவாளை அறியேனென்றாளாக, என்குறை இன்னாள் கண்ணதென அறிவித்தால்
இவள் முடிக்குமென நினைந்து ஆற்றுவானாமென்பது பயன்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் சொன்ன மாந்தளிர் போன்ற சரீரத்தையுடையாளை
நறுநாற்றமிக்க மாலையினையுடையவள் அறியேனென்றது.
செய்யுள்: அன்னமாய் ஆகாசம் கடந்தாரும், வராகமாய்ப் பூமியை இடந்தாரும் என்று (சொல்லப்பட்ட)
அயனும் மாலுமாகிய இவ்விருவரிடத்தையும் கடந்து நின்ற திருவம்பலத்திலேயுள்ளவர், அவருடைய திருக்கழுக்
குன்றம் நின்று திட்பமும் நறுநாற்றமும் உடைத்தாகிய பூப்பரந்த சந்தனச் சோலையில் பந்தாடுகின்றவர்கள் ;
இவர்கள் எண்ணிறந்த பேராய் இருந்தார்கள். இவர்களில் மன்னனே! நின்னுடைய அருள் யாரிடத்தே
என்று சொல்லுவாயாக. 107
19. அவயவங்கூறல்*
------------------
*'பேரின்பப் பொருள் : இன்பக் கனமரன் திருமேனியென்று' இன்பக்கனம்-ஆனந்தமயம்
அவயவங் கூறல் என்பது 'இன்னும் அவளை யிவள் அறிந்திலள்' அறிந்தாளாயிற் றழை வாங்குவா'ளென
உட்கொண்டு நின்று, என்னாற் கருதப்பட்டாளுக்கு அவயவம் இவை' யெனத் தோழிக்குத் தலைமகன்
அவளுடைய அவயவங் கூறா நிற்றல் : அதற்குச் செய்யுள் :-
குலவின கொங்கை குரும்பை
குழல்கொன்றை கொவ்வை செவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்*
சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே.
அவயவ மவளுக் கிவையிவை யென்றது.
*'சூழ்பொழிற்' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு - விரதங்களான்
வருந்தாமற்றவத் தொழிலை நீக்கி அன்பர்க்கு இன்புறு நெறியருளி யவனது தாழ்ந்த பொழிலையுடைய
சிற்றம்பலத்தை யொப்பாட்கு குவவின கொங்கை குரும்பை - குவிந்த கொங்கைகள் குரும்பையையொக்கும்,
குழல் கொன்றை -குழல் கொன்றைப் பழத்தை யொக்கும்; செவ்வாய் கொவ்வை- செய்ய வாய் கொவ்வைக்
கனியை யொக்கும்; கவவின வாள் நகை வெண் முத்தம் - அதனகத்திடப்பட்ட வாணகை வெண் முத்தையொக்கும்
கண் மலர் செங்கழுநீர்-கண்மலர்கள் செங்கழுநீரை யொக்கும்; ஒளி முகம் உவாவின நாள் மதிபோன்று
ஒளிர்கின்றது-ஒளிமுகம் உவாவின் கணுளதாகிய செவ்விமதிபோன் றொளிரா நின்றது எ-று
தவ வினை தீர்ப்பவனென்பதற்கு மிகவும் வினைகளைத் தீர்ப்பவ னெனினுமமையும்.
உவவின நாண்மதி யென்றது "காலகுருகு” ( குறுந்தொகை, 26) என்பது போலப் பன்மை யொருமை மயக்கம்.
எப்பொழுதுந் தன்னுள்ளத்து இடையறாது விளங்குதலின், ஒளிர்கின்றதென நிகழ்காலத்தாற் கூறினான்.
உவவினமதி பல கலைகள் கூடி நிறைந்த தன்மையையுடைய மதி நாண்மதி உவாவான நாளின் மதி.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: என்னாற் காதலிக்கப் பட்டவளுக்கு அவயவங்கள்
இப்படியே இருக்குமென்றது.
செய்யுள் : குவிந்த முலைகள் குரும்பையை யொக்கும்; மயிர் கொன்றைப் பழநெற்றுக் தானாயிருக்கும்!
சிவந்த வாயானது கொவ்வைப்பழம் போன்றிருக்கும் .உள்ளடங்க ஒளிசிறந்த முறுவல் வெள்ளிய முத்துப்
போன்றிருக்கும்: கண்ணானது செங்கழு நீர் மலரையொக்கும். தவத்தொழிலை முடிவு செய்கிறவன்,
அன்பர் விரதங்களினால் வருந்தாமல் இன்புற்று நெறியை அருளுகிறவன் அவனுடைய நீண்ட பொழில்
சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தை யொப்பாளுக்கு உவா நாளின் மதியை ஒத்து விளங்கா நின்றது
ஒளி சிறந்த முகமானது.
இப்படிக்கு அவயவங்களை உடையாளையும் அல்லாதாரையும் தெரியாதோ? என்றுபடும். 108
20. கண்ணயந் துரைத்தல் *
-------------------------
*பேரின்பப் பொருள் : ' திருநோக் கின்பச் சேதன மென்றது'
கண்ணயந் துரைத்தல் என்பது அவயவங் கூறியவழிக் கூறியும் அமையாது. தனக்கு அன்று
தோழியைக் காட்டினமை நினைந்து, பின்னுங் கண்ணயந்து கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள் :
ஈசற் கியான்வைத்த வன்பி
னகன்றவன் வாங்கிய வென்**
பாசத்திற் காரென் றவன்தில்லை
யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே
கண்ணிணை பிறழ்வன, வண்ணமுரைத்தது.
** 'வாங்கியவெம்' என்பது பழையவுரை காரர் பாடம் . 'வாங்கியவெண்' என்றும் பாடம் .
இதன் பொருள்: ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று- ஈசனிடத்து யான் வைத்த அன்பு போல அகன்று
அவன் வாங்கிய என் பாசத்தின் காரென்று - அவனால் வாங்கப்பட்ட எனது பாசம் போலக் கறுத்து; அவன்
தில்லையின் ஒளி போன்று - அவனது தில்லையினொளியை யொத்து; அவன் தோள் பூசு அத்திருநீறு
என வெளுத்து - அவன்றோள்களிற்சாத்தும் அத்திருநீறு போல வெளுத்து; அவன் பூங்கழல் யாம் பேசு
அத்திரு வார்த்தையின் பெருநீளம் பெருங்கண்கள் - அவனுடைய பூப்போலுந் திருவடிகளை யாம் பேசும்
அத் திருவார்த்தை போல மிகவு நெடிய வாயிக்கும் என்னாற் காணப்பட்டவளுடைய பெரிய கண்கள் எ-று.
அன்பி னகன்றென்பதற்குப் பிறிதுரைப்பாரு முளர். தில்லையினொளி போறல், தில்லையினொளி
போலும் ஒளியை யுடைத்தாதல். ஆகவே தில்லையே உவமையாம். பூசத் திருநீறு வெள்ளிதாய்த் தோன்றுமாறு
போல வெளுத்தென்றும், பேசத் திருவார்த்தை நெடிய வாயினாற் போலப் பெரு நீளமாமென்றும் , வினையெச்சமாக்கிச்
சில சொல்வருவித் துரைப்பினும் அமையும். பெரு நீளமாமென ஆக்கம் வருவித்துத் தொழிற்பட வுரைக்க.
கண்களாற் பெரிது மிடர்ப்பட்டானாகலானும், தோழியைத் தனக்குக் காட்டின பேருதவியை
யுடையனவாகலானும், முன்னர்க் கண் மலர் செங்கழுநீ ரென்றும் அமையாது, பின்னும் இவ்வாறு கூறினான்.
கண்ணிற்குப் பிறிது வகையான் உவமங்கூறாது இங்ஙனம் அகல முதலாயின கூறவேண்டியது
எற்றிற்கெனின் , அவை கண்ணிற் கிலக்கணமுங் காட்டியவாறாம், என்னை இலக்கணமாமாறு?
"கண்ணிற் கியல்பு சசடறக் கிளப்பின், வெண்மை கருமை செம்மை யகல நீள மொளியென
நிகழ்த்துவர் புலவர். ஆயின் இதனுட் செம்மை கண்டிலே மென்பார்க்குச் செம்மையுங் கூறிற்று.
அவன்றோளிற் பூசத் திருநீறென் றதனால் சிவப்புஞ் சொல்லிய தாயிற்று, அது செம்மையாற் றோன்றும்
வரியென வறிக.
யான் பேசத் திருவார்த்தை யென்னாது யாமென்ற தென்னை யெனின், திருவார்த்தை பேசுமன்பர்
பலராகலான் யாமென்று பலராகக் கூறினார், இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம்,
பயன்: ஐயமறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கண்ணிணைகள் உலவுகிற வடிவைச் சொன்னது.
செய்யுள்: சிவனிடத்திலே யான்வைத்த நேசம்போலே விரிந்து அவனாலே வாங்கப்பட்ட வெய்ய
பாசம்போலே கருமையுடைத்தாய் அவனுடைய தில்லையின் ஒளிபோன்று ஒளிபெற்று அவனுடைய
திருப்புயங்களிலே சாத்துகிற திருநீறு போலே வெள்ளிதாய், அவனுடைய பொலிவுடைத்தாகிய
சீபாதங்களை நாம் சொல்லுகிற திருவார்த்தை போலே பெரிய நீளமுடைத்தாய் இருந்தன. பெரிய கண்களும்.
கண்ணினாற் பெரிதிடர்ப் பட்டானாதலின் கண்மலர் செங்கழுநீர் என்று அமையாதாதலின்,
இவ்வாறு கூறினார். 109
21. தழையெதிர்தல் *
--------------------
*'பேரின்பப் பொருள் : "அடிமைத் திறத்தாற் சிவத்தாக்குவனென்றது."
தழை யெதிர்தல் என்பது கண்ணயந்துரைப்பக் கேட்ட தோழி, 'இவ்வாறு ஏற்றல் எங்குடிக் கேலாவாயினும்
நீ செய்த வுதவிக்கும் நின்பேரன்புக்கும் ஏலா நின்றே' னெனக் கூறித் தலைமகன் மாட்டுத் தழை யெதிரா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
தோலாக் கரிவென்ற தற்குந்
துவள்விற்கு மில்லின் தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
நீதந்த கொய்தழையே.
அகன்றவிடத் தாற்றாமைகண்டு
கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.
இதன் பொருள் : இருஞ் சிலம்ப-இருஞ் சிலம்பா; தோலாக் கரிவென்ற தற்கும் - எம்மை யேதஞ்செய்ய
வருந்தோலாக் கரியை நீ வென்றதற்கும்; துவள்விற்கும் - யான் குறை மறுப்பவும் போகாது பேரன்பினையுடையாய்,
நீ விடாது துவண்ட துவட்சிக்கும்; இல்லின் தொன்மைக்கு ஏலாப் பரிசு உளவே - எமது குடியின் பழமைக் கேலாத
இயல்பை யுடையவென்று எம்மாற் செய்யப் படாதனவுளவே; ஐய-ஐயனே ; மாலார்க்கு அரிய மலர்க் கழல்
அம்பலவன் மலையில் - மாலார்க்குமரிய மலர் போலுங் கழலையுடைய அம்பலவனது மலையின் கண்;
கோலாப் பிரசம் அன்னாட்கு நீ தந்த கொய்தழை- வைக்கப்படாத தேனையொப்பாட்கு நீ தந்த கொய்தழையை;
அன்றி ஏலேம்-பிறிதோராற்றானேலேம் எ.று.
உளவே யென்னு மேகாரம், எதிர் மறை . அஃதென் போலவெனின்,"தூற்றாதே தூர விடல்”
(நாலடியார்-பொறையுடைமை, 5) என்றது தூற்றுமென்று பொருள் பட்டவாறு போல வென்றறிக.
அன்றியும் ஏலாப்பரி சுளவே யென்பதற்கு நாங்கள் இத்தழை வாங்குவதன் றென்றது கருத்து.
எமது குடிப்பிறப்பின் பழமை பற்றி அது சுற்றத்தார் கூடிவாங்குவ தொழிந்து நாங்களாக வாங்கினாற்
குடிபிறப்புக்குப் பழிவருமென்பதனைப் பற்றியென்றவாறு. வழிபட்டுக் காணலுறாமையின்
மாலாரென இழித்துக் கூறினாரெனினுமமையும்.
உளவேலன்றி யேலேமென்பது பாடமாயின், தழைவாங்குகின்றுழி என்பொருட்டால் நீர்
நுங்குடிக்கேலா தனவற்றைச் செய்யா நின்றீரென்று தலைமகன் கூறியவழி, நீ செய்ததற்குக்
கைம்மாறு செய்ய வேண்டுதுமாதலின் இற்பழியாங் குற்றம் இவற் குளவாயினவல்லது
இதனை யேலேமென்று கூறினாளாக வுரைக்க. என்றது இற்பழியாங் குற்றம் இதற்குளவாகலான்
ஏற்கின்றோம். நீ செய்த வுதவியைப் பற்றி அல்லதேலே மென்றவாறெனவறிக.
கோலாற்பிரச மென்பது பாடமாயின், கோலிடத்துப் பிரசம் , என்றது கோற்றேன்.
இது சுவைமிகுதி யுடைமை கூறியவாறென வுரைக்க. தோலாக்கரி வென்றது முதலாயின நிகழ்ச்சி
செய்யுளின் கட் கண்டிலே மென்பார்க்கு இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்தின்கண் நிகழ்ந்தனவென
வுரைக்க. அன்றியும் படைத்து மொழி வகுத்துரை யென்பன வற்றானுமறிக. அகறல் - அவன்
கருத்திற் ககறல். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநேர்தல்;
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் குறைக்கு உடன் படாமல் அகன்ற விடத்துத்
தான் ஆற்றாமையைக் கண்டு அத்தன்மையாலே துன்பமுற்ற தோழி கையுறை எதிர்ந்தது.
செய்யுள் : ஒருவருக்கும் தோலாத கரியை நீ வென்ற படிக்கும், நாங்கள் குறை மறுக்கவும்
நீ போகாது துவண்டதற்கும், எம்குடியாயின் பழமைக்கும் ஏலாத் தன்மையுண்டோ ? பெரிய
மலையை யுடையவனே ! நாங்கள், புருஷோத்தமனார்க்கரிய மலரையொத்த சீபாதங்களையுடைய
திருவம்பலநாதன், அவனுடைய திருமலையில் ஈ முதலானவற்றாற் கொல்லப்படாத தேனையொப்பாளுக்கு:
சுவாமி! நீ தந்த கொய்யப் பட்ட தழையை இவற்றாலே ஏற்கிறோம்: இதனையல்லது தழையேற்பார்
சிலரல்லோம் காண். 110
22. குறிப்பறிதல்*
----------------
* பேரின்பப் பொருள் : 'பரிவுயிர்க் கருளெனப் பகரருள் கூறல்'
குறிப்பறிதல் என்பது தலைமகன் மாட்டுத் தழை யெதிர்ந்த தோழி: 'இவளுக்குத் தெற்றெனக்
கூறுவேனாயின் இவள் மறுக்கவுங் கூடு 'மென உட்கொண்டு, 'இந்நாள் காறுந் தழையேலாமைக்குத்
தக்க பொய் சொல்லி மறுத்தேன்; இன்று அவனது நோக்கங்கண்டபின் பொய் சொல்லு நெறி அறிந்திலேன்;
இனியவனுக்குச் சொல்லுமாறென்னோ'வெனத் தழை யேற்பித்தற்குத் தலைமகளது குறிப்பு அறியா நிற்றல்,
அதற்குச் செய்யுள்:-
கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும் பொய் தழைப்பமுன்
காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும் நினைப் பாகுமென்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
யேன்சொல்லும் ஈடவற்கே
தழையெதிரா தொழிவதற்கோர்
சொல்லறியேனெனப் பல்வளைக்குரைத்தது.
இதன் பொருள்: கழை காண்டலும் சுளியும் களியானை அன்னான் - குத்து கோலைக் காண்டலும்
வெகுளுங் களி யானையை யொப்பானுடைய; கரத்தில் தழைகாண்டலும் பொய் முன் தழைப்பக் காண்பன் -
கையிற் றழையைக் காண்டலும் அப்பொழுது சொல்லத் தகும் பொய்யை முன் பெருகக் காண்பேன்;
அம்பலத்தான் உழைகாண்டலும் நினைப்பு ஆகும் மெல் நோக்கி அம்பலத்தானுடைய கையிலுழை மானைக்
காண்டலும் நினைவுண்டாம் மெல்லிய நோக்கத் தையுடையாய்; மன் நோக்கம் கண்டால் - அம்மன்னனுடைய
புன்கணோக்கத்தைக் கண்டால் ; இழை காண்பணை முலையாய் இழை விரும்பிக் காணப்படும் பெரிய
முலையையுடையாய்; இன்று அவற்குச் சொல்லும் ஈடு அறியேன் - இன்று அவற்குப் பொய் சொல்லு
நெறியறிகின்றிலேன்; இனியாது செய்வாம்? எ-று.
குத்துகோல் வரைத்தன்றி யானை களிவரைத் தாயினாற்போலக் கழறுவார் சொல்
வயத்தனன்றி வேட்கை வயத்தனாயினானென்பது போதரக் கழைகாண்டலுஞ் சுளியுங்
களியானையன்னா னென்றாள். ஈண்டுக் கழறுவாரென்றது தோழிதன்னை. அஃதாவது
கையுறை பலவற்றையும் ஆகாவென்று தான் மறுத்ததனை நோக்கி. தலைமகளை முகங்கோடற்கு
இழைகாண் பணை முலையாயெனப் பின்னும் எதிர் முகமாக்கினாள். தழையெதிர்ந் தாளாயினும்
தலைமகளது குறிப்பறியாமையின், அவனைக் கண்டிலள் போலக் கண்டாலென எதிர்காலத்தாற்
கூறினாள். இதனை முகம்புக வுரைத்தல் எனினும் குறிப்பறிதல் எனினு மொக்கும்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : தழை ஏற்றுக் கொள்ளாதொழிவதற்கு ஒரு வார்த்தையும்
அறியே னென்று பல வளைகளையுமுடை யாளுக்குச் சொன்னது.
செய்யுள்: பரிக்கோலைக் காணுமளவில் விரிகின்ற மதயானையை யொத்த நாயகனுடைய
கையில் அத்தழையைக் காணுமளவில், அத்தழை ஏலாமைக்குச் சொல்லும் பொய்யான வார்த்தைகளை
முன்பு மிகவும் காண்பேன். இப்பொழுது திருவம்பலநாதனுடைய அத்தத்திலே ஏந்தின மானின்
நோக்கத்தைக்காணுமளவில் நினைப்பாகிற மெத்தென்ற பார்வையினை யுடையாய்! நாயகனுடைய
புன்னோக்கத்தைப் பார்த்தால் ஆபரணங்களை விரும்பிக் காணத்தக்க பெரிய முலைகளையுடையாய்!
அத்தழை ஏலாமைக்குச் சொல்லும் பெரிய வார்த்தைகளை ஒன்று மறிந்திலேன் காண்;
எனத் தழையேற்க வேண்டிற்றென்றுபடும். 111
23. குறிப்பறிந்து கூறல் *
----------------------
*'பேரின்பப் பொருள்: ' வேறறியா வுயிர்க்கருள வேண்டுமென்றது',
குறிப்பறிந்து கூறல் என்பது குறிப்பறிந்து முகங் கொண்டு அது வழியாக நின்று,
'யானை கடிந்த பேருதவியார் கையிற் றழையுந் துவளத்தகுமோ? அது துவளாமல் யாம் அவரது
குறைமுடிக்க வேண்டாவோ' வெனத் தோழி நயப்பக் கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள்:-
தவளத்த நீறணி யுந்தடந்
தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவ ளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே
ஏழைக் கிருந்தழை, தோழிகொண் டுரைத்தது.
இதன் பொருள்: சுரும்பு ஆர் குழல் தூ மொழி- சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்;
தவளத்த நீறு அணியும் தடந் தோள் அண்ணல் - வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய
தோள்களையுடைய அண்ணல் ; தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் தனதொரு
பாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன கவளத்த
யானை - அவன் அன்றுரித்த யானையையொக்குங் கவளத் தையுடைய யானையை: கடிந்தார் கரத்த
கண் ஆர் தழையும் துவளத் தகுவனவோ - நம்மேல் வாராமற் கடிந்தவருடைய கையவாகிய கண்ணிற்
காருந் தழையும் வாடத் தகுவனவோ? தகா எ-று.
தவளத்த நீறு கவளத்த யானை என்பன; பன்மையொருமை மயக்கம். சிவ தத்துவத்தினின்றுஞ்
சத்தி தத்துவந் தோன்றலின் அவளத்தனாமென்றும், சத்தி தத்துவத்தினின்றுஞ் சதாசிவ தத்துவந்
தோன்றலின் மகனாமென்றும் கூறினார். " இமவான் மகட்குத் தன்னுடைக்கேள்வன் மகன் றகப்பன்'
என்பதூஉமப் பொருண்மேல் வந்தது. *
* திருவாசகம், திருப்பொற்சுண்ணம், 13: இன்னும் ''கனகமார் கவின்செய் மன்றில் அனக நாடகற்கெம் மன்னை,
மனைவி தாய் தங்கை மகள்" (சிதம்பரச் செய்யுட் கோவை 33) : 'சிவஞ் சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான்
சிவத்தை யீன்றும், (சிவஞான சித்தியார்) : ''சத்தியீன்ற சதாசிவம்" (திருமந்திரம்) : "அம்மனையாயவர்
தம்மனை யானவள்" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அம்மானை-9) என வருவனவும் காண்க.
கவளத்த யானை யென்பதனால் தான் விரும்புங் கவளமுண்டு வளர்ந்த யானை யென்பதூஉம்
கூறப்பட்டதாம். அது ஒருவராற் கட்டப்பட்டு பிடிபட்டதன்றாகலான், அதனை வெல்வதரிது' அப்படிப்பட்ட
யானையையும் வென்றவர். அங்ஙனம் யானை கடிந்த பேருதவியார் கையனவுந் துவளத் தகுவனவோ
வென்றதனால் அவருள்ளமுந் துவளாமற் குறைமுடிக்க வேண்டுமென்பது குறிப்பாற் கூறினாள்.
உம்மை சிறப்பும்மை ஏழைக் குரைத்ததென வியையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு; அழுகையைச்
சார்ந்த பெருமிதம். பயன்: குறைநயப்பித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகிக்கு மிக்க தழையைப் பாங்கி கொண்டு சென்றது.
செய்யுள்: வெள்ளிய திருநீற்றைச் சாத்தியருளுகிற பெரிய திருப்புயங்களை யுடைய சுவாமி
தனக்கொரு பாகமாகிய தன் தேவிக்குத் தகப்பனும் மகனுமான திருவம்பலநாதன் முற்காலத்திலே
உரித்த யானையை யொத்ததான வேண்டிய கவளங்களைக் கொள்ளுகிற யானை நம்மைக் கொல்லாமை
வென்றவர். அவர் கையிலுள்ளனவாகிய கண்ணுக்கு நிறைந்த தழையும் வாட (விடப்படு) வனவோ?
வண்டு நிறைந்த கூந்தலினையும் தூய வார்த்தையினையும் உடையாய்! 112
24. வகுத்துரைத்தல் *
-------------------
*பேரின்பப் பொருள்: "சிவமுயிர்ப் பரிவரு டனக்குச் செப்பியது."
வகுத்துரைத்தல் என்பது உதவி கூறவும் பெருநாணின ளாதலின் தழை வாங்க மாட்டாது நிற்ப,
அக்குறிப்பறிந்து இருவகையானும் நமக்குப் பழியேறும்; அது கிடக்க, நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி
செய்யுமாறென்னோ' வெனத் தலை மகள் தழை யேற்குமாறு வகுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :
ஏறும் பழிதழை யேற்பின்மற்
றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மான்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம்காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே
கடித்தழைகொணர்ந்த காதற்றோழி
மடக்கொடிமாதர்க்கு வகுத்துரைத்தது.
இதன் பொருள் : ஏந்திழை- ஏந்திழாய்; தழை ஏற்பின் ஏறும்- தழையையேற்பின் தாமேயொரு நட்புச்
செய்தாரென்று பிறரிடத்து நமக்குப் பழியேறும்; ஏலாவிடின் அவன் மடல்மா ஏறும்-அதனையேலாதொழியின்
பிறிதோ ருபாயமில்லை யென்று அவன் மடலாகிய மாவையேறும் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும் -
தரும வடிவாகிய இடபத்தைக் கொடியின் கண் வைத்து நமது பிறவித் துன்பத்தை நீக்க ஒருப்பட்டு வந்து
அம்பலத்தின் கணேறும்: அரன் மன்னும் ஈங்கோய் மலை-அரன்றங்கும் ஈங்கோய் மலையின், நம் இரும் புனம்
காய்ந்து - நமது பெரிய புனத்தை யழித்து; ஏறும் மலை தொலைத் தாற்கு-நம்மை நோக்கி வந்தேறும் மலைபோலும்
யானையைத் தோற்பித்தவற்கு; யாம் செய்வது என்னை - யாஞ்செய்வதென்னோ? அதனை யறிகின்றிலேன் எ-று.
மற்று: வினைமாற்று. மடன் மா வேறுமவனென்று தழை யேலாவிடினும் பழியேறுமென்பதுபடக்
கூறினமையானும், ஏறுமலை தொலைத்தாற்கென அவன் செய்த உதவி கூறினமையானும், தழையேற்பதே
கருமமென்பதுபடக் கூறினாளாம். அன்றியுந் தழை யேற்றால் நமக்கேறும்பழியை அறத்தொடு நிலை
முதலாயின கொண்டு தீர்க்கலாமென்றும், ஏலாவிடின் அவன் மடன்மாவை யேறுதலான் வரும் பழி
ஒன்றானுந் தீர்க்கமுடியாதென்றும் கூறியவாறாயிற்று. வகுத்துரைத்தல்- தழையேற்றலே கருமமென்று
கூறுபடுத்துச் சொல்லுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாற்றமுடை (யதழையை) ஏற்றுக்கொண்டு வந்த உயிர்த்தோழி
மடப்பத்தால் தக்க நாயகிக்குக் கூறுபடுத்திச் சொன்னது.
செய்யுள்: தழை ஏற்போமாகில் பழி ஏறாநிற்கும்; மற்று நாம் தழை ஏற்காத போது, மடலாகிய புரவியை
(அவன்) ஏறாநிற்பன்; இடபத்தைக் கொடியிலே எழுதிப் பிடித்து வந்து, 'பிறவித் துன்பம் தீர்க்கக் கடவேன்' என்று
திருவம்பலத்தே ஏறிநின்ற தலைவன் மன்னும் நிலை பெற்ற திருஈங்கோய் மலையில் நம் பெரும்
புனத்தையுமழித்து நம்மையும் கொல்வதாக வந்தேறுகின்ற மலையை நிகர்த்த யானையைத் தோற்பித்தவர்க்கு ,
மிகுந்த ஆபரணங்களை யுடையாய்! நாம் என் செய்வோம் ?
என்ன தழையேற் (காமலிருப்பது) சிவ பழியாம்; தழை ஏலாத பொழுது அவன் மடலேறுதலாலே,
உலகெலாம் அறிந்து பெரும்பழியாகுமாதலால் உபகாரம் செய்தாரொருவற்கு, உபகார குன்னியம் செய்து
பெரும் பழி பெறுவதின், பிரதியுபகாரம் செய்து சிறுபழி பெற அமையாதோ என்று படும்.
25. தழையேற்பித்தல்*
--------------------
* பேரின்பப் பொருள் : அருளே யுயிர்ப்பணி சிவத்துக் காக்கல்.
தழை யேற்பித்தல் என்பது தழையேலாதொழியினும் பழியேறுமாயிற் றழையேற்பதே காரியமென
உட்கொண்டு நிற்ப, அக்குறிப்பறிந்து, 'இத்தழை நமக்கெளிய தொன்றன்று. இதனை யேற்றுக் கொள்வாயாக,'
வெனத் தோழி தலைமகளைத் தழை யேற்பியா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
தெவ்வரை மெய்யெரி காய்சிலை
யாண்டென்னை யாண்டுகொண்ட*
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைக்கண்
டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
திற்றந்த ஈர்ந்தழையே
கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது
*பா-ம்-யாக்கிவந் தாண்டு கொண்ட.
இதன் பொருள்: அருளான் - நம்மாட் டுண்டாகிய அருளான்; இவ்வரைமேல் சிலம்பன் எளிதில் தந்த
ஈர்ந்தழை - இம்மலைக்கட் சிலம்பன் எளிதாகக் கொணர்ந்து தந்த வாடாத இத்தழை; செழும் கயிலை
அவ்வரைமேல் அன்றி இல்லை- வளவிய கைலையாகிய அம்மலையிடத்தல்லது பிறிதோரிடத்தில்லை;
இதனைக் கொள்வாயாக எ-று. உள்ளவாறென்பது யான் கூறிய இது மெய்ம்மையென்றவாறு, தெவ்வரை
மெய் எரி காய்சிலை ஆண்டு - பகைவரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணி கொண்டு;
என்னை ஆண்டு கொண்டபின் என்னை யடிமை கொண்ட; செவ்வரை மேனியன் சிற்றம்பலவன் செழுங்கயிலை -
செவ்வரை போலுந் திருமேனியை யுடையனாகிய சிற்றம்பலவனது செழுங்கைலையெனக் கூட்டுக.
மெய் எரியென்பன ஒரு சொல்லாய்த் தெவ்வரையென்னும் இரண்டாவதற்கு முடிபாயின.
மெய்யெரித்த காய்சிலை மெய்யெரி காய்சிலையென வினைத்தொகை யாயிற்று. காய் சிலை: சாதியடை.
ஐகாரத்தை அசைநிலை யாக்கித்தெவ்வர் மெய் யெரித்தற்குக் காரணமாஞ் சிலை யெனினுமமையும்.
வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னை யாண்டா னென்பது போதரக் காய்சிலை
யாண்டென்னை யாண்டு கொண்டவென்றார்.
என்னைத் தனக்கு அடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை
வளைத்தான்; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொரு பகையுண்டாய்ச்
செய்ததன்று போலும் என்பது கருத்து. " கல்லை மென்கனி யாக்கும் விச்சை கொண்டென்னை
நின் கழற் கன்ப னாக்கினாய்" (திருவாசகம், திருச்சதகம், 94) என்பதுமது. கைலைத் தழையை
எளிதிற்றந்தா னென்றதனான் வரைவு வேண்டிய வழித்தமர் மறுப்பின் வரைந்து கொள்ளுந்
தாளாண்மையனென்பது கூறினாளாம். கண்டா யென்பது ; முன்னிலை யசைச்சொல்.
இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: கையுறையேற்பித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரை கிடைத்திலது.)
செய்யுள்: வடமேருவை வில்லாக வளைத்துத் தனக்கு மாறுபாடானவர்கள் புரங்களுடனே
அவர்கள் சரீரமும் எரியச் செய்தும் என் நெஞ்சக் கல்லை யுருக்கியும், இவ்விரு சிலையையும்
தன் வசத்திலே வரப்பண்ணிக் கொண்ட பவளமலை போன்ற திருமேனியையுடையவன்;
(என்றது வசமாக்க வொண்ணாத மலை முதலானவற்றை வசப்படுத்தின சிரிப்பாலே என்
நெஞ்சக் கல்லைக் கரைத்து, வசமாக்கினான் என்பது கருத்து); திருச்சிற்றம்பலநாதன் ஸ்ரீ கயிலாய
மலையாகிய வரையின் மேலன்றி வேறொரிடத்தும் கிடையாது காண்; இவ்வார்த்தை உள்ளது காண்;
நாயகன் தன்னுடைய அன்பினாலே இம்மலையிடத்தே நமக்கெளிதாகக் கொண்டுவந்து தந்த
குளிர்ந்த தழை அந்த வரையிடத்தன்றி வேறொரு மலைக்கும் (மலையிலும்) கண்டதில்லை காண். 114
26. தழைவிருப்புரைத்தல் *
------------------------
*பேரின்பப் பொருள்: உன்பணி சிவத்துக்குவப்பென வுரைத்தது:
தழை விருப்புரைத்தல் என்பது தலைமகளைத் தழையேற் பித்துத் தலைமகனுழைச் சென்று,
நீ தந்த தழையை யான் சென்று கொடுத்தேன்; அது கொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகு மெனத்
தலைமகளது விருப்பங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:
பாசத் தளையறுத் தாண்டுகொண்
டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான் கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப் **
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.
விருப்பவள் தோழி, பொருப்பற் குரைத்தது
** பா-ம்-பெயர்ந்துரைத்துப் பூசித்தில.
இதன் பொருள்: பாசத்தளை அறுத்து - பாசமாகிய தளையிற்பட்டுக் கிடப்ப அத்தளையை யறுத்து:
ஆண்டு கொண்டோன் தில்லையம்பலம் சூழ்தேசத்தன - தனக்குக் குற்றேவல் செய்ய என்னை யடிமை
கொண்டவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த தேசத்தின்கணுள்ளன : செம்மல் நீ தந்தன- அச்சிறப்பே
யன்றிச் செம்மல் நின்னாற் றரப்பட்டன; சென்று யான் கொடுத்தேன் - அவற்றைச் சென்று யான் கொடுத்தேன் ;
பேசில் பெருகும் - கொடுப்ப ஆண்டு நிகழ்ந்தனவற்றைச் சொல்லுவேனாயிற் பெருகும்; சுருங்கு மருங்குல் -
சுருங்கிய மருங்குலையுடையாள்; பூந்தழை- அப்பூந்தழையை; அரைத்துப் பூசிற்றிலள் அன்றிப் பெயர்ந்து
செய்யாதன இல்லை, அரைத்துத் தன் மேனியெங்கும் பூசிற்றிலளல்லது பெயர்த்துச் செய்யாதன வில்லை எ-று.
என்றது இவை வாடுமென்று கருதாது அரைத்துப் பூசினாற் போலத் தன் மேனி முழுதும் படுத்தாள்
என்றவாறு, பெயர்த்தென்பது பெயர்ந்தென மெலிந்து நின்றது. பிசைந்தரைத்தென்று பாட மோதுவாருமுளர்.
மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகனையாற்றுவித்தல்.
சேட்படை முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகியுடைய விருப்பத்தை அவளுடைய உயிர்த்தோழியானவள்
நாயகனுக்குச் சொல்லியது.
செய்யுள் : பிறவிச் சாகரமாகிய பாசத்தளையாகிய விலங்கை வெட்டி என்னையும் தன் வசமாக்கிக்
கொண்டவன், அவனுடைய திருவம்பலத்தைச் சூழ்ந்த இடத்திலுள்ளன; பெரியவனே! உன்னாலே தரப்பட்டன;
அதிலே கொண்டு சென்று யான் கொடுத்தேனாயிருந்தது. (அதனை நான் எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தேன் :)
அவள் தழையைக் கொண்டு செய்தனவற்றைச் சொல்லிற் பெருகாநிற்கும்; சிறிய இடையினை யுள்ளவள்
அத்தழையை அரைத்துப் பூசிற்றிலள்; தன்னை அல்லது பொலிவுடைத்தாகிய தழையைக் கொண்டு
பெயர்த்துச் செய்யாத பாவகமெல்லாம் செய்தாள் காண்.
13. பகற்குறி*
-----------
*பேரின்பக் கிளவி: பகற்குறித் துறைமுப் பாடிரண்டுக போற் இயற்கை சிவத்தோ டியலுறக் கூட்டிப்
பிரித்த வருளின் பகற்குறியே''
பகற்குறி என்பது தலைமகளைத் தழையேற்பித்த தோழி தலைமகனுடன் அவளைப் பகற்குறிக்கட்
டலைப்பெய்வியா நிற்றல். அது வருமாறு-
குறியிடங் கூற லாடிடம் படர்தல்
குறியிடைச் சேற லிடத்துய்த்து நீங்க
லுவந்துரைத் தலொடு மருங்கணை தல்லே
யறிவறி வித்த லவனுண் மகிழ்த
லாயத் துய்த்த றோழி வந்து கூட
லாடிடம் புகுத றனிகண் டுரைத்த
றடமென் முலையாள் பருவங் கூறி
வரவு விலக்கல் வரைவுடம் படாது
மிகுத்துரைத் தலொடு மெய்ம்மை யுரைத்தல்
வருத்தங் கூற றாயச்சங் கூற
லிற்செறி வறிவித்த றமர்நினை வுரைத்த
லெதிர்கோள் கூற லேறுகோள் கூற
லேதிலார் தம்முரை கூற லவளொடு
கூறுவாள் போன்று தினைமுதிர் வுரைத்தல்
பகல் வரல் விலக்கல் பையு ளெய்தித்
தினையொடு வெறுத்தல் சிறைப்புறமாக
வேங்கையொடு வெறுத்தல் வெற்பமர் நாடற்குக்
கழுமலுற் றிரங்கல் கடிப்புனங் கையறக்
கொய்தமை கூறல் பிரிவருமை கூறன்
மயிலொடு கூறல் வறும்புனங் காண்டல்
பயில் பதி நோக்கிப் பதிமிக வாடல்
சொன்னநா லெட்டுந் தோன்று மியற்கை
மன்னிய பகற்குறி வகையா கும்மே
இதன் பொருள் : குறியிடங்கூறல், ஆடிடம்படர்தல், குறியிடத்துக் கொண்டு சேறல், இடத்துய்த்து நீங்கல்,
உவந்துரைத்தல், மருங்கணைதல், பாங்கியறிவுரைத்தல், உண் மகிழ்ந்துரைத்தல், ஆயத் துய்த்தல், தோழிவந்து கூடல்,
ஆடிடம்புகுதல், தனிகண்டுரைத்தல், பருவங்கூறி வரவுவிலக்கல், வரைவுடம்படாது மிகுத்துக்கூறல்,
உண்மை கூறி வரைவு கடாதல், வருத்தம் கூறி வரைவுகடாதல், தாயச்சங் கூறி வரைவுகடாதல்,
இற்செறிவறிவித்து வரைவுகடாதல், தமர் நினைவுரைத்து வரைவு கடாதல், எதிர்கோள் கூறி வரைவு கடாதல்,
ஏறுகோள் கூறி வரைவு கடாதல், அயலுரை யுரைத்து வரைவுகடாதல், தினை முதிர்வுரைத்து வரைவுகடாதல்,
பகல் வரல் விலக்கிவரைவுகடாதல், தினையொடு வெறுத்து வரைவுகடாதல், வேங்கையொடு வெறுத்து
வரைவுகடாதல், மயிலொடு கூறி வரைவு கடாதல், வறும்புனங் கண்டு வருந்தல், பதி நோக்கி வருந்தல்
என விவை முப்பத்திரண்டும் பகற்குறியாம் எ-று அவற்றுள் :-
1. குறியிடங் கூறல்*
-----------------
*பேரின்பப் பொருள்; அருளுயிர்க் கின்ப மாமிட முரைத்தது.
குறியிடங் கூறல் என்பது தழை விருப்புரைத்த தோழி ஆங்கவள் விளையாடுமிடத்து ஒரு கரியபொழில்
கதிரவன் நுழையா விருளாய் கடுவண் ஒரு பளிக்குப் பாறையை யுடைத்தாயிருக்கும்; அவ்விடத்து
வருவாயாக ' வென்று தலைமகனுக்குக் குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:--
வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய் யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கான்மதியோன்
கானுழை வாழ்வு பெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே
வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள்
ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது
இதன் பொருள்: ஓர் கார்ப்பொழில் - ஒரு கரிய பொழில் : புறம் வெய்யோன் தான் நுழையா இருளாய் -
புறமெங்குங் கதிரோன் றான் சென்று நுழையாத விருளாய் - நாப்பண்வண் தாரகை போல் தேன் நுழை
நாகம் மலர்ந்து - நடுவண் வளவிய வான் மீன் போலத் தேன்கள் நுழையும் நாகப்பூ மலர்ந்து; திகழ் பளிங்கான்-
திகழும் பளிங்கால் ; மதியோன் கான் உழை வாழ்வு பெற்றாங்கு எழில் காட்டும்- திங்கட்கடவுள் வானிடத்து
வாழ்வையொழிந்து கானிடத்து வாழ்தலைப் பெற்றாற்போலத் தனதெழிலைப் புலப்படுத்தும் எ-று.
வான் உழைவாள் - இருட்கு அப்பாலாகிய வான் இடத்து உண்டாகிய ஒளி; அம்பலத்து அரன் - இவ்வண்ணஞ்
சேயனாயினும் அணியனாய், அம்பலத்தின் கண் உளனாகிய அரன்; குன்று என்று வட்கி வெய்யோன்
தான் நுழையா - அவனது மலையென்று கூசினாற்போல வெய்யவன் நுழையாவெனக் கூட்டுக.
"அண்ட மாரிருளூடு கடந்தும்ப, ருண்டுபோலுமோ ரொண் சுடர்" என்பதூஉம் அப்பொருண்மேல்
வந்தது. வட்கி யென்பதனால் முன் பற்பறியுண்டானால் விளங்கும். வானுழை வாளென்பதற்குக்
கற்பவிறுதிக்கண் தோன்றிய முறையானே வான்சென்றொடுங்கும் ஒளியென்றுரைப்பாருமுளர்.
புறம் இருளாயெனவும் நாகமலர்ந்தெனவும் சினைவினை முதன் மேலேறி நின்றன. புறம் இருளா யென்பது
இடத்து நிகழ் பொருளின் வினை இடத்தின் மேலேறி நின்றது. இது குறிப்பெச்சமாதலான், ஆண்டு
வாவென்பது கருத்து. மெய்ப்பாடு: உவகை. பயன்: குறியிடமுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகன் வாடினவிடத்து அழகிய தழையைப் பெற்றுக்
கொண்டவள் விளையாடுகிற இடத்தின் இயல்பை அறியும்படி சொல்லியது.
செய்யுள்: ஆகாயத்தினிடத்திலே உண்டாகிய ஒளியாயுள்ளவன் ,திருவம்பலத்தேயுளனாகிய
தலைவன்: (அவனுடைய) திருமலையென்று கூசிப் புறச்சோலையெல்லாம், ஆதித்தன் புகுந்து நுழையாத
இருளாய் வன்மையுடைய நக்கத்திரங்கள் போல.......சுரபுன்னைகள் மலர்ந்து விளங்கா நின்ற பளிக்குப்
பாறைகளான சந்திரனானவன் வானிடத்து வாழ்வை யொழித்துக் கானிடத்து வாழ்வு பெற்றாற்போலத்
தன்னழகை விட்டு விளங்காநின்றது கரிய பொழிலானது: என்ன; அவ்விடத்தேற வா ' என்றது. 116
*அப்பர் தேவாரம், சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை, 2
2. ஆடிடம் படர்தல் *
-----------------
*'பேரின்பப் பொருள் : இன்பந் தனைக்கொண் டேகாந்தத் தேகல்,
ஆடிடம் படர்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறின தோழி, 'யாம் புனத்தின்கட் போய்
ஊசலாடி அவியேற்று விளையாடுவேம், போதுவாயாக' வெனத் தலைமகளை ஆயத்தொடுங் கொண்டுசென்று
ஆடிடம் படரா நிற்றல், அதற்குச் செய்யுள் -
புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப் பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல் வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்த ருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான் வரைத் தண்புனத்தே:
வண்தழை யெதிர்ந்த வொண் டொடிப் பாங்கி
நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது
இதன் பொருள்: பொன்னே பொன்னே; காதரம் தீர்த்து அருளும் தயல் வளர் மேனியன் - பிறவி
காரணமாக வருமச்சத்தை நீக்கி அருள் செய்யுந் தையல் தங்குந் திருமேனியை யுடையவனாகிய;
அம்பலத்தான் வரைத்தண்புனத்து- அம்பலத்தானது மலையிற் குளிர்ந்த புனத்தின்கண்; புயல் வளர்
ஊசல்முன் ஆடி-புயல் தங்குமூசலை முன்னாடி; பின்னைப்போல் - பின் போய்; அயல் பொலியும்
வளர் குன்றில் நின்று அருவி ஏற்றும் - அதற்கயலாகிய பொலியும் உயர்ந்த குன்றின்கணின்று
அருவியை ஏற்போம்; திரு உருவின் கயல் வளர் வாள் கண்ணி போதரு - திருப்போலும் உருவினையும்
கயல் போலும் வாட் கண்ணையுமுடையாய், நீ போதுவாயாக எ.று.
உயர்ந்த வழைமரத்திற் றொடுத்தலால், புயல் வளரூசலென்றாள். வளர்கண்ணென வியையும்;
ஈண்டு வளர் என்பது; உவமை யுருபு , வாள் உவமை : ஒளியெனினுமமையும். தண்புனத்துப் போதருவென
இயைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம்; உவகையுமாம். பயன்: குறியிடத்துப் போதருதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அழகிய தழையைப் பெற்றுக் கொண்ட அழகிய வளையணிந்த
பாங்கி நீண்ட வேயையொத்த தோள்களை யுடையாருடனே விளையாடுகிற விடத்திற் சென்றது.
செய்யுள்: பொன்னை யொப்பாய்! கயலை யொத்த ஒளி சிறந்த கண்களையுடையாய்! போதுவாயாக,
பிறவியினாலே வருகின்ற அச்சத்தைத் தீர்த்தருளுகிற சங்கரி தங்குகிற திருமேனியை யுடையவன்,
திருவம்பலநாதன் அவனுடைய திருமலையிற் குளிர்ந்த புனத்திடத்தே முன்பு மேகங்கள் தங்குகிற
ஊசலையாடிப் பின்பு அருவி நீரை யேற்று விளையாடக் கடவேம்; போதுவாயாக. 117
3. குறியிடத்துக்கொண்டு சேறல்'*
------------------------------
*'பேரின்பப் பொருள் : அருமையாற் சிவத்தை யுயிரிடத் தாக்குதல்.
குறியிடத்துக்கொண்டு சேறல் என்பது ஆடிடம்படர்ந்த தோழி தலைமகனுக்குத் தான்
சொன்ன குறியிடத்து இவளைக் கொண்டு சென்றுய்க்கும் பொழுது, ஆயத்தாரைத் தம்மிடத்தினின்று
நீக்கவேண்டுதலின் தினைகாத்தல் முதலாகிய விளையாட்டுக்களைத் தான் கூறவே அவ்வவ்
விளையாட்டிற்குரியார் தலைமகள் அவ்வவ்விடங்களிலே வருவளென்று கருதித் தோழி சொன்ன
வகையே அவ்வவ் விளையாட்டு விருப்பினான் எல்லாரும் பிரிவர்; அவ்வகை ஆயவெள்ளத்தைப்
பிரிவித்துத் தமியளாய் நின்ற தலைமகளையுங் கொண்டு யாமும்போய் மயிலாடல் காண்பேமென
அக்குறியிடத்துச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே
அணிவளராடிடத் தாயவெள்ள
மணிவளர்கொங்கையை மருங்ககன்றது.
இதன் பொருள்: தொழுது எழுவார் வினை வளம் நீறு எழ- தொழா நின்று துயிலெழுவாருடைய
வினையினது பெருக்கம் பொடியாக: நீறு அம்பலவன்றன் வெற்பில் தன்றிரு மேனிக்கண் நீற்றையணியும்
அம்பலவனது வெற்பில்: புனை வளர் கொம்பர் அன்னாய் - கைபுனையப்பட்ட வளர் கொம்பை யொப்பாய்:
தினை வளம் காத்து - தினையாகிய வளத்தைக் காத்து; சிலம்பு எதிர்கூஉய் - சிலம்பிற் கெதிரழைத்து
சிற்றில் முற்று இழைத்து - சிற்றிலை மிகவுமிழைத்து; சுனை வளம் பாய்ந்து - சுனைப்புனலிற் பாய்ந்து:
துணை மலர் கொய்து - ஒத்த மலர்களைக் கொய்து ; அன்னபுனமயில் காண்டும் - அத்தன்மையவாகிய
புனமயிலைக் காண்பேம் யாம் எ-று.
மலைக்கு வளமா தனோக்கித் தினை வளமென்றாள் தினையினது மிகுதி யெனினு மமையும்.
தொழுதெழுவாரென்றது துயிலெழுங் காலத்தல்லது முன்னுணர்வின்மையான் உணர்வுள்ள காலத்து
மறவாது நினைவார் என்றவாறு. நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்குமெழிலுடைமையான்
அக்கோலந் தொழுதெழுவாருள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறாமென்னுங்
கருத்தான் வினைவள நீறெழ நீறணியம்ப லவனென்றார், புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற்
போலத்* தொழுதெழுவார் வினைக்குத் தானீறணிந்தா னென்பாருமுளர். வெற்பினென்புழி வெற்பைத்
தினைகாத்தல் முதலாகிய தொழிற்கு இடமாக வுரைப்பினுமமையும், அத்தன்மையவாகிய மயிலென்றது
பொருளதி காரத்திற் கூறப்பட்ட தலைமகள் தான்றமியளாய் நின்று கண்ட மயிலை. இயற்கைப், புணர்ச்சிய
திறுதிக் கட்டோழி தனது வாட்டத்தை வினவியபோது யானோரிள மயிலாலுவது கண்டேன்; அதனை நீயுங்
காணப்பெற்றிலை யென வாடினே' னென்று உரைப்பக் கேட்டாளாதலான், அதனைப்பற்றி அம் மயிலைக்
காண்டு மென்றளாயிற்று. மெய்ப்பாடு: அது பயன்: ஆயம் பிரிதல்.
*புதல்வன் பிணிக்குத் தாய் மருந்துண்டல்; பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து
தாயுண்டாங்கு" (சிதம்பர மும்மணிக் கோவை 1 14-15): "இளங்குழவிப் பிணிக்கீன்ற தாய் மருந்து
நுகர்வது போல்' (திருவானைக்காப்புராணம் செய்யுள் 7) ,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அழகுமிக்க விளையாட்டிடத்தே ஆயக் கூட்டத்தா ரிடத்தினின்று,
முத்துமணி அணியப்பட்ட ஆபரணங்களை யுடையாளுடனே ஒரு பக்கத்திலே சேர்ந்தது.
செய்யுள் : தினையாகிய வளத்தையும் காவலாகி யிருந்து சிலம்பிற் கெதிரழைத்துச் சிறு வீடுகளை
நெடும் போதெல்லாம் எடுத்து விளையாடிச் சுனைக்கு வளமாகிய நீரையும் குடைந்து, இணையொத்த
புட்பங்களையும் பறித்துத் தன்னைத் தொழுது செல்வாருடைய இருவினைகளும் நுண் பொடி யாம் படி
திருதீறணி அம்பலவன் திருமலையில் கைசெய்து வளர்க்கப்பட்ட வஞ்சிக்கொடியை யொப்பாய் !
அத்தன்மையாகிய புனத்தின் மயில்களையும் காணக் கடவோம்' என்று அங்கு ஏறப்போனது. 118
4. இடத்துய்த்து நீங்கல்*
--------------------
*பேரின்பப் பொருள்: அருள்சிவத்திடைச் சேர்த்தகன்று நின்றது.
இடத்துய்த்து நீங்கல் என்பது குறியிடைக் கொண்டு சென்ற தோழி, "யான் அவ்விடத்துச் சென்று
நின் குழற்குப் பூக்கொய்து வருவேன்; அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான்
நீ என்னோடு வாராது இங்கே நின்று பூக்கொய்வாயாக' வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித்
தானீங்கா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கே சென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கார்
தடமலர் கொண்டு வந்தே.
மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது .
இதன் பொருள் : உங்கே சென்று - யான் உவ்விடத்தே சென்று; ஈர்ங்குரல் வேய் அளி முரல் கொங்கு
ஆர் தட மலர் கொண்டு வந்து; தேனானீரிய பூங்கொத்தை மூடிய அளிகள் முரலுந் தாது நிறைந்த
பெரிய மலர்களைக் கொய்து கொண்டு வந்து உன் வார் குழற்கு வேய்தருவன் - நின்னுடைய
நெடிய குழற்கண் வேய்வேன் ; பரன் தில்லை அன்னாய்- பரனது தில்லையை யொப்பாய்;
நரல் வேய் இனம் நினதோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி காற்றானொன்றோடொன்று
தேய்ந்து நரலும் வேய்த் திரள் உன்னுடைய தோள்கட்கஞ்சிப் பிளத்தலான் உக்க நல்ல முத்துக்கள் சிதறுதலால்;
பரல் வேய் அறை பஞ்சு அடி உறைக்கும் - பரல் மூடிய பாறை நினது பஞ்சடிக்கணுறைக்கும்;
வரல் இங்கே நில் - அதனான் என்னோடு ஆண்டு வரற்பாலை யல்லை, ஈண்டு நிற்பாயாக எ-று.
யான்றருவன் நீ வேயென்றும் பிறவாற்றானு முரைப் பாருமுளர். குரலென்பது. பூங்கொத்தை
தடமல ரென்பதற்குத் தடத்து மலரென்றுரைப்பாரு முளர். பரல்வேயறையுறைக்கும் வரல்; வேய்தருவன்:
இங்கே நில்' லென்று தலைமகளைத் தோழி கூறி இவ்விடத்தே நில்லென்றாள் . மெய்ப்பாடு :அது
பயன்: தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்குதல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மடப்பத்தால் தகுதியுடைய நாயகியை தன் குறியிடத்து
(செலுத்தித் தான் நீங்கிய) பூத்த வல்லி சாதம் போன்ற தோழி சொன்னது .
செய்யுள்: நாதம் பண்ணுகிற மூங்கிலினம் உன்னுடைய தோளுக்குத் தோற்று உகுத்த நன் முத்தானது
பரந்து அந்தப் பரலாலே மூடப்பட்ட கற்பாறையானது உன் காலுக்கு உறுத்தா நிற்கும். அடியும் பஞ்சு
தானாக விருந்தது. சிவனுடைய புலியூரையொப்பாய் ! வாராதே கொள்; நான் சூட்டக் கடவேன்: இங்கே நில்;
அவ்விடத்திலேபோய் யான் உன்னுடைய நீண்ட கூந்தலுக்கு ஈரபார முடைத்தாகிய பூங்கொத்துக்களை மூடி,
வண்டுச் சாதிகள் ஆரவாரிக்கிற வாசனை நிறைந்த பெரிய புட்பங்களைப் பறித்துக் கொண்டு வந்து
நான் சூட்டக் கடவேன்: அவ்வளவும் நீ இங்கு நிற்பாயாக. 119
5. உவந்துரைத்தல்.*
------------------
*பேரின்பப் பொருள் : உயிர் சிவந் தரிசித் துண்மகிழ்ந் துரைத்தது.
உவந்துரைத்தல் என்பது தோழி தலைமகளைக் குறியிடை நிறுத்தி நீங்கா நிற்பத் தலைமகன்
சென்றெதிர்ப்பட்டு, 'இக் குவட்டை மாசுணப்பள்ளியாகவும் என்னைத் திருமாலாகவும் நினைந்தோ
நீ இப்பொழிற்கண் வந்து நின்ற தெனத் தலை மகளை உவந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
படமா சுணப்பள்ளி யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவெ ன்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே
களிமயிற்சாயலை யொருசிறைக்கண்ட
ஒளிமலர்த்தாரோ னுவந்துரைத்தது.
இதன் பொருள்: வடம் ஆர் முலை மடவாய்:-வடமார்ந்த முலையையுடைய மடவாய்; தில்லை நின்றவன்
ஈர்ங் கயிலை வார் பொழிற்கு வைகிற்று - தில்லைக்கணின்றவனது குளிர்ந்த கைலைக்கண் நீண்ட இப்பொழிலிடத்து
வந்து தங்கியது; இக் குவடு பட மாசுணப் பள்ளி ஆக்கி- இக்குவட்டைப் படத்தையுடைய மாசுணமாகிய பள்ளியாக்கி ;
என்னைப் பங்கயக் கண் அந் நெடுமால் என நீ நினைந்தோ- என்னை அம்மாசுணப்பள்ளியிற் றங்கும்
பங்கயம் போலுங் கண்ணையுடைய அந்நெடிய மாலென்று நீ நினைந்தோ; நெஞ்சத் தாமரையே இடம் ஆ
இருக்கல் உற்றோ - நெடுமாலின் மார்பினன்றித் தாமரையினுமிருத்தலான் யான் நீங்கினும் என்னெஞ்சமாகிய
தாமரையே நினைக்கிடமாக இருக்க நினைந்தோ ? கூறுவாயாக எ-று
மாசுணப்பள்ளி மாசுணத் தானியன்ற பள்ளியெனினு மமையும். என்னெஞ்சத் தாமரைக்கணிருக்க
லுற்றோ வென்றதனான், இப்பொழிற்கண் வந்து நின்ற நிலை ஒருஞான்றும் என்னெஞ்சினின்று நீங்காதென
உவந்து கூறினானாம். கைலை மடவாவென் றியைப்பினுமமையும். வான்பொழி லென்பதூஉம் பாடம்.
மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக்கண்டு தன் காதன் மிகுதியாற்றோன்றிய பேருவகையை
ஆற்றகில்லான் ஆற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கர்ச்சிதமான மயில் போன்ற சாயலையுடையாளை ஒரு புறமாக
நிற்கக்கண்ட பிரகாசமுடைய மாலையை அணிந்த நாயகன் சந்தோஷித்துச் சொன்னது.
செய்யுள் : இந்த மலையைப் படமுடைத்தாகிய அராவணையாக நியமித்துச் செந்தாமரைக்கண்ணனாகிய
நெடிய மாலாக என்னை நிச்சயித்தோ? என் இருதயத் தாமரைப் பூவை (யே) இடமாகக் கொண்டிருப்பதாக
எண்ணித் துணிந்தோ? புலியூரிலே எழுந்தருளி நின்றவனுடைய கயிலை மலையில் முத்துவட மார்ந்த
முலையினையுடைய பெண்ணே! நீண்ட கா(வகத்தே) வந்து அவதரித்தது. 120
6. மருங்கணைதல் *
------------------
*'பேரின்பப் பொருள்: இன்பங் கண்டத னியல்பெடுத் துரைத்தது.
மருங்கணைதல் என்பது உவந்துரைப்பக் கேட்ட தலை மகள் பெருநாணினளாதலி கண் புதைத்து
ஒரு கொடியி னொதுங்கி வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையிற் றலை மகன் அவ்வருத்தந் தணிப்பான்
போன்று, முலையொடு முனிந்து அவளிறு மருங்கு றாங்கி யணையா நிற்றல். அதற்குச்செய்யுள் :-
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின்
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே .
வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
கோதை வேலவன் ஆதர வுரைத்தது.
இதன் பொருள்: தொத்து ஈன் மலர்ப்பொழில் தில்லைத் தொல்லோன் அருள் என்ன முன்னி-
கொத்துக்களை யீனும் மலர்ப் பொழிலை யுடைய தில்லையிற் றொல்லோன தருள் போல
வந்தெதிர்ப்பட்டு ; முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி - கண்ணீர்த் துளியாகிய முத்தை விடாநின்ற
கண்ணாகிய குவளைகளைக் கையாகிய மெல்லிய காந்தட் பூவான் மூடி தன் ஏர் அளப்பாள் ஒத்து:
அதனோடு சார்த்தித் தன்னெழிலை யளவிடுவாள் போன்று ; ஈர்ங்கொடியின் ஒதுங்குகின்றாள்
மருங்குல் நெருங்க - குளிர்ந்த கொடியின் கண் நாணி மறைகின்றவளது மருங்குலடர்ப் புண்ண;
பித்தீர் பணை முலைகாள்- பித்தையுடையீர் பணை முலைகாள்; இன்னும் பெருக்கின்றது என்னுக்கு-
நும் பெருமை மேல் இன்னும் நீர் பெருக்கின்ற தெற்றிற்கு? இது நன்றன்று எ-று
தமக்கு ஆதாரமென்று கருதாது அடர்க்கின்றமை நோக்கிப் பித்தீரென்றான். பெருக்கின்ற
தெற்றிற்கு ஓர் பித்தை யுடையீரென வினைக்குறிப்பு முற்றாக வுரைப்பினும் அமையும். இவ்வாறு
தானாதரவுரைத்து இறுமருங்குறாங்குவானாய்ச் சென்று சாருமென்பது. ஈன்கொடி, ஈன்பணைமுலை
யென்பனவும் பாடம் ஈன்கொடி - மலரீன்றகொடி அரிவையை யென்பது பாடமாயின் நாணுதல் கண்ட
வென்பனவற்றை ஒரு சொல்லாக்கி முடிக்க. மெய்ப்பாடு அது. பயன்- சார்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒளி சிறந்த நெற்றியினையுடைய நாயகியை நாணினபடியைக்
கண்டு மாலையணிந்த வேலினையுடையவன் ஆதரவினாலே சொல்லியது.
செய்யுள்: கொத்துப்பூவாக வளையப்பட்ட (?) அழகிய பொழில் சூழப்பட்ட தில்லையிற்
பழையவனாகிய முதலியாருடைய அருளென வந்து நேர்ப்பட்டு, முத்துப் போன்ற கண்ணின்
நீர்த்துளித்தாரை விடுகிற நீலப் பூவை ஒத்த கண்களை மகுரமாகிய காந்தட், பூவொத்த கரங்களாலே
மறைத்துத் தன்னழகை ஒப்பிட்டுப் பார்ப்பாரையொத்துக் குளிர்ந்த வல்லிசாதக்கொடியிலே
மறைந்து நின்றவள் இடை ஒதுங்க? (நெருங்க) பித்தையுடையீராகிய பெரிய முலைகாள்! இவ்விடை
இத்தன்மை ஆகியபடி கண்டும் இன்னமும் நீங்கள் பெருக்கின்றதென்ன காரணத்தான்? (என்றுபடும்). 121
7. பாங்கியறிவுரைத்தல்*
----------------------
*'பேரின்பப் பொருள்: இன்பங்கண்ட பின்னருட் டெரிசியித.
பாங்கியறிவுரைத்தல் என்பது மருங்கணை விறுதிக்கட் டலைமகள தையந்தீர, அவளைக் கோலஞ்
செய்து, "இது நின்றோழி செய்த கோலமே ; -கலங்கா தொழி'கெனத் தலைமகன் தான்றோழியொடு
தலைப்பெய்தமை தோன்றக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு**
கோலந் திருநுதலே
நெறிகுழற்* பாங்கி, அறிவறி வித்தது.
**பா-ம் - னேமன்னு, * செறிகுழற்
இதன் பொருள்: நீ தண் நறவு உண் களி எனச்செய்த வன்கடல் தில்லை அன்னாய் - நீ குளிர்ந்த
நறவையுண்ணுங் களிமகனென்று பிறர் சொல்லும் வண்ணம் ஓரின்பத்தையெனக்குச் செய்தவனது
கடலையுடைய தில்லையை யொப்பாய்; அளிநீடு அளகத்தின் அட்டிய தாதும்-அளிகள் விடாது தங்கு
மளகத்தின்கண் இட்டதாதும்; அணி அணியும்-அணிந்தவணிகளும்; ஒளி நீள் சுரிகுழல் சூழ்ந்த
ஒண் மாலையும்-ஒளியையுடைய நீண்ட சுரிகுழலிடத்துச் சுற்றிய நல்லமாலையும் இவையெல்லாம்;
நீ அனைய பொன்னே பன்னு கோலம் - நின்னோடொரு தன்மயளாகிய நின்றோழி யாராய்ந்து செய்யுங்
கோலமே; திருநுதலே திருநுதலாய்; கலங்கல்-யான் பிறிதோர் கோலஞ் செய்தே னென்று கலங்க வேண்டா;
தெளி- தெளிவாயாக. எ-று
தண்ணறவுண்களி தீயெனச் செய்தவனென்பதற்குப் பிறிதுரைப்பாருமுளர். பொன்னே யென்னு
மேகாரம்: பிரிநிலை யேகாரம். அணி மணியு மென்ப நூஉம் பாடம். பாங்கியறிவு - பாங்கி யவ்வொழுக்கத்தை
யறிந்த வறிவு மெய்ப்பாடு : பெருமிதம். பயன். பாங்கி யறிந்தமை தலைமகட் குணர்த்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : தாழ்ச்சியினையுடைய கூந்தலையுடைய பாங்கி இக்கூட்டத்தை
அறிந்தபடியை அறிவித்தது.
செய்யுள்: வண்டுகள் மிக்க கூந்தலிலே இட்ட செருகு பூவும், ஆபரணங்களணிந்த படியும் ஒளி மிக்க
நீண்ட கூந்தலிலே சுற்றின அழகிய மாலையும் மகுரமான தேனையுண்டு களிக்கும்படி செய்தவன்
கடல்சூழ்ந்த பெரும்பற்றப் புலியூரனையாய்! கலங்காதே, தெளிந்து விடு. நீ உனக்கு உன்னை யொத்த
பாங்கியாலே ஆராய்ந்தணியப்பட்ட கோலந்தானே காண். ஆதலால் நானணிந்த கோலம் வேறுபட்டதென்று
கலங்காதே தெளிந்து விடுக. 122
8. உண்மகிழ்ந்துரைத்தல்*
-----------------------
* பேரின்பப் பொருள் : "கண்ட வின்ப மருட்கியம் பியது"
உண்மகிழ்ந் துரைத்தல் என்பது பாங்கி யறிவுரைப்பக் கேட்ட தலைமகள், இனி நமக்கொரு
குறையில்லையென வுட்கொண்டு முகமலரா நிற்ப, அம்முக மலர்ச்சி கண்டு, அவளைக் கழுநீர் மலராகவும்,
தான் அதனினறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமான் றன்ணுண் மகிழ்ந்து கூறா நிற்றல் .
அதற்குச் செய்யுள்:-
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிகள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே .
தண்மலர்க் கோதையை
உண்மகிழ்ந் துரைத்தது.
இதன் பொருள்: செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்பலவன் திருக்கழலே - வளவிய நீர்மையையுடைய
மதியாகிய கண்ணியை யுடைய சிற்றம்பலவனது திருக்கழல்களையே; கெழுநீர்மையின் சென்று
கிண்கிணி வாய்க்கொள்ளும். பொருந்து நீர்மையான் உண்மகிழ்ந்து முகமலர்வது போலப் போதாகிய
நிலைமையை விட்டு மலராம் நிலைமையை யடைந்து சிறிதே மலரத்தொடங்கும்; கள் அகத்த கழுநீர்
மலர் இவள்- தேனையகத்துடைய கழுநீர் மலர் இவள்: யான் அதன் கண் மருவிப்புரியாக் கொழுநீர்
நறப்பருகும் பெரு நீர்மை அளிகுலம் - யான் அக்கழுநீர் மலர்க்கண் மருவி ஒருகாலும் பிரியாத
கொழுவிய நீர்மையையுடைய அந்நறவைப்பருகும் பெருந்தன்மையை யுடையதோ ரளிசாதி எ-று
செழுநீர்மதிக்கண்ணி யென்பதற்கு வளவியநீரு மதியாகிய கண்ணியு மென்பாருமுளர்
திருக்கழலே யென்னும் ஏகாரம், பிரிநிலையேகாரம். செழுநீர்மையையுடைய கழுநீர் மலரென்
றியைப்பினு மமையும். சென்று கிண்கிணி வாய்க்கொள்ளு மென்பதனால், பேதைப்பருவங்
கடந்து இன்பப்பருவத்த ளாயினாளென்பது விளங்கும். கள்ளகத்த வென்பதனால், புலப்படா
துண்ணிறைந்த காதலளென்பது விளங்கும் . கள்ளகத்த கழுநீர் மலரென்பது 'காலகுருகு"
(குறுந்தொகை, 26) என்பது போல நின்றது. பெயரெச்சமெனினுமமையும். யான் மருவிப் பிரியாத
அளிகுல மெனினுமமையும். நறா : குறுகி நின்றது. பெரு நீர்மை யளிகுலமென்றான், கழுநீர் மலரல்ல
தூதாமையின். அதனால், பிறிதோரிடத்துந் தன்னுள்ளஞ் செல்லாமை விளங்கும். மெய்ப்பாடு: உவகை.
பயன்: நயப்புணர்த்துதல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: குளிர்ந்த பூமாலையுடையாளை உள் மகிழ்ந்துரைத்து.
செய்யுள்: அழகிய, நீர்மையுடைத்தாகிய மதியைத் திருநெற்றி மாலையாகவுடைய
திருவம்பலநாதன் சீபாதங்களை ஒக்கவேண்டுமென்கின்ற தன்மையாலே, போதாகிய தன்மையை
விட்டுப் பூவாகிய ' தன்மையாலே சென்றடைந்து சிறிதே மலரத் தொடங்கும் தேனையுள்ளடக்கின
கழுநீர் மலரை ஒப்பாள் இவள்: நான் செங்கழு நீர் மலரிடத்தே எப்பொழுதும் பழகி அதைவிட்டு
நீங்காத அழகிய நீர்மையுடைத்தாகிய தேனையுண்கிற வண்டினை ஒப்பன்.
செங்கழுநீர் மலரை ஒப்பதென்றதனால் இவளும் பேதைப் பருவம் கடந்து இளமைப் இன்பப்
பருவத்தளானவள் என்றது கள்ளகத்த கழுநீர் என்றதனால் இவளும் உள்ளடக்கின காதலையுடையவள்,
அது வெளிப்படுவதற்கு முன்னே வரைந்துகொள்ள வேண்டுமென்னும் நினைவுடையள் என்றுபடும்,
அச்செங்கழுநீர் மலரிடத்தேபழகி அதை விட்டு நீங்காத வண்டுச் சாதியை ஒப்பனென்றதனால்,
வரைந்து கொள்ள வேண்டுமென்கின்ற நினைவொழிய வேறு நினைவுடையேனல்லன் என்றும்படும்.
பெரு நீர்மை யளிகுலம்: பெரு நீர்மை என்றது ஒருவருக்குப் பெருந்தன்மையாவது, அது தம்மாற்
பாதுகாக்கப் படுவாரைப் பாதுகாக்கை. 123
9. ஆயத்துய்த்தல்*
----------------
*பேரின்பப் பொருள்: 'அடியார் கூட்டத் தன்பாலுய்த்தது'
ஆயத்துய்த்தல் என்பது மலரளிமேல்வைத்து மகிழ்வுற்றுப் பிரியலுறாநின்ற தலைமகன்,
'யாமித்தன்மையே மாதலின் நமக்குப் பிரிவில்லை; இனியழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம்
பொலிவு பெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடுவா' யெனத் தலைமகளை யாயத்துச்
செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லயத்துச்
சேர்க திருத்தகவே.
கனைகடலன்ன கார்மயிற்கணத்துப்
புனைமடமானைப் புகவிட்டது.
இதன் பொருள்: இப்பிறப்பில் அழுந்தா வகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய்-
இப்பிறவியின் கண் அழுந்தாதவண்ண மென்னை யடிமை கொண்டவனது சிற்றம்பலத்தை ஒப்பாய்;
கொழுந்தாரகை முகைகொண்டல் பாசடை விண் மடுவில் - கொழுவிய தாரகையாகிய முகையையுங்
கொண்டலாகிய பசிய விலையையுமுடைய விண்ணாகிய மடுவின் கண்; எழுந்து ஆர்மதிக் கமலம்
எழில் தந்தென-எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப் பூத் தனதெழிலைப் புலப்படுத்தினாற்போல;
செழுந் தாது அவிழ்பொழில் ஆயத்துத் திருத்தகச்சேர்க-வளவியதாது அவிழா நின்ற பொழிற்கண்
விளையாடுகின்ற ஆயத்தின் கட் பொலிவு தக இனிச்சேர்வாயாக. எ று.
முகையோடு தாரகைக்கொத்தபண்பு வெண்மையும் வடிவும் பன்மையும், தாரகையோ
டாயத்தார்க்கொத்த பண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய் அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு
மதிக்கொத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலிவும் . மதியோடு தலைமகட்கொத்த பண்புகட் கினிமையும்
சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும், இவ்வாறொத்தபண்பு வேறுபடுதலான் உவமைக்குவமை
யாகாமையறிந்து கொள்க. கொண்டலம் பாசடையென்புழி அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது;
அம்-அழகெனினுமமையும். புனைமடமான் கைபுனையப் பட்டமான். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஆரவாரிக்கின்ற கடலையொத்த கார்காலத்து மயிலையொத்த
ஆயக் கூட்டத்தாரின் திரளிலே ஒப்பினையுடைய பார்வையால் மான் போல்வாளைப் புக விடுத்தது.
செய்யுள்: அழகிய தாரகைகளாகிய முகை விரியா அரும்புகளையும் மேகங்களாகிய அழகிய
பச்சென்ற இலைகளையுமுடைய ஆகாயமாகிய மடுவில் எழுந்து நிறைந்த சந்திரனாகிய வெண்டாமரைப் பூ
அத்தாரகைகளுக்கு அழகளித்தாற்போல, இப்பிறப்பிலே வருந்தாதபடி அடிமை கொண்டவன்
திருச்சிற்றம்பலத்தை யொப்பாய்: அழகிய தாது விரிகின்ற சோலையிடத்தே, ஆயக்கூட்டத்தாரிடத்தே
சேர்வாயாக, திருத்தகவே.
அந்த ஆயக்கூட்டம் அழகு பெறும்படி செய்வாயாக: அது எங்ஙன மெனில் சந்திரன் அன்றி (யிருக்கும் போது)
பொலி வழிந்து கிடக்கிற நட்சத்திரங்களுக்கு அழகளிக்கச் சந்திரன் உதய மானாற்போல உன்னை யன்றி ...
வெ...........பொலிவழிந்து கிடக்கிற ஆயக்கூட்டம் பொலிவு பெறும்படி சென்று சேர்வாயாக என்ற பொருளாய்,
வெண்டாமரையை ஒத்த தாரகைகள் என்றும், தாரகைகளைப் போன்ற பாங்கிமார் என்றும் வெண்டாமரைப்
பூவை யொத்த மதியென்றும் சொன்னால், உவமைக்கு உவமையாகாதோ வெனின், ஒத்த பண்பு
வேறுபடுகையாலே உவமை யாகாது; வேறுபட்டபடி என்னெனின் வெண்டாமரை முகையுடன்
தாரகைக்கு உவமை வெண்மையும் வடிவும்: தாரகையுடன் பாங்கிமார்க்கு உவமை பன்மையும்
ஒன்றுக்குச் சுற்றமாய் அதில் தாழ்ந்து நிற்கையும்; வெண்தாமரைப் பூவுடன் மதிக்கு உவமை
வடிவும் பொலிவும்: சந்திரனுடன் நாயகிக்குவமை கண்ணுக்கினிமையும் சுற்றத்திடை மேலாய்த்
தோன்றுகையும் ; ஆகையாலே உவமைக்குவமையாகாது: உவமைக்குவமை இல்லென மொழிப. 124
10. தோழிவந்து கூடல்*
-------------------
*பேரின்பப் பொருள் : 'அருள் சிவங் கலந்த அபேதம் கண்டது'
தோழி வந்து கூடல் என்பது தலைமகனைப் பிரிந்த தலைமகடானும் பூக்கொய்யா நின்றாளாகப்
பிரிவாற்றாமையானும் பெருநாணினானுந் தடுமாறி மொட்டுக்களைப் பறியா நிற்ப 'யானின்குழற்காம்
பூக்கொண்டுவந்தேன், நீ விரல்வருந்த மொட்டுக்களைப் பறிக்க வேண்டா' வெனத் தோழி வந்து
கூடாநிற்றல், அதற்குச் செய்யுள் -
பொன்னனை யான்தில்லைப் பொங்கர
வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள் மேவலர்
போன்மெல் விரல் வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.
நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப்
பிறை நுதற் பாங்கி பெயர்ந்தவட் ** குரைத்தது.
** பா-ம் - பெயர்ந்திவட்.
இதன் பொருள்: ஆய் மறியே - அசைந்த மான்மறி போல்வாய்: பொன் அனையான் - பொன்னையொப்பான்;
தில்லைப் பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின் அனையான்- தில்லைக்கணுளனாகிய வெகுளா நின்றவரவம்
புல்லிய சடைக்கண் மிடைந்த மின்னையொப்பான்; அருள் மேவலர் போல் மெல்விரல் வருந்த - அவனதருளைப்
பொருந்தாதாரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த; மெல் நனைபறியேல்-மென்னனைகளைப் பறியா
தொழிவாயாக, மணம் தாழ் குழற்கு ஏய்வன வெறி ஆர் மலர்கள் இன்னனயான் கொணர்ந்தேன் -
நின்மணந்தங்கிய குழற்குப் பொருந்துவனவாகிய நறுநாற்ற நிறைந்த மலர்களித் தன்மையன வற்றை
யான் கொணர்ந்தேன் எ-று.
மிடைந்த வென்னும் பெயரெச்சம் மின்னனையானென்னு நிலப்பெயர் கொண்டது .
அரவஞ் சடைமிடை தலை மின்மேலேற்றி, இல்பொருளுவமையாக வுரைப்பாரு முளர். இல்பொருளுவமை
யெனினும் அபூதவுவமையெனினு மொக்கும். இவள் மலரைப் பறியாமல் மொட்டைப் பறிப்பானே னென்பது
கடா. அதற்கு விடை: இவள் தலைமகனைப் பிரிந்து அப்பிரிவாற்றாமையானும், தலைமகன் புணர்ச்சி நீக்கத்துக்கட்
டன்னைக் கோலஞ்செய்த அக்கோலத்தைத்தோழி காணா நின்றாளென்னும் பெரு நாணினானும் ஆற்றாளாய்,
மலரைப் பறிக்கின்றவள் மயங்கி மொட்டைப் பறித்தாளென வறிக. " மெல்லிய மொட்டுக்களைப் பறியாதொழி ,
இத்தன்மைய நறு மலரை நின் குழற்கணிதற்கு யான் கொணர்ந்தே' னென்பதனான், இவ்வொழுக்கம்
யானறியப் பட்டது காணென்றுடம்பாடு கூறியவாறாயிற்று. என்னனையாய் கொணர்ந்தே னென்பதூஉம்
பாடம். நின்றிடத்துய்த் - இடத்துய்த்து நீங்கி நின்று, பெயர்ந்து மீண்டு சென்று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நெறித்தலுடைய அளகத்தினையுடைய நாயகியைத்தன்
குறியிடத்தே - நிறுத்தி, நீங்குகின்ற பிறை போன்ற நெற்றியையுடைய பாங்கி மீண்டு வந்து நாயகிக்குச்
சொன்னது.
செய்யுள்: பொன்னையொப்பவன், புலியூரில் மிக்க பாம்பையும் கங்கையையும் சிவந்த
திருச்சடையிலே நெருங்கும்படி வைத்த மின்னை நிகர்ப்பான். அவன் திருவருளைப் பொருந்தாதவரைப்
போலே மெல்லிய விரல்கள் வருத்த மெல்லிய அரும்புகள் வருந்த (?) பார்வையினால் மான் கன்றை நிகர்ப்பாய்!
பறியாதே கொள், நறுநாற்றமிக்க புட்பங்களை ; இத்தன்மையன யான் கொண்டுவந்தேன் காண். மிகுந்த
வாசனையுள்ள கூந்தலுக்குப் பொருந்துவன என்றுபடும். 125
11. ஆடிடம்புகுதல்*
-----------------
* பேரின்பப் பொருள் : "அன்பர்க் கின்பமருளே யாக்கல்"
ஆடிடம் புகுதல் என்பது கொய்து வந்த மலருங் குழற் கணிந்து, 'இனி நின் சிறுமருங்குல் வருந்தாமல்
மெல்லச் செல்வாயாக' வெனத்தோழி தலைமகளையுங் கொண்டு ஆடிடம் புகா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
அறுகால் நிறைமல ரைம்பால்
நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என் சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே
தனிவிளை யாடிய தாழ்குழற்** றோழி
பனிமதி நுதலியொ டாடிடம் படர்ந்தது
** பா-ம்-தார்குழற்
இதன் பொருள்: என் சிரத்தின் உறுகால் பிறர்க்கு மிக அரியோன் புலியூர் அன்ன ஒண்ணுதலே"-
என்றலைக்கணுற்ற கால் பிறர்க்கு மிகவரியவனது புலியூரை யொக்கு மொண்ணுதலாய்; அணி ஆர்துறுகான்
மலர்த்தொத்து - அழகார்ந்த நெருங்கிய நறுநாற்றத்தை யுடைய மலர்க்கொத்துக்களை; அறுகால் நிறை
மலர் ஐம்பால் நிறை அணிந்தேன்-வண்டுகணிறைந்த மலரையுடைய நின்னைம்பாற்கண் நிறைய
வணிந்தேன்; தோகை-தோகையையொப்பாய்; சிறு கால் மருங்குல் வருந்தாவகை-சிறிய விடத்தை
யுடைய மருங்குல் வருந்தாத வண்ணம்; தொல் ஆயம் மெல்லப் புகுக - பழைய தாகிய ஆயத்தின் கண்
மெல்லப் புகுவாயாக எ-று.
அறுகானிறை மலரை யணிந்தே னென்றும், மலர்க் கொத்துக்களையுடைய தோகாயென்றும்,
உரைப்பாரு முளர். நிறையவென்பது குறைந்து நின்றது. காலென்னுஞ் சினை பிறர்க்கரியோனெனத்
தன்வினைக்கேலா வெழுத்துக் கொண்டது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம் ,
பயன்: தலைமகளையாற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தனியே விளையாடிய நீண்ட கூந்தலினையுடைய
தோழி குளிர்ச்சி பொருந்தின பிறை போன்ற நெற்றியினை யுடையாளுடனே விளையாடுகிற
விடத்தேறப் போனது.
செய்யுள் : (முன் சொன்ன மொழியை மாற்றி ) அழகார்ந்த நறுநாற்றம் நெருங்கின பூக் கொத்துக்களை
வண்டுகள் நிறைந்த பூவையுடைய ஐம்பால் வகுத்த கூந்தலிலே நிறைய வணிந்தேன் : தோகை நல்லாய்!
சிறிய தென்றல் வரின் இடை தளர்ந்து வருந்தாத படி, பழைய ஆயக் கூட்டத்தாரிடத்தேற மெல்லச் சென்று
புகுவாயாக; மிக என்னுடைய சிரத்திலே பொருந்தின சீபாதங்களைப் பிறர் மிகவும் பெறுதற்கரியவன்,
அவனது பெரும் பற்றப் புலியூரினை யொத்த நுதலினை யுடையாய்! 126
12. தனிகண்டுரைத்தல்*
---------------------
*பேரின்பப் பொருள் : அருளுயிர் தனைக்கண் டகமகிழ்ந் துரைத்தது.
தனிகண்டுரைத்தல் என்பது தலைமகளை யாயத்துய்த்துத் தலைமகனுழைச் சென்று'
'இஃதெம்மூர்; இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி, இன்றெம்மோடுதங்கி
நாளை நின்னூருக்குப் போவாயா' தென உலகியல் கூறுவாள் போன்று வரைவு மயப்பக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
தழங்கு மருவியெஞ் சீறூர்
பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
டேகுக முத்தன் முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.
வேயொத்த தோளியை ஆயத் துய்த்துக்
குனிசிலை யண்ணலைத் தனிகண் டுரைத்தது.
இதன் பொருள்: பெருமை-பெரும; தழங்கும் அருவி இது எம் சீறூர்- தழங்காநின்ற அருவியையுடைய
விஃதெ மதுசீறூர்; மதுவும் கிழங்கும் அருந்தி இன்று எம்மொடு இருந்து - இதன் கண் யாமருந்துந் தேனையுங்
கிழங்கையு நீயுமருந்தி இன்றெம்மோடு தங்கி; குன்றர் கிளர்ந்து முழங்கும் குரவை இரவில் கண்டு மணிநகர்க்கு
ஏகுக. குன்றரெல்லாருமெழுந்து முழங்கு மிந்நிலத்து விளையாட்டாகிய குரவையை யிரவிற்கண்டு
நாளை நினது நல்ல நகர்க்கேகுவாயாக எ-று. முத்தன்*- இயல்பாகவே முத்தன்; முத்தி வழங்கும் பிரான்-முத்தியை
யேற்பார்க்கு வழங்கு முதல்வன்: எரியாடி ஊழித்தீயின்கணாடுவான்; தென் தில்லை மணி நகர்- அவனது தெற்கின்
கட்டில்லையாகிய மணிநகரெனக் கூட்டுக.
*முத்தன் : முத்தராவார் மகாதேவர் (தக்கயாகப்பரணி, 610 உரை )
ஏற்பார்மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்கு மென்றார். உலகியல் கூறுவாள் போன்று ஒருகானீ வந்து
போந்துணையால் இவளாற்றுந் தன்மையளல்லளென்பது பயப்பக் கூறி வரைவு கடாயவாறு. மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன் : குறிப்பினாற் பிரிவாற்றாமை கூறி வரைவு கடாதல் .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மூங்கிலை நிகர்த்த தோளினையுடைய நாயகியை ஆயக்
கூட்டத்தாரிடத்திலே விட்டு வளைந்த வில்லினையுடைய நாயகனைத் தனியே நிற்கக் கண்டு சொல்லியது.
செய்யுள்: பெரியோனே! முழங்கப்படா நின்ற அருவிகளையுடைய எங்கள் சிறிய ஊர் இதுதானாயிருக்கும்;
தேனும் கிழங்குமாக நுகர்ந்து இன்றைக்கு எங்களோடும் கூடவிருந்து குன்றவரானவர் ....... எழுந்து ஆரவாரிக்கின்ற
குரவைக் கூத்தையும் கண்டு போவாயாக: அழிவில்லாதவன் அழியாத சுகத்தை நம்பின அடியார்க்கும்
மற்றுள்ளவரான மக்களுக்கும் கொடுக்கிற சுவாமி, ஊழித்தீயிடத்தாடி தக்ஷிணத்துக்குப் பெரிய
திருப்பதியாகிய அழகிய (தில்லை) நகருக்குள் இற்றைக்கு எங்களுடன் அவதரித்து, உதய காலமே
போவாய் (என்பது கருத்து). 127
13. பருவங்கூறி வரவு விலக்கல்*
-----------------------------
*'பேரின்பப் பொருள் : அருள் சிவத் தின்படுத் தறிவுறுத்தியது.
பருவங்கூறி வரவு விலக்கல் என்பது உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் வரைவு கடாவி, '
இனியிவ்வாறொழுகாது வரைவொடு வருவாயாக' வெனத் தலைமகளது பருவங்கூறித் தலைமகனைத்
தோழி வரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்:
தள்ளி மணிசந்த முந்தித்
தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால் விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.
மாந் தளிர்மேனியை வரைந்தெய்தா
தேந்தலிவ்வா றியங்கலென்றது.
இதன் பொருள்: மணி தள்ளி-மணிகளைத் தள்ளி; சந்தம் உந்தி-சந்தன மரங்களை நூக்கி;
தறுகட் கரி மருப்புத் தெள்ளி - தறுகண்மையையுடைய யானையின் மருப்புக்களைக் கொழித்து நறவம்
திசை திசை பாயும் மலைச்சிலம்பா- தேன் றிசைதோறும் பரக்கும் மலையையுடைய சிலம்பனே ;
வெள்ளிமலை அன்னமால் சிலம்பனே; வெள்ளிமலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும்-
தனது வெள்ளி மலையாகிய கயிலையை யொக்கும் பெரிய விடையை யுடையவனது புலியூர் போல
விளங்கும்; வள்ளி மருங்குல் கொடிச்சியது மருங்குலை; வனமுலை வருத்துவ போன்றன - நல்ல முலைகள்
வளரா நின்றபடியால் வருத்துவன போன்றன; இனி வரைந்தெய்து வாயாக எ-று.
சிலம்பனென்பது அதனை யுடையனென்னும் பொரு ணோக்காது ஈண்டுப் பெயராய் நின்றது.
புலியூர் புரையுமென்பதூஉம் பாடம் யாவருமறியா விவ்வரைக்கண் வைத்ததேன் முதிர்ந்துக்கு அருவிபோன்
றெல்லாருங் காணத் திசைதிசை பரந்தாற்போலக், கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டாற்
புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படா நின்றதென உள்ளுறை யுவமை யாயினவாறு கண்டு கொள்க.
மெய்ப்பாடு அச்சம். இவ்வொழுக்கம் புறத்தாரறியின் இவளிறந்து படும்; இறந்து பட இவனு மிறந்துபடுமென்னு
நினைவினளாதலால், பயன்: வரைவு கடாதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மாந்தளிர் போன்ற மேனியையுடைய நாயகியை வரைந்து
கொள்வதன்றி நாயகனே இவ்வழியில் வாராதே கொள் என்றது.
செய்யுள் : மாணிக்கங்களைத் தள்ளிச் சந்தன மரங்களைத் தூக்கித் தறுகண்மையுடைய
கரியின் கோடுகளைக் கொழித்துத் தேனானது திசைதிசை தோறும் பெருக்கெடுக்கிற மலை. -
பக்க முடையவனே; வெள்ளி மலை போன்ற பெரிய இடபத்தையுடையவன். அவனது புலியூரினை
யொத்து விளங்குகின்ற கொடிச்சி இடையை வருத்துவன போன்றிருந்தன, அழகிய முலைகளானவை;
ஆதலினாற் கடுக வரைந்து கொள்வாயாக. 128
14. வரைவுடம்படாது மிகுத்துக்கூறல் *
--------------------------------
* பேரின்பப் பொருள் : ''இன்ப மெளியேற் கெய்துமோ வென்றது.
வரைவுடம்படாது மிகுத்துக்கூறல் என்பது பருவங்கூறி வரைவு கடாய தோழிக்கு, அமராவதிக்கண்ணும்
இம்மாதர்க் கொப்பில்லையென நான்முகன் பயந்த பிள்ளையையான் வரையுந்துணை யெளியளாக நீ கூறுகின்ற
தென்னோ'வெனத் தலைமகன் வரைவுடம்படாது தலைமகளை மிகுத்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் -
மாடஞ்செய் பொன்னக** ரும் நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன் மயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.
வரைவுகடாய வாணுதற்றோழிக்கு
விரைமலர்த்தாரோன் மிகுத்துரைத்தது
** பொன்னக ரில்லைபிம் மாதருக் கென்னமன்னும்'
இதன் பொருள்: மாடம் செய் பொன் நகரும் இம்மாதர்க்கு நிகர் இல்லை என்ன - மாடமாகச் செய்யப்பட்ட
பொன்னகராகிய அமராவதிக்கண்ணும் இம்மாதர்க்கொப்பில்லை யென்று சொல்லும் வண்ணம்; பீடம் செய் தாமரையோன்
பெற்ற பிள்ளையை பீடமாகச் செய்யப்பட்ட தாமரையையுடைய நான்முகன் பயந்த பிள்ளையை ; கயிலைக் கூடம் செய்
சாரற் கொடிச்சி என்றோ நின்று கூறுவது - கயிலை மலைக்கட் கூடஞ் செய்யப்பட்ட சாரலிடத்து வாழுங்
கொடிச்சியென்றோ நீ நின்று சொல்லுவது? இவ்வாறு சொல்லற்பாலையல்லை எ-று. உள்ளலரைக் கீடம் செய்து-
தன்னை நினையாதாரைப் புழுக்களாகச்செய்து; என் பிறப்புக்கெடத் தில்லை நின்றோன் கயிலையான்றன்னை
நினைவேனாகச் செய்து என் பிறப்புக்கெடத் தில்லைக்கணின்றவனது கயிலை யெனக் கூட்டுக
கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவகோட்டத்தை. கூடஞ்செய்சார லென்பதற்கு மரத்திரளாற்
கூடஞ்செய்தாற் போலுஞ் சாரலெனினு மமையும். கூடஞ்செய்தாற் போலு முழைகளை யுடைய சார லெனினுமமையும்.
வரைவுடம்படாது மிகுத்துக் கூறியது. மெய்ப்பாடு: இளிவரல், பயன்: தலைமகனது விருப்புணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வரைவை உயர்த்திச் சொன்ன ஒளியையுடைய நுதலையுடைய
பாங்கிக்கு அரிய மலை மேலுண்டாகிய நாட்டுக் கதிபதியானவன் ஆற்றாது சொன்னது*
*அருவரை நாடன் அற்றா துரைத்தது' என்பன பழையவுரை காரர் பாடம்.
செய்யுள் : தெய்வலோகத்திலுள்ள பெண்களும் இந்த மாதர்க்கு ஒப்பல்ல ரென்னும்படி தாமரைப்பூவை
நிலைபெற்ற பீடமாகக் கொண்டிருக்கிற பிரமனாலே பெறப்பட்ட இவளை, தன்னை நினையாதவரான மாக்களைப்
புழுக்கள் மாத்திரந்தாளே (என்பதற்காகமம்? ) செய்து வைத்து என் பிறவியானது கெடும்படி பெரும்பற்றப்புலியூரிலே
எழுந்தருளி, நின்றவன் கயிலை மலையில் கூடமாகச் செய்யப்பட்ட சாரல் குறத்தியென்றோ நின்று சொல்லுவதுதான்?
கூடமென்றது மன்றாகச் செய்யப்பட்ட தெய்வக்கோட்டத்தை. மரத்திரளாற் கூடம் செய்தாற் போலும்
முழைகளையுடைய சாரலென்றுமாம். வரைவுடன் படாமை மிகுத்துச் சொன்னது. 129.
15. உண்மை கூறி வரைவு கடாதல் *
---------------------------------
*'பேரின்பப் பொருள், ''அன்புக் கருளு மின்பெளி தென்றது.''
உண்மைகூறி வரைவு கடாதல் என்பது வரைவுடம்படாது மிகுத்துக் கூறிய தலைமகனுக்கு, எங்களுக்குத்
தாயுந் தந்தையுங் கானவர் ; யாங்கள் புனங்காப்போஞ்சிலர் ; நீர் வரைவு வேண்டாமையி னெம்மைப்புனைந்து
கூறல் வேண்டுவதில்லை' யெனத் தோழி தங்களுண்மைகூறி வரைவுகடாவா நிற்றல்'. அதற்குச் செய்யுள்:-
வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலேங்
காவலித் தாழ்வரையே .
கல்வரைநாடன் இல்லதுரைப்ப
ஆங்கவளுண்மை பாங்கிபகர்ந்தது.
இதன் பொருள் : வேய் தந்த வெண் முத்தம் சிந்துபைங்கார் வரை மீன் பரப்பி -வேயுண்டாக்கிய
வெள்ளிய முத்துக்கள் சிந்திய சோலைகளாற் பசிய கரிய தாழ்வரை மீன்களைத் தன்கட் பரப்பி;
சேய் தந்த வான் அகம் மானும் சிலம்ப- சேய்மையைப் புலப்படுத்திய வானிடத்தை யொக்குஞ் சிலம்பை
யுடையாய்; தாய் தந்தை-எமக்குத் தாயுந் தந்தையும் ; தன் சேவடிக்கே ஆய் தந்த அன்பு தந்து- தன்னுடைய
சிவந்த திருவடிக்கே ஆராயப்பட்ட வன்பைத் தந்து; ஆட்கொண்ட அம்பலவன் மலையிற் கானவர்- என்னை
யடிமை கொண்ட அம்பலவனது மழையிற் கானவரே! இத் தாழ் வரை ஏனல் எம் காவல்-இத்தாழ்வரையி
னுண்டாகிய தினை யெமது காவலாயி யிருக்கும் ; அதனானீவரைவு வேண்டாமையிற் புனைந்து
கூறவேண்டுவதில்லை எ-று.
வினைமுத லல்லாத கருவி முதலாயின அவ்வினை முதல் வினைக்குச் செய்விப்பனவாமாதலில்,
பரப்பியெனச் செய்விப்பதாகக் கூறினார். சேவடிக்கே அன்புதந்தெனவியையும். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன் : வரைவுகடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மலையின் மேலுண்டாகிய நாட்டினையுடையவன் இல்லாத
ஒன்றைச் சொல்ல அவ்விடத்து அவள் உண்மை பாங்கி பகர்ந்தது.
செய்யுள் : வேயீன்ற முத்துக்கள் பரந்த சோலைகளாற் பச்சென்ற கரிய மலையானது நக்ஷத்திரங்களைப்
பரப்பி அதிதூரத்திலே விளங்கித் தோன்றுகிற ஆகாயப் பரப்பை யொத்த மலையினையுடையவனே; தன் சிவந்த
சீபாதங்களிலே அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன், மாதாவுக்குப் பிள்ளையிடத்தே உண்டான அன்பை
எனக்குத் தன்னுடைய சீபாதங்களிலே உண்டாக்கி அடிமை கொண்ட திருவம்பலவன் திருமலையில்
எங்களுக்கு மாதாவும் பிதாவும் குறவராக இருந்தார்கள்; நீண்ட மலையிடத்து நாங்கள் காப்பது தினையாயிருந்தது.
எனது பேராக இருத்தற்குச் செற்றியுமிதுவானால் வசவப்படாது? மாதாவாலும் பிதாவாலும்
செய்தொழிலாலும் செற்றியாலும் கண்டு எங்களைப் புகழ்ந்தாய் என்றது. 130
16. வருத்தங்கூறி வரைவுகடாதல்*
------------------------------
*பேரின்பப் பொருள் : இன்புறா திருத்த லென்பிழை யென்றது.
வருத்தங்கூறி வரைவுகடாதல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாயதோழி, 'வரையாமை நினைந்து
அவள் வருந்தா நின்றாள்; வரைவென்று நினைக்க நினைக்க நீயிர்வருந்தா நின்றீர்; இவ்வாறு நும்முள்ளம்
மாறுபட நிகழ்தலின் இருவர்க்கு மிடையே யான் வருந்தா நின்றே'னெனத் தலைமகனுக்கு வருத்தங்கூறி
வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மன்னுந் திருவருந் தும்வரை
யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
வாடுதி ரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
னென்னப் புலம்புவனே
கனங்குழை முகத்தவன் மனங்குழை வுணர்த்தி
நிரைவளைத் தோளி வரைவு கடாயது.
இதன் பொருள்: வரையா விடின் மன்னும் திருவருந்தும் வரையா தொழியிற் பெரும்பான்மையும் திருவை
யொப்பாள் வருந்துவள்; நீர்வரைவு என்று உன்னுமதற்குத் தளர்ந்து ஒளி வாடுதிர்- நீயிர் வரைவென்று நினைக்குமதற்கு
மனந்தளர்ந்து மேனியொளி வாடா நின்றீர்; பொன்னங் கழல் வழுத்தார் புலன் என்னப் புலம்புவன். இவ்வாறு
நும்முள்ளம் மாறுபட நிகழ்தலின் யான் பொன்னையொக்குங் கழலை வாழ்த்த மாட்டாதாரறிவு போலத்
தனிமையுற்று வருந்தா நின்றேன் எ-று. உம்பர் எல்லாம் பன்னும் புகழ்ப்பரமன் - அறிதற்கருமை யான்
உம்பரெல்லாமாராயும் புகழையுடைய பரமன் :பரஞ்சோதி எல்லாப் பொருட்கும் அப்பாலாகிய வொளி:
சிற்றம்பலத்தான் ஆயினும் அன்பர்க்கு இப்பாலாய்ச் சிற்றம்பலத்தின் கண்ணாயவன்;
பொன்னங்கழல் - அவனுடைய பொன்னங் கழலெனக் கூட்டுக.
மன்னு மென்பது ஒரிடைச்சொல். நிலைபெறுந் திருவென் றுரைப்பாருமுளர். *முன்னர் இவட்குத்
திருவை யுவமங் கூறுதல் தக்கதன்றென்று ஈண்டுவமித்த தென்னையெனின் ஆண்டுத் தெளியாமையிற்
கூறலாகாமைகூறி, மக்களுள்ளாளென்று தெளிந்த பின்னர்க் கூறலா மென்பதனாற் கூறிய தெனவுணர்க.
பொன்னங் கழலென்பதற்குப் பொன்னானியன்ற கழலையுடையதென அன்மொழித் தொகைப்பட
வுரைப்பினுமமையும். புலனென்ன வென்பதற்குச்சுவை முதலாகிய தம்பொருள் பெறாது வழுத்தாதா
ரைம்பொறியும் புலம்புமாறு போல வெனினுமமையும், இருவருள்ள நிகழ்ச்சியுங் கூறுவாள் போன்று,
தலைமகள தாற்றாமை கூறி வரைவுகடாயவாறு, மெய்ப்பாடு: அச்சம் - பயன்: வரைவுகடாதல்.
*உரைப்பவர் பழைய வுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கனத்த மகரக்குழைக் கிசைந்த முகத்தையுள்ளவள் மனம்
வாடுகிறபடியை அறிவித்து நிறைந்த வளைகளை யணிந்த தோளினை யுடையவள் வரைவை
வற்புறுத்திச் சொன்னது.
செய்யுள்: நீ வரைந்து கொள்ளாத பொழுது அம்புயம் நிலைபெறும் சீதேவியையொப்பாளும்
வருந்தா நிற்பள்; நீ வரைவு என்று நினைக்கும் அளவில் உள்ளந் தளர்ந்து மேவியொளிவாடா நின்றாய்;
தேவர்களெல்லாம் இற்றையளவும் ஆராயும் வண்ணம் நின்ற புகழையுடைய மேலானவன்,
சுயம்பிரகாசமானவன். திருச்சிற்றம்பல நாதன் அவனுடைய பொற்பு மிக்க பாதமலர்களை
வாழ்த்தமாட்டாதவருடைய அறிவுபோலே வருந்தா நின்றேன். 131
17. தாயச்சங்கூறிவரைவுகடாதல்*
--------------------------------
*பேரின்பப் பொருள்: 'பரையு முயிரின் பக்குவங் கண்டது'
தாயச்சங்கூறி வரைவு கடாதல் என்பது வருத்தங்கூறி வரைவு கடாய தோழி, எம்முடைய வன்னை
அவள் முலை முதிர்வு கண்டு இவள் சிற்றிடைக்கு ஒருபற்றுக் கண்டிலே மென்று அஞ்சா நின்றாள்:
இனி மகட்பேசுவார்க்கு மறாது கொடுக்கவுங் கூடு' மெனத்தாயச்சங் கூறி வரைவு கடாவா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
பனித்துண்டஞ் சூடும் படர்சடை
அம்பல வன்னுலகந்
தனித்துண் டவன்தொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சு மெம்மனையே **
மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா
வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.
**பா-ம் - மெம்மனைக்கே
இதன் பொருள்: பனித்துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் - பனியையுடைய துண்டமாகிய பிறையைச்
சூடும் பரப்பிய சடையையுடைய வம்பலவன்; தனித்து உலகம் உண்டவன் தொழும் தாளோன்-எஞ்சுவான்
றானேயாய்த் தானல்லாத உலக முழுதையுமுண்டவன் றொழுந் தாளையுடையவன்; கயிலைப் பயில் சிலம்பா -
அவனது கயிலைக்கட் பயிலுஞ் சிலம்பனே தொண்டைக்கனி வாய்ச்சி கதிர் முலைப் பாரிப்புக்கண்டு -
தொண்டைக்கனி போலும் வாயை யுடையாளுடைய கதிர் முலைகளது ஒருப்பாட்டைக்கண்டு:
அழிவு உற்று-நெஞ்சழிந்து, எம் அன்னை சிற்றிடைக்கு இனிப்பற்றுக் கண்டிலம் என்று அஞ்சும் -
எம்மன்னை இவள் சிற்றிடைக்கு இனியொரு பற்றுக் கண்டிலமென்று அஞ்சாநின்றாள்;
இனியடுப்பனவறியேன் எ-று.
துண்டம்: ஒரு பொருளினது கூறு. பாரிப்பு அடியிடு தலெனினுமமையும். இளமைப்பருவம் புகுந்தமையான்
மகட் கூறுவார்க்கு அன்னை மறாதே கொடுக்கும்: நீ முற்பட்டு வரைவாயாக வென்று தோழியேற்கக் கூறியவாறு.
மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: செறிப்பறிவுறுத்து வரைவு கடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மடப்பத்தாலே தகுதியையுடைய நாயகிக்கு வந்து
பொருந்துவதறியாதே வேலினை நிகர்த்த விழியுடைய பாங்கி பொருந்தும்படி சொன்னது.
செய்யுள்: குளிர்ந்த பிறையைச் சாத்தியருளுகிற விரிந்த திருச் (சடையையுடைய) திருவம்பலநாதன்,
பதினாலுலகையும் ஒரு காலே அமுது செய்த விட்டுணு வந்து வணங்குகின்ற நாயகன் (அவனுடைய கயிலைப்
பதியிலுள்ள சிலம்பனே!) கொவ்வைக் கனியை நிகர்த்த வாயினையுடையவள். ஒளியுடைத்தாகிய தனங்களின்
ஒருமைப் பாட்டைக் கண்டு நெஞ்சழிந்து இப்பொழுது சிறிய இடைக்கொரு ஆதாரம் கண்டிலோம் என்று
பயப்படா நின்றாள். எங்களுடைய தாயானவள்.
ஆதலாற் கடுக வரைந்து கொள்வாயாக என்றது. இளமைப் பருவம் புகுந்தமையான் மகட் கூறுவார்க்கு
அன்னை மறாது கொடுக்கும்; நீ அதற்கு முற்பட வரைந்து கொள்ள (வேண்டும்) என்றது. 132
18. இற்செறி வறிவித்து வரைவு கடாதல் *
-------------------------------------
* பேரின்பப் பொருள் : ''அருளினி லின்ப மரிதென விரைதல்.'
இற்செறி வறிவித்து வரைவுகடாதல் என்பது தாயச்சங் கூறி வரைவு கடாய தோழி எம்மன்னை அவளை
யுற்று நோக்கித் திருமலைக்கட் புறம் போய் விளையாட வேண்டாவெனக் கூறினாள் : இனி யிற்செறிப்பாள் போலு'மென
இற்செறி வறிவித்து வரைவு கடாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
ஈவிளை யாட நறவிளை
வோர்ந்தெமர்** மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே.
விற்செறி நுதலியை, இற்செறி வுரைத்தது.
**' நறவினை யோர்ந்தெமர்' என்பது பழைய வுரைகாரர் பாடம்.
இதன் பொருள் : ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து; தேனீக்கள் பறந்து விளையாட அவற்றினது விளையாட்டாற்
றேனினது விளைவையோர்ந்தறிந்து; எமர் மால்பு இயற்றும் வேய் விளையாடும் வெற்பா-எம்முடைய தமர் கண்ணேணியைச்
செய்யும் வேய் விளையாடும் வெற்பையுடையாய்; உற்றுநோக்கி குறித்து நோக்கி; அன்னை எம் மெல்லியலைத்
திருமலைக்குப் போய் விளையாடல் என்றாள் - அன்னை எம்முடைய மெல்லியலைத் திருமலைக்கட் புறம்போய்
விளையாட வேண்டாவென்று கூறினாள்; இனி இற்செறிக்கும்போலும் எ-று. அம்பலத்தான் - அம்பலத்தின் கண்ணான்;
புரத்தில் தீ விளையாட நின்று ஏ விளையாடி முப்புரத்தின் கட் டீவிளையாட நின்று ஏத்தொழிலால் விளையாடுவான்;
திருமலை -அவனது திருமலையெனக் கூட்டுக.
எமர் மால்பியற்றும் வெற்பா வென்றதனால், தாமந்நிலத்து மக்களாதலும் அவன் றலைவதனாலுங் கூறினாளாம்.
போய் விளையாடு கென்றாளென்பது பாடமாயின், உற்றுநோக்கி இன்று போய் விளையாடுக வென்றாள்; அக்குறிப்பால்
நாளை யிற்செறிப்பாள் போலுமென வுரைக்க; ஈ விளையாட்டாற்றேன் விளைவை யோர்ந்து எமர் மால்பியற்றுமாறு போலக்
கதிர்ப்பு வேறு பாட்டால் இவளுள்ளத்துக் கரந்த காம முணர்ந்து மேற்செய்வன செய்யக்கருதா நின்றாளென உள்ளுறை
காண்க. இச்செறிவித்ததென்பது** பாடமாயின், இன்னார் கூற்றென்னாது துறை கூறிற்றாகவுரைக்க.
**என்பது பழையவுரைகாரர் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வில்போன்ற நெற்றியினை யுடையாளை இல்லிலே செறிவித்தது.
செய்யுள்: (தேனை யொத்த படியாலே) ஈக்கள் புறப்பட்டு விளையாட நறவினையோர்ந்து விசாரித்து
எங்கள் உறவின்முறை யானவர்கள் கண்ணேணியை இயற்றுகிற மூங்கில் விளையாடும் மலையினை யுடையவனே!
உற்றுப் பார்த்து எம்முடைய மெல்லிய இயல்பினையுடையாளைப் புறம்பே போய் விளையாட வேண்டா வென்றாள்:
திருவம்பலநாதன் ,புரத்தில் தீப்புக்கு விளையாடும்படி எத்தொழில்களையும் கண்டு நின்று விளையாடினவன்.
(அவனுடைய) திருமலையிடத்துப் புறம்போய் விளையாட வேண்டா என்றாள் அன்னையானவள்.
எங்கள் அண்ணன்மார் ஈக்கள் ஒழுக்கத்தை அறிவார்கள்: ஈக்கள் புறப்பட்டு விளையாடத் தேன்
நெய்த்தபடியை அறிந்து சிலர் கண்ணேணியை ஏற்றுவார்கள்; அதற்கு முன்னே கடுக வரைந்து கொள்வாயாக
வேண்டும் என்றவாறு. விளையாடல் என்றாளதனால் நாளை யிற்செறிவிப்பாள் போலுமென்க. 133
19. தமர்நினை வுரைத்து வரைவு கடாதல் *
-------------------------------------
* பேரின்பப் பொருள்: இன்பம் பெறாவிடி லிகழுமுல கென்றது.
தமர்நினைவுரைத்து வரைவுகடாதல் என்பது இற்செறி வறிவித்து வரைவுகடாயதோழி, 'அவண் முலை
தாங்கமாட்டா திடை வருந்துவதனைக்கண்டு எமரிற்செறிப்பாராக நினையா நின்றார்; அயலவரு மகட்பேச
நினையா நின்றா' ரெனத் தமர் நினைவுரைத்து வரைவுகடாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
பலவற் றொழாது தொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே
விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்
றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.
இதன் பொருள்: சிலம்பா- சிலம்பா; சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம்பலவற் றொழாது-சுற்றப்பட்ட சடைத்திரளை
யுடைய சிற்றம்பலவனை முற்பிறவியிற் றொழாமையான்; கற்றும் தொல்சீர் அறியலரின் - நூல்களைக் கற்று வைத்தும்
அவனது பழைய புகழையறியாதாரைப் போல : இடை நைவது கண்டு முலை தாங்ககில்லா திடை வருந்துவதனைக்
கண்டு: எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார்-எற்றுந்திரையை யுடைய கடலிற் பிறந்த இனிய வமிர்தத்தை
யொப்பாளை இப்பொழுது தமர் இற்செறிப்பார்: மற்றும் சீறூர் பகர் பெரு வார்த்தைகள் சிலபல-அதுவுமன்றி
இச்சீறூராற் பகரப்படும் பெரிய வார்த்தைகள் சிலபலவுள எ-று.
எற்றுந்திரை யென்பது சினையாகிய தன் பொருட்கேற்ற வடையடுத்து நின்றதோராகு பெயர்.
இற்செறிப்பாரென்பது ஆரீற்று முற்றுச் சொல்: வினைப்பெய ரென்பாருஞ் செறிப்பரென்று பாடமோதுவாருமுளர்.
சிலபலவென்பது பத்தெட்டுளவென்பதுபோலத் துணிவின்மைக்கண் வந்தது. சீறூர்ப்பக ரென்பதூவும் பாடம்.
இவற்றிற்கு மெய்ப்பாடும் பயனும் அவை, இவற்றுண் மேலைப்பாட்டிற் குறிப்பினானே செறிப்பறிவுறுத்தாள்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (வில் போன்ற நெற்றியுடை யாளை) நிபத்தியாக (நிச்சயமாக) நாளை
இல்லிலே செறிவிப்பார்கள் என்கிறவதனை ஒளி வேலவற்கு வெளியே உரைத்தது.
செய்யுள்: சுற்றிக் கட்டப்பட்ட சடைத்திரளை யுடைய திருச்சிற்றம்பல நாதனை முற்பிறப்பில் தொழாத
படியினாலே, எல்லா நூல்களையும் கற்றிருந்தும் அவனுடைய பழைய சீரை அறியாதாரைப்போலே, நாயகனே!
இடை கிலேசிக்கிற அதனைக் கண்டு, கரையோடே மோதுகிற திரையையுடைத்தாகிய கடலிலே பிறந்த
அமுதத்தை ஒப்பாளை இப்பொழுதே உறவான பேர் இல்லிலே செறிப்பார்களாயிருந்தது. சிறிய ஊரிடத்துச்
சொல்லுகிற பெரிய வார்த்தைகள் மற்றும் சிலவும் பலவுமாயிருந்தன; (சிலவென்பது. தாங்கள் இன்ன வார்த்தை
யென்றறியாமையான்: பலவென்பது எல்லாம் சொல்லுதலான் ; பெருவார்த்தை யென்றது வெளிப்பட்ட காலத்துப்
பெரும் பழியைத் தருவது போலே என்றது) 134
20. எதிர்கோள் கூறி வரைவுகடாதல் *
---------------------------------
*'பேரின்பப் பொருள் : திரோதையும் பரையுஞ் சேர்ந்திடுமென்றது.
எதிர்கோள் கூறி வரைவுகடாதல் என்பது தமர் நினைவுரைத்து வரைவுகடாயதோழி, 'நீ வரைவொடுவரின்;
அன்னையும் ஐயன்மாரும் அயலவரும் நின்வர வெதிர்கொள்ளாநிற்பர் ; இனிப் பல நினையாது பலருமறிய வரைவொடு
வருவாயாக' வென எதிர்கோள்கூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள் :
வழியும் அதுவன்னை யென்னின்
மகிழும்வந் தெந்தையும் நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள் பல
வென்னோ கிளக்கின்றதே.
ஏந்திழைத்தோழி ஏந்தலை முன்னிக்
கடியாமாறு நொடிகென்றது.
இதன் பொருள்: வழியும் அது- இவளை நீ யெய்துதற்கு முறைமையும் வரைவு வேண்டுதலே:
அன்னை என்னின் மகிழும் - இவணலத்திற்குத் தக்கானோர் கணவனை வேண்டுவாளா கலின் நீ வரைவு
வேண்டுமிடத்து அன்னையென்னைப்போல மகிழும்; வந்து எந்தையும் நின் மொழியின் வழி நிற்கும் .
உலகியலாள் மறுத்தகன்று நின்றானாயினுந் தகுதி நோக்கிவந்து எந்தையு நின் மொழியைக் கடவாது
அதன் வழியே நிற்கும்: முன்னே சுற்றம் வயம்-இவளோடு நின்னிடை நிகழ்ந்தது குறிப்பானறிந்த தாகலின்
நீ வரைவு வேண்டுவதன் முன்னே சுற்றம் நினக்கு வயமாயிருக்கும்: பல கிளக்கின்றது என்-பல சொல்லுகின்றதென்:
குழி உம்பர் ஏத்தும் அம்பலத்து எம் கூத்தன் - திரண்டு உம்பரான் ஏத்தப்படுமம்பலத்தின் கணுளனாகிய எம்முடைய
கூத்தனது குற்றாலம் முற்றும் அறியக் கெழி உம்மவே பணைத் தோள்- குற்றால முழுதுமறியப் பொருந்திய
உம்மனவே தோள்கள் : ஐயுற வேண்டா எ-று.
வழியுமென்னுமும்மை: எச்சவும்மை உபாயமாதலேயன்றி என்றவாறு. எந்தையு மென்பது இறந்தது தழீஇய
வெச்சவும்மை. முன்னே வயமென வேறுபடுத்துக் கூறுதலால், சுற்றமுமென வும்மைகொடாது கூறினாள்.
நலமுங் குலமு முதலாயின வற்றானேராராயினும், வடுவஞ்சி நேர்வ ரென்பது பயப்பக் குற்றால முற்றுமறியக்
கெழீஇயவென்றாள், கெழீஇய வென்பது கெழியெனக் குறைந்து நின்றது. நின்மொழியென்று உம்மவே என்றது.
' என்னீ ரறியாதீர் போல விவைகூற, னின்னீர வல்ல நெடுந்தகாய்" (கலித்தொகை, பாலை-5) என்பது போல ஈண்டும்
பன்மையு மொருமையு மயங்கி நின்றன. குற்றால முற்றுமறியக் கெழியென்பதற்கு மறைந் தொழுகா தெல்லாரு
மறிய வரைவொடு வருவாயாக வென்றுரைப்பாருமுளர் **. இப்பொருட்குக் கெழுமுவென்பது விகார வகையாற்
கெழியென நின்றது மெய்ப்பாடும் பயனும் அவை. வரைவின்கட் டலைமகனை யொற்றுமை கொளுவுதலுமாம்.
**உரைப்பவர் பழையவுரைகாரர்
தழங்கு மருவி (127) என்னும் பாட்டுத்தொட் டிதன்காறும் வர இப்பாட்டொன்பதுஞ் செறிப்பறிவுறுத்து
வரைவு கடாயின வென்பது. இவையெல்லாந் தோழியிற் கூட்டமுந் தோழியிற் கூட்டத்தின் விகற்பமுமெனவறிக.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஏந்திழைப் பாங்கி யேந்தலை முன்னிக், கடியாமாறு நொடிதே கென்றது.
மிக்க ஆபரணங்களையுடைய தோழி நாயகனை எதிர்ப்பட்டுக் கலியாணத்திற்காம்படி விரை(வா)யாக வென்று
சொல்லியது.
செய்யுள்: தாயானவள் என்னைப்போலே விரும்புவாள்: (எனவே தன் விருப்பம் சொல்லாதே விளங்குகிறது) ;
(உலகியல்பான் மறுத்து நின்றானே யாகில்) வந்து என் பிதாவானவன் நீ சொன்ன வழியிலே நிற்பன்;
சுற்றத்திலுள்ளார் (க்கு) முன்னே வசப்படுவார்கள்: திரண்டு தேவர்கள் ஏத்துகிற அம்பலக்கூத்தனாயுள்ளவன்
அவனுடைய திருக்குற்றாலத்தி லுள்ளவர்கள் அறிய வேயை யொத்த தோளினையும் பொருந்துமதே காரியம்:
(பலரறியப் பொருந்துகையாவது, கலியாணம் செய்து கூடுகை) இனிப் பலபடச் சொல்வது ஏன் தான்?
உலகத்தின் வழி அதுவே யல்லவோ? 135
21. ஏறுகோள் கூறிவரைவு கடாதல்*
------------------------------
* பேரின்பப் பொருள்: "அன்பு புரிபவர்க் கின்பெளி தென்றது."
ஏறுகோள் கூறி வரைவு கடாதல் என்பது எதிர்கோள் கூறி வரைவுகடாயதோழி, 'எம்முடைய
வையன்மார் அவளுடைய முலையின் பெருமையும் இடையின் சிறுமையுங் கண்டு எம்மூர்க்கண்
விடையின் மருப்பைத் திருத்தி விட்டார்; இனியடுப்பன வறியே' னென ஏறுகோள் கூறி வரைவு கடாவா
நிற்றல். ஈண்டுக் கூறுவானுதலுகின்றது முல்லைத் திணையாகலின், அந்த முல்லைத் திணைக்கு மரபாவது,
ஓரிடத்தொரு பெண் பிறந்தால் அப்பெண்ணைப் பெற்றவர் தந்தொழுவில் அன்று பிறந்த சேங்கன்றுள்ளன
வெல்லாந் தன் னூட்டியாக விட்டு வளர்த்து அப்பரிசினால் வளர்ந்த வேற்றைத் தழுவினா னொருவனுக்கு
அப்பெண்ணைக் கொடுத்தல் மரபென்ப. அதற்குச் செய்யுள்:-
படையார் கருங்கண்ணி வண்ணப்
பயோதரப் பாரமும் நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
ளீர் முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலு முருவினதே*
என்னையர் துணி, வின்ன தென்றது
*பா-ம் முருவினவே.
இதன் பொருள்: படை ஆர் கருங்கண்ணி வண்ணப்பயோதரப் பாரமும்-படைக்கலம் போலுங்கரிய
கண்ணையுடை யாளுடைய நிறத்தையுடைய முலைகளில் பாரத்தையும்; நுண் இடையார் மெலிவும் கண்டு-
அப்பாரத்தைத் தாங்கலுறா நின்ற நுண்ணிய விடையாரது மெலிவையுங் கண்டு; அண்டர்கள் -
என் னையராகியவாயர்; ஈர் முல்லைவேலி எம்மூர் - ஈரிய முல்லையாகிய வேலியையுடைய எம்மூரின் கண்
விடை ஆர் மருப்புத் திருந்தச் செய்து விட்டார்கள் : வியன்தென் புலியூர் உடையார் கடவி வருவது போலும்
உருவினது அவ்விடை- அகன்ற தென்புலியூரையுடையவர் செலுத்தி வரும் விடைபோலு முருவினையுடைத்து:
இனி யென்னிகழும்! எ-று.
இயல்வது மேற்கொள்ளாமையின் இடையாரென இழித்துக் கூறினாள், முல்லையையுடைய
வேலியெனினுமமையும். அவ் வேறுகோள் நிகழ்வதன்முன் வரைந்தெய்துவாயாக வென்றவாறு.
விடையார்மருப்புத் திருத்திவிட்டார் நினக்குற்றது செய்யென்பதனைக் கேட்டுத் தலைமகனுள்ளம் வாடினான்;
அஃதெற்றிற்கெனின், ஏறுதழுவிக் கோடல் தங்குலத்திற்கு மரபாகலானும்,தமக்குப் பொதுவர் பொதுவியரென்று
பெயராகலானும், அவ்வேற்றைத் தன்னின் முற்பட்டானொருவன் றழுவவுந்தகு மென்றுள்ளம் வாடினான்.
அதனைத் தோழி கண்டு, அவ்வேறு புலியூருடையார் கடவி வருவது போலுமுருவின தென்றாள்: என்றது
அதன் வெம்மை சொன்னவாறன்று: இவ்வொழுக்கம் புலியூருடையாரதருளான் வந்ததாகலின், அவ்வேறு நினக்கே
வயப்படுவதன்றி மற்றொருத்தரா லணுகுதற்கரிது; நீ கடிது விரைந்து செய்: அஞ்சவேண்டா வென்றாளாயிற்று.
இது முல்லைத்திணை. மெய்ப்பாடு: அது. பயன்: ஏறு கோளுணர்த்தி வரைவுகடாதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: எங்கள் அண்ணன்மார் அறுதியிட்ட காரியம் இக்காரியம் என்றபடி .
செய்யுள் : வேலையொத்த கருங்கண்ணை யுடையாளின் அழகிய முலைகளின் பெருமையையும் நுண்ணிய
இடையினுடைய மிக்க மெலிவையும் பார்த்து, இடையராகிய எங்கள் அண்ணன்மார், குளிர்ந்த முல்லை வேலியையுடைய
எங்களூரிலே இடபத்தினுடைய நிரம்ப மருப்பைச் சீவி விட்டார்கள் (அதன் வடிவாவது பெரும்பற்றப்புலியூருடையவர்
ஏறிச் செல்லும் இடபத்தை யொக்கும் ) ஆதலால் இனி என் நிகழுமென்று தெரியாது; ஏறு கோள் நிகழ்வதன் முன்னே
வரைந்தெய்துவாய் என்பது கருத்து. 136
22. அயலுரையுரைத்து வரைவு கடாதல்*
------------------------------------
*பேரின்பப் பொருள்: ''அடியா ரின்பே யார்வா ரென்றது.''
அயலுரையுரைத்து வரைவு கடாதல் என்பது ஏறுகோள் கூறி வரைவுகடாயதோழி, 'அயலவர் நாளைப்பொன்
புனையப் புகுதா நின்றார்; இதற்குத் தீவினையேன் சொல்லுவதென்னோ' வெனத் தான் முன்னிலைப் புறமொழியாக
அயலுரை யுரைத்து வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள் :-
உருப்பனை அன்னகைக் குன்றொன்
றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்தி நிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல் செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் லேவினை
யேன்பான் புகல்வதுவே.
கயல்புரை கண்ணியை, அயலுரை யுரைத்தது .
இதன் பொருள்: உருப்பனை அன்ன கைக்குன்று ஒன்று உரித்து - வடிவு பனையை யொக்குங் கையையுடைய
குன்றொன்றையுரித்து; உரவு ஊர் எரித்த நெருப்பனை - வலியையுடைய வூர்களை யெரித்த நெருப்பையுடையானை;
அம்பலத்து ஆதியை- அம்பலத்தின் கணுளனாகிய வெல்லாப்பொருட்கு முதலாயவனை; உம்பர் சென்று ஏத்தி நிற்கும்
திருப்பனையூர் அனையாளை - உம்பர் சென்று வாழ்த்தி நிற்றற்கிடமாந் திருப்பனையூரை யொப்பாளை; நாளைப்பொன்
புனைதல் செப்பி- அயலார் நாளைப் பொன் புனைதலைச் சொல்லி; வினையேன் யான்முன் நின்று பொருப்பனைப்
புகல்வது என்னோ-தீவினையேனாகிய யான் முன்னின்று பொருப்பனைச் சொல்லுவதெவனோ? எ-று.
உரவூரெரித்தலை நெருப்பின் மேலேற்றுக எரித்த நெருப்பனென்ற சொற்களினாற்றலான், எரித்தது
நெருப்பானென்பது போதரும். புகல்வதென்றது வரைந்தெய் துவாயாகவென்று பின் சொல்லப்படுங் காரியத்தை.
இது சிறைப்புரம் பொருப்பனென்பது முன்னிலைக்கண் வந்ததென்று தலைமகள் தலைமகன் முன்னிலையாகக்
கூறினளெனினு மமையும், அயலுரை- தலைமகட்கியாது மியைபில்லாதவுரை: அயலா ரொருப்பட்ட வுரையெனினு
மமையும், மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு )கொளு: கயலை யொத்த கண்களை யுடையாளை அவளுக்கப்பாலான் வந்து
வரைவுணர் என்று சொன்னது.
செய்யுள்: பனையை யொத்த வடிவினையுடைய கையினையுள்ள மலையை யொத்த யானை உரித்து
வலியுடைத்தாகிய ஊரான முப்புரங்களை எரித்த நெருப்பையுடையவனை, திருவம்பலத்திற் பழையவனை,
அவனைத் தேவர்கள் சென்று வாழ்த்தி நிற்கைக் கிடமாகிய திருப்பனையூரை யொப்பளை, நாளைப்
பொன்னணிவார்கள் என்று சொல்லித் தீவினையைச் செய்த நான் நாயகனே! உன்னை எதிர்ப்பட்டு என்ன
வார்த்தையைச் சொல்லுவேன். 137
23. தினை முதிர்வுரைத்து வரைவு கடாதல்*
--------------------------------------
*பேரின்பப் பொருள்; பணியொழிந் தாற்சிவம் பலியா தென்றது.
தினைமுதிர்வுரைத்து வரைவு கடாதல் என்பது அயலுரை யுரைத்து வரைவுகடாய தோழி,
இவ்வேங்கை தினைப்புனங் கொய்க வென்று சோதிடஞ் சொல்லுதலைப் பொருந்தி எம்மைக் கெடுவித்தது:
இனி நமக்கேனல் விளையாட்டில்லையெனச் சிறைப்புறமாகத் தலைமகளோடு கூறுவாள் போன்று
தினைமுதிர்வுரைத்து வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரிய நின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு
வித்தது தூமொழியே
ஏனெல் விளையாட்டினையில்
மானற் றோழி மடந்தைக் குரைத்து .
இதன் பொருள்: தூமொழி-தூய மொழியையுடையாய்; மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன்-மாதையிடப்
பக்கத்துக் கொண்டெல்லாருங் காண அம்பலத்தின் கணின்ற பொருந்தா வொழுக்கத்தை யுடையவனது: வடவான்
கயிலைப் போது இடங்கொண்ட பொன் வேங்கை-வடக்கின் கணுண்டாகிய பெரிய கைலைமலைக் கணுளதாகிய
பொருப்பிடங் கொண்ட பொன் போலுமலரை யுடைய வேங்கை ; தினைப்புனத்தைக் கொய்க என்று தாது
இடங் கொண்டு- தினைப்புனத்தைக் கொய்க வென்று தாதையிடத்தே கொண்டு; பொன்வீசி-பொன் போலு
மலரையெல்லாங் கொடுத்து; தன் கள் வாய் சொரிய நின்று- தனது தேனைப் பூத்தவிடஞ் சொரிய நின்று சோதிடம்
சொல்லுதலைப் பொருந்தி இஃதெம்மைக் கெடுத்தது; இனியென் செய்தும்? எ-று.
பொன்னைக் கொடுத்துப் பிறர்க்கு அடிமை யாதலைப் பொருந்தித் தானிழிந்த சாதியாதலாற்
றனக்குரியகள்ளை வாய்சொரிய நின்றெனச் சிலேடை வகையா னிழித்துக் கூறினாளாகவு முரைக்க.
சோதிடங் கொண்டிதெம்மைக் கெடக் கொண்ட தென்பது பாடமாயிற் கெடக்கொண்ட தென்னுஞ்
சொற்கள் ஒருசொன்னீரவாய்க் கெடுத்த தென்னும் பொருள் பட்டு, எம்மை யென்னு மிரண்டாவதனை
முடித்தனவாக வுரைக்க. மெய்ப்பாடு: அழுகை, பயன்: செறிப்பறிவுறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: தினைகாத்து விளையாடும் விளையாட்டு இனியில்லை
யென்று கொண்டு கொண்டாட்டத்தினையுடைய தோழி நாயகிக்குச் சொன்னது.
செய்யுள்: தேவியை இடப்பாகத்தே கொண்டு அம்பலத்தே நின்றவன் அவனுடைய வடக்கின் கண்
உண்டாக்கிய கயிலாயத்தில் பக்கமலையை இடங்கொண்ட பொன் போன்ற மலரையுடைய வேங்கை, புனத்தில்
தினையைக் கொய்யுங்க' ளென்று, அல்லியிடங்கொண்டு பொன்னை யொத்த மலர்களைச் சிதறித்
தன்னுடைய தேனானது இடமெலாம் சொரிய நின்று சோதிடத்தைச் சொல்லிற்று: ஆதலால் தூய
வார்த்தையினையுடையாய்! எம்மைக் கெடுவித்தது.
என்று, பொருளாகிய சிலேடையாலே, பொன்னையுடைய வேங்கை தாதிடங்கொண்டு பிறர்க்கடிமைப்
படுத்தலைச் செய்து பொன்னையும் பிறர்க்குக் கொடுத்துத் தன் வாயாலே கள்போக நின்று இன்னாளைக்
கெடுக்கலாமென்று அறிவு சொல்லி எம்மைக் கெடுத்ததன்றோ. தனியாகத் தம்முடைய குலத்திற்கு ஏற்க. 138
24. பகல் வரல் விலக்கி வரைவுகடாதல்*
-----------------------------------
*பேரின்பப் பொருள்: பசுகர ணத்தாற் பலியா தென்றது.
பகல்வரல் விலக்கி வரைவுகடாதல் என்பது சிறைப்புறமாகத் தினைமுதிர்வுரைத்து வரைவு கடாய
தோழி, எதிர்ப்பட்டு நின்று, "இப்பெருங்கணியார் நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்;
எம்மையன்மார் இவர் சொற்கேட்டு இத்தினையைத் தடிவாராயிருந்தார் ; எமக்கு மினித் தினைப் புனங்
காவலில்லை; நீரினிப்பகல் வரல் வேண்டா' வெனப் பகல் வரல் விலக்கி வரைவு கடாவா நிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
வடிவார் வயற்றில்லை யோன்மல
யாத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
பெருமஇத் தண்புனமே
அகல்வரை நாடனைப், பகல்வர லென்றது
இதன் பொருள்: வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து நின்றும்-அழகார்ந்த வயல் சூழ்ந்த
தில்லையை யுடையவனது பொதியிற்க ணின்றுவைத்தும்; வருதேன் கடிவார் களிவண்டு நின்று அலர் தூற்ற-
நறுநாற்றத்தால் வாராநின்ற தேன்களும் நாற்றத்தைத்தேரு நெடிய களி வண்டுகளும் நின்று அலர்களைக்
குடைந்து தூற்ற; பெருங்கணியார் இனி நமக்கு நோதக நொடிவார்-வேங்கையாகிய பெருங்கணியார்
இப்பொழுது நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்; யான் உமக்கு என் உரைக்கேன் -
யானுமக் கென்சொல்லுவேன்; எமர் தினை தடிவார் கணியார் சொல்லுதலால் எமர் தினையைத்
தடிவாராயிருந்தார், அதனால்; பெரும-பெரும; இத்தண் புனம் காவேம் - இத்தண்புனத்தை யாமினிக்
காவேம்; நீ பகல் வர வேண்டா எ-று.
வடிவார் தில்லை யென்றியைப்பினுமமையும், மலயத்து வாழ்வார் பிறர்க்கு வருத்தஞ் செய்யாராகலின்,
மலயத்து நின்றுமென்றும்மை கொடுத்தார். மலயத்து நின்றும் வருந்தேனென் றுரைப்பாருமுளர். இப்பொருட்கு
வேங்கை மலையத்தை யணைந்ததோரிடத்து நின்றதாக வுரைக்க. கடி- புதுமையுமாம். வண்டொழுங்கினது
நெடுமை பற்றி வார்களி வண்டென்றாள். இதுவுமதுவாகலான், அலர்தூற்ற வென்பதற்குத் தன்னோடு பயின்றாரைக்
கண்ணோட்டமின்றி வருத்தா நின்றதென்று புறங்கூறவென்று முரைக்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அகன்ற மலைமேலுண்டாகிய நாட்டையுடையவனைப் பகற்குறி
வாராதொழிக என்றது.
செய்யுள்: அழகார்ந்த வயல் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூரிலுள்ளவன் அவனுடைய பொதியின் மலையிடத்தே
இவர் நின்று வைத்தும் வருகிற தேன் சாதிகளும் நறுநாற்றத்தை விரும்புகிற ஒழுங்கு பட்ட களிப்புடைத்தாகிய
வண்டுச் சாதிகளும் நின்று பூவை மலர்த்த வேங்கையாராகிய இப் பெரிய கணியார் சொல்லுவாராக இருந்தார்,
இப்பொழுது நமக்கு நோவத்தக்க காரியங்களை : இது கேட்டு எங்கள் உறவின் முறையார் தினையைக் கொய்வதாக
விருந்தார்கள்; இவ்வார்த்தையை நானுமக்கென்னென்று சொல்லுகேன்.
மேற் சொல்லாவது பெரியவனே! நாங்கள் இந்தக் குளிர்ந்த புனத்தைக் காவேம்
சொல்லத்தகாதபடி இப்பெருந்தன்மையை அடையாராய்க் கணி சொல்லுதற்குரியவர் வந்தார்;
எல்லாரும் தம்மை அலர் தூற்றப் பொதியின் மலையிலே நின்ற எம்முடைய மேம்பாட்டையும் கருதாது,
தம்மை அடைந்த நமக்குக் கேடு சொல்ல, இது கேட்பாருமே மாறாதலினும் உமக்கென்ன வார்த்தையைச்
சொல்லுக என்றுபடும் ** 139
**இப்பகுதி ஏட்டில் பிழைபடக் காணப்பட்டது. ஒருவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது- என்று பழையவுரைப்
பதிப்பில் காணப்பெறுகின்றது.
25. தினையொடு வெறுத்து வரைவுகடாதல்*
---------------------------------------
*பேரின்பப் பொருள்: தவங்கள் செய்துஞ் சலிப்பிலையென்றது.
தினையொடு வெறுத்து வரைவு கடாதல் என்பது பகல்வரல் விலக்கி வரைவுகடாய தோழி,
இத்தினைக்காவறலைக்கீடாக நாமவனை யெதிர்ப்படலாமென்று நினைந்து தினையை வித்திக்காத்தோம்;
அதுபோய்த் தீவினையை வித்திக்காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்ததெனச் சிறைப்புறமாகத்
தினையொடு வெறுத்து வரைவு கடாவா நிற்றல்; அதற்குச் செய்யுள்:-
நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்று சென்று
வினைவித்திக் காத்து விளைவுகண்ட
தாகி விளைந்ததுவே.
தண்புனத்தோடு தளர்வுற்றுப்
பண்புனைமொழிப் பாங்கிபகர்ந்தது.
இதன் பொருள்: என் நெஞ்சத்து இருந்து தன்னை நினைவித்து-தானே வந்திருந்து திருத்த வேண்டுதலின்
என்னெஞ்சத்துப் புகுந்திருந்து தன்னை யானினையும் வண்ணஞ்செய்து அம்பலத்து நின்று-அம்பலத்தின்கட் டன்
றிருமேனி காட்டி நின்று; புனைவித்த ஈசன் பொதியின் மலைப் பொருப்பன் விருப்பின்-என்னாற் றன்னைப்
புகழ்வித்துக் கொண்ட ஈசனது பொதியின் மலைக்கணுளனாகிய பொருப்பன் மேல் வைத்த விருப்பினால்;
தினை வித்திக் காத்துச் சிறந்து நின்றேமுக்கு - தினையை வித்தி அதனைக் காத்து உள்ளமலிந்து நின்ற எங்கட்கு;
சென்று சென்று வினை வித்திக் காத்து விளைவு உண்டதாகி விளைந்தது-அத் தினையை வித்திக்காத்த காவல்
போய்த் தீவினையை வித்தி அதனைக் காத்து அதன் விளைவையு முண்டதாகி முடிந்தது எ-று
நினைவித்துத் தன்னை யென்னெஞ்சத் திருந்தென்பதற்கு ஒருகாற் றன்னை நினைவேனாகவுஞ் செய்து
அந்நினைவே பற்றுக் கோடாகத் தான் புகுந்திருந்தெனினுமமையும். பொருப்பன் விருப்பென்பதனை நீர் வேட்கை
போலக் கொள்க. தினை வித்திய ஞான்று இத்தினைக்காவல் தலைக்கீடாக அவனை யெதிர்ப்படலாமென்று மகிழ்ந்து
அதற்கு உடம்பட்டாராகலிற் றாம்வித்தினார் போலக் கூறினாள். புனத்தோடு தளர்வுற்று - புனத்தாற்றளர்வுற்று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தளர்ச்சியுற்றுக் குளிர்ந்த புனத்துடனே பண் பொருந்தின
சொல்லையுடைய பாங்கி சொல்லியது.
செய்யுள்: தானே புகுந்து திருத்த வேண்டுதலாலே என் நெஞ்சிலே வந்திருந்து தன்னை யான் எப்பொழுதும்
நினையும்படி பண்ணித் திருவம்பலத்திலே நின்று என்னைக் கொண்டு, தன்னைப் புகழ்வித்துக் கொண்ட
பரமேசுவரன் அவனுடைய பொதிய மலையிடத்தே நாயகனைக் காணலாமெனும் விருப்பினாலே. தினையை
வித்தியதில் ஒரு சேத(மும்) படாமல் பரிகரித்துச் சிறந்து நின்றோம்; தன்னுடைய தண்ணளி எம்பால் நின்ற
எமக்குத் தினையை வித்தியதில் ஒன்றும் சேதப்படாமல் பரிகரித்து அது விளைந்தவாறு எய்தத்
தினையனுபவித்தாற்போல விளைந்தது இன்றே. 140
26. வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்*
-----------------------------------------
*பேரின்பப் பொருள் : பசு கரணங்களே பகையா மென்றது.
வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல் என்பது தினையொடு வெறுத்து வரைவு கடாயதோழி,
இவ்வேங்கையரும்பிய ஞான்றே அரும்பறக் கொய்தேமாயின் இவர் இன்று நம்மைக் கெடுப்பான் வேண்டி
இத்திணை கெட முயலுமாறு முண்டோ? யாமதுசெய்யப் பெற்றிலே'மென வேங்கையொடு வெறுத்து வரைவு
கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண்
டார்க்கம் பலத்தமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய்
கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தன மாயின்
நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறுமுண்
டோஇத் திருக்கணியே
நீங்குகவினி நெடுந்தகையென
வேங்கை மேல்வைத்து விளம்பியது.
இதன் பொருள்: கனைகடற் செய்த நஞ்சு உண்டு ஒலியா நின்ற கடலின்க ணுண்டாக்கப்பட்ட
நஞ்சை யுண்டு வைத்து: அம்பலத்துக் கண்டார்க்கு அமிழ்தமாய்; வினை கெடச் செய்தவன் விண் தோய் கயிலை
மயில் அனையாய்-நம் வினை கெடும் வண்ணஞ் செய்தவனது விண்ணைத் தோயா நின்ற கைலையின்
மயிலையொப்பாய்; நனைகெடச் செய்தனம் ஆயின் - அரும்பிய ஞான்றே நனையக் கெடும் வண்ணஞ்
செய்தேமாயின்; நமைக் கெடச் செய்திடுவான் இத்திருக்கணி தினைகெடச் செய்திடுமாறும் உண்டோ-
நம்மைங் கெடுப்பான் வேண்டி இத்திருவாகிய கணி தினைகெட முயலுமாறுமுண்டோ ? யாமது
செய்யப் பெற்றிலேம் எ-று.
கனைகடற்செய்த வென்றதனான் நஞ்சின் பெருமை கூறினார். செய்யாத நஞ்சிற் செய்தநஞ்சு
கொடிதாகலின், அவன் கொடுமை விளங்கச் செய்த நஞ்சென்றார். அமிழ்தாதல் அமிழ்தின் காரியத்தைச்
செய்தல் கண்டார்க் கென்றதனான் அல்லாத வமிழ்தோடு இவ்வமிழ்திற்கு வேற்றுமை கூறியவாறாகும்.
கெடச் செய்திடுவா னென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய்க் கொடுப்பானென்னும் பொருள்பட்டு,
நம்மை யென்னு மிரண்டாவதற்கு முடிவாயின. வினை கெடச் செய்தவனென்பது முதலாயினவற்றிற்கு
மிவ்வாறுரைப்பினு மமையும், திரு-சாதிப் பெயர். கணி: தொழிற் பெயர். நல்லகணி யென்றிழித்துக்
கூறினாளாக வுரைப்பாருமுளர்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பெரிய தகைமைப் பாட்டையுடையவனே! நீங்குவாயாக
என்று வேங்கை மரத்தைச் சொல்லுவாராகச் சொல்லியது.
செய்யுள்: ஆரவாரிக்கப்பட்ட கடலிலே உண்டாக்கப்பட்ட நஞ்சை அமுது செய்து வந்து, தரிசித்தார்க்கு
அம்பலத்தினுண்டாய அமுதாய் இருவினையும் கெடும்படி காரணங்களை ஒடுக்கினவன் ; (என்றது. கடலிலே,
நஞ்செனவே பெருமை விளங்கிற்று; செய்த நஞ்செனவே பெருமை விளங்கிற்று; இந்த நஞ்சை உண்டு
வைத்து அமுதமானான் என்பது கருத்து. அமுதானது அருமையற்று அம்பலத்தமுதாயிருந்தது. இங்ஙனமே
எளிதாய்வைத்தும் உண்டா , பலிக்கை ஒழிந்து , காணுமளவில் பலிக்கும்படியாயிருந்தது. பலிக்கும் பொழுதும்
யாக்கைத் துன்பமொழிய அந்தக் காரணங்களையும் சுத்தமாக்குவதாயிருந்தது) அவனுடைய விசும்பு தோய்ந்த
கயிலையில் மயிலை நிகர்ப்பாய் ! அரும்புகிற நாளிலே அரும்பினைப் பறித்துப் போட்டோமாகில் நம்மைக்
கெடும்படியாகத் தினைகெடச் செய்திடுமாறு முண்டோ இத்திருக்கணியே.
இத்திருக்கணியே தினைகெடும்படி சோதிடம் சொல்லுமாறு உண்டோ ? (எனவியைக்க). இந்தத் திருவாகிய
கணி, திரு என்பது சாதிப்பெயர்; கணி என்பது தொழிற்பெயர். அந்தச் சோதிடம் தப்பாமே சொல்லி வருகிறவர்
என்று அதற்கு இழிவு சொன்னபடி. 141
27. இரக்கமுற்று வரைவுகடாதல்*
-----------------------------
* பேரின்பப் பொருள்: அருளுயிர்க் கிரங்கி யன்பெடுத்துரைத்தது.
இரக்கமுற்று வரைவு கடாதல் என்பது வேங்கையொடு வெறுத்து வரைவு கடாய தோழி, 'யாமவனை
யெதிர்ப்படலா மென்றின்புற்று வளர்த்த தினைத்திரள் இப்புனத்தின் கணில்லாவாயிருந்தன; இனி நாமவனை
யெதிர்ப்படுமாறென்னோ' வெனச் சிறைப்புறமாகத் தலைமகனுக் கிரக்கமுற்று வரைவு கடவாநிற்றல்.
அதற்குச் செய்யுள் :--
வழுவா இயலெம் மலையர்
விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
பலவரைச் சென்று நின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே
செழுமலை நாடற்குக், கழுமலுற் றிரங்கியது.
இதன் பொருள்: வழுவா இயல்எம் மலையர் விதைப்ப - விதைக்கும் பருவத்துங் கொய்யும்
பருவத்தும் வழுவாது செய்யுமியல்பையுடைய எந்தமராகிய மலையர்விதைப்ப; யாம் வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்லாம்-யாம் வளர்த்த கொழுவிய நெடிய தினையின் திரட்களெல்லாம்;
எம் குழாம் வணங்கும் செழுவார் கழல் தில்லைச் சிற்றம்பலவரை- எமது குழாஞ்சென்று வணங்கும்
வளவிய நெடிய கழலையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தை யுடையானை; சென்று நின்று தொழுவார்
வினைநிற்கிலே சென்று நின்று தொழுவாருடைய வினை அவர்கண் நிற்கிலே; இத்தொல் புனத்து நிற்பது
ஆவது-இப்பழைய புனத்தினிற்பதாவது; இனி நில்லா எ-று.
குழாங்களெல்லா நிற்பதாவதெனக் கூட்டுக. நிற்பதென்பது நிற்றலென்னும்பொருட்டு. நிற்பதாவ
வென்பது பாடமாயின் ஆவவென்பதிரங்கற் குறிப்பாகவுரைக்க நிற்ப வென்பதூஉம் பாடம்.
குழுவார்தினை யென்பதூஉம் பாடம்.
(பழையவுரை பொழிப்பு) கொளு: அழகிய மலைமேலுண்டாகிய நாட்டினை யுடையவற்குக்
கழுமலுற்றிரங்கியது.
செய்யுள்: விதைக்கிற் பருவமும் அறுக்கிற் பருவமும் வழுவாத இல்லையுடைய மலையராகிய
எங்கள் அண்ணன் மார் விதைப்ப அதனை மற்றெங்களாலே வளர்க்கப்பட்ட வளவிதாய நீண்டதினையின்
திரளெல்லாம் வந்து வணங்குகிற அழகியதாய சீபாதங்களையுடைய பெரும்பற்றப் புலியூரில்
திருச்சிற்றம்பலத்தே யுள்ளவரைச் சென்று நின்று (கரும காண்டத்தினின்றும் ஞான காண்டத்திலே சென்று நின்று)
தொழுவாருடைய இருவினையும் அவர்கண்) நிற்கிலே, இத்தினையின் திரள் நிற்பது. 142
28. கொய்தமை கூறி வரைவுகடாதல்.*
---------------------------------
*பேரின்பப் பொருள் : ''சரியை யாதி மூன்றுங் கடந்தது''.
கொய்தமை கூறி வரைவு கடாதல் என்பது இரக்க முற்று வரைவு கடாய தோழி எதிர்ப்பட்டு நின்று,
** இப்புனத்துத் தினையுள்ளது இன்று தொடர் பறக்கொய்தற்றது; எமக்குமினிப் புனங்காவலில்லை;
யாமுமக்கறிவு சொல்லுகின்றே மல்லேம் நீரேயறிவீ 'ரெனத் தினை கொய்தமை கூறி வரைவு கடாவா
நிற்றல். அதற்குச் செய்யுள் :-
**இங்கு, "அஞ்செழுத் தெங்குரு நாதன் றனதடி யார்க்கொழித்த சஞ்சிதம் போலத் தினைமுற்று மாள"
(திருவாவடுதுறைக்கோவை, 179) எனவும், "புண்ணியர் தம் தீவினையற்றது போலற்ற வாவித் தினைப்புனமே''
(கலைசைக் கோவை, 173) எனவும் வருவனவற்றை ஒப்பு நோக்குக.
பொருப்பர்க் கியாமொன்று மாட்டோம்
புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே
நீடிரும்புனத்தினி யாடேமென்று
வரைவு தோன்ற வுரைசெய்தது.
இதன் பொருள்: எமக்குப் புகலாம் விருப்பர்க்கு-எமக்குப் புகலிடமாதற்குக் காரணமாகிய விருப்பத்தை
யுடையவர்க்கு; யாவர்க்கும் மேலர்க்கு-எல்லார்க்கு மேலாயவர்க்கு: மேல்வரும் ஊர் எரித்த நெருப்பர்க்கு -ஆகாயத்தின்கட்
செல்லுமூர்களை யெரித்த நெருப்பையுடையவர்க்கு : நீடு அம்பலவருக்கு - நிலை பெற்ற வம்பலத்தையுடையவர்க்கு :
அன்பர் குலம் நிலத்துக் கருப்பற்று விட்டென-அன்பராயினாருடைய குலங்கள் உலகத்துப் பிறவிக் காரணத்தைப்
பற்று விட்டகன்றாற் போல; இக் கடிப்புனம் இன்று கொய்தற்றது - இக்காவலையுடைய புனம் இப்பொழுது
தொடர்பறக் கொய்தற்றது அதனால்: பொருப்பர்க்கு யாம் ஒன்றும் புகலமாட்டோம் - பொருப்பர்க்கி-
யாமொன்றுஞ் சொல்லமாட்டோம் எ-று.
யாமொருகுணமு மில்லேமாயினுந் தமது விருப்பினால் எமக்குப் புகலிடமாயினாரென்னுங் கருத்தால்,
புகலெமக்காம் விருப்பர்க்கென்றார், எம்மால் விரும்பப்படுவார்க் கென்பாருமுளர். வீடெனவென்பதூஉம் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மிகவும் பெரிய புனத்தில் வியாபரியேமென்று (விளையாடே மென்று)
வரைந்து கொள்வாயாக என்னும் இடந்தோன்றச் சொன்னது.
செய்யுள்: நாயகனுக்கு இனி ஒரு வார்த்தையும் சொல்லமாட்டோம்: எமக்குப் புகலிட மா (னவர்க்கு)
விரும்பினவர்க்கு, மேல் இயங்குகின்ற முப்புரங்களை எரித்த அக்கினியை உடையவர்க்கு, மிக்க திருவம்பலத்தே
யுள்ளவர்க்கு, அவர்க்கு அன்பு செய்தவருடைய திரள் பூமியில் கருப்பற்று விட்டாற்போலே, இந்தக் காவலை
யுடைத்தாகிய புனமானது கொய்யப்பட்டு விட்டது
யாம் ஒரு குணமிலேமாயினும் தமது விருப்பினாலே புகலிடமாயினான். வீடென்பதூஉம் பாடம். 143
29. பிரிவருமைகூறி வரைவுகடாதல்*
----------------------------------
*'பேரின்பப் பொருள் : பழக்கந் தவிரப் பயிறல் பெரிதென்றது
பிரிவருமை கூறி வரைவு கடாதல் என்பது கொய்தமை கூறி வரைவுகடாயதோழி. 'இப்புனத்துப்
பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக் காலத்துந் தினைத்தாளை விடாதிரா நின்றன: நாம் போனால்
நங் காதலரிவ் விடத்தே வந்து நின்று நம்மைத்தேடுவர் கொல்லோ'வெனச் சிறைப்புறமாகப் பிரிவருமைகூறி
வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
பரிவுசெய் தாண்டம் பலத்துப்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவு செய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்## பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.
மறைப்புறக்** கிளவியிற் சிறைப்புறத் துறைந்தது.
**'மறைப்புறு' என்பது பழையவுரைகாரர் பாடம்
##இங்கு, "பேயோடேனும் பிரிவொன்று இன்னாதென்பர் பிறரெல்லாம்" (சுந்தரர் தேவாரம், மீளாவடிமை, 9),
"பேய் வயினு மரிதாகும் பிரிவு' (திருக்கோவை, 343) என வருவனவற்றை அறிக.
இதன் பொருள்: பரிவு செய்து ஆண்டு - எம்மைப் பரிந்தாண்டு; அம்பலத்துப் பயில்வோன் பரங்குன்றின் வாய் -
அம்பலத்தின்கட் பயில்வானது பரங்குன்றினிடத்து; அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் -அருவி நீராற்
செய்யப்பட்ட தாழ்ந்த புனத்தின்க ணுண்டாகிய ஐவனத்தைக் கொய்யவும்: இவ் வனத்து இருவி செய்தாளின் இருந்து
இக்காட்டின் கண் இருவியாகச் செய்யப்பட்ட தாளிலேயிருந்து; செய்தால் பேயொடும் பிரிவு அரிது - நட்புச் செய்தாற்
பேயோடாயினும் பிரிவரிது; கொள்க என்னும் பெற்றி - இதனையுள்ளத்துக் கொள்க வென்னுந் தன்மையை; இளங்கிளி
இன்று காட்டும்- இளங்கிளிகள் இப்பொழுது காட்டா நின்றன எ-று.
பேயோடாயினும் பிரிவு செய்தாலாற்றுத லரிதென்றுரைப்பினு மமையும். இருவியென்பது கதிர் கொய்த தட்டை.
தாளென்பது கதிர் கொய்யாத முன்னுஞ் சொல்வதோர் பெயர் . இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக்
காலத்து மிதனை விடாதிராநின்றன. இனி நங்காதலர் நம்மாட்டென் செய்வரென்னுங் கருத்தான், மறைப்புறமாயிற்று.
சிறைப்பட வுரைத்ததென்பது பாடமாயின், சிறைக்கண் வந்து நிற்ப வென்றுரைக்க.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மறைத்துப் பிறிதொன்றைச் சொல்லுகிற வார்த்தையாலே
பட்சியின் மிகுதி புனத்திலேயுண்டாகி விடும் என்று சொன்னது.
செய்யுள்: என்னைப் பரிவுற் றடிமை கொண்டு திருவம்பலத்திலே ஆடி அருளுகிறவன் திருப்பரங்குன்றிடத்து
அருவி நீராலே வளர்க்கப்பட்ட நீண்ட புனத்திடத்துத் தினையைக் கொய்யவும், இந்தப் புனத்திடத்தே பேயோடேயாயினும்
பிரிதலாற்றுதல் அரிதென்னும் படியை இருவிசெய் தாளிலிருந்து இப்பொழுது காட்டா நின்றன இளைய கிளிகளானவை.
தினை பயன்படாத காலத்தும் கிளிகள் விடாதே நின்றன என்பது கருத்து.
30 மயிலொடு கூறி வரைவுகடாதல்*
--------------------------------
*பேரின்பப் பொருள்: அருள்கர ணத்தி லார்ந்தினி துரைத்தது.
மயிலொடு கூறி வரைவு கடாதல் என்பது பிரிவருமைகூறி வரைவு கடாயதோழி, 'பிரிவாற்றாமையோடு
தலைமகளையுங் கொண்டு புனங்காவலேறிப் போகா நின்றாள்; கணியார் நினைவு இன்று முடிந்தது; யாங்கள்
போகா நின்றோம்: இப்புனத் தொருவர் வந்தால் இங்கு நின்றும் போனவர்கள் துணியாதன துணிந்து
போனாரென்று அவர்க்குச் சொல்லுமி' னென மயிலொடுகூறி வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கணியார் கருத்தின்று முற்றிற்
றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.
நீங்கரும் புனம் விடு நீள்பெருந் துயரம்
பாங்கி பகர்ந்து** பருவர லுற்றது.
**'பாங்கி நினைந்து, என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: கணியார் கருத்து இன்று முற்றிற்று, கணியாரது நினைவு இன்று முடிந்தது ;
யாம் சென்றும் யாங்கள் போகா நின்றேம்; கார்ப் புனமே - கரியபுனமே; மணி ஆர் பொழில்காள் - மணிகளார்ந்த
பொழில்காள்; மறத்திர் கண்டீர்-வேங்கையொடு பயின்றீராகலின் நீரெம்மை மறப்பீர்; மன்னும் அம்பலத்தோன்
அணி ஆர் கயிலை மயில்காள் - நிலை பெறுமம்பலத்தையுடையவனது அழகார்ந்த கைலையினின்றும் வந்த
மயில்காள்; அயில் வேல் ஒருவர் வந்தால்- அயில் வேல் துணையாகத் தனிவருமவர் ஈண்டு வந்தால் ;
துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமின் - அன்புடையார் துணியாதனவற்றை அவர்
துணிந்தாரென்னு நீர்மைகளை யவர்க்குச் சொல்லுமின் எ.று.
நீர்மை ஈண்டு வியப்பு. நீரிவ்வாறு சொன்னால் அவராற்றுவா ரென்பது கருத்து.
பேரருளினோன் கையிலையினுள்ளீராகலின் நீர் கண்ணோட்ட முடையீரென்பது கருத்து. கார்ப்புனமென்பதற்குக்
கார்காலத்துப் பொலியும் புனமெனினும் அமையும். துணியா தனவாவன: பிரிதலும் வரையுந்துணையு
மாற்றியிருத்தலும், புனமே பொழில்காள் மயில்காள் என்று கூட்டி, நீரெம்மை மறப்பீராயினும் மறவாது
சொல்லுமினென் றுரைப்பாருமுளர். இவையாறற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: விட்டு நீங்குவதற்கரிய புனத்தை விட்டு நீங்குகிற மிகவும்
பெரிய கிலேசத்தைத் தோழியானவள் நினைந்து துயரமுற்றது.
செய்யுள் : இந்த வேங்கையாருடைய நினைவுகளெல்லாம் முடிந்தன; நாங்கள் போகாநின்றோம்,
சோலையாற் பச்சென்ற கரிய புனமே! முத்து மணிகளாற் சிறந்த பொழில்காள்! உங்களுக்குச் சொன்னாலும்
இந்த வேங்கையாருடைய பெற்றியினால் மறந்து விடுவீர்கள். நிலைபெற்ற திருவம்பல நாதனுடைய
அழகார்ந்த ஸ்ரீ கயிலாயத்தினின்றும் வந்த மயில்காள் கூரிய வேலையுடையாரொருவர் வந்தால்
அன்புடையார் அறுதியிடாத பொருளாகிய பிரிவையும், பிரிந்தாலும் மாற்றுதலை அறுதியிட்டுப்
போனார்களென்னும் தன்மையையும் சொல்லுவீர்களாகவேண்டும். கயிலையிடத்து மயில்காளென்றது,
கண்ணோட்ட முடையீரென்ற கருத்து. 145
31. வறும்புனங்கண்டு வருந்தல்*
--------------------------------
*'பேரின்பப் பொருள் : ''அருளன்றி யின்பம் ஆரா தென்றது".
வறும்புனங்கண்டு வருந்தல் என்பது தலைமகளும் தோழியும் புனங்காவலேறிப் போகா நிற்பத்
தலைமகன் புனத்திடைச் சென்று நின்று, 'இப்புனம் யாமுன் பயின்றதன்றோ ? இஃதின்றிருக் கின்றவா
றென்னோ வென்று, அதன் பொலிவழிவு கூறித் தலைமகளைத் தேடி வருந்தா நிற்றல், அதற்குச் செய்யுள்:
பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.
மென்புனம்விடுத்து மெல்லியல் செல்ல
மின்பொலிவேலோன் மெலிவுற்றது
இதன் பொருள்: பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் ** - அதுவோவிதுவோ வழியென்று
மயங்கிப் பொதுவாக நின்ற நிலைமையை நீக்கி என்னை யாண்டவன்; புலியூர் அரன் - புலியூரிலரன்;
பொருப்பே எனில் இது இன்று இருக்கின்றவாறு என் அவனது பொருப்பாய் யான் முன் பயின்ற விடமேயாயின்
இஃதின் றிருக்கின்றவாறென்; எம் இரும்பொழிலே- எம்முடைய பெரிய பொழிலே; நுமக்கு எய்தியது -
எது- நுமக்குத் தான் இன்று வந்ததியாது; என் உற்றனிர் நீரென்னுற்றீர்; இவ்வான் புனம்- இதுவேயுமன்றி
இப்பெரிய புனம்; அறை ஈண்டு அருவி மதுவினில் கைப்புவைத்தால் ஒத்தவா-ஒலியா நின்ற பெருகிய
வருவியாய் விழும் மதுவின் கண் அதனின் சுவையை மாற்றிக் கைப்பாகிய வைத்தாலொத்தவாறென்! எ - று
**"பொதுவற வடிமை செய்திடும்'' (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முத்தப்பருவம், 10): ''உள்ளப்படாத திருவுருவை
உள்ளுதலும்' கள்ளப்படாத களிவந்த வான் கருணை, வெள்ளப் பிரானெம் பிரானென்னை வேறேயாட், கொள்ளப்
பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ" (திருவாசகம்) என்பன காண்க.
மற்றென்பது அசைநிலை. எல்லாரையு மாளும் பொதுவாகிய முறைமையினின்று நீக்கி என்னையுள
நெகிழ்விப்ப தோருபாயத் தானாண்டவனென் றுரைப்பினுமமையும், இன்பஞ் செய்வதுந் துன்பஞ் செய்வது
மொன்றாக மாட்டாதென்னுங் கருத்தாற் புலியூரரன் பொருப்பேயிதுவெனிலென்றான். அறையீண்டருவிகாள்
நீரென்னுற்றீரென்றும், அறையீண்டருவிப் புனமென்றும் உரைப்பாருமுளர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மெத்தென்ற புனத்தை விட்டு மெல்லிய இயல்பினையுடையாள்
போக, மின்னை நிகர்த்த வேயினை யுடையவன் வாடியது.
செய்யுள்: ஏதோ சமயமென்று பொதுவே நின்று தடுமாறுகின்ற என்னைப் பொதுமையினின்றும் நீக்கி
அடிமை கொண்டவன். பெரும்பற்றப் புலியூரிலேயுள்ள தலைவன், அவனுடைய திருமலை இதுவாமாகில்
(ஏந்தா நீ இருக்கின்ற படியென?) எம்முடைய பெரிய பொழிலே! உங்களுக்கு வந்துற்ற வருத்தம் எது?
அவ்வருத்தத்தாலுற்ற கிலேசம் எது? ஆரவாரம் மிக்க அருவி. மதுவிலே அதன் இனிய சுவையை மாற்றிக்
கைப்பாகிய சுவையை வைத்திருந்தா லொத்திருந்தது. மற்றிந்தப் பெரியபுனம். 146
32. பதிநோக்கி வருந்தல்*
----------------------
*'பேரின்பப் பொருள் : "இன்பப் பெருமைகண் யெளிமையன் றென்றது."
பதிநோக்கிவருந்தல் என்பது வறும்புனத்திடை வருந்தா நின்ற தலைமகன்,
'இவ்வாறணித் தாயினும் நம்மாற் செய்யலாவ தொன்றில்லை' யென்று அவளிருந்த பதியை நோக்கித்
தன்னெஞ்சோடுசாவி வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
ஆனந்த மார்கட லாடுசிற்
றம்பல மன்ன பொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே.
மதிநுத லரிவை பதிபுக லரிதென
மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.
இதன் பொருள்: ஆனந்தமாக் கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன-ஆனந்தமாகிய நீரானிறைந்ததோர் பெரியகடல்
நின்றாடுஞ் சிற்றம்பலத்தையொக்கும்; பொன்னின் தேன் உந்து மாமலைச் சீறூர் இது- பொன்னினது
தேன்றத்திப் பெரிய மலைக் கணுண்டாகிய சீறூரிது; செய்யலாவது இல்லை - இவ்வாறணித்தாயினு
நம்மாற் செய்யலாவ தொன்றில்லை, அதனால்; வான் உந்தும் மாமதி வேண்டி அழும் மழப் போலும் **-
வானின்கட் செல்லும் பெரிய மதியைக் கொள்ள வேண்டி அதனருமையறியா தழங்குழவி போல
எய்துதற்கரியாளை விரும்பி, நல்நெஞ்சமே -நல்ல நெஞ்சமே; நீயுந் தளர்ந்தனை- நீயும் தளர்ந்தாய்;
நானும் தளர்ந்தேன் - நீ யவ்வரும் பொருள் விரும்புதலான் யானுந்தளர்ந்தேன் எ - று
** திருக்கோவை. 198.
தேனையுமிழு மாமலை யெனினு மமையும். மழவை நெஞ்சத்திற்கேயன்றித் தலைமகற்குவமையாக
வுரைப்பினுமமையும், நெஞ்சத்தைத் தன்னோடுபடுத்தற்கு நன்னெஞ்சமெனப் புனைந்து கூறினான். இது தலைமகளை
இற்செறிவிக்கின்ற காலத்து ஆற்றானாகிய தலைமகன்றோழி கேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
மன்னுமோவும் அசை நிலை. பதி -தலைமகன். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு : அழுகை.
பயன்: ஆற்றாமை நீங்குதல்.
பகற்குறி முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பிறைபோன்ற நெற்றியினை யுடையவள் பதியிற் சென்று
புகுதலரிதென்று புத்தி மிகவும் கிலேசித்து நாயகன் வாடியது.
செய்யுள்: மகிழ்ச்சியாகிய பெரு நீராலே நிறைந்த பெரிய கடலாயுள்ளவன், அவன் ஆடியருளுகிற
திருச்சிற்றம்பலத்தையொத்த பொன்னை யொப்பாளுடைய தேன் தத்திப்பாய்கிற பெரிய மலையிற்
சீறூரிது காண் செயலாவதொரு பொருளுமில்லை காண்; ஆகாயத்திலே திரிகிற மதியைப் பிடித்துத்தர
வேண்டி அழுகிற பிள்ளைகளைப் போல. நல்ல நெஞ்சமே ! அரிய பொருள்களை விரும்புதலாலே நீயும்
தளர்ந்தாய்; அது முடித்துத்தர மாட்டாமையாலே நானும் தளர்ந்தேன்.
மன்னும் ஓவும் அசைநிலை. 147
14. இரவுக்குறி*
-------------
*பேரின்பக் கிளவி. "இரவுக் குறித்துறை முப்பத்து மூன்று மருளே சிவத்தோ டாக்கியவ் வருமை,
தெரியவற்புறுத்திச் சிவனது கருணையின், இச்சை பலவு மெடுத்தெடுத் தருளல்.
இரவுக்குறி வருமாறு: பகற்குறி புணர்ந்து விலக்கப்பட்ட தலைமகன் தெருண்டு வரைதறலை;
தெருளானாயிற்பின்னையுந் தோழியைத் தலைப்பட்டு இரவுக்குறி வேண்டிச் சென்று எய்து தன்
முறைமை யென்ப. என்னை, “களவினுட்ட விர்ச்சி கிழவோற் இல்லை'' (இறையனாரகப்பொருள் 33)
என்றாராகலின்.
இரவுக்குறி வேண்ட லாற்றருமை கூற
னின்று நெஞ் சடைத னிலைகண்டு நேர்த
லுட்கோள் வினாத லுட்கொண்டு வினாதல்
குறியிடங் கூறல் குறியேற் பித்த
லிரவர வுரைத்த லேதங் கூறல்
குறைநேர்த லோடு குறைநயப் புரைத்தன்
மயின்மே லிசைத்து வரவுணர்ந் துரைத்த
றாய்துயி லறித றலைவிதுயி லெடுத்த
லிடத்துய்த்து நீங்க றளர்வகன் றுரைத்தன்
மருங்கணைத லோடு முகங்கண்டு மகிழ்தல்
பள்ளியிடத் துய்த்தல் பள்ளியிடத் துய்த்து
வரைவு கடாவி வரவு விலக்கல்
வரைவு டம்படா தாற்றா துரைத்த
லதரிடைச் செலவிற் கிரக்கங் கூற
லிருளற நிலவு வெளிப்பட வருந்தல்
வேற்றுக் குறிகூறல் கடலிடை வைத்துத்
துயரறி வித்த றோழியு மின்றித்
தானே கிடந்து தனிமையுற் றாற்றுங்
காம மிக்க கழிபடர் கிளவி
காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
யாறுபார்த் துற்ற வச்சக் கிளவி
தன்னுட் கையா றெய்திடு கிளவி
நிலைகண் டுரைத்த னெடுங்கடற் சேர்த்த
லலரறி வித்தலோ டாறைம் மூன்று
மிரவுக் குறியிவை யென்றிசி னோரே.
இதன் பொருள் : இரவுக்குறி வேண்டல், வழியருமை கூறி மறுத்தல், நின்று நெஞ்சுடைதல்,
இரவுக்குறி நேர்தல், உட்கோள் வினாதல், உட்கொண்டு வினாதல், குறியிடங்கூறல், இரவுக்குறி யேற்பித்தல்,
இரவரவுரைத்தல், ஏதங்கூறி மறுத்தல், குறை நேர்தல், குறை நேர்ந்தமைகூறல், வரவுணர்ந்துரைத்தல்,
தாய் துயிலறிதல், துயிலெடுத்துச் சேறல், இடத்துய்த்து நீங்கல், தளர்வகன்றுரைத்தல், மருங்கணைதல்,
முகங்கண்டு மகிழ்தல், பள்ளியிடத்துய்த்தல், வரவு விலக்கல், ஆற்றாதுரைத்தல், இரக்கங்கூறி வரைவுகடாதல்,
நிலவு வெளிப்பட வருந்தல், அல்லகுறி யறிவித்தல், கடலிடை வைத்துத் துயரறிவித்தல், காமமிக்க கழிபடர் கிளவி,
காப்புச் சிறைமிக்க கையறு கிளவி, ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி, தன்னுட்கையா றெய்திடுகிளவி,
நிலைகண்டுரைத்தல், இரவுறுதுயரங் கடலோடு சேர்த்தல், அலரறி வுறுத்தல் எனவிவை முப்பத்து மூன்று
மிரவுக்குறியாம் எ.று அவற்றுள் :-
1. இரவுக்குறி வேண்டல்*
---------------------
*பேரின்பப் பொருள் ; 'அருளை யிரந்துயி ரன்பாய்க் கலந்தது'.
இரவுக்குறி வேண்டல் என்பது பதிநோக்கி வருந்தா நின்ற தலைமகன், இற்றை யிரவிற் கியானுங்கள்
சீறூர்க்கு விருந்து; என்னையேற்றுக் கொள்வாயாக'வெனத் தோழியை யிரவுக்குறி வேண்டா நிற்றல்.
அதற்குச் செய்யுள் : -
மருந்துநம் மல்லற் பிறவிப்
பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
ரதனுக்கு வெள்வளையே
நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென் முலைப் பாங்கிக் குரைத்தது
இதன் பொருள் : வெள்வளை - வெள்வளையையுடையாய்; குன்றினின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ
மேகம் பொருந்தின.குன்றின்கணின் றொலிக்கு மருவிகள் பாய்ந்தழகு விளங்கும் வண்ணம் மேகம் வந்து
பொருந்தின, அதனால் புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின் உங்கள் சீறூரதனுக்கு யான் விருந்தினன் -
அம்மேகத்தின்கட் புதைந்திருள் செறியுஞ் செய்காட்டையுடைய நுமது சீறூ ரதற்கியான் விருந்தினன்;
என்னை யேற்றுக் கொள்வாயாக எ-று நம் அல்லற் பிறவிப் பிணிக்கு மருந்து - நம்முடைய அல்லலைச்
செய்யும் பிறவியாகிய பிணிக்கு அருந்து மருந்தாயவைத்தும்; அம்பலத்து அமிர்தாய் இருந்தனர் குன்றின் -
அம்பலத்தின்கட் சுவையான மிர்தமுமாயிருந்தவரது குன்றினெனக் கூட்டுக.
மேகம் வந்து பொருந்தின வென்றதனால், தன்னூர்க்குப் போதலருமை கூறுவான் போன்று
இரவுக்குறி மாட்சிமைப் படுமென்றானாம். இருடூங்கும் புனையிறும்பு என்றதனால், யாவருங் காணாராகலி
னாண்டுவந்து நிற்கின்றே னென்றானாம். மாலை விருந்தினரை மாற்றுதலறனன் றென்பது தோன்ற
விருந்தின னென்றான் குன்றினின்றேங்கு மருவியேர் திகழச் சென்று பொருந்தின மேகமென்க. அருவியேர்பெற
மேகம் பொருந்தினவூர் நின்னூராகலான் என்னினைப்பற்று யானுமேர்பெற நின்னை வந்து சேர்ந்தேனென்பது
போதரும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இரவுக்குறி நேர்வித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: செறிந்த இருளினது குறியை நாயகன் நினைத்துப், பொழுதுக்குப்
பொழுது விம்மா நின்ற முலையினை யுடைய பாங்கிக்குச் சொன்னது.
செய்யுள்: நம்முடைய தனுகரணமிடமாகப் பொசிக்கின்ற பிறக்கின்ற அல்லற் பிறவியாகிய வியாதிக்குத்
திருவம்பலத்தே மருந்தையொத்து எழுந்தருளி இருந்தவர். அவருடைய திருமலையில் இடைவிடாது ஆரவாரிக்கிற
அருவியானது சென்று எதிர் திகழ, அழகு விளங்கும்படி பொருந்தின (மேகங்களானவை பொருந்துதலாலே)
மேகங்களாலே மூடப்பட்டு இருள் தூங்கும் இருளே செறிகின்ற கை செய்து வளர்க்கப்பட்ட காடுடைத்தாகிய
உங்கள் சிற்றூர் தனக்கு விருந்தாகினேன் யான் ; காண்; வெள்ளிய வளைகளை யுடையாய் !
என்று பொருளாய், மழைக்காலத்து மாலையம்பொழுது வந்த விருந்தினரை யாவர் சிலரும் (எவரும்)
மறார்களாதலால், நீங்களும் எம்மை எதிரேற்றுக் கொள்ள வேண்டுமென்பது படும். கை செய்து வளர்க்கப்பட்ட
காடு என்றதால் உங்களுக்கு எதிர்ப்பட்டாலும் ஆம் (?) என்றது. 148
2. வழியருமைகூறி மறுத்தல்*
--------------------------
*பேரின்பப் பொருள்: அருளுயிர்ப்போத மகறல் கண்டின் புறல்,
வழியருமைகூறி மறுத்தல் என்பது தலைமக னிரவுக்குறி வேண்டிநிற்ப, 'யாங்கள் வாழும்பதி
ஏற்றிழிவுடைத்தாகலின் அவ்விடத்து நினக்குச் சிந்தைக்கு மேறற்கரிது' எனத்தோழி வழியருமைகூறி
மறுத்துக்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே
இரவர லேந்தல் கருதி யுரைப்பப்
பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.
இதன் பொருள்: ஐய-ஐயனே; விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சின்னெறிமேல் விசும்பிற் - கிட்டதோ
ரேணி நெறி போலுஞ் சிறுநெறி மேல்: மழை தூங்கு அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும்-மழை யிடையறாது
நிற்றலான் இடையிடையுண்டாகிய அசும்பின் கட்சென்று பொருந்திய யேறுமிடத்து இட்டிமையால் அளை நுழைந்தாற்
போன்றிருக்கும்: எம் வாழ்பதி இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது- அதுவேயுமன்றி, எம்வாழ்பதி வழுக்கினான்
மெய்யே சிந்தைக்கு மேறுதற்கரிது; அதனாலாண்டு வரத்தகாது எ - று . எழில் அம்பலத்துப் பசும்பனிக்கோடு
மிலைந்தான் மலயத்து எம் வாழ் பதி-எழிலையுடைய வம்பலத்தின்க ணுளனாகிய குளிர்ந்த பணியையுடைத்தாகிய
பிறையைச் சூடியவனது மலயத்தின் கணுண்டாகிய வெம் வாழ்பதியெனக் கூட்டுக.
இசும்பு ஏற்றிழிவு முதலாயின குற்றமென்பாருமுளர். அசும்பு -சிறு திவலை, இசும்பினிற் சிந்தைக்கு
மேறற்கரி தென்றவதனான், 'எமது வாழ்பதி யிவ்வொழுக்கத்தைச் சிறிதறியு மாயிற் சிந்தையாலு நினைத்தற்கரிய
துயரத்தைத் தருமாதலால் தாஞ்செத்துல காள்வாரில்லை; அது போல விவ்வொழுக்க மொழுகற்பாலீரல்லீ' ரென்று
மறுத்துக் கூறியவாறாயிற்று. பசுமை, செவ்வியுமாம், அதனைக் கோட்டின் மேலேற்றுக. கோட்டை யுடைமையாற்
கோடெனப்பட்டது. மெய்ப்பாடு : இளிவரல். பயன்: இரவுக்குறிமறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இரவு வருதலை நாயகன் குறித்துச் சொல்ல அத்தன்மையாலே
துன்பமுற்ற பாங்கி வழியின தருமையைச் சொன்னது.
செய்யுள் : ஆகாயத்துக் கேறுவதாக விட்ட ஏணி வழியையொத்த சிறிய வழியமாய், மெத்தென்ற
மழை விடாதே பெய்கையாலே. நீரறாத (திவலைகளைச்) சேர்ந்து முழையிலே நுழைந்தாலொக்கும்;
சுவாமி! சுவாமி உண்மையாக வழுக்குதலாலே மனத்தாலும் ஏறற்கரிது; அழகிய திருவம்பலத்தேயுளன்,
செவ்விக்கதிர்களை உடைத்தாகிய திருவிளம்பிறையைச் சூடியவன், அவனுடைய பொதியின் மலையில்
நாங்கள் வாழுமிடம் இப்படி இருக்கும். 149
3.நின்று நெஞ்சுடைதல் *
----------------------
*பேரின்பப் பொருள்: "இன்பங் கிடைக்குமோவென்று நெஞ்சுடைந்தது''
நின்று நெஞ்சுடைதல் என்பது வழியருமை கூறக்கட்ட தலைமகன், 'எய்துதற்கரியாளை விரும்பி நீ
மெலியா நின்ற விதற்கு யானாற்றேன்' எனக் கூறித் தனதிறந்துபாடு தோன்ற நின்று தன்னெஞ்சுடைந்து
வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
மாற்றே னெனவந்த காலனை
யோல மிட அடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள் குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே
பாங்கிவிலங்கப் பருவரைநாடன்
நீங்கிவிலங்காது நெஞ்சுடைந்தது.
இதன் பொருள்: மாற்றேன் என வந்த காலனை - ஒருவராலு மாற்றப்படே னென்று வழிபடுவோன துயிரை
வெளவ வந்த காலனை; ஓலமிட அடர்த்த கோற்றேன் -அவனோலமிடும் வண்ண மடர்த்தகோற்றேன்; குளிர் தில்லைக்
கூத்தன்-குளிர்ந்த தில்லைக்கணுளனாகிய கூத்தன்; கொடுங்குன்றின் நீள் குடுமி மேல் தேன்விரும்பும் முடவனைப்போல -
அவனுடைய கொடுங் குன்றினது நீண்ட குடுமியின் மேலுண்டாகிய தேனை விரும்பு முடவனைப் போல; மெலியும் நெஞ்சே-
எய்துதற் கருமையை நினையாது மெலிகின்ற நெஞ்சமே; அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கு ஆற்றேன்
அரியளாகிய வரிவையிடத்து நீயுண் டாக்கிய அன்பால் யானாற்றேன் எ-று
மாற்றென்பது செயப்படு பொருட்கண் வந்தது. மாறே னென்ப து விகாரவகையான் மாற்றேனென
நின்றதெனினும் மையும் சுவை மிகுதியுடைமையிற் கோற்றேனென்றார். நீ வன் கண்மையை யாதலின்
இவ்வாறு மெலிந்து முயிர் வாழ்தி, யானத் தன்மையே னல்லேன் இறந்துபடுவே னென்னுங் கருத்தான் மெலியு
நெஞ்சே யானாற்றேனென்றான். நீங்கி விலங்காது-நீங்கி யுள்ளஞ் செல்கின்ற செலவினின்றும் விலங்காது.
மெய்ப்பாடு: இளிவரல். பயன்: இரவுக்குறி நயப்பித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பாங்கியானவள் இரவுக் குறிக்கு விலக்குதல் சொல்லப் பெரிய
மலைமேலுண்டாய நாட்டினையுடையவன் இரவுக் குறியினின்றும் நீங்காதே தன் நெஞ்சுடனே நொந்து சொல்லியது.
செய்யுள்: ஒருவராலும் மாற்றப்படேன் என்று அகங்கரித்து வந்த கூற்றுவனைக் கூப்பிடும்படி நெருக்கின,
அன்பருக்குக் கொம்பிடை இருந்த தேனைப் போன்றவன் , மதுரமாகிய பெரும் பற்றப் புலியூரில் திருநடனமாடி
யருளுகிறவன். அவனுடைய திருக்கொடுங்குன்றின் நீண்ட உச்சியிலே மேல்வைத்த தேனை உண்கைக்கு இச்சித்த
முடவனைப் போலே வாடுகின்ற நெஞ்சமே அரியளா யிருக்கிற அரிவைக்கு நீ வைத்த அன்புதான் ஆற்ற வொண்ணாது
காண்-என்று நெஞ்சுடன் அழுங்கியது . 150
4. இரவுக்குறி நேர்தல் *
---------------------
*பேரின்பப் பொருள் ; "உயிர்ப்பரி வருள்கண் டுவந்தியம் பியது"
இரவுக்குறி நேர்தல் என்பது தலைமக னெஞ்சுடைந்து வருந்தா நிற்பக் கண்டு, இவனிறந்துபடவுங் கூடுமென
வுட் கொண்டு நீ 'யாளிக ணிரைத்து நின் றியானைகளைத் தேடு மிராவழியின்கண் வந்து மீள்வேனென் னாநின்றாய்:
இதற்குத் தீவினையேன் சொல்லுவதெவனோ' வென்று மறுத்த வாய் பாட்டாற் றோழி யிரவுக்குறி நேர நிற்றல்,
அதற்குச் செய்யுள் -
கூளி நிரைக்கநின் றம்பலத்
தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி
யோயிவள் தோள் நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளி யுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே
தடவரைநாடன் தளர்வு தீர
மடநடைப்பாங்கி வகுத்துரைத்தது
இதன் பொருள்: கூளி நிரைக்க நின்று - கூத்தின்கட் சுவையாற் பேய்களும் போகாது நிரைத்து நிற்ப நின்று;
அம்பலத்து ஆடிகுரை கழற்கீழ் தூளி நிரைத்த சுடர் முடியோய் - அம்பலத்தின் கணாடுவானது ஒலிக்குங்
கழலையுடைய திருவடிக் கணுண்டாகிய தூளி மொய்த்த சுடர் முடியையுடையோய்:
இவள் தோள் நசையால்-இவ டோண்மேலுண்டாகிய விருப்பினால்: ஆளி நிரைத்து அடல்ஆனைகள்
தேரும் இரவில்வந்து மீளி உரைத்தி.ஆளிகள் ஊடுபோக்கற நிரைத்து வலியையுடைய யானைகளைத் தேடுமிரவின் கண்
வந்து மீளுதலைச் சொல்லா நின்றாய் : மெல்லியற்கு வினையேன் உரைப்பது என் - இனி மெல்லியற்குத் தீவினையேன்
சொல்லுவதென்? உடன்படுவா யென்பேனோ மறுப்பாயென்பேனோ எ-று.
இரவுக்குறி யுடம்பட்டாளாகலின், தூளி நிரைத்த சுடர் முடியோயென்றதனால், அரையிருளின் வருதலான்
வரும் ஏதத்தை அத்தூளி காக்குமென்று கூறினாளாம். குரைகழல்- அன்மொழித் தொகை. மருடல் வெகுடலென்பன
மருளி வெகுளி யெனெ நின்றாற்போல மீடலேன்பது மீளியென நின்றது. வந்து மீளியென்பதற்கு வந்து மீடலையுடைய
விரவுக் குறியென் றுரைப்பாரு முளர், உடம்படவு மறுக்கவு மாட்டாதிடை நின்று வருந்துதலின் வினையே னென்றாள்.
ஆளி நிரைக்குமாற்றின்கண் நீ வருதற் குடம்படுதறகாதாயினுந் தோணசையாற் கூறுகின்ற விதனை மறுப்பின்
நீயாற்றா யென்பதனா லுடம்படா நின்றே னென்பது படக் கூறினமையால் வகுத்துரைத்த லாயிற்று.
மெய்ப்பாடு; அச்சம். பயன்: இரவுக்குறி நேர்தல், இறந்த கால வுட்கோள் : குறிப்பு நுட்பம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரிய மலை மேலுண்டாகிய நாட்டினை யுடையான் தளர்ச்சி
நீங்க மடப்பத்தையுடைய நடையாற் சிறந்த பாங்கி கூறுபாடு சொன்னது.
செய்யுள்: கண்ணுக்கு இனிமையாலே பேய்களும் விட்டு நீங்காதபடி திருவம்பலத்தே நின்றாடி
யருளுகிறவன்,அவனுடைய வீரக்கழல் ஆரவாரிக்கிற சீபாதங்களில் தூளியாலே நிரைக்கப்பட்ட ஒளியையுடைய
(முடியை யுடைய)வனே! இவள் தோள் இடத்தே வைத்த விருப்பத்தாலே சிங்கங்களானவை நிரைத்து
வெற்றியுடைய யானைகளைத் தேடுகிற இரவிடத்தே வந்து மீள்வதாகச் சொல்லா நின்றாய். மெல்லிய
இயல்பினை யுடையாளுக்குத் தீவினை செய்த நான் எதைச் சொல்லுவேன்? 151
5. உட்கோள் வினாதல்.*
--------------------
* பேரின்பப் பொருள் : ''அருளுயிர் கண்ட வனுபவங் கேட்டது'',
* ' உட்கொளவினாதல்' என்றும் பாடம்.
உட்கோள் வினாதல் என்பது இரவுக்குறி நேர்ந்ததோழி தங்கணிலத்து மக்கள் கோலத்தனாய்
வருதற்கு அவனுட் கொள்வது காரணமாக, 'நின்னூரிடத்தார் எம்மலர் சூடி எச்சாந்தணிந்து எம்மரநிழலின் கீழ்
விளையாடுப' வெனத் தலைமகனை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள் : -
வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன் தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே .
நெறிவிலக் குற்றவ னுறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள் : சிலம்பா-சிலம்பா; நின்ஊர் நலம்பாவி ஒளிர்வனவிரை என்ன நின்னூரின்- நலம்பரந்து
விளங்குவனவாகிய ஆண்டையார் பூசும் விரை யெத்தன்மைய ; மென்னிழ லென்ன - அவர் விளையாடு மெல்லிய
நிழலெத் தன்மைய; வெறி உறு தாது இவர் போது என்ன-அவர் சூடு நறு நாற்றம் பொருந்திய தாது பரந்தபோதுகளெத்
தன்மைய; உரை - உரைப்பாயாக எ-று. அன்று ஒரு கால் வரை இருகால்வளைய நிமிர்த்து-அன்றொருகால் வரையை
யிரண்டு காலும் வளையும் வண்ண மார்பையுந் தோளையு நிமிர்த்து; வட்கார் நிரை அழல் எழ அன்று எய்து
நின்றோன் தில்லை அன்னநின்ஊர்- பகைவரது நிரையை யழலெழும்வகையன்றெய்து நின்றவனது
தில்லையையொக்கு நின்னூரெனக் கூட்டுக.
மெல்லிய நிலத்தை யுடைய நிழலை மென்னிழலென்றாள். நலம் பாவி யொளிர்வன என்பதனை
யெல்லாவற்றோடுங் கூட்டுக. அன்று நிமிர்த்தெனவும், அன்றெய்து நின்றோனெனவுமியையும். இது குறிப்பெச்சம் .
வன்றழலென்பதூஉம் பாடம். இவ்வாறு வினவத் தலைமக னொன்றனை யுட்கொள்ளுமென்று கருதிக்
கூறினமையால், ஆங்கொரு சூழலென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகற்குக் குறியிட
முணர்த்துந்தோழி யவனாற்றன்னை வினவுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இந்த வழியிலே வர வேண்டாவென்று விலக்கப்பட்டவன் உற்ற
கிலேசத்தைப் பார்த்து அவ்விடத்தே ஒரு சூழ்ச்சியைத் தோழி சொன்னது.
செய்யுள்: மகாமேருவை முன்னொரு காலத்து இரண்டு காலும் வளையும்படி பண்ண, மார்பையும்
தோளையும் நிமிர்த்துச் சத்துருக்களது நிரையை அன்று அழல் எழ எய்து நின்றோன். அவனுடைய பெரும்பற்றப்
புலியூரை ஒத்தவனுடைய ஊரில் நறுநாற்றங்கள் எத்தன்மையன? மென்னிழல் எத்தன்மையன? நறுநாற்றம் மிக்க
அல்லி பரந்த பூக்கள் எத்தன்மையன? சொல்லுவாயாக, நாயகனே! நன்மை பரந்து விளங்குவன எத்தன்மையன?
சொல்லுவாயாக. 152
6. உட்கொண்டு வினாதல்*
------------------------
*பேரின்பப் பொருள்: அறிவித்தா லறிவ னென் றனுபவங்கேட்டது.
உட்கொண்டு வினாதல் என்பது கேட்ட வினாவை யுட்கொண்டு அந்நிலத்து மக்கள் கோலத்தனாய்ச்
செல்வானாக 'நின்னூரிடத்து இராப்பொழுது நுமர் எம்மலரைச் சூடி எச்சாந்தை யணிந்து என்னமர நிழலின் கீழ்
விளையாடுப' வெனத் தலைமகன் றோழியை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள் :--
செம்மல ராயிரந் தூய்க்கரு
மால் திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.
தன்னை வினவத் தானவன் குறிப்பறிந்
தென்னை நின்னாட் டியலணி யென்றது .**
** 'டியவணி யென்றது' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: அம் மலர் வாள் கண் நல்லாய் - அழகிய மலர்போலு மொளியையுடையவாகிய
கண்ணையுடைய நல்லாய்; செம்மலர் ஆயிரம் தூய் கருமால் திருக்கண் அணியும்- செய்ய தாமரைமலர்க
ளாயிரத்தைத் தூவி முன்வழி பட்டு ஒரு ஞான்று அவற்றுளொன்று குறைதலாற் கரிய மால்
அவற்றோடொக்குந்தனது திருக்கண்ணை யிடந்தணியும் மொய்ம் மலர் ஈர்ங் கழல் அம்பலத்தோன்
மன்னு தென்மலயத்து பெரிய மலர்போலும் நெய்த்த நிறத்தையுடைய வாகிய திருவடியையுடைய
வம்பலத்தான்றங்குந் தென்மலயத்திடத்து; எல்லிவாய் நுமர் ஆடுவது - இராப்பொழுதின்கண் நுமர் விளைவது:
எம்மலர் சூடி நின்று-எம்மலைரைச் சூடி நின்று எச்சாந்து அணிந்து- எச்சாந்தை யணிந்து; என்ன நல் நிழல்வாய்-
என்ன நன்னிழற் கீழ்? கூறுவாயாக எ-று.
வாள்: உவமையெனினுமமையும், நுமரென்றது அவரோடொரு நிலத்தாராகிய மக்களை,
திருமாலென்பதூஉம் பாடம். நிழல் அணியன் றெனினும், பன்மைபற்றி யணி யென்றார்
மெய்ப்பாடு அது . பயன்: குறியிடமுணர்த்துதல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பாங்கியானவள் தன்னை வினவத் தான் அவளுடைய நினைவை
அறிந்து, 'உங்களுடைய நாட்டியல்பு இருக்கும்படி என்ன' என்று கேட்டது.
செய்யுள்: ஆயிரம் செந்தாமரைப் பூவையிட்டுப் புருடோத்தமன் அதிலொரு புட்பம் குறைதலாலே
அழகிய கண்ணை இடந்து அப்பிப் பூசிக்கிற பெரிய மலரை யொத்துக்குளிர்ந்த சீபாதங்களையுடைய
திருவம்பலநாதன் நிலைபெற்ற பொதியின் மலையிடத்து அழகிய மலரையொத்து ஒளிசிறந்த
கண்களையுடைய நல்லவளே! இரவிடத்தே எங்கள் உறவின் முறையார் விளையாடுவது எந்த மலரைச்
சூடி நின்று? எந்தச் சந்தனத்தை யணிந்து? எந்த நல்ல நிழலிடத்தே தான்? சொல்லுவாயாக வேண்டும். 153.
7. குறியிடங்கூறல்*
-----------------
*பேரின்பப் பொருள்: உயிர்க்கின் பமாமிட மருளெடுத்துரைத்தது
குறியிடங்கூறல் என்பது உட்கொண்டு வினாவிய தலைமகனுக்கு, 'யாங்கள் சந்தனச் சாந்தணிந்து,
சுனைக்காவிகள் சூடித், தோகைக டுயில் செய்யும் வேங்கைப் பொழிற்கண் விளையாடுவேம்; அவ்விடத்து
நின்வரவறிய மயிலெழுப்புவாயாக' வெனத் தோழி குறியிடங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் ; -
பனைவளர் கைம்மாப் படாத்தம்
பலத்தரன் பாதம் விண்ணோர்
புனைவளர் சாரற் பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே
இரவுக் குறியிவ ணென்று பாங்கி
அரவக் கழலவற் கறிய வுரைத்தது.
இதன் பொருள்: பனை வளர் கைம்மப் பாடத்து அம்பலத்து அரன்பாதம்-பனைபோலுநெடிய கையையுடைய
மாவினுரியாகிய படாத்தையுடைய வம்பலத்தரன் பாதங்களை விண்ணோர்புனை வளர் சாரல் பொதியின்
மலை- விண்ணோர் பரவுதற்கிடமாகிய வளருஞ் சாரலையுடைய பொதியின் மலைக்கண்; பொலி சந்து அணிந்து -
பொலியுஞ் சந்தனச் சாந்தை யணிந்து; சுனை வளர் காவிகள் சூடி-சுனைக்கண் வளருங் காவிகளைச் சூடி ;
யாங்கள் நின்று ஆடும் செழும் பொழில்-யாங் கணின்றாடும் வளவிய பொழில்; பைந்தோகை துயில் பயிலும்
சினை வளர் வேங்கைகள் - பசியமயில்கள் துயில் செய்யுங் கோடு வளரும் வேங்கைப் பொழில் எ-று.
என்றது சந்தனச் சாந்தணிந்து சுனைக்காவி சூடி வேங்கைப் பொழிற்கண் நீ வந்து நின்று
நின்வரவறிய மயிலெழுப்புவாயாக வென்றவாறு. மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக் குறியிட முணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இரவுக்குறி இத் தன்மைத்தென்று தோழியானவள் ஆரவாரிக்கிற
வீரக்கழலை யுடைய நாயகனுக்கு அறியும்படி சொன்னது.
செய்யுள்: பனையை யொத்த கையினையுடைய யானையின் தோலைப் படமாக உடையவன்.
திருவம்பலத்தே உளனாகிய தலைவன், அவனுடைய சீபாதங்களைச் சூடுதற்கிடமாகிய தேவர்கள், மிக்க
சாரலை யுடைய பொதியின் மலைப் பொலிவுபெற்ற சந்தனத்தை யணிந்து. நீலப் பூவைச் சூடி,
வேங்கை நிழலிலே நின்று, மயிலை எழுப்புவாயாக வேண்டும். 154
8. இரவுக்குறி யேற்பித்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்; சிவத்துக் கருளுயிர்ச் செய்கை யுரைத்தது.
இரவுக்குறி யேற்பித்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறி தலைமகளுழைச்சென்று,
'அந்திக்காலத்தோர் அலவன்றன் பெடையோடு பயிலக்கண்டு ஒரு பெரியோன் வருத்தமிக்குச் சென்றான்;
அதற்குப்பின் அவன் சேர்துயிலறிந்திலே' னெனத் தோழி அவனதாற்றாமைகூறித் தலைமகளை
யிரவுக்குறி யேற்பியா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மலவன் குரம்பையை மாற்றியம்
மால் முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
கானவிற் சீர்ப்பெடையோ
டலவன் பயில்வது கண்டஞர்
கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
தாங்கொன்மன் சேர்துயிலே
அரவக்கழலவ னாற்றானென
இரவுக்குறி யேற்பித்தது
இதன் பொருள்: மலவன் குரம்பையை மாற்றி - மலங்களை யுடைய வலிய யாக்கையாகிய
குரம்பையைமாற்றி; மால் முதல் அவ்வானர்க்கு அப்பால் செலவு அன்பர்க்கு ஓக்கும் - மான் முதலாகிய
அவ்வானவர்க்கப்பாற் செல்லுஞ் செலவை அன்பராயினார்க்கென்றோக்கிவைக்கும்; சிவன் தில்லை
கானலில் - சிவனது தில்லையைச் சூழ்ந்த கானலிடத்து: சீர்ப் பெடையோடு அலவன் பயில்வது கண்டு
நல்ல பெடையோடலவன் பயின்று விளையாடுவதனைக்கண்டு; அஞர் கூர்ந்து- வருத்தமிக்கு;
அயில் வேல் உரவோன்- அயில் வேலையுடைய வுரவோன்; அந்திவாய்ச் செலக்கண்டனன் -
அந்திப்பொழுதின்கட்செல்ல அவனைக் கண்டேன்; மன் சேர் துயில் என்னதாங் கொல் - பின் அம்
மன்னனது சேர் துயிலெத்தன்மைத்தாம்! அறியேன் எ-று.
அப்பாற்செலவு மான் முதலாயினார்க்கு மேலாகிய பதங்கள் : அன்பருட் போகவேட்கை யுடையார்
அவற்றைப் பெற்றுப் போகந் துய்ப்பாராதலிற் **செலவன்பர்க் கோக்கு மென்றார். பெடையொடும்பயிலு
மலவனைக்கண்டு முயிர் தாங்கிச் சென்றானாதலின் *உரவோனென்றாள்.
** 'செலவன்பர்க் கொக்கும்' ' * வேலுடையோன்' என்பன பழையவுரைகாரர் பாடம் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: 'அரவக்கழலவ னாற்றானென விரவி நிற்கும் குறையிசைவித்தது'.
அரவம் செய்கின்ற வீரக்கழலை யுடையவன் ஆற்றானென்று கொண்டு இரவினிற் குறையை இசைவித்தது.
செய்யுள்: மும்மலங்களை யுடைத்தாகிய உடம்பான இக்குடிலை மாற்றி அப்புருடோத்தமன்
முதலாகிய தேவர்களுக்கு அப்பாற் செல்லுகிற தனக்கு அன்பு செய்வார்க்கு ஒக்கிற சிவனென்னும்
திருநாமத்தையுடையவன்! அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச்சூழ்ந்த கடற்சோலையில்
சீரிய பேடையுடனே சேவல் நண்டானது உறவு செய்கிற படியைக் கண்டு வருத்தமுற்றுக் கூரிய
வேலினையுடைய நாயகன் செல்ல, அந்திக் காலத்திடத்தே கண்டேன்; மன்னனாலான பொருந்தின
உறக்கமானது என் செயத்தான்?. 155
9. இரவரவுரைத்தல் *
-------------------
* பேரின்பப் பொருள்: மலத்தடை கடந்துயிர் மருவிற்றென்றது.
இரவரவுரைத்தல் என்பது அலவன் மேல் வைத்திரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு
அதுவழியாக நின்று, வேட்கை மிகவால் யானைகணடுங்கச் சிங்கந்திரியுமலைச் சரியிடத்து
வர வேண்டிச் சொல்லா நின்றான்; இதற்கியாஞ் செய்வதென்னோ' வெனத் தோழி தலைமகளுக்குத்
தலைமகனிரவரவு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
தில்லை முன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பண் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான் சொல்லு மெல்லியலே.
குரவருகுழலிக் கிரவரவுரைத்தது.
இதன் பொருள்: மெல்லியல்-மெல்லியலாய்; மோட்டு அம் கதிர்முலைப் பங்கு உடைத் தில்லை முன்னோன்
கழற்கே பெரியவழகிய கதிர்முலையை யுடையதோர் கூற்றையுடைய தில்லைக்கணுளனாகிய எல்லாப் பொருட்கு
முன்னாயவனுடைய திருவடி யொன்றற்குமே; கோட்டம் தரும் குரு முடி நம் வெற்பன்-வணங்குதலைச் செய்யுங்
குருமுடியையுடைய நம் வெற்பன்; மழை குழுமி நாட்டம் புதைத்தன்ன நள் இருள்- முகில்கள் திரளுதலான்
நாட்டத்தைப் புதைத்தாற் போன்றிருக்குஞ் செறிந்த விருட்கண்; நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரி
சரிவாய் யானைகணடுங்கச் சிங்கம் வேட்டந்திரியு மலைச்சரியிடத்து; வருவான் சொல்லும்-வரவேண்டிச்
சொல்லா நின்றான்: இனியென்செயத் தகும்? எ-று
குரு - நிறம். முன்னோன் கழற்கல்லது பிறிதோரிடத்துந் தாழ்ந்து நில்லாப் பெரியோன்
தாழ்ந்து வேண்டுவதனை மறுத்தலரி தென்பதுபோதர, முன்னோன் கழற்கே கோட்டந்தரு நங்குரு முடிவெற்ப
னென்றாள். ஆற்றின் கண் வருமேத மறியினும் அவனது வேட்கை மிகுதியாலென்னா லொன்றுங்கூறுவ
தரிதாயிற்றென்பது போதர, நள்ளிருணாக நடுங்கச் சிங்கம் வேட்டந்திரி சரிவாயென்றாள். குரவெனவும்
இரவெனவும் விகாரவகையாற் குறுகி நின்றது: இவையிரண்டற்கும் மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த விளிவரல்,
பயன் : தலைமகளை யிரவுக்குறி நேர்வித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: குரவம் பூவை யொக்க நாறுகின்ற கூந்தலினை யுடையவட்கு
இரவு வருதலைச் சொன்னது.
செய்யுள்: பெரிய பெருமையையும் அழகையும் கதிர்ப்பையும் உடைத்தாகிய முலையாற் சிறந்த
பாகத்தையுடைய பெரும்பற்றப் புலியூரிற் பழையவன், அவனுடைய சீபாதங்களை வணங்குகிற நம்முடைய
நிறமுடைத்தாகிய முடியையுடைய நாயகன், மேகங்கள் திரண்டு கண் புதைத்தாலொத்த செறிந்த
இருளிடத்து யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டமாக உலவு வழியிடத்து, மெல்லிய இயல்பினை
யுடையாய்! வருவானாகச் சொன்னான். 156
10. ஏதங்கூறி மறுத்தல்*
---------------------
*பேரின்பப் பொருள்: 'பரிவுயி ரருளிற் படற்கிரங் கியது,'
ஏதங்கூறி மறுத்தல் என்பது தலைமகனிரவரவு கேட்ட தலைமகள் தனக்கவன் செய்த தலையளியு
முதவியு நினையா நின்ற வுள்ளத்தளாய், "அரிதிரண்டுநின் றியானை வேட்டஞ் செய்யும் வல்லிருட்கண்
வள்ளலை வாவென்று சொல்லத் தகுமோ'வென ஏதங்கூறி மறுத்துரையா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
செழுங்கார் முழவதிர் சிற்றம்
பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோவின்றெம் வள்ளலையே
இழுக்கம்பெரி திரவரினென
அழுக்கமெய்தி யரிவையுரைத்தது.
இதன் பொருள்: செழுங்கார் முழவு அதிர் சிற்றம்பலத்து- வளவிய கார் போலக் குடமுழா முழங்குஞ்
சிற்றம்பலத்தின் கண்ணே ; பெருந் திருமால்கான் கொழுமலர் இட- பெரிய திருமால் நறுநாற்றத்தையுடைய
கொழுவிய மலரையிட்டுப் பரவ; கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல- கூத்தை விரும்பிச் செய்வானுடைய
கழல்களை யேத்தா தாரைப்போல வருந்த: முழங்கு ஆர் அரிமுரண் வாரண வேட்டை செய் மொய் இருள் வாய் -
முழங்கா நின்ற கிட்டுதற்கரிதாகிய சீயம் முரணையுடைய வாரணவேட்டையைச் செய்யும் வல்லிருட்கண்;
வழங்கா அதரின் வழங்கு எம் வள்ளலை இன்று சொல்லுதுமோ! இவ்வாறு சொல்லுதற்குமோ! எ-று.
ஏத்தலரை யானைக்குவமையாக வுரைக்க. ஏத்தலர் போல் வழங்கென்றுமோவென்று
கூட்டியுரைப்பாருமுளர். முழங்காரரியென்பதற்கு முழங்குத லார்ந்த வரியென்பாருமுளர். தனக்கவன்
செய்த தலையளியு முதவியு நினையா நின்ற வுள்ளத்தளாகலின், வள்ளலென்றாள். மைந்தனை யென்பது
பாடமாயின், ஆண்மைத் தன்மை தோன்ற நின்றதாகவுரைப் பாருமுளர். ஆற்றினேத முணர்ந்து மறுத்தாள் :
அவருழை யாஞ்சேறலொழிந்து அவரை வரச் சொல்லக்கடவேமோ வென்றவாறு. அகங்காரம்: எதிர் காலக்
கூற்றிடத்துக் காரியத்தின் கண்வந்த இரங்கல் விலக்கு உபாயவிலக்கு; மெய்ப்பாடு : அச்சம் .
பயன் : இரவுக்குறி மறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: இரவுவரிற் குற்றம் பெரிதென்று வருத்தமுற்று நாயகி சொன்னது.
செய்யுள்: அழகிய காரையொத்த குடமுழாக்கள் முழங்குகிற திருச்சிற்றம்பலத்திலே, பெரிய மாலானவன்
அழகிய நறுநாற்றத்தையுடைய புட்பத்தையிட்டு அஞ்சலி செய்யத் திருக்கூத்தாடி யாளுகின்றவனுடைய
சீபாதங்களை வாழ்த்தாதாரைப் போல, முழங்குதலால் கிட்டவொண்ணாத சிங்கம் பாட்டையுடைய (?)
யானைகளை வேட்டம் செய்கிற செறிந்த இருளிடத்து, மனிதர் நடந்தறியாத வழியிலே வருவாயாக என்று
(எம்முடைய நாயகனை இப்பொழுது சொல்லல் தகுமோ?) 157
11. குறை நேர்தல்*
-----------------
*பேரின்பப் பொருள்: ' திருமேனி யருமை தெரிதலா லாமெனல்.'
குறை நேர்தல் என்பது ஏதங்கூறி மறுத்த தலைமகள் அவனாற்றானாகிய நிலை கேட்டு, 'யான் புனலிடை
வீழ்ந்து கெடப்புக என்னுயிர் தந்த பெரியோர்க்குச் சிறியேன் சொல்லுவதறியே' னென உடம்பட்டு
நேரா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
ஓங்கு மொரு விட முண்டம்
பலத்தும்ப ருய்யவன்று
தாங்கு மொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன் சிறி
யேன் சொல்லும் வாசகமே.
அலைவேலண்ணல் நிலைமை கேட்டு
கொலைவேற்கண்ணி குறைநயந்தது.
இதன் பொருள்: ஓங்கும் ஒரு விடம் உண்டு- உலக முழுதையுஞ் சுடும் வண்ணம் மேன்மேலும் வளரா
நின்றதோர் விடத்தைத் தானுண்டு; உம்பர் உய்ய அன்று தாங்கும் அம்பலத்து ஒருவன் தடவரைவாய்-
உம்பரெல்லா முய்ய அன்று தாங்கு மம்பலத்தொருவனது பெரியவரையிடத்து; தழங்கும் அருவி வீங்கும்
சுனைப்புனல் - ஒலியா நின்ற வருவியாற் பெருகுகின்ற சுனைப்புனற் கண்: அன்று வீழ்ந்து அழுங்கப்
பிடித்தெடுத்து வாங்குமவர்க்கு - அன்றியான் விழுந்து கெடப்புகப் பற்றியெடுத்துக் கரைக்கணுய்த்த
பெரியோருக்கு; சிறியேன் சொல்லும் வாசகம் அறியேன் - சிறியேனாகிய யான் சொல்லுவதோர்
மாற்றமறியேன் எ-று.
ஒருநஞ்சென்பதற்கு ஒப்பில்லாத நஞ்செனினு மமையும். தடவரைவாய் வீழ்ந்தழுங்கவென
வியையும், சுனையென்றியைப்பினு மமையும். சுனைப்புனல்வாய் வீழ்ந்தழுங்கவன்று தாமே
வந்தெடுத்துய்வித்தாற்போல வழங்காதவதரிற் றாம்வருதலான் எனக்கு வருமிடுக்கணையுந்தாமே
நீக்கினல்லது யானறிவதொன் றில்லை யென்னுங் கருத்தால், சுனைப்புனல் வீழ்ந்தன்றழுங்கப்
பிடித்தெடுத்து வாங்குமவர்க் கென்றாள்; ஆற்றின்கணேத நினைந்திரவுக்குறி மறுத்த தலைமகள்
அவன் செய்தவுதவி நினைந்துபின் னுடம்பட்டாளாதல் பொருந்தாமையறிந்து கொள்க.
இக்கருத்தே பற்றியுதவி நினைந்து குறைநயந்த தென்னாது அவனதாற்றாமை
நிலைமைகேட்டுக் குறைநயந்த தென்றார். அவன் செய்த பேருதவி சொல்லுகையால் அவன் செய்த
வுதவிக்குக் கைம்மாறாவது நானவனுழைச்சேறலே யென்றுடம்பாடாயிற்று. பிறவிக் குட்டத்தியான்
விழுந்து கெடப்புகத் தாமேவந்து பிடித்தெடுத்து அதனினின்றும் வாங்கிய பேருதவியார்க்குச்
சிறியேனாகியான் சொல்வதறியேனென்று வேறுமொரு பொருடோன்றியவாறு கண்டுகொள்க.
மெய்ப்பாடு : அழுகை, பயன்: இரவுக்குறி நேர்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சத்துருக்களை வருத்துகிற வேலினையுடைய நாயகனது
நிலைமைகேட்டுக் கொலைத் தொழிலாற் சிறந்த நிகர்த்த கண்களையுடையாள் குறையை விரும்பினது
செய்யுள்: பொழுதைக்குப் பொழுது மிகுந்து சதிப்பதான விடத்தைப் பானம் பண்ணித் தேவர்கள்
பிழைக்கும்படி அன்று பரிகரிக்கின்ற திருவம்பலத்தில் உளனாகிய ஒப்பில்லாதவன் அவனுடைய மிகவும்
பெரிய மலையிடத்து ஆரவாரிக்கிற அருவிப் பெருக்கிலே அகப்பட்ட சுனைநீரிலே அன்று நாம் விழுந்து
இறந்துபடப்புகச் சுனையினின்றும் பற்றிக் கரையிலேற விட்ட பெருங் கவியாளர்க்குச் (?) சிறியளாகிய
நான் சொல்லும் ஒருவார்த்தையுமறியேன்.
என்ற பொருளாய். நம் உறவின் முறையாராற் பரிகரிக்கிற காலத்திலும் நம்முடைய வருத்தமறிந்து
தீர்ப்பா ரொருவர் தாம் இரவுக்குறியிலே வருகிற இதற்கு நாம் கிலேசிக்கிற கிலேசமும் தாமே அறிந்து தீர்ப்பர். 158
12. குறைநேர்ந்தமை கூறல்*
-------------------------
* பேரின்பப் பொருள்:'உயிர்க்குக் கருணை யுண்மை யுரைத்தது '
குறைநேர்ந்தமை கூறல் என்பது தலைமகளைக் குறைநயப்பித்துத் தலைமகனுழைச் சென்று,
'இற்றையாமத் தெல்லாம் நின்னருண்மேனிற்கவேண்டித் துன்பமுற்றேன்; நீ கருதியதூஉ முடிந்த' தெனத்
தோழி தலைமகனுக்கு அவள் குறை நேர்ந்தமை கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
ஏனற் பகங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே
குறைநயந்தனன் நெறிகுழலியென
எறி வேலண்ணற் கறியவுரைத்தது
இதன் பொருள் : ஏனற் பசுங்கதிர் என்றூழ்க்கு அழியதினையினது பசிய கதிர் கோடையாலழிய;
எழிலி உன்னி - அஃதழியா மன் மழைபெறக் கருதி; கானக் குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா-
கானத்துவாழுங் குறவர்கள் தெய்வத்திற்குப் பலிகொடுத் தாரவாரிக்கும வம்பார்ந்த சிலம்பையுடையாய்;
இற்றையாமத்து யான் நின் அருண்மேல் நிற்கல உற்று-இற்றை யிரவின் கண்யான் நின்னேவன்மேனிற்கவேண்டி :
தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்கள் சென்றேன் - தேனோடு மலர்ந்த கொன்றையை
யுடையானது தில்லையைப் பொருந்தாதா ரடையுந் துன்பத்தை யடைந்தேன்; நீ கருதியதூஉ முடிந்தது எ-று.
வம்பு - காலமல்லாத காலத்து மழை யாமமுமென்பது பாடமாயிற் பகலேயன்றி யிரவுமெனவுரைக்க.
யாமமுநின்னருளே என்பதூஉம் பாடம். கானக்குறவர்கள் தமக்குணவாகிய தினைக் கதிர் கோடையாலழியத்
தெய்வத்தைப்பராவி மழை பெய்விக்க முயல்கின்றாற்போல, நினக்குத் துப்பாகிய இவணலம். அலர்
முதலாயினவற்றாற் றொலையும் வழி அது தொலையாமன் முயன்று பாதுகாப்பாயென உள்ளுறை
யாமாறு காண்க. மெய்ப்பாடு- பெருமிதம். பயன்- தலைமகற்குக் குறைநயந்தமை யுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நெறித்த கூந்தலினையுடையாள் குறை நயந்து
விரும்பினாளென்று மாலையால் நறுநாற்றத்தைப் பொருந்தின வேலுடைய நாயகற் கறியும்படி சொன்னது
செய்யுள் : ........ தினைக்கதிரானது கோடையாலே வாட, மழை பெய்விப்பதாக நினைந்து காட்டிலே வாழும்
குறவர்கள் தெய்வத்திற்குப் பலி கொடுத்து ஆரவாரிக்கிற புதுமை ஆர் (ந்த மலையின்) த(லை) மையினை
யுடையவனே! இற்றை இடையாமத்திலே யான் உன்னுடைய திருவருளின் வழியே நிற்க வேண்டியடைந்தோர்
காணத் தேன் மலருகின்ற கொன்றை மாலையுடையவனது பெரும்பற்றப் புலியூரையடையாதார்
அனுபவிக்கும் கிலேசத்தை அறிந்தனன் காண். (என்ன, இப்படி வருந்தி உடன் படுவித்தேன் காண்.) 195
13. வரவுணர்ந்துரைத்தல்*
--------------------------
*பேரின்பப் பொருள் : சிவத்துக் கருளுயிர்த் திறமெடுத் துரைத்தல்'
வரவுணர்ந்துரைத்தல் என்பது தலைமகனுக்குக் குறை நயப்புக்கூறியதோழி, 'யாம் விளையாடா
நின்ற பொழிலிடத்து வேங்கைமே லுண்டாகிய மயிலின மின்புற்றுத் துயில் பெயரா நின்றன; இதற்குக்
காரணமென்னோ' வென அவன் வரவறிந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
முன்னு மொருவ ரிரும் பொழில்
மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள் போல்
துன்னுமொ ரின்பமென் றோகை** தந்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே
வளமயிலெடுப்ப இளமயிற்பாங்கி
செருவேலண்ணல் வரவுரைத்தது
**பா-ம்: றோசை.
இதன் பொருள்: இரும் பொழில் மூன்றற்கு முன்னும் ஒருவர்-பெரிய வுலகங்கண்மூன்று முளவாதற்கு
முன்னுந்தாமொரு வருமே யாகியுள்ளார்; முற்றும் இற்றால் பின்னும் ஒருவர் - அவ்வுலகமுழுது மாய்ந்தாற்
பின்னுந்தாமொருவருமேயாகியுள்ளார்; சிற்றம்பலத்தார் - சிற்றம்பலத்தின் கண்ணார்; தரும் பேரருள் போல் -
அவர் தரும் பெரியவருள் போல, ஒரு இன்பம் துன்னும் என்று தம் தோகைக்கு ஓகை சொல்லுவ போல -
இவ்வில்லின் கண் ஓரின்பம் வந்து பொருந்துமென்று தம்முடைய தோகைகட்தோகை சொல்லுவனபோல:
மன்னும் அரவத்தவாய் மயில் இனம் துயில் பேரும் - இடைவிடாது நிகழு மாரவாரத்தை யுடையவாய்
மயிலினந் துயில் பெயரா நின்றன: இஃதென்னோ! எ- று
சிற்றம்பலத் தாரென்பதற்கு, உலகங்களுளவாய்ச் செல்லுங் காலத்துச் சிற்றம்பலத்தின்
கண்ணாரென்றுரைப்பினு மமையும். தன்றோகைக்கென்பது பாடமாயிற் பன்மை யொருமை மயக்கமாகக்
கொள்க. ஒருகால் வெருவித் தாமே துயிலெழுந் துணையன்று; இஃதவன் செய்த குறியென்பது போதர,
மன்னுமரவத் தவா யென்றாள், மெய்ப்பாடு அது. பயன்: தலைமகன் வரவுணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அழகிய மயிலெடுப்பச் சாயலால் இளைய மயிலை யொத்த பாங்கி
செருத்தொழிலுக்குச் சிறந்த வேலினையுடைய நாயகன் வந்த படியைச் சொன்னது.
செய்யுள்: பெரிய பூமிகள் மூன்றும் தோன்றுவதற்கு முன்னும் ஒருவராயுள்ளவர் : எல்லாப் பொருளும்
இறந்துபட்டாலும் ஒருவராயுள்ளவர்; திருச்சிற்றம்பலத்தேயுள்ளவர்; அவர் தருகிற பெரிய கிருபைபோல
நமக்கு வந்து சேர்கின்றதோர் இன்பத்தை மென்மயிலான தன் மயிலுடனே சொல்லுவபோல், நிலைபெற்ற
ஆரவாரத்தையுடையவாய், உறக்கமானது ஒழிய நின்றன மயிற்சாதிகள். (இஃதென்னோ ?)
ஓசை என்பது பாடமாயின் பிரியம் செல்லுவாரைப் போல என்றுமாம்.
நிலைபெற்ற ஆரவாரம் என்றது மயில்வெருவி எழுதல். வெற்றுப் புளவாவெழுதல் (?) செல்லுமவை
எழுந்தாலும் அப்பொழுதே துயில் வதியும்; இது நிலைபெற்ற ஆரவாரமாகையால் நாயகர் செய்த
குறி என்று படும். 160
14. தாய்துயிலறிதல்*
-------------------
*'பேரின்பப் பொருள் ; 'பரைக்கும் பாங்காம் பண்பருள் கண்டது'
தாய்துயிலறிதல் என்பது தலைமகன் வரவுணர்ந்து தலைவியைக் கொண்டு செல்லக் கருதா நின்ற தோழி,
'யாம் விளையாடா நின்ற பொழிலிடத்து ஒரு யானை நின்று ஊசலைத் தள்ளா நின்றது; அதற்கியாஞ்
செய்வதென்னோ' வெனத் தாயது துயிலறியா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
கூடார் அரண்நெரி கூடக்
கொடுஞ்சிலை கொண்ட அண்டன்
சேடார் மதன்மல்லற் றில்லையன்
னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே
ஊசன்மிசைவைத் தொள்ளமளியில்
தாயதுதுயில் தானறிந்தது.
இதன் பொருள்: கூடார் அரண் எரிகூட - கூடாதாருடைய வரண்களையெரி சென்று கூட; கொடும் சிலை
கொண்ட அண்டன் சேடு ஆர்மதில் மல்லல் தில்லை அன்னாய் - வளைந்த சிலையைக் கைக்கொண்ட
அண்டனது பெருமையார்ந்த மதிலையும் வளத்தையுமுடைய தில்லையையொப்பாய்; சிறு கண் பெரு
வெண்கோடு ஆர் கரி - சிறிய கண்ணையுடைய பெரிய வெண் கோடு நிரம்பிய யானை; நம் சூழ் பொழிற்கு -
தமது சூழ் பொழிற்கண்; குரு மாமணி ஊசலைக் கோப்பு அழித்து- நிறத்தையுடைய வுயர்ந்த மணிகளாற்
செய்யப் பட்டவூசலைச் சீர் அழித்து: தோடு ஆர் மதுமலர் நாகத்தை நூக்கும் - இதழார்ந்த மதுமலர்களை யுடைய
அவ்வூசலைத் தொடுத்த நாகமரத்தை நூக்கா நின்றது; இதற்கென் செய்வேம்? எ-று.
சூழ்பொழிற் கென்னு நான்கனுருபு ஏழாவதன் பொருட்கண் வந்தது. சூழ்பொழிலே யென்பதூஉம் பாடம்.
இவ்வாறு கூறவும் வாளாக் கிடப்பிற் றாய் துயின்றாளென்றறிதல். பயன். அலங்காரம் : பரியாயம்.
மெய்ப்பாடு அது. பயன்: இடையீடா ராய்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஊசலைச் சொல்லும் வார்த்தையின் மேல் வைத்து அழகிய சயனத்திலே
கிடக்கிற தாய் உறக்கத்தைத் தான் அறிந்தது.
செய்யுள்: சத்துருக்களது அரணம் நெருப்புக்கு இரையாம்படி கல்லை வில்லாக வளைய வாங்கினதேவன்,
உயரமிக்க மதிதோய்ந்த விரி சடைத்தாகிய (?) பெரும்பற்றப் புலியூரை யொப்பாய்! சிறு கண்களையும்
பெரிய வெள்ளிய கொம்பினையும் (பெற்ற) யானையானது, நிறமுடைத்தாகிய மிக்க மணியழுத்தப்பட்ட
ஊசலின் கோவையைக் குலைத்து, இதழ் நிறைந்த தேன் உடைத்தாகிய மலராற் சிறந்த புன்னையையும்
தள்ளா நின்றது நம்முடைய சூழ்ந்த சோலை (யிலே).
என. ' அதற்குப் பொருள் எது' என்று தாய் துயிலெழுந்தாளாகில் 'விளையாடினேன் காண்' என் (பாள்].
இதுகேட்டுத் துயின்றாளாகில் குறியிடத்துச் செல்வாள் : (இவை ஆயபயன்) 161
15. துயிலெடுத்துச்சேறல்*
------------------------
*பேரின்பப் பொருள்: "உயிர்ப் பக்குவங் கண்டுவந் தறிவித்தது"
துயிலெடுத்துச் சேறல் என்பது தாய்துயி லறிந்த தோழி; குவளைப்பூக் கண் மலரா நின்றன; அவை
நின்கண்ணை யொக்கு மாயிற் காண்பாயாக ' வெனத் துயிலெடுத்துச் செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென்
தில்லைநின் றோன் மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே.
தாய் துயிலறிந் தாய்தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது
இதன் பொருள்: வண்டு வாழும் கருங்குழல் - வண்டுகள் வாழுங் கரிய குழலையுடையாய்;
விண்ணுக்கு மேல் - எல்லாப் பொருட்கு மேலாகிய விண்ணுக்கு - மேலாயவன் ; வியன் பாதலக் கீழ்-
எல்லாப் பொருட்குங் கீழாகிய அகன்ற பாதாலத்திற்குங் கீழாயவன்; விரி நீர் உடுத்த மண்ணுக்கு நாப்பண் -
நடுவாகிய கடலையடுத்த மண்ணிற்கு நடுவாயவன்; நயந்து தென் தில்லை நின்றோன் - விரும்பித்
தென்றில்லைக் கணின்றோன்; மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின்றன- அவனது மிடற்றின்
வண்ணத்தை யுடைய குவளைப் பூக்கண் மலர்கின்றவை; சினவாள் மிளிர் நின்கண் ஒக்குமேல்
கண்டு காண்- சினவாண் மிளிருமாறுபோல மிளிரு நின் கண்களை யொக்குமாயிற் காண்பாயாக எறு.
பாதாலம்: பாதலமெனக் குறுகி நின்றது. மண்ணினுள்ளு முளனாதலின், மண்ணுக்கு நாப்பணென்றார்.
மண் முழுதுக்கு மிடைத் தில்லையை நயந்து அதன்கணின்றோனென் றுரைப்பாருமுளர் : சினவாண்மிளிர்
நின் கண்ணொக்குமே லென்புழி ஒத்த பண்பு வேறுபட்டமையான் உவமைக்குவமை யன்றென்க. கண்டு
காணென்பதொரு சொல். ஆய்தருபவள் புறத்துக் கொடுபோ முபாய மாராய்பவள். மெய்ப்பாடு: அது .
பயன்: தலைமகளைக் குறியிடத் துய்த்தல். அலங்காரம் : புகழுவமை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தாய்துயிலறிந் தாய்தருகின்ற, மேதகுதோழி மெல்லியற்கிசைத்தது.
தாயிடை உறக்கத்தை யறிந்து புறப்படும் உபாயம் விசாரிக்கிறவள் மெல்லிய இயல்பினையுடைய
நாயகிக்குச் சொன்னது.
செய்யுள்: ஆகாயத்துக்கு மேலாயுள்ளவன்; அகன்ற பாதலத்துங் கீழாயுள்ளவன்; விரிந்த நீராற் சூழப்பட்ட
பூமிக்கு நடுவாயுள்ளவன்; விரும்பித் தெற்குத் திசைக்குத் திருப்பதியாய் உள்ள பெரும்பற்றப் புலியூரிலே நின்றவன்;
அவனுடைய திருமிடற்றை யொத்த நிறமுடைத்தாகிய நீலம் மலராய் நின்ற(ன) ; சினத்த வாள் போல் உலாவுகின்ற
உன் கண்ணை ஒக்குமாகில் பார்த்துக் காண்: வண்டுகள் வாழ்கின்ற கூந்தலையுடையாய்! உன் கண்ணை
ஒக்குமாகில் பார்த்துக்காண். 162
16. இடத்துய்த்து நீங்கல்*
----------------------
*பேரின்பப் பொருள் : ''சிவத்திற் சேர்த்தருள் சென்று நின்றது"
இடத்துய்த்து நீங்கல் என்பது துயிலெடுத்துக்கொண்டு சென்று அக்குறியிடத்து நிறுத்தி,
'இவை நின் கண்கள் வென்ற குவளை மலர் ; இவற்றைக் காண்பாயாக; யானின் குழற்குச் சந்தனத்தழை
கொய்யா நின்றே' னெனத் தான் சிறிதகலாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
நந்தீ வரமென்னு நாரணன்
நாண் மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயுந் தருகுவனே
மைத்தடங் கண்ணியை யுய்த்திடத் தொருபால்
நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: நந்தீவரம் என்னும் நாரணன் நாள் மலர்க்கண்ணிற்கு - கண்ணையிடந்திட்டு நந்தீ
வரந்தரவேண்டுமென்னு நாரணனது அந்நாண் மலர் போலுங் கண்ணிற்கு ; எஃகம் தந்து ஈ வரன் புலியூர்
அனையாய் - ஓரெஃகத்தைப் படைத்துக் கொடுத்த தலைவனது புலியூரையொப்பாய்; இவை தடங்கண்
கடந்த இந்தீவரம் - இவை நின்பெரிய கண்கள் கடந்த நீலங்கள் காண்-இவற் காண்பாயாக; நின் இருள் சேர்
குழற்கு- நினது கருமைசேர்ந்த குழற்கு ; சந்து ஈ எழில் சேர் வர முறியும் வெறி வீயும் தருகுவன்-சந்தன
மரந் தரும் எழில் சேர்ந்த நல்ல முறிகளையும் நறு நாற்றத்தையுடைய மலர்களையும் யான் கொணர்ந்து
தருவேன்; நீ நீலப் பூக்களையுங் கண்டு ஈண்டு நிற்பாயாக எ-று.
நந்தியென்பது ஒரு திருநாமம். அனையாயுடைய தடங் கண்களென் றுரைப்பாருமுளர்.
இத்தீவரமிவை காணென்பதற்கு நின் கண்களை வென்ற இந்தீவரமாவன விவைகாணென்
றுரைப்பினு மமையும். இது குறிப்பெச்சம். உய்த்திடத்து. இடத்துய்த்து. மெய்ப்பாடு அது .
பயன்: தலைமகளைக் குறியிடத்து நிறீஇ நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மை யெழுதப்பட்ட பெரிய கண்களை யுடையாளைக்
குறியிடத்துய்த்து, ஒரு பக்கத்திலே நீங்குவதாக நினைந்து தோழி சொன்னது.
செய்யுள் : நந்தீசுவரனே! 'வரம் தரவேண்டு' மென்னும் புருடோத்தமனுடைய செவ்வித் தாமரைப் பூவை
யொத்த கண்ணுக்குச் சக்ராயுதத்தைப் படைத்துக் கொடுத்த மேலானவன் அவனுடைய பெரும் பற்றப் புலியூரை
யொப்பாய்! உன்னுடைய பெரிய கண்களையொத்த நீலப்பூக்கள் இவை காண்; உன்னுடைய இருள் சேர்ந்த
கூந்தலுக்குச் சந்தனம் புறப்படவிட வருகிற (எழில் சேர்ந்த நல்ல முறிகளையும்) நறுநாற்றமுடைய பூவையும்
கொண்டு வந்து நான் தரக்கடவேன்.
'அவ்வளவு நீ இந்நீலப்பூக்களைப் பறிப்பாயாக' என்று குறியிடத்தே நிறுத்தி நீங்கினது. 163
17. தளர்வகன் றுரைத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்: உயிர்சிவங் கண்டன்புற வுவந்துரைத்தது.
தளர்வகன் றுரைத்தல் என்பது தோழி குறியிடை நிறுத்தி நீங்கா நிற்பத் தலைமகனெதிரப்பட்டு.
'நும்முடைய கமலக் கோயில் கதிரவன் வருவதன் முன் நீரே திறந்து கொண்டோ போந்தது? இப்பொழிலிடை
வந்து நயந்ததென்னோ ' வெனத் தலைமகளைப் பெரும்பான்மை கூறித்தன்றளர்வு நீங்கா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
காமரை வென்றகண் ணோன் தில்லைப்
பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்தென் னோவந்து
வைகி நயந்ததுவே .
வடுவகி ரனைய வரிநெடுங் கண்ணியைத்
தடுவரி யன்பொடு தளர்வகன் றுரைத்தது.
இதன் பொருள்: காமரை வென்ற கண்ணோன் தில்லை - நிறையழிக்க வந்த காமனைவென்ற
கண்ணையுடையவனது தில்லைக்கண்; பல்கதிரோன் அடைத்த தாமரை இல்லின்- பல் கதிரோனாகிய
வாயிலோன் அடைத்து வைத்த தாமரையாகிய நும்மில்லின் கண்; இதழ்க் கதவம் திறந்தோ -இதழாகிய
கதவத்தை அவ்வாயிலோன் வருவதன் முன் நீரே திறந்து கொண்டோ போந்தது? இது கிடக்க;
பாம் அரை மேகலைப் பற்றி-பரந்த வரையின் மேகலையை யொலியாமற் பிடித்து ; சிலம்பு ஒதுக்கி -
சிலம்புகளை மேலேறக்கடுக்கி; தமியே பைய அரை யாமத்து நாம் வந்து வைகி நயந்தது என்னோ-
தனியே பைய அரையாமத்தின்கண் நாம் ஈண்டு வந்து தங்கி விரும்பிய தென்னோ? இதனைக்
கூறுவீராமின் எ-று
காமரென்னும் ரகரவீறு இழிவின்கண் வந்தது. தில்லைத் தாமரையென வியையும். கதவந்திறந்தோ
வென்னுமோகாரத்தை அசைநிலை யாக்கி யுரைப்பாருமுளர். பாவுமென்னு மீற்று மிசை உகரம் மெய்யொடுங்
கெட்டுக் கால மயக்கமாய் நின்றது. எல்லாரானுந் திருமகணயக்கப் படினல்லது திருமகடன்னா னயக்கப்
படுவதொன்றில்லை யென்னுங் கருத்தான், நாம் நயந்ததென்னோ வென்றான். நாமென்னு முன்னிலை
யுளப்பாட்டுத் தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது. தடு - தடுத்தல். அரியன்பு பரியரை
போலப் பண்புத் தொகையாய் நின்றது. தடையருமன்பென்று பாட மோதுவாருமுளர். கண்ணியை
யுரைத்த தெனவியையும், மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளைக் கண்டு தோன்றிய வுவகையைப்
பரிக்கலாற்றாத தலைமகனாற்றுதல்; தலைமகளை மகிழ்வித்தலுமாம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மாவின் வடுவகிரை ஒத்த வரியையுடைத்தாகிய
நெடிய கண்ணியைத் தடுத்தற்கரிய அன்புடனே தளர்ச்சி நீங்கிச் சொன்னது.
செய்யுள்: இறைவனையும் தன்வசமாக்க வந்த காமனாரை வெற்றி செய்த திருநயனத்தை யுடையவன்
பெரும்பற்றப் புலியூரிடத்துப் பல கிரணங்களையும் உடைய ஆதித்தனாலே அடைக்கப்பட்ட தாமரைப் பூவாகிய
உம்முடைய கோயில் இதழாகிய கதவை நாமே (நீரே) திறந்து கொண்டோ நடந்தது. ஒரு துணையுமின்றியே
பரந்தவரையின் மேகலையைச் சாத்தப் படாமற் பிடித்துச் சிலம்பை ஒக்கக் கடுக்கி, மெத்தனாகி (?) அர்த்த
ராத்திரியில் வந்து அவதரித்த விருப்பினது எது தான்?
என்ன சீதேவியினால் எல்லாரும் தங்குறை முடிப்ப, நம் பக்கலிலே வரு ........த்தலையல்லது
நாம் நடந்த காரணம் என் என்றபடி. 164
18. மருங்கணைதல்*
-------------------
* பேரின்பப் பொருள் : இன்பங் கனங்கண் டின்பனுபவித்தது
மருங்கணைதல் என்பது பெரும்பான்மை கூறக்கேட்ட தலைமகள் பெருநாணின ளாதலிற் றன்முன்
னிற்கலாற்றாது நாணித் தலையிறைஞ்சி வருந்தா நிற்பச், சென்று சார்தலாகாமையிற் றனதாதரவு மிகவால்
அவ்வருத்தந் தணிப்பான் போன்று, முலையொடு முனிந்து, 'அவளிறுமருங் குறாங்கிச் சென்றணையா நிற்றல்'
அதற்குச் செய்யுள்:-
அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிக இங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே.
அன்பு மிகுதியி னளவளா யவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந் துரைத்தது.
இதன் பொருள்: அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து- குழற்க ணகிற்புகை விம்ம ஆராயப்பட்ட
மலர்களை வேய்ந்து: அஞ்சனம் எழுதத் தகிலும்- கண்மலர்க் கஞ்சன மெழுதத் தகுவ ளாயினும்; தனி வடம்
பூட்டத்தகாள் - ஒரு தனிவடத்தைப் பூட்டத் தகுவாளல்லள்; சங்கரன் புலியூர் இகலும் அவரின்- அதனைப்
பூட்டுதலேயன்றிச் சங்கரனது புலியூரின் பெருமையை யுணராது அதனோடு மாறுபடுவாரைப்போல:
தளரும் இத்தேம்பல் இடைஞெமியப் புகிலும்- தளராநின்ற இத்தேய்தலையுடைய இடைநெரிந் தொடியப்புகினும்;
புணர் முலை இங்ஙனே மிக இறுமாக்கும் - அதனை யுணராது இப்புணர்ந்த முலைகள் இவ்வண்ணமே மிகவும்
விம்மா நின்றன; இஃதென்னாய் முடியும்! எ-று.
தேம்பலிடை: இருபெயர்ப் பண்புத் தொகையெனினுமையும், ஆய்மலராய்ந்தென்பது பாடமாயின்,
ஆராய்ந்து சூட்டியெனச் சூட்டுதலை ஆற்றலான் வருவித்துரைக்க. புகலுமென்பது பாடமாயிற் புகுதலுமென
வுரைக்க. பிற பாடமோ துவாருமுளர். அளவளா யென்பது மிகுதிக்கணிரட்டித்து வந்தது. அளாயென்பதனைச்
செய்தென்னும் பொருட்டாக்கி அளவுதலைச் செய்வென்றுரைப்பாருமுளர், மெய்ப்பாடு: அது.
பயன் : தலைமகளைச் சார்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தன்னுடைய அன்பினது மிகுதியினாலே மிகவும் கலந்தவளை,
அழகிதாகிய பொன்புனையப் பட்ட வேலினை உடையவன் மகிழ்ந்து சொன்னது.
செய்யுள்: அகிற்புகையை நிறைய ஊட்டி, அழகிய மலர்களைச் சூடிக்கண்ணுக்கு அஞ்சன மெழுத
இம்மாத்திரம் பொறுத்தாளாயினும் எகரவல்லி [?] வடம் பூட்டவும் இடை பொறுக்கும் தகுதியுடையாளல்லள் .
சிவனுடைய பெரும்பற்றப் புலியூருடனே மாறுபடுவார் மெலிவது போலத் தளரா நின்ற தேம்புதலையுடைய
இடை ஒடியா புகினும் ஒடியா திருக்கினும் தம்மிற் புணர்ந்த சோடு சேர்ந்த தனங்கள் மிகவும் இங்ஙனே
இறுமாப்புடைத் தானவை, (புகலும் என்பது இவர் பாடம்).
என்று, இடையைத் தாங்குவாரைப் போலே சென்று சேர்ந்தது. 166
9. முகங்கண்டு மகிழ்தல்*
-------------------------
*பேரின்பப் பொருள் : திருமேனி கண்டின் பதுவாய்த் தேறியது.
முகங்கண்டு மகிழ்தல் என்பது மருங்கணை விறுதிக்கட் டலைமகளது முகமகிழ்ச்சிகண்டு,
"இவளும் யானும் மலருமதியு' மெனத் தலைமகன் றன்னயப் புணர்த்தி மகிழா நிற்றல். அதற்குச் செய்யுள்:
அழுந்தேன் நரகத் தியானென்
றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ் **பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குருஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே
முகையவீழ்குழலி முகமதிகண்டு
திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.
** பா-ம் - உமிழ்.
இதன் பொருள் : யான் நரகத்து அழுந்தேன் என்று இருப்ப-யானினி நரகத்திற் புக்கழுந்தேனென்று
செம்மாந்திருக்கும் வண்ணம்; வந்து ஆண்டு கொண்ட செழுந்தேன் திகழ் பொழில் தில்லைப்புறவில் -
தானே வந்தாண்டு கொண்ட செழுந்தேன் போல்வானது விளங்கும் பொழிலையுடைய தில்லையைச்
சூழ்ந்த இளங்காட்டில்; செறுவகத்த கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள் -செய்யின் கண்ணவாகிய
கொழுவிய தேனையும் மலரா நின்ற வாயையுமுடைய குமுதமலர் இவள்; யான்குரூஉச் சுடர் கொண்டு
எழுந்து ஆங்கது மலர்த்தும் உயர்வானத்து இளமதி-யான் நிறத்தையுடைய நிலாவைக் கொண்டெழுந்து
அக்குமுதத்தை மலர்த்தும் உயர்ந்த வானத்தின் கட்டிகழும் முதிராமதி எ-று.
நரகமென்றது ஈண்டுப்பிறவியை; வீடுபேற்றின்பத்தோடு சார்த்த நரகமுஞ் சுவர்க்கமுமொரு
நிகரனவாகலின், நரகமென்றார். ஆண்டு கொண்டானென்பது பாடமாயிற் செழுந்தேனைப் பொழிலின்
மேலேற்றுக. செறு- நீர் நிலையுமாம், வாய்- முகம். மலர்வாய்க்குமுத மென்றது கிண் கிணிவாய்க்
கொள்ளு நிலைமையை. அதனாலிவளது பருவம் விளங்கும் குருஉச்சுடர் கொண்டு மலர்த்துமெனக்
கூட்டிக் குரூஉச் சுடரான் மலர்த்துமென் றுரைப்பினுமமையும் . அதனால், தலைப்பெய்தமையானன்றிக்
கண்ட துணையான் அவண் மகிழ்தலைக் கூறினானாம். இவ்வின்பம் வழிமுறையாற் பெருகுமென்பது
போதர, இளமதி யென்றான். மெய்ப்பாடு: அது. பயன்: நயப்புணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அரு(ம்பு) அவிழ்கின்ற கூந்தலையுடையவள் முகமாகிய
மதியினைக் கண்டு பிரகாசத்தினையுடைய வேலையுள்ள நாயகன் விரும்பிச் சொன்னது.
செய்யுள்: யான் இனி ஒருநாளும் நரகிற் புக்கழுந்தேனென்று செம்மாந்திருக்கும்படி என்னைத்தானே
வந்தடிமைகொண்ட அழகிய தேனை யொத்த இனியவன். அவனுடைய சிறந்த பொழில் சூழப்பட்ட
பெரும்பற்றப் புலியூரில் புறச்சோலையில் செய்யிடத்தே நிற்கிற அழகிய தேன் மலருகின்ற வாயினையுடைய
ஆம்பற் பூவையொப்பாளிவள்; நான் நிறமுடைத்தாகிய கிரணங்களைக் கொண்டு உதித்து அவ்வாம்பற்
பூத்தன்னையும் மலரப்பண்ணும் உயர்ந்த ஆகாயத்தின் இளைய மாமதியொப்பேன்.
என்று பொருளாய். அத்தேன் மலருகின்ற ஆம்பல் என்ற படியாலே, நாயகிக்கு அதைத் தானறியாதபடி
தோன்றும் நாண்மதியை ஒப்பென்ற படியாலே, நாளுக்கு நாளும் இவ்வன்பு வளருமென்றும், அவ் வாம்பற்
பூத்தன்னையே மலர்த்தும் மதி என்றபடியாலே இவளை வரைந்து கொண்டு மகிழ்விக்க வேண்டுமென்னும்
நினைவொழிய வேறு நினைவுடையேனல்லன் என்று படும். 166
20. பள்ளியிடத் துய்த்தல்*
-----------------------
* பேரின்பப் பொருள்: அடியரிடத் தன்பா யமர்தலுயிர் கண்டது.
பள்ளியிடத்துய்த்தல் என்பது மலர்மதிமேல் வைத்துக்கூறி மகிழ்வுற்றுப் பிரியலுறா நின்றவன்
'இப்பொழிலிடையினித் தனியே நின்று நீலப் பூக்களைக் கொய்யாது. நின்னரிய தோழியோடு ஆயத்திடைச்
சென்று துயில் பயில்வாய்' எனத் தலைமகளைப் பள்ளியிடத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சுரும்புறு நீலங் கொய்யல்
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே
பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது
இதன் பொருள்: அமரர் ஒன்னார் இரும்பு உறு மாமதில் பொன் இஞ்சி வெள்ளிப் புரிசை - அமரர்க்குப்
பகைவராயினாருடைய இரும்பு பொருந்திய பெரிய மதிலையுடையவூரும் பொன்னிஞ்சியை யுடையவூரும்,
வெள்ளிப்புரிசையை யுடையவூரும் அன்று ஓர் துரும்பு உறச் செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ்
பொழிற்கு; அன்று ஒரு துரும்பின் றன்மையையுற எரித்த வெற்றியையுடைய வெம்பிரானது தில்லைக்கட்
சூழ்ந்த பொழிலிடத்து; தமி நின்று தனியே நின்று; சுரும்பு உறு நீலம் கொய்யல்-சுரும்பு பொருந்து
நீலப்பூக்களைக் கொய்யா தொழி; அரும் பெறல் தோழி யொடு ஆயத்து நாப்பண் துயில் பயில்-அரிய
பெறுதலையுடைய நின்றோழியோடு ஆயத்தினிடைத் துயிலைப் பயில்வாயாக எ-று
மோ-அசை. சுரும்புறுநீலம் - மேலாற்சுரும்பு வந்து பொருந்து நீலமலர்; எதிர்காலவினை;
"மென்னனையாய் மறியே பறியேல்” (திருக்கோவையார், 125) என்றது போலக் கொள்க. சூழ்பொழில் -
தில்லையைச் சூழ்ந்த பொழிலே யென்பதூஉம் பாடம், மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பிரிவதாக நினைத்த பெரிய மலைமேலுண்டாகிய
நாட்டினையுடையவன் அழகிய ஆபரணங்களையுடைய பாங்கியுடனே நித்திரை கொள்கென்று சொன்னது.
செய்யுள் : தேவர்களுக்குப் பகைவராகிய அசுரருடைய இரும்பால் (ஆகிய) மிகப்பெரிய மதிலும்,
பொன்மதிலும், வெள்ளிமதிலும் அன்று ஓர் துரும்பின் தன்மையாயுறும்படி அழித்த வெற்றியினையுடைய
எம்முடைய சுவாமியுடைய பெரும்பற்றப் புலியூரைச் சூழ்ந்த பொழிலிடத்தே, வண்டுகள் பொருந்தின
நீலப்பூக்களைத் தனியே நின்று கொய்யா தொழிவாயாக: பெறுதற்கரிய தோழியுடனே ஆய்க்கூட்டத்தின்
நடுவே உறங்குவாயாக.
மோ-அசைநிலை
21. வரவு விலக்கல்*
------------------
*பேரின்பப் பொருள்: "அருளுயிர்க் குச்சிவத் தருமை கூறியது''
வரவு விலக்கல் என்பது தோழி தலைமகளைப் பள்ளியிடத்துச் சேர்த்திச் சென்று, 'இக்கல்லதர்
இவள் காரணமாக நினக்கெளிதாயிற்று; ஆயினும் இனி யிவ்வாறொழுகற் பாலையல்லை' யென
வரைவு பயப்பக்கூறித் தலைமகனை வரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
நற்பகற் சோமன் எரிதரு
நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.
தெய்வமன் னாளைத் திருந்தமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவு விலக்கியது.
இதன் பொருள் : வெற்பகச் சோலையின் வேய் வளர் தீ- வெற்பிடத்துச் சோலையின்க ணுண்டாகிய
வேய்க்கட்பிறந்து பிறந்து வளருந் தீ; விண்ணின் நின்ற கற்பகச் சோலை சென்று கதுவும் கல்நாட-விண்ணின்
கணின்ற கற்பகச் சோலையைச் சென்று பற்று மலை நாடனே; இக்கல் அதர்- இக்கல்லையுடைய சிறுநெறி;
நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன - நல்ல ஞாயிறுந் திங்களுந் தீயு முண்டாகிய மூன்று
நாட்டத்தையு முடையவனது தில்லையை யொக்கும்; வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் - வில்லைப்
பகைத்து அதனின்மிகும் புருவத்தையுடைய இவள் காரணமாக; மெய்யே எளிது - மெய்யாக வெளிதாயிற்று;
ஆயினும், இனி நீ வரற்பாலையல்லை எ-று.
செவ்வெண்ணின்றொகை விகாரவகையாற் றொக்கு நின்றது. உம்மைத் தொகை யெனினு மமையும்.
தில்லையன்ன விவளென வியையும்: இவளின் மெய்யே யெளிதேயென்பதற்கு இவள் காரணமாக வெளிதாமோ
எளிதன்றென வெதிர்மறை யாக்கி யுரைப்பினு மமையும். வேயிற் பிறந்ததீ ஆண்டடங்காது சென்று
தேவருலகத்தினின்ற கற்பகச் சோலையைக் கதுவினாற் போல, நின்வரவினால் அயலாரிடத்துப் பிறந்த
அலர்பெருகி நின்னூருமறியப் பரந்து நின்பெருமையைச் சிதைக்குமென உள்ளுறை வகையான்
அலரறிவுறுத்தவாறு கண்டுகொள்க. இவனுக்குப் பெருமையாவது இவன் வழியிற் பிதிர்கள் கொண்டாட்டம்
சிதைத்தலாவது இகலோக பரலோக மிரண்டையுஞ் சிதைத்தல். மூங்கிலிற் பிறந்த தீத் தன்னையுஞ் சுட்டுத்
தன்னுடைய சுற்றத்தையுஞ் சுட்டுக் கற்பகச் சோலையைக் கதுவினாற் போல என்க. நற்பகற்சோமன்,
விகாரவகையான் வலிந்து நின்றது. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரவு விலக்கி வரைவு கடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : (இதற்கு உரை ஏட்டில் இல்லை )
செய்யுள்: நல்ல ஆதித்தனும், சந்திரனும், அக்கினியும் இவை மூன்றின் குணங்களையும் தருகின்ற
நயனங்களை யுடையவனின் பெரும் பற்றப் புலியூரை யொத்த வில்லுடனே மாறுகொண்ட மேலாகிற
புருவங்களை யுடையவள் காரணமாக, மலையிடத்து மேலுண்டாகிய (ய) மூங்கிற் சோலையிலே பட்ட
நெருப்புச் சென்று தெய்வலோகத்திலே நின்ற கற்பகக்காவைப் பற்றுகிற மலைநாடனே!
இக்கல்லுடைத்தாகிய வழி உண்மையாக எளிதே.
எனவே, இப்படி அரியவழி வாராதொழிக என்றவாறு, என்று பொருளாய், மூங்கிலிற் பிறந்த
நெருப்பு மூங்கில் நின்ற வனத்தையும் சுட்டுப் பரந்த தெய்வலோகத்திலே நின்ற கற்பக மரத்ததயும்
சென்று பற்றுகின்ற நாடன் என்கையாலே. இவளிடத்தே யுண்டாகிய களவொழுக்கம் இவள் பிறந்த
குடியுமழிந்து உன் பெருமை தனக்குமழிவாகப் புகாநின்ற தென்றபடி. 168
22 ஆற்றாதுரைத்தல் *
---------------------
*பேரின்பப் பொருள்: 'இன்பமே யன்றி யுயிரிலை யென்றது.'
ஆற்றாதுரைத்தல் என்பது வரைவுகடாவி வரவுவிலக்கின தோழிக்கு வரைவுடம்படாது,
பின்னுங் களவொழுக்கம் வேண்டி, 'யான் முன் செய்த தவப்பயனால் எனக்கெய்தலாம் வண்ணந்
திருமகளிவ்வாறு கொடிச்சியா யிருந்தாளெனக் கருதியே எனதின்னுயிர் நிற்பது; இத்தன்மையாளை
யான் வரையுந் துணை யெளியளாக நீ கூறுகின்றதென்' னெனத் தலை மகன் றனதாற்றாமை
தோன்றக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
பைவா யரவரை அம்பலத்
தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே.
வரைவு கடாய வாணுதற் றோழிக்
கருவரை நாடன் ஆற்றா துரைத்தது
இதன் பொருள்: பை வாய் அரவு அரை - படத்தையும் பெரிய வாயையுமுடைய அரவையணிந்த
வரையையுடைய; அம்பலத்து எம்பரன் பைங்கயிலை- அம்பலத்தின் கணுளனாகிய எம்முடைய பரனது
சோலையாற் பசியகைலைக் கணுளளாகிய; செவ்வாய்க் கருங்கண் பெரும் பணைத் தோள் சிற்றிடைக்
கொடியை -செய்ய வாயையுங் கரிய கண்ணையும் பெரிய பணை போலுந் தோள்களையுஞ் சிறிய
விடையையு முடைய கொடி போல்வாளை: மொய்வார் கமலத்து முற்றிழை-பெரிதாகிய தாளானெடிய
கமலத்து வாழுந் திருமகளாகிய முற்றிழை; முன்னை என் தவத்தால்- முற்பிறப்பின்கணுண்டாகிய
எனது தவப்பயனால்; இன்று இவ்வாறு இருக்கும் என்றே- எனக் கெய்தலாம் வண்ணம் இன்றிவ்வாறு
கொடிச்சியா யிருக்கு மென்று கருதியே; என்இன் உயிர் என்றும் நிற்பது- என்னின்னுயிர் என்றும் நிற்பது:
இத்தன்மையாளை யான் வரையுந்துணை யெளியளாக நீ கூறுகின்றதென்! எ-று.
எம்பரனென்பதற்கு முன்னுரைத் துரைக்க (திருக்கோவையார், 99). கைலைக்கொடி யெனவியையும்.
கொடியையென்னு மிரண்டாவது. என்று கருதியென வெஞ்சி நின்ற வினையொடு முடியும். மெய்ப்பாடு: உவகை.
பயன்: வரைவு உடம்படாமை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: *விரைவின் மூறக்கின வொளி சிறந்த நெற்றியினையுடைய
தோழிக்கு நறுநாற்றமுடைத்தாகிய பூமாலையினை யுடையவன் அவர் ... பார்த்துச் சொன்னது.
*கொளுவிற்கு ஏட்டில் காணப்படும் உரை பொருந்தாமல் உள்ளது.
படத்தையும் பெரிய வாயையுமுடைய அரவத்தைத் திருவரை ஞாணாக உடைய திருவம்பலத்தில்
எம்முடைய மேலானவன் சோலையாற் பச்சென்ற அவனுடைய கயிலையில், சிவந்த வாயினையும்
கரிய கண்ணினையும் பெரிய வேயொத்த தோள்களையும் சிறிய இடையினையும் உடைய வல்லி சாதத்தை
யொப்பாளைப் பெருத்து நீண்ட தாமரைப் பூவிலே யிருக்கிற தொழில் முற்றுப் பெற்ற ஆபரணங்களையுமுடைய
சீதேவியை நான் முன்பு செய்த புண்ணியத்தால் இப்படியே குறவர் மகளாய் இராநின்றாள்
என்றல்லவோ என்னுயிர் என்றும் நிலைபெறுகின்றது.
ஆதலால், நான் வரைந்து கொள்ளாதிருப்பனோ என்றது. இத்தன்மையாளை வரைந்து கொள்ள
எளிதாகக் கூறுகின்றது ஏன்? என்றுமாம். 169
23. இரக்கங் கூறி வரைவு கடாதல் *
-------------------------------
* பேரின்பப் பொருள் : 'கருணையே யின்பக் கனமென வுரைத்தது'
இரக்கங்கூறி வரைவு கடாதல் என்பது களவு விரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு 'நீ
செல்லுநெறிக்கண் நினக்கிடை யூறுண்டா மென்னு மச்சத்தால் அவளழுதிரங்கா நின்றா ளென்று,
நீ சென்றமையறிய நின்குறி காட்டுவாய்; எனத் தலைமகள திரக்கங்கூறி வரைவு கடாவா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
பைவா யரவும் மறியும்
மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண் முத்த மாலைகளே
அதிர்கழ லவன் அகன்றவழி
யெதிர்வதறியா திரங்கியுரைத்தது
இதன் பொருள் : மன்ன - மன்னனே ; இச் சிறியாள் பெரு மலர்க்கண் மை வார் குவளை - நீ
செல்லுநெறிக்கண் நினக்கிடையூறுண்டா மென்னுமச்சத்தால் இச்சிறியாளுடைய பெரியமலர்
போலுங் கண்களாகிய கருமையையுடைய நெடிய குவளைகள்; நீள் முத்த மாலைகள் விடும் - நீண்ட முத்த
மாலைகளைப் புறப்படவிடா நிற்கும், அதனான் நினக்கிடையூறின்மையை யிவளறிய; தில்லையின்
முன்னினக்கால் - நின்பதியாகிய தில்லை யெல்லையிற் சென்று கிட்டினால்; செவ்வாய் கருவயிர்ச் சேர்த்து -
நின் செவ்வாயைக் கரியகொம்பின் கட்சேர்த்தி யூதவேண்டும் எ-று, பைவாய் அரவும் மறியும் மழுவும் பயில்-
படத்தையும் பெரிய வாயையு முடைய அரவும் மான்மறியும் மழுவாளும் விடாது நிகழும்; மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லை-மலர் போலுங் கையையும் நெருங்கிய நெடியசடைகளானியன்ற
முடியையுமுடைய எல்லாப் பொருட்கு முன்னாயவனது தில்லையெனக் கூட்டுக.
குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கள் கோலத்தனாய் வருமாதலின் வயிர் கூறப்பட்டது. மலர்க்கணென்பது
உவமை கருதாது கண்ணென்னுந் துணையாய் நின்றது. கண்ணாகிய குவளைப் பெருமலரென்று கூட்டுவாரும்,
மலர்தலை யுடைய கண்ணென் பாருமுளர். மெய்ப்பாடு: அச்சம், பயன்: வரைவு கடாதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : ஆரவாரிக்கிற வீரக்கழலினையுடையவன் பிரிந்தவிடத்து,
அவனுக்குறும் கிலேசத்தை அறியாதே வருந்திச் சொன்னது.
செய்யுள்: படத்தையும் பெரிய வாயையுமுடைய பாம்பும், மான் மறியும், மழுவும் (வாளும்) வாழ்கிற
மலரையொத்த கைகளையுடைய, செறிந்து நீண்ட சடா மகுடத்தையு முடைய, எல்லாப் பொருள்களுக்கும்
முதல்வனானவனுடைய பெரும்பற்றப் புலியூரில் நீ போனவிடத்து, உன்னுடைய சிவந்த வாயிலே கரிய
கொம்பை வைப்பாயாக வேண்டும்; (என்ன, சிறிது ஊதுவாயாக என்றது) இந்த இளையவளுடைய
பெரிய மலரையொத்த கண்களாகிய நீண்ட நீலப்பூக்கள், மன்னனே! நீண்ட முத்து மாலைகளாகிய
கண்ணின் நீர்த்தாரை விடாநிற்கும்.
நீ வழியிலே வரும் ஏதத்துக்குப் பயப்படும். ஆதலால் நீ பெரும்பற்றப் புலியூரிலே சென்றமையறியும் படி
கரிய கொம்பைச் சிவந்த வாயிலே வைத்து ஊதுவாயாக வேண்டும். 170
24. நிலவு வெளிப்பட வருந்தல்*
----------------------------
*பேரின்பப் பொருள்: உயிர்க்கு மாயையு மொளியென் றிரங்கியது
நிலவு வெளிப்பட வருந்தல் என்பது இரக்கங்கூறி வரைவு கடாயதோழி, பிற்றை ஞான்று
அவனிரவுக் குறியிடை வந்து நிற்ப, நிலவு வெளிப்பட்டாற் சென்றெதிர்ப் பட மாட்டாமற் றாங்கள்
வருந்தாநின்றமை சிறைப்புறமாக மதியொடு புலந்து கூறாநிற்றல், அதற்குச் செய்யுள் :-
நாகம் தொழவெழில் அம்பலம்
நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே
தனிவே லவற்குத் தந்தளர் வறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது
இதன் பொருள்: நவில் வேற்கை எங்கள் நாகம் வர-பயிலப்பட்ட வேலையேந்திய கையையுடைய எங்கள்
யானை வர; நாம் எதிர்கொள்ளும் நள் இருள்வாய்-நாங்களெதிர் கொள்ளுஞ் செறிந்தவிருளிடத்து; நற ஆர் நாகம்
மலிபொழில்வாய் எழில் வாய்த்த நின் நாயகம்- அவ்விருளைச் சிதைத்துத் தேனார்ந்த நாகமலர் மலிந்த
பொழிலிடத்து நின்று நீ செய்கின்ற அழகுவாய்த்த நினது முதன்மை: மதியே-திங்காள்; மதியே-நினக்கறிவே;
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் நாகம் இது - பதஞ்சலியாகிய நாகந்தொழ
எழிலையுடைய வம்பலத்தை நண்ணிக் கூத்தைப் பயில்வானது மலை காணிஃது: இதனைக் கடைப்பிடிப்பாயாக எ-று.
நாகத்தான் விழுங்கப்படு நீ நாகந்தொழ வம்பலத்து நடம் பயில்வோனது மலைக்கட் புகுந்து
விளங்கி வீற்றிருத்தல் நினக்கு நன்றி பயவாதென்பது கருத்து. அறிவென்பது ஈண்டறிந்து செய்யப்படும்
காரியத்தை, தனிநாயகமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி.. பயன்: இடையீடறிவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : இணையிலாத வேலினை யுடையவர்க்குத் தங்களுடைய
தளர்ச்சியை அறியக் குளிர்ந்த மதியினுடைய விளக்கத்தைத் தோழி சொன்னது.
செய்யுள்: நாகமாகிய பதஞ்சலி மாமுனி தொழ அழகிய திருச்சிற்றம்பலத்தே பொருந்தித்
திருக்கூத்தாடியருளுகிறவனிடம் காண் இது; சந்திரனே! சந்திரனே! இது ஒரு புத்தி; தான் சிலித்த(?)
வேலைக் கையிலே உடைய யானையைப் போன்ற எங்கள் நாயகர் வர நாங்கள் புறப்பட்டு எதிர் கொள்ளுகிற
செறிந்த இருளிடத்தே தேனார்ந்த சுரபுன்னைகள் மிக்க பொழிலிடத்து அழகு வாய்ந்த உன்னுடைய முதன்மை.
(சந்திரனே! சந்திரனே! இது ஒரு புத்திகாண்.)
என்று பொருளாய், உன்னை வருத்துகிற பாம்பாலும் தொழப் படுவான் ஒருவன் மலையானால்,
இந்த ஒளியெல்லாம் பொறாது சற்றுக் கண் கூசி நடக்க வேண்டும் என்றது . 171
25. அல்லகுறி யறிவித்தல்*
------------------------
* பேரின்பப் பொருள்: "உன் பரிவின் புக்குறா தென்றுரைத்தது"
அல்லகுறி யறிவித்தல் என்பது குறியல்லாத குறியெதிர்ப் பட்டு மீண்டமை, பிற்றை ஞான்று
தலைமகன் சிறைப்புறம் வந்து நிற்பத் தோழி தலைமகளுக்குக் கூறுவாள் போன்று அன்னத்தின்
மேல் வைத்து அறிவியா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
மின்னங் கலருஞ் சடைமுடி
யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்று முற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே.
வல்லி யன்னவ ளல்ல குறிப்பொடு
அறைப்பினற் றுறைவற்குச் சிறைப்புறத் துரைத்தது .
இதன் பொருள்: மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய் - ஒளி யவ்விடத்து
விரியுஞ் சடையானியன்ற முடியை யுடையவனது அகன்ற தில்லையையொப்பாய்; எழில் முத்தம் தொத்தி -
எழிலையுடைய அரும்பாகிய முத்தந்தொத்தி; அங்கு பொன் அலர் புன்னைச் சேக்கையின் வாய்-
அவ்விடத்துத் தாதாகிய பொன்மலரும் புன்னைக்கணுண்டாகிய தஞ்சேக்கையிடத்து ; அன்னம் முற்றும்
புலம்புற்றுப் புலரும் அளவும் துயிலாது அழுங்கின- அன்னமெல்லாம் துன்புற்றுப் புலருமளவுந் துயிலாது
ஆரவாரித்தன; அங்கு எய்தியது அலமரல் என் - அவ்விடத் தெய்தியதாகிய அலமரலென்னாம்?
அறிகின்றிலேன் எ-று.
மின்னங்கலருமென்பதற்குமின்னவ் விடத்தலர்ந்தாற் போலுஞ் சடையெனினு மமையும்,
என்னங்கலமர லெய்தியதோ வென்பதற்கு என்ன வலமரலாண்டெய்திற்றோ வென்று கூட்டி
யுரைப்பினு மமையும். இப்பொருட்கு என்னவென்பது கடைக் குறைந்து நின்றது, முத்தந் தொத்துதலும்
பொன் மலர்தலுமாகிய உறுப்பின் றொழில் முதன்மேலேறி நின்றன. சேக்கையின் வாயழுங்கின
னெவியையும், நெடும்பொழுது துயின்றிலவென்பாள் புலருமளவு மென்றாள், பிற்றைஞான்று
பகற்குறிவந்து நிற்பக் கூறினாளெனினு மமையும். அழுங்கல் - ............னினுமமையும்.
அறைப்புனல் - அறைதலையுடைய புனல், மெய்ப்பாடு: அழுகை; பயன்: அல்லகுறிப்பட்டமை
தலைமகற் குணர்த்துதல், இனித் திணை நெய்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வல்லி சாதம் போன்றவள் அல்ல குறிப்பட்டபடியை
ஆரவாரிக்கின்ற நீரையுடைத்தாகிய துறையை உற்றவற்குச் சிறைப்புறமாகச் சொன்னது.
செய்யுள் : பின் அவ்விடத்தே பெருமை பெற்ற சடைமுடியையுடைய வனுடைய பெரும் பற்றப்
புலியூரை யொப்பாய் ! அவ்விடத்து என்ன அலமாப்பை உற்றது காண்: அழகிய முத்துப் போல வரும் படி
அவ்விடத்துப் பொன் போல் வளர்கின்ற புன்னையில் தன் சேக்கையிடத்துத் தனிமையுற்றும்
அன்னங்களெல்லாம் விடியுமளவும் உறங்காதே கிலேசித்தன. (அவை என்ன அலமாப்பையுற்றன காண்,)
பிற்றை ஞான்று பகற்குறி வந்து நிற்கக் கூறினாளெனவுமமையும். 172
26. கடலிடை வைத்துத் துயரறிவித்தல்*
-----------------------------------
*'பேரின்பப் பொருள் : 'அருளுயிர் மோகங் கடலொடியம்பியது.'
கடலிடை வைத்துத் துயரறிவித்தல் என்பது தலைமகளிரவுறு துயரம், தலைமகன்
சிறைப்புறமாக, 'இவள் வாட நீயிரையா நின்றாய்; இது நினக்கு நன்றோ'வெனத் தோழி கடலொடு
புலந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்: -
சோத்துன் னடியமென் றோரைக்
குழுமித்தொல் வானவர் சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன் தில்லை
யன்னா ளிவள் துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
மதியும் இழந்தவம் நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
நோக்காய் பெருங்கடலே.
எறிகடல்மேல்வைத் திரவருதுயரம்
அறைகழலவற் கறியவுரைத்தது
இதன் பொருள்: பெருங்கடலே - பெருங்கடலே ; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து-
முற்காலத்து மிவ்வா றொலித்து உன்னமிர்தத்தையுந் திருவையுந் திங்களையுமிழந்து வைத்தும் :
நீ பேர்த்தும் அவம் இவள் துவள இரைப்பு ஒழியாய் - பெயர்த்து மொருபனின்றியே இவள் வாட
இரையா நின்றாய்; பழி நோக்காய்; காரணமின்றிப் பிறரை வருத்துதலான் வரும் பழியையு
நோக்குகின்றிலை; நினக்கிது நன்றோ? எ-று. சோத்து உன் அடியம் என்றோரை-சோத்தம் உன்னடிய
மென்றொருகாற் சொன்னாரை; தொல் வானவர் குழுமிச் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் தில்லை
அன்னாள் இவள்- பழையராகிய வானவர் குழுமிப் பரிவாரமாய்ச் சூழ்ந்து நின்றேத்தும் வண்ணம்
நிற்குமவனது தில்லை யன்னாளாகிய இவளெனக் கூட்டுக.
சோத்தம் - இழிந்தார் செய்யுமஞ்சலி; அது சோத்தெனக் எனக் கடைக்குறைந்து நின்றது.
சோத்த மடியமென்ப தூஉம், அடியமெனிற் குழுமித் தொல்லை வானவ ரென்பதூஉம், குழீஇத்
தொல்லை வானவர் சூழ்ந்தேத்தும்படி வைப்பவ னென்பதூஉம் பாடம். திருவு மதியு மென்பது
செல்வமு மறிவுமென வேறுமொரு பொருடோன்ற நின்றதென்பாருமுளர். இரா குறுகி நின்றது.
மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கரையுடனே மோதுகிற திரையைச் சொல்லும்
வார்த்தையின்மேல் வைத்து, இரவிடத்துண்டாகிய கிலேசத்தை ஆரவாரிக்கிற வீரக்கழலினை
யுடையவற்கு அறியும்படி சொன்னது.
செய்யுள்: சோத்தம் என்பது இழிந்தார் சொல்லும் அஞ்சலி வாய்ப்பாடு . அது சோத்தென்று
கடை குறைந்து நின்றது.
அதனைச் சொல்லி "உன் அடியோம்' என்னின், பழைய தேவர்களெல்லாம் திரண்டு அவர்களுக்குப்
பரிவாரமாகச் சூழ்ந்து தன்னைப் புகழும்படி திருவம்பலத்தே நிற்கின்றவன், அவனுடைய பெரும்பற்றப்
புலியூரை யொப்பாளாகிய இவள் வாட முன்பும் பயனின்றியே ஆரவாரித்து, உன்னிடத்துண்டான
அமுதத்தினையும், மதியையும், சீதேவியையும் பிறர் பறித்துக் கொள்ள நீயழிந்து ஒருகாரணமுமின்றியே
பின்னையும் உன்னுடைய ஆரவாரம் அடங்குவதில்லை! பிறரை வருத்துவது பழியென விசாரிக்கிறாயில்லை:
பெரிய கடலே ! உன்பெருமை யெல்லாம் கண்டேமன்றே .
என்றது, ஒருவருடைய உண்மையையும் செல்வத்தையும் புத்தியையும் ஒருவர் பறித்துக் கொண்டாற்
பின்னை அடங்குவார்கள், அது உனக்கில்லை யான தின்றே. 173
27. காம மிக்க கழிபடர் கிளவி*
---------------------------
*பேரின்பப் பொருள்: " உயிர்மேகங் கண்டருளு வகையொடியம்பியது."
காமமிக்க கழிபடர்கிளவி என்பது தலைமகனைக் காணலுற்று வருந்தா நின்ற தலைமகள், தனது
வேட்கை மிகவாற் கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து, நீங்கள் என்னை ஏதுற்றழிகின்றாயென்று
ஒருகால் வினவு கின்றிலீர்: இதுவோ நுங்காதன்மை 'யென அவற்றொடு புலந்து கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
மாதுற்ற மேனி வரையுற்ற
வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே,
தாமமிக்க தாழ்குழலேழை
காமமிக்க கழிபடர் கிளவி.
இதன் பொருள். மாது உற்ற மேனிவரை உற்ற வில்லி தில்லைநகர் சூழ்- மாது பொருந்திய
மேனியையுடைய வரையாகிய மிக்க வில்லையுடையவனது தில்லை நகரைச் சூழ்ந்த;
போது உற்ற பூம்பொழில்காள்- போது பொருந்திய மலரினை யுடைய பொழில்காள்;
கழிகாள் - அப்பொழிலைச் சூழ்ந்த கழிகாள்; எழிற் புள்ளினங்காள் - அக்கழிகளிற் பயிலுமெழிலை
யுடைய புள்ளினங்காள்; ஏது உற்று அழிதி என்னீர் - என்னை நீங்கள் யாதனை யுற்றழிகின்றாயென்று
ஒரு காற் கூறுகின்றிலீர்; ஈர்ந்துறைவர்க்கு இவள் தீது உற்றது என்னுக்கு என்னீர் - குளிர்ந்த துறைவர்க்கு
இவள் தீதுற்ற தெற்றிற்கென்று கூறுகின்றிலீர் ; இதுவோ நன்மை-இதுவோ நம்மாட்டு நுங் காதன்மை;
செப்புமின் - சொல்லுமின் எ - று.
மாதுற்ற மேனியென்பது ஆகு பெயராய் மேனியையுடையான் மேனின்றதெனினு மமையும் .
வரையுற்ற வில்லியென்பதற்கு வரைத் தன்மையைப் பொருந்திய வில்லையுடையா னெனினுமமையும்.
வரைத் தன்மையைப் பொருந்துதல் வரையாயிருத்தல். போது - பேரரும்பு. மன்னு மென்பதூஉம்
இவளோவென்னு மோகாரமும் அசைநிலை. மன்னுந் தீதுற்றதெனக் கூட்டி மிகுதிக்கண் வந்ததென்பாருமுளர்.
இதுவோ நன்மையென்பதற்குத் தில்லையைச் சூழ்ந்தவிடத் துள்ளீராகலின் உமக்குண்டாகிய சிறப்புடைமை
யிதுவோ வெனினு மமையும். அழுதியென்பதூஉம் பாடம், ஏழையது கிளவியென வியையும்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மாலை மிக்க நீண்ட கூந்தலையுடைய நாயகி அன்புமிக்கு
மிகவும் சொன்னது.
செய்யுள்: சங்கரி பொருந்தின திருமேனியையுடையவன். மலையாகிய மிக்க வில்லையுடையவன்.
(மென்மையால் ஒருமிசை ஈந்திருப்பவன் - வன்மையால் வரையாகிய வில்லுக்கிசைந்திருப்பவன்).
அவனுடைய பெரும்பற்றப் புலியூராகிய நகரியைச் சூழ்ந்த செவ்விய அரும்பு பொருந்திப் பூத்த பொழில்காள்!
அப்பொழிலாற் சூழப்பட்ட கழிகாள்! கழியிடமாக வாழ்கிற புட்சாதிகாள்! 'என்ன கிலேசமுற்று அழுகிறாய் ?'
என்று என்னைக் கேளீர். நிலை பெற்ற குளிர்ந்த துறையை யுடையவர்க்கு இவள் மிகவும் தீங்குற்றது
எது காரணமென்று அவர்க்குச் சொல்லீர் . பெரும்பற்றப் புலியூரைச் சேர்ந்தும் ...கள் பெற்ற நன்மையைச்
சொல்லுங்கள். 174
28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி *
-----------------------------------
* பேரின்பப் பொருள் : 'உயிர்பேறு மோகமுற வற்றியம்பியது"
காப்புச் சிறைமிக்க கையறுகிளவி என்பது காமமிக் கெதிர்ப்பட விரும்பா நின்ற தலைமகள்,
"இவ்விடையீடெல்லா நீந்தி ஒரு வழியான் வந்தாராயினும் இஞ்ஞானி குரை தரா நின்றமையின் யாமிவரை
யெதிர்ப்படுதலரி'தெனக் காப்புச்சிறை மிக்கு வருந்தா நிற்றல் .அதற்குச் செய்யுள் :-
இன்னற வார்பொழிற் றில்லை
நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமில் லோருந்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.
மெய்யுறு காவலிற் கையறு கிளவி.
இதன் பொருள்: இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில்-இனிய நறவார்ந்த
பொழிலையுடைய தில்லைநகர்க் கிறைவனாகியவனது சீரையுடைய விழவின் கண் பல் நிறமாலைத்
தொகை பகலாம் - மாணிக்க முதலாயினவற்றாற் பல நிறத்தையுடையவாகிய மாலைகளின்
றொகைகளான் இராப் பொழுதும் இருளின் துன் அற உய்க்கும்- அதுவேயு மன்றிப் பலவாகிய விளக்கு
இருளின் பொருந்துதலறத் துரக்கும்; இல்லோரும் துயிலின் - இவ்விடையீடேயன்றி ஒருபொழுதும் துயிலாத
இல்லோரு மொருகாற் றுயில்வராயின்; துறைவர் கொன் மிக்க நிறவேலொடு வந்திடின் -துறைவர்
அச்சத்தைக் செய்யு மிக்க நிறத்தையுடைய வேலொடொருகால் வருவாராயின்; ஞாளி குரை தரும்-
அப்பொழுது நாய் குரையா நிற்கும். அதனால், அவரை நாமெதிர்ப்படுதலரிது போலும் எ-று.
மாலைத்தொகையும் இராப்பகலாகா நிற்கும் பல்விளக்கும் இருளைத் துரக்குமென்
றுரைப்பினுமமையும். இல்லோருந் துயிலினென் றதனான். அதுவுமோ ரிடையீடு கூறப்பட்டதாம்.
மிக்கவே லென்றியைப்பினு மமையும். மெய்யுறு காவல் - பிழையாத மிக்க காவல், இவையிரண்டற்கும்
மெய்ப்பாடு: அழுகை. இவற்றைத் தலைமகன் கேட்டபின் வரைவானாம்; தோழி கேட்ட பின் வரைவானாம்;
தோழி கேட்பின் வரைவு கடாவு வாளாம்; யாரும் கேட்பாரில்லை யாயின் அயர்வுயிர்த்துத்
தானே ஆற்றுதல் பயன்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தப்பாதே காவலாலே செயலற்றுச் சொன்னது.
செய்யுள் : செவ்வித் தேனார்ந்த பொழில் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிறைவனுடைய
சீரிய திருநாளில் பலநிறமுடைத்தாகிய நவரத்தின மாலையின் திரள்களாலே இரவு பகலாகா நிற்கும்;
பல விளக்குகளும் இருளினுடைய ஒங்கலைத் துரக்கும். இல்லுள்ளாரும் உறங்குதலுற்றிருப்பார்கள்.
துறையை யுடையவனே மிக்க அச்சத்தைச் செய்கிற வேலோடே வரில் நாயானது கத்தா நிற்கும்.
இவ் விடையீடெல்லாம் கழிந்தாலல்லவோ அவர்க்கு வரலாவது என்று செயலற்றுச் சொன்னது.
மாலைத்தொகை இராப் பகலெல்லாம் விளக்கைத் துரக்குமெனினு மமையும். இல்லோரும் துயிலுற்றுறைவர்
என்ன, அவர்களும் உறங்காமை தோன்றும். 175
29. ஆறு பார்த்துற்ற வச்சக்கிளவி*
------------------------------
*பேரின்பப் பொருள்: "இன்பத் தின்வழி யேகவரி தென்றது"
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி என்பது சிறைப்புறமாகத் தலைமகள் - ஆற்றாமை கூறக்கேட்ட
தலைமகன், குறியிடைச் சென்று நிற்பத், தோழி யெதிர்ப்பட்டு, 'நீ கான்யாறு பலவு நீந்திக் கைவேல்
துணையாக அஞ்சாது வந்தால், யாங்களிச் சோலையிடத் துண்டாகிய தெய்வத்துக்கஞ்சுவேம்;
அதனாலிவ் விருளிடை வரற்பாலையல்லை'யெனத் தங்களச்சங்கூறி வரவு விலக்கா நிற்றல்,
அதற்குச் செய்யுள்:-
தாருறு கொன்றையன் தில்லைச்
சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தால் நினது
போருறு வேல் வயப் பொங்குரும்
அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே,
நாறு வார்குழ னவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி
இதன் பொருள் : தார் உறு கொன்றையன் - தாராகிய மிக்க கொன்றையை யுடையவன்; தில்லைச்
சடைமுடியோன்-தில்லை கணுளனாகிய சடையானியன்ற முடியை யுடையவன் : கயிலை நீர் உறுகான்
யாறு அளவில நீந்தி வந்தால் - அவனது கைலையின் நீரான் மிக்க கான்யாறுக ளெண்ணிறந்தனவற்றை
நீந்தி வந்தால்; வயப்பொங்கு உரும் நினது போர் உறுவேல் அஞ்சுக - அவ்விடத்து வலியையுடைய பொங்குமிடியேறு
நினது போர்மிக்க வேலை யஞ்சி நின்பால் வாராதொழிக; மஞ்சு இவரும் சூர் உறு சோலையின் வாய்
தூங்கு இருள் வரற்பாற்று அன்று ஆயினும்- மஞ்சு பரக்குந் தெய்வம் பொருந்துஞ் சோலையிடத்துச் செறிந்த
விருட்கண் வரும் பான்மைத்தன்று: அத்தெய்வங்களை யாம் அஞ்சுதும் எ-று
தாருறை கொன்றைய னென்பது பாடமாயின், தார் தங்கு கொன்றையனென முதலாகிய தன் பொருட்கேற்ற
வடையடுத்து நின்றதாக வுரைக்க. இப்பாடத்திற்கு ஏனை மூன்றடியும் உறையென்றோதுப. வரற்பாற்றன்றென்பது
வினைமேனின்றது. நவ்வி நோக்கியது கிளவியெனவியையும். மெய்ப்பாடு- அச்சம் .பயன்-வரைவுகடாதல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நறுநாற்றம் கமழ்கின்ற நீண்ட கூந்தலினையுடைய இளமான்
நோக்கத்தையுடைய பாங்கியானவள் வழியில் வரும் கிலேசத்தை விசாரித்துப் பயப்பட்டுச் சொன்னது.
செய்யுள்: மாலையாகிய மிக்க திருக்கொன்றை மாலையினையுடையான், பெரும்பற்றப் புலியூரில்
சடைமுடியை யுடையவன், அவனது ஸ்ரீ கைலாயத்தில் நீர்மிக்க காட்டாறுகள் அளவிலாதவற்றை நீந்தி
வந்தால் உன்னுடைய பேரிலே மி(க்க) வேலுக்கு வீரத்தை உடைத்தாய்க் கோபிக்கிற உருமேறு
பயப்படுவனவாக: மேகங்கள் பரக்கிற தெய்வங்கள் மிக்க சோலையிடத்துச் செறிந்த இருளிடத்தே
வருதல் (முறையன்று) சோலையிடத்துத் தெய்வங்களை யஞ்சுதும். 176
30. தன்னுட்கையா றெய்திடுகிளவி*
-----------------------------------
*பேரின்பப் பொருள் : 'சிவத்தின் கருணைத் திறம்பரி வானது'
தன்னுட்கையா றெய்திடுகிளவி என்பது தலைமகனைக் காணலுற்று வருந்தா நின்ற தலைமகள்,
'இக்கண்டல் சான்றாகக் கொண்டு இப்புன்னையிடத்துக் கலந்த கள்வரை இவ்விடத்து வரக் கண்டிலையோ?
துணையில்லாதேற்கு ஒரு சொல்லருளா யென்று, தன்னுட்கையாற்றை மதியொடு கூறி வினாவா நிற்றல்,
அதற்குச் செய்யுள் :-
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
தில்லைமெல் லங்கமிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கவந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
லாம் மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே
மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையா றெய்திடு கிளவி.
இதன் பொருள்: : கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் மண்டலமே - கங்குல் முழுது மாகாயத்
திடத்தை விளக்கு மண்டலமே; விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை - விண்ணிடத் துள்ளாராகிய
வெல்லார்க்கும் வேந்தராயுள்ளாரது வளவிய தில்லை வரைப்பின் ; மெல்லங் கழிசூழ் கண்டலே
கரியா-மெல்லிய கழிசூழ்ந்த கண்டலே சான்றாக; கன்னிப் புன்னை கலந்த கள்வர் - இளைய புன்னைக்கண்
என்னைக் கலந்த கள்வர்; வரக் கண்டிலையே - ஒருகால் வரக் கண்டிலையோ; தமியேற்கு ஒருவாசகம்
பணியாய்- துணையில்லாதேற் கொருசொல் லருளாய் எ-று
மெல்லங்கழி யென்பதூஉ மொரு பண்புத் தொகை முடிபு. மென்மை நிலத்தின் மென்மை- கழிசூழ்
புன்னையெனக் கூட்டுக. கண்டலை யென்னு மைகாரம் அசைநிலை. கரியாகக் கொண்டென வொரு சொல்
வருவித்து இரண்டாவதாக வுரைப்பினு மமையும். எஞ்ஞான்று மனத்ததொன்றாகத் தாமொன்று
மொழிந்தாரென்னுங் கருத்தாற் கள்வரென்றாள். கள்வர்க்கண்டிலையே யென்பது பாடமாயின் உருபு விரிக்க .
கங்கு லெல்லாங் கண்டிலையேயென்று கூட்டியுரைப்பினு மமையும். கண்டே கூறுகின்றிலை யென்னு
முணர்வினளாகலின் எய்திடு கிளவியாயிற்று. அந்நுண் மருங்குல் கிளவியென்றியையும்.
மெய்ப்பாடு: அழுகை, பயன்: அயர்வுயிர்த்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மின்னினையொத்த அழகிய நுண்ணிய இடையினை யுடையாள்
தன்னிடத்துண்டாகிய செயலற்ற ஒழுக்கத்தைக் கேட்கைக் கல்லா தொன்றின் மேலிட்டுச்சொன்னது .
செய்யுள்: தெய்வலோகத்திடத்து எல்லார்க்கும் தலைவராயுள்ளவர் ,அவருடைய தெற்கின்கண்
உண்டாகிய பெரும்பற்றப் புலியூரிலே மெத்தென்ற அழகிய கழிசூழப்பட்ட தாமையே சான்றாக, இளைய புன்னை
நிழலிலே கலந்தகள்வர் . .வரக்கண்டிலையே தான். (ஏகாரம் எதிர்மறையாய்க் கண்டு வைத்துச் சொல்லுகின்றிலை
என்பது கருத்து) இராப்பொழுதெல்லாம் ஆகாயத்திடத்தே நின்று விளங்குகின்ற சந்திர மண்டலமே!
உணர்விழந்து தனித்த எனக்குக் கண்டு வைத்தும் 'கண்டேன்' என்று ஒரு வார்த்தையும் சொல்லுகின்றிலை. 177
31. நிலைகண்டுரைத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்: "அருளே யுயிர்க்குப் பரிவா யுரைத்தது. "
நிலைகண்டுரைத்தல் என்பது தலைமகள் தன்னுட் கையாற்றை மதியொடு கூறி வருந்தா நின்றமை
சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் ஆற்றாமையான் இல்வரைப்பின்கட் புகுந்து நிற்பத் தோழியெதிர்ப்பட்டு
'நீயிவ்வா றில்வரைப்பின்கட் புகுந்து நின்றாற் கண்டவர் நின்னைப் பெரும்பான்மை நினையாது மற்றொன்று
நினைப்பாராயின் அவளுயிர் வாழ வல்லளோ? இனியிவ்வா றொழுகற்பாலையல்லை' யென வரைவு
தோன்றக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
னெனநீ புகுந்து நின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.
நின்னினழிந்தனள் மின்னிடைமாதென
வரைவுதோன்ற வுரைசெய்தது.
இதன் பொருள்: பற்று ஒன்று இலார் பற்றும் - துறக்கப் படுவன வற்றின் மேற் பற்றான்று மில்லாதவர்கள்
அறிந்து பற்றும் ; தில்லைப்பரங்குன்றில் நின்ற- தில்லைக் கணுளனாகிய பரனது பரங்குன்றின் கணின்ற:
புற்று ஒன்று அரவன் புதல்வன் என - அப்புற்றொன் றரவனுடைய புதல்வனாகிய முருகவேளைப் போல;
நீ புகுந்து நின்றால் - நீயில்வரைப்பிற் புகுந்து நின்றால்; மல் துன்று மாமலர் இட்டு உன்னை வாழ்த்தி
வந்தித்தல் அன்றி- கண்டவர்கள் இந்நிலத்திற்குரியனாகிய முருகனென்று கருதி வளத்தையுடைய
நெருங்கிய பெரிய மலர்களை யிட்டு வாழ்த்தி நின்னை வணங்காதே; மற்று ஒன்று சிந்திப்பரேல் -
பிறிதொன்றை நினைவராயின்; மங்கைவாழ்வகை வல்லளோ - மங்கை யுயிர்வாழும் வகை வல்லளோ?-
அதனா லிவ்வாறொழுகற்பாலை யல்லை எ-று.
பரங்குன்றினின்ற புதல்வனென வியையும், மல்லல் கடைக் குறைந்து நின்றது. மற்றொன்று
சிந்தித்தல் இவள் காரணமாக வந்தானென்று கருதுதல், முருகனென்றலே பெரும் பான்மையாகலின்,
உண்மை யுணர்தலை மற்றொன்றென்றாள் . ஏதஞ்செய்யக் கருதுதலென்பாருமுளர். மெய்ப்பாடு: அச்சம் .
பயன்: வரைவுகடாதல் .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மின்னையொத்த இடையினையுடைய நாயகி உன் காரணமாக
அழிந்தாளென்று வரைந்து கொள்ளும் இடந்தோன்றச் சொன்னது.
செய்யுள்: ஒரு பற்றுமில்லாதார் பற்றுகின்ற தில்லையின் மேலானவன். ஊரிலே (புற்றிலே)
பொருந்துகின்ற பாம்பாபரணன், திருப்பரங்குன்றிலே நின்றவன். அவனது பிள்ளையாகிய முருகவேள்
என்னும்படி நீ இவ்வரைவைப்பிலே புகுந்து நின்றால், உன்னைக் கண்டாருண்டாகில் வளமுடைய துய்ய
மலர்களை யிட்டு உன் பாதத்திலே முருகவேள் என்னும்படி கருதிப் புகழ்ந்து வணங்குதலல்லது,
நீ இவள் காரணமாக இரவுக்குறியிலே வந்த ஒருவனெனக் கருதி ஏதம் செய்வார்களாகில் நாயகியுடைய
(வாழுந் தன்மையை அவள் செய்ய ) வல்லளோ?
நீ இரவுக்குறி வந்து புறம் புகுந்து நின்றால், இம்மலை உறைதெய்வம் முருகவேளாகக் கருதும் ..
தோழி இவனை உள்ளவாறறிவாரில்லையென (இறந்து) படாதிருக்கின்றாள்; அல்லது அவனை
உள்ளவாறறிவார்கள் என்றும் இவள் கருதில் மானிலத்திறந்து படாளோ என்பது கருத்து. 178
32. இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல் *
-----------------------------------
*'பேரின்பப் பொருள் : ''கருணையாற் சிவமே யுயிர்போற் கனிந்தது'.
இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல் என்பது தலைமகனையெதிர்ப் படமாட்டாது வருந்தா நின்ற
தலைமகள், 'இற்றை யிரவெல்லாம் என்னைப்போல நீயுந் துன்பமுற்றுக் கலங்கித் தெளிகின்றிலை;
இவ்விடத்து நின்னையுமகன்று சென்றாருளரோ'வெனத் தானுறு துயரங் கடலொடு சேர்த்திக் கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
பூங்கணை வேளைப் பொடியாய்
விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே.
எறி வேற்கண்ணி யிரவருதுயரஞ்
செறிகடலிடைச் சேர்த்தியுரைத்தது.
இதன் பொருள்: பூங்கணை வேளை - பூவாகிய கணையை யுடையவேளை; பொடியாய் விழ விழித்தோன்
புலியூர் செறிகடலே- பொடியாய் விழும் வண்ணம் விழித்தவனது புலியூர் குரைப்பிற் செறிந்த கடலே; ஓங்கு அணை
மேவிப் புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு - நீயோங்கி யணைந்த கரையைப் பொருந்திப் புரண்டு விழுந்தெழுந்து
கூப்பிட்டு; தீங்கு அணைந்து ஓர் அல்லும் கலங்கித் தேறாய்- துன்பமுற்று ஓரிரவுங் கலங்கித் தெளிகின்றிலை .
அதனால் அணைந்தார் நின்னையும் சென்று அகன்றவர் ஆங்கு உடரோ - அணைந்தவர் நின்னையுமகன்று
சென்றார் அவ்விடத்துளரோ? உரைப்பாயாக எ-று.
பொடியாய்விழ விழித்தோனென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய்ப் பொடியாக்கினானென்னும்
பொருளவாய் வேளை யென்னுமிரண்டாவதற்கு முடிபாயின. புலியூர்க் கடலே கலங்கித் தேறாயென்று
கூட்டினுமமையும். செறிகடலென்புழிச் செறிவு எல்லை கடவா நிலைமை. பிரிவாற்றாதார்க்கு அணைமேவுதல்
பஞ்சியணைமேவுதல் அணைந்தாரென்பதூஉம் சென்றகன்றவ ரென்பதூஉம் அடுக்காய் உளரோவென்னும்
பயனிலை கொண்டன, ஆங்கு: அசை நிலையுமாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : குத்திப் பறித்த வேலையொத்த கண்களையுடையவள்
இரவிடத்தே யுண்டாகிய கிலேசத்தைச் செறிந்த கடலிடத்திலு முண்டாக்கிச் சொன்னது.
செய்யுள்: பூவை அம்பாக உடைய காமவேள் நீறாய் விழும்படி பார்த்தவன். அவனுடைய
பெரும்பற்றப் புலியூரில் உயர்ந்த கரையைப் பொருந்தித் திரை புரட்சி யுண்டாக்கி விழுந்து (எழுந்து),
மிகவும் ஆரவாரித்துப் பொல்லாச் சுவையை அளைந்து கலங்குதலுற்று, இராமுழுதும் தெளியார்
அவர்களும்: அக்குணங்கள் உன்னிடத்துண்டாயிருந்தன.
எல்லை கடவாத கடலென்றமையால் நீ எங்ஙனே பட்டும் உன் எல்லை கடக்கின்றாயில்லை.
அவர்களும் எங்ஙனே வருந்தியும் மனையிடமாக இருக்குமது ஒழிந்து பிரிந்தாருழைச்
செல்லமாட்டாரென்பது கருத்து.
33. அலரறிவுறுத்தல் *
--------------------
*"பேரின்பப் பொருள் : அருளுயிர்க் கின்பம் பெறவுறுத்தியது".
அலரறிவுறுத்தல் என்பது தலைமகளிரவுறு துயரங் கடலொடு சேர்த்தி வருந்தா நின்றமை
சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்பத் தோழியெதிர்ப்பட்டு 'நின்னருளாய் நின்றவிது
எங்களுக் கலராகா நின்றது; இனி நீயில்வாறொழுகாதொழிய வேண்டு' மென அலரறிவுறுத்தி
வரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
அலரா யிரந்தந்து வந்தித்து
மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா, விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே
அலைவேலண்ணன் - மனமகிழருள்
பலராலறியப் பட்டதென்றது..
இதன் பொருள்: மால் அலர் ஆயிரம் தந்து வந்தித்து- மால் தாமரை மலராயிரத்தைக் கொண்டு சென்றிட்டு,
வணங்கி; ஆயிரம் கரத்தால் அலர் ஆர்கழல் வழிபாடு செய்தாற்கு- தன்னாயிரங் கையானு மலர்போலுங் கழலை
வழிபடுதலைச் செய்தவற்கு; அளவில் ஒளிகள் அலராவிருக்கும் படை கொடுத்தோன் - அளவில்லாத வொளிகள்
விரியா நிற்கும் ஆழியாகிய படையைக் கொடுத்தவன்; தில்லையான்- தில்லைக்கண்ணான்; அருள் போன்று-
அவனதருள் போல; ஐய-ஐயனே; மெய் அருள் - நின்னுடைய மெய்யாகியவருள்; அம்பல் கைம்மிக்கு அலராய்
விளைகின்றது- அம்பல் கைம்மிக்கலராய் விளையா நின்றது; இனித் தக்கது செய்வாயாக எ-று.
அலராவிருக்குமென்பது ஓர் நிகழ்காலச்சொல் தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய்
நில்லாமையின், அவ்வருளுலகத்தார்க் கலராமென்பது கருத்து. "நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப"
(திருவாசகம். திருப்பொற்சுண்ணம் 8), என்பதூஉ மக்கருத்தே பற்றி வந்தது.. அம்பல் - பரவாத களவு;
என்னை ? "அம்பலு மலருங்களவு" (இறையனாரகப் பொருள், 22) என்றாராகலின்.
இரவுக்குறி முற்றிற்று .
( பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பகையை வருத்துகிற வேலினையுடைய நாயகனே!
உன்னுடைய மனம் விரும்ப அருள் பலரும் அறியும்படி வெளிப்பட்டது என்றது.
செய்யுள்: (தன் ஆயிரம் கைகளினாலே) ஆயிரம் செந்தாமரைப் பூவையிட்டு வணங்கிப்
புருடோத்தமன் செவ்வித்தாமரைப் பூவையொத்த சீபாதங்களிலே வழிபாடு செய்ய அவர்க்கு,
அளவில்லாத ஒளிகளை விரியா நின்ற சக்கரத்தைக் கொடுத்தருளினான். அவனுடைய பெரும்பற்றப்
புலியூரிலே யுள்ளவன், அவனுடைய திருவருளை ஒத்து சுவாமி உன்னுடைய மெய்யான அருள்
முகிழ்த்தலினின்று மிக்குப்பலருமறிய விரியா நின்றது. 180.
15. ஒருவழித்தணத்தல் *
------------------------
* பேரின்பக் கிளவி : "ஒருவழித் தணத்த ....ருபரின் மூன்றுஞ் சிவனது கருணை யருடெரிவித்தது."
இவ்வா றிரவுக்குறி புணர்ந்து, அலரெழுந்ததென்று விலக்கப் பட்ட பின்னர்த் தெருண்டு
வரைதறலை தெருளானாயின் அவ்வலரடங்கச் சிலநா ளொருவழித் தணந்துறைதல், உடன் கொண்டுபோதல்,
தோழியான் வரைவு முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து வரைந்து கோடல் இம்மூன்றினுளொன்று
முறைமையென்ப. அவற்றுள், ஒருவழித்தணத்தல் வருமாறு:
அகன்றணைவு கூற லாழியொடு கேட்ட
லாழியொடு புலத்த லன்னமோ டாய்த
லாழிக் குரைத்த லாழி யிழைத்தல்
சுடரொடு புலம்பல் பொழுதுகண்டு மயங்கல்
பையுளெய்தல் பரிவுற் றுரைத்த
லன்னமோ டழிதல் வரிவுணர்ந் துரைத்தல்
வருத்தங் கூறல் வருபதின் மூன்றுந்
திருத்திய வொருவழித் திறனா கும்மே .
இதன் பொருள்: அகன்றணைவுகூறல், கடலொடு, வரவு கேட்டல், கடலொடு புலத்தல், அன்னமோடாய்தல் ,
தேர்வழி நோக்கிக் கடலொடுகூறல், கூடலிழைத்தல், சுடரொடு புலம்பல், பொழுது கண்டு மயங்கல், பறவையொடு
வருந்தல், பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல், அன்னமோடழிதல், வரவுணர்ந் துரைத்தல், வருத்த மிகுதி கூறல்
எனவிவை பதின்மூன்றும் ஒருவழித்தணத்தலாம் எ - று. அவற்றுள்: -
1. அகன்றணைவு கூறல் *
-----------------------
*பேரின்பப் பொருள்: "பிரிந்து கூடிப்பெறுமின் பென்றது"
அகன்றணைவுகூறல் என்பது அலரறிவுறுத்ததோழி இத் தன்மையை நினைந்து நீ சிலநா ளகன்றணைவை
யாயின் அம்பலுமலருமடங்கி இப்பொழுதே அவளுக்குப் பழியில்லையாமெனத் தலைமகனுக்கிசைய
அகன்றணைவு கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள் :-
புகழும் பழியும் பெருக்கிற்
பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினால்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போது சென்னித்
திகழு மலர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.
வழிவேறு படமன்னும், பழிவேறு படுமென்றது.
இதன் பொருள் : புகழும் பழியும் - காரணவசத்தாற் பிறந்த புகழும் பழியும்; பெருக்கின் பெருகும் -
அக்காரணங்களை மிகச் செய்தொருவன் (வளர்க்குமாயிற்) றாம் வளரும்; நிகழ்த்தின்- அக்காரணங்களை
யிடையறாமற் செய்து நிகழ்த்துவனாயின்; பெருகி நின்று நிகழும் - அவ்வாறு வளர்ந்து நின்று மாயா
துளவாய்ச் செல்லும்; அல்லால் நிகழா-இவ்வாறல்லது அவை தாமாக நிகழா, அதனான்; இது நீ நினைப்பின்-
இப்பெற்றியை நீ கருதுவையாயின்; அகமும் மதிலும் அணி தில்லையோன் அடிப்போது - அகழையு
மதிலையுமணிந்த தில்லைக்கண்ணானுடைய அடியாகிய போதுகள்; சென்னித் திகழுமவர் செல்லல் போல்-
தஞ் சென்னிக்கண் விளங்கும் பெரியோரது துன்பம்போல; சில்மொழிக்குப் பழி இல்லையாம் - இச்சின்
மொழிக்குப் பழியிப்பொழுதே யில்லையாம். நீ நினையாமையிற் பழியாகா நின்றது எ-று.
நிகழு நிகழா நிகழ்த்தினல்லா லென்புழி நிரனிறையாகக் கூட்டப்பட்டது. அகழுமதிலு மலங்கார
நீர்மையவென்பது போதர, அணி தில்லை யென்றார். அகழுமதிலு மழகுசெய்தவென எழுவாயாக்கி
யுரைப்பினு மமையும். வழிவேறுபடுதல் - இவளையெய்து முபாயங் களவன்றி வரைவாய் வேறுப . மன்னும்:
அசை நிலை. பழிவேறுபடுதல்-பழித்தன்மை திரிந்து கெடுதல், இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சம்.
பயன்: அலரறிவுறீஇ வரைவு கடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: இரவுக் குறியாகிய நிலை பெற்ற பழியும் வேறுபடு மென்றது.
செய்யுள்: புகழேயாகப் பழியேயாகப் பெருகச் செய்யிற் பெருகா நிற்கும்; பெருகா நின்றவை தாம்
நடத்துவானாகில் நடவா நிற்கும்; அல்லாத பொழுது அவ்வளவிலேயே ஒழியும்; இப்படியே யுக்தி பண்ணுவாயாமாகில்
அகமும் மதிலும் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலுள்ளவனுடைய திருவடி களாகிய பூக்களை முடியிலே விளங்க
உடையவர்களுடைய பிறவித் துன்பம் போனாற்போல மெத்தென்ற வார்த்தையினை யுடையாளுக்குப்
பழியில்லையாய் விடும். 181
2. கடலொடு வரவுகேட்டல்*
------------------------
*பேரின்பப் பொருள் : உயிராய்ச்சிவமே யுற்றுற்றுரைத்தது
கடலொடுவரவு கேட்டல் என்பது ஒருவழித் தணத்தற் காற்றாது வருந்தா நின்ற தலைமகள்,
'நம்மைவிட்டுப் போனவர் மீண்டுவரும் பரிசுனக்குரைத்தாரோ' வெனக் கடலொடு
தலைமகன் வரவு கேளா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர் சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.
மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி
மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது.
இதன் பொருள்: புலியர்ப் புனிதன் சீர் அம்பர் சுற்றி- புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய
அம்பரைச் சூழ்ந்து ; எற்றி- கரையை மோதி; சிறந்து ஆர்க்கும் செறி கடலே - மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே;
ஆரம் பரந்து திரை பொரு நீர்-முத்துப்பரந்து திரைகடம் முட்பொருங் கடனீர்; முகில் மீன் பரப்பிச் சீர் அம்பரத்தின்
திகழ்ந்து- முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமே போல விளங்கி ஒளி தோன்றும் துறைவர் -
ஒளி புலப்படுத்துந் துறையை யுடையவர்; சென்றார்- நம்மை விட்டுச் சென்றவர்; போரும் பரிசு புகன்றனரோ-
மீண்டு வரும்பரிசு உனக்குக் கூறினரோ? உரை எ-று.
பரப்பி யென்னும் வினையெச்சம் சீரம்பர மென்னும் வினைத்தொகையின் முன் மொழியோடு முடிந்தது.
பரப்பி விளங்குமென ஒருசொல் வரு வித்து முடிப்பினுமமையும், பரப்பி யென்பதற்கு, முன்மீன் பரப்பி
(திருக்கோவையார்-130) யென்பதற் குரைத்த துரைக்க, திகழ்ந்தென்றதனான் ஒளி மிகுதி விளங்கும். போதருமென்பது
போருமென இடைக்குறைந்து நின்றது. ஈண்டு ஏனையுவமமுண்மையின், உள்ளுறை யுவம மின்மை யறிக .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : கூடினவர் ஒரு............ தற்குக் கிலேசித்து ஆரவாரித்து வந்து
மீளும் திரைபொருந்தின கடலுக்குச் சொன்னது.
செய்யுள் : முத்துக்களானவை பரந்து திரைபொருகிற கடலானது முகிலினையும் மின்னையும்
பரப்பிக் கொண்டு சிறப்பையுடைத்தாகிய ஆகாசம் போல் விளங்கி ஒளி தோன்றுகிற துறைவர்,
நம்மை விட்டுப் பிரிந்தவர், வந்து மீளும்படி சொன்னாரோ தான்? பெரும்பற்றப்புலியூரி லுள்ளவனாகிய
தூயவன், அவனுடைய சிறப்புடைத்தாகிய திரு அம்பரைச் சுற்றிக் கரையோட மோதிச் சிறப்புடைத்தாய்
ஆரவாரிக்கிற செறிந்த கடலே (மீளும்படி சொன்னாரோதான்?) 182
3. கடலொடு புலத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள்; பின்னும் உயிராய் மன்னி யுரைத்தது.
கடலொடு புலத்தல் என்பது கடலொடு வரவுகேட்ட தலைமகள். அது தனக்கு வாய்திறவாமையின்,
'என் வளை கொண்டு போனார் திறம் யான் கேட்க நீ கூறாதொழிகின்றதென்' எனப் பின்னும் அக்கடலொடு
புலந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும் புன்
னைத்துறைச் சேர்ப்பர் திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க் கடலே.
செறிவளைச் சின்மொழி, எறிகடற் கியம்பியது.
இதன் பொருள்: பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே - பூணையொக்கு
மொளியையுடைய அரவை யணிந்தவனது புலியூரைச் சூழ்ந்த கரைபொருதலையுடைய கடலே;
பாண் நிகர்வண்டு இனம்பாட - பாணரையொக்கும் வண்டினங்கள் சென்று பாட; பைம்பொன் தருவெண்கிழி-
தாதாகிய பசும்பொன்னைப் புலப்படுத்தா நின்ற போதாகிய வெண்கிழியை; தம் சேண் நிகர் காவின்
வழங்கும் புன்னைத் துறைச் சேர்ப்பர் - தமது சேய்மைக்கண் விளங்குங் காவினின்று அவற்றிற்குக்
கொடுக்கும் புன்னைகளை யுடைய துறையை யணைந்த சேர்ப்பை யுடையராகிய; திங்கள் வாள் நிகர்
வெள்வளைகொண்டு அகன்றார் திறம்-திங்களினொளிபோலு மொளியையுடைய என் வெள்வளையைத்
தம்மொடு கொண்டு போனவரது திறத்தை; வாய்திறவாய்-எமக்குக் கூறுகின்றிலை? நீ கூறாதொழிகின்றதென்! எ-று.
கிழிதமென்று கிழிக்குப்பெயராக வுரைப்பாருமுளர். வாய் திறவா யென்பதற்குக் கூறுவாயாகவென்
றுரைப்பினுமமையும்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: திரள்வளையினையும் மெத்தென்ற வார்த்தையினையும்
உடையவள் கரையுடன் மோதும் கடலுக்குச் சொன்னது.
செய்யுள்: பாண் சாதியை யொக்கும் வண்டுகள் இசையைப் பாடத் தாதாகிய செம்பொன்னைத்
தருகிற போதாகிய கிழிச் சீலையைத் தம்முடைய அதி தூரத்தே விளங்கித் தோன்றுகிற காவிடத்தே நின்று
கொடுக்கிற புன்னைத் துறையை யுடைய நாயகர் சந்திரன் ஒளியினையுடைய வெள்ளிய வளைகளைக்
கொண்டு பிரிந்தார்; அவருடைய திறத்து ஒருவார்த்தையும் சொல்லுகின்றிலை; பூணொத்த வொளியினை
யுடைய பாம்பை ஆபரணமாக வுடையவன், அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சூழ்ந்து கரை பொரு
கடலே! அவர் திறத்து ஒரு வார்த்தையும் சொல்லுகின்றிலை.
கிழிதம் என்று கிழிக்கும் பெயராக வுரைப்பினுமமையும், வாய் திறவாய் என்று சொல்லுவாய்
என்றுமாம். 183
4. அன்ன மோடாய்தல்*
--------------------
*பேரின்பப் பொருள் : பின்னும் உயிர்போல் மன்னி யுரைத்தது.
அன்ன மோடாய்தல் என்பது கடலொடு புலந்து கூறிய தலைமகள், புன்னையொடுபுலந்து,
'அகன்றவர் அகன்றே யொழிவரோ? யானறிகின்றிலேன்; நீயாயினுஞ் சொல்லு வாயாக'வென
அன்னமோடாய்ந்து வரவு கேளா நிற்றல். அதற்குச் செய்யுள் -
பகன்தா மரைக்கண் கெடக்கடந்
தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச் செம்பொன் முத்தணி
புன்னையின் னுமுரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே
மின்னிடை மடந்தை, யன்னமோ டாய்ந்தது.
இதன் பொருள்: பகன் தாமரைக் கண் கெட - பகன் என்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைபோலுங்
கண் கெட; கடந்தோன் புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே - அவனை வென்றவனது புலியூரைச் சூழ்ந்த
பழனத்தின்கணுண்டாகிய அகன்ற தாமரைக் கண்வாழும் அன்னமே; வண்டு நீல மணி அணிந்து- வண்டாகிய
நீலமணியை யணிந்து; செம்பொன் முத்து அணி - தாதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்தையுமணிந்த;
முகன்தாழ் குழைப் புன்னை - முகத்துத் தாழ்ந்த குழையையுடைய புன்னை; இன்னும் உரையாது -
இந்நிலைமைக்கண்ணு மொன்று சொல்லுகின்ற தில்லை; அகன்றார் நம் அகன்துறை அகன்லே யொழிவர்
கொல்லோ- அகன்றவர் நமதகன்ற துறையை யகன்றேவிடுவரோ? அறியேன்; நீயுரை எ-று.
முகன்றாள் குழை யென்பது இருபொருட்பட நின்றது. யானித் தன்மையேனாகவும்
மணியணிந் தின்புற்று நிற்கின்ற புன்னை எனக்கொன்று சொல்லுமோ? அன்னமே, எனக்கு
நீ கூறென்பது கருத்து. ஈண்டு நம்மொடு தாம் விளையாடும் விளையாட்டை மறந்தேவிடுவரோ
வென்னுங் கருத்தான், நம்மகன்றுறையை யகன்றேயொழிவர்கொல்லோ வென்றாள்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : மின்னையொத்த இடையினையுடைய நாயகி
அன்னத்துடனே ஆராய்ந்தது.
செய்யுள்: பகனென்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைப் பூவை யொத்த கண்
கெடும்படி செயித்தவன். அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சூழ்ந்த தடாகத்திலே அகன்ற
தாமரைப்பூவிலே வாழ்கின்ற அன்னமே! வண்டாகிய நீலமணியுமணிந்து முகத்தை மிக்க
அழகினையும் இணையினையு முடைத்தாய தாதாகிய செம்பொன்னையும், அரும்பாகிய
முத்துக்களையும் அணிந்திருக்கிற புன்னையானது நான் இத்தன்மையேனாகக் கொண்டு வைத்து
இன்னமும் சொல்லுகிறதில்லை; நம்முடைய அகன்ற துறையை விட்டுப் பிரிந்தவர் பிரிந்துபோம்
இத்தனையோ தான் ? 184
பொன்னையும் மணியையும் அணிந்த முகம் குழைந்திருக்கிற புன்னை ..... புலியூரில்
தடாகத்தில் வாழ்கிற அன்னமே நீ சொல்வாயாக.
5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்*
-----------------------------------
*பேரின்பப் பொருள்; "சிவனுயிர் மோகஞ் சென்றியம் பியது"
தேர்வழி நோக்கிக் கடலொடுகூறல் என்பது அன்னமொடு வரவு கேட்ட தலைமகள்,
அதுவும் வாய்திறவாமையின் 'இனியவர் வருகின்றாரல்லர்; எம்முயிர்க்குப் பற்றுக் கோடினியிதுவே;
இதனை நீ யழியா தொழிவா' யென அவன் சென்ற தேர்வழி நோக்கிக் கடலோடு கூறா நிற்றல்,
அதற்குச் செய்யுள் -
உள்ளு முருகி யுரோமஞ்
சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந் தந்
தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.
மீன்றோய் துறைவர் மீளு மளவு
மான்றேர் வழியை யழியே லென்றது.
இதன் பொருள்: புள்ளும் திரையும் பொரச் சங்கம் ஆர்க்கும் பொரு கடலே -புள்ளுந்திரையுந்
தம்முட்பொரச் சங்கொலிக்குங் கரை பொருங்கடலே; உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப - உள்ளுமுருகி
மெய்ம்மயிர் சிலிர்ப்ப; உடையவன் ஆட் கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் - உடையவனாகிய
தானாட்கொள்ளு மடியாருள் எமக்கோர் கூட்டத்தைத் தந்தவன் நின்று கூத்தாடும்; புலியூர் விள்ளும்
பரிசு சென்றார் வியன் தேர் வழி - புலியூரை நீங்கும் வண்ணஞ் சென்றவரது பெரிய தேர் போனவழியை;
தூரல் கண்டாய் - நின்றிரை களாற்றூராதொழிய வேண்டும்; எம்முயிர்க்குப் பற்றுக் கோடினி யிதுவே எ-று.
உள்ளுமென்ற வும்மையாற் புறத்துக்கண்ணீர் தழுவப் பட்டது. ஆட்கொள்ளுமவர் பெருமை
தோன்ற உடையவனென அவன் பெருமை விளக்கும் பெயராண்டுக் கூறினார். விள்ளுதல் செலவான்வருங்
காரியமாதலின் விள்ளும் பரிசு சென்றாறென்றாள். கண்டாயென்பது முன்னிலையசைச் சொல்.
குனிக்கும் புலியூர் நுகர்ச்சியை நினையாது நீங்கிய வன்கண்மையார் இனிவருவரென்னு நசையிலம்;
அவர் தேர்ச்சுவடாயினும் யாங்காண நீ யதனை யழியாதொழி யென்பது கருத்து .
விள்ளும்பரிசி சென்றாறென்பதற்குப் புலியூரை நீங்கினாற்போல யான்றுன்புறும்
வண்ணமெனினு மமையும். விள்ளுதல் வாய் திறத்த லென்று அலர்கூறி நகும் வண்ணஞ் சென்றவ
ரெனினு மமையும். பொரச்சங்கமார்க்கு மென்புழிப் பொருஞ் சங்கொலியுமென வொருபொரு டோன்றியவாறு
கண்டு கொள்க. கூட்டந் தந்தாரென்று பாட மோதி ஆட்கொள்ளும் அவரைப்போலின்புற எமக்கோர்
புணர்ச்சியைத் தந்தாரெனத் தலைமகன் மேலேற வுரைப்பாருமுளர். அலங்காரம்: அல்பொருட் டற் குறிப்பேற்றம்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மீனைத்தோய்ந்த துறையை யுடையவர் மீண்டு வருமளவும்
புரவிபூட்டப்பட்ட வழியை அழியாதே கொள் என்றது.
செய்யுள்: நெஞ்சம் உருகி மெய்ம் மயிரும் பொடிப்ப, இப்படிக்கு அடியாரையுடையவன் தானடிமை
கொள்ளும் அடியாருடனே என்னையும் அடிமையாகக் கூட்டிக்கொண்டவன், அவன் ஆடியருளுகிற பெரும்பற்றப்
புலியூரை விட்டு நீங்கும்படி சென்றவன். பெரியதேர் போனவழியை அழியாதே கொள்வாயாகவேண்டும். 185
6. கூடலிழைத்தல்*
----------------
*பேரின்பப் பொருள் : ''உயிர்த் தொழில் சிவமாய் உறுங்கூறி .
இப்பாடலின் கடைசி வரிக்கு உரையில்லை.
கூடலிழைத்தல் என்பது தேர்வழி நோக்கிக் கடலொடு கூறா நின்ற தலைமகள்
'இம்மணற் குன்றின்கண் நீத்தகன்ற , வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே
தரவல்லையோ' வெனக் கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தா நிற்றல்,
அதற்குச் செய்யுள் :-
ஆழி திருத்தும் புலியூ
ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்
றாழிதிருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம் வள்ளலையே.
நீடலந் துறையிற், கூடல் இழைத்தது.
இதன் பொருள்: ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து - ஆழிசூழ்ந்த மண் முழுதையுந் திருத்தும்
புலியூரை யுடையவன தருள்போல இன்புறவளித்து; ஆழிதிருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருகென்று -
கடல்வந்து திருத்து மணற்குன்றின்கண் என்னை நீத்தகன்றவர் வரவேண்டு மென்று; ஆழி திருத்திச் சுழிக் கணக்கு ஓதி
நையாமல்-கூடலை யிழைத்துச் சுழிக் கணக்கைச் சொல்லி யான் வருந்தாமல் ; ஐய - ஐயனே; வாழி- வாழ்வாயாக;
உள்ளம் திருத்தி வள்ளலைத் தரக்கிற்றியோ - அவனுள்ளத்தை நெகிழ்த்து வள்ளலை யீண்டுத் தரவல்லை யாயின்
யானிரக்கின்றேன் எ-று
முதற்கணாழி: ஆகுபெயர். ஆழிதிருத்தும் புலியூரென்பதற்குப் பிறவுமுரைப்ப. திரை வந்து பெயரும்
பெருமண லடைகரையைப் பின்னினையாத கொடியோர் இனி வருதல் யாண்டைய தென்னுங்கருத்தான்,
ஆழிதிருத்து மணற்குன்றினீகத் தகன்றா ரென்றாள். ஐயவென்றது கூடற்றெய்வத்தை. நீடலந்துறை
யென்பதற்குக் கமழலந்துறைக் (திருக்கோவை - 88) குரைத்தது உரைக்க.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நீண்ட அழகிய துறையில் கூடல் செய்தது.
செய்யுள்: பூமியைத் திருத்திச் செய்கிற பெரும் பற்றப் புலியூரை உடையவன். அவனுடைய திருவருள்
போலே தலையளி செய்து கடற்றிரை வந்து தூய்மை செய்கிற மணல் திடரே (திடரில்) விட்டுப் பிரிந்தவர்
வர வேண்டுமென்று வட்டமாகச் செய்து சுழிகளில் எண்ணைச் சொல்லியது கூடாமையால் கிலேசியாதபடி.
ஐய! கூடல் தெய்வமாகிய பெரியவனே! வருணராசனே! நீ வாழ்விப்பாயாக; உள்ளத்தைத் திருத்தி
வள்ளலைத் தரவல்லையாகில் கூட்டுவாயாக. 186
7. சுடரொடுபுலம்பல்*
--------------------
*பேரின்பப் பொருள்: "இன்பே யுயிராய் இடருற் றியம்பியது''.
சுடரொடு புலம்பல் என்பது கூடலிழைத்து வருந்தாநின்ற தலைமகள், 'துறைவர் போக்கும்
அவர் சூளுறவும் என்னை வருத்தா நின்றன; அதன் மேல் நீயுமேகாநின்றாய்; யான் இனியுய்யுமா
றென்னோ'வெனச் செல்லா நின்ற சுடரொடு புலம்பா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கார்த்தரங் கந்திரை தோணி
சுறாக்கடல் மீன் எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே
குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப
மணமலி குழலி மனம் புலம்பியது
இதன் பொருள்: கார்த் தரங்கம் - கரிய திரையும் ; திரை தோணி- திரையா நின்ற தோணியும்;
சுறா-சுறாவும்; மீன் எறிவோர்-மீனெறிவோரும்; கடல்-கடலும்; போர்த் தரு அங்கம்- போரைத்தரு மங்கங்களையும்:
துறை-அக்களத்தையும்; மானும் துறைவர் போக்கும்-ஒக்குந் துறையை யுடையவரது பிரிவும்; மிக்க தீர்த்தர்
அங்கன் தில்லைப்பல் பூம்பொழில் செப்பும் வஞ்சினமும் - சிறந்த தூயோராகிய அரியயர்களுடைய
வென்பை யணிந்தவனது தில்லைவரைப்பி னுண்டாகிய பல்பூம் பொழிற் கண் நின்னிற்பிரியேனென்று
சொல்லும் வஞ்சினமும்; ஆர்த்தர் அங்கம் செய்யும் என் மேனியை நோயுற்றார் மேனியாகச் செய்யா நின்றன;
ஆழ்சுடரே -வீழாநின்ற சுடரே; உய்யுமாறு என் கொல் - யான் உய்யுநெறியன்னோ ? கூறுவாயாக எ-று.
குதிரைத்திரள் தரங்கத்திற்கும், தேர் தோணிக்கும், யானை சுறாவிற்கும். காலாள் மீனெறிவோர்க்கும்.
போர்க்களங் கடற்கும் உவமையாக வுரைக்க. தரங்க முதலாயினவற்றாற் போரைத் தரு மங்கத்தையுடைய
களத்தையொக்குந் துறையென மூன்றாவது விரித்துரைப்பாருமுளர். இதற்கு அங்கத் துறை யென்றது
மெலிந்து நின்றது. போரைத்தருமங்க மென்பதனைத் தொகுக்கும் வழித் தொகுத்தார். துறைவர் போக்கும்
தில்லைவரைப்பிற் சூளுறவும் என்னாமென்னு மச்சத்தளாய், ஆர்த்தரங்கஞ் செய்யுமென்றாள்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கீழ்க்கடலிலே எழுந்த ஆதித்தன் மேல் கடலிலே மூழ்க
நறுநாற்ற மிக்க கூந்தலினையுடையாள் மனம் வாடியது.
செய்யுள்: கருந்திரையும் அத்திரைகளை ஒதுக்குகிற தோணிகளும், சுறா மீன்களும் கடல் தானும்
மீன் வெட்டுகிறவர்களும், போரைத் தருகிற சதுரங்கங்களும், போர்க்களத்தினை ஒக்கிற துறையினையுடையவர்
(இவை ஒத்தபடி திரைகள் குதிரைகளை யொத்தன. அவற்றை ஒதுக்குகிற தோணிகள் குதிரைத் திரள்களைக்
கெடுக்கிற தேர்களை யொத்தன; சுறாமீன்கள் யானைகளை யொத்தன; கடல் தானும் யுத்தகளத்தை யொத்தது:
மீன் வெட்டுகிறவர்கள் யானைகளைக் கையும் காலுமற வெட்டு கருவிக் கரலாட்களை ஒத்தார்கள் :
ஒருபொருள் வேறொரு பொருளாகத் தோன்றி நடத்தலால் நமக்கின்பம் செய்யப் பிரிந்த பிரிவும் துன்பம்
செய்வதொன்று போலத் தோன்றா நின்ற படி, அவர் நம்மை வரைந்து கொள்வதாகப் பிரிந்த பிரிவு.
மிக்க தூயோராகிய பிரம விட்டுணுக்களின் எலும்புகளைப் பூண்டவன். அவனுடைய பெரும்பற்றப் புலியூரில்
பலபூக்களை யுடைத்தாகிய பொழிலிலே அவர் சொன்ன வார்த்தையும் (என்னை) வியாதியாளர் உடம்புபோலே
பண்ணா நின்றது; அழுந்தா நின்ற ஆதித்தனே! இனி நான் பிழைக்கும் வழி ஏது?
அத் தில்லை வரைப்பிற் சூளுரையும் என்னா என்னும் அச்சத்தளாய் ஆர்த்தரங்கம் செய்யுமா லென்றாள். 187
8. பொழுதுகண்டு மயங்கல் *
-------------------------
*பேரின்பப் பொருள் ; பருவம் நோக்கிப் பரிவின் புற்றது.
பொழுது கண்டு மயங்கல் என்பது சுடரொடு புலம்பா நின்றவள், 'கதிரவன் மறைந்தான்;
காப்பவர் சேயர்: அதன் மேலிவ்விடத்து மீனுண்ட வன்னங்களும் போய்த் தஞ் சேக்கைகளை யடைந்தன;
இனி யானாற்றுமா றென்னோ'வென மாலைப்பொழுது கண்டு மயங்கா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
பகலோன் கரந்தனன் காப்பவர்
சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோவெனவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம் பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.
மயல் தரு மாலை வருவது கண்டு
கயல்தரு கண்ணி கவலை யுற்றது.
இதன் பொருள்: பகலோன் கரந்தனன் - கதிரவன் மறைந்தான், காப்பவர் சேயர் - இம்மாலைக்காலத்து
வருந் துன்பத்தைக் காக்குமவர் சேயராயிருந்தார்: அகல் ஓங்கு இருங்கழிவாய் கொழுமீன் உண்ட அன்னங்கள்
சேக்கைகள் நோக்கின - அதுவே யுமன்றி இவ்வகலோங் கிருங்கழியிடத்துக் கொழுமீனையுண்ட வன்னங்கடாமும்
இவ்விடத்தை விட்டுத் தஞ்சேக்கைகளை நோக்கின. இனியென் செய்வேன்! எ-று. பற்று அற்றவர்க்குப்
புகலோன்- புலன்களிற் பற்றற்றவர்க்குப் புகலிடமா யுள்ளான் ; புகுநகர்க்குப் போக்கு அரியோன் - தன்கட்
புகுவார்க்குப் பின்போதர வரியவன்; எவரும் புகலத் தகலோன்.எல்லாரு மேத்தத்
தகுதலையுடையவன்; பயில் தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் அவன் பயிலுந் தில்லை வரைப்பிற்
பைம்பொழில்களினுளவாகிய சேக்கைகளெனக் கூட்டுக.
ஓங்குதல் ஓதமேறி நீருயர்தல். கொழுமீன் என்பது ஓர் சாதி.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : மயலைத் தருகின்ற மாலைப் பொழுது வருகிறபடியைக்கண்டு
கயலைப் பொருத கண்களையுடையாள் வருந்தினது.
செய்யுள் : ஆதித்தன் ஒளித்தான் ; நம்மைக் காவல் செய்பவர் தூரியராக இருந்தார். புலன்களின்
பற்று விட்டவற்குப் புகலிடமாயுள்ளவன், புகுந்தார்க்கு மீண்டும் போம் தன்மை அரிதாயுள்ளவன்,
எல்லாரும் எல்லாம் சொல்லுவதற்கு எல்லாம் ஒத்திருக்கிறவன், அவன் வாழ்கிற புலியூரில் அழகிய
பொழிலில் தம் சேக்கையை நோக்கிச் செல்லாநின்றன (அன்னங்கள் ) என்றது..... இரை வேண்டி
உண்ணவேண்டும் பரவசத்தாலே நம்மை வினவிற்றில்..... வினவாதே தம் சேக்கையிடத்து ஏறச் செல்லா நின்றன;
இனி ஆற்றுதலரிது போலே இருந்தது. 188
கொழுமீன் என்பது மீனிலொரு சாதி.
9. பறவையொடு வருந்தல்*
-------------------------
*பேரின்பப் பொருள்: இன்பருணோக்க மெங்கு மானது'
பறவையொடு வருந்தல் என்பது பொழுதுகண்டு மயங்கா நின்ற தலைமகள், 'இந்நிலைமைக்கண்ணும்
என்னுண்ணோ யறியாது கண்ணோட்டமின்றித் தம் வயிறோம்பா நின்றன; இஃதென்னை பாவ'மென வண்டானப்
பறவையொடு வருந்திக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:
பொன்னும் மணியும் பவளமும்
போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
விரவா தவரினுள் நோய்
இன்னு மறிகில வாவென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே
செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை
பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது.
இதன் பொருள்: இருங் கழிவாய் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்கள் - என்னாற்றாமைக்குப்
பரிகாரமாவதி யாதுஞ் சிந்தியாது இருங்கழியிடத்துப் பகலே புகுந்து விரும்பித் தமக்குணவு தேடும் வண்டாங்களாகிய
குருகுகள்; உள நோய் இன்னும் அறிகில. என்னுண்ணோயை யிந்நிலைமைக்கண்ணு மறிகின்றனவில்லை;
என்னை பாவம் - இஃதென்னை பாவம் ! எ-று. பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி
மின்னும் பொன் போலப் பொலிந்து மாணிக்கம் போல, விட்டு விளங்கிப் பவளம் போல மின்னும்: சடையோன்
புலியூர் விரவாதவரின் (உறும்) உள் நோய்- சடையையுடையவனது புலியூரைக் கலவாதாரைப் போல
'யானுறு முண்ணோ யெனக்கூட்டுக.'
உறுமென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. முன்னறிந்தன வில்லையாயினும், இனியறிய
வேண்டுமென்பது கருத்து. புலியூரை விரவாதார் கண்ணோட்ட மிலராகலிற் புலியூரை விரவாதவரினின்னுமறிகில
வென்றியைத் துரைப்பினு மமையும். நிரனிறையாகக் கொள்ளாது , எல்லா மெல்லா வற்றின்மேலு மேறவுரைப்பினு
மமையும், மன்னும்- அசைநிலை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: புத்திக்கு வெறுப்பைச் செய்கிற காமநோய் கைசார்ந்து செல்லச் சிறிய
இடையினையுடைய நாயகி பறவைகளைச் சொல்லும் வார்த்தைகளின் மேலேவைத்துச் சொல்லி வருத்தமுற்றது.
செய்யுள்: பொன்னையும் மாணிக்கத்தையும் பவளத்தையும் ஒத்துச் சிறந்து விளங்கி மின்னும் திருச்சடையை
யுடையவன். அவனுடைய பெரும் பற்றப் புலியூரை நினைக்கும் நினைவை மற்றுள்ள, நினைவுகளுடனே
கலவாதாரைப் போல் [ என்றது, மற்றுள்ள நினைவை இந்நினைவு மாற்றுமென்பது கருத்து] உண்டாகிய வியாதியைப்
பெரிய கழியிடத்தே நிலைபெற்ற பகற் பொழுதே விரும்பி இரை தேடியுண்ட நீர்க்கோழிகள் தாங்கள் இரைதேடி
யுண்டும். நான் இத்தன்மையேனாகக் கண்டு வைத்தும் இன்னமும் அறிகின்றனவில்லை. இஃதென்ன பாவமோ?
பெரும்பற்றப் புலியூரை நினையாதார்க்கு உவமை பிறர் இடுக்கண் கண்டும் வினவாதிருக்கை.
10 . பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல் *
-----------------------------------
*பேரின்பப் பொருள்: இன்புற்றிட நோக்கி யன்புற்றிரங்கியது.
பங்கயத்தோடு பறிவுற்றுரைத்தல் என்பது பறவையொடு வருந்தா நின்றவள், இவையென் வருத்தங்கண்டு
இவள் வருந்தாமல் விரைய வரவேண்டுமென்று ஞாயிற்றை நோக்கித் தங்கை குவியா நின்றன; ஆதலால் என்மாட்
டன்புடையன போலு' மெனப் பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
கருங்கழி காதற்பைங் கானலில்
தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
றூழென் றலந்து* கண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே -
முருகவீழ் கானலொடு பரிவுற்றது.
*'அலர்த்து' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள் - தில்லை எம் கண்டர் - தில்லைக்கணுளராகிய எம்முடையகண்டர்; விண்டார் ஒருங்கு அழி
காதர மூவெயில் செற்ற பகைவ ரொருங்கே யழியு மச்சத்தையுடைய மூவெயிலைச் செற்ற; ஒற்றைச் சிலை சூழ்ந்து -
தனிவில்லைச் சூழ்ந்து அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று அரியவாகிய மிக்க காதங்களைப் போகா நின்றது.
என்றூழ் இனி யிவளெங்ஙன மாற்று மென்று வருந்தி கருங்கழி காதல் பைங்கானலின் அலந்து கண்ணீர்வரும் -
கருங்கழியின் கண்ணுங் காதலையுடைய பைங்கானலின் கண்ணுமுளவாகித் துன்புற்றுக் கண்ணீர் வாரா நின்ற;
கழிகாதல் வனசங்கள் -கழி காதலையுடைய தாமரைகள்; மலர்க் கைகள் கூப்பும் விரைந்து வர வேண்டுமென்று
அஞ்ஞாயிற்றை நோக்கித் தம் மலராகிய கைகளைக்கூப்பி யிரவா நின்றன; இவையென்மாட் டன்புடையன போலும் எ-று
கானலின் வனசங்க ளெனவும், தில்லையெங் கண்டர் செற்ற வெனவுங் கூட்டுக. கானலிற் கைகூப்பு
மெனவியைப்பினு மமையும். கானற் பொய்கையின் வசனம் கானலின் வனசமெனப்பட்டன: அலந்து கண்ணீர்
வருமென்பது இருபொருட்டாகலின், மலர்ந்து கள்ளாகிய நீர் வருமென் றுரைக்க. இப் பொருட்கு அலர்ந்தென்பதிடைக்
குறைந்து நின்றதாகக் கொள்க. கதிரோன்றம்மைப் பிரிய வாற்றாது கடிது வர வேண்டுமென வனசங்கள்
கைகூப்பா நின்றன வென்று அவற்றிற் கிரங்கினாளாக வுரைப்பினுமமையும். அலர்ந்த வென்பது பாடமாயின்,
அலர்ந்த வனசமெனவியையும்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நறு நாற்றம் விரிகிற கடற் சோலையுடனே வருத்தமுற்றது.
செய்யுள்: கரிய கழியினைச் சூழ்ந்த பச்சென்ற கடற்சோலையில் (உள்ள) அலர்ந்து கண்ணீர்
வராநின்று மிகுந்த காதலையுடைய தாமரைகள் பெரும்பற்றப் புலியூரிலுளவாகிய எம்முடைய வீரர்
தம்முடைய பகைவர் ஒருங்கே அழிய அச்சத்தைச் செய்கிற முப்புரங்களையுமழித்த தனிச்சிலையாகிய
மகாமேருவைச் சூழ்ந்து ஆதித்தன் கடத்தற்கரிய காதங்களைக் கடவாநின்றான் என்று. இவள் வருந்தாமல்
இரவியைக் கடுக வரவேண்டுமென்று தம் மலர்களாகிய கைகளைக் கூப்பித் தொழாநின்றன.
வனசங்கள் நம்மேல் காதலுடையனபோலே இருந்தன கடற்சோலை- கடற்சோலைமேலுள்ள
பொய்கை மேற்படும் அலர்ந்து கண்ணீர் வார்ந்து கை கூப்புதல்-அலருதலும் கள்ளாகிய நீர்வருதலும்
சிலேடை வகையாற் கொள்ளப் படும் வனசங்கள் தம்மலர்களாகிய கைகளைக் கூப்ப இரவா நின்றன;
இவை என் மாட்டு அன்புடையன போலும் என்றவாறு . 190
11. அன்ன மோடழிதல்*
---------------------
*பேரின்பப் பொருள்: இன்ப முயிர்க்கா யெடுத் திரங்கியது.
அன்னமோடழிதல் என்பது பங்கயத்தை நோக்கிப் பரிவுறா நின்றவள் ' உலகமெல்லாந் துயிலா நின்ற
விந்நிலைமைக் கண்ணும் யான்றுயிலாமைக்குக் காரணமாகிய என்வருத்தத்தைச் சென்று அவர்க்குச்
சொல்லாது தான்றன் சேவலைப் பொருந்திக் கவர்ச்சியின்றித் துயிலா நின்ற'தென அன்னத்தோடழிந்து
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
மூவல் தழீஇய அருண்முத
லோன்* தில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நா**னிலந்
துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்றி# தான் துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா ##
தளிய களியன்னமே.
இன்னகையவ ளிரவரு துயரம்
அன்னத்தோ டழிந்துரைத்தது
* மூவரழியத் திருமுதலோன்; ** நாவ றழியவிந் நா #சேவறிழிச் சென்று ## காவ றழியவற் கோதா
என்பன பழையவுரைகாரர் பாடங்கள்.
இதன் பொருள்: மூவல் தழீஇய அருள் முதலோன் : மூவலைப் பொருந்திய அருளையுடைய முதல்வன்;
தில்லைச் செல்வன் தில்லைக்க ணுளனாகிய செல்வன்; முந்நீர் நாவல் தழீ இய இந்நானிலம் துஞ்சும் -
அவனுடைய கடலாற் சூழப்பட்ட நாவலைப் பொருந்திய இந்நானில முழுதுந் துஞ்சா நின்றது; யான்
துயிலாச் செயிர் எம் காவல் தழீஇயவர்க்கு ஓதாது-இப்பொழுதினும் யான்றுயிலாமைக்குக் காரணமாகிய
வருத்தத்தை எமது காவலைப் பொருந்தினவருக் குரையாதே. அளியகளி அன்னம் - அளித்தாகிய களியன்னம்;
சென்று - இவ் விடத்து நின்றும் போய்; நயந்த இன்பச்சேவல் தழீஇத் தான் துஞ்சும்- தானயந்த வின்பத்தைச்
செய்யுஞ் சேவலைத் தழுவி ஒருகவற்சி யின்றித் தான்றுயிலா நின்றது; இனியிது கூறுவார் யாவர் எ-று.
மூவலென்பது ஒரு திருப்பதி. பாலைக்கு நிலமின்மையின், நானிலம் எனப்பட்டது. நயந்த சேவலைப்
பொருந்திய களிப்பால் அன்னஞ் சென்றுரையாமையல்லது அவரெம்மைக் காவாது விடாரென்னுங் கருத்தான்
எங்காவறழீஇயவர்க் கென்றாள் ஓதாதென்பதனை முற்றாக வுரைப்பினுமமையும் .நெய்தற்றிணை கூறுவார்
சோத்துன்னடியம் (173) என்பது தொட்டுப் புகழும் பழியும் (181) என்னுங்காறும் வரப்பாட் டொன்பதும்
இரங்கனிமித்தமாகக் கூறி, ஒரு வழித்தணத்தற் றுறையிடத்து ஆரம்பரந்து (182) என்பது தொட்டு இதன்
காறும்வர இப்பாட்டுப் பத்தும் இரங்கலே கூறுதலான், திணை: நெய்தல் என்னை? வாட்டம் உரிப்பொருளாதலின்
கைகோள் கற்பு மெய்ப்பாடு: அழுகை . பயன்: அயர்வுயிர்த்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : அழகிய முறுவலை யுடையவள் இரவிடத்துண்டாகிய கிலேசத்தை
அன்னத்துடனே அழிவுற்றுச் சொன்னது.
செய்யுள் : மூவராகியவர், முப்புரங்களை யழித்துவிட்ட திருமுறுவலைப் பொருந்தின வேதநாயகன்
பெரும்பற்றப் புலியூரிலுளனாகிய செல்வனுடைய நாவலைப் பொருந்தின நால்வகைப்பட்ட பூமியும்
உறங்கா நின்றன: நானுறங்காத விக்குற்றத்தை எம்மைக் காதலைப் பொருந்தினவற் கோதாதே, அளிக்கத் தக்க
களிப்புடைத்தாகிய அன்னம் தான் விரும்பின இன்பத்தைச் செய்கிற சேவலைத் தழீஇக்கொண்டு போய்த்
தான் உறங்கா நின்றது .
பாலைக்கு நிலமில்லாமையால் நால்வகைப்பட்ட, நிலமென்றார். களியன்னமே யென்றபடி;
தன்களிப்பாலே இது சொல்லாதிருந்தது. இது சொல்லிற் காப்பாரென்பது கருத்து. 191
12. வரவுணர்ந்துரைத்தல்*
-------------------------
*பேரின்பப் பொருள்: அருளேசென்றங் கரற்கியம்பியது.
வரவுணர்ந் துரைத்தல் என்பது தலைமக ளன்னத்தோ டழிந்து வருந்தா நிற்பத் தலைமக னொருவழித்தணந்து
வந்தமை சிறைப்புறமாக வுணர்ந்த தோழி, 'வளைகள் நிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெகிழ்ந் துருகா நின்றது.
கண்கள் துயிலின்றிக் கலுழா நின்றன; இவையெல்லாம் யான் சொல்ல வேண்டுவதில்லை: நீயே கண்டாய்;
இதனைச் சென்று அவர்க்குச் சொல்லுவா' யென மதியொடு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும் நெடுங் கண்துயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.
சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத் துரைத்தது.
இதன் பொருள்: எல் ஆர் மதியே - ஒளியார்ந்த மதியே; தில்லைத் தொல்லோன் அருள்கள் இல்லாரின்
சென்றார் சென்ற செல்லல் கண்டாய் - தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையாரல்லாதாரைப்
போலக் கண்ணோட்டமின்றிப் போனவர் போதலாலுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய் யான் சொல்ல
வேண்டுவதில்லை; வளை நில்லா- வளைகணிறுத்த நிற்கின்றனவில்லை ; நெஞ்சம் நெக்கு உருகும் -
நெஞ்சுநெகிழ்ந் துருகாநின்றது; நெடுங்கண் துயிலக்கல்லா கதிர் முத்தம் காற்றும்-நெடுங்கண்
கடுயிலாவாய்க் கண்ணீர்த் துளியாகிய கதிர்முத்தங்களை விடா நின்றன; எனக் கட்டுரைக்க- என்று
அவர்க்குச் சொல்வாயாக; நின்னை யான் இன்று இரக்கின்றது இது - நின்னையானின் றிரக்கின்றதிது எ-று
துயிலக் கல்லா வென்பது ஒரு சொல் முத்தங்காலுமென்பதூஉம்பாடம் . எல்லா மதியே யென்பது
பாடமாயிற் செ........மென்றுகூட்டியுரைக்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பிரிந்தவர் வந்து நின்ற படியை அறிந்து நின்று
நாயகியுடைய நிலையைச் சிறப்புடைய தோழி சிறைப்புறமாகச் சொன்னது.
செய்யுள் : ஒளியார்ந்த சந்திரனே! திருவம்பலத்தில் பழையவனுடைய அருளில்லாதாரைப்
போலே பிரிந்தவர், பிரிந்த துயரமெல்லாம் நீயே கண்டாய், ஆதலால், 'வளைகளும் தம்முடைய
நிலைகளில் நின்றனவல்ல! நெஞ்சமானது நெகிழ்ந்து உருகா நின்றது; நெடுங்கண்கள் உறங்காவாய்
ஒளியுடைத்தாகிய முத்து மாலைகளை இடாநின்றன' என்று சொல்லுவாயாக வேண்டும். இது நான்
இப்பொழுது உன்னை வேண்டிக் கொள்கிறது. 192
13.வருத்தமிகுதி கூறல்*
---------------------
*'பேரின்பப் பொருள் : ''வரைவிலின்பம் பெறுவாய் என்றது"
வருத்தமிகுதி கூறல் என்பது சிறைப்புறமாக மதியொடு வருத்தங்கூறிச் சென்றெதிர்ப்பட்டு
வலஞ்செய்து நின்று 'நீ போய், அவள் படாநின்ற வருத்தம் என்னாற்சொல்லுமள வல்ல' வென
வரைவு தோன்றத் தலைமகளது வருத்தமிகுதி தோழி கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
வளருங் கறியறி யாமந்தி
தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்க மெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே .
நீங்கி யணைந்தவற்குப், பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: வளரும் கறி அறியா மந்தி தின்று -வளரா நின்ற மிளகுக்கொடியைத் தமக்கேற்ற
வுணவென்றறியாத இளையமந்தி தின்று, மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண் சிலம்பா - வருத்தத்திற்
கிடமாய் நிலைதளரும் பெரிய வரைகளை யுடைய தண்சிலம்பையுடையாய்; வெண் மா மதி நின்று ஒளிரும்
சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள் நுதல் வெள்ளிய பெரிய மதி நின்று விளங்குஞ் சடையானியன்ற
முடியையுடையவனது புலியூரையொக்கு மொண்ணுதல்; தனது அங்கம் எங்கும் விளரும் - தன் மேனி
முழுதும் பசக்கும்; விழும்- அமளிக்கண் விழா நிற்கும்; எழும் - எழா நிற்கும் - விம்மும்-பொருமா நிற்கும்;
மெலியும் - நின்வன்கண்மையை நினைந்து மெலியா நிற்கும்; அதனாலின்ன நிலைமையளென்றென்னாற்
சொல்லப்படாது எ-று.
வளருமிளங்கறி கண்ணிற்கினி தாயிருத்தலின் இது நமக்குத் துய்க்கப்படா தென்றுணராத
இளமந்தி அதனைத் தின்று வருந்துமாறுபோலக் கண்ணு மனமு மகிழுமுருவினையாகிய நின்னை நின்
பெருமையுணரா தெதிர்ப்பட்டு வருந்தா நின்றாளென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
இவ்வாறு ஒருவழித்தணந்துவந்து வரைவுமாட்சிமைப்படவும் பெறும்.
அன்றியும் உடன்போக்கு நிகழப்படும்.
ஒருவழித்தணத்தல் முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒருவழிப் பிரிந்து கூடினவற்குத் தோழி சொன்னது.
செய்யுள்: இளைய மிளகுக் கொடியை விளைவறியா மந்திக்குரங்கு தின்று மயக்கத்துக்கொரு
கொள்கலமாய்த் தளர்ச்சியை உறுகிற பெரிய மலையில் குளிர்ச்சியுடைய பக்க மலையை யுடையவனே!
தன் மேனி முழுதும் வெளுக்கும்; சயனத்திலே விழுந்தும் எழுந்தும் பொருமியும் வாடாநிற்கும்;
வெள்ளிதாய் மிக்க திருவிளம்பிறை நின்று விளங்காநின்ற சடாபாரத்தை யுடையவனுடைய
பெரும்பற்றப் புலியூரை யொத்த ஒண்ணுதல் இப்படி இப்படிச் செய்யா நின்றாள்.
மிளகுக் கொடி இன்பம் செய்யாதாயினும் கண்ணுக்கு அழகியதாகத் தோன்றினாற்போல
நீயுமிவளை வரைந்து கொண்டு இன்புறுத்தாயாயினும் கண் மகிழ் உருவினையாய்த் தோன்ற விளைவை
அறியாமையினாலே அம் மிளகுக் கொடியை (மந்தி) தின்று வருந்தினாற்போல, இவளும் தன்
பேதைமையினாலே உன்னுடனே புணர்ந்து வருத்தமாகி விட்டனள் என்று படும். 193.
16. உடன் போக்கு*
----------------
*பேரின்பக்கிளவி: 'உடன்போக் கைம்பதோ டாறுதுறையு, மருளுயிர்க் கருமையறிய வுணர்த்தலு,
மானந்தத்திடை யழுத்தித் திரோதை, பரைவழியாகப் பண்புணர்த்தியது'.
இவ்வா றொருவழித்தணத்தல் நிகழாதாயின் உடன்போக்கு நிகழும். அது வருமாறு:
பருவங் கூறல் படைத்து மொழி தல்லொடு
மருவமர் கோதையை மகட்பேச் சுரைத்தல்
பொன்னணி வுரைத்தல் பொருள் விலை கூற
லன்னமென் னடையா ளருமைகேட் டழித
றளர்வறிந் துரைத்த றாழ் குழலாட
னுளநினை வுரைத்த லுடன் கொண்டு சேறற்
கருமை யுரைத்த லாதரங் கூறன்
மருவிய தடங்கயல் வாழா ளென்றல்
பொருவரு கற்பின் புனைநல னுரைத்த
றுணிந்தமை கூற றுணிவு கேட்ட
றுணிவறி வித்த றொல்லை நாண்விட
றுணிவெடுத் துரைத்தல்கொண் டகலென வுரைத்த
லடிவழி நினைந்துநின் றவனுளம் வாடல்
கொடியிடை யாளைக் கொண்டுசென் றுய்த்த
லோம்படுத் துரைத்தல் வழிப்படுத் துரைத்த
றேம்படு கோதையைத் திறலடு வேலோன்
பையக் கொண்டேகல் பயங்கெட வுரைத்தன்
மையமர் கண்ணியை வழியயர் வகற்ற
னெறிவிலக் கல்லொடு நெறியிடைக் கண்டவர்
செறிவெடுத் துரைத்தல் சேயிழை யாளுடன்
வழிவிளை யாடல் வழியெதிர் வருவோ
ரெழினக ரணிமை யிதுவென வுரைத்த
னகர்காட் டல்லொடு நகரிடைப் புக்குப்
பதிபரி சுரைத்தல் பாங்கியைக் கிட்டி
மதிநுத லாளை வளர்த்தவள் கேட்ட
லறத்தொடு நிற்ற லதுகேட் டழுங்க
றிறப்பா டுன்னிச் செவிலிகவன் றுரைத்த
லடி நினைந் திரங்க லதுதாய்க் குரைத்தன்
மடவரல் போக வாடி யுரைத்தல்
கிளி மொழிக் கிரங்கல் கிளர்சுடர்ப் பராய்த
லளிபெறு பருவத்திற் கவள் கவன் துரைத்த
னாடத் துணித னற்றாய் நயந்தவர்
கூடக் கரையெனக் கொடிக்குறி பார்த்தல்
சோதிடங் கேட்டல் சுவடுகண் டறித
லேதமுற் றவைகண் டிரங்கி யுரைத்தல்
வேட்ட மாதரைக் கண்டு வினாவல்
புறவொடு புலத்தல் குரவொடு வருந்த
றிறலருந் தவத்தொடு செல்லா நின்ற
மாவிர தியரை வழியிடை வினாவல்
வேதியர் தம்மை விரும்பி வினாவல்
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவன்
மணந்தரு குழலாண் மன்னிய நிலையொடு
வேங்கை பட்டது கண்டு வியத்த
லாங்கவ ரியைபணி யவட்கெடுத் துரைத்தன்
மீள வுரைத்தன் மீளா தவளுக்
கூழ் முறை யிதுவென வுலகியல் புரைத்த
லழுங்குதாய்க் குரைத்த லைம்பதோ டாறு
முழுங் கொலை வேலோ னுடன்போக் காகும்.
இதன் பொருள்: பருவங்கூறல், மகட்பேச்சுரைத்தல், பொன்னணி வுரைத்தல், அருவிலையுரைத்தல்,
அருமை கேட்டழிதல், தளர்வறிந்துரைத்தல், குறிப்புரைத்தல், அருமையுரைத்தல், ஆதரங் கூறல்,
இறந்துபாடுரைத்தல், கற்பு நலனுரைத்தல், துணிந்தமை கூறல், துணிவொடுவினாவல், போக்கறிவித்தல்,
நாணிழந்துவருந்தல், துணிவெடுத் துரைத்தல், குறியிடங் கூறல், அடியொடு வழிநினைந்தவனுளம் வாடல்,
கொண்டு சென்றுய்த்தல், ஓம்படுத்துரைத்தல், வழிப்படுத் துரைத்தல், மெல்லக் கொண்டேகல்,
அடலெடுத்துரைத்தல், அயர்வகற்றல், நெறி விலக்கிக் கூறல், கண்டவர் மகிழ்தல் , வழி விளையாடல்,
நகரணிமை கூறல், நகர் காட்டல், பதி பரிசுரைத்தல், செவிலிதேடல், அறத்தொடு நிற்றல், கற்பு நிலைக்கிரங்கல்,
கவன்றுரைத்தல், அடி நினைந்திரங்கல், நற்றாய்க் குரைத்தல், நற்றாய் வருந்தல், கிளிமொழிக்கிரங்கல்,
சுடரோடிரத்தல், பருவ நினைந்து கவறல், நாடத் துணிதல், கொடிக்குறி பார்த்தல், சோதிடங்கேட்டல்,
சுவடுகண்டறிதல், சுவடுகண்டிரங்கல், வேட்ட மாதரைக் கேட்டல், புறவொடு புலத்தல் , குரவொடு வருந்தல் ,
விரதியரை வினாவல், வேதியரை வினாவல், புணர்ந்துடன் வருவோரைப் பொருந்திவினாவல்,
வியந்துரைத்தல், இயைபெடுத்துரைத்தல், மீள வுரைத்தல், உலகியல்புரைத்தல், அழுங்கு தாய்க் குரைத்தல்
எனவிவை ஐம்பத்தாறும் உடன் போக்காம் எ-று. அவற்றுள்:
1. பருவங்கூறல்*
--------------
*'பேரின்பப் பொருள் : 'அருள் சிவம் பெறுபதம் இதுவெனவுரைத்தது
பருவங்கூறல் என்பது அலரறிவுறுத்த தோழி, 'இவண் முலை முதிர்வு கண்டமையான்
மகட்பேசுவார்க்கு எமர் மாறாது கொடுக்கவுங் கூடும்; அதுபடாமனிற்ப நீ முற்பட்டு வரை வாயாக'வெனத்
தலைமகனுக்குத் தலைமகளது பருவங் கூறா நிற்றல்; அதற்குச் செய்யுள்:-
ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம் பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.
உருவது கண்டவள்
அருமை யுரைத்தது.
இதன் பொருள் : ஒரு ஆகம் இரண்டு எழில் ஆய் ஒளிர்வோன் தில்லை ஒள் நுதல் ஒருமேனி
பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக்கணுளளாகிய
வொண்ணுதலுடைய; அங்கராகம் பயின்று - பூசப்படுவன பயின்று; அமிழ்தம் பொதிந்து-அமிர்தத்தைப்
பொதிந்து ; ஈர்ஞ் சுணங்கு ஆடகத்தின் பராகம் சிதர்ந்த பயோதரம்- நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின்
பொடியைச் சிதறின் முலைகள்; இப்பரிசே பணைத்த இராகம் கண்டால் இப்படியே பெருத்த
கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே-வள்ளலே ; எமர் எண்ணுவது இல்லையே - இவண் மாட்டெமர்
நினைப்பதில்லையே? சிலவுளவாம் எ-று.
இராகம் வடமொழிச்சிதைவு: ஈண்டு நிறமென்னும் பொருட்டு இராகம் முடுகுதலென்பாருமுளர்.
தில்லை யொண்ணுத லிராகமெனவியையும். மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஒரு திருமேனி பெண் வடிவமாக அழகு பெற்று விளங்குகின்ற
பருவங் கூறல்.
செய்யுள் : ஒரு திருமேனி பெண் வடிவும் ஆன்வடிவுமாக அழகு பெற்று விளங்குகின்றவன்,
அவனுடைய திருவம்பலத்தில் அழகிய நெற்றியினை யுடையாள் சந்தன குங்குமம் நெருங்கி அமுதத்தை
யுள்ளடக்கி நெய்த்த நிறமுடைத்தாகிய சுணங்கான பொற்கொடியைச் சிதறின முலைகள் இப்படியே
விம்மின இம்மணவொளியைக் கண்டால், நாயகனே! எங்கள் உறவின் முறையார் விசாரிக்குமது
ஒன்றுமில்லையேதான்.
என, மெத்தவும் விசாரிப்பார்கள் என்றது. அங்கராகம்-அங்கம், உடம்பு: இதனால் விரும்பப் படுவது;
சந்தன குங்குமம் இராகம் - முடுகுதல் என்பாருமுளர் : ஈண்டு நிறம். 194
2. மகட்பேச்சுரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள்: "சிவனது கருணையின் அளவெடுத்துரைத்தது."
மகட் பேச்சுரைத்தல் என்பது பருவங்கூறிய தோழி, படைத்துமொழியான் 'அயலவர் பலரும்
மேன்மேலும் பொன்னணியக் கருதா நின்றார்; நீ விரைய வரைவொடு வருவாயாதல் அன்றி யுடன்கொண்டு
போவாயாதல், இரண்டினுளொன்று துணிந்து செய்யக் கருதுவாய்; அதனை யின்றே செய்வாயாக' வெனத்
தலைமகனுக்கு அயலவர் வந்து மகட்பேசல் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
மணியக் கணியும் அரன்நஞ்ச
மஞ்சி மறுகி விண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே
படைத்து மொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி
அடர்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.
இதன் பொருள்: துறைவா-துறைவா; தில்லை அன்னாள் திறத்துத் துணியக் கருதுவது இன்றே
துணி- தில்லையை யொப்பாடிறத்து நீ துணிந்து செய்யக் கருதுவதனை இன்றே துணிந்து
செய்வாயாக; அயலவர் நிறை பொன் மேன்மேல் அணியக் கருதுகின்றார் பலர்- அயலவர் நிறைந்த
பொன்னை மேன்மேலு மணியக்கருதுகின்றார் பலர் எ-று .
மணி அக்கு அணியும் அரன்- மணியாகிய அக்கையணியுமரன் : நஞ்சம் அஞ்சி மறுகி
விண்ணோர் பணியக் கருணை தரும் பரன் - நஞ்சையஞ்சிக் கலங்கிச் சுழன்று தேவர் சென்று
பணிய அந்நஞ்சான் வருமிடர்க்கு மருந்தாகத் தன் கருணையைக் கொடுக்கும் பரன்,
தில்லை - அவனது தில்லையெனக் கூட்டுக.
அக்குமணி யெனினு மமையும். அலங்காரம்: ஒற்றுமைக் கொளுவுதல் ,
மெய்ப்பாடு : பெருமிதம். பயன் அது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சிட்டித் துரைக்கும் சொல்லினாலே ஆழ்ந்த வார்த்தையினையுடைய
பாங்கியானவள் உயுத்தம் விட்ட பிரகாசத்தினையுடைய நாயகனுக்கு அறிவு தோன்ற அறிவுறுத்திச் சொன்னது.
செய்யுள்: அக்கு மணியைச் சாத்துகின்ற தலைவன், விடத்துக்கஞ்சிச் சுழன்று பின்பு தேவர்கள் வந்து
வணங்க அருளைத்தருகிற மேலானவன், அவனுடைய புலியூரை யொப்பாள் அளவில் அறுதியிடத்தக்க
காரியத்தை இன்றே (துணிந்து செய்): துறைவனே! அயலார் பலரும் நிறைந்த பொன்னை அணிய நினையா
நின்றார்கள் மேன்மேலும்; ஆதலால் இன்றே (துணிவாயாக.) 195
3. பொன்னணிவுரைத்தல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: அன்புடை யோர்கட்கே யின்பாமென்றது.
பொன்னணி வுரைத்தல் என்பது படைத்து மொழியான் மகட்பேசல் கூறின தோழி, அறுதியாக
'முன்றிற் கணின்று முரசொடு பணில முழங்கக் காப்பணிந்து பொன்னணியப் புகுதா நின்றார்;
இனி நின்கருத்தென்னோ'வெனத் தலைமகனுக்கு அயலவர் பொன்னணி வுரையா நிற்றல், அதற்குச் செய்யுள்: -
பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான் றோய் கொடி முன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.
பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை
நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது.
இதன் பொருள் : கமழ் பூந் துறைவ-கமழ்பூந் துறைவனே; பாப்பணியோன் தில்லைப் பல் பூ
மருவுசில் ஓதியை - பாம்பாகிய வணியை யுடையவனது தில்லைக்கணுனளாகிய பலவாகிய பூக்கள்
பொருந்திய நுண்ணிய வோதியை யுடையாளை; நல் காப்பு அணிந்தார்- நல்ல காப்பையணிந்தார்கள்;
இனி பொன் அணிவார்- இனிப் பொன்னை யணிவார்; கோப்பு அணி வான் தோய் கொடி மூன்றில் நின்று -
கலியாணத்துக்குப் பொருந்திய கோப்புக்களை யணிந்த வானைத் தோயுங் கொடிகளையுடைய
முன்றிற்கணின்று; மணமுரசு இவை ஏர் குழுமி மாப்பணிலங்கள் முழங்கத் தழங்கும்- மண முரசங்களிவை
ஏரொடு குழுமிப் பெரிய சங்கங்கள் முழங்கத்தா மெலியா நின்றன; இனி யடுப்பது செய்வாயாக எ-று.
தில்லைப் பல்பூவென் றியைப்பினு மமையும். காப்பென்றது காவலை. அணிவா ரென்றது
முற்றுச்சொல். கோப்பணி முன்றிலெனவியையும். மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மலரை யொத்த நெடிய கண்களையுடையாளைப் பலபடியாலும்
நல்ல நெற்றியினையுடைய பாங்கி பொன்னணிவர் என்று சொன்னது.
செய்யுள்: அரவாபரணத்தைப் பூண்டவன், அவனுடைய பெரும் பற்றப் புலியூரில் பல பூக்களொடும்
பயின்ற மெத்தென்ற அளகத்தினை யுடையாளைக் காப்புக் கட்டினார்கள்; இனிப் பொன்னணிவார்களா
யிருந்தார்கள்: நாற்றமுடைய மலரினை யுள்ள துறைகளையுடையவனே ! கலியாணத்துக்குத் தக்க
கோப்புக்களை நிறைத்த ஆகாயத்தே தலைசாய்ந்த கொடிகளையுடைத்தாகிய முற்றத்திலே, கலியாண
முரசுகள் இவை அழகாகக் குழுமித் திரண்டு நின்று, மிக்க சங்குகள் ஆர்ப்ப (த்தாமும்) முழங்கா நின்றன.
இனிப் பொன் பூட்டுவார்களாயிருந்தது. (இனிச் செய்ய வேண்டுவது செய்வாயாக என்றவாறு). 196
4. அருவிலையுரைத்தல்*
---------------------
*பேரின்பப் பொருள்: "இன்பத னுக்கள வில்லை யென்றது'',
அருவிலையுரைத்தல் என்பது பொன்னணி வுரைப்பக் கேட்ட தலைமகன், "யான் வரைவொடு
வருதற்கு நீ முலைப் பரிசங் கூறுவாயாக' வென. எல்லாவுலகமு நல்கினும் எமர் அவளுடைய சிறிய விடைக்கு
விலையாகச் செப்பலொட்டார்; இனிப் பெரிய முலைக்கு நீ விலைகூறுவதென்னோ ' வெனத் தோழி
விலையருமை கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
எலும்பா லணியிறை யம்பலத்
தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.
பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென
ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.
இதன் பொருள்: சிலம்பா - சிலம்பா: எலும்பால் அணி இறை-எலும்புகளானலங்கரிக்கு மிறைவன்:
அம்பலத்தோன்- அம்பலத்தின் கண்ணான்; எல்லை செல்குறுவோர் நலம்பாவிய முற்றும் நல்கினும்-
அவனதெல்லைக்கட் செல்லக் கருதுவாரது நன்மை பரந்த வுலகமுழுதையும் நீ கொடுப்பினும் ;
கல் வரை நாடர்-எம்முடைய தமராகிய கல்வரை நாடர் ; வடிக்கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார் -
வடுவகிர் போலுங் கண்ணையுடையாளது சிறிய விடைக்கே விலையாகச் சொல்லுத லியையார் ;
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவது- கலம்பரந்த முலையின் விலையாக யாதனை நீ கருதுவது?
ஒன்றற்கும் அவருடம்படார் எ-று.
எலும்பாற் செய்த வணியென்று ஒரு சொல் வருவித்துரைப்பாருமுளர் . எல்லை சேறல்,
அறிவாலவனை யணுகுதல் தில்லை யெல்லை யெனினுமமையும். அவர் நலம் பாவா விடமின்மையின்
எஞ்சாமை முழுது மென்பார். நலம் பாவிய முற்று மென்றார்; என்றது அவர் சீவன் முத்தரா யிருத்தல்.
அஃதாவது சீவனுடனிருக்கும் போதே முத்தியை யடைந்திருத்தல். முத்தியாவது எங்கு மொக்கவியாத்தியை*
யடைந்திருத்தல். இஃது அகண்ட பரிபூரண ரென்றபடி அம்ம , கேளென்னுங் குறிப்பின்கண் வந்தது.
சிற்றிடைக்கேயென்னு மேகாரம்; பிரிநிலை. இவனுயர்ந்த தலைமகனாதலால், தன் றமரைக் கல்வரை
நாடென்றும், பேதையரென்றும் கூறினாள், மெய்ப்பாடு பெருமிதம். பயன் : தலைமகளதருமை யுணர்த்தல்.
*வியத்தி - வியாபித்தல்; நிறைந்திருத்தல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அறிவில்லாதாருடைய விசாரம் கொண்டது விடாமை
யுடைத்தென்று அன்புடைத்தோழி நாயகிக்கு விலையில்லாமையைச் சொன்னது.
செய்யுள்: எலும்பாலே அலங்கரிக்கிற சுவாமி , திருவம்பலத்தே யுள்ளவன். அவனுடைய எல்லையாகிய
ஞான காண்டத்தைக் குறுகி நிற்பவருடைய நன்மையே பரந்த எல்லாவுலகங்களையும் நீ கொடுக்கிலும். (எம்)
மலையிடத் துண்டாகிய நாட்டினையுடையவர் கேட்பாயாக வெற்பனே ! மாவடுவகிரை யொத்த
கண்களையுடையாளது சிற்றிடைக்கு விலையாகச் சொல்ல மாட்டார்கள் : ஆபரணங்கள் பரந்த தனத்தின்
விலையாக நீ எப்பொருளை நினைக்கின்றது.? 197
5. அருமைகேட்டழிதல்*
---------------------
*பேரின்பப் பொருள் : ''உயிரின்பெமக் குறுமோ வென்றது"
அருமைகேட்டழிதல் என்பது அருவிலைகேட்ட தலைமகன் நீ 'யவள தருமை கருதாது அவளதவயங்களி
லுண்டாகிய நயத்தைப் பற்றி விடாது நடுங்கா நின்றாய்; இனி மதியைப் பிடித்துத் தரவேண்டியழும் அறியாக்
குழவியைப் போலக் கிடந் தரற்றுவாயாக'வெனத் தன்னெஞ்சோடழிந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
விசும்பு ற்ற திங்கட் கழும்மழப்
போன்றினி விம்மி விம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
றூறல் குழல் மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.
பெருமைநாட் டத்தவள், அருமைகேட் டழிந்தது.
இதன் பொருள்; அரன் தில்லை அன்னாள் குயம் - அரனது தில்லையை யொப்பாளுடைய முலை;
புற்று அரவு இடை- புற்றின் கண் வாழும் பாம்புபோலு மிடை; கூர் எயிற்று ஊறல்- கூரிய வெயிற்றின்கணூறிய நீர்;
குழல் மொழியின் நயம் பற்றி - குழலோசை போலுமொழி என விவற்றின் கட்கிடந்த இன்பத்தையே கருதி;
நின்று நடுங்கித் தளர்கின்ற நல் நெஞ்சமே - விடாது நின்று அவளதருமை கருதாயாய் நடுங்கி வருந்தா நின்ற
நல்ல நெஞ்சமே; விசும்பு உற்ற திங்கட்கு அழம் மழப் போன்று -விசும்பைப் பொருந்திய திங்களைத் தரவேண்டி
யழுங் குழவியை யொத்து; அசும்பு உற்ற கண்ணோடு விம்மி விம்மி இனிக் கிடந்து அலறாய் நீரறாமையைப்
பொருந்திய கண்ணை யுடையையாய்ப் பொருமிப்பொருமி இனிக்கிடந்தலறுவாயாக. எ-று
குழன்மொழியி னென்னும் இன்: பலபெய ரும்மைத் தொகை யிறுதிக் கண்வந்த சாரியை இன்.
மெய்ப்பாடு : அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரிய நயனங்களையுடைவள் அருமையைக் கேட்டு நெஞ்சழிந்தது.
செய்யுள் : அரனுடைய பெரும்பற்றப்புலியூரை யொப்பாளுடைய முலைகளினும், புற்றிலே வாழ்கின்ற
பாம்பின் கழுத்தை ஒத்த இடையினும், கூரியழுறுவல் ஊறுகின்றன நீரிலும், குழலோசை ஒத்த வார்த்தையினுமுள்ள
இன்பத்தையே கருதி நடுக்கமுற்று வாடும் நல்ல நெஞ்சமே! (நல்ல நெஞ்சமென்றது, குறிப்பாலே அறிவில்லாத
நெஞ்சமே என்றது) ஆகாயத்திலே பொருந்துகின்ற சந்திரனைப் பிடித்துத்தா என்று வேண்டியழுகிற
பிள்ளைகளைப்போல் இப்பொழுது பொருமிப் பொருமி நீர் அறாக் கண்ணோடு கிடந்து அலறாய். 198
6. தளர்வறிந்துரைத்தல்*
---------------------
*பேரின்பப் பொருள்: "உன்னுடன் சிவமுறு மெனவருளுரைத்தது''
தளர்வறிந்துரைத்தல் என்பது வரைவுமாட்சிமைப் படாதாயின் நீயவளை யுடன்கொண்டு
போவென்பது பயப்பக் 'கடலையுங் கானலையு நோக்கிக் கண்ணீர் கொண்டு தன்னா யத்தாரை
யெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள் கருதிய தின்னதென்று தெரியா'தெனத் தோழி தலைமகளது
வருத்தங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மைதயங் குந்திரை வாரியை
நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல் நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
யும்மல்குற் பைந்தொடியே.
தண்டுறைவன் தளர்வறிந்து
கொண்டு நீங்கெனக் குறித்துரைத்தது.
இதன் பொருள்: பைதயங்கும் அரவம்புரையும் அல்குற் பைந்தொடி - படம் விளங்கும் பாம்பையொக்கும்
அல்குலையுடைய பைந்தொடி; மை தயங்கும் திரைவாரியைநோக்கி- கருமைவிளங்குந் திரையையுடைய
கடலையு நோக்கி: மடல் அவிழ் பூங்கைதை கானலை நோக்கி : மடலவிழா நின்ற பூவையுடையவாகிய
தாழையையுடைய கானலையு நோக்கி; கண்ணீர் கொண்டு-கண்ணீரைக் கொண்டு ; எம் கண்டர்
தில்லைப்பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள் பின் எம்முடைய கண்டரது
தில்லைக்கணுளராகிய பொய்யாதல் விளங்கும் நுண்ணிய மருங்குலையுடைய தன்னாயத்தாராகிய
நல்லாரையெல்லாம் புல்லிக் கொண்டாள்; அவள் கருதியதொன் றுண்டு போலும் எ-று.
கண்ணீர் கொண்டென்றது பெண்களுக் கியல்பான குணமொன்று, நெடுங்காலங் கூடமருவினாரை
விட்டு நீங்குகின்ற துயரத்தாற் றோன்றிய தொன்று, இக்காலமெல்லாம் உங்களைச் சேர்ந்து போந்த
பெருநலத்தான் இப்பெருநலம் பெற்றேனென்னு முவகைக் கண்ணீரொன்று. இப்பெருநல மென்றது
உடன்போக்கை. ஆதலான், நல்லாரை யெல்லாம் புல்லிக் கொண்டு கண்ணீர் கொண்டாள் பொய்
போலுமசையு மருங்கு லெனினுமமையும். குறித்துரைத்தது - கொண்டு நீங்கென்பது பயப்ப வுரைத்தது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: குளிர்ந்த துறையினை யுடையவன் தன் தளர்ச்சியை
யறிந்து கொண்டு நீங்குவாயாக என்று கருதிச் சொன்னது.
செய்யுள் : (இச்செய்யுளுக்கு உரை ஏட்டில் காணப்பெறவில்லை.)
7. குறிப்புரைத்தல்*
-----------------
*பேரின்பப் பொருள்; "கண்ட குறியாற் கலவே மென்றது"
குறிப்புரைத்தல் என்பது வருத்தங்கூறிப் போக்குணர்த்தி அதுவழியாக நின்று, 'என்னைப்
புல்லிக் கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும் பாவையையுங் கிளியையும் இன்றென்கைத்
தந்தாள்; அது நின்னோடுடன் போதலைக் கருதிப் போலு 'மெனத் தோழி தலைமகனுக்குத் தலைமகளது
குறிப்புரையாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
மாலைவந் தாண்டமென் னோக்கிதன்
பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே.
நறைக் குழலி, குறிப்புரைத்தது .
இதன் பொருள்; என் பைந்தொடி- என்னுடைய பைந்தொடி; இன்று என்னைப் புல்லிக் கொண்டு
பூவை தந்தாள்- இன்றென்னைப் புல்லிக்கொண்டு தன் பூவையை யென்கையிற் றந்தாள் ; பொன் பந்து
தந்தாள்; பின் பொற்றகட்டாற் புனைந்த பந்தைத் தந்தாள்: பாவை தந்தாள் - பின்றன் பாவையைத் தந்தாள் :
பைங்கிளி அளித்தாள் - பைங்கிளியையுமளித்தாள் ; மாவை வந்து ஆண்ட மெல் நோக்கி தன் பங்கர் -
மானைச் சென்றடிமை கொண்ட மெல்லிய நோக்கையுடையாளது கூற்றை யுடையவரது ;
வண் தில்லை மல்லல் கோவை வந்து ஆண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பு அறியேன்-
வளவிய தில்லை வரைப்பினுண்டாகிய வளத்தை யுடைய கொவ்வைக் கனியைச் சென்றாண்ட
செவ்வாயையுடைய இக்கருங் கண்ணியது கருத்தறிகின்றிலேன்; நின்னுடன் செல்லப்போம். எ-று.
புல்லிக் கொண்டு பாவையைத் தந்தாளென்றியைத்துப் பாவை மேலுள்ளவன்பால் அதனைத்
தருவுழிப் புல்லிக் கொண்டு தந்தாளென் றுரைப்பாருமுளர். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம்,
பயன்: உடன் போக்குணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : (இக்கொளுவிற்கு உரை ஏட்டில் காணப்பெறவில்லை).
செய்யுள் : தன் பூவையையும் தந்தாள் ; பொன்னாற் செய்த அழகிய பந்தையும் தந்தாள்; என்னைத்
தழுவிக்கொண்டு பாவையா .....ளனையும் .....(புல்லிக்கொண்டு பாவை தந்தாளென்றது. பாவை மேலுள்ள
அன்பால் அதனைப் புல்லிக்கொண்டு என்று உரைப்பினும் அமையும்; புல்லிக் கொண்டது என்றது முன்னே
அழைத்துச் சொல்லினும் (?) அமையும்; ) பச்சென்ற கிளியினையும் தந்தாள். இப்பொழுது எம்முடைய அழகிய
வளைகளையுமுடையாள். ஆதலால், மான் நோக்கத்தினைச் சென்றடிமை கொண்ட மெல்லிய
நோக்கினையுடையாள் பாகத்தையுடையவன். அவனுடைய அழகிய பெரும்பற்றப் புலியூரில்
அழகிய கொவ்வைக் கனியை வந்தடிமை கொண்ட சிவந்த வாயினையும் கரிய கண்களையுமுடையாள்
நினைவு இன்னபடி என்றறிகின்றேனில்லை. 200
8. அருமையுரைத்தல்*
------------------
*பேரின்பப் பொருள்; 'சிவன்றன் பெருமை யுயிரருட்குரைத்தது'
அருமையுரைத்தல் என்பது குறிப்புரைத்துப் போக்குடம்படுத்திய தோழிக்கு,
'கொங்கை பொறாது' நடுங்கா நின்ற இடையினையுடையாளது மெல்லிய வடிக்கு யான் செல்லும்
வெஞ்சுரந்தகாது; அதன் மேலும் எம்பதியுஞ் சேய்த்து; அதனால் நீ கருதுகின்ற காரிய மிகவுமருமை
யுடைத்து, எனத் தலைமகன் போக்கருமை கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
மெல்லியல் கொங்கை பெரியமின்
நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே
கானின் காடுமையும் மானின் மென்மையும்
பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது.
இதன் பொருள்: வானம் எல்லாம் கற்றுச் சொல்லிய சீர் -வானுலகெங்கும் ஆண்டையராற் கற்றுச்
சொல்லப்பட்ட புகழையும்; சுடர் திங்கள் கண்ணித் தொல்லோன் புலியூர் - சுடரையுடைய திங்களாகிய
கண்ணியையுமுடைய பழையோனது புலியூரில்; அல்லி அம்கோதை நல்லாய் - அல்லியங்கோதையை
யுடைய நல்லாய்; மெல்லியல் கொங்கை பெரிய - மெல்லியலுடைய கொங்கைகள் பெரிய; இடை மின்நேர்-
அவற்றைத் தாங்குமிடை. நுடக்கத்தான் மின்னுக்கு நேராயிருந்தது; மெல் அடி பூ-மெல்லிய வடிகள்
பூவேயாயிருந்தன; கல் இயல் வெம்மைக்கடம் கடுந் தீ - கல்லின் கணுண்டாகிய வெம்மையை யுடைய
காடு அவ்வடிக்குத் தகாததாய்க் கடிய தீயாயிருந்தது; எம் அகல் நகர் எல்லை சேய்த்து - அதன்மேல் எம்முடைய
வகன்ற நகரும் எல்லை சேய்த்தாயிருந்தது; அதனான் நீ கருதியது பெரிதுபரிது எ- று.
கல்லானியன்ற கடமென வியைப்பினு மமையும். எல்லை சேய்த்தென்பன ஒரு சொன்னீர்மைப்பட்டு
அகனகரென்னு மெழுவாய்க்கு முடிபாயின. வானரெல்லாமென்பதூஉம் பாடம் . இதுவென்பதனை
எல்லாவற்றோடுங் கூட்டுக. மெய்ப்பாடு : இளிவரல்' பயன்: தலைமகணிலைமை யுணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: காட்டினது கடினமும் மானின் நோக்கினை யுடையாளுடைய
மென்மையும் தனது ஊரினது தூரமும் இத் தன்மையவென்று சொன்னது. இதுவென்பதனை
எல்லாவற்றோடும் கூட்டுக.
செய்யுள்: மெல்லிய இயல்பினை யுடையாளது கொங்கை பெரிய வாயிருந்தன. இவற்றைத் தாங்கும்
இடை மின்னை நிகர்க்கும்; மெல்லிய அடிகள் பூவாயிருந்தன. கல்லாலியன்ற வெய்ய காடு கொடிய நெருப்பா
யிருந்தது; தேவர்கள் எல்லாரும் க'ற்றுச் சொல்லும் புகழினையுடைய ஒளியை யுடைத்தாகிய பிறையை
அழகிய நெற்றிமாலையாகவுடைய பழையவனுடைய பெரும் பற்றப்புலியூரில் , அல்லிமாலையுடைய
நல்லாய் ! எம்முடைய அகன்ற நகரியின் எல்லை தூரிதாயிருந்தது.
என்றால், 'நான் கொண்டு நீங்கும் படியே(து?)' என்றது, தேவர்க்கெல்லாம் கற்றுச் சொல்லிய
புகழென்றது அவர்களும் தன் பக்கலிலே கற்றுச் சொல்லுகிற சொல்லும் நல்லது; தன் புகழ் தனக்கே
தெரியும் என்பது கருத்து. 201
9. ஆதரங்கூறல்*
---------------
*பேரின்பப் பொருள் : 'அன்புக் கிரங்கு மின்பென வுரைத்தது.'
ஆதரங்கூறல் என்பது போக்கருமை கூறிய தலைமகனுக்கு, 'நின்னோடு போகப்பெறின் அவளுக்கு
வெஞ்சுரமுந் தண்சுரமாம்; நீ யருமை கூறாது அவளைக் கொண்டு போ'வெனத் தோழி தலைமகளதாதரங்
கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள்:-
பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும்
நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது .
இதன் பொருள்: பிணையும் கலையும்- பிணையுங் கலையும்; பெரு நீர் நசையால்-மிக்க நீர் வேட்கையால்;
வன் பேய்த் தேரினை அணையும் முரம்பு நிரம்பிய முரம்பு நிரம்பிய அத்தமும் - பெரிய பேய்த் தேரினைச்
சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐய-ஐயனே; நின்னொடு ஏகின் மெய்யே எம் பைந்தொடிக்கு-
நின்னோடு செல்லின் மெய்யாக எம் பைந்தொடிக்கு: இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லைப்
பூந் தண்பணையும் தடமும் அன்றே-ஒப்புமெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லைவரைப்பிற்
பூக்களையுடைய குளிர்ந்த மருத நிலமும் பொய்கையுமல்லவோ!-நீ யிவ்வாறு கூறுவதென்னை எ- று.
முரம்பு - கல் விரவி யுயர்ந்திருக்கு நிலம். ஏகினென்னும் வினையெச்சம் பணையுந்தடமுமாமென
விரியுமாக்கத்தோடு முடிந்தது. அழல்தடம் - தீக்காய்கலம் விகார வகையால் தடா தடமென நின்றது.
அழலானிறைந்த பொய்கையெனினு மமையும். அலங்காரம்: புகழாப்புகழ்ச்சி.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: காயக் கிலேசத்தை ஒத்து உரிய வகை உன்னோடே போகின் ,
இவளுக்கு நிழல் உட்பட்ட தடாகத் தோடு ஒக்குமென்றது, எம்முடைய அழகிய வளையினையுடையாளுக்கு.
செய்யுள்: பிணைமானும் கலைமானும் வலிய பேய்த்தேரைப் பெரிய பெரிய நீர் வேட்கையாலே
தண்ணீரென்று குறுகும் முரம்பு நிரம்பிய அத்தமும், கல் விரவி உயர்ந்த நிலங்கள் மிக்க அரிய வழியும்.
சுவாமீ, உண்மையாகத் தனக்கு ஒப்பும் அளவுமில்லாத இறைவனது பெரும்பற்றப் புலியூரில் தட்பமும்
பொலிவும் உடைத்தாகிய மருத நிலமும் தடாகமு மல்லவோ உன்னுடனே போதப் பெறில் அவை? நீ இவளை
அந்நியமாகச் சொல்வது ஏன்? 202
10. இறந்துபாடுரைத்தல்*
----------------------
*பேரின்பப் பொருள்: 'இன்புக் குயிரே யிடமென் றுரைத்தது.'
இறந்துபாடுரைத்தல் என்பது ஆதரங்கூறிய தோழி, நீயுடன் கொண்டு போகாயாகில்
அலரானுங் காவன் மிகுதியானும் நின்னை யெதிர்ப்படுத லரிதாகலின், தடந்துறந்த கயல்போல
இறந்துபடும்' எனத் தலைமகளதிறந்துபாடு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
இங்கய லென்னீ பணிக்கின்ற
தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
லண்ணல் கடிகொள் தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
கண்ணித் திருநுதலே .
கார்த் தடமுங் கயலும் போன்றீர்
வார்த்தட முலையு மன்னனு மென்றது.
இதன் பொருள்: இணைப்பது இல்லாக் கங்கை அம் செஞ்சடைக்கண் நுதல் அண்ணல் கடிகொள்
தில்லை - இணைக்கப் படுவதொரு பொருளு மில்லாத கங்கையையுடைய வழகிய செஞ்சடையையுங்
கண்ணையுடைய நுதலையு முடைய வண்ணலது காவலைப் பொருந்திய தில்லை வரைப்பின் ; பங்கயப்
பாசடைப் பாய்தடம் நீ - பங்கயத்தின் பசிய விலைகளையுடைய பரந்த பொய்கை நீ; கருங்கயல் கண்
இத்திருநுதல் படர் தடத்துச் செங்கயல் அன்றே-கருங்கயல் போலுங் கண்ணையுடைய இத் திருநுதல்
அகன்றவப் பொய்கைக்கண் வாழுஞ் செங்கயலன்றோ அதனால்; ஏந்தல்-ஏந்தால்; இங்கு நீ அயல்
பணிக்கின்றது என் - நின்னோடேகு மிடத்துவேறொன்றானொரு துன்பம் வருவதாக இவ்விடத்து
நீயயன்மை கூறுகின்றதென்! செங்கயற்குப் பங்கயத்தடமல்லது வேறு வேண்டப்படுவதொன் றுண்டோ ! எ-று.
கண்ணுதலாகிய வண்ணலெனினு மமையும். உடன் கொண்டு போகா யாயின், அலரானும்
காவன்மிகுதியானு நின்னைத் தலைப்படுதலரிதாகலிற் றடந்துறந்த கயல் போல இவளிறந்துபடு
மென்பது கருத்து. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு; பெருமிதம். பயன்: உடன்போக்கு வற்புறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : கரிய தடாகத்தையும் அதில் வாழும் கயலினையும் ஒப்பீர்!
கச்சணிந்த தனத்தாளும் மன்னனே நீயும் என்றது. (என்றது எதிர்மறை)
செய்யுள் : தனக்கு ஒப்பில்லாத கங்கை யணிந்த அழகிய சிவந்த சடையினையும் கண்ணுடைத்தாகிய
திருநெற்றியினையுமுடைய பெரியவன், அவன் காவல் செய்கிற பெரும்பற்றப்புலியூரில தாமரையிற்
பச்சென்ற இலை செறிந்த தடாகத்தை ஒப்பை; அந்தப் பரந்த தடாகத்தில் சிவந்த கயல் மீனல்லவோ,
கயலை ஒத்த கரிய கண்களையுடைய இந்த அழகிய நெற்றியினை யுடையாள், நீ இங்ஙனம் புக்கு
அயலாரது வார்த்தை சொல்லுவது என் தான்? (ஏந்தலே!)
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீரிலே நிற்கிற கயலுக்கு இன்பம்; தாமரையிலை யுடைத்தானால்
பிறிதொன்றினால் வருத்தப்படாது : அது போல உன்னுடனே போதுகையில் இவளுக்கு இன்பம். உடன் போய் நீ
வரைந்து கொள்ளுத(லி)ல் இவளுக்கு ஏமா(ற்)றமும் வருத்தமும் படா; எனவே உன்னைப் பிரிந்து அவள் இங்கு
இருந்தால் தடம் துறந்த கயல்போல இறந்துபடும் என்பது கருத்து. உடன் கொண்டுபோகாயாயின்
அலரானும் காவல் மிகுதியானும் நின்னைத் தலைப்படுதலரிதாகத் தடந்துறந்த கயல் போல்வள் இவள்
(இறந்துபடுவள்) என்றவாறு. 203
11. கற்புநலனுரைத்தல்*
----------------------
*பேரின்பப் பொருள்; அருள் சிவத் திடைச்சென் றாதரங்கூறியது.
கற்பு நலனுரைத்தல் என்பது தலைமகனைப் போக்குடம்படுத்திய தோழி, தலைமகளுழைச் சென்று,
'மகளிர்க்குப் பாதுகாக்கப் படுவனவற்றுள் நாண்போலச் சிறந்தது பிறிதில்லை; அத்தன்மைத்தாகிய நாணுங்
கற்புப் போலச் சீரியதன்று' என உலகியல் கூறுவாள் போன்று, அவள் உடன்போக்குத் துணியக் கற்பு நலங்
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்கந் நாண் தகைசால்
லேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமி தன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.
பொய்யொத்தவிடை போக்குத்துணிய
வையத்திடை வழக்குரைத்தது.
இதன் பொருள்: ஈங்கோயில் சிறந்து சிற்றம்பலத்து ஆடும்- ஈங்கோயிடத்துப் பொலிந்து மேவிச்
சிற்றம்பலத்தின் கணின்றாடும்; எம்கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதல் - எம்முடைய
கூத்தனாகிய பிரானது வாயின் கண் எப்பொழுதும் வந்து சிறத்தற்குக் காரணமாகிய அறிவாற்
சிறப்பையுடையையாகிய மதிநுதால்; தையலாருக்கு நாண் தாயின் சிறந்தன்று-மகளிர்க்குப் பழி நீக்கிப்
பாதுகாத்தலில் நாண் தாய் போலச் சிறந்தது; அந்நாண் - அத்தன்மைத்தாகிய நாண்; தகைசால் வேயிற்
சிறந்த மென் தோளி - அழகமைந்த வேய் போலச் சிறந்த மெல்லிய தோள்களை யுடையாய்; திண்கற்பின்
விழுமிது அன்று திண்ணிய கற்பு போலச் சீரிதன்று எ - று.
தாயினுஞ் சிறந்ததன்று நாணென் றுரைப்பினு மமையும். நாணென்பது ஒரு பொருட் குரிமையாக
லிற்றாயென வொருமை கூறினார். ''ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப” என்பது போல அமையுமாறு முடைத்து
அன்றியும், "உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்பச் சிறந்தன்று"
(தொல், பொருள், களவியல், 22) என்றாராகலின். வாயிற் சிறந்த மதியிற் சிறந்த வென்பதற்குத் தாய்போல
நாண் சிறத்தலும் நாணினுங் கற்புச் சிறத்தலுமாகிய இரண்டும் கூத்தப் பிரான் வாயிற் சிறந்த நூல்களிடத்துச்
சிறப்புடைய பொருளென்றுரைப்பினு மமையும். இது குறிப்பெச்சம். போக்குத் துணிய - போக்கும் துணியும் வண்ணம்.
மெய்ப்பாடு: அது பயன்: தலைமகளை யுடன்போக்கு நேர்வித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பொய்யென்ற சொல்லுக்குப் பொருந்தின இடையை
யுடையாள் உடன் போக்கு அறுதியிடப் பூமியிடத்து வழங்கும் இயல்பைச் சொன்னது
செய்யுள்: திருவீங்கோய் மலையிலே சிறந்தெழுந்தருளியிருந்து திருச்சிற்றம்பலத்திலே
யாடி யருளுகின்ற கூத்தனாகிய எம்முடைய சுவாமி தனது திருவாய் மலர்ந்தருளின வேதாகமத்திலே
மிகுத்தெண்ணப்பட்டன. மக்களுக்குப் பழி நீக்கிப் பாதுகாக்கலாலே தாய்போற் சிறப்புடைத்தாகி
மெல்லிய தோள்களையுடையாளுக்குச் சிக்கென்ற கற்புடைமை போலச் சீரிதல்ல (இவையிரண்டும்
வேத நூலிற் சிறந்தனகாண்) பிறையினை யொத்த நெற்றியினை யுடையாய்! ''உயிரினும் சிறந்தன்று
நாணே. நாணினும் செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' எனவாகலின். 204
12. துணிந்தமைகூறல்*
--------------------
*பேரின்பப் பொருள்: சிவத்துக்கருளுயிர்ச் செய்கையுரைத்தது"
துணிந்தமை கூறல் என்பது உலகியல் கூறுவாள் போன்று கற்புவழி நிறுத்தி, 'எம்பெருமான்
நின்னை நீரில்லாத வெய்ய சுரத்தே உடன் கொண்டு போவானாக நினையா நின்றான் ; இதற்கு நின்
கருத்தென்னோ'வெனத் தோழி தலைமகளுக்கு த் தலைமகனினைவு கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
குறப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம் விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம் பிரான் புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.
பொருவே லண்ணல் போக்குத் துணிந்தமை
செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது.
இதன் பொருள்: குறப்பாவை - குறப்பாவாய்; தம்பிரான் புலியூர் மறப்பான் அடுப்பது ஓர்
தீவினை வந்திடின் - தம் பிரானது புலியூரை மறக்கக்கூடுவதொரு தீவினை விளைவு வருமாயின்;
சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் - பல யோனிகளினுஞ் சென்று சென்று பிறக்கக்கூடினும்;
பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்- பின்னுஞ்சென்று சேரத் தகுந் தன்மையை யுடையவர்; நின் குழல்
வேங்கைப் போதொடு கோங்கம் விராய் - நின்குழலின்கணுண்டாகிய வேங்கைப் பூவொடு கோங்கம்
பூவை விரவி; நறப் பாடலம் புனைவார் நினைவார் - தேனையுடைய பாதிரிமலரைப் புனைவாராக
நினையா நின்றார் எ-று.
புனைவா ரென்னு முற்றுச் சொல் செய வெனெச்சமாகத் திரித்துரைக்கப்பட்டது. புனைவாரா யுடன்
போதலை நினையா நின்றா ரென்றுரைப்பினு மமையும். நினைவா ரென்னு மெதிர்காலத்து முற்றுச்சொல்
நிகழ்காலத்துக்கண் வந்தது. கோங்கம் விராய்ப் பாடலம் புனைவார் நினைவா ரென்றதனான், நீரிலாற்றிடை
நின்னொடு செல்லலுற்றா ரென்பது கூறினாளாம். புலியூரை யுணர்ந்தார்க்குப் பின்னை மறத்த லரிதென்னுங்
கருத்தான், மறப்பானடுப்பதொர் தீவினை வந்திடினென்றாள். புலியூரை யொருகாலுணர்ந்த துணையானே
பிறவி கெடுமன்றே :
அவ்வாறன்றி யதனை மறந்தவாற்றானே பிறக்கக் கூடினுமென்னுங் கருத்தால் , பிறப்பானடுப்பினு
மென்றாள் அலர் நாணி உடன்போகாது ஈண்டிற்செறிக்கப்பட்டு அவரை யெதிர்ப்படாதிருத்தல் அன்பன்றென்னுங்
கருத்தால் பிறப்பானடுப்பினும் பின்னுந் துன்னத் தகும் பெற்றிய ரென்றாள் பெற்றிய ரென்பதனை வினைக்
குறிப்பு முற்றாக வுரைப்பினு மமையும். உன்னத்தகும் பெற்றிய ரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு அது.
பயன்: தலைமகன் உடன்போக்கு நேர்ந்தமை யுணர்த்துதல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: போர்த் தொழிலுள வேலினையுடைய நாயகன் உடன் போக்கு
அறுதியிட்ட படியைச் செருச் செய்யும் வேலை யொத்த கண்ணினை யுடையாளுக்குச் சென்று சொல்லியது.
செய்யுள்: குறவர் மகளே! தம்பிரான் புலியூரை மறுத்தல் கூடுவதொரு தீவினை வருமாகில்,
அதனாற் சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்னத்தகும் பெற்றியரே என்பதனை
நிரை நிரையாக்கி, யோனிகளிலே சென்று பிறத்தல் கூடுவதாகிலும் அங்கே தாமும் சென்று நாளும்
கூடத்தக்க முறைமையினையுடையார் (என்று கொள்க). உன் மனையின் வேங்கைப் பூவோடே கோங்கம்
பூவையும் கலந்து தேனுடைத்தாகிய பாதிரிப் பூவையும் கலந்து சூட்டுவதாக நினையா நின்றார்.
(எனவே கோங்கும் பாதிரியுமுள்ளது பாலை நிலமாதலின் அந் நிலத்தேற
உடன் கொண்டு போவதாக அறுதியிட்டாரென்பது கருத்து) 205
13. துணிவொடு வினாவல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: "உயிர்வழி வருங் காரணமே தென்றது"
துணிவொடு வினாவல் என்பது தலைமகனினைவு கேட்ட தலைமகள் அவனினைவின்படியே
துணிந்து நின்று, "இந்நீரில்லாத வெய்யசுரத்தே யிப்பொழுதிவர் நம்மையுடன் கொண்டு போகைக்கு
காரண மென்னோ'வெனத் தோழியை வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள்;-
நிழற்றலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும் நங் கொற்றவர்க்கே .
சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து
கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.
இதன் பொருள்: நிழல் தலை தீநெறி நீர் இல்லை- நிழலிடந்தீந்தவழி நீருடைத்தன்று; ஓரி கத்தும்
கானகம் அழல் தலை வெம்பரற்று என்பர் - இரு மருங்குமுண்டாகிய ஓரி கூப்பிடுங் காடு அழனுதிபோலு
நுதியையுடைய வெய்ய பரலை யுடைத்தென்று சொல்லுவர்: தில்லை அம்பலத்தான் கழல் தலை வைத்துக்
கைப்போதுகள் கூப்பக் கல்லாதவர்போல் - தில்லையம்பலத்தின் கண்ணானது கழல்களைத் தந்தலை மேல்
வைத்துக் கையாகிய போதுகளைக் கூப்பப் பயிலாத வரைப் போல இத்தன்மைத்தாகிய நெறிக்கண் ;
குழல் தலைச் சொல்லி குழலிடத்துச் சொற்போலுஞ் சொல்லையுடையாய்; நம் கொற்றவர்க்குச் செல்லக்
குறிப்பு ஆகும் என்னோ-நம் கொற்றவர்க்குச் செல்லக் குறிப்புண்டாகின்ற இஃதென்னோ ! எ-று.
நீரில்லையென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய் நெறி யென்னு மெழுவாய்க்குப் பயனிலையாயின.
நெறிக்கணீரில்லை யென விரிப்பினு மமையும். நிழலிடந்தீயோடொக்கு நெறி; அந்நெறி நீருடைத்தன்று.
கானகமெங்கு மோரி கூப்பிடும். அக்கானகம் அழற்றலை வெம்பரலையுமுடைத்து என்றுரைப்பினுமமையும்,
இப்பொருட்குக் கானகமோரிகத்து மென்பதற்கு நெறி நீரில்லையென்ற தற்குரைத்த துரைக்க. மெய்ப்பாடு: அழுகை,
பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாயகன் துணிந்த நெஞ்சுடனே போ (கும் சுரத்தினை நினைந்து ஆ)
பரணங்களை அணிந்த வஞ்சிக்கொம்பை ஒப்பா (ள்] கலங்கினது .
செய்யுள்: இரண்டு பக்கங்களிலுமுண்டாகிய காட்டில் தண்ணீர் வேட்கையாலே ஓரி கூப்பிடாநிற்கும்;
நிழலிடம் தீய்ந்த வழி நீரில்லை; அழலுடைத்தாகிய தலையாற் சிறந்த வெம்பரலை உடைத்தென்று பலரும்
சொல்லுவார்கள்; பெரும்பற்றப் புலியூரில் தில்லையம்பலத்தே யுள்ளவருடைய சீபாதங்களைத் தலையிலே
வைத்துக் கையாகிய பூக்களைக் குவித்து அஞ்சலி பண்ணக் கல்லாதவர்களைப் போலே குழலிடத்துண்டாகிய
ஓசையை ஒத்த வார்த்தையினை யுடையாய்! நம்முடைய கொற்றவற்கு இவ்வழிக் கருத்துச் சென்றபடி
எது காரணமாகத்தான் ? 206
14. போக்கறிவித்தல்*
--------------------
'பேரின்பப் பொருள் : உயிருடன் படலரற் கருளே யுரைத்தது.
போக்கறிவித்தல் என்பது 'இப்பொழு தவர் போகைக்குக், காரணமென்னோ'வென்று கேட்ட தலைமகளுக்கு,
' நீங்கள் உடம்புமுயிரும் போல ஒருவரையொருவ ரின்றியமை யீராயினீர்; இத்தன்மைத் தாகிய நுங்காதலை
யறிந்து வைத்தும் அவற்குவரு மேதம் நின தென்றஞ்சி யானவனை வரவுவிலக்குவேன்; அவனுமவ்வாறு
வருதலையொழிந்து வரை வொடுவரிற் பொன் முதலாகிய வெல்லாவற்றையு நினக்கு முலைப்பரிசம்
பெறினும் நமர் நின்னைக் கொடார்; சொல்லு மிடத்து இதுவன்றோ நீரருஞ்சுரம் போகைக்குக்காரணம்' என்று
தோழி தலைமகனது போக்கறிவியா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
காயமும் ஆவியும் நீங்கள்சிற்
றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீ இவர
லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
கொடார்நமர் இன்ன செப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
போக்குத் துணி வித்தவே.
பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை
அரிவைக் கவள் அறிய வுரைத்தது.
இதன் பொருள்: நீங்கள் காயமும் ஆவியும்- நீங்கள் உடம்பு முயிரும்போல ஒருவரை யொருவ
ரின்றியமையாத வன்பையுடையீர் : சிற்றம்பலவன் கயிலைச்சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் -
இத்தன்மைத்தாகிய நுங்காதலை நினையாது சிற்றம்பலத்தான் கைலையிற் சீயத்தையும் அல்லாத
கொடு விலங்கையுமஞ்சி யானவனை வரற்பாலையல்லையென்று கூறுவேன்; செறிதிரை நீர்த்தேயமும்
யாவும் பெறினும் நமர் கொடார்- அவ்வாறு வருதலை யொழிந்து வரைவு வேண்டின், நெருங்கிய
திரைகளையுடைய கடலாற் சூழப்பட்ட இந்நிலத்தையும் பொன் முதலாகிய வெல்லாவற்றையும்
பெறினும் நமர் நின்னைக் கொடார்கள், அதனால், தோயமும் நாடும் இல்லாச் சுரம் போக்குத் துணிவித்த-
செப்பில் இன்ன நீரு மக்கள் வாழுமிடமில்லாத சுரங்களைப் போதலைத் துணிவித்தன சொல்லுமிடத்து
இத்தன்மையனவன்றோ? எ-று
நீங்கள் காயமு மாவியும் போல வின்றியமையாமையின் அவற்கு வருமேத நினதென்றஞ்சி
அவன் வரவு விலக்குவே னென்றாளாக வுரைப்பினு மமையும். துணிவித்தத தென்பது பாடமாயின்,
துணிவித்ததனைச் செப்பினின்னவெனக் கூட்டியுரைக்க. அறிய-இன்ன காரணத்தானென்றறிய.
மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: உடன்போக்கு மாட்சிமைப் படுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: போர்த் தொழிலை வல்ல ஒளியுடைத்தாகிய வேலினை
யுடையவன் உடன் போக்கறுதி யிட்ட படியை நாயகிக்கு அவள் அறியும்படி சொல்லியது.
செய்யுள் : நீங்கள் உடம்பும் உயிருமாயிருந்தீர்கள் ; திருச்சிற்றம்பல நாதனுடைய ஸ்ரீகயிலாய
மலையில் சிங்கத்துக்கும் மற்றுமுள்ள - துட்ட மிருகங்களுக்கும் பயப்பட்டு 'வாராதே கொள் என்பன் நான்;
செறிந்த திரைகளையுடைத்தாகிய கடல்சூழ்ந்த இந்த உலகத்தையும் மற்றுமுள்ள பொருள்களையும்
பெறினும் நம் உறவின் முறையானவர்கள் (உன்னைக்) கொடார்கள்; இத்தன்மையன காண் ; சொல்லின்
நீரும் மனிதரும் இல்லா வழியிலே போகைக்கு அறுதியிடப் பண்ணினவை இவைகாண் . 207
15. நாணிழந்து வருந்தல்*
-----------------------
*பேரின்பப் பொருள் : "இன்பமே யுயிருக் கேகாந்த முன்னியது''
நாணிழந்து வருந்தல் என்பது உடன் கொண்டு போகைக்குக் காரணங்கேட்ட தலைமகள்,
ஒருநாளுமென்னை விட்டு நீங்காது என்னுடனே வளர்ந்த பொலிவுடைத்தாகிய நாண் கற்பினெதிர்
நிற்கமாட்டாது தன்னைவிட்டு நீங்காத என்னைக் கழிவதாக; மகளிர் எழுபிறப்பின் கண்ணுங்குடியிற்
பிறவாதொழிக'வெனத் தானதற்குப் பிரிவாற்றாமை யான் வருந்தா நிற்றல் அதற்குச் செய்யுள் ;-
மற்பாய் விடையோன் மகிழ்புலி
யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்து நுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.
கற்பு நாணினு முற்சிறந் தமையிற்
சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது
இதன் பொருள்: மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் - வளத்தையுடைய பாயும் விடையையுடையவன்
விரும்பும் புலியூரில்; என்னொடும் வளர்ந்த பொற்பு ஆர் திரு நாண்- என்னோடுந் தோன்றி என்னோடொக்க
வளர்ந்த பொலிவார்ந்த திருவையுடைய நாண் ; பொருப்பர் விருப்புப் புகுந்து நுந்த - பொருப்பர் மேல் யான்
வைத்த விருப்பம் இடையே புகுந்து தள்ள நின்ற நிலைகுலைந்து; கற்பு ஆர் கடுங் கால் கலக்கிப் பறித்து எறிய-
கற்பாகிய நிறைந்த கடியகாற்று அலைத்துப் பிடுங்கி என்வயிற் கிடவாமைப் புறத்தெறிய; கழிக- என்னைக்
கழிவதாக; ஏழையர் எழுமையும் இற்பால் பிறவற்க இனி மகளிர் எழுபிறப்பின் கண்ணுங் குடியிற்
பிறவா தொழிக எ-று.
நாண் கழிகவென வியையும். வாழி: அசைநிலை. கற்பாங் கடுங்காலென்பதூஉம் பாடம்.
முற்சிறந்தமையின்- முன்னெண்ணச் சிறந்தமையின். மல்லல், மல்லெனக் கடைக்குறைந்து நின்றது.
மெய்ப்பாடு அது. பயன்: உடன்போக்கு வலித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கற்பானது நாணத்துக்கு முன்னே சிறந்ததாய்த் தோன்றுகையினாலே,
தூர முடைத்தாகிய வழியிலே போகைக்கு ஒளி சிறந்த நெற்றியினை யுடையாள் அறுதியிட்டது.
செய்யுள்: வளப்பம் உடைத்தாய்க் கதி பாய்கிற இடபத்தையுடையவன் விரும்பி யருளுகிற
பெரும்பற்றப் புலியூரில், நான் வளர்த்த தாயினும் வளர்ந்த அழகுமிக்க சிகரமான நாணமானது,
நாயகர் மேல் வைத்த அன்பானது இடையிலே புகுந்து தள்ளக் கற்பாகிய பெருங்காற்றானது
நிலைகலக்கிப் பறித்துப் போகடக் கழிவதாகுக; மகளிர் எழுபிறவியும் குடியிற் பிறவாதொழிவதாக
வேண்டும். 208
16. துணிவெடுத்துரைத்தல்*
-------------------------
*பேரின்பப் பொருள்: இன்பத் துணிவுயிர்க் கருளியம் பியது.
துணிவெடுத்துரைத்தல் என்பது தலைமகளைக் கற்புவழி நிறுத்திச் சென்று, 'நின்னோடு
போதுமிடத்து நீ செல்லுங் கற்சுரம் அவளது சிற்றடிக்கு நற்றளிராம்போலு'மெனத் தோழி தலை மகனுக்கு
அவடுணிவெடுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கம்பஞ் சிவந்த சலந்தரன்
ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே
செல்வ மாதர் செல்லத் துணிந்தமை
தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.
இதன் பொருள்: நம்பா-நம்பா; அம்பு அஞ்சி ஆவம்புகமிக நீண்டு அரிசிந்து கண்ணாள் -
அம்புகளஞ்சித் தூணியிற் புக்கொளிப்ப மிக நீண்டு செவ்வரி சிதறிய கண்களை யுடை யாளுடைய;
செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர்ச் சீறடிக்கு - செம்பஞ்சியின் மிதிப்பினு நடுங்கும் மலர்
போலுஞ் சிறியவடிக்கு; கல்சுரம் நல்தளிர் ஆகும் - நீ செல்லுங் கல்லையுடைய சுரம் நல்ல தளிராம்
போலும் இவளது துணிவிருந்த வாற்றான் எ-று. கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த- அச்சத்தால்
வரு நடுக்கத்தை வெகுண்ட சலந்தரன தாகத்தை முனிந்த; தில்லைநம்பன் சிவநகர் நல் தளிர் -
தில்லை யினம்பனது சிவநகரின் நற்றளிரெனக் கூட்டுக.
சிவநகரென்பது ஒரு திருப்பதி. செம்பஞ்சியின் மிதிக்கிற் பதைக்கும் மலர்ச் சீறடி என்பன
ஒரு சொன்னீர்மைப்பட்டு நின்றன; இதனை யதிகாரப் புறனடையாற் கொள்க. அரிசிந்து கண்ணாளது
என்னுமாறனுருபு தொகச் சொல்லாதவிடத்துத் தொக்கு நின்றதெனினுமமையும். அரிசிந்து கண்ணாள்
மலர்ச் சீறடி யென்று கூட்டுவாருமுளர். தொல் வரை - பெரியவரை மெய்ப்பாடு: அது.
பயன்: உடன்போக்கு வற்புறுத்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : செல்வத்தை யுடைய மாதர் உடன் போக அறுதியிட்ட படியைப்
பழைய மலை மேலுண்டாகிய நாட்டினை யுடையவற்குப் பாங்கி சொன்னது.
செய்யுள் : நடுக்கத்தைச் சீறின சலந்தரனுடைய வடிவைக் காய்ந்த பெரும்பற்றப் புலியூரிலே
உளனாகிய எல்லாராலும் விசுவாசிக்கப்பட்டவனது சிவநகர் என்கிற திருப்படைவீட்டில் நல்ல தளிராயிருக்கும்
கல்லுடைத்தாகிய அரிய வழி. நாயகனே! அம்பானது பயப்பட்டு ஆவ நாழிகையிலே புக்கொளிப்ப மிகவும்
நீண்டு செவ்வரி பரந்த கண்களையுடையவளின் செம்பஞ்சினிலே மிதிக்கினும் பதைக்கின்ற
மலர்போன்ற சிறிய அடிக்கு.
கல்லுடைத்தாகிய அரியவழி சிவநகரில் நல்லதளிரை ஒத்திருந்தது காண் என்றபடி. 209
17. குறியிடங்கூறல்*
------------------
*பேரின்பப் பொருள் : 'யான் கொடு வரும் வழி நீ வருகென்றது'
குறியிடங் கூறல் என்பது துணிவெடுத்துரைத்த தோழி தாழாது இவ்விருட்காலத்துக் கொண்டு
போவாயாக: யானவளைக் கொண்டு வாராநின்றேன்; நீ முன்பு வந்தெதிர்ப்பட்ட அக்குறியிடத்து வந்து
நில்'லெனத் தலைமகனுக்குக் குறியிடங் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
முன்னோன் மணிகண்ட மொத்தவன்
அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
னாய் அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.
மன்னிய இருளில் துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது
இதன் பொருள்: எனது உயிரே அன்னாள் அரும் பெறல் ஆவி அன்னாய் - எனதுயிரை யொப்பாளது
அரிய பெறுதலையுடைய ஆவியை யொப்பாய்; அருள் ஆசையினால் - நினதருண் மேலுள்ள வாசையால்;
பொன் ஆர்மணிமகிழ்ப் பூவிழ யாம் விழை பொங்கு இருள் - பொன் போலும் நிறைந்த நல்ல மகிழின்பூ விழ
அவை விழுகின்றவோசையை நீ செய்யுங் குறியாக வோர்ந்து யாம் விரும்பு மிக்கவிருள்; முன்னோன்
மணிகண்டம் ஒத்து இக்காலத்துக் கருமையால் எல்லார்க்கு முன்னாயவன தழகிய மிடற்றையொத்து
அவன் அம்பலம் தம்முடி தாழ்த்து உன்னாதவர் வினைபோல் பரந்து ஓங்கும்-அவன தம்பலத்தைத் தம்
முடிகளைத் தாழ்த்து நினையாதவரது தீவினை போலக் கருமையோடு பரந்து மிகும் எ-று.
ஆவியன்னாய தருளென் றுரைப்பாருமுளர், மணிமகிழ் பூவிழவென்பது பாடமாயிற் பூவிழவென்னுஞ்
சொற்கள் ஒரு சொன்னீர்மைப்பட்டு மணிமகிழென்னு மெழுவாயையமைத்தன வாகவுரைக்க. இனித்தாழா
திவ்விருட்காலத்துப் போகவேண்டு மென்றும் இரவுக்குறிக்கண் வரும் அரையிருட்கண் வந்து அக்குறியிடத்து
நில்லென்றுங் கூறினாளாம். துன்னிய குறி - நீ முன்பு வந்திவளை யெதிர்ப்பட்ட குறியிடம். மெய்ப்பாடு அது.
பயன்- குறியிடமுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நிலைபெற்ற இருளிடத்தே சேர்ந்திருந்த குறியிடத்தே கோங்கம்பூப்
பரந்த மாலையினையுடையாளைக் கொண்டு நீங்குவாயாக என்றது.
செய்யுள் : என்னுடைய உயிரே ஒத்தவள், அவளுடைய பெறுதற்கரிய அரிய உயிரை ஒப்பாய்! உன்னுடைய
அருளைப் பெறலாம் என்னும் ஆசையினாலே, பொன்னை யொத்த தூய மகிழம் பூ விழ, அதனை நீ செய்த
குறியென்று நாங்கள் விரும்புகிற மிக்க இருள் எல்லாப் பொருளுக்கு முன்னோனுடைய நீலமணி போன்ற
திருமிடற்றை யொத்து அவனுடைய திருவம்பலத்தைத் தங்களுடைய தலைசாய்த்து வணங்க நினையாதாருடைய
இருவினை (போல் விரிந்து) ஓங்கும்.
விரிந்து-பொழுதைக்குப் பொழுது மிக்குச் செல்லா நின்று என்ன, கொண்டு நீங்கைக்கு நல்ல இடம்
மகிழம் பூ விழுந்த (இடம்) ... கோத்துக் கொண்டு இருப்போம்; பழைய குறியிடத்தே வந்தே குறிசெய்வாயாக
என்றது . 210
18. அடியொடு வழிநினைந் தவனுளம் வாடல் *
------------------------------------------
*பேரின்பப் பொருள் : ''இன்பத்துக் கென்வழி வருந்துமேயென்றது"
அடியொடு வழி நினைந் தவனுளம் வாடல் என்பது தோழி குறியிடை நிறுத்திப் போகா நிற்பத்,
தலைமகன் அவ்விடத்தே நின்று, 'அனிச்சப்பூப்போலும் அழகிய வடிகள் அழற்கடம் போது மன்றால்
இதற்கென்ன துன்பம் வந்தெய்துங் கொல்லோ 'வெனத் தலைமகளடியொடு தான் செல்லா நின்ற வழி
நினைந்து, தன்னுள்ளம் வாடா நிற்றல் . அதற்குச் செய்யுள்:-
பனிச்சந் திரனொடு பாய்புனல்
சூடும் பரன்புலியூர்
அனிச்சத் திகழுமஞ் சீறடி
யாவ அழல் பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே
நெறியுறு குழலியொடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது
இதன் பொருள்: பனிச் சந்கிரனொடு பாய் புனல் சூடும்- குளிர்ச்சியை யுடைய மதியோடு பரந்த
புனலை யுடைய கங்கையைச் சூடும் ; பரன் புலியூர் அனிச்சம் திகழும் அம் சீறடி - பரனது புலியூரில்
அனிச்சப்பூப்போலு மழகிய சிறியவடிகள்; ஆவ- அன்னோ ; அழல் பழுத்த கனிச் செந்திரள் அன்ன -
தீப் பழுத்த பழத்தினது சிவந்த திரள் போலும்; கல் கடம் போந்து கடக்கும் என்றால் - கற்றிரளையுடைய
காட்டை இங்கு நின்றும் போந்து கடக்குமாயின்; சந்த மேகலையாட்கு இனிப் புகுந்து எய்துவது என் கொல் -
நிறத்தையுடைய மேகலையுடை யாட்கு இனி யென் காரணமாக வந் தெய்துந்துன்பம் வேறென்! எ-று.
ஆவ: இரங்கற்குறிப்பு. மெய்ப்பாடு: அழுகை, பயன்: நெஞ்சோ டுசாவுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நெறித்த கூந்தலினையுடை யாளுடனே நீங்க அறுதியிட்ட
மிக்க ஒளியினையுடைத்தாகிய வேலினை யுடையவன் மனம் வாடியது. ('நெறிவுறு' என்பது இவர் பாடம்)
செய்யுள்: குளிர்ச் சந்திரனுடனே வார்த்த நீரைச் சூடுகிற மேலான வனுடைய பெரும்பற்றப்புலியூரில்
அனிச்சப்பூவையொத்து விளங்குகின்ற அழகிய சிறிய அடிகளையுடையவள் ஆ ஐயோ. ஐயோ, அழகிய பழுத்த
பழத்தின் சிவந்த திரளையொத்த கல்லுடைத்தாகிய அரிய வழியை என்னுடனே போந்து நடப்பாளாமாகில்
இப்பொழுது, நிறமுடைத்தாகிய மேகலா பரணமுடையாட்கு என்ன வந்துற்றது சொல்லுவாயாக வேண்டும். 211
19. கொண்டுசென் றுய்த்தல்*
---------------------------
*பேரின்பப் பொருள்: அருளே சிவங்கொண் டுயிர்க்கறி வித்தது
கொண்டு சென்றுய்த்தல் என்பது தலைமகன் குறியிடை நின்று, அடியொடு வழிநினைந்து, தன்னுள்ளம்
வாடா நிற்ப, அந்நிலைமைக் கண் 'நின்னுள்ளத்துக் கருதியதனை இப்பொழுது நினக்குத் தெய்வந் தாரா நின்றது;
என்றோழியையுங் கொண்டு வந்தேன்; நீ யிவளைக் கைக் கொள்' ளெனத் தோழி தலைமகளைக் கொண்டு சென்று,
அவனொடு கூட்டா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
துயிலுமிம் மூதெயிலே.
வண்டமர் குழலியைக் கண்டுகொள் கென்றது.
இதன் பொருள்: செழு மிடற்றின் மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் - வளவிய மிடற்றின் கட்
கருமை யுண்டாகிய கோனது தில்லையை வாழ்த்தாதாருடைய மனம் போல; முழுதும் இருள் தூங்கும் - உலக முழுதும்
இருள் செறியா நின்றது; வழுத்துநர் போல்- அத் தில்லையை வாழ்த்துவாருடைய மனம்போல ; மொய்வந்த வாவி
தெளியும் பெருமையுண்டாகிய பொய்கைகள் கலக்க மற்றுத் தெளியாநின்றன; இம் மூதெயில் துயிலும் -
இம்முதியவூர் துயிலா நின்றது, அதனால் ; வை வந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல்- கூர்மையுண்டாகிய
வேலையுடைய விளையர் சூழத்தேரின் கண்வரும் வள்ளலே; உள்ளம் தெய்வம் தரும் - நினதுள்ளத்துக் கருதியதனைத்
தெய்வம் இப்பொழுதே நினக்குத் தரும்; என்றோழியையுங் கொணர்ந்தேன்; காண்பாயாக எ - று.
வள்ளலென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்ததெனக் கொண்டு, வள்ளல துள்ளமென்று விரித்துரைப்
பினுமமையும். சூழ்வரத் தேர்வரு மென்று பாட மோதி ஊர்க்காக்குமிளையர் ஊரைச் சூழ்வரும் வரவு மினி
யொழியுமென் றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளைத் தலைமகனுடன்படுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வண்டுகள் அமர்ந்த நெறித்த கூந்தலினையுடையாளைக்
காண்பாயாக என்று காட்டியது.
செய்யுள்: அழகிய திருமிடற்றிலே இருளையுடைய சுவாமியினுடைய பெரும்பற்றப்புலியூரை வாழ்த்தார்
மனம்போலே பூமி முழுதும் இருள் செறியா நின்றது ; வாழ்த்துவார் மனம் போலப் பெருமையுடைத்தாகிய தடாகங்கள்
தெளியா நின்றன; இப்பழைய ஊர் முழுதும் உறங்கா நின்றது; இப்படியே உன்னுடைய நினைவுக்கேற்கக்
குறிவாய்த்தப்படியால் வல்ல கூர்மையுடைத்தாகிய வேல்வீரர் சூழத்தேரிலே வரக்கடவ வள்ளலே! மேலும் நீ
நினைத்தன தெய்வமே முடிக்குங் காண். 212
20. ஓம்படுத்துரைத்தல்*
-----------------------
*பேரின்பப் பொருள் ; சிவத்திடை நெஞ்சந் திறம்பா யென்றது.
ஓம்படுத்துரைத்தல் என்பது கொண்டு சென்றுய்த்து இருவரையும் வலஞ்செய்து நின்று 'மறை நிலை திரியினும்
கடன் முழுதும் வற்றினும், இவளிடத்து நின்னருடிரியாமற் பாதுகாப்பாய்' எனத் தோழி தலைமகளைத் தலைமகனுக்குக்
கோம்படுத் துரையா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
பறந்திருந் தும்பர் பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடி தென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.
தேம்படு கோதையை: யோம்ப டுத்தது.
இதன் பொருள்: சிலம்பா - சிலம்பா; இருந்து உம்பர் பதைப்பப்பறந்து படரும் புரம் கரப்ப - இருந்து உம்பரிடை
விடாது நடுங்கப் பறந்து செல்லும் புரங்கள் கெட ; சிறந்து எரி ஆடி தென் தில்லை அன்னாள் திறத்து - பொலிந்து எரியான்
விளையாடுமவனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை யொப்பாளிடத்து; அறம் திருந்து உன் அருளும் பிறிது ஆயின் -
அறந்திருந்துதற்குக் காரணமாகிய உனதருளும் வேறுபடு மாயின் இச் சேண் நிலத்து - இவ்வகன்ற நிலத்து ;
அருமறையின் திறம் திரிந்து ஆர் கலியும் முற்றும் வற்றும் - அரிய மறைகளின் முறைமை பிறழக் கடலு
மெஞ்சாது வற்றும் எ-று.
அறந்திரிந்தென்பது பாடமாயின், அறந்திரிந்தருமறையின் றிறந்திரித்தென மாற்றியுரைக்க.
அறந்திரிந்தாற் போல நின்னருளும் பிறிதாயினென வொருசொல் வருவித் துரைப்பினு மமையும்.
அருமறையு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஓம்படுத்தல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: தேன் துளிக்கும் மாலையினை யுடையாளைப் பரிகரித்துக்
கொள்ளென்று நாயகனுக்குக் கையடையாக்கினது.
செய்யுள்: தேவர்கள் இடைவிடாதே நடுங்கப் பறந்து செல்கின்ற புரங்கள் இடைவிடாமற் செல்கை
அழியும்படி, மிக்க அக்கினியை ஏந்தி விளையாடியவனுடைய தெற்கின் கண் உண்டாகிய பெரும்பற்றப்புலியூரை
ஒப்பாள் அளவில் வெற்பனே! தருமந் திரிந்ததற்குக் காரணமாகிய உன்னுடைய அருள் வேறு படுமாகில்
அரிய வேதத்தின் முறையும் வேறுபட்டுக் கடலும் சிறிதும் ஒழியாமல் வற்றும் இந்த அகன்ற பூமியில்;
என்ன, உனக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை. 213
21. வழிப்படுத்துரைத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்: இன்பம் விடாதினி தேகென் றியம்பியது.
வழிப்படுத்துரைத்தல் என்பது ஓம்படுத்துரைத்த தோழி 'ஆயமுமன் னையும் பின்வாராமல்
இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்துள்ள அலரையு மொருவாற்றானீக்கி யானும் வந்து நுங்களைக் காண்பேனாக;
நீயிருந் திருவொடு சென்று நும் பதியிடைச் சேர்வீராமின்' என இருவரையும் வழிப்படுத்துக் கூறா நிற்றல்,
அதற்குச் செய்யுள் :-
ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும்
நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
சிற்றம் பலம் நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.
மதிநுதலியை வழிப்படுத்துப்
பதிவயிற்பெயரும் பாங்கிபகர்ந்தது.
இதன் பொருள்: எம்மைப் பிடித்து ஆண்டு - எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லை தீர் இன்பம்
தந்தவன் சிற்றம்பலம் நிலவு-இன்று எல்லையை நீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம் நிலைபெற்ற;
சேண் தில்லை மாநகர் வாய்-சேய்த்தாகிய தில்லையாகிய பெரிய நகரிடத்து; திருத்தகச் சென்று சேர்வீராமின் :
ஆயமும் ஒளவையும் ஈண்டு நீங்க- ஆயமு மன்னையும் பின் வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க் கவ்வை
ஒல்லை தீர்த்து - இவ்வூரின்க ணுண்டாகிய அலரை யொருவாற்றான் விரைய நீக்கி; ஆண்டு நும்மை ஒல்லை
கண்டிடக் கூடுக - யானாண்டு வந்து நும்மைவிரையக் காணக் கூடுவதாக எ-று.
சேண்டில்லை யென்பதற்கு மதின் முதலாயினவற்றா னுயர்ந்த தில்லை யெனினு மமையும்.
ஒல்லை கண்டிடவென விகாரவகையான் வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு: அழுகை.
பயன்: அச்சந் தவிர்த்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பிறை மிகுத்த நெற்றியினை யுடையாளை ஒருவழிப்படுத்திவிட்டுத்
தான் பதியிடத்தே வரும் பாங்கி சொன்னது.
செய்யுள்: எம்மைப் பிடித்து இப்பொழுது வலிய அடிமை கொண்ட எல்லையற்ற இன்பமாகிய
சிவானந்தத்தை யளித்தவருடைய திருச்சிற்றம்பலம் நிலைபெற்ற பெரிய பெரும்பற்றப்புலியூராகிய
நகரியிடத்தே அழகிதாகச் சென்று சேர்வாயாக; ஆரவாரமுடைத்தாகிய ஆயக் கூட்டமும் எங்கள் அன்னையும்
இவ்விடத்தே ஒழிய, இவ்வூரில் ஆரவாரம் அடங்க, அறத்தொடு நிலையாலே உம்மை விரையவந்து
காண்பேனாக விளைவதாக. 214
22. மெல்லக்கொண்டேகல்*
-------------------------
*பேரின்பப் பொருள் : இன்பைப் பிரிவின்றி இனிதியம் பியது.
மெல்லக்கொண்டேகல் என்பது தோழியை விட்டு உடன் கொண்டுபோகா நின்ற தலைமகன்,
'நின்னொடு சேறலான் இன்று இக்காடு திருந்தச் செய்யப்பட்டாற் போலக் குளிர்ச்சியை யுடைத்தாயிருந்தது;
இனி நின்சீறடி வருந்தாமற் பையச் செல்வாயாக' வெனத் தன்னாய வெள்ளத்தோடும் விளையாடுமாறு போலத்
தலைமகளை மெல்லக் கொண்டு செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
பேணத் திருத்திய சீறடி
மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலியூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும் முன்
னாமன்னு னங்களே.
பஞ்சிமெல்கடிப் பணைத்தோளியை
வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது
இதன் பொருள்: பேரரவம் பூண - பெரிய வரவங்களைப் பூணும்வண்ணம் ; திருத்திய பொங்கு
ஒளியோன் புலியூர் புரையும் - அவற்றின்றீ த் தொழிலை நீக்கிய பெருகுமொளியை யுடையவனது
புலியூரை யொக்கும் மாணத் திருத்திய வான்பதி இருமருங்கும் சேரும்- மாட்சிமைப் படக் குற்றங்கடிந்து
செய்யப் பட்ட பெரியவூர்கள் நாஞ்செல்லு நெறியி னிருபக்கமு மொன் றோடொன்று சேர்ந்திருக்கும்;
முன்னா மன்னு கானங்கள் காணத் திருத்திய போலும்-முன்னுளவாகிய காடுகள் நாஞ் சென்று காணும்
வண்ணந் திருந்தச் செய்யப்பட்டன போலும், அதனால்; பேணத் திருத்திய சீறடி - யான் விரும்பும் வண்ணங்
கைபுனையப்பட்ட சிறிய வடியையுடையாய்; மெல்லச் செல் - பையச் செல்வாயாக எ-று.
பேணத்திருத்தியசீறடி யென்பது சினையாகிய தன்பொருட்கேற்ற வடையடுத்து நின்றது.
அரவந் திருத்தியவென வியையும். வான்பதி சேருமென்பதற்குப் பதிநெறியைச் சேர்ந்திருக்குமென்
றுரைப்பினுமமையும், மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை அயர்வகற்றுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பஞ்சினும் மிருது பதமான பாதமும் வேயை யொத்த
பணைத்த தோள்களையுமுடையாளை வெய்ய வழியிடத்தே ...... (மெலிவகற்றியது).
செய்யுள்: தாள் பூணும்படி பெரிய பாம்பை அதன் கொடுமை திருந்தப் பண்ணின பேரொளியை
யுடையவன் (ஏதம் செய வந்த பாம்பு இவர் திருமேனியைக் காணு மளவில் இவ்வழகு கண்டு அவசமாய்த்து
என்பது இதனைத் திருத்திய ஒளி என்க.) அவனுடைய பெரும்பற்றப் புலியூரை யொத்த மாட்சிமைப்பட்ட
திருந்தச் செய்த பெரிய ஊர்கள் இரண்டு பக்கங்களிலும் ஒன்றுக்கொன்று அண்ணிதாயிருக்கும் (புலியூரையும்
பதி எனக் கூட்டுக) நமக்கு முன்னாக நிலைபெற்ற காடுகள் காட்சிக்காம்படி திருந்தச் செய்தனபோலும்;
ஆதலால், பாங்கிமாராலே திருத்தப்பட்ட சிறிய அடியினை உடையாய்! நான் விரும்பும்படி மெல்லப் போவாயாக. 215
23. அடலெடுத்துரைத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள் : 'இன்பைப் பார்த்ததன் வலி யுயிரெடுத் தியம்பியது.'
அடலெடுத் துரைத்தல் என்பது மெல்லக்கொண்டு செல்லா நின்றவன், சேய்த்தாகச் சிலரை
வரக்கண்டு தலைமகளஞ்சா நிற்ப, 'நின்னையன்மாராயின் அஞ்சுவேன்; அல்லது நால்வகைத்
தானையுந் திரண்டுவரினும் என் கையில் வடித்திலங்கா நின்ற எஃகின் வாய்க்கிரை போதாது;
இதனை யிவ்விடத்தே காண்பாயாக' வென்று, அவளதச்சந்தீரத் தன்னடலெடுத் துரையா நிற்றல்.
அதற்குச் செய்யுள்: -
கொடித்தேர் மறவர் குழாம் வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.
வரிசிலையவர் வருகுவரெனப்
புரிதருகுழலிக் கருளவனுரைத்தது.
இதன் பொருள்: நின் ஐயர் என்னின் - நின்னையன் மாராயின்; மன்னும் அம்பலத்தோன்
அடித்தேரலர் என்ன அஞ்சுவன்- நிலைபெறு மம்பலத்தின் கண்ணா னுடைய அடிகளையாராய்ந்
துணராதாரைப் போல அஞ்சுவேன், அல்லது; கொடித் தேர்- கொடியையுடைய தேரும்; மறவர் குழாம் -
வீரரது திரளும்; வெம் கரி நிரை- வெய்யகரி நிரையும், கூடின் அனைத்துந் திரண்டு வரினும், என் கை
வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா- என்கையில் வடிக்கப்பட் டழகு விளங்கா நின்ற எஃகினது
வாய்க்கு இரையுதவமாட்டா; மன்னும் கடித் தேர் குழல் மங்கை- நிலை பெற்ற நறுநாற்றத்தை
வண்டுகளாராய்ந்து வருங் குழலையுடைய மங்காய் விண்தோய் இக்கனவரைக் கண்டிடு விண்ணினைத்
தோயா நின்ற இப்பெரிய வரையிடத் தியான் செய்வதனைக் காண்பாயாக எ - று
கூடினென்பதற்கு என்னைக் கிட்டினென் றுரைப்பினு மமையும். அடித்தேர்பவரென்பது
பாடமாயின் என்னவென்பதனை உவமவுருபாக்காது இவரை யடித் தேர்பவரென்று பிறர் கருத
வென்றுரைக்க. கண்டிடிரென்பதூஉம் பாடம் மன்னுங்கடி யென்பதற்கு வண்டென வொரு சொல்
வருவித்துரைக்க. வரிசிலை யவர் வருகுவரென- வரிசிலையவர் வாரா நின்றார் இவர் யாவரென-
மெய்ப்பாடு : பெருமிதம். பயன்- தன்வலியுணர்த்தி யாற்றுவித்தல்.
இடைச்சுரத்து அவடமரெதிர் படை தொடர்ந்து நிற்ப வழி வருவார் விலக்கி வரைவித்துக்
கொடுப்ப என்னை 'இடைச் சுரமருங்கின வடம ரெய்திக், கடைக்கொண்டு, பெயர்தலிற் கலங்கஞ்
செய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை யுளப்பட வப்பாற்பட்ட வொருதிறத் தானும் " (பொருள்
அகத்திணை 41) என்றார் தொல்காப்பியனார்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வரித்த சிலையினையுடையவர் வருகிறாரென்று
நெறித்த கூந்தலையுடையாளுக்கு அருளுடையவன் சொன்னது.
செய்யுள்: நிலைநின்ற நறுநாற்றத்தை வண்டுகள் நுகருகின்ற அளகத்தையுடைய பெண்ணே!
இந்த ஆகாய முட்டின பெருமலையிடத்தே வருகிறவர்களைப் பார்ப்பாயாக: கொடி கட்டப்பட்ட தேரும்
வீரருடைய கியளு இரண்டும் வந்தாலும் என்கையிலே பிடித்த வடுக்கப் பட்டு அழகு விளங்குகிற வேலின்
வாய்க்கு இரை போதாது: திருவம்பலத்தே யுள்ளவனது திருவடிகளை நினையாதவரைப் போலப்
பயப்படுவேன் உங்கள் ... (ஐயர் என்னின்) - இருவரிலும் யாரென்று பார்த்துக் காண். 216
24. அயர்வகற்றல்*
-----------------
*பேரின்பப் பொருள்: இன்பேயிடர்க்குத் துணையென் றியம்பியது.
அயர்வகற்றல் என்பது அடலெடுத்துரைத்து அச்சந் தீர்த்துக்கொண்டு போகா நின்றவன்,
இத்துன்பக்கடறு கடந்து சென்று இப்பொழுதே நாமின்பப்பதி காணப் புகா நின்றோம்; இனி நமக்கொரு
குறைவில்லை'யெனத் தலைமகளது வழிவருத்தந் தீரக்கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
முன்னோ னருள்முன்னும் உன்னா
வினையின் முனகர்துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான் நட
மாடுசிற் றம்பலமே.
இன்னல் வெங்கடத் தெறி வேலவன்
அன்ன மன்னவள் அயர்வகற் றியது.
இதன் பொருள்: முன்னோன் அருள் முன்னும் முன்னா - எல்லார்க்கும் முன்னாயவன தருளை
முற்றப்பின் கண்ணு நினையாத ; வினையின் முனகர் துன்னும் இன்னாக் கடறு இது இப்போழ்தே கடந்து -
தீவினையையுடைய நீசர்சேருந் துன்பத்தைச் செய்யும் பாலை நில மிதனை யிப்பொழுதே கடந்து;
பொன் ஆர் அணி மணி மாளிகைத் தென்புலியூர் - பொன்னிறைந்த வழகையுடைய மணியால்
விளங்கும் மாளிகையையுடைய தென்புலியூர்க்கண், புகழ்வார்தென்னோ என உடையான் நடம் ஆடு
சிற்றம்பலம் - புகழ்ந்துரைப்பார் தென்னனே யென்று புகழ என்னை யுடையான் நின்று கூத்தாடுஞ் சிற்றம்
பலத்தை; இன்று சென்று காண்டும்-இன்று சென்று காண்பேம்; இதுவன்றோ நமக்கு வருகின்ற வின்பம்! எ-று.
தென்புலியூர்ச் சிற்றம்பலமென வியையும் உடையாரென்பது பாடமாயின், தென்னனே யென்று
புகழ வொரு சிறப்புடையா ரென்றுரைப்பினு மமையும். மெய்ப்பாடு பெருமிதம். பயன் : தலைமகளை
யயர்வகற்றுதல், அலங்காரம் : கூற்றிடத்திரு பொருட்கண் வந்த வுயர்ச்சி வேற்றுமை .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : பொங்குடைத் தாகிய வெய்ய காட்டிலே எறிகிற வேலையுடையவன்
அன்னத்தையொப் ....... ளுடை ..........ததைச் சொன்னது.
செய்யுள்: எல்லாப் பொருளுக்கும் முன்னோனுடைய திருவருளை முற்பிறப்பின் நினையாத
வினையினாலே, அறிவிலாதவர் செறிகிற இன்னாத அரிய வழியைக் கழிந்து சென்று இப்பொழுதே
காணக் கடவோம், பொன்னாலே செய்து அழகிய மாணிக்கங்களை இட்டு இழைக்கப்பட்ட மாட
மாளிகைகளாற் சூழ்ந்த அழகிய பெரும்பற்றப் புலியூரில் அதனைப் புகழ்வார் தென்னாதென
வென்று புகழ என்னையுடையான் திருக்கூத்தாடி யருளுகிற சிற்றம்பலம், இதனை இப்பொழுதே
காணக்கடவோம்.
இவ்வருத்தந்தீரச் சொன்னபடி. நம் அரிய வழியை நடத்ததனால் கிலேசமுண்டோ ?
இப்பொழுதே தரிசித்துப் புகுகின்றது திருச்சிற்றம்பல மல்லவோ?' என்றபடி. 217
25.நெறிவிலக்கிக் கூறல் *
-----------------------
*பேரின்பப் பொருள்: 'பெற்றாரின்பம் பற்றி யுரைத்தது'.
நெறி விலக்கிக் கூறல் என்பது அயர்வகற்றிக் கொண்டு செல்லா நின்ற தலைமகனை,
'இனிச்செல்லுநெறிக்கண் நன் மக்களில்லை; நீ தனியை; இவள் வாடினாள்: பொழுதுஞ் சென்றது;
ஈண்டுத் தங்கிப் போவாயாக' வென. அவ்விடத் துள்ளோர் வழிவிலக்கிக் கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
விடலையுற் றாரில்லை வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.
சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு
சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
இதன் பொருள்: விடலை - விடலாய்; உற்றார் இல்லை- இனிச் செல்லு நெறிக்கண் நன்மக்களில்லை;
வெம்முனை வேடர் உள்ளார்- வெய்ய முனையிடத்து வேடரே: தமியை - நீ தனியை; மென்பூ மடலை உற்று ஆர்
குழல் வாடினள் - மெல்லிய பூவினிதழைப் பொருந்தி நிறைந்த குழலையுடையாள் வழிவந்த வருத்தத்தால்
வாடினாள்; மன்னுசிற்றம்பலவர்க்கு அடலை உற்றாரின்- நிலைபெற்ற சிற்றம்பலத்தையுடையவர்க்
காட்படுந்தன்மையைப் பொருந்தினவர்கள் அல்லாரைப்போல : எறிப்ப ஒழிந்து ஆங்கு அருக்கன்
சுருக்கிக் கடலை உற்றான் - விளக்கமொழிந்து அவ்விடத்து அருக்கன் றன்கதிர்களைச் சுருக்கிக் கடலைச்
சென்றுற்றான்; இக்கடுஞ்சுரம் இன்று கடப்பார் இல்லை: இக்கடிய சுரத்தை யிப்பொழுது கடப்பாருமில்லை:
அதனாலீண்டுத் தங்குவாயாக எ-று.
வேடரோடு சாராத நன்மக்கள் இவர்க்கணியராதலின் அவரை உற்றா ரென்றார்.
வேடரி லுற்றாரில்லை யென்று நன்றி செய்யாரென்பது பயப்பவுரைப்பினுமமையும். மடலென்றது
தாழம்பூ மடலையென்பாருமுளர். சிற்றம்பலவர்க்கென்னு நான்கனுருபு பகைப்பொருட்கண் வந்தது.
அருக்கன் பெருக்கி யென்றும், பெருகியென்றும் பாடமாயின், கெடுதலை மங்கல மரபிற் கூறிற்றென்க,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : அரியவழியிற் கண்டவர். 'ஒளியுடைத்தாகிய மகரக்குழையார்
சிறந்த நாயகியுடனே அம்பினையும் வில்லினையு முடையவனே? இங்கே அவதரிக்க' என்றது.
செய்யுள்: நிலைபெற்ற திருச்சிற்றம்பலத்தே யுள்ளவர்க்கு அறித்தால யுற்றவர்களை (?)ப் போலத்
தன் கிரணங்களால் விளங்க வேண்டுதலை யொழிந்து அவ்விடத்தே தன் கிரணங்களை ஒடுக்கி
அருக்கன் மேலைக் கடலைச் சேர்ந்தான். அதுவுமன்றி, இக்கடிய வழியை இன்றைக்கு இனி நடப்பாருமில்லை;
நாயகனே! நீ சென்று அவதரிக்கைக்கும் ஒரு நன் மக்கள் உறைவிடமில்லை (நன் மக்களை உற்றார் என்றது):
வெய்ய முனையைச் செய்கிற வேடர்கள் உண்டாயிருக்கும்; தனியனாக இருந்தாய்; அதுவன்றியும் மெல்லிய
பூமடலை யொத்து மணங்கமழும் நிறைந்த கூந்தலினை யுடையாளும் பொலிவழிந்தாள், என்ன, குறிப்பாலே
பலபடியும் தங்கிப்போம் என்று படும். 218
26. கண்டவர் மகிழ்தல்*
---------------------
*பேரின்பப் பொருள் : 'உயிர் சிவங் கலந்த வுண்மைக்கு மகிழ்தல்'.
கண்டவர் மகிழ்தல் என்பது நெறிவிலக்குற்று வழிவருத்தந் தீர்ந்து ஒருவரையொருவர்
காணலுற்று 'இன்புற்றுச் செல்லா நின்ற இருவரையுங்கண்டு 'இவர்கள் செயலிருந்தவாற்றான் இப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று போலும் அதுகிடக்க, இது தானின் புறவுடைத்தாகியதோர் நாடகச்
சுவையுடைத்தா யிருந்தது என எதிர்வருவார் இன்புற்று மகிழ்ந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண் அளி
போன்றொளிர் நாடகமே
மண்டழற் கடத்துக் கண்டவ ருரைத்தது.
இதன் பொருள்: அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் - சிறுபுறமும் அசை
நடையுங் காண்டற்கு அன்பானணைத்து அழகிய சொல்லையுடையாளது பின்னே ஆடவனொருகாற்
செல்லா நின்றான்: அவன்றன் பின் பணைத் தோளி நீ வரும் - முன் செல்ல நாணிப் புறக்கொடையும்
வழிச் செலவுங் காண அவனது பின்னே வேய் போலுந் தோள்களை யுடையாள் நெடும் பொழுது
செல்லா நின்றாள்: இப் பெருஞ் சுரம் செல்வது அன்று - இருந்தவாற்றான் இவரது செயல் இப் பெரிய
சுரத்தைச் செல்கை யன்று: பொன் பணைத்தன்ன இறை உறை தில்லை - பொன்னொரு வடிவுகொண்டு
பொருத்தாற் போலுமிறை யுறைகின்ற தில்லை வரைப்பின் : நன்பணைப் பொலிமலர் மேல் தண் நறவு
உண் அளி போன்று - நல்ல பணையிற் பொலிந்த மலரிடத்துக் குளிர்ந்த நறவை யுண்ட வண்டுகளையொத்து:
ஒளிர் நாடகம்- இன்பக்களியான் மயங்கி விளங்குவ தொரு நாடகம் எ-று.
பெருஞ்சுரஞ் செல்வதன்றென்பதற்குப் பெருஞ்சுரந் தொலைவதன்றெனினு மமையும்.
பொன்பணைத்தாற் போலு மிறையென்பாருமுளர். கண்டார்க் கின்பஞ் செய்தலின், நாடக மென்றார்.
இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: நெறிவிலக்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மிக்க நெருப்பையொத்த காட்டிலே கண்டவர்கள் சொன்னது.
செய்யுள்: சிறுபுறமும் அசை நடையும் காண வேண்டி அன்பாலே அணைத்துக் கொண்டு அழகிய
சொல்லினை யுடையாள் பின் செல்லா நிற்கும் நாயகன்; இவனுடைய புறக் கொடையும் வழிச் செலவும்
காணவேண்டி நெடும் பொழுதெல்லாம் வேயை யொத்த தோள்களை யுடையாள் அவன் பின்னே
வாராநின்றாள்; ஆதலால் இப்பெரிய வழி போகிறபடியாயில்லை : இவர்கள் செய்தி, பொன் கொழுந்துவிட்டு
எரிந்தாற் போலொத்த சுவாமி வாழ்கிற பெரும்பற்றப் புலியூரில் பொலிவுடைத்தாகிய மலரிடத்தே நல்ல
மருத நிலத்தில் குளிர்ந்த தேனையுண்ட வண்டுச் சாதிகளைப் போலே விளங்காநின்ற நாடகமாயிருந்தது.
பணை-பண்ணை ; இடை குறைந்து நின்றது. பெரும்பற்றப் புலியூரில் சூழ்ந்த வயற் பூக்களில்
மதுவுண்ட வண்டுகள் களித்து ஒன்றோடொன்று சுற்றி விளையாடினாற் போல நடப்பதொரு நாடகமாயிருந்தது.
27. வழிவிளையாடல்*
-------------------
*பேரின்பப் பொருள்: "இன்பிற் கலந்துயி ரன்பு செய்தது"
வழிவிளையாடல் என்பது கண்டவர் மகிழக் கொண்டு செல்லா நின்றவன், 'நெறிசெல் வருத்தத்தி
னெகிழ்ந்த மேனியையுடைய நின்னைக் கண்டு கண்கடம்மாற் கொள்ளும் பயன் கொண்டனம். இனிச்
சிறிதிருந்து இக்கடுங்கானகந் தண்ணெனு மளவுஞ் செவி நிறைய நின்மொழி பருக வருவாயாக'வெனத்
தலைமகளுடன் விளையாடா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
கண்கடம் மாற்பயன் கொண்டனங்
கண்டினிக் காரிகை நின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருக இன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங் கோன்
தண் கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே
வன்தழற் கடத்து வடிவே லண்ணல்
மின்றங் கிடையொடு விளையா டியது
இதன் பொருள்: கண்டு - நெறிசெல் வருத்தத்தினெகிழ்ந்த மேனியை யாகிய நின்னைக் கண்டு;
கண்கள் தம்மால் பயன் கொண்டனம் - கண்களாற் கொள்ளும் பயன் கொண்டனம்; காரிகை - காரிகை
நீர்மையாய்; இனி நின் பண்கடமென் மொழி ஆரப் பருக இன்னே வருக-இனிச் சிறிதிருந்து நினது
பண்ணினது முறைமையையுடைய மெல்லிய மொழியைச் செவி நிறையப் பருகுவான் இவ்விடத்து
வருவாயாக: விண்கள் தம் நாயகன் - விண்ணுலகங்க டம்முடைய தலைவன் : தில்லையில் மெல்லியல்
பங்கன்- தில்லைக் கணுளனாகிய மெல்லியல் கூற்றை யுடையான் எம்கோன் - எம்முடைய விறைவன்:
தண்கடம்பைத் தடம் போல் கடுங் கானகம் தண்ணென - அவனது குளிர்ந்த கடம்பையிற் பொய்கை போலக்
கடிய கானகங் குளிருமளவும் எ-று
தண்ணென வின்னே வருகவென வியையும். கடம்பை யென்பது ஒரு திருப்பதி, கடம்பைத்
தடம் போற் கடுங்கானகங் குளிரும் வண்ணம் நின் மொழியைப் பருகவென்று கூட்டினு மமையும்.
மெய்ப்பாடு ; உவகை. பயன் : மகிழ்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வலிய நெருப்பையொத்த காட்டில் வடித்த வேலினை
யுடைய நாயகன் மின்னின் தன்மை நிலை நின்ற இடையாளுடனே விளையாடிச் சொன்னது.
செய்யுள்: " கட்டளைப்பட்ட அழகினை யுடையாய்! இப்பொழுது உன்னைக் காணப்பெற்றுக்
கண்படைத்ததனா லுள்ள இலாபம் பெற்றேன் : தேவர்கள் தங்களுடைய தலைவனாய் உள்ளவன்:
பெரும்பற்றப்புலியூரி லுள்ளனாகிய மெல்லியல் பங்கன். எமக்குச் சுவாமியாக உள்ளவன் -அவனுடைய
திருக்கடம்பூரில் குளிர்ந்த தடாகம் போலக் கடியகாடானது தட்பமுண்டாமளவும், உன்னுடைய பண்ணின்
இயல்பாகிய மெல்லிய வார்த்தையைச் செவியாரப் பருகும்படி இங்ஙனே வருவாயாக'' என்று
ஒரு நிழலிடத்தைக் காட்டி சொன்னது.
என்றது. ஆதித்தன் வெம்மை தணியுமளவு மென்னிழலிலிருந்து சில வார்த்தையை
என் செவிக்கினிதாகச் சொல்லுவாயாக வேண்டும். 229
28. நகரணிமை கூறல்*
---------------------
*பேரின்பப் பொருள்: சிவந்தங் கிடமிது வென்று வேர்ந்தது.
நகரணிமை கூறல் என்பது இருவருந் தம்முளின் புற்றுச் செல்லாநின்றமை கண்டு,
'இனிச் சிறிது நெறி சென்று அக்குன்றத்தைக் கடந்தால் நும்பதியாகிய நகர் விளங்கித்
தோன்றா நிற்கும்; அத்துணையுங் கடிது செல்வீராமின்' என எதிர் வருவார் அவர்
நகரணிமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
மின்றங் கிடையோடு நீவியன்
தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே
வண்டமர் குழலியொடு கண்டவ ருரைத்தது.
இதன் பொருள்: மின் தங்கு இடையொடு - மின்போலு மிடையை யுடையாளோடு: நீ வியன்
தில்லைச் சிற்றம்பலவர் குன்றம் கடந்து சென்றால் நீயகன்ற தில்லையிற் சிற்றம்பலத்தை யுடையவரது
குன்றத்தைக் கடந்து அப்பாற் சிறிது நெறியைச் சென்றால்: குரூஉக்கமலம் துன்று அம் கிடங்கும்-
நிறத்தையடைய தாமரைப்பூ நெருங்கிய அழகிய கிடங்கும்; வள்ளை வெள்ளை நகையார்
துறைதுறை சென்று அங்கு அடை தடமும்-வள்ளைப் பாடலைப் பாடும் வெள்ளை முறுவலையுடைய
மகளிர் துறைதொறுந் துறைதொறுஞ் சென்று அவ்விடத்துச் சேரும் பொய்கைகளும்; புடை சூழ்தரு
சேண் நகர் பக்கத்துச் சூழ்ந்த அத்தில்லை யாகிய வுயர்ந்த நகர்; நின்று தோன்றும் - இடையறாது தோன்றும்;
அத்துணையுங் கடிது செல்வாயாக எ-று .
குழலியொடு கண்டவர் குழலியொடு தலைமகனைக் கண்டவர், மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: இடமணித்தென்றல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வண்டுதுற்ற அளகத்தினையுடைய நாயகி யுடனே
நாயகனைக் கண்டவர்கள் சொல்லியது.
செய்யுள் : நிறமுடைத்தாகிய தாமரை மலர்கள் நெருங்கின அழகிய கிடங்குகளும், வள்ளைப்பாட்டைப்
பாடுகிற வெள்ளிய முறுவலை யுடையார் துறை துறை தோறும் சென்ற விடத்தே அடைகிற தடாகங்களும்,
மின்னினது தன்மை நிலைபெற்ற இடையினையுடை யாளுடனே 'நீ பெரும்பற்றப்புலியூரில் திருச்சிற்றம்பல
நாதனுடைய இம்மலையைக் கடந்து சென்றபொழுதே இடைவிடாமல் தோன்றும்.'
29. நகர்காட்டல்*
----------------
*பேரின்பப் பொருள்: "அன்பா லடுத்த தென்றியம்பியது".
நகர்காட்டல் என்பது நகரணிமை கூறக்கேட்டு இன்புறக் கொண்டு செல்லா நின்ற தலைமகன்,
'அன்னந்துன்னிப் பிறையணிந்து குலத்தையுடைத்தாகிய மாளிகை மேற்கொடி நுடங்க மதில் தோன்றாநின்ற
அப்பெரிய நகர் காண், நம்முடை நகராவது' எனத் தலைமகளுக்குத் தன்னுடைய நகர் காட்டா நிற்றல்,
அதற்குச் செய்யுள் :-
மின்போல் கொடிநெடு வானக்
கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
தோன்றும்நன் னீணகரே.
கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத்
தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது
இதன் பொருள்: நின்போல் நடை அன்னம் துன்னி - நின்னடைபோலு நடையையுடைய அன்னங்கடுன்னி;
மன்போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் - மன்னனைப் போலப் பிறையை யணிந்த மாளிகைகள்
அவனைப்போலச் சூலத்தவுமாய்; முன்தோன்று நல் நீள் நகர் - முன்றோன்றுகின்ற நல்ல பெரிய நகர்;
மடவாய்- மடவாய்; மின் போல் கொடி நெடுவானக் கடலுள் திரை விரிப்ப - ஒளியானும் நுடக்கத்தானும்
மின்னை யொக்குங் கொடிகள் பெரிய வானமாகிய கடலுட் டிரையைப் பரப்ப; பொன்புரிசை வடவரை
காட்டப் பொலி புலியூர் பொன்னானியன்ற புரிசை மேருவைக் காட்டப் பொலியும்...........தொழுவாயாக எ-று.
.............அசைநிலை. நிறத்தாற் பொன் போலும் புரிசையென்பாருமுளர். சூலத்தவா யென்னுஞ்
சினை வினையெச்சம் முன்றோன்று மென்னு முதல்வினையோடு முடிந்தது. துன்னியென இடத்து நிகழ்
பொருளின் வினை இடத்தின் மேலேறி நின்றது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொடிய வழியைக்கடந்த மகரக்குழை சிறந்த முகத்தினை
யுடைய மாதர்க்குப் பெரிய கிடங்கு சூழப் பட்ட குளிர்ந்த நகரியைக் காட்டியது.
செய்யுள்: மன்னாகிய முதலியாரைப் போலப் பிறையைச் சூடின மாடங்கள் சூலத்தை யுடையனவாய்,
உன் நடையை ஒத்த நடையை உடைத்தாகிய அன்னங்கள்.....(துன்னி) முன்னே தோன்றுகிற நல்ல பெரிய நகரம்
மிக்க ஆகாயமாகிய கடலிடத்தே மின்னை யொத்த கொடியானது குடையை ஒக்கவிரிப்பப் பொன்னாலே
செய்த மதிலானது வடக்கின் கண் உண்டாகிய மகாமேரு இப்படி இருக்குமென்று காட்டப் பொலிவு பெற்ற
பெரும்பற்றப் புலியூர் காண்.
என்ன, தொழுவாயாக என்று படும். போல: அசை. 222
30. பதிபரிசுரைத்தல்*
--------------------
*'பேரின்பப் பொருள் : "இன்பமா மிடமிவை யென்றியம்பியது".
பதிபரிசுரைத்தல் என்பது நகர் காட்டிக் கொண்டு சென்று அந்நகரிடைப்புக்கு அவ்விடத்துள்ள
குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், தெய்வப்பதி இவையெல்லாந் தனித் தனிகாட்டி,
இதுகாண் நம்பதியாவதெனத் தலைமகளுக்குத் தலைமகன் பதிபரிசு காட்டா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
செய்குன் றுவைஇவை சீர்மலர்
வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே
கண்ணிவர் வளநகர் கண்டுசென் றடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி சுரைத்தது.
இதன் பொருள்: உவை செய் குன்று - உவை செய் குன்றுகள் ; இவை சீர்மலர் வாவி - இவை நல்ல மலரை
யுடைய வாவிகள் ; அவை விசும்பு இயங்கி நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை விசும்பின்
கணியங்குதலான் வருந்துந் திங்கள் அயர்வுயிர்க்கும் பொழில்கள்; உந்திடம் ஞாங்கர் எங்கும் பொய்குன்ற
வேதியர் ஓதிடம் - உவ்விடம் மிசையெங்கு முலகத்திற் பொய் முதலாகிய குற்றங்கெட மறையவர் மறை
சொல்லுமிடம் : ஏந்திழை - ஏந்திழாய்; இந்திடமும் எய் குன்ற வார்சிலை அம்பலவற்கு இடம் - இவ்விடமும்
எய்தற்குக் கருவியாகிய குன்றமாகிய நீண்ட வில்லையுடைய அம்பலவற் கிருப்பிடம் ; இத்தன்மைத் திவ்வூர் எ-று.
இவை யென்பது தன் முன்னுள்ளவற்றை உவையென்பது முன்னின்றவற்றிற் சிறிது சேயவற்றை.
அவையென்பது அவற்றினுஞ் சேயவற்றை; முன் சொல்லப்பட்டவையே யன்றி இதனையுங் கூறுகின்றே
னென்பது கருத்தாகலின், இந்திடமு மென்னுமும்மை இறந்தது தழீஇய வெச்சவும்மை. உந்திடம் இந்திடமெனச்
சுட்டீறு திரிந்து நின்றன. பண்ணிவர் மொழி - பண் போலு மொழி. இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு :பெருமிதம்.
பயன்: இடங்காட்டுதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இடம் பரந்த அழகிய நகரியைக் கண்டு சென்று குறுகி இசைபோன்ற
வார்த்தையையுடையாளுக்கு அவ்வூரினியல்பு சொல்லியது.
செய்யுள்: செய்யப்பட்ட குன்றுகள் உவை; இவை சிறப்புடைத் தாகிய பூவோடைகள் ; ஆகாயத்திலே
நடந்து கிலேசிக்கிற சந்திரன் இளைப்பாறுகிற பொழில் அவை: பூமியில் பொய் முதலாகிய குற்றம் கெடப்
பிராமணர் வேத மோதுகிற இடம் உந்திடம்: இந்தவிடம் எய்கிற மலையாகிற நீண்ட வில்லை யுடைய
திருவம்பலநாதனுக்கிடம், மிக்க ஆபரணங்களை யுடையாய் ! 223
31.செவிலிதேடல்*
-----------------
*பேரின்பப் பொருள்: திரோதையைக் கடந்த செய்கையுரைத்தது.
செவிலிதேடல் என்பது இருவரையும் வழிப்படுத்தி வந்து பிரிவாற்றாது கவலா நின்ற தோழியை,
எம்பிள்ளை எங்குற்றது? நீ கவலா நின்றாய்; இதற்குக் காரணமென்னோ'வென்று வினாவிச் செவிலி
தலைமகளைத் தேடா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
மயிலெனப் பேர்ந்திள வல்லியி
னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.
கவலை யுற்ற காதற் றோழியைச்
செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.
இதன் பொருள்: மயில் எனப் பேர்ந்து - மயில் போலப் புடைபெயர்ந்து ; இள வல்லியின் ஒல்கி -
இளைய கொடி போல நுடங்கி; மெல் மான்விழித்து - மெல்லிய மான்போல விழித்து; குயில் எனப்பேசும்
எம் குட்டன் எங்குற்றது - குயில் போலச் சொல்லும் எமது பிள்ளை யாண்டையது; என்நெஞ்சகத்தே
பயில் என- என்னெஞ்சின் கண்ணே தனக்குப் பயிற்சி யென்று பலர் சொல்லும் வண்ணம்; பேர்ந்து
அறியாதவன் தில்லைப் பல்பூங்குழலாய்- என்னெஞ்சினின்று நீங்கியறியா தவனது தில்லையிற்
பலவாகிய பூக்களையுடைய குழலையுடையாய்; அயில் எனப் பேரும் கண்ணாய். வேல் போலப் பிறழுங்
கண்ணை யுடையாய்; இன்று அயர்கின்றது என்கொலாம் - நீ யின்று வருந்துகின்றதென்னோ? எ-று
எங்குற்றதென்பது ஒரு சொல், என்னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறியாதவ னென்பதற்கு
என்னெஞ்சின் கண்ணே நீ பயிலவேண்டுமென்றொருகால் யான் கூறப் பின் னீங்கியறி யாதவனென்
றுரைப்பினு மமையும். கண்ணிக்கென்பது பாடமாயின் அவள் காரணமாகப்போலும் இவள்
வருந்துகின்றதென்று உய்த்துணர்ந்து அவட்கு நீ வருந்துகின்ற தென்னென வினாவிற்றாக வுரைக்க.
மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகட் குற்றதுணர்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கிலேசமுற்ற உயிர்த் தோழியைச் செவிலித் தாயார் ஆராய்ந்து கேட்டது.
செய்யுள் : **'என் நெஞ்சகத்தே தனக்கு வாழ்வென்று பிறர் சொல்லும் படி என்னைவிட்டு நீங்கி
அறியாதவன். அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் பூவணிந்த கூந்தலினை யுடையாய்! வேல் போல்
உலாவுகின்ற கண்களினை உடையாளுக்கு இப்பொழுது என் தான் வருந்துகின்றது? அது கிடக்க. 224
**இச்செய்யுளின் முதலிரண்டடிகட்கு ஏட்டில் உரை காணப்பெற வில்லை .
32. அறத்தொடுநிற்றல் *
----------------------
* பேரின்பப் பொருள் : அருளே திரோதை யாந்திற முரைத்தது.
அறத்தொடு நிற்றல் என்பது தேடாநின்ற செவிலிக்கு, நீ போய் விளையாடச்சொல்ல யாங்கள்
போய்த் தெய்வக் குன்றிடத்தே யெல்லாரு மொருங்கு விளையாடாநின்றேமாக, அவ்விடத்தொரு பெரியோன்
வழியே தார்சூடிப் போயினான்; அதனைக்கண்டு நின் மகள் இத்தாரை யென்பாவைக்குத் தாருமென்றாள்;
அவனும் வேண்டியது மறாது கொடுப்பானாதலிற் பிறிதொன்று சிந்தியாது கொடுத்து நீங்கினான்;
அன்றறியாப் பருவத்து நிகழ்ந்ததனை ''உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் - கொண்டார்க் குரியர்
கொடுத்தார்'' என்பதனை யின்றுட் கொண்டாள் போலும்; யானித் துணையுமறிவேன்' என்று உடன்போக்குத்
தோன்றக்கூறித் தோழி அறத்தொடு நில்லா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
யாவருக் கும்மெளிதாங்
தாளர் இக் குன்றில் தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே
சுடர்க்குழைப் பாங்கி படைத்து மொழி கிளவியிற்
சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.
இதன் பொருள்: ஆள் அரிக்கும் அரிதாய் - ஆட்செய்தல் அரிக்குமரிதாய்; தில்லை யாவருக்கும்
எளிதாம் தாளர் இக் குன்றில்- அவ்வாட் செய்தல் தில்லைக்கணெல்லார்க்கு மெளிதாந் தாளையுடை யவரது
இம்மலையிடத்து: தழல் திகழ்வேல் கோள் அரிக்கு - தழல் விளங்கும் வேலையுடைய கோள் வல்ல அரிமாவிற்கு;
நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர்த்தார் - மாறுதலை போல்வாரொருவரது நிறத்தையுடைய மலரானியன்ற தாரை;
வாள் அரிக் கண்ணி எம் வாள் நுதல் - வாள் போலுஞ் செவ்வரி பரந்த கண்ணையுடையாளாகிய எம்முடைய
வாணுதல்; வண்டல் ஆயத்துத் தன்பாவைக்கு மேவிக் கொண்டாள்- வண்டலைச் செய்யு மாயத்தின் கண்ணே
தன்பாவைக்கென்று அமர்ந்து கொண்டாள்; இத்துணையுமறிவேன் எ-று.
ஆளரி, ஒருகால் நரசிங்கமாகிய மாலெனினு மமையும். கோளரிக்கு நிகரன்னாரென்பதற்குக்
கோளரிக் கொப்பாகிய அத்தன்மையா ரெனினு மமையும். இக்குன்றின்கண் வண்ட லாயத்து மேவிக்கொண்டா
ளெனவியையும், தாளெரிக்குன்றி னென்றதனான் இது தெய்வந் தர வந்ததென்றும், பாவைக்கென்.................
409 முதல் 432 பக்கங்கள் புத்தகத்தில் இல்லை.
வண்டோலுலுத்த நின்று விளங்கினையென்று கூட்டியுரைக்க. குழை யெழில் வீச வண்டோலுறுத்த வென்பன
அணியாகிய குழைவிளங்க வென்பதூஉஞ் செவிலியரோலாட்ட வென்பதூஉந் தோன்ற நின்றன.
இப்பாட்டைந்திற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை ..ங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: தேடிச்சென்ற செவிலித் தாயானவள் அசைந்த குரவோடே
நேர்ந்து சொல்லியது.
செய்யுள் : குழையானது அழகைத் தர, வண்டுகள் ஆரவாரிப்ப, நீயும் நின் பிள்ளைகளுமாக நின்று
நிலைபெறுகிற நீண்ட குரவே! கதி பாய்ந்து செல்லுகிற இடபத்தினை யுடையவனுடைய புலியூரினையொத்த
என்னுடைய பிள்ளையானவள் நின்று கொதிக்கிற வழியிலே அசைந்தசைந்து போகக்கண்டு வைத்தும்
ஒரு வார்த்தையும் சொல்லுகிறாயில்லை. என்ன இப்படிக் கொத்த அரிய வழியில் போகக்கண்டதேயன்றி
நான் வந்தவிடத்திலும் ஒருவார்த்தை சொல்கின்றிலை. 241
49. விரதியரை வினாவல்*
-----------------------
*பேரின்பப் பொருள் : "திரோதை தவத்தர் திறத்தில் வினாயது."
விரதியரை வினாவல் என்பது குரவொடுவருந்திச் செல்லா நின்றவள், பத்தியர் போல
ஒரு பித்தி தன் பின்னேவர ஒரு பெருந்தகை முன்னே செல்லக் கண்டீரோ'வென விரதியரை
வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
சுத்திய பொக்கணத் தென்பணி
கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே .
வழிவரூ கின்ற மாவிர தியரை
மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.
இதன் பொருள் : சுத்திய பொக்கணத்து - சுத்தியை யுடைத்தாகிய பொக்கணத்தையும்; என்பு அணி -
என்பாகிய வணியையும்; கட்டங்கம் - கட்டங்கமென்னும் படைக்கலத்தையும் ; சூழ்சடை - சூழ்ந்த சடையினையும்;
பொத்தியவெண் கோலத்தையுமுடையீர் ; புலியூர் அம்பலவர்க்கு உற்றபத்தியர் போல - புலியூர்க்கணுண்டாகிய
அம்பலத்தை யுடையவர் கண்மிக்க பத்தியையுடையாரைப்போல; பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் பித்தி.
பெருத்திறுமாந்த முலைகளையுடையா ளொரு பேதை; தன் பின்வர ஓர் பெருந்தகை முன் வருமோ - தனக்குப்
பின்வர ஒரு பெருந்தகை முன்னே வருமோ? உரைமின் எ-று.
சுத்தி - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பி வடிவாகத் தலையோட்டா னமைக்கப்படுவதொன்று.
என்பணி யென்புழி இயல்பும். கட்டங்கமென்புழித் திரிபும் விகார வகையாற் கொள்க. கடங்கமென்பது மழு ;
இது கட்டங்கமென நின்றது. வெண்கோலம் - நீறணிந்த கோலம். பத்தியர்க்குப் பணைத்தல், உள்ளத்து நிகழும்
இன்புறவால் மேனிக்கண் வருமொளியும் ஒடுங்காமையும் இறுமாத்தல் - தாழாத வுள்ளத்தராய்ச் செம்மாத்தல்,
முலைக்குப் பணைத்தல்- பெருத்தல்; இறுமாத்தல்- ஏந்துதல், வெண்பத்திய கோலத்தினீ ரென்ற பாடத்திற்கு
வெண்ணீற்றாற் பத்திபடவிட்ட முண்டத்தையுடைய கோலமென்றுரைக்க.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வழியே வாராநின்ற பெரு விரதம் பூண்டவர்களைச் சொல்மின்
என்று எதிர்ப்பட்டுச் சொல்லியது.
செய்யுள் : இப்பி வடிவாகச் செய்யப்பட்ட சுத்த மடம்பட்ட (?) பொக்கணத்தினையும் எலும்பாகிய
ஆபரணங்களையும் கட்ட(ங்க)மாகிய படைக்கலத்தையும் சூழ்ந்த சடையினையும் வெள்ளிதாகத் திருநீற்றாலே
பொலிவு பட்ட மேனியையுமுடையீர்! பெரும்பற்றப் புலியூரில் திருவம்பல நாதனுக்கு மிக்க பத்தியானவர்களைப்
போலே பணைத்துச் செம்மாந்த முலைகளையுடைய ஓர் அறியாதவள் தன் பின்னேவர முன்னே வரா நின்றானோ
ஒரு பெரிய தகைப்பாட்டையுடையவன்; சொல்வீராக வேண்டும் . 242
50. வேதியரை வினாவல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: திரோதை பெற்றோரைச் சென்று வினாயது.
வேதியரை வினாவல் என்பது விரதியரை வினாவி அதுவழியாகச் செல்லா நின்றவள், 'மான் போலு
நோக்கினையும், மயில் போலுஞ் சாயலையு முடைய மான் ஓரேந்தலோடு நும் மெதிரே வரக்கண்டீரோ' வென
வேதியரை வினாவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வெதிரேய் கரத்துமென் தோலேய்
சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே
மாதின்பின் வருஞ்செவிலி
வேதியரை விரும்பி வினாவியது.
இதன் பொருள்: வெதிர் ஏய் கரத்து - மூங்கிற்றண்டு பொருந்திய கையினையும்: மெல் தோல்
ஏய் சுவல் - மெல்லிய கலைத்தோலியைந்த சுவலினையும்; வெள்ளை நூலின் - வெள்ளை நூலினையும்;
கொண்மூ அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் - கொண்மூவினது முழக்கம் போலு மறையொலியினையு
முடைய இந்நெறிச் செல்வீர்; ஒருமான்- ஒரு மான்; தில்லை அம்பலத்துக் கதிர் ஏய் சடையோன் கரமான் என -
தில்லையம்பலத்தின் கணுளனாகிய மதிசேர்ந்த சடையை யுடையவனது கரத்தின்மான் போல மருண்ட
நோக்கத்தளாய்; மயில் போல்- மயில் போல வசைந்த சாயலளாய். சுரமே வெறுப்ப ஒரு ஏந்தலொடு எதிரே
வருமே - வருத்துஞ் சுரந் தானே கண்டு துன்புற ஓரேந்தலோடு நும்மெதிரே வந்தாளோ? உரைமின் எ-று.
தோலேய்ந்த சுவலின்கணுண்டாகிய வெள்ளை நூலினையு மெனினுமமையும். இவை
யிரண்டற்கும் மெய்ப்பாடு: அது . பயன்: தலைமகளைக் காண்டல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மகள் பின்னே தேடி வருகிற செவிலித்தாய் பிராமணரை
வினாவிக்கேட்டது.
செய்யுள்: மூங்கிற்றண்டு பொருந்தின கையினையும், மெல்லிய தோல் பொருந்தின கழுத்தினையும்,
வெள்ளிய பூண் நூலினையும், மேகத்தின் முழக்கத்தினை யொத்த வேதத்தினையுமுடையூராய் இந்த வழியின்
நடக்கிறவர்களே! பெரும்பற்றப்புலியூரில் திருவம்பலத்தே யுளனாகிய ஒளி பொருந்தின திருச் சடாபாரத்தை
யுடையவன் கையிலேந்தின மானை நிகர்த்த ஒரு மானோக்கினை யுடையவள் மயிலைப்போல எதிரே வாரா
நின்றாளோ? வந்தாளாகில் சொல்லுவீராக வேண்டும். 243
51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்*
------------------------------------------------
*பேரின்பப் பொருள் : திரோதை பெற்ற சிவத்தைக் காட்டியது.
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் என்பது வேதியரை வினாவி, அது வழியாகச்
செல்லா நின்றவள், 'நும்மைக் கண்டு என்னாற்றேடப்படுகின்றார் மீண்டார்களென்று கருதிமகிழ்ந்தேன்;
அதுகிடக்க, இவ்வாறு நும்மோடொத்த வொழுக்கத்தினராய் முன்னே யிருவரைப் போகக்கண்டீரோ?' வெனப்
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையும் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.
புணர்ந்துடன் வரும் புரவலனொருபால்
அணங்கமர் கோதையை யாராய்ந்தது
இதன் பொருள்: நும்மைக் கண்டு மீண்டார் என உவந்தேன்- நும்மைக்கண்டு என்னாற்
றேடப்படுகின்றார் மீண்டா ரென்றுகருதி மகிழ்ந்தேன்; இம் மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே-
இவ்வாறு நும்மோடொத்த மேதகவை யுடைத்தாகிய இவ்வொழுக்கத்தையே பூண்டார் இருவர்
முன்னே போயினரோ? உரைமின் எ-று. புலியூர் எனை நின்று ஆண்டான் அருவரை ஆளி அன்னானைக்
கண்டேன் - புலியூர்க் கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்றாண்டவனது கிட்டுதற்கரிய மலையில்
ஆளியை யொப்பானை யான் கண்டேன்; தூண்டா விளக்கு அனையாய் - தூண்ட வேண்டாத விளக்கை
யொப்பாய்; அயல் அன்னை சொல்லியது என்னையோ- அவன தயல் அன்னை சொல்லியதி யாது?
அதனையவட்குச் சொல்லுவாயாக எ-று.
அருவரைக்கட் கண்டேனெனக் கூட்டினு மமையும். ஆளி யன்னானென்றதனால், நின்மகட்கு
வருமதோ ரிடையூறில்லையெனக் கூறினானாம். தூண்டாவிளக்கு: இல்பொருளுவமை .
மணிவிளக் கெனினுமமையும். அணங்கமர்கோதையை - தெய்வ நாற்றமமர்ந்த கோதையை
யுடையாளை. ஆராய்ந்தது- வினாயது. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த வுவகை. பயன்: அது
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: புணர்ந்துடனே வருகிற நாயகன் தனக்கொரு பக்கத்தாளாகிய
தெய்வ நறுநாற்றம் பொருந்தின மாலையினையுடையவளைக் கேட்டது.
செய்யுள்: 'உங்களைக் கண்டு என் மகளும், அவளுடைய நாயகனும் மீண்டார்களென்று
பிரியப்பட்டிருந்தேன்; இம்மெய்ப்பாடு தக்க ஒழுக்கத்தினைப் பூண்டவர்கள் இரண்டுபேர் முன்னே போனார்களோ'
(என்று செவிலி கேட்ப எதிரேவருகிற நாயகன் சொல்லுவான் ;) புலியூரில் நின்று என்னை அடிமை கொண்டவன்
அவனுடைய அரியமலையில் சிங்கம் போன்றவனைக் கண்டேன்: அவனுக்கயலாகத் 'தூண்டப்படாத
விளக்கினை யொப்பாய்! அன்னை சொன்ன வடிவு எத்தன்மைத்து?', 244
52. வியந்துரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள் : ''திரோதை யின்புயிர்க்குச் செய்திறங் கண்டது''
வியந்துரைத்தல் என்பது புணர்ந்துடன் வருவோரை வினாவி, அதுவழியாகப் போகாநின்றவள்,
தன் மகணின்ற நிலையையும், அவன் கையின் வேலினான் வேங்கை பட்டுக் கிடந்த கிடையையுங்கண்டு
வியந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
பூங்கயி லாயப் பொருப்பன்
திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே
வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும்
நாடா வருங் கோடாய் கூறியது
இதன் பொருள்: பூங்கயிலாயப் பொருப்பன் திருப்புலியூரது என்ன - பொலிவினையுடைய கைலாயமாகிய
பொருப்பை யுடையவனது திருப்புலியூரதனைப்போல; தீங்கை இலாச் சிறியாள் நின்றது இவ்விடம் குற்றத்தையுடையவ
றல்லாத என் சிறியாள் நின்றது இவ்விடத்து, சென்று -சென்று எதிர்ந்த வேங்கையை மடுத்து; கிடந்து அலற - விழுந்து
கிடந்தலறும் வண்ணம்; திண் திறல் ஆண்டகை அயிலால் பணிகொண்டது ஆங்கு - திண்ணிய திறலையுடைய
ஆண்டகை வேலாற் பணி கொண்டது அவ்விடத்து, அதனால், அவர் போயின நெறி யிதுவே எ-று;
தீங்கையிலாவென்புழி இன்மை உடைமைக்கு மறுதலை யாகிய வின்மை. மகளவிச் சுவடு கிடந்தவழிச்
சென்று நின்றனளாதலின். அதனை இவ்விடமென்றும், வேங்கை பட்ட விடத்தை யிவ்விடமென்றுங் கூறினாள்,
வேங்கை தன் காதலியை யணுகாமல் அது வரும்வழிச் சென்றேற்றானாதலிற் சென்றென்றாள்;
சென்று பணிகொண்டதென வியையும், மெய்ப்பாடு அது , பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வேங்கைப்புலி பட்ட படியும். பூத்த வல்லிசாதம் போன்றவள்
நிலையும், தேடி வருகிற செவிலித்தாய் சொன்னது.
செய்யுள் : பொலிவுடைத்தாகிய கயிலைமலையினை யுடையவன். அவனுடைய அழகிய
பெரும்பற்றப் புலியூரெனும்படி குற்றமில்லாத சிறியவள் நின்றவிடம் இவ்விடம்: தன்னுடனே மாறுபட்டு
வந்த புலியானது தன் வாயிலே பெரிய கையை மடுத்துக் கிடந்து கூப்பிடும்படி சிக்கென்ற தைரியத்தை
யுடைய நாயகன் அவ்விடத்துத் தன் கையில் வேலினை வேலை கொண்டது அவ்விடமாயிருக்கும். 243
53. இயைபெடுத்துரைத்தல்*
-------------------------
* பேரின்பப் பொருள் : திரோதை யின்புருவைச் சிவமாக்கண்டது.
இயைபெடுத்துரைத்தல் என்பது வேங்கைபட்டது கண்டு வியந்து' அதுவழியாகச் செல்லா நின்றவன்,
எதிர் வருவாரை வினாவ, அவர் , 'நீ கூறாநின்றவரைக் குன்றத்திடைக் கண்டோம், அவ்விருவருந்
தம்முளியைந்து செல்லா நின்றமை கண்டு, எல்லாவற்றையுமுடையளாகிய தன் காதலியோடு ஒரு
வடிவாய் விளையாடும் புலியூரனென்றே கருதி, யாங்களெல்லா மொத்து, மிகவும் அவ்வெழிலைத்தொழ
நினைந்தோம்; அந் நன்மை சொல்லலாவதொன்றன்று; என எதிர்வருவார் அவரியைபெடுத்துக்
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மின்றொத் திடுகழல் நூபுரம்
வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடெயன்
றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே
சேயிழை யோடு செம்மல் போதர
ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது
இதன் பொருள்: அன்னை - அன்னாய்; நீ சொன்ன கொள்கையர்க் குன்றத்திடைக் கண்டனம்
நீ கூறிய கோட்பாட்டை யுடையாரைக் குன்றத்திடைக் கண்டேம்; மின் தொத்து இடு கழல் நூபுரம் -
அவ்விருவரு மியைந்து சேறலின், மின்றிர ளுண்டாகா நின்ற அவனது கழலும் அவளது சிலம்பும்;
வெள்ளை செம்பட்டு - அவனது வெண்பட்டும் அவளது செம்பட்டும்; மின்ன- விளங்க; ஒன்று ஒத்திட -
ஒருவடிவை யொத்தலான்; உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்று - எல்லாவற்றையு முடையாளாகிய
தன் காதலியோ டொருவடிவாய் விளையாடும் புலியூரனென்றே கருதி ; ஒத்து நன்று எழிலைத்தொழ உற்றனம் -
யாங்களெல்லாமொத்துப் பெரிது மவ்வழகைத் தொழ நினைந்தேம்; என்னது ஓர் நன்மைதான் - அந்நன்மை
யெத்தன்மைய தோர் நன்மைதான்! அது சொல்லலாவ தொன் றன்று எ-று.
என்னதோர் நன்மையென்றதனான், அஃதறமாதலுங் கூறப் பட்டதாம். தானென்பது அசைநிலை.
கொள்கையரையென்னு முருபு விகாரவகையாற் றொக்கது. என்ன நன்மையதா மென்ப தூஉம் பாடம்,
மெய்ப்பாடு: உவகை, பயன்: செவிலியை யெதிர் வருவார் ஆற்றுவித்தல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சிவந்த ஆபரணங்களை யுடையாளுடனே நாயகன் போக
அழகிய ஆபரணங்களையுடைய உமாதேவி பங்கனாகிய மகாதேவனென் றயிர்த்தே மென்றது .
செய்யுள் : 'ஒளி திரண்டவன் காலிலே யணிந்த வீரக்கழலும் அவன் காலிலே அணிந்த சிலம்பும்,
அவனுடுத்த வெள்ளைப் பட்டும் அவளுடுத்த செம்பட்டாடையும். இவை விளங்கி ஒன்றுபடப் பிரகாசிப்ப,
எல்லாப் பொருளையு முடைத்தாகிய உமாதேவி ஒன்றுபட்டுத் தோன்றுகின்ற பெரும்பற்றப்புலியூரை யுடைய
முதலியாரென்று சொல்லி மிகவும் ஒப்புக் கொண்டு. அவ்வழகைத் தொழக்கடவதாக நினைந்தோம்:
அஃதென்ன நன்மையோதான்? தாயே! நீ சொன்ன கோட்பாட்டை யுடையவர்களை அம்மலை வழியிற்
கண்டோம்.' மலையில் வழியிடத்தே கண்டோர், என்ன? நன்மைதான் என்றனர் என்றுபடும். 246
54. மீளவுரைத்தல்*
----------------
*பேரின்பப் பொருள்: "அடியார் சிவத்தோ டாவா யென்றது".
மீளவுரைத்தல் என்பது இயைபெடுத்துரைத்தவர், 'அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப்போய்த்
தில்லையினெல்லையைச் சென்றடைவர் : இனி நீ செல்வதன்று, மீள்வதே காரியம்' எனத் தேடிச்
செல்லாநின்ற செவிலியை, மீளக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
மீள்வது செல்வதன் றன்னையிவ்
வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
னெல்லை யணுகுவரே
கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து
நடுங்கன்மின் மீண்டும் நடமி னென்றது
இதன் பொருள்: கிளர்கெண்டை அன்ன நீள்வது செய்த கண்ணாள் - புடை பெயரா நின்ற கெண்டை
போலும் நீடலைச் செய்த கண்ணை யுடையாள்; இவ் வெங்கடத்து - வெய்ய விச்சுரத்தின்கண்: அக்கடமாக்
கீள்வது செய்த கிழவோனொடும் அத்தன்மைத்தாகிய கடமாவைப் பிளத்தலைச் செய்த கிழவோனோடும்:
இந்நெடுஞ் சுரம் நீந்தி - இந்நெடியசுரத்தை நீந்தி அவ்விருவரும் ஓரிடுக்கணின்றிப் போய்: எம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவர் - எம்மை யாளுதலைச் செய்தவனது
தில்லையினெல்லையைச் சென்றணைவர், அதனால்: அன்னை-அன்னாய் : மீள்வது - செயற் பாலது
மீள்வதே: செல்வது அன்று- சேறலன்று எ-று.
சுரங்கடத்தல் இருவர்க்கு மொக்கு மெனினும், நீள்வது செய்த கண்ணாணீந்தியெனத் தலைமகண்மேற்
கூறினார் . வெஞ்சுரத்திற்கவள் பஞ்சின் மெல்லடி தகாவாகலின், அணுகுவ ரென்புழித் தலைமகள் தொழிலு
முண்மையின், நீந்தி யென்னு மெச்சம், வினைமுதல் வினை கொண்டதாம்;** திரிந்துரைப் பாருமுளர்.
கிழவோனொடு மென்றதனால், அவன் பற்றுக் கோடாக நீந்தினாளென்பது விளக்கினார். இனி ஒடுவை
எண்ணொடுவாக்கி யுரைப்பினுமமையும். உம்மை : அசைநிலை.
**"முதனிலை மூன்றும் வினை முதன் முடிபின" என்புழிப் பொது வாகாது வினைமுதற்கே வினையாதல்
வேண்டுமென்னும் வரையரையின்றி வினைமுதல் வினையென்னுந் துணையேயாய் நிற்றலின்.
இவ்வாறு முடித்தாக இது சேனாவரையருரையானு முணர்க. கிளவியாக்கம், 2-ம்சூத்திரம் ஆடூஉவறிசொல்
(இது நாவலர் பதிப்புக்குறிப்பு.)
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அரிய காட்டு வழியைக் கடந்ததனைச் செவிலிக்குச் சொல்லி,
'நடுங்காதீர், மீண்டுபோம்' என்றது.
செய்யுள்: இவ்வரையிடத்தே அந்த (மத) முடைத்தாகிய யானையைக் கிழித்(த) நாயகனுடனே
உபலாளிக்கிற (?) கயிலையொத்த நீளிய மாவடு வகிர்போன்ற கண்களை யுடையாள் தூரிய வழியைத்
தொலைத்து நம்மையாளும் தொழிலினைச் செய்து நின்றவனுடைய பெரும்பற்றப்புலியூரின் எல்லையைச்
சென்று சேர்வள் ; ஆதலால் நீரினிச் செய்யத்தகுவது மீளுவதே. செல்கை காரியமுடைத்தன்று; தாயே! 247
55. உலகியல் புரைத்தல்*
----------------------
*பேரின்பப் பொருள் ; 'பெற்ற வின்பம் பிறர்கொள்வ ரென்றது'.
உலகியல்புரைத்தல் என்பது மீளக்கூறவும் மீளாது கவலா நின்ற செவிலிக்கு 'சந்தனமு முத்துஞ்சங்கும்
தாம்பிறந்த விடங்கட்கு யாதும் பயன்படாது; தம்மை விரும்பி யணி வாரிடத்தேசென்று பயன்படா நிற்கும்;
அதுபோல மகளிருந்தாம் பிறத்த விடத்துப் பயன்படார்; நீ கவல வேண்டா' வென உலகியல்பு
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் : -
சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற் சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே
செவிலியது கவலை தீர
மன்னிய உலகியன் முன்னியுரைத்தது.
இதன் பொருள்: சுரும்பு இவர் சந்தும்- நறுநாற்றத்தாற் சுரும்பு சென்று பரக்குஞ் சந்தனமும்; தொடு கடல்
முத்தும் - தோட்கப்பட்ட கடலின் முத்தும்; வெண் சங்கும் - வெண் சங்கும்; எங்கும் விரும்பினர் பால் சென்று
மெய்க்கு அணியாம்- எத்தேயத்துந் தாம் பிறந்த விடங்கட்கு யாதும் பயன்படாது தம்மை விரும்பி யணிவாரிடத்தே
சென்று அவர் மெய்க்கு அணியாகா நிற்கும்; வியன் கங்கை என்னும் பெரும்புனல் சூடும் பிரான்- அகன்ற கங்கை
யென்னா நின்ற பெரும் புனலைச் சூடும் பிரான்: சிவன் - சிவன் : சிற்றம்பலம் அனைய கரும்பு என மென்மொழியாரும் -
அவனது சிற்றம்பலத்தை யொக்குங் கரும்பு போலும் மெல்லிய மொழியினையுடைய மகளிரும் ; காணுதர்க்கு
அந் நீர்மையர்- ஆராய்வார்க்கத் தன்மையர்; நீ கவலவேண்டா எ-று.
சங்கு மணியாயும் வளையாயும் அணியாயும் எங்குமணியாமெனவியையும், சிற்றம்பலத்து
மன்னுங் கரும்பன மென் மொழியா ரென்பது பாடமாயின் சிற்றம்பலத்தையுடைய தில்லையினுளதாங்
கரும்பு போலு மென்மொழியையுடையா ரென்றுரைக்க.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : செவிலித்தாயுடைய கிலேசம் தீர நிலைபெற்ற
உலகினியல்பினை எதிர்ப்பட்டுச் சொன்னது.
செய்யுள் : வண்டுகள் பறக்கப்படாநின்ற சந்தன மரமும், சகரராலே தோண்டப்பட்ட கடலிற் பிறந்த
முத்தும், வெள்ளிய சங்கும், எல்விடத்தும் தம்மை விரும்பினவர்களிடத்தே சென்று அவர்களுக்கு மெய்க்கு
அலங்காரமாக நிற்கும்: நலமாகிய (?) கங்கையென்று சொல்லப்பட்ட அதிக சலத்தைச் சூடியருளுகிற
தலைவன், சிவனென்னும் நாமத்தை யுடையவன். அவனுடைய திருச்சிற்றம்பலத்தை யொத்துக் கரும்பை
நிகர்த்த வார்த்தையினையுடையாளும், விசாரிக்கில் அத்தன்மையினாள் காண் : ஆதலால் நீ செல்லவேண்டா. 248
56. அழுங்கு தாய்க்குரைத்தல்*
----------------------------
*பேரின்பப் பொருள் : 'அடியார் திரோதை யருளே யென்றது"
அழுங்குதாய்க் குரைத்தல் என்பது உலகியல்பு கூறவும் மீளாது நின்று, தானெடுத்து வளர்த்தமை
சொல்லிக்கவலா நின்ற செவிலியை, முன்னிலைப்புறமொழியாக 'இவர் தாம் இல்லின் கணெடுத்து வளர்ந்தவர்
போலும்; அவர் போய்த் தம்மையிருவரையுங் கூட்டுவித்த தெய்வப்பதியாகிய தில்லை யிடத்துப் பழனங்களைச்
சென்றணைவர்' எனத் தம்முட் கூறுவார் போன்று கூறி, மீட்டுக்கொண்டு போகா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
ஆண்டி லெடுத்தவ ராமிவர்
தாமவர ல்குவர் போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம் விழுந்து
பாண்டி லெடுத்தபஃ றாமரை
கீழும் பழனங்களே.
செழும் பணை யணைந்தமை
அழுங்குதாய்க் குரைத்தது
இதன் பொருள் : இவர் தாம் ஆண்டு இல் எடுத்தவர் ஆம்- இவர் தாம் அவ்விடத்து இல்லின்கணெடுத்து
வளர்த்தவர் போலும்; தீண்டில்-யாவராயினுந் தம்மையணுகில்; எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன்
தில்லையின்வாய் - அவர் நரகத் தழுந்தாம லெடுத்து அவரது தீவினையைத் தீர்ப்பவனது தில்லையின் கண்;
தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு ஏற்ற- தூண்டிலை விழுங்கிய வரால் தெங்கொடு மோத; பழம் விழுந்து -
அதன் பழம் விழுந்து; பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்கள் - கிண்ணம் போலும் பூக்களை
யுயர்த்திய பலவாகிய தாமரையைக் கிழிக்கும் பழனங்களை; அவர் போய் அல்குவர் - அவர் சென்று சேர்வர் :
இனியோரிடரில்லை எ-று.
தில்லையின்வாய்ப் பழனங்களெனவியையும், ஆண்டிலெடுத் தவராமிவர் தாமென்று தம்முட்கூறிப்பின்
செலிலிக்குக் கூறினாராக வுரைக்க, இவ்வாறு பகராது, செவிலி கேட்ப முழுவதூஉந் தம்முட் கூறினாராக
வுரைப்பினுமமையும். தூண்டிலா னெடுக்கப்பட்ட வராலெனினுமமையும் . இவை மூன்றற்கும் மெய்ப்பாடு:
பெருமிதம். பயன்: செவிலிக்கியல்பு கூறி அவளை மீள்வித்தல் , நில்லாவளை (192) தொட்டு இது காறும் வரப்
பாலைத்திணை கூறியவாறறிக.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : அழகிய மருதநிலத்தை...... கிலேசிக்கிற தாய்க்குச் சொன்னது,
செய்யுள்: அவர்கள் போய் அவதரிப்பார்கள் : (எவ்விடத்தே யென்னில்,) தம்மைச்சென் று குறுகுகிற(வர்)
பிறவி என்கிற கடலில் அழுந்தாமல் எடுத்து, அவர்கள் தீவினையைத் தீர்க்கிறவருடைய பெரும்பற்றப் புலியூரில்,
தூண்டிலினது இரையை விழுங்கிய வரால் தெங்குடன் மோதத் தென்னம் பழம் விழுந்து கிண்ணம் போலே
உயர மலர்ந்த பல தாமரைப் பூக்களை ஆங்கு அழிக்கின்ற தடாகங்களையுடைய மருத நிலத்தே
(சென்று புகுவார்கள்): இல்லிலே எடுத்து வளர்த்த கைத்தாயராக வேண்டுமிவர், 249
உடன்போக்கு முற்றிற்று
17. வரைவு முடுக்கம்.*
-------------------
*பேரின்பக் கிளவி: "வரைவு முடுக்க மொருபதி னாறுஞ் சிவனது கருணை தெரியவுரைத்தவ்,
வின்பம் பெறவரு ளெடுத்தியம்பியது"
இவ்வா றுடன்போக்கு நிகழாதாயின், வரைந்து கோடனிகழும். அது நிகழுமிடத்துத் தோழியான்
வரைவு முடுக்கப் பட்டும் வரை பொருட் பிரிந்து வந்தும் நிகழுமென்ப அவற்றுள் , வரைவு முடுக்கம் வருமாறு:-
வருத்தங்கூற லவன்மறுத் துரைத்த
லுள்ளது கூற லேதங் கூறல்
பகல்வர லென்ற றொழுதிரந் துரைத்தல்
சிறைப்புறங் கூறன் மந்திமேல் வைத்தல்
கண்டுயி லாமை கண்டா ருரைத்தல்
பகலுடம் பட்டாள்போன் றிரவர லென்ற
லிரவுடம் பட்டாள் போன்று பகல்வர லென்ற
லிரவும் பகலும் வரவொழி கென்றல்
காலங் கூறல் கூறுவிக் குற்றல்
செலவு கூறல் பொலிவழி வுரைத்த லென்
றீரெண் கிளவியு மியம்புங் காலை
வாரணி முலையாய் வரைவு முடுக்கம்.
இதன் பொருள்: வருத்த மிகுதிகூறி வரைவு கடாதல், பெரும்பான்மை கூறி மறுத்தல், உள்ளது கூறி
வரைவு கடாதல், ஏதங்கூறி யிரவரவு விலக்கல், பழிவரவுரைத்துப் பகல் வரவு விலக்கல், தொழுதிரந்துகூறல்,
தாயறிவுகூறல், மந்தி மேல் வைத்து வரைவு கடாதல், காவன் மேல் வைத்துக் கண்டுயிலாமை கூறல்,
பகலுடம் பட்டாள் போன்றிரவரவு விலக்கல், இரவுடம் பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல், இரவும் பகலும்
வரவு விலக்கல், காலங்கூறி வரைவு கடாதல், கூறுவிக்குற்றல், செலவு நினைந்துரைத்தல், பொலி வழிவுரைத்து
வரைவு கடாதல் எனவிவை பதினாறும் வரைவு முடுக்கமாம் எ.று. அவற்றுள்:-
1. வருத்தமிகுதி கூறி வரைவுகடாதல்*
-----------------------------------
*பேரின்பப் பொருள்: ' சிவனது கருணை தெரிய வுரைத்தவ், வின்பம் பெற வகுத்து ரைத்தது.'
வருத்தமிகுதி கூறி வரைவுகடாதல் என்பது அலரறிவுறுத்த தோழி, 'அலரானுங் காவன்மிகுதியானு
நின்னையெதிர்ப்பட மாட்டா தழுது வருந்தா நின்றவளிடத்து நின்னருளிக்கின்ற வாறென்னோ'வெனத்
தலைமகளது வருத்தமிகுதி கூறித் தலைமகனை வரைவு கடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
எழுங்குலை வாழையின் இன்கனி
தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
னோநின் னருள்வகையே.
இரவுக் குறியிடத் தேந்திழைப் பாங்கி
வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.
இதன் பொருள்: எழும் குலை வாழையின் இன் கனி தின்று,எழா நின்ற குலைகளை யுடைய
வாழைத்திரளின் கணுண்டாகிய இனிய கனிகளைத் தின்று; இளமந்தி- இளையமந்தி; செழுங் குலை வாழை
அம் தண் நிழலில் துயில் சிலம்பா - வளவிய குலையையுடைய அவ்வாழைத் திரளினது நல்லகுளிர்ந்த
நிழற்கண் வெருவுத லின்றித் துஞ்சுஞ் சிலம்பை யுடையாய்; முனை மேல் உழும் கொலை வேல்
திருச்சிற்றம்பலவரை உன்னலர் போல் - போரிடத் துழுங் கொலைவேலையுடைய திருச்சிற்றம்
பலவரை நினையாதாரைப்போல, அழுங்கு உலைவேல் அன்ன கண்ணிக்கு - வருந்தா நின்ற
உலைத்தொழிலமைந்த வேல் போலுங் கண்ணையுடையாட்கு; நின் அருள் வகை என்னோ நினதருட்
கூறியாதோ? இவளதாற்றாமைக்கு மருந்தன்று எ.று.
நின்னருள்வகை யென்னோ வென்பதற்கு இல்வாறு வருந்து மிவடிறத்து இனி நீ செய்யக்கருதிய
வகை யாதோ வெனினு மமையும். அழுங்கொலை வேலென்பது பாடமாயின், அழா நின்ற கொலைவேல்
போலுங் கண்ணையுடையாட்கென் றுரைக்க. எழுங்குலை - இளங்குலை; செழுங்குலை- முதிர்ந்த குலை ;
எழுங்குலையு முதிர்ந்த குலையு முடைமையான் இடையறாது பழுக்கும் வாழைத் திரளின் கணுண்டாகிய
கனியை நுகர்ந்து, மந்தி வேறொன்றான் வெருவாது அவ்வாழை நிழலின் கீழின்புற்றுத் துயிலுமாறு போல,
ஆராவின்ப மிடையிட்டு நுகராது நீ வரைந்து கோடலான் இடையறாத பேரின்பந் துய்த்து, அன்னை
சொல்லாலுண் ணடுங்காது நின்றாணிழற்கீழ் இவளின்புற்று வாழ்தல் வேண்டுமென உள்ளுறை காண்க.
மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல் .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: இரவுக்குறியிடத்து ஏந்திழைப் பாங்கி வரைந்து கொள்வாயாக
என்னும் இடம் தோன்றச் சொன்னது.
*என்பது பழையவுரைகாரர் பாடம்
செய்யுள் : இளமந்தி.. குலையுடைத்தாகிய வாழையின் இனிய பழத்தைத் தின்று, அழகினையும்
தட்பத்தினையும் உடைத்தாகிய..... குலையுடைத் தாகிய வாழை நிழலிலே உறங்குகிற மலையினை
யுடையவனே! சத்துருக்கள் முனையிடத்தைக் கிழித்து செல்லுகிற தொத்து வேலாகிய சூல வேலையுடைய
திருச்சிற்றம்பலவரை நினையாதவரைப் போலே, வருந்துகிற கொலைத் தொழிலாற் சிறந்த
வேல்போன்ற கண்களையுடையாளுக்கு உன் அருளின் கூறுபாடு எத்தன்மைத்து?
என்று பொருளாய். 'உன் நாட்டத்துப் பண்புதான் உன்னிடத்தே உண்டாயிருக்க வேண்டாவோ' என்றது.
எங்ஙனெனின், 'இளைய மந்திக் குரங்கானது அழகுடைத்தாகிய வாழையின் பழத்தைத் தின்று எழுகிற
குலையுடைத்தாகிய வாழை நிழலிலே பிறிதொன்றிற்கு வெருவாதே உறங்கும் மலையினை யுடையவனே'
என்றதாற் போந்த பொருள்; 'இவளும் உன்னோ - - டைப் போகத்தை அனுபவித்து உன் திருவடி நிழலிலே
தாயார் சொல்லுக்கு உண்ணடுங்கிக்கா ..... யுறையும தல்லவோ நன்மையாவ தென்றுபடும். 250
2. பெரும்பான்மைகூறி மறுத்தல்*
-------------------------------
*பேரின்பப் பொருள்; உயிர்சிவப்பெருமை யெடுத்தருட்கியம்பியது.
பெரும்பான்மை கூறி மறுத்தல் என்பது வரைவு கடாவிய தோழிக்கு, யானவளைத்
தெய்வ மானுட மென்றறிந்து வரைந்து கோடற்கு இக்குன்றிடத்துத் தோன்றா நின்ற விடம் தெய்வ
மகளிர தியிடமோ, அன்றிக் குறத்தியரிடமோ, கூறுவாயாக' வெனத் தலைமகன் தலைமகளைப்
பெரும்பான்மைகூறி மறுத்துரையா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோ இடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.
குலம்புரி கொம்பர்க்குச், சிலம்பன் செப்பியது.
இதன் பொருள்: இக்குன்றிடத்தே தோன்றும் இடம்-இக்குன்றிடத்துத் தோன்றுமிடம் ; தில்லை வானவன்
வானகம் சேர் அரம்பையர் தம் இடமோ - தில்லையின் வானவனது வானகத்தைச் சேர்ந்த தெய்வமகளிர்
தமதிடமோ; அன்றி வேழத்தின் என்பு நட்ட குரம்பையர் தம் இடமோ - அன்றி யானையி னென்பை வேலியாக
நட்ட குரம்பைகளையுடைய குறத்தியர் இடமோ? நீ கூறுவாயாக எ-று . பரம் - எல்லாப் பொருட்கும்
அப்பாலாயவன்; தன் அடியேனுக்குப் பயன்- ஆயினுந் தன்னடியேற்குப் பெறும் பயனாயுள்ளான்: பார் விசும்பு
வானவன் ஊடுருவி வரம்பு அயன்மால் அறியாத் தில்லை வானவன்- பாரையும் விசும்பையு மூடுருவி
நிற்றலாற் றன்னெல்லையை அயனுமாலு மறியாத தில்லையின் வானவனெனக் கூட்டுக.
என்றது அவளை யெட்டவுஞ் சுட்டவும் படாத தெய்வமென் றிருத்தலான், அவள் வாழு மிடத்தை
அரம்பையரிட மென்றே கருதுவல், அன்றாயி னுரையென வரைவுடம்படாது கூறியவாறு. மெய்ப்பாடு: மருட்சி.
பயன்: இரவுக் குறியிட முணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : அழகிதாய் விரும்பத்தக்க வஞ்சிக் கொடியை யொப்பாளுக்கு
நாயகன் சொன்னது.
செய்யுள்: மேலாய பொருளாயுள்ளவன். தன் அடியேனாகிய எனக்குப் பெரும்பயனாயுள்ளவன்.
பூமியையும் ஆகாயத்தையும் ஊடுருவி நிற்கையாலே அவனுடைய திருவடியின் எல்லையை அயனும் மாலும்
அறியாத தில்லைவானவன்; அவனுடைய தெய்வலோகத்தைச் சேர்ந்த தெய்வமகளிரிடமோ? அன்றி அது
யானை யெலும்பை வேலியாக நட்ட குறவரிடமோ? இக்குன்றிடத்தே தோன்றுகின்ற விடம்.
தெய்வமகளிரிடமாக வன்றோ நான் நினைந்திருப்பது என்றது, 251
3. உள்ளது கூறி வரைவுகடாதல் *
-----------------------------
*பேரின்பப் பொருள் : 'இன்பத்துக் கிடமியல் பருளுயிர்க் கியம்பியது'.
உள்ளது கூறி வரைவுகடாதல் என்பது பெரும்பான்மை கூறி மறுத்த தலைமகனுக்கு,
'இவ்விடம் எந்தையது முற்றூட்டு ; எமக்குற்றார் குறவரே: எம்மை பெற்றாளுங் கொடிச்சியே ;
யாங்களு புனங்காப்போஞ் சிலர் : நீ வரைவு வேண்டாமையின் எம்மைப் புனைந்துரைக்க
வேண்டுவ தில்லை' யெனப் பின்னும் வரைவு தோன்றத் தோழி தங்களுண்மை கூறா நிற்றல் .
அதற்குச் செய்யுள் :-
சிறார்கவண் வாய்த்த மணியிற்
சிதைபெருந் தேனிழுமென்
நிறால்கழி வுற்றெஞ் சிறுகுடுல்
உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர் பெற்
றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே
இன்மை யுரைத்த மன்ன னுக்கு
மாழை நோக்கி தோழி யுரைத்தது.
இதன் பொருள்: சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெருந்தேன் - சிறார்கையிற் கவண்
தப்பாமல் அதுவிட்ட மணியாற் சிதைந்த பெருந்தேன்; இழு மென்று - இழுமென்னு மோசையை யுடைத்தாய்;
இறால் கழிவுற்று எம் சிறுகுடில் உந்தும் இடம் இது- இறாலினின்றுங் கழிதலையுற்று எமது சிறு குடிலைத்
தள்ளுமிவ்விடம்; எந்தை உறாவரை - எந்தையது முற்றூட்டு, உற்றார் குறவர்- எமக்குற்றார் குறவர்;
பெற்றாளும் கொடிச்சி - எம்மைப் பெற்றாளுங் கொடிச்சியே; உம்பர் பெறா அருள் அம்பலவன்
மலைப் பெரும் புனம் காத்தும்- யாமும் தன்னன்பரல்லது உம்பர் பெறாத வருளை யுடைய அம்பலவனது
மலைக்கட் பெரும் புனத்தைக் காத்தும்; அதனால் நீயிர் வரைவு வேண்டாமையினெம்மைப் புனைந்துரைக்க
வேண்டுவதில்லை எ-று.
" கோவையுந் தொகையு மாவயின் வரையார்" என்பதனான், இது தொடர்நிலைச் செய்யுளாதலிற்
குரம்பையர் தம்மிடமோவென்று வினாவப்பட்ட விடம் எஞ்சிறு குடிலுந்து மிடமெனவும் ஒருபுனத்தைச்சுட்டி
இதெந்தையுறாவரை யெனவுங் கூறினாளாகவுரைப்பினுமமையும். சிறாரெறிந்த மணியாற் பெருந்தேன்
சிதைந்து அவ்விறாலை விட்டுக் கழிந்து சிறுகுடிலிற் பரந்தாற்போல, அயலார் கூறும் அலரான் நுமது
மறைந்தவொழுக்கம் நும் வாயினடங்காது பலருமறிய வெளிப்படா நின்றதென உள்ளுரை காண்க.
மெய்ப்பாடு: மருட்சி. பயன் : குறியிடமுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : இல்லாத தொன்றைச் சொன்ன நாயகனுக்குக் குளிர்ந்த
நோக்கினை யுடையாளுடைய தோழி சொன்னது.
செய்யுள் : சிறுபிள்ளைகள் கையில் கவண் வாய்க்கப் பெற்ற மணியாலே அழித்த பெருந்தேனானது
இழுமென்கிற அநுகாணச் சத்தத்தினை யுடைத்தாய் இறாலினின்றும் கழிந்து எம்முடைய சிறிய வீடுகளைத்
தள்ளுகிற இடமாமிது என் பிதாவுக்கு முற்றூட்டாயிருந்தது. எங்களுக்கு உறவின் முறையாரும் குறவராயிருந்தனர்;
எங்களைப் பெற்றவளும் குறத்தி; தேவர்கட்கும் பெறவரிய ' திருவருளையுடைய திருவம்பல நாதனுடைய
திருமலையிடத்து நாங்கள் காப்பதும் பெரும் புனமாயிருந்தது .
என்ன, ஒருவருக்கும் வசப்படாது? மாதாவாலும், பிதாவாலும்,செய் தொழிலாலும் செற்றியாலும் இருக்கும்;
என்றால் எங்களுக்கு மாதாவும் பிதாவும் குறக்குலமாய்ச் செய்தொழிலும் தினைக்காவலாய் எம்மென்ற
செற்றியினாலே பண்புடைத்தாய் இருக்க, நீ ஏது கண்டு எங்களைப் புகழ்ந்தாய்' என்றது. 252
4. ஏதங்கூறி யிரவரவுவிலக்கல்*
-----------------------------
இதன் பேரின்பப் பொருள்; " இன்புருக் காண்டற் கிரவிலையென்றது."
ஏதங்கூறி யிரவரவுவிலக்கல் என்பது உண்மையுரைத்து வரைவுகடாய தோழி, 'நீ வரைவொடு
வாராயாயிற் சிங்கந் தனக்கி யானையாகிய வுணவுகளைத்தேடு மிருளின்கண், நினது கைவேல் துணையாக
நீவந்தருளா நின்றவிஃதே எங்களுக்குத் துன்பமாகத் தோன்றா நின்றது; இனியிவ்விருளிடை வாரா தொழிவாய்'
என ஏதங்கூறித் தலைமகனை யிரவரவு விலக்கா நிற்றல், அதற்குச் செய்யுள் : -
கடந்தொறும் வாரண வல்சியின்
நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
லம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.
இரவரு துயரம் ஏந்தலுக் கெண்ணிப்
பருவர லெய்திப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: பல்சீயம் வாரண வல்சியின் நாடி - பலவாகிய சீயம் வாரணமாகிய வல்சி காரணமாகத்தேடி ;
கங்குல் கடம் தொறும் இடம்தொறும் பார்க்கும் இயவு - கங்குற் பொழுதின்கட் காடுக டோறுங் காட்டினிடங்கடோறுஞ்
சென்று பார்க்கு நெறியின் கண் ; ஒரு நீ எழில்வேலின் வந்தால் - தனியையாகிய நீ எழிலையுடைய வேல் துணையாக
வந்தால் ; அன்ப - அன்பனே; நின் அருள் எம்மைத் தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே தோன்றுவது - எம்மிடத் துண்டாகிய
நின்னருள் எம்மைவிடாதே தொடர்ந்தொறுக்குந் துன்பமென்னுமுணர்வே எமக்குத் தோன்றுவது எ-று.
படம் தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை ஒறும் - படந்தொறு முண்டாகிய தீயையுடைய
அரவை யணிந்தவன தம்பலத்தைப் பணியாதாரைப் போல வருந்த எம்மை யொறுக்குமெனக் கூட்டுக.
என்றது, எமக்கு நீ செய்யுந் தலையளியை யாங்கள் துன்பமாகவே யுணரா நின்றோம்
என்றவாறு. நாடுதல் - மனத்தா லாராய்தல், பார்த்தல்- கண்ணானோக்குதல், வேலினென்னு மைந்தாவது
ஏதுவின் கண் வந்தது. ஒறுக்குமென்பது ஒறுமென விடைக்குறைந்து நின்றது. எம்மை நீ விடாது தொடருந்தொறு
மெனினு மமையும். இதற்குத் தொடரு மென்பது இடைக்குறைந்து நின்றது. நின்னருளென்னு மெழுவாய்
துன்ப மென்னும் பயனிலை கொண்டது. மெய்ப்பாடு: அச்சம். பயன் : இரவுக்குறிய தேதங்காட்டி
வரைவுகடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகனுக்கு இரவிடத்தே வருகிற கிலேசத்தை விசாரித்துத்
துன்பமுற்ற தோழி சொன்னது.
செய்யுள் : பல சிங்கங்களும் யானையாகிய உணவைத் தேடி இராக்காலத்துக் காடுதொறும்
அவை வாழும் இடங்கள் தோறும் பார்க்கும் வழியிடத்தே ஒருதுணையு மில்லாத நீ அழகிய வேலே
துணையாக வந்தால் அன்பனே! நின்னுடைய அருள் எங்களுக்குத் தோன்றுகிறது; படங்கள் தோறும்
அக்கினியைக் கான்று விடுகிற பாம்பை யுடையவன். அவனுடைய திருவம்பலத்தை வணங்காதாரைப்
போலே எம்மை இடைவிடாமல் ஒறுக்கிற துன்பம் (தோன்றாநின்றது). 253
5. பழிவரவுரைத்துப் பகல்வரவுவிலக்கல்.*
---------------------------------------
* பேரின்பப் பொருள் : ''இன்புருக் கொளிவே றில்லை யென்றது"
பழிவரவுரைத்துப் பகல் வரவு விலக்கல் என்பது இவ்விருளிடை வாராதொழிகென்றது பகல்வரச்
சொன்னவாறாமென வுட்கொண்டு, பகற்குறிச் சென்று நிற்பத், தோழியெதிர்ப் பட்டுப் 'பகல் வந்து எமக்குச்
செய்யா நின்ற மெய்யாகியவருள் புறத்தாரறிந்து வெளிப்பட்டுப் பழியாகப் புகுதாநின்றது; இனிப் பகல்வர
வொழிவாயாக' வெனப் பழிவருதல் கூறிப் பகல் வரவு விலக்கா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
களிறுற்ற செல்லல் கனைவயிற்
பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல் *
வெளிறுற்ற வான்பழி யாம்பகல்
நீசெய்யும் மெய்யருளே.
ஆங்ஙனம் ஒழுகும் அடல்வே லண்ணலைப்
பாங்கி ஐய பகல்வர லென்றது.
*பா-ம் சிற்றம்பலவனை யுன்னலர் போல்
இதன் பொருள்; களிறு உற்ற செல்லல் பெண் களைவயின் - அசும்பின்கட் பட்டுக் களிறுற்ற
வருத்தத்தைப் பிடி தீர்க்கின்றவிடத்து; மரம்கைஞ் ஞெமிர்த்துப் பிளிறு உற்ற வானப் பெருவரை நாட -
மரத்தைக் கையான் முறித்துப் பிளிறுதலையுற்ற வானத்தைத்தோயும் பெரிய வரையை யுடைய
நாடனே; பெடை நடையோடு ஒளிறு உற்றமேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் - அன்னப்
பெடையினது நடைபோலு நடையை யுடையாளொடு கூடி விளங்குதலையுற்ற மேனியையுடையவனது
சிற்றம்பலத்தை நெஞ்சா லுறாதாரைப் போல யாமிடர்ப்பட ; வெளிறு உற்ற வான் பழியாம் - வெளிப்
படுதலையுற்ற பெரிய யழியாகா நின்றது: நீபகல் செய்யும் மெய் அருள் - நீ பகல்வந்து எமக்குச்செய்யும்
மெய்யாகியவருள் எ - று
மெய்யருளென்றது மெய்யாவருகளு கின்றா யேனுமென்றவாறு. வழியல்லாவழிச் சேறலான்
அசும்பிற் பட்டகளிற்றனை வாங்குதற்குப்பிடி முயல்கின்றாற்போல, இவளை யெய்துதற் குபாயமல்லாத
விவ்வொழுக்கத்தினை விரும்பு நின்னை இதனினின்று மாற்றுதற்கு யான் முயலா நின்றேனென
உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறி விலக்கி வரைவு கடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : அப்படியிலே பகற்குறி வந்தொழுகும் கொலை வேலையுடைய
நாயகனைப் பாங்கியானவள் பகற் குறியில் வரவேண்டாவென்றது. ஆங்ஙனமென்றது, விட்டுப் பெற்றியாய்
முன்சொன்ன பகற்குறியை.
செய்யுள் : களிறானது அனலிலே * (?) பட்டுற்ற கிலேசத்தைக் களையவேண்டி அதன் பெண்ணாகிய
பெண் யானை மரத்தை முறித்து அதன் கையிலே கொடுத்துத் தான் பற்றி வலிக்கவும் வராதபடியாலே
கூப்பிடுகிற ஆகாயத்தைத் தோய்த்த பெரிய மலைமேலுண்டாகிய நாட்டினை யுடையவனே! அன்னப்பெடையை
யொத்த நடையையுடையாளுடனே விளங்குகிற திருமேனியை யுடையவன். அவனுடைய திருச்சிற்றம்பலத்தை
நினையாதாரைப்போலே பகற்பொழுதினிடத்தே நீ செய்கிற மெய்யான அருள் வெளிப்பட்ட பெரும்பழியாகா
நிற்கும்; ஆதலாற் பகற்குறியின் வரவேண்டா என்றபடி.
*'அனற்றிலே' என்று ஏட்டிலே காணப்படுகிறது என்று பழையவுரைப் பதிப்பிலுள்ளது.
வழியல்லாத வழியே வந்து யானையானது பாயப் பிடியானை அதனை யெடுக்க முயன்றாற்போல
நீயும் வழியல்லாத வழியாகிய களவொழுக்கத்திலே வந்து இச்சிற்றின்பத்திலே அழுந்துகையாலே உன்னை
இது மாற்றவேண்டி நானும் கிலேசியா நின்றேன் என்றது. 254
6. தொழுதிரந்து கூறல் *
----------------------
*பேரின்பப் பொருள்: 'இன்புக் கிருளிலை யேகா யென்றது'.
தொழுதிரந்துகூறல் என்பது பகல்வரவு விலக்கின தோழி, இவனிரவு வரவுங் கூடுமென வுட்கொண்டு,
'நின்னை யெதிர்ப் படவேண்டி அழுது வருந்தா நின்ற இவள் காரணமாக, அரிக்கும் யாளிக்கும் வெருவி
யானைகள் திரண்டு புடை பெயராத மிக்க விருளின்கண் வாராதொழிவாயாக வென்று நின்கழல்களைக்
கையாற்றொழுது நின்னையிரந்தேன்' என வரைவு தோன்றத் தலைமகனைத் தொழுதிரந்து கூறா நிற்றல்,
அதற்குச் செய்யுள்:-
கழிகட் டலைமலை வோன்புலி
யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇ அரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலில்
துவளு மிவள் பொருட்டே,
இரவரவின் ஏதமஞ்சிச்
சுரிதரு குழற் றோழிசொல்லியது.
இதன் பொருள்: பொழிகட் புயலின் மயிலின் அவளும் இவள் பொருட்டு - பொழியாநின்ற கண்ணிற்
புனலையுடையதோர் மயில்போலத் துவளா நின்ற விவள் காரணமாக, அரியாளி வெரீஇ - அரியையும்
யாளியையும் வெருவி குழி கண் களிறு - குழிந்த கண்ணை யுடையவாகிய யானைகள்; குழீஇ- ஓரிடத்தே
திரண்டு நின்று; வழங்கா - அவ்விடத்து நின்றும் புடைபெயராத; கழிகட்டிரவின் வரல் - சிறந்த வச்சத்தைச்
செய்யு மிரவின்கண் வாராதொழிவாயாக; கழல் கை தொழுது இரந்தேன் - நின்கழல்களைக் கையாற்றொழுது
நின்னையிரந்தேனிதனை எ -று. கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல் வெரீஇ - கழிந்த
கண்ணையுடைய தலை மாலையைச் சூடுவோனது புலியூரைக் கருதாதாரைப்போல வெருவியெனக்கூட்டுக.
குழிவழங்காவென்று பாடமோதி, அரியையும் யாளியையுங் குழியையும் வெருவி வழங்காவென்
றுரைப்பாருமுளர். கழி - அச்சத்தைச் செய்யு மியல்பாற் சிறத்தல். கழிகட்டிரவி னென்பதற்குக் கழி
சிறப்பின்கண் வந்து, அரையிரவின் கணென்பது பட நின்றதெனினு மமையும். பொழிகட்புயலின்
மயிலிற்றுவளு மென்றதனால், இவ்வாறிவளாற்றாளெனினும் நீ வரற்பாலையல்லை யென்றுகூறி
வரைவுகடாவினாளாம். வழியிடைவருமேதங் குறித்து இவ்வாறாகின்ற விவள் பொருட்டென்
றுரைப்பினு மமையும். கருதார் மனம் போலென்பது பாடமாயின் மனம் போலுங் கழிகட்டிரவென வியையும்.
மெய்ப்பாடு : அது. பயன்: இரவுக்குறிவிலக்கி வரைவுகடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: இரவுக்குறி வரவுக்குப் பயப் பட்டு நெறித்த கூந்தலினையுடைய
தோழி சொன்னது.
செய்யுள்: பொழிய நின்ற கண்ணாகிய மேகங்களையுடையவளாய் மயில் போல் வாடுகிற இவள்
காரணமாகக் குழிந்த கண்களையுடைய யானைகள் சிங்கத்துக்கும் யாளிக்கும் பயப்பட்டு ஓரிடத்தே திரண்டு
போக மாட்டாதே நிற்கிற நெடிதாகிய கடுமையைச் செய்கிற இரவிடத்தே கண் கழிந்த தலை யோட்டைச்
சூடுகிறவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சேராதாரைப் போலே (வெருவி) வாராதொழிவாயாக. 255
7. தாயறிவு கூறல்*
------------------
*'பேரின்பப் பொருள்: திரோதையுந் திரும்பலா மென்று கூறியது.
தாயறிவு கூறல் என்பது தொழுதிரந்து கூறவும், வேட்கை மிகவாற் பின்னுங் குறியிடைச்சென்று
நிற்ப, அக் குறிப்பறிந்து ' நங்கானலிடத்து அரையிரவின் கண் ஒரு தேர்வந்த துண்டாகக் கூடு
மெனவுட்கொண்டு, அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து என்னையும் பார்த்தாள்: இருந்தவாற்றான்
இவ்வொழுக்கத்தை யறிந்தாள் போலும்' எனத் தோழி தலைமகளுக்குக் கூறுவாள் போன்று
சிறைப்புறமாகத் தலைமகனுக்கு வரைவு தோன்றத் தாயறிவு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
விண்ணுஞ் செலவறி யாவெறி
யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன் தில்லை மல்லெழிற்
கானல் அரையிரவில்
அண்ணல் மணிநெடுந் தேர் வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே
சிறைப்புறத்துச் செம்மல் கேட்ப
வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது
இதன் பொருள்: 'கார் மயிலே - கார்காலத்து மயிலையொப்பாய்; தில்லை மல் எழில் கானல் - தில்லையில்
வளவிய வெழிலையுடைய கானலிடத்து; அரை இரவில் மணி அண்ணல் நெடுந்தேர் வந்ததுண்டாம் என-
அரையிரவின் கண் மணிகளை யுடைய தலையாயதொரு நெடுந்தேர் வந்த துண்டாகக் கூடுமென வுட்கொண்டு :
அன்னை சிறிது கண்ணும் சிவந்து - அன்னை சிறிதே கண்ணுஞ்சிவந்து; என்னையும் நோக்கினள் - என்னையும்
பார்த்தனள் ; இருந்தவாற்றான் இவ்வொழுக்கத்தினையறிந்தாள் போலும்! எ-று. விண்ணும் செலவு அறியா
விண்ணுளாரானும் எல்லாப் பொருளையுங் கடந்தப்பாற்சென்ற செலவை யறியப்படாத; வெறி ஆர் கழல் வீழ்
சடைத் தீ வண்ணன் நறுநாற்றமார்ந்த கழலினையுந் தாழ்ந்த சடையினையுமுடைய தீவண்ணன்;
சிவன் -சிவன்; தில்லை - அவனது தில்லையெனக் கூட்டுக.
எல்லாப் பொருளையுங் - கடந்து நின்றனவாயினும் அன்பர்க்கணியவாய் அவரிட்ட நறுமலரான்
வெறிகமழுமென்பது போதர வெறியார்கழ லென்றார். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: படைத்து மொழியால் வரைவுகடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : நாயகன் கேட்கவேண்டிச் சிறைப்புறமாக நறுநாற்றத்தினைப் பொருந்திய
அளகத்தினையுடைய பாங்கி மெல்லிய இயல்பினையுடையாளுக்குச் சொன்னது.
செய்யுள்: விண்ணும் செலவு அறியா - வெறியார் கழல் வீழ்சடைத் தீவண்ணன் என்பதாவது, சென்று நின்ற
நிலைமையைத் தேவர்களும் அறியாத நறுநாற்றமுடைத்தாகிய சீபாதங்களையும் தாழ்ந்த சடையினையு முடைய
தழற்பிழம்பு போன்ற சுரூபத்தைக் கண்டு பிரமன் பால் அடி முடியும் தேடும் அவர்களால் காணப்பட்டிலன்" என்பது
கருத்து. அப்படிக் காணப் படாதவன் அன்பரிடு மலரிலே வெளிப்பட்ட நறுநாற்றம் கமழும் திருவடி யினையும்
அவர்களுக்குத் தோன்றும் தாழ்ந்த சடையுமுடையவன் , சிவ தத்துவனாயுள்ளவன், அவனுடைய - பெரும்பற்றப் புலியூரின்
வளப்பமும் அழகுமுடைத்தாகிய கடற்சோலையிடத்தே இடையாமத்தே தலையானதொரு மணிகட்டப்பட்ட பெருந்தேர்
வந்ததாக வேண்டு மென்று அற்ப மாத்திரம் கண்களைச் சிவப்பித்துத் தாயானவள் என்னையும் குரோதத்துடனே
பார்த்தாள் காண், கார்காலத்து மயிலையொப்பாய்.
'என்னையும் சிறிது பார்த்தாள்' (என்றாள்): தங்களைக் கோபிக்கிலும் முற்றுப்பார்க்கிலும்
இவ்வொழுக்கம் வெளிப்பட்டதாக.. (அநு) மாநிக்கிறவர்களென்று கருதி; வரைவொடு வருவனாவது பயன். 256
8. மந்திமேல்வைத்து வரைவுகடாதல்*
----------------------------------
*'பேரின்பப் பொருள் ; ''பெற்றோர்பே றெடுத்தருள் பெருங்கருணை யுரைத்தது."
மந்திமேல் வைத்து வரைவு கடாதல் என்பது சிறைப்புறமாகத் தாயறிவுகூறிச் சென்றெதிர்ப்பட்டு,
ஒரு கடுவன்றன் மந்திக்கு மாங்கனியைத் தேனின்கட் டோய்த்துக் கொடுத்து நுகர்வித்துத் தம்முளின்புறுவது
கண்டு, இது நங்காதலர்க்கு நம்மாட்டரிதாயிற்றென நீ வரையாமையை நினைந்தாற்றா ளாயினள்' என
மந்திமேல்வைத்துத் தலைமகளது வருத்தங்கூறி வரைவு கடாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
வான்றோய் பொழிலெழின் மாங்கனி
மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள் முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே
வரிவளையை வரைவுகடாவி
அரிவை தோழி உரைபகர்ந்தது.
இதன் பொருள்: நீள் திருமுடிமேல் மீன் தோய் புனல் பெண்ணை வைத்து - நீண்ட திருமுடிக்கண்
மீனைப் பொருந்திய புனலாகிய பெண்ணை வைத்து; உடையாளையும் மேனி வைத்தான் வான் தோய்
மதில் தில்லை மாநகர் போலும் வரிவளை எல்லாவற்றையு முடையவளையுந் திருமேனிக்கண் வைத்தவனது
வானைத்தோயு மதிலையுடைய தில்லையாகிய பெரிய நகரையொக்கும் வரிவளை ; வான் தோய் பொழில்
எழில் மாங்கனி - வானைத் தோயும் பொழிலின்க ணுண்டாகிய நல்ல மாங்கனியை ; கடுவன் தேன் தோய்த்து
மந்தியின் வாய் அருத்தி மகிழ்வ கண்டாள் - கடுவன் தேனின் கட்டோய்த்து மந்தியின் வாய்க் கொடுத்து
நுகர்வித்துத் தம்முளின்புறு மவற்றைக் கண்டாள் எ-று.
என்றதனால், துணை புறங்காக்குங் கடுவனைக் கண்டு விலங்களுமிவ்வாறு செய்யா நின்றன,
இது நங்காதலர்க்கு நம்மாட்டரி தாயிற்றென நீ வரையாமையை நினைந்தாற்றா ளாயினாளென்றாளாம்.
அருத்தி என்பதற்கு நெடுஞ்சுர நீந்தி (திருக்கோவை, 247) என்றதற்குரைத்ததுரைக்க. கான்றோய்
பொழிலன்பதூஉம் பாடம் . வரிவளையை வரைவு - வரி வளையை வரைதல்.
மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவுகடாதல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அழகிய வளைகளையுடையாளை வரைந்து கொள்ளும்
படியை முடுக்கி நாயகியுடைய தோழி சொன்னது.
செய்யுள் : அழகிய நீண்ட சடாபாரத்தின் மேலே நட்சத்திரத்தைப் பொருந்திய புனற்கங்கையாகிய
பெண்ணை வைத்து எல்லாமுடையாளையும் திருமேனியில் ஒரு பாகத்தில் வைத்தவனுடைய ஆகாயத்தைப்
பொருந்தின மதில் சூழப்பட்ட அவனுடைய பெரும்பற்றப்புலியூராகிய நகரியையொத்த அழகியவரி (வளைகளை)
யுடையாள். ஆகாயத்தைத் தோய்ந்த பொழிலின் அழகிய பழத்தைத் தேனிலே தோய்த்து மந்திக் குரங்கின் வாயிலே
கொடுத்(து) (இவ்) வினியோகங் கொள்ளப்பெற்றோமே யென்று கடுவன் குரங்கு மகிழ்கின்றதனைக் (கண்டாள்).
இதனால் இம்மலையிலே விலங்கு சாதிகள் முதலாகத் தம்மால் பாதுகாக்கப் படுவன வற்றைப்
பாதுகாவா நின்றன, தம்முடைய நாயக ரல்லரோ நம்மை நினையா தொழிந்தார் என்று கருதுவள் என்பது கருத்து. 257
9. "காவன் மேல்வைத்துக்கண்டுயிலாமை கூறல் *
----------------------------------------------
*பேரின்பப் பொருள் : உயிர்க்கின் பிடையூ றுண்டென் றியம்பியது.
காவன்மேல்வைத்துக் கண்டுயிலாமை கூறல் என்பது மந்தி மேல்வைத்து வரைவுகடவாப்பட்ட,
தலைமகன், இது நங்காதலியிடத்து நமக்கரிதாயிற்றெனத், தானுமாற்றானாய் இரவுக்குறிச் சென்று நிற்ப,
அந்நிலைமைக்கண் - இவ்விடத் துள்ளார், இவள் காவற்பறை கேட்குந் தோறுங், கண்டுயிலாமைக்குக்
காரணமென்னோவெனத் தம்முட் கூறா நிற்றல். இதுவுஞ் சிறைப்புறமாக வரைவு கடா தலைப்பயக்கும்.
அதற்குச் செய்யுள் :-
நறைக்கண் மலிகொன்றை யோன் நின்று
நாடகமாடு தில்லைச்
சிறைக்கண் மலிபுனற்- சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே.
நகர்காவலின் மிகுகழிகாதல்.
இதன் பொருள்: நறை கள் மலி கொன்றையோன் - நறு நாற்றத்தையுடைய தேன் மலிந்த கொன்றையை
யுடையவன் நின்று நாடகம் ஆடு தில்லைச் சிறைக்கண் - நின்று கூத்தாடுந் தில்லையாகிய சிறையிடத்து;
மலி புனல் சீர்நகர் காக்கும்- அது பொறாமன் மிகும்புனலையுடைய சீரிய நகரை இராப் பொழுதின் கட் காக்கும்;
செவ்வேல் இளைஞர் பறைக்கண்படும் தோறும் - செவ்வேலை யுடைய இளைஞரது பறைக்கண்,
படுந்தோறும் படுந்தோறும்; படா முலைப் பைந்தொடியாள்- படக்கடவ வல்லாத முலையையுடைய
பைந்தொடியாளுடைய கறை கண்வலி கதிர்வேற் கண் - கறை தன் கண் மிக்க கதிர்வேல்
போலுங் கண்கள் ; படாது கலங்கின - ஒரு காலும் படாவாய் வருந்தின எ-று.
நாடக மென்றது ஈண்டுக் கூத்தென்னுந் துணையாய் நின்றது. கலங்கின வென்பதற்குத் துயிலாமையான்
நிறம் பெயர்ந்தன வென்றும் அழுது கலங்கினவென்று முரைப்பாரு முளர். காவன் மிகுதியும் அவள தாற்றாமையுங்
கூறி வரைவு கடாயவாறு இஃதின்னார் கூற்றென்னாது துறை கூறிய கருத்து. மெய்ப்பாடு: அழுகை,
பயன்: வரைவுகடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நகரியைக் காப்பார் காவலிலே மிகவும் சிறந்த அன்பாலே சொன்னது.
செய்யுள் : தேனினைத் தன்னிடத்தே யுடையதாகிய கொன்றை மாலையை யுடையவன், அவன் நின்று
கூத்தாடியருளுகிற பெரும்பற்றப் புலியூராகிய அணையிடத்தே நின்று சிறைப்படும் புனல் சுற்றிச் சூழப்பட்ட
சீரிய நகரியைக் காக்கின்ற சிவந்த வேலையுள்ள இளைஞருடைய துடியின் வட்டம் ஆரவாரிக்குந்தோறும்
விழாத முலைகளையும் அழகிய வளைகளையும் உள்ளவளுடைய தன்னிடத்தே இரத்தம் செறிந்த
ஒளி வேலையொத்த கண்கள் உறங்காது வருந்தின. 258
10. பகலுடம்பட்டாள்போன்றிரவரவுவிலக்கல் *
-----------------------------------------
*பேரின்பப் பொருள்: 'சகலமுடன் பட்டுக் கேவல மொருவியது',
பகலுடம்பட்டாள் போன்றிரவரவு விலக்கல் என்பது சிறைப் புறமாகக் கண்டுயிலாமை கேட்ட தலைமகன்
ஆதரவு மிக வாலெதிர்ப்படலுற்றுநிற்பத் தோழியெதிர்ப்பட்டு, ' நீ வந்தொழுகா நின்ற இப்புலராவிரவும் பொழியா
மழையும் , புண்ணின் கணுழையும் வேல் மலராம்படி யெங்களை வருத்தா நின்றன; இதற்கொரு மருந்தில்லையோ
நும்வரையிடத்து எனப் பகலுடம்பட்டாள் போன்றிரவரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
கலரா யினர்நினை யாத்தில்லை
அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலரா இரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
யோநும் வரையிடத்தே
விரைதரு தாரோய், இரவர லென்றது
இதன் பொருள்: கலர் ஆயினர் நினையாத்தில்லை அம்பலத் தான் கழற்கு - தீ மக்களாயுள்ளார்
கருதாத தில்லையம்பலத் தானுடைய திருவடிகட்கு ; அன்பு இலர் ஆயினர் வினைபோல் இருள் தூங்கிப்
புலரா இரவும் - அன்புடையரல்லாதாரது தீவினை போல இருள் செறிந்து புலராத விரவும்; மின்னி
முழங்கிப் பொழியா மழையும் - மின்னி முழங்கி பொழிவது போன்று பொழியாத மழையும்;
புண்ணில் நுழைவேல் மலரா வரும் - எமக்குப் புண்ணின் கணுழையும் வேல் மலராம் வண்ணங்
கொடியவாய் வாரா நின்றன; மருந்தும் இல்லையோ நும்வரையிடத்து - இதற்கொரு மருந்துமில்லையோ
நும் வரையிடத்து! எ-று.
மருந்தென்றமையான் வரையிடத் தென்றாள், ஒருநிலத்துத் தலைமகனாதலின், நும் வரையாகிய
இவ்விடத் திதற்கோர் மருந்தில்லையோவென ஒருலகவழக்காக வுரைப்பினு மமையும் வருத்துதலே யன்றித்
தணித்தலு முண்டோவென்பதுபட நின்றமையின், மருந்து மென்னுமும்மை எச்சவும்மை. இரவின் கண்
வந்தொழுகா நிற்பவும், இரவுறு துயரந் தீர்க்கு மருந்தில்லையோ வென்று கூறினமையான்: வரைவல்லது
இவ்வாறொழுகுதல் அதற்கு மருந்தன்றென்றுகூறினாளாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறி விலக்குதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: திவ்யகந்தம் பொருந்தின மாலையினை யுடையவனே!
இரவுக்குறி வாராதே கொள் என்றது.
செய்யுள் : அறிவில்லாதவர்களால் நினையப்படாத பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தே
உள்ளவனுடைய திருவடி கண்டு அன்பில்லாதார் தீவினை போல, இருள் செறிந்து விடியாத இரவும்
முழங்கி மின்னிப் பொழிவது போலக் காட்டிப் பொழியாத மழையும். புண்ணிலே பட்டுருவுகின்ற வேல்
பூவென்னும் படி மிகவும் கொடியதாய் வாரா நின்றன: இது நீ வரைந்து கொள்ளாயாகில் வரைந்து
கொள்ளுமளவும் இவ்வளவிலே நிற்கும்படி ஒருமருந்தாகிலு மில்லையோ நுங்கள் வரையிடத்தே என்று படும். 259
11. இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கல் *
-----------------------------------------------
*பேரின்பப்பொருள்: கேவலம்போற் சகலமென் றருளியம்பியது.
இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கல் என்பது இவள் மருந்தில்லையோவென்றது, யான்
இரவுக்குறிச் செல்லின் மழைக்காலிருளா னெதிர்ப்பட லருமையான் வேட்கையுற்றுப் பகற்குறி யுடம்பட்டாளென
வுட்கொண்டு பகற்குறிச் செல்லா நிற்பத் தோழி யெதிர்ப்பட்டு 'பகல்வந்தருளா நின்றது அவளுக்கு வருத்தமுறும்படியாக
மிக்கவலராகா நின்றது; அதனாற் பகற்குறி வரற்பாலையல்லை'யென, இரவுக்குறி யுடம்பட்டாள்போன்று
பகற்குறி விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
இறவரை உம்பர்க் கடவுட்
பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர் போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே.
இகலடு வேலோய், பகல்வர லென்றது.
இதன் பொருள்: இற - தொடர்ந்து பெய்யாதிறுதலான்; எழிலி உன்னி - எழிலிபெய்தலை நினைந்து;
வரை உம்பர்க் கடவுள் பராய் - மலைமேலுறையுந் தெய்வங்களைப் பராவி; குறவர் நின்று ஆர்க்கும் குளிர்
வரை நாட குறவர் நின்றார்ப் பரவஞ் செய்யுங் குளிர்ந்த வரைமே லுண்டாகிய நாட்டை யுடையாய்;
கொழும் பவள நிறவரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் உற - கொழுவிய பவளமாகிய
நிறத்தையுடைய வரைபோலுந் திருமேனியையுடையவனது சிற்றம்பலத்தை நினையாதவரைப் போல வருந்த;
அரை மேகலையாட்குப் பகல் உன் அருள் அலராம்- அரைக்கணிந்த மேகலையை யுடையாட்குப் பகலுண்டா
முனதருள் மிக்க வலராகாநின்றது; அதனானீவாரல் எ - று
குறவரையென்புழி, ஐகாரம்: அசை நிலை; அசை நிலை யென்னாது குறமலையென் றுரைப்பாரு முளர்.
வரையை யுடையநாடெனினு மமையும். குறவர் பரவும் பருவத்துத் தெய்வத்தைப் பரவாது பின்மழைமறுத்த
லானிடர்ப்பட்டு அதனை முயல்கின்றாற்போல, நீயும் வரையுங் காலத்து வரையாது, இவளை யெய்துதற்
கரிதாகியவிடத்துத் துன்புற்று வரைய முயல்வையென உள்ளுறை காண்க. "உள்ளுறை தெய்வமொழிந்ததை
நிலனெனக், கொள்ளுமென்ப குறியறிந் தோரே'. (தொல், பொருள், அகத்திணையியல், 47 ) என்ப வாகலிற்
றெய்வத்தை நீக்கி யுவமை கொள்க. மெய்ப்பாடு. அது. பயன்- பகற்குறி விலக்குதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மாறுபட்டாரைக் கொல்லுகிற வேலினையுடையவனே!
பகற்குறிவாரா தொழி என்றது.
செய்யுள்: மழைபெய்யா தொழிய மலையினுச்சியிலே இருக்கிற குறவர்கள் மழை பெய்விப்பதாக
நினைந்து தெய்வத்துக்குப் பலி கொடுத்து வேண்டிக்கொண்டு குறவர் (ஐகாரம் அசைநிலை) ஆரவாரிக்கின்ற
குளிர்ந்த மலைமேலுண்டாகிய நாட்டினையுடையவனே! அழகிய பவளத்தின் நிறம் போன்ற வரையினை
நிகர்த்த திருமேனியை யுடையவன். அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நினையாதாரைப் போலே கிலேசிக்க,
உன்னுடைய அருள் - பகற்குறியிடத்தே - வருவாயாகில் அரையிலே சிறந்த மேகலாபரணத்தை யுடையாளுக்கு
அலராக நிற்குமாதலால் பகற்குறியிடத்தே வரவேண்டா. 260
12. இரவும்பகலும் வரவு விலக்கல் *
---------------------------------
*பேரின்பப் பொருள்: "கேவல சகலமு மேவிலை யென்றது" ,
இரவும்பகலும் வரவு விலக்கல் என்பது இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கின தோழி,
'நீ பகல்வரின் அலர் மிகுதியானெங்களுக்கு மிக்கபழி வந்தெய்தும்; இராவரின் எவ்வாற்றானு நின்னை
யெதிர்ப்படுதலருமையாற் சிறிதும் பயனில்லை; அதனால் நீயிருபொழுதும் வரற் பாலையல்லை' யென
இரவும் பகலும் வரவு விலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சுழியா வருபெரு நீர்சென்னி
வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள் திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரில் நீயிர
வேதும் பயனில்லையே .
இரவும் பகலும், வரவொழி கென்றது.
இதன் பொருள்: ஐய-ஐயனே; நீ பகல்வரின் புரிமென்குழலாள் திறத்து மெய்யே பழியாம்- நீ பகல்வரிற்
சுருண்ட மெல்லிய குழலையு டையாடிறத்து மெய்யாகவே அலருண்டாம்; இரவு ஏதும் பயன் இல்லை -
இராவரின் எதிர்ப்படுத லருமையாற் சிறிதும் பயனில்லை; அதனான் நீ யிருபொழுதும் வாரல் எ-று.
சுழியா வருபெரு நீர் சென்னிவைத்து - சுழியா நின்று வரும் பெரிய நீரைச் சென்னியின் கண் வைத்து -
தன் தொழும்பின் என்னைக் கழியா அருள் வைத்த - தனக்குத் தொண்டு படுதற்கண் என்னை நீங்காத
தன்னருளான் வைத்த; சிற்றம்பலவன் கரம் தரும் மான் விழியா வரும் புரி மென்குழலாள் - சிற்றம்பலவனது
கரத்தின் கண் வைக்கப்பட்ட மான் போல விழித்துவரும் புரிமென்குழலாளெனக் கூட்டுக.
பரந்து வரும் பெரும்புனலை வேகந்தணித்துத் தன் சென்னியின்கண் வைத்தாற் போல
நில்லாது பரக்கு நெஞ்சை யுடையேனைத் தன்னருட்கணடக்கினானென்பது கருத்து. தன் றொழும்பினின்றும்
யானீங்காமைக்குக் காரணமாகிய அருட்கணென்னை வைத்தவனெனினுமமையும். மெய்ப்பாடு: அது.
பயன்: இரவுக்குறியும் பகற்குறியும் விலக்கி வரைவு கடாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இரவிடத்தும் பகலிடத்தும் வரவேண்டாவென்று விலக்கியது.
செய்யுள் :- சுழித்துக் கொண்டு வருகிற பெருநீராகிய கங்கையைத் திருமுடியிலே வைத்து என்னைத்
தன் அடிமைத் திறத்துக்குப் போந்தேனென்று நீக்கி நிறுத்தாத அருளை என்னிடத்தே வைத்த
திருச்சிற்றம்பல நாதன், அவன் கையிலேந்திய மான் போலச் சதாகாலமும் விழித்துச் செல்லுகிற
நெறித்த மெல்லிய கூந்தலினையுடையாளளவில், சுவாமி ! உண்மையாக நீ பகற்குறியிடத்தே வருகையினாலே
சிறிதும் பயன் படாது. என்ன, இரவும் பகலும் வாராதே கொள் நாயகனே.
சுழித்துக் கொண்டு வருகிற பெரிய நீரை அதன் விசையை மாற்றித் திருமுடியிலே வைத்தாற்போல
நில்லாது பரக்கும் நெஞ்சுடைய என்னையும் ஒருவழிப்படுத்தி ஆண்டானென்பது கருத்து 261
13. காலங் கூறி வரைவு கடாதல் *
------------------------------
*பேரின்பப் பொருள்: பக்குவ மிதெனப் பரிந்தரு ளியம்பியது.
காலங்கூறி வரைவுகடாதல் என்பது இருபொழுதும் வரவு விலக்கின தோழி, 'மதி நிரம்பாநின்றது;
வேங்கை பூவா நின்றன**. இனி நினக்கு வரைவொடு வருதற்குக் காலமிது' வெனக் காலங் கூறி வரைவு
கடாவா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
**மதி யூர்கொளும் நாளிலும் வேங்கை மலரும் நாளிலும் வரைதல் மரபு. ' வேங்கையு மொள்ளிணர்
விரிந்தன ; நெடுவெண்டிங்களு மூர்கொண்டன்றே (அகம், 2, 16-17).
மையார் கதலி வனத்து
வருக்கைப் பழம் விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கை பொன்
மாலையின் முன்னினவே.
முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து
வரைதரு கிளவியில் தெரிய வுரைத்தது.
இதன் பொருள்: மை ஆர் கதலி வனத்து வருக்கைப் பழம் விழுதேன்- இருளார்ந்த வாழைக் காட்டின் கண்
வருக்கைப் பலாவின் பழம்விழுதலா லுண்டாகிய தேனை ,இள மந்திகள் எய்யாது அயின்று சோரும் இருஞ் சிலம்பா -
இளையமந்திகளறியாதே யுண்டு பின்களியாற் சோரும் பெரிய சிலம்பையுடையாய்; மதிஊர் கொள்- மதி நிரம்பா
நின்றது: அம்பலத்தான் வெற்பின் - அம்பலத்தானுடைய இவ்வெற்பின் கண், மொய் ஆர்வளர் இளவேங்கை
பொன்மாலையின் முன்னின. செறிவார்ந்த வளரா நின்ற விளைய வேங்கைகள் பூத்துப் பொன்மாலை போலத்
தோன்றின; மெய்யா அரியது என் - இனி மெய்யாக வுனக் கரியதியாது! எ-று
கதலிவனத்துண்டாகிய தேனென்றதனாற் கதலிக்கனி யொடு கூடுதல் பெற்றாம். ஊர்கோடல்
குறைவின்றி மண்டலமாக வொளிபரத்தல்; அல்லதூஉம் பரிவேடித்த லெனினு மமையும். நின்மலைக்கண்
விலங்குகளு மித்தன் மைத்தாகிய தேனைக் குறியாதுண்டு இன்புறா நின்றன வாகலிற் குறித்த வற்றினக்
கரியதியாது இதுவன்றோ பருவமுமென வரைவு பயப்பக் கூறியவாறாயிற்று. மந்திகடேருமென்பது பாடமாயின்,
தேனையறியா துண்டு அதன் சுவை மிகுதியாற் பின்னதனைத் தேர்ந்துணருமென்றுரைக்க. வேட்டபொருள்
உள்ளத்து முற்பட்டுத் தோன்றுதலின், வரைவை முந்திய பொருளென்றாள்.
வரைதருகிளவி - வரையுங்கிளவி. மெய்ப்பாடு; பெருமிதம். பயன் -வரைவுகடாதல்,
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : முற்படத் தோன்றுகிற பொருளை நெஞ்சிலே வைத்து வரைய
வேண்டுமென்கிற வார்த்தையாலே விளங்கச் சொன்னது.
செய்யுள்: பெரியதாய் வளரா நின்ற இளையவேங்கைகள் பொன்னரி மாலையைப் போலத்
தோன்றா நின்றன. (என்ன வரையுங் காலமும் வந்தது; நீ நினைத்தால் முடியாதனவுமில்லை; ஆதலால்
நீ நினையாமலே கிடக்கின்றன .... து உன்னுடைய மலையின் வளமிருந்தபடி; ஓரின்பத்தைத்
தெரியாமலிருக்கும் போதும் விலங்குச் சாதிகள் முதலாகப் பெற்று அனுபவியா நின்றன என்றால். நீயுமாகி
... றித்தால் முடியாதிருக்குமோ என்றது.. 262
14. கூறுவிக்குற்றல்*
------------------
*பேரின்பப் பொருள் :- சிவத்தி லுயிரின் பார்வ தன்றி,யாகா தென்றே யருளியம் பியது.'
கூறுவிக்குற்றல் என்பது காலங் கூறி வரைவு கடாவவும் வரைவுடம்படாமையின் அவடன்னைக்
கொண்டே கூறுவிப்பாளாக, 'அலரான் வருநாணினையுங் காணாமையான் வரு மாற்றாமையையும் பற்றிக்
கிடந்த நம்மல்லலை நம்மாற்றலை யளிக்கப்படுவார் இவ்வாறு வருந்துதறாகாதெனத் தாமாக வறின்றிலராயின்
நாஞ்சொல்லுந் தன்மைகளென்னோ' வெனப் புலந்து, நீயாகிலுஞ்சென்று கூறென்பது குறிப்பாற்றோன்றத்
தலைமகன் வரைவுடம்படாமையைத் தோழி தலைமகட்குக் கூறாநிற்றல், அதற்குச் செய்யுள் :
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண்ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
னாஞ்சொல்லுந் தன்மைகளே
ஒத்த தொவ்வா துரைத்த தோழி
கொத்தவிழ் கோதையாற் கூறுவிக் குற்றது.
இதன் பொருள்: தேமாம் பொழில் தில்லைச் சிற்றம் பலத்து-தேமாம் பொழிலையுடைய தில்லைச்
சிற்றம்பலத்தின் கண்; விண்ணோர் வணங்க நாம் ஆதரிக்க நடம்பயில்வோனை நண்ணாதவரின் -
விண்ணோர் வணங்கவும் நாம் விரும்பவுங் கூத்தைச் செய்வானைச் சேராதாரைப் போல வருந்த;
வாம்மாண்கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால் அழகு மாட்சியமைப்பட்ட மேகலை சுழலும்
வண்ணங்கண்டு தலையளி செய்யாது நின்றவர் பெருகிக்கிடந்த நம் மல்லலைக் கண்டால் ; தாமா அறிகிலர்
ஆயின் நம்மாற்றலை யளிக்கப்படுவார் இவ்வாறு வருந்துதற்காக தென்று தாமாக வறிகின்றிலராயின்;
நாம் சொல்லும் தன்மைகள் என் - நாஞ்சொல்லுமியல்புகளென்! எ - று
வாமம் வாமென விடைக் குறைந்து நின்றது. அலரான் வருநாணினையுங் காணாமையான்
வருமாற்றாமையையும் பற்றிக் கிடந்த நம்மல்லலென்றாள் ஒத்ததொவ்வா தென்பதனை ஒத்துமொவ்வாமலெனத்
திரிக்க. அஃதாவது இராவருதலுடம் பட்டாள் போன்று பகல்வாரலென்றலும் பகல் வருதலுடம் பட்டாள் போன்று
இராவார லென்றலும் பின் இரு பொழுதையு மறுத்தலும்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகனுடனே பொருந்தவும் பொருந்தாமலும் வரைவின்.... கினதோழி,
கொத்து விரிகின்ற மாலையை யுடைய நாயகி தன்னைக் கொண்டே சொல்லுவிப்பதாக நினைந்தது
செய்யுள்: தேமாம் பொழிலினாலே சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்திலே
தேவர்கள் வந்து வணங்க மானிடராகிய நாம் ஆதரம் பண்ணவும், திருக்கூத்தாடியருளுகிறவனைச்
சேராதாரைப்போலே குறங்கினின்று (அழகு) மாட்சிமைப்பட்ட மேகலாபாரம் கழலவும் இதனை
விசாரியாதே நின்றவர் பெருகிக் கிடந்த நம்முடைய கிலேசத்தைப் பார்த்தால் தாமாக அறியாராகில்
இவருக்கு நாம் அறிவிக்கும் இயல்புகள் எங்ஙனே தான்?
என்ன நாயகி மறுமாற்றஞ் சொல்லவும், அவன் கேட்பவனாவது பயன். 263
15. செலவு நினைந்துரைத்தல் *
-----------------------------
* பேரின்பப் பொருள்: அருளாற் சிவமுயிர்க் கன்பறி வித்தல்"
செலவு நினைந்துரைத்தல் என்பது வரைவுடம்படாமையிற் றோழி தலைமகனோடு புலந்து கூறக்கேட்டு,
அக்குறிப்பறிந்து இக்கல்லதரின்க ணீர்வந்தவா றென்னோவென்று வினவுவாரைப் பெற்றேமாயின் இத்தன்மையை
யுடைத்தாகிய மிக்கவிருளின் கண்யாமவருழைச் சேறலரிதன்று; சென்றே மாயினும் அவ்வாறு சொல்வாரில்லையெனத்
தலைமகள் செலவு நினைந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் : -
வல்சியி னெண்கு வளர்புற்
றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்று மன் சிற்றம்
பலவரைச் சேரலர் போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென் வந்த வாறென்
பவர்ப்பெறிற் கார்மயிலே
பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து
தேங்கமழ் சிலம்பற்குச் சிறைப்புறக் கிளவி.
இதன் பொருள்: கார் மயிலே - கார்காலத்து மயிலையொப்பாய், சிற்றம்பலவரைச் சேரலர் போல் -
சிற்றம்பலவரைப் சேராதாரைப்போல வருந்த: சீயம் கொல்கரி குறுகாவகை பிடி தான் இடைச் செல் கல் அதர் -
சீயங் கொல்கரியைச் சென்றணையாத வண்ணம் பிடி தானிரண்டற்கு மிடையே சென்று புகுங்கல்லாதரின்கண்;
வந்தவாறு என் என்பவர்ப் பெறின் - நீர் வந்தவா றெங்ஙனே யென்று சொல்வாரைப் பெற்றேமாயின்; வல்சியின்
எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்வாய் - குரும்பியாகிய வணவுகாரணமாகக் கரடி உயர்ந்த புற்றை யகழா நிற்ப
'மிகா நின்ற விருளின் கண் ; செலவு அரிதன்று மன் - அவரிருந்த வழிச் சேறலரிதன்று: சென்றே மாயினும்
அவ்வாறு சொல்லுவாரில்லை எ - று,
செல்வரிதென்பது செல்வுழிக்கணென்பது போல மெய்யீற்றுடம்படுமெய் ** செல்லவென்பது
கடைக்குறைந்து நிற்ற தெனினுமமையும். மன்: ஒழியிசைக்கண் வந்தது. கல்லதர்- கற்கண்ணதர். கல்லதரி
னென்பது பாடமாயின், வந்தவா றென்னென ஒருசொல் வருவித்துரைக்க. பணிமொழி மொழிந்தென்பதனை
மொழியவெனத் திரித்துச் சிறைப்புறக் கிளவி யாயிற்றென வொருசொல் வருவித் துரைக்க, சிறைப்புறக்
கிளவி யாயிற்றெனவே, சிறைப்புறமாதல் குறித்தாளல்ல ளென்பது பெற்றாம். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு-
அழுகையைச் சார்ந்த விளிவரல், பயன்: அது
**"உயிரீற்றின் முன் உயிர்முதல்வரின் உயிரோடுயிர்க்கு மயக்க மின்மையிற் புணர்ச்சியின்றி
விட்டிசைத்து நிற்குமாதலின், உடம்படாதவவ் விரண்டு முடம்படுத்தற்பொருட்டு இடையே வருமெய்யை
உடம்படு மெய்யென்பவாகலின், வருமுயிரேறி யொற்றுமைப் பட்டுப் புணர்தற்குரிய மெய்யீற்றின்
வழித்தோன்று மெய்யை உடம்படுமெய் யென்பது பொருந்தாது"- நன்னூல் விருத்தி 162-ம் சூத்திரம்.
விண்வத்துக்கொட்கும் எ-ம் செல்வுழிச்செல்க எ-ம் சார்வுழிச் சார்ந்த தகையள் எ-ம் மெய்யீற்றுமுன்
உயிர் வருங்கால் இங்ஙனமுடம்படுமெய் யன்றெனக் கூறும்வகரம் தோன்றின' - நன்னூல் விருத்தி 163-ம் சூத்திரம்
விண்வத்துக் கொட்கும், வண்ணத்தமரர் என்புழி வகரம் உடம்படாத வற்றை உடம்படுத்த வந்ததல்லாமையின்,
இன்னோரன்னவை உடம்படு மெய்யெனப் பெயர் பெறுமாறில்லை யென்பது' தொல்காப்பியச் சூத்திர விருத்தி,
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பாங்கியானவள் நெருங்கி வார்த்தை சொல்வதற்கு நாயகியானவள்
பலவார்த்தையும் பேசியது. தேன் கமழும் மலையினையுடையவனுக்குச் சிறைப்புறத்துச் சொல்லும் வார்த்தையாயது.
செய்யுள் : திருச்சிற்றம்பல நாதனைச் சேராதாரைப் போல கொலைத் தொழிலை வல்ல யானையைச் சிங்கம்
சென்று குறுகாதபடி பிடி யானையானது தான் இடையிலே புகுந்து தன் முகத்தைக் காட்டி அதன் மருப்பை மறைத்துப்
பரிகரிக்கிற கல்லுடைத்தாகிய வழியிலே நீங்கள் வந்தபடி ஏன்? என்று சொல்லுவாரைப் பெறின், கார்காலத்து
மயிலை யொப்பாய்! தனக்கு உணவுகாரணமாகக் கரடியானது மிக்க புற்றை அகழும்படி செறிந்த இருளிடத்தே
செல்கை அரிதன்று காண்
சென்றாலும் வினவு வாரில்லை ; எனவே மானி (லத்திறந்து ) படுவரென்பது கருத்து.
16. பொலிவழிவுரைத்து வரைவுகடாதல் *
-----------------------------------
* பேரின்பப் பொருள் : 'இன்னுங் கருணைகண் டிலையோ வென்றது'
பொலிவழிவுரைத்து வரைவுகடாதல் என்பது தலைமகள் தன்னை யெதிர்ப்படலுற்று வருந்தா நின்றமை
சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் குறியிடை வந்து நிற்பத் தோழியெதிர்ப்பட்டு, 'என்னையரது காவலைநீவி
நின்வயத்தளாய் நின்று பொலி வழிந்து வருந்தா நின்றவளை நீ வரைந்து கொள்ளாது இவ்வாறிகழ்ந்து மதித்தற்குக்
காரணமென்னோ'வெனத் தலை மகளது பொலிவழிவுகூறி வரைவு கடாவா நிற்றல், அதற்குச் செய்யுள்:
வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே,
வரைவுவிரும்பு மன்னுயிர்ப்பாங்கி
விரைதருகுழலி மெலிவுரைத்தது
இதன் பொருள்: களிற்றின் மருப்பு உகுமுத்தம்- களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை;
வரை மகளிர்வேரிக்கு வாரி அளிக்கும் விழுமலை நாட- வரையின்வாழுமகளிர் வேரிக்கு விலையாக முகந்து
கொடுக்குஞ் சிறந்த மலைக்கணுண்டாகிய நாட்டை யுடையாய்; விரி திரையின் நாரிக்கு அளிக்க அமர் -
விரியுந் திரையையுடைய யாறாகிய பெண்ணிற்குக் கொடுத்தற்குப் பொருந்திய : நல் மாச்சடைமுடி நம்பர்
தில்லை ஏர் இக்களிக் கருமஞ்ஞை - நல்ல பெரியசடைமுடியையுடைய நம்பரது தில்லையினுளளாகிய ஏரையுடைய
இக்களிக் கரு மஞ்ஞையை யொப்பாள்; இந் நீர்மை எய்துவது என்- தன்றன்மையை யிழந்து இத்தன்மையை
யெய்துவதென்? நீயுரை எ.று.
மலையையுடைய நாடெனினு மமையும் விரிதிரையி னென்பது அல்வழிச்சாரியை, விரிதிரையையுடைய
நாரியெனினு மமையும். நாரிக்களித்தமரென்பது பாடமாயின் நாரிக் கழித்தலான் அவளமருஞ்சடை யென்றுரைக்க.
களிக்கருமஞ்ஞை- களியையுடைய கரிய மஞ்ஞை, அணைதற்கரிய களிற்றின் மருப்பினின்றுமுக்க முத்தத்தின
தருமையைக் கருதாது தமக்கின்பஞ் செய்யும் வேரிக்குக் கொடுத்தாற்போல, என்னையரது காவலை நீவி நின்
வயத்தாளாகிய விவளதருமை கருதாது நினக்கின்பஞ் செய்யுங் களவொழுக்கங் காரணமாக இகழ்ந்து
மதித்தாயென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வரைந்து கொள்ளுகிறதை விரும்புகிற நிலைபெற்ற உயிர்போன்ற
பாங்கி நறு நாற்றமுடைத்தாகிய கூந்தலினை யுடையவள் வாடியதனைச் சொன்னது.
செய்யுள்: இம்மலையிற் குறமகளிர் ஆனை மருப்புக்கள் உகுத்த முத்துக்களைக் கள்ளுக்கு முகந்து
கொடுக்கும் சீரிய மலைமேலுண்டாகிய நாட்டினையுடையவனே ! விரிந்த திரையையுடைய பெண் (ணாகிய)
கங்கைக்குக் கொடுக்கப் பொருந்தின நல்ல பெரிய திருச்சடா மகுடத்தையுடைய சிவனது பெரும்பற்றப் புலியூரில்
அழகுடன் களிக்கும் கரிய மயிலையொப்பாள் இத்தன்மையை அடைகுவதேன் தான் ?
என்ற பொருளாய் ஆனைக் கொம்பினின்று முகுத்த முத்துக்களை மது பானங் காரணமாக முகந்து
கொடுத்தாற் போல இவளும் தன் அண்ணன்மார்களுடைய காவல் நீங்கி உனக்கெளியளாயின (மை)
பார்க்காது உனக்கின்பஞ் செய்கிற களவொழுக்கங்கள் காரணமாக இகழ மதித்தாய், அத்தனை என்றது. 265
வரைவு முடுக்கம் முற்றிற்று.
18. வரைபொருட்பிரிதல் *
---------------------
*பேரின்பக் கிளவி: ''வரை பொருட் பிரிதற் றுறை முப்பத்து மூன்றுங் கருணை தோன்றவருளே, யுணர்த்தலு
முணர்தலுந் திரோதையும் பரையுந், தெரிசன மாகித் திவ்விய வின்பங், கூடுங்குறியுங் குலவி யுணர்தல்.
வரைபொருட்பிரிதல் வருமாறு:-
முலைவிலை கூறல் வரைவுடம் படுத்தல்
வரை பொருட் கேகலை யுரையவட் கென்ற
னீகூ றென்றல் சொல்லா தேகல்
பிரிந்தமை கூற னெஞ்சொடு கூற
னெஞ்சொடு வருந்தல் வருத்தங்கண் டுரைத்தல்
வற்புறுத் தல்லொடு வன்புறை யழிதல்
வாய்மை கூறன் மன்னவன் மெய்யுரை
தேறாது புலம்பல் கால மறைத் துரைத்த
றூதுவர வுரைத்த றூதுகண் டழுங்கன்
மெலிவு கண்டு செவிலி யுரைத்தன்
மேவிய செவிலி கட்டுவைப் பித்தல்
கலக்குற்று நிற்றல் கட்டுவித்தி கூறல்
வேலனை யழைத்த லின்ன லெய்தல்
விலக்க நினைத்த னிலைமை யுரைத்த
லறத்தொடு நிற்ற லையந் தீர்த்த
லவன் வெறி விலக்கல் செவிலிக்குத் தோழி
யறத்தொடு நிற்ற னற்றாய்க்குச் செவிலி
யறத்தொடு நிற்ற றேர்வர வுரைத்தன்
மணமுரசு கேட்டு மகிழ்ந் துரைத்த
லையுற்றுக் கலங்க லவனிதி காட்ட
லாறைந் துடனே கூறிய மூன்றும்
விரைமலர்க் குழலாய் வரைபொருட் பிரிதல்
இதன் பொருள்: முலைவிலை கூறல், வருமதுகூறு வரைவுடம்படுத்தல், வரை பொருட் பிரிவை யுரையெனக்கூறல்,
நீயே கூறென்றல், சொல்லா தேகல், பிரிந்தமை கூறல், நெஞ்சொடு கூறல், நெஞ்சொடுவருந்தல், வருத்தங் கண்டுரைத்தல்,
வழியொழுகிவற்புறுத்தல், வன்புறையெதிரழிந்திரங்கல், வாய்மை கூறி வருத்தந் தணித்தல், தேறாதுபுலம்பல்.
காலமறைத் துரைத்தல், தூதுவரவுரைத்தல், தூதுகண்டழுங்கல், மெலிவு கண்டு செவிலிகூறல், கட்டு வைப்பித்தல்,
கலக்கமுற்று நிற்றல், கட்டுவித்தி கூறல், வேலனையழைத்தல், இன்னலெய்தல், வெறி விலக்குவிக்க நினைத்தல்,
அறத்தொடு நிற்றலையுரைத்தல், அறத்தொடு நிற்றல், ஐயந்தீரக்கூறல் , வெறிவிலக்கல், செவிலிக்குத்
தோழியறத்தொடு நிற்றல், நற்றாய்க்குச் செவிலி யறத்தொடுநிற்றல், தேர் வரவு கூறல், மணமுரசு கேட்டு
மகிழ்ந்துரைத்தல், ஐயுற்றுக்கலங்கல், நிதி வரவு கூறாநிற்றல் எனவிவை முப்பத்து மூன்றும்
வரைபொருட்பிரிதலாம் எ-று, அவற்றுள்: -
1. முலைவிலைகூறல்*
---------------------
*பேரின்பப் பொருள்: 'கைம்மா றின்பக் கனத்துக் கிலையென்ன'
முலைவிலைகூறல் என்பது வரைவு முடுக்கப்பட்ட தலை மகன், 'யான் வரைவொடு வருதற்கு நீ
சென்று அவளையன்மாரை முலைவிலை கேட்பாயாக' வென, 'எல்லாவற்றானு நின்வரவை எமரேற்றுக்
கொளினல்லது விலை கூறுவராயின் அவளுக்கேழுலகும் விலை போதா' தெனத்தோழி முலைவிலை
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
நின்குலத் திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின் அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே
கொலைவேற் கண்ணிக்கு விலையிலை யென்றது.
இதன் பொருள்: குறைவிற்கும் - வரைவு வேண்டி - நீ யெம்மாட்டுக் குறை யுடையையாய்
நிற்குமதனானும்; கல்விக்கும் கல்வி மிகுதியானும், செல்விற்கும்- செல்வானும், நின் குலத்திற்கும் -
தங்குலத்திற்கேற்ற நின்குலத்தானும்: வந்தோர் நிறைவிற்கும் - நீ விடுக்க வந்த சான்றோரது
நிறைவானும் மேதகு நீதிக்கும் - மேவுதற்குத் தகு நீதியானும் ; ஏற்பின் அல்லால் - நின்வரவை
யெமரேற்றுக் கொளினல்லது விலை கூறுவராயின்: நினையின் மெய்ம்மை ஓதுநர்க்கு-ஆராயுமிடத்து
மெய்ம்மை சொல்லுவார்க்கு; உரை வில் குலா நுதலாள் ஏழ் பொழிலும் விலையோ - விற்போல
வளைந்த நுதலை யுடையாட்கு ஏழுலகும் விலையாமோ! விலைக் குறையாம் எ-று .
இறை- எல்லாப் பொருட்கு மிறைவன்; வில் குலா வரை ஏந்தி - வில்லாகிய வளைதலையுடைய
வரையை யேத்துவான்: வண் தில்லையன் - வளவிய தில்லைக்கண்ணான் : ஏழ்பொழிலும் -
அவனுடைய ஏழ்பொழிலு மெனக் கூட்டுக
செல்வு - இருமுதுகுரவராற் கொண்டாடப்படுதல். நிறைவு- அறிவொடுகூடிய வொழுக்கம்,
நீதி - உள்ளப் பொருத்தமுள் வழிமறாது கொடுத்தல். உறைவிலென்பதற்கு உறையையுடைய வில்லெனினுமமையும்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கொலை செய்யும் வேல் போன்ற கண்ணினை யுடையாளுக்கு
மதிக்கும் விலை இல்லையென்று சொன்னது.
செய்யுள்: ஒருகுறை (யுடை) யாயிருக்கிற நீ வந்த வரத்திற்கும், உன்னுடைய கல்விமிகுதிக்கும்
உங்கள் குடிக்கேற்ற பெரு (மை) க்கும், நின்னுடைய வமிசத்திற்கும், உன்னிடத்தே நட்புக் கொள்ள நாடிவந்த
நல்லோர்களுக்கும்... பஞ்சேந்திரியங்கள் ஒருப்பட்டு நிரம்பத்தக்க நின் ஒழுக்கத்திற்கும், இவற்றான்
ஏற்கினல்லது விசாரிக்கில், சுவாமி வில்லாக வளைத்த மகாமேருவை ஏந்தியவன், அவனது அழகிய
பெரும்பற்றப் புலியூரிலே யுள்ளவன், அவனுடைய ஏழுபொழிலாகிய ஏழுபூமியும் உறையிடவும் போதாது:
இத்தனையல்லது விற்போன்ற நெற்றியினை யுடையாளுக்கு, உண்மை சொல்லில் விலையோதான்? 266
2. வருமதுகூறி வரைவுடம்படுத்தல்*
-------------------------------
*பேரின்பப் பொருள்: அடியார்க் கலராகா தணையின் பென்றது.
வருமதுகூறி வரைவுடம்படுத்தல் என்பது முலைவிலை கூறிய தோழி, நீ வரைவொடு வாராது இரவருள்
செய்யா நின்றவிது கெர்ப்பத்துக் கேதுவானால் நம்மெல்லார்க்கும் பொல்லாதாம்; அது படாமல் எமராற்
றொடுக்கப்பட்ட அருங்கலங்களை விரைய வரவிட்டு அவளை வரைந்தெய்துவாயாக'வென மேல் வருமிடுக்கண்
கூறித் தலைமகனை வரைவுடம் படுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வடுத்தன் நீள்வகிர்க் கண்ணிவெண்
ணித்தில வாள் நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்சிற்
றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவின்நின் னாரருளே,
தொடுத்தன** விடுத்துந் தோகைதோளெய்
திடுக்கண்பெரி திரவரினென்றது
** பா-ம்: தொடுத்தது.
இதன் பொருள்: என்னைத் தன் தொழும்பிற் படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம்- என்னைத்
தன்னடிமைக்கட் படுவித்த நல்ல நீண்ட கழலையுடைய வீசரது சிற்றம்பலத்தை: தாம் பணியார்க்கு
அடுத்தன தாம்வரின்- தாம் பணியா தார்க்குத் தக்கனவாகிய தீதுகள் உனக்கு வரக் கூடுமாயின்;
இரவின் நின் ஆர் அருள் பொல்லாது - இரவின்கணுண்டாகிய நின்னாரருள் எமக்குப் பொல்லாது,
அதனான்; வடுத்தன நீள்வகிர்க் கண்ணி வெண் நித்திலவாள் நகைக்கு - வடுவன வாகிய நீண்ட
வகிர்போலுங் கண்ணையுடையாளது தூய முத்துப்போலு மொளியையுடைய முறுவலுக்கு: தொடுத்தன
நீ விடுத்து எய்தத்துணி - எமராற் றொடுக்கப் பட்டனவாகிய பொருள்களை நீ வரவிட்டு வரைந்தெய்தத்
துணிவாயாக எ-று.
நீள்வகிர்க் கண்ணியாகிய வெண்ணித்தில வாணகைக் கென்றுரைப்பினு மமையும்.
தொடுத்தன பலவாக வகுக்கப் பட்டன. படுத்தன நீள்கழலென்பதூஉம் பாடம். சிற்றம்பலந்தாம்
பணியார்க்கடுத்தன தாம் வருகை யாவது கெர்ப்பம் வருகை. அடுத்தன தாம்வரினென்பதற்கு
நீ வரினெமக்கடுத்தன தாமுளவா மென்று பொருளுரைப்பாரு முளர். அடுத்தன தான் வரினென்பது
பாடமாயின், தானென்பது அசைநிலை, இவை இரண்டிற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன் அது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: எங்கள் (ஊர்) இன முறையார் அடுக்கிச் சொல்லுகின்ற
பொருள்களைக் கொடுத்து மயிலை போன்றவள் தோளைப் பேணுவாயாக; இரவிடத்தே வரில் இடுக்கண்
பலவும் உண்டாம் (என்றது ) .
செய்யுள்: வடுவிடத்தனவாகிய நீண்ட வகிரை யொத்த கண்களையும் வெள்ளிய முத்துப் போலும்
ஒளிசிறந்த முறுவலையும் உடையாளுக்கு எங்கள் உறவின் முறையாராலே அடுக்கிச் சொல்லுகின்றவற்றை
நீ கொடுத்து இவளைப் பெறும்படியை அறுதியிடுவாயாக. என்னைத் தன்னுடைய தொண்டு படுத்தலிலே
ஆக்கிக்கொண்ட நன்றாக அளவிடப்படாத சீபாதங்களையுடைய முதலியாருடைய திருச்சிற்றம்பலத்தை
வணங்காதார்க்கு அடுத்தன வாகிய குற்றங்கள் வரின் பொல்லாதாய் முடியும்: இரவிடத்தே நீ ஒழுகுகின்ற
பெறுதற்கரிய அருளானது பொல்லாதாக முடியும்: ஆதலால் இவளை வரைந்து கொள்ளும்படி
அறுதியிடுவாயாக வேண்டும். 267
3. வரைபொருட்பிரிவையுரையெனக் கூறல் *
-----------------------------------------
* பேரின்பப் பொருள் : யானன்ப லின்பா மாவுரையென்றது''
வரை பொருட் பிரிவை யுரையெனக் கூறல் என்பது மேல்வருமது கூறி வரைவுடம்படுத்தின தோழிக்கு,
'யான் போய் நுமர் கூறு நிதியமுந் தேடிக்கொண்டு நும்மையும் வந்து மேவுவேன்; நீ சென்று அவள் வாடாத
வண்ணம் யான் பிரிந்தமை கூறி ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக, 'வெனத் தலைமகன் றான் வரை
பொருட்குப் பிரிகின்றமை கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:
குன்றங் கிடையுங் கடந்துமர்
கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும் வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்ன பொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே
ஆங்க வள்வயின் நீங்க லுற்றவன்
இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது
இதன் பொருள்: மின் தங்கு இடை - மின்போலுமிடையை யுடையாய்: குன்றங் கிடையும் கடந்து -
இனிக் குன்றக்கிடப்புக்களை யுடைய சுரத்தையுங் கடந்துபோய்: உமர் கூறும் நிதி கொணர்ந்து - நுமர் சொல்லு
நிதியத்தைத் தேடிக் கொணர்ந்து: நும்மையும் வந்து மேவுவன்; தேமொழியே - தேமொழியினை யுடையாய்:
சென்று - நீ சென்று: அம்பலம் சேர் மன்தங்கு - அம்பலத்தைச் சேர்ந்த மன்னன்றங்கும்: இடைமருது ஏகம்பம்
வாஞ்சியம் அன்ன பொன்னை - இடைமருது ஏகம்பம் வாஞ்சியமாகிய இவற்றையொக்கும் பொன்னை:
இடை கொண்டு வாடாவகை- இடைகொண்டு வாடாத வண்ணம், அங்குச் செப்பு - அவ்விடத்துச் சொல்ல
வேண்டுவன சொல்லுவாயாக எ-று.
குன்றக்கிடை யென்பது மெலிந்து நின்றதெனினுமமையும். நும்வயி னென்பதூஉம் பாடம்.
எண்ணப்பட்டவற்றொடு படாது அம்பலஞ்சேர் மன்னனெக் கூறியவதனால், அம்பலமேயவர்க்கிட மாதல்
கூறினார். இடைகொண்டென்புழி இடை, காலம். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம்,
பயன்: வரை பொருட் பிரியுந் தலைமகன் ஆற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவ்விடத்து நாயகியிடத்தினின்றும் நீங்குவதாக
நினைந்தவன் இனிதாகிய உயிர் போன்ற தோழிக்கு எதிர்ப்பட்டுச் சொன்னது.
செய்யுள் : திருவம்பலத்தைப் பொருந்தின தலைவன், அவன் நிலை நின்ற திருவிடைமருதூர்
திருவேகம்பம் திருவாஞ்சியம் என்கிற திருப்படை வீடுகளை யொப்பாளைச் சென்று அவ்விடத்தே
இடங்கொண்டு வாடாதபடி சொல்லுவாயாக வேண்டும், தேனையொத்த வார்தையினை உடையாய்
நீ தான் ; மலைக்கிடையில் கல்லுடைத்தாகிய அரிய வழியினையும் கடந்து உங்கள் உறவின்
முறையாராலே சொல்லப்பட்ட நிதியினையும் கொண்டு வந்து மின் போன்ற இடையினையு (டைய)
உங்களை வந்து பொருந்தக் கடவேன். 268
4. நீயே கூறென்றல்*
------------------
*பேரின்பப் பொருள்: அன்பா லின்புற லுனக்கெளி தென்றது.
நீயே கூறென்றல் என்பது பிரிவறிவிப்பக்கூறின தலைமகனுக்கு, 'நீ யிரவுவரினும் பகற்பிரிந்து
செல்வையென வுட்கொண்டு நின்னொடு கூடியவப்பொழுதும் யானுயிர்வாழே னென்று நினைந்திருப்பாளுக்குத்
தாழேனென்னு முரை முன்னாக நின்பிரிவை நீயே சொல்லிப் போவாயாக'வென அவன் விரையவருவது
காரணமாகத் தோழி தலைமகளது பிரிவாற்றாமை கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
கேழே வரையுமில் லோன்புலி
யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீவருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
யேகு தனிவள்ளலே
காய்கதிர்வேலோய் கனங்குழையவட்கு
நீயேயுரை நின்செலவென்றது .
இதன் பொருள்: தனி வள்ளலே - ஒப்பில்லாத வள்ளலே கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர்ப் பயில்கிள்ளை
அன்னயாழ் ஏர்மொழியாள் - தனக்குவமையாக யாவரையுமுடைய னல்லாதவனது புலியூர்க்கட் பயிலுங் கிளியை
யொக்கும் யாழோசை போலு மொழியையுடையாள் : இரவரினும் பகல்சேறி என்று - இரவினீ வரினும் பகற்பிரிந்து
செல்வை யென்று அதனையேயுட் கொண்டு : வாழேன் என இருக்கும் வரிக் கண்ணியை- நின்னொடு கூடிய
வப்பொழுதும் யானுயிர் வாழேனென்று நினைந்திருக்கும் வரிக்கண்ணினையுடையாளை: வருட்டி
இடைக் கண் தாழேன் என நீ சொல்லி ஏகு - வசமாக்கிப் பெற்றதோர் செவ்வியில் தாழேனென்னும்
உரை முன்னாக நின்பிரிவை நீயே சொல்லி யேகுவாயாக எ-று.
கிளி மென்மையும் மென் மொழியுடைமையும் பற்றி, மென்மொழியை யுடையாட் குவமையாய் வந்தது.
யாழோசை செவிக்கினிதாதல் பற்றி மொழிக்குவமையாய் வந்தது. புலியூர்ப் பயிலு - மொழியாளென வியையும்.
வாழேனன விருக்கு மென்பதனை முற்றாக்கி மொழியாளிவ்வாறு செய்யும் அவ்வரிக்கண்ணியையென
ஒருசுட்டு வருவித்துரைப்பினு மமையும். வருடி வருட்டி யென மிக்கு நின்றது, வாழேனென விருக்கு மென்றதனான்,
இத்தன்மைத்தாகிய விவளது பிரிவாற்றாமையை மறவாதொழிய வேண்டு மென்றாளாம். இடைக்கணென்றது
இவ்வொழுக்கத்தால் நினக்கு வருமேத நினைந்து ஆற்றாளாஞ் செவ்வி பெற்றென்றவாறு. வடிக்கண்ணியை
யென்பதூஉம் பாடம் மெய்ப்பாடு: அச்சம் பயன்: தலைமகளதாற்றாமையுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கொலைத் தொழிலினையும் பிரகாசத்தையுமுடைய
வேலினையுடைய நாயகனே! கனத்த மகாக் குழையை யுடையாளுக்கு நின்னுடைய செலவை நீயே
சொல்லாய் என்றது.
செய்யுள்: தனக்கிணை யாவருமில்லாதவன் அவனுடைய பெரும்பற்றப்புலியூரில் வாழ்கின்ற
கிளியை நிகர்த்த யாழின் இசையைப் போன்ற வார்த்தையினையுடையவள் இரவிடத்தே வரினும்
பகற்பொழுதெல்லாம் பிரிந்திருப்பை யென்றும், உயிர்வாழே னென்றும் இருக்கின்ற செவ்வரி பரந்த
கண்களையுடையாளை, நீ நுதலும் தோளும் முதலாயினவற்றைத் தடவி, நிமிடமளவும் தாழ்த்து அங்கே
உயிர்கொண்டு இரேன்' என்று ஒப்பில்லாத நாயகனே! அதனிடையிலே சொல்லிப் போவாய் . 269
5. சொல்லாதேகல்*
-----------------
* பேரின்பப்பொருள், 'எக்காலும் பிரிவில்லை யென்றது.''
சொல்லாதேகல் என்பது நீயேகூறென்ற தோழிக்கு யானெவ்வாறு கூறினும் அவள் பிரிவுடம்படாளாதலின்
ஒரு காலும் வரைந்து கொள்கையில்லை ; யான் விரைய வருவேன்; அவ்வளவும் நீ யாற்றுவித்துக்
கொண்டிருப்பாயாக'வெனக் கூறித் தலைமகன் றலைமகளுக்குச் சொல்லாது பிரியா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார் மனம் போன்
றிருட்டிற் புரிசூழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே
நிரைவளை வாட, உரையா தகன்றது
இதன் பொருள்: வருட்டின் திகைக்கும் - நுதலுந்தோளு முதலாயினவற்றைத் தைவந்து ஒன்று
சொல்லக் குறிப்பேனாயின் இஃதென் கருதிச் செய்கின்றானென்று மயங்கா நிற்கும் வசிக்கின் துளங்கும் -
இன்சொல்லின் வசித்து ஒன்று சொல்லலுறுவே னாயின் அக்குறிப் பறிந்து உண்ணடுங்கா நிற்கும்
தெருட்டின் மனமகிழ்ந்து தெளியலள் - இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருண்முடித்துக்
கடிதின் வருவலென்று சூளுற்றுத் தெளிவிப்பேனாயின் மனமகிழ்ந்து அதனைத் தேறாள் : செப்பும்
வகையில்லை - இவ்வாறொழிய அறிவிக்கும் வகை வேறில்லை. அதனான்: புரிகுழலாட்கு எங்ஙன் சொல்லி
ஏகுவன் சுருண்ட குழலை யுடையாட்குப் பிரிவை எவ்வண்ணஞ் சொல்லிப் போவேன்! ஒருவாற்றானுமரிது எ-று .
சீர் அருக்கன் குருட்டின் புகச் செற்ற கோன் புலியூர் - பெருமையையுடைய அருக்கன் குருடாகிய இழிபிறப்பிற்
புகும் வண்ணம் அவனை வெகுண்ட தலைவனது புலியூரை: குறுகார் மனம் போன்று இருட்டின் புரிகுழல் -
அணுகாதார் மனம் போன்று இருட்டு தலையுடைய புரிகுழலெனக் கூட்டுக.
வருடினென்பது வருட்டினென நின்றது, ஏகுவதே யென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை.
பயன் : வரைவு மாட்சிமைப் படுத்துதற்குப் பிரிதல்,
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நிறைந்த வளைகளை யுடைய நாயகி வாடச் சொல்லாதே போனது.
செய்யுள்: பிரிவு காரணமாக நுதலும் தோளும் தடவுவேனாகில், "இதற்குக்காரணம் ஏது' என்று
திகையாநிற்கும்: வசமாகச் சில வார்த்தைகளைச் சொல்வேனாகில் இதற்குக் காரணம் ஏது' என்று நடுங்கா நிற்கும்
தெளியும்படி வார்த்தை சொல்லில் நெஞ்சு மகிழ்ந்து தெளியாள்: பிரிவறி விக்கலாவதொரு (உ) பாயமில்லை;
சீரிய ஆதித்தர்பன்னிருவரின் இனத்தை யொழித்துக் குருடர்க்கிடமாகச் சென்று சேரும்படி அழித்த சுவாமி
அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சேராதார் மனம் போலே இருண்டு நெறித்த கூந்தலினை யுடையாளுக்கு
(எங்ஙனம்) சொல்லி நான் பிரிவேன். 270
6. பிரிந்தமை கூறல்*
-------------------
*பேரின்பப் பொருள் : ''அருளுயிர்ப் பிரிவின் பாரவுரைத்தது".
பிரிந்தமை கூறல் என்பது தலைமகன், முன்னின்று பிரிவுணர்த்த மாட்டாமையிற் சொல்லாது
பிரியா நிற்பத் தோழி சென்று, 'நமராற் றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கு வரவிட்டு
நின்னை வரைந்து கொள்வானாக அழற்கட நெறியே பொருள் தேடப் போனான்; அப்போக்கு; அழற்கடஞ்
சென்றமையான் நமக்குத் துன்பமென்பேனோ? வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின் நமக்கின்ப
மென்பேனோ ? வெனப் பொதுப்படக் கூறி 'வரைவு காரணமாகப் பிரிந்தானாதலின் இது நமக்கின்பமே'
யெனத் தலைமகள் வருந்தாமல் அவன் பிரிந்தமை கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
நல்லாய் நமக்குற்ற தென்னென்
றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.
தேங்கமழ் குழலிக்குப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: நம் சிறந்தவர் - நமக்குச் சிறந்த அவர் நமர்தொடுத்த எல்லா நிதியும் உடன் விடுப்பான் -
நமராற் றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையும் ஒருங்கே வரவிடுவான் வேண்டி; இமையோர் இறைஞ்சும்
மல் ஆர் கழல் அழல் வண்ணர்வண் தில்லை- இமையோர் சென்று வணங்கும் வளமார்ந்த கழலையுடைய
அழல்வண்ணரது வளவிய தில்லையை; தொழார்கள் அல்லால் செல்லா அழல்கடம் இன்று சென்றார் -
தொழா தாரல்லது நம்போல்வார் செல்லாத அழலையுடைய சுரத்தை இன்று சென்றார், அதனான்
நல்லாய் - நல்லாய்; நமக்கு உற்றது என்னென்று உரைக்கேன்- நமக்கு வந்ததனையாதென்று சொல்லுவேன்! எ-று.
என்னென்றுரைக்கே னென்றதனான், 'தொடுத்தது விடுப்பச் சென்றாராகலின் இன்பமென்பேனோ?
அழற்கடஞ் சென்றமையாற் றுன்ப மென்பேனோ' வெனப் பொதுபடக் கூறுவாள் போன்று, வரைவு காரணமாகப்
பிரிந்தாராகலின் இது நமக்கின்பமே யென்றாற்றுவித்தாளாம் தொழார்களல்லார் செல்லாவென்று பாட
மோதுவாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: வரைவு நீட்டியாமை யுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நறு நாற்றங் கமழா நின்ற கூந்தலினையுடையாளுக்குத்
தோழி சொன்னது.
செய்யுள்: நன்மை யுடையாய்! நாயகர் வந்துற்ற நன்மையினை என்ன நன்மையென்று
சொல்லுவேன்? நம்முடைய உறவின் முறையாராலே அடுக்கிச் சொல்லப்பட்ட வெல்லாப் பொருள்களையும்
ஒருக்காலே கொடுத்து விடுவதாகத் தேவர்கள் வந்து வணங்குகிற வளப்பமுடைத்தாகிய சீபாதங்களையுடைய
தழல் விசும்பு போன்ற திருமேனியை யுடையவர். அவருடைய வண்மை யுடைத்தாகிய (பெரும் பற்றப்புலியூரைத்
தொழாதாரல்லது செல்லலாகாத நெருப்புக்**) காட்டை இன்று சென்றார் நம் சிறந்தவரே: நம்முடைய சிறப்புள்ளவர்
இப்பொழுது போனாராதலால் இந்த நன்மையை என்ன நன்மை என்று சொல்லுவேன் ! 271
**பிறைவளைவுக்குள்ள உரை பழைவுரைப் பதிப்பாசிரியரால் சேர்க்கப் பெற்றது.
7. நெஞ்சோடு கூறல்*
-------------------
*பேரின்பப் பொருள் : "உயிர்பரி வாற்சிவன் கருணை யுற்றது."
நெஞ்சொடு கூறல் என்பது பிரிந்தமை கூறக் கேட்டு வருந்தாநின்ற நெஞ்சிற்கு " நமக்கேதம் பயக்கு
மொழுக்க மொழிந்து குற்றந் தீர்ந்த முறைமையாகிய வொழுக்கத்துப் பிரிந்தவிது நம்மைக் கெடுக்குமென்று
நீ கருதின் இதுவொழிய நமக்கின்புற்று வாழுமுபாயம் வேறுளதோ'வெனத் தலைமகள் நெஞ்சினது வருத்தந்
தீரக் கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள் : -
அருந்தும் விடமணி யாம்மணி,
கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
னோன்தில்லை வாழ்த்தும் வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே
கல்வரை நாடன் சொல்லா தகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்தது .
இதன் பொருள் : அருந்தும் விடம் அணியாம் மணி கண்டன் உண்ணப்பட்ட நஞ்ச நின்று அலங்காரமாய்
நீலமணி போலுங் கண்டத்தை யுடையவன்; அண்டர்க்கு எல்லாம் மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன்-
தேவர்க்கெல்லா முறுதி பயக்கு மருந்தும் இன்சுவையை யுடைய வமிர்தமு மாகா நிற்கும் முன்னோன் -
தில்லை வாழ்த்தும் வள்ளல் அவனது தில்லையை வாழ்த்தும் நம்வள்ளல் ; திருந்தும் கடன் நெறி செல்லும்
இவ்வாறு சிதைக்கும் என்றால் - நமக்கேதம் பயக்குமொழுக்கமொழிந்து குற்றந் தீர்ந் திருக்கு முறைமை
யாகிய இந்நெறியைச் செல்கின்ற இந்த நீதி நம்மைக் கெடுக்கு மென்று நீகருதின்; வருந்தும் மட நெஞ்சமே -
வருந்துகின்ற வறிவில்லாத நெஞ்சமே; யாம் இனி வாழ் வகை என்ன-யாமின்புற்று வாழும் உபாயம் வேறியாது! எ- று .
அருந்து மென்பது காலமயக்கம்: அருந்துதற்றொழின் முடிவதன்முன் நஞ்சங்கண்டத்து
நிறுத்தப்பட்டணியா யிற்றாகலின் நிகழ்காலத்தாற் கூறப்பட்ட தெனினுமமையும். மற்று: அசை நிலை.
திருந்துங் கடனெறியென்பது தித்திக்குந் தேனென்பதுபோல இத்தன்மைத்தென்னு நிகழ்காலம்பட
நின்றது திருந்துங் கடநெறியைச் செல்லுமென்றும், களவாகிய விவ்வாற்றைச் சிதைக்கு மென்றும்
முற்றாக அறுத்துரைப் பாருமுளர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கல்லுடைத்தாகிய மலை மேலுள்ள நாட்டினையுடைவன்
போகிறேனென்று சொல்லாமற் பிரிந்தகல மின்னைப் போல் நுடங்குகிற மருங்கினையுடைய நாயகி
தன்னுடைய பிரகாசங் குன்றியது.
செய்யுள்: உண்கிற நஞ்சமு மழகு செய்கிற நீல மணி போன்ற திரு மிடற்றினையுடையவன் ,
மற்றுள்ள தேவர்களுக்கெல்லாம் மருந்துமாய் அமுதமாகிற பழையவன்' அவனுடைய பெரும் பற்றப்
புலியூரைப் புகழ்கிற வள்ளலானவன் திருந்தின கடப்பாட்டையுடைய முறைமையிலே செல்லுகின்ற
இத்தன்மை நம்மையழிக்குமாகில் இதற்கு வருந்துகிற அறியாத என்பேதை நெஞ்சமே! இப்பொழுது
உயிர் வாழும் உபாயம் ஏதாந்தன்மை தான் ?? 272
8. நெஞ்சொடு வருந்தல்*
---------------------
*பேரின்பப் பொருள் : ' உயிர்க்கே கருணை யுற்றின் பானது'
நெஞ்சொடு வருந்தல் என்பது பிரிந்தமை கூறக்கேட்ட தலைமகள், 'அன்றவரை விடாது என்னை
விட்டு அவரது தேர்ப்பின் சென்ற நெஞ்சம் இன்று மவ்வாறு செய்யாது என்னைவருத்தாநின்றது' எனத்
தன்னெஞ்சொடு வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் மூத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே.
வெற்பவன் நீங்கப்,பொற்பு வாடியது.
இதன் பொருள்: ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த - அழகையுடைய பின்னை யென்கின்ற
தேவியுடைய தோள்களை முற்காலத்துக் கலந்த மாயோன் நின்று பரவ; எழில் திகழும் சீர்ப் பொன்னை வென்ற
செறி கழலோன் தில்லைச் சூழ்பொழில்" வாய் - எழில் விளங்குஞ் செம் பொன்னை வென்ற திருவடிகளை
யுடையவனது தில்லைக்கட் சூழ்ந்த பொழிலிடத்து; கார்ப்புன்னை பொன் அவிழ் முத்த மணலில் - கரியபுன்னை
பொன்போல மலரா நின்ற முத்துப் போலு மணலையுடைய தோரிடத்து: கலந்து அகன்றார்- கூடி நீங்கினவரது:
தேர்ப்பின்னைச் சென்ற என் நெஞ்சு இன்று செய்கின்றது என் கொலாம் - தேர்ப்பின் சென்ற என்னெஞ்சம்
இவ்விடத்தின்று செய்கின்ற தென்னோ! அறிகின்றிலேன்! எ-று
ஏத்த வெழிறிகழுமென வியையும். என்னோடு நில்லாது அவர் தேர்ப்பின் போன நெஞ்சம்
இன்றென்னை வருத்துகின்ற விஃதென்னென்று நெஞ்சோடு நொந்து கூறினாளாக வுரைப்பினு மமையும்,
செறிகழலும் முத்தமணலும்: அன்மொழித் தொகை, தேய்கின்றதே யென்பது பாடமாயின், அன்றவரை
விடாது சென்ற நெஞ்சம், செல்லாது ஈண்டிருக்கு மென்னைப்போல் இன்று தேய்கின்றதென்னென்று
கூறினாளாக வுரைக்க, இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் பிரிய அழகினையுடையாள் வாடியது.
செய்யுள்: அழகிய (பின்னைப்) பிராட்டி தோள்களை முன் பொருந்தின புருடோத்தமன் ஏத்தப்
புகழ் அழகு விளங்கா நின்ற செம்பொன்னை வெற்றி செய்கிற வீரக்கழல் செறிந்த சீபாதங்களையுடையவன்,
அவனுடைய பெரும்பற்றப் புலியூரைச் சூழ்ந்த ........ முத்தை யொத்த வெள்ளிய மணலிலே கூடிப் பிரிந்தவருடைய
தேரின் பின்னே சென்ற என் நெஞ்சம் ...முது செய்கிற படியே....றை சேர வலிந்தோ என்னை மறந்துதான்
அங்கே நின்று விட்டுச் சொல்லவிட...... டடதொ ........ 273
9. வருத்தங்கண்டுரைத்தல் *
--------------------------
*பேரின்பப் பொருள் : அருள் சிவன் கருணைக் குருகி நோக்கியது.
வருத்தங்கண்டுரைத்தல் என்பது தலைமகன் தன்னெஞ்சொடு வருந்தா நிற்பக்கண்ட
தோழி, 'இத்தன்மைத்தாகிய வெற்பராகலிற் றாழாது விரைய வரைவொடு வருவர்: ஆதலால் நீ யின்னாமையை
யடையாதொழிவாயாக'வென்று அவள் வருத்தந் தீரக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
கானமர் குன்றர் செவியுற
வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லி செல்லார் செல்லல்
செல்லல் திருநுதலே .
அழலுறு கோதையின் விழுமுறுபேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: தேன் அமர் சொல்லி - தேனைப் பொருந்துஞ் சொல்லையுடையாய்: கான் அமர் குன்றர்
செவி உறவாங்கு கணை- கானின்க ணமருங் குன்றவர் செவியுறும் வண்ணம் வலித்த கணையை: துணையாம்
மான் அமர் நோக்கியர் நோக்கென மான் நல்தொடை மடக்கும் - தாமெய்யக் குறித்தவற்றினோக்குந்
தந்துணைவியராகிய மானைப் பொருந்திய நோக்கத்தையுடையவரது நோக்கோ டொக்கு மென்று கருதி
அம்மானைக் குறித்த நல்ல தொடையை மடக்கும்: வான் அமர் வெற்பர் செல்லார்முகிறங்கும் வெற்பர்
செல்கின்றாரல்லர்: வண்தில்லையின் மன்னை வணங்கலர் போல் - வளவிய தில்லையின் மன்னனை
வணங்காதாரைப் போல: திருநுதல் - திருநுதால் செல்லல் செல்லல் - இன்னாமையை யடையாதொழிவாய் எ-று
தொடைமடக்குமென் னுஞ்சொற்கள் இயைந்து ஒரு சொல்லாய்க் குன்றவ ரென்னு மெழுவாய்க்குங்
கணையை யென்னுமிரண்டாவதற்கும் முடிபாயின. துணையாமென்பது 'ஏவலிளையர் தாய்' என்பதுபோல
மயக்கமாய் நின்றது. மானமர் நோக்கியர் நோக்கென்பதனை உறழ்வானுவமைப்பாற் படுக்க. கொலைத்
தொழிலாளருந் தந்துணை வியரோடொப்பனவற்றிற்கு மிடர் செய்யாத வெற்பராதலின்,
நீயிவ்வாறு வருந்த நீட்டியாரென்பது கருத்து.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அக்கினியிற் சேர்ந்த மாலை போல் வாடிய நாயகியைப்
பிரியா ரென்று பாங்கி சொன்னது;
செய்யுள்: காட்டிலே வாழ்கிற குறவரானவர்கள் காதளவும் செல்ல நிரம்ப வலித்த அம்பைத்
தங்கள் துணைவியராகிய மான் நோக்கத்தை யொத்த கண்களை யுள்ளவர்களுடைய பார்வையும்
மான் நோக்கந்தான் நோக்கையாலே மானுக்குத் தொடுத்த நல்ல பாணத்தை எய்யாதே மடக்குகிறவர்,
ஆகாயத்தைப் பொருந்தும் படிக்கு உயர்ந்த மலையினையுடையவர் அழகிய பெரும்பற்றப்புலியூரில்
கர்த்தனை வணங்காதாரைப்போலே தேனை யொத்த இனிய வார்த்தையினை யுடையாய்! போகார் காண்;
ஆதலால் அழகிய நெற்றியினை யுடையாய்! கிலேசத்தை யடையாதே கொள். 274
10. வழியொழுகி வற்புறுத்தல்*
----------------------------
*பேரின்பப் பொருள்: கருணை யிங்கன மாயி னுயிரும். இன்பேயாகுமென் றன்புற வுரைத்தது.
வழியொழுகி வற்புறுத்தல் என்பது தலைமகளது வருத்தங் கண்ட தோழி, அவளை வழியொழுகி
யாற்றுவிக்க வேண்டுமள வாகலின், ஆற்றாமைக்குக் காரணமாகியவற்றைக் கூறித்தானும்
அவளோடு வருத்தமுற்று. 'அதுகிடக்க, இம்மலர்ப் பாவையை யன்னாட்கு இவ்வேறுபாடு வந்தவாறென்னோ
வென்று அயலவர் ஐயுறாநிற்ப ராதலான் நீ யாற்றவேண்டும்' என்று அவள்வழி யொழுகி வற்புறுத்தா நிற்றல்.
அதற்குச் செய்யுள்: -
மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்கு முன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோன் தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே
சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது.
இதன் பொருள்: மது மலர்ச் சோலையும் - அவரைப் புதுவது கண்ணுற்ற மதுமலரையுடைய சோலையையும்:
வாய்மையும்- அன்று நின்னிற்பிரியேன் பிரியினாற்றே னென்று கூறிய வஞ்சினத்தினது மெய்ம்மையையும்:
அன்பும் - வழிமுறை பெருகிய வன்பையும்: மருவிவெங்கான் கதுமெனப் போக்கும் - நம்மோடு மருவி வைத்துப்பின்
கதுமெனவெங்கானிற் போகிய போக்கையும்: நிதியின் அருக்கும் - போய்த் தேடுநிதியினது செய்தற்கருமையையும்:
முன்னிக்கலுழ்ந்தால் - நினைந்து நீ கலுழ்ந்தால் : ஏந்திழை- ஏந்திழாய்: நொதுமலர்- ஏதிலர் : மலர்ப் பாவைக்கு
இது வந்தவாறு என்னோ என்பர் - மலர்ப்பாவை யன்னாட்கு இவ்வேறுபாடு வந்தவாறென்னோ வென்றையுறுவர்;
அதனானீ யாற்றுவாயாக எ-று . நோக்கம் ஓர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர்போல் வந்தவாறு என்னோ -
கண்களொரு மூன்றை யுடையவனது தில்லையைக் கருதாதார் போல வந்தவாறென்னோ வெனக் கூட்டுக
அன்பு வழிமுறையாற் சுருங்காது கடிது சுருங்கிற்றென்னுங் கருத்தாற் கதுமெனப் போக்கு மென்றாள்.
அருக்குமென் றதனால் நீட்டித்தல் கருதினாளாம். வழியொழுகி யாற்றுவிக்க வேண்டுமளவாகலின்,* ஆற்றாமைக்குக்
காரண மாகியவற்றை மிகுத்துக் கூறினாளாம். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு இளிவரலைச் சார்ந்த பெருமிதம்
பயன்- தலைமகளை யாற்றுவித்தல்.
*'மவளாகலின்' என்றிருக்கலாம்
(பழையவுரைப் பொழிப்பு )* கொளு: சுற்றிக் கட்டப்பட்ட அளகத்தினையுடையாளைத் தோழி தெளிவித்தது.
*கொளு ஏட்டிற் காணவில்லை என்பவர் பழையவுரைப் பதிப்பாளர்
செய்யுள்: காட்டிலே அவர் கடிதாகிய போக்கையும் பொருள்தேடி வருகையையும் நினைத்து நீ யழுதால்.
அயலார் கண் மூன்றுடையவனுடைய பெரும்பற்றப் புலியூரைத் துதியாரைப் போலே -ங்களாகிய சீதேவியை
ஒப்பாளுக்கு இது வந்தபடியேனென்று ஆராயத் தகுங்காண்: மிகுந்த ஆபரணங்களையுடையாய்! 257
11. வன்புறையெதிரழிந்திரங்கல் *
-------------------------------
* பேரின்பப் பொருள் : ''பின்னுஞ் சிவமே பெருங்கருணை யாயது."
வன்புறையெதிரழிந்திரங்கல் என்பது, வழியொழுகி வற்புறுத்தினதோழியோடு, 'தலைமகன்
வரைவு நீடுதலாற்றமக் கோர்பற்றுக்கோடின்றி வருந்துந் திருவினையுடையார்க்கு அவன்வரைவு மிகவுமினிது:
யானாற்றேன்' எனத் தலைமகள் வன்புறை யெதிரழிந்திரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வந்தாய் பவரையில் லாமயில்
முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
நாடன்பண் போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையுந் திருவினர்க்கே
வன்கறை வேலோன்** வரைவு நீட
வன்புறை யழிந்தவள் மனமழுங்கியது
**'மன்கறை வேலவன்' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: கொந்தார் நறுங் கொன்றைக் கூத்தன் தென் தில்லை தொழார் குழுப்போல் -
கொத்தார்ந்த நறிய கொன்றையையணிந்த கூத்தனது தெற்கின்கணுண்டாகிய தில்லையை வணங்காதாரது
திரள்போல சிந்தா குலம் உற்றுப் பற்று இன்றி நையும் திருவினர்க்கு - மனக்கலகத்தை யுற்றுத் தமக்கோர்
பற்றுக்கோடின்றி வருந்துந் திருவினை யுடையார்க்கு வந்து ஆய்பவரை இல்லாமயில் முட்டை - சென்றாராய்வாரை
யுடைத்தல்லாத மயிலின் முட்டையை: இளைய மந்தி பந்தாடு இரும் பொழில் பல்வரை நாடன் பண்போ -
இளையமந்தி பந்தாடி விளையாடும் பெரிய பொழிலையுடைய பலவாகிய வரைகளை யுடைய
நாட்டை யுடையவன தியல்போ இனிது - இனிது எ-று.
நையுந்திருவினர்க்கென்றது நையுந்துணையா யிறந்துபடா திருந்து அவனளிபெற்ற ஞான்று
இன்புறவெய்தும் நல் வினை யாட்டியர்க்கென்றவாறு எனவே யானது பெறுமாறில்லை யென்றாளாம்.
உற்றதாராய்ந் தோம்புவாரில்லாத மயிலினது முட்டையால் ஈன்ற வருத்தமறியாத விளமந்தி மயிலின்
வருத்தமும் முட்டையின் மென்மையும் பாராது பந்தாடுகின்றார்போலக் காதலரான் வினவப் படாத என்
காமத்தை நீ யிஃதுற்றறியாமையான் எனது வருத்தமும் காமத்தினது மென்மையும் பாராது
இவ்வாறுரைக் கின்றாயென உள்ளுறை வகையாற் றோழியை நெருங்கி வன்புறை யெதிரழிந்தவாறு
கண்டுகொள்க. அல்லதூஉம், வந்தாய்பவர் தோழியாகவும் இளமந்தி தலைமகனாகவும், பந்தாடுதல்
தலைமகளது வருத்தம் பாராது தான் வேண்டியவாறொழுகு மவனதொழுக்கமாகவும் உரைப்பினுமமையும்.
திருவினெற்கே யென்பது பாடமாயின் இவ்வாறு வன்கண்மையேனாய் வாழுந்திருவை யுடையேற்கென,
வுரைக்க. இதற்குத் திரு: ஆகுபெயர் . மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : அது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நிலை நின்ற இரத்தம் பொருந்தின வேலினையுடையவன்
வரைந்து கொள்ள நீட்டிப்ப வலியுறுத்த லிழந்து நாயகி மனம் வாடியது.
செய்யுள்: கொத்து நிறைந்து நறுநாற்ற முடைத்தாகிய கொன்றை மாலையை யணிந்த கூத்தனது
தக்ஷிணதிக்கி னுண்டாகிய புலியூரைத் தொழா தாருடைய திரள்போலப் பிரிந்த காலத்துச் சிந்தையானது ஒருவர்
ஆதாரமும் அன்றியிலே கிலேசித்து ஆறியிருக்கவல்ல பாக்கியமுடையவர் களுக்குச் சென்று ஆராய்வாரை
உடைத்தல்லாத மயில் முட்டையைக் கொண்டு இளைய மந்திக் குரங்கு ஆடி விளையாடும் பெரிய
பொழிலுடைத்தாகிய பல மலைகளாற் சிறந்த நாட்டினையுடையவன் செய்திதான் அழகாயிருந்தது.
திருவினர் என்றது குறிப்பாலே இழித்தபடி: வந்தாராய் பவரையில்லாத மயின் முட்டையைக்
கொண்டுபோய் மந்திக்குரங்கு அதன் வருத்த மறியாமல் பந்தாடினாற் போல. நாயகரால் வந்தாராயப்படாத
நம்மைக் கொண்டு பாங்கியானவள் தனக்கு வேண்டினது சொல்லி வருந்தி நின்றாள் என்பது கருத்து . 270
12. வாய்மை கூறி வருத்தந் தணித்தல்*
----------------------------------
*பேரின்பப் பொருள் : உயிர்ப்பரிவெடுத்தருளு வந்தரற் குரைத்தது.
வாய்மை கூறி வருத்தந் தணித்தல் என்பது வரைவு நீடுதலான் வன்புறை யெதிரழிந்து வருந்தா நின்ற
தலைமகளுக்கு ' அவர் சொன்ன வார்த்தை நினக்குப் பொய்யென்பதே கருத்தாயின் இவ்வுலகத்து மெய்யென்பது
சிறிதுமில்லை'யெனத் தோழி தலைமகனது வாய்மைகூறி, அவள் வருத்தந் தணியா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
மொய்யென் பதே இழை மொண்டவ
னென்னைத் தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே
வேற்றடங் கண்ணியை, ஆற்று வித்தது
இதன் பொருள்: மொய் என்பதே இழை கொண்டவன்- வலிமையை யுடைய என்பதனையே
தனக்கணியாகக் கொண்டவன்: என்னைத் தன் மொய் கழற்கு ஆள் செய் என்பதே செய்தவன் - என்னைத்
தன்னுடைய வலிய திருவடிக்காட் செய்யென்று வெளிப்பட்டு நின்று சொல்லுதலையே செய்தவன்;
தில்லை சூழ்கடல் சேர்ப்பர் சொல்லும் . அவனது தில்லை வரைப்பினுண்டாகிய சூழ்ந்த கடலை யுடையத்தாகிய
சேர்ப்பையுடையவரது சொல்லும்; பொய் என்பதே கருத்து ஆயின் - பொய்யென்பதே நினக்குக் கருத்தாயின்;
புரிகுழல் பொற்றொடியாய்-சுருண்ட குழலையுடைய பொற்றொடியாய்; இவ்வியல் இடத்து மெய் என்பது
ஏதும் இல்லை கொலாம். இவ்வுலகத்துத் மெய்யென்பது சிறிது மில்லைபோலும்! எ.று.
அரிமுதலாயினாரென்பாகலின் மொய்யென்பென்றார் இழிந்தேன கைக்கொள்வானாகலின்,
என்பையணியாகவும் என்னை யடிமையாகவும் கொண்டானென்பது கருத்து. மெய்ப்பாடும் பயனும் அவை .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வேல்போலும் கண்ணையுடையாளை ஆற்றுப்படுத்தினது.**
**பா-ம் ஆற்றும்படி சொன்னது.
செய்யுள்: வலிமையையுடைய என்பதனையே தனக்கு ஆபரணமாகக் கொண்டவன் என்னைத்தன் னுடைய
பெரிய சீபாதங்களுக்கு ஆட்செயவென்கிற கருத்தைச் செய்து நின்றவன், (என்றபடி; ஏதென்னில், பேரறிவுடையராகிய
பிரமன் மால்களுக்கு மயக்கத்தைக் கொடுத்தது; அவர்களிறந்துபடவே, அவர்களுடைய எலும்பைப் பூணாகப் பூண்டு
நின்றவன் ஓரறிவுமில்லாத எனக்குத் தன்னை அறிவித்துத் தனக்கு ஆட் செயச் செய்வித்துக் கொள்ளா நின்றான் :)
அவனுடைய பெரும்பற்றப் பூலியூரைச் சூழ்ந்த கடலின் துறையையுடையவருடைய வார்த்தையும் பொய்யென்பதே
நினைவாயாகி நெறித்த கூந்தலினையுடைய அழகிய வளையணிந்த கையையுடையாய் ! இப்பெருநிலத்து
மெய்யென்பது சிறிதுமில்லையாய் விடும். 277
13. தேறாதுபுலம்பல் *
--------------------
*பேரின்பப் பொருள்: அருவியம்பியு மரன் கருணை மிக்கெழுந்தது
தேறாதுபுலம்பல் என்பது தலைமகனது வாய்மை கூறி வருத்தந் தணியா நின்ற தோழிக்கு,
'யானவர் கூறியமொழியின் படியே மெய்ம்மையைக் கண்டு வைத்தும், என்னெஞ்சமு நிறையும்
என்வயமாய் நிற்கின்றன வில்லை; அதுவேயு மன்றி என்னுயிரும் பொறுத்தற்கரிதாகா நின்றது ;
இவையிவ்வாறாதற்குக் காரணம் யாதென்றறி கின்றிலேன்' எனத்தான் தேறாமை கூறிப்புலம்பா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
மன்செய்த முன்னாள் மொழிவழியே
அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரி தாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.
தீதறுகண்ணி ** தேற்றத்தேறாது
போதுறுகுழலி புலம்பியது
**தீதறு குழலி, என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: மொய் குழலே மொய்த்த குழலையுடையாய்; முன் நாள் மன் செய்த மொழிவழியே
அன்னவாய்மை கண்டும்- முற்காலத்து மன்னன் நமக்குதவிய மொழியின் படியே அத்தன்மைத்தாகிய மெய்ம்மையைக்
கண்டுவைத்தும்; நெஞ்சும் நிறையும் நில்லா -என்னெஞ்சமு நிறையு மென் வரையவாய் நிற்கின்றில; என் செய்த -
இவையென் செய்தன; எனது இன் உயிரும் அதுவேயுமன்றி என தினியவுயிரும் : பொன் செய்த மேனியன்
தில்லை உறாரின் பொறை அரிதாம் - பொன்னை யொத்த மேனியை யுடையவனது தில்லையை யுறாதாரைப்
போல வருத்தம் பொறுத்தலரிதாகா நின்றது; முன் செய்த தீங்குகொல்- இவையிவ்வாறாதற்குக் காரணம் யான்
முன் செய்த தீவினையோ ; காலத்து நீர்மைகொல் - அன்றிப் பிரியுங் காலமல்லாத விக்காலத்தினியல்போ?
அறிகின்றிலன் எ-று.
மொழிவழியே கண்டுமென வியையும், நெஞ்சநில்லாமை யாவது நம்மாட்டு அவரதன்பு
எத்தன்மைத்தோவென்றையப் படுதல், நிறைநில்லாமையாவது பொறுத்தலருமையான் அந் நோய்
புறத்தார்க்குப் புலனாதல், நில்லாதென்பது பாட மாயிற்றனித் தனி கூட்டுக. பொன் செய்த வென்புழிச்
செய்த வென்பது உவமச் சொல், உயிர் துன்ப முழத்தற்குக் காரண மாதலின், அதனையுந் துன்பமாக
நினைந்து இன்னுயிரும் பொறையரிதா மென்றாள். மெய்ப்பாடு: மருட்கை, பயன்: ஆற்றுவித்தல் .
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: குற்றமற்ற கூந்தலினையுடையவள் தெளிவிக்கத் தெளியாதே
பூப்பொருந்தின கூந்தலினை யுடையவள் வருந்தியது.
செய்யுள் : நாயகனானவன் நமக்கு முன்னோட் சொன்ன வார்த்தைப் படியே அத்தன்மையாகிய
உண்மையைக் கண்டும் என் நெஞ்சமும் நிறையும் நிற்கின்றன வில்லை: இவை என் செய்தன தாம்?
என்னுடைய இனிய வுயிரும்? பொன்னையொத்த திருமேனியை யுடையவனுடைய பெரும்பற்றப்
புலியூரை நெஞ்சிடைப் பொருந்தாதாரைப் போலே பொறையுடைமை அரிதாகி நின்றது;
செறிந்த கூந்தலினையுடையாய்! அதற்குக் காரணம் முற்பிறப்பிற் செய்த தீமையோ? காலநீர்மையோ?
சொல்லுவாயாக வேண்டும். 278
14. காலமறைத்துரைத்தல்*
------------------------
*'பேரின்பப் பொருள் : "அருள்சிவ நோக்கிக் காலமீதென்றது "
காலமறைத்துரைத்தல் என்பது தேறாமைகூறிப் புலம்பா நின்ற தலைமகள். காந்தள் கருவுறக்கண்டு,
இஃதவர் வரவு குறித்த காலமென்று கலங்கா நிற்ப 'நம்முடைய வையன்மார் தினைக்கதிர் காரணமாகக்
கடவுளைப்பராவ, அக்கடவுள தாணையாற் காலமன்றியுங் கார் நீரைச் சொரிய, அதனை யறியாது, காலமென்று
இக்காந்தண் மலர்ந்தன; நீயதனைக் காலமென்று கலங்கவேண்டா' வெனத்தோழி அவளை யாற்றுவித்தற்குக்
காலமறைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
கருந்தினை யோம்பக் கடவுட்
பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால் தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்புரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.
காந்தள் கருவுறக் கடவுண் மழைக்கென்
றேந்திழைப் பாங்கி இனிதியம் பியது.
இதன் பொருள்: வெள் வளை- வெள்வளையை யுடையாய்; கருத்தினை ஓம்பக் கடவுட் பராவி நமர் கலிப்ப-
கரியதினையை யோம்ப வேண்டிக் கடவுளைப் பராவி நமரார வாரிப்ப; கொண்மூச் சொரிந்தன-அக்கடவுளணையாற்
கொண்மூக்கள் காலமன்றியு நீரைச் சொரிந்தன; காரென - அதனைக் காரென்று கருதி: பரங்குன்றின் காந்தள்
துன்றி விரிந்தன.இப்பரங்குன்றின்கட் காந்தணெருங்கி யலர்ந்தன; அதனான் நீ காரென்றஞ்ச வேண்டா எ-று .
சுரந்ததன் பேரருளான் - பொறுத்தற்கரிதாகச் சுரந்த தனது பெரிய வருளான்; தொழும்பில் பரிந்து எனை ஆண்ட
சிற்றம்பலத்தான் பரங்குன்றின்- அடிமைக்குத் தகாதவென்னைத் தன்னடிமைக்கண்ணே கூட்டி நடுவு நிலைமை
யின்றிப் பரிந்தாண்ட சிற்றம்பலத்தானது பரங்குன்றினெனக் கூட்டுக.
கடவுண் மழை: - கடவுளாற் றரப்பட்டமழை. மெய்ப்பாடு .பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: காந்தளானது அரும்பத் தெய்வத்தினால் வந்த மழைகாண்
என்று ஆபரணங்களையுடைய பாங்கி மிகுத்துச் சொன்னது.
செய்யுள்: பச்சென்ற தினையைப் பரிகரிப்பதாகத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு
நம்முடைய உறவினர் ஆரவாரிக்க நீரைச் சொரிந்தன மேகங்களானவை; தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது
மாணாக்கர்க்குச் சுரந்த பெரிய அருளைப்பொறுக்க மாட்டாமையினாலே தனாளும் வாய்மை மறுத்து என்னை
அடிமை கொண்ட திருச்சிற்றம்பல நாதனுடைய திருப்பரங்குன்றினிலே நெருங்கி விருந்தன காந்தளானவை
வெள்ளிய வளைகளையுடையாய் ! இது காரென்று பயப்படாதே; இது தெய்வ மழை காண். 279
15. தூதுவரவுரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள்: உயிர்க்குக் காரணம்யான் வேறிலையென்றது
தூதுவரவுரைத்தல் என்பது காலமறைத்த தோழி, 'ஒரு தூது வந்து தோன்றா நின்றது; அஃதின்னார்
தூதென்று தெரியாது' எனத் தானின்புறவோடு நின்று அவள் மனமகிழும்படி தலைமகளுக்குத் தூதுவரவுரையா
நிற்றல்.அதற்குச் செய்யுள்:-
வென்றவர் முப்புரஞ் சிற்றம்
பலத்துள் நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையுஞ் செல்லல் செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.
ஆங்கொரு தூதுவரப், பாங்கிகண் டுரைத்தது,
இதன் பொருள்: நிரை வளை - நிரைவளையையுடையாய்; வந்து தோன்றும்- ஒரு தூது வந்து தோன்றாநின்றது;
குன்றா அருள் தரக் கூடினர் நம் அகன்று சென்றவர் தூது கொல்லோ - இது குன்றாத அருள்கொணர்ந்துதர வந்து
கூடிப் பின்னம்மைப் பிரிந்து சென்றவர் தூதோ; இருந்தே மையும் செல்லல் செப்பா நின்றவர் தூது கொல்லோ-
அன்றி அவர் பிரியவிருந்தோ மிடத்தும் இன்னாமையைச் சொல்லா நின்ற வேதிலார் தூதோ? அறியேன் எ-று.
முப்புரம் வென்றவர் - முப்புரத்தை வென்றவர்; சிற்றம்பலத்துள் நின்று ஆடும் வெள்ளிக்குன்றவர்,
சிற்றம்பலத்தின் கணின்றாடும் வெள்ளிக்குன்றையுடையவர். குன்றா அருள்- அவரது குன்றா தவருளெனக் கூட்டுக
கூடினரென்பது பெயர் பட நின்ற தெனினு மமையும். இருந்தேமையென்னு மிரண்டாவது ஏழாவதன்
பொருட்கண் வந்தது இரண்டாவதாயே நின்று இன்னாமையைச் சொல்லா நின்றவரென்னுந் தொழிற்பெயரோடு
முடிந்த தென்பாருமுளர். ஆங்கொரு தூது- ஏதிலார் தூது. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த மருட்கை,
பயன்: ஐயந்தீர்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அவ்விடத்தே ஒரு தூது வரப் பாங்கி கண்டு சொன்னது.
செய்யுள் : மூன்று புரங்களையும் வென்றவர், திருச்சிற்றம்பலத்தே நின்றாடியருளுகிற வெள்ளிமலையை
யுடையவர், அவருடைய குறைவுபடாத அருள் கொண்டுவந்து நமக்குத் தர நம்மைக் கூடிச் சிநேகித்தவர் நம்மைவிட்டுப்
பிரிந்தவர். அவர் நமக்கு விட்ட தூதோ? அவர் பிரிய ஆற்றவிருந்த எம்மிடத்தும் இன்னாமையைச் சொல்லாநின்ற
ஏதிலோர் தூதோ? வந்து தோன்றுவது (என்பதாவது வருத்தம் சொல்லா நின்றவர்களுடைய தூதோ) நிரைத்த
வளைகளை யுடையாய்! 240
16. தூது கண்டழுங்கல்*
---------------------
*பேரின்பப் பொருள்: கர்ண மொன்றுண்டோ வென்றருள் கருதியது.
தூது கண்டழுங்கல் என்பது தூதுவரவுரைப்பக் கேட்ட தலைமகள் மனமகிழ்வோடு நின்று, இஃதயலார்
தூதாகலான் இவை வருவன செல்வன வாகா நின்றன; காதலர் தூது இன்று வாராதிருக்கின்றது என்செய்யக்கருதி
யென்றறிகின்றிலேன்' என்று ஏதிலார் தூதுகண்டழுங்கா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
வருவன செல்வன தூதுகள்
ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே
அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது.
இதன் பொருள்: ஏதில தூதுகள் வருவன செல்வன- ஏதிலவாகிய தூதுகள் வருவன போவனவாயிரா
நின்றன; வான்புலியூர் ஒருவனது அன்பரின்- வாலிய புலியூர்க்கணுளனாகிய ஒப்பில்ல தானது
அன்பையுடையவரைப் போல; உள் உருகத் தருவன இன்பக் கலவிகள் செய்து யானின்புறவுள்ளுருகும்
வண்ணந் தரப்படுவனவாகிய இன்பக் கலவிகளை முன் செய்து, எனது ஆவிகொண்டு ஏகி -பின்னென
தாவியைத் தாங்கொண்டு போய்; என் நெஞ்சில் தம்மை இருவின காதலர்- என்னெஞ்சத்தின் கட்டம்மையிருத்தின
காதலர், இன்று இருக்கின்றது ஏது செய்வான் - இன்று வாளாவிருக்கின்றது ஏது செய்யக்கருதி? எ-று.
ஒருவனதன் : ஒருவன் கணன்பு. உள்ளுருகத் தருவனவென்பதற்கு உள்ளுருகும் வண்ணஞ்
சிலவற்றைத் தருவனவாகிய கலவி யென்றுரைப்பினு மமையும். தன்மெய்யன்பர் போல யானு மின்புற
வுள்ளுருகுங் கல்விகளை முன்செய்து பின்னெனதாவி போயினாற் போலத் தாம் பிரிந்து போய்
ஒரு ஞான்றுங் கட்புலனாகாது யானினைந்து வருந்தச் செய்த காதலர் இன்று ஏது செய்ய விருக்கின்றாரென
வேறுமொரு பொருடோன்றியவாறு கண்டுகொள்க. அயல்-அயன்மை. மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு:* அயலார் தூது வரக் கயலையொத்த கண்களையுடையாள் மயக்கமுற்றது**
*இதுவரை தரப்பெற்ற பழையவுரை தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையப் பிரதியில் கண்டவை:
இனித்தரப் பெறுபவை அடையாறு மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலைய
ஏட்டுப் பிரதியிலுள்ளவை. (பழையவுரைப் பதிப்பு)
** இது முதல் பழையவுரைப் பதிப்பில் காணும் உரை பதவுரையாகவேயுள்ளது.
செய்யுள்: அயலாருடைய தூதுகள் வருவனவும் செல்வனவுமாயிருந்தன. பெரிய பெரும்பற்றப் புலியூரில்
ஒப்பில்லாதவனுடைய அன்பரைப்போல உள்ளுருகும்படி இன்பத்தைத் தருகிற கலவிகளைச் செய்து,
என் உயிரைக் கொண்டுபோய் என்னுடைய நெஞ்சிலே தம்மை இருத்தின காதலர் இப்பொழுது இருக்கின்ற
இது என் செய்வதாகத் தான் ?? 281
17. மெலிவுகண்டு செவிலி கூறல்*
------------------------------
*பேரின்ப பொருள் : திரோதை சிவத்திற் சேர்ந்தெனத் திரும்பியது.
மெலிவுகண்டு செவிலி கூறல் என்பது ஏதிலார் தூது காண்டழுங்கா நின்ற தலைமகளைச்
செவிலி யெதிர்ப்பட்டு, அடியிற் கொண்டு முடிகாறு நோக்கி, 'அவள் பண்டைத் தன்மையளல்லள்; இவ்வாறு
மெலிதற்குச் சேயினதாட்சியிற் பட்டனள் போலு மென்றறிகின்றிலேன்' என்று அவளது மெலிவு கண்டு
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் : -
வேயின மென்தோள் மெலிந்தொளி
வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
ளாம்இத் திருந்திழையே.
வண்டமர் புரிகுழ லொண்ணடாடி மெலிய
வாடா நின்ற கோடாய் கூறியது
இதன் பொருள்: வேய் இன மென்றோள் மெலிந்து- வேய்க்கினமாகிய மென்றோண் மெலிந்து;
ஒளி வாடி - கதிர்ப்புவாடி விழிபிறிதாய் விழி தன்னியல்பிழந்து வேறாய்; பாயின மேகலை பண்டை யளல்லள் -
பரந்த மேகலையிடையாள் பண்டைத் தன்மையளல்லாயினாள், அதனால்; இந்திருந்திழை- இத்திருந்திழை;
சேயினது ஆட்சியின் பட்டனளாம்.சேயின தாட்சியாகிய விடத்துப்பட்டாள் போலும் எ-று. பவளச்செவ்வி ஆயின
ஈசன் திருமேனி பவளத்தினது செவ்வியாகிய வீசன் அமரர்க்கு அமரன் - தேவர்க்குத் தேவன்; சிற்றம்பலத்தான்
சிற்றம்பலத்தின் கண்ணான்; சேய்- அவனுடைய சேயெனக் கூட்டுக.
ஒளிவாடி யென்பதூஉம், விழிபிறிதாயென்பதூஉம் சினை வினைப்பாற்படும். பாயினமேகலை யென்னுஞ்
சொற்கள் ஒரு சொன்னீர்மைப்படுதலின், ஆகுபெயரெனப்படும். செவ்வி கருகுதலும் வெளுக்குதலுமில்லாத நிறம்,
ஆட்சி - அவனதாணையான் மக்களுக்கணையலாகாத விடம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வண்டுகள் அமரப்படா நின்ற நெறித்த கூந்தலினையுடைய அழகிய
வளைகளை யுடையாள் வாட அதற்குத் தளராநின்ற செவிலித்தாய் சொன்னது.
செய்யுள்: வேயின் தன்மையாற் சிறந்த மெல்லிய தோள்களானவை மெலிந்து அழகுவாடி விழிகளும்
வேறுபட்டுப் பரந்த மேகலையையுடையவள் பண்டைத் தன்மை யுடையாளல்லள்: பவளத்தின் செல்வி
நிறத்தை யொத்த திருமேனியை யுடையவன், தேவர்களுக்கெல்லாம் தேவனா யுள்ளவன் , திருச்சிற்றம்பலநாதன்,
அவனுடைய திருமகனாகிய சுப்பிரமணியனாலே ஆளப்பட்ட இடத்தே சென்றாளாக வேண்டும்.
ஆபரணங்களையுடையாள். 282
18. கட்டுவைப்பித்தல்*
---------------------
*'பேரின்பப்பொருள்: திரோதை சிவத்திற்சேர் சின்னங் கண்டது.
கட்டுவைப்பித்தல் என்பது மெலிவுகண்ட செவிலி, அவளது பருவங்கூறி, இவ்வணங்குற்ற நோயைத்
தெரியவறிந்து செல்லுமினெனக் கட்டுவித்திக் குரைத்துக் கட்டுவைப்பியா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்கிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர் போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே .
மால்கொண்ட கட்டுக், கால் கொண்டது
இதன் பொருள். சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில-சுணங்கைப் பொருந்திய கொங்கைகள்
சூதின்றன்மையை யுற்றனவில்லை; சொல் தெளிவு உற்றில - சொற்கள் குதலைமை நீங்கி விலங்குதலை
யுற்றனவில்லை; குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் நன்மையுந் தீமையு மறியும் . பெதும்பைப்
பருவத்தையிப்பொழுதைக் குறாள், இவளிளமை இதுவாயிருந்தது: அன்னையரே - அன்னைமீர், அணங்கு
உற்ற நோய் அறிவுற்று உரையாடுமின் இவ் வணங்குற்ற நோயைத் தெளியவறிந்து சொல்லுவீராமின் எ-று.
குறுகா அசுரர் நிணம் குற்றவேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் அணங்குற்ற - சென்று
சேராத வசுரருடைய நிணத்தைக்குற்ற சூல வேலையுடைய சிவனது சிற்றம்பலத்தை நெஞ்சாலுறாதரைப்
போல அணங்குற்றவெனக் கூட்டுக
இளமைகூறிய வதனாற் பிறிதொன்று சிந்திக்கப்பட்டா ளென்பது கூறினாளாம். இவையிரண்டிற்கும்
மெய்ப்பாடு: மருட்கை. பயன். தலைமகட்குற்ற துணர்த்தல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெருமை கொண்ட கட்டைத் தொடங்கினது .
செய்யுள் : சுணங்கு பொருந்தின முலைகளானவை சூதின் வடிவைப் பொருந்தின வில்லை: இன்னும்
வார்த்தை (கள்) தெளிந்தனவில்லை : நன்மையும் தீமையும், அறிகிற பக்குவத்தை அடைந்திலள்; தன்னை வந்து
சேராத அசுரருடைய நிணத்தைக் குத்திப்பறித்த சூலவேலினையுடைய சிவனென்னும் திரு நாமத்தை யுடையவன்,
அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நெஞ்சிலே பொருந்தாதாரைப் போலே தெய்வத்தை ஒப்பாள் உற்ற நோய்,
தாய்மார் நீங்கள் விசாரித்துச் சொல்லுவீராக வேண்டும். 283
19. கலக்கமுற்று நிற்றல்*
----------------------
* பேரின்பப் பொருள் : ''சிவத்துயிர் சேர்ந்த திறமுல கறிதல், அருள் கண்டிதுவழி யாமோ வென்றது .
கலக்கமுற்று நிற்றல் என்பது செவிலி கட்டுவைப்பியா நிற்ப, இவளுள்ள மோடியவாறு முழுதையும்
புலப்படுத்தி நம்மை வருத்தி, அயலார் அன்று மொழியாத பழியையும் வெளிப்படச் சொல்லி எம்மிடத் துண்டாகிய
நாணினையுந் தள்ளி எங்குடியினையுங் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டு வித்தி நிற்கப்புகுகின்றது' எனத் தோழி
கலக்கமுற்று நில்லா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
மாட்டியன் றேயெம் வயிற்பெரு
நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
வாறிவ ளுள்ள மெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர் போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே
தெய்வத்தில் தெரியுமென**
எவ்வத்தின மெலிவுற்றது
**தெளியுமென என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: இவள் உள்ளம் ஓடியவாறு எல்லாம் காட்டி- இவளுள்ளமோடியவாறு முழுதையும்
புலப்படுத்தி; அன்றே நின்ற தில்லைத் தொல்லோனைக் கல்லாதவர் போல் வாட்டி- அன்று தொட்டு நின்ற
தில்லைக்கணுளனாகிய பழையோனைக் குருமுகத்தா லறியாதாரைப்போல வருந்த நம்மை வாட்டி;
ஏர் குழலார் அன்று மொழியாதன வாய்திறந்து- அலர் தூற்றி அவ்வேர்குழலாராகிய வயலார் அன்று
மொழியாத பழியையும் வெளிப்படச்சொல்லி; இனி எம் வயின் பெரு நாண் மாட்டி அன்றே- இப்பொழு
தெம்மிடத்துண்டாகிய பெருநாணினை மாள்வித்தல்லவே; மாக் குடிமாசு ஊட்டி அன்றே நிற்பது-
எம் பெருங் குடியைக் குற்றப்படுத்தியல்லவே இக்கட்டுவித்தி நிற்பது! இனியென் செய்தும் ! எ-று.
மூள்வித்தற்கண் மூட்டியென நின்றவாறுபோல மாள்வித்தற்கண் மாட்டி என நின்றது;
தள்ளியென்னும் பொருள்பட நின்றதென்பாருமுளர். நிற்பதென்றதனை முன்னை யதனோடுங் கூட்டுக.
இவளென்றது கட்டுவித் தியையென்று, இவணிற்ப தெனக் கூட்டித் தலைமகள் கூற்றாக வுரைப்பினுமமையும்,
தில்லைக்கணின்ற நாள் இந்நாளென் றுணர லாகாமையின் அன்றே நின்றவென்றார். தெய்வம் கட்டுக்குரிய
தெய்வம் மெய்ப்பாடு: இளிவரல், பயன்: அறத்தோடு நிற்றற் கொருப்படுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தெய்வத்தாலே தெளிவு மென்று கிலேசத்தாலே மெலிவுற்றது.
செய்யுள்: இவன் உள்ளம் ஓடின வழியெல்லாம் காட்டி அன்று தொட்டு நின்ற பெரும்பற்றப்புலியூரில்
பழையவனைச் சீலி (2) யாதவர்களைப் போலே வாடப்பண்ணி அழகிய கூந்தலினையுடையவள் அன்று
வாய் திறந்து சொல்லத்தகாதனவற்றை இப்பொழுது வாய்திறந்து சொல்லும்படி பண்ணி எம்மிடத்துண்டாகிய
பெரிய நாணத்தை இப்பொழுது மாளப் பண்ணி யல்லவோ இக்குடியை மாசு உண்ணப் பண்ணுவித்தல்லவோ
இவள் நிற்பது. 284
20. கட்டுவித்தி கூறல்*
---------------------
*பேரின்பப் பொருள் ; ' சிவமுயி ருற்ற திவ்வியந் தெரிந்தது'
கட்டுவித்தி கூறல் என்பது தோழி கலக்கமுற்று நில்லா நிற்ப, இருவரையு நன்மையாகக் கூட்டுவித்த
தெய்வம் புறத்தார்க்கிவ் வொழுக்கம் புலப்படாமல் தானிட்ட நெல்லின் கண் முருகணங்கு காட்ட, 'இதனை
யெல்லீருங் காண்மின்; இவளுக்கு முருகணங் கொழியப் பிறிதொன்று மில்லை ' யெனக் கட்டுவித்தி நெற்குறி
காட்டிக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே.
கட்டு வித்தி** விட்டு ரைத்தது
** கட்டு விச்சி என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: இது குயில் அன்றே என்னலாம் சொல்லி கூறன். இது குயிலோசையாமென்று
சொல்லலாகுஞ் சொல்லையுடையாளது கூற்றையுடையான்; சிற்றம் பலத்தான்- சிற்றம்பலத்தின் கண்ணான்;
இயல் இது அன்றே என்னல் ஆகா இறை- அவனது தன்மை யிதுவாமென்று கூறமுடியாத விறைவன்;
விறல் சேய் கடவும் மயில் இது அன்றே- அவனுடைய விறலையுடைய சேயூரு மயிலிது வல்லவே ! கொடி
வாரணம் காண்க: அதுவேயு மன்றி, அவன் கொடிக்கணுளதாகிய கோழியையும் எல்லீருங்காண்க:
வன்சூர் தடிந்த அயில் இது அன்றே- அதுவேயு மன்றி வலியனாகிய சூரைக்குறைந்த அயில் தானிது வல்லவே?
இவையெல்லாஞ் சொல்லுகின்றதென்; நெல்லில் தோன்றும் அவன் வடிவு - இப்பரப்பிய நெல்லிக்கண் வந்து
தோன்றுகின்றது அவனதுருவமாம்; இது அன்றே - இதுவல்லவே? காண்மின் எ-று.
முருகனெனவே மிருகணங்கினாளென்று கூறினாளாம். சூர்மா மரமாய் நின்றமையாற் றடிந்த வென்றாள்,
மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தன் கரும முற்றுதல், கட்டு வித்தியை வினவ, அவளறியாதாள்போல இக்கருமமுடித்தற்
பொருட்டிவ்வகை சொன்னாள். என்னை? வரை பொருட்குத் தலைமகன் போக அவன் வரவு நீட்டித்தலான்,
இவளதாற்றாமையானுண்டாகிய நோயை முருகனால் வந்ததென்றிவள் கூறலாமா? இஃதங்ஙனமாயிற்
குறியென்ப தனைத்தும் பொய்யேயாமென்பது கடா. அதற்கு விடை: குறியும் பொய்யன்று; இவளும் பொய்
கூறினாளல்லள்; அஃதெங்ஙன மெனின் :- குறிபார்க்கச் சென்றிருக்கும் பொழுதே தெய்வ முன்னிலையாகக்
கொண்டிருத்தலான்.
அத்தெய்வத்தின் வெளிப்பாட்டானே தலைமகனுடன் புணர்ச்சி யுண்மையை யறிந்தாள்.
இவளிங்ஙன மறிந்தாளென்பதனை நாமறிந்தவாறியா தினாலெனின், இக்களவொழுக்கந்
தெய்வமிடை நிற்பப் பான்மை வழியோடி நடக்கு மொழுக்கமாதலானும், சிற்றபலத்தானியல்பு
தெரிந்திராதே யென்றிவள் சொல்லுதலானும் அறிந்தாம், இப்படி வருமொழுக்கம் அகத்தமிழொழுக்க
மென்பதனை முதுபெண்டீரு மறிந்து போது கையானும், இவளுரைக்கின்றுழி முது பெண்டீரை முக
நோக்கியே சிற்றம்பலத்தானியல்பு தெரியானென வுரைத்தாள். அவரு மக்கருத்தே பற்றியும்
அதனையுணர்ந்தார் இக்கருத்தினாலும் நாமறியப்பட்டது இனி யயலாரையுஞ் சுற்றத்தாரையும்
நீக்கவேண்டுகையாலும், இக்களவொழுக்க முடியு மிடத்து வேலனைக் கூவுகையும், வெறித் தொழில்
கொள்கையும், அவ்வெறித்தொழிலை யறத்தொடுநின்று விலக்குகையும் அகத் தமிழிலக்கண மாகையின்,
முருகணங்கென்றே கூறப்பட்டது கூறியவாறாவது: குறிக்கிலக்கணம் நென் மூன்று மிரண்டு
மொன்றும்படுகை, அஃதாவது அடியுங்கொடியு மூவகையும் இதனில், .அடியாவது மயில், கொடியாவது கோழி ,
உவகையாவது வேல் - ஆதலால் முருகணங்கெனவே கூறப்பட்டதென வறிக.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : கட்டுப்படுக்குமவள் விட்டுச் சொன்னது.
செய்யுள்: குயிலோசை இதுதான் அல்லவோ என்று சொல்லா நின்ற வார்த்தையினையுடைய
தேவியைப் பாகத்தே யுடையவன், சிற்றம்பலநாதன், அவனுடைய இயல்பு இது அன்றென்று
சொல்லலாகாத சுவாமி (யினது) வெற்றியையுடைய பிள்ளை அவர் கடாவுகிற மயில் இதுவன்றோ ?
அவனுக்குக் கொடியாகிய கோழியும் பாருங்கள் ; வலிய சூரனை வெட்டின வேல் இதுவன்றோ ?
நெல்லிலே தோன்றினவன் வடிவு இதுவன்றோ ? என்ன , அவனாலே வந்ததோ காணும் என்றது. 285
21. வேலனையழைத்தல்*
-----------------------
* பேரின்பப் பொருள் : திரோதை சிவத்தின் செயல் வெளியாக்கல்
வேலனை யழைத்தல் என்பது கட்டுவித்தி முருகணங்கென்று கூறக் கேட்டு, 'இப்பாலனிக்குடியின்கட்
பிறந்து நம்மை யிவ்வாறு நிற்பித்த பண்பினுக்கு வேலன் புகுந்து வெறியு மாடுக; அதன் மேன் மறியுமறுக்க; வெனத்
தாயர் வேலனை யழையா நிற்றல். அதற்குச் செய்யுள் :
வேலன் புகுந்து வெறியா
டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
னிருந்த வெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே
வெறியாடிய வேலனைக்கூஉய்
தெறியார்குழலி தாயர்நின்றது.
இதன் பொருள்: காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற மேலன்- தன்னையடைந்த
அந்தணனை ஏதஞ் செய்யக் குறித்து அவ்விடத்துப் புகுந்த காலன் வலிகெட ஒரு கழலை வைத்து எழிலையுடைய
தில்லைக் கணின்ற எல்லாப் பொருட்கு மேலாயுள்ளான்; புகுந்து என்கண் நின்றான்- புகுந்தணியனா யென்னிடத்து
நின்றவன். இருந்த வெண்காடு அனைய பாலன் புகுந்து - அவனிருந்த வெண் காட்டை யொக்கும் இப்பிள்ளை
யிக்குடியிற் பிறந்து; இப்பரிசினின் நிற்பித்த பண்பினுக்கு-வெறியாடு வித்தலாகிய இம்முறைமைக்கணெம்மை
நிற்பித்த பண்பால்; வேலன்புகுந்து வெறி ஆடுக - வேல னீண்டுப் புகுந்து வெறியாடுவானாக; வெண்மறி அறுக்க-
பலியாக வெள்ளிய மறியையு மறுக்க எ-று,
வெறியாடுதலேயன்றி இதுவுந் தகாதென்னுங் கருத்தால், மறியறுக்கவெனப் பிரித்துக் கூறினாளாம்.
கழல்வைத்தென்றாள், எளிதாகச் செய்தலான். பாலனென்னும், பான் மயக்கம் அதிகாரப் புறனடையாற் கொள்க.
பரிசினினிற் பித்தவெண்புழி ஐந்தாவது ஏழாவதன் பொருட்கண் வந்து, சிறுபான்மை இன் சாரியை பெற்று
நின்றது. ஏழாவதற்கு இன்னென்பது தாருருபு புறனடையாற் கொள்ளினுமமையும். மெய்ப்பாடு: இளிவரல்.
பயன்: தலைமகளது வேறுபாடு நீக்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வெறியாடுவதாக வேலனை அழைத்து விட்டு நெறித்த
கூந்தலினை யுடையாளுடைய தாயார் நின்றது.
செய்யுள்: காலனானவன் அவிந்து போம்படிக் கிடந்த சீர்பாதத்தை வைத்து அழகிய பெரும்பற்றப்புலியூரிலே
எழுந்தருளி நின்ற மேலாயுள்ளவன், என்னிடத்தே புகுந்து எழுந்தருளி நின்றவன் அவன் எழுந்தருளி யிருந்த
திருவெண்காட்டை யொத்த பிள்ளையானவன் புகுந்து இம்முறைமையாலே நிறுத்தின இயல்புக்கு வேலனானவன்
புகுந்து வெறியாடவும் அமையும்; அதற்குப் பலியாக வெள்ளாட்டு மறியையும் அறுக்கவும் அமையும். 286
22. இன்னலெய்தல் *
-------------------
*பேரின்பப் பொருள்: எங்குநா மன்றி யில்லையின் பென்றது"
இன்னலெய்தல் என்பது வெறியாடுதற்குத் தயார் வேலனை யழைப்பக்கேட்ட தலைமகள், இருவாற்றானும்
நமக்குயிர் வாழு நெறியில்லை யெனத் தன்னுள்ளே கூறி இன்ன லெய்தா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
அயர்ந்து வெறிமறி ஆவி
செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
ஆதுந் துறைவனுக்கே
ஆடிய வெறியிற் கூடுவ தறியாது
நன்னறுங் கோதை இன்ன லெய்தியது.
இதன் பொருள்: வெறி அயர்ந்தும் மறி ஆவி செகுத்தும் பெயர்ந்தும் விளர்ப்பு ஒழியா விடின்-
வெறியை விரும்பியாடியும் மறியின தாவியைக்கெடுத்தும்பின்னு நிறவேறு பாடொழியா தாயின்;
அயலார் பேசுவ என்னை- அயலார் கூறுவன வென்னாம்; பிறிதின் ஒழியின் - வெறியாட்டாகிய பிறிதினால்
இவ்விளர்ப் பொழியுமாயின், துயர்ந்தும் துறைவனுக்கு என் ஆதும்- துயர முற்றும் அத்துறைவனுக்கு நாம்
மென்னாதும்! இருவாற்றானு முயிர்வாழ்தலரிது எ-று. இருவர் போந்து உயர்ந்தும் பணிந்தும் உணரானது
அம்பலம் உன்னலரின் துயர்ந்தும் யான்றலைவனென்று தம்முண்மாறுபட்ட பிரமனுமாலுமாகிய விருவர்
அந்நிலைமையினின்றும் பெயர்ந்து தழற் பிழம்பாகிய தன்வடிவை யறியலுற்று ஆகாயத்தின் மேற்
சென்றுயர்ந்தும் நிலத்தின் கீழ்ப்புக்குத் தாழ்ந்தும் அறியப்படாதவன தம்பலத்தை நினையாதாரைப்
போலத் துயர முற்றுமெனக்கூட்டுக.
மறியறுத்தற்கு முன்னுரைத்த துரைக்க. பெயர்ந்து மென மெலிந்து நின்றது, உணரானென்றது
செயப்படு பொருட்கண் வந்தது. தன்னைப்பிரிதல், துன்பமாய் இன்றியமையாத யாம் இத்தன்மைய மாகவும்,
அளிக்கின் றிலனென வுட்கொண்டு அவனை நாம் முன்னம் நெருங்க முயங்கு மன்பாமாறெல்லாம்
இன்றென்னாமென்னுங் கருத்தால், என்னாதுமென்றாள், பிறிது மொழியினென்பது பாடமாயின்,
வெறியினாற்றணியாதாதலின் இந்நோய் பிறிதென்று பிறர்மொழி யினென்றுரைக்க. மெய்ப்பாடு ;
அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: தலைமகள் தன்னெஞ்சொடு சொல்லி யாற்றுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஆடுகிற வெறியிடத்தே அவையிற்றை யறியாதே நல்ல
நறுநாற்றத்தை யுடைய மாலையினையுடையவள் கிலேசமுற்றது.
செய்யுள்: வெறியாடியும் வெள்ளாட்டு மறியின் உயிரை அழித்தும் விளர்ப்பமானது மீண்டு
போகாத பொழுது அயலாரவர்கள் என்ன சொல்லுவார்கள்? தங்கள் நிலைமையினின்றும் பெயர்ந்து
பிரும்மா விட்டுணுக்கள் இருவரும் அன்னமும் பன்றியுமாய், அன்னமாய் உயர்ந்து பறந்தும் பன்றியாய்த்
தாழ விழுந்தும் உணரப்படாதவன். அவன் திருவம்பலத்தை உணராதாரைப்போல வருந்தியும்,
அந்நியமாயிருக்கிற வெறியாட்டிலே தீரில் துறைவனுக்கே அன்பு தரக்கடவேனான் (?) 287
23. வெறிவிலக்குவிக்க நினைத்தல்.*
---------------------------------
*பேரின்பப் பொருள்: 'யாமன்றிப் பிறவிலை யென்றன் பியம்பியது.'
வெறிவிலக்குவிக்க நினைத்தல் என்பது, இருவாற்றானு நமக்குயிர்வாழு நெறியில்லை யாதலாற்
றுறைவற்குற்ற நோயைப் பிறர் சிதைக்கப்படின் நாண்டுறந்தும் வெறி விலக்கு விப்பன்' எனத் தலைமகள்
தோழியைக் கொண்டு வெறிவிலக்கு விக்க நினையாநிற்றல் அதற்குச் செய்யுள் :-
சென்றார் திருத்திய செல்லல் நின்
றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
லேன் மொழி யாது முய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
உரைப்பனிக் கூர்மறையே.
அயறரு வெறியின் மயறரு மென
விலக்க லுற்ற குலக்கொடி நினைந்தது.
இதன் பொருள்: இறை தில்லை தொழாரின் நைந்தும்; இறைவனது தில்லையைத் தொழாதாரைப்போல
வருந்தியும்- ஒன்றாம் இவட்கும் மொழிதல் கில்லேன் நாணினாலென்னோ டொன்றாயிருக்கும் என்றோழியாகிய
விவட்கு மொழியமாட்டுகிலேன்; மொழியாதும் உய்யேன்-மொழியா தொழிந்தாலும் வேறோராற்றானுயிர் வாழேன்,
ஆயினும்: குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் - இனி மணற்குன்றுகளார்ந்த துறையை யுடையவர்க்குச் சிறந்தயான்:
இக்கூர் மறை உரைப்பன் - இம் மிக்க மறையை யிவட்குரைப்பேன்; சென்றார் திருத்திய செல்லல் சிதைப்பர்
நின்றார்கள் என்றால் புணர்ந்து போயினார் மிகவுமுண்டாக்கிய இந்நோயைக் தீர்ப்பார் முருகனாகப்
பிறராக இதற்கியாதி மியைபிலாதார் சிலராயின; நன்றா அழகிது அன்றே. இது பெரிது மழகிது எ - று
நன்றாவழ கிதன்றே யென்பது குறிப்புநிறை. குன்றார் துறைவர்க்குறுவே னென்றவதனால்
நாண்டுறந்தும் மறையுரைத்தற்குக் காரணங் கூறினாளாம். இந்நோயை யேதிலார் சிதைப்ப விடேன்
மறையுரைத்தாயினும் வெறிவிலக்குவேனென்னுங் கருத்தால். நன்றா வழகிதன்றே யென்றாள்.
மயறருமென- வருத்த நமக்குண்டாமென. மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த நகை,
பயன்: வெறிவிலக்குதற் கொருப்படுதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இந்நோய்க்கு அயலார் (தரு) கிற வெறியாட்டாலே மயக்கத்தைத்
தருமென்று விலங்குவதாக நினைத்த அழகிய வஞ்சிக்கொடியை யொப்பாள் விசாரித்தது.
செய்யுள்: மறிந்தவர் உண்டாக்கின கிலேசத்தை இந்நோய்க்குச் சிறிதும் பொருத்த மின்றியே
நின்றவர்கள் போக்குவார்களாமாகில் மிகவும் அழகிதாய் இருந்ததன்றே! சுவாமியுடைய பெரும்பற்றப்
புலியூரைத் தொழாதாரைப் போல கிலேசித்தும் எனக்கு ஒன்று பட்டிருக்கிறவளுக்கும் சொல்லாதிருக் (கிறேன்);
சொல்லாதே (யும்) உயிர் வாழமாட்டேன் : மணற் குன்றுகளார்ந்த துறையினை யுடையவர்க்குப் பொருந்தின
நான் இச் சிறந்த (மறையை) யினிச் சொல்லக் கடவேன். 288
24. அறத்தொடு நிற்றலையுரைத்தல்*
---------------------------------
*பேரின்பப் பொருள்: "சிவமே யருட்குயிர்ச் செய்தியுரைத்தது'.
அறத்தொடு நிற்றலையுரைத்தல் என்பது நாண்டுறந்தும் மறையுரைத்தும் வெறிவிலக்குவிக்க
நினையா நின்ற தலைமகள் மேலறத்தொடு நிற்பாளாக, அயலாரேசுக; ஊர் நகுக; அதுவேயு மன்றி,
யாயும் வெகுள்வளாக; அதன் மேல் நீயு மென்னை முனிவாயாக; நீ தேறாயாகிற் சூளுற்றுத் தருவேன்,
யான் சொல்லுகின்ற விதனைக்கேட்பாயாக' வெனத் தோழிக்குக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
யாயுந் தெறுக அயலவ
ரேசுக ஊர் நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர் போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே
வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்
கறத்தோடு நின்ற ஆயிழை யுரைத்தது.
இதன் பொருள்: சுடர்க் குழை- சுடர்க்குழையையுடையாய்; என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை
தில்லை வாழ்த்துநர் போல தூயன் -எனது வாயையு மனத்தையும் பிரியாத விறைவனது தில்லையை
வாழ்த்துவாரைப் போலத் தூயேன்; நினக்குக் கடுஞ் சூள் தருவன் - நீதேறாயாயின் நினக்குக்கடிய
சூளுறவையுர் தருவேன் - அயலவர் ஏசுக - அயலாரேசுக : ஊர் நகுக - ஊர் நகுவதாக; - யாயுந் தெறுக-
அவற்றின் மேலே யாயும் வெகுளுவாளாக; நீயும் முனிக- அதுவேயு மன்றி நீயுமென்னை முனிவா யாக:
நிகழ்ந்தது கூறுவல் - புகுந்ததனை யான் கூறுவேன். கேட்பாயாக எ-று.
தூயனென்றது தீங்குகரந்த வுள்ளத்தேனல்ல னென்றவாறு. தூயனெனக் கென்பது பாடமாயின்,
எனக்கியான் றூயேனென்றுரைக்க. அறத்தொடு நின்ற- அறத்தொடுகூடி நின்ற. வெரீஇ யுரைத்தென வியையும் .
அலங்காரம்-பரியாயம்: பொருண்முரணுமாம் மெய்ப்பாடு: பெருமிதம்: பயன்: அறத்தொடு நிற்றல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வெறியாட்டிடத்துக்குப் பயப்பட்டுப் பயப்படுகிற தோழிக்கு
அறத்தோடு நின்ற அழகிய ஆபரணங்களை யுடையாள் சொன்னது.
செய்யுள்: என்னுடைய வாக்கினின்றும் மனத்தினின்றும் நீங்காத சுவாமி, அவனுடைய பெரும்பற்றப்புலியூரை
வாழ்த்துவாரைப் போலே உனக்கு நான் தூயேன் ; ஒளியுடையதாகிய மகரக் குழையினை யுடையாய் !
கடிய சூளு (றவைத்) தரக் கடவேன்: மாதாவும் கோபிக்க அமையும்: ஊரிலுள்ளாரும் சிரிக்க அமையும்;
நீயும் என்னை முனிய அமையும்; புகுந்தபடியைச் சொல்லக் கடவேன். 289
25. அறத்தொடுநிற்றல்*
---------------------
*பேரின்பப் பொருள்; அருட்சிவமே யெடுத்தியம்பியது.
அறத்தொடு நிற்றல் என்பது அறத்தொடு நிற்பாளாக முன்றோற்றுவாய் செய்து, எம்பெருமாற்குப்பழி
வருங் கொல்லோ' வென்னு மையத்தோடு நின்று, 'யாமுன்பொருநாள் கடற் கரையிடத்தே வண்டல் செய்து
விளையாடா நின்றேமாக, அந் நேரத்தொருதோன்றல், நும்வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்ற
பொழுது, நீ பூக்கொய்யச் சிறிது புடை பெயர்ந்தாய்; அந் நிலைமைக்கட் கீழ்க் காற்று மிகுதலாறற் கரை மேலேறுங்
கடல் மேல் வந்துற்றது; உற, யான் றோழியோ தோழியோ வென்று நின்னை விளித்தேன் ; அதுகண்டிரங்கி
அவனருளொடு வந்து தன் கையைத் தந்தான்; யானு மயக்கத்தாலே யதனை நின்கை யென்று தொட்டேன்;
அவனும் பிறிதொன்றுஞ் சிந்தியாது என்னுயிர் கொண்டுதந்து, என்னைக் கரைக்கணுய்த்துப் போயினான்;
அன்று என்னாணினால் நினக்கதனைச் சொல்லமாட்டிற்றிலேன்; இன்றிவ்வாறாயின பின் இது கூறினேன்;
இனி நினக்கடுப்பது செய்வாயாக'வெனத் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நில்லா நிற்றல்.
அதற்குச் செய்யுள் ; -
வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
றானொர் கழலவனே
செய்த வெறியி னெய்துவ தறியாது
நிறத்தொடித் தோழிக் கறத்தோடு நின்றது
இதன் பொருள்: வண்டல் உற்றேம் எங்கண் விளையாட்டைப் பொருந்தினே மாகிய வெம்மிடத்து;
ஒரு தோன்றல்- ஒருதோன்றல் ; வரிவளையீர் உண்டல் உற்றேம் என்று வந்து நின்றது ஓர் போழ்து-
வரி வளையை யுடையீர் நும் வண்டல் மனைக்கு விருந்தாய் நாமுண்ணக் கருதினோமென்று சொல்லி
வந்து நின்றதோர் பொழுதின் கண்; உடையான் புலியூர்க் கொண்டல் உற்று ஏறும் கடல் வர-உடையானது
புலியூர் வரைப்பிற் கீழ்க்காற்று மிகுதலாற் கரைமேலே வந்தேறுங் கடல் எம்மேல்வர; எம் உயிர் கொண்டு தந்து -
அதன் கணழுந்தாமல் எம்முயிரைக் கைக் கொண்டு எமக்குத் தந்து; ஓர் கழலவன் கண்டல் உற்று ஏர் நின்ற
சேரிச் சென்றான் - அவ்வொரு கழலவன் கண்டலாகிய மரமிக்கு அழகு நின்ற அச்சேரியின்கட் சென்றான்:
இனித்தக்கது செய்வாயாக எ-று.
வண்டலுற்றேமங்கணென்பது பாடமாயின் அங்க ணென்பதனை ஏழாம் வேற்றுமைப்பொருள் பட
நின்றதோரிடைச் சொல்லாக வுரைக்க புலியூர்க் கடலென வியையும். தேரிற் சென்றானென்பது பாடமாயின்
நம்மைக்காண்டல் விரும்பித் தேர்மேலேறிச் சென்றானென்றுரைக்க , தேரினென்பது கருவிப் பொருட்கண்
வந்த வைந்தாமுருபெனினுமமையும், இதற்குக் காண்டலுற்றென்பது குறுகி நின்றது. தோன்றல் கழலவன்
என்றதனால், அவனது பெருமையும், எம்முயிர் கொண்டு தந்தென்றதனால் மெய்யுறவுங் கூறினாளாம்.
மெய்ப்பாடும் பயனும் அவை'.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: செய்யப்பட்ட வெறியின் வந்து புகுதுமத்தையறியாதே
நிறமுடைத்தாகிய வளைகளையுடைய தோழிக்கு அறத்தோடு நின்றது.
செய்யுள்: விளையாட்டுப் பொருந்தின எங்களிடத்தே வந்து ஒரு தோன்றலானவன் 'அழகிய
வளைகளையுடையீர்! உங்கள் சிற்றிலிலே உண்கைக்குப் பொருந்தினோம்' என்று நின்ற அவசரத்திலே
உடையானுடைய பெரும்பற்றப் புலியூரிலே கீழ்க்காற்றுப் பொருந்துதலாலே கரையிலே ஏறுகிற
கடலானது (எம்மேல்வர) எங்கள் உயிரைப் பிழைப்பித்துக் கொண்டு தந்து கடல் மரம் பொருந்தி
அழகு நிலை நிறை சேரியிடத்தே சென்றான் வீரக்கழலினையுடையான் ஒருவன் ; இனிதக்கது
செய்வாயாக வேண்டும்.
என்ற பொருளாய் அறத்தோடு நிற்கும் பொழுது உலகினோடு மாறு கொள்ளாமையும்
தாய்காவலொடு மாறுகொள்ளாமையும் வேண்டும்; எங்ஙனமெனில் தாய்காவலொடு மாறுகொள்ளாமையாவது,
அறிவதறியாக் காலத்தே செய்ததொன் றாகையாலே தாய் காவலுடனே மாறுகொள்ளாது; தன் காவலுடனே
மாறுகொள்ளாமை, அயல் கூட்டத்தாரெல்லாரும் நிற்க.... செய்ததொன்றாகையாலே தன் காதலனுடனே
மாறுகொள்ளாது; உலகினோடு மாறுகொள்ளாமை; அறிவதறியாக்காலத்தே செய்ததொன்றை அறிந்ததற்குப்
பின்னும் அவனே தெய்வமாகக் கொள்கையினாலே உலகினோடு மாறுகொள்ளாது; கற்பினோடு மாறு
கொள்ளாமையும் அது தான் நாயகன் பெருமையுடன் மாறுகொள்ளாமை. பெண்களாயிருப்பார்
நீரிலேபுக்கு வருந்தக் கண்டிருக்கை முறைமையல்ல வாகையாலே நாயகன் பெருமையுடனே மாறுகொள்ளாது ;
நாயகிபெருமையுடனே மாறுகொள்ளாமையும் முன்பு கற்புக்குக் சொன்னது.
26. ஐயந்தீரக்கூறல்'*
-------------------
*பேரின்பப்பொருள்: 'அருளே சிவத்தை வியந்தெடுத் துரைத்தது'.
ஐயந்தீரக்கூறல் என்பது எம்பெருமாற்குப் பழிவருங் கொல்லோவென் றையுற்று அறத்தொடு நின்ற
தலைமகளது குறிப்பறிந்த தோழி, அவளையந்தீர, 'நங்குடிக்குப் பழிவரினும், அவற்குப் பழிவாராமல் மறைத்துக்
கூறுமாறென்னோ' வெனத் தான் றலைமகளைப் பாதுகாத்தல் தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் : ..
குடிக்கலர் கூறினுங் கூறா
வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்கு மொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்று நம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.
விலங்குதல் விரும்பு மேதகு தோழி
அலங்கற் குழலிக் கறிய வுரைத்தது
இதன் பொருள்: முரி புருவ வடிக்கு அலர் வேல்கண்ணி முரிந்த புருவத்தை யுடைய வடுவகிரிற் பரந்த
வேல் போலுங் கண்ணையுடையாய்; கூறா வியன் தில்லைக் கூத்தன தாள்- கூறலாகாத அகன்ற தில்லையிற்
கூத்தனுடைய தாள்களை; முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூந்துறைவற்கு வந்தன- தன் முடிக்குப் பூவாக்கும்
மொய்த்த பூவையுடைய துறையை யுடையவனுக்கு வந்த பழிகளை; சென்று நம்யாய் அறியும் - அவை
போய்ப்பரத்தலான் நம்முடைய யாயுமறியும்; படிக்கு அலர் ஆம் - அதுவேயுமன்றி உலகத்திற் கெல்லா
மலராம் அதனான் குடிக்கு அலர் கூறினும். நங்குடிக்கலர் கூறினே மாயினும்; இவை நாம் மறைக்கும்
பரிசுகள் என் - இவற்றை நாம் மறைத்துச் சொல்லும் பரிசுகளென்னோ ! எறு.
கூறாத்தாளென வியையும். வடுவகிரோடு பிற பண்பா லொக்குமாயினும் பெருமையானொவ்வா
தென்னுங் கருத்தான், வடிக்கலர் கண்ணென்றாள், வடிக்கென்னு நான்காவது ஐந்தாவதன் பொருட்கண் வந்தது,
வடித்தலான் விளங்கும் வேலெனினு மமையும். அறத்தோடு நிற்குமிடத்து எம்பெருமாற்குப்பழிபடக்
கூறுமோவென் றையுறுந் தலைமாட்கு நங்குடிக்கலர் கூறினுந் துறைவற்குப் பழி படக்கூறேனென்பதுபடக்
கூறித்தோழி யறத்தோடு நிற்றலை யுடம் படுவித்தவாறு, கூறாவென்பதற்குக் கூத்தன தாள் தனக்குக்
கூறாகவென்றும், யாயறியும் படிக்கலரா மென்பதற்கு யாயு மறியும்படியாகச் சென்றலரா மென்று
முரைப்பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளையாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வெறி விலக்குதலை விரும்புகிற மேம்பாடு தக்கத்தோழி
மாலையணிந்த கூந்தலினை யுடையாளுக்கு அறியும்படி சொன்னது,
செய்யுள்: நம்குடிக்கு இழிவு சொல்லினும் சொல்ல வொண்ணாத பெரிய பெரும்பற்றப்புலியூரில்
கூத்தனாகிய முதலியார் சீபாதங்களைத் தன்முடிக்குப் பூவாகக் கொள்ளுகிற பூவுடைத்தாகிய
துறையையுடையவற்கு, வளைந்த புருவத்தினையும் வடித்த அலருடைத்தாகிய வேலையொத்த
கண்களையுமுடையாய்! நமக்கு வந்த குற்றங்கள் நம்முடைய யாயானவள் அறியும்படி, சென்று
அலராக நின்றன; இவையிற்றை நாம் மறைக்கும்படி என் தான் சொல்லுவாயாக வேண்டும். 291
27. வெறிவிலக்கல்*
------------------
*பேரின்பப் பொருள்: அருள்பிறி தொன்று மிலையுயிர் சிவமே, யாதல் கண்டவேதியம்பியது.
வெறிவிலக்கல் என்பது தலைமகளை ஐயந்தீர்த்து வெறிக் களத்தே சென்று, வேலனை நோக்கி,
'புனலிடை வீழ்ந்து கெடப்புக வந்தெடுத்துய்த்த கதிர்த்தோணிற்க, இந் நோய் தீர்த்தற்குப் பிறிதோருபாயத்தைக்
கருது நின்னைப்போல இவ்வுலகத்தின் கண் அறிவுடையாரில்லை' யென, மேலறத்தொடு நிற்பாளாகத் தோழி
வெறி விலக்கா நிற்றல், அதற்குச் செய்யுள்:
விதியுடை யாருண்க வேரி
விலக்கலம் அம்பலத்துப்
பதியுடைய யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள் நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடைய யார்தெய்வ மேயில்லை
கொல் இனி வையகத்தே
அறத்தொடு நின்ற திறத்தினிற்பாங்கி
வெறி விலக்கிப் பிறிதுரைத்தது.
இதன் பொருள்: விதியுடையார் உண்க வேரி - இவ்வெறி யாட்டு விழவின் வேரியுண்ண விதியுடையவர்கள்
வேரியுண்ண வமையும் விலக்கலம் - யாமதனை விலக்கேம். அது கிடக்க ; அம்பலத்துப் பதி உடையான்
பரங்குன்றினின் பாய் புனல் யாம் ஒழுக - அம்பலமாகிய விருப்பிடத்தை யுடையானது பரங்குன்றினிடத்துப்
பரந்த புனலோடே யாமொழுக: கதி உடையான் கதிர்த் தோள் நிற்க-எடுத்தற் பொருட்டு ஆண்டு வரவை
யுடையவனாயவ னுடைய ஒளியையுடைய தோள் கணிற்க; வேறு கருது நின்னின் மதி உடையார் இந்நோய்
தீர்த்தற்கு வேறோருபாயத்தைக் கருது நின்னைப்போல் அறிவுடையார்; தெய்வமே -தெய்வமே,
வையகத்து இனி இல்லை கொல்-இவ்வுலகத்து இப்போழ் தில்லைபோலும் எ.று.
இவ்வாறு கூறவே, நீ கூறியதென்னென்று கேட்ப அறத்தொடு நிற்பாளாவது பயன். அம்பலத்தென அத்துச்
சாரியை அல்வழிக்கண் வந்தது. ஒரிடத்தா னொதுக்கப்படா மையிற் பதியுடையவனென்று சொல்லப்படாதவன்
அம்பலத்தின் கண் வந்து பதியுடையனாயினா னென்பதுபட வுரைப்பினு மமையும். பரங்குன்றினினென் பதற்குப்
'பாலன் புகுந்திப் பரிசினி னிற்பித்த' (திருக்கோவை, 286) என்ற தற்குரைத்த துரைக்க ஒழுக வென்னும்
வினையெச்சம் கதியையுடைவென்னும் வினையெச்சம் கதியையுடையானென்னு மாக்கத்தையுட்கொண்ட
வினைக் குறிப்புப் பெயரோடு முடியும் கதி -ஆண்டுச்சென்ற செலவு கதிர்த் தோணிற்கவென்பதற்கு
எடுத்தற்பொருட்டு அவன்றோள் வந்து நிற்க வென்று பொருளுரைத்து, அவ்வெச்சத்திற்கு முடிபாக்கினுமமையும்.
மதியுடையா ரில்லை கொல் லென்பது குறிப்பு நிலை. அறத்தொடு நின்ற திறத்தினில் - அறத்தோடு நின்ற
தன்மைத்தாக. பிறிது- புனலிடையவன் வந்துதவின வுதவி மெய்ப்பாடு: பெருமிதத்தைச் சார்ந்த நகை.
பயன்: குறிப்பினால் வெறிவிலக்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு': அறத்தொடு நின்ற முறைமையாலே பாங்கியானவள்
வெறிவிலக்கிப் பிறிதொன்றைச் சொன்னது.
செய்யுள் : மதுவுண்ண விதியுடையார் உண்ண அமையும்: இது விலக்கற்போந்தோ மல்லோம்;
திருவம்பலத்தை இருப்பிடமாகவுடையவன் அவனுடைய திருப்பரங்குன்றினிடத்துப் பரந்த புனலிலே
நாங்கள் முழுகிப் போக விரைந்து வருகிற (வார்த்தை யுடைய)வன் , அவனுடைய ஒளியுடைத்தாகிய
தோள்களானவை நிற்க நோய்க்குக் காரணமாக வேறே (எண்ணும்) உன்னிலும் காட்டில் இந்நோய்க்குக்
காரணம் வேறே தேடித் திரிகிற உன்னைப்போலே மதியுடையார் உலகத்து ஒருவரும் இல்லைபோலே
இருந்தது: [தெய்வமே!]
28. செவிலிக்குத் தோழி யறத்தொடுநிற்றல் *
-----------------------------------------
*பேரின்பப் பொருள் : திரோதைக் கருளே சென்றியம் பியது.
செவிலிக்குத் தோழி யறத்தொடு நிற்றல் என்பது வெறி விலக்கி நிற்ப, நீ வெறிவிலக்குதற்குக்
காரணமென்னோ வென்று கேட்ட செவிலிக்கு, 'நீ போய்ப் புனங்காக்கச் சொல்ல, யாங்கள் போய்த்
தினைக்கிளி கடியா நின்றோம்; அவ்விடத் தொரு யானைவந்து நின் மகளை யேதஞ் செய்யப்புக்கது;
அதுகண்டு அருளுடையானொருவன் ஓடி வந்தணைத்துப் பிறிதொன்றும் சிந்தியாமல் யானையைக்கடிந்து
அவளதுயிர் கொடுத்துப்போயினான்; அறியாப் பருவத்து நிகழ்ந்ததனை இன்றறியும் பருவமாதலான்,
உற்றார் குரியர் பொற்றொடி மகளிர்' என்பதனையுட்கொண்டு இவ்வாறுண் மெலியா நின்றாள்;
இனியடுப்பது செய்வாயாக' வெனத் தோழி அறத்தொடு நில்லா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
மனக்களி யாய்இன் றியான்மகிழ்
தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே
சிறப்புடைச் செவிலிக், கறத்தொடு நின்றது.
இதன் பொருள்: மனக் களியாய் இன்று யான் மகிழ் தூங்க உள்ளக் களிப்புண்டாய்
இன்றியான் மகிழ் தூங்கும் வண்ணம்; தன் வார்கழல்கள் எனக்கு அளியா நிற்கும் அம்பலத்தோன் இருந்தண் கயிலை-
எனக்குத் தன்னுடைய நீண்ட கழலையுடைய திருவடிகளை யளியா நிற்கும் அம்பலத்தானது பெரிதாகிய
குளிர்ந்த கயிலைக்கண்; புனச் செவ்வாய்ப் பசிய கிளி யாம் கடியும் வரைச் சாரல் பொருப்பிடத்து- எம் புனத்தின்
கண் வருஞ் செவ்வாயையுடைய பசிய கிளிகளை யாங் கடியும் வரையடியினுண்டாகிய பொருப்பிடத்தின் கண்
வந்து; ஒருவர்- ஒருவர் ; சினக்களி யானை கடிந்தார்- எம்மேல்வருஞ் சினத்தையுடைய களி யானையை
மாற்றினார்; இனியடுப்பது செய்வாயாக எ-று
கயிலை யென்றது கயிலையை யணைந்த விடத்தை கடியும் பொருப்பென வியையும். வரை- உயர்ந்தவரை.
பொருப்பு - பக்க மலை. கிளிகடியும் பருவமென்றதனாற் கற்பினோடு மாறு கொள்ளாமை முதலாயின கூறினாளாம்.
மெய்ப்பாடு: அது. பயன்: வெளிப்படையா லறத்தொடு நிற்றல்,
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: சிறப்புடைச் செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றபடி.
செய்யுள் : உள்ளக்களிப் (புண்டு), இப்பொழுது நான் செம்மாந்திருப்பத் தன்னுடைய வார்கழலணிந்த
சீபாதங்களை எனக்குத் தாரா நிற்கிற திருவம்பலநாதன். அவனுடைய மிகவுந் தட்பத்தினையுடைய பெரிய
ஸ்ரீகயிலாசத்தில் சினக்களியானையை ஓட்டினாரொருவர் : சிவந்த வாயினையும் பச்சென்ற நிறத்தினையு
முடைத்தாகிய புனத்திற் கிளியை நாங்கள் ஓட்டுகிற மலையிற் சாரலுடைத்தாகிய பக்கமலையிடத்தே
ஓட்டினார் ஒருவரென்ன அவர்க்கு வரைந்து கொடுக்கவேண்டும் என்றுபடும். 293
29. நற்றாய்க்குச் செவிலியறத்தொடு நிற்றல்*
----------------------------------------
*பேரின்பப் பொருள் : திரோதை பரைக்குச் சென்றியம்பியது.
நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு நிற்றல் என்பது தோழி யறத்தொடு நிற்பக்கேட்ட செவிலி ,
இளையளாகிய இல்வாழ்க்கைச் செல்வத்தையுடைய விவளை என் சொல்லிப் புகழுவோம்? முன்னெழுமிரண்டெயிறு
முளையாத விளமைப் பருவத்தே அறிவு முதிர்ந்தாள் எனத் தலைமகளது கற்புமிகுதி தோன்ற நற்றாய்க்
கறத்தொடு நில்லா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
இளையா ளிவளையென் சொல்லிப்
பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்து மன்னன்
திளையா வரும்அரு விக்கயி
லைப்பயில் செல்வியையே
கற்பினின் வழாமை நிற்பித் தெடுத்தோள்
குலக்கொடி தாயர்க் கறத்தொடு நின்றது.
இதன் பொருள்: இமையோர் முடிசாய்த்து - இமையோர் தம்முடியைச் சாய்த்து; வளையா வழுத்தாவரு
திருச்சிற்றம்பலத்து மன்னன் - வணங்கியும் வாழ்த்தியும் வருந் திருச்சிற்றம்பலத்தின்கண் உளனாகிய மன்னனது ;
திளையாவரும் அருவிக் கயிலைப் பயில் செல்வியை- திளைத்து வருமருவியையுடைய கயிலைக்கட் பயிலுந்
திருவாட்டியை; இளையாள் இவளை - இளையளாகிய விவளை : என் சொல்லிப் பரவுதும் - என்சொல்லிப் புகழ்வோம்:
ஈர் எயிறு முளையா அளவின் முதுக்குறைந்தாள்- முன்னெழு மிரண்டெயிறு முளையாத விளமைக்கண்
அறிவுமுதிர்ந்தாள் எ-று
திளைத்தல் ஈண்டிடைவிடாது அவ்விடத்தோடு பயிறல். கற்பினின்வழாமை நிற்பித் தெடுத்தோள்- கற்பினின்
வழுவாம லறிவு கொளுத்தி வளர்த்தவள். மெய்ப்பாடு- உவகை. பயன் : நற்றாய்க்கறத்தொடு நிற்றல்.
(பழையவுரைப் பொழிப்பு ). கொளு: கற்பினின்று வழுவாமற் பண்ணி எடுத்து வளர்த்த செவிலித்
தாயானவள் அழகிய வஞ்சிக் கொம்பை யொப்பாளுடைய நற்றாய்க்கு அறத்தொடு நின்றபடி.
செய்யுள்: முடியைச் சாய்த்துத் தேவர்களானவர்கள் சூழ்ந்து புகழ்ந்து வருகிற திருச்சிற்றம்பலத்துத்
தலைவன், திளைத்து வருகிற அருவியையுடைத்தாகிய ஸ்ரீ கயிலாயத்தே வாழுகிற செல்வத்தையுடைய
(வளை ) இளையாளாகிய இவளை எதைச் சொல்லிப் புகழ்வோம்? முற்படத் தோன்றக்கூடிய இரண்டு எயிறும்
தோன்றுவதற்கு முன்னே அறிவு முதிர்ந்துவிட்டாள். 294
30. தேர்வரவுகூறல்'*
------------------
*பேரின்பப் பொருள்: "அருளுயிர் வரலைச் சிவத்திற்கியம்பியது'.
தேர்வரவு கூறல் என்பது நற்றாய்க்குச் செவிலி யறத்தோடு நில்லா நிற்ப, அந்நிலைமைக்கட்
டலைமகனது தேரொலி கேட்ட தோழி, உவகையோடு சென்று. தலைமகளுக்கு அதன் வரவெடுத்துக்
கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே.
மணிநெடுந் தேரோன் அணிதினின் வருமென
யாழியன் மொழிக்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள்: மெல்லியல் - மெல்லியால்; கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன்
தில்லைக் கார்க் கடல் வாய்-கள்ளை வண்டினங்களார்த் துண்ணும் வளவிய கொன்றைப் பூவையுடையவனது
தில்லையை யணைந்த கரிய கடலிடத்து; புள் இனம் ஆர்ப்ப-ஆண்டுப் படியும் புள்ளினங் களார்ப்ப; பொரு திரை
ஆர்ப்ப- கரையைப் பொருந்திரை களார்ப்ப; புலவர்கள் தம்வள் இனம் ஆர்ப்ப- அவ்வாரவாரத்தோடு
மங்கலங் கூறும் புலவர்கடமது வள்ளிய வினமார்ப்ப; மதுகரம் ஆர்ப்ப-நறு விரையால் வண்டுகளார்ப்ப,
வலம்புரியின் வெள் இனம் ஆர்ப்ப- வலம்புரியினது வெள்ளிய வினமார்ப்ப; இன்று பெருந்தேர் வரும் - இன்று
நங்காதலர் பெருந்தேர் வாரா நின்றது எ-று.
கரந்தவொழுக்கத்து மணியொலி யவித்து வந்ததேர் வரைந் தெய்த இவ்வரவத்தோடும் வருமென
மகிழ்ந்து கூறியவாறு. கள் என்பது வண்டினுளொரு சாதியென் பாருமுளர் புள்ளினத்தையும் பொருதிரையையும் ,
அவன் வரவிற்கு உவந்தார்ப்பன போலக் கூறினாள். இதனை மிகை மொழிப்பாற் படுத்திக் கொள்க. முன்னர்த்
தலைமகன் பிரிந்தகாலத்துத் தலைமகளதாற்றாமையைத் தாமாற்றுவிக்க மாட்டாது பொறுத்துக் கண்டிருந்த
புள்ளினமுங் கடலும் அவனது தேர்வரவுகண்டு, இனிப் பிரிவும் பிரிவாற்றாமையு மில்லையென்று
மகிழ்வுற்றார்த்தன வென்றறிக. அணிதினின்வரும் - அணித்தாகவரும், மெய்ப்பாடு: பெருமிதம்,
பயன்: தலைமகளை யாற்றுவித்தல்; வரைவு மலிந்தமை யுணர்த்தலுமாம்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: மணிகட்டப்பட்ட நெடிய தேரினையுடையவன் அண்ணிதாக
வருவனென்று யாழோசையை யொத்த வார்த்தையை யுடையாளுக்குத் தோழி சொன்னது.
செய்யுள்: வண்டுச் சாதிகள் ஆரவாரித்து உண்கிற வளவிய திருக்கொன்றை (மாலையை யுடையோன்),
அவனுடைய பெரும் பற்றப் புலியூரைச் சூழ்ந்த கடலிடத்துப்புட்கள் (ஆரவாரிக்கவும்) கரையோடே பொருகிற திரைகள்
ஆரவாரிப்பவும், புலவருடைய வளவிய திரள்கள் ஆரவாரிப்பவும் (வண்டுகள் ஆரவாரிப்பவும் ) சங்கினுடைய
வெள்ளிய திரள்கள் ஆரவாரிப்பவும், மெல்லிய இயல்பினையுடையாய்! இப்பொழுது ஒரு பெரிய தேர் வாரா நின்றதுகாண்
31. மண முரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல்*
------------------------------------
*பேரின்பப்பொருள் : சிவமணமுயிர்பெறல் அருள் கண்டு மகிழ்ந்தது'.
மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் என்பது தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறா நின்ற
அந்நிலைமைக்கண் மணமுரசு கேட்டு மனையிலுள்ளார், இஃதிவளை நோக்கியொலியா நின்றது
மணமுரசென வுட்கொண்டு யாம் பூரணபொற் குடந் தோரண முதலாயினவற்றான் மனையை
யலங்கரிப்போமென மகிழ்வொடு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
பூரண பொற்குடம் வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே
நிலங்காவலர் நீண்மணத்தின்
நலங்கண்டவர் நயந்துரைத்தது.
இதன் பொருள்: தொல்மால் அயற்குங் காரணன்- பழையராகிய அரியயனுக்குங் காரணனாயுள்ளான்;
ஏர் அணி கண் நுதலோன்- அழகுண்டாகிய கண்ணையுடைய நுதலையுடையான்; கடல்தில்லை அன்ன அவனது
கடலையடைந்த தில்லையையொக்கும்; வார் அணவும் முலை மன்றல் என்று மண முரசு ஏங்கும் - வாராற்
கட்டப்படு மளவைச் சென்றணவும் முலையையுடையாளது மணமென்று மண முரசேங்கா நின்றது,
அதனால் பூரண பொற்குடம் வைக்க- வாயில் கடோறும் நீரானிறைக்கப் பட்ட பொற்குடத்தை வைக்க;
மணியு முத்தும் பொன் பொதிந்த தோரணம் நீடுக- மணி முத்தம் பொன்னின் கணழுத்திய தோரணம்
எங்கு மோங்குவதாக; தூரியம் ஆர்க்க தூரியங்கணின் றார்ப்பனவாக எ-று .
வாரணவு முலை யென்பதற்கு வாரைப் பொருந்து முலை யெனினு மமையும், மெய்ப்பாடு; உவகை.
பயன்: நகரியலங்கரித்தல்,
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பூமியைக் காக்கிறவருடைய நீண்ட மணத்தின் நன்மையைப்
பார்த்தவர்கள் விரும்பிச் சொன்னது.
செய்யுள்: பழைய மாலுக்கும் அயனுக்கும் காரணமாயுள்ளவன், அழகு பொருந்தின திருநயனத்தையும்
அழகிய திருநெற்றியினையும் உடையவன், அவனுடைய கடல் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூரையொத்த ... முலை
யினையுடையவளுடைய கலியாணம் என்று ஆரவாரியா நின்றன. (மணமுரசுகள்); நன்றாகிய நிறைந்த
பொற்கரகத்தையும் வைக்க; தோரணத்திலே நீலமணியினையும் முத்தினையும் (பொன்னையும்) நன்றாகச்
செய்யுங்கள் ; வாத்தியங்களை முழங்கச் சொல்லுக. 296
32. ஐயுற்றுக் கலங்கல்*
----------------------
*பேரின்பப்பொருள்: இன்னுமுயிர்க்கிடையூறு உண்டோ வென்றது
ஐயுற்றுக் கலங்கல் என்பது மணமுரசு கேட்டவள் மகிழ்வொடு நின்று மனையை யலங்கரியா நிற்ப,
'மிகவுங் களிப்பை யுடைத்தாய நமது சிறந்த நகரின்கண் முழங்கா நின்ற இப்பெரிய முரசம், யான் எவற்கோ
அறிகின்றிலேன்' எனத் தலைமகள் கலக்கமுற்றுக் கூறா நிற்றல் , அதற்குச் செய்யுள்:-
அடற்களி யாவர்க்கு மன்பர்க்
களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
றில்லைப் பரமன் வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
ரார்க்கும் வியன் முரசே.
நல்லவர் முரசுமற் றில்லவர்முரசெனத்
தெரிவரிதென அரிவைகலங்கியது
இதன் பொருள்: விடக்களி ஆம் நம் விழுநகர் ஆர்க்கும் வியன் முரசு- மிகவுங் களிப்புண்டாய
நமது சிறந்த வில்லின் கண் முழங்கா நின்ற இப்பெரிய முரசம் ; வெற்பின் கடக்களி யானை கடிந்தவர்க்கோ-
வெற்பின் கண் மதத்தையுடைய களியானையை நம்மேல் வராமல் மாற்றினவர்க்கோ: அன்றி நின்றவர்க்கோ -
அன்றியாது மியைபில்லாதவர்க்கோ? அறிகின்றிலேன் எ-று : துன்ப இன்பம் பட அடல் களியாவர்க்கும்
அன்பர்க்கு அளிப்பவன்- பிறவியான் வருந் துன்பமுமின்பமுங் கெட இயல்பாகிய பேரின்பத்தை
யாவராயினு மன்பரா யினார்க்குவரையாது கொடுப்போன்; களியா வண்டு அறை பொழில் தில்லைப் பரமன்-
களித்து வண்டுகளொலிக்கும் பொழிலையுடைய தில்லைக்கணுளனாகிய பரமன்; வெற்பின்- அவனது
வெற்பினெனக் கூட்டுக .
அடற்களி - அடுதல் செய்யாத பேரின்பம். அடக்களி யென்பது பாடமாயின், பேரின்பம் யானென்னு முணர்
வினைக் கெடுப்ப வென்றுரைக்க. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நாயகருடைய முரசை மற்றந்த அயலார் முரசென்று தெரிகை
யரிதென்று நாயகி கிலேசித்தது.
செய்யுள்: வெற்றியுடைத்தாகிய களிப்பைத் தனக்கு அன்பரானவர் யாவர் சிலர்க்கும் கொடுப்பவன்,
இன்ப துன்பம் படும் படிக்கு (ஈடாகத் தனக்கு ஒப்பார் சிலர் யாவர்க்கும் கொடுக்கிறவன் ) களித்து வண்டுகள்
ஆரவாரிக்கிற பொழில் சூழப்பட்ட பெரும் பற்றப்புலியூருக்குப் பழையனாகிய முதலியாருடைய மலையில்
உள்ளக் களிப்பையுடைத்தாகிய மதயானையை நம்மிடத்தில் வாராமல் ஓட்டினவர்க்கோ ? .....சிலர்க்கோ ?
மிகவும் களித்து நம்முடைய விழுமிய நகரியிலே ஆரவாரிக்கிற பெரிய முரசமானது ஆர்க்கின்றது? அறிகிறோமில்லை. 297
33. நிதிவரவுகூறாநிற்றல்*
------------------------
* பேரின்பப் பொருள்; உடல்பொரு ளுயிரின் சிவந்த தென்றது.
நிதி வரவு கூறாநிற்றல் என்பது முரசொலி கேட்டு ஐயுற்றுக் கலங்கா நின்ற தலைமகளுக்கு,
'நமர் வேண்டினபடியே அருங்கலங் கொடுத்து நின்னை வரைந்து கொள்வாராக, யானை கடிந்தார் நமது
கடைமுன் கொணர்ந்திறுத்தார் குறைவில்லாத நிதி; இதனை நீ காண்பாயாக' வெனத் தோழி மகிழ்தரு
மனத்தொடு நின்று நிதிவரவு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
என்கடைக் கண்ணினும் யான்பிற
வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.
மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
திகழ்நிதி மடந்தையகுத்** தெரிய வுரைத்தது.
**பா-ம்-திகழ்மனைக் கிழத்திக்குத்
இதன் பொருள் : கடை என் கண்ணினும்- கடையாகிய வென்னிடத்து, யான் பிற ஏத்தா வகை இரங்கித் தன்
கடைக் கண் வைத்த யான் பிறதெய்வங்களை யேத்தாத வண்ணமிரங்கித் தனது கடைக்கண்ணை
வைத்த; தண்தில்லைச் சங்கரன் தாழ் கயிலை- குளிர்ந்த தில்லைக்கணுளனாகிய சங்கரன் மேவுங்
கயிலையிடத்து: கொன்கடைக்கண் தரும் யானை கடிந்தார்- தமக்கொரு பயன் கருதாது நமக்கிறுதியைப்
பயக்கும் யானையை யன்று கடிந்தவர்; கொணர்ந்து இறுத்தார். கொணர்ந்து விட்டார், விட; கடைக்கண் முன்
வந்து தோன்றும் முழுநிதி- நங்ககடை முன்வந்து தோன்றும் குறைவில்லாத நிதி; இது காண்-
இதனைக் காண்பாயாக எ-று
என் கடைக்கண்ணினு மென்பதற்கு மொழி மாற்றாது எனது கடையாகிய நிலைமைக் கண்ணுமென்
றுரைப்பினு மமையும். கண்ணகன் ஞாலமென் புழிப்போலக் கண்ணென்பது ஈண்டுப்பெயராகலின்
ஏழனுருபு விரித்துரைக்க. கடைக் கண்ணினு மென்னும் வேற்றுமைச் சொல்லும், ஏத்தாவகை யென்னும்
வினையெச்சமுங் கடைக்கண் வைத்த வென்னும் வினை கொண்டன. கடைக்கணென்பதனை முடிவாக்கி,
என் முடிவு காலத்தும் பிறவேத்தாவகை யென்றுரைப்பாருமுளர். கொன் கடைக் கண்டரும்யானை யென்பதற்கு
அச்சத்தைக் கடைக் கண்டரும்யானையென் றுரைப்பாருமுளர் ** . வண்புகழ் - அறத்தொடு நின்று
கற்புக்காத்தலான் வந்தபுகழ். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஐயந்தீர்தல் .
**என்பவர் பழையவுரைகாரர்.
வரைபொருட்பிரிதல்* முற்றிற்று
*இயற்கைப் புணர்ச்சி முதல் வரைபொருட்பிரிதல் வரையுள்ள கிளவிக் கொத்துப் பதினெட்டும் களவொழுக்க மாகும்.
பேராசிரியர் 300- ஆம் பாடல் வரை இன்பக் களவு என்று குறிப்பிடுகின்றார்; 568-வது பக்கம் காண்க.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : மகிழ்ச்சியைத் தருகிற மனத்துடனே வளவிய புகழையுடைய
பாங்கி வளவிய மனைக்கிழத்தியாகிய நற்றாய்க்குத் தெரியும்படி சொன்னது.
செய்யுள்: கடையாகிய என்னிடத்திலும், நான் பிற தெய்வங்களை வாழ்த்தாதபடி தானே இரங்கித்
தன்னுடைய திருக்கடைக்கண் வைத்துக் குளிர்ந்த பெரும்பற்றப் புலியூரில் சங்கரனாகியவன் அவனுடைய
நீண்ட கயிலாயத்திலே அச்சத்தை (க்கடைக்கண்) தரும் யானையை ஓட்டியவர் கொண்டு வந்து விட்டார்;
உன் கடைக்கண் முன்னே பாராய்; வந்து தோன்றுகிற நம் உறவின் முறையாராலே சொல்லப்பட்ட முழுநிதியைக்
கடைக்கண் முன்னே பாராய்.
19. மணஞ்சிறப்புரைத்தல் *
-----------------------
*பேரின்பக் கிளவி: ' மணஞ்சிறப் புரைத்தல் வருமோ ரொன்பதும், உயிர்சிவ மணம்பெற் றுண்மை யின்பாகிப்,
பரை கடத்தின்பப் பண்பாய் நிற்றல்'
மணஞ்சிறப்புரைத்தல் என்பது வரைந்த பின்னர் மணஞ் சிறப்புக் கூறா நிற்றல், அது வருமாறு:-
மணமுரசு கூறன் மகிழ்ந்துரைத் தல்லொடு
வழிபாடு கூறல் வாழ்க்கை நலங் கூறல்
காதல்கட் டுரைத்தல் கற்பறி வித்தல்
கற்புப்பயப் புரைத்தல் காதன் மரு வுரைத்தல்
கலவி யுரைத்தல் கருதிய வொன்பதும்
நலமிகு மணமிவை நாடுங் காலே
இதன் பொருள்: மணமுரசுகூறல், மகிழ்ந்துரைத்தல், வழிபாடுகூறல், வாழ்க்கை நலங்கூறல்,
காதல் கட்டுரைத்தல், கற்பறி வித்தல், கற்புப்பயப்புரைத்தல், மருவுதலுரைத்தல், கலவியின்பங் கூறல்,
என விவை ஒன்பதும் மணஞ்சிறப்புரைத்தலாம். எ-று. அவற்றுள்:
1. மணமுரசுகூறல் *
------------------
*பேரின்பப் பொருள்: "உயிர்சிவ மணஞ் சிவத்துக் கருளே யுரைத்தது"
மணமுரசு கூறல் என்பது வரைபொருட் பிரிந்து வந்த பின்னர் அருங்கலம் விடுத்தற்கு முன்றிற்கணின்று
தலைமகனது முரசு முழங்கா நிற்பக்கண்டு மகிழ்வுறா நின்ற தோழி, 'நாந்துயர் தீர நம்மில்லின் கட் புகுந்து
நின்று யானைகடிந்தார் முரசுமுழங்கா நின்றது; இனியென்ன குறையுடையோம் என வரைவு தோன்ற நின்று,
தலைமகளுக்கு மணமுரசு கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
பிரசந் திகழும் வரைபுரை
யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்து நின்றே.
வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி
நிரைவளைக்கு நின்றுரைத்தது.
இதன் பொருள்: சந்த புரை மேகலையாய்- நிறத்தை யுடைய வுயர்ந்த மேகலையையுடையாய்;
எவர்க்கும் முன்னாம் அரசு- அரியயன் முதலாகிய யாவர்க்கும் முன்னாயிருக்கு மரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் -
இவ்வாறு பெரியனாயினும் எளியனாய் அம்பலத்தின் கண் எல்லாருங் காண நின்றாடு முதல்வன்;
அருள் பெற்றவரின் துயர் தீர- அவனதருளுடையவரைப் போல நாந்துயர் தீர; புகுந்து நின்று; பிரசம் திகழும்
வரை புரை-யானையின் பீடு அழித்தார் முரசம் திகழும்-பெருந்தேன் றிகழு மலைக்கண் வரை போலும்
யானையினது வலியை நங்காரணமாக வழித்தவரது முரசு முழங்கி விளங்கா நின்றது; முருகியம் நீங்கும்-
அதுவேயுமன்றி, வெறிகாரணமாக ஒலிக்கும் முருகியமும் நீங்காநின்றது; இனியென்ன குறையுடையோம்? எ-று.
புகுந்து நின்று திகழுமெனக் கூட்டுக. வரையுயர் யானை யென்பதூஉம் பாடம். முருகுங் கமழுமென்று
பாட மோதிக் கலியாணத்திற் குறுப்பாம் நறுவிரை நாறா நின்றனவென் றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அது .
பயன்: தலைமகளை மகிழ்வித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கலியாணம் தோன்ற மகிழ்ச்சி யுறுகிற தோழி நிரைத்த வளையினை
யுடையாளுக்கு நின்று சொன்னது.
செய்யுள்: எல்லாத் தேவர்களுக்கும் முன்னேயுண்டாகிய அரசாயுள்ளவன், திருவம்பலத்தே
நின்றாடியருளுகிற தலைவன், அவனுடைய திருவருளைப் பெற்றவர்களைப் போலே மேலான நிறமுடைத்தாகிய
மேகலாபரணத்தையுடையாய் ! கிலேசம் தீரும்படிக்கு ஈடாகப் புகுந்து நின்றுதேன் விளங்குகிற நிலையில் மலையை
யொத்த யானையின் பெருமையை அழித்தவர் முரசானது விளங்கா நின்றது; முருகனுக்குக்கொடுக்கிற
வாத்தியங்களெல்லாம் நீங்காநின்றன: ஆகையால் நீ கிலேசிக்க வேண்டாம் காண் என்றுபடும்.
2. மகிழ்ந்துரைத்தல் *
-------------------
*பேரின்பப் பொருள்: "அருளே சிவன் நாதிக் கருணை மனம் வியந்தது."
மகிழ்ந்துரைத்தல் என்பது மணமுரசொலி கேட்டதோழி, சிலம்பன் றந்த பெறுதற்கரிய தழைகளை
வாடாமல் வைத்தது அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாள்' எனத் தலைமகளைத் தன்னுள்ளே மகிழ்ந்து
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
இருந்துதி யென்வயிற் கொண்டவன்
யான்எப் பொழுதுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே
மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.
இதன் பொருள்: சிலம்பன் அரும் தழை-சிலம்பன் றந்த பெறுதற்கரிய தழைகள் ; முன் எரி வலம் செய்து -
இப்பொழுது முன் றீயை வலங்கொண்டு; இடப்பால் அருந்துதி காணும் அளவும்- பின் வசிட்டனிடப்பக்கத்துத் தோன்றும்
அருந்ததியைக் காணுமளவும்; தில்லை வாழ்த்தினர் போல் இருந்து திவண்டன- தில்லையை வாழ்த்தினரைப்போல
வாடா திருந்து விளங்கின எ-று. இருந்துதி என் வயின் கொண்டவன் - அன்பர் துதிப்ப அவர் வயிற்றான்
கொள்ளும் பெருந்துதியை என் வயினுண்டாக்கிக் கொண்டவன். யான் எப்பொழுதும் உண்ணும் மருந்து-
யானெப் பொழுது முன்னும் வண்ணஞ் சுவையுடைத்தாயதோர் மருந்து : திசைமுகன் மாற்கு அரியோன் -
இவ்வாறெனக் கெளிய னாயினுந் திசை முகற்கும் மாற்கு மரியான்; தில்லை - அவனது தில்லையெனக் கூட்டுக.
என்றது தழைகளை வாடாமல் வைத்து, அத் தழையே பற்றுக் கோடாக ஆற்றியிருந்தாளெனத்
தலைமகளை மகிழ்ந்து கூறியவாறு. திவண்டனவென்பதற்கு வாடாதிருந்து இவளைத் தீண்டி யின்புறுத்தின
வென் றுரைப்பினுமமையும். தழை வாடாதிருந்தன வென்றது முன்னர்த் தான் அவன் றந்த தழையையேற்ற
முகூர்த்தத்தைக் கொண்டியவாறு. மெய்ப்பாடு உவகை. பயன் : மகிழ்தல். வேயின மென்றோள் ( 582 )
என்னுமது தொட்டு இதுகாறும் வர இப்பாட்டுப் பத்தொன்பதும் அறத்தொடு நிலையினையும், அதன் பின்னர்
வரைதலையும் நுதலினவென்பது.
அகத்திணையின் மிகத் திகழும் இன்பக் கலவி இன்பக்களவு முற்றிற்று -எண்பத்தொராம்பாட்டு
முதல் இப்பாட்டீறாகத் தோழிபாலாய கூட்டம் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நிலைபெற்ற கலியாணத்தில் அழகிய நாற்றமுடைத்தாகிய
மாலையினையுடையாளை நல்ல நெற்றியினை யுடைய பாங்கி தன்னிலே மகிழ்ந்தது.
செய்யுள்: மிக்க துதிப்பை என்னிடத்தே கொண்டவன். நான் எப்பொழுதும் நினைக்கிற மருந்தாயுள்ளவன்
திக்குகள் தோறும் முகமுடைத் தாகிய பிரம(னுக்கும்) விட்டுணு(க்கும்) அரியனாயுள்ளவன். அவனுடைய
பெரும்பற்றப் புலியூரை வாழ்த்தினவரைப் போலே இருந்து விளங்கின, வலிதாக எரியை வலஞ்செய்து
வசிட்டனுக்கு இடப்பாகத்தளாகிய அருந்துதியைக் காணுமளவும் சிலம்பன் அரிய தழையை (விளங்கின) என்ன,
அவர் வரைந்து கொள்ளுவளவு அத்தழையைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஆற்றினாளென்று பாங்கு
பிரியப்பட்டுச் சொன்னது. 300
3. வழிபாடு கூறல் *
------------------
* பேரின்பப்பொருள் : அருடிரோ தைக்குயிர் அத்துவிதஞ்செப்பல்
வழிபாடுகூறல் என்பது மணஞ்செய்த பின்னர் மணமனை காணவந்த செவிலிக்கு,
'காவலர் உடம்புமுயிரும் போல ஒருவரையொருவர் இன்றியமையாமல் இவள் கருத்தைக் கடவார்
கமலங் கலந்த தேனுஞ் சந்தன மரமும் போல வியைந்து இவள் கற்புவழி நிற்றலையுடையராய்
இவள் வழியே நின்றொழுகா நின்றார்' எனத் தோழி தலைமகன் றலைமகள் வழி யொழுகா
நின்றமை கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
சீரியல் ஆவியும் யாக்கையும்
என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.
மணமனை காண வந்த செவிலிக்குத்
துணைமலர்க்கு குழலி தோழி சொல்லியது.
இதன் பொருள் : அன்னே- அன்னாய்; கார் இயல் கண்டர் வண்தில்லை வணங்கும் எம் காவலர் -கார்போலுங்
கண்டத்தை யுடையவரது வளவிய தில்லையை வணங்கு மெம்முடைய காவலர்; சீர் இயல் ஆவியும் யாக்கையும்
என்னச் சிறந்தமையால்-சீர்மையியலு முயிருமுடம்பும் போல ஒருவரையொருவர் இன்றியமையாமையால்;
கார் இயல்வாள் கண்ணி எண் அகலார்- கரிய வியல்பையுடைய வாள் போலுங் கண்ணை யுடையாளது கருத்தைக் கடவார்:
கமல கலந்த வேரியும் சந்தும் வியல் தந்தென-தாமரைப் பூவைச் சேர்ந்த தேனுஞ் சந்தன மரமும் இடத்து நிகழ்
பொருளு மிடமுமாய் இயைந்து தம் பெருமையைப் புலப்படுத்தினாற் போல இயைந்து; கற்பின் நிற்ப - இவளது
வழிபாட்டின் கண்னே நிற்பர் எ-று.
எண்ணகலா ரென்ற தனாற் காதலி யாதலும், கற்பினிற்ப ரென்றதனால் வாழ்க்கைத்துணை
யாதலுங் கூறப்பட்டன . ஆவியும் வேரியும் தலைமகட் குவமையாகவும் யாக்கையுஞ் சந்தும் தலைமகற்
குவமையாகவு முரைக்க. பிரித்துவமை யாக்காது. இவரது கூட்டத்திற்கு அவற்றது கூட்டமுவமையாக
வுரைப்பினுமமையும். காரியல் கண்டர் வண்டில்லை வணங்கு மென்ற தனான், இவரதில் வாழ்க்கை
இன்று போல என்றும் நிகழு மென்பது கூறினாளாம். இன்னேயென்பது பாடமாயின், இப்பொழுதே
யென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்- மகிழ்வித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கலியாண மனை காண வந்த செவிலிக்கு இணையொத்த
மலரணிந்த கூந்தலை யுடையாளுடைய தோழி சொன்னது.
செய்யுள்: பருவமேத்தை (யொத்த) கருமிடற்றையுடையவர். அவருடைய வளவிய பெரும்பற்றப்
புலியூரை வணங்குகிற எம்முடைய காவலரானவர் சீர்புடைத்தாகிய உடம்பும் உயிரு மென்னச் சிறந்தமையாலே
கருமை பொருந்தின ஒளியார்ந்த கண்களையுடையவளுடைய விசாரத்தினின்றும் நீங்கார்: செந்தாமரைப்
பூவிலே பொருந்தின தேனும் சந்தன மரமும் தம்மிலொத்து.... விளங்கினாற் போலத் தாயே! நாயகியுடைய
கற்பிடத்தே நிற்பர் காண். 301
4. வாழ்க்கைநலங்கூறல்*
-----------------------
* பேரின்பப்பொருள் : திரோதை பரைக்குயிர் சேரின் புரைத்தது.
வாழ்க்கை நலங்கூறல் என்பது மணமனைகண்ட செவிலி மகிழ்வோடு சென்று, 'நின்மகளுடைய
வில்வாழ்க்கை நலத்திற்கு உவமை கூறில் நின்னுடைய வில் வாழ்க்கை நலமல்லது வேறுவமையில்லை' யென
நற்றாய்க்குத் தலை மகளது வாழ்க்கை நலங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன் செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோன்
வண்டின மேவுங் குழலா
ளயல்மன்னும் இவ்வயலே.
மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது.
இதன் பொருள் : தொண்டினம் மேவும் சுடர்க் கழலோன் தில்லைத் தொல் நகரில் - தொண்டரதினத்தைப்
பொருந்துஞ் சுடர்க்கழலை யுடையவனது தில்லையாகிய பழைய நகரிடத்தில்; கண்ட இல் மேவு நம் இல் -யான்கண்ட
அவளதில்லம் மேவப்படு நமதில்லத் தோடொக்கும். அவள் நீ- அவள் நின்னோடொக்கும். தண்டு இனம் மேவும்
செழுமெல் திண் தோளவன் நின் கொழுநன் - தண்டாகிய வினத்தையொக்கும் வளவிய வாய் மெல்லியவாகிய
திண்ணிய தோள்களையுடையான் நின்கொழுநனோ டொக்கும்; அவள் தற் பணிவோள் யான்- அவடன்னைப்
பணிந்து குற்றேவல் செய்வாள் என்னோ டொக்கும்; வண்டினம் மேவும் குழலாள் அயல் இவ்வயல் வண்டினம்
பொருந்துங் குழலையு டையாள தயல இவ்வயலோ டொக்கும்; வேறு சொல்லலாவதில்லை எ-று.
கண்டவென்பது கடைக்குறைந்து நின்றது. பெண்டீர்க்கு ஊறினி தாதனோக்கித் தோளிற்கு மென்மை
கூறினால் தண்டின மென்புழி இனமென்றது சாதியை. மன்னும் : அசை நிலை; பெரும்பான்மையு மென்பதுபட
நின்ற தெனினுமமையும். கண்டென்பதனைத் தன்மைவினை யென்று, அவளில் வாழ்க்கையோர் கண்டேனென
முன் பொதுவகையாற் கூறிப்பின் சிறப்புவகையாற் கூறிற்றாக வுரைப்பாருமுளர். மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : கலியாண மனையிலே சென்று மகிழ்ச்சி விரும்புகிற செவிலித்
தாயானவள் அழகிய மனைக்கிழத்தி யாகிய நற்றாய்க்கு மிக்க சிறப்பைச் சொன்னது.
செய்யுள்: அடியார் திரள் பொருந்தின ஒளியுடைத்தாகிய சீபாதங்களையுடையவன் அவனுடைய
பெரும்பற்றப் புலியூராகிய பழைய நகரில் என்னாற் காணப்பட்ட அவளுடைய இல்லமானது: நம்முடைய
பொருந்தின இல்லத்தோடொக்கும்; உன்னை ஒத்திருப்பாள் அவள்; வளவியதாய் மெத்தென்று தண்டாயுதத்தின்
திரள்களை யொத்த தோள்களையுடையவன் உன்னுடைய கொழுநன் தானாயிருக்கும்; அவளை வணங்குகிறவள்
என்னை ஒத்திருக்கும்; வண்டுச்சாதிகள் பொருந்தின கூந்தலையுடையவளின் அயலார் நம்முடைய நிலைபெற்ற
அயலோடொப்பார்கள். 302
5. காதல் கட்டுரைத்தல் *
----------------------
*பேரின்பப்பொகுள்; 'திரோதைப் பரைகுயிர் செய்பணி யுரைத்தது..
காதல் கட்டுரைத்தல் என்பது, 'அவளில் வாழ்க்கை நலங் கிடக்க, அவன் அவண்மேல்வைத்த காதலாண்
இவையே யன்றிப் பொறையாமென்று கருதி நுதலின் கண் இன்றியமையாத காப்பாகிய பொட்டையு மணியான்;
இஃதவன் காதல் ' எனத் தலைமகனது காதல் மிகுதி கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
பொட்டணி யான்நுதல் போயிறும்
பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
ரன்றி மதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை
போலிதன் காதலனே.
சோதி வேலவன், காதல்கட் டுரைத்தது.
இதன் பொருள் : கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலன் - மகுடமாகக் கட்டப்பட்ட
அழகிய நீண்ட சடையை யுடையவனது தில்லையை யொப்பாடன்னுடைய காதலன்; பொய் போல் இடை போய்
இறும் எனப் பூண் இட்டு அணியான் - பொய்போலுமிடை போயிறு மென்று கருதிப் பூணைப் பூட்டியணியான் ;
தவிசின் மலர் அன்றி மிதிப்பக் கொடான்.மெல்லடிநோதலஞ்சித் தவிசின் மதிப்புழியும் மலரினன்றி மிதிப்பவிடான்;
வண்டு உறுதல் அஞ்சி மட்டு அணிவார் குழல் மலர் வையான்- வண்டுற்று மொய்த்தலஞ்சித் தேனை யுடையவழகிய
வார் குழலிடத்து மலர்களை வையான். இவை சொல்லுகின்றதென்; நுதல் பொட்டு அணியான்- பொறையா மென்று
நுதலின்கட் பொட்டையுமிடான் எ-று
கட்டணி வார்சடை யென்பதற்கு மிக்க அழகையுடைய சடையெனினு மமையும் . தவிசின் மிசையென்று பாட
மோதுவாருமுளர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: ஒளியுடைத்தாகிய வேலினை யுடையவன் அன்பு இயல்பைச் சொன்னது.
செய்யுள்: பொய்யையொத்த இடையானது நைந்து முறியுமென்று ஆபரணங்களைப் பூட்டி அலங்கரியான்.
படுக்கையிலே மதிக்கும் பொழுது இவள் கால் நோவுமென்று மலரின்றி மதிப்பக் கொடான் ; தேனுடைத்தாகிய
நீண்ட கூந்தலிலே வண்டுகள் (சேர்கின்றனவோ) என்று பயப்பட்டு மலரையும் வையான் : கட்டப்பட்டு அழகியதாய்
நீண்ட திருச்சடாபாரத்தை யுடையான், அவனுடைய பெரும்பற்றப் புலியூரை யொப்பாளுடைய காதலனானவன்.
(இவையித்தனையும் செய்யான் காண்; இவை செய்யாதிருக்கக் கேட்க வேண்டுமோ, இடை ஒடியுமென்று பயப்பட்டு)
நெற்றியில் திலக முதலாக இட்டு அலங்கரியான் காண். 303.
6. கற்பறிவித்தல் *
----------------
*பேரின்பப் பொருள் : திரோதை பரைக்கின்பாக வறத்திறம் உவமைத் திறந்ததா லுவந்து ரைத்தது.
கற்பறிவித்தல் என்பது தலைமகனது காதன்மிகுதி கூறின செவிலி, அதுகிடக்க, அவளவனை யொழிய
வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாளாதலான், அவன் றன்னை வணங்காத பகைவரைச் சென்றுகிட்டித்
திறைகொள்ளச் சென்றாலுந் திறை கொண்டு வந்து அவள தில்லத் தல்லது ஆண்டுத்தங்கியறியான் இஃதவரதியல்பு'
எனக்கூறி நற்றாய்க்குத் தலைமகளது கற்பறிவியா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
தெய்வம் பணிகழ லோன் தில்லைச்
சிற்றம் பலம் அனையாள்
தெய்வம் பணிந்தறி யகள்என்று
நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யனனார்
பரிசின்ன பான்மைகளே.
விற்பொலி நுதலி** கற்பறி வித்தது
** விற்பயில் நுதலிவள் ' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: தெய்வம் பணிகழலோன் தில்லைச் சிற்றம்பலம் அனையாள்-பிறரான் வழிபடப்படுந்
தெய்வங்கள் வணங்குந் திருவடிகளை யுடையவனது தில்லையிற்சிற்றம்பலத்தை யொப்பாள்; என்றும் தெய்வம்
பணிந்து அறியாள்- எஞ்ஞான்றும் வேறொரு தெய்வத்தைப் பணிந்தறியாள்; நின்று திறை வழங்காத் தெவ்வம்
பணியச்சென்றாலும்-முன்னின்று திறைகொடாத பகைவர் வந்து பணியும் வண்ணம் வினைவயிற் சென்றாலும்;
மன் வந்து அன்றிச் சேர்ந்து அறியான் - அம்மன்னவன் அவளதில்லத்து வந்தல்லது ஆண்டுத் தங்கியறியான்,
பெளவந் தந்த மணிபோலப் பெருங்குலத்துப் பிறந்த தூயோர தியல்பு இன்ன முறைமைகளையுடைய எ-று
தெவ்வு : தெவ்வமென விரிக்கும் வழி விரித்து நின்றது. தெவ்வம் பணியச் சென்றாலு மென்பதற்குத்
தெவ்வர் அம்பை யணியவென்றும், பௌவம்பணிமணி யென்பதற்குக் கடலிடத் தும்பாம்பிடத் துமுளவாகிய
முத்தும் மாணிக்கமுமென்று முரைப்பாருமுளர். *விற்பொலி நுதலி- விற்போலும் நுதலி .
* உரைப்பவர் பழையவுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : வில்லை யொத்த நெற்றியினை யுடையாளுடைய கற்பை அறிவித்தது.
செய்யுள்: பிறரால்கொண்டாடப்படும் தெய்வங்கள் வணங்குகிற சீபாதத்தையுடையவன். அவனுடைய
பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தை யொப்பாள் ஒருநாளும் தன்பர்த்தாவாகிய தெய்வம் ஒழிய வேறொரு
தெய்வத்தை வணங்கியறியா ளென்று முன்னின்று திறைகொடாத சத்துருக்கள் எதிர்ப்புத் தொடுக்கையினாலே
அவர்கள் மேல் (அம்பை) எடுத்துவிட்டுச் சென்றாலும் அவருடைய மன்னனானவன் அதைமுடித்து இவளிடத்தே
வந்து அவதரிக்குமது அல்லால் வேறொரு இடத்தில் அவதரித்தறியான்; கடல் தந்த முத்தும் பணிதந்த சிகாமணியும்
ஒத்த பெரியவமிசத்துப் பிறந்து உய்வோருடைய முறைமைகள் இத் தன்மைத் தாயிருந்தன. 304
7. கற்புப்பயப்புரைத்தல்*
-----------------------
*பேரின்பப் பொருள்; போதமின் புயிர்கெனப் பரைக்குரைத்தது.
கற்புப்பயப்புரைத்தல் என்பது கற்பறிவித்த செவிலி 'அவள் அவனை யொழிய வணங்காமையின்
அவனூருங் களிறும் வினைவயிற் சென்றால் அவ்வினை முடித்துக் கொடுத்து வந்து தன் பந்தியிடத்தல்லது
ஆண்டுத் தங்காதாதலான், அவளது கற்பு அந்திக் காலத்து வடமீனையும் வெல்லும்' என அவளது கற்புப்
பயந்தமை நற்றாய்க்குக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
சிற்பந் திகழ்தரு திண்மதில்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே
கற்புப் பயந்த, அற்புத முரைத்தது.
இதன் பொருள்: சிற்பம் திகழ் தரு திண் மதில் தில்லை -நுண்டொழில் விளங்குந் திண்ணிய மதிலையுடைய
தில்லையின்; சிற்றம்பலத்து பொற் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின் கற்பு- சிற்றம்பலத்தின்
கணுளனாகிய பொற்றகட்டு நிரைபோலுஞ் சடையை யுடையவனது பூவணத்தை யொக்கும் பொன்னினது கற்பு:
அந்திவாய் வடமீனும் கடக்கும் - அந்திக் காலத்துளதாகிய வடமீனையும் வெல்லும், அதனான் ' அவன் ஈர்ங்களிறு-
எடுத்துக்கொண்ட வினையை யிடையூறின்றி யினிதின் முடித்து அவனூரும் மதத்தா னீரியகளிறு; படி கடந்தும்
இல்பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது- நிலத்தைக் கடந்தும் இல்லின்கட் டன் பந்தியிடத்தல்லது தங்காது எ-று.
பொற்பந்தியன்ன சடையென்பதற்கு அழகிய அந்தி வானம் போலுஞ் சடையென்பாருமுளர்.
அந்திக்காலத்துக் கற்புடை மகளிராற் றொழப்படுதலின், அந்திவாய் வடமீனென்றாள். கற்புப்பயந்த
வற்புதமாவது படிகடந்துங் கடிது வரும் வண்ணம் எடுத்துக்கொண்ட வினையை யிடையூறின்றி
யினிது முடித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு; கற்புடைமையைத் தந்த அழகைச் சொன்னது
செய்யுள்: நுண்தொழில் விளங்குகிற திண்ணிய மதில் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூர்ச் சிற்றம்பலத்துளனாகிய
பொன் தகட்டு நிரையை யொத்த திருச்சடையை யுடையவனுடைய திருப்பூவணத்தை யொத்த பொன்னினுடைய
கற்பு அந்திக் காலத்து வடபால் தோன்றும் அருந்ததி கற்பையும் செயிக்கும்; அதற்குக் காரணம் தன் இல்லம் கடந்து
போனாலும் சத்துரு செயம் பண்ணி இவள் இல்லில் பந்தியிடத்தே வந்து கட்டுமதல்லது போனவிடங்களிலவதரியாது.
அவனுடைய பெரிய யானையே .
என்றது, தான் இருந்த தேசத்தில் அரசனுக்கு வெற்றியுண்டாம். ஆதலால் தன் கணவனுக்கு (ப்படி கடந்து)
செல்லவேண்டா என்பது கருத்து . 305
8. மருவுதலுரைத்தல் *
--------------------
*பேரின்பப் பொருள் : உயிரின் பொன்றாய் மருவுத லுரைத்தது.
மருவுதலுரைத்தல் என்பது கற்புப் பயப்புரைத்த செவிலி ' வேந்தற்குற்றுழிப் பிரியினும் அவனூருந்தேரும்
வினை முடித்துத் தன்னிலையி னல்லது புறத்துத் தங்காது; அவளும் அவனையொழிய மற்றோர் தெய்வமும்
மனத்தானு நினைந்தறியாள் : இஃதிவர் காதல், என அவ்விருவர் காதலும் மருவுதல் கூறா நிற்றல் அதற்குச் செய்யுள் : -
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந் **
தென்னவ னேத்துசிற் றம்பலந்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.
இருவர் காதலும், மருவுத லுரைத்தது.
** இவ்வரகுணன் முதலாம் வரகுணன் என்றும் 'கி. பி. 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னாட்டை அரசு செலுத்தியவன்
என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இவனைத் திருவாசகம். போற்றித் திருவகவல் (213-14) ''நரகொடு சுவர்க்க நானிலம்
புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி' எனக் குறிப்பாகக் குறிக்கும் என்பவர். வரகுணன் என்ற பெயர்
327-ம் பாட்டிலும் வருவதைக் காண்க .
இதன் பொருள்: மன்னவன் தெம்முனை மேல் செல்லும் ஆயினும்- மன்னவனது பகைமுனைமேலேவப் பட்டுப்
போமாயினும்; மால் அரி ஏறு அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது - பெரிய வரியேற்றை யொப்பா னூருந்தேர்
தன்னிலையினல்லது புறத்துத் தங்காது; வரகுணன் ஆம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் - வரகுணனாகிய
தென்னவனா லேத்தப்படுஞ் சிற்றம்பலத்தின் கண்ணான் : மற்றைத் தேவர்க்கு எல்லாம் முன்னவன்- தானல்லாத
வரியயன் முதலாகிய தேவர்க்கெல்லாம் முன்னே யுள்ளான், மூவல் அன்னாளும் மற்ற ஓர் தெய்வம் முன்னலள் -
அவனது மூவலை ஒப்பாளும் வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாள் எ- று
மற்றெத் தேவர்கட்கு மென்பதூஉம் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இருவரன்பும் பொருந்தின படியைச் சொன்னது.
செய்யுள்: பெருநில மன்னன் ஏவிவிட அவன் முனையிடத்தே சென்றதாயினும் பெரிய சிங்கவேற்றை
ஒப்பானுடைய தேர் பிறிதோரிடத்தும் அவதறியாது: வரகுணனாகிய பாண்டியனாலே புகழப்பட்ட திருச்சிற்றம்பலநாதன்
மற்றெல்லாத் தேவர்களுக்கு முன்னாயுள்ளவன் அவனுடைய திருமூவலைஒப்பாளும் தன்கணவனாகிய
தெய்வத்தையன்றிப் பிறிதொரு தெய்வத்தைத் தெய்வமாக நினையாள்.
9.கலவியின்பங் கூறல் *
----------------------
*'பேரின்பப் பொருள் : 'ஒன்றற் றிரண்டற் றொன்று முலவா, தொழியாததையு ரைத்தது.
கலவியின்பங்கூறல் என்பது இருவர் காதலு மருவுதல் கூறின செவிலி, ' இவ்விருவருடைய காதலுங் களிப்பும்
இன்ப வெள்ளத்திடை யழுந்தப் புகுகின்றதோ ருயிர் ஓருடம்பாற் றுய்த்த லாராமையான் இரண்டுடம்பைக் கொண்டு,
அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோ டொக்கும். அதுவன்றி அவ்வின்ப வெள்ளம் ஒரு காலத்தும்
வற்றுவதும் முற்றுவதுஞ் செய்யாது' என நற்றாய்க்கு அவரது கலவியின்பங்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே
நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங் குளத்தோ டிகுளை கூறியது.
இதன் பொருள் : ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஓர் ஆர் உயிர் - இருவரது காதலுங் களிப்பும்
இன்ப வெள்ளத் திடை யழுந்தப் புகுகின்றதோருயிர்; ஈர் உருக் கொண்டு ஆனந்த வெள்ளத்திடைத்
திளைத்தால் ஒக்கும் * - ஒருடம் பாற்றுய்த் தலாராமையின் இரண்டுடம்பைக் கொண்டு அவ்வின்ப
வெள்ளத்திடைக் கிடந்து திளைத்ததனோ டொக்கும். அதுவேயு மன்றி: அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்து
அறை கழலோன் அருள் பெற்றவரின் - அம்பலத்தைச் சேர்ந்த வின்பவெள்ளத்தைச் செய்யு மொலிக்குங்
கழலை யுடைத்தாகிய திருவடியை யுடையவனதருளைப் பெற்றவரின்பம் போல ஆனந்த வெள்ளம் வற்றாது-
இவ்வின்ப வெள்ளமும் ஒரு காலத்துங் குறைவுபடாது ; இவ்வணிநலம் முற்றாது - இவ்வணி நலமு முதிராது எ-று
* திருக்கோவையார் 71-விளக்கக் குறிப்பு நோக்குக.
இவை யைந்திற்கும் மெய்ப்பாடு: உவகை- பயன்: மகிழ்தல்,
மணஞ்சிறப்புரைத்தல் ** முற்றிற்று
** மணஞ்சிறப்புரைத்தல் முதல் பரத்தையிற்பிரிவு வரையுள்ள கிளவிக் கொத்து ஏழும் கற்பொழுக்கமாகும்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நல்லநெற்றியினையுடைய நாயகி தான் பெற்ற நலத்தைப் பார்த்து
மகிழ்ச்சி மிக்க உள்ளத் தோடே தோழி சொன்னது.
செய்யுள்: இன்பவெள்ளத்தே அழுந்தக்கடவதோர் அரியவுயிர் இரண்டு வடிவு கொண்டு காமவின்பம்
துய்த்தல் காரணமாக வற்றாத இன்பம் வளரும் திருவம்பலத்தைப் பொருந்தின இன்பவெள்ளத்தைத் தருகிற
வீரக்கழல் ஆரவாரிக்கிற சீர்பாதங்களை யுடையவன், அவனுடைய திருவருளைப் [பெற்றவர்களை]ப் போலே
இவ்வின்பம் ஒருநாளும் குறையாது; இவ்வழகிய நன்மை முதிருவதும் செய்யாது; நீர்க்கடலுக்கு ஒரு நாளிலே
வற்றுவதுமுண்டு; இவ்வின்பக் கடலுக்கு அதுவில்லை. 307
20. ஓதற்பிரிவு *
---------------
* பேரின்பக் கிளவி: ''கல்வியிற் பிரிவொரு நான்குங் காதல், புல்லுமானந்த வின்பப் பூரணஞ்
சொல்லும் பயனின் றிறம் பாராட்டல்.
இனி ஓதற்பிரிவு என்பது வரைந்துகொண்ட பின்னர்த் தலைமகளுக்கு முதற்பிரிவு ஓதலாதலாற்
கல்வியின் மிகுதி கூறி நீங்கா நிற்றல். என்ன? ஓதல் காவல் பகைதணி வினையே, வேந்தற் குற்றுழி
பொருட்பிணி பரத்தை யென்றாங்க வாறே யவ்வயிற் பிரிவே " (இறையனாரகப் பொருள். 35)
என்றோதப்படுதலின், முதற்பிரிவோ தலாயிற்று, என்னை? இவ்வண்ணம் முன்னரோதலின்றி இவளை
வரைந்த பின்னர் ஓத நின்றானோ வெனின், அல்லன், முன்னரிவனைப் பொருவிறந்தானென்று
கூறப்படுதலால் ஓதிமுடித்தானென்பது இவன் தானோதிய புருடார்த்தமாகிய தருமார்த்த
காமங்களையொழிய வேறும் புருடார்த்தமாகக் கூறப்படுவன உளவோவென்பதனை
யாராய வேண்டுங் கருத்தினனாதலானும், கல்வியாற் றன்னிற்றாழ்ந் தாரைத் தனது கல்விமிகுதி
காட்டி அவர்களை யறிவித்தல் தரும நூல் விதியாதலானும் பிரியு மென்பவாகலின், அது வருமாறு:-
கல்விநலங் கூறல் பிரிவுநினை வுரைத்தல்
கலக்கங்கண் டுரைத்தல் காதலர் தமது
வாய்மொழி கூறல் வருவன நான்குந்
தீமையில் கல்வி தேருங் காலே.
இதன் பொருள் : கல்விநலங் கூறல், பிரிவு நினைவுரைத்தல், கலக்கங்கண்டுரைத்தல், வாய்மொழிகூறித்
தலைமகள் வருந்தல் என விவை நான்கும் ஓதற்பிரிவாம் எ-று அவற்றுள் :--
1. கல்வி நலங்கூறல் *
-------------------
* பேரின்பப் பொருள் : ' இன்பனு போகனூற் பாராட்டென்னை அன்பினருளே யரற்கறி வுறுத்தல்."
கல்விநலங் கூறல் என்பது வரைந்துகொண்ட பின்னர் ஓதற்குப் பிரியலுறா நின்ற தலைமகன்,
தலைமகளுக்குப் பிரிவுணர்த்துவானாக மிகவுங் கூற்றாற் கற்றோர் நன்மைக் கெல்லையில்லாத
தன்மையராவரெனத் தோழிக்குக் கல்வி நலங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் : -
சீரள வில்லாத் திகழ்தரு
கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவு சென்
றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
ராகுவ ரேந்திழையே
கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது
இதன் பொருள்: ஏந்திழை -ஏந்திழையாய்; சீர் அளவு இல்லாத் திதழ்தரு கல்விச் செம்பொன்
வரையின் ஆரளவு இல்லா அளவு சென்றார்-நன்மைக்கெல்லையில்லாத விளங்குங் கல்வியாகிய
மேருக் குன்றத்தினது மிக்கவள வில்லாத வெல்லையை யடைந்தவர்கள்; அம்பலத்துள் நின்ற ஓரளவு
இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல் அம்பலத்தின் கணின்ற ஓரளவையுமில்லாத
ஒப்பில்லாதவனுடைய பெரிய திருவடிகளையறிந்து நினைந்த வரைப்போல; ஏர் அளவு
இல்லா அளவினர் ஆகுவர்-நன்மைக் கெல்லையில்லாத தன்மையராவர் எ-று.
செம்பொன் வரை யென்றான், தூய்மையும் பெருமையுங் கலங்காமையு முடைமையால்
கற்றதின் மேலுங் கற்க நினைக்கின்றனாதலான்,ஆரளவில்லா வளவு சென்றா ரென்றான் ஆரளவு,
காதமும் புகையு ** முதலாயின அளவு ஓரளவென்பது காட்சியும் அனுமானமு முதலாயினவளவு. இது
குறிப்பெச்சம். செல்வத்தவர் - இல்வாழ்க்கைச் செல்வத்தவர். அறிவறிவித்தது- அரியப் படுவதனை
யறிவித்தது. பாங்கி யறிவறித்ததென்பது* பாடமாயின், தலைமகனது குறிப்பைக் கண்டுதோழி
தலைமகட்குக் குறிப்பினாற் கூறினாளாக வுரைக்க மெய்ப்பாடு: பெருமிதம், பயன் : பிரிவுணர்த்தல்.
**புகை - யோசனை தூரம்
* என்பது பழையவுரைகாரர் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : இல்வாழ்கைச் செல்வத்தை யுடையாயவர் கல்வி
காரணமாகப் பிரிவரென்று செறிந்த கூந்தலினையுடைய பாங்கி அறியத்தகுவதான
பிரிவை அறிவித்தது.
செய்யுள்: சிறப்புக்கு எல்லையில்லாது விளங்கா நின்ற கல்வியாகிய மகாமேருவின் மிக்க
அளவுகளால் அளவிட வெண்ணாத எல்லையை யடைந்தவர்கள் (மிக்க அளவாவன, காதமென்றும்
புகையென்றும் சொல்லுகிற எண்ணிலக்கணங்கள்) திருவம்பலத்தே நின்றருளின ஒன்றாலும்
அளவிடப்படாத ஒருவன் தான் (இங்கு ஒன்றாலும் என்றது. காட்சியாலும் அனுமானத்தாலும்)
அவனுடைய பெரிய திருவடிகளை நினைத்தவர்களைப் போலே (திருவடிக்குப் பெருமையாவது
அடைந்தாரை விடாமை) அழகுக் கெல்லையில்லாத அளவையுடையவர்கள். ஆபரணங்களையுடையாய்
ஆவர். (என்று உலகத்தார் மேலே வைத்துச் சொல்ல நம்முடைய நாயகரும் பிரிவார் என்பது கருத்து). 308
2. பிரிவுநினைவுரைத்தல் *
-------------------------
* பேரின்பப்பொருள்: அறியார் போன்றிருக்கு மனுபவ விலக்கண மென்றரு ளின்புக் கன்பற்ற துரைத்தது.
பிரிவுநினைவுரைத்தல் என்பது கல்விநலங் கேட்டதோழி அவன் பிரிதற் குறிப்பறிந்து, மிகவுங்கற்றோர்
நன்மைக் கெதிரில்லாத தன்மையராவ ரென்பதனை யுட்கொண்டு, நின் புணர்முலை யுற்ற புரவலர்,
அழற்கானத்தே போய்க் கல்வியான் மிக்காரைக்கிட்டி அவரோடு உசாவித் தங்கல்வி 'மிகுதி புலப்படுத்தப்
பிரியா நின்றார்' எனத் தலை மகன் ஓதுதற்குப் பிரிவு நினைந்தமை தலைமகளுக்குக் கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
வீதலுற் றார்தலை மாலையன்
தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார் செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.
கல்விக் ககல்வர் செல்வத் தவரெனப்
பூங்குழல் மடந்தைக்குப் ** பாங்கி பகர்ந்தது
** 'பூங்குழை மாதர்க்குப்' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: செல்வீ - செல்வீ; வீதல் உற்றார் தலை மாலையன் - கெடுதலையடைந்தவர்
தலையானியன்ற மாலை யையுடையான் : தில்லைக்கோன்- தில்லைக்கணுளனாகிய பெரியோன்:
கழற்கே காதல் உற்றார் நன்மை கல்வி தரும் என்பது கொண்டு - அவனுடைய திருவடிக்கே யன்புற்றாரது
நன்மையைக் கல்வி தருமென்பதனைக் கருதி; ஓதல் உற்றார் உற்று ஓதுதலான் மிக்காரைக் கிடைத்து;
உணர்தல் உற்றார்- எல்லா நூல்களையு முணர்தலுற்று; நின் புணர்முலை உற்ற புரவலர் - நின்
புணர்முலையைச் சேர்ந்த புரவலர்; செல்லல் மல் அழல் கான் போதல் உற்றார் - இன்னாமையைச்
செய்யும் மிக்க வழலையுடைய கானகத்தைப் போக நினைந்தார் எ-று.
ஒத்தான் உயர்ந்தாரைக் கிடைத்து அவரோடுசாவித் தமது கல்வி மிகுதியை யறியலுற்றா
ரென்றுரைப்பாருமுளர். உணர்த லுற்றா ரென்பதனை முற்றாகவுரைப்பினு மமையும். நின்புணர்
முலையுற்றவென்றதனான், முலையிடத்துத் துயிலை நினைந்து நீட்டியாது வருவரென்றும்,
புரவலரென்ற தனான், நின்னலந் தொலையாமற் காப்பரென்றுங் கூறிப் பிரிவுடம்படுத்தாளாம்.
செல்வத்தவரென்றது ஈண்டுத் தலைமகனை. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம்.
பயன்: பிரிவுணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: இல்வாழ்க்கையுடைய நம் நாயகரும் கல்வி காரணமாகப்
பிரியா நின்றாரென்று பொலிவையுடைத்தாகிய குழைகளையுடைய நாயகிக்குத் தோழி சொன்னது.
செய்யுள்: செத்தவருடைய தலைகளால் தொடுத்த மாலையினை யுடையவன்,
பெரும்பற்றப்புலியூரில் மேலானவன், அவனுடைய திருவடிகளுக்கே அன்புற்றவர்கள் பெறும் நன்மையை,
இல்வாழ்க்கைச் செல்வத்தையுடையாய்! கல்வி தாவற்று என்னும் இதனைப் புத்தி பண்ணி ஓதலால்
மிக்காரைக் கிட்டி உணர்வதாக நினைந்து நிறைந்த கிலேசமுடைத்தாகிய வளவிய அழலுடைத்தாகிய
காட்டிலே போவதாக நினைத்தார் காண். உன்னுடைய தம்மிற் பொருந்தின முலைகளிலே அன்பு செய்த
நாயகர் போனாலும், தாழார் என்பது கருத்து. 309
3. கலக்கங்கண்டுரைத்தல் *
-------------------------
*பேரின்பப் பொருள்: 'இன்பிற் பிரிவிலை யென்றருள் கண்டது.'
கலக்கங்கண்டுரைத்தல் என்பது பிரிவு நினைவிரைப்பக் கேட்ட தலைமகளது கலக்கங்கண்ட தோழி,
'அன்பர் சொற்பா விரும்பினரென்ன, அச்சொல் இவள் செவிக்கட் காய்த்த வேல்போலச் சென்றெய்திற்று;
இனி மற்றுள்ள பிரிவை எங்ஙனமாற்றுவள், எனத் தன்னுள்ளே கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கற்பா மதிற்றிலைச் சிற்றம்
பலமது காதல் செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போல அன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே
ஓதற் ககல்வர் மேதக் கவரெனப்
பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது
இதன் பொருள்: கல் பா மதில் தில்லைச் சிற்றம்பலமது காதல் செய்த- கல்லாற் செய்யப்பட்ட பரந்த
மதிலையுடைய தில்லைக்கட் சிற்றம்பலமதனைக் காதலித்த; வில்பா விலங்கல் எங்கோனை விரும்பலர்
போல - வில்லாகச் செய்யப்பட்ட பரந்தமலையையுடைய எம்முடைய கோனை விரும்பாதாரைப் போல ;
அன்பர் சொல்பா விரும்பினர் என்ன-நம்மன்பர் சொல்லானியன்ற பாவாகிய நூல்களைக் கற்க
விரும்பினாரென்று சொல்ல; மெல்லோதி செவிப் புறத்து - அச்சொல் மெல்லோதியை யுடையாளது
செவிக்கண்; கொல் பா இலங்கு இலை வேல்குளித்தாங்குக் குறுகியது கொற்றொழில் பரந்த விளங்கு
மிலையையுடைய வேல் சென்று மூழ்கினாற்போலச் சென்றெய்திற்று; இனிபிரிவை யெங்ஙன மாற்றுமோ! எ.று.
பொருப்பு வில்லிமேல் விருப்புடையார் கல்விக் கடனீந்தி வருந்தாமையின் விரும்பலர்போலச்
சொற்ப விரும்பினரென்றாள் இனிவருந்தவென்பதோர் சொல்லை விரித்து விரும்பலர் போல வருந்த
அச்சொற்குறுகியதென் றுரைப்பினுமமையும். பூங்கொடி கலக்கம் பாங்கி தன்னுள்ளே சொல்லியது;
தலைமகற்குக் கூறியதென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழங்குவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : மேம்பாடு தக்கவர் ஓதுதற்குப் பிரியா நின்றார் என்று
சொல்லப் பூத்த வல்லிச்சாதி ஒப்பாள் கலங்கின படியைப் பாங்கி கண்டு சொன்னது.
செய்யுள்: கல் பரந்த மதில் சூழப்பட்ட பெரும்பற்றப்புலியூர் திருச்சிற்றம்பலத்தை விரும்பின
வில்லாகிய பரந்த மலையையுடைய எம்முடைய சுவாமியை விரும்பாதாரைப்போல வருந்த, நம் நாயகர்
சொல்லால் இயன்ற பாக்களைக் கற்க விரும்பினாரென்று சொல்ல, அச்சொல் கொல் தொழில் பரந்து
விளங்கின இலைத்தொழிலையுடைத்தாகிய வேல் சென்று மூழ்கினாற்போல மெல்லிய
மயிரினையுடையாள் செவியிடத்தே குறுகிற்று. 310
4. வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் *
------------------------------------
*பேரின்பப்பொருள்: ''பிரிவொரு காலு மின்றென வருளுக் கின்பே யன்பா யெடுத்தெடுத் துரைத்தது''.
வாய்மொழி கூறித் தலைமகள் வருந்தல் என்பது கலக்கங் கண்டுரைத்த தோழிக்கு, முன்னிலைப்
புறமொழியாக நின்னிற் பிரியேன் பிரிவு மாற்றேனென்று சொன்னவர் தாமே பிரிவராயின், இதற்கு
நாஞ்சொல்லுவ தென்னொ 'வெனத் தலைமகனது வாய் மாழி கூறித் தலைமகள் வருந்தா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
பிரியா மையுமுயி ரொன்றா
வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையல் மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.
தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப்
போதுறு குழலி புலம்பியது .**
** "பொறையழிந்தது" என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: தையல் மெய்யின் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர்-
தையலாடனது திருமேனியினின்றும் பிரியாமையைச் செய்து நின்றவனது தில்லையிற்
பெருந்தன்மையையுடைய வூரர்; பிரியாமையும்- நம்மிற் பிரியாமையையும் ; உயிர் ஒன்றாவதும்-இருவருக்கு
முயிரொன்றா தலையும்; பிரியின் பெரிதும் தரியாமையும் பிரியிற் பெரிதுமாற்றாமையையும்;
ஒருங்கே நின்று சாற்றினர்- ஒருங்கே அக்காலத்து நம் முன்னின்று கூறினார்; அன்ன புரியா மையும் இதுவே -
இப்பொழிது அவற்றுட் பிரியாமை பொய்யாகக் கண்டமையின் உயிர் வேறு படக் கருதுதலும் பிரிவாற்றுதலுமாகிய
அன்னவற்றைச் செய்யாமையும் இப்பிரியாமையோ டொக்கும்; இறு நாம் புகல்வது என்-இனி நாஞ்
சொல்வதென்! எ - று.
தையன் மெய்யிற் பிரியாத பேரன்பினோனது தில்லைக்கட்பயின்றும் அன்பு பேணாது பிரிதல் எங்ஙனம்
வல்லராயினாரென்னுங் கருத்தால், பிரியாமை செய்து நின்றோன் றில்லைப் பேரியலூரரென்றாள். பிரிவு
காணப்பட்டமையின், அன்ன வென்றது ஒழிந்த விரண்டையுமேயாம் அன்னபுரிய மையு மிதுவே என்பதற்குப்
பிரிவு முதலாகிய நமக்கின்னாதவற்றைத் தாம் செய்யாமையு மிதுவேயாயிருந்த தெனினுமமையும்.
இன்னல் புரியாமையு மிதுவேயென்று பாடமோ துவாருமுளர். மெய்ப்பாடும் பயனும் அவை.
ஓதற்பிரிவு முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (உரைகாணப்பெறவில்லை)
செய்யுள்: நம்மை விட்டு நீங்காமையும் இருவர்க்கும் உயிர் ஒன்றாவதும் எம்மை விட்டு நீங்கினால் மிகவும்
ஆற்றாமையும் ஒரு படிப்பட மாறாமல் சொன்னார்: ( அவற்றில் 'பிரியோம்' என்றது யென்று படக் கண்டோம்'.
இப்போது பிரிகையாலே), பரமேசுவரி திருமேனியினின்று நீங்காதே நின்றவன் அவனுடைய பெரும்பற்றப்
புலியூராகிப் பெரிய இயல்பாற்சிறந்த ஊரையுடையவர் நீக்கி நின்ற இரண்டும் வேறுபடாதே யிருக்குமது
இப்பிரியாமையின் விழுக்காடாயிருக்குமென்றால் இனிநாம் எதைச் சொல்வோம். 311
21. காவற்பிரிவு *
----------------
*பேரின்பக் கிளவி: காவற் பிரிவுத் துறையோ ரிரண்டுமின்பத் திறத்தை யெங்குங் காண்டல்
இனிக் காவற்பிரிவு என்பது எல்லாவுயிர்களையும் அரசன் 'பாதுகாக்க வென்னுந் தரும நூல்
விதியான் அக்காவற்குப் பிரிதல். அதுவருமாறு:-
பிரிவறி வித்தல் பிரிவுகேட் டிரங்கல்
வருபவை யிரண்டும் வையங் காவல் :
இதன் பொருள் : பிரிவறிவித்தல், பிரிவுகேட்டிரங்கல் என விவை இரண்டுங் காவற்பிரிவாம் எ-று. அவற்றுள் :
1. பிரிவறிவித்தல் *
------------------
*பேரின்பப் பொருள்: "உலகம் யாவும் இன்பாய்க் காணு, மருமை யருளே யறிந்துரைத்தது''.
பிறிவறிவித்தல் என்பது தரும நூல் விதியால் நமர் உலகத்தைப் பாதுகாப்பான் பிரியக் கருதா
நின்றாரெனத் தலைமகளுக் கறிவியா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
மூப்பான் இளையவன் முன்னவன்
பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே.
இருநிலங் காவற் கேகுவர் நமரெனப்
பொருசுடர் வேலோன் போக்கறி வித்தது.
இதன் பொருள்: கார்க் கயற் கண் பூப்பால் பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூங்கொடி - கரியகயல்
போலுங் கண்ணினையும் பூவின்கண் நறுநாற்றமுடைமையாகிய நன்மை விளங்குஞ் சுருண்ட தாழ்ந்த
குழலையுமுடைய பூங்கொடியை யொப்பாய்; மூப்பான் - எல்லார் யாக்கைக்கும் முன்னே தனதிச்சையாற்
கொள்ளப்பட்ட. திருமேனியை யுடையனாதலின் எல்லார்க்குந் தான் மூப்பான்; இளையவன்- பின்றோன்றிய
யாக்கையை யுடையா ரெல்லாரும் மூப்பவும் தான் நிலைபெற்ற விளமையை யுடையனாதலின் எல்லார்க்கு
மிளையான்;முன்னவன் - உலகத்திற்கு முன்னுள்ளோன்; பின்னவன் - அதற்குப் பின்னுமுள்ளோன்; முப்புரங்கள்
வீப்பான் - மூன்றுபுரங்களையுங் கெடுப்பான்; வியன் தில்லையான் -அகன்ற தில்லைக்கண்ணான்; அருளால் நமர்
விரி நீர் உலகம் காப்பான் பிரியக் கருதுகின்றார் - அவனதேவலால் நமர் விரிந்த நீராற் சூழப்பட்ட வுலகத்தைக்
காக்கவேண்டிப் பிரியக்கருதா நின்றார் எ-று.
தில்லையா னேவலாவது எல்லாவுயிர்களையு மரசன் காக்க வென்னுந் தரும நூல் விதி.
காத்தலாவது தன்வினை செய்வாரானுங் கள்வரானும் பகைவரானும் உயிர்கட்கு வருமச்சத்தை நீக்குதல்.
தில்லையானருளா லென்பதற்கு அவன தருளா னுலகத்தைக் காக்குந் தன்மையை யெய்தினானாதலின்
அக்காவற்குப் பிரிகின்றா னென்றுரைப்பினுமமையும். மெய்ப் பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம்.
பயன்: காவற்குப் பிரியும் பிரிவுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரிய பூமியைக் காப்பதற்காகப் போகா நின்றார் நம் நாயகரென்று
பொருகிற ஒளியையுடைய வேலவன் பிரிவை அறிவித்தது.
செய்யுள்: எல்லாப் பொருளையும் தோற்றுவிப்பது காரணமாகத் தனக்கு முன்னே ஒரு திருவடிவு
கொள்கையாலே மூப்பான், திருவடிவுக்கு முதிர்ச்சியில்லாமையாலே இளையவன். அவ்வடிவு கொள்வதற்கு முன்பு
முன்னவன், வடிவு தவிர்ந்த பின்பு பின்னவன், முப்புரங்களையும் அழிக்கிறவன். பெரும்பற்றப் புலியூரிலுள்ளவன்.
அவனுடைய திருவருளாலே விரிந்த நீரால் சூழப்பட்ட உலகைக் காப்பான் பிரிவதாக நினையா நின்றார்
நம்முடைய நாயகர்: கரிய கயல்போலும் கண்ணானது பாடலம்பூவின் நன்மை விளங்குகிற நெறித்து நீண்ட
கூந்தலினையுடையாய் ! பூத்த வல்லி சாதியை யொப்பாய்! 312
2. பிரிவுகேட்டிரங்கல்.*
----------------------
* பேரின்பப் பொருள்: இன்ப மநாதி யியல்பெடுத்தருளி யன்பிற் கருணை யெடுத்தியம்பியது
பிரிவுகேட்டிரங்கல் என்பது பிரிவறிவித்த தோழிக்கு, 'முற்காலத்துக் குரவர்களாற் பாதுகாக்கப்படு
நம்மை வந்து யானை தெறப்புக அதனைவிலக்கி நம்முயிர் தந்தவர், இன்று தம்மல்ல தில்லாத இக்காலத்துத்
தாம் நினைந்திருக்கின்ற திதுவே? இது தமக்குத் தகுமோ' வெனத் தலைமகனது பிரிவு கேட்டுத்
தலைமகளிரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
சிறுகட் பெருங்கைத்தின் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே
மன்னவன் பிரிவு நன்னுத லறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது.
இதன் பொருள்: கள் துறு புரி குழலாய் - பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்;
சிறுகண்- சிறிய கண்ணினையும்; பெருங்கை-பெரிய கையினையும்; திண் கோடு - திண்ணியகோட்டினையும்,
குழை செவி - குழைந்த செவியினையும்; செம்முக மாத் தெறு கட்டு அழிய முன் உய்யச் செய்தோர்- சிவந்த
முகத்தினையுமுடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து
நம்மை யுய்வித்தவர்; கருப்புச் சிலையோன் உறு கண் தழல் உடையோன் உறை சென்றுற்ற கண்ணிற் றீயையுடையவ
னுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ - கண்ணோட்ட மின்றித் தம்மல்ல
தில்லாத இக் காலத்து நினைக்கின்றதிதுவோ ! இது தகுமோ! எ-று
கருப்புச்சிலையோ னென்பதனை எழுவாயாக்கி யுரைப்பினு மமையும். தெறுகட்டழீஇ முன்னமுய்யச்
செய்தோ ரென்பது பாடமாயின், தெறுகின்றவிடத்துத் தழுவி முன்னம்மை யுய்வித்தவ ரென்றுரைக்க.
மெய்ப்பாடு: அழுகை. பயன் : செலவழுங்குவித்தல்.
காவற்பிரிவு முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகனுடைய பிரிவை நல்ல நெற்றியினையுடையாள்
அறிந்து வருத்தமுற்று மயக்கத்தையடைந்தது.
செய்யுள்: சிறிய கண்ணினையும் பெரிய கையினையும் திண்ணிய மருப்பினையும் குழைந்த
செவியினையும் சிவந்த முகத்தினையுமுடைய யானையினது கோபித்த கோப்புக்குலைய முன்பு நம்மைப்
பிழைப்பித்தவர் கருப்புவில்லையுடைய காமன் நடுவே புகப், படுகிற கண்ணிடத்தாகிய நெருப்பையுடையவன்
வாழ்கிற திருவம்பலத்தை நினையாதாரைப் போல நெருங்கிய தேனுடைத்தாகிய நெறித்த கூந்தலினை
யுடையாய்! இப்பொழுது விசாரிக்கிறது இதுவே?
என்பது, நன்மையான மாற்றல் பாதுகாக்கப்படுவ காலத்து யானை கொல்லாமற் காத்தவர்.
தம்மாற் பரிகரிக்கப்படுங்காலத்து இங்ஙனம் செய்கை தகுமோ என்று. 313
22. பகைதணிவினைப்பிரிவு *
---------------------------
*பேரின்பக் கிளவி: "பகைதணிவித்தற் றுறையோ ரிரண்டும். எங்கு மின்பக் களமென் றியறல்.
இனிப் பகைதணி வினைப் பிரிவு என்பது தம்மிற்பகைத்த வேந்தரைப் பகையைத் தணித்து
இருவரையும் பொருந்தப் பண்ணுதற்குப் பிரிவு. அது வருமாறு :-
பிரிவு கூறல் வருத்தந் தணித்த
லிருபகை தணித்தற் கேக லென்ப
இதன் பொருள் : பிரிவுகூறல், வருத்தந் வருத்தந் தணித்தல் என விவை இரண்டும் பகைதணிவினைப்
பிரிவாம் எ-று. அவற்றுள்:-
1. பிரிவுகூறல் *
-------------
* பேரின்பப் பொருள்: "உலகிலின் பன்றி யறியாமை யிலையென் றனுபவ முற்ற தருளே செப்பல்"
பிரிவுகூறல் : என்பது ஒருவர துள்ள மிகுதியை ஒருவர் தணித்தற்கரிதாகிய இருவேந்தர் தம்முட்பகைத்து
உடன் மடியப் புகுதா நின்றாரெனக்கேட்டு, அவ்விருவரையு மடக்க வல்ல திறலுடையராதலின். அவரைப்
பகை தணித்து அவர் தம்மிலொன்றுபட வேண்டி நின்னைப்பிரியக் கருதாநின்றார்' எனத் தலைமகன்
பகை தணிக்கப் பிரியலுறா நின்றமை தோழி தலைமகளுக்குக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
மிகைதணித் தற்கரி தாமிரு
வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன் தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே
துன்னுபகை தணிப்ப* மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு** முன்னி மொழிந்தது
* துன்னும்பகை தணிய, **கோதை என்பன பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: பல்பிறவித் தொகை தணித்தற்கு என்னை ஆண்டு கொண்டோன் தில்லை -
பேரருளினராதலின் தாமளிக்கு மிடத்துப் பலபிறவித் தொகையான் வருங்கழி பெருந் துன்பமுடையாரையே
வேண்டுதலின் என்னை யடிமை கொண்டவனது தில்லைக்கண்; சூழ்பொழில் வாய் முகை தணித்தற்கு
அரிதாம் புரிதாழ் தரு மொய் குழல்-சூழ்ந்த பொழிலிடத்துளவாகிய போது களாற்றனது நறுநாற்ற மாற்றுதற்
கரிதாஞ் சுருண்ட தாழ்ந்த நெருங்கிய குழலை யுடையாய்; மிகைதணித்தற்கு அரிதாம் ஒருவருள்ள
மிகுதியை ஒருவர் தணித்தற் கரிதாகா நின்ற; இருவேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்கு
நமர் படர்தல் உற்றார் - இரு வேந்தரது வெய்ய போர் நெருங்கிய பகையை மாற்றுதற்கு நமர்போக
நினைந்தார் எ-று
எளிதினிற் சந்து செய்வித்துக் கடிதின் மீள்வரென்பது பயப்ப, மிகை தணித்தற்கரிதா
மிருவேந்த ரென்றதனால், ஒத்த வலியினராதலும், வெம்போர் மிடைந்த வென்றதனால்
ஒத்த தொலைவினராதலுங் கூறினாளாம். மிகை தணித்தற் கரிதாம் பகை யெனவியையும்.
மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : பகைதணி வினையிடைப் பிரிவுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தம்மில் அடர்பட்டிருக்கிற பகைவரைத் தணிவு செய்கைக்கு
நாயகன் பிரிகிற படியை நல்ல நறுநாற்றத்தால் சிறந்த மாலையினையுடையாள் முன்னின்று சொன்னது.
செய்யுள்: தத்தம் மிகைகளை ஒருவரால் தணிவு செய்கைக்கு அரிய இரண்டு அரசருடைய
வெய்ய பூசல் நெருங்கின பகையைத் தணிவிப்பதாகப் போக நினைத்தார் நம்முடைய நாயகர்; பல பிறவித்
திரளை மாற்ற வல்ல படிக்குச் சாதனமாக என்னை அடினம கொண்டவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரைச்
சூழ்ந்த பொழிலிடத்துச் செவ்விய அரும்புகளாலும் தாழ்வுபடுத்த வொண்ணாத நாற்றத்தை உடைத்தாய
நெறித்த நீண்ட கூந்தலினை யுடையாள்!
ஒருவரை ஒருவர், மிகை தணித்தற் கரியவர் என்றமையால் இவர் சொல்லுமளவில் கடுகச்
சந்து செய்வரென்பது கருத்து. 314
2 வருத்தந்தணித்தல்*
-------------------
*பேரின்பப் பொருள்: வேறாய்க் காண்டலனுபவ மன்றென அருளே யுருக்கத் தான் மிக வறிந்தது
வருத்தந்தணித்தல் என்பது தலைமகனது பிரிவுகேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்தா நின்ற
தலைமகளை, 'நின்னைவிட்டு அவர் பிரியார்: நீ நெருப்பையுற்ற வெண்ணெயும் நீரையுற்ற வுப்பும் போல
இவ்வாறுருகித் தனிமையுற்று வருந்தாதொழி' யெனத் தோழி அவளது வருத்தந் தணியா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மென இங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.
மணிப்பூண் மன்னவன் தணப்பதில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
இதன் பொருள்: மிக்க விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து-தன்கண் மிக்க விருப்புறுமவரை
விண்ணோரினு மிகச் செய்து; நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திருநுதல் -
பகைவர் மாய விதிர்க்கப் படுஞ் சூலவேலை யுடையவனது தில்லையை யொக்குந் திரு நுதால்;
பொருப்பு உறு தோகை பொருப்பைச் சேர்ந்த மயில்போல்வாய், நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என-
தீமையுற்ற வெண்ணெயும் நீரை யுற்ற வுப்பும் போல; இங்ஙனே புலம்புறல்- இவ்வாறுருகித் தனிமை யுறாதொழி;
அன்பர் போக்குப் பொய்- அன்பர் போக்குப் பொய். எ-று
மிகுத்தென்னும் வினை யெச்சம் திருப்புறுசூல மென்புழித் திருப்பென்பதனோடு முடிந்தது .
மெய்ப்பாடு: பெருமிதம், பயன் : தலைமகளை யாற்றுவித்தல்.
பகைதணி வினைப்பிரிவு முற்றிற்று
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மணி யழுத்தப்பட்ட பூணினையுடைய நாயகன், பிரிவதில்லை,
அஞ்சாதுகொள், பொய் காண் என்று நாயகியைத் தணித்தது.
செய்யுள்: மிக்க அன்பு செய்கிறவர்களைத் தேவர்களில் மேலாக்கிச் சத்துருக்கள் இறந்து படத் திரிக்கப்பட்ட
திரிசூலத்தையுடையவன், அவனுடைய பெரும்பற்றப்புலியூரை யொத்த திரு நுதலே ! மலையிலே பொருந்தின
மயிலையொப்பாய் ! அன்பர் போவிகுப் பொய்காண்; (ஆதலால்) நெருப்பிலே உற்ற வெண்ணெய் உருகினாற்
போலவும் நீரிலே உற்ற உப்பு (க்கரைந்தாற் ) போலவும் இப்படிக் கிலேசியாதே கொள்.
23. வேந்தற்குற்றுழிப்பிரிவு *
--------------------------
*பேரின்பக் கிளவி : ' உற்றுழிப் பிரிவீ ரெட்டுமா னந்தம், பெற்றவாராமை முற்று முரைத்தல்'
இனி வேந்தற்குற்றுழிப்பிரிவு என்பது ஒருவேந்தனுக்கொரு வேந்தன் றொலைந்து வந்தடைந்தால்
அவனுக்குதவி செய்யப் பிரியா நிற்றல், அது வருமாறு:
பிரிந்தமை கூறல் பிரிவாற் றாமை
கார் மிசை வைத்தல் வானைநோக்கி
வருந்தி யுரைத்தன் மலர்குழ லரிவை
கூதிர்கண்டு கவறல் குளிர்முன் பனிக்கவ
ணொந்து கூற னோக்கிப் பின் பனிக்
கிரங்கி யுரைத்த லிளவேனில் கண்டவ
னின்ன லெய்த லிதுவவர் குறித்த
பருவ மாமென வரவு கூறல்
பருவமறைத் துரைத்தன் மறுத்துரைத் தல்லொடு
தேர்வரவு கூறல் வினை முற்றி நினைத
னிலைமை நினைந் துரைத்தன் முகிலொடு கூறல்
வரவெடுத் துரைத்தன் மறவாமை கூறன்
மற்றிவை யீரெட்டு முற்றுழிப் பிரிவாம்
இதன் பொருள்: பிரிந்தமைகூறல், பிரிவாற்றாமை கார் மிசைவைத்தல், வானோக்கி வருந்தல், கூதிர் கண்டு
கவறல், முன்பனிக்கு நொந்துரைத்தல், பின்பனி நினைந்திரங்கல், இளவேனில் கண்டின்னலெய்தல்,
பருவங்காட்டி வற்புறுத்தல், பருவமன்றென்று கூறல், மறுத்துக்கூறல் , தேர் வரவு கூறல், வினை முற்று நினைதல்,
நிலைமை நினைந்துகூறல், முகிலாடு கூறல், வரவெடுத்துரைத்தல், மறவாமை கூறல் என விவை பதினாறும்
வேந்தற் குற்றுழிப் பிரிவாம் எ-று. அவற்றுள்: -
1. பிரிந்தமைகூறல் **
--------------------
* பேரின்பப்பொருள் : அருளுயி ரின்ப மடுத்தோர்க்குரிமை யென்ன வுதவியா மென்றரற் குரைத்தது.
பிரிந்தமை கூறல் என்பது, 'தம்மை வந்தடைந்த வேந்தனுக்குத் தாமுதவி செய்வாராக வெய்ய போரையுடைய
பாசறை மேல் நமர் சென்றார்; இனியவ்வேந்தன் பகைவராலிடப்பட்ட மதில் இன்றென்னாய் முடியுமோ' வெனத்
தலைமகன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமை தோழி தலைமகளுக்குக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
போது குலாய புனை முடி
வேந்தர்தம் போர் முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய் விளை கின்றதின்
றொன்னா ரிடுமதிலே
விறல்வேந்தர் வெம்முனைக்கண்
திறல் வேந்தர் செல்வரென்றது.
இதன் பொருள் : மாது குலாய மெல்நோக்கி - மடவழகு பெற்ற மெல்லிய நோக்கத்தையுடையாய்
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனைமேல் - பூவழகு பெற்ற பேணிச் செய்யப்பட்ட முடியையுடைய
வேந்தர் தமது போரையுடைய பாசறைமேல்; நமர் சென்றார்- நமர் சென்றார்; வண் புலியூர்க்காது குலாய குழை
எழிலோனைக் கருதலர்போல். வளவிய புலியூரிற் காதழகு பெற்ற குழையாலுண்டாகிய எழிலையுடையவனைக்
கருதாரைப் போல; ஒன்னார் இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது - ஒன்னாராலிடப்பட்ட மதில்
இன்றியாதாய் முடியுமோ! எ-று.
வினை முடித்துக் , கடிது மீள்வரென்பது பயப்ப, ஒன்னாரிடு மதிலின்றேயழியு மென்று
கூறினாளாம். கொல்லென்பது அசை நிலை, சென்றாரெனத் துணிவு பற்றி இறந்த காலத்தாற்
கூறினாள் திறல் வேந்தரென்றது' சாதிபற்றி யன்று; தலைமை பற்றி . மெய்ப்பாடு: அழுகையைச்
சார்ந்த பெருமிதம். பயன் : வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : வெற்றியினையுடைய அரசர் வெய்ய முனையிடத்தே
வெற்றியினையுடைய நம் அரசர் போகா நின்றார் என்றது.
செய்யுள் :பொற்பூ அழகுபெறச் சூடின முடியினையுடைய அரசருடைய போர் செய்கிற முனையிடத்தே,
அழகு வீறுபெற்ற மெல்லிய நோக்கினையுடையாய்! - நம் நாயகர் போனார்; வளவிய பெரும்பற்றப் புலியூரில்
காது அழகுபெற்ற குழையினையுடைய அழகனை நினையாதாரைப்போல ஏதாய் விளையப் புகுகின்றது
தான் இப்பொழுது சத்துருக்கள் இட்ட மதில். 316
2, பிரிவாற்றாமை கார்மிசைவைத்தல்*
-----------------------------------
*பேரின்பப் பொருள்: அனுபவ மடுத்தோர்க் கறிவித்திடவும் அன்பே யின்பா யங்குங் கலந்தது
பிரிவாற்றாமை கார்மிசைவைத்தல் என்பது பிரிவுகேட்ட தலைமகள் தனது வருத்தங்கண்டு
'காதலர் வினைவயிற்பிரிய நீ வருந்தினால்வினை முடியுமாறென்னோவென்ற தோழிக்கு, 'யானவர்
பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன்; இக் கார் முகில் சென்று அப்பாசறைக்கண்ணே தோன்று மாயின்,
நம்மை நினைந்தாற்றாராய், அவ்வினை முடிக்க மாட்டாரென்று அதற்கு வருந்துகின்றேன்' எனக்கார்
மிசை வைத்துத் தனது வருத்தங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
பொன்னி வளைத்த புனல்சூழ்
நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து ** விரிநீர்
கவரும் வியன்முகிலே.
வேந்தற்குற்றுழி விறலோன்பிரிய
ஏந்திழைபாங்கிக் கெடுத்துரைத்தது.
** 'வளைத்த' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவிப் பொலி புலியூர் - பொன்னி சுற்றுதலானுண்டாகிய
புனலாற் சூழப்பட்ட நிலை பெற்றுப் பொலிகின்ற புலியூரில்; வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர்போல்
வன்னித் தளிராற் சூழப்பட்ட நெடிய சடையை யுடையவனை வணங்காதாரைப் போல; துன்னி வளைத்த நம் தோன்றற்கு;-
இடர்ப் படப் பகைவரைக்கிட்டிச் சூழ் போகிய நம்முடைய தோன்றற்கு - மின்னி வளைத்து விரி நீர் கவரும் வியன்
முகில் மின்னி யுலகத்தை வந்து வளைத்துப் பரந்த கடலைப் பருகும் பெரிய முகில்; பாசறைக்கண் தோன்றும் கொல்-
பாசறைக் கண்ணே சென்று தோன்றுமோ!
வளைத்தலை விரிநீர்மே லேற்றினும மையும். தோன்று மாயின் ஆற்றாராவரென யானாற்றேனாகின்றே
னென்பது கருத்து பொன்னி வளைத்த புனலென்பதற்குப் பொன்னியாற் றகையப்பட்ட புனலென்றும் வன்னி வளைத்த
வென்பதற்குத் தீயை வளைத்தாற்போலுஞ் சடையென்று முரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அழுகை பயன்: ஆற்றுவித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தனக்குச் சார்வாகிய அரசனுக்கு வினையுற்றவிடத்து வெற்றியையுடைய
நாயகன் போக மிக்க ஆபரணங்களையுடைய தோழிக்கு மிகுத்துச் சொன்னது.
செய்யுள் காவேரியினின்றும் கோலப்பட்ட நீரால் சூழப்பட்ட நிலை பெற்றுச் சிறந்த பெரும்பற்றப்புலியூரில்
வன்னித்தளிரால் சூழப்பட்ட மிக்க திருச்சடையையுடையவனை வணங்கமாட்டாதாரைப் போல் வருந்த
நெருங்கிச் சென்றுவிட்டு வளைந்து கொண்ட நம் நாயகற்குப் பாசறைப் படை வீட்டிலே தோன்று (மிறே).
மின்னிப் பூமியைச் சூழ்ந்து கொண்ட (முகிலென்று கூட்டி இப்பொழுதைத் தொழிலும் முன்னைத் (தொழிலு மாக்கி)
இம்முகில், தோன்றுமோ என்று கூட்டுக.
என்று பொருளாய், இது தோன்றில் எடுத்துக் கொண்ட வினை முடியாது மீள்வரென்று கிலேசித்து
நின்றேனல்லது. அவர் பிரிவுக்குக் கிலேசிக்கின்றேனல்லேன் என்பது கருத்து. 317
3. வானோக்கி வருந்தல்.*
------------------------
*பேரின்பப் பொருள்: "அனுபவம் பிறருக் கடுத்தது கண்டவ், வின்பப் பிரிவை யெண்ணியன் பாயது''.
வானோக்கிவருந்தல் என்பது உற்றுழிப்பிரிந்த தலைமகன், 'பார்ப்புக்களோடு பெடைக்குருகைச்
சேவல் தன் சிறகா னொடுக்கிப் பனியான் வரும் மிக்க குளிரைப் பாதுகாக்கின்ற இரவின்கண் எனது
போதரவு அவளுக்கென்னாங் கொல்லலோ' வெனத் தலைமகளது வடிவை நினைந்து வானை நோக்கி
வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கோலித் திகழ்சிற கொன்றி
னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
தாங்கொலென் போதரவே
மானோக்கி வடிவுநினைந்தோன்
வானோக்கி வருந்தியது.
இதன் பொருள்: பார்ப்பொடு பெடைக் குருகு திகழ் சிறகு ஒன்றின் கோலி ஒடுக்கிப் பாலித்து -
பார்ப்புக்களோடு பெடைக்குருகை விளங்கா நின்ற சிறகொன்றினாற் கோலி யொடுக்கிப் பாதுகாத்து :
இரும் பனிசேவல்பயில் இரவின் - கொண்டற் றுவலையால் வரும் மிக்க குளிரைச்சேவல் தானுழக்கு மிரவின்கண்,
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே போலித் திருநுதலாட்கு - மாலாற் சிறிது மறியாத
அந்தணனுறையும் அம்பலத்தைப் போல்வாளாகிய திரு நுதலாட்கு: என் போதரவு என்ன தாம் கொல்- எனது
போதரவு எத்தன்மைய தாகுமோ ! எ-று.
இரவினென்னதாமென வியையும் நாம் இக்காலத்து நங்காதலிக்குப் பனிமருந்தாயிற்றிலே மென்னும்
உள்ளத்தனாகலின். பெடை யொடுக்கிய சிறகைத் திகழ்சிறகெனப் புனைந்து கூறினான்.
போலித்திருநுதலாட்கென்பதற்கு அம்பலம் போலும் இத் திருநுதலாட்கென்றுரைப்பினு மமையும் .
இத்திருநுதலா வென்றான் தன்னெஞ்சத் தளாகலின் மெய்ப்பாடு: அச்சம். பயன்: மீடற்கொருப்படுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மான் நோக்கம் போன்ற நல்ல நோக்கினையுடையாள்
அவள் வடிவை நினைத்தவன் ஆகாசத்தைப் பார்த்து வருந்தினது.
செய்யுள்: சேவலானது தன் குஞ்சுகளோடே தன்பெடைக் குருகையும் விளங்கா நின்ற சிறகொன்றாலே
கோலி ஒடுக்கி (ஒரு பக்கத்தே கொண்டு) மிக்கபனியைச் சீவிக்கிற இரவினிடத்தே (திகழ், பாதுகாக்கப்படுவாரைப்
பாதுகாத்தலாலே விளங்கின சிறகென்று புகழ்ந்தான் ; புகழவே நாமும் நம்மாற் பாதுகாக்கப் படுவாரைப்
பாதுகாத்தலே வழக்கமென்பது கருத்து) : மாலால் சிறிதும் அறியப்படாத பிராமணன் அவன் வாழ்கிற திருவம்பலத்தை
யொப்பாளாகிய அழகிய நெற்றியினையுடையாளாகிய இவளுக்கு என்ன தான் மிகவும் நான் போந்த போதரவு?
(இத்திருநுதலாள் என்று உரு வெளிப்பாடாக்கி உரைக்கவும் அமையும்) 218
4. கூதிர்கண்டுகவறல் *
---------------------
*பேரின்பப் பொருள்: "இன்பம் பாகி யிருத்தலா லுயிரையன்பே பிரிவாற் றாமை யியம்பல்''.
கூதிர்கண்டுகவறல் என்பது, ' விழா நின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத்திரளை மேவா நிற்ப,
மலைத் திரளை யேறித் துணையில்லாதாரைத் தேடும் புயலினம் நமக்கேயன்றித் தம்மை யடைந்தார்க்
குதவி செய்யச் சென்றார்க்குஞ் சென்று பொருந்துமோ? பொருந்து மாயின், நம்மை நினைந்து ஆற்றாராய்
அவ்வினை முடிக்கமாட்டார்' எனத் தலை மகள் கூதிர் கண்டு கவலா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
தோன்றச்சென் றாங்குநின்ற
பெருப்பின மேறித் தமியரைப்
பார்க்கும் புயலினமே .
இருங்கூதிர் எதிர்வுகண்டு
கருங்குழலி கவலையுற்றது
இதன் பொருள்: வீழ்பனிவாய் நெருப்பினம் மேய்-விழா நின்ற பனியிடத்து எல்லாரும் நெருப்புத் திரளை
மேவா நிற்ப; நெடுமால் எழில் தோன்றச் சென்று -நெடிய மாய வனதெழில் கண்டார்க்குப் புலப்படச் சென்று;
ஆங்கு நின்ற பொருப்பினம் ஏறி - அவ்விடத்து நின்றமலைத்திரளையேறி; தமியரைப் பார்க்கும் புயலினம் -
துணையில்லாதாரைத் தேடும் புயலினங்கள்; கருப்பினம் மேவும் பொழில் தில்லை மன்னன்கண் ஆர்அருளால்-
கருப்புத் திரள் பொருந்தும் பொழிலையுடைய தில்லையின் மன்னவன் கணுண்டாகிய மிக்கவருளான்;
விருப்பு இனம் மேவச் சென்றார்க்கும் சென்ற அல்கும் கொல் விருப்பையுடைய தம்மினந் தம்மாலுதவிபெற்றுப்
பொருந்தும் வண்ணஞ் சென்றார்க்குஞ் சென்று தங்குமோ! எ-று.
அல்குதலான்வருந் துயருறுதனோக்கிச் சென்றார்க்கு மென நான்காவதனாற் கூறினாள்
நெருப்பினமேயென்பதனைப் புயன் மேலேற்றி இடிநெருப்பென்றும், சென்றென்பதனை மலைமேலேற்றி
உயர்ந்தென்றும் உரைப்பினுமமையும். மெய்ப்பாடு : அழுகை, பயன்: தோழியை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெரிய கூதிர்க் காலம் வந்து தோன்றினமையைக் கண்டு
கருமையுடைய கூந்தலினையுடையாள் வருந்தினது.
செய்யுள் : கருப்புத்திரள் பொருந்தின பொழில்சூழ்ந்த தில்லையிடத்து மன்னனுடைய நிறைந்த
அருளாலே தம்மை விரும்பின திரள் தம்மால் உதவி பெற்று மகிழும்படி பிரிந்தவரிடத்தும் சென்று
அவதரிக்குமோ தான்? விழா நின்ற பனியிடத்தே நெருப்புத்திரளைப் பொருந்திக்கொண்டு
நெடியமாலின் அழகிய நிறம் தோன்ற அவ்விடத்தேநின்ற மலைகளின் மேலே பாய்ந்து ஏறித்தனித் தாருண்டோ
நாம் உயிர் கொள்ள வேண்டுமென்று எட்டிப்பார்க்கிற மேகத்திரள்.
5. முன்பனிக்கு நொந்துரைத்தல்*
------------------------------
* பேரின்பப் பொருள்: பிரிவன்புக் கிலையெனப் பரையை நொந்தது.
முன்பனிக்கு நொந்துரைத்தல் என்பது மக்களேயன்றிப் புள்ளுந் தம்பெடையைச் சிறகானொடுக்கிப்
பிள்ளைகளையுந் தழுவி இனஞ்சூழ வெருவாது துயிலப்பெறுகின்ற இம்மயங்கிருட் கண் இடையறாது
விழா நின்ற பனியிடைக்கிடந்து வாடித் துயர்வாயாகவென்று என்னைப் பெற்றவளை நோவதல்லது
யான் யாரை நோவேனென முன்பனிக்காற்றாது தாயொடு நொந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
சுற்றின வீழ்பனி தூங்கத்
துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
பெறுமிம் மயங்கிருளே
ஆன்றபனிக் காற்றாதழிந்
தீன்றவளை ஏழைநொந்தது.
இதன் பொருள்: புற்றில் வாள் அரவன் தில்லைப் புள்ளும் புற்றையுடையவல்லாத ஒளியையுடைய பாம்பை
யணிந்தவனது தில்லையின் மக்களே யன்றிப் புள்ளும்; பெடை சிறகான் ஒடுக்கி பெடையைச் சிறகானொடுக்கி;
தம் பிள்ளை தழீஇ - தமது பிள்ளைகளையுந் தழுவி; இனம் சூழ்ந்து துயிலப் பெறும் இம் மயங்கு இருள் - இனஞ்சூழ்ந்து
வெருவாது துயிலப் பெறுகின்ற இச்செறிந்த விருட்கண்ணே சுற்றின - மேனி யெங்குஞ்சுற்றி ; வீழ் பனிதூங்க -
வீழா நின்றபனி இடையறாது நிற்ப; துவண்டு துயர்க என்று- அதற்கோர் மருந்தின்றித் துயர்வாயாக வென்று;
எனைப் பெற்றவளே பெற்றாள்- என்னை யீன்றவளே ஈன்றாள் இனி யான் யாரை நோவது! எ-று.
சுற்றின தூங்கவென வியையும். மயங்கிருட்கட்டுயர் வாயாகவெனக் கூட்டுக. சுற்றின வென்பது
பெயரெச்சமுமாம் மற்று: அசை நிலை புற்றிலவாளரவ னென்பதற்கு முன்னுரைத்த துரைக்க ( திருக்கோவை 97)
மெய்ப்பாடு: அது பயன் : ஆற்றாமை நீக்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மிக்க பனியாலே ஆற்றாதே நெஞ்சழிந்து பெற்றதாயை நாயகி நொந்தது.
செய்யுள்: புற்றில் ஒளிசிறந்த பாம்பையுடையவன். (புற்றில்லாமை வேள்வித் தீயிலே பிறத்தமையால்.)
அவனுடைய பெரும்பற்றப் புலியூரிடத்துப் புட்சாதிகள் பெடையைத் தம்சிறகாலே ஒடுக்கிக் கொண்டு
தம்பிள்ளைகளைத் தழுவிக்கொண்டு மற்றுள்ள தம் இனத்தையும் சூழ்ந்து உறங்கப் பெறா நின்றன இந்த
மயக்கத்தையு டைத்தாகிய இருளிலே; சுற்றிக் கொண்டு வீழா நின்ற பனி: செறி ..... தே துவண்டு
வருந்துவாயாக வென்று பெற்றவளே என்னை இங்ஙனம் வருந்தும்படி பெற்றாள். 320
6. பின்பனிநினைந்திரங்கல்*
---------------------------
*பேரின்பப் பொருள்: "பிரிவுண்டே லின்பம் பெறலாமென்றுயிர் இன்ப நோக்கி யெடுத்து ரைத்தது"
பின்பனி நினைந்திரங்கல் என்பது இப்பெரியபனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு
அவள் பொறுக்கு மளவன்று; அவளைச் சொல்லுகின்றதென்! எனக்கு மாற்றுத லரிதென்பது போதர, மிக்க
தனிமையையுடையார்க்கு இப்பனி, வான் சரத்தைத் தருமாயின் அதனோடொக்கும் ' எனத் தலைமகன்
தலைமகளது துயர நினைந் திரங்கா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன் தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே
இரும் பனியின் எதிர்வு கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.
இதன் பொருள்: இரும் பனி வையம் எங்கும் பரந்து பாரித்தவா- பெரியபனி வையமெங்கும் பரந்து
துவலைகளைப் பரப்பியவாறு; தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று- தில்லையிற் சிற்றம்பலத்தை
யொப்பாளதளவன்று: மிக்க தமியருக்கு-மிக்க தனிமையை யுடையார்க்கு இப்பனி; அன்றி -உயிர் கவர வெகுண்டு;
வான் சரம் தருமேல்-வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும்- அதனோடொக்கும் எ-று. புரம் அயர அன்று
பொருப்பு வில் ஏந்தி-புரம் வருந்த அன்று பொருப்பாகிய வில்லையேந்தி; புத்தேளிர் நாப்பண்-தேவர் நடுவே;
அயனை அன்று சிரம் செற்றோன் தில்லைச்சிற்றம்பலம் - அவர்க்குத் தலைவனாகிய அயனையன்று
சிரமரிந்தவனது தில்லைச்சிற்றம்பலமெனக் கூட்டுக.
பரந்தெங்குந் தருமேலென் றியைப்பினு மமையும்-(அன்று வானென்பது பாடமாயின், வையத்தையன்றி
அவ்வானமுமென உரைக்க ). இக்காலத்து அவளாற்றாமை சொல்லவேண்டுமோ, எனக்கு மாற்றுதலரிதென்பது
போதரத் தமியருக்கெனப் பொதுமையாற் கூறினான். இதனைத் தோழி கூற்றாக வுரைப்பாருமுளர்.
மெய்ப்பாடு அது. பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : மிக்க பனிக்காலம் எதிர் கொண்ட படியைக் கண்டு வண்டுகள்
பறக்கப்பட்ட கூந்தலினை யுடையாள் கிலேசத்தை நாயகன் விசாரித்தது.
செய்யுள்: முப்புரங்களும் அன்று வருந்தும்படி மலையாகிய வில்லேந்தித் தேவர்களுக்கு நடுவே அன்று
அயனைத்தலையறுத்தவன் (தேவர்கள் நடுவே அயனைத் தலையறுத்தான் என்றது, அவர்கள் பிதாவாகிய
அவனைத் தலையறுப்ப ஒரு சேட்டையற்று நின்றான் என்பது கருத்து) அவனுடைய பெரும்பற்றப்புலியூர்
திருச்சிற்றம்பலத்தை யொப்பாளுடைய அவள் அளவல்ல. பெரும்பனி பரந்தபடி பூமியெங்கும் பரந்து
பகைத்து ஆகாசமானது சரவருஷத்தைப் பொழியுமாகில் அதனோடொக்கும். மிகவும் தனித்திருப்பார்க்கு.
என்றது. இப்பனி பொழிகிறபடி, சரவருஷம் பொழிந்தாலொக்கும் தனியேயிருப்பவர்க்கெல்லாம்.
என்ன, எனக்கும் அப்படி என்றது என்றால் அவளால் இது ஆற்றுவதன்று என்றபடி: 321
7. இளவேனில்கண்டின்னலெய்தல் *
---------------------------------
* பேரின்பப் பொருள் : 'உயிரின் பின்பே யுன்னி யுரைத்தல்'.
இளவேனில்கண்டின்னலெய்தல் என்பது மேன்மேலும் நிறம்பெற் றிருளா நின்ற இக்குயில்கள்,
மாம்பொழிலைச் சுற்றும் வந்து பற்றின; இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலேன்' எனத் தலைமகள்
இளவேனில் கண்டின்னலெய்தா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
வாழும் படியொன்றுங் கண்டிலம்
வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
ளாநின்ற கோகிலமே
இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்னலெய் தியது
இதன் பொருள்: அம் தொண்டைக் கனிவாய் அழகிய தொண்டைக்கனி போலும் வாயினையும்;
யாழின் - மொழிமங்கை பங்கன் சிற்றம்பலம் ஆதரியர் - யாழோசை போலுமினிய மொழியினையுமுடைய
மங்கையது கூற்றை யுடையானது சிற்றம்பலத்தை விரும்பாத; கூழின் மலி மனம் போன்று -உணவாற்செருக்கும்
மனம்போல : இருளா நின்ற கோகிலம் - ஒரு காலைக் கொருகால் நிறம்பெற் றிருளா நின்ற குயில்கள்!
இம்மாம் பொழில் தேன் சூழும் முகச் சுற்றும் பற்றின - இம் மாம்பொழிற்கட் குடைதலாற்றேன் சுற்று
முகமெங்கும் வந்து பற்றின : வாழும்படி ஒன்றும் கண்டிலம்- இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலேம் எ-று.
வாழியென்றது வாழ்வாயாக வென்னும் பொருட்டாய் எதிர் முகமாக்கி நின்றது. தேன் சூழுமுகைச்
சுற்றும் பற்றின வென்பது பாடமாயின் மலருமளவுங் காலம் பார்த்துத் தேன்கள் சூழு முகையென்க.
மெய்ப்பாடு அது. பயன் : ஆற்றாமை நீங்குதல்.
* "கிழவி நிலையே வினையிடத் துரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்'' (தொல், பொருள், கற்பியல், 45 )
என்பதனான், இக்கிளவியைந்தும் காலங் காட்ட வேண்டி இத்துறையுட் கூறினாரென்பது கருத்தாகக்கொள்க,
*என்பது பழையவுரைகாரர் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இனிய இளவேனிற் காலம் எதிர்கொண்டபடியைக் கண்டு மெல்லிய
முறுவலையுடைய நாயகி வருத்தமுற்றது.
செய்யுள்: வாழ்வாயாக ! ஆ தொண்டையில் அழகிய பழத்தையொத்த வாயினையுடைய யாழோசையுமொத்த
வார்த்தையினையுடைய பரமேசுவரி பாகத்தையுடையவன், அவனுடைய சிற்றம்பலத்தை அன்பு செய்யாதே
கூழ்க்களிகளாலே களிக்கும் மனங்களின் இருட்சிபோலத் தம் நிறமும் மொழுதைக்குப் பொழுது இருண்டு
செல்லாநின்றன குயில்கள் (அவை) இந்த மாம்பொழிலிடத்து வண்டுகள் சூழப்பட்ட அரும்பிடத்தே சுற்றும்
வளைந்தன வாதலால் உயிர்வாழும் உபாயமொன்றும் கண்டிலோம் . 322
8. பருவங்காட்டிவற்புறுத்தல் *
-----------------------------
*பேரின்பப் பொருள்: அருள் சிவத்துக்குயிர் வரவு நலங் கூறியது
பருவங்காட்டி வற்புறுத்தல் என்பது தலைமகன் தான் வருதற்குக் குறித்துப்போகிய
கார்ப்பருவத்தினது வரவு கண்டு கலங்காநின்ற தலைமகளுக்கு. 'இக்கார்வந்து வானிடத்துப் பரந்தமையான்
நம்மைக் கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாரா நிற்பக் காணப்படுவதே இனியுள்ளது' எனத்
தோழி அப்பருவந் தன்னையே காட்டி அவளை வற்புறுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள் :
பூண்பதென் றே** கொண்ட பாம்பன்
புலியூ ரரனமிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே
கார்வருமெனக் கலங்குமாதரைத்
தேர்வருமெனத் தெளிவித்தது.
**பழைய வுரையைக் காண்க.
இதன் பொருள்: கார் மலர்த் தேன் பாண் பதன் தேர் குழலாய்-கார்காலத்து மலரை யூதுந்தேன் பாட்டினது
செவ்வியையாராயுங் குழலையுடையாய்: பூண்பது என்றே கொண்ட பாம்பன்- பூணப்படு மணியென்றே கொள்ளப்பட்ட
பாம்பினை யுடையான்! புலியூர் அரன் - புலியூரரன்: மிடற்றின் மாண்பது என்றே எண - அவனது மிடற்றினழகதாமென்று
கருதும்வண்ணம் : எழில் வாய்த்த பனி முகில் வானின் மலரும் - எழில் வாய்த்தலையுடையவாகிய பனிமுகில்கள்
வானிடத்துப் பரவா நின்றன. அதனான் மணந்தவர் தேர் இன்று நாளை இங்கே வரக்காண்பது அன்றே -
நம்மைக்கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாரா நிற்பக் காணப்படுவ தல்லவே?
இனி யாற்றாயாகற் பாலையல்லை எ-று.
தேரிங்கே வருவதனைக் காணுமதல்லவே இனியுள்ளதென மொழிமற்றியுரைப்பினு மமையும் .
கான்மல ரென்பதூஉம், எழிலாயவென்பதூஉம் பாடம், மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம்.
பயன்: தலைமகளை வற்புறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: கார்காலம் வாராநின்றதென்று கலக்கமுற்று நாயகியை,
இனி நம் நாயகர் தேர் வருமென்று தெளியச் சொன்னது.
செய்யுள்: தேனுடைத்தாகிய மலரிலே வண்டு பொகுட்டின் செவ்வியை ஆராய்கின்ற அழகிய
கரிய கூந்தலினை யுடையாய் ! அழகு பொருந்தின குளிர்ந்த மேகங்கள் பூணப்படுவதென்றே நிச்சயித்துக்
கைக் கொள்ளப்பட்ட பாம்பை யுடையவன் ( அன்றே என்று பாடமோதி முற்காலத்தே என்றுரைப்பாருமுளர்).
பெரும்பற்றப்புலியூர்த் தலைவனுடைய திருமிடற்றினது மாட்சிமை தோன்றுகிற அதுவல்லவோ என்னும் படி
ஆகாயத்தே பரவநின்றன: ஆதலால் பொருந்தின நம்முடைய நாயகர் தேரும் இன்று நாளை இவ்விடத்தே
வரக்காண்பது அல்லவோ இனி உள்ளது? எனவே குறித்த பருவம் தப்பா தென்றது. 323
9. பருவமன்றென்று கூறல்*
------------------------
*பேரின்பப் பொருள்: அன்புயிர்ப் பருவம் இன்பலாலிலையென்றல்
பருவமன்றென்று கூறல் என்பது 'காரும் வந்தது: காந்தளும் மலரா நின்றன: காதலர்
வாராதிருந்த தென்னோ ' வென்று கலங்கா நின்ற தலைமகளுக்குச் சிற்றம்பலத்தின் கண்ணே
குடமுழா முழங்க அதனையறியாது காரென்று கொண்டு இக்காந்தண் மலர்ந்தன: நீயிதனைப் பருவமென்று
கலங்கா தொழி'யெனத் தலைமகன் வரவு நீட்டித் தலால் தோழி அவள் கலக்கந்தீரப் பருவத்தைப்
பருவமன்றென்று கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
தெளிதரல் காரெனச் சீரனஞ்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன் நட
மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன
ஆர்ப்பத்தொக் குன்குழல் போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித் தலர்ந்தனவே .
காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு *
இன்றுணைத் தோழி யன்றென்று மறுத்தது
* 'ஏரெழில் மாதரை' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: அடியேன் களி தர- அடியேன் களிப்பை யுண்டாக்க: சிற்றம்பலத்துக் கார் மிடற்றோன்
நடம் ஆட- சிற்றம்பலத்தின்கண்ணே கரிய மிடற்றையுடையவன் கூத்தாடா நிற்ப: கண் ஆர் முழவம் துளிதரல்
கார் என ஆர்த்தன- முகமமைந்த முழவங்கள் துளியைத் தரு கலையுடைய முகில் போல முழங்கின:
ஆர்ப்ப காந்தளும் தொக்கு உன் குழல் போன்று முழங்க அவற்றை முழவமென் றுணராது காந்தருளுந்
திரண்டு உன் குழலையொத்து; அளிதரப் பாந்தளைப் பாரித்து அலர்ந்தன - நறுநாற்ற மனிகளைக்
கொணர்தரப் பாம்புபோலுந் துடுப்புகளைப் பரப்பி அலர்ந்தன, அதனால் சீர் அனம் - சீரையுடைய
அன்னமே ; கார் எனத் தெளிதரல்- இதனைக் காரென்று தெளியற் பாலையல்ல எ-று.
களித் தரவென்பது களிதரவென்று நின்றதெனினு மமையும். பாரித்தென்பது உவமச் சொல்லெனினு
மமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கார்காலம் என்று கலங்குகிற மிக்க அழகினை யுடைய நாயகியை
அவளுக்கு இனிய துணையாகிய தோழி கார் அன்று என்று மறுத்தது.
செய்யுள்: சீரிய அன்னத்தை யொப்பாய்! கரிய திருமிடற்றையுடையவன் திருச்சிற்றம்பலத்தே அடியேனும்
கண்டு களிக்கும்படி திருக்கூத்தை யாட முகம் நிறைந்த முழவம் மழைபொழியும் (மேகம்) போல ஆரவாரித்தன;
ஆரவாரித்தலாலே.... உன் (கூந்தல்) போல வண்டுச் சாதிகளைத் தம்மிடத்தே வருவிப்பதாக இக்காலத்தே
காந்தட் பூக்களும் பாம்பின் படத்தை யொத்து இனமாக மலர்ந்தன, கார்காலமென்று தெளியாதே;
எனவே, வம்பு காண் என்றது.
10. மறுத்துக்கூறல்*
-------------------
*பேரின்பப்பொருள்: "அருளுயிர்ப்பருவம் அன்றெனச் சிவமு முண்டே என்பது பருவமென் றுரைத்தது"
மறுத்துக்கூறல் என்பது பருவமன்றென்ற தோழிக்குக் காந்தளேயன்றி இதுவும் பொய்யோவெனத்
தோன்றியினது மலரைக் காட்டி. இதுபருவமேயென்று அவளோடு தலைமகள் மறுத்துக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள் : -
தேன்றிக் கிலங்கு கழலழல்
வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல் போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
யோமெய்யிற் றோன்றுவதே.
பருவமன்றென்று பாங்கிபகர
மருவமர்கோதை** மறுத்துரைத்தது.
**' மருவமர் 'குழலி' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: தேன்-தேனை யொப்பாள்; திக்கு இலங்கு கழல் அழல்வண்ணன் - திசைகளிலே விளங்கா நின்ற
வீரக் கழலையுடைய அழல்வண்ணன்; சிற்றம்பலத்து எம்கோன்- சிற்றம்பலத்தின்கணுளனாகிய வெங்கோன்;
திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் திசைகளிலே விளங்கா நின்ற திண்ணிய தோள்களையுங்
கொண்டல் போலுங் கண்டத்தையு முடையான்; குழை எழில் நாண் போன்று - அவனுடைய குழையும் எழிலையுடைய
நாணுமாகிய பாம்பையொத்து; இக்கடி மலர்க் காந்தளும் போந்து இக்கடி மலர்க் காந்தளினது துடுப்புக்களும்
புறப்பட்டு அவன் கை அனல்போல் அவனது கையிற் றீயைப்போல; தோன்றிக்கடி மலரும் மெய்யின் தோன்றுவது
பொய்மையோ- தோன்றியினது புது மலரும் மெய்யாகத் தோன்றுகின்ற விது பொய்யோ! எ-று.
கடி யென்பது நாற்றம். கடிமலர் முதலாகிய தன் பொருட்கேற்றவடை, மெய்யிற்றோன்றுவ
தென்பதற்கு மெய்போலத் தோன்றுவதெனினு மமையும் . காந்தளு மின்றென்பதூஉம் பாடம்.
மெய்ப்பாடு: அழுகை, பயன்: ஆற்றாமை நீங்குதல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: குறித்த பருவம் அன்று என்று தோழி சொல்லத் தேன் பொருந்தின
கூந்தலையுடையாள் மறுத்துச் சொன்னது.
செய்யுள்: தேனை யொத்தவன், திசைதோறும் பிரகாசித்த திருவடிகளையுடைய அக்கினி ரூபியானவன்,
அவன் திருச்சிற்றம்பலத்தானாகிய எம்போல்வார்க்குச் சுவாமியாயுள்ளவன், திக்குகளை விள(க்)கா நின்ற
திண்ணிய திருப்புயங்களாக வுடையனுமாய்ப்பருவ மேகத்தை யுடைய (ஒத்த ) திருமிடற்றை யுடையவன்
அவனுக்குத் திருகுழையும் திருவரை நாணுமாகிய பாம்பின் படத்தையொத்து இந்த நறு நாற்றமாகிய
காந்தளும் (புறப்பட்டு ) அவனுடைய கையில் ஏந்தின தீயை ஓக்கத் தோன்றி இவனுடைய நறுநாற்ற
முடைத்தாகிய பூவும் மெய்யே தோன்றுகின்றதும் பொய்யோ? ஓகாரம் எதிர்மறையாய் மெய்யென்றுபடும். 325
11. தேர்வரவுகூறல்*
------------------
*பேரின்பப் பொருள்: ',அருட்குச் சிவமுமன் புணர்த்துதலால் உயிர்பிரியாமை வரவெடுத் துரைத்தது''.
தேர்வரவுகூறல் என்பது மறுத்துக்கூறின தலைமகளுக்கு, கொண்டல்கள் எட்டுத் திசைக்கண்ணும்
வாரா நின்றமையின் இதுபருவமே; இனியுடன்ற மன்னர் தம்முட் பொருந்துதலான் நம்மைக் கலந்தவர் தேர்
நம்மில்லின் கணின்று வந்து தோன்றும்' என்று அவள் கலக்கந்தீரத் தோழி தலைமகனது தேர்வரவு
கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் : -
திருமா லறியாச் செறிகழல்
தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
தோன்றும்நம் பொன்னகர்க்கே.
பூங்கொடி மருளப், பாங்கி தெருட்டியது.
இதன் பொருள் : திருமால் அறியா -திருமாலறியப்படாத; செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்து
எம் கரு மால்விடை உடையோன் கண்டம் போல்- செறிந்த வீரக்கழலையுடைய திருவடியையுடைய
தில்லையிற் சிற்றம்பலத்தின் கணுளனாகிய எம்முடைய கரியமாலாகிய விடையையுடையவனது
கண்டம் போல விருண்டு; கொண்டல் எண் திசையும் வரும்- கொண்டல்கள் எட்டுத் திசைக்கண்ணும்
வாரா நின்றன, அதனால்; பொரும் மால் அயில் கண் நல்லாய்-தம்மிற்பொரும் பெரிய வேல் போலுங்
கண்ணையுடைய நல்லாய் ; மணந்தவர் தேர்- நம்மைக் கலந்தவரது தேர்; உடல்மன் பொருந்தல் திருந்த-
உடன்ற மன்னர் தம்முட் பொருந்துதல் திருந்துதலால்; நம் பொன் நகர்க்கு இன்று தோன்றும்-
நம்பொன்னையுடைய வில்லின் கண் இன்று வந்து தோன்றும் எ-று.
உடன்மன் பொருந்தறிருந்த மணந்தவ ரென்பதற்கு மன்னர் பொருந்தும் வண்ணம் அவரைச் சென்று
கூடினவரென்றுரைப் பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பருவங்கண்டு பூத்த கொடியை யொப்பாள் மயங்கத் தோழி சொன்னது,
செய்யுள்: திருமா(லால்) அறியப்படாத வீரக்கழல் செறிக்கப்பட்ட சீர்பாதங்களையுடைய (செறித்தலாலே
வீரக்கழலும் கழல் என்ற ஆகு பெயராலே திருவடியுமாகின்றன ;) பெரும்பற்றப்புலியூர்ச் சிற்றம்பலத்தேயுளனாகிய
எம்முடைய மிகவும் பெரிய இடபத்தினையுடையவன். அவனுடைய திருமிடற்றையொத்த மேகங்கள் எட்டுத் திக்கும்
வாராநின்றன, கோபித்த, அரசர்கள் தங்களுடன் பொருத்துதல் திருத்தம் பெறுதலாவே. பொருகிற பெரிய கூரிய
வேலையொத்த கண்களையுடையாய் ! நம்முடன் கூடினவர் தேர் நம் பொன்னகரிடத்தே இப்பொழுது
தோன்றும் காண். 326
12. வினை முற்றிநினைதல்*
--------------------------
* பேரின்பப் பொருள்: ' அனுபவங் கண்ட அன்புயிர் சிவனது கருணைமுக நோக்கிக் கசிந்துருகியது.
வினைமுற்றிநினைதல் என்பது வேந்தற்குற்றுழிப் பிரிந்த தலைமகன், 'வினைமுற்றிய பின்னர்,
கயலையும் வில்லையுங் கொண்டு மன்கோபமுங்காட்டி ஒரு திருமுகம் வாராநின்றது இனிக்கடிதுபோதும்'
எனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முக நினைந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
புயலோங் கலர்சடை ஏற்றவன்
சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
வரகுணன் * வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
இன்றோர் திருமுகமே
பாசறை முற்றிப்** படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை# மதிமுகம் நினைந்தது.
*கோவை 306
**பாசறுநிலை, # பூணவள் என்பன பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: செயல் ஓங்கு எயில் எரி செய்த பின்- செய்தலையுடைய உயர்ந்த மதிலை எரியாக்கியபின்;
இன்று ஓர் திருமுகம் - இன்று திருவையுடைய தொருமுகம் ; கயல் - கயல் போலுங் கண்ணையும் ; ஓங்கு இருஞ்சிலை
கொண்டு- மிகப் பெரிய விற்போலும் புருவத்தையுமுடைத்தாய்; மன் கோபமும் காட்டி வரும்-தங்கிய விந்திரகோபம்
போலும் வாயையுங் காட்டி வாரா நின்றது; இனிக் கடிது போதும் எ-று. புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம்
புகழும்- நிரை உயர்ந்த விரிசடையின்கணேற்றவனது சிற்றம் பலத்தையே பரவும்; மயல் ஓங்கு இருங்களி யானை
வரகுணன் வெற்பின் வைத்த கயல் மயக்கத்தையுடைய உயர்ந்தபெரிய களியானையையுடைய வரகுணன்
இமயத்தின் கண்வைத்த கயலெனக் கூட்டுக.
இன்று ஓராணையோலை அரையன் பொறியாகிய கயலையும் வில்லையுமுடைத்தாய் மன்னன்
முனிவையுங் காட்டி வாரா நின்றதெனச் சிலேடைவகையான் ஒருபொருடோன்றிய வாறறிக .
மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் கேட்டுக் கடிதூர்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : பாசறைப் படை வீட்டிலே நிலைநின்ற படைப் போரையுடைய
வரசன் குற்றமற்ற ஆபரணங்களை யுடையாளுடைய சந்திரனையொத்த முகத்தை நினைந்தது.
செய்யுள் : தொழில் மிக்க மதிலை எரித்த பின்பு, (மதில் என்பது ஊரை}, இப்பொழுது ஓர் திருமுகம்
நீரை நீண்டு விரிந்த திருச்சடையிலேற்றவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை வாழ்த்தும் மயக்கம் மிக்க
களிப்பை யுடைத்தாகிய யானைகளை யுடைய வரகுணனான பாண்டியன் இமய பருவதத்தின் கண் எழுதி
வைத்த கயலையும் மிகவும் சிலையையும் தன்னிடத்தே கொண்டு நிலைபெற்ற கோபத்தையும்
தோற்றுவித்து வாரா நின்றது
இனி இங்கே நிற்கை யரிதுபோலும் என்றது. இனிச் சிலேடை வகையால், ஊரை எரித்தற்கு முனிந்த
கயலாம் சிலையையும் விற்படையையும் கொண்டு மன்னன் கோபத்தையும் தோற்றுவித்து ஒரு திருமுகம்
வாரா நின்றது; ஆற்றலரிது போலும் என வேறொரு பொருளும் (கொள்க) 327
13. நிலைமைநினைந்து கூறல்*
----------------------------
*பேரின்பப் பொருள்: "சிவம்பிரிவின்றிக் கருணைசெய் திறத்தைப் போக வருளொடு புகன்று சென்றது"
நிலைமை நினைந்து கூறல் ஒன்பது வினை முற்றிய பின்னர் அவள் முகங்கண்டு வாரா நின்றவன்,
'புறாக்கள் தந்துணையோடு துயின்று முன்றிற்கண் விளையாடுவ கண்டு இது நமக்கரிதாயிற்றென்று
என்னிலைமை நினைந் தாற்றகில்லாளாவள்; நீ விரையத் தேரைச் செலுத்துவாயாக 'வெனத் தலைமகளது
நிலைமை நினைந்து தேர்ப்பாகனுக்குக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம்
பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
தேர்பிறங் கும் மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினில்
துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
தேரும் எழில்நகர்க்கே
பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர்ப் பாகற்கு வருந்துபு புகன்றது
இதன் பொருள்: பிறங்கும் ஒளி ஆர் நிறப் பொன் புரிசை மறுகினின்-மிக்க வொளியார்ந்த நிறத்தையுடைய
செம் பொன்னானியன்ற உயர்ந்த மதிலையுடைய வூரிற்றெவின்கண் : துன்னி-சேர்ந்து விளையாடி; மட நடைப்புள் -
மென்னடையை யுடைய மாடப் புறாக்கள் : இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் - இறப்பின்கட்டுயின்று
முற்றத்தின் கணிரைதேர்ந்துண்ணும்; எழில் நகர்க்கு - அவளிருந்த வெழிலையுடைய இல்லத்திற்கு: சிறப்பின்
திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர் தம் பிறப்பின் - சிறப்புக்களாற் பொலியுஞ் சிவனது சிற்றம்பலத்தைச்
சென்றடைந்தவர்கடம் பிறவிபோல : துனைந்து பெருகுக தேர்- விரைந்து முடுகுவதாக இத்தேர் எ-று.
புறாக்கள் துணையோடு துயின்று முன்றிலின் கண் விளையாடுவன கண்டு ஆற்றகில்லாளென்பது
போதர, இறப்பிற்றுயின்று முற்றத்திரைதேரு மென்றான். சிற்றம்பலஞ் சென்று சேர்ந்தவர் பிறவியிறுதிக்கட்
பேரின்பமெய்துமாறுபோல யானுஞ் சுரஞ் செலலிறுதிக்கட் பெருந்தோண் முயங்குவலென்னுங் கருத்தாற்
பிறப்பிற்றுனைந்து பெருகுகதேரென்றான். துன்னு மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு : உவகை பயன்: கேட்ட
பாகன் விரைந்து தேர் பண்ணுவானாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அழகிய வளைகளை யுடையாள் நிலைமையை மற்று
அந்த நாயகன் நினைந்து திருந்தின தேர்ப் பாகனுக்குக் கிலேசித்துச் சொன்னது.
செய்யுள்: மிக்க ஒளியால் நிறைந்த மாற்றற்ற பொன்னாலே செய்த மதில் சூழ்ந்து ஊரின்
தெருக்களில் பெடையும் சேவலும் தம்மிற் சேர்ந்து மடப்பத்தையுடைய நடையாற் சிறந்த புள்ளாகிய
மாடப்புறா இறப்பிலே துயின்று பிற்பட்டு முற்றத்தே சேர்ந்திருந்து இரை எடுக்கின்ற அழகிய நகரிடத்தே
தம் சிவனுடைய திருநாட்களாலே சிறந்த திருச்சிற்றம்பலத்தைச் சென்று அடைந்தாருடைய பிறவியற்ற
கடுமைபோல விரைந்து முடுகுவதாக, தேரானது. 328
14. முகிலொடு கூறல்*
--------------------
* பேரின்பப் பொருள்: அன்புக்கு முன்பின் பாரவுயிர் சென்றது.
முகிலொடு கூறல் என்பது “காரோட்டங்கண்ட பாகன் அதனோடு விரையத் தேரோட்டா நிற்பான்;
பிரிதலால் திருந்திய வழகெல்லாம் அழிந்து துன்புறா நின்றவளது சீரிய நகரின்கண் வாரா நின்ற வெனது
தேரின் முற்பட்டுச் சென்றி யங்காதொழிய வேண்டும். இயங்கினும், அத்தமியாள் கேட்ப முழங்கா தொழிய
வேண்டும் எனத் தலைமகன், முந்துற்றுச் செல்லா நின்ற முகிலோடு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
அருந்தே ரழிந்தனம் ஆலமென்
றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
மலர்த்தாள் வணங்கலர் போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
முழங்கேல் வளமுகிலே
முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன்
கழும லெய்திச் செழுமுகிற் குரைத்தது.
இதன் பொருள்: ஆலம் அருந்து-நஞ்சையருந்தவேண்டும். ஏர் அழிந்தனம் என்று ஓலம் இடும் இமையோர் மருந்து;
இதனானழ கழிந்தோமென்று முறையிடுந் தேவர்க்கு அந்நஞ்சால் வரும் இடர்க்கு மருந்தாயவன்; ஏர் அணி அம்பலத்தோன்-
அழகையுடைய அம்பலத்தின் கண்ணான்; மலர்த்தாள் வணங்கலர் போல்- அவனது மலர் போலுந்தாளை வணங்கா
தாரைப்போல; திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும்- திருந்திய வழகெல்லாமழிந்து துன்பத்தையுண்டாக்கும்;
செல்வி சீர் நகர்க்கு- இல்வாழ்க்கைச் செல்வத்தை யுடையவளது அழகை யுடைய வூரின்கண்; வளமுகிலே- வள முகிலே;
வரும் என் தேர் இதன் முன் வழங்கேல்-வாராநின்ற வெனது தேரிதனின் முற்பட்டுச் சென்றியங்கா தொழியவேண்டும்;
முழங்கேல் இயங்கினும் அத்தமியள் கேட்ப முழங்காதொழியவேண்டும் எ-று.
ஏரணி யென்பதற்கு மிக்கவழகென்றும், பழங்கண்டருமென் பதற்குத் துன்பத்தை யெனக்குத் தருமென்று
முரைப்பினு மமையும். வழங்கே லென்பதற்குப் பெய்யவேண்டா மென்றுரைப்பாருமுளர். நகர் இல்லெனினுமமையும்.
முனைவன்- இறைவன். மெய்ப்பாடு: அது பயன்: கேட்டபாகன் றேர் விரைந்து கடாவுதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : முனைசெய்யும் அரசனுக்குப் போருற்ற விடத்து அவனுக்காக வினை
முடித்து வருகின்ற(வன்) மயக்கமுற்று வளவிய முகிலுக்குச் சொன்னது.
செய்யுள்: 'எங்கள் அழகு அழிந்தோம். இந்நஞ்சை உண்பாயா: வேண்டும்' என்று முறையிடுகிற
தேவர்களுக்கு ஒளடதமானவன்' (என்றது அழுது வேண்டிக் கடல் கடைந்த தாங்கள் சாவாமலிருப்ப
இவன் சாவாமற் பரிகரித்தான் என்பது கருத்து:) மிக்க அழகுடைத்தாகிய திருவம்பலத்தே உள்ளவனுடைய
மலரையொத்த திருவடிகளை வணங்காதாரைப் போலத் திருந்தின அழகழிந்து வருந்துகிற நாயகியுடைய
சீரிய நகரிடத்துப்போகிற என்னுடைய தேராகிய இதன் முன்னே போகாதொழிவாயாக; (போனா யாகிலும்)
வளவிய முகிலே! முழங்காதே ஒழிவாயாக வேண்டும், என வேக முகிலுக்கே முற்படத் தேர் கடாவ
வேண்டுமென்பது கருத்து. 329
15. வரவெடுத்துரைத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள் : ''பரசம யாதிபாற் சிவமே யாக்கி, உயிர்வரலருளே புகன்றது"
வரவெடுத்துரைத்தல் என்பது தலைமகன் முகிலொடுவாரா நிற்பக்கண்ட தோழி
'வணங்கு வாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும் வணங்காது மாறுபட்டவ ரடையாளங்களையும்
தமது தேருக்கு முன்னாகக்கொண்டு. வீரமுரார்ப்ப, ஆலியா நின்ற மாவினோடும் வந்தணுகினார்;
இனிநமக்கொரு குறையில்லை' யெனத்தலைமகளுக்கு அவன் வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் :
பணிவார் குழையெழி லோன் தில்லைச்
சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
மாவோ டணுகினரே
வினை முற்றிய வேந்தன் வரவு
புனையிழைத் தோழி பொற்றொடிக் குரைத்தது.
இதன் பொருள்: பணிவார் குழை எழிலோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய பணியாகிய
நீண்ட குழையானுண்டாகிய அழகையுடையவனது தில்லைச்சிற்றம்பலத்தை யொக்கும்; மணிவார்
குழல் மட மாதே - நீலமணி போலு நீண்ட குழலை யுடைய மடப்பத்தையுடைய மாதே; பொலிக பொலிக ;
நம் மன்னர் பணிவார் திறையும் - வந்து வணங்குவாராக வுடம்பட்டவர் கொடுத்த திறையையும்,
பகைத்தவர் சின்னமும்- பணியாது மாறுபட்டவரதடை யாளங்களையும்; வண்தேர் முன்னாக் கொண்டு
தமது வண்டேர்க்கு முன்னாகக் கொண்டு; அணிவார் முரசினொடு அணியப்பட்ட வாரையுடைய
வீரமுரசினோடும்; ஆலிக்கும் மாவோடு-ஆலியா நிற்கு மாவினோடும்; அணுகினர் - வந்தணுகினார் எ-று.
வண்டேரொ டென்பதனைத் தொகுக்கும் வழித் தொகுத்துக் கூறினாரெனினுமமையும். இப்பொருட்கு
முன்னர்கவந்து பணிவாரென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகளை மகிழ்வித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : வினைமுடித்த நாயகன் வரவை அணியத்தக்க ஆபரணங்களை
யுடைய தோழி அழகிய வளைகளை யுடையாளுக்குச் சொன்னது.
செய்யுள்: நம்முடைய நாயகர் முன்னின்று வணங்குவாரிட்ட திறையும் : வணங்காதே பகைத்தவருடைய
விருதுகளும் (தமது வண்தேர்க்கு முன்னாகக்கொண்டு) வீரமுரசுகள் முழங்க யானை குதிரைகள் கதிபாய வந்து
குறுகினார் இனி : பாம்பாகிய நீண்ட குழையாலுண்டாகிய அழகை யுடையவன்; (என்றது சிலர்க்கு ஆபரணங்களைப்
பூண்டாலும் அழகு செய்திராது; இவனுக்கு நீண்ட பாம்புகளைப் பிடித்துப்பூண்டும் அதனாலும் அழகு
செய்வதென்பதுகருத்து; ) அவனுடைய பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தை விட்டு நீங்கவொண்ணாத
அழகினையுடையாய்; நீலமணியையொத்த நீண்ட கூந்தலினையும்மடப்பத்தையு முடையாய்
(பொலிவடைவாயாக) 330
16. மறவாமை கூறல்*
-------------------
*பேரின்பப் பொருள்: 'அறிவு பிறதாயின் மறதியுண்டென்ன அருட்கு யிரியம்பி யன்பாயினது.'
மறவாமைகூறல் என்பது வினைமுற்றி வந்து தலைமகளோடு பள்ளியிடத்தானாகிய
தலைமகன், நீயிர் வினையிடத் தெம்மை மறந்தீரே' யென்ற தோழிக்கு, 'யான் பாசறைக்கட் டாழ்த்த விடத்தும்,
கண் முத்திலங்க நின்ற இவள் என்னுடைய நெஞ்சை விட்டு நீங்கிற்றிலள்; ஆதலால், யான் மறக்குமாறென்னோ'
வெனத் தானவளை மறவாமை கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
கருங்குவ ளைக்கடி மாமலர்
முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலள் நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்து மன் பாசறை
நீடிய வைகலுமே
பாசறை முற்றிப் பைந்தொடியோ டிருந்து
மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.
இதன் பொருள் : நான்முகனோடு ஒருங்குவளைக்கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய்: நான் முகனோடுங்
கூடச்சங்கை யேந்திய கையையுடையவனு மறியாதவனது தில்லையை யொப்பாய் மருங்கு வளைத்து மன்பாசறை
நீடியவைகலும்- முனை மருங்கு சூழ்ந்து மன்னனது பாசறைக்கண் யான்றாழ்த் தவைகற்கண்ணும் :
கருங்குவளைக் கடிமாமலர் முத்தம் கலந்து இலங்க நின்று-கண்ணாகிய கருங்குவளையது புதிய பெரியமலர்
கண்ணீராகிய முத்தத்தைக் கலந்து விளங்க நின்று ; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்றிலள் நெருங்கின
வளையையுடைய இக்கிளியை யொப்பாள் ஒருகாலமு மென்னைவிட்டு நீங்கிற்றிலள்; அதனாற் பிரிவில்லை எ-று.
வைகலு மென்பதற்கு வைகறோறு மென்றுரைப்பாருமுளர். மெய்ப்பாடும் பயனும் அவை.
வேந்தற்குற்றுழிப்பிரிவு முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பாசறைப் போரை முடித்து வந்து அழகிய வளைகளையுடையாளுடனே
இருந்து குற்றமற்ற தோழிக்கு நாயகன் சொன்னது.
செய்யுள்: நான் முகனோடே சங்கேந்திய கையையுடையவனும் மாறாமல் ஆராய்ந்தும் உணரப்படாதவனுடைய
பெரும்பற்றப்புலியூரை யொப்பாய்! மாற்றரசனுடைய பாசறையை வளைத்துக் கொண்டு அவன் பக்கத்தே
தாழ்த்திருந்த நாளெல்லாம் கண்ணாகிய குவளையில் நறுநாற்ற முடைத்தாகிய பெரிய மலர்களிலே
கண்ணீர்த் துளியாகிய முத்துக்கள் விரவி விளங்கும் ; நெருங்கிய வளைகளையுடையாளாகிய கிளியை
யொப்பாள் என்னை விட்டு நீங்கிற்றிலள்.
வினை முடித்த பின்பு இவளை நினைத்தலே யன்றி வினை முடிவதற்கு முன்னும் இவளைக்
கருதிக்கொண்டு இருந்தேன் என்னுமது தோன்ற வைகலும் என உம்மையைக் கொடுத்தார்.
24. பொருள் வயிற்பிரிவு*
----------------------
*பேரின்பக் கிளவி: பொருட்பிரி விருபது மருட்பிரிவுயிரே யானந்தமாகி யதுவேதானாய்த் தானே யதுவாய்ப் பேசிய கருணை.
இனிப் பொருள்வயிற் பிரிதல் என்பது குரவர்களாற் படைக்கப் பட்ட பொருள் கொண்டு இல்லறஞ் செய்தால்
அதனான்வரும் பயன் அவர்க்காமத்துணையல்லது தமக்காகாமையால் தமது பொருள் கொண்டில்லறஞ் செய்தற்குப்
பொருடேடப் பிரியா நிற்றல், அது வருமாறு:-
வாட்டங் கூறல் பிரிவு நினை வுரைத்த
லாற்றாது புலம்ப லாற்றாமை கூற
றிணைபெயர்த் துரைத்தல் பொருத்தமறிந் துரைத்தல்
பிரிந்தமை கூறல் பிரிவாற் றாமையா
னிரவுறு துயரத்திற் கிரங்கி யுரைத்த
லிகழ்ச்சி நினைந்தழித லுருவுவெளிப் படுத
னெஞ்சொடு நோத நெஞ்சொடு புலத்த
னெஞ்சொடு மறுத்த னாளெண்ணி வருந்த
லேறு வரவுகண் டிரங்கி யுரைத்தல்
பருவங்கண் டிரங்கன் முகிலொடு கூற
றேர் வரவு கூற விளையரெதிர் கோட
லுண் மகிழ்ந் துரைத்த லொதிய விருபது
மாமதி நுதலாய் வான் பொருட் பிரிதல்.
இதன் பொருள்: வாட்டங்கூறல், ' பிரிவு நினைவுரைத்தல்' , ஆற்றாது புலம்பல், ஆற்றாமை கூறல்,
திணை பெயர்த்துரைத்தல், பொருத்தமறிந் துரைத்தல், பிரிந்தமை கூறல், இரவுறு துயரத்திற் கிரங்கியுரைத்தல்,
இகழ்ச்சி நினைந்தழிதல், உருவு வெளிப்பட்டு நிற்றல், நெஞ்சொடு நோதல், நெஞ்சொடு புலத்தல்,
நெஞ்சொடு மறுத்தல், நாளெண்ணி வருந்தல், ஏறு வரவு கண்டிரங்கி யுரைத்தல், பருவங்கண்டிரங்கல்,
முகிலொடுகூறல், தேர் வரவு கூறல், இளைய ரெதிர்கோடல், உண்மகிழ்ந்துரைத்தல்,
என விவை இருபதும் பொருள்வயிற் பிரிவாம் எ-று. அவற்றுள் :-
25. வாட்டங்கூறல்*
-----------------
* பேரின்பப் பொருள் : "பிரிவை யுரைக்கின்ற பிரிவிலையாதலான் நீயே யுரையென அருளோ டியம்பியது"
வாட்டங்கூறல் என்பது பொருள் வயிற் பிரியலுறா நின்ற தலைமகன், 'இருமையும் பொருளானே
முற்றுப் பெறுமென்று யான் பொதுவகையாற்கூற, அக்குறிப்பறிந்து கண்பனிவர இத் தன்மையளாய்
வாடினாள்; இனி யென்னாற் பிரிவுரைத் தலரிது; நீ யுணர்த்துமாற்றா னுணர்த்து' எனத் தோழிக்குத்
தலைமகளது வாட்டங் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
முனிவரும் மன்னரும் முன்னுவ
பொன்னான் முடிவுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
வந்திக்கும் நன்னுதலே
பிரிவு கேட்ட வரிவை வாட்டம்
நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது
இதன் பொருள்: முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்* ன்ன- துறந்தாரு மரசரும்
கருதுவனவாகிய மறுமையு மிம்மையும் பொருளான் முற்றுப் பெருமென்று பொதுவகையார்கூற;
கண்பனி வரும் அக்குறிப்பறிந்து கண்கள் பனி வாராநின்றன. இவ்வாறு பனிவருங் கண்ணோடு
அறிவழிந்து வருந்தியவிடத்து; பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய்- பரமனது திருச்சிற்றம்பலத்தை
யொப்பாய்; துனிவரும் நீர்மை இது என் என்று தூநீர் தெளித்து அளிப்ப- நீ துன்பம் வருந் தன்மை இஃதென்ன
காரணத்தான் வந்தது யான்பிரியே னென்று தூய நீரைத் தெளித்துத் தலையளி செய்ய அறிவு பெற்று
அறிவழிந்த காலத்தைப் பிரிந்த காலமாகவே கருதி நனி வரும் நாள் இதுவோ என்று நன்னுதல் வந்திக்கும்-
நீர் நனி தாழ்த்து வருநாளிதுவோவென்று நன்னுதலாள் வணங்கி நின்றாள்; இனி நீயுணர்த்து
வாற்றானுணர்த்து எ-று
* எல்லாம் பொருளிற் பிசைந்து விடும் என்பது நான் மணிக் கடிகை. 5.
"பொருளானா மெல்லாம்" என்பது திருக்குறள். 101
பரமன் றிருச்சிற்றம்பலம் மனையா ளென்று பாடமோது வாருமுளர். ** நீனெவுக் தாழ்த்தெனவு
மொருசொல் வருவித் துரைக்கப்பட்டது நனிவந்திக்கு மெனினு மமையும். துறந்தார் கருதுவதாகிய
மறுமையின்பமும், அரசர் கருதுவதாகிய விம்மையின்பமுமென்று, நிரனிறையாகக் கொண்டு, அவரிருவருங்
கருதுவனாகிய இப்பொரு ளிரண்டினையும் பொருண் முடிக்கு மென்று பொது வகையாற் கூறினானெனக்
கொள்க. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் :பிரிவுணர்த்துதல்
**ஓதுபவர் பழையவுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு : (உரை கிடைத்திலது)
செய்யுள்: முனிவரும் அரசரும் நினைக்கப்படுவன (மறுமையின்பமும் இம்மையின்பமும் இவையிரண்டும்)
பொன்னுண்டாகவே முடிபும் என்று சொல்லுமளவில் கண்கள் நீர்வர வாளா நிற்பன; பரமனுடைய திருச்சிற்றம்பலத்தை
யொப்பாள் வெறுக்குந்தன்மையாகிய இது என்னவென்று தூய நீரைத் தெளித்துத் தலையளி செய்ய நெடுங்காலமாக
விருந்தன. நீர் வருவேன் என்று சொன்ன நாள் இந்நாளோ ; என்று தொழா நிற்கும் நல்ல நெற்றியினையுடையாள்.
என்றது பிரிவி அறிவிக்கும் அளவில் புத்தி கலங்கிக் கலங்கின காலமெல்லாம் பிரிந்த காலமாகக்கலங்கித்
தலையளி செய்த பொழுது வந்த காலமாகக் கருதி, இது தன்னை நெடுங்கடலாகக் கருதித் தொழாநிற்பவள்
எனவே பிரிவரிதென்றுபடும். 332
2 பிரிவுநினைவுரைத்தல்*
------------------------
* பேரின்பப் பொருள்: அனுபவப் பொருளை யளவளாவுதலே, பிரிவென வின்புக் கருளியம்பியது.
பிரிவுநினைவுரைத்தல் என்பது வாட்டங் கேட்ட தோழி 'பொருளில்லாதார் இருமையின் கண்வரு மின்பமும்
அறியாரென வுட்கொண்டு, அருஞ்சுரம் போய் நமர் பொருடேட நினையா நின்றார்' எனத் தலைமகளுக்குத் தலைமகனது
பிரிவு நினைவுரையா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வறியா ரிருமை யறியா
ரென மன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
றார் நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன்தில்லைச்
சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதலே.
பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச்
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள்: இருவர் அறியா அளவு நீண்டு நின்றோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய -
மாலும் பிரமனுமாகிய விருவர் அடியுமுடியு மறியாத வெல்லையின்கண் நீண்டு நின்றவனது
திருச்சிற்றம்பலத்தை யொக்கும்; செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதல் ;-
செறிந்த நீண்ட கரிய குழலினையும் வெள்ளிய நகையினையுஞ் செய்ய வாயினையு முடைய திருநுதால்;
வறியார் - பொருளில்லாதார்; இருமை அறியார்* என-இம்மையு மறுமையுமாகிய இருமையின் கண்
வரும் இன்பமு மறியாரென்று கருதி; மன்னும் மாநிதிக்கு தொலையாது நிலை பெறும் பெரிய வரும்
பொருடேடுதற்கு நெறி ஆர் அரும் சுரம் நமர் செல்லல் உற்றார்- வழியறிதற் கரிய அருஞ் சுரத்தை
நமர் போகலுற்றார் எ-று.
* வறியார் இருமையும் அறியார்: ''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கில் என்பது குறுந்தொகை, 63-1.,
செறியா ரென்பதூஉம் பாடம், சிறுகானெறி பலவாகிய வருஞ்சுரமெனினு மமையும்,
மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுடம்படுத்தல்.
(பழையவுரை பொழிப்பு) கொளு: (உரை கிடைத்திலது)
செய்யுள் : அயனும் மாலும் அறியா அளவிலே நீண்டு நின்றவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை
யொத்த நெருங்கி நீண்ட கரிய கூந்தலினையும் வெள்ளிய முறுவலினையும் சிவந்த வாயினையும்
அழகிய நெற்றியினையு முடையாய்! (பொருள் இல்லாதார்) இம்மை மறுமையாயுள்ள இன்பம் அறியார் (என்று)
நிலைபெற்ற பெரும் பொருளுக்கு வழி (அறிதற்கு) அரிய போகைக்கு அரிய காட்டைப் போவதாக நினைந்தார்
காண் நம்முடைய நாயகர்.
நமரென்பது நம் அன்புக்குப் பொருந்த ஒழுகும் அவர் எனவே. பொருள் முடித்துக் கடுக
வருவரென்று படும். 333
3. ஆற்றாது புலம்பல்*
--------------------
*பேரின்பப் பொருள்:'பிரிவிலை யெணிற்பிரி வுண்டோ வென்ன அருளுக் கின்பேயார வுரைத்தது.
ஆற்றாது புலம்பல் என்பது பிரிவு நினைவுரைப்பக்கேட்ட தலைமகள் 'இத்தோழியாகிய கொடியவள்,
இத்தன்மையை யறிந்திருந்தும், அன்பர் பிரிவரெனக் குவளைப்பூ வெறித்தற்கு வாளுறை கழித்தாற்போலக்
கூறினாள்; இதற்கியான் கூறுவதுண்டோ'வென ஆற்றாது புலம்பா நிற்றல் அதற்குச் செய்யுள்:-
சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
றம்ம கொடியவளே
பொருள் தரப் பிரியும் அருள்தரு பவனெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது
இதன் பொருள்: தோழி கொடியவள் - தோழியாகிய கொடியவள் ; அஞ்சனம் எழுதிற் கரப்பதற்கே ஒழிகுவது**
அறிவாள் - அஞ்சன மெழுதின் எழுதுகின்ற காலமத்துணையுங் காதலர் தோன்றாமையான் அவ்வஞ்சனத்தை யொழிவ
தறிவாள் ;அம்பலவர்ப் பணியார் குறி நெறி அன்பர் செல்வர் என்று-அம்பலவரை வணங்காதார் அவ்வணங்காமைக்குக்
குறியாக வாழுந் தீயநெறியை அன்பர் செல்வரென்று; வாள் சிறு உசிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு -
ஒளியையுடைய சிறியவுகிர் சிறிதுற்றுச் சிறிதுறா முன்னம் பொடிபடுங்குவளைப் பூவிற்கு; எறிவாள் கழித்தனள் -
எறிதற்குக் கருவியாகிய வாளையுறை தழித்தாள்; யான் கூறுவதுண்டோ ! எ-று.
** அஞ்சனம் ஒழிகுவது: "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்; எழுதேங் கரப்பாக் கறிந்து" என்பது திருக்குறள் 1127
கொடியவரே யென்பது பாட மாயிற் கொடியராகிய வன்பரெனக் கூட்டுக. அம்ம: அசை நிலை .
மெய்ப்பாடு: அழுகை. பயன் : செலவழுங்குவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பொருள் கொண்டுவரப் பிரியா நின்றான் அருளைத் தரக் கடவனென்று
தோழி சொல்ல. வல்லி சாதியை யொப்பாள் வருந்தினது.
செய்யுள் : அஞ்சனம் எழுதில் (எழுதுகின்ற) பொழுதும் நாயகர் தோன்றாமையை அறிந்திருந்தும்
திருச்சிற்றம்பலநாதரை வணங்காதவர்கள் அடையாளமாக உறைகிற வழியிடத்தே அன்பர் போகா நின்றாரென்று
கொடியவள் சொல்லிச் சிறு உகிர்ப்பட்டுப்படா மாத்திரையிலே பொடியாய்ப் போகிற குவளைப் பூவுக்கு
வெட்ட வல்ல வாளை உறை கழித்து வெட்டினாள் தோழியானவள் கொடியவள் என்ற பின்பு தோழி யென்றது
குறிப்பு மொழி. 334
4. ஆற்றாமைகூறல் *
-------------------
* பேரின்பப் பொருள்: "பிரிந்த வளாவல்ல வரும்பெரும் போதந் திருமேனி தன்னில் திகழு மென்றது''
ஆற்றாமை கூறல் என்பது தலைமகளது வருத்தங் கண்ட தோழி காதலர் 'கானகத்தையுடைய
சுரத்தைப்போய்ப் பொருட்டே நினையா நின்றாரென்று யான் சொல்லுமளவில் அவளது முலையுங்
கண்ணும் பொன்னும் முத்துந் தாரா நின்றன; இனி நீ சேட்சென்று தேடும் பொருள் யாதோ' வெனத்
தோழி தலைமகனுக்கு அவளது பிரிவாற்றாமை கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வானக் கடிமதில் தில்லையெங்
கூத்தனை ஏத்தலர்போற்
கானக் கடஞ்செல்வர் காதல
ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
கண்கள் முத்தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
இனிச் சென்று தேர்பொருளே.
ஏழை யழுங்கத், தோழி சொல்லியது
இதன் பொருள் : வானக்கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் முகில்களையுடைத்தாகிய
காவலையுடைய மதிலாற் சூழப்பட்ட தில்லையில் எங்கூத்தனை வாழ்த்தாதார் போல ; காதலர் கானக் கடம்
செல்வர் என்ன - காதலர் கானகத்தையுடைய சுரத்தைச் செல்வரென்று சொல்ல கதிர் முலைகள் மானக் கனகம்
தரும்- ஒளியையுடைய முலைகள் கொண்டாடப்படும் பொன்னைத் தாரா நின்றன; மலர்க்கண்கள் முத்தம் வளர்க்கும் -
மலர்போலுங் கண்கள் முத்தத்தைப் பெருகவுண்டாக்கா நின்றன; அதனான் தேன் நக்கதார் மன்னன் - தேனோடு
மலர்ந்த தாரையுடைய மன்னன்; இனிச் சென்று தேர் பொருள் என் இனிச்சேட் சென்று தேடும் பொருள் யாது! எ-று
மானமென்றது அளவை. அளவை யென்றது பிரமாண மாற்றாணிப் பொன்னென்றுரைப்பினு மமையும்.
மன்ன னென்பது ஈண்டு முன்னிலைக்கண் வந்தது ; இயல்பு விளியென்பாரு முளர் மெய்ப்பாடு: இளிவரலைச்
சார்ந்த பெருமிதம். பயன் : அது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தாம் பிரிவறிவித்த காலத்து அதற்கு நாயகி கவலைப்படுகையாலே
நாயகனுக்குத் தோழி சொன்னது.
செய்யுள்: வான அளவும் செல்ல உயர்ந்த சிறந்த மதிலாற் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரில்
எம்முடைய கூத்தனை வாழ்த்தாதாரைப் போலக் காடு உடைத்தாகிய அரிய வழியிலே போகாநின்றார்
நம்முடைய நாயகரென்று சொல்லும் அளவில் கதிர்த்த முலைகள் கொண்டாடப்பட்ட பொன்னைத்
தாராநின்றன; மலரை யொத்த கண்கள் முத்துக்களை மிகா நின்றன. மதுமலர்ந்த மாலையினையுடைய
மன்னனே! இனிச் சென்று தேர்கின்ற பொருள் எப்பொருள் தான் ? 335
5. திணைபெயர்த்துரைத்தல்*
---------------------------
* பேரின்பப் பொருள், "பெற்ற வுயிர்க்குப் பிரிவிலை யென்றது.
திணைபெயர்ந்துரைத்தல் என்பது 'யான் அவர்க்கு நின தாற்றாமை கூறினேன் இனியவர்
நினைவறியேன்' என்ற தோழிக்கு, 'தாம் எனக்கருளைப் புலப்படுத்திய சொற்களைத் தனையு மறந்தோ
காவலர் தீவினையேற்குப் பொருளைத் தரத் தொடங்குகின்றது' எனப் பிரிவுள்ளிப் பாலை நிலத்தனாகிய
தலைமகனை மருதநிலத்தனாக்கித் தலைமகள் புலந்து கூறா நிற்றல்' அதற்குச் செய்யுள்:-
சுருடரு செஞ்சடை வெண்சுட
ரம்பல வன்மலயத்
திருடரு பூப்பொழில் இன்னுயிர்
போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை
யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை
யேற்குப்** புரவலரே
துணைவன் பிரியத் துயருறு மனத்தொடு
திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது
** 'தமியேற்குப்' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: சுருள் தரு செஞ்சடை வெண்சுடர் அம்பலவன் மலயத்து-சுருண்ட செஞ்சடைக்
கண்ணணிந்த வெண் சுடரையுடைத்தாகிய மதியையுடைய வம்பல வனது பொதியின் மலைக்கண் ;
இருள் தரு பூம் பொழில், இருண்ட பூவையுடைய பொழிலிடத்து; இன் உயிர் போலக் கலந்து- இன்னுயிர்
போல இனியராய் ஒன்று பட்டு வந்து கூடி, இசைத்த அருள் தரும் இன்சொற்கள் அத்தனையும் மறந்து-
நமக்குச் சொன்ன அருளைப் புலப்படுத்தும் இனியசொற்களெல்லாவற்றையு மறந்து; அத்தம் சென்றோ-
தாம் அருஞ்சுரஞ் சென்றோ புரவலர் - காவலர்; வினையேற்குப் பொருள் தரக்கிற்கின்றது -
தீவினையேற்குப் பொருளைத்தரத் தொடங்குகின்றது! இது தகுமோ ! எ-று.
இருளைத்தருமென் றுரைப்பினு மமையும், உடம்போடு உயிர் கலக்குமாறு போலக்
கலந்தெனினு மமையும், திணை பெயர்த்திடுதல் பிரிவுள்ளிப் பாலை நிலத்தனாகியானை
மருத நிலத்தனாக்குதல். மெய்ப்பாடு : அழுகை. பயன்: சொல் வழுங்குவித்தல்'
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் பிரிய வருத்தமுற்ற மனத்துடனே
நிலம் பெயர்த்திட்டு தேனையொத்த வார்த்தையினை யுடையாள் சொன்னது.
செய்யுள்: நெரித்த சிவந்த திருச்சடையிலே வெள்ளிய திருவிளம் பிறையையுடைய
திருவம்பல நாதனுடைய பொதியின் மலையிடத்து (இருள) பூம்பொழிலிடத்தே இனிய உயிர்போல
நின்று சொன்னது அருளுண்டான இனிய சொற்கள் அத்தனையும் மறந்து அரிய வழியிலே
(சென்றோ). பொருள் தரப்புகுகின்றது தனித்திருக்க (ப்பட்ட) என்னை புரக்கக் கடவர்.
என்றது திருவம்பலநாதனிடமு மாயதிலே, பொதியின் மலையுமாயதிலே பூம்பொழிலுமாயிருக்கிற
சத்திய பூமியிலே, சொன்ன வார்த்தையை மறந்து பொருள் தர நினைக்கிறவர் புரக்கக் கடவரே யல்லவோ
எனக்குறிப்பாலே இகழ்ந்தாள். அன்றிக் கலந்தும் நினையாதவர், எனவே காமத்துக்கும் கூட்டல்லர்
என்பது கருத்து. தமியேற்கு எனவே புரக்க வேண்டுமிடத்தும் புரவாதவர் என்பது கருத்து.
தனி, தன் நாயகனைத் தன் அன்புக்குத் துணையாகப் பெறாத தனிமை. 336
6. பொருத்தமறிந்துரைத்தல்*
---------------------------
* பேரின்பப் பொருள் : "அருளும் பாராட்டல் அன்பேயன்றி வேறளவளாவலும் வேண்டா மென்றது.'
பொருத்தமறிந்துரைத்தல் என்பது திணைபெயர்த்துக் கூறின தலைமகளுக்கு' 'யாமெல்லாஞ்
சொன்னேமாயினுங் காதலர்க்கு நினைவு பொருண்மேலரயா யிருந்தது; இனியாஞ் சொல்லுவதென்னோ'வெனத்
தோழி தலைமகனது பொருத்த மறிந்து தானதற்கு நொந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
மூவர்நின் றேத்த முதலவன்
படமுப் பத்து மும்மைத்
தேவர் சென் றேத்துஞ் சிவன்தில்லை
யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
உரைப்பது பூங்கொடியே
பொருள்வயிற் பிரிவோன் பொருத்த நினைந்து
சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது
இதன் பொருள்: மூவர் நின்று ஏத்த நான்முகனும் மாலும் இந்திரனுமாகிய மூவர் நின்று பரவ;
முதலவன் ஆட - எல்லாப் பொருட்குங் காரணமாகியவனாடா நிற்ப; முப்பத்து மும்மைத்தேவர் சென்று
ஏத்தும் சிவன் தில்லையம்பலம் சீர் வழுத்தா-முப்பத்து மும்மையாகிய எண்ணையுடைய தேவர்கள்
சென்று வழுத்துஞ் சிவனது தில்லையம்பலத்தை நன்மை புகழாத ; பாவர் சென்று அங்கும் நரகம் அனைய-
தீவினையார் சென்று தங்கு நரகத்தையொக்கும்; புனை அழல்கான் போவர் நம் காதலர்- செய்தாற் போலு
மழலையுடைய காட்டைப் போவார் போன்றிந்தார் நங்காதலர்; பூங்கொடி- பூங்கொடி போல்வாய்;
நாம் உரைப்பது என்- இனி நாஞ் சொல்வதுண்டோ! எ- று .
முப்பத்து மும்மை - முப்பத்து மூவரது** தொகுதி மெனினுமமையும் சீர்வழுத்தா வென்பன
ஒரு சொன்னீர்மைப் பட்டு அம்பலத்தையென்னு மிரண்டாவதற்கு முடிபாயின. பொருத்தம் - உள்ளத்து
நிகழ்ச்சி சொல்லாது பொருள் வயிற் பிரிவோன் கருத்தறிந்து தோழி சொல்லியது. மெய்ப்பாடும்
பயனும் அவை.
** முப்பத்து மூவர் - ஆதித்தர்-12' அச்சுவினிகள்-2, உருத்திரர்-11, வசுக்கள் -8; ஆக 23 தேவர்கள்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பொருள் வயிற்பிரியுமரு டருபவனெனப், பூங்கொடி மருளப்
பாங்கி புகன்றது: அருள் தரக் கடவர் பொருளிடத்துப் பிரியா நின்றாரென்று பூத்தகொடியினை ஒப்பாள்
மயங்கினவிடத்துத் தோழி சொன்னது.
செய்யுள்: அரி அயன் இந்திரனாகிய மூவரும் மாறாமல் புகழ, எல்லாப் பொருட்கும்
காரணமாகியவன் ஆடா நிற்ப முப்பத்து மும்மையாகிய எண்ணையுடைய தேவர்கள் சென்று
தோத்திரஞ் செய்யும் சிவனுடைய பெரும்பற்றப் புலியூரில் திருவம்பலத்தைச் சிறப்பாய்ப் புகழாத
அம்பலத்தின் சீர் என்னலுமாம் (பாவிகள், இவர்களைப் பாவிகள் என்றது தேவர்களும் காரண தேவர்களும்
வாழ்த்தும் மாத்திரையல்லது தெரிக்கப் படாதே வருந்தின திருவம்பலம் வியாக்கிரபாத முனியாலே
கட்புலனாகப் பெற்று வைத்தும் வாழ்த்தாமையில்லாப் பாவிகள் என்றார்!) அவர்க்கு என்றும் நிலையாக
அவதரிக்கிற நரகத்தை யொத்த அழல் கை செய்யாக் கடலொத்த காட்டிலே நம்முடைய காதலர்
போகா நின்றார். பூங்கொடியையொப்பாய்! நாம் என்ன வார்த்தையைச் சொல்லுவோம்.
என்றது, நம் காதலர் என்றும் அம்பலத்தை வாழ்த்துபவராய் வைத்தும் இக்காட்டிலே
போம்படியானால் நாம் சொல்வதற்கு ஒரு வார்த்தையில்லை. நம்மேல் காதலராய் வைத்தும் இக்காட்டிலே
போகா நின்றது ஒரு காரியத்தைக் கருதி யன்றே; அக்காரியம் முடிவு செய்யுமளவு நாம் ஆற்றியிருத்த லன்றி,
ஆம் ஆகாது என்னும் நினைவு நமக்கு என் செய்ய என்றபடி; காதலர் எனவே கடிது மீள்வர் என்பது கருத்து. 337
7. பிரிந்தமைகூறல் *
-------------------
*பேரின்பப் பொருள் : பிரிந்தும் பிரியா போலுயி ரன்பை, அருளே சிவத்துக் காரவுரைத்தது"
பிரிந்தமை கூறல் என்பது பொதுவகையா னுணர்த்தினேமாயின், இனித்தீயது பிற
காண்கின்றோம்' எனத் தலை மகனுணர்த்தாது பிரியா நிற்ப, 'நின் முன்னின்று பிரிவுணர்த்தினால்
நீ மேனி யொளி வாடுவையென வுட்கொண்டு பொருண்முடித்துக் கடிதின் மீள்வாராக நால்வகைத்
தானை யோடு நம் மன்னர் வினைவயிற் சென்றார்' எனத்தோழி, தலைமகளுக்குத் தலைமகன்
பிரிந்தமை கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
தென்மாத் திசைவசை தீர்த்தரத்
தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்
பூவணம் அனைபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர்
இன்று நம் மன்னவரே
எதிர்நின்று பிரியிற் கதிர்நீ வாடுதற்
குணர்த்தா தகன்றான் மணித்தேரோ வென்றது.
இதன் பொருள்: தென் மாத்திசை தீர் தர* - தெற்காகிய பெரிய திசை குற்ற நீங்க! என்மாத் தலைக்
கழல் வைத்து- எனது கருந்தலைக்கட் கழல்களை வைத்து; தில்லைச் சிற்றம்பலத்து - தில்லைச்
சிற்றம்பலத்தின்கண்; எரி ஆடும் இறை திகழும் பொன் மாப் புரிசைப் பொழில் திருப் பூவணம் அன்ன
பொன்னே - எரியோடாடு மிறவையினது விளங்கும் பொன்னா னியன்ற பெரியமதிலாற் சூழப்பட்ட
பொழிலையுடைய திருப் பூவணத்தை யொக்கும் பொன்னே; நம் மன்னர் வன் மாக்களிற்றொடு
இன்று சென்றனர். நம் மன்னர் வலிய பெரிய களிறுகளோடும் வினைகுறித்து இன்று சென்றார் எ.று.
* தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலால், என்பது நாலடியார், 243
நால்வகைத்தானையோடுஞ் சென்றா ரெனினு மமையும். மதிற்கால் சாய்த்தற்குக் களிறு
சிறந்தமையின் அதனையே கூறினார். வினைவயிற் பிரிவுழிக் களிற்றுத்தானை சிறந்த தமையின் ஓடு;
உயர் பின்வழி வந்ததாம்; வேறு வினையொடு வாய்க் களிற்றையுடையராய்ச் சென்றா ரென்பதுபட
நின்ற தெனினுமமையும். ஊர்ந்தகளி றென்று ஒடு கருவிப் பொருட்கண் வந்ததெனினு மமையும்.
செல்வ ரென்னாது சென்றா ரென்றமையான், சொல்லாது பிரிந்தானாம். மாவென்பது விலங்கென்று
நாய்த்தலை யென்றுரைப்பாருமுளர். வாடுதற்கு- வாடுதலான். மெய்ப்பாடு: அழுகை பயன் : பிரிவுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: முன்னின்று சொல்லிப் பிரியில் நீ ஒளி வாடுவை என்று பயப்பட்டு
மணியழுத்தப்பட்ட தேரினை யுடையவன் சொல்லாதே பிரிந்தான் என்றது .
செய்யுள்: மிக்க தென் திசையிலுள்ள குற்றம் நீங்கப் பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்திலே
என்னுடைய நாய்த்தலையிலே திருவடிகளை வைத்தும் எரியை ஏந்திக்கொண்டும் ஆடுகிற சுவாமி சிறந்து
எழுந்தருளியிருந்தது என்றது தூயதல்லாத என்னுடைய நாய்த்தலையிலே திருவடிகளை வைத்தும் எல்லார்க்கும்
தண்ணளி செய்கிற சீகரத்திலே நெருப்பை வைத்தும் இச்செய்கைகளுடனே தூயதாயுமிருக்கிற
திருச் சிற்றம்பலத்திலே ஆடினான் என்பது கருத்து: பொன்னாற் செய்த பெரிய மதிலாற் சூழப்பட்ட
பொழிலாற் சிறந்த திருப்பூவணத்தை யொத்த பொன்னே! வலியும் பெருமையுமுடைய யானையுடனே
(இன்று நம் மன்னவர்) போனார்.
என்ன, போர்க்குச் சிறந்தது யானையாதலால் கடுக வினை முடித்து மீள்வர் என்பது கருத்து. 338
8 இரவுறு துயரத்திற்கிரங்கியுரைத்தல்*
------------------------------------
*பேரின்பப் பொருள் : ''அருளுயிர்ப் பிரிவு சூனியத்திலுண்டேயென இன்பக் கதிர்வரை யின்பெடுத் துரைத்தது
இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல் என்பது பிரிவு கேட்ட தலைமகள் தாற்றாமுகங் கண்ட தோழி,
'இவ்வுறுப்புக் குறையோடொக்குந் திரிந்திளைத்து' அருக்கனது தேர் வருதல் யாண்டையது?' இவளாற்றுதல்
யாண்டையது .?' என, அவள் இரவுறு துயரத்திற்குத் தானிரக்க முற்றுக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:
ஆழியொன் றீரடி யும்மிலன்
பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமையும்
பூதமும் ஆறொடுங்குமம்
ஏழியன் றாழ்கட லும்மெண்
டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
தேர்வந்து வைகுவதே
அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள்
தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது
இதன் பொருள் : ஆழி ஒன்று-காலுள்ள தொன்று: பாகன் ஈரடியும் இலன்- பாகன் இரண்டடியு முடையனல்லன்,
இவ்வுறுப்புக் குறையோடு ஐம் பூதமும் ஆறு ஒடுங்கும் முக்கண் தில்லையோன் ஊழி ஒன்றாதன நான்கும்-
ஐந்து பூதமுந் தோன்றிய வாறொடுங்கும் மூன்று கண்ணையுடைய தில்லையானுடைய ஊழியு மொவ்வாத
பெருமையையுடைய நான்கியாமத்தின் கண்ணும்; ஏழ் இயன்ற ஆழ்கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து
அன்றோ- ஏழாயியன்ற ஆழ்ந்த கடல்களையும் எட்டுத் திசைகளையுந் திரிந்திளைத்தன்றோ; அருக்கன்
பெருந்தேர் வந்து வைகுவது-அருக்கனது பெருந்தேர் ஈண்டு வந்து தங்குவது; அதனான் அதன் வரவு
யாண்டையது! இவளாற்றுதல் யாண்டையது! எ-று.
ஈரடியுமென்பதனை எழுவாயாக்கினு மமையும். நான்குந் திரிந்தென வியையும் இயன்ற வென்பது
கடைக்குறைந்து நின்றது. வாழி: அசைநிலை. ஒன்றாதன வென்பதனை நான்குமென்னு மெழுவாய்க்குப்
பயனிலையாக்கி யுரைப்பினுமமையும். ஐம்பூதமும் ஆறுகளொடுங்கும் ஏழ்கடலு மென்றெண்ணிக் கடலோ
டருக்கற் கியைபுண்மையான் ஐம்பூதத்திற் பிரித்துக் கூறினா ரென்பாருமுளர். இரவும் பகலு மொப்பவருமாயினும்
இரவுறு துயரத்திற் காற்றாமையான், இராப்பொழுது பலகால் வருவது போலப் பயிறருமிர வென்றாள்.
மெய்ப்பாடு: அழுகை. பயன். செலவழுங்குவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வேலையொத்த கண்களை யுடையாளைப் பல இரவு செறிந்தா
லொத்த இரவிடத்தே ஆற்றுவித்தல் அரிதென்று தோழி சொன்னது.
செய்யுள்: தேருக்குக் காலும் ஒன்றே; பாகன் இரண்டு காலும் உடையனல்லன்: நாலுசாமங்களும்,
மூன்று திருநயனங்களையுடையனாகிய தில்லையோனாற் படைத்த ஊழியுடன் ஒவ்வாமல் விஞ்சியிருந்தன;
பஞ்ச பூதங்களும் தோன்றி முறையையிற் சென்றொடுங்குகிற ஊழி என்று முன்னே கூட்டுக:
(என்றது, பிருதிவி சங்கார முதலாக வாயு சங்கார மீறாகத் தோன்றும் ஊழிகளின்றியே பஞ்சபூத
பரிணாமங்களெல்லாம் ஒடுங்குகிற மகாசங்காரத்தை:) ஏழாகச் செய்த ஆழ்ந்த கடல்களையும்,
(ஆழம் சொல்ல வேண்டினது தன்னைச் சாரின் நீளத்தோன்றுதற்கு : எட்டுத் திக்கும் திரிந்து
சுழன்று இவ்வழிச் செல்லலாலே இணைத்து ஆதித்தனுடைய பெரிய தேர் வந்து அவதரிப்பது
பின்பு அல்லவோ?
அவ்வளவும் இவளை எங்ஙனே ஆற்றுவிப்பன், எனத் தன்னுள் அழிந்தது. 339
9. இகழ்ச்சி நினைந்தழிதல் *
-------------------------
* பேரின்பப் பொருள் : 'முன்னும் பிரிவிலை பின்னும் பிரிவிலை ஆகிலு மேனியைப் பிரிதலரி தென்றது.'
இகழ்ச்சி நினைந்தழிதல் என்பது தோழி இரக்கமுற்றுக் கூறாநிற்ப, 'முற்காலத்து அவருலகின்
மேல் வைத்துணர்த்திய வழி நீட்டித்துப் பிரிவாராயினும். இப்பொழுதைக்கிவர் பிரியாரென யான்
அவர் பிரிவிகழ்ந்திருந்தேன்; முன்னின்று பிரிவுணர்த்தின் இவளுயிர் தரியாளென்று அவருணர்த்துதலை
யிகழ்ந்து போனார்; அத்தன்மையவாகிய இரண்டிகழ்ச்சியும் என்னை யித்தன்மைத்தாக வழிவியா நின்றன,
வெனத் தலைமகள் இகழ்ச்சி நினைந் தழியா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
பிரியா ரெனஇகழ்ந் தேன்முன்னம்
யான்பின்னை எற்பிரியின
தரியா ளெனஇகழ்ந் தார்மன்னர்
தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மொழி
லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
என்னை யழிவித்தவே
உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ்குழலி வாடியது
இதன் பொருள்: முன்னம் பிரியார் என யான் இகழ்ந்தேன்-முற்காலத்து அவருலகின் மேல்வைத்துக்
கூறிய வழி நீட்டித்துப் பிரிவராயினும் இப்பொழுது பிரியாரென யான் இகழ்ந்திருந்தேன்; எற்பிரியின் தரியாள்
என மன்னர் தாம் பின்னை இகழ்ந்தார்-என்னைத் தாம் பிரிகின்றாராக வுணரின் இவளுயிர் தாங்காளென
மன்னர் தாம் பின்னுணர்த்துதலை யிகழ்ந்தார்; அன்ன -அத்தன்மையவாகிய இரண்டிகழ்ச்சியும்;
தக்கன் வேள்வி எரி ஆர் மிக்க எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் - தக்கனது வேள்வியின் முத்தீ
நிறைந்த மிக்க வழகை யழித்த எழிலையுடைய அம்பலத்தான்; எவர்க்கும் அரியான்- யாவர்க்கு மரியவன் ;
அருள் இலர் போல் என்னை அழிவித்த அவன தருளில்லாதாரைப்போல வருந்த என்னை யழிவித்தன. எறு.
உண்மையாற் காரணமாவனவும், உணரப்பட்டாற் காரணமாவனவும் எனக் காரணமிருதிறத்தன
அவற்றுட் பிரிவு தரியாமைக்கு உணரப்பட்டாற் காரணமா மாகலின் பிரியினென்புழிப் பிரிகின்றாராக
வுணரினென்பது ஆற்றலாற் பெற்றாம். புலிவரினஞ்சு மென்புழிப்போல, எரியாரெழிலழிக்கு மென்பதற்கு
எரியின தெழிலழிக்கு மென்பார்* ஆரைக்கிளவி கொடுத் திழித்துக் கூறினாரெனினு மமையும். அழிக்கு
மென்பது காலமயக்கம். கற்பந்தோறும் அவ்வாறு செய்தலின் நிகழ் காலத்தாற் கூறினாரெனினுமமையும்.
உணர்த்தாது பிரியினும் ஒருவாற்றானுணர்ந்து பின்னுமாற்றாளா வளாலெனின், தீயது பிற காணப்படு
மென்பதாகலானும், முன்னின்றுணர்த்தல் வல்லனல்லாமையானும் அவ்வாறு பிரியுமென்க.
மெய்ப்பாடு: அது பயன்: ஆற்றாமை நீங்குதல்.
* என்பவர் பழைய வுரைகாரர்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: அறிவியாது பிரிந்தார் என்று நீலமணியை யொத்த நீண்ட
கூந்தலினை யுடையாள் மெலிந்தது.
செய்யுள்: நம் மன்னர் முன்னாளிலே நகையாடிப் பிரிவன் என்றபொழுது இவர் அருளிச்
செய்கிறது நகையாட்டல்லது 'பிரியார் என்று நெகிழ்ந்திருந்தேன் யான் ; நாம் நெகிழ்ந்திருந்தது கண்டு,
நம்மைப் பிரிந்தால் இவள் துன்பம் தரியாள் என்று நெகிழ்ந்து சொல்லாதே பிரிந்தார் நம் நாயகரும்
தக்கனுடைய வேள்விடத்துமிக்க யாகத் தீயின் நிறைந்த அழகை அழிக்கிற அழகிய திருவம்பலத்திலுள்ளவன்,
எல்லார்க்கும் அரியவன் அவனுடைய திருவருளில்லாதாரைப் போலே அவைகாண் என்னை அழிவித்தன,
அவர் பிரிந்தாலும் நான் துன்பமுறேன் என்று அவரும் தன்மையால் அளவில்லையாக பிரிவுள்
நீட்டியரோ என்னக் கருதி வருந்தினேன் என்றது.
தக்கன் வேள்விமிக்க எரியா ரெழிலழிக்கும் எழிலம்பலத்தோன் என்றது, தேவர்களும் இருடிகளும்
ஓமத்தில் பிறந்த கொடியோரும் தோற்றாலும் தோலாமலூரவணியாக (?) யேவுவது நெருப்பை இந்நெருப்புத்
தோன்றுவ தெனவே நீக்கியுள்ளார்--- சென்மம் சொல்லாமலே விளங்கும்? 340
10 உருவுவெளிப்பட்டு நிற்றல்*
----------------------------
* பேரின்பப் பொருள்: 'பிரியு மிடமெலாஞ் சிவமே கண்டது'
உருவுவெளிப்பட்டு நிற்றல் என்பது தலைமகள் இகழ்ச்சி நினைந்தழியா நிற்ப, தானுணர்த்தாது
பிரிந்தமையுட் கொண்டு பொருள் வலித்த நெஞ்சொடு செல்லா நின்ற தலைமகன், 'காணுந்திசைதோறுங்
கயலையும் வில்லையுஞ் சிவந்த கனியையும் முலையையுங் கொண்டு ஒரு பூங்கொடி தோன்றா நின்றது'
எனத் தலைமகளதுருவை நினைந்து மேற்போக மாட்டாது மீளலுற்றுச் சுரத்திடை நில்லா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
சேணுந் திகழ்பதிற் சிற்றம்
பலவன் தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
தோன்றுமொர் பூங்கொடியே.
பொருள்வயிற் பிரிந்த ஒளியுறு** வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைத்தது
**'இருளறு' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன்- சேய்மைக் கண்ணும் விளங்கும் மதிலையுடைய
சிற்றம்பலத்தை யுடையான்; தெள் நீர்க் கடல் நஞ்சு ஊணும் திருத்தும் ஒருவன் தெளிந்த நீரையுடைய கடலினஞ்சை
உணவாகவுஞ் செய்யுமொப்பிலாதான்; திருத்தும் உலகின் எல்லாம் அவனாற் செய்யப்படு முலகினெங்கும்;
காணும் திசைதொறும்- பார்க்குந் திசைதோறும்; கார்க்கயலும்-கண்ணாகிய கரியகயல்களையும்: செங்கனியொடு-
வாயாகிய செய்யகனியோடும் ; பைம் பூணும் -- பசும் பொன்னானியன்ற பூணையும்; புணர் முலையும் கொண்டு -
தம்முட் புணர்ந்த முலைகளையுமுடைத்தாய்; ஓர் பூங்கொடி தோன்றும் - ஒரு பூங்கொடி தோன்றா நின்றது எ-று.
நஞ்சுண்டலையுங் குற்ற நீக்குமென வுரைப்பினு மமையும். ஊணுந் திருத்து மென்பது அது செய்யுந்
தன்மையனென்னும் பொருட்டாகலின் நிகழ்காலத்தாற் கூறினார்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பொருளிடத்துப் பிரிந்த ஒளி வேலினையுடையவன் மிக்க
அழலுடைத்தாகிய காட்டிலே பூத்த கொடியை ஒப்பாளை நினைந்தது .
செய்யுள் : அதிதூரத்தே சிறந்து தோன்றும் மதில் சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தே யுள்ளவன்,
(என்றது. திருவம்பலம் நின்ற தானத்தே சென்றாலும் தேவர்களுக்கும் தெரியாதது; வியாக்கிரபாத முனியாலே
கட்புலனாகிய அதிதூரங்களிலே கண்டு நின்று தொழும்படியாயது என்பது கருத்து.)
தெளிந்த நீரையுடைய கடலில் நஞ்சை ஊணாக அருந்தின ஒருவன் (என்றது அல்லாத தேவர்களும் இருடிகளும்
மரிக்குமளவில் வந்து வீழ்வதானதனை ஏதம் செய்யாமற் காத்தலன்றி அமுதாம்படி திருத்திக் கொண்ட ஒருவன்
என்பது கருத்து! ஒருவனென்றது, அமுது கடைகிற காலத்து நாம் அனைவோரும் உளமாக. அவன் ஒருவனும் வந்து
செய்வது ஏனென அங்கு அவதரித்து அனைவரும் அழிய வந்த நஞ்சை வென்ற ஒருவன் என்றபடி; அன்றி நஞ்சுணும்
திருத்தும் ஒருவன் என்றாக்கி, நஞ்சூணை வஞ்சகமென்றும் பாபமென்றும் நூல்களில் அருளிச் செய்து வைத்து,
அதுவும் பிறர் பிழைக்க உண்ணில் என்றும் புண்ணியமாகத் திருத்தினானெனலுமாம்:) அவனால் திருந்தச்
செய்யப்பட்ட உலகிலெவ்விடத்தும் பார்க்கும் திக்குகளிளெல்லாம் (கண்ணாகிய) கரிய கயலும் (வாயாகிய)
சிவந்த தொண்டைப் பழமும், அழகிய ஆபரணங்களும் பூண்ட தம்மிற் புணர்ந்த முலைகளும் கொண்டு
தோன்றாநின்றது ஒரு வல்லிசாதி: (எங்கும் தோன்றும்) எனவே மீண்டும் பார்த்த பொழுது தோன்றி முன்னிலையாகி
லன்றோ போகலாவது; எங்குந் தோன்றுதலாற் போகலரிதென நின்றது. 341
11. நெஞ்சொடு நோதல்*
----------------------
*பேரின்பப் பொருள்: செல்விட மெங்குஞ்சிவமென வுணர்தல்
நெடுஞ்சொடுநோதல் : என்பது மீள நினைந்த தலைமகன் பின்னும் பொருண்மேற் செல்லா நின்ற
வுள்ளத்தனாய் இன்று மீளமாட்டாது, "இவ்விரண்டனுள் இப்பொழுது நீ யேதுக்குப் போக முயல்கின்றாய்' எனத்
தன்னெஞ்சொடு நொந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :
பொன்னணி யீட்டிய ஓட்டரும்
நெஞ்சமிப் பொங்கு வெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
ரன்னஅன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
கோநீ விரைகின்றதே.
வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.
இதன் பொருள்: பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் - பொற்றிரளை யீட்டுவா னோட்டந்தரு
நெஞ்சமே; நீ விரைகின்றது-இப்பொழுது நீ விரைகின்றது: இமையோர் இறைஞ்சும் மன் அணி தில்லை
வளநகர் அன்ன- இமையோர் சென்று வணங்கும் மன்னனது அழகிய தில்லையாகிய வளநகரை யொக்கும்;
அன்ன நடையாள் மின் அணி நுண் இடைக்கோ- அன்னத்தினடை போலு நடையை யுடையாளது
மின் போலும் நுண்ணிய விடைக்கோ; பொருட்கோ-எடுத்துக்கொண்ட பொருட்கோ, இரண்டற்கு மல்லவோ;
இப்பொங்கு வெங்கானின் நணி நிற்குமிது என் என்பது இவ்வழல் பொங்கு வெங்கானத்தைச் சேர்ந்து
போவதும் மீள்வதுஞ் செய்யாது நிற்கின்ற விஃதி யாதென்று சொல்லப் படுவது? எ-று.
நண்ணியென்பது நணியென விடைக்குறைந்து நின்றது. அணியென்று பிரித்து வெங்கானின்க
ணணித்தாக நிற்பதென் றுரைப்பினுமமையும்.இமையோரிறைஞ்சுந் தில்லைவள நகரென வியையும்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வலிய அழலுடைத்தாகிய காட்டிலே மெல்லிய வியல்பினை
யுடையாளை நினைந்து வெம்மையும் ஒளியுமுடைத்தாகிய வேலினை யுடையவன் தன்னெஞ்சுடனே உசாவினது.
செய்யுள்: பொன் திரளை ஈட்டுவதாக என்னை உன் நினைவிலே ஓட்டின பெறுதற்கரிய நெஞ்சம்
(பெறுதற் கருமை குறிப்புமொழி) மிக்க வெய்ய காட்டிலே பொருந்தி நிற்குமிது என்னென்று சொல்லப்படும்?
(நண்ணுகை-பொருந்துகை ): தேவர்கள் வணங்குகிற மன்னனுடைய அழகிய பெரும்பற்றப்புலியூராகிய
வளவிய நகரியையொத்த அன்னத்தின் நடைபோலும் நடையையுடையாளது மின்னையொத்த
நுண்ணிடைக்கோ பொருள் தேடவோ நீ விரைகின்றது.
இடைக்காகில் மீண்டுபோகவேண்டும்: பொருட்காயின் மேலே போக வேண்டும்;
இரண்டும் செய்யாது காட்டிலே நிற்கின்றது என் பெறவேண்டி? 342
12. நெஞ்சொடுபுலத்தல்*
---------------------
* பேரின்பப் பொருள்: "போதந் தனையிழந் தருளே பூண்டது"
நெஞ்சொடுபுலத்தல் என்பது நெஞ்சொடு நொந்து கூறா நின்றவன் "பேயிடத்துஞ் செய்தலரிதாம்
பிரிவை இவள் இடத்தே யெளிதாக்கு வித்துச் சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த நினது சிக்கனவுக்
கஞ்சத்தக்கது' எனப்பின்னும் அந்நெஞ்சொடு புலந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
நாய்வயி னுள்ள குணமுமில்
லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன சிற்றம்
பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
தக்கதுன் சிக்கனவே
அழற்கடத் தழுக்கமிக்கு
நீழற்கதிர்வேலோன் நீடுவாடியது
இதன் பொருள்: நாய் வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட - நாயினிடத்துள்ள
நன்மையுமில்லாத வென்னை நல்ல தொண்டாகக் கொண்ட; தீவயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன
சில் மொழியை - தீயிடத்து நிறம்போலு நிறத்தை யுடையவனது சிற்றம்பலத்தை யொக்குஞ் சிலவாகிய
மொழியையுடையாளிடத்து: பேய் வயினும் அரிதாகும் பிரிவு** எளிதாக்குவித்து - பேயினிடத்துஞ்
செய்தலரிதாம் பிரிவை எளிதாக்குவித்து; சேய்வயின் போந்த நெஞ்சே - சேய்த்தாகிய இவ்விடத்துப் போந்த
நெஞ்சமே', உன் சிக்கனவு அஞ்சத்தக்கது- உனது திண்ணனவு அஞ்சத்தக்கது எ-று.
** பேயோடேனும் பிரிவொன்று இன்னா தென்பர் ' என்பது சுந்தரர் தேவாரம். மீளாவடிமை. 9.
நற்றொண்டென்புழிநன்மை: சாதியடை. சின்மொழியை யென்னுமிரண்டாவது
ஏழாவதன் பொருட்கண்வந்தது.
( பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நிழற்கதிர் வேலவன் நெஞ்சொடு நொந்தது நிழலைச்
செய்கிற ஒளியினை யுடைய வேலவன் நெஞ்சுடனே விசாரித்தது.
செய்யுள்: நாயிடத்துமுள்ள குணமுமில்லாத என்னை நல்ல தொண்டனாகக் கொண்ட
தீயிடத்து உள்ள நிறத்தை யொத்த திரு நிறத்தையுடையவன், (என்றது. நாய்.... நன்றியறியும்; நான்
தன்னைத் தொழுதற்கு உறுப்புக்களுள்ள உடம்பும் கருத்தும் த (ரப்பெற்றும் வணங்கா திருந்தது
என் அறியாமையால் என்றபடி:) அவனுடைய சிற்றம்பலத்தை யொத்துமெல்லிய வார்த்தையினை
யுடையாளிடத்துப் பேயிடத்தும் பயின்றார் செய்தற் கரிதாகிய பிரிவை எளிதாகப் பண்ணித்
தூரத்திடத்தே போனநெஞ்சமே! உன்னுடைய இரக்கமில்லாமை பயப்படத் தக்கதொன்றாய் வந்தது. 343
13. நெஞ்சொடுமறுத்தல்*
----------------------
* 'பேரின்பப் பொருள்; "இன்பன்றி வேறு பெறுவது மிலையென் றன்பாய்ப் போத மருளே யாயது''
நெஞ்சொடுமறுத்தல் என்பது நெஞ்சொடு புலந்துகூறிப் பின்னும் பொருண்மேற் செல்லா நின்ற
வுள்ளத்தோடு தலைமகளை நினைந்து, 'இத்தன்மைத்தாகிய பொன்னை விட்டு வேறு பொன்றேடியோ
எம்மை வாழச் செய்வது ? இதற்கியா முடம்படேம்; நாமே நடக்கவெனச் செலவுடம் படாது பொருள்வலித்த
நெஞ்சொடு மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் : --
தீமே வியநிருத் தன்திருச்
சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
யாம் நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
தேர்ந்தெம்மை வாழ்விப்பதே
நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.
இதன் பொருள் : நெஞ்சம்- நெஞ்சமே; தீமேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய - தீயைப்
பொருந்திய நிருத்தத்தை யுடையவனது திருச்சிற்றம்பலத்தை யொக்கும்; பூமேவிய பொன்னை விட்டுப்
பொன்தேடி - பூவின் கண்மேவிய பொன்னை விட்டு வேறு பொன்னைத் தேடா நின்று; இப்பொங்கு
வெங்கான் நாமே நடக்க இவ்வழல் பொங்கும் வெங்கானின் நாமே நடப்பீராமின்; யாம் ஒழிந்தனம் --
யாமொழிந்தேம்: பொருள் தேர்ந்து எம்மை வாழ் விப்பது - பொருடேடி யெம்மை வாழச் செய்வது,
வஞ்சி அன்னவாம் மேகலையை விட்டோவஞ்சியை யொக்கு மழகிய மேகலையையுடையாளை விட்டோ?
யாமிதற் குடம்படேம் எ-று
இதுவும் பெருந்திணைப் பாற்படும். மீள நினைந்த துணையல்லது மீண்டிலனென்பார் மீணெறியை
யுள்ளத்தாற் சென்ற தென்றுரைப்ப. இப்பாட்டு நான்கிற்கும் மெய்ப்பாடு-அச்சம். பயன்: செலவழுங்குவித்தல் .
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நெடிய வழியிலே போன நாற்றத்தாற் சிறந்த கொத்து மாலையை
யுடையவன் தூரமான வழிச் செலவுக்கு அஞ்சி மீளும் உபாயத்தை யடைந்தது.
செய்யுள்: தீயிலே பொருந்திய கூத்தையுடையவனது திருச்சிற்றம்பலத்து எல்லையிலே
நிலைபெற்ற பூவிலே பொருந்தின பொன்னாகிவயளை விட்டு வேறு பொன்தேடி மிக்க வெய்யக்
காட்டிலே நாமே நடப்போமாக: (என்றது தாமிருக்கும் நல்ல தேசத்திலே நிலைபெற்ற பூவிலே
பொன்னிருக்க, அந்நியமான கொடியதேசத்து அருங்காட்டிலே சென்று தேடுகிற பொருட்காகப்
போகிற நாம் என நெஞ்சினை அழித்துக் கூறினான்;) நாங்கள் ஒழிந்தோம்; (நாங்கள் என்ற பன்மை
கொடுமைப்பாடு ;) நெஞ்சமே! (நெஞ்சம் என்றது கருத்து கடவாய் என்றபடி :) வஞ்சிக் கொடியையொத்த
அழகிய மேகலையை யுடையாளை விட்டோ, பொருள்தேடி எம்மை வாழச்செய்வது? 344
14. நாளெண்ணிவருந்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்: 'அருளே பிரிவின் அளவா ராய்ந்தது'
நாளெண்ணிவருந்தல் என்பது தலைமகனது வரவுநீட்ட நினைந்து வருந்தா நின்ற தலைமகளது
வருத்தங்கண்ட தோழி, இவளை நோய் பொருந்தச் சென்றவர் சென்ற நாளை எண்ணுந் தன்மையாற்
பலகாலிடுதலின் நிலனுங் குழிந்து விரலுந் தேய்ந்தது' என, . அவன் சென்ற நாளெண்ணி வருந்தா நிற்றல்.
அதற்குச் செய்யுள் :-
தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே
சென்றவர் திறத்து நின்றுதனி வாடுஞ்**
சூழிருங் கூந்தற்குத்** தோழிநனி வாடியது
**வாட கூந்தல் என்பன பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின்- தெண்ணீரைச் சூடிய
சிவனது சிற்றம்பலத்தைச் சிந்தியாதவரைப்போல வருந்த; பண் நீர் மொழி இவளைப்பையுள் எய்த -
பண்ணீர்மையையுடைய மொழியையுடைய விவளைநோய் பொருந்த! பனித் தடங் கண்ணுள் நீர் உக :
குளிர்ச்சியை யுடைய பெரிய கண்ணகத்து நீர் வார: ஒளி வாடிட - மேனியொளிவாட; நீடு சென்றார்
சென்ற நாள் - கால நீடப்பிரிந்தவர் பிரிந்தநாளை எண் நீர்மையின் இட்டு விரல் அற நிலனும் குழியும்
எண்ணுந்தன்மையாற் பலகாலிடுதலின் விரல் தேய நிலனுங்குழியும்! இனியெங்ஙன மாற்றும் எ-று
ஒளிவாடினளென்பது பாடமாயின், விரலிட்டென்பதனைத் தோழிமேலேற்றுக.
மெய்ப்பாடு: அழுகை. பயன் : தலைமகளை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பிரிந்தவர் திறத்து மாறாமல் மிகவும் வாடச் சுருண்டு
நிறைந்த கூந்தலினையுடைய தோழி மிகவும் வாடியது என்றது, நாயகி வாட்டங்கண்டு ஆற்றுவிக்க
வொண்ணாமையாலே தோழியும் அதற்கு வாடியது.
செய்யுள்: தெளிந்த நீராகிய கங்கையைச் சூடிய சிவன் அவனுடைய திருச்சிற்றம்பலத்தினை
நினையாதாரைப் போல் வருந்தப் பண்ணின் தன்மைய வாகிய வார்த்தையினையுடைய இவளைக்
கிலேசம் பொருந்தக் குவிர்ந்த கண்களுண்டாகிய நீரைச் சிந்த. (உள்ளுண்டாகிய நீர் என்றது.
கண்ணிர் மாண்டால் கண்மணியில் நீரும் விழுந்து...) மேனியொளியும் வாடிட நீட்டித்தவர் போன
நாளை எண்ணும் இயல்பாலே குற்றப்பட்டு நிலனும் குழியுமிட்டு விரலும் தேய நிலனும் குழியும்
எனவே தன் இன்னாமை கண்டு நாயகி ஆற்றுவது பயன்.
15. ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல்*
-------------------------------
*பேரின்பப் பொருள்: அருளுயிர்ப் பருவங்கண் டன்பாயுரைத்தது
ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் என்பது பொருண்முற்றி மீளலுறாநின்ற தலைமகன்,
மாலைக்காலத்து நாகொடு வாரா நின்ற ஏறுவரவு கண்டு, 'இச்சிறந்த செக்கர்மாலை அவள்
பொறுக்குமள வன்று' என இரங்கிக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:
சுற்றம் பலமின்மை காட்டித்தன்
தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
லாநின்ற கூர்ஞ்செக்கரே
நீடியபொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது
இதன் பொருள்: திண் கோட்டின் வண்ணப் புற்று உதர்ந்து திண்ணிய கோட்டான் நிறத்தையுடைய
புற்றையிடந்து; பொன் ஆர் மணி புலம்ப - இரும்பார்ந்த மணியொலிப்ப: கொற்றம் மருவு கொல் ஏறு- வெற்றியைப்
பொருந்தின கொலல் வல்ல ஆனேறு ; நல்நாகொடும் செல்லா நின்ற - நல்லநாகோடும் ஊர் வயிற் செல்லாநின்ற;
கூர்ஞ்செக்கர்-சிறக்குஞ் செக்கர் வானை யுடைய மாலைசுற்றம்பலம் இன்மை காட்டி சுற்றத்தாற் பயனின்மையை
யறிவித்து; தன் தொல்கழல் தந்த தொல்லோன் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று - பிறவி மருந்தாதற்குப்
பழையவாய் வருகின்ற தன்கழல்களை யெனக்குத் தந்த பழையோனது சிற்றம்பலத்தை யொப்பாள தளவன்று;
இனியென்னாகுவள்! எ - று
சுற்றம் பயனையுடைத் தன்மையெனினு மமையும்.மண்ணப்புற்றென்ப தூஉம் பாடம் .
நேடிய பொன்னினென்பது பாடமாயின், நேடுதல் - தேடுதல், மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன்
மீள்வதற்கொருப்படுதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நீடின பொன் மேலே நெஞ்சு சென்றமை யொழிந்து
வாட்டமுற்றவன் வந்தது
செய்யுள்: பலமுள்ளது போலத் தோன்றுஞ் சுற்றத்தார் பலமில்லாமையைத் தரிசிப்பிது என்னுடைய
பிறவித்துன்பம் தீர்த்தற்குப் பழையதாய் வருகிற சீபாதங்களைத் தந்தவன் (என்றது. மாயாமலமும்
ஆணவ மலமும் அறுத்தவன்; அவனுடைய திருச்சிற்றம்பலத்தை யொப்பாள் அளவிலேயன்று:
சிக்கென்ற கொம்பாலே அழகியபுற்றை இடந்து பொன்னார் மணி ஒலிப்ப வெற்றி பொருந்தின
கொலைத் தொழிலால் சிறந்த ஏறு, நல்ல நாகுடனே அவனிருந்த ஊரிடத்தே செல்லா நின்ற
செக்கரையுடைத்தாகிய மாலையம் பொழுது: செக்கர்- ஆகுபெயர். 346
16. பருவங்கண்டிரங்கல்*
----------------------
*பேரின்பப் பொருள்: 'இன்பத் தனக்கிது பருவமென்றே. அன்பா யுயிர் மிகு மருளா லுரைத்தது
பருவங்கண்டிரங்கல் என்பது ஏறுவரவு கண்டிரக்கமுற்று வாரா நின்ற தலைமகன், 'இம் முகில்கள்
ஒன்றோடொன்று தம்மில் விரவுதலாற் பொழில் கடோறும் மயில்கள் திரண்டாடா நின்ற இக்கார்காலத்து,
அவளென்னை நினைந்தாற்றாளாய் கொல்லோ'வென அப்பருவங் கண்டிரங்காநிற்றல், அதற்குச் செய்யுள் ;
கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலி நின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறி தில்லை
மன்னை தின்னருள் போற்
பண்ணுழை யாமொழி* யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே
மன்னிய பருவ முன்னிய செலவின்
இன்ன லெய்தி மன்னனே கியது
* 'யாழ் மொழிப் ' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: விண்மேகம் கலந்து கண் நுழையாது - விண்ணிடத்து முகில்கள் ஒன்றோடொன்று
விரவுதலாற் கண் சென்று நுழையமாட்டாது : இனமலர் வாய் இனமலரையுடைய விடமெங்கும்; கணமயில்
தொக்கு எண் நுழையாத் தழை கோலி நின்று ஆலும்- மயிலினங்கள் திரண்டு எண்சென்று புகாத பீலியை
விரித்து நின்றாடா நிற்கும்: மண் உழையாவும் அறிதில்லை மன்னனது இன் அருள் போல்- மண்ணிடத்தெல்லா
உயிர்களுமறியுந் தில்லையின் மன்னனது இனியவருள் போலும். பண் நுழையா மொழியாள் பாவியற்கு
என்னள் ஆம்கொல் - பண்ணணையாத தேமொழியை யுடையாள் தீவினையேற்கு எத்தன்மையளாமோ!
அறிகின்றிலேன்! எ-று.
எண்ணென்பது உணதாகிய வெண்ணென் பாருமுளர். பண்ணுழையாமொழி யென்பதற்குப்
பண்ணப்பட்ட வுழையாகிய நரம்பு போலும் மொழியாளெனினு மமையும், மன்; அசை நிலை. மன்னிய
பருவ முன்னிய செலவின் இன்னலெய்தி - நிலைபெற்ற பருவத்து முற்பட்ட செலவினான்
வருத்த மெய்தி, மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு ; நிலை நின்ற பருவமே -- கொண்டு செல்லாநின்ற
நிகழ்ச்சியிலே வருத்தமான துற்று நாயகன் மீண்டது.
செய்யுள்: மேகங்கள் விரவுவதலாலே கண் நுழைவதில்லை ஆகாய மானது: திரண்டு மயில்கள்
பெடையும் சேவலுமாகச் செறிந்திருந்தது. எண் சென்று புகுதாமல இலக்க [ம] ற்ற பீலியை
விரிந்து நின்று ஆவியா நின்றன; திரண்ட மலரிடத்த பூமியிடத்துள்ளாராய எல்லாராலும்
அறியப் படுகின்ற தில்லையிலுளனாகிய மன்னனது, (என்றது, மண்ணிடத் தெனவே தெற்கேயுள்ளார்க்கல்லாது
தில்லையைத் தொழ வொண்ணாமையின் வடக்குள்ளார் மலரை யேந்தித் தில்லையிற் சென்று
தொழமாட்டாமையால்' வணங்குவரென்பது கருத்து அல்லது பாம்பும் புலியும் முதலாயின மலரிட்டுத்
தொழத்தில்லையுள் வெளிப்பட்டானென் றுமாம்). அவனுடைய இனிய அருள் போலத் திருந்தப்பட்ட
உழை நரம்பை யொத்த வார்த்தையினையுடையாள் எத்தன்மையாளவள் தான் பாவத்தைச் செய்த
என் காரணமாக ?
உழையாகிய பண்ணென்று பொருளுரைப்பாருமுளர்: உழையிசையாதலாலும், இசைக்குப் பண்
வேறாகலானும் அது பொருளன்றென்க.
17 முகிலொடு கூறல்*
-------------------
*பேரின்பப் பொருள்: ' போதத் துக்குமுன் பன்பின்ப முற்றும்.
முகிலொடு கூறல் என்பது பருவங்கண்டிரங்கி விரைவோடு வாராநின்ற தலைமகன்
இவ்விடத்தெல்லாம் முற்பட்டாயாயினும் முது பெண்டீர் திரண்டு அவளின்னாமையை நீக்கற்கு
இல்லுறை கடவுட்குப் பூசனை செய்யா நிற்கும் நீணகரத்திற்கு என்னின் முற்படா தொழிவாயாக வென;
முந்துற்றுச் செல்லா நின்ற முகிலொடு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
அற்படு காட்டில்நின் றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுதலாள் செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீள்நகர்க்கே
எனைப்பல துயரமோ டேகா நின்றவன்
துனைக்கா ரதற்குத் துணிந்து சொல்லியது.
இதன் பொருள் : அல் படு காட்டில் நின்று ஆடி-மாலைக் காலத்து இருளுண்டாகாநின்ற
புறங்காட்டின் கண் நின்றாடுவான் :சிற்றம்பலத்தான் சிற்றம்பலத்தின் கண்ணான் மிடற்றின்
முற்படு நீள்முகில் - அவனது மிடறுபோல விருண்டு முற்படா நின்ற நீண்டமுகிலே, முதுவோர் குழுமி -
இவ்விடத்தெல்லாம் முற்பட்டாயாயினும்: முதுபெண்டீர் திரண்டு : வில் படு வாள் நுதலாள்
செல்லல் தீர்ப்பான் - விற்றாழுமொளி நுதலாளது இன்னாமையை நீக்க வேண்டி விரை மலர்
தூய் நறு நாற்றத்தை யுடைய மலர்களைத் தூவி, நெல் படுவான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கு
நெல் விரவிய துய பலியைக் கொடுத்து இல்லுறை கடவுட்குப் பூசனை செய்யா நிற்கும் பெரிய வில்லத்திற்கு:
என்னின் முன்னேல் - என்னின் முற்படாதொழி எ-று.
வான்பலி செய் தயராநிற்கு மென்பதற்குப் பலி கொடுத்து விரிச்சி யயரா நிற்கு
மெனினு மமையும், ஆடு* சிற்றம்பலவனென்பதூஉம் பாடம் துனைக்கார் விரைவை யுடையகார்
துணைக்கா ரென்பது பாடமாயின், இனத்தையுடைய முகிலென்றுரைக்க, மெய்ப்பாடு: அது
பயன் : பாகன் றேரை விரையக் கடாவுதல்.
*ஆடு' என்பவர் பழையவுரைகாரர்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: எத்தனையேனும் பல கிலேசத்தினோடும்
போகாநின்றவன் விரைந்து செல்லுகிற மேகத்திற்கு அறுதியிட்டுச் சொன்னது.
செய்யுள் : இருளுண்டான சுடுகாட்டிலே நின்றாடுகிற திருச்சிற்றம்பலநாதன், அவனுடைய
மிடற்றை யொத்து விரைந்து செல்லாநின்ற நீண்ட முகிலே; முதிய பெண்டுகள் திரண்டு வில்லையொத்த
ஒளி சிறந்த நெற்றியினையுடையாளது கிலேசத்தை ஆற்றுவதாக நறுநாற்றமுடைத்தாகிய பூக்களைத்
தூவி நெல்லைப் பரப்பப்பட்ட வாலிய பலியையிட்டு இல்லுறை தெய்வத்தைக் கொண்டாடாநிற்கிற
நீண்ட நகரளவில் சென்றால் எனக்கு முற்படாதே யொழிவாயாக வேண்டும்.
18 தேர்வரவு கூறல் *
------------------
* 'பேரின்பப் பொருள் "அருளுயி ரன்பின் அமர்ந்து வருதல் இன்பந் தனக்கு முன்னியம்பியது"
தேர்வரவு கூறல் என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகன் முகிலொடுவந்து புகாநிற்ப
இம்முகில் இவள தாவியை வெகுளா நின்ற காலத்து ஒரு தேர் வந்து காத்தமையான் இனிவரக்கடவதனை
வெல்லுமா தில்லையெனத் தோழி தலைமகளுக்குத் தேர்வரவு கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
பாவியைவெல்லும் பரிசில்லை
யேமுகில் பாலையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
தேர்வந்து மேவினதே
வேந்தன் பொருளொடு விரும்பி** வருமென
ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது.
**'மேவி' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: முகில் பாவை அம் சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் - முகில்
பாவைய தழகிய சீர்மை யையுடைய வுயிரைச் செகுப்பான். கறாநின்ற பொழுதின்கண், அம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் - அம்பலத்தின் கணுளனாகிய நீலப்பூவை வெல்லு மிடற்றை
யுடையவனதருள் போல: போய் மேவிய மாநிதியோடு - போய்த்தேடிய பெரு நிதியோடு அன்பர் தேர்
கதுமென வந்து மேவினது- அன்பர் தேர் கதுமென வந்து பொருந்திற்று. அதனால் பாவியை வெல்லும்
பரிசு இல்லையே-வரக்கடவதனை வெல்லுமாறில்லையே போலும் எ-று.
இனி ஒருவாறானும் இவளுயிர் வாழ்த லரிதென்றிருந்தனம் இது பாவியா தலின் இற்றைப்
பொழுதி கவாதுதேர் வந்ததென்னுங் கருத்தாற் பாவியை வெல்லும் பரிசில்லையே யென்றாள்.
தமியரை அற்றம் பார்த்து வெல்லக்கருதிச் சிலர் வெகுள்கின்ற காலத்து அத்தமியார்க்குத்
துணையாயதொரு தேர்வந்து காத்ததென வேறுமொரு பொருள் விளங்கின வாறறிக . அருளின்
மேவின தெனவியையும் அருளான் வந்துமேவிற்றெனினு மமையும். மெய்ப்பாடு: பெருமிதம் .
பயன் : ஆற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் பொருள் முடித்துக் கொண்டு விருப்பத்துடனே
வாராநின்றா னென்று மிக்க ஆபரணங்களையுடைய தோழி இனிய வார்த்தையைச் சொன்னது.
செய்யுள் : மேகமானது நாயகியுடைய அழகிய சீர்மைப்பாட்டினையுடைய உயிரைச் சாய்பிப்பதாகக்
கறுக்கின்ற அளவில் (கறுத்தல் நிறமும் வெகுளியும் சிலேடை:) திருவம்பலத்தே உளனாகிய நீலப்பூக்களைத்
தோற்பிக்கிற மிடற்றையுடையவனது திருவருள் வாய்த்தாற்போலப் போய்த் தேடப்பட்ட பொருளோடே
கடிதாக அன்பருடைய தேர் வந்து பொருந்திற்று: ஆதலால் வரக் கடவ அனுபோகத்தை மாற்றும் உபாயமில்லை. 349
19. இளையரெதிர்கோடல்*
----------------------
*பேரின்பப் பொருள்: "சிவப்பெருங் கருணையால் உவப்பின் பாமுயிர், அருட்பெரு வளத்தொடும் அன்பின் பானது."
இளையரெதிர்கோடல் என்பது தோழி தலைமகட்குத் தேர் வரவு கூறா நிற்ப இந்நிலைமைக்கண்
இவளாவி செல்வதற்கு முன்னே, சூழுந் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றிற்று: இனி யூழின
வலியது வேறொன்று மில்லை யெனப் பொருண் முடித்து வாராநின்ற தலை மகனைச் சென்று இளையர்
எதிர் கொள்ளா நிற்றல். அதற்குச் செய்யுள் -
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
தேர்வந்து தோன்றியதே
செறிகழலவன் திருநகர் புகுதர
எறிவேல் இளைஞர் எதிர்கொண்டது
இதன் பொருள் : ஒளிமேகலை உகளும் - ஒளியையுடைய மேகன் தன்னிலையினின்றும் போகா நின்றது:
வரி வளை வீழும் வரியை யுடைய வளைகள் கழன்று வீழா நின்றன: மெல்லியல் ஆவி செல்லாத முன்னே -
இந்நிலைமைக் கண் மெல்லிய லுயிர் செல்வதற்கு முன்னே ; சூழும் தொகுநிதி யோடு அன்பர் தேர் வந்து
தோன்றியது - சூழ்ந்து வருந் திரண்ட நிதியோடு அன்பரது தேர் வந்து தோன்றிற்று அதனான்; யாழின்
மொழி மங்கை பங்கன் - யாழோசை போலு மினிய மொழியையுடைய மங்கையது கூற்றை
யுடையான் : சிற்றம்பலத்தான்- சிற்றம்பலத்தின் கண்ணான்; அமைத்த ஊழின் வலியது * ஒன்று என்னை -
அவனா லமைக்கப்பட்ட ஊழின் வலிய தொன்றியாது! எ - று
மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம் மகிழ்தல்
* ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று, சூழினுந் தான் முந்துறும்" என்பது திருக்குறள், 380
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: செறிக்கப்பட்ட வீரக் கழலினையுடையவன் அழகிய நகரியிலே
வந்து புகுத எறியும் வேலினை யுடைய இளைய வீரர் எதிரேற்றுக் கொண்டது.
செய்யுள்: ஒளியுடையத்தாகிய மேகலாபாரம் கழலுகிற மாத்திரை யன்றிக் குதித்து வீழாநின்றது,
வளைகளும் கழன்று வீழா நின்றன; மெல்லிய இயல்பினையுடையா ளுடைய உயிர் போவதற்கு
முன்னே தேடப்பட்டு எதிர்கொண்ட பொருளோடே இவளாற் காதலிக்கப்பட்ட நம்முடைய
அரசருடைய தேர் வந்து தோன்றிற்று; ஆதலால் யாழோசையை யொத்த வார்த்தையினையுடைய
தேவியைப் பாகத்தேயுடையவன், திருச்சிற்றம்பலத்தேயுள்ளவன். அவனாற் செய்யப்பட்ட
விதியினும் வலியதொன்றேது தான் ?
20. உண்மகிழ்ந்துரைத்தல் *
-------------------------
* பேரின்பப் பொருள்: 'அறிவும் போகமும் பிரிவிலையென்று நெஞ்சிடை யின்பாய் நிறைந்த தென்றது'.
உண்மகிழ்ந்துரைத்தல் என்பது பொருண்முடித்து இளைஞரெதிர் கொள்ள வந்து புகுந்த தலைமகன்,
தலைமகளுடன் பள்ளியிடத்தனாயிருந்து 'இம்மானைப் பிரிந்து பொருள் தேடயான் வெய்யசுரஞ்சென்ற
துன்பமெல்லாம் இவள் கொங்கைகள் என்னுறுப்புக்களிடை மூழ்க இப்பூவணை மேலணையாமுன்னம்
துவள்வுற்றது' எனத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் : -
மயின்மன்னு சாயலிம் மானைப்
பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
லாம்விடை யோன் புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
அங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
யாமுன் துவளுற்றதே.
பெருநிதியோடு திருமனை** புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது
** 'திருநகர்' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: மயில்மன்னுசாயல் இம்மானைப் பிரிந்து; மயில் போலு மென்மையையுடைய
இம்மானைப் பிரிந்து பொருள் வளர்ப்பான் வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றது எல்லாம்- பொருளை
யீட்டுவான் யெயினிலை பெற்ற வெய்ய சுரத்தைச் சென்ற துன்பமெல்லாம்; விடையோன் புலியூர்க்
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை-விடையை யுடையவனது புலியூரிடத்துளவாகிய குயிலோசை
போலுஞ் சொல்லை யுடையாளுடைய மெல்லிய கொங்கைகள் ; என் அங்கத்திடைக் குளிப்ப-
என்னுறுப்புக்களிடை மூழ்கும் வகை; துயில் மன்னு பூ அணைமேல் அணையாமுன் துவளுற்றது-
துயினிலை பெறும பூவணையிடத் தணைவதன் முன்னம் மாய்ந்தது எ-று
இம்மானென்றது, பிரிதற்கரிய வித்தன்மைய ளென்றவாறு எல்லாமென்பது முழுது மென்னும்
பொருள்பட நிற்பதோ ருரிச்சொல். பன்மையொருமை மயக்க மென்பாருமுளர். மெய்ப்பாடும் பயனும் அவை.
பயன்: மகிழ்வித்தலுமாம்.
பொருள் வயிற்பிரிவு முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பெரும் பொருளோடே அழகிய நகரியிலே புகுந்தவன்
வளவிய மனைக்கிழத்தியோடே மனம் விரும்பிச் சொன்னது .
செய்யுள்: மயிலை யொத்த சாயலையுடைய நோக்கத்தால் இந்த மானையொப்பாளை விட்டுப்
பொருள் தேடுவதாக ஆதித்த கிரணம் நிலை பெற்ற வெய்ய காட்டிலே போன வருத்தமெல்லாம்
இடபத்தை யுடையவனது பெரும் பற்றப் புலியூரிடத்துள்ளாகிய குயிலை யொத்த வார்த்தையினை யுடையாள்
மெல்லிய முலைகள் என்னுடைய மார்பிலே மூழ்க உறக்கம் நிறை பெறுதற்கிடமாகிய படுக்கையிலே
அணைவதற்கு முன்னே பொடியாயிற்று. 351
25. பரத்தையிற் பிரிவு*
--------------------
* பேரின்பக் கிளவி; 'பரத்தையிற் பிரிதலெண்ணா றொன்று முரைத்த சிவானந்தமுற்றது வாம்பி,
னெப்பத மெவ்வுயி ரெவ்வுல கியாவு. மப்படி யெகண் டறிவுபூரண மாகிநின் றளவி லனுபவம் பெற்று
நின்ற தன்மை நிலைமை யுரைத்தது.
இனிப் பரத்தையிற் பிரிதல் என்பது தலைமகளை வரைந் தெய்திய பின்னர், வைகலும்
பாலே நுகர்வானொருவன் இடையே புளிங்காடியு நுகர்ந்து அதனினிமை யறிந்தாற்போல
அவள் நுகர்ச்சி யினிமையறிதற்கும் புறப்பெண்டீர் மாட்டுப் பிரியா நிற்றல். அல்லதூஉம்,
பண்ணும்பாடலு முதலாயின காட்டிப் புறப்பெண்டீர் தன்னைக் காதலித் தாற்றா னெல்லார்க்குந்
தலைவனாகலின் அவர்க்குமின்பஞ் செய்யப் பிரியா நிற்றலென் றுமாம். அல்லதூஉம், தலைமகளை
யூடலறிவித்தற்குப் பி_த லென்றுமாம். இவ்வாறொழிந்து தனக்கின்பம் வேண்டிப் பிரிவனாயின்,
'கண்டுகேட் டுண்டு யிர்த்துற்றறியு மைம்புலனு மொண் டொடி கண்ணேயுள' என்பதனால்
இவளுக்குத் தலைமகளென்னும் பெயரோடு மாறுபட்டுத் தனது பெருமையோடு மாறுபடா நிற்கும்.
அது வருமாறு:
கண்டவர் கூறல் காதற் றோழி
பொறையுவந் துரைத்தல் பொதுப்படக் கூறி
வாடி யழுங்கன் மாறுகொண் டவனொடு
கனவிழந் துரைத்தல் விளக்கொடு வெறுத்தல்
வாரம் பகர்ந்து வாயின் மறுத்தல்
பள்ளியிடத் தூடல் பனிமொழி யாடன்
செவ்வணி விடுக்க வில்லோர் கூற
வயலறி வுரைத்தவ ளழுக்க மெய்தல்
செவ்வணி கண்ட வாயிலவர் கூறன்
மனைபுகல் கண்ட வாயிலவர் கூறன்
முகமலர்ச்சி கூறன் முனிவ தென்னெனக்
காலநிகழ் வுரைத்தல் கலவி யெய்தலை
யெடுத்துரைத் தல்லொடு கலவி கருதிப்
புலத்தல் குறிப்பறிந்து புலந்தமை கூறல்
வாயிலவர் வாழ்த்தல் புனல்வர வுரைத்த
றேர்கண்டு மகிழ்தல் சேடியர் விழவிற்
றம்மு ளுரைத்த றன்னை வியத்த
னகைத்துரைத் தல்லொடு நாண்கண் டுரைத்தல்
பாணன்வர வுரைத்தல் பாங்கியியற் பழித்த
லுழையரியற் பழித்த லொண்ணுத லாளவற்
கியற்பட மொழித லியல்பு நினைந் துரைத்தல்
வாயில் பெறாது மகன்றிற நினைதல்
வாயிற்க ணின்று தோழிக் குரைத்தல்
வாயில் வேண்டத் தோழி கூறன்
மன்னிய தோழி வாயில் வேண்டன்
மனையவர் மகிழ்தல் வாயின் மறுத்தல்
பாணனொடு வெகுடல் பாணன் புலத்தல்
விருந்தொடு செல்லத் தணிந்தமை கூற
லூட றணிவித்த லணைந்தவழி யூடல்
புனலாட்டு வித்தமை கூறிப் புலத்தல்
கலவி கருதிப் புலவி புகறன்
மிகுத்துரைத் தூடல் விறல்வேற் காளை
யூட னீட வாடி யுரைத்த
றுனியொழிந் துரைத்த றுகளொன் றில்லாப்
புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தல்
கலவியிடத் தூடன் முன்னிகழ் வுரைத்தல்
பரத்தையைக் கண்டமை பயன்படக்கூற
லூதிய மெடுத்துரைத் தூட றீர்த்த
லெண்ணா றொன்றிவை பரத்தையிற் பிரிவெனப்
பண்ணார் மொழியாய் பகர்ந்திசி னோரே.
இதன் பொருள்: கண்டவர் கூறல், பொறையுவந்துரைத்தல், பொதுப்படக்கூறி வாடியழுங்கல்,
கனவிழந்துரைத்தல், விளக்கொடுவெறுத்தல், வாரம்பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல், பள்ளியிடத்தூடல் ,
செவ்வணி விடுக்கவில்லோர் கூறல், அயலறிவுரைத்தவ ளழுக்கமெய்தல், செவ்வணி கண்டவாயிலவர் கூறல்,
மனை புகல் கண்ட வாயிலவர் கூறல், முகமலர்ச்சி கூறல், கால நிகழ்வுரைத்தல், எய்தலெடுத்துரைத்தல்,
கலவிகருதிப் புலத்தல், குறிப்பறிந்து புலந்தமைகூறல், வாயிலவர் வாழ்த்தல், புனல்வரவுரைத்தல்,
தேர்வரவு கண்டு மகிழ்ந்து கூறல், புனல் விளையாட்டிற் றம்முளுரைத்தல், தன்னை வியந்துரைத்தல்,
நகைத் துரைத்தல், நாணுதல்கண்டு மிகுத்துரைத்தல், பாணன் வரவுரைத்தல், தோழியியற்பழித்தல்,
உழையரியற்பழித்தல், இயற்படமொழிதல், நினைத்து வியந்துரைத்தல், வாயில் பெறாது மகன்றிற
நினைத்தல், வாயிற்கணின்று தோழிக்குரைத்தல், வாயில் வேண்டத் தோழிகூறல், தோழிவாயில்
வேண்டல், மனையவர் மகிழ்தல், வாயின் மறுத்துரைத்தல், பாணனொடு வெகுடல், பாணன் புலந்துரைத்தல்,
விருந்தொடு செல்லத் தணிந்தமைகூறல், ஊடறணிவித்தல், அணைந்தவழியூடல், புனலாட்டுவித்தமை
கூறிப்புலத்தல், கலவிகருதிப்புலத்தல், மிகுத்துரைத்தூடல், ஊடனீடவாடியுரைத்தல், துனியொழிந்துரைத்தல்,
புதல்வன் மேல் வைத்துப் புலவி தீர்தல், கலவியிடத் தூடல், முன்னிகழ்வுரைத் தூடறீர்த்தல், பரத்தையைக்
கண்டமை கூறிப் புலத்தல், ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல் எனவிவை நாற்பத்தொன்பதும்
பரத்தையிற்பிரிவாம் எ-று. அவற்றுள்:-
1. கண்டவர் கூறல் *
-----------------
*பேரின்பப்பொருள்; "பத்தியிடத்தும் விதியுண்டோ , வென்று தம் மடியா ருள்ளே நினைந்தது:
கண்டவர் கூறல் என்பது தலைமகன் பரத்தையர் சேரிக்கட் செல்லா நிற்ப, அப்பரத்தையர்
அவனை ஒருங்கெதிர் கொண்டு சுற்றும் பற்றிப் போர் செய்யா நின்றமையின், இஃதிவன் காதலி
மாட்டென்னாமென அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
உடுத்தணி வாளர வன்தில்லை
யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
பற்றினர் மாதிரமே
உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்டேர் விதியிற் கண்டோ ருரைத்தது
இதன் பொருள்: உடுத்து அணிவாள் அரவன் தில்லை ஊரன்வர-கச்சாகவும் உடுத்து அணியாகவு
மணித்தவாள் அரவையுடையவனது தில்லைக்கணுளனாகிய வூரன் இவ்வீதிக் கண்வர எடுத்து அணிகை
ஏறு இனவளை ஆர்ப்பதெரிந் தணியப்பட்ட கைக்கணுளவாகிய இனவளைகளொலிப்ப; இளமயில் ஏர்கடுத்து -
இளமயிலதெழிலை யொத்து' அணி காமர் கரும்புருவச் சிலை கண்மலர் அம்பு அடுத்து - மிக்க வழகையுடைய
கரிய புருவமாகிய வில்லொடு கண்மலராகிய வம்பைச் சேர்த்தி அணிவாள் இளையோர் ஒருங்கே சுற்றும்
மாதிரம் பற்றினர்- அணிகளுண்டாகிய வொளியையுடைய மகளிர் ஒருங்கே சுற்றுந் திசைகளைப்பற்றினர்;
இஃதிவன் காதலிமாட்டென்னாம்! எ-று.
அணிகாமர் என்பன ஒரு பொருட்கிளவியாய், மிகுதி 'தோன்ற நின்றன. ஒன்றாகவெழுத்து
அணியினுங்கையினு முளவாகிய சங்கொலிப்ப இளமைக் கணுண்டாகிய வுள்ள வெழுச்சிமிக்கு
வில்லோடம்பை யடுத்துப் பற்றி அரைக் கணியப்பட்ட வுடைவாளையுடைய இளையோர் திசைமுழுதுஞ்
சூழ்ந்து பற்றினரெனப் பிறிதுமோர்பொருடோன்றி நின்றவாறு கண்டு கொள்க. கருப்புருவச் சிலையென்பது
பாடமாயின், புருவமாகிய காமனது உட்கையுடைய கருப்புச் சிலையோடு கண்ணாகிய கள்ளையுடைய
மலரம்பை யடுத்தென்றுரைக்க. சுற்றும் பற்றிய மாதிரமென்பது பாடமாயின் சுற்றும் பற்றி மேவா நிற்ப,
அவ்விடத்து நகைக் குறிப்பாலெடுக்கபட்டு இவர் கைகள் வளையொலிப்பத் தலைமேலேறின வெனக்
கூட்டியுரைக்க. இதற்குச் சுற்றும் பற்றிப் போர் செய்யா நிற்பப் படைக்கல மெடுத்துச் சங்கொலிப்ப
அணியுங் கையு மொருங்கெழுந்தன வெனப் பிறிதுமொரு பொருளாகக்கொள்க. இதற்குப்பிற வுரைப்
பாருமுளர். உரத்தகுவேல் - உரத்தாற்றக்கவேல். மெய்ப்பாடு: மருட்கை, வியப்பாகலின். பயன் : பிரிவுணர்த்துதல்;
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வலிகருதிப் பெற்றவேலினை யுடையவன் பரத்தை மனையிலே
நீங்கச் சிக்கென்ற தேர் உடைத்தாகிய தெருவிலே கண்டவர்கள் சொன்னது.
செய்யுள்: கச்சாகவுமுடுத்து அணியாகவும் அணிந்த ஒளி சிறந்த பாம்பையுடையவன்,
(என்றது, உடுக்கப்படும் பொருள் பூணப்படாதது பூணப்படும் பொருள் உடுக்கப்படாதது: இரண்டற்கும்
(ஒருங்கே) படாத பொருளை உடுப்பதும் பூண்பதும் செய்தான் என்றது:) அவனுடைய தில்லையில்
தலைவன் அவன் வரத்தெரிந்து அணியப்பட்ட கையிற் செறிந்த வளைகளார்ப்ப, (எல்லாம் ஒருபடிப்படச்
செறிந்த வளைகள் முன்னின்றனவெனவும் ஆரவாரித்தனவெனவும் அவை இவனைக் கண்டவளவிலே
நெகிழ்ந்து உழன்றனவெனவும் தோன்றுகிறது. தெரிதல்; இவ்விடத்துச் செறியத் தக்கண தெரிதல் :)
இளமயிலின் அழகையொத்து மிக்க அழகினையுடைய கரிய புருவமாகிய சிலையிலே கண் மலராகிய
அம்புகளைத் தொடுத்து ஆபரணங்களில் உண்டாகிய ஒளியினையுடைய இளமைப் பருவத்து மகளிர்
திக்குகள் தோறும் சூழ நின்று பிடித்துக் கொண்டார்கள். 352
2. பொறையுவந்துரைத்தல்'*
-------------------------
*பேரின்பப் பொருள்; அருளே சிவப்பொறை யறித்துரைத்தது
பொறையுவந்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தைய ரெதிர்கொண்டமை கேட்ட
தலைமகள் நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமற் பொறுத்தமை கண்ட தோழி. 'யானிவ் வாறாகவும்
கலங்காது நின்று பெரும்பொறையாட் டியையான் இன்று பேசுவன என் ' னென்று அவளையுவந்து
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்:-
சுரும்புறு கொன்றையன் தொல்புலி
யூர்சுருங் கும்மருங்குற்
பெரும் பொறை யாட்டியை யென் இன்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
தேய்வுற் றழிகின்றதே .
கள்ளவிழ்க்கோதையைக் காதற்றோழி
உள்ளவிழ்பொறைகண் டுவந்துரைத்தது
இதன் பொருள் :- போரொலி நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகவறான் என்று - பெரிய வொலிக்கு
நீரையுடைய கரும்புதங்கு மூரை யுடையவன் கலந்து வைத்து நீங்கினா னென்று கருது தலான்;
கண்மணியம் அரும் பொறை ஆகும் - என் கண் மணியும் பயணின் மையாற் றாங்குதற் கரிய
பாரமாகா நின்றன்; என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றது எனதுயிருத் தேய்ந்தழியா நின்றது;
பெரும் பொறை யாட்டியை என் இன்று பேசுவ - யானிவ்வாறாக வுங் கலங்காது நின்ற பெரும்
பொறையை யுடையவளை யான் இன்று பேசிவனவென் ! எ-று சுரும்பு உறுகொன்றையன்
தொல்புலியூர்ச் சுருங்கும் மருங்குல் பெரும் பொறை யாட்டியை- சுரும்புகள் வாழுங் கொன்றைப்
பூவினை யுடையானது பழையதாகிய புலியூரிற் சுருங்கின மருங்குலையுடைய பெரும்
பொறையாட்டியையெனக் கூட்டுக.
என் கண்மணியுந் தேய்வுற்றழியா நின்றது ஆவியுமரும் பொறை யாகா நின்றதென்று கூட்டுவாருமுளர்.
உள்ளவிழ் பொறை - நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாத பொறை. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த வுவகை.
பயன்; தலைமகளை வியத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மது விரிகிற, மாலையினை யுடையாளை உயிர்த்தோழி நாயகன்
வருமளவில் நெஞ்சு நெகிழ்கிற பொறையுடைமையைக் கண்டு விரும்பிச் சொன்னது.
செய்யுள்: மிக்க ஆரவாரமுடைத்தாகிய நீர் சூழப்பட்ட சுரும்பு தங்கும் ஊரையுடையவன் கலந்து
வைத்து நீங்கினான் என்று வண்டுகள் அமரப்பட்ட கொன்றைமாலையினையுடையவனது பழைய
பெரும் பற்றப்புலியூரில் சிறிய இடையினையுடையளாய்ப் பெரிய பொறையையுமுடையவளை
இப்பொழுது என் சொல்லுவேன்.! ........
நாயகன் வாயில் வேண்டத் தோழி, நாயகி நெஞ்சு நெகிழ்ந்தமை கண்டு 'எம்போல்வார் அன்றோ
இவையிற்றுக்கு வெகுள்வார்கள் : இவள் பெருமனைக் கிழத்தியாகையால் நீசெய்த கொடுமை கண்டு
நினையாது நெஞ்சு நெகிழ்ந்தாள் என்று வாயில் நேர்ந்தது. 353
3. பொதுப்படக்கூறிவாடியழுங்கல்*
-------------------------------
*பேரின்பப் பொருள்: இன்ப முயிர்விதி யெண்ணி யிரங்கியது...
பொதுப்படக்கூறிவாடியழுங்கல் என்பது பொறை யுவந்துரைத்த தோழிக்கு, முன்னிலைப்புற மொழியாக,
'தமது நலங்கவரக் கொடுத்து வேறுதுணை யின்மையிற் றமதணை யையே தமக்குத் துணையாகக் கொண்டு
கிடந்து என்னைப் போலவுயிர் தேய்வார் இனியாவரோ' வெனப் பொதுப்படப் பரத்தையர்க் கிரங்குவாள்
போன்று தலைமகனது கொடுமை நினைந்து வாடாநிற்றல். அதற்குச் செய்யுள் ;-
அப்புற்ற சென்னியன் தில்லை
யுறாரி னவர் உறுநோய்
ஒப்புற் றெழில்நல முரண்
கவரஉள் ளும் புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
லாருயிர் தேய்பவரே.
பொற்றிக ழரவன்* மற்றிகழ் தில்லைப்
பிரிந்த வூரனோ டிருந்துவா டியது.
*பா-ம் - பொற்றிக ழாவணி
இதன் பொருள்: அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின்- நீரடைந்த சென்னியையுடையவனது
தில்லையை மனமொழி மெய்களாலணுகா தாரைப் போல; எழில் நலம் ஊரன் கவர- கண்ணோட்டமின்றி
எழிலையுடைய நலத்தை ஊரன் கவர்ந்து கொள்ள ; அவர் உறுநோய் ஒப்புற்று உள்ளும் புறம்பும் வெப்புற்று
அத்தில்லையையுறா தாருறு நோயையொத்து அகத்தும் புறத்தும் வெப்பத்தையுற்று; வெய்துயிர்ப் புற்று -
வெய்தாக வுயிர்த்தலையுற்று: தம்மெல் அணையே துணையா-வேறுதுணை யின்மையிற் றமதுமெல்
லணையே தமக்குத் துணையாக; செப்பு உற்ற கொங்கையர் ஆருயிர்தேய்பவர் யாவர் கொல் -
செப்புப் போலுங் கொங்கையை யுடைய மகளிர் ஆருயிர் தேய்வார் பிறர் யாரே யானல்லது? எ-று.
இத் தன்மையராய் என்போல இனி யாருயிர் தேய்வர் ரோவெனப் பரத்தையர்க் கிரங்குவாள்
போன்று, தலைமகனது கொடுமை கூறினாளாக வுரைக்க. தில்லையுறாத வலருறு நோய் யென்பது
பாடமாயின் எழினலமூரன் கவரத் தில்லையை யுறாத அத் தீவினையாருறு நோயை யொத்தென்றுரைக்க.
ஊரனோ டிருந்து வாடியது ஊரன்குறைகளை நினைந்து அதனோடிருந்து வாடியது. மெய்ப்பாடு: அழுகை.
பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : அழகிய சிறந்த பாம்பை யுடையவன் வளப்பம் சிறந்த
பெரும்பற்றப் புலியூரில் பிரிந்த நாயகன் வர அவனுடனே ஒரு சயனத்திருந்து நாயகி வாடியது.
செய்யுள்: கங்காசலம் பொருந்தின திருமுடியையுடையவனது பெரும் பற்றப் புலியூரைச்
சேராதாரைப் போல (இரக்கமின்றி) தோற்றப்பொலிவையும் அழகையும் நாயகன் கொள்ளை கொள்ள
அத்தில்லையைச் சேராதார் உறுநோய் போல உள்ளும் புறம்பும் வெதும்பி. (தில்லையைச் சேர்வாருக்கு
நோய்வந்தாலும் நெஞ்சழியார் என்பது கருத்து) வெய்தாகப் பெருமூச்சு விட்டுத் தம்முடைய மெல்லிய
அணையே துணையாகக் கொண்டு பொற்செப்பையொத்த முலையினையுடையவர்கள் பெறுதற்கரிய
உயிர்தேயாநின்றார் யாவர்காண் ?
எனவே அவர் அது செய்யார்: அன்புடையராதலின் இறந்து படுவார்கள்: நாமே இங்ஙனம்
வருந்தியிருந்தோம், எனக் குறிப்பாலிகழ்ந்தான் . 354
4. கன விழந்துரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள் : "மறந்து முயிரின் பகலா தென்றது."
கனவிழந்துரைத்தல் என்பது தலைமகனது கொடுமை நினைந்து கிடந்து வாடா நின்ற தலைமகள்,
கனவிடைவந்து அவன் மார்புதரத் தானதனை நனவென்று மயங்கிப் பு..து அவனோடு புணராதிழந்தமையைத்
தோழிக்குச் சொல்லா நிற்றல் . அதற்குச் செய்யுள்:-
தேவா சுரரிறைஞ் சுங்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம் வந் தூரன்
தரப்பு லம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன் விழித்
தேனரும் பாவியனே,
சினவிற் றடக்கைத் தீம்புன லூரனைக்
கனவிற் கண்ட காரிகை யுரைத்தது
இதன் பொருள்: நலம் பாய் பாவாய் - நலம் பரந்த பாவாய்; அமளியின் மேல் பூ ஆர் அகலம்
வந்து ஊரன் தர- அமளியின் கண் மாலையையுடைய மார்பை ஊரன் வந்து தர; புலம்பாய் - அவனோடு
மேவாமையிற் பின்னுந் தனிமையாய்; நனவு என்று தழுவிற்றிலேன்; நனவென்று மயங்கித்
தவறு நினைந்து புல்லிற்றிலேன்; அரும் பாவியன் விழித்தேன் - அத் துணையே யன்றிப் பொறுத்தற்கரிய
தீவினையையுடையேன் விழிப்பதுஞ் செய்தேன் - அதனால்; தேவாசுரர் இறைஞ்சும் கழலோன்
தில்லை சேரலர் போல் - தேவரு மசுரரு மிறைஞ்சுங் கழலையுடைய வனது தில்லையைச் சேராதாரைப் போல;
ஆவா கனவும் இழந்தேன் - ஐயோ! கனவான் வருமின்பத்தையு மிழந்தேன் எ-று.
தில்லை சேரலர்போ லென்புழி ஒத்த பண்பு துன்பமுறு தலும் இன்பமிழத்தலுமாம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சினத்தவில்லைப் பெரிய கையிலே யுடைய இனிய புனலூரனை
(க்கனவிலே) கண்ட நாயகி சொன்னது.
செய்யுள் : சயனத்திடத்தே மாலை நிறைந்த மார்பை நம் நாயகர் வந்து தரப் பரத்தையர் (பால்)
என்று வெறுப்பாய், நலம் பரந்த சித்திரத்தை யொப்பாய்! தழுவிக் கொள்ளப் பெற்றிலேன் காண்;
அதற்கு மேலே அரிய பாவத்தைச் செய்த நான் விழித்தேன். ஆதலால் தேவரும் அசுரரும் வணங்கும்
திருவடிகளை யுடையவனது பெரும்பற்றப் புலியூரைச் சேராதாரைப் போல, ஐயோ, ஐயோ
உண்மையென்று கருதிக் கனவையும் இழந்தேன்
தில்லையைச் சேராதார்க்கு உவமை: இம்மை யின்பத்தை, மெய்யெனக் கருதி மறுமை யின்பத்துக்குக்
காரணமாகிய தில்லையைச் சேராமையால் இம்மையும் மறுமையும் இழந்து வருந்துமதுபோல நானும் கனவும்
நனவும் பெற்றிலேன் என்றபடி, 355
5. விளக்கொடுவெறுத்தல்*
-----------------------
* பேரின்பப் பொருள்: இன்பஞ் சுடரோடு இரங்கியுரைத்தது.
விளக்கொடு வெறுத்தல் என்பது கனவிழந்தமை கூறி வருந்தா நின்ற தலைமகள், 'நீயாயினுங்
கலந்தவர்க்குப் பொய்ம்முகங்காட்டிக் கரத்தல் பொருத்தமன்றென்றிலையே யென விளக்கொடு
வெறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் ; -
செய்ம்முக நீல மலர்தில்லைச்
சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக்** கழல்பணி
யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
பொருத்தமன் றென்றில்லையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
கீழும் நெடுஞ்சுடரே
பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ டழுங்கிச்** செஞ்சுடர்க் குரைத்தது.
**கூப்பி: **'டூடிச்' என்பன பழைய வுரைகாரர் பாடம்
இதன் பொருள்: நெய்ம் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடுஞ்சுடரே- நெய்ம் முகத்தைப்பருகி
இருண் முகத்தைக் கிழிக்கும் நெடியசுடரே; கலந்தவர்க்குப் பொய்ம்முகம் காட்டிக் கரத்தல் பொருத்தம்
அன்று என்றிலை-எம்மைக் கலந்தவர்க்குப் பொய்யையுடைய முகத்தைக் காட்டித் தெளிந்தாரை வஞ்சித்தல்
தகுதி யன்றென்று கூறிற்றிலையே? வேறுகூறுவார் யாவர் ? எ-று. செய்ம்முகம் நீலம் மலர்தில்லைச்
சிற்றம்பலத்து அரற்கு- செய்ம்முகத்து ளவாகிய நீலப்பூ மலரா நின்ற தில்லையிற் சிற்றம்பலத்தின்
கணுளனாகிய அரனுக்கு; கைம்முகம் கூம்பக் கழல் பணியாரின் கரத்தல்-கைம்முகங் குவியக்கழலைப்
பணியாதாரைப் போலக் கண்ணோட்டமும் மெய்ம்மையு மின்றிக் கரத்தலெனக் கூட்டுக
செய்ம் முகம் - செய்ம்முன்; கைம்முகம் கைத்தலம், கரத்தல் மறைத்தலெனினு மமையும்.
நெய்ம்முகம் - சுடரை யணைந்தவிடம். நெய்ம்முகமாந்தி யிருண்முகங்கீழு நெடுஞ்சுடரே என்றது
உணவாகிய நெய்யை மாந்தி மேனியொளியை யுடையையாய்ப் பகை செருக்கும் பெருமையையுடையை
யாதலின் அக்களிப்பினாற் கண்டது கூறிற்றிலை என்றவாறு, இவையிரண்டிற்கும் மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையுவுரைப் பொழிப்பு ) கொளு; பஞ்சணையிலே கிடந்த பஞ்சையொத்த மெல்லிய அடியினை
யுடையாள் நாயகன் திறத்து வருந்திச் சிவந்த அழகிய விளக்குடனே சொன்னது.
செய்யுள்: செய் இடங்கள் தோறும் நீலப்பூக்கள் மலருகின்ற பெரும் பற்றப் புலியூரில்
திருச்சிற்றம்பலத்துத் தலைவருக்குக் கையிடத்தைக் குவித்து அவன் திருவடியை வணங்காதாரைப்
போல எங்களுடன் கலந்தவர்க்குப் பொய்யிடத்தைத் தோற்றுவித்துப் பிரியுமது பொருந்துவதொன்றன்று
என்று சொல்லிற்றில்லையே, நெய்யைக் குவளையிலே உண்டு இருளிடத்தைக் கிழிக்கிற விளக்கே!
என்றது. உனக்குணவாகிய நெய்யைப் பெற்று உண்ட செருக்காலும் உனக்குப் பகையாகிய
இருள் கிழித்த மேம்பாட்டாலும் எங்களை உதாசீனம் பண்ணினாய் இத்தனை. 356
6. வாரம்பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல் *
---------------------------------------
*'பேரின்பப் பொருள் : இன்புயி ரன்பே யெடுத்து ரைத்தது"
வாரம் பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல் என்பது விளக்கொடு வெறுத்து வருந்தா நின்ற தலைமகள்
தலைமகன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயிற்கணிற்ப, 'வண்டோரனையர் ஆடவர். பூவோரனையர்
மகளிராதலான், நாமும் அவன்றலை பொழுது ஏற்றுக்கொள்வதன்றோ நமக்குக் காரியம் ; நாம்
அவனோடு புலக்கற் பாலேமல்லேம்' என்று வாயினேர்வித்தார்க்கு 'ஊரனது மாலையுந் தோளும் அவ்
விடத்து வளைத்து வைத்து வேண்டினார் கொள்ளவ மையும் ; யான் மன்னனைப் பரத்தையர்க்கு
உறாவரையாகக் கொடுத்தேன்' என மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் ;
பூங்குவ ளைப்பொலி மாலையும்
ஊரன் பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
கொள்கநள் ளார் அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
தோமன் உறாவரையே.
வார்புன லூரன் ஏர்திகழ் தோள் வயிற்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.
இதன் பொருள்: பூங்குவளைப்பொலிமாலையும்- பொலிவை யுடைய குவளைப் பூவானியன்ற
பெரிய மாலையையும்; ஊரன் பொன்தோள் இணையும் ஊரனது பொன் போலுந் தோளிணையையும்;
ஆங்கு வளைத்து வைத்து ஆரேனும் கொள்க. தம்மில்லத்து வளைத்து வைத்து வேண்டியார் கொள்வாராக;
நள்ளார் அரணம் தீங்கு வளைத்த வில்லோன் தில்லை -பகைவரதரணந் தீங்கெய்த வளைக்கப்பட்ட
வில்லையுடையவனது தில்லையின்; சிற்றம்பலத்து அயல்வாய் ஓங்குவளைக் கரத்தார்க்கு - சிற்றம்பலத்துக்
கயலாகியவிடத்து வாழும் உயர்ந்த வளையையுடைய கையையுடையார்க்கு; மன் உறா
வரை அடுத்தோம் - மன்னனை உறாவரையாகக் கொடுத்தோம் எ-று.
உறாவரை - முற்றூட்டு தீங்குவளைத்த வில்லோனென் பதற்கு இத்தீங்கெய்தவென ஒருசொல்
வருவியாது அரணத்தைத் தீங்கு வளைத்தற்குக் காரணமாகிய வில்லென்று உரைப்பினு மமையும் ஓங்கு
வளைக் கரத்தாரென் புழி ஓங்குதலை வளைக் கரத்தார் மேலேற்றுக. விலையானுயர்ந்த வளையெனினு
மமையும். அடுத்தோ மென்றதனால், தனதுரிமை கூறினாளாம் மன்: அசை நிலையாக்கி, மாலையையுந்
தோளையு மடுத்தோ மெனினு மமையும். மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (நீண்) ட புனல் சூழ்ந்த ஊரையுடையவன் அழகு சிறந்த
தோளிடத்துக் காரையொத்த கூந்தலினை யுடையவள் அன்புடைமை தோன்றச் சொன்னது:
செய்யுள்: தன்னுடனே செருக்கொண்ட அசுரருடைய முப்புரங்களையும் தீங்கு செய்த வில்லையுடையவன்,
அவனுடைய பெரும்பற்றப் புலியூரில் சிற்றம்பலத்துக்கு அயலிலே இருக்கிற மிக்கவளைகளை யணிந்த
கைகளை யுடையார்க்கு மன்னனை முற்றூட்டாகக் கொடுத்து விட்டோம்; இனிச் செங்கழுநீர்ப் பூவாலே
தொடுத்த சிறந்த மாலையையும் நாயகனுடைய அழகிய தோளிணைகளையும் இங்கு வராமல் தங்களிடங்களில்
மறித்து வைத்து யாவராகிலும் கொள்ள அமையும்.
வாரம் புகன்றபடி; முற்றூட்டாகக் கொடுத்தோம் எனவே தன்னுரிமை போன்ற: அம்மாலையோடு
கொடுத்தோம் எனவே தன்னெஞ்சு விடாமையும் இணையாகக் கொடுத்தோம் எனவே சிறிது கொடாமையும்
தோன்றி நின்றது. 357
7. பள்ளியிடத்தூடல்*
------------------
*பேரின்பப் பொருள் : '' இன்ப மிகழ்தல் அன்பெனக் கண்டது"
பள்ளியிடத்தூடல் என்பது வாயின் மறுத்த தலைமகள், ஆற்றாமையே வாயிலாகப் புக்குப்
பள்ளியிடத்தா னாகிய தலைமகனோடு, 'நின்னை யிடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச்
செய்யாத தீவினையேமை நோவாது, இன்றிவ்வாறாகிய - நின்னை நோவதென்னோ ? அது கிடக்க
நின் காதலிமார் புறமே கற்றுநினக்குப் புதிதாகச் செய்த அப் புல்லுதலை யாஞ் செய்ய மாட்டோம்;
அதனா லெம்மைத் தொடாதே, எங்கலையை விடுவாயாக வெனக் கலவி கருதிப் புலவா நிற்றல்,
அதற்குச் செய்யுள் :-
தவஞ்செய் திலாதவெந் தீவினை
யேம்புன்மைத் தன்மைக்கொள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
நோவதென் அத்தன்முத்தன்
சிவன் செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
தொடல்விடு நற்கலையே
பீடிவர் கற்பிற் றோடிவர்** கோதை
ஆடவன் றன்னோ டூடி யுரைத்தது
** றோடலர் , என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: அத்தன் உலகத்துள்ளாரெல்லார்க்குந் தந்தை: முத்தன் - இயல்பாகவே
பாசங்களி னீங்கியவன் : சிவன் - எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்
செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர அவனாற் செய்யப்பட்ட சீரிய வருணிறைந்த தில்லையிலூரனே:
தவம் செய்திலாதவெம் தீவினையேம் - முற்காலத்துத் தவத்தைச் செய்யாத வெய்ய தீவினையை
யுடைய யாம்; புன்மைத் தன்மைக்கு எள்ளாது - நின்னாலா தரிக்கப் படாத எமது புன்மைத் தன்மை
காரணமாக எம்மையே யிகழாது: எவம் செய்து நின்று இனி உனை நோவது என் - நினக்குத்
துன்பத்தைச் செய்யா நின்று இப்பொழுது இனி நின்னை நோதலென்னாம்! அது கிடக்க: நின்
சேயிழையார் நவம் செய்த புல்லங்கள் மாட்டோம் நின்னுடைய சேயிழையார் நினக்குப் புதிதாகச்
செய்த புல்லுதல்களை யாமாட்டேம், அதனால்; நற்கலை தொடல் எமது நல்ல மேகலையைத்
தொடா தொழி; விடு - விடுவாயாக எ - று .
எவ்வம் எவமென நின்றது. காதலில்லை யாயினுங் கண்ணோட்ட முடைமையான்
இகழ்ந்து வாளா விருப்ப மாட்டாமையின், எம்புலவியான் நினக்குத் துன்பமாந் துணையே
யுள்ளதென்னுங் கருத்தான், எவஞ்செய்து நின்றென்றாள். இனியென்பது நீயிவ்வாறாயின பின்
னென்னும் பொருட்டாய் நின்றது சிவன் செய்த சீரருளார் தில்லையூர வென்ற தனான், நின்னாற்
காயப்பட்டாரானுங் காதலிக்கப்படா நின்றாயெனவும் தவஞ்செய்திலாத வெந்தீவினையே மென்றதனான்
எம்மாற் காதலிக்கப்பட்டாரானுங் காயப்படா நின்றேமெனவுங் கூறியவாறாம். புல்லென்பது புல்லமென
விரிந்து நின்றது புல்லமென்பதனைப் புன்மை யென்று நின்சேயிழையார் புதிதாகச் செய்த குறிகளைப்
பொறுக்க மாட்டேமென்றுரைப்பினு மமையும். எவன் செய்து நின்றெனப் பாடமோதி, (தவஞ் செய்திலாத
வெந்தீவினையேம் இன்றுன்னை நோவது என் செய்து நின்றென்றும் என்னத்தனென்று முரைப்பாரு முளர்.
எள்காதென்பதூஉம் பாடம் மெய்ப்பாடு; வெகுளி. பயன்: புணர்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பெருமை மிக்க கற்பினையும் இதழ் விரிகிற மாலையையும்
உடையாள் நாயகனுடனே வெறுத்துச் சொன்னது.
செய்யுள்: உனக்கேற்க வழிபாடு செய்தற்கு முற்பிறப்பில் தவஞ் செய்யாதிருத்தலே யன்றி
வெய்ய தீவினையைச் செய்த நாங்கள் எங்களுடைய புல்லிய இயல்புக்கு எங்களை இகழ்ந்து கொள்ளாதே
வருத்தஞ் செய்து நின்று இப்பொழுது உன்னை நோவது ஏன்? சுவாமி, முத்தியைத் தருகிறவன்
தத்துவத்திலுள்ளவன், அவன் செய்த சீரிய அருளாலே நிறைந்த தில்லையில் தலைவனே! நின்
கருத்தொத்த சேயிழையார் பொழுதைக்குப் பொழுது புதிதாகத் தழுவுகிற தழுவுதலும் அறியோம்:
ஆதலால் எங்களுடைய நல்ல மேகலையைத் தீண்டுதலும் ஒழிவாயாக. 358
8. செவ்வணிவிடுக்கவில்லோர் கூறல்*
----------------------------------
*பேரின்பப் பொருள்: "பலபா ராட்டிலு மின்பகலாதென, அடியார் தாமே யறிந்து கூறியது, '.
செவ்வணி விடுக்கவில்லோர் கூறல் என்பது 'இக்கொங்கைகள் தாங்கித் தளரா நின்ற
மருங்குலையுடைய இவள் வருந்த, இவ்வாயத்தார் முன்னே, அப்பரத்தையர் மனைக்கண் இப்பேதை
இக்குறியறிவிக்கச் செல்லாநின்ற விது நமக்கு மிகவு மிளிவர வுடைத்து' எனச் செவ்வணி விடுக்க
விரையா நின்ற வில்லோர் தம்முட் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் :-
தணியுறப் பொங்குமிக் கொள்கைகள்
தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
யார்கள் பயின்மனைக்கே
பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது
இதன் பொருள்: அரவும் பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லை பிறைக்குப் பகையாகிய
அரவையும் பிறையையும் அழகுறத் தனக்கணியாகக் கொண்டவனது தில்லையின் தொல் ஆயம் நல்லார்கள்
முன்னே- பழைய இவளாயத்தி னுள்ளராகிய நல்லார்கண் முன்னே; பணி உறத்தோன்றும் நுடங்கு
இடையார்கள் பயில்மனைக்கு - அரவு போலத் தோன்றும் நுடங்கு மிடையை யுடையார்கள் நெருங்கும்
பரத்தையர் மனைக்கண் ; தணிஉறப்பொங்கும் இக்கொங்கைகள் தாங்கி தணிதலுறும் வண்ணம்
வளரா நின்ற இக்கொங்கைகளைத் தாங்கி; தளர் மருங்குல் பிணியுறப் பேதை இன்று சென்று எய்தும் ஆல்-
தளரா நின்ற மருங்குலையுடைய இவள் வருந்த இப்பேதை இன்று சென்றெய்தும்; ஆயிற் பெரிதும்
இஃதிளிவர வுடைத்து எ.று.
இதற்குப் பிறிதுரைப்பாருமுளர். பாற்செலு மொழியார்.... புகன்றது- கேட்டார்க்குப் பாலின்
கணுணர்வு செல்லுமொழி யையுடைய மகளிர் மேற்சென்று தூதுவிட விரும்பல் பொல்லாதென
இல்லோர் கூறியது பால்போலு மொழி யெனினு மமையும் ஈண்டுச்செல்லு மென்பது உவமைச் சொல்.
பேதை யென்பது செவ்வணி யணிந்து செல்கின்ற மாதரை. மெய்ப்பாடு நகை, எள்ளற்பொருட்டாகலின்.
பயன்: தலைமகனைச் செலவழுங்குவித்தல், சிறைப்புறத்தானாக, இல்லோர் சொல்லியது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பால் செல்லும் மொழியார் --அவர்களிடத்துச் செல்ல
விரும்புதல் பொல்லா ஒழுக்கம் என்று மனையிலுள்ளார் சொல்லியது
செய்யுள் : பாம்பையும் பிறையையும் ஆபரணமாகக் கொண்டவன், அவனுடைய பெரும்பற்றப்
புலியூரில் பழைய நம் ஆயக் கூட்டத்தாராகிய நல்லோர் முன்னே பாம்பின் கழுத்தை ஒத்துத் தோன்றிய
(நுடங்கிய) இடையினையுடையாராகிய பரத்தையர் வாழும் மனையிலே -- அமையும் படி விம்முகிற
முலைகள் சுமந்து தளர்கிற இடையானது வருந்தப் பேதைத் தன்மையுடையாள் இன்று சென்று
புகா நின்றாள்; இது தகுவதொன்றன்று,
தகாத ஒன்றுக்குச் சொல்லுதலால், இது லோகாசாரமே ஆயினும் தன்மையன்று என்னும் கருத்தால்,
இடைவருந்த இவள் நடக்குமதே -- என இழித்துக் கூறினார், பொல்லாது என்றது, இவ்வுலகாசாரம்
எங்களுக்கு பொருந்தி --யிருந்தது .
9. அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் *
----------------------------------
*பேரின்பப்பொருள்: பலர்கண் டாலுமின் பகலா தென்றது'.
அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் என்பது இல்லோர் செவ்வணி விடுக்க நினையா நிற்ப,
'அயலார்முன்னே இவளால் இக்குறியறிந்த விடத்து ஒருத்தி நமக்குத்தர நாமவனை யெய்தும்படியாயிற்று
நம்முடைய பெண்டன்மையென அயலறி வுரைத்துத் தலைமகள் அழுக்கமுற்றுக் கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள் ;-
இரவணை யும்மதி யேர்நுத**
லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
ளால் இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
வாறுநந் தன்மைகளே
உலகிய லறியச் செலவிட லுற்ற
விழுத்தகை மாதர்க் கழுக்கஞ்## சென்றது.
** 'போனுத: ## விழுத்தகு மாதர் அழுக்கஞ்' என்பன பழைய வுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி இரவைச் சேரும் பிறைபோலு நுதலையுடையாரது
முன் கோலம் செய்து - செவ்வணியாகிய கோலத்தைச் செய்து ; குரவு அணையும் குழல் இங்கிவளால்
இக்குறி அறிவித்து - குரவம்பூச் சேருங் குழலையுடைய இவளால் இக்குறியை யறிவித்து ;
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை- பாம்பு சேருஞ் சடையை யுடையவனது - தில்லையிலூரனை:
ஆங்கு ஒருத்தி தர பின் அவ்விடத்து ஒருத்தி நமக்குத்தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகள்-
நாமவனை யெய்தும்படி யாயினவாறென் நம்முடைய பெண் டன்மைகள் எ.று
நுதலார் நுதியறிவித்தென வியையும் குறி - பூப்பு நிகழ்தற்குறி மெய்ப்பாடு: அழுகை .
பயன்: ஆற்றாமை நீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: உலகியலாகிய செவ்வணியை நாயகன் அறியச்
செல்ல விடுவதாக நினைந்த விழுமிய தகுதியையுடைய நாயகி வருந்தினது.
செய்யுள்: இராப்பொழுது தோன்றும் மதியத்தை ஒத்த நெற்றியினையுடையார்
கூர்மையாலுண்டாகிய --ச் செய்து குரவின் மணத்தை யொத்த கூந்தலினையுடைய இந்த இவளாலே
அறிவித்ததாக இந்தக் குறியை அறிவித்துப் பாம்பைப் பொருந்தின திருச்சடையையுடையவனது
பெரும்பற்றப்புலியூரில் தலைவனை அப் பரத்தையர் சேரியிலே நின்றும் ஒருத்தி இரங்கி
நமக்குத் தரக்கூடும் படியான படியே நம் பெண்மைத் தன்மை (ஆயிற்று).
ஒருத்தி என்றது அவள் உரியளல்லாமை காட்டிற்று, நம் பெண்மை என்றது தன் உரிமையும்
காட்டிக் களவுக் காலத்துத் தன்னுரிமையுங் காட்டிற்று இரவணையுமதி என்றது பகல் விளங்காமையால் 360
10. செவ்வணிகண்ட வாயிலவர் கூறல்.*
-----------------------------------
*பேரின்பப் பொருள்; "இன்பங் கண்டவர்க் கெங்குமின் பாகல்"
செவ்வணிகண்டவாயிலவர்கூறல் என்பது தலைமகளிடத்து நின்றுஞ் செவ்வணி செல்லக்கண்டு,
'நம்மூரற்கு உலகிய லாறுரைப்பான் வேண்டிச் செம்மலருஞ் செம்பட்டுஞ் செஞ்சாந்தும் நமது திருவையுடைய
மனையின் கண் வந்து தோன்றின, வெனப் பரத்தை வாயிலவர் தம்முண் மதித்துக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள் : -
சிவந்தபொன் மேனி மணி** திருச்
சிற்றம் பலமுடையான்
சிவந்த அம் தாளணி யூரற்
குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்த அம் சாந்தமுந் தோன்றின
வந்து திருமனைக்கே
மணிக்குழை## பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது
**யணி என்பது பழையவுரைகாரர் பாடம்
##'மணிக்குழல், என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: சிவந்த பொன் மேனி மணி - செம்பொன் போலு மேனியையுடைய மணி;
திருச்சிற்றம்பலம் உடையான்- திருச்சிற்றம்பலத்தை யுடையான்; சிவந்த அம் தாள் அணி ஊரற்கு-
அவனது சிவந்தவழகிய தாள்களை முடிக்கணி யாக்கும் ஊரற்கு; உலகியலாறு உரைப்பான் -
உலகியனெறியை யறிவிப்பான் வேண்டி; திருமனைக்கு - நமது திருவையுடைய மனைக் கண்;
சிவந்தபைம்போதும் - சிவந்த செவ்விப்பூவும்: அம் செம் மலர்ப்பட்டும் - அழகிய செய்ய பூத்தொழிற்
பட்டும், கட்டு ஆர் முலைமேல் அம்சிவந்த சாந்தமும் கட்டுதலர்ந்த முலைமேலுண் டாகிய வழகிய
செய்ய சாந்தமும்; வந்து தோன்றின - வந்து தோன்றின; இனித் தருமக் குறைவாராமல் ஊரற்கும்
ஏகல் வேண்டும் எ.று.
உலகியலாறு பூப்பு உரைத்தாற் போலச் செவ்வணி யாலறி வித்தலின் உரைப்பா னென்றார்.
தாளிணையூரற் கென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பூப்புணர்த்துதல்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நீலமணியை யொத்த கூந்தலினையுடையாள் பூப்பியல்பை
அறிவிப்பதாக வந்த அழகிய ஆபரணங்களையுடையாளைக் கண்ட வாயில் காவலர் சொன்னது.
செய்யுள்: செம்பொன்னை யொத்த திருமேனியையுடையது அழகிய திருச்சிற்றம்பலமுடையவன்
சிவந்த அழகிய சீர்பாதங்களைச் சூட்டிய நாயகனுக்கு உலகியல் முறையாலே பூப்பறிவு (உரைக்க) சிவந்த
பசுமை பொருந்திய பூவும் (அழகிய) சிவந்த பூந்தொழிற்பட்டும் கச்சினாற் கட்டுதலார்ந்த முலையிடத்தே
அழகிய செஞ்சந்தனமுமாய் நம்முடைய அழகிய திருமனையில் (வந்து தோன்றின).
உலகியல் முறைமை செய்கின்றபடி மறைக்கப்படுவதொன்றைப் பலருமறியும்படி உறுப்புக்கள்
தோறும் எழுதிய பரத்தையர் மனைக்கண் காட்டும்படியாயிருந்தது.
11. மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல் *
-----------------------------------
*பேரின்பப் பொருள்; " இன்புடை யோர்க்குப் புகலின் பேயென் றன்புடை யோர்கள் அறிய வுரைத்தது.''
மனைபுகல்கண்டவாயிலவர்கூறல் என்பது செவ்வணி கண்ட தலைமகன் பரத்தையிடத் தினின்றும்
வந்து தடையின்றி மனைவயிற் புகுதாநிற்ப, பண்டிரவும் பகலும் வாயில் பெறாது நின்றுணங்கும்
இக்காவலையுடைய கடையை இத்துணைக் காலத்திற்கு கழிந்து வாயிலின்றிப் புகுதா நின்றான்,
மனைக் கடன் பூண்டலான் இனிப் புலந்து அடங்காதார் ஒருவருமில்லை, யெனத்தலைமகள் வாயிலவர்
தம்முட் கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள்:-
குராப்பயில் கூழை யிவளின்மிக்
கம்பலத் தான் குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
புகுமிக் கடி மனைக்கே
கடனறிந் தூரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயி லவராய்ந் துரைத்தது
இதன் பொருள்: பண்டு இராப்பகல் நின்று உணங்கு ஈர்ங்கடை - முற்காலத்து இரவும்பகலுந் தான்
வாயில் பெறாது நின்று வாடும் இக்குளிர்ச்சியையுடைய கடையை: இத்துணைப் போழ்தின் சென்று-
நீட்டியாது இத்துணைக் காலத்திற் கழிந்து: கராப்பயில் பூம்புனல் ஊரன் இக்கடி மனைக்குப் புகும் கராம்
பயில்கின்ற பூம்புனலையுடைய வூரையுடையான் இக்காவலையுடைய மனைக்கட் புகாநின்றான். அதனான்
குராப்பயில் கூழை இவளின்மிக்கு - குராப் பூப் பயின்ற குழலையுடைய இவளினும் மேம்பட்டு:- அம்பலத்தான்
குழையாம் அராப்பயில் நுண் இடையார் அடங்கார் எவர் - அம்பலத்தான் குழையாகிய அரவு போலும்
- நுண்ணிய விடையினையுடையார் புலந் தடங்காதார் இனி யாவர் ! மனைக்கடன் பூண்டலான்
எல்லாருமடங்குவர் எ-று
கராம்பயிலென்பது கராப்பயிலென வலிந்து நின்றது; மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: ஊரனானவன் இச்சிறந்த மனையிலே கடப்பாடறிந்துபுக
அழகிய வாயிலுள்ளார் விசாரித்துச் சொன்னது.
செய்யுள்: முன் காலத்து இரவும் பகலும் தான் வாயில்பெறாது, நின்றுவாடும் குளிர்ந்த
வாசலை ஒருமாத்திரைப் பொழுதைக்குள்ளே போய்ப் பெருமுதலைகள் வாழ்கிற புனலுடைத்தாகிய
ஊரினை யுடையவன் இச்சிறந்த மனையில் [புகுந்தான்], : குரவம்பூ நெருங்கின கூந்தலினையுடைய
இவளின் மேலாய்த் திருவம்பலநாதன் குழையாகிய பாம்பின் கழுத்தை ஒத்த நுண்ணிய
இடையினையுடையார் இனி அடங் [காதவர் யாவர்] ?
.......குணமுடையவர் அடங்குகைக்குக் காரணம் பூப்பறிவிக்கும் அளவில் கடப்பாடறிந்து
நாயகன் விரைய வருதலும் வந்தவிடத்து வாயில் மறுக்கக்கடவார் ஏற்றுக்கொள்ளுகையாலும்
இருவரும் கடப்பாடறிந்து தங்களில் பொருந்துதலால் இனிப்பரத்தையர்க்கு மிகையில்லை
போலும் என்பது கருத்து. 362
12. முகமலர்ச்சிகூறல் *
---------------------
*பேரின்பப் பொருள்; "உயிரின் படைந்த தடியார் தேறியது. '
முகமலர்ச்சிகூறல் என்பது பரத்தையிற்பிரிந்த தலைமகன் செவ்வணிகண்டு வந்தானென்று
சொல்லுமளவில், தலைமகளது கண்கள் சிவந்தன. அப்புலவி நோக்கத் தெதிர் காதலனோக்க,
அச்சிவப்பாறி முகமலர்ந்தமையை அவ்விடத்துக்கண்டவர் தம்முட்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வந்தான் வயலணியூர
னெனச்சின வாள் மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற்
றம்பல வன்னருளான் **
முந்தா யினவியன் நோக்கெதிர்
நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
சூழ்ந்து பயின்றனவே
பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிற ருரைத்தது.
**பா-ம் - 'றம்பலத் தானருளான்'
இதன் பொருள்: வந்தான் வயல் அணி ஊரன் என - வந்தான் வயலணிந்த வூரனென்று சொல்லுமளவில்;
சினவாள் மலர்க்கண் செந்தாமரைச் செவ்வி சென்ற- சினவாள் போலு மலர்க்கண்கள் சிவந்த தாமரைப் பூவினது
செவ்வியையடைந்தன : சிற்றம்பலவன் அருளான் முந்தாயின வியன் நோக்கு எதிர்நோக்க- சிற்றம்பலவனதருளான்
முன்னுண்டாகிய பெரிய அப்புலவி நோக்கெதிர் காதலனோக்க: முகமடுவின் பைந்தாள் குவளைகள் பூத்து இருள்
சூழ்ந்து பயின்றன - கதுமெனப் பின் முகமாகிய மடுவிற் பைந்தாளையுடைய குவளைப் பூக்கள் மலர்ந்திருண்டு
நெருங்கின: என்னவில்லறக் கிழத்தியோ! எ-று.
இயனோக்கென்று பிரித்து முன்னுண்டாகிய துனித்த லியல்பையுடைய நோக்கென் றுரைப்பினு மமையும்,
கண்களது பிறழ்ச்சிப் பன்மையாற் குவளைப் பூக்கள் பல கூடினாற் போன்றிருந்தனவென்பது போதரப்,
பயின்றனவென்றார், காதலனோடு பழகினவெனினு மமையும். தலைமகற்குப் புலவிக் காலத்து வருந் துன்பமிகுதியும்
புலவி நீக்கத்து வருமின்ப மிகுதியும் நோக்கிச் சிற்றம்பலவ னருளாலெனக் காரணத்தை மிகுத்துக் கூறினார்.
மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பூவடைத்தாகிய புனல் சூழப்பட்ட ஊரையுடையவன் மனையிடத்துப்
புகுதுமளவில் முகமலர்ந்த வாசத்தைப் புனைந்த குழலினையுடையாள் செய்தியை அயலார் சொன்னது.
செய்யுள்: வயலணிந்த ஊரையுடையவன் வந்தான் எனும் அளவிலே சினத்த வாள் போலும்
தொழிலினையும் மலர்போலும் தோற்றத்தையும் உடைய கண்கள் செந்தாமரைப் பூவின் செவ்வி
நிறமாகிய மிக்க சிவப்பை அடைந்தன: திருச்சிற்றம்பலத்தினிடத்தே வாழும் அவனருளால் ( முன் உண்டாகிய)
கோபித்த நோக்கம் நாயகன் நோக்கி எதிர்பார்த்த பொழுது முகமாகிய மடுவிலே அழகிய தாளையுடைய
நீலப்பூப்போல பொலிவுற்று மலர்ந்து இருண்டு நெருங்கின.
13. காலநிகழ்வுரைத்தல்*
-----------------------
* பேரின்பப் பொருள் : 'இன்புடை யோர்க்குக் கருணை யெளிதென அன்புடை யோர்கள் அறிய வுரைத்தது:
காலநிகழ்வுரைத்தல் என்பது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனது ஆற்றாமையைத் தலைமகள்
நீக்காதிருப்ப வண்டூது மல்லிகை போதானும் அந்திப்பிறையானுங் கங்குற் பொழுதானும் ஆற்றானாய்ப்
புகுதரா நின்றான். இனி நீ புலக்கற்பாலை யல்லை யென உழையர் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் -
வில்லிகைப் போதின் விரும்பா
அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன் தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
லூரற் கெதிர்கொண்டதே
இகழ்வ தெவன்கொல் நிகழ்வதிவ்** வாறெனச்
செழுமலர்க் கோதை உரைத்தது
** இகழ்வதெங்கே திகழ்வதிவ் : என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: வில்லி கைப்போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பிற்செல்லி - காமன் கையிலம்பாகிய
பூக்களில் ஆதரமில்லாத அரிய குறிப்பையுடையவர்கள் தனக்குச் செய்த அன்பின்கண் வேட்டுச் செல்வோன்:
கைப் போதின் எரி உடையோன் கையாகிய பூவின்கணுளதாகிய எரியையுடையான்; தில்லையம்பலம் சூழ்
மல்லி கைப்போதின் வெண்சங்கம் வண்டு ஊத - அவனது தில்லை யம்பலத்தைச் சூழ்ந்த மல்லிகையின்
போதாகிய வெண்சங்கை வண்டுகளூத: விண் தோய் பிறையோடு எல்லி - விண்ணையடைந்த பிறையோடு
இராப்பொழுது: கைப்போது இயல்வேல் வயல் ஊரற்கு எதிர்கொண்டது கையாகிய பூவின்கணியலும்
வேலையுடைய வயலூரற்கு மாறு கொண்டது எ-று.
என்றது 'வண்டூது மல்லிகைப் போதானும் அந்திப் பிறையானுங் கங்குற்பொழு தானும்
ஆற்றானாய்ப் புகுதரா நின்றான்: இனி நீ புலக்கற்பாலையல்லை' யென வாயினேர் வித்தவாறு.
வில்லிகைப் போதற் புலன்களை விரும்பாத அரும் பாவியரெனினு மமையும் . இகழ்தல்
தலைமகனாற்றாமை நீக்காதிருத்தல். எல்லி ஊரற்கு வாயிலாக வேற்றுக் கொண்டது
புலவா துண்ணெகிழ்ந் தாளென்றிவளை நாமிகழ்கின்றதென் இதுவன்றோ பொழுதென
உழையர் தம்முட் புறங்கூறினாராக வுரைப்பினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம்,
பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இகழ்ந்திருந்த.......... திகழாநின்ற காலம்
இக்காலமல்லவோவென்று வளவிய பூமாலையையுடையாள் பக்கத்தே நின்றவர் சொல்லியது.
செய்யுள்: காமன் கையில் பூ அம்பாலே மகளிரை விரும்பாத அரிய பாவத்தையுடையவர்கள்
செய்த அன்பிலே செல்லுகிறவன், கைம்மலராகிய பூவிலே நெருப்பை ஏந்தினவன், அவனுடைய
திருவம்பலத்தைச் சூழ்ந்த மல்லிகைப் பூவாகிய வெள்ளிய சங்குகளை வண்டுகள் ஊத விசும்புதோய்ந்த
பிறையோடே இரவானது கையாகிய பூவிலே சீலித்தவேலையுடைய வயல் சூழ்ந்த ஊரையுடையவர்க்கு
எதிராய் நின்றது. இக்காலத்தை இகழப் படுமோ ? 304
14. எய்தலெடுத்துரைத்தல் *
-------------------------
* பேரின்பப் பொருள்: 'இன்பம் பெற்றவுயி ரன்பாய் மகிழ்ந்தது '
எய்தலெடுத்துரைத்தல் என்பது பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன் பூப்பு நிகழ்ந்த
கிழத்தியைப் புலவிதீர்த்து இன்புறப் பண்ணி எய்தலுற்று மகிழ்ந்தமையை அவ்விடத்துள்ளார்
எடுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
புலவித் திரைபொரச் சீறடிப்
பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
றெய்திக் கதிர்கொண் முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
லாயின வூரனுக்கே
சீரிய லுலகிற்* றிகழ்தரக் கூடி
வார்புன லூரன் மகிழ் வுற்றது.
**சீர்திகழுலகிற், என்பது பழையவுரைகாரர் பாடம்,.
இதன் பொருள்: புலவித் திரை பொர-புலவியாகிய திரை வந்துமாறுபட; சீறடிப்பூங்கலம்
சென்னி உய்ப்ப - காதலி சிற்றடியாகிய பொலிவினையுடைய வணியைத் தன்சென்னியி லுய்த்தலான்
அப்புலவி நீங்க; கலவிக் கடலுள் கலிங்கம் சென்று எய்தி-கலவியாகிய கடலுள் துகிலைச் சென்று பற்றி;
கதிர்கொள் முத்தம் நிலவி நிறைமது ஆர்ந்து - எயிறாகிய வொளிபொருந்தின முத்தின்கட் பொருந்தி
நிறைந்த நீராகிய மதுவைப் பருகி; அம்பலத்து நின்றோன் அருள் போன்று உலவு இயலாத் தனம்-
அம்பலத்து நின்றவன தருளை யொத்து ஒருஞான்றுந் தளர்தலில்லாத முலைகள், ஊரனுக்குச் சென்று
எய்தல் ஆயின- ஊரற்குச் சென்று பெறலாயின எ.று.
புலவு நாறித் திரைகள் வந்து மோதச் சிறிய வடியையுடைய பொலிவையுடைய மரக்கலத்தைக்
கடலில் சென்னியிலே செலுத்தக் கடலுட் கலந்து கலிங்கமாகிய தேயத்தைச் சென்றெய்தி ஒளிபொருந்திய
முத்துக்கள் தன்கண்வந்து நிலைபெற அவ்விடத்துள்ள மதுக்களை நுகர்ந்து அம்பலத்து நின்றவ னதருளை
யொத்து ஒரு ஞான்றுங் கேடில்லாத பொருள் சென்றெய்தலாயின வென வேறுமொரு பொருள் விளங்கிய
வாறறிக சீரியலுலகிற் றிகழ் தரக்கூடி - சீர்மையியன்ற வுலகினுள்ள வின்பமெல்லா வற்றினும் விளங்கக்கூடி,
சீரியலுலகு- தேவருலகுமாம் . இதுவுந் துறை கூறிய கருத்து மகிழ்வுற்றதென இன்னார் கூற்றென்னாது
துறைகூறினார். மெய்ப்பாடு : உவகை. பயன் : மெய்ம்மகிழ்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சிறப்பு விளங்கின உலகத்தே விளக்க முண்டாம்படி
கூடி ஒழுங்குபட்ட புனலாற் சூழ்ந்த ஊரன் மகிழ்ச்சி யடைந்தது
செய்யுள் : புலவியாகிய திரைபொர அத்திரை நீங்குதற்கு நாயகியுடைய சிறிய அடியிலே பொலிந்த
ஆபரணங்கள் சென்னிபட (என்றது வணங்க என்றபடி) இருவருடைய நெஞ்சாகிய கடலும் கடந்த விடத்துப்
புடவையைச் சென்றுய்த்து ஒளியுடைத்தாகிய முத்தை யொத்த முறுவலிலே நிலைபெற்று நிறைந்த
நீராகிய தேனையுண்டு திருவம்பலத்தே நின்றவனுடைய திருவருளை ஒத்துத் தளராத முலைகள்
ஊரனுக்குச் சென்று பெறலாயின அன்றே .
என்றது. நாயகன் அன்புடைமையும் நாயகி புலவிச் செவ்வியறிந்து நீர்த்த காமச்சுவை மதுவுண்டு
அவளுள்ளத்தே மகிழ்ச்சியும் கூறினவாறு, 365
15. கலவிகருதிப்புலத்தல்*
------------------------
*பேரின்பப் பொருள்: " இன்பம் மிகும்படி யன்பறிவித்தது''
கலவிகருதிப்புலத்தல் என்பது புலவிதீர்த்து இன்புறப் புணரப்பட்டு மயங்கா நின்ற தலைமகள்,
தனக்கவன் செய்த தலையளியை நினைந்து, இவ்வாறருளுமருள் ஒரு ஞான்று பிறர்க்குமாமென வுட்கொண்டு
பொருமியழுது; பின்னுமவனோடு கலவி கருதிப் புலவா நிற்றல், அதற்குச் செய்யுள் ;-
செவ்வாய் துடிப்பக் கருங்கண்
பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
கலுழ்ந்து புலந்து நைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
மெனநினைந் தின்னகையே
மன்னிய வுலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் ** புலவி யெய்தியது.
**" மகிழ்ந்து" என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: இன் நகை - இன்னகையை யுடையாள் செவ்வாய் துடிப்ப - செய்யவாய் துடிப்ப;
கருங்கண்; பிறழ - கரிய கண்கள் பிறழ; சிற்றம்பலத்து எம், மொய்வார் சடையோன் அருளின் முயங்கி
மயங்குகின்றாள்- சிற்றம்பலத்தின்க ணுளனாகிய எம்முடைய நெருங்கிய நீண்ட சடையை யுடையவன
தருள் பெற்றவர் போல முயங்கி இன்பக்களியின் மயங்குகின்றவள், இவ்வாறு நமக்கருளுமருள் ஒரு
ஞான்று பிறர்க்கு மாமென ஒன்றனையுட் கொண்டு; வெவ்வாய் உயிர்ப் பொடி விம்மிக் கலுழ்ந்து
வெய்ய விடத்தையுடைய நெட்டுயிர்ப் போடு பொருமியழுது; புலந்து நைந்தாள் - புலந்து வருந்தினாள் எ-று.
அருளின் முயங்குகின்றாளென்புழி அருள் பெற்றவர் உவமை யாதல் ஆற்றலான் வந்தது
அருளான் முயங்கி யென்பாரு முளர். வெவ்வாயுயிர்ப்பென்பது "கலுழ்கட் சின்னீர்” என்பது போல நின்றது.
தவறுபற்றிப் புலப்பளென்று நீ கூறுதி; இதுவன்றோ இவள் புலக்கின்ற வாறெனத் தோழிக்குத் தலைமகன் கூறியது.
மன்னிய வுலகிற் றுன்னிய வன்பொடு- நிலை பெற்ற வுலகத்தின் வைத்துச் செறிந்த வன்போடு.
இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த வெகுளி ; பெருமிதமுமாம். பயன்: அது
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : நிலை நின்ற உலகத்தோடு செறிந்த அன்புடனே
கலவியிலே களித்துப் புலவியுற்றது.
செய்யுள்: சிவந்தவாய் துடிப்பவும் கரியகண்கள் உலாவவும் சிற்றம்பலத்தே உளனாகிய
எம்முடைய செறிந்து நீண்ட சடையினை யுடையவன் திருவருள் பெற்றாரைப் போலத் தழுவிக்கொண்டு
களிக்கின்றவள் வெய்ய விடத்தை யுள்ளே உடைத்தாகிய பெருமூச்சோடே பொருமியழுது வெறுத்துக்
கிலேசித்தாள் ; இத்தன்மையாகிய அருள் மேலாரு காலத்திற் பிறர்க்கும் செய்ய அடுக்குமோ என்று
கருதி இனிய முறுவலினையுடையாள் நைந்தாள்.
16. குறிப்பறிந்து புலந்தமை கூறல் *
--------------------------------
*பேரின்பப் பொருள்: "அன்பா லின்பென் றாராய்ந் துரைத்தது
குறிப்பறிந்து புலந்தமை கூறல் என்பது புலவி தீர்ந்து கலுழ்ந்து புணர்ந்து தானுமவனு மேயாய்ப்
பள்ளியிடத்தாளாகிய தலைமகள், பின்னுமொரு குறிப்பு வேறுபாடு கண்டு புலந்து, இப் பள்ளி பலரைப்
பொறாதென்றிழிய, 'இப்பொழுது இவளிவ் வாறிழிதற்குக் கருதிய குறிப்பென்னை கொல்லோ' வென
உழையர் தம்முட் கூறா நிற்றல் . அதற்குச் செய்யுள்:-
மலரைப் பொறாவடி மானுந்
தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழலவிழித்
தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
கொல்லோ கருதியதே
குறிப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.
இதன் பொருள்; மன்னன் ஒருவன்-மன்னன் ஒருவன்; மலரைப் பொறா அடிமானும் தமியள் -
மென்மையான் பொறாத வடியையுடைய மானுந்தமியளே ஆயினும்: பள்ளி பலரைப் பொறாது என்று
இழிந்து நின்றாள் - இப்பள்ளி பலரைத் தாங்காதென்று கூறிப் பள்ளியினின்று மிழிந்து நின்றாள்;
காமன் எய்த அலரைப் பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா- காமனெய்த
அலரம்பை வெகுண்டு அன்றழலாகிய கண்ணை விழித்தவன தம்பலத்தை வணங்காத; கலரைப்
பொறாச் சிறியாள் கருதியது என்னை கொல்- தீய மக்களைப் பொறாத சிறியவள் இந்நிலைமைக்கட்
கருதிய தென்னோ! எ-று
இழிந்து நின்றாளென்பது விரைய விழிந்தாளென்பதுபட நின்றது . கலரைப்பொறாச்
சிறியாளென்றது தீமக்களென்று சொல்லும் வார்த்தையும் பொறாதவள் தீமக்கள் செய்யுங்
காரியத்தைச் செய்தாளென்றவாறு. குறிப்பினிற் குறிப்பென்றது, இவ்வாறருள் பிறர்க்காகுமென
நினைந்து இன்னகை புலந்தாளென்று தலைமகன் கூறிய கூற்றையே தவறாக நினைந்து
நம்மையொழிந்து பிறருமுண்டாகக் கூறினானாகலான் இந்தவமளி பலரைப் பொறாதெனப்
புலந்தாள், குறிப்பாலே தலைமகனது குறிப்பையறிந்து. இவ்வகை தலைமகள் புலம்ப வாயில்
கடம்மூட் சொல்லியது. இதுவுமது. மெய்ப்பாடு: மருட்சி. பயன்: ஐயந்தீர்தல், பள்ளியிடத்தாளாகிய
தலைமகள் நுண்ணிதாகியதோர் காரணம் பற்றி இவ்வகை யுரைத்து ஊடக்கண்ட தோழி
தன்னெஞ்சோ டுசாவினாளென்பது தலைமகன் றன்னெஞ்சோ டுசாவினானெனின், அது பொருந்தாது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: நாயகனுடைய - முகக்குறிப்பாலே நெஞ்சிற் கருத்தை முறைப்பட
விசாரித்து மலர்களை யொத்த கண்களையுடையாள், புலந்தது. (என்ன. புலந்தபடியைச் சொன்னது
என்று படும்)
செய்யுள்: மலரினை மிதிக்கவும் பொறாத மெல்லிய அடியினையுடைய மானை ஒப்பவளும்
தனியளாயிருந்தாள்; அவள் நாயகனும் தனியனாயிருந்தான்; (அவனுக்கொரு பாங்கனாதல் அவளுக்கொரு
தோழியாதல் அருகிருந்தாரில்லை என்றபடி); இந்தச் சயனம் பலரைப் பொறாது என்று இழிந்து நின்றாள்;
காமனால் எய்யப்பட்ட பூவம்பைப் பொறாதே அன்று அழலாக விழித்தவன், அவனுடைய திருவம்பலத்தை
வணங்காத அறிவிலாதாரைப் போல் பொறாத சிறியவள் , (என்றது அம்பலம் வணங்காதாருடனே கெழுமியிருக்கப்
பொறாதவள், அம்பலம் வணங்காதாரைப் போல ஒரு காரணமின்றிச் சீறினாள் என்பது கருத்து )
இவள் கருத்து என் தான் ? 367
17.வாயிலவர் வாழ்த்தல் *
------------------------
* பேரின்பப் பொருள்: அடியா ருயிரின் பகமிக மகிழ்ந்தது
வாயிலவர் வாழ்த்தல் என்பது செவ்வணிவிடுக்கப் பூப்பியற் செவ்விகெடாமல்
மெலிவறித்து இவளது பொலிவோடு வந்தமையான் இவன் மெய்யே தக்கவாய்மையனெனத்
தலைமகனை வாயிலவர் வாழ்த்தா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
வில்லைப் பொலி நுதல் வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவோடு வந்தமை
யான்நின்று வான் வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.
தலைமகனது தகவுடைமை
நிலைதகுவாயில் நின்றோருரைத்தது.
இதன் பொருள்: வில்லைப் பொலி நுதல் வேல் பொலி கண்ணி மொலிவு அறிந்து-விற்போலு
நுதலையும் வேல்போலுங் கண்களையு முடையாளது வாட்டமறிந்து; வல்லைப் பொலிவொடு வந்தமையான் -
விரைய இவளது பொலிவோடு வந்தமையால்; வான் நின்று வழுத்தும் வானத்துள்ளார் நின்று
வழுத்தும்; தில்லைப்பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை -சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் -
தில்லைக்கட் பொலியுஞ் சிவனது சிற்றம்பலத்தைக் கருதுவாரைப்போல மல்லைப் பொலிவயல் ஊரன் -
வளத்தாற் பொலியும் வயலையுடைய வூரையுடையவன்: மெய்யேதக்க வாய்மையன்- மெய்யாக
நல்ல மெய்ம்மையன் எ-று.
வில்லையென்னு மைகாரம் இசைநிறையாய் வந்தது: காதலன் வர இவள் இடையின்றிப்
பொலிந்தமையாற் பொலிவொடென ஒடுக்கொடுத்துக் கூறினார். பொலிசிற்றம்பலமென வியையும் மல்லல்:
கடைக்குறைந்து ஐகாரம் விரிந்து நின்றது. மல்லற் பொலி யென்பதூஉம் பாடம் . மெய்ப்பாடு: உவகை.
பயன்: மகிழ்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தலைமகன் தகவுடைமையை நிலைமைதக்க வாயில்
நின்றவர்கள் சொன்னது.
செய்யுள் : வில்லையொத்த நெற்றியினையும் வேலையொத்த கண்களையுமுடையாளது
வாட்டத்தையும் அறிந்து விரையச்சிறந்து வந்தமையால் மாளாதே தேவர்கள் வாழ்த்தும் பெரும்பற்றப்
புலியூரிலே சிறந்தவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை நெஞ்சாலே நினைப்பாரைப் போலே
வளப்பமுடைத்தாகிய பொலிவு பெற்ற ஊரையுடையவன், உண்மையாகத் தகுதி பெற்ற ஒரு சொல்
வாசகத்தை யுடையனாயிருந்தான்.
என்றது இவள் வாடாமல் வந்தமையால், அவன் அன்புடையனென்று சொல்லிய
வார்த்தை சத்தியமாயிருத்தது. 368 )
18. புனல்வரவுரைத்தல் *
---------------------
*பேரின்பப் பொருள் : அடியா ருயிர்க்கின் பாமெங்குமென்றது
புனல்வரவுரைத்தல் என்பது 'தலைமகளுடன் மனைவயிற் றங்கி யின்புறா நின்றவனது
தோள்களைப் பரத்தையர் பொருந்தி மகிழப் புதுப்புனல் வந்து பரந்தது: இனிப் புனலாட்டினால் இவன்
காதலி புலக்கும் போலும்' என வையத்தார் தம்முட் புனல்வரவு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மேன்பூக்
குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகி
ழத்தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
வாய்ந்த புதுப்புனலே.
புனலா டுகவெனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வையமுரைத்தது.
இதன் பொருள் : சூன் முதிர் துள்ளு நடைப்பெடைக்கு- சூன் முதிர்ந்த துள்ளுநடையை யுடைத்தாகிய
பெடைக்கு; இல் செய்வான் துணைச்சேவல்-ஈனுமில்லைச் செய்யவேண்டுடித் துணையாகிய சேவல்;
தேன் முதிர் வேழத்தின் மென் பூக்குதர்- தேன் போலுஞ் சாறு முதிர்ந்த கரும்பினது மெல்லிய பூவைக்கோதும்;
செம்மல் ஊரன் திண்தோள் தலைமையை யுடையவூரனது திண்ணிய தோள்களை; மான் முதிர்நோக்கின்
நல்லார் மகிழ - மானினது நோக்கம்போலு நோக்கினையுடைய நல்லார் கூடி இன்புற; தில்லையான்
அருளே போல்முதிர் பொய்கையில் வாய்ந்த புதுப்புனல் பாய்ந்தது - தில்லையான தருளை யொத்து
நீர் முதிர்ந்த பொய்கையுள் நல்ல புதுப்புனல் பாய்ந்தது. இனிப் புனலாட்டினாற்றன் காதலியைச்
சிவப்பிக்கும் போலும் எ-று.
சூன் முதிர் தலாற் குறுகவடியிடுதலிற் றுள்ளு நடையென்றார். தில்லையானருள் பெற்றவர்
போல நல்லார் மகிழ வென்றுரைப்பாருமுளர். சேவலன்னந் தன் சூன் முதிர்ந்த பெடைக்கு ஈனில்லிழைத்துப்
பாதுகாக்கின்றாற்போல இவனுந் தன் காதலிக்கு வேண்டுவன செய்து மனைவயிற்றங்கி யின்புறுகின்றானென
உள்ளுறை காண்க. துன்னுநடையென்று பாடமோதிச்* சூன்முதிர் தலாற்பால அடியிடு நடையென்
றுரைப்பாருமுளர்,
*ஓதுபவர் பழையவுரைகாரர்.
வெண்பூ வென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: பிரிவுணர்த்துதல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: விரும்பிப் புனலாடப் புகாநின்றானென்று மனையை விரும்பி
வந்தவனைப் பூமியிலுள்ளார் சொன்னது ('புனலாடுவதென' என்பது இவர் பாடம்).
செய்யுள்: சூன் முதிர்ந்த குறுக அடியிடும் நடையினையுடைய தன் பெடைக்குச் சேவலானது
கூடு எடுப்பதாகத் தேன் மிக்க வேழமாகிய சுரும்பின் மெல்லிய பூவைக் கோலுகிற தலையான
ஊரையுடையவன், (என்றது குறிப்புமொழி: மகப்பேறு காரணமாக எடுக்க நினைந்தமையல்லது
தன்பெடை மேலுள்ள அன்பாகில் முன்னமே எடுக்குமென்றும், தன் காரியமுற்றி நாற்றமில்லாத
பூவைக் கோதினாற் போலப் புதல்வன் காரணமாகத் தன் நாயகியிடத்து வியாபரிக்கிறான்
என்பது கருத்து : ) சிக்கென்ற தோள்களை மானோக்கத்தின் தன்மை முதிர்ந்த நோக்கினை
யுடையவர்கள் பெற்று மகிழத் தில்லையானருளை யொக்க முதிர்ந்த பொய்கையிலே புதுப்புனல்
வந்து பாய்ந்தது.
ஆதலால், இவன் புதுப்புனலாடிப் பரத்தையரை மகிழ்வித்துத் தன் காதலியை வெகுள்விக்கும்
போலுமெனக் கண்டார் சொல்லியது. 369
19. தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல் *
----------------------------------
*பேரின்பப் பொருள் : "இன்புடை யோரால் எவர்க்குமின்பாமென, அடியார் நோக்கி அகமிக மகிழ்ந்தது"
தேர்வரவுகண்டு மகிழ்ந்துகூறல் என்பது புனல் வரவு கேட்ட தலைமகன் புனலாட்டு விழவிற்குப்
பரத்தையர் சேரிக்கட் செல்லா நிற்ப, 'இவனைப் புணர்தற்குத் தக்க தவத்தினை முற்காலத்தே செய்தீர்கள் :
தேர்வந்து தோன்றிற்று: இனிச் சென்று இவனது தோளிணையைத் தோய்மின்' எனத் தேர் வரவு கண்டு
பரத்தையர் தம்மின் மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்: -
சேயே யெனமன்னு தீம்புன
லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
தீர்சுடர் கின்றகொலந்*
தீயே யெனமன்னு சிற்றம்
பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
தேர்வந்து மேவினதே
பயின்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயன்மணிக் கண்ணியர் கட்டுரைத்தது
*'கோலந்' என்பது பழைய வுரைகாரர் பாடம்
இதன்பொருள்: சுடர்கின்ற கொலம் தீயே என மன்னு- சுடரா நின்ற வடிவு தீயேயென்று சொல்ல
நிலைபெற்ற; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வீயே என அடியீர் -சிற்றம்பலவரது - தில்லை நகரிடத்துள்ளீராகிய
பூவையொக்கு மடியையுடையீர், நெடுந் தேர்வந்து மேவினது நெடிய தேர் ஈண்டுவந்து மேவிற்று; புணர் தவம்
தொன்மை செய்தீர் - இவனைப் புணர்தற்குத் தக்க தவத்தை முற்காலத்துச் செய்தீர்கள் ; சேயே என மன்னு
தீம்புனல் ஊரன் திண் தோள் இணைகள் தோயீர் - வடிவு முருக வேளேயென்று சொல்ல நிலைபெறா நின்ற
இனிய புனலை யுடைத்தாகிய வூரையுடையவனது திண்ணிய தோளிணைகளை யினியணைமின் எ-று
ஒன்றற்கொன்றிணையா யிருத்தலின் இணையெனத் தனித் தனி கூறப்பட்டன இதுவும் ஊடனிமித்தம்.
கோலமெனற் பாலது கொலமெனக் குறுகி நின்றது. கயன் மணிக்கண்ணி யென்பது பாடமாயின். பரத்தையர்
சேரிக்கட்டலைமகனது தேர் செல்லத் தலைமகணொந் துரைத்ததாம். இப்பொருட்கு நெடுந்தேர் நுமது சேரிக்கண்
வந்து தங்கிற்றென்றுரைக்க. மெய்ப்பாடு: உவகை. பயன் : தலைமகன் வரவு சேரிப்பரத்தையர்க்குப்
பாங்காயினார் அவர்க்குணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பரத்தையர் தெருவிலே பயின்ற மணியழுத்தப்பட்ட தேர் செல்லக்
கயலையொத்த தூய கண்களையுடையாராகிய பரத்தையர் சொன்னது.
செய்யுள் : விளங்காதின்ற திருநிறம் தீ நிறமேயென்ன நிலைபெற்ற திருச்சிற்றம்பல நாதருடைய
பெரும்பற்றப் புலியூராகிய நகரியின் தெருவிலே நெடிய தேர் வந்து பொருந்திற்று: (ஆதலால்) சுப்பிரமணியனே
என்னும்படி நிலைபெற்ற இனிய புனலணைந்த ஊரையுடையவன் சிக்கென்ற தோளிணைகள் புணர்ச்சிக்கு
வேண்டும் புண்ணியத்தை முற்பிறப்பிலே செய்தவர்களே! பூவேயென்று சொல்லும்படி மெல்லிய வடிவினை
உடையீர்! இனித் தோயீர் தோள். 370
20. புனல் விளையாட்டிற் றம்முளுரைத்தல்*
--------------------------------------
* பேரின்பப் பொருள்: உலகிலெப் பணிகள் உற்று முயிருக்கின்பம் பிரிவிலை யென்றே யுரைத்தது.
புனல்விளையாட்டிற் றம்முளுரைத்தல் என்பது தலைமகனுடன் புனலாடநின்ற பரத்தையர் சேடிமார்
'அரமங்கையரைப் போலப்புனலாடநின்ற அவ்வரே' யென்று விளித்து 'நாமெல்லா மித்தன்மையேமாக
வானரமங் கையரென்று சொல்லும் வண்ணம் மற்றொருத்தி வந்து இவனைத் திரித்துக் கொள்ளக்
கொடுத்துப் பின் வருந்தாது முன்னுறக் காப்போம் எனத் தம்முட் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
அரமங்கையரென வந்து
விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோனதில்லைச்
சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
காத்துநம் பொற்பரையே
தீம்புனல் வாயிற் சேயிழை வருமெனக்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது
இதன் பொருள்: அரமங்கையர் என வந்து விழாப்புகும் அவ்வவர்- அர மங்கையரைப் போல வந்து
புனலாட்டு விழவின்கட் புகாநின்ற அவரவரே ; வான் அரமங்கையர் என அவள் வந்து அணுகும் -
நாமெல்லாம் இத்தன்மையோமாக. வானிடத் தரமங்கையரென்று கருதும் வண்ணம் அவள்
வந்தணுகா நின்றாள். அணுகித் தன்னிடத் திவரைத் திரிப்ப; அன்று அங்கு உகிரான் அயனைச்
சிரம் செற்றோன் தில்லை - அன்று அவ்விடத்து உகிரால் அயனைச் சிரந்தடிந்தவனது தில்லையின் ;
சிற்றம்பலம் வழுத்தாப் புர மங்கையரின் நையாது- சிற்றம்பலத்தை வழுத்தாத புரங்களின்
மங்கையரைப் போலப் பின் வருந்தாது: நம் பொற்பரை ஐய காத்தும் - நம் பொற்பரை வியப்ப
முன்னுடைத்தாகக் காப்போம் எ-று,
அரமங்கையர் தேவப் பெண்களுக்குப் பொதுப் பெயர் வானரமங்கையரென்றது.
அவரின் மேலாகிய உருப்பசி திலோத்தமை முதலாயினாரை வானரமங்கையரென்றது
சாதியை நோக்கி நின்றது. ஐயபொற்பரையெனக் கூட்டினுமமையும், அவளென்றதும்
சேயிழையென்றதும் பரத்தையரிற் றலைவியாகிய இற்பரத்தையை “பரத்தை வாயிலென
விரு கூற்றுங் கிழவோட் சுட்டாக் கிளப்புப் பயனிலவே'' (தொல்,பொருள் செய்யுள். 200)
என்பதனால் இது கிழவோட் சுட்டாக் கிளப்பாயினும் இப்பரத்தையரது மாறுபாடு தலைமகளூடுதற்கு
நிமித்தமாகலிற் பயனுடைத்தாம். மெய்ப்பாடு : அச்சம் .பயன்: தலைமகனைத் தங்கட்டாழ்வித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இனிய புனலாடிடத்தே சிவந்த ஆபரணங்களை யுடையாளாகிய
காதற் பரத்தையர் வருமென்று வேயை யொத்த தோள்களை யுடையராகிய இற்பரத்தையர் சொன்னது.
செய்யுள்: நீரரமங்கையர் என்னும்படி நீர் விழவிலே வந்து புகுதுகிற அவ்வவர் தாங்களே
(என்றது. விழவுக்குப் புகுதுகிற மகளிர் பலரையும்) தெய்வமகள் என்று சொல்லும்படி வந்தணுகா நிற்பள்
(அவன் காதற் பரத்தையாதலால்): அன்று உகிராலே அவ்விடத்து அயனைத் தலையறுத்தவன்.
அவனுடைய பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தை வாழ்த்தாத புரத்திலுள்ள அசுரமகளிர்
வருந்தினாற்போல வருந்தாதே தம்முடைய நாயகரைக் கண்டோர் வியக்கும்படி நம்மிடத்தே தரக்கடவோம்,
புனலாடு மகளிர் பலரும் நீரரமகளிர்க்கு உவமையாவது, நீரை விட்டு நீங்காமையும்
நீருடன் விருப்பமும்: காதற் பரத்தை தெய்வமகளிர்க்கு உவமையாதல், அலங்காரமும் நாயகனைக்
கண்டால் விடாமையும். 371
21. தன்னை வியந்துரைத்தல்*
--------------------------
*'பேரின்பப் பொருள்: 'செய்பணி யெல்லாம் சிவனின் பென்றது,'
தன்னை வியந்துரைத்தல் என்பது சேடிமார் பின் வருந்தாது முன்னுறக்காப்பேமென்று
தம்முட் கூறுவதனைக், கேட்டு 'இவனை அமரப் புல்லும் பரத்தையர் மாட்டு இவனருள் செல்லாமல்
விலக்கேனாயின் என் மாட்டிவனைத் தந்தழா நின்ற இவன் மனைக்கிழத்தி யாகின்றேன்'
எனப் பரத்தைத் தலைவி தன்னை வியந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்: -
கனலூர் கணைதுணை யூர்கெடச்
செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
லூர்கணப் பூங்கொடியே
அரத்தத்** துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபுகன்றது
**'அரத்தைத்' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: கனல் ஊர் கணை துணை ஊர்கெடச் செற்ற - கனல்பரந்த கணையான் ஒத்தவூர்
கெட வெகுண்ட; சிற்றம்பலத்து எம் அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின்- சிற்றம்பலத்தின்கணுளனாகிய
எம்முடைய அனலை யொக்குஞ் சடையையுடைய வனதருளைப் பெற்றவர் போலச் செம்மாந்து;
அமரப்புல்லும் மினல் ஊர் நகையவர் தம்பால் அருள் விலக்கா விடின் - அவனைச் செறியப்
புல்லா நின்ற ஒளிபரந்த நகையை யுடையவர் தம்மிடத்து அவனருள் செல்லாமை விலக்கேனாயின்;
யான்புனல் ஊரனைப்பிரியும் புனல் ஊர்கண் அப்பூங்கொடி - யான்புன லூரனைப்பிரிந்திருக்கும்
புனல்பரக்குங் கண்ணையுடைய அவன் மனைக்கிழத்தியாகிய அப்பூங்கொடியாகின்றேன் எ-று
கணை துணையெனச் செய்யுளின்ப நோக்கி மிகாது நின்றது. கணையென்பதனை
வெழுவாயாக்கி யுரைப்பாருமுளர். ''பரத்தையிற் பிரிவே நிலத்திரி வின்றே '' (இறையனாரகப்பொருள், 42)
என்பதனால், இவரதில்லந் தம்மில் வேறுபாடில்லாமையை யறிக. மெய்ப்பாடு; வெகுளி. பயன் : தனது பீடுணர்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மிகவும் சிவந்த வாயினை யுடையாளாகிய பரத்தையராகிய
தலைவி (அவளைத் தலைவி என்றது, பொது வகையாற் பரத்தை மாத்திரை யன்றி ---) வெறுப்புத்
தோன்றுதலாலே மிகவும் சொன்னது.
செய்யுள்: அழல்பரந்த அம்பாலே ஒத்த ஊராகிய முப்புரங்களும் பொடியாகச் சீறின
(ஒத்த-மூன்றூர்களிலுமுள்ளார் தங்கள் நினைவு ஒத்திருத்தல் :) - அவனுடைய திருவருளைப் பெற்றவர்
போல நாயகனைச் சிக்கெனப் பொருந்தியிருக்கிற மின்னுதல் பரந்த முறுவலையுடையார் தம்மிடத்து
நாயகன் வைத்த அருள் விலக்கி என்னிடத்தாக்கிக் கொண்டிலேனாகில் நான் புனலணிந்த
ஊரனைப் பிரிந்திருக்கும் கண்ணின் நீர்ப்பரந்த கண்களையுடைய பூங்கொடியை ஒப்பாளாகிய
அவன் மனைக்கிழத்தியாகக் கடவேன்.
மனைக்கிழத்திக்கு இவள் தன்மையாகக் கருதினது, நாயகனுக்கேற்ப வழிபடமாட்டாமையாலே
அவன் பிரிந்தானாகக் கருதி : 372
22. நகைத்துரைத்தல்*
--------------------
*பேரின்பப் பொருள் : இன்பமே பணிகண் டன்பாய்த் கொண்டது.
நகைத்துரைத்தல் என்பது பரத்தைத் தலைவி தன்னை வியந்து கூறினாளென்று கேட்ட
தலைமகள், 'எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கைச்சியார் தோன்றின பொழுதே தம்மிறு மாப்பொழியத்
தம்முடைய இணைமுலைகளின திறுமாப்பும் ஒழியப் புகாநின்றது; இதனையறியாது தம்மைத்தாம்
வியக்கின்ற தென்னோ' வெனப் பரத்தையை நோக்கி நகைத்துக்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
இறுமாப் பொழியுமன் றேதங்கை
தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
பொழிந்த இணை முலையே
வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி** விரித்து ரைத்தது
** 'நொந்து' என்பது பழையவுரை காரர் பாடம்
இதன் பொருள் : அங்கைச் சிறுமான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண்தோள் -
அங்கைக் கண்ணே சிறிய மானைத்தரித்த சிற்றம்பலத்தானது தில்லைக்கணுளனாகிய ஊரனுடைய
திண்ணிய தோள்களை: பெறுமாத்தொடும் பெறுதலாலுண்டாகிய பெருமையோடும் தன்னபேர்
அணுக்குப் பெற்ற பெற்றியினோடு- தன்னவாகிய இறுமாப்பு ஒழிய - தான் செம்மாத் தலை
அவனோடுண்டாகிய பெரிய அணுக்கைப்பெற்ற தன்மைகளோடும் யொழிய: இணைமுலை
இறுமாப்பு ஒழிந்த - இணைமுலைகள் ஏந்துதலை யொழியப் புகா நின்றன; தங்கை தோன்றின் -
இனித் தனக்கொரு தங்கை தோன்றின்; என் எங்கை இறுமாப்பு ஒழியும் அன்றே - என்னுடைய
வெங்கையும் செம்மாத்தலை யொழியு மன்றே; அதனான் வருவதறியாது தன்னைப் புகழ்கின்றாள் எ-று.
எங்கள் யென்றது என்றங்கை யென்றவாறாயினும், என்னெங்கையென இயைபுமிகுதி கூறி
நகையாடினாள். மாத்து - தலைமகற்குரியளாய் நிற்றலான் உண்டாகியவரிசை. பெற்றி அணுக்காற்றன்னை
மதித்தல் தன்னபெற்றியென வியையும் பெற்றியினோடு மென்னு மும்மை தொக்கு நின்றது. ஒழிந்த வென்னு
மிறந்தகாலம் விரைவு பற்றி வந்தது. மெய்ப்பாடு: வெகுளியைச் சார்ந்த வழுகை, பயன்- பரத்தையது
சிறுமையுணர்த்துதல். அவ்வகை பரத்தை கூறிய வஞ்சினம் தன்பாங்காயினாராற் கேட்ட தலைமகள்
பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப இவ்வகை சொன்னாளென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் பிரிய மிக்க ஆபரணங்களை யுடைய நாயகி
பரத்தைக்கு வருந்துவாள் போன்று விரித்துரைத்தது.
செய்யுள்: அங்கையிலே இளமானை ஏந்தின திருச்சிற்றம்பல நாதனுடைய
பெரும்பற்றப் புலியூரில் நாயகனுடைய சிக்கென்ற தோள்களைப் பெற்ற மேம்பாட்டோடே தன்னுடைய பெரிய
அணுக்கை (இயலாகப் பெற்ற முறைமையோடே செம்மாப் பொழியும்படி இணை யொத்த முலைகள்
செம்மாத்தலை யொழிந்தன; ஆதலால் இனித் தனக்கொரு தங்கை தோன்றில் என் தங்கையாகிய
தான்செம்மாப்பொழிய ...
என்று பரத்தைக்கு நோவாரைப், போலே நயப்புக் கூறினாள், என் எங்கை என்ற இரட்டிப்பு,
இனித்தானும் எனக்குத் தங்கையாய் நாயகனைப் பெறாதிருத்தலல்லது அவன் விரும்பும் தன்மைக்கு
அழன்று தோன்றியபடி. 373
23 நாணுதல் கண்டுமிகுத்துரைத்தல் *
----------------------------------
*பேரின்பப் பொருள், 'அருளுயி ரன்புக்குக் கண்டு வந்தது':
நாணுதல்கண்டு மிகுத்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தையர் வசம் புனலாட விட்டுச்
சூடுவாரின்றிச் செப்பின் கணிட்டடைத்துத் தமியேவைகும் பூப்போல்வாள், 'இஃதவணுக்குத் தகாத பழியாமெனக்
கருதி நாணி அதனை மறைத்திருந்தமை கண்ட தோழி, இவளது கற்பும் நலனும் நல்ல பகுதியை
யுடையனவாயிருந்தன' வென அவள் நலத்தை மிகுத்துக் கூறாநிற்றல், அதற்குச் செய்யுள் ; -
வேயாது செப்பின் அடைத்துத்
தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம் பலமனை
யாள் தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
பால வியல்புகளே
மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுத லுரைத்தது.
இதன் பொருள்: வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயின் அன்ன - சூடாது செப்பின்க ணிட்டடைப்பத்
தனியே வைகும் 'பூவைப்போலும்; தீயாடி சிற்றம்பலம் அனையாள்- தீயின் கணாடுவானது " சிற்றம்பலத்தை யொப்பாள்,
தில்லை ஊரனுக்கு" இன்று " ஏயாப் பழி என நாணி தில்லையூரனுக்கு இன்று தகாத பழியாமெனக் கருதி நாணி;
என்கண் இங்ஙனே மறைத்தாள் - தனதாற்றாமையை என்னிடத்தும் இவ்வண்ணமே மறைத்தாள். அதனால்:
இவள் கற்புயாய் ஆம் இயல்பு - இவளது, கற்பு நமக்குத் தாயா மியல்பையுடைத்து; இயல்புகள் நல்பால- இவளுடைய
நாணமுதலாகிய வியல்புகள் நல்லகூற்றன எ-று.
தமிவைகும் வீ அக்காலத்தி னிகழ்ந்த வேறுபாட்டிற்குவமை அம்பலம் இயற்கை நலத்திற்குவமை,
பாணனுரைத்ததென்பதூஉம்* பாடம்; மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளது பெருமை யுணர்த்துதல்.
*என்பது பழையவுரைகாரர் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் பிரிய நல்ல மனைக்கிழத்தியை நாணின படியைக்
கண்ட பாணன் சொன்னது.
செய்யுள்: ......... து செப்பிலே அடைத்துத் தனியிருந்த பூவையொப்பாள் தீயை ஏந்தி ஆடுகிறவனுடைய
திருச்சிற்றம்பலத்தையொப்பாள், தில்லையில் தலைவனுக்குப் பொருந்தாத பழியிதென்று நாணி இப்பொழுது
என்னிடத்து இப்படியே கரந்தாளாதலால் இவளுடைய கற்புத் தாயான தன்மையை யுடைத்தாயிருந்தது;
குணங்கள் நல்ல கூறுபாட்டை யுடையன வாயிருந்தன.
என்றது பாணன் வாயில் வேண்டவும் நாணுடன் படவும் வேண்டுவது நாயகன் பரத்தையரிடத்திற்கு
........ஒவ்வாது செய்யார் கருமக் குறைபாட்டுக்குப் பிரிந்தார் என்ற தலைமகளை நோக்கிப் பாணன் கூறியது . 374
24 பாணன் வரவுரைத்தல் *
--------------------------
*பேரின்பப் பொருள்: 'அருளுயிர்ப் பாராட் டன்பென் றியம்பியது'
பாணன்வரவுரைத்தல் என்பது நாணோடு தனியிருந்து வருந்தா நின்ற தலைமகளுக்கு,
இராப் பொழுதின் கட்சென்று திசையைக் கடக்கும் வாவல் இரை தேருங்கால மன்மையாற்
பகற்பொழுதின் கணுறையும் மரம்போலும் தமியோமை யறியாது விறலியும் பாணனும் நம்
'வேந்தற்கு குத்துயிலெழு மங்கலம் பாடவந்து நின்றார்' எனத் தோழி பாணன் வரவு கூறா நிற்றல்,
அதற்குச் செய்யுள் ;--
விறலியும் பாணனும் வேந்தற்குத்
தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
யோமை யறிந்திலரே
இகல்வே லவனகல் வறியாப் பாணனைப்
பூங்குழன் மாதர்க்குப் பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்: விறலியும் பாணணும் விறலியும் பாணனும்: தில்லை இறை அமைத்த திறல் இயல் யாழ் -
தில்லை யிறையா லமைக்கப்பட்ட வெற்றி பியலும் யாழை: வேந்தற்குக் கொண்டு வந்து நின்றார் - நம் வேந்தற்குத்
துயிலெழுமங்கலம் பாடக் கொண்டுவந்து நின்றார்கள்; அறல் இயல் கூழை நல்லா - அறல் போலுங் கூழையையுடைய
நல்லாய் இராச்சென்று திசைபோம் பறல் இயல் வாவல்- இராப் பொழுதின் கட் சென்று திசையைக் கடக்கும்
பறத்தலாகிய வியல்பினையுடைய வாவல்' பகல் உறைமா மரம் போலும் தமியோமை அறிந்திலர் - இரைதேருங்
காலமன்மையாற் பகற்பொழுதின் கணுறையும் பெரிய மரம் போலும் இராப் பொழுதிற் றுணையில்லாதோமை
இவரறிந்திலர் போலும் எ-று.
வெற்றி - விணைகளுட்டலையாதல் 'எம்மிறை நல்வீணை வாசிக்குமே' என்பவாகலின் இறையமைத்த
யாழென்றார். சென்று பகலுறைமாமர மென்றியைப்பினு மமையும். பறத்தல் பறலென இடைக்குறைந்து நின்றது
போல வென்பது பாடமாயின், பகலுறையும் மரம்போலத் தமியேமாகிய நம்மை யெனவுரைக்க மன்னும் ஓவும்:
அசை நிலை மெய்ப்பாடு: அது பயன்; பாணனும் விறலியும் வரவுணர்த்திச் சிவப்பாற்றுவித்தல் என்னை ?
இவர் வந்து நின்றதற்குத் தலைவி நம்மை இவர் நகையாடி வந்தாரென்று முனிந்தானாகத் தோழி இவரவன்
செயலை யறிந்தாரல்லரென்றும், தலைவர்க் கியல்பு நம்மிடத்து வருதலும் அவரிடத்துச் சேறலுமெனவும்
இயல்பு சொல்லுதலாற் சிவப்பாற்றுவித்தாளாம்.
* திருநாவுக்கரசர் தேவாரம், தனித் திருவிருத்தம், பொது. 7.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மாறுபாட்டாற் சிறந்த வேலினையுடையவன் அகன்ற படியறியாப்
பாணனைப் பொலிந்த மாக்குழையை யுடைய நாயகிக்குத் தோழி சொன்னது.
செய்யுள் : பாணிச்சியும் பாணனும் நம் நாயகற்கு மங்கலம் பாடுவதற்காகத் தில்லை இறையிலே
சமைக்கப்பட்ட ஓசையால் மற்றுள்ள யாழைவென்ற யாழைக்கொண்டு வந்து நின்றார்கள். போய் இரவிடத்தே
திக்குகளைக் கிழிக்கிற பறத்தலை இயல்பாகவுடைய வாவல் (பகலிலே உறையும் பெரிய மரம் போலும்)
தனித்திருக்கிற நம்மை அறிந்திலர் (அறல் போலும் கூழையையுடைய நல்லாய்).
அறியாமல் அவர் இருந்ததாகக் கருதி மங்கலம் பாட வந்தார்கள் : என்றது அவர் போமிடம் இவர்கள்
அறியாமலிருக்க நாம் எங்ஙன் அறிவோம் என்பது கருத்து. 375
25. தோழியியற்பழித்தல்*
------------------------
* பேரின்பப் பொருள் : அருளின் பக்கனி வறியவல ருரைத்தது.
தோழியியற்பழித்தல் என்பது பாணன் வரவுரைத்ததோழி, இவள் வருந்த அயலாரிடத்து
நல்குதலால் எம்முடையவள்ளல் இன்று தக்கிருந்திலன்' எனத் தலைமகனையியற்பழித்துக் கூறா நிற்றல்.
அதற்குச் செய்யுள் ;-
திக்கின் இலங்குதிண் டோளிறை
தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்து நின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேலெந் தனிவள்ளலே.
தலைமகனைத் தகவிலனெனச்
சிலைநுதற்பாங்கி தீங்குசெப்பியது
இதன் பொருள்: திக்கின் இலங்கு திண்தோள் இறை- திக்கின் கண்விளங்கா நின்ற திண்ணிய
தோள்களையுடைய விறைவன்: தில்லைச்சிற்றம்பலத்துக் கொக்கின் இறகது அணிந்து நின்றாடி -
தில்லையிற் சிற்றம்பலத்தின் கட்கொக்கினிறகதனை யணிந்து நின்றாடுவான்; தென்கூடல் அன்ன-
அவனது தெற்கின் கணுண்டாகிய கூடலையொக்கும்: அக்கு இன் நகை இவள் நைய அயல்வயின்
நல்குதலால் - அக்கு மணிபோலும் இனியநகையையுடைய இவள் வருந்த அயலாரிடத்து
நல்குதலால்; நின்ற செவ்வேல் எம் தனி வள்ளல்- எல்லாரானு மறியப்பட்டு நின்ற செவ்வேலையுடைய
என்னுடைய வொப்பில்லாத வள்ளல்; இன்று தக்கிருந்திலன்- இன்று தக்கிருந்திலன் எ-று.
அயில்வயி னென்பதற்குப் பொருணசை யுள்ளத் தராகலிற் காமத்திற் கயலென்றுரைப்பினு மமையும்,
தலைமகனது தகவின்மை யென்பதூஉம் பாடம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகன் தமக்குத் ...- தகவுடையன் அல்லனென்று வில்லையொத்த
நெற்றியினையுடைய பாங்கி குற்றம் சொன்னது
செய்யுள்: திக்குகளாகிய விளங்கின சிக்கென்ற தோள்களையுடைய சுவாமி பெரும்பற்றப் புலியூரிலே
திருச்சிற்றம்பலத்திலே கொக்கின் இறகை அணிந்து நின்றாடுவானுடைய தெற்கின் கண் உண்டாகிய கூடலையொத்த
அக்கை யொத்த முறுவலையுடைய இவள் வருந்த (இங்ஙன் அன்பால் வருத்தத்திற்கு) அயலாராகிய
பரத்தையரிடத்தே தலையளி செய்தலாலே நிலைநின்ற சிவப்பாற் சிறந்த வேலினையுடைய எம்முடைய
ஒப்பில்லாத வள்ளல் தகுதியுடையவனாயிருந்திலன்.
வள்ளல்களுக்குத் தகுதியாவது தராதரப் பருவமறிந்து கொடுத்தல், இவ்வள்ளல் நல்கவேண்டுமிடத்து
நல்காமையாலும் வேண்டாதவிடத்து நல்குதலாலும் அத்தகுதியுடையனல்லன் வேலுக்குச் சிவப்பு கொலைத்
தொழிலாலே இரத்தம்பட்ட சிவப்பு
26. உழையரியற்பழித்தல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: "அடியாருயி ரின்பறிய மாறாய் உரைத்தது பின்னும் எடுத்தெடுத் தியம்பல"
உழையரியற்பழித்தல் என்பது தோழி தலைமகனை யியற் பழித்துக் கூறாநிற்பக் கேட்டுத், '
தன்மாட் டன்புடை நெஞ்சத்தையுடைய விவள்பேதுற இதற்குப் பரியாமையின் வயலூரன் வரம்பிலன்'
என உழையர் அவனை யியற்பழித்துக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :-
அன்புடை நெஞ்சத் திவள்பே
துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
லூரன் வரம்பிலனே .
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக் குழைய ருரைத்தது
இதன் பொருள்: அடியார் என்பிடை அமிழ்து வந்து ஊற - அடியவரென்புகளிடையே அமிழ்தம் வந்தூற;
அம்பலத்து நின்றாடி இருஞ் சுழியல்- அம்பலத்தின் கண்ணே நின்றாடுவானது பெரிய சுழியலின்கண்; தன் பெடை
நையத் தகவு அழிந்து - தன் பெடைவருந்தத் தகுதி கெட்டு; அன்னஞ் சலஞ்சலத்**தின் வன்பெடைமேற் துயிலும் -
அன்னஞ் சலஞ்சலத்தினது வலிய பெடைமேற் கிடந்துறங்கும்; வயல் ஊரன் இவளுடையவன். அன்புடை
நெஞ்சத்து வயலாற்-சூழப்பட்ட ஊரை பேதுற - தன்மாட்டன்பையுடைய நெஞ்சத்தை யுடைய இவள் மயங்கா
நிற்ப இதற்குப் பரியாமையின் வரம்பு இலன் - தகவிலன் எ - று.
**சலஞ்சலம் - சங்கு: இது வலம்புரிச் சங்கு ஆயிரம் தன்னைச் சூழ்ந்து விளங்கும் சங்கு.
அன்புடை நெஞ்சத்திவ ளென்றதனால்; பரத்தையர தன்பின்மை கூறப்பட்டதாம். இருஞ்சுழியலூரென
வியையும், சுழியலென்பது ஒரு திருப்பதி.வன்பெடை யென்றதனாற் பரத்தையரது வன்கண்மை விளங்கும்.
ஒரு சொல் வருவியாது பேதுறுதலான் வரம்பில னென்றுரைப்பாரு முளர். உள்ளுறையுவமம் வெளிப்பட
நின்றது இவையிரண்டற்கும் மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த நகை; பயன். தலைமகனை யியற்பழித்துத்
தலைமகளை யாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அரத்தவே லண்ணல் பரத்தையிற் பிரியத், திண்டோர்
வீதியிற் கண்டோ ருரைத்தது; சிவந்த வேலினையுடைய நாயகன் பரத்தையரிடத்துப் பிரியச் சிக்கென்ற
தேருடைத்தாகிய வீதியிலே கண்டவர்கள் சொன்னது.
செய்யுள்: தன்பெடை அன்னமானது வருந்தத் தகுதியழிந்து சேவலன்னமானது சங்கினுடைய
வலிய பெடையிடத்தே கிடந்துறங்குகிற வயல் சூழ்ந்த ஊரையுடையவன். (அன்புடைய நெஞ்சத்தையுடைய
இவள், பேதுறும்படியாக) வரம்பு கடந்தான், அடியார் எலும்புக்குள்ளெல்லாம் அமுதம் வந்து ஊறும்படி
அம்பலத்து நின்றாடி அருளுகிறவனுடைய பெரிய திருவலஞ்சுழி யென்னும் படைவீடாகிய
(வயலூரன் , எனக் கூட்டுக)
தன்பெடையென நாயகி அருமை காட்டியும், வன்பெடையெனப் பரத்தையர் அன்பிலாமை
காட்டியும் நின்றது.
அன்புடை தன்பெடை வருந்த அன்பிலாத தன் மரபுக்குப் பொருந்தாத சங்கின் பெடையுடனே
அன்னம் துயில்கின்ற நாடனாதலால் தன் நாயகி வருந்தத் தனக்கன்பிலாதாரும் தன்மரபுக்குப்
பொருந்தாருமாகிய பரத்தை யருடனேயுறையும் தகுதியின்மை . 377
27. இயற்படமொழிதல்*
-----------------------
*பேரின்பப் பொருள்: அடியார்க்குச் சிவன் உயிரன் புரைத்தது
இயற்படமொழிதல் என்பது தலைமகனை யியற்பழித்தவர்க்கு, ' அன்று நம்பொருட்டாக
நம்புனத்தின் கண்ணே மாந்தழையேந்தி வந்தார். இன்று என்னெஞ்சத்தின் கண்ணார்; அதுகிடக்க
மறந்துறங்கினேனாயின் அமளியிடத்து வந்து என் பயோதரத்தைப் பிரியாதார்; இத் தன்மையாரை
நீங்கள் கொடுமை கூறுகின்றதென்னோ' வெனத் தலைமகள் அவனை யியற்பட மொழியா நிற்றல்,
அதற்குச் செய்யுள் :-
அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
டோவெம் பயோதரமே,
வரிசிலை யூரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை யுரைத்தது
இதன் பொருள்: அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம்தண் கயிலை- இறைவனென்று உட்காதவருடைய
புரங்களைக் கெடுத்த சிற்றம்பலவரது அழகிய குளிர்ந்த கயிலைக்கண், மஞ்சு ஆர் புனத்து - மஞ்சார்ந்த புனத்தின் கண்:
அன்று மாந்தழை ஏந்தி வந்தார் அவர் நனவு என் நெஞ்சார் - அன்று மாந்தழையை யேந்தி வந்தாராகிய அவர்
இன்று நனவின் என்னெஞ்சத்தின் கண்ணார்; விலக்கினும் நீங்கார் - யான்றடுப்பினும் அவ்விடத்தினின்று நீங்கார்;
கனவும் உண்டேல்- துயிலு முண்டாயின்: பஞ்சு ஆர் அமளி எம் பயோதரம் பிரிதல் உண்டோ- பஞ்சார்ந்த வமளிக்கண்
எம் பயோதரத்தைப் பிரிதலுண்டோ ! நீர் கொடுமை கூறுகின்ற தென்! எ - று.
அஞ்சார் தறுகண்ண ரெனினு மமையும், தழையேந்தி வந்தாரென்பதனை முற்றென்று இளிவந்தன
செய்து நம்மைப் பாதுகாத்தார் இன்றிவ்வா றொழுகுவரென் றுரைப்பினு மமையும். கனவுமுண்டேலென்பதற்
குத்துயில் பெற்றுக் கனாக்காணினென் றுரைப்பினு மமையும். எனது நெஞ்சா ரென்பதூஉம், ஊரனைப்
பரிசு பழித்த வென்பதூஉம் பாடம்; மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: தலைமகனையியற் படமொழிந் தாற்றுதல்,
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: வரிபொருந்திய வில்லினை யுடையவனாகிய ஊரனது
ஒழுக்கத்தை முன்பு பழித்த அடுத்தார் கேட்ப அழகிய நகையையுடையாள் கூறியது.
செய்யுள்: தனக்கடங்காதாருடைய முப்புரங்களைக் கெடுத்த அழகிய குளிர்ந்த ஸ்ரீ கயிலாயத்தின்
கண் மஞ்சு சூழ்ந்த புனத்தின்கண் அன்று மாந்தழையை ஏந்தி வந்தாராகிய அவர் இன்று கனவில் என்
நெஞ்சத்தின் கண்ணார்; தடுப்பினும் அவ்விடத்தினின்று நீங்கார். நித்திரையால் கனவுண்டாயினும்
பஞ்சார்ந்த அமளியின் கண்ணும் எனது பயோதரத்தைப் பிரிதலுண்டோ? ஆதலால் நீர் கொடுமையொடு
கூறுகின்றதென்ன ?
28 நினைந்து வியந்துரைத்தல்*
---------------------------
* பேரின்பப் பொருள்: "பலபணி செய்யினும் பரனின்பன்றி வேறிலை யெனவுயிர் வியந்து ரைத்தது."
நினைந்து வியந்துரைத்தல் என்பது புனலாடப் பிரிந்து பரத்தையிடத் தொழுகாநின்ற தலைமகன்
'யான்றன்னை நினையாது வேறொன்றன்மேல் உள்ளத்தைச் செலுத்தும் வழியும் தானென்னை நினைந்து
என்னுள்ளம் புகாநின்றாள். அவ்வாறன்றி யான்றன்னை நினையுந்தோறும் பள்ளத்துப் புகும்புனல் போல
நிறுத்த நில்லாது என்மனத் தாளாகா நின்றாள்: ஆதலாற்பிரிந்து ஈண்டிருத்தல் மிகவுமரிது' எனத்
தலைமகளை நினைந்து வியந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
தேவரும் பான்மையளே
மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியங் கோதையை அகனமர்ந் துரைத்தது
இதன் பொருள்: தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் தெள்ளிய நல்ல புனலையுடைய
கங்கை தங்குஞ் சடையை யுடையவன்; சிற்றம்பலத்தான் - சிற்றம்பலத்தின் கண்ணான் - கள்ளம்புகு
நெஞ்சர்காணா இறை-பொய் நுழையு நெஞ்சத்தை யுடையவர் ஒரு ஞான்றுங் காணாத விறைவன் :
உறை காழி அன்னாள் - அவனுறைகின்ற காழியையொப்பாள்: உள்ளி ஒரு கால் பிரியாது உள்ளம் புகும் -
யான்றன்னை நினையாது வேறொன்றன்மே லுள்ளத்தைச் செலுத்தும் வழியும் தானென்னை நினைந்து
ஒரு காலும் பிரியாது என்னுள்ளம் புகா நின்றாள்; உள்ளு தொறும் - அவ்வாறன்றி யான்றன்னை
நினையுந்தோறும்: பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையள் - உயர்ந்தவிடத்தினின்றும்
பள்ளத்திற்கும் புனலை யொத்துத் தடுப்பரியளாய் என் மனத்தின்கண் முறைமைய ளாகா நின்றாள் :
அதனாற் பிரிந்தீண்டிருத்தல் அரிது போலும் எ-று.
தெள்ளம்புனல் மெல்லம் புலம்பு போல்வதோர் பண்புத் தொகை. மெய்ப்பாடு; மருட்கை.
பயன்: பரத்தையினீங்கித் தலைமகளிடத்தனாதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மெல்லிய இயல்பினையுடைய பரத்தையை விரும்பிப்
பொருந்தினோன் அல்லியால் தொடுத்த அழகிய மாலையை யுடையாளை நெஞ்சாலே விரும்பிச் சொன்னது.
செய்யுள்: தெளிந்த நீருடைத்தாகிய கங்கை நிலைபெற்ற திருச்சடையையுடையவன்,
திருச்சிற்றம் பலத்தேயுள்ளவன், பொய் நுழையும் நெஞ்சினாற் காணப்படாத இறைவன், அவன்
உறைகிற காழியை யொப்பாள் தான் ஒருகால் விடாதே நினைந்து என் உள்ளத்திலே புகுதா நின்றாள்,
தான் நினைக்குந்தோறும் -------
அவர்கள் பாவமான செய்தி தன் நெஞ்சுக்குப் பொருந்தாமையாலே, தன் நாயகியுடைய
உண்மையான செய்தியை விரும்பிச் சொன்னது. 379
29. வாயில் பெறாது மகன் றிறநினைத்தல்*
--------------------------------------
*பேரின்பப் பொருள்; "இன்பு மடியார் கூட்ட மென்றே, அன்பாயுயிரே யகமிரங்கியது,"
வாயில்பெறாது மகன்றிற நினைதல் என்பது பரத்தையிற் பிரிந்து நினைவோடு வந்த தலைமகன்
வாயிற்கணின்று. 'இத் தன்மையான் என்னை வந்தணைகின்றிலன்; யான் இனிவண்டுறையுங் கொங்கையை
எவ்வாறு நண்ணுவது' என்று வாயில் பெறாது மகன்றிற நினையா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
தேன்வண் டுறைதரு கொன்றையன்
சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
வாறுகொனண்ணுவதே.
பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினன் மொழிந்தது.
இதன் பொருள்: தேன்வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் - தேனும் வண்டுமுறையும்
கொன்றைப் பூவை யணிந்தவனது சிற்றம்பலத்தை வழுத்தும்; வான்வள் துறை தரு வாய்மையன்- வானிடத்துளவாகிய
வளவிய விடங்களை எனக்குத் தரு (மெய்ம்மையையுடையான் மன்னுகுதலை இன்வாயான் - நிலைபெற்ற
குதலையையுடைய இனிய வாயையுடையான்; வள் துறை தருமால் அமுது அன்னவன் - வளவிய கடல் தந்த
பெருமையையுடைய அமிர்தத்தை யொப்பான், வந்து அணையான் - அவன் என்னை வந்தணை கின்றிலன்;
வண்டு உறை தரு கொங்கை நான் நண்ணுவது எவ்வாறு கொல் - நறுநாற்றத்தால் வண்டுகளுறையுங்
கொங்கையை யுடையாளை யான் பொருந்துவது இனியெவ்வாறோ! எ-று
தேனை நுகரும் வண்டெனினு மமையும் வழுத்துவார் பெறும் வானென்பது வழுத்தும் வானென
இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்துமே லேறிற்று. இப்பொழுது குதலையை யுடைத்தாகிய வாயான்
மேல் வளவிய நூற்றுறைகளைச் சொல்லி எனக்கின்பத்தைச் செய்யும் அமிழ் தன்னவ னென்று ரைப்பினு
மமையும். வாயிலின் - வாயிலால் மெய்ப்பாடு : அழுகை; பயன்; வாயில் கோடல். நெஞ்சொடு சொல்லியது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அழகியவளைகளையுடைய நாயகியது நல்ல வாசலிடத்தே குறுகி
வாயில் நீடிக்கையாலே மெலிந்து சொன்னது.
செய்யுள் : தேனும் வண்டும் வாழும் திருக்கொன்றை மாலையை யுடையவன் , (தேனென்பது
வண்டில் ஒரு சாதி; அல்லதூஉம் பூவின் தேனென்றுமாம்) அவனுடைய திருச்சிற்றம்பலத்தை வாழ்த்துவார்
பெறுகிற தெய்வலோகங்களில் வளவிய இடத்தை எனக்குத் தருகிற உண்மைத் தன்மையை யுடையவன்:
(என்றது கதிபெறுவது புதல்வராலே என் கையால்) நிலைபெற்ற இளஞ்சொல்லைச் சொல்லுகிற இனிய
வாய்மையையுடையவன். வளவிய கடற்றுறையால் தரப்பட்ட பெரிய அமுதத்தை யொப்பவன் இவ்விடத்தே
வந்து அணைகிறானில்லை: சந்தன குங்குமத்தாலும் மாலைகளாலும் வண்டு உறையும் கொங்கைகளை நான்
எத்தன்மையாலே சேர்வேன் ?
இது தோழிக்கு முன்னிலைப் புறமொழியாகத் தோழியைக் கொடுமை கூறியது. 380
30. வாயிற்கண்நின்று தோழிக்குரைத்தல்*
--------------------------------------
*பேரின்பப் பொருள்; "எப்பணி செயினுமரு ளின்றியன் பிலையென உயிரே யருளுக் குவந்து ரைத்தது",
வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் என்பது வாயில் பெறாது மகன்றிற நினையா நின்ற தலைமகன்,
'நல்லநாட்டுப் பொலிவும் மகளிர் தங் கண்ணிணையான் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் உண்டாகிய
வாட்டத்தை நீக்காத இவ் விரதம் யாதாம்' என வாயில் வேண்டித் தோழிக்குக் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :
கயல்வந்த கண்ணியர் கண்ணிணை
யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
தோனம் பலம் நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
னாட்டுப் பொலிபவரே.
பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக் கறிய வுரைத்தது
இதன் பொருள்: வந்த ஆடரவு மாமதியின் அயல் ஆட வைத்தோன் அம்பலம் நிலவு-ஏதங்குறித்துவந்த
ஆடவரைப் பெருமையையுடைய பிறையின் பக்கத்து அதனை வருந்தாமற் செய்து ஆடவைத் தவனது அம்பலம்
நிலைபெற்ற; புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டுப் பொலிபவர் - புயல் தங்கிய பெரிய மதிலையுடைய
தில்லையைச் சூழ்ந்த நல்ல நாட்டிற் பொலியும் மகளிர்; கயல் வந்த கண்ணியர் கண் இணையால்-
கயல் போலுங் கண்ணையுடையவர் கண்ணிணையால், மிகுகா தரத்தான் மயில் வந்த வாட்டம் -
ஒரு காலைக் கொருகால் மிகாநின்ற! அச்சத்தால் வந்த மயக்கத்தாலுண்டாகிய வாட்டத்தை;
அகற்றா விரதம் என் -நீக்காத இவ்விரதம் யாதாம் எ-று.
தில்லை நன்னாட்டுப் பொலிபவர் அகற்றாதவென வியையும் பொலிபவர்க்கு என்னு நான்கனுருபு
விகார வகையாற்றொக்க தெனினுமமையும். இது முன்னிலைப்புற மொழி. இதனுள் கயல் வந்த
கண்ணியரென்றது தலைமகளை. தில்லை நன்னாட்டுப் பொலிபவரென்றது தோழியை.
இனி மதிக்குவமை தலைமகளும் அரவிற்குவமை தலைமகனும் ஈசனுக்குவமை தோழியுமென்றாக்கி,
அவ்வகைத்தாகிய பாம்பையும் மதியையும் தம்மிற் பகையறுத்து ஓரிடத்தே விளங்க வைத்தாற்போல
என்னுடன் அவட்குண்டாகிய வெறுப்பைத் தீர்த்து விளங்க வைத்தல் உனக்குங் கடனென்றா னாயிற்றென
உள்ளுறை காண்க. மதியையர வேதங்குறித்து வந்தாற்போலத் தலை மகளைத் தலைமகனே தங்குறித்து
வருதலாவது தலைமகளுக்கு ஊடல் புலவி துனியென்னும் வெறுப்புத் தோன்றுதற்குத் தக்க காரணங்களைத்
தலைமகன் உண்டாக்கிக் கொண்டு வருதல்.
அரவைக் கண்டு மதிக் கச்சந்தோன்றினாற் போலத் தலை மகனைக் கண்டு தலைமகளுக்கும்
ஊடல் புலவி துனியென்னும் வெறுப்புத் தோன்றிற்று. ஆதலால் அத்தலை மகனையும் தலைமகளையும்
மதிக்குமரவுக்கு மொப்பச் சிலேடித்த சிலேடைக்கு மறுதலையாகாது, "தேவ ரனையர் கயவர்”
( திருக்குறள், கயமை 3) என்றார் போலவா மென்க. கயல் வந்த கண்ணியர் கண்ணிணையால் வந்த
அச்சத்தால் வந்த மயக்கத்தால் வந்த வாட்டம் இவனுக்கு வருதற்குக் காரணம் தலைவி பராமுகஞ்
செய்யும்படி தான் வருந்தல்.
இதனைத் தீர்த்தல் தில்லை நன்னாட்டுப் பொலியு மகளிர்க்குக் கடனென்றா னென்க.
அது "பிணிக்கு மருந்து பிறம னணியிழை, தன்னோக்குத் தானே மருந்து' (திருக்குறள் புணர்ச்சி மகிழ்தல் 2)
என்றும்,' துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத தோற்றமாய் வான், பொறைமலி பூம்புன்னைப்
பூவுதிர் நுண்டாது போர்க்குகான, நிறைமதி வாண்முகத்து நீள்கயற் கண்செய்த, வுறைமலியுய்யா
நோகாரம் கானல்வரி ) என்றும், சொல்லிய வாறுபோலக் கண்ணாலுண்டாகிய நோய்க்குக் கண்ணே
மருந்தா மென்று சொல்லிய வாறாமெனக்கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை . தோழியை வாயில்
கோடற்கிவ் வகை சொன்னா னென்பது.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பெரிய தகைமைப்பாட்டினை யுடையவன் வாயில் பெறாதே
நின்று அரிய தகைமைப் பாட்டினை யுடைய பாங்கிக்கு அறியும்படி சொன்னது,
செய்யுள்: மிக்க மதியின் பக்கத்தே தன்னை ஏதம் செய்யவந்த ஆடரவை ஆடும்படி வைத்தவன்
(அம்பலம் நிலைபெற்ற) மேகத்தைச் செல்ல உயர்ந்த பெரிய மதிலாற் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரைச்
சூழ்ந்த நல்ல நாட்டிற் சிறந்தவர்கள் கயலையொத்த கண்களையுடையவர்கள் கண்ணிணை களாலே
உண்டான மிக்க அச்சத்தோடே பொருந்தின மயக்கத்தால் உண்டாகிய வாட்டத்தை அகற்றார்;
இத் தீ விரதம் என்தான்: 381
31. வாயில் வேண்டத்தோழி கூறல்*
--------------------------------
*பேரின்பப் பொருள்: “எப்பணி யுஞ்சிவ னன்றி யிலையென அருளே சிவனுக் கறிய வுரைத்தது.''
வாயில் வேண்டத்தோழி கூறல் என்பது வாயில் வேண்டிய தலைமகனுக்குப் 'பண்டு நீர் வரும்
வழியிடை வருமேதமும் இருளு மெண்ணாது கன்றையகன்ற ஈற்றாவை யொத்து எம் மாட்டு வருதிர் ;
இன்று எம்பொருந்தாதார் தெருவே அன்று எம்மாட்டூர்ந்து வந்த தேர் மேலேறிப் போகா நின்றீர்;
இது வன்றோ எம்மாட்டு நுமதருள்' எனத்தோழி அவன் செய்தி கூறா நிற்றல், அதற்குச் செய்யுள் :
கூற்றா யினசின ஆளியெண்
ணீர்கண்கள் தோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
போதிர்அத் தேர்மிசையே.
வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையர வல்குற் பாங்கி பகர்ந்தது
'பாவை' என்பது பழையவுரைக்காரர் பாடம்
இதன் பொருள்: கூற்றாயின சின ஆளி எண்ணீர் - கூற்றம் போலக் கொடியவாகிய சினத்தையுடைய
யாளிகளை ஊறு செய்வனவாகக் கருதாது; கண்கள் கோள் இழித்தால் போல் தான் செறி இருள் பொக்கம்
எண்ணீர் - கண்களைக் கோளிழித் தாற்போலச் செறிந்த விருளின் மிகுதியைத்தான் இடையூறாக நினையாது:
கன்று அகன்ற புனிற்று ஈற்றா எனப்பண்டு நீர் வருவது- கன்றையகன்ற ஈன்றணிமையை யுடைய ஈற்றாவை
யொத்துப் பண்டு நீர் எம்மாட்டு வருவது: இன்று எம்ஈசர் தில்லைத் தேற்றார் கொடி நெடுவீதியில் -
இன்று எம்முடைய வீசரது தில்லையிலே எமது பொருந்தாரது கொடியையுடைய நெடிய வீதியில்:
அத்தேர் மிசைப் போதிர் - எம்மாட்டூர்ந்து வந்த தேர்மே லேறிப் போகா நின்றீர்: இதுவன்றோ எம்மாட்டு
நும்மருளாயினவாறு எ - று
ஆளியெண்ணீர் பொக்கமெண்ணீர் என்பனவற்றை முற்றாக வுரைப்பினு மமையும். கண்களுக்குக்
கோளென்றது பார்வை இதனை இழித்த லென்பது கண்மணியை வாங்குதல். தானெ என்பது அதுவன்றி
இதுவொன்றென்பது பட நின்றதோ ரிடைச் சொல், அசைநிலை யெனினு மமையும். ஈற்றா வென்றது
கடுஞ்சூல் நாகன்றிப் பலகாலீன்ற ஆவை. மெய்ப்பாடு: வெகுளி. பயன் : வாயின் மறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கூரிய வேலினையுடைய நாயகன் வாயில்வேண்டப்
பாம்பின் படத்தினையொத்த அல்குலினையுடைய பாங்கி சொன்னது
செய்யுள்: கொடுந் தொழிலால் கூற்றுவன் தானேயாய் இருக்கிற சினத்த அம்புகளென்று விசாரியீர்,
கண்களைக் கெடுத்தாற் போன்ற செறிகிற இருளின் குற்றத்தை விசாரியீர்; அம்புகள் என்றது அம்புகளையுடைய
மறவரை); கன்றைப் பிரிந்த ஈன்றணிமை யுடைத்தாகிய ஈற்றுப் பசுவைப் போல -- பண்டு காணும்; இப்பொழுது
எம்முடையரசருடைய பெரும் பற்றப்புலியூரில் தெளியப்படாத பரத்தையருடைய கொடி கட்டப்பட்ட
நெடிய தெருவிலே போகாநின்றீர், அங்ஙனம் வருந்தி எங்களிடத்து வந்த தேரின் மேலேறி.
எனவே நீர்வந்து இப்பொழுது சொல்லுகின்ற........... அன்பு உடைமை யெல்லாம் பொய் இப்படி
எங்களுடன் சொல்ல வேண்டுவதில்லை. முன்பு சிலகாலம் இடையூறு எண்ணாதே கன்று நினைத்த
பசுப் போல வந்திலிரோ எனக் கொடுமை கூறியது 382
32 தோழிவாயில் வேண்டல்*
--------------------------
*பேரின்பப் பொருள் : அருளே சிவத்துக் குயிரின் பாகியென் றுவந்தருளே சிவத்துக் குரைத்தது.
தோழி வாயில் வேண்டல் என்பது தலைமகளுக்கு அவன் செய்தது கூறிச் சென்று அன்று நம்புனத்தின்
கண்ணே வந்து யானை கடிந்த விருந்தினர் தாந்தம் பெருமையை நினையாது இன்று நம் வாயிற்கண் வந்து,
வேட்கைப் பெருக்கந் தம்மிடத்துச் சிறப்ப நின்று ஒன்றும் வாய் திறக்கின்றிலர்; இதற்கியாஞ் செய்யுமா
றென்னோ' வெனத் தலைமகளைத் தோழி வாயில் வேண்டா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
வியந்தலை நீர்வையம் மெய்யே
யிறைஞ்ச விண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
அரனிருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
விருந்தினர் கார்மயிலே.
வாயில் பெறாது மன்னவ னிற்ப
ஆயிழை யவட்குத் தோழி சொல்லியது.
இதன் பொருள்: கார் மயிலே - கார்காலத்து மயிலையொப்பாய்; வந்த வாள் அரக்கன் புயம் தலை தீர -
வரையை யெடுக்க வந்த வாளினையுடைய அரக்கனது கையுந் தலையும் உடலினீங்க; புலியூர் அரன் இருக்கும்
பொருப்பின் - புலியூரான் வாளா விருக்குங் கைலைப் பொருப்பின்கண்: கயம் தலையானை கடிந்த விருந்தினர் -
மெல்லிய தலையையுடைய யானையை நம்மேல் வாராமல் அன்று மாற்றிய நம் விருந்தினர்;
விண் தோய் குடைக் கீழ்- தமது விண்ணைத் தோயா நின்ற குடைக்கீழ்: அலை நீர் வையம் வியந்து மெய்யே
இறைஞ்ச- கடலாற் சூழப்பட்ட வுலகத்துள்ளா ரெல்லாரும் வியந்து சென்று அகனமர்ந்திறைஞ்ச:
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய் திறவார் - தாந்தமது பெருமை நினையாது நங்கடை வந்து நின்று
வேட்கைப் பெருக்கந் தம்மிடத்துச் சிறப்ப ஒன்றுஞ் சொல்லு கின்றிலார்; இனி மறுத்தலரிது எ-று.
விண்டோய்குடைக் கீழிறைஞ்சவென வியையும். வயா வயமென நின்றது இருந்த துணையல்லது
ஒரு முயற்சிதோன்றாமையின், இருக்குமென்றார். சிற்றிலிழைத்து விளையாடும் வழி விருந்தாய்ச்
சென்று நின்றானாகலின், விருந்தினரென்றாள். இற்செறிக்கப்பட்ட விடத்து ஊண் காலத்து விருந்தாய்ச்
சென்றானாகலின் விருந்தின ரென்றா ளெனினு மமையும், “புகா அக்காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்,
பகா அவிருந்தின் பகுதிக் கண்ணும்" (தொல், பொருள், களவு, 15) என்பது இலக்கண மாதலின். கார்ப்
புனத்தே யென்பதூஉம் பாடம்: மெய்ப்பாடு: இளிவரல்; பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : வாயில் பெறாதே நாயகன் நிற்ப அழகிய ஆபரணத்தை
யுடைய ளுக்குத் தோழி சொன்னது.
செய்யுள் : கார் காலத்து மயிலை யொப்பாய்! பேதம் செய்ய வந்த வாளரக்கனுடைய தோளும்
தலையும் நெரியப் பெரும்பற்றப் புலியூரில் தலைவன் வாழும் மலையில் மெல்லிய தலையினை யுடைத்தாகிய
யானையை நம்மைக் கொல்லாமையில் மாற்றின வருமாய் அந்நாயகர் நம்மிடத்து விருந்தினராய் வந்தவர்
அலையுடைத்தாகிய கடல்சூழ்ந்த உலகத்தார் உண்மையாக வணங்கவும் விசும்பு தோய்ந்த குடையின் கீழே
வேட்கை பெருகத் தம்மிடத்தே ஒரு வார்த்தையும் சொல்லுகிறாரில்லை. காண். 383
33 மனையவர்மகிழ்தல்*
----------------------
*பேரின்பப் பொருள் : அடியா ருயிரின் பண்பு கண்டது
மனையவர்மகிழ்தல் என்பது தோழி வாயில் வேண்டத் தலைமகள் துணித்த நோக்கங்கண்டு,
ஓகை கொண்டுசெல்ல வேண்டிக் காதலன் வந்தானென்று சொல்லுமளவில் இவளுடைய காவியங் கண்கள்
கழுநீர்ச் செவ்வியை வௌவுதல் கற்றன' வென மனையவர் தம்முண் மகிழ்ந்து கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
தேவியங் கண்திகழ் மேனியன்
சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணுத
லாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டணை யோவந்
தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
வௌவுதல் கற்றனவே
கன்னி மானோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்துரைத்தது **
** 'மறித்துரைத்தது' என்பது பழையவுரைக்காரர் பாடம்
இதன் பொருள்: தேவி அங்கண் திகழ்மேனியன் சிற்றம்பலத்து எழுதும் - தேவியவ் விடத்து விளங்கு
மேனியையுடையவனது சிற்றம்பலத்தின்கண் எழுதப்பட்ட; ஓவியம் கண்டன்ன ஒண்ணுதலாள் தனக்கு ஓகை
உய்ப்பான் - ஓவியத்தைக் கண்டாற் போலும் ஒண்ணுதலையுடையாள் தனக்கு ஓகைகொண்டு செல்லவேண்டி;
வந்தனன் மேவு இயம் கண்டனையோ என வெய்துயிர்த்து-காதலன் வந்தான் வந்து பொருந்துகின்ற இயவொலி
கேட்டனையோ வென்று கண்டார் வந்து சொல்லக் கேட்டு வெய்தாகவுயிர்த்து; காவியங்கண் கழுநீர்ச் செவ்வி
வௌவுதல் கற்றன-குவளைப் பூப்போலுங் கண்கள் கழுநீர் மலர்ச் செவ்வியை வெளவுதல் வல்லவாயின :
இனியென்னிகழும் எ.று.
அங்கட்டிகழ் மேனி யென்பது மெலிந்து நின்றது. தேவியுடைய வழகிய கண்மலர்கள் சென்று விளங்கு
மேனியையுடைய வனெனினு மமையும். மேவியங்கண்டனையோ வந்தனனென வென்பதற்கு. அழகிய கண்டன்
வந்தானென்று மேவியுரைப்ப வெனினு மமையும். ஐயோவென்றது உவகைக்கண் வந்தது. வெய்துயிர்த்தற்கு
வினைமுதல் உயிர்த்தற்குக் கருவியாகிய பொறியெனினு மமையும். மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகள்
வாயினேராமை யுணர்த்துதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: இளைய மான் நோக்கம் போன்ற நோக்கினையுடையாள்
கோபித்துப் பார்க்க நிலைபெற்ற மனையிலுள்ளார் மறுத்துச் சொன்னது.
செய்யுள் : தன் தேவியுடைய அழகிய கண் விளங்குகிற திருமேனியை யுடையவன்.
(என்றது. நாச்சியார் அன்புடைமையாலே திருவடி தொடங்கித் திருமுடியளவும் திருவழகு பார்க்கையே
தொழிலாகையாலே அத்திரு நயனங்களில் அவர் மேனி முழுதும் விளங்கா நின்ற தென்க;) அவனுடைய
திருச்சிற்றம்பலத்தே எழுதப்பட்ட சித்திரத்தைப் பார்த்தாலொத்த ஒண்ணுதலாள் அவளுக்கு மாயை
சொல்லுவதாகப் பொருந்தின எழுச்சி தொடரு மயலிலே கேட்டாயோ, இனி வந்தான் காண் என்று
சொல்லுமளவில் வெய்தாகப் பெருமூச்சு விட்டு நீலப்பூவையொத்து அழகிய கண்கள் செங்கழு
நீரின் செவ்வியைப் பற்றிக் கொள்ளக் கற்றன.
முன்பு நாம் வெறுப்பன செய்யினும் முனிந்து பார்க்க வறியாத கண்கள் இவன் செய்த
கொடுமையாலே மாராயம் சேரவும் வெகுண்டு பார்க்கும்படி யாயிற்று, என நாயகனைக் கொடுமை கூறியவாறு.
34. வாயின் மறுத்துரைத்தல்*
--------------------------
*பேரின்பப் பொருள்: சிவமரு ணோக்கி யருட் செய்கையுரைத்தது.
வாயின்மறுத்துரைத்தல் என்பது மனையவர் துனிகண்டு மகிழா நிற்ப, இவனை நமக்குத் தந்த பின்னர்
நம்முடைய வாயத்தார் முன்னே நங்காதலர் இன்றுநங் கடையைக் கண்டார்; இதுவன்றோ நம்மாட்டு அவரருள்' எனத்
தோழிக்குத் தலைமகள் வாயின் மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் ;-
உடைமணி கட்டிச் சிறுதே
ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
கண்டனர் காதலரே
மடவரற்றோழி வாயில் வேண்ட
அடல்வேலவனா ரருளுரைத்தது.
இதன் பொருள்; மணிவாள் நகையாய் - முத்துப்போலு மொளியையுடைய நகையையுடையாய்:
உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும் உடைமணியை யரையிற் கட்டிச் சிறுதேரையுருட்டி உலாவும்:
இந் நடைமணியைத் தந்த பின்னர் - இவ்வியங்கு தலையுடைய இந்த மணியை நமக்குத் தந்த பின்;
முன் நான்முகன் மால் அறியா- முற்காலத்து நான்முகனுமாலுந் தேடியுமறியாத; விடை மணிகண்டர்
வண் தில்லை மென்தோகை அன்னார்கள் முன் விடையை யுடைய மணிகண்டரது வளவிய தில்லையின்
மெல்லிய மயிலை யொப்பார்கண் முன்னே; நம் கடை காதலர் இன்று கண்டனர் - நங்கடையைக் காதலர்
இன்று கண்டார்; இதுவன்றோ நம்மாட்டு அவரருள் எ று.
கட்டியென்பது ஈண்டுத் தாங்கியென்னும் பொருட்டாய் நின்றது. நடைமணியென்றது புதல்வனை.
விடமணி கண்ட ரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: வெகுளி . பயன்: வாயின் மறுத்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: மடப்பத்தை வெற்றியாக வுடைய நாயகி தோழி வாயில் வேண்ட
வெற்றிவேலுடையவன் நிறைந்த அருளிருந்தபடியைச் சொன்னது.
செய்யுள்: உடைமணியைக் கட்டிச் சிறுதேருருட்டி உலாவுகிற நடவாநின்ற இம்மாணிக்கத்தை
யொப்பானைப் பெற்றபின் முற்காலத்து அயனும்மாலும் அறியப்படாதே வைத்தும் விடையை மேல்
கொண்டு திரியும் நீலமணிபோலும் திருமிடற்றையுடையவர், (என்றது, இடப வாகனனான நீலகண்டனை
வாகனரூபியாகப் பெற்றும் அயனும் மாலும் அறிந்தில ரென்பது கருத்து:) அவனுடைய வளவிய பெரும்பற்றப்
புலியூரில் மெல்லிய மயிலையொப்பார்கள் முன்பு முத்துமணியை யொத்த ஒளி சிறந்த முறுவலினை
யுடையாய் நம்முடைய வாசலைக் காதலர் இன்று கண்டார் இத்தனை யல்லவோ!
புதல்வனைத் தந்த பின்பு புலத்தல் முறைமை யன்றாயினும் மணி வாணகையார் முன்பு
வாயினேர்தல் பெண்மையன்றென மறுத்தாள் போலும் உலாத்தரும் புதல்வன் என்றமையால் இவன்
உலாத்தருமளவும் புறத் தொழுக்கத்தே நின்றான் என்பது கருத்து. நடவாநின்ற மாணிக்கமெனவே
நம்மை வேண்டாராயினும் மாணிக்க நடை பெற்றாலொத்த புதல்வனை வேண்டாராயினார் பரத்தையர்
மேல் வைத்த அன்பினாலென்பது. 385
35. பாணனொடு வெகுளுதல்*
---------------------------
*பேரின்பப் பொருள்: "பரசம யத்திற் பரிவா காதென்றின்பே யுயிருக் கெடுத்துரைத்தது"
பாணனொடுவெகுளுதல் என்பது தோழிக்கு வாயின் மறுத்த தலைமகள், ' நின்னிடத்து அவர்
நீங்காத வருள் பெரியரென்று நீ சொல்ல வேண்டுமோ? அது கிடக்க' கொற்சேரியி லூசிவிற்றுப் புலையா
எம்மில்லத்து நின்னுடைய நல்ல நல்ல பொய்யைப் பொருந்தி நிற்கலுற்றோ நீ போந்தது' என வாயில்
வேண்டிய பாணனொடு வெகுண்டு கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
மைகொண்ட கண்டர் வயல் கொண்ட
தில்லைமல் கூரர் நின்வாய்
மெய்கொண்ட அன்பின் ரென்பதென்
விள்ளா அருள் பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
விற்றெம்இல் வண்ண வண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
ஆத்தின்னி போந்ததுவே
மன்னியாழ்ப்பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டுரைத்தது.
இதன் பொருள் ; மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்கு ஊரர் - கருமையைப் பொருந்திய
கண்டத்தை யுடையவரது வயலைப்பொருந்திய தில்லைக்கண்ணுளராகிய வளமல்கிய வூரையுடையவர் ;
நின்வாய் மெய் கொண்ட அன்பினர் என்பதென் - நின்கண் மெய்ம்மையைப் பொருந்திய வன்பை
யுடையரென்று நீ சொல்ல வேண்டுமோ; விள்ளா அருள் பெரியர்- அவர் எம்மிடத்து நீங்கா தவருள்
பெரியரன்றோ ? அதுகிடக்க; வைகொண்ட ஊசி கொல்சேரியின் விற்று-கூர்மையைப் பொருந்திய
ஊசியைக் கொற்சேரியின்கண் விற்று: எம் இல் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கல் உற்றோ
எம்மில்லத்து நின்னுடைய நல்ல நல்ல பொய்ம்மையைப் பொருந்தி நிற்கலுற்றோ; புலை ஆத் தின்னி -
புலையனாகிய ஆத்தின்னி போந்தது-ஈண்டு நீ போந்தது! இது சால நன்று! எ-று
மெய் கொண்ட வன்பினரென்று சொல்லுகின்றதென் ? நின்வாயிலவர் விள்ளாவருள் பெரியரன்றோ
வென்றுரைப்பினுமமையும். ஊசி கொற்சேரியின் விற்றென உவமவினை உவமிக்கப்படும் பொருண்
மேலேறி நின்றது. அடுக்கு, பன்மைக்கண் வந்தது. ஆத்தின்னியென்பதனை முன்னிலைக்கண் வந்ததாக
வுரைப்பினு மமையும். விற்கு நின்னென்பதூஉம் பாடம். மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நிலைபெற்ற யாழினை யுடைய பாணன் வாயில் வேண்ட
மின்னையொத்த இடையினையுடைய நாயகி கோபித்துச் சொன்னது.
செய்யுள்: கருமை நிறத்தைக் கௌவிக்கொண்ட திருமிடற்றையுடையவர், அவருடைய வயல்சூழ்ந்த
பெரும்பற்றப் புலியூரில் சிறந்த தலைவர் உன்னிடத்து உண்மை பொருந்தின அன்பையுடையவர் இன்று
எனக்குச் சொல்வதென்? நீங்காத அருள் பெரியவர் அல்லரோ அவர்? கூரிய ஊசியைக் கொற்சேரியிலே விற்று,
(எங்களுக்கு நீ அவர் செய்தி சொல்லுவது கொற்சேரியில் ஊசி விற்றதனோடு ஒக்கும்; ஊசியின் கூர்மை
சொல்லுவாள் போன்று இவள் சொற்கூர்மை சொன்னபடி: ) எம் இல்லத்து உன்னுடைய மிகவும் அழகியதாய்த்
தோன்றும் பொய்யைக்கொண்டு நிற்பதாக (உற்றோ ) புலையனாகி ஆத்தின்றவனே, நீ வந்தது?
நீங்காத அருள் புரிவோர் என்றது, அவர் பரத்தையரிடத்து அன்பினாற் பிரிந்தாரல்லர், தம் காரணத்தால்
அவர்கள் வருந்துகையில் அருளுடைமையாற் பிரிந்தார் என்க, இப்பொய் சொல்லியும் என் முன்னே நிற்பதாகவோ
வந்தாய் என்கையில் கல்லும் கட்டியும் முதலாயின கொண்டு வெருவிக்கத் தொடங்கினார்களாகக் கொள்க.
ஆத்தின்னி, சொல்லினிமை நோக்கி ஒற்று மிக்கது. 386
36. பாணன் புலந்துரைத்தல்*
---------------------------
*பேரின்பப் பொருள் : "பரசம யங்கள் பாறி யெய்த்தது".
பாணன் புலந்துரைத்தல் என்பது தலைமகள் வெகுண்டுரையா நிற்ப, 'நின்புருவநெரிய வாய் துடிப்ப
என்னையெறிதற்குக் கல்லெடுக்க வேண்டா ; நினது கரியகண்களின் சிவப்பாற்று வாயாக; நீ வெகுளப்படுவதன்று;
நினக்குப் பல்லாண்டு செல்வதாக; யான்வேண்டியவிடத்துப்போக நின்னடியை வலங்கொள் ளாநின்றேன்' என
வாயில் பெறாமையிற் பாணன் புலந்து கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
கொல்லாண் டிலங்கு மழுப்டை
யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
நெரியச்** செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண் சிவப்
பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
கொள்வன் பணிமொழியே
கருமலர்க்கண்ணி கனன்று கட்டுரைப்பப்
புரியாழ்ப்பாணன் புறப்பட்டது
** பா-ம் - புருவ நெளிய
இதன் பொருள் ; கொல் ஆண்டு இலங்கு மழுப்படையோன் குளிர் தில்லை அன்னாய்
கொற்றொழில் அவ்விடத்து விளங்கும் மழுவாகிய படையையுடையவனது குளிர்ந்த தில்லையை
யொப்பாய்: வில் ஆண்டு இலங்கு புருவம் நெரியச் செவ்வாய் துடிப்ப - வில்லையடிமை கொண்டு
விளங்க நின்ற புருவ நெரியச் செவ்வாய் துடிப்ப; கல் ஆண்டு எடேல் - எறிதற்குக் கல்லை அவ்விடத்
தெடுக்கவேண்டா; கருங்கண் சிவப்பு ஆற்று- கரியகண்களைச் சிவப்பாற்று வாயாக; கறுப்பது அன்று -
வெகுளப்படுவ தன்று; பல்லாண்டு - நினக்குப் பல்லாண்டுகள் உளவாக வேண்டும்; பணிமொழி -
பணிமொழியையுடையாய் அடியேன் அடி வலங்கொள்வன்-யான் வேண்டிய தேயத்துக்குப் போக
அடியேன் நின்னடியை வலங்கொள்ளா நின்றேன் எ-று.
கருங்கண்ணினது சிவப்பெனினுமமையும். பல்லாண்டென்றது தலைமகனுடனுண்டாகிய
வெறுப்புத் தீர்ந்து கூடியிருமென்று சொல்லியது நுமக்குத் தவறாயிற்றாயின் பல்லாண்டும்
இப்படியிருப்பீ ரென்றான். இப்படியிருப்பீ ரென்றது பல்லாண்டு மிப்படித் தனித்திருப்பீரென்று
வளமாகத் தன்பாணவர்த்தை சொல்லியவாறென்றறிக. புருவ நெறிக்க வென்பதூஉம்
வெவ்வாயென்பதூஉம் பாடம். புரி - நரம்பு, மெய்ப்பாடு: அச்சம்; பயன்: சிவப்பாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: கரிய மலரை யொத்த கண்களையுடையாள் கோபித்துச்
சொல்ல விரும்பத்தக்க யாழினையுடைய பாணன் புறப்பட்டது
செய்யுள்: கொல் தொழில் இடத்தே விளங்குகிற மழுவாயுதத்தை யுடையவன் அவனுடைய
குளிர்ந்த பெரும்பற்றப் புலியூரை யொப்பாய் வில்லை அடிமை கொண்டு விளங்குகிற புருவம் நெரியவும்
சிவந்தவாய் துடிப்பவும் அவ்விடத்துக் கல் எடாதே கொள்: கரிய கண்கள் சிவப்பை ஆற்றுவாயாக;
(இவை என்னெனில்) நான் விண்ணப்பம் செய்த வார்த்தை கோபிக்கப்படுவ தொன்றன்று காண்:
உனக்குப் பல்லாண்டுகள் சொல்லுவதாக, தாழ்ந்த வார்த்தையினையுடையாய்! அடியேன் சீர் பாதம்
வலங்கொண்டு போகிறேன்.
இன்னாகையாலே கல்லெடுத்தவிடத்தும் கலங்காது நின்று புகழ்ந்தும் பல்லாண்டு கூறியும்
தன் பொய் மெய்யாக்கியும் கோபம் நீக்கிக் கழன்றனன் தாழ்ந்த வார்த்தையினையுடையா ளென்றமையால்,
உனக்கு இக்கடுஞ் சொல் தகாது' என்றது. 387
37. விருந்தொடு செல்லத்துணிந்தமை ** கூறல்*
-----------------------------------------
**பா-ம் - தணிந்தது
*பேரின்பப் பொருள்: :உண்மைப் பணிகண் டடியா ருவந்தது..
விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் என்பது வாயில் பெறாது பாணன் புலந்து நீங்காநிற்ப.
“யாவர்க்கும் வாயினேராது வெகுண்டுரைத்த லாற்றழல்வேல் போல மிளிர்ந்து முத்தம் பயக்கு
மிவளுடையகண்கள் விருந்தொடு வந்தா னென்று சொல்லுமளவிற் பண்டைநிறமாகிய கருங்குவளையது
செவ்வி பரந்த; என்ன மனையறக் கிழத்தியோ' வென இல்லோர் தம்முட் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
மத்தக் கரியுரி யோன்தில்லை
யூரன் வர வெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
யோடிக் கெழுமினவே.
மல்வளை பரிசு கண்டு, இல்லோர் இயம்பியது.
இதன் பொருள்: மத்தக் கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும் - களிப்பையுடையத்தாகிய
யானையின் றோலை யுடையவனது தில்லையூரனது வரவென்று சொல்லத் தொடங்குதலும் ; தத்தைக் கிளவி
முகத் தாமரைத் தழல்வேல் மிளிர்ந்து கிளியின் மொழிபோலும் மொழியை யுடையவளது முகமாகிய
தாமரைக் கண்ணே தழலை யுடைய வேல்போலப் பிறழ்ந்து; முத்தம் பயக்கும் கழுநீர்-நீர்த்துளியாகிய
முத்தையுண்டாக்கா நின்ற கண்ணாகிய செங்கழு நீர்மலர்: விருந்தொடு என்னாத முன்னம் - விருந்தோடென்று
சொல்லுவதற்கு முன்; கித்தக் கருங்குவளைச் செவ்வி ஓடிக் கெழுமின-விரையப் பண்டை நிறமாகிய கரிய
குவளைச்செவ்வி பரந்து மேவின! என்ன மனையறக் கிழத்தியோ ! எ-று.
மத்தம் - மதமென்பாருமுளர். ஊரன் வரவென வினையெச்சமாகப் பிரிப்பினுமமையும்.
கித்தமென்பதனைச் செய்யப்பட்டதென்னும் பொருளதோர் வடமொழித் திரிபென்பாருமுளர்.
விருந்து வாயிலாகப் புக்கவழி இல்லோர் சொல்லியது, மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பலவளைகளையுடையாள் இயல்பைக் கண்டு
இல்லிலுள்ளார் சொன்னது.
செய்யுள்: மத யானையின் தோலைப் போர்த்தவன், அவனுடைய பெரும் பற்றப் புலியூரிற்றலைவன்
வாரா நின்றானென்று சொல்லுமளவில் கிளியை யொத்த வார்த்தையினையுடையாள் முகமாகிய தாமரைப் பூவில்
வெம்மையுடைத்தாகிய வேல் போல் உலாவிக் கண்ணின் நீர்த்துளியாகிய முத்துக்களை விடுகிற கண்ணாகிய
செங்கழுநீர்கள் (செங்கழுநீர் என்றது கோபத்தால் எறிவிக்கையால்) விருந்தினருடனே வந்தான் என்று
சொல்லுவதற்கு முன்னே விரையக்கரிய நீலப்பூவின் செவ்வியை அடைந்தன, என்ன இல்லக்கிழத்தியோ
என்றது 388
38, ஊடல்தணிவித்தல்*
---------------------
* பேரின்பப் பொருள் : அருளே யன்புகண் டரற்கெடுத் துரைத்தது.
ஊடல்தணிவித்தல் என்பது விருந்தேற்றுக்கொண்ட தலைமகளுழைச் சென்று நம்முடைய
தோன்றலைத் தனக்குத் துணையாகக் கொண்டுவந்து தோன்றுதலான் நினதுளத்துக் கவற்சியை
யொழிந்து இனி நம்மரசற்குக் குற்றேவல் செய்வாயாக' வெனத் தோழி அவளை யூடறணிவியா நிற்றல்.
அதற்குச் செய்யுள்:-
கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
னாய்தழு விம் முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
பாலை யரசனுக்கே
தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்றகை மடந்தையை வருத்தந் தணித்தது.
இதன் பொருள் : கவலம் கொள் பேய்த்தொகை பாய்தரகவற்சி கொள்ளுதற்கேதுவாகிய பேய்த் திரள்
கரணங்களைப் பாயா நிற்ப; காட்டிடை ஆட்டு உவந்த- புறங்காட்டின்கண் ஆடுதலை விரும்பிய; தகவல் அங்கு
இலாச்சிவன் தில்லை அன்னாய் - கேடங்கில்லாத சிவனது தில்லையை யொப்பாய்; தழுவி முழுவிச்
சுவல் அங்கு இருந்த - தழுவி முத்தங்கொண்டு சுவலிடத்தேறியிருந்த நம் தோன்றல் துணை எனத்
தோன்றுதலால் - நம்முடைய தோன்றலைத் தமக்குத் துணையெனக் கருதி வந்து தோன்றுதலான்;
அவலம் களைந்து அரசனுக்குப் பணி செயற்பாலை நினதுள்ளத்துக் கவற்சியை நீக்கி இனியரசற்குக்
குற்றேவல் செயற்பாலை எ-று.
தழுவி முழுவித் தோன்றுதலாலென வியையும் சுவற்கணங் கிருந்தவெனினு மமையும்.
மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: பிள்ளையைத் துணையாக வருதலோடே தோழி கண்டு
பாலியத்தகைமைப் பாட்டையுடைய நாயகியை வருத்தம் தணியும்படி சொன்னது.
செய்யுள் : கானம் பாய்கிற பேய்த்திரள்கள் திருக்கூத்தைக் கண்டு களித்து இரண்டு கால்களையும்
கூப்பிக் குதிபா.......சுடு காட்டிலே ஆடுதலை விரும்பின கெடுதல் தன்னிடத் தில்லாத சிவனுடைய
பெரும்பற்றப் புலியூரையொப்பாய்! முத்தமிட்டுக்கொண்டு (சுவலிடத்து ஏறியிருந்த) நம் தோன்றலைப்
புதல்வனைக் கொண்டு மனையிடத்தே வருகிற பொழுதே நாயகி ஊடல் அறிவான் போல் பிள்ளையைப்
பாராட்டி வருதல் இந்நிலத்தைக் குலைத்து நீ ஊடுதல் போல ஆங்கு அவலமாயிருந்தது: அதனால்
ஒழிவாயாக: கிலேசத்தைப் போட்டு அரசன் ஏவினது செய்கையே முறைமை அரச னென்றது ஈண்டு
உவமை வாசகம், 389
39. அணைந்தவழியூடல் *
-----------------------
* பேரின்பப் பொருள் : "இன்பம் பணிமுழு தன்பாக் கொண்டு பின்பும் புதிதா யன்பு பேணியது'
அணைந்தவழியூடல் என்பது தோழியாலூடல் தணிவிக்கப்பட்டுப் பள்ளியிடத் தாளாகிய
தலைமகள், 'நீ செய்கின்ற விதனையறியின் நின் காதலிமார் நின்னை வெகுள்வர்; அதுகிடக்க,
யாம் மேனி முழுதுஞ் சிறுவனாலுண் டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையை யுடையேம்:
அதன்மேல் யாமும் நீ செய்கின்ற விக்கள்ளத்தை விரும்பேம்; அதனால் எங்காலைத்
தொடாதொழி: எங்கையை விடுவாயாக 'எனத் தலைமகன் றன்னையணைந்தவழி
ஊடா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சேறான் திகழ்வயற் சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன் செய்த
பாறான் திகழும் பரிசினம்
மேவும் படிறுவவேங்
காறான் தொடல் தொட ரேல்விடு
தீண்டலெங் கைத்தலமே
தெளிபுன லூரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.
இதன் பொருள்: சேல் திகழ் வயல் - சேல் விளங்கும் வயலையுடைய: சிற்றம்பலவர்த்தில்லை
நகர்வாய் வேல்திகழ் கண் இளையார் - சிற்றம்பலவரது தில்லை நகரிடத்துளராகிய வேல்போலுங்
கண்ணையுடைய நின் காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர்- நீசெய்கின்ற விதனை யறியின்
நின்னை வெகுள்வர் , அதுவேயுமன்றி: மெய்ப்பாலன் செய்த பால் திகழும் பரிசினம்-மேனி
சிறுவனாலுண்டாக்கப் பட்ட பால் புலப்படுந் தன்மையையுடையே மாதலின் நினக்குத் தகேம்:
மேவும் படிறு உவவேம் - இதன்மேலே யாமும் நீயும் மேவு நாணின்மையோடு கூடிய கள்ளத்தை
விரும்பேம்; கால்தொடல்- அதனால் எங்காலைத் தொடா தொழி: தொடரேல்-எம்மைத் தொடரவேண்டா ;
எம் கைத்தலம் தீண்டல் - எங்கைத் தலத்தைத் தீண்டற்பாலையல்லை: விடு - விடுவாயாக எ-று
திகழ்வயற்றில்லையென வியையும் பால் திகழுமென்னும் இடத்து நிகழ்பொருளின் வினை
மெய்யாகியவிடத்து மேலேறி நின்றது. நான் கிடத்தும் தானென்பது அசைநிலை பரிசினமேனு
மென்பதூஉம் பாடம் . மெய்ப்பாடு: வெகுளி. பயன்: ஊடனீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: தெளிந்த புனலையுடைத்தாகிய ஊரையுடையவன்
சென்றணைந்தவிடத்து ஒளியுடைத்தாகிய மதியையொத்த நெற்றியினை யுடையாள் வெறுத்துச் சொன்னது.
செய்யுள்: சேல் சிறந்த வயல் சூழ்ந்த சிற்றம்பலத்தேயுள்ளவருடைய பெரும்பற்றப் புலியூராகிய
நகரிடத்துள்ள வேல்போலச் சிறந்த கண்களையுடைய இளையோர் கோபிப்பர்: அதுவேயுமன்றி உடம்பானது
பிள்ளையாலே உண்டாக்கப்பட்ட முலைப்பாலால் இகழத்தக்க பரிசினை** யுடையேம்; அதுவேயுமன்றி
நீர் செய்யும் வஞ்சகங்களை விரும்பேம் ஆதலால் காலைப் பிடியாதே கொள்; எங்களைத் தீண்டப் பெறாய்:
ஆதலால் எம்கைத் தலங்களை விடுவாயாக.
தான் - நாலடியும் அசை. இளையார் வெகுள்வர் என்றது. என் வெகுளிக்கு நீ பயப்படுமாறு கண்டால்
இளையவர் வெகுளிக்கும் அஞ்ச வேண்டும் 'என்றது. இளையார் என்றது பண்டை இளையோரில் நின்
பரத்தைய ரில்லாதாரில்லை என்றது, யான் ஒருத்தியை ஊடல் தணிக்கப் புகுந்து வீணாய்ப் பகை
கொள்ளா நின்றாய் என்றது. பகை கொண்டாலும் இவ்விடத்து இன்பமில்லை என்பதுபட்டு இகழும்
பரிசினம்** என்றாள். பெற்ற இன்பம் கொண்டு நிற்கிலும் நாங்கள் இனி நம்போம் என்பது படப்
படிறுவவேம்' என்றாள். 390
** 'இகழும் பரிசினம்' என்பது இவர் பாடம் போலும்.
40, புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல்*
-----------------------------------
* பேரின்பப் பொருள் : " உண்மைப் பணியும் உண்டோவின் பஞ்செம்மையாய் விடிலெனச் சிவமே யுரைத்தது.
புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல் என்பது அணைந்த வழி யூடாநின்ற தலைமகள் ஊடறீரா நின்ற
தலை மகனோடு, 'இவர் செய்த பிழையெல்லாம் பொறுக்கலாம்; பலருமறிய வொருத்தியைப் புனலாட்டுவித்து
அது செய்யாதார்போல என்மனையின்க ணிவர்வந்து நிற்கின்றவிது எனக்குப் பொறுத்தலரிது' எனத் தணிக்கத்
தணியாது பரத்தையைப் புனலாட்டு வித்தமை கூறிப் புலவா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
பலவர்தில் லைநகரோர் *
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசு மன் றாய்நிற்கு
மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
அயிற்படைக் கொற்றவரே
ஆங்க தனுக் கழுக்கமெய்தி
வீங்குமென்முலை விட்டுரைத்தது
* 'தில்லை நகர்வாய்' என்பது பழையவுரைகாரர் பாடம்.
இதன் பொருள்: கொந்து ஆர் தடந்தோள் விடம் கால் அயில் படைக்கொற்றவர்- கொத்துமாலை
நிறைந்த பெரிய தோளிணையும் நஞ்சைக் காலுங் கூரிய படையினையுமுடைய கொற்றவர்.
பாவி யெற்கு என்னை மனையின் நிற்குமாறு - தீவினையேற்கு எனது வளமனையில் வந்து நிற்கின்றபடி ;
ஓர் பந்து ஆர் விரலியைப் பாய்புனல் ஆட்டி - பந்து பயின்ற விரலா ளொருத்தியைப் பாய்ந்த
புனலையாட்டுவித்து; வந்தார் பரிசும் அன்றாய் - வெளிப்படத் தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும்
பரிசு மன்றாய் மனத்தவறு செய்யாதார் வந்து நிற்குமாறு வந்து நின்றாராயின், அது பொறுத்தலரிது எ-று.
செந்தார் நறுங் கொன்றைச் சிற்றம்பலவா தில்லை நகர் பாய்புனலாட்டி- செய்ய தாராகிய நறிய
கொன்றைப் பூவினையுடைய சிற்றம்பலவரது தில்லையாகிய நகர் வரைப்பிற் பாயும் புனலையாட்டி
யெனக் கூட்டுக
தில்லை நகரோர் பந்தார் விரலியெனவியைப் பினுமமையும். மன்: ஒழியிசைக்கண் வந்தது;
அசைநிலை யெனினு மமையும். ஒருத்தியைப் புனலாட்டி வந்தார் பரிசு மன்றாய்க் கொற்றவர்
மனைக்கண்வந்து நிற்குமாறென்னென்று கூட்டியுரைப்பினு மமையும். கொத்துமாலை-
பலவாயொன்றாகியமாலை, ஆங்கதனுக்கு- அப்படிற்றுநிலையால், விட்டுரைத்தது - வெளிப்பட வுரைத்தது
மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவன் முன்பு செய்து வந்த புதுப்புனலாட்டுக்கு வெறுத்துப்
பொழுதைக்குப் பொழுது விம்முகிற முலையினையுடையாள் தோன்றச் சொன்னது.
செய்யுள்: நறுநாற்ற முடைத்தாகிய கொன்றை மாலையாகிய சிவந்த மாலையையுடைய
திருச்சிற்றம்பல நாதருடைய பெரும்பற்றப் புலியூராகிய நகரியிடத்துப் பந்தின் தொழில் பயின்ற
விரலினையுடையாளைப் புனலாடப் பண்ணிப் புனலாட வந்தவர்கள் செய்தியும்.... பாவியெற்கு.....
நிற்கும்படி ஏன் தான்? வளவிய மனையிடத்திலே வந்து கொத்துமாலை நிறைந்த பெரிய தோள்களையும்
விடத்தைக் காலுகிற வேலையுமுடைய வெற்றியையுடையவர் : (நிற்கிறபடி என் என்று கூட்டுக)
புதுப் புனலாடப் பண்ணி அவ் ஈரக்கோலத்துடன் நிற்றல் மகளிற்குப் பொறாமை செய்யும்;
அதுவேயுமன்றி அவரணிந்த கோலத்து மாலையையும் அணிந்து நின்றமையால் புதுப்புனலாடி
வந்தார் பரிசு மன்றாய் இருந்தது (என்றாள்) கொற்றவரென்றது மாலை சூடி வந்தார் என்னும்
கரித்தால் விடங்காலயிற் படையென்றது. சத்துரு ஜயம் பண்ண வேலெடுத்தது போலும்
மகளிரை வருத்த மாலை சூடினது ..... 391
41. கலவிகருதிப்புலத்தல்*
-------------------------
*பேரின்பப் பொருள்: ஆனந்தத்துக்கன்பு பிறிதிலை யென்று சிவமே யெடுத்துரைத்தது :
கலவிகருதிப்புலத்தல் என்பது புனலாட்டுவித்தமை கூறிப் புலவாநின்ற தலைமகள்,
'ஊடறீர்க்க நுதலுந்தோளு முதலாயினவற்றைத் தைவந்து வருடித் தலையளி செய்யா நின்ற
தலைமகனோடு, எம்முடைய சிறியவில்லின்கண் வந்து அன்று நீயிர் செய்த தலையளி எங்கட்கு
அன்று வேண்டுது மாயினும் இன்று உமது திருவருள் எங்கட்கு நீயிர்வந்த இத்துணையு மமையும் :
வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லையெனக் கலவிகருதிப் புலவா நிற்றல், அதற்குச் செய்யுள் :
மின்றுன் னியசெஞ் சடைவெண்
மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
தில்லம் நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
சாலுமன் னெங்களுக்கே
கலைவள ரல்குல் தலைமகன் றன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது
இதன் பொருள்: மின் துன்னிய செஞ்சடை வெண்மதியன் - மின்னையொத்த செஞ்சடைக்கண் வைத்த
வெண்பிறையை யுடையான்: விதியுடையோர் சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் - நற்பாலையுடையோர்
சிற்றின்பத்திற்குக் காரணமான புலன்களை விட்டுச் சென்று நினைந்த கழலையுடைய சிற்றம்பலவன்;
தென்னம் பொதியில் எமது இல்லம் நன்றும் சிறியவர் இல்- அவனது தெற்கின்கணுண்டாகிய பொதியிலிடத்து
எமது குடி பெரிதுஞ் சிறியவரது குடி அதனான்: நல் ஊர- நல்லவூரை யுடையாய்: இன்று உன் திருவருள்
எங்களுக்கு இத்துணைசாலும் முற்காலத்து நின்றலையளி வேண்டுது மாயினும் இப்பொழுது உனது
திருவருள் எங்கட்கு நீ வந்தவித்துணையு மமையும். நீ தலையளி செய்யவேண்டுவ துண்டோ? எ-று
மன்னும் ஓவும் அசை நிலை சாலுமன்னென்புழி மன்னும் அசை நிலைபோலும் மெய்ப்பாடு: வெகுளி .
பயன்: புலத்தல். புலவி நீங்கியதூஉமாம்.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு : மேகலையணிந்த அல்குலினையுடையாள் நாயகனுடனே
கலவியைக் கருதிப் புலவியான வார்த்தையைச் சொன்னது.
செய்யுள்: ஒளிசிறந்த செஞ்சடையிலே வெள்ளிய பிறையை வைத்தவன், தொண்டு செய்து தன்னை
அடைதற்கு ஆகம விதியுடையோர்கள் கன்ம காண்டத்தின்று ஞான கண்டத்திலே சென்று நினைக்கிற
திருவடிகளையுடைய திருச்சிற்றம்பல நாதன் அவனுடைய தெற்கின் கண் உண்டாகிய அழகிய
பொதியின் மலையிடத்து மிகவும் சிறியோராகிய குறவர்குடி எங்கள் குடி : நல்ல ஊரையுடையவனே!
இக்காலத்து உன்னுடைய திருவருள் இத்தனையும் வேண்டுவது போலும் எங்கள் அளவில்.
எனவே, முற்காலம் இவன் கிலேசிக்கவும் தாங்கள் அறியாரானமை தோன்றச் சொன்னது. 392
42. மிகுத்துரைத்தூடல்*
---------------------
* பேரின்பப் பொருள் : பெற்றிடின் ஞான முதன் மூன்றிலையெனல்.
மிகுத்துரைத்தூடல் என்பது கலவி கருதிப் புலவா நின்ற தலைமகள் புணர்தலுறா நின்ற தலைமகனுடன்,
'நீர்விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுமிய குடியிலுள்ளீர்; எம்போல்வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல்
நுமக்கு விழுமிய வல்ல'வென மிகுத்துரைத்தூடா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
செழுமிய மாளிகைச் சிற்றம்
பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
வாறு விரும்புவதே
நாடும் ஊரும் இல்லுஞ் சுட்டி
ஆடற் பூங்கொடி யூடி யுரைத்தது.
இதன் பொருள்: செழுமிய மாளிகைச் சிற்றம்பலவர் வளவிய மாளிகைகளாற் சூழப்பட்ட சிற்றம்பலத்தை
யுடையார் : அன்பர் சிந்தை சென்று கழுமிய கூத்தர் - அன்பர் சிந்தைக்கட் சென்று பொருந்திய கூத்தர்
கடிபொழில் ஏழினும் - அவரது காவலை யுடைய வுலகமேழினுள்ளும்: விழுமிய நாட்டு விழுமிய நல்லூர்
விழுக்குடியீர் - சிறந்த நாட்டின்கட் சிறந்த குடியிலுள்ளீர் : இன்னவாறு விரும்புவது விழுமிய அல்ல கொல்லோ -
எம்போல் வாரிடத்து இத்தன்மையவாகிய நெறியை விரும்புதல் உமக்குச் சிறந்தனவல்ல போலும் எ.று.
வாழியும் அரோவும்: அசைநிலை விரும்புவ தென்புழி; இன்னவாறு விரும்புவன போல்வன வென்பது
கருத்தாகலின் ஒருமைப்பன்மை மயக்கம் அமையுமாறு முடைத்து. இன்ன வாறென்பதற்கு இன்ன வண்ணம்
விரும்புதலெனினு மமையும். விரும்புத லென்பதூஉம் பாடம் . ஆடல் - நுடக்கம். மெய்ப்பாடும் பயனும் அவை.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு - நாட்டையும் ஊரையும் வீட்டையும் குறித்து அசைந்த
பூங்கொடியினை யொப்பாள் வெறுத்துச் சொன்னது .
செய்யுள் : வளவிய மாடங்களாலே சூழப்பட்ட திருச்சிற்றம்பலத்தே யுள்ளவர், அன்பர் சிந்தைகளிலே
சென்று செறிகிற திருக் கூத்தையுடையவர் அவராலே காக்கப்பட்ட பூமிகளேழினும் வாழியரோ , சீரிய நாட்டில்
சீரிய நல்லூரில் சீரிய குடியிலுள்ளீர்! இவ் வொழுக்கத்தை விரும்புவது சீரியதன்று போலேயிருந்தது.
என நாடும் ஊரும் இல்லும் புகழ்ந்து நீர் இவற்றிற்குத்தக்க ஒழுக்க முடையீர் அல்லீர்
எனவே கூட்டத்துக்கு உடன் பாட்டில்லாமை தோன்றினது. 393
43. ஊடல் நீடவாடியுரைத்தல்*
---------------------------
*பேரின்பப் பொருள்: 'பெற்றார்க் கானந்தம் பிறிவிலையென்றது'
ஊடல்நீடவாடியுரைத்தல் என்பது தணிக்கத் தணியாது மிகுத்துரைத்துத் தலைமகள் மேன்மேலு
மூடாநிற்ப, ' அன்று அம்மலையிடத்துத் தன்னை யெய்துதற்கோ ருபாயமின்றி வருந்தா நிற்ப யானுய்யும்
வண்ணந் தன்னிணை மலர்க் கண்ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத்தன் வயமாக்கிய
நம் பெண்ணமுதம் அதுவன்று: இது நம்மை வருத்துவதோர் மாயமாம்' எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி
ஊடனீடத் தலைமகன் வாடா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
திருந்தேன் உயநின்ற சிற்றம்
பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
வருவதொர் வஞ்சனையே.
வாடாவூடல், நீடா வாடியது
இதன் பொருள்: திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் - ஒருவாற்றானுந் திருந்தாத
யான் பிறவித் துன்பத்திற்கு பிழைக்க வந்து நின்ற சிற்றம்பலவரது தெற்கின்கணுளதாகிய பொதியிலிடத்து:
இருந்தேன் உயவந்து- ஒரு முயற்சியுமின்றி யிருந்த யானுய்யும் வண்ணம் வந்து; இணை மலர்க் கண்ணின்
இன்நோக்கு அருளி - தன்னுடைய இணைந்த மலர் போலுங் கண்களினது உள்ளக்கருத்தை வெளிப்படுத்தும்
நாணோடுகூடிய நோக்கமாகிய இனிய கடைக் கணோக்கத்தை முன்னெனக் குத்தந்து; பெருந்தேன்
என்நெஞ்சு உகப்பிடித்து ஆண்ட-பெருந்தேன் போலவினிதாய் என்னெஞ்ச முருக என்னைப் பிடித்துத்
தன் வயமாக்கிய; நம்பெண் அமிழ்தம் அது அன்று - நமது பெண்வடிவையுடைய அமிழ்தமாகிய அது
இதுவென்று; இதுவோ வருவது ஓர் வஞ்சனை - இதுவோ வருவதொரு மாயம்; வருந்தேல் - அதனான் நீ
வருந்தாதொழி எ- று.
ஓகாரம் ஒழியிசை கண் வந்தது தன்னை நோக்கி யொரு முயற்சியுமில்லாத யான் பிறவித்
துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணை மலர்கண்ணின தினிய கடைக்கணோக்கத்தைத்
தந்து பெருந்தேன் போன்றினிதாய், அன்வன மன நெகிழ அன்னைவலிந்து பிடித்தடிமைக் கொண்ட
பெண்ணமிழ்தமென வேறுமொரு பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு: அழுகை
பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: குறையா ஊடல் நீட்டிப்ப நாயகன் வாடினது
செய்யுள் : ஒரு வழியாலும் திருந்தாதவன் உய்யும்படி தன் கண் வரும் திருமேனி காட்டி நின்ற
சிற்றம்பலநாதன் அவருடைய தெற்கின் கண் உண்டாகிய அழகிய பொதியின் மலையிடத்தே ஒரு
முயற்சியின்றியே இருந்த நான் பிழைக்கும்படி வந்து இணையொத்த மலரையொத்த கண்களின்
இனிய நோக்கைத்தந்து பெருந்தேனை யொப்ப இனிதாய நெஞ்சு உருகும் படி பற்றித் தன் வசமாக்கிக்
கொண்ட நம் பெண்ணாகிய அமிழ்தே, அல்ல காண் இது வரக்கடவதொரு வஞ்சனைகாண்:
நெஞ்சமே வருந்தாதே கொள். 394
44. துனியொழிந்துரைத்தல் *
--------------------------
'பேரின்பப் பொருள்: "பெத்தம் போல முத்தியி னின்றது"
துனியொழிந்துரைத்தல் என்பது ஊடனீடலாம் தலைமகனதாற்றாவாயில் கண்ட தலைமகள்,
'அன்று நங்குன்றிடத்து மிக்க விருளின் கண்ணே அரி திரண்டு யானை வேட்டஞ் செய்யும் அதரகத்துத்
தமது வேலே துணையாக வந்து இயல்பைப் பொருந்திய வன்பை நமக்குத் தந்தவர்க்கு இன்று
நாம்முடம்படாது நிற்குமிந்நிலைமை என்னாம்' எனத் துனியொழிந்து அவனோடு புணர்ச்சிக்
குடம்படாநிற்றல். அதற்குச் செய்யுள் ;-
இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
துணையாப்பொம் மென்னிருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
தேரும் அதரகத்தே .
தகுதியினூரன் மிகுபதநோக்கிப்
பனிமலர்க்கோதை துனியொழிந்தது.
இதன் பொருள்: இமையோர் இறைஞ்சும் செயல் மன்னும் சீர்க்கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில்-
இமையோ ரிறைஞ்சும் நுண் செயல் தங்கிய நல்ல 'வீரக் கழலணிந்த திருவடியையுடைய சிற்றம்பலவரது
தெற்கின் கணுளதாகிய பொதியிலிடத்து; புயல் மன்னு குன்றில் பொம்மென் இருள் வாய்- புயறங்கிய
இக்குன்றிற் செறிந்தவிருளின் கண்ணே; அயல்மன்னும் யானை துரந்து பக்கத்துத் தங்கும் யானைகளை யோட்டி ;
அரிதேரும் அதரகத்து அரிமா அவைபுக்கவிடந் தேடும் வழியகத்து: பொருவேல் துணையா - தமது பொருவேலே
துணையாக வந்து; இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு - இயல்பாகிய நிலை பெற்றவன்பை நமக்குத் தந்தவர்க்கு
நிலை என் - யானிவ் வாறுடம்படாது நிற்கு நிலை என்னாம்! இது தகாது எ-று.
பெயரெச்சத்திற்கும் பெயர்க்கும் ஒரு சொன்னீர்மைப் பாடுண்மையின் இயன்மன்னு மன்பெனத்
தொக்கவாறறிக .இயல்பைப் பொருந்திய வன்பெனினு மமையும். அதரகத்து வந்தென வொருசொல்
வருவித்துரைக்கப் பட்டது. புயன் மன்னு குன்றிலன்பு தந்தார்க்கெனக் கூட்டுக, தகுதியின்- தகுதியான்
மிகுபதம் ஆற்றாமை. மிக்கவளவு தகுதியிலூரனெனப் பாடமாயின், தகுதியில்லாத மிகுபத மென்க.
மெய்ப்பாடு அச்சம். பயன்; சிவப்பாற்றுதல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: நாயகனுடைய அன்பு மிக்க செவ்வியைப் பார்த்துத்
தகுதியுடைமையாலே அவ்விடத்தே ஒரு விசாரத்தைப் பாங்கி சொன்னது.
செய்யுள்; தேவர்கள் வணங்குகிற செய்தி நிலைபெற்ற சிறந்த திருவடிகளையுடைய
சிற்றம்பல நாதனுடைய தெற்கின் கணுண்டாகிய அழகிய பொதியின் மலையிடத்து மேகங்கள்
நிலைபெற்ற பக்கமலையிடத்தே சிறந்த வேலைத் துணையாகச் செறிந்த இருளிடத்தே
வழிப்பக்கங்கள் தோறும் நிலை பெற்ற யானைகளை ஓட்டிச் சிங்கங்கள் உணவு தேடுகிற
வழியிடத்தே இயற்கை நிலைபெற்ற அன்பைத் தந்தவர்க்கு நீ இங்ஙனே வெறுத்து நிற்கிற
நிலை என் தான் ?
இயல் மன்னு மன்புதருதல் - செயற்கையாகில் அப்படி வந்து வருந்த வேண்டியதில்லை;
ஆதலால் அவருடைய அன்பு இயற்கை அளவிலே (அமைந்தது) என முன் நிகழ்ந்தது கூறிநெஞ்சு நெகிழ்ந்தது. 395
45. புதல்வன் மேல்வைத்துப் புலவிதீர்தல் *
-------------------------------------
*பேரின்பப் பொருள்: முத்தியி னுஞ்சுகம் புதிதாய்த் தோன்றியது.
புதல்வன் மேல்வைத்துப் புலவிதீர்தல் என்பது துனியொழித்துக் கூடிப் பிரிந்தவழிப்
பின்னும் பரத்தை மாட்டுப் பிரிந்தானென்று கேட்டுப் புலந்து வாயின் மறுக்க, வாயிற்கணின்று
விளையாடா நின்ற புதல்வனை யெடுத்தணைத்துத் தம்பலமிட்டு முத்தங் கொடுத்து அது
வாயிலாகக் கொண்டு தலைமகன் செல்லா நிற்ப, அப்புதல்வனை வாங்கியணைத்துக்
கொண்டு அவன் வாயிற்றம்பலந் தன்மெய்யிற் படுதலான் 'எல்லார்க்கும் பொதுவாகிய
தம்பலத்தைக் கொண்டு வந்தோ நீ யெம்மைக் கொண்டாடுவது? அது கிடக்க, இதனை
நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாக வெனப் புதல்வன் மேல் வைத்துத் தலைமகள்
புலவி தீரா நிற்றல். அதற்குச் செய்யுள் :-
கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
மார்களைக்** கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
எம்மைப் பூசிப்பதே
புதல்வனது திறம்புகன்று
மதரரிக்கண்ணி வாட்டந் தவிர்ந்தது ##
** 'மார் தம்மைக்' என்பது பழையவுரைகாரர் பாடம்
## 'வாட்டமுற்றது' என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்; மதுத் தங்கிய கொன்றை வார் சடை ஈசர் இமையோர் இறைஞ்சும் வள் தில்லை
நல்லார் பொதுத் தம்பலம் கொணர்ந்தோ- தேன்றங்கிய கொன்றைப் பூவை யுடைய வீசரது இமையோரால்
வணங்கப்படும் வளவிய தில்லையிலுளராகிய நல்லாரெல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக்
கொண்டுவந்தோ : புதல்வா - புதல்வா : எம்மைப் பூசிப்பது- நீ யெம்மைக் கொண்டாடுவது? அது நிற்க:
கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களைக்கண் பிழைப்பித்து - இது நினக்குத் தருகின்ற விடத்து
நின்றந்தை ஒளிவிட்ட முறுவல் பொருந்திய நின் சிறிய வன்னைமாரைக் கண்ணைத் தப்புவித்து;
எதிர்த்து- எங்கு நின்ற எப்பரிசு அளித்தான் - அவர் காணாத வண்ணம் ஒருவாற்றானின்னை
எதிர்ப்பட்டு எவ்விடத்து நின்று எவ்வண்ணமிதனை நினக்குத் தந்தான்? நீயிது சொல்லவேண்டும்.எ-று
மெய்ப்பாடு; இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: ஊடனீங்குதல்.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: பிள்ளையுடைய..... யைச் சொல்லுவாள் போன்று ----த்துடனே
நல்ல நிறம் பரந்த கண்களையுடையாள் வாடினது.
செய்யுள்: தேவர் வணங்கப்பட்ட மது நிலைபெற்ற கொன்றை மாலையினையணிந்த நீண்ட
திருச்சடையையுடைய ஈசர், அவருடைய வளவிய பெரும்பற்றப் புலியூரிடத்து நல்லோராகிய
பரத்தையர்க் கெல்லாம் பொதுவாகிய நின் பிதாவின் தம்பலத்தைக் கொண்டு வந்தோ, புதல்வனே
நீ எம்மைக் கொண்டாடுவது? (அது) கிடக்க? ஒளியுடைத்தாகிய முறுவல் நிலைபெற்ற சிற்றன்னையராகிய
தில்லை நல்லாரைக் கண்புதைப்பித்து அவ்வளவிலே உன்னைச் சிந்தித்து எவ்விடத்தே ..... யாலே
உனக்குத் தம்பலம் இட்டான் நின்று?
என்றது, அவர்கள் காணாதது ஓரிடம் எங்குப் பெற்றான் என்றும் எப்பரிசு அளித்தான் என்றும்......
அவர்கள் காண்கிறார்களோ என்று பயப்பட்டு நடுங்குகையாலே அந்நடுக்கத்திலே உனக்கிட்ட விரகு
ஏனென....... ட்டஞ்சலி பண்ணி அன்றோ, பரத்தையர்க்குப் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டு
பூசிக்குமது புதல்வர்க்கு இயல்பன்று (என்றும் கொண்டு கூறினாள் எனக்கொள்க) 396
46. கலவியிடத்தூடல்*
-------------------
*பேரின்பப் பொருள் : ''ஆனந் தங்குரு வடியே பேணல்"
கலவியிடத்தூடல் என்பது புதல்வனை வாயிலாகப்புக்குப் புலவி தீர்த்துப் புணர்தலுறா நின்ற
தலைமகனைத் தலைமகள் ஒருகாரணத்தால் வெகுண்டு, அவன் மார்பகத்துதைப்ப, அவ்வெகுடல் தீர
வேண்டி அவனவள் காலைத் தன்றலை மேலேற்றுக் கொள்ள, அது குறையாக அவள் புலந்தழா
நின்றமையை அவ்விடத்து உழையா தம்முட் கூறா நிற்றல், அதற்குச் செய்யுள்:-
சிலைமலி வாணுத லெங்கைய
தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
தான்றலை மன்னர் தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
மாலை கலுழ்ந்தனவே.
சீறடிக் குடைந்த நாறிணர்த் தாரவன்
தன்மை கண்டு பின்னுந் தளர்ந்தது
இதன் பொருள்: மலைமலி செழும் பூண்மார்பின் உதைப்ப- யான் வெகுண்டு மலைபோலும் வளவிய
பூணையுடைய தன் மார்பகத்து மிதிப்ப: சிலை மலி வாணுதல் எங்கையது ஆகம் எனத் தலை தந்தான் -
அவ்வாகத்தைச் சிலைபோலும் வாணுதலையுடைய எங்கையதென்றே கருதித் தன் சென்னியைத் தந்தனன்,
அதனான். மன்னர் தில்லை உலைமலி வேற்படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி - மன்னனது
தில்லையில் உலையிடத் துண்டாகிய தொழிலான்மிக்க வேலாகிய படையை யுடைய வூரனைப்போலக்
கள்வரில்லையென்று கருதி: கலைமலி காரிகைகண் முத்தமாலை கலுழ்ந்தன - மகளிர்க்குத் தக்க
யாழ்முதலாகிய கலைகளான் மிக்க காரிகை நீர்மையை யுடையாளுடைய கண்கள் கண்ணீர்த்
துளித்தாரையாகிய முத்த மாலையைப் பொருந்தின: அதனான், இவள் புலத்தற்குக் காரணம்
வேண்டுவ தில்லை போலும் எ-று .
இதுவுந்துறை கூறிய கருத்து மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: தலைமகளைச்
சிவப்பாற்றுவித்தல். பிள்ளை வாயிலாகப் புக்க தலைமகனை யேற்றுக் கொண்டு பள்ளியிடத்தாளாக
மேற்சொன்ன வகையே உண்ணின் றெழுந்த பொறாமை காரணம் பெற்றுத் தோன்றியது: தோன்றத்
தலைமகன் ஆற்றானாயின் அவ்வாற்றாமை கண்டு சிவப்பாற்றுவித்தல். தலைமகளிடத்தும்
தலைமகனிடத்தும் இவ்வகை நிகழ்ந்தது கண்டு தோழியிது சொன்னாளென்பது. தலைமகன்றான்
சொன்னா னெனினுமமையும், என்னை ? 'மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு, நினையுங் காலைப்
புலவி புளுரிய" (தொல், பொருள், பொருளியல் 33) என்றார் தொல்காப்பியனார். தலைமகளவ்வகை
செய்யவும் பெறுமென்பது.
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: சிறிய அடியினையுடையான் காரணமாக .......
செய்யுள்: வில்லையொத்து ஒளிசிறந்த நெற்றியினையுடைய என் தங்கையுடையதன்
மார்பைக் கருதி (வௗவிய பூணையுடைய) மலையை யொத்த மார்பினை நான் உதைப்ப மார் (பினால்)
ஏலாதே தலை (யால்) ஏற்றான் : (நெஞ்சிலிருக்கிறவர்களுக்கு நோமென்று கருதித் தலையால் ஏற்றானென்க):
முதலியாரின் பெரும்பற்றப் புலியூரிடத்து உலைத்தொழிலால் சிறந்த வேலாயுதத்தையுடைய நாயகரைப்
போலக் கள்வரில்லை யென்று விசாரித்து மேகலையாற் சிறந்த நாயகியின் கண்கள் முத்தமாலை போலக்
கண்ணீர்த் துளி தாரை தோன்றும்படி அழுதன. 397
47. முன்னிகழ்வுரைத் தூடறீர்த்தல் *
-------------------------------
* பேரின்பப் பொருள்: அனாதியே யின்ப மாவ யர்ந்து மிருந்ததற் கெண்ணி யின்ப மாயின்.
முன்னிகழ்வுரைத் தூடறீர்த்தல் என்பது கலவியிடத் தூடா நின்ற தலைமகளுக்கு யாங் கொடிய
நெறியைச் சென்று சிறியவூரின் கண் மரைய தட்பள்ளியின் இச்செறிந்த மெல்லிய முலைகள் என் மார்பிடை
வந்தடர்க்கத் தங்கிய சிறிய துயிற்கு மாறுகண்டிலம்: அதனை நீ யுள்ளியுமறிதியோ' வென முன்னிகழ்வுரைத்துத்
தலைமகன். அவளையூடறீராநிற்றல் அதற்குச் செய்யுள்:-
ஆறூர் சடைமுடி அம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
கங்குற் சிறுதுயிலே
முன்னிகழ்ந்தது நன்னுதற்குரைத்து
மன்னுபுனலூரன் மகிழ்வுற்றது.
இதன் பொருள்: ஊர் மழ விடையாய் - தவழா நின்ற இளைய வேற்றையுடையாய்: ஆறு ஊர் சடைமுடி
அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்- ஆறுபரந்த சடை முடியையுடைய அம்பலத்தின் கணுளராகிய
அண்டர தண்டமுழுதையும் யாம் பெறினும்; வண்கதிர் வெதுப்பு நீறு ஊர்கொடு நெறி சென்று - ஞாயிற்றினுடைய
வளவிய கதிர்கள் வெதுப்பிய நீறு பரந்த கொடிய நெறியைச் சென்று; இச் செறி மென்முலை நெருங்க-
இச்செறிந்த மெல்லிய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்தடர: சீறூர் மரை அதளின் தங்கு கங்குல்
சிறுதுயில் மாறு கண்டிலம் - நெறியாற் சிறியவூரின் கண் மரைய தட்பள்ளி** யிற்றங்கிய இரவிற் சிறிய
துயிற்கு மாறு கண்டிலம்; அதனை நீ யுள்ளியு மறிதியோ எ-று.
** மரையதட்பள்ளி; மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி பெரும்பாணாற்றுப்படை, 89. மரை - ஒருவகை மான்.
அண்டர தண்ட முழுதும் பெறுதலால் வருமின்பமும் அத்துயிலான் வந்த வின்பத்திற்கு
மாறல்ல வென்றவாறு. இளவேறு-புதல்வன், தமக்குத்தக்க பள்ளியுமிடமு மின்மையிற் சிறு துயிலென்றான், துயிலும்
பொழுதிற்றுயிலாப் பொழுது பெரிதாகலின் அவ்வாறு கூறினானெனினு மமையும். துயிற்கென்னு
நான்கனுருபு விகாரவகையாற் றொக்கு நின்றது. முன்னிகழ்ந்தது கூறுவானாய் உண்ணின்ற சிவப்பாற்றுவித்தது.
ஞெமுங்க வென்பதூஉம், மரவதளென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன் : தலைமகளை மகிழ்வித்தல்
(பழையவுரைப் பொழிப்பு ) கொளு: (முன் நிகழ்ந்த) படிகளை நல்ல நெற்றியினையுடையாளுக்குச்
சொல்லி நிலைபெற்ற புனலாற் சிறந்த ஊரினையுடைய (வன் மகிழ்ந்தது.)
செய்யுள் : கங்கையானது இற்றை வரை ஒ(ழு)குகிற சடை முடியினையுடைய அழகிய அம்பலத்தில்
தேவராகிய முதலியாரால் காணப்பட்ட உலகங்கள் எல்லாவற்றையும் பெறினும், தவழாநின்ற இளைய இடபத்தினை
யுடையாய்! ஒப்பாகக் கண்டிலோம்: வளவிய கிரணங்கள் வெதுப்பும் தூளி பரந்த கொடிய வழியிலே போய்
இந்தச் செறிந்த முலைகள். முயங்கச் சிற்றூரிலே மரைத் தோலிலே அவதரித்தவற்றை இரவிற் சிறிது
துயிலு....... உலகங்களெல்லாம் பெற்றாலும் நேராகக் கண்டிலோம்.
சிறிய துயிலென்றது சிறுகுடியில் மரைத்தோலில் கிடந்து புல்லிய உறக்கம் ,..ணைந் தென்னுடன்
போந்தாய் என்றபடி; அன்றிப் பெறாது பெற்றமையால் துயிலும் பொழுதில் துயிலாப் பொழுதே பெரிதாதலால்
சிறுதுயிலென் றுரைப்பாருமுளர். 398
48. பரத்தையைக் கண்டமை கூறிப்புலத்தல்*
---------------------------------------
*பேரின்பப் பொருள் "இன்ப சுகம்புணர் வெங்குமாகி, மற்றொன் றறியா வகையாய் நின்றது"
பரத்தையைக்கண்டமை கூறிப்புலத்தல் என்பது முன்னிகழ் வுரைத் தூடறீர்த்து இன்புறப்
புணரப்பட்ட தலைமகள் பிறர்க்கும் நீ இவ்வாறின்பஞ் செய்தியென்று கூற நின்னை யொழிய
யான் வேறொருத்தியையு மறியேனென்ற தலைமகனுக்கு 'நின் பரத்தை போகா நின்றவள் நம்
வாயிற்கணின்று தேருருட்டி விளையாடாநின்ற புதல்வனைக் கண்டு நின்மகனென்றை யுற்றுத் தழுவ.
நீ யையுற வேண்டா அவன் உன்மகன்; உறவு மெய்யாகிய வுறவே; ஈதும் உனதில்லமே; ஈண்டு வருவாயாக
வென்றியான் கூற, அது கேட்டுத் தானாணிப் போயினாள்; யானவளை யறியேனாக நீ மாயங்
கூறவேண்டுவதில்லை யெனத் தான் பரத்தையைக் கண்டமை கூறிப் பின்னுமவனொடு புலவா நிற்றல்,
அதற்குச் செய்யுள்:-
ஐயுற வாய்நம் அகன்கடைக்
கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
தழுவமற் றுன்மகனே
மெய்யுற வாம் இதுன் னில்லே
வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
யூரன்ன காரிகையே
பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற் குரைத்தது
இதன் பொருள்: நம் அகன் கடைக்கண்டு ஐயுறவாய் நமதகன்ற கடைக்கட் கண்டு நின்மகனென்றையுற்று;
வள் தேர் உருட்டும் மைஉறு வாள் கண்மழவைத் தழுவ-வளவிய சிறு தேரையுருட்டும் மையுற்ற வாட்கண்ணை யுடைய
புதல்வனைத் தான்வந்து தழுவ, அதனைக் கண்டு; உன்மகனே - அவன் உன் மகனே; மெய் உறவாம் - உறவு மெய்யாகிய
வுறவே ; இது உன் இல்லே-இதுவும் நினதில்லமே; வருகென - ஈண்டு வருவாயாக வென்றியான் கூற, கை உறு மான்
மறியோன் புலியூர் அன்ன காரிகை :கையைப் பொருந்திய மான்மறியை யுடையவனது புலியூரைப் போலுங்காரிகை;
வெள்கிச் சென்றாள்-நாணிப் பெயர்ந்தாள்; அதனான் ; யானவளை யறியாதேனாக நீ நினைத்து மாயங்கூற
வேண்டுவதில்லை எ-று.
ஐயுறவாக வெனத் திரித்துக் கொள்க. அரத்தகு நெடுவேலென்பது பாடமாயின்** அரத் தொழிலாற்றக்க
நெடுவேலென வுரைக்க. மெய்ப்பாடு: நகை. பயன்: சிவப்பாற்றுதல், ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன்
தலைமகளைச் சிவப்பாற்று விப்பான் நின்னின் வேறுசில ரெனக்கில்லையால் நீ வெகுளற்க வென்றாற்குத்
தலைமகளிவ் வகை சொன்னாளென்பது
** என்பது பழையவுரைகாரர் பாடம்
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: அவன் பரத்தையைக் கண்டேனென்ற பவளம் போலும்
வாயினையுடைய மாதர் சிவந்த நெடிய வேலினையுடைய நாயகனுக்குச் சொன்னது.
செய்யுள்: வளவிய சிறு தேரையுருட்டி விளையாடுகிற மை பொருந்தின ஒளிசிறந்த கண்களையுடைய
பிள்ளை நம்--- டத்தே கண்டு தன் பிள்ளையாகக் கருதி நம் வாயிலிலே நிற்கையால் ஐயப்பட்டு அவ்வையத்துடனே
தழுவிக்கொண்ட பொழுது, உன் பிள்ளையேகாண்; உன்னுடன் உண்டாகிய உறவு மெய்யான உறவே காண்;
உன் அகமே காண்: வாராய்' என்று நான் சொல்வதற்கு நாணி மேனி வெளுத்துப் போனாள். கையிலே பொருந்தின
மான்மறியை யுடையவனுடைய பெரும்பற்றப்புலியூரை யொத்த வீறுபட்ட அழகினையுடையவள். 399
49. ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல்*
-----------------------------------
*பேரின்பப் பொருள் : ''அருளுயிர் பூரண வானந்த மாறல், சிவத்துக் குரைத்துத் திறம்பா தின்ப,
மாக்கி மிகவு மருள்மிக மகிழ்தல்"
ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல் என்பது பரத்தையைக் கண்டமைகூறிப் புலந்து வேறுபட்ட
தலைமகளுக்கு, 'இத்தன்மையனாய் யாவர்க்கு மூதியமாகலின். அன்பானன்றி யருளாற் பரத்தையர்க்குந்
தலையளி செய்ய வேண்டுமன்றே; புறப்பெண்டீரைப்போல யாமவனோடு புலக்கற்பாலே மல்லேம்:
அவன் வரும் பொழுது எதிர் தொழுதும், போம்பொழுது புறந்தொழுதும். புதல்வனைப் பயந்திருக்கையன்றோ
நமக்குக் கடனாவது' எனத் தோழி தலைமகன தூதியமெடுத்துரைத்து அவளையூடறீர்த்து. அவனோடு
பொருந்தப் பண்ணாநிற்றல். அதற்குச் செய்யுள் :-
காரணி கற்பகங் கற்றவர்
நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
தஞ்சங்க நிதி விதிசேர்
ஊருணி** உற்றவர்க் கூரன்மற்
றியாவர்க்கும் ஊதியமே
இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.
** ஊரணி, என்பது பழையவுரைகாரர் பாடம்
இதன் பொருள்: ஊரன் கார் - ஊரன் வேண்டாமைக் கொடுத்தலிற் காரோடொக்கும். அணி கற்பகம் -
வேண்டக் கொடுத்தலின் அழகிய கற்பகத்தோடொக்கும்: கற்றவர் நல் துணை நுண்ணிய கல்வியனாகலிற்
கற்றவர்க்கு நல்ல வுசாத் துணை; - பாணர் ஒக்கல் - இசையுணர்வானுங் கெழுதகை மையானும் பாணர்க்கு
அவர் சுற்றத்தோ டொக்கும்; சீர் அணி சிந்தாமணி- நினைத்தது கொடுத்தலிற் சீரையுடைய நல்ல
சிந்தாமணியோடொக்கும்: அணி தில்லைச் சிவனடிக்குத் தார் அணி, கொன்றையன்- அழகிய
தில்லைக்கட் சிவனது திருவடிக்குத் தாராகிய அவனாலணியப்படுங் கொன்றைப் பூவின்றன்மையையுடையன்;
தக்கோர் தம் சங்க நிதி-சான்றோர் தமக்குத் தொலையாத நிதியா யிருத்தலிற் சங்க நிதியோ டொக்கும்;
விதி - நட்டார்க்கும் பகைவர்க்குந் தப்பாது பயன் கொடுத்தலின் விதியோடொக்கும்; உற்றவர்க்குச் சேர் ஊருணி -
சுற்றத்தார்க்கு அவர் வேண்டியது செய்ய விருத்தலின் அணித்தாகிய வூரணியோ டொக்கும்; யாவர்க்கும்
இவன் பெறும் பயன் எ.று.
தாரணி கொன்றைய னென்பது குரங்கனென்பது போல உவமைப் பொருட்பட நின்றதெனினுமமையும்,
விதிசேரூ ருணியென்பதற்கு முறைமையாற் சேரப்படு மூரணி யெனினு மமையும். தக்கார்க்குஞ் சுற்றத்தார்க்குங்
கொடுத்தல் வண்மை யன்மையின் அவரைவேறு பிரித்துக் கூறினாள். ஊடறீர்ந்து கூடியவழித் தலைமகட்கு
உண்ணின்ற சிவப்பு ஒரு காரணத்தாற் சிறிது புலப்பட: ஊரன் யாவர்க்கு மூதிய மாகலின் அன்பா னன்றி
அருளாற் பரத்தையர்க்குத் தலையளி செய்யுமன்றே; அதனான் புலக்கற் பாலையல்லை யென்று
குறிப்பினாற்றோழி சிவப்பாற்று வித்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம் மகிழ்தல்,
இவ்வகை கூத்தர் மகிழ்ந்து இன்னபோல்வன தலைமகனது குணங்களைப் பாராட்டினாரென்பது
என்னை? ''தொல்லவையுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும், பல்லாற்றானும் மூடலிற் றணித்தலு, முறுதி காட்டலு
மறிவு மெய்ந் நிறுத்தலு. மேது விலுணர்ந் துணியக் காட்டலு, மணிநிலை புரைத்தலுங் கூத்தர் மேன'
(தொல்: பொருள், கற்பு, 27) என்றார் தொல்காப்பியனார். இப்பாட்டு ஐவகைத் திணைக்கும் உரித்தாகலிற்
பொது வகைத்தெனப் பெறுமென்பது.
பரத்தையிற்பிரிவு முற்றிற்று.
(பழையவுரைப் பொழிப்பு) கொளு: வந்த ஏற்றவர்க்குப் பரிசிலைக் கொடுத்து மற்று விரும்பினார்
விரும்பின பொருள் பெற்று மகிழும்படி பலர்க்கும் பொருந்த மேவுதலைச் சொன்னது.
செய்யுள்: வரையாது கொடுத்தலால் மேகத்தை (ஒப்பான்): வேண்டினது கொடுத்தலால் அழகிய கற்பக
விருட்சத்தை ஒப்பான்: நூலறிவால் நல்ல துணையாயிருப்பான் இச்சையாலும் கெழுதகைமை யாலும் பாணர்க்கு
இனமுறையா யிருப்பவன் : நினைத்தது கொடு முடைத்தாகிய சிந்தாமணி யென்னும் வள்ளலையொப்பான்
அழகிய பெரும் பற்றப்புலியூர் அடிகளுக்கும் மாலையாகிய கொன்றையை யொப்பான்; ( சான்றோர் தமக்குத்
தொலையாத நிதியாயிருத்தலின் சங்க நிதியோடொப்பான்): சுற்றத்தார்க்கும் பகைவர்க்கு--துக்கங்களைத்
தப்பாமற்..... செய்கையால் விதியை யொப்பான்; தன்னை வந்து சேர்வார்க்கெல்லாம் ஊர்க்கண்ணிய
ஊரணியோ டொப்பான்; ஆதலால் மற்றுமெல்லார்க்கும் .......னாயிருப்பன்.
எனவே, இவன்கண் மகிழ உருவினனாதலாலே இவனைக் கண்டு பரத்தையர் விரும்புதலால்,
அவர்கள் வேட்கை தணிக்கச் செல்லு.............மேல் அன்புடையனாய், நின்மேல் அன்பிலாமை பிரிகின்றானவன்;
அருளாற் செய்யுமவனை வெறுத்தல் உனக்கு மேன்மை.......என்று உண்ணின்ற சிவப்பாற்றுவித்தாள். 400
திருக்கோவையாருரை முற்றுப்பெற்றது
திருச்சிற்றம்பலம்
குறிப்பு: உடன்போக்கு 32 முதல் 48 வரை உள்ள பாடல்களுக்கான விளக்கம் இந்தப் பக்கத்தில் இல்லை.