logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தத்துவப் பிரகாசிகை மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விரிவுரையும்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்.

போஜ தேவர் இயற்றிய

அஷ்ட  பிரகரணங்களில் ஒன்றாகிய 

இதற்கு

அகோர சிவாசாரியாரியற்றிய விரிவுரையும்

(தமிழ் மொழிபெயர்ப்பு)

உரையாசிரியரால் செய்யப்பெற்ற உரை மங்கலம்

(1)     முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அதீதராயும், சத்தியுடன் கூடினவராயும் உள்ள பரமசிவனை
 நமஸ்கரித்து தத்துவப் பிரகாசத்திற்குத் தெளிவாயும், இலகுவாயும் விளங்கும் வியாக்யானத்தைச்  செய்கின்றேன்.

(2)     சித்தாந்த சாஸ்திர ஞானமில்லாமல் * அத்வைத வாசனையுடன் கூடிய வேறு சில உரையாசிரியர்களால் 
வேறு வேறு விதமான உரை செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், நான் இதற்கு உரை செய்ய நேர்ந்தது

* அத்வைத மென்றது மாயாவாதத்தை. 

நூல்

                    அவதாரிகை

    நூலாசிரியர் தாம் எடுத்துக்கொண்ட நூல் இடையூறு புகுதாமல் இனிது முடியும் பொருட்டுச் 
சித்தாந்த சாத்திரங்களிற் சொல்லப்படும் பொருளாயுள்ளவரும், சகல தத்துவங்களையுங் கடந்து நிற்பவரும், 
நிட்கள சொரூபருமாயுள்ள பரமசிவனை முதற்கண் வணங்குகின்றார். அவ்வணக்கம் வருமாறு: 

(1)     ஞான சொரூபனாயும், ஒன்றாயும், வியாபகனாயும் நித்தியனாயும், நித்திய முத்தனாயும், 
பிரபுவாயும், சாந்தனாயும், உலகத்திற்கு நிமித்த காரணனாயும் அனைவருக்கும் அனுக்கிரகம் 
செய்கின்றவனாயும் உள்ள பரமசிவன் அனைத்திற்கும் மேற்பட்டவனாய் விளங்குகின்றான் *என்பதாம்.

*வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல் என்னும் மங்கலம் மூன்றனுள் இது 
பொருளியல்புரைத்த லெனவறிக.

    ஞானம் என்றதனால், ஞானம் கிரியை யிரண்டுங் கொள்ளப்படும்.  மிருகேந்திரத்தில் 
இக்கருத்தேபற்றி, “சைதன்யம் ஞானக்கிரியா ரூபம்" எனக்கூறப்பட்டிருக்கின்றது. ஞான சொரூபன் 
என்றது ஞானமே சரீரமாக உடையவனென்பதாம்.  இதனால் கன்மம் காலம் முதலியவைகளைக் 
கடவுளாகக் கொண்ட வாதிகளுக்கு, அவை சடமாதல் போல, பரமசிவன் சாரூபமாதலில்லை யென்றவாறாம். 
சடரூபமான பொருள்களுக்கு அறிவு ரூபமான பொருளின் சம்பந்தமின்றித் தொழிற்பாடு நிகழுமாறில்லை. 
ஆதலால், பரமசிவன் ஞானமே சரீரமாக உடையவன் என்பது கண்டு கொள்க.

    பரமசிவனுக்குச் சுத்த மாயா சரீரம் உண்டென்று கொள்ளுதல் பொருந்தாது. எதனாலெனின், 
சுத்த மாயா சரீரத்தை யுடைய விஞ்ஞானகலருள் ஒருவராய் ஈசுவரத் தன்மை சித்திக்காதாகையாலென்க.
அன்றியும், சுத்த மாயா சரீரத்தை வேறொரு கடவுள் தரக்கொண்டனரா? தானே கொண்டனரா? என 
வினவுமிடத்து வேறொரு கடவுள் தரக்கொண்டாரெனில், அவர் எந்தச் சொரூபத்தோடு நின்று தந்தார்? எனவும், 
தானே கொண்டாரெனில், தான் எந்தச் சொரூபத்தோடு நின்று கொண்டார்? எனவும் வினாக்கள் நிகழும்.
 அவற்றிற்கு விடையாக, சுத்த மாயா சரீரத்தைக் கொண்டு நின்று தந்தாரெனவும், கொண்டாரெனவும் கூறின், 
மேலும் அவ்வாறே வினாக்கள் எழும்பி வரம்பின்றியோடல் என்னும் குற்றமாம்.

    அனேக ஈசுவரர் உண்டென்பதை மறுத்தற்கு, ''ஒன்றாயும்” என்றார். அனேக கர்த்தாக்களாற் 
செய்யப்படுந்தேரும் ஒரு கருத்தாவின் ஏவல்வழி நின்று செய்யப்படுதலால், கருத்தா ஒருவனே யென்பது 
கண்டுகொள்க

    எந்த இடத்தில் அநேகர்கள் தங்களைப் பண்டிதர்களாகவும், மகான்களாகவும்  எண்ணிக்கொண்டு 
பிரவிர்த்திக்கிறார்களோ அந்தப் பிரவிர்த்தியானது முடிவு பெற மாட்டாது. ஆதலால், எந்தவகையினாலும் 
அநேகேசுரவாதம் பொருந்தாது. இனி, ஒரே காலத்தில் அநேக ஈசுவரர் உண்டென்பது பொருந்தாதாயினும், 
ஒரு ஈசுவரருக்குப் பின் ஒரு ஈசுவரராக அநேக ஈசுவரர் உண்டென்று கூறும் பிரவாகேசுவர வாதம் 
பொருந்தும் எனின், அதுவும் பொருந்தாது. எதனாலெனின்; ஈசுவரத் தன்மையென்பது, சொரூபத்தினுடைய 
பிரகாச லாபமே யாதலால், அது எக்காலத்துங் கெடுதலில்லை ஆதலால் என்க.

    "வியாபகன்'' என்றதனால், எல்லாப் பொருள்களினிடத்தும் உள்ளீடாய் நிற்றலைக் குறிக்கும். 
குறிக்கவே, சரீர அளவாக  இருப்பவன் என்ற சமணர்கொள்கை மறுக்கப்பட்டது . அக் கொள்கையை 
ஒத்துக்கொண்டால், ஒடுங்குதல் விரிதல் என்னும் தர்மத்தையுடையவ னெனப்பட்டு, சடத்தன்மை உடைமையும், 
அநித்தியத் தன்மை உடைமையும் சம்பவிக்கும்.

    “நித்தியன்' என்றதனால், தோற்றமும் ஒடுக்கமும் இல்லாதவனென்பது பெறப்படும். படவே, 
பவுத்தர்கள் கொள்ளும் க்ஷணிக விஞ்ஞானவாதம் மறுக்கப்பட்டதாகும். எதனாலெனின் உற்பத்தியாகும் பொழுதே
 நசிக்குந் தன்மையுடைய பொருளுக்கு, உலகத்துக்குக் கருத்தாவாயிருக்குந் தன்மை பொருந்தாமையாலென்க.

    முத்தான்மாக்களும் ஈசுவரத்தன்மை யுடையவராதலால், அவர்களும் ஈசுவரர் தானேயென்பாரை 
மறுத்தற்கு 'நித்திய முத்தன்'' என்றார். அஃதாவது, ஈசுவரப்பிரசாதத்தால் முத்தியடைந்த ஆன்மாக்கள் போலன்றி, 
இயல்பாகவே முத்தன் என்பதாம். இவ்வாறு கொள்ளவில்லையானால், வரம்பின்றியோடல் என்னும் குற்றமுண்டாகும்.

    "பிரபு” என்றதனால் தான் இன்னொருவருக்கு அடிமையா யில்லாதவன் என்பது பெறப்படும். 
 எதனாலெனின் வேறொருவனால் முத்தனாகாது, இயல்பாகவே முத்தன் என்று மேலே கூறியவாற்றானென்க. 
பிரபுவாயிருப்பினும் கர்த்தாவா யிருக்குந் தன்மையில்லாதவனென்று கொள்ளலாமோவெனின் 
உலகத்திற்குக் கருத்தாவென்று சித்தித்திருக்கின்றபடியால், அவ்வாறு கொள்ளலாகாது.

    "சாந்தன்” என்றதனால். விருப்பு வெறுப்பு இல்லாதவ னென்பது பெறப்படும். அவையில்லாமை 
எதனாலெனின்;  மோகம் மதம் இராகம் துக்கம் வாடுதல் விசித்திரத்தன்மை சந்தோஷம் ஆகிய இவ்வேழுக்குங் 
காரணமான மலமில்லாமையினாலென்க. 

    இத்தகைய ஈசுவரன் உண்டென்பதில் பிரமாணம் யாது?  எனில், உலகத்துக்கு நிமித்தகாரணர்
உண்டு என்று உணரும் அநுமானமே பிரமாணமாம். அவ்வநுமானம் வருமாறு:- உலகம், அவன் அவள் அது 
என்னும் அவயவப் பகுப்பாய்க் காணப்படுதலால் செய்யப்படுந் தன்மையுடையது. எனவே அவ்வாறு 
செய்விக்கும் ஈசுவர ரூபமான நிமித்தகாரணன் ஒருவன் உண்டென்பது பெறப்படும். இந்த ஆராய்ச்சியில்
அநுமானம் செய்யுமுறை எவ்வாறெனின்; எது எது அவயவப் பகுப்புடையதோ, அவையனைத்துங் காரியம் 
(செயப்படு பொருள்) எது காரியமோ,  அது கர்த்தாவையுடையது. 

    கடமாகிய காரியம் குலாலனாகிய கர்த்தாவையுடையது போல என்க.  இவ்வாறே, சில 
ஆகமங்களில் வியவகாரத்திற்கு முன்னிலையாயிருக்கிற உலகமானது, அவ்வுலகத்தையறிந்து 
செய்யும் கருத்தாவையுடையது; காரியமா யிருத்தலினால்; பிரத்தியக்ஷத்திற் காணப்படுங் கடாதிகள் போல. 
என்று கூறப்படுகிறது. மதங்காகமத்திலும் “நிமித்தகாரணன் ஈசன்" என்று சொல்லப்பட்டிருக்கின்றது. 
இந்த ஈசுவர வாதமானது நம்மால் மிருகேந்த்ர விருத்தி தீபிகையில் விரிவாய்ச் சொல்லப் 
பட்டிருக்கின்றமையால், விரிவனைத்தும் ஆண்டுக்காண்க.

    "அனைவருக்கும் அனுக்கிரகம் செய்கிறவர்"  என்றதில், அனுக்கிரகம் என்பது * உபலக்ஷணத்தால் 
சிருட்டி  முதலிய நான்கினையுந் தழுவும். எனவே சிருட்டி, திதி, சங்காரம் ,திரோபவம், அனுக்கிரகம் என்னும் 
ஐந்து கிருத்தியங்களினால் எல்லா வுயிர்களுக்கும் போகமோக்ஷங்களைக் கொடுக்கிறவரென்பது கருத்து.

* உபலக்ஷணமாவது, சிறந்ததொன்றால் ஏனைய தழுவுதல் ('ஒரு மொழியொழி தன்னினங் கொளற்குறித்தே'' 
என்பது நன்னூல்.)

    இதுவரையுஞ் செய்த ஆராய்ச்சியால், ஈசுவரன் அனைத்துக்குங் கருத்தாவா யிருக்கின்றானென்பது 
பெறப்பட்டது. படவே, அனைத்தையும் அறிந்தவனாகவு மாகின்றான் எதனாலெனின் ; எதனை ஒருவன் 
அறியவில்லையோ அதனை அவன் செய்ய முடியாதாகையா லென்க.  இக்கருத்துப்பற்றியே, " சாதனம் 
அங்கம் பலம் ஆகிய இவற்றுடன் சர்வகர்த்தாவா  யிருக்கின்றமையால் சர்வஞ்ஞன்" என்றார் பிறரும். 
எவன் எதை அறிகின்றானோ, அவனே அதைச் செய்கின்றான் என்ற பிரத்தியக்ஷமும் இக்கருத்தை 
வலியுறுத்தும். இத்தகைய ஏதுக்களால், பரமசிவன் அனைத்திற்கும் மேம்பட்டவனாய் 
விளங்குகின்றானென்பது சித்தித்தது.      (1)

            அவதாரிகை

    இவ்வாறு ஞானம் முதலிய தர்மங்களை உடையவரான பரமசிவனைத் தோத்திரஞ் செய்து,
 பின்னர், சத்தி ரூபமான  சிவ சாமார்த்தியத்தின் லயாவஸ்தை இதுவென்று சத்தியைத்
தோத்திரஞ் செய்யு முறைமையிற் காட்டுகின்றார்.

(2)      யாதொன்று உண்டாகிறதில்லையோ, நாசமடைகிறதில்லையோ, ஒழிவையடைகிறதில்லையோ, 
சுகத்தைக்கொடுக்கவுஞ் செய்கிறதோ, அத்தகைய ஞானக்கிரியா ரூபமான சிவனுடைய *பிரகாசமானது
அனைத்திற்கும் மேலாயிருக்கின்றது என்பதாம்.

*பிரகாசம் என்றது சத்தியை.

     உற்பத்தி நாசம் இல்லையென்றதனால், அவற்றுடன் கூடிய பவுத்த ஞானத்தினும், சைதன்னிய 
ரூபமான சிவஞானத்தின் விசேடம் அறிவிக்கப்பட்டது.  அவ்வாறாயின், "ஞானக் கிரியா ரூபமான 
சேதனத் தன்மை ஆன்மாவினிடத்தில் எக்காலத்தும் உள்ளது"  என்னும் சுருதியால் ஆன்மாவும் ஞானக் 
கிரியைகளை யுடையது என்பது பெறப்படும். படவே, ஆன்மாவினது ஞானக்கிரியைகளினும், 
சிவனது ஞானக்கிரியைகளுக்கு விசேடமென்னை ? என, ஆசங்கை நிகழும். அவ்வாசங்கையை நீக்குதற்கு 
'' ஒழிவை யடையாமலும், சுகத்தைக் கொடுப்பதாயும் இருப்பது என்றார். எனவே, பிறிதொரு சைதன்னியத்தால் 
தான் மலத்தினின்றும் விடுதலையடையாமல், மலத்தோடு கூடியிருக்கும் ஆன்மாக்களுக்கு அம்மலத்தை 
விடுதலை செய்வது விசேடம் என்பதாம்.

    இதனால் ஞானக்கிரியா ரூபமான சிவஞானமானது, அனைத்திற்கும் மேம்பட்டதென்பது சித்தித்தது. 
"சித்தினுடைய தர்மமானது சடமாகாது"  என்னும்  சுருதியால் ஞானமே சொரூபமாகிய சிவனுடைய 
தர்மமாகிய ஞானக் கிரியா ரூபமும் ஞானமயமே என்பதாம் .     (2).

    (அ-கை) இனி, அதிகார அவஸ்தையிலும், சிவனுக்குச் சத்தியே கரணமென்று கூறுகின்றார்.

(3)     அந்தப் பரமசிவன் இந்த ஆன்ம வர்க்கங்களுக்குப் போக மோக்ஷங்களைக் கொடுப்பதில் 
எந்தச் சத்தியால் சமர்த்த ராகின்றாரோ, ஒன்றாயும், ஞானரூபமாயும், சமவேதமாயும் இருக்கிற 
அந்தச் சத்தியை, எல்லாவிதத்தினாலும் நமஸ்கரித்தவனாக ஆகிறேன் என்பதாம்.

    சத்தி ரூபமான கரணத்தினாலேயே ஆன்மாக்களுக்குப் போக மோக்ஷம் சித்தித்தற் 
பொருட்டுப் பரமசிவன் பஞ்ச கிருத்தியம் செய்வதில் சமர்த்தனாக ஆகிறார். சத்தி ரூபமான 
கரணத்தைத் தவிர, வேறு  கரணம் கிடையாது.  அவ்வாறாயின், தேகேந்திரியமில்லாத 
ஒருவனுக்கு உலகத்தில் செய்யுந் தன்மை காணப்படுவதில்லை யாதலால், அவையில்லாத 
சிவனுக்குச் செய்யுந்தன்மை யுண்டென்பது எப்படிச் சித்திக்கும்?  எனின், தேகேந்திரியத்திற்கு 
வேறான ஆன்மாவிற்குத் தனது சத்திமாத்திரத்தினாலேயே தன்னுடைய தேகத்தின் தொழிற்பாடு 
விஷயத்தில் செய்யுந் தன்மையான  சாமர்த்தியம் காணப்படுகின்றமையால், அவ்வாறே, 
சத்திமாத்திரத்தினால் பஞ்ச கிருத்தியஞ் செய்வதில் சிவன் சமர்த்தனாகிறான் எனவறிந்து 
கொள்க*. இன்னும், சத்தியின் வேறாகக் கரணமில்லையென்று நூல்களிற் கூறப்பட்டிருப்பதையும் நோக்குக.

*இதனால் சிவனுக்கு அனைத்துந் திருமேனியாதல் கண்டு கொள்க. இதுபற்றியே " உலகமே வுருவமாக " 
என்றார் அருணந்தி சிவாசாரியர்.

    இந்தச் சத்தி ஒன்று என்றமையால், இச்சை முதலிய பேதங்களும், வாமை முதலிய பேதங்களும்
 ஞானசத்திக்கு விஷயமாகின்ற அறியப்படும் பொருள் பற்றியும், கிரியாசத்திக்கு விஷயமாகின்ற
 செயப்படுபொருள் பற்றியும்  உண்டாகும் தொழில் வேறுபாடுகளால் உபசாரமேயன்றி உண்மையிலில்லை 
யென்பது தெரிவிக்கப்பட்டது. ஒரு சிவசத்தியே தொழில்  வேறுபாட்டால் அநேகமென்று கருதியுங் கூறுகின்றது.

    ஞான ரூபம் தொழில் வேறுபாட்டால் பலவாறாயினும், பரிணாமமில்லை.  எதனாலெனின், 
பரிணாமமென்பது சடத்தின்றன்மை யாதலாலென்க.

    " சமவேதம் '' என்று சொன்னபடியால், பரமசிவனுக்கு இந்த அபின்ன சத்தியின் வேறாகச் 
சுத்தமாயை, அசுத்த மாயை யென்னும் பின்னமான பரிக்கிரக சத்தி** இரண்டு உண்டென்று அறிவிக்கப்படுகிறது.

**பரிக்கிரக சத்தி என்பது வைப்புச் சத்தி.

    முதற்காரண மில்லாமல் உலக உற்பத்தி கூடாதாகையால் பரிக்கிரகமான அவ்விரண்டு சத்திகளும் 
உண்டென்பது கண்டு கொள்க.  கர்த்தாவில்லாமல் காரியம் உண்டாகாதது போல், முதற்காரணங்களாகிய 
இவை இல்லாமலும் காரியம் உண்டாகாதென்று பின்னர்க் காட்டுகின்றார் (3)

    (அ-கை) இந்தப்பிரகரணத்தில் சொல்லப்படும் விஷயம் இதுவென்று கூறுகின்றார்.

(4)     உயிர்களிடத்து வைத்த அனுக்கிரகத்தின் பொருட்டுக் கருணை நிறைந்த மனதையுடைய நம்மால் 
தத்துவங்களைப் பிரகாசிப்பிக்கின்ற தத்துவப்பிரகாசம் என்னும் இந்த நூலானது சுருக்கமாகச் 
செய்யப்படுகிறது என்பதாம்.

    தத்துவப் பிரகாசம் என்னும் மொழியால், பிருதிவி தத்துவ முதல் சிவதத்துவம் இறுதியான
தத்துவங்களையும், அத்தத்துவங்களைத் தோற்றுவிக்கும் கர்த்தாவான பரமசிவனையும் தத்துவங்களால் 
உபகாரத்தைப் பெறும் ஆன்மாக்களையும் விளக்கஞ் செய்கின்றாரென்பது கருத்து. (4)

    (அ-கை) இந்தப் பிரகரணத்தில் தத்துவமென்றதனாற் சொல்லப்படும் பொருள்களைப்
பெயர் மாத்திரையாக எடுத்துக் கூறுகின்றார்.

(5)     சிவாகமங்களில், பதார்த்தங்கள் எனப்படுவனவற்றுள், பதி பசு பாசங்கள் என்று முறையாக 
மூன்று பதார்த்தங்கள் முக்கியமாகக் கூறப்படும். அம்மூன்றனுள் பதியாவது - பரமசிவன்; 
பசுக்களாவன-ஆன்மாக்கள் ; பாசங்களாவன-ஐந்து பொருள்கள் ; என்பதாம். "பதார்த்தங்கள் 
எனப்படுவனவற்றுள்"  என்பது மூலத்தில் சேர்த்துக்கொள்ளப் பட்டது

    மகாதந்திரம் என்பது சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களுடன் 
பதி பசு பாசம் என்னும் மூன்று பதார்த்தங்களை அறிவிக்கக் கூடியது என்று தந்திர லக்ஷணத்திற் 
சொல்லப்பட்டிருக்கின்றமையால், அந்த மூன்று பதார்த்தங்களுக்குள்  ஏனைய பதார்த்தங்களும் 
அடங்குகின்றன  என்று இலக்கணத்துடன் கூறப்படுகின்றது. எவ்வாறெனின்; சிவத்தின் றன்மையைத் 
தெரிவிக்கின்ற சிவன் என்னும் ஒருமையால் சிவத்தன்மையுடன் கூடிய மந்திர மந்திரேசுவரர், 
மந்திர மகேசுவரர், முத்தான்மாக்கள், சத்தி, சிவன் இவர்களும் இவர்களைத் தெரிவிக்கும் 
வாசகங்களும், சிவத்தன்மையை அடையச் செய்வதற்கு உபாயமான தீக்ஷை முதலிய சாதன 
சமூகங்களும் கொள்ளப்படும்.

    ஆன்மாக்களாவன ஏவப்படுவதற் குரிமையுடையன. இந்த ஆன்மா என்னும் மொழியால் 
பசுத்தன்மையுடன் கூடிய விஞ்ஞானாகலர், பிரளயாகலர் சகலர் ஆகிய பாசத்தொடக்குறும் 
ஆன்மாக்கள் அனைத்தும் கொள்ளப்படும்.

    பாசம் ஐந்து என்று சொன்னபடியால், ஆணவம், திரோதானசத்தி, கன்மம், அசுத்தமாயை, 
சுத்தமாயை என்னும் இவை கொள்ளப்படும். இவ்வைந்துங் கொள்வதனால் சுத்த மாயை அசுத்த மாயைகளின் 
காரியங்களாயுள்ள தனு கரண புவன போகங்களுங் கொள்ளப்படும்.

     சிவசத்தி, பதி பதார்த்தத்துள் அடங்கும் என்று சொல்லிவிட்டுப்  பாச பதார்த்தத்திலும் 
திரோதான சத்தியை  வைத்து எண்ணியது எவ்வாறு கூடும் எனின் ; நன்று வினாவினாய் ; 
உண்மையில் சத்தி, பதி பதார்த்தத்துட்டான் அடங்கும் . ஆயினும் பாசமாகிய ஆணவமலத்தின் 
தர்மங்களை, அம்மலத்தை நிலைக்களமாகக்கொண்டு நின்று தோற்றுவிக்கின்றபடியால், 
உபசாரமாகப் பாசத்துள் வைத்தெண்ணப்பட்டது. இக்கருத்தேபற்றி, மிருகேந்திரத்தில் 
"அனைத்துயிர்க்கும் அனுக்கிரகம் செய்பவளாயும், சிவரூபமாயும் இருக்கும் சிவசத்தியானது, 
பாசங்களினுடைய காரியங்களைத் தோற்றுவிக்கிறபடியால் உபசாரமாய்ப் பாசமென்று 
சொல்லப்படுகிறது'' என்று கூறப்பட்டிருத்தல் காண்க .    (5).

    (அ--கை) அங்ஙனமாயினும், முத்தான்மாக்களுக்குப் பாச சம்பந்தம் இல்லாமையினால் 
சிவத்துவம் (சிவத்தன்மை) இருத்தல் கூடும். வித்தியேசுவரர் முதலானவர்களுக்கோவெனின் : 
சுத்த மாயா காரிய சரீர மிருத்தலால் சிவத்துவமுடையாரோடு வைத்தெண்ணப்படும் 
பசுத்துவமில்லாமை எப்படிச் சித்திக்கும்? என்னும் சங்கைக்குச் சமாதானம் கூறுகின்றார்.

6.     முத்தான்மாக்களும் சிவத்துவமுடையவர்கள். ஆனால் இவர்கள் அந்தப் பரமசிவனுடைய 
பிரசாதத்தால் முத்தியடைந்தவர்கள். அந்தப் பரமசிவன் அநாதியாகவே முத்தன் ; ஒருவன்; 
பஞ்சமந்திரங்களைத்  திருமேனியாக உடையவன் என அறியத் தகுந்தவன் என்பதாம்.

    முத்தான்மாக்கள் என்பவர்கள் மலமில்லாமையினால் சிவனோடு சமத்தன்மை யடைந்தவர்கள். 
முத்தான்மாக்களும் என்ற உம்மையினால், வித்தியேசுரர் முதலியோர்களும் சிவனோடு சமத்தன்மை 
யடைந்தவர்களென்பது கருத்து. எதனாலெனின் ; இவர்களுக்குப் பசுத்துவ ரூப மலமில்லாமையா லென்க.
பசுத்துவத்தைச் செய்யும் மலமுடையவர் தான் பசுத் துவமுடையவராவர். "பசுத்தன்மையைச் செய்யும் 
மலத்தின் சேர்க்கையால் பசுக்கள்" எனக்கூறும் சுருதியும் இதற்குப் பிரமாணமாகும். இதனால் இவர்களுக்குப்
பசுத்துவமில்லாது சர்வஞ்ஞத்துவம் முதலான சிவத்துவம் இருக்கிறபடியால், இவர்கள் சிவமே யாவர் 
என்பது கருத்து. 

     ஆயினும், சுத்தமாயா காரிய சரீர சம்பந்தம் இருக்கிறதே எனின் ; அது அதிகார மல சேடத்தா 
லுண்டான அதிகாரங் காரணமாக உள்ளதாகும். ஆதலினாற்றான், "மாயையைக் கடந்திருப்பதனாலும், 
மலமில்லாமையினாலும் வித்தியா வித்தியேசுரத் தன்மையானது அபர முத்தி" என்று கூறப்படுகிறது.
இவர்களுக்குக் கலை முதலிய தத்துவங்களின் சம்பந்தம் இருக்கிறபடியால் சிவத்துவம் உண்டென்றல் 
எவ்வாறு கூடும்? எனில் சிவபெருமானால் நேரே அனுக்கிரகிக்கப் பெற்றுச் சர்வஞ்ஞத்துவம் முதலான 
குணங்களை உடையவர்களாயிருத்தலினாலும், மலமில்லாமையினாலும் சிவத்துவமுடைய ரென்பது 
பொருந்துமென்க. 

     கலை முதலிய தத்துவங்களின் சம்பந்தமும் அதிகார மலங் காரணமாகவே ஏற்பட்டது. 
அதிகாரத்திற்குக் கலை முதலிய தத்துவங்களின் சம்பந்தம் இன்றியமையாதது. அக்கலாதி 
தத்துவங்களுக்குப்   பசுத்துவமுடைய  ஜீவர்கள் வசியமாவது* போல், இவர்கள் வசியரல்லர். 
அவ்வாறாயின் சிவனுக்கும் இவர்களுக்கும் சிவத்துவம் சமமாயிருக்கிறபடியால், இவர்களினின்றும் 
சிவனுக்கு விசேடம் என்னை?  எனின், இவர்கள் சிவப் பிரசாதத்தினால் ஆதி முத்தர்கள். சிவனோ 
அநாதி முத்தன். அஃதாவது, இயல்பாகவே சித்தித்துள்ள நித்ய நிர்மல நிரதிசய சர்வஞ்ஞத்துவ 
சர்வ கர்த்திருத்துவமுடையவன்; என்பதாம்.   இதுவே விசேடமென்க. 

*வசியம் - வசப்படுதல்

    சிவனும் ஐந்து முகத்தையும் பதினைந்து கண்களையு முடையவனென்று ஆகமங்களிற் 
சொல்லப்படுகிறதே,  ஆதலால், கலை முதலான தத்துவங்களின் சம்பந்தம் இல்லாதவன் என்பது 
எப்படிச் சித்திக்கும்? எனில், பஞ்ச மந்திரங்களே திருமேனியாயிருத்தலால் சித்திக்குமென்க. 
இதன் கருத்தென்னையோவெனின், சரீரமில்லாதவனிடத்தில் தியான பூசை செய்யமுடியாது.
 ஆதலால், ஆன்மாக்களின் தியானத்தின் பொருட்டுச் சிவனுக்குப் பஞ்ச மந்திரதேகம் சொல்லப்பட்டதென்க. 
இவ்வாறே, பெளட்கரத்திலும், " தேகமுடையவனாயிருக்கும் நீதான் உபாசிக்கத் தகுந்தவன்” 
புத்தியானது தேகமில்லாதவனைக் கிரஹிக்காது, பூஜகனுடைய லக்ஷியத்திற்காக அவனுக்கு 
ரூபம் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருத்தல் காண்க.  இன்னும், மிருகேந்திரத்திலும் 
"அவன் சரீரமிருப்பது பற்றி எந்த எந்தக்காரியத்தைச் செய்கின்றானோ, அந்த அந்தக் காரியத்தில் ,
அவனுடைய சரீரமானது அந்தக் காரியத்திற்குக் கர்த்தாவாந் தன்மையினை யுடையதாயிருக்கிறது" 
என்று கூறப்பட்டிருத்தலையும் நோக்குக. ஆதலால், பஞ்சமந்திர ரூபங்களாயுள்ள சிருட்டி திதி 
சங்கார திரோபவ அனுக்கிரக ரூபங்களான பஞ்ச கிருத்தியங்களுக்கும் உபயோகமாயிருக்கும் 
ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோஜாதம் என்னும் சத்திகளே சரீர காரியத்தைச் 
செய்கின்றன எனக்கொண்டு அவை சரீரமென உபசாரமாய்ச் சொல்லப்படுகிறதென்க.     (6)

    (அ-கை) பஞ்சமந்திர தேகத்தால் நிகழும் பஞ்ச கிருத்தியம் இதுவென்று கூறுகின்றார்.

7.     நித்திய பரிபூரணனான இந்தப் பரமசிவனுடைய மேலான கிருத்தியமானது சிருட்டி, திதி, 
சங்காரம், திரோபவங்களென்றும், அனுக்கிரகஞ் செய்தலென்றும் இவ்வாறு ஐந்து விதமாகச் 
சொல்லப்பட்டிருக்கிறது என்பதாம்.

    இந்த ஐந்து விதமான தொழில்களும் சுத்த மாயாகாரிய விஷயத்தில், நேரே சிவனைக் 
கர்த்தாவாக வுடையது. அசுத்த மாயா காரிய விஷயத்தில் அனந்தேசுவரர் முதலியோர் வாயிலாகப் 
பரமசிவனைக் கர்த்தாவாகவுடையதென்று சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறே கிரணாகமத்தில், 
"சுத்தாத்துவா விஷயத்தில் சிவன் கருத்தா;  அசுத்தாத்துவா விஷயத்தில்  அனந்தேசர் கருத்தா " என்று 
சொல்லப்பட்டிருத்தல் காண்க.

    சிவபெருமான் நேரே செய்யும் சிருட்டியாவது, சுத்த மாயையை முதற் காரணமாகக்கொண்டு 
சுத்த தத்துவ புவன போகங்களையும், அந்தப் புவன வாசிகளான வித்தியா வித்தியேசுவரர்களுக்குச் 
சுத்த மாயா காரியமான சரீரங்களையும் தோற்றுவித்தலும், நாத மாத்திரையான சூக்குமை முதலிய 
வாக்குக்களால் வேதாகமங்களைத் தோற்றுவித்தலுமாம். அனந்தேசுவரர் வாயிலாகச் செய்யும் 
சிருட்டியாவது, அசுத்த மாயையை முதற்காரணமாகக்கொண்டு அசுத்த தத்துவ புவன போகங்களை 
உண்டு பண்ணி, அப்புவன வாசிகளான உயிர் வருக்கங்களுக்குச் சூக்குமமான தத்துவ சரீரத்தையும்,
அவ்வுயிர்களின் கன்மத்தை யநுசரித்து அப்புவனத்திற்குரிய தூலமான சரீரத்தையும் மந்திர மந்திரேசுரருக்கு 
அதிகாரங் காரணமான சரீரத்தையும் உண்டு பண்ணுதலாம்.

    திதியாவது, தனது சத்தியால் தோற்றுவிக்கப்பட்ட எல்லா உலகங்களையும் அதனதன் விஷயத்தில் 
நிலைக்கச் செய்தல். 

    சங்காரமாவது, சுத்தமாயா காரியங்களைச் சுத்த மாயையிலும், அசுத்த மாயா காரியங்களை 
அசுத்த மாயையிலும் ஒடுக்குதல்.

    திரோபவமாவது, உயிர்களின் பாச நீக்கங் காரணமாக அவ்வுயிர்களை அவரவர்க்குரிய 
போகங்களில் அழுந்தி அனுபவிக்கச் செய்தல். 

     அனுக்கிரகமாவது, ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கி மேலாகிய மோக்ஷத்தைக் கொடுத்தல்.

    சுத்த மாயா புவனவாசிகளான வித்தியா வித்தியேசுவரர்களுக்கும் சிருட்டி முதலிய பஞ்ச கிருத்தியம் 
உண்டென்று ரெளரவாகமத்திற் சொல்லுகிறபடியால், சுத்தமாயையில் சிவனுக்கே பஞ்ச கிருத்தியம் 
உண்டென்றல் எவ்வாறு கூடும்?  எனில், சிவப்பிரசாதத்தினால் அவர்களுக்குப் பஞ்சகிருத்தியமேயன்றிச் 
சுதந்திரமாய் இல்லையாகலாற் கூடும் என்க. (7)

    (அ--கை) இவ்வாறு பதிப்பொருளின் பேதங்களைச் சொல்லிவிட்டுப் பசுப்பொருளின் 
பேதத்தைச் சொல்லுகிறார்.

8.     பசுக்களாவார், விஞ்ஞான கேவலர், பிரளய கேவலர் என்றும், சகலர் என்றும் மூன்று 
வகையினராக அறியத் தகுந்தவராவர். அவருள், முதலாவதான விஞ்ஞான கேவலர் ஆணவமலம் 
மாத்திரமுடையவர். இரண்டாவதான பிரளய கேவலர் ஆணவம் கன்மம் என்னும் 
இருமலமுடையவராக ஆகிறார் ; என்பதாம்.

    விஞ்ஞான கேவலர் என்பது :- விஞ்ஞானம், யோகம், சந்நியாசம் அநுபவம் ஆகிய 
இவற்றால் கன்மமல நாசமும், கன்மமில்லாமையால் கன்மத்தின் பயனை அநுபவித்தற்குக் 
கருவியா யிருக்கிற கலை முதலிய மாயா காரியங்களின் நாசமும் உண்மையால், கன்மமலம் 
மாயா மலமின்றி ஆணவமலம் மாத்திரம் உடையர் என்னும் பொருள் தோன்ற நின்றது.

    பிரளய கேவலர் என்பது :- பிரளயத்திலே கலை முதலிய மாயா காரியங்களுக்கு 
நாசம் உண்டாகின்றமையால், மாயாமலம் இன்றி ஆணவமலம் கன்மமலம் என்னும் இரண்டும் 
உடையர் என்னும் பொருள் தோன்ற நின்றது     (8)

    (அ--கை) இதுவுமது.

9.     சகலரானவர் ஆணவமலம் கன்மமலம் மாயாமலம் மூன்றும் உடையவர். அம்மூவர்களுள், 
முதலாவதான விஞ்ஞான கேவலர் இரண்டு விதமாகிறார். அவ்விருவருள், முதலாவதாயுள்ளவர் 
சத்தி தேய்ந்த மலத்தை உடையவர் ; இரண்டாவதாயுள்ளவர் சத்தி தேயப்படாத மலத்தை உடையவர் என்பதாம்.

    சகலருக்கு மாயாமல சம்பந்தம் நேரே கிடையாதாயினும், மாயாமல காரியங்களான கலை 
முதலிய தத்துவங்களின் சம்பந்தம் இருக்கிறபடியால், அச்சம்பந்தத்தை அநுசரித்து மும்மலம் உடையரென்று 
சொல்லப்பட்டார். கலையாதிகளுடன் கூடியிருத்தலினாற்றான் அப்பொருள் தோன்ற, ' சகலர் ' என்ற பெயர் 
சம்பவித்தது.  ஆதலினாற்றான், விஞ்ஞானத்தால் சஞ்சித கர்மத்தின் நாசம் ஏற்பட்டுப் பிராரத்த 
வாசனாவசத்தால், சரீரத்தை உடைய சகலர், ஆணவமலம் மாயாமலம் உடையர் எனினும், அவர்களையும் 
மும்மலமுடைய சகலர் என்று நூல்களிற் கூறப்படுகின்றது. இதுபற்றியே, சாங்கிய காரிகையிலும் 
" ஞானத்தினால் தர்மாதர்ம ரூபமான கன்மம் நசித்து வாசனையின் வலிமையால், சரீரத்துடன் கூடிச் 
சுழற்றிவிடப்பட்ட சக்கரம் சிறிது நேரம் சுற்றுமாறு போல், போக்குவரத்துச் செய்கிறான் " எனக் 
கூறப்பட்டிருத்தல் காண்க.

    சத்தி தேய்ந்த மலமுடையவராவார், பக்குவ மலமுடையவர்.

    சத்தி தேயாத மலமுடையவராவார்  அபக்குவ மலமுடையவர்.

    மலத்திற்குப் பக்குவம் சம்பவிக்குமோ? எனின் ; அது, திரவியமாயும் சடமாயும் இருத்தலால், 
கண்ணிலுள்ள படலத்திற்குப் பக்குவம் சம்பவிப்பது போல், சம்பவிக்குமென்க. (9)

    (அ--கை.) இதுவுமது.

(10)      பரமசிவன், பக்குவமலர் அபக்குவமலர்களுள், முதலாவதான பக்குவ மலர்களுக்கு அனுக்கிரகம் 
செய்து, அவருள் அதிக மலபாகமுள்ள எண்மர்களை வித்தியேச பதத்தில் நியமிக்கின்றார். ஏனையோரை 
மந்திரேசுவரர்களாகவும் செய்கின்றார். அந்த மந்திரேசுவரர்களும் ஏழுகோடிகளாகச் சொல்லப் 
படுகிறார்கள் ; என்பதாம்.

    பக்குவமலர்களுக்கு அனுக்கிரகம் செய்தலாவது, அவர்களுடைய மலபாகத்துக்கு ஒத்த 
அதிகாரத்தையும், சர்வஞ்ஞத் துவாதிகளையும், சுத்தமாயா காரிய சரீரத்தையும் கொடுத்தல்.
 அவர்களுள் மிகுந்த மலபாகம் உடையவர்களை அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர் , 
ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சிகண்டி என்னும் பெயருடையவர்களாகவும்,
பஞ்சகிருத்தியத்திற் கதிகாரிகளாகவும்,  சுத்தாத்துவாவுக்குக் கர்த்தாக்களாகவும், ஈசுவர 
தத்துவவாசிகளாகவும் செய்கின்றார்.  ஏனையோரை ஏழுகோடி மகாமந்திரேசுவரர்களாகவும்,
வித்தியா தத்துவ வாசிகளாகவும் செய்கின்றார்.

    ஏழுகோடி மகாமந்திரேசுவரர்களுள், பிற்பாதியாயுள்ளார், சகலரில் அனுக்கிரகம் 
செய்யத்தகுந்தவர்களுக்கு அனுக்கிரகிக்கும் வண்ணம் ஆசிரிய வடிவத்தை ஆதாரமாகக்கொண்டு, 
அனுக்கிரகம் செய்வதாகிய தன் அதிகாரத்தை நிறைவேற்றி மகாப்பிரளயத்தில் மோக்ஷத்தை 
அடைகின்றனர்.

    ஏனைய முற்பாதியாயுள்ளார், நிராதாரமான சிவனுக்கு விஞ்ஞான கேவலர் விஷயத்திலும், 
மந்திரேசுவரர் மாயாகற்பாதிகாரி விஷயத்திலும் கரணமாயிருக்குந் தன்மையை அடைந்து 
அதிகார வைராக்கியத்தால் சிருட்டிக்குப்பின் முத்தியை அடைகின்றனர். இவ்வாறே மிருகேந்திரத்தில் 
சொல்லப்பட்டிருத்தல் காண்க. 

    "எவர்கள் அதிகமான மல பாகத்துடன் அதிகாரத்தை  விரும்பாமல் இருக்கிறார்களோ, 
அவர்களைப் பரபதரூபமான மோக்ஷத்திற் சேர்க்கின்றார். எவர்கள் அபக்குவ மலர்களோ அவர்கள் 
மலபாகம் வரும்வரை விஞ்ஞானகலர்களாகவே இருக்கின்றார்கள்” என்று இரெளரவத்தில் 
சொல்லப்பட்டிருத்தலையும்  காண்க.     (10).

    (அ--கை). இதுவுமது.

11.     பிரளயாகலர்களுள் எவர்களுடைய மலகன்மங்கள் பக்குவமாயிருக்கின்றனவோ அவர்கள் 
(மோக்ஷத்தை) அடைகின்றனர் ; அவரின் வேறான அபக்குவ மலர்கள் புரியட்டக தேகத்துடன் கூடினவர்களாய்க் 
கன்ம வசத்தால் பலவிதமான யோநிகளிலே பிறப்பை அடைகிறார்கள் ; என்பதாம்.

    பிரளயாகலர்களுள் எவர்களுடைய மலம் பக்குவமாயிருக்கிறதோ அவர்களுக்கு அந்த மல 
பாகத்தால் பலவிதமாயுள்ள கன்மமும் பக்குவமாயிருக்கின்றமையால் அவர்கள் மோக்ஷத்தை
 அடைகின்றார்கள். மோக்ஷத்தை என்பது, மூலத்திலில்லை ஆயினும், சேர்த்துக் கொள்ளப்பட்டது.

    மல பாகத்தால் மோக்ஷம் என்பதற்கு, மல பாகத்தால் சத்திநிபாதம் வந்து அதனால் மோக்ஷம் 
என்பது பொருளாகக்கொள்க. இவ்வாறே மிருகேந்திரத்தில், " மலத்தினுடைய அதிகாரமாகிய 
நீசத்தன்மையும் * திரோதான சத்தியினுடைய அதிகாரமாகிய மறைப்பும் நீங்குதலால் அந்த 
மல சத்திகள் நீங்கும் சமயத்தில் அனைத்துயிர்க்கும் பந்துவான பரமசிவன் அந்த ஆன்மாவிற்கு
எவற்றையும் அறியுந் தன்மையினையும் எவற்றையும் கர்த்தாவாயிருந்து செய்யுந் தன்மையினையும் 
தோன்றும்படி செய்கின்றார் ; என்று கூறி இருத்தல் காண்க. இன்னும், சுவாயம்புவத்திலும் 
"அந்த மலமானது ஞானத்தினால் நாசமாகும் சமயத்தில் சத்தியானது மோக்ஷத்தின் பொருட்டுத் 
தோன்றுகிறது''  எனக் கூறியிருத்தல் காண்க .

* நீசத்தன்மையாவது ; அறிவாயும், வியாபகமாயும் விளங்கும் ஆன்மாவை அறியாமையாயும், 
அணுவாயும் ஆக்குதல்.

    பிரளயாகலருள், ஏனைய அபக்குவ மலர்கள் புரியட்டக தேகத்துடன் கூடினவர்களாய்க் 
கன்மத்தின் வசப்பட்டு அக்கன்மத்தை அநுபவித்தற் பொருட்டுப் பலவிதமான புவனங்களுக்குரிய 
சரீர ரூபங்களான யோநிகளிலே பிறப்பை அடைகிறார்கள்.

    சில பாடபேதத்தால் அபக்குவ மலர்களாயுள்ள பிரளயாகலர்கள் புரியட்டக தேகத்தை 
உடையவர்களாய்ப் பிறவிகளை அடைகிறார்கள் என்று பொருள் கொள்ளக்கிடக்கும், அவ்வாறாயின், 
மிருகேந்திரம் முதலிய ஆகமங்களோடு முரணுதலும், பக்குவமலர்களுக்கும் புரியட்டகதேகம் 
இருக்கின்றமையால் சம்சார சம்பந்தத்தால் மோக்ஷமில்லாமையும் சித்திக்கும். ஆதலால், அந்தப் பாடம்
பொருந்தாமை காண்க. (11) 

    (அ--கை) புரியட்டகம் இது எனக் கூறுகின்றார்.

12.     அந்தக்கரணமும், புத்திவியாபாரங்களும், இந்திரியங்களும் புரியட்டகமாக நிச்சயிக்கப்படுகிறது.

    புரியட்டகத்துடன் கூடியவர்களுள், சிலர்களுக்கு மந்திர மகேசுவரரானவர் அனுக்கிரகம் செய்து 
அவர்களுக்குப் புவனங்களுக்குப் பதியாயிருக்குந் தன்மையைக் கொடுக்கின்றார் என்பதாம்.

    புரியட்டக சரீரம் என்பது ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் கேவலத்தினின்றும் நீங்கி முத்தி 
அடையும் வரை இருக்கப்பட்ட பிருதிவி முதல் கலை வரையுள்ள முப்பது தத்துவ ரூபமாயும், 
நிலைத்திருப்பதாயும் உள்ள சூக்கும தேகம். இவ்வாறே வேறு நூல்களிலும் " கலை முதல் பிருதிவி 
வரையுள்ள தத்துவமய சூக்கும தேகம் புரியட்டகம்'' எனக்கூறியிருத்தல் காண்க.  தத்துவ சங்கிரகத்திலும் 
''பூமி முதல் கலைவரை ஒவ்வொரு புருஷர்களிடத்திலும் நிலைத்திருக்கும் தத்துவ சமூகமானது 
கன்ம வசத்தால் பலவிதமான புவனத்திற்குரிய சரீரங்களிலும் சுற்றுகிறது"  என்று கூறப்பட்டிருக்கின்றது.

    மனம் புத்தி அகங்காரங்களைத் தெரிவிக்கக்கூடிய அந்தக்கரணம் என்னும் சொல்லால், 
அவற்றின் வேறாய் ஆன்மாவினுடைய போகாநுபவத்திற்கு அந்தரங்க சாதனங்களான கலை, காலம், 
நியதி, வித்தை, அராகம், பிரகிருதி, குணம் என்னும் ஏழு தத்துவங்களும் கொள்ளப்படும்.

    புத்தி காரியம் என்னும் சொல்லால் அதன் காரியங்களான பிருதிவி முதலான ஐந்து பூதங்களும்,
 அவற்றின் காரணங்களான ஐந்து தன்மாத்திரைகளுங் கொள்ளப்படும்.

    இந்திரியம் என்னும் சொல்லால் ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கொள்ளப்படும்.

    காலோத்தரத்தில் "சத்தம் முதலிய தன்மாத்திரைகள் ஐந்தும் மனம் புத்தி அகங்காரம் மூன்றும்
 புரியட்டகம்" என்று சொல்லப்படுகிறதே யெனில், அது உண்மையே. அந்த எட்டனுள் இந்த முப்பதும் அடங்கும் 
என்னும் கருத்துப் பற்றியே பகவானாகிய ராமகண்டர் அந்தச் சூத்திரத்திற்குக் கீழ்க்கண்டவாறு 
வியாக்கியானம் செய்திருக்கின்றார் அது வருமாறு:- "தன்மாத்திரை என்றதனால் அதுவும், 
பஞ்ச பூதங்களும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் ஆகிய நான்கு வகையும், மனோ புத்தி 
அகங்காரம் என்றதனால் அவ்வந்தக்கரணமும், அதற்குக் காரணமாகிய குணமும், அந்தக் குணத்திற்குக் 
காரணமாகிய பிரகிருதியும், அந்தப் பிரகிருதிக்குக் காரணமாகிய கலை முதலிய ஐந்தும் ஆகிய நான்கு 
வகையும் ஆக எட்டும் கொள்ளப்படும்” என்பதேயாம் . 

    அனுக்கிரகம் செய்தலாவது குஹ்யாதி குஹ்யதர பவித்திர ஸ்தாணு முதலிய பதின்மூன்று 
புவன பதிகளுக்கும் அவரவர்களுடைய அதிகாரம் வரை ஞானக் கிரியா சத்திகளைக் கொடுத்தும்
அணிமாதி யோக சத்திகளைக் கொடுத்தும் அதிக புண்ணியவான்களாகச் செய்தல்.     (12)

    (அ--கை) பிரளயாகலருள்  ஏனையோரைப் பற்றிக் கூறுகின்றார்.

(13)     பிரளயாகலருள் ஏனையோர் சிருட்டி ஆரம்பத்தில் கலாதிகளின் சேர்க்கையால் சகலர்களாக 
ஆகின்றனர். அவர்களுள், நூற்றுப் பதினெட்டுப் பேர்களைச் சிவன் தானாகவே மந்திரேசுவரர்களாகச் 
செய்கிறார் என்பதாம்.

    சிறிது பக்குவமடைந்த ஆன்மாக்கள், பக்குவத்தின் மந்தத்தினால் மாயைக்குட்பட்ட அதிகாரத்திற்கு 
யோக்கியர்களாய்ச் சிருட்டி ஆரம்பத்தில் அதிகாரத்திற்குக் காரணமான கலாதிகளின் சம்பந்தத்தால் 
சகலர்களாக ஆகிறார்கள். இவர்கள் கலாசம்பந்த முடையவர்களாயிருந்தபோதிலும், மலத்தின் பக்குவத்தால், 
பிரளயாகலர்களோடு சேர்த்து எண்ணப்பட்டு ஏனையோரென்று சொல்லப்பட்டார்கள்.

    அந்தப் பக்குவம் அடைந்தவர்கள் எத்துணைப் பேர்கள் ? எவரால் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டார்? 
எனில், நூற்றுப் பதினெட்டு மந்திரேசுவரர்களாகச் சிவபெருமானால் நேரே நியமிக்கப்பட்டாரென்க. 
அனந்தேசுவரரால் நியமிக்கப்பட்டவரல்லர். ஆயினும், கலாதிகளின் சம்பந்தம் அனந்தேசுவரராலேயே 
செய்யப்பட்டது. எதனாலெனின், "அசுத்த மாயா காரியத்தில் அனந்தர் பிரபு" என்று வசனமிருத்தலாலென்க (13)

    (அ--கை) அந்த நூற்றுப் பதினெண்மர் பெறும் பெயர்களைப் பிரித்துக் கூறுகின்றார்.

14.      அந்த நூற்றுப் பதினெண்மருள் மண்டலிகள் என்பவர் எண்மர்.  க்ரோதாதிகளும் அவர்களைப்போல் 
எண்மர்களே. வீரபத்திரர், ஸ்ரீகண்டபரமேசுவரர், நூறு ருத்திரர்கள் ஆக நூற்றுப் பதினெண்மர் என்பதாம்.

    மண்டலிகளாவார் கலையினுடைய மத்தகத்தில் வாசஞ் செய்யக்கூடிய கெஹநேசர் முதலியோர்.
 க்ரோதாதிகளாவார் குணதத்துவத்தின் மத்தகத்தில் வாசஞ்செய்பவர். வீரபத்திரராவார் நூறு ருத்திரர்களையும் 
நியமனம் செய்பவர். ஸ்ரீகண்டராவார் குண தத்துவத்தை இடமாகக்கொண்டு அதற்குக் கீழ்ப்பட்ட புவனங்கட்குக் 
கருத்தாவாயுள்ளவர்.  நூறு ருத்திரர்கள் பிரமாண்டங்களுக்கு ஆதாரமாயுள்ளவர்.  (14)

    (அ--கை) சகலரைப் பற்றிக் கூறுகின்றார்.

15.     மலநாசத்திற்குக் காரணமான சத்திநிபாதத்தால் அதிகமான மலபாகத்தை அடைந்திருக்கும் 
சகலர்களை அந்தப் பரமசிவன் ஆசிரிய வடிவத்தை அதிட்டித்து நின்று சிவசாமிய ரூப மோக்ஷத்தில் 
சேர்த்துவைக்கின்றான் என்பதாம்.

    மும்மலமுடைய சகலருள் மல பரிபாகம் மிகுதியுமுடைய சகலர்களைத் திரோதன சத்தியின் 
நீக்கமான அனுக்கிரக சத்தியினால் பாச நீக்கஞ்செய்து, குருவை அதிட்டித்துச் செய்யுந்
தீக்கையினால் சிவசாமிய ரூபமான மோக்ஷத்தில் சேர்க்கின்றார். மந்தமான மலபாகம் உடையவர்களை 
மந்ததர சத்திநிபாதத்தால் வித்தியேசுவராதி பதங்களிற் சேர்க்கின்றார்.  இவ்வாறே "திதி காலத்தில் 
குருவை யதிட்டித்து எவர்களுக்குப் பரமசிவன் அனுக்கிரகம் செய்கின்றாரோ அவர்கள் உருத்திர 
மந்திரேசுவராதி பதங்களை அடைகிறார்கள்” என நூல்களிற் சொல்லப்பட்டிருத்தல் காண்க. 

    சகலருக்குக் குருவை யதிட்டித்து நின்று அனுக்கிரகம் செய்கின்றார் என்றதனால், 
விஞ்ஞான கேவலர், பிரளய கேவலர்களுக்கு நிராதாரமாய் நின்று அனுக்கிரகம் செய்கின்றார் 
என்பது பெறப்படும். மலம் கண்ணினுடைய படல நோய் போல் திரவியமாகையால் தீக்ஷாரூபமான 
ஈஸ்வர வியாபாரத்தினாலேயே அதற்கு நாசமன்றி, ஞானமாத்திரத்தினால் இல்லையென
அறிந்து கொள்க.    (15)

    (அ--கை) இதுவுமது.

(16)     மும்மலங்களால் கட்டுப்பட்டவர்களாயும், மேலே கூறப்பட்டவ ரல்லாதவர்களாயும், 
பக்குவமில்லாத மலத்தையுடையவர்களாயுமுள்ள புருஷர்களை அவரவர்க்குரிய கன்மங்களை 
அநுசரித்துப் போகங்களை அநுபவித்தற் பொருட்டுப் பரமசிவன் ஏவுகிறார். இந்தப் பிரகாரம் 
பசுக்களின் பிரிவு சொல்லப்பட்டது என்பதாம்.      (16) 

    (அ--கை) இனிப் பாசங்களின் பிரிவைச் சொல்லுகின்றார்

(17)     புருஷனுக்குப் பாசங்களானவை நான்கு விதங்களாகும். அவற்றுள், முன் இரண்டு ஆணவமலம், 
கன்மமலம் என்னும் இவற்றின் காரியங்கள். ஏனைய மூன்றும் நான்கும் மாயா காரியமும், திரோதான 
காரியம் ஆகிய சிவசத்தியின் காரியமும் என்னும் இவை என்பதாம்.

    முன் பாசம் ஐந்து என்று சொல்லி, இவ்விடத்து நான்கு என்றது விரோதமாகாதோ? எனின், ஆகாது. 
எதனாலெனின், மகாமாயா ரூபமான சுத்த மாயைக்குப் பரமுத்தியை நோக்கப் பாசத்துவம் இருந்தபோதிலும், 
வித்தியா வித்தியேசுவரர்களுடைய பதமாகிய அபரமுத்திக்கு சுத்த மாயா காரிய சரீரம் காரணமாய் 
இருக்கிறபடியால் அதற்குப் பாசத்துவம் கூடாது ஆதலின் என்க.  ஆதலினாற்றன், புருடத் தன்மை என்னும் 
மலத்தை உடைய சகல வர்க்கத்துப் புருடர்களுக்கு நான்கு மலம் என்று இங்கே சொல்லப்பட்டது. ஆதலால், 
சுத்தாத்துவ வாசிகளான  அனந்தாதிகளுக்குச் சுத்த மாயையும் திரோதான சத்தியுமாகிய இரண்டு 
பாசங்கள் தான் உள்ளன. அவையும் அசுத்த மாயைபோல் மோகத்தை   உண்டு பண்ணுகிறதில்லை; 
ஞானத்தையே உண்டு பண்ணுகின்றன என்று கூறப்படுகிறது.

     நாதம் என்று சொல்லப்படும் சுத்த மாயா காரியம் எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறது என்று 
ஆகமங்கள் சொல்லுகிற படியால், சகலருக்கும் சுத்தமாயா காரிய சம்பந்தம் இருக்கிறதே எனில்,
அஃதுண்மையே. ஆயினும், வித்தியா வித்தியேசுவார்களுக்குச் சர்வஞ்ஞத்துவ சாவகர்த் திருத்துவ 
முதலிய சுத்தமாயா காரிய சம்பந்தம் இருப்பது போல், சகலர்களுக்கு இல்லை என்று இவ்வாறு 
வேற்றுமை கூறப்பட்டிருத்தல் காண்க.

    மல கன்மங்களையே அவற்றின் காரியங்கள் என்று  சுலோகத்திற் சொன்னது காரிய காரணங்களின் 
ஒற்றுமைபற்றி உபசாரமாய்ச் சொல்லியவாறாம். 

    எதனாலெனின், அடுத்த சூத்திரத்தில் மல கன்மங்களுக்கே இலக்கணஞ் சொல்லுகின்றமையால் என்க.
 ஆயினும் உபசாரமாகவாவது சொன்ன கருத்து என்னையெனில்,  மல கன்மங்களின் காரியங்களான மறைப்பும், 
போக நுகர்ச்சியுமாகிய இவை பயன் வடிவமாகையால், இவையும் பாசங்களே என்று கூறப்பட்டிருத்தல் பற்றி யென்க. 
இது போலவே, மாயா காரியத்திலும் திரோதானசத்தி காரியத்திலுங் கொள்க.  ஆணவமலம் , கன்மமலம் என்னும்
இவை அநாதியே சித்தித்துள்ளன.

    அவற்றுள், ஆணவமலம் புருடனுக்கு அநாதியாகவே ஞானக்கிரியைகளை மறைப்பது,
 கன்மமும் பிரவாகநாதியாய் வித்தும் முளையும் போல் உள்ளது. எதனாலெனில், கன்மத்தினால் உண்டாகும் 
சரீர பரம்பரை அநாதியாதலால் என்க. மாயா காரியமான கலாதிகள் கன்மங்காரணமாக உண்டாகிறபடியால் 
இடையே வந்து கூடினவையாகும்.  மாயா காரியம் இல்லாத பிரளயாகலருக்கு மல கன்மம் மட்டும் 
இருக்கின்றபடியால், சகலருக்கு மாயாகாரியம் இடையே வந்து கூடினதென்றது பொருந்துமாறு காண்க. 
ஆணவமலத்தை அதிட்டித்து நின்று காரியப்படுத்துதல் பற்றித் திரோதான சத்திக்குப் பாசத்துவம் 
உபசாரமாய்க் கூறப்பட்டது. பின்னரும், இது விஷயமாய்க் கூறப்படும் .     (17)

    (அ--கை) நான்கு பாசங்களுள் முதன்மையான ஆணவ மலத்திற்கு இலக்கணங் கூறுகின்றார்

(18)     ஆணவ மலமானது ஒன்றாயும், அனேக சத்திகளை உடையதாயும், புருடனுடைய ஞானக்கிரியா 
சத்திகளை மறைப்பதாயும் உள்ளது.  அது, நெல்லுக்கு உமி போலவும், செம்பைப்பற்றி யிருக்கும் களிம்பு 
போலவும் அறியத்தகுந்தது என்பதாம்.

    சடமாயும், நித்தியமாயும் இருத்தலால் ஆணவமலம் ஒன்றேயாம். அநேகம் என்று சொல்லின், 
சடமாயும் அநேகமாயும் உள்ள கடம் முதலியவைகளுக்கு அநித்தியத் தன்மை  காணப்படுமாறு போல, 
ஆணவமலத்திற்கு அநித்தியத்தன்மை சம்பவிக்கும்; ஆதலால், அது பொருந்தாது. அங்ஙனம் மலம் 
ஒன்றாயிருக்குமாயின், மல நிவர்த்தி யென்னும் முத்தி  ஒருவனுக்குண்டாகும் பொழுது அனைவருக்கும் 
உண்டாக வேண்டுமேயெனில், மலம் ஒன்றாயிருந்தாலும் அநேக ஆன்மாக்களை மறைக்கக்கூடிய 
அநேக சத்திகளை யுடையதாகையால் எந்த மல சத்திக்குப் பரிபாகம் உண்டாகின்றதோ அந்த மல சத்தியால் 
மறைக்கப்பட்டிருந்த ஆன்மாவிற்கு மட்டும் முத்தியேயன்றி ஏனையோருக்கு இல்லை என்க.

    அரிசியிலும் செம்பிலும், அநாதியே கூடியிருக்கிற உமியும் களிம்பும் பாகத்தினாலும், 
ரசசக்தியினாலும் எப்படி நிவிர்த்தியடைகின்றனவோ, அது போல அநாதியே மறைத்துக் கொண்டிருக்கின்ற 
ஆணவ மலமானது தீக்ஷையினால் நிவிர்த்திக்கப்படுகிறது. இங்கே கூறப்பட்ட இரண்டு திருட்டாந்தங்களுள், 
முதலாவது திருட்டாந்தத்தினால் உமி நெல்லின் உற்பத்திக்குக் காரணமாதல் போல, சரீர உற்பத்திக்கு 
மலம் காரணமென்பதும், இரண்டாவது திருட்டாந்தத்தினால் களிம்பின் நிவிர்த்திக்கு ரசம் காரணமாதல்போல, 
மல நிவிர்த்திக்குத் தீக்ஷை காரணமென்பதும் பொருளாகக் கொள்க. (18)

    (அ--கை) கன்மமல மாயாமலங்களின் இலக்கணங் கூறுகின்றார்.

(19)     தர்ம அதர்ம ரூபமாயும், வேறுபாடுடையதாயும் உள்ள கன்மமானது, அநாதி எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
மாயையும் பொருள்வடிவாயுள்ளது.  காலம் முதலான சாதாரண  உலகத்திற்கு முதற்காரணமாகும். அது 
நித்தியமாயுள்ளது என்பதாம்.

    கர்மத்தினுடைய அநாதித் தன்மையானது பிரவாகநாதி* ரூபமாகும்.  கன்மத்திற்கு வேறுபாடாவது, 
சாதன வேறுபாட்டாலென்க.  சாதனமாவது, செய்கிறவன், செயப்படுபொருள், கருவி முதலாயின. 
இன்னும், கன்மம் அநேகம்   என்பதற்கு அதன் பலன்களகிய போகங்கள் பலவாறாதலும் ஏதுவாகும்.

* பிரவாகநாதியாவது, இடையறாதோடும் நீர்ப்பெருக்குப்போலத் தொடர்ச்சியாய்த் தொன்று தொட்டு வருதல்.

    மாயையானது வேதாந்திகள் கூறுவதுபோல் அசத்தியமன்று.  மற்றென்னையோ எனில் 
சத்தியமான பொருள் வடிவமாயுள்ளது.  உலகம் என்பது காலம் முதலிய பொது உலகமும், 
சூக்கும தேகம் முதலிய சிறப்பு உலகமும், தூல தேகமாகிய பொதுச்சிறப்பு உலகமும் என 
முத்திறப்படும்.  இவையனைத்துங் காரியரூபம். முதற்காரணம் இன்றிக் காரியப் பிரபஞ்சம் 
உண்டாகாதாகையால், மாயை முதற் காரணமாகும்.  அந்த மாயையானது பரமகாரணமாகையால் 
நித்தியமாயுள்ளது. அநித்தியம் என்று கொண்டால் அதற்குக் காரணம் வேண்டுமென்றாகி 
அதுவும் அநித்தியம் எனப்பட்டு வரம்பின்றியோடும். நித்தியமாதலால், ஒன்றாயிருக்கவேண்டும்.
இந்த நியாயத்தைச் சுத்த தத்துவ புவனங்களுக்கு முதற் காரணமான சுத்த மாயையினிடத்திலுங் கொள்க.

    முன் பாசத்தின் பெயரைச் சொன்ன சூத்திரத்தில் மாயா காரியம் பாசமாகச் சொல்லப்பட்டிருக்க, 
இவ்விடத்து மாயைக்கு இலக்கணம் சொல்வது எப்படிப் பொருந்தும்?  எனில், மாயைக்கு இயல்பாகப் 
பந்திக்குந் தன்மை இல்லாத படியால், அதன் காரியம் அங்கே சொல்லப்பட்டது.  காரணமின்றிக் காரியம் 
உண்டாகாதாகையால், இங்கே காரணத்திற்கு இலக்கணம் சொல்லப்பட்டது . காரியம் விரிவானமையால்
 அதற்கு இலக்கணம் மேலே சொல்லப்படுகிறது. (19)

    (அ--கை) இவ்வாறு மூன்று விதமான பாசங்களைச் சொல்லிவிட்டு நான்காவது பாசமாகிய 
திரோதான சத்திக்குப் பாசத் தன்மை உபசாரமென்று கூறிப் பாச விஷயத்தைப் பூர்த்தி செய்கின்றார்.

(20)     புருஷர்களை மறைக்கக்கூடிய சிவனுடைய திரோதான சத்தியானது பாசத்தைத் 
தொடர்ந்து நின்று காரியப் படுத்துகிறபடியால், பாசம் என்று சொல்லப்பட்டது 

    இந்தப் பிரகாரம் பாசங்கள் நான்கு பிரிவுகளாகக் கூறப்பட்டன என்பதாம் (20)

    ( அ--கை) இவ்வாறு சகலர்களைப் பந்திக்கக்கூடிய மும் மலங்களையும், விஞ்ஞானகலர், 
பிரளயாகலர்களைப் பந்திக்கக் கூடிய திரோதான சத்தியையும் சொல்லிவிட்டு சுத்தமாயையைக் 
கடந்தவர்களுடைய சுத்த தத்துவ ரூபமான பாசத்தைச் சொல்லுகின்றார்.

(21)     சுத்தங்களான தத்துவங்கள் ஐந்து. அவற்றுள், சிவதத்துவத்தை முதற்காரணமாகச் சொல்லுகிறார்கள். 
சத்தி  தத்துவம், சதாசிவ தத்துவம் ஆகிய இவற்றையும், ஈசுவர தத்துவம், வித்தியா தத்துவம் ஆகிய 
இவற்றையும், சிவ தத்துவமாகச் சொல்லுகிறார்கள் என்பதாம்.

    சுத்தமாகிய சிவதத்துவங்கள் நித்தியமா? அல்லது அநித்தியமா? நித்தியம் எனில், இவற்றிற்கு 
உற்பத்தி கூடாது. அநித்தியம் எனில், இவற்றின் உற்பத்திக்கு முதற்காரணம் எது? என்று ஆசங்கை நிகழும். 
நிகழவே, அவ்வைந்து தத்துவங்களுள், சிவதத்துவமானது முதற்காரணம் ஆகுமென்று சொல்லுகின்றார். 
இந்தச் சிவதத்துவம் முதற்காரணமாதலால், மாயைபோல் நித்தியமாயுள்ளது, இது காரணமாகவே 
ஏனைய சத்தி தத்துவம், சதாசிவ தத்துவம், ஈசுவர தத்துவம், வித்தியா தத்துவம் ஆகிய நான்கும் 
இதன் காரியங்களாம்.

    மாயைக்கு மேல் மகாமாயை ஒன்று உண்டென்று நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றது . இவ்விடத்தில்
கவனிக்கத் தக்கது என்னையெனில், *வித்தை முதலிய தத்துவங்கள் வெவ்வேறான உலக அமைப்புக்களுடன் 
கூடியிருப்பதாகப் பிரமாண நூல்களிற் சொல்லுகிறபடியால், அவை அவசியம் காரியங்களாக இருப்பதனாலும்,
அத்தத்துவங்களில் வசிக்கக்கூடியவர்களுக்குச் சரீரசம்பந்தம் இருப்பதனாலும், அவற்றிற்குக் காரணமாய் 
மகாமாயை ஒன்றுண்டென்று சுத்தமாயை சித்தித்தது என்பதாம். இவ்வாறே, வித்தியா வித்தியேசுவரர்களின் 
சரீரங்களுக்கு முதற்காரணம் மகாமாயை என்று சொல்லப்பட்டிருத்தலுங் காண்க. 

*ஈண்டுக்கூறிய வித்தை, சுத்தவித்தை எனப்படும். அசுத்த மாயையின் காரியமான வித்தை வேறு ; இது வேறு

    இன்னும், நாதம்  முதலியவற்றை வழியாகக் கொண்டு மந்திர தந்திரங்களின் காரணத்துவமும் 
இந்த மகாமாயைக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வாறெனில் சத்தியிலிருந்து நாதமும், அதிலிருந்து விந்துவும்,
அதிலிருந்து  *மாதிருகாக்கரங்களும் தோன்றுமாறு பற்றியென்க. இவ்வாறு, விந்து ரூபமான சிவ தத்துவத்தைச் 
சொல்லி விட்டு அதன் காரியங்களை சத்தி தத்துவம், சதாசிவ தத்துவம் எனத் தொடங்கிப் 
பிற்பாதியாற் சொன்னார்.         (21)

*மாதிருகாக்கரம் :- அச்சு அல் என்னு மிருவகை யக்கரம்.

    (அ--கை) இவ்வாறு சுத்த தத்துவங்களை எண்ணிக்கையினாலும் பெயரினாலும் சொல்லி விட்டு, 
இனி அசுத்த தத்துவங்களையும் அவ்வாறே சொல்லுகின்றார்.

(22)     பந்தத்தையுடைய ஆன்மாக்களுக்கு அறியாமை யுடைமையா யிருக்குந் தன்மை கர்த்தாவா
 யிருக்குந் தன்மை ஆகிய இவை சித்திப்பதற்காக மாயையிலிருந்து நேராகவும், ஒன்றன் பின் ஒன்றாகவும், 
காலமும், நியதியும், அவ்வாறே கலையும், வித்தையும், அராகமும் ஆகிய ஐந்து தத்துவங்கள்
தோன்றுகின்றன என்பதாம்.

    இந்த ஐந்துவிதமான தத்துவங்களென்னும் சட்டையைத் தரித்த ஆன்மாவே, போகத்தை 
யநுபவித்தற்குரியதாகும்; ஆதலால், புருடத்தன்மை யென்னும் மலத்தின் சம்பந்தத்துடன் புருடதத்துவம் 
என்னும் பெயரை அவ்வான்மா அடைகிறது. இவ்வாறே பின்னர்ச் சொல்லுகின்றார்.  (22)

    (அ-கை) இதுவுமது.

(23)     மாயையிலிருந்து பிரகிருதியும், குணத்துவமும் பின்னர் புத்தி, அகங்காரம் என்னும் இவையும், 
சித்தமும் கண் காது மூக்கு நாக்கு துவக்கு என்னும் ஞானேந்திரியங்களும், வாக்கு கை கால் ஆசனம் குறி 
என்னும் கன்மேந்திரியங்களும், சத்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்னும் தன்மாத்திரைகளும், 
இவற்றை யநுசரித்து ஐந்து பூதங்களும், ஆக இருபத்தைந்து தத்துவங்களும் தோன்றுகின்றன என்பதாம்

    ஆசிரியர் இவற்றிற்கு இலக்கணம் பின்னர்க் கூறும் பொழுது, இவை மாயையிலிருந்து ஒன்றன்பின் 
ஒன்றாய் உண்டானவை என்று கூறுகின்றார்.     (23)

    (அ--கை) இதுவுமது.

(24)     புருஷனுடைய போகத்திற்காக இருபத்து மூன்று தத்துவங்கள் பிரகிருதியிலிருந்து தோன்றும்
 எந்தக் காரணத்தால் பிரகிருதிக்கும் குண தத்துவத்திற்கும் உண்மையில் அதிகமான பேதம் இல்லையோ 
(அதனால், இருபத்து மூன்று எனப்பட்டன) என்பதாம்.

    இத்தத்துவங்கள் அனைத்திற்கும் எந்த எந்த இடத்தில் உபயோகம் என்றும், பிரகிருதியிலிருந்து 
நேரே உண்டானவை எவை? தொடர்ச்சியாய் ஒன்றன்பின் ஒன்றாக உண்டானவை எவை ? 
என்றும் இவையனைத்தும் பின்னர்க் காட்டுகிறோம்.

    மாயையிலிருந்து பிரகிருதி தோன்றுகின்றது என்னும் பொருளுடைய முன் சுலோக வாக்கியத்தால் 
மாயையிலிருந்து பிரகிருதிக்குக் கீழ் இருபத்து நான்கு தத்துவங்கள் தோற்றுகின்றன என்று 
கிடைக்கிறபடியால், இருபத்து மூன்று தத்துவங்கள் என்று சொன்னது எவ்வாறு பொருந்தும்? எனில் 
பிரகிருதிக்கும், குணதத்துவத்திற்கும் குணங்கள் அடங்கியிருத்தலும், வெளிப்பட்டுக் தோன்றலுமாகிய 
பேதமேயன்றி வேறு பேதம் இன்மையால் பொருந்துமென்க. சாங்கியனால் குணங்களே பிரகிருதி என்று
கொள்ளப்பட்டிருக்கின்றதே எனில், அது பொருந்தாது. எதனாலெனின், சடமாயும் அநேகமாயும் இருக்கும் 
கடம் முதலியவற்றிற்கு ஏகமாயிருக்குங் காரணத்தைக் காண்கின்றமையால், அது போல் சடமாயும் 
அநேகமாயும் இருக்கும் குணங்களுக்குப் பிரகிருதியே காரணமாகும் ஆதலாலென்க. ஆதலால், காரிய 
காரணங்களின் அபேதத்தைக் கருதிக் குணத்தைப் பிரகிருதியில் அடக்கி இருபத்து மூன்றெனக் கூறியவாறாம். (24)

    (அ--கை) இனி, இதுவரை கூறப்பட்ட தத்துவங்களுள், முதலாவதாகக் கூறப்பட்ட சிவ தத்துவத்திற்கு 
இலக்கணங் கூறுகின்றார். 

(25)     விந்து ரூபமான சிவதத்துவத்தை வியாபகமாகவும், ஒன்றாகவும், நித்தியமாகவும், எல்லாத் தத்துவ 
வருக்கங்களுக்கும் காரணமாகவும், ஞானக் கிரியா சுபாவமாகவும் ஆசிரியர் சொல்லுகின்றனர் என்பதாம்.

    சுத்த அத்துவாக்களுக்கு முதற் காரணமாக யாதொரு விந்து என்னும் சிவதத்துவம் முன்
 சாதிக்கப்பட்டதோ, அந்தச் சிவதத்துவம் வியாபகம். அஃதாவது, சுத்தம் அசுத்தமான ஜகத்துக்கு 
வியாபக மென்றபடியாம்.  எவ்வாறெனில் தன்னுடைய பரிணாம ரூபங்களான நிவிர்த்தி முதலிய 
கலைகளினால் உலகத்தை வியாபிப்பது என்பதாம்.  இக்கருத்துப்பற்றியே, கலைகளை நிலையாகக்
கொண்டு தத்துவங்கள் இருக்கின்றன.  தத்துவங்களில் புவன சமூகங்கள் இருக்கின்றன என்று 
பெரியோர்கள் கூறுகின்றனர்.

     அந்தச் சிவதத்துவம் மேலான காரணமாய் இருப்பதனால், ஒன்றேயாம். பல எனில், பலவாயும்,
 சடமாயும் இருக்கும் கடம் முதலியன போலக் காரியமாதல் கூடும். ஒன்றாதலால், நித்தியமாய் உள்ளதாகும். 
அநித்தியம் எனில், மேலான காரணம் ஆகாமையுடன் வேறு முதற் காரணத்தை விரும்பும் ; விரும்பவே, 
அதற்கு வேறொரு காரணம் வேண்டப்பட்டு வரம்பின்றியோடுதல் என்னும் குற்றமாகும் என்க. இந்தச் 
சிவ தத்துவம் எல்லாச் சுத்த தத்துவங்கட்கு முதற்காரணமேயன்றி, அசுத்த தத்துவங்கட்கு முதற் 
காரணமாதலில்லை. எதனாலெனின்? அசுத்தமாயையிலிருந்து அசுத்த தத்துவங்கள் உண்டாகின்றன 
வாதலால், அவ்வசுத்த தத்துவங்களுக்குச் சுத்தமான சிவதத்துவம் காரணமாதல் செல்லாமையால் என்க.

    ஆன்மாக்களுக்குத் தன்னிடமிருக்கும் ஞானக்கிரியைகளை விளக்குகிறபடியால், இச்சிவதத்துவம் 
ஞானக்கிரியா சுபாவமெனப்பட்டது. அஃதாவது, அந்த அந்தப் புவனபதிகளின் ஆராதனத்தினாலாவது, 
தீக்ஷையினாலாவது தன்னுடைய காரியங்களான சுத்தாத்துவ புவனங்களையடைந்த ஆன்மாக்களுக்கு 
ஞானக்கிரியைகளை விளங்கும்படி செய்தல் என்பதாம்.  இவ்வாறே, மதங்கத்திலும், ஜீவத்தன்மையுடைய 
ஆன்மாக்கள் யாதொரு சிவதத்துவத்தால் விளங்கப்பட்ட ஞானக்கிரியா சாமர்த்தியம் உடையவர்களாய் 
ஆகின்றார்களோ, அந்தச் சிவ தத்துவமானது சாந்தியதீதமாய், நாசமில்லாததாய் இருக்கிறது என்று 
சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகலாற்றான், இந்தச் சிவதத்துவத்தை மோகத்தைச் செய்விக்கிறது 
என்று சொல்லாமல் ஞானத்தைப் பிரகாசிப்பிக்கிறது என்று  சொல்லுகிறோம்.

    அசுத்த மாயையும் கலை முதலிய தத்துவங்களின் வழியாய் ஆன்மாக்களின் ஞானக்கிரியைகளைப் 
பிரகாசம் செய்வதாகவும், சுத்த மாயை மாத்திரம் ஆன்மாக்களின் ஞானக்கிரியைகளைப் பிரகாசிப்பிக்கிறது 
என்றல் எவ்வாறு பொருந்தும் ?  எனின், அஃதுண்மையே. ஆயினும், அசுத்த மாயையினால் உண்டாகும் 
ஞானம் * ஏகதேச ஞானமே ஆகலானும், ஆன்மாவல்லாத பொருள்களில் ஆன்ம பாவனையை 
உண்டுபண்ணுவதனாலும், அந்த அசுத்தமாயை மோகத்தையே உண்டு பண்ணுகிறது. இந்த 
மகா மாயையினாலுண்டாகும் ஞானமோ எனின், எல்லாப்பொருள்களையும் ஒருசேர அறியும் விபாபக
ஞானமாதலாலும், சிவன் முதலிய சுத்தப் பொருள்களை, நூல்களால் சித்திக்கப்பட்ட ஞானத்தின் 
வழியால் அறியச் செய்வதனாலும், சுத்தமாயை ஞானத்தையே உண்டுபண்ணுகின்றது. ஆதலால், உன்னுடைய 
ஆசங்கை பொருந்தாதென்க.  ஞானக்கிரியா சொரூபம் என்பதற்கு, இதுகாறுங் கூறிய பொருளேயன்றி 
சுவம் என்பதற்கு  வடமொழியில் தனம் என்று பொருள் கிடைக்கும் ஆதலால், ஞானக்கிரியா ரூபமான 
தன்னுடைய தனத்தை ஆன்மாக்களுக்கு விளங்கும்படி செய்கிறதென்பதும் பொருளாகக் கொள்க.

* ஏகதேச ஞானமாவது, ஒன்றினை யறியுங்கால் பிறிதொன்றனை அறியாமை

    இன்னும் ஞானக்கிரியை அசுபாவ என்று பிரித்து, ஞானக் கிரியைகள் இதற்குச் சுபாவமாக 
இல்லை எனப் பொருள் கொண்டு இந்தச் சிவதத்துவத்தைச் சடம் என்றும், ஞான ரூபம் இல்லை என்றும் 
பொருள் கூறலாம். சிவதத்துவம் ஞான ரூபமாயின் இது முதற்காரணமாதல் கூடாது. கடம் முதலிய 
காரியங்களுக்கு முதற்காரணமான மண் சடப்பொருளாதல் காண்கின்றமையால், ஞான ரூபம் 
முதற்காரண மென்றல் கூடாதென்க. 

    இவ்வாறே பராக்கியம் என்னும் நூலில், 'சட ரூபமான காரியங்களுக்கு ஈஸ்வரன் நிமித்தகாரணன் ; 
விந்து முதற்காரணம்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வேறு நூல்களிலும் அந்தப் பரமசிவனுடைய 
குண்டலிநி என்னும் சத்தியானது சடரூபம் " என்று சொல்லப்பட்டிருக்கின்றது. முதற் காரணமான 
மகாமாயையை ஆசிரியர்கள் இவ்வாறு கருதுகின்றனர். இந்தச் சுலோகத்திற்குப் பரமசிவனையாவது, 
சிவனுடைய சமவேத சத்தியையாவது விஷயமாகக் கொள்வோம்  எனில், சிவம் முதல் பிருதிவி ஈறான 
தத்துவங்களுக்கு இலக்கணம் சொல்லும் இவ்விடத்தில் தத்துவங்களைக் கடந்து நிற்கும் பரமசிவன், 
சிவ சமவேத சத்தி ஆகிய இவர்களைப் பற்றிப் பேசுதற் கிடமின்மையால் அவ்வாறு கொள்ளுதல் கூடாதென்க. 

    அந்தப் பரமசிவன், சிவ சமவேத சத்தி ஆகிய இவர்களையே சிவ தத்துவமாகக் கொண்டு, 
சுத்தாத்துவாவுக்கு இவர்களையே முதற் காரணமாகக் கொள்ளலாமோ எனில், அங்ஙனங் கொள்ளின், 
இவர்களுக்குப் பரிணாமம் உண்டு எனப்பட்டு, அந்தப்பரிணாமத்தால் சடத்தன்மை முதலிய குற்றங்கள் 
உண்டு எனப்படும் என்க.

    சித்தினுடைய பரிணாமமாகக் கொள்ளாமல், விவர்த்தனமாகக் கொள்வோம் எனில், அது 
பொருந்தாது. எதனாலெனின் விவர்த்தனமாகிய காரியம் அசத்தியமாகும்;  ஆதலின் எல்லாப் 
பிரமாணங்களினாலும் சத்தியமெனச் சித்தித்த உலகம் அசத்தியமாய்விடும் ஆகலாலென்க. 
இன்னும், சிவதத்துவம் என்று பெயருடைய விந்து ரூபமான குண்டலிநி சத்தியைச் சித்தினுடைய 
சமவேதமென்று கூறாமல் பரிக்கிரக சத்தியாய்க் கூறப்பட்டிருப்பதனாலும், சிவதத்துவம் என்பதற்குச் 
சிவனையாவது, சத்தியையாவது பொருளாகக் கொள்ளக்கூடாதென்று கீழே நம்மால் செய்யப்பட்ட 
விருத்தியே சரியானதாகும். 

     இன்னும், பரமசிவன் சித்த ரூபன் ஆகையால் எப்படி உலகத்திற்கு முதற்காரணம் ஆதலில்லையோ,
 அப்படியே சிற்சத்தியும் முதற்காரணம் ஆதலில்லை; பரிணாமம் சடத்திற்குக் கூறப் பட்டதேயன்றிச் 
சேதனனுக்குக் கூறப்படவில்லை ; சித்தினுடைய **விவர்த்தனமாகக் கொண்டால், காரியமான ஜகத்துக்குச் 
சூனியத் தன்மை சித்திக்கும்.  எல்லாப் பிரமாணங்களினாலும் சத்தியமெனச் சித்தித்த உலகம் எப்படி அசத்தியமான
சூனியமாகும்? இனி, சுத்தாத்துவாவுக்குச் சிவனும் சிற்சத்தியும் முதற்காரணமாதல் செல்லாதவாறு போலவே,
அசுத்த மாயையும் முதற்காரணமாதல் செல்லாது.

**விவர்த்தனம் என்பது கயிற்றினிடத்து மயக்கங் காரணமாக அரவு தோன்றல். அந்த அரவு உண்மையில் 
இன்மையால் சூனியத் தன்மை சித்திக்கும் எனப்பட்டது.

     எதனாலெனின் அவ்வசுத்த மாயை தன் காரியத்திற்கு மோகத்தை உண்டு பண்ணுமேயன்றி, 
ஞானத்தை யுண்டுபண்ணாது ஆதலாலென்க. அந்தக் குண்டலிநி யென்னும் சுத்தமான சடரூப சிவசத்தியானது
 பரமசிவனுடன் தாதான்மியமாயிராது ; பரிக்கிரக சத்தியாய் இருக்கின்றது. ஆதலால், குயவனான 
கர்த்தாவினிடத்துக் கடத்திற்கு முதற்காரணமாய் மண் இருப்பது போல, பரம சிவனான கர்த்தாவினிடத்து 
உலகமாகிய காரியத்திற்கு முதற் காரணமாய் விந்து என்னும் குண்டலிநி சத்தி இருக்கின்றது என்று 
பௌட்கரம் முதலிய கிரந்தங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றது.

    சத்தமே பிரமம் என்று சொல்லக்கூடிய வையாகரண மதத்தில் ஆன்மா நாதம் முதலிய முறையில் 
அநேகமாய் இருக்கும் என்றல் பொருந்தாது. எவ்வாறெனில், ஆன்மாவும் ஆன்மசத்தியும் விகாரமற்றவை 
யானபடியால், அநேகமாய்ப் பரிணமித்துப் பிரிந்திருத்தற்கு உரியன வல்ல ஆதலாலென்க. இவ்வாறு 
நாதகாரிகையிற் சொல்லப்பட்டிருக்கின்றது.

    ஆதலால், சப்தத்தைத் தோற்றுவிப்பதனாலும், மகா மாயை முதற்காரணமாகச் சிந்தித்தது. 
இவ்விஷயம் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றமையால், ஆண்டுக்காண்க.    (25)

    (அ--கை) இதனையே வற்புறுத்துகின்றார்.

(26)     பலவிதமான இச்சை முதலிய சிவசத்திகள், முதற் காரணமான இந்த விந்துவினிடத்தில் அதிட்டித்து 
நின்று தன்னுடைய காரியத்தைச் செய்கின்றன ; ஆதலால், அவ்விதமான இந்தச் சிவதத்துவத்தை எல்லாப் 
பொருள்களுக்கும் அநுக்கிரகம் செய்கிறதாகச் சொல்லுகிறார்கள் என்பதாம்.

    இச்சை முதலிய சிவசத்திகள், முதற்காரணமான இந்த விந்துவை யதிட்டித்துத்தான் அநுக்கிரகம் 
செய்தற்குரியவற்றிற்கு அநுக்கிரகத்தைச் செய்தும், அவ்வநுக்கிரகத்திற்கு அங்கமான சிருட்டி முதலிய 
காரியங்களையும் செய்கின்றன.  ஆதலால், இந்த மகாமாயையும் சிவசத்தி வழியாய் அனைத்திற்கும் 
அநுக்கிரகம் செய்கிறதாகப் பெரியோர்கள் சொல்லுகின்றனர். அசேதனமானது சேதனத்தால் 
அதிட்டிக்கப்பட்டாலன்றிக் காரியத்தைத் தோற்றுவிக்காது ; ஆதலால், விந்துவானது சத்தியால் 
அதிட்டிக்கப்பட்டுக் காரியங்களைத் தோற்றுவிக்கின்றது என்க.     (26)

    (அ--கை) இவ்வாறு சிவதத்துவத்தைச் சாதித்து அதன் காரியமான சத்தி தத்துவத்தைச் 
சொல்லுகின்றார். 

(27)     சிருட்டிக்க வேண்டுமென்னும் இச்சையுடைய பரம சிவனுக்கு, சித்தான ஆன்மாக்களுக்கும், 
சடமான பாசங்களுக்கும் அநுக்கிரகம் செய்தற்குக் காரணமான இந்த மகாமாயையினுடைய முதலாவதான
 யாதொரு பரிணாமமுண்டோ  அது சக்தி தத்துவமாகச் சொல்லப்படும். இந்த மகா மாயையே 
நிரவயவமாயுள்ளது என்பதாம்.

    பரமசிவன் சித்துக்களுக்கு அநுக்கிரகஞ் செய்தலாவது ஆன்மாக்களுக்கு அநுக்கிரகமான 
மோக்ஷத்தைச் செய்ய இச்சையுள்ளவராய் அந்த ஆன்மாக்களுக்கு மலபாகத்தின் பொருட்டும், 
கன்மாநுபவத்தின் பொருட்டும், சிருட்டி முதலியவற்றைச் செய்தல், சடங்களான பாசங்களுக்கு 
அநுக்கிரகஞ் செய்தலாவது, தத்தம் வியாபாரத்தில் சாமர்த்தியம் உண்டுபண்ணுதல். 

     இவ்விடத்தில் பாசங்களுக்கு அநுக்கிரகம் சாதிப்பதில் முதற்காரணமா யுள்ளது விந்துவாதலால் 
அது சாதனமென்று சொல்லப்பட்டது. ஆதலால், நிச்சயமாகக் கிடைத்த பொருள் என்னையெனில், 
சித்து, சடம் என்னும் இவற்றிற்கு அநுக்கிரகம் செய்தற்குச் சாதனமான, சிருட்டிக்க இச்சையுடைய 
பரமசிவனது விந்துவினுடைய சாந்தியாதி புவன ரூபமாயும், நாதரூபமாயுள்ள முதலாவதான 
பரிணாமமே சத்தி தத்துவம் என்று சொல்லப்படுகிறது என்பதாம். 

    இந்தச் சத்தி தத்துவமானது, விந்து முதலியன போல் அவயவம் இல்லாததா?  அல்லது, அவயவம்        (திருத்: இவ்லாததா/இல்லாததா)
 உடையதா?  எனில், எவற்றால் பதார்த்தங்கள் ஒன்றுக்கொன்று பிரிக்கப்படுகின்றனவோ, அவை அவயவங்கள்.
 அந்த அவயவங்கள் அற்றது நிரவயவம். பரிக்கிரக சத்தி ரூபமாயுள்ள விந்துவே பரம காரணமாதலின், 
அதுவே நிரவபவமாகும். சத்தி முதலிய காரிய ரூபமான தத்துவங்களோவெனில், நேராகவே புவனங்களுக்கு 
ஆதாரமாய் இருத்தலினால் அவயவங்களை யுடையனவேயாம். ஆயின், சிவதத்துவத்திலும் புவனங்கள்         (திருத்: ஆகாரமாய்/ஆதாரமாய்)
உண்டென்று சொல்லப்படுகின்றமையால் அஃதெங்ஙனம் நிரவயவமாகும்? 

    எனின், அஃதுண்மையே ஆயினும், சிவ தத்துவத்தில் புவனங்கள்  நேராக  இருக்கவில்லை.
அசுத்த மாயா புவனங்கள் கலாதத்துவத்தின் சிரசில் இருப்பது போல, சிவதத்துவத்திற் சொல்லப்படும் 
புவனங்கள் சாந்திகலையின் சிரசிற்றான் இருக்கின்றன. ஆதலால் முரணின்மை யறிக. (27)

    (அ-கை.) இனி சதாசிவதத்துவத்தைச் சொல்லுகின்றார்

(28)     ஞானசத்தி, கிரியா சத்திகளாகிய இவை குறையாமலும், ஏறாமலும் நிகழும் யாதொரு 
பரிணாமமுண்டோ , அதனை வித்துவான்கள் சதாசிவம் என்னும் பெயரையுடைய தத்துவமாகச் 
சொல்லுகின்றனர் என்பதாம்.

     சிருட்டிக்க இச்சையுடைய முன் சொல்லப்பட்ட பரமசிவனது ஞானக்கிரியா சத்திகள் சமமாய் 
அதிட்டிக்க முதற்காரணமாய்க் கூறப்பட்ட விந்துவினுடைய இரண்டாவது பரிணாமம் சத்தி தத்துவத்திற்குப் 
பின் உண்டாகின்றது. அந்த இரண்டாவது பரிணாமத்தையே சதாசிவ தத்துவமாக வித்துவான்கள் 
சொல்லுகின்றனர் (28)

    (அ--கை)  இனி, ஈசுவர தத்துவத்தைச் சொல்லுகின்றார்.

(29)     எதனிடத்தில் ஞானசத்தியானது குறைவை யடைகிறதோ, கிரியா சத்தியானது அதிகத் தன்மையை 
யடைகிறதோ, அது ஈசுவர தத்துவமாகச் சொல்லப்படுகிறது. எப்பொழுதும் எல்லாப் பொருள்களுக்கும் 
கர்த்தாவாகவும் சொல்லப்படுகிறது என்பதாம் . 

    எதனிடத்தில் உலகத்திற்குக் கர்த்தாக்களான அனந்தர் முதலானவர்களை யதிட்டித்துக் கிரியா 
சத்திக்கு அதிக வியாபாரம் உண்டாகின்றதோ, அந்தக் கிரியா சத்தியின் பரிணாமத்தைச் சதாசிவ தத்துவத்திற்குக் 
கீழுள்ள ஈஸ்வர தத்துவமாகச் சொல்லுகின்றனர். அந்த ஈஸ்வர தத்துவத்திற்கு எல்லா வஸ்துக்களுக்குங் 
கர்த்தாவாயிருக்குந் தன்மையானது, கிரியாசத்தி யதிட்டித்தலினாலும், எல்லாப் பெருள்களுக்குங் 
கர்த்தாக்களான அனந்தேசுவரர் முதலானவர்களுக்கும் இந்த ஈஸ்வர தத்துவத்திலேயே அடக்கம் என்று 
மேலே சொல்லப்போகிறபடியாலும் உண்டாகின்றது.     (29)

    (அ-கை.) இனி, வித்தியா தத்துவத்தைக் கூறுகின்றார். 

(30)      எதன் இடத்தில் கிரியா சத்தியானது குறைவையடைகிறதோ, ஞானரூபமான சத்தியானது 
அதிகத்தை யடைகிறதோ அதை வித்தியா தத்துவமாகச் சொல்லுகின்றனர். ஞானரூபம் ஆதலால், 
பிரகாசத்தைச் செய்கிறதாகவும் சொல்லுகின்றனர் என்பதாம். 

     யாதொரு ஈஸ்வர தத்துவத்திற்குக் கீழ்ப்பட்ட விந்து பரிணாம ரூபமான தத்துவத்தில், 
சப்தகோடி மகா மந்திரர்களை அதிட்டித்து ஞான சத்திக்கு அதிகமான தன்மை உண்டாகிறதோ, 
அந்தத் தத்துவத்தில் வசிப்பவர்களுக்கு அனைத்தையும் அறியுந்தன்மையை அது உண்டு பண்ணுகிற
படியால், அந்த வித்தியா தத்துவம் பிரகாச மெனப்படும்.     (30)

    (அ--கை) இவ்வாறு சுத்த தத்துவங்களைச் சொல்லி விட்டு, அவற்றுள், வேறு பொருள்களும்
 அடங்கி யிருக்கின்றன என்று  கூறுகின்றார்.

(31)     சகல ரூபமான விந்துவும், நாதமும் சதாசிவ தத்துவத்தைச் சேர்ந்திருப்பனவாகச் சொல்லப்படுகின்றன. 
வித்தியேசுவரர்களோ எனில், ஈஸ்வர தத்துவத்திலும், சத்தகோடி மகா மந்திரேசுவரர்களும் காமிகம் முதலிய 
ஆகமங்களும் வித்தை என்னுந் தத்துவத்திலும் அடங்குகின்றன என்பதாம். 

    பரவிந்துவானது சிவதத்துவ ரூபமானபடியால், அதன் காரியமான சூக்கும நாதத்திற்குச் 
சத்தி தத்துவத்தில் அடக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால், இவ்விடத்தில் சகலவிந்து
என்பது அக்ஷர ரூபமான விந்து என்றும், நாதம் என்பது தூல நாதம் என்றுங் கொள்க. இவ்விரண்டும், 
சதாசிவ தத்துவத்தில் அடங்குகின்றன. வித்தியேசுவரரான அனந்தேசுவரர் முதலியோர், ஈஸ்வர 
தத்துவத்தில் அடங்குகின்றனர். சத்தகோடி மந்திரேசுவரர்களும், வியோம வியாபி முதலிய * வாசிகமான 
மந்திர சப்தங்களும், காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமமாகிய ஞான சாதனங்களும் வித்தியா 
தத்துவத்தில் அடங்குகின்றன . (31)

* வாசிகம் என்பது வாயினாற் சொல்லப்படுவது

(32) .     இந்த ஐந்து தத்துவங்களுக்கும் காலமில்லாமையால், (அதுபற்றி) முற்பிற்பாடு இல்லை. 
வியாபார வசத்தால் அல்லவோ முற்பிற்பாடு நூல்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதாம். 

    இந்தச் சுலோகம் சில புத்தகங்களிற் காணப்படுகின்றது ; அவ்வாறு கூறுதல் பொருந்தாது, 
எதனாலெனின், சுத்தாசுத்த அத்துவாக்களிலும் தோன்றுமுறை, ஒடுங்குமுறை என்னும் இவற்றை 
அறிவிக்கின்றனவாயும், அந்த அந்தப் புவனவாசிகளுக்கு இடபேதத்தை அறிவிக்கின்றனவாயும், 
சுத்தாத்துவாவிலேயும் சுத்தகாலம் இருப்பதாக அறிவிக்கின்றனவாயுமுள்ள வாக்கியங்களுடன் 
முரணும் ஆதலாலென்க. இந்தச் சுலோகம் இந்த நூல்களை அறியாதவர்களால் சேர்க்கப்பட்டதாதலின் 
நாம் இதற்கு வியாக்கியானம் செய்யவில்லை.**      (32)

    **சுத்தாத்துவாவில் உள்ள, சுத்தகாலம் இந்த ஐந்து தத்துவங்கள் தோன்றிய பின்னர்த் 
தோன்றுதலால், அந்தக்காலம் உண்டென்றது கொண்டு இத்தத்துவங்களுக்கு முற்பிற்பாடு 
கூடுமென்றல் பொருந்தாது. மற்றென்னையோவெனில், காலம் தோன்றுவதற்கு முன்னரே 
தோன்றுகின்ற இந்த ஐந்து தத்துவத்தின் முற்பிற்பாட்டிற்குக் கலையித்திரி எனப் பெயர் 
பெற்றுக் காலத்தானமாய் நிற்கும். சிவசத்தியே காரணம் என்க. (இது, சிவஞான சித்தியாருக்குச் 
சிவஞான சுவாமிகள் அருளிய உரையிற் கண்டது )

    (அ--கை.) சிவனுக்கும் சதாசிவன் முதலிய பேதம் நூல்களில் சொல்லப்படுகின்றமையால், 
அஃதுண்மையோ அன்றோ ? என்னும் வினாவிற்கு விடை கூறுகின்றார்.

(33)     விசித்திரமான அனேகவித சத்திகளுடன் கூடியிருக்கப்பட்ட சிவம் என்னும் தத்துவமானது 
உண்மையில் ஒன்றேயாம். சத்தி வியாபார பேதத்தால் அந்தச் சிவனுக்கு இந்தச் சதாசிவம் 
முதலிய பேதங்கள் சொல்லப்படுகின்றன என்பதாம்.

    அதிட்டித்துக்கொண்டு நிற்கும் பரமசிவம் என்னும் பெயர் கொண்ட தத்துவம் உண்மையில்
 ஒன்றே. அது, கர்த்தாவாகையால், அவசியம் சேதனமாகவே இருத்தல் வேண்டும். சேதனத்தன்மை 
உடையது, விகாரமற்றதாயிருக்கவேண்டுமென்று மேலே சொல்லியிருக்கிறோம். அந்தச் சிவம் 
என்னும் தத்துவம் அநேக விதமான அநேக சத்திகளுடன் கூடியிருப்பது அஃதாவது, சத்தி ஒன்றாயினும்
 அறியப்படும் பொருள் பற்றிய காரியங்கள் அநேகமாதலால், அந்த உபாதி பேதத்தால் அநேகமான
 சத்திகளுடன் நித்தியமான சேர்க்கையுடையது சிவம் என்பது பொருள் என்க. 

    ஆதலால், சத்திகளின் வியாபார பேதத்தால் சிவனுக்குச் சதாசிவம் முதலிய பேதங்கள் 
உபசாரமாகக் கூறப்பட்டனவேயன்றி, உண்மையில் இல்லை. அதிட்டிக்கப்படுதற்கு உரிமையான 
விந்துவுக்கோ எனில், சிவ தத்துவம் முதலிய அவஸ்தையின் பேதமானது உண்மையென்றே 
சொல்லியிருக்கின்றோம். அப்படியே நூல்களிலும் சொல்லப்படுகிறது.  நூல்களிற் கூறப்பட்ட 
சிவபேதமானது சத்தி பேதத்தினாலேயாம். சத்திபேதமானது அதன் காரிய பேதத்தினாலேயாம்.

     சிவனுக்கு யாதொரு உபாதியில் இலயம் முதலிய பேதமானது சொல்லப்பட்டிருக்கின்றதோ, 
அந்த உபாதி விந்துவென்றும்,  குண்டலிநி சத்தியென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆதலினாற்றான்
பரமசிவனுக்குச் சதாசிவம் முதலிய உருவம் சொல்லப்படுதல், தியானத்திற் காகவேயன்றி 
உண்மையிலில்லை என்னும் இக் கருத்தேபற்றி, பெளட்கரத்தில் ," சாதகனுடைய லக்ஷியத்தின் 
பொருட்டு அவனுக்கு ரூபம் சொல்லப்பட்டிருக்கிறது"  என்றும், மிருகேந்திரத்தில், "சரீரமிருத்தலால் 
அவன் எந்த எந்தக் காரியத்தைச் செய்கின்றானோ, அதுவதற்குக் கர்த்தாவாயிருந்து அந்த அந்தக் 
காரியத்தை அவன் சரீரம் அனுசரிக்கிறது ” என்றும் கூறப்பட்டிருத்தல் காண்க .     (33)

    (அ--கை.) இவ்விஷயத்தையே இன்னுங் கூறுகின்றார்.

(34)     அந்தப்பிரபுவான பரமசிவன் சித்துக்கும் சடத்துக்கும் அநுக்கிரகம் செய்வதற்காக, 
இந்தச் சதாசிவம் முதலிய ரூபங்களைச்செய்து அநாதியான ஆணவ மலத்தால், மறைக்கப்பட்ட 
சத்திகளை உடைய ஆன்மாக்களுக்கு அநுக்கிரகத்தைச் செய்கின்றார் என்பதாம்.

    பரமசிவன் ஆன்மாக்களின் அநுக்கிரகத்திற்காகத் தியானிக்கப்படுதற்குத் 
தகுந்தவையான சதாசிவம் முதலிய சரீரங்களை அதிட்டிக்கின்றார். ஆதலால், 
அவற்றை அதிட்டித்துச் செய்யும் சடப்பொருள்களின் அநுக்கிரகத்தால் விருத்தி 
செய்யப்பட்ட ஆன்மாக்களுக்கே அநுக்கிரகம் செய்கின்றார். இந்த அநுக்கிரகத்தையே 
சித்து, சடங்களின் அநுக்கிரகம் என்று சொல்லியிருக்கிறோம். அநாதியான மலத்தினால் 
தடுக்கப்பட்ட சத்தியை யுடையவர்கள் என்று ஆன்மாக்களுக்குக் கூறப்பட்ட விசேடணமானது
பரமசிவன் செய்யும் அநுக்கிரகத்திற்குக் காரணமாகக் கூறப்பட்டது என்க.      (34)

    (அ-கை) சித்துச் சடங்களுக்கு அநுக்கிரகம் என்பது இதுவெனக் கூறுகின்றார்.

(35)      அனைத்திற்கும் அநுக்கிரகம் செய்கின்ற பரமசிவன் ஆன்மாக்களுக்குப் போகத்தையும், 
முத்தியையும், சட சமூகத்திற்குத் தன் தன் வியாபாரத்தில் சாமர்த்தியம் உண்டாதலையும் 
செய்கின்றார் என்பதாம்.     (35)

    (அ--கை.) துக்க நிவர்த்திக்குக் காரணமான மோக்ஷத்தை அநுக்கிரகம் என்று கூறியது 
பொருந்தும். சுக துக்காநுபவ ரூபமான போகத்தையும் அநுக்கிரகம் என்றது எவ்வாறு பொருந்தும்? 
என்னும் கேள்விக்குச் சமாதானங் கூறுகின்றார்

(36)     இந்தச் சித்து சடங்களுக்கு அநுக்கிரகம் என்பது சிவசமரூபமான மோக்ஷமாகும். 
அந்த மோக்ஷமானது கன்மத்துக்கு அநாதித் தன்மை யிருத்தலால் போகா நுபவம் அன்றிச் 
சித்தியை அடைவதில்லை என்பதாம். 

    பாச நீக்கத்தினாலும், எல்லாப் பொருள்களிடத்தும் உள்ள ஞானக் கிரியா சத்தி ரூபமான 
சிவத் தன்மையின் விளக்கத்தினாலும், உண்டாகும் சிவசம ரூபமான மோக்ஷமே அநுக்கிரகம் 
என்பது உண்மை . போகமோ எனில், "அநுபவிக்கப்படாத கன்மங்கள் அநேக கற்பகோடி காலங்கள் 
சென்ற போதிலும் கெடுவனவல்ல” என்னும் நியாயத்தால், போகா நுபவம் கன்ம நாசத்திற்குக் 
காரணமாயிருந்து கன்ம நாசம் மோக்ஷ ரூபமான அநுக்கிரகத்திற்குக் காரணமாய் இருத்தலால், 
இந்தப் போகமும் அநுக்கிரகம் என்று கூறப்பட்டது. ஆதலால், விரோத மில்லையென்க.     (36)

    (அ-கை.) இவ்வாறே பாசங்களுக்கு அநுக்கிரகம் செய்தலும் போகத்தின் வழியாய் 
ஆன்மாக்களுக்கு அநுக்கிரகம் செய்தற்காகவே என்று கூறுகின்றார்.

(37)     ஆதலால் பரமசிவன் அந்தக் கன்மங்களின் பயனாகிய போகத்தின் பொருட்டுத் 
தனுகரண புவனங்களின் சிருட்டியைச் செய்கின்றார். கர்த்தா வன்றியில் காரியமானது எப்படி 
இல்லையோ, அப்படியே முதற்காரணமும், கரணமும் ஆகிய  இவையில்லாமலும்  காரியம் இல்லை என்பதாம். 

    தனுகரண புவனங்கள் என்பவற்றுள், தனுகரணம் என்னும் பதத்தால், சிறப்பான சூக்கும சரீர 
சிருட்டியும், புவனம் என்னும் பதத்தால் பொதுவான புவனங்களின் சிருட்டியும், பொதுவும் சிறப்புமான 
புவனத்திற்றோன்றும் சரீர சிருட்டியும் சொல்லப்படுகின்றன. இந்தச் சிருட்டியை அனந்தர் வாயிலாகச் 
செய்கின்றார் என்று முன்னே சொல்லப் பட்டிருக்கின்றது. இனி, கர்த்தா வன்னியில் காரியங்களுக்கு 
எவ்விதம் உற்பத்தி காணப்படவில்லையோ, அவ்விதமே முதற்காரணமும் கரணமும் இல்லாமல்
 காரியங்களின் உற்பத்தி காணப்படுகிறதில்லை. ஆதலால், அசுத்தாத்துவாவிலே தனு கரணாதிகளை 
அனந்தர் வாயிலாகச் சிவன் தோற்றுவிப்பதில் முதற் காரணம் எது ?  கரணம் எது என்பது பூர்வபக்ஷம்.  (37)

    (அ-கை.) மேல் நிகழ்ந்த பூர்வபக்ஷத்திற்குச் சித்தாந்தங் கூறுகின்றார்.

(38)     இந்த அசுத்தாத்துவாவில் இந்தச் சிவனுக்குச் சத்திகள் கரணமாகவும், அரூபமான மாயை 
முதற்காரணமாகவும் கொள்ளப்படுகின்றன. அந்த மாயையானது ஒன்றாயும், நித்தியமாயும், வியாபகமாயும்,
 தோன்றுதல் ஒடுங்குதல் இல்லாததாயும், சிவனோடு பிரிக்க முடியாத சம்பந்தம் இல்லாததாயும்
இருக்கின்றது என்பதாம். 

    முன் சுத்த மாயையிற் கூறப்பட்டவாறு போல் உபாதி வேறுபாட்டால் வேறுபாடான சத்தியே இந்த 
அசுத்தாத்துவாவிலும் சிவனுக்குக் கரணமாகும். முதற்காரணம் மாயையாகும். அந்த மாயை, சத்தி 
ரூபமாய் நின்று முதற் காரணமாதலால்,  சூக்குமமாய் உள்ளது.  அஃதாவது, வடிவம் இல்லாதது என்பதாம். 
அத்தகைய மாயை ஒன்றேயாம். அநேகம் என்னில், அநேகமாயும் அசேதனமாயும் இருத்தல்பற்றி 
அநித்தியத் தன்மை உடையது என்னும் குற்றம் உண்டாகும் என்க.  உற்பத்தி நாசம் இல்லாமையால் 
நித்தியமாய் உள்ளது. சிருட்டி சங்காரக் கிரமங்கள் நித்தியம் ஆதலால், இந்த மாயா சத்தியும் நித்தியமேயாம். 
நித்தியமாதலால், தன் காரியமான கலை முதலியவற்றிற்கு வியாபகமாயுள்ளதாகும். விந்து என்னும் சத்தி
போல் இந்த அசுத்த மாயையும் பரமசிவனுக்குப் பரிக்கிரக சத்தியாய் நின்று முதற்காரணமாய் இருத்தலால், 
இது அவனிடத்தில் * சமவேதமில்லாமல் இருக்கின்றது (38)

* சமவேதம் என்பது சமவாய சம்பந்தத்தில் இருப்பது. சமவாயம் என்பது எக்காலத்தும் பிரிக்கமுடியாத கலப்பு. 
சிவனிடத்தில் சம வேதமாய் இருப்பது சிற்சத்தியே. மாயை பரிக்கிரகமாயிருப்பது.

(39)     இந்த மாயா சத்தியானது ஆன்மாக்களுக்குப் பொதுவாயும் எல்லாப் புவனங்கட்கும் காரணமாயும், 
எல்லா ஜனங்களின் கன்மங்களுடன் கூடினதாயும், மோகத்தை யுண்டு பண்ணுகிறதாயும் இருக்கிறது என்பதாம்.

    இந்த மாயையானது, எல்லாப் பிராணிகளினுடைய சரீர இந்திரியங்களாய்ப் பரிணமித்து, எல்லாப் 
புருடர்கட்கும் போக்கியமாய் இருத்தலால், ஆன்மாக்களுக்குப் பொதுவென்று கூறப்பட்டது. எல்லாப் 
புவனங்கட்கும் காரணம் என்று கூறியதால் உபலக்ஷணத்தால் தேகம் முதலியவற்றிற்கும் காரணம் 
என்பது சித்திக்கும். பிரளய காலத்தில் புத்தி தத்துவத்திற்கும் மாயையின் கண் ஒடுக்கம், ஆகையால் 
புத்தியின் குணரூபங்களான எல்லா ஆனமாக்களினுடைய கன்மங்களுடன் கூடினது என்று கூறப்பட்டது. 
உழவு முதலிய தொழில்கள் பூமியைச் சுத்தஞ் செய்வதுபோலக், கன்மமும் புத்தியைச் சுத்தஞ்செய்தலால்
 புத்தி குணமாகக் கொள்ளப் படுகிறது.   ஆன்ம குணமாகக் கொள்ளப் படுகிறதில்லை.

     ஆன்மகுணம் என்னில், ஆன்மாவிற்கு வேறுபடுந்தன்மை யுண்டாகுமென்க.  இந்த மாயையானது 
அநித்தியமாயும் அசுத்தமாயும், துக்கமாயும்  காணப்படும்.  ஆன்மாவிற்கு வேறான பொருள்களில் 
நித்தியமாயும், சுத்தமாயும், சுகமாயும், உள்ள ஆன்மாவின் தோற்றத்தை உண்டுபண்ணுதலால், 
மோகத்தை உண்டுபண்ணுகிறது என்று சொல்லப்பட்டது.      (39)

(40)     பரமசிவன் கன்மங்களை யநுசரித்துத் தன்னுடைய சத்திகளால் மாயையைக் கலங்கும் படி 
செய்து, (அஃதாவது உற்பத்திக்கு எதிர்முகமாகச்செய்து) ஆன்மாக்கள் தோறும் போகத்திற்காகச் 
சரீரங்களையும், காரணங்களையும் தோற்றுவிக்கின்றார் என்பதாம்.

    பரமசிவன் பிரளயகாலத்தில் பக்குவமடைந்த ஆன்மாக்களின்  கன்மங்களையறிந்து 
அந்த ஆன்மாக்களின் போகத்தின் பொருட்டுத்  தன்னுடைய சத்தியால் அதிட்டிக்கப்பட்ட 
அனந்தேசுவரருடைய சத்திகளால் மாயையை உற்பத்திக்கு  எதிர்முகமாகச் செய்கின்றார். இவ்வாறே 
"வாமை முதலிய சத்திகளுடன் கூடினவராயும், பரமசிவனுடைய இச்சாரூபமான நியமத்தால் 
ஏவப்பட்டவராயும் உள்ள வித்தியா ராஜாதிராஜனான மந்திரேசுவரர், மாயையைக் கலக்கிக் கலையை 
உண்டுபண்ணுகிறார்'' என்று ஸ்ரீமத் இரௌரவாகமத்திற் கூறப்பட்டிருக்கின்றது. அந்த மாயையை யதிட்டித்து 
ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறான தூல சரீரங்களையும் இந்திரிய சமூகங்களையும், சூக்கும சரீரங்களையும், 
பொதுவான புவனம் முதலியவைகளையும் தோற்றுவிக்கின்றார். (40)

    (அ--கை) இனி, கலைமுதல் பிருதிவி யீறாக முப்பது தத்துவங்கள் சூக்கும தேகத்திற்கு 
உபகாரிகளாயிருக்குந் தன்மையைத் தெரிவிப்பதற்காக அம்முப்பது தத்துவங்கள் தோற்றும்
முறைமையைச் சொல்லுகின்றார்,

(41)     அநேக சத்திரூபமான அந்த மாயையானது முதலாவதாகக் காலம் என்னும் தத்துவத்தைத் 
தோற்றுவிக்கின்றது. யாதொரு காரணத்தால் இந்தக் காலதத்துவமானது உலகத்தைச் சென்றகாலம், 
நிகழ்காலம், வருங்காலமாகப் பிரிக்கின்றதோ அந்தக்காரணத்தால் பிரிக்கின்ற இது காலதத்துவம் 
எனக் கொள்ளப்படுகிறது என்பதாம். 

    "உள்ளது தோன்றும்” என்னும் சற்காரியவாதத்தை நாம் அங்கீகரிக்கின்றமையால் மகாப் 
பிரளயத்திலும், காரியப்  பொருள்கள் சத்தி ரூபமாய் மாயையில் இருத்தல்பற்றிச் சத்தி சமூக 
ரூபமான மாயையானது அனந்தேசுவரரால் கலக்கப் பட்டுக் காலதத்துவத்தைத் தோற்றுவிக்கின்றது. 
காரியத்தைத் தோற்றுவிக்கும் மாயையின் பரிணாமமானது பால் தயிராகப் பரிணமிப்பதுபோல 
முற்றும் பரிணாம மாதலில்லை , நெய் புழுவாகப் பரிணமிப்பதுபோல் ஏகதேச  பரிணாமம்  
என்றறிக. 

     மதங்கம் முதலிய ஆகமங்களில் கலை, வித்தை , அராகம் என்னும் இவற்றினுடைய 
வியாபாரத்திற்குப் பின் இந்தக் கால தத்துவத்தின் வியாபாரம் சொல்லப்படுகிறது. அங்ஙனமாகவும்
இங்கே கால தத்துவத்தை முதலாவதாகச் சொல்லுதல் எவ்வாறு பொருந்தும்? எனில், கலை வித்தை 
அராகம் என்னும் இவற்றினுடைய தொழில் முதற்கண் நிகழும் ; ஆகையால், தொழிற் படும் முறையை 
யநுசரித்து, அவற்றின் பின் காலதத்துவ நிரூபணம் மதங்கம் முதலியவற்றில் சொல்லப்பட்டது. 

    இவ்விடத்தில், கால தத்துவம் முதலாவதாகத் தோற்றுவிக்கப்படுதலால் தோன்றும் 
முறையை அநுசரித்து முதலாவதாகச் சொல்லப் பட்டது; ஆதலாற் பொருந்தும் என்க. இந்தக் 
கால தத்துவமானது தார்க்கிகர் முதலிய புறச் சமயிகளால் நித்தியமாகக் கொள்ளப்படுகிறது. 
அது, பொருந்துமோ எனில், இக் காலமானது சென்றது, நிகழ்கின்றது, வரப் போகின்றது என 
மூன்று பிரிவுகளாகக் காணப்படுதலால், அசேதனமும் அநித்தியமும் ஆதல் பற்றி, நித்தியமென்றல் 
பொருந்தாது என்க. இந்தக் காலம் எந்தக் காரியத்தினால் சித்திக்கின்றது? எனில் தாமதம் விரைவு 
முதலிய ஞான ரூபமான உபாதியின் வழியாக உலகத்தைப் பிரிக்குங் காரியத்தால் சித்திக்கின்ற தென்க. 
இவ்வாறே, " காலமானது ஞானத்தாற் பிரிக்கப்படுகிறது” என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள்.     (41)

(42)     நியதியானது, நியமனத்தைச் சொரூபமாக உடையது. அதுவும், கால தத்துவத்திற்குப் பின் 
மாயையிலிருந்து உண்டாகின்றது, யாதொரு காரணத்தினால் எல்லா உலகத்தையும் நியமனம் 
செய்கின்றதோ, அந்தக் காரணத்தால் இது நியதி தத்துவம் என்று சொல்லப்பட்டது என்பதாம்.

    இதன் கருத்தாவது, இராஜாவின் ஆணை என்னும் நியமம் இல்லாவிடில் உழவு தொழில் 
முதலியவற்றால் பெறக்கூடிய நெல் முதலியவற்றை உரியரல்லாத திருடர் அநுபவிப்பர். அது போல், 
நியதி என்னும் தத்துவம் இல்லாவிடில், ஒருவனாற் செய்யப்படும் கன்மங்களின் பலன்களான 
சுக துக்கங்களை மற்றொருவன் அநுபவிப்பன். ஆதலால், கன்மங்களின் நியமனத்தின் பொருட்டு 
நியதி என்னும் தத்துவம் சித்தித்தது என்க. கன்மமே நியதியைச் செய்யும் என்னில், அக்கன்மம் 
பலன்களை உண்டுபண்ணுவதினாலேயே பயன்படுவதன்றி, வேறு காரியங்களுக்குக் காரணமாய் 
இருக்குமென்றற்குப் பிரமாணமில்லை. 

    இன்னும், கன்மத்தை நியமனம் செய்வதென்று சொல்லில், எல்லாத் தத்துவங்களின் 
காரியத்திற்கும் கன்மமே ஏதுவாகி அநேக தத்துவங்களை நிர்ணயிப்பதில்  அச்சம் நேரிடும். 
ஆதலால், நியதி தத்துவமே நியமனத்தைச் செய்யும் என்க.  சிவ சத்தியே நியமனம் செய்யுமென்று 
கொள்வோமெனில், அது  பொருந்தாது. எதனாலெனின், அச்சிவ சத்தியானது யாதானும் ஒரு 
தத்துவத்தின் வழியாகவே போக விஷயத்தில் காரியம் செய்யும் ஆதலாலென்க. அங்ஙனம், 
யாதானும் ஒரு தத்துவத்தின் வழியாகச் சிவசத்தியானது தன் காரியத்தைச் செய்யுமென்பது 
இல்லையாயின், சகல தத்துவங்களுமே வேண்டப் படுவனவல்ல என்று கொள்ள வரும். (42)

(43)     அதன் பின்னர் மாயையிலிருந்து கலை என்னும் தத்துவமானது தோன்றுகின்றது. 
அந்தக் கலையானது ஆன்மாக்களுடைய மலத்தை ஏக தேசத்தில் விலக்கிக் கிரியா சத்தியை 
விளக்குகின்றது.  ஆதலால், கலை என்று சொல்லப்பட்டது என்பதாம்.

    இந்தக் கலை என்னும் தத்துவமானது, மலத்தினால் மறைக்கப்பட்டுப் போகாநுபவத்திற்கு 
உரிமையில்லாத ஆன்மாக்களின் போகாநுபவத்தின் பொருட்டு மலத்தைச் சிறிது விலக்கித் 
தொழிற் செய்யும் சத்தியை விளங்கும்படி செய்கின்றது. * சத்தி ஏகமாதலால், ஞானக் கிரியா சத்தியைச் 
சிறிது விளங்கும்படி செய்கிறதென்று  கொள்க. இந்தச் சத்தி விளக்கமென்னுங் காரியத்தினால், 
கலை என்னும் தத்துவம் உண்டென்பது சித்தித்தது.      (43)

*ஞானத்தின் வியாபார பேதமே கிரியை யாகலின் ஏகம்.

 (44)     அப்பிரதானத் தன்மையை யடைந்திருக்கும் கால தத்துவத்தினாலும், நியதி தத்துவத்தினாலும் 
இந்தக்கலையானது தன்னுடைய வியாபாரத்தைப் பூமிவரை செய்கின்றது என்பதாம்.

     கலை என்னும் தத்துவமானது போகத்தை யநுபவிக்கும் ஆன்மாவின் சொரூபத்திற்கு 
உபகாரமாயிருத்தலால் அந்தரங்க சாதனமாகும். அதுபற்றிக் கலை பிரதானமாயுள்ளது.  காலம் 
முதலியவையோ எனில், வெளிச் சாதன மாதலால் அதுபற்றி அவை அப்பிரதானமென்று சொல்லப்பட்டன (44)

(45)     கிரியா சத்தியின் விளக்கத்தை உடைய உயிருக்கு  விஷயங்களை அறிவிப்பதற்காகக் 
கலா தத்துவமே பிரகாச ரூபமான வித்தியா தத்துவத்தைத் தோற்றுவிக்கின்றது என்பதாம்.

    இவ்வாறே கலா தத்துவத்திலிருந்து அராகம், வித்தை யென்னும் இரண்டு தத்துவங்களும், 
மூலப் பிரகிருதியும் உண்டாயின என்று இரௌரவாகமத்திற் கூறப்பட்டிருக்கின்றது .      (45)

    (அ--கை) ஆன்மாக்களுக்கு விஷயங்களை அறிவிப்பதில் வித்தியா தத்துவம் காரணமா
யிருப்ப தென்பதை விளக்குகின்றார். 

(46)     இந்த வித்தியா தத்துவமானது, தன்னுடைய வியாபாரத்தால், ஞானம் என்னும் பெயருடைய சத்திக்கு
விஷயங்களை அறியாதிருத்த லென்னும் மறைப்பைக் கெடுத்து, விஷய சமூகத்தைத் தோற்றுவிக்கின்றது. 
இவ்விஷயத்தில் அந்த வித்தையானது ஆன்மாவிற்கு மேலான சாதனமாக இருக்கின்றது என்பதாம். 

    கலை யென்னும் தத்துவத்தினால் ஆணவமலத்தின் மறைப்புச் சிறிது நீக்கப்பட்டு 
ஆன்மாவின் ஞான சத்திக்கு விளக்கம் உண்டாதலால், அதன் மேலும் ஞான சத்தியின் விளக்கத்தின் 
பொருட்டு வித்தியா தத்துவம் எற்றுக்கெனின், கலா தத்துவத்தினால், ஞான சத்திக்கு விளக்கம் உண்டான 
போதிலும் அந்த ஞான சத்தியானது கரணம் இன்றி விஷயத்தை அறியும்படியான சாமர்த்தியம் உடையதாகாது 
ஆதலால், இந்த வித்தியா தத்துவமானது ஞானசத்திக்குக் கரணமாய் நின்று தன்னுடைய வியாபாரத்தினால் 
ஞான சத்தியினுடைய மறைப்பை நீக்கி விஷயங்களை அறியும்படி செய்விக்கிறது.

    விஷயங்களை அறிவதற்குப் புத்தி முதலிய கரணங்கள் இருக்கின்றமையால், அவையே 
அமையாதோ? எனில், கடம் முதலியவற்றின் ஞானம் கண் முதலியன இன்றிப் புத்தி முதலியவற்றால் 
எப்படி உண்டாகிறதில்லையோ, அப்படியே சுக துக்கங்களின் உணர்வு கரணமன்றிப் புத்தி 
முதலியவற்றால் உண்டாகாமைபற்றி, இந்த வித்தியா தத்துவமானது சுக துக்கங்களின் உணர்வு 
விஷயத்தில் ஆன்மாவிற்குக் கரணமாய் நின்று அந்தரங்க சாதனமாய் இருக்கின்றது என்க. 
புத்தி முதலியவை வெளிச் சாதனமாய் இருக்கின்றன. குதிரையினாலும், வழியினாலும், தீபத்தினாலும்
 ஒருவன் செல்கின்றான் என்றவிடத்தில் குதிரை, அந்தரங்க சாதனமும், ஏனைய பகிரங்க சாதனமும் 
ஆதல்போல சுகதுக்க உணர்வு விஷயத்திலும் அநேக சாதனங்கள் சேர்ந்து காரியம் முடிவை யடைந்தாலும்,
வித்தையே பிரதானமான சாதனம் என்றறிந்து கொள்க. (46)

    (அ-கை.) இன்னும் அதனையே தெரிவிக்கின்றார்.

(47)     இந்த ஆன்மாவிற்குப் புத்தியானது சுக துக்க ரூபமான போக்கியப் பொருளாக எப்பொழுது 
சித்திக்கிறதோ, அப்பொழுது இவ்வாறு வித்தியா தத்துவமானது கரணமாய் இருக்கின்றது. 
விஷயத்தை கிரஹிப்பதில் புத்தியானது கரணமாய் இருக்கின்றது என்பதாம்.

    மனதினாலே செலுத்தப்பட்ட கண் முதலிய இந்திரியங்களால் அறியப்படும் விடயங்களைப் 
புத்தியானது சந்தேகமின்றி நிச்சயிக்கும். அப்புத்தியால் நிச்சயிக்கப்பட்ட விடயங்களை ஆன்மா பற்றுகின்றது. 
இவ்வாறே, " புத்தியினால் நிச்சயிக்கப்பட்ட விடயங்களைப் புருடன் அறிகின்றான், எனப் பெரியோர்களும் 
கூறியிருக்கின்றனர். ஆதலால் வித்தை எதற்காக வேண்டுமெனில், நிச்சயரூபமான புத்தியை விஷயமாகக் 
கொண்ட அறிவில் புத்தியே விஷயமாதலால், அப்புத்தியை அறிவதற்கு அதனையே கரணமாய்க் கொண்டு 
அறிய முடியா தாதலால் அதற்குக் கரணமாய்ப் புத்தியினும் வேறாய் வித்தை யென்னும் தத்துவம் வேண்டுமென்று 
சித்தித்திருக்கிறதென அறிந்து கொள்க.

    இவ்வாறே, " புத்தியானது மகானாய்ச் சூரியன் போல் பிரகாச ரூபமாய் இருந்தாலும் தன்னை யறியும் 
விஷயத்தில் தானே விஷயமா யிருக்கின்றமையால் தானே சாதனமாதல் கூடாது" என்று தத்துவ  சங்கிரகத்திலும் 
கூறப்பட்டிருக்கின்றது.      (47)

     (அ-கை.) அராக தத்துவத்தின் உண்மையைக் கூறுகின்றார்.

(48)     பற்றுதலைச் சொரூபமாகக் கொண்ட அராக தத்துவமானது விஷயங்களின் வேறுபாடின்றியே 
புருடனுடைய  பிரவிர்த்திக்குக் காரணமாயிருக்கின்றது. புத்தியின் தர்மங்களைக் காட்டிலும் வேறாயுள்ளது . 
எல்லாப் பற்றுக்களுக்கும் பொதுவான காரணமாய் உள்ளது என்பதாம்.

    பற்றுதலானது அராக தத்துவத்தின் காரியமாதலால், அந்தத் தத்துவத்திற்குச் சொரூபம் எனக் 
கூறப்பட்டது. அஃதாவது, பற்றுதலென்னும் காரியத்தைக் கொண்டு அராக தத்துவத்தினுண்மை 
சித்திக்கின்றது என்பதாம். பொருள்களின் குணங்களையே புருடனுடைய பற்றுதலுக்குக் காரணமாகக் 
கொள்ளலாம்; அல்லது, வைராக்கியமின்மை யென்னும் புத்தியின் தர்மத்தையாவது காரணமாகக் 
கொள்ளலாம்; அராக மென்னும் தத்துவம் பற்றுதற்குக்  காரணமாக வேண்டாமென்னின், அது பொருந்தாது ; 
எவ்வாறெனின், பொருள்களின் குணங்களைப் பற்றுதலுக்குக் காரணமாகக் கொண்டால், பற்றின்றி 
வைராக்கியம் நிறைந்தவர்களுக்கும் பொருள்களின் குணம் விளங்குகின்றமையால், அக்குணங்களைப் 
பற்றினவர்களாய் வைராக்கியம் நிறைந்த துறவிகள் இல்லையாய் முடியும். 

    இனி, புத்தியின் தர்மமான வைராக்கிய மின்மையும் புத்தியின் வாசனா ரூபமாதலால், அதனால் 
புருடனுக்கு உபகாரம் உண்டாகாது.  உபகாரம் உண்டென்னில், புத்தியானது அளவற்ற வாசனைகளுடன் 
கூடியிருப்பதால், புருடனுக்கு ஒரே காலத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட அனேக ஞானங்கள் உண்டாகிக் 
கெடுதல்வரும். ஆதலால், பொருள்களின்  குணங்கள்  புத்தி தர்மமான வைராக்கியமின்மை என்னும் 
இவற்றினும் வேறான அராகமென்னும் தத்துவம் புருடனுடைய பற்றுதற் றொழிலுக்குக் காரணமாய்ச் 
சித்தித்ததென்க. இவ்விஷயம் நம்மால் மிருகேந்திர விருத்தி தீபிகையில் விரிவாய்க் கூறப்பட்டிருத்தலால், 
அவ்விடத்துக்கண்டு கொள்க. இந்த அராக தத்துவமானது எல்லாப்பொருள்களி னிடத்தும் உண்டாகும் 
பொதுவான பற்றுதலுக்குக் காரணமாதலால், பொதுவான காரணமெனக் கூறப்பட்டது.  (48)

    (அ-கை) புருடன் சிவனைப்போல் சடப்பொருளின்றிச் சேதனப்பொருளாதலால், சடப்பொருள்களாயுள்ள 
தத்துவங்களினிடையே புருடதத்துவம் என வைத்தெண்ணுவதும் புருடன் வியாபகமாதலால், தத்துவங்களுக்குள் 
அராக தத்துவத்திற்குப்பின்  புருட தத்துவத்தை நூல்களிற்  கூறுவதும் பொருந்தாதே என்னும் ஆசங்கைக்குச் 
சமாதானங் கூறுகின்றார்.

(49)      இந்தத் தத்துவங்களால் வியாபிக்கப்பட்டு, ஆன்மாவானது எப்பொழுது போகத்தை யநுபவிக்கும் 
தன்மை யுடையதாயிருக்கும் நிலையை அடைகிறதோ, அப்பொழுது புருடன் என்னும் பெயருடன் கூடியிருக்குந் 
தன்மையையும் தத்துவங்களிள்  இடையே  வைத்து எண்ணப்படுவதையும் அடைகின்றது என்பதாம்.

    கலை, வித்தை , அராகம், காலம், நியதி என்னும் இவ்வைந்து தத்துவங்களோடு கூடிய 
அணுவான ஆன்மா, போகத்தை யநுபவிக்குந் தன்மை யுடையதாய்ப் புருட தத்துவமென 
வழங்கப்படுகிறது. இவ்வளவேயன்றி உண்மையில் புருடனுக்குத் தத்துவமாயிருக்குந் தன்மை
கிடையாது. ஆதலினாற்றான் மதங்கம் முதலிய ஆகமங்களில், புருடதத்துவ புவனங்களுக்கு 
அராக தத்துவத்தில் இருப்புக் கூறப்பட்டுள்ளது.  வியாபகமான புருட தத்துவத்தை அராக தத்துவத்தின் 
பின்னர் வைத்து எண்ணினமைக்குக் காரணம் என்னையெனில், தீக்ஷையில் பிரகிருதி தத்துவத்தின் 
சுத்தியின்பின்னர் புருடத்தன்மை என்னும் மலத்தைச் சுத்திசெய்வதன் பொருட்டு ஆதலால் என்க. (49)

(50)     புருடனுடைய போகத்திற்காக கலை யென்னும் தத்துவமே, அந்த அராக தத்துவத்திற்குப்பின் 
அவ்வியத்தம் என்னும் பிரகிருதி தத்துவத்தைத் தோற்றுவிக்கின்றது. அந்தப் பிரகிருதியானது, 
வெளிப்படாத சாத்துவிக இராசத தாமத குணங்களோடு கூடியிருத்தலால், விளக்கிச் சொல்ல முடியாத
காரணத்தைக் கொண்டு அவ்வியத்தம் எனப்பட்டது என்பதாம்.

    இவ்வாறு போகத்தை யநுபவிக்குந்தன்மையை அடைந்த புருடனுடைய போகத்தின் 
சித்தியின் பொருட்டு அப்போகத்திற்குக் காரணமாய் அராக தத்துவத்திற்குப் பின் கலை என்னும்         (திருத்: சித்திபின்/சித்தியின்)
தத்துவமே அவ்வியத்தம் என்னும் பிரகிருதி தத்துவத்தை உண்டுபண்ணுகின்றது. போகம் என்னும் 
பதத்திற்குக் குணம் முதலிய தத்துவங்கள் பொருளாகும்; எதனாலெனின் இந்தத் தத்துவங்களால் 
போகங்கள் அநுபவிக்கப்படுகின்றன ஆதலாலென்க. அஃதாவது, குணம் முதலிய தத்துவங்கள் 
போகாநுபவத்திற்குச் சாதனங்கள் என்றபடியாம். 

    எனவே 'போகத்தின் சித்தியின் பொருட்டு '  என்பதற்குக் குணம் முதலிய தத்துவங்களின் 
சித்தியின் பொருட்டு என்பது பொருளாகக் கொள்க. சாத்துவிகம், இராசதம், தாமத மென்னும் 
முக்குணங்களே அவ்வியத்தமாகும்; அதுவே புத்தி முதலியவற்றிற்குக் காரணம் என்று சாங்கியர் 
கூறுகின்றனர்; அது பொருந்தாது. எதனாலெனின், சத்துவ முதலிய முக்குணங்கள் சடமாயும் 
அநேகமாயு மிருத்தலால், அவற்றிற்கு வேறான காரணம் முன் இருந்து அந்தக் காரணத்திலிருந்தே 
சத்துவ முதலிய குணங்கள் தோன்ற வேண்டுமென்பது முறைமையாதலால், அந்தக் காரணமே 
அவ்வியத்தமென்று கூறப்படுமாதலாலென்க. 

    அவ்வாறாயின், சாங்கியனால் ஒப்புக்கொள்ளப்பட்ட   பிரகிருதியைப் போல் இந்த அவ்வியத்தத்தை 
நித்தியமெனக் கொள்ளலாமோ வெனின், ஆகாது. எதனாலெனின், பிரகிருதியானது ஒவ்வொரு 
புருடர்கள் தோறும் வெவ்வேறாயிருத்தல் பற்றிச் சடமாயும் அநேகமாயும் உள்ளதெனப்பட்டுக் 
காரியத் தன்மை சித்தித்தலாலென்க.     (50)

(51)     பிரகாசம், பிரவிருத்தி, நியமம் என்னும் ரூபமான சாத்துவிகம், இராசதம், தாமதமென்னும் 
குண தத்துவமானது அவ்வியத்தமென்னும் பிரகிருதி தத்துவத்திலிருந்து தோன்றுகின்றது. பின்னும், 
சுக துக்க ரூபமாகவும், மோக ரூபமாகவும் இந்தக் குணதத்துவம் விளங்குகின்றது என்பதாம்.

    பிரசாசம், பிரவிருத்தி, நியமம் என்னும் மூன்று விதமான காரியங்களால், காரணமான
அவ்வியத்தத்திலிருந்து குண தத்துவம் தோன்றுகிறது என்பது சித்திக்கிறது. அந்தக் குணதத்துவம் 
சாத்துவிகம், இராசதம், தாமதம் என மூவகையாயிருந்து, சாத்துவிக குணம் சுகத்தையும், 
இராசத குணம் துக்கத்தையும், தாமத குணம் மோகத்தையும் உண்டு பண்ணுதலால், சுக துக்க மோக 
ரூபமென்றுங் கூறப்படுகின்றது. இந்தத் தத்துவங்களின் இன்றியமையாமையை மதங்கம் முதலிய 
நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருத்தலால், அவ்விடங்களிற் கண்டுகொள்க. விரியுமென்றஞ்சி 
இவ்விடத்து விரிக்கவில்லை (51)

(52)     சத்தம் முதலிய விஷயங்களின் நிச்சய அறிவு ரூபமான புத்தி தத்துவமும், முக்குணங்களான     (திருத்: முககுண/முக்குண)
குண தத்துவத்திலிருந்து தோன்றுகின்றது. அந்தப் புத்தி தத்துவமும் காரியத்தை யநுசரித்தும் சத்துவ 
முதலிய குணங்களாலும் மூன்றுவிதமாகச் சொல்லப்பட்டது என்பதாம்.

    இது கடம், என்னும் நிச்சயத்தை உண்டுபண்ணுதலாகிய காரியத்தைக் கொண்டு புத்தி தத்துவம் 
சித்தித்தது. அந்தப் புத்தியும் புருடனுடைய காரிய ரூபத்தால் சத்துவ குணம் அதிகமான பொழுது 
சாத்துவிகி யென்றும், இராசத குணம் அதிகமானபொழுது இராசசி யென்றும், தாமத குணம்         (திருத்: சாததுவிகி/சாத்துவிகி)
அதிகமான பொழுது தாமசி யென்றும் மூன்று விதமாக ஆகிறது. குணங்களினுடைய வியாபாரம் 
எல்லாவிடத்திலுங் காணப்படுகின்றமையால், புத்தி தத்துவம் மூன்று விதமாக ஆகிறதென்க. 
இந்தப் புத்திக்குத் தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், 
அநைசுவரியம் என்னும் எண் குணங்களை யுடையதாயிருக்குந் தன்மையும், சித்தி முதலிய ஞான 
பேதமும் உளவென்பதை மதங்கம் முதலிய ஆகமங்களிற் கண்டுகொள்க .     (52)

(53)     அந்தப் புத்தி தத்துவத்திலிருந்து இந்த அகங்கார தத்துவமானது ஜீவனாகங்காரம், 
சம்பிரம்பாகங்காரம், கர்வாகங்காரம் என்னும் மூன்று விதமாகத் தோன்றுகிறது.
சத்தான ஆன்மாவிற்கு இந்த அகங்கார தத்துவத்தினுடைய சேர்க்கையினால் விஷயமானது 
வியவகரிக்க யோக்கியமாகுந் தன்மையை யடைகிறது என்பதாம்.

    பிரயத்தனம் என்னும் சம்பிரம்பமானது அகங்காரத்தினால் உண்டாகின்றது.
 இவ்வாறே "சம்பிரம்பமானது அகங்காரத்தின் வியாபாரம் " என்று பெரியோர்களும் கூறுகின்றனர். 
இன்னும், பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் என்னும் ஐந்து வாயுக்களின் 
தொழிற்பாட்டிற்கு அகங்காரம் காரணமாயிருத்தலால், ஜீவனமும் அகங்காரத்தால் 
உண்டானதேயாம். இவ்வாறே “சரீரத்திலுள்ள ஐந்துவாயுக்களும் எந்த அகங்காரத்தின் 
சேர்க்கையால் தொழிற்படுகின்றனவோ"  எனப் பெரியோர்களும் கூறுகின்றனர்

    அவ்வாறே, அறிவிற்கு விடயமான பொருள்களிலுள்ள புத்தி காரியமான நிச்சயத்தைக் 
காட்டிலும் வேறானதாயும்,  நான் என்னும் அறிவின் கருத்தாவை விஷயமாகக்கொண்ட நிச்சய 
ரூபமாயும் உள்ள கர்வமும் அகங்காரத்தின் காரியமே. ஆதலின், இம்மூன்றினாலும் அகங்காரம் 
என்னும் தத்துவம் சித்தித்த தென்க. இந்த அகங்காரத்தினுடைய சேர்க்கையினாலேயே, நான் கடத்தை 
அறிகிறேன்” என்பது முதலிய வியவஹாரங்கள் உண்டாகின்றன. அவ்விதமான அகங்காரம் புத்தி 
தத்துவத்தினின்றும் தோன்றிற்று. சாங்கியர்களும் "மகத் தத்துவத்திலிருந்து அகங்காரம் 
தோன்றுகிறது" என்று கூறுகின்றனர் (53)

(54)     அந்த அகங்கார தத்துவமானது சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் பேதத்தால் 
மூன்றுவிதமாகத் தோன்றுகின்றது. பின்னும் அந்த அகங்கார தத்துவமே தைசதம், வைகாரிகம், 
பௌதிகம் என்னும் பெயர்களால் சொல்லப்படுகின்றது என்பதாம்.

    சாத்துவிகாகங்காரத்திற்குத் தைசதமென்றும், இராசதாகங்காரத்திற்கு வைகாரிகமென்றும்  ,
தாமதாகங்காரத்திற்குப் பௌதிக மென்றும் முறையே பெயர்கள் வழங்கப்படுகின்றன. (54).

(55)     அந்த மூன்று அகங்காரங்களுக்குள், தைசத  அகங்காரத்திலிருந்து மனமும்  ஞானேந்திரியங்களும்,
வைகாரிகாகங்காரத்திலிருந்து கன்மேந்திரியங்களும், பௌதிகாகங்காரத்திலிருந்து தன்மாத்திரைகளும் 
ஆகிய இந்தப் பதினாறும் இந்த அகங்காரத்திலிருந்தே தோன்றுகின்றன என்பதாம். 

    தைசதம், வைகாரிகம், பௌதிகம் என்னும் மூன்றுவிதமான அகங்காரங்களுள் தைசதாகங்காரத்திலிருந்து 
மனதும்,  கண் காது மூக்கு நாக்கு தோல் என்னும் ஞானேந்திரியங்களும்   ; வைகாரிகாகங்காரத்திலிருந்து 
வாக்கு கை கால்  ஆசனம் குறி என்னும் கன்மேந்திரியங்களுந் தோன்றுகின்றன. பெளதிகாகங்காரத்திலிருந்து 
சப்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் தோன்றுகின்றன.  தைசதாகங்காரத்திலிருந்து
மனதும், வைகாரிகாகங்காரத்திலிருந்து  ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் தோன்றுமெனக் கூறலாகாதோவெனின், 
மூல வசனத்தோடும் யுக்தியோடும் மாறுபடுமாதலால், அவ்வாறு கூறலாகாதென்க. 

     சாத்துவிகமானது பிரகாச ரூபமாகையால் ஞானேந்திரியத்திற்குக் காரணமாதலும், 
இராசதம் கிரியைக்குக் காரணமாதலால் கன்மேந்திரியத்திற்குக் காரணமாதலும் யுக்திக்குப்         (திருத்:யுகதி/யுக்தி)
பொருத்தமாகும். இவ்வாறே ஸ்ரீமத் மிருகேந்திராகமத்திலும் : "மனதோடு சுரோத்திரம், துவக்கு,
 சட்சு, சிங்ஙுவை, ஆக்கிராணங்கள் பிரகாச ரூபமாயிருத்தல் பற்றிச் சத்துவ குணமுள்ளவை; 
தைசதம் சாத்துவிகம் என்பது ஒரு பொருட் சொற்கள்;  வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தங்கள் 
செயல்களின் காரணமாதலால் இராசத குணத்தில்  உண்டானவை" என்று கூறப்பட்டிருத்தல் காண்க (55)

    (அ-கை) மனம் என்னும் தத்துவத்தைப் பற்றிக் கூறுகின்றார்.

(56)     மனம் என்னும் தத்துவமானது இச்சையைச் சொரூபமாகவுடையது. அந்த மனதுக்குச் சங்கற்பம்     (திருத்: சொருப/சொரூப)
 என்பது தொழிலாக நிகழ்கின்றது. செவியும் துவக்கும் தோலும் கண்ணும் நாக்கும் நாசியும் 
ஞானேந்திரியங்களாகும் என்பதாம்.

    சங்கற்பம் என்பது அவதானம்.  அஃதாவது, ஒரு பொருளைப் பற்றுந்தன்மை. அந்தச் சங்கற்பம் 
என்னும் தொழிலால், இச்சை என்னும் மன தத்துவம் சித்தித்ததென்பது பொருள். இதன் கருத்தாவது,
 தனக்கு வேறான விஷயங்களில் பற்றுள்ள ஆன்மாவினுடைய கண் முதலிய பொறிகளுக்குக் கடம் 
முதலிய புலன்களோடு சேர்க்கை இருந்த போதிலும், எதனுடைய நிலைக்கள மில்லையாயின் 
பொறிகள் தொழிற் படுவதில்லையோ அந்த நிலைக்களமே மனம் என்னுந் தத்துவமென்பதா மென்க. 
பிற்பகுதியினால் ஞானேந்திரியங்களைக் கூறுகின்றார்.     (56)

    (அ--கை) பின்னர் இந்த ஞானேந்திரியங்களால் அறியப்படும் விஷயங்களைக் கூறுகின்றார் .

(57)     அந்த ஞானேந்திரியங்களுக்கு சத்தமும் பரிசமும் ரூபமும் இரசமும் கந்தமும் அறியத்தக்கவை.

    இந்தக் காரணத்தால் இந்த ஐந்து இந்திரியங்களுக்கும் ஐந்து விஷயங்களும், முறையே 
(அதாவது காதுக்குச் சத்தமும், தோலுக்குப் பரிசமும், கண்ணுக்கு ரூபமும், நாவுக்கு இரதமும், 
நாசிக்குக் கந்தமும்) விடயங்களாகச் சித்திக்கின்றன என்பதாம்     (57)

    (அ-கை) ஆதலால், இந்த ஐம்பொறிகளையின்றிச் சத்தம் முதலியவற்றை அறியமுடியாது; 
ஆதலின், அவற்றின் அறிவின் பொருட்டு அருத்தாபத்திப் பிரமாணத்தால் இவ்வைம்பொறிகள் 
சித்தித்தனவென்று கூறுகின்றார்.

(58)     சத்தம் முதலியவற்றை அறியும் அறிவானது இந்த ஞானேந்திரியங்களுக்கு முறையே 
தொழில்களாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. வாக்கு, பாதம், கை, ஆசனம், குறி என்னும்  இவை 
கன்மேந்திரியங்களாகச் சித்திக்கின்றன என்பதாம்.

    செவி முதலிய ஞானேந்திரியங்களுக்குச் சப்தம் முதலிய விஷயங்கள் இன்னதற்கிதுவென 
நியதமாயிருத்தலின், சப்தம் முதலிய ஐந்தும், ஆகாயம் முதலிய பூதங்களின் குணம் ஆதலால், 
அவ்வப் பூதகுணங்களை அறிவிக்கும் செவி முதலிய இந்திரியங்கள், அவ்வப் பூதங்களிற் றோன்றிய 
காரியமென்றலே பொருத்தமுடைத்தாதலின் ஞானேந்திரியங்கள் பௌதிகமேயாம்; என்னில், அது 
பொருந்தாது. 

    எவ்வாறெனில் இந்திரியங்கள்  பூதங்களின் காரியமாயின், கண்ணிந்திரியமானது 
அக்கினியின் குணமான ரூபத்தை மாத்திரம் அறிய வேண்டும். அவ்வாறன்றி, அக்கினியையும் 
வேறு பூதங்களையும் அவற்றின் குணங்களையும், கன்மம் சாதி என்னும் இவைகளையும் 
அறிகின்றமையால், கண்ணிந்திரியம் அக்கினியின் காரியம் ஆகாதவாறு போல, ஏனையவும்
 ஆதலினென்க. இக்கருத்துப் பற்றியே சித்தகுரு என்பவரும், “ நியதம் பற்றி இந்திரியங்கள் பூதகாரியம் 
என்று சொல்லின், கர்மம் சாமானியம் சமவாயம் என்னும் இவற்றினறிவு இந்திரியங்களால் 
உண்டாகக் கூடாது" எனக் கூறியிருக்கின்றனர். வாக்கு பாதம் என்னும் பிற்பாதியால் 
கன்மேந்திரியங்களைக் கூறுகின்றனர்.      (58)

    (அ--கை)  பின்னர் எந்தத் தொழில்களால் கன்மேந்திரியங்கள் சித்திக்கின்றன 
என்பதைப் பற்றிக் கூறுகின்றார்

(59)     பேசுதலும், ஏற்றலும், போதலும், மலநீக்குதலும், ஆனந்தம் அநுபவித்தலும் ஆகிய இவை இந்தக் 
கன்மேந்திரியங்களினுடைய தொழில்களாம். அந்தக்கரணமானது புத்தி, அகங்காரம், சித்தம் என மூன்று 
விதங்களாக விளங்குகின்றது என்பதாம். 

    வாக்கு முதலிய கரணங்களின்றிப் பேசுதல் முதலிய இக்காரியங்கள் சம்பவிக்காவாகையால் 
கன்மேந்திரியங்களை ஒத்துக்கொள்ளாத தார்க்கிகர் விலக்கப்படுகின்றனர். ஆயின் புருவங்களின் அசைதலும் 
தொழிலான படியால் கன்மேந்திரியங்கள் அநேகம் எனில், அது பொருந்தாது. எதனாலெனின், 
ஞானேந்திரியங்களுள் தோலிந்திரியம் போல் இந்தக் கன்மேந்திரியங்களைச் சரீரமுற்றும் 
வியாபகமெனக் கொள்ளுதலால்  புருவ நெறித்தல் முதலியன கையிந்திரியத்தின் தொழிலாகுமாதலாலென்க. 
அந்தக்கரணம் என்னும் பிற்பகுதியால் இவ்வித இந்திரியங்களுள் வெளியிந்திரியம் * உள்ளிந்திரியம் என்னும் 
இவற்றின் பிரிவைக் கூறுகின்றார். (59)

*உள்ளிந்திரிய மென்றது அந்தக்கரணத்தை.

(60)     வெளி யிந்திரியமானது மறுபடியும் கன்மேந்திரியம், ஞானேந்திரியம் என்னும் வேறுபாட்டால் 
பத்துவிதமாகச் சித்திக்கிறது. தன்மாத்திரைகளிலிருந்து ஆகாயம், வாயு ,அக்கினி, நீர், மண் என்னும் 
ஐந்து பூதங்கள் தோன்றுகின்றன என்பதாம்.

    சுலோகத்தின் பிற்பகுதியால் பஞ்ச பூதங்களுக்குக் காரணம் தன்மாத்திரைகள் என்றனர்.     (60)

    (அ--கை) தன்மாத்திரைகள் இவையெனக் கூறுகின்றார்.

(61)     சப்தம் முதலியவற்றினுடைய சூக்கும ரூபங்கள் ஐந்து தன்மாத்திரைகளாகக் கூறப்பட்டிருக்கின்றன. 
அந்தத்  தன்மாத்திரைகளிலிருந்து ஒவ்வொரு குணத்தின் மிகுதியால் முன் கூறப்பட்ட ஆகாய முதலிய 
பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன என்பதாம்.

    சப்தம், பரிசம் முதலிய ஐந்தின் பிரகாசமற்ற விசேஷங்களையுடைய சூக்கும ரூபங்கள் ஐந்து 
தன்மாத்திரைகளெனக் கூறப்படும்.  இவ்வாறே  "தன்தன் குண விசேடங்களைக் காட்டாமல் சூக்குமங்களாய்
 பூதங்களுக்குக் காரணங்களாக மாத்திரம் இருப்பதால் தன் மாத்திரை யெனப்படும் "  என்று 
பெரியோர்களும் கூறுகின்றனர். ஆதலால், சூக்குமங்களாய்க் காரண ரூபங்களாயிருக்கும் 
தன் மாத்திரைகளிலிருந்து, நம்மவர்களின் வெளியிந்திரியங்களால் அறியப்படுங் குணங்களோடு 
கூடினது பற்றித் தூலங்களெனப்படும் பஞ்ச பூதங்கள் தோன்றினவென்று கூறுகின்றனர். 

     சுலோகத்தின் பிற்பகுதியால் அந்த ஆகாயம் முதலியவை சப்தம் முதலிய ஒவ்வொரு 
குணங்களை யதிகமாகவுடையன என்கின்றனர்.  அஃதாவது, ஆகாயம் சப்தமென்னும் ஒரு குணமுடையது .
வாயு, சப்தம் பரிசம் என்னும் இருகுணங்களையுடையது.  அக்கினி, சப்தம் ,பரிசம் ரூபம் என்னும் மூன்று 
குணங்களையுடையது. நீர் , சப்தம் பரிசம் ரூபம் இரதம் என்னும் நான்கு குணங்களையுடையது. 
 மண், சப்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்னும் ஐந்து குணங்களையுடையது என்க .

    இவ்வாறே, சப்தம் முதலிய ஒவ்வொரு குணங்களை அதிகமாகவுடையதும் இடங்கொடுத்தல் 
முதலிய  தொழில்களுடன் கூடியதும் பஞ்ச பூதங்களெனப் பெரியோர்கள் கூறுகின்றனர்.  வைசேஷிகர்களால் 
சப்தம் தனக்குப் பற்றுக்கோடான பேரி முதலியவற்றின் வேறான ஆகாயத்திற் காணப்படலால், 
ஆகாயத்தின் விசேஷ குணமாக மாத்திரம் கொள்ளப்படுகிறதே யெனில், அது பொருந்தாது. எதனாலெனின், 
சப்தத்துக்குப் பற்றுக் கோடான ஆகாயத்தில் மாத்திரமன்றி ஏனைய பிருதிவி முதலிய பூதங்களிடத்தும் 
சப்தம் உணரப்படுகின்றமையா லென்க.

     இவ்வாறே சப்தம் ஆகாயத்தில் மட்டும் தான் இருக்குமென்றற்கு வைசேஷிகராற் கூறப்பட்ட 
ஏதுவானது பிரத்தியக்ஷம், ஆகமம் என்னும் இரு பிரமாணங்களோடு விரோதமாயிருத்தல் பற்றிப் பாதிதம் **
என்னும் ஏதுப்போலியாகுமென்று பெரியோர்களும் கூறுகின்றனர். இந்தச் சப்தம் ஆகாயத்தில் எதிரொலியாயும், 
வாயுவில் சகசகவென்றும், அக்கினியில் தமதம வென்றும்,  நீரில் சலசலவென்றும், மண்ணில் கடகட வென்றும் 
உணரப்படுகின்றது. 

** பாதிதமாவது, தன்னாற் சாதிக்கப்படும் பொருளினது அபாவம் மற்றோரளவையாற் துணியப்படுவது. 
[உ-ம்] நெருப்பு சூடில்லது; திரவியமாகலின். இங்கே  சூடின்மை சாதிக்கப்பட்ட பொருள்.  சூடின்மையின் 
அபாவமாகிய சூடுண்மை துவக்கிந்திரியக் காட்சியால் அறியப்படுகின்றது. இவ்வாறே சப்தம் ஆகாயத்தில் 
மாத்திரமிருக்கும்; பற்றுக்கோடான பேரி முதலியவற்றின வேறான ஆகாயத்திற் காணப்படுதலாலென்பர்.
 இங்கே ஆகாயத்தில் மாத்திரமிருக்குமென்பது சாத்தியம். இதற்கு மறுதலையாக ஏனைய பூதங்களினுங் 
காணப்படுதலின்  பாதிதமாயிற்று. எனவே, சப்தம் ஆகாயத்தில் விசேஷ குணமாகவும் ஏனையவற்றில் 
சாமானிய குணமாகவும் பரிசம் வாயுவில் விசேஷ குணமாகவும் ஏனையவற்றில் சாமானியமாகவும் 
இவ்வாறே பிறவும் விளங்குமென்பது கண்டுகொள்க. 

     இவ்வாறே மிருகேந்திரத்திலும் " ஐந்து பூதங்களுள் சப்தம் ஆகாய முதலிய வைந்தினும்,
 பரிசம் வாயு முதலிய நான்கினும், ரூபம் அக்கினி முதலிய மூன்றினும், இரதம் ஜலம் முதலிய விரண்டினும், 
கந்தம் பிருதிவி ஒன்றினும் விளங்குமெனவும், அவற்றுள் வாயுவினும், பிருதிவியினும் வெப்பமும் தட்பமுமில்லாத 
பரிசம் ; ஜலத்தில் தட்பப்பரிசம்; அக்கினியில் வெப்பப்பரிசம் ; எனவும், ஜலத்தில் வெண்மைரூபம்; அக்கிநியில் 
பிரகாசமான வெண்மை ரூபம்,  பிருதிவியில் வெண்மை, நீலம், மஞ்சள், இரத்தம், பச்சை, பொன்மை , சித்திரவர்ணம் 
என்னும் ஏழு ரூபங்கள் எனவும்;  ஜலத்தில் மதுர ரசம், பிருதிவியில் தித்திப்பு, புளிப்பு, கைப்பு, உறைப்பு, துவர்ப்பு 
முதலியவை எனவும், பிருதிவியில் நல்ல வாசனை தீயவாசனை யென்னும் இரண்டு விதமான வாசனை யெனவும் 
வித்துவான்களால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன எனக் கூறப்பட்டிருத்தல் காண்க.  (61)

    (அ-கை) பின்னர் இப்பூதங்களின் வியாபாரத்தைக் கூறுகின்றார்.

(62)     ஆகாயம் முதலிய பூதங்களுக்கு முறையே இடம் கொடுத்தலும், வேறு வேறான பொருள்களைத் 
திரட்டுதலும் பாகஞ் செய்தலும், பொடி முதலியவற்றைத் திரட்டிக் கட்டிப் படுத்தலும், பாரங்களைத் 
தரித்தலும் தொழில்கள் என்பதாம். 

    ஆகாயத்திற்கு இடங்கொடுப்பதும், வாயுவுக்கு பொருள்களைச் சேர்ப்பதும், அக்கிநிக்குப் 
பாகஞ்செய்வதும், ஜலத்துக்குக் கட்டிப்படுத்துவதும், பூமிக்குத் தரிப்பதும் தொழில்கள் என்க.
 இவ்விஷயத்தில் இடைவெளியைக் காட்டிலும் ஆகாயம் வேறு என்பதும், அது அநித்தமென்பதும், 
மிருகேந்திர விருத்தி தீபிகையில் நாம் விரிவாய்க் கூறியிருக்கின்றோமாதலால் அவ்விடத்துக் 
கண்டுகொள்க. (62)

    (அ--கை) தன்மாத்திரை பூதம் என்னும் இப்பத்தினிடத்தும் காரியத்தன்மையும், இந்திரியங்களுக்கு 
ஆதாரமாயிருக்குந் தன்மையும் உண்டென்று கூறுகின்றார்.

(63)     இந்தப் பத்துவிதமான பூதம், தன்மாத்திரை என்பன, யாதொரு காரணத்தால் காரியமா யிருக்கின்றனவோ,
அதனால் இந்திரியங்களோடு சேர்ந்து தொழிற்படுகின்றன. இந்திரியங்களுக்குச் சாமர்த்தியமின்மையால் 
(இந்தப் பத்துக்) காரியங்களை ஆதாரமாகக் கொண்டு தொழிற் செய்கின்றன என்பதாம்.

    தன் மாத்திரையாயும், பூதரூபமாயுமுள்ள காரியரூபமான தத்துவம் பத்தும் இந்திரியங்களோடு 
சேர்ந்து தொழிற்செய்கின்றன. அந்த இந்திரியங்களும் தானே தொழிற் செய்யும் சாமர்த்தியம் இல்லாமையினால்
 ( இந்தப் பத்துக்) காரியங்களை நிலைக்களமாகக்கொண்டு தொழிற் செய்கின்றன. இவ்வாறே தத்துவ 
சங்கிரஹத்திலும் "பத்துவிதமான இந்த காரியமானது இந்திரியங்களோடு  சேர்ந்து தொழிற்படுகிறது. 
இந்திரியங்களோ வெனில் சாமர்த்திய மில்லாமையால் இப்பத்துக் காரியங்களை நிலைக்களமாகக் 
கொண்டே தொழிற்படுகின்றன.'' என்று கூறப்பட்டிருத்தல் காண்க. 

    வாதி, பிரதிவாதிகளால் ஏன்று கொள்ளப்பட்ட பூதங்களே இந்திரியங்களுக்கு ஆதாரமாகச் 
சித்திக்கட்டும். இடையே, ஐந்து தன்மாத்திரைகளால் பயனில்லை; எனின், அது பொருந்தாது. 
எவ்வாறெனில், அப்பத்தும் இந்திரியங்களுக்குத் தூலமாகவும், சூக்குமமாகவும் ஆதாரங்களா யிருக்கின்றன 
வென்று நூல்களிற் சொல்லப்படுகின்றன. மிருகேந்திரத்திலும் " கடம் போல்  தன்மாத்திரைகளும், 
அக்கடத்தின் மேலுண்டான பூச்சுப்  போல் மகா பூதங்களும்” எனக்கூறப்பட்டிருக்கின்றது. (63)

    (அ--கை)   இவ்வாறு தத்துவங்களின் இலக்கணத்தைக் கூறிவிட்டு மேல் எந்தத் தத்துவங்களுக்கு
 எவற்றினிடத்து எவ்வாறு அந்நுவயம் என்பதைப்பற்றிக் கூறுகின்றார்.

(64)     முதலாவதான ஐந்து தத்துவங்களுக்கும் சித்துக்கு உபகரிக்குந் தன்மை யுண்மையால் 
சித்தினோடு அந்நுவயம்.  ஏனைய மாயை முதலான ஏழு தத்துவங்களுக்கோ வெனில், 
இரண்டு விதமாக அந்நுவயமானது சிவ சாஸ்திரமான சிவாகமங்களிற் 
சொல்லப்பட்டிருக்கின்றன  என்பதாம். 

     இது பசு இது பசு வென்னும் தொடர்ந்த ஞானத்திற்குக் காரணமாயுள்ளது அந்நுவயம் எனப்படும். 
பசுவினுடைய உருவத்திலும் வேறான பசுத்தன்மைச் சாதியை சைவ சாஸ்திரமான சிவாகமங்களில் 
ஒப்புக் கொள்ளாவிடினும், எவ்விதமேனும் சமான மாத்திரத்தில் அந்நுவயம் கூறப்படும்.  ஆதலால், 
முதலாவதான சுத்த தத்துவம் ஐந்தும் சிவத்தினுடைய சர்வஞ்ஞத்துவம், சர்வகர்த்திருத்துவம் 
என்னும் இவற்றின் பிரகாசத்திற்குக் காரணமாய் இருத்தல் பற்றி உயிருக்கு உபகரித்தலால் 
சிவத்தைப்போல் சுத்தங்களாம். அவற்றைச் சேதனமெனக் கொள்ளுதல் கூடாது.

     அவை அசேதன மென்று மேலே சாதிக்கப்பட்டிருத்தல் காண்க. ஏனைய அசுத்த தத்துவங்களான 
மாயை முதல் புருடதத்துவம் வரையுள்ள ஏழு தத்துவங்களும், உயிரின் ஏகதேசத் தன்மையுடைய 
அறிவிற்குக் காரணமாய் நிற்பது பற்றி உயிருக்குபகரிப்பதாலும், சூக்கும தேகத்தின் வழியாய்க் 
குண சம்பந்தத்தால் சுகம் துக்கம் மோகம் என்னும் இவற்றை யுண்டுபண்ணுதலாலும், 
இரண்டு விதமாய்ச் சித்தினுடனும் அசித்தினுடனும் சமானமாயிருத்தலால் சித்தசித்து 
எனக் கொள்ளப்படும் என்க (64)

(65)     அவ்வியத்தம் முதலிய எல்லாத் தத்துவங்களுக்கும் குண சம்பந்தத்தால் சுக துக்க மோக
 ரூபமாயிருத்தல் பற்றி (அசுத்தத்தில்) அன்னுவயம். இறுதியிலுள்ள தன் மாத்திரை ஐந்து, பூதம் ஐந்து 
ஆகிய பத்தில் பின்னர்ச் சொல்லப்படுவது விசேடமாகும் என்பதாம்.

    பிரகிருதி தத்துவம் முதல் பிருதிவி தத்துவம் வரையுள்ள தத்துவங்களுக்குக் குண சம்பந்தத்தால் 
சுக, துக்க, மோக ரூபமிருத்தல் பற்றி அவை அசுத்தத்தோடு  ஒத்தலால் அசுத்தமென்க.  (65)

    (அ--கை)  பூதங்களிடத்தும் தன்மாத்திரைகளிடத்தும் உள்ள விசேடம் இதுவென்று கூறுகின்றார்.

(66)     சப்தம் முதலிய குணங்களின் ஒற்றுமையாயிருத்தலிலும், காரியமென்று சொல்லப்படுவதில் 
ஒற்றுமையாயிருத்தலிலும், பூதங்களுக்குந் தன்மாத்திரைகளுக்கும் அன்னுவயமானது அறியத்தக்கது. 
சில தத்துவங்களுக்கு அங்காங்கி பாவமாக ஏற்படும் விசேஷம் சித்திக்கின்றது என்பதாம்.

    தன்மாத்திரைகளுக்கும் பூதங்களுக்கும் சப்தம் முதலிய குணங்கள் ஒற்றுமையாயிருத்தல் பற்றியும், 
தன்மாத்திரைகளும் பூதங்களுங் காரியமென்று சொல்லப்படுவதில் ஒற்றுமையாயிருத்தல் பற்றியும் 
ஆகிய இரண்டு வகையில் அந்நுவயம் இவ்வாறு கூறட்பட்ட எல்லாத் தத்துவங்களுள்ளே விந்து மாயை 
முதலிய சில தத்துவங்கள் காரணமாயிருத்தல் பற்றி அங்கியாகவும், சத்தி முதலிய தத்துவங்கள் 
காரியமாயிருத்தல் பற்றி அங்கமாகவும் இருக்கின்ற விசேஷம் உண்டென்று சுலோகத்தின் 
பிற்பகுதியாற் கூறினர்.      (66)

    (அ-கை) பின்னர் தத்துவங்களின் இலக்கணத்தை முடித்துக் காட்டுகின்றார்.

(67)     எல்லாத் தத்துவங்களுக்கும் உற்பத்திக்கிரமமாக இருப்புக் கூறப்பட்டது. பரிணமிப்பதால் 
அங்ஙனம் பரிணமிக்குந் தத்துவங்கள் மாறுதலாக அசுத்தமாயையில் ஒடுங்குகின்றன என்பதாம். 

    பிருதிவி முதலிய தத்துவக் கூட்டங்கள் தன் தன் காரணங்களில் முறையே ஒடுங்கி 
முடிவில் மாயையில் ஒடுங்குகின்றன. (67)

(68)     மாயைக்கு மேற்பட்ட கலையினால் * விருத்தியடைந்த சுத்தமான அத்துவாவானது 
மகாமாயையில் ஒடுங்குகின்றது. அந்த மகாமாயையும் சிவன் அதிட்டானமாயிருக்கக் காரண 
ரூபமான தான் மாத்திரமா யிருக்கின்றது என்பதாம்.

* கலை:- நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை,

    சுத்த வித்தை முதலியவற்றிற்கோவெனின் , மகாமாயை யென்னும் சத்தியில் ஒடுக்கம்.
 இந்த ஒடுக்கத்தின் முறை நம்மாலே வேறு நூலில் விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கின்றது. 
 அஃதாவது கந்தத்தில் பூமியும், இரதத்தில் ஜலமும், ரூபத்தில் அக்கினியும், பரிசத்தில் வாயுவும், 
சப்தத்தில் ஆகாயமும் தாமதாகங்காரத்திற் றன்மாத்திரைகளும், இராசத அகங்காரத்தில் 
கன்மேந்திரியங்களும், சாத்துவிக அகங்காரத்தில் ஞானேந்திரியங்களோடு மனதும்,  புத்தியில் 
மூவகையான அகங்காரங்களும், குணங்களிற் புத்தியும், குண சமூகம் அவ்வியத்தமென்னும் 
பிரகிருதி மாயையிலும் ஒடுங்குகின்றன. 

    அராகம் வித்தை என்னும் இவை கலையிலும், புருட தத்துவம் காலம் நியதி கலை என்னும் 
இவை மாயையிலும், அம்மாயை வித்தியேசுவரரிடத்திலும், வித்தியேசுவரர் சதாசிவரிடத்திலும், 
சதாசிவர் சத்தியினிடத்திலும், சத்தி சிவனிடத்திலும், சிவதத்துவம் விந்துவினிடத்திலும் 
ஒடுங்குகின்றன என்பதாம். 

    அவ்விடத்தில் சிவதத்துவம் என்பது சாந்தி கலையின் மத்தகத்திலிருக்கும் சாந்தியதீத 
புவனத்தைக் குறிக்கும்.  மகா மாயையும் என்னும் உம்மையால், மலத்தினால் மறைக்கப்பட்ட 
உயிர்களினிடத்துள்ள அசுத்தமாயையும், சிவனதிட்டித்து நிற்கக் காரிய ரூபமான 
பிரிப்பின்றிக் காரண ரூபமாய் நிற்கின்றது என்று கொள்க. சிவனிடத்தில் பிரிப்பின்றி 
நித்தியமாயுள்ள கூட்டத்தை யடைகின்றதென்று சொல்வோமெனில் அது பொருந்தாது .
எதனாலெனின் ; அந்த மாயைகட்குச் சிவனுடன் பிரிக்க முடியாத சம்பந்தத்தைக் கொண்டால், 
பரிணாம முதலிய குற்றங்கள் சிவனுக்கு வருமாதலாலென்க. 

    இந்த விஷயமானது மிருகேந்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றது.  அஃதாவது 
"சகலாவஸ்தையைப் போலக் கேவலாவஸ்தையிலும் மலபரிபாகத்திற்குத் தக்கபடி 
அறிவிக்க வேண்டியவர்களுக்கு அறிவித்தும், மறைப்புச் சத்தியாற் றடுக்க வேண்டியவரைத் 
தடுத்தும், கர்மிகளின் கர்மங்களைப் பக்குவமாகச் செய்தும், மாயா சத்திகளைத் தோற்றுதற்குரியதாய்ச் 
செய்தும், எல்லாவுயிர் வருக்கங்களையும் முறையே பார்த்துக்கொண்டும் இருக்கின்றார்” என்றும், 
'சம்சாரத்தினால் துன்பமடைந்த சம்சாரிகளுக்கு இளைப்பு நீக்கத்தின் பொருட்டுச் சகலவுயிர்களுக்கும்
 அநுக்கிரக கர்த்தாவான பரம சிவன் போகசாதனமான தநுகரணாதிகளை யொடுக்கி  ஆத்மாக்களுடன் 
கூட மாயையி லொடுங்கச்செய்து அந்த மாயையினையும்  ஆசிரயித்துக்கொண்டு இருக்கின்றார் "
என்றும் கூறப்பட்டிருத்தல்  காண்க.     (68)

 (69)     மகாப்பிரளயத்தில் மாயை, ஆன்மா, சிவம் என்னும் மூன்றும் எஞ்சி நிற்கின்றன. திரும்பவும் 
அவை முன் போலச் சிருட்டியிற் றொழிற்படுகின்றன என்பதாம்.

    மூன்றுலகத்தை முடிவாகவுடையதாயும், குண தத்துவத்தை முடிவாகவுடையதாயும் உள்ள 
மத்திமப்பிரளயம் ஒன்றிருக்கின்றமையால், இங்கே கூறப்பட்ட பிரளயம் மகாப்பிரளயம் என்றறிந்து கொள்க. 
அஃதாவது, எல்லாப் பொருள்களினுடைய ஒடுக்கமாகுமென்பதாம். இப்பிரளயத்தில் வித்தியேசுவரர்களும் 
முத்தியடைகின்றனர். மாயை, ஆன்மா, சிவம் என்னும் மூன்று பொருள்கள் மாத்திரம் எஞ்சுகின்றன. 
மூலத்தில் மாயையென்று பொதுவாகச் சொன்னமையால் அசுத்த மாயை, சுத்தமாயை யென்னும் 
முதற்காரணங்கள் இரண்டுங் கொள்ளப்படும். ஆன்மாவென்று சாதி யொருமையாற் கூறினமையின்,
 மலசம்பந்தமுடைய எல்லா ஆன்மாக்களுங் கொள்ளப் படும்.  சிவ என்னுஞ் சொல்லால் சமவாய 
சம்பந்தத்திலிருப்பதாய்ப் பிரிக்க முடியாததாயுள்ள சிற்சத்தியோடு கூடிய சிவனும் முத்தான்மாக்களும் 
கொள்ளப்படுகின்றனர். திரும்பவும் சங்காரத்தின் முடிவில் அந்தச் சிவம் முதலிய பொருள்கள் 
சிருட்டியின் பொருட்டு முன்னர்க் கூறப்பட்டவாறுபோல் தொழிற்படுகின்றன.     (69)

    (அ-கை) பின்னர், இந்த மகாப்பிரளயத்திற்குப் பலன் இதுவெனக் கூறுகின்றார்

    (70-71) சம்சாரத்தில் துன்பமடைந்த அநேகமான இந்த உயிர்களுடைய இளைப்பு நீக்கத்தின் 
பொருட்டும், கன்மத்தின் பரிபாகத்தின் பொருட்டும், பரமசிவன், கிருபையினால் மகாப் பிரளயத்தைச் 
செய்கின்றனர். உயிர்களிடத்து வைத்த கருணையால் திரும்பவும் இவ்வுலகில் சிருட்டியைச்செய்து 
அந்த உயிர்களுடைய கன்மங்களை முதிர்வித்துப் பக்குவப்படுத்துகின்றனர் என்பதாம்.

    எல்லா ஆன்மாக்களின் இளைப்பு நீக்கத்தின் பொருட்டும் கன்மங்களின் பரிபாகங்களின் 
பொருட்டும் என்ற உபலட்சணத்தால், இடைவிடாமல் அளவில்லாத சரீரங்களை யுண்டுபண்ணினமையால் 
சத்தி குறைந்திருக்கின்ற சுத்தமாயை, அசுத்த மாயைகளுக்குச் சத்தியை யுண்டுபண்ணுவதற்காகவும்
சங்காரத்தைச் செய்கின்றாரென்பது பொருள். உயிர்களிடத்து வைத்த கருணையால் திரும்பவும் 
சிருட்டியைச் செய்கின்றார் என்றமையால், சிருட்டியும் முத்தியின் பொருட்டேயாம் என்பது கருத்து. 
ஆன்மாக்களின் கன்மங்களை முதிர்வித்துப் பாகஞ் செய்தலாவது, முன் சம்பாதிக்கப்பட்ட கன்மங்களைப் 
பக்குவ முறையில் அந்தக் கன்மத்தின் பொருட்டு அநுபவித்தற்கு யோக்கியமாகக் கூடும்படி 
செய்கின்றார் என்பதாம்.  (70-71)

    (72) (பின்னர் முறையே மலபரிபாக முண்டானவுடன்) போகத்தால் கன்மத்தை நாசஞ்செய்து
 தீக்ஷையென்னும் பெயருடைய தன் சத்தியால் கருணைக் கடலாயிருக்கும் பரமசிவன் எல்லா வுயிர்களையும்
 (பாசத்தினின்றும்) விடுவிக்கின்றார் என்பதாம்.

    தீக்ஷை யென்னுந் தனது சத்தியினால் ஒரே காலத்தில் கன்மத்தின் பக்குவத்தால் ஆணவமலத்திற்குப் 
பக்குவமுண்டானவுடன், ஆசிரியனிடத்து நிகழும் வியாபாரத்தில் விளங்கித் தோன்றும் தன் சத்தியினாலாவது 
அல்லது கேவலம் (தன்னுடைய) சத்தியினாலாவது ஒரே காலத்தில் அநேக போகங்களை யநுபவித்தலென்னும் 
கன்ம நாசத்தைச் செய்து மலங்களினின்றும் உயிர்களை விடுவிக்கின்றார்.  அவ்வாறே சிரணாகமத்திலும்
" அநேக பிறப்புக்களில் உயிர்களாற் சம்பாதிக்கப்பட்ட கன்மமானது, வறுக்கப்பட்ட வித்துப்போல் எதனாற் றடை 
செய்யப்பட்டதோ'' என்று கூறப்பட்டிருத்தல் காண்க அதுபற்றியே, உடனே முத்திதரக்கூடிய சத்தியோ நிர்வாண 
தீக்ஷை கூடும்போது, நிகழ்ந்து கொண்டிருக்கும் சரீரத்திற்குக் காரணமாயும், பயனைத் தருவதாயுமுள்ள 
பிராரத்த  கன்மத்திற்கும் நாசம் என்பது சித்தித்தது. தீக்கையினுடைய நைட்டிக முதலிய பேதம் 
மதங்கத்திலிருந்து அறிந்து கொள்க.     (72)

    (அ-கை) அவ்வாறாயின், சரீர முதலியவற்றைத் தத்துவங்களாக வைத்து ஏன் எண்ணவில்லை ? 
என்றதற்குச் சமாதானங் கூறுகிறார்.

(73)     எல்லா வுயிர்களுக்கும் போகத்தைக் கொடுத்துக் கொண்டு பிரளயகாலம் வரை 
யாதொன்றிருக்கின்றதோ  அது தத்துவமென்று கூறப்பட்டது.  அந்தக்காரணத்தால் சரீரம் கட முதலியன 
தத்துவமாக ஆவதில்லை என்பதாம். 

    நேராகவோ, தொடர்ச்சியாகவோ யாதொன்று உயிர்களுக்குப் போகத்தைக் கொடுத்துக்கொண்டு
 பிரளயகாலம் வரையிருக்கின்றதோ அது தத்துவம் எனக்கூறப்படும். அதுபற்றியே, ஒடுங்குமுறையில் 
நம்மால் கீழ்க்கண்டவாறு வேறிடத்தில் தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. எவ்வாறெனில் ; 
" பிருதிவி, அப்பு, தேயு, வாயு ஆகாயம், கந்தம் இரதம், ரூபம், பரிசம், சப்தங்களையும், உபத்தம், ஆசனம்,
 பாதம், கை, வாக்கு, மூக்கு, நாக்கு, கண், தோல், காது, மனம் இவற்றையும், கர்வம், புத்தி, குணங்கள்,
 அராகம், புருடன், வித்தை , நியதி, கலை, காலம், அசுத்தமாயை, சுத்தவித்தை, ஈஸ்வரன், சதாசிவன், 
சத்தி, சிவதத்துவம் இவற்றையுந் துதிக்கின்றேன்” என்பதாம். இவ்விடத்தில் அராகம் புருடன் என்று 
முறை மாறியிருத்தல் பற்றிப் புருடனுக்கு தத்துவத் தன்மையில்லை யென்பது அறிவிக்கப்பட்டது. 
செய்யப் படாததைச் செய்தலும், செய்ததை விருத்தி செய்தலும் புத்தியினுடைய தர்மமாகும்.     (73)

(74)     தத்துவத்திற்குக் காரணமாகவும், பூரணஞ் செய்வதாகவும் யாதொரு தத்துவமிருக்கின்றதோ
 அதிலிருந்து தத்துவங்கள் தோன்றுகின்றன. எல்லாத் தத்துவங்களுக்கும் இவ்விதமான வரையறை 
சொல்லப்பட்டது என்பதாம்.     (74)

    (அ--கை) எவரால் இந்நூல் கூறப்பட்ட தென்பதைப்  பற்றிக் கூறுகின்றார்.

(75)    தத்துவங்களினுடைய எல்லாவிதமான உண்மையும் யாதொரு கிரந்தத்தால் எளிதாகக் 
கூறப்பட்டதோ, அத்தகைய தத்துவப் பிரகாசம் என்னும் கிரந்தத்தைப் பிரசித்தரான போஜ தேவ 
ராஜா செய்தனர் என்பதாம்.

    தத்துவப் பிரகாசம் என்பதற்குத் தத்துவங்களின் பிரகாசம் அல்லது தத்துவங்களின் ஞானம் 
என்பது பொருள். தத்துவங்களின் ஞானம் என்பதற்குத் தத்துவங்களின் உண்மையான சொரூபத்தை 
அறிவிப்பது என்பது பொருள். (75) 

    (அ-கை) மேற்கூறியதனையே விரித்துக் கூறுகின்றார்.

(76)     யாதொரு போஜ தேவருடைய மனதில் எல்லாத் தத்துவ சமூகமும் உள்ளங்கை நெல்லிக்கனி 
போல் பிரகாசித்ததோ அத்தகைய போஜதேவர் சிவாகமங்களின் சாரமான ஒப்பற்ற தத்துவப் பிரகாசம் 
என்னும் நூலைச் செய்தனர் என்பதாம்.     (76)

            நூல் முற்றுப்பெற்றது.

    யாதொருவர் சிவாகமங்களுக்குப் பெரிய வியாக்கியானஞ் செய்யுந்தன்மையை யடைந்து, 
சாமானியமான பதங்களுக்கும் விசேடமான பொருளை நிர்ணயித்துத் தருவதில் சமர்த்தராயும் 
வித்துவானாயு மிருக்கிறாரோ, அத்தகைய அகோர சிவாசாரியர், சிவபத்தர்களால் பிரார்த்திக்கப்பட்டு 
அச்சிவபத்தர்களிடத்து வைத்த அன்பின் பெருக்கால் தத்துவப் பிரகாசம் என்னும் நூலுக்குச் 
சுருக்கமாய் உரை செய்தனர்.

    இவ்வாறு, இரண்டு லக்ஷம் கிரந்தத்திற்குக் கர்த்தாவான அகோர சிவாசாரியரா லியற்றப்பெற்ற
 தத்துவப் பிரகாச விருத்தியானது முற்றுப்பெற்றது.

            சிவபிரான் றிருவடி வாழ்க.

Related Content

பரமோக்ஷ நிராச காரிகை மூலமும் விருத்தியுரையும்

இரத்தினத்திரயம் மூலமும் விருத்தியுரையும்