சிவமயம்
திருச்சிற்றம்பலம்
அஷ்ட பிரகரணங்களில் ஒன்றாகிய
இதற்கு
(தமிழ்மொழி பெயர்ப்பு.)
உரைமங்கலம்.
எந்தப் பரமசிவனுடைய சிவத்தன்மை, நின்மலமாயும் உலகத்துக்கு வேறாயும் இருக்கின்றதோ,
அத்தன்மையினையுடைய, எவற்றையும் தரத்தக்க சிதம்பர சபாபதியான பரமேசுவரனை எப்பொழுதும்
நான் நமஸ்கரிக்கின்றேன் (1)
வியாகரண சாத்திரம், தர்க்க சாத்திரங்களை அறிந்தவராயும், என்னை ஒத்தவர்களால்
அறிய முடியாத அறிவின் மகிமையை உடையவராயும் விளங்கும் சத்தியோ ஜோதியென்னும் குரு சிரேஷ்டர்,
சாக்ஷாத் பரமசிவன்போல் விளங்குகின்றார் (2)
தத்துவ சங்கிரகம் என்னும் சந்திரனுடைய பிரகாசத்துக்கு, சரற்கால இரவு போல நாராயண
கண்டரால் பெரிய உரை ஒன்று செய்யப் பட்டுள்ளது. (3)
ஆயினும், விரிவான அப்பெரிய உரையில் உள்ள பொருளை அறியமுடியாது வருந்தும்.
சிற்றறிவுடையவரின் நன்மையின் பொருட்டு, இந்தச் சிற்றுரை என்னால் செய்யப்படுகின்றது (4)
நூல்
(அவதாரிகை ) பூசிக்கத் தகுந்தவரான ஆசிரியர், எடுத்துக் கொண்ட நூல் இடையூறின்றி
முடிதற் பொருட்டு, முன்னர்ப் பரமசிவனை நமஸ்காரம் செய்து பின்னர் தன்னாற் செய்யப்படும்
பிரகரணம் இதுவென்று கூறுகின்றார்.
(1) சித்து ரூபமான ஆன்மாக்களையும், சடரூபங்களான விந்து , மாயைகளையும், அவற்றின்
காரியங்களையும், அதிட்டிக்கின்றவராயும், உற்பத்தியில்லாதவராயும், அனைத்தையும் அறிபவராயும்,
சர்வஞ்ஞத் தன்மை, சருவகருத்திருத்தன்மை என்னும் சுகத்தைத் தருபவராயும் உள்ள சங்கரனை
நமஸ்கரித்து சிற்றறிவுடையாருக்குப் பேரறிவுண்டாதற் பொருட்டுச் சுருக்கமாகத் தத்துவங்களைச்
சொல்லுகின்றேன் என்பதாம்.
சித்துரூபமான பெத்தான்மாக்களையும், சடரூபமான சுத்தமாயை, அசுத்தமாயைகளையும்,
அவற்றின் காரியங்களையும் அதிட்டிக்கிறவரென்றதற்கு, நேராகவும், பரம்பரையாகவும்,
சுத்தபுவனம், அசுத்த புவனங்களுக்கு, முதற்காரணமான சுத்த மாயை, அசுத்த மாயைகளால்
ஆன்மாக்களுக்கு அவரவர் கன்மத்துக்குத் தகுந்தவாறு, சுத்தபோகம், அசுத்த போகங்களைக்
கொடுக்கின்றவர் என்பது கருத்து. ஆதலால், உலகம் அவயவப் பகுப்புடன் கூடியிருத்தல்பற்றி
அவசியம் காரியமாய் இருத்தல் வேண்டும். வேண்டவே, அக்காரியத்திற்குக் கருத்தாவாய்
ஈசுவரன் ஒருவன் உண்டென்பது சித்தித்தது.
இதனால், பிரதானம், புருஷன், கன்மம் என்னும் இவற்றைக் கடவுளாகக் கூறும் வாதிகள்
நீக்கப்பட்டார். எதனாலெனில், பிரகிருதியென்னும் பிரதானமும், கன்மமும் சடப் பொருளாதலானும்,
புருஷன் மலத்தோடு கூடியிருத்தலால் சுதந்திரமில்லாதவனாதலானும் என்க.
அந்த ஈசுவரன் நித்தியனாயும், நின்மலனாயும் இருத்தலால் உற்பத்தி இல்லாதவன். சரீர
சம்பந்த ரூபமான பிறவியும் இல்லாதவன். இதனால் இவன் நித்தியன் என்பது சித்தித்தது.
உலகத்துக்குக் கருத்தாவான இந்தப் பரமசிவனை அநித்தியனாகவும் உற்பத்தியுள்ளவனாகவும்
கொண்டால், சடத் தன்மையும் வரம்பின்றி ஓடல் என்னும் குற்றமும் சம்பவிக்கும். அஃதன்றியும்,
மலமில்லாமையாலும், எல்லாப் பொருளுக்கும் கருத்தாவாயிருத்தலாலும், எல்லாம் அறிந்தவனாவன்.
இவ்விடத்தில் ரகசியமான கருத்து இதுவாகும். எதுவெனில், இந்தச்சிவனுடைய அறிவானது தார்க்கீகர்கள்
கொள்வது போல மனத்தின் சேர்க்கையை விரும்பாது அவனுடைய சுபாவமாகவே உள்ளது என்பதாம்.
ஈசுவரனுடைய சுபாவமான அறிவிற்கும், அறியப்படும் பொருள்கள் செய்யப்படும்
பொருள்கள் ரூபமான உபாதி வேறுபாட்டால் அநேகத்தன்மை உபசாரமாகச் சம்பவிக்கிறது.
அவ்வாறே வேறு நூல்களிலும், உண்மையில் ஒன்றான சிவனறிவானது, விஷய வேறுபாட்டால்
அநேகத் தன்மையை அடைகிறதென்றும், அதுபோலவே, விஷயங்களுடன் அபின்னமாயிருத்தலால்
கர்த்தாவாயிருக்கும் தன்மையும் உபசாரமாய்க் கூறப்பட்டிருத்தல் காண்க.
பிறரால் ஏவப்படாத தன்மையும், எவற்றையும் அறிந்து எவற்றிற்கும் கருத்தாவாயிருக்கும்
தன்மையுமாகிய தனது சமான ரூபமான சுகத்தை ஆன்மாக்களுக்குத் தருதலால், சங்கரன் * என்னும்
நாமம் பூண்டவன் ஈசுவரன். இதனால், இவனுக்கு மோக்ஷத்தைத் தரும் தன்மை கூறப்பட்டது . இந்தச்
சுலோகத்தில் சங்கர என்னும் பதம் விசேஷிய பதம்
*சம்- சுகம். கரன்- செய்பவன்.
இவ்விதமான பரமசிவனை மனம் வாக்குக் காயங்களால் வணங்கி, பிருதிவி முதலிய
தத்துவங்களைச் சுருக்கமாகக் கூறுகின்றேன் என்றார். இந்தப் பிரகரணத்திற் கூறப்படும் விஷயம்
தத்துவங்களின் இலக்கணம் என்பது கருத்து. மதங்கம் முதலிய மூலாகமங்களால் தத்துவங்களின்
இலக்கணம் அறியப்படுவதாயிருக்கவும், இந்தப் பிரகரணத்தின் ஆரம்பம் எதற்காக என்று
ஆசங்கிப்பார்க்கு, சிற்றறிவுடையவரின் பொருட்டு என்று பிற்பகுதியாற் சமாதானம் கூறுகின்றார்.
மதங்கம் முதலியவற்றிற் கூறப்படும் தத்துவ இலக்கணமானது, மிகவும் விரிவாயிருத்தலால்,
அவற்றைக்கொண்டு சிற்றறிவுடையவர்கள் தத்துவங்களின் இலக்கணங்களை நிச்சயித்தல் முடியாது
ஆதலின், அவர்களுக்கு அவற்றின் நிச்சயம் உண்டாதற் பொருட்டுச் சுருக்கமாக இந்நூல் செய்யப்பட்டதென்க.
இந் நூலின் பிரயோஜனம், முக்கிய புருஷார்த்தமான மோக்ஷமென்பது அறிவிக்கப்பட்டது.
எதனாலெனில், தத்துவங்களின் அறிவானது, பரம்பரையாக அபரமோக்ஷம் பரமோக்ஷங்களுக்குச்
சாதனமாயிருத்தலா லென்க. ஆதலால் தத்துவ ஞானமென்னும் விஷயத்திற்கும் நூலுக்கும்,
அறிவிக்கப்படுவது அறிவிப்பது என்னும் சம்பந்தமும், தத்துவஞானத்திற்கும் மோக்ஷத்திற்கும்,
அடையச் செய்வது அடையப்படுவது என்னும் சம்பந்த விசேஷமும் சித்தித்தமை காண்க.
பகவானாயும் சர்வக்ஞனாயும் உள்ள உக்கிர சோதி யென்பவர் எவரொருவருக்கு
அனுக்கிரகஞ் செய்தாரோ என்ற ஆரம்பத்தால் குரு சம்பிரதாய ரூபமான சம்பந்தத்தையும்
பின்னர்க் கூறுகின்றார். அவ்விடத்தில் அனுக்கிரக மென்னும் பதத்திற்கு உபலக்ஷணத்தால்
ஸ்ரீ கண்ட பரமேசுவரன் முதல் தான் வரை இடைவிடாமல், சாஸ்திர சம்பிரதாயப் பிரகாரம்
சித்தாந்தத்தின் பொருள் நிச்சயிக்கப் பட்டிருக்கிற தென்பது கருத்து (1)
(அ-கை.) இவ்வாறு தத்துவங்களின் வியாக்கியானத்தைச் செய்கிறேனென்று கூறிவிட்டு,
இந்த ஆன்மா சிவனையடைவதற்கு, ஒடுக்க முறையில் சேர்க்கத் தகுந்தவன் என்னும் சுவாயம்புவாகமத்தால்,
பிருதிவி முதலிய தத்துவங்களுக்குத் தீட்சையில் ஒடுக்கக் கிரமமாகவே சுத்தி என்று அறிவிப்பாராய்
ஒடுக்க முறையாகவே பஞ்ச பூதங்களைக் கூறுகின்றார்.
(2) பூமி, ஜலம், அக்கினி, வாயு, ஆகாயம் என்பன பூதங்களாகும். இந்தப் பூதங்களுக்கு, தரித்தலும்,
சங்கிரகம் செய்தலும், பக்குவம் செய்தலும், வியூகம் செய்தலும், அவகாசம் தருதலும்
காரியங்களாகும் என்பதாம்
பூமி, ஜலம், அக்கினி, வாயு, ஆகாயம் இவைகளே பூதங்களாகும். இந்தப் பிருதிவி முதலிய
பூதங்கள் தரித்தல் முதலிய காரியங்களால் சித்திக்கின்றன. அக்காரியங்களுள் சங்கிரகமென்பது
உண்டையாகச் சேர்த்தல். வியூகம் என்பது அவயவங்களைச் சேர்த்தல். இடம் தருதல் ஆகாசத்தின் காரியம்.
இடம் தருதல் என்னும் காரியத்தால் ஆகாயம் அவசியம் சித்திப்பதால், ஆகாயம் இல்லையெனக்
கூறும் சாருவாகரும் ஆகாயத்தைப் பிரத்தியக்ஷமென்று கூறும் மீமாஞ்சகரும் நீக்கப்பட்டார்.
இந்த ஆகாயத்தை நையாயிகர் கொள்வது போல் நித்தியமாகக் கொள்ளக் கூடாது. எதனாலெனில்
இந்த ஆகாயத்தைத் தன்மாத்திரையின் காரியமாய்ப் பின்னர்க் கூறப்போகின்றமையாலென்க.
ஏனைய நூல்களிலும் புவனங்களுக்குப் பற்றுக்கோடாக இந்த ஆகாயத்தைக் கூறியிருத்தலால்
இதனை அநித்தியமென்றே கொள்ளல் வேண்டும்.
அவயவச் சேர்க்கை யென்னும் வாயுவின் காரியத்தைக் கூறினமையால், உபலக்ஷணத்தால்
வாயுவினுடைய ஏனைய காரியங்களும் கொள்ளப்படும், பெரியோர்களும், பரிசித்தல் சப்தித்தல்,
நிலைத்தல், அசைதல் என்னும் இவற்றைக் குறியாக உடையது வாயுவென்று கூறியிருக்கின்றனர் (2)
(அ-கை) இன்னும் பூதங்களைப் பற்றியே கூறுகின்றார்.
(3) * கந்தம், இரசம், உருவம், பரிசம், சத்தம் என்னும் இவை பூமியின் குணங்களாகும். ஜல முதலிய
ஏனைய நான்கு பூதங்களுக்கும் முன்னர்க் கூறிய குணங்களுள், கந்த முதலாக ஒவ்வொன்று குறைந்து
மற்றவை முறையே குணங்களாகுமென்பதாம்.
* இந்தச் சுலோகம் மூலத்தில் வியாக்கியானத்துடன் சேர்ந்து எண்ணுள் அகப்படவில்லை.
மிருகேந்திரத்திலும் சப்தம் ஆகாயம் முதல் ஐந்து பூதங்களிலும், பரிசம் வாயு முதல் நான்கிலும்,
உருவம் தேயுமுதல் மூன்றிலும், இரசம் ஜலம் முதல் இரண்டிலும், கந்தம் பூமி ஒன்றிலும் என்றறிக .
அவற்றுள், வாயுவிலும் பூமியிலும் வெப்பமும் தட்பமுமில்லாத பரிசம். அக்கினியில் வெப்பப் பரிசம்.
ஜலத்தில் குளிர்ந்த பரிசம்.
ஜலத்தில் விளங்காத வெண்மை உருவம், அக்கினியில் விளங்கிய வெண்மை யுருவம்.
பூமியில் வெண்மை முதலிய **ஏழும் உருவம்
**ஏழு - வெண்மை கருமை பொன்மை செம்மை பசுமை புகைமை சித்திரம் என்பன.
ஜலத்தில் மதுர இரசம். பூமியில் தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, காழ்ப்பு, கைப்பு, துவர்ப்பு, என்னும் ஆறும் இரசம்.
பூமியில் நறுநாற்றம் தீநாற்றம் என இரண்டுவித நாற்றமுண்டு எனப் பெரியோர்களால்
கொள்ளப்பெற் றிருக்கின்றதென்று கூறப்பட்டிருத்தல் காண்க. ஆதலின், சப்தம் தனக்குப் பற்றுக்கோடான
பேரி முதலியவற்றிற் காணப்படாமல் ஆகாயத்திற் காணப்படுதல்பற்றி அது ஆகாயத்தின் குணமாக
மாத்திரம் இருக்குமென்ற வைசேஷிகர்களின் கூற்றுப் பொருந்தாது. எதனாலெனின், அவர்களாற்
கூறப்படும் ஏது பிரத்தியக்ஷ அளவையாலும் ஆகம அளவையாலும் மறுப்புடையதாகக் காணப்படுதலால்,
ஏதுப்போலியாய் அவர்கள் கொள்கையைச் சாதியாமையாலென்க.
அஃதாவது, சத்தம் ஆகாயத்தில் எதிரொலி ரூபமாகவும், வாயுவில் சகசகவென்றும், அக்கினியில்
தமதமவென்றும், ஜலத்தில் சலசலவென்றும், பூமியில் கடகடவென்றும், பிரத்தியக்ஷத்தில் அறியப்படுவதாகும்,
அன்றியும் பேரி முதலிய பற்றுக் கோட்டிலும் சப்தம் அறியப்படுகின்றது. இவ்விஷயம் நம்மால் மிருகேந்திர
விருத்தி தீபிகையில் விரிவாய்க் கூறப்பட்டிருத்தலால் விரிவை அவ்விடத்திற் காண்க (3)
(அ--கை) இந்தப் பூதங்கள் நம் போன்றவர்களின் வெளி இந்திரியங்களான கண் முதலியவற்றால்
அறியப்படும் உருவ முதலிய குணங்களையுடையதா யிருக்கின்றமையால் கடம் முதலியன போல
இவற்றிற்கும் காரணங்கள் முன்னிருத்தல் வேண்டும். அக்காரணங்களே ஐந்து தன்மாத்திரைகளாகச்
சித்தித்தன என்று கூறுகின்றார்.
(4) அந்தப் பூதங்களின் குணங்களுக்குச் சமானமான குணங்களை யுடையனவாயும், அப்பூதங்களுக்குக்
காரணமாயும் அவற்றையே விருத்தி செய்கிறதாயும், தன்மாத்திரைகளிருக்கின்றன. தன்மாத்திரைகளைவிடப்
பூதத்திற்கு விசேஷம் உண்டு . தன் மாத்திரைகள் விசேஷமற்றன என்பதாம்.
தன்மாத்திரைகளாவன, பூதங்களின் குணங்களுக்குச் சமானமான குணங்களையுடையன.
அப்பூதங்களுக்கு முதற் காரணமாயும், அவற்றை விருத்தி செய்வனவாயும் இருக்கின்றன.
இருக்கின்றன வென்னும் வினைச்சொல் மூலத்திலில்லை . சேர்த்துக்கொள்ளப்பட்டது. அவ்வாறே
செய்யப்படாததைச் செய்வதும் செய்யப்பட்டதை விருத்தி செய்வதும் முதற் காரணத்தின் தொழிலென்று
பெரியோர்களுங் கூறுகின்றமை காண்க. ஆதலால், கந்த முதல் ஐந்து குண ரூபமான கந்த தன்மாத்திரை
பூமிக்குக் காரணம். இரச முதல் நான்கு குண ரூபமான இரச தன்மாத்திரை ஜலத்திற்குக் காரணம்.
இவ்வாறே ஏனையவும் கண்டுகொள்க. இதனால் இந்தத் தன் மாத்திரைகளைப் பரமாணு ரூபங்களென்று
கூறும் தார்க்கிகர்கள் ஒதுக்கப்பட்டனர்.
எதனாலெனின்? அந்தப் பரமாணுக்கள் அசேதனமாயும் அநேகமாயும் வடிவுடைப் பொருளாயும்
இருத்தலால், கட முதலியன போலவும் தூளி முதலியன போலவும் காரியத் தன்மையுடைமையில்
பிறழ்ச்சியடையாது காரியமாகவே இருத்தலாலென்க. அவர்களால் கொள்ளப்படும் பரமாணுக்கள்
முதற்காரண மாகாமையினாற்றான் நாம் தன்மாத்திரை வாயிலாக மாயையே முதற் காரணமென்று
சொல்லப் போகின்றோம்**
** பூதங்கட்கு முதற்காரணம் பரமாணுக்களென்பது தார்க்கிகர் கொள்கை. தன்மாத்திரை காரணமென்பது
சித்தாந்தம். ஆதலால், தன்மாத்திரைகளைப் பரமாணு ரூபமென்றனர் தார்க்கிகர். பரமாணுக்களிடத்துக்
காரியத்தன்மை காணப்படலால் முதற்காரணமாதல் பொருந்தாதென மறுக்கப்பட்டது. தன்மாத்திரையும்
காரியமாதலால் இடைப்பட்ட காரணமேயன்றி முதற்காரணமாதலில்லை , மேலான முதற்காரணம் மாயையேயாம்.
அவ்வாறாயின் தன்மாத்திரைகளும் பூதங்களும் சமானமான குணமுடையனவா யிருத்தலால்,
இவ்விரண்டிற்கும் வேற்றுமை யென்னையென்னும் கேள்விக்கு விடை சுலோகத்தின் பிற்பகுதியால்
கூறுகின்றார். எவ்வாறெனின், பூமி முதலிய பூதங்களின் குணங்களான கந்த முதலியன, மேலே கூறப்பட்டவாறு
வெண்மை, கருமை, நறுநாற்றம், தீநாற்றம் முதலிய பிரிவுகளுடன் கூடினதாயும், அது பற்றி வெளிப்பட்டுத்
தோன்றுவனவாயும் அறியப்படுகின்றனவோ, அவ்வாறு அப்பூதங்களுக்குக் காரணமான தன்மாத்திரைகளிடத்து
அறியப்படுதலில்லை. ஆதலால் சூக்குமமான குணங்களோடு கூடியிருக்கும் சூக்குமமான தன்மாத்திரைகளைக்
காட்டிலும், பூதங்களுக்கு அக்குணங்கள் தூலமாயும் வெளிப்படையாயும் காணப்படுதல் விசேஷம் என்றவாறாம்.
ஆதலினாற்றான் குணங்கள் வெளிப்படாமல் தன்மாத்திரமாகவே யிருத்தல்பற்றித் தன் மாத்திரையென்னும்
பெயரும் வந்தது. அவ்வாறே நூல்களிலும் விசேடணத்துடன் கூடாத குணங்களே, தன்மாத்திரையென்னும்
சொல்லால் வழங்கப்படுகின்றன என்று கூறப்பட்டிருத்தல் காண்க. (4)
(அ--கை). பின்னர் இந்தப் பூதங்களும் தன்மாத்திரைகளும் காரியமென்னும் சொல்லால் சொல்லத்
தகுந்தவை யென்றும் இந்திரியங்களுக்கு ஆதாரமென்றும் கூறுகின்றார்.
(5) இந்தப் பத்துக் காரியங்களான பூதங்களும் தன்மாத்திரைகளும் இந்திரியங்களுடன் சேர்ந்து
தொழிற்படுகின்றன இந்திரியங்களோவெனில், வியாபகமா யில்லாமையால் , இப்பத்துக் காரியங்களை
யாதாரமாகக் கொண்டு தொழிற்படுகின்றன என்பதாம்.
இந்தப் பூதங்களும் தன்மாத்திரைகளும் தூலரூபமாயும் சூக்கும ரூபமாயும் இந்திரியங்களுக்கு
ஆதாரங்களாயிருக்கின்றன என்று மதங்கத்திற் கூறப்பட்டிருக்கின்றது. தன் மாத்திரைகள் கடத்தைப்போலவும்,
பூதங்கள் அதன் மேலே பூசப்படும் பூச்சுப்போலவும் ஆகுமென்றும் மதங்கத்திற் கூறப்பட்டிருத்தல் காண்க. (5)
(அ--கை.) பின்னர்க் கன்மேந்திரியங்கள் உண்டென்று கூறுகின்றார்.
6. சொல்லுதல், வாங்குதல், மலம் நீக்குதல், இன்பமனுபவித்தல், செல்லுதல், ஆகிய இந்தத்
தொழில்களில் கன்மேந்திரியங்கள் சாதனங்களாகின்றன. செவி, தோல், கண் , நா, நாசி, என்னுமிவைகள்
ஞானேந்திரியங்களாகும் என்பதாம்.
கன்மேந்திரியங்கள் வாய், கை, ஆசனம், குறி, கால் என்னும் பெயருடையன. வாய் முதலிய
கன்மேந்திரியங்கள் சொல்லுதல் முதலிய காரியங்களில் முறையே சாதனங்களாகச் சித்தித்தனவென்பது
கருத்து. ஆதலால், கன்மேந்திரியங்களின் இன்மையைக்கூறும் தார்க்கிகர் ஒதுக்கப்பட்டனர். எதனாலெனின்,
காரணமின்றிக் காரியமுண்டாகா தாதலினென்க.
கொடி போன்ற புருவங்களின் அசைவுகளும் தொழிலாகையால் அத்தொழில்களை நிகழ்த்தும்
கருவிகளும் கன்மேந்திரியமாதல்பற்றிக் கன்மேந்திரியங்கள் அனந்தமெனக் கொள்வோ மெனில்,
அது பொருந்தாது. எதனாலெனின், தோலிந்திரியம் போலக் கன்மேந்திரியங்களும் உடல் முழுதும்
நிறைந்திருப்பன வாதலின், புருவம் அசைதல் முதலியன, கை முதலிய கன்மேந்திரியங்களின்
தொழிலேயாகு மாதலாலென்க. அந்தந்த இந்திரிய சக்திகள், அந்தந்தத் தானங்களில் விசேஷமாய்
அதிட்டித்துத் தொழிலைச் செய்தலால், அந்தந்தத் தானங்களின் பெயர்கள் இந்திரியங்களுக்காயின .
ஆதலால் ஒருவிதமான விரோதமுமில்லை என்க.
சுலோகத்தின் பிற்பகுதியால் ஞானேந்திரியங்கள் இவையென்று கூறுகின்றார். மூலத்தில்
கூறப்பட்ட பரிசனம் என்னும் பதமும், தரிசனம் என்னும் பதமும், பரிசத்தையும், பார்வையையும்
குறிக்குமேனும், எதனால் பரிசிக்கப்படுகிறதோ எதனால் பார்க்கப்படுகிறதோ என்னும்
கரணார்ததங்கொண்டு தோலிந்திரியத்தையும் கண்ணிந்திரியத்தையும் குறிக்கின்றன
வென்றறிந்து கொள்க. (6)
(அ--கை.) எவ்வகைத் தொழில்களால் இந்த ஞானேந்திரியங்கள் சித்தித்தன வென்பதைப்
பற்றிக் கூறுகின்றார்
(7--8) இந்த ஞனேந்திரியங்களுக்குத் தனித்தனியே சத்தம் முதலிய விஷயங்களைக் கொள்ளுதல்
தொழில். இவ்வாறு வெளியிந்திரியங்கள் பத்து விதங்களாக அறியத் தகுந்தன. இவற்றைக் காட்டிலும்
வேறாயுள்ள அந்தக்கரண மென்னும் உட்கருவியானது சித்தம், அகங்காரம், புத்தி, என்னும் மூன்றுவிதமாய்க்
கூறத் தகுந்ததாயும், முறையே சங்கற்ப மென்னும் இச்சை, பிரயத்தன மென்னும் ஸம்ரம்பம், போதம்
என்னுமிவற்றைத் தொழிலாகவுடையதாயு மிருக்கின்றது . அந்தக்கரணம், வெளியிந்திரியங்கள்,
பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள் என்னுமிவை அகங்காரத்தினின்று தோன்றுகின்றன என்பதாம்.
இந்தக்காது முதலிய ஞானேந்திரியங்களுக்கு முறையே சத்தம், பரிசம், உருவம், இரசம்,
கந்தமென்னும் ஐந்து விஷயங்களின் அறிவு தனித்தனியே தொழிலாமென்க. இந்த ஐந்து
ஞானேந்திரியங்களையின்றிச் சத்தம் முதலிய விஷயங்களினறிவு நிகழ்தல் சம்பவியாதாகையால்
என்னும் அருத்தாபத்திப் பிரமாணத்தால், இவ்வைந்தும் சித்தித்தன வென்பது கருத்து. இவ்வாறு
வெளியிந்திரியம் பத்துவிதமாய் அறியத் தகுந்தது. அறியத்தகுந்தது என்னும் வினைச்சொல்
மூலத்திலில்லை, சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இனி உட்கருவியின் சித்தியைக் கூறுகின்றார். வெளியிந்திரியங்களைக் காட்டிலும்
வேறான உள்ளிந்திரியமானது மனம், புத்தி, அகங்காரம், என்னும் பெயருடன் மூன்று விதமாகும் .
இவற்றிற்கு முறையே இச்சை, சம்ரம்பம், போதம், தொழில்களென்று கூறுகின்றார். அவற்றுள்,
இச்சை யென்னும் சொல்லால் சங்கற்பம் என்னும் பெயருடையதாயும் ஒரே மனதாயிருத்தல்
என்னும் மறு பெயருடையதாயுமிருக்கும் சிந்தனை கூறப்படுகின்றது. அந்தச் சங்கற்பமும்
ஞானக்கிரியா ரூபமாயிருத்தலால் புத்தியின் காரியமான கட முதலியவற்றின் அறிவு
அகங்காரத்தின் காரியமான நானென்று தன்னை விஷயமாக உடைய அறிவு ஆகிய
இவற்றை விட வேறானது. எதனாலெனில், புத்தியின் காரியமும் அகங்காரத்தின் காரியமும்
ஞான ரூபங்களேயன்றி ஞானக்கிரியா ரூபங்களில்லையாதலா லென்க.
ஆதலால், ஞானக்கிரியா ரூபமான இச்சங்கற்பம் எதன் காரியமோ, அதுவே மனமாகும்
என மனம் சித்தித்தது. அந்த மனமானது, உள்ளே சங்கற்பத்தினாலும் வெளியே இந்திரியங்களை
அதிட்டித்தலினாலும் இரண்டு விதமாக அதிகாரியாயிருக்கின்றதென்று மதங்கத்திற் கூறப்பட்டிருக்கின்றது.
அது வருமாறு :- மனமானது வெளியில் இந்திரியங்களுடன் கலந்து அவ்விந்திரியங்களுக்குச்
சாமர்த்தியத்தையும், உள்ளே சங்கற்ப ரூபமான இருப்பையும் செய்கின்றது. ஆதலால் அந்த
மனம் இரண்டு விதமான அதிகாரமுடையதாய் அனுபவிப்பவனுடைய அனுபவத்தை
நிகழ்த்துகின்றது என்பதாம்.
மிருகேந்திரத்திலும் தேவ என்னும் பதத்திற்குப் பொருளாயுள்ள இந்திரியங்களைத்
தொழிற்படச் செய்வதாயும், விரைவில் செல்வதாயும் சங்கற்பத்தைக் குணமாகவுடையதாயும்
மனமிருக்கின்றதென்று கூறப்பட்டிருக்கின்றது. அவ்விடத்தில் தேவ என்னும் சொல்லிற்குப்
பிரகாசம் செய்வது என்பது பொருள். அப்பொருள்கொண்டு இந்திரியங்கள் கூறப்பட்டன .
இந்த மனமானது இந்திரியங்களை ஏவுகின்றதென்பதும் அதிலேயே நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.
ஆன்மாவிற்கு இந்திரியம், விஷயம், ஆகிய இவற்றொடு சம்பந்தமிருப்பினும் எப்பொழுதும்
தொழிற்பாடு காணப்படாமையால் தொழிற்படச் செய்யும் கருவியொன்றிருத்தல் வேண்டுமென்பது
யுத்தியினாலும் சித்திக்கின்றது என நிச்சயிக்கப்பட்டிருத்தல் காண்க.
ஆதலால், வியாபக மில்லாமையாலும், ஒவ்வொரு ஆன்மாக்கள் தோறும் இன்றியமையாதிருப்பது
பற்றி அநேகமாதலாலும் இந்த மனம் காரியமாகும்.
அவ்வாறே சம்ரம்பமென்பது முயற்சியாகும். இது அகங்காரத்தின்தொழில். சம்ரம்பம்
அகங்காரத்தின் தொழிலென்று பெரியோர்களும் கூறியிருக்கின்றனர். இது, போதமென்னும் புத்தி
விருத்தியான நிச்சயமானது ஞான சக்தியைப் பற்றி யுண்டாவதுபோல் கிரியா சக்தியைப்பற்றி
யுண்டாகின்றது. இந்த சம்ரம்பமே சரீரத்தினுள்ளிருக்கும் பிராணன் அபானன், முதலிய வாயுக்களின்
தொழிற்குக் காரணம். அவ்வாறே வாயுவுக்கு செலுத்துதல், இழுத்தல், முதலிய தொழில்கள்
முயற்சி யென்னும் சம்ரம்பமில்லையாயின் எவ்வாறு சித்திக்குமென்று பெரியோர்களும்
கூறுகின்றனர். அன்றியும் கணந்தோறும் அநேக ரூபங்களான அறிவிற்கு விஷயமான கட
முதலியவற்றின் அறிவு ரூபமான புத்தியின் தொழிலைக் காட்டிலும் வேறாயும், ஒரேவிதமாயும்
உள்ள அறிபவனை விஷயமாகக் கொண்ட நான் என்னும் அறிவிற்கு எது காரணமோ, அதுவே
அகங்காரமெனச் சித்தித்தது.
அறிபவனை விஷயமாகக் கொண்ட நானென்னும் அறிவானது ஏனைய தத்துவங்களால்
உண்டாகட்டுமெனில், அது பொருந்தாது. அந்தந்த தத்துவங்கள் அதனதன் காரியங்களை உண்டுபண்ணி
ஒழிவையடைந் திருக்கின்றபடியால், தன் தன் காரியத்தைக் காட்டிலும் வேறான ஒரு காரியத்தை
உண்டுபண்ணாவென்க. உண்டுபண்ணுமென்று கொள்ளின் ஒரே தத்துவத்தினாலேயே சகல
காரியங்களு முண்டுபண்ணப்படு மாதலால் அநேக தத்துவங்களைக் கொள்ளுதல் வீணாக முடியும்.
இவ்வாறே அறிவிற்கு விஷயங்களான கடம் முதலியவற்றின் நிச்சயரூபமான போதமானது
புத்தியின் தொழிலாகும். இவ்விடத்தில் போதமென்பது, அத்தியவசாயம் , அனத்தியவசாயம்
என இரண்டு விதமாகும். அவற்றுள், இரண்டாவதான அனத்தியவசாயமென்பது எப்பொழுதும்
அறிபவனுடைய சொரூபமாகவே பிரகாசிக்கின்ற ஆத்ம சுபாவமே. முதலாவதான அத்தியவசாயமென்பது
உற்பத்தியுடன் கூடியிருத்தல் பற்றி அநித்தியமாய்த் தோன்றுகிறபடியால், அது ஆன்மாவிற்குச் சுபாவமாகாது;
நித்தியப் பொருளுக்கு அநித்தியமான சுபாவம் கொள்ளக்கூடாதாதலினென்க. இந்த அத்தியவசாயம்
நித்தியமாய் அனுபவிக்கப்படவில்லை, ஆதலால் இது எதன் சுபாவமோ அதுவே புத்தி தத்துவமெனச்
சித்தித்தது. அவ்வாறே ஒரு பொருளைப் பார்த்த மாத்திரத்தில் நிருவிகற்பஞானம் முதலில் உண்டாகின்றது.
அந்த நிருவிகற்பஞானம், பாலன் ஊமை முதலியோருடைய அறிவுக்குச் சமானமாய்ப் பொருள் மாத்திரத்தை
விஷயமாகக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னர், பொருளின் தர்மங்களான சாதி உருவம் முதலியவற்றுடன்
கூடி அப்பொருள் புத்தியாலறியப்படுகின்றது.
அந்த அறிவும் பிரத்தியக்ஷ அறிவென்று கொள்ளப்பட்டிருக்கின்றதெனப் பெரியோர்களும்
கூறியிருக்கின்றனர். அன்றியும், தர்மம் முதலிய குணங்களுக்குப் பற்றுக் கோடாகப் புத்தியென்னும்
தத்துவம் சித்தித்ததென்று நூல்களிற் கூறப்படுகின்றது. எவ்வாறெனில், புத்தியின் குணங்களான
தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் என்னுமிவை சாத்துவித தர்மங்கள். இவற்றிற்கு மாறான
அதர்மம் , அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் என்னுமிவற்றுள் அவைராக்கியமென்னும்
அராகம் நீங்கிய ஏனைய மூன்றும் தாமச தர்மங்கள் ** இவ்வாறு கூறப்படுகின்றமை காண்க.
இவ்விடத்தில் இது கருத்தாகும்.
**அராகம், இராசத தர்மமென்பது குறிப்பெச்சம்.
அது வருமாறு:-இதம் அகித ரூபமான கன்மமானது தொழில் ரூபமாதலின் செய்த அப்பொழுதே
நாசமடையும். ஆதலால், காரியமான பலனுண்டாகும் பொழுது காரணமான கன்மம் இல்லாமையின்
நெடுநாட்சென்று அக்கன்மங்களுக்குப் பலன்களைக் கூறும் நூல்கள் பொருத்தமில்லாதிருத்தலால் அந்நூல்கள்
பொருத்தமுடையன என்று காட்டுதற்கு, கன்மங்கள் நசித்தாலும் அவற்றாலுண்டுபண்ணப்பட்ட
புண்ணியபாவங்கள் நசியாமலிருந்து நெடுநாட் சென்று பலனைத் தருகின்றன என்று, புண்ணிய
பாவ ரூபமான கன்மங்களின் வாசனை நிச்சயிக்கப்படுகிறது.
ஆன்மா விகாரமற்ற பொருளாதலால் அந்தப் புண்ணியபாவ ரூபமான கன்மங்களின்
வாசனையை ஆன்மாவினிடத்தில் கொள்ளுதல் பொருந்தாது. உழவு முதலிய தொழில்களின்
வாசனை ஆன்மாவிடத்திற் காணப்படவில்லை. சடப்பொருளிலேயே காணப்படுகின்றது.
ஆதலால் எந்தச் சடப்பொருளில் புண்ணிய பாவங்கள் வாசனாரூபமாயிருக்கின்றனவோ,
அந்தப் பொருளே தர்மம் முதலிய எண் குணங்களை உடைய புத்திதத்துவமாமென்க.
இவ்வாறே ஞான முதலியவற்றின் வாசனையிலும் கொள்ளத் தகுந்தது. அந்த எட்டும் சித்தி
முதலிய வேறுபாட்டால் முந்நூறு பேதங்களாகின்றன என்றும் வேறு நூல்களிற் கூறப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு இந்திரிய வர்க்கத்தைச் சாதித்து அவற்றுள் எந்த இந்திரியம் எதிலிருந்து உண்டாகின்ற
தென்பதைப்பற்றிக் கூறுகின்றார். மேலே கூறப்பட்டவற்றுள், மனதும் ஞானேந்திரியங்களும் தைசதமென்னும்
பெயருடைய சாத்துவித அகங்காரத்திலிருந்தும் கன்மேந்திரியங்கள் வைகாரிகமென்னும் பெயருடைய
இராசத அகங்காரத்திலிருந்தும், பஞ்சபூதங்களுக்குக் காரணமான தன் மாத்திரைகள் பூதாதிகமென்னும்
பெயருடைய தாமத அகங்காரத்திலிருந்தும் உண்டாகின்றன.
அவ்வாறே செவி தோல் கண் நா மூக்கு என்னுமிந்த ஐந்து ஞானேந்திரியங்களும்
மனதும் பிரகாச ரூபமாதலால் சாத்துவிதங்கள். இவற்றிற்குக் காரணமான அகங்காரமும்
சாத்தவிதமெனப்படும். அதற்குத் தைசசமென்பது பெயர். வாக்கு, கை, கால், ஆசனம், குறி
என்னும் இவ்வைந்து கன்மேந்திரியங்களும் தொழிலை யனுசரித்துள்ளன. ஆதலால்
இராசதங்கள். இவற்றிற்குக் காரணமாகிய அகங்காரமும் இராசதமே. அதற்கு வைகாரிகமென்பது
பெயர். சத்தம் ,பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னுமிவ்வைந்தும் தத்தம் விசேடங்களைக்
காட்டாமல் சூக்குமமாய் ஐந்து பூதங்களுக்கு முதற்காரணமாக மாத்திரமிருத்தலால், தன்மாத்திரைகள்
என்னும் பெயரையுடையன. இத்தன்மாத்திரைகள் பிரகாசத்தைச் செய்யும் ஞானேந்திரியங்களினும்
தொழிற்செய்யும் கன்மேந்திரியங்களினும் வேறாய்ப் பிரகாசிக்கப்படுவதாயிருத்தலால் தாமதங்கள்.
இவற்றிற்குக் காரணமாகிய அகங்காரமும் தாமதமே. அதற்குப் பூதாதிகமென்பது பெயர் என்று
மிருகேந்திரத்திலும் கூறப்பட்டிருத்தல் காண்க.
ஆகலால் ஞானேந்திரியத்தின் வழியாய் தைசத அகங்காரத்தினால் ஆன்மாவின்
ஞானசத்தியானது பிரகாசம் செய்யப்படுகிறது. கன்மேந்திரியத்தின் வழியாய் வைகாரிக அகங்காரத்தால்
ஆன்மாவின் கிரியாசத்தியானது பிரகாசம் செய்யப் படுகிறது. ஞானசத்தியை நோக்கக் கிரியாசத்தி
மலினமா யிருத்தலால் வைகாரிக அகங்காரத்தால் பிரகாசம் செய்யப் பட்டது.
இந்த அகங்காரங்களுக்கு, சாத்துவிதம் இராசதம் தாமதம் என்னும் பெயர், சத்துவம் முதலிய
மூன்று குணங்களின் மிகுதிப்பாட்டால் வந்தன. 'கலப்பில்லாதது பரிணமிக்காது'' என்னும் நியாயத்தால்
ஒரு பொருள் தனியாயிருந்து காரணமாகாது ஆதலால், இந்த அகங்காரங்கள் குணங்களோடு கூடிக்
காரணமாயினமை காண்க. (7-8)
(9) அகங்காரம் எதிலிருந்து உற்பத்தி யாகுமெனில் புத்தியிலிருந்து உற்பத்தியாம். புத்தி,
முக்குணத்திலிருந்து உற்பத்தியாகும். அக்குணங்களோ, சாத்துவிதம் இராசதம் தாமதம் என்னும்
மூன்று பிரிவுகளாய், முறையே பிரகாசம் வியாபாரம் நியமம் என்னுமிவற்றைத் தொழில்களாக
உடையன என்பதாம் .
அகங்காரம், புத்தி தத்துவத்திலிருந்து உண்டாகின்றது. புத்தி தத்துவம் குண தத்துவத்திலிருந்து
உண்டாகின்றது. அவ்வாறே, பிரகிருதியிலிருந்து மகத்தத்துவமும், அதிலிருந்து அகங்கார தத்துவமும்,
பின்னர்ப் பதினாறு விகாரங்களும் உண்டாகின்றன என்று சாங்கிய காரிகையிலும் கூறப்பட்டிருத்தல் காண்க
வைசேடிகர்கள், செவி முதலிய இந்திரியங்கள் ஓசை முதலிய இன்றியமையாத விஷயங்களை
உடையனவாயிருத்தல் பற்றி, அந்தச் செவி முதலியவற்றிற்கு ஓசை முதலிய இன்றியமையாத
குணங்களையுடைய ஆகாயம் முதலிய பூதங்கள் முதற்காரணமெனக் கூறுகின்றனர்; அது பொருந்தாது.
எதனாலெனின், கண் முதலிய இந்திரியங்கள் தமக்கு விஷயமான உருவத்தைக் குணமாகக்கொண்ட
அக்கினியை யறிவது போல், அதனின் வேறான ஏனைய பூதங்களையும், அப்பூதங்களிலிருக்கும்
உருவம் முதலிய குணங்களையும், அப்பூதங்களின் சாதிகளையும் அறிகின்றமையால், என்க.
அவ்வாறே, இன்றியமையாத விஷயங்களோடு கூடியிருத்தல்பற்றி இந்திரியங்கள் பூதங்களை
முதற்காரணமாக உடையனவென்று கொண்டால், ஆன்மாக்களுக்கு இந்திரியங்களால் பூதங்களின்
கர்மம், சாதி, சமவாயம் ஆகிய இவற்றினறிவு உண்டாதல் கூடாதென்று போக காரிகையிலும்
கூறப்பட்டிருத்தல் காண்க.
அவ்வாறாயின், அகங்காரமென்னும் காரணம் ஒன்றாயிருத்தலால், காரியமான இந்திரியங்களில்
வேற்றுமை எவ்வாறு கூடுமெனில் காரணமான கரும்பு ஒன்றாயிருந்தும், அதின் காரியமான வெல்லம்,
சர்க்கரை முதலியவற்றின் உற்பத்தி வேறுபாட்டால் வேற்றுமை காணப்படுமாறு போல், இந்திரியங்களிலும்
வேற்றுமை கூடுமென்க.
பின்னர், பிற்பகுதியால் குணதத்துவத்தைக் கூறுகின்றார். பிரகாசம் பிரவிருத்தி நியமம் என்னுமிவை,
சாத்துவிதம், இராசதம், தாமதம் என்னும் இம் முக்குணங்களுக்கு முறையே தொழில்களாகும். இந்தச் சாத்துவிதம்
முதலிய முக்குணங்களும் சூக்கும தேகத்தின் வழியாய் மாயா காரியங்களனைத்திலும் வியாபகமாயிருக்கின்றன.
பிரகாசம் பிரவிருத்தி நியமம், என்பன உபலக்ஷணத்தால் பிரதானமல்லாத ஏனைய குண விருத்திகளையும்
சேர்த்துக்கொள்ளும்; அஃதெவ்வாறெனில் மனோபலம் சரீரபலம் என்னுமிவை, சாத்துவித குணத்தின் தொழில்கள்.
குரூரனாயிருத்தல் சூரனாயிருத்தல் முதலியவை இராசதகுணத்தின் தொழில்கள். சந்தோஷமில்லாதிருத்தல்
மந்தமாயிருத்தல் முதலியவை தாமதகுணத்தின் தொழில்கள். இவ்வாறு மதங்கத்திற் கூறப்பட்டிருக்கின்றன (9)
(அ--கை) குணங்களே பிரகிருதியென்று சாங்கியர் கூறுவது பொருந்தாதென்று கூறுகின்றார்.
(10) எந்தக் குணங்களுக்கு அவ்வியத்தத்திலிருந்தே உற்பத்தி சம்பவிக்கின்றதோ அந்தக் குணங்கள்
இந்த நூலில் மூன்று பிரிவுகளாகின்றன . மண் முதலியவற்றின் அவயவங்களான கடம் முதலியன,
மண் முதலிய ஒரே பற்றுக்கோட்டில் ஒடுங்கியிருத்தல் போல, சாத்துவிதம் முதலிய குணங்களுக்கும்
ஒரே பற்றுக்கோட்டில் ஒடுக்கமென்பது அவசியம் அறியத் தகுந்தது என்பதாம்.
எந்தக் காரணத்தால் குணங்கள், சடமாயும் அநேகமாயுமிருத்தல்பற்றி, ஒருகாரணத்தை
முன்னுடையதாயிருக்கின்றனவோ, அந்தக்காரணத்தால் அந்தக்குணங்கள் அவ்வியத்தத்திலிருந்தே
உண்டாகின்றன என்பது கருத்து. மூல சுலோகத்தில் குணத்தோடு சேர்த்துக் கூறப்பட்ட ஏவ யென்னும்
ஏகாரத்தை அவ்வியத்தத்தோடு சேர்த்து உரைகொள்ளப்பட்டது.
மூலத்தின் நான்காம் பாதத்தால் இக்குணங்கள் பிரகிருதியின் காரியமென்பதை வெளிப்படுத்துகின்றார்.
பூமி முதலியவற்றின் அவயவங்களான கடம் முதலிய உருவங்களுக்கு எவ்வாறு பூமி யென்னும் ஒரே
பற்றுக்கோட்டில் ஒடுக்கம் காணப்படுகின்றதோ, அவ்வாறே, சாத்துவிதம் முதலிய குணங்களுக்கும் யாதாவதொரு
பற்றுக்கோட்டில் ஒடுக்கம் அவசியமறியத் தகுந்தது. அந்தக் குணங்களின் ஒடுக்கத்திற்கு எது பற்றுக்கோடா
யிருக்கின்றதோ, அதுவே அவ்வியத்தமென அவ்வியத்தம் சித்தித்தது. அவ்வாறே மிருகேந்திரத்திலும் புருட தத்துவ
முண்டான பின்னர், தன்மாத்திரை ஐந்து, மகத்தத்துவம், அகங்காரம் இரண்டு, ஆக இவ்வேழு தத்துவத்திற்கும்
முதற்காரணமான அவ்வியத்த தத்துவத்தைக் கலா தத்துவத்திலிருந்து
தோற்றுவித்தார் என்று கூறப்பட்டிருத்தல் காண்க. (10)
(அ--கை) பின்னர் அராக தத்துவ முண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.
(11) எதனாலுண்டுபண்ணப்பட்ட ஆசையையுடைய மனிதருக்கு, போக்கியப் பொருள்களில் பிரவிருத்தி
உண்டாகின்றதோ, அதுவே, இந்த நூலில் அராக தத்துவமெனக் கூறப்பட்டிருக்கின்றது. விசேடமான போக்கியப்
பொருள்களால் ஆசையுண்டாகுமெனில், உலகத்தில் ஆசையற்ற வைராக்யமுடையார் காணப்படார் என்பதாம்.
மதங்கம் முதலிய ஆகமங்களில், பிரகிருதி தத்துவம் அராக தத்துவமென்னும் இவற்றினிடையே
புருட தத்துவம் சொல்லப்படுகின்றது. அவ்வாறே பிரகிருதி தத்துவம் கூறிய பின்னர் புருட தத்துவத்தைக்
கூற வேண்டுவதாயிருக்க, அதனைக் கூறாது, அராக தத்துவத்தைக் கூறியது எவ்வாறு பொருந்துமெனில்
அஃதுண்மையே ஆயினும், புருடன் சேதனனாயும் நித்தியனாயும் இருப்பதால், அத்துவாவாதல் கூடாது;
கலை முதலிய ஐந்து **கஞ்சுகமுடைய ஆன்மாவே போகத்தை யனுபவித்தற்குரியது ஆதலால்
அந்தப்போக்தாவாகிய ஆன்மாவிற்கு, அநாத்மப்பொருள்களில் ஆத்மாபிமானத்தை உண்டு பண்ணுகின்ற
புருடதத்துவ மென்னும் மலத்தோடு சேர்க்கையிருத்தல்பற்றி, அந்தப் புருடத்துவ மலநிவிருத்தியின்
பொருட்டுத் தீக்கையில் சுத்தி செய்வதற்காகப் பிரகிருதி தத்துவத்திற்கு முன் புருடதத்துவமாக ஒன்று
ஆகமங்களில் கூறப் பட்டிருக்கின்றது. ஆதலால், இந் நூலாசிரியரால் புருடதத்துவக் கூற்று விலக்கப்பட்டது.
ஆன்மாவின் சொரூபத்தை மாயா தத்துவத்திற்குப் பின்னர்க் கூறப்போகின்றார்.
**கஞ்சுகம் - சட்டை .
எந்தத் தத்துவத்தால் உண்டு பண்ணப்பட்ட ஆசையையுடைய புருடனுக்குப் போக்கியப்
பொருள்களைக் கிரகிப்பதற்குப் பிரவிருத்தி உண்டாகிறதோ , அந்தத் தத்துவம் இந்தச் சைவசாத்திரத்தில்
அராகமென்று அறியத் தகுந்தது. இதனால் ஆசையென்னும் காரியத்தைச் செய்வதற்காக
அராகமென்னும் தத்துவம் சித்தித்த தென்பது கருத்து.
அவ்வாறாயின், வைராக்கிய மின்மையென்னும் புத்தியின் தர்மமே ஆசையை யுண்டு பண்ணுதற்குக்
காரணமென்று சாங்கியர் கூறுகின்றனரேயெனில், அது பொருந்தாது. எதனாலெனில், வைராக்கியமின்மையென்னும்
புத்திதர்மம் வாசனா ரூபமாதலால், அஃது ஒருவிதமான காரியத்தையும் நிகழ்த்தாது. அவ்வாசனையும் காரியத்தை
நிகழ்த்துமெனக் கொள்ளின், புத்தியில் எப்பொழுதும் அநேக வாசனைகளின் சேர்க்கை இருத்தலால், புருடனுக்கு
ஒரே காலத்தில் மாறுபட்ட அநேக ஞானங்கள் உண்டாகிக் கெடுதல் சம்பவிக்கு மாதலாலென்க.
இனி, பிரத்தியய ரூபமான புத்தி தர்மத்தை இச்சைக்குக் காரணமாகக் கொள்ளின், அது
போக்கிய ரூபமாயிருத்தலால் அதுவும் பொருந்தாதென்க.
அவ்வாறாயின், பொருள்களிலிருக்கும் அழகு முதலிய குணங்களே இச்சைக்குக் காரணமாகட்டுமெனில்,
பொருள்களின் எதிர்முக மாத்திரையினாலேயே அனைவருக்கும் ஆசையுண்டாகுமாதலின், ஆசையற்ற வைராக்கிய
சம்பந்தன் இல்லையென முடியும். வைராக்கியம் நிறைந்த பெரியோர்கள் காணப் படுகின்றமையால், (திருத்:சம்பந்நன்/சம்பந்தன்)
அருத்தாபத்திப் பிரமாணத்தால், அறிபவனான ஆன்மாவினிடத்தில் ஆசைக்குக் காரணமான அராகமென்னும்
தத்துவத்தை ஒத்துக்கொள்ளவேண்டுவது அவசியமே யென்க. இவ்விஷயத்தையே மூலத்தின்
பிற்பகுதியால் கூறுகின்றார்.
அவ்வாறாயின் புருடர்களாற் செய்யப்பட்ட நல்வினை தீவினைகளே ஆசைக்குக் காரணமெனக்
கொள்வோமெனில், நல்வினை தீவினையென்னும் கன்மமானது, சுகதுக்க ரூபமான பலன்களைத்தந்து,
அதனோடு ஒழிவையடைகின்றமையால், அதுவும் பொருந்தாது. அன்றியும், கன்மம் ஒன்றாயிருந்து
எல்லாத் தத்துவங்களுக்கும் காரணமாதலின், அநேக தத்துவங்களைக் கூறியதும் வீணாகும் .
அவ்வாறாயின் மாயையினுடைய மோகத் தன்மையே அராகமெனக் கூறுவோமெனில்,
மாயையும் தான் நேரே மோகத்தைச் செய்யாது; காரியங்களின் வாயிலாகவே மோகத்தைச்
செய்கின்றதாதலால் அதுவும் பொருந்தாது. (11)
(அ-கை) ஆசையற்ற விரக்தன் பிரத்தியக்ஷத்தால் சித்தித்திருக்கிறானென்று கூறுகின்றார்
(12) யாதொரு மகளிர் முதலிய பொருள்களில் ஆசையானது மக்களுக்குண்டாகின்றதோ,
அந்த மகளிர் முதலிய பொருள்களின் நெருங்குதலிருந்தும், பெரியோர்களிடத்தில் ஆசை காணப்படவில்லை;
ஆதலால், விசேடமுடைய ஆசையற்ற விரக்தன் இல்லையென்று சொல்லுவது கூடாது என்பதாம்.
எந்தக் காரணத்தால் மகளிர் முதலிய பொருள்களின் நெருங்குதலிருந்தும் ஆசை காணப்படவில்லையோ,
அந்தக் காரணத்தால் விசேடத்துடன் கூடிய ஆசையற்ற விரக்தன் பிரத்தியக்ஷத்தால் காணப் படுகின்றமையால்,
அவனில்லை யென்றல் பொருந்தாதென்க. (12)
(அ-கை) வித்தியாதத்துவம் உண்டென்று சித்திப்பதைக் கூறுகின்றார்.
(13) புருடன் எந்தக் காரணத்தால் புத்தி முதலியவற்றைச் செலுத்தி, போக்கியத்தையும்
போக்கியப் பொருளில் போகத்தையும் செய்கின்றானோ அந்தக் கரணம் வித்தியா தத்துவமெனப்படும்.
அது மேலான சாதனமாகு மென்பதாம்.
எந்தக் கரணத்தால், புத்தி அகங்காரம் முதலிய கரண சமூகத்தைப் புருடன் ஏவுதல் செய்து
போக்கியத்தையும் அப்போக்கியப் பொருள்களில் போகத்தையும் செய்கின்றானோ, அது வித்தையென்னும்
தத்துவமாகும். இது ஆன்மாவுக்குச் சமீபமாயிருத்தலால் மேலானதென்று கூறப்படுகின்றது.
குதிரையினாலும் மார்க்கத்தினாலும் தீபத்தினாலும் செல்கின்றானென்பது போல், அநேக
சாதனங்களால் பலன் சித்தித்திருந்தாலும் வித்தையே மேலான சாதனமென்பது இதனால்
கூறப்பட்டதாகும். யாதொரு காரணத்தால் புருடன் இந்த வித்தியாதத்துவத்தினாலேயே போக்கியப்
பொருளனைத்தையு மறிகின்றானோ, அது பற்றியே மேலானதென்க. (13)
(அ-கை) இனி போக்கியமென்பது எது? போகமென்பது எது? என்னும் ஆசங்கைக்குச்
சமாதானம் கூறுகின்றார்.
(14) விடய ரூபமாயும், சுக முதலிய ரூபமாயும் உள்ள புத்தியே சுருக்கமாக போக்கியப் பொருளாகும்.
போக்கியத்துடன் சேர்ந்த அறிவின் விளக்கமே போகத்தை யனுபவிக்கும் ஆன்மாவான கர்த்தாவுக்குப்
போகமெனப் படுமென்பதாம்.
நிச்சயம் செய்யப்பட்ட மாலை சந்தனம் முதலிய விஷயங்களை யுடையதாயும், அதுபற்றியே
சுகதுக்க மோக நிச்சய ரூபமாயுமுள்ள புத்தியே புருடனுக்குச் சுருக்கமாக போக்கியப் பொருளெனப்படும்.
எதனாலெனின், அந்தப் புத்தியே நேரே போக்கியமாயிருத்தலாலென்க.
வெளி விஷயங்களோவெனின், அந்தப் புத்திக்குச் சாதனமாய் நின்று பரம்பரையாய்ப்
போக்கியங்களென்று கூறப்படுகின்றன. சித்தத்தால் அதிட்டிக்கப்பட்ட ஞானேந்திரியக் கூட்டமானது
போக்கியப் பொருளை வித்தைக்கு விடயமாகக் கொண்டுவந்து விடுகின்றது. அந்தப் பொருளைப் புருடன்
புத்தியால் நிச்சயித்து, நானென்னும் அறிவை உண்டுபண்ணுகின்ற அகங்காரத்தின் விருத்தியால்
அறிகின்றான். அவ்வாறே புத்தியால் நிச்சயம் செய்யப்பட்ட விடயத்தைப் புருடன் அறிகின்றான் என்று
பெரியோர்களும் கூறுகின்றனர்.
புத்தி முதலியன நெருங்கியும் நெருங்காமலும் இருக்கும் பொருள்களைக் கொண்டுவந்து விடுவதில்
உபயோகமாகின்றன. அப்பொருள்களின் அறிவை யுண்டுபண்ணுவதில் உபயோகமில்லை. புத்தியினால்
கொண்டுவரப்பட்ட விடயத்தை, புத்தி, அகங்காரம், இந்திரியம் என்னும் இவற்றுடன் எந்தத் தத்துவம்
ஆராய்ந் தறிகின்றதோ, அந்தத் தத்துவமே வித்தியா தத்துவமாகுமென, வித்தியா தத்துவம் சித்தித்தது.
ஆதலால், போகத்தை யனுபவிக்கும் கருத்தாவான புருடனுக்கு, சுகாதி ரூபமான புத்தியை
விடயமாகக்கொண்டு நான் சுகி நான் துக்கி யென்னும் அறிவின் தோற்றமே போகமெனப் படுமென்க.
அவ்வாறே சுவாயம்புவாகமத்திலும் இந்தப் புருடனுக்கு சுகதுக்க முதலியவற்றை விடயமாக உடைய
அறிவே போகமெனக் கூறப்பட்டிருத்தல் காண்க. ஆதலால் நிச்சயம் நினைவு, **பிரதிபை, *பிரத்தியயம்
என்ற வேறுபாட்டால் வேறு பட்ட புத்தியும் எந்தத் தத்துவத்தால் அறியப்படுகின்றதோ அந்தத் தத்துவமே
வித்தியா தத்துவமாகும். அந்த வித்தியா தத்துவமே மேலான சாதனமென்று கூறப்பட்டது. (14)
**பிரதிபை - புதிது புதிதான தோற்றம்.
*பிரத்தியயம் - புத்தி தர்மமான எட்டின் காரியங்கள்.
(அ- கை) அவ்வாறாயின், புத்தி தத்துவமே பிரகாச ரூபமாயிருத்தலால் சூரியன் முதலிய
பொருள்கள் போல், விஷயங்களையும் நிச்சயத்தால் பிரகாசம் செய்து, தன்னையும் பிரகாசம் செய்யும்.
ஆதலால் தன்னை யறிவதற்கு வித்தையென்னும் வேறொரு தத்துவத்தால் பயனில்லை யென்னும்
ஆசங்கைக்குச் சமாதானம் கூறுகின்றார்.
(15) புத்தியானது சூரியன் போல் அறிவு ரூபமாயிருந்தாலும், தன்னை விஷயமாகக் கொண்ட
அறிவிற்குத்தான் செயப்படு பொருளாயிருத்தலால் தன்னின் வேறான சாதனத்தைக் கொண்டே
தன்னையறியச் செய்தற்குச் சமர்த்தமாகின்றது என்பதாம்
புத்தியானது பிரகாசரூபமாக இருந்தபோதிலும், அறிவுக்கு விஷயமாயிருக்கும் தன்னை,
தான் கரணமாய் நின்று அறியச் செய்தற்குச் சமர்த்தமாகின்றதில்லை. எதனாலெனின், தான்
அறிவுக்கு விடயமாயிருத்தலின், கடமுதலியனபோல வெளிச் சாதனமாயிருத்தலாலென்க.
சூரியன் முதலியோர் பிரகாச ரூபராயிருந்த போதிலும், வேறோரு சாதனத்தை விரும்பாது,
தாமே தம்மை அறியச் செய்வதில்லை. கண முதலியவற்றைக் கொண்டே அறியும்படி செய்கின்றனர்.
அதுபோல, நினைவு ரூபமானபுத்தியும், தானே தன்னையறியச் செய்வதில்லை; தன்னினும் வேறான
கரணத்தைக் கொண்டே தன்னை யறியச்செய்கின்றது என, அந்தப் புத்தியை யறிவதற்குச் சாதனமாக
வித்தையென்னும் தத்துவம் சித்தித்தது. (15)
(அ-கை) அவ்வாறாயின், பிரகிருதியே, புத்தி ரூபமாய் நிகழ்ந்த தன்னைப் புருடனுக்குப் போக்கியப்
பொருளாக அறிவிக்கின்றது. புருடனுக்கோவெனில் , கருத்தாவாயிருக்குந் தன்மை இல்லை;
அறியுந்தன்மையே உண்டு. ஆதலால் புருடன் கருத்தாவாயிருத்தல் பற்றி, கரணம் வேண்டுமென்று
வித்தியா தத்துவத்தைச் சாதித்தது பொருந்தாதென்னும் ஆசங்கைக்கு சமாதானங் கூறுகின்றார்.
(16) புத்தி முதலிய கரணங்களோடு சேர்க்கையிருத்தலாலும், போகத்தில் ஆசை உடைமையாலும்,
அந்தச் சாதனங்களை ஏவுதலாலும், அந்தச் சாதனங்களின் தொழில்களைப் பயனோடு சேர்த்தலாலும்,
புருடனுக்குக் கருத்தாவாயிருக்குந் தன்மை சித்தித்தது என்பதாம்.
"புத்தி முதலிய” என்றவிடத்து, "முதலிய” என்றதினால் விடயங்களுங் கொள்ளப்படும். படவே,
புத்தியோடும் விடயங்களோடும் சேர்க்கையிருத்தலாலும், போகத்திலாசை யுண்டாவதாலும்
அந்தக்கரணங்களை ஏவுதல் செய்தலாலும், விடயங்களின் அறிவு ரூபமான அக்கரணங்களுடைய
தொழில்களுக்குச் சுக முதலிய பயனோடு சேர்க்கையிருத்தலாலும், புருடனுக்குக் கருத்தாவாயிருக்குந்
தன்மை சித்தித்தது. போக்கியத்தில் ஆசையுடைமையினாலும், என்று பாடங்கொள்ளின் போக்கியப்
பொருளை விடயமாகக் கொண்ட ஆசையினாலும் என்று உரை செய்து கொள்க.
இதன் கருத்தாவது :- பிரகிருதி சடமாதலால், புருடனைக் குறித்துப் பிரவிருத்திப்பதில்லை.
புருடனோ எனில், அறிவுடையனாதலால், அவனுக்குக் கரணங்களை ஏவுதல் என்னுந் தொழில்கூடும்.
ஆதலால் கருத்தாவாயிருக்குந் தன்மை புருடனுக்குத் தான் சம்பவிக்கும். புருடன் கருத்தா வில்லையெனில்,
கருத்தாவாயில்லாத புருடனிடத்தில் கரணமுதலியவற்றின் சேர்க்கை இருப்பது வீணாகும் என்க.
அவ்வாறாயின், பசுவின் பாலுக்குச் சடத்தன்மை இருந்த போதிலும், கன்று முதலியவற்றின்
விருத்தியின் பொருட்டுப் பிரவிருத்தி காணப்படுகின்றது. அவ்வாறே, கன்றின் பொருட்டுப் பாலுக்குப்
பிரவிருத்தி காணப்படுவது போல புருடனுடைய மோக்ஷத்திற்காகப் பிரகிருதியும் பிரவிருத்திக்கின்றது
எனச்சாங்கியருங் கூறுகின்றனரே எனில், அது பொருந்தாது. எதனாலெனின், சடமான பாலுக்கும்
அறிவுடையதான பசு முதலியவற்றின் ஏவுதலினாலேயே பிரவிருத்தி காணப்படுதலால், பிரகிருதிக்கும்
தானாகவே பிரவிருத்தி நிகழாது ஆதலால், என்க. (16)
(17) (அன்றியும் பிரகிருதியைக் கருத்தாவாகக் கொண்டால்) யாதொரு காரணத்தால் கருத்தாவாயிருக்குந்
தன்மையில்லாதவனாயும், கரணங்களை ஏவுதல் செய்யாதவனாயும் உள்ள புருடனிடத்தில், போகமானது
காணப்படவில்லையோ, அந்தக் காரணத்தால் புருடனைப் போகம் அனுபவிப்பவனென்று கூறியதும், அந்தப்
போகானுபவத்திற்காகப் பிரகிருதியின் தொழிலும், சாங்கியராகிய உங்களுக்கு வீணாக முடியும் என்பதாம்.
யாதொரு காரணத்தால் *கர்த்திருத் தன்மையற்றவனாயும் கரணம் முதலியவற்றை ஏவுதல்
செய்யாதவனாயும் உள்ள புருடனிடத்தில், போகம் காணப்படவில்லையோ, அந்தக் காரணத்தால்,
அறிவு ரூபமான போகமும் கிரியா ரூபமாதலால், அவ்வித போகத்தோடு கூடிய போக்தாவான
புருடனுக்குக் கருத்திருத்தன்மை நீங்காமையால், அந்தக் கருத்திருத்தன்மையைப் புருடனுக்குக்
கொள்ளாவிடில், புருடனைப் **போக்தாவாகக் கூறியதும், போகத்துக்காகச் சடமான பிரகிருதிக்குக்
கூறப்பட்ட தொழிலும், உங்களுக்குப் பயன்படாமையால், அவ்வாறு கூறுதல் பொருந்தாதென்க.
*கருத்திருத்தன்மை--கருத்தாவாயிருக்குந் தன்மை
** போக்தா -போகத்தை யநுபவிக்கின்றவன்.
ஆதலால், கரணங்களை ஏவுதலாலும், போக்தாவா யிருத்தலாலும், புருடனுக்குக்
கருத்திருத்தன்மை சித்தித்தது. அவ்வாறே, கிரியையை நிகழ்த்தும் சாதனங்களான ##காரகங்களைத்
தொழிற்செய்யும்படி செய்வதிலும், தொழிற் செய்யாமலிருக்கச் செய்வதிலும்,தொழிற் செய்யாததைச்
செய்யும்படி செய்வதிலும் சமர்த்தனாயுள்ளவன், கருத்தாவென்னும் காரகமாவன் என்று
பெரியோர்களும் கூறியிருக்கின்றனர். (17)
(அ-கை) இவ்வாறு அறிபவனாயிருக்குந் தன்மையைப் போல், கருத்தாவாயிருக்குந் தன்மையும்
புருடனுடைய சொரூபமென்று கூறப்பட்டது. இனி, புருடனுடைய சொரூபமான அறியுந் தன்மை
கருத்தாத் தன்மை என்னுமிவை, அனாதியான மலத்தால் மறைக்கப்பட்டிருத்தலால், எப்பொழுதும்
பரமசிவனுடைய அறியுந் தன்மை கருத்தாத் தன்மைகள் பிரகாசிக்குமாறு போல் பிரகாசித்த
லில்லையாதலால், இவை யாதாவதொரு தத்துவத்தால் பிரகாசம் செய்யப்படுகின்றன வென்பது
சித்தித்ததெனக் கூறுகின்றார்
## காரகம்--செய்விக்கிறது
(18) இந்தச் சகலாவத்தையில் அறியுந் தன்மை போல , கருத்தாவாயிருக்குந் தன்மையும்,
எல்லாப் பொருள்களையும் விஷயமாகக் கொள்ளாமையாலும் யாதானுமொரு சமயத்திலுண்டாவதாலும்,
யாதானுமொரு தத்துவத்தால் விளக்கத் தகுந்ததாயிருக்கின்றது. அதன் விளக்கத்தைச் செய்வது
எதுவோ அதுவே கலையென்னும் தத்துவமென்று அறியத் தகுந்தது என்பதாம்.
சகலாவத்தையில் அறியும் தன்மையைப் போல, கருத்தாவாயிருக்கும் தன்மையும்
எல்லாப் பொருள்களையும் விஷயமாகக் கொள்ளாமையாலும், யாதானுமொரு சமயத்தில்
உண்டாதலாலும், யாதானுமொரு இடையேவந்து கூடின தத்துவத்தால் விளக்கக் தகுந்ததா யிருக்கின்றதெனத்
தோன்றுகின்றது. ஆதலால், அதன் விளக்கத்தைச் செய்வது எதுவோ , அதுவே கலையென்று அறியத் தகுந்தது
என்னு மூலத்தால் கருத்தாவா யிருக்கும் தன்மையை விளக்கம் செய்வதற்காகக் கலையென்னும் தத்துவம்
சித்தித்ததென்று கூறுகின்றார். ஒரு பாகத்தில் மலத்தை விலக்கி ஆன்மாவிற்கு அறியும் தன்மை
கருத்தாவாயிருக்கும் தன்மைகளை விளங்கச் செய்கின்றது எதுவோ, அதுவே, கலா தத்துவமெனக்
கலா தத்துவம் சித்தித்ததென்பது கருத்து (18)
(அ--கை) அவ்வாறாயின், புருடனுடைய சத்தியானது மலத்தால் மறைப்புண்டிருந்தபோதிலும்,
சிருட்டிகாலத்தில் சிவசத்தியே அப்புருட சத்தியை விளங்கச்செய்யுமாதலின் கலையென்னும் தத்துவத்தைக்
கூறுவது பயனற்ற தாகுமென்னும் ஆசங்கைக்குச் சமாதானங் கூறுகின்றார்
(19) எந்தக் காரணத்தால், அறியும் தன்மை கருத்தாவாயிருக்கும் தன்மை என்னுமிவை, எல்லாப்
பொருள்களையும் விஷயம் செய்யவில்லையோ, அந்தக் காரணத்தால், பாசமில்லாமல் அந்த அறியும் தன்மை
கருத்தாவா யிருக்கும் தன்மைகளை ஈசுவரன் விளங்கச் செய்கின்றானில்லை. ஏற்றத் தாழ்வான வாத முதலிய
தோஷமானது, பத்தியம் இன்மையையின்றி நோயின் கருத்திரு சத்தியை விளங்கச் செய்யாமை போல என்பதாம்.
எந்தக் காரணத்தால், சமுசார நிலையில் புருடனுடைய ஞானக் கிரியா ரூபமான சைதன்னியமானது
எல்லாப் பொருள்களையும் விஷயமாகக் கொள்ளாமை காணப்படுகின்றதோ, அந்தக் காரணத்தால்,
அந்தச் சைதன்னியத்தை ஈசுவரன் பாசத்தின் வழியாகத் தான் விளங்கச் செய்கின்றான் .
நேரே விளங்கச் செய்கின்றானில்லை
மல பரிபாகம் வந்த பின்னர், தீக்கை யென்னும் தனது சத்தியால், அந்த ஞானக்கிரியா ரூபமான
சைதன்னியத்தை எல்லாப் பொருள்களும் விஷயமாகும்படி விளங்கச் செய்கின்றான் என்று மேலே
சொல்லப் போகின்றோம். ஆதலால், சிவ சத்தியானது வேறு தத்துவங்களை நிலைக்களமாகக் கொண்டே
புருடனுக்குப் போகத்தைக் கொடுக்கின்றது. நேராகக் கொடுப்பதில்லை. நேரே கொடுக்குமாயின்,
புத்தி முதலியன பயனற்றனவாகும் என்பது கருத்து .
பிற்பகுதியில் இந்தத் தோஷத்தையே உதாரணம் காட்டி நிச்சயம் செய்கின்றார். எவ்விதம்
சமமில்லாத வாதம் பித்தம் முதலிய தோஷமானது,பத்தியமின்மையை இன்றி,வியாதியினுடைய
கருத்திருசத்தியை அதாவது( அசெளக்கியம் செய்வதில் சாமர்த்தியத்தை) விளக்கம் செய்கிறதில்லையோ,
பத்தியமின்மையைக் கூடுதலினாலேயே விளக்கம் செய்கின்றதோ, அவ்விதமே, ஈசுவரனும் பாசங்களின்
வழியாகவே ஆன்மாக்களுடைய சைதன்னியத்தை எல்லாப் பொருள்களையும் விஷயமாகக்
கொள்ளாதிருக்கும்படி செய்கின்றனன். இந்த மட்டில் இது உதாரணமாகக் கூறப்பட்டது. எல்லா
விஷயத்திலும் உதாரணமாகக் கூறப்படவில்லை . எதனாலெனில் வாத பித்த முதலிய தோஷம்
துக்கத்துக்கே காரணமாயிருத்தலாலும், ஈசுவரனோவெனில் ஆன்மாக்களின் உபகாரத்தின்
பொருட்டே பிரவிர்த்திக்கின்றா னாதலாலுமென்க.
இந்தக் கலை முதலிய காரியங்களுக்கு ஈசுவரன் கருத்தாவாயிருக்கின்றானென்பது,
' அனந்தர் முதலியோரை அதிட்டித்தே" என்று கிரணாகமத்தில் கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறெனில்,
சுத்தாத்துவாவில் சிவன் கருத்தா; அசுத்தாத்துவாவில் அனந்தர் கருத்தா என்றவாறாமென்க (19)
(அ-கை) அவ்வாறாயின், கன்மத்தைக் காரணமாகக் கொண்டு போகம் நிகழ்கின்றமையாலும்,
கன்மமில்லாத விஞ்ஞான கேவலர்களுக்குச் சுகதுக்க முதலிய போகங்களின் உணர்ச்சி காணப்படாமையாலும்,
கன்ம மாத்திரத்தினாலேயே பரமசிவன் ஆன்மாக்களுடைய சைதன்னிய விருத்தியைச் செய்கின்றான்
என்பார்க்குச் சமாதானம் கூறுகின்றார்.
(20) கன்ம மாத்திரத்தால் ஆன்ம சைதன்னியம் விளங்குகிறதில்லை. எதனாலெனின், யாதொரு
காரணத்தால் கன்மமானது போகத்தின் சித்தியில் உண்டுபண்ணப்பட்ட பயனை யுடையதாக ஆகின்றதோ,
அந்தக் காரணத்தாலென்க. ஞானத்திலும் இவ்விதமான ஆசங்கையே நிகழுமாதலால், வித்தை முதலிய
பந்தங்களும் பயனிலவாகு மென்பதாம்.
கன்ம மாத்திரத்தால் ஆன்ம சைதன்னியம் விளங்குகிறதில்லை. கன்மமானது பயனைக் கொடுத்த
மாத்திரத்தினாலேயே ஒழிவை அடைகிறதினால், அந்தக் கன்மத்தை வேறு காரியத்திற்குக் காரணமாகக்
கொள்வதில் பிரமாணமின்மையாலென்க. அந்தக் கன்மத்தை வேறு காரியத்திற்கும் காரணமாகக் கொண்டால்,
விடயங்களை அறிவதிலும் அவற்றை நிச்சயம் செய்வதிலும் இந்தக்கன்மத்திற்கே காரணத்தன்மை கொள்ளக்கூடும்.
கொள்ளவே, வித்தை புத்தி முதலிய தத்துவங்களைக் கூறுதல் பயனற்றதாக முடியும். ஆதலால், வேறான தத்துவங்களின்
உதவியுடன் கூடிய கன்மமே போகத்துக்குக் காரணம் என்று எவ்வாறு நிச்சயம் முதலிய காரியங்கள் புத்தி முதலிய
தத்துவங்களையின்றி நிகழாமையால், புத்தி முதலிய தத்துவங்கள் கூறப்பட்டனவோ, அவ்வாறே, புருடனுடைய
கிரியா சக்தியின் விளக்கம் கலையையின்றி நிகழாமையால் கலையென்னும் தத்துவம் சித்தித்தது .
ஆதலால் ஒருவிதமான குற்றமின்மை காண்க. (20)
(அ-கை) இவ்விஷயத்தில் பூர்வ பக்ஷியின் ஆசங்கையினையும் அதற்குச் சமாதானத்தையும் கூறுகின்றார்.
(21) கலை முதலியவற்றின் சம்பந்தத்திற்கு முன் ஆன்மாவினிடத்து ஞானக்கிரியைகள் காணப்படாமையால்,
அவை ஆன்மாவினிடத்தில் உள்ளனவல்ல. விளக்கம் செய்விக்கும் கருவியுடன் கூடாக ஆன்மாவினிடத்தில்
அறியப்படுவதில்லையேயன்றி , ஆன்மாவினிடத்தில் இல்லாமையால் அறியப்படுவதில்லை என்பதில்லை என்பதாம்.
கலை முதலிய தத்துவங்களின் சேர்க்கையினாற்றான் அறியும் தன்மையும் செய்யும் தன்மையும்
உண்டாகின்றமையாலும், அந்தத் தத்துவங்களின் சோ்க்கைக்கு முன் அவை காணப்படாமையாலும்,
அந்த அறியும் தன்மை செய்யும் தன்மை என்னும் இவை ஆன்மாவினிடத்தில் முன்னர் சொரூபமாக
உள்ளனவல்ல. கலை முதலியவற்றின் சேர்க்கையினாற்றான் உண்டாகின்றன. ஆதலால் , ஆன்மா,
ஞானம் முதலியவற்றிற்குப் பற்றுக் கோடாயிருக்கின்றதென்பது சித்தித்தது . ஞான சொரூபமென்பது
சித்திக்கவில்லை என்பது பூர்வபக்கம். இனி பிற்பகுதியால் சித்தாந்தம் கூறுகின்றார்.
ஆன்மாவிற்குச் சட சுபாவமான கட முதலியவற்றிற்குப் போல, ஞானத்தின் *சமவாயம்
இல்லாமையால், அநித்திய ஞானத்தின் சமவாயத்தைக் கொள்ளின், விகார மேற்பட்டு அநித்தியத்தன்மை
வர நேருமாதலாலும், அறியச் செய்யும் துணையின் சந்நிதானத்தில் அறிகின்ற ஆன்மா, தானே
பிரகாச ரூபனென்பது சித்தித்திருப்பதாலும், ஆன்மாவிற்கு ஞான சொரூபமாயிருக்கும் தன்மை
நித்தியமாய்க் கொள்ளத் தகுந்தது.
* சமவாயமென்பது- பிரிக்க முடியாத சம்பந்தம்.
அந்த ஆன்ம சொரூபமானது அனாதியான மலத்தால் மறைப்புண்டு இருத்தலால் விளங்கச்
செய்யும் கருவியான துணையின்றி விளங்குகிறதில்லை யென்று சமாதானம் கூறப்பட்டது.
ஆதலால், கலை முதலியவற்றின் சேர்க்கைக்கு முன் விளங்கச் செய்யும் கருவியான துணையின்மையால்,
அறியும் தன்மை, செய்யும் தன்மை என்னுமிவை ஆன்மாவினிடத்தில் விளங்குகிறதில்லையேயன்றி,
ஆன்மாவினிடத்து இல்லாமையால் விளங்கவில்லை என்பது இல்லை. விளங்கச் செய்யும் கருவியான
துணையின்மையினா லுண்டான யாதொரு தோற்றமின்மை உள்ளதோ, அது இன்மையைச் சாதிப்பதில்லை.
விளங்கச் செய்யும் கருவியான துணை இருப்பின் தோற்றமின்மை உளதாயின் அதுவே இன்மையைச் சாதிக்கும்.
பூதம் நிதி முதலியன இருப்பினும், அவற்றை விளங்கச் செய்யும் துணையின் சன்னிதி யின்மையால்
தோன்றாமை பற்றி இல்லையென்பது சித்திக்காதா தலாலென்க. (21)
(அ-கை) இன்னும் இதனையே கூறுகின்றார்.
(22) உலகத்தில் எந்தப் பொருளானது விளங்கச் செய்யும் சாதனம் உள்ளவிடத்தும் அறியப்படுவதில்லையோ,
அந்தப் பொருளே அசத்தாகும்; ஆதலால், அதுபோல, ஞானக்கிரியைகள் அசத்தாவனவல்ல என்பதாம்.
விளங்கச் செய்யும் தீபம் முதலிய சாதனமிருந்தும், எந்தக் கட முதலியவற்றிற்குத் தோற்றமில்லையோ,
அவற்றிற்கே அசத்தாயிருக்கும் தன்மை உள்ளது. அந்தக்கடத்தினும் வேறான இருள் முதலியவற்றால் மறைப்புண்டு
தோன்றாத கடம் முதலியவற்றிற்கு அசத்தாயிருக்கும் தன்மை கிடையாது. ஆதலால், ஞானக்கிரியைகளும்
விளங்கச் செய்யும் கருவியான துணையின்மையால் அறியப்படுகின்றனவல்ல ஆகலின், அவை எக்காலத்தும்
அசத்தாயிருக்கும் தன்மையை அடைவன அல்லவென்று பிற்பகுதியால் கூறுகின்றார்.
அவ்வாறாயின், உடலோடு கூடி விஷயங்களை அனுபவிக்கும் உயிர்களுக்கு உடலோடு கூடுதற்கு
முன்னர் ஞானம் உண்டென்பதில் நிச்சயமின்மையால் ஐயந்தானே எனில் அது பொருந்தாது. எதனாலெனின்,
அன்று பிறந்த குழந்தைகளுக்கும் தொழில் செய்யும் காலத்தில் முயற்சியுடன் அன்னையின் தனத்திலுள்ள
பாலைப்பருகுவதில் பிரவிருத்தியும், காலடித்தல் முதலிய சேட்டையும் காணப்படுதலால். அவை நன்மை
தீமைகளின் வாசனையையின்றி நிகழாதாகலின், உடலோடு கூடுதற்கு முன்னரும் அறியும் தன்மை
கருத்தாவாயிருக்கும் தன்மைகள் உள்ளனவென்பது சித்தித்தலாலென்க. (22)
(அ--கை) இதனையே உதாரணத்தோடு காட்டுகின்றார்.
(23) எவ்வாறு சமைத்தற்றொழில் செய்பவனிடம் அது செய்வதற்கு முன்னர் அத்தொழிலின்
ஆற்றல் உள்ளதோ, அவ்வாறே ஆன்மாவினிடத்தில் ஞானக்கிரியைகள் காணப்படுதலால்
அவை முன்னரே சித்தித்துள்ளன என்பதாம்.
எவ்வாறு சமைத்தற்றொழில் செய்பவனிடம் சமைத்தலைச் செய்தல் என்னும் தொழில்
காணப்படுதலால் அத்தொழில் நிகழ்ச்சிக்கு முன்னரே அவனிடத்தில் அச்சத்தி உள்ளதாகத்
துணியப்படுகின்றதோ, அத்தொழில் செய்யுங்காலத்திற்றான் உண்டானதில்லையோ,
அவ்வாறே, ஞானக் கிரியைகள் ஆன்மாவினிடம் காணப்படுதலால் முன்னரே ஆன்மாவினிடத்தில்
ஞானக்கிரியா சத்திகள் உள்ளனவென்பது துணியப்படுமென்க. அவ்வாறே மிருகேந்திரத்திலும்
யாதொரு காரணத்தால் முத்தியில் ஆன்மாவின் அறிவு எல்லாவற்றையும் அறியும் தன்மையுடையதெனச்
சொல்லப்படுகின்றதோ, அந்தக்காரணத்தால் ஆன்மாவினிடத்தில் எக்காலத்தும் ஞானக்கிரியா
ரூபமான அறிவு இருக்கின்றது எனக் கூறப்பட்டிருத்தல் காண்க. (23)
(24) (அதுபற்றியே) எந்தக்காரணத்தால் விளங்கச்செய்யும் கருவியாகிய துணையை
ஞானக்கிரியைகள் விரும்புகின்றனவோ, அந்தக் காரணத்தால் அந்த விருப்பத்திற்குக் காரணமாக
ஞானக்கிரியைகளை மறைக்கும் பொருளாகிய மலமொன்று உண்டென்பது சித்திக்கும்.
இந்த மலமில்லாமையினாற்றான் முத்தான்மாக்களின் ஞானக்கிரியைகள் எல்லாப் பொருள்களையும்
விஷயமாகக் கொள்ளுதலால், அவர்களுக்குச் சமுசார சம்பந்தம் உண்டாகிறதில்லை என்பதாம்.
எந்தக்காரணத்தால் சமுசார அவத்தையில் ஞானக்கிரியைகளுக்கு விளங்கச்செய்யும்
சாதனத்தின் விருப்பம் காணப் படுகின்றதோ, அந்தக்காரணத்தால் , அவ்விருப்பத்திற்குக்
காரணமாக ஞானக்கிரியைகளை மறைக்கும் பொருள் ஒன்று உண்டெனத் துணியப்படுகின்றது.
எந்தப் பொருளில்லாமையினால், முத்தான்மாக்கள் பரம சிவன் போல் சர்வஞ்ஞாகளாயும்
சர்வ கருத்தாக்களாயு மிருந்து மறுபடி சமுசார சம்பந்தத்தை அடைகிறார்களில்லையென்று
கேட்கப்படுகின்றதோ . (அது மலமாம்.)
அவ்வாறாயின் , ஆன்மாவை மலமற்றதாகச் சாங்கியர்கள் கூறுகின்றனரே எனில், அது பொருந்தாது.
எதனாலெனின், சமுசார நிலையில் அந்த ஆன்மாவுக்கு அடிமைத்தன்மை காணப்படுதலால்
அவ்வடிமைத்தன்மை காரணமின்றி நிகழுமாயின் , முத்தான்மாக்களுக்கும் அடிமைத்தன்மை
நிகழுமாதலாலும் , விளங்கச் செய்யும் கருவியை ஞானக் கிரியைகள் விரும்புதலாலும் என்க.
அவ்வாறே சிவாகமங்களிலும் பாசமின்றி அடிமைத் தன்மை எந்தக் காரணத்தால்
நிகழ்ந்ததென்று சொல்லத் தகுந்ததெனக் கூறப்பட்டிருத்தல் காண்க. (24)
(அ--கை) இனி அவ்வியத்தம் முதலிய தத்துவங்களின் தோற்றமுறையைக் கூறுகின்றார்.
(25-26) அவ்வியத்தம், அராகம், வித்தை என்னுமிவை கலையிலிருந்து உண்டாகின்றன.
கலையும் மாயையிலிருந்து உண்டாகின்றது. மண் முதல் கலை ஈறான தத்துவக் கூட்டம் ஒவ்வொரு
உயிர்களுக்கும் இன்றியமையாத சூக்கும உடம்பாகும். இந்தச் சூக்கும உடம்பே கன்ம வசத்தால்
உலக சம்பந்தங்களாயுள்ள தூல உடம்புகளில் சுற்றுகின்றது. கலை இறுதியான தத்துவங்களுக்கு
உலக ரூபங்களான வேறு கூட்டங்களும் உண்டென்று அறியத்தகுந்தது என்பதாம்.
ரெளரவாகமத்திலும், அராகம் வித்தை என்னுமிரண்டு தத்துவங்களும் அவ்வியத்தமும்,
கலா தத்துவத்திலிருந்து உண்டாயினவெனக் கூறப்பட்டிருத்தல் காண்க. கலையும் என்ற
உம்மையால் காலநியதிகளும் மாயையிலிருந்து உண்டாகின்றன என்று கொள்க. எதனாலெனின்?
காலநியதிகளும், மாயையிலிருந்து உண்டானதாகவும், போக நிகழ்ச்சிக்கு உபகாரம் செய்கின்றதாகவும்,
நூல்களில் கேட்கப்படுதலாலென்க. அஃதாவது, அந்தணர் முதலியோருடைய உழுதற்றொழிலாலுண்டாம்
பயன்களான தானியங்களை, அரசன் ஆணையின்றித் திருடர்கள் கொண்டு போவது போல, ஒருவனால்
ஈட்டப்பட்ட கன்மத்தின் பலனை மற்றொருவன் அனுபவிக்க நேரும்.
அவ்வாறு நிகழாதிருத்தற் பொருட்டு, அரசன் ஆணை போல நியதி தத்துவம் வேண்டப்படுமெனச்
சித்தித்தது. காலம் என்னும் தத்துவமும் இந்தக் கன்மபலன் இத்துணை நாள் அனுபவிக்கத் தகுந்தது என்னும்
நியமத்துக்குக் காரணமாய், தாமதம் , விரைவு என்னும் அறிவிற்குக் காரணமாகவும் சித்தித்தது என்னுமிவ்
விஷயம் மிருகேந்திர விருத்தி தீபிகையிலும், தத்துவப்பிரகாச விருத்தியிலும், நம்மால் விரிவாகக்
கூறப் பட்டிருத்தல் காண்க
மிருகேந்திரத்திலும் துடி, கணம் முதலிய வியவகார ஞானங்களுக்குக் காரணமாய் காலம் என்னும்
தத்துவம் மாயையிலிருந்து தோன்றி, தான் தோன்றின காலம் முதல் சங்கார காலம் வரை, நியதி தத்துவத்தால்
நியமனம் செய்யப்பட்ட உயிரைப் போகத்தை அனுபவிக்கச் செய்தலால் காலம் எனப்பெயர் கொண்டது
எனக்கூறப்பட்டிருத்தல் காண்க.
இந்த வித்தை, காலம் என்னும் இரண்டு தத்துவங்களும் கலை முதலியவற்றை நோக்க உயிருக்கு
வெளிச்சாதனமாயிருத்தலால், ஆசிரியர் இந்தத் தத்துவங்களை வெளிப்படையாகக் கூறாது உம்மையால்
குறிப்பித்தாராதலின், கூறாத குற்றமன்மை காண்க.
இந்தக் கலை முதல் மண் முடிவான முப்பது தத்துவரூபமான சூக்கும உடம்பு ஒவ்வொரு உயிர்களுக்கும்
இன்றியமையாது ஆதலின், அவ்வுயிர்களின் போகத்துக்குச் சாதனமாயிருக்கின்றது . அவ்வாறே
மிருகேந்திரத்திலும், கலைமுதல் மண் ஈறான தத்துவங்கள், ஆன்மாவின் போகத்திற்குச் சாதனமா யிருக்கின்றதெனக்
கூறப்பட்டிருத்தல் காண்க. அதுபற்றியே தீக்கையில் சூக்கும தேக சுத்தியானது மாயா தத்துவ சுத்திக்குப்
பின்னரே செய்யத் தகுந்ததென்று ரௌரவாகமத்திற் கூறப்பட்டிருக்கின்றது.
அவ்வாறாயின், ஸ்ரீமத் காலோத்தராகமத்தில், சத்தம், பரிசம், உருவம் , இரசம், கந்தம் என்னும்
இவ்வைந்தும், புத்தி மனம், அகங்காரம் என்னும் மூன்றும் ஆக இவ்வெட்டும் புரியட்டகமெனக்
கூறப்பட்டிருக்கின்றதே எனில், அஃதுண்மையே . அதுபற்றியே, இந்தக் காலோத்தர சூத்திரத்திற்குப்
பகவானான இராமகண்டாசிரியர் முப்பது தத்துவங்களைக் கூறினதாக உரை செய்திருக்கின்றனர்.
அவ்வாறாயின் , இதற்குப் புரியட்டகமெனப் பெயர் கூறியது எவ்வாறு பொருந்துமெனில், பூதம் ,
தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம் என்னும் ஐந்து வர்க்கங்களாலும்,
அவ்வந்தக்கரணத்துக்குக் காரணமான குணதத்துவத்தாலும், அந்தக் குண தத்துவத்தை விருத்தி செய்யும்
மூலப்பிரகிருதியினாலும்,போகத்தை அனுபவிப்பதாயிருத்தற்கு உபகாரம் செய்வதான கலை முதலிய
ஐந்து சட்டை ரூபமான புருட தத்துவத்தினாலும், ஆகிய எட்டு வர்க்கங்களால் ஆக்கப் படுதலின் ,
புரியட்டகமெனக் கூறியதில் முரணின்மை காண்க.
ஆன்மாவின் தூலசரீரம் வெவ்வேறாயினும் இந்தச்சூக்கும சரீரம் சிருட்டி தொடங்கிச் (திருத்: சரம் சிருட்டிரீ/சரீரம் சிருட்டி)
சங்கார வரையாவது அமனத்ததியில் முத்திவரையாவது, ஒரு ஆன்மாவிற்கு ஒரே தேகமென்று அறியத் தகுந்தது. (ஐயம்: அமனத்ததியில்?)
இவ்வாறு, ஒவ்வொரு ஆன்மாவிற்கும் இன்றியமையாத கலை முதலிய தத்துவங்களின் தோற்றத்தைக்
கூறிவிட்டு, ஆன்மாக்களின் கன்மத்திற்குத் தகுந்தவாறு உண்டாகும் புவன சம்பந்தமான உடலுக்கு ஆதாரமாயுள்ள
புவனரூபமான பொதுச் சிருட்டியை, புவன ரூபங்களான கந்தங்கள் *அறியத் தகுந்தன என்பதனால் கூறினர் (25-26)
* கந்தம் - கூட்டம்.
(அ-கை) இந்தத் தத்துவங்கள் உயிர்கள் தோறும் இன்றியமையாதிருத்தல் பற்றிச் சடமாயும்
அநேகமாயுமிருத்தலாலும் புவனங்களுக்குப் பற்றுக்கோடாய் இருப்பது பற்றி அவயவப் பகுப்புடையதா
யிருத்தலாலும், இவை காரியமென்று சித்தித்தலின் இவற்றிற்கு முதற்காரணமாக மாயையென்னும் தத்துவம்
சித்தித்ததென்று கூறுகின்றார்.
(27) படைத்தல், காத்தல், அழித்தல் என்னுமிவற்றிற்கு ஆதாரமாயும், உலகத்திற்கு முதற்காரணமாயும்,
நித்தியமாயும், வியாபகமாயும், சடமாயும், ஒன்றாயும் இருக்கும் மாயையானது, தனது விகாரமான காரிய
வருக்கங்களுக்குப்பின் படிக்கப்பட்டிருக்கின்றது என்பதாம்.
முதற்காரணமாயிருத்தலால், படைத்தல் முதலியவற்றிற்கு ஆதாரமாகத் தனது காரிய
சமூகத்திற்குப்பின் படிக்கப் பட்டிருக்கின்றது. படிக்கப்பட்டிருக்கின்றதென்னும் வினைச்சொல்
மூலத்திலில்லை. சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்த மாயை பரமகாரணமாயிருத்தலால் நித்தியமாயுள்ளது.
அந்த மாயையைப் பரமகாரணமாகக் கொள்ளாவிடில் அதற்கும் ஒரு முதற்காரணம் வேண்டப்படும்.
படவே, வரம்பின்றி ஓடல் என்னும் குற்றம் வரும் என்க.
அன்றியும், தனது காரியத்தினளவில் வியாபகமாயுள்ளது. அதுவன்றியும் முதற்காரணமாயிருத்தலால்
சடமாயுள்ளது. உலகத்தில் கட முதலியவற்றிற்கு முதற்காரணமான மண் முதலியன சடமாகவே காணப்படுகின்றன.
பரம காரணமாயிருத்தலால் ஒன்றாயுள்ளது. அநேகமெனக் கொள்ளின், கட முதலியன போல, சடமாயும்,
அநேகமாயும் இருத்தலால் வேறு காரணம் வேண்டப்படும். படவே, வரம்பின்றி ஓடல் என்னும் குற்றம்
உண்டா மென்க. இது பற்றியே, மேலே பரமாணுக்கள் முதற்காரண மாகாதென்று கூறினோம்.
அவ்வாறாயின், பரமான்மாவே உலகத்திற்கு முதற் காரணமென்று வேதாந்திகள் கூறுகின்றனரே எனில்,
அது பொருந்தாது எதனாலெனில், பரமான்மாவை முதற்காரணமாகக் கொள்ளின், தத்துவமுதலியன போலச்
சடமெனப்பட்டு வழுவாமாதலினென்க. இந்தப் பரமான்மாவையே சேதனப் பிரபஞ்சம், அசேதனப் பிரபஞ்சமென்னு
மிவற்றிற்குக் காரணமெனக் கூறில், காரணமான பரமான்மாவும், சேதனா சேதன ரூபமாய் அவயவத்துடன்
கூடிக் காரியமெனப் படுமாதலாலும், பரமான்மா முதற்காரணமாதல் செல்லாது எத்தன்மையுடையனவாய்
காரியங்கள் தோன்றுகின்றனவோ? அத்தன்மையுடைய காரணத்திலிருந்தே அக்காரியங்கள் தோன்றுகின்றன
வென்பது முறைமை. பாஞ்ச ராத்திரிகளால் கொள்ளப்படும் நாராயண னென்னும் பரப்பிரகிருதியிலும்
இக்குற்றமே நிகழும். நியாயம் சமானமாதலால்.
இவிடத்தில் இந்த மாயையை, படைத்தல், காத்தல், அழித்தலென்னு மிவற்றிக்குப் பற்று கோடாகக்
கூறினமையின் , சற்காரியவாதத்தை யனுசரித்து, மகாப் பிரளயத்தில் கலை முதலிய காரியங்கள் சூக்கும ரூபமாய்
மாயையினிடமிருக்கின்றன வென்று அறிவிக்கப்பட்டதாகும். அவ்வாறே நூல்களில் மகாப் பிரளயத்தில் மாயையைப்
பற்றுக்கோடாகக் கொண்டு சக்தி ரூபங்களாக நிற்கும் காரியங்கள், சிருட்டி காலத்தில் பொருள் ரூபத்தோடு
காரியத்தின் பொருட்டுத் தொழிற்படுகின்றன என்று கேட்கப்படுகின்றது. இந்தச் சத்காரிய வாதமானது நம்மால்
மிருகேந்திரவிருத்தி தீபிகையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (27)
(அ-- கை) இவ்வாறு, அசுத்தாத்துவாக்களைக் கூறி விட்டு இந்த அசுத்தாத்துவா எதற்கு உபகாரம்
செய்கின்றதோ, அந்தத் தத்துவத்தைக் கூறுகின்றார்.
(28) எந்தத் தத்துவத்தின் போகத்தின் பொருட்டு இந்தக்கலை முதலிய சாதனக் கூட்டம் கூறப்பட்டதோ,
அந்தத் தத்துவம் பசுவென்னும் பெயருடையதாயும் , நித்தியமாயும், வியாபகமாயும், மலத்தால் அனாதியே
மறைக்கப்பெற்ற ஞானக் கிரியைகளை யுடையதாயும் உள்ளது என்பதாம்.
யாதொரு ஆன்மாக்களின் கன்ம போகத்திற்காகச் சிறப்பாயும் பொதுவாயுமுள்ள மாயா காரியங்களின்
கூட்டம் கூறப் பட்டுள்ளதோ, அந்த ஆன்ம சமூகம், பசுத்தன்மை என்னும் மலத்தால் அனாதியாய் மறைக்கப்பட்ட
ஞானக்கிரியா சத்திகளுடன் கூடியிருத்தலால் பசு என்னும் தத்துவமாகக் கூறப்படுகின்றது. அது பற்றியே
மலமானது வேறான தத்துவமாகக் கூறப்படவில்லை. எதனாலெனின், பசுத்தன்மையிலேயே
அடங்குகின்றமையாலும், அதனையின்றிப் பசுத்தன்மை நிகழாதாதலாலும் என்க . அந்தப் பசுவென்னும்
தத்துவம் நித்திய மாயுள்ளது. பெளத்தர்கள் கூறுவது போலச் சணிகமில்லை. எதனாலெனின், முன்னர்
அனுபவிக்கப் பட்ட விடயத்தைப் பின்னர் நினைக்கின்றமையாலென்க. அன்றியும், கன்மங்களைச்
செய்து பின்னர் அக்கன்மபலன்களை யனுபவித்தல் ஆன்மாவிற்குப் பொருந்தாது ஆதலாலும்
சணிகமென்று கூறுதல் கூடாது
அன்றியும், ஆன்மா வியாபகமாயுள்ளது. சமணர்கள் கூறுவது போலச் சரீர அளவினதாகவும்,
விரிதல், சுருங்குதல் என்னும் தர்மங்களை யுடையதாகவும் இல்லை. அவ்வாறு கொண்டால், சடத்தன்மை,
அநித்தியத்தன்மை முதலிய குற்றங்களுண்டாம்.
கன்ம பலன்களான போகங்கள் (உயிர்தோறும்) வேறு வேறாகக் காணப்படுதலின், அக்கன்ம
பலன்களை யனுபவிக்கும் ஆன்மாக்கள் அநேகமென்பது அருத்தாபத்திப் பிரமாணத்தால் சித்தித்தது.
இவ்விஷயத்தை மேலே சங்கிராந்தி வாதத்தை மறுக்குமிடத்துக் கூறவும் போகின்றார். இவ்விடத்தில்
*கூடஸ்த நித்தியமான மலத்தோடும் ** பிரவாக நித்தியமான கன்மத்தோடும், அனாதியே கூடியிருக்கும்
ஆன்மாவிற்கு, எப்பொழுது பரமசிவன் முத்தியைத் தரவேண்டுமென்று எண்ணி மலபரி பாகத்திற்காகவும்,
கன்மங்களை யனுபவிப்பதற்காகவும், மாயா காரியங்களான கலை முதலியவற்றுடன் சேர்க்கையைச்
செய்கின்றாரோ, அப்பொழுது அந்த ஆன்மா சகலன் என்று கூறப்படுகின்றது. மகாப்பிரளயத்தில் கலை
முதலியவற்றின் நாசத்தால், மலம் கன்மமென்னு மிவற்றுடன் கூடிய ஆன்மா பிரளயாகலன் என்றும்,
ஞானம் யோகமென்னு மிவற்றால் கன்மமும் நசிக்கவே, மலமாத்திரத்துடன் கூடிய ஆன்மா,
விஞ்ஞான கலனென்றும் கூறப்படுகின்றன. இவ்விதமான பசு வேறுபாடு நம்மால் தத்துவப் பிரகாச
விருத்தியில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது . (28).
* கூடஸ்த மென்பதற்கு, கொல்லன் உலையிலுள்ள கூடம்போலிருப்பதென்பது பொருள். அது, ஒன்றாய்க்
கெடாதிருத்தலை யுணர்த்தும்.
** பிரவாகமென்பது, முன் வந்த நீரிது பின் வந்த நீரிதுவெனப் பிரித்தறியவராது தொடர்ச்சியாய்
வரும் நீர்ப்பெருக்கு.
(29) தீக்கை, ஞானம் முதலிய சொற்களுக்குப் பொருளாயுள்ள சிவசத்தியால் நாசம் செய்யப்பட்ட
பாசக் கூட்டத்தை யுடையவனாயும் விளங்கும்படி செய்யப் பட்ட ஞானக்கிரியா சத்திகளை யுடையவனாயுமுள்ள
அணுவானவன், தத்துவங்களுள்ளே சுத்தாத்துவா வென்னும் பெயருடையவனாகின்றான் என்பதாம்.
சிவபெருமானால் ஆசிரியனை யதிட்டித்துச் செய்யப்படுவதும், ஆசிரியனை யதிட்டிக்காமல்
நேரே செய்யப்படுவதுமா யிருப்பதும், சிவபெருமான் அனுக்கிரகம் செய்தற்குத் தகுதியுள்ளவர்களை
விடயமாகவுடையதுமாயுள்ள, சத்தியின்தொழிற் பாடே தீக்கையென்று கூறப்படுகின்றது. அவ்வித தீக்கை
ஞானம் என்னும் சொற்களுக்குப் பொருளான சிவசத்தியினால் நாசஞ்செய்யப்பட்ட மலம் முதலிய
பாசக் கூட்டத்தை யுடையவனாயும், அதுபற்றியே விளங்கும்படி செய்விக்கப்பட்ட, எல்லாப் பொருள்களையும்
விடயமாகவுடைய ஞானக்கிரியா சத்திகளுடன் கூடினவனாயும் உள்ள ஆன்மா சுத்தாத்துவா வென்னும்
பெயருடையவனாக ஆகின்றான்.
அவ்வாறே, ரெளரவாகமத்திலும் எல்லாப் பாசங்களினின்றும் விடுபட்டதாயும், சிவசத்தி கலையில்
நிற்பதாயுமுள்ள ஆன்ம தத்துவம், சுத்தம் என்னும் பெயருடையதெனக் கூறப்பட்டிருக்கின்றது.
அவ்வாறாயின், ஞானத்தினாற்றான் முத்தி சித்திக்கிறதென்று வேதாந்திகளும், சாங்கியர்களும்
கூறுகின்றனரே எனில், அது பொருந்தாது. எதனாலெனின், மலமானது திரவியமாதலால், கண்களிலுள்ள
படலம் போல் ஞான மாத்திரத்தால் நாசமடைகின்றதில்லை. கண்களிலுள்ள படலம் கண் வைத்தியன்
தொழிலால் நீங்குமாறு போலப் பரமசிவனுடைய தீக்கை யென்னும் தொழிலினாலேயே மலம்
நீங்குகின்றமையால் என்க . அவ்வாறே சுவாயம்பு வாகமத்திலும் தீக்கையே பாச விமோகம் செய்து
ஆன்மாவைச் சிவசம்பந்தமான முத்தியை அடையும்படி செய்கிறதெனக் கூறப்பட்டிருக்கின்றது (29)
(அ--கை) இந்தச் சுத்தமென்னும் பெயரானது ஆன்மாவிற்குச் சிவானுக்கிரகம் நிகழ்ந்த பின்னர்
அதிகாரம் காரணமா யுண்டான சரீரச் சேர்க்கையிற்றான் பொருந்தும். சிவசம ரூபமான பரமுத்தியில்
பொருந்தாது. எதனாலெனில், முத்திக் காலத்தில் ஆன்மா சிவனாகவே சொல்லப்படுகின்றமையால்
என்று கூறுகின்றார்.
(30) இந்த ஆன்மாவானவன், சிவனால் விளக்கஞ் செய்விக்கப்பட்ட தனது சத்தி ரூபமான அறிவால்,
சிவனைத் தியானஞ் செய்கின்றான். பார்க்கவுஞ் செய்கின்றான். தன்னுடைய உபகாரத்தின் பொருட்டும்,
பிறருடைய உபகாரத்தின் பொருட்டும் மந்திரங்களினால் பரமசிவனைப் பூசிக்கவுஞ் செய்கின்றான் என்பதாம்.
இந்தச் சுத்தனான ஆன்மா, சிவனால் விளக்கம் செய்விக்கப் பட்ட தனது சத்திரூபமான அறிவால் (திருத்:அறிவா/அறிவால்)
சிவனைத் தியானஞ் செய்கின்றான். பார்க்கவுஞ் செய்கின்றான். இவ்வாறே, மோக்ஷ காரிகையிலும்,
"சிவனென்னும் சூரியனுடைய சத்திரூபமான கிரணத்தால் விளக்கஞ் செய்யப்பட்ட அறிவு என்னும் கண்ணால்,
ஆன்மா மறைப்பு நீங்கினவனாய், சத்தி முதலியவற்றுடன் சிவனைப் பார்க்கின்றான்" என்று கூறப்பட்டிருக்கின்றது.
அதுபற்றியே, பாதஞ்சலர்கள் கூறுவது போல், சிவனுக்குப் புத்தி முதலியவற்றிற்கு விஷயமாயிருக்குந் தன்மை
பொருந்துகிறதில்லை. எதனாலெனின், பரமசிவன் பாசங்களுக்கு விஷயமாகாதவன் ஆதலாலென்க. இவ்விடயமும்
மோக்ஷ காரிகையிலேயே, புத்தியின் தொழிலாகிய யாதொரு ஞானமுண்டோ , அது விலங்கு முதலியன போலப்
பாசமாயிருத்தலால், பரமேசுவரனை விளங்கச் செய்வதற்குச் சமர்த்தமாகிறதில்லையென்று கூறப்பட்டிருக்கின்றது.
அன்றியும், இந்த ஆன்மா தன்னுடைய உபகாரத்தின் பொருட்டும், பிறருடைய உபகாரத்தின் பொருட்டும்,
அந்தப் பரமேசுவரனையே அநேக யாகங்களால் வழிபடுகின்றான். அவ்வாறே, ரெளரவாகமத்தில், மந்திரம்
தந்திரம் என்னும் இவற்றில் சமர்த்தராயும் குருவினாலும், நூல்களினாலும் அனுமதி பெற்றவராயும்,
தீக்கையால் நீங்கிய மும்மல முடையவராயுமுள்ள பெரியோர்கள் அவனையே அநேக யாகங்களினால்
வழிபடுகின்றனரென்று கூறப்பட்டிருக்கின்றது.
அவர்களுள், ஆசிரியர்களும், வித்தியேசுவர்களும், அதிகாரம் நசித்துத் தனக்கு உபகாரம்
நிகழ்வதின் பொருட்டும், போகத்தையும் முத்தியையும் உபகரிக்கும் ரூபமான பிறருடைய உபகாரத்தின்
பொருட்டும் வழிபடுகின்றனர். சாதகன், புத்திரன் என்னுமிவர்கள், தனக்குப் போக மோக்ஷம் நிகழ்வதின் பொருட்டே
வழிபடுகின்றனர். இவ்வாறு வேற்றுமை கண்டுகொள்க. (30)
(அ--கை) அவர்களுக்குள் மாயா கர்ப்பாதிகாரியான ஈசுவர தத்துவத்தைக் கூறுகின்றார்.
(31) மண்டலேசுவரர், ஸ்ரீ கண்டர், குரோதேசர், வீரபத்திரருடன் கூடிய நூறு உருத்திரர் என்னுமிவர்கள்,
பரமேசுவரனால், கலை முதலியவற்றின சம்பந்தத்தால் விளங்கும்படி செய்யப்பட்ட ஞானக்கிரியா
சத்திகளையுடையரா யிருக்கின்றனர் என்பதாம்.
அவர்களுள், மண்டலேசுவரர் எண்மர். இவர் கலையினுடைய மத்தகத்திலிருப்பவர் . அவ்வாறே,
ரெளரவாகமத்தில் "மண்டலாதிபதிகளால் தத்துவ மார்க்கத்தில் பிரதிட்டை செய்யப்பட்ட யாதொருவர்"
என்று கூறப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீகண்டர் குணதத்துவத்தை இருப்பிடமாக உடையவர். அதற்குக் கீழேயுள்ள புவனங்களுக்குக்
கருத்தாவாக உள்ளவர்.
குரோதேசர்-குணமத்தகத்திலுள்ளவர். எண்மர்.
நூறு உருத்திரர்--பிரமாண்டத்தைத் தரிப்பவர் .
வீரபத்திரர்-- நூறு உருத்திரர்களையும் அதிட்டிப்பவர்.
இவர்களனைவரும் பரமசிவனால் விளங்கும்படி செய்யப்பட்ட ஞானக் கிரியா சத்திகளையுடையவர்.
அதுபற்றியே, இவர்களுக்கு அதிகாரம் காரணமாக நிகழ்ந்த கலை முதலியவற்றின் சேர்க்கை இருப்பினும்,
இவர்கள் பசுக்கள் போல விபரீத உணர்வின் சேர்க்கையை யடையார்கள். எதனாலெனின், சிவனால்
நேரே அனுக்கிரகம் செய்யப்பட்டவராதலாலென்க. அவ்வாறே பெரியோர்களும், கலையின் சேர்க்கை யிருப்பினும்,
இவர்கள் அக்கலைக்குப் பசுக்கள் வசியராயிருத்தல் போல வசியரல்லர் என்று கூறியிருக்கின்றனர்.
அவர்களுக்குக் கலை முதலியவற்றின் சேர்க்கையும் அநந்ததேவரால் செய்யப்பட்டது. அவ்வாறே,
சுத்தாத்துவாவில் பரமசிவன் கருத்தா. அசுத்தாத்துவாவில் அநந்ததேவர் கருத்தாவென்று நூல்களில்
கேட்கப்படுகின்றது. (31)
(32) அவர்கள் தத்தமக்குட்பட்ட இடத்தில் பரமசிவனாணையால் புருடர்களுக்கும் போகமுத்திகளைத்
தருகின்றனர். இந்த அபர மந்திரேசுவர தத்துவமானது மாயா காரியத்திற்கு அதிகாரியாயிருக்கின்றது என்பதாம் .
சுலோகத்தின் பிற்பகுதியால் இந்த அபர மந்திரேசுவரர் தத்துவம் மாயா கர்ப்பாதிகாரி யென்று கூறுகின்றார் (32)
(அ--கை) இவ்வாறு, அபர மந்திரேசுவரர்களைக் கூறிவிட்டு, மந்திரேசுவரர்களைக் கூறுகின்றார்.
(33) சிருட்டி ஆரம்பத்தில் ஏழு கோடி ஆன்மாக்கள், பரமேசுவரனால் நாசஞ்செய்யப்பட்ட மறைப்புடையராயும்
அதுபற்றியே விளங்கச்செய்யப்பட்ட, ஞானக்கிரியா சத்திகளை யுடையராயும் உள்ளார். விளங்கும்படி
செய்யப்பட்ட ஞானக் கிரியைகளை யுடையராயிருத்தலின் இந்தத்தத்துவம் மந்திரமென்னும் பெயருடையது என்பதாம்
இவ்விடத்தில் விஞ்ஞான கேவலர் எண்மரைத் தெரிவித்தாரென்று சுருதி இருத்தலாலும்,
சுத்தாத்துவாவிலிருப்பவராதலாலும், விஞ்ஞான கேவலர்களின் நடுவில் பரிபாகமடைந்த மலமுடையவரையே,
அவரவர்களின் பாக வேற்றுமைக்குத் தக்கவாறு, வித்தியேசுவரத் தன்மையிலும் மந்திரேசுவரத் தன்மையிலும்
பரமேசுவரன் ஏவுகின்றார். அசுத்தாத்துவாவிலிருத்தலால், பக்குவமடையாத மலமுடையவர்களான
பிரளயாகலர்களையே அபரமந்திரேசுவரத் தன்மையில் ஏவுகின்றார் என்று எண்ணத்தகுந்தது. (திருத்: ஏவுகின்றா/ஏவுகின்றார்)
இவ்விடத்தில் மந்திர என்னும் சொல்லானது, மனனம், திராணம் என்று பிரிக்கப்படும் அவற்றுள்,
மனனம் என்பது எல்லாமறிதல். திராண மென்பது சமுசாரிகளை யனுக்கிரகித்தல். இவ்விரண்டிற்கும்
தருமியாயிருத்தலால் மந்திரமென்று வழங்கப் படுகின்றதென்று கேட்கப்படுதலால், சிவன் சத்தி
என்னுமிவர்களா லனுக்கிரகிக்கப் பட்டவர்களை, மந்திர என்னும் சொல் குறிக்கின்றது. இவர்களைக்
கூறும் சொற்களுக்கும் உபசாரமாய் மந்திரத் தன்மையென்று கூறப்போகின்றோம். மலமற்றவராதலால்
இவர்கள் விளங்கும்படி செய்யப்பட்ட ஞானக் கிரியையினையுடையர். எல்லா மறிதல் முதலிய
தருமங்களின் சேர்க்கையாலும், சுத்த வித்தியா தத்துவத்தி லிருத்தலாலும், ரௌரவம் முதலிய
சிவாகமங்களில் மந்திர தத்துவமென்று கூறப்பட்டிருக்கின்றனர். அதுபற்றியே, சுத்தவித்தையில்
சேர்ப்பதற்கு முன், மாயையின் மேல் என்னுந்தானத்திலேயே மலத்தின் நாசமானது தீக்கையில்
ஆசிரியரால் செய்யத் தகுந்ததென்று பெரியோர்கள் கூறுகின்றனர். (33)
(அ--கை) பின்னர் இந்த மந்திரேசுவரர்களுக்கு, ஆன்மாக்களுக்கு அனுக்கிரகம் செய்வதிற்
காரணமாயிருக்குந் தன்மையைக் கூறுகின்றார்.
(34) உலகத்தின் அனுக்கிரகத்திற்காக அவர்களுள், மந்திரேசுவரர்களின் பாதி பாகமானது,
ஆசிரியன் வடிவத்தை யதிட்டிக்காமல் பரமேசுவரனால் ஏவப்பட்டு அந்தப் பரமசிவனால்
அனுக்கிரகிக்கப்பட்ட புருடர்களை அனுக்கிரகஞ்செய்து முத்தியை யடைகின்றது என்பதாம் .
அந்த ஏழுகோடி எண்ணுள்ள உயிர்களுக்குள் பாதி பாகம் ஆசிரியனை யதிட்டிக்காமலே
ஈசுவரனால் ஏவப்பட்டு அந்த ஈசுவரனுடைய அனுக்கிரக சத்திக்கு உரியரான புருடர்களை அனுக்கிரகித்து,
சிருட்டிக்குப் பின்னரே சிவானுக்கிரகத்தை அடைகின்றது. சிவானுக்கிரகத்தை என்னும் செயப்படுபொருள்
மூலத்திலில்லை. சேர்த்துக் கொள்ளப்பட்டது.
அவ்வாறே, மிருகேந்திரத்திலும், மந்திரேசுவர்களுள் பாதி பாகமானது எல்லா மாயா காரியமான
அத்துவாவிலும் ஆசிரியனை யதிட்டித்து அதிகாரஞ்செய்து திதிகால முடிவில் சிவனையடைகின்றது.
மற்றொரு பாதியானது, ஆசிரியனை யதிட்டிக்காமல் மூலப்பிரகிருதியின காரியத்திற்குக் கீழ்
அதிகாரத்தைச்செய்து பரமசிவனை அடைகின்றதெனக் கூறப்பட்டிருக்கின்றது.
அவர்களுள், மலபரிபாகம் மிகுதியுமுடையோர் சிருட்டிக்குப் பின்னர் முத்தியடைகின்றனர் . மலபரிபாகம்
மிகுதியற்றவர் சங்கார காலத்தில் முத்தியடைகின்றனர். ( 31)
(அ-கை) ஆதலாற்றான் மற்றப்பகுதியின் தொழிலைக் கூறுகின்றார் .
(35--36) சிவனால் செய்யப்பட்ட மண்டலங்கள் மந்திரங்களென்னும் இவற்றோடு கூடிய
மற்றொரு பாதியானது ஆசிரிய வடிவத்தோடு கூடியிருக்கும் பரமசிவனால் ஏவப்பட்டு, தீக்கையென்னும்
பெயரையுடைய தொழிலால் விரைவாகப் பசுவினுடைய மலம், கன்மம், மாயை என்னும் இவற்றின்
தொழில்களை , விடத்தைப்போல நாசஞ் செய்கின்றது. வழிபாடு செய்யப்பட்டுச் சாதக
சிரேட்டரானவருக்கு அநேக விதங்களான சித்திகளையும் கொடுக்கின்றது என்பதாம்.
சிவபெருமானால் பசுவினுடைய அனுக்கிரகத்தின் பொருட்டு உண்டு பண்ணப்பட்ட மகா மண்டலம்,
வித்தியாங்கம் முதலிய மண்டலங்களோடும் , அம்மண்டலங்களில் பூசை செய்யத் தகுந்ததாய் நூல்களிற்
கூறப்பட்ட மந்திரங்களோடும் கூடிய மற்றொரு பாதியானது, ஆசிரியன் வடிவத்தை யதிட்டித்து
பரமசிவனால் ஏவப்பட்டு உயிரினுடைய மலகன்ம மாயா காரியங்களை , மந்திரமானது விடத்தை
நாசஞ்செய்வது போல விரைவில் நாசஞ் செய்கின்றது. அதுபற்றியே சகலருக்கே ஆசிரியனை யதிட்டித்த
சிவபெருமானால் அனுக்கிரகம் நிகழ்கின்றது. மும்மலங்களின் சேர்க்கை சகலருக்கே இருத்தலாலென்க.
இவ்விடத்தில் மலமானது ஒன்றாயும் அநேக ஆன்மாக்களை மறைக்கும் அநேக சத்தியுடன்
கூடினதாயும், நித்தியமாயும், வியாபகமாயும் இருக்கின்றது என்றவாறாம். அவ்வாறே, நூல்களினும்
சகல உயிரிடத்தும் அநாதி சேர்க்கையுள்ளதாய், வியாபகமாய் ஒவ்வொரு உயிர்களிடத்தும் தன் தன்
பரிபாக காலமுடிவில் நசிக்கும் அநேக சத்தியையுடையதாய் யாதொரு மலமிருக்கின்றதோ என்று
கேட்கப்படுகின்றது. ஆதலால் எந்தமல சத்திக்குப் பரிபாகமுள்ளதோ, அதற்கே தீக்கையால் தடையுண்டு.
மற்றவற்றிற்குத் தடையில்லை என்று கொள்கிறோம். ஆதலால் மலத்தை ஒன்றென்று கூறின் ஒருவர்
முத்தியடையுங்கால் அனைவரும் முத்தியடையவேண்டுமென்னும் வினாவிற்கு விடையளிக்கப்பட்டது.
தருமம் அதருமமென்னும் கன்மமானது ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாதது.
நீர்ப்பெருக்குப்போல் அநாதியாயுள்ளது. வடமொழி மூலத்திற் கூறப்பட்ட யோநி என்னும்
சொல்லிற்குக் காரணமென்பது பொருள். அதாவது மாயையென்பது கருத்து. சிறப்பாயும்
பொதுவாயுமுள்ள மாயா காரியங்க ளனைத்தும் கன்மத்தைக் காரணமாகக்கொண்டு இடையே
வந்தன வாயினும், அவையும் நீர்ப்பெருக்குப்போல அநாதியாயுள்ளனவேயாம்.
கன்மத்துக்கும் சரீரத்திற்கும் உண்டான சம்பந்தம் வித்துக்கும் முளைக்கு முண்டான
சம்பந்தம் போல் அனாதியாகவே சித்தித்திருக்கின்றமையால், மந்திரத்தை மேற்கொண்ட
விட வைத்தியனுடைய தொழிலால் விட நீக்கம் காணப்படுவது போல், மந்திரத்தைக் கரணமாகக்
கொண்ட பரமசிவனுடைய தீக்கை யென்னுந் தொழிலால் இந்த மல முதலியவை நாசமடைகின்றன.
ஆதலால், மந்திரேசுவரர்கள் பரமசிவன் அனுக்கிரகஞ் செய்யும் விஷயத்தில் கரணமாயிருக்கின்றனர்.
பர வித்தியேசுவரர், அபர வித்தியேசுவரர்கள் அனுக்கிரகத்திற்குக் கருத்தாவாயிருக்கின்றனர் என்பது
வேற்றுமை.
அன்றியும் இந்த மந்திரமானது மற்றொரு காரியத்தின் பொருட்டுப் போகத்தை இச்சிக்கும்
சாதகர்களால் பூசிக்கப்பட்டு அநேக விதங்களான சித்திகளையும் அளிக்கின்றன. அவ்வாறே
ரௌரவாகமத்திலும், கணபதி குருவின் மண்டலத்தில் உற்பத்தி யுடையவர்களாயும் தீக்கையால்
பரிசுத்தர்களாயும் மந்திரசித்தி யுடையவர்களாயு முள்ளவர்கள் பால சூரியமண்டலம் போல்
விளங்கும் வடிவமுடையவர்களாய் வெகுகாலம் அநேக தேவதாசிகளுடன் கூடிச் சகல
போகங்களையு மனுபவித்து இறுதியில் ஆசையற்றவர்களாய் பரம ஐசுவரியமான சிவஸ்தானத்தை
யடைந்தவர்களாக ஆகின்றனர் என்று கூறப்பட்டிருக்கின்றது. (35-36)
(அ-கை) அவ்வாறாயின் தீக்கையால் ஆன்மாவுக்குப் பாச நாசம் நிகழ்ந்திருக்கிறதென்பது
எவ்வாறு அறிய முடியுமென்னும் ஆசங்கைக்குச் சமாதானம் கூறுகின்றார்.
(37) முக்கியமான பிரமக்கொலை என்னும் பாவத்திலிருந்து தீக்கையினால் சுத்தியடைகிறான்
என்று நம்பிக்கையால் விடத்தின் நாசம்போல், துலையிலேற்றிப் பாசத்தின் நாசத்தையறிக என்பதாம்.
தீக்கை செய்துகொண்டபின் மகா பாவங்களைச் செய்தவனுக்கும் பாவநீக்கம் காணப்படுகின்றது.
அது எவ்வாறெனில், ஸ்ரீமத் காலோத்தரம் முதலிய ஆகமங்களில் கூறப்பட்டவாறு போல், மந்திரத்தினால்
பெறப்பட்ட திராசில் ஒரு புருடனை முன்னர் ஏறச்செய்து அவனுடைய கனத்தன்மையைப் பரீக்ஷித்துப் பின்னர்
உத்காத மந்திரங்களை ஜெபித்து அவனுக்குச் சுத்திசெய்வித்து மறுபடியும் அவனைத் திராசில் ஏற்றி
வைக்குங்கால் அவனிடத்தில் இலகுத்தன்மை காணப்படுகின்றது. இது நிர்ப்பீச தீக்கை முதலிய வேறு
ஞானங்களுக்கு உப லக்கணமாகக் கூறப்பட்டது. ஆகையால் நம்மால் காணப்படும் இவ்விதமான
நம்பிக்கையால் பாம்பாட்டியினுடைய செயலால் விடம் நீங்குவது போல் பரமேசுவரன் செயலான
தீக்கையால் மலத்திற்கு நாசஞ் சித்தித்ததென்று அறியத்தகுந்தது.
ஆதலினாற்றான், உலகில் பயனுடையதாய்க் காணப்பட்ட விட நீக்கம், பூத நீக்கம்,
இரசவாதம் முதலிய காரியங்களில் அவற்றைக்கூறும் சாஸ்திரங்களைப் பிரமாணமாகக் கொள்வது போல்,
கண்ணுக்குப் புலப்படாத அதிருஷ்ட ரூபமான தீக்கையைக் கூறும் சாஸ்திரமும் பிரமாணமென்று
ஊகிக்கிற படியால் அச்சாஸ்திரங்களைக் கூறிய பரமேசுவரன் மேலான ஆப்தனென்று சித்தித்தது.
அவ்வாறே நூல்களிலும் விட நீக்கம், மந்திரவாதம், இரசவாசம் முதலிய காரியங்கள் பயனுடையனவாகையால்
இவற்றின் கருத்தா ஆப்தெனென்று கொள்ளப்படுகிறானெனக் கூறப்பட்டிருக்கின்றது. (37)
(அ-கை) அவ்வாறாயின் தீக்கையால் சகல பாவங்களும் நசிக்குமானால் அக்காலத்திலேயே
சரீரம் நசிக்கட்டும் என்பார்க்குச் சமாதானம் கூறுகின்றார்.
(38) பிற்காலத்தில் பயனளிக்கும் கன்மம் நசிப்பதால் தீக்ஷிதர்கள் அனைவருடைய சரீரமும்
நாசமடைகிறதில்லை. நிகழ்கின்ற பயனையுடைய பிராரப்த கன்மத்தை நசிக்கச் செய்யும்
தீக்கையும் ஒன்றுளது என்பதாம்.
பிற்காலத்தில் பயனளிக்கும் கன்மங்கள்தான் சத்தியோ நிருவாண தீக்கையில் நசிக்கின்றன-
பிராரப்த கன்மம் பயனளித்துக் கொண்டிருத்தலால் அது நசிக்கிறதில்லை. ஆதலால், தீக்கை நிகழ்ந்த
பின்னர் தேகம் இருப்பின் ஒருவிதமான குற்றமில்லாமை காண்க. அவ்வாறே கிரணாகமத்திலும்
யாதொரு பிராரப்த கன்மத்தால் அநேகம் பிறவிகளில் ஆன்மாக்களால் சம்பாதிக்கப்பட்ட கன்மமும்
வருங்கன்மமும் தீக்கையில் வறுக்கப்பட்ட வித்துப்போலத் தடைசெய்யப்பட்டிருக்கின்றதோ, அந்தப்
பிராரப்த கன்மம் போகத்தினால் நசிக்கின்றதென்று கூறப்பட்டிருக்கின்றது. மல பரிபாகம்
மிகுதியாயிருந்தால் சத்தியோ நிருவாண தீக்கையினாலேயே பிராரப்த கன்மமும் நசிக்குமென்று
பிராரப்த கன்மத்தை நசிக்கச் செய்யும் தீக்கையுமொன்றுளது என்பதனால் கூறுகின்றார்.
ஆனால் அப்பொழுதும் வாசனை காரணமாய் சரீரம் சிறிதுகாலம் இருக்கவே செய்யும்.
அவ்வாறே பெரியோர்களும், வாசனை காரணமாய் சுற்றி விடப்பட்ட சக்கரம் போலச் சிறிது காலம்
ஆன்மா சரீரத்தை வகித்துக்கொண் டிருக்கின்றானெனக் கூறுகின்றனர். (38)
(அ-கை) இப்பொழுது பின்னர்ச் செய்யப்படும் கன்மமும் நடைபெறும் என்று முன்னர்க்
கூறியதை விரித்துரைக்கின்றார்.
(39) தீக்கைக்குப் பின்னர் கன்மங்களைச் செய்தாலும் விசேஷ சாஸ்திரங்களின் சேர்க்கையா
லுண்டானதாயும் பிரதானமாயு மிருக்கும் கன்மங்களல்லாத ஏனைய கன்மம் உவர்ப்பூமியில்
விதைக்கப்பட்ட விதைபோலப் பலனளிக்காது என்பதாம்.
தீக்கைக்குப் பின்னர் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறதென்று செய்யப்பட்ட
(இஷ்டாபூர்த்தம்) அதாவது வேள்வி செய்தல், குள முதலியன தோண்டுதல் முதலிய கன்மமானது
தீக்கையால் தடைப்பட்ட சத்தியுடன் கூடியிருத்தல்பற்றிப் பின்னர் சரீர சேர்க்கை ரூபபலனைக்
கொடுக்கிறதில்லை. விசேட சாத்திரத்தால் விதிக்கப்பட்டதாயும் சாதகனால் அனுட்டிக்கப்
பட்டதாயுமுள்ள மந்திர ஜெபம், ஆராதனம் முதலிய கன்மமானது பயனை யளிக்கவே செய்யும் .
அவ்வாறே சுவாயம்பு வாகமத்தில் எந்தச் சித்த புருடன் எவ்விடத்தில் போகங்களை விரும்புகிறானோ
அவிடத்தில் மந்திர சாமர்த்தியத்தால் ஏவப்பட்டிருக்கிறானென்று கூறப்பட்டிருக்கின்றது.
அன்றியும் மோக்ஷத்தில் விருப்பமுள்ளவன் விசேட சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட
கன்மத்தைச் செய்யாமலிருந்தாலும் அச்சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட கன்மத்தைச் செய்து
பிராயச்சித்தம் செய்து கொள்ளாமலிருந்தாலும், அவனுக்குப் பாவத்தின் சேர்க்கை சாஸ்திரங்களில்
கேட்கப்படுகின்றது. அதாவது சாஸ்திர ரூபமான ஏவுதலைத் தாண்டினால் நூறு வருட காலம்
வேடனாயிருக்குந் தன்மை கூறப்பட்டிருக்கிற தென்க. சாமான்ய சாஸ்திரத்தால் விதிக்கப்பட்டதா
யிருந்தாலும் வருணாச்சிரமங்களுக் குரிய கன்மங்கள் செய்யத் தகுந்தனவேயாம்.
அவ்வாறே சாஸ்திரங்களிலும் '' இவ்வாறு வருணம், ஆச்சிரமம், அவற்றிற் குரிய செயல்கள்,
என்னுமிவற்றை மனத்தாலும் தாண்டக்கூடாது. எந்தப் புருடன் எந்த ஆச்சிரமத்தினின்று பரமசிவ
ரூபமான தீக்கையைப் பெற்றிருக்கின்றானோ அவன் அந்த ஆச்சிரமத்தினின்றே சிவதர்மத்தைக்
காக்கக் கடவன்" என்று கேட்கப்படுகின்றது. (39)
(அ-கை) அவ்வாறாயின் தீக்கைபெற்ற பிறகு சமயத்தைத் தாண்டுதல் முதலிய பாவங்களைச்
செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ளாத புருடனுக்கு மோக்ஷம் உண்டா இல்லையா என்னும்
ஆசங்கைக்குச் சமாதானம் கூறுகின்றார்.
(40) மோகத்தால் செய்யப்படாத கன்மத்தையுடைய புருடன் சிறிதுகாலம் பிசாசுகளுக் கதிபனாயிருந்து
பின்னர் நிர்மல சொரூபமுடையவனாய் பரமசிவனோடு சமத்தன்மையை யடைகின்றானென்பதாம்.
இவ்விஷயத்தில் தீக்கைக்குப் பின்னர் ஸ்நானம் பூஜை முதலிய சமயாசாரத்தின் செயலால்,
ஆரம்பிக்கப்பட்ட காரியத்தையுடைய பாசத்திற்கு நாசமானது, ஒவ்வொரு தினமும் குறைதல் ரூபமாகச்
செய்யப்படுகின்றது. ஆகையால் சாபேக்ஷ தீக்கையுடைய (அதாவது விருப்பத்துடன் தீக்கைபெற்ற)
சாமர்த்தியமுடையோர் அவரவர் சமயாசாரத்தை விசேடமாகச் செய்யக்கடவர். சாமர்த்தியமற்ற
நிரபேட்ச தீக்கையடைந்த பாலர்களுக்கு தன்னால் முடிந்த மட்டும் ஆசிரியனுக்குத் தொண்டு புரிதல்,
சிவ பூஜை செய்தல் முதலியன செய்யத் தகுந்தவை. ஆனதுபற்றியே இவ்வித கன்மங்களின்
செயலைக் கொண்டு இவன் தீக்கை நிரம்பப் பெற்றவ னென்பது ஊகிக்கப் படுகின்றது.
ஆகையால் எவனுக்கு மலபரிபாக மிகுதியால் மிகத் தீவிரமான சத்திநிபாதமும், தீக்கையில்
குறைவின்மையும் , சமயத்தைத் தாண்டாமலிருத்தலு மிருக்கின்றனவோ, அவனுக்கே தேகநாசத்துக்குப்
பின்னர் மோக்ஷம் நிகழ்கின்றது. மலபரிபாகக் குறைவால் மிகவும் குறைவான சத்தி நிபாதமுடைய
எந்தப் புருடன் தீக்கை நிரம்பிய பின்னர் தெய்வ வசத்தினாலாவது அல்லது மனித வசத்தினாலாவது
சமயத்தைத் தாண்டுகின்றானோ, அவன் தனது சமயத்திற்குரிய கன்மங்களைச் செய்யாதவனும்,
தவறுதலுக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாதவனுமாய்ச் சமயத்தைத் தாண்டினதற்கு, பிசாச ராஜ
ரூபமான பயனை காமியப் பயன்களைப்போல அனுபவித்துப் பின்னர் நின்மல சொரூபனாய்
பரமசிவனுடன் சாமியரூபமான மோட்சத்தை யடைகின்றான்.
அவ்வாறே, சாஸ்திரங்களும் பிராயச்சித்தத்தால் சுத்தியடைந்த புருஷனுடைய
புத்தியானது சுத்தமாகக் கூறப்பட்டிருக்கின்றதென்று கூறப்பட்டிருக்கின்றது. எவன் இவ்வுலகில்
காணப்படும் அநித்தியமான சிற்சில பயனை விரும்பி வியாசமான குருபத்தியோடு தீக்கைபெற்றுக்
கொண்டு தனது சமயத்துக்குரிய கன்மங்களை அனுட்டிக்காமலிருக்கின்றானோ அவனுக்குத்
தீக்கை முடிவடையவில்லை. செய்துவைத்த ஆசிரியனும் பாவச் சேர்க்கையுடையவனாகின்றான்.
அவ்வாறே சாஸ்திரங்களில் பொய்த் தீக்கை பெற்றுக் கொண்டவன் பெற்றுக்கொள்ளாதவனாவான்.
அவனுக்குத் தீக்கை செய்வித்த ஆசிரியன் பாவமுடையவனாகின்றான். ஆசிரியன் அந்தப் பாவத்தைத்
தொலைப்பதற்காக, தான் மறுபடியும் தீக்கை செய்து கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது. (40).
(அ--கை) இவ்வாறு இடையே தொடர்ந்த தீக்கையின் பயனைக் கூறிவிட்டு முன் தொடர்ந்த
விஷயத்தில் மந்திரங்களுக்குப் பின்னர் மந்திர மகேசுவரர்களைக் கூறுகின்றார்.
(41) மந்திரர் முதலியோரின் சிருட்டிக்கு முன்னரேயே பரமசிவனால் அணுக்கள் எண்மர்
நாசஞ்செய்யப்பட்ட மலமுடையவர்களாயும் எல்லாப் பொருள்களையும் விஷயமாகச்
செய்யும் ஞானக் கிரியா சாமர்த்திய முடையவர்களாகச் செய்யப்பட்டவர்களாயு மிருக்கிறார்க ளென்பதாம்.
மந்திரர்களின் சிருட்டிக்கு முன்னரேயே அணுக்கள் எண்மர் பரமசிவனால் நீக்கஞ் செய்யப்பட்ட
மலமுடையவர்களாயும் அதுபற்றியே விளங்கச் செய்யப்பட்ட ஞானக்கிரியா சத்தியுடையவர்களாயுமிருக்கும்
விஞ்ஞான கேவலர்களாகச் செய்யப்பட்டார்கள். அவ்வாறே மிருகேந்திரத்திலும், இவ்வாறு இருத்தலில்
மல பரிபாகத்தையனுசரித்து நாசமடைந்த மாயை கன்மங்களையுடைய வித்தியேச பதத்திற்கு
யோக்கியரான அணுக்கள் எண்மரை வாமம் முதலிய ஒன்பது சத்திகளுடன் கூடி ஏழு கோடி
மந்திரங்களைப் பரிவாரமாகவுடைய விஞ்ஞான கேவலர்களாகச் செய்கிறாரெனக் கூறப்பட்டிருக்கின்றது. (41)
(அ-கை) அந்த வித்தியேசுவரர்கள் யாவர்? என்ன தொழில் செய்கின்றனர்?
என்னு மாசங்சைக்குச் சமாதானம் கூறுகின்றார்.
(42) அநந்தேசுவரர் முதலிய அந்த வித்தியேசுவரர்கள் பதியாயிருத்தலால் மந்திரர்
முதலியோரை ஏவுகின்றனர். பரமசிவனுடைய இச்சையால் ஏவப்பட்டவர்களாய் படைத்தல்
காத்தல் அழித்தல் அனுக்கிரகித்தல் முதலிய கன்மங்களைச் செய்கின்றனர் என்பதாம்.
அந்த அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர்,
சிகண்டி என்னும் பெயருடைய வித்தியேசுவரர்கள் மந்திர மகேசுவரர்களாயிருத்தலால் மந்திரர்
முதலியோரை ஏவுதல் செய்கின்றனர். அன்றியும், படைத்தல் முதலிய நான்கு தொழிலையும்
அவற்றிற்கு இன்றியமையாத அனுபவ ரூபமான திரோபவத்தையும் செய்கின்றனர். அவ்வாறே,
ரௌரவாகமத்தில், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்கிரகித்தல் என்னுமிவற்றைச்
செய்கின்றனர் என்று கூறப்பட்டிருக்கின்றது.
பரமசிவனுடைய இச்சையால் ஏவப்பட்டவர்களாய் என்பதனால் இவர்கள் ஐந்தொழில்களுக்கு
அதிகாரிகளாயிருந்தும் இவர்களுக்குச் சிவசாமிய மின்மையைக் கூறுகின்றார். இவர்கள் அதிகார
மலச் சேர்க்கையுடையவர்களாதலால் ஏவத் தகுந்தவர்களாயிருப்பது பற்றி இவர்களுக்குப்
பரமசிவனைக் காட்டிலும் கருத்தாவாயிருக்குந் தன்மை ஒரு கலை அளவாக் குறைந்திருக்கின்றது.
மந்திர மந்திரேசுவரர்களுக்கு இவர்களைக் காட்டிலும் கருத்தாவா யிருக்குந் தன்மை குறைந்திருக்கின்றது .
அதுபற்றியே சாஸ்திரங்களில் அநந்தருக்கு ஏனையோரைக் காட்டிலும் மேலான தன்மை கேட்கப்படுகின்றது.
எவ்வாறெனில், அனந்த சித்திகளையுடைய அவர்களுள், அநந்தர் மேலானவராயிருக்கிறார் என்பதால் என்க.
எவற்றையும் அறியும் விஷயத்தில் அனைவரும் சமமாகவே இருக்கின்றனர். எதனாலெனின், நூல்களில்
விசேடங் காணப் படாமையாலென்க. இவர்களனைவருக்கும் மகாப்பிரளயத்தில் அதிகாரம் நீங்குதலால்
மோட்சம் நிகழ்கின்றதென்று ரௌரவத்தில் கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறெனில், அநந்தருடைய ஒடுக்கத்தில்
மகான்களாயும், சக்கரவர்த்திகளாயு மிருக்கும் அவர்களுக்குச் சர்வ கருத்திருத் தன்மைக்குக் காரணமான
மேலான ஸ்தானமானது விதிக்கப்பட்டிருக்கின்றது என்பதாலென்க. (42) .
(அ--கை) இது இவ்வாறாக ஈசுவரத் தத்துவத்திலிருப்பவர்களான இவர்கள் மந்திர
மகேசுவரர்களென்று கூறப்படுகின்றனரெனக் கூறுகின்றார் .
(43) சுத்தாத்துவா அசுத்தாத்துவா என்னும் இந்த இரண்டிலும் அணுக்களும் அணுக்களின்
பதிகளும் இந்த மந்திரேச தத்துவமாகின்றனர். யாதொரு காரணத்தால் சொல்லானது
பொருளில்லாததாக ஆகாதோ அந்தக் காரணத்தால் சொற்களாயுள்ள மந்திரங்களுக்குப்
பொருள்களாயிருக்கின்றனர் என்பதாம்.
சுத்தா சுத்த ரூபமான இரண்டு விதமான அத்துவாவிலும் மனனம் திராணம் என்பவற்றின்
பொருளான எல்லாமறிதல், சமுசாரிகளை யனுக்கிரகித்தல் என்னும் தருமங்களுடன் கூடிய
அணுக்களும் அவ்வணுக்களின் பதிகளும் மந்திரேசுவரர் என்றும், மந்திர மகேசுவரர் என்றும்
கூறப்படுகின்றனர். இதனால் அசுத்தாத்துவாவி லிருக்கும் பாசமுடையோர்களும்
மந்திரர்களாகின்றனரென்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறே பெரியோர்களும் பிரமா, விஷ்ணு
முதலியோர் பிரதானர்களான மந்திரர்கள். புவனாண்டத்தி லிருப்பவர்களாயும், பாசப் பற்றுடையவர்களாயும்,
சத்துவ, ராசச, தாமசர்களாயுமிருக்கும் அணுக்களும் மந்திரர்களாவரெனக் கூறுகின்றனர்.
அது பற்றிப் பிற்பகுதியால் பொருளைத் தெரிவிக்கும் சொற்கள் சடமாயிருத்தலால் மனனம்,
திராணம் எனப் பிரிக்கப்பட்டு எல்லா மறிந்திருத்தல், சமுசாரிகளைக் காத்தல் என்னும் கருமம் மந்திரத்திற்குச்
சம்பவியா தாகையால் அம்மந்திரங்கள் பொருள்களி னறிவுக்குக் காரணமா யிருப்பதுபற்றி
உபசாரமாய் மந்திரங்களென்று கூறுகிறார்.
கடம் படம் முதலிய சொற்கள் அவற்றிற்குச் சத்தியால் கிடைக்கக் கூடிய பொருள்களான கடம் படம்
முதலியவற்றி லிருக்கின்றனவாகக் காணப்படுகின்றன. ஆதலால் அநந்தர் முதலியோரைக் கூறும்
சொல்வடிவமான மந்திரங்களுக்குச் சத்தியால் கிடைக்கக் கூடிய பொருள்களான மந்திரேசுவரர்கள்
மந்திர செபத்தினால் பலனளிப்பவர்களாய் சித்தித்தனர். இதனால் சொற்கள் மாத்திரமே தேவதைகளென்று
கூறும். பூர்வமீமாம்ஸகர்கள் ஒதுக்கப்பட்டனர். எதனானெனில் , அசேதனப் பொருள் சேதனப் பொருளை
யதிட்டித்து நின்றே தொழிற்செய்கிறபடியா லென்க. ஆதலால் பரமேசுவரன் வடிவத்தை யதிட்டித்துப்
பலனளிப்பதுபோல் மந்திர ரூபமான சொல்லில் விளங்கிய சிவன் முதலிய சத்தியால் கிடைக்கும்
பொருள்களே பலனளிக்கின்றன வென்று அறியத் தகுந்தது. (43)
(அ-கை) இவ்விடத்தில் சொல்லானது செய்கையுடன் கூடியிருத்தலால் கட
முதலியன போல் காரியமாயிருப்பது பற்றிச் சொல்லுக்கும் பொருளுக்கு முள்ள சம்பந்தமும்
நித்திய மில்லாமல் சங்கேதத்தால் முடிந்தமையால் அந்தச் சங்கேதத்தைச் செய்தவனான
கருத்தா எல்லாமறிந்த பரமசிவனேயாவ னென்று கூறுகின்றார்.
(44) யாதொரு காரணத்தால் பொருளை யறிந்தவனே பொருளின் பெயரைச் செய்கிறவனாகக்
காணப்படுகின்றானோ, அந்தக் காரணத்தால் மந்திரேசுவரர்களுடைய சிறப்புப் பொதுத் தருமங்களை
யறிந்த பரமசிவன் அவர்களை யறிவிக்குஞ் சொற்களான மந்திரங்களைச் செய்தனர் என்பதாம்.
எந்தக் காரணத்தால் புத்திரன் முதலிய பொருள்களுக்கு அப்பொருள்களை யறிந்த பிதா
முதலியவன் பெயரைச் செய்கிறவனாகக் காணப்படுகின்றானோ, அந்தக் காரணத்தால்
மந்திரேசுவரரென்னும் பொருள்களுக்குச் சொற்களான மந்திரங்களைப் பரமசிவனே செய்தனர்.
எதனாலெனின், அந்தப் பரமசிவனே மந்திரேசுவரர்களின் சிறப்புப் பொது இலக்கணம்
அறிந்தவராகையாலென்க. மந்திரேசுவரர்களுக்குப் பொது இலக்கணமாவது நித்தியத்தன்மை,
வியாபகத் தன்மை முதலியன. சிறப்பிலக்கணமாவது மல சேடத்தால் அந்தந்தத் தானத்தில்
ஏவத்தகுந்தவர்களாயிருக்குந் தன்மையென்று அறியத் தகுந்தது. இவ்விடத்தில் மந்திரங்களென்னும்
சொற்களுக்கு முதற் காரணமாயும் வித்தியேசுவரர்களின் சரீரம் இந்திரியம்
முதலியவற்றிற்குப் பற்றுக்கோடான சுத்தாத்துவ புவனங்களுக்கு முதற்காரணமாயும்,
குண்டலினீ என்னும் பெயருடைய மகாமாயை சித்தித்தது.
அவ்வாறே ரௌரவாகமத்திலும் மாயைக்கு மேல் மகாமாயை யென்று கூறப்பட்டிருக்கின்றது.
மிருகேந்திரத்திலும் சத்தியிலிருந்து நாதமும் அதிலிருந்து விந்துவும், அதிலிருந்து மாதிருகாக்கரங்களும்
உண்டாகின்றன வென்றும், சுத்தாத்துவாவில் மகாமாயைக்கு என்றும் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விதமான
வித்தை ஈசுவரன் சதாசிவன் முதலிய சுத்த தத்துவங்களின் வேறுபாடும் அவற்றிற்குக் காரணமான
பரவிந்துவின் சித்தி முறையும், மதங்கம் முதலிய சிவாகமங்களில் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றது.
இரத்தினத் திரயத்திற்கு வியாக்கியானமான இரத்தினத்திரய உல்லேகிநீ என்னும் கிரந்தத்திலும்
நம்மால் சாதிக்கப்பட்டிருக்கின்றமையால் அதிலிருந்தே யறிந்து கொள்க. (44)
(அ-கை) பின்னர் அவரவரால் அதிட்டிக்கத் தகுந்த உபாதி வேறுபாட்டால் வேறுபாட்டை யடைந்த
சத்தி சிவன்களோடு வித்தியேசுவரர்களுக்குச் சேர்க்கை ரூபமாயிருக்குந் தன்மை நூல்களில்
கேட்கப்படுகின்றதென்று கூறுகின்றார்.
(45-46) வித்துவான்களால் வித்தியா வித்தியேசுவரர்களில் அணுபக்கம், சத்திபக்கம், சம்புபக்கம்
என்னும் மூன்று பக்கங்கள் கொள்ளப் பட்டிருக்கின்றன. சிவன் ஒருவனாயும் விகார மற்றவனாயுமிருக்கின்றான்.
அவனது சத்தியும் ஒன்றாயும் விகாரமற்றதாயு மிருக்கின்றது. ஆதலால் சிவன் சத்தியென்னுமிவை அநேகமாயிருத்தற்கு
உரிமையுடையனவல்ல. அநேக விதங்களாயிருக்குமாயின் விகாரமுடையனவாய்ச் சடங்களாய் ஆகுமென்க.
பரமசிவன் ஒருவனாயிருந்தும் யோகிபோல் அநேக தேகங்களை யதிட்டித்துக் கொண்டிருக்கின்றான்
என்று ஒரு பக்கத்தார் கூறுகின்றனர் என்பதாம்.
உலகத்தின் அனுக்கிரகத்தின் பொருட்டுச் சிவன் மந்திரமா யிருக்கின்றானென்று சுருதி கூறுகின்றது;
யாதொரு அனுக்கிரகஞ் செய்யுஞ் சிவசத்தியிருக்கின்றதோ அது மந்திரத் தன்மையை அடைகின்றதென்றும்,
மந்திரங்களுக்கு மேலான ஈசுவரர்கள் இருபத்து நான்கு பெயர்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். அணுவைச்
சார்ந்தவர்களும், சம்புவைச் சார்ந்தவர்களும், சத்தியைச் சார்ந்தவர்களுமாயுமுள்ள அநேக மந்திர
கோடிகள் வீரபத்திரரை முன்னிட்டவர்களாய்க் கொண்டு உலகத்திற்கு ஆதாரங்களாயிருக்கின்றனர்
என்றும் சிவகீதையில் கூறப்பட்டிருக்கின்றது.
இவர்களுள் அணுபக்கத்திற்கு மேலே கூறப்பட்டவாறு போல் வேறுபாடாயிருக்குந் தன்மை
முக்கியமாகவேயுள்ளது. சம்புபக்கம் சத்திபக்கங்களுக்கோவெனில், சம்பு சத்திகள் அதிட்டித்தல் பற்றி
உபசாரமாய் வேறுபாடு கூறப்பட்டிருக்கிறதென்று, சிவனொருவனாயும் விகாரமற்றவனாயு மிருக்கின்றான்
என்னும் தொடக்கத்தால் கூறுகின்றார். இவ்விடத்தில் சிவனொருவனே உலகத்திற்குக் கருத்தாவாயும்,
அனைவரையும் அனுக்கிரகஞ் செய்கின்றவராயும் இருக்கின்றார். எதனாலெனின் அவர் அநாதி
முத்தனா யிருக்கிறபடியாலென்க.
அவ்வாறே ரௌரவாகமத்திலும் சிறந்ததான சிவதத்துவமானது ஒன்று என்று கூறப்பட்டிருக்கின்றது.
அவ்வாறே சுருதியும் உருத்திரன் ஒருவனாகவே இருக்கின்றான், அநேகனா யிருக்கின்றானில்லை என்று
கூறுகின்றது. அநேக ஈசுவரர்களைக் கொண்டால் உலக ரூபமான காரியம் நிகழாதாதலாலென்க.
தேர் முதலியவற்றின் செயல்கள் அநேகம் கருத்தாவையுடையதாயினும் ஒரு ஸ்தபதியின் இச்சையை
யனுசரியாமல் உண்டாகாமையால் கருத்தா ஒருவனேயாவனென்க. அவ்வாறே எந்தக் காரியத்தை
அனேகர் தங்களைப் பண்டிதர்களாய் எண்ணிக் கொண்டு கௌரவத்தை விரும்பி நடத்துகின்றார்களோ
அந்தக் காரியம் நிச்சயமாய் முடிவை யடைகிறதில்லை யென்று பெரியோர்களும் கூறுகின்றனர்.
ஈசுவரத் தன்மையானது சொரூப விளக்கத்தையடைதல் என்னும் சொரூபமாதலால் நாசம்
சம்பவியா தாகையால் பிரவாகேசுவரபக்கம் ஒதுக்கப்பட்டது. அந்த ஈசுவரன் நித்தியனாயும்
சேதனனாயு மிருக்கிறபடியால் விகாரமற்றவன், அவனது சத்தியும் அவனுடைய தருமமா யிருத்தலால்
அவன் போலவே விகாரமற்றதாய் நித்தியமாயிருக்கின்றது. நித்தியனான ஈசுவரனுக்கு அநித்தியமான
தருமம் கொள்ளக்கூடாதாகையா லென்க. அவ்வாறு கொண்டால் தருமமும் தருமியும் வேறு இல்லையாதலால்
தருமியும் அநித்தியமாய் முடியும்.
ஆதலால் அந்தச் சத்தி சிவன் இரண்டும் அநந்தர் முதலியோரின் வேறுபாட்டால் அநேக
விதமாயிருப்பதற்கு யோக்கியமாவதில்லை. அவ்விரண்டும் அநேக விதமாக இருக்கின்றனவென்று
கொண்டால் அப்பொழுது விகாரமுடையவர்களாய் மாயை முதலியன போல் சடங்களாதல் கூடும் என்க.
அவர்களைச் சடங்களாகக் கொள்ளுதல் கூடாது. சேதனங்களென்றே நூல்களில் கேட்கப்படுவதாலும்
அசேதனத்திற்குச் சேதனப் பொருளின் அதிட்டான மில்லாமல் பரிணாமம் கூடாதாகையாலுமென்க.
ஆகையால் சத்தி சிவன்களின் வேறுபாடு உபசாரமாய்க் கூறப்பட்டதேயாம். அவ்வாறே
நூல்களிலும் ஈசுவரன் ஒருவன் உபசாரமாய் லயமுடைய லயி என்றும் அதிகாரமுடைய அதிகாரி யென்றும்
போகமுடைய போகியென்றும், அவ்வாறே அன்றியும் யாதொரு பதி வேறுபாடு நூல்களில் சத்தி
வேறுபாடுபோல் கூறப்பட்டிருக்கின்றதோ அது காரிய வேறுபாட்டால் உபசாரமாய்க் கூறப்பட்டிருக்கின்றது.
காரிய வேறுபாடு சாதன வேறுபாட்டா லுண்டானதென்றும் கூறப்பட்டிருத்தல் காண்க. மூலத்தின் இறுதியான
பகுதியால் இவ்விஷயத்தில் பூர்வபக்ஷியின் சங்கையைக் கூறுகின்றார். அஃதாவது சிவனொருவனாயினும்
யோகிபோல் அநேக தேகங்களை யதிட்டித்துச் சதாசிவன் அநந்தர் முதலிய பெயர் வேறுபாட்டையடைகின்றான்
என்பதாம். (45–46)
(அ-கை) இந்தச் சங்கை பொருந்தாதென்று கூறுகின்றார்.
(47-48) அந்தப் பரமேசுவரனுக்குச் சத்தியே யாதொரு காரணத்தால் சரீரமாயிருக்கின்றதோ
அந்தச் சத்தி ஒன்றாயுமிருக்கின்றதோ அந்தக் காரணத்தால் பரமசிவனுக்குச் சரீர வேறுபாடு உண்மையற்றது .
மேன்மையடைந்த புருடர் அநேகர். அவர்களுக்குச் சரீரம் இந்திரியம் முதலிய துணைகளின்
வேறுபாட்டாலுண்டான மேன்மை காணப்படுகின்றது. ஆகையால் அதினாலுண்டான வேறுபாடானது
உண்மையேயாகு மென்பதாம்.
யாதொரு காரணத்தால் மலமற்றவனா யிருப்பதுபற்றிச் சிவனுக்கு உண்மையாகச்
சுத்த மாயா காரியம் முதலிய தேகத்துடன் சேர்க்கை யில்லாமையால் அவனது சத்தியே
தேகத்தின் தொழிலை நிகழ்த்துவதாய்க் கொண்டு உபசாரமாய்த் தேகமென்று கொள்ளப்
படுகின்றதோ, அந்த சத்தி ஒன்றே யென்றும் கூறப்பட்டிருக்கின்றதோ, அந்தக் காரணத்தால் (ஐயம்: அந்த சத்தி? எந்த சத்தி?)
பரமேசுவரனுக்கு ஈசானன் முதலிய வேறுபாடு உண்மையற்றது. ஆகையால் யோகிகளின் சரீர
வேறுபாடு போல் இவனுடைய சரீர வேறுபாடு உண்மையற்றது. அவ்வாறாயின் ஐந்து முகமுடையவன்
பதினைந்து கண்களுடையவனென்று பரமசிவனுக்கும் நூல்களில் சரீர வேறுபாடு கேட்கப்
படுகின்றதேயெனில், அஃதுண்மையே. அந்தச் சரீர வேறுபாடும் தியானத்தின் பொருட்டே
சொல்லப்படுகின்றது. அவ்வாறே பௌட்கரத்திலும் சாதகனுடைய குறிப்புக்காகப் பரமசிவனுக்கு
உருவம் கூறப்பட்டிருக்கிறதென்று கூறப்பட்டிருத்தல் காண்க.
அணுபக்கத்திலுண்டான வேறுபாடு உண்மையென்று மேன்மை யடைந்த புருடர்கள்
அநேகர் என்னுந் தொடக்கத்தால் கூறுகின்றார். இவ்விடத்தில் போக வேறுபாட்டாலும் பிறப்பு
இறப்பின் வேறுபாட்டாலும் போகமோக்ஷத்தின் பொருட்டு மேன்மையடைந்த இந்தப் புருடர்கள்
அனேகர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு விளக்கஞ் செய்விக்கும் வியஞ்சகங்களான
சரீரம் இந்திரியம் முதலியன இருத்தலால், அவற்றாலுண்டான மேன்மையும் மேல் மேலான
ஞானக் கிரியைகளின் மேன்மையும் காணப்படுகின்றன. ஆகையால் இந்த வித்தியா
வித்தியேசுவரர்களுக்கும் மேலே கூறப்பட்டவாறுபோல் சிவனுடைய அனுக்கிரக வேறுபாட்டாலும்
அவரவரின் அதிகார வேறுபாட்டாலும் புவன வேறுபாட்டாலும் அவற்றால்நிகழ்ந்த
வேறுபாடுண்மையேயாகும். (47-48)
(48-49) ஆகையால் அவர்களை யதிட்டித்துச் சிவசத்திகள் புருடார்த்தத்தை நிகழ்த்துகின்றன.
ஆகையால் அவர்களை யடைந்த வேறுபாட்டால் சிவசத்திகளும் வேறுபாடுள்ளனவாகக் காணப்படுகின்றன.
குணத்தாலும் சாதியாலும் அவர்களின் பெயரும் நிகழ்கின்றன என்பதாம்.
எந்தக் காரணத்தால் அவர்களை யதிட்டித்துச் சிவனும் அவனது சத்தியும் புருடார்த்தங்களை
யளிக்கின்றனரோ, அந்தக் காரணத்தால் அவர்களின் வேறுபாட்டால் இந்தச் சிவ சத்திகளும் வேறுபட்டவை
போல் ஆகின்றன. சத்தியுடன் கூடிய அந்தப் பரமசிவனும் அவர்களின் காரிய வேறுபாடுடைய
சேர்க்கையால் உபசாரமாய் அப்பெயருடையவனாக ஆகின்றான் (48-49)
( அ--கை)ஆகையால் சிவனே அனைவருக்கும் அனுக்கிரகஞ் செய்பவனாகின்றானென்று கூறுகின்றார்
(49-50-51) நித்தியனாயும் அனாதியே மலமற்றவனாயும் சர்வஞ்ஞனாயும் சர்வ கருத்தாவாயும்
கெடுக்கப்படாத சக்தியுடையவனாயும் சுகத்தைத் தருபவனாயும் ஒருவனாயுமிருக்கும் பரமசிவன்
அனைவருக்கும் நேசனாயிருக்கின்றான். இந்த நூலில் போதம் தியானம் முதலியன முடிவடைவதின்
பொருட்டு இரண்டு தத்துவங்கள் கூறப்பட்டன. சத்தி சத்திமான் என்பவற்றை மூர்த்தி மூர்த்திமான்
என்று சுருக்கமாகச் சொல்லலாம் என்பதாம்.
இந்த நூலில் போக மோக்ஷம் சித்திப்பதற்காக அறிவுக்கு விஷயமாக சகள நிட்களமென்னும்
பெயருடையதாகவாவது, சத்தி சத்திமானென்னும் பெயருடையதாகவாவது, இரண்டு தத்துவங்கள்
கூறப்பட்டன. அந்தச் சத்தி சத்திமானென்னும் தத்துவ மிரண்டிற்கும் மூர்த்தி மூர்த்திமானென்னும்
சொற்கள் உண்டென்பது அறியத் தகுந்தது. இதனால் இது கூறப்பட்டதாகின்றது. அஃதாவது
அதிகாராவத்தையில் காரிய வேறுபாட்டால் முப்பத்திரண்டு கலை வேறுபாட்டால் பிரிக்கப்பெற்ற
சத்தியே இறைவனது சரீரம். அச்சரீரச் சேர்க்கையால் இறைவன் சகளனென்று கூறப்படுகின்றான்.
தொழிலற்ற சத்தியுடன் கூடிய இறைவன் நிட்களனாகக் கூறப்படுகின்றான் (49-50-51)
(51-52) பிறர்க்கு நன்மை செய்வதிலேயே நோக்கமுடையவராயும் சுகத்தைத் தருபவராயு
மிருக்கும் அரன், இந்தச் சத்தி ரூபமான தேகத்தை யதிட்டித்து, மறைக்கப்பட்ட ஞானக்கிரியா
சாமர்த்திய முடையவரா யிருத்தல்பற்றித் தானே சாமர்த்தியமற்ற புருடர்களுக்குப் போக
மோக்ஷங்களைக் கொடுக்கின்றான் என்பதாம்.
தியானத்திற்கு விடயமான வடிவத்தில் விளங்கிய சத்தி ரூபமான வடிவத்தை யதிட்டித்துப்
பிறருக்கு நன்மையொன்றையே செய்வதில் நோக்கமுடைய பரமசிவன், மலத்தால் மறைக்கப்பட்ட
சாமர்த்திய முடையவராயிருத்தல் பற்றித் தனக்குப் போக மோக்ஷங்களின் பொருட்டுத் தானே
சாமர்த்தியமற்ற புருடர்களுக்குப் போக மோக்ஷங்களை யளிக்கின்றார். அந்தப் பரமசிவன்
பசுக்களிடமிருந்து பாசங்களை யபகரிக்கின்றான் என்பதினாலாவது, அல்லது அப்பசுக்களை
போகத்தின் பொருட்டும் மோக்ஷத்தின் பொருட்டும் அபகரிக்கின்றான் என்பதினாலாவது
அரன் என்று கூறப்படுகின்றான்.
அவ்வாறே நூல்களிலும் பசுக்களிடமிருந்து பாசங்களை இழுக்கின்றான்; பசுக்களையும்
மேலான பதத்திற்கு இழுக்கின்றான்; ஆகையால் இறைவன் அரனாகின்றானென்று கூறப்பட்டிருத்தல்
காண்க. இவ்விஷயத்தில் அனுமானஞ் செய்யும் முறையாவது, புருடர்கள் போகத்தின் பொருட்டாவது
மோக்ஷத்தின் பொருட்டாவது தானே பிரவிருத்திப்பதற்குச் சமர்த்தராகின்றாரில்லை. கட்டுப்பட்டுச்
சுவதந்திரமற்றவர்களா யிருத்தலால்; ஆடு முதலிய கட்டுப்பட்ட பசுவருக்கம் போலவென்க.
அவ்வாறே பாசங்கள் உயிரின் பொருட்டுத் தானாகப் பிரவிருத்திப்பதுமில்லை; நிவிருத்தியடைவதுமில்லை;
சடப் பொருளாகையால்; கயிறு முதலியன போல. ஆகையால் எவனொருவன் பசுக்களின் போக மோக்ஷத்திற்குக்
காரணமாக இருக்கின்றானோ அவனே பரமசிவனென்று சித்தித்தது.(51-52)
(52) (இவ்விடத்தில்) வித்தியா வித்தியேசத் தன்மையானது அபர முத்தியாகின்றது.
பரமுத்தி சிவசாமிய மாகுமென்பதாம்.
வித்தியா வித்தியேசர் முதலிய தானங்களுக்குப் பரமுத்தியை நோக்க, ஏவத்தகுந்த
தன்மையிருந்தாலும், அசுத்த மாயையைத் தாண்டியிருத்தலாலும், நின்மலமாயிருத்தலாலும் ,
மீண்டும் சமுசாரச்சேர்க்கை நிகழாதாகையால், அந்த வித்தியா வித்தியேச பதமானது அபரமுத்தியாகக்
கூறப்பட்டது. சிவசாமியமே பரமுத்தியாகுமென்க. (52)
(53-54) மந்திரர் முதலியோர் பரமுத்திக்கு யோக்கியர்களாகையால் முத்தர்களென்னும்
பெயரையடைகின்றனர். புருடன் பதியால் விளக்கஞ் செய்விக்கப்பட்ட சாமர்த்தியமுடையவனா
யிருக்கின்றான். ஆகையால் இந்தப்புருடனுக்கு பதியோடு சாமியமுண்டாகின்றது. அணுவுக்கு
முன்னரே துணைக்கருவிகளை யனுசரிப்பதான சத்தி காணப்பட்டிருக்கின்றது. சத்தி முன்
காணப்பட்டிருத்தலால் சிவசாமிய ரூபமான முத்தியை சங்கிராந்தியாகக் கொள்ள முடியாது.
பசுத் தன்மை முதலில் சாதி போல் ஒன்றாகவும் கொள்ளக்கூடாது என்பதாம்.
மந்திரர்கள் பரமுத்தியடைதற்கு உரிமை யுடையராகையால் முத்தர்களென்னும் பெயரை
யடைந்தவர்களா யிருக்கின்றாரென்பது கருத்து. அவ்வாறாயின், சமுசாராவத்தையில் புருடனுக்குச்
சிற்றறிவோடு கூடியிருக்குந்தன்மை காணப்படுதலால் முத்திநிலையிலும் புருடன் சிற்றறிவுடையனாகவே
இருக்கின்றானெனில், பதியால் விளக்கஞ் செய்யப்பட்ட சாமர்த்திய முடையவனா யிருக்கின்றான்
என்னும் தொடக்கத்தால் அது பொருந்தாதென்று கூறுகிறார்.
யாதொரு காரணத்தால் புருடன் சர்வஞ்ஞனாயும் சர்வசாமர்த்திய முடையனாயு மிருக்கும்
பரமசிவனால் விளக்கஞ் செய்யப்பட்ட சத்தியை யுடையனா யிருக்கின்றானோ, அந்தக் காரணத்தால்
இந்தப்புருடனுக்கு அவனுடன் சாமியமுண்டாகின்றது. அஃதெவ்வாறெனில், சமுசார நிலையில் விளக்கஞ்
செய்விக்கும் துணைக்கருவிகளின் பலத்தை யனுசரித்து சிற்சிலருக்கு அஞ்ஞான முதலியவற்றுடன்
சேர்க்கையும், மற்றவர்களுக்கு ஞானமுதலியவற்றின் மிகுதியும் காணப்படுகின்றன. அதுபற்றியே
ஈசுவர குணங்களுக்கு ஆன்மாவிடம் * சங்கிராந்தியே முத்தியென்று கூறும் சங்கிராந்த மோக்ஷவாதிகளின்
கூற்றுப்பொருந்தாதென்று சத்தி முன் காணப்பட்டிருத்தலால் என்னும் தொடக்கத்தால் கூறுகின்றார்.
* சங்கிராந்தி - ஒன்றிலிருப்பது நன்றாகப் பிறிதொன்றற்கு வருதல்.
பிராஞ்ஞனான (அதாவது சமுசாரியான) புருடனிடத்தில் ஞானம் முதலிய சத்தி காணப்படுதலாலும்,
வடிவமில்லாத பொருளுக்குக் குணசங்கிராந்தி பொருந்தாதாகையாலும், வடிவமில்லாத பொருளுக்குச்
சங்கிராந்தி நிகழுமென்பதில் திருட்டாந்தம் காணப்படாமையாலும் சங்கிராந்தி பக்கமானது பொருந்தாது.
இவ்விதமான சங்கிராந்தி முதலிய முத்திகளின் கண்டனப் பிரகாரமானது பூசிக்கத்தகுந்தவரான
ஆசிரியரால் ரௌரவாகம விருத்தியில், குணங்களுக்குச் சங்கிராந்தி கூறும் விஷயத்தில் உதாரணமில்லை.
உபதேசத்தால் மாணாக்கனுடைய புத்தியில் வேறான ஞானம் தீபத்திலிருந்து விறகு முதலியவற்றில்
வேறு தீபமுண்டாவது போல் உண்டாகின்றது.
வடிவமில்லாத பொருளுக்குச் சங்கிராந்தி கொள்ளுதல் உலகத்திலும் சித்தமாயில்லை;
வித்துவான்களிடத்திலும் சித்தமாயில்லை யென்னும் பொருளுடைய காரிகைகளால் விரிவாய்ச்
சாதிக்கப் பட்டிருக்கின்றது. அந்தச் சிவசாமிய ரூபமான முத்தியும் பசுத்தன்மை முதலிய
சாதி போல் ஒன்றில்லை. அவ்வாறன்றி ஒவ்வொரு பொருள்கள் தோறும் வெவ்வேறாயிருக்கின்றது.
சாதிருசயத்தைத் தவிர சாதி கிடையாதென்றும் அவ்விடத்திலேயே ஆசிரியரால் நிச்சயிக்கப்
பட்டிருக்கிறது. சிவசாமிய ரூபமான முத்தியை ஒன்றாகக் கொள்ளுமிடத்தில் மேலேகூறியவாறு
புருடர்கள் அநேகராகையால் ஒருவனுக்கு முத்தி நிகழுங்கால் அனைவரும் முத்தியடைய
வேண்டிவருதலால் அநேகமாகவே கொள்ளல் வேண்டும். (53–54)
(அ-கை) பரமான்மலய ரூபமான முத்தியும் கூடாதென்று கூறுகின்றார்.
(55) புருடர்கள் அடிக்கடி வேறாக அறியப்பட்டிருக்கின்றார்கள். ஆகையால் பரமான்மாவோடு
ஐக்கியம் பொருந்தாது. எந்தக் காரணத்தால் புருடசத்திகளுக்கு அனாதித்தன்மை யிருக்கின்றதோ,
அந்தக் காரணத்தால் அந்தச் சத்திகளுக்கு முத்தி நிலையில் நாசங் கிடையாதென்பதாம்.
மூலத்தில் நாசம் கிடையாதென்னும் சொல்லை அடுத்த அடியிலிருக்கும் முத்தியில்
என்னும் சொல்லோடு சேர்த்துரைக்க. மூலத்தின் பிற்பகுதியால் முத்தி நிலையில் நையாயிகர்களால்
கொள்ளப்படும் அறிவின்மையும் பொருந்தாது; ஞானக்கிரியா சத்தியையும் அச்சத்தியை யுடையவர்களையும்
சித்து ரூபமாயும் நித்தியமாயும் சாதித்திருத்தலாலென்று கூறுகின்றார். (55)
(அ-கை) அதுபற்றியே அநாதியாயிருப்பது பற்றி நித்தியமாயிருத்தலால் மோக்ஷத்திற்குக்
காரணமாய் நின்ற சிவனுக்காவது சத்திரூபமான அவனது ஐசுவரியத்திற்காவது நாசம் நிகழுகிறதில்லை.
ஆதலால் ஐசுவரியம் நசித்து மற்றொரு ஐசுவரியம் உண்டாகிறதென்று பிரவாகேசுவர வாதிகள்
கூறுவது பொருந்தாதென்று கூறுகின்றார்.
(56) முத்திக்குக் காரணமான சிவனுக்காவது அவனது சத்திக்காவது இன்மை கிடையாது.
சமமான குணமுடையவர்களாகையால் சிவனுக்கும் முத்தான்மாக்களுக்கும் வேறுபாடில்லாமல் அறிவு
நிகழ்கின்றது. இவர்களுக்குண்டான விசேடமும் மேலே கூறப்படுகின்றது என்பதாம்.
சிவனுக்கும் முத்தான்மாக்களுக்கும் சமமான குணமுடைமை பற்றிப் பிரிக்கப்படாமல்
ஒரேவிதமாய் எல்லாவற்றையும் விடயமாகச் செய்யும் ஞானக்கிரியைகளின் விளக்கம் நிகழ்கின்றது.
இவர்களைக் காட்டிலும் சிவனுக்கு விசேடமென்னவெனில் விசேடம் மேலே கூறப்படுகின்றது
என்பதனால் கூறுகின்றார் . (56)
(57- முற்பாதி). ஆதிமத்தியம் அந்தமில்லாத பெருமை முத்தர்களிடத்தில்
சிவனாலுண்டாயிருக்கின்றதென்பதாம் .
முத்தான்மாக்களிடத்தில் ஆதிமத்தியாந்த மற்ற எல்லாமறியுந் தன்மை எல்லாம்
செய்யுந் தன்மையென்னும் பெருமை இருந்தபோதிலும், அது அநாதியான மலத்தால் மறைபட்டிருப்பதால்
நிமித்த காரணனான சிவனால் விளக்கஞ் செய்யப்பட்டது. சிவனோவெனில் அநாதியாய்ச் சித்தித்த
மறைபடாத எல்லாமறியுந் தன்மை எல்லாம் செய்யுந்தன்மை யுடையவனென்பது முத்தான்மாக்களுக்கும்
சிவனுக்கும் விசேடமாகும். (57)
(57-பிற்பாதி). இவ்வாறு சகல வரங்களையும் அளிப்பவனான பரமசிவனே உண்மையறிந்தவனால்
பூஜிக்கத் தகுந்தவன். அப்பரமசிவன் சந்தோஷ மடையுங்கால் புருடனுக்குச் சித்தியும் பரமுத்தியும்
உண்டாகும் என்பதாம்.
இவ்வாறே அதர்வசிகையில் " சிவன் ஒருவனே மற்றைத் தேவர்களை நீக்கித் தியானம் செய்யத்
தகுந்தவன் ” என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆகையால், அனைவருக்கும் அநுக்கிரகஞ் செய்தலாலும்,
எல்லாப் பொருளுக்குங் கருத்தாவாயிருத்தலாலும், அந்தச் சிவனால் அருளிச் செய்யப்பட்ட சிவாகமங்களே
பிரமாணமாகும். ஏனைய புத்தாகமம் முதலியன சர்வஞ்ஞனல்லாத புத்தர் முதலியோராற் செய்யப்பட்டது பற்றி
ஒன்றுக்கொன்று முரண்பாடுடைமையால் பிரமாணமாகாவாம்; அவ்வாறே பெரியோர்களும் "சுகதர்
சர்வஞ்ஞராயிருக்கிறார். கபிலர் சர்வஞ்ஞராயில்லை என்பதிற் பிரமாணம் என்னை? பிரமாணமின்மையால்
இருவரையும் சர்வஞ்ஞர்களாகக் கொண்டால் அவர்களுள், மதபேதமுண்டாகக் காரணமென்னை"
என்று கூறியிருத்தல் காண்க.
அவ்வாறாயின், சிவாகமங்களும் பிற ஆகமங்களுடன் முரண்படுதலால் பிரமாணமற்றதே எனில்,
அது பொருந்தாது. முரணின்மையாலென்க. அஃதெவ்வாறெனின், பிற ஆகமங்களாலடையத் தகுந்த முத்தி
ரூபமான தானத்தை யறிவித்து, பின்னர் அவைகளாலறியமுடியாத மேலான விஷயங்களை விளக்கஞ்
செய்வதால் சிவாகமங்களின் பிரமாணத் தன்மை தள்ள முடியாததேயாகும். இவ்வாறே, பெரியோர்களும்
"மற்றைப் பிரமாணத்தா லறியப்படாததை அறிவிப்பது பிரமாணமாகும் " என்று பிரமாண இலக்கணங்
கூறுகின்றனர்.
அன்றியும், அவரவர்களின் வருணங்களுக்கும், ஆச்சிரமங்களுக்கும், உரிய செயல்களை மனதினாலும்
தாண்டக்கூடாதென்று வருணங்கள் ஆச்சிரமங்கள் என்னும் இவற்றின் செயல்களை விரித்திருப்பது பற்றி
வேதங்களோடு முரண்படாதிருத்தலானும், வேதமறிந்த பெரியோர்களால் அநுட்டிக்கப் பட்டிருத்தலானும்,
பிறமதங்கள் போல இம்மதம் பாஷண்ட மதமாகிறதில்லை. அஃதெவ்வாறெனின், புராணம் இதிகாச
முதலியவற்றில் சுவேதர், உபமந்யு முதலிய மஹரிஷிகள் சிவாகம விதிகளை அநுட்டித்ததாகக்
கேட்கப்படுகின்றன. மகாபாரதத்திலும் நரநாராயணர்களும் அசுவத்தாமாவும், " இவர்களால் பரமேசுவரன்
சிவலிங்கத்தில் பூஜிக்கப்பட்டான் என்ற வாக்கியங்களால் சிவாகம விதிகளை அநுட்டித்ததாகவும்,
சுவர்னாக்ஷத்தில் விஷ்ணு ஆராதித்து அநுக்கிரகம் பெற்றாரென்றும், அன்றியும் " ஏ கிருஷ்ண!
சிவாராதனத்தைத் தவிர வேறு பிரியம் எனக்கு என்ன இருக்கின்றது" என்றும் கூறப்பட்டிருத்தல் காண்க.
அவ்வாறே இராமாயணத்திலும், கார்த்த வீரிய ஸ்மிருதியிலும், '' பக்குவங்களான
செங்கல்களால் சிவாலயத்தை எவன் கட்டிவைக்கின்றானோ" என்பதனால் பிரதிட்டை முதலிய
சிவாகம அரத்தங்கள் கூறப்பட்டிருக்கின்றன. சிவ சூத்திரத்திலும் சிவாகமங்களின் மோக்ஷ (ஐயம்: அரத்தங்கள்? அர்த்தங்கள்?)
சொரூபங் கூறப்பட்டிருக்கிறது. அதர்வ சிகையிலும், சுவேதாசுவதர உபநிடதத்திலும்
இலிங்க பூஜை முதலியவை கேட்கப்படுகின்றன. ஆகையால், இச்சிவாகமங்களுக்கு
மற்றைப் பிரமாணங்களுடன் முரண்பாடு கிடையாது. சிவாகமங்கள் மூலமற்றவையுமல்ல.
சிற்சிலர்கள் தான் அநுட்டிக்கிறார்களென்பது மில்லை. ஆகையால், சிவாகம வாக்கியங்கள்
மற்றைப் பிரமாணங்களால் மறுக்கப்படாமல் ஏனைய பிரமாணங்களைக் காட்டிலும்
மேம்பட்டிருத்தலால் அவசியம் அநுட்டிக்கத் தகுந்தவையேயாகும். அவ்வாறே மோக்ஷ காரிகையிலும்
"சிவாகமங்களின் விஷயமானது ஏனைய பிரமாணத்தோடு முரண்பாடின்றி ஏனைய
பிரமாணங்களா லுண்டாகும் பயனைக் காட்டிலும் அதிகப் பயனளிப்பதனால் மகான்களாலும்
ஆதரிக்கத் தகுந்தது” என்று கூறப்பட்டிருத்தல் காண்க. (57)
(அ-கை.) இந்தப் பிரகரணம் யாரால் கூறப்பட்ட தென்னுங் கேள்விக்கு விடை கூறுகின்றார்.
(58) சுவிருத்தியைச் செய்தவரான சத்தியோஜோதி சிவாசாரியர் இந்தப் பிரகாரம் தத்துவங்களைக்
கூறினார் என்பதாம்.
சுவிருத்தி என்பதும் சத்விருத்தி என்பதும் இரெளரவாகம விருத்தியின் பெயராகும். அந்த இரௌரவாகம
விருத்தியை இயற்றியவரால் இந்தப் பிரகரணம் இயற்றப்பெற்றதென்பது கருத்து (58)
தத்துவ சங்கிரகம் முற்றுப்பெற்றது.
சத்விருத்தியின் வாக்கிய ரூபங்களான ஸ்ரீமத் கேடகரின் புத்திரனாகிய சூரியனுடைய கிரணங்களால்
நாசஞ் செய்யப் பெற்ற அஞ்ஞானமென்னும் இருட்கூட்டத்தையுடைய அகோர என்னுஞ் சொல்லை முன்னிலையாகக்
கொண்ட சிவனால் (அஃதாவது அகோர சிவாசாரியரால்) தத்துவ ஞானத்தை அறிதற்கு இச்சையுள்ள வித்துவான்களால்
அன்புடன் பிரார்த்திக்கப்பட்டு தத்துவங்களின் சுருக்கமான தத்துவ சங்கிரஹப் பிரகரணத்திற்கு இலகுவான
விருத்தியானது விளக்கமாய்ச் செய்யப் பெற்றது.
அகோர சிவாசாரியரா லியற்றப் பெற்ற தத்துவ சங்கிரஹத்தின் விருத்தியுரை முற்றுப் பெற்றது.
சிவபெருமான் திருவடி வாழ்க.