ஓம்.
பரப்ரம்மணே நம:
கலிநிலைத்துறை
அண்ணல் கூறிடுமரிய வாரணக் கடலெழுமவ்
வண்ண மின்றியவா சாம கோசர வமிர்தைக்
கண்ண தாயிடக் கரதல மணியெனக் காட்டும்
வண்ண முள்ளமா வாக்கியமைந் தற்குப் புகல்வான்.
வன்ன நாலதாய் வண்பத மூன் றஃதுடைத்தாய்த்
தன்ன தாம் வடிவது மிகத்தானு நுண்ணியதாய்
முன்ன மாமறை முழுது மோதியு முடியாச்சீர்
மன்னுமாப் பொருளுடைமை மாவாக்கியப் பெயராய்
வடிவு நுண்மையுமாப் பொருளு டைமையு மலர்வு
முடிவு மாயிருமையு மறமொழி தருவிரகும்
படியிலா தெழுபழமையு மப்படி புதுமை
யுடைய வாகிய வுயர் குறியா றவை யுடைத்தாய்.
இறந்த கேள்வியா யிறந்த நற்றரிசன மஃதா
யிறந்த வீரமா யெலையிலானந் தஞான மதாய்ச்
சிறந்த காலதேசந் திசையிறந்திடத் திகழ்ந்து
நிறைந்த வெட்டியல் புடைத்து நீள்வாக்கிய மினங்கேள்
கலி விருத்தம்
நித்தமொடு முத்தநிமலந் திகழ் பரத்தை
யுய்த்தகர முத்தமணி யத்தினிக ரொப்ப
மெய்த்திட வெவர்க்கு முணரத் திகழுவிக்குந்
தத்துவமசி தத்வமசி சத்யம்
ஆதலால் மஹாவாக்யஞ் சொல்லப்பட்ட ஞானமே ஞானம். அதுவல்லாமற்
சொல்லப்பட்ட ஞானங்களெல்லாம் அறியுமிடத்துக்குஞ் ஞானமேயாம். ஆனபடியினாலே
சுத்த வேதாந்தஞ் சொல்லப்பட்ட பரிசினை ஆசாரியர் சிஷ்யனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறார்.
அஃதெப்படியென்னில், இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்கிற நான்கு வேதங்களும்,
இரண்டு பிரகாரமாயிருக்கும். அவை எவை யென்னில், அற்ப சுருதிவாக்ய மென்றும்,
பிரபல சுருதிவாக்ய மென்றுமாம். இவற்றில், அற்ப சுருதி வாக்யம் கர்ம காண்டத்தைச்
சொல்லும், பிரபல சுருதி வாக்யம் அத்யாத்மத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு
உபநிஷத்தாயிருக்கும். இது நான்கு வாக்கியங்களைப் பிரதிபாதிக்கும்.
அவை யெவையென்னில், "பிரக்ஞானம் பிரமம், அகம் பிரமாஸ்மி, தத்வமசி, அயமாத்மா பிரமம்"
என்பனவாம். இந்த நான்கு வாக்யங்களும் சீவ பர ஐக்கியத்தைச் சொல்லும். இந்த நான்கு
வாக்யங்களிலும், தத்வமசி வாக்யம் மஹாவாக்கிய மென்று சொல்லப்படும். அஃதெப்படியென்னில்,
நான்கு வாக்யத்தினர்த்தமும், இந்த வாக்யத்திலிருக்கையினாலும், அந்வயபதம் இதனிடத்தே
யிருக்கையினாலும், அவாங் மநோகோசரமா யிருக்கிற வஸ்துவைக் கரதலாமலகம் போலக்
காட்டுகையினாலும் இது மகாவாக்யமென்று சொல்லப்பட்டது .
இந்த மகாவாக்கியந்தான், அவாங் மநோகோசரமா யிருக்கிற வஸ்துவை நான்கு வர்ணத்தாலும்,
மூன்று பதத்தாலும், மூன்று லட்சணத்தாலுஞ் சொல்லிற்று. ஆறு குறியும், எட்டியல்புமா யிருக்குமென்றுஞ்
சொல்லிற்று. அவை எவையென்னில்,
நான்கு வர்ணமாவன:--தத்-துவம்-அ-சி-இவைகளாம்.
மூன்று பதமாவன: தத்பதம்-துவம்பதம்- அசிபதம்-இவைகளாம்.
மூன்று லட்சணமாவன:- சீவ- பர- ஐக்கியம் - இவைகளாம்.
ஆறுகுறியாவன :- வடிவு, நுண்மை , மாப்பொருளுடமை, நிறைவு, இரண்டற விளங்கிய முடிவு,
என்றும் பழமை, என்றும் புதுமையாம்.
எட்டியல்பாவன:- கேள்வி யிறந்ததாதல், தரிசன மிறந்ததாதல், வீர மிறந்ததாதல்,
எல்லையிலாத ஆனந்தமுடையதாதல், எல்லையிலாத ஞானமுடையதாதல்,
கால மிறந்ததாதல், தேசமிறந்ததாதல், திசையிறந்த தாதலாம்.
இப்படி மகாவாக்கியத்தாற் சொல்லப்பட்ட வஸ்து எப்படி விளங்குமென்னில், ஆசாரியர் திருவருளினாலே
சொல்லுகிற சிரவணம்,மனனம், நிதித்தியாசனம் என்னு மூன்றுவகையினாலே விளங்கும். இந்த மூன்றுவகையும்
விசாரிக்குமிடத்து ஸ்தூலசிரவணாதி மூன்றென்றும் சூட்சும சிரவணாதி மூன்றென்றும், இரண்டு விதமாயிருக்கும்.
சிரவணம்.
ஸ்தூல சிரவணாதி.
இவற்றில், ஸ்தூல சிரவணாதி மூன்றாவன, சொல்லப்பட்ட சாஸ்திரங்களை இது விதுவென்று - வினவிப் பகுத்தறிந்து
கேள்விப்படுகிறது சிரவணம். அப்படிக் கேள்விப்படா நின்ற சப்தார்த்தங்களெல்லா மனதிலே தரிக்கத் தெளிந்து
விளங்குகிறது மனனம். சிரவணத்தினாலே கேள்விப்பட்டு மனனத்தினாலே தெளிந்து விளங்கியிருக்கப்பட்ட
யாதொரு அறிவுண்டோ ,அந்த அறிவு தானாய் நிற்கப்பட்ட நிலை நிதித்தியாசனமாம்.
சூட்சும சிரவணாதி
இனி சூட்சும சிரவணாதி மூன்றென்ற தெப்படியென்னில், சிரவணமாவது மகாவாக்யஞ் சொல்லப்பட்ட
அதுவென்னும் தத்பதத்துக் கர்த்தம் பரம்; நீயென்னுந் துவம்பதத்துக் கர்த்தம் சீவன்;
ஆனாயென்னும் அசிபதத்துக் கர்த்தம் இரண்டினுடைய ஐக்கியமாயுள்ள பொருளாம்.
கிரியா பதத்துடனே கூட்டிப் போதிக்கிற முறைமை எப்படியென்னில், அது நீ யாகின்றாயென்றும்,
நீ யது வாகின்றாயென்றும் போதிக்கப்படுதலாம். இந்த வாக்கியம் அந்வயித்துப் போதிப்பானேனென்னில்,
அது வென்கின்ற தத்பதத்துக்கு உபாதி பரோட்சமென்கிற காரண உபாதி, நீ யென்கிற துவம்பதத்துக்கு
உபாதி அபரோட்சமென்கின்ற காரிய உபாதி.
இந்த அபரோட்சமென்கின்ற காரிய உபாதி முந்தி வருகையிலனோ துவந்ததசி யென்று
போதிக்க வேண்டிற்று. துவந்ததசி வாக்கியம் போதிக்கிற முறைமை ஜக சீவ பரத்தை விளக்கும்.
அஃதெப்படியென்னில்,
நீ யென்கின்ற துவம்பதத்துக்கு உபாதியேழு.
அதுவென்கின்ற தத்பதத்துக்கு உபாதியேழு.
இந்த உபாதியேழும் முக்கியம், இந்த உபாதியேழுந் தீர்ந்தது லட்சியம்,
உபாதியை நானென்றது அசுத்தம், உபாதியை நீங்கினது சுத்தம்.
இந்த இரண்டு பதங்களுக்கும் லட்சியமான சத்தார்த்தங்களை ஆனாயென்னும் அசிபதத்திலே
ஏகமாய்க் கண்டு விளங்குகிறதே சிரவணம்,
மனனமாவது துவம்பதத்திற் காரியஉபாதி யேழும், அவஸ்தை மூன்றும் ,
தற்பதத்திற் காரணவுபாதி யேழும், அவஸ்தை மூன்றும் தரிசித்து நீக்கி ,
சீவனும் பரனும் அசிபதத்திலே ஐக்கியபடக்கண்டு, ஏகமான பொருளை மனதிலே தருத்திருக்க
விளங்குகிறது மனனம்.
நிதித்யாசன மாவது துவம்பத முக்கியமான அவஸ்தை மூன்றையும் நீங்கி
லட்சியமாய் விளங்குகிற சீவனும், தத்பத முக்யமான அவஸ்தை மூன்றையும் நீங்கிச் சுத்தமாய் விளங்குகிற
பரனும், அசுபதத்திலே ஐக்கியப்பட கண்டு, ஏகமாய் விளங்குகிற ஸ்வரூபத்தை ஆசாரியருடைய திருவருளின்
சிரவணத்தினாலே கேள்விப்பட்டு, மனனத்தினாலே தரித்து விளங்குகிற தத்ஸ்வரூபந் தானாய்
நிற்கப்பட்ட நிலை நிதித்தியாசனம்.
துவம்பத முக்கிய சீவவுபாதி.
இப்பால், முன் சொல்லப்பட்ட சூட்சும சிரவணாதி என்கிற மூன்றையும் விரித்து விளங்க
வருளிச்செய்கிறார். துவம்பத முக்கிய சீவஉபாதி சொல்லுகிறோம். அதெப்படியெனில்,
வேதாந்த தத்துவம் 28 ஆம். அவை யெவையெனில்:
ஞானேந்திரியமான சுரோத்ராதி- 5,
இவற்றின் விஷயமான சப்தாதி- 5
கன்மேந்திரியமான வாக்காதி- 5.
இவற்றின் விஷயமான வசனாதி-5.
அந்தக்கரணம்.-4.
புருஷன், காலபரம், வியோமம், பரம்- 4.
ஆகத் தத்துவம்.- 28.
இவற்றில் புருஷன், காலபரம், வியோமம், பரம் இந்நான்கும் நிற்க நின்ற தத்துவம் -24.
பிராணவாயு.-1, ஆகத் தத்துவம்.- 25. இவை ஏழுபாதியாம்.
அவை யெவையெனில்: தேகம், இந்திரியம், மனம், புத்தி, அகங்காரம், சித்தம், பிராணன் . ஆக 7.
இவற்றில் தேகம் நானோவெனில் தேகம் நீயன்று. அஃதெப்படி நானன்றெனில், என்னுடைய
தேகமென்று உன்னால் அறியப் படுகையினாலும், தேகம் பஞ்சபூதத்தின் கூறாகையாலும்,
தேகம் உனக்கு அந்நியமாகையினால் தேகம் நீ யன்று,
இந்திரியம் நானோவெனில் இந்திரியமும் நீ யன்று. அஃதெப்படி நானன்றென்னில், என் கண்
நன்றாய் விளங்குகிறதென்றும், என் கண் நன்றாய் விளங்குகிறதில்லையென்றும்,
என் காது நன்றாய்க் கேட்கிறதென்றும், என் காது நன்றாய்க் கேட்கிறதில்லையென்றுஞ்
சொல்லப்படுகையினாலும், இந்திரியம் ஒன்றறிந்தது ஒன்று அறியாத படியினாலும்,
என்னுடைய இந்திரியமென்று உன்னால் அறியப்படுகையினாலும், இந்திரியம் பஞ்சபூதத்தின்
கூறாகையினாலும், இந்திரியம் உனக்கு அந்நியமாகையினால் இந்திரியமும் நீயன்று .
அந்தக்கரணங்களில் மனந்தான் நானோவெனில் மனமும் நீயன்று. அஃதெப்படி நானன்றெனில்,
என்னுடைய மனமென்றுன்னா லறியப்படுகையிலும், மனம் வாயுவின் கூறாகையினாலும்
மனமும் நீ யன்று.
புத்திதான் நானோவென்னில் புத்தியும் நீயன்று. அஃதெப்படி நானன்றென்னில், என்னுடைய
புத்தியென்றுன்னா லறியப்படுகையினாலும், புத்தி அக்கினியின் கூறாகையினாலும் புத்தியும் நீயன்று.
சித்தந்தான் நானோவென்னில் சித்தமும் நீயன்று, அஃதெப்படி நானன்றென்னில், என்னுடைய
சித்தமென்றுன்னா லறியப்படுகையினாலும், சித்தம் அப்புவின் கூறாகையாலும், சித்தமும் நீயன்று.
அகங்காரந்தான் நானோ வென்னில் அகங்காரமும் நீயன்று. அஃதெப்படி நானன்றென்னில்,
என்னுடைய அகங்காரமென்றுன்னா லறியப்படுகையினாலும், அகங்காரம் பிருதிவியின்
கூறாகையாலும் அகங்காரமும் நீயன்று.
அந்தக்கரணந்தான் நானோவென்னில் அந்தக்கரணமும் நீயன்று. அஃதெப்படி நானன்றென்னில்,
ஸங்கல்ப நிச்சய வபிமான சிந்தனையாதி வடிவாகையால் அந்தக்கரணமும் நீயன்று,
பிராணன்றான் நானோவென்னில் பிராணனும் நீயன்று. அஃதெப்படி நானன்றென்னில்,
என்னுடைய பிராணனென் றுன்னா லறியப்படுகையினாலும் பிராணன் பிருதிவியின் கூறாகையினாலும்,
சுழுப்தியிற் **சைதன்னிய மில்லாமையினாலும் பிராணனும் நீயன்று. இவையெல்லாம்
நானன்றாகில் நான் யாரோவென்னில், தசம திருஷ்டாந்தமிட்டனுக்கிரகம் பண்ணுகிறார்.
(** மோகவதைப்பரணி. பிராணனுமல்ல துஞ்சினுணர்வின்மையா லஃதுணரும் புலன்களொழிவால்,
பிராணனிதென்னின் மன்னை யொழியாத சேனை நகர் சூழ்வலஞ் செய்பொழுதே.)
அஃதெப்படி யென்னில், பத்துப்பேர் கூடி ஓரூர்வழிப் போகையில் ஆற்றிலே அமிழ்ந்திக்
கரையேறி யெண்ணிப்பார்க்கும் போது ஒன்பதுபேரை யெண்ணித் தன்னை யெண்ணாமல்
ஒருவனைக் காணோமென்று மயங்குமிடத்தில், அந்நியனாகிய வொருபுருஷன் வந்து
பத்தாவானைக் காட்டிக் கொடுத்தாற் போல, ஆசாரியரெழுந்தருளி இந்த ஏழுபாதியையுங்
கண்டு கொண்டிருக்கிற யாதொரு சைதன்னிய வறிவுண்டோ, அந்தச் சைதன்னிய வறிவுதான் காண்
நீ யென்றனுக்கிரகம் பண்ணினார். இந்தச் சைதன்னியவறிவு காரியவுபாதியுடனே
கூடிநின்ற போது முக்கியமென்றும் உபாதியை விட்டு நீங்கினபோது லட்சியமென்றும்,
உபாதியை நானென்றபோது அசுத்தமென்றும், உபாதியை நீங்கின போது சுத்தமென்றுஞ் சொல்லப்பட்டது.
இதற்கு வாக்கியம் சம்சர்க்க வாக்கியமாம். அஃதெதுவென்னில் "மஞ்சாக்குரோசந்தி,
கங்காயாங்கோஷப்பிரதி வசதி" என்பனவாம். மஞ்சங் கூப்பிட்டதென்றும், கங்கைக்கண்ணிடைச்
சேரியுள்ளதென்றுஞ் சொல்லுமிடத்து மஞ்சமானது மரம். மரமானது கூப்பிடுமா, மஞ்சத்தில் ஒரு
புருஷனிருந்து கூப்பிட்டானென்று கொள்ளல் வேண்டிற்று. கங்கையானது ஜலம்.
ஜலத்திலே இடைச்சேரி யிருக்கமாட்டாது; கங்கைக் கரையிலே இடைச்சேரி யிருக்கிறதென்று கொள்ளல்
வேண்டிற்று. இப்படிப்போல ஏழுஉபாதிக்குஞ் சீவன் சாட்சியா யிருக்கின்றானென்று கண்டுகொள்க.
இது, விட்ட லக்ஷணை.
தத்பத முக்ய பரவுபாதி.
தத்பத முக்ய பரவுபாதி சொல்லுகிறோம். அஃதெப்படியென்னில்
த்வம்பத லக்ஷ்யார்த்தமான துரியம் பரனுக்கு உடலாகையாலே, இதனிடத்திலே
ஸர்வக்ஞத்வாதி உபாதியுண்டாயிற்று. அஃதெதுவென்னில், ஸர்வக்ஞன் - சர்வகாரணன்
-ஸர்வாந்திரியாமி - ஸர்வேசுவரன்-ஸர்வ சிருஷ்டி-ஸர்வ ஸ்திதி- ஸர்வ ஸம்ஹாரன் என்பனவாம்.
அவற்றுள்,
ஸர்வக்ஞனென்பானே னென்னில், இந்திரியங்களெல்லாம் ஒன்றறிந்ததொன் றறியாதபடியினாலும்,
தான் ஸர்வத்தையும் அறிகையினாலும், ஸர்வக்ஞனென்கிற நாமமுண்டாயிற்று.
ஸர்வகாரணனென்பானேனென்னில், இந்திரியங்களெல்லா மழிந்துந் தானழியாமல் நிற்கையினாலே
ஸர்வ காரணனென்கிற நாமமுண்டாயிற்று.
ஸர்வாந்திரியாமி யென்பானேனென்னில், இந்திரியங்களுக்கெல்லா முள்ளீடாய் நின்றறிகையினாலே
ஸர்வாந்திரியாமியென்கிற நாமமுண்டாயிற்று.
ஸர்வேசுவரனென்பானே னென்னில், இந்திரியங் களுக்கெல்லா மேலாய்நின்று விளங்குகையினாலே
ஸர்வேசுவரனென்கிற நாமமுண்டாயிற்று.
ஸர்வ சிருஷ்டியென்பானே னென்னில், இந்திரியங்களெல்லாந் தனக்குள்ளே தோன்றுகையினாலே
சர்வசிருஷ்டியென்கிற நாமமுண்டாயிற்று.
சர்வஸ்திதி யென்பானேனென்னில், இந்திரியங்களை யெல்லாந் தானே ரட்சிக்கையினாலே
சர்வஸ்திதி என்கிற நாமமுண்டாயிற்று.
சர்வ ஸம்ஹாரனென்பானே னென்னில், இந்திரியங்களெல்லாந் தனக்குள்ளே யடங்குகையினாலே
சர்வ ஸம்ஹாரனென்கிற நாமமுண்டாயிற்று.
இந்த ஏழு உபாதியும் ஸ்வரூபமன்று.
இனி எதுதான் ஸ்வரூப மென்னில், இந்த ஏழு உபாதிகளையும் யாதொரு சைதன்னியத்தினாலே
அளவிடப்பட்டதோ, அதுவே ஸ்வரூபம். இந்த ஸ்வரூபம் உபாதியுடனே சம்பந்தித்து நின்றபோது
முக்யமென்றும், உபாதியைப் பிரிந்தபோது லட்சியமென்றும், உபாதியை நானென்றபோது
அசுத்தமென்றும், உபாதிக்குச் சாட்சியான போது சுத்தமென்றுஞ் சொல்லப்பட்டது.
இதற்கு வாக்கியம் விசிஷ்ட வாக்யமாம். அஃதெது வென்னில், "சோணஸ்திஷ்டதி, சுவேதோதாவதி"
என்பனவாம். ஒரு சிவப்புக் குதிரையையும் வெள்ளைப் பசுவையுங் கண்டாயோ வென்பார்க்குச்
சிவப்பு நிற்கின்றது, வெள்ளை போகிறதென்னுமிடத்துச் சிவப்பு வர்ணந் தனியே நில்லாது.
வெள்ளை வர்ணந் தனியே போகாது. ஆகையால் சிவப்புக் குதிரை நிற்கின்றதென்றும், வெள்ளைப்பசு
போகின்றதென்றுங் கொள்ளல் வேண்டிற்று. இப்படிப் போல, சர்வக்ஞத்வாதி உபாதியுடையவனாய்
அதற்குச் சாட்சியாயிருக்கிறான் பரன். இது விடாதலட்சணை.
அசிபதம்
இனி, அசிபதம் அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்ற போது முன் சொல்லப்பட்ட விரண்டுபதத்தினுடைய
உபாதியுந்தீர்ந்து லக்ஷியார்த்தமான பதார்த்தத்தை அசிபதத்திலே ஐக்கியம் பண்ணவேண்டுமென்ற
ஆசாரியாரை நோக்கிச் சிஷ்யன் விண்ணப்பஞ் செய்கிறான் :
தேகக்கிரகனாகிற கிஞ்சிக்ஞனா யிருக்கிற சீவனுக்கும், போதக்கிரகனாகிற சர்வக்ஞனாயிருக்கிற
பரனுக்கும் எப்படி ஐக்கியங்கூடுமென்ன, கூடுங்காண்;
இரண்டு பதத்திலுஞ் சொல்லப்பட்ட பொருள் முன்னைக்கிய விருப்பினாலே யேகமாம்.
அஃதெப்படி யென்னில், ஸம்சர்க்க வாக்கியத்தினாலும் விசிஷ்ட வாக்கியத்தினாலுஞ்
சொல்லப்பட்ட முக்கியமான உபாதி தீர்ந்து, லட்சியமானோமென்கிற வாசனா தோஷமாகிய
குற்றம் அகண்ட வாக்யத்தினாலே ஏகம்பண்ணப்படும்: அகண்ட வாக்கியமாவது
சோயந் தேவதத்தனென்பது,
ஒரு தேவதத்தனாகிய புருஷனுடனே நாம் சிறிது நாள் கூடவிருந்தோம்.
இவன் சிறிது நாளுக்குப் பிறகு பிரிந்து போயினான் .
அநேக நாளுக்குப்பின்பு சதுரங்க பரிவாரத்துடனே யிவனை மதுரையிலே அந்திக்காலத்திலே
ராஜாவாயிருக்கக் கண்டோம். அங்கே அவனுடன் சிறிது நாள் கூடியிருந்தோம்.
பின்பு நம்மை அவன் பிரிந்து போயினான்.
சிறிது நாளைக்குப் பின்பு தண்ட கமண்டலத்துடனே அவனைச் சிதம்பரத்திலே விடியற்காலத்திலே
சந்நியாசியா யிருக்கக்கண்டோம்; அப்பொழுது இவன் அந்தத் தேவதத்தனோ அல்லனோவென்று
சந்தேகிக்கையில், இவனடியிலும் மார்பிலும் முடியிலும் முன்னே மறுவுண்டே அந்தவடையாளம்
இவனிடத்திலே யிருந்தால், அந்தத்தேவதத்தனே இவனாவனென்று பார்க்கு மிடத்து அந்த வடையாளம்
இவனிடத்திலே இருக்கையால், அந்தத் தேவதத்தனே இந்தத் தேவதத்தன் ஆவானென்று சொல்லப்படுவதாம்,
அப்போது அவனை விட்டன அந்த இரண்டிடமும் இரண்டு காலமுமாம்.
அவைவிட்டுப் போக விடாமல் நின்றவன் ஒரு தேவதத்தன் மாத்திரமேயாம். அவனைப் போல, இந்தத்
துவம்பதமாகிய ஜீவவுபாதிக்கும், தத்பதமாகிய பரவுபாதிக்கும், சாக்ஷியாய் நின்றவன் ஒருவனே.
இந்த ஒருவனுக்கும் விட்டுப் போயின துவம்பத உபாதியென்னுங் காரியவுபாதியும், தத்பதவுபாதியென்னுங்
காரணவுபாதியுமாம். அவை விட்டுப்போக விடாமல் நின்றவன் ஒருவனேயாம். இப்படி இரண்டு உபாதியும் போக,
இரண்டு பதத்திலும் நின்ற சீவனென்றும் ஏகமாய்க் காண்பது அசிபதம், இது விட்டுவிடாதலக்ஷணை.
வாதமற்றிருக்கப்பட்ட வஸ்துவை மன்னு மஹாவாக்யத்தினாலே, தத்பதார்த்த சோதனை பண்ணப்பட்டது.
அதனாலே போதமே புறையற் றோங்கும் பொருளெனத் தெளிந்தேன். அல்லல்தீர் பொருளீதென்ப தறிந்துகொண்டேன்,
தேவரீ ரநுக்கிரகத்தினாலே சிரவணந் திடமாயிற்று. இனி, மனன மருளிச்செய்ய வேண்டுமென்ன அருளிச் செய்கிறார்.
சிரவண - முற்றிற்று.
மனனம்
துவம்பதார்த்தம்.
அஃதாவது, முன் சொல்லப்பட்ட பதம்மூன்றில், முன்னே துவம்பதார்த்தஞ் சொல்லுகிறோம்.
துவம்பத முக்யத்தை நீ மனனஞ்செய்? அஃதெப்படியென்னில்: தேகம், இந்திரியம், மனம்,புத்தி,
அஹங்காரம், சித்தம், பிராணன் என்னும் இந்தத் துவம்பத முக்யமான ஏழுபாதியும் மூன்றவஸ்தைகளாம்.
அவையெவையென்னில்:-
ஜாக்ரம், ஸ்வப்னம்,சுழுப்தியும், இவைக்கு அபிமானிகள் விஸ்வன், தைதசன் , பராக்ஞனுமாம்.
இந்த மூன்றவஸ்தையும் மூன்றபிமானியும் சீவனுடைய முக்யம், ஆதலால், ஏழுபாதியுடனே கூடி விளங்குகிறது
ஜாக்ரம். அபிமானி விஸ்வன், தேகேந்திரிய மிரண்டு நிற்க மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்,
பிராணனென்னு மிந்த ஐந்துடனே கூடி விளங்குகிறது ஸ்வப்னம். அபிமானி தைசதன். அந்தக்கரணம்
நான்கும் நிற்க பிராணவாயுவுடனே கூடி விளங்குகிற சுழுப்தி அபிமானி பிராக்ஞன்.
ஆதலால் இந்த மூன்றவஸ்தையும் நீயன்று.
அஃதெப்படி நானன்றென்னில், ஜாக்ரம் ஏழுஉபாதியுடனே கூடி விளங்குமென்றும், அது ஸ்வப்னத்திலே அழியுமென்றும்,
இப்படி உன்னாலறியப் படுகையினாலே ஜாக்ரமும் நீயன்று.
ஸ்வப்னந்தான் நானோவென்னில், ஸ்வப்னமும் நீயன்று. அஃதெப்படி நானன்றென்னில், ஐந்து உபாதியுடனே
கூடி விளங்குமென்றும், ஸ்வப்னம் ஜாக்கிரத்தின் வாஸனையென்றும்,மனோவியாபாரமென்றும்,
ஸ்வப்னம் சுழுப்தியில் அழியுமென்றும் இப்படி யுன்னா லறியப்படுகையினாலே ஸ்வப்னமும் நீயன்று.
சுழுப்திதான் நானோவென்னில்? -சுழுப்தியும் நீயன்று. அஃதெப்படி நானன்றென்னில், பிராணனே
யாதாரமென்றும் , இரண்டவஸ்தைகளுடைய வொழிவென்றும், இப்படியுன்னா லறியப்படுகையினாலே
சுழுப்தியும் நீயன்று.
இனி நான் யாரோவென்னில்? இப்படி மூன்றவஸ்தைகளையும் உணர்ந்து அவை கழன்று, உணர்வாய் நின்று
விளங்குகிற துரியங்காண் நீயாகிற சுவரூபம். இந்தச் சுவரூபத்தை ஆக்கும் மஹாவாக்யம், -
சுத்த துவம்பதார்த்தமென்று சொல்லப்பட்டது.
தத்பதார்த்தம்.
இனி தத்பதார்த்தஞ் சொல்லுகிறோம். தத்பத முக்கியத்தை நீ மனனஞ்செய். அஃதெப்படி யென்னில்;
சர்வக்ஞன், ஸர்வ காரணன், சர்வாந்திரியாமி, சர்வேசுவரன், ஸர்வசிருஷ்டி, ஸர்வ திதி, ஸர்வ சம்ஹாரனென்னும்
இந்தத் தத்பத முக்யமான ஏழுஉபாதியுந் துவம்பத உபாதிகள் போல மூன்றவஸ்தைகளாம். அவையெப்படியென்னில்:-
துரியம், காலபரம், அதீதமும், இவைக்கு அபிமானிகள் விராட்புருஷன், இரணிய கர்ப்பன், அவ்யா கிருதனுமாம்.
இந்த மூன்றவஸ்தையும் மூன்றபிமானியும் பரனுடைய முக்யம். ஆதலால் சீவனுடைய உபாதிகளாகிய
மூன்றவஸ்தையு முணர்ந்து அவை கழன்று, உணர்வானது போல, பரனுடைய வுபாதியாகிய
மூன்றவஸ்தையு முணர்ந்து அவை கழன்று அறிவானதே பரம்.
பரஜாக்ரமேதென்னில், முன் சொல்லப்பட்ட சுத்த துவம் பதார்த்தமான துரியம் பரனுக்குத் தேகமாகையினாலே,
காரணோபாதிகளேழும் இதனிடத்துச் சம்பந்தித்து விளங்குகின்றதே துரியமாகிய பரஜாக்ரம்,
அபிமானி விராட் புருஷன்.
பரஸ்வப்பன மேதென்னில் சர்வ சிருஷ்டி, சர்வ திதி, சர்வ சம்ஹாரமென்னும் இந்தமூன்று உபாதியுடனே
கூடி விளங்குகிறதே காலபரமாகிய பரஸ்வப்பனம், அபிமானி இரணிய கர்ப்பன்.
பரசுழுப்தி யேதென்னில், இந்த ஏழுபாதிகளும் அந்த பரஸ்வரூபத்தினிடத்திலே நிற்கிறதோ இல்லையோ
வென்னுமிடத்தில் இல்லை. இப்படி யொன்றுமில்லாமல் இருந்தவிடமே அதீதமாகிய பரசுழுப்தி.
அபிமானி அவ்யாகிருதன்.
இந்தப் பரசுழுப்தியை வேதம் ஓரிடத்திலே பரமென்றும், ஆகாசம்போல நிறைந்திருக்கையால் பிரமத்தின்
சுவரூபமென்றுஞ் சொல்லும். அது ஸ்வரூபமாகாது. அஃதெப்படி யென்னில்:--
இது, பரனுக்கு உபாதியான படியினாலே, இந்த மூன்றவஸ்தையு முணர்ந்து அவை கழன்று நின்றதே பரம்.
இப்படிச் சுத்த துவம் பதார்த்தமான துரியத்திலே, காரணோபாதிகளேழுஞ் சம்பந்தித்து விளங்குகிறதே
பரஜாக்ரமென் றறியப்படுகிறதினாலும், பரஜாக்ரம் பரஸ்வப்பனத்திலே தோன்றாமையினாலும்,
பரஜாக்ரமும் நீயன்று. மூன்று உபாதியுடனே கூடி விளங்குகிறதே பரஸ்வப்பனமென் றறியப்படுகையினாலும்,
பரஸ்வப்பனம் பரசுழுப்தியில் அழிகையினாலும் பரஸ்வப்பனமும் நீயன்று. இந்த உபாதிகளேழும் ஒழிந்து
ஒன்றுமில்லாம லிருந்தவிடமே பரசுழுப்தியென் றறியப்படுகையினாலும், பரசுழுப்தி மேலாய்நின்று
விளங்குகிற பரஸ்வரூபத்திலே அழிகையினாலும் பரசுழுப்தியும் நீயன்று.
இப்படி மூன்றவஸ்தையுங் கண்டு கழன்று மேலாய் நின்று விளங்குகிறதே பரஸ்வரூபம்.
இந்த ஸ்வரூபத்தை ஆக்கும் மஹாவாக்கியம், சுத்த தத்பதார்த்தமென்று சொல்லப்பட்டது.
இந்தச் சுவரூபம் உள்ளும் புறம்பும் போக்கும் வரவுமின்றித் தானே தானாகி விளங்கா நிற்கும்.
அதுவே பரம்.
அசி பதார்த்தம்.
இப்படி யிரண்டு பதார்த்தத்தினுடைய லட்சியார்த்தப் பொருளைப் பொருந்த
வருளிச்செய்தாற்போல, ஆனாயென்கிற பதத்தினர்த்தமும் மனனத்திலே அநுக்கிரகம் பண்ண வேண்டுமென்ன,
அப்படியே இருபதப்பொருளையும் லட்சியப்பரிசாற் குற்றமற விளங்கத்தக்கதாக மனனத்திலே தரித்த பின்பு,
ஆனாயென்னும் பதத்தையும் பூரணமாக மனனத்திலே தரித்திரு. அஃதெப்படியென்னில்,
சீவனிடத்திலிருக்கிற துவம்பத உபாதி நீங்கினோமென்ற, வாசனை யிருக்கையினாலும், பரனிடத்திலிருக்கிற
தத்பத உபாதி நீங்கினோமென்கிற வாசனையிருக்கையினாலும், துவம் பதத்திலுள்ள துரிசு மூன்றையும் விட்டுத்
தத்பதத்திலுள்ள துரிசு மூன்றையும் விட்டுத் தருக்காய் நின்று விளங்குகிற தத்ஸ்வரூபத்தினிடத்திலே
இரண்டு உபாதியும் ஒழிந்தபடியினாலும் விஸ்வந் தோன்றாமையினாலும் அதுவே
பிரமமென்று வேதத்தில் சொல்லப்பட்டது.
அஃதெப்படி யென்னில், ஸ்தூலமாய் விளங்குகிற பிரபஞ்சத்தைச் சீவன் நானென்று கொண்டு நின்ற
உபாதியை நீக்கி, முன் சுத்த துவம் பதார்த்தமானவிடத்தில் காரணோபாதி சம்பந்திக்கையால்
சுத்த துவம்பதார்த்தம் விஸ்வக்கிராசம் பண்ணமாட்டாது. விஸ்வக்கிராசமானாலொழிய ஐக்கியங்கூடாது.
ஆகையால் காரணோபாதி கழன்று விளங்கா நின்ற தத் ஸ்வரூபத்தினால் விஸ்வத்தைக் கிரகிக்கையினாலே
அதுவே விஸ்வக்கிராசமென்று வேதத்தில் சொல்லப்பட்டது.
ஆகையால் இரண்டு பதத்தினுடைய அவஸ்தைகளும் நீங்கி, சீவத்வமென்கிற போதமுமொழிந்து,
விஸ்வமெல்லாந் தன் மயமாயிருக்கிறோ மென்கிற விவேகம் தத்பதத் துண்டாகையால் சம்சர்க்க
வாக்கியத்தினாலும் விசிஷ்டவாக்யத்தினாலும் நிச்சயிக்கப்பட்டுப் போகிற பொருள் இரண்டினுடைய
வாசனையும் அசிபதத்தினாலேயன்றி நீங்காது.
அதெப்படியென்னில், சோயந் தேவதத்தனென்கிற வாக்யத்தினாலே இரண்டு பதத்தினுடைய
காரியமுங் காரணமுங் கழன்று இந்த அகம் போய் இந்த வாசனையுந் தீர்ந்து அகண்ட பரிபூரணமாய்
விளங்குகிறது அசிபதம். ஆகையால் சீவனும் பரனும் ஐக்கியமாயிருக்கிற உபாதியும், சம்பந்தித்து
வருகிற அவஸ்தையும், கோட்பாடும், விரிவும், ஒடுக்கமுமாகிய இவையெல்லாம் ஒன்று மின்றியே
ஒழிவில்லாத நிறைவாய் விளங்காநின்ற யாதொரு சுவரூபத்தை ஆக்கும் மகா வாக்கியம் ஆனா யென்றது.
குற்றமில்லாமல் மனனத்திலே தரித்த பதார்த்த சோதனையாகிய படியைச் சுவாநுபூதியிற்
காட்டவேண்டு மென்ன, நிதித்யாசனம் அநுக்கிரகம் பண்ணுகிறார்.
மனனம் முற்றிற்று
நிதித்யாசனம்.
அஃதெப்படியென்னில், முன்சொல்லப்பட்ட துவம் பதத்திற் காரியோபாதியினுடைய சோதனையும்,
தத்பதத்திற் காரணோபாதியினுடைய சோதனையும், இரண்டு உபாதியினுடைய வாசனா தோஷமாகிய
அசிபதத்தினுடைய சோதனையுஞ் சந்தேகமறக்கண்டு உண்மை காண்பது முடிவு. இந்த உண்மையினுடைய
முடிவைக் குற்றமில்லாமல் உனக்கேற்க நீ காண். விருப்பத்துடனே நிலைபெற்று விளங்கக்காட்டுகிறோம்.
நீ கண்டு கொண்டு வருவாய்.
துவம் பதார்த்த சுத்தம்
முன்னே உனக்குச் சிரவணத்தினாலே கேள்விப்பட்டு மனனத்திலே தரித்து விளங்குகிற துவம்பத முக்கியமான
அவத்தை மூன்றும், அவை கண்டு கழன்றுணருகிற துரிய சுவரூபத்தையும் சந்தேகமற நனவிலே நீ கண்டபடி
சொல்லுங்காணென்னச் சொல்லுகிறான்:
பொறியும் புலனும் மனமே யாதாரமாக விஷயத்தைப் புசிக்கிற போது ஜாக்ரமென்றும், விசுவமாயிருக்கிற
உபாதியை நானென் றபிமானித்திருக்கையினால் விசுவனென்றுங் கண்டேன். அது தேவரீரருளினாலே
தீர்ந்ததுங் கண்டேன். ஜாக்ரத்தின் வாசனை ஸ்வப்பனமென்றும் இந்தச் சடமாகிய வாசனையை
நானென் றபிமானித்திருக்கையினால் இதற்கபிமானி தைசதனென்றுங் கண்டேன். அது தேவரீர்
அருளினாலே தீர்ந்ததுங்கண்டேன்,
நனவின் வாசனையாகிய கனவும் இறந்தவிடம் சுழுப்தியென்றும் இந்த வெறும் பாவனையாகிய
சுழுப்தியை நானென் றபிமானித்திருக்கையினாலே யிதற்கபிமானி பிராக்ஞனென்றுங் கண்டேன்.
அது தேவரீரருளினாலே தீர்ந்ததுங் கண்டேன், இந்தப் பேரிருளாகிய சுழுப்தியை விஷயமா யறியுமென்னை
அறிவெனக் கண்டேன். தேவரீருடைய அனுக்கிரகத்தினாலே என்னைக் கண்டபின் மூலப் பகுதியாயிருக்கின்ற
சுழுப்தி யிறந்ததுங் கண்டேன், கண்ட ஸ்வரூபமெப்படி யிருந்ததென்னில்:-
"அறிவு தானழிவின்றியே யனைத்தையுமறிந்து முறிவதாகிய முன்பு பின் பக்க மேல் கீழ்" என்பன வொன்றுமின்று
எங்குமாய்த் திகழ்ந்து பிரிவில்லாமல் எல்லாவற்றினுள்ளுந் தானாய் நின்று விளங்குகிறபடியினாலும், சகலமுந்
தன்னிடத்திலே தோன்றியும் விளங்கியும் ஒடுங்கியுந் தானே மேலாகிச் சகலத்துக்குங் காரணமாய்த்
தேஹேந்திரிய கரணங்களுக்கெல்லா மேலாகித் தானே சாக்ஷியாய் நிற்கையினாலும் ஒப்பிலாத
விவ்வுணர்வதே வடிவதாமென்னைத் தேவரீரருளினாலே உள்ளங்கை நெல்லிக்கனி போற் சந்தேகமறக் கண்டேனென,
அமைய வுன்றனை அநுபவத் துணர்ந்தாய்! ஆனபடியினாலே துவம்பதத்திற்குப் பொருள் சுத்தமாயிற்று.
தத்பதார்த்த சுத்தம்.
தத்பத முக்யமான அவஸ்தை மூன்றையுங்கண்டு கழன்றுணருகிற சித்பரத்தையுஞ் சந்தேகமற நீ கண்டபடி
சொல்லிக் காணென்ன, தேவரீ ரநுக்கிரகத்தினாலே சுத்த துவம் பதார்த்தமாயிருக்கிற துரிய சுவரூபத்தினிடத்தில்
சர்வக்ஞத்வாதி உபாதி சம்பந்தித்து விளங்குகிறதே பரஜாக்ரமென்றும், இதற்கபிமானி விசுவத்துக்கெல்லாம்
ஆதாரமாகையால் விராட்புருஷனென்றுங் கண்டேன். அது தேவரீரருளினாலே ஸ்வப்பனத்தி லழிந்ததுங் கண்டேன் .
காலபரமாயிருக்கிற சுவப்பனத்தைப் பார்க்குமிடத்தில், சர்வசிருஷ்டி, சர்வஸ்திதி, ஸர்வ சம்ஹாரன் என்கிற
மூன்று உபாதியுடனே கூடி விளங்குகின்றதே பரஸ்வப்பனமென்றும், இதற்கபிமானி சாக்கிரம்போல வியாப்தமும்
சுழுப்திபோல அவ்வியாப்தமுமான படியினாலே இரணிய கர்ப்பனென்றுங் கண்டேன்.
அது தேவரீரருளினாலே சுழுப்தியிலொழிந்ததுங் கண்டேன் . தத்ஸ்வரூபத்தினிடத்திலே சர்வக்ஞத்வாதி உபாதி
ஒழிந்ததே பரசுழுப்தியென்றும், இதற்கபிமானி ஒரு வியாப்தமு மில்லாதபடியினாலே அவ்யாகிருதனென்றுங் கண்டேன்.
இந்தப் பரசுழுப்தியை வேதம் ஓரிடத்திலே பரமென்றும் ஆகாசம்போல வியாப்தமற்றிருக்கையினாலே பிரமத்தின்
ஸ்வரூபமென்றும் சொல்லியதுங் கண்டேன். இந்தப் பரசுழுப்திக்கு மேலாய் நின்று விளங்கா நின்ற ஞானத்தைப்
பரஸ்வரூபமென்றுங் கண்டேன் . வியோமமாயிருக்கிற பரசுழுப்தியும் பரனிடத்திலே ஒழியக்கண்டேன்.
அசிபதார்த்த சுத்தம்
தேவரீர் அநுக்கிரகத்தினாலே வியோமமீறாய மூன்றவஸ்தையுங் கபளீகரித்து நின்று விளங்காநின்ற
ஸ்வரூபத்தையுங் கண்டேன். ஞானமே வடிவாகையால் இதற்கபிமானி சித்சொலிதை யென்றுங் கண்டேன்,
தேவரீர் அநுக்கிரகத்தினாலே யிரண்டு உபாதியுந் தன்னிடத்தில் ஒழிகையினாலும், போக்கு வரவின்றியே
நிற்கையினாலும், இதரமாயிருக்கின்ற விசுவமெல்லாம் விழுங்கி அகண்ட பரிபூரணமாய்
விளங்குகையினாலும், விசுவக்கிராசமென்றுங் கண்டேன். இதற்கபிமானி அசேஷமுந் தானாய்
நிற்கையினாலே பிரசாபத்தியனென்றுங் கண்டேன்.
இப்படிச் சகல ஆத்மாவினுள்ளும் புறமும் முழுதும் பரிபூரணமாய்ப் பிரத்தியக்ஷமாய் விளங்குகின்றது
சொரூபமென்று வேதஞ்சொல்லும். அதுவே தேவரீரருளினாலே "பழமறைத் திருமொழிப் பரிசேதராதல
வுலகமுண்டகம் புறமருவுஞ் சராதிகண், முழுதுந் தன்னுருவமாய்" விளங்கப்படுகின்றதுவுங் கண்டேன்,
பேதமாயிருக்கின்ற பிரபஞ்சமெல்லாம் பிரமமென்று வேதஞ்சொன்ன மெய்ம்மொழிப் படியே
ஜகமெல்லா மொருதன்வடியாய் விளங்குகின்ற சொரூபத்தைச் சீவதுரிய முதலாகக்கொண் டுள்ளும்
புறமுமாய் வருகிற உபாதிக் குற்றங்களெல்லாந் தீர, அநுக்கிரகம் பண்ணுகையினாலே கண்டேன் என,
இந்த ஸ்வரூபம் ஐக்கியத்திலே உபசாந்தமாம். இதனை நீ அரிதாகிய வமல தத்பதார்த்த மென்றறி.
இப்படி வியோமத்தைக் கடந்து விசுவமெல்லாந் தன்மயமாய் விளங்குகிறபடியினாலே உபாதியினுடைய
குற்றந் தீர்ந்தாலும் இந்த வாசனா தோஷந் தீரவேண்டுமென்று வேதஞ்சொல்லும். ஆகையினால் இனி
யிந்த வாசனா தோஷந் தீருமுறைமை யெப்படியென்னில், உபசாந்தம் நீங்கினாலொழிய தீராது.
உபசாந்தமாவதே தென்னில் மூலாக்ஞானம்; மூலாக்ஞான மேதென்னில் மறைப்பு; அந்த
மறைப்புத்தானே தென்னில் தத்சொரூபத்தை மறந்தவிடம். தேகமாதியாக இந்த மறைப்பாகிய உபசாந்தம்
அந்தமாகச் சகலமும் தன்னிடத்திலே அடங்குகையினாலே யிதற்கபிமானி பொற்புவிசாந்தனாம்.
நன்றாய் விளங்கப்பட்டு உலகெலாம் நிறைந்த உபசாந்தத்தின் பெருமையை வேதத்தினுடைய முடிவு
இன்றளவுஞ் சொல்லியது. முப்பதத்தவத்தை மும்மூன்றொன்பது முடிந்தது ஞானமென்றுஞ் சொல்லியது.
ஆகையால் முப்பதமு முடிந்தவிடத்திலே சத்தியஞான வனந்த வானந்தமா யிருக்கப்படாநின்ற
தத்சொரூபம் வெளிப்படுமென்று அநுக்கிரகம் பண்ணியருள அந்தச் சொரூபத்தை அநுக்கிரகம்
பண்ணவேண்டுமென்ன அநுக்கிரகம் பண்ணுகிறார்.
நிதித்யாசன முற்றிற்று
தத்ஸ்வரூபம்.
அஃதெப்படியென்னில், இந்த மறைப்பாகிய உபசாந்தத்தைக்கண்டு விளங்கப்பட்ட
தத்சொரூபத்தினிடத்திலே அந்த மறைப்பு நிற்கிறதோ இல்லையோ பாரென்னுமிடத்தில் இல்லை.
இல்லாதவிட மெப்படியிருந்தது? ஆதியந்தஞ் சூனியமாயிருந்தது. அந்தச்சொரூபந்தான் காண்.
அறிந்திடப் படாததாய் அறிவுடையதாய் அளவிடப்படாததாய்ச் சுக சிவசொரூபியுமாயிருப்பது.
அதுதான் காண். சத்யஞான வனந்த வானந்தமானது.
அஃதெப்படியென்னில், ஆதியந்தஞ் சூனியமாயிருக்கப்பட்டதே பரிபூரணம் . அந்தப் பரிபூரணம்
எப்படி யிருந்தது பாரென்னுமிடத்தில் என்னாற் சொல்லப் போகாதிருந்தது. அதேனென்னில்,
மனதுக்கெட்டாதபடியினாலே வாக்கு வசனிக்கப் போகாது. ஆகையினால் வாக்கு மனோதீதமென்று
கண்டு விளங்கி வந்ததே ஞானம். அந்த ஞானத்தை விட்டிருந்த விடத்திலே யாதொரு ஸ்வரூபம்
நிகழ்ந்தது அதை ஆசாரியரும் மஹாவாக்கியத்தினாலே அது நீ யாகின்றாயென்றும்
நீ யது வாகின்றாயென்றும் அநுக்கிரகம் பண்ணினார்.
இந்த ஸ்வரூபந்தான் மூன்று பதமானது அஃதெதுவென்னில், துவம்பத முதலாக அந்த ஸ்வரூபந்தான்
காண் மூன்றுலக்ஷணமானது. அஃதெதுவென்னில், ஜீவன் முதலாக அந்த ஸ்வரூபந்தான் காண்,
ஆறு குறியாயுள்ளது. அஃதெதுவென்னில், வடிவு நுண்மை முதலாக அந்த ஸ்வரூ பந்தான் காண்
எட்டியல்பானது அஃதெது வென்னில், இறந்த கேள்வி முதலாயினவாம்.
இப்படி அநுக்கிரகம் பண்ணப்பட்ட குருநாதன் பெருமை யாதோவென்னில்,
"மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென்றுந் தீபற
தவத்திற் றலைவரென்றுந் தீபற''
என்று கூறுவதாற் கண்டுகொள்க.
கலிவிருத்தம்.
தொம்ப தந்தத் பதந்தோன்று மசிபதம்
நம்பியசீவன் பரன் சிவமாய் நிற்கு
மம்பத மேலைச்சொரூப மாவாக்கியஞ்
செம்பொரு ளாண்டருள் சீர்நந்திதானே.
நேரிசை வெண்பா.
புசிப்போஞ் சிவபோகம் பூரணமா யெங்கும்
வசிப்போ முலகில் வசியோ - முசிப்பின்றி
வாழ்வோஞ் சிவத்தையுணர் மாதவர்தம் பொன்னடிக்கீழ்த்
தாழ்வோ மெமக்கார் சரி
தத்துவாமிர்தக்கட்டளை முற்றிற்று.
சற்குருநாதன் துணை