logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

(  உரையாசிரியர் தி.மு. சபாபதி தேசிகர்   அவர்கள்)

        பாயிரம் - காப்பு
              விநாயகப்பெருமான் துதி

“நீர்விளையாட்டிற்றீ  ம்பாற்கடலி டைநெடுங்கை நீட்டிக்
கார்நிறத் தவனை வெள்ளைத் திருவொடு கலந்துவாரிச்
சீர்தருவிசும்பின் வீசத்திங்களு மறுவு மென்னப்
பேர்தருமாலங்காட்டுப் பிள்ளைதாள் வணங்கஞ் செய்வாம்'              

        முருகப் பெருமான் துதி

"ஓர் தருபரமீதென்ன வோமெனு நாதத்தோங்கி
யார் தருபயனை யீசற்கருளுருவாகி நல்கிச்
சூர்முதற்றடிந்து வானந்தொழுத விந்திரற்கு நல்கும்
பார்பு கழாலங்காட்டுக் கந்தனைப் பணிதல் செய்வாம்"

        இரத்தினசபாபதி துதி

    "சீரணிந்த மிடற்றினொளி காளிநீலச்
    சேயரிக் கணொளிபோலத் திகழச்செவ்வி
    யேரணிந்து புடவி முதற்றாங்குஞ் சத்திக்
    கினிமையுற வலத்தாளை யியலவூன்றி
    யாரணிந்துவான முதலனைத் துந்தாங்க
    வமைந்திடத் தாளுயர்த்த நந்த விகற்பமேவு
    நீரணிந்த நடநவிற்று மாலங் காட்டு
    நின்மலனைச் சின்மயனை நினைதல் செய்வாம்"

"ஒருபாதம் தனையூன்றி ஒருபாதம் உயரத் தூக்கி
மறைவாகத் திரையினுள்ளே மாசிலா நடனஞ்செய்வாய்
இறைவனே ஆலங்காட்டில் ஏந்திடும் கயிலை நாதா
தருகுவாய் நிறைந்த செல்வம் தற்பரா போற்றி போற்றி "

    வண்டார்குழலியம்மை துதி

    “கரியமலர்த் தடங்குவளைக் கலகவாட்கட்
    கடையத னாலைந் தொழிலுங் களியுற்றீசன்
    புரிய வருணோக்கருளிப் புரந்தராதி
    புனையுமணி மகுட நிரை பொழியுங்காந்தி
    பரிபுரச் சீரடிப்ப துமச்செய்ய தோட்டுப்
    பஞ்சியொழுங் கெனப்பரவப் பணிய நல்குந்
    தெரிவரிய பரமாய வாலங்காட்டுச்
    சேயிழை வண்டார் குழலைச் சிந்தைசெய்வாம்”


    காரைக்காலம்மையார் துதி

"ஓதாமற் பலகலையு முணர்ந்தொளிருஞ்
    சிவஞானவுருவ மாகிப்
போதாருங்கயிலையர னம்மைவாவென
    வப்பா புகுந்தேனென்று
தாதாருமலர்க்க ரத்துச்சதிக்கிசையப்
    பாணி திருத்தாளமேந்தும்
வாதாடும்பிரானடிக் கீழ்க்காரைக்கா
    லம்மை பதம் வணங்கிவாழ்வாம்''

    நாயன்மார்கள் துதி

“உயிருடல் பொருளென்றோரா தொழுக்குயர் நிலையாயின்பப்
பயிர்செயு முருவு மீசற்கிரண்டெனும்பான்மை யோர்ந்து
செயிரறுபணியின் மேவிக்கொடைக்கடன் சேர்ந்துபோத
மயர்வறவரர்களாய தொண்டர் தாள் வணக்கஞ்செய்வாம்”

        வாழ்த்து

“விண்டமலர்த்தரு நீழற்சுரர்கள் வாழ்க பூசுரரும் விரும்பி வாழ்க
கொண்டன் மழை பொழிந்து வளங்கொழிக்க மனுநெறி வேந்தன் குலவி வாழ்க
அண்டர்பிரா னருச்சனையுமாக மமுமானினமு மறமும் வாழ்க
தொண்டர் குழாம்பொலிந்திடுக வேதநெறியுல கனைத்துஞ் சூழ்ந்து மல்க”

        1. நைமிசாரணியச் சருக்கம்

இச் சருக்கம் 68 திருவிருத்தங்களைக் கொண்டது :

    “பொருவருஞ் சிவபரம் பொருளாருமனப் புணருந்
    திருவிரும்பிய சிந்தையர் தெய்வவெண்ணீற்று
    மருவுகண்டிகையே மதித்தவர் மதிநுதல்பாக
    னுருவமாய வஞ்செழுத்து நெஞ்சழுத்திய வுரவோர்"

    மிக்க மேன்மை பொருந்திய நைமிசாரணியத்தில் 
நல்வினையே ஒரு வடிவெடுத்தாலொத்தவர்களும் உயிர்களிடத்திலே 
தாய் போன்ற அன்புடையவர்களும், அருள் நிறைந்தவர்களும்
உலகத்திற்குண்டாகுமிடராகிய இருளைச் சூரியனைப்
போல் ஒழிப்பவர்களும், பரமசிவமே பரம்பொருளெனக்
கொண்டவர்களும், திருநீற்றினையும்,கண்டிகையினையும்
அணிந்தவர்களும், அஞ்செழுத்தினை நெஞ்சழுத்தியவர்களும்,
விரதாதிகளால் மார்பின் என்பு எழுந்து தோன்றும்
மேனியுடையவர்களுமாகிய முனிவர்கள் கங்கையில் நீராடித் தத்தம்
நித்திய கடன்களை முடித்து ஓரிடத்திலே கூடி அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

    அவ்வமயம் வேதவியாசரின் முதன் மாணவராகிய சூத முனிவர் அவ்விடத்துக்கு 
எழுந்தருளவே அப்பெரும் தபோதனரைக் கண்ட உடன் சௌநகாதி 
முனிவர்கள் எழுந்து அர்க்கிய, பாத்தியம் கொடுத்து உபசரித்து
அடியுறப்பணிந்து வரவேற்று ஆசனம் கொடுக்க
அதில் சூத முனிவர் இருந்தருள முனிவர்கள் மீண்டும் மும்முறை 
அஷ்டாங்கமாக வணங்கி சுவாமீ, மூர்த்தி, தலம்,
தீர்த்தம் என்னும் மூன்றானும் முதன்மையுற்றுச் சிறப்பு மிக்கத்
தலம் யாது? நாங்கள் நற்கதியடைய அதனைத் திருவாய்
மலர்ந்தருள வேண்டுமென்று விண்ணப்பித்தனர்.
சூதமுனிவரும் மனமகிழ்ந்து முனிவர்களே என் குருநாதராகிய
வியாசாசாரியர் "எமக்குயர் ஞானம் பயக்குமா றுயர்புராணமீரொன்பதும் 
பகர்ந்தான்" அதில் மிகவும் உயர்வுடையதாய்

    “ஞாலமேத் திடுமப்பதி நலம் பெறுநாமம்
    ஆலங்காடென வறைகுவ ரப்பெயர்பகரில்
    வேலவாற்றிய தீவினைத் திரளெலா மிரியும்
    பாலலோசனன் அடிநிழற் பதவியு மளிக்கும்''

இத்தகு சிறப்புமிக்க திருத்தலமாகிய திருவாலங்காட்டுத் தலச்
சிறப்பை நீங்களும், நானும் உய்யும் பொருட்டுக் கூறுகின்றேன் " 
எனக் கூறியருளினார்.

இத்திருவாலங்காடென்னும் சிறப்புமிக்க திருத்தலத்தே

    “நொடியளவதனிற் பாதியாயினு நுகற்சிமே வற்
    கடி நிழலாற்றற் கங்கண மரினும் வலமதாய
    கடி வினையொழிக்குமென்றாற் கண்ணுதலாலங் காட்டி
    னொடி வரையுறைவோர் மேன்மையுணர்ந்தெவருரைக் கற்பாலார் "

    " கற்றையஞ் சடையார்க் கொக்குங் கடவுளரில்லை காத
    லுற்றனவளிக்கு மாலங் காடென வுலகமேவு நற்றலமில்லை-"

இத்தகு திருத்தலத்தின் சிறப்பைச் சொல்லுகின்றோம். 
கேட்டு நற்பயனடைவீராக எனச் சொல்லுகின்றார்.


        2. திருவிழாச் சருக்கம்

    இச்சருக்கம் 29 திருவிருத்தங்களைக் கொண்டது.

    அளவிடற்கரிய பெருமைமிக்க திருவாலங்காட்டின்
சிறப்பினைச் சிவபிரானே கூறவல்லவர். அடியேன் சிறிது
கூறினேன்.ஆதியில் கயிலைக்கண்ணுதற் கடவுள் சுநந்த
மாமுனிவருக்கு இத்தலப் பெருமையை  அருளிச் செய்தார். 
அதன்பின்னர் மார்க்கண்டேய மாமுனிவர்பிரான் சஹஸ்தி
ரானீகனெனும் அரசனுக்குக் கூறினார். பின்னர் விஷ்ணுதேவர்
ஆதிசேடனுக்குக் கூறினார். இவ்வித பரம்பரை முறைகள்
நன்குணர்ந்த வியாசமுனிவர் அடியேனுக்கு அருளிச்செய்த
வண்ணம் உங்களுக்குக் கூறுகின்றேன். இத்தகு சிறப்பும்
புண்ணியமும் தரத்தக்க தலத்தின் பெருமையை வேதாகமப்
பற்றில்லாதவர்கள், நீதி தவறியவர்கள், பக்தியற்றவர்கள்,
பூசையில்லாதவர்கள், பஞ்சமாபாதகம் செய்தோர்களுக்குக்
கூறலாகாது என்று ஆணையிட்டுக் கூறலுற்றார்.

    கிருதயுகம் முதற்பாதத்தில் சிவபெருமானுக்குப் பங்குனி
யுத்திரத் திருவிழாவினைச் செய்ய தேவர்களும், இருடியர்களும்
துணிந்து இத்திருவாலங்காட்டுப் பழையனூர் திருவீதிகளை
அலங்கரித்து கரும்பு, தென்னை, பனை முதலியவற்றைப்
பந்தலில் கட்டி மாலைகளை வரிசையாகத் தொங்கவிட்டு,
வீதிகளில் மணல் பரப்பி ஆங்காங்கே பூரண கலசங்கள், மகர
தோரணங்கள் கட்டி இந்திராதி திக்குப்பாலகர்கள், ஏனைய
தேவர்கள் பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், காந்தருவர், சித்தர்,
கின்னரர், யோகியர், முனிவர் முதலியோர் கூடி

    “அருமறைச்சிரத்தின் மேய வநந்த வாநந்தமாகிக்
    கருமலியுயிர்கட்கெல்லாங் களைகணாய்க் கதியுமாகி
    யொருவனா யுலகனைத்தும் படைத்தளித் துமையோடாடும்
    திருவமே யாலங்காட்டுச் செல்வமே போற்றி போற்றி"

எனப் பலகோடி நாமமுடைய சம்புவைப் பலபடியாகப் போற்றி
பெருமானே தேவரீருக்குத் திருவிழாச் செய்ய ஆசைப்பட்டோம்.
ஏற்றருள்புரிய வேண்டும் என விண்ணப்பிக்க,
இறைவன் அநுமதி தரலும், தரும தேவதையாகிய இடபக்
கொடியையும் அஷ்டமங்கலங்களையும் எழுதி, யாகவேதிகை
முறைப்படி அமைத்து அருச்சித்து கொடியினை ஏற்றி, நவரத்தின
 கசிதமான கேடயத்தில் எழுந்தருளப்பண்ணி
வாசனாதி திரவியங்கள் அணிவித்து ஸகலவித வாத்திய
கோஷங்களும், ஆடல், பாடல்களும் பின்னே வேதஒலி முழங்க
சிறப்புற திருவிழாவைப் பத்து நாட்களும் செய்து பெருமான்
அருளைப்பெற்று அனைவர்களும் ஓரிடத்தில் கூடியிருந்தனர்,

    அப்போது சங்கிருது முனிவர் என்பவர் மாதவத்தில் மேன்மை
யடைந்த வசிஷ்டர் முதலிய முனிவர்களைப் பார்த்து தவ
சிரேஷ்டர்களே! இத்திருவாலங்காட்டின் சிறப்பும், காளியுடன்
பெருமான் நடித்ததற்குக் காரணமும், பெருமைமிக்க
தீர்த்தத்தின் விசேடமும் எனக்கு அருளிச்செய்ய வேண்டுமென்று 
விண்ணப்பிக்கவே ஏனைய முனிவர்கள் சங்கிருது
முனிவரைப் பார்த்து முனிவரே நீர் வேதாகம புராண கலைக்
கியானங்கள் உணர்ந்த பேரறிவோடு பொறுமை, தவம்
முதலியவற்றால் சிறப்புற்றுள்ளீர். நீர் கேட்ட இக்கேள்விக்கு
வாக்கு வன்மையுடையவரும் உம்மைப்போன்றே சகலகலை
வல்லுநருமாய கௌசிக முனிவர் தான் சொல்லும் தகுதியுடை
யவர்'' என்று கூறலும் சங்கிருது முனிவர் கௌசிகரை
வணங்கிக்கேட்க, விரித்துப் பெருக்கி இத்தல வரலாற்றைக்
கூறியருளினார். அதைக் கர்ண பரம்பரை மூலமாகக்
கேட்டறிந்து வியாசாசாரியர் அடியேனுக்குக் கூறினார்.

    “கணங்கள்சூழ் திருக்கயிலைமால் வரையினுங்கவினார்
    குணங்களாற் பரனிப்பதி விருப்புளங் கொளுமார்"

கயிலையினும் இயற்கை அழகு நிறைந்த பதியாதலால் இத்
தலத்தில் பெருமான் விருப்பங்கொண்டார். இத்தகுபுண்ணியப்
பதிக்குப் போகவேண்டுமென்று நினைத்தவர்களும் சென்று
தரிசித்துத் தங்கினவர்களும் நற்பேறடைவரென்பது திண்ணம்.

    “புண்ணியப்பதி போகுவமென மனம்பொருந்தி
    எண்ணினார்களு மிரிப்பர் தீவினையி யங்கிரிய
    தண்ணில் வேங்கடச் சரியிடைத் தங்கினர் தாழ்ந்து
    பண்ணினற் றுதிபரவி னீத்துறுவர் நற்பதமே''

இத்தலத்தில் மிகப்புனிதமாயதும் சங்குக்கூட்டங்கள் உலவிக்
கொண்டிருப்பதும் கொடிய தீவினைத்திரளை வடவாக்கினி
பட்ட வைக்கோல் எப்படியாகுமோ அதுபோல் எரித்து,
ஆணவமாகிய உள்ளிருளையும் போக்குவதோடு தாண்டவப்
பெருமான் உவக்கும் வண்ணமும் செய்யும் சிறப்புமிக்குடையது
சென்றாடு தீர்த்தமென்னும் முத்தி தீர்த்தம்.

    "குடவளைத் திரள் குலவிய வடவனத் தீர்த்தம்
    வடவை வையெனத் தீவினைத் திரளெலா மாய்க்கும்
    இடரகற்றிடு மனத்திரு ளீர்ந்தருளீயும்
    நடனவிற்றிடு நாதனுமுவந் தருளீயும் "

எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

        3. ஆதிசேடனுக்கு மாலுபதேசச் சருக்கம்

    இச்சருக்கம் 20 திருவிருத்தங்களைக் கொண்டது.

    சாவாமருந்தாகிய அமிர்தத்தைத் தேவர்களுக்கு அளித்ததோடு 
இலக்குமி, காமதேனு, கற்பகவிருக்ஷம், வெள்ளையானை
முதலியவற்றைத் தந்த மிகுபுண்ணியக்கடலாம் திருப்பாற்
கடலின் நடுவே நவரத்தினங்களால் இழைத்ததும், அறிவில்
மிகுந்த ஆதிசேஷனாகிய படுக்கையில் திருமகளும், நிலமகளும்
இருபுறம் வீற்றிருக்க நாரதர் யாழிசை வாசிக்க சனகாதி முனிவர்களும்,
தேவர்களும் போற்றிப்பரவ திருமால் அறிதுயில்
கொண்டிருக்குங்கால் ஒருநாள் திருமாலின் திருமேனியில்
வேர்வை உண்டாகி ஆதிசேஷனை நனைத்துவிட ஆதிசேஷன்
லோகரக்ஷகனை வணங்கி ஐயனே என்றும் கண்டறியாத
இவ்வியர்வைக்கு யாது காரணம் திருவாய்மலர்ந்தருள
வேண்டுமென்று விண்ணப்பித்தார். திருமால் ஆதிசேஷனை
நோக்கி சேடனே முழுமுதற் கடவுளாகிய சிவபரம்பொருள்
பூவுலகத்தில் கயிலையினும் சிறப்புமிக்க திருவாலங்காட்டிலே
காளியின் கொட்டமடங்க சண்ட தாண்டவமென்னும்
ஊர்த்துவ தாண்டவத்தைச் செய்தருளியபோது நானும்,
சுநந்த முனிவரும், கார்க்கோடரும், நான்முகன் முதலான
இந்திராதி தேவர்களும் நடனங்காண நண்ணினோம்.

    "புடவிமேற் சிவபுரியெனப் புண்ணியப்பதியாம்
    வடவனத்திடை மறமலி யகந்தைகூர்காளி
    யடலவித் திடச்சண்ட தாண்டவமெனவறையு
    நடநவிற்றன்ன சாலைசூழ் நானிலமோங்க"

சண்ட தாண்டவ மென்பது மஹா உக்கிரமானது. இறைவன்
எண் தோளுடன் இடது பாதத்தைக் காதளவோடு உயரத்
தூக்கியாடிய ஊர்த்துவதாண்டவத்தில் நான் மத்தளம்
வாசிக்க முடியாமல் மிகுசிரமப்பட்டு வாசித்த அலுப்பினால்
இவ்வேர்வை யுண்டாகியது என,சேடன், ஐயனே! சிவ
பெருமான் நடித்ததிறத்தை அடியேன் தரிசிக்கும் புண்ணியப்
பேறடையாவிடினும், அவ்வற்புத நடனத்தின் சிறப்பை
விளக்கியருள வேண்டுமென்று விண்ணப்பிக்க, திருமால்
சிவபெருமான் சுநந்த முனிவருக்குக் கூறிய வண்ணம்
அருளலுற்றார்.

    "நாற்றிசையும் போற்றிசெயு மாலவனப் பெருமையினை நாதனல்லாற்
    போற்றியெவர் புகழ்ந்துரைப்பார் புனிதமதிற் புனிதமதாய் பொருவற்றோங்கி
    மேற்றிகழும் புண்ணியத்தின் புண்ணியமாய் வியனாகி வீறும்பாச
    மாற்றியருளளித் தீசன் மலரடிக்கீழ்ப் பேரின்ப வாழ்வு சேர்க்கும்"

இவ்வாறு தலப்பெருமையைக் கூறி.

    "சானவியே முதற்றீர்த்தந் தன்னினுமே தகுமேன்மைத் தன்மை மேவி
    யீனமதாம் வினையனைத்து மிறுத்து முத்தியீய்ந்திடலான் முத்திதீர்த்தம்"

எனத் தீர்த்தப் பெருமையையும் திருவாய் மலந்தருளினார்.

    
        4. சுநந்தர் உபதேசச் சருக்கம்

    இச்சருக்கம் 90 திருவிருத்தங்களைக் கொண்டது.

    "அநந்த னாவினா லளப்பரு மேன்மை சால்பமைந்தோன்
    சுநந்த னென்றுயர் பெயரினான் றுறவறங்கோமான்
    இனந்தரும் பலரேயினு மீசனை யல்லான்
    மனந்தனிற் பிறதேவரை மதித்திடா மதியோன்"

    சிவபெருமான் மேற் கூறிய இலக்கணத்திற் கொப்பாகிய
சுநந்தமுனிவருக்கு அருளிச்செய்தபடி திருமால் ஆதிசேடனுக்கு
உபதேசிக்கின்றார். இயற்கைத் தோற்றப் பொலிவோடு 
வளமும் அழகும் நிறைந்த திருக்கயிலாய மலைச் சிகரத்தில்
நானும்,நான்முகனும், தேவாதி தேவர்களும், அருந்தவ
முனிவர்களும் போற்றிப் பரவித்துதித்துக் கொண்டிருக்க
சிவபெருமான் திருவோலக்கம் கொண்டிருந்த சமயத்தில்
வேதாகமங்களையும் அறுபத்தினான்கு கலைகளையும் கற்றுணர்ந்தவரும் 
தவசிரேஷ்டருமாகிய சுநந்த முனிவர், கற்பாந்த காலமாகக் 
கயிலையில் தவமியற்றிக் கொண்டிருந்தவர் நிஷ்காமியபரர் 
(இச்சையாக எதையும் கருதாதவர்) இவரும் அத்திருவோலக்கக் 
காட்சி காணவந்திருந்தார்.  

    இறைவன் முனிவர் மீது திருவருள் நோக்கி நீர் சாம கானத்தினால் 
பன்னாள்  நம்மைப் பாடிக் கொண்டிருக்கிறீர். உளம் மகிழ்ந்தோம். உமக்கு
வேண்டும் வரம் யாது? என, முனிவர், பெருமானே! அடியேனுக்கு 
ஒரு வரமும் தேவையில்லையே. அப்படி தேவரீர் வரம்
தருவதாயின் அடியேன் விரும்புவது தங்கள் நடனக்
காட்சியைத் தரிசிக்கும் பேரருள் வேண்டுமென்றார். அப்படியே
தந்தோம். ஆனால் நாம் செய்யும் சண்ட தாண்டவத்தைத்
தாங்கக் கூடிய தலமானது எந்த லோகத்தினுமில்லை; ஆனால்
இக்கயிலாயத்தினும் சிறப்புமிக்க தலம் ஒன்றுள்ளது. அது
திருவாலங்காடென்னும் தலம். ஆகவே நீர் அங்குபோய்
தவமியற்றிக் கொண்டிரும். நாம் அவ்விதமே உம்முடைய
விருப்பப்படி தாண்டவப்பேற்றை அருளுவோம்.

    "சண்டதாண்டவ நாஞ் செயத் தாங்கிடுந்தான
    மண்டமார் புவியகத்திலை யாயினு மறிநீ
    கொண்டல் கண்படு குளிர்வடவன மெனக்குலவி
    மண்டலந்தனில் வயங்கிடுஞ் சிவபுரிமேலான்''

இத்தகு சிறப்புற்றோங்கிய தலத்திற்குச் சென்று அதன் பக்கலிலுள்ள 
புனிதமானதும் அதிற் படிந்து ஸ்நாநம் செய்வோர்களின் 
வினைத்திரளை யெல்லாம் போக்கக் கூடியதுமான
முத்தி தீர்த்தத்தில் முழுகி நம் வரவை நோக்கித் தவமியற்றிக்
கொண்டிரும் என்றருளிச் செய்தார்.

    "மணிவளை தவழுமுத்தி தீர்த்த மவ்வனத்தின்மேவி
    யணிசெயு மாடினார்தம் மருவினை யனைத்துந் தீர்க்கும்”

என தீர்த்தத்தின் பெருமையானது நாம் ஒரு காலத்தில்
“வா” வென்று சொல்லியதால் வந்த பெருமையுடையது.

    " மேயவத் தீர்த்த நாமு மேவென விளம்புமாற்றாற்
    றூயசங்கச்ச தீர்த்தமப் பெயர் துன்னுமன்ன
    தாயசென் றாடுந்தீர்த்த மங்கதன் அருகுமேவி
    வாயனீயிருத்தி யென்ன"

சுநந்த முனிவர் பெருமானே இத்தலத்தில் தேவரீர் இன்பங்
கொண்டெழுந்தருளிய விதத்தை அருள்பாவிக்க வேண்டுமென
 வேண்டவே முனிவரே 'ஆலவனத்துயர் தூயமேன்மை
யோதியா முணர்த்தற் காலம் உலப்பில் செல்லும்'' "வெள்ளி
யங்கிரியும் ஆலவன மெனவிரும்பி உள்ளத்துள் உள்ளிய
தென்றால்"  இத்தலப்பெருமை நன்குணருவாய். உலகத்
துன்பங்கள் நீங்குவதற்காக நாம் நடிக்கும் தலங்களைச்
சொல்லுகின்றோம். கேட்பீராக. என்று கூறலுற்றார். 

திருக்கயிலாயம், சிவலோகம், இமயமலை, தேவலோகம், பத்திர
பீடம், நேபாளம், காசி, காமரூபம், நைமிசாரணியம், குரு
க்ஷேத்திரம், மந்தரகிரி, கமலா நந்தகிரி, புயங்க குலகிரி,
சுராஷ்ட்டரம், கதலித்தானம், திருக்கேதாரம், பத்திரிகா
சிரமம், சந்திரஸ்தானம் சுமிந்திரம், பராபுரந்தரம், விசாலாக்ஷம்,
மேருகிரி, சண்பகவனம், போடமாடவி, ஆமிரதம், துளசி
வனம், அயவந்தி, சூலவரை, சிகண்டம், அசோதம், மஞ்சரி,
காம்பீரியம், மாவிரதம், பிரம்மாண்டம், அயிராவதி, மாயூரம்,
சித்திரசேனாகம், புஷ்கரணி, பாதாளம், மந்திராச்சிரமம், ஏம
கூடம், கமலமணி, சிவாச்சிரமம், சித்தராச்சிரமம், சித்திர
கூடம், மல்லிகார்ஜுனம், கங்கா நதித்துவாரம், புஷ்யரதம்,
உதயவரை, புன்னாகவனம், நந்திபுரம், கும்பகோணம்,
சாளரத்தம், சீர்காழி, சோமபீடம், சாளக்கிராமம், ரிஷபா
சலம், சரஸ்வதி, சிதம்பரம், காஞ்சிபுரி, அவந்திகாபுரி, மதுரா
புரி, மாயாபுரி, துவாரகாபுரி, அயோத்யாபுரி, சேது இராமே
சுவரம், வாதபுரி, யம்பை, கோகர்ணம், திருக்காளத்தி,
திருக்கழுக்குன்றம், திருவோத்தூர், ஸ்ரீசைலம், திருவெண்காடு
திருக்கேதாரம், இத்தலங்களிலெல்லாம் நடித்து ஆன்மாக்
களுக்கு இன்பம் தந்தருளுவதில் சிதம்பரத்தலத்தில் செய்யப்
பட்ட நடனமானது ஆன்மாக்களது ஆணவமல இருளைத்
தடுத்து பேரின்பமாகிய ஆநந்த மோங்கும்படியாக அநுக்கிரகஞ் 
செய்தருளும் நடனம், மற்றைய தலங்களில் நடிக்கும்
தாண்டவம் ஆன்மாக்களுக்கு நிச்சயஞானம் வருவித்தற்
பொருட்டாம். இனி

    “ஆலவன மனைத்தினுக்கு முதலான நடத்தான மருளார் நட்ட
    மூலமதா மதனகத்துச் சண்ட தாண்டவங் ககனமுகடுநோக்கி
    மேலணுகவிடத் தாளையெடுத்து வலத்தாளூன்றி விளைக்கு நட்டஞ்
    சாலுமிது சங்கார தாண்டவமாம் பிறப்பிறப்புத் தவிர்த்தலாலே"

திருவாலங்காட்டில் நடிக்கப்போகும் நடனம், திரு நடனங்களுக்கு
மூலாதாரமான சண்டதாண்டவம். அது ஜனன
மரணங்கள் நீக்கும் வன்மையுடையது.

    "அண்டமெலா மிருணீங்க ஆடல் செய்வோம்
            ஆலவனத்துறுதியென்றும்''

நமது நடனத்தானமாகிய திருக்குற்றாலம், திருநெல்வேலி,
மதுரை, தில்லைச் சிதம்பரம், திருவாலங்காடு என்னும் ஐந்து
சபைகளில் முதன்முதலில் நடிக்க திருவாலங்காடாம் இரத்தின
சபைதான் உகந்தது. இத்திருவாலங்காட்டில் நமக்கு விருப்ப
முண்டாகிய மற்றொரு காரணத்தையும் கூறுகின்றோம்.
கேட்பீராக? முன்னொரு காலத்தில் தக்கன் என்பவன் தவமாற்றி
உலகைச் சிருஷ்டிக்குங்கால் நமது பராசக்தி தனக்கு புத்திரியாக 
வரவேண்டுமென்று பெருந்தவம் செய்த பலத்தினால்
பராசக்தி தன் மகளாகக் கிடைக்கப்பெற்று எடுத்து வளர்த்து
நமக்குக் கொடுத்து திருமணம் செய்யும் காலத்தில் தக்கனுக்கு
ஆணவம் தடித்து பரமசிவனே நமக்கு மாப்பிள்ளையாய்விட்டார்
எனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவம் உள்ளே பொங்கி
வந்ததை நாம் உணர்ந்து இவன் அகந்தையைப் போக்கக்
கருதி மறைந்துவிட்டோம். 

    "நஞ்செயலற்று இந்த நாமற்ற" பின் தான் நாம் 
அருள்பாலிப்போம். நான் என்னும் முனைப்புக்
கெட்டவர்க ளிடத்திலே யல்லவோ நாம் வசிப்போம். நாம்
மறைந்துவிடவே தாக்ஷாயணி வருந்தி தவமியற்றவே நாம்
அவள் தவத்திற்கு மகிழ்ந்து இருஷபாரூடராய்க் காக்ஷி
கொடுத்து மனைவியாக ஏற்றுக் கயிலைக்கு அழைத்துப்போய்
வீற்றிருந்தோம். இச்செயலைக்கேட்டு தக்கனுக்கு மேலும்
கோபம் பொங்கி மமதையால் நம்மை நீக்கி ஒரு யாகத்தைச்
செய்யக்கருதி மற்றைத் தேவர்களை (வரிக்க) வரவழைக்க
இவன் தவமகிமைக்குப் பயந்து எல்லாத் தேவர்களும் யாக
சாலையில் வீற்றிருக்க தாக்ஷாயணி இஃதறிந்து நாமும் போய்
வருவோமென்று நம்மையழைக்க உன் பிதாவினது
யாகத்தைப் பார்க்கமாட்டோமென்று சொல்ல வாட்டமுற்று
வளர்ப்புத் தந்தையின் பாசத்தால் யாகசாலைக்குப் போகவே
தக்கனானவன் பார்த்து" நீ இங்கு வந்த காரணம் என்ன?" என்று
ஏளனமாகப்பேசி சிவபரம்பொருளைக் கடுஞ்சொற்களால்
கேவலமாக நிந்தித்தான். 

    இந்த இழி சொற்களைக் கேட்ட உமை பரம்பரனை
 யிகழ்ந்தாரைப் பகர்ச்சிசெயு நாவரிந்து
பகைத்து மாயவுரம் பயிலுமுயிர் பருகவேண்டும். தந்தை
யென்ற காரணத்தால் முடியவில்லை. ஆதலால் என் உயிரை
மாய்ப்பேனென்று யோகத்தீயில் மூழ்கி தாக்ஷாயணியென்னும்
நாமத்தைப் போக்கி தம்மைப் புத்திரியாகப் பெறவேணு
மென்று பெருந்தவமாற்றும் பருவதராஜனுக்குப் புத்திரியாகத்
தாமரைத் தடாகத்தில் தோன்றி வளர்ந்து வருவாளானாள்,

    இச்செயலைக் கேட்டு வீரபத்திரனை அழைத்து நீ போய் தக்கன்
யாகத்தைச் சேதிப்பாய் யெனலும் வீரபத்திரர் மிகுகோபா
வேசத்தோடு யாகசாலைக்குப்போய் தேவர்களைச்
சின்னா பின்னப்படுத்தி தக்கன் தலையை வெட்டி வீழ்த்தி தலைக்குப்
பதிலாக ஆட்டுத்தலை வைத்து அழித்துவந்து கூறியபின் நாம்
கயிலையங்கிரியை நீங்கி பரிமளம் வீசப்பட்ட புஷ்பங்கள்
நிறைந்த மரங்கள் நிறைந்துள்ள மூங்கில்வனத்தில் ஏகாந்த
மாய் வீற்றிருக்குங்கால் சிவநிந்தையபராதத்தைக் கேட்டுக்
கொண்டிருந்ததோடு தக்கனால் கொடுக்கப்பட அவிர்
பாகத்தை உண்ட பழி தீரும்பொருட்டு மாயையென்னும் அசுர
மடந்தை காசிபரிஷியை அணுகி மோகிப்பிக்கச் செய்து
புணர்ந்து சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், அஜமுகி ஆகிய
நால்வர்களை ஜாமத்திற்கொருவராகப் பெற்றதோடு அவர்களுடன் 
அநேக அசுரர்களையும் பெற்றெடுத்தாள். 

    இந்த சூரபத்மாதியர்கள் நம்மைக்கருதி கடுந்தவமாற்றியமையை
உகந்து வேண்டிய வரமனைத்தும் தந்தோம். இவர்கள்
பரம்பரை வைரிகளாகிய தேவர்களை ஹிம்சித்து அல்லல்
படுத்தவே இவர்கள் ஆற்றலுக்குப் பயந்து தேவர்களும்,
பிரம்மா, விஷ்ணு முதலியோரும் ஒளிந்துகொண்டு அநேக
காலம் தலைமறைவாயிருந்தார்கள். அசுரர்கள் தேவர்களைத்
தேடிப்பிடித்துத் துன்பப்படுத்தி சிறையிலிட்டு வதைத்
தார்கள். ஏனைய தேவர்கள் ஒன்றுகூடி பிரம்மதேவனிடம்
முறையிட இவ்வசுரர்கள் அழியும் தன்மையல்லாதவர்கள்.                            

    சிவபரம் பொருளை நிந்தித்ததைக் கேட்டிருந்ததும் அப்பரம்
பொருளை நீக்கி அவிசுண்டதுமாய பழிக்குத் தக்க தண்டனை
களை இதுவரை அநுபவித்தோம். இனி இறைவனிடமே
சரணாகதியடைய வேண்டியதுதான். இறைவன் சூரபத்மாதி
யர்கள் அழியாவரம் கேட்டபோது நமது சத்தியாலன்றி
யாராலும் உங்களை அழிக்க முடியாதென்றருளினார். இறை
வனோ யோகிருக்கின்றார். இறைவனுடன் பர்வத இராஜன்
புத்திரியாகிய பார்வதி தேவியார் இணைந்து பெற்றெடுக்கும்
சுப்பிரமணியப் பெருமானாலன்றி அசுரர்கள் மாயார். ஆகவே
இறைவனது யோகத்தைக் கலைத்து சக்தியோடு கலக்கும்
செயலைச்செய்ய மன்மதனை ஏவி கலைக்கச்செய்து பார்வதியம்
மையை மணஞ்செய்விக்க வேண்டுமென்று காமனை ஏவி
கணைவிடச் செய்தார்கள்.   

    புஷ்பபாணங்களால் இறைவன் யோகு கலைந்து 
நாலாபக்கமும் பார்வையிட்டபோது அழகின்
கொழுந்தென அம்மையார் இறைவன் அருகிருப்ப அம்மையார்
மீது அருள் நோக்கங் கொண்டு நம் மனம் கலைந்த காரணம்
யாது என்று பார்க்கவே மன்மதன் கரும்புவில்லேந்தி ஐங்கணையுடன் 
தென்றல் தேரிலிருப்பதை நெற்றிக்கண்ணால் பார்வையிடலும்
 தீக்கண் பார்வையால் காமன் கனலாலெரிந்து சாம்பரானான். 
அவ்வனம் மூன்றுகாதம்வரை அக்கினிப்புழுதியாகவே, 
பார்வதியும் பயந்து தோழிகளுடன் தம் திருமாளிகைக்கு ஏகினார். 
நம் யோகம் கலைந்த காரணத்தால் மனம்
வெதும்பி பூதவேதாளங்கள், சிவகணங்கள் சூழ்ந்துவர
ஏகாந்தமாகிய இடத்தைத் தேடிவரும்போது திருவாலங்
காடென்னும் பதியில் ஆலவனத்து நிழலிலே சந்தோஷித்துத்
தங்கி வாவென அழைத்த "சங்கச்ச" புஷ்கரணியை
வரவழைத்துப் பலகாலம் வசித்தோம்.

    “பூதவனமே தனவாய்ந்துறுமளவில் ஆலவனம் புனிதமாகிச்
    சீதமலி தருமுத்தி தீர்த்தமருங் குறவோங்குஞ் சிலைகள் சூழ
    நாதமலி குயில் கூவ மயிலாட வளி முரல நறிய பூவார்க்
    காதமண முறுமால நிழன் மேவிக்களி கூர்ந்து கணங்கள் போற்ற "

    அத்திருவாலங் காடென்னும் தலத்திலே பிறந்த உயிர்களும் ,
மரணமடைந்த உயிர்களும், தரிசனத்திற்கு வந்தவர்களும் 
எங்கோ போகும்போது இடையே அடியிளைப்பாறினவர்களும் 
அன்பினால் திருவாலங்காடென்று கூறியவர்களும் நமது
சிவபோகத்தையடைவார்கள்.

    “தோற்றமேயவு மரித்தவும் பிறபதிதுன்னிப்
    போற்றவந்தன ரடியிளைப் பாற்றினர் புரிவான்
    மாற்றமேவின ராயினு மடியுறு பசிநோய்
    ஆற்றலேய்ந்தவர் யாவருமடைவர் நம்முலகே''

    அத் திருவாலங்காட்டுத் தலத்தில் உள்ள முத்திதீர்த்தத்தில்
முழுகி அத்தலத்தில் செய்யும் தானம், சிரார்த்தம், விரதம்,
தவம் முதலாகிய அனைத்தும் கோடி பலன் தரத்தக்கது.
அங்கு வீற்றிருந்தருளும் மூல லிங்கப்பெருமானை முறையோடு
வழிபட்டு அபிஷேகித்து,புஷ்பாலங்காரம், தோத்திரம்
முதலியவை செய்தோர்களுக்கு இம்மையில் செல்வமும்,
மறுமையில் வீடும் பயக்கும் தலமாம்.

    “கடல்புடை சூழ்ந்திருக்குங் காசிதன்னிலந்த
    வடவனந்தனக் கொப்பாக வளர்தல மில்லையில்லை
    திடமுறுத்தவ னெங்கெங்குந் தேடினு மில்லையில்லை
    அடல்செயும் புனலைவாட்டி யருந்தவம் புரிந்தோய் கேட்டி"

ஐம்புலன்களையும் அடக்கி அரிய தவஞ்செய்த சுநந்த
முனிவரே, கடல் சூழ்ந்த உலகில் வடவனத்திற் கொப்பாகிய
க்ஷேத்திரம் இல்லை. முக்காலுமில்லை. திடமாய்ச் சொல்கின்
றேன். தேடிப்பார்த்தாலும் இல்லை, முக்காலுமில்லை என்று
உணர்த்தி மேலும்,

    “வெள்ளியங்கிரிக்கு மாலவனம் வியனுள்ள தென்றே
    விள்ளுவரந்த வெற்பு முத்தியை விளங்கக் காட்டும்
    தெள்ளியோர் வழுத்து மாலவனஞ் சித்தி புத்தி முத்தி
    யுள்ளவை யாவுமீயு முண்மையை யுடையதாலே”

கயிலையங்கிரியினும் பெருமையுடையது திருவாலங்காடு.
கயிலை தேகாந்தத்தில் மோக்ஷம் தருவது; திருவாலங்காடோ
வென்றால் இம்மையில் சித்தி, புத்தியைக் கொடுத்து மறுமையில் 
மோக்ஷத்தையும் அளிக்கவல்ல சிறப்புடைய தலம்.
அங்கு நீர் சென்று தவமியற்று வீராக என சுநந்தமுனிவருக்கு
இறைவன் கட்டளையிட்டார்

    
    5.சுநந்தருக்கு அடவிமகிமை உரைத்த சருக்கம்

    இச்சருக்கம் 8 திருவிருத்தங்களைக் கொண்டது

    தேவர்களெல்லாம் துதி செய்யும்படியான வடாரணியமாகிய 
ஆலவனத்தில், மதம் பொருந்திய யானைகள்,
சிங்கங்கள், யாளிகள், புலிகள், கரடிகள், மரை, செந்நாய்,
கலைமான்கள், பெண் மான்கள், சாமரையுடைய கௌரிமான்,
பிடியானைகள், பருந்து, கழுகு, கரும்புறா, கோட்டான், மயில்,
காட்டுக்கோழி, நாகணவாய்ப் பக்ஷிகள், கிளி, நாகப்பாம்புகள்,
தேள்கள், பெரியதான பெருச்சாளிகள், மரவட்டைகள் 
முதலியவை பெருக்கமாய் உள்ளன.

    மருது, இருளி, கடுக்காய், தான்றி, நெல்லி, புளி,
மந்தாரை, வன்னி, நாவல், கடம்பு, கமுகு, தேக்கு, பாதிரி,
காஞ்சி, வேம்பு, இலுப்பை, நீர்வஞ்சி, தேமா, இலவங்கம்,
ஒதியன், முருக்கு, கருங்காலி, அழிஞ்சில், புன்னாகம், சந்தனம்,
அகில், வில்வம், குங்கிலியம் முதலான செழிப்புள்ள மரங்களும்,

    சண்பகம், முல்லை, ஊசி மல்லிகை, மல்லிகை, நந்தியா
வர்த்தம், அலரி, எருக்கு, ஊமத்தன், நாரத்தை, எலுமிச்சை,
முதலியவைகளும் நெருங்கி சூரியகிரணம் கீழே அப்பூமியிற்
படாதபடி அடர்ந்துள்ள வனமாயுள்ளது.

    வேதாளம், பிசாசம், டாகினி, சாகினி, முதலியவைகள்
ஆவியைப் பக்ஷிக்கும்படியாய்ச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்.
எவரும் புகமுடியாததுடன் நம்மைத் தெரிந்த தெளிந்த
ஞானியர் தங்கித் தவம் செய்ய உகந்ததும் இன்பமுடையதுமாகும்.

    "அடவிமேன்மை யறிந்தவர் யாவரும்
    புடவியாவும் புரந்து பெரும்புகழ்
    நடவுவாழ்ந்து நயப்பரென் றோதினான்"


        6. தீர்த்தச்சருக்கம்

    இச்சருக்கம் 38 திருவிருத்தங்களைக் கொண்டது

    சுநந்த முனிவர் சிவபெருமானை மீண்டும் போற்றிப்பரவி
பெருமானே திருவாலங்காட்டுத் தலப்பெருமையைக் கேட்டு
ஆனந்தமடைந்தேன். அவ்விடத்துள்ள தீர்த்தத்தின்
பெருமையைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென
விண்ணப்பிக்கவே பெருமான் அருளலுற்றார்.

    ''அந்தமிலருளான் முன்ன மளித்தியா மமலமாய
    சந்தமா மறைகளோதிப் படிந்திடுந் தன்மையாலே
    பந்தமில் முத்தி தீர்த்தமெனப் பெயர்படைத்த"

வேதங்கள் ஒலிக்க நாம் முன்னொரு காலத்தில் அத்தீர்த்தத்தில்
படிந்து எழுந்ததால் முத்தி தீர்த்தமெனப் பெயர் பெற்றது.
அதன் சிறப்பைக் கூறுகின் றேன். இந்தத் தீர்த்தத் தடாகத்தில்,

    "சானுவி யமுனை வாணி சந்திரபாகை சிந்து
    வானனி கண்ணவேணி கெண்டகை வயங்க பொன்னி
    தேனனை சரையுத் தெய்வ நிருமதை நிறைந்த தீர்த்த
    மானவையாவு மிங்குபரவி நம் அருளால் வைகும்"

    கங்கை, யமுனை, சரஸ்வதி, சந்திர பாகை, சிந்து, கிருஷ்ணவேணி, 
கெண்டகை, காவிரி, சரயு, நருமதை, முதலிய புனிதமான
நதிகள் இத்தடாகத்தில் நம் அருளால் ஸதா காலம்
வசித்துக் கொண்டிருக்கும். நூறு கற்பகாலம் பிரயாகையில்
ஸ்நானம் செய்த பலனும் முத்தி தீர்த்தத்தில் நியமத்தோடு
ஒரு முறை ஸ்நாநம் செய்தவர்கள் அடைவார்கள். அசுவமேத
யாகம், வாசபேயம் செய்யும் பலனால் கிடைக்கக் கூடிய பேறு
இத்தீர்த்தத்தில் ஸ்நாநம் செய்தால் கிடைக்கும், அயன
புண்ணிய காலம், மாதப் பிரவேசம். பூரணை, அமாவாசைகளில் 
ஸ்நாநம் செய்தால் பல ஜென்மாக்களில் செய்த பாவத்
திரளையெல்லாம் அழித்துவிடும். இத் தீர்த்தக்கரையில்
செய்யும் தானங்கள் ஒன்றுக்குக் கோடியாக பலன் தரும்.

    இத்தீர்த்தத்தில், தருப்பணம், சிரார்த்தம் செய்தால் அவர்களின் 
பிதுருக்கள் (மூதாதையர்) நற்கதியடைவார்கள்.
இத்தீர்த்தத்தில் ஒரு வருடகாலம் நியமத்தோடு பிள்ளைப்
பேறு வேண்டி நாள்தோறும் ஸ்நாநம் செய்து எம்மை வணங்கினால் 
வந்தியாயுள்ளவளுக்கு நல்ல குணமும், பூரண ஆயுளும்
உடைய புத்திரப்பேறும் நிறைந்த செல்வமும் உண்டாகும்.
இது உறுதி இதை

    "வருடமொன் றுறுதியோடு வந்தியு நித்தமூழ்கி
    திருவுறவாயு மேன்மைச் சேயுஞ்சீர் செல்வமுண்டாம்''

காசியென்னும் தலம் அழகிய கங்கை நதியை யுடையதாம்.
இத்திருவாலங்காடு திருத்தலம் புநிதமாகிய முத்திதீர்த்தத்தை
யுடையதாம். இவ்விரு தலத்திலும் மரித்தவர்களுக்கு நாம்
தாரக மந்திரோபதேசம் செய்வோம்.

    “தாரகஞ் செவியினோடு தழைத்தது சார்ந்து பாச
    மாரக மாகி முத்தி வழங்கிடும் வனத்தான் மேன்மைப்
    பாரகமாகு மாலவனம்”

இத்தகு சிறப்புமிக்குடைய சென்றாடு தீர்த்தத்தில் நீ அகமர்ஷணாதி
மந்திரங்களால் ஸ்நாநம்செய்து தவமியற்றுவாயாக
எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

        7. சுநந்தர் துதிச்சருக்கம்

    இச்சருக்கம் 9 திருவிருத்தங்களைக் கொண்டது.

    “ஆலவனப் பெருமையொடு சென்றாடுந் தீர்த்தத்தினணியு மற்றுஞ்
    சாலவுணர் முனிவரனைப் போதியென அரன்கூறத் தாழ்ந்து போற்றி”

    திருவாலங்காட்டுத் தலப் பெருமையையும், தீர்த்தப் 
பெருமையையும், இறைவனால் கேட்டறிந்த சுநந்தமுனிவர் கருணா
மூர்த்தியே தேவாதி தேவரெல்லாம் திருவடிமேல் அலரிட்டுத்
தேடி நிற்கும் பழம்பொருளே! காலனைக் காலால் உதைத்து
காமனைக் கனல்விழியால் எரித்து, மாலும் பிரமனும் மயக்குற்று
அடி, முடி, தேட தீப்பிழம்பாய் ஓங்கியவரே! சலந்தராசுரனைப்
பொடி படுத்தியவரே! கயாசுரன் தோலுரித் தவரே! பிரமன்
தலையைக் கிள்ளிய பேரருளாளனே! திரிபுரமெரித்த விரிசடைக்
கடவுளே! 
    இந்திரியங்களை அடக்கி மனம், வாக்கு, காயத்தால்,
வழிபடும் அடியார் உள்ளத்தில் ஊற்றெடுக்குந் தேனமுதமே,
அஷ்டமூர்த்தமே, எண்குணக்குன்றே அமலனே, ஆநந்தனே,
மகேசனே, அருளாளனே, அருட்சத்தியை இடப்பாகங்
கொண்டவனே, தேவரீர் திருவடிக் கமலங்களுக்குத் தொண்டு
செய்யவோ, மனமுருகித் தியானிக்கும் அன்பையோ அறிகிலேன் 
என்று திருவடியில் வீழ்ந்து பணிந்து அவசத்தையடைய 
கருணாம்பகத்தை யுடையவராகிய அருட்சத்தியை
இடப்பாகங்கொண்ட இறைவன் சுநந்த முனிவர் செய்த
தோத்திரத்துக்கு மகிழ்ந்து தமது திருக்கரங்களால் எடுத்து
புழுதி துடைத்து சுநந்த முனிவரே

    “பூங்கனி சூழாலவனம் புகலாகிக் கயிலையெனப் புனிதமாகி
    நீங்கலரிதா மதனானிரந்தரமு முறைந்திடுவோ நினைந்து நீயு
    மாங்குறைதி சிலநாளிலருநடமு மளித்து முளத்தைய மாற்றித்
    தேங்கமழுமாலவன மடைந்து தவஞ்சேர்தியெனச் செப்பப்போற்றி"

எனக்கூறி சுதந்தமுனிவருக்கு விடைகொடுக்க முனிவரும்
விடைபெற்று மீண்டும் பெருமானை வலம்வந்து வணங்கி
வேதமோதிக்கொண்டு திருவாலங்காடென்னும் திருத்தலத்தை
நோக்கி வந்தார்.

        8. சுநந்தர் வடவனம் அடைந்த சருக்கம்

    இச்சருக்கம் 32 திருவிருத்தங்களைக் கொண்டது.

    சுநந்தமுனிவர் கயிலையை விட்டு தெற்கே நாடு, நகரம்,
காடு, மேடுகளையும் நதி, நதங்களையும் கடந்துவந்து அருட்
பெருங்கடலாகிய சிவபெருமான் திருவாய்மலர்ந்த ஆலவனத்தைத்
தேடியலையும்போது அங்கு சிவகணங்கள் சஞ்சரித்துக்
கொண்டிருக்கவே அவர்களைப்பார்த்து இந்த வனமாகத்தான்
இருக்குமெனக்கருதி சிவகணங்களை அணுக சிவகணங்கள்
இம்முனிவரரைப் பார்த்து தோற்றப் பொலிவைக் கண்டு

    "அஞ்செழுத்தணிந்த நாவு மங்கணன மலமேனி
    நெஞ்சழுத்தியதோர் பண்புங்கண்டவர் நிறைந்த அன்பாற்
    றஞ்சமிலினிய சொல்லாற் சுநந்தனைத் தழைய நோக்கி
    யெஞ்சலரின்பங்கூர விசைந்தன ரியல்பின் மிக்கார்''


ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தையே ஆபரணமாகவும் சிவபெருமான்
திருமேனியை நெஞ்சழுத்தியவராயுமுள சுநந்தமுனிவரிடம்
பூரண அன்புடையவர்களாய் இனிய உபசாரவசனங்களால்
சிவகணங்கள் வரவேற்று நீர் யாவர், எக்காரணத்தை
வேண்டி இங்குற்றீர் அதன் விஷயம் விவரமாக
எங்களுக்குச் சொல்லவேண்டுமென்று கேட்கவே ; கண
நாதர்களே நான் கயிலையில் தவமாற்றிக் கொண்டிருந்தவன்,
இறைவன் நடன தரிசனம் காணும்படி வேண்டினேன்.
பெருமான் நீர் திருவாலங்காட்டுக்குச் சென்று புனிதமாகிய
முத்தி தீர்த்தத்தில் முழுகி, தவமியற்றிக் கொண்டிரும்.
விரைவில் உமக்கு நடன தரிசனங் காட்டுவோமெனத்
திருவாய் மலர்ந்தருள வந்தேனாக'' எனலும் கண நாதர்கள்
புளகாங்கிதமடைந்து அடியுற வணங்கி நடன தரிசனம்
நமக்கும் கிடைக்கப் போகின்றதென்று ஆனந்தம் மேலிட
ஆடிப்பாடி முனிவர் பிரானை அழைத்துக்கொண்டு சங்கச்
சமோக்ஷ புஷ்கரணியாகிய முத்தி தீர்த்தத்தைக் காட்டலும்
முனிவர் பிரான் நியமமுறைப்படி அதிற்படிந்து அகமர்ஷணாதி
மந்திரங்களுடன் அங்க நியாசம், கரநியாசம் செய்து ஸ்நாநம்
செய்து நித்திய கர்மாக்களை முடித்து திக்கு தரிசனம் செய்யும்
போது தடாகத்தின் கீழ்ப்பாகத்தில் ஆலமர நிழலில் வீற்றிருந்
தருளும் தேவர்சிங்கப்பெருமானது அன்பினால் வெண்மை
யாகிய ஒளி பொருந்திய அமுத மேனியினின்று படர்ந்த ஒளி
வீசுகின்ற மஹாலிங்கத்தைக் கண்டு அங்ஙனே அடியுற
வணங்கித் துதிக்கின்றார்.

    "ஆலமர்கடவுளன்பால் அருள்வழிதடத்தின் கீழ்பாற்
    பாலொளி யமுதமேனிப் படரொளியிலிங்கங்கண்டு
    ஞாலமேற் பணிந்து போற்றி ஞானமார் குறியீதென்னச்
    சாலஅன் புருவமாகித் தாழ்ந்து பன்முறையுஞ் சொல்வான்"

    முனிவர்பிரான் இறைவனுக்கு மிக விருப்பமாகிய சாம
வேதகானத்தால் துதிக்க, பெருமான் அம்மையோடு தோன்றி
தரிசனங்கொடுத்து இதுதான் நாம் கூறிய சிறப்பு மிக்க
தலமும், தீர்த்தமும் ஆம். இங்கு நாம் நித்தியவாசம்
செய்வோம். நீ நம் வடபால் அமர்ந்து தியான சமாதியில்
இருப்பாயாக. உமக்கு நடன தரிசனம் தந்தருளுவோமென்று
திருவாய்மலர்ந்து மஹாலிங்கத்தில் ஆவிர்ப்பவித்தார்.
இறைவன் அருளாணையின் வண்ணம் சுநந்தமுனிவர்
“முக்குணம் புலனைந்துடன் அடக்கி மூலவாயுவை யெழுப்பி
இருவழியைச் சிக்கெனும்படி யடைத்து ஒருவழியைத்
திறந்து தாண்டவச் சிலம்பொலியுடன் போய் தக்க ஐந்
தெழுத்து ஓரெழுத்துருவாம் தன்மை கண்டு அருள் தரும்
பெருவழிக்கே புக்கழுந்தி' மூலலிங்கப் பெருமானுக்கு வடபால்
தவமாற்றிக் கொண்டிருந்தார்.

        9. கார்க்கோடச் சருக்கம்

    இச்சருக்கம் 28 திருவிருத்தங்களைக் கொண்டது.

    கார்க்கோடனென்னும் நாகம் முன்னைத் தவப்பேற்றால்
பரமசிவத்தின் திருக்கரத்தில் கங்கணமாகி பல்லூழி காலமாக
வசித்திருப்பவன் ஒரு நாள் தனது வாயினின்று ஒழுகிய நச்சு
நீரைப் பரமசிவத்தின் திருக்கரத்தில் கக்கிவிடவே அதைக்
கண்ட பெருமான் சுத்த தத்துவமாகிய நம் திருக்கரத்திருக்கும்
பதவியைப் பெற்றும் உன் அகங்காரத்தால் கரத்தை அசுத்தப்
படுத்தினமையால் கொடிய கானகத்தில், குடிக்க நீரின்றி
உண்ண இரையின்றி இடித்தொனிகள் உண்டாகக்கூடிய
கானகத்தில் ஒரு கற்பகாலம் இருக்கக்கடவாய் என்று மிகுந்த
கோபாவேசத்தோடு கூறலும், கார்க்கோடன் நடு நடுங்கி
நாக்குளறி செய்வதறியாது திகைத்து நிற்ப, அத்தருணம்
வாசுகி முதலிய நாகேந்திரர்கள் வந்து, பெருமானே! புழுக்
களினும் கடையேமாகிய நாங்கள் அஃறிணை. நன்மை
தீமையறியோம். நாயிற்கடையாய்க் கிடந்த அடியேங்களை
நயந்து நீயே யாட்கொண்டு ஆபரணமாகத் தரித்து, பயத்
தைப்போக்கிய கருணாமூர்த்தியே! கார்க்கோடன் தேவரீரிடம்
செய்யத்தகாத பிழைதான் செய்தான். தேவரீரையன்றி
எங்களுக்குப் புகலிடம் ஏது? மன்னித்தருள வேண்டுமென்று
குறையிரப்ப, அத்தருணம் கார்க்கோடனும் அடியுறப்பணிந்து
பெருமானே! கருணாமூர்த்தி அறிவிழந்து அடியேன் தேவரீர்
கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளானேன்! மன்னித்து
அருள்பாலிக்க" என்று பன்முறை தோத்திரித்து வேண்டினான்.


    “பிழையுளன பொறுத்திடுவ ரெம்மடிகள்' என்று நீர் கிழிய
வெய்தவடுப் போல சினம் நீங்கி மன்னித்தோம் .அஞ்சற்க.
எமது அன்புருவத்தையே சிந்திக்கும் தவத் தனிப் பெருந்
தோன்றலான சுநந்தமுனிவன் நம் நடன தரிசனம் காண்பான்
வேண்டி திருவாலங்காட்டிற்குச் சென்று தவமியற்றிக் கொண்
டிருக்கின்றான். அம்முனிவரனுக்குத் தாண்டவ தரிசனம் தந்தருளப்
போகின்றோம். ஆகவே நீயும் அவ்விடம் சென்று தவமியற்றிக்
கொண்டிருந்தால் உனக்கும் நடன தரிசனம் தந்தருளு
வோமெனத் திருவாய் மலர்ந்தருள, கார்க்கோடன் சுவாமீ!
அடியேன் பாம்பு; நான் தேவரீர் சன்னிதானத்தை விட்டுத்
தனித்து திருவாலங்காடென்னும் தலத்தையடைவேனா?
எத்தனையோ ஆபத்துக்கள் உள்ளன.கருடன் என்னைக்
கொத்தி இரையாகத் தின்றுவிடுமே? அத்துடன் அந்த ஆல
வனம் சிங்கம், கரடி, புலி, யானை, யாளி முதலிய கொடிய
மிருகங்கள் நிறைந்துள்ள அடவியாயிற்றே. நான் சென்ற
டைவதெப்படி? என மீண்டும் அடியுறப்பணிந்து வேண்ட,
பெருமான் கருணைகூர்ந்து, அஞ்சற்க. நம் ஜடாபாரத்திலிருந்து
விழும் தடாகத்தில் மூழ்குவாயாயின் அம்முத்தி தீர்த்தத்தில்
எழும்புவாய் . "இத்தடமூழ்கி முத்திச்சீத நீரெழுதி" என்றதோடு
 அத்தீர்த்தம் “உன்மச்ச தீர்த்தமென்றாம்'' என்னும்
பெயரோடு விளங்குமாக என்றருளி" நீ அங்கு தவமியற்றும்
சுநந்தமுனிவனையணுகி இருப்பாயாக" என அருளலும் கார்க்
கோடன் கயிலைத் தடாகத்தில் முழுகி, முத்திதீர்த்தத்தில்
எழும்பி சுநந்த முனிவரையணுகி வந்த வரலாற்றைக் கூற
முனிவரும் கார்க்கோடரை உபசரித்து நீ தென்பால் ஒரு
பக்கல் தவமிருப்பாயெனக் கூறினார். மேலும் தலச்சிறப்பையும்
கூறலுற்றார்.

    "வடவனந் தரும முத்தி க்ஷேத்திரம் வயங்குஞ்சோதித்
    தடமதிபுனித மீசன் தனதுரு வாகுமிங்கு
    படவர வுருவோயச்சம்பாற்றி நீ நோற்றுமேவி
    னடமருள் செய்யு நாதனென முனி நவில நாகம்''

இத்தகு சிறப்புமிக்க தலத்தில் நீ அச்சத்தை நீக்கி தவஞ்
செய்து கொண்டிருப்பாயாகில் பரமசிவம் நடன தரிசனப் 
பேற்றைத் தந்தருளுவார், இத்தீர்த்தத்திற்கு  " சங்கச்ச
தீர்த்தம் " என்ற நாமம் இறைவன் அழைத்த காரணத்தாலும்
போகத்தோடு முத்தியையும் முடிவில் தரத்தக்கதாகலின்
“முத்தி தீர்த்த "மென்ற நாமத்தோடு நீ மூழ்கி எழும்பியதால்
“உன்மச்ச தீர்த்தம்' என வழங்குவதாகுக. "முத்திநாமத்
துடை திரைத் தீர்த்த முன்னா லுன்மச்சதீர்த்தமாம்'' என்று
கூறி தான் முன்னம் ஆற்றிய தவநெறிக்கே சென்று கடுந்தவ
மாற்றும்போது அநேக காலம் கடந்துவிடவே அவர்மீது
புற்றானது வளர்ந்து சிகையெல்லாம் பூமியோடு பூமியாய்ப்
பொருந்தி நாணற்புல்லாகிவிடவே சுநந்தமுனிவரும் முஞ்சி
கேச முனிவராகத் திகழ்ந்தார்.


        10. காளிச் சருக்கம்

    இச்சருக்கம் 77 திருவிருத்தங்களைக் கொண்டது.

    முஞ்சிகேச முனிவர் (சுநந்த முனிவர் எனும் நாமமுடைய
வருக்கு இனி முஞ்சிகேச முனிவரென்றே வழங்கப்படும்) கார்க்
கோட முனிவர் இருவர்களும் தவமியற்றிக்கொண்டிருக்கும்
திருவாலங்காட்டு வனப்பகுதிக்குக் கரிய நிறம் பொருந்திய
வளும் ஊழித்தீயைப்போல சஞ்சரிக்கின்றவளுமான காளி
யானவள் உலகங்களையெல்லாம் உள்ளங்கையில் பிடித்துப்
பொடியாக்கக் கூடியவளும், வாளைத்தாங்கிய மலைச்சிறகை
யொத்த அழகிய கரங்களை யுடையவளும் நீலநிற ஆடையைத்
தரித்து கொலைத்தொழிலையே செய்யும் தன்மையுடையவளு
மாகிய வீரசாமுண்டி ஆவள்.

    அவள் மிகுந்த அகங்காரத்தோடு தலைமாலைகளை ரத்தம் ஒழுகத்
 தரித்தவள். புலி, சிங்கம், மும்மதமுடைய யானை, பன்றி ஏனைய 
மிருகங்களையும் மனிதர்களையும் பிடித்து உணவாக உண்ணக்கூடியவள்.
இடியைப்போன்ற கர்ச்சனையும், சிவந்த மயிரும் மலைப்பாம்பு
களைப் போன்ற புயங்களும், செந்நிறமுடைய கண்களோடு
பிண மாமிசங்களைச் சுவைக்கக்கூடிய கோரைப்பற்களுடன்
சாகினி, டாகினி, பசாசுக் கூட்டங்கள் சூழ இயமனையையும்
சம்மாரம் செய்து கால ருத்திரர்களும் அஞ்சக்கூடிய வல்லமை
யுமுடையவள். தமோ குணமே உருவான இக்காளியானவள்
அடர்ந்து செழித்து வானளாவிய மரங்கள் நிறைந்து அழகா
யுள்ளதும் சீலந்தான் பெரிதும்முடைய தபோதனர்களான
சுநந்தமுனிவர், கார்க்கோட முனிவர் தவமியற்றும் ஆலவன
மாகிய திருவாலங்காட்டை அழித்தவண்ணமாகத் திரிந்து
கொண்டிருந்தாள் என்று திருமால் கூற ஆதிசேஷன் திரிவிக்
கிரமாவதாரமூர்த்தியே இத்தகு பராக்கிரமமுள்ள காளியின்
வரலாற்றை விவரமாக அடியேனுக்குத் திருவாய்மலர்ந்தருள
வேண்டுமென்று பன்முறை பணிந்து பரவிக் கேட்டார்.

    காளீ முத்பாத்யஜிஹ்வா ஸமராங்கண மாஸ்திதா
    ரக்தானு ரக்தஸம் ஹிருத்ய ரக்த பீஜாக்ஷமேவச
    தயோருதிர ஸம்ஸித்த பாம்ஸவோபி மஹத்தராஹ
    ததக்காளீ சதத்ரக்த பா நாதேவ மதாகுலா
    ஸர்வஸம் ஹரணேயத்தாசுக்ருசு பிராணி நோகிலாஹ
    ததப்பிராண்யுபகாராய தத்கர்வசம நாயச
    தயாநநர்த தேவேசஸ்தத்புதமிவாபவத்
    நிர்ஜிதா தாண்டவே காளீதேவே நவிகதஸ்மயா
    நிர்ஜிதா துர்கயா ஸாக மாசிரிதா ஸர்வமங்களா

இதன் பொருள் : துர்கை (அம்பிகை) யானவள் காளியைப்
படைத்து அவள் நாவாகிய யுத்தகளத்தில் இருந்துகொண்டு
இரக்தாசுரன், ரக்த பீ ஜனை சம்ஹரித்தாள். அப்போது
அவர்கள் இரத்தத்தால் நனைந்த புழுதிகளெல்லாம் அவனைப்
போன்றே அநேக அசுரர்களாய்த் தோன் றிவிடுவார்கள் என்ற
காரணத்தால் காளியானவள் நாவினால் ரத்தங்களை உறிஞ்சி
விட்டாள். இங்ஙனம் அசுரர்கள் சங்கரிக்கப்பட்ட பின்னர்
காளி இரத்தபான வெறியால் மதங்கொண்டவளாகி எல்லா
உலகையும் நாசம் செய்யத் தலைப்பட்டபோது சகல பிராணி
களும் கலக்கமடைந்தன. பிராணிகளின் உபகாரார்த்தமாய்
ஆன்மாக்கள் மீதுள்ள பெருங்கருணையால் காளியின்
கர்வத்தையடக்க சிவபெருமான் காளியோடு நடித்துத் தோல்வி
யடையச் செய்தபின் காளி கர்வமிழந்தாள். தோல்வியுற்ற
காளி சர்வமங்களத்தோடு கூடி அம்பிகை பக்கல் இருந்தாள்.
(ஸ்காந்தபுராணத்தில் வருவன).

    முன்னொரு காலத்தில் நிம்பன், சும்பன் என்னும் இரு
அசுரர்கள் சிவபெருமானை நோக்கி மிக்கதாய கடுந்தவமாற்றி
வேண்டிய வரங்களைப்பெற்று தம்மை எதிர்க்கக்கூடியவர்களே
யில்லாதபடி பராக்கிரமமுடையவர்களாய் மூவுலகத்தையும்
தம் ஆளுகைக்குள்ளாக்கிக் கொண்டு பாரம்பரிய வைரி
களாகிய தேவர்களை அடித்து நொறுக்கித் துரத்தித் துன்பப்
படுத்தி வந்தார்கள். இவர்களோடு போர் செய்யக்கூடிய
பலமில்லாத தேவேந்திரன் முதலாகிய தேவர்கள் தேவலோகத்
தையேவிட்டு உலகின்கண் தலைமறைவாக பலகாலம் சஞ்சரித்
துக்கொண்டு வந்தார்கள். இவ்வசுரர்கள் பிரம்ம, விஷ்ணு.
ருத்திரர் முதலிய திரிமூர்த்திகளாலும் எதிர்க்கமுடியாத
வன்மையுடைய தபோபலம் பெற்றிருந்ததால், தேவாதி
தேவர்கள் கூடி இவ்விதமாக நாம் எவ்வளவு காலம் ஒளிந்து
கஷ்டப்படமுடியும் ; இதற்கு ஒரு வழிதேடவேண்டுமே என
திரிமூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, தேவர்களே சர்வசக்தி
வாய்ந்த ஜகன்மாதாவான ஸ்ரீ பரமேசுவரியைச் சரணடைந்து
விண்ணப்பித்தால் நமக்கு நற்காலம் உண்டாகும் என்று
கூறலும் அனைவரும் அம்பிகையின் அருளைப்பெற

    “ஆவியாய் முற்றுமாகி யகண்டவா நந்தமாய
    தேவியைத் தேவிசூக்த முதலிய தெய்வவேதம்
    பாவியமனுக்க ளோதிப் பற்பல காலம்போற்ற
    மேவிமுன்னின்று நீவிர்வேண்டிய தென்னையென்ன"

ஸ்ரீ பராசத்தியானவர் தேவர்கள் தவத்துக்கிரங்கி அருள்
கூர்ந்து பிரசன்னமாகி தேவர்களே நீங்கள் வேண்டும் வரம்
யாது என்ன.

    கருணாம்பிகே ! “காக்கக்கடவிய நீ காவாதிருந்தக்கால்
யார்க்குப்பரம்'' நாங்கள் அசுரனாகிய நிம்ப, சும்பர்களால்
பல்லாண்டு காலமாக ஆற்றொணாத் துன்பப்பட்டு வருந்து
கின்றோம். ஒவ்வொரு முறையும் அசுரர்கள் மிக்க பலம்
வாய்ந்து எங்களைத் துன்புறுத்துவதே வேலையாக உள்ளதே
அவ்வப்போதும் முறையிடுகின்றோம்.எங்களை ரஷிக்கும்
கடமை தேவரீருடையதே எனவேண்ட அம்பிகை தேவர்களை
நோக்கி அஞ்சாதீர்கள் உங்கள் தேவவுலக பதங்களைத்
தருவோம் என்று அருளிச்செய்து விடை கொடுத்தனுப்பி
அம்பிகையானவள் தனிமையில் மலைச்சாரலில் அழகொளி
யோடு வசித்திருக்கும் போது, சண்டன், முண்டன் என்னும்
அசுரசேனைத் தலைவர்கள் வந்து நீ யார் ? ஏன் இங்கு தனிமை
யாயிருக்கின்றாய் என்று கேட்டனர். அவ்விரு அசுரர்கள்
சும்பன் என்னும் எங்கள் அசுரத் தலைவன் மூவுலகும் தனக்கு
ஏவல் செய்யும்படியாய் தனிச் செங்கோலோச்சி சிறப்புடன்
ஆளுகின்றான். அவ்விடத்திற்கு வா வென்றனர். அம்மையார்
சண்டமுண்டனைப் பார்த்து ''நான் புருஷர்களோடு பேச
மாட்டேன் உங்களாலும், உங்கள் தலைவனாலும் எனக்காவ
தொன்றில்லை. நான் தவநெறியில் உள்ளேன். இவ்விடத்தை
விட்டு அகன்று போங்கள்'' என்றாள்.

 அவர்கள் சும்பனென்பவனிடம் போய் அரசே! அழகின் இருப்பிடமாய் 
சொல்லொணாச்சோதி வீசக் கூடிய பருவமங்கை ஆபரணாலங்கிருத
மாகத் தனிமையில் சோபையோடு வீற்றிருக்கின்றாள் என்று
கூறினர். சும்பன் இவர்கள் கூறிய அழகில் ஈடுபட்டு
மோகாந்தகாரத்தில் மயங்கி நீங்கள் மறுபடியும் போய்
இன்னுரை கூறி, அழைத்து வாருங்கள் ; வர இணங்காவிடில்
பலாத்காரமாகப் பிடித்து இழுத்து வாருங்கள். சாம, பேத,
தான, தண்டமாகிய சதுர்வித உபாயத்தால் பார்த்து முடிவில்
பலாத்காரத்தை உபயோகியுங்கள் எனக் கூறலும், சண்ட
முண்டாசுரர்கள் மீண்டும் அம்மையாரிடம் சென்று இன்னுரை
யோடு "ஏ பெண்பாலே எங்கள் தலைவனுக்கு தேவாதி தேவ
ரெல்லாம் குற்றேவல் செய்கின்றார்கள். அவரை எதிர்க்கும்
ஆற்றல் யாருக்குமேயில்லை. ஆகவே நீ அவ்விடத்துக்கு வந்து
பட்டத்தரசியாக வீற்றிருக்கலா" மென்ன,  "அடே சண்டாளர்களே! 
உங்களை அழித்துவிடுவே" னென்ன,  "ஆஹா அப்படியா?
உன்னை இழுத்துப் போவோ" மென்று நெருங்கவே அம்மையார்
கோபாவேசங் கொண்ட மாத்திரத்தில் தம் தோளிலிருந்து
ஒரு சக்தியானவள் தோன்றினாள். 

     அச்சத்தியை தேவி பார்த்து, நீ இந்த அசுரர்களை அழிப்பாயென்ன, 
அச்சக்தி சண்டமுண்டனை இழுத்துத் தலையை வெட்டி அம்பிகையின்
திருவடியில் சமர்ப்பித்தது. தேவி சந்தோஷித்து நீ சண்ட
முண்டனை சம்மரித்தபடியால் சாமுண்டியென்ற பெயரோடு
விளங்கிக்கொண்டு உன்னை வழிபடுகிறவர்களுக்கு அருள்
பாலிப்பாய் என்று விடைகொடுத்தனுப்பினாள்.

     இச்செய்தியை உடன் யுத்தத்திற்கு வந்தவரில் தப்பிய சிலர் ஓடி
சும்ப நிடம் கூற சும்பன் கோபித்து நம் வீரம் நன்றாயிருக்கிறது.
ஒரு பெண்பாலானவள் பராக்கிரமமுடைய சண்டமுண்டனை
அழித்தாளென்று கேட்கவே வெட்கமாகயிருக்கிறது, என்று
தூமக்கண்ணன் முதலிய மாவீரர்களை யனுப்ப, அவர்கள்
வந்து அம்மையாரிடம் ஆரவாரிக்க அம்பிகை சப்தமா துருக்
களையும், பிடாரி முதலிய சிவ தூதிகளையும் இன்னம் அநேக
உக்கிர சக்திகளையும் உண்டாக்கி அனுப்ப அசுரக் கூட்டங்
களுக்கும், சக்திக் கூட்டங்களுக்கும் கடும்போர் மூண்டு அசுரக்
கூட்டங்களை சக்திக் கூட்டங்கள் அழித்து விட்டன. 

    இதைக் கேட்ட நிம்பன் என்னும் அசுரன் ரத, கஜ, துரக, பதாதிக
களோடு, அநேக வெள்ளம் சேனைகளுடனே வருவதைப்
பார்த்து சக்தி சேனைகள், அம்பிகையே நாம் சற்று தாமதித்தால் 
உலகையே அழித்துவிடக் கூடிய சேனைகளல்லவோ
வருகின்றன என்று கூறி அபிராமி முதலிய சக்திக் கூட்டங்கள் 
போர் செய்யப் புறப்பட்டபோது பார்வதி தேவியார்,
"சக்திகளே நீங்கள் அசுரசேனைகளை அதம் செய்யுங்கள். நான்
நிசும்பநோடு யுத்தம் செய்கின்றேனென்று புறப்பட்டு எதிர்த்து
அஸ்திர, சஸ்திரங்களால் கடும்போர் செய்து நிசும்பனின்
தலையை வெட்டி வீழ்த்தினாள். தேவ தூதிகள் நிசும்பநோடு
படையாக வந்த அத்தனை சேனைகளையும் வெட்டி வீழ்த்தி
ஆரவாரித்தார்கள். நிசும்பனோடு வந்த சேனைகளில் மடிந்த
வைகள் போக எஞ்சியிருந்த சிலர் ஓடோடிப் போய் நிசும்பன்
தமையனாகிய சும்பன் என்னும் அசுரராஜனுக்குத் தெரிவித்
தார்கள். 

    ஆ அப்படியா?!! ஒருவருக்கும் நம்முடனே யுத்தம்
செய்ய வேண்டுமென்ற எண்ணமே வராது. மூவரோடு தேவாதி
தேவர்களும் நம் ஆணைக்கு அடங்கி நடப்பவர்களும்
நமக்குப் பயந்து நாடு கரந்துறைகின்றார்கள். அஷ்டதிக்குப்
பாலர்கள் நடுநடுங்கி நாம் இட்ட ஆணைக்குக் கட்டுப்படுகின்
றார்கள். பெண்கள் கூட்டம் வந்து எண்ணிலடங்காத நம்
சேனைகளையும் அதி வீர பல பராக்கிரமமுடைய அஞ்சா
நெஞ்சுரங் கொண்ட என் இளையன் நிசும்பனையும் வெட்டி
வீழ்த்தி விட்டார்களென்றால் இதனினும் எனக்கென்ன
இழுக்கு வேண்டும்? என் வீரமும், அரசும் எள்ளி நகையாட
லாகவல்லவோ உள்ளது. வளையலணிந்த பெண் கூட்டங்கள்
சேனைகள், சேனாதிபதிகளை அழித்து விட்டதென்றால் என்
வீரமும், அரசும் நன்றாயிருக்கின்றது. தம்பியோடு அநேக
ஆயிரக்கணக்கான சேனைக் கூட்டங்களும் அழிந்தனவே
என்று, இப்பெண் சிவதூதிகளை அழிக்காமல் விடுவதில்லை
என்று சும்பனென்னும் அசுரத்தலைவன் அம்பிகையை
எதிர்த்துவந்து கடும்போர் செய்தபோது பார்வதி தேவியார்
அநேக பாணங்களை வருஷிக்க, சும்பன் தன் தவவலிமையால்
அனைத்தையும் சேதித்து இவளை பாணங்களால் வெல்ல
முடியாது மாயையால் தான் வெல்ல வேண்டுமென்று அண்டங்
கள் பிளந்து போகும்படியான பெரிய யானை உருவெடுக்க,
ஓ ஹோ இவன் இனி பல மாயைத் தோற்றங்களை யெடுத்துப்
போர் செய்வான் ; காலங்கள் ஊழி கடக்கும் ஆதலால் இவனை
இப்போதே வெட்டி வீழ்த்த வேண்டுமென்று எண்ணினாள்.
அம்பிகையானவள் ஞானவாளேந்தி அந்தக்ஷணமே சும்பன்
தலையை வெட்டி வீழ்த்தினாள், சிவ தூதிகள் ஆரவாரத்தோடு
களி நடமாடினார்கள். 

     ஒளிந்திருந்த தேவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு 
பூமழைபொழிந்து தாயே ஜகன்மாதா!
பரமேசுவரி, கருணைக்கடலே நாங்கள் உய்ந்தோம், உய்ந்தோம்,
என்று தேவியைப் பலபடியாகத் தோத்திரித்து முடியடியுற
பன்முறைப் பணிந்தெழுந்தார்கள். இஃதிப்படியிருக்க
நிசும்பன், சும்பன் என்னும் இரு அசுரத் தலைவர்களின்
தங்கை, கொடிய வடவாக்கினியையும் தணிக்கப்பட்ட குரோதி
என்பவளுக்கு ஒரு மைந்தன். இவன் ஆதிசேடனால் தாங்கப்
பட்ட இவ்வுலகத்தைச் சுண்டுவிரலினால் தாங்கக்கூடிய
வல்லமையுடையவன். பிரம்மதேவனைக் குறித்து கடுந்தவஞ்
செய்து தன் தேகத்திலுள்ள இரத்தம் ஒரு துளி பூமியில்
சிந்தினால் தன்னைப்போல ஒரு துளிக்கு ஒரு உருவம் உண்டாகி
தனக்குப் படை பலம் பெருக வேண்டுமென்ற வரத்தைப்
பெற்று தன் மாமன்மார்களையும் மிஞ்சி மூவுலகத்தையும்
அடக்கி யாண்டதோடு தேவலோகம் போய் கற்பகத்தரு
நிழலைக் கைக்கொண்டான். 

    இவன் தன் தாய்மாமன்மார்கள்
இறந்த செய்தியைக் கேட்டு ரத, கஜ, துரக, பதாதிகளோடு
அநேக சேனைகள் புடைசூழ பிரம்ம தேவர்கள் அஞ்சக்கூடிய
படி பார்வதி தேவியார் முன்பாக வந்து எதிர்த்துத் தேவ
தூதிகளை சின்னாபின்னப்படுத்தி விரட்டினான். இவன் தாக்குதலைத் 
தாங்கமுடியாமல் அபிராமி முதலிய சப்த மாதர்கள்
கடுமையான பாணங்களை ஏவ இரத்த பீசனென்னும் அசுரன்
மீது பாணங்கள் படவே அவன் சரீரத்திலிருந்து சிதறிய
இரத்தங்கள் ஒரு துளிக்கு ஒரு இரத்த பீசனாகத்தோன்றி
ஆயிரக்கணக்காகப் பெருகிவிட்டது. அது கண்டு சப்த
மாதுருக்கள், இஃதென்ன நாம் பாணங்கள் போட அழிய
வேண்டியது போக வளருகின்றதே; என்று ஆச்சரியமடைந்து
பார்வதி தேவியாரிடம் விண்ணப்பிக்க ஓ அப்படியா என்று
ருத்திராகாரமான கோபம் பொங்கி முகங் கறுகறுக்க கண்
சிவப்பேற தன் கோபத்திலிருந்து கோபாக்கினிகளெல்லாம்
திரண்ட  உருவமாகிய  ரௌத்திராகாரமான காளி தோன்றினாள்.

    "அறிவரு மாயைமேவ வகிலமு மச்சமேவுங்
    குறியுறு முருவினின்றுந் தோன்றினாள் கோபமுற்றுஞ்
    செறிதரு முருவமென்னத் தெறுமுகங் காளமாக
    வெறியுறுகாளி தோற்றம் விளம்பினங் கருமஞ்சொல்வாம்''

பார்வதி தேவியாரின் கொடூர கோபாந்தகாரத்தினின்று
தோன்றிய காளியானவள் தேவியின் இருசரணார விந்தங்களை
வணங்கி நிற்ப அம்பிகை ஹே காளீ! இந்த இரத்தபீச அசுரக்
கூட்டங்களது இரத்தம் பூமியிற் சிந்தாவண்ணம் உன் கரத்தி
லேந்திய கபாலத்தில் அவர்கள் இரத்தத்தை பிடித்துப்புசித்து
அழிப்பாயாக என உத்திரவிட்டதும், காளியானவள் அந்த
க்ஷணமே அசுரக்கூட்டத்தில் புகுந்து சூலத்தால் குத்தித்
தூக்கி கபாலத்தில் இரத்தத்தை ஏந்தி மாமிசத்தோடு காளி
யானவள் பக்ஷித்துவிட்டாள், இரத்த பீசாசுரக்கூட்டங்கள்
அடியோடு அழிந்தன. மூவரும் தேவாதி தேவரும் அம்பிகை
திருவடிகளில் வீழ்ந்து பன்முறைபணிந்து

    “முன்னமற்றமல மாயமூர்த்தமே மூலமேய
    வன்னமேயகில மீன்றவருட் பெருங்கடலேயாரு
    மின்னதென்றறிய வாரா வேகமே இருக்கின்மேலாஞ்
     சின்மயப் பொருளதாய தேவியே போற்றி போற்றி"

ஆதி, மத்தியம், அந்தம் கடந்த நிர்மலவடிவமே, உலகத்
திற்கு மூலாதாரப் பொருளே, அன்னமே, உலகங்களை
யெல்லாம் ஈன்ற அருட்கடலே! எத்தன்மையோர்களும் இத்
தன்மைத் தென்றறியா ஏகத்துவமே! இருக்கு வேதத்தின்
மேலாகிய சின்மயப் பொருளாகிய தேவியே போற்றி, போற்றி
என்று தேவர்கள் வழிபாட்டிற்கிரங்கி அம்பிகையானவள்
தேவர்களே உங்கள் பயத்தைப் போக்கினோம் இனி நீங்கள்
நன்னெறியோடு நடந்து கொண்டு உங்கள் உங்கள் உலகங்
களுக்குச்சென்று பதவிகளில் அமர்ந்து சுகமாக வாழுங்கள்
என்று அம்பிகையானவர் அருள் கூர்ந்தனுப்பினார். 

    பின்னர் காளியைப் பார்த்து நீ மிகுந்த வல்லமையோடு வீரதீரமாய்
இரத்த பீசாசுரவதம் செய்து தேவர்களுக்கு அவ்வப்பதங்களைக்
கொடுத்தபடியால் சண்டி என்னும் பெயருடனே புருஷ
வலிமைகளெல்லாம் பொருந்தி தேவாதி தேவர்களுக்கும் வரம்
தரும் ஆற்றலையும் தந்தோம். இனி நீ பூத வேதாளங்கள்
புடைசூழ உலகெங்கணும் ஜெயம்பெற வாழ்ந்து கொண்டு
பலகாலம் சென்றபின்னர்; பரஞ்ஜோதியும், பசுபதியும்,
செம்மேனியனும், புண்ணிய சொரூபியும், புவனாதிபதியும்,
பகவனும், சாந்தனும் சாமவேதகானப்பிரியனும் சர்வபாபங்
களையும் சம்ஹரிக்கும் சங்கரனும் தனக்கொப்பில்லாத தனிப்
பெருந்தெய்வமாய பரமசிவன் தாண்டவம் செய்யக்கருதி ஸ்ரீ
வடாரணியமென்னும் க்ஷேத்திரத்தைத் தேடி நின்னிடத்துக்கு
வருவராகில் தவசிரேஷ்டனாகிய சுநந்த முனிவனுக்கு நேராக
அப்பரமசிவத்தோடு உலகமெல்லாம் அதிர நடித்து உலகமெல்
லாம் போற்ற அப்பரம்பொருளின் பக்கலில் வாழ்வாயாக எனச்
காளிக்கு அருள்பாலித்து உமை மலர்ந்தருளினார்.

    பின்னர் காளிதேவியானவள் அசுர மாமிச இரத்த பானங்களால்
மத்தோன்மத்தமாகியதோடு பார்வதி தேவியாரின் வர பலத்தை
யுங்கொண்டு ஒவ்வொரு வனமாகத் திரிந்து தன் பரிவாரங்
களான வேதாளம், பசாசு, கடைச்சிகள், கொள்ளிவாய்ப்
பேய்களுடன் ஒவ்வொரு வனமாகத் திரிந்து அங்கங்குள்ள
மிருகம் பக்ஷிகளைப்பிடித்துப் புசித்துக்கொண்டு திருவாலங்
காட்டு வனவளங்களைப் பார்த்துப் பேராவல் கொண்டு
நெருங்க ஆசைமீதூர்ந்தனள். இதற்குள் பரம்பொருள் திருக்
கோயில் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாதலால் கூப்பிடு
தூரமளவிற்கு வெளியே தங்கி ஆரணிய முழுவதும் தன்
வசமாக்கிக்கொண்டு புலி, சிங்கம், யானை பன்றி முதலிய
மிருகக்கூட்டங்களுடனே மனிதர்களையும் கொன்று தின்று
கொண்டு தான் தேவியின் அம்சம் என்பதை அறவேமறந்து
உக்கிர வடிவத்தையும், மாமிச பக்ஷணத்தையும் சமனப்
படுத்தி நீக்கிக் கொள்ளாமல் உயிர்வகைகளை வதைத்து
உண்டு களிப்புற்று வந்தாள். இதன் மத்தியில் மனத்தில்
மாத்திரம் அம்பிகை ஆதிகாலத்தில் தனக்குக் கட்டளையிட்ட

    "தனிமுதலாய பெம்மான் றாண்டவ நிருத்தமேவற்
    குனிவனமடைந்து நின்பாலுற்றிடி லுவகைமேவி
    முனிவனே ரமலனோடு முதிர் நடமதிரச்செய்து
    கனிவொடு மவன்பால்வைகிக் காசினிபோற்ற வாழ்தி"

இந்த அருள் மொழியை மனத்திருத்தி எதிர்பார்த்திருந்த
தோடு தன் வல்லமையை நினைந்து நினைந்து நமக்கு நிகர்
யாரிருக்கின்றார்?  நம் பேராற்றலை எதிர்க்க யாராலும் முடியா
தன்றோ?  இவ்வுலகம் நம் பராக்கிரமத்தாலன்றோ கிடைத்திருக்
கிறது என்று இறுமாப்புடன் எல்லா வனங்களையும் அழித்து
வந்ததைப்போல் ஆலவனத்தையும் அழித்து வருவாளானாள்.


        11. நாரதர் சருக்கம்

    இச்சருக்கம் 32 திருவிருத்தங்களைக் கொண்டது

    ஒரு நாள் திரிலோக சஞ்சாரியாகிய நாரத முனிவர்
ஆலவனத் தமர்ந்தருளும் அப்பரைத் தரிசிக்கக் கருதி வந்து
மூலமாய் முளைத்தெழுந்த ஜோதியாம் தேவர் சிங்கப்
பெருமானைத் தரிசிக்க வந்து சங்கச்சோன் மச்ச தீர்த்தமாய
மோக்ஷபுஷ்கரணியில் ஸ்நாநம் செய்து விபூதியை உத்தூளன
மாகப் பூசி மணிமயமா யுயர்ந்த சபையில் சபாநாயகனாய்
வீற்றிருந்தருளூம் மூர்த்தியைத் தேன்மாரியென செவ்வழிப்
பண்ணை வீணையில் அமைத்து தேவர்கள் பூமாரிபொழிய
இறைவன் இன்புறப் பக்திப்பரவசத்தோடு பாடியருளினார்.
இச்செயலை.

    “சங்கச்சதீர்த்தம் படிந்தாரணஞ் சாற்றுமாற்றி
    னங்கச் செவிமேவிய பூதியணிந்து மாழைத்
    துங்கச்சபை மேவிய சோதியைச் சூழ்ந்துபோற்றி''

    “தேமாரி பொழிந்தெனச் செவ்வழி சேர்ந்த வீணை
    யாமாதுரியம்பட மெல்லிசையார்ந்த வின்பம்''

எனப்புராணம் கூறும். இவ்விதமாக நாரத முனிவர் பரம்
பொருளைப் பாடிப் பரவி, தவமியற்றும் கார்க்கோட முனிவரைக்
காணச் சென்று கண்டு கார்க்கோடரால் உபசரிக்கப்பட்டு
அவருடன் சில நாள் தங்கி இறைவனை வழிபாடியற்றிக்
கொண்டிருக்கும்போது கார்க்கோடர் நாரதமுனிவரே இவ்
வனம் மரங்களடர்ந்து சூரியகிரணம் பூமியிற்படாவண்ணம்
குளிர்ச்சியைத் தருவதோடு அநேக மிருகங்களும், பக்ஷிகளும்
தங்கி வாழ்ந்துவரும் வனத்தைக் கொடூர குணமும், ரூபமு
முடைய காளியென்பவள் எல்லா வனங்களையும் அழித்து
ஆங்காங்குள்ள உயிர் வர்க்கங்களைப் புசித்தது போல் இவ்
வனத்திற்கும் வந்து வனத்தையும் அழித்து அநேகமாகிய
மிருகங்களைக் கொன்று தின்று வருகிறாள். அவள் இங்கு
வருவாளோ என்று அஞ்சுகின்றேன் எனலும் ; நாரதர்
கார்க்கோடரே அஞ்சற்க . இது இறைவன் நிலைத்து உறையும்
பதி . வரமுடியாது. அஞ்சற்க என்று கூறி தவசிரேஷ்டராகிய
சுநந்த முனிவர் எங்குற்றாரெனக் கேட்டு இருவரும் சுநந்த
முனிவர் வசிக்குமிடம் சென்று யோக சமாதியில் சிகை
யெல்லாம் முஞ்சம்புல்லாகி யிருக்கும் தவ நிலையைக் கண்டு
வணங்கி வரும்போது காளியானவள் கண்டு நாரதமுனிவரைப்
பிடித்துப் புசிக்க நினைத்து வரும்போது இதையறிந்த முனிவர்
ஆகாய மார்க்கமாக மறைந்து வைகுந்தத்திற்குப் போய்
ஸ்ரீமந்நாராயணரிடம் இச்செயலை விண்ணப்பிக்க தம் வீணையில்
மெல்லிசையாகிய கொல்லிப்பண்ணினாற் பாடிப்பரவி ஆல
வனத்தில் காளியானவள் தனது பசாசுக் கூட்டங்களுடன்
வனத்தை அழிப்பதோடு மிருகங்களை யெல்லாம் நாசம் செய்து
விட்டாள். என்னையும் பிடித்து விழுங்கவந்தாள். நான் தலை
தப்பி தேவரீரிடம் வந்தடைந்தேன் என்றார். 

விஷ்ணுவானவர் ,நாரதரே! காளியானவள் யாவராலும் அழிக்க முடியாத 
இரத்த பீசனை வதைத்து அம்பிகையால் கொடுக்கப்பட்ட வரங்களால்
அத்தலத்தில் வசிக்கின்றாள். அவளை யாராலும் வெல்ல
முடியாது. ஒரு காலத்தில் சிவபெருமான் சுநந்த முனிவருக்குக்
கொடுத்த வரத்தால் அத்தலத்தில் தாண்டவமியற்றி காளி
யின் கொட்டத்தை அடக்குவார். ஆதலால் நீர் கயிலைக்குச்
சென்று முறையிடுவீரென்று கூறியருளினார்.

    மகாவிஷ்ணுவானவர் கூறியருளிய அருளுரையைக் 
கேட்டு அங்கிருந்து அளவிடற்கரிய பெருமையிற் சிறந்த
கயிலை மலைக்கேகிய நாரதர், 

    “சுருதியின் முடிவுங்கருதிய மனமுந்துணிவருஞ் சோதியாயவனைப்
    பருதிகள நந்த மாமெனக்கதிர்கள் பரப்பிய படிவமேயானை " 

யாழினில் யேழிசையைப் பொருத்தி வாயாரத் தன்னடியே
பாடுந்தொண்டர் இனத்தகத்தானைப் பாடிப் பரவி அஷ்டாங்க,
பஞ்சாங்க நமஸ்காரம் செய்து நின்று “தொண்டு பூண்டியல்
வார்க்கின்பமே யளிக்குஞ் சோதியே'' என்றும் 'வண்டுவார்
கூந்தன் மங்கையோர் பங்க வழங்குதி யருளென'' வேண்டி
விண்ணப்பித்து ஆனந்தக் கூத்தாடினார். இறைவன், நாரதரே!
உலக சஞ்சாரம் செய்துவரும் நீர் என்ன அதிசயம் கண்டீர்?
உலகம் தீங்கில்லாமல் சிறந்திருக்கின்றதா? என்று சர்வக்ஞராகிய 
பெருமான் ஏதுமறியாதவர்போலக் கேட்டலும் ; நாரதர்
தேவரீர் திருவுள மறியாததோ? இன்னம் சில நாட்களில்
உலகமும், ஆங்காங்குள்ள வனங்களும் அழிந்து பாழ்பட்டுப்
போம். அழிப்பவர்களை அழிக்கத் திருவருள் துணை புரிந்த
தேவரீரே! தேவாமிசமாகிய சக்தியே அழிக்குந் தன்மைக்கு
ஈடுபட்டால் யாது செய்ய முடியும்?  தேவரும், மூவரும் கண்டு
அஞ்சுந்தன்மை யுடைய காளியின் வல்லமையையும்,                         (திருத்தம்: வல்லமையையையும் / வல்லமையையும்)
தோற்றத்தையும் என்னைப் பிடிக்க வந்த வேகத்தையும் கண்டு
நடுங்கி இங்குச் சரணடைகின்றேன். தேவரீர் நிலைத்து
அருள்பாலிக்கும் திருப்பதியாம் திருவாலங்காட்டிற்குத்
தரிசனத்திற்கே போக முடியாத படியாயிற்று.

    " உறும்பய மகன்று தெறுங்கொலை மேவியுயரிய வயிரவி யுருவாய்
    குறும்பொறை யடவி வெறுந்துகளாக்கிக் குலவிடுங் கொடியவள் கொடுமை
    யறும்படி குறுகி யகந்தையை மாற்றி யாற்றுதியன் றெனிலுலக
    மிறும்படியாக்கு முனையலாதவளை யெதிர்த்திடுமவர்களு மிலையால் "

    இறைவனே அஞ்சேலென்று தேவரீர் அருள் செய்யாவிடில்
உயர்ந்த வயிரவியாகிய உருவமாய் ஊழிக்காலத்துமழியாத
வடாரணிய மென்னும் வனம் புழுதியாகி அங்கு
வாழும் உயிரினங்களை யெல்லாம் வதைத்துக் காளியானவள்
கொலை செய்துவிடுவாள். தேவரீரைத் தவிர வேறு யாருக்கும்
காளியை எதிர்க்கும் எண்ணமே எழாது என வேண்டினார்.
சிவபெருமான் ஆதியில் சுநந்தருக்கும், கார்க்கோடருக்கும்
தாண்டவப் பேறளிப்பதாய் அருள் செய்ததையும் கருதி
இத்தினமே ஆலவனத்திற்கு எழுந்தருளுவோம் அஞ்சற்க,
என்று கூறி நாரதருக்கு விடைகொடுத்தனுப்பினார்.


        12. நிருத்தயுத்தச் சருக்கம்

    இச்சருக்கம் 61 திருவிருத்தங்களைக் கொண்டது.

    நாரதர் விண்ணப்பித்துக் கொண்டதற்கும் ஆதியில்
சுநந்த முனிவர் கார்க்கோடருக்கு அருளிச் செய்ததற்கும்
மனமுவந்த சிவபெருமான் திருவாலங்காட்டை நோக்கிவரும்
தோற்றமானது நித்தியப்பிரளையம், நிமித்தப்பிரளையம், பிரா
கிருதிப்பிரளையம் இவைகளுக்கு அந்தமாகிய ஆதியந்தப்
பிரளைய காலத்தில் எடுத்துக்கொள்ளும் காலருத்திர வடிவம்
போன்றிருந்தது அத்திருவுருவம். கொடுமையான ஊழித்
தீயையும் கோபிக்கும்படியான வயிரவ மூர்த்தமாகும்.
கபாலத்தைக் கையிலேந்திச் சூலத்தைச் சுழற்றிக்கொண்டு
கபாலம், சூலம், அங்குசம், பாசம், வாள், கேடகம், வேல்,
மணி, ஆகிய எட்டுப்படைகளும் எட்டுத் திருக்கரங்களில்
பிரகாசிக்க ஐயனார், கந்தவேள், பிருங்கிமுனிவர், நந்திதேவர்
ஆதிசண்டேசர், முதலியோர்களும் கணநாதர்களும், புடை
சூழ நடனக்கோலத்தோடு காளி வாசம்செய்யும் வனத்திற்கு
வரலும் காளிக்குப் படைகளாயுள்ள பூதங்கள் , பசாசுகள்,
வேதாளங்கள், சடைச்சிகள், டாகினிகள், சாகினிகள் இவ்வறு
வர்களும் சிவசேனைகளைப் பார்த்ததும் போர் முரசக்கொடி
தூக்கி சிவசேனைகளைத் தாக்க, சிவசேனைகள் காளியின்
சேனைகளைத் தாக்க கடும்போர் நிகழ்ந்த சமயம் சிவசேனைகள்
தாக்குப்பிடிக்காமல் கலைந்தோட அத்தருணத்தில் ஐயனார்
வெள்ளை யானை மீது ஆரோகணித்து வந்து காளி சேனைகளைத்
தாக்கினார். 

    காளி சேனைகள் நிலைகுலைந்து காளியினிடம்
போய்  "அபயம், அபயம் தேவீ ! ஒரு வீரபுருஷன் வந்து போர்
முனையில் நின்று எங்களை வாட்டி வதைத்துவிட்டான்,
எங்களை இதுவரை கட்டிக்காத்து வயிறார உணவளித்துக்
காப்பாற்றியது பெரிதன்று ; இப்போது எங்கள் உயிரைக்காக்க
வேண்டு " மென்று ஓலமிடவே காளியானவள் , "ஓகோ அப்படியா
நம் வல்லமையை உணரான் போலும். இவ்வனத்திலேயே வந்து
உங்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ளவனும் உள்ளானோ?"
என்று உறுமி ரௌத்திராகாரமான கோபத்தோடு காலபைரவி
உருவங்கொண்டு பூமியதிர உலகமெல்லாம் நடுங்கும்படி வரும்
தோற்றத்தைக் கண்டு ஐயனார் நடுநடுங்கி ஓடோடிப்போய்
சிவபெருமானிடம் பணிந்து விண்ணப்பிக்க, " அப்படியா அஞ்சா
தீர்கள்"  என்று ஆறுதல்கூறி, சூலத்தைச் சுழற்றிக்கொண்டு
பெருமான் காளிக்கு முன்னாக வரவே காளியானவள் இத்
தோற்றப் பொலிவைப் பார்த்து ,ஓஹோ ஆதிகாலத்தில்
பரமேசுவரி நமக்குக் கட்டளையிட்டபடி சிவபெருமானே தான்
வருகின்றார்போலும். நமக்குச் சமமானவர்தான் இவரைப்
போரினால் எவ்விதத்தாலும் வெல்வதரிது. உபாயமாக ஹித
வசனம் பேசி நடனத்திற்குச் சம்மதிக்கச் செய்யவேண்டு
மெனக்கருதி பரமசிவத்தைப் பார்த்து காளியானவள், " நீ யார்?
காளியென்னும் பெயரை இதுவரை அறியாயோ? இந்த
வனத்திற்கு என் உத்திரவின்றி நீ எப்படி வரலாம் ?  வந்தது
மன்றியில் உன்னுடன் வந்த கூட்டங்கள் என் சேனைகளைத்
தாக்கியுள்ளன ; மன்னிக்கமுடியாதவற்றைச் செய்துவிட்டாய்;
என் பெயரைக் கேட்டமாத்திரத்தில் தேவரும் மூவரும் நடு
நடுங்குவார்கள் " என்று தன் வீரதீரப்பராக்கிரமங்களை விரிவாய்க்
கூறக்கேட்ட சிவபெருமான் புன்னகை புரிந்துகொண்டு
மவுனம் சாதிப்பதைப்பார்த்து, சரி உன் பக்கலில் உள்ள சேனைகளை
வாரி விழுங்கி என் ஆறாப்பசியைத் தணிப்பதோடு என்
சேனைகளுக்கும் பசிப்பிணியைப் போக்குவேன் என வீரவசனங் கூறினாள்.

    பெருமான் தமது கோபத்தை அடக்கிக்கொண்டு
"பேதாய் நாம் யார் என்பதுகூட உன் ஆணவ அகங்காரத்
திமிரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. நாம் சதாகாலமும்
வீற்றிருந்து அருள்புரியும் தலமென்பதையும் அறியவில்லை.
நம் அடியார்கள் தவமிருந்து வழிபடும் இவ்வனத்தையெல்லாம்
அழித்துவிட்டாய். இனி இவ்வனத்தை நீங்கி
அகன்று போய்விடாவிடில் இச்சூலத்தால் உன்னையும் உன்
பரிவாரங்களையும் அடியோடு அழித்துவிடுவேன், ஆகையால்
இவ்வனத்தைவிட்டு விரைவில் அகன்று போவாய் " என்றார் .

    இதைக்கேட்ட காளியானவள் "நீ மெத்த வல்லவனைப்போலப்
பேசுகின்றாய். நீயும், உன் பரிவாரங்களும் பிழைக்கவேண்டுமாயின்
 இப்போதே என் ஆளுகைக்குட்பட்ட இவ்வனத்தை
அகன்றுவிடுங்கள். இல்லையேல் என்னைப்போரில் வென்று
வனத்தை உனதாக்கிக் கொள்"  எனக்கூறலும் பரமசிவன்
மகிழ்ச்சியடைந்து " பெண்ணே! மற்போர், விற்போர், வாட்
போர், சூலப்போர் ஆகிய இவற்றில் உனக்கு எவை தெரிந்
திருக்குமோ அதைச் செய்ய நாமும் இணங்குகிறோ" மென்ன;
காளியானவளுக்கு ஆதியில் உமையவள் அருளியவாக்கு
நினைவுக்குவரவே எனக்குச் சம்மதமாகிய செயல் உனக்கும்
பொருந்துமாகில் எனக்கு நிருத்த யுத்தம் செய்யச் சம்மத
மென்றாள். பரமசிவம் நல்லது நாமும் சம்மதிக்கிறோம். ஆதியில்
சுநந்தமுனிவர், கார்க்கோட முனிவருக்கு நிருத்த தரிசனம்
தந்தருளுவோமென்று அருளியுள்ளதையும் நினைந்து," ஆமாம்
நம் நடனத்தைத் தாங்கும் சபை யாது? எங்கு செய்யலாம்?"
என்றார். காளியானவள் நீர் எங்கு, எவ்விடத்தை நிச்சயிக்
கின்றீரோ அங்கு நானும் வர சம்மதமெனலும் பரமசிவன்
திருவாலங்காடு முத்தி தீர்த்தக்கரை பக்கலில் வருகயென்றார்.

    உடனே இருவர்களும் கூட்டங்களோடு வர இறைவனைப்
பார்த்து " ஆமாம் , நாம் செய்யும் நடனத்திற்குச் சரி, பிழை,
சொல்ல சபையோர்கள் வேண்டாவோ? " யென்ன இறைவன்
தேவர்களையும், மூவர்களையும் நினைக்கவே அனைத்துத்
தேவர்களும் முனிவர்களும் கூடிவிடலும், இறைவன்
கார்க்கோடரைப்போய் அழைத்து சுநந்தமுனிவர் தவமியற்று
மிடமெங்கே யெனக்கேட்டு, பெருமானே அங்கு போய்ப்
பார்க்க முனிவர் சரீரத்தின் மீது புற்று மூடி முஞ்சம்புல்
முளைத்து இருப்பதைத் தள்ளி தமது திருக்கரங்களால்
தடவி " முஞ்சிகேசா " என அழைக்க, முனிவர் விழித்து
இறைவனை பல்லாண்டிற்குப்பின் தரிசித்ததால் மெய்தளர்ந்து
நாக்குளறி ஆனந்த பாஷ்பம் பொழிய இறைவன் திருவடித்
தாமரைகளைத் தடவிப் போற்றி வணங்க, "இன்று முதல் நீ
முஞ்சிகேசனெனும் நாமத்தோடு வழங்கப்படுவதாக" என்றருளினார். 
    
    ஆதியில் நாம் கயிலையில் நீ வேண்டிய தாண்டவப்
பேற்றைக் கண்டு களிக்க வருவாயென்றதோடு இரு பிறப்
பாளர்களுக்குப் பிரம்மோபதேசமும் தீக்ஷையும் செய்து பூணுல்
அணிவிப்பதில் பரமபவித்திரமாகிய உன் மீது வளர்ந்து
மூடியுள்ள இம்முஞ்சம்புல்லைக் கட்டினால் தான் பிரமசரிய
விரதம் கைகூடுவதோடு முஞ்சம் புல்லைத்திரித்து அரை
ஞாணாகக் கட்டினால் வேத வேதாந்தப் பொருள்கள் யாவும்
தெற்றென விளங்குமென்று திருவாய் மலர்தருளி சபைக்கு
அழைத்துப் போயிருக்கச் செய்து நடன தரிசனத்திற்காக
வந்து கூடியுள்ள அஷ்டதிக்குப் பாலகர்களோடு ஏனைய
தேவர்களையும் நலம் விசாரித்து நடனத்திற்கு இன்றியமையாததான
இசைக்கருவிகளை அவரவர்கள் தக்கபடி முழங்க
வேண்டுமெனக் கூறி நடனத்திற்குச் சித்தமானார்கள்.

    மூண்ட வெஞ்சினக்காளி முரண்கெடத்
    தாண்ட வாரம் பணித்தருளுங் கதை
    வேண்ட வேண்டிய யாவும் விளைக்குமா
    னீண்ட செஞ்சடையா னருணீடவே.

இத்தாண்டவ தரிசனத்தைக் கண்டுகளிக்க, பற்பல முனிவர்
களும் தேவர்களும் முன்கூட்டியே இத்தலத்திற்கு 3 அல்லது
4 மைல் சுற்றளவுக்குள்ளாக ஆசிரமம் அமைத்துக்கொண்டு
தவமாற்றியிருந்தார்கள். அவரவர் தங்கியிருந்த ஆசிரமங்
களுக்கு அவரவர் பெயருடனே இன்றும் வழங்கி வருகின்றது.
அவையாவன, பராசரபுரம், வேணுகோபாலபுரம், வியாசபுரம்,
அம்பரீஷபுரம், சௌநகபுரம், மிருத்யுஞ்சயபுரம், தரணீவராஹ
புரம், கூர்மவிலாசபுரம், கவேர இராஜபுரம், ஸ்ரீதரபுரம்,
பட்டாபிராமாபுரம், இராமலிங்காபுரம், வீரராகவபுரம், ஸ்ரீஹரி
புரம், புண்டரீகபுரம், இராஜபத்மாபுரம், இராஜரத்னாபுரம்,
கணேசபுரம்.

    தமிழ்ப்பெயரால் கலைக்கோட்டூர் (கலைக்கோட்டு முனிவர்-
ரிஷியசிருங்கர்) அம்மையார் வருகையைக் காட்டிக் கும்பிட்ட
ஊர், தொழுதார் ஊர், கூடிய பாடல், நாரதர்பாடி.


        13. திருநடனச் சருக்கம்

    இச்சருக்கம் 35 திருவிருத்தங்களைக் கொண்டது.

    பரமசிவன் நடனத்திற்காக வந்து குழுமியுள்ள தேவாதி
முனிவர் கூட்டங்களைப் பார்த்துச் சொல்லலுற்றார். சபையோர்களே!
இக்காளியானவள் நம்மைப்பார்த்து வாதமுகமாக 
நிருத்தஞ்செய்து யான் பிறகிடும்படிச் செய்தபின்னர் இந்த
வனத்திற்கு வாவென்றபடியால் நீங்கள் நடு நிலையாளராயிருப்
பதோடு நடனத்திற்கு இன்றியமையாததும் சோபைதருவதுமாய
இசைக்கருவிகளைக் கொண்டு பக்கவாத்தியங்களை
முழக்குவீர்களாக என்று ஆணையிட்டார்.

    இவ்வருளாணையைச் சிரமேற்கொண்டு விஷ்ணுதேவர் மத்தளமும்,
 பிரம்மதேவர் தாளமும், சரஸ்வதிதேவி வீணையும், தும்புரு முனிவரும்,
 நாரத முனிவரும் கீதமும்பாட தேவகன்னியர்கள்
இலயப்பிரமாணத்திற்கொப்ப கைகளைத் தட்ட,  சூரிய, சந்திராள்
வேணுக்குழலால் இசைமுழங்க,  நந்தியம்பெருமானும்
முருகப்பெருமானும் மிடற்றிசைபாட (சுநந்த முனிவரை இனி
வரும் பகுதிகளில் முஞ்சிகேசமுனிவர் என்றே கூறப்படும்)
முஞ்சிகேசமுனிவர், கார்க்கோடர் இருவரும் தலைமைதாங்க
இறைவன் சாமவேதத்தில் கூறும்வண்ணம் ஏழிசைமுழங்க
கோசுகோட்டி என்னும் பெயரையுடைய நிருத்தத்தைத்
தேர்ந்தெடுத்துக்கொண்டார். 

    காளியானவளும் மிக்க அலங்காரபூஷியாய் 
அந்த கோசுகோட்டியென்னும் நிருத்தத்தைத்
தன் மனதில் ஆவாஹனஞ் செய்து கொண்டு அங்கங்களை
ஒருவழிப்படுத்திக்கொண்டு அனவரதமாக-அற்புதம்-இரெளத்
திரம்-கருணை-குற்செய்-சாந்தம்-சிருங்காரம்- பயம்-பெருநகை-
வீரியம் என்று சொல்லப்பட்ட நவரசங்களுடன் வாக்கு
வன்மையோடு பாவ இலக்கணத்துடன் நடனத்தைச் செய்தாள். 
இறைவன் இளஞ்சந்திரன், கங்கை, சிரமாலை, சிரோ
மாலைகள் அசையாவண்ணம் அமைதியாக வாக்குவாதம்
நிகழ்த்த காளி, "சபையோர்களே ஜயம் நம்பாலதே இதில்
ஏதேனும் ஐயமுண்டோ ?" எனக்கேட்க, சபையோர்களும் "சரி
தான் காளிதான் வெற்றியடைந்தா " ளென்றனர். இறைவனும்
அங்கீகரித்து கோசுகோட்டியென்னும் நடனப்பகுதியில் காளி
யோடு ஒப்பிடக்கூடியவர்களில்லை என்று தீர்மானித்தார்கள்.
(கோசுகோட்டி என்பது முறையாகிய சம்பாஷணை-
சம்பாஷணையென்றால் வாக்குவாதம் பேச்சுத்திறமை)

     கோசு கோட்டியின் தீர்ப்பிற்குப்பின் இரண்டாவதாக 
பாண்டரங்கமென்று சொல்லப்பட்ட சண்டதாண்டவம் செய்வதற்கு ஒருப்
பட்டு இறைவன் வலது திருவடியைப் பூமியிலூன்றி இடது
திருவடியை விண்ணளாவத்தூக்கி விசுவரூபத்தோடு (பேருருவம் கொண்டு)

    ''கறையன லுகரம் வன்னி தமருகங் கனலுஞ் சூல
    மறைதரு சதங்கைக் கோவை யபயமென்றாய வங்கை
    முறையுற நீட்டித்திக்கின் முகிழ்மதி கங்கை செந்தீ
    இறையசையாது வேணியிடத்தமைத் தினிமை கூர"

அக்கினியைப் போன்ற விஷமுடைய சர்ப்பங்களும், மழுப்
படையும், உடுக்கையும், அக்கினியைக் கக்கும் சூலாயுதமும்,
சப்திக்கக்கூடிய கிண்கிணி கோவைகளும் அபயமும் ஆகிய
அழகிய திருக்கரங்களை முறையாக நீட்டி இளஞ்சந்திரனும்,
கங்கைச்சலமும், அக்கினியும் கொஞ்சமேனும் அசையாமல்
வீரம் ததும்ப கோபாவேசத்தோடு சண்ட தாண்டவத்தை
ஆடியருளும்போது இயற்கையண்டங்களும், சூரிய, சந்திர
லோகம், நக்ஷத்திரக்கூட்டங்கள், ஏழு கடல்களும் நிலைகுலைந்து
அதிரும்வண்ணம் அண்டகடாகம் ஊடுருவ மஹா உக்கிர
சண்டதாண்டவத்தை ஆடினார். இவ்வாடலினால் சபையாக
கூடியிருந்த தேவாதி தேவர்கள் ரிஷிகள் தன்வயமற்று
மூர்ச்சித்து மயங்கி வீழ்ந்துவிட்டார்கள். காளியானவள் இத்
தாண்டவ வேகத்தைச் சகிக்கமுடியாமல்

    “மருங்குறுகாளி மோகமருவினள் மயங்கிவீழ்ந்து
    பெருங்கையால் அவனிபற்றிப் பீடுபெற்று ஆவிமேவ” என்று.

மோகமடைந்து மயங்கிவீழ்ந்து நீண்ட கைகளினாலே
பூமியைப் பிடித்துக்கொண்டு வலிமை பெற்று உயிர் நீங்காமல்
இருந்தாள்.

    இத்தாண்டவத்தில் நடந்த அதிசயம் பரமசிவனுக்கல்லால் 
அங்கிருந்த ஒருவரும் இவ்வதிசயத்தைக் கண்டாரில்லை. அதாவது

    “ஆடிடு மளவினங்கோ ரதிசய மரனேயல்லான்
    மாடுளரொருவர் காணார் மணிக்குழைவீழ வவ்வித்
    தோடுறுகாதின் மீளவணிந்தனன் சுருதி நாதன்
    பீடியல் பவுரிசண்ட தாண்டவம் பிறங்கிச்செய்ய"

இரத்தினகசிதமாகிய குண்டலம் பூமியிற் கழன்றுவீழ அதை
வவ்வி எடுத்து தோடுகள் தங்கிய திருச்செவியில் மறுபடியுந்
தரித்தார். இதை யாரும் கண்டிலர். பின்னர் இறைவன்
சபையோர்களைப் பார்க்கவே அனைவரும் மூர்ச்சித்திருப்பதை
அறிந்து சண்டதாண்டவ வேகத்தைக் குறைத்துக்கொண்டு
சாவதானமாக நடித்ததோடு தேவர்கள் மீது ஜடாபாரத்துள்ள
கங்கைச்சலத்தை தெளிக்க அனைவரும் மூர்ச்சை தெளிந்து
ஒருவாறு விளக்கம் பெற்று எழுந்தார்கள். இச்செயலைக்
குறிப்பிட்டே இத்தலத்தில் நடராஜப்பெருமான் சன்னிதியில்
விபூதிப்பிரசாதம் வழங்கியபின் அன்பர்களுக்கு தீர்த்தப்
பிரசாதம் வழங்கி தரிசனம் கண்டபின் தரும் வரப்பிரசாத
மாகிய நிருமால்ய வில்வம் அளித்துவரப்படுகின்றது. 

    மூர்ச்சை தெளிந்தபின் இவ்வேகத்தைத் தாங்கமாட்டாத தேவர்கள்
முனிவர்கள் அருட்சத்தியாம் அம்பிகை பக்கலின் போய் தேவீ
இனியும் இத்தாண்டவம் நீடித்தால் சர்வ அண்டங்களுடன்
நாங்களும் அழிவடைவோம். இத்துடன் தாண்டவத்தை
நிறுத்த இறைவனிடம் விண்ணப்பிக்க வாருமென்று
வேண்டவும் அம்பிகை வந்து இறைவனிடம் கூறவே
சண்டதாண்டவத்தைப் பெருமான் நிறுத்தியருளினார். இதை

"உமை திருப்பாலின் சேர்ந்து மேவரு நிலய மின்னும் விளைக்குமேல்
உலகம் வீயும் ஆவலினிரந்து மாற்றவாருமென்று' விண்ணப்பித்தாராக

காளியானவள் தோல்வியடைந்த நாணத்திற் பொருந்திய
வளாய் ஒளியுடைய முகத்தால் வணங்கி விலக்ஷணமாய
பாவைபோல் செய்கையற்று ஒருபக்கல் வணங்கி நின்றாள்.
தாண்டவம் முடிந்து தேவர்களுக்கு அருள் பாலித்து "என்ன
அதிசயங்கண்டீர்க?" ளென்ன "யாதொன்றுமறியோம்" எனலும்
"வள்ளுவரிடம் போய்க்கேளுங்க" ளென்ன , வள்ளுவர்

    "இழை நக்கி நூல் நெருடும் ஏழை அறிவனோ
    குழை நக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து'' 

எனக் கூறியதாகவும் வரலாறு.


    14. தேவர் துதிசெய் சருக்கம்

    இச்சருக்கம் 55 திருவிருத்தங்களைக் கொண்டது

    தேவர்களெல்லாம் பெருமான் திருவடியில் அடியுறப்
பணிந்து வீழ்ந்தெழுந்து எம்பெருமானே அன்று திருப்பாற்
கடலைக் கடையும்போது எழுந்த ஆலகாலத்தை உகந்து
அமுதமாக உண்டு அமுதத்தை ஈந்து எங்களைக் காப்பாற்றியது
தேவரீரன்றோ? தாருகாவன ரிஷிகள் யாகத்தால் விட்ட
கொடிய ஆயுதங்களைத் தாங்கி அவர்களை நல்வழிப்படுத்தி
யதும், மறலியை உதைத்து மார்க்கண்டரைக் காத்தருளி
யதும், திரிபுர அரசுரர்களை அழித்ததும், தக்கன் அகந்தையை
 அழித்து ஆட்டுக்கிடா தலை வைத்ததும், பிரம்ம, விஷ்ணுக்
களாகிய நாங்கள் ஆணவமலமேலீட்டால் நாம் பிரம்மம்,
நாம் பிரம்மம் என்று நான் நான் எனக்குளறி ஒன்றுவிட்
டொன்று பற்றி அகந்தையால் போரிட்டபோது எங்கள்
மயக்கம் தீர அருட்சோதிப் பிழம்பாய்த் தோன்றியதும்
சனகாதி முனீந்திரர்களுக்குப் பேசாமவுனம் பிறப்பித்ததும்
தேவரீரன்றோ என இறைவன் அருட்செயல்களைப் பலபடியாகப்
போற்றிப் பரவினர். 

    அப்போது அம்பிகையும் பெம்மானே
தேவரீரையன்றி உலகிற்கு தேவர் முனிவர் முதலாய சகல
ஜீவராசிகளுக்கும் கதியேது உமது அன்பனாகிய முஞ்சிகேச
முனிவனும், கார்க்கோடனும், காளியும் மயக்கமடைந்து
நடுநடுங்கிச் சோர்ந்து வீழ்ந்தார்கள், என்று கருணையே
உருவமாய்க் கசிந்துருகும் அன்பர்கட்கு அருளை வாரி வழங்கும்
சர்வலக்ஷண சர்வாலங்கார சகல கல்யாண குணங்களுடைய
ஜகன்மாதாவாய் அழகொழுக எழுந்தருளி அம்மையாரும்
ஆடல்வல்லானின் சன்னதியில் " பெருமானே இனியும் இத்
தாண்டவத்தை நீடிக்காமல் முடித்து அருள்பாலிக்க வேண்டு"
மென்று விண்ணப்பித்தார். 

    பெருமான் கருணைகூர்ந்து தாண்டவத்தை நிறுத்தி காளியைப் பார்த்து ,
"காளியே, பரதசாத்திர முறைப்படி நடிப்பதில் நீ நிகரற்றவள்; உனக்குச்
மத்துவமானவர் நாமன்றி வேறெவருமிலர். இன்று முதல்                                                     
பத்திரகாளி யென்னும் பெயரோடு இத்திருவாலங்காட்டில்
நம் இடதுபுறத்தே ஓர்பக்கல் இருப்பாயென்றருளி, இத்தலத்
தில் நம்மைத் தரிசிக்க வருபவர்கள் உன்னை முதலில் தரிசித்து
என்னைத் தரிசிப்பாராக.  தரிசிப்பவர்களுக்கு வேண்டிய வரங்கள்
தந்து கொண்டிருப்பாயாக. இது முதல் இத்தலத்தில் உனக்கு
முன் பூசையும் முன் விழாவும் நடத்தி நமக்கு நடத்தப்படுவதாகுக "
என அருளினார். 

    காளியானவள், "பெம்மானே!
அறிவில்லா நாயேன் என் ஆணவத் திமிரினால் தேவரீர் என்று
உள்ளம் உணர்த்தியும், உணராமல் அகமோடு ஏதேதோ
ஏசிப் பேசிவிட்டேன்.ஆதிகாலத்தில் அம்பிகை எனக்கு
அருளிய வாக்கினால் பரதமுறை நடனஞ் செய்யென்று
கூறினேன் . மன்னித்தருளுவீராக " எனப் பலபடியாகப் போற்றி
 வணங்கலும், பெருமான் "பேதாய் , இந்நடனம் உனக்காகச்
செய்ததன்று . மாசற்ற முஞ்சிகேச, கார்க்கோட முனிவர்களுக்கு
ஆதிகாலத்தில் கொடுத்த வரத்தால் உனது வாத முகத்தால்
செய்தருளினோம்"  என்றார்.

     " ஆலவனத்தெமையகலா துறைதியெம்பாலரிச் சையளித்தாருனக்கு மளிப்பாராயிற்
    சாலவுறுபயன் பெறுவர் செய்யாராயிற் சார்ந்திடார் பயனை யெனச் சாற்றிப்போற்று
    ஞாலமதற்கினியவர நல்கிநம்போனல மேவியிருத்தி யெனநம்பன்கூறக்
    கோலவளை தனக்கருளாற் றேவர்பூசை கொடுத்தனர் வாழ்த்தினர் மகிழ்ச்சிகூர்ந்தார்”

    இறைவன் அருள் செய்த வண்ணம்  தேவர்கள் ஸ்ரீ
பத்திரகாளி யம்பிகையை முறையாகப் பூசித்துப் போற்றிப்
பரவி வேண்டிய வேண்டியாங் கெய்தினர்கள். மீண்டும்
சிவபரம்பொருள் தேவ ரிஷிகளை நோக்கிக் கட்டளையிட்டதாவது.

ஸ்தல புராண வடமொழி சுலோகத்தில் வரும்பகுதி

    “வத்ஸரேவத்ஸரே யூயம் இஹபால்குந பால்கு நீ
    அத்யாஸ்மிந் நிருத்தன தினே தர்சயிஷ்யாமி தாண்டவம்”

    “திருப்பதிகள் பல நமக்குப்புடவி மீதே திகழ்ந்தன வாயினு மாலவனத்திற்சிந்தை
    விருப்புளவாமதனாலே நிலையமீண்கு விளைத்திடுவ மெஞ்ஞான்றுமேவி நீவிர்
    மருப்பரவு பங்குனிநற்றிங்கடோறு மருவி நடமின்னால் வணங்கிப்போற்றித்
    தருப்பயில் வீரெனப்பரமன் சாற்றத்தேவர் தாழ்ந்தனர் நன்றென்றுவிடைசார்ந்து சொல்வார்”


என்றருளியபின் தேவர்கள் பாத தீர்த்தம் உட்கொண்டு சிவ
நிர்மாலியத்தைப் பெற்றுக்கொண்டு தந்தமது உலகுபுக்கர்.
பின்னர் இறைவன் கார்க்கோட, முஞ்சிகேச முனிவர்களைத்
திருநோக்கால் பார்த்து உமக்குக் கயிலையில் அருளிய
திருவாக்கின்படி தாண்டவப் பேற்றைத் தந்தோம்; நீங்கள் நம்
அடியார் கூட்டத் தலைவர்களாய் இத்தலத்திலேயே வாழக்
கடவீர்களெனலும், முனிவர்கள் பெருமானே அகர, உகர,
மகர, பிந்து, நாத மயமான பிரணவ சுவரூபீ, நிலம், நீர்,
நெருப்பு, உயிர், நீள்விசும்பு, நிலா, பகலோன், சர்வான்
மாக்கள் ஆகியவற்றை அதிட்டித்து உள்ளீடாய் விளங்கும்
அஷ்டமூர்த்தியே! பலகோடி நாமங்களுடைய சம்புவே!
ஒப்பாரு மிக்காருமில்லாத ஒருதனிமுதலே!  ஏழையேங்கள்
என் சொல்லிப்பரவுவோம் என்று பரமன் அருட்புகழைப்
பலபடியாகப் போற்றித் துதிக்கலும் பெருமான்," அன்பர்களே!
நம்மைத் தரிசிக்க வருபவர்கள் உங்களையும் தரிசித்தால்தான்
முழுப்பயனடைவர் என வரமீந்தார்" யென்று திருமால்
சேடனுக்குச் சொன்னார். இத்தலப் பெருமையை

    "வடவன மென்றுரைத்திடினும் பாவமுற்றும் மாய்ந்திடு மங்குறைபவர் சீர்வகுப்பார்யாரே
    தடமதனிற்படிய விடந்தங்கமத்தி தானாகுங் கீர்த்தி திருத்தகைமை நல்கும்
    புடவியினப்பதிபோலப் பதிமற்றில்லைப் புகழ்ந்திடினுங் கதியளிக்கும் புனிதமாகு
    நடமருவிப் பணிந்தவர் தம் பெருமையெம்மால் நவிற்றரிதா முத்தியினை நல்கலாமே"

என்று தலப்பெருமையை ஆதிசேஷனுக்குத் திருமால் திருவாய்
மலர்ந்தருளினார். இச்சருக்கத்தில் சைவசித்தாந்த தத்துவக்                
கருத்துக்களை இடையிடையே மிக அழகாக விவரித்துக்
கூறுகின்றார். இந்நூலாசிரியர் ;

    "அடையார் தருமாலவனப்பதி யன்ன தாழி
    யுடையார் புவிமேலிலையப்  பதியுற்ற திங்கட்
    சடையானுயர் தாண்டவமாமெனத் தக்கவையத்
    திடையாடலுமில்லை வியப்பனதா மின்மையாலே"

கடல் சூழ்ந்த உலகில் இத்திருவாலங்காட்டுக்கு நிகராகிய
தலமில்லை; இத்தகு திருவாலங்காட்டில் சந்திர சூடாதரனாகிய
பரமசிவன் செய்த உயர்வாகிய நடனத்தைப் போல நடனமு
மில்லை என்பதாம்.

 
        15. சேடன் சருக்கம்

    இச்சருக்கம் 12 திருவிருத்தங்களைக் கொண்டது

    உலகத்தைக் காத்தருளும் எம் பெருமானே! தேவரீர்
திருவாலங்காட்டில் இறைவன் நடனத்தைக் காணச் சென்ற
போது அடியேனை உடனழைக்காமல் சென்று கண்டு ஆனந்
தித்தீர்கள். நடனக்காட்சியை அடியேன் தரிசிக்கா
விட்டாலும் தேவரீர் அமுத மொழியால் கேட்டு ஆனந்த
மடைந்தேன். ஊழி முதல்வனாய ஒருவன் நடிக்கும் தாண்டவம்
காண்பதெப்போதோ? ஒரு காலத்தில் உனக்கு
இருநூற்று நாற்பது சிரசுடன் நீ செய்த தவத்துக்குரிய
காலத்தில் இறைவனது தாண்டவம் காணுவாயென்று
அருளியுள்ளீர்களே; அஃது எப்போது சித்திக்கும் எனத்
திருமாலை வேண்டவே, திருமாலானவர் நீ திருவாலங்காட்டில்
நடந்த இறைவன் நடனத்தைக் கேட்ட அளவிலே புனித
மடைந்து விட்டாய். இருப்பினும் நடன தரிசனம் காண
அவா மிக்குடையனா யிருத்தலினால் இன்னம் சில காலத்திற்குப்
பின் மூலாதார ஸ்தலமாகிய தில்லைச் சிதம்பரத்தில், வசிஷ்ட
முனிவரின் மைத்துனர் வியாக்கிரபாத ரென்னும் நிஷ்காமிய
தவசிரேஷ்டர் நடன தரிசனம் காணும் பொருட்டுத் தவமி
யற்றிக் கொண்டிருக்கிறார் . நீயும் அவர் பக்கல் சென்று தவமி
யற்றிக் கொண்டிருப்பாயாகில் ஆன்மாக்களுக்கு அருளானந்த
மாய பஞ்ச கிருத்தியச் செயலைக் காட்டி அம்பிகை காண
நடித்தருளப் போகின்றார். ஆகவே, நீ இன்றே அத்தலத்திற்
கேகி தவமியற்றுதியென்ன ஆதிசேடனும் சிதம்பரம் சென்று
தவமியற்றலானான்.

        16. உருத்திரசாமி சருக்கம்

    இச்சருக்கம் 31 திருவிருத்தங்களைக் கொண்டது

    சகஸ்திரா நீக அரசன் மார்க்கண்டேய முனிவரை
அடியுறப்பணிந்து போற்றி முனிவர் பிரானே தலத்தின் பெரு
மையும், மூர்த்தியின் பெருமையும் தாண்டவச் சிறப்பையும்,
தீர்த்தத்தின் சிறப்பையும் கேட்டு இன்புற்று முற்செய்
பாபத் திரளெல்லாம் நீங்கிப் புனிதமடைந்தேன். அத்தலத்தில்
உள்ள புனிதமாகிய முத்தி தீர்த்தத்தில் முழுகிப் பாவங்க
ளொழித்துப் புனிதமடைந்தோர் யாரேனும் இருப்பின் அவர்
கள் சரிதமும் புகலவேண்டு மெனவேண்டி விண்ணப்பிக்கவே
மார்க்கண்டேய முனிவர் பிரானும் கூறலுற்றார். 

    பிரம்ம தேசத்திலே வசிப்பவனும் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம்,
எண்ணெண்கலா வல்லபனும் வேதவிதியால் யாகங்களும்,
ஸ்மிருதி விதியால் யக்யங்களும் செய்துகொண்டு அக்நி
தேவனுக் கொப்பாகிய தருமசீலன் மகன் உருத்திரசாமி
என்னும் பிராம்ணோத்தமன் ஷட்கர்மநிரதன். அதிதி
பூசையைத் தவறாமல் நாள் தோறும் செய்து வருபவன்
தனக்குத்தானே நிகரானவன். "செல்விருந்தோம்பி
வருவிருந்து பார்த்திருப்போன்' ஆகிய இவ்வந்தணனுக்கு
அருந்ததிக் கொப்பானவளும், ஸ்ரீ சாமுத்திரிகா லக்ஷணங்கள்
அனைத்தும் பொருந்திப் பேரழகுடையவளும் அறிவிற்
சிறந்தவளுமான புண்ணியவதி யென்னும் பெயருக்குப்
பொருத்தமாய புண்ணியம் செய்பவளுமான மனைவி யொருத்தி
யிருந்தாள். அவளோடு இல்லறமாம் நல்லறத்தைச் செவ்வனே
நடத்திக்கொண்டு "காகத் திருகண்ணிற்கு ஒரு மணியே
போல்” தரும நெறியில் தவறின்றி நடத்திவந்தார்கள்.

    ஒரு நாள் நியம நிஷ்டாபரனாய்த் தவத்தால் சிறந்த வேத
விற்பன்னனாகிய ஓர் அந்தண சிரேஷ்டன் மிகுந்த பசியோடு
உருத்திரசாமியின் இல்லத்திற்கு வந்தான். விருந்தினரைப்
பேணும் பண்பிற் சிறந்த புண்ணியவதியானவள் வீடு தேடி
வந்த அந்தணச் சிரேஷ்டரைப் பார்த்தும் ஏதோ மயக்கத்தால்
முன் ஊழ்வினையின் காரணமாக அசட்டையாய் அதிதிக்குச்
செய்யவேண்டிய சத்கார உபசாரங்கள் யாதொன்றும் செய்து
வரவேற்காமல் போய்விடவே அவ்வந்தணன் சற்று நேரம்
நின்று பின்னர் வேறோர் அந்தணன் வீட்டிற்குப்போக அங்கு
அவ்வந்தணனை உபசாரத்தோடு வரவேற்று அதிதிபூசை
செய்து மகிழ்விக்கவே அங்கேயே தங்கியிருந்தான்.

     பின்னர் உருத்திரசாமி தமதில்லத்திற்கு வந்ததும் நடந்த தறிந்து
தன்னையும் ஊழ்வருத்த மனைவியின் மீது மிகுந்த கோபாவேசத்
தோடு ஒரு பெரிய கல்லை எடுத்து மனைவியின் தலைமீது போட,                                  
மனைவி அங்கேயே துடி துடித்து மாண்டாள். இரத்த ஆற்றில்
மிதக்கும் தன் மனைவியின் பிணத்தை யாரும் அறியாமல் ஒரு
பாழுங்கிணற்றில் தூக்கிப் போட்டுத் தானும் தன் தேசத்தை
விட்டுச் சென்றான். கொலைப்பழி தன்னை ஆட்டி வைக்க
புத்திமயங்கி அறிவுகெட்டுத் திகைத்து தான் யார் யென்றதும்
நினைவுக்கு வராமல் நித்திய கருமங்களைச் செய்ய வொட்டா
மலும், தலம், தீர்த்தங்களைக் கண்டால் கிட்ட நெருங்க
வொட்டாமலும் பிசாசு குணத்தோடு இமையம் முதல் சேது
வரையிலும் மேலைச்சமுத்திரம் முதல் கீழைச்சமுத்திரம் வரை
ஓரிடத்தும் தங்கவொட்டாமல் பசி, பட்டினியோடு ஒன்றும்
தோன்றாமல் நிலைகுலைந்து அலைந்து கொண்டிருந்தான்.

    "இருந்தியன் மனையுமாடு நிதியமு மினிய கேளும்
    பொருந்து கேத்திரமு மாற்றிப் புல்லெனப் புறமேபோனான்
    அறிந்த நூலறிவர்க் கேனுந்தீயவூழ்ச் செய்கைமாற்று
    மருந்திலதாகு மூழேவலிய தின் வலியதாமால்''

வீடு, மாடு, தனம், மக்கள், சுற்றத்தார், தன்னுடைய
நகரம், முதலியவைகளை யெல்லாம் விட்டு, சகலசாஸ்திரங்க
ளறிந்திருந்தாலும் ஊழ்வினையை மாற்ற முடியாதென்பது
உணரற்பாற்று.

    “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்”

தன் குலம், ஒழுக்கம், தவம், அனைத்தும் மறந்து இவ்வூழ்
வலியால் சுத்தா சுத்தம் அற்று கண்டதைத் தின்று தூக்க
மின்றி அலைந்து கொண்டே திரிந்து வந்தான். இப்பழி
இவனை இருபத்தைந்து ஆண்டு காலமாக ஆட்டிப்படைத்து
வந்தது. இதற்கிடையே இப்பழி வருவதன் முன் தான்
செய்துவந்த ஜபதபாதி, யக்கிய, யாகங்களின் புண்ணியம்
சற்றே துணைபுரிய சிறிதே ஞானோதயம் தோன்றியதினால்

    “இடர்கெடத் தரும முன்ன மியற்றிய தினிதுமேவ
    வடவன மடைந்தான் மேன்மை வரமுறும்பதி யென்றோரான் "

உருத்திரசாமி அலைந்துவரும்போது தன்னை அறியாமலே
இத்திருவாலங்காட்டுத் தலத்தை மிதித்து முத்தி தீர்த்தத்தைக் 
கண்ணால் கண்டதும் மனைவியின் கொலைப்பழி சிறிதே
தன்னைவிட்டகல முன்னறிவு விளங்க,

    “கடிசிறி தகலப்போதங் கலந்தனன் களியின் மேவிப்
    படியினிற் புனிதமாய பதியிது பயிற்றும் பாவ
    நொடியினிங் ககன்ற தென்ன நோக்குபு பதியின் மேன்மை
    வடிவுறப் பயில்வோன் முத்திவாவியின் மருங்குசென்றான் ”

இத்தகு புண்ணிய தீர்த்தத்தில் முக்காலும் முழுகி தன்பழி
பாவம் நீங்கி முன்னையறிவு விளங்க சர்வபிராயச்சித்தம்
செய்துகொண்டு ஒரு திங்கள் வரை விதிப்படி ஸ்நாநம் செய்து
நித்திய கருமங்களாற்றி தேவர் சிங்கப்பெருமானை முக்காலமும்
வணங்கிப் புனிதமடைந்தபின் தருமபத்தினியின்றி யக்கிய,
யாகாதிகளியற்ற முடியாதென்ற வேதவிதிப்படி தன் முதல்
மனைவியின் கோத்திரத்தில் சுசீலை என்னும் கன்னிகையை
மணந்து ஆகவனீயம், தக்ஷிணாக்கினீயம், காருகபத்தியம்,
என்னும் முத்தீவளர்த்து யாக, யக்ஞங்கள் செய்து கொண்டு
சுசீலையாம் கற்பினும், அழகினும் சிறந்த மனைவியுடன் அதிதி
களை உபசரித்துக்கொண்டு வசிஷ்டருக்கு ஒப்பாகத் தவத்திற்
சிறந்து கல்வியும், செல்வமும், பெருகி எட்டுப் புத்திரர்களைப்
பெற்று புத்திரர்களுக்கு வேதாகம விதி மார்க்கத்தைப்
போதித்துக்கொண்டு பூரண ஆயுளாய 120 ஆண்டுகள்
வாழ்ந்து பின்னர் முத்தியடைந்தான்.

    "சுற்றமுநட்பு மேன்மைப் புதல்வருந்துவன்றி மல்கக்
    கற்றவர் சூழவாழ்ந்து கண்ணுத லாலங்காட்டுக்
    கொற்றவ னருளான் முத்திகூடினன் குழகன் கோயி
    லற்றமின் முத்திதீர்த்த மேன்மையுமளப் பாரியாரே"

        17. கிராதன் சருக்கம்

    இச்சருக்கம் 24 திருவிருத்தங்களைக் கொண்டது.

    மார்க்கண்டேய முனிவர் பெருமான் மஹாயுத்தவீரனும்,
பக்திமானுமாகிய சஹஸ்திரா நீகனென்னும் அரசனை நோக்கி
இதுகாறும் முத்தி தீர்த்தத்தின் சிறப்பும், வடாரணிய மான்மியமும்
கூறினோம். இனி சுத்தபாவனமாகிய தலச்சிறப்பைச்
சொல்லுகின்றோம். கேட்பாயாக என்று கூறலுற்றார். அடர்ந்த
வனங்களில் சதா சஞ்சரிக்கின்றவனும், பின் முதுகுப்புறமாகச்
சாய்ந்த குடவயிறுடையவனும் (விருகோதரன் - பெருந்தீனி
யுண்டும் பசியடங்காதவன்) மலைக்குகைபோன்ற வாயும்,
இடிபோன்ற குரலும், கருகருத்த மேனியும், பாவங்களெல்லாம்
திரண்டு உருவாகிய வடிவமுடையவனும் வில்லை சதா கையி
லேந்தியவனுமாய வேடர் குலத்துதித்த கிராதகன் என்னும்
கொடிய பாதகன் ஒருவன் வனங்களில் வசிக்கும் பக்ஷிமிருகங்
களைக் கொன்று தின்றுகொண்டு நூறாண்டுகாலம் வனங்கள்
தோறும் திரிந்துகொண்டு பிழைத்துவந்தான், பின்னர் நரை,
திரை, மூப்பு வந்து இருமல் தொடர, கண், காது, மூக்கு,
நாக்கு, உடல் ஆகிய ஞானேந்திரியங்கள் செயலற்று நடக்க
முடியாமல் கோலூன்றித் தட்டுத் தடுமாறி நடக்கமுடியாமல்,
நடக்கும்போது ஆகாரமில்லாமையால் கீழே விழுவதும் எழுந்
திருப்பதுமாக பசியின் கொடுமையால் கீழே விழுந்து விட்டான்.

     சிலநாள் பார்ப்பாரற்றுக் கேட்பாரற்றுக் கிடக்கும்
போது ஒரு கோட்டானானது இவன் மோக்ஷத்துக்கு
ஏதுவாயின விவரத்தைச் சொல்லுகின்றோம்.கேட்பாயாக.
சண்டனென்னும் பெயருடைய ஒரு அந்தணன் மிக்க தரித்திரத்தினால்
பேராசைகொண்டு பாவம், புண்ணியம், நன்மை,
தீமைகளைக் கருதாமல் குற்ற மனப்பான்மையுடையவர்கள்,
திருடர்கள், காமிகள், பொய்யர்கள், கொடுக்கும் தானங்
களையும், வேதவிதிக்கு மாறான கோரமாகிய தானங்களையும்,
விருப்பத்தோடு மனமுவந்து வாங்கிப் பிழைத்து வந்தான்.

    ஒருநாள் அரசன் சில அந்தணோத்தமர்களை வருவித்துப்
பொன் பாளங்களைத் (சுவர்ண தானம்) தானம் செய்தான்.
அதை மந்திரவிதிமுறை வழுவாது பெற்றுக்கொண்டுவரும்
அந்தணோத்தமர்கள் போகும் வழியைத் தெரிந்துகொண்ட
சண்டனென்னும் இக்கொடிய பார்ப்பான் அவர்களை வழி
மடக்கிச் சிலரைக் குத்திக் கொலை செய்யவே, ஏனைய
பிராமணர்கள் பொன் பாளங்களைக் கீழேபோட்டுவிட்டு ஓடி
விட அவைகளை இச்சண்டனென்னும் கிராத பார்ப்பான்
திரட்டிச் சேர்த்ததும் கொலைப்பழி வந்து மூடி பிரம்மராக்ஷஸ
உருவம் மாற்றமடைய தன்னிலைமாறி அன்ன ஆகாரமின்றி
வேடர் தொழிலால் பக்ஷி, மிருகங்களைக் கொன்று தின்று
அலைந்துவந்தான். மேற்கண்ட சண்டன் தான் கிராதனாகிக்
கீழே வீழ்ந்தவன். 

    இத்தகு நிலையில் உள்ளவன் சமீபமாக
ஒருபகல் கச்சியம்பதியில் வாழ்பவர் இருவர் காசி யாத்திரை
யாக வரும்போது இத்தலத்திற்கு வந்து வடாரணியப்
பெருமையையும், முத்தி தீர்த்தச் சிறப்பையும் பேசிக்கொண்
டிருந்தார்கள். இத்தகு புண்ணிய சரிதம் நிலைதவறி வீழ்ந்து
கிடக்கும் கிராதன் செவிவழிக்கேட்டான். உடனே இவனைப்
பிடித்திருந்த பிரம்மராக்ஷஸப் பேய் நீங்கி கிராதவேடமும்
மாற்றமடைந்து பழைமையான உருவம் வந்துவிடவே கிராதன்
சற்றே தெளிவு பெற்று அந்த காசியாத்திரை செய்யும்
அறிஞரிடம் சென்று அடிபணிந்து கேட்கவே, அவர்கள் முத்தி
தீர்த்தத்தில் படிந்து ஸ்நாநம் செய்தால் பாவம் தீருமென்ன;
தீர்த்தத்தினிடம் போக சக்தியற்று மறுபடி கீழே விழுந்து
விட்டான்.

    அற்றைநாள் முத்தி தீர்த்தக்கரையிலிருக்கும்
ஒரு ஆலவிருக்ஷத்தின் பொந்தில் ஒரு கோட்டான் முன்
செய்த பாவத்தால் இப்பிறப்பு, கோட்டானாகி இரவில் இரை
தேடியருந்தி பகலில் மரப்பொந்தில் இருபது வருஷம் ஒளிந்து
பயந்து தங்கிவந்தது. ஒரு கோடைக்காலத்தில் கோட்டானுக்கு
 நாவுலர்ந்து சோர்வடைய பகலில் வெளிப்பட்டால்
காகம், பருந்து முதலிய பக்ஷிகள் கொத்திக் கொன்றுவிடுமேயென
அஞ்சியஞ்சிக் கொண்டிருக்கும்போது மாலைநேரம்
நெருங்கவே தாகவிடாய் தீர்த்துக்கொள்ள வெளிவர காகம்,
பருந்து, கழுகு முதலிய பக்ஷிகள் கண்டுவிட்டுக் கொத்திச்
சின்னாபின்னப்படுத்திவிட்டன. 

    தட்டுத்தடுமாறி முத்திதீர்த்தத்தில் விழுந்து
 உடல் தாபந்தீர்த்துக் கொண்டு தாகமும்
தீர்த்துக்கொண்டு பழையபடி மரப்பொந்திற்குவர அங்கு
பக்ஷிகள் கூடியிருக்கவே பயந்து நனைந்த உடலுடன் நாலா
பக்கமும் அலைந்து கொண்டிருந்தபோது பிராணன் பிரியும்
தருவாயிலிருந்த கிராதன் உடலின் மீது கோட்டான் இறகில்
இருந்த முத்திதீர்த்த நீர் படவே கிராதன் மரணபயம் நீங்கி
நல்லுடம்பைப் பெறலும் சிவபெருமான் பார்வதிசமேதராய்
ரிஷபத்தின்மீது ஆரோகணித்து கிராதனுக்குக் காட்சி
கொடுத்து இடது செவியில் தாரக பிரம்மோபதேசம் செய்
தருளி மோக்ஷத்தையளித்ததோடு; கோட்டானும் இதரபக்ஷிகள் 
கொத்திய உபாதையால் அதுவும் பிராணன் துடிக்கவே
அதற்கும் செவியில் தாரகப் பிரம்மோபதேசம் செய்து முத்தி
தந்தருளினார்.

    "மறிதிரை யுலகி னாலவனமென வரங்கணல்கு
    நெறியுறு பதிதானில்லை நினைதிநீ நிருபரேறே''


        18. சோமசாமி சருக்கம்

    இச்சருக்கம் 63 திருவிருத்தங்களைக் கொண்டது

    "வரிமதர் மழைக்கண் மங்கையோர் பங்கன் மருவிய வடவனப் பெருமை
    பெரியதிற் பெரிதா மளப்பரிதாகும் பிறங்கிதிகாசவீற்றின்னம்
    பரிவொடுகேட்டி பாவனம் பாவம் பறித்திடுமதிசயம் பயக்குந்
    தரியலர்குருதி பருகிய நெடுவேற்றலைவ நீ யெனமுனி சாற்றும்”

    சுருதி நகரத்தில் வேதசுவாமி என்னும் அந்தணன்
சைவகுலத் துதித்து வேத வேதாந்தங்களை யுணர்ந்தவன்.
இவனுக்கு சோமசுவாமி யென்னும் புத்திரன் பிறந்து வேதா
கம சாஸ்திரங்களுணர்ந்து விபூதி ருத்ராக்ஷதாரணத்தோடு
சிவபெருமானுக்கு மேலாகிய தெய்வமேயில்லை என்பதுணர்ந்து
இறைவனுக்கு அன்பனாகி பக்தியிற் சிறந்து நற்குணப்
பண்புடன் விளங்கினான். இவ்வந்தணன் கணுவற்ற முருங்
கைக் கோலைத் தாங்கி, முஞ்சம்புல்லை அரைஞாணாகத் தரித்து,
சடைமுடி வளர்த்து முக்காலமும் முழுகி சிவார்ச்சனை செய்து,
பிக்ஷையை விதிமுறையாக ஏற்று, உண்டு விரதாதிகளை
வழுவாமல் அநுஷ்டிப்பவன்.

    சூரியோதயத்திற்கு ஐந்து நாழிகை முன்னதாகவே
 விதிப்படி ஸ்நாநம் செய்து காயத்திரி மந்திர ஜபமும்,
 பகலில் பஞ்சாக்ஷர ஜபமும் ஓதிக்கொண்டு
ஒழுகி வந்தான். அந்த பிராமணன் ஸ்தல யாத்திரையையும்
தீர்த்த யாத்திரையையும் செய்ய வேண்டுமென்ற அவாவோடு
பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு கடம்பவனம் (மதுரை
மாநகரில்) வசித்திருக்குங்கால் ஸ்திரீசாமுத்ரிகா லக்ஷணங்க
ளெல்லாம் ஒருங்கமையப் பெற்று அழகெலாம் திரண்டு ஓரு
ருவாயினாற் போல தேககாந்தி ஒளிவீசுந்தன்மையுடைய
வளாய் பாணர் வமிசத்தில் பிறந்து ஆடல் பாடல் வீணை
முதலியவற்றில் வல்லமையுடைய ஒரு பெண் செவ்வழிப்
பண்ணைப்பாடிக் கொண்டு சோமசுவாமி வசிக்கும் இடத்திற்கு
வர, அவ்வழகியை சோமசுவாமி பார்த்ததும் தன்னுடைய
சிஷ்டாசார ஒழுக்க வழக்கங்களை யெல்லாம் மறந்து அவளது
அழகிய தோற்றப் பொலிவில் மதி மயங்கி மோகித்து பின்னர்
வெளிக்காட்டாமல், " பெண்ணே! நீ யார்? அரம்பை முதலிய
தேவ மாதர்களும், ரதியும், உன் அழகுக்கு ஈடாகார். உன்
அழகொழுகும் உருவைச் சிருஷ்டிக்க பிரம்மதேவனுக்குப் பல
நாள் வேலை கொண்டிருக்கும். இத்தகு சிறப்பு மிக்க 
அழகமைந்த உனக்குக் கணவன் யார் ? " என்று வினவினான் . 

    மதங்கி யானவள் சுவாமீ நீங்கள் தவசிரேஷ்டராகிய
 பிராம்மணோத்தமர், தங்களைப் போன்ற தபோதனர்கள் நெருங்கி
 வரவோ, தீண்டவோ, அருகதையற்றவள் அடியாள் இந்த
மதுராபுரி புலைச்சேரியில் வசிப்பவள், என் தாய் விப்பிரமாவதி,
என் தந்தை நந்தன். இவர்கள் எங்கள் வமிசத்திற்குப் பொருத்
தமாகிய சௌபரன் என்பவன் மகன் சாரங்கனுக்கு மணம்
முடிக்கக் கருதியதறிந்து புருஷர்களிடத்தில் விரக்தியுடைய
யான் வீட்டிற்குத் தெரியாமல் இவ்விடத்திற்குத் தனிமையாய்
வீணை யெடுத்துக்கொண்டு வந்தேன் என்று பிராம்மண
நிடம் கொண்டகாதலை மறைத்து, அன்பில்லா தவளைப்
போல பேசவே சோமசுவாமி, பெண்ணே உன்னைக்கண்டதும்
எனக்கு மோகம் மேலிட்டதால் காமத் தீ அதிஜ்வாலையோடு
வளர்ந்து கொண்டு என் மனத்தையும் உயிரையும் வாட்டு
கின்றது. நீ இணக்கமான பதில் கூறாவிடில் இன்னம் சற்று
நேரத்தில் நிச்சயமாக என் உயிர் மாய்ந்துவிடும். பிரம்ம
ஹத்திப்பழி உன்னைத்தான் வந்து சேரும் என குறையிரந்து
வேண்டினான். 
    
    மதங்கி மவுனம் சாதிக்கவே சோமசாமி எனுமவ்
வந்தணன் தவ நிலையில் உடையவன் என்பதும், மதங்கி
தீண்டத்தகாதவள் என்பதும் உணர்ந்து கட்டித் தழுவி
இன்பந் துய்த்துக்கொண்டு காம நூல் முறைப்படி கலவியிற்
கலந்து இன்புறுங்கால், மதங்கியின் தாய், தந்தையர்
பெண்ணைத் தேடி வருவதையறிந்து இவர்கள் இருவரும்
எதிர் கொண்டு மனக்களிப்புடன் வரவேற்கவே அவர்களும்
இவனோ பிராம்மணோத்தமனாயுள்ளான் ; கட்டுடம்பும்,
அழகும், தேஜஸும் கண்ணைப் பறிக்கின்றது நம் மகளுக்குப்
பொருத்தமானவனேதான். அத்துடன் தொழுங்குலத்தில்
அவதரித்த தூயவன், மகளுக்கு மணாளனானது நம் குலத்துக்கே
புனிதத்தை யுண்டாக்கியது என்று மன நிறைவடைந்து
நீங்களிருவரும் நம் வீட்டிற்கு வாருங்களென்று அழைத்துப்
போனார்கள்.

    "கற்ற நூற்பொருளு மொழுக்க முங்குலனுங் காட்சியுமாட்சியார் மரபு
    முற்றுமூழ்மறைப்ப வீழ்ந்தறிவழிந்து மொய்குழலொடுஞ் செலற்கெழுந்தா
    னெற்று நீர் வரைப்பிற்கல்வி மெய்ஞ்ஞான மிருந்தவந்திருந்து மந்திரங்கண்
    மற்றுமூழ்மாற்றும் வலியிலதாகும் வலியது வலிய தாமதுவே"

இந்த அந்தணனாகிய சோமசுவாமியின் கல்வி, ஞானம்,
குலம், ஒழுக்கம், எல்லாம் மாறுபட்டு, தவத்தையும் மறந்து
அவர்களுடன் கலந்து உறவாடிச் சென்றானென்றால், ஊழ்வினை
யின் வன்மை எத்தன்மைத்தென்று அறியலாம்.  "ஊழிற்
பெருவலியாவுள"

    "காமத்தாலிந்திரன் கருத்தழிந்தனன்
    காமத்தாலி ராவணன் கலக்கமுற்றனன்
    காமத்தால் கீசகன் கவலையுற்றனன்
    காமத்தா லிறந்தவர் கணக்கிலார்களே"


என்றபடி மயங்கி மது, மாமிசம், முதலான உண்ணத்தகாத
வைகளை உண்டு செய்யத்தகாதவைகளைச் செய்து சதா
காலமும் காம லீலையிலேயே ஈடுபட்டுக்கொண்டு அவர்கள்
ஆதரவிலேயே பன்னாள் வாழ்ந்து வரலானான். மதங்கியின்
தாய் தந்தையர்களுக்கு வயதாகி இறந்துவிட்டார்கள். இவர்
களிருவர்கள் சேர்க்கையால் பல குழந்தைகளும் பிறந்து
விட்டனர். அந்த மதுராபுரியில் பிழைக்க வழியின்றி, மனைவி
மக்களை அழைத்துக் கொண்டு ஊர்ஊராய்த் திரிந்து பிச்சை
ஏற்று மனைவி மக்களை போஷித்துக்கொண்டு ஊர்மீது ஊராக
வந்து கொண்டே இருந்தார்கள். 
    
    இதற்கிடையே தாம்பெற்ற
பிள்ளைகளும்,பெண்களும் வயது வந்துவிடவே இவை
களுக்குத் திருமணம் எந்தவிதமாக யாரைத் தேடிக்கொடுப்ப
தென்று வழிவகை தோன்றாமல்; தன் பிள்ளைகளையே தன்
பெண்களுக்குச் சேர்த்துவைத்து அவர்களையும் கெடச்செய்து
ஊர்ஊராய் அலைந்துவரும்போது இவர்கள் இருவருக்கும்
நரை, திரை மூப்படைந்து பிச்சைக்குப்போகச் சக்தியற்றும்
போனாலும் பிச்சை கிடைக்காமலும், பலநாள் பட்டினி கிடந்து
வந்து கொண்டிருக்குங்கால் முன்னை நற்பயன் சற்று இருந்த
தோடு தன் முன்னோர்களாகிய உத்தம தவசிரேஷ்டர்கள்
புண்ணியமும் துணைகூட திருவாலங்காட்டினருகே வந்து
பிச்சை கிடைக்காமல் பட்டினியிருந்தான். அந்தப்பசியால்
இரவு தூக்கம் வராமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான்.

    இரவுபூராவும் விழித்திருந்து விடிந்ததும் சூரியன் உதய
மானான். அன்றையதினம் சோமனுக்குரிய (திங்கட்கிழமை)
வாரம். பசியால் தூக்கம் வராமல் கண்விழித்துக் கொண்டிருந்
தான். இந்நிலையில் மரணமும் சம்பவித்து இறந்துவிட்டான்,
இவன் உயிரை எமபடர்கள் கொண்டுபோய் எமனிடம் ஒப்பு
விக்க, இவனது பட்டியலைப் பாருங்களேன் என்றபடியால்
சித்திரகுப்தன் ஹே தருமபிரபோ! இவன் செய்துள்ள பாவங்
கள் எண்ணிலடங்காதவை. விழுப்பந்தரும் ஒழுக்கம்                        
உயிரினும் ஓம்பப்படுவதன்றோ சிறந்தது. மானங், குலம்,
கல்வி, வண்மை, அறிவுடமை, தானம், தவமுயற்சி,
தாளாண்மை, ஆகிய இவையனைத்தும் தேனின் கசிவந்த
சொல்லுடையளாய மதங்கியின்பால் சேர்ந்து கெட்டுத் தன்
மக்களையும் முறைதவறிக் கெடச்செய்தான். இவன் கொடிய
பாதகன். இதுவரை நம் உலகத்திற்கு இவ்வித வழக்கே
வந்ததில்லை எனலும், படர்களே இவனை கும்பீபாக நரகத்
தழுத்திச் சித்திரவதை செய்யுங்கள் என்று கூறிக் கொண்டிருக்
கும்போது சிவபெருமானால் அநுப்பப்பட்ட கணங்கள் போய்
சோமசுவாமியின்மீது பிணிக்கப்பட்டிருந்த பாசக்கயிற்றை
அறுத்துச் சிவலோகத்தில் சிவபெருமானிடம் சேர்ப்பிக்க,
அவனுக்கு அவர் மோக்ஷத்தைத் தந்தார்.

    இஃதறிந்து இயமன் சிவபெருமானிடம் சென்று இவன்
பாவஏட்டைப் படித்து, சுவாமி, அடியேனை இப்பணிக்கு நியமித்தருளி நான்
தவறுதலின்று அவரவர் செய்த பாவத்திற்குரிய தண்டனையைக்
கொடுத்தும், புண்ணியத்திற்குரிய சுகத்தையும் கொடுத்துக் கொண்டு
செவ்வனே செய்து கொண்டு வரும்போது  நீதி
நிருவாகத்தில் தேவரீர் குறுக்கிட்டால் அடியேன் எப்படி
நடப்பது என்று பிரார்த்திக்க, உனக்கு ஒரு பொதுவிதியமைத்துத்
தந்ததோடு ஒரு சிறப்பு விதியும் கூறியுள்ளோம் அதை
மறந்து விட்டனையோ? முன்னொரு காலத்தில் மார்க்கண்டனுக்
காகக் கூறியது நினைவில்லையா? எனலும் , இயமன் சுவாமீ
மார்க்கண்டர் தீமையே யுணராத தபோதனர் இவனோ கொடிய
பாபி எனலும், பெருமான் கூற்றுவனே கேட்பாயாக தேவர்
தம்மில் பனி தரு திங்கள் பேணிப் பகவனாகிய நாமே உயர்ந்த
வனென்பது உனக்குத் தெரியும் . வேட்டோர்க்கு இனிதரு 
விரதந் தம்முள் அதிகமாம் இந்துவாரம் என்பதறியாயோ!
இவன் நாம் உறையும் புனிதமாய திருவாலங்காட்டில் திங்கட்
கிழமை முழுக்க விரதமிருந்து கண்விழித்து விடிந்தபின் உயிர்
நீங்கினான். அந்தப் புண்ணியம் ஒன்றே போதாதோ?

மேலும் கேட்பாயாக என்று திருவாலங்காட்டுத் தலப்
பெருமையை இறைவனே இயமனுக்குக் கூறியருளுகின்றார்.

    “அஞ்சனமிடற்றோன் வடவனத்தடைந்த பெருமையு மாற்றியநோன்பும்,
    வஞ்சமற்றெமக்கே யடிமையாயதுவு மறந்து நீ புரி யபராதந்தஞ் செய்தனைப் பொறுத்தோம்"

என்று கூறி மேலும்.

    “ஆடலாற்பயத்தான் மாயையாலிரப்பாலயர் வினாலவ்விடைப் பயின்றார்க்
    கூடலாற் காமக்குறியினான் மற்றோர் கொள்கையாலாயினுங் குயிலின்
    பாடலாராலவனத்திடை யடைந்தார் பயிற்றிய தீவினை முற்றும்
    வீடலானவர் பால்வெய்ய தூதுவரை விடாதுமேன்மை யரிவரென்றே”

என அருளிச் செய்து மேலும்,

    "புங்கவ னாலவனத் திடைமேவும் புனிதனை யனுதினம் போற்றி
    யங்கதின் மேவும் விலங்குபுட் கிருமியலர் தரு கொடி முதலனைத்து
    மங்கலமாய நம்முருவென்றே மதித்து நீ மருவுதியென்று"

இயமனுக்கு விடை கொடுத் தனுப்பினார் சிவபெருமான்.

    இச்சருக்கத்தில் நூலாசிரியர் மதனனூல், காமசாத்திரம்,
பெண்களின் அழகு முதலான அலங்காரங்களில் இன்பத்துப்
பாலில் கண்டபடி பல பாடல்கள் பாடியுள்ளார்.

இத்தலத்தில் ஒரு தினம் தங்கி பட்டினிகிடந்து மாண்டவன் சோமசாமி

    "சோமச்சாமி வெந்தீமை நயந்தவன் வடவனத்தொருனா
    ளொன்று மங்கதற்கே யுயர்தி யுற்றானே லிப்பதிப் பெருமை யாருரைப்பார்''

மார்க்கண்டேய முனிவர் சஹஸ்திரா நீக அரசனுக்கு அருளுகிறார்

    “பாய்திரையுடுத்த ஞாலமீதந்தப் பதியெனப் பதியிலையதுபோ
    லாய்தரு நிருத்தமூர்த்தி போன் மூர்த்தி யகலிடத்தில்லை யாலலங்கி
    வேயணி முத்தி தீர்த்தமேபோல வியனிலத்தில்லையிம் மூன்று
    வாய்தரப்பரமன் வழங்கிய தாகு மற்றவன் வடிவமாய் வயங்கும்''

என்றும், இங்கு வசித்தோர், வழிபட்டோர், விரதமிருந்தோர் ,
தவமாற்றினோர், தான தருமங்கள் செய்தோர்,
வழிநடையில் இளைப்பாறினோர் முதலிய அனைவர்களும், நீண்ட
ஆயுளும், நிறைந்த செல்வமும், நன் மக்கட்பேறும் பெறுவர்
இது சத்தியம், சத்தியம், என்று கூறினார். மேலும்,

    “தீர்த்தமதிற் றிலதமெனக்கங்கை முதற்படிந்திடுஞ் சென்றாடு தீர்த்தம்
    மூர்த்திகளி னுவமையிலாத் தேவர்சிங்க நாயகனே முதன்மையாகும்
    நாற்றிசையில் தலங்களெனு ஆயிரத்தெண்பதிகள் தனை நவிற்றி நின்று
    போற்றி செயும்போதெல்லாம் புதிதிதுவே பழசையெனப் புகலும் வேதம்" 

என்று சஹஸ்திரா நீக அரசனுக்கு மார்க்கண்டேய முனிவர்
பிரான் அருளிச் செய்தார்.

 
            முற்றும் .

Related Content