logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

நடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

இயற்றியவர் திருவாசக ரத்னம் சிவ ஸ்ரீ தத்புருஷ தேவநாம  இராம . மாணிக்க வாசகன்  அவர்கள்
        
சோதியா யெவர்க்கும் தொடர்வரி தாய
    துரியனே பெரியமா லறியாச்
சுடர்மறை புகழும் துணைவனே எனது
    தொடர்வினை அறுப்பதோர் தொடர்பே

பாதிமா லுருவிற் படர்தரு மேனிப்
    பவழமே தவளநீ றணிந்த
பண்பனே பாச நாசனே அடியார்
    பரவுதற் கெளிவரும் பரமே

ஏதிலார் புரமூன் றெரியெழச் செய்த
    ஈசனே மாசிலா மணியே
ஏதுமொன் றறியா ஏழைசொல் நினது
    எழிற்சபைக் கேறுநாள் எந்நாள்

ஆதிநா யகியென் அம்மைகண் குளிர
    அரியதோர் தாண்டவம் புரியும்
ஆரருட் கருணை அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே.   (1)

நாபிதன் கீழே பிருதிவி தானே
    நலமுறு கிழங்கென மற்றை
நாடிரு பத்து மூன்றுதத் துவமும்
    நாலிரண் டங்குல நாளம்

மேவமற் றதிலொன் பதுதொளை முட்கள்
    விரவுகீழ் மாயைகள் முடிச்சேழ்
வித்தையுஞ் சுத்த மொடுபுற விதழெண்
    வித்தியே சுரரக விதழாத்

தூவெழி லெண்ணெண் கேசர மீசர்
    துகளில்சா தாக்கிய மாக,
துணைதரு சத்தி பொகுட்டென வைம்பத்
    தொருவிதை சிவமெனச் சூழ

ஆவிசே ரிதய தாமரை யதனில்
    அந்தரி யாகபூ சைகொள்
ஆதிநா யகனே அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற்றருளே.   (2)

தாணுவே நினது தாண்டவம் காணத்
    தலையரிந் தெரியினி லிட்டுத்
தவமிகப் புரிந்த பதஞ்சலி முனிவன்
    தாள்தொழத் தகுதியொன் றில்லை

சேணுயர் காவிற் றிகழ்மலர் கொள்ளத்
    திறல்மிகு புலியுருப் பெற்றுத்
தினந்தினம் பூசை செய்தவி யாக்ரன்
    திருவடி பணிதலும் இல்லேன்

மாணுறு மரச போகம தெல்லாம்
    மறந்துநின் மலரடி பேணி
மாதவம் புரிந்த விரணிய வர்மன்
    மகிழ்ந்துசெய் திருப்பணி மகிழும்

ஆணையே நினது அடியிணை மறவா
    அன்பெனக் காகவந் தருளாய்
ஆதியே தில்லை அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே   (3)

பாரினில் ஒருவர் துன்புறு காலை 
    பார்த்துள மிரங்கிமற் றொருவர் 
பயப்பட வேண்டாம் யானுள னென்று
    பரிவுறக் கூறுமவ் வேளை

யாரெவ ரேனும் இயல்வலக் கரத்தை
    இதயமீ துற்றிட வைத்து
இயம்புவ ரீதுல கியற்கையே யாகும் 
    இச்செயற் குரியகா ரணமும்

பூரண மாகும்  தில்லைமன் றெங்கும்
    பொருந்திய இதயமே யதனால்
பூதலத் துள்ளார் துன்பங்கள் யாவும்
    போக்கிடும் புனிதனீ யன்றோ

ஆரெயில் உடைய அவுணர்கள் புரமூன்
    றழிந்திடக் குறுநகை புரியும்
ஆரண முதலே அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே.   (4)

மண்ணகத் திங்கண் வாழுமா றறியேன்
    வல்வினை வந்துவந் தலைப்ப
மனத்தொடு காயம் வருந்தியே திரிந்தேன் 
    மாற்றிடும் வகையறி யேனென்

புண்ணிய பாவக் கணக்கெலாம் பார்த்துப்
    புலையனேன் தனைவெறுக் காமல்
போதுறும் அறவை பாவமென் றிரங்காய்
    போதுநான் பட்டன வெல்லாம்

எண்ணிய எண்ணம் யாவும்நீ அறிவாய்
    ஏகனாய் உன்னடி கூட
இன்னமும் காலம் தாழ்த்திட வேண்டாம்
    எந்தையென் பிழையெலாம்  பொறுத்து

அண்ணலே நின்றன் அடிமலர் தந்தே
    ஆண்டருள் புரிந்திட வேண்டும்
ஆதியே தில்லை அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே  (5)

பத்தியால் நினது திருவடி பணிந்து
    பனிமலர் கொய்துனை நித்தம்
பரவிடும் அன்பர் மகிழ்ந்துறை கின்ற
    பதிகளும் சென்றுநா னறியேன்

துத்தியஞ் செய்து மனமது கரையச்
    சுருதியா கமநெறி துலங்கேன்
சுகந்தரு யோக விதம்பல வறிந்து 
    துய்யநின் மலரடி கூடிச்

சித்தம தடங்க வழியிலை நாளும்
    தீவினை பலப்பல செய்து 
சிறிதுமெய்ஞ் ஞான நாட்டமி லாமல் 
    திரிந்தனன் யானினி யேனும் 

அத்தநின் னடியார் அருட்குழாம் புகுத
    அருள்செய வேண்டுமென் னமுதே
ஆதியீ றறியா அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே    (6)

துடியினால் நின்னைத் தொழுமடி யார்க்குத்
    துரிசறு ஞானமுண் டாக்கித்
துலங்குசீ ரபயம் தோற்றிய பிறவித்
    துன்பறக் காத்துமும் மலத்தைச்

சுடுவதோர் ஞான வழலினாற் சுட்டும்
    துணைகழல் ஊன்றியிவ் வுலகம் 
தோன்றிடா வண்ணம் ஆகவே மறைத்தும் 
    சூழ்மறை யார்கழல் எடுத்தே    

நெடியபே ரின்ப நிழலுற மகிழ 
    நீடருள் கொடுத்துமிவ் வைந்து
நிகழருட் கருணை ஆடலை நினைந்து
    நித்தமும் துதிசெய நல்காய்

அடியுநீள் முடியும் அரியயன் தேட 
    அழற்பெருஞ் சோதியாய் நின்ற
அமலனே தில்லை அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே     (7)

சிதம்பரம் போக வேண்டுமென் றெண்ணும்
    சிந்தையே சிறந்தநற் சரியை
திகழ்தரு ஞானத் திருநடங் காணச்
    செல்வதே சிறந்தநற் கிரியை 

பதந்தரு மாடல் காண்பதே யோகம்
    பக்தியில் விளைந்தவப் பரதம் 
பணிந்தரு ளாரப் பருகியா னந்த
    பரவச மாவதே ஞானம்

இதந்தரு முத்தி உலகம ததனை 
    எய்தினும் எய்துறா இன்பம்
எந்தையே நினது தாண்டவம் காண
    எய்திடும் இருவினை தனக்கே

அதந்தரு மடியார் நடுவுளே இருக்கும்
    அருளது பெறுகவென் றருளாய்
ஆரண முதலே அம்பல வாணா
    ஆரெனக் குறவுமற் றருளே    (8)


    திருச்சிற்றம்பலம் .

 

Related Content