logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

இயற்றியவர் திருவாசக ரத்னம் சிவ ஸ்ரீ தத்புருஷ தேவநாம  இராம . மாணிக்க வாசகன்  அவர்கள்

சீரார்ந்த செல்வத் திருமாலும் நான்முகனும்
ஏரார்ந்த வானத் திமையோரும் - சார்வரிதாய்
ஆறாறுக் கப்பால் அகிலாண்ட காரணமாய்
வேறாகா நித்த விழுப்பொருளாய்ப் - பேறுதவும்
சுத்தபரி பூரணமாய்த் தூவெளியில் சத்தாகிச்     (5)

சித்தாகி யானந்தத் தேனாகி - வித்தகமாய்
நீக்கமற வெங்கும் நிறைந்த ஒருநிமலன்
ஆக்குமுல கெல்லாம் அகமகிழ - நோக்கமிக
உற்ற பதஞ்சலியும் ஓங்குபுலிக் கால்முனியும்
பற்றுந் தவத்தின் பயனுகர - நோக்கியே    (10)

ஆதி மறையும் அருளா கமவிதியும்
ஓது புராண வுபநிடத - போதமெலாம்
சாற்றும் பரம ரகசியமும் தத்துவங்கள்
போற்று மிதய புரமாகி - ஏற்றமுறும்
ஞாலத் தலங்கள் அனைத்திற்கும் நாயகமா    (15)

மூலத் தலமாகி முன்விளங்கிக் - கோலமுடன்
மன்னுதிருச் சிற்றம் பலத்தரிய மந்திரங்கள்
துன்னுமணிப் பீடத்தில் தோன்றிமிக - இன்னருளே
செய்யுங் கருணைத் திருமேனி தான் கொண்டு
மெய்யொளிசே ரோங்கார மேவுமொரு - துய்யதிரு   (20)

வாசி யமைய மருளார் முயலகன்மேல்
ஆசில் திரோத மருள்மகரம் - தேசுறவந்
தங்கமைய ஊன்றியே அஞ்சிலம்பு கொஞ்சியிடும்
செங்கமல மன்ன திருவடியும்-புங்கவர்கள்
ஆராய்ந் துவமிக்க வொண்ணா அழகியன்ற    (25)

சீர்சதங்கை காப்பு செறிதண்டை- சார்ந்தவொலி
நீடும் அருளே நிலைதொழிலாக் கொண்டயன்மால்
தேட எடுத்தமலர்ச் சேவடியும் - நாடுமெழில்
தூய இருதுடையிற் சுற்றி மடித்துடுத்த
ஆயு மொருபுலித்தோ லாடையும் - ஆயிடையிற்   (30)

பொங்கரவு தந்த பொருவில் மணிவரிசை
தங்கு மரைஞாணும் சாற்றுமறை - அங்கமதில்
முந்திவரு முப்பொருளா முந்நூல் கிடந்திலங்கு
மந்தி நிறத்தி னணிமார்புஞ் - சந்தமுறத்
தெள்ளும் நவரத் தினவளையு மோதிரமும்   (35)

உள்ளும் யகரத் துடன்றிகழக் - கள்ளவிழ்பூந்
தாமரை போற்சிவந்த தண்ணா ரபயகரம்
சேமமுறக் காக்குந் திறங்காட்டத் - தாமடியார்
வீங்குஞ் சமுசார வேலைக்குள் வீழ்ந்தன்று
தாங்குங் கருணை தழைத்தினிய - பாங்குடனே   (40)

பற்றி எடுத்துப் பழவினைகள் வாங்கிமிகு
முத்திக் கரையுதவ முன்வீசிச் - சுற்று மணிக்
கங்கணமு மோதிரமுங் காண்பார் மனங்கவர்ந்து
தொங்கு மபிநயத்திற் சூக்குமமாய் - அங்ஙண்
வகரம் மறைந்த வடிவாம்பல் போன்று    (45)

திகழும் இடக்கரமும் செய்ய -புகழுடைய
பாணினியுஞ் செந்தமிழ்சொற் பண்ணவனுஞ் சற்குருவாய்ப்
பேணும் துடியதிர்த்துப் பேருலகை- மாணவே
ஆக்குஞ் சிகரம் அமர்மேல் வலக்கரமும்
காக்கு முயிர்க்குக் கருதுசுகம் - நோக்கியொரு   (50)

சங்காரஞ் செய்யுந் தழல்சேர் நகரத்தால்
மங்காமேல் வாம மணிக்கரமும்- கங்கணமும்
அக்கமணி மாலை அவிரொளிசெய் முத்தாரம்
தக்கநவ ரத்தினத் தாழ்வடமும் - மிக்க
வயிரமணித் தொங்கல் மகரகண்டி யோடினிய   (55)

செயீர்தீ ரேகமணிச் சீரழகும் - பயிலுந்தம்
பத்த ரிடர்களைவான் பால்புரையும் வெண்ணீற்றை
உத்தூ ளணஞ்செய் தொளிமிளிரும் - வித்தகப் பொன்
மேனி யழகும் விரிகடல்வா யன்றெழுந்து
வானவர்க ளஞ்ச வருவிடத்தைத் - தானமுது   (60)

செய்துலகைக் காத்த தியாகந் தனைக்காட்டும்
மைதிகழுங் கோல மணிமிடறும் - மெய்வணங்கும்
ஆராத அன்பர் அமுத மொழிகேட்கும்
ஏரார் செவிக ளிரண்டிலும் - பேரான
சாமம் பயிலுந் தனிப்பொற் குண்டலங்கள்   (65)

தாமுஞ் சிறிதே தகைந்தாடச் - சேமமுறச்
சென்று தொழுமடியார் சித்தங் களிகூர
என்று வந்தீ ரென்னு மெழிற்குறிப்பும் - நன்றமையப்
பௌவத் தெழுமுத்தின் பல்சிறிது முன்தோன்றக்
கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்-செவ்வியதோர்   (70)

குன்றுதவும் பச்சைக் கொழுந்தேன் சுவைபருகா
னின்றகளி வண்டி னிகர்விழிகள்- துன்றவிடை
நாடுந் துலை போலும் நாசிக்கு மேல் வளைந்து
ஓடும் புருவ முறநடுவிற்- கூடுமணக்
குங்குமத்தின் மேல் மூன்று கோடா மிளிர்ந்துவளம்   (75)

தங்குந் திருநீற்றுத் தாரணமும் - இங்கிதமா
யோங்கு நுதல்விழிமே லொண்வயிரப் பட்டையொளி
தாங்குங் கருணைத் தனிமுகமும் - நீங்கா
அரும்பாசந் தீர்க்கு மபிநயங்க ளுந்தும்
பெருங்கூத்தி னின்பப் பெருக்கால் - பொருந்தவே   (80)

ஆர்க்கு மரவ மரிய மணியுமிழப்
பூக்கு மலர்க்கொன்றை பொன்சொரியப் - பார்க்குமதி
ஆரமுது சிந்த அலைபுனலு முத்திரைப்பத்
தூர்வை யெருக்கிறகு தூமத்தஞ் - சேர்ந்திலங்கு
மின்போலுஞ் செய்ய விரிசடையும் வேரிமிகு   (85)

பொன்சேர் மணியிதழிப் பூந்தாரும் - நன்புகழின்
ஓங்கு மரியெடுத்த உற்பவங்க டோறுமிக
ஆங்காரங் கொள்ளு மமயத்தே - பாங்காகச்
சங்கரித்து வைகுண்டஞ் சார்வித் துலகுயிரைப்
பங்கமறக் காக்கின்ற பண்புணர்த்த- அங்கேனம்     (90)

முன்பாரை ஏந்தும் முனைமருப்புங் கூர்மவோ
டென்பு புனைந்த எழில்வடமும் - முன்பொலியச்
செம்பொற் கமலத் திருமகளு மிந்திரையும்
பைம்பொற் கவரி பணிந்திரட்ட - வம்பொற்
சதங்கை சிலம்பொடு தண்டையங் காப்பு   (95)

விதம்படு சந்த மிழற்றப் - பதந்தரு
செங்கமல மன்ன திருவடிக ளோரிரண்டும்
பொங்குமிள ஞாயிற்றைப் போல்விளங்கத்- தங்கத்தால்
ஆன சரிகை அமைந்தசெம் பட்டாடை
தானுடுத்து நின்ற தனிவனப்பும் - வான்தோன்று    (100)

மின்னிடையில் வண்ணமணி மேகலையு முந்தியின்மேல்
மன்னும் படிபோல் மடிப்புகளும் - உன்னரிதாம்
ஞான மயமாகி நண்ணு மிருகொங்கை
மேனிலவு முத்துவிரிவடமும் - ஆனவிருள்
மாயவினைச் சேற்றில் வருந்தா வகையெடுத்துத்    (105)

தூயவருள் நீராட்டித் தூய்மை பெறத் - தாயினுமுன்
பேதித்து நம்மை வளர்த்துப் பெருநலஞ்செய்
ஆதி வலக்கரத்தி லங்கழுநீர்ப் - போதலரும்
ஏர்திகழும் பைந்துடையிற் சேர்த்த இடக்கரத்திற்
சீரார் நவரத் தினவளையும் - நீருதவு    (110)

சங்கு மணிக்கழுத்திற் சார்மங் கலநாணும்
பொங்கொளிசேர் முத்தான புன்சிரிப்பும் - துங்கப்
பசுந்தளிர் மேனியும் பன்மா, மணித்தோடு
இசைந்த செவிக ளிரண்டும் - திசைவிளங்கு
பொன்மன்ற மென்னுமோர் பொற்றா மரையதனில்    (115)

உன்னருநற் கூத்தா முறுதேனை - மன்னியே
உண்டு மகிழும் உயர்வண்டு போன்றிலங்கு
கண்க ளிரண்டின் கருணையும் - தண்புருவ
வில்லிடையில் வைத்த மிளிர்குங் குமப்பொட்டும்
நல்லதிரு நீற்றின் நளினமொடு - செல்லும்   (120)

வெயில்மழுங்கச் செய்யும் மிகுவயிரப் பட்டை
பயிலும் நுதற்சுட்டிப் பாங்கும் - அயலே
மின்ன லுடன்தோன்று மேகத்தைப் போலணிகள்
துன்னுமெழில் நீண்ட சுரிகுழலும் - தன்னடியார்
வேண்டுவன வெல்லாம் விதித்தருளி நாட்டத்தால்   (125)

மீண்டுலகில் வாரா விழுச்செல்வம் - ஈண்டுதவ
ஆராத ஆசையும் ஆன்ற மகிழ்ச்சியொடு
பேரழகும் நீங்காப் பெருமாட்டி - ஈரேழ்
புவனங்கள் பெற்ற புதியளிளங் கன்னி
நவமுடைய நித்தியகல் யாணி - சிவகாம   (130)

சுந்தரியாள் காணத் துலங்குஞ் சதிலயத்தோ
டந்தர துந்துபிக ளார்ப்பமிகு - நந்தியுடன்
பானுகம் பன்பிருங்கி பாணனுயர் மாகாளர்
ஆன இசைமுழங்க அள்ளூறி - வானயன்மால்
இந்திரனு மேனோரும் எண்ணில் முனிவோரும்   (135)

முந்து மடியாரு முன்வணங்கச் - சந்தமறை
அத்தனைக்கும் வித்தாக ஆராய்வார் தம்மருந்தாய்
முத்தியிலுங் கிட்டா முழுவின்பஞ் - சித்திக்கும்
தெய்வ நடம்புரியும் தேவா சிதம்பரத்து
ஐயாபொன் னம்பலத்தெம் மாரமுதே - உய்வருளும்  (140)

அப்பா உனக்கே அடைக்கலமா யார்வமுடன்
செப்புந் தமிழைச் செவிமடுத்து - எப்போதும்
சிற்சபையைக் கண்டுன் திருவடியே சிந்திக்கும்
அற்புடையார் கூட்டத் தவர்நடுவில் - பொற்புறவே
வந்தென்னை யாண்டு மலவினைகள் மாற்றியுறு   (145)

சிந்தை மகிழச் சிவமாக்கி - அந்தமிலா
இன்ப வெளியில் இரண்டறவே நிற்கலந்து
அன்பமையு முத்தி யருள்.   (148)

    திருச்சிற்றம்பலம்

 
 

Related Content

நடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)