சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ விநாயகர் துதி (காப்பு)
அருளார் நடேச ரடிபோற்றி நல்ல
பொருளார் தமிழ்மாலை புனைந் திடவே
தெருளார் களிற்றண் ணல்திரு வடிகள்
மருளா வகைவாழ்த் திவணங் குதுமே
இதன்பொருள் : அருள்மிகுந்த நடராசப் பெருமானுடைய
திருவடி போற்றி. மெய்ஞ்ஞானப் பொருளை உடைய தமிழ்
மாலையைப் புனைந்து அணிவிப்பதற்காகத் தெளிந்த ஞானத்தை
அருளும் களிற்று அண்ணலாகிய விநாயகப் பெருமானுடைய
திருவடிகளைப் பிறப்பு இறப்புக்களான மயக்கம் நீங்கும் வண்ணம்
வாழ்த்தி வணங்குவோமாக
நூல்
பொன்னின் றதிரு வடிபோற் றியுறும்
என்னன் பையுமேன் றுகொளெம் மிறைவா
அன்னந் தருசே வடியா ளுடனே
பொன்னம் பலவா டல்புரிந் தவனே (1)
இ.ள்:- அன்னம் என்ற முத்தியை வழங்குகின்ற திருவடியை
உடைய சிவகாமி அம்மையுடன் பொன்னம்பலத்தில் திருநடம்
புரிகின்ற எம் இறைவனே! உமது பொன்போன்ற திருவடிகளைப்
போற்றி வணங்குகின்ற என்னுடைய அன்பையும் ஏற்றுக்
கொள்வாயாக!
ஆரா அமுதே அடியே னையுங்கண்
பாராய் இனியுன் பதமே புனையத்
தாராய் சிவகா மசவுந் தரிதன்
சீரார் மணவா ளசிதம் பரனே (2)
இ.ள். :- ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மையின் பெருமை
பொருந்திய மணவாளராகிய சிதம்பரேசனே, தெவிட்டல் இல்லாத
அமுதம் போன்றவனே, ஞானமில்லாத இந்த அடியேனையும்
திருக்கண்களால் நோக்கம் செய்தருளுக. இனி நற்கதி உண்டாகும்
பொருட்டு உனது திருவடியை எனது சிரசிலே அணிந்து
கொள்ளும்படி தந்து அருள்வீராக
சலம்பா டியமா யைதவிர்த் துனது
நலம்பா டிடவந் தருள்நான் மறையோர்
குலம்பா டிடவம் மைகுறிப் பறிந்தே
சிலம்பா டியவெங் கள்சிதம் பரனே (3)
இ.ள். :- நான்கு வேதங்களைப் பயின்ற மறையவர்கள்
திருச்சிற்றம்பலத்தினது மேன்மையைப் பாடானிற்ப, உயிர்கள்
சிரமமின்றி முத்தியைப் பெறவேணுமென்கிற எம்முடைய
தாயாகிய சிவகாமியம்மையின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து
பாதங்களில் சிலம்பு ஒலிக்கத் திருநடனம் செய்தருளும் எங்கள்
சிதம்பரேசனே! வஞ்சகம் மிக்க உலக மாயையை நீக்கிவிட்டு
உனது திருவருள் நலத்தைப் பாடும்படி நீ வந்து அனுக்கிரகம்
செய்வீராக.
பேசிப் பணிந்துன் அடிபே ணிநித்தம்
பூசிக் கவரம் தருவாய் புவிமேல்
நேசித் துமைகா ணநெடுந் தடந்தோள்
வீசித் திருநட் டம்விதித் தவனே (4)
இ.ள்.:- இந்தப்புவிமண்டலத்திலே உமையம்மை விரும்பிக்
காண நீண்ட பெருந்தோள்களை வீசி, உயிர்களுக்குப் போகம்
மோக்ஷங்களை விதித்துத் திருநடனம் செய்கின்ற பெருமானே!
உனது திருவடியை விரும்பித் தினந்தோறும் புகழ்ந்து பணிந்து
பூசிக்கின்ற வரத்தைத் தந்தருள்வீராக.
பின்னே ஒருதாய் வயிற்றிற் பிறவா
என்னா வியைக்காத் தருள்வாய் இறைவா
பொன்னா னதில்லைப் பொதுமே வினித்தம்
நன்னா டகஞ்செய் தருள்நா யகனே (5)
இ.ள் :- பொன் மயமான தில்லைப் பொதுவில் நாடோறும் நல்ல
நாடகத்தைச் செய்தருள்கின்ற எங்கள் தலைவனே! இனி ஒரு
தாய்வயிற்றில் பிறவாமல் என்னைக் காத்தருள் புரிவாயாக.
புவிமேல் அருள்எந் தைஇராம லிங்கக்
கவிவா னரியற் றமிழே கமழும்
பவியா தமலர்க் கழல்பற் றவருள்
குவியாக் கரம்வீ சியகுஞ் சிதனே (6)
இ.ள். :- குவிதல் இல்லாத திருக்கரத்தை வீசி ஆடுகின்ற
குஞ்சித பாதனே! பூமியில் உன் திருவருளைப் பெற்ற எம்
தந்தையாகிய இராமலிங்கக் கவிவாணருடைய தில்லைப் புராணம்
முதலிய தமிழ்ப் பாக்களின் மணம் கமழ்கின்ற, தோற்ற
முடிவில்லாத மலர் போன்ற உன் திருவடியைப் பற்றுவதற்கு
அருள் புரிவாயாக.
தாயே எனநின் றழுவார் தமக்கு
நீயே துமிரங் கிலைநீ தியதோ
வேயே மிகுதோ ளிவிரும் பநிதம்
தீயேந் திநடித் தருள்சிற் பரனே (7)
இ.ள். :- மூங்கில் போன்ற தோளை உடைய அம்பிகை
விரும்பும் வண்ணம் நித்தமும் தீயை ஏந்திக் கொண்டு
நடம்புரிகின்ற சிற்பரனே! தாயே என்று உன்னிடம் வந்து
அழுகின்ற அடியார்களுக்கு நீ கொஞ்சமும் இரங்காமல் இருப்பது
நீதியாகுமோ?
படிதா வியமால் பரவுங் கழலென்
முடிமீ துறவைத் தருள்வாய் முழுவெண்
பொடியா கியநீ றுபுனைந் துநிதம்
அடியார் வினைதீர்க் குமரு மருந்தே (8)
இ.ள். :- வெண்மையான திருநீற்றை மேனிமுழுதும்
புனைந்து, வருகின்ற அடியார்களின் வினையைத் தீர்க்கும்
அருமருந்தே! உலகைத் தாவி அளந்த திருமாலால் வணங்கப்
படுகின்ற உனது திருவடியை என் முடியிலே தங்கும்படி
வைத்தருள்வாயாக.
உன்னாற் குறையொன் றிலையுத் தமன்நீ
என்னாற் குறையெத் தனையுண் டெனினும்
மன்னா வதுமாற் றிடவல் லையன்றோ
தென்னா எனையாண் டசிதம் பரனே (9)
இ.ள் :- என்னை ஆட்கொண்ட சிதம்பரேசனே! உன்னால்
எந்தக் குறையும் இல்லை. ஏனெனில் நீ உத்தமன், என்னால்
குறைகள் அநேகம் உண்டு. இருந்தாலும் அக் குறைகள்
அனைத்தையும் நீ மாற்ற வல்லவனன்றோ? . ஆகவே எம்
குறைகளை நீக்கி அருள்புரிவாயாக.
ஊரா எனதுள் ளமுவந் திருக்க
வாரா யருள்ஞா னவரம் பினின்ற
பேரா ளரிரு வர்பிரி யமுறச்
சீரார் நடந்தந் தசிகா மணியே (10)
இ.ள்:- அருள் ஞான வரம்பில் நின்ற பேராளர் பதஞ்சலி ,
வியாக்கிர பாதர் இருவரும் பிரியப்படும் வகையில் புகழ்பெற்ற
தாண்டவத்தைத் தந்தருளிய சிகாமணியே! எனது உள்ளத்தை
ஊராகக் கொண்டு குடியிருக்க வருவாயாக.
இரவும் பகலும் அறவின் பவெளி
விரவும் அருள்ஞா னவிளக் கமருள்
அரவும் புலியும் அகலா மல்நடம்
பரவும் படிதந் தபரஞ் சுடரே (11)
இ.ள். :- பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகிய இருவரும்
அகலாதபடிக்கு ஆனந்த தாண்டவத்தை எப்போதும் தரிசிக்குமாறு
அருள்செய்த பரஞ்சுடரே! இரவும் பகலும் நீங்க இன்ப மயமான
பரவெளியில் விரவும்படி அருள் ஞான விளக்கத்தை அருள்வாயாக.
அதுவென் றறியா வகைநின் றநீஇங்
இதுவென் றறியும் படியெய் தியவா
மதுவென் றமொழி மலைவல் லியொடே
பொதுவின் பநடம் தருபுண் ணியனே. (12)
இ.ள். :- தேனை வென்ற மொழியை உடைய மலை
வல்லியாகிய சிவகாமியம்மையோடு பொது என்னும்
சிதம்பரத்திலே இன்ப நடம் தருகின்ற புண்ணியனே! யாராலும்
அறிதற் கரிதாய் 'அது' என்று சொல்லும்படியாக நின்ற நீ, எமக்கு
இரங்கி வந்து 'இது' என்று கூறும்படிப் பக்கத்தில் வந்து உருவத்
திருமேனி கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கும் எந்தையே!
உனது கருணையை என்னென்று சொல்வது.
அஞ்ஞா னமெலா மறவாழ் வுதரும்
மெஞ்ஞா னியர்சே வைவிதித் தருளாய்
செஞ்ஞா யிறுபோன் றொளிர்சிற் சபையில்
விஞ்ஞா னநடம் புரிவே தியனே (13)
இ.ள். :- சிவந்த ஞாயிறு போன்று ஒளி திகழும் ஞான
சபையிலே மேலான ஞான நடம்புரிகின்ற வேதியனே!
என்னிடத்திலே அஞ்ஞானம் எல்லாம் நீங்கும் வண்ணம் பேரின்ப
வாழ்வைத் தரும் மெஞ்ஞானிகளுக்குத் தொண்டு செய்ய எனக்குக்
கட்டளையிட் டருள்வாயாக.
ஆமா றெனையா ளுவதன் றியயல்
போமா றுவிடேல் புகலா னவனே
வேமா றெழுசா பவினை தொலையத்
தூமா மதிசூ டியசுந் தரனே (14)
இ.ள். :- அங்கம் வேகுமாறு எழுந்து துன்புறுத்துகின்ற
தக்கனது சாபம் விலகும் வண்ணம் சந்திரனைத் தலையில் சூடிக்
காத்தருளிய சுந்தரனே! நான் நற்கதியை அடையுமாறு என்னை
ஆண்டு கொண்டருள வேண்டும். அவ்வாறன்றி அயலே
போகும்படி என்னை விட்டுவிடாதே. நீ எல்லோருக்கும்
புகலிடமானவன்.
ஏறும் வினைகோ டியிருப் பினுமென்
தேறும் வகைநீ சிறிதே யருளின்
மாறும் இதையிங் குமறுப் பவர்யார்
கூறும் உயர்ஞா னகுண நிதியே (15)
இ. ள். - உயர்ந்த ஞானத்தையே குணமாக உடைய
செல்வமே! என்னிடத்திலே வந்து சேருகின்ற வினை கோடி
இருந்தாலும் என்ன?! நான் உருப்படியாகுமாறு நீ சிறிது
அருள் செய்தால் போதும். அத்தனை வினைகளும் மாறிவிடும்.
இதை இங்கு மறுப்பவர் யார்?
அவமே புரியும் அகமா யைவிடத்
தவமே புரியும் தனிவாழ் வையருள்
நவமே மிகுஞா னநடம் புரியும்
சிவமே நடரா சசிதம் பரனே (16)
இ.ள். - பிரணவநாதம் மிகும்படி ஞானநடம் புரிகின்ற
சிவபெருமானே! நடராஜ மூர்த்தியே! சிதம்பரேசா! அவத்தொழில்
மிகுந்திருக்கும் மாயை கலந்த வாழ்க்கையை விட்டுவிட்டுத்
தவத்தையே செய்யும் ஒப்பற்ற வாழ்க்கையைத் தந்து அருள்வாயாக.
துணையே துமிலேன் துயர்தீ ரவொரு
கணமே னுநினை கருணா கரனே
பணமே வுபதஞ் சலிபா டநித்தம்
குணமே வநடித் தருள்குஞ் சிதனே (17)
இ.ள். :- கருணாகரனே! படம் விளங்குகின்ற பதஞ்சலி
முனிவர் பாடல்களைப் பாட, நாடோறும் உயிர்களுக்குச்
சிவஞானமாகிய குணம் உண்டாகும்படி நடித்தருள்கின்ற குஞ்சித
பாதத்தை உடையவனே! அடியேன் யாதொரு துணையும்
இல்லாதவன். எனது துன்பங்கள் நீங்க வேண்டுமென்று ஒரு
கணமாயினும் நீ நினைப்பாயாக.
வீடொன்ற வந்தார் வினைதீர்த் தருளின்
கேடொன் றும்வரா திதுகேட் டருள்நீ
பாடொன் றுவியாக் கிரபா தனுக்கே
நாடொன் றநடித் தருள்நா யகனே (18)
இ.ள்- பக்கத்திலே ஒன்றிய வியாக்கிரபாத முனிவனுக்காக
இந்த நாட்டிலே வந்து நடித்த அருள் நாயகனே! உமது
திருமன்றத்தை வந்து அடைந்தார்களது வினையைத் தீர்த்து
அருள்புரிந்தால் உனக்கு ஒரு கேடும் வராது. இதனைக் கேட்டு
அருள்வீராக.
நல்லார்க் கருள்செய் கையின்னா டறியும்
பொல்லா தவெமக் கருள்பூ ரணனே
எல்லா மறவந் தவிர ணியனுக்
கெல்லா மருள்செய் தவிக பரனே (19)
இ.ள். :- எல்லாப் பற்றுக்களையும் விட்டுவிட்டு வந்த
இரணியவர்மனுக்கு எல்லா நலன்களையும் தந்தருளிய
இகபரமாகிய எந்தையே! நீர் நல்லவர்களுக்கு அருள்செய்தலை
இந்த நாடு அறியும்; அது பெரிதன்று. பொல்லாத எங்களுக்கு
அருள் செய்து வாழ்விப்பாயாக . குறைவில்லாத பூரணனே!
பேறா நினதாள் பிரியா மலன்பு
மாறா திருக்க வரம்தந் தருள்வாய்
ஆறா றுகடந் தவருள் வெளியில்
வீறா னநடம் புரிவித் தகனே (20)
இ.ள். - தத்துவங்கள் முப்பத்தாறையும் கடந்த அருள்
வெளியில் வெற்றித் திருநடனம் புரிகின்ற வித்தகனே!
உன்னுடைய திருவடியிலே பிரிவில்லாத மாற்றமில்லாத அன்பு
உண்டாகும்படி வரத்தைத் தருவீராக. அதுவே எமக்குப் பேறாகும்.
வேம்பா கியவாழ்க் கைவினை யலைப்பத்
தேம்பா திருக்க உயர்தீக் கையருள்
ஓம்பும் கவிநல் கியுமா பதிபால்
சாம்பன் தனையாண் டசதா சிவமே (21)
இ.ள். :- அகச்சந்தான குருவாகிய உமாபதி சிவாச்சாரி
யாரிடத்து ஆன்மாவைப் பிறவாமற் காப்பதாகிய ஒரு கவியை
நல்கிப் பெற்றான் சாம்பன் என்னும் பக்தனை ஆட்கொண்ட
சதாசிவ மூர்த்தியே! வேம்பைப் போன்று கசப்பான உலக
வாழ்வில் வினை துன்புறுத்த அதனால் வாடாமல் இருக்கும்படி
உயர்ந்த தீக்கை தந்து அருள்வாயாக.
ஆய்ந்த மலர்கொண் டடிபோற் றுநலம்
வாய்ந்த தொருமங் கலவாழ் வையருள்
ஏய்ந்தன் றுலகோர் இறைஞ்சும் படிநற்
சேந்தன் களியுண் டசிதம் பரனே (22)
இ.ள். - உலகத்தவர் திருவருள் பொருந்த வந்து
வணங்கும்படி நல்ல பக்தனாகிய சேந்தனாரிடத்துக் களியை
உண்ட சிதம்பரனே! நல்ல மலர்களைக் கொண்டு உன்
திருவடியைப் போற்றுகின்ற நலம் வாய்ந்த ஒப்பற்ற மங்கலமான
வாழ்வை எமக்குத் தருவாயாக.
எந்தா யிடர்தீர்த் தருளென் றுநம்பி
வந்தார்க் கிரங்கி ஒருவார்த் தையருள்
நந்தா வழல்மூழ் கிநணு கெனவே
தந்தா ணிழல்தந் ததயா பரனே (23)
இ.ள். - திருநாளைப் போவாரென்னும் நந்தனாரை இந்த
அக்கினியில் மூழ்கி வருக என்று உத்தரஞ் செய்து தனது திருவடி
நிழலைத் தந்த தயாபரனே! எந்தையே ! எமது துன்பத்தை
நீக்கியருள் என்று உன்னை நம்பி வந்தவர்க்கு இரங்கி ஒரு
வார்த்தையேனும் வழங்கியருள்வீராக.
நாயேன் பலசென் மம்நயந் துலகில்
ஓயா மலலைந் ததுபோ துமையா
ஆயா துபன்றிக் குருளைக் குமன்று
தாயாய் முலைதந் ததயா பரனே (24)
இ.ள். - தாயை இழந்த பன்றிக் குட்டிகள் தவிப்பதைக்
கண்டு எந்த ஆராய்ச்சியும் இன்றி அவற்றின் துன்பத்தை நீக்க
வேண்டித் தாய்ப் பன்றியாகச் சென்று பாலூட்டிய தயாபரனே !
நாயேன் பலப்பல பிறவிகள் எடுத்து ஓயாமல் அலைந்தது
போதுமையா; இனிப் பிறவா வரம் தருவாயாக.
தாபா தியறத் தமியே னிடுமித்
தீபா திகளா னசெழுங் கவிகொள்
கோபா திகொண்ட கொடியோ னுமுய்ய
மாபா தகந்தீர்த் தவரோ தயனே (25)
இ.ள். :- கோபம் முதலான துர்க்குணங்கள் கொண்ட
கொடியவனும் உய்யும்படி அவன் செய்த மாபாதகங்களைத் தீர்த்த
வரோதயனே ! எனது தாபம் முதலான துன்பங்கள் நீங்க
அடியேனால் நினக்குச் சமர்ப்பிக்கப் படுகின்ற தீபம் முதலான
சோடசோபசாரங்களாகும் இச் செழுமையான கவிகளை ஏற்றுக்
கொள்வீராக.
நீர்தந் தகுமிழ் நிகர்வாழ் வினித்தம்
சீர்தந் திடுநின் புகழ்செப் பவருள்
ஊர்தந் தொளிதந் துயர்தத் புருடப்
பேர்தந் தெனையாண் டபெருந் தகையே (26)
இ.ள். - தேகம் நீங்கியவுடன் ஆன்மாவிற்கு ஊரும் பேரும்
இல்லாமல் அநாதையாக இருக்கும். என்னை அப்படி விடாமல்
எனக்குத் தத்புருட தேவன் என்னும் (தீட்சா நாமம்) பேர் தந்து
அறிவைத் தந்து. உனது திருவடியாகிய ஊரைத் தந்து
ஆண்டுகொண்ட பெருந்தகையே ! நீர்க்குமிழி போலும்
நிலையில்லாத உலகவாழ்வில் தினந்தோறும் உனது பெருமை
மிக்க புகழைப் பேசும்படியாக அருள்புரிவீர்.
பாங்கா னமனார் உயிர்பற் றவரின்
ஈங்கா ரெனைக்காப் பவரிங் கிரங்காய்
நீங்கா வருள்தில் லைநெடு வனத்துள்
ஓங்கா ரநடம் புரிஉத் தமனே (27)
இ.ள். - அருள் நீங்காமல் விளங்கும் நெடிய தில்லை வனத்தில்
ஓங்கார நடனம் செய்கின்ற உத்தமனே! மிகவும் பாங்காக உயிரைப்
பற்றவரும் எமன் வந்தால் இங்கே எனைக் காப்பவர் யார்? நீர்
இரங்கி அருள்புரிவீராக.
வாடும் படிநின் றடுவல் வினைகள்
ஓடும் படிநல் லுபதே சமருள்
நாடும் படிமா லயனும் மறையும்
தேடும் படிநின் றசிதம் பரனே (28)
இ.ள். - உலகவரால் விரும்பப்படும் திருமாலும் பிரமாவும்
வேதங்களும் தேடும்படி ஒளியாக நின்ற சிதம்பரனே ! எனது
உள்ளம் வாடும்படி வந்து தாக்குகின்ற வல்வினைகள் ஓடும்படி
நல்ல உபதேசத்தை நல்குவீராக.
தகுமா றறியேன் நினதா ளையன்றிப்
புகுமா றறியேன் வினைபோக் கியருள்
மிகுமா தவர்சூ ழவெட்ட வெளியில்
மகுடா கமநட் டமகிழ் பவனே (29)
இ.ள். :- உயர்ந்த தபோதனர்கள் சூழ வெட்ட வெளியான
சிதாகாசத்திலே மகுடாகமத் திருநடனத்தை ஆடி மகிழ்பவனே!
தக்க நெறியைக் கண்டறியாதவன்; உன் திருவடியைத் தவிர வேறு
எங்கும் புகுதற்கறியாதவன், என்னுடைய வினையைப் போக்கி அருள்வாயாக
தீதா டியவல் வினைதீர்த் தருளாய்
தாதா டியதார்த் தமிழ்நா வலர்பால்
ஈதோ நுமக்கன் றெழுதோ லையென
வாதா டியஞா னவயோ திகனே (30)
இ.ள்.- தேன் சிந்துகிற மாலை அணிந்த தமிழ் நாவலராகிய
சுந்தரமூர்த்தி சுவாமியிடத்து, இதோ உன் பாட்டன் எழுதிய
வோலை என்று கூறி, வாதாடிய ஞான வயோதிகனே! தீமை
மிகுந்த வல்வினையைத் தீர்த்து அருள்வாயாக
ஏலா தனசெய் யுமெனை யிகழேல்
ஆலா லமயின் றவரும் பொருள்நீ
மாலா னவிரா மன்மயக் கமற
மேலா கியகீ தைவிரித் தவனே (31)
இ.ள். :- மாயையினால் மனம் கலங்கியிருந்த சீதை
மணாளராகிய இராமனுக்கு மேன்மையான சிவகீதையை
உபதேசித்தவனே! பொருந்தாத செயல்களைச் செய்யும் என்னை
இகழ்ந்து விட்டுவிடாதே. நீ ஆலகால விடத்தை அருந்தியவன் அன்றோ ?!
கருவொன் றிவரா துகடைக் கணித்தே
இருவென் றெனைக்காக் கவிரங் கியருள்
திருவொன் றியதில் லைவனம் திகழ
உருவொன் றிநடித் தருளுத் தமனே (32)
இ.ள். - ஞானம் நிலைபெற்ற தில்லைவனம் சிறப்புற்றுத்
திகழும்படி உருவத் திருமேனி கொண்டு நடனஞ் செய்தருளுகின்ற
உத்தமனே! கருக்குழியில் வாராமல் என்னைக் கடைக்கண்ணால்
நோக்கி, இத் திருவடி நீழலில் தங்கி இரு என்று கூறி இரங்கிக் காத்தருள்க
எட்டோ டிரண்டு மிசைவித் துவினைக்
கட்டா கியமா யைகளைந் தருள்வாய்
பிட்டா கியகூ விபிரி யமுறக்
கொட்டோ டொருகூ டைசுமந் தவனே (33)
இ.ள். :- பிட்டாகும் சிற்றுண்டியை விரும்பி உண்டு
வைகைக் கரையை அடைப்பதற்குக் கொட்டுங் கூடையும் சுமந்து
கொண்டு நடந்த சுவாமியே! எட்டும் இரண்டும் சேர்ந்த ஓங்காரப்
பொருளை உபதேசித்து எனது வினையின் கட்டுக்களையும்
மாயைகளையும் நீக்கி அருள்வாயாக
எங்கே பிறந்தா லுமினி மறவா
தங்கே தொழவந் தருள்வா னவனே
வெங்கா ளமயின் றுவினை வெருவச்
சிங்கா ரநடம் பயில்சின் மயனே (34)
இ.ள். :- வெம்மையான ஆலகால விடத்தை அருந்தி
அடியார்களின் வினை அஞ்சும்படியாகச் சிங்காரமான நடம்
செய்கின்ற ஞான மயமான பெருமானே! அடியேன் இனி எங்கே
பிறந்தாலும் அங்கே உனை மறவாமல் வணங்கும்படி வந்து அருள்
செய்வாயாக.
பகரா லயமந் திரபா தமெனும்
நகரா லயவாழ் வுநயந் தருளாய்
மகரா லயன்பா சமறுத் தருளும்
தகரா லயசுந் தரதாண் டவனே (35)
இ.ள். - வருண குருவை வதைத்த பாவம் வருணனைப்
பற்றியிருந்தது. அவனுடைய பாவத்தையும், கட்டப் பட்டிருந்த
பாசத்தையும் நீக்கியருளிய தகராலயத்தில் அழகு பொருந்த
ஆடுகின்ற பெருமானே! வெளியே சொல்லப்படாத லயம்
பொருத்திய ஹம்ஸ மந்திரமயமான திருவடியில் பொருந்தும் அந்த
நகராலய வாழ்வை அடியேனுக்குத் தந்தருள்க .
** நகராலயம் நகாரம் என்பது திருவடியைக் குறிக்கும்.
காதாந் தகன்வந் துகனைத் திடுமுன்
போதாந் தவரம் புபுகன் றருளாய்
வேதாந் தமுடிந் தவெளி தனிலே
நாதாந் தநடம் புரிநா யகனே (36)
இ.ள். :- வேதாந்தமும் கடந்த ஞான வெளியான
சிதம்பரத்திலே நாதாந்தமான திருநடனத்தைச் செய்கின்ற
நாயகனே! காதுகின்ற அந்தகன் வருவதற்கு முன்பாக என்னை
நினைந்து, போதாந்தமாகிய ஞான உபதேசத்தைப் புகன்று
அருள்வாயாக.
நெஞ்சாற் றுயர்தீ ரநினைந் துநித்தம்
எஞ்சாத் தமிழ்பா டவிசைந் தருளாய்
பிஞ்சாக் கரவல் விபிரி யமுறும்
பஞ்சாக் கரநா டகபண் டிதனே (37)
இ.ள். - பிஞ்சாக்கரம் என்பது 'வ' கார எழுத்து. இது பராசக்தி
சொரூபம் ஆகும். பிஞ்சாக்கர வல்லியாகிய சிவகாமி அம்பிகை
பிரியப்படும் வகையில் பஞ்சாக்கர நடனத்தைச் செய்யும் நாடக
வித்தையில் சிறந்தவனே! நெஞ்சில் இருக்கும் துன்பங்கள் நீங்கத்
தினந்தோறும் உன்னை நினைந்து, குறைவில்லாத தமிழால் பாடி
வழிபட அனுக்கிரகம் செய்வீராக.
ஆளா னவறொன் றுசொலின் அதுநீ
கேளாய் எமக்கார் துணைகேட் டிரங்க
வாளார் நெடுங்கண் மலைவல் லியொடு
நீளா கமக்கூத் துநிகழ்த் தினனே (38)
இ.ள் :- வாள் போன்ற கூரிய நெடிய கண்களை உடைய
மலைவல்லியோடு நீண்ட ஆகமக் கூத்து நிகழ்த்துபவனே!
ஆளான அடியார்கள் ஏதேனும் சொன்னால் அதனைக் கேட்டு
அருள்வீர். உம்மைத் தவிர எமக்கு வேறு யார் துணை? எமது
குறைகளைக் கேட்டு இரங்குவதற்கு உனையன்றி யார் உளர்?
ஆதா ரமாறும் அகன்றே நினது
பாதா ரவிந்தம் பணிதற் கருளாய்
பூதா திகடந் தபொது வெளியில்
வேதா கமக்கூத் துவிரும் பினனே (39)
இ.ள். :- நாம் உணர்கின்ற ஆகாசம் பூதாகாசம், இது சடம்.
தில்லை என்பது பஞ்ச பூதங்களைக் கடந்த ஞான ஆகாசம்;
அதற்குப் பொது வெளி என்று பெயர். அந்தப் பொது வெளியில்
வேதாகமங்களின் பயனாகிய ஞானானந்தக் கூத்தினை விரும்பிச்
செய்யும் வித்தகனே! மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களையும்
கடந்து சகஸ்ராரத்தில் விளங்கும் உமது பாதாரவிந்தங்களைக்
கண்டு வணங்கும் பேற்றை அருள்வாயாக.
பொய்வந் தவாழ்விற் பொருளா கவென்றன்
கைவந் தநெல்லிக் கனியா னவனே
செய்வந் தபொன்னம் பலத்தென் றுநல்ல
மெய்வந் தஞான நடமே வினனே (40)
இ.ள். :- வயல்கள் சூழ்ந்திருக்கும் தில்லை வனத்தில்
பொன்னம் பலத்தில் என்றும் நல்லதாகிய சத்தியமான ஞான
நடத்தைச் செய்கிறவனே! பொய்யான இந்த உலக வாழ்விலே
ஒப்பற்ற பொருளாக என்னுடைய கையில் வந்த அரிய
நெல்லிக்கனியே! எமக்கு அருள் செய்வாயாக. !
வானுந் தமரர் அறியா மனின்ற
தேனுந் தமுதே சிறியேற் குமருள்
தானந் தமில்லாத் தனிஞா னமன்றுள்
ஆனந் தநிருத் தமருள் பவனே (41)
இ.ள்:- அழிவில்லாத ஒப்பற்ற ஞானமன்றிலே ஆனந்த
நிருத்தத்தை அருள்பவனே! வானுலகத்தில் வாழ்கிற தேவர்களும்
அறியாமல் நின்ற தேன் கலந்த அமுதமே, இச் சிறியேனுக்கும்
இரங்கி அருள் புரிக.
சமுசா ரபந்தம் தனைவிட் டுநின்றன்
விமுதா ரணமெய்க் கழல்வீ டருள்வாய்
குமுதா கமவாய்க் குலமஞ் ஞைகாண
அமுதா கமநட் டமருள் பவனே (42)
இ.ள். :- ஆகம வசனங்களை உரை செய்கின்ற குமுதம்
போன்ற திருவாயினை உ டைய குல மஞ்ஞையான
சிவகாமியம்மை காண, அமுத நிலை தரும் சிவாகமத்
திரு நடனத்தைச் செய்தருளும் பெருமானே! சமுசார பந்தத்தை
விட்டு உன்னுடைய ஆச்சர்யமான வேதத்தின் மெய்ப்பொருளான
திருவடியாகிய வீட்டை அருள்வாயாக.
இருளா மயல்தீ ரவினி யருள்மெய்ப்
பொருளா னதுவொன் றுபுகன் றருளாய்
அருளா லுயர்மன் றிநடம் புரியும்
தெருளா கமஞா னசிதம் பரனே (43)
இ.ள். :- அருள் என்கிற பராசக்தி ரூபமான உயர்ந்த மன்றில்
நடம் புரிகின்ற தெளிவுமிக்க ஆகம ஞானத்தை வழங்கும்
சிதம்பரனே! அறியாமையான மயக்கம் நீங்கும்படி இன்பப்
பொருளாகிய ஒரு ஞான வாக்கியத்தை அருள்வீராக.
எந்தா யெனைக்காத் தல்எளி திதுகேள்
வந்தே நலன்பர் பணிவாய்க் கவருள்
மந்தா ரமாலை மணம்வீ சவருள்
தந்தோ மெனவா டல்தழைப் பவனே (44)
இ.ள். :- மந்தார மாலை மணம் கமழும் படி அணிந்து
கொண்டு அருள் தந்தோம் என்று திருநடனம் தழைக்கின்ற
சிவபெருமானே! என்னைப் பிறவிப் பிணியில் இருந்து
காப்பாற்றுதல் எளிது. இதனைக் கேட்பாயாக. தேவரீர் இரங்கி
வந்து நல்ல அடியார்களுக்குப் பணி செய்யும் படியான வாய்ப்பை
அருள்வீராக. அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்குமாயின்
என்னைக் காத்தல் உனக்கு எளிதேயாகும்.
இன்றிங் கெனது மனுவேன் றுகொள்நீ
ஒன்று மடியார் உடன்கூட் டியருள்
சென்றங் கெதிர்கா ளிசின மடங்க
வென்றங் கெதிரா டல்விதித் தவனே (45)
இ.ள். :- உயிர்களைக் கொன்று எதிர்த்து வந்த காளியின்
கோபம் அடங்குமாறு அவளை வென்று ஆடியருளிய பெருமானே!
இன்று எனது விண்ணப்பத்தை ஏன்று கொள்வாயாக. உனது
திருவடியில் ஒன்றும் பக்குவமுடைய மெய்யடியார்களோடு
என்னைச் சேர்த்து வைப்பாயாக.
ஊனா ருடல்பட் டுலையா வகையின்
றானா உபதே சமளித் தருள்வாய்
மானார் விழிமங் கைமன மகிழத்
தேனார் நடமா டுசிதம் பரனே (46)
இ.ள். :- மான்போன்ற விழியை உடைய சிவகாம சுந்தரி
யம்பிகை மனம் மகிழும்படி மலர்மாலைகள் தேன்சிந்தும்படி
இனிமை பொருந்திய நடனம் ஆடுகின்ற சிதம்பரனே! ஊன்
பொருந்திய உடல் பெற்று உலையாமல் குறைவில்லாத ஞான
உபதேசத்தை அருள்வீராக.
வெற்றம் பலவாழ் வுவிடுத் துனதாள்
பற்றம் பலவாழ் வுபணித் தருளாய்
கற்றம் பலவா ணர்கருத் தகலாச்
சிற்றம் பலவா ணசிதம் பரனே (47)
இ.ள். - ஞான நூல்களைக் கற்ற ஞானிகள் கூடும் சபையிலே
கூடிச் சிவஞான கலைகளில் தேர்ச்சி பெற்ற அடியார்களின்
சித்தத்தை விட்டு அகலாத சிற்றம்பல வாணராகிய சிதம்பரேசா!
வெற்று அம்பலமான உலக வாழ்வை விட்டு விட்டு உனது
திருவடித் தாமரைகளைப் பற்றி வாழும் ஞானாகாச வாழ்வைத்
தந்தருள்வாயாக.
வாதித் தடர்வல் வினைமா யும்வகை
போதித் தெனையாண் டருள்பூ ரணனே
பேதித் தெடுத்தாண் டபிராட் டியுட
னாதிப் பரநட் டமருள் பவனே (48)
இ.ள். - ஆன்மாக்களின் பக்குவத்திற் கேற்றவாறு பேதித்தும்
எடுத்தும் அருள் செய்கின்ற பிராட்டி சிவகாமி அம்மையுடன்
ஆதிப் பரமான திருநடத்தைச் செய்கிற பெருமானே! வாதித்து
வருகின்ற வலியவினை நீங்குமாறு எனக்குச் சிவஞானத்தைப்
போதித்தருள்வாயாக !
சத்தித் திருநட் டதரி சனமா
முத்திப் பெருஞ்செல் வமுழு தருளாய்
தத்தித் தெனநற் சயபே ரிகொட்ட
தித்தித் தநடம் பயில்சிற் பரனே (49)
இ.ள் - தத்தித்த என்று ஜயபேரிகை கொட்டத் தித்திக்கின்ற
நடத்தைச் செய்கின்ற சிற்பரனே ! சத்திநிபாதத்தை வழங்குகின்ற
திருநடன தரிசனமாகிய முத்திச் செல்வத்தை முழுமையாக
அருள்வாயாக, நடன தரிசனமே எமக்கு முத்திப் பெருஞ்செல்வமாகும்.
ஆவா எனநின் றடியேங் களையும்
வாவா எனநீ டியவாழ் வருளாய்
மூவா யிரவர் முறையே பரவும்
தேவா சிவலோ கசிதம் பரனே (50)
இ.ள். :- மூவாயிரம் தில்லைவாழ் அந்தணர்களால்
முறையாக வணங்கப்படும் தேவராகிய சிவலோகத்தை உடைய
சிதம்பரனே! ஆ! ஆ! என்று இரங்கி அடியேங்களையும் வா வா
என்று அழைத்துப் பேரின்ப வாழ்வைத் தருவாயாக.
பவமா கியவல் வினைப்பற் றறவே
தவமா கியவாழ் வுதழைக் கவருள்
நவமா கியமன் றினடம் புரியும்
சிவகா மிசமே தசிதம் பரனே (51)
இ.ள். - பிரணவமாகிய மன்றில் திருநடம் புரியும் சிவகாமி
சமேதரான சிதம்பரேசனே! பிறப்பினை உண்டாக்கும் வலிய
வினையினது பற்று நீங்கும்படியாக, எமக்குத் தவமே வாழ்க்கை
என்று கூறும்படி அத்தவ வாழ்க்கை தழைக்க அருள்வாயாக.
திருச்சிற்றம்பலம்