logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்

        சிவமயம் 

    ஸ்ரீ உலகுடைய நாயனார்  அருளிச் செய்த  

        1 .உடலப் பதும பீடிகை

மலமெனுந் தடத்தில் கருமசே தகத்தின் 
    மாயையாம் கிழங்கில் அங் குரித்து
   மன்னுமூ வெட்டாம் தத்துவ நாள
    மலரிதழ் வித்தை ஏழ் வித்தை 

நலமிகும் ஈசன் சதாசிவம் இரண்டும்
    நண்ணுகே சரங்களாம் சத்தி 
   நற்பொகுட் டாகும் நாதமே விந்து 
    நயந்தகண் ணாம்என விரவி

இலகும்என் உடலப் பதுமபீ டிகைநீ
    இருந்தருள் ஆசனம் எனாமல்
   எனதுபுக் கிலதாய் எண்ணினேன் தெளிய
    இயலருள் பார்வைதந் தனையே 

அலகிலா உயிர்கள் மலநடைக்(கு) இலையாய்
    அருள்நடைக்(கு) உண்மையாய் நின்ற 
   ஆவடு துறைசை அம்பல வாணா !
    அடியவர்க்(கு) அருளுமா நிதியே.


        2.ஞான பாத உபதேசம்

புசிப்பினால் வினையால் சகலனாம் என்பால் 
    புசிப் பொடு வினையுமாய்ப் புகுந்து
   புல்லிய அரவின் வாய்மணி கொள்வார் 
    போல்மலத் தெனை வெளிப் படுத்தி

நசிப்பிலாக் கருணை உருவமாய் வந்து
    ஞானபா தத்தை ஈரைந்தா
   நண்ணுகா ரியத்தால் எனக்குப தேசம்
    நல்கும் நின் பெருமைநான் அறியேன் 

வசிக்கும்ஐந் தொழிலின் மலநடை நான்காய்
    மற்றொரு தொழில் அருள்நடையாய் 
   மன்னுயிர்க்கு இரங்கி நடத்தொழில் புரியும் 
    வள்ளலே மருவுசித் திடத்தும்

அசித்தினும் நீங்காது அகண்டமாய் நிறைந்த 
    அருட்பரி பூரணக் கடலே!
   ஆவடு துறைசை அம்பல வாணா 
    அடியவர்க்கு அருளுமா நிதியே.

    
        3. உயிர்க்கு இருப்பிடம்

சீவனோ வியாபி அவத்தையில் இழிந்து
     திரும்புதல் குற்றமாம் கருவி
   சேருதல் பிரிதல் இல்லையாம் முறையில் 
    செயற்படும் கருவியே தெரியும் 

தாவிலா அறிவு தங்கின இடமே
    தகும் உயிர்க்கு இருப்பிடம் என்று 
    சாற்றிஎன் உளத்தில் ஐயமும் திரிவும்
    தவிர்த்து எனை ஆண்டு கொண்டனையே

பாவனை கடந்த உனைவச மாக்கப்
    பாசமும் பசுவுமா ஞானம்
   பற்றிநாட் டத்தை முகிழ்த்துவாய் நீரைப் 
    பசையறப் பருகுவார் தங்கள் 

ஆவல்சேர் நிட்டை அபாயமாய்க் கருதி 
    அதற்கியல் பினை அளித் தவனே 
    ஆவடு துறைசை அம்பல வாணா
    அடியவர்க் கருளுமா நிதியே.


        4. ஞான நடனம்

நாலுகை தனிலே நாலுகை அமைப்பு
    நல்துடி முளரியை நயந்து 
   நளினபா தத்தின் ஒன்றுஎடுத்து ஒன்றை 
    ஞானவான் பொதுவிலே நாட்டிக் 

கோலமார் கூத்து விடாதநீ உன்தன்
    குலம் இரண்டு என் குலம் இரண்டும் 
   குறுகிடா வண்ணம் இன்பமாய் என்பால்
    கூத்தையும் கொண்டது எப் படிதான்

ஏலுமா மலர்க்காய் நாசிகை வேழம் 
     எறிந்தநீ சினகரம் தகர்க்க 
   எப்படிப் பொறுத்தாய் இதற்குமேல் வினையும் 
    இல்லை என்று உரைத்ததும் இலையோ

ஆலநீ ழலிலே அயன்தரு புதல்வர்க்கு 
    ஆகமம் உரைத்தபூ ரணனே!
    ஆவடு துறைசை அம்பல வாணா!
    அடியவர்க்கு அருளுமா நிதியே.


        5.கைம்மாறு இல்லாக் கருணை

முந்துநான் செய்த இதத்தினுக்கு இதமே
    முடித்தவா பிறப்பினை முடிப்பாய் 
   மூளும்இக் காலத்து இவ்வுடல் வினையை
    முற்றும்நின் தொழில்எனக் கொள்வாய்

நந்திடா என்னை உனக்கு உடலாக்கி 
    நண்ணும்என் உயிருமாய் நயப்பாய்
    நாட்டில் உன்கருணைக்கு ஏற்றகைம் மாறு 
    நான்செய முடியுமோ நவில்வாய்

சிந்தைமெய் வாக்கு மூன்றினும் உயிர்கள்
    செய்வினை கொடுத்திட அதற்காத் 
    தேகமே கொடுத்து மலபரி பாகம்
    செய்துஅறி வினில்பவ முடித்த 

அந்தமார் குரவர் சிகாமணி நீயே
    அண்ணலே! என் உயிர்க்கு அமுதே 
   ஆவடுதுறைசை அம்பல வாணா!
    அடியவர்க்கு அருளுமா நிதியே.


        6. இரண்டற்ற கலப்பு

காந்தம்முன் கரும்பொன் கதிரின்முன் படிகம் 
    ககனநேத் திரஒளி தாரை 
    கலைமதி பொருந்தும் தன்மையாய் உனது
    கருணையின் உள்ளுறக் கலந்து

மாந்திய கனியும் மதுரமும் , பண்ணும் 
    மருவுறும் ஓசையும் உடலும்
    மன்னிய உயிரும் போலமூன் றில்லா 
    வகைஇரண்டு அல்லதும் ஆனேன் 

ஏய்ந்த மூன்று அவத்தை உயிரினுக்கு அநாதி
    இருக்கினும் வினைமுதிர்ச் சியினால் 
    இரண்டும் முன் நடாத்தி மலபரி பாகம்
    இயற்றிமற்று ஒன்றைஈர் ஐந்தாய் 

ஆய்ந்தகா ரியமா அவத்தை ஓர் ஐந்தின் 
    அடக்கிநான் அறிந்திடச் செய்த 
    ஆவடு துறைசை அம்பல வாணா!
    அடியவர்க்கு அருளுமா நிதியே.


        7.மலசத்தியை மாற்றுதல்

என்னையும் உனையும் தன்னையும் காட்டாது 
    இந்திரிய விடயமே காட்டி
    இயல்வினை மாயை இரண்டையும் எனையும் 
    இணக்கிய ஆணவ மலத்தின்

தன்னுறு வழிநின் சத்தியை நடாத்தித்
    தகும்அதன் சத்திகள் எல்லாம்
    தயங்குநின் உருவம் மூன்றினான் மாற்றித் 
    தாள் நிழல் தந்துகாத் தனையே 

கன்னல்அம் கழனிக் காழிமா நகரில்
    கவுணியன் இரண்டு ஞா னமுமே
    கற்றிடாது உணர ஈர்க்கிடை போகாக்
    கதிர்முலைப் பால்கறந்து அளித்த

அன்னைதன் பசுவாம் தன்மையை அகற்றி 
    ஆதரித்து அருள் கொடுத் தவனே
    ஆவடு துறைசை அம்பலவாணா ! 
    அடியவர்க்கு அருளுமா நிதியே. 


    8.உயிர்க் குணத்தினைத் திருப்புதல்

தணவிலா மலத்தின் குருடனேற்கு உடலம் 
    தானொரு கோலெனக் கொடுத்துச்
    சத்தமே ஆதி விடயம் ஓர் ஐந்தின் 
    தன்வழி புசித்திடத் தந்து

குணவழி நடவார் குணவழி நடந்து
    குணத்தினைத் திருப்புவார் போலக் 
    கொடுவினை ஒப்புச் சத்திநி பாதம்
    கூர்மல பாகமும் குறித்தே

இணையிலா இன்ப வடிவமா முன்னோடு 
    என்னையும் இரண்டற வைத்தாய்
    ஏழையேன் உன்தன் அடியருக்கு அடியான் 
    என்னவும் பற்றிலேன் அரவின்

அணைதுயில் எழுந்தே அருவிகண் பொழியும் 
    அரி அரிக்கு உரைத்த கூத்து உடையாய் 
    ஆவடு துறைசை அம்பல வாணா!
    அடியவர்க்கு அருளுமா நிதியே.


        9.உபகாரம் செய்யும் உடல்.

இருங்கடல் மணலை எண்ணினும் உவர்நீர் 
    இவ்வளவு எனஅளந் திடினும்
    இருவினைக்கு ஈடா எடுத்தஎன் உடலம் 
    எண்ணிறந் தனஇவை ஒழிய

வரும்சிவ தருமம் தன்னில் உன்திருமுன்
    வந்தனை செய்து உனக்கு அளிக்க 
    வாய்த்த இவ் வுடலே எனக்குஉப கார 
    மாகவே வந்திடும் உடல்காண்

பெருஞ்சிவ னடியார் வேடமுற் றிடாநான் 
    பிறன்எனத் திருஉளத்து உறாமல்
    பேதையேன் தன்பால் நோக்கொடு பரிசம்
    பிறங்குபா வனைத்தொழில் பெருக்கி 

அருந்திறன் மலந்தீர்த்து அறிவினைத் திருப்பி
    ஆண்டருள் கருணையங் கடலே !
    ஆவடு துறைசை அம்பல வாணா !
    அடியவர்க்கு அருளுமா நிதியே. 


        10.சிந்தனை உரை

முந்தும்ஆ கமத்தை அருட்டுறை அண்ணல் 
    மொழிபெயர்த்து உரைத்தநூல் முதலா
    முதல்வழி சார்பாம் மூன்றுநூல் கருத்தும் 
    முறைதெரி யாமலே கருதி

நந்தவே எழுதும் உரைதனைக் குருவாய் 
    நாடிய குரவரை நம்பி 
    நற்கதி அடையா உயிர்களுக்கு இரங்கி
    நற்கதி கொடுத்திட வேண்டிச் 

சிந்தனை ஆக்கிப் பசுபதி பாசம்
    தெளிந்திட லளிதமா உரைத்து உன்
    திருவடி நீழல் மருவிட வைத்த
    தேசிக சிகாமணி நீகாண்

ஐந்தலை அரவின் நடித்தமால் ஈரைந்து 
    ஆதிய பிறவி நோய் தவிர்த்த
    ஆவடுதுறைசை அம்பல வாணா!
    அடியவர்க்கு அருளுமா நிதியே .  


        முற்றும்.

 

Related Content