சிவமயம்.
காப்பு.
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணியை முன் நாடு.
நூற்பெருமை.
நமசிவய மென் றுரைத்த மந்திரம்
நவ்வொடு மவ்வும்போய் மாய்கை வலமதாய்
யவ்வான ஜீவன் வவ்வுறச் சேர்ந்திடில்
சிவமினி லொன்றாய்ச் சிவமென லாமே.
இதன் பொருள்.
நகாரம்:- திரோதாசத்தி, ஆத்துமாக்களைப் பிரபஞ்சத்திலே
இச்சையை வருவிக்கும்.
மகாரம்;-கிரியாசத்தி, ஆத்துமாக்களைப் பிரபஞ்சத்தில்
மெய்யென் றழுத்தும் சிவத்திலே ஆசையை வருவித்துச்
சிகாரத்தோடு கூடி நிற்பது.
நகாரம்:-நின்றசிவத்திலே ஆசையை வருவித்து மகாரத்தோடு
கூடிநிற்பது.
நின்றவெழுத்து மூன்றும் செபிக்குமிடத்து வொன்றாகும்.
நமசிவயமென் றோதப்பட்ட வைந்தெழுத்துக்குள்ளே
ஐந்தெழுத் துண்டு; இந்த ஐந்தெழுத்தினையும் மூல அட்சரமாகிய
அகாரம் - உகாரம் - மகாரம்- விந்து - நாதம்-என்கிற
அட்சரங்களைச் சேர்ப்ப தெப்படியெனில், சிகாரத்தில்-
அகாரமும், வகாரத்தில்-உகாரமும், யகாரத்தில்- மகாரமும்,
விந்து-நகாரத்திலும், நாதம்- மகாரத்திலுமாம். இந்தப்படி
சேர்ந்த ஐந்தெழுத்தும் ஓடுகிறவித மெப்படியெனில்,
நகாரமானது:-விந்து - திரோதாசத்தி பிரபஞ்சத்திலே
இச்சையை வருவிக்காமல் சிவத்திலே யிச்சையை
வருவித்துச் சிகாரத்திலே ஐக்கியமானது ,
மகாரமானது:- நாதம் - கிரியாசத்தி பிரபஞ்சத்தை
மெய்யென்றழுத்தாமல் சிவத்திலே ஆசையை மெய்யென்
றழுத்தி வகாரத்தில் ஐக்கியமானது. நின்ற எழுத்தை ஓத
முன் சொன்ன மூன்றெழுத்தும் ஒன்றாயின.
அதெப்படியெனில், பராபரமாகிய பரமேஸ்வரன் ஆதி
காலத்திலே ஆத்மாக்களை இரட்சிக்கத் திருவருள் புரிந்தமையால்
பராபரையான சத்தியின் துடையில் தம்முடைய பெரு
விரல் அங்குஷ்டங்கொண்டு கீறுகையினாலே பராசத்தி
பொறுக்கமாட்டாமல் ஓவென்றனள். அப்போது பராபரமாகிய
பரமேஸ்வரன் ஆவென்றமைத்தார். அந்தவெழுத்து அகாரமானது.
அப்போது பராசத்தி அடக்கமாய் ஊவென்றனள்.
அந்த எழுத்து உகாரமானது. இந்த இரண்டெழுத்துக்களுஞ்
சத்தியும் சிவமுமானது, இவ்விரண்டெழுத்தும் ஓரட்சரமானது
எப்படியெனில் ,
அகாரம் இலக்கத்தில்-8, பின் சொன்ன உகாரம் இலக்கத்தில்-2,
இவ்விரண்டுமாய் தொகைக்கு- 10 ஆயின.
யவ்வானது-ஜீவன்.அந்தச்சீவனைச் சத்தியுஞ் சிவமுமாகக்
கூடி ஆத்துமாக்களை சினேகத்தை வருவித்தது. நவ்வானது
திரோதயசத்தி, இச்சினேகத்தை மெய்யென் றழுத்தி மிகவும்
இருதலையுண்டாக்கினது. மகாரமானது கிரியா சத்தி,
இவையிரண்டினும் பற்றாமல் நிற்கின்றது. யவ்வானது
ஜீவன், இவை யிரண்டும் விந்து நாதமானது. இந்த
உருக்கத்தைச் சத்தி பெறாளென்றறியாமல் நின்றது. கேவலமான
இருள் எப்போது பெறுவோமென்ற விகாரம். சகலமான பகல்
இவையிரண்டுக்கும் இரவு பகலென்று பேர்.
இவையன்றி ஞான முறைமைக்குச் சகலாவஸ்தை யென்றும்
கேவலாவஸ்தை யென்றும் பெயர்.
சிதம்பரத்திலே சினேகமாயிருக்கையினாலே பராபரமாகிய
பரமேஸ்வரன் மானைப் பிடிக்க மான் வேடங் கொண்டது போல்
இராப்பகலே குருவென்று வடிவெடுத்துக் கொண்டு
ஆதி கபில மாமுனிவர் திருவள்ளுவ நாயனார் வடிவமாய்த்
திருக்குருந்தீசுவரராகிய திருமூல தேவருக்குத் திருவாய்
மலர்ந்தருளிய உபதேச வைப்பாகும்.
சிவாயநமா.
தோற்றமும் ஒடுக்கமும் அறியும்படி
பராபரமாகிய பரமேஸ்வரன்
தராதலம் படைக்கத் தானினைந் தருளி
பராபரத்திற்-பரந்தோன்றி, பரத்திற்-சிவந்தோன்றி,
சிவத்திற்-சத்திதோன்றி, சத்தியில்- நாதந்தோன்றி,
நாதத்தில்-விந்து தோன்றி, விந்துவில்-சதாசிவந் தோன்றி,
சதாசிவத்தில்- மகேசுவரன் தோன்றி, மகேசுவரத்தில்-ருத்திரன் தோன்றி,
ருத்திரனில்-விஷ்ணு தோன்றி; விஷ்ணுவில், -பிரம்மா தோன்றி,
பிரம்மாவில் - ஆகாயந் தோன்றி,ஆகாயத்தில்-வாயு தோன்றி,
வாயுவில்- அக்கினி தோன்றி, அக்கினியில்- அப்பு தோன்றி,
அப்புவில் -பிருதிவி தோன்றி, பிருதிவியில் - அன்னந் தோன்றி,
அன்னத்தின் கண்ணே நர மிருக பட்சி தாவர சங்கமாதிகள் தோன்றின.
இவ்விதமாய்த் தோன்றிய அடைவே நர மிருக பட்சி
தாவர சங்கமாதிகள் அன்னசத்திலொடுங்கி,
அன்னம்- பிருதிவியிலொடுங்கி, பிருதிவி- அப்புவிலொடுங்கி,
அப்பு-தேயுவிலொடுங்கி, தேயு-வாயுவிலொடுங்கி,
வாயு-ஆகாசத்திலொடுங்கி, ஆகாசம்- பிரம்மாவிலொடுங்கி,
பிரம்மா -விஷ்ணுவிலொடுங்கி, விஷ்ணு- ருத்திரனிலொடுங்கி,
ருத்திரன் - மகேசுவரத்திலொடுங்கி, மகேசுவரன் -சதாசிவத்திலொடுங்கி,
சதாசிவம்-விந்துவிலொடுங்கி, விந்து - நாதத்திலொடுங்கி,
நாதம்-சத்தியிலொடுங்கி, சத்தி - சிவத்திலொடுங்கி,
சிவம் - பரத்திலொடுங்கி, பரம்-பராபரமாகிய பரமேஸ்வரனிடத்தில்
ஒடுங்குமெனக் காண்க.
அத்துவா தத்துவம்.
அன்னத்தில்- ரஸந் தோன்றி, ரஸத்தில்-உதிரந் தோன்றி,
உதிரத்தில் - மாம்சந் தோன்றி, மாம்சத்தில் - மேதை தோன்றி,
மேதையில்-அஸ்தி தோன்றி, அஸ்தியில்- மச்சை தோன்றி,
மச்சையில்- சுக்கிலந் தோன்றி, சுக்கிலத்தில்-சுரோணிதந் தோன்றியது.
இப்படித் தோன்றிய சுக்கில சுரோணிதங்கள் அணுப்
பிரமாணமுள்ள ஓருருவுபோலப் பாய்ந்து குதித்துக் கண்டிப்பும்
பேரிகையும் போலே கண்டித்து நடுவெளியில் ஒரு
சுழுமுனையுண்டாய் அம்முனையினடுவே ஒரு துவாரமுண்டாய்
அத்துவாரத்தினடுவே இரண்டெழுத்துகளாலே
அபிமந்திரித்துப் பிண்டமாகி யெழுமளவில்,
சுக்கிலம் பெருகில்- ஆணாம். சுரோணிதம் பெருகில்-பெண்ணாம்.
இந்தச் சுக்கிலச்சுரோணிதம் ரேகித்துப் பெருகில்- இரட்டைப்பிண்டமாம்.
அப்பிண்டமானது நீர்வழியே பெருகில்- ஊமையாம். மலக்கிடையேயாகில்-மந்தனாம்.
இப்படிக்குக் கெற்பவுற்பத்தி கொள்ளுங்காலத்தில்
இரதக்கலையென்றும் இரஸக்கலை யென்றும் இரண்டு கலைகளுண்டு.
அவற்றுள் எரிகலையிலே பிராணேந்திரியம் பாயில் இடப்
பாகங்கொண்டு கிருமியென்னும் புழுச்சென்று விழுங்காமல்
கன்றோடு தாய்ச்சென்று தொடர்ந்தாற்போலே பிராணவாயுவை
ஆத்துமா முன்னிட்டுக்கொண்டு செல்லுமளவில் இதமகிதமென்னும்
இரண்டக்ஷரமும் பின்தொடர்ந்து சென்று அச்சுக்குள் அச்சாக
அவ்வென்னு மூலாட்சரத்தில் அமைத்துப் புகவிட்டுக்
கிழிச்சிலை வாசல் போலே ஓடி அங்கிஷாவென்னு
மந்திரக் கயிற்றாலே சுருக்கிக்கட்டி, சிவாக்ஞா சக்கரத்திடையிலே
முத்திரையிட்டு தான் ஒருத்தியாய் நின்று இந்தக்கருவை
வளர்க்கும்படியாய் கெற்ப உற்பனத்தை உதானவாயுவான
மூலவாயு வளர்க்கும்.
அது எப்படியெனில், கெற்பாகு தியென்னும் பவக்கடலில்
எண்ணனவாயு வளர்க்கும்.
அது எப்படியெனில், எண்ணெயுந் தண்ணீரும்போல
நிற்கிற சுக்கில சுரோணிதத்தைப் பாலும் நெய்யும் போலே
பாய்ந்தவுடனே கற்பிக்குங்கற்பைச் சுருக்கினாற் போல
வாசலைடைத்துக் கருவை வெளியாக்கி,
ஒன்றாந் திங்களில் உதிரந்திரளும்,
இரண்டாந் திங்களில் கொழுந்துவிட்டு அச்சு அமையும்,
மூன்றாவதில் மாமிசந் திரண்டு மூட்டுருவாகும்,
நான்காவதிலோ தண்டமாய் நரம்பு நாடிகளமையும்.
ஐந்தாவதில் பஞ்சவர்னமாய் இந்திரியகரத்தால் அழியினும்
அழியும் செழிக்கினுஞ் செழிக்கும்,
ஆறாமாதத்தில் அதிற்புகுந்து ஆமையின் வடிவமுற்று கால்கைகள்
வகுக்கப்பட்டு நவத்துவாரங்களு முண்டாகும்.
ஏழாமாதத்தில் கற்பத்திலிருந்து எழுந்து முழக்கமுற்று கெற்பத்தைச்
சூழ்ந்து புரளும், ஏனெனில் (72000) நாடிநரம்புகளும் ஆறாதாரமும்
ஐந்தெழுத்தும் ஐம்பத்தோரட்சரமும் பஞ்சபூத தேவதைகளும்
தூல சூக்குமத்துடனே கொழுந்துவிடப் பேதையாம்.
எட்டாமாதத்தில் நீட்டி முடக்கி தாயுண்ட அன்ன சாரத்தைத்
தொப்புளின் வழியாகவுண்டு பிள்ளையினுடல் வளர்ந்து
தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்,
ஒன்பதாவதில் தலை காலளவும் ரோமத் துவாரமுண்டாம்.
ரோமக்குருத்து அறிவுடனே உரங்கொள்ளுகையில் விசனம்
பொறுக்கமாட்டாமல் ஈசுவரனை நோக்கித் தவஞ்செய்து
தொழுகையுடனே பிரிந்து ஜனனத்தை யொழித்தருள
வேணுமென்று வணங்கி நிற்கும்,
பத்தாவது மாதத்தில் நிறைந்த பிண்டமாய் மலை மேல் நின்று
தலைகீழாய் விழுந்தவர்களைப் போலே அபான
வாயுவின் பலத்தினாலே பூமியில் விழுந்தும் முன்னுள்ள
நினைவுகளை மறவாதிருக்கும்.
இப்படி பரப்பிரமம் சிருஷ்டிப்பினாலே கர்ப்பந் தரித்து
வாழ்வுபெறும்.
அப்பேர்ப்பட்ட பிராணவாயு வலப்புறமோடில் ஆண்
பிள்ளையாம், இடப்புறமோடில் பெண்பிள்ளையாம், வாயுவிரண்டும்
ஏகோபித்தோடில் அலியாம் அதாவது பேடி அல்லது குறியற்றது.
அந்த வேளையிலே நடந்த வாயு பேதியாமல் ஐந்து
நாழிகையளவும் நடந்தியங்குமாகில் அந்தப்பிள்ளைக்கு வயது 100.
அந்த அளவு குறையுமாகில் பிள்ளைக்கு வயதுங் குறையும்,
வாயு நிரம்பியோடில் அவயவங்களுண்டாகும், அவ்வாயு சிதறியோடில்
அவயவங்கள் குறையும். முதன்மையில் கெற்பரந்தனத்தில்
போகிக்கும் பொழுது மூன்று குணத்திலே ஒன்றாவது
மாதா பிதாக்களுக்கு உண்டானால் மக்களுக்கும் உண்டாகும்.
அந்தவேளையில் வாயு நின்றியங்குமாகில் நிலத்தில்
நிறமே பிள்ளைகளுக்கு நிறமாகும். மாதா பிதாக்களினுடைய
மனமும் குணமும் வாயுமொன்றாகுமாகில் அந்தப்பிள்ளைக்கு
மிகவும் அறிவுண்டாகும்.
மாதா பிதாக்களுக்கு அந்த மூன்று விதமுஞ் சிதறில்
பிள்ளை மரித்துப்போம். கர்ப்பாசனத்தைவிட்டு கெற்பங்கர
வழியிலும் போக்கிலும் அக்கினி மிகுக்கலும் வாயுகலங்கிலும்
மலமாம். ஸ்திரீ புருஷர்க ளிருவருக்கும் மூலாக்கினி
அதிகரித்தால் அந்த கர்ப்பஞ் சுவறிப்போம்.
இப்படி கன்மானுபவத்திற் கீடாக எடுக்கப்பட்ட
சரீரத்தில் முன் சொன்னவழியே அருந்தின அன்னாகாரமானது
முப்பது நாழிகையில் எங்குற்றதெனில்,
மல ஜல ரத்தமாகிய மூன்று கூறாகும். இதில் இராப்பகல்
அறுபது நாழிகையில் மலஜலமென்ற இரண்டுகூறு கழிந்து போம்.
மற்ற ஒருகூறாகிய இரத்தமானது சரீரத்தில் தங்கும்.
அந்த இரத்தமானது ஏழிலொருபங்கு இந்திரியமாம். மற்ற
பங்குகளோவெனில், தோல் - உரோமம் - சதை - கற்பம் -மேதை-
அஸ்தி-குடும்பி- பூளை - சுக்கிலம் - தியம்பு- குடல் - நரம்பு
முதலிய விடங்களுக்கு முறையே 7---- நாழிகைவீதம் பரவி நிற்கும்.
இனி இந்தச் சரீரத்தில் இருவினைக் கதவுங்கூட்டி மூலத்
தண்டாகிய நெடுங்கயிற்றை முகட்டு வளையாகச் சேர்த்து பழு
வெலும்பாகிய வரிசையிட்டு நரம்பாகிய யாக்கையாலே கட்டி
உதிரமாகிய ஜலத்தினாலே மண் கூட்டிச் சுவரேற்றி ரோமமாகிய
கத்தையாலே மேய்த்து எடுக்கப்பட்ட வீட்டுக்கு
நவத்துவாரமென்னும் வாசலிட்டு அச்சமாகிய கதவுகளிட்டு
பல்வாகிய தாள்பூட்டி நாவாகிய ஓங்காரம் பாய்ச்சிப் பண்டமாகிய
பஞ்சேந்திரியங்களு முடைத்தாய் நிற்கும்.
இந்தச் சரீரத்தில் பதினாறு கதவு பூட்டிய வீணாத் தண்டும்
மொழியென்னு முச்சாணெலும்பும், முச்சாண் சதையும்,
அஞ்சுருவும், ஆறுதெருவும், ஏழுகடலும், எட்டு தூணும்,
நாலு சாண் பருமனும், எட்டுச்சாண் நீளமும், முப்பத்திரண்டு
முழக் குடலும் இருக்கும்.
இது மூலாதாரத்தைத் தொட்டு ஆக்ஞையளவும்
பெருநரம்புகள் (11000) , சிரநரம்பு (18000) ,கையிலும் காலிலும்
பெரு நரம்பு (7000) சிறுநரம்பு (12000), நாபிதானத்தில் பெரு
நரம்பு (1000) சிறுநரம்பு (2000) நவத்துவாரத்துக்கும் வாசல்
9 க்கு பெருநரம்பு (1500) சிறுநரம்பு (3500), முடிவில்
பெருநரம்பு (3000) சிறு நரம்பு (6000) எலும்பிலுங்
குடலிலும் சிறு நரம்பு (7000). ஆக நரம்பு நாடி (72000)
இனி கால்களிலும் கைகளிலும் சந்துப் பொருந்தல்-
69-கழுத்துக்குக் கீழ்சந்து (86) கழுத்துக்கு மேற்சந்து
(83) ஆக சந்து பொருந்தல் (337)
இனி நாசியில் ஜலம் பலம் - 41. எலும்பில் ஜலம் பலம்-7
மாம்சத்தில் ஜலம் பலம்-21 ஆக ஜலம் பலம் -69.
காலிலும் கையிலும் எலும்புகள் (190) மூலாதாரத்தைத்தொட்டு
ஆக்ஞையளவும் முழுயெலும்பு (30) கழுத்துக்குமேல் பொடியெலும்பு (300)
இருபக்கத்திலும் எலும்பு (20) ஆக எலும்பு (510).
இனி சரீரத்தில் 3--- -கோடி ரோமத் துவாரங்களும்,
நாளொன்றுக்கு (21600) சுவாசமும், (96) தத்துவமும்,
(360) பலம் மாம்சமும், உழக்கு பித்தமும், ஆழாக்குச்
சேத்துமமும் கூடி சரீரத்திலே நாளொன்றுக்கு நடக்கும்
பிராண வாயு (12) விரல் பிரமாணம் புறப்பட்டு நாலுவிரல்
பிரமாணங் கழிந்து போய் (8) அங்குலம் உடம்பூடுருகி
சப்த தாதுக்களை வளர்க்கும்.
இனி ஜீவராசிகளின் வாழ் நாளின்
விவர மெப்படி யெனில்.
வயதளவு 100 -க்கு -
10 வயதளவும் இளமை,
20-வயதினளவும் வாலிபம்,
25-30-40 - இதுவரையில் யௌவனம்,
45-50-இவைகளில் கௌமார திசை யடைந்து ஒளி மழுங்கலுற்று பிருதிவி -அப்புவை நெருக்கும்.
60- அப்பு தேயுவை நெருக்கும்,
70-தேயு-வாயுவை நெருக்குதலினால் தாதுமாயா வுணர்வு பண்டு போலே செலுத்தும்,
80-வயதில் வாயு ஆகாசத்தை நெருக்கும்,
90 -வயதில் ஆகாசம் ஆத்துமாவை நெருக்கும், அதனால் மலஜலம் இடை விடாமல் ஒத்துநிற்கும் .
100-வயதில் ஆத்துமா வந்தவழியை நோக்கும்.
இப்படிப்பட்ட சரீரமானது முன்சொன்ன அறு திங்களில் முந்தாமல்
சற்குருவின் தாளே சரணமென்று திருக் குருந்தீசுரர்
ஆதி திருமூல தேவருக்கு திருவுளம்பற்றி யருளிய
முறைமை கூறினோம்.
தோற்றவொடுக்கம் முற்றிற்று.
அத்துவா தத்துவ கலைஞானம்.
அட்சரம் - ஆகாரம்-கரணம்- அவஸ்தை-பொறி-புலன் -
இளமை-வறுமை-வேதம்-புராணம்-சரியை-கிரியை-யோகம்-
மெய்ஞ்ஞானம்- இவ்விதமென்று குருவருள் செய்யச் சீடன்
கேட்டுத் தெளிந்து அருட்பிரகாசத்திலே சர்வ அஞ்ஞானங்களையும்
ஞானாக்கினியினாலே சுட்டுப் போட்டு களிப்புற்று
சிவத்துடனே நின்று தெளிவுறவே யெப்போதும் சிவஞானியென்று
ஒட்டியாணம் பூட்டி ஆனந்தமென்னும் ஞானாமிர்தத்தை யருந்தி
ஓம் நமா வென்னும் ஞான முத்திரையிட்டு
அழியாப் பதவியாக மோட்ச சாம்பிராச்சியத்தை
யடைபவருக்கே சீவன் முத்தரென்று பேராம்.
இப்படிப்பட்ட பெருமையை யடையுமவர்களுக்குப்
பரகதி கிடைக்காததற்குக் காரணமேதோவெனில்;
பரகதிக்கு விலகல்.
காயாபுரியென்னும் பட்டணமும், அந்திர சூத்திரமென்னும்
உட்கோட்டையும், நவத்துவாரமாகிய வாசல்களும்,
இரணமென்னும் முகப்பும், சுவாதிஷ்டானம், மணிபூரகம்,
அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் அரண்களும்,
அக்கினிமண்டலம், ஆதித்தமண்டலம், சந்திர மண்டலம் ஆகிய
சொர்க்க மத்திய பாதாளமாகிய லோகங்களும், அங்க ராசன்
மூர்க்க ராசன் என்னும் இரண்டு ராஜர்களும், மூலப்பிரகிருதி
யென்னுந் துன்மந்திரியும், பஞ்சபூதர்களென்னும் பிரதானியர்களும்,
அலகையென்னும் வீதிகளும், இச்சாசத்தி கிரியாசத்தி யோகசத்தி ஞானசத்தி
பராசத்தியென்னும் ஊழியக் காரிகளும், அசுவையென்னும் அடப்பக்காரனும்,
கெர்விதனென்னும் களாஞ்சிக் காரனும் , கால கர்மனென்னும் தளவானும் ,
மனம்-புத்தி-சித்தம்- ஆங்காரமென்னும் காணிக்காரனும்,
மாயாப் பிரபஞ்சமென்னும் வன்னிநாயகப் பாடிகரும்,
சத்த-பரிச-ரூப - ரச -கந்தமென்னும் கொல்நாயக்கர்களும்,
காம-குரோத-லோப-மோக-மத-மாற்சரிய-இடும்பை அகங்காரமென்னும் கள்ளரும்,
இதமகித மென்னு மல்லர்களும்,
ஆணவம்-மாய்கை-காமியம்-என்னும் கோட்டைக்காரரும்,
வாக்கு-பாதம்-பாணி - பாயுரு- உபஸ்தம் என்னும் கன்னக்காரரும்,
சாக்கிர - சொப்பன - சுழுத்தி- துரியம்- துரியாதீதமென்னும் தலையாரிகளும்,
அன்னமயம், பிராணமயம்,மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயமென்னும் காலாட்களும்,
வாயு, தேயு வென்னும் புரவிகளும்,
மனோபதியென்னும் கருணீகனும்,
நவகோடியென்னும் ராவுத்தனும்,
இருதயபாதரென்கிற தானாபதிகளும்,
சதகோடி மகாமந்திர மென்னும் உப தளமும்,
வாதபித்த சேத்துமமென்னும் பரிவாரமும்,
அஷ்டமத மென்னும் யானைகளும்,
நாலுவேத மென்னும் ரதங்களும்,
அசுத்தம் சுத்தமென்னும் தேவியரும்,
இருவினை யென்னும் தோழிகளும்,
இவர்கள் யாவரும் கூட்டமாகக் கூடிக்கொண்டு தங்களில் தாங்களே ஒருவருக்கொருவர்
ஒப்புரவற்றவர்களாய் முன்னுரைத்த காயாபுரிக்கோட்டையை வளைந்து கொண்டு
ஒன்பது வாசலுக்கும் அஷ்டமதமென்னும் யானைகளை விடுத்து யுத்தஞ்செய்கையில்
ஒருவருக்கொருவர் தங்களால் இந்தக்கோட்டையை
ஆளுகிறதற்கு சாத்தியப்படாமல் காரிய உபாதியாலும் காரண
உபாதியாலும் ஸ்தூல சூக்குமாதி தேகத்தினாலும் சதுர்விதோபாயத்தினாலும்
ஆராய்ந்து இந்தக் கோட்டையைக் கைக்கொள்ளும்படி பராபரமா யிலங்குகின்ற
சற்குருநாதன் மானைப்பிடிக்க மான் சட்டையுடுத்தது போல திருநந்தி
தேவரான சற்குருநாதர் ஆதிகபிலராகிய திருவள்ளுவராய்
திருமூலதேவருக்குத் திருவாய்மலர்ந் தருளியவாறு இதயமென்னும்
வில்லுக்குப் புரியென்னும் நாணினைப்பூட்டி அறிவென்னும்
அம்பைத்தொடுத்து குருவென்னும் இலக்கு நோக்கி
மூலாதாரத்தின் இரண்டு நாகுநெட்டழுத்தின் நடுநடுத்தெழுத்திலே
யிருந்து வங்கென்று வளைத்து சங்கென்று
சன்னிதனாய் அங்கிஷாவென் றியங்குவித்து சங்கென்று
ஆக்ஞையா சக்கரத்திலே புகுந்து அக்கினிமண்டலத்தில்
அனைவரையுங் காண்பித்துக்கொண்டு ஆயாவாளென் னும்
இடை பிங்கலை இரண்டுக்கும் படிக் கதவிட்டு ஆதிமூலமென்னும்
யானையின் மேற் கொண்டு தண்டுக்குந் தனுவுக்கும் நடுக்
குத்தென்னுங் குரசுக்கயிற்றுக்குள்ளாக அன்ன தானத்தி
லுற்றவளவில் அங்கென்று மேனோக்கி ஆதிகாலமும் அவ்வையும்
பதியுங்கொண்டு நடுவணையென்னும் ருத்திராக்கினியான
பன்னிரு சமுத்திரத்திலே ஆனையை நீராட்டுவித்து
ஞானபரமென்னும் காவணமிட்டு அங்கென்று மேனோக்கி
யுற்றளவில் சித்திர நாடி வழியேசென்று சந்திராபுரி யென்னும்
மண்டலமுங் கொண்டு அக்கினி மண்டலத்தில் அஞ்செழுத்திலேயும்
ஆதித்த மண்டலத்தில் மூன்றெழுத்திலேயும்
சந்திர மண்டலத்தில் ஓரெழுத்திலேயும் ஆசனமாயிருந்த
பிறகு திரிமண்டலாதிபன் பின்னிட்டு மந்திரி யுபதேசப்படி
வைத்துக் காயாபுரியென்னும் பட்டணத்தைக் கொள்ளாமற்
கொண்டு அதிகாயனென்னும் பிரபஞ்சங்களை யெல்லாம்
கருவோடறுத்து , பின்பு சத்தியஞானப் பிரகாசமான மனதிருத்
தேரிலே யெழுந்தருளிய பின்பு ,
அறிவுகந்து நரலோகங் கொண்டருளியபின்பு காயாபுரியை நோக்கி திருநந்திதேவர்
ஆதி கபில மஹாரிஷி திருவள்ளுவர் சாக்ஷியாகத் திருமூலதேவருக்குத்
திருவுளம் பற்றியருளிய முறைமையிலே திருமூல தேசிகர்
நின்று நகைசெய் தளவில் காயாபுரி பட்டணத்தில் யோகாதியுங்கெட்டு
இரவகெந் துருவபதாதி சேனையுபட்டு ஆயாக்கினி
வேந்தனும் சிறப்புண்டுபோய் காயாபுரியென்னும் பட்டணத்தில்
சொர்க்க மத்திய பாதாள லோகமளவாக திருவடி வைத்துக்கொண்டு
ராச்சியஞ் செய்தபடிக்கு திருநந்திதேவர்
ஆதிகபில மகாரிஷி திருவள்ளுவர் சாட்சியாகத் திருமூல
தேவருக்கு அபயாஸ்தமுங் கொடுத்தருளி அபிஷேகமுஞ்
சூட்டி சித்தாந்தமும் வேதாந்தமுங் கடந்த நாதாந்த முடிவான
அமுர்த பஞ்சாட்சர துருவ நிலையில் சூக்ஷம்புகட்டி இப்படி
யுணர்த்தியருளிய முறைமையை உட்பட்டுத் தேடாதவன்
சிவஞானி யல்லவென்று இந்தமுறையை உட்பட்டுத்
தேடின பெரியோர்களுக்குப் பராபரத்தில் உத்தரங்களும்
வெளியாயிருக்கும்.
பிண்டத்திற் கண்ட பொருள் அண்டத்திற் காணலாம்.
அண்டத்திற்குள்ளது பிண்டத்து முண்டெனக் கொள்க.
ஆறாதார ஜீவோற்பத்தி சிந்தாமணி முற்றிற்று.