logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

            சிவமயம்

 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய 

            காப்பு - வெண்பா

பாண்டரங்கங் கண்டுதில்லை பாதிநெல்லை பாதிசொல்லி
வேண்டலெய்தத் தூண்டல் விநாயகனும் - நீண்டவடி 
வேலோனும் ஆனி விழாச்சேவை வேண்டிவரும் 
மேலோர் பதத்துகளு மே.

            நூல்

            வெண்பா

பூதலமும் மீதலமும் போதின்மறைப் புங்கவனும்
சீதரனும் போற்றுதிருத் தில்லையே - நாதனிடம் 
கோடிநலம் நீடுதென்றற் குன்றுதவு செந்தமிழால்
ஈடில்வள மார்ந்தநெல்லை யே   (1)

பத்தர்களும் முத்தர்களும் பாவலரும் காவலரும்
சித்தர்களும் நத்துதிருத் தில்லையே - அத்தனிடம்
பஞ்சா யுதனேர் பலர்வாழும் பான்மையினால் 
எஞ்சாத சீர்கொள்நெல்லை யே    (2)

நீதி மறையோர் நெருங்குதலால் நித்தநித்தம் 
தீதிலறம் ஓங்குதிருத் தில்லையே - ஆதியிடம் 
செந்நா வலரும் திருவேடத் தொண்டர்களும்
எந்நாளும் மன்னுநெல்லை யே   (3)

வாசவனும் வேதியனும் மாயவனும் மற்றனைய 
தேசர் எவருமெச்சும் தில்லையே - ஈசனிடம் 
கானவர்போற் பல்லுயிர்கள் காதிஅவற் றூன்அருந்தும் 
ஈனருக்கா காதநெல்லை யே   (4)

பையரவத் தாள்முனியும் பாய்புலிக்கால் மாதவனும் 
செய்யகதி பெற்றுயர்ந்த தில்லையே - ஐயனிடம் 
தாம்பிரமன் றாடும் சரணமே தஞ்சமென்று
யாம்பிறந்த தாயநெல்லை யே   (5)

அல்லல் வினையைவென்றிட் (டு) ஆனந்த வீட்டினிடம் 
செல்லவிழை வார்புகழும் தில்லையே - நல்லனிடம் 
விண்ணும் மண்ணும் நொந்து வெறுப்பனசெய் வாரைவெல்சீர் 
எண்ணுமவர் வாழுநெல்லை யே   (6)

கீர்த்தி அறம்பெருமை கேடில்முத்தி என்பவற்றைச் 
சேர்த்திகத்தில் நல்கவல்ல தில்லையே - மூர்த்தியிடம்
செந்திருவும் வெண்திருவும் சேர்ந்துவிளை யாடுகையால்
இந்திரனூர் ஒல்குநெல்லை யே   (7)

பாரணங்கு வாழும் பரிசே நனிவிழைவார்
தீரர்வந்து போற்றிசைக்கும் தில்லையே - வீரனிடம் 
காரார் பொதியைக் கலசமுனி வன்தவம் போன் (று) 
ஏரார் பொருநைநெல்லை யே   (8)

புத்தர்முத லோர்வரினும் புண்ணியவெண் ணீறணியும் 
சித்தமுண்டா கத்திகழும் தில்லையே - அத்தனிடம் 
பொங்காழி யன்ன புனிதத் தவத்தோரை 
இங்கா தரிக்குநெல்லை யே   (9)

சுத்தபர ஞானச் சுகமடைந்த தூயோர்கள் 
சித்தனந்தம் செய்ததிருத் தில்லையே - நித்தனிடம் 
கண்டிகையும் நீறும் கவினப் புனைவார்க்கே
எண்திருவும் நல்குநெல்லை யே   (10)

பக்கலுறை வார்களொடு பல்கோடி ருத்திரரும்
செக்கரெனக் கூத்தாடும் தில்லையே - நக்கனிடம் 
கண்ணிஅறி யாராய்க் கருமமே தெய்வமென்றன்(று) 
எண்ணினரைக் காய்ந்தநெல்லை யே   (11)

மாற்றரிய பொற்பணியும் மாமணியும் மான்மதச்செஞ் 
சேற்றமிழும் வீதியுடைத் தில்லையே - ஆற்றலது
கூற்றனைக்கொன்(று) அன்றோர் குழவியினைக் காத்தபிரான் 
ஏற்றருந்தச் செய்தநெல்லை யே   (12)

வல்ல புலவோரும் மாதவரும் வந்துவந்து 
தில்லனைத்தும் பெற்றுவக்கும் தில்லையே - நல்லதலம் 
தோணான் கினராகித் தும்பியொன்றைக் கொன்றுரித்த
ஏணார் மருவுநெல்லை யே   (13)

பொன்னை விழையாதார் புந்திநலம் போல்வளரும் 
தென்னையொடு வாழைமலி தில்லையே - முன்னையிடம்
மூங்கி லொடுகரும்பு முத்துகுக்கக் கண்டு விண்ணோர்
ஏங்கியசீர் ஓங்குநெல்லை யே   (14)

கந்தை முறிக்கும் கடகளிறூர் காவலவர் 
சிந்தை யொல்க நீடுசெல்வத் தில்லையே - நிந்தையில்லூர் 
பந்தைநிகர் கொங்கையுமை பார்க்கப் பரதமுயன்(று)
எந்தைவளர் கின்றநெல்லை யே   (15)

கற்றணுகும் பாவலரைக் காசினியும் காணநுகர் 
சிற்றம் பலம்குலவுந் தில்லையே - நற்றகைய (து)
ஆனந்தச் செப்புமன்றில் ஐம்முகத்தான் ஆடுதலால் 
ஈனந் தவிர்ந்தநெல்லை யே   (16)

பன்முறையும் கூடிப் பலவாப் பயப்படுத்தும் 
சென்மவினை தீர்க்குமெழில் தில்லையே - நன்மையது 
போயத்தம் கூப்பினர்க்குப் போராழி யான்புகழ்சீர் 
ஈயத் தகுந்தநெல்லை யே   (17)

ஆரியரும் விண்ணோர் அனைவோரும் அன்றுவப்பத் 
தேரிழுத்த பாட்டணியும் தில்லையே - சீரியது
விண்டோய் தருக்குலங்கள் வெட்கவளர்  வேய்அடிவாழ்
எண்டோட் பரமர்நெல்லை யே   (18)

சந்திரனும் சூரியனும் தக்கன்மகத் தூ(டு)உதிரம்
சிந்தியழ வென்றபிரான் தில்லையே - முந்தியது 
வேறிணையொன் றின்றிஎதிர் வெய்யமுயல் மீதிலரன் 
ஏறிநடம் ஆடுநெல்லை யே    (19)

நன்னாக ரீகமெய்தி நாய்நரிபோன்(று) ஊன்எலும்பு 
தின்னாதார் வேண்டுமெழிற் றில்லையே - என்னாசை 
எட்டு வகைப்பொருளும் ஈசனே என்றறிந்தார்க்(கு) 
இட்டுவப்பார் வாழுநெல்லை யே   (20)

நாரணனும் நான்முகனும் நந்துகின்ற நாள்வரினும்
சீரணமெய் தாததிருத் தில்லையே- காரணனூர்
தாயார் வயிற்றிலின்னம் சந்ததியா கும்துயரம் 
ஏயார் பிறக்குநெல்லை யே   (21)

மோகாந்த காரம்வந்து மூடா தொழியும்வண்ணம் 
தேகாபி மானம்விட்டார் தில்லையே - சாகானூர்
பந்தாடு மாதர் பனைவேர் அரும்பு நுதல் 
இந்தா விளங்குநெல்லை யே   (22)

வந்த படிபாடும் வாயுடைய மாதவர்தம் 
செந்தகைய பாடல்மலி தில்லையே- நந்தலில்லூர்
ஆதி முனிக்கோன் அடியார்க்(கு) அடிமைசெய்யா 
ஏதிலார்போற் றாதநெல்லை யே   (23)

கள்ளமின்றி வானிற் கரைந்தார் கனிதமிழாம் 
தெள்ளமுதச் சீர்மணக்கும் தில்லையே - வள்ளல்கொள்ளூர்
தென்னர்களிற் கூனிமிர்ந்த சீரியன்தான் செய்தபணி 
இன்னம் இலகுநெல்லை யே   (24)

திங்கணிகர் சங்கத் திரளுலவும் வாவிதொறும் 
செங்கமலம் பூத்ததிருத் தில்லையே - சங்கரனூர்
முத்தாரம் காட்டும் முகிழ்முலையார் மோகமிஞ்சி 
எய்த்தாரும் ஏத்தும்நெல்லை யே   (25)

மக்கள் உருவ மரையனையார் இன்றிஎந்தத் 
திக்கவரும் போற்றுமணித் தில்லையே - மிக்கதலம் 
பாற்றுணவு கொள்வார் பகையாய பத்தர்நெஞ்சில்
ஏற்றுலவும் ஈசன்நெல்லை யே   (26)

மங்களமும் நல்ல மணமும் மகத்துவமும் 
திங்கள்தொறும் காட்டுகின்ற தில்லையே - அங்கணர்ஊர்
தங்கமொல்கும் அக்கும் தவளமுழு நீறுமணி
எங்கள்அபி மானநெல்லை யே   (27)

பார்த்தன் அடித்ததற்குப் பாசுபதம் ஈந்துமகிழ்
தீர்த்தர் மருவுதிருத் தில்லையே - சீர்த்ததாம் 
வெட்டும் இடையனுக்கு மேலுலகில் மேவுமெய்ச்சீர்
இட்டுவப்பார் உற்றநெல்லை யே   (28)

அங்கடைந்த ஆனந்தத் தால்அவ மாகிஎன்றும் 
செங்கண்நெடு மால்கிடக்கும் தில்லையே - புங்கவரூர்
வண்ணஇதழ்க் காந்தி மதித்தாய் வழங்கறத்தால் 
எண்ணருஞ்சீர் தோய்ந்தநெல்லை யே   (29)

பல்வரமும் வேண்டியவா பத்தருக்கெல் லாம்கொடுக்கும்
செல்வச் சிவகாமி தில்லையே - நல்வளத்தூர் 
அள்ளல்விட முண்ட அனவரதத் தான்அரன்பால்
எள்ளரும்சீர் எய்துநெல்லை யே    (30)

பாலாழி யிற்றுயிலும் பச்சைநிற மோகினிநேர் 
சேலார்கண் ணார்மலியும் தில்லையே - மேலாமூர் 
மாட்டு மனைவியொடும் மைந்தனொடும் ஏறுமவர்
ஈட்டுபுகழ் காட்டுநெல்லை யே   (31)

அட்டவித மூர்த்திகளை அஞ்செழுத்தை நிந்தைசெய்யாச் 
சிட்டர் பலர்வாழும் தில்லையே - கட்டழகூர் 
கொல்லா விரதியர்தம் கூட்டமிக நீடுதலால் 
எல்லாரும் மெச்சுநெல்லை யே   (32)

மிக்கழகார் சோலைஎங்கும் வீதியெங்கும் வீடெங்கும் 
சிக்க மயிலாடும் தில்லையே - முக்கணனூர் 
கல்லைநிகர் நெஞ்சறியார் காதும் தொழிலறியார் 
இல்லைஎன்னார் வாழுநெல்லை யே   (33)

நாற்றகைய பேற்றில் நலந்தீ(து) அறியாரைத் 
தேற்றவல்லார் பற்பலர்வாழ் தில்லையே - கூற்றனஞ்சூர்
அன்பர்க்(கு) எளியாராய் அந்தரத்தோர் ஆதியர்வெள்
என்பணிந்தார் ஆளுநெல்லை யே    (34)

வீட்டுக்(கு) அலந்துதொண்டு வேணமட்டும் செய்வார்க்(கு) ஓர் 
சீட்டுக் கிடைக்குமெழிற் றில்லையே - பாட்டுயரூர் 
கும்ப முனிவன் குறித்தபெரு வாழ்வதனை
இம்பரிற்பெற் றுய்ந்தநெல்லை யே    (35)

பொய்த்துளநூல் நம்பிப் புழுங்குநர்க்கும் பொற்சபையிற் 
சித்துருவம் காட்டுகின்ற தில்லையே - தத்துவனூர் 
செச்சையொடு பச்சைபுணர் சீருருவம் நாடுமவர்க்(கு)
இச்சைமுற்றும் நல்குநெல்லை யே   (36)

சந்தா கரச்செந் தமிழ்பாடத் தக்கவர்க்குச்
சிந்தா குலம்தவிர்க்கும் தில்லையே - நந்தாவூர் 
தக்கவயற் றோறும் தரளம்உகும் நெற்பயிர்சீர் 
இக்கனைய ஆகுநெல்லை யே   (37)

வெங்கட் கொலைப்புலையர் வேரறுக்கும் வீரர்புகழ்
திங்கட் சடைப்பெருமான் தில்லையே -  எங்களூர் 
பண்டை வினையழியப் பாடுபடும் பத்தர்கட்கும் 
இண்டையணி ஈசன்நெல்லை  யே   (38)

மாதமெல்லாம் மும்மாரி வந்துவந்து பெய்வதனாற்
சீத மிகப்பொலியும் தில்லையே - கோதறுமூர் 
காமாதி நல்கும் கழைமதனன் தன்னைஎரித்(து) 
ஏமாக்கும் எந்தைநெல்லை யே   (39)

நன்றைஅதன் ஏனையினை நாடிநைந்த நாவலவர் 
சென்றையம் தீர்க்கும்நல்ல தில்லையே - கொன்றையனூர் 
மைக்காலன்  தன்பகட்டு வாகனத்தின் வன்மனமும்
எக்காலும் அஞ்சுநெல்லை யே   (40)

தாமாகச் சந்தத் தமிழ்ப்புலவர்  தம்கவிபோல் 
தேமாங் கனிஉதிரும் தில்லையே - கோமானூர் 
மாற்றரும்சீர்த் தென்பொதியை மாமுனிவன் ஆதியரால்
ஏற்ற மலியுநெல்லை யே    (41)

நாற்றுக் கழனி நடுக்கும் குமப்புரையும் 
சேற்றுக் கயலுகளும் தில்லையே - போற்றுநல்லூர் 
கூற்றுக் (கு) எமனாக் கொலை முயல்வார்க்(கு) இன்னுயிராம்
ஏற்றுப் பதாகைநெல்லை யே   (42)

பூத்தார் அணிகுழலார் பொற்புநடை கண்டுகண்டு 
சேத்தாள் அனம்பயிலும் தில்லையே - கூத்தானூர் 
பன்னரிய செந்தமிழாற் பாடிப் பணியுமன்பர்
இன்னல்முற்றும் தீர்க்குநெல்லை யே    (43)

அன்னம்விண்ணூர் தன்னைவிடுத் (து) அம்புயப்பூங் கொட்டையினைத் 
தின்ன வரும்வளமைத் தில்லையே - முன்னவனூர்
பொல்லாங்கு நோய்வறுமை போலும் அவைசிறிதும் 
இல்லார் மருவுநெல்லை யே   (44)

விம்மு கனியும் விரிமலர்ப்பைந் தாதும்மிகச் 
செம்மு பொழிலணையும் தில்லையே - ஐம்முகனூர் 
துன்பம் தணந்து தொலைவரிய தாகியபேர் 
இன்பம் கொடுக்குநெல்லை யே   (45)

சொல்புலவர் சேகரனாம் சுந்தரர்க்காத் தூதுமன்று 
செல்புனிதர் மேவுதிருத் தில்லையே - தொல்புகழூர்
அன்னைஎழிற் காந்திமதி  அம்புயத்தாள் போற்றொருவற் (கு)
என்னைமக வாச்செய்நெல்லை யே   (46)

தூயதமிழும்  துகள்தீர் மறையும் மெச்சும்
சேயபுகழ் ஓங்குதிருத் தில்லையே - நாயகனூர் 
பெண்ணாளும் பாகப் பெருங்கோல மன்றிமற்றொன்(று)
எண்ணாதார் வாழுநெல்லை யே (47)

அம்புயத்தோன் சொன்னாலும் அஞ்செழுத்தை யன்றிநம்பாத் 
தெம்புடையார் மன்னுதிருத் தில்லையே - சிம்புள்மல்கூர் 
சேரத்தா னான சிவனே பரமெனச்சொல்
ஈரத்தார் மேவுநெல்லை யே   (48)

விண்குறித்த தேவர்களும் வேதியரும் மாதவரும்
திண்குறளும் போற்றிசைக்கும் தில்லையே - எண்குணனூர்
பாகைநிகர் முத்தமிழும் பாடும் பணிபுரிவார்க்(கு) 
ஈகை மலியுநெல்லை யே   (49)

அக்கினியி  னோ(டு) உடுக்கை அங்கையனல் ஏந்தியரன்
தெக்கினிற்கால் வீசிநிற்கும் தில்லையே - முக்கியவூர் 
பாவி கருமம் பரமென்று பல்பகையை 
ஏவிரும் வாழ்ந்தநெல்லை யே   (50)

மேலார் அவாவியணி வேண்டலெய்தும் வீறுடைத்தாய்ச் 
சேலார வாவியணித் தில்லையே - பாலானூர்
வேதங் களையும் வியன்கிளியும் மிக்குரைத்திட்(டு)
ஏதங் களையுநெல்லை யே   (51)

            முற்றிற்று

            நூற்பயன்

பத்தி மலிந்துதில்லை பாதிநெல்லை பாதிஎன 
நத்தியஐம்பத் தோர்கவியும் நன்குரைத்தாற் - புத்திதரும்
சித்திதரும் அப்பாற் றிரும்பாது சொல்லுமுண்மை
முத்திதரும் மெய்என் மொழி.

 

Related Content

திருத்துறையூர் சிவபெருமான் பதிகம்

திருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்