logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஞானக்கட்டளை

சிவமயம்.

இகபரங்களிலே யாவரொருவர்க்கு முன் செய்த தவத்தினால்  ஞானத்தில் 
விருப்புற்றுச், சற்குருநாதன் சேவைகள் கிடைத்து மோட்சம் பெறப் பரிபக்குவம் 
வந்தவிடத்து வேதாந்த தெரிசன  விளக்கமே சூரியப்பிரகாச விளக்கமாயிருக்கும் . 
மற்ற நூற்களியாவும்  மின்மினி விளக்கமாயிருக்கும். , ஆகையால் வேதாந்த 
தெரிசனமே யுண்மையென வறிக. 

இனி வேதாந்த தெரிசனஞ் செய்வதெப்படி யென்றால்??
நான்கு வேதமே முப்பத்திரண்டு உபநிடதமாயும், நான்கு வாக்கியமாயும் 
ஆறு சாஸ்திரமாயும் , இன்னும் அநேக சாகோப சாகைகளாய் 
விரிந்திருந்தாலும் இவை யிரண்டு வகையாயிருக்கும்.

அவை யாதெனில்: அற்ப சுருதி வாக்கியமென்றும், பிரபலசுருதி வாக்கியமென்றுமாம்.

 இவற்றுள் அற்ப சுருதி வாக்கியம் கன்ம காண்டத்தைச் சொல்லும். 
பிரபல சுருதி வாக்கியம் ஞான காண்டத்தைச் சொல்லும். இந்த ஞான காண்டத்தைச் 
சொல்லா நின்ற பிரபல சுருதி வாக்கியத்தை மகா வாக்கியமென்று சொல்லப்படும்.

அவ்வாக்கிய விபரம் யாதெனில்:-நான்கு வர்னமும், மூன்று பதமும், மூன்று  பதார்த்தமும், 
மூன்றிலக்கணை யுமாய் விளங்கும்.

வர்னம் நான்காவன-  சத்தியம், ஞானம், அநந்தம், ஆநந்தம்.

பதம் மூன்றாவன - தற்பதம், தொம்பதம், அசிபதம்

பதார்த்தம்  மூன்றாவன-அது, நீ , ஆனாய் என்பனவாம். 

இதில் அது  என்றது பரம்.  நீ என்றது சீவன், ஆனாய்  என்றது  (ஐக்கியப் பொருளாகிய) சிவம்.

இலக்கணை வாக்கியம் மூன்றாவன - விட்டலக்கணை சம்சர்க்க வாக்கியம். 
விடாதலக்கணை விசிட்டவாக்கியம். விட்டு விடாத லக்கணை - அகண்ட வாக்கியம். 

இப்படி விளங்கிய வேதாந்தத்துக்குத் தத்துவம் 28. இந்த இருபத்தெட்டே 
அபரோட்சமாகிய காரிய உபாதி -7.
பரோட்சமாகிய காரண உபாதி- 7. அவத்தை -9 அபிமானி - 9. 
முக்கியம், லட்சியம்- 2, சுத்தம் அசுத்தம்- 2                     

 (திருத்தம்: கூட்டுத்தொகை சரியாக வரவில்லை. சரி பார்க்கவும்)

இவைகள் விளங்க வேண்டுமானால் சிரவண, மனன, நிதித்தியாசனத்தினால்
விளங்கவேண்டும். 

சிரவணமாவது -முன் சொன்ன வேதாந்தப் பொருளைக் குருநாதன் 
பக்குவனுக்குச் சொல்லக் கேட்பது.

மனனமாவது - அதைச் சீடன் சதா சிந்திப்பது .

நிதித்தியாசனமாவது- சிந்தித்தபடியே அறிவது. இவைகளே தத்துவ தெரிசனமாம்.


    இனி முன் சொன்ன வேதாந்த தத்துவம் இருபத்தெட்டாவன. 

சகள வடிவமான அசித்துருவ தத்துவம்- 24.  நிட்கள வடிவமான சித்துரு தத்துவம்-4.
இதில் சுரோத்திரம், தொக்கு, சட்சு, சிங்ஙுவை, ஆக்கிராணம் ஆகிய ஞானேந்திரியம். 5.
வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் ஆகிய கன்மேந்திரியம்- 5. ஆக பொறி. 10. 
இவைகளின் விஷயங்களாகிய சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், வசனம்,
கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் ஆகிய 10. 
மனம், புத்தி, அகங்காரம் , சித்தம் ஆகிய அந்தக்கரணம் 4.
ஆக அசித்துருவ தத்துவம் -24 . 
புருடன், காலபரம், வியோமம், பரம் ஆக சித்தருவ தத்துவம்- 4. 
ஆக தத்துவம் இருபத்தெட்டு.

இந்த இருபத்தெட்டு தத்துவமே சகம், ஜீவம், பரம் என மூன்று பொருளாய் விளங்கும்.
அதெப்படியெனில், 24 தத்துவமும் சகமாக விளங்கும்.
புருடன், காலபரம் வியோமம் மூன்றும் சீவனாக விளங்கும்.
பரம் ஒன்றுமே சிவமாக விளங்கும். இதே இன்னம் சத்தியம், பரம், ஞானம், சீவன், 
அநந்தம், சராசரம், ஆனந்தம், சகல புவனமாகவும் விளங்கும். இதுவே தத்துவ தெரிசனமாம்.

        1. இனி தொம்பத சிரவணம். 

முன் தற்பதத்தைச் சொல்லாமல் தொம்பதத்தை முதற்சொன்ன தெதனாலெனில்:- 
நீயென்ற  பதார்த்தமாகிய சீவன் நிர்விகாரியாய்ச், சித்துருவமாயிருந்தும் அதையறியாமல்
சடத்தைத் தானென்றறிந்திருப்பதால், இச்சடம்  நீயல்லவென்று விலட்சணப்படுத்திப்  போதிப்பதற்காக
அது நீ ஆனாய் என்ற வாக்கியத்தை , நீ அது ஆனாயென்றும், தத்தொமசி யென்ற வாக்கியத்தை 
தொந்தத்தசியென்றும் அன்வயப் படுத்தி  யுரைக்கலாயிற்று.

 இனி தொம்பத வுபாதியானது  காரிய உபாதியென்றும் சீவவுபாதியென்றும், 
ஒவ்வொன்று எவ்வேழுவிதமாய் விளங்கும். அஃதெப்படியெனில்: 

முன் சொன்ன சித்துருவ தத்துவம் 4.ம் நிற்க, அசித்துருவ தத்துவம்  24-ல் 
பொறிகள் 10-ம், தேகம் ஒன்றும் ஆகப் பதினொன்றுஞ் சேர்த்து ஒன்று விஷயங்கள் 10ம் சேர்த்து ஒன்று , 
அந்தக்கரணம் -4 . இவைகளுக்குச் சகாயமாகிய பிராணாதி-1. ஆக காரிய உபாதி-7.

     இந்தக் காரியவுபாதி ஏழுமாகிய தேகம்நீயல்ல. எப்படி நானல்லவெனில்:- 
என் தனம், என் தானியம், என்புடைவை, என்னுடைமையாதி என்பதுபோல; 
என்தேகம், என் இந்திரியம், என் பிராணன், என் மனம், என் புத்தி, என் அகங்காரம், என் சித்தம், 
என்று உன்னாலறியப்படுவதால், இவைகளும் அந்தக்கரணங்களின் தொழில்களாகிய 
ஐயம், துணிவு, அபிமானம், சிந்தனை, ஆகிய இவைகளும் நீயல்ல. ஆயின் நான்யார்? 
என இந்த ஏழு பாதியாகிய மூன்று தேகத்தையும் இது இது எனப் பகுத்தறிந்திருக்கின்ற 
அறிவாகிய ஆத்மாவே நீ. 

    இந்த  நீ இவ்வேழுபாதியுடன் கூடியிருந்த போது முக்கியமென்றும், அவ்வுபாதியை 
நீங்கியிருந்தபோது  லட்சியமென்றும், அதை நானென்றபோது அசுத்தமென்றும், 
அவ்வுபாதியை நானல்லவென்று கண்டபோது சுத்தமென்றுமாம். 

    இவ்வுபாதியாகிய தேகம் நானல்லவென்றதற்கு வேதப் பிரமாணம் உண்டோவென்றால் 
உண்டு, அஃதாவது: 

    சம்சர்க்க வாக்கியமென்றும், விட்டலக்கணையென்றும் இரண்டு விதமாம். இதற்கு அருத்தம் யாது?  
மச்சுவீடு கூப்பிடுகிறதென்றும், கங்கை சத்திக்கிறதென்றும் சொன்னால், மச்சுவீடு கூப்பிடுமா?  கூப்பிடாது,
அதற்குள் ஒரு புருஷனிருந்து  கூப்பிடுகிறானென்றும்; கங்கை சத்திக்குமா?, சத்தியாது. அதன் கரைமேலுள்ள 
இடைச்சேரியிலிருக்கும் மனிதர்களே சத்திக்கிறார்களென்றும் அருத்தங்கொள்வது போல,
சடமாகிய தேகம் செய்கையாதி செய்யுமா?, செய்யாது; தேகத்திற்குள் ஆத்மாவாகிய  நீயிருந்து 
சகல செய்கையுஞ் செய்விக்கிறாயென்பதே.

    ஆகையால் நீயும் அப்படியே அறிவதுமல்லாமல், காரிய வுபாதித்தன்மையும், உனக்கு உடம்பு,
அன்னியமென்பதையும், உனக்குள்ள முக்கியமும் லட்சியமும் சுத்தா சுத்தமும் சம்சர்க்க வாக்கியத்தினுடைய
விட்டலக்கணையும் நாமனுக்கிரகித்தபடி உன் அனுபவத்தைச் சொல்லென? சுவாமீ தேவரீர் திருவாய்
மலர்ந்தருளிய சிரவணத்தினால் அடியேனுக்குக் கேள்வி  நன்றாகத் திடமாயிற்றென, 
இதுவே தொம்பதசிரவண மென்றறிக.


            2. இனித் தொம்பத மனனம். 

    இனித் தொம்பத மனனமெப்படியெனில்:-

    முன்சொன்ன காரியவுபாதி ஏழும் ஆத்மாவுக்குத் தூலதேகம், சூக்கும தேகம், காரணதேகம்
என மூன்று தேகமாயிருக்கும் . அதெப்படி: -

    ஏழுபாதியுடன் கூடி நின்றவிடமே தூலதேகம். இதில் தேகம் இந்திரியம்.1. விடயம்-1, 
ஆக  இரண்டு பாதியும் நிற்க மனாதி-4ம்,  பிராணாதி வாயுக்கள் 1-ம். ஆக ஐந்துவுபாதியுடன் 
கூடிநின்றவிடம் சூக்கும தேகம் .  இதில் மனாதி 4- உபாதியும் நிற்க.  பிராணாதி வாயுக்களாகிய 
ஒருபாதியுடன் கூடி முன் சொன்ன உபாதி  யாவுந்திரண்டு ஒன்றாயொடுங்கி
மூலப்பிரகிருதியாய் நின்றவிடம் காரணதேகம். ஆகிய இந்த மூன்று தேகமே சாக்கிரம், சொப்பனம்,
சுழுத்தி என்னும் மூன்றவத்தையாம், அஃதெப்படி: -

    ஏழுபாதியோடுங் கூடிநின்ற தூலதேகமே சாக்கிரம். இதை நானென் றபிமானித்த 
ஆத்மாவுக்கு அபிமான நாமம் விசுவனென்றறி.

    இனி ஐந்துபாதியுடன் கூடிநின்ற சூக்கும தேகமே சொப்பனம், இந்தச் சொப்பனத்தை 
நானென் றபிமானித்த ஆத்மாவுக்கு அபிமான நாமம்  தைசதனென்றறி. 

    இனி பிராண வாயுவாகிய ஒருபாதியுடன் கூடிநின்ற மூலப்பிரகிருதியான காரண தேகமே சுழுத்தி. 
இதை நானென்றபிமானித்த ஆத்மாவுக்கு அபிமான நாமம் பிராஞ்ஞனென்றறி.

    இந்த மூன்று தேகமான மூன்றவத்தையும் சீவனுடைய முக்கியார்த்தமாகையால், 
மூன்று தேகமான  மூன்றவத்தையும்  நீயல்ல; எப்படி நானல்ல.

    இந்த ஏழுபாதியுடன் கூடிநின்ற தூலதேகம் சாக்கிரமென்றும், இந்தச் சாக்கிரம் 
சொப்பனத்தி லழிகின்றதென்றும், உன்னாலறியப்படுவதால், இது நீயல்ல; 
இதில் அபிமான நாமமும் உனக்கில்லை.

    இனி ஐந்து உபாதியுடன் கூடிநின்ற சூக்கும தேகம்,  சொப்பனமென்றும், இந்தச் சொப்பனம் 
சுழுத்தியில் அழியுமென்றும், உன்னாலறியப் படுவதால் இதுவும்  நீயல்ல, இதில் அபிமான நாமமும் உனக்கில்லை.

    இனி பிராணவாயுவாகிய ஒருபாதியுடன் கூடிநின்ற மூலப்பிரகிருதியான காரணதேகம் சுழுத்தியென்றும், 
இந்தச்சுழுத்தி ஏதுந்தெரியவில்லை யென்றழிந்து போனதும், உன்னாலறியப்படுவதால், இதுவும் நீயல்ல; 
இதில் அபிமான நாமமும் உனக்கில்லை.

    இந்த மூன்றவத்தையாகிய மூன்று தேகமும் நானல்ல வெனில், பின்னை நான்றான் யாரென.

    இந்த மூன்றவத்தையின் விரி வொடுக்கங்களை யறிந்து சாட்சியாயிருக்கின்ற சைதன்யமான 
அறிவே ஆத்ம சொரூபமென்கின்ற நீ .

     இந்த ஆத்ம சொரூபம் உபாதி, தேகம், அவத்தை முதலிய துரிசெல்லாம்விட்டு மேலாக விளங்கிக் 
கொண்டிருப்பதால், முன் கொண்டிருந்த அபிமான  நாமங்களை விட்டுத் துரியமென்னும் நாமத்தைப் 
பொருந்திச்  சுத்த தொம்பதார்த்தமாய்  விளங்கிக் கொண்டிருக்கின்றது. 

    ஆகையால் இந்தத் துரிய சொரூபமே நீயென்னும் ஆத்ம சொரூபம்.  இதை நீயுன்  மனத்திற்றரித்து  அனுபவித்திரு. 

    இப்படி மனத்திற் றிடமாகத் தரிப்பதே தொம்பத மனனம் .

        3. இனித் தொம்பத நிதித்தியாசனம் யாது.

    சுவானுபூதியிற் காட்சிப் படுத்துவதே!
    சுவானுபூதியென்ப தென்ன?

    உன் அனுபவத்திலே நீ கண்டிருந்த தெளிவை நீ சொல்வதே சுவானுபூதி.

     ஆகையால் முன் சொன்ன தத்துவ ரூபம், உபாதித்தன்மை,  அவத்தைநிலைகள்,
அபிமான நாமங்கள் முதலிய யாவும்  கண்டு கழன்று துரிசற்று மேலான துரிய சொரூப
தரிசனமும் உனக்கு  நாம் அனுக்கிரகித்தபடி சிரவணத்திற் புலப்படக்கேட்டுத் 
திடப்படத் தரித்திருப்பதைச் சொல்லென?

        சீடன் அனுபவங் கூறல். 

    சுவாமி! தேவரீர் திருவாய் மலர்ந்தருளிய கருணையால் அடியேனுக்குப் பசுமரத்தில் 
ஆணியறைந்தாற் போல தொம்பத லட்சண மனைத்தும்  நன்றாயறிந்தேன் . அது எப்படியென?

    ஏழுபாதியுடன் அத்தூல தேகத்திலிருந்து புருடன்  விடயாதி போகங்களை அனுபவிப்பது 
சாக்கிரமென்றும்,  இதில் அபிமானி விசுவனென்றும், இந்தச் சாக்கிரம்  சொப்பனத்தில் அழிந்ததென்றும்,
இனி ஐந்து உபாதியுடன்  கூடிச் சூக்கும தேகத்திலிருந்து  விஷய போகங்களை யனுபவிப்பதாகப்  புருடன் பாவிப்பது
சொப்பனமென்றும், இதற்கபிமானி தைசதனென்றும், இந்தச்சொப்பனம் சுழுத்தியிலழிந்த தென்றும்; 
இனி ஒரு உபாதியான பிராணவாயு ஒன்றுடன் கூடின காரண தேகத்திலிருந்து புருஷன் கருவி 
கரணங்களேதுமில்லாமல், எல்லா மொடுங்கிப்போய், ஏதுந்தெரியாமல் இருளாயிருந்ததைச் சுழுத்தியென்றும், 
இதற்கபிமானி பிராஞ்ஞனென்றும்; இந்த அறியாமையான  சுழுத்தி அறிவினிடத்தில் அழிந்ததும்,
இந்த அறியாமையென்னுஞ் சுழுத்தி யிருளைக் கெடுத்து அறிவாய் நின்ற தொம்பதசுத்தார்த்தமான 
துரியத்தை என் வடிவெனவும் கண்டேன்.

    இப்படிக்கண்ட சொரூபம் எப்படியிருந்ததெனில், அறிவே வடிவாகியும், ஞானப்பிரகாசமாகியும், தனக்கு 
முதல், நடு, இறுதி  பக்கமென்பதில்லாமல்; சர்வ புவன சராசரமும் தன்னிடத்திற் றோன்றியும், விளங்கியும், 
ஒடுங்கியும், வருவதாய்; அதற்குச் சாட்சியுமாய் விளங்கிய அறிவாகிய என்வடிவைக் 
கரதலாமலகம் போலக் கண்டேன்.

    தேவரீர் கருணாகடாக்ஷத்தினாலே சீவன் முத்தனானேன், முப்பொறிப் பகைகளான மனம், வாக்குக் காயத்தினால்
வரப்பட்ட காமாதி எண்வகை விவகாரங்களும் அறுத்தேன்,  நிர்விகாரியுமானேன் , ஈடேறினேன், என்ற  சீடனைனோக்கி

    வாராய் சீடனே! உனக்கு ஆத்ம போதம் நன்றாக விளங்கப்பெற்றாய், ஆகையால் தேகாந்தமளவும் 
இந்நிலையைப் பிரியாதே என்றனர் .

    சுவாமி!தேவரீருடைய அனுக்கிரகத்தால் ஆத்மபோதம் பெற்றுச் சீவன் முத்தனானது போல, இதற்கு மேலான
பரபோதமும் பெற்றுப் பர முத்தனாகும்படி தேவரீர் திருவாய் மலர்ந்தருளி யிரட்சிக்க வேண்டுமென்று  சீடன் 
விண்ணப்பஞ் செய்யக் குருநாதன் அருளிச்செய்கின்றார்.

            4. இனித் தற்பத சிரவணம்.

    அஃதாவது முன் சொன்ன தொம்பதப் பொருளுக்கு ஏழுபாதியுண்டானது போலத்
 தற்பதப்பொருளுக்கு ஏழு உபாதியுண்டாய் விளங்கும் ; அஃதென்னவெனில்: 

    முன்சொன்ன தத்துவப்படி புருடன், காலபரம், வியோமம் என்ற சொல்லப்பட்ட மூவகை அறிவுருவான 
சீவ துரியம் பரனுக் குடலாக ஏழு உபாதியாய் விளங்கும். 

            அதன் விவரம் 

சர்வஞ்ஞன், சர்வ காரணன், சர்வேந்திரியாமி, சர்வேசுரன், சர்வசிருட்டி, சர்வதிதி, சர்வசங்காரம் என ஏழாம்.

    இப்படி ஏழுவகைப்பட்ட உபாதி நாமம் ஆத்மதுரியத்துக்கு எப்படி யனுபவமாமெனில்?  சர்வேந் திரியங்களினுடைய 
செயலையுந் தானறிந்து  கொண்டிருப்பதால் சர்வஞ்ஞனென்றும், சர்வேந்திரியங்களு மழிந்தவிடத்தும் தான் அழிவற்று
நித்தியனாயிருப்பதால் சர்வகாரணனென்றும் சர்வேந்திரியங்களிலும் உள்ளீடாயிருப்பதால் சர்வேந்திரியாமியென்றும், 
சர்வேந்திரியங்களுக்கும் மேலான அதிபதியாயிருப்பதால் சர்வேசுரனென்றும், சர்வேந்திரிய சர்வ பிரபஞ்சங்களையும் 
தான் தோற்றுவிப்பதால் சர்வசிருட்டியென்றும், சர்வேந்திரியாதிகளையும்  தான் பரிபாலனம் பண்ணுவதால் 
சர்வ திதியென்றும், சர்வேந்திரியாதிகளும் தனக்குள்ளே யொடுங்கலால் சர்வசங்காரனென்று நாமந்தரித்தது. 

    அப்படியானால் சகல துரிசுகளுமற்றுச் சுத்தமான துரியத்துக்கு இவ்வேழு உபாதி நாமங்கள் வருவானேனெனில்? 
சர்வேந்திரிய சர்வ சராசரங்களும் தன்னிடத்திலே தோன்றி விளங்கி ஒடுங்கலாலும், அவைகள் தனக்கன்னியமெனக்கண்டு
சாட்சி மாத்திரமாயிருப்பதாலும், அத்ம துரியத்துக்கு அவ்வொரு தூடணமுண்டாய் உபாதி நாமங்களைப் பொருத்தி 
பரனுக்கு உடலாச்சுதெனவறிக.

    இப்படியான ஏழு உபாதியும் அதுவென்கின்ற பர சொரூபமல்ல. ஆனால் பரசொரூபமெதுவெனில்: 

    இந்த ஏழு உபாதியும் யாதொரு சைதன்யத்திலே கண்டு அளவிடப்படுகின்றதோ அதுவே பரசொரூபம். 

    அந்தப் பரம் அவ்வுபாதியுடனே சம்பந்தித்தபோது முக்கியமென்றும், அவ்வுபாதியைத் தவிர்ந்து நின்றபோது
லட்சியமென்றும், அவ்வுபாதியை நானென் றபிமானித்த போது அசுத்தமென்றும், அவ்வுபாதியைக் கடந்துநின்ற 
போது  சுத்தமென்றுஞ் சொல்லப்படும் . 

    இப்படி யிருந்தாலும், சீவபரனுக்கு உபாதி வேறுபட்டது போல சீவனுக்கும் பரனுக்கும் வேறுபாடின்றி 
ஒன்றாகவேயிருக்கும். இதற்கு வேதப்பிரமாண முண்டோவெனில்? உண்டு.

    அஃதாவது, விசிட்டவாக்கியம். விடாதலக்கணை. அதற்கு அர்த்தம் யாதெனில்:- 
ஒருசிவப்புக் குதிரையும் வெள்ளைப்பசுவும் கண்டாயா? என்ற எதிரிட்ட ஒருவனைக்கேட்க, அவன் வெள்ளை நிற்கின்றது, 
சிவப்புப் போகின்றது என, அச் சத்தத்தால் வெள்ளைப்பசு நிற்கின்றது, சிவப்புக் குதிரை போகின்றது என நிறமும் 
பசுவும் குதிரையும் ஒன்றாயிருப்பது போல, சீவனும் பரனும் ஒன்றெனவறிதலே யருத்தமாம். 

    ஆகையால் காரண வுபாதித் தன்மையும், பரனுக்குண்டான முக்கியமும், சுத்தாசுத்தமும், பரனும், சீவனும், 
ஒன்றென்பதும், விசிட்ட வாக்கியத்தினுடைய விடாத லக்கணைச் கருத்தமும், உனக்கு நாம் அனுக்கிரகித்த பிரகாரம்
 உன் அனுபவத்தைச் சொல்லென,

    சுவாமி! தேவரீர் திருவாய் மலர்ந்தருளியதால் சிரவணத்திலே நன்றாகத் திடமாயிற்று.

                5. இனித் தற்பதமனனம். 

    அஃதாவது, முன் காரியவுபாதி யேழும் மூன்றவத்தையானது போல, காரணவுபாதி யேழும் 
மூன்றவத்தையா யிருக்கும்.

    அதெப்படியெனில்? சர்வக்ஞன் , சர்வ காரணன், சர்வேந்திரியாமி, சர்வேசுரன், சர்வசிருட்டி, 
சர்வதிதி, சர்வசங்காரன் என்னும் ஏழுபாதியுடன் சம்பந்தித்த புருடன் பரசாக்கிரமென விளங்கும்.
இந்தப் பரசாக்கிரத்தை நானென்றபிமானித்த பரனுக்கு அபிமான நாமம் விராட்டென்றறிக.

     இனி பரசொப்பனமாவது? இந்த ஏழு உபாதியில் நான்கு உபாதியும் நிற்க சர்வசிருட்டி,
 சர்வ திதி, சர்வசங்காரம் என்ற மூன்று உபாதியுடன் சம்பந்தித்த காலபரம் பரசொப்பனமென 
விளங்கும்; இந்தப் பரசொப்பனத்தை நானென்றபிமானித்த பரனுக்கு அபிமான நாமம் 
இரணிய கர்ப்பனென்றறிக ,

    இனி பரசுழுத்தியாவது? இந்த மூன்று, உபாதியில் இரண்டு உபாதியும் நிற்க 
சர்வ சங்காரமாகிய ஒரு உபாதியுடன் சப்பந்தித்து நின்ற வியோமம் பரசுழுத்தியென விளங்கும்.             (திருத்தம்: சங்கரமாகிய / சங்காரமாகிய)
இந்தப் பரசுழுத்தியை நானென்றபிமானித்த பரனுக்கு அபிமானநாமம் அவ்வியாகிர்த னென்றறிக.

     ஆகையால் இந்த மூன்றவத்தையும், மூன்றபிமான நாமமும், பரனுக்கு முக்கியமும், அசுத்தமுமாம். 
ஆகையால் இது பரசொரூபம் அல்ல. 

    இனி பரசொரூபம் யாதெனில்? இந்த மூன்றவத்தையையுங்  கண்டு கழன்று மேலாய் நின்று விளங்கிய 
சுத்த அறிவானதே, அதுவென்ற பரசொரூபம். 

    அதெப்படியெனில்? ஏழு உபாதியுடன் சம்பந்தித்து விளங்கிய புருடன் பரசாக்கிரம். இந்தப் பரசாக்கிரம் 
பரசொப்பனத்தி லழியுமென்று உன்னா லறியப் படுவதால் பர சாக்கிரம் பரசொரூபமல்ல. 
இதில் அபிமான நாமமும் பரத்துக்கில்லை.

     இனி மூன்று உபாதியுடன் சம்பந்தித்து விளங்கிய காலபரம் சொப்பனம். இந்தப் பரசொப்பனம்
பர சுழுத்தியில் அழியுமென்று, உன்னால் அறியப்படுவதால் பரசொப்பனம்  பரசொரூபமல்ல. 
இதில் அபிமான நாமமும் பரத்துக்கில்லை யென்றறிக. 

    இனி ஒருபாதியுடன் சம்பந்தித்து விளங்கிய வியோமம் பரசுழுத்தி யென்றும்
இது அறிவிறந்து நின்றது துரியாதீதமென்றும், உன்னாலறியப்படுவதால் இப் பரசுழுத்தியும் 
பரவுடலே தவிரப் பரரூபமல்ல. இதில் அபிமான நாமமும் பரத்துக்கில்லை யென்றறிக.

    இவையாவும் பரரூபமல்லவாயின் இனிப் பரரூபந்தான் யாதெனில்? 

    இந்த மூன்றவத்தையுங் கண்டு கழன்று மேலாய் நின்று விளங்கிய லட்சியம் சுத்தமான பரதுரியமே 
அதுவென்கின்ற பர சொரூபம். இந்தப் பர சொரூபத்தை மனதில் திடப்படத் தரித்து அனுபவித்திரு. 


            6. இனித் தற்பத நிதித்தியாசனம்

    
    அதாவது, முன் சொன்ன உபாதித்தன்மையும், அவத்தை நிலைகளும், அபிமான நாமமும், இவையெல்லாங் 
கண்டு கழன்று துரிசற்று  மேலான பரதுரிய தரிசனம் உனக்குச் சிரவணத்திலே கேள்விப்பட்டு மனதில் தரிப்பதாக 
நாம் உனக்கு அனுக்கிரகம் பண்ணினபடி உன்மனதில் திடப்படத் தரித்ததைச் சொல்லென,

    சுவாமி?  தேவரீர் திருவாய் மலர்ந்தருளியதால், புடம் வைத்த பொன்னுக்கு மாற்றேறியது போல 
அடியேனுக்கு  மனதில் திடமாகத் தரித்தது . 

    அதாவது, பரவுபாதியேழும் சம்பந்தித்து விளங்கிய புருடன் பரசாக்கிரமென்றும், இந்தப் பரசாக்கிரத்தை 
அபிமானித்த பரனுக்கு அபிமான நாமம் விராட்டென்றும்  கண்டேன். இந்தப் பரசாக்கிரம் பரசொப்பனத்தில் 
அழிந்ததுங்கண்டேன், இதில் அபிமான நாமம் பரத்துக்கில்லை யென்பதுங் கண்டேன்.

    இனி மூன்று உபாதி சம்பந்தித்து விளங்கிய காலபரம் பரசொப்பனமென்றும், இந்தச் சொப்பனத்தை 
அபிமானித்த பரனுக்கு அபிமான நாமம் இரணிய கர்ப்பனென்பதுங் கண்டேன். இந்தப் பரசொப்பனம் 
பரசுழுத்தியில் அழிந்ததுங் கண்டேன், இதில் அபிமான நாமம் பரத்துக்கில்லை யென்பதுங் கண்டேன்.

    இனி ஒரு உபாதியுடன் சம்பந்தித்து விளங்கிய வியோமம் பரசுழுத்தியென்றும், இந்தப் பரசுழுத்தியை 
அபிமானித்த பரனுக்கு அபிமான நாமம் அவ்வியாகிருதனென்றுங் கண்டேன். இந்தப் பரசுழுத்தி பரதுரியத்தில் 
அழிந்ததுங் கண்டேன். இதில் அபிமான நாமம் பரத்துக்கில்லை யென்பதுங் கண்டேன்.

    இனி இந்தப் பரசுழுத்தியான  வியோமத்தை யிதுவெனக் கண்டேன். கண்டு மேலாய் நின்று சர்வமுந் 
தன்மயமாய்த்  தனக் கன்னியமில்லாமல் எல்லாந் தானாக விளங்கி போக்கு வரவின்றி உள்ளும் புறம்புந் 
தானாகி நின்ற பரதுரியமான பரரூபத்தை அடியேன் உள்ளங்கை ரத்நம் போலக் கண்டேன். சுவாமிகளினது
கிருபையால் பரமுத்தனானேன் என, ஆகையால் உனக்குப் பரபோதம் நன்றாக விளங்கிற்றென்றறி. 

    சுவாமி?  தொம்பத சுத்தார்த்தமான சீவதுரியத்தையும் தற்பத சுத்தார்த்தமான பரதுரியத்தையும், அறிந்தேன். 
இனி யிதற்குமேலான சிவ துரியத்தையும் தரிசிப்பித்துச் சிவானுபவப்பேறு பெறும்படி கிருபை செய்ய வேண்டுமென்று
சீடன் விண்ணப்பஞ் செய்ய, குருநாதன் அருளிச்செய்கின்றார்.


                7. இனி அசிபத சிரவணம்.

    அஃதாவது, முன் சொன்ன தற்பத சுத்தமான பரன் பரிபூரணமாகவும், எல்லாந் தானாகவும் விளங்கினாலும்,
அந்தப் பரனுக்கு ஒருவாசனா தோஷம் உண்டு. அது யாதெனில்,

    எல்லாந் தானாக  விளங்குகின்றோமென்னும் கொள்கையினாலும் , ஆனாய் என்ற சிவத்துக்குத்தான் 
மூன்று தேகமாய் அவத்தைக் குறிகளைக் கொண்டு  நிற்கையாலும், பரனுக்கு இந்த வாசனாதோஷம்  உண்டென்றறி.

     ஆகையால் இந்தத் தற்பத சுத்தமான பரம்பொருளானது  அசிபதப்பொருளான ஆனாய் என்ற சிவத்துக்கு 
மூன்று  தேகமாய் மூன்றவத்தையாய் விளங்கும். 

    அதெப்படியெனில்? பரம், விசுவக்கிராசம், உபசாந்தம் என மூன்று விதமாய் விளங்கும்; ஆகையால் 
இந்த மூன்றும் சிவசொரூபமல்ல வெனவறிக.

            8. இனி அசிபத மனனம்.

    அதாவது, முன் சொன்ன தொம்பதத்துக்கும், தற்பதத்துக்கும், மூன்றவத்தைகள் உண்டானது போல, 
அசிபதத்துக்கும், மூன்றவத்தைகள் உண்டாய் விளங்கும். 

    அதெப்படியெனில்? காண்பானும், காட்சிப்படுகின்ற சர்வ சராசரப் பிரபஞ்சமும், தானேயாகிப் 
பரிபூரணித்து விளங்கிய பரனே சிவசாக்கிரம். இந்தச் சிவசாக்கிரத்தைத் தானென்று அபிமானித்து 
விளங்கிய சிவத்துக்கு அபிமான நாமம் சிற்சொலிதை யென்றறிக. 

    இனிச் சிவசொப்பனம் யாதெனில், முன் சொன்ன சிவ சாக்கிரமான பரன், சத்த, பரிச, ரூப, ரச, கந்தமென்னும்
ஐவகைப்பொருளால் சமைவதான சகல சகத்தையும் விழுங்கித் தானே  சகரூபமாய்ச் சூரியனும் பிரபையும் போலவும்,
மணியும் ஒளியும் போலவும், பண்ணும் இசையும் போலவும், அன்னியமற நின்ற  விசுவக்கிராசமே சிவசொப்பனம்;
இந்தச் சிவ சொப்பனத்தைத் தானென்று, அபிமானித்த சிவத்துக்கு அபிமான நாமம் பிரசாபத்தியனென வறிக. 

    இனிச் சிவசுழுத்தி அதாவது,  இந்தப்பரன் எல்லாம் தானாய் விளங்குகிறோமென்பதையு  மறந்து,
 தன்னையுமறந்து  தன்னையுமிறந்து பரமாதீதமாய்ச் சாந்தப்படுவதான உபசாந்தமே சிவசுழுத்தி; 
இந்தச் சிவசுழுத்தியை நானென்றபிமானித்த சிவத்துக்கு அபிமான நாமம் பொற்பு விசாந்த னென்றறிக. 

    ஆகையால் இந்த மூன்றவத்தையும் சிவரூபமல்ல.  ஆனால் சிவரூபம் யாதெனில்; சர்வ பரிபூரணமான 
பரம் சிவசாக்கிரமென்றும், இந்தச் சிவ சாக்கிரம் சிவசொப்பனத்தி லழியுமென்றும், உன்னால் அறியப்படுவதால்
சிவசாக்கிரம் சிவ ரூபமல்ல.  இதில் அபிமான நாமமும் சிவத்துக்கில்லை யென்றறிக.

    இனி பரன் விசுவக்கிராசம் பண்ணியதே சிவசொப்பன மென்றும், இந்தச் சிவசொப்பனம் 
சிவசுழுத்தியி லழியுமென்றும், உன்னாலறியப்படுவதால், சிவசொப்பனமும்  சிவரூபமல்ல;           (திருத்தம்: கிவசொப்பன/சிவசொப்பன)
இதில் அபிமான  நாமமும் சிவத்துக்கில்லையென்றறிக. 

    இனி உபசாந்தம் சிவசுழுத்தியென்றும், இந்தச் சிவசுழுத்தி சிவதுரியத்திலழியுமென்றும் 
 நீ அறிவதால் சிவசுழுத்தியும் சிவரூபமல்ல.  இதில் அபிமான நாமமும் சிவத்துக்கில்லை யென்பதறிக.

     இவைகளும் சிவரூபமல்லவெனில் இனிச் சிவரூபந்தான்  யாது?

    இந்த மூன்றவத்தையுங் கண்டு கழன்று மேலான அறிவென்னும் சிவதுரியமே 
சுயம்பிரகாசமான குருபாதமென்ற சிவரூபம்.

    ஆகையால், இந்த அசிபதத்துக்கு வேதப்பிரமாண வாக்கியம் அகண்ட வாக்கியமென்றும் 
சோயம் தேவதத்தனென்பதுமே.

    இதற்கருத்தம் யாது? தேவதத்தனென்னும் நாமமுடைய ஒருவன் ஒரு காலத்தில், ஒரு தேயத்தில் 
ஒரு பட்டணத்தில், கிரகஸ்தனாய்த் தனது கிரியை செய்துகொண்டிருந்த விடத்திலும்; பின்பு ஒரு காலத்தில், 
ஒரு தேயத்தில், ஒரு பட்டணத்தில், சதுரங்கபலமுஞ் சேவிக்க, அதிக பிரதாபத்துடன் இராசாவாயிருந்த விடத்திலும்; 
பின்பு ஒரு காலத்தில் , ஒரு தேயத்தில், ஒரு பட்டணத்தில் சர்வசங்க பரித்தியாகம் பண்ணிக்கொண்டு, 
தண்டு கமண்டலத்துடன், சந்நியாசியாயிருந்த விடத்திலும், அங்கங்கே கண்ட அடையாளங்களைப் 
பார்த்தறியும்போது, முன் கிரகஸ்தனா யிருந்தவனும், பின் இராசாவா யிருந்தவனும், 
பின்பு சந்தியாசியா யிருந்தவனும், ஒருதேவதத்தனே போல், தற்பிரகாசமாய் விளங்கிய பிரமம், 
அசித்துருவமான காரிய உபாதியைப் பொருந்திய விடத்துக் கிஞ்சிக்ஞனாகியும், உபாதி நாமத்தை 
அபிமானித்துக் கொண்டு சீவனாகியும்  அதற்கு மேற்பட்டுச் சீவ துரியமாகியும், பின்பு சித்துருவமான 
காரண  உபாதியைப் பொருந்தியவிடத்துச் சர்வஞ்ஞனாகி ,  உபாதி நாமத்தை அபிமானித்துக்கொண்டு, 
பரனாகியும், அதற்கு மேற்பட்டுப் பரதுரியமாகியும், பின்பு இந்தப்பரனை அவத்தைகளாகப் 
பொருந்தியவிடத்து, அவத்தை நாமத்தை யபிமானித்துக் கொண்டு சிவமாகியும், அதற்கு மேற்பட்டுச் 
சிவதுரியமாகியும், சுயம்பிரகாசமான குருபாதமாகியும் விளங்கா நின்ற பிரமம் ஒன்றே .

    எப்படி? முன்சொன்ன தேவதத்தனுக்கு  மூன்று காலமும், மூன்று தேயமும், மூன்று பிரபஞ்சமும் 
விட்டுப் போன விடத்து ஒரு தேவதத்தனே  யானதுபோலவே, மூன்று உபாதியும், ஒன்பது அவத்தையும்,
ஒன்பது அபிமான நாமமும், தீர்ந்தவிடத்தில் சீவ துரியம், பர துரியம், சிவதுரியம் என்னு முத்துரியமுமாய் 
அந்த முத்துரியமென்னப் படுவதுமிறந்து, சுத்த அறிவாகாரமான பிரமமேயான சிவானுபவத்தைக்
கண்டு மனதில் திடப்படத் தரித்திரு.

            

                9. இனி அசிபத நிதித்தியாசனம்.

    அதாவது, உனக்கு நாம் சொன்னபடி, அசிபதத்தினுடைய அவத்தை நிலைகளும் அபிமான 
நாமக்குறிகளும், அகண்ட வாக்கியத்தன்மையும், விட்டுவிடாத லக்கணையும், கண்டு  கழன்று மேலான 
குருபாதமான  சிவதுரியமென்னும் சுயம்பிரகாச தரிசனமும்,  சீவ துரியமென்னும் சீவனும்,
பரதுரியமென்னும் பரனும், சிவதுரியமென்னும் சிவமும், ஒரு சொரூபமேயென்று  அகண்ட வாக்கியத்தினால் 
தேவதத்தனைப்போலக் கண்ட திடமும்,  நீ சிரவணத்திற் கேட்டு மனதிற்றரித்ததைச் சொல்லென, 
சீடன் விண்ணப்பஞ் செய்கின்றான். 

    சர்வ பரிபூரணமாய், காண்பானும் காக்ஷியும் தானாய் நின்ற பரசொரூபத்தைச் சிவசாக்கிரமென்றும், 
இந்தச் சாக்கிரத்தை நானென் றபிமானித்த சிவத்துக்கு அபிமான நாமம் சிற்சொலிதை யென்றுங் கண்டேன். 
இந்தச் சிவசாக்கிரம் சிவசொப்பனத்தி லழிந்ததுங் கண்டேன். 

    இனி முன்சொன்ன சர்வ பரிபூரணமான விசுவமென்னும் சகத்தை விழுங்கித் தான் சக சொரூபமாய் நின்ற
விசுவக்கிராசத்தைச் சிவ சொப்பனமென்றும், இந்தச் சிவசொப்பனத்தை நானென் றபிமானித்த சிவத்துக்கு 
அபிமான நாமம் பிரசாபத்தியனென்றுங் கண்டேன், இந்தச் சிவ சொப்பனம் சிவசுழுத்தியில் அழிந்ததுங் கண்டேன். 

    இனி சகலலோகமும் சகல சராசரமும் தன் வடிவேயெனக் கண்டு விளங்கிய பரன், எல்லாம் தன்மயமே யென்பதையும் 
மறந்து , தன்னையும் மறந்து, தன்னையுமிறந்து, சாந்தமான உபசாந்தத்தைச் சிவசுழுத்தியென்றும், இந்தச் சிவசுழுத்தியைத்
தானென்றபிமானித்த சிவத்துக்கு அபிமான நாமம் பொற்புவி சாந்தனென்றுங் கண்டேன். இந்தச் சிவசுழுத்தி 
சிவ துரியத்தில் அழிந்ததுங் கண்டேன். 

    இனி இந்த மூன்றவத்தையும் கண்டு கழன்று, மேலாய் நின்று  தற்பிரகாசமாய் விளங்கிய சிவதுரியமான
 குரு சொரூபத்தையுங் கண்டேன், சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம், என்னும் முத்துரியமுமாய், இந்த மூன்று
துரியமுமிறந்து , ஏகவடிவான பிரமசொரூபத்தையுங் கண்டேன், சுவாமிகளினது பெருங்கருணையாலே 
சிவானுபவப் பேறும் பெற்றுச் சிவரூபமானேன் என.

     இனி நீ பெற்ற தற்பிரகாசமான குருசொரூபம் எப்படி யிருந்ததெனில்?

    நிராமயமாய், நிராதாரமாய், சர்வமும் பிரமப்பிரகாசமாய் விளங்குகின்றது என.

    ஆகையால் இதுவே சத்தியம், ஞானம், அநந்தம், ஆனந்தம் என்றும், சகசீவபரம் என்றும், 
விளங்காநின்ற பொருளும், இதுவே தொம்பதமும், தொம்பதார்த்தமும், தற்பதமும், தற்பதார்த்தமும், 
அசிபதமும், அசிபதார்த்தமும், உபாதிபேதமும், அவத்தை நிலைகளும், அபிமானிகளும், இதற்கு மேற்பட்ட 
மூன்று துரியமுமாய் விளங்கிய பொருளும் தற்பிரகாசமான பிரமமே சகல வேதாகம புராண சாத்திரங்களும், 
சட்சமய விகற்பங்களும், அவைகளிற் பேதமாயிருந்த பொருளும் இதுவே; இப்படியேயிரு.

    நாமங்களினாற் குறிக்கப்படாமல், தற்பிரகாசமாய் விளங்கியது எப்படியிருந்தது, சொல்லென.

    இந்தச் சொரூபத்தை அடியேன் மனத்தால் எண்ணவும், வாக்காற் சொல்லவும், இடமில்லாமலிருக்கின்றது.
 ஆகையால், இதுவே மௌன முத்திரையென்பது, 

    அதெப்படியெனில்? மனமும் மனதினாலெண்ணப்படுவதும், வாக்கும் வாக்கினாற் சொல்லப்படுவதும், 
காயமும், காயத்தினாற் செய்யப்படுவதும், சுத்த அறிவான பிரமமே. 

    ஆகையால் மனம், வாக்கு, காயம் மூன்றுமிறந்து, வாக்கு மனாதீதமாய், தற்பிரகாசமான சொரூபமானதே
மவுன முத்திரை; இதுவே மவுன முத்திரையென்று கண்ட கருத்தையும் விட்டுச் சும்மாயிருந்தபடியே யிருப்பதே
மோட்சம்; இதுவே நிச்சயார்த்தம், இதுவே வேதாந்தத்தினுண்மை தெளிந்த பிரம தரிசனம்.

            ஞானக்கட்டளை முற்றிற்று


            சற்குருநாதன் துணை.

 
 

Related Content

சிவாத்வைதம்

அத்வைத பஞ்சரத்னம் - தமிழ் உரையுடன்

வள்ளலார் சாத்திரம் - 1. சத்தியஞானபோதம்

வள்ளலார் சாத்திரம் - 2. பதிபசுபாசவிளக்கம்.

வள்ளலார் சாத்திரம் - 3. சித்தாந்த தரிசனம்