logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வடதிருமுல்லைவாயில் தோத்திரப்பா மஞ்சரி

திருச்சிற்றம்பலம்

(தொகுக்கப் பெற்ற பாடல்கள்)

   முல்லை விநாயகர் காப்பு

    நேரிசை வெண்பா

மணி ஒளியும், பால் சுவையுமாக உயிர்தோறும்
நணிவளரு நாயகனார் நல்கும் - அணிகிளரும்
முல்லை விநாயகனை முக்கண் பகவோனை
வல்லபை தன் காதலனை வாழ்த்து.   (1)

    மாசிலாமணீசுவரர்

    நேரிசை வெண்பா

மல்லிகை என்றான் முனியு மாமாசிலாமணிதன்
முல்லை என்றால் உள் மகிழ்ந்து முன்பாயும் - நல்ல
குருவளரும் தன்னிரத்திதிற் கோங்கரும்பு காட்டும்
மருவளர் பூங்கொம்பு அசைந்த வண்டு.   (2)

விண் மணிகள் ஓரிரண்டும் வேதமணி நீலமணி
கண்மணிகள் ஈராறு காணவரும் - நன்மணியும்
வந்து அன்பால் போற்று(ம்)  முல்லைவாழ் மாசிலாமணிதா
னென்று அன்பால் எய்திடுவது என்று ?   (3)

கைக்குமணி பொல்லார்க்குக் கண்டம் கறுத்தமணி,
அக்குமணி பூண்ட மணி, அல்லவோ? - மிக்குஉலகில்
மைப்படியும் சோலை முல்லைவாழ் மாசிலாமணிதான்
எப்படி மாசில்லா மணி?   (4)

அந்தி வெடிமுல்லை அரும்பெடுத்து நான்வந்தேன்
விந்தை மாசிலாமணியா (ம்) மெய்யருக்குச் - சுந்தரம்சேர்
செண்டு கட்டவேண்டும் திரிவிளக்கிலே திரியைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து.   (5)

        கலிவெண்பா

திருத்தங்கு முல்லைத் திருவாளர் என்றன்
கருத்தங்கு அருளும் கருத்தன் - விருத்தம்
உறஎன்னை வேறாக்க வேண்டாப் பெருமான்
நிற(ம்)மன்னு நீலமிடற்றான் - பெற மன்னும்
நற்றவத்தைச் சால நவிலும் பிருகுவுக்குத்
துற்ற மணிமழையைத் தூவினான்- வில்கழுந்தால்
மோதிட்ட பார்த்தனுக்கு முன் வேடனா நடந்த
காதுற்ற சங்கக் கடிக்குழையான் - போதுற்ற
வானவனும் வாசவனு(ம்) மங்கல விழாச்செய்ய
ஆன அருள் புரியும் ஆதியான் - மானென்னும்
சாலி மணாளனுக்குத் தான் அளித்த வாவினான்
வாலிய தூய வடிவினான் - கோல் இகந்த
தீய குறும்பர் தியக்க(ம்) அற வேந்தியலை
மேய திரையனுக்கு வேண்டினான் - ஆல் அமர்ந்த
தூய தவ யோகத் துறவனான் அன்பர்களுக்கு
ஆ எனவே நல்லருளை ஆக்கினான் - தாய் இல்லா
ஐயன் புகழ்தன்னை யான் அளக்க வாராவேன்
வெய்ய வினையேன் விழைந்து.   (6)

        நேரிசை ஆசிரியப்பா

நித்தியானந்த வத்துவாய் நிறைந்தோய்!
அகளமே வடிவாம் துகளறு மூர்த்தி!
ஆகமத்து அகத்து அமர் ஏகமூர்த்தி!
உன்னிலை இந்நிலை ஆயினும் பெரும!
உலகினைக் கருணையில் உய்வித்திடுவான்
சகளங் கொண்டு புகல் அரும் சிறப்பில்
அங்கி மண்டலத்தும், சந்திரன் உலகினும்,
ஆதித்தன் இடத்தும், வேத உச்சியினும்,
மலர்மிசை மேயிய உலகு அருள்வோனினும்
ஆல் அமர்ந்துவக்கு மாலவன் வடிவினும்
தவகணத்தவர் குழூஉஞ் சிவலோகத்தினும்
அகிலமீது உயர்ந்த அலகிலாத் தலத்தினும்
நிலயிய போல என் புலனிலா அறிவினும்
காயாரோகணன் கழறிய தமிழினும்
குல்லைமாலையன் பனிமுல்லை மாநகரினும்
நேசமாய் நிறைந்த மாசிலாமணியே!
அடியவன் வேண்டுமாறு அருளுவை பெரிதும்
திங்களும், கடுக்கையும், கங்கையும் புணர்ந்த
சடாதரத்து இலங்கிய நெடிய வாள் தழும்பும்,
சிந்தாமணிமுகச் சுந்தரப் பொலிவும்,
பாலமேல் இலங்கும் கோல நீற்றழகும்,
செம்பதுமம் பொரூஉம் அம்பக விளக்கமும்,
சிந்துரம் பொலிந்த செந்துவர் வாயும்,
இந்திர நீலக் கந்தரக் குறியும்,
வடிவெலாம் கவர்ந்த படிகமேனியும்,
பொன் மலைப் புயமும், முந்நூல் மார்பமும்,
மான், மழு, வரத, அபயமு மன்பொலிந்த
தேன்மலி பதுமத்திருக்கர(ம்) நான்கும்,
கடிமலர்ப் பூங்குழல் கொடியிடைப் பாகமும்,
இந்துஎனச் செறி உந்திச் சுழியும்,
புலியதள் உடுத்த வலி இடைப் பொலிவும்,
நாதம் சிலம்பிய பாதச் சிலம்பும்,
கருணாகரம் எனும் சரணாம்புயமும்,
கல்லினும் வலிதென என் பொல்லா மனக்குத்
தோற்றமாக வீற்றிருந்து அருளி
என் செயல் எல்லா (ம்) நின்செயலாக் கொடு,
முத்தமிழ் கல்வியும், ஊன்று வாகனமும்,
கைத்தலக் கிரியையு(ம்) நற்றவச் சேர்வும்,
பொற்பளமனையும், கற்பக மனைவியும்,
துற்புத்தி இலாச் சற்புத்திரரும்,
தாயுற்ற சுற்றமு(ம்), நோயற்ற வாழ்வும்,
சிறந்த தீர்க்காயுளும், பரந்த சௌபாக்கியமும்,
ஆனிரைப் பொலிவும், தானியப் பெருக்கமும்,
அன்பர்கள் குழுவினில் இன்புற வாழ்தலும்,
எடுத்த இவ்வுடலுக்கு அடுத்ததுவாகச்
சிறந்திட அருளுவை! சிறக்கப்
பிறந்து அலையாமலே நிறைந்த வாழ்வு அருளே!!   (7)

        பன்னிருசீர் விருத்தம்

பிறையணி சடாதர விலாச ருத்ராக்கமும்,
    பெருகிவளர் நதியின் அழகும்,
    பிரபல திருநயனமு(ம்), நெற்றி அணி பூதிப்
    பிரகாசமும், சோதி முகமும், -

நிறையும் இருகுண்டலச் செவி அழகும், பன்னாக
    நிகழ் காள கண்ட அழகும்,
    நிகழு மழு, மானுமணிசதுர் புஜவிலாசமும்,
    நீளும் வியாக்ர சருமமும், -

குறைவிலாது ஆடும் இருபதமும், அடியேனுளம்
    கொண்டு தரிசிக்க அருளாய்
    கோலாகலப் பிரணவ சூலாயுதத் திரிபுர
    கோபாதிகார விமலா, -

மறைபகரும் ஐம்பத்தோர் அக்கர சொரூபனே!
    மாதுவளர் முல்லைவாயில்
    வாசவானவராசன் பேசியே புகழ்நேச
    மாசிலாமணி யீசனே!   (8)

        எழுசீர் விருத்தம்

சோதி நன்மணியே! சுடரொளி மணியே!
    சொரூபம் உண்டாகிய மணியே!
பூதி நன்மணியே! போதமா மணியே!
    புண்ணியம் திரண்ட செம்மணியே!
ஆதி நன்மணியே! அஞ்செழுத்துருவா(ய்)
    அமர்ந்த என் கண்ணினுள் மணியே!
தீதினன் முல்லை நகர் வயின் அமர்ந்த
    செழுமணி! மாசிலாமணியே!    (9)

ஒப்பிலா வேடன் தனக்கு நின் உள்ள (ம் )
    உகந்தருள் புரிந்தனை எனது
தப்பெலாம் பொறுத்தே ஆண்டு அருள்புரிவாய்
    ததி இது கருணை பார், ஐயா!
சிற்பரை செம்பொன் கொடியிடை பாகா!
    திரிபுரம் எரித்த சேவகனே!
பற்பல ஆகமங்களொடு மறைபுகழும்
    பதிமுல்லை வாழு(ம்) மாமணியே!   (10)

        சந்தப்பா

தனதன தையன தான தானன
தனதன தையன தான தானன
தனதன தையன தான தானன - தன்தானா

நதிமதி வெள்ளறு காடரா அணி
    சடைமுடி உள்ளவர் நீடு கூடலில்
    நரிபரி வெள்ள மதாகவே கொடு - வருமாயோன்

    நலமலி சல்லரி தான மானகம்
    ஒலிதர வல்லவர் பூதர் பாடிட
    நடமிடு நல்லவர் ஞான நாயகர் - அளியே சால்

குதலை கொள் ஐயர் குமார வேள் பணி
    திரு அமர் மெய்யில் வீபூதி பூசுநர்
    குசலவர் மையிருள் ஓட வீடருள் - பெருமானார்

    கொடிமதில் முல்லையின் மாசி லாமணி
    கொடியிடை நல்லவள் பாக மானவர்
    எனுமொரு மெய்யர்த மாமை மேலிட - மயலாயே.

மதிமயல் கொள்ளுவள் தீய தாம் என
    அணைமலர் தள்ளுவள் காம மீறிட
    மலர்விழி பள்ளி கொளாது மாழ்குவள் - கிளியோடே

    வகைசில சொல்லுவள் தூது போய்வர
    உருவெளி புல்லுவள் ஆடை சோர்தர
    மணம் அவிழ் மல்லிகை ஓதி வீழ்தர - விழுவாள்மேல்

விதிவசம் இவ்விடர் ஆன தேஎன
    உருகுவள் உய்யுதல் ஏதினால் என
    அறிகுவள் ஐயர் முனாகி ஈதினை - அவர்பாலே

    மிகுநலி வில்லை உய்வாய் எனாஅரு
    ளுவிர் என மெல்ல மெலாக ஓதிட
    மனதில் உள்ளுதிர் மான மேலிடு - மடவீரே.   (11)


    நேரிசையொத்தாழிசைக் கலிப்பா

மின்செய்த ஒளிநெடுவேல் வியன் தொண்டைமாற்கு அன்று
கொன் செய்த விடைத்துணையைக் குறித்து உதவிமாறு அகற்றித்
தென் செய்த 'தளி அமைக்கத் திருவருள் செய் பெருந்தகையே!
        
        (இது மூவடித்தரவு)

மை உண்ட நெடுங்கூந்தல் மடவரல் தன் கண் மானுக்
கையுண்ட நின்மேனி அருமுல்லைப் புறவமோ.

தேன் மருளும் திருநெடுங்கண் சேயிழை ஆடற்குறிய
கான் மருவும் குறுஞ்சுனையோ கண்ணுதலோய் நின்னகலம்.

மின்னெனு நுண்ணிடை மடந்தை விழிவண்டு காமுறுக்கும்
துன்னுகருங் காயாவோ சோதிநின் களக்கறுப்பே.

    ( இவை மூன்றும் ஈரடித் தாழிசை )

அதனால்,
(இது தனிச்சொல் )
மத்தம் உகந்த சித்திரச் சடையோய் !
என் மகள் இன்புக்கியைந்த
மன்னிய உருவின் மாபெரு நிலையே   (12)

        கொச்சகக் கலிப்பா

பேசும் அயன் மூன்றும் பிரிந்தடிய னான் மறைத்தேன்
மூசும் பதாம்புயத்தின் மோகம் வைக்கு நாளுளதோ?
வீசு பதாகைத் தடந்தேர் வீதி அலங்கார முல்லைப்
பாசுபதா! தேவர் பணி மாசிலாமணியே!   (13)

கன்னிமதில் சூழ முல்லைக் காவலனே! எங்கள் கொடி -
யின்னிடையை முல்லையில் சேர்ந்து இன்புதரல் ஒண்ணாதோ?
பன்னும் அடியார்கள் மனப்பாச இருட்கு ஓர்கதிராய்
மன்னும் ஒளிவீசும் எங்கள் மா மாசிலாமணியே!   (14)

அத்தொண்டை மானுக்கு அருளிய நீர் செவ்வாயாம்
இத்தொண்டை மானுக்கு இரங்கி நலம் ஈயீரோ?
கைத்தொண்டு அறா தலைக்கும் காமாதிய களைந்த
மெய்த் தொண்டர் அன்பு செய்து மேவு முல்லை நாயகரே!  (15)

தேனாரும் பூங்கமலச் செய்யாள் தினம் பரவும்
மானார் விழி அணங்கை வைத்தாய் இடப்பாகம்
நானோ உனதடிமை, நம்பினேன், வாழ்வு அருள்வாய்,
வானோர் துதி முல்லை வாழ் மாசிலாமணியே!   (16)

சித்தம் உனதடியைச் சேரத் தினம் தினமும்
பத்தி செய்வேன்றன் கண்அருள் பாலிப்பாய் பண்புயர
மத்தம் உகந்த சடை வள்ளால்! நினது உளத்துள்
வைத்தருள்வை முல்லைநகர் வாழ் மாசிலா மணியே   (17)

பல்லுயிர்கள் தோறும் பரவும் எள்ளும் எண்ணெயைப் போல்,
சொல்லு கலை தோறும் தோன்றுபொருள் நீயலவோ?
வெல்லும்படி கதியை வேண்டினேன் மேதினியில்
செல்லும்படி உதவிசெய்!  மாசிலாமணியே!   (18)

வண்டமரும் சோலை வளம் பெருகு முல்லைநகர்
கண்டவர்க்கும் உண்டோ கலியால் வருந்துயரம்
அண்டர்களும் யாரும் அணைந்தேத்திப் போற்றி செயத்
தொண்டு கொளும் எங்கள் துரை மாசிலாமணியே!   (19)   

ஓதப்பெருங் கடலில் உற்ற துரும்பாகி மனம்
வாதைப்படலாமோ? வையத்தில் என்னிடத்தில்
காதல் உரைத்துக் கலந்து அகல யான் இரவில்
தூதுரைக்க வைத்தாய் துரை மாசிலாமணியே!   (20)

    கட்டளைக் கலிப்பா

பன்னகாசனன் பங்கயன் வச்சிர
    பாணி போற்றரவிந்த பதத்தினார்
கன்னிமென் பொற்கொடியிடை நாயகிக்
    காதல் கொண்டு களித்த கங்காளனே
என்னை நீ அயிராது அளியாய் எனில்
    ஏகுவேனலன் எங்ஙனம் எந்தையே!
மன்னு பொன்னுலகோன் புகழ் முல்லையுள்
    வாசனே மாசிலாமணி ஈசனே!   (21)

நாட்டிலா தொண்டை மான் எனு(ம்) மன்னவன்
    நல்ல ஆம்பல் இவர்ந்து குறும்பர்தம்
கோட்டையில் சமர் செய்து பரிபவம்
    கொண்டு மீண்டு வரு நெறியில் முலைக்
காட்டினில் தடுத்தாண்டு கருணையில்
    காட்சி தந்து தரியலர் தங்களை
மாட்டி வென்றிடச் செய் திருமுல்லையுள்
    வாசனே மாசிலாமணி ஈசனே!   (22)

        கலித்தாழிசை

முருகு அவாவிய வண்டுபோல் இவள் 'முருகவாவி' புக்கு ஆடுமால்
    முல்லைவாயில் உதிக்கு(ம் ) முன் திருமுல்லைவாயிலை நாடுமால்
கரியவண்டு இமிர் பரிமளம்தரு கண்ணியோதி முடிக்குமுன்
    கந்தர் பூசனை செய் பதாம்புயக் கண்ணியோதி முடிக்குமால்
மருவும் ஒன்பது மணிகளும் தன வடிவணிந்திட வேண்டுமுன்
    மாசிலாமணி தன்னையே தினம் வாஞ்சை பூண்டு இவள் வேண்டுமால்
அரிய போதனை யுட்படும் வயதல்லவே கொடியிடை நலாள்
    அன்பனார் செயும் விந்தையோ வருமாறு கண்டிலன் அன்னையே !  (23)

மாலைவேலுறு மன்னனார் மதயானையைத் தடைசெய்தவர்
    மதனராயன் விடுத்த யானையை வந்து கைவசமாக்குவார்
சீலைமார்பன் உறுத்த வாளியின் திருத்தழும்பு அணிசென்னியார்
    செல்வியும் விழிவாளினால் வடுசெய்வள் என்று நினைப்பரே
காலையே தொழும் குசலவர்க்கு அவர் கனிவு கண்டு அருள் முல்லையார்
    கன்னியே கனிவாய் இருந்ததோர் கள்ளருந்தி களிப்பரால்
பால லோசனர் மாசிலாமணியீசர் பாசுபதத்தினார்
    பனிக்கண் மாலையில் வந்து அருளுவர் பனித்திடேல் இனிஅன்னமே.    (24)

புள்ளுற்றிடும் அரையானொடு புயல் மேவிய வண்ணன்
    பூசைக்கருள்புரி நித்திய புனிதா! விடையாளா!
வெள்ளைப் பொடி புனையும் சுடர் மெய்யா! கொடியிடையாள்
    மேவும் திகழ்வாகா, சதுர் வேதம் சொல் விநோதா!
உள்ளத்தினில் ஒருபோது உனை உற்றே துதி செய்யில்
    ஓடும் பவம் இரவிக் கதிர்க்கு உடையும் பனிபோல்
அள்ளல் பழனத்துக் கமலத்தில் அலவன் வாழ்
    அருமுல்லையில் அமர் மாசிலாமணி என்னும் என் அரசே!   ( 25)

        மணி பஞ்சகம்

        கட்டளைக் கலித்துறை

சுகமணி, ஆநந்த மாமணி, ஆகமம் சொல்லும் ஐந்து
முகமணி, மூவைந்து கண்மணி, வேயுறு முத்து மணி,
மகமணி, வேதச்சிரோமணி, மாமலை மன்னு மகள்
அகமணி, முல்லைப்பதி மாசிலாமணியா (ம்) மணியே!   (26)

சோதிமணி, மறையோதுமணி, மலைத்தோகை ஒரு
பாதிமணி, நடராஜமணி, தமிழ்ப்பாவலர்தம்
பூதிமணி, விடையேறு மணி, கடுக்கைப்புனையும்
ஆதிமணி, முல்லைவாழ் மாசிலாமணியா(ம்) மணியே!   (27)

ஒளிமணி, சைவப்பொருள் மணி, அன்பர் உளம் அமரும்
களிமணி, இன்பக்கடல் மணி, முல்லைக்கொடி மறைந்த
வெளிமணி, வெள்ளிமலைமணி, அத்துவிதத்து அமர்ந்த
அளிமணி, முல்லைப்பதி மாசிலாமணியா (ம்) மணியே!   (28)

மோனமணி, சிவலோகமணி, முப்புரம் அலைத்த
ஞானமணி, குருநாதமணி, கடல் நஞ்சு உகந்த
பானமணி, நவபேதம் அமர்ந்த படிவமணி,
ஆனமணி, முல்லைவாழ் மாசிலாமணியா (ம்) மணியே!   (29)

ஒருமணி, என்தன் உளமணி, முத்தர்க்கு ஒரு மொழியைத்
தருமணி, அஞ்சு அக்கரமணி, ஓதும் தமிழ்க்கு இரங்கி
வருமணி, ஆறுமுகமணி வாழ்த்திட வாழ்வு (உ) கந்த
அருமணி, முல்லைப்பதி மாசிலாமணியா (ம்) மணியே!   (30)

        கட்டளைக் கலித்துறை

படியிடை என்னையு (ம்) நீதான் அடிமை படைத்தும் என் தன்
மிடியிடைந்து ஓட அருளாது இருப்பது என்? வெள்ளை வண்ணப்
பொடி உடையாய்! எங்கள் புங்கவனே! புகழ் பூத்த முல்லைக்
கொடியிடை நாயகி பங்காள! என்தன் குல தெய்வமே!    (31)

சடைகொடுத்தாய், பொங்கு நீர்க்கு இடமாய்க் கந்தசாமிக்கு வேல்
படைகொடுத்தாய், தொண்டைமான் பகை சாடென்று பாய் விடைக்கு
விடைகொடுத்தாய், முல்லை மாசிலாமணி வித்தக நின்
தொடை கொடுத்தால் இவட்கு எப்போதும் காமத்துயர் இல்லையே   (32)

வருவார், அதர மருந்தருள்வார். மன்மதப் பயலே!
செருவார், நாண் அம்பு எங்கே செலுத்துவை?  திக்கு முதல்
பெருவான் மட்டு ஓங்கும் புகழ்சேர் கொடியிடைப் பெண்மருவும்
திருவாரு முல்லைப்பதி மாசிலாமணித் தெய்வம் இன்னே!   (33)

        குறளடி வஞ்சிப்பா

வையம் அளித்த மலர்க்கிழவனும்,
தெய்வ வான்பதித் தேவ நாயகனும்,
சசிமடந்தையும், ஒசிஇடை பெறூஉம்
நாண் மீன்களும், நளிர் மதியனும்
வாளொடு துருவாசனும் பிற
முனிக் கணத்தரும் தனித்தனி வழி
படப் பொலிவுறு மடற்றளவுறு
முல்லைப் பதி எல்லைத் தலை
அமர்ந்தருள்
மாசிலாமணி எனு(ம்) மாபெரு வள்ளால் !
என்னுளம் இருந்தவா நின்னுளம் அறியும்
அங்ஙன(ம்) முடிக்க அருளாய்!
திங்கள் தவழும் செஞ்சடையோனே!    (34)

        இரட்டை மணிமாலை

        நேரிசை வெண்பா

மணியோ? கருணை மழையோ? அறிவின்
துணிவோ? அமுதின் சுவையோ? - அணி பணியாம்
பொன்னோ? பின் என்னோ? பொழில்சூழ் திருமுல்லை
அன்னே சொல் ஈசன் அடி!   (35)

        கட்டளைக் கலித்துறை

அடிக்கஞ்சன வண்ணன் மாவாகி மண்ணினும் அம்பரத்தும்
முடிக்கஞ்ச மாகவு நான்முகன் தேடரு முல்லை அண்ணல்
கடிக்கஞ்ச பாத முகம் காட்டி, வந்து, கருணை செய்யில்
முடிக்கஞ்ச நெஞ்சே சிவானந்த போக(ம்) முதிர்ந்திடுமே.   (36)

        மும்மணிக் கோவை

        நேரிசை ஆசிரியப்பா

திருப்பயில் மருமத்துருப் பொலி முகுந்தனும்
மருக்கிளர் தாமரை வளர் சதுமுகத்தனும்
முத்தலை அயில்வேல் கைத்தலத்து அரனும்
முத்தொழில் உஞற்றிய முக்குணத்து உயிரா
அக்குணம் கடந்து அவர் தமக்கு நேரா அது
ஓலத்து அலறுபு: சாலத் தொடர்ந்தும்
மறைத்தலைப் போதமு(ம்) மயங்குறூஉ மறைய !
பூதத்து ஆகிய வேதத்து உலகு
பொய்த்தெனத் தெருண்டு கைத்தமர் வாழ்க்கை
உத்தம மாண்பு சால் மெய்த்த பேரன்பினர்
கைத்தலக் கனி எனக் காண் தரூஉம் காட்சிய !
காசுலாம் கறைவிடம் கள நனி கிடப்பினும்
மாசிலாமணி என வயங்கிய நாயக!
வாலிய மணிக்குவால் கரைத்தலை வரை செயூஉம்
பாலியம் பெரு நதி வளைஇய வடதிரு
முல்லை வாயில் முதல் தளிப்புக்கு நின்
பல்லுயிர் அளித்த எல்லையில் கருணைக்
கொடியிடையம்மைக்கு இடம் அமர் கோலம்
அளியனைக் காட்டி அருளிய எளிமையை
நினைதொறு (ம்) நினைதொறு (ம்) நெக்கு நெக்கென் மனம்
கனல் கெழு மெழுகில் கரைந்து மன் உருகாது
எஃகு மஃகிய சேகிற்றெனினும்
தெருமரல் கழிப்பித் தெளிந்ததைப் பெரிதும்
பன்னரும் துயர்க்கடல் பரிப்ப நின்
பொன்னடித் துணை அலது புணை இன்று எனவே.   (37)

        நேரிசை வெண்பா

எனக்கும் அருளி இனியன தந்து
மனக்குறையைப் போக்க வருமோ? - சினக் குன்
றிடம் எனும் வன்னெஞ்சேன், இறைவி வலப்பாக!
வடமுல்லை வாயில் மணி!   (38)

        கட்டளைக் கலித்துறை

மணியே! திருமுல்லைவாழ்வே! கொடியிடை வாமம் உற்ற
துணியேர் பிறைமுடித் தூச்சடையாய்! துணைப்போது அடியைப்
பணியேன், பணிகுநர் தம்மோடு உறவு படித்தறியேன்
குணியேர் தமனியக் குன்றுடையாய்! எனைக் கொண்டருளே!    (39)

        பதிற்றுப்பத்தந்தாதி

        கலிவிருத்தம்

உலகெலாம் பயந்தான் வலன் ஓங்கிய
அலகில் ஆற்றல் அருட்பெரு வாரியை
மலைவிலானை வடமுல்லை வாயிலில்
குலவும் எந்தையைக் கூறுதி நெஞ்சமே.   (40)

        அறுசீர் விருத்தம்

ஆண்டகையே போற்றி! அருமாமுனிக்கா வளித்து விடையன்பினூரும்
காண்டகைய மணிவிளக்கே போற்றி! வடமுல்லை நகர்க்கனியே போற்றி!
மாண்டகுணப் பிருகு முனிக்கருள் புரியும் கொடியிடையாள் மகிழ்ந போற்றி!
நீண்டு நீண்டு அருமறைக்கும் எட்டாமால் உலகினென்று நின்றாய்  போற்றி!    (41)

            பதிகம்

        பன்னிருசீர் விருத்தம்

வெள்ளி ரிஷப ஏறென்னும் வெள்ளி மலை மீது
    செம்மேகம் திரண்டு இருந்த
    மேன்மைபோல் உனது திருமேனியும் தோன்றுபரி
    வேட செங்கமல முகமும், -
பிள்ளைமதி அனைய வெண்ணீறு புனை இந்திர
    பினாக வாள்நுதலின் அழகும்
    பிறக்கின்ற மின்னெனப் பன்னக ஆபரணமும்
    பிரபையென் முத்தாரமும்,
தள்ளரிய தாராகணத்தனைய புள்ளி செறி
    தண்புலித்தோல் ஆடையும்,
    சத்தித்த இடி எனக் குமுறு பரிபுரமும், இரு
    தாளும், சடா மகுடமும், -
வள்ளையங்குழைமாது கொடியிடைப் பரையினொடு
    வரவேண்டு(ம்) முல்லை வாயில்
    வாச, நேச, மகேச, தேசராச, கணேச
    மாசிலாமணி ஈசனே.   (42)


        கொடியிடை நாயகியார்

            நேரிசை வெண்பா

 'அன்னே' எனப் பலகால் யான் அழைத்தும் என் நினைத்தோ
கொன்னே இருந்தாய் கொடியிடையே! - இன்னே
அணைத்து அருளைக் காட்டி எனை ஆதரிக்க வேண்டும்
பிணைத்துறத்தும் வேல்விழியாய் பேசு.   (43)

            கலிவெண்பா

சீர் பூத்த செல்வத் திரிபுரம் செய் சீமாட்டி
பேர் பூத்த தேவர் பெருமாட்டி - கார் பூத்த
நீலம் குலாவி நெருங்கும் குழலழகி
கோலம் குலாவு கொடியிடையாள் - சூலுற்ற
கொங்கைத் தழும்பும் குலாவு வளைத் தழும்பும்
வெங்கைத் தனஞ்சயனார் வில் தழும்பும் - அங்கரியால்
கால் தழும்பும், கைத் தழும்புமே அன்றித் தொண்டைமான்
வாள் தழும்பும் பெற்ற வரமேலோன் - பால் தவழும்
அன்னை உனைப் போற்ற அடியேனுக்கு ஆகுமதோ
முன்ன வினையால் உழலு(ம்) மூடனேன் - என்னை
உரை செய்குவேன் என் உளம் உவக்கச் செய்தல்
தரை செய்பெரும் புண்ணியமாய்த் தாவில் - நிரை வளம்சூழ்
முல்லைப்பதி மேய முத்தமே நின் கடமை
இல்லை எனேல் ஏழைதனக்கு இன்று.   (44)

        பன்னிருசீர் விருத்தம்

சீர்பெருகு நின்முகச் சேவை கண்டிடலால்
    செழித்த கனயோகம் வரும்,
    சித்தமதில் உற்றபடி வெற்றி வரும், புத்தி வரும்,
    திக்கு விசயங்கள் வருமே, -
பார்நிருபர் கொண்டாட நித்திலச் சிவிகை நிழல்
    பரவுபெண் பலனும் வரும்;
    பராபரி, சடாதரி, தயாநிதி, உன் மகிமையைப்
    பகர்வதற்கு எளிதாகுமோ?
ஏர்பரவு நாற்பத்து முக்கோண மதில் அமரு(ம்)
    இமய பார்வதி, புராரி
    எழில் வீரி, கௌமாரி, மிகுசூரி அவுதாரி
    ஏழைகட்கு உபகாரியே,
கூர்கருணை வாரியே, திருமுல்லை வாயில்வாழ்
    கோகனக சரணீ மதம்
    கொன்றபிடி நடைவல்லி மன்றில் நடமிடும் வில்லி
    கொஞ்சு கொடியிடை வல்லியே!    (45)

மருமருவும் வார் குழலி மந்திர மனோன் மணி
    வாராகி உனது செம்பொன்
    மாண் அடிக்கு ஏவல் செயும் அடிமைகளித்து நீ
    வண்கொடுமை செய்வதேது? -
இருள் மருவு நெஞ்சகக் கொடுமூடர் தங்களுக்கு
    இதம் பகர்ந்து ஏங்கி ஏங்கி
    இரவு பகல் அலைகின்ற ஏழைகளிடத்தினில்
    எள்ளளவு இரக்க(ம்) இல்லையோ? -
பெருமை உறு திருமருவு மழலைபகர் மக்களைப்
    பெற்றிலாப் பெருமலடியோ?
    பெண் அமிர்தமே! எனது கண்ணுள் மணியே! அருள்
    பிரணவ கல்யாண உமையே -
தரும(ம்) மிக ஓங்கிவளர் திருமுல்லை நகரில் அமர்
    தரு மாசிலாமணீசர்
    சங்கரர் இடத்தில் வளர் சங்கரி மகிழ்க்குரிய
    தங்கை கொடியிடை மங்கையே!   (46)

            அறுசீர் விருத்தம்

ஆதிமறைப் பொருளாளை அளவிடுதற்கு அரியாளை அமரர் போற்றும்
காதளவு விழியாளைக் கனதனக் கோட்டினில் கமழும் களபத்தாளைத்
தாதுலவு முல்லைநகர் மாசிலாமணியர் பங்கில் தயங்கா நிற்கும்
மாது கொடியிடையாளை மனமுறவே எந்நாளும் வழுத்தல் செய்வோம்   (47)

செழும் தவத்தின் மிகுந்த எழில் திருஞான சம்பந்தர் தேவாரத்தால்
விழுந்த பரசமயம் எனும் விடபத்தின் வேர் அலைய வீயுமாறு
குழைந்து மனம் கும்பமுலை கொடுத்து அடிமை கொண்ட அருள் குறிப்பினாளை
வழிந்து ஒழுகும் செல்வமுல்லைக் கொடியிடையாள் பொன்னடியை  வணங்குவாமே.    (48)

        கட்டளைக் கலிப்பா

அன்ன ஊர்தியும், அம்புயக் கண்ணனும்
    அண்டர் தேவரும், ஆதித்தன், அம்புலி,
பன்னிமாரும், குசலவர், தொண்டைமான்,
    பத்தியாய்த் தொழும் பாண்டியன் கன்னியே!
மன்னுமாமறை போற்றிடும் வள்ளலார்
    மாசிலாமணியார் மனையாட்டியே
மன்னி நின்னிடை அன்பருள் முல்லையில்
    வாழ்வு கொண்ட கொடியிடை வல்லியே!   (49)

மங்களாகரமான மதங்கி என்
    மனதுள் மேவு மகாமண்டலேசுவரி
திங்கள் நேர்முகச் செல்வி வெண் பங்கயத்
    தேவி போற்றிடும் தேவி எம் ஐயர் தம்
அங்கநாயகி என்னையும் ஆட்கொளும்
    ஐயர் மாசிலா மாமணியாருடன்
கொங்குலாவிய சோலை சூழ் முல்லையில்
    கொஞ்சி வாழும் கொடியிடை வல்லியே   (50)

        கொச்சகக் கலிப்பா

பூவுலகில் மேவு சிவபுண்ணியர்கள் வாக்கில் எனைப்
பாவி என்ற நாமம் படையாமல் காத்தருள்வாய்
ஆவி, உடல், ஆசையினை அன்று அளித்தேன் முல்லை எனும்
காவில் வளர் மென்குயிலே! காமர் கொடியிடையே!   (51)

        கட்டளைக் கலித்துறை

கல்வி செம்பங்கயச் செல்வி என் பங்கினில் காவல் உற
நல்விசயங்களும் தந்தருள்வாய் திருநாரணியே
பல்விதமான இமையோர் பணிந்து பரவு முல்லை
வல்விந்துநாத வடிவே கொடியிடை மாதங்கியே!   (52)

ஊனார் உயிர்க்குள் உயிராய் உறைந்து இவ்வுலகில் எங்கும்
தானாய் நிறைந்த தயாநிதியே! திருத்தாளிணையில்
கானார் மலர்கொடு தூவிப் பணியக் கருத்தருள்வாய்!
தேனாரு முல்லைக் கொடியிடை வாலை திரிபுரையே!   (53)

        மும்மணிக் கோவை

        நேரிசை வெண்பா

தாயை இழந்து தனிப்பட்ட கன்றதுபோல்
நாயேன் துயர் உழத்தல் ஞாயமோ? - தூய
படி புகழு(ம்) முல்லைப்பதி வாழ் கருணைக்
கொடியிடையே வாய்திறந்து கூறு.   (54)

        கட்டளைக் கலித்துறை

கூரும் பெருமைக் குணமணியே! என் கொடும் துயரம்
ஈரும்படி அருள் தாராய்! இமவானி லஞ்சியமே!
நீரும் கடுக்கை நிலவு மராக்கமழ் நீள் கரந்தை
ஆரும் புனை முல்லை அண்ணல்தன் பாகத்து அமர்ந்தவளே!   (55)

        நேரிசை ஆசிரியப்பா

'அவள்' எனச் சொல்லின் அவனாய் இருப்பை;
'அவன்' எனச் சொல்லின் அவளாய் இருப்பை;
'சிவன்' எனச் சொல்லின் சிவையாய் இருப்பை;
'சிவை' எனச் சொல்லின் சிவனாய் இருப்பை.   (56)

'அவர் ' எனும் ஓர் உரை அருந்தமிழ் இலதேல்
எவன் என உன்னை ஏத்துவன் அம்ம !?
முல்லையம் பதியுள் முளைத்த
எல்லையில்லா எழில் கொடியிடையே!   (57)

        மாலை

மா வணங்கும் பனுவல்மாதும் ஏத்து மடந்தை கஞ்சம்
பூ வணங்கும் பவருமதி செங்கதிர் போற்றுபதி
கா வணங்கும்ப மலி கோபுர மதில் கண்டு இமையோர்
கோ வணங்கும் பதி தென்முல்லைவாயில் கொடியிடையே.   (58)

 தண்டவளத்தி சிவப்பி, பணியும் சமர்த்தி, மறை
விண்டவளத்திமுகன், குகன், காழியின் வேந்தனும் பால்
உண்டவளத்தின் இரு பொற்றனத்தி, உவந்து எனை ஆட்
கொண்டவளத்தி, திருமுல்லைவாயில் கொடியிடையே.   (59)

            திருச்சிற்றம்பலம்

 

Related Content