logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருமுல்லைவாயில்  கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )

திருச்சிற்றம்பலம்

சென்னை நகர் - பண்டிதை ம. மனோன்மணியம்மாள் அவர்களால் இயற்றப்பட்ட

            காப்பு

        சங்கற்ப விநாயகர்

கடிமணம் ஆர் சங்கற்ப முன்னோன் எந்தாய்
கொடியிடையாள் அந்தாதி கூறும் - படி அருளால்
'பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதார்'' என்ற சொல்லை
நாட்டுவித்தான் என்பால் இந்நாள் .   (1)

        உபாசனா தேவி வணக்கம்

        அறுசீர் விருத்தம்

பூவையர்களா மலர்மாது இருவரும்தம் கணவருடன் புகழ்ந்து எந்நாளும்
காவை அருளென மனத்துத் துதித்து, ஏத்தி, வாய்பொத்திக் கரங்கள் கூப்பிச்
சேவை செய்து புடை மருவ வீற்றிருந்து கடைக் கணிக்கும் செல்வியாய
காவை அகிலாண்ட நாயகி அடியை எப்போதும் கருத்துள் வைப்பாம்.   (2)

            நூல்

        கட்டளைக் கலித்துறை

சீரார் வடதிரு முல்லைவா யென்னும் செழுநகரி(ல்)
ஏரார் கமலை, நல்வாணி, புலோமசை, ஏவல் செய
நீரார் சடைக் கங்கையார் மாசிலாமணி நேயரிடம்
தாரார் கொடியிடை நாயகியான தயா நிதியே!   (3)

நிதியே! சுகாநந்த வாழ்வே! நின் நேயர்கள் நெஞ்சில் உறை
மதியே மதிமுக சேவை கண்டோர்க்கு உறு வாழ்வளிக்கும்
கதியே! என்தீவினை யாவும் களைந்திட்டுக் காட்சி நல்கத்
ததியே, கொடியிடைச் சங்கரியாய தயைக் கடலே!   (4)

கடலில் பிறந்த அமிர்தத்தை உண்டு களிப்படைந்தே
அடலில் பெரியவர் வாழ்வு வந்தாலும் அகமகிழேன்
உடலில் பெரியவர் தங்காய்! பவானி! உமையவளே!
வடதிரு முல்லை யினாளே! நிற்கண்டு மகிழுவனே!   (5)

கண்டேன் என் தாயைப் புகலிக் கவுணியர் காதலித்து உட்
கொண்டே இருக்க முலை அமுது ஈந்த குணவதியை!
வண் தாமரையனும், மால்முதலோரும் வணங்கி நிதம்
கொண்டாடும் முல்லைக் கொடியிடையாளை! முற்கூர் தவமே!   (6)

தவமே புரிந்து, பைந்தண் மலரிட்டுச் சரண் புகுந்தா(ல்)
அவமாக்கிடாது, எனை ஆதரித்து, ஆண்டு இங்கு அடர் வினையாம்
பவமே ஒழித்து, நற்பேற்றை அளிக்கும் பசுபதியாம்
சிவமே மகிழத் திருமுல்லைவாயில் எம் சேயிழையே!   (7)

சேயேன் படும் துயர் இவ்வளவென்று செகமதனில்
தாயே! புகலுதற்கு ஏலாமல் இங்குத் தவித்திடுவேன்
நாயேன் மலவினை யாவையு நீக்கி நலங்கள் தரு-
வாயே! வடதிருமுல்லையில் வாழ்கின்ற மாணிக்கமே!   (8)

மாணிக்கவாசகர் வாசகம் கேட்டு மகிழ்ந்து அருளு(ம்)
ஆணிப்பொன் அம்பலத்தானந்த வள்ளல் அருகிருந்து
வேணிக்கிருந்திசை காணாத அருநடமேய திருப்
பேணிக்களித்திடு முல்லையில் நின்ற பெருமையளே!   (9)

பெருமையும் தாழ்மையும் இல்லாது வாழும் பெரியவர் த(ம்)
இருமையை யான் கண்டவர் பணி செய்ய அருள் புரியி(ன்)
எருமைக் கடாவின் வரு நமன் செய்யும் இடர் அகற்றி
இருமையும் வாழ்குவன் முல்லையில் நின்ற இறையவளே!   (10)

இறைப் பொழுதாயினும் சும்மா இருந்திட எண்ணினனேல்
மறைப்பெனும் பாசம் இழுத்து எனை வாட்டி மயக்கும் அந்தக்
குறைப் பழிநீக்கி, எனை ஆளவேண்டும் குளிர் புனல் சூழ்
நிறைத் தடம் வாய்ந்த திருமுல்லை வந்து அருள் நின்மலையே!    (11)

நின்போல் அருளுடையார் தமைக் கண்டிலன்! நேயம் வைத்துத்
துன்பே ஒழித்து உன் திருவடி தம்மைத் துதி புரிந்து எ(ன்)
என்பே உருகிட நெக்குவிட்டே நெஞ்சு இளகி நிற்கு(ம்)
அன்பே அருளுகண்டாய்! முல்லை வாழும் என் ஆரமுதே!  (12)

ஆரணன், மாலும் அடிமுடி தேடிய அற்புதம் ஆர்
பூரணற்கு உண்மைப் பொருள் இஃது என்று அப் பொருள் விரித்த
காரணம் கேட்டுக் களிப்புடன் மைந்தனைக் காதலித்த
வாரணம் போன்ற தனமுடையாய் முல்லை மாதரசே!    (13)

மாதவத் தக்கன், வரையன், வழுதி மகளெனவும்
சீதரன் தங்கை எனவும், செருக்குவர் சித்திரமே
ஓதரும் ஐந்தொழிலும் சிவத்துற்றே உஞற்றிடுவான்
பாதவம் சூழ் திருமுல்லையில் நின்ற பராபரையே!   (14)

பரையினை முல்லைப் பசுங்கொடி தன்னைப் பணிந்திடுவோர்
தரையிடை மிக்க தனபதியாகித் தழைப்பதுடன்
நரை, திரை, மூப்பு முதலனவாகு நலிவகன்று
நிரை இந்தர போகமும் எள்வர் அதீத நன்நீள் நிலத்தே.   (15)

நிலத்தே பிணியுற்று உழலாமல் அன்பர்கள் நேயமெனு(ம்)
நலத்தோடு உறைந்து மறுமையில் முத்தியை நண்ணிடுவான்
தலத்தே சிறந்திடு முல்லையிலே உறை சாம்பவி! மங்-
கலத்தோடு நின்றிடும் காட்சியைக் கண்டு களிக்குவனே.   (16)

களிக்கும்படி அரன் தன் தீ விழியினில் கந்தனைப் பெற்(று)
அளிக்கும்படி செய்து அவுணர்கள் யாரும் அவர் நகர் விட்(டு)
ஒளிக்கும்படி விண்ணமரர்கள் வாழ்வடைந்து ஓங்கி நிதம்
துளிர்க்கும்படி செய்தை முல்லையிலே வந்த சுந்தரியே.   (17)

சுந்தரமான வதனமும், வாள் விழித்தோற்றமும், ஏர்
மந்தரம் போன்றிட்ட கொங்கையும், பட்டுஅணி வண்ணங்களும்,
கந்தரவார் குழலாம் எழில் ஒய்யிலும் கண்டு கண்டு,
சிந்துர மேனிய(ன்) நின் வசமாயினன் செங்கரும்பே,   (18)

கரும்பேநிகர் மொழியாய்! கற்றை வாய்ந்த கதிர்சடையோன்
பெரும்பாக்கியம் என முல்லையில் வந்து நின் பேசுபவர்
விரும்பாத போகங்கள் யாவும் அடைந்து வினைக்கிடமா (ம்)
இரும்பா மனமும் கசிந்திடப் பேரருள் எய்துவரே!   (19)

எய்து நல் பாக்கியம் என்போடு யாக்கை இளகி மலர்க்
கொய்து நல் அன்பொடு சாத்திப் பணிந்து குழைந்து உருகி
மெய்யது வேர்த்திடக் கல்போன்ற நெஞ்சமும் வெவ்வழல்வெண்
ணெய்யது போல உருகிடு முல்லையில் நின்றிடினே.   (20)

நின்றாளை, முல்லையில் ஏத்தித் துதிக்கின்ற நேயமதால்
மன்றாடும் ஈசன் அருள் வாய்க்கும்; வானகம் வாழவைத்த
குன்றாடும் ஐயன், குகன், சேய், குழகன், குருபரன் தாள்
நன்றாகச் சேவித்து இங்கு உய்யும்படிக்கு அருள் நல்கிடுமே!    (21)

நல்லோர்கள் நேசமு(ம்) நின்பூசை செய்கின்ற ஞானமுமே
அல்லாது என்நெஞ்சம் அலையாதிருக்க அருளுகண்டாய்!
கல்லாலின் கீழ்அன்று நால்வர்க்கு அருளிய கண்ணுதலாம்
வல்லார் விரும்பும் திருமுல்லை வாழ்கின்ற மாதவமே!   (22)

மாதலத்து ஓங்கிடு முல்லைக்கண் வாழ்கின்ற மாமருந்தைப்
பூதலத்தோர்களு(ம்) மீதலத்தோர்களும் போற்றி நின்று
பாதகம் தீர்ந்திட்டு அருளது வாய்ந்திட்ட பண்பது போல்
வாதனை நீங்கிட வாழ்வித்தல் வேண்டு நன் மாமணியே!    (23)

மணிசேர்ந்த கண்டனும் குன்றுதொறாடிய மாமகனு (ம்)
அணிவேற் படையுடன் ஆதரித்து ஆண்டு இங்கு அரும் பிறவிப்
பிணிபோக்கி ஏழையள் பேரருள் பெற்றுப் பிழைத்திடற்குப்
பணி ஏவலே செய்து முல்லையில் வாழ்ந்திடப் பண்ணுவையே!   (24)

பண்ணுடன் நின்மேல் கவிதனைப் பாடிப்ப ழகுகிலேன்
மண்ணினில் ஏழை ஒதியதுபோல வளர்ந்திடுவேன்
கண்ணுதலோடு விடைமீது வந்து களிப்புடனே
தண்ணருள் ஈயக் கடைக்கணி! முல்லைத் தயாநிதியே!   (25)

நிதி வந்திடினும் இமையா விழிபெறு நேர்மையர்தம்
பதி வந்திடினு(ம்) மகிழேன்; மகிழ்வது உன் பண்பினுக்கே;
விதியுடன் மாலும் அடிமுடி தேடும் விமலர் மகிழ்
சதிர்பெற நின்றிடு! முல்லையில் வாழ்கின்ற சங்கரியே!   (26)

கரியுடன் ஆளி விளையாடு காளத்திக் கண்ணப்பனார்
பரிவுடன் தந்திட்ட ஊனதைத் தின்ற பரமருடன்
பரிபுரச் சிற்றடி வாணி புலோமசை பாற்கடலாள்
சரிவளை மாதர் தொழ வாழ்வை! முல்லையில் சாம்பவியே!   (27)

"சாம்போது உனக்குத்துணை வருகின்றவர் தாம் உளரோ?
வீம்புடன் காலம் கழித்தே திரிந்து வெகுண்டனையால்!
பாம்புடன் கங்கையும் திங்களும் பூண்ட பசுபதியார்
தாம் புடைவைத்த வடமுல்லை தேவியைச் சார் "   மனமே!   (28)

சார்ந்தாரைத் தன்னடிக்கீழே இருத்தித் தயையொடு அருள்
கூர்ந்தே தன்னாயகனோடு வந்தன்னர் குறைக ளெல்லாம்
தீர்ந்தே சிவானந்த முத்திக் கரைவழி சேர்ந்து மனம்
தேர்ந்தே இருக்கத் திருத்து! வண்முல்லைத் தினகரியே!   (29)

தினம் உனைச் சேர்ந்து களிப்போடு இருக்கும் சிவசங்கரன்
மனம் உவந்தே ஒரு மாற்றாளைச் சென்னியில் வைத்திருந்தும்
சினம் இன்றிப் பாகத்தில் நீங்காது வாழும் செயல் கண்டிடில்
கனமிகு நின் பொறை யார்க்குண்டு? முல்லைக் கனங்குழையே!    (30)

குழை நக்கர் ஓட்டைத் திருநீல கண்டக் குயவர் ஒரு
பிழை ஒன்று இலாது புரந்து வைத்திட்ட பெருமை கண்டும்,
பழையோடு தந்தனன, தா என்று சூள்செயப் பண்ணியவர்
குழைய வைத்தார் அது செய்யேல்! வண்முல்லைக் கொடியிடையே !   (31)

கொடிபோல் இடையும் அம்கொவ்வைச் செவ்வாயில் குயில் மொழியும்
பொடிபூசும் வேணிப் பிரான் கண்டு கெஞ்சும் பொலிவுடனே
மடிமீதில் மைந்தர் விளையாடிக் கொஞ்சிடும் வாழ்வதனால்
அடியேனை நீ மறந்தாய் போலும்! முல்லையில் ஆரணங்கே!    (32)

அணங்கினர் மங்கல நாள் நிலைநிற்க அசுரர்குலம்
உணங்கும்படி வடிவேலினைத் தந்திட்டு உயர்நிலத்தோர்
வணங்கும்படி செய்து மைந்தனுக்கு ஆசி வழங்கும் உன்றன்
குணங்கண்டு முல்லையில் ஏத்தினன் ஏழை குறை அறவே!    (33)

குறை அறலாம், குணம் ஒத்துக் கரைந்து குழைந்து நின்றால்,
தறைமீது உனது அடியார் அருள் பெற்றுச் சயம் பெறலாம்.
மறை ஓதும் நின்மல நாதர் மகிழும் வடமுல்லையில்
உறையும் உனது அடி வாழ்த்தித் துதித்து இங்கு உனைப் பணிந்தே!   (34)

பணிந்தேன் நின திருப்பாத அம்புயத்தைப் பகல் இரவாய்
அணிந்தேன் விபூதியுடன் அக்க ஒணிமணியம் பணியாய்த்
துணிந்தே(ன்) நின்றன் அடியாரி னதேவற்றொழும்பதனைத்
தணிந்தே அருளுதி! முல்லையில் வாழும் தயாபரியே!   (35)

பரிவேண்டிப் பாண்டியன் செய்திடும் துன்பினைப் பார்த்து இரங்கி
நரிபரி யாக்கித் திருவாத வூரர்க்கு நல்குமுன்றன்
உரியோனுடன் முல்லை தன்னில் வந்து ஏழைஉள மகிழப்
பரிவோடு வந்துஎனைக் காத்திடல் வேண்டும் பனிமொழியே.   (36)

பனிமலையோன் பெற்ற பச்சிளங் கிள்ளையைப் பார்வதியைக்
கனிவுட னேத்தித் துதிக்கின்ற அன்பர் கருத்தறிந்து
தனிமலர்ச் சேவடி தந்துபின் அங்கு அவர் தம்மைவிண்ணோர்
நனிதொழச் செய்வை! திருமுல்லை வந்த என் நாயகமே.   (37)

நாயினன் சன்மப் பிணியால் மெலிந்து நலிவுற்றுமே
தீயினில் பட்ட புழுப்போல வாடித் திகைக்கையிலே
தாயின் பரிந்து ஆதரித்திட முற்றும் தயை செய்குவாய்!
ஞாயிலை ஞாயிறு தாவிடு முல்லையின் ஞானவித்தே!   (38)

வித்தாகிய சஞ்சிதம் ஒழித்து என்றன் வினை அகற்றிப்
பித்தாகிய மனச் சஞ்சலம் தீர்த்திடப் பேரின்பமாம்
சத்தாகிய அருள் வந்து எனை எய்தத்தகவு அருளாம்
முத்தாகிய மொழியாய் !  முல்லை வாழ்ந்திடும் முக்கனியே   (39)

முக்கண் பகவனும் நீயும் நின் மைந்தனும் மொய்வனத்தில்
அக்குமணி தரித்தே வேடராகி அருச்சுனன் செய்
தக்க தவத்தைக் கலைத்து மொத்துண்ட சமயம் அதில்
பக்கத்தில் நின்று நகைப்பழகோ! முல்லைப் பைங்கொடியே!   (40)

கொடியே! மரகதக் கொம்பே! இளவஞ்சிக் கோமளமே!
அடியேன்மிசை எப்பிழை இருந்தாலும் அருள் சுரந்திட்டு
இடிபோல் நமன் வந்து துன்புசெய் ஞான்று அவ் இடர் அகற்றி
அடியாருடன் வந்து இங்கு ஆதரிப்பாய்! முல்லை ஆனந்தியே!   (41)

ஆனந்தத் தாண்டவம் ஆடும் பிரான் அன்று அமரர் உய்யத்
தான் அருந்தும் கடு கண்டத்து நிற்பித்ததை உணராது
ஈனம் செய் தக்கன் மகள் என்னும் பேரை இனிது ஒழித்தாய்
ஞானம் பகரும் சுகச் சோலை முல்லையின் ஆரணியே.   (42)

நாரணனோடு பிரமனும் தேடி நணுக ஒண்ணாக்
காரணன் உன்றன் அருமையைக் கண்டு களிப்பதல்லால்
தாரணியோர்களுள் ஆர் அறிவார் உன் சதிரதனை
வாரணி மென் முலையாய் முல்லை மாநகர் வந்தவளே!   (43)

வந்தே தமியன் படுந்துயர் யாவையு மாற்றுவித்துச்
சிந்தாகுலம் கெடக் கண் பார்த்தருள் சிவகாமி எனு(ம்)
எந்தாய் உனையன்றி வேறுகதி இல்லை என்றனக்கே
தந்தாள வேண்டும் திருமுல்லை வாழ்கின்ற சங்கரியே!   (44)

சங்க நற்கீரன் தமிழ்க்கே இரங்கித் தனிமுழையை
மங்கப் பிளந்திட்ட மைந்தனைப் பெற்று மகிழ்வடைந்தாய்
தங்க வெற்போனும், அரி, அயர், தேவரும், தான் மகிழ
சிங்காத னத்தினில் வீற்றிட்ட முல்லைத் தினகரியே!   (45)

தினம் அப்பர் செய்தவிருவகைத் தொண்டின் செயற்கு அரனார்
மனமொத்து வட்டமில் பொற்காசு தந்த வகையறிந்தும்
கனநித்தமேயும், வடமுல்லை வந்து களித்திடு நல்
அனம் ஒத்த தேவி எளியனுக்கு ஒன்று (ம்) அளித்திலளே!    (46)

அளித்தும், புரந்தும், அழித்து(ம்) மறைத்தும், அநுக்கிரகம்
தெளித்தும் உலகை நடத்தும் செயல்களைத் தேவி! உன்பால்
துளித்த அருளினில் ஓராயிரத்து ஒன்று இங்கு ஓர் நொடியில்
களித்திடச் செய்திடு முல்லையில் என் இரு கண்மணியே!    (47)

மணியே! மலைக்கோன் தவத்திற்கு இரங்கி வரம் அருள் சற் -
குணியே! நல்வாழ்க்கைக் குலதெய்வமே! என் கொடுவினையால்
பணியேன், பிழைபல யாவும் பொறுத்த பசுங்கொடியா(ம் )
மணியே! திருமுல்லை வாழ்கின்ற சுந்தர அந்தரியே!   (48)

அந்தரத் தேவர்கள் சூர் செயும் துன்பினலக்கணுற்றுச்
சிந்துரமேனியன் தன்னோடு இயம்பச் சிறந்த முல்லைச்
சுந்தரியே! உனைத் தான் மணந்தே அவர் துன்பொழித்தார்
கந்தரவார் குழல் தாயே! தமியனைக் காத்தருளே!    (49)

அருளே நிறைந்த நின் அன்பர்கள் ஏவல் அனுதினமும்
தெருளோடு நான் செயச் சித்தி எல்லாம் தந்து தீங்குறுத்து(ம்)
மருள் ஏத(ம்) நீக்கி எனை உன் அடியினில் வாழவைத்தே
இருள் என்பது ஓடிடு(ம்) முல்லையில் வந்தாய் இமாசலையே!    (50)

சலந்தனில் நின்றும், சருகைப் புசித்தும், தணல் எரித்து
மலமதிதுன் பினைத்தாமகன்றோர் நின் மகிமை கண்டார்.
நிலமதில் பொய்யொடு வஞ்சகமும், சூது நிறைந்துள நான்
தலமதில் எங்ஙனம் உய்ந்திடுவேன்? முல்லைத் தாயகமே!    (51)

 தாயே! உனையன்றி வேறுகதி இலைத் தாரணியில்
நாயேனைக் காத்துப் புரந்தர தரித்திடு நல்லிமவான்
சேயே! திருமுல்லை வந்தடைந்தோர் துன்பம் தீர்த்தருளு-
வாயே! கிருபைக் கடலாகிய என் மனோன் மணியே!   (52)

மணிபோன்ற செந்தமிழ் பாடவல்லோர்க்கு அருள் மாவிடையோன்
அணிபூண்ட கங்கையைத் தன் தலைமீதில் வைத்து ஆதரித்தும்
தணிவாகப் பாகத்தில் வாழும் உன் அன்புதனை அறிந்தேன்
பணியாத என் பிழை முல்லையில் தீர்த்தல் ஓர் பாரமன்றே.   (53)

அன்று ஓர்தினந்தனில் ஆரூரர் தன்பால் அணுகி முலை -
குன்றேயனைய பரவை இணங்கிடக் கூட்டி வைக்க
நன்றே உழன்ற உன் நாயகன் செய்தியை நன்கறிந்து
மன்றேறி நின்றவர் தன்னோடு முல்லையில் வாழ்வதென்னே!    (54)

தென்னவராகி நற்சைவப் பயிரைச் செழித்திடச் செய்
மன்னவர் ஆண்ட மதுரைப் பதியினில் மானவர் முன்
கன்னலைக் கல் களிறு உண்ணும்படி செய்து காய்கதிரின்
தன்னிலை மாற்றிய சித்தன் மகிழ்முல்லைச் சார்ந்தவளே!    (55)

சார்ந்தே தொழுத அபிராமி பட்டற்குத் தக்க ஒளி
கூர்ந்தே நிலவுமுன் கம்மலை விண்ணில் குளிர்மதியா(ய்)
ஆர்ந்தே விளங்கப் புரிந்து அவன் மாட்சி அவனியிடைத்
தேர்ந்தே மதித்திடச் செய்தனை! முல்லைச் சிவக்கொழுந்தே!    (56)

கொழுந்து அருந்தும் குயிலாகி மறைந்திட்ட கோன் துயரி(ல்)
அழுந்தாதிருக்க அவுணர்கள் தம்மை அறக்களைந்து
செழுந்தேன் மொழித் தெய்வயானையை ஈந்திடச் சேர்ந்தணைந்தோன்
தொழுந் தேமலர்ப் பொழில் முல்லையிலே நின்ற தோகையளே!    (57)

தோகையில் பொன்னனையாளிடம் சென்று அவள் துன்பொழிக்க
வாகையின் உற்ற வகைமுற்றும் கேட்டபின் வாதி என்றே
சாகையிலுள்ள செம்பாதியைப் பொன்னெனத் தானமைத்த
ஈகை மிக்கோனிடம் வாழ்வாய் திருமுல்லை ஏந்திழையே ! (58)

ஏந்திழைமார்கள் பன்னீராயிரவர்கள் இல்லினிடைக்
காந்தனின் வாழ்ந்து கலந்தே இருந்தும் கருது தன்ம
வேந்தன் செய் வேள்வியில் ஐட்டிகன் தானென மேவி அவி -
சாந்தத்துடன் அடைந்தோன் தங்கையாய்! முல்லைச் சங்கரியே!    (59)

சங்கரனார் உன் பெருமைதனைக் கண்டு தான் பயந்து
கங்கையை நீ பார்த்திடா வண்ணமே சடைக்காட்டில் வைத்துப்
பொங்கோடு வாழ்த்துமுன் செஞ்சரண் என்னைப் புரப்பதலால்
இங்கார் எனக்குத் துணை முல்லை வாழும் இமையவளே!    (60)

இமையா விழிபெற்ற விண்ணவர் துன்பு ஒழிந்து இன்புறவும்
உமை நாயகர்க்கு அன்று அங்கு உண்மைப் பொருளை உரைத்திடவும்
கமையோடு கந்தனைத் தந்திட்ட உன்றன் கருணை என்னே!
எமை ஆதரிக்க வருவாய் நன்முல்லை இரு நிதியே!   (61)

நிதியாவும் நீங்கிடக் கைவிட்ட தங்கை நிலை உணர்ந்து
கதிஏதும் இன்றி அருணையின் கோபுரம் கண்டு முடி
அதில் ஏறி ஆவிவிடத் துணிந்தோன் இடம் அந்தணனாய்த்
ததிவந்து காத்தோன்தனை ஈன்ற முல்லைத் தயாபரியே!   (62)

பரிவுடன் கண்ணப்பன் எச்சில் தசையினைப் பல்பொழுதும்
பிரியமுடன் உண்ட பேயர்தம் வாழ்வே பெருமை என்று அங்(கு)
உரிமையுடன் அவர் மோகத்தில் ஆழ்ந்திட்டு உழல்வதென்னே!
அரிஅயர் போற்றிட முல்லையில் வாழ்கின்ற ஆரியையே!   (63)

ஆரியன் போன்று ஒரு கன்னன் முன் சென்று அங்கு அமர்க்களத்தில்
சீரியவான் தருமத்தினை ஏற்றுச் சகமகிழத்
தாரிய பஞ்சாயுதத்துடன் காட்சிதனை அளித்தோன்
பாரினில் மெச்சிட வாழ்வாய் வடமுல்லைப் பைங்கொடியே!    (64)

கொடியாடு பொன் எயில் சூழ் திரு முல்லையில் கோமளமே!
அடியேன்மிசை எப்பிழை இருந்தாலு(ம்) நீ ஆதரித்து
மிடி தீர்த்து நோயின் மிகை தீர்த்து நாளு(ம்) நல் வீடு அடைவா(ன்)
இடியேறு சிங்கந்தனிற் காட்டி ஈவை இறையவளே!    (65)

இறையவர் செய்கையை ஓராதது என்? முல்லை ஏந்திழையே!
குறைமதி தாங்கி, அணங்கினைத் தாங்கிக் கொடிய விடக்
கறையினைத் தாங்கி, என்பார் அங்கமோடு கரத்துறலால்
மறைகளெலாம் 'பித்தன் என்றே உரைத்திட வாழ்குவரே!   (66)

வாழ்வளிப்பாய், உனை வாழ்த்தித் துதிக்க வரமளிப்பாய்,
தாழ்வொன்றிலாத தரமளிப்பாய், இத் தரணி தன்னில்
பேழ் வந்தளிப்பாய், பிறை எயிற்றுச் சமன் பீடழிய
மாழ்க வைப்பாய், திருமுல்லையில் வாழும் வள மயிலே!    (67)

மயிலன்ன நீ இமக்குன்றில் தவம் செய்து வாழுகையில்
கயிலைப் பிரான் ஓர் மறையவனாய் உனைக் கண்டு அணுகி
வயினுற நன்மணம் செய்யவந்தேன் என வைதிட்ட நீ
அயின் மேனியைக் கண்டு வெட்கியது என்? முல்லை அம்பிகையே!   (68)

அம்போருகத்தன் சிறையிட்டு, வேதத்து அருத்தமதை
நம்பனுக்கு ஓதிப்பின், தென்மலை வாழு(ம்) நயமுனியாம்
கும்பனுக்கே உரைத்திட்டு அங்கு அசுரக் கொடியவராம்
வம்பரை வாட்டும் குகனுடன் முல்லையில் வாழ் அனமே!    (69)

அனமாகியும், பன்றிதானாகியும் தேடும் அன்று இருவர்
மனமாயினும் சென்று காண்டற்கு அரிய மலரடிகள்
தினமே நடிக்க இருவிழி நோக்கித் திகழுறுமுன்
கனமே எவர்க்குண்டு? முல்லையில் வாழ் கனகாம்பிகையே!    (70)

கனந்திகழ் மேனியங் கன்னிகையே! உன் கழல் பணிசெ(ய்)
அனங்கன் மனைவிக்கு அகமகிழ்வெய்திட ஆண்டதுபோல்
தினம் துதித்து ஏத்திடும் ஏழைக்கு இரங்காத் திருவருள் என்?
கனந்தவழ் சோலை வளர்முல்லை வாழ்ந்திடும் கண்மணியே!    (71)

மணியே என் கண்ணுள் மணியே! திருமுல்லைவாயில் எந்தாய்!
பணியேன் நின் அன்பரைத் தோத்திரம்பாடி! பலபொழுது(ம்)
அணியேன் நல்பூதியை! ஆவியோடு ஆக்கை அயர்ந்து உருகேன்;
பிணியேன் செய்தீவினை எல்லாம் பொறுத்தருள் பேரின்பமே!   (72)

இன்பாக ஆரூரர் செய் மணந்தன்னை இடர் செய்து, பின்
அன்பாக மன்றல் இரண்டினைக் கூட்டும் அருட்செயலை
உன்பாகம் வாழ்ந்திட்ட சேடியர்க் கென்றே உவந்தனையோ
வென்பாகமுற்றோன் உடனுறை முல்லை இமயவளே!   (73)

இமையா விழிபெற்ற பண்ணவர் துன்பொழிந்து இன்புறவும்
சுமையாகப் பூமியைத் தாங்கும் அச் சேடன் துயர் கெடவும்
தமை வேண்டினோர் துன்ப(ம்) நீங்கவும் செய்திட்ட சண்முகனை
உமையவளே உன் அருகில் வைத்தாய் முல்லை உய்வதற்கே.    (74)

உய்யும்படிக்கு உனைப் பாடி நின்று ஏத்திடும் உத்தமரி(ன்)
ஐயம் தவிர்த்து அவர் துன்பினை நீக்க அருளுறு நீ
கையும் தலைமிசைக் கூப்பாது கண்ணும் கசிந்துருகாப்
பொய்யனை எவ்விதம் ஆள்வாய்? வடமுல்லைப் பொற்கொடியே!   (75)

கொடியவராம் சமணாதிகளை களைக்கொய்து எறிந்திட்டு
அடியார் குலைச்சிறை, நீண்மாறன், மங்கைக்கரசி எனும்
கடிகமழ் ஞானப் பயிர் விளைத்திட்ட நம் கண்மணிக்குப்
படிமிசைப் பொற்கிண்ணப் பால் தந்த முல்லைப் பரிவினளே!    (76)

பரிவாக மேனையின் சங்கற்ப முற்றிடப் பண்டு இமய -
கிரியோனைப் பூமிதனில் வரச் செய்தவன் கேண்மையளா(ம்)
உரியோளுடன் வாவி மூழ்கிடக் கண்டு அங்கு உயர் பதவி
புரிவோடு தந்த நீ ஆண்டிடுவாய் முல்லைப் பூங்கொடியே!    (77)

பூங்காவனம் சென்று பன்மலர் கொய்து நல் பூசைசெய்த
பாங்கான பாலன் தனை நமன் வந்து பயமுறுத்தி
ஆங்காரத்தோடு நெருங்கும் சமயம் அருள் அளித்த
நீங்காத காதலனோடு உறை முல்லை நிறைமதியே!    (78)

மதியாது உனைத் தொழுதேத்தாப் பிருங்கிதன் மாதசையைப்
பொதியாது ஒழித்திடப் போக்குவரவு புரிதலற்றுக்
கதியேதும் இன்றிட நின் நாதன் வேண்டக் கருணையுடன்
துதியோடு முக்கால் அருளிய முல்லையில் சுந்தரியே!   (79)

சுந்தரமான வதனமும், தோகைச் சுரிகுழலு(ம்)
அந்தரமே இடையாகியும் அன்பின் அருள் விழியு(ம் )
மந்தரநேர் கொங்கை தம்மையுங் கண்டு மயங்கி வெள்ளி
சிந்துர மேவிய நின் வச(ம்) முல்லையில் சிக்கினனே!    (80)

சிக்கல் அடைந்த ஒரு மைந்தனும் தாயும் திகைத்திடும்போ(து)
அக்கண(ம்) மாமன் உருக்கொடு வந்து அங்கு அருள்சுரந்து
தக்க வழக்கினைத் தீர்த்துப் பொருளைத் தயைபுரிந்த
நக்கனிடத்து அமர்வாய் வடமுல்லையி(ல்) நாயகமே!    (81)

நாயினும் கீழ்ப்படும் ஏழை என் குற்ற நலிவகற்றிச்
சேயினைப் போல அணைத்து ஆதரித்துச் சக(ம்) மதிக்கத்
தாயினு(ம்) மேம்பட்டு நின்று ஒளிரும் தன் தனித்த முல்லை-
வாயில் வைத்து ஆள்வாய் நிருமலனோடு உறை மாதவமே!    (82)

மாதாவைப் போல வளர்ப்பவள் மீப்புகழ் வாழ்த்துநர்க்குத்
தாதாவைப் போலக் கொடுப்பவள் மாண்புறச் சார்ந்தவர்க்குப்
பாதாரவிந்தம் அளிப்பவள் சன்மம் பறித்ததற்பின்
வேதாவிற்கு எட்டாது செய்பவள் முல்லையில் மேவுவளே!    (83)

மேவலர் முப்புர(ம்) நீறாகச் செய்தபின் மீதியமுக்
காவலர் தம்முள் ஒருவன் குடமுழாக் காட்டிடவு(ம்)
ஆவலராய்ச் சிலர் வாயிலைக் காக்கவும் ஆக்குவித்த
சேவகன் தன்னொடும் வாழ்குவை முல்லைச் சிவானந்தியே!    (84)

சிவாலயம்தோறும் தொழுது துதிக்கும் திறம் உறவு(ம்)
அவாவை அறுத்துப் பரமுத்தி ஞான அருள் உறவும்
சுவானந்தம் ஓர்வழியில்பட்டு நின்று. துதித்திடவும்
பவானி அருளுவள் முல்லையில் வேண்டிய பாக்கியமே!    (85)

பாக்கியம் பெற்றனர் ஆரணன் நாரணன் பால்ஒளியோ(ன்)
ஆக்கி அளித்து அங்கு அழிக்கும் திறத்தினை அண்டமதில்
வாக்கியம் தப்பாது முல்லை நகரினில் வாழ்ந்து நிதம்
யோக்கியமாக நடந்திட்ட உண்மையின் ஊகையதே.   (86)

உண்மையுடன் உனைப் போற்றித் துதிக்கின்ற உத்தமரின்
வண்மையைச் சொல்லிட வாயேது? கஞ்சமலர்த் திருவும்
தண்மையளாம் கலைவாணியும் சம்புவும் சண்முகனும்
கண்மை வைத்து ஆளுவர் முல்லையிலே என்றன் கண் மணியே!    (87)

மணிகட்டி நீதி செலுத்திய ஆரூரின் மன்னவனைப்
பணிகொண்டு அங்கு ஆள்வதற்கு எண்ணிப் பெரிய பசு உருவாய்த்
திணிகொண்ட ஏமன் கன்றாக்கித் தொடர தெருவில் வரு
மணிகொண்ட நாயகனோடு உறை முல்லையில் ஆயிழையே!    (88)

இழைநுழையாத நின் கொங்கைகள் தம்மால் இளகி மிகக்
குழைந்திட்ட நாயகற்கு என் குறை முற்றும் குறித்து நிதம்
விழைவுறச் செய்யாது இருப்பது என்கொல்லோ? விசும்பளவும்
கழைவனம் சூழ் திருமுல்லையில் வாழ்கின்ற காரிகையே !  (89)

காரிகையே நின் மணவாளனோடு கயிலைதனில்
சாரிகை ஆடிடும்போது மாயன் தனைச் சாட்சி வைத்து ''இங்(கு)
ஆர் இதில் தோற்றவர்?'' என்ன அவன் பொய்யுரை தரவும்
பாரினில் பாம்பாய்ச் சபித்திட்ட முல்லைப் பசுங்கொடியே!    (90)

கொடியாடு பொன் எயில் சூழ் திரு முல்லையில் கோமளன் தன்
அடியாரை ஆளத் துவசம் கட்டி நின்று இங்கு அகிலமதில்
மிடிபோக்கித், தீவினை யாவும் துடைத்து, விரிநரகை
அடியோடு மாற்றுவள் நிச்சயமாம் இச்சொல் அன்பர்களே!   (91)

அன்பரைக் காக்கும் கருணை விழிகளும் அன்பிலரை
வன்புடன் காக்கும் வலியையும் கண்டு மனம் குழைந்தே
என்புடன் ஆக்கை யாவும் தளர்ந்து இங்கு இளகி நின்றேன்
துன்பு செய்யாது எனை ஆதரி முல்லைச் சுக முகிலே!   (92)

முகிலைப் பழித்த குழல் பின்னல் மேவ முருகுயிர் சேர்த்(து)
அகிலூட்டிய கொங்கை தாங்கா இடையும் அசைந்து ஒளிரச்
சிகிபோல் அசைந்து என் முனமாக வந்து இச் செயிர் ஒழித்தே
அகிலம் புகழ்ந்திடக் காட்சி தந்தாள் முல்லை ஆனந்தியே !  (93)

ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கிய அற்புதமே!
ஈனம் தரும் என் உடலினை ஏமன் இடர் செய்யவும்
ஞானன் படைக்கவும் ஒண்ணாது இருக்க உன் நல்லருளால்
வானத்தர் போற்றிட வாழ்வளிப்பாய் முல்லை வண்மயிலே!   (94)

மயிலோனும், தும்பி முகத்தோனும், மாலும், மலரவனும்,
கயிலாயனும், வேள்வி வேந்தனும், மற்றைக் கடவுளரு(ம்)
மயில்போல் விழியுடை ஆரணங்கே நின் அருளதனால்
செயலுற்று வாழ்ந்தனர் முல்லையிலே நின்ற சேயிழையே!    (95)

இழைபோல் இடையுடை வண்டோதரிபால் இனிமையதாய்
குழைநக்கர் சென்றது இராவணன் காணக் குழவியதாய்
விழைவுடன் தோன்றக் குறத்தி நீயாக விளங்கியதால்
பிழை ஒன்றும் கண்டிலன் நல்சூழ்ச்சி முல்லைப் பிடிஇடையே!    (96)

இடைவிடாது உன்றனையேத்தித் துதித்து இங்கு இறைஞ்சுநர்க்குத்
தடைபடாது உன்னருள் வாய்ப்பது சத்தியம் சத்தியமே!
கொடையாளியாய் வந்து முப்பத்திரண்டு அறம் குற்றமற
மடைதிறந்தாலன்ன ஈபவள் காண் முல்லையில் வாழ்பவளே!    (97)

வாழ்நாள்கள் எல்லாம் அவமாக்கி நின்றனை வாழ்த்தறியேன்
மாழ்தல் கொண்டே மண்ணில் வாழ்ந்தேன் இரண்டுகால் மாடது போல்
தாழ்தலைச் செய்யாது முல்லையில் நின் இருதாள் மலர்க்கீழ்
பேழ்வுடன் என்றனை வாழ்விக்க வேண்டும் பெருந்தகையே!    (98)

பெருமானை வேதப் பெருந்தகை தன்னை நல் பெற்றியனை
இருமானைத் தன்னிடம் வைத்திட்ட எங்கள் இருநிதியை
ஒருமானை எய்தவன் காணாப் பொருளை உவந்து அணைந்தாய்
வருமானைக் காலிடறச் செய்யும் வண் முல்லை மாதவமே!   (99)

மாதவச் சூழலில் மால்விடையான் ஓர் வயோதிகனாய்
நீதவம் செய்கையில் பற்பல நிந்தை நெடிதுரைத்து(ம்)
ஆதரத்தோடு அவன் தொல்லுருக் கண்ட பின் அன்புடனே
காதலுற்றே மணம் பூண்டாய் திருமுல்லைக் காரிகையே!  (100)

கார்போல நின் அருள் தன்னைப் பொழிந்து கடைக்கணித்துச்
சீர்வாய்ந்திடச் செய்த என்றனைக் கஞ்சன் சிருட்டியினால்
பார் மீது வந்திடப் பண்ணாது, காத்துப் பதம் அடையு(ம்)
ஏர் வாய்ந்திடும்படி செய்திட வேண்டும் இமாசலையே   (101)

இமையவன் செய்திட்ட புண்ணியம் ஏது என்று இயம்பிடுவேன்
உமையான முல்லைக் கொடியினைப் பெண்ணாக உற்றதுவும்
நமையாதரித்து அருள் நம்பன் மருகனாய் நண்ணியது (ம் )
அமை ஐங்கரன், குகன் பேரரும் ஆனது அதியசமே!    (102)

சயரோகம், சூலை, பெருநோய், மகோதரம், சன்னி குளிர்,
வியர்வைச் சுரம், அஷ்டகுன்மம், தலைவலி, மேகரண(ம்)
முயல்வலி, யாவும் பறந்தோடும் சூரியன் முன் பனிபோ(ல்)
அயன் அரி போற்றிடு(ம்) முல்லைச் சிவையின் அடியருக்கே!    (103)

அடியாளில் கொண்டனள் முல்லை மனோன்மணி அன்னை, அதால்
குடியான வாந்தி, அருசி, இடுப்பு நோய், குன்மம் முதல்
படியாய் இறக்கி உடலை வளர்த்திடும் பார்தனிலே
செடியால் வளர்ந்த உறுப்பாகும் என் மதர்ச் சீரகமே.   (104)

        வாழி - வெண்பா

வாழி திருவெண்ணீறு, வாழி ருத்ராக்க மணி
வாழி பஞ்சாக்கர மாமந்த்ரம் - வாழி நின்
நல் புதல்வர், வாழி நின் நாயகனார், வாழி நின்
பொன் சரணம் என்னுள் பொலிந்து.    (105)

        திருச்சிற்றம்பலம்

 

Related Content