logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)

திருச்சிற்றம்பலம்

தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை அவர்கள் இயற்றிய


பொட்டிட்ட நெற்றியும், கொப்பிட்ட செவியும், பொருப்பை ஒப்பிட்ட தனமும்
    புயலிட்ட அளகமும், கயலிட்ட கண்கடை பொழிந்திட்ட கருணை அமுதும்
நெட்டிட்ட பைங்கழையை நிகரிட்ட தோளும், இள நிலவிட்ட புன்முறுவலு(ம்)
    நீரிட்டசடையாளர் மணமிட்ட நாளில் அவர் நெஞ்சுஇட்டமொடு கரத்தால்
தொட்டிட்டு எடுத்து அம்மி மீதிட்ட பதமும், துலங்கிடக் கண்டிட்டு அடியான்,
    துதியிட்டு உனைத் தெண்டனிட்டு இறைஞ்சிட அருள் சொரிந்திட்டு உகந்து ஆள்வையோ?
மட்டிட்ட சோலை வளர் முல்லைநகர் மாசிலாமணியிடத்து உறைகரும்பே! 
    வாழ்த்தும் அடியவர் தம்மை ஆழ்த்துபிறவியின் வெம்மை மாற்று கொடியிடை அம்மையே !  (1)

ததிகொண்ட மத்தெனச் சுழல்கொண்ட எழுவகைதனைக் கொண்ட பிறவிதனிலே
    தனிஉருக்கொண்டு வந்து உதரவெம்பசியால் தளர்ச்சி கொண்டு உழல்வ தல்லால்
சுதிகொண்ட நூபுரத்தொனி கொண்டு , மறைகள் பல துதிகொண்ட பதமிசை மலர்த்
    தொடைகொண்டு புனையாத பேய்கொண்ட நாயனைத் தொண்டு கொண்டு ஆள்வது எந்நாள்?
பதிகொண்ட சேடன் ஒருபாயலாக் கொண்டு பால்கொண்ட உததிதனிலே
    பள்ளிகொண்டு ஒளிர்மேனி பச்சை கொண்டவர் மனது பரிவு கொண்டிடு தங்கையே!
மதிகொண்ட மாடமலி முல்லைநகர் மாசிலாமணியிடத்து உறை கரும்பே!
    வாழ்த்தும் அடியவர்தம்மை ஆழ்த்து பிறவியின் வெம்மை மாற்று கொடியிடை அம்மையே !  (2)

நான்முகக் கம்மியன் வகுத்த தோல் பாவையை நமன் பிழிந்து எறி சக்கையை
    நாறுபல மும்மலம் அடைத்திடு துருத்தியை நரிக்கும். கொடிக்கும் இரையை
ஊன்மலி ஒதுக்கினை ஈனமல, சலம் வழிந்து ஒழுகும் ஒன்பது
    ஓட்டைக் குடத்தினைப் போட்டு உனது தாள் வீட்டில் உற்றிருப்பதுவும் எந்நாள்?
மேன்மைபெறு நாற்பத்து முக்கோண நடுவினும் வேதமுடிவினும் அழிவிலா
    வித்தான அத்துவித முத்திமுதலினு(ம்) நின்ற விமலி!  பைங்கமுக அடவி
வான்முகடு அளாவு வடமுல்லைநகர் மாசிலாமணியிடத்து உறை கரும்பே!
    வாழ்த்தும் அடியவர் தம்மை ஆழ்த்து பிறவியின் வெம்மை மாற்று கொடியிடை அம்மையே! (3)

உடலேறு கருமையுடன் வளைவேறு பிறைஎயிறு உதட்டின் மேலேற அத்தத்து
    ஒளிர் சூல பாசம்ஏறக் கண் சிவப்பேற உரும் ஏறெனக் குமுறியே
கடலேறி வருவிடம் எனக் கொதித்தேறி வெங்காலன் மாடு ஏறி வருநாள்
    கரையேறுதற்கிலாது இடரேறு சிறியனைக் கதியேறவைத்தாள் வையோ?
அடலேறும் ஒரு மகிடன் மதமேறி ரதமேறி அமரேறி வருபோதிலே
    அவன் முடியிலேறி நடமிட்டு உம்பர் குடியேற அருளிய கபாலி அளிபூ
மடலேறி இசை பயிலு முல்லைநகர் மாசிலாமணியிடத்து உறை கரும்பே!
    வாழ்த்தும் அடியவர் தம்மை ஆழ்த்து பிறவியின் வெம்மை மாற்று கொடியிடை அம்மையே  !  (4)

நெஞ்சு என்றும் இளகாத வஞ்சரைத் "தரு'' என்று. ''நிதி'' என்று ''மணி" என்று
    "மா" நிகர் என்று, ''முகில்" என்றும், "வள்ளல் இருபத் தொருவர் நீயலாதில்லை" என்றும்,
அஞ்சென்ற லட்சணம் உணர்ந்து தமிழ் ஓதுகினும் 'ஆர்'' என்று கேளார்கள் பால்
    "அருள்க" என்று பின்சென்றிடாமல் என்றனையும் உனது அன்பு என்று அளித்து ஆள்வையோ?
நஞ்சென்றும், அம்பென்றும், வேலென்றும், வாளென்றும், நமன் என்றும் வடுவென்றும் உன்
    நயனத்தை இணையிட்டு உரைப்பர் அல்லால், உண்மை நாடும் அன்பர்க்கு அருள்பெயும்
மஞ்சென்று உரைக்கிலார் முல்லைநகர் மாசிலாமணியிடத்து உறை கரும்பே!
    வாழ்த்தும் அடியவர்தம்மை ஆழ்த்து பிறவியின் வெம்மை மாற்று கொடியிடை அம்மையே!   (5)

            திருச்சிற்றம்பலம்

 

Related Content