திருச்சிற்றம்பலம்
வரசத்தி விநாயக வணக்கம்
முத்திக்கு வித்தாகு(ம்) முல்லைக் கொடியிடையாம்
சத்திக்கு இரட்டைமணி சாத்தவே - சித்திக்கும்
பத்திமுதல் பத்தும் உறுபத்து அருளத் துற்றுவர
சத்திஎனும் அத்திமுகன் தாள். (1)
நேரிசை வெண்பா
திருவோங்கிடும் அடியர் செவ்வி மனத்து ஓங்கும்
கருவோங்க ஏங்குநரைக் காக்கு(ம்) - மருவோங்கு
முல்லைக் கொடியி டையாள் ஏழையேற்கும்
அல்லல்பவம் அறுக்கும் ஆய்ந்து. (2)
கட்டளைக் கலித்துறை
ஆயும் துறவியர்க்கு ஆரமுதாய், அடியேன்றனக்கு ஓர்
தாயும் சிவம் எனும் தாதையைக் காட்டும் தனித் துணையும்
பாயும் வினைமுதலாம் இருள் சீக்கும் பரிதியும் ஆம்
சாயும் பிறைதவழ் செஞ்சடையான் பங்கில் சார் கொடியே! (3)
நேரிசை வெண்பா
கொடிய பவக்கடலில் குப்புற்று வீழா(து)
அடியனையு மாள லழகா - னெடிய சங்கம்
செய்யில் தவழ்முல்லைச் சீர்மாசிலா மணியின்
மெய்யில் திகழ்ஒளியே மேல். (4)
கட்டளைக் கலித்துறை
மேனாடுறும் செல்வமே வந்து வாய்க்கினும் வேட்கை அற்று அவ்
வானாத போகத்து அருவருப்புற்று உன் அடி மலரை
யான் நாடிடும்படி செய்யாய்! புகழ் முல்லை அன்பர் தமக்கு
ஊனா ருயிர்என நின்றான் வலத்து அமர் உத்தமியே! (5)
நேரிசை வெண்பா
உத்தமியே! எத்துணையும் இன்றி உலகமய (ல்)
எத்த வலைப்புண்டு இளைப்பேற்கு - முத்தர்
புகலடையு(ம்) முல்லையில் வாழ் பொற்கொடியே! முத்திச்
சுகமடையு(ம்) மெய்ந் நெறியைச் சொல், (6)
கட்டளைக் கலித்துறை
சொல்லும் பொருளும் என என்னுளத்து நின் தூயடியை
அல்லும் பகலும் இருத்தித் துதித்து நல் அன்புருவாய்ப்
புல்லும்படி அருள் செய்வாய் பகைவர் பொருது அழிய
வெல்லும் செயல் வளவற்கு அருள்வோன் வலமெய்த்துணையே! (7)
நேரிசை வெண்பா
துணையேதும் இல்லேன், தொடக்குண்டு அழிவேன்
இணையார் எனக்கு இங்கு இடரில் - தணியாமல்
இட்டளத்தை நாளும் இசைக்கின் கொடியிடையே!
எட்டுணையும் ஆற்றேன் இனி. (8)
கட்டளைக் கலித்துறை
இனியாயினும் எளியேன் அருளாராது இடர் அடைந்தே
நனிவாடிடக் கண்டிருத்தல் நன்றோ? நவைதீர்ந்து இதயம்
பனியாது இயற்றும் தவத்தோர் புகழ் முல்லைப் பைங்கொடியே
சனிவான் பிறவிச் சலநிதிக் காக்கும் தனிப்புணையே! ( 9)
நேரிசை வெண்பா
தனியே இருந்து அருளாம் தண்ணமுத(ம்) மாந்தி
நனியோம் கிடக் கடைக்கண் நல்காய் - கனிவோங்கு
மன்னே, என் அன்னே, நான் ஆற்றேன், ஆற்றேன், வன்மை
என்னே! கொடியிடையே இன்று! (10)
கட்டளைக் கலித்துறை
இன்றேயலது இவ்வுடல் நாளையே பொன்றும் என்று நல்லோர்
நன்றே அடைய முயன்றனர்; நாயடியேன் தினமும்
சென்றே, அவத்து உழைத்தே, உண்டு. உடுத்துத் திரிந்து, உழலா
நின்றேன்; அருள்முற்றி எங்ஙன் உய்வேன்? முல்லை நின்மலியே ! (11)
நேரிசை வெண்பா
மலியா உலக மயல்பட்டு அடியேன்
சலியா உழன்று, அலைந்து. சாய்வேன் - கலியாரு
நெஞ்சேன் எனை ஆள நேர்ந்தருள்வாய்! முல்லை என்தாய்!
செஞ்சேல் கடைக்கண்ணால் தேர்ந்து. (12)
கட்டளைக் கலித்துறை
தேர்ந்தே அடியருடன் பயின்று, இன்னருள் தேக்கி இன்பம்
ஆர்ந்தே, பவப்பிணிக்கு ஆரமுதாகும் மடிஇல் அன்பு
கூர்ந்தே மமைய பெற்றுன் குறிவழிக் கூடி நிற்கச்
சார்ந்தேன் என் எண்ண(ம்) முடித்தருள்வாய்! முல்லை தற்பரையே! (13)
நேரிசை வெண்பா
பரையே நினது பதாம்புயத்து நெஞ்சம்
கரையேன்; புகழ் ஒன்றும் கற்றே - உரையேனுக்கு
அல்லல்கொடி இடையே, யாப்புண்டு, அடையாமல்
முல்லைக் கொடியிடையே! முன். (14)
கட்டளைக் கலித்துறை
முன் ஆரணமும் சொலற்கு அரிதாம் புகழ் மூதறிவில்
என்னால் அளக்க இயலுமதோ? எளியேனனைத்
தன்னாவி விட்டு அழவும் இரங்காமை நின்றாய்! கருணைக்கு
என்னாகு(ம்)? முல்லைக் கொடியிடையே! என்ஓர் இன்னுயிரே! (15)
நேரிசை வெண்பா
இன்னம் பிறந்து இறக்க எண்ணுகிலேன் எண்ணம் உன்றன்
பொன்னம் கழலிணைக்கே பூணாவேன் - சின்னம்கொள்
சம்பந்தருக்கு இரங்கும் தாயே ! அருள்அடிக்கே
சம்பந்தம் கொள்ள அருள்! (16)
கட்டளைக் கலித்துறை
சார்ந்தேன் எனக்குக் குறையுளதோ? தனிச் சீவ தயை
ஆர்ந்தே பொறிவழிச் செல்லா அடியர் அமல மன
நேர்ந்தே நிருமல மாமணியோடு உறு நீர்மை எனச்
சேர்ந்தே கொடியிடையாள் வதி வானவன் சீர் அருளே! (17)
நேரிசை வெண்பா
அருளே திருஉருவாய் அன்பர் அகத்தின்
இருளே இரித்து ஒளிரும் என்தாய்! - மருளேனும்
பாசக் கடல் கடக்கப் பைம் புணையா நின்பதத்தை
நேசித்து எனக்கு அருளாய்! நேர்ந்து. (18)
கட்டளைக் கலித்துறை
நேசித்து நின்னை நினைக்ககில்லேன்; அன்றி நெஞ்சுருகிப்
பூசித்து நின்சரண் போற்றகில்லேன்; புல்லா பொய்ப் புகழை
மோசித்து, நின்னை மொழியகில்லேன் இந்த மூர்க்கன் அந்தோ!
வாசித்து நின் தொண்டன் ஆவது என்றோ? முல்லை அம்பிகையே! (19)
நேரிசை வெண்பா
அம்பரத்தார் இன்பநலம் ஆர்ந்தார்; நாயே(ன்)
இம்பரத்தார் தீவினைக்கே ஈடழிவேன் - சம்பரத்தச்
செம்பாதியாய் ! முல்லைச் சிற்பரையே! மெய்ப் புலவோர்
நம்பாதியாய் அருளை நல்கு ! (20)
கட்டளைக் கலித்துறை
அருள் கொண்டவர் குழுக்கூடினும், அல்லார் அவை புகினும்,
இருள் கொண்டு நல்கூர்ந்திருப்பினும், அன்றி இரப்பவர்த(ம்)
மருள் கொண்டிடும் மிடி மாற்றும் வளமை மருவிடினும்,
தெருள் கொண்டு இரு மனமே! வடமுல்லைத் திருநகரே. (21)
திருச்சிற்றம்பலம்