திருச்சிற்றம்பலம்
1. ஆமாத்தூர் அம்மான் பதிகம்
2. அருட்பேறு வேண்டு சந்தப்பதிகம்
3. விரைந்தருள வேண்டு பதிகம்
4. அழகேசுரன் சந்தப்பதிகம்
5. மாதையுளான் சந்தப்பதிகம்
6. மாதை அபிராமன் சந்தப்பதிகம்
7. ஆமாத்தூர்ச் சிவன் சந்தப்பதிகம்
8. ஆமாத்தூர்வாழ் அம்மான் பதிகம்
9. ஏற்றுக்கொள்ள வேண்டு பதிகம்
10. ஆமாத்தூரான் வண்ணப்பதிகம்
11. மாதையில் வாசன் பதிகம்
12. மாதைச்சிவன் சந்தப்பதிகம்
13. மாதைச் சித்தர் பதிகம்
14. மாதை ஈசன் சந்தப்பதிகம்
15. ஆமாத்தூர் ஆண்டான் பதிகம்
16. மாதையான் பதிகம்
17. மாதை அழகேசன் பதிகம்
18. மாதையூர்ப் பெம்மான் பதிகம்
19. திருவாமாத்தூர்ச் சிவனார் பதிகம்
20. மாதை அழகியநாதன் வண்ணப்பதிகம்
21. உலவாக் கிழி வேண்டு பதிகம்
22. அருள் துளி வேண்டு பதிகம்
23. கலிதீர வேண்டுபதிகம்
24. சோதிக்கொணாது என்ற சந்தப் பதிகம்
25. இரங்கிட வேண்டு பதிகம்
26. எள்ளேல் என்ற பதிகம்
27. வினாப் பதிகம்
28. அரசாண்ட நாயகன் பதிகம்
29. மாதையூர்ச் சந்தப் பதிகம்
30. ஆமாதை அழகன் வண்ணப்பதிகம்
31. ஆண்டுளான் பதிகம்
32. திருவாமாத்தூரான் பதிகம்
33. மாதை மாநகர்ச் சந்தப்பதிகம்
34. மாதை மாநகர்ப்பதிகம்
35. மாதைவாழ் பெருமான் பதிகம்
36.ஆளில் இழிவுறாது என்ற பதிகம்
37. தேர் ஊரக் கண்ட பதிகம்
38. வம்பிற் கொல்லேல் என்ற பதிகம்
39. திருவாமாத்தூர்ப் பதிகம்
40. மாதைநகர் வாழ் சிவன் வண்ணப்பதிகம்
41. மாதை வளம்பதிச் சிவனார் பதிகம்
42. சோதியேல் என்ற பதிகம்
43. மாதை ஆதிபன் பதிகம்
44. மாதைத் தெய்வப் பதிகம்
45. இடர்தீர்க்க வேண்டு பதிகம்
46. மாதை வளம்பதி வள்ளல் பதிகம்
47. ஆட்கொள்ள வேண்டு பதிகம்
48. அருள் ஆசை மறவேன் என்ற சந்தப்பதிகம்
49. ஆமாத்தூர் அரசன் பதிகம்
50. ஆமாத்தூர்வாழ் அழகன் வண்ணப்பதிகம்
51. ஆமாத்தூர் அரனார் பதிகம்
52. மாதை ஆண்டுளான் பதிகம்
53. சித்து அனைத்தும் வேண்டு பதிகம்
54. ஆசைநோய் தீர்க்க வேண்டு பதிகம்
55. மாதையூர்ச் சிவன் பதிகம்
56. நேரில் அழைத்த சந்தப்பதிகம்
57. மாதைச் சிவலிங்கப் பதிகம்
58. பிறப்பு இறப்பு ஒழிய வேண்டு பதிகம்
59. ஆண்டுகொண்டருள வேண்டு சந்தப் பதிகம்
60. திருவாமாத்தூர்த் தெய்வ வண்ணப் பதிகம்
61. காணவிழைந்த பதிகம்
62. திருவிளையாடல் விழைந்தபதிகம்
63. அடியரிற்கூட்ட வேண்டு பதிகம்
64. சித்திகள் வேண்டு பதிகம்
65. மாதைப்பெருமான் சந்தப் பதிகம்
66. மாதைநகர் அபிராமன் சந்தப்பதிகம்
67. பம்பைக்கரைப் பிரான் பதிகம்
68. பரிந்தாள வேண்டு பதிகம்
69. ஆமாத்தூர் ஊர்ச்சந்தப் பதிகம்
70. அழகியநாயகன் வண்ணப் பதிகம்
71.மாதைவாழும் மயேசன் பதிகம்
72. மாதை மாதேவன் பதிகம்
73. மாதை மாநகர்ப் பெருமான் பதிகம்
74. ஏனோ அறியேன் என்ற சந்தப்பதிகம்
75. புரந்தருள வேண்டு சந்தப்பதிகம்
76. திருவாமாத்தூர்ப் பிரான் பதிகம்
77. ஆமாத்தூர் உத்தமன் சந்தப் பதிகம்
78. மதித்தருள வேண்டு பதிகம்
79. மாதை மாநகர் வள்ளல் பதிகம்
80. மாதைநகர்ச் சிவன் வண்ணப்பதிகம்
81. மாதைப்பதிப் பதிகம்
82. ஆளவேண்டு சந்தப்பதிகம்
83. ஆண்டுகொள்ள வேண்டு பதிகம்
84. மானங்காக்க வேண்டு சந்தப்பதிகம்
85. என்னுடை மானமும் நினதென்ற பதிகம்
86. பணி ஏற்கவேண்டு பதிகம்
87. தாமதம் தவிர்க்க வேண்டு சந்தப்பதிகம்
88. மாதையூர் அரசன் பதிகம்
89. மாதையின் மன்னன் பதிகம்
90. பசுக்குலம் பரவிடு வண்ணப்பதிகம்
91. சோம்புதல் தவிர்க்க வேண்டு சந்தப்பதிகம்
92. நிசப்படச் செயவேண்டு பதிகம்
93. இன்னே அருள் துளி வேண்டு பதிகம்
94. மாதைவாழ் சிவன் பதிகம்
95. இன்றே ஆண்டருள வேண்டு பதிகம்
96. செல்வத் திருவாமாத்தூர்ப் பதிகம்
97. மெய் அருள் வேண்டு பதிகம்
98. ஆமாதை ஆதிபன் பதிகம்
99. ஆமாத்தூர் ஆண்ட பெருமான் பதிகம்
100. ஆமாதைப் பரசிவன் வண்ணப் பதிகம்
காப்பு
நேரிசை வெண்பா
1. ஆறுபுனை செஞ்சடிலத் தம்மான்ஆ மாத்தூரில்
நூறு பதிகம் நுவல்வேற்குக் - கீறுமதித்
துண்டமருப் பானும், சுடர்இலைவே லோனும், உண்மைத்
தொண்டர்களும் சூழும் துணை. (1)
பொதுத்துதி
கட்டளைக் கலித்துறை
2. அதிகப் புகழ்த்திரு ஆமாதை
வாழும் அழகர்தம்மேல்
பதிகச் சதகத் துதிபாடும்
என்னைவெண் பாரதிசேர்
விதிகற்ற நான்மறைத் தெய்வம்எல்-
லாமும் விரும்பி, வினைச்
சதிகட் களைந்தருள் உல்லாசச்
செல்வம் தரத்தகுமே. (2)
சரசுவதி துதி
அறுசீர் விருத்தம்
3. பால்வண வாணி யே! நின்
பணிலவான் கழுத்தில் வேத
னால்வரு தாலி மீதில்
ஆணைஆ யிரம்இட் டேன்முன்;
நால்வருக் கீந்த வாக்கே
நான்பெறக் கொடுக்க வேண்டும்
வால்வளைச் செவியார் மாதை
மகிமைநன் கிலங்கு மாறே. (3)
அழகியநாதர் துதி
எண்சீர் விருத்தம்
4. கல்எறிந்த சாக்கியனைப் பன்றி ஊனும்
கடித்தளித்துக் கழல் அணியும் காலால் தீண்டும்
வில் எறிந்த தோள்மறவன் றன்னை ஆண்ட
வியன் ஆடல் முதலியன மெய்யே யாகில்
சொல்எறிந்த எனைவெறுக்க ஞாயம் இல்லை;
துதித்துருகும் வடலூராற் றொலைத்த தேனோ?
அல்எறிந்த களத்தழக நாத ரே! நும்
ஆமாத்தூ ரினில்அருட்கூத் தாடு வீரே!
நூற்பயன்
வண்ண விருத்தம்
தனனத் தனனத் தனதானன தந்தனா
5. அணிமிக் குயர்முத் தமிழ்மேன்மைஅ றிந்துய்வார்;
அமரர்க் கதிபற் குறும்வாழ்வையும் நம்பிடார்;
மணிமுற் றும்வடத் தொடுநீறணி தொண்டர்தாள்
மலர்பட் டுதிரத் தருதூள்அணி அன்பறார்;
கணிதத் துள்அடக் கம்இல்ஆண்மைபொ ருந்துவார்.
கயிலைப் பதிஒத் தவிர்மாதையில் நம்பனார்
பணிலச் செவிபத் தினும்மேவிநி ரம்பிவாழ்
பதிகச் சதகத் தைஎநாளும்வி ளம்பினே! (5)
பாயிரம் முற்றும்
நூல்
வெண்டளைக் கலிப்பா
1. நீர்மருவு சென்னி நிலவெறிப்ப நீள்விடையில்
கார்மருவு கன்னியொடு காட்சி தரல் எந்நாளோ?
பேர்மருவு நாவினரைப் பேரின்ப வீட்டில்உய்ப்பாய்!
ஆர்மருவு செஞ்சடையாய்! ஆமாத்தூர் அம்மானே! (1)
2. தேனைநிகர் பாடல் சிறியோர் திரள்மொழிந்தால்
ஊனை உருக்கி உடன்கலக்க மாட்டாயோ?
மானை மழுவை மலர்க்கரத்தில் வைத்துகந்தாய்!
ஆனை உரிபோர்த்தாய்! ஆமாத்தூர் அம்மானே! (2)
3. குஞ்சரத்தோன் ஆணை; குகப்பெருமான் தன்ஆணை;
அஞ்சல்எனச் சொல்லிஎன்னை ஆண்டுகொள்ள வேண்டுங்காண்
பஞ்ச முகத்தோர் பரம்ஆய பண்ணவனே!
அஞ்சனக்கண் மங்கைபங்கா! ஆமாத்தூர் அம்மானே! (3)
4. செம்பொற் பணத்தால் தியக்கமுற்றுச் சீரழிந்து
வெம்பொற்றை நேர்பொருளார் வீட்டெதிர்செல் லாதருள்வாய்
பைம்பொற் கவுரிஒல்கப் பால்நிறத்தோர் கங்கைவளர்
அம்பொற் சடைக்கிழவா! ஆமாத்தூர் அம்மானே! (4)
5. கொங்கவிழ்மென் கூந்தற் குமரியர்கள் கொங்கையின் மேல்
இங்கடியேன் மோகித் திளைக்கும்இடர் என்றொழிப்பாய்?
பங்கயமே போன்று பரிதிமதி யூடுவளர்
அங்கனற்கண் நம்பா! என் ஆமாத்தூர் அம்மானே! (5)
6. சீரும் தனமும் தினத்துணைஎன் றெண்ணியெண்ணி
நேரும் துயர்க்கடலில் நீந்தல்என்று நீக்குவையோ?
பாரும் கனகப் பதியும் வெறுத்திகழார்
ஆரும் அறிவரியாய்! ஆமாத்தூர் அம்மானே! (6)
7. மண்டலத்தில் உள்ளபல மானிடரும் நல்உணவே
கொண்டருந்தக் காணும் குருஒருவன் வாரானோ?
புண்டரிகக் கண்ணானும் போதானும் பொன்னுலகத்து
அண்டர்களும் போற்றிசைக்கும் ஆமாத்தூர் அம்மானே! (7)
8. நம்படிமைத் தன்மைஉறும் நாங்கள்எலாம் நாய்அனையர்
கும்பலைக்கண் டஞ்சிக் குலைந்துழல, ஏன்செய்கின்றாய்?
வம்பர்களைக் கொல்வான் வருந்தும் வலாரிமகற்கு
அம்பளித்த கைச்சிவனே! ஆமாத்தூர் அம்மானே! (8)
9. எந்தமது வேட்கைஒன்றும் ஈயா தொழிக்கின்முன்நாள்
செந்தமிழ்வேட் டுற்ற சிறப்பெல்லாம் பொய்யாமே!
சந்தமுலைப் பார்ப்பதிப்பால் தந்திமுகன் சண்முகன்என்
அந்தண்மகர்ப் பெற்றுவந்தாய்! ஆமாத்தூர் அம்மானே! (9)
10. பொய்வணக்கம் செய்தும்உனைப் போற்றிசையார் தாமும்நிந்தை
செய்வதொல்கும் என்னைத் திருவருளால் தேறிடச்செய்து,
உய்வடைந்தோர் நால்வர்என்றே ஓதும் இந்த மூதுலகம்
ஐவர்என என்றருள்வாய்? ஆமாத்தூர் அம்மானே! (10)
அறுசீர்ச்சந்த விருத்தம்
11. பாடல்வல் லார்விருப் பியாவும் அளித்தருள்
பண்பில் தளரான்ஆம்
நாடனைத் தும்பர வத்தகு மாதையின்
நடுவாழ் வுறுநம்பா!
வாடல்இல் வேழம்அன் னார்முயல் போல்பவர்
மாட்டே கவும் செய்யும்
ஆடக மையல்எ னைத்தொட ராதுனது
அருட்பே றருள்வாயே (1)
12. செங்கன கக்கிரி விற்கொடு போயும்ஓர்
சிரிப்பால் புரம்நீற்றும்
புங்கம்ஒக் கும்புகழ் தோய்தரு மாதையில்
புனிதப் பெருமானே!
பங்கயம் ஆதிய ஐங்கணை வேள்பொரும்
பாவப் பொலிவதனால்
அங்கனை மார்பலர் பால்மயங் காதுனது
அருட்பே றருள்வாயே! (2)
13. கொம்புடன் ஆமையின் ஓடும்அ ணிந்துகொள்
குழகன் பரம்என்றே
நம்பும்அ வர்க்கினி தாத்திகழ் மாதையில்
நாளும் குடிகொள்வாய்!
பைம்புல்அ ருந்திஉய் கின்றவற் றைக்கொலை
பணற்குள் அஞ்சாதார்
அம்புவி மீதில்இல் லாதொழிப் பான்உனது
அருட்பே றருள்வாயே! (3)
14. பூசைசெய் தன்பில் துதித்ததொர் பார்ப்பனப்
புதல்வன் சமன்றனைவெல்
ஓசைநம் பும்தவத் தோர்வரு மாதையில்
ஓவா துறைவானே!
காசைமென் பூந்துணர் போல்ஒளிர் மாயனும்
கமலா தனத்தானும்
ஆசைகொள் ளத்தகும் வாழ்வுறு வான்உனது
அருட்பே றருள்வாயே! (4)
15. தேவர்தம் என்பொடு கொன்றையும் தும்பையும்
சேர்த்துப் புனைந்தாடி
மூவல்இல் மாதையி னில்சிவ லிங்கநல்
மூர்த்தம் கொளும் முதல்வா!
காவலர் முற்பகர் செல்வரைக் கண்டுளம்
கலங்கும் கொடும்துயர்போய்
ஆவல்முற் றும்புரிந் தின்புறு மாறெனக்கு
அருட்பே றருள்வாயே! (5)
16. பஞ்சவன் றன்பொரு ளைக்கொடன் றாலயப்
பணிசெய் தவன்நிலை தேர்ந்து
உஞ்சகண் டம்பெற நாடுகின் றார்விருப்பு
உறுமா தையின் ஒருவா!
வஞ்சகம் செய்வதற் கஞ்சிநின் தொண்டரை
வாழ்த்தித் திரிவேனுள்
அஞ்சனை சேய்பகர் சொற்பலிக் கும்படி
அருட்பே றருள்வாயே! (6)
17. பஞ்செனும் மெல்லடிப் பாவைதன் னோடெழில்
பால்வெள் விடையேறித்
தஞ்செனும் மாதவர் வேட்கைஎல் லாம்மிகத்
தரும்மா தையில்தலைவா!
நஞ்செழு நாள்அருந் திப்புவி யோடுவிண்
நலியா தருள்செயல்ஓர்ந்து
அஞ்செழுத் தும்பகர்ந் திட்டதன் கூலி என்று
அருட்பே றருள்வாயே! (7)
18. வன்பர்தம் வேர்அறுக் கத்தவம் செய்ததொர்
மகன்வில் அடியேற்றுத்
தன்பக ழித்திறம் நல்கி, நம் மாதையில்
தழைக்கும் சிவசம்போ!
என்பழு தாயிர மும்கரு தாதுசில்
இசையே மிகஏத்தும்
அன்பர்தம் வேட்கையும் நல்கிடு மாறெனக்கு
அருட்பே றருள்வாயே! (8)
19. செம்பிய னும்,திறல் சேரனும், மீன்உருத்
திகழ்கே தனவேந்தும்
நம்பிமுன் நாள்பணி செய்துயும் மாதையின்
நடுவாழ் அழகேசா!
கும்பிவ ரும்கொலை யேநனி செய்பவர்
குடைக்கீழ்க் குலைவேனை
அம்பிகை புத்திரர் தம்மொடு கூட்டிநல்
அருட்பே றருள்வாயே! (9)
20. தீயினும் செய்யபொன் மேனியும், கொண்டபல்
சிறப்பும் தினம்நாடி
வாயிகத் தொண்டுசெய் நால்வர்க்கு நண்ணும்நல்
மாதைப் பதிவாழ்வே!
மாயிரும் பூதலத் தோர்விழி காணுற
வடலூ ரவன் முதலாம்
ஆயிரம் பேர்எழுந் தின்புறச் செய்யும்மெய்
அருட்பே றருள்வாயே! (10)
எண்சீர் விருத்தம்
21. ஆதாரம் ஆறினும் தனித்தனி வெவ்வேறு
ஆகிய கோலமொ டமர்ந்ததல் லாமல்,
மாதாஎ னப்பசுக் குலம்புரந் தருள்ஊர் -
வயின்ஒரு சிவலிங்க வடிவும்உற் றோனே!
சேதாம்ப லங்கனி வாய்அனப் பெடைநேர்
சீர்க்கலை வாணிமுற் செப்புபற் பலர்தேர்
வேதாக மங்கள்முற் றுய்வுறும் பொருட்டியான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே. (1)
22. சாதியும் சமயமும் சாத்திரச் சடங்கும்
தாண்டிஅப் புறம்திகழ் சமரசம் அடைந்தோர்க்கு
ஆதிஅ நாதியும் தான்என விளங்கி
ஆமாத் தூர்வளர் ஐம்முகத் தரசே!
காதிஎவ் வகைப்படும் ஊனும்உண் கின்றார்
கருங்குடை நீழலில் கனற்புழுப் போலும்
மேதினி மகள்துயர் தீர்தர வேநான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (2)
23. சுத்ததத் துவப்பொரு ளேஎனப் பலநூல்
சொல்லியும் இடிஎனத் தொனிசெய்வெள் விடைமேல்
பத்தர்பற் பலர்நனி சூழ்தர மாதைப்
பதிப்பெரும் தெருத்தொறும் பவனிசெய் வானே!
அத்தம்முற் படச்சொலும் ஏடணைப் பேய்மூன்
றாலும்நொந் தளவற அலமரும் அடியேன்
வித்தகப் புலவர்தம் துயர்முழு தறவே
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே. (3)
24. வையக மாம்பெரும் தேர்மிசை ஏறி
வரைப்பொலஞ் சிலைநடு மாற்கணை பூட்டி
எய்யல்செய் யாதிகல் வென்றமெய்ப் புகழோடு
எழில்நகர் மாதையி னிடைவளர் வானே!
பொய்யன்என் றுலகினில் பலரும்மிக் கேசப்
புரியத்த காதன புரிந்துழல் பொல்லேன்
மெய்யடி யார்குழுக் கூடுதல் காண்பான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (4)
25. ஆதவன் அம்புலி அக்கினி மூன்றும்
அம்பகம் ஆநிலை அறியவல் லாரே
போதநம் பிடும்படி மாதையம் பதிவாய்ப்
புண்ணிய முளைஎனப் பொலிதரு வானே!
காதம்ஓர் கணத்தினில் செலச்செயும் குளிகைக்
கவின்முத லாவன கைக்கொடும் பதுங்கும்
மேதகு சித்தர்வந் துறவுசெய் திடற்கியான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (5)
26. தேள்விடத் தினும்கொடும் சொற்பகர் பொல்லார்
தீநெறி சூழ்வினை தீர்தரக் கருதித்
தாள்விழைந் துருகுநர் அனைவரும் மாதைத்
தலத்தினில் வரச்செயும் தண்ணருட் சிவனே!
வாள்வியன் காட்டுகண் அரம்பையர் மயலால்
மறைமுடி வினில்பகர் வண்பொருள் மறப்பார்
வேள்வியிற் கொலையையும் தவிர்ப்பதற் காநான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (6)
27. பண்டயி ராணிமென் தோள்புணர்ந் தாரும்
பழவினை உருக்கொடு பாரினர் உருவம்
கொண்டல மரச்செயும் ஆடலும் விளைத்தே
குளிர்பொழில் மாதையில் குலவும்அம் மானே!
புண்டரி கன்புணர் வாணிகண் அருள்சேர்
புலவர்எண் வண்ணமும் புகலல்கண் டதற்பின்
வெண்டளைப் பிழைபகர் சிறியவர் எதிர்நான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே. (7)
28. பசைஇல்வெண் தலைக்கலம் கொண்டுழல் போதும்
பார்ப்பனச் சேரியில் பலிகவர்ந் தப்பால்
தசைகொடு வேடுவன் செயத்தகு பூசை
தனைஎள்ளி லாய்; பசுத்தாய்நகர் வாழ்வாய்!
கசைகொடு நீஉகைத் திடும்பரி இனமும்
கண்கலங் கிடச்செயும் கயவரை எல்லாம்
விசையன்அன் னான்செகுப் பதுகுறித் தடியேன்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (8)
29. வாழவேட் டப்படி தானவர் தாமும்
வரம்பெறக் கொடுத்திடும் வண்மைகுன் றாதே
ஆழவாரி வயிற்றைஉ ழக்கிய பம்பை
அருகுறு மாதையில் அமர்ந்தசங் கரனே!
பாழதே பரம்என்று வப்பவர் எல்லாம்
பதைபதைப் புறும்படிப் பற்பல்சித் தாடி
வேழமா முகவனைக் குகனையொப் புறநான்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (9)
30. அளக்கர்வாய் வந்தபொல் லாவிடம் அமுதா
அயின்றசீர் கருதும் அன்பர்கள்பற் பலரும்
உளக்கணால் காணுறு மாறுருக் கொள்வாய்!
உலப்பில்மா தைநக ருள்உறை வானே!
கிளக்கரும் பல்விளை யாடல்செய் நால்வர்
கீர்த்திமேல் பிழைசொல்அக் கீழவர் கண்முன்
விளக்கவே பெரிதினும் முயலுறும் தமியேன்
விரும்புபே றனைத்தும்வி ரைந்தருள் வாயே! (10)
எண்சீர்ச் சந்த விருத்தம்
31. கேடற் றபதத் தில்உறக் கருதிக்
கிளர்செந் தமிழ்கொண் டுகிளத் திடும்நான்
ஊடற் சிறுமங் கையொடொப் புறநீ
ஒருதீ மைஉஞற் றல்ஒழித் தருள்வாய்
கூடற் பதியாழ் பயிலும் கிழவா!
கொலைவாள் அரவும் புனைகோ லம்உளாய்!
ஆடற் ககம்ஆய் அரிஅட் டுயர்வாய்!
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (1)
32. குன்றந் தொறுமே வியநின் சிறுசேய்
கூறும் சொல்குறித் தயரும் தமியேன்
என்றன் பர்குழா மொடுபோய் உனவாம்
இடம்எங் கும்இயற் றமிழ்மா ரிபெய்வேன்?
வன்றந் தம்உடைக் கரிகொன் றுரிசீர்
வாயா ரவழுத் துநர்வாழ் வனையாய்!
அன்றந் தரர்நா ணநகும் சிவனே!
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (2)
33. கடல்ஆ தியநீர் வகையில் கனலில்
கடையேன் இடுகா சில்நறும் தமிழ்முற்-
றிடல்ஓர் அரிதா கில்வன்மீன் நுகர்சே-
யினைநல் கியதெப் படிமெய்ப் படுமோ?
விடவாள் அரவப் பணியும் புனைவாய்!
மிக்கோர் பலர்மெச் சியசிற் பரையோடு
அடல்வால் விடையே றிவிண்வாய் வருவாய்!
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (3)
34. கஞ்சா அபின்ஆ தியஉண் டுழலும்
கள்ளத் தவர்கண் டுளசித் தியும்இன்று
எஞ்சா து,நினைத் துளவண் ணம்எலாம்
இகமேல் விளையா டிசைஎன் றருள்வாய்?
நஞ்சார் அமுதா கஅருந் தியவா!
நரைவெள் விடைஏ றிநடத் தொருவா!
அஞ்சா னனம்எய் தொருசற் குரவா!
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (4)
35. கண்டத் தவம்எய் தியநா ளையினில்
காணும் சிலகாட் சியும்மே விலனா
வண்டக் குணருக் குளம்அஞ் சுறும்என்
வாய்ப்பா டலின்வாஞ் சைஉனக் கிலையோ?
தொண்டற் கொருதூ தனும்ஆ கியவா!
சுடலைப் பொடிபூ சியசுந் தரனே!
அண்டத் தினர்என் பணிதோள் இறைவா!
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (5)
36. பொருளாம் அதுவே துணைஎன் றளிகூர்
புன்மைக் குணர்போ கம்விரும் பியும்நான்
மருளா விதம்என் றருள்வாய்? ஒருநாள்
வந்தோ தியவாய் மைமறப் பதுவோ?
இருளார் தருகண் டமுடைச் சிவனே!
இமவெற் பருள்அம் மைமனோ கரனே!
அருளா ழியினூ டெழுபேர் அமுதொத்து
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (6)
37. பொய்யன் புடையார் களும்உய் வுறவே
புரியத் தகுபுண் ணியன்நீ எனவே
மெய்யன் பினர்சொல் மொழிநம் பியநான்
வீணே மடியும் படிவிட் டுவிடேல்
மையஞ் செழில்மோ கினிகண் வழிமா
மயல்எய் தினன்மா னஅணைந் தடல்கூர்
ஐயன் றனைநல் கியதெய் வம்எனா
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (7)
38. விசையன் செய்தவத் தின்மகிழ்ந் தொருநாள்
வேடர்க் கிறைஎன் றுவிளங் கியநீ
திசைஎங் கும்அறிந் திடவே வெகுநாள்
செயும்என் தவசிற் கருள்செய் கிலையே?
தசைஉண் டுகளிக் கும்அரக் கர்செயும்
தவமும் கொள்தயா நிதியாம் இறைவா!
அசைவின் றியமெய்ப் புகழ்கோடி பொறுத்து
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (8)
39. அருவம் பரமா வது;மா தவரால்
அடல்மால் விடையே றிஅவிர்ந் திடும்நின்
உருவம் பொருள்அன் றெனும்வாய் உடையார்
ஒல்கும் பயன்உன் னியவா றருள்வாய்.
பொருவின் றியவே ழமுகத் திறையும்
புள்ளிச் சிகியே னும்எனப் புகல்ஈர்
அருமைப் புதல்வர்க் கொருதா தைஎனா
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (9)
40. காலிக் கிடர்செய் பவர்வாழ் வறவே
கறுவித் தளர்வேன் மிசைகா தலிகண்
வேலிற் சுதைநண் ணியநா வலன்மேல்
விடுமெய் அருள்மே வவிழைந் திலையே!
சேலிற் றிகழ்கண் உமைபால், நுகர்ஓர்
சிறுசேய் முதல்நால் வர்அலா தொருகல்
ஆலிற் றொழுநால் வரும்உய் தல்செய்தாய்!
ஆமா தையில்வாழ் அழகே சுரனே! (10)
சந்தக்கலி விருத்தம்
41. ஏழாம்முடக் கோளேநிகர் ஈனக்கலி நோயால்
பாழாய்அழி யாதேஅருள் பாலித்திடல் என்றோ?
காழார்தரு வன்னிப்பொழில் கவினுந்திரு நிழலோய்!
ஆழாழிபுல் பம்பைக்கரை ஆமாதையு ளானே! (1)
42. பித்தாஎன அன்றேசிய பிள்ளைப்புல வோனை
ஒத்தான்ஒரு வன்பார்மிசை ஒளிரும்படி செய்வாய்
சத்தாதிய பொருள்மூன்றும்ஓர் தானாநிகழ் சம்போ!
நத்தார்செவி பத்தாய்நமர் நன்மாதைஉ ளானே! (2)
43. மானந்தவம் என்றோர்ந்ததன் வழியேநனி சென்றுள்
ஆனந்தம்எய் தாதேஇவண் அலமந்தயர் வேனோ?
ஞானந்தரு கண்மூன்றுறு நாதா! பல்வி நோதா!
ஊனந்தவிர் வார்சூழ்அருள் ஒண்மாதைஉ ளானே! (3)
44. நிகளத்துணை ஒப்பாம்என நிகழ்வல்வினை நீக்கி
அகளப்பர ஞானக்கடல் அமுதம்தரு வாயோ?
துகளற்றுயர் நிலைநின்றுது தித்தேதொழு வாருள்
சகளப்பொருள் ஆவாய்முதிர் தமிழ்மாதைஉ ளானே! (4)
45. கலகப்பொய் மதத்தீயவர் காணும்தொறும் நாணும்
புலமைத்திறம் எய்தாதுபு ழுங்கும்துயர் போக்காய்
சலதிக்கிடை அணையிட்டொரு தசமாமுக வனைவெல்
அலரிக்குல பதிபூசைசெய் அணிமாதைஉ ளானே! (5)
46. ஆலத்தினை அமுதென்னமுன் அயிலுற்றுள நீஎன்
சீலப்பிழை எள்ளாதருள் செய்யில்தகும் அன்றோ?
ஓலக்கடல் ஓர்ஏழும்நல் உடையாம்என வளையும்
ஞாலத்தணி முகமேஎன நகுமாதைஉ ளானே! (6)
47. கண்மைக்கொடி யவர்செய்பிழை கண்டுங்களை யாதே
வெண்மைச்சிறி யவர்தம்மொடு வெருளுற்றுலை வேனோ?
பெண்மைப்பொலி வொருபாதிகொள் பெருமான்முதல் எனவீழ்
உண்மைத்தவ முனிவோர்பலர் உறுமாதைஉ ளானே! (7)
48. ஓராயிரம் விழியான்மகன் ஒருவில்லடி கொடு, தன்
பேரார்கணை அருள்மெய்ப்புகழ் பேசென்னைவெ றுக்கேல்
காரார்கள நம்பா! மிளிர் கலைவான்மதி புனைவாய்!
தாரார்மழு வலவா! வளர் தவமாதைஉ ளானே! (8)
49. அந்நாள்இரு மகவீன்றுன தருகுற்றவள் அருளால்
இந்நாள்ஒரு சேய்நல்கிடில் யாம் உய்குவம் அன்றோ?
முந்நால்நெறி யினருங்கொள்ஒர் முதல்ஆகிமு ளைத்தே
பைந்நாகம் அணிந்தாய்! முது பதிமாதைஉ ளானே! (9)
50. காழ்த்துற்றம னத்தார்பலர் கடைவாயிலில் ஏகிப்
பாழ்த்துத்தள ராதேமகிழ் பரிசென்றருள் வாயோ?
ஊழ்த்துக்கம்இல் ஒருநால்வரை ஒத்தேஉனை நத்தும்
வாழ்த்துக்கிசை வார்பற்பலர் வருமாதைஉ ளானே! (10)
எழுசீர்ச்சந்த விருத்தம்
51. பானல் நேர்கரும் கண்மி னார்மயல்
பற்றொன் றும்தவிர் கின்றிலாய்;
ஈனம் மீறிஇ டைந்து ளேன்;இனி
என்றுன் மெய்யருள் எய்துவேன்?
தேன றாமலர்க் கொன்றை சூடிய
செம்பொன் மால்வரை என்னவே
வான நாடரும் வந்து போற்றிடும்
மாதை வாழ்அபி ராமனே! (1)
52. வஞ்ச மங்கையர் மோகம் ஆம்பெரு
வாரி நீந்திநின் வார்கழல்
தஞ்சம் என்றுப ராவு மேலவர்
தம்மொ டியானுறல் எற்றையோ?
நஞ்ச யின்றமு துண்டு ளார்பலர்
நாசம் ஆவது கண்டுளாய்!
மஞ்ச டர்ந்தவிர் சோலை சூழ்தரு
மாதை வாழ்அபி ராமனே! (2)
53. பொன்ன வாமுத லாய ஏடணை
புண்ப டுத்தலில் நொந்தநான்
நின்ன ருட்பெரும் சித்தி எய்திநி
லாவும் ஒர்தினம் உள்ளதோ?
கன்னல் வார்சிலைக் காமன் அஞ்சுக
னற்கண் அஞ்சுடைக் காரணா!
மன்னர் மன்னர்அ நேகர் போற்றிசை
மாதை வாழ்அபி ராமனே! (3)
54. கலக மேவிளைக் கின்ற பொய்ம்மதக்
கள்வர் நெஞ்சுக லங்குமாறு
அலகி லாவிளை யாடல் வேட்டுழல்
ஆசை யான்கொள ஏன்செய்தாய்?
உலகம் யாவையும் உண்டு மிழ்ந்தளந்து
உன்னை நாடுநர் உந்திஆம்
மலர்உ ளார்தலை மாலை பூண்டெழின்
மாதை வாழ்அபி ராமனே! (4)
55. நாடெ லாம்புகழ் பீடு வேட்டுநின்
நாள்ம லர்த்துணைத் தாள்களே
வீடெ லாம்என நாடும் மேன்மைவி
ளைந்தும் இங்ஙனம் வெம்பினேன்
பூடெ லாம்மிசை போடு வோர்க்குமெய்ப்
போதம் ஈந்தருள் புண்ணியா!
மாடெ லாமுமுன் கோடு பெற்றுயும்
மாதை வாழ்அபி ராமனே! (5)
56. ஈறும் ஆதியும் இன்றி எங்கணும்
ஏய்ந்த நீஒரு பாவலோன்
கூறும் நாள்ஒர்ம ரத்தின் நீழல்கு
லாவு ஞாயம்அ றிந்திலேன்;
நீறு பூசிய செந்து வர்க்கிரி
நேரும் மேனிகொள் நின்மலா!
மாறு தீர்புகழ் கோடி தோய்தரு
மாதை வாழ்அபி ராமனே! (6)
57. ஊழி ஆயிரம் கண்ட பேரும்உள் -
ளார்எ னச்சொலும் ஒர்மொழி
ஆழி யிற்பசுக் கொன்று தின்றுறும்
அன்ன வர்க்கழி வாயதேன்?
வீழி நேர்இதழ் வாய்முத் தாம்பிகை
மேய பாதிகொள் வித்தகா!
வாழி கூறுநர் தஞ்சம் ஆம்என
மாதை வாழ்அபி ராமனே! (7)
58. கசைபி டித்தொரு காளை ஓச்செழில்
காட்டும் முன்ஒரு வேடனா
விசையன் முற்செயும் ஆடல் போல்வன
வீணில் என்முன்வி ளைத்திடேல்
குசைநு னிப்புரை சிந்தை யாளர்கு
றித்த வாறுருக் கொண்டுபோய்
வசைஇல் மெய்ப்புகழ் நல்கு வாய்! தமிழ்
மாதை வாழ்அபி ராமனே! (8)
59. கார ணக்குறிப் பன்று கூறிய
கந்தன் வந்திலன்; நொந்துநின்
ஆர ணக்கழற் றாள்ப ராவினேன்;
ஆட்கொ ளாதுகை விட்டிடேல்
சீர ணங்கொடு வாணி ஏத்துசி
லம்ப ணங்கருள் செல்வனாம்
வார ணத்தலை மைந்தன் அன்புசெய்
மாதை வாழ்அபி ராமனே! (9)
60. தொண்டர் தம்பதம் தோயும் நுண்பொடி
சூடி டும்தலை யேனுடன்
பண்ட றைந்தசொல் மெய்ப்ப டும்படி
பார்த்தி டாததொர் கீர்த்தியோ?
மிண்ட மண்களை கட்ட சேய்முதல்
விள்ளும் நால்வர்வி ரித்தவாம்
வண்ட மிழ்த்தொனி மேலி டுந்தனி
மாதை வாழ்அபி ராமனே! (10)
சந்தக்கலி விருத்தம்
61. மெய்யோர் ஆயிரம் நான் - சொலி
வீணே மேதினியோர்
பொய்யோன் என்றிகழ்கால் - மனம்!
புழுங்கச் செய்குவதேன்?
மையோங் கும்களத்தாய் - என
வாழ்த்தும் சொல்கசப்போ?
ஐயோ! சற்றிரங்காய் - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (1)
62. விளக்கொண் ணாதஎலாம்- மிக
விளம்பி ஆண்டுகொண்டும்
கிளக்கொண் ணாத்துயரால் - இஙன்
கீழ்மை உறச்செயல் ஏன்?
துளக்கொண் ணாத்தலையால்- ஒரு
சூட்சம் உணர்த்திலையோ?
அளக்கொண் ணாப்புகழ்சேர் - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (2)
63. பரவும் தொண்டனுக்கா - அவன்
பன்னிதன் னிடமும்போய்
வரவும் நாணாநீ - எனை
வருத்தல் ஞாயமதோ?
குரவார் வார்குழலாட் - கொரு
கூற ளித்ததற்பின்
அரவும் பூண்டுகொண்டாய் - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (3)
64. பந்துறழ் கொங்கைமின்னார் - தரும்
பாச நோய்மிகலால்
நொந்துத விப்பார்மேல் - அருள்
நோக்கம் வையாயோ?
இந்துமு டித்தோனே - விடை
ஏறிவிண் வாய்வருவாய்!
ஐந்துமு கத்தரசே! - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (4)
65. தாரணி வாடாமே அரும்
தவம்செய் கின்றோர்பால்
கோரணி செய்வானேன்? - அருள்
குன்றிம யங்கியதோ?
நாரணி பங்குடையாய்! - பெரு
நால்வாய்த் தோல்புனைந்தாய்!
ஆரணி செஞ்சடையாய்! - திரு -
ஆமாத் தூர்ச்சிவனே! (5)
66. நெல்ல ளித்ததன்றிக் - கொடு
நேரிழை பாற்சேர்க்க
வல்ல ஆளும்விடும் - குணம்
மாறிப் போகியதோ?
பல்ல வம்சொரிந்தே - பழம்
பாடல் சொல்வார்க்கும்
அல்லல் தீர்த்தருள்வாய் - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (6)
67. ஏழிசை பாடவல்லார் - கதி
எய்திட வும்செயும்நீ
வாழிய வண்ணம் எட்டால் - துதி
வகுக்கில் கொள்ளாயோ?
பாழிவெண் சீயம்ஒன்றைப் - பெரும்
பறவை யாய் அடர்த்தாய்!
ஆழியின் நஞ்சயின்றாய் - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (7)
68. இதற்கென் றோர்பயன்நீ - எனக்கு
இன்னமும் ஏன்நல்கிலாய்?
முதற்சங் கப்புலமைத் - திறம்
முற்றும் தப்பியதோ?
மதற்கொப் பாம்விசையன் கையின்
வரிவில் லால்அடித்த
அதற்கும் பேறளித்தாய் - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (8)
69. தந்திமு கத்தோனைக் - குகன்
தன்னை நல்கியநீ
நொந்திறைஞ் சும்வடலூ - ரவன்
அனுங்கச் செய்தல்நன்றோ?
சந்திர சேகரனே! அடல்
தவள மால்விடையாய்!
அந்திநி றத்தானே! - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (9)
70. முன்னை நால்வர்களும் - பெற
முத்தியும் நல்கியநீ
என்னை வீணேகொன்-றுடல்
எடுக்க விட்டுவிடேல்
பொன்னை நேர்உடலில் - பொடிப்
பூசும் புண்ணியனே!
அன்னை பாதியனே! - திரு
ஆமாத் தூர்ச்சிவனே! (10)
அறுசீர் விருத்தம்
71. செஞ்சொற் பனுவல் பலபாடிச்
சிறியோர் தம்பால் செப்பி, அவர்
வெஞ்சொற் கேட்டுத் திரிவாரும்
வீணே இகழ மெலிவேனோ?
தஞ்சொற் பலிதம் பெறும்மேலோர்
தகைநான் எய்தத் தயைசெய்வாய்
அஞ்சொற் கவுரி மணவாளா!
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (1)
72. இன்னம் புலையர் குடைநிழலூடு
யாம்உற் றுலையச் செய்வாயேல்
முன்னம் சொன்ன சொல்எல்லாம்
முழுப்பொய் ஆம்என் றறியாயோ?
தன்னந் தனியாய்ப் பலபொருளும்
தானே ஆகும் தத்துவனே!
அன்னம் பயில்தண் வயல்சூழும்
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (2)
73. ஏத்தித் தொழுதார் சிலதொண்டர்
எழில்மா மேனி களைஅந்நாள்
தீத்தின் றொழியும் படிசெயும்அத்
தீங்கென் றன்பால் செய்யாதே
மாத்திக் கெட்டும் கையாயும்
மழமால் விடைமேல் வரவல்லாய்!
ஆத்திப் பூந்தார்ச் சடைநம்பா!
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (3)
74. கண்டப் படவே உனைநாடும்
காலத் தெய்தும் காட்சியும்அற்று
இண்டத் தனையுட் குழலே போன்று
யான்இங் கிடையச் செயல்ஏனோ?
வண்டத் தகுவர் புரம்மூன்றும்
வாய்வெண் நகையால் எரியிட்டாய்!
அண்டத் தினர்என் பணிதோளா!
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (4)
75. ஒருமைச் சிந்தை இலனேனும்
ஓதும் துதியில் பிழைஉண்டோ?
பெருமைப் பண்பொன் றுதவாமல்
பேதுற் றுழலச் செயலாமோ?
கருமைக் கண்டத் தணிசொன்னார்
கனல்நோய் தீரச் செயல்பொய்யோ?
அருமைத் தமிழ்கைத் ததுகொல்லோ?
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (5)
76. ஏறார் கொடியே உயர்வாம்என்று
எண்ணிச் சொலி,நீ எழுதியநூல்
தூறார் தலையில் கொண்டோனும்
தொலையச் செய்தாய் சோர்வுற்றேன்;
ஊறார் பசுஊண் துய்ப்பார்வாழ்வு
ஒழியச் செயும்மான் புற அருள்வாய்
ஆறார் தலைமேல் மதிவைத்தாய்!
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (6)
77. நண்ணும் வடலூர்ப் புலவோனை
நகுவார் பலரும் நாணமுறப்
பண்ணும் திறம்நல் கிடும்வரை நின்
பதமும் கதியும் பாழ்அன்றோ?
பெண்ணும் ஆணும் தான்ஆம்ஓர்
பெருமான் என்னும் பெரியோருள்
அண்ணும் பொருளாய் அருள்ஓங்கும்
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (7)
78. குருவா தியரைக் கொலல்வேட்டோன்
கொளவும் கணைநல் கியநீதான்
பொருவா ஈனர்க் கெமன் ஆவான்
புலர்வார் பகர்சொற் புனையாயோ?
மருவார் கொன்றைத் தொடைமேல்ஊ
மத்தம் பூவும் புனைவானே!
அருவாய் உருவாய் அருவுருவாய்
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (8)
79. கவலுற் றழுத வடலூரான்
கருதும் பயன்ஈந் திலைகொன்றாய்;
உவகைப் பொலிவோ டவன்வருமாறு
உன்னித் தளர்வே னையும் ஒழியேல்;
பவளக் கிரிபோல் உமையவள்தன்
பரிவால் பெற்ற பாலர்களாம்
அவராய்க் கண்ணால் பாராயோ?
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (9)
80. காணப் பொதிஒன் றேனும்இலேன்;
கனல்வேள் விக்கும் பொருள்கேளேன்;
நாணம் இன்றிச் சமண்புகுதேன்;
நான்ஆள் அல்லேன் என்றிகழேன்;
வேண பேறு முழுதருளும்
விறல்நிற் குளதேல் விரைந்தாள்வாய்;
ஆணம் உடையார் பலர்போற்றும்
ஆமாத் தூர்வாழ் அம்மானே! (10)
எண்சீர்ச் சந்த விருத்தம்
81. வெவ்வுர கப்பணி யும்புனை வானே!
வெள்விடைக் கேதனம் மேயபி ரானே!
செவ்வுரு வப்பரஞ் சோதிஅம் மானாச்
சீர்மலி மாதைத் திருநகர் வாழ்வாய்!
அவ்வுடன் உவ்வும்மவ் வும்புணர்ந் தொன்றாம்
அம்மநுக் கொள்ளும் அறுவரும் வாழும்
இவ்வுல கம்புலை நீங்கிஉய் மாறே
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே! (1)
82. வெண்ணில வும்புன லும்கொன்றைப் பூவும்
வேணியிற் சூடிவி டைப்பரி ஏறும்
புண்ணிய னே! பசுக் கூட்டம்எல் லாம்முன்
பொற்புறு கோடுகொள் பூம்பதி வாழ்வாய்!
மண்ணில்நல் லோர்துயர் எய்திடல் ஓர்ந்தும்
மாமலை தோறும் மகிழ்ந்துறை வோர்ஆம்
எண்ணில்பல் சித்தரும் நாணுறு மாறே
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே! (2)
83. பானற் கருங்கண் மனோன்மணி யோடும்
பால்விடை ஏறிப் பலர்க்ருள் செய்தாய்!
மானப் புலவர்எல் லோர்களும் போற்றும்
மாதைப் பதியில் வளர்பெருமானே!
ஆனட் டுரித்து நிணம்தினும் பொல்லார்
ஆணைகெட் டுத்திரு அன்பரைச் சேர்கால்
ஈனக் கலிப்பயல் நாணுறக் காண்பான்
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே! (3)
84. கொட்டுமி ழற்றப்பல் வானவர் தாமும்
கூட்டமிட் டேத்தஒர் கோல்வளை யாள்முன்
நட்டுவன் இன்றி நடிக்குமுன் மாதை
நன்னகர் கோயில் நடுமுளைத் தோனே!
இட்டுணும் நன்மையும் இன்றிய பொல்லார்
இந்திரர் போன்றிறு மாப்பது தீர்வான்
எட்டு வகைச்சித்தும் ஆடும் பொருட்டே
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே! (4)
85. கள்ளவிழ் கொன்றையும் ஆத்தியும் சூடிக்
கைகளில் மான்மழுக் காண்தர ஓர்நாள்
உள்ளகத் தெய்தி ஒளித்ததொர் கள்வா!
ஒண்புகழ் மாதை உடையபி ரானே!
வள்ளம்என் கொங்கை மடந்தையர் ஆசை
வாரியில் நின்று வளர்ந்தெனைச் சூழும்
எள்ளலும் மெய்ப்புகழ் ஆதல் குறித்தே
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே. (5)
86. ஆறும் மனம்பெறும் மாமுனி வர்க்கா
ஆலடி யிற்குரு ஆகிய வண்மை
கூறும் அவர்க்கெளி யான்என மாதைக்
கோயிலில் நாளும் குலவுபெம் மானே!
நீறு முதற்சொலும் ஒன்றும்இ டாதார்
நெற்றி உடைந்து நிணம்சொரி யப்போர்
ஏறுறழ் வீரர்செய் ஆடல்கள் காண்பான்
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே. (6)
87. ஆழுத திக்கொடு நஞ்சயின் றிட்டும்
அண்டர்க ளாதிய வர்ப்புரந் தாண்டாய்!
வீழும்நற் றொண்டர்க் குவப்பருள் வானே!
மெய்ப்புகழ் மாதைவி யன்பதி மேயாய்!
கூழுறழ் ஆறுநெ றிக்குரி யாரும்
கோதில்வித் தன்னகு ணத்தற வோரும்
ஏழுவ கைப்படச் சொல்லலும் கைக்கொண்டு
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே. (7)
88. போர்த்தகை வேடுவ னாஉருக் கொண்டோர்
பொய்ப்புலைப் பன்றிப் பொருட்டடல் வில்லால்
பார்த்தன் அடிப்பம கிழ்ந்தருள் செய்தாய்!
பம்பைநல் நீர்ப்பசுத் தாய்நகர் ஆள்வாய்!
மூர்த்தம்எல் லாம்உன தேஎன அன்பால்
முன்னிடும் என்னைவெம் மும்மலப் பேய்கள்
ஈர்த்தழி யாவணம் இக்கணம் முன்நின்று
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே. (8)
89. மன்றல் மதிச்சடை வானவ னே! மும்
மாஉரி போர்த்தவ ரோதய னே! பொற்
குன்றவில் லால்புரம் மூன்றழித் தோனே!
கோக்குலம் முற்றும்முன் கோடுகொள் ஊரா!
உன்றன் மகார்இரு வர்க்கும்ஒப் பாவாழ்ந்து
ஓவரும் முத்திஉ றும்பயன் நாடும்
என்றவத் திற்கிடை யூறுசெய் யாதே,
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே. (9)
90. சத்தசு ரச்சுரு திப்பொருள் ஆனாய்!
சக்கரம் மாயன் தனக்கருள் செய்தாய்!
உத்தமத் தொண்டர் தொழும்திரு ஆமாத்
தூர்உடை யாய்! விலை ஓலைவைத் துள்ளாய்!
முத்தமிழ் பாடிய நால்வர்தம் பேறே!
முன்னிநொந் தேன்எனை மோசம்செய் யாதே,
எத்தனை குற்றங்கள் செய்யினும் கொள்ளாது
யான்செயும் தொண்டுமுற் றேற்றுக்கொள் வாயே. (10)
அறுசீர் வண்ண விருத்தம்
தனதன தனதன தனதன தனதன தானாத தானானா
91. தளவமென் முகைநிரை புரையும் வெண்
நகையினர் தாள்சூட் டாரானால்
உளம்நலி வுறும்மயல் முழுதற
அமரரும் ஓராச் சீர்சவாய்
களவுறும் மனதினர் தவம்முய -
லினும்எதிர் காணாப் பீடார்வாய்!
அளவறு புகழொடு வளம்மரு
வியதிரு வாமாத் தூரானே. (1)
தானன தானன தானன தானன தானாத் தானானா
92. பாசவெம் நோய்மலி தீமையி
னால்இசை பாழாய்ப் போகாமே
நாசம்இல் யோகிய ராதியர்
நேர்வரின் நாணாப் பேறீவாய்
காசகல் ஒதிமம் ஆகிஅ
நாள்விதி காணாக் கோடீரா!
ஆசறு கோடிமு னீசுரர்
பூசைசெய் ஆமாத் தூரானே! (2)
தனனா தனனா தனனா தனனா தானாத் தானானா
93. கொடியார் மனைதோ றும்உறா
அவர்ஆர் கூழ்ஏற் றோயாதே
மிடியோர் பலர்வாழ் வுறவே
அருள்சீர் வீறாப் பேய்வேனோ?
கடியார் தரும்ஆர் புனைவார்
சடையா! கார்ஏய்ப் பாள்பாகா!
அடியார் குழுவால் உயர்தே
சிகர்சூழ் ஆமாத் தூரானே! (3)
தானா தானா தானா தானா தானாத் தானானா
94. வானா டேவீ டாநா டாமா
டாடாத் தான்போவார்
பானான் வீண்வா தாடா நோம் நோய்
பாராற் போல்ஆனேன்;
மானார் மால்ஆ வான்ஓர் வாறாய்
வால்ஒட் டூண்ஆர்வாய்!
ஆனா தேவாழ் மாதே வா!சீர்
ஆமாத் தூரானே! (4)
தத்தன தத்தன தத்தன தத்தன தானாத் தானானா
95. நித்தம்உ னைத்தொழும் உத்தம
பத்தர்கள் நேர்போய்த் தாழாதே
சுத்தந கைச்சிய ரைத்தொழுது
எய்த்தவ தூறேற் காதருள்வாய்
முத்தமி ழிற்கவி செப்பும
வர்க்கிசை மூவாச் சீர்ஈவாய்!
அத்தம திற்கலை யைப்பர -
சைப்புனை ஆமாத் தூரானே! (5)
தந்தன தந்தன தந்தன தந்தன தானாத் தானானா
96. சந்தத மும்பசு வும்கொலும்
வம்பர்கள் தாய்போல் சூழ்வார்நேர்
பந்தய மும்சொலி வென்றுசெ -
யம்கொடு பார்காப் பான்ஆரோ?
செந்தழல் அங்கைகொ ளும்சிவ
சங்கர சேண்மேல் சேஊர்வாய்!
அந்தரர் வந்துதி னம்தின
மும்தொழு ஆமாத் தூரானே! (6)
தத்தா தத்தா தத்தா தத்தா தானாத் தானானா
97. இப்பா ரிற்கா லத்தால் எய்த்தேன்
ஏமாப் போர்பாலே
தப்பா கப்பே சப்போ கொட்டேல்;
சாயாச் சூள்ஈவாய்
செப்பா றுய்த்தோ னுக்கேண் இட்டாய்!
சேணாட் டோர்தேறா
அப்பா! நித்தா! சித்தா! கத்தா!
ஆமாத் தூரானே! (7)
தந்தா தந்தா தந்தா தந்தா தானாத் தானானா
98. செம்பா கம்சேர் வண்பா விண்டார்
சீர்தூக் காதாள்நீ
நம்பா நெஞ்சான் என்றே என்பால்
நாள்போக் காதே; வா
கொம்பார் மொய்ம்பே னம்போம் அங்கோர்
கோனாப் போம்வேடா!
அம்பாள் பங்கா! சிங்கா ரம்சேர்
ஆமாத் தூரானே (8)
தன்னன தய்யன தன்னன தய்யன தானாத் தானானா
99. முன்னவன் நல்கிய கன்னிதன் மையலில்
மூவாச் சேய்வாயால்
என்னகம் வௌவிய நன்மைகள் எய்திலன்;
யான்கேட் காதாள்வாய்
பன்னகம் மல்கிய சென்னிகொள் வல்லவ!
பால்நீற் றார்தேகா!
அன்னவ யல்வளை நன்னலம் மல்லல்கொள்
ஆமாத் தூரானே! (9)
தாந்தன தாந்தன தாந்தன தாந்தன தானாத் தானானா
100. வேந்தனை ஆண்டமண் மாய்ந்திடல் காண்தகும்
மேலோர் போல்சீரே
வாய்ந்தன மூன்றுயிர் யான்பெற ஏங்கிடல்
வாளாப் போகாதாள்
மாந்தளிர் கோங்கலர் ஈந்தவர் தாம்பெற
மாயாப் பேறீவாய்!
ஆய்ந்தறி பாங்கினர் சூழ்ந்திடும் மாண்புனை
ஆமாத் தூரானே! (10)
கலி விருத்தம்
101. கும்ப மாமுனி யாதியர் கொள்கையோடு
உம்பர் போற்றும் உதாரமும் நல்குவாய்
நம்ப னே!நன்முத் தாம்பிகை நாயகா!
வம்ப றாப்பொழில் மாதையில் வாசனே! (1)
102. அன்னி யோர்அர சாள்வத னால்என்உள்
துன்னி வேம்துய ரம்தொலை யாததோ?
முன்னி ஏத்தும்முக் கால்முனி யாம்மர
வன்னி நீழல்கொள் மாதையில் வாசனே! (2)
103. மானு றழ்ந்தகண் மங்கையொ டும்தினம்
யானு ணர்ந்த படிவரல் எற்றையோ?
தேனு இன்புறும் சீர்கரு தித்திகழ்
வானும் ஏத்திசை மாதையில் வாசனே! (3)
104. பண்கு லாவியல் பாடிப் பரவுவேற்கு
எண்கு லாவிசை ஈயஎன் றெண்ணுவாய்?
கண்கு லாவு கவின்நுதற் காரணா!
வண்கு லாவெழில் மாதையில் வாசனே! (4)
105. நஞ்சு போன்று நலிக்கும்வன் சொல்சொல்வார்க்
கெஞ்சு தீமை கெடச்செயல் எற்றையோ?
மிஞ்சு மாளிகை மேல்நிலை தோறும்வான்
மஞ்சு லாவிய மாதையில் வாசனே! (5)
106. முந்து வேத முனிமுத லோர்கள்போல்
உந்து சீர்பெற உன்னல்என் தன்மையோ?
சந்து நாறிய தண்சிறு கால்நிதம்
வந்து வப்பருள் மாதையில் வாசனே! (6)
107. ஆறி ரண்டு நெறியும்நின் ஆடலாத்
தேறி யும்துயர் தீர்கிலன் என்செய்வேன்?
நீறி யைந்த நெருப்புறழ் நின்மலா!
மாறில் சீர்திகழ் மாதையில் வாசனே! (7)
108. விசைய னுக்கருள் வென்றியில் சற்றெனக்கு
இசைய நல்கிடில் யார்உனை எள்ளுவார்?
கசைபி டித்தொரு காளை உகைப்பவா!
வசையில் சீர்பெறும் மாதையில் வாசனே! (8)
109. விண்ட லம்தொழும் வேழமும் வேளும்நேர்
தொண்ட லந்தனன் இன்னமும் சோதியேல்
வண்ட லம்பு மலர்ச்செழுங் கொன்றையாய்!
மண்ட லம்புகழ் மாதையில் வாசனே! (9)
110. தளையில் வேழம்ஒக் கும்சது ரர்க்கும்ஒர்
இளையன் என்றடி யேன்இயங் கச்செய்வாய் -
களையில் தண்பணைக் காமர் வரம்பெலாம்
வளைமு ழங்கெழில் மாதையில் வாசனே! (10)
சந்தக் கலிவிருத்தம்
111. இளமைப் பருவத் தெழில்மங் கையர்தம்
களபத் தனவாஞ் சைகழித் தருள்வாய்
குளம்உற் றகனற் கண்உடைக் குரவா!
வளம்மிக் குறும்மா தையில்வாழ் சிவனே! (1)
112. தேனோ டுறழ்செந் தமிழின் கவியால்
யானோ திசைஎன் றணிதற் கிசைவாய்?
மானோ டுமழுப் படைவைத் தகையாய்!
வானோர் புகழ்மா தையில்வாழ் சிவனே! (2)
113. இந்தார் சடையா தியஏர் இலகச்
சிந்தாம் விழியா ளொடுசே வைநல்காய்
வெந்தா னவர்போல் பவர்வேர் அறவெல்
மைந்தார் வருமா தையில்வாழ் சிவனே! (3)
114. கயிலா யமும்நின் கழல்என் றுணர்வேற்கு
அயில்வேள் பெறும்ஆண் மைஅளித் தருள்வாய்
குயிலா தியகூ வுபொழிற் கிடைமா
மயிலா டியமா தையில்வாழ் சிவனே! (4)
115. அருவாய் உருவா யும்அவிர்ந் திடும்நீ
குருவா வருகொள் கைமறந் தனையோ?
பொருவா விடைஏ றியபுங் கவ!நன்
மருவார் பொழில்மா தையில்வாழ் சிவனே! (5)
116. பிழைதீர் கதிபெற் றவரைக் கருதென்
னுழைநின் அருள்ஒர் சிறிதென் றுறுமோ?
தழைபோ டுநர்தா மும்உயப் புரிவாய்!
மழைமா ணுறுமா தையில்வாழ் சிவனே! (6)
117. காழ்வாய்ந் தமனத் தியர்கண் மயலால்
தாழ்வா தல்தவிர்த் தெனையென் றருள்வாய்?
பாழ்வா தனைஅற் றுயர்பத் தர்களே
வாழ்வாம் எழில்மா தையில்வாழ் சிவனே! (7)
118. இந்தப் புவிமீ துழல்யான் உயநின்
சொந்தக் கருணைத் துளிஒன் றருள்வாய்
முந்தக் கணைபெற் றவன்நேர் முரணார்
வந்தற் புசெய்மா தையில்வாழ் சிவனே! (8)
119. அகம்நொந் துழலா துன்அருட் செயலே
மிகவிண் டிடல்வீண் எனில்எங் ஙன்உய்வேன்?
புகர்விஞ் சியபூட் கைமுகன் குகன்என்
மகர்தொண் டுசெய்மா தையில்வாழ் சிவனே! (9)
120. நாலன் பர்பெறும் பயன்நண் ணி,அவர்
போலன் புசெய்புண் ணியர்எங் குளரோ?
காலன் பரவும் கதிரோன் மரபின்
மாலன் புகொள்மா தையில்வாழ் சிவனே! (10)
கலிவிருத்தம்
121. வண்புதுக் கவிகளால் வாழ்த்தும் என்மிசை
நண்புசற் றிசைத்திடில் ஞாலம் ஏசுமோ?
பண்புகல் அரம்பையர் பலர்உற் றின்பருள்
விண்புகழ் மாதையூர் விமலச் சித்தரே! (1)
122. புயல்நிகர் குழலியர் போக மேஉயர்
பயன்எனக் கருதுமா பாவம் தீர்வனோ?
வயல்வரம் பெங்கணும் வளைமுத் தீன்றவிர்
வியன்உறு மாதையூர் விமலச் சித்தரே! (2)
123. தென்றிசைக் குரியவன் செலுத்தும் தூதர்தம்
வன்றிறற் கஞ்சுறா வரம்என் றீகுவீர்?
கொன்றிரை நுகர்பொலார் குலையப் போர்பொரும்
வென்றியோர் மாதையூர் விமலச் சித்தரே! (3)
124. பத்தரைப் பழித்திடும் பதிதர் நாணுறச்
சித்தர்வந் துலகினில் திகழக் காட்டுவீர்
முத்தரும் பலவகை முனிவ ரும்தொழும்
வித்தக மாதையூர் விமலச் சித்தரே! (4)
125. பொய்மையைப் பெருக்கிடும் புலைய ராம்அவர்
கைமையா வையும்அறக் காண்ப தெற்றையோ?
மைமைசால் களம்முதல் வனப்பெல் லாம்உணர்
மெய்மையோர் மாதையூர் விமலச் சித்தரே! (5)
126. ஆறுபே தத்தவாம் அனந்த மார்க்கமும்
தேறும்நும் அருள்எனத் தெளிந்தும் சோர்வனோ?
நீறுமுற் றணிதரும் நெருப்புக் குன்றுறழ்
வீறுளீர்! மாதையூர் விமலச் சித்தரே! (6)
127. அலியொடாண் பெண்என அமரும் நீர்பல
குலிசர்என் பணிதரும் கொள்கை என்கொலோ?
கலியுக புருடனாம் கடையற் கஞ்சுறார்
மெலிவறு மாதையூர் விமலச் சித்தரே! (7)
128. ஆடிய நும்திரு அடிக ளேமிக
நாடிய நான்இவண் நலிய லாகுமோ?
பேடிவார் கணைமுனாள் பெறச்செய் தீர்! பெரும்
வீடியல் மாதையூர் விமலச் சித்தரே! (8)
129. கூனும்வெண் கோடனும் குமர வேளுமே
மானும்வாழ் வினன்என்முன் வயங்கல் எற்றையோ?
ஆனுருத் திகழ்கொடி அசையும் பல்விழா
வேனுறு மாதையூர் விமலச் சித்தரே! (9)
130. ஞாலமேல் முன்வரும் நால்வர் போல்ஒரு
சீலன்வந் திடும்படி செயவல் லீர்கொலோ?
ஆலமர்ந் தறம்சொல்வீர்! அளக்கொ ணாஅருள்
மேலவர் மாதையூர் விமலச் சித்தரே! (10)
எழுசீர்ச் சந்த விருத்தம்
131. இந்தி ரற்கும் எய்தி டாத
ஈடு கொள்ள நாடும்நான்
எந்தி ரத்தி னிற்சு ழன்றி
டச்செய் கின்ற தார்கொலோ?
சந்தி ரச்ச டாட வித்த
ழற்பொருப்பை அன்னவா!
மந்தி ரத்தர் வந்து பேணும்
மாதை வாழும் ஈசனே! (1)
132. மீனம் அன்ன கண்ணி யோடு
வெள்வி டைக்கண் ஏறியே
தான வார்க்கு நேரி னும்த
யங்கு கின்ற தில்லையோ?
தேன ளாய கொன்றை தும்பை
திங்கள் உற்ற சென்னியாய்!
மானம் மிக்க தொண்டர் சூழும்
மாதை வாழும் ஈசனே! (2)
133. குண்ட லம்பு னைந்த காது
கொண்ட தொண்டன் ஆகிவந்து
அண்ட லர்ச்செ குக்கும் ஆசை
ஆர நல்கல் ஆர்கொலோ?
கண்ட லங்களாலும் அன்றொர்
கான்மு ளைப்ப யந்துளாய்!
வண்ட லம்பு சோலை நீடு
மாதை வாழும் ஈசனே! (3)
134. கார ணச்சொல் நீப யந்த
கந்தன் வந்து விண்டும்நான்
மார ணத்தை எண்ணி அஞ்சி
வாடு கின்ற தோர்தியோ?
பூர ணப்ப தத்து றும்பு
ராத னா!பொ லார்விடும்
வாரணத்தை வென்ற வா! நல்
மாதை வாழும் ஈசனே! (4)
135. அஞ்ச னக்கண் மங்கை மார்அ
நேகர் நல்கும் ஆசையால்
சஞ்ச லப்ப டாத வாறு
தண்ண ருட்பொ ழிந்திடாய்
நஞ்ச யின்ற ருட்செய் தாய்!பல்
நார ணர்ப்பு ணர்ந்தவா!
மஞ்ச டர்ந்த மேடை கூடும்
மாதை வாழும் ஈசனே! (5)
136. சேல்வி ழிக்க லாபி அன்ன
தேவி யோடு வந்துசெங்
கோல்வி திப்பி ழைப்பு நீக்கு
கொள்கை நல்க வல்லையோ?
நால்வி தத்தொ ழும்பர் தாமும்
நாள்தொ றும்ப ராவுசீர்
வால்வி டைப்ப தாகை கொண்ட
மாதை வாழும் ஈசனே! (6)
137. அல்லல் வாரி யிற்ப டிந்தும்
ஆசை எண்ணி லாதவாறு
ஒல்லல் உற்று ளேன்எ னக்கொர்
உண்மை என்று ரைப்பையோ?
கொல்லல் ஊன்அ ருந்தல் அற்ற
கூர்மையாளர் குன்றிடா
மல்லல் மாநி லம்து திக்கும்
மாதை வாழும் ஈசனே! (7)
138. ஆளி அன்ன வீரம் முற்ற-
டக்கி நெஞ்ச யர்ந்துளேன்
தேளி னைப்பு ரைந்து ளார்தி
டுக்கம் எய்த வாழ்வனோ?
காளி நாண ஆடி னாய்! பல்
கண்ணன் நல்கும் மைந்தன் ஓர்
வாளி எய்த முன்செய் தாய்! நம்
மாதை வாழும் ஈசனே! (8)
139. அருள்இ ரந்து நெஞ்ச யர்ந்த
அண்ட ராதி யோர்உய்வான்
இரும கர்ப்ப யந்த நீஎ -
னக்கி ரங்கி டாடதேன்?
நிருமலா! நி னைக்கும் அன்பர்
நெஞ்சு தோறு லாவுவாய்!
மரும லர்த்த டம்கு லாவும்
மாதை வாழும் ஈசனே! (9)
140. நன்னர் முத்த மிழ்க்கி ரங்கி
நால்வ ரைப்பு ரந்தநீ
இன்னம் என்ற னக்கொர் சற்றும்
ஏன்அ ருட்செய் கின்றிலாய்?
பொன்ன கர்க்குள் வாழ்ந்து ளார்பொ
டிந்த நீறு பூசுவாய்!
மன்னர் மன்னர் வந்து தாழும்
மாதை வாழும் ஈசனே! (10)
கொச்சகக் கலிப்பா
141. பொன்பரவும் மார்புடையான்
போல்வாழும் வாழ்வின்இச்சை
என்பரம்ஆ கிடச்செய்தோன்
யாவன்?உன்னில் வேறுளனோ?
மன்பதைஆ தியஉயிர்கள்
மாதாவில் கருதவளர்
அன்பர்பலர் போற்றிசைக்கும்
ஆமாத்தூர் ஆண்டானே! (1)
142. மானைநிகர் விழிநல்லார்
மயல்கடலுள் கிடப்பேனுக்கு
ஏனையமெய் அருள்வாஞ்சை
ஈந்தும்வளர்ப் பவன்ஆரோ?
தேனைவெறுத் தளிக்கூட்டம்
தினம்உண்மும் மதம்ஊற்றும்
ஆனைஉல வியவீதி
ஆமாத்தூர் ஆண்டானே! (2)
143. செந்திருமின் ஊன்அருந்தும்
தீயவர்தம் பால்புகலால்
நொந்திரங்கும் எனக்குன்அருள்
நோக்கம்ஒர்சற் றருளாயோ?
மந்திரமூ லம்செபிப்பார்
மனம்போலும் ஒளிவாய்ந்த
அந்திமதிச் சடைநம்பா!
ஆமாத்தூர் ஆண்டானே! (3)
144. காரணப்பண் பதுகேட்டும்,
கனதுணிவால் தவம்செய்தும்
வாரணக்கொம் பதுபோலும்
மகளிர்முலை விழைவேனோ?
பாரணங்கைச் செய்துதன்னைப்
பயந்தானுக் களித்தான்சொல்
ஆரணத்தின் தொனிநீடும்
ஆமாத்தூர் ஆண்டானே! (4)
145. தண்டமிழ்ப்பா டலின்அருமை
சற்றேனும் அறியாத
வண்டர்களைப் பகைத்தடிமை
வருந்தும்விதம் அறியாயோ?
கொண்டல்இடித் தொனிபோலும்
கொடுஞ்சொல்அவு ணரைவெல்வான்
அண்டர்குழாம் பெரிதிறைஞ்சும்
ஆமாத்தூர் ஆண்டானே! (5)
146. கறுவுகொடும் புத்தர்களில்
கடைப்பட்டார் களும்ஏசும்
மறுவுடையார் களிகூர்நாள்
மனுப்பிறப்பேன் எனக்கீந்தாய்?
குறுமுனிவன் முதல்ஏழ்வர்
குறித்தபயன் அளித்துய்த்தாய்!
அறுசமயத் தரும்விரும்பும்
ஆமாத்தூர் ஆண்டானே! (6)
147. பழகினர்தம் மீதும்அணுப்
பாசம்இலாப் பாதகர்தம்
விழவிழந்து நாய்நரிஉண்
விடக்குருஆம் தினம்என்றோ?
கழகம்உணர் பெரும்புலமைக்
காரணனும் தானேயாம்
அழகியநா யகனே! நம்
ஆமாத்தூர் ஆண்டானே! (7)
148. மருச்செறிவில் தழைபெயினும்
வாழ்வருளும் நீஉனைச்சற்
குருச்சிவன்என் றுணர்ந்திறைஞ்சும்
குளிர்தமிழ்ச்சொற் கிரங்காயோ?
விருச்சிகத்தில் பொல்லார்தம்
வேர்களையும் விறல்கணைஒன்று
அருச்சுனனுக் கன்றளித்தாய்!
ஆமாத்தூர் ஆண்டானே! (8)
149. பெற்றமகார் இருவரொடு
பிரமபுரத் தொருபனவன்
நற்றவச்சே யையும்கொளும்நீ
நான்கருதல் அறியாயோ?
மற்றடந்தோள் கொடுந்தகுவர்
மாதவம்செய் தாலும்அவர்க்கு
அற்றம்அறிந் தருள்செய்வாய்!
ஆமாத்தூர் ஆண்டானே! (9)
150. நால்வர் பெரும் புகழினைஇந்
நாள்இகழ்வார் பலர்ஆனார்;
போல்வலிபெற் றான்ஒருவன்
புவித்தலைதோன் றிடச்செய்வாய்
வேல்வளைசெண் டாதியசில்
வேந்தர்களும் பெறநல்கி
ஆல்வயின்தே சிகன்ஆனாய்!
ஆமாத்தூர் ஆண்டானே! (10)
கலித்துறை
151. மானோடுறழ் கண்ணியர் மாமயல்
வாரி மூழ்கும்
யானோஉனை நேர்வரக் கண்டருள்
எய்த வல்லேன்?
தேனோஎனும் இன்மொழிப் பார்ப்பதி
சேரும் பாகா!
வானோர்தினம் வந்துப ராவிய
மாதை யானே! (1)
152. கனவிற்பல கால்தரும் வேல்ஒரு
காளைக் கென்ன
நனவிற்றிக ழப்பெறத் தக்கதொர்
நாள்உண் டாமோ?
அனகத்துவ மும்பெரும் தானமும்
ஆர்ந்த மேலோர்
மனம்ஒப்பெனத் தோற்றிய சீர்த்தனி
மாதை யானே! (2)
153. ஈரேழ்முனி வர்க்குள்ஒர் மாமுனி
என்றென் றென்னைப்
பாரேமுத லாம்உல கியாவையும்
பகரச் செய்வாய்
காரேஎனக் காண்தகும் மென்குழல்
காமர் மங்கை -
மாரேநடம் ஆடிய கோயில்கொள்
மாதை யானே! (3)
154. இந்தார்சடை ஆதிய கோலம்முற்று
எண்ணி எண்ணி
நொந்தாதரிக் கும்தவம் பெற்றும்நு
டங்கு வேனோ?
சிந்தாமணிக் கும்திறம் நல்கிய
தேவென் றோர்ந்து
வந்தார்விருப் பம்தரு வாய்! தமிழ்
மாதை யானே! (4)
155. பிறவாமைநட் டார்க்கருள் செய்தனை
பெற்றம் வாளால்
இறவாமை எண் ணித்தவிப் பேற்குவப்பு
ஈந்தி டாயோ?
நறவார்மலர்க் கொன்றையும் தும்பையும்
நாறும் பூந்தாள்
மறவார்க்கெளி யாய்! எழில் நீடுறும்
மாதை யானே! (5)
156. கண்ணப்பன்அந் நாள்செயும் பூசையும்
கைக்கொண் டாய்க்கென்
விண்ணப்பம்வி னாவிடில் நிந்தனை
மேவும் கொல்லோ?
தண்ணப்பர வைப்புனல் நீந்திஉய்ந்
தான்தன் வாயால்
வண்ணப்புல வோன்எனும் சீர்பெறும்
மாதை யானே! (6)
157. விதியைப்பொரு ளாம்என நம்பி,நின்
வென்றி எண்ணார்
கதியைக்குறித் துத்தமி யேனும்க
லங்கு வேனோ?
நதியைப்புனை யும்சடை மீதுமுன்
நாள்வ ணங்கும்
மதியைப்பரித் தாய்! அடி யார்மலி
மாதை யானே! (7)
158. வேணித்தலை மேல்அடித் தாற்கொரு
வென்றி வாளி
ஆணிப்பொன்எ னக்கொடுத் தாய்எனை
ஆட்கொ ளாயோ?
பாணிப்பல பச்சிலை இட்டுப்ப
ணிந்து போற்றோர்
மாணிக்கதி ஆயுள்இட் டாய்! வள
மாதை யானே! (8)
159. கசமாமுகற் பெற்றபின் வேலுடைக்
காளை ஈன்றாய்!
பிசகாஅடி யார்பல ரோடெனைப்
பேணொண் ணாதோ?
நிசவீரம யேசுரன் மாதவம்
நேடி அந்நாள்
வசவேசனை வாழவைத் தாய்! தனி
மாதை யானே! (9)
160. கழுமீதம ணர்ச்செறித் தான்முதற்
காணும் நால்வர்த்
தொழுநான்அவர் பேறடை யாவிடில்
தோடம் அன்றோ?
முழுநீறணிந் தாடும்அப் பா! ஒளிர்
முக்கண் மூர்த்தீ!
மழுமான்அணி தோள்அர னே!அருள்
மாதை யானே! (10)
கலிநிலைத்துறை
161. நேராக வருகென்றெ ழுத்தைந்தும்
மிகஓதி நினைவார்பெறத்
தாராள மாகக்கொ டுக்கும்பெ
ருந்தன்மை தவறுற்றதோ?
காரார்க ளத்தெம்பி ரானே!நு
தற்கட்க னற்கண்ணுளாய்!
ஆராலும் அறிதற்கொ ணாவண்மை
யாய்மாதை அழகேசனே! (1)
162. துறவோர்அ நேகர்க்கும் அரிதாய
வேடம்து லங்கக்கொள்வேன்
மறவேல்பொ ரும்கண்ணி மார்மோக
வலைஉற்ற வாறென்கொலோ?
பிறவாம ருந்தாய பித்தப்பி
ரானே!பெ ருந்தன்மை தோய்
அறவோர்த மக்கோர்த னித்தஞ்ச
மாம்மாதை அழகேசனே! (2)
163. வண்டத்த னத்துட்டர் குடிகேடு
மிகநாடும் மனம்எய்தியும்
பண்டப்ப டிக்கந்தன் நுவல்சொல்கு
றித்தும்ப தைத்தேன்ஐயோ!
தண்டக்க ளிற்றீர உரியூடு
புதைவாய்! தவத்தோர்க்கும்மேல்
அண்டர்க்கும் ஆதாரம் ஆம் ஐய-
னே! மாதை அழகேசனே! (3)
164. பொருவாவல் இகல்கோடி உலகிற்கொ -
டுள்ளம்பு ழுங்குற்றநான்
மருவார்க டம்பாரம் அணிதோளன்
எனவாழ வைப்பாய்கொலோ?
தருவாணர் உடல்வெந்த என்போடு
சாம்பல்த ரித்தாடுவாய்!
அருவாகி உருவாயும் அவிர்தெய்வ -
மே! மாதை அழகேசனே! (4)
165. தொண்டால்உ னைக்கண்டு தொழநாடி
அன்பிலது ணிந்தோர்களைக்
கண்டார்வம் எய்தப்பெ றாஎன்னை
நீஎன்று கைக்கொள்வையோ?
பண்டாசு ரன்தானும் மகிழ்கூர
அருள்செய்த பரமா! முன்நாள்
அண்டார்பு ரம்சுட்ட வாய்அண்ண
லே! மாதை அழகேசனே! (5)
166. முப்பால்வி தித்துள்ள முறைஇந்த
உலகத்தில் முதிரச்செய்தற்கு
இப்பாடு படும்என்னை இகழாதுன்
அடியார்தம் மிடைவைப்பையோ?
கொப்பார்கு ழைக்காரி ஒருபாதி
தன்னில்கு லாவற்கொல்கா
அப்பா!அ ருட்கொண்டல் அனையாய்! நல்
வளமாதை அழகேசனே! (6)
167. மிளகைப்பொ ருந்தன்மை கடல் முற்றும்
உறஉண்ட மேலோன்எனாது
உளமுற்ற ளித்திட்ட பயனும்பொய்
ஆமாகில் உய்வேன்கொலோ?
வளமிக்க பொன்னும்பல் மணியும்கொடு
இமையோர்ம திப்பக்குலாவு
அளகைப்பி ரான்தோழ னே!அன்பர்
வாழ்மாதை அழகேசனே! (7)
168. பைம்பொன்பெ றும்பேறெ னக்கொண்டு
ளார்எய்து பலபுண்உளேன்
கம்பொன்று நிற்காது றப்பாடும்
வண்பாடல் கைக்கின்றவோ?
கொம்பொன்று பன்றிப்பொ ருட்டன்று
சமர்செய்த குலவேந்தனுக்கு
அம்பொன்ற ளித்திட்ட அருளாள
னே! மாதை அழகேசனே! (8)
169. மேனைக்கு மகளான கவுமாரி
முலைதோயும் வீறுற்றநீ
வானைப்பு ரப்பார்தம் என்பாரம்
அணிகின்ற வகைஎன்கொலோ?
தேனைப்பொ ரும்செஞ்சொல் ஒளவைக்கு
வெள்ளிச்சி லம்பீந்ததோர்
ஆனைக்கும் முருகற்கும் முதலாகி
னாய்! மாதை அழகேசனே! (9)
170. ஞாலம்க ளிப்பச்செய் வானேமு
யன்றெய்த்த நான்எய்தநீ
நாலன்ப ருக்கும்கொ டுத்திட்ட
பேராண்மை நல்காய்கொலோ?
மாலஞ்ச மற்றுள்ள வானோர்எ -
லாம்ஓட வந்திட்டஆ
லாலம்கு டித்துய்ந்த வா! எங்கள்
ஆமாதை அழகேசனே! (10)
அறுசீர் விருத்தம்
171. சுந்தரக் கரேணி யேபோல்
துலங்கும் நலநடையார் ஆசை
அந்தரத் தினும்கொண் டேங்க
அருவினை அலைப்ப தேனோ?
கந்தரக் கறைஉள் ளானே!
கடுக்கையோ டெருக்கும் பூண்டாய்!
மந்தரக் கிரிபோல் வார்சூழ்
மாதையூர் வாழ்பெம் மானே! (1)
172. கந்தனைப் பயந்த நீஎன்
கவலைநோய் முழுதும் மாற்றிச்
சிந்தனைப் படிஎல் லாமும்
திகழ்தரச் செயவொண் ணாதோ?
நிந்தனைக் கனற்சூ டாறி
நிறைபுகழ் பெறுதல் வேட்பார்
வந்தனைக் கவிகொள் வோன்ஆம்
மாதையூர் வாழ்பெம் மானே! (2)
173. காசுபொன் ஆடை மாலை
களபம்ஆ தியவேட் கில்லேன்
வீசும்வாள் அனைய கண்ணார்
வேட்கையால் மெலிய லாமோ?
பூசுரர் குலதே வாகிப்
பொருப்பிறை மகள்தோள் சேர்ந்து
மாசுணப் பணியும் பூண்டாய்!
மாதையூர் வாழ்பெம் மானே! (3)
174. தூயமெய்ப் புகழே வேட்டும்
சுருதிநன் குணர்ந்தோர்க் காகாத்
தீயசெய் கையும்சற் றென்பால்
செறிதரச் செயல்ஏன் செப்பாய்?
காயகத் தரக்கர் தம்மைக்
காலனில் கனன்று வெல்லும்
மாயவர் பலர்வந் தேத்தும்
மாதையூர் வாழ்பெம் மானே! (4)
175. அஞ்சனக் கருங்கண் ணாளோடு
அடல்விடைப் புறத்தில் ஊர்ந்தென்
நெஞ்சகத் தவிர்ந்த கோலம்
நினதலால் பிறர தாமோ?
குஞ்சரத் துரிவை போர்த்துக்
குளிர்மதிக் குழவி தாங்கி
மஞ்சடர் மலர்த்தண் சோலை
மாதையூர் வாழ்பெம் மானே! (5)
176. குற்றமே மலியச் செய்யும்
கொடியனேன் எனினும் என்னை
நற்றவர் குழுவில் கூட்டி
ஞானவாழ் வருளி ஆள்வாய்
கற்றடம் சுமந்து வெண்பாற்
கடல்அமு துதவும் ஆமை
வற்றலோ டிலங்கும் மார்பா!
மாதையூர் வாழ்பெம் மானே! (6)
177. ஏழையூர் படைசூழ் மாரன்
இகன்றிகன் றெய்யும் பூவால்
கோழைநெஞ் சுடையார் போல்யான்
குலைகுலைந் தலைய லாமோ?
தாழையும் கமுகும் மாவும்
தருக்குலம் பிறவும் தாற்று
வாழையும் கரும்பும் சூழும்
மாதையூர் வாழ்பெம் மானே! (7)
178. குரவன்ஆ தியரைக் கொல்லக்
குறித்தவற் கொருகோல் ஈந்தாய்;
அரவம்நேர் கொலைஞர்ச் சீறும்
அடியனேற் கருள்செய் யாயோ?
பரவும்வன் தொண்டன் தோள்சேர்
பரவைசங் கிலிக்கன் றூடல்
வரவரத் திருத்திச் சேர்த்தாய்
மாதையூர் வாழ்பெம் மானே! (8)
179. இருமகர்ப் பயந்த நீதான்
இயற்றமிழ் வடலூ ரானை
அருமைஇட் டாண்டு கொள்ளாது
அழிக்கில்ஒர் அவதூ றன்றே?
தருமனை மதனைச் செற்றும்
தழைத்தெழப் புரிந்தாய்! சற்றும்
வருமம்இல் கருணைக் குன்றாம்
மாதையூர் வாழ்பெம் மானே! (9)
180. நற்றமிழ் விரக னாதி
நால்வர்மீ தாணை யிட்டேன்
எற்றடுத் தாண்டோர் தேகம்
இனிஎடாக் கதியில் சேர்ப்பாய்
பொற்றடங் கிரியை, வில்லாப்
புரம்ஒரு மூன்றும் நீற்ற,
மற்றடம் தோளில் கொண்டாய்!
மாதையூர் வாழ்பெம் மானே! (10)
அறுசீர் விருத்தம் - வேறு
181. அறிவே அணுவும் இல்லார்போன்று
ஆகா வினையும் செய்வேன்முன்
மறியும் மழுவும் கைக்கொண்டோர்
மழமால் விடையின் மிசைவந்து
பொறிசெர் மார்பன் போல்வாழ்சீர்
போதத் தந்தால் புகழேயாம்;
சிறிதும் கருணை செய்யீரோ?
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (1)
182. அஞ்சொற் கிளிநேர் மொழிநல்லார்
ஆசைக் கடலூ டமிழ்வுற்று
வெஞ்சொற் கேட்டுத் தளர்வேனை
வீணே மாய விடவேண்டாம்;
தஞ்சொற் பலிதம் பெறும்மாண்பால்
தவமே உயர்வாம் எனல்காட்டும்
செஞ்சொற் புலவோர் பலர்போற்றும்
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (2)
183. காரார் கருணைத் துளிபெய்தென்
கவலைப் பிணிமுற் றறமாற்றிப்
போரார் விடையில் சிவையோடே
புறம்பும் உள்ளும் பொலியீரோ?
நீரார் சடிலத் தலைமீதே
நிலவா தியபற் பலபூண்டீர்?
சீரார் பம்பைப் புனல்சூழும்
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (3)
184. அங்கட் புவனம் துயரால்நொந்து
அலமந் திடல்கண் டயர்வேனை
வெங்கட் கொடியோர்க் கெமனேபோல்
மிளிரச் செயுமா றறியீரோ?
திங்கட் குலவேந் தாம்ஒருவன்
செவ்வேல் வளைசெண் டுறஈந்தீர்!
செங்கட் கரிகொன் றுரிபோர்த்தீர்!
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (4)
185. மாலா தியர்தம் பெருவாழ்வை
மதியா தாரும் வழிபடும்நும்
கோலா கலமே நினைவேனைக்
கொடியோர் குடையுள் விடலாமோ?
ஆலா லம்தின் றிடும்நாள் ஓர்
அங்கை மலரால் அதுசெய்த
சேலார் விழியாள் மாபங்கீர்!
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (5)
186. ஆனா அமுதே நிகர்சொல்லார்
ஆசைக் கடலூ டயர்வேற்கு
வானாட் டோரும் பெறல்அரும்சீர்
வாய்ப்பக் கருணை வைப்பீரோ?
ஊனார் ஒருமுத் தலைவேலீர்!
உலகுண் டுமிழ்வான் உயிர்போல்வீர் !
தேனார் கொன்றைத் தொடையுடையீர்!
திருவா மாத்தூர்ச் சிவனாரே ! (6)
187. அங்கத் திரளோ டங்கதமும்
ஆமைத் தோடா தியும்அடியார்
துங்கத் துதியில் தாழ்வெனவே
சொலும்என் தொண்டேற் றருளீரோ ?
சங்கத் தொனிசால் கைக்கிளிநேர்
தையற் குதவச் சலியான்போல்
செங்கல் திரளும் பெறஅருள்வீர் !
திருவா மாத்தூர்ச் சிவனாரே ! (7)
188. கலைமா தருளில் சிறிதுற்றும்
கமலக் கண்ணான் கவின்மார்பில்
நிலையா வாழ்வாள் அருள்செய்யா
நிட்டூ ரத்திற் கென்செய்வேன்?
தலைமா லிகையும் புனைதோளீர்!
சரம்ஒன் றெய்தத் தவம்முயல்வான்
சிலையால் அடியும் கொளநாணீர்!
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (8)
189. தாய்மார் எனமா தரைஎண்ணும்
தவரும் கருதாத் தகவெல்லாம்
நாய்மா திரியாய் உழல்பொல்லேன்
நண்ணச் செயல்ஏன்? நவிலீரோ?
பாய்மா உரிதொட் டரவார்த்தும்
பசுமா மயில்அன் னவள்தன்னால்
சேய்மார் இருவர்த் தருபுகழீர்!
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (9)
190. பாலத் துறுகண் உடையாரே
பரம்என் றோதில் பழிசொல்வார்
ஞாலத் தழியச் செயவேநான்
நண்ணும் தவம்நல் கியதாரோ?
காலற் கொருகா லனும்ஆனீர்!
கவிதைத் தமிழால் துதிசெய்த
சீலத் தினர்நால் வரைஆண்டீர்!
திருவா மாத்தூர்ச் சிவனாரே! (10)
எழுசீர் வண்ண விருத்தம்
தான தனதன தான தனதன தான தனதன தானனா
191. காசு பொருள்என நாடி மகிழ்வுறு
காதல் உடையவர் பால்எலாம்
ஆசு கவிபகர் நாவ லவர்அலை
யாமல் அருள்புரி வாய்கொலோ?
தேசு மதிகனல் ஆய விழிமக
தேவ! கவுரிதன் நாயகா!
மாசு தவிர்பெரி யோர்கள் வழிபடும்
மாதை அழகிய நாதனே! (1)
192. ஞானம் முதலிய வாய நிலைஒரு
நாலும் விழைவுறு நாயினேன்
ஈனம் மலிகலி கால புருடன்முன்
ஈடு குலைவுறல் ஆகுமோ?
தேன ளவுமலர் மாலை வகையொடு
சேர மதிபுனை தேசிகா!
வான வரும், முனி வோரும் நனிவரு
மாதை அழகிய நாதனே! (2)
193. காரி யமும்முது கார ணமும்எதிர்
காமன் உயிர்கவர் வான்எனா
நாரி னொடுபகர் வார்கள் குழுவிடை
நானும் உறஅருள் வாய்கொலோ?
போரின் வலிமிகு தான வரும்அதி
போகம் உறவரம் ஈகுவாய்!
வாரி தரும்விடம் ஆரும் இறையவ!
மாதை அழகிய நாதனே! (3)
194. காவி யொடுமுழு நீறும் மணிபுனை
காமர் முனிவரர் கூடியே
ஆவின் இகல்எனும் நீசர் கெடவிளை
யாட அருள்புரி வாய்கொலோ?
சேவில் உமையொடு வானில் உலவிய
சேய வடிவ! மயேசுரா!
வாவி தொறும்மலர் பூவில் வளைபயில்
மாதை அழகிய நாதனே! (4)
195. நீசர் குடைநிழ லூடு புவிஅழல்
நீடும்; முரகரி நாடிலான்;
ஈச லினும்எளி யேன்அ தறல்எணி
ஏதம் உறவிடல் ஆர்கொலோ?
பாச மொடுபசு வாயும் நிகழும்அ
பார பதிஎன வாழ்சிவா!
வாச வனும் இமை யோரும் விழைவுறு
மாதை அழகிய நாதனே! (5)
196. ஆர ணமும்எண்இல் ஆக மமும்நுவ -
லாத பொதுநிலை ஈயும்நீ
ஈரம் அணுவும்இல் பாத கரைஅடும்
ஈடு பெறஅருள் வாய்கொலோ?
பார தனம்உறு கோல அரிஒரு
பாலன் உதவவும் ஏவினாய்!
மாரன் உருவம்முன் நீற முனிபவ!
மாதை அழகிய நாதனே! (6)
197. கோழை மனம்உடை யார்கள் எனஅதி
கோர நமபயம் மேவினேன்
ஏழை யொடுவிடை ஏறி விழிஎதி
ரேஎய் தியும்எளி தாள்வையோ?
ஊழை ஒருபொரு ளாக நினைகிலர்
ஓகை மனதில்உ லாவுவாய்!
மாழை வரைசிலை ஆய புயபல!
மாதை அழகிய நாதனே! (7)
198. பாணி தனில்உறு சாப மதுகொடு
பார முடிமிசை மோதினான்
ஏணில் உயர்வுற வாளி உதவல்எந்
நாளும் மொழிவது பாவமோ?
மாணி இனிதுசெய் பூசை கொடுசமன்
மாய வதைபுரி தாள்உளாய்!
வாணி கணவன்முன் நாளில் வழிபடும்
மாதை அழகிய நாதனே! (8)
199. சீலம் அறுகொடி யோர்கள் பகைகொடு
தீமுன் உறுபுழு நேரும்நான்
ஞாலம் முழுதுய வேநின் மகர்நிகர்
நாக ரிகம்உறு நாள்எதோ?
பால விழிகொள்ம யேச! வெயில்உமிழ்
பானு குலமக வாகிவாழ்
மால வர்கள்பல பேர்செய் பணிகொளும்
மாதை அழகிய நாதனே! (9)
200. பாத கரைஅடும் ஆசை கொடுதுதி
பாடும் எனைஒரு நால்வர்நேர்
போதம் உறஅரு ளாது விடில்உள
பூர்வ கதைகள்மெய் ஆகுமோ?
சாத லொடுபவ நோயும் அறஇரு
தாள்கொள் நிழல்செயும் ஏகனே!
மாதம் முழுதும்வி ழாவின் அணிதிகழ்
மாதை அழகிய நாதனே! (10)
அறுசீர் விருத்தம்
201. இலகோர் பசும்பொற் கொடிபாகா!
ஏன மருப்பும் அணிவானே!
அலகோர் வரிய புகழ்ஓங்கும்
ஆமாத் தூர்வாழ் அம்மானே!
பலகோ ரத்தால் புண்பட்டுப்
பதைத்துத் தளரும் பாழ்வினை தீர்ந்து
உலகோர் கலிமுற் றொழிப்பஎனக்கு
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (1)
202. பாவா ணர்க்கோர் எளியானே!
பனைக்கை மதமா உரிபோர்த்தாய்!
மூவாப் புகழ்தோய் ஆமாத்தூர்
முதல்வா! முக்கட் பெருமானே!
கோவாய் உலகம் முழுதும்ஒரு
குடைக்கீழ் கொள்வார் களும்நாண
ஓவாச் செலவே செய்தாலும்
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (2)
203. கண்ணும் கருத்தும் கொடுத்தோனே!
கயிலைக் கிரிமேற் கவின்றபடி
விண்ணும் புகழ்சீர் ஆமாத்தூர்
மேவித் தினமும் மிளிர்வானே!
நண்ணும் புலவோர் தவர்வீரர்
நல்லார் முதலாம் நரர்பலரோடு
உண்ணும் பெருமை விழைகின்றேற்கு
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (3)
204. நாறு மலர்க்கொன் றையும்இறகும்
நளிர்வார் சடையின் மிசையேவைத்து
ஆறு சமயத் தரும்போற்றும்
ஆமாத் தூரில் அமர்வானே!
நீறு நிறுவு மவன்தாதை
நிறையும் கருணை யினர்க்காகா
ஊறு செயற்கும் கொடுத்தாய்! எற்கு
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (4)
205. வலுத்த பயன்வேட் டடையாதே
மறைந்த வடலூ ரானை நினைத்து
அலுத்த சிறியேன் தமிழ்விழைந்தே
ஆமாத் தூரில் அழைத்தோனே!
செலுத்தத் தகும்நன் னெறிதவறித்
தீய வழியில் செலும்நெஞ்சோடு
உலுத்த ரிடம்போய் இரவாதெற்கு
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (5)
206. சொல்லும் திறத்தோர்க் கமையாச்சீர்
தோயும் திருவா மாத்தூரா!
கல்லும் எறிந்து நீறணியான்
கதிசேர்ந் தமைகேட் டயர்கின்றேன்;
அல்லும் பகலும் தவிர்ந்தபதம்
அருளல் நிசம்ஆ மாகில்இ நாள்
ஒல்லும் தருமம் பலசெய்வான்
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (6)
207. மின்னும் சடைக்கா டுடையானே!
வேலா வலயம் தரும்விடத்தால்
மன்னும் கறைஆர் களத்தானே!
மாதைப் பதியில் வாழ்சிவனே!
பொன்னும் மணியும் முதலியபல்
பொருளும் தமியேன் புன்மனத்தில்
உன்னும் படியே தரத்தகும்ஏண்
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (7)
208. பேடிக் கொருவார் கணைஈந்த
பெருமை தினமும் பேசலுற்றும்
வாடித் தளரும் எனைஏனோ
மாதைப் பதியில் வருவித்தாய்?
பாடிப் பாடிக் குறித்தபடி
பயன்எய் திடற்காப் பாவையர்போன்று
ஊடிக் கொண்டேன் எனை எள்ளாது
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (8)
209. பகலோன் வசிக்கும் வயிற்றானைப்
பலவெற் பினும்போய் நடிப்பானை
மகவாம் எனப்பெற் றவளோடு
மாதைப் பதியில் வாழ்வானே!
இகல்வா தனையால் மெலிவுறும்நான்
இரந்தும் தளரத் தகும்கொல்லோ?
உகம்ஆள் கலியன் நடுங்குறுமாறு
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (9)
210. நம்ப வல்லார்க் கரசனையார்
நால்வர் துதியும் நனிபூண்டோர்
செம்ப வளமால் வரையேபோல்
திருவா மாத்தூர் நடுத்திகழ்வாய்!
அம்பல் மிகையால் துயர்ப்பட்டேன்
அறம்செய் திசையால் சுகம்உறுவான்
உம்பர் தாமும் பெறல் அரிதாம்
உலவாக் கிழிஒன் றருள்வாயே! (10)
கலித்துறை
211. கோட்டி றால்மதுப் பொழிபொழில் மாதையில் குடிகொண்டு
ஏட்டி னால்விரிக் கரும்பல புகழ்செயும் இறைவா!
காட்டி னும்கொடுங் கோல்செலுத் தரையரால் கவன்றென்;
மாட்டில் ஏறிவந் துனதருள் துளிஅருள் வாயே! (1)
212. மஞ்ச றாமலர்ச் சோலைசூழ் மாதையில் வருவார்க்கு
அஞ்சல் நல்கிமால் விடைமிசை அவிரவல் லானே!
நெஞ்ச கம்கரை கின்றிலேன்; எனினும் நிற் றுதிப்பேன்;
பஞ்சம் இன்றிய திருவருள் துளிஅருள் வாயே! (2)
213. பானு வாதிமுச் சுடர்களும் கண்களாப் படைத்துத்
தேனு வும்திறற் கோடுகொள் மாதைவாழ் சிவனே!
ஊனும் கள்ளும்வேள் வியிற்கொளும் ஒருபெரும் பிழையால்
வானு ளாரும்எய் தாஅருள் துளிஅருள் வாயே! (3)
214. சந்தி ரச்சடா டவியொடு வெண்பொடி தயங்க
அந்தி வான்என மாதையூர்க் கோயிலூ டமர்வாய்!
புந்தி யிற்பெரி யார்தினம் கருதும்ஐம் பொறியாம்
மந்தி ரப்பயன் எனும்அருள் துளிஅருள் வாயே! (4)
215. பார ணங்குறு பருவரல் களைந்துயப் பதைக்கும்
நீரர் வந்துறும் மாதையில் நிலவும்நின் மலனே!
ஆர ணன்சதுர் ஆனனத் துதித்தவர் அறிய
மார னைப்பொடித் திடும்அருள் துளிஅருள் வாயே! (5)
216. அறம்எ லாம்மிகப் பெருகிய மாதையில் அமர்ந்து
பிறவி நோய்அறத் துடைத்தருள் பெருந்தகைப் பிரானே!
நறவ றாமலர் சொரிதரும் மாணிநன் குணர
மறலி யைத்தடிந் திடும்அருள் துளிஅருள் வாயே! (6)
217. பலபல் மாதவர் வானவர் ஆதியோர் பரவக்
குலவு மாதையில் கோயில்கொண் டமர்தரு குழகா!
புலவு வானவர்க் காம்எனும் புன்மொழி புகன்ற
மலர வன்தலை கவர்அருள் துளிஅருள் வாயே! (7)
218. காளி யும்கொலைப் பலிவெறுத் துறும்கவின் மாதை
கோளில் சீர்பெற முயன்றுளார் பரவுசற் குரவா!
மீளி ஆயவில் விசையன்முன் வேட்டுவன் ஆகி
வாளி ஒன்றுத வியஅருள் துளிஅருள் வாயே! (8)
219. திக்க டங்கலும் புகழும்மா மாதையில் செம்பொற்
செக்க ரேஎனச் சந்ததம் திகழ்தரு சிவனே!
முக்கண் வேழமும் முருகனும் எனப்பலர் மொழியும்
மக்கள் நல்கல்மெய்ப் படஅருள் துளிஅருள் வாயே! (9)
220. புண்ட ரீகன்மால் முதல்சொல்புத் தேளிரும் போற்றிப்
பண்ட நேகம்வாழ் வடைந்தவர் மாதையில் பரனே!
தொண்டர் சேகரர் ஆம்ஒரு நால்வர்முன் துதித்த
வண்ட மிழ்க்கரு ளியஅருள் துளிஅருள் வாயே! (10)
கொச்சகக் கலிப்பா
221. ஏந்துமுலைக் கவுமாரி இடத்தமைய எந்நாளும்
ஆய்ந்துணர்மா தவர்போற்றும் ஆமாத்தூர் அமர்வானே!
சாந்துயர்நன் றாகும்எனத் தார்வேந்த ரையும்ஒருக்கால்
காந்துகொடும் கனல்போலும் கலிநோய்தீர்த் தருள்வாயே! (1)
222. வன்மமனத் தானவர்க்கும் வரங்கொடுக்கும் வள்ளல்எனத்
தன்மம்மலி மாதைநகர் தனில்வளரும் சங்கரனே!
சென்மம்அள விறந்தவற்றில் தினந்தோறும் தேடிவைத்த
கன்மபலப் பிணிப்பாய கலிநோய்தீர்த் தருள்வாயே! (2)
223. செல்வி உறும் மார்புடையான் தினம்கருதி வழிபாடு
பல்விதத்தில் செய்மாதைப் பதியில்வளர் பண்ணவனே!
நல்வினைதீ வினைஉணர்த்தி ஞானநெறித் துணையாகும்
கல்வியதற் கிகலாய கலிநோய்தீர்த் தருள்வாயே! (3)
224. பற்பமதில் முழுக்காடிப் பாந்தள்என்பா தியபூண்டு
நற்பயன்நல் கிடுமாதை நகர்ஆண்ட நாயகனே!
மற்படுதா னவர்க்கிறைவர் வரம்பெறும்நாள் வருந்தோறும்
கற்பகநாட் டையும்வெதுப்பும் கலிநோய்தீர்த் தருள்வாயே! (4)
225. சீலமறை நான்குரைத்தான் திருமுகங்கள் தரவந்தார்
ஆலடியில் உயக்கொண்டாய்! ஆமாத்தூர் ஆள்சிவனே!
நீலமலை எனப்போய்ப்போய் நிதம்உயிர்கொன் றளிகூரும்
காலனிலும் பொல்லாதாம் கலிநோய்தீர்த் தருள்வாயே! (5)
226. சீரியவா னவர்சூழத் திருவாமாத் தூர்த்தெருவில்
நாரியொடும் மகவோடும் நரைவிடைமேல் வருவானே!
வாரிதியில் தினம்உதிக்கும் மார்த்தாண்டன் மகனான
காரிதன்ஆ ணையில்திரியும் கலிநோய்தீர்த் தருள்வாயே! (6)
227. அம்பலத்தில் தேவியெதிர் ஆடல்பயில் வதன்முன்னே
வம்பவிழ்பூம் பொழில்மாதை வளநகரில் வந்தோனே!
சம்பரற்கொன் றான்படைமுற் சாற்றும்ஏ டணைஉதவும்
கம்பலைக்கோர் கொள்கலமாம் கலிநோய்தீர்த் தருள்வாயே! (7)
228. சீர்த்தபுகழ் ஆமாத்தூர்த் திருக்கோயில் கொண்டருளிப்
பார்த்தன்அடித் தமைசொல்வார் பயங்கரம்முற் றொழித்தாள்வாய்!
தூர்த்தர்உற வொடுவேம்பும் தோல்வியுறும் தகைத்தாய
கார்த்தசுவை நனிகாட்டும் கலிநோய்தீர்த் தருள்வாயே! (8)
229. பாதகர்கண் காணரிய பழம்பதியா கியமாதை
நாதனே! இமையவர்தம் நடுக்குலவும் நாயகனே!
பூதகணத் தினரொடுபோய்ப் புலைத்தகுவர்ச் செகுத்துயர்நின்
காதலர்மீ தாணை! என்றன் கலிநோய்தீர்த் தருள்வாயே! (9)
230. புவிக்கொருமா முகம்போலும் புகழ்மாதைப் பதிமேவிச்
செவித்தொகைபத் தெனக்கூறார் சிலர்க்கும் அருள் செய்தோனே!
அவித்தமணர்க் கெடுத்தான்நே ராம்சதுரர் தமிழோடென்
கவித்தொகைபூண் டிக்கணமே கலிநோய்தீர்த் தருள்வாயே! (10)
அறுசீர்ச் சந்த விருத்தம்
231. அண்டர்உ டம்பெரி யும்தொறும் என்புடன்
அடலை அணிந்தாடி
வண்டமிழ்ச் சீர்பெறு மாதையின் கோயிலுள்
வாழ்வாம் முதல்வள்ளால்!
புண்டரி கத்தனை மாரனை ஏமனைப்
புறம்காண் பதுவேட்டுன்
தொண்டர்ப தத்துகள் சூடிய என்றனைச்
சோதிக் கஒணாதே. (1)
232. அட்டவி தப்படும் மூர்த்தியும் ஆனமெய்
அறிந்தன்பு செய்வாருக்கு
இட்டம்அ னைத்தும்வ ழங்குபு மாதையி
னிடம்வாழ் வுறும்எந்தாய்!
சட்டம்மு ழுக்கஉ ணர்ந்தவர் போல்கொலை
தழல்முன் செயற்கஞ்சாத்
துட்டர்க ளைக்கறு வித்தவிக் கின்றஎற்
சோதிக் கஒணாதே! (2)
233. மாயன்என் றேஉல கும்சொல்இ ராகவன்
வந்தன்பு செய்மாதை
நாயக னே!உடம் பிற்படு பாதிஓர்
நங்கைக் கருள்செய்தாய்!
காயகம் முற்றொழித் துத்திறம் பாதெழு
கருணைக் கடல்மூழ்கும்
தூயவர் தம்பணி வேட்டயர் வேன்தனைச்
சோதிக் கஒணாதே! (3)
234. மாதுறை பாகன்ம யேசன்என் றேமிக
மறவாது சொல்கின்றார்
ஏதுவி ழைந்துறி னும்கொடுத் துத்தினம்
எழில்மா தையில் உற்றாய்!
வாதுசெய் சாரண ரிற்கொடி யார்கொளும்
மதம்மாய் வுறமுயல்வேற்
சூதுசெய் தின்னமும் வம்பினில் இங்ஙனம்
சோதிக் கஒணாதே! (4)
235. அன்பர்த மக்கொரு தாயக மாநிகழ்
அணிமா தையின்மேவிப்
பொன்பழ கும்திரு மார்பினன் ஆதியர்
புகழத் திகழ்வானே!
இன்பம்அ னைத்தும்அ யின்றயின் றண்டினர்
இன்னற் செறமுயல்வேற்
துன்பம்மி கக்கொடுக் கும்கலி யால்இஙன்
சோதிக் கஒணாதே! (5)
236. அல்லிம லர்த்தடம் பொய்கைஒன் றால்உயர்
ஆமா தையில்நாளும்
பல்லிய மும்கறங் கச்செயும் மால்விடைப்
பவனிக் குரியானே!
வல்லிஒத் துத்திகழ் மெல்லிடை ஓதிமம்
மானும் கலைவாணி
சொல்லிய வாறுது தித்துறும் என்றனைச்
சோதிக் கஒணாதே! (6)
237. பக்தர்கள் சொற்படி செய்யவல் லான்எனும்
பழங்கீர்த் திகுன்றாதே
முத்தமிழ்ச் சீர்திகழ் மாதையில் வாழ்வுறும்
முதல்வா! அருள்மூர்த்தீ!
சித்தர்எல் லோரும்அ றைந்தமை ஓர்ந்தும்ஓர்
சிறிதே னும்ஒல்காதே,
சுத்தவெண் ணீற்றில்மு ழுக்குறும் என்றனைச்
சோதிக் கஒணாதே! (7)
238. வேர்த்தவ சப்படு பன்றிஒன் றுய்வது
வேட்டுக் கையின்வில்லால்
பார்த்தன்அ டித்தஅன் றம்பளித் தாய்!பெரும்
பம்பைக் கரைவாழ்வாய்!
சீர்த்தந லம்பல செய்வது வேட்டுளத்
திடுக்கம் கொடுதீராத்
தூர்த்தகு ணத்தர்கைக் கீழ்ப்படும் என்றனைச்
சோதிக் கஒணாதே! (8)
239. கொம்பினில் மாங்குயில் கூவிட மாமயிற்
குலம்ஆ டிடும்மாதை
அம்பிகைக் குத்தன தன்பனை ஓர்மரம்
ஆக்கிக் கொடுத்தோனே!
நம்பினார் பால்வரும் விக்கினம் யாவையும்
நாசம் செயும்நால்வாய்த்
தும்பிறைக் கந்தனு டன்தரும் நீஎனைச்
சோதிக் கஒணாதே! (9)
240. ஏதுவும் ஆய்அத னால்இயல் கின்றன
எல்லாம் ஒருதான் ஆய்
மாதுமை பாகன்என் றோர்வடி வம்கொடு
மாதைப் பதிவாழ்வாய்!
ஓதுசொற் பாவலர் நால்வரில் பிந்தினன்
உரிமை மனையவள்பால்
தூதுமுன் போய்வரும் நீஎனை இங்ஙனம்
சோதிக் கஒணாதே! (10)
அறுசீர் விருத்தம்
241. அன்னவா கனனும் பூசித்து
அருள்பெறும் மாமா தைக்கண்
பன்னகப் பணியும் பூண்டு
பவளவெற் பெனவாழ் வானே!
உன்னதைந் தெழுத்தும் கூறி
உருவசிந் தனைசெய் கின்றேன்;
இன்னமும் சிறிதா னாலும்
இரங்கிடா திருக்கின் றாயே! (1)
242. வெள்ளநீர்ப் பம்பை சூழும்
வியன்திகழ் ஆமாத் தூரில்
வள்ளல்என் றுணர்ந்து சார்ந்தார்
வாஞ்சைமுற் றருள வல்லாய்!
கள்ளநெஞ் சிடைநின் ஆடல்
காதல்மிக் கடைந்துள் ளேன்காண்!
எள்ளள வேனும் நீதான்
இரங்கிடா திருக்கின் றாயே! (2)
243. அகழ்கடல் உலகின் சென்னி
அனையசீர் ஆமாத் தூரில்
திகழ்சிவ லிங்கத் துள்ளே
தினம்தினம் வசிக்கும் தேவே!
புகழ்மிக விழைகின் றேனைப்
பூரியர் பலரும் கூடி
இகழ்தல்நன் குணர்ந்தும் அந்தோ!
இரங்கிடா திருக்கின் றாயே! (3)
244. எக்கட வுளரும் போற்றும்
இசைபெறும் ஆமாத் தூரின்
முக்கண்எம் பெருமான் என்ன
முன்னுவார்க் கருள்செய் மூர்த்தீ!
மக்கள்ஊன் அருந்தி டாநல்
வாழ்வுறச் செயல்வேட் டெய்த்தேன்;
இக்கலிக் கஞ்சித் தானோ
இரங்கிடா திருக்கின் றாயே! (4)
245. தேனளா வியபூங் கொன்றை
செறிபொழில் திருவா மாத்தூர்
வானவா! உமைதன் னோடு
மழவிடைப் பரிஊர் வானே!
ஆனள விறந்த கோடி
அநுதினம் கொன்றுண் டாடும்
ஈனரைச் செறல்வேட் டேனுக்கு
இரங்கிடா திருக்கின் றாயே! (5)
246. மைப்பெரும் பகடூர் வானை
வதைத்தொரு மறையோன் மைந்தன்
மெய்ப்பெரும் கலகம் தீர்த்தாய்!
வியன்திகழ் ஆமாத் தூரா!
பொய்ப்பெருக் கினர்செய் தீங்கால்
புவியழல் பொறுத்தற் பாற்றோ?
இப்பெரும் ததியில் சற்றும்
இரங்கிடா திருக்கின் றாயே! (6)
247. காவையும் வெறுத்துத் தேவர்
கணம்பயில் ஆமாத் தூரா!
ஆவையும் வதைக்கும் பொல்லார்க்கு
அரசளித் தவன்மற் றாரோ?
தேவைமுற் றடியார் எய்தத்
தினம்தினம் கொடுக்கும் பான்மை
யாவையும் மறந்திட் டாற்போன்று
இரங்கிடா திருக்கின் றாயே! (7)
248. பார்த்தன்உள் விழைந்த வாறே
பகழிஒன் றளித்தாய்! பம்பை
நீர்த்தடந் திரைசூழ் மாதை
நெடும்பதிக் கரசா நின்றாய்!
ஊர்த்தலம் தோறும் போய்ப்போய்
உழன்றுழன் றொல்கி னேனை
ஈர்த்தரும் தமிழ்த்தொண் டேற்றும்
இரங்கிடா திருக்கின் றாயே! (8)
249. வான்தட வியபொற் சென்னி
மதில்அணி மாதை யூரில்
ஆன்றவர் பலரும் போற்ற
அவிர்தரும் அபிரா மேசா!
மூன்றருள் மதப்பி ரானை
முருகனை முன்நாள் உன்னா
ஈன்றவள் பாகத் துற்றும்
இரங்கிடா திருக்கின் றாயே! (9)
250. சினக்குமால் விடைமீ தேறித்
தேவர்ஆ தியஈர் ஒன்பான்
கனக்குழாம் பரவ மாதைக்
கவின்தெருத் தொறும்போய் மீள்வாய்!
மனக்குறை தீர்த்து நால்வர்
வாழ்வுறப் புரிந்த நீதான்
எனக்கும்என் உறவி னோர்க்கும்
இரங்கிடா திருக்கின் றாயே! (10)
பண்: நட்ட ராகம்
(இப்பதிகம் பெரும்பாலும் சுந்தரரின் "நொந்தா ஒண்சுடரே " என்னும் தேவாரப்
பதிகத்தை (7-21) அடியொற்றுவதால் நட்டராகம் எனக் குறிக்கப்பெற்றது.)
251. அன்று விண்ணூரில் பசு ஆதி எலாம் தொழலால்
நன்று மிகுமாதைப் பதி நண்ணும் நாயகனே!
கன்றும் கொன்றுதின்றே மகிழ் கயவர் வேர்அறல்வேட்டு
இன்று நின்றுதிகூ றிடும் என்னை எள்ளேலே! (1)
252. ஆற்றுயர் பம்பைநன்னீர்த் திரு அமையும் மாதை உளாய்!
கூற்றுதைத் தன்றொருசேய் உயக் கொண்ட கொற்றவனே!
நீற்று முழுக்காடிப் புலை நீச ரைக்கறுவி
ஏற்று நெடுங்கொடிபோற் றிடும் என்னை எள்ளேலே! (2)
253. கழுத்தில் நஞ்சுடையாய் பலகாலி யும்தொழுதே
மழுத்த னைப்புரைகோ டுறும்மாதை யூர்ச்சிவனே!
வழுத்தி நின்அடியார் பத வாரி சத்துகள்பூண்டு
எழுத்தொர் ஐந்துநன்கோ திடும் என்னை எள்ளேலே! (3)
254. விண்ணில் வாழ்புலவோர் உடல் வெந்த வெண்பொடியே
மண்ணித் தாடவல்லாய்! திரு மாதை யூர்ச்சிவனே!
புண்ணி யம்செயலால் பெரும் புகழ்பெற் றுய்ந்திடவே!
எண்ணி எண்ணிநொந்தேங் கிடும் என்னை எள்ளேலே! (4)
255. அட்ட மூர்த்தியுமாய் எழில் ஆமா தைப்பதியில்
சிட்டர் போற்றிடும்ஓர் உருத் திகழக் கொண்டும் உ ளோய்!
கெட்ட லந்தவர்க்கும் பெரும் கேண்மையுற் றோர்க்கிடல்போன்று
இட்டளி கூர்வதுநா டிடும் என்னை எள்ளேலே! (5)
256. பன்ன கப்பெரும்பாய்த் துயில் பகவன் ஆதியர்க்கோர்
முன்ன வன்ஆம்மாதைப் பதி முளைத்த முக்கணனே!
பொன்ன தேபொருள்என் றெணும் பூரியர் புன்குடைக்கீழ்
இன்னல் உறாதுயநா டிடும் உன்னை இகழேலே! (6)
257. ஊழும் ஒருபொருள்அன் றென உன்னும் உண்மை உளார்
வாழும் மாதையில்ஓர் மர வன்னி நீழல் கொள்வாய்!
ஆழும் அறிவுடையார் அயன் அறைந்த நூல்வழிசொல்
ஏழு நெறிக்கணும்சார்ந் திடும் என்னை எள்ளேலே! (7)
258. ஆசகல் மாமுனிவோர் தொழும் ஆமா தைப்பதிவாழ்
ஈசன்எம் மான்எனப்போற் றுநர்க் கியாவும் ஈவானே!
வாசவன் குந்திதன்பால் பெறும் மகன்கை வில்அடிசொற்று
ஏசல்உள் ளான்எனவே வெறுத் தென்னை எள்ளேலே! (8)
259. ஆனை முகன்குகன்என் றிரண்டருமை மக்கள் நல்கோர்
மானையன் னாளுடனே எழில் மாதை யூர்வாழ்வாய்!
தேனைஒக் கும்சொல்நல்லார் மயல் தீங்குற் றெய்தாராம்
ஏனையர் வேடம்இட்டேன் என என்னை எள்ளேலே! (9)
260. கால்வலி மிக்குளதாம் பெரும் காளை ஒன்றிவர்வாய்
சேல்வளப் பம்பையின்பால் அவிர் திருந கர்ச்சிவனே!
நால்வர்முன் நாள்பெறும்சீர் பெற நாடி நைந்துளன்காண்!
ஏல்வை அறிந்துதவா திவண் என்னை எள்ளேலே! (10)
அறுசீர் விருத்தம்
261. என்இரண்டு கண்களினூ டொருசோதி
சிலகால்வந் தியங்கக் கண்டும்
முன்இரண்டு வினையும்நின்று போராடு
பெருங்கொடுமை மொழிதற் பாற்றோ?
மின்இரண்டு புரைபரவை சங்கிலிக்கோர்
தூதனும்ஆம் விமலா! வீறு
பன்னிரண்டு சமயத்தோர் களும்பரவும்
ஆமாதைப் பதிஉள் ளானே! (1)
262. சுந்தரன்சொற் கவிஇனித்த செவிகளுக்கு
வடலூரான் துதித்த பாடற்
செந்தமிழ்கைத் தமைகருதித் தியங்குறும் என்
றனக்கினிஎன் செய்வாய் கொல்லோ?
விந்தகிரி எனநீடி முகில்திரளால்
பொதிதருபல் மேடை தோறும்
பந்தணைந்த மெல்விரலார் பலர்ஆடும்
ஆமாதைப் பதிஉள் ளானே! (2)
263. நன்னெறியும் தீநெறியும் உணர்ந்துபிறர்க்கு
அறிவுறுத்தும் ஞானம் பெற்றும்
புன்னெறியில் சுழலும்எனை நின் அடியார்
குழுவினிடை புகஉய்ப் பாயோ?
வன்னெறிசார்ந் தோர்இகழும் மாமிசமும்
கள்அரக்கும் மகிழ்ந்துண் டாடும்
பன்னெறியோர்க் கெமன்போல்வார் பரவுபுகழ்
ஆமாதைப் பதிஉள் ளானே! (3)
264. நிற்பழிச்சும் பெருந்தொழும்பில் துணிந்தொழுகும்
சிலர்தாமும் நிலத்தோர் போற்றும்
பொற்பணமால் கொண்டுழலப் புரிகின்றாய்;
இதுவும்ஒரு புகழ்தான் கொல்லோ?
சற்பம்ஒக்கும் சாரணர்எண் ணாயிரர்க்கோர்
கூற்றானான் தமிழால் உய்ந்த
பற்பமொடக் கமும்புனைவார் பலர்விரும்பும்
ஆமாதைப் பதி உள் ளானே! (4)
265. வம்பைநனி வளர்க்கமுயல் அரக்கர்ஆ
யினும்கருதி வணங்கு வாரேல்
கொம்பையன்னா ளொடுவிடைமேல் குலவி, அருள்
பெருங்கருணைக் குணம்எங் குய்த்தாய்?
வெம்பைஅர வெனச்சீறிப் பவம்முழுதும்
அறமாற்றும் வென்றி குன்றாப்
பம்பைநதி யேஅகழி எனச்சூழும்
ஆமாதைப் பதிஉள் ளானே! (5)
266. சோற்றின்விருப் பமும்தணந்துன் திருவருளே
தஞ்சம்எனத் துணிந்துள் ளேனைக்
காற்றில்இவர் வான்கணையால் கண்கலங்கப்
படுத்துவதும் கருணை தானோ?
போற்றினர்க்கோர் எளியானே! புரம்எரிய
நகைத்தோனே! புலாலே உண்ணும்
பாற்றினம்சூழ் தருசூலப் படையானே!
ஆமாதைப் பதிஉள் ளானே! (6)
267. கங்கணக்கைச் சிவையொடொருக் கால்விளங்கி
நீறளித்த கருணைப் பண்பும்
அங்கண்நிலத் தினர்அறியத் துலங்காமை
நினைத்தயர்கை அறிகி லாயோ?
செங்கனற்கண் ஐந்தும்மற்றைத் திருக்கண்ஒரு
பத்தும்உடைச் சிவனே சீர்சால்
பங்கயத்தோன் தலைஓட்டில் பலிகவர்ந்தாய்!
ஆமாதைப் பதிஉள் ளானே! (7)
268. கற்கும்முது கலைப்புலவோர் களும்தவரும்
வாழ்வதெண்ணிக் கலங்கும் என்னைப்
பொற்குவைகாப் பவர்இகழா தஞ்சிவணங்
கிடுமாறு புரப்ப தென்றோ?
சற்குரவர் சிலரொடுமூ தாதையும்மாய்
வுறச்செகுப்பான் தவம்முன் செய்த
பற்குனற்கும் வாளிஒன்று பரிந்தளித்தாய்!
ஆமாதைப் பதிஉள் ளானே! (8)
269. சீலம்ஒரு சிறிதேனும் இலர்ஆகி
ஆன்இனமும் செகுத்துண் கின்றார்
காலன்எனத் திகழ்வானைக் காணின்அன்றி
மகிழாவன் கருத்தேன் ஈந்தாய்?
மாலயன்இந் திரன்முதலோர்க் கிகல்ஆய
தானவரை மாய்த்த வென்றிப்
பாலர்இரு வரைஉடையாய்! பழுதறும்சீர்
ஆமாதைப் பதி உள் ளானே! (9)
270. நால்வர்செயும் துதிஏற்று நல்அருள்செய்
துளநீஇந் நாளில் அன்னோர்
போல்வழிபா டியற்றொருவற் செய்தேனும்
புவிபுரக்கப் போகா தேயோ?
கோல்வளைக்கைக் கவுரி உறும் இடப்பாகா!
செழும்பவளக் குன்றின் மீது
பால்வழிந்தாங் கவிர்தருவெண் பொடியானே!
ஆமாதைப் பதிஉள் ளானே! (10)
அறுசீர் விருத்தம்
271. தெருள்வ ளம்பெறு பாவ லோர்பலர்
சிறிதும் நாணாமே
பொருள்வ ளம்கொளும் மூடர் வாசலில்
புகுதல் என்றொழிப்பாய்?
மருள்வ ளம்சொலி நிந்தித் தானையும்
வாழ்வித் திட்டாய்!மெய்
அருள்வ ளம்பெரு காமாத் தூர் அர
சாண்ட நாயகனே! (1)
272. வண்டர் புன்குடை நீழ லூடெனை
வாட விட்டுளநீ
தொண்டர் பற்பலர் சூழ்த ரும்புகழ்
தோய என்றருள்வாய்?
புண்ட ரீகனும் மாய னும்புரு
கூதன் ஆதியராம்
அண்ட ரும்தொழ ஆமாத் தூர்அர
சாண்ட நாயகனே! (2)
273. பித்தன் என்றிகழ்ந் தான்முன் நாள்பெறும்
பேற்றில் சற்றேனும்
பத்தர் எய்தஇந் நாள்நல் காதுறு
பாவம் ஏன்செய்கின்றாய்?
சுத்த நீற்றின்அ வாம லிந்தெரி
சுடலை யும்புகுந்தாடு
அத்த னே!அணி ஆமாத்தூர் அர -
சாண்ட நாயகனே! (3)
274. காதி உண்பவர் மீதெந் நேரமும்
கறுவு கின்றேனைச்
சோதி யாதணைத் தாளில் நின்அருள்
தோற்றம் குன்றிடுமோ?
மேதி ஊர்பவன் மாயச் செற்றொரு
விடலை யைப்புரந்தாள்
ஆதி யே! திரு ஆமாத் தூர்அர -
சாண்ட நாயகனே! (4)
275. காலை மாலையும் உச்சி யும்தொழும்
கருத்த ரார்க்கேனும்
மேலை வானவர் எய்த ரும்புகழ்
விரைவில் ஈந்தருள்வாய் -
வேலை நாணுறப் பலபல் வேள்சிலை
வென்றி கொன்றார்க்கும்
ஆலை தோய்பொழில் ஆமாத்தூர் அர
சாண்ட நாயகனே! (5)
276. நாறு நாண்மலர்க் கொன்றை நேர்கவி
நவின்று கைகூப்பும்
பேறு தந்தனை; உலகம் முற்றுணர்
பெருமை என்றருள்வாய்?
வீறு கங்கைமுன் னான தீர்த்தங்கள்
விரும்பு சீர்ப்பம்பை
ஆறு சூழ்தரும் ஆமாத் தூர்அர
சாண்ட நாயகனே! (6)
277. பாவி வேள்கணை வந்து வந்துரம்
பாய்தல் நீத்தனையேல்
ஓவி லாதுனை நாடி ஐந்தெழுத்து
ஓதி உய்ந்துகொள்வேன்
தேவி நாயக! தெய்வ நாயக!
செல்வி நாயகனுக்கு
ஆவி நாயக! ஆமாத் தூர்அர -
சாண்ட நாயகனே! (7)
278. பைம்பொன் னேமுத லாகும் ஏடணை
படுத்தும் பாழ்வினைபோய்ச்
செம்பொன் நாண்மலர் போலும் நின்பதம்
சிந்தித் துய்வதென்றோ?
வெம்பொன் னார்க்கெமன் ஆகும் வாழ்வுற
விசையற் கந்நாளில்
அம்பொன் றீந்தவ! ஆமாத் தூர்அர -
சாண்ட நாயகனே! (8)
279. கொன்று தின்றுழல் வோர்கள் யாவரும்
கொல்லா நல்விரதம்
துன்று மாறுழைக் கின்ற பண்பெனைத்
தோயச் செய்தவன்ஆர்?
நன்று செய்கண நாத னும்கையில்
ஞாங்கர் வைத்தானும்
அன்று போற்றிய ஆமாத் தூர்அர
சாண்ட நாயகனே! (9)
280. கமல நான்முகன் கைதொட் டின்னமும்
கருவில் சேராமே
விமல வீடருள் பேறு நால்வர்முன்
மேவச் செய்திலையோ?
தமல கோர்கில ராம்உ ருத்திரர்
தமக்கொர் வித்தாகும்
அமல னே! எழில் ஆமாத் தூர்அர -
சாண்ட நாயகனே! (10)
சந்தக்கலி விருத்தம்
281. ஆனோ டடல்குன்றா அயிரா வணம் ஏறித்
தேனோ டுறழ்சொற்சொல் சிவையோ டவிர்சிவன்ஊர்
ஊனோ டுயிர்பிரியா உயர்வாழ் வுறல் உன்னி
வானோர் குலம்நாளும் வரும்மா தையதாமே (1)
282. கொம்பைப் புணர்மார்பில் குலவென் பணிபூண்டு
வெம்பைப் பணிஇனமும் மேல்இட் டவன்வெஃகூர்
அம்பைப் பொருகண்ணார் ஆடும் துறைபலதோய்
பம்பைப் புனல்சூழ்ந்தே படர்மா தையதாமே. (2)
283. கடியார் மலர்க்கொன்றைக் கண்ணிச் சடைமுடிமேல்
வடியார் கதிர்வாள்போல் மதியம் புனைவான்ஊர்
பொடியார் திருமேனிப் பொலிவால் அவன்போலும்
அடியார் பலர்போற்றும் ஆமா தையதாமே. (3)
284. அங்கா ரகன்எழுநா அரிந்திட் டபின்மாமற்
சங்கா ரம்செய்தன்னோன் தலைஊட் டினன்தன் ஊர்
செங்கால் அனம்கூவும் தெள்நீர்த் தடம்பொய்கைக்
கொங்கார் மலர்ச்சோலைக் குளிர்மா தையதாமே. (4)
285. கண்ணீர் சொரிந்துருகிக் கவிசூட் டுநர்காணப்
பெண்ணீர் மையொர்பாகம் பிறங்கும் பெருமான்ஊர்
உண்ணீர் மையதாகி ஊழ்வெந் துயர்ஓட்டும்
தெண்ணீர்ப் புனற்பம்பைத் திருமா தையதாமே. (5)
286. செம்பூ ரம்உளாள்கோன் சிகைஆர் தலையோட்டில்
வெம்பூ தம்ஒன்றொடுபோய் வெண்சோ றிரப்பான்ஊர்
அம்பூத் தொறும் ஏறி அணியார் மணிஈன்று
கம்பூர் தருகழனிக் கவின்மா தையதாமே. (6)
287. ஆவா யிரம்கோடி அந்நாள் செயும்பூசைக்
கோவாய் அவைகோடு கொள்ளத் தருவான்ஊர்
நாவா ணிகள்பல்லோர் நன்கேத் தெடுத்தாலும்
மூவாப் பெரும்புகழ்ச்சீர் முதிர்மா தையதாமே. (7)
288. பிணைநேர் விழிமானார் பேசும் புகழ்ப்பேடி
கணைஒன் றுறநல்கும் கையார் செயும்காப்பூர்
திணைதோ றுளவாம்பல் செல்வங் களும்மல்கி
இணைதீர் அருட்சீரும் இயல்மா தையதாமே. (8)
289. கொம்பொன் றுடையானைக் குறிஞ்சிக் கிழவோனைப்
பைம்பொன் மயில்போல்வாள் பால்அன் றருள்வான்ஊர்
செம்பொன் உலகுருவிச் சென்றண் டம்அளாவும்
அம்பொன் மதிள்சூழும் அணிமா தையதாமே. (9)
290. சால்வண் புலமையினால் சகளக் கடவுளர் ஆம்
நால்வர்க் கருள்செய்தார் நடுவாழ் வுறுநல்ஊர்
மால்வந் தகிலத்தே மறுகும் தொறும்வளர்ஓர்
ஆல்வந் தருள்பெறுசீர் அவிர்மா தையதாமே. (10)
எழுசீர் வண்ண விருத்தம்
தானா தத்தன ........... தனதனா
291. மாபா ரத்துய ராலே இப்புவி
மாதோ லிட்டழல் ஒருவுசீர்
கோபா லத்திரு மால்போ லப்பெறு
கூறா ளத்தர நினைவையோ?
காபா லக்கர நாதா! சிற்பிர
காசா! சத்துவ குணதரா!
ஆபா சர்க்கரு ளானே! பொற்புறும்
ஆமா தைப்பதி அழகனே! (1)
292. மானோ டொத்தக ணார்மோ கக்கடல்
வாய்வீ ழச்செயல் ஒருவியே
யானோர் பத்தன்எ னாவா ழச்செயில்
யார்தாம் நிற்கறு வுவர்? சொலாய்;
தேனோ டட்டுள பால்சேர் தற்புரை
சீர்ஆர் முத்தமிழ் விழைவறாய்!
ஆனோ டுத்தம வானோர் முற்றொழும்
ஆமா தைப்பதி அழகனே! (2)
293. சோகா கப்பகர் தீயோர் முற்பெறு
சோர்வால் இப்படி மறுகினேன்
நீகா வற்செய லாமே? சத்திய
நீர்தோய் உத்தமர் இலர்கொலோ?
போகா திக்கம்உ ளார்மே னிப்பொடி
பூசார் வச்சிவ! பொருவில்பேர்
ஆகா யத்தினும் வாழ்வாய்! மிக்குயர்
ஆமா தைப்பதி அழகனே! (3)
294. வானா டுற்றமி னார்மால் பெற்றழல்
வாய்ஊன் இட்டுணும் அவர்கள்பால்
ஏனான் நித்தமும் வாதா டச்செயல்?
ஈடார் சித்துள படிநல்காய்;
கானார் புட்பம் எ லாம்ஆ ரத்திகழ்
காலால் அட்டெமன் உயிர்கொள்வாய்!
ஆனா மெய்ப்புகழ் தோய்வார் பத்திசெய்
ஆமா தைப்பதி அழகனே! (4)
295. மாலா கப்புவி யோர்கூ றப்பெறும்
வாழ்வே நத்தியும் வழுஇலா
நூலார் சொற்படி யேஏ கித்தவம்
நோலா மற்பிழை முயல்வனோ?
சேலார் கட்சிவை பாகா! வெற்புகழ்
சேஏ றித்திரி பவ! கெடா
ஆலா லக்குடி ஓவா மைக்கள!
ஆமா தைப்பதி அழகனே! (5)
296. சோறா சித்துழ லாஏண் உற்றுமெய்
சோரா முத்தமிழ் விரகன்நேர்
பேறா சித்துறை யால்ஆ சித்தும் ஒர்
பீடே யத்தரு கிலை; ஐயோ!
நீறா டித்திகழ் வானே! சற்சனர்
நேர்சே விற்செலும் நிருமலா!
ஆறா றுக்கும்அ தீதா! முற்படும்
ஆமா தைப்பதி அழகனே! (6)
297. ஏழா கப்பிர மாநூல் முற்பகர்
ஈடார் பக்குவம் முழுதுளார்
பாழா கிக்கெடு வாரேல் ஒற்றைகொள்
பாலார் முத்திஎய் திடல்மெயோ?
வீழா ருட்குல வானே! விப்பிர
வேடா! விட்டுணு விரகனே!
ஆழா ழிக்கிணை யாய்நீர் சுற்றிய
ஆமா தைப்பதி அழகனே! (7)
298. காரே றித்திரி கோமான் முற்றரு
கால்சா பத்தடி அடிகொளா
ஓரே விட்டருள் நீரே நித்தமும்
ஓதா நிற்கும்என் உரைஎளேல்;
சூரே முற்பகர் தீயோர் நத்துவ
தோலா திட்டரு ளவும்ஒல்காய்!
ஆரே யப்புனை கோடீ ரத்தர!
ஆமா தைப்பதி அழகனே! (8)
299. சேயே பெற்றிலன் ஆகாய்; நிற்புணர்
சீரார் சிற்புரை உபயசூல்
மேயே அத்தியை வேளோ டிட்டனள்;
வீணே எற்கொலும் நினைவுறேல் -
தீயே ஒத்தவிர் தேகா! சற்குரு
தேவா! பத்தரை அகல்கிலாய்!
ஆயேன் வெற்றிசை வீழ்வாய்! சித்துறும்
ஆமா தைப்பதி அழகனே! (9)
300. வாதா டிச்சமண் மேயா ரைச்செறு
மாயோ கச்சிசு முதல்எனா
ஓதா நிற்கும் ஒர் நால்ஊ கத்தவ
ரோடே எற்கிடம் அருள்வையோ?
மாதா முற்பகர் நாலா கித்திகழ்
வானே! மற்றிணை மருவிடா
ஆதா ரப்பொருள் ஆனாய்! நற்றலம்
ஆமா தைப்பதி அழகனே! (10)
அறுசீர் விருத்தம்
301. கொன்றையும் தும்பையும் திங்களும்
கங்கையும் கோள்அ ராவும்
மின்றயங் கும்சடை மீதணிந்
தான்; விடை மேற்கொள் பெம்மான்;
மன்றைஒர் நல்இட மாக்கொண்டன்று
ஆடினன்; மாயன் தெய்வம்;
அன்றையும் இன்றையும் என்றையும்
மாதையை ஆண்டு ளானே! (1)
302. பூமான் வாழ்உரத் தான்பல
கால்வந்து போற்றும் மூர்த்தி;
காமா யுதம்புரைக் கண்ணியர்
வளைகவர் கள்வன்; முன்நாள்
தேமாக் கச்சியில் சென்றிரு
பாவலர் செஞ்சொல் கொண்டோன்
ஆமாத் தூர்த்தல மேமுதல்
ஆகும்என் றாண்டு ளானே! (2)
303. சந்ததம் மெய்யடி யார்மகிழ்
சீர்செயும் தாணு; ஆறாச்
செந்தழல் அங்கையில் கொள்ளவல்
லான்; பெரும் சித்தர் கோமான்;
வெந்தவெண் ணீறினி தாடும் எம்
மான்; விடம் வேண்டி உண்டோன்
அந்தரத் தோர்புகழ் மாதையம்
பதியினை ஆண்டு ளானே! (3)
304. சிலைமதன் பொடிபடத் தீய்த்தகண்
ணான்; அருட் சீலம் நீங்கா
நிலையினர்க் கோர்பெரும் தாரக
மாநிகழ் நீல கண்டன்;
வலைஎறிந் தான்எனச் சொன்னவர்க்
கும்கதி வாய்ப்பச் செய்தோன்
அலைமலி பம்பைநன் னீர்த்திரு
மாதையை ஆண்டு ளானே! (4)
305. நிலமகள் காவலன் கண்புனை
தாளினன்; நீதி மாறாப்
புலவர்தம் கோன்என வேமுதல்
சங்கமும் புக்க அண்ணல்;
குலவுமுக் கண்உடை யார்பலர்க்கு
ஒர்இறை; குன்ற வில்லி
அலர்சொரி தண்பொழில் ஆமாத்
தூரினை ஆண்டு ளானே! (5)
306. காரண காரியம் முழுமையும்
ஆம்பரன்; கற்று ளார்தேர்
பூரணன்; புண்ணியன்; பூட்கைவன்
மாஉரி போர்த்த நாதன்;
நாரணன் நான்முகன் போர்கெடு
மாறொரு நடுவன் ஆனான் ;
ஆரணம் ஓலிடும் மாதையில்
கோயில்கொண் டாண்டு ளானே! (6)
307. வில்வமும் கொன்றையும் ஆத்தியும்
பூத்தொளிர் வேணி யூடே
வல்வழக் கிடத்தகு கங்கையைக்
கரந்ததொர் வள்ளல்; புள்ளாய்க்
கொல்வலிக் கோளரிச் சோரிஉண்டு
ஆடினன் குற்றம் நீங்கா
அல்வளர்ப் பார்அறி யாப்புகழ்
மாதையை ஆண்டு ளானே! (7)
308. பேடி அன் றடித்ததற் கார்வமுற்று
ஒருகணை பேணி ஈந்தோன்;
நாடினர் மொழிவழி பலவகைச்
சமயமும் நண்ண வைத்தோன்;
பாடிய மறைமுடிப் பாகிய
பண்ணவன் பைந்தண் கார்முன்
ஆடிய மயில்திரள் அகவிய
மாதையை ஆண்டு ளானே! (8)
309. பேரரு ளால்ஒரு பேதையைப்
பாதியில் பேணி வைத்துக்
கூரவெண் மருப்புடைக் குஞ்சர
முகவனைக் குகனை ஈன்றோன்;
போரறி யாமழுப் படையொடு
மான்புனை பொற்பு நீங்கான்
ஆரவண் பொழில்திரு ஆமா
தைப்பதி ஆண்டு ளானே! (9)
310. பொடியணி சீர்திகழ் புண்ணியன்;
நால்வர்முன் போற்றும் பாடற்
கடிகமழ் தாளினன்; கண்கொடு
காமனைக் காய்ந்த யோகி;
மடிவொடு பிறப்பும்இல் லாமுதல்
வானவன்; வஞ்ச நெஞ்சத்து
அடியர்சொல் லாத்திரு ஆமாத்
தூரினை ஆண்டு ளானே! (10)
வெண்டளைக் கலிப்பா
311. கார்ஆர்ந்த கண்டம் கருதினர்முன் நாள்அடைந்த
பேர்ஆர்ந் தடியேன் பிறங்கஎன்று பேணுவையோ?
நீர்ஆர்ந்த சென்னி நிமலா! நிறைபெருக்கச்
சீர்ஆர்ந்த பம்பைத் திருவாமாத் தூரானே! (1)
312. முத்தர் பெருமை முழுதும் உற வேட்டேனைப்
பத்தரொடும் கூட்டாமல் பாழாகச் செய்துவிடேல் -
செத்தவிண்ணோர் என்பணிந்து செங்கண்விடை மீதேறிச்
சித்தர்தொழ வாழ்வாய் திருவாமாத் தூரானே! (2)
313. என்னாசை முற்றுவதற் கேற்றதவம் செய்யாமல்
மின்னார் தருமயல்ஆம் வேலையில்வீழ்ந் தேன் எனைஆள்
கன்னார் உரிக்கும் கருணையாய்! கள்குடித்தூன்
தின்னார் பரவும் திருவாமாத் தூரானே! (3)
314. காதகர்தம் புன்குடைக்கீழ்க் கண்கலங்கு கின்றேனை
மாதவனே போன்று மகிழ்கூர வைப்பாயோ?
வேதனது சென்னிதரு வெண்தலையோட் டுண்டுவந்தாய்!
சீதமலி சோலைத் திருவாமாத் தூரானே! (4)
315. வெஞ்சரபப் புள்போலும் வீரம்மிகப் பெற்றிருந்தும்
குஞ்சரம்போல் வார்க்கொதுங்கும் கோதொழித்தென் றாண்டருள்வாய்?
நஞ்சயின்ற நம்பா! நமன்நடுங்கக் கொன்றெழுப்பும்
செஞ்சரணத் தப்பா! திருவாமாத் தூரானே! (5)
316. சூதாம் முலைமடவார் தோள்விரும்பிச் சோர்வுறும்நான்
பாதாளம் சேராப் பரகதிபெற் றுய்வேனோ?
வேதா கமப்பொதுச்சீர் விள்ளினும்கொள் ளாதிகழும்
தீதாளர் காணாத் திருவாமாத் தூரானே! (6)
317. பொங்கரவப் பூணும் புனைந்தாய்! என் புன்தலையில்
அங்கமலத் தாள்சூட்டி ஆளற் கிசையாயோ?
சிங்கம்ஒன்று கொன்றாய்! திரிபுரத்தார் சீர்அழிக்கும்
செங்கனக வில்ஆதி! திருவாமாத் தூரானே! (7)
318. சீர்த்தமிழால் போற்றெனக்குச் சென்னியில்வில் லால்அடித்த
பார்த்தனுக்கன் றீந்த பரிசேனும் நல்காயோ?
ஆர்த்தபுனல் பொய்கைஒன்றும் ஆறொன்றும் ஆதியவாம்
தீர்த்த மகிமைத் திருவாமாத் தூரானே! (8)
319. கொல்வ தொழியார் கொடுங்கோலால் குன்றாத
நல்வரம்ஒன் றேனும்ஒரு நாவலவற் கென்றருள்வாய்?
வில்வம்அணி வேதியனே! வேழமுகன் வேலன்எனும்
செல்வர்களைப் பெற்றாய்! திருவாமாத் தூரானே! (9)
320. பொற்றாளம் பெற்ற புனிதன்முதல் நால்வரைப் போன்று
உற்றாட வல்லான் ஒருவனைநான் பார்ப்பேனோ?
முற்றா முலைப்பாகா! முப்பகையும் நாசம்உறச்
செற்றார்க் கெளியாய்! திருவாமாத் தூரானே! (10)
எழுசீர்ச் சந்த விருத்தம்
321. அந்த ணாளனை ஆண்ட சீர்அகி
லத்த நேகர்சொல் கின்றதால்
இந்த வாதனை தீரும் வண்மைஎ
னக்கு நல்குதிர் என்னவே
செந்த மிழ்த்துதி பாடி னேன்; வந்து
சேவித்தேன்; புறம் பாக்கினீர்;
வந்த ணைந்திடக் கொண்மி னோ! திரு
மாதை மாநகர் வள்ளலே! (1)
322. என்றன் பாடலைக் கைப்பென் றோதிடில்
யாரும் ஏற்றுக் கொள் ளார்கள், மெய்;
தென்றல் மால்வரை நாதன் ஆதிய
சீலர் சாட்சிநும் தேரின்மேல்
மன்ற ஓதுவர் ஆத லால்எனுள்
வாஞ்சை ஈந்திட வேண்டும்; இவ்
வன்ற கைத்தொழில் கொண்ட தேன்? சொலும்
மாதை மாநகர் வள்ளலே! (2)
323. சுந்த ரன்கவிக் கீந்த காய்களில்
தோடொன் றீயவும் எண்ணிலீர்;
சொந்த நாவலர் வேட்கை ஈந்தருள்
தொன்மை நீர்மறந் தீர்கொலோ?
அந்த விக்கிர கங்கள் தாம்உமது
ஆணை இன்றிம றைந்தவோ?
வந்த னைத்தமிழ் கேட்கின் றீர்எழில்
மாதை மாநகர் வள்ளலே! (3)
324. பஞ்ச நோய்முழு தும்த விர்த்தருள்
பாலிப் பீர்எனப் பாடுவேற்கு
அஞ்சல் நல்கிமுன் நின்றி டாமல்அ
லைக்கழிப்பது ஞாயமோ?
தொஞ்ச நெஞ்சொடு மாதர் பால்முனம்
தூதும் போனதை யோசித்தால்
வஞ்ச கக்குணம் ஈதன் றோ? அருள்;
மாதை மாநகர் வள்ளலே! (4)
325. பாவ லார்க்கருள் செய்யும் நற்றகை
பாழ்த்த தேஎனில் பாடும்நல்
நாவ மைந்தவர்ச் சிட்டி யாவகை
நான்மு கற்கரு ளீர்கொலோ?
ஏவல் வேலைசெ யச்சொ லேன்; அதை
எண்ணி ஒல்கல்மின்; இடபமாம்
மாவ லீர்! மலை மங்கை யோடுறும்
மாதை மாநகர் வள்ளலே! (5)
326. பானல் நாள்மலர்க் கண்ணி மார்மிசை
பற்று ளார்க்கருள் செய்திடா
மானம் வைத்திருந் தீர்என் றால் இஙன்
மாத வத்தளர் வெய்திடேன்;
போன நாட்குணம் என்கை நும்மது
பூர ணத்தகைக் கேற்குமோ?
வான ளாவிய மாட மாளிகை
மாதை மாநகர் வள்ளலே! (6)
327. எண்ணி லார்க்கருள் செய்து ளீர்;எவ -
ரேனும் மானிடர் ஈனஊன்
நண்ணி உண்பது தீர்க்கு மாறு , ந -
யந்தி லார்; அது நான் கொண்டேன்;
புண்ணியப் பொருள் நீர்என் றால்பொருக்
கென்ற ருட்டிறம் பூட்டுவீர்
மண்ணில் உள்ளபல் ஊர்க்கும் தாய்நிகர்
மாதை மாநகர் வள்ளலே! (7)
328. பேடி யும்செயம் எய்து மாறுபி
றங்கும் வாளிஒன் றீந்தநீர்
கேடி யன்றப சுக்கள் வாழ்வுறக்
கெஞ்செ னக்கி ரங்கீர்கொலோ?
நாடி னார்எவர்க் கேனும் மெய்யருள்
நான்அ றிந்திட நல்கினும்
வாடி டாதவர்ப் போற்றி உய்குவன்;
மாதை மாநகர் வள்ளலே! (8)
329. ஆனை மாமுகன் தேற்றும் மாற்றமும்
அங்கை வேலன்சொல் யாவையும்
பூனை போல்பதுங் குற்ற வால்உமைப்
போற்ற வந்தமை பொய்அன்றே?
மோனை இன்றிய பாட லும்கொளும்
முன்னை நீர்மைஎங் குய்த்துளீர் ?
மானை அன்னவ ளோடி டம்கொளும்
மாதை மாநகர் வள்ளலே! (9)
330. நால்வர் தம்புகழ் குன்றி, ஈனர்பல்
நாக ரீகம்எய் தாதனோர்
போல்வ யங்கொரு வற்செ யாதுறப்
போகு மோ? பித்தம் பொங்கிற்றோ?
ஆல்வ யிற்குரு ஆகி னீர்!பல
அண்ட மும்பொடி ஆக்குவீர்!
மால்வ ணங்கிய தாள்உ ளீர்! எங்கள்
மாதை மாநகர் வள்ளலே! (10)
அறுசீர் விருத்தம்
331. இந்து சூடிய தலையின் மீது கொக் -
கிறகும் வைத்தவராய்ப்
பந்து நேர்முலை ஒன்றும் பாதியில்
பரிக்கும் பண்ணவர் ஊர்
முந்து சீயமும் புலியும் அஞ்சிட
முட்டும் கொம்புறுவான்
வந்து பற்பல பசுவும் முன்தொழும்
மாதை மாநகரே! (1)
332. அறுவ கைச்சம யத்தும் தம்அருள்
அமைந்த வாறுணர்வார்க்கு
இறுதி இன்றிய ஞானம் சித்திஒர்
எட்டொ டீபவர்ஊர்
குறுமு னிக்கும்மற் றனைய பற்பல
கோடி மாதவர்க்கும்
மறுவில் பேறருள் மாட்சி தங்கிய
மாதை மாநகரே! (2)
333. கார ணப்பொரு ளாகி, ஏனைய
காரி யங்களுமாய்,
நார ணற்கும்மற் றுள்ள தேவர்க்கும்
நன்மை செய்பவர் ஊர்
பூர ணப்பரத் துவம்உ ணர்ந்தவர்
புண்ப டச்செருக்கோர்
வார ணத்தைவெல் பதியின் மிக்குயர்
மாதை மாநகரே! (3)
334. குண்ட லம்புனை யாது காதினில்
குலவும் வால்வளைபூண்டு
அண்ட லர்ச்செகுத் திடந் கைத்தருள்
ஆண்ட நாயகர்ஊர்
விண்ட லத்தினர் தாமும் நாள்தொறும்
மேவிக் கைதொழலால்
மண்ட லச்சிவ லோக மாநிகழ்
மாதை மாநகரே! (4)
335. கஞ்சன் சென்னியில் பலிஇ ரந்துணும்
கார ணம்தெரிவார்
நெஞ்ச கத்தினுள் கனவி னும்திகழ்
நீல கண்டர்தம் ஊர்
அஞ்ச மும்சினைச் சங்க மும்பயின்று
ஆற்று நீர்வயற்பால்
மஞ்ச றாமலர்ச் சோலை சூழ்தரு
மாதை மாநகரே! (5)
336. நன்ன லம்பல உலகிற் குச்செய
நாடி நைவாரைப்
பன்ன கம்புரை வார்க்கொர் கூற்றெனப்
பண்ணி டும்பரன்ஊர்
பொன்ன வட்குரி யானை முத்தமிழ்ப்
புலவர் கோவினைநேர்
மன்ன ரும்தவர் தாமும் வந்துயும்
மாதை மாநகரே! (6)
337. சோகா டித்தொழச் சுடலை யிற்புகல்
சொல்லும் சில்லோர்க்கும்
ஆகா யத்தினில் கலக்கும் மெய்க்கதி
அளிக்கும் அம்மான்ஊர்
பாகா கச்சில மிருகச் சோரிகொள்
பதிதப் பண்பால்தாழ்
மாகா ளப்பெயர்ப் பேயும் அன்றுயும்
மாதை மாநகரே! (7)
338. பாய பன்மலைச் சிறக ரிந்தவன்
பழுதில் குந்திமென்தோள்
தோய வந்தவன் நிமித்தம் பன்றிபின்
தொடர்ந்து போனவன்ஊர்
தூய மெய்த்தவத் தொண்டர் தாள்மலர்த்
துகளை நம்பாராம்
மாய வஞ்சகர் கண்கள் காணரும்
மாதை மாநகரே! (8)
339. திக்க டங்கலும் கரங்க ளாகிடத்
திகம்ப ரப்பொருளாய்
முக்கண் காட்டிப்பின் இலிங்க மாம்என
முளைத்த மூர்த்திதன்ஊர்
செக்கர் நேர்எழில் சிந்து ரானனன்
திருக்கை வேலன்எனும்
மக்கள் இருவர் தாமும் போற்றிய
மாதை மாநகரே! (9)
340. கிளைக்கும் சாரணர் காலன் முற்படக்
கிளத்தும் நால்வர்தம்பால்
விளைக்கும் ஆடல்கள் எண்ணும் அன்பரை
விரும்பும் வேதியர் ஊர்
துளைக்கும் வண்டினம் நாண முரல்நறு
தூமுத் தம்சொரிவால்
வளைக்கு லம்செறி பம்பைத் தண்கரை
மாதை மாநகரே! (10)
அறுசீர் விருத்தம்
341. அழுது நெக்குரு கியவட லூரனை
அறையினுள் புகஉய்த்தாய்!
எழுது முத்தமிழ்க் கவிகளால் உனைத்துதித்து
இரந்திரந் திளைத்தேன்காண்
தழுவு சொற்சுவை தளைவண்ணம் முதலிய
தகவினில் சற்றேனும்
வழுவு றாப்புல வோர்பலர் போற்றிடும்
மாதைவாழ் பெருமானே! (1)
342. முந்து நாள்ஒரு முதலைவாய் மகப்பெற
முதிர்தமிழ் செயல்மெய்யேல்
நொந்து நைந்துபோற் றிசைக்கும் நான் இங்ஙனம்
நுடங்குதல் முறைதானோ?
இந்து லாவிய சடைமுடிப் பகவனே!
எழில்மிகும் மதன்தேராம்
வந்து வந்துலாம் பொழில்வளம் மலிதரு
மாதைவாழ் பெருமானே! (2)
343. வெகுவி தப்பெரும் பகைகளும் கடந்தருள்
விளக்கமும் சிறிதுற்றும்
முகுள பங்கயக் கொங்கைமங் கையர்தரு
மோகம்உற் றிடல்ஏனோ?
பகுபல் வாய்அராப் பணிகளும் பரித்தவிர்
பரமனே! பரமேட்டீ!
வகுள மாரனைப் பொடித்தழித் தளித்தவா!
மாதைவாழ் பெருமானே! (3)
344. அஞ்சல் என்றொருக் கால்விடைப் பரிமிசை
அவிர்ந்தனை யாமாகில்
கொஞ்சம் நெஞ்சினுள் மிஞ்சவந் தடைந்துள
கோதெலாம் குலையாவோ?
சஞ்ச லம்தவிர்த் தருள்; அமு தனையசீர்ச்
சங்கரா! தழல்ஏந்தீ!
வஞ்ச கர்க்கிரங் காதவா! வளம்பொலி
மாதைவாழ் பெருமானே! (4)
345. சட்ட நான்மறைத் தலைஉணர்ந் தோர்களும்
தாழ்பசுக் களைநாளும்
அட்ட ருந்துநர்க் கரசளித் துள அருள்
அழியும்நாள் உதியாதோ?
பட்ட வர்த்தனர் வாழ்விகழ்ந் திரந்துணும்
பக்குவர்க் கரசானாய்!
வட்ட வார்சடைப் பவளவெற் பெனத்திரு
மாதைவாழ் பெருமானே! (5)
346. அதுல சுந்தரக் கவுரியும் குகனும்நின்
அருகுற விடைமேற்கண்டு
எதுவும் நின்அருட் செயல்எனத் தெளிந்துளார்
இனத்தொடென் றமைவேனோ?
கதுமை சாலும்முத் தலைப்படை அணிந்தகைக்
கனற்கிரி அனையாய்! நல்
மதுர முத்தமிழ்க் கவிப்பெருக் கால்உயர்
மாதைவாழ் பெருமானே! (6)
347. பொன்ன வாஎனும் கடல்நடுக் கிடந்துழல்
புன்மைபோய்ப் புகழ்ந்தார்தம்
இன்னல் தீர்த்துவப் புறுபெருந் தகைஎனக்கு
இசைந்திட அருளாயோ?
கன்னல் வார்சிலை யார்பலர் எனத்திகழ்
கார்த்தவீ ரியன் ஆதி
மன்னர் கூற்றனைச் செயம்கொள்வான் பணிகொடு
மாதைவாழ் பெருமானே! (7)
348. இந்தி ரன்தரு புதல்வரில் ஒருவன்வில்
எடுத்தடித் ததும்ஏற்றாய்!
நந்தி வங்கிசம் முழுதுயத் துதிசெயும்
நறுந்தமிழ் இகழ்வாயோ?
அந்தி யும்கனற் பிழம்பொடு பவளமும்
அனையபேர் அழகெய்தி
வந்தி யாதவர் சிலரும்இன் புறச்செய்தே
மாதைவாழ் பெருமானே! (8)
349. இரும கார்இளைப் பாறிலர் என்னில்முன்
இவுளிமேல் வருசேரன்
பொருவு வான்ஒரு தொண்டனை யேனும்இப்
புவிஉய விடலாமே?
குருவும் தெய்வமும் மன்னனும் ஆதிய
கோலம்ஆ யிரம்கோடி
மருவு நாயக னே! இமை யார்தொழ
மாதைவாழ் பெருமானே! (9)
350. பாலை நேர்மொழிப் பரவைநா யகன்வரை
பகரும்நால் வரும்செய்த
வேலை யான்செயப் பணித்தனை; கூலிஏன்
விரைந்தருள் கிலை? சொல்லாய்;
ஓலை வன்கையர்க் கொருபெருந் தலைவனை
உதைத்தொர்வே தியற்காத்தாய்!
மாலை வண்டமிழ் தொடுப்பவர்க் கெளியனா
மாதைவாழ் பெருமானே! (10)
எண்சீர் விருத்தம்
351. ஆத்தி கொன்றை தும்பை சூடி
அழகன் என்றோர் பேரும் கொண்டு
நாத்தி கர்க்கே கூற்றன் அன்னார்
நண்ணும் மாதை நகரில் வாழ்வாய்!
சேத்தி ரள்கொன் றுண்ணும் பொல்லார்
சீர்அழிக்கச் சிந்தித் துன்னை
ஏத்தி ஏத்தித் துயர்மிக் குற்றேன்
என்னை ஆளில் இழிவு றாதே! (1)
352. சங்க மாய குழைஅ ணிந்து
தவள நீறு முழுதும் பூசிச்
செங்க னற்கண் விடையில் ஏறிச்
சீர்கொள் மாதைத் தெருவில் நேர்வாய்!
பங்க யத்தோன் முதலி னோரைப்
பரிந்த தன்றிப் பாவப் பேய்க்கும்
இங்க ருட்செய் துள்ள நீதான்
என்னை ஆளில் இழிவு றாதே! (2)
353. தேன ளாவும் மலர்கள் இட்ட
சென்னி மீதில் அறுகும் வைத்து
மானம் இல்லார் போன்றி ரந்து
மாதை யூரில் வாழும் வள்ளால்!
ஆன னந்தம் கொன்று தின்றார்த்து
அகில மங்கை அழவ ருத்தும்
ஈனர் தம்மைக் கறுவு கின்றேன்
என்னை ஆளில் இழிவு றாதே! (3)
354. கொழுத்த ஆமை முதுகின் மீதோர்
குன்றை நட்டுக் கோள்அ ராவால்
இழுத்த நாளில் கடலின் நஞ்சுண்டு
இறந்தி டாவாழ் வெய்தும் எந்தாய்!
வழுத்தி னார்பற் பலர்முன் உய்ந்த
மாதை யூரில் வந்துன் அன்பால்
எழுத்தொர் ஐந்தும் சொல்லி எய்த்தேன்
என்னை ஆளில் இழிவு றாதே! (4)
355. கன்னல் வில்லான் தன்னை நீற்றிக்
கருணை யால்பின் உய்யச் செய்து
மன்னர் மன்னர்க் கிறைவர் போற்றும்
மாதை யூரில் வருபி ரானே!
நின்ன தான சொருப சித்தி
நேரின் அன்றி மகிழ மாட்டேன்;
இன்னம் வம்பில் சோதிப் பானேன்?
என்னை ஆளில் இழிவு றாதே! (5)
356. கடக ரித்தோல் போர்வை இட்டுக்
காய்பு லித்தோல் ஆடை சாத்தி
மடவ ரற்கோர் பாதி நல்கி
மாதை யின்கண் வாழ்ம யேசா!
திடம திற்றீ எழந கைத்த
தன்மை யாதி சாற்று கின்றேன்
இடபம் ஒன்றில் ஏறி வந்தின்று
என்னை ஆளில் இழிவு றாதே! (6)
357. பச்சை மங்கை பாகம் வைகப்
பால்வி டைக்கண் ஏறி நேரும்
செச்சை மேனிச் சிவபி ரானே!
சீர்கொள் மாதைத் தேவ தேவே!
பிச்சை உண்டு நீற்றின் மூழ்கும்
பெருமை பெற்றும் பிழைசெய் வேன்மீது
இச்சை யுற்றே வரவ ழைத்தாய்!
என்னை ஆளில் இழிவு றாதே! (7)
358. மகர வேலை முரசு ளானே
மானும் மைந்தன் வரிவில் ஒன்றால்
சிகர மீது மொத்தல் நாளும்
செப்பும் என்னைத் தெரிகி லாயோ?
புகழ்கொள் மாதைப் பதியில் வந்தும்
புல்லர் தம்மால் புலர லாமோ?
இகமும் வானும் பரவும் ஈசா!
என்னை ஆளில் இழிவு றாதே! (8)
359. ஆனை யாய தலைகொள் சேயை
அளித்த தன்றி அழல்கொள் கண்ணால்
வானை யன்னாள் வருந்த மற்றோர்
மகவும் ஈன்றாய்! வஞ்சியாதே;
மானை ஏந்தும் கைகொள் குன்றின்
மாதை யூரில் வாழ்ந்து ளானே!
ஏனை யோருக் கஞ்சு றாமே
என்னை ஆளில் இழிவு றாதே! (9)
360. ஆரியத்தில் துதிசெய் வார்க்கும்
அருந்த மிழ்ப்பாட் டறைகு வார்க்கும்
மாரி என்னக் கருணை பெய்யும்
வண்மை குன்றா மாதை யூரா!
பாரில் உள்ளார் தெய்வம் என்னப்
பலபல் ஆடல் பயின்றுய்ந் தோராம்
ஈரி ரண்டு தொண்டர் தம்மோடு
என்னை ஆளில் இழிவு றாதே! (10)
கொச்சகக் கலிப்பா
361. பொருவாவன் குணத்தவுணர் போல்வார்முற் றறநீற்றிப்
பெருவானத் தோர்அனையார் பீடுபெறச் செய்வானோ?
மருவார்மென் மலர்க்கூந்தல் மலைமடந்தை மகிழ்கூர்நம்
திருவாமாத் தூர்ப்பரமன் தேர்ஊரக் கண்டோமே! (1)
362. வெங்கண்அரக் கரைஅனையார் வேரோடு கெடமாய்த்திட்டு
எங்கள்குலத் தோர்பலரும் ஈடுபெறச் செய்வானோ?
அங்கமல வாவிமலி ஆமாத்தூர் அம்மான்ஒர்
செங்கனகச் சிலைஏந்தித் தேர்ஊரக் கண்டோமே! (2)
363. பாவம்மிகச் செய்கின்றோர் பலர்தாமும் அறமாய்த்துச்
சீவகரு ணையிற்பெரியோர் சீர்பொருந்தச் செய்வானோ?
மூவல்இல்ஆ மாத்தூரின் முதலாய முக்கண்ணான்
சேவணிக்கே தனம்தோய்பொற் றேர்ஊரக் கண்டோமே! (3)
364. அள்ளிவெண்ணீ றணியாதார் அகம்முழுதும் அறஒழித்திட்டு
உள்ளிவணங் கிடும் அடியார் உவகைமிகச் செய்வானோ?
கள்ளியல்பூங் கொன்றையினான் கவின்ஆமாத் தூர்த்தெருவில்
தெள்ளியநான் மறைஈர்க்கும் தேர்ஊரக் கண்டோமே! (4)
365. வசைஉரைக்கும் தீக்குணத்தோர் மதம்முழுதும் அறமாற்றி
இசைவிளக்கும் மெய்யடியார் இன்பம்உறச் செய்வானோ?
நசைபெருக்கும் ஆமாத்தூர் நடுக்குலவும் நம்பன்இன்று
திசைமுகத்தோன் நடத்துபெரும் தேர்ஊரக் கண்டோமே! (5)
366. போர்உஞற்றும் இகலோர்தாம் புரத்தாரில் பொடியவென்று
நார்உடையார் அனைவோரும் நலம்பொருந்தச் செய்வானோ?
ஏர்உலவா ஆமாத்தூர் இறைவன்தான் இருசுடரும்
சீர்உருளை ஆயபெரும் தேர்ஊரக் கண்டோமே! (6)
367, மண்கதறத் தீங்கிழைப்பார் மரபொடுமாய் வுறத்தாக்கி
ஒண்கருணைப் பொலிவுடையார் உவகைஉறச் செய்வானோ?
தண்கழனி ஆமாத்தூர்த் தலைவன்ஒரு தாரகம்ஆம்
திண்கசையால் இயங்குமணித் தேர்ஊரக் கண்டோமே! (7)
368. மாட்டுதிரத் தொடுதசையும் மகிழ்ந்தருந்து வார்ச்செகுத்து
வீட்டுயர்ச்சி உணர்ந்துள்ளார் மிகமகிழச் செய்வானோ?
பாட்டுமலி ஆமாத்தூர்ப் பரன்பேடி படைகொடருள்
தீட்டுகணை ஒன்றேந்தித் தேர்ஊரக் கண்டோமே! (8)
369. கோயில்நலம் கருதாராம் கொடுங்கோலார் தமைநீற்றிக்
காயிகம்ஆ தியமுயல்வார் களிகூரச் செய்வானோ?
மாயிரும்சீர் மன்னியஆ மாத்தூர்ச் சிவன்வலிசால்
சேயிரண்டு பெற்றும்தான் தேர்ஊரக் கண்டோமே! (9)
370. கால்வலிய பகடூரும் காலன்அன்னார் தமைக்காய்ந்து
நால்வர்அனை யார்மகிழும் நலம்பெரிது செய்வானோ?
ஆல்வயின்சற் குருஆகி அசைவறவீற் றிருந்தபிரான்
சேல்வனநீர் ஆமாத்தூர்த் தேர்ஊரக் கண்டோமே! (10)
அறுசீர் விருத்தம்
371. கசைபி டித்தோர் விடையில் ஏறிக்
கவுரி யோடும்போய்த்
திசையில் உள்ள ஊர்தோ றேற்கும்
திருவா மாத்தூரா!
நசைவி ளைத்துப் பகைவர் ஆனார்
நாளும் நிந்திக்கும்
வசைஒழிக்க நாடும் என்னை
வம்பில் கொல்லேலே! (1)
372. அந்திப் பொழுதும் பகலும் சோம்பாது
அஞ்சக் கரம்ஓதிச்
சிந்திக் கின்றார்க் கெளியன் ஆகும்
திருவா மாத்தூரா!
நந்திப் பெருமான் மரபு வாழும்
நலமே மிகநாடி
வந்தித் துனையே கெஞ்சும் என்னை
வம்பில் கொல்லேலே! (2)
373. ஈடில் சீவ கருணைப் பண்பால்
ஏற்றம் பெற்றோரைத்
தேடிப் போய்ப்போய் ஆட்கொண் டருளும்
திருவா மாத்தூரா!
கோடி குற்றம் செய்வார் குடையில்
குலையா வாழ்வுறுவான்
வாடி வாடித் தவிக்கும் என்னை
வம்பில் கொல்லேலே! (3)
374. அஞ்ச னக்கண் மின்னார் வலையில்
அகப்பட் டார்சிலர்க்கும்
செஞ்ச ரணங்கள் சூட்ட நாணாத்
திருவா மாத்தூரா!
குஞ்ச ரம்போல் ஆண்மை மீறக்
கொண்டுள் ளேன்எனினும்
வஞ்சம் ஒன்றும் அறியேன் என்னை
வம்பில் கொல்லேலே! (4)
375. கண்ட கோலந் தன்னை நாளும்
கருதி அன்போடும்
தெண்ட னிட்டார் வேட்கை நல்கும்
திருவா மாத்தூரா!
புண்ட ரீகன் கையில் இன்னம்
புகுதா வாழ்வுறுவான்
வண்ட மிழ்ப்போற் றிசைக்கும் என்னை
வம்பில் கொல்லேலே! (5)
376. பானல் ஆம்பல் கமலம் பூக்கும்
பணையின் பக்கம்எலாம்
தேன ளாவும் சோலை நீடும்
திருவா மாத்தூரா!
ஆன னந்தம் கொன்று தின்றும்
அவர்கைக் கீழ்ப்படலால்
மானம் மிஞ்சித் தளரும் என்னை
வம்பில் கொல்லேலே! (6)
377. அகிலம் முற்றும் நன்மை எய்தற்கு
ஆசைப் பட்டோர்தாம்
திகில்உ றாமல் காவல் செய்யும்
திருவா மாத்தூரா!
முகில்நிறத்து மாயன் தானோ
முருகன் தானோஎன்
மகிமை தோய நாடும் என்னை
வம்பில் கொல்லேலே! (7)
378. ஆயி ரங்கண் ணானைச் சேர்ந்தோர்
அரிவை அன்றீனும்
சேயி னுக்கோர் வாளி நல்கும்
திருமா மாத்தூரா!
காயி கத்தும் மான தத்தும்
கடைப்பட் டுற்றாலும்
வாயி கத்தில் சீர்த்த என்னை
வம்பில் கொல்லேலே! (8)
379. அந்த ணர்க்குள் முதல்வன் ஆகி
அன்னத் தூர்வானும்
செந்த கைப்புட் கோனும் போற்றும்
திருவா மாத்தூரா!
தந்தம் ஒன்றுள் ளானை வேலன்
தன்னை முதலாச்சொல்
மைந்தர் தம்மில் சேரா தென்னை
வம்பில் கொல்லேலே! (9)
380. ஆலம் அன்ன சார ணர்ச்செற்
றவனே முதலாய
சீலர் நால்வர் தாமும் போற்றும்
திருவா மாத்தூரா!
காலன் என்னும் கண்ணார் தம்மைக்
கண்டால் அஞ்சாமல்
மால டைவேன் எனினும் என்னை
வம்பில் கொல்லேலே! (10)
கலி விருத்தம்
381. ஆதவனும் சந்திரனும் அக்கினியும் கண்ஆம்
நாதன்எனத் தேறுநர்க்கே நலம்அருள்வான் நல்லூர்
காதகராம் தானவரைக் கறுவுதலில் சோராச்
சீதரன்ஆ தியர்போற்றும் திருவாமாத் தூரே! (1)
382. அந்தரத்தோர் என்புமுழு தரவினத்தோ டணிந்தும்
பைந்தகைய பார்ப்பதிதோள் பரிந்தணைவான் பற்றூர்
விந்தவெற்பை நிலத்தமிழ்த்தும் மேலவன்மா தவமாம்
செந்தமிழ்ச்சீர் நனிஓங்கும் திருவாமாத் தூரே! (2)
383. பத்தர்பதத் துகள்சூடும் பக்குவத்தோர்க் கெல்லாம்
உத்தமச்சற் குருஆகும் ஒருபெருமான் உறும்ஊர்
சத்தசுரச் சுருதிமொழி தலைமைஉணர்ந் துய்ந்த
சித்தர்எலாம் வந்துதொழும் திருவாமாத் தூரே! (3)
384. காமுகரே ஆனாலும் கவிகொடுபோற் றுவரேல்
சாமுன்உயற் காயபெருந் தகைஅருள்வார் தம்ஊர்
கோமுழுதும் வழிபடும்நாள் குவலயத்தில் வந்து
சேமுகப்பண் ணவன் இறைஞ்சும் திருவாமாத் தூரே! (4)
385. மானுடன்ஒண் மழுஅணிந்து மழவிடைமேல் தோன்றிப்
பானுமுத லினர்க்கருளும் பரமன்உறும் பழஊர்
வானுலகோர் பலர்க்கும் ஒரு மாதாவே போலும்
தேனுவழி பாடுசெயும் திருவாமாத் தூரே! (5)
386. நாரணனும் நான்முகனும் நம்குலதே வென்னும்
காரணன்ஓர் லிங்கமதாக் கவின்தரும்சீர் காட்டூர்
பூரம்இவர் வாள்போலும் புலவர்பகர் பாடல்
சீரறியும் பம்பைநதித் திருவாமாத் தூரே! (6)
387. அம்புயன்றன் தலைஓட்டில் அமுதிரந்துண் டாலும்
நம்புமவர் விரும்புபயன் நல்கவல்லான் தன்ஊர்
கொம்புறும்வல் வேழம்நுகர் கோளரிகட் கொல்லும்
சிம்புள்அனை யார்பரவும் திருவாமாத் தூரே! (7)
388. நசையறுவேட் டுவனேபோல் நாய்த்திரளோ டேகி
விசையனுக்கோர் வாளிஅநாள் விரைந்தளித்தோன் மேவூர்
குசையினரும் தொழுதிறைஞ்சும் கோஇனம்கோ டுறலால்
திசைமுழுதும் அறிந்தபுகழ்த் திருவாமாத் தூரே! (8)
389. கற்றறிந்தோர் குலம்போற்றும் கணபதியைக் குகனை
முற்றறிபேர் அருளாற்செய் முன்னவன்றன் மூதூர்
மற்றறியா தெந்நாளும் மாழைபெற முயலும்
சிற்றறிஞர் வந்தமையாத் திருவாமாத் தூரே! (9)
390. சம்பந்தன் முதலாய தமிழ்ப்புலவர் நால்வர்
தம்பந்தம் தீர்ந்துயும்சீர் தந்தளித்தார் தங்கூர்
அம்பந்த கண்ணியர்கோன் ஆதியபொல் லார்தம்
தெம்பந்தம் செய்வார்சூழ் திருவாமாத் தூரே! (10)
வண்ணக் கொச்சகக் கலிப்பா
தானதன தானதனா தானதன தானதனா
391. காசதனை யேபுகழ்வார் காதல்கொடு வாடுறும்நான்
நீசர்குடை யால்அயரா நேர்மைஉறு மாறருள்வாய்
பூசல்விழை ஏறிவர்வாய்! பூதகண நாயகனே!
மாசறுத யாநிதியே! மாதைநகர் வாழ்சிவனே! (1)
392. ஏதம்ஒரு கோடிசெய்வே னேனும்உனை நான்மறவேன்:
ஆதரவி லாதவர்போல் ஆயஇக ழாதருள்வாய்;
சீதமதி நீர்புனைவாய்! தேவர்குல சேகரனே!
மாதவர்கு ழாம்அகலா மாதைநகர் வாழ்சிவனே! (2)
393. காரணம்எ னாஉனதோர் கான்முளைசொ னான்அதனால்,
நாரணனில் வாழின்அலால் நான்மகிழ்வு றேன்;அறிவாய்.
பூரண!ச தாசிவ!மா போத!கரு ணாகரனே!
மாரணம்இ லாமுதல்வா! மாதைநகர் வாழ்சிவனே! (3)
394. கானமறை நூல்முடிவே காசிலதெ னாஉணராது
ஈனநெறி போம்அவர்தாம் ஏசல்அறு பேறருள்வாய்
தானமலி மாஉரியாய்! சாபம்என மேருஉளாய்!
வானவர்தம் ஊர்விழையார் மாதைநகர் வாழ்சிவனே! (4)
395. பாசமலி வார்எனவே பாவபல மேவிழைவேன்
ஏசறும்உ னாதடியார் ஈடுபெறும் நாள்உளதோ?
நாசம் இல்ம யேசுரனே! நாரிஅமர் பாகம்உளாய்!
வாசம்மலி சோலைகுலாம் மாதைநகர் வாழ்சிவனே! (5)
396. ஆறிருவர் தாமும்வெவே றாமொழியும் ஓர்பொருள்நீ!
ஊறில்அநு பூதியினால் ஓகைபெறு மாறருள்வாய் -
மீறியசு பாவம்உளாய்! மீன்எழுது கேதனை நேர்
மாறிநடம் ஆடியவா! மாதைநகர் வாழ்சிவனே! (6)
397. தேரலர்கள் வாழ்வெனும்மா தீயின்எதிர் ஓர்புழுவே
நேரமெலி வேன்நுவல்பா நீ அணியொ ணாதனவோ?
கோரவடி வார்பலபேய் கூடநடம் ஆடஒல்காய்!
மாரனைமு னாள்அடுவாய்! மாதைநகர் வாழ்சிவனே! (7)
398. கேடியல்பொல் லார்பலர்வாய் கேலிசொல லால்மெலிவேன்
நீடிசைம காரதர்தாழ் நீர்மைஉறல் ஆர்செயலோ?
பேடிஅடி யால்மகிழ்வாய்! பீதிஅறி யாமுதல்வா!
மாடிவர்ப ராபரனே! மாதைநகர் வாழ்சிவனே! (8)
399. ஆனைமுக னோடயில்வேள் ஆகும்இரு சேய்உடையாள்
ஏனைஅடி யார்உயுமா றேதும்மொழி யாதவளோ?
தானைஅத ளாஅணிவாய்! சாவுபவ நோய் அறியாய்!
மானைமழு வோடுகொள்வாய்! மாதைநகர் வாழ்சிவனே! (9)
400. நாவலவர் ஏறனையர் நால்வர்கவி மாலைகொள்நீ
ஆவலெனும் வாரியுளேன் ஆசுகவி வீழ்கலையோ?
காவலரி பால்அருள்வாய்! காளைஅயி ராவணம்ஆம்
மாவலவ னே! திருவார் மாதைநகர் வாழ்சிவனே! (10)
எண்சீர் ஆசிரிய விருத்தம்
401. முந்தஉ தித்தசொல் மாறிமற் றொன்றே
மொய்ம்பொடு தோன்றவும் மோசம்செய் கின்றீர்!
இந்தவி சித்திரம் கண்டும்என் ஆசை
என்சொந்த மேஎன ஏற்றுக்கொள் வேனோ?
கந்தம தத்தயி ராவணம் ஊர்வீர்!
காமனைச் சுட்டக னற்கண்ஒன் றுள்ளீர்!
மைந்தரும் வானவ ரும்கலந் தாடும்
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (1)
402. பாரறி யப்பல சித்தும்செய் தோய்ந்தே
பரகதி எய்திடப் பரிதவிக் கின்றேன்;
ஆரணம் ஆயசி லம்பணி நாற்கால்
அடல்விடை மீதுவந் தாண்டுகொள் ளீரோ?
தேரகல் பார்எனக் கொண்டும்அன் றூர்ந்தீர்!
சித்தர்எல் லாம்தொழும் தெய்வமும் ஆனீர்!
வாரணம் ஒன்றைச்செ குத்ததள் கொண்டீர்!
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (2)
403. அன்னியர் போரினுக் கஞ்சும்ஒர் வீரன்
அடங்கினர்க் கின்னல்அ நேகம்செய் தாற்போல்
என்னிடத் தாணைசெ லுத்திவெண் நீறே
இட்டிலர் பால்பொறை ஏன்செய்கின் றீரோ?
கன்னியொர் பால்இருப் பக்களிக் கின்றீர்!
காலனை அன்றொரு கால்கொடு செற்றீர்!
வன்னியிட் டுப்புரம் மூன்றும்எ ரித்தீர்!
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (3)
404. பாகுறழ் சொற்கவி பற்பல சொல்வேன்
பைம்பொன்அ வாவினும் பாழ்பட லாமோ?
யோகுமு யன்றறி யாதவன் தொண்டன்
உற்றஅந் நாள்தயை உன்னிநொந் தேன்காண்;
வேகும்அ ழற்பொறி யும்கையில் கொண்டீர்!
வேள்வியில் சீரியர் வெட்குறச் செய்தீர்!
மாகுணம் எட்டுடை யான்என நின்றீர்!
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (4)
405. பஞ்சம தால்உல கம்படும் பாடும்
பாவமன் ஆணைப ரந்தடும் தீங்கும்
நஞ்சமொக் கும்கண்மின் னார்செய்பொல் லாங்கும்
நாடிநொந் தேற்கொரு நன்மைசெய் யீரோ?
கஞ்சன்ந டுத்தலை யில்பலி கொண்டீர்!
கைக்குறி காட்டிக்கல் லால்அடி உற்றீர்!
வஞ்சக நெஞ்சுடை யார்க்கிரங் கார்ஆம்
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (5)
406. வீறுசொற் சாரம்நன் கோர்வட லூரான்
வெற்றறை யிற்புகல் மேதினி முற்றும்
கூறுவ தால்உம தாம்இசைப் பேரும்
குன்றிய தோர்ந்துகொ தித்துளன்; ஆள்வீர்;
நீறுடல் முற்றும்அ ணிந்தவிர் வாரே!
நெற்றியின் கண்ணில்நெ ருப்புடை யீரே!
மாறுப டாஎழுத் தைந்துரு வாயே
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (6)
407. பாழிம தக்களி றூர்மக வானும்
பக்கல்உற் றார்களும் பார்த்துளம் நாண
ஆழிவ ளைந்தபு வித்தலை நும்பேர்
அன்பினர் கூடிஅ விர்ந்திடல் என்றோ?
வீழிஇ தழ்க்கனி மோகினி தோள்சேர்
வென்றிசொல் வார்க்கருள் மெத்தவும் செய்வீர்!
வாழிஎன் றேத்தவல் லார்க்கெளி யாராம்
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (7)
408. ஆளியும் சீயமும் அஞ்சுறும் எண்கால்
ஆர்தரு புள்உறழ் ஆண்மைஉற் றேனைத்
தேளினும் தீயர்க ருங்குடைக் கீழே
சிந்தைநொந் தஞ்சுறச் செய்குவ தேனோ?
மீளியர் ஆயஅ நேகரைக் கொல்வான்
மெய்த்தவம் செய்துறும் வில்விசை யற்கோர்
வாளிஅ ளிப்பவல் வேடமிட் டோர்ஆம்
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (8)
409. முக்கண்இ லாதஉ ருத்திரர் போல்வார்
மொய்த்திட மத்தியில் முத்தமிழ்க் காரே
ஒக்கஒ ருத்தன்உ லாவிடக் காணாது
ஊன்விடு மாறெனை யும்கொல வேண்டாம்
திக்கடங் கப்புகழ் வாரிபெ ருக்கித்
தீயவர் வேர்அறச் செற்றிட என்றே
மக்கள் இருவரைப் பெற்றுவிட் டோர்ஆம்
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (9)
410. ஐந்துமு கம்கொளும் நீர்உமைப் போற்றைந்து
அக்கரம் சொல்பவர் ஐவர்என் றாக்காது
இந்துறழ் வெண்பொடி காத்தவன் முன்னாம்
ஈர்இரு பேர்எனற் கேன்மகிழ்ந் துற்றீர்?
நந்துல வும்செவி பத்துடை யாரே!
நாரியர் இன்புற நாணம்விட் டோரே!
வந்ததென் றல்பசும் தேர்புகும் சோலை
மாதைவ ளம்பதி வாழ்சிவ னாரே! (10)
அறுசீர் விருத்தம்
411. மாத்தடங் கிரிநேர் கொங்கை
மாயமோ கினியால் ஈன்ற
சாத்தன்ஆ தியர்சூழ் காவல்
தனித்திரு ஆமாத் தூரா!
பூத்தலைச் சேவல் ஏந்தும்
புதல்வன்ஒத் தொளிர்வான் உன்னை
ஏத்தலில் துணிந்துள் ளேனை
இன்னமும் சோதி யேலே! (1)
412. முக்குணங் களைக்கொண் டந்நாள்
மூவரைச் சிருட்டித் தப்பால்
அக்கும்வெண் ணீறும் பூண்டார்
அகத்துல வாமாத் தூரா!
கொக்குறழ் குறிப்புள் ளேனுள்
கூடிநின் றாடி டாமல்
இக்குவில் வேளை ஏவி
இன்னமும் சோதி யேலே! (2)
413. வளைத்தடங் கரத்து மாயன்
வருந்தொறும் அருள்செய் வானே!
முளைத்ததோர் இலிங்கத் துற்றாய்!
முதுபுகழ் ஆமாத் தூரா!
களைத்தகைப் புலையர் புன்கைக்
கருங்குடைக் கொடும்நீ ழற்குள்
இளைத்தனன் கண்டாய் என்னை
இன்னமும் சோதி யேலே! (3)
414. காவளம் பொலிபொன் னூரைக்
கருக்கவே முயல்கின் றார்க்கும்
ஆவல்ஒத் தருள்செய் வானே!
அணிமலி ஆமாத் தூரா!
தீவளர் கரத்தா னா, முன்
திகழ்ந்துநீ தேற்றி ஏவும்
ஏவலில் தொழில்செய் வேனை
இன்னமும் சோதி யேலே! (4)
415. வெண்ணில வெனநீ றாடி
விடைப்பரி யதன்மேல் ஏறிப்
புண்ணியர் போற்றச் சூழ்வாய்!
புகழ்த்திரு ஆமாத் தூரா!
பண்ணிய பயிரை மூடும்
பலகளை அனையார்க் கோறல்
எண்ணிநெட் டுயிர்க்கின் றேனை
இன்னமும் சோதி யேலே! (5)
416. கனியொடு மலரும் பெய்யும்
கடிநறைக் கால்சூழ் சோலைத்
தொனிதரு பறவை ஆர்வம்
தோய்திரு ஆமாத் தூரா!
மனிதரில் கடைப்பட் டேனை
வலிதிழுத் தூடச் செய்தும்
இனியசொற் கவிகேட் கின்றாய்!
இன்னமும் சோதி யேலே! (6)
417. ஆழும்மூ தறிஞர் பூந்தாள்
அணைந்துகும் மகரம் சூடல்
வீழும்என் றனைஆட் கொண்டாய்!
வியன்திரு ஆமாத் தூரா!
பாழும்என் றூழ்முன் னாகப்
பகரும்ஆ றுருவும் ஆய
ஏழும்நின் றனவாத் தேர்ந்தேன்;
இன்னமும் சோதி யேலே! (7)
418 அகழ்கடல் விடம்உண் டின்புற்று
அமுதுணும் அவர்சாம் தோறும்
திகழ்எலும் படலை கொள்ளும்
சீர்பெறும் ஆமாத் தூரா!
நிகழ்சமர்க் களத்தோர் பேடி
நிகழ்த்துசொல் கருதிப் பல்கால்
இகழ்பெரு வீரத் தென்னை
இன்னமும் சோதி யேலே! (8)
419. தருமமும் சரதம் தானும்
தாழவே முயல்வார் தம்மேல்
வருமம்மிக் குள்ளார் போற்றி
மகிழ்திரு ஆமாத் தூரா!
பொருதுவல் அவுணர் பல்லோர்
பொன்றிடக் காண்பான் அந்நாள்
இருமகர்ப் பெரும்நீ என்னை
இன்னமும் சோதி யேலே! (9)
420. கோல்வளைக் கவுரி யோடும்
குகனொடும் விடைமேற் கொண்டே
ஓல்வளத் தெருக்கள் தோறும்
உலாவரும் ஆமாத் தூரா!
நால்வர்தம் பேறே நாடி
நறுந்தமிழ் பொழிகின் றேனை
ஏல்வைகண் டருள்செய் யான்போன்று
இன்னமும் சோதி யேலே! (10)
எழுசீர் விருத்தம்
421. வேலுடைக் கடவு ளாயநின் மகன்போல்
விளங்குமாண் பருள்என வேண்டும்
மாலுறக் கொடுத்தாய்; பயன்இல்சொல் ஆகா -
வாறருள் புரிவதற் கிரங்காய் -
வாலுடுத் திரளும் மதியமும் குலவும்
வார்சடைப் பவளவெற் பனையாய்!
சேலுறழ் கருங்கண் உமைமண வாளா!
திருவளர் மாதைஆ திபனே! (1)
422. முன்னைநாள் அணுப்போன் றேனும்நீ றணியா
முகம்கொள்சாக் கியனையும் புரந்தாய்;
உன்னைஒத் துடல்முற் றணிகுவார் தமக்கும்
ஒருசிறி தேன்இநாள் இரங்காய்?
பொன்னைநன் மணியை அணிகுவார் பலர்முன்
பொறிஅர வெலும்பொடு புனைந்தாய்!
தென்னையும் கமுகும் பலவொடு மாவும்
செறிபொழில் மாதைஆ திபனே! (2)
423. பாவம்ஆ யிரம்செய் திடும்கொடி யவரே
படிமுழு தாண்டுறப் பார்க்கும்
ஆவல்என் றொழிவாய்? அருள்நெறிச் சமயத்
தவர்எலாம் ஆர்வம்என் றடைவார்?
நாவலந் தீவில் நரர்எலாம் காண
நளிர்மலி பம்பைநீர் ஆடித்
தேவரும் முனிவோர் தாமும்நன் கிறைஞ்சத்
திகழ்தரும் மாதைஆ திபனே! (3)
424. சுந்தரன் வினவும் படிவெணெய் நல்லூர்த்
தொல்பெரும் கோயிலில் சொன்னது
எந்தநா ளினும்மெய் ஆகும்என் றெண்ணி
இயற்றமிழ் பொழிந்துளேற் கிரங்காய்
மந்தரக் கிரியைச் சூழ்தரு பாம்பின்
வாய்உமிழ் விடமும்உண் டுவந்தாய்!
சிந்தனை செய்வார்க் கருள்செயச் சலியாய்!
செயம்பொலி மாதைஆ திபனே! (4)
425. சத்தநூல் திரளின் முடிவிதென் றுணராச்
சழக்கர்தம் வழக்கினால் தளரேன்
இத்தரை மகள்கோ எனஅழும் தொனிகேட்டு
இரங்குதல் உணர்ந்திலாய் கொல்லோ?
பத்தரில் ஒருவன் மொழிவழி ஆரூர்ப்
பரவைபால் பலதரம் சென்றாய்!
சித்தர்பற் பலர்க்கும் ஒர்அர சரனாய்!
சீர்மலி மாதைஆ திபனே! (5)
426. பத்திர கிரிமுன் வளர்த்ததோர் நாயும்
பரிந்தநு பவித்தன வாய
சித்திமுத் திகளில் சிறிதெனக் களித்தால்
திருவருட் சீர்குறைந் திடுமோ?
சத்திபற் பலவற் றினுக்கும்ஒர் பொதுவாத்
தழைத்தவிர் சங்கரா! தகைசால்
சித்திர கூடம் தொறும்மினார் நடிக்கும்
சிறப்புறும் மாதைஆ திபனே! (6)
427. ஆணுடன் பெண்ணும் அலியும்நீ எனவே
அருமறை யாதிநூல் அறைந்தும்
வாணுதற் கவுரி பாகன்என் றேத்தி
வழிபடும் பிழைபொறுத் தருள்வாய் -
தாணுஎன் றுரைத்தார் தம்மையும் புரந்தாய்!
தமநியத் தரைஉடைத் தாய
சேணுல கினரும் கண்டுகண் டொல்கத்
திகழ்வள மாதைஆ திபனே! (7)
428. துங்கவல் வீரர் பலர்ச்செறும் கூற்றாத்
துலங்கும்வாழ் வன்றொரு பேடிக்கு
அங்கணை ஒன்றால் அளித்தனை; தமியேன்
அறைதுதிக் கியாதும்நல் காயோ?
சங்கணி தருகா தொருபதுள் ளானே!
தவளநீ றாடிடச் சலியாய்!
செங்கரும் புடையாற் பொடித்தபின் அளித்தாய்!
செழிப்பறா மாதைஆ திபனே! (8)
429. இந்துசூ டியவார் சடைமுதற் பகர்சீர்
இராக்கதர் சிலரும்முன் கண்டார்;
நொந்து போற் றிசைக்கும் தமியனேற் கருட்கண்
நோக்கம்ஆ யினும்சிறி தருளாய்
பைந்துழாய் முடிப்பார் பலர்விழி கமழும்
பாதபங் கயம்உடைப் பரமா!
சிந்துரா னனனும் குகனும்ஆம் இரண்டு
சேய்உளாய் மாதைஆ திபனே! (9)
430. வெந்தவெள் ளென்போர் மெல்லியல் ஆக
விதித்தவன் முதலிய நால்வர்க்கு
அந்தநாள் அளித்த வாழ்விநாள் ஒருவன்
அடையுமா றருள்புரிந் தாள்வாய்
கந்தவார் குழல்முத் தாம்பிகை பாகா!
கால்இலார் கண்இலார் கழறும்
செந்தமிழ்ச் சுவையும் அறிதரு பம்பைத்
தெளிபுனல் மாதைஆ திபனே! (10)
கலிவிருத்தம்
431. அண்டர்தம் வாழ்வையும் அருவ ருக்கும்மெய்த்
தொண்டரோ டெனைப்புவி சொல்லச் செய்வையோ?
புண்டரீ கக்கண்மால் போற்றும் புங்கவா!
வண்டறாப் பொழில்மலி மாதைத் தெய்வமே! (1)
432. இளம்பரு வத்தினேன் இசைக்கும் இன்தமிழ்
களம்படு நஞ்சினும் கசப்ப தாகுமோ!
தளம்படு ஆம்பல்அம் தடம்முன் னாயபல்
வளம்பழுத் திலகிய மாதைத் தெய்வமே! (2)
433. செங்கண்அச் சுதன்எனச் சீர்செய் மன்னவன்
இங்கவிர் நாளையில் எனைச்செய் தில்லையே?
சங்கணி காதுடைத் தவளச் சங்கரா!
மங்களம் பலதிகழ் மாதைத் தெய்வமே! (3)
434. தீதொருங் கியற்றுநர் திடுக்கம் எய்திட
மோதொரு வீரனை முன்னல் பாவமோ?
காதொரு பத்துடைக் கனற்குன் றே!கவின்
மாதொரு பாதியாய்! மாதைத் தெய்வமே! (4)
435. நஞ்சம்உண் டுவந்தநீ நான்சொல் பாடலில்
கொஞ்சமா யினும்கொளில் குறைவந் தெய்துமோ?
செஞ்சரோ ருகப்புனல் செறுவின் மாடெலாம்
மஞ்சள்இஞ் சியும்குலாம் மாதைத் தெய்வமே! (5)
436. ஆரணப் பொருள்முடி வறிகி லாஎனை
நாரணற் புரைபதம் நண்ண உய்ப்பதேன்?
தோரணத் தெருத்தொறும் துதிக்கை நீர்சொரி
வாரணத் திரள்உலாம் மாதைத் தெய்வமே! (6)
437. அம்பவிர் கண்ணியர் ஆசை யால்வரும்
கம்பலை முழுமையும் களைந்தென் றாட்கொள்வாய்?
எம்பரம் நும்பரம் என்று போர்பொரும்
வம்பர்வந் தமைவுறா மாதைத் தெய்வமே! (7)
438. விசையன்ஓர் கணைபெறும் வீறு கூறும்நான்
திசைமுழு தறியவாழ் திறம்செய் வாய்கொலோ?
கசைபிடித் துமையொடு காளை மேற்கொள்வாய்!
வசைஅறுப் பவர்தொழும் மாதைத் தெய்வமே! (8)
439. அக்கரம் அறிகிலா ஆனும் உய்வுறச்
செக்கரில் திகழ்ந்தநீ சிறிய னேற்கொலேல்
முக்கண்வல் வேழமும் முருக வேளும்ஆம்
மக்களைப் பயந்துளாய்! மாதைத் தெய்வமே! (9)
440. தேன்குலா வியதமிழ்ச் செல்வர் நால்வர்போன்று
யான்குலா விடச்செயில் இளப்பம் ஆகுமோ?
ஊன்குலா வியமழு ஒன்றோ டொண்பொறி
மான்குலா வியகையாய்! மாதைத் தெய்வமே! (10)
எண்சீர் விருத்தம்
441. விலங்கனையார் இறுமாப்புக் கண்டு கண்டு
மிகமெலிந்துன் அருட்செயலே விரும்பி நொந்தேன்;
பலங்கொள்இலங் கேசனைச்செற் றானுக் கீந்த
பாக்கியத்தில் சிறிதளித்தால் பாவம் கொல்லோ?
அலங்கிருதக் கவுரிமண வாளா! வேளை
அழற்கண்ணால் அழித்திரதி யளவில் ஈந்தாய்?
இலங்குபுகழ் மலிஆமாத் தூர்ப்பி ரானே!
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (1)
442. சமயம்ஒன்றை நம்பி, மற்றுள் ளவற்றை எல்லாம்
சற்றேனும் மதியாதார் தமக்கும் முன்நாள்
அமையஅவ்வா றிவ்வளவில் அருள்செய் தாண்டாய்;
அட்டமூர்த் தியும்விழைவேன் அழியக் கொல்லேல்;
சிமையவிற்கைப் பெருமானே! ஆமாத் தூரில்
திருக்கோயில் கொண்டமரும் சிவனே! சீர்சால்
இமயமக ளொடும்குமர வேள்தன் னோடும்
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (2)
443. கவ்வுபுலை வாய்ஞமலி அனைய பொல்லார்
களிக்கடல்கண் டுள்ளம்மிகக் கலங்கும் என்னை
இவ்வுலகம் முழுதறியத் தடுத்தாட் கொண்டால்
இளப்பமோ? எறும்பையும் முன் ஏற்றாய் அன்றோ?
நவ்வுமுத லாம்எழுத்தோர் ஐந்து ளானே!
நளிர்திருவா மாத்தூரின் நடுவே நின்றாய்!
எவ்வுயிரும் உண்டுமிழ்ந்த மாய னேஆம்
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (3)
444. பாரில் இந்நாள் ஒருதவசி யேனும் செஞ்சொல்
பாவலனா யினும்நின் அருட்பலிதம் இன்றிச்
சீரியமேம் பாடனைத்தும் இழந்தன் னோர்தம்
திருக்கூட்டம் முழுதும்நைதல் தீர்க்கை வேட்டேன்;
நாரிஒரு பால்இருப்பக் களிகூர் வானே!
நகைஒன்றால் புரம்மூன்றும் நசியச் செற்றாய்!
ஈரிருமா மறைமுழங்கும் ஆமாத் தூரா!
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (4)
445. கந்தமலர்க் குழல்மடவார் ஆசைப் பேயும்
கனகம்எனக் குலவும்ஒரு கடும்பி சாசும்
இந்தநிலத் திச்சைஎன்வே தாளம் தானும்
எனைச்சூழ்ந்து வருத்துதலால் இளைத்தேன்; அந்தோ!
சந்தனக்குன் றாளும்முனி முதல்ஏழ் வர்க்கும்
தணப்பரிய பதம்உதவும் தலைவா! என்றும்
எந்தநல மும்பொருந்தும் ஆமாத் தூரா!
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (5)
446. கூற்றனைச்செற் றதினும்,மதன் தன்னைக் காய்ந்து
கொன்றதினும், பிரமனது குடுமிச் சென்னி
ஆற்றல்மலி கலமாக்கொண் டதினும் நாயேன்
அருவினைவேர் அறக்களைவ ததிகம் ஆமோ?
மாற்றரிய பெருங்கருணைக் கடல்உள் ளானே!
வழுத்துமவர் மனம்தோறும் வயங்கச் சோம்பாய்!
ஏற்றம்மிகப் பெறுதிருவா மாத்தூர் அப்பா!
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (6)
447. குன்றேஒப் பாயகனத் தினர்பல் லோரைக்
கொலவேண்டித் தவம்செயினும் கொடுப்ப துன்பண்பு
என்றேயா வரும்உரைப்பக் கேட்டேன்: கற்றா
இறைச்சியும்உண் பார்குடைக்கீழ் இறக்கச் செய்யேல்
பொன்றேடிப் புதைப்பாருக் கிரங்கா தானே!
புகழ்த்திருவா மாத்தூர்வாழ் புனித மூர்த்தீ?
இன்றேஇக் கணமேநின் உமைதன் னோடும்
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (7)
448. விசையனுக்கன் றொருகணை ஈந் ததுமெய் ஆனால்
வேற்படையும் மயிற்பரியும் விரைந்தெற் கீந்து
திசையில்உளார் அனைவரும்ஊன் அருந்தார் ஆகச்
செயல்காண்பாய் எனப்பெரிதும் சிந்திக் கின்றேன்;
குசைஉறுகைப் பனவர்மலி ஆமாத் தூரா!
கோமுழுதும் கோடுபெறக் கொடுத்தன் றாண்டாய்!
இசைமதுரக் கவிகள் இன்னம் பலவாச் சொல்வேன்;
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (8)
449. புக்கொளியூர்க் குளத்திடங்கர் உண்ட பிள்ளை
புவிஅறிய மீண்டுவரப் புரிந்த துண்டேல்
திக்கொருங்கோர் தரத்தவம்செய் திறந்த சில்லோர்
திரும்பிவரக் கருதல்ஒரு தீதா காதே?
கைக்கொள்கொம்பொன் றுடையானைக் குகனைப் பெற்றாய்!
கவின்திருவா மாத்தூர்வாழ் கருணைக் குன்றே!
இக்கொளிர்கை யானைஎரித் தப்பால் செய்தாய்!
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (9)
450. அந்நாள்நீ ஆண்டுகொண்ட நால்வர் தம்மில்
ஆரேனும் உனதருட்பே றடையா முன்னே
இந்நாளை வடலூரான் தனைப்போன் றியார்க்கும்
இதம்செயல்வேட் டருந்தமிழ்ப்பாட் டிசைத்த துண்டோ?
முந்நான்கு நெறியோரும் தொழும்ஆ மாத்தூர்
முதல்வா!என் றனையும்வம்பில் மோசம் செய்யேல்;
எந்நாளும் எப்பொழுதும் நினைக்குந் தோறும்
இடபவா கனத்தில்வந்தென் இடர்தீர்ப் பாயே! (10)
கலி விருத்தம்
451. அறுவ ருக்கும் ஒருபொது வாய நான்
சிறுமை எய்தித் தியங்கிட லாகுமோ?
குறுமு னிக்கருள் வாழ்வருள் கொற்றவா!
மறுவில் மாதை வளம்பதி வள்ளலே! (1)
452. அயங்கொல் வார்களும் ஆக்கொல்பொல் லார்களும்
தியங்க வெல்லும் திறம்தர வல்லையோ?
கயங்கொள் ஆயிரம் கண்ணர்கண் டொல்குசீர்
வயங்கும் மாதை வளம்பதி வள்ளலே! (2)
453. ஆறி ரண்டு நெறியும்நின் ஆடலாத்
தேறி டும்படிச் செய்ததும் பொய்கொலோ?
ஈறில் சீர்மலி வெய்தலின் எங்கணும்
மாறில் மாதை வளம்பதி வள்ளலே! (3)
454. குருவும் தெய்வமும் நீஎனக் கொண்டநான்
தெருவு தோறும் திகைப்பது ஞாயமோ?
அருவு மாய்உரு ஆயவ னே!அருள்
மருவு மாதை வளம்பதி வள்ளலே! (4)
455. என்னு ளத்தொர் விடையில்வந் திட்டநீ
முன்னும் வந்திடின் மோசம்உண் டாகுமோ?
பொன்னும் செந்தமிழ்ப் பொங்கமும் போதமும்
மன்னும் மாதை வளம்பதி வள்ளலே! (5)
456. ஆசி கூறும்நின் அன்பருக் கன்பிலார்
பாசி நெஞ்சில் பதம்பதிப் பாய்கொலோ?
தேசி கர்க்கொரு தேசிகன் என்றுளாய்!
மாசில் மாதை வளம்பதி வள்ளலே! (6)
457. ஊழும் நின்அரு ளால்ஒதுங் கும்திறம்
ஆழும் மெய்யுணர் வார்அறி யார்களோ?
தாழும் அன்பரைத் தாழும் தகவுளார்
வாழும் மாதை வளம்பதி வள்ளலே! (7)
458. பேடி கட்குள் பெரியவன் பெற்றுய்வான்
ஈடில் வாளி அளித்தபண் பெங்குய்த்தாய்?
கேடில் மாதவத் தோர்பெருங் கீர்த்திஆர்
வாடி மாதை வளம்பதி வள்ளலே! (8)
459. ஓவு றாநின் மகர்இரு வோரும் என்
பாவு வந்து பகர்ந்தசொல் பொய்க்குமோ?
காவுள் வானரம் கற்பகச் சோலைமேல்
வாவு மாதை வளம்பதி வள்ளலே! (9)
460. ஊழ்த்தொ டர்ச்சிஇல் நால்வர்சொல் ஓர்ந்தநீ
காழ்த்த நெஞ்சின்என் சொற்களைக் கைப்பையோ?
பாழ்த்தி றக்கும் பதிதர்அல் லார்எலாம்
வாழ்த்தும் மாதை வளம்பதி வள்ளலே! (10)
எண்சீர் விருத்தம்
461. பொய்யைமெய்யாச் சொல்பவர்கை மேலாகக் கண்டு
பொறுக்கரிய துன்பம் உற்றுப் புண்ணாகி நொந்தேன்;
மெய்யைமெய்யாச் செய்வதற்காம் திறம்கொடுக்கொண் ணாதோ?
வேலவன்சொல் மெய்யானால் விரும்பி உன்னைக் கேளேன்
மையைவென்ற நீலவிழிக் கவுரிமண வாளா!
மாதைநகர்க் கோயிலிடை வாழும்இறை யோனே!
அய்யய்யோ! இரங்காதார் போன்றிருந்தா யே!நின்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (1)
462. மான்வசிக்கும் இடக்கரத்தாய்! மழுவலக்கைக் கொண்டாய்!
மாதைநகர்க் கோயில்நடு மன்னுபெரு மானே!
ஏன்வணங்கு வார்க்கருள்செய் கின்றகுணம் முற்றும்
இழந்தான்போல் திகழ்கின்றாய்? இதுஉனக்காம் தகவோ?
கோன்வழக்கம் தவறியதால் புவிஅழும்பேர் ஓசைக்
கொடுமைஎஙன் சகித்துளையோ? கொன்றுதின்பார் தம்மால்
ஆன்வருந்தும் அநியாயம் தவிர்ப்பதுவேட் டுளன்; நின்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (2)
463. நஞ்சிருந்த களத்தானே! நான்முகத்தோன் தானும்
நாரணனும் பொரும்நாளில் நடுமலையாய் நின்றாய்!
வஞ்சிஉருப் பாதியினில் காட்டவும்வல் லானே!
வளம்பெருகும் மாதைநகர் வாய்வசிக்கும் வள்ளால்!
கொஞ்சிநின்பால் விளையாடும் ஆசையுற்றோர் இந்நாள்
குலைகுலைந்து படும்துயரம் கூறிமுடி யாவே!
அஞ்சிகிப்புள் ஊர்ந்துலகைச் சூழலும்வேட் டுளன்; நின்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (3)
464. தோத்திரம்செய் தார்விருப்பம் முழுதளித்தாய் என்றே
தொடுகடற்பார் உலகமுற்றும் சொலும்புகழ்ச்சீர் தோய்ந்தாய்!
நாத்திகர்அல் லார்பலரும் விரும்புபொதுப் பொருளாய்
நறைகமழ்பூம் பொழில்மாதை நகர்நடுவே நின்றாய்!
சேத்திரளும் பசுத்திரளும் கொல்வதன்றிப் பசும்புல்
தினஅறியாக் கன்றினமும் செகுப்பவர்சீர் அழித்தற்கு
ஆத்திரம்உற் றுனைஅடைந்தேன் தாமதியா தே;நின்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (4)
465. மஞ்சடர்தண் பொழிற்காழிச் சம்பந்தன் தானும்
வாரணா சியில்செலவும் அலைந்தகதை கேட்டும்
நெஞ்சகத்திவ் வுலகமுழு தொருநொடியில் சூழும்
நினைவுற்றேன்; அதற்கேற்ற நிசத்தவம்செய் கில்லேன்;
செஞ்சகள மூர்த்தியும்நிட் களப்பொருளும் தானாத்
திருவாமாத் தூர்த்தலத்தில் தினம்வசிக்கும் தேவே!
அஞ்சல்என நீவிடைமேல் எதிர்வரக்கண் டோராம்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (5)
466. கூறுவமுற் றுன்வடிவே என்றுணர்ந்து கொண்டும்
கோக்கொலைசெய் வார்க்கறுவும் கோரம்ஒழி கில்லேன்;
நாறுமலர்ப் பிரமன்விதி எனத்தழல்முன் ஆட்டூன்
நயந்தருந்து வார்மீது நனிபகைத்துள் ளேன்காண்;
ஏறுகைக்கும் பெருமானே! எழில்திருவா மாத்தூர்
இடத்தில்ஒரு மடக்கொடியோ டென்றும்உறை வானே!
ஆறுபுனை சடையில்மதிப் பிளவும்அணிந் தாய்! நின்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (6)
467. வடலூரான் வாதவூர் அடிகள்மறை சுமந்தான்
வளவனூ ரான்முதல்ஆம் மாதவர்பற் பலரைக்
கடல்சூழும் உலகினர்முன் காட்டும்வலி இன்றேல்
கதிதரினும் கொள்ளேன்; இக் கருத்தெனக்கேன் அளித்தாய்!
மடல்வாழைத் தேன்அருந்தும் வானரம்பாய் சோலை
வளம்குலவும் ஆமாத்தூர் வாழ்வனையாய்! வன்கோட்டு
அடல்வேழத் துடன்விடைஊர் அழகா! நின் அருள்சேர்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (7)
468. மருச்செறிகற் பகச்சோலைக் கிறைவன்முத லோர்தம்
வாழ்வினையும் மதியாத வண்மைஉறப் பெற்றும்
விருச்சிகம்போல் வார்சிலரை வேட்டுமனம் வாட
விடுத்துள்ளாய்; இனிப்பிறவா வீடும்விழை கின்றேன்;
திருச்சரணங் களில்ஒன்றால் எமன்உயிர்உண் டளித்தாய்!
சீர்மலியும் ஆமாத்தூர்ச் சித்த! பெரு மானே!
அருச்சுனனை வழுதியைப்போன் றுனை அடித்துய்ந் தோராம்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (8)
469. பூனைஎன வேபதுங்கிப் புலிஎனவே பாயும்
பொல்லார்தம் கொடுமைஇன்னம் பொறுக்கென்னால் முடியாது
ஏனையபண் பினன்எனப்பார் உலகிகழக் கொல்லேல்;
இத்தனைநாள் கடத்தியதுன் இயல்பினுக்காம் தகவோ?
மானைஅனை யார்தொடரச் சென்றிரந்தும் ஒவ்வோர்
மகவளித்தாய் ஆமாதை வளநகர்க்கோ மானே!
ஆனைமுகன் குகன்எனும்நின் மக்களையே போலும்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (9)
470. கருந்தடங்கட் கவுரிமுத லோரையும்நீத் தந்நாள்
கமலமல ரோன்புதல்வர் கதிபெறக்கல் லாற்கீழ்
இருந்தகதை ஆதியஎத் தனைகவியில் சொன்னேன்!
இன்னமும்நின் திருவுள்ளம் இரங்காமை முறையோ?
குருந்தைநிழற் பால்இருப்பக் கண்டரையன் றனக்காக்
குதிரைகொளக் கொடுபோம்பொன் கொடுத்தடைந்தோன் முதலாம்
அருந்தமிழ்ப்பா வலர்நால்வர் முதலினராம் நின்மெய்
அடியார்மேல் ஆணைஎன்னை ஆளாக்கொண் டருளே! (10)
சந்தக் கலித்துறை
471. அந்திப் பிறையைச் சென்னியில் வைத்தாய்! ஆமாத்தூர்ச்
சிந்திப் பாருக் காவன செய்யும் திறல்குன்றாய்!
வெந்திட் டுக்கூற் றேவல்செய் வோர்தாம் வெகுபேர்முன்
வந்திட் டாலும் நின்அருள் ஆசை மறவேனே! (1)
472. தேனோ பாலோ என்றுரை பேசும் சிவைபாகா!
வேனோங் காமாத் தூர்நடு என்றும் மேயானே!
ஊனோர் ஊணா வேள்வியில் ஈந்தால் உணநாணா
வானோர்க் கெய்தா நின்னருள் ஆசை மறவேனே! (2)
473. எல்லாம் ஆகி யாதினும் மேவா இயல்புற்றாய்!
நல்லா மாத்தூர்க் கோயிலுள் வாழும் நசைநீங்காய்!
கொல்லா நோன்பே மேல்என ஓர்ந்து கொண்டாற்ற
வல்லார் கொள்ளும் நின்அருள் ஆசை மறவேனே! (3)
474. சேயன் தான்என் றெண்ணில்பல் நூலும் தினம்ஓத
ஆயன் போற்றா மாத்தூர்க் கோயில் அமர்வானே
காயம் தானே நாம்என எண்ணிக் கடையாம்இம்
மாயம் தீர்க்கும் நின்அருள் ஆசை மறவேனே! (4)
475. கஞ்சத் திரளும் நீலமும் மன்னும் கழனிப்பால்
அஞ்சத் தொனிசால் ஆமாத் தூர்வாழ் அம்மானே!
நஞ்சத் தினைஒத் துக்குளிர் காட்டி நலிசெய்யும்
வஞ்சர்க் காகா நின்அருள் ஆசை மறவேனே! (5)
476. நீறொன் றேஇட் டுன்திரு நாமம் நினையார்க்கும்
பேறொன் றீவாய்! ஆமாத் தூரில் பெருமானே!
ஏறொன் றேபோல் வரைகொடி எண்ணார்க் கிடியாவான்
மாறொன் றில்லா நின்அருள் ஆசை மறவேனே! (6)
477. ஒலிசெய் பம்பைத் தண்புனல் ஆமாத் தூரூடே
கலியன் செல்லாக் காவல்செய் முக்கட் கணநாதா!
புலியிற் பொல்லார் தம்கிளை மாயப் பொருதார்க்கும்
வலிபெற் றுய்வான் நின்அருள் ஆசை மறவேனே! (7)
478. விசையன் றன்பால் வேட்டுவ னாமுன் மேயாய்! நல்
இசையார் ஆமாத் தூர்நடு வாழும் இறையோனே!
பசையோர் சற்றும் இன்றிய பொல்லார் பலர்பேசும்
வசைதீர் தற்கா நின்அருள் ஆசை மறவேனே! (8)
479. அகழிக் கிணையாய் ஆறுகு லாவும் ஆமாத்தூர்ச்
சிகரிக் கோயிற் கோர்தலை ஆகித் திகழ்வானே!
புகர்வெற் பன்னான் பூதரம் எங்கும் போவான்என்
மகர்ஒத் துய்வான் நின்அருள் ஆசை மறவேனே! (9)
480. விண்பார் பிலம்என் மூவுல கத்தின் மேயாரும்
நண்பாம் ஆமாத் தூர்அர சாகி நடுநின்றாய்!
திண்பான் மையராம் நால்வர்முன் நாள்செப் பியவாறே
வண்பா மொழிவான் நின்அருள் ஆசை மறவேனே! (10)
அறுசீர் விருத்தம்
481. நீண்ட மால்அறி யாத தாள்உறு
நிமலன்; நீறணிவான்;
தாண்ட வம்சலி யாது செய்பவன்;
சடையில் கங்கைவைத்தான்;
வேண்டல் யாவையும் கொடுத்து விட்புல
விபுதர் ஆதியரை
ஆண்ட நாயகன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (1)
482. கழக நாவலர் கண்முன் அன்றொரு
கவிஞன் என்றவிர்ந்தான்;
கிழவ னாகிஎவ் வனத்தன் ஆகிப்பின்
கிடைகொள் சேய்ஆனான்;
தழலும் எல்லவன் தானும் திங்களும்
தனது கண்ணாம்பேர்
அழகன் நம்திரு வாமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (2)
483. பத்தர் சொற்படி பாவை மாரிடம்
பரிவில் தூதாவான்;
செத்த விண்ணவர் எலும்பும் சாம்பலும்
சேர்த்த ணிந்துகொள்வான்;
முத்த வாள்நகைக் கவுரி பால்உற
மூரிவெள் விடைஊர்
அத்தன் இத்திரு ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (3)
484. இந்து சூடிய தலையில் கொக்கின்வெற்று
இறகும் வைக்கஒல்கான்;
பந்து நேர்முலை யார்பின் தொடரப்
பலிகொண் டுண்டுழல்வான்;
நந்து வார்செவி பத்தி னும்தினம்
நாலத் தூக்கினனாம்
ஐந்து மாமுகன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (4)
485. மானைச் சூரியன் நாணக் குலவு
மழுவு டன்புனைவான்;
ஏனைத் தேவரும் தான்என் றோர்ந்தவர்
இதயம் தோறவிர்வான்;
சேனைத் தாபதர் வேள்வித் தீயினில்
செருக்கொ டன்றெழும்ஓர்
ஆனைத் தோலினன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (5)
486. மதனை அட்டபின் இரதி மட்டினில்
வயங்கி டக்கொடுத்தான்;
பதம்ஒன் றால்எமன் றன்னை வென்றமை
பகர்கின் றார்க்கெளியான்;
கதம்மிக் கன்றழற் குழியில் நின்றெழு
காமர் வல்லியத்தின்
அதள்உ டுத்தவன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (6)
487. குரவு வார்குழல் மங்கை வாழ்ஒரு
கூறன் என்றுணர்ந்தார்
பரவு பாடலுக் கினியன்; நீறணி
பவள வெற்பனையான்;
கரவு நெஞ்சினர்க் கிரங்கி டாதவன்;
கனற்கண் வெவ்விடவாய்
அரவும் பூண்டவன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (7)
488. கொம்ப ணிந்திடும் மார்பிற் பாரிய
கூர்மத் தோடும் இட்டான்;
நம்ப வல்லவர் வம்பு செய்யினும்
நலம்என் றேற்றருள்வான்;
உம்பர் கோன்எழிற் குந்திதோள் புணர்ந்து
உதவ வந்தாற் கோர்
அம்ப ளித்தவன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (8)
489. கப்ப ணக்கரத் துருத்தி ரத்திரள்
கருதும் கண்நுதலோன்;
மைப்ப டிந்தவிர் கண்டத் தான்; மது
மலர்ப்பொற் கொன்றையினான்;
கைப்ப கட்டுமு கனுக்கும், வேலுடைக்
கந்தன் ஆதியர்க்கும்
அப்பன் ஆனவன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (9)
490. ஓசை மிஞ்சயி ராவ ணக்களிறு
ஊரும் ஒண்புகழோன்;
பூசை அன்றுசெய் பாலன் இன்புறப்
பொருவில் ஆயுள் இட்டோன்;
மாசை வென்றவர் நால்வ ரின்கவி
வனைந்தென் புன்கவிக்கும்
ஆசை கொண்டவன் ஆமாத் தூரினுக்கு
அரசன் ஆனானே! (10)
அறுசீர் வண்ண விருத்தம்
தானாத் தானா தனதனா
491. நாணாப் பேய்நேர் மகளிர் பால்
நாய்போற் போய்வீழ் மயலினால்
வீணாச் சாகா தடியர்சேர்
வீறாப் பியான்மே விடுவனோ?
சேணாட் டார்சூழ் கிரியுளாய்!
சேவேற் றூர்நீர் தவிர்கிலாய்!
ஆணாய்ப் பேடாம் இறையவா!
ஆமாத் தூர்வாழ் அழகனே! (1)
492. நானாத் தீயோர் எதிர்செலா
நாவாற் கேளா வகைசெய்வான்
ஏனாக் கோமேல் வருகிலாய்?
ஈனாத் தீதார் மலடனோ?
தேனாப் பேசோர் கவுரிவாழ்
சீராட் டோவா இடமுளாய்!
ஆனாப் பேறே தரவலாய்
ஆமாத் தூர்வாழ் அழகனே! (2)
493. காயாப் பூவே அனையமால்
காணாத் தாள்சேர் கதியதோ
தாயாப் பார்கூ றிசைகொலோ
தாழாப் பேறா வதுசொலாய்;
மாயாத் தேவா கியசிவா!
வான்மேற் போய்மீள் எருதுளாய்!
ஆயாப் பேய்போல் பவர்தோழா
ஆமாத் தூர்வாழ் அழகனே! (3)
494. பாகாப் பாடா தவர்சிலோர்
பார்மேற் சீர்தோ யவும்முனாள்
நீகாத் தாயாம்; அதுவினாய்
நேர்வேற் கியாதீகுவைகொலோ?
சோகாற் சூழ்ஆ டலும் உளாய்!
தோல்மாய்த் தேதோல் கவர்கையாய்!
ஆகார்க் காகா தனசெய்வாய்!
ஆமாத் தூர்வாழ் அழகனே! (4)
495. மாறாப் பாசா டவியுளே
மாயாப் பேறே விழையும் நான்
நீறாட் டாலே அதுகொள்வார்
நேர்தோற் றீடார் செயல்கொலோ?
நாறாப் பூமா லையும் எளாய்!
நாவாற் பேசா ரையும்விடாய்!
ஆறாத் தீபோல் நிறமுளாய்!
ஆமாத் தூர்வாழ் அழகனே! (5)
496. நூலாற் றேறா அருள்கொடே
நோலார்ப் போல்யான் மெலியவே
வேலாற் சூர்மா அடும்ஓர்சேய்
மேனாட் கூறீ டறியையோ?
மாலாற் காணா அடியுளாய்!
வாணாட் தேயா வகைசெய்வாய்!
ஆலாப் போல்வார் கருதொணாய்!
ஆமாத் தூர்வாழ் அழகனே! (6)
497. வீழாக் காமா யுதமலால்
வீணாச் சோர்வா வதுசெய்தாய்;
பாழாப் போகா தடியார்சூழ்
பால்வாய்த் தூர்தோ றுறநல்காய்;
தாழாச் சீர்ஆ யிரம்உளாய்!
சாகாத் தேவா! பவம்இலாய்!
ஆழாற் றாலே வளைவதாம்
ஆமாத் தூர்வாழ் அழகனே! (7)
498. தேசாற் சீர்தோய் அமரர்ஊர்
தேர்கோச் சேய்பால் எயினனாம்
நீசாக் கேதா யினும் விளேல்;
நேராய்ப் பேசா அருள்நல்காய்;
மாசாத் தாவாய் பிறகுபோம்
மால்சாற் றாதார் அறியொணாய்!
ஆசாற் றாமா முனிவர்சூழ்
ஆமாத் தூர்வாழ் அழகனே! (8)
499. கூகூக் கூகூ முரலும்வீ
கோடாத் தோளான் மொழிபொயேல்
மாகூர்க் கோடார் கரமுனோன்
வாய்தேற் றோர்வாழ் வடைவனோ?
சோகூட் டாடார் தொழும் அரா!
தோலாப் பேறே அருள்சிவா!
ஆகூழ்த் தூயோர் பணிகொள்சீர்
ஆமாத் தூர்வாழ் அழகனே! (9)
500. மாளாச் சேணார் அறியொணா
வாழ்வேற் றார்ஓர் சதுரர்; யான்
மீளாச் சீர்வீ டுறுமுனே
வேல்வேட் போல்மாண் அருள்வையோ?
தோளாச் சூடா மணிஅனாய்!
சோறேற் பார்போல் நிகழ்பவா!
ஆளாப் போனார் அளவிலா
ஆமாத் தூர்வாழ் அழகனே! (10)
எழுசீர்ச் சந்த விருத்தம்
501. தொண்டர் ஆனார் பாதம் யாவும்
தோயும் துகளே சூடிடு நான்
வண்டர் தம்புன் குடையின் கீழே
மாயும் படிசெய் திடவேண்டாம்
தண்ட வேழம் ஒன்று கொன்று
தடிக்கும் தோல்ஏ காசமிட்டீர்
அண்டர் கூட்டம் வந்து போற்றும்
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (1)
502. செந்த மிழ்ப்பாட் டியாப்போர் நிறையாச்
செப்பிற் கைக்கொண் டணியீரோ?
சுந்த ரன்போல் கூட்டிக் குறைத்துச்
சொல்லில் தான்ஏற் றருள்வீரோ?
சந்த னத்தண் சோலைப் பொதியைத்
தவமா முனிவன் முதலோராம்
அந்த ணர்க்கோர் தஞ்ச மாகும்
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (2)
503. பொன்னைப் பொருள்என் றெண்ணிக் களிகூர்
புலையோர் பலரும் நகுமாறே
என்னைத் துன்பம் செய்வீ ரானால்
இளப்பம் உமையே சூழும்காண்;
முன்னைச் சதுமா மறையின் தலையீர்!
மூவா முக்கட் பெருமானே!
அன்னை முதல்நால் வகையும் ஆவீர்!
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (3)
504. முகில்வந் தளவில் பொழியாக் கொடுமை
முதலா வனமிக் குறுதலினால்
திகில்உற் றும்மைப் பணிவார் தம்மைச்
சிறிதா யினும்ஏன் விழைகில்லீர்?
நகிலக் குயில்நேர் பரவைக் கினியோன்
நவில்சொற் படியும் செயல்பொய்யோ?
அகிலத் திற்கா தரமா நிகழ்சீர்
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (4)
505. வஞ்சக் கலியன் தன்னைப் பொருளா
மதியா வலிசால் வடலூரான்
நெஞ்சக் கவலை தீரா துற்றீர்
நீர்என் பணிஏன் விழைகின்றீர்?
கஞ்சப் பிரமன் தலைஓ டொன்றைக்
கைக்கொண் டேற்றுண் டளிகூர்வீர்!
அஞ்சக் குலம்வாழ் கழனித் திருஆர்
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (5)
506. கருணைத் துளிஒன் றென்மேற் பெய்யில்
ககனத் தொடுபா ருலகுய்யும்;
இருண்மிக் குடையார் தாழ்வார்; இதுசெய் -
திடுதற் கேனோ எண்ணுகிலீர்!
வருணற் செறும்வேற் றிறமும் அநாள் ஓர்
மன்னற் கருளி வாழ்வித்தீர்!
அருள்முற் றியதோர் தருணப் பிடியோடு
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (6)
507. சந்தம் அனந்த விதம்ப கர்எனைத்
தளரச் செய்யும் தன்மைகொள்நீர்
சிந்தறை யும்சில ரும்கதி சேரச்
செய்தீர் என்சொல் திறமாமோ?
பந்தணை யும்கை மடந்தையர் ஏசப்
பலிகொண் டலையும் பண்பொழியீர்!
அந்தர ரும்புகழ் பம்பைந தித்திரு
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (7)
508. இடித்தொ னிக்கிணை யாகிய பாடல்
இன்னம் அனந்தம் சொலும் என்னை
பிடித்து வந்தீர்; பணிகொள் கின்றீர்;
பெருமைப் பாடேன் அருள்கில்லீர்?
கடித்து நஞ்சால் கொல்லும் பாம்பைக்
கைக்கங் கணமா யும்புனைவீர்!
அடித்த வற்கும் கணைஒன் றீந்தீர்!
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (8)
509. ஒருமைச் சிந்தைத் தவர்தாம் உலகத்து
ஒருவ ரேனும் இலர்கொல்லோ?
மருளிற் பெரியோர்க் கரசேன் ஈந்தீர்?
மாறும் தினம்ஒன் றுதியாதோ?
பொருவில் பண்டிக் கரிமா முகனும்
புலமைத் தலைமைக் குமரனுமாம்
அருமைப் பாலர்ப் பெற்றில் லீரோ?
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (9)
510. பத்தர்க் கெல்லாம் அரசர் நால்வர்
பாடற் கந்நாள் அருள்செய்த
சித்தம் இந்நாள் எங்குய்த் தீரோ?
தீயோர் வாழச் செயல்ஆரோ?
முத்தம் போலும் நகையா ளேனும்
முறையிற் செயுமா றுரையாளோ?
அத்தம் தொடும்நீ றன்றேன் ஈந்தீர்?
ஆமாத் தூர்வாழ் அரனாரே! (10)
யாப்பு
(இப்பதிகத்தின் தெளிவான யாப்பமைதி விளங்கவில்லை)
511. காரான்வன், மேனியுடைத் தானவர்தாம்
கருதிக் கருதிஅன்பிற் கசிந்திடினும்
தாராள மாக்கொடுக்கும் குணம் எங்கே
தவறவிட் டாய்? இதுவும் தருமமதோ?
நாரா யணன்பணியும் பதத்தானே!
நான்முகத் தோன் தலையில் நாளும் இரந்தாய்!
ஆராதிப் பார்களுக் கெளியானே!
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (1)
512. செஞ்சக் கரப்படைக்கை நாரணனும்
தேவேந்தி ராதியரும் செத்தனரோ!
வஞ்சக் கருத்துடைய நீசர்களால்
மாநிலம் படும்துயர் மாற்றிலரே?
நஞ்சக் கறைக்களத்து நீயேனும்
நலம்செயக் கருதிலை; ஞாயமதோ?
அஞ்சக் கரச்செபமும் பொய்த் திடுமோ?
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (2)
513. குரக்குவன் பிடிப்புடைத் தொண்டர்பல்லோர்
கோபுரத்திற் குன்றினிற் கொழுங்கனலில்
இரக்கம்உன் றனக்குண்டென் றெண்ணிஇறந்தார்;
என்னசெய் தந்நாளில் எங்கிருந்த னையோ?
சிரக்கணம் அரிந்தஇரா வணற்குத்
தேருடன்வாள் கொடுத்ததும் திருட்டுச் சொல்லோ?
அரக்கர்தம் பங்கினிற் சேர்ந்தனையோ?
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (3)
514. முடைக்கலத் தன்னம்இரந் துண்ட கதையை
மொழிந்திட்ட பாவலரும் முன்னாள் உய்ந்தார்;
மடைக்கண்வந் தாலெனக் கண்ணீர் சொரிந்து
வாழ்த்தும்வட லூரனையும் மாய்த்துவிட்டுற்றாய்;
கொடைக்குணம் முழுமையும் தணந்தனையோ?
கும்பிட்டுத் துதித்து, மெய் கூறி, உனக்கே
அடைக்கலம்ஆம் எனையும் கொன்றிடாதே;
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (4)
515. சஞ்சலத்தில் பட்டுமிகத் தயங்குகின்றேன்;
தமிழ்த்துதி அன்றிஒரு தஞ்சம் அறியேன்;
நெஞ்சகத்தில் ஒருவிசை விடைப்பரிமேல்
நீஉமையோ டவிர்ந்ததும் நிசம் அல்லவோ?
பஞ்சமுற்றுப் பார்வருந்தல் சகிப்பதுவோ?
பணம்தரில் பார்த்திருக்கும் பண்பன் நானல்லேன்;
அஞ்சல்அஞ்சல் என்றுசொல்லிக் கண்முன்வாராய்
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (5)
516. தில்லையில் நெல்லையில் செங்குன்றாதிச்
சிலசில தலங்களிற்செப் பும்சொல்எல்லாம்
இல்லைஎன் றிடுதலில் பொல்லாவாய் எனைத்
துயர்செய்வ தெண்ணிஎண்ணி அஞ்சினேன்;
முல்லைவெண் நகைச்சியர் சூழும்வேளும்,
முளரிமின் னாளும்மிக மோசம்செய்கின்றார்;
அல்லைவென்றுய்யும் திறம் விரைந்தருளாய்
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (6)
517. ஏறுடன் பசுக்களும் கன்றும் அருந்தும்
ஈனர்எல் லோரும்மடிந் திடும்களத்தில்
பாறுவன் கழுநரி நாய்கள் பேய்கள்
பரிந்துணும் விருந்தினைப் பார்க்க அருள்வாய்
நீறுமிக் கணிபவர்க் கெளியானே!
நீலகண்ட னே! எங்கும் நிறைந்தோனே!
ஆறு,வெண் மதிபுனை சடையானே!
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (7)
518. திருச்சிற்றம் பலத்தினில் பலர்கூடிச்
செய்யத் தகாதன செயல்ஓர்ந்தும்
மருச்செச்சை மலர்புனை குகன் போற்போய்
மாற்றாமல் மனம்மிக வருந்தியுற்றேன்;
குருச்செயலோர் எவரேனும் இருந்தால்
கோபம்செய் யாதமைந்துட் குளிர்வாரோ?
அருச்சுனற் கொருகணை கொடுத்தோனே!
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (8)
519. ஏனையமந் திரங்கள் ஏழுகோடி
யினுக்குள்ஒன் றேனும் உணர்ந் திலராகிப்
பூனைஒத் தூன்அருந்தும் புலைவேள்வி
புரியும்பொய்ப் பனவரும் புண்செய்கின்றார்;
தேனைஒப் பெனச்சொலும் தமிழ்க்கூலி
சீக்கிரம் கொடுத்தெனைத் தேற்றியருள்வாய்;
ஆனைமுக னைக்குகன் றனைஈன்றாய்!
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (9)
520. புத்தரிற் சமணரிற் பொல்லாரே
பூமி
எங் கணும்மிகப் புரிந்திருந்தாய்;
இத்தனை துயர்சகித் திடவசமோ?
எண்ணிய பயன்முழு தீந்தருள்வாய்;
முத்தமிழ்ச் சதுரருக் கருளியசீர்
முன்னிநெட் டுயிர்த்துளன்; மோசியாதே;
அத்தனை நல்கினும் போதாது காண்
ஆமாதை வளம்பதி ஆண்டுளானே! (10)
எண்சீர் விருத்தம்
521. வயற்றலைக் கமலங்கள் மேல்வளைத் திரளை
வாளைகள் பாய்வள மாதையம் பதியில்
அயற்கும்மற் றையமுனி வோர்முத லோர்க்கும்
அருள்புரிந் தசைவற அமரும்அம் மானே!
புயற்புரை மால்இறந் தான்எனத் துயின்றான்;
பூமகள் படும்துயர் பொறுக்கறி கில்லேன்;
இயற்றமிழ்க் குறுமுனி நூல்வகுத் துளவாம்
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (1)
522. களமதில் கறைஒருக் காலும்விட் டொழியாக்
காரணம் கருதுநர் கருத்துறழ் மாதை
வளநகர்க் கோயிலின் நடுமுளைத் தெழுந்தே
வானவர் தேவென வயங்குபெம் மானே!
அளகையம் பதிக்கிறை ஆதியர் தம்சீர்
ஆயிரம் நல்கினும் அணுத்துணை மகிழேன்;
இளமையும் முதுமையும் மாற்றலும் விழைந்தேன்
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (2)
523. திண்ணிய நந்தியும் தேனுவும் முதலாத்
திகழ்தரு பசுக்குலம் சீர்பெறு மாதை
நண்ணினர் விருப்பமுற் றநுதினம் கொடுத்தே
நனந்தலை வாழ்வுறும் நலம்பொலி சிவனே!
மண்ணினும் விண்ணினும் வாழ்பவர் எல்லாம்
மகிழ்வுறும் படிநெடு மால்இவன் எனவே
எண்ணிய வாவிளை யாடுதல் வேட்டேன்;
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (3)
524. கருமம தேபொருள் ஆம்என நம்பிக்
கருணையைக் கைவிடும் காதகர்க் கெமன்நேர்
வருமம்உள் ளார்பலர் போற்றிய திருவா
மாத்தூர்க் கோயிலில் வாழ்இறை யோனே!
பொருமலுற் றம்புவி மகள்அழல் ஓராப்
புல்லியர் ஆணவப் பொலிவுகண் டயர்ந்தேன்;
இருமர புடைப்பல சித்தரும் வியப்பான்
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (4)
525. சமயம்எல் லாமும்நின் திருவருட் கூத்தால்
சமைந்தன என்றுணர் தன்மையிற் சிறந்தே,
அமைதலுற் றார்க்கொரு தாரகம் ஆகி,
ஆமாத் தூர்வளர் ஐம்முகத் தரசே!
கமைஅணு வேனும்இல் லார்பெரும் பகையால்
கனவினும் நனவினும் கலக்கம்மிக் கடைந்தேன்;
இமயமங் கலைகையில் சேய்மொழி பிழையாது
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (5)
526. வல்லைஒப் பாம்முலைக் கவுரியும் குகனும்
மாட்டுற விடைமிசை மகிழ்ந்தினி தேறித்
தொல்லைமெய்ப் புகழ்பல தோய்தரும் மாதை
சுகமுறச் சூழ்தலிற் சோம்பல்இல் லானே!
கல்லைவிட் டெறிந்தவன் தானும்முன் உய்ந்த
கதைமுத லாவன காதுறும் தோறும்
இல்லைதெய் வீகம்என் றிகழ்பவர்ச் செகுப்பான்
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (6)
527. கோவரு நோன்புவந் தன்றவை முழுதும்
கோடுகொண் டொளிர்தரக் கொடுத்தமை உணர்வார்
நாவரு பாடல்முற் றிதழியிற் புனைந்தே,
நலமலி மாதையின் நடுவளர் வானே!
மூவரும் தேவரும் முனிவரும் ஊன்மால்
முதிர்ச்சிஉ ளார்எனும் முரணினர் மிகுத்தார்;
யாவரும் நல்லுண வுணச்செயல் வேட்டேன்
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (7)
528. சீவர்எல் லாம்தனை அனையர்என் றுணராச்
சிற்றறி வினர்பலர் தீமகம் செய்து
மூவரில் ஒருவன்சொல் விதியிதென் றுவக்கை
முற்றொழி யாமுனம் முத்தியும் விழையேன்
தேவர்தம் இறைஒரு மானிடப் பெண்ணைச்
சேர்ந்துத வியமகன் சிலைஅடிக் களிகூர்ந்து
ஏவளித் தருளிய ஆமாத் தூரா!
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (8)
529. அரக்கர்மெய்த் தவம்முடித் தாலும்அன் னவர்வேட்
டவைஅளித் தருளிடும் ஆமாத் தூரா!
மரக்கண்உள் ளேன்எனப் பொய்பகர்ந் தாற்கும்
மற்றிணை தீர்பெரு வாழ்வருள் வள்ளால்!
நரக்கணம் நாய்உண வருந்தல்கண் டிளைத்தேன்;
நாரிதன் பால்இரு நன்மகர்ப் பயந்த
இரக்கம்நின் பால்அணுத் துணைஇருந் தாலும்
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (9)
530. திசைக்கணம் முழுமையும் தினம்தினம் போற்றும்
திருஆ மாதையில் சிவபெரு மானே!
தசைப்புசிப் பருந்தன்மின் என்றுவற் புறுத்தாச்
சதுரர்தம் பேறும்என் றனக்களித் திலையே?
அசைப்பிழை யாதும்இல் லாதசெந் தமிழ்ப்பாட்டு
ஆயிரம் தில்லையில் அறைந்தஅந் நாள்நீ
இசைத்தசொல் சத்தியம் ஆகில்என் றனக்கீண்டு
இருபத்தைந் துச்சித்தும் ஈந்தருள் வாயே! (10)
எண்சீர் விருத்தம்
531. தாமாக் கேட்டுக் கெஞ்சும் மாதர்
தமக்கும் இசையாத் தவரும் விழையா
ஏமாப் பெல்லாம் கருதி நொந்தேன்;
இந்தப் புத்தி எனக்கேன் ஈந்தாய்?
தேமாப் பொழிலில் குயில்கள் கூவச்
சிகிகள் ஆடும் சீர்குன் றாத
ஆமாத் தூரிற் சிவனே! நீஎன்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (1)
532. கஞ்சத் தொடுசெங் குவளைத் திரளும்
கழனிக் களையாம் கவின்ஆ மாத்தூர்த்
தஞ்சப் பொருளாம் எனவாழ் சிவனே!
தலையில் பசுவின் தடம்ஒன் றுடையாய்!
நஞ்சத் தினைஇன் னமுதைப் பொழிகண்
நல்லார் எனவாழ் பொல்லா மடவார்
அஞ்சப் பெடைநேர் நடைகண் டுருகென்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (2)
533. பாவிப் பவர்தம் மனம் உற் றுலவும்
பரமா! மாதைப் பதியிற் கண்டு
சேவிக் கின்றார் இடர்முற் றொழியச்
செய்யச் சலியாய்! சிவைபங் குடையாய்!
காவிக் கலையும் முழுநீ றதும்நின்
கண்ணின் மணியும் கவினப் புனைவேன்
ஆவிக் கொருபேர் இகலா விளையும்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (3)
534. முகில்வந் தமரும் பொழில்சூழ் மாதை
முதல்வா! மூவா முக்கட் சிவனே!
திகில்உற் றுள்ளேன் முன்நாள் வினையைச்
சேதித் திடும்மெய்த் திறன்நின் றனதே;
நகிலத் துணையால் அமர்செய் கின்றார்
நசைமிக் குறலால் நலிகின் றதுகண்டு
அகிலத் தினர்முன் திகழத் தளர்வேன்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (4)
535. தண்டக் கரமா தவர்பற் பலர்முன்
தனிவீ டுறும்மா தையில்வாழ் சிவனே!
கண்டக் கறைஎய் தியதே முதலாம்
கதைகள் கவியில் கழறப் பெற்றும்,
வண்டத் தகையார் பகைமுற் றியதால்
மறுகத் தகுமோ? வரம்ஈ கிலையேல்
அண்டத் தினைஓர் கடுகா நினையேன்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (5)
536. வந்த படியே பாடு கின்றேன்;
வாக்கின் போக்கு மறதி யுற்றேன்;
இந்த மட்டும் பேற டைந்தும்
இன்னல் வாரி வற்ற வில்லை;
கந்தம் மீறும் கொன்றைச் சோலைக்
கவின்ஆ மாத்தூர் காக்கும் சிவனே!
அந்தண் கருணைத் துளிஒன் றால்என்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (6)
537. பற்பத் தாலே முழுகும் பேறு
பாலித் திட்டும், பரிசீ யாமல்
சொற்ப னத்தும் முன்நாள் போலத்
தோற்றா துற்றாய்; தோடம் அன்றோ?
சிற்பர் நாணும் பணிகு லாவும்
திருவா மாத்தூர்ச் சிவபி ரானே!
அற்ப வாழ்வும் கருதி நோம்என்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (7)
538. பேடிக் கன்றோர் வாளி நல்கும்
பெருமை நாளும் பேசும் நாயேன்
வாடிச் சிந்தை தளர லாமோ?
வரம்ஒன் றீந்தால் மகிமைக் கிழிவோ?
பாடித் தெண்ட னிட்டார் உய்யும்
பழைய மாதைப் பதிஉள் ளானே!
ஆடிக் காற்றில் செற்றை ஆக்கும்
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (8)
539. கரிமு கத்தோன் முருகன் எனநின்
காதல் மைந்தர் கழறும் சொல்லால்
பெரிய எண்ணம் கோடி கொண்டு
பிழைபட் டெய்த்தோர் பேயன் ஆனேன்;
நரிகள் தம்மைப் பரிகள் ஆக்கும்
ஞாயம் ஒன்றும் நடத்தி லாயோ?
அரிய சீர்கொள் மாதை யூரா!
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (9)
540. சலந்த ரற்கோர் கூற்றன் ஆனாய்!
தமிழ்கொ டுத்த சதுரர் தம்மைக்
கலந்து நின்றாய்! மாதை யூரைக்
காவல் செய்யும் கருணை வள்ளால்!
குலம்த ழைக்கும் பேறு நாடிக்
கோது பட்டுக் குன்றி நொந்தீண்டு
அலந்து போன தறிகி லாயோ?
ஆசை நோய்தீர்த் தருள்செய் வாயே! (10)
கலித்துறை
541. அந்த ரத்தினர் வாழ்வையும்
அருவருத் திடும்மாண்பு
எந்த நாளின்வந் தெனக்கமைந்
திடும்கொலோ? இயம்பாய்;
சந்த னத்தடங் கிரிமுனி
முன்னைநாள் தவம்நேர்
செந்த மிழ்ப்பெருஞ் சீர்குலாம்
மாதையூர்ச் சிவனே! (1)
542. சத்த நான்மறைச் சுருதியின்
தலைநிலை உணர்ந்தும்;
பித்த ரேஎனப் பிழைமிகச்
செயும்எனைப் பேணாய்;
முத்த மிழ்க்கிரி முதற்சொல்பல்
மலைதொறும் மொய்க்கும்
சித்தர் வந்துவந் திறைஞ்சிய
மாதையூர்ச் சிவனே! (2)
543. எறியும் வார்திரைப் புவிமுழு
துயக்கரு தென்பால்
கிறிசெய் கின்றது முறைகொலோ?
மெய்ம்மொழி கிளத்தாய்;
பொறிகு லாம்பணித் திரள்களும்
புனைந்தவிர் புனிதா!
செறியும் தண்பொழில் உடுத்தவிர்
மாதையூர்ச் சிவனே! (3)
544. யானின் பால்இரக் கின்றதை
நீஎன்பால் இரக்கும்
வேனிங் காரொடு விளம்பலாம்?
மெய்மைபொய்ப் படுமோ?
கூனி டும்குறு நத்தை உண் -
டுவப்புறக் கொடுக்கும்
தேனி றால்தெரிந் தார்புகழ்
மாதையூர்ச் சிவனே! (4)
545. எந்நெ றிக்கும்ஒர் பொதுஎனத்
திகழ்தரும் என்னை
வெந்நெ றிக்கொடி யார் இகழ்ந்
திடலும்நின் விழைவோ?
பொய்ந்நெ றிக்குளும் மெய்ந்நெறிக் -
குளும்புகும் புனிதா!
செந்நெ றித்தவ ரேதொழும்
மாதையூர்ச் சிவனே! (5)
546. நாறும் நாண்மலர்த் திரளினும்
நான்நறுந் தமிழால்
கூறும் இன்கவித் தொடைமுழு
திழிந்தன கொல்லோ?
பாறு வந்துவந் தறைந்தெழு
மூவிலைப் படையாய்!
சீறும் வெண்திரைப் பம்பைசூழ்
மாதையூர்ச் சிவனே! (6)
547. வாத மிட்டுழல் மதப்பெரும்
பிணக்கினர் மாய,
மோதல் வேண்டுஎற் குனதருள்
மொய்ம்பெ நாள் அருள்வாய்?
கீத நான்மறைப் பொருள்பல
முனிவர்முற் கிளத்தும்
சீத வாரிசன் தொழுதுயும்
மாதையூர்ச் சிவனே! (7)
548. விசையன் வேட்கையில் கோடிபங்
குயர்நலம் வேட்டேற்கு
இசைய நல்கிலை எனில்உன -
தருள்இழி வுறும்காண் -
பசைஇல் வெண்டலைப் பலிகொடு
நுகர்ந்துளாய்! பத்துத்
திசையும் ஏத்திடத் திகழ்தரு
மாதையூர்ச் சிவனே! (8)
549. ஐங்க ரத்தனை அறுமுகன்
தனைஅளித் துளநீ
இங்க ணுத்துணை எனக்கிரங்
காதுறல் முறையோ?
பங்க யாதனத் திருவினைப்
பரிக்கும்மார் பினனாம்
செங்கண் மால்விடைக் கொடிதிகழ்
மாதையூர்ச் சிவனே! (9)
550. தரும சேனனை நால்வரில்
ஒருவனாத் தடுத்தாள்
கருணை நம்வட லூரனைக்
கழித்தது முறையோ?
பொருளும் கல்வியும் நாள்தொறும்
மேலிடும் பொருட்டால்
திருவும் வாணியும் வாழ்வுறும்
மாதையூர்ச் சிவனே! (10)
அறுசீர்ச் சந்த விருத்தம்
551. புவியும் வானும் பிலமும் போற்றும்
புகழாற் களிகூரும்
செவிஒர் பத்துக் கொண்டே வாழும்
திருவா மாத்தூரா!
அவிஎன் றூன்பெய் கின்றார்க் கெமன்ஆம்
ஆசைப் பட்டுள்ளேன்
கவிகேட் கின்றாய் அன்றோ? சற்றென்
கண்முன் வாராயே! (1)
552. அனகத் தவமே முயல்வார் அன்றி
அறுகம் புல்மேயும்
இனமாம் பசுவும் வாழச் செய்தாய்
எழில்ஆ மாத்தூரா!
நினதன் பொன்றே குறியாக் கொண்டு
நிதமும் போற்றிடும்என்
கனவில் வந்து போகும் நீதான்
கண்முன் வாராயே! (2)
553. இரக்கும் பண்பும் பேயோ டாடும்
இழிவும் சொன்னாட்கும்
நரக்கும் பேத்தும் பேறன் றீந்தாய்!
நல்ஆ மாத்தூரா!
சுரக்கும் கருணைக் கடலூ டேஓர்
துளியும் நல்காமல்
கரக்கும் கொடுமை நீத்தின் றேஎன்
கண்முன் வாராயே! (3)
554. ஆளைப் பாய்ந்திட் டருகிற் குறுகட்
டணியார் பொழிலிற் பாய்
வாளைப் பகடும் பேடும் களிகூர்
வயல்ஆ மாத்தூரா!
தேளைப் போலும் கொடியார் தம்மைச்
செறலே விழைகின்றேன்;
காளைப் பரிமேல் உமைதன் னோடும்
கண்முன் வாராயே! (4)
555. கொங்கைக் குயில்நேர் மடவார் ஆசைக்
கொடியோர் ஆனாலும்
அங்கைத் துணையால் பணிசெய் வாரேல்
அருள்ஆ மாத்தூரா!
சங்கைப் புனையும் காதுக் கேற்கும்
தமிழே வனைகின்றேன்;
கங்கைச் சடையும் பிறையும் தோன்றக்
கண்முன் வாராயே! (5)
556. தவலற் றுயரும் தவமே செய்தார்
தம்மோ டுறும்வாழ்வைத்
திவலைத் திருநீ றணியான் எய்தச்
செயும்ஆ மாத்தூரா!
அவலைக் கருதி உரலிற் குத்தும்
அசடுற் றாரேபோல்
கவலைப் பட்டேன் கண்டாய்! நீஎன்
கண்முன் வாராயே! (6)
557. வெள்ளப் புனலைச் சடைமேல் வைத்தாய்;
வெற்பின் மகள்வாழத்
தள்ளற் கரிதாம் இடம்ஈந் திட்டாய்;
தமிழ்ஆ மாத்தூரா!
வள்ளல் தகையோர் தம்மில் தலையா
வாழ்கின் றாய்க்கேனோ
கள்ளத் தனம்?இக் கணமே அடியேன்
கண்முன் வாராயே! (7)
558. திசைஎங் கணும்நன் கறியும் படியே
சிலைஒன் றால்மோதும்
விசையன் கருதும் கணைஈந் தருள்செய்
வியன்ஆ மாத்தூரா!
நசைகொண் டுழல்என் றனைஇங் கிகழேல்;
நரைமால் விடைமீதே
கசையும் கையும் தோன்றும் படியே
கண்முன் வாராயே! (8)
559. வேலிற் றிகழ்கண் உமைபால் இருசேய்
மேனாள் அருள்செய்து
கோலிற் கொடியார் குலவேர் களைவாய்!
குளிர்ஆ மாத்தூரா!
பாலிற் குலவிக் கடுவிற் தொழில்செய்
பலரால் மிகமாயும்
காலிக் குலம்உய் வுறவே சிறிதென்
கண்முன் வாராயே! (9)
560. முமலப் பிணியும் தவிரச் செயும்ஓர்
முக்கட் குருவாகி,
அமலச் சிவலிங் கமும்ஆம் இறைவா!
அணிஆ மாத்தூரா!
தமலத் தினும்இன் தமிழ்தாழ் வல;நால்
தவரே சான்றாமால்;
கமலத் தயன்நூல் அழியா வணம்என்
கண்முன் வாராயே! (10)
கட்டளைக் கலிப்பா
561. கோயில் உட்புகு தாவணம் அப்பெருங்
கொடுமை செய்தும் கொழுந்தமிழ்ப் பாடலால்,
"தாயில் மிக்கினி யாய்”எனப் பாடும்என்
தன்னை ஈனர்முன் தாழ்வுறத் தள்ளிடேல்
பேயி னுக்கும் கருணைசெய் தாண்டுளாய்!
பிரமன் ஆதியர் பீடுறப் பேணினாய்!
மாயி ரும்புவ னிக்கொரு தஞ்சமாம்
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (1)
562. எண்ணில் மாதவர் காணுற முன்னைநாள்
இடப மீதில்ஒர் ஏழையொ டெய்தினாய்;
நண்ணி ஏத்தும்என் நேர்ஒருக் கால்வந்தால்
ஞாலம் முற்றும் நலம்பெறும் அல்லவோ?
திண்ணி மைக்கொடுந் தானவர்க் கும்பெரும்
சீர்வ ழங்கும் திருவருட் தெய்வமே!
வண்ணி லாம்புவி மாமுக மாத்திகழ்
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (2)
563. எந்த வேளையில் எந்நன்மை தீமைவந்து,
எய்து மோஎன ஏங்கித் தவித்துளேன்
பைந்தண் கற்பகக் காவுடை யார்எலாம்
பார்த்து நாணும் பரிசுபெற் றுய்வனோ?
கொந்த விழ்ந்தபொற் கொன்றையும் தும்பையும்
குலவு சென்னிக் குருபரன் ஆகுவாய்!
மந்த மாருதம் வந்துல வும்பொழில்
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (3)
564. சதும றைச்சுரு திக்கிடை கூறிய
தருமம் யாவையும் தணந்துயிர் கொன்றுணும்
அதுமட்டும்செயும் பாதகத் தோர்க்குநல்
அறிவு றுத்து மவன்வரக் காண்பனோ?
பதுமக் காடனை யாய்எனப் போற்றிய
பாவலர்க்குப் பரகதி ஈந்துளாய்!
மதுர முத்தமிழ்ச் சீர்பெரு கும்திரு
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (4)
565. வேனன் ஆதிய தானவப் பாதகர்
வேதங் கட்குள் விரவிவைத் திட்டன
ஆன தீவிதி அத்தனை யும்தவிர்த்து
அருளும் மான்மியம் ஆர்க்களிப் பாய்கொலோ?
சேனம் உண்பன தின்பவர் காணொணாச்
செல்வ மே!பல தெய்வமும் ஆகுவாய்!
வான நாட்டின ரும்பெரி தேத்துசீர்
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (5)
566. கற்ற ஆணவத் தோர்களும், பொய்ப்பொருட்
காவ லாளரும் கண்டுகண் டொல்குறும்
நற்ற வப்பயன் பெற்றுய நாடும்நான்
நைந்து நொந்து நலிவுறச் செய்திடேல்
பொற்ற டங்கிரி வில்கொடு போர்செய்சீர்
புகலு வார்க்கருட் போதம் வழங்குவாய்!
மற்ற ஊர்களொ டொப்புரைத் தற்கொணா
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (6)
567. அரத னப்பெரும் பீடம்உற் றும்பர்ஊர்
ஆளும் வாழ்வும் அருவருத் திட்டுனைப்
பரவு பாக்கியம் பெற்றபின் மானிடப்
பாவை மார்க்குரு கச்செயல் ஆகுமோ?
கரவி லாமனத் தார்உண ரத்திகழ்
கார ணப்பொரு ளே!மலைக் கன்னியாம்
மரக தப்பிடி பூசைகொண் டுய்வித்தாய்!
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (7)
568. செங்கண் ஆயிரத் தான்மகன் பற்றுகைச்
சிலையி னால்அடித் திட்டதற் கார்வமாய்ப்
புங்கம் ஒன்றளித் தாய்!தமிழ்ப் பாக்களால்
போற்று வார்சிலர்ப் புண்படச் செய்வதேன்?
தங்க ணம்சிலம் பாதியும் பாம்பெனக்
கவினப் பூண்டவிர் கண்ணுதல் மூர்த்தியே!
மங்க ளங்கள் அனந்தமும் தோய்தரும்
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (8)
569. செக்கர் வான்உரு விற்பொடிப் பூசிய
சீல மேதினம் சேமிசை நாடும்நான்
திக்க றிந்திடச் சித்தியற் றிக்கதி
சேரச் செய்யில் திருவருட் கீனமோ?
முக்கண் வேழ முகப்பெரு மான்என
முருக வேள்என மூவுல கும்தொழும்
மக்க ளாச்சில சீவரைச் செய்குவாய்!
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (9)
570. ஆல்வ யின்தொழு துய்ந்தவர் தாம்கொல்என்று
ஐயம் எய்த அருந்தமிழ் பாடிய
நால்வ ருக்கருள் செய்தனை; இந்தநாள்
நான்அ ழச்செயல் ஞாயம்என் றோர்தியோ?
பால்வ ழிந்தசொற் சானகி கேள்வனாப்
படியில் வந்து பலவிசை யும்திரு
மால்வ ணங்கு வரம்பெறும் தெய்வமாம்
மாதை மாநகர் வாழ்சிவ லிங்கமே! (10)
அறுசீர் விருத்தம்
571. சந்தச் சரப வடிவாகிச்
சயமார் சீயம் தனைஅட்டே,
எந்தச் சமயத் தரும்நாடும்
எழில்ஆ மாத்தூ ரிடைநின்றாய்!
அந்தச் சடலத் தொடு முத்தி
அடையா வண்ணம் அதுசெயும்நீ,
இந்தச் சடலத் தோடேனும்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (1)
572. முன்னைப் பரம்என் றுணர்வார்க்கே
மூவா முத்திப் பேறருளித்
தென்னைப் பொழில்சூழ் ஆமாத்தூர்த்
திருக்கோ யிலில்வாழ் சித்தேசா!
பொன்னைத் துணையாம் எனநம்பும்
பொல்லார் சிலரைப் பொருளாக்கி
என்னைத் துயர்செய் திடவேண்டாம்;
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (2)
573. பானற் புரைகட் கவுரியொடும்
பவளக் கிரிபோல் விடைஏறி,
ஆனத் தனையும் களிகூரும்
ஆமாத் தூர்சூழ் அம்மானே!
மானக் கேடும் கருதாதே
மடவார் மயலால் தடையுண்டீங்கு
ஈனக் கலியிற் புண்பட்டேன்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (3)
574. அமையார் தோளார் நடமாடும்
அணியார் மேடை பலகோடி
சிமையா சலமே எனநீடும்
திருவா மாத்தூர் வாழ்சிவனே!
உமையாள் உடன்உன் றனைஎன்றும்
ஒருமால் விடைமீ துன்னியுளேன்;
இமையா தாரும் தீர்வரி தாம்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (4)
575. கடலைச் சிறுமா டமதளவாக்
கைக்கொண் டுண்டோன் முதலோராம்
திடமிக் கவரும் பணிசெய்யத்
திருவா மாத்தூர் சேர்தேவே!
அடமுற் றிகழ்புன் சமயத்தோர்க்கு
அஞ்சிப் பெரிதீண் டயர்கின்றேன்;
இடபப் பரிமேல் எதிர்தோன்றி
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (5)
576. அகளப் பொதுநன் னிலை ஓர்ந்தும்
அஞ்சக் கரம்ஓ திடும் அவர்பால்
சகளப் பொருளாய் அவிர்வானே!
தனிஆ மாத்தூர் தனில்வாழ்வாய்!
புகழ்அத் தனையும் மதியாராய்ப்
பொல்லாங் கொன்றே புகல்வார்தம்
இகல்முற் றற அட் டப்பால் என்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (6)
577. முன்னம் தவசால் உய்ந்தோராம்
முனிவோர் பலரும் இகழாமெய்ச்
சின்னம் புனைவார் மிகநம்பும்
திருவா மாத்தூர்ச் சிவசித்தா!
கன்னன் புரைவார் தங்களையும்
கருணைக் குறைவார் என்றெண்ணும்
என்னன் பதுபொய் ஆகாமே
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (7)
578. திசைமுற் றறியும் படிஅன்றோர்
சிலையால் மொத்தும் சேவகனுக்கு
அசைவில் மெய்ப்பே றருள்செய்தாய்
ஆமாத் தூர்வாழ் அழகேசா!
தசைஉண் கின்றார் பலர்தாமும்
தவர்தம் உணவே உணவெல்சீர்
இசையச் செய்திட் டப்பால்என்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (8)
579. மானும் மழுவும் கைக்கொண்டு
மழமால் விடைமீ திவர்கோலம்
தேனு முதலா வனகாணச்
சேவை தரும்ஆ மாத்தூரா!
பானு முழுதும் மனம்நாணும்
படிவத் தினராய் உமையவள்பால்
ஈனும் மகர்தம் மொடு சேர்த்தென்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (9)
580. புனையும் பணியில் பொல்லேன்என்
புதுமைப் பாடல் புகல்வாயான்
தனைமீட் டருளும் சிந்தையனாத்
தமிழ்ஆ மாத்தூர் தனில்வாழ்வாய்!
வனையும் கவிநா வலர்நால்வர்
வண்மை பகரும் அவர்எல்லாம்
எனையும் புகழும் பயன் வேட்டேன்
இறப்பும் பிறப்பும் தீர்த்தருளே! (10)
சந்தக்கலி விருத்தம்
581. சலந்தரன் றனைக்கொன்று தானவ ராம்பொல்லார்
குலம்தளர் வுறக்கண்டாய்! குளிர்ஆ மாத்தூரா!
இலந்தையிற் கனிகொய்தால் எனப்பல துயர்எய்தி
அலந்துநொந் தலைவேனை ஆண்டுகொண் டருள்வாயே! (1)
582. மயல்அறு பெரியோரும், மன்னவர் முதலோரும்
செயம்மரு விடநாடும் திருவா மாத்தூரா!
கயல்நிகர் விழியார்சூழ் கார்மத வேள்கணையால்
அயர்வுறு தமியேனை ஆண்டுகொண் டருள்வாயே! (2)
583. கொண்டல்இ னம்பிரியாக் குளிர்பொழில் அதுசூழம்
வண்தகை ஆமாத்தூர் மருவிய பெருமானே!
தொண்டர்ம லர்த்தாளின் துகள்முடி புனைவேனை
அண்டரும் மெச்சிடவே ஆண்டுகொண் டருள்வாயே! (3)
584. வாரணம் ஒன்றுடன்ஓர் மால்விடை மிசைஏறித்
தேரண வும்தெருவில் திகழ்ஆ மாத்தூரா!
காரணம் ஒன்றொருநாள் கனவினில் உணர்வேனை
ஆரண முனிவோரோ டாண்டுகொண் டருள்வாயே! (4)
585. கஞ்சன்ஓர் தலைஓடே கைக்கொண் டமுதேற்றுண்டு,
எஞ்சலில் ஆமாத்தூ ரிடம்வளர் எம்மானே!
பஞ்சம்மி கும்புவியில் பலதுயர் கொடுநொந்தேன்;
அஞ்சல்எ னாமுன்நின் றாண்டுகொண் டருள்வாயே! (5)
586. நாறும லர்க்கொன்றை நளிர்சடை முடிமேற்கொண்டு
ஏறுவ லிந்தூரும் எழில்ஆ மாத்தூரா!
நீறுமி கப்பூசி நிலவிசை பெறுவேன்நெஞ்சு
ஆறுதல் உறுமாறே ஆண்டுகொண் டருள்வாயே! (6)
587. களிப்புறு மடமானார் கண்இன மேபோலும்
அளிக்குலம் மலிசோலை ஆமாத் தூரானே!
கிளிப்புல வோன்எனநின் கேழ்கிளர் சேய்வரம் அன்று
அளித்தது பொய்யாமே ஆண்டுகொண் டருள்வாயே! (7)
588. மருச்செறி மலர்ஏந்தி வானவர் எல்லோரும்
அருச்சனை செய்துயவாழ் ஆமாத் தூர்அப்பா!
திருச்சிற்றம் பலத்தென்பால் செப்புசொல் மெய்யானால்
அருச்சுன னொடுசொலவே ஆண்டுகொண் டருள்வாயே! (8)
589. திருமகள் மணவாளன் தினகர குலமகவாய்
வரும்எழில் ஆமாத்தூர் வாய்தினம் வாழ்சிவனே!
ஒருமையில் சிறியேனை உமையவள் பெறும்உன்றன்
அருமைமக் களிற்கூட்டி ஆண்டுகொண் டருள்வாயே! (9)
590. பாதிவெண் மதிசூடிப் பழுத்துறும் ஆமாத்தூர்
வீதியில் உமையோடும் விடைமிசை வருவானே!
நீதியில் கடையேனை நிறைபுகழ் ஒரு நால்வர்க்கு
ஆதியில் ஈந்தாங்கீந் தாண்டுகொண் டருள்வாயே! (10)
அறுசீர் வண்ண விருத்தம்
தனனா தாத்தாத் தய்யனா
591. அறியார் பாற்போய்ப் பல்லெலாம்
அவர்நேர் காட்டாக் கல்வியே
செறிவார் கூட்டாற் றுள்ளியே
திரிசீர் வேட்டேற் கெய்துமோ?
மறிபே ராத்தோட் செய்யவா!
மழவான் மாற்றார்க் கொல்கலாய்!
சிறியார் போற்றாச் செய்கையாய்!
திருவா மாத்தூர்த் தெய்வமே! (1)
592. கிளிவாழ் வேய்த்தோட் டையல்சேர்
கிரிபோல் மாட்டேற் றெய்தியே
அளியார் நீற்றாற் பொய்யில்சீர்
அருளா நாட்போக் கெள்ளலே;
களிசால் கூத்தாட் டுள்ளவா!
கடமா மாத்தோற் கொள்சிவா!
தெளிநீர் ஆற்றாற் செல்வம்ஆர்
திருவா மாத்தூர்த் தெய்வமே! (2)
593. அவமா வாக்காற் பொய்சொலேன்;
அருள்நீர் பாட்டாப் பெய்குவேன்;
நவகோ ளாற்றீட் பெய்திடா
நலமே சேர்த்தாட் கொள்ளுவாய்
தவமே நோய்பார்க் கைவிடாய்!
தயைமா றாச்சீர்ச் சைவர்சூழ்
சிவனே! நீற்றாட் டல்கலாய்!
திருவா மாத்தூர்த் தெய்வமே! (3)
594. பழிநா ணாப்பேய்க் கொவ்வு நீர்
படுமா னார்க்காட் செய்குவா -
ருழிநான் ஏற்றேற் றொல்கல்போய்
உனையே வாழ்த்தீட் டொல்வனோ?
அழியா வீட்டாட் டையனே!
அவியா மாத்தீக் கையுளாய்!
செழியா ஆர்த்தார்க் கொள்பவா!
திருவா மாத்தூர்த் தெய்வமே! (4)
595. இகழ்தீ யோர்ப்பார்த் துள்ளுளே
இடியா தேற்றார்ப் பெய்தவே
மிகமா லாய்ப்பாச் சொல்லும்நான்
மெலியா தேற்றாற் றொய்வையோ?
பகலோ ராற்பூக் கொள்பதா!
பகடூர் கார்க்கூற் றைவெல்லாய்!
செகமேழ் காப்பாட் புல்லுவாய்!
திருவா மாத்தூர்த் தெய்வமே! (5)
596. அயலார் சீர்ப்பார்த் துள்ளில்நோ
அடைவேன்; வேட்பார்க் கெய்தொணா
வியனே கேட்டார்த் தெள்ளுவேன்;
விதிர்வே லோற் சேர்த் துள்வையோ?
கயல்போல் வாட்போற் சொல்கணாள்
கணவா! மாற்றார்க் கொல்லுமா
செயமா லேய்ப்பார்க் கைவிடாய்
திருவா மாத்தூர்த் தெய்வமே! (6)
597. மருள்வார் பேச்சாற் பொய்களால்,
வழிமா றாட்டாற் றையலார்
இருள்வாழ் வாற்பாழ்த் துள்ளநான்
இனி,மே லோர்ப்பார்த் துய்வனோ?
சுருள்வால் நாய்ச்சோற் றைவிணோர்
சுகநேர் வீட்டார்க் குள்ளொல்வாய்
தெருள்வார் கூட்டாற் கைலைபோல்
திருவா மாத்தூர்த் தெய்வமே! (7)
598. மகவா னாற்பார்க் குள்ளொர்கோ
மகள்சே யாய்ப் போர்ச் செய்கையான்
மிகமே லாத்தோற் றைபெறா
வெகுமாண் வேட்டேற் கைவிடேல்;
புகழ்வார் வாக்காற் சொல்கைநேர்
புரிவாய்! சாக்காட் டொல்லுறாய்!
திகழ்சீர் வாய்த்தாப் பல்கவாழ்
திருவா மாத்தூர்த் தெய்வமே! (8)
599. கரியே போற்றோற் றையனோ
கதிர்சூழ் வேற்றோட் செய்யனோ
இரியா மாற்றார்க் கொல்லினான்
எனவாழ் வாற்காட் டைதிலே;
கிரிதா ளாற்கோட் டெல்லைநேர்
கிழவா! பார்த்தேர்ச் செல்கையாய்!
தெரியார் கேட்டாற் பொய்மைதீர்
திருவா மாத்தூர்த் தெய்வமே! (9)
600. சனிநே ராத்தீச் செய்கைதோய்
சமண்வா தார்த்தாழ்த் தைமுனாம்
முனிவோர் நாற்பாற் கொள்கைவாய்
முறைமே னாட்சாற் றல்பொயோ?
கனிஓர் பேய்க்காச் செய்தவா!
கவிமால் போக்காக் கள்வனே!
செனியா மேற்சீர்ச் சைவர்சேர்
திருவா மாத்தூர்த் தெய்வமே! (10)
எண்சீர் விருத்தம்
601. செங்கதிரும் சந்திரனும் தீயும் கண்ணாம்
சிவனைஅறம் செயும்கருணைச் சிவைஒர் பாகம்
தங்கவிடைப் பரிஉகைத்து வானில் செல்வான்
தனைத்தவளப் பொடிபோர்க்கும் தழல்போல் வானைப்
பங்கயத்தோன் நடுத்தலையில் பலிகொள் வானைப்
பசும்பொன்மலைச் சிலைவளைக்கும் பணைத்தோளானை.
அங்கசனை எரித்தொருவா றளித்திட் டானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவதென்றே? (1)
602. மானைஒளிர் மழுப்படையோ டணிந்துள் ளானை,
மரகதமங் கலைஅமைந்த வாமத் தானைத்
தேனைநிகர் தமிழ்க்கவிகேட் டுவக்கின் றானைத்
திரிபுரங்கள் பொடியாகச் சிரித்திட் டானை,
மீனைஒரு வலைவீசிப் பிடித்தோன் என்ன
விளம்பினும்வீ டளிப்பானை, விரவார் ஏவும்
ஆனையின்ஈர் உரியாய போர்வை யானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவதென்றே? (2)
603. வட்டவார் சடைத்தலைமேல் மதிவைத் தானை
மணிகண்டன் தனைப்புரிநூல் மார்பத் தானைச்
சிட்டர்போற் றியஎழுத்தைந் துடைப்பி ரானைத்
திருநீறும் கண்டிகையும் திகழப் பூண்டார்க்கு
இட்டம்ஆ வனமுழுதும் நடத்து வானை,
இகபரசா தனம்கருதும் ஈடுள் ளாருக்கு
அட்டமூர் த்தியும்ஆகி நிலவு வானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவதென்றே? (3)
604. முன்னைமறைத் தலையினது முடிவா னானை,
முதியார்க்கெல் லாம்முதலா முளைத்துள் ளானைப்
பொன்னைமணி யைப்புனைவார் பலரும் நாணப்
புயங்கமும்வா னவர்எலும்பும் பூண்டுற் றானைத்
தன்னைநிகர் பொருள்ஒன்றும் இல்லா தானைச்
சருவமுமாய் யாதினிலும் சாரா தானை,
அன்னை முதல் பகர்உறவு முழுதா னானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவதென்றே? (4)
605. காரணமும் காரியமும் ஆகி னானைக்
கண்களின்மேல் கண்ணுடைய கடவுள் தன்னைப்
பூரணமாய்க் கருதுருவும் கொள்வான் தன்னைப்
புலித்தோல்மே லாஆர்க்கும் பொற்பி னானை,
நாரணனும் நான்முகனும் அறியொண் ணானை,
நமன்றனைச்செற் றருள்மிகையால் நல்கி னானை,
ஆரணமும் ஆகமும் கழறு வானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவ தென்றே? (5)
606. வானேற்றுத் திரளேபோல் முழங்கும் பேய்கள்
மருங்காட நடிப்பானை, மடிவில் லானை,
ஊனேற்ற மூவிலைவேற் படைக்கை யானை,
ஊன்உறக்கம் தவிர்ந்தார்க்கும் உறவா வானை
தேனேற்ற மலர்க்கொன்றைத் தொடைய லானைச்
சிற்றறிஞர் அறிவரும்மா தேவன் தன்னை,
ஆனேற்றுக் கொடிஉயர்த்தும் அரசா னானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவ தென்றே? (6)
607. சேலார்கண் ணார்வருந்தச் சென்றேற் றானைத்
தீவேள்வி அழிந்தொழியச் செருச்செய் தானை,
நாலாய கரணங்கட் கப்பா லானை,
நறும்புனல்பெய் கல்லாற்கீழ் நணுகி னானை,
பாலாடித் தயிராடி நெய்யும் ஆடிப்
பழிக்கரிய நீறாடும் பரமன் தன்னை,
ஆலாலம் அருந்தியும்ஓர் தீங்கெய் தானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவ தென்றே? (7)
608. குருச்சிவனைக் கோல்வளையாள் பாகத் தானைக்
குற்றம்முற்றும் பொறுத்தருளும் குணத்தி னானை,
உருச்செபித்துக் கருதுமவர் வசமா வானை,
ஊன்உயிர்க்கும் உள்ளொளியா ஒளிர்கின் றானை,
விருச்சிகத்திற் கொடியாராம் அசுரே சர்க்கும்
வேணவரம் அளித்தானை, விமலன் தன்னை,
அருச்சுனன்பால் வேடன்உருக் கொடுசென் றானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவ தென்றே? (8)
609. நந்துலவும் செவிஒருபத் துடையான் தன்னை,
ஞானிகட்கும் யோகிகட்கும் நடுநின் றானைச்
செந்துவர்க்குன் றெனநிலவு கோலத் தானைச்
சீயமொன்றின் உதிரம்உண்ணச் சிம்புள் ஆகும்
மைந்துடைய பெருமானை, மறவா தாரை
மறவானைப் பிறப்பிறப்பில் மருவா தானை,
ஐந்துகரத் தான்முருகன் தாதை தன்னை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவ தென்றே? (9)
610. கருந்தனக்குன் றாயவில்லால் புரம்எய் தானைக்
காலிகட்குக் கோடளித்த கருணை யானை,
மருந்துறழ்நீர்ப் பம்பைநதி வடமேற் காகும்
வன்னிவனக் காவலனை, மரம்சுட் டுண்டாம்
இருந்தைநிறச் சாரணர்க்கோர் கூற்றன் ஆகி
இயற்றமிழ்மா மாரிபெய்த இளையோ னாதி
அருந்தவத்தோர் நால்வர்உணர் பொருளா னானை
ஆமாத்தூர்க் கோயிலுட்கண் டறிவ தென்றே? (10)
கொச்சகக் கலிப்பா
611. திலகநுதற் கவுரியொடு திருவாமாத் தூர்த்தெருவில்
பலதடவை பவனிவரும் பவளமலை அனையானே!
கலகமுடைப் புறநெறியோர் களிமலிவால் கலக்குற்றேன்
உலகறியத் திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (1)
612. என்னாணைக் குள்அடங்கி எறிகடற்பார் உலகாள்கோன்
தன்னாணை நடத்துவதே சந்ததமும் விழைகின்றேன்;
தென்னாணைக் கஞ்சார்வாழ் திருவாமாத் தூர்ச்சிவனே!
உன்னாணை! திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (2)
613. தீங்காளர் ஆணவத்தால் செயும்கொடுமை சகியாதியான்
ஈங்காய்வ தறியாயோ? எழில்திருவா மாத்தூரா!
ஏங்காதிப் புவியொடுவா னிடத்துறும்நல் லோர்எவர்க்கும்
ஓங்கார்வத் திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (3)
614. தவம்இகழ்ந்து காலபலம் தனைப்புகழும் தருக்குற்றார்
அவமதிப்புச் சகிக்கில்லேன்; அணிஆமாத் தூர்அரசே!
கவலைஒழிந் துன்னடியார் கணம்கூடிக் களிப்புறுமாறு
உவமையில்சீர்த் திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (4)
615. அள்ளல்முந்நீர்ப் புவிமகளும் அழுதுமிகத் தவிக்கின்றாள்;
கள்ளநெடு மால்ஏனோ கருதான்போல் துயில்கின்றான்;
வெள்ளமலி பம்பைநதி வியன்ஆமாத் தூர்விமலா!
உள்ளபடி திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (5)
616. மறங்காட்டும் கொடுங்கோலார் மனத்துவகை மலிந்ததனால்
அறங்காமுற் றார்பலரும் அஞ்சிஒஞ்சி அயர்கின்றார்;
நிறங்காந்தள் புரைவானே! நெடும்பொழில்ஆ மாத்தூரா!
உறங்காநீ திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (6)
617. மல்கருவிக் குன்றுதொறும் மயில்ஏறி அயில்ஏந்திச்
செல்கதிவேட் டிறைஞ்சும்எனைத் தியக்கிடல்; ஆ மாத்தூரா!
அல்கடுக்கும் கொடும் பாவத் தரசாய கலிபுருடன்
ஒல்கஇன்றே திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (7)
618. பெற்றவுடன் தாதைகையால் பிறர்மனையில் இடும்சேய்க்குக்
கொற்றநெடு மால்பெருமை கொடுத்தருள்ஆ மாத்தூரா!
விற்றடங்கைப் பேடியிடம் வேடன்உருக் கொண்டொருக்கால்
உற்றபடி திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (8)
619. மைவழியும் நெடுமேனி மறலியினுக் கஞ்சாதார்
செய்வலிய தவம்போலும் திருவாமாத் தூர்ச்சிவனே!
பொய்வழக்கர் உணராநின் புத்திரர்போற்சிற் சிலர்ஈண்டு
உய்வதற்காம் திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (9)
620. நீதியொடு மாதவமும் நிகழ்துதிசொல் ஒருநால்வர்க்கு
ஆதியில்வேண் டுவமுழுதும் அருள்திருவா மாத்தூரா!
காதிஉணும் தீங்கொழிந்து காசினியில் எல்லோரும்
ஓதிஉயும் திருவிளையாட் டொன்றேனும் செய்தருளே! (10)
எழுசீர் விருத்தம்
621. சினம்கவின் றெழுங்கால் திறக்கும்ஒர் கனற்கண்
சித்தன்ஆம் சிவபெரு மானே!
நினங்கமாம் இலிங்கத் தலங்களுள் தலையாய்
நிகழ்தரும் மாதையூர் நேடி
மனம்கரு தியவா றாடல்வேட் டுற்றேன்;
வஞ்சனை செய்தெனை வருத்தேல்;
அனங்கவேள் கணையால் தியங்குறா வணம்நின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (1)
622. காரணம் எனஓர் கனவினில் முக்கால்
கழறிய கந்தவேள் கரந்தான்;
பாரணங் குறும்நோய் சகித்திடா துன்னைப்
பலகவி களில்துதித் திருந்தேன்;
நாரணன் கலைதோய்ந் தவர்களே விரும்பும்
நலம்திகழ் மாதையூர் நம்பா!
ஆரண முடிப்பீ தெனச்சொலி எனைநின்
அடியரிற் கூட்டிஆண் டருளே! (2)
623. கற்புறு மடவார் எனஒரு நிலையே
கருதிலேன்; காண்பன முழுதும்
பொற்புநீ டுனது வடிவெனத் துணியும்
பொதுமையும் புனைந்திலேன் அந்தோ!
வெற்புவில் பிடித்துப் புரம்எரித் துவந்தாய்!
வியன்பொழில் மாதைவாழ் விமலா!
அற்புதக் கருணை மிகவிளைத் தெனைநின்
அடியரிற் கூட்டிஆண் டருளே! (3)
624. தெருட்பெரும் புலவோர் தாமும்மிக் குவப்பத்
திகழ்தமிழ்ச் சந்தமும் தரும்நீ
இருட்கலிப் பிணக்கால் துயர்ப்படக் கண்டாய்;
இதுவும்நின் தகவினுக் கிசைவோ?
சுருட்பணிக் கலனும் புனைந்துளாய்! மாதைத்
தொல்பதி சூழ்தரச் சோம்பாய்!
அருட்கடற் பெருக்கில் துளிதெறித் தெனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (4)
625. சஞ்சலப் பிணிதீர்த் தருள்மருந் துனது
சரணபங் கயங்கள்என் றுணர்ந்த
நெஞ்சரில் குலவப் பெற்றும்மா மயல்பேய்
நிதம்எதிர்த் துறுக்கநெட் டுயிர்த்தேன்;
கஞ்சனும் பூசித் துயும்புகழ் மாதைக்
காவலா! கவுரியோ டொருக்கால்
அஞ்சல்என் றடல்மால் விடையில்வந் தெனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (5)
626. நீறுபோர்த் துனது கண்கள்முற் பணியும்
நெறிஉளேன் நெஞ்சகம் நிதமும்
ஊறுபட் டுழலத் தகுங்கொலோ? ஆமாத்
தூரில்வாழ் ஒள்ளிழை பாகா!
வேறுவே றுருவும் இயற்கையும் குணமும்
விரதமும் விதித்துள மதங்கள்
ஆறும்நின் றனவாத் தெரித்தநீ எனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (6)
627. சுகிர்தமா தவரே தொழத்திகழ் பொருளாம்
சூரியன் குலத்திரா கவன்றான்
மகிழ்வுற வரங்கள் ஆயிரம் வழங்கி
மாதையூர் வாழும்மா தேவா!
நகிலமங் கையர்சூழ் மதன்கணைப் போரால்
நலிந்துளேன் என்னினும் நரர்வாழ்
அகிலம்முற் றுயவே முயன்றுளேன் எனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (7)
628. மூவகை மயலும் தணந்த மூதாதை
முதலினர்ச் செகுப்பது முன்னும்
காவலன் தனக்கும் கணைஅளித் துளநீ
காலிகாப் பதுவிழை வேனைப்
பாவமா னிடர்முற் கொன்றிடேல்; மாதைப்
பதியில்வாழ் பரம்பரா! பலவாம்
ஆவலும் முடித்துக் களிக்குமா றெனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (8)
629. செய்யமால் வரைநேர் இருமகர்ப் பயந்தும்
தெளிதமிழ் உணர்வட லூரான்
வையநிந் தையினுட் படச்செய்தாய்; நொந்தேன்;
மறுத்தவன் வரின்அலால் மகிழேன்;
பையர வணிந்தாய்! பசுக்குலம் முழுதும்
பரிசுறும் மாதைவாழ் பரனே!
ஐயகோ! அருள்முற் றொழிந்திடா தெனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (9)
630. பொருவில்மெய்ப் புலவர் நால்வரில் ஒருவன்
புகல்தொகைப் பதிகம்இப் பொல்லேன்
இருவயிற் குலவக் கொண்டமை நீயும்
யானும்ஓர்ந் ததும்இலை கொல்லோ?
பெருநிலம் உணரப் புரிந்திடா தொழியேல்;
பிழைஇல்சீர் மாதையிற் பெரியோய்!
அருகனும் தான்ஆம் அகண்டன்நீ எனைநின்
அடியரில் கூட்டிஆண் டருளே! (10)
கட்டளைக் கலித்துறை
631. கடியேற்கும் கொன்றைச் சடையாய்!
கருணைக் கடல்அனையாய்!
வடியேற்கும் மூவிலைச் சூலம்கொண்
டாய்!எழில் மாதை வள்ளால்!
பிடியேற்கும் நன்னடைப் பேதையர்
மோகப் பெருக்கில்அமிழ்
அடியேற்குச் சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (1)
632. இறவாய்! பிறந்தும் அறியாய்! தன்
பங்கில்ஓர் ஏழைவைத்தாய்!
மறவார் மனம்தொறும் புக்கொளிர்
வாய்! எழில் மாதைவள்ளால்!
பறவா அலைந்தைம் பொறியால்
வருத்தப் படாமல், உய்வான்
அறவாழ்க்கைச் சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (2)
633. சலந்தாழ் கிலார் புரம் மூன்றெரித்
தாய்! பொறிச் சார்ங்கமொடு
வலந்தோய் பரசும் தரித்துவந்
தாய்! எழில் மாதைவள்ளால்!
குலந்தீங் கடைதல் சகியாமை
யால் மிகக் கூவிநொந்துள்
அலந்தேன்; மெய்ச்சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (3)
634. பொருளோடு நெல்லும்நற் பெண்களும்
அன்றொர் புலவற் கிட்டாய்!
மருள்வாதை தீர்க்கும் குருவாகு
வாய்! எழில் மாதைவள்ளால்!
இருள்வார் குழற்பிடி யோடுவெள்
ஏற்றினில் ஏறிவந்துன்
அருள்வாழ்க்கைச் சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (4)
635. குறிஆய்ந் துளார்க்கெளி யாய்!தலை
ஓடொன்று கொண்டிரப்பாய்!
மறிஆர்ந்த பாகத்தொர் மங்கைவைத்
தாய்! எழில் மாதைவள்ளால்!
சிறியார் உணர்வரி தாம்எழுத்
தோர் ஐந்தும் செப்புகிலார்
அறியாத சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (5)
636. தண்டமிழ் வாஞ்சை தவிர்கின்
றிலாய்! எழு சாகரம்சூழ்
மண்டலம் முற்றும் புகழ்ந்தோதும்
சீர்திகழ் மாதைவள்ளால்!
கொண்டல்வண் ணத்திரு மால்பிர -
மாமுதல் கூறவளர்
அண்டர்தம் சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (6)
637. கடைந்திட்ட வாரியின் நஞ்சுண்டுய்ந்
தாய்!கடைக் கண்கள் தொறும்
அடைந்திட்ட பேரருள் ஈசா!எண்
சீர்திகழ் மாதைவள்ளால்!
மிடைந்திட்ட வார்சடைச் சித்தர்எல்
லோரும்பல் வெற்பின்முன்நாள்
அடைந்திட்ட சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (7)
638. ஒருத்தன்வில் லால்அடித் திட்டதற்கு
அம்பொன் றுடன் அளித்தாய்!
மருத்தரும் ஆம்பலம் பொய்கையின்
சீர்திகழ் மாதைவள்ளால்!
பெருத்தமெய்ப் பத்தியி னால்பெற்ற
மூதருட் பேற்றில்உள்ள
அருத்தமென் சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (8)
639. எஞ்சா மதமலைச் சென்னியி -
னான்குகன் ஏத்தும்அப்பா!
மஞ்சார் பொழிலில் மயில்ஆடும்
சீர்திகழ் மாதைவள்ளால்!
செஞ்சா றொழுக இகலோர்
பலரைச் செகுத்துவத்தற்கு
அஞ்சாத சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (9)
640. யோசித்துப் பாடல்சொல் லாவண்மை
நால்வர் உறக்கொடுத்தாய்!
வாசித்து நோம்பலர் ஓர்வரும்
சீர்திகழ் மாதைவள்ளால்!
மாசித்தர் நெஞ்சத் துலோபம்கண்
டேசி வழக்கிடும்நான்
ஆசித்த சித்தி அறுபத்து
நான்கும் அளித்தருளே! (10)
சந்தக் கலிவிருத்தம்
641. நேமத் திடைநின்றோர் நெறியிற் படிவார்க்குக்
காமத் தொடர்பொன்றும் கடுவென் றுணர்கில்லேன்;
தாமப் பதம்சூட்டாய்; சயிலப் பிடிதன்னை
வாமத் தினில்வைத்தாய்! மாதைப் பெருமானே! (1)
642. நெஞ்ச மதனூடு நீல விழிமானார்
கஞ்ச முகம்தோன்றும் கவலை பெருகாதே
அஞ்சல் எனக்கூவி ஆண்டு கொளவேண்டும்;
வஞ்சம் அறியேன்காண்; மாதைப் பெருமானே! (2)
643. வடலூ ரனைஎண்ணி வாடும் தமியேனைக்
கடல்சூழ் புவிஏசக் கழியா தருள்பொழிவாய்;
அடல்வே ழமும்ஏறும் அபிரா மியொடூர்வாய்!
மடல்சூழ் மலர்ச்சோலை மாதைப் பெருமானே! (3)
644. உளமோ டடியேன்நின் உயர்வோ துபல்பாவும்
களம்ஆர் தருநஞ்சக் கனலிற் கொடியனவோ?
தளம்ஆ கியபூதத் தலைவா! சிவசம்போ!
வளம்ஆ யிரம்மன்னும் மாதைப் பெருமானே! (4)
645, எய்யா துலகிற்காம் இதமே முயல்வேனைப்
பொய்யா ளன்என்றதுதான் புகலா வகைபுரிவாய்;
பையார் பணிபூணும் பரமா! பரமேட்டீ!
மையார் கறைக்கண்டா! மாதைப் பெருமானே! (5)
646. ஊனே விழைகின்றார் உறுகண் உறல்கண்டன்றி
யானேங் குதல்தீரேன்; இதில்நிற் கிசைவின்றோ?
ஆனே றுயர்த்திட்டாய்! அழியா முதல்ஆனாய்!
மானேந் துகைப்பரமா! மாதைப் பெருமானே! (6)
647. எந்நாள் வரைபொல்லார்க் கிதம்நீ புரிவாயோ
அந்நாள் வரைநின்வீ டதையான் விழையேன்காண்;
கைந்நான் குடையார்தம் கணத்தில் தலையானாய்!
மைந்நா கம்உரித்தாய்! மாதைப் பெருமானே! (7)
648. விசையன் தவம்செய்து விழையும் பயனோ , என்
நசையோ, உயர்வதுநீ நன்கோர் குவைஅன்றோ?
கசையொன் றுகைக்கொண்டு காளைப் பரிஊர்வாய்!
வசையொன் றும்இலானே! மாதைப் பெருமானே! (8)
649. இக்கட் டறநீக்கி எண்சித் தியும்எய்திப்
பொய்க்கட் டறும்முத்தி புகவேட் பவர்பலரோ?
முக்கட் கரிமுகவன் முருகோன் எனும் இருநன்
மக்கட் பெறுவானே! மாதைப் பெருமானே! (9)
650. ஏழ்வா ரமும்உனவாய் எண்ணித் தெளிநால்வர்
ஆழ்வார் கடல்போலும் அருள்யான் அடைவேனோ?
தாழ்வார் சடைநம்பா! தவளக் கயிலையின்மேல்
வாழ்வா ரலர்போற்றா! மாதைப் பெருமானே! (10)
சந்தக் கலித்துறை
651. தொண்டர்க்கெ லாம்அன்பு செயும்வாழ்வு
நாடித்து யர்ப்பட்டுளேன்
சண்டப்பெ ருங்கோரன் வசம்ஆகி -
டாதென்று தயைசெய்வையோ?
கண்டக்க றைப்பேர்மொ ழிந்தாரும்
உய்யச்செய் கருணாகரா!
அண்டர்க்கொ ரேதஞ்சம் ஆம்மாதை
நகர்மேவும் அபிராமனே! (1)
652. சித்தாடும் வகைசெய்து, பிறகுன்ப
தத்தூடு சேரச்செய்தால்
இத்தார ணிப்பாவை மணவாளன்
முதலோர்சொல் இசைகுன்றுமோ?
பத்தாய செவிகொள்ளும் ஐந்தான
னத்தோர்ப ரஞ்சோதியாம்
அத்தா!மெய் அரசாகி ஆமாதை
நகர்மேவும் அபிராமனே! (2)
653. காதித்தி னும்தீமை மனிதர்க்கி
லாவாறு கதிர்வேலினால்
சாதித்தி டற்காசை கொளும்என்னை
ஆளத்த காதோ? சொலாய்!
நீதித்த கைக்காவல் மன்னர்க்கொர்
உரையாணி நிகராகிவாழ்
ஆதித்த குலராமர் தொழமாதை
நகர்மேவும் அபிராமனே! (3)
654. நம்பொற்றை மதிதந்து ளாய்;தொண்டும்
ஒருவாது நான்செய்துளேன்;
வெம்பொற்றர் பலர்சூழும் நமன்ஊர்பு
காதுன்னுள் மேவக் கொள்வாய்
தம்பொற்ப ணம்தஞ்சம் என்றெண்ணு
வாரைத்த டுத்தாள்கிலாய்!
அம்பொற்சி லைக்கைய னே! மாதை
நகர்மேவும் அபிராமனே! (4)
655. சகளங்கண் மணிஎன்று கருதாத
பொய்மைத்த வத்தோர்கள் முன்
நிகளம்க றைக்காலில் அணி வேழம்
எனநோதல் நீங்கேன்கொலொ?
மகளங்கம் ஒருபாதி யில்கொள்ள
ஒல்காய்!ம றைச்செல்வராம்
அகளங்க முனிவோர்கள் தொழமாதை
நகர்மேவும் அபிராமனே! (5)
656. தண்டாயு தம்சூலம் முதலாய
படைகொண்ட சமன் ஏவலர்க்
கண்டாய்வு றும்போது வருவாய்எ
னச்சொல்லல் கழிவல்லவோ?
வண்டார்ம லர்க்கொன்றை மாலைப்பு -
யம்தோயும் மலைநாணஅன்று
அண்டார்பு ரம்செற்ற வா!மாதை
நகர்மேவும் அபிராமனே! (6)
657. பாழாய பொருள்என்று பலர்சொல்லும்
நாள்அம்பை பாகத்தனா
வாழாதி முத்தாஎ னக்கெஞ்சும்
என்பாடல் வனையாய்கொலோ?
தோழாஎ னக்கூவி னன்தூதும்
ஆனாய்!சு ரர்க்காகமுன்
ஆழாழி நஞ்சுண்ட வா!மாதை
நகர்மேவும் அபிராமனே! (7)
658. கம்பன்த னைப்போலும் இசையும்பெ
றாதுட்க லங்குற்றுளேன்
வம்பன்ற றைந்துள்ள வாறென்று
செய்தென்னை வாழ்விப்பையோ?
கும்பன்த வத்தோர்கள் கோவாக
வைத்தாய்!கு றுங்கோமகற்கு
அம்பன்ற ளித்திட்ட வா!மாதை
நகர்மேவும் அபிராமனே! (8)
659. சதிகோடி செய்யும்கொ டுங்கோல்பி
டித்தார்த மைச்செற் றுமெய்த்
துதிபூணும் அன்பற்செய் தால்நின்பு -
கழ்க்கூறு தோயும்கொலோ?
திதிபால ரிற்சீர்த்த கயம்ஒன்றை
மாவைச்செ குத்தாண்டுவாழ்
அதிவீர ரைப்பெற்ற வா!மாதை
நகர்மேவும் அபிராமனே! (9)
660. இருள்சார ணர்க்கீன ராம்புத்தர்
கண்டீனர் என்றெண்ணவே
மருள்பாத கத்தோர்தம் மேல்வைத்த
தயைஎன்று மாயும்கொலோ?
வெருளாத வலிஎய்தி ஒருநால்வர்
மேல்நாள்வி ளங்கச்செய்பேர்
அருளாழி யரனே!நம் மாமாதை
நகர்மேவும் அபிராமனே! (10)
67. பம்பைக்கரைப் பிரான் பதிகம்
கலித்துறை
661. முத்தாரமு லைச்சியர் தம்பெரு மோக நோயால்
செத்தார்பலர் தம்முடன் என்னையும் சேர்த்தி டாதே
சித்தா!சிவ லோகம்எய் தத்தகு சீலர் யார்க்கும்
கத்தா!கவின் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (1)
662. அடுக்கும்பல அண்டமும் காத்தினி தாளும் நீயான்
தொடுக்கும்தமிழ்ப் பாடல்க ளூடொன்றும் சூடி டாயோ?
எடுக்கும் கழல் தாண்டவ னே!இமை யார்தம் ஊரைக்
கடுக்கும் திரு மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (2)
663. பண்டாயம றைத்திரள் யாவும்ப கர்ந்து நாளும்
கொண்டாடும்நின் சீர்த்திஎன் போல்பவர் கூறற் பாற்றோ?
அண்டார்புரம் போல்மதன் மேனியும் அன்று நீறக்
கண்டாய்!எழில் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (3)
664. ஆத்தாளுடன் அப்பனும் ஆம்உனக் கன்பு செய்தும்
பாத்தான்றொடுத் தேத்தியும் துன்புறப் பண்ணல் யாதோ?
மாத்தாட்பக டான்வதை யாதன்றொர் மாணி உய்யக்
காத்தாய்!எழில் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (4)
665. நற்றாரணி உய்திற மேதினம் நாடும் என்னைப்-
பற்றாதுகை விட்டனை யேல்கொடும் பாவம் அன்றோ?
பொற்றாமரை வாவியிற் பாவலன் போன்று போனாய்!
கற்றார்புகழ் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (5)
666. குலம்தான்நிலம் தான்பொருள் ஆம்எனக் கொண்டு வாடி
மலம்தான்தினும் பன்றிஒப் பாமவர் மாட்டு யாதே -
அலந்தாதரித் தாடலும் பாடலும் ஆற்று வாரைக்
கலந்தாள்பவ! மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (6)
667. வெளிக்கும்துணை நீஎனத் தேறுநர் வேட்கை யாவும்
அளிக்கும்தகை தோயும்நிற் போற்றியும், அஞ்சி னேன்காண்!
ஒளிக்கும்பயம் போய்ப்பசுக் கூட்டம்முற் றுய்ந்து கோட்டால்
களிக்கும்புகழ் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (7)
668. வானாடர்தம் கோன்மகன் தன்னிடம் வஞ்ச வேடன்
ஆனாய்எனப் பல்விசை சொல்கவி ஆசி யாயோ!
தேனால்மல ரால்கனி யால்மதன் சேனை தன்னால்
கானார்பொழில் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (8)
669. அடல்வேழம கன்குகன் தந்தைஎன் றாய நீதான்
வடலூரனைக் கொன்றனை; என்னையும் மாய்த்திடாதே;
மடல்ஆயிரம் சூழ்மல ரோன்மறை வாய்மை ஆய்ந்தோர்
கடல்போல்வளர் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (9)
670. வலிஅன்றொரு நால்வர்பெற் றார்எனில் வம்பென் பார்முன்
புலியென்றவிர் மாண்பொரு பாவலன் பூணொ ணாதோ!
மலிவெண்பொடி பூசுகின் றார்பலர் வாழல் கண்டு
கடல்போல்வளர் மாதையின் பம்பைக் கரைப்பி ரானே! (10)
அறுசீர் விருத்தம்
671. முசுக்கலை ஒன்றை மேல்நாள்
முடிபுனை அரசன் ஆக்கிக்
கொசுக்களில் அசுரர் எல்லாம்
குன்றல்செய் ஆமாத் தூரா!
இசுக்குவார்த் தைகள்கேட் டஞ்சி
எஞ்சியும், இகத்தில் உள்ள
பசுக்கள்வாழ் வதுவேட் டேன்உள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (1)
672. கோடலம் செருந்தி புன்னை
குருந்தைஆ தியவாழ் சோலை
ஆடலஞ் சிகிக்கூட் டார்க்கும்
அகவல்நீ டாமாத் தூரா!
ஏடலர் மலர்இட் டார்க்கும்
இரங்கும்நீ என்று நின்சீர்
பாடலே தொழிலா னேன்உள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (2)
673. நயம்தழைத் தவிர்சொற் பாடல்
நாள்தொறும் பகர்கின் றார்க்கே
செயம்தரும் ஆமாத் தூர்வாழ்
சித்தனாம் சிவபி ரானே!
அயன்தனை மதனைக் கூற்றை
அடிக்கடி நினைத்துச் சாலப்
பயந்துனை அடுத்தேன்; என்னுள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (3)
674. அகந்தையால் மலைபேர்த் தார்த்த
அரக்கனை அணிட்பொற் றாளின்
நகத்தனால் அடக்கி ஆண்டாய்!
தளிர்பொழில் ஆமாத் தூரா!
சுகம்தனை அன்னப் புள்ளைத்
தும்பியை விளித்துச் சில்சொற்
பகர்ந்திடற் கொல்கும் என்னுள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (4)
675. கஞ்சநாண் மலர்ப்புத் தேளின்
கவின்தலை ஓட்டில் ஏற்று,
நஞ்சமும் அருந்தும் நம்பா!
நலம்பொலி ஆமாத் தூரா!
கொஞ்சமும் கருணை இல்லார்
கொடியகோற் றுணையால் நீடும்
பஞ்சநோய்க் கஞ்சும் என்னுள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (5)
676. ஆலமும் அமுதம் ஆக,
அசுரரும் அன்பர் ஆக,
மாலவன் மனையும் ஆக
வாழ்திரு ஆமாத் தூரா!
சாலநொந் தீன்ற தாயும்
தந்தையும் துணையும் இல்லாப்
பாலரில் தயங்கும் என்னுள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (6)
677. கொல்வதூன் அருந்தல் என்னும்
கோதுமுற் றொழித்திட் டார்க்கே
நல்வரம் அளித்தா மாத்தூர்
நடுவளர் ஞான மூர்த்தி!
அல்வரும் மதன வேள்தன்
அலர்கணை பொழியும் ஆற்றால்
பல்வகைத் துயர்ப்பட் டேன்உள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (7)
678. விற்றிறத் தொருவன் தன்பால்
வேடனில் சென்று வெல்சீர்
சொற்றிடச் சலியார் போற்றும்
தொல்புகழ் ஆமாத் தூரா!
கொற்றிநேர் மடவார் மாலும்
கொடுதளர்ந் தியாதின் மீதும்
பற்றிலார் எனவாழ் வேன்உள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (8)
679. செம்மலைத் துணையே போலத்
திகழ்இரு புதல்வர் பாலும்
கைம்மலர் ஏற்றா மாத்தூர்க்
காவல்செய் கடவு ளானே!
மும்மலப் பிணக்கம் தீர
முயன்றிலேன்; முதிர்போர் வேட்குப்
பம்மல்வெம் புலிபோன் றேன்உள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (9)
680. ஆரணங் களும்கேட் டொல்க
அருந்தமிழ்க் கவியால் போற்றும்
காரணர் நால்வர்ச் செய்தாய்!
காமர்நீ டாமாத் தூரா!
நாரணன் இவனே என்ன
நலம்பல செயும்பே ராசை
பாரணங் குயக்கொள் வேன்உள்
பதைப்பறப் பரிந்தாள் வாயே. (10)
சந்தக் கலிவிருத்தம்
681 துன்பம்மி கக்கொடு தோகையர் சொற்சூழ்
என்பணி கொள்ளஇ சைந்தபி ரான்ஊர்
பொன்பரம் என்றொரு போதும்ம யங்கா
அன்பர்கு லாவிய ஆமாத் தூரே. (1)
682. கொண்டல்நி றத்தரி கொற்றமும் நத்தாத்
தொண்டர்அ னேகர்தொ ழத்திகழ் தொல்ஊர்
எண்தரு சீர்கொள்இ ரேழ்உல கத்தும்
அண்டலர் இன்றிய ஆமாத் தூரே. (2)
683. மிஞ்சவ ருந்திய விண்ணவர் உய்வான்
நஞ்சம்அ ருந்திய நாயகன் ஆள்ஊர்
கஞ்சம லர்க்கழ னித்தலை தோறும்
அஞ்சம்இ ருந்தொளிர் ஆமாத் தூரே. (3)
684.காலப யம்கடு கேனும்இ லாராம்
சீலர்ப ராவிய சித்தர்பி ரான்ஊர்
மாலவ னுக்கநு மான்உற வாம்ஓர்
ஆலம ரம்திகழ் ஆமாத் தூரே. (4)
685. வெற்புத வத்தகு மெல்லியல் பாதிப்
பொற்புட லாவளர் புங்கவன் ஆள்ஊர்
சொற்புல வோர்பலர் சொல்லினும் முற்றா
அற்புதம் நீடுறும் ஆமாத் தூரே. (5)
686. நீறுடல் முற்றும்நி றைத்தது போல்வெள்
ஏறும் உகைத்தவிர் எந்தைபி ரான்ஊர்
பாறுதல் இன்றிய பம்பைஎ னும்பேர்
ஆறுவ ளைந்திடும் ஆமாத் தூரே. (6)
687. கானம றைப்பிர மன்தன்ஒர் கம்மில்
போனகம் உண்டமர் புண்ணியன் நண்ஊர்
மானவ ரைக்கலை வாரிதி ஆனாள்
ஆனனம் என்றொளிர் ஆமாத் தூரே. (7)
688. கோடிவில் வீரர்கு லம்புகழ் கோல்ஓர்
பேடியி னுக்கருள் பெம்மான் தன்ஊர்
நீடிய சோலையில் நீலம யில்கூட் -
டாடிய சீர்மலி ஆமாத் தூரே. (8)
689. சோகம்இ லார்பர வும்துணை மைந்தர்ப்
பாகம்உ ளாட்கருள் பண்ணவன் நண்ஊர்
மாகரும் ஓர்வரி தாம்மறை யாவும்
ஆகம மும்புகழ் ஆமாத் தூரே. (9)
690. உத்தமர் மெச்சிசை சேர்ஒரு நால்வர்
நத்தல்அ ளித்தருள் நாதர்தம் நல்ஊர்
முத்தமி ழும்,சிவ ஞானமும், மூவா
அத்தமும் மிக்குறும் ஆமாத் தூரே. (10)
எண்சீர் வண்ண விருத்தம்
தனதன தானன தனதன தானா
691. புலவர்பி ரான்அயன் அரிமுத லோர்அகல்
புவிநலம் நாடல்இல் கடையவ ரோ?நீ
அலதொரு தேவிலை எனினும்,அ னோர்தம
தரசென வாழினும் உனையும்வி டாதே;
பலபல ஆவதை செயும்அதி பாதகர்
பவிசொடு வாழல்செய் திடுமவன் வேறோ?
அலர்சொரி தாதகி மரம்மலி மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே (1)
692. படியொடு வானமும் ஒருகுடை யூடுறு
பரிசுற ஈயினும் மனம்மகி ழேனே
இடிநிகர் பேரொலி யொடுதிகழ் பாடல்சொல் -
லியபடி யேநட விலைஎனில் ஓர்வாய்;
கடிகமழ் தாதகி இதழிவி ளாவிலை
கலைமதி நீர்அறு கவிர்சடை யானே!
அடியவர் சேகரம் மிகவரு மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே (2)
693. சரபம தாகிஓர் அடல்நர கோளரி -
தனைஅடும் மாண்நுவ லியபுல வோர்தாம்
இரவல ரோடலை வதுமுறை யோ?அருள்
எனும்முது வாரியில் ஒருதுளி ஈவாய்;
வரகரு ணாகர! கவுரிம னோகர!
மழவிடை மாவல! சிவமக தேவா!
அரகர கோஎனும் ஒலிமலி மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (3)
694. கொதிதிரை வாரிதி அணிகலை யாநிகழ்
குவலய மாதுளம் மகிழ்வுறு மாறே
பதிதர்க ளாம்அர சரைஅடி யோடுகொல்
பவன்ஒரு மீளிஎன் எதிர்நில வானோ?
மதியணி வார்சடை விமல!ச தாசிவ!
மரகத மால்வரை அனையவள் பாகா!
அதிசயம் ஆயிரம் உறும்எழில் மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (4)
695. கபிலைமுன் ஆயபல் பசுவழி பாடுசெய்
கதைமுது நூல்பகர் தலின்வரும் நாயேன்
வபைநுகர் வார்முத லினர்எம னாய்அருள்
மலிவுசெய் தால்அல தமைகலன்; ஓர்வாய்
சபரன தோர்மகள் கதிபெற ஈபவ!
தசரத ராகவர் பலர்தொழும் ஈசா!
அபிநய மாதர்கள் நடமிடும் மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (5)
696. சபதம்விள் வார்குடி கெடஅடு மாரதர்,
தவர்,புல வோர்,வனி தையர்முத லோரோடு
உபமனி யூபகர் விதிதெரி வானிலும்
உயர்புகழ் தோய்தர உலவுநன் ஆரோ?
கபம்அறு யோகியர் உணர்பர மா!சிவ
கணமுத லாநிகழ் விடைஇவர் வானே!
அபிரிமி தாநுப விகள்வரு மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (6)
697. களபம தால்முழு கியமுலை மாதர்கள்
கலவியில் மாழ்குநர் பகர்கவி கேளாது
உளபரன் நீஎனில் அடிமைஉ யேன்; முனம்
ஒருவன்உய் காதையும் முதிர்பிழை யாமே;
பளபள மீறொளி மழுவொடு மான்அணி
பவளம கோனத மலையென வாழ்வாய்!
அளகையி னான்உற வொடுவள மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (7)
698. மகபதி யால்ஒரு மகள்தரு பாலகன்
வயின்முது வேடுவன் எனஉறல் போலாம்
விகடம்எ னோசெயல்? உமையொடு வாலிய
விடைமிசை வானவர் வளைதர வாராய்!
சகளம்எ லாம்இழி வினஎன வேஇகழ்
தவர்அறி யாஅதி மகிமைஉ ளானே!
அகளமும் ஆகிய பரசிவ! மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (8)
699. முகில்என வேபொழி தருமத வாரண
முகவனும் வேலனும் உமைதரு சேயாம்
மகிமையை யேமிக மொழிகிலர் தோய்தரு
வலியும்எய் தாதிவண் மனம்மெலி வேனோ?
பகிரதன் நீர்பெற அருளிய வா!சிலர்
பரகதி மேவிட ஒருகுரு ஆனாய்!
அகிலமும் வானமும் நனிபுகழ் மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (9)
700, மருமலி தேன்உகும் இதழியை நேர்கவி
வனைதரு நால்வரொ டொருவன்உ றாநாள்
ஒருமுகம் நாணம்எய் திழிவுனை மேவும்; மெய்
உணரும்என் னூடும்வை கிடும்அவன் ஆரோ?
திருவருள் வாரிதி அனையச தாசிவ!
திரிபுரம் நாசம்எய் திடநகு வானே!
அருவுரு ஆனவ! பொருவறும் மாதையில்
அழகிய நாயகன் எனஅமர் வானே! (10)
கலித்துறை
701. சென்னி மேற்பிறை சூடிய
நாயகன்; செல்விதாழ்
கன்னி தன்உடல் பாதியில்
வைகும் களிப்பினான்;
அன்னி யச்சமண் ஆதியர்
நிந்தையின் ஆசையான்;
வன்னி ஏந்தினன்; மாதையில்
வாழும்ம யேசனே! (1)
702. தேனு ஆதிய பல்பசுப்
பூசைகொள் சீர்மையான்;
ஆனும் ஆனையும் ஏறும்அம்
மான்! மலர் ஆத்தியான்;
பானு மூர்த்திகள் பன்னிரு
வர்க்கருள் பாலித்தான்;
வானு ளார்ப்புகழ் மாதையில்
வாழும்ம யேசனே! (2)
703. சிந்தி யார்க்கொரு காலும்தன்
மெய்யருள் செய்திடான்;
நந்தி மேல்மனை யாளொடும்
சேயொடும் நண்ணுவான்;
அந்தி வானம்ஒப் பாம்நிறத்
தாதிஅ நாதியான்;
மந்தி பாய்பொழில் மாதையில்
வாழும்ம யேசனே! (3)
704. பாலும் நாணும்வெண் ணீறணி
வாரது பங்கினான்;
சேலு லாம்கண்மின் னார்பலர்
மால்கொளச் சென்றவன்;
போலும் ஓர்துணை இல்லவன்;
பல்பணி பூண்டுளான்;
மாலும் ஏத்திறை; மாதையில்
வாழும்ம யேசனே! (4)
705. செங்கண் வெள்விடைச் சீர்எழு
தும்கொடிச் சேவகன்;
பங்க யாதனத் தார்தலை
மாலிகைப் பண்ணவன்;
கங்க ணம்கழல் ஆதிய
கட்செவி யாக்கொள்வான்;
மங்க ளம்பொலி மாதையில்
வாழும்ம யேசனே! (5)
706. ஆறு வான்மதி கொக்கிற
கார்சிரத் தைம்முகன்;
பாறு டன்கழு கும்தொடும்
சூலப்ப டைக்கையான்;
நீறு முற்றுஅ ணிந்துநின்
றாடல்செய் நின்மலன்;
மாறு தீர்புகழ் மாதையில்
வாழும்ம யேசனே! (6)
707. பொன்னும் முன்சில பாவலர்க்
கீந்தருள் புண்ணியன்;
மின்னும் வார்சடை வேதியன்;
மத்தமும் வேண்டுவான்;
பன்னு பல்கதைச் சீர்கொள்
புராணங்கள் பாடுவான்;
மன்னும் மாண்புறு மாதையில்
வாழும்ம யேசனே! (7)
708. பேடி ஒர்கணை எய்தமுன்
நல்கிய பித்தன்; யாம்
பாடி டும்கவி ஆசைகுன்
றாச்சிவன்; பத்தியால்
நாடி நம்பவல் லார்பணி
செய்யவும் நாணிடான்;
வாடி டார்வளர் மாதையில்
வாழும்ம யேசனே! (8)
709. திக்க டங்கலும் கைத்திர
ளாநிகழ் செவ்வியான்;
முக்கண் வானவன்; மும்மதிள்
காய்ந்தவன்; மொய்ம்பறாச்
செக்கர் போல்பவன்; சிந்துரம்
போல்தவச் செல்வர்போல்
மக்கள் ஈன்றவன்; மாதையில்
வாழும்ம யேசனே! (9)
710. விளையும் முத்தமிழ்ப் பாவலர்
நால்வரை வேண்டினான்;
துளைஇ ரண்டுடைக் கைக்கரி
யிற்கவர் தோல்உ ளான்;
களைஅ னார்தவம் செய்யினும்
காப்பவன்; காதெலாம்
வளைஅ ணிந்தவன்; மாதையில்
வாழும்ம யேசனே! (10)
கலிவிருத்தம்
711. பயில்தமிழ்ச் சுவைகொளார் பகைமலிந் துழல்எனக்கு
அயில்அளித் தருளின்நின் அருள்வளம் குறையுமோ?
கயிலைவெற் பிறையவா! கண்ணுதற் கடவுளே!
மயில்அனாள் பாகனே! மாதைமா தேவனே! (1)
712. இக்கணத் திடபமேல் என்முன்வந் தியாவரும்
தக்கமா மவன்எனத் தகுபயன் தருவையோ?
செக்கரஞ் செஞ்சடைச் சித்தனே! தீர்கலா
மைக்கறைக் கண்டனே! மாதைமா தேவனே! (2)
713. எள்ளல்மிக் குரைசெய்வார் எதிர்இடைந் துழலும்நான்
உள்ளம்ஒத் துன்னைநா டுண்மைபொய் ஆகுமோ?
புள்ளலம் பும்துணர்ப் புரிசடைப் புங்கவா!
வள்ளல்கட் கிறையவா! மாதைமா தேவனே! (3)
714. பொரி,நெய், சோ றவியிடும் புனிதவேள் வியினர்ஊன்
சொரியும்மீ மாஞ்சனைத் துயர்செயும் தினம்எதோ?
கிரிவளைத் தமர்செயும் கிழவனே! கேடிலாய்!
வரிஅரா அணிகொள்வாய்! மாதைமா தேவனே! (4)
715. தண்ணளித் துளியிலார் தரையினைத் துயர்செய்தீங்கு
எண்ணலால் அயரும்வம் பேன்எனக் கீந்துளாய்?
திண்ணநா வரையனார் தெரிதரத் தமிழினால்
வண்ணமும் பாடினாய்! மாதைமா தேவனே! (5)
716. காற்றினில் பஞ்செனக் கனதுயர்ப் படும்எனைக்
கூற்றினுக் கஞ்சுறாக் கொள்கைதந் தாள்வையோ?
ஏற்றில்உற் றுமைதனோ டெங்கணும் செல்லுவாய்!
மாற்றில்பொன் அனையவா! மாதைமா தேவனே! (6)
717. கோழைநெஞ் சினர்எனக் குலைவுறும் கொடியனேற்கு
ஊழைவென் றுயரும்மாண் புதவுதற் கிசைவையோ?
தாழைவாள் மலர்மதன் தன்னுடல் பொடிசெய்தாய்!
மாழைவண் சிலைஉளாய்! மாதைமா தேவனே! (7)
718. அண்டலர்க் கியமனே யார்அருச் சுனன்எனும்
தொண்டனைப் போலும்ஓர் தோழன்எற் கருள்வையோ?
குண்டலத் திரள்எனக் குலவும்வால் வளைகொள்வாய்!
வண்டமிழ்ச் சீர்குலாம்! மாதைமா தேவனே! (8)
719. கொங்கைமின் புரைபொலார் கோட்டிகொண் டயர்எனக்கு
அங்கைவெண் ணீறுநீ அருளல்பொய் ஆகுமோ?
செங்கையில் கோடுளான் சிகிவலான் வரநல்கோர்
மங்கைபங் குடையவா! மாதைமா தேவனே! (9)
720, கந்தரக் கறையையே கழறினார் சிலர்பெறும்
செந்தகைப் பேறுநான் சேரநல் காய்கொலோ?
அந்தரர்க் கரியமெய் அருள்கொளும் சதுரர்வாய்
வந்தனைக் கவிகொள்வாய்! மாதைமா தேவனே! (10)
எண்சீர் விருத்தம்
721. கோளை யேவலி தெனத்துணிந் துள்ளார்
கூறும் மாற்றமும் குறிக்கொடுள் ளேன்நின்
தாளை யேதொழும் தவம்முயன் றிகலோர்
தம்மை வென்றுயும் தகைஅடை வேனோ?
பாளை வார்கமு கொடியமின் எனவே
பார்த்த வானரம் பயப்படப் பாயும்
வாளை மீன்உகள் வயலினம் சூழும்
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (1)
722. அந்தி வான்மதி சடைமுதற் கோலம்
அனைத்தும் உன்னுமா றடியனேன் விழிமுற்
சந்தி யாவிடில் எங்ஙனம் உய்வேன்?
தான வர்க்கும்முன் சார்ந்தபே றன்றோ?
நந்தி நாயக னே!இமை யாதார்
நாளும் அன்பொடு நம்பிய சம்போ!
வந்தி யார்சிலர் தமையும்வாழ் வித்தாய்!
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (2)
723. வலிய பேறுறக் கருதிஉன் றனையே
வாழ்த்தி நொந்தவ னாம்வட லூராற்
கலியன் தன்உற வோரொடும் நக,ஏன்
கண்டு ளாய்?இதும் கருணையின் பாங்கோ?
புலியின் ஈர்உரி உடுத்ததன் மேல்ஒர்
புயங்க மும்புனை பொற்புடை யானே!
மலியும் வெண்திரைப் பம்பைநீர் சூழும்
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (3)
724. அழலிற் புக்கவர், சிரம்அரிந் திறந்தோர்,
அசலம் ஏறிவீழ்ந் தவர்முதற் பலர்க்கும்
பழமைப் பண்பொடுற் றருளிலை; இந்தப்
பாவ நாளில்யான் படும்துயர் சிறிதோ?
கழகத் தார்எதிர் வேதியன் பொருட்டோர்
கவிகொண் டேகிய கருணைமாய்ந் ததுவோ?
மழவி டைப்பரி வானினும் உகைப்பாய்!
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (4)
725. பன்றி ஊன்வரை அருந்துபா தகர்க்கே
பார்முற் றீந்தமை பார்த்தும், நிற் பரவும்
நன்றி ஏன்மறந் துளைகொலோ? உனின்மேல்
நாதன் உண்டெனில் நவின்றொழித் தருள்வாய்;
கன்றி னால்கனி எறிந்தவன் முதலோர்க்
காத்த மான்மியக் கதையெலாம் பொய்யோ?
மன்றி னம்தொறும் ஆடிடச் சலியாய்!
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (5)
726. அசம்உ ரித்துவெந் தருந்திட நாணா
அந்த ணர்க்கும், ஆன் அறுத்துணற் கஞ்சாப்
பிசக ராம்புலை யருக்கும்மத் தியினில்
பேணும் அன்பர்தாம் பிழைப்படல் முறையோ?
தசமு கற்கும்வாள் முதலிய கொடுத்தாய்!
சமணர் கூற்றெனத் தக்கவீ ரேசன்
வசவன் வாழ்வுறச் செயும்தவம் புரந்தாய்!
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (6)
727. கன்னல் வார்சிலைக் கைம்மதன் தன்னால்
கடைப்பட் டுள்ளஎன் கருத்தினில் கடலாம்
வன்ன மேகலை யாள்துயர் கெடற்காம்
மார்க்கம் நாடுறும் வருத்தம் ஏன் அமைத்தாய்?
முன்அ னேகரா கவர்தொழு துய்ந்த
முறைமை நாடுபு முதிர்பிழைக் கொடுங்கோல்
மன்னர் கூற்றுவர் அனைவரும் வரும்சீர்
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (7)
728. பிணங்கும் வன்குணக் காலகே யரைஓர்
பேடி மானிடன் பிணங்களாச் செய்தற்கு
இணங்கி வாளியும் அளித்தநீ தமியேற்கு
யாதும் நல்கிலை எனில்வசை அன்றோ?
மணங்கொள் கற்பக நாட்டினுக் கரசாம்
வாழ்வை நாய்உமிழ் மலம்என இகழ்வார்
வணங்கு பங்கயத் தாளுடை யானே!
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (8)
729. உனது மைந்தரின் மூத்தவன் சொலும்பின்
உதித்து ளான்சொலும் உண்மைஆ மாறே
தினமும் நின்துதி செயும்எனை இகழ்ந்தால்
சிலர்க்க நாள் அருள் செய்யல்மெய் ஆமோ?
கனக வார்சிலை வளைத்தகை யானே!
கண்ணு தற்பெரும் கணத்தினர் தலைவா!
வனச வாவிகள் தொறும்அனம் பயிலும்
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (9)
730. அன்று நின்பதம் புகுந்தநால் வரில்,நீ
ஆளும் முன்னமே அகிலம்முற் றுயற்கா
நன்று பாடி, நொந் தழுது,நம் வடலூர்
நாவ லோன்என நலிந்தவன் எவனோ?
பொன்று றாமுதற் புலமைவா னவனே?
பூத நாதனே! பொறியுமிழ் சிறுகண்!
வன்று ளைக்கைமும் மதமலை உரித்தாய்!
மாதை மாநகர் வாழ்பெரு மானே! (10)
சந்தக் கலிவிருத்தம்
731. செங்கற் பொருள்செய்தும் தெளிநா வலற்கீந்தான்;
திங்கட் சடைவைத்தான்; திருமா தையிற்சிவன்தான்
அங்கட் புவனம்எலாம் அறியத் துதிபாடும்
எங்கட் கருள்கில்லான் ஏனோ? அறியேனே! (1)
732. கட்டம் அறத்தீர்க்கும் கருணைக் கடல்உள்ளான்;
சிட்டர் பலர்போற்றும் திருமா தையில்வாழ்வான்;
அட்ட விதமூர்த்தி ஆம்என் றறிந்துள்ளேற்கு
இட்டம் தருகில்லான் ஏனோ? அறியேனே! (2)
733. அன்னைக் குயர்கருணை அமையும் சிவபெருமான்;
தென்னைப் பொழில்மலியும் திருமா தையில்உறைவான்
முன்னைப் பழவினை நோய் முழுதும் கெட முயலும்
என்னைத் தொடர்கில்லான் ஏனோ? அறியேனே! (3)
734. காதும் சுடர்மழுவைக் கலைமா னொடணிந்தான்;
மாதுங் கர்பராவும் மாதைப் பதிவள்ளல்
ஓதும் துதியன்றி ஒன்றம் புரிகில்லேற்கு
ஏதும் தருகில்லான் ஏனோ? அறியேனே! (4)
735. அன்னப் பரிஏறும் அயன்ஓர் தலைகொண்டான்;
கன்னற் கழனிகள்சூழ் கவின்மா தையிற்கடவுள்
வன்னக் கிளிமொழியார் மயலான் மிகமாழ்கென்
இன்னல் தவிர்க்கில்லான் ஏனோ? அறியேனே! (5)
736. மூத்தும் பலமடவார் மொய்க்கும் படிசென்றான்
மாத்துங்க வில்வீரர் வரும்மா தையில்ஒருவன்
கோத்தும் பியும்மேனாள் கொண்டான் எனவேநான்
ஏத்தும் துதிகொள்ளான் ஏனோ? அறியேனே! (6)
737. வளைக்கும் பிறைச்சடைமேல் மத்தத் தையும்வைத்தான்;
கிளைக்கும் புகழ்கோடி கிளர்மா தையிற்கிழவன்
உளைக்கும் துயர்தீர்பே றுன்னித் தொழும்என்னை
இளைக்கும் படிகண்டான் ஏனோ? அறியேனே! (7)
738. பேடிக் கருள்செய்த பெருமான்; திருமாதை
நாடித் தொழுதார்க்கும் நலமே அருள்நாதன்
பாடித் தினம்அடியார் பதநுண் துகள்புனைவேற்கு
ஈடிட் டிலன்அந்தோ ஏனோ? அறியேனே! (8)
739. அருளார் உமைதன்னால் அந்நாள் இருபுதல்வர்த்
தருவான்; வளமாதை தனில்மே வியதலைவன்
ஒருவா தவன்அருளே உன்னித் தொழும்என்னுள்
இருள்நீக் கிடநினையா தேனோ? அறியேனே! (9)
740. மனையாள் தனதுடலுள் வாழும் படிவைத்தோன்;
தனையே நிகர்மாதை தனில்மே வியதாணு
முனைநாள் உயும்நால்வர் மொய்ம்பே விழைந்தேங்கும்
எனைஆ தரிக்கில்லான் ஏனோ? அறியேனே! (10)
சந்தக்கலி விருத்தம்
741. வானத்தரும் நாடிப்புகழ் மாதைப்பெரு வாழ்வாம்
மோனச்சிவ யோகத்தவ முனிவோர்தொழ வளர்வாய்!
ஏனத்துடன் ஆன்அட்டுணல் இனிதென்றுகொள் வோராம்
ஈனர்க்கெதிர் வாடித்தளர் என்னைப்புரந் தருளே! (1)
742. அமையேநிகர் தோளார்பலர் ஆடும்பொழில் மாதைச்
சுமைதோய்தரு புயம்நான்குறு சுடர்என்றொளிர் வானே!
கமையில்லவர் அறியாய்! சிலர் கனலூடிடும் அவிதேர்
இமையாரையும் மதியாதிகழ் என்னைப்புரந் தருளே! (2)
743. மடல்சூழ்மல ரவன்ஓதிய மறைநூல்உணர் வல்லார்
திடமாதவ பலம்மிக்குறு திருமாதையின் முதல்வா!
அடம்ஆர்தரு கொடியார்பகை யால்மிக் கயர்வுற்றேன்;
இடபப்பரி மிசைவந்தினி தென்னைப்புரந் தருளே! (3)
744. மின்னேநிகர் சடைமாமுடி மீதேமதி வைத்துத்
தன்னேர்புகழ் மாதைப்பதி தழையத்திகழ் சம்போ!
பொன்னேபொருள் எனும்மூடர்கள் போலத்தளர் வுற்றேன்;
இன்னேஉன தடியாருடன் என்னைப்புரந் தருளே! (4)
745. கன்னற்சிலை மதனைப்பொடி கண்டாய்! கவின் மாதை
நன்னர்த்தவ முனிவோர்தொழ நடுவேமுளைத் துற்றாய்!
பன்னற்கரி யனவாகிய பல்வாறுவி ளங்கும்
இன்னற்கடல் மூழ்காவணம் என்னைப்புரந் தருளே! (5)
746. அகழ்வாரிதி விடம் உண்டமை அறைவார்மனம் தோறும்
நிகழ்வாய்!வளம் மலிமாதையில் நிலவும்பெரு மானே!
புகழ்வாஞ்சைம லிந்துன்செயல் போற்றித்தளர் கின்றேன்;
இகழ்வார்க்கிலக் காகாவணம் என்னைப்புரந் தருளே! (6)
747. அகமும்புற மும்போற்றிடும் அடியார்பலர் கூடித்
திகழ்கின்றதற் கிடமாநிகழ் திருமாதையிற் சிவனே!
சகளம்குறி யாவம்பர்கள் தம்மோடிகல் கின்றேன்;
இகமும்பர மும்பேசிட என்னைப்புரந் தருளே! (7)
748. அசைவின்றிய வீரத்தினர், அறையும்புகழ் எய்த
விசையன்றனை ஆண்டாய்!நலம் மிகும்மாதையின் மேயாய்!
தசைஉண்பவர் இன்றிப்புரி தகையேவிழை கின்றேன்!
இசையும்பயன் முழுதும்கொடுத் தென்னைப்புரந் தருளே! (8)
749. செபமோடுதி யானம்புரி சீலத்தினர் தம்பால்
அபவாதம்எய் தாவாறுசெய் தாமாதையில் வாழ்வாய்!
கபவாதபித் தத்தால்அயர் கன்மம் தொடராதே
இபமாமுகன் முருகோனுடன் என்னைப்புரந் தருளே! (9)
750. அருநான்மறை உணர்வார்மலி ஆமாதையில் என்றும்
திருநாள்உடை யவனாமுது சேவில்திரிவானே!
மருநாண்மல ரான்ஓர்வரும் வண்மைப்பயன் உற்றார்
இருநால்வருள் ஒருநால்வரொ டென்னைப் புரந் தருளே! (10)
அறுசீர் விருத்தம்
751. கொலையாளர் புலையாளர் இன்றிவெல்லத்
தகும்திறமை கொடுத்தால் அன்றி
நிலையாய நின்பதத்தில் இடம்தரினும்
மகிழ்ந்தமையேன்; நிசம்சொன் னேன்காண்
கலையார்வெண் மதிச்சடிலத் தலையானே!
மலைமடந்தை கணவா! என்றும்
உலையாத நன்னெறியோர் பலர்போற்றும்
திருவாமாத் தூர்ப்பி ரானே! (1)
752. கரகசன்மன் முதலினராய் என்தலைமேல்
புனைதருதாட் கமலத் தோரும்
நரகபலம் தருகொலைத்தீங் குலகில்இன்றிக்
கெடமுயலா ஞாயம் என்னோ?
வர!கருணைக் கடல்அனையாய்! வானவர்என்
பாரம்அணி மார்பத் தெந்தாய்!
உரகபதி முதலோரே சொலத்தகும்சீர்த்
திருவாமாத் தூர்ப்பி ரானே! (2)
753. செப்புறழ்மென் முலைமடவார் தரும்மோகக்
கடல்படிந்து சிறியேன் செய்யும்
தப்புமுழு மையும்தணந்துன் திருவருட்பேற்
றினிற்சிறிது தரத்தான் வேண்டும்;
முப்புரமும் பொடியாக முகிழ்த்தநகைப்
பவளவெற்பா! முக்கண் அப்பா!
ஒப்புரைத்தற் கரியபுகழ் பலதோயும்
திருவாமாத் தூர்ப்பி ரானே! (3)
754. தீங்கார்வன் கொடுங்கோலார் தமைச்செகுத்துப்
புவிக்குதவி செய்யத் தக்க
பாங்கார்மெய்த் தவன்ஒருவன் இன்றிஒழிந்
திடும்படிநீ பண்ணல் ஏனோ?
கோங்கார்மென் முகைஅனைய முலைக்கவுரி
மருவும்ஒரு கூறு கொண்டே
ஓங்காரப் பொருள்ஆகும் ஒருவனே!
திருவாமாத் தூர்ப்பி ரானே! (4)
755. சபதம் இட்டுப் பொரும்வீரர்க் கெமன்எனக்கைப்
பரசொடுவாழ் தவசி தானும்
அபரிமிதக் கொடுங்கோலார்க் கஞ்சிஇந்நாள்
ஒதுங்கும்விதம் அறியச் சொல்வாய்!
இபம்உரித்தன் றேகாசம் இடும்சிவனே!
யாவருக்கும் இறைவா! என்றும்
உபநிடதம் நான்மறைப்பே ரொலிநீங்காத்
திருவாமாத் தூர்ப்பி ரானே! (5)
756. சிரஞ்சீவி எனப்பேர்பெற் றோர்களும், பல்
சித்தர்களும் செத்தார் போலும்;
கரஞ்சால்வெம் பணிஅனையார் காலியும்கொன்
றுண்டுவப்பக் கண்டேன் அந்தோ!
பரஞ்சோதி அப்பா!முப் பால்உரைத்தோன்
உணரும்நடம் பயின்றாய்! பல்கை
உரஞ்சேர்வல் அரக்கன்அழ ஒறுத்தளித்தாய்!
திருவாமாத் தூர்ப்பி ரானே! (6)
757. "வக்கிரக்கோள் பகைவரினும் மாற்றவல்லாய்"
என்றுனையே வாழ்த்தும் அன்பர்
சுக்கிரன்சீ டரில்கொடியார் இறுமாப்புக்
கண்டுகண்டு சோர லாமோ?
மிக்கிரங்கும் திருவுளத்து விமலா!வெண்
நீறணியும் மேனி எந்தாய்!
உக்கிரப்பேய் களும் விரும்பும் ஒருவனே!
திருவாமாத் தூர்ப்பி ரானே! (7)
758. வாடிவருந் துறும் உலகம் உய்வதெண்ணித்
தொழும்எனைஏன் வஞ்சிக் கின்றாய்?
பேடியும்கைக் கணைபெற முன் கொடுத்தருளும்
பெருங்கருணை பிழைத்த தேயோ?
தேடியமால் அயன்அறியாத் திருவடியும்
முடியுமுடைச் செம்பொற் குன்றே!
ஊடியமங் கையர்அனையார் உளம்அகலாய்!
திருவாமாத் தூர்ப்பி ரானே! (8)
759. செந்துவர்க்குன் றனையஇரு செல்வரைஈன்
றவரொடுசீ ராடும் நீதான்
முந்தும்வட லூரனது பழி ஏற்றாய்;
எனைக்கொலவும் முன்னி டாதே
ஐந்துமுகத் தாரமுதே! அட்டமூர்த் -
தியும்ஆகி, ஆகா தானே!
உந்துபெரும் புகழ்அனந்தம் உடையானே!
திருவாமாத் தூர்ப்பி ரானே! (9)
760. முன்னிறைஞ்சும் நால்வருக்கும் வரம்மனம்போன்
றருள்செய்தாய்; முதிர்சொற் பாடல்
என்னிடத்தும் பல உதிப்பச் செய்கின்றாய்;
அவருடன் சேர்த்திட ஒண் ணாதோ?
பன்னிரண்டு சமயத்தோர் தமக்கும்ஒரு
பொதுவாகிப் பத்தர் ஆனார்
உன்னியவா றுருக்காட்டும் ஒருவா! நம்
திருவாமாத் தூர்ப்பி ரானே! (10)
அறுசீர்ச் சந்தவிருத்தம்
761. பற்பல சொல்சம யங்கள், “உயிர்க்கொலை
பழி”என் றிடுமாகில்
தற்பர னாம்உன வேஎனும் என்னைத்
தழுவற் கிசையாயோ?
சற்பம் அனேகமும் அணிவாய்! பவளச்
சயிலம் புரைவானே!
உற்பலம் அன்னவள் பாகா! ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (1)
762. பொன்னும்ஒர் ஒன்பது வகைபடு மணியும்
பொருள்என் றிடுமவர்பால்
நின்னுரி மைக்குரி யார்இர வாவணம்
நீஎன் றருள்புரிவாய்?
பன்னும றைத்தலை யாய்! முடி வாய்நிகழ்
பண்ணவ னே! பணிவார்
உன்னும்உ ருப்பெறு வாய்!திரு ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (2)
763. என்னது சத்தியம் நீஅறி வாய்!உனை
யான்அறி யேன்! எனினும்
முன்னம்என் நெஞ்சம்அ றிந்திட நீபகர்
மொழிகளும் அழிவாமோ?
கன்னல்வ ரிச்சிலை யான்உரு வைப்பொடி
கண்டுயர் கண்ணுதலே!
ஒன்னலர் புரம்மூன் றடுவாய்! ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (3)
764. கவலைமி கக்கொடு வாடுறும் என்சொற்
கவிதைகள் விழைகின்றாய்!
அவளவில் ஒன்றும் அணிந்திலை யாகில்நின்
அருள்குன் றிடும் அன்றோ?
சிவபர வாதம்உ ணர்ந்தவர் தம்குல
சேகர மாநிகழ்பேர்
உவகையு டைப்பெரி யோர்வரும் ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (4)
765. தோகைம யில்புரைவார் மயல்எய்தித்
துயர்உறு தமியேன்வாய்
பாகைநி கர்த்தத மிழ்த்துதி பாடப்
பண்ணலும் நீயன்றோ?
வாகைபொ றுத்தெதிர் தானவர் செம்புனல்
வாரிதி புகவேமோது
ஓகைப டைப்பவ ரேதொழும் ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (5)
766. பண்டொரு நாள்ஒர் கனாவிடை நின்சிறு
பாலகன் வாய்பகர்சொற்
கொண்டொரு கோடிஅ வாவுறும் என்நிலை
கோதுப டத்தகுமோ?
விண்டொடு மேடைகள் தோறும்அவ் வூர்அர
மெல்லியர் வெள்குறவே
ஒண்டொடி யார்நடம் ஆடிடும் ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (6)
767. பாழிம தக்களி றுண்ணும்ம டங்கல்
பதைப்பஅ டும்ககம்ஆம்
வாழிய வென்றிசொல் வேன்இக லோர்எதிர்
மட்கவி டாதருள்வாய்;
கேழிணர் இட்டவ ருக்குமெய் வீடருள்
கீர்த்தியு டைக்கிழவா!
ஊழிஅ னந்தம்அ றிந்துள ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (7)
768. கண்கள்ஒ ராயிரம் உள்ளவன் அன்றருள்
காளைஉ வப்புறஒர்
வண்கணை நல்கிய நீஎனை இங்ஙனம்
வாடவி டத்தகுமோ?
வெண்கடல் வந்தவள், நான்முகன், அன்னவன்
மேவும்மி னாள்எனும் மூன்று
ஒண்கம லத்தினர் தொண்டுகொள் ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (8)
769. குறமகள் காவலன் ஓதிய சொற்பல
கொண்டபின், ஐங்கரன்ஓர்
திறமொழி, கூறிய உண்மைஉ னாதொரு
திருவுளம் அறியாதோ?
மறலிஎ னத்தகு தானவ ரைச்செறும்
வன்மையும், வானவர்தம்
உறவும்உ டைப்பலர் நம்பிடும் ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (9)
770. வாதபு ரித்தவன் ஆதிய நால்வர் சொல்
வண்தமி ழோடடி யேன்
ஓதல்பொ ருந்தும்எ னக்கன விற்சொல்
ஒருத்தன்உ னக்கயலோ?
வேதவி ழுப்பொருள் ஆலடி யிற்பகர்
வித்தக! வெள்வளைதொட்டு
ஊதரி போல்பவர் ஆசைகொள் ஆமாத்
தூர்வளர் உத்தமனே! (10)
கட்டளைக் கலித்துறை
771. கரும்பு நெடுஞ்சிலை யாய், மலர்
ஓர்ஐந்து கைக்கணையாய்
விரும்பு மதனைப் பொடித்தாய்!நம்
மாதையின் மேயஅப்பா!
பொரும்புலைப் பாழ்மதத் தோர்இறு
மாப்பறப் போக்கல்நத்தி
வரும்புனி தத்தொண்டர் பாடும்
துதியை மதித்த ருளே! (1)
772. தண்டம் எடுத்துப் பகடூர்ந்து
நேரும் சமன்மடிவு
கண்டபொற் றாள்உடை யானே! நம்
மாதையில் கண்ணுதலே!
துண்டரி கக்கொடும் தானவர்ச்
சீறும் துணிவுடையார்
வண்டமிழ்ப் பாடற் சுவையாவும்
நன்கு மதித்தருளே! (2)
773. காரணம் தன்னொடு காரியக்
கூட்டம் கருதுநர்க்கு
நாரணன் போலும் பதம்ஈந்து,
மாதையில் நண்ணும்வள்ளால்!
பூரண போதம் மருவாத
ஈனர்ப் பொருதழிக்கும்
வாரணம் பொல்பவர் தங்களை
யேனும் மதித்தருளே! (3)
774. காஞ்சித் தலம்விட்டு வந்தார்
தொடுக்கும் கவிஅணிந்தாய்!
ஆஞ்சித்தர்க் கோர்அர சாய்மாதைக்
கோயில் அமரும்அத்தா!
வேஞ்சித்தத் தென்னை இகழேல்; பொல்
லார்அஞ்ச வெல்லும்வண்ணம்
வாஞ்சித் தயர்ந்தனன் அந்தோ!சற்
றேனும் மதித்தருளே! (4)
775. புண்டரி கக்கண் இராகவன்
போற்றப் பொரும்திறத்தால்
அண்டலர்க் கொல்செயம் ஈந்தாய்!நம்
மாதையில் ஆண்டகையே!
தண்டமிழ்ப் பாடல்க ளால், வந்த
வாதுதி சாற்றெனக்கு
வண்டரைத் தாக்கும் வலிமுதல்
யாவும் மதித்தருளே! (5)
776. அணங்கார்ந்த பாகத் தரசே!புற்
றோல்உடுத் தாடவல்லாய்!
கணங்காக்கும் மாதைப் பெருங்கோயில்
வாய்வளர் கற்பகமே!
இணங்கார் இணங்கினும் கொள்வேனை
அன்புடன் ஏன்று, நின்றாள்
வணங்காரின் கூட்டிக்கை விட்டு
விடாது மதித்தருளே! (6)
777. ஆழும் கடல்விடம் உண்டான்என்
றோதும் அடியவரைத்
தாழும் தவருக் கெளியாய்!நம்
மாதைத் தலத்திறைவா!
கூழும் பகிர்ந்தருந் தார்பலர்
நாணக் கொடைகொடுத்து
வாழும் பெருந்தகை எற்சேரு
மாறு மதித்தருளே! (7)
778. பேடிக்கும் அன்றொரு வாளிஇட்
டாய்! பெரும் பித்தன்எனப்
பாடிக்கண் டார்க்கும் பதம்ஈந்த
மாதைப் பதிஅழகா!
நாடிக் கசிந்து துதித்தேங்கி
னேன்எனை நானிலத்தில்
வாடிக் கலங்க விடாதே மெய்ச்
செல்வம் மதித்தருளே! (8)
779. முக்கட் கருணைக் கடலே!தன்
சீர்த்தி மொழியும் அன்பர்
இக்கட்டெல் லாம்தவிர்ப் பாய்! மாதை
யூர்நடுவே முளைத்தாய்!
மைக்கட் கவுரி முலைப்பால்
சொரிந்து மகிழவரும்
மக்கட் கினியவன் தானேஎன்
றென்னை மதித்தருளே! (9)
780. போல்வதொன் றின்றிய மெய்ப்பொருள்
ஆம்பரி பூரணனாச்
சேல்வளர் வாவித் திருமாதைக்
கோயில் திகழ்சிவனே!
நால்வர்தம் பேறன்றி வேறிச்சி
யாஎன் நறுந்தமிழை
வாழ்வளைக் காதொரு பத்தாலும்
கேட்டு மதித்தருளே! (10)
அறுசீர் விருத்தம்
781. போன கம்தரு வார்பினே
போய்அ லைந்துழல் புல்லர்போல்
ஈனம் இங்கடை யாமலே
யான்வி ரும்புவ தீகுவாய்;
பானல் அம்கண்மி னாளைஓர்
பாகம் வைத்தமர் பண்ணவா!
மானம் மிக்கவ ரேகுலாம்
மாதை மாநகர் வள்ளலே! (1)
782. நன்று நின்துதி என்றநீ
ஞாலம் முற்றுண ரும்பரிசு
ஒன்றும் நல்கிலை; என்செய்வேன்?
உம்பர் ஈதுண ரார்கொலோ?
பொன்று தீமைஇல் புங்கவா!
போக்கு டன்வர வின்றியே
மன்று தோறும்ந டிப்பவா!
மாதை மாநகர் வள்ளலே! (2)
783. வெயிலில் வீழ்புழுப் போலவே
வெம்பி நொந்துயர் வீணனேற்கு
அயில்கு லாவிய கையன்ஒத்து
ஆடும் வாழ்வும்அ ளிப்பையோ?
கயிலை மால்வரைக் காவலா!
கண்ணு தற்பெரும் தெய்வமே!
மயில்கள் ஆடிய சோலைசூழ்
மாதை மாநகர் வள்ளலே! (3)
784. ஆர வண்பொழிற் சீர்அறா
அந்தண் மால்வரைக் கும்பன்அன்று
ஈரம் மிக்களித் திட்டநீற் -
றின்ப யன்பெறல் எற்றையோ?
கார ணா!கரு ணாகரா!
கையில் மான்மழு வைத்துளாய்!
மார னைப்பொடி செய்தவா!
மாதை மாநகர் வள்ளலே! (4)
785. எந்த வேளையும் உன்னையே
ஏத்தி அன்பொடி ரக்கும்நான்
இந்த மாநிலத் தோர்எலாம்
எண்ணும் மாண்படை யேன்கொலோ?
கந்த நாண்மலர்க் கொன்றையாய்!
கண்கள் மேல்கனற் கண்உளாய்!
மந்தர் ஓர்வரும் வண்மைதோய்
மாதை மாநகர் வள்ளலே! (5)
786. சீலம் இன்றிய நீசர்தம்
தீக்க ருங்குடை நீழலில்
சால வாடுறும் என்னைநின்
தண்அ ருள்துளி சாருமோ?
கால கால!ம யேசனே!
கற்ப கக்கனி ஒத்துளாய்!
மால னேகர்ப ராவு சீர்
மாதை மாநகர் வள்ளலே! (6)
787. குஞ்ச ரத்திரட் கொன்றுணும்
கோள ரித்திரள் போன்றுளார்
அஞ்ச வெல்செயம் வேட்டுளேன்
ஆட்டி னும்கடை ஆக்கிடேல்
கஞ்சன் ஓர்தலை கொய்தவா!
காளி நாணுற ஆடினாய்!
வஞ்ச நெஞ்சினர் ஆசியா
மாதை மாநகர் வள்ளலே! (7)
788. அந்தி வான்மதிச் சென்னிமேல்
அன்ற டித்தவன் இன்புற,
வெந்தி றல்கணை நல்கினாய்!
மெச்சும் என்னைவெ றுத்திடேல்!
தந்தி ஈர்உரிப் போர்வையாய்!
சங்க வெண்குழைத் தாணுவே!
மந்தி ரப்பொறி ஐந்துளாய்!
மாதை மாநகர் வள்ளலே! (8)
789. ஆனை மாமுகன் தானும், வேல்
அங்கை யானும்அ ருந்துபால்
ஏனை யோர்உணல் கேட்டதால்
யானும் சற்றுண வேட்டுளேன்!
தானை யாஅதள் சுற்றினாய்!
சற்ப மும்பல பூண்டுளாய்!
மானை யும்கரத் தேந்தினாய்!
மாதை மாநகர் வள்ளலே! (9)
790. வேலை நாணுறும் முத்தமிழ்
விரகன் ஆகிய நால்வர்போன்று
ஓலை யாளரை வெல்லும்மாண்பு
உன்னும் என்னைஒ றுத்திடேல்;
பாலை நேர்பொடி பூசுவாய்!
பரவை பாற்செல நாணிலாய்!
மாலை வான்நிறத் தையனே!
மாதை மாநகர் வள்ளலே! (10)
யாழ்மூரிப்பண் யாப்பு
தானன தத்ததனா தன தானன தத்ததனா
தனதன தனதன தான தனத்தனனா
791. மாதர் மயக்கமதால் அதி பாதகம் உற்றுழல்வேன்
மனவெளி தனில்அருள் வாரி உதித்திடுமேல்
ஏதம் உனைத்தொடுமோ? அகல் பூமி நடுக்குறுமோ?
இசைபெறும் முனிவரர் ஏசி நகைப்பர்கொலோ?
ஆதவன் அக்கினிமா மதி ஆகும் விழிப்பரமா!
அனலிடை வரும்அடல் ஆனை உரித்தணிவாய்!
வாதம் இடச்சலியா தெழு சாரண ருக்கெமனாம்
மகன்நவில் கவிபுனை மாதை நகர்ச்சிவனே! (1)
792. கோழை மனத்தினர்போல் இக லோரை ஒறுத்தடியார்
குழுவுடன் அவிர்புகழ் கோதென விட்டுவிடேன்;
ஊழை மதித்துழலேன்; உனை யேதுதி செப்புவன்;நீ
உமையொடு விடைமிசை ஓடி வரற்கிசைவாய்
தாழை மலர்க்கரவேள் பொடி ஆக விழித்தவனே !
தவர்சிலர் மனைவியர் தானை அறக்களைவாய்!
மாழை வரைச்சிலையாய்! புரம் நீற நகைத்தவனே!
மழைவளம் மலிதரும் மாதை நகர்ச்சிவனே! (2)
793, பாடல் விருப்பம் இலான் என வேமுத லிற்றிகழ்நீ
பலகவி பகர்தரும் பாசம் விளைத்திலையோ?
ஆடல் வனச்சிகியோ டயில் வேலும் அளித்தருள்வாய்;
அவைகொடுன் அடியவர் ஆரும் உவக்கைசெயவே
ஏடலர் புட்பம்எலாம் இடு தாள்கள் படைத்தவனே!
இகழ்பிழை பகர்மல ரேஅணி தற்கிசையாய்!
வாடல் ஒழித்தருள்கூர் விளை யாடல் மிகப்புரிவாய்!
வயல்வளை தரும்எழில் மாதை நகர்ச்சிவனே! (3)
794. காணியும் நட்பிலர்பா லினும் ஏகிஇ ரக்கஒல்கார்
களும்நனி பகர்வசை காதுள் உறத்தளர்வேன்
ஆணி எனப்புவிகூ றிடும் ஆடகம் ஒப்பெனவே
அடியவ ரிடைதிகழ் ஆசை உறச்செ யல்ஏன்?
வேணி வனத்தலைமேல் அணி பாலம திக்கிழவா!
விரகிலர் உணர்வரும் வேத விழுத்தலைவா!
வாணி வசித்திடும்நா வினன் ஓர்தலை கைக்கொடுளாய்!
மலிதறு புகழ்பெறு மாதை நகர்ச் சிவனே! (4)
795. கான மறைத்துணிவீ தென வேசிறு புத்தியுளார்
கழறியும் இகல்சமர் காணும் வசத்தன் அலேன்;
ஞான விளக்குடனே பல வாகிய சித்தியுமேய்
நரகுரு ஒருவன்இ நாள்உல வப்புரிவாய்
தீனர் களுக்கெளியாய்! அசு ரேசரும் நத்திறைவா!
திருவருள் விழைதரு சீலர் களைப்பிரியாய்!
மானணி கைப்புனிதா! மழு சூல முதற்புனைவாய்!
மறையவர் பெருகிய மாதை நகர்ச்சிவனே! (5)
796. ஏடெதி ரிற்செலும்நாள் அடர் சாரணர் கெட்டதுபோல்
இகதல மதில்உயிர் யாவையும் அட்டயில்வார்
பாடென் விழிக்கெதிரே நட வாவிடில் முத்தியும்ஓர்
பழிநர கெனஇகழ் பான்மைஎ னுட்புகல்ஏன்?
மோடெரு மைப்பரியோன் உயிர் மாயஉதைத்தவனே!
முரகரி அயன் இகல் மூடம் ஒழித்தவிர்வாய்!
மாடெழு தப்படுகே தனம் மேல்எனும் மெய்ப்புலவோர்
மனமலர் தனைநிகர் மாதை நகர்ச்சிவனே! (6)
797. காரியம் எட்கருதா முழு மூடர்உ வப்புறவே
கனலிடை தசைஇடு காய்சின விப்பிரர்தாம்
ஆரியம் உட்பகர்சீர் அரு ளேஎனும் நிச்சயமாம்
அதுசெயும் விறலினன் ஆர்கொல்? உரைத்தருள்வாய்!
சீரியர் சித்தம்எலாம் வழி பாடுசெய் மெய்ப்பொருளே!
திகழ்பரி திகள்பணி சேவடி வித்தகனே!
வாரிதி யிற்கனல்போல் வரும் ஆலம் உணத்துணிவாய்!
மடிவொடு பவம்அறு மாதை நகர்ச்சிவனே! (7)
798. பாச வினைக்கிடைமூழ் கிடு தீமை ஒழித்தடியார்
பலரொடு திரிதரு பான்மை படைத்தவரே
நாசமில் மெய்க்கதிசேர் பவர் ஆக நினைத்துளநான்
நலிவது முறையல; நாரியொ டுற்றருள்வாய்!
கீசகம் ஒற்றையினோ டெலி தானும் முழுப்புவி ஆள்
கெடிபெற அருளிய கேவல சத்துவனே!
வாசவன் முற்றருசேய் அனை யார்கள் உவப்புறவே
வசிபல உதவிடும் மாதை நகர்ச்சிவனே! (8)
799. ஆனைமு கப்பெருமா னுடன் ஆறுமுகக் குகவேள்
அனையவர் இருவர்எ னாது விழிக்கெதிரே
மோனைவ ழுக்கலவா துயர் பாடல் விழுப்புலவோர்
முறையொடு திகழ்தல்என் மோகம்; அளித்தருள்வாய்
தானை எனப்புலிஈர் உரி பூணவும் வெட்குகிலாய்!
தரையினை ஒருசக டாக நடத்தியவா!
வானை வசிப்பிடமா உடை யார்கள் உடற்பொடியே
மகிழ்வுடன் அணிதரும் மாதை நகர்ச்சிவனே! (9)
800. ஏதம் மிகுத்ததனால் அகல் பூமி அழற்றெரியா
இளமதி யினர்களி ஈடு குலைப்பதனால்
ஓதரும் மெய்த்துயர்நோய் தமி யேனை நினைக்கிலையேல்
உனதுயர் திருவருள் ஊறு மிகப்பெறுமே;
பூத கணப்படையாய்! அயி ராவண வெற்பிவர்வாய்!
புயமிசை தனிவட பூதர விற்புனைவாய்!
வாத புரித்தவனே முதல் நால்வர் தமக்குரியாய்!
மகிமையில் இணைதவிர் மாதை நகர்ச்சிவனே! (10)
கலிவிருத்தம்
801. அலரியும் மதியமும் ஆழித் துணையா
நிலவிய தேர்விடும் நிமலன் தனதூர்
பலபல உலகுசெய் பணிவிட் டொழியா
மலரவன் வழிபடும் மாதைப் பதியே! (1)
802. பிறவியும் மரணமும் இன்றிப் பெரியோர்
திறமன வெளியிடை திகழும் சிவன்ஊர்
அறமிகு மாணியை அனையார் பலரால்
மறலி நடுங்குறு மாதைப் பதியே! (2)
803. அஞ்சுறும் வானவர் அழியா வணமே
நஞ்சு குடித்தருள் நாதன் தனதூர்
கொஞ்சு கவித்திரள் குலையக் குளிர்சால்
மஞ்சு வரும்பொழில் மாதைப் பதியே! (3)
804. காவி மலர்ப்புரைக் கண்ணா ளுடன்ஓர்
சேவில் இவர்ந்தவிர் சித்தன் தனதூர்
ஆவி உயப்பெறும் அவரே முழுகோர்
வாவி நலம்பொலி மாதைப் பதியே! (4)
805. பிறையணி செஞ்சடை பிறழப் பிடிநேர்
இறைவிமுன் ஆடல்செய் எம்மான் தனதூர்
குறைமதி யால்உயிர் கொன்றுண் டிழியா
மறையவர் நீடுறும் மாதைப் பதியே! (5)
806. பாகை நிகர்த்துரை பகர்வார் பலர்சூழ்
ஓகையொ டேற்றுணும் ஒருவா னவன்ஊர்
கூகை மதிக்கொடி யவர்உட் குலைசீர்
வாகை பொறுப்பவர் மாதைப் பதியே! (6)
807. வெண்டலை ஒன்றிடை மின்னார் இடுசோறு
உண்டளி கூர்சிவன் உறையும் தனிஊர்
அண்டர்தம் வாழ்வினை அவம்என் றிகழ்வார்
வண்டமி ழால்உயர் மாதைப் பதியே! (7)
808. மீளி எனும்தகை விசையன் பெறஓர்
வாளி அளித்தருள் வள்ளற் பரன்ஊர்
கோளில் துகிற்கொடி குளிர்மா மதிபோல்
மாளிகை தோறவிர் மாதைப் பதியே! (8)
809. ஐந்து கரத்தனொ டயில்வே லவனைத்
தந்துமை யாள்மகிழ் தகைகண் டவன்ஊர்
சந்துற வான்முதிர் தமிழாற் சிறுகால்
வந்துல வும்தகை மாதைப் பதியே! (9)
810. குற்றமில் நால்வர்சொல் குளிர்பா டலொடென்
சொற்றமி ழும்புனை துணிவான் உறும்ஊர்
நற்றவ சால்உயர் ஞானிகள் அல்லால்
மற்றவர் காணரும் மாதைப் பதியே! (10)
எழுசீர்ச்சந்த விருத்தம் -
811. சமர சப்பெ ரும்ப தம்த ரும்ச தாசி வா!எழில்
கமல வாவி சூடி மாதை யில்க வின்ற காரணா!
குமரன் வம்ப றிந்து னாது குணந லம்பு கன்றுளேன்;
எமன்வ சத்த கப்ப டாமல் என்னை ஆள வேண்டுமே! (1)
812. கார ணம்தெ ரிந்தி டார்க லங்கு றப்பல் வாறுபேசு
ஆரணம்ப ராவும் மாதை யிற்கு லாவும் அத்தனே!
பார ணங்கு நோத லாற்ப சுக்கு லம்த வித்தலால்!
ஈர ணங்கு நேரி டாமல் என்னை ஆள வேண்டுமே! (2)
813. கருப்பு விற்கை யானை அட்ட கண்ணு தற்ப ராபரா!
மருப்பு றப்ப சுக்கள் போற்று மாதை யின்கண் வாழ்சிவா!
விருப்பு நீட லிற்பல் வாறு வெந்தொ ழிற்செய் தொஞ்சுறா
இருப்பு நெஞ்சன் என்றெ ளாமல் என்னை ஆள வேண்டுமே! (3)
814. கான வேதம் ஆதி நூல்கள் கற்று ணர்ந்த நற்றவர்
மான வாழ்வு றப்பு ரந்து மாதை வாழ்ம யேசுரா!
வான னந்த மும்செ குத்த ருந்தி டற்கும் அஞ்சுறா
ஈனர் கண்முன் நாணு றாமல் என்னை ஆள வேண்டுமே! (4)
815. அஞ்சு பூத மும்தன் ஆன னங்கள் ஆயும் அன்பரால்
மிஞ்சு சீர்கொள் மாதை யூடி லிங்க மாகி மேவினாய்!
நெஞ்சு வப்பு றத்தொ டர்ந்து நீஉ ரைத்த சொல்எலாம்
எஞ்சு றாத வாறு நாடும் என்னை ஆள வேண்டுமே! (5)
816. செவ்வி மிக்க மங்கை யோடொர் சேவில் ஏற நாணிடாய்!
வவ்வி னர்க்கு வப்ப ளிக்கும் மாதை மேய வள்ளலே!
கவ்வி ஊன்அ ருந்து வார்க ணங்க ளைப்ப கைத்துளேன்
எவ்வி தத்தி னும்த ளாமல் என்னை ஆள வேண்டுமே! (6)
817, பெண்ணும் ஆணும் ஆகி மற்றொர் பெட்பொ டும்பி றங்கியே
மண்ணும் வான மும்து திக்கும் மாதை யூரில் வாழ்பவா!
கண்ணு டன்க ருத்தும் நல்கு கார ணம்தெ ரிந்தபின்
எண்ணு மாறு செய்ய நாடும் என்னை ஆள வேண்டுமே! (7)
818. கேடில் சீர்வி ளைக்கும் நம்கி ருட்டி ணன்ச காயனாம்
பேடி யன்ன தொண்டர் வந்து பேணும் மாதை நாதனே!
கோடி கோடி காரி யம்கு றித்த வாறு ணர்ந்தநீ
ஈடில் சீர்வி ரைந்து நல்கி என்னை ஆள வேண்டுமே! (8)
819. தானை யென்று தோல்உ டுத்த சங்க ரா!ச தாசிவா!
மானை வென்ற கண்ணி யோடு மாதை வாழ்ம யேசுரா!
ஆனை மாமு கப்பி ரானை அயில்வ லானை அனையன்என்று
ஏனை யோர்கள் சொல்லும் வண்ணம் என்னை ஆளவேண்டுமே! (9)
820. சகள நிட்க ளங்க ளாய தாணு என்று ணர்ந்தவர்க்கு
அகள வாழ்வ ளித்து மாதை யம்ப திக்கண் நின்றவா!
புகழ்ம லிந்த நால்வர் அன்ன புண்ணி யத்தொர் புனிதன்என்று
இகப ரம்சொ லச்செய் தன்பொ டென்னை ஆள வேண்டுமே! (10)
அறுசீர் விருத்தம்
821. கெஞ்சிய தொண்டருக் கெல்லாம்
கேடில்ப தம்தரு வானே!
வஞ்சியர் ஆடிய சோலை
மாதைவ ளம்பதி வள்ளால்!
நஞ்சியல் கண்ணியர் சூழ்வேள்
நாள்மலர்க் கோல்செயும் நலிவால்
அஞ்சிய நெஞ்சுறும் என்னை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (1)
822. கோடலில் பேரருட் சிந்தை
கொண்டவ ருட்குடி யாகி
நாடல்முற் றும்தெரி வானே!
நற்புகழ் மாதையின் நாதா!
பாடல்ஒன் றேமுயன் றிட்டுப்
பாரொடு வானினும் பலவாறு
ஆடல்வி ழைந்துழல் என்னை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (2)
823. நோன்புறு மாந்தருக் கெல்லாம்
நோய்அறும் வாழ்வுற நோக்கி
மான்புரை கண்ணிதன் னோடும்
மாதையின் கோயிலுள் வாழ்வாய்!
வான்புகழ் சக்கரக் கையான்
வன்துயில் நீத்தெழுந் திலனால்,
ஆன்புரத் தற்குறித் தேனை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (3)
824. வெண்டகைச் சங்கணி காதா!
வேணியிற் பாணிகொள் விகிர்தா!
மண்டலத் தின்தலை யாய
மாதையில் நாள்தொறும் வாழ்வாய்!
குண்டக ராம்புலைத் தீயோர்
கொன்றிடும் ஊன் நசை கொள்ளும்
அண்டரை யும்பழிப் பேனை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (4)
825. கற்புறு மங்கைதன் னோடும்
கான்முளை தன்னொடும் கயிலை
வெற்புறழ் வெள்விடை ஊர்வாய்!
மேதகு மாதையின் மேயாய்!
பொற்புறு பாடல்கள் பாடிப்
பூதலத் திற்பல செய்யும்
அற்புத மேவிழை வேனை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (5)
826. பாறுணும் ஊனுடைச் சூலம்
பற்றிநின் றாடல்செய் பரமா!
வீறுமி கும்திரு மாதை
வென்றிஎய் தச்செயும் விமலா!
நாறுமென் பூவொடு தெண்ணீர்
நண்ணிடும் நற்சம யங்கள்
ஆறும்நின் றன்னஎன் பேனை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (6)
827. முக்கண்உ டைக்குரு வாகி,
முற்றும்வெண் ணீறணிந் தாடித்
திக்கறி யும்புகழ் மாதைச்
சீர்நக ரில்திகழ் வானே!
எக்கணத் தும்சலி யாதே
எண்ணிஎண் ணாதிசைக் கின்ற
அக்கரம் ஐந்துடை யேனை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (7)
828. கோடிமு னீசுரர் முதலோர்
கும்பிடும் நாள்பெறும் கொற்றம்
பேடியும் எய்திடச் செய்தாய்!
பீடுறும் மாதையிற் பெரியாய்!
காடியல் வீடெனக் கொண்ட
காளிஉள் வெட்குறக் காண்பான்
ஆடிய தாள்மற வேனை
ஆண்டுகொ ளத்துணி வாயே! (8)
829. எஞ்சுதல் இன்றிய கற்பார்
ஏந்திழை பால்இரண் டாகிக்
கொஞ்சும்நன் மக்களைப் பெற்றாய்!
கோதறும் மாதையின் கோவே!
செஞ்சுவைப் பாடல்சொல் வேனைச்
சித்தர்எல் லாம்மதித் திடநின்
அஞ்சுமு கங்களும் காட்டி
ஆண்டுகொ ளத்துணி வாயே! (9)
830. ஏணைஎன் றால்உடன் கோணை
என்றுசொல் கின்றவர்க் கெய்தாத்
தாணையம் ஆகிய மாதை
தன்னிடை வாழ்சிவ சம்போ!
வீணைவல் லார்புகழ் பாடல்
விண்டவர் நால்வர்தம் மீதும்
ஆணைஇட் டேன்எனைத் தள்ளாது
ஆண்டுகொ ளத்துணி வாயே! (10)
அறுசீர்ச் சந்த விருத்தம்
831. காமரு சேவடி யேகதி யாம்எனக்
கைகூப் பிடவல்லார்
தாமறி யும்பொருள் ஐந்தும்ஒன் றாய்அருள்
தனிமா தையில்அமர்ந்தாய்!
தாமரைப் பண்ணவன் தன்பதம் பெற்றவர்
தடநாத் தொறும்சாரும்
மாமறைப் பின்செலும் மாந்தரைச் சூழ்தரு
மானம் புரந்தருளே! (1)
832. செக்கர்ஒஞ் சும்சடை நந்தியும் தேனுவும்
சேர்ஆன் இனம்பிறவும்
தக்கமெய்ப் பூசனை செய்துவன் கோடுறத்
தகும்மா தையிற் தலைவா!
சிக்கம்ஒன் றும்தலை வேதியர் ஆதியர்
திரளாய்க் கதிசேரும்
மக்களும் நாய்நரி உண்பதுண் ணாவணம்
மானம் புரந்தருளே! (2)
833. அகத்தி யன்முத லாகும் ஏழ்வர்க்கும்
அவர்போல் எழுவர்க்கும்
மிகத்த வம்செயும் முன்னம் பேறெய்தும்
வியன்மா தையில் விமலா!
செகத்தில் உள்ளபுன் சமயத் தோர்களும்
சிரிப்பச் சிலபார்ப்பார்
மகத்தில் ஆடுகொன் றருந்தி டாதருள்
மானம் புரந்தருளே! (3)
834. பாலும் நாணுறத் தக்க வெண்பொடி
பவளத் திருமேனி
மேலு ரித்தொடு பூசுவாய்! வளம்
மிகுமா தையில் விகிர்தா!
சேலும் கூர்மமும் ஏன மும்சிலர்
தின்னும் கொடுமையினால்
மாலும் நாண்உறல் ஓர்ந்து வாடும்என்
மானம் புரந்தருளே! (4)
835. கஞ்ச நாண்மலர் வாசன் சென்னிஒர்
கைக்கொண் டிரந்துண்டும்
தஞ்சம் எனப்பலர் வேட்கை யாவையும்
தரும்மா தையில் தலைவா!
கொஞ்ச மேனும்மெய் அருளின் ஆசையும்
கொள்ளா திறுமாக்கும்
வஞ்ச நாவலர் ஆண்மைக் கொல்கும்என்
மானம் புரந்தருளே! (5)
836, நீந்த ரும்துயர் எய்தி எய்த்தவர்
நினைத்துத் தொழுதாலும்
ஆந்த ரம்தெரிந் தருளி மாதையில்
அமரும் பெருமானே!
காந்தன் அன்றிய ஒருவன் தோள்புணர்
கன்னிக் கிணையாகி
மாந்தர் பால்உனை மறந்திட் டேற்கும்என்
மானம் புரந்தருளே! (6)
837. கண்ட மானதிற் கறைவைத் தண்டரைக்
காக்கும் சிவனே! மெய்த்
தொண்டர் சூழ்தரு மாதை தன்னில்ஒண்
டொடியா ளொடுவாழ்வாய்!
பண்ட னேகர்பல் பிறப்பில் என்றனைப்
பழிச்சும் புவனத்தில்
வண்டர் பற்பலர் கூடி ஏசும்முன்
மானம் புரந்தருளே! (7)
838. முகுள நாண்மலர்க் கமலம் நேர்முலை
முத்தாம் பிகைபாகா!
வெகுவ ளம்பெறு மாதை யம்பதி
வியன்கோ யிலுள்மேயாய்!
தகுவில் பார்த்தனைத் தாழ்த்தும் ஆணவம்
தலைக்கொண் டுழல்வேன்உன்
வகுள மாலிகை மார னாற்கெடு
மானம் புரந்தருளே! (8)
839. சந்த னம்புனை வார்கள் ஒஞ்சுறத்
தவளப் பொடிபூசி,
வந்த னம்புரி வார்கள் பங்கினில்
மாதைப் பதிவாழ்வாய்!
தந்தம் ஒன்றுடை யானைச் சண்முகன்
தன்னை முதலாச்சொல்
மைந்தர் தங்களை யேனும் ஏவிஎன்
மானம் புரந்தருளே! (9)
840. சீத மதிச்சடை செம்பவ ளப்பெரும்
சிகரிக் கிணையாகிப்
பூத கணங்களும் போற்றிட மாதையில்
புரிசைக் கிடைஉற்றாய்!
வாதபு ரித்தவன், வாக்கிறை, காழியர்
மன், சுந் தரன் எய்தும்
மாதயை யிற்சிறி தியான்உற நல்கிஎன்
மானம் புரந்தருளே! (10)
அறுசீர் விருத்தம்
841. குன்றுநெடும் சிலையாகக் கோளரவு
நாணாகக் கொண்டல் மேனி
துன்றும் அரி கணையாகப் புவித்தேரின்
மாதைஎனும் தொல்லூர் சூழ்வாய்!
நன்றுறினும் தீதுறினும் இரவுபக -
லொடுகூடி நாள்என் றுண்டாம்
என்றுமுழு நீறணியும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (1)
842. நாற்றமலர் சொரிவார்க்கும், நவைஅறுசெந்
தமிழ்ப்பாடல் நவின்று நாளும்
போற்றவல்லார் தமக்கும்முத்தி அருள்வானே!
மாதைநகர்ப் புனித மூர்த்தி!
கூற்றனைய விழிமடவார் பலர்ஏசத்
தெருத்தோறும் குறுகி நாளும்
ஏற்றருந்த நாணாத என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (2)
843. புள்ளலம்பு கொன்றைமலர்த் தொடைஅணிந்த
சடையானே! பொருவில் சீர்த்தி
வள்ளல்நெடும் தகையானே! மாதைநகர்க்
கோயில்நடு வாழ்பெம் மானே!
கள்ளமனச் சாரணரும் சாக்கியரும்
அவரினும்கீழ்க் கடையா னாரும்
எள்ளல்உரைத் திடற்கிலக்காம் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (3)
844. ஊழைமதி யாத்தவருக் கெளியானே!
விண்ணவரும் உணரொண் ணானே!
வாழையொடு தாழைமயங் கிடும்பொழில்சூழ்
தருதிருவா மாத்தூ ரானே!
கோழைமனத் தினர்சிறிதும் விழையாத
தாயபெருங் கோலம் கொண்டும்
ஏழையொடு களிகூரும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (4)
845. நட்டமிடச் சலியானே! நாரணனும்
நான்முகனும் நணுகொண் ணானே!
பட்டணிவார் நாணுறத்தோல் உடுப்பானே!
மாதைவளம் பதிஉள் ளானே!
அட்டவித மூர்த்தியினுக் கயல்அலம்யாம்
எனத்தேறி, அளவில் நூல்கள்
இட்டமுற்ற படிபாடும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (5)
846. பூவலம்செய் வார்க்கருள்கூர் புண்ணியனே!
வெண்ணகையால் புரம்மூன் றட்டாய்!
பாவலங்கல் பலபுனைவாய்! பழுதறும்சீர்
ஆமாத்தூர் பாலித் துள்ளாய்!
ஆவல்மலிந் தன்பில்அமிழ்ந் தடிபணியும்
தொழும்பினராம் அவர்ஓர் ஓர்கால்
ஏவலும்செய் திடற்கிசையும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (6)
847. செத்தவிண்ணோர் என்பொடுசாம் பலும்புனையும்
திருமேனிச் சிவனே! தெண்ணீர்
முத்தம்எறி தருபம்பைத் திருவாமாத்
தூர்த்தலத்தின் முதலா நின்றாய்!
வித்தகநான் மறைவிதிஎன் றுரைத்தேனும்
ஊன்சிறிது வெந்துண் பார்தாம்
எத்தவம்செய் யினும்மதியா என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (7)
848. கசைபிடித்து விடைஏறிக் கவுரியொடும்
குமரனொடும் ககனம் ஆறாத்
திசைதொறும்போய் வருவானே! திருவாமாத்
தூர்நடுவாழ் சிவபி ரானே!
விசையன்அனை யார்த்தழுவி வெம்பணிக்கே
தனன்அனையார் வேர்முற் றீர்தற்கு
இசையும்முயற் சியிற்றுணியும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (8)
849. மீனைஅன்று வலைவீசிப் பிடித்ததுரைத்
திட்டாற்கும் வீடீந் தாண்டாய்!
மானைஅனை யார்மகிழும் மலர்ச்சோலை
மலிதிருவா மாத்தூர் வள்ளால்!
ஆனைமுகன் குகன்எனும்மெய்ப் புதல்வர்உன்னால்
பெறும்பயனே அடைந்திட் டியாண்டும்
ஏனையர்ச்செற் றிடல்விழையும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (9)
850. பொன்னைமதித் தார்சிலர்க்கும் தகும்உதவி
செயும்கருணைப் புயல்போல் வானே!
தென்னையும்கந் தியும்மலியும் திருவாமாத்
தூர்க்கரசாத் திகழ்பெம் மானே!
முன்னைஅருட் பெரும்புலவர் ஒருநால்வர்
கதைபலவா மொழிவார் எல்லாம்
என்னையும்சொல் லிடல்விழையும் என்மானம்
நின்மானத் தினில்ஒர் கூறே! (10)
ஈற்றடி மிக்குவந்த கலித்தாழிசை
851. விண்ணும் புவியும் புகழ்வீ றுடையார்
நண்ணும் திருமா தையில்நா யகனே!
கண்ணும் கருத்தும் தரும்நின் கருணை
எண்ணும் தமியேன் பணிஏற் றுக்கொள்ளே! (1)
852. புகழ்ஆ யிரம்கோ டிபொருந் தியதாத்
திகழ்மா தையின்மே வியசீர்ச் சிவனே!
அகழ்ஆ ழியின்நஞ் சும்அருந் தியநீ
இகழா துவந்தென் பணிஏற் றுக்கொள்ளே! (2)
853. கரங்கட் கும்வன்கட் செவிப்பூண் அணிந்தாய்!
வரங்கட் கரசென் றெழில்மா தைஉற்றாய்!
குரங்கிற் கருள்செய் ததும்கூ றுகின்றேன்
இரங்கிச் சிறிதென் பணிஏற் றுக்கொள்ளே! (3)
854. திடம்மிக் குறுசித் தரும்முத் தரும்மிக்கு
அடர்மா தைவளம் பதிஆள் சிவனே!
கடல்சூழ் புவிவாழ் வுறக்கா தலித்தேன்
இடர்தீர்த் தினிதென் பணிஏற் றுக்கொள்ளே! (4)
855. முன்னே பசுக்கூட் டம்முற்றுய்ந் ததனால்
தன்னேர் திருமா தையிற்சங் கரனே!
மின்னேர் உமையா ளொடுவெள் விடைமீது
இன்னே அவிர்ந்தென் பணிஏற் றுக்கொள்ளே! (5)
856. நள்ளார் புரம்மூன் றும்நகைத் தெரித்தாய்!
புள்ளார் பொழில்மா தையிற்புண் ணியனே!
உள்ளாய்ப் பணிதற் குரியோ ரும்வெறுத்து
எள்ளா வணம்என் பணிஏற் றுக்கொள்ளே! (6)
857. களைத்தோர் மகிழ்கா மர்நன்மா தையில்முன்
முளைத்தோங் கிலிங்கத் துறைமுக் கணனே!
கிளைத்தே வளர்பல் பகையும் கெடல்வேட்டு
இளைத்தேன் விரைந்தென் பணிஏற் றுக்கொள்ளே! (7)
858. மைத்தே சுறும்மால் பணிமா தையில்ஓர்
மெய்த்தே வன்எனத் திகழ்வித் தகனே!
கைத்தே சினற்குக் கணைஈந் தமைசொற்று
எய்த்தேன்; மகிழ்ந்தென் பணிஏற் றுக்கொள்ளே! (8)
859. அறமே வளர்த்தாள் இரண்டற் புதச்சேய்
பெறஆண் டருள்மா தையிற்பிஞ் ஞகனே!
மறம்ஆர் கொடுங்கூற் றுவன்மாய்த் திடஈண்டு
இறவா வணம்என் பணிஏற் றுக்கொள்ளே! (9)
860. தீயும் துவரும் தனிச்செக் கரும்நேர்
வாயும் தகையாய்! திருமா தைஅப்பா!
ஆயும் தமிழ்நால் வர்தம்மோ டடியேன்
ஏயும் படிஎன் பணிஏற் றுக்கொள்ளே! (10)
சந்தக் கலிவிருத்தம்
861. மைப்படி யும்கண்ம னோன்மணி தன்னோடு
ஒப்பறும் மாதைவ ளம்பதி உற்றாய்!
மெய்ப்பயன் நல்கிவி ரைந்தெனை ஆளாது
இப்படித் தாமதம் ஏன்செய்கின் றாயே! (1)
862. கன்னல்வில் மாரனைக் காய்ந்தருள் வானாய்
நன்னல மாதைந கர்க்கிடை வாழ்வாய்!
பொன்நசை தீர்த்தருட் போதம் வழங்காது
இன்னமும் தாமதம் ஏன்செய்கின் றாயே! (2)
863. தேய்ந்திடும் வான்மதி சென்னியிற் சூடி
ஏந்திசை மாதையி டத்துறை வானே!
காந்திய ஒன்னலர்க் காய்ந்தெழும் ஆர்வம்
ஈந்திடத் தாமதம் ஏன்செய் கின்றாயே? (3)
864. கூற்றினை வென்றொரு கோமளப் பாவை
பாற்றினம் மாதைப் பதிநடு வாழ்வாய்!
நாற்றிசை யோர்உய நான்பகர் பாடல்
ஏற்றிடத் தாமதம் ஏன்செய்கின் றாயே! (4)
865. சிறுத்தகண் குன்றுறழ் சிந்துரத் தின்தோல்
பொறுத்தெழில் மாதைபு ரந்தமர் வானே!
கறுத்தவில் வேளிடும் காமவெம் பாசம்
இறுத்திடத் தாமதம் ஏன்செய்கின் றாயே! (5)
866. ஆர்ந்தவி டக்கறை அம்களம் காட்டி
நேர்ந்ததொன் றின்றிய மாதையில் நின்றாய்!
கூர்த்த மதியைக் குமைக்கும்பொய்ப் பாசம்
ஈர்ந்திடத் தாமதம் ஏன்செய்கின் றாயே! (6)
867. விண்ணவர் போற்றும்வி யன்புகழ் மாதைக்கு
அண்ணல்என் றோங்கிடும் அழகிய நாதா!
வண்ணம்மிக் கோதும்என் வாஞ்சைமுற் றுறச்சற்று
எண்ணவும் தாமதம் ஏன்செய்கின் றாயே! (7)
868. சீர்த்தவ ளம்பெறும் மாதையில் தெய்வம்
மூர்த்தம்எல் லாமும்ஒன் றாம்முதல் வோனே!
பார்த்தன்அன் றுய்ந்தமை பாடும்என் றன்னை
ஈர்த்திடத் தாமதம் ஏன்செய்கின் றாயே! (8)
869. பொன்மலை விற்கொடு போர்புரிந் தப்பால்
நன்மைகொள் மாதைந கர்க்கிடை வந்தாய்!
நின்மகர் வாழ்க்கைஅல் லால்மற்றொர் நேயம்
இன்மையில் தாமதம் ஏன்செய்கின் றாயே! (9)
870. மால்வணங் கும்புகழ் மாதையில் என்றும்
பால்வண நீறணி யும்பர மேட்டீ!
நால்வர்அன் னானைஇந் நாட்டில்வி ளக்காது
ஏல்வையில் தாமதம் ஏன்செய்கின் றாயே! (10)
பியந்தைக் காந்தாரப்பண்
(திருஞானசம்பந்தரின் "வேயுறு தோளிபங்கன்" எனத் தொடங்கும் கோளறு திருப்பதிக யாப்பு)
871. கண்டக னாவி னூடும் மடமாதர் சேனை
கவினத்த யங்கு கடையேற்
றொண்டர்க ளோடு கூடி விளையாடும் ஆசை
தோயச்செய் வித்த தெவரோ?
புண்டரி கத்தின் மேய பிரமாக்கள் சென்னி
புனையும்பு யத்தொர் புனிதா!
அண்டர்பராவும் வண்மை பலகோடி! தோயும்
ஆமாதை யூரின் அரசே! (1)
872. பொற்புறு கொங்கை மாதர் மயலால் நலிந்து
போதம்பி றழ்ந்து புலர்வேன்
நிற்புகழ் பேறும் எய்த அருள்செய்து ளாய்!நல்
நிலைநல்கி டாதல் முறையோ?
மற்புரி தான வேசர் குலகாலன் ஆகும்
மாயன்ப ராவும் அழகா!
அற்புத லீலை செய்யும் முனிவோர்கள் கூடும்
ஆமாதை யூரின் அரசே! (2)
873. செங்கண்மு ராரி யன்ன ஒருவீரன் வந்து
செகம் எங்கும் ஏகி வினையால்
வெங்கண்அ ரக்கர் போலு மவர்நாசம் ஆக
வெலும்நாள்உ திப்ப அருள்வாய்
சங்கர! சாம வேத முடிவாகி நின்ற
தலைவா!அ ருக்கன் மதிதீ
அங்கண்ஒர் மூன்றும் ஆகும் முகம்ஐந்து ளாய்!நம்
ஆமாதை யூரின் அரசே! (3)
874. சகளம்பொ லாத தென்று பலவாறி கழ்ந்து
தவம்முற்றி ழந்து வினையாம்
நிகளம்த றிக்கும் ஆறு தெரியார் களாகி
நிகழ்வாரொ டென்னை அழியேல்
மகளங்க மும்த னாதொர் பாகத்தி லங்க
மழமால்வி டைக்கண் அவிர்வாய்!
அகளங்க ஞான யோக முனிவோர்கள் கூடும்
ஆமாதை யூரின் அரசே! (4)
875. செஞ்சக்க ரம்பி டித்த நெடுமால்உ றங்கு
தினம்மா நிலப்பெண் அழவே
வஞ்சக்கு ணத்து நீசர் அரசாளல் கண்டு
வாடாத வண்மை அருள்வாய்
நஞ்சக்க றைக்க ளத்து முதல்வா! எதிர்த்த
நமன்ஆவி உண்ட விமலா!
அஞ்சக் கரம்செ பிக்கு மவர்நெஞ்சம் அன்ன
ஆமாதை யூரின் அரசே! (5)
876. நீறொடுன் அக்கம் நல்கு மணியும்த ரித்து
நிதம்ஏற் றருந்து நெறியோர்
பாறொடி ணைந்த நீசர் குடைநீழ லூடு
பலவாவ ருந்தல் முறை யோ?
ஏறொடி ரண்டு நூறு பது கோடு கொள்ஓர்
இபமும்கொ டூரும் இறைவா!
ஆறொடு கொன்றை தும்பை மதிசூடு நாத!
ஆமாதை யூரின் அரசே! (6)
877. வீழியி டம்பழுத்த கனிநாணம் எய்த
மிளிர்வாய்இ தழ்கொள் மடவார்
சூழிருள் வேழ மாரன் மலர்வாளி ஐந்து
சொரியாத ஞானம் அருள்வாய்
கேழிணர் கிள்ளு வார்தம் வழிபாடும் ஒப்பு
கிழவா!கி டங்கின் முதலாம்
ஆழியின் நஞ்சம் உண்டும் அழியாத சித்த!
ஆமாதை யூரின் அரசே! (7)
878. மாயிரு ஞாலம் முற்றும் அறியப்பு டைத்த
மகவான் மகற்கொர் கணைஈந்து
ஆயிழை மாது மான மதுகாத்த நீஎன்
அபிமானம் முற்றும் அழியேல்
வேயிசை ஊதும் மாயன் அனையார்ப ராவும்
விமலா! வெண் மேனி விடையாய்!
ஆயிர கோடி யாய கதையோடி லங்கும்
ஆமாதை யூரின் அரசே! (8)
879. வடலூரன் நெஞ்சம் நோவ அநியாயம் நீசெய்
வகைஓர்ந்தும் வாழ்த்தும் என்றன்
இடர்தீர்த ரச்செய் வாய்கொல்? அவனோடு சேர
எனையும்கொல் வாய்கொல்? அறியேன்;
கடமாமு கன்கு கேசன் எனும்மக்கள் ஆடல்
காணும் களிக்கண் உடையாய்!
அடல்வீர ராய பூதர் பலர்சூழ்ந்து காக்கும்
ஆமாதை யூரின் அரசே! (9)
880. செஞ்சொற்க விக்கி ரங்கி ஒருநால்வர் வாழல்
செய்தாய்எ னும்சொல் நிசமேல்
எஞ்சொற்றி ரட்குள் யாதும் இனியாத தென்கொல்?
இயல்ஓர வல்லர் இலரோ?
வெஞ்சொற்க ருங்கண் வல்லி நிகர்மோகி னிப்பெண்
விரகத்த ழுந்தி மீண்டாய்!
அஞ்சொற் கிளிக்கு ழாமும் மறைநூல்ப யிற்றும்
ஆமாதை யூரின் அரசே! (10)
வஞ்சி விருத்தம்
881. அளவறும் ஆசைகொ டாயும்என்
இளமைத விர்ந்தும் இ ரங்கிலாய்;
களமதில் நஞ்சுறு காரணா!
வளமலி மாதையின் மன்னனே! (1)
882. கலியன்ந டுங்குறு காரணம்
மலியவி ரும்பெனை வஞ்சியேல்;
புலியரி பூட்கைஉ ரித்தகை
வலியவ! மாதையின் மன்னனே! (2)
883. தந்திர வாதிகள் தம்எதிர்
நொந்திர வாதெனை நோக்குவாய்;
இந்திர னாதியர் எண்ணுபல்
மந்திர! மாதையின் மன்னனே! (3)
884. ஏசறும் ஆடல்இ யற்றவே
நேசம்எய் தென்துயர் நீக்கிஆள்;
பாசம்இ லார்பலர் பணிதலால்
மாசகல் மாதையின் மன்னனே! (4)
885. நஞ்சம்நி கர்த்தகண் நாரிமார்
வஞ்சனை யால்மரு ளாமல்ஆள்;
மிஞ்சணி யார்பல மேடைமேல்
மஞ்சடர் மாதையின் மன்னனே! (5)
886. ஏழ்வகை நீதியும் ஏற்றுளேன்
தாழ்வுபொ ருந்தல்த குங்கொலோ?
கூழ்வயல் வாவிகு லாவுசீர்
வாழ்வுயர் மாதையின் மன்னனே! (6)
887. பெண்மையொ டாண்மைபி றங்கும்நின்
உண்மைஉ ணர்ந்தும்உ யேன்கொலொ?
வெண்மையின் மிக்கவி டைக்கொடி
வண்மைகொள் மாதையின் மன்னனே! (7)
888. ஏணுயர் பேடியை எண்ணிஉள்
நாணும்எ னக்கருள் நல்குவாய்;
பேணுபு மாதுமை பீடுதோய்
மாணுறு மாதையின் மன்னனே! (8)
889. நின்னிரு பாலர்நி கழ்ச்சிசற்று
என்னிடம் மேவஇ யற்றுவாய் ;
பொன்னியல் ஆதிய பொருள்எலாம்
மன்னிய மாதையின் மன்னனே! (9)
890. நால்வர் பெறும்பயன் நல்குவான்
போல்வலி தோதிடல் பொய்கொலோ?
வேல்வரி விற்கைஇ ராமன்ஆம்
மால்வரும் மாதையின் மன்னனே! (10)
எண்சீர் வண்ண விருத்தம்
தனதன தனதன தனதன தனனா
891. அடியவர் இடர்கெட அநுதினம் முயல்வான்
அமைமுளை நிகர்புய உமையவள் பிரியான்
இடியுறழ் ஒலிதரு விடைமிசை திரிவான்
இடையற வதிதரும் இசைபெறும் எழிலூர்
கொடியவர் எனும்அவு ணரும்அம ரரும்நேர்
குழுவினர் மகிழ்வொடு குலைவுறு தகைதோய்
படியினை மலரவன் அருளிய முதல்நாள்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (1)
892. அலகைகள் முறையிட நடுநட மிடுவான்
அமரரும் அவுணரும் விழைதரு பொதுவான்
இலகிய திரிசுடர் விழிஎன அமைவான்
இமவரை யினதொரு மருமகன் உறும்ஊர்
கலகமும் உறவும்எய் தியசில குரவோர்
கழறலின் உலகினர் தமதுகண் எனவாழ்
பலபல சுருதியின் உயிர்அல திணைதீர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (2)
893. கிரியினை ஒருசிலை எனஅணி தருதோள்
கிளர்தரு திரிபுர தகனன்மெய் அடியார்
உரிமையின் முழுகிய மடவியர் எதிர்போய்
உரைபயி லவும்இசை வுறுசிவன் உறைஊர்
அரியநன் மலர்களின் அரசெனும் அதுதான்
அலர்தர விணினிடை அநுதினம் வரும்ஓர்
பரிதியை இகழ்கலர் தொழும்உயர் வொடுவாழ்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (3)
894. மழுவொடும் மறிஅணி தருகர மலரான்
மரகத மயில்அனை யவள்வலம் அமர்வான்
அழுதுவல் வினைகளை யடுமணி தருவான்
அரகர எனும்அவர் உளம்உறை பவன்ஊர்
எழுதரும் மறைகளில் நுவலிய பொருள்தாம்
எமதிறை வடிவல திலைஇலை எனவே
பழுதறு சிவசம யிகள்தம துயிர்நேர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (4)
895. உருவமும் அருவமும் ஒருதன தெனவே
உணர்பவ ரொடுசில உரைபகர் பெருமான்
மருமலர் இதழியொ டிறகையும் அணிவான்
மழவிடை முதுகினில் வருதெரு உறும்ஊர்
திருமக ளொடுகலை மகள்அடி தொழவே
சிறிதுகண் அருள்புரி சிகியிது எனவே
பருவத இறைதரும் மகள்அல திணைதீர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (5)
896. முசுஅர சரின்இறை எனஉற அருள்வான்
முதிர்கனல் வளைதரு சுடலையும் இகழான்
அசுவம தெனமறை முதலுறும் ஒருதேர்
அவிர்இரு சுடர்வழி நடவினன் அமர்ஊர்
கொசுவென அவுணரை இகழ்தரு வலிசால்
குணதரர் அனைவரும் மிகவிழை தரவாழ்
பசுமர கதமலை புரைஅரி உயிர்நேர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (6)
897. அவன்அவள் அதுஎன நிகழ்ஒரு பெரியோன்
அசரமொ டுசரமும் அருளிய அருளான்
உவமைஇல் பரன்எனில் உளம்மிக மகிழ்வான்
ஒழிவற நிறைசிவன் உறைதரு திருவூர்
நவமுறும் மணம்முயல் சுபமனை யினுமாய்
நலிவுறும் அசுபம னையினும்எய் திடும்ஒர்
பவளவல் வரைபுரை கரிமுகன் அனைநேர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (7)
898. மனிதமி னொடுபுணர் மகபதி தருசேய்
வயின்அடல் எயினனில் வடிவுகொ டுறுவான்
அனியமொ டனனியம் எனவளர் தகவான்
அழகியன் எனும்ஒரு பெயருடன் அமர்ஊர்
கனிதரு மதுமல ரவன்நுவல் பவும்மா
கபடிகள் நுவல்பவும் எனும்நெறி தொறும்வாழ்
பனிருகை முருகையன் அடியவர் உயிர்நேர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (8)
899. கரவறு கணபதி குகன்நுகர் அமுதார்
களபமென் முலைஉமை யவள்மொழி கடவான்
இரவொடு பகல்இலன் இரவலர் பெருமான்
இரசித மலைகொளும் இறையவன் உறைஊர்
அரவுறழ் சினம்உறும் மதஇகல் மிகலால்
அதுஇது பொருள்என மருள்உறும் மயல்தீர்
பரநிலை அறியும்மெய் அடியவர் மனம்நேர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (9)
900. அறிவினில் உயர்வுறு சதுரர்சொல் கவியே
அநுதினம் மொழிபவர் அகமலர் அகலான்
எறிகடல் விடம்அமு தெனநுகர் புகழான்
இருடியர் பலர்தொழ இனிதமர் எழில்ஊர்
பொறிபடர் முகம்உறு மதகளி றனையார்
புகல்பனு வலில்உள பொருள்திரு டுபுவாழ்
பறிதலை அமணரும் விழைதரும் அயம்ஆர்
பசுமுழு மையும்வழி படும்முது நகரே! (10)
அறுசீர்ச் சந்த விருத்தம்
901. விண்டு இரவி குலமன் னவனாம்
எனமலர் இடல் கொண்டாய்!
மண்டு சடிலப் பெருமா னே!நம்
மாதையில் வாழ்வானே!
கண்டு புரையும் சுவைபெறு சந்தக்
கவியும் பலபாடும்
தொண்டு கொளும் நீ கூலிகொ டுக்கச்
சோம்புதல் முறைஅன்றே! (1)
902. பன்னக முடன்என் பணிதரு மார்பப்
பவளக் கிரிபோல்வாய்!
கன்னல்வில் மதனைச் செற்றாய்! மாதைக்
கவின்நகர் அமர்வானே!
என்னக வெளியிற் பலவிளை யாடல்
இயற்றிய நீவாயால்!
சொன்னசொற் படியே செய்குவ தற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (2)
903. காயக நெஞ்சினர் தம்மை விரும்பாக்
கண்ணுதலே! கருணை
மாயனும் வேதா வும்தொழ மாதை
வளம்பதி மேயானே!
கூயழு தேங்குறு பூமகள் நெஞ்சம்
குளிரும் படிசெய்வான்
தூயமெய் யடியார்க் கூட்டுவ தற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (3)
904. அட்டவ கைப்படு மூர்த்தியும் ஆனாய்!
ஆன்ஏ றதில்ஊர்வாய்!
மட்டவிழ் சோலைவ ளம்பொலி யும்திரு
மாதையில் வாழ்சிவனே!
எட்டனை அன்னஇ ரக்கமும் இன்றி
இறைச்சி விழைந்துண்ணும்
துட்டர்ந டுங்குறு மாறுசெ யற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (4)
905. அன்பன்உ ரைப்படி தூதும்முன் ஏகும்
அருட்பர னே!அணிசால்
பொன்பர வும்திரு மாதையில் மேய
புராதன! புங்கவனே!
இன்பம்வி ழைந்துன தக்கரம் ஐந்தும்
இயம்பிவ ணங்குநர்தம்
துன்பம்அ னைத்தும்ஒ ழித்திடு தற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (5)
906. விற்கன கக்கிரி யாகவ ளைத்தாய்!
வெள்வளை யேகுழையா
நற்கவி னார்செவி இட்டாய்! மாதை
நகர்க்கர சானவனே!
மற்கட மேநிகர் நெஞ்சொடு சென்று
வருந்தும்எ னைப்பலர்வாய்ச்
சொற்கனல் சூழ்ந்துசு டாதுசெ யற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (6)
907. நன்னெறி யிற்செல்ப வர்க்கெளி யானே!
நான்மறை ஆதியநூல்
சொன்னெறி நம்புநர் எள்ளரும் மாதைத்
தூய சதாசிவனே!
புன்னெறி முற்றும்ம றைந்துப சுப்பணி
புரிதலின் மெலியாவாம்
தொன்னெறி வாழ்வகை செய்குவ தற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (7)
908. கண்டம திற்கறை கொண்டவ னே!உயர்
கற்பக நகரேபோல்
மண்டல மீதுவி ளங்கிய மாதையில்
வாழ்வுறும் வானவனே!
அண்டலர் சேனைஅ னைத்தையும் வெல்ல
அருச்சுன னேநிகர்ஓர்
துண்டரி கன்றனை உண்டுப ணற்கும்
சோம்புதல் முறைஅன்றே! (8)
909. சதமகர் என்பொடு வேதியர் சென்னி
தரித்துந டம்புரிவாய்!
பதம்ஒரு மூன்றுடை யான்உயும் மாதைப்
பதிவளர் பண்ணவனே!
மதம்ஒரு கோடியை யும்தழு விப்பிழை
மாறும் நலம்செய,நின்
சுதர்அனை யான்ஒரு வற்கருள் செயவும்
சோம்புதல் முறைஅன்றே! (9)
910. கல்வரை கட்கிறை தரும்மகள் தழுவும்
கணவா! கறைதீர்மெய்ச்
செல்வம்உ றப்பெறு வாரே பரவும்
திருஆ மாத்தூரா!
நல்வரம் முற்றும் விரும்பும் எனக்கு,முன்
நால்வர் உனால்அடையும்
சொல்வலி மட்டும்வ ழங்கவும் நீதான்
சோம்புதல் முறைஅன்றே! (10)
கலி விருத்தம்
911. பொன்ன தாம்விட் புலம்புரப் பான்முதல்
மன்னர் போற்றெழில் மாதைவ ரோதயா!
என்ன கத்துள் இருவரும் சாட்சியா
நென்னல் காணல் நிசப்படச் செய்திடே. (1)
912. வாசம் ஆர்ந்த மலர்ப்பொழில் மாதைவாழ்
ஈச னே!இற வாதுறும் ஏகனே!
ஆச கன்ற அநுபவம் அம்புவி
நீசர் கண்முன் நிசப்படச் செய்திடே. (2)
913. செறியும் வார்பொழில் மாதையில் தெய்வமாய்
மறிம ழுப்படை வைத்தகை வள்ளலே!
குறியி றந்த குணத்தினர் கூறும்நல்
நெறிஅ னைத்தும் நிசப்படச் செய்திடே. (3)
914. ஏய நந்தி முதற்பலர் ஏத்துசீர்
மேய மாதை வியன்பதி வித்தகா!
மாய னேநிகர் வாழ்வுற நாடும்என்
நேயம் முற்றும் நிசப்படச் செய்திடே. (4)
915. ஆற்றி னால்உயர் வாம்அணி மாதைவாய்
ஏற்றில் ஏறி வலம்வரும் எந்தையே!
போற்றி னார்க்கநு பூதிநல் கும்திரு
நீற்றின் வண்மை நிசப்படச் செய்திடே. (5)
916. தீங்கில் மாதையில் தேவர்வந் தேத்தவே
காங்கி லங்கு களத்தருட் காரணா!
ஓங்கி டும்தவத் துத்தமர் உள்ளுரம்
நீங்கி டாது நிசப்படச் செய்திடே. (6)
917. மஞ்சி யங்கு மலர்ப் பொழில் மாதையில்
வஞ்சி யன்னவள் பால்அமர் வானவா!
அஞ்சி கிக்குகன் ஆண்மைவி ரும்புவார்
நெஞ்சின் ஆர்வம் நிசப்படச் செய்திடே. (7)
918. பேடி அன்று பெரும்புகழ் எய்தவே
ஓடி ஆண்டருள் மாதையில் உத்தமா!
கோடி ஞாயம் குறித்துழன் றேன்அவை
நீடி முற்றும் நிசப்படச் செய்திடே. (8)
919. தந்தி மாமுக னைக்குக னைத்தரும்
அந்தி வான்என மாதைஅ மர்ந்துளாய்!
புந்தி நாணப் புகலும்என் சொற்கள்பார்
நிந்தி யாது நிசப்படச் செய்திடே (9)
920. மாயன் வந்து வணங்கிட மாதையில்
மேய வா! மதி வேணியின் மேல்வைத்தாய்!
தூய நால்வர்தம் தொண்டுவி ழைந்தமை
நீய றிந்து நிசப்படச் செய்திடே (10)
கொச்சகக் கலிப்பா
921.கொடிநிலவு மணிமாடம் குலவுதிரு ஆமாத்தூர்
படியில்உயர் சிவலோகப் பாங்கமையப் பரிந்தாள்வாய்;
நெடியவனே எனப்பலரும் நிகழ்ந்துபுகழ் விழைந்தேங்கும்
அடியவனேற் கின்னேநின் அருள்துளிஒன் றருள்வாயே! (1)
922. மையல்தீர்ந் தவர்போற்றும் மாதைவளம் பதியூடோர்
செய்யமால் வரையேபோல் தினம்வளரும் சீர்ச்சிவனே!
பொய்யர்!ஆ ணவப்பெருக்கம் பொறுக்கரிதாத் தளர்கின்றேன்;
ஐயகோ! இன்னேநின் அருள்துளிஒன் றருள்வாயே! (2)
923. சீரணங்கு களிகூரும் திருவாமாத் தூர்த்துதிப்பார்!
காரணங்கள் அத்தனையும் கனவில்நுவல் கண்ணுதலே!
பாரணங்கு துயர்கண்டு பரதவித்துச் சுழல்கின்றேன்!
ஆரணங்கள் அறிவரும்நின் அருள்துளிஒன் றருள்வாயே! (3)
924. கடல்அனைய விழிமாதர் காமவலை கடந்துய்யும்
திடமனத்தார் பலர்போற்றும் திருவாமாத் தூர்ச்சிவனே!
நடலைஉடை யார்பகையால் நான்மிகவும் நலிகின்றேன்;
அடல்விடையில் தோன்றிஉன தருள்துளிஒன் றருள்வாயே! (4)
925. சங்கலம்பு கைக்கவுரி தன்னொடுமால் விடையேறி
மங்கலம்சேர் மாதைநகர் மறுகெங்கும் வருவானே!
செங்கலிற்பொன் முன்னாள்ஒர் செழுந்தமிழ்ப்பா வலன்பெறல்கேட்டு
அங்கலைக்கும் தமியேற்குன் அருள்துளிஒன் றருள்வாயே! (5)
926. சலந்தரனைக் கீன்றபுகழ் சந்ததமும் நினைவாருள்
கலந்தவிர்வாய்! மாதைநகர்க் காவல்செயும் காரணனே!
நிலந்தளர்வெம் துயர்ஓர்ந்து நெறிப்பிழையோர்ச் செறும்பேற்றுக்கு
அலந்துமிகத் தவிப்பேற்குன் அருள்துளிஒன் றருள்வாயே! (6)
927. வண்டமர்பூம் பொழில்சூழும் மாதைநகர்க் கோயிலிடை
தொண்டர்பெறும் பேறாகித் துலங்கும்ஒரு தொல்லோனே!
வெண்டமிழாற் போற்றிசைக்கும் விதமன்றி வேறறியேற்கு
அண்டர்களும் பெறல்அரும்நின் அருள்துளிஒன் றருள்வாயே! (7)
928. உருச்செபித்து நாடுமவர் உள்ளகத்தில் உள்ளபடி
திருச்சகளம் ஆம்மாதைச் சிவலிங்கப் பெருமானே!
எருச்சுடும்நீ றணிவார்முற் றின்புறல் வேட்டிளைக் கின்றேன்;
அருச்சுனனுக் கீந்தாங்குன் அருள்துளிஒன் றருள்வாயே! (8)
929. கானமறைத் திரள்போற்றக் கவின்திருவா மாத்தூரில்
ஞானபர சத்தியொடு நடுவிருக்கும் நாயகனே!
மோனமத மாமுகற்கும் முருகனுக்கும் ஒருதுணைவன்
ஆனபுகழ் யான்பெறநின் அருள்துளிஒன் றருள்வாயே! (9)
930. தெய்வகுலக் கோஆகித் திருவாமாத் தூர்நடுவில்
சைவபர வாதிகளைத் தழுவிவளர் சங்கரனே!
மெய்வழக்கர் நால்வர்எனும் மேதினிஎன் னையும்சேர்த்தோர்
அய்வர்எனச் சொலுமாறுன் அருள்துளிஒன் றருள்வாயே! (10)
ஆசிரியத்துறை
931. நீறி டாவெறு நெற்றி யோடு,கல்
மூன்றெடுத்து, நிதம்தொ றுன்மிசை
சீறி வீசினன் றான்கதி சேர்ந்ததெவ் விதமோ?
ஏறி வர்ந்துமை தன்னொ டும்பரில்
ஏகி யேவரம் ஈயும் தன்மையின்
மாறி லாமுதல் வா!திரு மாதைவாழ் சிவனே! (1)
932. சுத்த மாம்விலை ஓலை யும்கொடு
தொண்ட னேஎனச் சென்ற போதுனைப்
பித்தன் என்றிகழ்ந் தான்அருட் பேறுபெற்ற தென்னே?
நெய்த்த நாண்மலர்க் கொன்றை தும்பை
நிலாம திப்பிள வார்ந்த சென்னியின்
மத்த மும்புனைந் தாய்!வள மாதைவாழ் சிவனே! (2)
933. அப்பன் நீரிடை மூழ்கல் கண்டழு
திட்ட பார்ப்பனச் சேய்உ னாதுமை
செப்ப தாம்முலைப் பால்உணச் செய்தஞாயம் என்னோ?
ஒப்ப ரும்கக னத்து வானவர்
உய்வு றக்கடல் நஞ்ச யின்றதின்
மைப்ப டுங்களத் தாய்! கவின் மாதைவாழ் சிவனே! (3)
934. வெண்பொ டிப்புனைந் தார்கள் நேர்வரில்
ஊணும் விட்டுவெ தும்பி னான்மிகு
தெண்பொ றுத்திட ஆண்டருள் செய்தசெய்கை என்னே?
ஒண்பொ லன்குவ டாய விற்கொடு
போய்ஒ னார்புரம் மூன்றும் நக்கடும்
வண்பொ றுத்தவ னே!எழில் மாதைவாழ் சிவனே! (4)
935. கூலி தந்திடும் மன்உ ரைப்படி
குதிரை கொண்டிடச் சென்ற மந்திரி
பாலி லங்கிய நாள்அருட் பான்மைஏன் அளித்தாய்?
வாலி, ராவணன் ஆதி யோர்களை
மாய்த்து மாநிலம் வாழ வைத்திடும்
மாலி றைஞ்சிய சீர்பெறு மாதைவாழ் சிவனே! (5)
936. வேத வேதிய ராதி உத்தமர்
வெம்பி டச்செய வேமு யன்றபல்
காத கத்தகு வேசரும் காண ஏன் அவிர்ந்தாய்?
பூத நாத! புராண! புங்கவ!
புயக பூடண! என்று போற்றிடு
மாத வர்க்கினி தாகிய மாதைவாழ் சிவனே! (6)
937. மாயி ரும்புவ னங்கள் உண்டுமிழ்
வானும் நாடரி தாய தாள்கொடு
பேயி னத்திடை ஆடிடும் பெற்றிஏன் அடைந்தாய்?
காயி கப்பணி ஒன்று மேதெரி
வார்கள் காணரி தாய மாண்உறும்
வாயி கப்புல வோர்வரு மாதைவாழ் சிவனே! (7)
938. ஓடி யம்பல பேசி, விற்கோ
டுருத்து, வானவர் காண மோதிய
பேடி இன்புற ஓர்கணை பேணிநல் கியதேன்?
கேடில் பல்கண மும்ப ராவிய
கீர்த்தி கொண்டு கிளர்ந்த வெண்ணிற
மாடி வர்ந்தவ னே!தனி மாதைவாழ் சிவனே! (8)
939. கசமு கத்தனு டன்க டம்பனை
நல்கும் நீகன தொண்டர் புண்படு
பிசகு செய்குவ தேன்? இதொர்! பீடென்றெண் ணுதியோ?
அசம தன்தலை தக்கன் எய்த
அடர்த்த வீரனை அனைய னால்அருள்
வசவன் உய்கைசெய் தாய்!தமிழ் மாதைவாழ் சிவனே! (9)
940. நால்வர் சொற்கவி கொண்டென் நேர்சிலர்
நவில்து திக்கருள் செய்தி டாதவன்
போல்வ யங்குகின் றாய்;இதொர் புதுமைஅன் றுகொலோ?
கோல்வ ளைக்கவு மாரி ஆதிய
கோடி பேர்மொழி கொள்ளும் ஓர்பது
வால்வ ளைச்செவி யாய்!வியன் மாதைவாழ் சிவனே! (10)
நட்டராகம்
(சுந்தரமூர்த்தி நாயனாரின் "நீள நினைந்தடியேன்" எனும் திருக்கோளிலிப்
பதிகம் போன்றது. எனவே நட்டராகம் என யாப்புக் குறியீடு பெற்றது)
941. ஐந்துமு கத்தானே! அருள்ஆழி அனையானே!
வந்துதென் றற்சிறுகால் புகும் மாதையில் வாழ்வானே!
நொந்துபல் வானவர்சீர் மிக நுவன்றும் பேறிலனா
இந்துற ழத்தளர்ந் தேன் எனை இன்றே ஆண்டருளே! (1)
942. பன்னக பூடணமும் புனை பரம னே! பலவாம்
வன்னம லர்ச்சோலை திகழ் மாதைந கர்ச்சிவனே!
பொன்னதன் பொய்யாசை யதும் போகப் பெற்றிலன்நீ
இன்னமும் தாமதியா தெனை இன்றே ஆண்டருளே! (2)
943. மெய்ப்பசுக் கூட்டம்எல்லாம் பெற விரைந்து கொம்பளித்தாய்!
மைப்படி யும்களத்தாய்! மிளிர் மாதைவ ளம்பதியாய்!
தப்பனந் தம்புரிவேன்; அருந் தவமும் செய்யறியேன்;
எப்படி யானாலும் எனை இன்றே ஆண்டருளே! (3)
944. கரக்க ணத்திறத்தால் பெரும் கயிலை யைப்பெயர்த்த
அரக்கன் போல்வாரும் தொழ ஆமாத் தூர்அமர்ந்தாய்!
குரக்கு வன்குணத்தேன் மனக் கோரம் தீர்ந்திறைஞ்சேன்;
இரக்கம் நிற்குளதேல் எனை இன்றே ஆண்டருளே! (4)
945. கந்தம லர்க்குழல்சேர் உமை காதல் மிக்குடையாய்!
அந்தணர் கொண்டாடும் திரு ஆமாத் தூரானே!
செந்தமிழ்ப் பாடல்களால் புகழ் தெரிந்த மட்டுரைப்பேன்
எந்த விதத்தேனு எனை இன்றே ஆண்டருளே! (5)
946. வள்ளல்க ளிற்றலையாய்ப் பெரு மாதை மாநகரில்
கள்ளவிழ் பூங்குழலா ளொடு கவினும் காரணனே!
உள்ளம்விட் டேகறியாய்! முயல் உழைப்பு நன்கறிவாய்!
எள்ளல்வி ளையாமே எனை இன்றே ஆண்டருளே! (6)
947. மாழை மலைச்சிலையாய்! திரு மாதை மாநகர்வாய்!
ஊழை மதியாரா வரும் உறுதி யோர்க்கெளியாய்!
கோழை மனக்கசட்டால் மதன் கோல்கள் போராட
ஏழையர் மால்அடைந்தேன் எனை இன்றே ஆண்டருளே! (7)
948. பேடிஅ டித்தபினே, ஒரு பிரம்பி னால்அடியும்
பாடினற் காப்பொறுத்தாய்! தினம் பழுதில் மாதைஉற்றாய்
ஆடிய தாள்மறவா தெழுத் தைந்தும் சொல்பவர்சேர்
ஈடின்மெய்ப் பேறமைத்தே எனை இன்றே ஆண்டருளே! (8)
949. திரண்ட மால்வரைத்தோள் மிசை செம்பொன் விற்கொடுபோய்
அரண்ட கித்துவந்தாய்! அணி ஆமாத்தூர் அரசே!
முரண்ட னந்தம்உளான் என முற்றும் கைவிட்டி டாது
இரண்டு மக்களில்சேர்த் தெனை இன்றே ஆண்டருளே! (9)
950. ஆரிய மும்தமிழும் புகழ் ஆமாத்தூர்க் கோயில்
சீரியன் றோங்கிடவாழ் பெரும் சித்த சேகரனே!
பாரினர் கண்காண அருட் பலம்துய்த் துய்ந்தோராம்
ஈரிரு தொண்டரில்சேர்த் தெனை இன்றே ஆண்டருளே! (10)
அறுசீர் விருத்தம்
951. பத்தர் உவகைக் கடல்மூழ்கப்
பணைமென் முலையால் சமராடும்
முத்த நகையார் விழைவெல்லாம்
மூவா தருளும் முன்னவன்ஊர்
சத்த சுரநான் மறையோரும்
தவசால் உயர்மா முனிவோரும்
சித்தர் தாமும் தொழுதேத்தும்
செல்வத் திருவா மாத்தூரே. (1)
952. அங்க மொடுபாம் பணிவான்என்று
அருமைத் தமிழால் துதிசெய்வார்
தங்கள் விருப்பம் எல்லாமும்
சலியா தருளும் சங்கரன்ஊர்
துங்க அசுரர் உதிரம் எல்லாம்
சோகுத் திரள்உண் டிடஊட்டும்
செங்கண் நெடுமால் பணிசெய்யும்
செல்வத் திருவா மாத்தூரே. (2)
953. கோணா கத்தோ டிளமதியும்
கொக்கின் இறகும், பச்சறுகும்
மாணார் சடிலத் தலைமீதே
வைக்கும் பெருமான் வாழ்வுறும்ஊர்
நாணா மடவார் ஆசையினால்
நாய்உண் பதுதின் பவர்நாடும்
சேணா டதுகண் டுளம்ஒல்கும்
செல்வத் திருவா மாத்தூரே. (3)
954. வேதத் திரளோ டாகமமும்
விள்ளும் பொருளின் விரிவாகி
நாதக் கழலிட் டதன்முடிமேல்
நடமா டிடுவான் நண்ணிடும்ஊர்
கேதக் கடல்முற் றறநீக்கிக்
கிருபைக் கடலின் பெருமைதரும்
சீதப் புனலார் பம்பைநதிச்
செல்வத் திருவா மாத்தூரே. (4)
955. ஆலா லம்தின் றிறவானாய்
அடல்ஆர் கூற்றன் தன்னையும்ஓர்
காலால் வென்று தொழுவார்தம்
கலக்கம் தீர்க்கும் காரணன்ஊர்
கோலா கலமா முனிவோர்சொல்
குமுதப் பொய்கை முதலாய
சேலார் வாவி பலசூழும்
செல்வத் திருவா மாத்தூரே. (5)
956. வட்டச் சடிலத் தலையூடே
வாழும் கங்கை மகிழ்கூரும்
இட்டக் கலவி உமைஅறியாது
என்றும் செய்யும் இமையவன்ஊர்
பட்டப் பகல்போல் அருள்நாடிப்
பாவப் பொலிவாம் இருள்ஓட்டும்
சிட்டர்க் கொருதா ரகமேயாம்
செல்வத் திருவா மாத்தூரே. (6)
957. பத்துத் தலையன் முதலோராம்
பலதா னவருக் கருள்செய்திட்டு
எய்த்துத் தளர்வா னவர்தாமும்
இன்பம் பெறநல் கிடுவான்ஊர்
முத்துப் புரையும் நகைமடவார்
மோகம் தவிர்மா முனிவோருள்
செத்துப் பிறவா தவர்நாடும்
செல்வத் திருவா மாத்தூரே. (7)
958. வேடன் உருவம் கொடுசென்று
விசையற் கன்றோர் கணைநல்கல்
பாடல் வகையால் நுவல்வார்க்குப்
பலவாழ் வருளும் பண்ணவன்ஊர்
பீட மதுபோற் புவிதாங்கிப்
பெருநா ஈரா யிரம்எய்தும்
சேட னாலும் பகரரிதாம்
செல்வத் திருவா மாத்தூரே. (8)
959. மானை நிகர்கண் உமையாளை
மருவித் தேவர் வாழ்வுற, அன்று
ஆனை முகனைக் குகவேளை
அருளிக் களிகூர் அம்மான்ஊர்
மேனை மகளார் மொழியோடு
வியனார் பொதியைத் தமிழ்போலும்
தேனை உகுபூம் பொழில்சூழும்
செல்வத் திருவா மாத்தூரே. (9)
960. சுகிர்தம் மருவும் ஒருநால்வர்
சொல்லும் துதியில் களிகூர்ந்திவ்
அகிலம் முழுதும் தெய்வம்எனும்
ஆர்வம் தருவான் ஆண்டுறும்ஊர்
முகில்வந் துலவும் பெருநன்மை
மூவா மையினால் முப்போதும்
சிகிநின் றாடும் எழில்குன்றாச்
செல்வத் திருவா மாத்தூரே. (10)
எண்சீர் விருத்தம்.
961. மன்னவர்பெரு வாழ்வினையும் பொருளெனஉட் குறியா
மாதவத்தோர் மனவெளியில் மால்விடைமேல் திரிவாய்!
பொன்னவளும் கலைமகளும் வழிபடும்ஓர் பூவை
புணர்ந்துவப்ப ஆமாதைப் பூம்பதிஆண் டுறைவாய்!
நின்னருட்சேய் உரைத்தமொழி ஆயிரத்தொன் றேனும்
நிசமாகும் படிகருதி நெடிதிளைத்தேன்; அந்தோ!
இன்னமும்என் பத்தியைநீ சோதிக்க வேண்டாம்;
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (1)
962. மான்விரும்பும் விழிஉமைப்பெண் வலத்தமர்பெம் மானே!
மறவாத நிலையுடையார் மனம்தொறும்சஞ் சரிப்பாய்!
தேன்விழைபூம் பொழில்திருவா மாத்தூர்ப்பொற் கோயில்
சிவலிங்கத் துள்உறையும் சித்த பெருமானே!
ஊன்விழுங்கும் தீயகுண மனிதர்இன்றிச் செய்யும்
ஒருவனைக்கண் டலதமையேன்; உன்உளம்சம் மதித்தால்
யான்விரைந்தந் நலம்செயற்கும் சலிப்படையேன் கண்டாய்;
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (2)
963. பொன்னாகச் சிலைவளைத்துப் புரம்எரித்து மீண்டாய்!
போதபரா னந்தநெடும் புணரியில்மூழ் கினரைத்
தன்னாகத் துடன்கலந்து கொளச்சிறிதும் சோம்பாய்!
தனித்திருவா மாத்தூரில் தலைவன்என வாழ்வாய்!
மன்னாணை வழுப்படலும், பசுவதைத்தூன் உண்பார்
மகிழ்வதுவும், அனையபல வம்புமலி வதும்கண்டு
என்னாவி படும்துயரம் முழுதும்அறி வாயேல்
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (3)
964. பிச்சைஅமு துண்பவர்க்கோர் பேரரசன் ஆயும்
பிறைமுடிப்பாய்! கறைமிடற்றெம் பெருமானே! பெரியோர்
அச்சைஉந்தன் சொரூபம்எனக் கருதுமவர்க் கெளியாய்!
ஆமாத்தூர்க் கோயில்வாழ் அழகியநா யகனே!
கச்சைவிடைப் பரிஏறி வானகத்தில் தேவர்
கணம்சூழ நீவருதல் காணல்முதலாகும்
இச்சைபல பலவாக்கொண் டேங்குகின்றேன்; அந்தோ!
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (4)
965. நவக்கிரக வாதனைமுற் றொழித்தருள வல்லாய்!
நாரணன்நான் முகன்அறியா நகத்துருவும் கொண்டாய்!
பவப்பிணியோ டிறப்பும்ஒழித் தருள்பதங்கள் உடையாய்!
பழுதறும்சீர் ஆமாதைப் பதிவளர்பண் ணவனே!
தவத்துயர்ந்தோர், பத்திநலத் தினில்உயர்ந்தோர் என்னச்
சாற்றும்இரு தகையினராச் சகத்தினில்வாழ் கின்றார்
எவர்க்கும்இலாப் பேராசை என்றனக்கேன் கொடுத்தாய்!
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (5)
966. கூற்றுவனைத் தடிந்தொருமா ணியைப்புரந்த வண்மை
கூறுவார் வினைமுழுதும் கூறுபடக் களைவாய்!
ஆற்றுயர்சீர்ப் பம்பைநதி ஏய்அகழி எனச்சூழ்
ஆமாத்தூர் அமர்ந்துமுழு தாண்டபெருமானே!
வேற்றுநெறிப் புலையர்கருங் குடைநிழலில் தவித்து
மெய்த்தவத்தோர் களும்மறைந்து வெருளும்விதம் ஓர்ந்தும்
ஏற்றுருவம் பொறித்தகொடி உயர்பயன்வேட் டடைந்தேற்கு
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (6)
967. பானல்விழிப் பார்ப்பனமங் கையர்பலர்கண் டேங்கப்
பலிஇரந்தாய்! பகிரண்டப் பரப்பினிலும் நிறைந்தாய்!
கானமறைத் தொனிஅகலா ஆமாத்தூர்க் கோயில்
கண்ணுதலே! விண்ணவரும் கனவினும்காண் பரியாய்!
போனபிறப் பாதியவும் புகன்றெனைத்தேற் றியசேய்
பொறிமயில்மேல் வருகில்லான்; போற்றிஉனை அடைந்தேன்;
ஈனர்நகும் படிஎனைக்கொன் றொருபிணம்ஆக் காதே!
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (7)
968. கூர்த்தகணை மாரிபொழி கொண்டல்அனை யார்க்கோர்
கொடுங்கூற்றா வதுகருதிக் கோரதவம் செய்த
பார்த்தனுக்கன் றருள்புரிந்தாய்; பன்னிருசூ ரியர்க்கும்
பயன் அளித்தாய்; ஆமாதைப் பதியில்வளர் பரனே!
சீர்த்தமறைக் குலம்பகர்மூ விருநெறிக்கும் பொதுவாய்த்
திரிந்தேனை இகழாமல் திருப்புகலூ ரினில்கண்டு,
ஈர்த்தடிமைப் படுத்தி, அப்பால் பணிகொளல்பொய் யாமே
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (8)
969, மருமலிமண் தாமரைப்போ தினில்வசிப்போர் ஆய
மாமிமரு மகள்கலகம் மாற்றிஅருள் செய்தாய்!
குருமரபில் தலையாய்க்கல் லால்அடியில் உற்றாய்!
கோமுழுதும் கோடுமுனாள் கொளும்நகர்க்கோ ஆனாய்!
தருமமொடு சத்தியமும் மறைந்தமைகண் டயர்ந்தேன்;
சயிலமகள் களிகூரத் தந்திமுகன் குகன்என்
இருமகர்ப்பெற் றனை;அதனால் மலடன்அலாய்; தமியேற்கு
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (9)
970. புண்ணியர்க்கோர் ஆதரமாய்த் திருவாமாத் தூரில்
பொலிவானே! பலவாய புராணமும்முற் புகன்றாய்!
பண்ணியல்செந் தமிழ்ப்புலமைப் பயன்அடைந்த நால்வர்
பதம்பணிவார்க் கடிமைசெயும் பண்புடையேன்; எனினும்
மண்ணில்உயிர்க் கொலைமுழுதும் தணந்தலதுன் திருத்தாள்
வலிதளித்திட் டாலும்உறா வன்மையும்நீ தரலே;
எண்ணில்அடி யவர்மீதும் திருவாணை இட்டேன்;
எட்டுணைஆ யினும்மெயருள் ஈந்தருள்இக் கணமே! (10)
எண்சீர் விருத்தம் (வேறு)
971. விடியா தஇருட் டுறழ்மா யையினால்
வெம்பித் துயர்மெத் தஅடைந் துளன்இப்
படியோ டகல்வா னமும்மெச் சிடுசீர்
பாலிக் கில்உனைப் பழிசூழ் தருமோ?
மடியா தவனே! பிறப்பில் லவனே!
மணிகண் ட!மயே சுர!வா னவனே!
அடியார் பலருக் கொருதா ரகம்ஆம்
ஆமா தைவளம் பதிஆ திபனே! (1)
972. மெய்யோ துநர்நொந் து,மிகத் தவித்தார்;
வேறோ துநர்வீ றுமிகப் படைத்தார்;
வெய்யோன் எதிர்நீர் இறைக்கும் தொழிலே
மேலாம் எனும்வே தியர்மிக் கிளைத்தார்;
நெய்யோ டுபுன்நாய் உணவும் கனற்பெய்
நியமத் தவர்நீ டலுற்றார்; முறையோ?
ஐயோ! இனிஎன் றருள்செய் குவையோ?
ஆமா தைவளம் பதிஆ திபனே! (2)
973. காணிக் கைஎனத் தனைநல் கிடுவான்
கடல்சூழ் புவிக்கண் இலையோ? அவனைப்
பேணித் தண்அருள் துளிஒன் றளித்தால்
பெருமைப் பிழையோ? புவிபே துறுமோ?
வாணிக் கினியார் தலைமா லைஇட்டாய்!
மழமால் விடைஏ றிவிண்வாய் வருவாய்!
ஆணிக் கனகம் புரைமே னிஅப்பா!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (3)
974. கடல்சூழ் புவிமா தழுதேங் குகிறாள்;
கமலக் கண்உளான் துயில்கைத் திலன்என்
னிடம்ஆர் இருந்தோ அவைமுற் றும்உணர்ந்து
ஏங்கப் புரிகின் றனன்; நீ அலையோ?
வடலூ ரனைமோ சம்செய்திட் டபின்என்
மனவா தைவளர்ந் ததும்ஓர் கிலையோ?
அடல்வே ழம்உரித் தணிப்போர் வையிட்டாய்!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (4)
975. வஞ்சக் கருத்தர்க் கரசாட் சிஇட்டாய்;
மதவா தம்மலிந் திடவும் புரிந்தாய்;
பஞ்சப் பிணிமீ றிடவும் புரிந்தாய்;
படியோர் படும்பா டுரைக்கத் தகுமோ?
நஞ்சக் கறைஒன் றுகளத் தமைத்த
நாள்உற் றதொர்நல் அருள்இன் றிலையோ?
அஞ்சக் கரமே வடிவாம் பரமா!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (5)
976, கோலா கலமங் கையர்சூழ் தரும்வேள்
கொடுங்கோல் சொரிகின் றதனால் குலைவேன்
மேலா யவரங் கள்அனே கம்நின்பால்
வேண்டித் தளரும் படிவிட் டவன்ஆர்?
சேலார் விழிமா துமைதா னும்என்மேல்
சிறிதே னும்இரங் கிடச்செப் பிலளோ?
ஆலா லம்அருந் தியும்உய்ந் தவனே!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (6)
977. வெறிநாய் நிகர்புன் புலவோர் பகையால்
வேள்விக் கொலையின் மகிழ்வே தியரால்
சிறியார் அரசால் தமியேன் வருந்தாத்
திறம்என் றருள்செய் திடஎண் ணுவையோ?
பொறிதோய் மயிலான் மொழியால் எனக்கிப்
பொல்லாங் குவிளைந் ததும்பொய்ப் படுமோ?
அறிவாய் அறிவுக் கறிவாம் இறைவா!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (7)
978. கடித்தார் பலசெய் தணிந்தார் சிலர்க்கும்
கருகூ லமெய்க்காட் சிகள்அன் றளித்தாய்;
இடித்தாங் கியல்பா டல்செய்வார்க் கும்இநாள்
ஏதேனும் நல்கா திருக்கத் தகுமோ?
மடித்தர யுள்அளித் தெமன்ஆ தியரை
வாழும் படிவைத் ததும்பொய்க் கதையோ?
அடித்தான் மகிழக் கணைநல் கியவா!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (8)
979. இந்தப் புவியில் தமியேன் நினைத்துள்
ஏங்கும் பயனியா வையும்நல் கிலையேல்
மந்தக் கதிமெய் எனயான் அடையேன்;
மறவா நிலைவைப் பதுநீ அலையோ?
தந்தக் கரிமா முகனைக் குகனைத்
தரும்நீ எனைத்தள் ளவொணா துகண்டாய்;
அந்தக் கருத்தோர் அறிதற் குரியாய்!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (9)
980. மைந்நா கமலைக் கிணையாம் எனவே
வருங்கூற் றன்வசத் தடியேன் அடையாது
இந்நா னிலத்தோர் அறியும் படியே
எண்சித் தியும்முத் தியும்எய் துவனோ?
முந்நான் குநெறிக் கும்ஒரே பொதுவா
முளைத்தோங் கியமுக் கணனே! முறையே
அந்நால் வரைஆண் டருளும் சிவனே!
ஆமா தைவளம் பதிஆ திபனே! (10)
வெண்டளைக் கலிப்பா
981. துன்பக் கடலில் சுழலும் தமியேனுக்கு
இன்பத் திவலைஇனி என்றருள எண்ணுவையோ?
பொன்பழகும் மார்புடையான் போல்வாழ வேவிரும்பும்
அன்பர்வரும் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (1)
982. மாசுடைய நெஞ்சார் மனைவாயில் தோறும்அலைந்து
ஏசுமொழி கேட்டிரப்பார் இன்புறும்நாள் வாராதோ?
தேசு மலியும் திருமேனிச் சித்தர்களால்
ஆசுதவிர் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (2)
983. மானுறழ்கண் ணாரும் வசைபேச வாட்டமுறும்
நானுனது கோயில் நடுவருமா றென்றருள்வாய்?
பானுமதி அங்கி பழகும்விழிப் பண்ணவனா
ஆனுவக்கும் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (3)
984. பஞ்ச மலிவாற் பரதவிக்கும் பார்த்துயர்என்
நெஞ்சகத்தைப் புண்படுத்தல் நீங்குமா றென்றருள்வாய்?
கஞ்சனும்மா யோனும் கனகநகர்க் காவலனும்
அஞ்சலிப்ப ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (4)
985. ஊறோங்கும் கோலார் உடற்றுணிசால் ஒண்களத்தில்
பாறோங்கும் நன்னாளைப் பார்த்துவக்கும் பேறருள்வாய்;
நீறோங்கும் மேனி நிமலா! நிறைபுனற்பேர்
ஆறோங்கும் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (5)
986. ஒண்டகைய கோயில்தொறும் ஊறுசெய்வார் உற்சாகம்
கண்டடியேன் நோதல் கழியுமா றென்றருள்வாய்?
வண்டகுணத் தானவரால் வாடாத வாழ்வடைவான்
அண்டர்தொழும் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (6)
987. முன்னம் ஒருக்கால் மொழிந்தமொழி மெய்யானால்
இன்னல் முழுதும்ஒழிந் தின்பவெள்ளம் எய்தாதோ?
கன்னலொடு செந்நெல் கழுநீர்க் கழனிதொறும்
அன்னமலி ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (7)
988. போர்வலியார் அஞ்சும் புகழ்விசையன் போலும்ஒரு
தேர்வயவன் வந்திச் செகம்உயும்சீர் செய்யானோ?
நீர்வசிக்கும் செஞ்சடையாய்! நெற்றிவிழி யாய்!நிறையும்
ஆர்வமுடன் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (8)
989. கந்தமத மாமுகவன் காங்கேயன் என்னும்இரு
மைந்தருடன் நானும் மகிழ்கூர வைப்பாயோ?
எந்தநலம் வேட்டேனும் எவ்வுயிர்க்கும் இன்னல்செயா
அந்தணர்வாழ் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (9)
990. மெய்ச்சகளம் போலும் வியன்புலவர் நால்வரினும்
மிச்சமெனும் சீர்ஓர் விடலைபெறச் செய்தருள்வாய்;
இச்சகத்தி ராகவன்போல் ஈடுபெற நாடுமவர்
அச்சமறும் ஆமாத்தூர் ஆண்டபெரு மானே! (10)
ஒன்பதின்சீர் வண்ண விருத்தம்
தந்தத்தா தந்தத்தா தனந்தனந் தனந்தனந்
தானா தானா தானானத் தனதன தனதனனா
991. சந்தத்தே நின்றற்பேர் அறைந்துமந் தகன்றன்வம்
பாரா தாராய் வீடேபுக் கவர்களும் உளர் எனவே
இந்தப்பா ரின்கட்பே சிடும்சொல்ஒன் றும்உண்டுணர்ந்து
யான்ஓ யாதே கூறார்வத் தினில்ஒரு பயன்இலையோ?
சந்தத்தேர் ஒன்றிற்போ தரும்தினம் புரம்கொளும்
தாரார் நேரா நீறாகத் தகும்நகை புரியவலாய்!
பந்தத்தால் நொந்திட்டார் பரிந்துவந் துவந்தனம்
பாடா வீறார் ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (1)
992. கெஞ்சிப்போய் வம்பர்க்கே கிளர்ந்தவென் றியும்சொலும்
கேடார் நாவார் வாதாடக் கிறிபடு தமியனுளே
கொஞ்சிப்பேண் அன்புற்றோர் குவிந்திறைஞ் சஅன்றுவெண்
கோமே லேநே ரானாய்!அக் குணமதும் அழிவதுவோ?
செஞ்சித்தா! நஞ்சக்கார் செறிந்திடும் களம்பெறும்
தீரா! நீரார் கோடீரச் சிரமிசை நதிபுனைவாய்!
பஞ்சிற்றீ என்கக்கோல் பருங்கரும் பன்அம்சுடும்
பாடா வீறார் ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (2)
993. சண்டைக்கே முந்திப்போ தரும்குணம் கொள்வண்டர்தம்
சார்பா லேபாழ் ஆம்மேன்மைத் தவம்எனும் உணர்வுறவே
தொண்டைச்சோ பங்கெட்டார் சுகம்பொருந் தஎன்றுநின்
தோளே தாளே பாமாலைத் தொகையிட வரம்அருள்வாய்;
இண்டைத்தார் தந்திட்டான் இபம்செய்வம் பில்நொந்தஅன்
றேனோ னாலே கூறாவெட் டியும்உயும் வகைபுரிவாய்!
பண்டைத்தே வென்றொப்பார் பயன்பொருந் தநன்குகண்,
பாராய்; சீர்ஆர் ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (3)
994. கந்தைச்சா டுங்கற்போல் கயம்கொல்சிங் கம்அஞ்சும்எண்
கால்வீ யேநேர் பேராண்மைக் கவிஞர்தம் அரசனையான்
இந்தைச்சூ டும்கத்தா! இளந்தைஎன் றிகழ்ந்தவம்
பேய்வார் ஊர்பாழ் ஆமாறட் டிடுதினம் வரவருள்வாய்;
சந்தைப்பூ சும்பொற்பார் தடம்புயம் கொள்உம்பர்தம்
தாழ்வோர் வார்நேர் நீறாடித் தனிவிடை மிசைதிகழ்வாய்!
பந்தைப்போ லும்கச்சார் பருந்தனம் கொள்குன்றமின்
பாகா! வாகார் ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (4)
995. கொம்பைப்போ லும்குத்தார் குயம்துலங் கவந்துவெங்
கோலே வாளே போல்கோவைக் கொடுபொரு மடமகளார்
தம்பைச்சீர் சிந்தித்தே தவம்குலைந் துநொந்தறம்
தாழ்வார் பாலே போகாமற் றனமும்நல் கிடவருவாய்;
அம்பைக்கோர் பங்குற்றாய்! அயன்சிரம் சுமந்திரந்
தார்வாய்! கோவார் மாபோதத் தவிர்தகை கணம்ஒழியாய்
பம்பைக்கூ டன்புற்றே படிந்திறைஞ் சுதொண்டர்தம்
பாசா! தேசா! ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (5)
996. எங்கட்கே சொந்தத்தே வெனும்தொழும் பர்தம்கண்முன்பு
ஏகா யானால் வேறாருக் கினியசெய் குவை?பலநா
ளுங்கட்போல் இன்சொற்பா உளைந்துளைந் துவின்டுவிண்
டோரா நாடா நோவேனுக் கொருபயன் விரைவில்நல்காய்;
கங்கட்டாய் தம்தொட்டே கவின்தரும் புயம் கொள்சிங்
காரா! வீரா வேசா! தக் கனைவதை செயும்இறைவா!
பைங்கட்சே வொன்றிற்பா பம்மங்குதொண் டர்சிந்தையின்
பால்ஊர் வானே! ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (6)
997.சிந்தித்தார் தங்கட்கே செயம்பொருந் தமுன்செயும்
சீர்நீர் ஏனோ மாறாகித் திருடனில் மறைதல்? எனேர்
சந்தித்தால் உன்றற்கே தலம்தொறும் புகுந்துநின்
தாராம் ஆர்நேர் பாவோதிச் சகம்உயும் வகைபுரிவேன்;
அந்திக்கோ லம்பெற்றாய்! அறிந்தறிந் துடன்கலந்
தார்ஆன் மாவே றாகாதுற் றணைபவ! மனதிடையே
பந்தித்தே நம்புற்றார் பகர்ந்திடும் பல்விந்தையும்
பார்மீ தீவாய்! ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (7)
998. தென்றிக்கோன் வந்திட்டே தினந்தினம் செல்கின்றதும்
தேரார் பாலே போகாமற் சிறிதருள் புரிகுவையேல்
இன்றிப்போ திங்குற்றார் இயன்றதுன் பம்மங்கவென்று
யான்ஓர் தேவா! வாழ்வேன்;நிற் கிதுதெரி வரியதுவோ?
கொன்றிட்டூன் உண்டற்றேர் குறிஞ்சிநண் பர்தம்கணம்
கூடோர் கோனா வானாள்கைக் குரிசில்தன் மகன்எணவே
பன்றிக்கோர் அம்புய்த்தே பயந்தணந் தொர்அம்பவன்
பால்ஈ வானே! ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (8)
999. திங்கட்சூ டும்பொற்பார் சிரம்கொள்தந் திஒன்றுவந்
தேநா யேனூ டோதோர்சொற்றி ரம்என மிளிர்தரவே
செங்கட்கோ லம்செற்றே திரண்டெழுந் தகொம்பிடும்
சேயே போலாம் வாழ்வாரச் சிறிதுளில் நினைகுவையோ?
அங்கப்பூ ணும்துற்றாய்! அனன்றகண் கள்ஐந்தும், அன் -
பானார் மேலே யேபாய்பத் தழகிய விழியும்உளாய்!
பங்கற்போல் நின்றிட்டாய் பல்அண்டமுங் கடந்துறும்
பாவா தீதா! ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (9)
1000. எண்டிக்கோ ரும்செப்பீ டியன்றதொண்டர் தங்கண்முன்
பேடோர் நீர்ஆ றேறேணுற் றிலகினன், விடம்உணவா
உண்டிட்டே அம்பிற்போய் உயும்தொழும் பன், இன்பம்உண்
டோரான், வானே ஆனான்ஒத் துயும்நலம் உறஅருள்வாய்;
கண்டிச்சீர் கொண்டுற்றார் கணம்சொலும் சொல்நன்குறும்
காதா! வேதா மால்போரிற் கனல்வரை எனநிகழ்வாய்!
பண்டிக்கே தம்துய்க்காய்! பயந்தநங் கைஇன்றுறும்
பாரா காரா! ஆமாதைப் பதிவளர் பரசிவனே! (10)
வெண்பா
அன்னவயற் சீர்குலவும் ஆமாத்தூர் ஆண்டகைக்குத்
தென்னவன்றன் நாட்டுத் திருப்புகழோன் - சொன்ன
பதிகச் சதகம் படிக்கின்றோர்க் கெல்லாம்
அதிகப் பெருமையுண்டாம் ஆம்.
முற்றிற்று.