logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வடதிருமுல்லைவாயில்  கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)

திருச்சிற்றம்பலம்

மயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்கள் இயற்றிய

பொன்னே! கருணைப் புயலே! ஒருமுப்புரை எனும்பேர்
மின்னே! மெய்ஞ்ஞான விளக்கே! நின்னாடி விரைமலர் தூய்
என்னே கொடுந்துயர் இன்று அகற்றாய் என்று இறைஞ்சவும், நீ
கொன்னே இருந்தனை! முல்லைக் கொடியிடைக் கோமளமே!  (1)

பூவே! அப்பூவின் மணமே! மெய்ஞ்ஞான புனிதமலர்க்
காவே! கமலையும் வெண்தாமரை உறைக் கன்னிகையும்
ஏவே பொரும் விழியாக் கொண்டனை, முல்லை என்னுநகர்க்
கோவே! மனமகிழும் பூங்கொடியிடைக் கோமளமே!   (2)

 மானே மட அனமே! பல மாமறையும் வழுத்தும்
தேனே! இலகும் பசும் கழையே! தீவினை தெறுப்பாய்
வானே! வளிமுதலாம் பூதமாக வயங்கு முல்லைக்
கோனே மகிழும் பரையே! கொடியிடைக் கோமளமே!   (3)

'மாமாதவன்' எனச் சொல்வர் கண்டாய் அம் மணிநிறத்துப்
பூமாதுதன் கொழுநன் தான் நின் முன்வரும் பொற்பதனால்;
'காமாரி' 'ஓர்முப்புராரி' என வலாரி கனிந்து தொழும்
கோமான் நலத்தமர்ந்து ஓங்கும் கொடியிடைக் கோமளமே!   (4)

நந்தாமணி மாசிலாமணி தன்னை நயந்து வலம்
அந்தாரணியில் கொளும் அனமே! நின் அடிமலர்ச்சீர்
சிந்தாகுலம் தெறும் என்பது உணர்ந்தேன் ; திருமுல்லை வாழ்
கொந்தார் குழல் செங்கரும்பே! கொடியிடைக் கோமளமே!   (5)

ஐயானனத்து எம்பிரான் மாசிலாமணி அன்பின் உளம்
வையா எழுதரும் ஓவியமே! நின் மலர்க்கண் அருள்
செய்யாயெனின் எப்படி பிழைப்பேம் சிறியேம்? முல்லைவாழ்
கொய்யா மலர் அனமே! பூங்கொடியிடைக் கோமளமே!   (6)

ஆலம் அடங்கும் களத்தன், எம்மான், அருளாளன், அன்பர்
சீலம் அறிந்து உதவும் வடமுல்லைத் திருநகரான் -
பால் அமரும் தெய்வ ஆரமுதே! நின்பரங்கருணைக்
கோலம் இறைஞ்ச அருள்வாய்!  கொடியிடைக் கோமளமே!    (7)

போது அயன் ஏத்தும் கருணாகரி! நின்புனித மலர்ப்
பாத பதுமம்தனை நாடி நிற்கும் பரிசினருக்கு
ஆதர நல்கினை! முல்லையில் எய்த, மெய்யன்பினொடு எம்
கோது அறுத்து ஆண்டருள் கண்டாய்!  கொடியிடைக் கோமளமே!  (8)

மங்களவல்லி! நினை மகவாக இம்மாநிலத்தில்
செங்கயற்கண் காஞ்சனை மாலை செய்தவம் செய்தவர் ஆர் ?
இங்கு எளியேம் துயர் தீர்த்திடு! அன்னே! எழிலாரும் முல்லைக்
கொங்கவிழ் பூங்குழல் கொம்பே! கொடியிடைக் கோமளமே!   (9)

        திருச்சிற்றம்பலம்

Related Content