( கௌசிக முனிவர் என்னும் விசுவாமித்திரரின் பெயரால் இந்தத் தலம் கௌசிகபுரி எனப்படுகிறது.)
1. பாயிரம் - 1 -13
2. நாட்டுப் படலம் 14 - 53
3. நகரப் படலம் 54- 89
4. இயமதருமன் வழிபடு படலம் 90-123
5. கௌசிகமுனிவர் யாகப்படலம் - 124- 154
6. கரிகாற்சோழன் திருப்பணிப் படலம் - 155- 191
7. பயன்- 192-195
கற்பக விநாயகர் துதி.
(கலித்துறை)
1. திருவ ளம்பொலி கோயிற்பா ளையமெய்க்கௌ சிகப்பேர்
வருவ ளம்பொலி தலபுரா ணத்தினை வழுத்தப்
பெருவ ளம்பொலி கற்பக விநாயகர் பிரச
மருவ ளம்பொலி தாள்மலர் மனமுடி வைப்பாம். (1)
இங்கு தலவிநாயகரின் பெயர் கற்பக விநாயகர்.
(கொச்சகக் கலிப்பா - திரிபு)
(கலித்துறை)
2. அற்பகவி னாயகத்தேன் அரும்புலமைப் பெரியோர்தம்
சொற்பகவி னாயகத்தில் துணிபணியில் தோய்ந்தனன் நீ
முற்பகவி னாயகதை முடிக்கவிடை ஈந்தருள்வாய்
கற்பகவி னாயகப்பேர் கவின்றநலம் கண்டிடவே. (2)
காலகாலேசர் துதி
(கலித்துறை)
3. போற்று தென்திசைக் காலன்நின் சந்நிதி புரிந்துன்
மாற்று யர்ந்தபேர் அருள்திரு உருப்பெற வயக்கி,
ஆற்று பூசையின் சிறப்பும், பின் ஆம்செயல் அனைத்தும்
சாற்று காலகா லேச!என் நாவினில் தழைத்தே. (3)
கருணாகரவல்லி துதி
(அறுசீர் விருத்தம்)
4. என்னை இறப்புப் பிறப்பெனும்நோய்
எய்தா வண்ணம் எடுத்தருளால்
பொன்னை நிகர்தாள் துணைமருந்து
புசிப்பான் அளிக்கக் கௌசையினில்
மின்னை நிகர்சிற் றிடைகமம்சூல்
மேகம் நிகர்மெய் விழிகொண்ட
அன்னை கருணா கரவல்லி
அடித்தா மரைகள் முடிக்கணிவாம். (4)
நடராஜர் துதி
(கலித்துறை)
5. புடம்பு ரிந்தபொன் அணிக்கவு சிகபுரிப் பொதுவில்
நடம்பு ரிந்தருள் நாத! என் நெஞ்சின்மெய்ஞ் ஞானத்
திடம்பு ரிந்திடும் சிவகாமி யோடுநீ சேர்தற்கு
இடம்பு ரிந்திட வேண்டும்நின் திருஉளம் இசைந்தே (5)
சண்முகக் கடவுள் துதி
(அறுசீர் விருத்தம்)
6. புண்முகந் திட்ட ஆக்கை புலத்துளை புக்கு நாடிப்
பெண்முகந் திட்ட போகப் பிழையினுள் குழைவு றாதென்
கண்முகம் தழைத்த பேறு காட்டிடக் கௌசை மேய
சண்முகப் பெம்மான் செம்பொற் சரணமே சரணம்; அம்மா! (6)
தட்சிணாமூர்த்தி துதி
(கலித்துறை)
7. தன்னை ஓர்ந்தமை காலத்தில் தன்னுளே மறைந்து
பின்னை ஓர்ந்திசை காலத்தில் தான்அறப் பெயர்த்து
முன்னை ஒத்திசை தரப்புரி தட்சிணா மூர்த்தி
பொன்னை ஒத்ததாள் பணிந்துவெம் பவம்அறப் புரிவாம். (7)
கரிவரதராசர் துதி
(அறுசீர் விருத்தம்)
8. திணிக்கருங் கல்ஒப் பாம்என் சிந்தையை வெதுப்பும் மாயைப்
பிணிக்கருங் கோடை முற்றும் பெயர்ந்தொழிந் தறவே பெய்யும்
மணிக்கருங் கொண்டல் ஆகி வளர்புகழ்க் கௌசை மேய
கணிக்கருங் கருணை மேனி கரிவர தன்தாள் போற்றி (8)
கலைமகள் துதி
(வேறு)
9. மலைமகள்ஆம் உமை கருணா கரவல்லி
ஆம்கௌசை வளப்ப திப்பால்
அலைமகள்ஆம் உன்மாமி அமைக்கும் இன்பம்
அத்தனையும் அடியேன் நாவில்
நிலைமகள்ஆய் நீ இருந்து முன்புகுந்த
சரிதம்உடன் நிகழ்த்தல் வேண்டும்;
கலைமகளே! எனதுசுதந் திரம்முழுதும்
கருணையினால் கைக்கொண் டாயே. (9)
கௌசைக் காளி
(வேறு)
10. பாப்பணி புனையும் இன்பப் பரன்கால காலே சன்சீர்ப்
பாப்பணி புனைவேன் உள்ளம் பதிந்தருட் பார்வை ஈவாய்
காப்பணி பெறுமா றென்றும் கௌசையம் பதியில் மேவும்
காப்பணிக் கைகொண் டோங்கும் காளி! நின் உளம்உ வந்தே. (10)
சற்குரு துதி
(வேறு)
11. மறப்பும் நினைப்பும் தோற்றுவித்து
வாட்டும் கொடும் மும் மலம்பொருத்தும்
இறப்பும் உதிப்பும் அகற்ற அருள்
இராமா னந்தப் பெயர் அமைந்த
சிறப்புத் திருமே னியில்பொருந்திச்
சிறியேன் காண வந்த அருள்
நிறப்புத் தலர்ச்சே வடிஇணைஎன்
நெஞ்சில் சிரத்தில் நின்றிடுமே. (11)
அவையடக்கம்
(எழுசீர் விருத்தம்)
12. சுவைபொலி அமுத புஞ்சம்என் மழலைச்
சொற்கரு ணாகர வல்லிச்
சிவைபொலி வாமக் காலகா லேசன்
திருத்தொண்டர் பாற்புரி இன்பக்
குவைபொலி ஆடல் வளம்பெரி யோர்க்குக்
கொடுக்கும்; என் புன்மொழிப் பாடல்
நவைபொலி சிறியோர்க் கவர்மன விருப்பு
நல்கும்கற் பகத்தினில் நயந்தே. (12)
13. சான்றவர் யாரும் யான்பொருந் திச்சை
தவத்தினால் வந்ததென் றென்னை
ஏன்றவர் ஆகி இன்னம்மேன் மேலும்
ஏற்றிடற் கெண்ணுவர்; என்னைப்
போன்றவர் தம்பாட் டினும்குறை கூறப்
புகுவன்என் றென்னை அஞ் சுவர்; கீழ்த்
தோன்றவர் குற்றம் பொறுத்தல்என் கடன்; மேல்
சொல்லுவ தெவர்க்கவை யடக்கம்? (13)
பாயிரம் முற்றிற்று
14. பாட்டுச் சிறப்பு பொலிதொண்டர்
பலர்க்கும் சித்திப் பயனொடியல்
வீட்டுச் சிறப்பும் தரும்பரமன்
விளங்கும் மகிமை மிகுகொங்கு
நாட்டுச் சிறப்புள் உயர்பத்தி
ஞானச் சிறப்பு நல்குவிளை
யாட்டுச் சிறப்பு முதற்சிறிதீண்டு
அறிஞர் முறைவ ழாதறைவாம். (1)
(வேறு)
15. முழுதுணர் புலவ னான முருகவேள் அமரர் வேண்டப்
பழுதுறும் அசுரர்ச் செற்ற பவநினைந் திரங்கி அன்பால்
மழுஅணி கரத்தெம் பெம்மான் மலர்அடி அருச்சித் தேத்தும்
செழுமைகாண் முருகன் பூண்டி திகழ்வது கொங்கு நாடு. (2)
16. சூரன்ஓர் தங்கை ஆகித் துலங்கச முகிதூர் வாசப்
பேர் அருள் முனியைக் கூடிப் பெற்றவில் வலன்வா தாவிக்
கோரரை அட்ட பாவம் குறுமுனி அகற்ற இன்பால்
சாரம்ஆர் பூசை ஆற்றும் தலத்தது கொங்கு நாடு. (3)
17. பரம்மரு விடச்செய் ஞானப் பாலறா வாயன் இன்ப
வரம்மரு வியமெய்த் தொண்டர் வாழ்த்திடத் திருச்செங் கோட்டுப்
புரம்மரு வியகால் ஆண்டுப் பொருந்திய சீத வாதச்
சுரம்மரு விடாது பாடத் தோய்ந்தது கொங்கு நாடு. (4)
18. பரவுசீர்ச் சேரன் ஆரூர்ப் பாவலற் கீகை முற்றும்
கரவுறக் கணத்தால் கொண்டு கவிதைகேட் டீந்த பூண்டி
வரம்உறு முதலை உண்ட மதலைஆ ரூரர் பாவால்
விரவுபுக் கொளியூர் கொண்டு விளங்கிசைக் கொங்கு நாடு (5)
19. அரன்உமை பள்ளன் பள்ளி ஆகிநெல் வித்தி ஆரூர்ப்
புரவலர் காண நட்டம் புரிந்துதில் லையினும் போற்றும்
வரம்அளித் துதிப்பி றப்பில் மாண்பனை புளிகொண் டோங்கும்
உரம்மிகும் பேரூர் தன்கண் உறத்திகழ் கொங்கு நாடு, (6)
20. நீற்றிடம்; பவம்இ றப்பை நீற்றிடம், சேரன் ஆட்சி
ஆற்றிடம்; புகுந்தோர் நெஞ்சம் ஆற்றிடம்; ஆய்உ லாவைச்
சாற்றிடம் ஆகி இன்பம் தரும் அரங்கென்னக் கைலை
ஏற்றிட அமைக்கும் மாட்சி ஏற்றம் ஆர் கொங்கு நாடு (7)
21. அயர்வு முன் தான்தீர்ந் தின்பம் அடைந்திடல் உன்னி யோ?வெம்
துயர்கெட அருள்வான் அன்புள் துளும்பியோ? தேரேன்; கும்பன்"
உயர்புகழ் முருக வேள்முன் உரைத்தலின் இராமா னந்தப்
பெயர்கொடு மீண்டும் எய்தப் பெற்றது கொங்கு நாடு. (8)
22. பருவரல் உற்ற மற்றைப் பதியில்நின் றடைந்தார்க் கெல்லாம்
திருவருள் உதவும் பெட்பால், சிவன்நுதல் விழிக்கு லம்சால்
பொருவரு சேரன் ஆட்சி பொருந்தலால் கருணைச் சீலக்
குருபரன் நிகர்ப்ப தம்மா! கோதில்சீர்க் கொங்கு நாடு. (9)
(கலித்துறை)
23. திருந்தும் ஈகைஇல் வன்குணன் பெற்றசெல் வம்போல்
வருந்து தாகம்ஆற் றாப்புனல் மலிந்துவான் மகரம்
பொருந்து நாற்றம்மிக் குவர்த்திடும் கடல்நிலம் போக்கி
விருந்து மெய்விழிக் களிக்கும்முந் நிலம்கொடு விரவும். (10)
குறிஞ்சி
24. தோல்அ மைந்துமை இடங்கொடாற் றினைமுடி சூடி
ஆல்அ மைந்தணிப் பணியிருள் கந்தரம் அவிர்ந்து
பால்அ மைந்தஇந் தணிமுடி குமரன்தாள் பதித்து
மேல்அ மைந்தவெற் பினம் அரன் நிகர் என விளங்கும். (11)
இது மலைக்கும் சிவபிரானுக்கும் சிலேடை.
25. பொன்ன கர்க்கிடர் அறுக்கும்நம் இறைவனைப் போல்அம்
மன்ன வன்புரந் திடும்வயல் நிலம்வளம் மருவ
நன்ன திக்குலப் பெருக்கம்ஈந் தளிக்குதும் நாமும்
என்ன நல்வரைக் குலம்வரை யற்றசீர் இசைக்கும். (12)
26. பைய ராவின முடிமணி யால்இருள் பாற்றி
மைய றாச்செழும் சோலையுள் வதிதரு மாட்சி
துய்ய கார்த்திகை உடுக்கள்போன் றிசைகள்யாம் தோயச்
செய்ய வேண்டும்என் றேனைமீன் தவம்செயல் சிவணும். (13)
27. “மகத்து வம்கொள்எம் மலைமுடிக் கடவுளை வாழ்த்திச்
சுகத்து வம்பெறும் அருணையூர் நாதனைத் துணைப்பச்
சகத்துள் ஆர்நரர் காள்!வந்து திருப்புகழ் சாற்றிக்
குகப்பி ரான் அருள் பெறும்” எனக் கூறும்அஞ் சுகங்கள். (14)
28. வரையில் வாழ்புகழ் பெற்றசீர்க் குருபரன் வனசக்
குரைக ழற்றுணை ஆட்டியற் றருள்நலம் கொண்ட
வரையின் மாட்சிமை மிகமிக வழுத்தினும் இன்னம்
வரைதி என்னவான் அளக்கும்நம் புகல்இது வரையே. (15)
29. மலைதிர் என்றிசைத் திடும்இயற் புலவரை மருட்டும்
நிலைப டைத்தவிர் குறிஞ்சிநன் நிலத்தயல் நிலவும்
தொலைவில் பல்வளம் மல்கியல் முல்லையின் தொகுசீர்
கலைவ லார்இனம் களிப்புறச் சிறிதிவண் கரைவாம். (16)
முல்லை
30. பொதுவன் ஆகிஅண் டத்திரள் யாவையும் புரக்கும்
பதுமை நாயகன் சிறப்புறப் புரப்பினும் பகுப்பில்
நொதும லாய்அவிர் பான்மையோன் என்பதை நுவலப்
பொதுவர் ஆயினர் முல்லையி னிடைவசிப் போரும். (17)
31. வருக என்றழைத் திடர்கெடுத் தருள்கரி வதனன்
மருகன் என்றுநா ரணன் அவன் திருஉளம் மகிழ்ச்சி
பெருக நல்விருந் தூட்டிடும் இச்சைபெற் றேகொல்
பருக ஓகையார் தானிய நிரை இடப் பணித்தான்? (18)
32. அரன்மு டிக்கண்ஆட் டினர்தமக் குவந்தருள் அளிக்கும்
வரம்ம லிந்தபால் தயிர்நெய்கோ சலம்நல்கோ மயமும்
உரம்எ னத்தன்பால் பெய்பசுக் குலங்கள்உண் டிடப்புல்
விரவ என்றும்ஈந் தின்பளித் திடும்வியன் முல்லை (19)
33. மாய னார்எனும் பொதுவர்கள் மகிழ்வின்ஆ னாய
நாய னார்எனப் பசுஇனம் புரந்தருள் நமசி
வாய னார்உளம் மகிழவேய்ங் குழலிசை வழங்கித்
தூய நாரணன் சிவன்ஒன்றென் சமரசம் தோய்வார். (20)
34. சிறந்த கோபருக் கைம்புலம் பொலிசுகம் தேக்கப்
பிறந்த கோபியர் பசுக்களின் முலைகொள்பால் பிதுங்கக்
கறந்து பால்செய்து தயிர்செய்து மற்றதைக் கடைந்து
நிறந்த வாநவ நீதம்மோர் செய்துநெய் செய்வார். (21)
35. தொல்லை நற்பதி யாம்உயிர்த் துணைஉறுந் துணையும்
முல்லை காத்தமை தரும்குல மங்கையர் முயங்கும்
எல்லை அற்றசீர் முல்லைமாண் புரைசெய்வார் எவரே?
செல்லை ஊர்இறை காப்பவிர் திணைவளம் பகர்வாம் (22)
மருதம்
(கொச்சகக் கலிப்பா)
36. மிகப்பசந்த செஞ்சாலி வியன்பயிரின் இடையிடையே
சகத்திரம்ஆம் தொகைஅமையச் சார்ந்தசெந்தா மரைமலர்கள்
மகத்துவத்தில் தமைப்புரக்கும் வானவர்கோன் சாரூபம்
புகப்பெறுதன் மையைக்காட்டிப் பொலிவவள வயல்கள்எலாம்(23)
37. வேலையிடை அணைந்துறுசூல் மேவிஅவிர் மின்பயந்து
சோலையில்உற் றிடித்தொனியால் தோய்தருபுட் குலம்ஓட்டிக்
காலையிடை மாலையும்நல் காவல்செயும் இந்திரன்செங்
கோலைஅங்ஙன் ஓர்குறையும் கூடாது முகில்இனமே (24)
38. செருக்கெடுக்கும் மூலமலத் திமிரம்அறக் கண்நோக்கால்
குருக்கெடுக்கும் தன்மையைப்போல், குளிர்புனல்கௌ சிகநதிதான்
பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் பிணக்கெடுக்கும் கொடுங்கோடை
உருக்கெடுக்கும்; பேர்அருளால் உலகெடுக்கும் நலம்மிகவே. (25)
39. களவிறந்த பெருங்கருணைக் காலகா லேச்சுரன்தான்
அளவிறந்த உயிர்த்திரள்கள் ஆற்றியபுண் ணியத்தளவில்
கொளவிறந்த பயன்கூட்டக் கூர்அறிவாய்த் திகழ்செயல்போல்
வளம்விறந்த கௌசைநதி மதகளவில் உறும் எவற்றும். (26)
40. விருந்தழைக்கும் அறத்தினர்போல் விரிவுறுபாற் கடல்கடைந்து
மருந்தழைக்கும் இமையவர்போல் வாஞ்சைமிகும் தலைவன்அன்பில்
தருந்தழைக்குள் மகிழ்ச்சிபெறும் தலைவியைப்போல் மள்ளர்எலாம்
இருந்தழைக்கும் பிசைவயலுள் எதிர்கொடழைத் தறல்புகுப்பார். (27)
41. அரம்படித்துத் தனைப்படிப்பார்க் காரணக்கும் பவிர்தரும்தன்
சிரம்படிக்கும் பரன்அடிசேர்த் திடச்சமன்செய் திடலேபோல்
குரம்படிக்கும் மேதிஇனம் கொண்டுழுது சமம்பெறவே
பரம்படிக்கும் மள்ளர்இசைப் பாட்டொலிகேட் டிடிநாணும். (28)
42. காற்றுநடப் பொழிற்கௌசைக் காலகா லேச்சரன்பொன்
மாற்றுநடத் திருத்தாளை மனம்நடுமெய்த் தவத்தினர்போல்
கூற்றுநடக் கண்மள்ளக் கோதையர்தம் குழல்அவிழ
நாற்றுநடப் புகுவார்பொன் நகில்குலுங்க வளைஅலம்ப. (29)
43. விதித்திடுவான் தொழிற்கும்இக்கு வில்வேட்கும் உலகனைத்தும்
துதித்திடுவான் திதித்தொழிற்கும் துணையாகும் கடைசியர்கள்
பதித்திடுவான் பயிர்இனங்கள் பசந்தவிர்இந் திரனேபோல்
மதித்திடுவான் பதிஅணைய வழிக்கொளல்போல் வளர்ந்தனவே (30)
44. திரப்படுநல் உழுதொழிலில் சீர்த்திமிக்க தாகும்எருப்
பரப்பிடுதல் அதில்மேன்மை பாதுகாப் பென்றுணர்ந்து
தரப்படுநீர் அளவறிந்து தகவிடுத்தும் மிகில்வடித்தும்
சுரப்பமைஊக் குடன்முயலும் தொழிலினர் ஆயினர் களமர். (31)
45. வளைகளைஆர்ப் புறஅசைத்து, மலிதருஞெண் டாமைஇனம்
அளைகளைஎய் திடவெருட்டி, ஆடவர்பால் ஆம்மையல்
களைகளையும் கடைசியர்கள் கமலமொடுற் பலம்ஆம்பல்
களைகளைந்து சூடிஅவை கன்றஒப்பன் றென்றெறிந்தார். (32)
46. காணாதுள் ளமைகருவும் காத்துமக வென்றுயிர்த்துப்
பேணார்வத் தினர்கண்முன் பெற்றபயிர் வளர்ப்பதும் ஓர்
மாணாமோ? வளர்ந்துபயன் வழங்கஇசை காலத்தில்
நாணார்மங் கையர்செயல்போல் நன்குதலை தாழ்த்தனவே. (33)
47. தலைகுனிந்தார் தம்புடையே தமக்கின்ப மிக்கிசைவா
நிலைகுனிந்து கொண்டமள்ளர் நெஞ்சம்மகிழ்ந் தவர்ஆகிக்
கொலைகுனிந்த வெள்வாயார் குயம்ஏந்தி வியர்வோங்க
அலைகுனிந்த கடல்என்ன அறுத்தரிக ளாய்அமைத்தார். (34)
48. சுமைஎன்னக் கட்டுபு, விண் தோய்தரவே போர்புரிந் தாண்டு
அமைஎன்ன அமைதோள்ஆர் அணங்கினர்க்கண் டீங்கிவர்கட்கு
இமைஎன்ன இல்லாமை என்றுவந்திந் திரன்கண்டான்
நமைஎன்ன அவன்பாதம் நனிவணங்கிக் கீழ்அணைந்தார். (35)
49. மெய்க்கோலம் பெறவயல்முன் மிதித்துநடப் பண்படுத்தும்
மைக்கோல மேதிகளே மற்றிதையும் மிதிப்பஎனக்
கைக்கோலப் போர்பிரித்துக் களம்படுத்துத் துவைத்தடித்து
வைக்கோலும் நெல்லும்எனும் வகைஅமையப் பிரித்திட்டார். (36)
50. காற்றில்விடுத் துறுபதடி களைக்களைபோல் களைந்தகலத்
தூற்றிஇறை தனக்காறில் துதை ஒருபங் களித்தங்ஙன்
ஏற்றிடுவார் தமக்கெல்லாம் இச்சைஅடங் கிடவழங்கிப்
போற்றிடுநெல் திரள்கூண்டுள் புகுத்தி,அறம் புரிந்தமைவார். (37)
51. கூட்டுறுநெல் லினைஎடுத்துக் குற்றரிசி ஆக்கிஅதைச்
சூட்டுறுநீர் பெய்துறுவெண் சோறாக்கித் தம்மனையின்
மாட்டுறுவார்க் கிட்டறத்தின் வடிவாக்கி, உயிர்க்கூட்டி
வீட்டுறுமெய்ப் பரம்பரையார் மேன்மைவிளம் பிடும்தகைத்தோ?( 38)
52. இன்னவகை அறம்புரிந்திட் டிமையவர்ஊ ரிடைஅறம்இன்று
என்னவெறுத் திடும்தவப்பே றீந்தருளும் இந்நாட்டை
முன்னமைபுண் ணியர்க்கொண்டு முற்றும்அழித் துத்துரத்தும்
இன்னல்அமை பொன்நாட்டை எங்ஙன்இணை எனச்சொல்வாம்? (39)
(அறுசீர் விருத்தம்)
53. காரைநாட் டியற்பூஞ் சோலைக் கடிக்க னத்தைந் தாரு
சீரைநாட் டிடச்செய் கொங்கின் சிறப்புரை அளவோ? தெய்வப்
பேரைநாட் டியற்பேர்க் கோயிற் பெருநகர்த் திலகம் வாய்ந்த
ஆரைநாட் டியல்பு சொல்வார் ஆர்ஐநாட் டினத்துள்அம்மா.(40)
நாட்டுப்படலம் முற்றிற்று.
54. தாயின்மா புரம்சாத் தேயர் தமக்குசை வர்க்குக் கைலை;
சேயின்மா புரம்கௌ மாரத் திரட்கு;வை ணவர்க்கு மாயன்
தோயின்மா புரம்;மெய்த் தெய்வத் தொண்டுளார்க் கவர்கட் கான
கோயின்மா புரம்ஆர் சீலம் கூறமேல் வளர்வ தம்மா! (1)
55. விரிஅறம் பவம்செய் வார்கொள் மெய்ப்பயன் அநுப விக்கப்
புரிதலின் வினைஒப் பாக்கும் புனிதகா லன்செய் பூசை
பெரிதுகொண் டருள்அன் னோற்குப் பெய்கால காலே சன்தான்
பரிவில்வாழ் கௌசி கப்பேர்ப் பதிப்புகழ் பகரல் ஆமே? (2)
புடை நகர்
(கலித்துறை)
56. திரைஎ றிந்திடு வாவியில் தவளமாய்ச் சிவப்பாய்
நிரைபொ ருந்திய மலர்கள்தம் மிசைஉற நேர்வார்
பரைஅ ருட்கரு ணாகர வல்லிதாள் பணிந்து
கரைஇல் செல்வம்கல் வியைநிறைத் தமைசெயல் காட்டும்.(3)
57. தருவின் மேல்கிடந் துறங்கிடும் முகில்மிசை தாவிப்
பொருவில் மஞ்ஞைதன் சிறைவிரித் தாடியற் பொலிவு
திருவ மைந்தஇந் திரன்கவு சிகபுரிச் சிறப்பைத்
தெருளும் கண்கள்முற் றினும்தெரிந் தாடிடல் சிவணும். (4)
58. பதுமம் ஏந்திய சங்கங்கள் நாம்இதன் பாலே
கதும்என் றூர்தல்எப் பான்மையால் என்றுளம் கருதிப்
புதுமை மாதர்தம் நடைக்குடை பொலஞ்சிறை அன்னம்
பதுமை ஒத்தகன் றிடநிலைத் திடமனம் பற்றா. (5)
59. வன்னி, சந்தனம், வில்வம், மந்தாரம், நீள் மருதம்,
கன்னி காரம், சண்பகம், குருந்தம், துணர்க் கடம்பு,
பொன்னில் அம்கணிக் கொன்றை, பாதிரி, குரா, புன்னை
மன்னி டும்செழும் காவினம் மலர்ந்துதேன் வடிக்கும். (6)
60. அழற்று வேனிலால் இளைத்தருந் தாகம்மிக் கமைதன்
நிழல்து தைந்தவர்க் காலகா லேசுரன் நிமலக்
கழல்து ணைக்கண்நெஞ் சமைந்தவர் ஆம்எனக் கலந்து
சுழற்று வெம்மைபின் அணைதரா தாற்றும்தண் சோலை. (7)
61. படைய யின்றிடும் வீரரும், தானமாப் பகட்டின்
இடையில் இந்திரர் எனச்செலுத் துநர்களும், இவுளி
நடைப யிற்றிடும் வீரரும் தீரத்தில் நண்ணும்
புடைந கர்ப்பெரு வளம்முடித் திடைநகர் புகல்வாம். (8)
இடைநகர்
(அறுசீர் விருத்தம்)
62. அந்தரம் மறைக்கும் காவும், அணிமலர்த் தடமும், பாங்கர்
சுந்தரப் புளின மும்சீர் துதைந்தசெய் குன்றும் என்னும்
அந்தம்ஆர் இடங்கள் கண்டோர் அகம்விழி கொள்வ தாய்நல்
மைந்தர்ஆ டவர்கள் ஆட வயின்வயின் வயங்கும் மாதோ. (9)
63. வேனிலால் வெதும்பித் தானம் வேட்டவர்க் கேவ லாளன்
தானிட வரும்முன் இன்பத் தையலர் தலைவர் ஆவோர்
மேனிலை மாடத் தும்பர் விசிறிய சிவிறித் தூநீர்
மேனிதோய்ந் தெறிபூண் சுண்ணம் மிடிஅறப் போக்கும் அன்றே (10)
64. நீடும்மாக் காமர் மிக்க நேரிழை யார்க்கம் மானை
ஆடுவான் கொடுத்து, வேர்வை அரும்பச்செய் தெழில்காண் பார்போல்
கூடுயிர்ச் சித்தி ரத்தில் குலாம்அவர் கோலம் கண்ணால்
நாடுவார் உயிர்ப்பற் றோவன் நாட்டுசித் திரம்ஒப் பாரால், (11)
65. நங்கையர் கையில் பந்து நல்குபு மைந்தர் ஈதுஉம்
கொங்கையின் மிக்க தென்னக் கோபம்நாண் அமைந்து வல்லே
தங்கையில் கொண்டடிக்கும் ததிஉவ மேயம் மானம்
சங்கைதீர்ந் துணர்ந்தன் னோரில் தாமும்மேல் புடைப்பர் மன்னோ. (12)
66. அயில்புரை உண்கண் மாதர் அமைபொழில் இருளை முற்றும்
வெயில்விடு மணிப்பூண் வாங்க மேவினர்; மதலைத் தீஞ்சொல்
குயில்கள்அஞ் சுகங்கள் வாங்கக் கோடிய யாழ்கைக் கொண்டு
பயில்வர்இன் னிசைஅ தற்கும் பயிற்றுவர் ஒப்ப மாதோ. (13)
67. மாகநாட் டிமையோர் உள்ளம் மருளமங் கையர்கள் மைந்தர்
போகம்ஆர் இடைந கர்ச்சீர் புகன்றமட் டடக்கி, விண்சார்
மேகம்ஆர் புனல்(த்) தரங்க வேலைநேர் அகழி யின்சீர்
நாகம்நேர் புரிசை சால்உள் நகர்வளம் சிறிது சொல்வாம். (14)
உள் நகர்
(எழுசீர் விருத்தம்)
68 . மாதவப் பெருக்கால் காலகா லேசன்
வளர்கரு ணாகர வல்லி
பாதபங் கயங்கள் பணிஅடி யவருள்
பதிபெரும் காதலின் திறம்போல்
பூதலத் தவர்கட் புலன்அள வறியாப்
புரிசையின் மீதுகண் டவருள்
ஆதரம் பொலியப் பிரமத கணங்கள்
அணிஅணி யாய்அமைந் திடுமால். (15)
69. கோயிலம் பதிஎன் றிசைபெயர்க் கேற்பக்
குலவுசீர்ப் புரிசையின் மேல்ஆர்
ஞாயிலின் குலமே நோக்குநர் உளத்தஞ்
ஞானமாம் பகைஅற நசித்துத்
தாயியற் கருணா கரக்கொடி இடத்தில்
தழைத்தவிர் காலகா லேசன்
தூயியற் சேவை கண்டிசை ஞானத்
துணைவிழி நல்கிடும் அம்மா. (16)
70. சத்தத்தில் பரிசத் தினில்உரு வத்தில்
தகுசுவை மணம்இவை தம்மில்
சித்தத்தைக் கவரும் பொருள்முழு தமைந்து,
சேர்கரா இனங்கள்உள் அடக்கிப்
பைத்தத்து விடம்ஆர் சேடன்நீள் உச்சி
பதிமணி மேற்கிடந் தமைந்தோர்
வித்தத்தைக் கவரும் வேசையர் உளம்போல்
மிக்கஆழ்ந் தகன்றதால் அகழி. (17)
71. மாடமீ தணியார் கொடிக்குலம் அசையும்
மாட்சிதென் திசைமற லியை, “நின்
தோடம்நீக் கியமெய்க் காலகா லேசன்
துணைஅடி தொழுதுபே றுறத்தென்
நாடமை நிரயத் துயிர்த்திர ளுடனே
நண்ணுதி; புண்ணியர் ஆக்கி
வீடமைத் திடலாம்” என்றழைத் திடும்மெய்
விம்மிதம் காட்டுவ அம்மா! (18)
72. சண்டன்ஆம் பெயர்தன் போல்பெறு நமன்முன்
சாபம்நீங் கப்புரி நீல
கண்டன்ஆர் கோயில் நம்பரம் பரையில்
கட்டுதும் எனக்கரி கால்(ப்)பேர்
கொண்டவன் புரியக் கண்டுகண் டுள்ளம்
குளிர்ந்துதன் கரம்சிரம் பதித்தல்
எண்டரும் என்கான் முளைகள்துன் படையாது
இரட்சிஎன் றினன்தொழல் போலும், (19)
73. இந்தனம் என்ன உதித்திடும் தருவை
எரிக்கும்தீ எனஎழும் மயலால்
நொந்தனங் காட்டில் உழல்விடர் களின்கண்
நோக்கிடும் ஆடல்பா டலினால்
தந்தனம் பணத்தால் அவர்தனம் பணங்கள்
தாங்கொடு மிடிபிணி ஈந்து
வந்தனம் அவர்பால் பெறும்விலை மகளிர்
வாழ்தரு சேரியும் உளதால், (20)
74. மலையிடத் தமைந்த பொருள்களும் முல்லை
வயின்உறு பொருள்களும் ஒலிஆர்
அலையிடத் துள்ள பொருள்களும் வயற்கண்
அமைந்தஎப் பொருள்களும் நிறைந்தே
விலையிடற் கரிய வாய்உல கெவற்றும்
மேவினோர் களும் கொள்வான் வரினும்
நிலையிடத் தினவாய் இலை எனப் புகலா
நெடுங்கடைத் தெரு அணி நிறையும். (21)
(கலித்துறை)
75. சகம்செய் நான்முகன் றனக்கெதி ராய்சரா சரம்சால்
சுகம்செய் காயங்கள் நல்குபு திரிசங்கு சொர்க்க
அகம்செய் சங்கற்பத் தாக்கிய கௌசிகன் அமைந்து
மகம்செய் நீற்றுமேட் டிசைசொலி முடிப்பதெவ் வாயே? (22)
76. கோலம் மேவும்முன் யுகங்களில் வெள்ளமேற் கொண்டு
ஞால மேல்பற்பல் வளம்புரி கௌசிக நதிதான்
சால உற்றதன் நீர்கலி யில்குறை தகையால்
சீல காலகா லேசன்ஓர் விடைஎனத் திகழும். (23)
77. சீர ணம்படாத் தவத்தினர், புலவர்கள், சித்தர்,
ஆர ணத்திசை அங்கம்ஆ கமம்கொள்அந் தணர்கள்
தோர ணத்திரு மறுகமை கோயிலுள் துதைந்தே
பார ணங்குதுன் பறச்செய்செங் கோல்கொள்பார்த் திபரும் (24)
78. மட்டி லாப்பொருள் வாய்ந்துதா ரத்தகை மலிந்து
வட்டி ஏற்றிடற் கிச்சைஅற் றறம்கொள்வை சியரும்
கொட்டில் ஆன்நிரை பொலிதர உழுதொழில் குயிற்றி
முட்டி லாதவே ளாண்தகைக் குடிகளும் முயங்கும். (25)
79. இற்பு ரந்து,தம் கேள்வர்ஆம் உயிர்க்குமெய் இரண்டாய்ச்
சொற்பு ரந்தறம் பெருக்குபு, செல்வியில் துலங்கு
பொற்பும், பூமிநேர் பொறுமை,ஆர் குணங்களும் பொருந்தும்
கற்பு மங்கையர் பாரில்வாழ் கற்பகம் கடுப்பார். (26)
80. படிம ணந்திடும் படிஅவ தரித்தருட் பரன்பொன்
அடிம ணந்திடும் உளத்தவத் தினர்பிச்சை அளிப்பார்
குடிம ணந்திடப் போதலில் தெருத்தொறும் குளிர்தாள் (ப்)
பொடிம ணந்திடும் புனைபவர் பவம்அறப் பொடிப்ப. (27)
81. தருமச் சாலையும் ஓமத்தின் நறும்புகை தவழ்சத்
கருமச் சாலையும் மோனம்உற் றமைந்துயோ கம்செய்
மருமச் சாலையும் கனிரசம் கள்மலர் மணம்தோய்
துருமச் சாலையும் மாடவீ திகள்தொறும் துலங்கும். (28)
(கலி விருத்தம் அடிமடக்கு)
82.பண்ண வர்க்கு பரிகைக ளாற்றுமே
பண்ண வர்க்கு பரிகைக ளாற்றுமே
வண்ணம் பாவலர் வாய்களின் வாசமே
வண்ணம் பாவலர் வாய்களின் வாசமே. (29)
83. தங்க ரத்தினஞ் சாரப் பணிகளே
தங்க ரத்தினஞ் சாரப் பணிகளே
சங்க மங்களந் தாரணி யேற்றமே
சங்க மங்களந் தாரணி யேற்றமே. (30)
84. முத்த மிழ்த்து முதுகலைச் சங்கமே
முத்த மிழ்த்து முதுகலைச் சங்கமே
வித்தங் கொட்டிடு மேன்மை நன் செய்கையர்
வித்தங் கொட்டிடு மேன்மை நன் செய்கையர் (31)
திருக்கோயில்
(கலித்துறை)
85. படைத்தல் காத்திடல் அழித்திடல் உறுதிரோ பவத்தில்
அடைத்த லால்துயர் மிகும்உயிர்த் திரள்களுக் ககந்தை
துடைத்து நான்விடை கொடுப்பன்என் றோதிடு தொழில்போல்
விடைத்த னிக்கொடி காலகா லேசன்முன் விளங்கும். (32)
86. சேத னத்தகை தீர்நெல்லாய்ச் செனித்த தான் திருத்த
போத னர்க்கொளும் காலகா லேச்சுரன் புசிநை
வேத னத்திறம் பெறும்தகை தூமத்தால் விளங்கப்
போத னம்சுரர்க் கோதல்போல் விண்பதி புகுத்தும். (33)
87. தாள்அ ளித்தருள் காலகா லேசன்சந் நிதியில்
வாள்அ விர்ந்திடும் திருவிளக் கெண்இல வயங்கல்
கோள்அ மைந்தஎம் இறையைஒத் தெம்குலம் முழுதும்
ஆள வேண்டும்என் றுடுஇனம் சரண்புகல் அனைய. (34)
88. கால காலவீச் சுரன்தளிச் சிகரிகாப் பமையாத்
தூல லிங்கம்என் றேவெயில் படாதுகாத் தோய்ந்து
மூலம் ஆர்கனிச் சாறலர் மதுமுடிக் காட்டிச்
சால நன்மலர் கொண்டர்ச்சித் தன்பினில் தழைக்கும். (35)
89. கிளர்ந்த நெஞ்சினுள் காலகா லேச்சுரன் கிருபை
வளர்ந்தெ ழும்திறம் போல்அமை கௌசையின் மாட்சி
உளர்ந்த நெஞ்சினேன் ஒடுக்கிஆண் டுற்றருள் உற்றுக்
குளிர்ந்து ளோர்நலம் கூறிஎன் பவம்அறக் குமைப்பேன். (36)
நகரப்படலம் முற்றிற்று.
90. சாமியாம் கால காலே சன்திரு விளையாட் டெல்லாம்
நேமியங் காவோர் சொல்கை நேர்ந்திடு நிறைவெய் தில்லேன்
பூமியில் அறிவ றிந்தோர் புகல்மொழிச் சரதம் கொண்டென்
நாமிளிர் பெரும்பே றெய்த நவிலுவன் சிறிது மாதோ. (1)
(எழுசீர் விருத்தம்)
91. வளம்பொலி சோழ நாட்டில்நான் மறையின்
வரம்புகண்ட வற்றுட்சொற் கொண்டே
விளம்பொலி முடியின் வீற்றிருந் தருளும்
விமலமெய்ப் பரம்பொருள் ஆவோன்
களம்பொலி நஞ்சம் அமைத்தவன் என உள்(க்)
கருதி அன் னவன்திருத் தாளே
உளம்பொலி தரக்கொண் டவன்கட வூர்வாழ்வு
உற்றவன் மிருகண்டே யனனே. (2)
92. அருந்ததிக் கற்பார் மனைமருத் துதியோடு
அமைமனை அறங்கள்பற் பலவும்
திருந்திடப் புரிந்து பற்பல்நாள் முயன்றும்
சீர்த்திஆர் சேய்இலா மையினால்
வருந்திமெய்க் கடவூர் அமுதக டேசர்
மலர்ப்பதத் துணைமனத் திருத்திப்
பெருந்தவம் இயற்றிச் சிவபிரான் அணையப்
பெற்றடி தொழுதுவந் தெழுந்தான். (3)
93.விழியில்நீர் பெருக, மெய்புள கரும்பி
விதிர்விதிர்த் திடப்பல்கால் வணங்கி,
மொழிகுழ, றினன், “என் குலம்விளக் கிடுகான்-
முளைஎனக் கருள்”என இரப்பப்
"பழிபெறும் சேய்நூ றாண்டுறக் கொளவோ?
பத்திமெய்ஞ் ஞானம்ஆ தியகொள்
செழியஓர் மகவீர் எண்வய தமையச்
சேரவோ? விருப்புரை” என்றான். (4)
94. “பின்உரை மகவே வேண்டும்”என் றிடலும்
பிரான்வரம் ஈந்தனன் மறைந்தான்
கொன்உறும் மிருகண் டேயன்அவ் வாறோர்
குறைவிலாத் திருவருள் வடிவா
மன்னுசற் புதல்வற் பெற்றவற் குவப்பால்
மார்க்கண்டன் எனப்பெயர் சாற்றி,
முன்உறு பிறைபோல் வளர்திரு மகவின்
முதிர்சிறப் பறிந்தறிந் துவந்தான். (5)
95. ஐந்தமை பருவம் எய்தும்முன் அங்கம்
அரும்மறை உபநிடப் பயிற்சி
மைந்தன்உற் றமைகண் டுவகையின் மூழ்கும்
மருத்துதி மனைவியும் தானும்
இந்தணி சடையான் அருள்வரம் உள்ளத்து
எண்ணிஉள் ஒளிமுகத் தொழிந்து
நொந்தழி திறம்கண் டுடன்வின வினன்உள்
நுழைந்தவா றவர்இவற் கிசைத்தார். (6)
96. வினவுசேய் களிப்புற்று "அருந்தவத் தால்என்
விதிஒழிப் பேன்”என விளம்பித்
தனதுதாய் தந்தை விடைகொடு, கடவூர்த்
தாணுவை இடையறா தேத்தி,
அனகநல் தவம்ஈர் எண்வய தளவும்
ஆற்றி,ஆண் டமையும்நாள் இயமன்
முனம்இசைந் துற்ற சித்திர குத்தன்
முடிவின்று மார்க்கண்டற் கென்றான். (7)
97. இயமன்அவ் வுரைகேட் டெதிர்கொள்தூ தர்களை
ஏவ,அன் னவர்கள்மார்க் கண்டன்
நியமம்ஆர் தவஅக் கினிதகித் திடலின்
நெஞ்சயர்ந் திறைமுனம் புகல்கால்,
செயம்மலி தருமன் சென்றவன் அஞ்சாத்
திறல்கொள்வா திடுதலில் சினந்து,
பயமுடன் இலிங்கத் தினைப்பற்றப் பாசம்
பாசம்இல் லான்கணும் எறிந்தான். (8)
98. சிவபிரான் உடன்உக் கிரத்துடன் தோன்றித்
திருந்திடத் தாளினால் தாக்க
அவம்உறும் இயமன் மடிந்துதே வர்கள்ஆண்டு
ஆயிரம் ஒழிந்திறப் பிலராய்ப்
புவனிமாந் தர்உறும் பெருஞ்சுமை ஆற்றாள்
பூமினாள் அமரர்கள் வேண்ட
நவம்உறும் இயமன் உயிர்பெற அருளி
நக்கன்அங் கவற்கிது நவில்வான். (9)
99.“தேவர்வேண் டிடநின் றனைஎழுப் பினன்; நீ
செய்அதி பாதக சேடப்
பாவம்நீங் கிடக்கொங் கணைந்துநம் பேரூர்
பயில்வட குணதிசை அடைந்தென்
மேவருள்(த்) துணைகொண் டியல்சிவ லிங்க
வியன்உரு ஒன்றுதா பித்துள்
ஆவலில் தீர்த்தம் அகழ்ந்துபூ சனைமிக்கு
ஆற்றிமா தவம்முயல்” என்றான். (10)
100. சிவபிரான் அருளும் குருமொழி தன்னைச்
செவிகொடு சிரமிசை அமைத்திட்டு
உவகையின் வணங்கித் துதித்தணிப் பேரூர்
உற்றிறை வனைஅர்ச்சித் தேத்தி,
தவமலி கௌசி கப்பதி யாம்இத்
தனிவனத் தமைந்துளந் தன்னில்
உவமைதீர் தவம்செய் கால்இறை அருளால்
உரைத்ததாங் கோர்அச ரீரி. (11)
101. "இவ்விடை உனது தண்டினால் ஊன்றில்
எற்றிடும் தீர்த்தம்ஒன் றதன்மேல்
செவ்விதின் எழுந்த நுரையைஎன் அருளால்
சிவக்குறி யாம் எனத் திரட்டி,
அவ்வியம் அகலப் பூசைஆற்று” என்ன,
அவ்வகை யாகவே புரிந்து,
திவ்விய மனத்தன் அர்ச்சனை பூசை
தினம்புரிந் தரும்தவம் முயன்றான். (12)
102. பற்பல காலம் அங்ஙனம் புரிந்து
பரவசம் மிக்கமைந் தவனாய்
“சிற்பர! தேவ தேவ! மெய் உணர்வில்
சிறியனேன் இயற்றுவெம் பாவம்
துற்பயன் அளியா தாண்டுநின் பணிசெய்
தொண்டன்ஆக் கியநின்பேர் அருட்கிங்கு
அற்பனேன் புரிகை மாறுமற் றறியேன்
அடிப்பணி இயற்றிடல் அலதே” (13)
103. எனப்பல வாறு துதித்தனன் மெழுகொத்து
இதயம்நெக் குருகிடச் செயல்போய்
மனப்பர வசம்உற் றிருவிழி களில்நீர்
மலையில்வீழ் அருவியில் வழிய,
கனப்படு தவம்செய் தியலும்நாள் கருணா-
கரக்கொடி படர்ந்தசெம் பவள
வனப்பவிர் மேனி துலங்கிடத் தரும
வடிவுறும் இடபமேற் கொண்டே (14)
104. வரம்மலி திருமால் வேதன்இந்த் ராதி
வானவர் சூழ்ந்துதோத் தரிக்க,
பிரமத கணங்கள் சயசய என்ன,
பேர்ஒலி எடுத்தியம் இயம்ப,
கரம்அவிர் மழுமான் அசைந்திட, நீல
கண்டம்ஆ தியஎழில் கவின,
புரம்அழ லாக்கும் நகைத்திரு மலர்வாய்
புன்முறு வற்றிறம் பொலிய (15)
105.மதனனை எரித்த விழிமலர் தருமன்
வண்பவக் கடல்அறப் பருக,
இதம்உறும் அபய வரதகைத் தலங்கள்
இசைதரும் அச்சம்முற் றொழிப்ப,
மதம்அற ஒழித்த பதமலர் இரண்டும்
மாண்விழி விருந்தென உற,அற்
புதஅருள் இருகண் கொட்ட, நேர்நின்ற
பூரணன் தனைஅறன் கண்டான். (16)
106. கையிணை உச்சி மிசைகுவித் திருகண்
கரைஇல்ஆ னந்தநீர் பொழிய,
"பொய்யிழி வாழ்வை மெய்யெனக் கொண்டு,
புன்புல போகமா மாயைத்
தொய்யிலூ டழுந்திச் செய்வகை அறியாத்
துட்டனேன் மீதருள் சுரந்து,
கையில்ஆ மலகம் போன்றருட் காட்சி
கடைக்கணித் தாய்க்கென்கை மாறே?” (17)
107.இனையபல் வாறு புகன்று,தன் வசமற்று,
இணையடி களில்அடி அற்ற
பனைஎன விழுந்து கிடந்தெழாத் தருமன்
பத்திகண் டரன்உவப் படைந்து,
“தனைநிகர் தான்ஆம் தன்னிய! நீஅஞ்
சலை”என ஆசிகள் சாற்ற
நினைவுபெற் றெழுந்த பின்னர்இவ் வகையால்
நிமலனைத் துதித்திடு கின்றான். (18)
(கலித்துறை)
108. விரிந்த வல்வினைத் தொடர்பினால் திரண்பொய் மெய்யைப்
பரிந்து நான்எனக் கொண்டகங் கரக்கடல் படிந்து
திரிந்த மாயையாய் மயங்கிய புன்மைசால் சிறியேன்
புரிந்த தீமைதீர் காலகா லேச்சுர! போற்றி (19)
109. "கூற்றன் யான்உல குற்றிடும் ஆவியின் குலங்கள்
மாற்ற வல்லவன் எனக்குமேம் பாடுற மதிக்கும்
ஆற்றல் சான்றவர் யார்”என்ஆ ணவம்அழித் தன்பால்
போற்ற முன்வரும் காலகா லேச்சுர! போற்றி! (20)
110. இனிய நின்அருட் பெருமையை இதயமீ தெண்ணேன்
முனிவு நல்கும்அஞ் ஞானத்துள் மூழ்கிய மூர்க்கன்(க்)
கனிவி னால்திரு வடிஅரு ளான்மிசை கலத்திப்
புனிதன் ஆக்கிய காலகா லேச்சுர! போற்றி! (21)
(அறுசீர் விருத்தம்)
111. என்றுபல படத்துதித்த தருமன்மிசை
உள்ளம்மகிழ்ந் திறைவன் இன்பாய்,
“நன்றுநன்றுன் தொண்டினுக்குள் உவப்படைந்தேன்;
நீஉளத்தில் நசைத்த யாவும்
இன்றுவழங் கிடக்கேட்டி” என்றருள,
உவகைபொலிந் திருதாள் போற்றி,
“ஒன்றும்அறி யாச்சிறியேற் கருட்காட்சி
நல்கினை;ஒன் றிதன்மேல் உண்டோ? (22)
112.“வன்புருவாம் கொடுமனத்தே னுட்பொருந்தும்
தீமைஎல்லாம் மாற்றி மெய்ப்பேர்
அன்புருவாக் கிடல்வேண்டும்; உமைமறவா
வரம்எனக்குஈண்டு அருளல் வேண்டும்;
துன்புருவாம் மலம்மாயை கன்மம் ஒன்றும்
எனைஎன்றும் தொடாமை வேண்டும்;
இன்புருவாம் நின்னடியார் இனத்தொருவன்
ஆகஎனை ஏற்றல் வேண்டும். (23)
113. "திருக்கடவூர் தனில்அடியேன் றன்னைமறக்
கருணையினால் திருத்தி ஆள
முருக்குதலால் காலகா லப்பெயர்கொண்டு
உற்றஅருள் முறைமை போல,
இருக்கறியாப் பெரும்சேவை இத்தலத்தில்
அநுக்கிரகத் திடும்ஓர் பண்பால்
பெருக்கஅருள்(க்) காலகா லேச்சுரன் ஆம்
திருநாமம் பெறுதல் வேண்டும். (24)
114. "பெரும்பாவம் புரிந்தஎனக் கித்தலத்தில்
அருள்புரிந்த பெற்றி போல்உன்
அரும்பாத மலர்பணிந்து பூசைஅன்பில்
புரிந்திடும்மெய் அன்பர்க் கெல்லாம்
திரும்பாத வீடமையத் தரல்வேண்டும்;
உன்அருளின் சிறப்பாய் வாமம்
வரும்பாவை அணிக்கருணா கரவல்லிப்
பெயரொடிவண் வதிதல் வேண்டும். (25)
115. "உன் அருளால் எனது தண்டம் ஊன்றவரும்
தீர்த்தம் இதை உலகோர் எல்லாம்
என்னதுபேர் அமைகாலப் பொய்கை,தண்ட
தீர்த்தம்என இசைத்துப் போற்றி,
நன்னலம்ஆர் நின்மேனிக் கபிடேகம்
செயல்வேண்டும்; நானம் ஆற்றில்
இன்னல்உறும் பிணிமுதலாம் இடர்கள் அகன்று
இட்டசித்தி எய்தல் வேண்டும். (26)
116 “திருவிழா நித்தியம்ஆ தியபூசை
பெற்றிவண்நீ சிறத்தல் வேண்டும்;
பெருவிழா உனக்காற்றும் ஆர்வம்மிகும்
பக்தர்எலாம் பிறப்பென் மாயைக்
கருவிழா தென்பாசத் துருவிழாது
ஆனந்தக் கடல்ஆம் உன்பொன்
மருவிழாப் பதம்புகுதச் செயல்வேண்டும்;
நன்மைமுற்றும் வழங்க வேண்டும். (27)
117.பிரியமனம் பிரியம்உறா திப்பதியை
அடியேற்கு; பிஞ்ஞ கப்பேர்ப்
பெரியபொரு ளே!எனக்கீண் டியற்கைஇன்பம்
ஆன அருட் பெருவாழ் வீந்தென்
கரியமல இருள் ஒழித்த காலகா-
லேச! நிறை கருணைக் குன்றே!
துரியநிலை மேல்அமைந்த சுகப்பெருக்கே!
என்உயிர்க்குத் துணைஆம் தேவே! (28)
118. மாறாதுள் இன்பமைத்தள் ளூறிடச்செய்
உனதின்ப வடிவென் கண்கொள்
பேறாகக் கொண்டசுகப் பிரிவைநினை-
தொறும் அடியேன் பேதுற் றெய்த்தேன்;
ஆறாடும் சடைமுடியாய்! நீறாடும்
திருவுருவாய்! அம்மை ஆகக்
கூறாகும் திருக்கருணா கரவல்லிக்
கொடிஆரும் குழக னேயோ? (29)
119. இன்னபல பலவரங்கள் இரந்துபிரிந்
திடற்கமையா திரங்கு வானை,
பன்னகப்பூண் அணிமார்பர் காலகா-
லேசர் அருள்(ப்) பரிவால் நோக்கி,
"உன்னகம்நாம் பிரியாமல் அமைந்ததிறம்
நீமறவா துளத்தில் கண்டுன்
கொன்னகரத் தரசாட்சி இயற்றென” ஓ
தலும் இருகை குவித்துத் தாழ்ந்தான். (30)
120. வணங்கிஎழும் தருமன்விழி காணும்முனம்
சிவபெருமான் மைதோய் மின்போல்
கணங்களுடன் ஆண்டமைந்த சிவலிங்கத்-
துள்(க்)கலப்பக் கண்டு வாடி
இணங்குபெரும் பத்திமையில் சிற்சிலநாள்
பூசைபுரிந் திருந்து பின்னர்
குணங்கிளர்தன் பதிஅமையும் கடமைஉன்னி
இறைவன்விடை கொள்கின் றான்ஆல். (31)
121."மார்க்கண்டன் உனைப்பிடித்தல் குற்றம்என
முன்னேநான் மதித்தேன்; என்முன்
கார்க்கண்ட முடன்தோன்றி, அடிசூட்டி,
உன்பூசை காணச் செய்திச்
சீர்க்கண்டப் புரிந்தஉனை இவண்விடுத்தென்
தீவினையின் சிமிழ்ப்பால் நாயேன்
ஊர்க்கண்ட மனம்துணிந்தேன்” என்று பிரி-
யாவிடைகொண் டூர்போய் வாழ்ந்தான் (32)
122. முடிக்கமனம் எனக்கும்வரா தால் தருமன்
போலநின்பொன் முளரித் தாளைப்
பிடிக்கமனத் தன்பமையேன், பேய்உலகப்
பொய்மாயைப் பிணக்கில் வீழ்ந்து
நடிக்கமனம் படைத்தேனை விட்டுவிடேல்;
மெய்அன்பு நல்கி நின்பொன்
அடிக்கமலம் தந்தருள்வாய்; காலகா-
லேச்சுரப்பேர் அருள்(ப்)பொற் குன்றே! (33)
123. தென்திசைக்கோன் ஆம்தருமன் புரிபூசை
கொண்டருள்மெய்ச் சீர்த்தி என்றும்
என்றிசையக் கொடுத்தருளும் காலகா-
லேச்சுரப்பேர் இறைவன் ஆட்டின்
நன்றிசைய இசைத்தனன்;மேல் கௌசிகமா
முனிவன்மகம் நவிற்றி இன்பம்
நின்றிசையப் பெறும்மாட்சி என்உள்ளத்தில்
தூண்டியவா நிகழ்த்து வேனே. (34)
இயமதருமன் வழிபடுபடலம் முற்றிற்று.
124. தவத்தின் மேம்படு கௌசிக முனிவன்முன்
தரணியில் பிறப்பெய்தி
அவத்தின் மேம்படு பாவிகள் தமையும்கூற்று
ஆள்நகர் அடையாமல்
நவத்தின் மேம்படு தன்னுள்வாழ் காலபை
ரவர்தண்டத் தால்மாற்றிச்
சிவத்தின் மேம்படு தாள்அருள் - காசியின்
சிறப்பெண்ணி அருண்சார்ந்தான். (1)
125. நிகழும் நாளையில் போதியம் பலத்திடை
நிருத்தம்செய் திடும்ஆதி
பகவன் அன்னவன் மனவெளிக் காட்சியில்
பார்க்கப்பே ரூர்காட்டித்
திகழும் காசிபை ரவர்தண்டத் துன்பினில்
தீர்க்கும்இத் தலம்யாரும்
அகம்உ வப்புற அறப்பெரும் கருணையின்
ஆண்டினை யற்றோங்கும் (2)
126. என்ற பேர்அருள்(க்) காட்சிகண் டுளம்அழல்
இடுமெழு காய்இன்பம்
துன்ற மாண்புகழ்ப் பேரையூர் அடைந்திறை
துணைக்கழல் பணிந்தேத்தி
நன்ற ரும்பெரும் தவம்புரிந் திருவிழி
நாடுமா றெதிர்வந்து
நின்ற எம்பிரான் பால்(ப்)பல வரம்கொடு
நிறையும்இன் படைந்திட்டான். (3)
127.சிறிதுநாள் அவண் வதிந்தியல் தருமனால்
சிவலிங்கப் பிரதிட்டை
செறியும் அன்பினில் செய்துகா லப்பொய்கைத்
தீர்த்தமும் பெறஆற்று
நறிய கானமாய் ஒலித்தெழும் புண்ணிய
நதியின்உத் தரப்பாங்கில்
பொறிகொ ளாப்பெருங் காட்சிசால் இவ்வனம்
புலங்கொள விளங்கிற்றால். (4)
128.பின்னைத் தன்பெய ரேகொடு விளங்கருட்
பிரபலத் தலம்ஆகித்
தன்னைத் தான்நிகர் காலகா லேச்சுரன்,
தழைகரு ணைத்தேவி,
முன்னைத் தேவெனும் கற்பக விநாயக
மூர்த்தி,குஞ் சரிவள்ளி
மின்னைத் தோய்அருள்(ச்) சண்முகக் கடவுள்,சீர்
விரிஅருள் நடராசன், (5)
129.ஆதி மூலம்என் றழைத்திடும் கசேந்திரற்கு
அஞ்சல்என் றருள்செய்யும்
சோதி யாம்கரி வரதரா சன்,காளித்
தோகைஆ தியர்கோயில்
நீதி யார்கரி காலனால் ஆற்றிடு
நிலையும்பின் நிகழ்இன்பச்
சேதி யாவும்தன் ஞானக்கண் காட்டலில்
தெளிவடைந் தவன்ஆகி, (6)
130. பேரை மேவிய பட்டிநா யகர்அடி
பேணுபு விடைகொண்டு
காரை மேவிய இரத்தினா சலஅருள்(க்)
கடவுளைத் தொழுதேத்தி
நாரை மேவிய புண்ணியக் கௌசிகன்
நதியில்நீர் படிந்தின்பச்
சீரை மேவிய காலகா லேசன்வாழ்
திருவனத் திடைசேர்ந்தான். (7)
131. தண்ட தீர்த்தத்தின் மூழ்கிநல் மஞ்சனம்
சங்கரன் றனக்காட்டி,
சண்ட னுக்கருள் காலகா லேச்சுரன்-
றனக்கருச் சனைஆற்றி,
"அண்டர் நாயக! திருக்கரு ணாகர
அம்பிகை இடப்பாகம்
கொண்ட பேரருள் வாரியே!" எனப்பல
கூறுபு துதித்திட்டான். (8)
132. "கொங்கு நாட்டணி பெற்றசீர்க் காஞ்சியின்
குளிர்கரை வடபாலில்
பொங்கு சீர்பெறும் யாகம்வே தன்முனம்
புரிந்திடும் திறம்போல
மங்குல் ஆர்பொழில் சூழ்நதிப் பால்அருள்
மகம்புரிந் ததன்பேற்றால்
இங்கு மேவினர் துன்பகன் றின்பம்மிக்கு
இசையஆற் றுவன்”என்றே, (9)
133. புனிதம் ஆர்களம் கண்டருள் நலம்மிகப்
பெறஉழு வித்துள்ளக்
கனிவில் வான்தொடும் சாலைஒன் றியற்றுபு
கவின,வே திகைகுண்டம்
நனிஉ றக்குறித் துயர்தண்ட யூபமும்
நவில்சமி தைகள்ஆதி
இனிய பண்டங்கள் குறைஅறத் தொகுத்தனன்
இயற்றுமெய்த் தவப்பேற்றான். (10)
134. வஞ்சு ளத்தரு ஆணியின் ஞெலிதழல்
வாங்கி,ஓங் கிடமூட்டி,
மஞ்சு சூழ்ந்துல கப்பொருள் களைஎலாம்
மறைத்ததோ எனஉள்ளார்
நெஞ்சு ளேகொள, வானுல கத்தினும்
நிமிர்ந்தது மணத்தூமம்-
விஞ்சு சீர்க்கரு ணாகர வல்லிதன்
விசுவரூ பம்போன்றே, (11)
135. "கமல மீதமர்ந் தான்சிருட் டியின்மலம்
கலந்து, வன் காய்போன்றீர்!
விமலம் ஆம்கனித் தகைமையில் குழைந்துளம்
மெய்அன்பு மயம் ஆகி,
அமல காலகா லேசனை எனைத்தொடர்ந்து
அடைந்துவாழ் குதிர்” என்னச்
சிமயம் அன்னமெய்த் தவன்விடும் தூதரைச்
சிவணும்அப் புகைஅம்மா! (12)
136.சுருவத் தான்முறை முறைமிக மிகநெய்யைச்
சொரிவித்தங் கதனூடே
மருவத் தான்முனம் இட்டன அதில்நின்றும்
வந்தன பொருள்எல்லாம்
பருவத் தால்அமை இமையவர் ஆதியோர்
பருகநல் கினன் - உற்ற
உருவத் தால்மன்ன னாப்பிரா மணத்தகை
உயர்தவத் தால்பெற்றான். (13)
137. சிவப்பி ரீதியாய் ஆருயிர்த் திரள்எலாம்
சிந்தையின் கண்மாறா
உவப்பின் மூழ்கிடத் தான்அடை தரும்பயன்
ஒன்றுளத் திடைநாடாத்
தவப்பி றக்கம்ஆர் கௌசிகன் இவ்வணம்
தழைத்தவேள் விகள்ஆற்றி,
அவப்பி றப்பிறப் பென்றியல் பிணிஅவண்
அடுத்தவர்க் கறுத்தானால். (14)
138. துரிய மெய்ந்நிலைக் கௌசிகன் யாகவான்
தூமம்ஏய் தலினாலே
கரியன் ஆகினன் இந்திரன்; அவன்பரி
கரிஎனப் படும்தன்பேர்
உரிமை காட்டிற்று, வான்நின்றும் உணர்தர
ஓங்கிய தவ்வண்ணம்;
பெரிய காலகா லேசனார் திருவருள்(ப்)
பெருக்கம்என் புரியாதே? (15)
139. மீது போந்திடும் காரியப் புகைபுரி
விம்மிதங் களைநாக்கொண்டு
ஓது தற்கரி தென்றுளம் அஞ்சிடும்
உரம்இலேன் அதுதோன்றற்கு
ஏது வாநிகழ் அங்கியின் சிறப்பையும்,
எய்தும் அங் கதைத்தாங்கும்
தாது வாத்திகழ் குண்டத்தின் மகிமையும்
சாற்றுரம் பெறுவேனா? (16)
140. சொன்மு டிந்தசீர் பொலிஅதன் நிலைசொலத்
தூண்டிடும் என்இச்சைக்கு
என்மு டிந்திடும்? தான்பல பிறப்பினும்
ஈட்டும்ஐம் கொடும்பாவம்
முன்மு டிந்திடும்; கன்முடிந் திடும்மன
முரண்என்பு கரைஇன்பாய்ப்
பின்மு டிந்திடும் பிறப்பிறப் பென்றியல்
பேதைமை யுடன் மாதோ. (17)
141.மூண்டு மங்கலம் பெறவலம் சுழித்தெழு
முளரியின் மிகுவெப்பம்
கீண்டு பாதலம் வரையும்கீழ்ப் போய்ப்புவி
கிளர்அகல்(ப்) பரப்பின்கண்
யாண்டு தாக்கிய தோஅது புண்ணியம்
இசைந்துமே வினர்க்கம்ம
நீண்டு மெய்ப்பயன் அனந்தம்ஆம் படிபெற
நிறைக்கும்ஐ யுறவின்றே. (18)
142. போற்றும் அந்நிலை தான்இன்றும் மேலினும்
புவிஉளோர் மணல்எனச்
சாற்றும் மாறிலாத் தன்மைவாய்ந் திலகருள்ச்
சரதம்ஆம் கரிகாட்டும்;
நீற்று மேட்டின்மண் காலவான் பொய்கையின்
நீரினால் குழைத்தே, தம்
மேற்றி மிர்ந்துகௌ சிகநதி மூழ்கில்தீ-
வினைகள்முற் றொழிவாம் ஆல். (19)
143. இன்ன வாறுகௌ சிகன்பன்நாள் இருந்து, பல்
யாகமும் இனிதாற்றி,
கன்னல் வில்(க்)கரு ணாகர வல்லிதோய்
காலகா லேசன்செம்
பொன்ன டித்துணை அருச்சனை ஆதிய
புரிந்து,வாழ்ந் துறுநாளில்
மன்ன ருட்சிவக் குறியினும் அவன்கண்முன்
வந்தனன் சுரர்போற்ற. (20)
144. தவளம் ஆர்திருக் கயிலைவான் பொருப்பெனும்
தருமவெள் விடைமீதில்
பவளம் ஆர்செழும் சோதியின் கிரணங்கள்
பரந்தவிர்ந் திசைமெய்ப்பால்
துவள ருட்பசும் கொழுங்கொடி மீதிரு
தூயபொற் கிரிநாணும்
அவள வாம்திரு ஞானவான் குடம்மதர்த்து
அணைந்தியல்(ச்) சுகம் நல்க (21)
145. கண்ட கண்ணினைக் கருத்தினை அக்கணம்
கவர்ந்தடக் கிடும்வெற்றி
கொண்ட பான்மையில் தனக்குமே லவர்இனம்
கூறியற் புகழ்எல்லாம்
விண்ட வாறருள்(த்) திருவடி களில்ஒளிர்
வீரகண் டைகள்ஆர்ப்பத்
தொண்டர் வாள்விழி கூசுறா திசைஒளி
தோல்இனம் மேல்மூட, (22)
146. பவள மத்தியில் பதித்தநித் திலம்எனப்
பகைவர்முப் புரம்சுட்ட
தவள மூரல்புன் முறுவல்காட் டிடச்செவித்
தலம்கொள்குண் டலம்ஆட,
திவள ணிச்சடை மீதில்அம் பிறைஅரா,
திரைகொள்கங் கையும் ஆட,
இவள வென்றிடா அருள்நலம் துளும்புகண்
இனங்களொ டெதிர்நின்றான். (23)
147.அருட்பெ ரும்கடல் இன்னஅற் புதங்கள் கொண்டு
அணைதரத் தவம்தோயும்
தெருட்பெ ரும்குணக் கௌசிகன் அன்பினால்
தெண்டனிட் டினிதேத்தி,
“மருட்பெ ரும்கொடு மாயைகன் மங்கள்ஆம்
மலங்கள்நல் கிடும்தாய்நேர்
இருட்பெ ரும்கொடு மூலவல் இருள்அற
எழுந்தபேர் ஒளியேயோ! (24)
148."கோலம் ஆகிமண் இடந்தெகி னத்துருக்
கொண்டுமேல் பறந்துஎய்த்து,
காலம் எண்ணில கடந்துறும் அளவெலாம்
கடந்தநின் திருக்கோலம்
மால யன்பெறற் கரிதெனும் மறைஎதிர்
மறைபெற முன்வந்தாய்;
சால அன்னவர்க் கெளியனேன் பெரியனோ?
தண்ணருள் செயல்வேண்டும். (25)
149. "செருக்க மைந்துளோர் பலஉப கரணங்கள்
திரண்டிடச் செயும்பூசைப்
பெருக்கந் தன்னில்நீ உவப்புறா உண்மைஉள்(ப்)
பெரிதுணர்ந் தனன்;அன்பால்
உருக்கம் மிக்கவர்ப் பிரிகிலா துடன்உறைந்து
உவப்புற மெய்ச்சேவை
பொருக்கென் றீதலால் சச்சிதா னந்தமெய்ப்
பூரணப் பொருளேயோ?” (26)
150. என்று போற்றிடப் பரசிவன் உளம்மகிழ்ந்து,
"இணைஇல்கௌ சிகமேலோய்!
நன்று; நன்றுநீ புரிவழி பாடெலாம்
நனிஉவந் தேற்றேம்; நீ
இன்று வேண்டுவ நல்குதும் கேள்: நினக்கு
ஈந்திடாப் பொருள்உண்டோ?
ஒன்றும் அஞ்சலை; உரை” என, நீஉற
ஒரு குறை எனக்கென்னே? (27)
151. "ஆயி னும்பிற உயிர்களின் பொருட்டில்எற்கு
அருள்புரிந் திடல்வேண்டும்;
தாயி னும்பொலி கருணையால்! இத்தலம்
தமியனேன் யாகத்தால்
தூயி யற்கைவாய்ந் திட்டதால், என்பெயர்
துலங்குவான் பதியாய்நீடு
ஆயி ருங்கரு ணாகர வல்லிஆ -
தியர்பெரும் தளிவாய்ந்தே, (28)
152. விளங்க வேண்டும்; இந் நதியும்என் பேர்கொடு
விரவவேண் டும்; இங்ஙன்
வளங்க வின்றிட யான்புரி யாகங்கள்
மருவிடத் தமைநீறால்
சளங்க டந்துமா னிடர்கள்மெய்ப் பிணிஎலாம்
தவிர்தல்வேண் டும்; போற்றென்
உளங்க லந்துநீ இருந்திடல் வேண்டும்” என்று
உரைத்தடி பணிந்திட்டான். (29)
153. "நீக னிந்தெம்பால் வேண்டிய வரம்எலாம்
நேர்ந்தனம் உவப்புற்றோம்;
பாகம் ஆர்தவக் கௌசிக! நலம்எலாம்
பற்றுதி” எனச்சாற்றி,
மேகம் ஆர்மின்போல் அருட்சிவக் குறியினுள்
விரவினன் என்போன்றார்
மோக மும்தெறும் காலகா லேச்சுர
முத்திவித் தாம்தேவே. (30)
154. தெள்ளி யோர்உணர் புகழ்அருள்(க்) கௌசிகத்
திருமுனி உற்றன்பர்
உள்ளி சைந்தருள் காலகா லேச்சுரற்கு
ஓகையா கம்செய்தே
நள்ளி ரும்பயன் பெறல்சொனேன் இனிநலம்
மருவிடக் கரிகால்(ப்)பேர்க்
கிள்ளி ஆற்றிய திருப்பணித் திறத்தினில்
கிளத்துவன் சிறிதம்மா! (31)
கௌசிக முனிவர் யாகப் படலம் முற்றிற்று
155.மன்னு புகழ்க்கா விரிநதியால்
வளம்சால் சோணா டரசாற்றித்
துன்னும் இறைவிக் கிரமசிங்க
சோழன் எனும்பேர் காரணமாப்
பன்னும் முறையில் கலிஒதுக்கிப்
பார்ஆள் பவன்பால்(க்) கரிகாலன்
என்னும் பாலன் பாற்கடலில்
எழும்மா மதியில் உதித்தனன் ஆல். (1)
156 . மற்போர் தன்னில், விற்போரில்,
மாஏற் றம்,தோல் ஏற்றத்தில்,
சொற்போர் வெல்லும் கல்வியினில்,
துதையும் பலவித் தைத்திறத்தும்
கற்போர் வியப்பத் தெளிவமையும்
காலம் தன்ஓர் மைந்தனுக்குப்
பொற்போர் வடிவாம் பெண்ணைமணம்
புரிவித் தான்விக் கிரமசிங்கன். (2)
157.மகவான் நிகர்ப்பக் கரிகாலன்
வளநா டளிக்கும் கால்,குடிகட்கு
இகலாய் விருகம் பயிர்அழிக்கும்
இயல்கேட் டிரங்கி, அவைசாட,
நகம்ஆர் வனம்சேர்ந் துறுவேட்டை
நவிற்றி, உற்ற களைதீர்வான்
சுகம்ஆர் தடத்தின் தருநிழலில்
துதைகால் போந்த தொருகேழல். (3)
158. மருவி ஒருபால் நீர்அருந்த
மன்னன் வில்லின் அம்பதனை
உருவி ஓட விட இறந்தது;
உடன்அங் கதில்நின் றொருபூதம்
வெருவி அரையன் விழத்தோன்றி,
“வேந்தா! பன்றி அன்றுநான்;
ஒருவிப் பிரன்;என் தவத்தை உற்றார்
ஒழியா திக்கோ லம்கொண்டேன். (4)
159 கோலக் கோலம் மாற்றி,அலங்-
கோலம் எனக்கு நல்குனைஇக்
காலத் தகலேன் என்றுள் அகங்-
கரித்துப் பற்கள் கறித்தொறுக்கச்
சீலக் குணத்துக் கரிகாலன்
சிந்தை தளர்ந்து செயல்அற்றுப்
பாலத் தழல்(க்)கண் பரன் அன்பார்
பனவர்க் கோதி ஒழிபிரந்தான். (5)
160.சதுர்மா மறையோர், “சிவதலங்கள்
தரிசித் தால்போம்” எனநுவல,
பொதுஆர் தில்லை முதல்(த்)தலங்கள்
போற்றிப் பணிந்தும் தீராதாய்,
விதுஆர் கடலில் துயர்ந்திரங்கும்
வேளை தனில்,விண் வழிப்போந்த
மதுவார் மகதி யாழ்முனிவன்
வரக்கண் டடிவீழ்ந் தழுதயர்ந்தான். (6)
161.தெய்வ முனிவன் சோழனை,"அஞ்-
சேல்” என் றருளி, “நீபலவாம்
சைவத் தலம்சார் புண்ணியத்தால்
சார்ந்தேன்; உனது பழிநீக்கி,
உய்வற் புதம்சார் திருப்பதி ஒன்று
உளது; கொங்கில் திருப்பேரூர்;
மெய்வர்த் தனைசால் இறைவ!வல்லே
மே”வென் றுரைத்திட் டகன்றான். ஆல். (7)
162.வானைக் காவல் ஆற்றும்இயல்
மன்னன் அனைய கரிகாலன்
தேனைக் காதில் ஊற்றும் இசைத்
தெய்வ முனியைப் புகழ்ந்தேத்தி
ஆனைக் காவில் அமர்ந்தருளும்
அமுதை அடியார்க் கருள்விருந்தாம்
கோனைக் காத லால்வணங்கிக்
குதூக லம்கொண் டமைவேலை. (8)
163. இமையத் தம்மை தவம்புரிகால்,
ஏவல்(ச்) சேடி எழுவர்மலர்
அமையப் பறிக்கும் போதில், அவண்
அணைகாந் தருவற் குளம்மயங்கிச்
சமையத் தலர்ஈ கலர்தாழ்க்கும்
தகையால், பூசை தவறுதலால்,
உமைஅக் கன்னி களைமனித
உருக்கொண் டுளம்போன் றுறுதிர்என்றாள். (9)
164. கேட்ட மகளிர் பணிந்தயர்ந்து,
கிருபை புரிஎன் றழுதிரங்க,
“வாட்டம் தணப்பீர்; சீரங்க
வைப்பில் சார்ங்கன் மகளிர்களாய்,
நாட்டம் என்பால் அமைந்திருப்பின்,
நலம்சால் கரிகா லன்பழியை
ஓட்டப் பேரூர் குறுகிடுங்கால்
உறைவான் திருவா னைக்காவில்; (10)
165. அவனோ டிசைப்பே ரூரில்அடைந்து
அகல்வீர் சாபம்” எனும்மொழியை
நவம்ஆர் உளம்கொண் டெதிர்நோக்கும்
நாளில் மன்னன் வரவுணர்ந்து,
தவம்ஆர் மகளிர் இறைஎதிர்போய்ச்
சரதம் உரைப்ப, மனம்மகிழ்ந்து,
குவடே போல்தோள் பூரித்துக்
கொடுத்தான் சிவிகை எழுவருக்கும். (11)
166.நீதி புரியும் கரிகாலன்
நெஞ்சம் குளிர்ந்து, நெடுமன்றில்
சோதி புரிபிப் பிலவனத்தைத்
தூய புகழ்ஆர் பேரூரை
ஆதி புரியை வல்லேசென்று
அடைவேம் என்னும் ஆர்வமுடன்
பீதி புரியும் வினைகள்விடை
பெறுமா றெண்ணி அடைந்திட்டார். (12)
167.புனித அருள்(க்)காஞ் சியில்படிந்து
போந்து சிவனைப் போற்றிஉளக்
கனிவில் சிவலிங் கம்பதிட்டை
கண்டு பூசித் தமைநாள்பொன்
குனிவில் பரமன் காட்சிநல்கிக்
கோதை யரைமுத் தியில்கூட்டித்
தனிஅற் புதச்சீர்க் கரிகாலன்
றான்வேண் டிடும்மெய்ச் சிறப்பளித்தான். (13)
168 "எங்குற் றிடும்போ தும்குறையா
எனதோர் பழிவே லையைப்பருகி,
மங்குற் றறச்செய் பேரூராம்
வடவா னலப்பேர் அருள்நிறைவார்
கொங்குற் றிசையும் தலங்களில்ஆம்
குழகன் கோவில்(ப்) பணிபுரிவேன்;
இங்குற் றியலும் தலங்கள் தெரிந்து
இசைப்பீர்” எனத்தூ தரைவிடுத்தான். (14)
169. பற்பல் தலமும் பார்த்தோர்ந்து
படரும் படர்இப் பதிப்பெருமை
அற்பம் அன்றென் றுணர்ந்திறைவற்கு
அறைவார் - “நினது குலமுதல் ஆம்
நற்பங் கயநா யகன் அருளும்
நமனால் பதிட்டை புரிமூர்த்தி
முற்பண் பமைகா லப்பொய்கை
முயங்கும்; காஞ்சி நிகர்த்திசையும் (15)
170. புனிதம் மலிகௌ சிகநதியும்,
போதன் இணையாம் கௌசிகப்பேர்
முனிவன் யாகம் இயற்றி இவண்
முயங்கும் நீற்று மேட்டையொத்து
நனிஇன் பருளும் இடம் ஒன்று
நாம் கண் டணைந்தோம்” எனவினவிக்
கனிவில்(க்) கரிகால் வளவன் அதைக்
காண்பேன் யான்என் றுளங்கொண்டே (16)
171.சீருர் இறைவன் தலத்திரளுள்
சிறந்து தன்ஓர் பழிதொலைத்த
பேரூ ரினில்ஆம் பணிமுடித்துப்
பெரிதும் போற்றி விடைபெற்றுக்
காரூர் பொழிற்கௌ சிகநதியைக்
கண்டு மகிழ்வில் குடைந்திசையால்
ஏரூர் கௌசை அடைந்து, படர்
இசைத்த செயல்முற் றுறக்கண்டான். (17)
172. காலப் பொய்கை நீராடிக்
கால காலே சன்றனக்குள்
சாலப் பழுத்த பேர்அன்பால்
தன்கை கொடுமஞ் சனம்ஆட்டிக்
கோலப் புதும மலர்த்தொடையல்
குயிற்றிப் புனைந்தர்ச் சித்தேத்தி,
"மூலப் பொருளே! உன்பணிகள்
முடிக்க அடியேற் கருள்” என்றான். (18)
173. இன்பே வடிவாம் காலகா-
லேசன் திருத்தாள் இணைப்பிரிவில்
அன்பே வடிவாம் கரிகாலன்
அமையாக் காதல் மீதூறத்
தன்பேர் அமைய ஓர்இலிங்கம்
தழைக்க அமைத்துப் பூசித்துத்
துன்பே அறியாப் பேரின்பில்
சொக்கிப் பணிகள் துவக்கினான். (19)
174.வில்லின் பணியால் பிரமகத்தி
மேவப் புரிந்து, மெல்லியலார்
சொல்லின் பணிஆற் றெனைவலிதில்
தொண்டு கொண்டு மறுமைதரும்
நல்லின் பணிஆற் றிடஅருளும்
நாதர் கௌசைப் பதியாற்குக்
கல்லின் பணிஆற் றுவன்என்னக்
கடிதில் சிற்பர்க் கறிவிப்பான். (20)
175.என்னோர் முதல்ஆம் இனன்சேயாம்
இயம தருமன் றனக்கெனைப்போல்
மன்னோ தொடர்ந்த பிரமகத்தி
மாற்றும் கால காலேசற்கு
என்னோர் கைமா றேழைஇவண்
இயற்றல் உளதா லயப்பணிகள்
கொன்னோங் கிடமண் டபம்பொலிவார்
கோயில் அமைத்து முடிப்பீர்ஆல். (21)
176. என்னைப் பொருளாக் கணித்திகம்சார்
இழிபோ கத்தாழ்ந் தழியாதே,
பொன்னைப் புரைதன் அடிஅமையப்
புரியும் கருணா கரவல்லி
அன்னைக் கினிதாம் திருக்கோயில்
அண்டர் புகழும் படிஆற்றி,
முன்னைத் தேவாம் கற்பகப்பேர்
முதல்வன் றனக்கும் புரிதிர்” என்றான். (22)
177.நீறு முகம்கொண் டறியாத
நீசச் சமணக் கொடியோர்பொய்
ஏறு முகங்கள் முற்றும் அயர்ந்து
இறங்கு முகம்ஆம் படிபுரிந்தே
ஆறு முகத்தெம் மங்கையர்கட்கு
அரசிக் கிம்மை மறுமைஇசைப்
பேறும் உகப்பில் நல்குகுகப்
பெம்மான் வடிவேல்(ப்) பெருமாற்கே (23)
178.ஆம் ஆக் கம்தம் பால்(ப்) பொருந்தும்
அடலால் இடர்மிக் கிமையோர்க்குத்
தாம்ஆக் கந்தத் தானவரைச்
சாடி அமரர்க் கருள்புரிந்த
தேம்மாக் கந்தம் இளமைபொலி
திருச்சண் முகத்தெம் தேசிகனார்
சோமாக் கந்த ராய் அமைந்து
துலங்கக் கோயில் அமைப்பீர்ஆல். (24)
179. வருத்தம் புரியும் கொடும்மூல
மலம்சேர் ஆவித் திரள்கள்உளம்
திருத்தம் புரியும் படிஅருள்ஆர்
சிவகா மித்தாய் கண்டுவப்ப,
நிருத்தம் புரியும் பெருமான்றான்
நிகழும் கனக சபைஉலகோர்
பொருத்தம் புரியும் பணிஎன்னப்
புரிசை மடைப்பள் ளிகள்அமைப்பீர். (25)
180. திருக்கல் யாண மண்டபம் உள்(ச்)
சேர்ந்தோர் தங்கள் மனம்என்னும்
உருக்கல் யாணர் படைத்தமைய
உஞற்றி, மேகத் திடிஅஞ்சச்
செருக்கல் யாணத் தொனிச்சேமுற்
சேர்வா கனம்ஆர் மண்டபமும்
பெருக்கல் யாணர் ஆம்உமது
பேர்நின் றிடவே பிறக்கிடுவீர். (26)
181.நஞ்சாய் உலகத் தவரைஉளம்
நலியப் புரிவார் தமைச்சாடப்
பஞ்சா யுதங்கள் தரித்தாற்குப்
பகுவாய்க் கராவாய்க் கசேந்திரனை
அஞ்சா தருளி உயர்ஆதி
மூலப் பொருளாய் அமைந்தாற்கு
மஞ்சார் கரிவ ரதராச
மணிக்கும் கோயில் புரிவீரால், (27)
182. பேணும் இமையோர்க் கிரங்கிஉரம்
பெற்ற மயிடற் சாடி,இசை
பூணும் அம்மை; கௌசைநகர்
புரக்கும் அம்மை; எம்விழிநேர்
காணும் அம்மை ஓங்குதிருக்
காளி யம்மை கவின்றிடவே
சேணுந் திமையோர் வியக்கும் அணித்
திருக்கோ யிலைஆக் குதிர்என்றான். (28)
183. கரிகால் வளவன் உரைத்தவண்ணம்
கருத்தில் அமைத்துச் சிற்பர்பணி
புரிகா லத்தில் ஆண்டிறைவன்
பூசை நைமித் தியம்நித்தம்
விரிவார் அன்பில்(ச்) செய்தமைய
விதிமா றாத பற்பலவாம்
பரிவா ரங்கள் அமைத்தவர்க்குள்(ப்)
பரிவால் நிதிஆ தியஅளித்தான். (29)
184. உறையும் மனைகள் பற்பலவும்
உடைஊண் ஆதி நலங்களுக்கோர்
குறையும் எய்தா திசைவித்து
கூறும் தனதோர் இசைவித்து
நிறையும் வடம்ஆர் தருப்போல
நீண்டு செழிப்புச் சேர்அன்பால்
முறையுந் திடப்பொன் ஈந்துமிக
முதிர்மா னியங்கள் பலஅமைத்தான். (30)
185. இவ்வா றியலும் காலத்தில்
இயற்றும் பணிகள் முடிவடைந்து
செவ்வா ரிசமின் பொலியும்மணித்
திருமால் துளடம் பெறுமார்பம்
ஒவ்வா விளங்கும் தன்மை தெரிந்து,
உள்ளத் துவகை உற்றிமையோர்
துவ்வார் அமுதுண் டெனக்கரிகால்(ச்)
சோழன் இன்பம் துளும்பினான். (31)
186. அண்டர் வியந்து கொண்டாடி
அணிமா மலர்கள் மிகச்சொரிய
விண்ட ஐந்து கருவிஒலி
விம்மி மேகத் திடிவிளர்ப்பக்
குண்ட மண்ட லம்வேதி
குயிற்றி யாகம் புரிந்துகும்பம்
கொண்ட புனல்மூர்த் திகட்குள்ளம்
குளிரும் படிஆட் டினன் அம்மா! (32)
187. சிறப்பார் அபிடே கங்கள்எலாம்
செய்வித் துயர்அர்ச் சனைபூசை
திறப்பார் மாகே சுரபூசை
திகழும் தானம் மிகஇயற்றிப்
புறப்பா டமையும் உலாவும்இன்பம்
பொங்கப் புரிந்து மானிடம்ஆர்
பிறப்பால் அமையும் பயன்முழுதும்
பெற்றேன் பெற்றேன் என்றார்த்தான். (33)
188. இன்ன வகையில் தொழுதேத்தும்
இன்பக் கரிகா லன்விழியின்
முன்னர் அமைந்த மூர்த்திஎலாம்
முதிரும் கருணை யுடன்உனக்காம்
என்ன நலங்கள் தாமும்என
இசைத்தல் ஓர்ந்தான்; இருவிழிநீர்
தன்ன தகலம் நின்றிழியத்
தகுபேர் இன்பக் கடல்படிந்தான். (34)
189 அகரத் திசையும் அந்தணர்கள்
ஆதி யாம்பல் வகைக்குடியும்
நிகரற் றிலங்கும் திருக்கோயில்
நியமப் பணிக்காக் குடியேற,
நகரம் பிரவே சம்புரிந்ததெந்
நாளும் குறையற் றமையூர்க்குப்
பகரத் தகுநற் பெயர்கோயிற்
பாளை யம்மென் றிசைத்திட்டான். (35)
190. தழைக்கும் கால காலேசன்
றன்னை, கருணா கரக்கொடியை
புழைக்குஞ் சரக்கற் பகக்களிற்றை,
போர்வேல் இறையை, நடத்தரசை,
அழைக்கும் கரிகாத் தருள்மாலை,
அணிஆர் கௌசைக் காளிதனை
மழைக்கு நிகர்கைக் கரிகாலன்
வணங்கி வணங்கி வாழ்த்தியே, (36)
191.விடைகொண் டிலங்கும் கேதனம்சார்
வியன்ஆர் கால காலேசர்
கடைகொண் டிசைபேர் அருள்புரியக்
கனிந்து வணங்கித் தன்நகர்க்கு
விடைகொண் டடைந்தான்; அன்னவன்வாய்
விளம்பும் கோயிற் பாளையம்ஆம்
நடைகொண் டமையும் திருநாமம்
நாம்போற் றிடுவான் விளங்கியதே. (37)
கரிகாற் சோழன் திருப்பணிப் படலம் முற்றிற்று
192. இன்ன சரிதம் என்போதத்து
இசைத்த தோ?இன் போங்குபிர-
சன்ன கருணா கரவல்லித்
தாய்தோய் கால காலேசர்
பன்ன வரைந்த தோ?எனும்சீர்
பகர யானும் துணிகில்லேன்;
வன்ன வெண்டா மரையில்வளர்
வாணி விளக்கும்; சத்தியமே.
திருப்பணிப் பயன்
(வேறு)
193. பொருப்பணி மாடக் கௌசைப் புரக்கால காலே சற்காம்
திருப்பணி இயற்றும் தொண்டில் சிறந்தவிர் கரிகா லன்போல்
விருப்பணி அன்பி னாலே விளக்குமெய்ச் செல்வர் கேழல்
மருப்பணி இறைவன் இன்ப வாழ்வினுக் குரியர் மெய்யே.
நூற்பயன்
(எழுசீர் விருத்தம்)
194 அருள்பொலி கருணா கரவல்லி மகிழும்
அற்புதக் காலகா லேசன்
தெருள்பொலி அடியார்க் கருள்புரிந் திடுசீர்
செப்பிடும் வைப்பிணை யாம்இப்
பொருள்பொலி காதை படிப்பவர் கேட்போர்
புகல்பவர் மகிழ்வுறப் புரிவோர்
மருள்பொலி துன்ப வலைப்படா இன்ப
வாரிதி யூடமை வாரே.
வாழி விருத்தம்
(அறுசீர் விருத்தம்)
195. இலங்கிசைக்கோ யிற்கௌசை நகர்வாழ்க!
காலகா லேசன் வாழ்க!
துலங்குகரு ணாகரப்பேர்க் கொடிவாழ்க!
கற்பகமும் துணையும் வாழ்க!
நலங்கொண்ட ராசர்,கரி வரதராசன் பணிசெய்
நல்லோர் வாழ்க!
புலங்கொள்மறை யோர் இறைவர் வாழ்க!காலம்
முற்றும் இன்பம் பொங்கி வாழ்க!
கௌசைப் புராணம் முற்றிற்று.