logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)

(சிவானந்தர் )

        காப்பு

பூவார் பொழிற்றிரு வெண்காட்டில் வாழும் புனிதனும்ப
ராவார் பெருந்துன் பொழித்திடத் தோன்று மகோரனுக்கென்
னாவார்சொன் மாமலர் கொண்டொரந் தாதித் தொடைநவிற்று
மாவார் பெருவா ரணப்பிள்ளை யார்தம் மலர்ப்பதமே.

        நூல்

சீரார் திருவடி யென்சென்னி மன்னித் திகழவைத்துப்
பேரா ருனற்புகழ் பேசவைத் தானந்தப் பேறளித்தா
யாரார் முடியவென் னையா வகோர வருட்கடலே
காரார் வடிவகைம் மாறுள தோகடை யேன்செயவே.  (1)

செய்யாள் விரும்பத் திருமலி வெள்வனத் தேதிகழு
மையா வகோர வரசே மருத்துவ னாற்றுதுயர்க்
கெய்யா விமையவர் மாதவ ரேத்த விடரொழித்தாய்
துய்யா வடியனைச் சூழ்பகை மாற்றிச் சுகமருளே.  (2)

சுகமுந் தொடிக்கண்ண பூவையும் பூசுரர் சொல்லிசைசேர்
நிகமம் மடுத்துட னேயமிக் கூற நிகழ்த்து பொழிற்
சுகநற் சுவேத வனத்தெனை யாண்ட வகோரசிவ
தகநின் னடிக்கணலன் பொன்று தந்தா டமியனுக்கே.  (3)

கேளார் வறியம் வறியமென் றேசொலுங் கீழ்மொழியும்
மூளார் மறந்தும் பிறர்தீங்கிற் சூல முதற்றரியெண்
டோளா ரகோரர் துணைப்பத மன்றிச் சுரருலகும்
வேளார் விழாநிறை வெண்காட்டில் வாழ்கின்ற மேலவரே.  (4)

மேலவர் நற்றிருக் கூட்டமெந் நாளுமன் மேவவவர்
காலவிர் நாயடி யேன்றலை சூடவிற் காமனைவெல்
பாலவிர் நீறணிந் தைந்தெழுத் தோதப் பணித்தருள்வாய்
நீலவிர் மேனி யகோர சிவேசவென் னெஞ்சினனே.  (5)

சினவடி வானவன் சூலம தாதிச் செருபடையா
னனன்முடி யான்மிகக் கோர னகோரனல் லன்பிலர்க்கு
மனன்முடி நற்பதம் வைத்தவ னாமம் வழுத்துநர்க்கோ
புனன்மிகு வெள்வனத் தையனல் லான்றற் புருடனுமே.  (6)

தற்புரு டாதி முகநான்கி னாலுஞ் சதுர்மறைகள்
வெற்புரு வாகக் குவிந்திட விண்டவன் மேற்பிறவி
நிற்பதற் கஞ்சி நசித்திடச் செய்தென்ற னெஞ்சினிலே
பொற்பமர் ஞான வடிவ னகோரன் புகுந்தனனே.  (7)

புகுந்தே னகோரநின் பொன்னடி யேநற் புகலிடமாய்
மிகுந்தே னகத்தினின் மெய்யுணர் வானந்த வெள்ளநனி
முகுந்தே னமாகி முயன்றறி யாப்பத முண்டகத்தா
யுகுந்தேன் பொழிற்பொனி யோடும்வெண் காட்டுறை யுத்தமனே.  (8)

வெண்காட்டு முக்குள நீர்தோய் வினையினர் மேவலபின்
புண்காட்டு தீவினை யென்னவெந் தைநற் புகலியர்கோன்
கண்காட்டு பாலரைக் கைகாட்டு பாலர்சொல் கம்படிந்தேன்
விண்காட்டு மேனி யகோரேச வென்றன் மெலிவகற்றே.  (9)

கற்றேன் பலகலை யப்பொருள் யாவுங் கருத்தினன்காய்
வுற்றே யுணர்ந்தன னுன்னையல் லாலொன் றுலகெனவே
சற்றே யெனினுந் தனிக்கண்டி லேன்பிற சார்பனைத்து
மற்றே யகோர நினைப்பணி வார்தொண்ட னாயினனே. (10)

ஆயிழை மாதர் தனம்புகழ் மக்க ளரோகதிட
காயநற் கல்வி மதிகால காலன் கழலிணையிற்
றூயமுற் பத்தி துறக்கமு மெய்துஞ் சுவேதவனம்
ஞாயிறு சென்றங் ககோரேசர் காட்சியை நாடினர்க்கே.  (11)

நாடின னான்மனத் தெந்தை யகோரனை நான்மறையுந்
தேடின னாண்மலர்ப் பாதமுன் செய்த திருவினையாற்
சூடின னென்றலை சூடிடுந் தூயவர் தொல்குழுவிற்
கூடினன் கூற்றுந் தொலைந்தனன் யாதுங் குறையிலையே. (12)

இலையே யொருகுறை யேனு மெனக்கினி யேழையர்தஞ்
சொலையே மறையெனத் தோளே துறக்கந் துவரிதழே
விலையே யிலாதநன் மாமருந் தென்ன வெறிகொடுழல்
புலையேழைப் பாழ்மதி போய தகோரநிற் போற்றிடவே.  (13)

போற்றிட நாவும் புனலிடம் காண்பரும் பொன்னடியிற்
றூற்றிட மாமலர்க் கையுநிற் சூழத் துணைப்பதமு
நீற்றிட நெற்றியு நேயநன் னெஞ்சுமன் னீயளித்தாய்
பாற்றிடச் சூலப் படையா யகோரநிற் பாடுவனே.  (14)

பாடுவர் வெள்வனத் தையன் றிருப்புகழ் பாவவினை
சாடுவர் சந்ததந் தத்தொந்தொந் தத்தகந் தத்தனவே
யாடுவர் பேரறி வான வகோரனை யன்புடனே
கூடுவர் கூடத் தனிச்சிவ மாமென்பர் கோவிதரே. (15)

கோவியர் கோங்கவிர் குங்குமச் சாந்தணி கொங்கையின்மேற்
றாவிய ளாய்த்திளை மாலவன் றேடுன் சரண்டனிலே
யோவிய மென்னவென் னுள்ள முறற்கோ ருபாயமுரை
பாவியர்க் கெட்டரும் பாத வகோர பழம்பொருளே. (16)

பழமா மறையனந் தம்முகங் கொண்டும் பகரவெட்டாய்
மழமான வேயழு தோலிடு மன்பர் மனத்திடையே
விழமானன் ஞான விளக்கா யொளிர்வைவை மெல்லியலார்
குழன்மா வனந்திரி யென்னெஞ் சகோர குரைகழற்கே. (17)

குரைகட னித்தில மாமணி கொண்டு குவிப்பகுல
வரைகடஞ் சால மெனவே யகோரவவ் வாண்மலிந்தோ
மரைகட மான்கணேர் மாதர் முறுவல் வயக்கத்தினோ
வுரைகட மக்கரி யாய்பெயர் வெள்வன முன்பதிக்கே. (18)

பதியே யமரர் பதிக்கும் விதிக்கும்பொன் பார்ப்பதிக்குங்
கதியே பிறவிக் கடலிற் கலங்கினர்க் கங்கருணா
நிதியே யகோர நிமலா நிகிலநின் னீள்புகழின்
றுதியே யமுத மழையெனச் சொல்லநற் சொல்லருளே.  (19)

சொல்லு நினைவுங் கடந்தொளிர் சோதி சுகவடிவே
யல்லும் பகலுநின் னம்புயப் பாதத்தி லன்புவைத்தே
புல்லும் வணஞ்செய லுன்கட னேகடற் பொங்கிமிழை
வெல்லு மறையொலி வெண்காட் டகோரநல் வித்தகனே.  (20)

வித்தக னேவெண் பொடிபட வேளை விழித்தவிழி
மத்தக னேமத்தகவுரி யாய் நிக மாகமத்தின்
புத்தக னேபுல னைந்தையும் வென்ற புரையிலன்பர்
சித்தக னேயென் னகோர சிவாவுனைச் செப்புவனே. (21)

செப்பிளங் கொங்கையர் வேட்கையி னாற்றினஞ் சிந்தைநைந்தே
யெப்புல னுந்திகைத் தேயலைந் தேனை யியமனண்ணா
விப்பதி வாவென் றழைத்து னிணைப்பத மென்றலைமேல்
வைப்பதற் கெந்தை யகோரவென் யான்செய்த மாதவமே.  (22)

மாதவ னாயிர மாமரைப் போதுண் மறைய வொன்று
போதவ னாதன் னயனம் பறித்துனம் பொன்னடியின்
மீதவ னார்கொடு சாத்திடச் சக்கர மீந்தவகா
வாதவ னாயிரந் தேச வகோர வருட்கடலே. (23)

கடலே யனையம்யாங் கல்வியா லென்னக் களிமிகுத்து
மடலே வரைந்துபுன் மாதரை யெண்ணி மனமழிந்தே
யுடலே விழுமள வும்முனை யுன்னா ருறவுகொளா
தடலே றுகைத்த வகோர வருளெம் மடிகணட்பே. (24)

நட்புக்கொண் டாய்கல்வி செல்வ மிரண்டினு நாவலர்கோன்
பெட்புக்கொண் டான்மனை சென்றிரு காலிற் பிரியமுட
னுட்புக் கொண் டார்குழ லூட லொழிகென் றுரைத்தனையால்
கொட்புக்கொண் டாரறி யாத வகோர குறித்தனனே.  (25)

தனமே பொருளென் றிறுமாந் தறிஞரைச் சற்றுமெண்ணார்
முனமே செலாதுனன் மொய்ம்புகழ் பாடி முடிக்கரங்கூய்
மனமே கனிந்துபே ரானந்த மாக்கடன் மன்னவரு
ளனமேய் வயற்றிரு வெண்காட் டகோர வரும்பொருளே.  (26)

அருப்பு மலர்கொண்டு னம்புயப் பாதத் தகநிறைந்த
விருப்புட னிட்டர சாம்ப சதாசிவ வேத வெள்ளிப்
பொருப்புறை தேவபொன் னம்பல வாதி புலீச்சரவென்
றுருப்புள கோடுனை யோத வகோரவுன் னுன்மனத்தே.  (27)

மனத்தே யகில வுலகமுந் தோன்றி மறையுமுன்சிற்
கனத்தே சலாதிதற் கெந்தை யகோர கருதிடிற்சொப்
பனத்தே யெனச்சிறி தும்முண்மை யின்றுனிற் பாரனைத்துஞ்
சொனத்தேசொன் மாத்திர மாமணி போலச் சொலிலிலையே, (28)

இல்லைந நன்னக ரில்லிது போலு மெழிற்றிருவென்
றெல்லையி லாநிதிக் கோன்விழைந் தெய்துநின் னிப்பதிநீத்
தொல்லையில் வேள்வி யகோர வுஞற்றுவ ருன் பொருட்டில்
பொல்லையென் பார்சொலி னென்னோ வுடைத்திதிற் பொன்னுலகே. ( 29)

பொன்னலர் மாதிரு வெண்காட்டில் வாழும் புராந்தகவுன்
றன்னலர் மாமரைத் தாடொழு மன்பர்க்கித் தாரணியி
லொன்னலர் நோய்மிடி யுள்ளக் கலக்க முறுவதுண்டோ
சொன்னலர் போற்று மகோரா சரணந் துணிபருளே. (30)

அருளே யுருவெனத் தோன்று மகோர வமரரகம்
வெருளே நிறைந்திட வெம்போர் விளைத்த வெறுங்கொடியோ
னுருளே யெடுத்திறக் கச்செய்த வாமி றோசை செய்யும்
கருளேய் குழலியர்ச் சூழா தெனைக்கொளும் றொண்டினுக்கே. (31)

தொண்டரின் றொண்டினுக் கேயகம் வைத்த தொழும்பனியான்
கொண்டலின் மேனி யகோரேச நாளுங் குரைகழற்கே
யொண்டரு மாமலர் மாலையொ டுன்புக ழோதுகின்ற
பண்டரு பாவலங் கன்மிகச் சார்த்தப் பணிக்குதியே. (32)

குதியோ ரிரண்டையுஞ் சீவனிப் பக்கங் குவித்தனலை
மதியே றிடத்துரப் பாவவ் வமுத மழைபொழிந்தென்
மதியேர் மிகுந்தநின் மாமலர்ப் பாதத்தின் மன்னிடச்செய்
விதியோர்நல் வீடுறு வெண்காட் டகோர விழுத்துணையே  (33)

விழுமந் துடைத்தி யகோர விதுச்சுட வேள்வினின்று
மெழுமம் பெளியடன் மார்பம் பொறாதினி யென்செய்வலென்
றழுமம் பருவி யெனச்சோர மாராத்தணை யிலந்தோ
விழுமந் தணாவெனும் வெண்கா டெணாரிலென் மெல்லியலே. (34)

மெல்லிய லார்கா விரிப்புன லாடவம் மெய்யினிற்றோய்
சொல்லிய லாத விரைகட லுற்றதிற் றோய்பரத
வல்லியர் மேனிப் புலாலோட்டிச் சத்தி மகனிகர்க்குந்
தொல்லிய னற்றமிழ் வெண்காட் டகோர தொழுதனனே. (35)

தொழுவார் கரஞ்சிரந் தூக்கிநன் னான்மறைத் தோத்திரத்தாற்
கழுவார் தரச்செய் தமணைநங் காத்த கௌணியர்வாக்
கெழுமா ரமுதைப் பருகிநல் லாநந்தத் தேயிருப்பா
ரழுவா ருவகையி னைய னகோரன் அடியவரே. (36)

அடியார் பொருட்டு செயற்கருஞ் செய்கை யளப்பிலவே
தொடியார் கரத்தினர் சூழலிற் பட்டுத் துயருழக்கு
மடியார் மனத்தனைத் தேற்றியுன் பாதம் வணங்குவித்தப்
பொடியார் தரச்சிரஞ் செய்யி லகோரவென் புண்ணியனே. (37)

புண்ணிய னேபுல னைந்தையு நீத்தநற் புந்தியருக்
கண்ணிய னேமிகச் சேயவனேயுளத் தன்பிலர்க்கார்க்
கண்ணிய னேகரு ணாகர னேயென் கருத்தினிலே
நண்ணிய னேதா வகோரவுன் பாத நளினமதே. (38)

நளினம் படைத்துச்செவ் வாம்பலம் போதி னகைமுலைமொக்
கொளிரிரு பானலம் பூத்தங் குமிழ்கொடொண் கோங்கரும்பி
மிளிர்கொடி வெள்வனத் தைய னகோரன்றன் வெற்பிலொன்று
குளிர்நிழற் சோலையிற் காண்கி லதுவென் குலதெய்வமே. (39)

தெய்வத் திருமுறை யோர்செயும் வேள்வியின் தீம்புகைபோய்
மைவைத் தெனவினன் மாணொளி மாய்ப்பவம் மாதவர்பூண்
சைவத் திருநீற் றொளியவ்வல் சாய்த்துத் தயங்குவெண்காட்
டைவித்த காவென் னகோரா வருணின் னடிக்கணன்பே. (40)

அன்பே சிவமன்றி வேறில்லை யென்ன வருமறைகண்
முன்பே மொழிந்தன வென்கட வேன்முடை மூரலர்தம்
பின்பே யலைந்தெரி மேலிழு தென்னப் பெரிதுநைந்தே
னின்பே யகோர விரங்கா யினியுனை யெண்ணிடவே. (41)

இடம் பொரு ளேவலிம் மூன்றையு மெண்ணியென் னேழைநெஞ்சந்
தடம்பொரு சாகரத் திற்றுரும் பென்னச் சலித்தனன்றோ
படம்பொரு மல்குலர் பாதம் வருடிப் பதைத்துருகு
மடம்பொருந் தாதருள் செய்வா யகோரா வென மாணிக்கமே. (42)

மாணிக்க வாசக மாமறை யோனுமெவ் வானவரும்
பேணிக்கை கூப்பும் பெருநாவ லூரனும் பேரொளியைத்
தோணிக்கட் சுட்டுமென் றோன்றலும்வாக்கின் றுரையுஞ்சொலும்
பாணிக் கழலி லகோரா வணியென் பருங்கவியே. (43)

கவிகையொன் றாலிக் கடல்சூழ் புவனியுங் காப்பரம்பொற்
சிவிகையொன் றேழ்முனி வர்பொறுத் தேகவின் செல்பசிறு
நவிகையொன் றாவர் நதிமதி சூடுவர் நார்மிகுந்தே
குவிகையொன் றாச்சிரத் தோடு மகோரனைக் கும்பிடினே. (44)

பிடியே யெனினும் வெண் காட்டினிற் பிச்சை பெரியர்க்கிடும்
மிடியே யறிகிலி ராய்வியன் போக மிதப்புவுண்பீர்
துடியே ரிடுகிடைத் தூய்மொழி யார்நற் சுதர்ப்பெறுவீ
ரடியே வகோரன வீற்றி லடைவீ ரறிஞர்களே.  (45)

அறியா குளவி தகோர னடியிணைக் கன்புசெய்வா
ரெறியார் கலிசுல விம்மணில் யாரெனி னென்னவரே
நெறியார் பெரிய ரெனப்படு வார்மன் னினைக்கலரே
சிறியா ரிதுவன்றிச் செப்புதல் வினெனத் தேர்குமினே. (46)

மின்னே யனையவிம் மெய்யினை மெய்யென வேநினைந்தப்
பின்னேர் குமிழியிற் செல்வ நிலையெனப் பித்தடைந்தும்
பன்னேர் விளவெனப் பாழ்பட லின்றிப் பரங்கருணை
யன்னே யகோர வளியனைக் கூட்டடி யாரவையே. (47)

அவைக்கண் ணடித்தனம் போலவர்க் காவதன் றாமெனவச்
சிவைக்கண் ணறிந்து நடஞ்செயன் மானத் திரைமுழவந்
துவைக்கநல் வண்டினம் பாடவந் தோகை கழன்றகவுஞ்
சுவைக்கண் மலர்ப்பொழில் வெண்காட் டகோர தொலைமிடியே. (48)

மிடியே தகோர விழைவன்றி யவ்விழை வென்மனத்தே
குடியேற லின்றிக் குலைத்துன் குரைகழற் குஞ்சியிலே
யடியே னுயவைத்தெ னல்ல லெலாமொழித் தாரணத்தின்
படியே நடந்து பவக்கட னீந்தக்கண் பாரையனே.  (49)

பார்தரு மப்புன றீவளி யம்பரம் பானுமதி
யேர்தரு மாவிய மானனென் றெட்டுரு வேய்ந்துநின்றாய்
வார்தரு கொங்கைநல் மலர்மயன் மாற்றிநின் மாண்பதத்தி
னார்தரு மேலோ ரறிவா ரகோரநின் னல்லுருவே. (50)

நல்லுரு வுன்றனக் கையா வகோர மெய்ஞ் ஞானமன்றிப்
புல்லுரு யாவுமிப் பூமிச வாழுயிர் போதநண்ணி
யெல்லுருள் போற்சுழ லாதுன வின்புரு வெய்தவன்றோ
செல்லுரு வேய்ந்த வகோர வருணற் சிதமெனக்கே. (51)

எனக்கே விதித்தனை கொல்லோ வகோரபுல் லெண்ணமெல்லாம்
புனக்கேழ லாய்முலை யக்குரு ளைக்கருள் புண்ணியனே
யுனக்கே யபய மபயமென் றோலிட லுத்தமநின்
மனக்கே றிலையெனின் யானென்செய் வேனருள் வாரிதியே. (52)

வாரிதி நாப்பண்கலன் கவிழ்த் தேமன் மாழ்குநர்போற்
பாரிதில் யாரும் புரப்பவ ரின்றியுன் பாலணைந்தேன்
வேரிதி ரண்டெழுந் தோடநெல் லெங்கும் விளைசிதக்காட்
டாரிதி னந்தொழு மையா வகோர வகற்றினலே. (53)

இன்னலென் னுள்ளத்தி லெய்திய தின்னதென் றியாதுமறி
மன்னவ நீயறி யாததன் றாலுனல் வாய்திறந்து
சொன்னவ நான்மறை யுச்சியி லொண்பொரு டூயருடன்
முன்னவ கோரநெஞ் செண்ணிய தாங்கு முடித்தருளே. (54)

முடித்தலை வானவர் மாதவர் யோகியர் மெய்த்துனபொன்
னடித்தலை வீழ்ந்து பணிந்திட வாக மகோரசிவ
துடித்தலை யாவணங் காவெனச் சோத்தஞ்சொல் லுன்றிருமென்
செடித்தலை நாயின னென்சொல்லு வேன்கதி சேர்த்திடவே. (55)

சேர்கநல் லன்பரை வாயுன சீர்த்திமன் செப்பகணீர்
வார்ககல் லாமன மாமலர்ப் பாத மதுவருந்தித்
தேர்கபொய் வாழ்வைச் சிறிதுமெண் ணற்க திகழ்கவன்பு
வார்கமெய் யானந்த மென்றே யகோர வருண்மிகவே. (56)

மிகவே யுரைத்தெனல் வீடுறன் மெய்யுணர் வின்றியின்றென்
னிகவே யிலாத மறைமொழி யார்க்கு மியையுமது
தகவேய் பிரமவித் தையன்றி யாதவ டங்குமிடம்
புகவே தகும ஃதகோரன்வெண் காடெனும் பொற்பதியே. (57)

பொற்பக லாதநற் பாமாலை கொண்டுனைப் போற்றிநிதங்
கற்பக லாதநன் மங்கையர் போலுன் கழலிணைக்கண்
ணற்பக லாதநெஞ் சோடலை வின்றி யமையவெள்ளி
வெற்பக லாத வகோரா நினைநனி வேண்டுவனே.  (58)

வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறிவெண் காடெனுமின்
பாண்டு நடைச்செவிக் கையா வகோரநற் பத்தியின்றிக்
காண்டு நடையோ வியமெங்ங னென்னக் கவலுநெஞ்ச
வீண்டு னடையர் வெறுங்கவி யேறும் விதமெனவே. (59)

எவனெவ் வுயிர்த்திர ளுங்கலந் தெங்கு மிருக்குமிறை
யெவனம்மை தன்னொடும் வெள்ளிச் சிலம்பி லிலங்கிடுவா
னெவனெம் பிரமவித் தைகொழு நன்னெவ னின்பநட
னவனென் மனங்கலந் தானந்த மீயு மகோரனன்றே. (60)

அகோரநின் னம்புய வங்கிரி தன்னின லன்புசெய்தே
யகோரந் தொலைந்துபே ரானந்த மாக்கட லாடவருள்
சகோரஞ் சகிபின் சரித்தெனச் சன்மந் தருங்கொடிய
பகோரம் படைத்தார்ப் பராயது போதும் பரம்பரனே. (61)

பரனே பருப்பத வல்லிபங் காநற் பழமறையின்
சிரனே சிதவனத் தேவே பிறவித் திரையிலிடே
லரனே யெனத்துதி யன்பருக் கன்றிங் கருள்வைகொலோ
வுரனே யருளென் னகோரா வுனையுற வுள்ளத்திலே. (62)

உள்ளத்தி லேயுறு மெண்ணங்கள் யாவுநன் கோய்ந்துசுக
வெள்ளத்தி லேவிழுந் தானந்த மேலிட லேயருள்வாய்
பள்ளத்தி லேபடு முத்த மகோரநிற் பாடுமவர்
கொள்ளத்தி லேகுவித் தாங்கொளிர் வெள்வனக் கொற்றவனே. (63)

கொற்றவ னேயிக் குவலயங் காத்துக் குலவுமறப்
பெற்றவ னேயெனைப் பெற்றவ னேவெறும் பித்தனென்னெஞ்
சுற்றவ னேசுவரர் போற்ற மருத்துவச் சூரனைமுன்
செற்றவ னேயென் னகோர சிவாவருள் சேவடியே. (64)

சேவடிப் போதென் சிரமிசைச் சூடவின் றேமிதழிப்
பூவடிப் போதி லிடவப் புகலியர் பொற்புமிகு
நாவடிப் போத சுகந்தரு நற்றமிழ் நாளுஞ்சொலப்
பாவடி போதக வெண்காட் டகோரவெற் பண்ணுகவே. (65)

பண்ணார் தவமொன்று மேயைத் தெழுத்தைநற் பத்தியொடு
மெண்ணா ரிகமும் பரமுந் தருமுன் னெழில்வெள்வன
நண்ணா ரகோரநின் னல்லடி யார்க்கன நல்கிமிச்சி
லுண்ணா ருடற்பொதி காப்பா ரவர்க்கென் னுரைப்பதுவே. (66)

உரைபத்து வென்கட னுன்றிரு நாம முளக்கருங்கற்
கரைப்பது வுன்கட னையா வகோர கவலைகற்போ
லரைப்பதுங் கண்டிலை கொல்லோ வருள்க வமுதுவட்க
நரைப்பது மம்மலர் வாவிவெண் காடவென் னாயகனே. (67)

நாயக னேயண்டம் யாவைக்கு நல்லிசை நான்குமறைக்
காயக னேகரு ணாகர னேவிண் கணிக்கவெழு
வேயக னேர்பொழில் சூழ்திரு வெள்வன வித்தகனே
தாயக னேயென் னகோரா நினம் பொற் சரண்சரணே. (68)

சரணங் கிடந்தரி சக்கர மேற்கத் தருமிறைவன்
புரணங் கிடந்தொளிர் புண்ணிய மேனியன் புன்மைசெறி
கரணங் கிடந்தறி யாதவ னுன்னினர் காலனினான்
மரணங் கிடந்தறி யாம லகோரன்மன் வாழ்விப்பனே. (69)

வாழ்விப்பர் வாக்கு மனமுஞ் செலாததன் மாண்பதத்தி
லாழ்விப்ப ரானந்த வம்புதி யிற்ற னடியரைப்பின்
வீழ்விப்பர் வேந்தர் பலரையு மன்னவர் மென்பதத்திற்
சூழ்விப்ப ரெந்தை யகோர ரடியர்சீர் சொல்லரிதே. (70)

சொல்ல லரிதன்பர் மேன்மையன் னார்திருத் தொண்டுசெய்யார்
புல்ல லரிதெம் மகோரன்பொற் றாளது புல்லரிதேல்
வெல்ல லரிது வினைப்பிறப் பஃதுமை மேவிடுமே
லல்ல லரிதிங் ககற்றிடத் தேர்மின் னவனியரே. (71)

அவன்றெய்வ மாவ னிவன்றெய்வ மாவனென் றையமுட
னுவன்றெய் மனத்தவர் கேண்மின் னுகர்பொருள் யாதுமின்றி
யெவன்றெய்வ மாவிருந் தின்பளித் தான்றுயி லில்லிலங்கு
மவன்றெய்வ மெந்தை யகோர னறிந்தின்ப மார்மின்களே. (72)

ஆர்மின் னகோரன் றிருப்புகழ் பேசி யவனடியார்ச்
சேர்மின் விகற்ப மியாவு மிறந்து தெளிந்துசித்தம்
பார்மின் பரவடி வானந்தம் பொங்கிப் பரவசமாய்
வார்மின் கணீர்மிக மாயா வலியை மடக்குமினே. (73)

மடக்குந் திரைக்கடல் வாசவன் றிக்கு மறலிதிக்கும்
குடக்கும் வடக்குங்கும் பன்கடக் காவிரி கோலவைக்க
னடக்குஞ் சிதப்பதத் தேவொ டகோரனை நான்கண்டுகும்
பிடக்கும் பிடக்குறை தீர்த்தது தூர்ந்தது பேய்ப்பிறப்பே. (74)

பிறவா திருக்க விரும்பி னொருவன் பிறிதுதனாற்
பிறவா திருக்க விரும்ப வகோரனற் பேரருளா
லிறவா திருக்க விரும்பி னொருவ னெதுவுந்தனா
லிறவா திருக்க விரும்புக வென்னு மெழின்மறையே. (75)

மறையே புகன்று மகம்பல செய்தென் மயிலியலார்
பிறையேய்ந் திலங்கொண் குமுதப் பிரசம் பெருகவுண்டென்
கறையேய்ந் திலங்குபொற் கண்ட னகோரன்கழ லிணைக்கண்
ணிறையே கொளின்மன மின்பவீ டெய்து மிலையையமே. (76)

ஐயம் புகுந்தகந் தூய்மைசெய் தானந்த வாழிபொங்கி
மொய்யம் புகுமிரு கண்ணின ராகி முகுந்தனந்த
னெய்யம் புகண்டில ராயென் னகோர னிணையடிக்காட்
செய்யம் புலவர் திருவடி சூடுமென் சென்னியதே. (77)

சென்னிமன் னித்திக ழும்மென் னகோரன் றிருவடிக்கண்
பொன்னிமன் னித்திக ழும்மிகப் புண்ணியம் பொற்புறுமூ
வன்னிமன் னித்திக ழும்மறை யோர்கண் மனைகளெங்கு
மின்னிமன் னித்திக ழுங்கார் பொழிறொறும் வெள்வனத்தே. (78)

வனத்தோகை யார்கட மைக்கணம் பேறுண்டு மானெவே
மனத்தொகை யின்றி வருந்திநைந் தேனையென் மன்னமம்மர்
சினத்தோட வாவென்ற சீரிய ராம்பெருஞ் செல்வரினல்
லினத்தோடி ணைத்தனை யெந்தா யகோர வினியுய்வனே. (79)

உய்ம்மட நெஞ்சமே வெண்கா டடைந்தென் றுரையரையர்
செய்ம்மடந் தீர்க்குந் திருப்பா சுரநனி தேர்ந்திலைகண்
மைம்மட வார்பணி செய்ய மதித்தனை வான்மரைநேர்
பொய்ம்மட மாமன மேமுன் னகோரன் புகழினையே. (80)

புகழ்வா ரகோரன் பொருவில் புகழவன் பொன்னடிக்கே
திகழ்வார் திசைமுக னாதியர் செல்வமுஞ் சீரிதன்றென்
றிகழ்வா ரிறைமறை யாற்றி லிறையு மிழுக்கலின்றிற்
றிகழ்வார் நிதிதுனும் வெண்காட்டில் வாழ்கின்ற நேயர்களே. (81)

நேயம் பொறையவா வாமை யுவப்பரு ணீதியிவ
ராயம் பயிலுந் தலைவிய ராந்திரு வன்பரையே
தோயம் புயத்துணை யாயென் னகோரமற் றோய்வைகொலோ
மாயம் படைத்த மனத்தன்பி லாரெனு மாதரையே. (82)

மாதரை கண்ணார் மனவம்பு யம்மலர் மாண்மரைச்செம்
பாதரை கண்ணார் பனவரை யன்பரைப் பாவிநமன்
றூதரைக் கண்ணா வணஞ்சொன்ன தூயரைத் தொண்டெ னைக்கொள்
நாதரைக் கண்ணார் சிதக்கா னகோரரை நண்ணுமினே. (83)

நண்ணிய வெள்வன நாடிய மாந்தரு நாலெணறம்
பண்ணிய பேறு படைப்பா ரெனிலவண் பத்தியொடு
மண்ணிய கோரன் றிருப்பணி செய்வா ரகந்தனிலே
யெண்ணிய வெண்ணியாங் கெய்துப வென்றே னியம்பன்மனே. (84)

பன்னகத் தேயுன் பதநினைந் தியோகம் பயின்றிடுமால்
பொன்னகத் தேபொலிந் தும்மித னானிங்குப் போந்ததுகொல்
லென்னத் தேயுறி னென்னகத் தேயுறி னென்னகத்தே
மன்னகத் தேசகோ ரன்அன்பே ரென்பவர் மாதிடமே. (85)

மாதிட னாக மதற்செற்ற மாதவன் மாண்பதநற்
போதிட னாகப்புலி முனி வாழும் புனிதவெண்கா
டேதிட னாகநீர் சேர்மி னிருமி னிறுதிவலக்
காதிட னாக வகோரன் கழறுங் கதிமொழியே. (86)

மொழிவிச்சு வேசனன் மாதவன் றுண்டிதண் டாயுதன்முப்
பழிதுச்ச மாக்கும் பயிரவ னொண்குகை பாகிரதி
யழிவச்ச மில்வட மம்மணி கர்ணிகை யாதியுள
பழியெச்ச மில்லரு ளெந்தை யகோரன் புரிவம்மினே. (87)

புரிவாற் புகலுகின் றேமல்லம் வெள்ளிப் பொருப்பிலர
னரிவாற் சலியமிக் காநந்த நட்டமிங் காடுதுநந்
தெரிவாற் பெரிய ரகோரர் சிதவனஞ் சிந்தித்தெனப்
பரிவாற் புகழந்தவிவ் வெள்வனச் சீர்யார் பகருவரே. (88)

பகருவ ராரண மாகம மாதிப் பலகலையும்
நுகருவர் நூறுநூ றானந்தம் யாவும் நுதல்விழிவித்
தகருவர் வெள்வனத் தைய ரகோரர் சரணுறற்கே
நகருவ ரென்றலை பொன்னடி சூட்டிடு நற்றவரே. (89)

நற்றவவஞ் செய்ம்மி னகோரன் வடத்தடி நண்ணிமண்ணி
லுற்றவஞ் செய்வதென் னுத்தா லகன் மகனோத் தனைத்துங்
கற்றவன் காலன் கடும்பாசம் யாப்பக் களைந்துஞமற்
செற்றவற் போற்றி வதிந்தனன் காணிச் சிதவனத்தே. (90)

சிதமதி தன்னிலஞ் செங்கதி ரோடுஞ் செறிபதம்பல்
விதமதி நீத்தலை வேலையிற் றூப்பொன்னி மேவுழியுற்
றிதமதி கந்தரு மெந்தை யகோரன் னெழிலிணையார்
பதமதி னெஞ்சுற மூழ்குமின் முத்தி பலித்திடுமே. (91)

இடுவா ரெவரொரு தீப மகோர னெழிற்றிருமன்
னடுவா ரவர்பிற விப்பகை யன்னார்க் கமரருமாட்
படுவா ரெவர்சுவைப் பாயச மையர்முன் பார்க்க வைப்பார்
சுடுவா ரவரலர் சூழ்பசி யாற்பினை துய்ப்பரின்பே, (92)

இன்பே தருவ ரகோர ரிணையடி யெய்தினர்க்கா
ரன்பே யுருவா யவர்திரு வெண்கா டடைந்துதளி
பொன்பே ரொளிமணி யாதிய கொண்டு புனைமினெண்ணு
முன்பே தருவர்நீர் முன்னிய யாவுமம் முன்னவரே. (93)

முன்னவர் யார்க்கும் முளரிய ரெண்ணிலர் முத்திபெறச்
சொன்னவர் துர்க்கை யிலக்குமி வாணிதற் சூழ்ந்துதுதி
பன்னவ ரந்தரு பண்ப ரகோரர் பரசுகமீ
யென்னவ ரேற்றவ ரேர்மிகு பொற்பத மேத்துமினே. (94)

ஏத்திடு மெந்தை யகோரரை யீவா ரெழுபொழிலுங்
காத்திடு மாடக நூபுர மையர் கழலிணைக்கண்
யாத்திடும் யானென தென்னுஞ் செருக்கறு மன்பருக்குப்
பாத்திடுஞ் சேரும் பவக்கட னீந்திப் பரகதியே. (95)

பரனே சரணம் மனவா சரணம் பழமறையின்
சிரனே சரணம் சிவனே சரணம் சரணம் சிவாநந்தமா
புரனே சரணம் புனிதா சரணம் புரணமய
வரனே சரணம் மகோரா சரண மருணலமே. (96)

நல்லாய் சரண நகையாய் சரண நகைமனக
வில்லாய் சரணம் விடங்கா சரணம் வினையர்க்குற
வல்லாய் சரண மகோரா சரண மனைத்துஞ்செய
வல்லாய் சரணமென் வாழ்வே சரணம் வலியருளே. (97)

வலியாய் சரண மெளியாய் சரணம் மறையினிய
வொலியாய் சரண முணர்வே சரண முருப்பெணொடா
ணலியாய் சரண மகோரா சரண மஞரகத்திற்
பொலியாய் சரணம் புராணா சரணநிற் போற்றினனே. (98)

போற்றி யகோரன் றிருநாமம் போற்றி புனைநன்முடி
போற்றி கருணை பொழிமுகம் போற்றி புயங்களெட்டும்
போற்றி மருத்துவற் றன்மய மாக்கிய பொங்கொளிமன்
போற்றி பொலன்கழல் போற்றி யவன்சொன்ன பொன்மறையே. (99)

பிறைவாழ்க மாதவர் வாழ்க மகம்மழை மாவரங்கத்
திறைவாழ்க வென்யாய் பிரமவித் தைநடத் தெந்தைதமிழ்
முறைவாழ்க முக்குள நீர்வாழ்க கற்பெனு மொய்குழலார்
சிறைவாழ்க வாழ்கவென் னைய னகோரன்பொற் சீரடியே.  (100)

        ஸ்ரீ அகோரந்தாதி முற்றிற்று.

 

 
 

Related Content