காப்பு வெண்பா
மாயவனும் ஏத்துவெள்ளி மால்வரை ஆம் தென் கயிலை
நாயகனுக் கோர்மாலை நான்அணிதற் - காயதுணை
என்மனத்துள் மேவும் இராமானந் தப்பெருமான்
பொன்மலர்செம் பாதாம் புயம்.
நூல்
எழுசீர் விருத்தம்
மண்அளந் திடும்மால் எட்டரும் பதமும்
மலர்அயற் கரியநீள் முடியும்
பெண்அவிர் பாக மும்கணப் போதும்
பிறிதரா தென்உளத் திருப்பாய்;
வண்நரர்க் கன்று; போகபூ மியர்க்கும்
வழங்குதும் கதிஎன நீண்டு
விண்அகம் போழ்ந்து விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (1)
மலைஉருக் கொடுநீ விளங்கியும் மலத்தால்
மதித்திடா தூன்நசைத் துழலும்
புலையரைப் பாடிப் பொருள்மதித் திழிபுன்
புலவரை மதித்திடா தருள்வாய்
எலைஇல்ஆ ரணங்கட் கெட்டரும் தன்சீர்
இசைத்து நாள்தொறும்துதிப் பார்க்கு
விலைஎனத் தன்னை வழங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (2)
பெண்டொடு மைந்தர் சோதரர் சுற்றம்
பெற்றவர் மற்றவர் பலரும்
தண்டொடு தோன்றாக் காலனில் என்னைத்
தண்டொடு சூழ்தலிற் தளர்ந்தேன் ;
மண்தொடும் கேழல் மால்என அடியும்
மதிஎகி னப்படி அயன்போல்
விண்தொடும் முடியும் நேடுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (3)
எய்தரும் பிறவி கிடைத்தும்உன் அடியை
எண்ணிலேன் அமுதினைக் கமரிலர்ப்
பெய்தயர் பேதை போலிகத் தளறாம்
பேதையர் காதலிற் சுழன்றேன் ;
கைதழு வியமான் ஒன்றலால் மற்றைக்
கணங்களும் மெய்தழு வாது
மெய்தழு விடக்குன் றுருக்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (4)
கொடுவரிச் செயலை மறந்ததன் தோல்மேற்
கோலம்நோக் குறஅணை வார்போல்
வடுநிகர் விழியார் இச்சைகொண் டுழல்என்
மனத்தினைத் திருத்தியாண் டருள்வாய் ;
கடுஅமைந் தியல்கந் தரத்தினைக் கடுப்பக்
கந்தரம் கவின்பொலி விழிபோல்
விடுசுடர்ப் பரிதி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (5)
மறைமுடிக் கணிஆம் நின்அடிக் கமல
மணிமுடி என்இரத் தணிந்து
தறைஅல தண்ட கோடிகற் கெல்லாம்
தனிஅர சாற்றஎன் றருள்வாய் ?
நிறைமணிக் கழையின் நுனிக் கனத்தில்
நேர்ந்தினன் இரதம்மே வருணன்
மிறைஅறப் பரிகற் புடைக்கும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (6)
துன்பள வறநல் கினும்மட வாரைத்
துதித்தவர் பணிசெயத் துணிவேன் ;
இன்பமே தரினும் சற்றுனை நினையேன்
என்மதி என்மதி? இசையாய்;
கொள்பயில் கரித்தோ லிடைதிரு மேனி
குலவல்போற் சோலையின் நாப்பண்
மின்பயில் சோதித் தருக்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (7)
காயம்ஆம் சிறைக்குள் இன்பதுன்பப் பொய்க்
கனவுகண் டுழலும்என் உயிர்நின்
தூயபேர் இன்பத் துணைஅடி வீட்டிற்
தோய்ந்துநித் திரைசெயல் உளதோ?
நேயம்ஆர் உமையின் தோள்என வரையா
நின்மலற் றழுவுதும் என்று
வேய்அள வறவாய்ந் தோங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (8)
நாவலர் கோன்போல் உனைமனைக் கொற்றா
நடந்திட வேண்டிலேன்; என்னை
ஏவலன் எனக்கொண் டுன்அடிப் பணிகள்
ஈயவே வேண்டினேன் ; இரங்காய் ;
தேவர்மா னிடர்தம் தருக்கறத் தருக்கள்
தேன்கனி இரசம்மீ தாட்டி
மேவலர் பொழிந்து வணங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (9)
குற்றம்என் றறிஞர் வெறுத்தன வாம்துர்க்
குணம்எலாம் கூடிஇங் கென்னை
அற்றம்இல் துயர்செய் திடத்தளர்ந் தனன்;அன்
னவர்உளத் தன்பைஎன் றளிப்பாய் ?
கொற்றவிண் வேந்தன் கரிஉரி என்னக்
கொண்டல்அம் கலைஉடுத் தவிர்வான்
விற்றழை மாலை சூட்டுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (10)
உடம்பெல்லாம் வாயாய்ப் பிறர்க்குப தேசம்
ஓதினேன் அல்லதென் உளத்துள்
நடம்பயில் உனது திருவடித் துணைகள்
நாடிலேன்; எந்தவா றுய்வேன் ?
இடம்பெறு மேனி யிடம்பொலி பணியாய்
இலங்கல்போல் இயல்இடம் எங்கும்
விடம்பொலி பணிகள் விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (11)
காமனை விழித்த கண்ணும்அந் தகனைக்
கதத்துடன் உதைத்தபூங் கழலும்
பூமனைச் சரம்கொய் கரமும்என் சிந்தை
பொருந்திடிற் பவம்பொருந் துமதோ ?
காமர்தண் டலையிற் செறிதரு சந்தம்
கார்அகில் உராய்ந்தெழு கனலால்
வேம்மணம் எங்கும் விரிந்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (12)
வார்த்திகப் பருவம் நெருங்கிய ததன்பின்
வருவது மரணம் ; மற் றதனைத்
தீர்த்திரட் சிக்கும் செய்கைநிற் கல்லாற்
தேவர்கள் தமக்கும்முற் றுவதோ ?
கார்த்திரள் வெருவப் பிளிறுகுஞ் சரங்கள்
கான்றிடு கடம்தருக் கணம்கொள்
வேர்த்திடர் பறித்து விழுத்துதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (13)
இடைஅற உன்னைப் பாடி,ஆர் அழல்சார்
இழுதென நெஞ்சம் நெக்குருகித்
தடைஅற இருகண் நீர் சொரிந் துன்னைத்
தரிசனம் செய்யஎன் றருள்வாய்?
அடைவுற அண்ட கோடிகள் எல்லாம்
அம்புய வாய்கொடுண் டருள்மால்
விடைமிசை ஊர்ந்து விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (14)
கான்அலர்த் திரளும் புனலும்நின் மீதிற்
காட்டியும் கருத்திலன் ஆகி
நான்அபி டேகித் தர்ச்சியேன் ; அவமே
நமன்றனக் கஞ்சினன் இருந்தேன் ;
வானவர் சித்தர் அன்றிமா னிடர்தாம்
மருவிடா இருகயி லையினும்
மேல்நலம் தாங்கி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (15)
பூமிசை வேதன் படைத்தலுத் தனன்;மால்
புரந்தயர்ந் துறங்கினன்; கூற்றன்
தோம்இசை எனதா வியைப்பிடித் திளைத்தான் ;
துயர்இவர் அறஎனைப் புரப்பாய்
பூமிசை வீழ்ந்து வணங்கிடும் உயிரைப்
புலவர்பூப் பொழிந்திடக் கயிலை
மீமிசை அமைக்க விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (16)
புன்மலக் கூட்டுள் அயரும்என் உயிரும்
புள்ளினை வினைத்தடை போக்கி
உன்மலர்க் கழல்ஆம் பரவெளி தன்னில்
உலவிட விடுக்கும்நாள் உரையாய் ;
கொன்மலி சுரரைப் பார்த்து " நம் பரனைக்
கும்பிட வம்மின் " என் பனபோல்
மென்மலர்ச் சினைகள் அசைந்ததென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (17)
மதப்பயல் மதத்தால் நினக்கமைத் திடும்என்
மனத்தளி யிடைமட வாரைக்
கதத்துடன் இருத்த எண்ணினான்; முந்நாட்
கதைமறந்தனன்; நினைப் பூட்டாய் ;
சதக்கிருத் தனந்தர் பார்த்துநாக் கொண்டு
சாற்றினும் முற்றுறாத் தகைசால்
விதத்திவிம் மிதம்கொண் டிலங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (18)
வரையொணா தென்ன மறைசொல்நின் வடிவம்
வரைஎன நிற்பினும் அயன்மால்
கரைஅற முயன்றும் கண்டிலர் எனில்உன்
கருணையால் அன்றிமுற் றுவதோ ?
தரையில்வாழ் மாந்தர் தமக்குமெய் வீடு
தரும்தருக் குலவிடும் என்பால்
விரையவம் மின்என வழுந்துதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (19)
புரணஆ னந்த வடிவன்நீ உறநின்
பொன்னடித் தொண்டன்யான் சனன
மரணவா தனைப்பட் டுழல்வது நீதி
வழக்கதோ? அருட்குள மரபோ ?
பரணஆ காய வீதியிற் படரும்
பனிமதி யினதுரு நாப்பண்
விரணம்ஆற் றிடுகான் உயர்ந்ததென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (20)
இலவுறு கனிதுய்த் துறுபசி ஒழிப்பான்
எய்க்குநர் போலமங் கையராய்
நலம்உறக் கருதும் மடமையேற் கருள்மெய்ஞ்
ஞானம்ஈந் துனைத்தொழுப் புரிவாய்;
பலர்புகழ் பரிதி வானவன் நேரே
படர்தரா துத்தரம் தெற்கில்
விலகல்செய் தயனம் காட்டுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (21)
மும்மலப் பகையால் நரகம்மண் சுவர்க்கம்
மூன்றினும் சுழன்றயர் வேனைச்
செம்மலர்ப் பாத வீட்டமைத் திடநீ
திருஅருள் புரிவதென் றுரையாய்;
கைம்மலை முகற்கார் மலைமலை சூரைக்
கடிந்தசெம் மலைஅளித் தருளி
மெய்ம்மலை வடிவா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (22)
குருவடி வாக வந்தென துள்ளக்
கோயில்கொண் டருளும்நின் ஞானத்
திருஉருக் கண்டு களிக்கமா மாயைத்
திரைஒழித் தருளும்நாள் என்றோ?
கருமுகில் அலைக்கும் கமுகுறு குரண்டம்
கலங்கிடக் ககனம்ஆர் கதிர்மீன்
வெருளுறப் பாய்சேட் டடத்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (23)
சரதபூ ரணநின் வடிவினை உன்னித்
தரிசனம் புரிசெயல் மறைத்துக்
கரவுறும் உலகை மெய்எனக் காட்டிக்
கலக்கும்வல் வினைஅறக் கருதாய்;
நரர்விழிக் கொருகல் மலைஎனத் தோற்றி
நாரதா தியமுனி வரற்கு
விரவருள் உருவா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (24)
நத்தரும் பொருள்கள் உடன்உடன் நல்கும்
நாத! நீ உளத்துறல் கருதேன்
பித்தனாய் உலகப் பொருள்விழைந் தவமே
பெருங்கடல் கானகத் துழன்றேன் ;
சித்தமீ துன்னும் தவத்தரை உதிப்பில்
சின்மயா னந்தவான் தலத்தில்
வித்தருள் வடிவா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (25)
இன்னம்எத் தனைஆர் உயிர்இனம் சேய்என்று
எனைக்கொள விடுப்பைகொல் அன்றி
நின்அரும் சுதன்என் றெடுத்தெனை முந்தி
நிமலவீ டளிப்பைகொல், அறியேன்;
பொன்அவிர் உதயாத் தமனவெற் பென்னப்
பொலிகரத் தால்உல கிருளை
வெல்நலச் சுடர்ப்பந் தாடுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (26)
கற்பனை மதுரச் சொற்பொருள் அணிஆர்
கவிஅள வறப்பொழிந் துனது
பொற்பதத் தணியப் புரிந்தெனை முற்றும்
புரப்பது நின்பரம்; எந்தாய் !
பொற்பமை நமது குலத்தினுக் குரிமை
பொருந்துநன் மாமன்என் றிமய
வெற்பருள் மகனைக் கொண்டதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (27)
காலனுக் கச்சம் அளிக்கும்வெண் நீற்றுக்
கவசமும் கண்டிகை அணியும்
சீலம்என் றணியேன் ; மானிடர்க் கஞ்சச்
செயும்பணி தேடினேன் திரிந்தேன் ;
ஞாலம்ஆர் மலையில் வேற்றுமை உறாது
நயக்கும்அல் வழியிற் றன்குறியே
மேல்அமைந் தோங்க விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (28)
வேதம்எட் டரிதாய் நாவலூர்க் கோன்பா
விருப்பில்ஆ ரூர்த்தெரு உழன்ற
பாதபங் கயம்என் சிரமிசை சூட்டிப்
பவம்இறப் பொழிந்திடப் பாராய்;
போதனோ டகிலாண் டத்திரள் யாவும்
பொன்றுறும் ஊழிகா லத்தும்
வீதல்அற் றோங்கி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (29)
புண்புழு விரும்பும் புள்எனத் துன்பப்
பொய்உடல் விழைந்தவத் துழல்வேன்
இன்புருப் பொலிநின் திருவடித் தொண்டர்
எய்தருள் ஏதுகொண் டடைவேன் ?
கொன்புவி பரித்த பணியினை விரலிற்
குலவுசிற் றாழியாப் புனைந்த
மின்புணர் கருணை வெற்ப! தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (30)
பழிபவம் விளையும் பூமிஆம் மடவார்ப்
பார்த்துரு குற்றஎன் மனம்நின்
செழியமென் மலர்ப்பொற் சேவடி நினைந்தச்
செயல்பெறு தினம்எது ? செப்பாய்;
இழிவுறு சமய வாதிகள் தருக்கர்
இகலுலோ காயதர் தாமும்
விழிகொடு காண விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (31)
நலம்கிளர் நீஎன் னுள்மலர் மணம்போல்
நண்ணவும் நாடிலேன் ; வினையால்
மலங்கினேன் ; தேற அஞ்சல்என் றொருசொல்
வழங்கிஆட் கொண்டிட மதியாய்
தலம்கிளர் வான்சார் கோள்எலாம் முடியைத்
தாண்டிடா தகன்றுசூழ் தலினால்
விலங்கல்என் றிடுபேர் ஏற்றதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (32)
சின்மயா னந்தக் கடல்முகந் தெழுந்த
செழுமுகில் எனக்கவி பொழிந்து
கல்மனம் கரையக் கண்கள்நீர் உகுத்துள்
காட்சிகண் டேத்தஎன் றருள்வாய் ?
என்மறை தரத்தோற் றிடுதுணங் கறலை
இலங்குசோ தித்திரு விழியால்
வில்மதன் கடுப்ப எரிக்கும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (33)
இகல்படு காலன் இருள்உடல் மீதில்
இருந்தும்நின் தாள்துணை அடியேன்
துகள்அறப் பலகால் இரந்தும்என் சிரமேற்
சூட்டிட இரங்கிலை; என்னே ?
திகழ்கரி முகன்அம் குறிஞ்சிவேந் துவகை
சிறந்துமேல் இவர்ந்தனர் ஆட
விகசித வரையா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (34)
காடழைத் துறுவீ டேகெனச் சாற்றும்
காலம்எய் தியும்கருத் திடைமூ
ஏடணை ஒழித்துன் திருவடித் துணைகள்
எண்ணிலேன் கண்இலேன் ; அந்தோ!
மீடல்இல் அன்பார் திண்ணன்வாய் அமுத
வேட்கைமிஞ் சலின்இனம் இசைந்த
வேடர்தம் மிகைகொண் டிலகுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (35)
காந்தம்வல் இரும்பை ஈர்த்தலிற் கருத்தைக்
கவர்வது நின்கழல் ஆக்கி
வாய்ந்தயாக் கையினில் ஒன்றல்போல் நின்மெய்
வடிவினிற் புணர்ந்துறப் புரியாய் ;
சாந்தம்நா றிடுகூ விளத்திருக் கவிகட்
சமர்கடத் தருந்துணை எனவிண்
வேந்தன்உள் உவப்புற் றேத்துதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (36)
சுழிபடு நீர்போல் மெய்அறி வனைத்தும்
சூறைகொண் டிடுபடு மாயைக்
குழிவிழுந் தயர்வேன் என்னைமெய் அன்பர்
கொண்டபேர் இன்புறத் திருத்தாய்;
செழியஆ காயம் தன்பெரு வடிவிற்
றிகழும்எண் அற்றதா வகைஆம்
விழிகொடு நோக்க விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (37)
மகம்கலந் திட்ட சனியில்என் உயிரை
வருத்தும்ஆ ணவவலி ஒழித்தே
சுகம்கலந் திட்ட நின்அருட் புரண
சொரூபமோ டொன்றுறப் புரியாய்;
நகம்கலந் திட்ட மாதுகந் தரத்தில்
நண்ணிய குரல்சொல்என் றுவந்து
விகங்கவர்க் கம்செய் ஒலிகொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (38)
"விம்மிய தனம்அல் குலிற்சுகம் கோரும்
வீணர்காள்! இவற்றிடை அமைந்த
எம்இடைச் சிறுமை தேர்திர்" என் றுணர்த்தும்
ஏழையர் மால்ஒழித் தருள்வாய் ;
செம்இயற் செடியிற் கொடியினிற் குகையிற்
சிலையினிற் சரசுக ளிடத்தில்
விம்மிதம் பலகொண் டிலகுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (39)
அளக்கரில் நதியில் நனைந்துல கெங்கும்
அலைந்தன னன்றிநின் அடிஎன்
உளக்கம லத்தில் இருத்திஉள் ஒளிக்குள்
ஒளிக்கும்ஓர் உபாயம்ஓர்ந் தில்லேன் ;
துளக்கம்ஆர் மணிச்சூட் டராஇனம் வரையிற்
சூர்அர மகளிர்வைத் திட்ட
விளக்கம்ஒத் திரவை விலக்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (40)
ஓடிட உன்னி உறங்குநர் தமைப்போன்று
உன்அருள் பெறமுயன் றறிவை
மூடிய மலத்தால் அயர்ந்தனன்; நின்கண்
முளரியால் நோக்கினை எரியாய்
கோடிய சிலைத்தேர் அம்பினை நாகக்
குலம்ஒழித் தமையும்அன் பருக்குள்
வேடியக் ககற்றி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (41)
உன்அருட் துணைத்தாட் பத்தியற் றவத்துண்டு
உடுக்கும்என் னாற்பிற உயிர்கட்கு
இன்னலே ; யான்கொள் மானிட செனனத்து
ஏனைஅஃ றிணைப்பிறப் பினிதே;
மன்னல்ஆம் சோலை மழைமது முழைவாழ்
மடங்கல்ஆர்ப் புற்றிடு மடங்கல்
மின்ஆவிர் சோதிக் கொடிவிண்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (42)
நாள்என வரும்ஒவ் வொன்றும்மெய் உயிரின்
நண்ணிய வேர்அறுத் தொழிக்கும்
வாள்எனக் கருதிக் கூற்றுயிர் கொளும்நின்
மலர்ப்பதம் தொழமறந் துழன்றேன்;
"ஆள்" எனத் துதிப்பார் தம்மது பிடர்மேல்
அமைந்தசண் டனைஅவன் ஊர்ப்பால்
"மீள்" எனக் கனன்று துறந்துதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (43)
கரணம்ஐம் புலனும் பொறிகளும் மெத்தக்
கலக்கம்எய் திடப்பெரும் துயர்செய்
மரணவா தனைதீர்த் துன்திரு அடியில்
வைத்திடத் திருவருள் புரிவாய்;
வருணன்அம் தடப்பங் கயப்படி யகம்கை
மருவிடத் தென்றலாய் உறும் ச-
மிரணன்சாந் தாற்றி வீசுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (44)
எரிநுகர் வீட்டுக் கோவியம் தீட்ட
எண்ணுநன் போல,வெம் கொடிநாய்
நரிநுகர் யாக்கை அலங்கரித் துன்பொன்
நாள்மலர்ப் பதம்தொழா துழன்றேன் ;
கரிநுகர் வெள்ளில் போல்எதிர் அணைந்தார்
கருத்தினைக் கலக்கும்மும் மலத்தின்
விரிநுகர்ந் தருட்சீர் விளக்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (45)
எட்டியின் கனியிற் காணமிக் கெழில்பெற்று
இன்பென நுகர்ந்திடிற் கசக்கும்
பட்டிகள் மோக வலைப்படா தருள்மெய்ப்
பத்திஞா னம்பெறப் பணியாய்;
மட்டில்சீர்க் காழி சிறைமனப் பந்தர்
மருவினர் போல்வரைச் சுடர்பாய்
விட்டில்கட் குயர்வீ டருள்செய்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (46)
நாரையும் முத்தி எய்தஆண் டருளும்
நாயக ! நாகவாய்ப் பட்ட
தேரையின் மூல மலவயத் தயர்என்
சிற்றுயிற் கென்றிரங் கிடுவாய் ?
காரைஎட் டியதண் டலைபொலி வரையாக்
காணினும் கருணையிற் கரைதீர்
வீரைஒத் திகலி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (47)
தேன்இயல் மலர்கொண் டுனைஅருச் சிக்கும்
திருந்துமெய்ப் பத்தியும் , வினைசார்
ஊன்இடர்ப் பிறப்போ டிறப்பெனும் மயக்கம்
ஒழிக்கும்மெய்ஞ் ஞானமும் உதவாய் ;
"வானிடன் மலையான் எனமலை யாதிர்;
மான்இடன் ஆகும்மா னிடம்ஆம்
மேனியர் காண்மின் " என்னும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (48)
சளக்கருக் கடலை நீந்துதற் கறியேன்
சஞ்சலித் தயர்ந்திடு திறம்என்
உளக்க லத்தில் இருந்தநீ அறியா
ஒருசெயல் என்றுரைப் பேனோ ?
துளக்கம்ஆர் அழல்பற் றிட,விரைந் தெண்கு
சூழ்ந்திடல் தனதுகே சத்தில்
விளக்கிடு கலியன் போன்றதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (49)
தளர்வுறு விருத்த குமாரபா லகன்ஆம்
தன்மையை நீஉனற் சுதர்கள்
இளவலாய்ப் பிள்ளை சேய்ப்பெயர் ஏற்றார்
என்றுகொல் வளர்ந்திசை புனைவீர் ?
துளவணி உரத்தன் கனிகொள மாட்டான்
தொட்டுநன் காசினி துய்ப்ப
விளவுவிண் ணகம்போழ்ந் தோங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (50)
ஒற்றினால் ஒருவரைப் பரவையிற் சேர்த்தாய் ;
உயிர்மெய்யால் ஒருவரை எடுத்தாய்;
பற்றினால் வாடும் எனதுயிர்க் குயிராம்
பாததா மரைபுகப் பணியாய்;
கொற்றம்ஆர் ஞான சற்குரு ஆகிக்
குறிஞ்சிவேந் தெனும்பெயர் புனைந்த
வெற்றிவேற் குகனும் போற்றுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (51)
பத்தர்மேற் செலுத்தும் கருணைஎன் மீதோ
பாவவல் அரக்கர்ஆ தியர்மேல்
வைத்தவெம் சினத்தை என்மல மிசையோ
வல்லைஉய்த் திடஉளம் மதியாய்
செத்தபுள் விலங்கின் ஊன்உயிர் கொண்டு
திகழ்என்பு காஞ்சியில் உய்த்து
மெய்த்தவீ டளித்து விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (52)
மதிநதிச் சடையும் மான்மழுக் கரமும்
மங்கைபங் ககன்றிடா வடிவும்
கதிஅருள் வனசப் பதங்களும் அடியேன்
கண்ணினும் கருத்தினும் இருத்தாய்
துதிபுரிந் தன்பிற் றொழுதழு துருகும்
தொண்டர்கட் குறுவிதி விதித்த
விதிசிரம் ஒழித்து விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (53)
பூவணங் கிடுபூ அணங்குநா அணங்கின்
புருடர்ஆ கண்டலன் ஆம்விண்
கோவணங் கிறைநீ அன்பமர் நீதி
கோவணம் கவர்ந்தனை என்னே!
காவணங் கியல்மா லவரும்மே லவரும்
கதிகொளக் கல்உருப் பொருப்பாய்
மேவணங் குருவாய் விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (54)
கைப்பொருட் கள்ளர் கொளவிடுத் தரிப்பான்
காட்டகத் தமைந்துழல் வான்போல்
வைப்பொளி மணிநின் றனைவிடுத் துடலை
வளர்த்திடத் திரிந்தவத் தலுத்தேன் ;
வைப்பொரு மாது சிரத்திருந் துவக்க
மலைமகள் மலைமகள் ஆக
மெய்ப்பொருப் பாகி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (55)
மைஉறும் மின்போற் கணத்தொழி தரும்இம்
மாயவாழ்க் கையைநிலை என்றே
உய்யும்நல் நெறிதோ யாதொரு தமியோன்
உழன்றொழிந் திடுவதோ ? உரையாய்
பைஉறழ் அல்குல் மலைமகள் தெண்ணீர்ப்
படிவுறு கங்கையாம் மங்கை
மெய்உற வமைய விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (56)
சொல்லுமாய்ப் பொருளும் ஆகிஅல் லவும்ஆய்த்
துலங்கும்நின் திருஉரு வினையே
அல்லும்நண் பகலும் இடையினும் என்றன்
அகம்புறம் கண்டுறப் புரியாய்
"கல்உறழ் தனத்தால் நம்உருக் குழைத்தாள்
கவுரி;அன் னவள்உருக் குழைத்து
வெல்லுதும்" எனக்கல் உருக்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (57)
கற்பக நீழல் வாழ்க்கையும் மாயக்
கனவெனக் கண்டுவர்த் துனது
பொற்பதத் தன்பர் அன்பர்தம் ஏவல்
புரிந்துதாட் பொடிபுனை யேனோ?
கற்புமை இன்மை கங்கையைக் காணிற்
கறுப்பள் ;என் செய்தும் " என் றாய்ந்து
வெற்பருள் உருவாய்த் தாங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (58)
மாட்சிதோய் நந்தி பிரம்புகொண் டுலவ
மால்அயன் சுரர்முனி வரர்சூழ்
காட்சிமிக் கமைநின் திருக்கயி லாயக்
காட்சிகண் டுவக்கஎன் றருள்வாய்?
சேட்சிபெற் றண்டர் தாருவை நாடிச்
செழுங்கணீர் உகுத்தலர் தூற்றி
மீட்சிபெற் றுனைத்தாழ் தருக்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (59)
பாதகக் கொடியோர்க் கோர்அர சாம்மா
பாவிஎன் றெனைப்புறக் கணிக்கில்
போதமுன் ஒருவற் கீந்தனை என்னப்
புகலும்நூல் இனம்வெறும் பொய்யே
பூதலத் திடைஓர் பொருப்பெனத் திகழ்ந்தும்
பொருந்துப நிடதம்ஆ கமங்கள்
வேதம்எட் டரிதா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (60)
பூவில்வாழ் அயனும் மாலும்முன் களிப்பப்
புரிந்திடும் நின்திரு நடனம்
பாவியேன் ஒருக்காற் பார்த்திடப் புரியிற்
பரம! நிற் றடுப்பவர் எவரே?
கோவிலுட் புகுந்தர்ச் சகன்இடும் தீபம்
கொண்டுநோக் காதுயிர் யாவும்
மேவிடத் திருந்தே காணும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (61)
பாடி,வந் தனைசெய் துன்திருப் பாத
பங்கயங் களைச்சிர மீதிற்
சூடிட விழையேன்; ஆயினும் வலிந்துன்
தொண்டருள் இருத்திஆண் டருள்வாய்
காடிடம் என்னத் திரிவிலங் கினத்திற்
கடைபடு மடமையர் தமக்கும்
வீடிட வெற்பா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (62)
எண்ணிடில் கேட்கில் காணில்மிக் கின்பம்
ஈந்திடும் நின்திறம் இகந்து
புண்ணிடை மொய்க்கும் ஈஎன உலகப்
பொய்யிடை புரண்டனன் வறிதே ;
"புண்ணியத் தவமெய்த் தொண்டர்போல் என்பால்
பொருந்துயிர் களைப்புரி வல்"என
வெண்ணிறக் காஞ்சி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (63)
மாண்அவிர் உனது திருவடிக் கன்பு
மருவிலர் மரஉரி தாங்கி
ஊண்அருந் திலர்காற் றயின்றுவாழ் நரினும்
உறுபயன் துன்பல துளதோ ?
ஆணவம் கொடுதே டரிஅயற் கெட்டாது
அதிபவம் பொருந்தும்அங் கிரன்நேர்
வீணர்கட் கருளி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (64)
புளியுறு பழத்தைப் போலஆக் கையினிற்
பொருந்திநின் பொன்னடித் துணைஆம்
களிஅருட் கடலின் மூழ்கமெய்ஞ் ஞானக்
கண்அளித் தெனைமுற்றும் காப்பாய்
அளியர்ஆம் மாந்தர் தேர்தரப் புவிக்கண்
அசலமாத் திகழினும் ககன
வெளிஎனக் கிடம்என் றோங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (65)
ஆதிஅந் தமும்அற் றோங்குநின் புரணத்து
அமைந்துசிற் சுகம்அநு பவியேன்
சூதியல் மாயை வலையினுட் சிக்கிச்
சுழன்றனன் எனைஎடுத் தணையாய்
கோதியல் மலம்ஆம் களிம்புறு மனத்தைக்
குலவும்மாற் றுற்றபொன் ஆக்கும்
வேதியாய்ச் சிறந்து விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (66)
சோதிஎன் றுன்னைத் துதித்ததற் காகச்
சோதியேல் ; எனக்குநின் அருளை
ஈதி; மிக் கேழை; ஏழைபங் காளன்
என்றபேர் புரந்திட எண்ணாய்;
மீதியேல் உலகுக் குத்தரம் இடையில்
விரவிரு கயிலையின் வித்தாய்
மேதினிக் கணியாய் விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (67)
நினைத்துநின் அடிகள் , நெஞ்சம்நெக் கிருகண்
நீர்சொரிந் தேத்தில னேனும்
எனைப்புறக் கணியா தருளினால் முன்வந்து
ஏன்றுகொள் வாய் ; விடேல் , எந்தாய்!
அனைத்துள பொருட்கும் இன்பம்ஈந் திடுமாறு
அமையினும் அன்புடன் காண்போர்
வினைக்குமட் டிகலாய் விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (68)
புற்புதம் நிகர்ஆம் உடல்அபி மானம்
போக்கி மால் அயன்அறி வரிதாம்
அற்புதம் பொருந்தும் குறிகுணம் கடந்த
ஆனந்தக் கூத்தினைக் காட்டாய்
பொற்புமிக் கமைஇவ் வரைதெரி வார்க்குப்
பொருக்கென இன்பம்ஈந் திடலால்
வெற்பிதொன் றேநின் வடிவு;தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (69)
பசையிடைப் பட்ட புள்என உடலப்
பற்றமைந் தனன்விடுக் கறியேன்
அசைவில்நின் திருத்தாட் கடைக்கலம் ஆனேன் ;
அப்ப! நின் ஆணை ! எற் கருள்வாய்
நசையுடன் பார்த்தல் நிட்டையா, மொழியே
நவில்மறை யாக்கொடு பாசம்
மிசைஅமு தாக்கொண் டருள்செய்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (70)
கற்பனை உலக வாழ்க்கைஎன் றெனக்குக்
காட்டியும், யான்மயங் காதே
நிற்பதற் காம்மெய் ஞானம்ஈந் திலதால்
நீர்உறும் வண்டெனச் சுழன்றேன்
கற்பருட் காஞ்சி மாநதி கருணைக்
கடலதாக் கரைஇல்ஆ னந்த
வெற்பதாத் தேர்ந்தேன் நின்னைத்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (71)
நரைதிரை மூப்போ டிருமல்வந் தடியேன்
நலிவுறா முன்னம்நின் செம்பொற்
குரைகழற் பாதப் புணைஅளித் தன்பர்
குலவும்ஆ னந்தவீட் டமைப்பாய்
கரைஇல்ஆ ரணங்கள் நித்தன்நீ எனினும்
கணிக்கலன் கண்டவர் இன்பம்
விரையநல் கிடலால் விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (72)
ஏஉறழ் விழியார் கருப்பைபுக் காலை
இசைந்திடு கரும்பெனப் பிறந்து
சாவுறும் காலை படும்துயர்க் கயர்ந்துன்
சரணம் ஆயினன்எனைப் புரப்பாய்
பூஉறு தேராப் புறம்எரி படுத்தப்
போந்தநா ளோ? முனோ? பின்னோ?
மேவும்இவ் வரைஆ இயது-தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (73)
மக்களாய்ப் பிறந்தும் உனைத்தரி சிப்பான்
மதிக்கிலர் மனைசுதர் என்று
புக்கலை வார்கட் கவர்அல துவமைப்
பொருள்பிறி தாய்ந்திடில் உளதோ?
தக்கநின் உருத்தன் எல்லையிற் கொண்டு
தழைத்தநா டிதற்கிரும் புகழ்ச்சீர்
மிக்ககொங் கென்கை சாலும்;தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (74)
முரிதிரைக் கடல்ஆ லத்தினுக் கஞ்சி
முறையிடும் தேவரைக் காத்தாய்க்கு
அரிவையர் விழிநஞ் சஞ்சினேன் றனையும்
ஆதரிப் பதுகடன் அலவோ ?
" அரியன்என் றெனைச்சொல் நூல்இளம் பொய்ப்ப
அசரமும் பொருந்தவாழ்பு வன்" என
விரிஅருட் பொருப்பாய் விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (75)
பாசவல் வினையின் உனைமறந் துழல்வெம்
பாவிஎன் றெனைவிடா தருளாற்
றேசமை நினது தெரிசனம் காட்டித்
திருத்தல்நின் கடன் ; உனக் கபயம்
ஆசறு கதியின் ஈந்துதண் புனலில்
ஆடுவார்க் கிம்மையில் மணிபொன்
வீசலைக் காஞ்சி நல்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (76)
அறுவகைச் சமயத் தேவராய்ச் சத்சித்
ஆனந்த மாநிகழ் உன்னைச்
சிறுசம யப்புன் கலைகொடு தருக்கம்
செய்மதி ஈனர்தேர் குவரோ?
நறுமலர்த் தருவோ டதிபுள்மா நரர்கள்
நானம்ஆற் றிடநடந் தளற்றை
வெறுமைசெய் காஞ்சி வழங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (77)
கொள்ளிய னிடைதோய் எறும்பென வினைப்பொய்க்
கூட்டில்உற் றுளம்குலை வேன்நீ
தள்ளிடின் நீங்கி மடிந்தொழி வதலால்
சகத்தில்ஓர் திக்குமற் றறியேன்
நள்ளிரா சதநீ திச்சிவப் பொழித்து
ஞானவெண் சத்துவ அருளால்
வெள்ளியங் கிரியா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (78)
கைவரும் அமுதை எறிந்துஞா ளியின்காற்
கறைகொள்புண் நக்குவான் போலத்
தெய்வம்ஆ கியநின் அடிவிடுத் துடல்இச்
சித்தலைந் தெய்த்தனன் சிறியேன்;
மைவரும் காள கண்டம்ஆ தியகொள்
வடிவமோ ? இம்மலை வடிவோ?
மெய்வடி வெதுநிற் கருள்செய்;தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (79)
அலங்குளைப் பரித்தேர் ஊர்ந்துல கெல்லாம்
ஆட்சிசெய் மன்னர்ஆ னாலும்
துலங்குநின் பதத்தன் பிலர்எனில் அவர்புன்
துரும்பினும் சிறியவர் அன்றோ?
புலங்கொள்வார் பாவம் பற்றற விலக்கிப்
புண்ணிய விலங்கல்நீ பாவம்!
விலங்கல்ஆ யினைஎன் ? விளம்பு;தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (80)
உடையினில் நடையிற் பணியினிற் கபட
உரையினில் உழைஎனப் பிறழ்கட்
கடையினிற் றனத்தில் தனத்தினைக் கவர்வார்
காதலிற் போதரா தருள்வாய்
புடைஅடுத் தன்பாற் பார்த்தவர்க் கவர்பாற்
பொருந்திடு வல்வினை தனக்கும்
விடைஅளித் தருளி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (81)
நாற்கவி புலவர் செவிஅமு தென்ன
நற்றமிழ்க் கவிமழை பொழிந்து
பாற்சுரன் அனைய புகழுடன் பாராய்;
பலரொடுன் பால்உறப் பாராய்;
வேற்கரன் கணேசன் அன்றுஅன்பால் என்பால்
மேவுயிர் யாவும்சேய் கள்என
மேற்கொடு முத்தி அணைக்கும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (82)
கூற்றுயிர் கொள்ளக் குறுகும்முன் நின்பொற்
குரைகழல் கழல்அருள் தெப்பத்து
ஏற்றுவாய் என்ன நம்பினேன்; தள்ள
எண்ணிடேல் புண்ணிய மூர்த்தீ !
சாற்றும்ஆ ரணம்ஆகமம் அவன் அன்றிச்
சார்அருள் இன்றெனல் போல
வேற்றுமை உறாது விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (83)
நயனம்நீர் உருப்ப நெஞ்சம்நெக் குருக
நாள்மலர் சொரிந்துனைப் போற்றித்
துயர்அறு பரம சுகப்பெரு வெளியிற்
றூங்குமா றென்றெனக் கருள்வாய்?
புயவலி அரக்கர் ஆதியர் பெயர்க்கப்
போந்திடா வணம்மிக நீண்ட
வியன்உருக் கொண்டு விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (84)
சள்இயல் மதவா தப்பிணக் கொழிந்த
சத்திய சுத்தசன் மார்க்கத்
தெள்ளியர் உளம்கொள் அருட்பெரும் சுகத்தைச்
சிறியனேற் கருள்ததி இதுவே
நள்இரும் பேர்க்கொத் தியல்வடி வளமயில்
நரர்குணம் கெடுபவர்என் றருளால்
வெள்ளிகாட் டாய்கல் உருக்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! ( 85)
கண்தரும் அனலால் வெந்தொழி அனங்கன்
கைம்மலர் படக்கலங் கிடுவேன்
தொண்டர்ஏத் தெடுக்கும் நின்பத மலர்கள்
தோய்ந்துளம் களிக்கும்நாள் உளதோ?
அண்டர்பூ மாரி பொழிதலிற் பொழில்விட்டு
அகல்அளி இனம்அறி ஞரைப்போல்
விண்தலம் உவர்த்து மீளும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (86)
உருவம்நா மம்சங் கற்பவி கற்பம்
ஒழித்துயிர் அதனுளே இன்பம்
மருவும்நின் நடனம் காட்டிவன் மாயை
மயக்கம்முற் றறஅருள் வழங்காய்
கருதுவார் கருதும் கடவுளர் வடிவாக்
காட்சிநல் குதும்எனப் பொதுவாம்
விருடபத் துவசங்கொண் டிலகுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (87)
வண்டுறு காந்தள் மலர்க்கையர் அரிமேல்
வாரணந் தன்னை அம் புலிமேற்
கொண்டுள மானைக் கண்டுளம் மால்மேற்
கொண்டுழல் வேற்கருள் கூராய்
வண்டுருக் கொண்டு துளைத்தவன் போன்ற
வைரநெஞ் சகம்படைத் தோரும்
விண்டுவென் றேத்த விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (88)
தளம்பொலி கமலன் கைகொடின் னமும்மெய்
சமைத்தயர் வுறப்புரி யாதே
களம்பொலி தரநஞ் சிருத்தும்நீ எனைநின்
கழல்அடி நிழல்உறப் புரிவாய்
உளம்பொலி அன்பர் துயர்வினாய் அவர்க
ளுடன்வருந் திடும்திறல் தெரிய
விளம்பிஅத் துவிதம் காட்டுதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (89)
பொருவரும் நினது திருவருட் பெரும்சீர்
பொருந்திலேன் ; புண்உடல் பொறுத்தற்கு
அருவருக் கின்றேன் ; என்னைநீ அருளால்
ஆட்கொள்ள வேண்டும் ; என் அரசே!
பருவத மான்கண் டம்புலி வயிற்றுட்
பட்டமான் நாணுபு திரும்பி
வெருள்கொடார் கலியிற் பாயும்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (90)
பாவமோ டறம் மிச் சிரம்எனும் கன்மப்
பரப்பில்உற் றிருள்புவி விண்ணத்து
ஓவறச் சுழலும் என்னுயிர்த் துன்பம்
ஒழித்திரட் சிப்பதென் றிசையாய்;
பூவரும் அயன்வேள் இயமன்ஆம் இகலோர்
போர்க்குடைந் தார்க்கொளி அளிப்ப
மேவரண் ஆகி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (91)
மத்துறு தயிர்போற் கலங்குபு மூல
மலத்தினால் தட்டழி வேனைச்
சத்துரு என்னக் கருதிநீ அகற்றில்
சகத்தெவர் சரண்எனக் கிசையாய்
ஒத்துறும் என்மைத் துனன்மனை சுதர்கண்
உபாசனை உடையிர்நுந் தமக்கு
மித்துரு நான்என் றோங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (92)
தாங்குசற் குணமும் தேங்குபத் திமையும்
சகலகே வலம்அற அருளிற்
றூங்குசிற் சுகமும் தரஅடி யேன்முன்
தோன்றிடத் ததிஇது கண்டாய்
பூங்குழற் கவுரி மொழிஎனப் புறத்தான்
புரக்கும்ஆ னாயர்நம் பவர்தம்
வேய்ங்குழற் குவந்து விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (93)
ஆடர வினம்தோய் புற்றுறழ் உடலில்
அமைந்து நான் படும்துயர் அறிந்தும்
நீடருட் கடல்-நீ அருளிலை ; வறிதே
நீக்கிடில் என்செய்வேன் அடியேன் ?
காடமை மாக்கொல் வேடருக் கன்றிக்
கருத்துள்மாக் கொன்றிடும் தவமெய்
வேடர்கட் கிடமா விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (94)
மண்எனப் பொன்பெண் எனப்படு பொருளின்
மயங்கும் என்நெஞ்சைநின் ஞான
விண்எனத் திகழும் திருஉருக் கண்டு
விரகம்மிக் கிசைதரப் புரிவாய்;
திண்எனும் சிலையா விளங்கினும் இவைதன்
தீஞ்சொல்கேட் டார்அழல் அமைந்த
வெண்நெய்ஒத் துருகும் அருள்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (95)
கருக்கடல் போகக் கடல்கலை ஆதிக்
கடல்எலாம் தாண்டினோர் மூழ்கும்
திருக்கடல் ஆகும் நினதுபூ ரணத்தில்
சிறியனேன் றனைஎடுத் தாழ்த்தாய்;
மருக்கமழ் சுரர்ஐந் தருத்தருக் கொழிய
மகிமைபல் லாயிரம் கொண்ட
விருக்கம்எண் ணிலகொண் டோங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (96)
தருப்பயில் உலகத் திருப்பதும் நரகிற்
சார்வதும் கனவெனப் புரிநின்
திருப்பத கமலத் திசையும்மெய் அன்பிற்
றிளைத்திட அடியனேற் கருளாய்;
பொருப்பன்நன் மகள்,தன் பொருப்பன தனத்தைப்
பொருவதிஃ தென்னமெச் சுறள்போல்
விருப்பம்மிக் கமைய விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (97)
ஒவ்வருட் துணைநீ ; புன்புலம் பகைஎன்று
ஓர்கிலேன் உலகின்மா னிடரைத்
தெவ்வர்கள் இவர்கள், இவர்உற வென்னச்
சிந்தைசெய் தவத்தளிற் றிரிந்தேன்
செவ்வருட் கடல்நேர் தீர்த்தம்மூழ் குநர்க்குட்
சேர்பசு உணர்வில்மெய்ப் போத
வெவ்வொளி வழங்கும் அளிகொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (98)
நச்சுறழ் ஐம்பா ணத்தறி விழந்து
நாரியர்ச் சரண்புக மீட்டும்
அச்சுறக் குன்றேற் றினர்கருக் குழியில்
ஆழ்த்தநொந் துனைச்சரண் ஆனேன்;
பச்சுரு உமையாள் தழுவிய மேனிப்
பால்உறும் ஐம்முகம் போல
மெச்சும்ஐந் திலிங்க உருக்கொள்தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (99)
மூத்திரக் குழியில் வீழ்த்துநர்க் காளாய்
மூத்திற வாதிள மையினிற்
றோத்திரம் புரிவான் எனக்கருள் நினக்குத்
தொண்டனேன் ஓர்கைமா றறியேன்
ஏத்திருங் கயிலை நந்திஎம் பெருமாற்கு
இல்லைஎன் னாதிறுந் தோறும்
வேத்திரம் உதவி விளங்குதென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (100)
எப்பவத் திழைத்த பெரும்தவத் தாலோ
எனதுபாக் கியமதாய் முத்தி
வைப்பதாய்த் திகழும் உனைத்துதித் திறைஞ்சும்
வாழ்வுபெற் றுய்ந்தனன் அடியேன்
ஒப்பரு வடிவம் கண்டவர்க் கென்றூழ்
உடல்முன்ஊ ழால்வரும் துன்ப
வெப்பறுத் தின்பம் வழங்கு;தென் கயிலை
வித்தகா! சத்திநா யகனே! (101)
முற்றும்.