பாயிரம் 1-8
1 தலவிசேஷம் 9-22
2 நாகராசர் பூசைச் சருக்கம் 23-43
3 பிரமதேவர் அருச்சனைச் சருக்கம் 44-59
4 தேவேந்திரன் பூசைச் சருக்கம் 60-75
5 பார்வதி பூசைச் சருக்கம் 76-87
6 அகத்தியர் பூசைச்சருக்கம் 88 - 99
7 அக்கினி பூசைச் சருக்கம் 100-112
8 தக்கன் பூசைச் சருக்கம் 113- 136
9 கங்கை பூசைச் சருக்கம் 137 -150
10 சூரியன் பூசைச் சருக்கம் 151- 165
11 சந்திரன் பூசைச் சருக்கம் 166- 181
12 சுனீத பூசைச் சருக்கம் 182- 193
13 சிலந்திச் சோழன் பூசைச் சருக்கம் 194- 208
பாயிரம்
தியாகராசப் பிள்ளையார் தோத்திரம்
விருத்தம்
காராருஞ் சோலைநெறி மேரு வெற்பில்
கதிக்கு மொரு பாரதத்தைக் கதையாற் றீட்டி
சீராரப் படைத்தானைக் குமர னுக்குச்
செல்வமென மூத்தானைத் திரிசூழ் பாரில்
ஆராரும் புகழவருங் கீர்த்தி யானை
ஐந்துமுக முடையானை அமரர் போற்றும்
போராரும் பாம்புரத்தில் தியாக ராசப்
பிள்ளையா ரிருபதத்தைப் பெற்று வாழ்வாம். (1)
சிற்றம்பலப்பிள்ளையார் தோத்திரம்
வேறு
காரானை முகத்தானைக் கையோரைந் துடையானைக்
கமழுங் கொன்றை
தாராரு முடியானைச் சலசலமென்றப் படியானைச்
சகத்தோர்க் கெல்லாம்
தீராத செல்வமெல்லாம் அளிப்பானை ஒருமருப்பு
செங்கை யானை
ஆராயும் பாம்புரசிற் றம்பலப்பிள்ளையா ரடிபதத்தை
யகத்தில் வைப்பாம். (2)
விருத்தம் வேறு
பாம்புரநாதன் வாழ்த்து
காதமருங் குழையானை கனக வெய்யோன் தேவேந்திரன்
சீதமதி சேடன்முதற் பூசைகொள்ளும் செய்கையானை
மாதுவண்டு சேர்குழலி ஒருபாகம் வைத்தானை வனசப்பூவாம்
பாதமிரண்டு டையானைப் பாம்புர நாதனை தினமும் பணிந்து வாழ்வாம். (3)
விருத்தம் வேறு
வண்டு சேர் குழலாள் வாழ்த்து
கண்டுசேர் மொழியாளைக் கருணைபொழி விழியாளைக்
கமலத் தோடு
செண்டுசேர் கரத்தாளைத் திங்கள்சேர் சிரத்தாளைச்
சேடன் பூசை
பண்டுசேர் பாம்புரத்தில் சேஷபுரீசு வரன்வாம
பாகத் தாளை
வண்டுசேர் குழலாளை இருபோது மவள்பாதம்
வணங்கி வாழ்வாம். (4)
முருகன் வணக்கம்
துள்ளுமா மயிலானைச் சுரர்பகையைத் தீர்த்தானைச்
சுரர்கள் போற்றும்
வெள்ளிமா மலைபோலும் சுடர்வேலை யுடையானை
விண்ணோர்க் கெல்லாம்
தெள்ளிதா மருவிய சேனாபதியே ஆனானைத்
தெய்வ யானை
வள்ளிநா யகனை வளராறு முகத்தானை
மனத்துள் வைப்பாம். (5)
தெய்வங்க நாயகன் வணக்கம்
மல்லல்முனி வோர்விடுத்த மான்மழுவைத் தரித்தானை
வானோர்க் கெல்லாம்
செல்வமிகக் கொடுத்தானைத் தெய்வங்க நாயகனைச்
செகத்தோர்க் கெல்லாம்
அல்லல்விழி ஒழிப்பானை அப்பரொடு சம்பந்தற்
கருளு வானை
நல்லதிருப் பாம்புரத்தில் நான்மறையா ளனைத்தொழுது
நாளும் வாழ்வாம் (6)
நடராசப் பெருமான் வாழ்த்து
முன்னைவா னவரெல்லாம் பணியுமிரு பதத்தானை
முயற்சி யில்லா
என்னையா ளுடையானைக் கங்கைவாழ் சடையானை
எவர்க்கு மேலாம்
சென்னிநா டாள்வானைச் சிதம்பரத்தில் நடம்புரியும்
செல்வன் தன்னை
புன்னைவாழ் சடையானைப் புனிதபதம் சென்னிமிசை
போற்றல் செய்வாம். (7)
பாம்புரத்தில் பூசைபண்ணி பதம்பெற்றோர் பன்னிருவர்
பகரும் சேடன்
ஆம்பிரமன் தேவேந்திரன் அம்மையகத் தியன்கங்கை
அனலோன் திங்கள்
வாம்பரிதே ரிரவிதக்கன் சுனீதன்செங்க ணான்சேஷன்
வரம்பெற் றார்கள்
தீம்பமறுமா முனிவோரே யென்றேமன மகிழ்வாய்ச்
செப்புஞ் சூதன். (8)
முதல் சருக்கம்
மன்னுமுயிர்க் குழுக்களெல்லாம் படைக்குமந்தச் சதுர்முகத்தோன்
வளரு மீசன்
சன்னதிமுன் தன்போல ஒருதீர்த்த முண்டாக்கி
சலத்தின் மூழ்கி
மின்னுசடை பாம்புரனைப் பூசித்து வரங்களெல்லாம்
விரும்பிப் பெற்றான்
அன்னதியில் படிந்தெழுந்தோர் கயிலையங் கிரிமீதி
லடைந்து வாழ்வார். (9)
சிறக்குமந்தத் தலத்தால யத்தினுக்குள் தென்திசையில்
சேஷ ராசன்
சிறக்குமெனத் தன்பெயரால் தீர்த்தமொன் றுண்டாக்கியதில்
தோய்ந்தே யந்த
உறக்கமில்லாச் சிவராத்திரி பூசைபண்ணி வரம்பெற்றான்
உவந்தே மூழ்கில்
பிறப்புஇறப் பில்லாதபடி வெகுகாலம் சிவலோகம்
பெற்று வாழ்வார். (10)
விளங்குமந்தத் தலத்தால யத்தினுக்குக் கீழ்த்திசையில்
விண்ணோர் கோமான்
உளங்கள் மிகக் களிகூற இந்திர தீர்த்தமெனவே
குண்டுண் டாக்கி
வளங்கொளுந் தீர்த்தக்கரையி லிருந்துசிவ பூசைபண்ணி
வரங்கள் பெற்றான்
உளங்கொளுந் தீர்த்தத்தில் படிந்தெழுந்தோர் சிவலோக
முற்று வாழ்வார். (11)
மேயவந்த தலத்தாலயத்தினுக்கு தென்திசையின் மலைவெற்பில்
விளங்கு மங்கி
ஆயவரே தீர்த்தமதொன் றுண்டாக்கி அதில்மூழ்கி
பரனைப் பாம்பை
நாயகனைப் பூசைசெய்து வரம்பெற்றான் அதில்மூழ்கி
நண்ணி னோர்கள்
தூயதொரு விரதமாகச் சிவலோக மதுதனிலே
துன்னி வாழ்வார். (12)
மன்னுமத் தலத்தால யத்தினுக்குத் தென்திசையில்
மாமலை வெற்பில்
துன்னுமகத் தியன்பேரால் தீர்த்தமொன் றுண்டாக்கியதிற்
தோய நம்பன்
தன்னையருச் சித்துவரம் பெற்றானிப் புவியோர்த்
தடத்தில் மூழ்கில்
அன்னவர்கள் வெகுகாலஞ் சதாசிவ லோகந்தனிலே
யடைந்து வாழ்வார். (13)
விரிக்குமந்தத் தலத்தால யத்தினுக்கு நிருதிதிக்கில்
வீரனார் தக்கன்
பரிக்குமொரு தீர்த்தமொன் றுண்டாக்கி யதிற்படிந்து
வழிபாடு செய்து
தரிக்குநல்ல வரம்பெற்றான் தீர்த்தந்தன் னில்மூழ்கித்
தரணி யோர்கள்
அரிக்குபிர மற்குமரி தாயசிவ லோகத்தை
யடைந்து வாழ்வார். (14)
தழைக்குமந்தத் தலத்தா லயத்தினுக்கு மேற்றிசையில்
தரிக்குங் கங்கை
இழைக்குமொரு தீர்த்தமொன் றுண்டாக்கி யதிற்படிந்
தர்ச்சித் தியல்பாய்ப்
பிழைக்கநல்ல வரம்பெற்றாள் அப்புனலில் படிந்தோர்கள்
பிரம கல்பம்
அழைக்குமந்தச் சிவலோகத் தரன்பாத நிழலிலே
அடைந்து வாழ்வார். (15 )
பரிதிபக வான்தனது பாவமெலாம் போக்கவென்று
பாம்பு ரேசன்
நிருதிதிசை யில்தீர்த்த மொன்றுண் டாக்கியதில்
நேராய் .................
கருதரிய சிவபூசை செய்துநல்ல வரம்பெற்றான்
கடல்சூழ் பாரோர்
வரிசைபெற மூழ்கினோர் வெகுகாலம் சிவலோகம்
தன்னில் வாழ்வார். (16 )
விஞ்சுமந்தத் தலத்தால யத்தினுக்கு வடதிசையில்
வெற்பின் மேவும்
வஞ்சியுமை யாள்பெயரால் தீர்த்தமொன் றுண்டாக்கியதில்
மகிழ்ந்து மூழ்கி
நஞ்சடையும் கண்டனைப்போய்ப் பூசைபண்ணி வரம்பெற்றார்
நாளும் அன்பாய்
தஞ்சமென மூழ்கினோர் வெகுகாலஞ் சிவலோகந்
தன்னில் வாழ்வார். (17)
இந்தநம்ப னாலயத்தினுக்குத் தன்பெயரால் வேணுமென்றே
யீசா னத்தில்
சந்திரதீர்த்த மொன்றுண்டாக்கி யதுதன்னில் மூழ்கிசிவபூசை
சாரப் பண்ணி
விந்தவரம் பெற்றானப் புனலில் படிந்தெழுந்தோர்
வேண்டுங் காலம்
அந்திமதி வேணியன்றன் சிவலோக மதுதனிலே
அடைந்து வாழ்வார். (18)
கங்கைமா நதிசூழும் காசிமா நகராளும்
காவ லாளன்
மங்கைபங்கன் கோயிலுக்கு வடமேற்குக் காளிபக்கல்
வகுத்தோர் தீர்த்தம்
அங்கமுற பட்டெழுந்து வரம்பெற்றான் அதில்மூழ்கி
அரன்லோ கத்தில்
திங்கள்கதி ருள்ளளவும் வேண்டியமா வரம்பெற்றுச்
சிறந்து வாழ்வார். (19)
செங்கணான் சேஷனுடன் தன்பெயரால் தீர்த்தமொன்று
திருத்தி மூழ்கி
கங்கையணி சடையானைப் பணிந்துநல்ல வரம்பெற்றான்
கதிக்குங் தீர்த்தங்க
ளங்கம்படிந் தெழுந்தால் அவர்பேறு பேறுரைப்பா
ரார்வின் மேவும்
பங்கயன் பரவுசதா சிவனையடைந் தவனுடைய
பக்கல் வாழ்வார். (20)
ஆறிரண்டு தீர்த்தமந்தத் தலத்தினைச் சூழ்ந்திருக்கும்
அதனில் மூழ்கி
நீறணிந்து நியமஞ்செய் தெள்ளெண்ணெய் பால்தயிர்
நெய்நெல் லிமுளி
கூறியபொன் பட்டாடை தான்மறை யோர்களுக்குக்
கொடுத்த பேர்கள்
பேறதனை யாருரைப்பார் சிவலோக மதுதன்னைப்
பெற்று வாழ்வார். (21)
இந்தவகை தீர்த்தங்கள் பன்னிரண் டவரவர்கள்
இதனிற் றோய்ந்தே
அந்தமறுக்கும் பாம்புரானை பூசைப்பண்ணித் தங்கள்
..........................
தொந்தமறுக்கும் பவங்கள் நீங்கிநல்ல வரம்பெற்றார்
தொடர்ச்சி யான
இந்தவகை யென்றுமுனி வரர்கேட்க நன்றென்றே
யிசைப்பார் சூதர். (22)
தலவிசேடம் முற்றும்.
இரண்டாம் சருக்கம்
விருத்தம் வேறு
பூமியைச் சிரத்தால்தாங்கும்
புயங்கநாயகஞ்சேடன்
தாமியைந் தியந்தோர்பூசை
சாற்றுவாங் கேண்மினென்ன
மாமுனி சௌனகாதி
வாழ்முனி வோரைநோக்கி
ஆமெனச் சொல்வான்சூதன்
அவரெலா மகிழ்ந்துகேட்பார். (23)
துவாபர யுகந்தாந்தன்னில்
சுரரெல்லாம் ஒன்றாய்க்கூடி
திவாகர மயமாம்வெள்ளிச்
சிலம்பினில் வந்துசேர்ந்தார்
அவாவுடன் வாதராசன்
அனந்தனென் றிருவோருக்கும்
தவாவலி நம்மைப்போலத்
தான்படைத் தவராரென்றார். (24)
வாதராசனும் என்போல
வலியுளன் நீயோவென்றான்
ஆதலாலுனை யன்னதும்
ஆதிபலவான் யானேயென்றான்
காதலா லனந்தன்வெள்ளிக்
கயிலையங் கிரிமறைப்பேன்
நீதகர்ந் திடவேபேரின்
நெடுங்கிரி தன்னையென்றான். (25)
ஆயிரஞ் சிரத்தினாலும் கொடுமுடி யாயிரத்தை
ஆயிரம் படத்தினாலே மறைத்துதன் வாலினாலே
மேயதோர் வரையின்வேரை வீழ்ந்திடா வகையாச்சுற்றி
நீயிரும் பலத்தினாலே நெடுவரை பிடுங்கென் றோத. (26)
தன்னிரும் பலத்தினாலே சருகுபோல் வரைகளெல்லாம்
துன்னியே பறக்கவேழாயிச் சூழ்தரு முவரியெல்லாம்
பன்னுநீர் சுவறலானான் பண்ணவரர் நடுநடுங்கி
மன்னிய உகாந்தகாலம் வருதல்போ லடித்தான்வாதம். (27)
அடித்தடித்தாற் அபகரிக்க அனந்தனும் அடைவிடாமல்
படித்தலம் சுமத்தல் போலப் பருவரை யதனைமூட
துடித்திடும் வாதராசன் சோர்ந்துடன் நடுநடுங்கிவெற்பி
னடித்தலந் தன்னில்முழைஞ்சி லங்கொளித் திருளுநாளில் (28)
காசினி யுயிர்கட்கெலாம் கலந்திடும் பிராணவாயு
மாசற அனங்க னெல்லாம் வாங்கி யார்ப்பரிக்க
தேசற வுலகமெல்லாம் சேட்டிபத் திருக்கநோக்கி
வாசவன்முதல் வானோர்கள் மகிழ்வுடன் அனந்தன் முன்போய். (29)
பன்னகத் தரசேயிந்தப் பாரெல்லாம் சேட்டிபத்
தென்னவுந்தன் பால்வந்தோம் இரங்கிநீ யருளவேண்டும்
உன்னிரு பாரிசத்தில் ஒருபுற மொதுங்கென்றோத
அன்னவ னொதுக்கவாத ராசனார் ஆர்ப் பரித்துவந்தார். (30)
வந்ததொரு பாரிசத்தில் வளர்கொடி முடிகள்தன்னை
ஐந்துனோ டிருபதத்தை அடைவுற வேபிடுங்கி
சிந்தினன் புவியின்மீதே சிதறினன் தனைநோக்கி
முந்திய தேவற்கெல்லாம் முதல்வன் முனிந்துபார்த்தான். (31)
அனந்தனை வாதன்தன்னை அலகலென வேநம்பன்
மனந்தனில் முனிவுகண்டு மலரடி வணங்கிப்போற்றிச்
சினந்தனை யொழிந்துயாங்கள் செய்பிழை பொறுத்தியென்ன
அனந்தரும் அவரைநோக்கி கருணையே செய்தானய்யன்.(32)
இருவரும் நம்மைப்பூசை செய்யயிப் பாவம்நீங்கும்
பருவரு முன்னைப்போல வளர்பல முடையீராவீரர்
பொருவரும் பாதாளம்போய் பூதலந் தாங்கலாகும்
ஒருவருமுமக் கொப்பில்லை யென்றனர் உரைக்கும்போதில், (33)
யாங்களெத் தலத்திற்பூசை செய்குவோ முனையென்றோத
பாங்குள மதுரைக்கீழ்பால் பகர்வையை வடபக்கத்து
நீங்களும் பூசைசெய்தால் நிலைபெற்று வாதராசன்
ஆங்கவை நீங்குமப்பால் அனந்தனை மகிழ்ந்துநோக்கி. (34)
பொன்னின்மா நதியிற்றென்பால் புகழ்கும்ப கோணக்கீழ்ப்பால்
மன்னிய அரசிலாற்றின் வடபால் மீகைமேல்பால்
துன்னிய தலமொன்றுண்டு தொல்லை மாநகரில்நீபோய்
என்னைநீ பூசைசெய்தால் இப்பவம் நீங்குமென்றார். (35)
வெள்ளிமா மலையைநீங்கி விளங்குமை யாற்றில்வந்து
தள்ளிய புனல்சூழ்சிந்து துலங்குகங்கையி னீராடி
வள்ளலார் பழனபொன்னி வளர்நதி தென்பால்வந்து
பள்ளமார் வயல்சூழ்கின்ற பாம்புரத் தெல்லைகண்டான். (36)
கண்டனன் பாம்புரத்தைக் களிப்புடன் மகிழ்ந்துநோக்கி
தெண்டென வீழ்ந்திறைஞ்சிச் சிவன்திருக் கோவில்முன்னே
பண்டுள பிரம தீர்த்தம் படிந்துகோ யிலுக்குள்புக்கான்
அண்டர்நா யகனைப்பூசை யாறிரண் டாண்டுசெய்தான். (37)
ஆறிரண் டாண்டுக்கப்பால் மகாசிவ ராத்திரிதன்னில்
வீறிய முதற்சாமத்தில் விளங்கிய கும்பகோணத்
தூறிய கீழ்க்கோட்டத்தில் உயர்சிவ நாகநாதர்க்
கேறிய பூசைசெய்தான் இரண்டெனுஞ் சாமந்தன்னில். (38)
வளருநா கீச்சுரத்தில் மகிழ்சிவ பூசைசெய்தான்
உளமகிழ் மூன்றாஞ்சாமம் உயர்ந்த பாம்புரத்தில்
நளிர்புனற் கங்கைசூடும் நாதனைப் பூசைசெய்தே
அளவிலாப் பாவம்நீங்க அனந்தனும் மகிழச்சியுற்றான். (39)
அய்யன்வெள் விடையின்மீதே அருவரை மங்கையோடும்
பய்யரா வரசன்முன்னே பண்ணவர் திரண்டுபோற்ற
தய்யலார் நடனமாட சாமரை வசுக்கள்வீச
செய்யமா முனிவர் போற்ற சிறப்புடன் வருதல்கண்டான். (40)
அவ்வள வதனிற்சேடன் அடியனேன் செய்தபூசை
எவ்வள வாயினாலும் இரங்கியுன் திருவுளத்தில்
செவ்வையாய் மகிழ்ந்துநாயேன் செய்பிழை யதனால்வந்து
பவ்வமு நீக்கென்றோதி பதந்தனைப் பணிந்துநின்றான். (41)
நின்றவன் றன்னைநோக்கி நீசெய்த பூசைதன்னால்
யின்றக மகிழ்ந்தோம்நீசெய் யிரும்பவம் தானும்நீங்கி
பொன்றிகழ் பாதாளத்தில் பூமியைச் சிரத்தால்தாங்கி
என்றுநீ வாழ்வாயென்ன யியம்பினன் பாம்புரேசன். (42)
சேடனும் பாதாளம்போய் சிரத்தினில் பூமிதாங்கி
நாடொறும் வானோர்போற்ற நயந்தன னென்றார்சூதர்
ஆடவர் திலகமான அருமறை முனிவரெல்லாம்
பீடுபேர் பிரமன்செய்யும் பெரும்பூசை செப்புகின்றார். (43)
நாகராசர் பூசைச் சருக்கம் முற்றும்.
மூன்றாம் சருக்கம்
கமலநான் முகத்தோன்வேதன்
காசினி மாதற்கெல்லாம்
அமைவுறும் அழகுஎன்னத்
தனையெடுத் தொன்றாக்கூட்டி
தமரவா னவர்கள்மெச்சும்
தையலா யளித்தான்பேரும்
திமரற நோக்கிநின்று
திலோத்தமை யென்னசெய்தான். (44)
ஆங்கவ ளிவன்பிதாவென்று அமைவுற வலஞ்செய்போதில்
பாங்கரில் பின்னில்வாம பாகத்தில் முகமுண்டாக
ஓங்குவா னத்திலோட உயர்ஒரு முகமுண்டாக
தீங்குடனிவனென்னைச் செகுத்தனன் பிதாவென்றோட. (45)
ஐந்தலை யுனக்கேதென்று அவர்நக நுதியினாலே
சிந்தவோர் சிரத்தைக்கிள்ள திசைமுகத் தோடும்வீழ்ந்து
பந்தமா முயிர்களெல்லாம் படைத்திடும் தொழிலுமின்றி
வெந்துய ரதனாற்பட்டு வீழ்ந்தனன் புவியின்மீதே. (46)
முனிவரெல் லாம்வந்து முளரிவேந்த னையேநோக்கி
துனிவருங் காரணத்தைச் சொல்லென வினவும்போதில்
நனிதிலோத் தமையென்றோதும் நாரியால் வந்ததென்றார்
இனியிருப் படைப்பு எய்தும் எழிற்சிவ பூசைதன்னால், (47)
என்றுமா முனிவர்கூற எத்தலத் தவனைப்பூசை
சென்றுநான் செய்வேனென்னத் திருந்துகா விரிதென்பாலில்
மன்றலா ரரிசிலாற்றின் வடகரைக் குரோசமொன்றில்
பொன்றிகழ் பணத்தின்சேடன் பூசித்ததல மொன்றுண்டால் (48)
அத்தலந் தன்னில்நீபோய் அரனைநீ அருச்சித்தால்போம்
இத்துய ரெல்லாம்நீங்கும் இசையுயிர் படைப்புமெய்தும்
சத்திய லோகந்தன்னில் சார்ந்துநீ வாணியோடும்
புத்தியாய் வாழலாகும் போமென வுரைத்தாரையர். (49)
நைமிசா ரணியநீங்கி நளிற்புனற் சிந்துவாடி
கைம்மிகாப் புனல்நின்றோம் கங்கைமா நதியுமாடி
மெய்மொழி கோதாவரி யோடிடுங் கிருஷ்ணவேணி.
.......................................... (50)
மற்றுள நதிகளெல்லாம் வருபுன லாடிபெண்ணைச்
சற்றுபா லாறுசெய் யாற்றோடு முகரியாடி
நத்துவெள் ளாற்றில்வந்து நளிர்புன லாடிப்பின்னைத்
தெத்திபரஞ் சித்திரகூட தில்லைமா நகரில்வந்தான். (51)
தீர்த்தங்கள் தன்னில்மேலாஞ் சிவகங்கை தன்னிலாடி
மூர்த்தியம் பலவானன் றான்முறுவலுடன் பணிந்துபோற்றி
ஆர்த்திடும் விருத்தகா வேரிமகா நதியையாடி
பார்த்தீபர் தொழுமாயூரப் படித்துறை தன்னிலாடி. (52)
முன்னிய வழுவூர்மீகை முதிர்ந்தமெய்ஞ் ஞானம்போற்றி
அந்தமில் புகழ்சேர் பாம்புரத் தெல்லையெய்தி
சிந்தையால் முடியால்கையால் சிறந்திட வணங்கிப்பின்னைக்
கந்தமா மலர்சூழ்சோலை கதித்திடும் பதிக்குள்வந்தான். (53)
பாம்புர நாதன்றன்னைப் பரிவுடன் வணங்கிப்பூசைக்
காம்படி சன்னிதானத் தரும்பொய்கை ஒன்றுண்டாக்கி
தேம்புனல் படிந்துயேத்திச் சிவநிய மங்கள்செய்து
காம்பணி தோளாள் வண்டுசேர் குழலிமானை. (54)
ஆனைமுகனை வேளை யடியினை வணங்கிப்போற்றி
வானவர் பாம்புரேசன் மகிழ்தரப் பூசைசெய்து
தேனுலா மொழியாள்வாணி திகழ்பணி விடைகள்செய்ய
ஆனதோ ரோராண்டை அடைவுறச் செய்யுநாளில், (55)
அங்கவன் மனோரதத்தை அடைவுற கொடுக்குமாசி
திங்களில் அபரபட்ச சிவராத்திரி தனில்முற்சாம
துங்கமாம் பூசைதன்னில் தோன்றினன் விடைமேல்வெற்பன்
மங்கையுந் தானும்வானோர் மலர்மழை மாரித்தூவ. (56 )
வேதநீ செய்யும்பூசை விரும்பின முனதுவாஞ்சை
ஓதென வுரைக்கமங்கை ஒருத்தியால் வந்தபாவம்
தீதகற் றிடுவாயென்னை சிருட்டி யுமளிப்பாயென்றான்
தாதுசேர் பவமும் நீக்கி சிருட்டியு முந்தனுக்கெய்த, (57 )
..........................................
..........................................
ஒப்பில்சத் தியலோகத் தமர்ந்துபோய் வாணியோடும்
மெய்ப்பரி சாகவாழ்ந்து மேவின னென்றார்சூதர். (58)
ஆதலால் தேவர்க்கெல்லாம் அதிபதி பூசைசெய்ய
வேதனை பிணியும்நீங்கி விழியோரா யிரமும்பெற்ற
தோதென முனிவர்சொல்ல உகந்துபார்த் தவரைநோக்கி
சூதமா முனிவரன்பாய்ச் சொல்லுவே னென்றுசொல்வார். (59)
பிரம்மதேவர் அருச்சனைச் சருக்கம் முற்றும் .
நான்காம் சருக்கம்
வானவ ரெவற்கும்கோமான்
மறிகடல் கடைந்தநாளில்
ஆனதோர் ரம்பைமாதர்
அனேகராய்ப் பிறக்கக்கண்டு
தானவர் தம்மையெல்லாம்
தனக்கெனக் கொண்டுபோனான்
தேன்மொழி யகலிகைதன்னைச்
சிறந்தகௌதம குருசேர்ந்தார். (60)
ஆங்கவர் தன்மேல்வைத்த
ஆசையால் பாதியிரவில்
தீங்கிலா முனிவன்தன்னா
சிரமத்திற் காகமாகி
பாங்குற காகாவென்னப்
பகர்ந்தனன் தன்னைக்கண்டு
நீங்கினன் முனிவனந்த
நெடும்புனல் தன்னில்மூழ்க. (61)
அண்டம்வாழ் மீனைப்பார்த்தான் அர்த்தராத்திரி ஈதென்றான்
பண்டுசேர் புனலைத்தொட்டான் வாரியே துயிலிதென்றான்
கண்டகா ரணமேதென்று கனன்றுதன் னாசிரமத்தில்
மண்டியே வரும்போதந்த வலாரிதான் அகலிகைதன்னை. (62)
மகிழவே வேண்டிஒத்தை
மாரிச்சாலந் தானேயாகி
திகழவே முன்றிலின்கண்
செல்நுழை வழியினாலே
புகழுமாச் சிரமந்தன்னில்
பூனையொன் றோடிப்போன
இகழவே காகம்கூப்பிட்டு
இயம்பிய தேதுசெய்வாய். (63)
என்றுதான் அகலிகைதன்னை
இயல்புடன் முனிவன்கேட்க
நன்றுநன்றிப் போதென்னை
நயந்துடன் வந்துகூடிச்
சென்றநீர் திரும்பிவந்து
செப்பிய கருமமென்ன
இன்றெனக் கருளுமென்று
இயம்பின ளந்தமாது. (64)
இந்திரன் பதத்தையிச்சித்து
இறங்கிவந் தானேயென்ன
அந்தமில் அவன்சரீரத்து
ஆயிரம் பகமுண்டாக
விந்தமா னதிலேநீயும்
வெஞ்சிலை யாவாயென்றே
அந்தமா முனிவர் சொல்ல
அப்படி யானதன்றே. (65)
வாசவன் மேனியெல்லாம் மன்னிய பகத்தினாலே
தேசழிந் ததுதாநீங்கும் செயலதை யேதென்றெண்ணி
ஈசனைப் பூசைசெய்தால் இத்தனை பிணியுநீங்கும்
மாசிலா தேவலோக மன்னனு மாவோமென்ன. (66)
எண்ணியே பூலோகத்தில் ஏத்த தானபூசை
பண்ணுவ தென்னஆசான் பாதத்தை வணங்கிப்போற்றி
மண்ணின்மேல் சேஷன்பூசை வகுத்திடுந் தலமொன்றுண்டு
நண்ணியே யதனில்நீயே நம்பனைப் பூசைசெய்வாய். (67)
என்னுமந் திரிசொல் கேட்ட இந்திரன் புவியின்மீதே
அன்னமின் னிடையாளிந்தி ராணியா மாதினோடும்
பொன்னக ரதனைநீங்கிப் புவியின்மேல் வந்துபொன்னி
நன்னதித் தென்பால்விண்டுந் தீவட பாலில்வந்தான். (68)
அத்தலத் தெல்லைகண்டான் அவனிமேல் வீழ்ந்திறைஞ்சிச்
சுத்தமா நகரில்வந்து சூழ்ந்தகத்திய தீர்த்தத்திற்
பத்தியாய்ப் படிந்துநீறு பரிவுடன் அணிந்துமெத்த
துத்தியஞ் செய்துகோயில் சூழ்வலஞ் செய்தான்பின்னை. (69)
அந்தஆ லயத்தினுள்ளே அணிகொள்பாம்பு ரேசன்றன்னை
மந்திர தந்திரங்கள் வழாதுஅபி ஷேகஞ்செய்து
சந்தனம் கதம்பம்சாற்றி தாமப்பூ மாலைசாற்றி
தொந்தமா நிவேதனங்கள் துதிபெற அமைந்தபின்னை. (70)
தூபமா நெய்யிற்தீபம் சோடச உபசாரங்கள்
தாபமாம் அரம்பைமாதர் தாம்புரி நடனமெல்லாம்
கோபனன் துயிலில்லாமல் குறைவுறச் செய்தான்பூசை
பாபநாச மாமெங்கள் பாம்புர நாதன்தன்னை. (71)
இப்படிப் பன்னிரண் டாண்டுயிந்திரன் பூசைசெய்யச்
சொப்பமாம் புகழ்சேர்மாசி திகழ்சிவ ராத்திரிதன்னில்
தப்பில்முற் சாமபூசை தான்செய வுளமகிழ்ந்து
ஒப்பில்வெள் விடைமேல்நம்பன் உமையவ ளவளோடும்வந்தார். (72)
கண்டனன் வீழ்ந்திறைஞ்சி கடவுளே போற்றி! போற்றி!
அண்டர்நா யகனேபோற்றி! அருள்பாம்பு ரேசாபோற்றி!
இன்றெனை யாளவந்த யீசனே போற்றி! போற்றி!
வண்டுசேர் குழலாள் சேரும் வாமபா கத்தாய்போற்றி! (73 )
என்றெனத் துதிகள் செய்யும் இந்திரன் பக்கம்சென்று
நன்றென்று நின்பூசைக்கி நாம்உள மகிழ்ந்தோம் உன்மேல்
மன்றின்று குறிக்கவேணும் விழியோ ராயிரமாகி
இன்றென்று கருணைசெய்தான் எனவுரை சூதன்செய்தான். (74 )
பின்னரும் சூதன்பாதம் பேர்பெறு முனிவரெல்லாம்
பன்னியே வணங்கிப்போற்றி பராபர உமையாள் பூசை
இன்னமுஞ் சொற்றியென்ன இயம்பின னதனைக்கேட்டு
நன்னய மோடுவெற்பின் நங்கைசெய் பூசைசொல்வாம். (75 )
தேவேந்திரன் பூசைச்சருக்கம் முற்றும்.
ஐந்தாம் சருக்கம்
கயிலைமால் வரையின்மீதே கண்ணுதல் நம்பன்தானும்
அயில்விழி யுமையும்வானோர் ஆனமுப் பத்துமூவர்
செயலறு முனிவோரெல்லாம் சேவடி திரண்டுபோற்ற
இயல்புற இருந்தநாளில் இருகண்கள் புதைத்தாளம்மை. (76)
அம்மைகண் புதைத்தலோடும் ஆரிருள் மூடயெங்கும்
செம்மைசேர் முனிவோருக்கும் தேவோருக்கும் மற்றோருக்கும்
வெம்மொழி தந்தவேதம் விதித்திடும் தொழில்சிதைந்தே
எம்மைவிட்டுப் போவென்று இனிதற மொழிந்தானம்பன். (77)
நம்பனா லினிதலோடும் நாரியும் நடுநடுங்கி
உம்பர்நா யகனைப்போற்றி யொருபிழை பொறுத்தியென்ன
தம்பிரான் கமலப்பாதம் சரணென வீழ்ந்திறைஞ்சி
பம்பரம் போலத்தேகம் பதைப்புற ஒடுங்கிநின்றாள். (78)
உமையவள் தன்னைநோக்கி உயர்கயி லாசந்தன்னில்
எமையினிப் பூசைசெய்தால் இப்பாவம் நீங்குமென்றார்
அமையுமென் பூசைசெய்ய வத்தலமெது சொல்லென்று
இமையமா துரைக்கச்சம்பு யெனுமொரு தீவுதன்னில் (79 )
காவிரி யாற்றின்தென்பால் கருதுமீகைக்கு மேல்பால்
மாவிரி அரிசிலாற்றின் வடபால்நன் னிலத்தின்கீழ்பால்
பூவெலாந் தாங்க ... பொ... வர ஆகஞ் சேடன்
ஆவகை பூசைசெய்த அற்புதத் தலமொன்றுண்டால். (80 )
அத்தலத் திருப்பேரேதென் றம்மைதான் வினவும்போதில்
மெய்த்தல மதுதிருப் பாம்புரமென விளம்பிப்போவென்
றுத்த மனுரைத்தவப்பால் உயர்கயி லாயம் நீங்கி
..............ஏழிற் சிந்து மானீராடி .................................(81)
..........................................
கமைபெறு கங்கையாடி காவிரி நதிநீராடி
தவமிது தனக்கேயாகத் தழைத்தபாம்பு ரத்திலெல்லை
அமைவுறக் கண்டாள்காண் அன்புடன் பணிந்தாளம்மை. (82)
சன்னிதி முன்னர்வந் தழைத்திடும் பிரமதீர்த்தம்
துன்னிய தீர்த்தமாடி சூழ்திருக் கோயில்தன்னுள்
மன்னிய பாம்புரேசன் மலரடி வணங்கிப்பின்னை
மின்னிய அபிஷேகங்கள் விதிப்படி செய்தபின்னை. (83)
பாலனந் தூபதீபம் பரிவுட னமைத்தன்பாக
ஆலமர் மிடற்றினானை யாறிரண் டாண்டுக்கப்பால்
ஏலவே பூசைசெய்தே எழிற்சிவ ராத்திரிக்குள்
நாலெனுஞ் சாமப்பூசை நடத்திடும் போதிலப்போ. (84)
ஏறெனும் விடைமேல்தோன்றி இமையவர் திரண்டுபோற்ற
கூறுடை யுமையாள்பூசை குளிர்ந்தது நமக்கென்றோதி
ஆறுடை முடியாநீசெய் அரும்பவம் நீங்கிற்றென்பால்
பேறுட னிருத்திபின்பு பிரியமுடன் பேசினனால். (85)
அப்படி நம்பன்சொல்ல அம்மையு மகிழ்ந்துபோற்றி
மெய்ப்பொடு விடையின்மீதே விண்ணவர் திரண்டுபோற்ற
தப்பிலா மறையோர்போற்ற சந்தத மகிழ்வினோடும்
செப்பிய கயிலாயத்திற் சிவனுடன் சிறந்தாளம்மை. (86)
என்னமா முனிவர்கூற இசைமுனி வோருக்கெல்லாம்
சொன்னவா றழகிதென்று சூதரைத் தொழுதுபோற்றி
இன்னமோர் கதைசொல்லென்ன எழிற்குறு முனிவன்பூசை
தன்னையே சொல்லலுற்றார் சவுனகா திபர்கள் முன்னே. (87)
பார்வதி பூசைச் சருக்கம் முற்றும் .
ஆறாம் சருக்கம்
அகத்தியர் பூசைசெய்வ தாங்கதை யுரைப்பாங்கேண்மின்
மிகுத்தது கயிலைவெற்பின் விண்ணவர் முனிவர்கூடி
தொகுத்திட விருந்தபோதில் சுரர்முனி வோர்களெல்லாம்
உகைத்திடுங் கீர்வாணத்திற் கொப்பில்லை யென்றுசொன்னார். (88)
அந்தவாய் மொழியைக்கேட்டு அகத்திய முனிவன்தானும்
இந்தமா கிரந்தத்துக்கு ஏற்றதோர் பாஷையுண்டாம்
விந்தையாய் வளருமாயா விலாசத்தி னாலுண்டாகும்
சிந்தையா லதனைமாலும் சிவனுமங் கீகரிப்பார். (89)
இத்தனை பேருமன்பா யிசைத்திடும் வார்த்தைக்கொவ்வா
உத்தரஞ் சொன்னாயன்றோ உன்னுடைத் தவமுமாறி
சுத்தமா மூகனாகி சொன்மக மேருவுக்குப்
பத்திர வடபால்நீபோய்ப் படுதியென் றுரைத்தாம்வஞ்சம். (90)
அப்படி மகமேருக்குத் தாருரு வதினிலேயதி
செப்பணி முலையாள்பாகன் திருவடி வணங்கிப்போற்றி
ஒப்பிலா முனிவர்வானோர் உரைத்திடுஞ் சாபம்போக
எப்படி யென்றுபூவில் எழுதிய முனிவன்கேட்டார். (91)
நாவலந் தீவில்மேவி நாரணன் பூசைசெய்யும்
மாவிழி மிழலைதன்னின் வடகீழ் மூலைதன்னில்
பூவெலாஞ் சிரத்திற்றாங்கும் பொற்பணி ராசன்சேஷன்
ஆவலாய்ப் பூசைசெய்யும் அத்தல மொன்றுண்டால். (92)
அந்தத்தலத்திற் சிவலிங்கம் அதனைஓராண் டர்ச்சித்தால்
இந்தத்துயர மூகமும் எழில்சேர்தவமு மிகவுண்டாம்
சந்தத்தமிழென் றொருபாஷை தானுண்டாக்கி மலையத்தில்
சிந்தைக்குதக்க சிவபூசை செய்வாயென்று உரைத்ததனால், (93)
மேருமால் வரையை நீங்கி விளங்கிய நிடதம்நீங்கி
காருலா மேககூடம் கதித்திடும் இமயம்நீங்கி
வாருலா முலையாளெங்கள் வண்டுசேர் குழலாளோடும்
தேருலா வியதோர்வீதி திருப்பாம் புரத்தில்வந்தார். (94)
குறியதோர் முனிவன்வந்து குளிர்புனல் பிரமதீர்த்தம்
நெறியுடன் பணிந்துமூழ்கி நீறுமெய் நிறையப்பூசி
பொறியர வரசன்பூசை பண்ணிய லிங்கமுன்போய்
பிறிதிலா வன்பினோடும் பிரியமாய் வணங்கிப்போற்றி. (95)
ஓராண்டு பூசைசெய்தே உவப்புட னுறையும்போதில்
சீராண்ட புகழ்சேர்மாசி திங்களில் சிவராத்திரிக்குள்
பாராண்ட முனிவரெல்லாம் பணிமுதற் சாமபூசை
வாராண்ட முலையாள்லோபா முத்திரை மனைவியோடும். (96)
செய்யும்பொற் றரகுநம்பன் திருவுள மிகமகிழ்ந்து
மெய்யன்பு தரவேவந்து வெள்விடை மீதிலேறி
மய்யொன்று கண்ணானெங்கள் வண்டுசேர் குழலாளோடும்
அய்யன்முன் வந்துநின்றான் அடியினை வணங்கிப்போற்றி. (97)
மூகமும் நன்றாய்ப்போக்கி முத்தமிழ் தனையுண்டாக்கி
ஆகிய அறிவுதந்தோம் அய்ய நீ மலைவெற்பில்
போகிய தமிழுண்டாக்கப் புகுவையென் றுரைத்தானரன்
ஆகையால் மலையவெற்பின் அடைந்தனன் முனிவ னம்மா. (98)
இத்திற முனிவன்பூசை யென்னவே சூதன்சொல்ல
அத்திற மதனைக்கேட்டே அகமகிழ் முனிவோரெல்லாம்
பொய்த்திற மில்லாயீசன் பூசையின் மகிமைகேட்டோம்
வித்தக அங்கிபூசை விளம்பென விளம்பலுற்றான். (99)
அகத்தியர் பூசைச் சருக்கம் முற்றும் .
ஏழாம் சருக்கம்
அக்கினி பூசைச் சருக்கம்
தக்கனார் யாகசாலை தனில்அவிர் பாகந்தன்னை
புக்கவோர் சுரருக்கெல்லாம் புகழ்ச்சியாய்க் கொடுத்தகையை
மிக்கதோர் சமரில்வேள்வி வீரபத்திரன் கைவாளால்
ஒக்கவே தறித்துக்காலால் உதைக்கவே யுருண்டுவீழ்ந்தான். (100)
வீழ்ந்தவக்கினி தேவன்தான் மீளவும் எழுந்திருந்து
தாழ்ந்தடி வணங்கி அய்யர் சகித்திடு மென்றுபோற்ற
சூழ்ந்திடுந் தாரகத்தாலே துலங்கியக் கயிலைவெற்பில்
போழ்ந்துநீ சிவனைக்கேட்டு பக்கத்துநீ ..... ன் றார். (101)
வீரனன் றுரைத்தவார்த்தை விரும்பியே செவியிற் கேட்டு
தாரமாம் வெற்பின்மேவி சங்கரன் தாளில்வீழ்ந்தான்
ஆரணி சடையாயிப்போ அடியனேன் செய்பிழைக்குக்
காரணமாகநீயே கற்பிக்க வேண்டுமென்றான், (102)
ஆங்கவ னுரைத்தபோதில் அங்கியே வாராயெம்மை
நீங்கிய சுரருக்கெல்லாம் நிறையஅவிர் பாகமீந்தாய்
ஆங்கவை தன்னால்வீரன் அங்கையைத் தறித்துவிட்டான்
யீங்கிவை நல்லவண்ணம் யியம்புவாம் புகலக்கேட்டி. (103)
நாரணன் பூசைசெய்யும் நற்றவ மிழலைக்கீழ்பால்
பாரெலாம் புகழுமீசா னத்தினில் பணிசெய்பூசைக்
காரணத் தலமொன்றுண்டு கதித்திடுந் தலத்தின்மேவிச்
சீருடன் எமைப்பூசித்தால் தீருமிப் பாவமென்றான். (104 )
எனஅவ னுரைத்தபோதில் எழிற்கயி லாயம்நீங்கி
மனகதி யதனால்வந்து வளர்பொன்னி நதிநீராடி
பனகரா சன்செய்பூசை பாம்புரத் தலத்தினெல்லை
இனிதினிற் கண்டான்காண எழிலுடன் வணங்கிப்போற்றி. (105)
கோயில்முன் வந்துபிரம தீர்த்தத்திற் குளிர்நீராடி
நேயமா நியமஞ்செய்து நீறு நிறையப்பூசி
மாயவன் தங்கையெங்கள் வண்டுசேர் குழலாள்மேவும்
நாயகன் முன்னேவந்து நளினமா வடியில்வீழ்ந்தான். (106 )
எழுந்திருந்து போற்றி யீசன்வாழ் கோயில்புக்கு
செழுந்தி .... மாம் பிரமதீர்த்தங் கொண்டபி ஷேகித்து
கொழுந்துடன் முல்லைவாச்சி குளி... காலஞ் சாற்றி
விழுந்திடா தணியுஞ்சாந்தம் மேனியில் நிறையச்சாற்றி. (107 )
தூபதீ பங்கள் மேலாஞ் சோடச வுபகாரங்கள்
தாபமில் லாமற்செய்து தைய்யலர் நடனம்காட்டி
மாபவ மகற்றும்எங்கள் வண்டுசேர் குழலைப்பூசி
தேபவ மகற்றிமூவாண் டித்தலத் துறையுநாளில், (108)
மாசிமா தத்தில்வந்து வளர்சிவ ராத்திரிதன்னில்
தேசிலா விரண்டாம்சாமம் சிவபூசை செய்யும்போதில்
மாசிலா துளமகிழ்ந்து வண்டுசேர் குழலாளோடும்
ஈசனார் பாம்புரேசன் எழில்கொள்விடை மேல்வந்தான். (109 )
வந்தவன் றன்னைக்கண்டு மலரடி வணங்கிப்போற்றி
யெந்தனருள் இறைவாநம்பா யான்செய் பிழைபொறுத்து
விந்தையாய்ப் பூசைசெய்யும் விதிவழி அறிவாயென்னைப்
பந்தமாம் பூசைகொண்டாய் பத்தனைக் காக்கவேண்டும். (110 )
என்னவே யுரைத்தபோதே இலங்குவெண் ணீறால்தோன்றும்
மன்னவன் பாம்புரேசன் மகிழ்ந்தனம் உன்பூசைக்குச்
சொன்னவாறு அவிர்பாகத்தைச் சுவாகாவின் கையில்வாங்கி
அன்னவர்க் கெல்லாம்நீயும் அவளுமா யளித்தியென்றான். (111 )
நல்லதென் னுயிர்க்கொண்டு நலங்கொள்தென் திசையில்மேவி
சொல்லரும் புகழ்சேர் சுவாகாதேவி நற்சுதையினோடும்
மெள்ளவே யன்பருந்தி விளங்கின னங்கியென்றால்
நல்லதோர்க் கதையைஇன்னும் நவிலென்று முனிவர் சொன்னார். (112 )
அக்கினி பூசைச் சருக்கம் முற்றும் .
எட்டாம் சருக்கம்
தலைவனாய் வேதன்பெற்ற தனையர்கள் பதின்மருக்குள்
நிலைபெறு தக்கனான் நெறியிலான் சரிதைசொல்வோம்
உலைவிலா ததனைக்கேட்டிங் குளமகிழ்ந் திடுவீரென்ன
துலைவிலா நட்புக்கேபெற்ற சூதமாமுனி வன்சொன்னான். (113 )
அவன்பெறும் புதல்விநட்சத் திரங்களாம் இருபத்தேழைத்
தவம்பெறுஞ் சந்திரனுக்குத் தாரமாய்க் கொடுத்தான்பின்னை
உவந்திட்டு மகிழ்ந்துபெற்ற உமையவள் தன்னையன்பால்
சிவன்றனக் களித்தான்மெத்த சித்தமே களிகள்கூர்ந்தான். (114 )
சுமக்குமெட் டானைநாகம் சூழ்கடல் சக்கிரவாளம்
அமைப்புறு வானோர்நாகர் அவனியி லுயிர்களெல்லாம்
இமைப்பினில் படைத்தான்வானோர் எவர்களும் பணியநின்றான்
நமக்கினிச் சரியாரென்ன நலம்பெற மகிழ்ந்து வாழ்ந்தான். (115 )
அச்சுவ மேதயாகம் அடைவில்நாம் செய்வோமென்ன
கச்சிளம் கொங்கைமேவும் கயிலைமேல் வரையில்வந்தான்
நச்சரா வணிந்தகீர்த்தி நம்பனார் கோயில்புக்கான்
இச்சையாய் வந்திரோவென இனிதுட னிசைத்தானையன். (116 )
அய்யன்வாய் மொழியைக்கேட்டான் அழகிதே யாகுமென்றான்
செய்யுமா முனிவுதோன்ற திரும்பிப்பா ராதுபோனான்
வைய்யகந் தன்னில்வந்து வளம்பெற யாகஞ்செய்ய
பையவே சொல்லிவானிற் பண்ணவன் தன்னைக்கூடி. (117 )
யாகசாலையு மைந்நூறு யோசனை தனிலுண்டாக்கி
ஆகம்வாழ் சுரரையெல்லாம் அங்கங்கே தானழைத்து
மாகம்வாழ் வைகுண்டத்தில் மாயவன் பிரமனோடும்
நாகலோ கத்துள்ளோரை நலம்பெற அழைத்தானம்மா. (118 )
அழைத்துவந் தங்கிகுண் டத்தினருகில் இருத்தித்தானும்
கிழக்குநன் முகமாம்மேலாம் கிரியைகள் செய்யும்போதில்
மழைப்பெருங் கூந்தலம்மை வளர்தக்கன் யாகத்துக்கு
விழைப்போடு போவோமென்ன விளம்பின னதனைக்கேட்டான். (119)
............................................
....னமைய னழைக்கவில்லை நான்வரல் தருமமல்ல
இமையமா மயிலேநீபோய் என்னவே யிசைத்தான்கோமான்
அமைவுறு கயிலாயத்தின் அரனிருப் பதனைநீங்கி. (120)
அம்மைதான் வருதலோடும் அவமதித்தா ரெல்லோரும்
செம்மையில் லாததக்கன் திரும்பிப்பா ராதிருந்தான்
வெம்மையில் மிகவருந்த மிளிர்கயி லாயந்தன்னில்
கைம்மறி கொண்டகோமான் களி ... பம் இருக்கைச்சேர்ந்தாள். (121)
சேர்ந்தவள் நடந்ததெல்லாம் செப்பிய போதுமய்யர்
காய்ந்ததி கோபமுண்டாய்க் கனல்விழி தனைவிரித்தார்
காந்தியே விழியில்வீழ்ந்து கதித்திடும் வீரபத்திரன்
போந்தெமை யழைத்ததேது புகறியால் நின்றுசொன்னார். (122)
நீயவன் தன்னிலேபோய் நிறையாக சாலைபுக்கு
போயின வமரர்தம்மை பொருதுடல் துணித்துவீழ்த்தி
சேயொளி தக்கனார்தம் சிரத்தினால் துணிந்துவீட்டி
மாயிருள் கயிலாயத்தில் வாவென நம்பன்சொன்னான். (123)
மகம்புரி சாலைதன்னில் வந்துதான் புகுந்துவீரன்
உகம்பயில் உகாந்தமென்ன உருட்டியே துணித்துவீட்டி
சகம்புகழ் தக்கனார்தம் தலையினை யுருட்டிவெட்டி
நகம்பெறு கயிலாயத்தின் நாதன்முன் வந்தான்வீரன். (124)
முனிவினை யகற்றிநாதன் முதல்வா னவரையெல்லாம்
தனித்தனி கோபமென்றோதி தக்கனாம் யீனனுக்கு
வனமுள தலையீயாமல் வருடையின் தலையைவொட்டி
இனிதினிற் கொண்டுவாவென் றிசைத்தனன் எங்கள்நாதன். (125)
அவ்வகைத் தக்கன்தானும் கேட்டினிற் தலையையொட்டி
செவ்விய வானோர்தம்மை திரும்பவே தானுண்டாக்கி
எவ்வழி யோரும்போற்ற இரசத வெற்பன்வந்தான்
அவ்விய நெஞ்சன்தக்கர் அரனடிதன்னில் வீழ்ந்தான். (126)
விழுந்தனன் தக்கன்யான்செய் வெம்பிழை பொறுத்தியென்ன
தொழுந்தோறும் வானோர்கோமான் துதியினால் மகிழ்ந்துநோக்கி
எழுந்திருந்து தக்காநீபோய் எம்மைநீ பூசைசெய்தால்
விழுந்திடும் இந்தப்பாவம் விளங்குவா யொளிபெற்றென்றான். (127)
எத்தலத் துனையான்துதிப்ப தென்றுநின் றிரங்கியேங்கி
வித்தக தக்கன்கூற வேதநா யகனுஞ்சொல்வான்
பத்தியாய்ச் சேஷன்பூசை பண்ணிய தலமொன்றுண்டே
அத்தலந் தன்னில் நீபோய் அருச்சனை செய்வாய்நம்மை. (128)
நீசெயும் பாவம்நீங்கும் நிருமலன் ஆவைமண்மேல்
தேசுமெய்ப் புகழுமுண்டாம் செல்லெனக் கோமான்சொன்னான்
ஆசிலாப் புகழ்சேர்தக்கன் அடர்கயி லாயம்நீங்கி
வாசனை வந்தகானம் வளைந்தகா விரிக்கண்வந்தான். (129)
காவிரி நதியிலாடி கதித்தபாம் புரத்தில்வந்து
தேவரதி தேவன்மன்னும் திருக்கோயில் முன்னம்வந்து
பூமியில் வல்லபிரம புட்கரணி யில்நீராடி
நீவர வெண்ணீறுசாற்றி நியமங்கள் முடித்தபின்னர். (130)
பாம்புர நாதன்கோயில் பணிவிடை யெல்லாம்பார்த்துத்
தேம்பொழி மொழியாள்வண்டு சேர்குழல் முன்னர்வந்தே
ஆம்படி அமயநோக்கி ஆறிரண் டாண்டுபூசை
நாம்புரிவோ மென்றெண்ணி நளிர்மணிக் கோயில்புக்கான். (131)
கோயிலுக்குட் புகுந்தான் குளிர்சிலம் படியைப் போற்றி
வாயிலிற் பூசை பண்ணி .........................................
......................................................................மாய மொன்றி
........................ல்லாக்கணேசன் வயிரங்கள் பூசைபண்ணி. (132)
இந்தவகையாற் பன்னிரண்டாண்டு தக்கனார் பூசைசெய்நாளில்
சிந்தை மகிழ்வாய் வருமாசி திங்கள்சிவ ராத்திரிநாளில்
அந்தமுள்ள நாலாஞ்சாமம் அதனிற்கடவுள் உள்மகிழ்ந்து
விந்தைபெற விண்ணவர்சூழ் விடையிலேறி வுமையோடும். (133)
நீசெயும் பூசையன்பாய் நிறைந்துநாம் உளமகிழ்ந்தோம்
நீசெய்பாசமும் பவமும் நீங்கி பதிதனிலே இதன்மேல்
வாசவன் முதலாம்வானோர் மலரடி வணங்கிப்போற்றி
ஆசில்லா உயிர்கட்கெல்லாம் அடைவினில் படைப்பாயென்றார். (134)
ஈசனார் வரங்கொடுத்தார் எழில்சத்திய லோகந்தன்னில்
நேசமாய்ப் புகுந்துவானோர் நிறையவே திரண்டுபோற்ற
மாசிலா உயிர்கட்கெல்லாம் வகைவகை யாகப்படைத்துப்
பேசரும் புகழேபெற்று பிரியத்துடன் வாழ்ந்தானம்மா. (135)
தக்கனார் செய்தபூசை தன்னையே சொன்னார்சூதர்
அக்கணத் தடியில்வீழ்ந்தார் அன்பினில் வணங்கிப்போற்றி
இக்கதை கேட்டோமையா எழிற்கங்கை பூசைசெய்த
அக்கதை உரையென்றோத அதைச்சொல்வார் முனிவர்சூதர். (136)
தக்கன் பூசைச் சருக்கம் முற்றும்.
ஒன்பதாம் சருக்கம்
வையகத் தோர்களெல்லாம் மகிழ்வுறச் செய்தபாவம்
செய்யதானவர் அரக்கர் செய்தபாவம்
பையவா னவர்கள் நாகர் செய்திடும் பாவமெல்லாம்
எய்திடும் என்பால்தோய்ந்தால் என்றென திடத்தில்சேரும். (137)
இத்தனை பாவ மெல்லாம் என்னிடந் தன்னில்சேர்த்தால்
மெத்தலைச் சுமையாமென்றாள் விரும்பிய பொறுக்கப்போகா
அத்தலைப் பவங்கள்தீர ஆம்வகை யேதென்றெண்ணி
உத்தம கைலாயத்தில் உயிர்ந்திடும் கங்கைபோந்தாள். (138 )
போந்தவள் நம்பனார்தம் பொன்னடி தன்னில் வீழ்ந்து
தேய்ந்திடு வெண்பிறையைச் சூடும்திகழ் சடையான்யென்பால்
தோய்ந்திட வந்தபேர்கள் செய்திடும் பாவமென்னால்
ஆய்ந்திடப் பொறுக்கபோகா அதற்குநீவகை சொல்லென்றாள். (139)
சம்புதீவி லேபோய் தழைத்தகா விரிக்குத்தென்பால்
வம்புலா வரிசில்லாற்றின் வடபால்மீகைய்க்கு மேல்பால்
வெம்பலா புகழ்சேர் வீழிமிழலை யீசானத்தில்
நம்பனார் புகழ்கயத் தொன்றுநற்றல மொன்றுண்டாமால். (140)
அத்தலந் தன்னில்சேடன் அயன்அமரர்க் குந்தன்
பத்தனுந் தக்கன் பூசை பண்ணியே பவங்கள் தீர்ந்தார்
மெய்த்தவத் தகத்தில்நீபோய் விரும்பியே பூசைசெய்தால்
சுத்தியா யுன்மேல்வைத்த தோஷமும் தீருமென்றான். (141 )
தீருமென்றா ரவிர்கங்கை தென்புற மதனிற்மேவி
சாரும்புனல் காவேரி தானுறை மாயூரத்தில்
ஆருமைப் பசியின்மாத முப்பது மவணிருந்தே
சேருமிக் கார்த்திகையாம் திங்களின் வந்துசேர்ந்தான். (142)
பாம்புரந் தன்னில்வந்து பணிராசன் பூசைசெய்யும்
மேம்படும் பாம்புரேசன் விளங்குசன்னதி முன்வந்து
தீம்பறு மவனநோக்கித் திருவடி வீழ்ந்திறைஞ்சி
தாம்புகல் தோத்திரங்கள் சாற்றியங் கிருந்துபின்னர். (143)
பிரமதீர்த்தத் தில்மூழ்கி பெருமைசேர் திருக்கோயிற்குள்
மருவியே வலமுஞ்செய்து வண்டுசேர் குழலைப்போற்றி
சொரிபுனற் கங்கையென்னும் தூயவள் பாம்புரேசன்
திருவடி பூசைசெய்யச் சினகர மதனுட்புக்காள். (144)
புக்கனள் அதன்பின் சேஷபுரீசன் தனைபூசிக்க
மிக்கதோர் எண்ணெய்ப்பால்தேன் வீங்கிள நீர்பழங்கள்
தக்கசந் தனங்கற்பூரம் தான்முதல் திரவியங்கள்
ஒக்கவே கொண்டுவந்தார் உயரபி ஷேகஞ்செய்தார். (145)
செய்தபின் பரமானத்தை சிறக்கவே நிவேதனஞ்செய்
தய்யனு மகிழ்ச்சியாக வணிதூப தீபங்காட்டி
கொய்தம லரின்மாலை குளிர்ச்சிசந் தனம்சாற்றித்
துய்யமா முனிவர்போற்ற சோடச உபசாரஞ்செய்தாள். (146)
இவ்வகை யீரெட்டாண்டி னியல்பினாற் பூசைசெய்து
செவ்விய புகழ்சேர்மாசி திங்கள் சேர் சிவனின்ராத்திரி
வவ்விய ரெண்டாஞ்சாமம் வரைபூசைச் செய்யும்போது
நவ்வியேந் தியதோர்செங்கை நம்பனார் மிகமகிழ்ந்து. (147)
நீசெயும் பூசைநெஞ்சம் நிறைந்துளம் மகிழ்ந்தோம்
நீமுன் பேசியபாவ மெல்லாம்பின்ன சின்னங்களாக
மாசற முன்னைப்போல் வருந்திநம் மிடத்திலென்ன
ஈசனுங் கருணைசெய்தா னிடபத்தில் உமையாளோடும். (148)
தேவர்கள் எவரும்போற்ற திசைமுகன் துதிக்கயிந்த
மாவரம் பெற்றுக்கங்கை வளர்சடாட் வியன்மீதே
தாவியே மகிழ்ச்சியோடும் தனதுள மகிழ்ந்திருந்தார்
ஆவரை யென்னச்சூதர் அறைந்தனர் முனிவோர்க்கெல்லாம். (149 )
இன்னமோர்கதை சொல்லென்ன இயம்பியே சவுனகாதி
மன்னிய முனிவர்சூதர் மலரடி வணங்கிப்போற்றி
பின்னையும் அவரைநோக்கி பிரியமுடன் நேசஅன்பாய்
நன்னய மோடுவெய்யோன் நவிற்றிய பூசைசொல்வாம். (150 )
கங்கை பூசைச் சருக்கம் முற்றும் .
பத்தாம் சருக்கம்
சூரிய னுலகமெல்லாம் துலங்கவே விளங்கவேண்டி
யாரவர் நமக்குச்சோதி யளிப்பவ ரெவரென்றெண்ணி
பாரினி லிழிந்துமேலாய்ப் பகரநைமி சாரண்யத்தில்
ஆரிய முனிவர்தம்மை யடியினை வணங்கிக்கேட்டார். (151)
கேட்டமா முனிவரெல்லாம் கிளர்த்திய வியாசர்செப்பென்
றாட்டுரை வணங்கிஅய்யர் தபணன்வந் தென்னைக்கேட்டான்
நாட்டமா யவன்றனக்கு நல்லதோ ரொளியுண்டாக்க
காட்டிய உபாயநீயே கழறென கேட்கலுற்றான். (152)
அவ்வுரை தன்னைக்கேட்ட வியாசமுனிவ னன்பாய்ச்
செவ்விய கதிரோன்நீபோய் சேஷன்பூசனை தலத்தில்
நவ்வியை யேந்துஞ் சேடபுரிசுரன் நளினபாதம்
வவ்வியே பூசைசெய்தால் வளரொளி தானுண்டாகும். (153)
அதுவலா லுன்னைநோக்கி அவனியுள்ளோர் களெல்லாம்
வதுவையாய்த் தினமும்உன்னை வணங்கியே நித்தம்வாழ்வார்
சதுர்முகன் பூசைசெய்யும் தலமத் தலத்தில்போவென்
றிதுவெலாஞ் சொன்னார்வியாசர் இருள்வழி யெழுந்துபோனார். (154)
காசிமா நதியில்வந்து கங்கைமா நதிநீராடி
தேசிகன் தருங்காவேரித் தென்கரை மாயூரத்தில்
ஆசற வந்துநம்பன் அடியிணை தன்னைப்போற்றி
மாசகற் றிடவேமல்கும் பாம்புரந் தன்னில்வந்தான். (155)
சேடனார் பிரமன்பூசை செயுந்தல மிதுவோவென்று
நாடியத் தலத்தில்வந்து நலமுற வலமுஞ்செய்து
தேடரும் பிரமதீர்த்தஞ் சிறந்திடும் புனலில் மூழ்கி
நேடரு நீறுபூசி நியமங்கள் முடித்தபின்னர். (156)
ஆலயந் தன்னில்புக்கான் அவன்பணி விடைகளெல்லாம்
சாலவே மகிழ்ச்சியோடும் தன்னிரு கண்ணால்நோக்கி
ஆலமர் மிடற்றான்கோயில் அன்புடன் வலமுஞ்செய்து
மாலுடன் சினகரத்துள் வந்துமே புகுந்தான்வெய்யோன். (157)
சினகரன் தன்னில்வி சேடன் பூசித்தலிங்கம்
மனமகி ழுறவேநோக்கி மலரடி வணக்கம்செய்து
பனகபூ ஷணனையெங்கள் பாம்புர நாதன்தன்னை
தினமோராயிரம் பூக்கொண்டு சிறப்புடன் பூசைசெய்தான். (158 )
பன்னிரண் டாண்டுஇந்தபடி யோராயிரம் பூக்கொண்டு
தன்னிரண் டெனுங்கை யாலேதானருச் சிக்கும்நாளில்
மின்னுசித் திரையின்திங்கள் விளங்கிய பூசனைக்குள்
மன்னிய உச்சிக்காலம் மலரோரா யிரமும் கொண்டு, (159)
எண்ணெய்பால்தேன் அக்காரம் இளநீர் வாழைப்பழங்கள்
வெண்ணெய்மா முதலாயுள்ள விளைதிர வியங்கள் கொண்டு
பண்ணினா னபிஷேகங்கள் பகர்சகத்திர நாமத்தால்
தண்ணெனும் ஆயிரம்பூ சாற்றியே பூசைசெய்தான். (160 )
துன்னு மாயிரம் விளக்குத்தூபதீபங்கள் காட்டி
......................................
பன்னுமாயிர நாமத்தால் பகர்ந்திடுந் தோத்திரங்கள்
சன்னதி முன்னேசொல்லி தனதுளம் குழைந்து நோக்கி, (161)
தாவுவெள் விடைமேல்நம்பன் சத்தியா முமையாளோடும்
மேவும்விண் ணவர்கள்சூழ வேதமாம் முனிவர்போற்ற
மாவரம் பையர்கள்பாட வசுக்கள்சா மரையிரட்ட
ஆவலாய் வந்துநின்றான் ஆதவன் வணக்கஞ்செய்தான். (162)
தவம்நீ செய்யும்பூசை சந்தோஷ மாச்சுதென்று
சிவனுமக் கென்னவேணுஞ் செப்புதி யென்றபோது
கவனமா இரதத்தினேறி கதிரோரா யிரத்தினாலே
அவனியை விளக்கவேண்டும் அவரம் யெனக்கீயென்றான். (163 )
தந்தன முனக்கேயென்று சம்புவு மறைந்துபோனான்
சிந்துவுக் கப்பால்வைகும் சிறந்தசக்கிர வாளத்தில்
உந்திய பசும்பொன்மல்கும் ஒற்றைமாப் புரவித்தேர்மேல்
அந்தரந் தன்னிலேகி அவனியை விளக்குவோமென்றான். (164 )
சூதமா முனிவன்சொல்லத் துதிமுனி வோர்களெல்லாம்
பாதக மெவையும் நீங்கும் பாக்கிய மடைந்தோரப்பால்
ஓதுமோர் சரிதையென்ன உரைத்தனர் சவுனகாதி
மாதவ ரவர்கள்கேட்க மனமகிழ்ந் திடவோசொல்வான். (165 )
சூரியன் பூசைச் சருக்கம் முற்றும்.
பதினொன்றாம் சருக்கம்
சந்திரன் பூசைசெய்வ தாங்கதை யுரைப்பக்கேண்மின்
முந்துறு சௌனகாதி முனிவரே என்றார்சூதர்
அந்தமா மிதுவேயென்ன அடியினை வணங்கித்தத்தஞ்
சிந்தையுங் குழைந்துகேட்பார் சிறப்புடன் சொல்வார்சூதர். (166)
தானவர் அரக்கர்பேரிற் றகைப்புண்டு மறைந்தேநாடும்
வானவர் கோமான்மேரு விட்டறந் தன்னிலேபோய்
ஆன்.......வானரசறு மாவானென்பான் கு....
ஊனமில் குணத்தில்நீங்கள் உரைத்திடு யென்றுரைத்தானம்மா. (167 )
அந்தப்படியே வானவர்கோன ழைத்தானெனவே சுரரோடி
சந்தப்படிவப் பீதகனைத் தாம்போய்க்கொணர்ந்தார் சுரர்நாதர்
விந்தைப்பசு பொன்மணி மாடமேடை மீதிலிருத்திசெய்
தொந்தப்படியே வாத்தியங்கள் துதிமாசம னாற்கியங்கொடுத்தான். (168 )
அசுரர் அரக்கர் பொரும்போரால் அமராபதி விட்டிங்குவந்தேன்
நசையும்பிழையு மெமக்குவுண்டா நாளும் பொறுப்பதுன் கடன்காண்
இசையும்படியே யேத்தியிதன்றி யம்புமெனவே யவர்நோக்கி
வசையொன்றில்லா திருவருக்கும் வழக்கம்செய்வோ மெனவுரைத்தார். (169)
தேவாதி பரஞ்சுரருக்கும் தினமும்தினமும் உறவாக
ஓவாதி தேவத்தினந்தன்னில் உறைந்தாரொரு மண்டலமுழுதும்
பாவாத வாத... தேவியெனப் பகருந்தாரை தனைக்கண்டே
ஆவாவென்ன அவர்தன்னை அணைந்தானொரு நாள்புலியும். (170 )
அக்காலையிலே கருப்பமது அடைந்தேபுதனைப் பெற்றெடுத்தாள்
மெக்காலசுரர் தங்களுக்கும் விண்ணோர் தமக்கும்உறவாக்கு
புக்காசுரர் மந்திரிதானும் புதல்வன்வந்த தெவரென்றான்
விக்காமொழியன் தனைக்கேட்க இயம்பினா னிக்கதையெல்லாம். (171)
ஆங்காரித்து நம்மனையை அணைந்தானென் திங்களென்பான்
தீங்காயவன்ற னுடலமெல்லாம் சின்னபின்னந் தானாக
நாங்காண்டிடவே க்ஷயரோகம் நன்றாய்ப்பிடிக்க
.................................................................................வெனவுரைத்தான். (172 )
திங்கள் விழவே விண்ணோரும் தேவேந்திரனும் சலிப்பெய்தி
தங்கையத னாலேயெடுத்து நைமிசாரண்யத்தின் முனிவோர்முன்
எங்கனுறைந்தா லிதுதீரும் எனவேகேட்க அவரெல்லாம்
கங்கைமுடி யான்றனைப் பூசைச்செய்தா லகலுமென்றார். (173)
அம்மாமுனிவ ருரைத்தசொல்லை அமரர்தேவேந் திரன்கேட்டான்
எம்மாதலத்திற் பூசைசெய்வ தியம்புவீ ரென்றுரைத்தருள
கைம்மான்மறியான் றனைப்பூசை கண்ணே சேவியாம்உரகேசன்
செம்மாந்திருந்தே பூசைசெய்த திருப்பாம்புர மென்றுளதாமால், (174 )
பொன்னிநதிக்குத் தென்பாலிற் புகலும் அரிசில் வடபாலில்
மன்னும்குடந்தைக் கீழ்ப்பாலில் வளர்மீ கைக்கு மேல்பால்
இன்னலகற்றுமா தவங்கள் எல்லாத்தலத்தும் அதிசெயமாம்
சென்னிவள நாடகன்று விற்சேஷபுரியென் றுளதாமால். (175 )
அந்தத்தலத்தில் மகாலிங்கம் அதனைப்போய் நீபூசைசெய்தால்
எந்தப்பவமும் அகற்றுவிக்கும் எல்லாவாழ்வும் கொடுத்தருளும்
இந்தப்படியே போவெனவே இசைத்தார் முனிவோரனைவோரும்
அந்தப்படிகா விரிகடந்தே அருள்பாம்புரத்தில் வந்தனனால், (176)
பிரமன்வகுத்த தீர்த்தத்தில் பெயராம்புனலிற் படிந்தெழுந்து
திரமாநியமங் களைமுடித்து திருக்கோயிலுக்குள் தனிப்புகுந்து
வரமாமுனிவர் சொன்னபடி மலராயிரமும் கொடுவந்து
துரமாம்பூசை திரவியமும் சோம்பாய்கொடுவந் தர்ச்சித்தான். (177 )
ஈராறுண்டு மத்தலத்தி ..............................................................
................................................
தீராப்பிணி தீர்த்திடமகர திங்கள் தனிற் பூரணையில்
பேராமுச்சிக் காலத்தில் பெரும்பூசைக்கு மனமகிழ்ந்து. (178)
நம்பன்திருப்பாம் புரநாதன் நயவெள்விடை யின்மேலேறி
செம்பொன்மலைமா துமையோடும் திங்கள்பகவான் முன்வந்தே
உம்பர்க்கிறைவன் பூசையென உள்ளமகிழ்ந்தோ முன்னுடைய
சம்பத்தினையும் தந்தனமுன் சரீரப்பிணியுந் தீருமென்றான். (179)
முதற்பக்ஷத்தில் சரீரமெல்லாம் முன்பாய்வளர என் றுரைத்தே
அதற்பின்பக்ஷத் தங்கமெல்லாம் அவன்சொற்படியே ஆகவென்று
புதுப்பொன்னிற் மேனியனாம் பாம்புரேசனுரைத்து போய்ப்புக்கான்
மிதத்தன்புடனே சந்திரனும் விண்ணிலுறைந்து விளங்கினனால். (180)
இவ்வாறெனவே சூதமுனி இசைந்தார்சவுன காதிபர்முன்
அவ்வாறெல்லா முனிவர்கேட்டி வீழ்ந்திறைஞ்சி மிகப்போற்றி
ஒவ்வாதெனவே சிவகதைகள் உரைத்தாய் இன்ன மொருகதையைச்
செவ்வாய்க்கொடுநீ யெங்களுக்குச் செப்பென்றுரைத்தார் முனிவோர்கள். (181 )
சந்திரன் பூசைச் சருக்கம் முற்றும்
பன்னிரண்டாம் சருக்கம்
அறங்கிடந் தொளிருநெஞ்சான் அருள்சுரந் தொழுகும்கண்ணான்
மறந்திட திண்டோளான் வயமன்னர் பணியுந்தாளான்
புறந்தனைக் காட்டாதோரை போர்புரிந் தடகும்வாளான்
கறங்குநீர்க் கங்கைசூழும் காசிமாநகரை யாள்வோன். (182)
அனுதிகள் புரியாவேந்தன் அரிவையர்மையல் கொள்காந்தன்
மனுதிகள் வழுவாநெஞ்சான் மறைகளோர் நாலும்வல்லான்
தனிகரிற்ற .. தைனெனன் தழைத்திடுஞ் செல்வமுள்ளான்
சுனிதியென் றுரைக்கும் வேந்தன் தொல்லுல கதனையாள்வோன். (183)
அன்னவன் சரீரந்தன்னில் அடர்முய லகநோய்வந்து
சின்னபின் னங்களாக தேகத்தில் வலிர்ப்புவந்து
மின்னகை யார்களெல்லாம் வெறுத்திட வந்தநாளில்
மன்னவன் முன்னேயந்த வசிட்டமா முனிவன்வந்தான். (184 )
வந்தமா முனியை நோக்கி மலரடி வணங்கிப்போற்றி
இந்தமெய் பிணிகடீரும் வகைசொல்லென வியம்பி நின்ற
அந்தமா மன்னன்தேகம் அடைவுடன் நோக்கியிந்த
தொந்தமாம் பிணியை நீக்கத் தொடர்க்கியாந் தலமொன்றுண்டால். (185)
மாமுனி உரையைக்கேட்டு மருவுமத் தலமேதென்ன
கோமுகி வினவிக்கேட்க கொற்றமா முனிவன்சொல்வன்
தேமலர்ப் பிரமன்சேஷன் தேவர்கோன் முதலாயுள்ளோர்
ஆமெனப் பூசைசெய்தே அவரவர்பதம் பெற்றார்காண். (186)
அத்தலந் தன்னில்நீபோய் அனந்தன்பூ சித்தலிங்கம்
நித்தமே மெய்ப்பதாக சிறப்புடன் பூசைசெய்தால்
இத்துயர் பிணியும்தீரும் எய்தலாம் செல்வமெல்லாம்
வித்தக விரகநீபோ வென்றன மய்யர்கோமான். (187)
முனிவன்சொன்ன படிகேட்டு முதல்வன் காசிநகர் நீங்கித்
துனியொன் றில்லாமயூர துறைக்காவேரி நதியாடி
தனிவந்திறைஞ்சிப் பாம்புரமாய் தலத்தில்பிரம தீர்த்தத்தில்
அனிவன்மூழ்கிக் கரையேற அகன்றுபோன முயலகநோய். (188)
சீராய்மருவ வரும்பிரம தீர்த்தக்கரையில் நியமமெல்லாம்
ஆராய்ந்திடவே முடித்தபின் னையரனால யத்தினுட்புகுந்து
பாராளரசன் பரசிவனாம் பாம்புரேசன் பதம்பணிந்து
கூராவிழியாள் வண்டுசேர் குழலாள் பாதம் பணிந்திறைஞ்சி. (189 )
ஓராண்டிருந்து பாம்புரத்தி னுறையும்கோயிற் பணிவிடைகள்
நேராய்வருமுன் மான்யங்கள் நிறுத்தமண்டபப் பணிகளெல்லாம்
தாரார்வண்டு சேர்குழலாள் தன்னுட்கோயிற் பணிவிடைகள்
ஆரைஅர்த்த மகாமண்டபத்தின் அன்பாய்ப்பணிகள் செய்த பின்னை. (190)
நாற்கோபுரங்கள் சுற்றுமதில் நல்லமூன்று பிரகாரம்
சீற்காயமருவ வரும்பரம தீர்த்தமதற்குப் படித்துறைகள்
ஊற்காகியவர் மறையோற்கு உயருந்தானம் வரிகலங்கள்
வார்க்காகியதோர் கொங்கைமடவார்கள் தன்னனையு மைத்தருளி. (191)
மாசித்திங்கள் பூர்வ பக்ஷம் ....................................................
நாசிக்கெதிராந் திருத்தேர் நால்வீதியினும் ஓட்டிவித்தே
ஆசிற்பருவ மகதீர்த்தம் ஆடிபிரம தீர்த்தத்தில்
பாசப்பிணிகள் தனையகற்றி பதியால்காசி நகர்சேர்ந்தான். (192)
சேர்ந்தான்சுனீத னென்னவே செப்புந்சூத ரடிவணங்கி
சார்ந்தார்சவுன காதிபர்கள் சரிதையினடி ஒன்றுரையென
ஓர்ந்தாரவர்கள் உளமகிழ உரைத்தான்உறையூர் வளவர்பிரான்
நேர்ந்தான்வெள் வளப்பிணி தீர்த்துநிகழும் கதையைச்சொல்வாம். (193)
சுனீதன் பூசைச் சருக்கம் முற்றும் .
பதின்மூன்றாம் சருக்கம்
சிலந்திச் சோழன் பூசைச் சருக்கம்
நறையூர்தருதோ தகித்துடையான் நாராசருக்குச் சிங்கமெனத்
திறையூர்மணிமா முன்றிலினான் செங்கோல்நடத்தும் அரசர்பிரான்
பொறையூர்மனத்தான் சோணாடு புரக்குங்கோமான் பதியின்மிக்க
உறையூர்ச்சோழ குலவேந்தன் ஒருகோலலோச்சு மனபாயன். (194)
வெகுநாள்மக வொன்றில்லாமல் மேலாந்தாயு மானவனைத்
தகவேபெரும் பூசைகள்நடத்தி தவமுங்கிடந்து தன்பதியில்
புகவேமாதர் பூதேசன் பொருந்துங்கனவில் வந்தருளி
தகவேயுனக்கோர் மகவுதனை தந்தோமென்று உரைத்தனனால். (195)
தேவிவயிற்றிற் கருப்பமுண்டாய்த் தினமுன்னூறு சென்றபின்னர்
நாவல்லவர்கள் புகழ்ந்தருள நலமாமைந்தன் செனித்தனனால்
ஆவலுடனே யம்மகவை அணைத்தேயெடுத் தானம்மகவை
பூவனுலகத் தின்அரசாய் பொருந்தவைத்தான் வளவர்பிரான். (196)
அவன்றன்பெயருஞ் செங்கண்ணனாம் ஆமாமெனவே முடிசூடிச்
சிவன்தன் திருக்கோயிலின்முன்னே செங்கோல்கொடுத்துச் செலுத்துநாள்
இவன்றான் முன்னம் செய்வினையால் எங்கும்சுவேத வண்ணமதாய்
உவந்தானன பாயனுநோக்கி உள்ளந்தளர்ந்து மெலிந்துநைந்தான். (197)
வெள்ளைப்பிணியைத் தீர்த்தருள விளங்குமருந்தே தென்றெண்ணி
உள்ளத்தினாலே மிகத்தேறி உவப்பாம்வசிட்ட ராசிரமத்தில்
எள்ளப்புகுந்தான் அனபாயன் இனியமகனுந் தானுமாய்க்
கள்ளப்புலனை வென்றருளும் கனமாம்முனிவன் பதம்வணங்கி. (198 )
எந்தன்மகவின் பிணிதீர்ப்ப தெந்தவகை யென்றியம்புகின்றான்
அன்றன்புடனே வசிட்டமுனி அறைவான் முன்னோர் புரூரவற்கு
நின்றன்புடனே வெண்குட்டம் நீங்கும்மிழலை யீசானத்
தொன்றும்பதியா மதன்பெயரும் உயருந்திருப்பாம் புரமாமால். (199)
சேடன்பிரமன், தேவேந்திரன் சிறந்தகுறிய முனியுமையாள்
நாடுங்கனல், வெய்யோன்மதியம், நல்லகங்கை சுனீததக்கன்
ஆடம்பரமாய்ப் பூசைபண்ணி அவர்கள் பதம்பெற் றடைந்தார்கள்
நீடன்புடனே நீங்களும் போய் நியமப்பூசை செய்கவென்றான். (200)
செய்யும்பொழுதில் உன்மகவின் தேகவெள்ளைப் பிணிநீங்கும்
அய்யம்சற்றும் இல்லையென்றே அறையவசிட்டன் பாதம்வணங்கி
மெய்யன்திருப் பாம்புரம் மேவி விளங்குபிரம தீர்த்தத்தில்
மெய்யன்புடனே பணிந்தெழுந்தான் முழுதும்செம்பொன் நிறமானான். (201)
அந்தப்பிரம தீர்த்தத்தை அன்பாய்மெள்ள வலஞ்செய்து
சிந்தைக்கதீதப் பாம்புரத்தின் திருக்கோவிலுக்குட் புகுந்தருளி
பந்தப்பாவ வினையகற்றும் பாம்புரேசன் பதம்போற்றி
கொந்துற்றிடவாழ் வண்டுசேர் குழலாள் பாதம் தனைப்போற்றி. (202)
ஒருமூவாண் டங்கிருந்தருளி உயருங்கோயில் திருப்பணிகள்
வரமூன்றியதோர் கோபுரங்கள் மண்டபத்தின் பணிவிடைகள்
திரமாம்படியே செய்தருளி திருநந்தவனமுந் திருத்தோட்டம்
வரமாம்திருக் கெவ்விடமும் வளருஞ்சோலை யுண்டாக்கி, (203)
கோயில்வீதி இல்.....றை -- குலத்துக்கதீக மரபமெனவாழ்
தூயசிவமா மறையோரைச் சோ ... ட பெயர்கொடுத்து
நாயகனு மற்றிவனொ ... நற்போதனையுங் கொடுத்து
தூயதலத்தார் .... தலங்கள் தொகுபர மெனவே.. யுண்டாக்கி. (204)
தலத்தினுட்.....ரன் ததிலட்சதா சிவபிரதிட்டை செய்து ....
செலத்தினுக் கதிகமான தீர்த்தமுமொன் றுண்டாக்கி
புலப்படும் சிலந்திச் சோழபுரமென மன .... தம்மை
நிலைப்புற அமைத்துப்பின்னை நண .. யாண்டான். (205)
அவனியுள் ளோர்களெல்லாம் ஆ(ர்ப்பரித்) தே .... ட்முன் டென்பர்
சிவனுறை யாலயங்கள் திருந்துமைப் பதிக்குமே.....
புவனியோர் புகழ்திருப் பாம்புரத்தின் மகிமைதன்னை
எவர்களுக்குச் சொல்லப்போமே என்னவே யுரைத்தார்சூதர். (206)
இக்கதை கேட்டபின்னர் எழிற்பெருஞ் சவுனகாதி
மிக்கமா முனிவரெல்லாம் விளங்குமத் தலத்திலே
ஒக்கவே பிரமதீர்த்தம் உயர்பன்னி ரெண்டுதீர்த்தம்
திக்கெலாம் போய் நீராடி சிவனுறை கோயில்புக்கான். (207)
பாம்புர நாதன்தன்னைப் பணிந்துவீழ்ந் திறைஞ்சிப்பின்னர்
தேம்படு மலர்சேர்வண்டு சேர்குழ லாளைப்போற்றி
நாம்புகழ் முனிவோரெல்லாம் நைமிசா ரணியமிக்கார்
தாம்புகல பவரியோடும் தழைத்தினி திருந்துவாழ்வார். (208)
சிலந்திச் சோழன் பூசைச் சருக்கம் முற்றும்
திருப்பாம்புரம் தலபுராணம் முற்றிற்று.