logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

நெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிகள்)

வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிகள்  அருளிய 

(இது நூறு வெவ்வேறு யாப்புக்களால் புனையப்பட்டுள்ளது.)    

        காப்பு
        (நேரிசை வெண்பா)

தந்தி முகநாடித் தாரகத்தை யுச்சரித்துச்
சந்திதொறும் வந்துன்மலர்த் தாள்பணிவே - னந்திகனல்
குல்லைக் கலம்பகநேர் கோல விநாயகனே
நெல்லைக் கலம்பகநேர் நில்.  (1)

        (கட்டளைக் கலித்துறை)

போதகச் சென்னியப் பாவென்றி வேற்கைப் புகழ் முருகா
சீதவெண் டாமரைப் பாவாய்நுந் தாண்மிகச் சிந்தைசெய்வேன்
ஆதவன் சந்திர னக்கினி தோன்று மரியவிழி
நாதன தாந்திரு நெல்லைக் கலம்பக நல்குமினே.  (2)

        (அறுசீர்விருத்தம்)

எத்தனையோ பலபனுவ லிருமூன்று
    நெறிக்கடவு ளினர்க்கும் பாடி
அத்தமயல் தானுமறா தலமருமென்
    றனைத் தொடர்ந்தின் றரிய நெல்லைச்
சித்தர்தமக் கினியகலம் பகம்பாடத்
    தூண்டுகின்றார்; செப்பு கின்றேன்;
சுத்தவருட் பெருங்கடலி லொருதுளியென்
    மேற்றெறிக்கத் துணிந்தால் நன்றே.  (3)

            நூல்
        (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)

அருள்வடிவே தன்வடிவா மதுகருது மறிவில்லா
மருள்பொலியு மென்போலு மானிடரு முயவேண்டிப்
பைம்பொன்மர கதமேனிப் பாவையது பங்கேந்துஞ்
செம்பொனெடு வரையாய சிலையதற்குத் தென்பாலே  
தண்பொதியக் குன்றினிடை தமிழொடுமே னாளுதித்த
வண்பொருனை வடபாலாம் வரைவனத்தின் மத்தியினில்
வேண்டவல்லார் வேட்கைநல்கி வியனார்ந்த செப்புமன்றிற்
றாண்டவஞ்செய் அனவரத தானநா தர்கேண்மோ

        (இவை தரவுகள்)


உட்செவிக்கு மைந்தெழுத்தா லுன்னிய தோரொண்புலிக்குக்
கட்செவிக்கு மன்றுதில்லைக் காட்டினும்போ யாடினையே

கந்தமல ரோனுதவுங் கான்முளைக ளாவருநா
லந்தணர்க்கா வன்றொருகல் லாலடியி லுற்றனையே

உள்ளக் கசிவோ டுணர்ந்தேத்து மொள்ளியற்காக்
கள்ளக் குதிரைக் கடிவாளம் தொட்டனையே

வீழி மிழலைநகர் மேவுமிரு பாவலர்க்கு
வாழியபொற் காசு வழங்குதற்குஞ் சோம்பிலையே

இன்சொற் கவியொருவ னின்புறத்தென் னாரூரில்
வன்சொற் கணிகை மனைத்தூது மாயினையே

செத்தறவு நாறுஞ் சினையாடுய்ந் தீனவுமோர்
பத்த னிமித்தம் பலர்காணச் செய்தனையே

    (இவை ஆறும் தாழிசைகள்)


அமரர்த முடன்முழு தழல்சுடு பொடியினை!
சமரச முதுநிலை தருதிரு வடியினை!

அவரவர் நினைவென அவிர்திரு வுருவினை!
குவலய முதலிய கொடிமுலை மருவினை!

பலபல கதைவகை பகர்தரு தெருளினை!
குலமதகளிறொடு குமரனை யருளினை!

மறமுனை புகழ்செய மலிகொலை மழுவினை
குறளுட லனகைகள் குழுமிய குழுவினை

    (இவை நான்கும் அராகங்கள்)


அந்திமதி சூடி அடன்மால் விடையேறி 
மந்திசித் தேதர் மகிழ்கூர முன்னிற்பாய்

அங்கரத்தோ டேந்தி  அகந்தொறுமேற் றுண்டாலும்
செங்கலிற்பொன் செய்தேனும் செந்தமிழோர்க் கீந்தருள்வாய்

புல்லுந் தழையும் புனலும் புனைந்தாலும்
அல்லும் பகலும் அகன்றபதத் தேயவிர்வாய்

நல்லாற்றுத் தொண்டர் நறுந்தமிழ்ப்பா வாலிரக்கிற்
பொல்லாச் சமணர்புலைப் புத்தர்முத லோர்க்கெடுப்பாய்

(இவை நான்கும் பெயர்த்தும் வந்த தாழிசைகள்)


    திரிபுர நகைகொடு தீயெ ரித்தனை
    அரியுட றருபணி யாத ரித்தனை
    கரியதள் புலியதள் காத லித்தனை
    பெரியர்சொல் விதிவழி பேற ளித்தனை

(இவை நாங்கும் நாற்சீரோரடி  அம்போதரங்கங்கள்)

 அவை போன்று (இது தனிச்சொல்) 
நின்புகழ் பாடி நெட்டுயிர்த் தழுத
வன்புடை வடலூ ரவனசை யருளா
தியாவரும் இகழ விருட்டறை யொன்றுட்
போவது கண்டாய் புலவர்முற் றயர்ந்தார்
யானுன தருளா லிகத்தினி யன்னோன் 
றானுமற் றவனேர் தவத்தினர் சிலரும்
மீட்டெழ லாதி வியன்பெற விழைந்து
பாட்டெணில் லனவாப் பகர்ந்துழைக் கின்றேன்
என்னையு மவர்போன் றேகச் செய்யேல்
முன்னை நாளோர் முதலைவாய் மதலை
வரத்தர லாதிய வண்புகழ் பலவுங்
கரத்தநெஞ் சினராற் கழிக்கப் பட்டன
சாந்தநீர்மை தனைவிடுத் திவற்றை
யாய்ந்த வீர மணுத்துணை கோடி
யிங்கறம் வளர்க்குநிற் கினியாண்
மங்கலத் திருநூல் வாழிய வாழியவே.  (1)
    
    (இஃதாசிரியச் சுரிதகம்)


    (நேரிசை வெண்பா)

வாழியசீர் நெல்லை வளநகரின் வாய்மருவு
கேழிணர்த்தண் கொன்றைக் கிழவனுக்குப் - பாழி
மதகரித்தோ லேகாசம் வன்புலித்தோல் தானை
பதமலர்க்கும் பாம்பே பணி.  (2)

    (கட்டளைக் கலித்துறை)

பணியனந் தம்பணி பாட்டனந் தம்புகழ் பாரனந்தம்
மணியனந் தம்பொற் பெருந்தேர் தலைச்சுமையாற னந்த
மணியனந் தம்பத்துவார்செவிப் பூணெல்லை மாநகரிற்
றிணியனந் தண்புண ரானெனவாழ்சிவ சித்தனுக்கே.  (3)

    (வெண்டளைக் கலிப்பா)

சித்தர்புகழ் நெல்லைச் சிவனா ரருள்வேண்டிப்
பத்தர் பதத்தூள் பரிந்தணியுஞ் சென்னியினேற்
இத்தருணத் துண்மைநல மியாதொன்று மெய்தாதேல்
அத்தகைய முன்னூ லனைத்து மவமாமே.  (4)

        (கலித்துறை)

அவமெ லாங்கெடுத் திடுந்திரு வருள்பெறற் குரிய
தவமெ லாந்தருஞ் சித்தியுமுத்தியுந் தழைக்கு
நவமெ லாம்விளக் கிடுந்திரு நெல்லைநா யகனாற்
பவமெ லாங்கெடப் பெறுமவர் பதத்துணைப் பணியே  (5)

        (அறுசீர் விருத்தம்)

துணைப்பணிலச் செவியாடச் சடையாட
    மதியாடத் தொந்தோ மென்றாங்
கிணைப்பிணைக்கட் காந்திமதிக் கெதிராடுஞ்
    செப்புமன்றத் திறைவ னார்தாம்
கணைப்பனிமா மலரோனைக் காலனைமுன்
    தடிந்துமுய்யக் கருணை செய்தார்
பணைப்புயவன் முயலகன்றா னெழுந்துலவ
    அருள்செய்கில்லார் பாவ மன்றே.  (6)


        (எழுசீர் விருத்தம்)

பாவ புண்ணியங் கடந்தமா தவத்தராப்
    பலபல பிறப்புற்ற
சீவ ரேயுணர் வார்கண்மற் றேனையர்
    செப்பினுந் தெரியாரே
தேவர் தானவர் காருடர் விஞ்சையர்
    சித்தரா தியராய
யாவ ருந்தொழக் கழைவனத் தெழுந்தரு
    ளிறையவன் இயற்சீரே.  (7)

        புயவகுப்பு

தனனதன தான தான ... தானந் தனந் தன

இயலுணரு நால்வரோது பனுவல்வகை யோடுகூட
        இதழியறு கார்விளாவு மாரப்புனைந்தன
    இமையவர்ப ராவவாழும் அரசருடல் கோடிகோடி
        எரியினிடை நீறில் வீழ்ப வாமத்திகொண்டன
    இனியசதுர் வேதநீதி புகல்பிரம தேவகோடி
        யினதுசிர மாலைசால மோதிக்கிடந்தன
    இகபரமும் வாழுமாறு முயல்கருணை நேயமாயன்
        எழில்முதுகி னூடுநீடு மோரெற்பமைந்தன
    இமயமலை யோடுமேனை தவமுயல்வ தாலெய்தோர்பெண்
        இருமுலைக ளானமேரு மோதப்பொலிந்தன
    இகலவுணர் மாயமாய்வில் அமுதுணவு தேவரார
        இலகுமொரு நீலமாது லீலைக்கிசைந்தன
    இரலைமழு சூலம்வாள்வில் முதலியவ னேகமேவி
        இகழ்குணவி காதமாம னியாகத்தைவென்றன
    இரசிதம தாகி நீடுமலையினது வேர்கெல்வானும்
        இணையில்களி கூருமாறொர் வாளிட்டுவந்தன
    எறுழியொடு தேவரியாரு முருடரென வேகுநாளில்
        எதிர்பொருத பேடிமீது கோல்கட் சொரிந்தன
    இயல்கரும மேலென்வாயர் பகைமிகையி லேவநேரு
        மிபவுரிவை யான போர்வை சூழப் பொதிந்தன
    இடையிலணி தானையாக வதளதுப யோகமாதல்
        எணியுழுவை ராசனாமொர் பேயைத் தடிந்தன
    இசையில்வல நாரதாதி யவர்பலரு நாணின் மூழ்க
        இரதமலி கானவீணை நீவிச்சிறந்தன
    இடுதகையி லாதலோபர் பலரும்விழை யாதவாகி
        இவர்தாமதி ராளியான பேர்நச்சநின்றன
    எளிதில்வட மேருவான சிலைகொடம ராடிவானில்
        இழையமர மாதர்தாலி நூல்கட்புரந்தன
    எழுகடலு மாரும் வேல்கொள் வழுதியர சாளுமூர
        திறுதியடை யாமலேமண் வாரிச்சுமந்தன
    இதுவதெது மேன்மைதாழ்மை யுனதெனதெனாவி ரோத
        மெழுசமயவாதநீள நாணப்படர்ந்தன

வயமுதிர்பல் வாகுவாரு மரியுதிர மாருநாளில்
        வலியசிறை ரூபமாயு மோர்சற் றவிர்ந்தன
    வகுளதரன் மேனிநீறும் விதமொழியு மார்வசீலர்
        மனமலர்தொ றேகியேகி யாடற்பயின்றன
    மழைமுகிலு நாணநீடு கொடைமுயல்சு பாவதீரர்
        வனசவிதி யார்கைதோய்வு றாமற் றகைந்தன
    மதுரமலி பாடலோடு செபதவமு ளாரெலோரு
        மரணமுத லாயநோயு றாமற்பரிந்தன
    மறைமுனிவ ராவிபோலு மிளமகளி ராடைசோர
        மறுகினிடை யேகும்வேளை யோர்கொட்டறைந்தன
    மகரசல வாரிமீதொர் குழவியுரு வாகிநீல
        வருணன்மனை நீடிநான்ம லோவிப்புகுந்தன
    மதுரைநகர் நாய்கமாதர் விரதமுடி வாகுமாறு
        வளையலதி பாரமாக மேவக் கொணர்ந்தன
    மறமிலறி வாளரோது துதிவினவு காதிலேறும்
        வளைகண்மதி நாணுமாறு மேலுற்றுரிஞ்சின
    மயிலிறகு தோய்கைநீல வரையனைய சாரணேசர்
        வளரரச நீழலாளர் மாயக் கனன்றன
    மதுகரகு ழாமறாத விதழிமலர் மாலைமீது
        மயல்கொளுமி னார்கள் கூடி யேசக்குளிர்ந்தன
    மலநிகள மாறநீடு தவமுயல்வ லோர்களோர
        மவுனசிவ யோகஞான சாரத்தையொன்றின
    மகபதிதன் வாழ்விலாசை யணுவுமரு வாததீர
        மகர்தலைகண் மீதிலோரொர் காலத்திலங்கின
    மசகமனை யார்களீன பலமடையு மாவலோடு
        வழிபடினு மீயநாணு றாமற்செறிந்தன
    வயலினிடை வாளைதாவு மெழில்குலவு காழியூரின்
        மதலையனை யார்கள்வாய்க ளேமெச்சுபண்பின
    வளமருவு நாவலூர னலதிணையி லாததோழர்
        வசைநசையெ ணாமலேவும் வேலைக்கிணங்கின
    வபையிடும் கோரவேள்வி யிகழ்கருணை யாளர்வாழ
        மறுவில் செப மாலையோய்வு றாமற்சுழன்றன

செயமுறும வாவினோடு தவமுயனி சாசரேசர்
        திரள்பெறவு மாயுதாதி யீயத்துணிந்தன
    திருவருள்வி லாசவாரி யிடைநிகழ்பல் கோடியூடொர்
        திவலையடி யேனலாவி மேல்விட்டெறிந்தன
    செனனமர ணாதியான விடருதவு மூலமோக
        திமிரமறு ஞானநீறு சாலத்திமிர்ந்தன
    சிவகதைவி னாவலோடு பலதலமு நாடிடார்கள்
        செவிடுகுரு டாயெநாளு நோவத்துறந்தன
    சிகியிலுதிர் பீலிசூடு முடியிறைகை வாள்வெலாத
        திறலசுரர் வாழுமூரு நீறச்சினந்தன
    தினகரகு ழாமுமாழி நடுவில்வளர் தீயுமேம
        சிகரவட மேருதானு நேரச்சிவந்தன
    திரைகடல்சு லாவுபாரின் வதனமென வேநிலாவு
        தெளிதமிழ்ந னாடுமேன்மை தோயப்பிறங்கின
    சிமயகுல பூபனாது மகள்விழிமுன் வேதநீதி
        தெரிகிழவ னார்செல்போது மீறத்திரைந்தன
    திரிவிழிம யேசரீச வரகரச தாசிவாவை
        திகசமய நாயகாவென் வாயர்த்தொடந்தன
    திகிரிவளை தோயுமாய னெனுமிடப ராசன்மீது
        சினவுகசை நாசிமூழ்கு பாசத்தொடந்தின
    தெருளுமுனி வோர்பராவு குயவர்மனை தேடி யேகு
        தினமதிய மோடதாகி வாழக்கவின்றன
    திரலிமய வாவியூடொர் குழவியுரு வாமுன்மேவு
        சிறுமிசிறி தூடினாலு நேரிற் குவிந்தன
    திகுதிகென வேயகோர வொலியொடு குலாவியாழி
        திடர்படல்செ யாலமோடு தீயைக் கவர்ந்தன
    சிறையில்கக மாகிவாட விடுமயலு நாதபோதர்
        திசைகளென வேபல்காலு மோதத் துலங்கின
    திவவினிலை தேறுவானொ டனையசிலர் வாழுமாறு
        சிலகவிக ளோலைமீது காணச்செய்கின்றன
    செடிதருபு லாலுண்மேனி யெயினன்விழி கீலும்வேளை
        சிலையுருவு ளேகுபீரெ னாவுற்றெழுந்தன

அயவதன மால்செயாடல் கருதுமதி வீரயோகர்
        அறியவிளை யாடல்கோடி யாடற்கிரங்கின
    அபரிமித சீலசால மருவுமுனி வோரெலோரும்
        அநுதினம்வி டாதுநாட லான்மிக் குயர்ந்தன
    அலகைபல சூழொர்காளி யெதிர்நடன மாடும்வேளை
        அபிநயவி னோதபேத மாரப்பிறழ்ந்தன
    அணுவளவு நாணுறாது பலமனைக டோறுமேகி
        அமுதுகொளும் வாழ்வினோர்கள் வாரத்தமிழ்ந்தன
    அரிவையர்ச லாபமீடில் சுகமெனவெ நாளுமோதும்
        அசடரொரு போதுநாடு றாமற்கிளர்ந்தன
    அகளபர மோனயோக சமரசசு பாவஞானம்
        அடையமுய லாதமூட ரோடத்துரந்தன
    அதுலநய மேவுபாட லிருவர்பக ரோர்திவாவில்
        அழிவில்சதுர் வேதவாயின் மூடித்திறந்தன
    அரதனவ வாவில்வாடு மொருவழுதி யார்வமாக
        அளவில்பல நாய்கரார்கை தோயக்கிடந்தன
    அலர்கமல பீடமீது மருவுபிர மாவொர்காலம்
        அழுதுவச மாறவோர்க பாலத்தைவிண்டன
    அகரமுத லாநிலாவு பொறிமுழுது மாறுமோதை
        அவளவும்வி ராவுபாட லேடொற்றைதங்கின
    அநுசிதம தேயெநேர மொழிதருகு ருரவாய்கொள்
        அசுரரனை யாருமேசி டாமற்புகழ்ந்தன
    அவனவள தாயபேத முழுதுமய மேகமாகும்
        அதிரகசி யாதியோர்வ லோருட்குழைந்தன
    அணுகுமவ ராசையாவும் உதவுபெரு மேன்மைதோய
        அமரர்நகர் மேவுதாரு போலத்தழைந்தன
    அசலமிசை யேறிவீழின் மரணமுமெய் தாதபாவி
        அறைதருசில் பாடல்மீது மாவற்கொடுந்தின
    அரவரசர் கோடி பேர்கள் மொழியினும றாதகாதை
        அமைதருவி சாலபார மால்வெற்புறழ்ந்தன
    அமைவனநெல் வேலியூரின் நடுநிலவு கோயில்வாழும்
        அனவரத தானநாதர் ஆண்மைப்புயங்களே.  (8)

        (நேரிசை வெண்பா)

புயமிரண்டோ நான்கோ புகலெட்டோ பத்தோ
வயமல்கிரண் டாயிரமோ மற்றும் - அயலுளவோ
வல்லையப்பா லற்றனது வாணுதற்கண் ணாலருளு
நெல்லையப்பா சொல்வாய் நினக்கு.  (9)

    (கட்டளைக் கலித்துறை)

நினக்கஞ்சன் சென்னியி லன்றேற்ற துன்ப நினைவிருந்தா
லெனக்கஞ்ச கத்தி லிரந்தேங்கும் பாழ்ந்துய ரீகுவையோ
வனக்கஞ்ச வாவித் திருநெல்லை யாய்கொடு மாமறலி
தனக்கஞ்ச லாமனத் தார்க்கருள் கூர்சிவ சங்கரனே.  (10)

        (கொச்சகக் கலிப்பா)

சங்கரனைத் திருநெல்லைத் தனிக்கோயி லுடையானைப்
பொங்கரவ மணிந்தானைப் பூதகணப் படையானைச்
செங்கரங்கள் கூப்பிமிகத் தெண்டனிடுந் தெளிவுள்ளார்
வெங்கரமே நிகராகு மிடியினுக்கு வெருளாரே.  (11)

        (கலித்துறை)

வெருள வெங்கலிப் பேய்செயுந் துயரற விலக்கி
அருள ளக்கரிற் படியும்வாழ் வென்றெனக் கருள்வாய்
மருளன் பேய்களொ டாடியென் றிகழினு மகிழ்வுற்
றிருள்கு லாம்பொழிற் றிருநெல்வே லியில்வள ரிறையே.  (12)

        (மடக்குத் தாழிசை)

இறையவ ரினத்தின் மிகப்பெரி யானே
        யிகபர மிகப்பெரி யானே
    எண்ணில்வே தங்கட் கொலுதயா பரனே
        இயமனைக் கொலுதயா பரனே
கறைமிடற் றொருவா கண்ணுத லத்தா
        கரியமால் கண்ணுத லத்தா
    கழைவனத் துதித்த கனகமா மணியே
        கனபனிக் கனகமா மணியே
பிறையணி சடிலக் காடுடை யானே
        பெயுங்கடுக் காடுடை யானே
    பெற்றமீ தேறிப் பிறங்கலங் காரா
        பேணும்விற் பிறங்கலங் காரா
நிறைவொடு குறைவு மாயவா னவனே
        நிலந்தினு மாயவா னவனே
    நின்னடி யவருக் கூட்டியாண் டருளே
        நிலவவெற் கூட்டியாண் டருளே.  (13)

        அம்மானை

ஆண்டடியார்க் கின்ப மருளுநெல்லை யம்பலத்துத்
தாண்டவற்கு முச்சுடருந் தன்விழிக ளம்மானை
தாண்டவற்கு முச்சுடருந் தன்விழிக ளாமாகில்
வேண்டயன்வேள் கூற்றை வெருப்பானே னம்மானை
வெறுத்த தொருபாதி மேயதா லம்மானை.  (14)

        (எண்சீர்த் தாழிசை)

மானை நேர்விழிப் பாவை மார்செய்பாழ்
    மைய லாதிநோய் வாட்ட நொந்ததாற்
றேனை யன்னசொற் பாட லாலுனைச்
    செப்பி னேனெனைச் சிறிது மெண்ணிலாய்
ஊனை யூட்டுமோ ரெயின னுக்குநீ
    ஒழிவில் வீடநாளுதவல் பொய்கொலோ
மேனை யார்மகட் கினிய னாகிநெல்
    வேலி யூரின்வாய் மேய வீசனே.  (15)

        (நேரிசை வெண்பா)
ஈசனணி நெல்லைக் கிறைவனென்று மெண்ணுமவர்
பாச மொழிக்கும் பரஞ்சோதி - வாசவர்த
மென்பணிந்த மார்பகத்தி லென்றுதியு மேற்றணிந்தாற்
றுன்பமுற்றுந் தீர்வதுண்மைச் சொல்.  (16)

        பாங்கியைத் தலைவி வினாதல்
        (கட்டளைக் கலித்துறை)

சொற்கொண்டு போய்நெல்லை யப்பர்முன் நின்று துணிந்து சொல்லும்
மற்கொண் டதுகிளி யோவளி யோசினை மாமுகிலோ
விற்கொண்ட மென்சிறை யோதிம மேவென் விரகநெஞ்சோ
கற்கொண்ட கொங்கை யணங்கேநன் கோர்ந்து கழறுதியே.  (17)

        (மடக்குக் கலிப்பா)

கழகமுற்று முடையானே கைக்கலத்து முடையானே
விழலனையார்க் கரியானே மிடலுமிகக் கரியானே
தழனிலவு கரத்தானே தாழ்விலஞ்சக் கரத்தானே
தொழவருமோர் கோவிலனே தூயநெல்லைக் கோவிலனே. (18)

            ஊர்
        (கட்டளைக் கலிப்பா)

கோவி லாயிரங் கோடிக ளுள்ளவிக்
    கோணன் மூங்கிற் குளிர்நிழ லாளற்கு
மாவி லாத்தியி லாலர சத்தியில்
    மதுகத் திற்கடம் பின்மரு திற்புன்னைக்
காவில் நாவல்ப லாப்பனை யாதியிற்
    கண்டு தெண்டனிட் டுக்கவி பாடியே
தாவில் வீடுபெற் றாரொரு நால்வர்த்
    தன்மை வேட்குந் தவம்பெரி தாகுமே. (19)

        (எழுசீர்விருத்தம்)

ஆகு வாகனத் திவர்தரு மொருவனை
    அறுமுக முருகோனைப்
பாகு நேர்மொழிப் பார்வதித் தாய்பெறப்
    பரிந்தரு ளியநாதன்
சோகு வாயிரஞ் சூழ்தர விருளிடை
    சுடலையில் நடித்தப்பால்
யோகு ளார்மகிழ் வுறத்திருச் செப்புமன்
    றுழிநடம் புரிந்தானே.  (20)

        (எண்சீர் விருத்தம்)

தானநா யகனெனப்பேர் தரித்து நெல்லைத்
    தலத்திலொரு மூங்கினிழற் றங்குங் கோமான்
ஞானநா டானதில்லை மதுரை காஞ்சி
    நாவலூர் திருவாரூர் நள்ளா றையா
றேனல்வே டுவர்முருகன் பூண்டி பாசூர்
    இந்தளூர் குற்றாலம் இலஞ்சி சிங்கை
பானனீ ரவிநாசி நாங்கூர் புன்கூர்
    பழனஞ்சீ காழிமுதற் பலவூ ரானே.  (21)

        (நேரிசைவெண்பா)
ஊரா யிரந்தோறு முற்றேற் றுழலாதுன்
பேரா யிரமுரைக்கும் பீடருள்வாய் - காராரு
மேனித் திருமால் வியந்தோதும் வேணுவனத்
தானிற் றிரிதருமப் பா.  (22)

        (கட்டளைக் கலித்துறை)

அப்பார்ந்த செஞ்சடைச் சித்தர்நெல்
    வேலிக் கழகியர்தம்
துப்பார்ந்த மேனியைத் தூவிடை
    மேலெண்ணித் தோத்திரங்கள்
செப்பாநிற் பார்களுக் கேவினைப்
    பேய்செயுந் தீமையென்னும்
பொய்பாச நீங்கு மநுபூதி
    ஞானப் புகழெய்துமே.  (23)

        (கட்டுத்தாழிசை)

புகழ்பெறு மிக்கோனு மிகழ்வறு தக்கோனும்
    பொற்புயர் செங்கோனுங் கற்புமை பங்கோனும்
அகளமயத் தானுஞ் சகளசெயத் தானும்
    ஆன்மிசை யூர்வானும் வான்மிசை போவானும்
திகழ்மழு வேந்தினனும் இகல்விட மாந்தினனும்
    தீயுறு கையானும் மீயுறு மெய்யானும்
சிகரவெ முத்தானும் சகலர் வழுத்தானும்
    தில்லை நடத்தானும் நெல்லை யிடத்தானே.  (24)

        (எழுசீர் விருத்தம்)

இடபமொன் றெழுதுங் கொடிகுலா நெல்லைக்
    கிறையவன் றனையிமா சலத்தோர்
மடமயி லென்ன வளர்ந்தசீர்க் காந்தி
    மதிமண வாளனை வழுத்தார்
கடவுள ரினத்தி லொருவரா னாலுங்
    காசினி முழுமையுங் காக்குந்
திடமலி செங்கோ லரசரா னாலுஞ்
    சிறியரென் றுணர்கைமெய்த் தெளிவே.  (25)

        (பெருந்தாழிசை)

தெளிவோர் சிறிது மருவு கில்லவர்
        தினம்செய் தீமைகண் டேங்கியே
    சிந்தைச் சலனக் கடலின் மூழ்குறுஞ்
        சிறுவனேற்கருள் செய்துசெங்
களிறா னனத்தன் முருக னாதிய
        கான்முளைத் திரட்கிடையிலே
    களித்து வாழ்வுறக் காணி லுன்றனைக்
        கனன்றொ றுப்பவ ருளர்கொலோ
தளிரே புரையு மேனி யம்பிகைத்
        தாயொ டன்றொரு கனவிலே
    தவளமால்விடை மீது வந்ததுஞ்
        சரத மன்றெனத் தருங்கொலோ
அளியார் தண்டலைத் திருநெல் வேலியில்
        அமையின் கீழினி தமைந்துநின்
    றடுத்த தொண்டர்தம் விருப்பி யாவையும்
        அளித்து வாழமென் னையனே.  (26)

            மறம்
        (எண்சீர் விருத்தம்)

ஐயர் வந்து கேட்டாலும் பெண்கொடுக்க மாட்டோம்
    அவர்குலத்துப் பெண்கள்வலி தளித்தாலும் வேண்டோம்
பையரவ கேதனத்தான் குடிகெடுக்கும் வாளி
    பண்டளித்த தெங்குலத்தோர் பழங்கிழவன் கண்டாய்
செய்யதிரு நெல்வேலிச் சித்தருக்கு மவர்தஞ்
    சிறுவனுக்கு முன்னிருபெண் சிந்தைமகிழ்ந் தீந்தோம்
கையதிலோர் முடங்கல்கொடு வந்திரந்த தூதா
    காவலருக் கஞ்சுவதெங் கைப்படையன் றறியே.  (27)

            (தாழிசை)

அறிவி னுக்கொ ரறிவெனா
        வகண்ட மாநி லாவுவான்
    அமைவ னத்தி னிடைமு ளைத்த
        அதிச யத்தை யிகழுவார்
செறிவ ழிக்கு மாயு தங்கள்
        ஒருப திற்றொ ரெட்டினும்
    சீர்த்தி கொண்ட புயவி சால
        தீர கோர வீரரியாம்
மறிய றுத்த பூசை செய்யும்
        வேட ரல்லம் அவரெலாம்
    வழிப டத்த குந்த சாதி
        மறவ ரெங்கள் மாதர்தோள்
குறியெ னத்தொ டர்ந்து டற்று
        ணிந்து கற்சொ ரூபராய்க்
    குவல பத்தினின்று ளார்கள்
        கோடி கோடி மன்னரே.  (28)

        (கலிவிருத்தம்)

மன்னும் வேணுவ னத்துறை வானவன்
மின்னு றழ்ந்தச டைக்கிழ வேதியன்
என்னு டைத்துதி யேற்றெனக் கின்றுசெம்
பொன்னு நல்கில னேற்புகழ் பொன்றுமே.  (29)

        (கலிநிலைத்துறை)

பொன்றாத சிவசித்த னணிநெல்லை
    நகர்மேய புனிதப்பிரான்
ஒன்றாலு மிணையற்ற பெருமானல்
    வடிவாயி யுடனாடுசீர்
மன்றாம தைக்கண்டு வழிபாடு
    புரிகின்ற மக்கட்கலால்
நன்றாகு மவைசற்று மெய்தாது
    மறைநாலு நவில்சொல்லிதே.  (30)

    (அறுசீர்விருத்தம்)

சொல்லுடன் பொருளு மெல்லாத்
    தோற்றமு மொடுக்கந் தானும்
அல்லுடன் பகலு மாகி
    அமைவனத் தமரு மம்மான்
வில்லுடன் வேட ராய்ப்போம்
    வியன்மிக விளம்பு நாயேன்
கல்லுடன் புரையு நெஞ்சார்
    கடைத்தலை காக்கொண் ணாதே.  (31)

        (எழுசீர்விருத்தம்)

காக்கை வாகனக் கரியனா தியபல
    கடிய கோட்களை வென்று
தீக்கை யிற்பொனுஞ் செயத்தகு சித்தராய்த்
    திரித ருசில ரெல்லாம்
பாக்கை நேர்முலைப் பார்வதி கொழுநனைப்
    பசிய மூங்கிலின் கீழ்க்கண்
டியாக்கை யாதிய மூவகை யுடைமையு
    மீந்து போற்றிசைத் தோரே.  (32)

        (எண்சீர் விருத்தம்)

இசைத்தமிழ் புலவோர் வேண்டுவ வெல்லாம்
    ஈந்துளீ ரெனவே யிகஞ்சொலக் கேட்டு
நசைத்துதி பலவாத் தினஞ்சொலுந் தமியேன்
    நவைப்பெருக் கெய்தி நலிவது முறையோ
பசைத்தலை யோட்டிற் பலிகவர்ந் துண்பீர்
    பசும்பொன்மா மேனிப் பாவைபங் குடையீர்
அசைத்தபாம் பரையீர் நெல்லையூர்க் கோயில்
    அமைத்திரு நிழற்கீழ் அமர்ந்தசங் கரரே.  (33)

        மடக்கு
    (கட்டளைக் கலிப்பா)

சங்கம் வார்ந்த குழைக்கணி வேடனே
    தனது மைந்தன் குழைக்கணி வேடனே
ஐங்க ரத்தனுக் கார்திருத் தந்தையே
    அணையு மாதல ரார்திருத் தந்தையே
சிங்க முங்கரி யுங்கலை யாயவே
    செப்புஞ் சொற்பொலி யுங்கலை யாயவே
எங்கள் நெல்லைப் பதித்தவ னம்பற்கே
    இலகு நெல்லைப் பதித்தவ நம்பற்கே. (34)

        (நேரிசை வெண்பா)

நம்பறியா மானிடர்போல் நானுமிந்த நானிலத்தில்
வம்படையக் கண்டு மகிழாதே - கும்பமுனி
போற்றுநெல்லை யப்பா புரமூன் றையுங் கணத்தில்
நீற்றுநகை தோய்ந்தபிரா னே.  (35)

    (கட்டளைக் கலித்துறை)

பிரமஞ் சிவமென் றிருபேர் சுமக்கும் பெருந்தகைய
பரமொன் றுளது திருநெல்லை மூங்கிற் பசுநிழற்கீழ்
வரமன்பர் வேண்டுவ வெல்லாந் துணிந்து வழங்குமை தீட்
டரமென்ற கண்ணியர் பாற்றூது மேகும் அருந்தமிழ்க்கே.  (36)

        வண்டுவிடுதூது
        (கலிநிலைத்துறை)

அருந்தும் பசுந்தேன் வெறிக்கொண் டினிசைபாடு மளிவண்டுகாள்
மருந்துண்டு மாயும்பல் வானோர்க ளென்பார மலிமார்பனைத்
திருந்துந்த மிழ்ச்சீல முதலாய வளமன்னு திருநெல்லையிற்
பொருந்தும் படிக்காசை யுற்றேனெ னிலையங்கு புகன்மின்களே. ( 37)

            களி
        (கட்டளைக் கலிப்பா)

புகலுஞ் சாதிக் குணஞ்சற்று மில்லவர்
    புல்ல ரென்றுகட் போதக் குடித்துளேன்
திகழுஞ் சொற்கள் பிறழ்ந்து பிதற்றிடேன்
    திருநெல் வேலிச் சிவன்கழல் சிந்திப்பேன்
உகமொர் நான்கினும் பாருல கத்துளீர்
    உலக்கை கோவண மேமற்று மங்ஙனே
நிகள மிட்டவன் மாமனை வென்றவன்
    நிமல யோக நிசத்தவ சீலனே.  (38)

        இதுவுமது
        (எழுசீர்விருத்தம்)

சீல மிக்ககட் குடிப்பது பாவமோ
    சிவசி வாதிரு நெல்லைப்
பால லோசனன் சடைப்பெருங் காட்டிலும்
    பசிய மான்ம னைவீட்டு
ஞால மீந்தவன் வசிக்குநல் லிடத்திலு
    நண்ணி டுமது கண்டீர்
சால நான்மறை நுவல்பவ ரமைந்தமு
    கத்தி லொன்றா மன்றே.  (39)

        (அறுசீர்விருத்தம்)

அன்றிருக்கால் முக்காலென் கனவில்வந்து
    திருவெண்ணீ றளித்த துண்டேல்
இன்றொருக்கா லானாலுஞ் சாக்கிரத்திற்
    சேவைதந்தீ டேற்ற வேண்டும்
குன்றனைத்துங் கொளுஞ்சேய்போல் வாழுமிச்சை
    எனக்களித்த கொடியோ னாரோ
பொன்றனக்கா யிரமடங்கு மேலாய
    செப்புமன்றிற் பொலிகின் றோனே.  (40)

        (எண்சீர் வண்ண விருத்தம்)
    தனதந்த தனதந்த தனதந்த தனதந்த
         தனதந்த தனதந்த தனதந்த தந்தனா

பொலிகின்ற தவளங்கொள் பொடிமிஞ்ச வணிகின்ற
    புனிதங்கொ ளெனைவம்பர் புகனிந்தை - தந்ததார்
அலியென்று மவனென்று மவளென்று மிளிர்கின்ற
    வருளன்றி மயமின்றி யறிவின்க ணின்றதார்
புலியொன்று கரியொன்று புரமொன்று திரளொன்று
    பொருதிண்கை யரியொன்று மகவொன்று கொன்றதார்
கலியன்ற னகமொஞ்சு நலமென்று நினைதொண்டர்
    கணநம்பி யுயவன்றொர் கழைதந்த சம்புவே.  (41)


        (எழுசீர் வண்ண விருத்தம்)
    தந்தனத் தனன .... -... .... தானனா

சம்புவைக் கயிலை நண்பனைச் சருவ
    தந்திரத் தலைமை யோனையோர்
அம்புவிட் டசுரர் தம்புரத் தையடும்
    அம்பொன்விற் சிவனை - யாசுதீர்
செம்புகழ்க் கழைவ னந்தனிற் குடிகொள்
    சிம்புளைப் பெரிது நாடியே
நம்புபத் திவெகு முன்பிறப் பிலுறு
    நந்தமர்க் கிலைகி லேசமே.  (42)

    (அறுசீர் வண்ண விருத்தம்)
    தானன தந்தன தானனா

ஏசறு மெய்ப்புகழ் வாரியூ டியான்மகி ழத்தின நாடினேர்
மாசடை யப்படு தீமையோர் வாய்வசை மிக்கிட னீதியோ
பூசனை யிச்சையி லாய்கொலோ பூதர விற்கொடு போர்செய்தாய்
வீசலை யிர்கடு வார்பவா வேணுவ நத்துறை நாதனே.  (43)

        (கலிநிலைத் துறை)

நாதக் கழற்பூணு நடனத் துணைத்தாள்க ணாடப்பெறா
தேதக் கடற்றாழு மெனையென்று னருள்வாரி யிடையுய்ப்பையோ
மேதக்க மொழியொன்று தில்லைத்த லத்தோதல் வீணாகுமோ
சீதப்பு னற்சீர்கொள் திருநெல்லை நகரூடு திகழீசனே.  (44)

        (மருட்பா)

ஈச னடியார்க் கெளியா னெனப்பலநூல்
பேசலுண்டு கேட்டதுண்டு பேணியதுண் - டாசகலப்
போற்றலு முண்டே பொருவில்மெய் யருட்பே
ராற்றல் கண்டில னந்தோ
சாற்றணி நெல்லைத் தலத்துமா தவரே. (45)

        (கட்டளைக் கலித்துறை)

மாதவ னான்முகன் காணாப் பிரானெல்லை வாணனெனப்
போதவும் போற்றிப் பலர்பேறு பெற்றனர் பொய்யடியேன்
ஏதமில் சுந்தரன் சொற்றூத னென்று மெழிற்பரவை
காதன்முற் றுந்தரு வானென்றும் வாழ்த்துசொற் கற்றுளனே. (46)

            சித்து
        (அறுசீர் விருத்தம்)

கற்றவித்தை கோடானு கோடிகளுண்
    டவற்றையெல்லாங் காட்டு வானேன்
சற்றயத்தைப் பொன்னாக்கித் தனிவங்கம்
    வலிக்கும்வகை தனையுங் காட்டிக்
கொற்றலிங்க முருகும்விதங் கூறுகின்றாம்
    கூழெனினும் கொடுவா வப்பா
செற்றமதாற் புரமெரித்தார் திருநெல்லைப்
    பதிவியக்குஞ் சித்த ரியாமே. (47)

        இதுவுமது
        (எண்சீர் விருத்தம்)

சித்தருக்கோ ரரசாகி நெல்லை யூரிற்
    றிருக்கோயில் கொண்டருளுஞ் சிவனுக் கன்றிப்
பத்தமொரு சிறிதுமெய்த மாட்டே மென்றும்
    பலவிதமா ரசவாதம் பண்ணச் சோம்பேம்
அத்தம்விழைந் தடுப்போருக் குலோபஞ் செய்யேம்
    ஆழியோ ரேழுமங்கை யடங்கக் காண்பேம்
எத்தனைதான் கற்றுமென்ன அன்ன மொன்றும்
    எமக்கருமை யாயதிந்த இகத்தின் மாதோ.  (48)

        (எழுசீர்விருத்தம்)

மாத ரார்தரு மயற்பெருங் கடலிடை
    மாழ்குறுந் தமியேனுக்
கேத மின்றிய சித்திக ளெட்டிலொன்
    றேனுமீந் தருளீரோ
போத னோர்சிகைத் தலையிலேற் றருந்துவீர்
    புயனிறத் தரிசெங்கண்
பாத தாமரைக் கணிந்துளீர் நெல்லையம்
    பதிச்சிவ பெருமானே.  (49)

    (மும்மடக்குத் தாழிசை)

மான னாரபி மான மிஞ்சலின்
        மான முற்றுமி ழந்துளேன்
    வஞ்சி நாட்டினர் வஞ்சிப் பாரென
        வஞ்சி டாதுமி ரந்தெய்த்தேன்
கான வேட்டுவர்க் கான செய்கையர்
        கானல் நீரெனக் காண்பதே
    கண்ணி யென்னது கண்ணி யங்கெடக்
        கண்ணி லாரிற் கலங்கினேன்
ஆன ணிக்கொடி யான தேபுக
        ழான னத்தரிற் கூட்டியே
    ஆயி யாதிய ராயி லிங்கியொ
        ராயி ரம்பயன் நல்குவாய்
தேன றாமலர்த் தேன வாமிசைத்
        தேந னாடுறழ் நெல்லையூர்ச்
    சித்த னேயருச் சித்த மேலவர்
        சித்த மோர்ந்தரு டெய்வமே.  (50)

    (நிலைமண்டில ஆசிரியப்பா)

தெய்வ நன்னிலை தெரிவரி தென்பா
ரைவகைத் தொழில்செய் தாடுவ தென்பா
ரிவ்வுரு வுடைத்தே யென்பார் சிற்சில
எவ்வுரு வினுந்தோய்ந் திடுவ தென்பார்
அருவே யென்பா ரான்ற பேரருட்
திருவே யென்பா சிவம்பர மென்பா
ரங்ஙன மங்ஙன மறைவா ருணர
வுங்ஙன நிலைபெற் றூக்கங் குன்றா
தருந்தமிழ்ப் புலவ னார்வம் வேண்டுபு
திருந்தணிப் பரவை திருமனைக் கிருக்காற்
போயா னென்பேன் பொதுச்செப் பவைச்சீர்
தேயா நெல்லைத் திகிரி யாதிய
பன்மர நீழற் பரம னென்பேன்
றன்ம மியாதோ தவளமங் கலையே.  (51)

    (நேரிசை வெண்பா)

மங்களங்க ளெல்லாம் வயங்குந் திருநெல்லைச்
சங்கரனே ஞானச் சதாசிவனே - செங்கமலக்
கண்ணானுக் கீந்த கருணையே வேண்டுமெய்தப்
பண்ணா திராதே பரிந்து.  (52)

    (கட்டளைக் கலித்துறை)

பரிந்தடி யார்களைப் பார்க்குங்கட் கூர்மை படுஞ்செவியிற்
சரிந்தமென் கூந்தலங் காந்தி மதியைத் தழுவுகொண்கா
விரிந்த சடாடவி யார்வெள்ளை நீறணி மேனியினா
ரெரிந்தகண் மிக்குடை யார்நெல்லை யூரிடை யேற்பவரே.  (53)

    (வெண்டளைக் கலிப்பா)

ஏற்றுக் கொடியா ரிலங்குசெப்பு மன்றுடையார்
காற்றுச் செவியானைக் கந்தனைமுன் றந்தருள்வார்
கூற்றுக் கெமனான கோபமுளார் ஆனாலு
நீற்றுப் பொலிவார் நினைத்தபணி செய்வாரே.  (54)

        ஊசல்
    (எண்சீர் விருத்தம்)

செய்யநிறப் பவளக்கா லிரண்டு நாட்டித்
    திகழ்தருகோ மேதகத்தால் விட்டஞ் சேர்த்துத்
துய்யமறை போலுமுத்து வடங்கள் பூட்டித்
    தொடர்பதும ராகமணிப் பலகை மீது
சையமருள் வடிவாயி யிடப்பாற் சேரச்
    சரவணத்தான் நடுக்குலவ ஆடீ ரூசல்
ஐயமற்ற பரத்துவந்தோய்ந் தவிரு நெல்லை
    யனவரத தானரிருந் தாடீ ரூசல்.  (55)

    (கலிநிலைத்துறை)

சல்லித் தனக்கார ருக்கஞ்சித் தவிக்கு நாயேன்
வில்லிற் பெரியா னிகர்பீ டுறவேட் டுளேன்காண்
செல்லிற் றொனிதந் தவிர்சே வுடைச்சித்த நாதா
நெல்லிற் கொருவேலி முன்கோ லியநீ தியானே.  (56)

        (எழுசீர் விருத்தம்)

நீதிப் பிழைக்காரர் பலகோடி பேர்வந்து
    நேர்நின்று போர்செய்யினுஞ்
சாதித்து வெல்லத் தகுந்தீரர் பலரோடு
    தமியேனு முறவைப்பையோ
மேதிப் பரிக்கால னுயிருண்டொர் சிறுமைந்தன்
    மிகவாழ வருள்செய்தபின்
ஆதித் தனிச்செப்பு மன்றத்தி னடமாடு
    மருளாண்மை மலியையனே.  (57)

        தழை
        (தாழிசை)

ஐய மேற்றுணு மோடு கொண்டகைக்
        கம்பொன் வில்லும ணிந்துளார்
    அமைவ னத்தி லமர்ந்த நாயகர்
        ஆசை கொண்டவென் னாயிழை
உய்ய நாடுபு தூதி கையிலொர்
        ஒண்ட ழைக்கொடை நல்கினார்
    உடன தேற்றணிக் கொன்றை மாலிகை
        யொப்ப மார்பினி லாற்றலும்
வைய மாதர்க ளேசு கின்றிலர்
        மன்ம தன்கணை பெய்கிலான்
    வாரி தித்தொனி யாதி சால
        வருத்து கின்றில வந்தவர்
செய்ய தோளில ணைக்கு நாண்வரிற்
        தேவரும்புகழ்ந் தோதுவார்
    சிவசி வாவெனிற் பாவம் வேரொடு
        தீரு மென்பது திண்ணமே.  (58)

         (அறுசீர் விருத்தம் )

திண்ணனுக்குங் கண்ணனெனும் பெயர்பொருந்தப்
    புரந்தபிரான் திருநெல் வேலிக்
கண்ணவிர்ந்த  மூங்கினிழற்  காரணனோர்
    உயிர்க்கணுப்போற் கருணை செய்தான்
மண்ணவரும்  விண்ணவரும் மாயனென்பார் 
    வடிவேற்கைம் மதலை யென்பார்
பண்ணமைந்த நால்வேதப் பயனிதுண்மை 
    யறிய வல்லார் பலரல் லாரே  (59)

        (எண்சீர் விருத்தம்)

அல்லார்தண் பொழிற்றிருநெல் வேலிநகர்க் கோயில்
    அமையடியின் முளைத்தபிரான் அனைத்து முளானெனலா
லெல்லாரு மவற்கினியா ரென்றிடுதல் கூடா
    தெயிலவரைப் பொடித்தகதை யிதற்கொருசான் றாகுங்
கொல்லாத விரதியர்க ளாதியரே நல்லோர்
    கொலைப்புலைஞர் முதலானோர் கும்பிடினும் பொல்லார்
இல்லாத ஞாயமன்றன் றுண்மை சொன்னேன் சொன்னேன்
    இனிப்பிறவா நெறியடைந்தோ ரிஃதுணர்வா ரன்றே.  (60)

    (இரட்டையாசிரிய விருத்தம்)

அன்றிலுங் குயிலுமலை யாழியுமொ லித்தொலித்
        தாவியுங் கவருகின்ற
    அம்புலிந றுந்துணர்செ ழுங்களப மாதிய
        அழற்றிவலை வீசுகின்ற
தென்றிசைக் கால்புலியெ னப்பாயு மதுகண்டு
        சேடியரு மேசுகின்றார்
    தித்தித்த பாலமுத ருந்தச்சொ னாலுமொரு
        சிறிதேனு மிசைகின்றிலாள்
கொன்றிரைய ருந்துமசு ரர்க்கும்வர முதவுநுங்
        குணமிநாள் சிறிதுமிலையோ
    கொன்றைமா லையைவிழையு மங்கைமீ தித்தனை
        குரூரஞ்செய் வதுஞாயமோ
மன்றினிடை முயலகன் றிருமுதுகி னடமாடு
        மாதேவ னேதேவராம்
    வரைவ னத்திற்குலவு மிறைவசிற் சத்திமுலை
        மருவுமுக் கட்பகவனே.  (61)

            தவம்
        நேரிசை வெண்பா

பகல்வனைப் பல்லுகுத்தார் பத்துத்தோ ண்மீதுந்
திக்பிரமர் மண்டைவடஞ் சேர்த்தார் - நகர்முழுதும்
போற்றுதிரு நெல்வேலிப் புண்ணியனார் பூண்டபுகழ்
சாற்றுதலே நந்தந் தவம்.  (62)

        (கட்டளைக் கலித்துறை)

தந்தனத் தான வெனச்செப்பு மன்றிற் சரணெடுத்த
வந்தனத் தானய னாடரி யான்வடி வம்மனிரு
செந்தனத் தானந்த மிக்கயில் வானென்றன் சிந்தைப்பொன்னிற்
குந்தனத் தான மணிபோல நின்று குலாவலென்றே.  (63)

        (கொச்சகக் கலிப்பா)

குலமறைக ளொருநான்குங் கொண்டாடக் குளிர்சடையி
னிலவசையச் செப்புமன்றி னிருத்தமிடு நெல்லையப்பா
திலகநுதற் கவுமாரி திருமுலைப்பால் சிறிதெனக்குப்
பலமதத்தர் குறும்பழியும் படிபாலித் தருள்வாயே.  (64)

        (கலிவிருத்தம்)

அருள ணுத்துணை யேனுமில் லார்கள்போன்
றிருளிற் பட்டுளைப் பேனையென் றாட்கொள்வாய்
தெருளுஞ் சித்தர் தினம்புகழ் நெல்லையிற்
பொருளெ லாந்தரும் புண்ணியச் சோதியே.  (65)

        (எழுசீர்விருத்தம்)

சோதி வான்மதிச் சடையுடைப் பண்ணவன்
    தூயநெல் லையில்வாழும்
ஆதி நாயகன் அருட்டுளி பெறுவதே
    அநுதினம் விழைவேனும்
காதி யுண்பவர் கருங்குடைக் கீழ்ப்படுங்
    கடுந்துய ரொழியாதோ
நீதி யேயது தோய்தரக் கவின்றரு
    நேமியம் படைமாலே.  (66)

        சம்பிரதம்
        (எண்சீர்விருத்தம்)

மால்வழுத்தச் சக்கரமீந் தருளி நெல்லை
    வளம்பதியிற் குலவுமன வரத தானர்
பால்வணங்கித் துதித்துருகும் தவம்கண் டார்வம்
    படையாத கடையருவப் படைதல் வேண்டி
நூல்வருக்கம் பலவொருபா வதனுட் காட்டி
    நுதிவேலால் வேங்கைமகிழ் நுணுக்கஞ் சொல்லிக்
கால்வதைக்குங் கதிகிடைத்த கதையும் பாடிக்
    கற்பனைமேற் கற்பனையுங் கற்பிப் போமே.  (67)

        (கட்டுத்தாழிசை)

கற்பு மாதர் கொங்கையே யற்பு நீடல் வெங்கையே
    காமி கட்கு மோசமே மாமி வெட்க நேசமே
பொற்ப ணத்தி னாசையே யற்பர் நக்க வோசையே
    பூர ணச்ச காயமே யார ணத்து பாயமே
சற்ப மாயை யானியே பற்ப மூழ்கு மேனியே
    தமிழி னிப்பு நன்றதே யமிழ்து மட்க நின்றதே
சிற்ப ரத்து ணீடுவார் கற்ப மெத்த வாடுவார்
    தில்லை போலும் வன்பதே நெல்லை யூரு மென்பதே.  (68)

    (கட்டுக்குறுந்தாழிசை)

என்பணி பூண்டானு மன்பரை யாண்டானு
    மேறு வனைந்தானு நீறு புனைந்தானுந்
துன்ப மொளிப்பானு மின்ப மளிப்பானுந்
    தோல துடுத்தானு மால மடுத்தானும்
வன்பரை யட்டானுந் தன்பரை யெட்டானு
    மால்பணி கொண்டானுஞ் சால்பலி யுண்டானும்
புன்பழி சாற்றானு முன்படி யேற்றானும்
    பூணுமி னத்தானும் வேணு வனத்தானே.  (69)

    (பஃறொடை நேரிசை வெண்பா)

தானே தனக்கிணையாஞ் சங்கரா! தன்னிடம்வாழ்
மானேருண் கண்ணி மணவாளா - நானேநிற்
காளானேன் கொல்லோ அடுத்தடுத்து வந்துவந்து
கேளா தனவனந்தங் கேட்பித்தாய் - வாளா
மடிந்தொழியச் செய்யாதே மாயையிருட் டின்னம்
விடிந்திடவுங் காணேன் வெருண்டேன் - றடிந்தெழிலி
பெய்தாங் கடுத்தோர் பிரியமுற்று மீந்தருளுங்
கைதா விடைப்பரிமேற் காட்சிதர - மெய்தாங்குஞ்
சித்தியெட்டுந் தாதா திரும்பாதுன் னுட்கலக்கு
முத்தியுந்தா வின்னமென்னை மோசியேல் - பத்தியிலார்
தம்மோடு வீணே தரையில் மடியார்தேர்
மெய்ம்மோன வாழ்க்கையின்னு மேவிலேன் - பொய்ம்மோக
மாதியன சூழ்வுற் றலக்கழிக்கச் சோர்கின்றேன்
நீதி யொடுபொருளு நின்னவன்றோ - யாதியற்கை
யெவ்வாறா னாலு மிலங்குநெல்லை யூரறியச்
செவ்வாமோ ராடலின்னே செய்.  (70)

            மதங்கு
        (எழுசீர் விருத்தம்)

செய்ய வீணைதொட் டிசைக்குமிம் மதங்கியைத்
    திருநெல்வே லியிற்காணா
வைய ரேநெடும் பாற்கட லிடைவரு
    மணங்கினர் மயல்கொண்டார்
தெய்ய வென்றுசெம் பம்பலத் தாடிய
    சிவனரு ளுணராரே
வைய மேழுமுண் டான்முதற் பலர்செயு
    மதங்களிற் புகுந்தாரே.  (71)

    (வஞ்சி விருத்தம்)

புகுமுடல் வேறு பொருந்தலால்
வெகுவித வாதனை மேவிடா
நெகுமன தோடணி நெல்லையூர்ச்
சகுண சிவன்கழல் சாரினே.  (72)


    (பதினான்குசீர் வண்ண விருத்தம்)

சாரி விட்டபரி மாவுடைச்சிலரு
        தார நச்சுகலி           தேய்வுறார்
    தாம தக்குணவி காதமுற்றியவி
        சார மைக்கடலின்     மூழ்குறார்
வேரி மிக்க மலர் வாளி தொட்டமர்செய்
        வீரன் முற்சிறிதும்     நாணுறார்
    மேதி யிற்கதையி னோடொர் வெற்பிலிவர்
        மீளி யைக்கருதி         வாடுறார்
பாரி மக்களுற வோர்வி ளைக்கவளர்
        பாச முற்றிமருள்         கேடுறார்
    பார்பு ரக்குநெடு மாலு மெச்சுமதி
        பார மெய்ப்புகழ         தேகொள்வார்
சீரி யற்கைபிற ழாதெ ழிற்பொருனை
        சேர்த கைத்திருநெல்     வேலிவாழ்
    சேவு டைக்கொடிம யேசனைக்க ருது
        சீல ரைத்துதிசெய்     வோர்களே.  (73)

            இரங்கல்
        (எண்சீர் விருத்தம்)

ஓரம்புதொ டுத்தான்மத னுலவாமய லுற்றேன்
    உள்ளத்தினை நெல்லைப்பதி யுடையார்கொடு போனார்
ஈரம்பகர் வாரிங்கிலர் எவரும்பழிக் கின்றார்
    இதழித்தொடை தரவல்லவர் யாரோவறி கில்லேன்
வாரம்பெரி துறுதாயும்வெ றுத்தாளெங னுய்வேன்
    மதியஞ்சுட வாரித்தொனி வளர்கின்றது சகியேன்
ஆரங்கரி வதுகண்டுமி ரங்காதுற லாமோ
    அவர்தம்மெதிர் போயிருப்பரி சறைதற்கிசை வீரே.  (74)

        (இன்னிசை வெண்பா)

இசைவிழைந்து பாடுபடு மென்றனக்கே னிந்த
வசையளித்தாய் நின்குணமோர் வன்குணமே யானால்
விசையனுக்கு வாளி விரைந்தருள்வாய் கொல்லோ
திசைபுகழ்சீர் நெல்லையர சே.  (75)

            பாண்
        (கட்டளைக் கலித்துறை)

அரசர்க்கு மங்கையர்க் குந்தூது
    செல்லுமது தொழிலாஞ்
சரசவுற் சாக குணப்பாண
    னேநெல்லை தங்குமெங்கோன்
விரசனல் லானவற் காத்தூதென்
    பாற்சொல்ல வேட்டனையோ
பரசவல் லார்க்கெளி யானாத
    லாற்சென்று பாடுதியே.  (76)

        அடிமடக்கு
        (கட்டளைக் கலிப்பா)

பாடு நாவின ருக்கரு ளத்தனே
    பாடு நாவின ருக்கரு ளத்தனே
யாடு பேரர வம்புனை யப்பனே
    யாடு பேரர வம்புனை யப்பனே
மாடு வாகன மான வொருத்தனே
    மாடு வாகன மான வொருத்தனே
தாடு நெல்லைப் பதித்தவ ராசனே
    தாடு நெல்லைப் பதித்தவ ராசனே.  (77)

        (கொச்சகக் கலிப்பா)

தவராச ராசனெல்லைத் தாணுவன்றி வேறில்லை
சிவராச யோகமவன் திருவுருவச் சிந்தனையே
யவராசர் கைப்பொன்விழைந் தகிலமிசை யலையாமற்
கவராசன் றொடராமுன் கருதுவது கடனாமே  (78)

        (எழுசீர் விருத்தம்)

கடகரிப் பெருந்தோல் போர்த்துநெல் வேலிக்
    கழைநிழ லமர்ந்தகா ரணநீ
நடனமா டியபோ தெடுத்ததா ளெனது
    நடுத்தலை சுமக்குநா ளிலையோ
விடர்விடுந் தூது மாகுநீ யெனக்கிவ்
    விதஞ்செய்தா லிழிவுகொல் விளம்பாய்
புடவிமால் களையாப் புலவரு மிகழ்சொற்
    பொறுக்கிலேன் புரந்தருள் விரைந்தே.  (79)

        குறம்
    (பிற்கட்டுக் குறுந்தாழிசை)

ஐந்துநெற்கை யொன்றியதா லாக்கமுண் டன்னே
    அனவரத தானருன்னை யணைகுவா ரின்னே
வெந்துநொந்து பேசுதலை விட்டுவி டம்மா
    வீதியைப்போய்ப் பார்த்துப்பார்த் தேன்மெலிகிறாய் சும்மா
சந்து சென்ற பேரவரைக் கண்டிலர் கண்டாய்
    சாலிநகர் மாதர்மிகத் தரும்வசை யுண்டாய்
இந்துநிகர் முகமலர்ந்து துதியென்னைப் பாரே
    ஈகைதந்தென் பிள்ளைதலைக் கெண்ணையும் வாரே.  (80)

        (கொச்சகக் கலிப்பா)

வாரணிந்த கொங்கைகாட்டி மதிமருட்டும் விலைமினார்
கோரணிக்கொ ராளெனக் குழப்பிடா தெனைக்கொள்வாய்
ஆரணிந்த சென்னியப்ப வானிமாத மோடுமைந்
தேரணிந்த வீதிநெல்லை யிற்றிகழ்ந்த செம்பொனே  (81)

        பெண்பாற் கைக்கிளை
            (வண்ணப்பா)

தன்னதன தய்யதான தன்னதன தய்யதான
தன்னதன தய்யதான தன்னதன தய்யதான
    தத்ததன தந்ததான தத்ததன தந்ததான
    தத்ததன தந்ததான தத்ததன தந்ததான
        தனனதன தானதான தனனதன தானதான
        தனனதன தானதான தனனதன தானதான
                 (தொ) தனதாத்த தாந்ததன தானனா.

பொன் அனைய செய்யமேனி அண்ணல்; வெகு வெள்ளவாரி
மன்னுசடை ஐயன்; ஆலம் உண்ணுமிட றுள்ளஆதி;
    பொற்புமலி கந்தநாத னைத்தருசெ ழுங்கண்மேய
    நெற்றியினன்; இந்திராதி யார்க்குமுன்இ ரங்குநேய
        புனிதன்;அசு ரேசரேனும் மிகுதவம தேசெய்தால் அன்
        னவர்கருது மாறுபேறு தருகருணை நீடுசோதி;
விண்ணில் இடை ஒல்லும் ஆடல் பண்ணுமுதல்; வள்ளல்; காலன்
என்னும்ஒரு வெய்யன்ஆவி உண்ணும்அடல் மல்குபாதன்;
    வெற்பிறைப யந்தபாவை பற்பலம் டந்தைமாரொ -
    டுற்றுயர்த வஞ்செய்காலை யிற்றலைந டுங்குசோரன்;
        விபுதர்உடல் நீறுபூசி, மகபதியும் வேதநீதி
        அறிபவனும் மாலும்ஈயும் அளவில்அடை யாளம்மேவு
புண்ணியன்; ஓர் பிள்ளைவேடன் உண்ணஎன மெல்லும்வேளை
பன்மணமும் ஒல்லும்ஊனை நண்நசையும் எய்துசாமி;
    புத்தர் எதிர் கண்டவாதில் வெற்றியத டைந்தஞான
    வித்தகன்நு வன்றபாடல் முற்றும் எழு துங்கையாளி;
        புகர்முகநி சாசரேசன் மடிவடைய வாரணாசி
        தனில்ஒரும காகுரூர வடிவொடுநி லாவுதேவு
                       புருடார்த்தம் ஈந்தருள்க பாவகோ. (1)

புன்மையினர் வவ்வொணாத தண்ணியன்; ஓர் தையல்ஓடி
என்னஇனி செய்வன்ஈதி என்னஅவண் உள்ளபானை
    புத்தமுது றழ்ந்தவாறி ரட்டியப ழங்கள்ஈய
    அக்கணம்நி னைந்தபான்மை செப்பும்அவர் நெஞ்சில்வாசி
        பொருவில்சன காதியோர்கள் அரியசிவ ஞானம்மேவ
        ஒருமுதுக லாலநீழல் வயின்உறுத யாகுணாளன்;
மின்னல்அதும் ஒல்குகோல நுண்ணிடைகொள் செல்விபாகம்
மன்னல்அருள் கையமாமன் வண்ணமுடி கொய்துவேள்வி
    வெப்பழல்அ ருந்தவீசும் மற்புயம்ம லிந்தவீரன்;
    விப்பிரர்தி னம்பரவு மெய்ப்புகழ்உ றுங்கிரீசன்
        விடஅரவு, கோடுபால மதி, இதழி, ஆர், விளா வெள்
        அறுகறுகு, கூவிளாதி அணிதரும யேசன்; ஈடில்
பொய்ம்மொழிஓர் நல்லாபலன் உன்னஎன விள்உபாயன்;
மும்மதிலும் வல்லைவேவும் வெண்ணகையன்; மெய்விடாத
    புத்தியினர் தங்கள்பேரு ணர்ச்சியில்வி ளங்கும்ஏக
    தத்துவசு தந்தரேசர்; அத்தன்; நவ கண்டரூபி
        புகழ்பலபல் கோடிமேய பரசிவன்; அ னாதி; யோகி;
        சருவமத பேதவாதம் அறுசமர சாநுபூதி
                      பொலிகீர்த்தி தோய்ந்தவிளை யாடலான். (2)

அன்னநடை வல்லிபோலும் வண்மையுறு தையலார்கள்
பின்வரஓர் வெள்ளைஓடு கொண்மதனன் ஒவ்வஏகும்
    அத்தன்; மத குஞ்சரான னத்தனைவ ழங்குதாதை
    சத்திகள்அ னந்தகோடி மொய்த்துமரு வுஞ்சையோகன்
        அதிரதம காரதாதி வயவர்கள்ப ராவுசூலம்
        முழுமுதல வாயவேல்கள் புனைதருபல் பூதநாதன்
மண்ணுலகில் வைகுவார்கல் உன்னுபவும் நல்குசீலன்;
எண்ணில்பல தெய்வம்ஆகும் முன்னவன்; ஓர் வில்வம்ஏறும்
    மற்கடம்அ கன்றபூமி முற்றும்ஒரு தன்கை ஆள்கை
    உட்கொளவ லிந்தநாள் அ ளித்தவன்;உ டன்குலாவு
        மரகதக லாபிபோலும் உமைஉரைத வாதகோர
        நிருதர்குல பாலவாதை அறஅருளும் மோகவாரி;
ஐம்முகவன்; வெள்ளிஆய தொன்மலையில் வைகும்ஆர்வன்;
அம்மலையின் எல்லைபேர முன்முயல்ஓர் வல்லன்ஆவி
    அப்படிவ ருந்தஓர்வி ரற்கொடுமு யன்றமீளி;
    அத்திரம்வி ழைந்தபேடி கைச்சமர்உ வந்தவேடன்;
        அபரிமித மானசார தமிழ்கொடுமுன் நால்வர்ஓது
        பதிகம்மொழி வார்கள் ஆவல் முழுதுதவு சீர்வினோதன்
            அருளாட்சி வேண்டுநரை ஓவிடான் (3)

அம்மலரின் மையவாசன் நன்மறைகள் விள்ளும்நீதி
அண்மைஉறு சைவர்சேனை, தொன்னெறியில் கர்மசீலம்
    அத்தனையும் ஒன்றுதூய விப்பரர்சு கந்ததாம
    மற்புயம்இ லங்குகாவ லர்த்திரள்,ச ளம்செயாத
        அருநெறிய நாய்கர், யாவர் விழையினும்வி டாமல்ஈயும்
        அருள்மலிப ரோபகாரம் உறுசதுரர் வாசம்ஆகும்
மைமருவு செய்யசோலை தன்னில்உதிர் கள்ளறாத
நன்மலரை நள்ளும்மாஓர் கும்மல்என உள்ளுலாவும்;
    வத்திரமுடன் பல்பூண்இ டத்தகுசி கண்டிபோல
    மொய்த்தமட மங்கைமாரொ டிக்குவில்ம தன்சுலாவும்;
        மரணபயம் மேவிடாத புலவர்அவர் மாதரோடு
        தளிரில்மலர் மீதுநாளும் மிகவும்விளை யாடலாகும்;
அன்னையினும் நல்லர்ஆன தன்மைஉறு பல்வலோர்கள்
துன்னுபொதி யைநனீரில் மும்மையத மிழ்விராவும்
    அத்தியினி டம்பெண்ஈயும் அச்சிறுகு ழந்தைபாடல்
    நித்தம்முர லும்;பல்சார ணர்க்கழுவி டந்தநாளில்
        அணிபொடியி னால்நன்மேனி கொளும்வழுதி யார்செய் கோயில்
        அவிர்தரும்நெல் வேலிஆளும் அனவரத தானநாதன்
            அணிவாய்த்த காந்திமதி தோள்புல்வான். (4)

இன்னல்இல தையர்வாழ, அன்னவரை வெல்லநாளும்
முன்னும்அவு ணர்கள்தாழ, உண்மையொடு தர்மம்நீட,
    இற்றொறும்ம டந்தைமார்கள் கற்புநிலை மிஞ்சஆட
    வர்க்குவயம் முன்சொல்பான்மை அத்தனையும் வந்துசேர
        எழிலிஇனம் ஏழும்வானில் இரவிசெலும் மாதம்யாவும்
        விதிவழிமு மாரிஈய, விளைவுகுறை யாததாக
உன்னுதலின் வெள்ளைஏறு தன்னில்ஒரு தையலோடும்
அம்மகள்ஓர் கைவிடாத செம்மைமுரு கையனோடும்
    உச்சியில்இ ருந்தநீர்ம கட்கினிய திங்கள்சூடி
    முக்கணும்அ சைந்தவால்வ ளைக்குழைக ளுங்குலாவ,
        உரகம்முத லாயபூணும், இதழிமுத லாயதாரும்
        மழுவும்எழில் மானும், யாதும் அழல்சிதறி டாததாகும்
இன்னகையும் வல்லதோள்கள் துன்னுடையும், மெய்மைஞானம்
என்னமிளிர் துய்யநீறும், அன்னபல செவ்வியாவும்
    எற்பொழுது கொண்டு, தேவர் முற்பகர்க ணங்கள்சூழ,
    டுட்டுடுடு டுண்டுடூடு டுட்டெனஇ யங்கள்ஓல
        இருவகைய வேதசாலம் முறையிடமி னார்கள் ஆட,
        இசைமுனிவர்பாட, ஆனி விழவினது நாள் ஓர்நாலில்
            இருள்தீர்க்கும் வான்பவனி காணலால் (5)

என்னதுடல் வல்லைசோர, மின்னும்வளை யல்கள்ஆழி
தன்னொடுக ழல்வதாகும்; வன்மெலிவு கொள்ளமாரன்
    இக்குடன்ம லிந்ததேம லர்க்கணைபொ ழிந்துபோர்செய்
    திட்டனன்;அ வன்றன்மாம திக்குடைகு ளிர்ந்தநீர்மை
        இலது;கனல் கோடிபோலும் வெயில்உமிழ்வ தாயதேழு
        பனைஉயரம் ஆனமேன்மை எலிஉயரம் ஆயதாரும்
உண்மைஉற வில்லர்ஆகும் அன்னவர்த முள்அநேக
வண்ணம்வசை சொல்லினார்கள்; உண்அமுதும் நல்லபாலும்
    ஒப்பிலது, மிஞ்சலான கைப்பொடுதி கழ்ந்தகோகி
    லத்தினிசை, அன்றில்ஓசை, மைக்கடல்செ யுங்கலோல
        ஒலிமுதல வானகோடி பகைவிளைப வான; சோகம்
        இரவுபகல் மாறிவீழல் பிறழல்எழல் ஓடல்போலும்;
எண்ணில்வகை அல்லல்ஆன பன்னிவிடு கிள்ளையாதி
இன்னம்வர வில்லை; தோழி அன்னைமுதல் உள்ளபேரும்
    எட்டியைநி கர்ந்த நூறு சொற்சொலிமு னிந்துளார்கள்;
    கட்டில்அணை கந்தம்மீறு புட்பகள பங்கள்தீயில்
        எரிவுதர லானதீதில் கனவுபல வாயும் ஓர்நல்
        நனவில்அவன் ஈவதான தழைவரவும் நேரல்காணன்
            எழில்ஆத்தி வாஞ்சையிடை மூழ்கினேன் (6)

முன்னம்எனில் மையல்ஆகி அம்முதல்வன் நல்கும்ஆர்வம்
நன்னலம தெய்தினாரிம் மன்னுலகில் இல்லைபோலும்;
    முத்தலம்வி யந்தராவ ணற்புணர்ம டந்தைதோள்வி
    ருப்பும்உளன் என்றுநூல்கள் செப்புதலும் வம்புபோலும்;
        முகுளமலர் வாளியான்நல் உடல்பொடிய தானபோதும்
        இமயமலை தேடிஏகி மணம்முயலல் ஓர்பொய்போலும்;
நன்மைதவிர் புல்லன்ஆன சின்னவிதி இல்லில்நீடு
பெண்ணுரிமை கொள்ளும்ஆடல் பண்ணியதும் இல்லைபோலும்;
    நத்தணித ருங்கைநார ணற்கினிய தங்கையாம்ஒ
    ருத்தியைம ணஞ்செய்தான்எ னச்சொலலும் வம்புபோலும்;
        நதிவடிவ மானபாவை தனைஇதழி மாலைசூடும்
        நெடியசடை யூடுவாழ அருளலும்ஓர் காதைபோலும்;
மும்மைஉல குய்யுமாறு தென்மலையில் ஐதுபோய
மன்முனித மிழ்வழாது முன்வளர்தல் செய்தபேருள்
    முக்கியன்எ னஞ்சொல்மேவ அக்கிரிவ ரைந்தகேத
    னத்தினைஅ ணிந்துளான்ம கட்புணர்த லும்பொய்போலும்
        முறையிடும்எ னாதுமோகம் அறிகிலவர் போல்உளான்இ
        தருள்நெறிய தாகுமோ? எல் மிதுனம்அதில் ஏகுதோறும்
            முருகாற்றல் ஏந்திழைகள் வாடவோ? (7)

மொண்ணைமுகி அல்லன்; ஈனர் தம்மரபி அல்லன்; வாரி
தன்னில்வரு தையலாரும் என்னெழிலை நள்ளுவார்கள்
    முற்பவம்உ ணர்ந்தமோன வித்தகர்க ளும்பெணாசை
    அத்தனையும் வென்றிடார்எ னப்பகர்வ துண்டதாயின்
        முதியன்இவன் ஏதென்ஆவல் அணுவளவும் மேவிடாமல்
        இவன்உரிமை ஈர்கிறான்;இ திணையில்கொடி தாம்அநீதி;
நண்ணல்அருள் உள்ளமூவர் துன்னெரியில் வெய்துறாமல்
இன்னம்மகிழ் வெய்தல்காணும் அண்ணல்இவன் அல்லனோ?பல்
    நச்சரவ ணிந்ததோள்கொ டுக்கவும்இ சைந்திலான்; முன்
    நக்கன், அரன், அம்பைபாகன், அத்தன்என நின்றபேர்கள்
        நவில்பவரும் வீடுசேர அருளினன்எ னாமுனூலும்
        உலகினரும் ஓதல்வாய்மை எனில், எனைவி டான்விடான்மெய்
மொய்ம்முகர்தல் உள்ளிமீது துன்னுமுகை கள், கொல்யானை,
பொன்னவிர்சி மிழ், கிரீடம் என்னமிளிர் செவ்விமேவி
    முத்தணிவ டங்களாதி நற்பணிபு னைந்து, தேமல்
    மொய்த்து, மத னன்றனோட வற்கினிய நங்கைகோலம்
        முழுதும்மட மாதரார்கை எழுதிபொறி தோய்வதாகி,
        முகமும்அகல் வானில்நீடு பிறைநுனியின் மேலதாம்என்
            முலையாற்செய் வேன்சமரம் நேரினே (8)

        தொங்கற்றாழிசை

புருடார்த்தம் ஈந்தருள்சு பாவகோ;
    பொலிகீர்த்தி வாய்ந்தவிளை யாடலான்
அருளாட்சி வேண்டுநரை ஓவிடான்
    அணிவாய்ந்த காந்திமதி தோள்புல்வான்
இருள்தீர்க்கும் வான்பவனி காணலால்
    எழில்ஆத்தி வாஞ்சையிடை மூழ்கினேன்;
முருகாற்றல் ஏந்திழைகள் வாடவோ?
    முலையாற்செய் வேன்சமரம் நேரினே!  (82)

        ஆண்பாற் கைக்கிளை
        (பதினான்குசீர் விருத்தம்)

நேரலார் புரங்கள் மூன்றுமோர் நொடியி
        னிகழ்குறு நகையினா லெரித்தார்
    நெல்லையூர்க் கோயி லிடைகுலா மூங்கில்
        நீழலின் முத்தென நிகழ்ந்தார்
வாரணா சியிற்றான் போர்த்திடற் கான
        வலிய தோற் போர்வையொன் றடைந்தார்
    வரைப்பெருஞ்சாரற் றினைப்புனத் தெனது
        மனங்கவர்ந் திருக்குமம் மறப்பெண்
ஈரமின் மனமே கருங்கலு மிரும்பும்
        எஃகமும் வயிரமு மேய்க்கும்
    எத்தனை காலம் தொழுதுபோற் றிடினும்
        எள்ளள வாயினு மிரங்காள்
வீரவேற் குமர னிவள்குலத் தொருத்தி
        வெருளமுன் னானையால் வெருட்டி
    மேவிய வாறே செயத்தகு மதற்காம்
        வித்தையான் உணர்தர விளம்பே.  (83)

        (நேரிசை வெண்பா)

விளம்புதமிழ்ச் சீருணரா வீணரிடம் போய்ப்போ
யுளம்பதறா வாழ்வெற் குதவாய் - களம்பொருந்து
நீலத்தாய் மிக்கதிரு நெல்லையாய் நீடுதழற்
பாலத்தாய் இன்னே பரிந்து.  (84)

        (கட்டளைக் கலித்துறை)

பரியா நரிகளைச் செய்துமந் நாளொரு பத்தற்கொண்டாய்
தெரியா மதியுடை யேன்றன்னை யாளச் சிறிதிரங்காய்
எரியார் நுதற்கண் ணுளாய்நெல்லை யூர்த்தனி யேறுடையாய்
கிரியாய வில்வளைத் தாய்பெரி யார்துதி கேட்பவனே.  (85)


        (எண்சீர் முடுகு விருத்தம்)

கேட்டுக் குளஞ்சித்த விக்கின்ற துன்பங்
    கெடத்தூய ஞானக்கி ரிச்சென்னி யிற்போய்ப்
பாட்டுக் கடற்போ னுவன்றிட்ட வற்றாற்
    பலசித்தி யாடும் படிக்கென்னை யாள்வாய்
நீட்டுக் கழைச்சாலி வாடிப் பதிக்கண்
    நிலாவுந் திருக்கோயில் நிற்கைக் கிசைந்தாய்
தோட்டுக் கடுக்கைச் சடைத்தம்பி ரானே
    தொழுத்தொண்ட ருக்காய தூதுஞ்செல் வானே.   (86)

        (குறளடி வஞ்சிப்பா)

சொல்லொடுபொருள் மல்கு தண்ணருள்
இத்தகைத்தெனச் சித்தமோர்ந்திட
நச்சுமென்றனக் கச்சமீந்தனை
இனியெநாளடற் றனிவிடைப்பரி
மிசையெதிர்திகழ்ந் தசைவறச்செயல்
பகராய்
கல்லைநேர் மனத்தினர் காணா
நெல்லையூர்க் கோயில் நிலவுசங் கரனே.  (87)

        மடக்கு
    கழிக்ககரைப் புலம்பல்

    (பன்னிருசீர் விருத்தம்)

சங்க முலவு மலையினமே
    தன்மை யுலவு மலையினமே
    தாதுந் தூற்று மிக்கலரே
    தாயுந் தூற்று மிக்கலரே
பங்கத் தருகி லடர்புனையே
    பாழ்வே ளருகி லடர்புனையே
    பனையி னிலவு மன்றில்களே
    பகையா நிலவு மன்றில்களே
செங்கட் கரியான் மயல்கொடிதே
    தேவர்க் கரியான் மயல்கொடிதே
    சீர்நெல் வேலிக் கழையானோ
    திருநெல் வேலிக் கழையானோ
துங்கக் கிளிவா கனத்தானைத்
    துகளாக் கிளிவா கனத்தானைத்
    தோய விரும்பித் தவித்தேனே
    தூசெ னிரும்பித் தவித்தேனே.  (88)

        (சவலை வெண்பா)

தேனே கிளியே சினைமுகிலே சேடியே
நானேநெல் லைச்சிவனை நச்சிலேன்
ஏனே னெனைவலிந்தாண் டித்துயரஞ் செய்கின்றான்
ஆனே றுகைக்கு மவன்.  (89)

        ஏகபாதம்
    (கட்டளைக் கலித்துறை)

அவலந் தணவக் கழைவனத் தானை யடுத்தனமே
அவலந் தணவக் கழைவனத் தானை யடுத்தனமே
அவலந் தணவக் கழைவனத் தானை யடுத்தனமே
அவலந் தணவக் கழைவனத் தானை யடுத்தனமே.  (90)

பதப்பொருள் - அ - அகரவெழுத்தாலுள்ள, வலம் - வல்
லபமும், தண் - குளிர்ச்சியாகிய கருணையும், நவ - புதுமையான,
கழை - கருப்புவில்லும், வன - நிறமுள்ள, தானையள் - வத்திர
தாரணமு முடையவளான உமையவளது, துத்தன் - வயிற்றுக்குரிய
குமாரனான விநாயகன் அல்லது முருகனுடைய, அம்-அலங்காரம்
ஏய் - பொருந்தவும்,

அலம் - துன்பத்தையும், தண் - தாழ்மையையும் அவ-
பாவகன்மத்தையும், கழ - இன்றிச் சுத்தப்படுத்துகின்ற, ஐவன -
மலைநெற் புசிப்புள்ள, தானை - கூட்டத்தாரான தவசிகளை, அடு
- பொருகின்ற, உத்தன் - சண்டைக்காரனான மன்மதனுடைய, மே
- மேன்மைக்கு,

அ - உரிய, அல்-  இருளையும், அந்தண - பிராமணச்
சாதியான, அக்கு- உருத்திராக்கத்திற்கும், அழ-பக்தி
மேலீட்டாலழுகின்ற, ஐ - அழகிற்கும், வல் - வலிய, நத்தான் -
சங்கத்தையுள்ளவனான விட்டுணுவால்,நயள்-
உபசரிக்கப்பெற்றவளான லட்சுமியினது, து - சொந்தமான, தனம் -
பொருள், ஏ- நிந்தைபண்ணுகின்றதானேரிடும்

அவலம் - சபலத்தையும், தணவ- நீக்கவும்,
கழைவனத்தானை - திருநெல்வேலியுடைய சிவனை, அடுத்தனம்
- சார்ந்திருக்கின்றோம் என்றவாறு ஏ - ஈற்றசை.

கருத்து : உமையவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளுக்குச்
சமானமான சற்புத்திர பாவமடையவும் மன்மதனா லுண்டாகின்ற
காமவாதனையும் பத்தி நெறியைப் பிறரவமதிக்கச் செய்யுந்
தரித்திரதால் உண்டாகின்ற சித்தசலனமுந் தீரும்பொருட்டுந்
திருநெல்வேலியில் எழுந்தருளிய சிவபெருமானைச்
சார்ந்திருக்கின்றோ மென்பதாம்.


            காலம்
        (அறுசீர்விருத்தம்)

அடுக்கன்மிசை யடைகிடக்கு மெழுமுகிலுந்
    திரண்டெழுந்தீண் டார்த்துப் பெய்யத்
தொடுக்குமிந்தக் கார்கால முதலாறு
    ருதுக்களுந்தொந் தோமென் றோர்தா
ளெடுக்குநெல்லை யப்பர்புயம் புணர்வார்க்கே
    யினியவனா மிதழி வேட்டு
நடுக்குறுவார்க் காகாவாம் அவற்றைவியந்
    தளவில்கவி நவின்றெய்த் தோமே.  (91)

            இதுவுமது
        (எழுசீர்விருத்தம்)

தோமரத் தலைமைப் புரவல னொருவன்
    சுகிர்தமே விளைத்துல காளப்
பாமழை பொழிசற் குருவிளை யாடல்
    பயில்வதே பழுதில்நற் காலந்
தீமனத் தரசுந் தவமில்பொய்க் குருவும்
    திகழல்செப் பருங்கொடுங் காலம்
யாமறி காலத் தகுதியீ தமைப்பா
    லிறையவ னுறைநெல்வே லியிலே.  (92)

        மடக்கு
        (எண்சீர் விருத்தம்)

நெல்வேலித் திருக்கோவி லமர்தருமா னவனே
    நினைக்குநரன் றிருக்கோவி லமர்தருமா னவனே
சொல்வேத னாநாலு மிகப்பரவு மையனே
    துதிக்கின்றே னானாலு மிகப்பரவு மையனே
கொல்வேட வடிவாயன் றொருவனையாண் டனையே
    குளத்தீன்றாய் வடிவாயன் றொருவனையாண் டனையே
வல்வேழத் தோற்போர்வை யீரிருமற் புயனே
    வருந்துறுமென் றோர்போர்வை யீரிருமற் புயனே.  (93)

        இரங்கல்
        (பெருந்தாழிசை)

புயலு மன்னமுங் கிளியு நாரையும்
        போய்ச்சொல் லியசொற் கருதிலார்
    புத்திரர்ப் பெறல் போன்று தானொரு
        பூவை யும்பெறு கின்றிலார்
அயல்வந் தாங்குருக் காட்டு கின்றனர்
        அணைக்கிற் கைக்ககப் படுகிலார்
    அரக்கி யாசைகொண் டிலங்கைக் கேகிவந்
        தாரென் றோதல்மெய் யாங்கொலோ
செயலொன் றோர்கில னினியென் செய்குவன்
        சிந்தை யும்பறி போயதே
    செவிலி யும்பெறுந் தாயுந் தோழியர்
        திரளு மேசலிற் றிகைத்துள்ளேன்
வயலிற் செங்கயல் வானின் மீன்மிசை
        வாவு சீர்கொணெல் வேலியூர்
    வரையில்வாழன வரத தானரென்
        மட்டுக் கும்பெரு வம்பரே. (94)

    (இன்னிசைப் பஃறொடைவெண்பா)

வம்பவிழ்தண் கொன்றை மலர்மாலைத் தோளானை
யம்பலத்தி லென்று மருணடஞ்செ யம்மானைப்
பால ரிருவர்ப் பயந்த பரஞ்சுடரை
நீல மிடற்றானை நெற்றிவிழி யுள்ளானைக்
கங்கையொடு திங்கள் கவினுஞ் சடையானைச்
செங்கைமழு மானேந்திச் சேவேறுஞ் செய்யோனைப்
பல்கோடி தேவர் பரவும் பரமனைப்போர்
வெல்கோரப் பூதர் மிகவேண்டும் வீரனையோர்
கையானை செற்றுக் கனற்கட் புலிதடிந்த
மெய்யானை ஞான விழியுதவும் வித்தகனை
முன்னால்வர் போற்றியவா முன்னியசீர் முற்றடைந்தார்
என்னா வுலக மியம்புதலை யேறநம்பித்
தில்லை முதலாஞ் சிவதலங்கட் செப்பியப்பால்
நெல்லையினை யன்பா னினைத்துத் துதிக்கின்றேன்
செங்கலினும் பொன்செய் திருவருளென் செய்யுமோ
அங்கமலப் பாவா யறை.  (95)

    (கட்டளைக் கலித்துறை)

அறைகழற் றாண்மன்ன ரிற்றமிழ்ச் சீல மறிகிலர்க்குக்
குறைவளித் தேனையர்க் காப்போனெவ் வீனக் குலனெனினு
நிறைபுகழ்த் தாம்பிர மன்றுடை யார்திரு நெற்றிக்கண்ணிற்
றனையின ரோடுவிண் ணோருயத் தோன்றுஞ் சடானனனே.  (96)

        (பள்ளுச் சிந்து)

சட்டியிற் சோறுங் குத்திதன்னி லரக்குங் - குடஞ்
    சாலிற் கள்ளும் விரும்புந்தன் னாட்டுப்பள்
குட்டிக்கொள் வார்க்கருளு மூத்தநயினார் - பல
    குன்றுதொறு மாடல் செய்யுங் குள்ளநயினார்
வெட்டி மாமனை வென்ற நெல்லை நயினார் - சொல்லும்
    வேலை செய்து கூலி கொள்ளு மேன்மை யெய்துமோ
அட்டியின்றிச் சுவர்க்க மெய்தினாலும் - அவை
    அருந்துகில்லா வடியார்க் காகுமாமே.  (97)

    (எண்சீர் வண்ண விருத்தம்)
    தான தானனத் தனதன தனதன

ஆகு வாகனத் திவர்கய முகவனு
    மாறு மாமுகக் குமரனு மனையவர்
பாகு நேர்தமிழ்க் கவிகளின் மகிழ்வுறு
    பான்மை யீரெனிற் பலமனை தொறுநனி
போகு வார்துதிக் குவகையெய் திடில்வசை
    பூணு றீர்கடுக் கையினுட னிறகணி
வாகு நீர்பொறுத் ததுபிழை யலநிசம்
    வாளை பாய்புனற் கழைவன வரதரே.  (98)

        (திருப்புகழ்)
தனன தத்தனத் தனதன தனதன - தனதானா

வரத முற்றகைத் தலமதை யநுதின
    நினைத ரச்சலிப் பறுமெனை யளவறு
    வறுமை யிற்சலிப் புறவிடு தலுமருண்
                முறைதானோ
        வகுள மற்றொடைப் புயமத னனையரை
    நொடியி னிற்பொடித் திடும்விழி கொளுமுமை
    மனதி னிற்குறித் தவர்மிசை யவன்மலர்
                விடலாமோ
சுரத வித்தையிற் பெரிதுயர் பரவைதன்
    விழைவ னைத்துமுற் றருகதை யுலகினர்
    சொலுதன் மெய்ப்படத் துதிகொடு கொடைநல
                முயலீரோ
        தொடுக டற்கடுத் தனைநுகர் வதிலிது
    பெரித லத்துவர்க் கிரிபுரை வடிவொடு
    சுரர்து தித்திடப் பரையொடு விடைமிசை
                வருவீரே.
யிரத மொற்றையிற் புவிநுகர் கணையொடு
    கனக விற்பொறுத் தடமொடு நடவியொ
    ரிளந கைப்பினிற் றிரிபுர மெரிபட
                முனிவாரே
        யிகுளை யர்க்குண்மைக் குயிலென நிலவிய
    தவம கட்குமுற் கிழமுனி வடிவுட
    னிமய வெற்பினிற் றிகழ்சொல் பவரிடர்
                களைவாரே
கரத லத்தினிற் பலிநுக ரடியவர்
    அடிய ரைப்பழிப் பவர்பல துயர்தரு
    கனபி றப்பினிற் சுழல்வுற நினைதகை
                யுடையாரே
       கலியு கத்தினுக் கரசெனு மவனக
    முழுதொ ழித்திடத் துணிவுறு சிலர்புகழ்
    கழைவ னத்தினிற் றினம்வதி தருசிவ
                பெருமானே.  (99)


        நேரிசை ஆசிரியப்பா

மானிகர் கண்ணார் மஞ்சளிற் றிமிர்ந்த
மேனிகண் டுருகா வீரப் பண்பும்
பைம்பொன்மா மேனிப் பருப்பதப் பகைவ
னம்பொனூர் வாழ்க்கை யதிலரு வருப்பு
நாணு றாஅது நாயிரை நுகர்நீர்ப்
பேணு வார்மேற் பெயும்பெரு நகையும்
யாருரை குறித்து மெதன்பொருட் டேனு
மாருயிர் கோறற் கஞ்சும் பயமும்
பூவல யத்தோர் புண்பட வருத்துங்
காவலர் வெருளக் காட்டுங் கோரமு
மறப்பிடை தன்கை வாய்தலிற் கொதுகொன்
றிறப்பினு மெய்யா விரங்கின னருளும்
பன்னுநான் மறைச்சொற் பயன்கொள் வார்பாற்
புன்னுனிச் சினமும் பொருத்தாப் பொறுமையுங்
கார்திகழ் யாக்கைக் கண்ண பிரான்போன்
றேர்திகழ் தரநுகர் இன்பப் பெருக்கும்
பட்டவர்த் தனரும் பழிச்சுபு வணங்கு
மட்டமா சித்தி யாதியற் புதமு
மாகிய நவரச மருளி யவைகைத்
தேகிய பின்ன ரிரண்டொ டொன்றற்ற
வீட்டிடை கூட்டாய் லியன்றமிழ்த் திருத்தென்
னாட்டி னெல்லை நகர்ப்பெருங் கோயி
லகப்பசு மூங்கிலி னடியின்
மிகப்பெரி யான்றன் மெய்யருள் வடிவே.  (100)

    நெல்லைக் கலம்பகம் முற்றிற்று

        (கட்டளைக் கலித்துறை)

தொல்லைக் கலம்பக மாலெய்தி வாடிச் சுழன்றிடினும்
நல்லைக் கலம்ப கதிவேட் டுருகினும் நானிலத்தீர்
சொல்லைக் கலம்பக நேருணர் வாலரன் றொண்டர்மகிழ்
நெல்லைக் கலம்பக மேதஞ்ச மாமென நேடனன்றே.


         திருச்சிற்றம்பலம் .
 

Related Content

அருணைப் பதிற்றுப்பத்து  அந்தாதி  (வண்ணச்சரபம்  தண்டபாணி சுவா

திருத்துறையூர் சிவபெருமான் பதிகம்

திருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிக