logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வெள்ளிக்கிரியான்  பதிகம் (சிரவையாதீனம்  கந்தசாமி சுவாமிகள்)

இயற்றியவர்  சிரவையாதீனம்  தவத்திரு . கந்தசாமி சுவாமிகள்


 

        அறுசீர்ச் சந்தவிருத்தம் 


ஆடும் பணிஆ பரணம் 
    சுரர்என் பயனார் தலைமாலை 
சூடும் பணிலக் குழைஆர்
    சிவ! நின் சுகிர்தப் புகழ் அன்பாற்
பாடும் பணியிற் பதிவித்து 
    எனக்குன் பாதப் புகல் ஆகும் 
வீடும் பனியாய் சேடுந்து 
    அணிசால் வெள்ளிக் கிரியானே!  (1)


ஈன்றோய் வறுதுன் புடனே
    வளர்த்தாள் இன்பம் புசித்தானை 
ஏன்றோய்க் கடியேன் றனைஆண்டு 
    அருள எண்ணிற் புகழ்போமோ ? 
கான்தோய் தருவெண் ணிறமா 
    மலர்கள் ககனத் திடம்மேவும் 
மீன்தோய் வியன்காட் டிடுதென்
    கயிலை வெள்ளிக் கிரியானே ! (2)


ஏனக் குருளைத் துயரம் 
    சகியா தின்பால் அளித்திட்டாய் ;
நான்நத் தியவா றருளாது
    அவமே நலியச்செயல் ஏனோ ?
வானத் தியல்பூஞ் சுனையிற்
    பொலியும் வாளைத் திரள்விண்ணார்
மீனத் திடம்பாய் வளம்மிக்கு 
    இயலும் வெள்ளிக் கிரியானே ! (3) 

வெண்நத் தியல்கை யினன்எட்
    டரிதா விளங்குன்  பதமீதே
வண்ணத் தமிழ்மா லிகைசூட்
    டிடுவான் மதிக்கும் தகைகொள்வேன் 
எண்ணற் றிடுதுன் புடன்வா
    டிடல்நின் இதயத் திசைவேயோ?
விண்ணத் தவரும் தவரும் 
    பரவும் வெள்ளிக் கிரியானே ! (4)

உகம்பற் பலசென்  றிடுனும்
    தமியேன் உன்பேர்அருள் அல்லாற்
சுகம்பற் றிடுமா றறிகின்
    றிலன்; தீ சோதித் திடல் எந்தாய் !
முகம்பற் பலகொண் டுளஆ 
    ரணம்போல் முதிர்இன் இசைகொண்டு
விகங்கத்  திரள்பா டிடுதென் 
    கயிலை வெள்ளிக் கிரியானே  !  (5)

அளிவந் திடுதாள் மலர்தந்து 
    அருள் என் அப்பா !  அருள்வைப்பே !
துளிவந் திடுகண்  ணுடன்நின் 
    புகழே துதித்தின்  புறஆள்வாய் ;
ஒளிவந் திடும்உன் ஒளியே !
    உயிர்க்கும் புதிப்போ டிறப்பற்று
வெளிவந் திடும்மா வெளிதங்கு
    இயல்சீர் வெள்ளிக் கிரியானே! (6)

கண்ஆம் வலையிற் கட்டிப் 
    புன்சீழ்க் கட்டித் திடர்ஏற்றிப் 
புண்ஆர் குழிவீழ்த் திடுவார் 
    மயலிற் புரளா  தெனை ஆள்வாய் ;
தண்ஆர் மதியும் பணியும் 
    புனையும் சடையாய் ! விடையானே!
வெண்நால் வாயின் திரள்சேர் 
    பொழில்சூழ் வெள்ளிக் கிரியானே ! (7)

புல்உண் டிடும்ஆ இனத்தூன் 
    நுகர்வார் புன்மைக் குணந்தன்னைச் 
சொல்உந் தியபாப் படையால்
    ஒழிக்கத் துணிவேற் கருளாயோ ? 
அல்லும் பகலும் காணாத் 
    தவர்தம் அகம்ஒத் துலகின்கண்
வில்உந் தியாமெய்  பெறுதென் 
    கயிலை வெள்ளிக் கிரியானே ! (8)

காதும் தொழிலார்  காதுந்
    தியமைக் கண்ணார் உதரத்திற் 
போதும் தொழில்தீர்த் துன்தாள்
    வனசப் போதொன் றிடஆள்வாய் ;
போதுந் தியபோ தன்கைக் 
    கொடுசெய் புரம்சுட் டருள்வான் 
மீதுந் திடஆர் உயிர்கட்கு
    அருளும் வெள்ளிக் கிரியானே ! (9)

கரணத் துடன்ஐம் பொறியும் 
    புலனும் கலங்கும் படிஎய்தும்
மரணத் தியக்கந்  தனைஅஞ்
    சினன்நின் மலர்த்தாள்  சரண்ஆனேன் ;
புரணப் பொருளே ! கருணைக் 
    கடலே ! புயங்கப் பணியானே!
விரணப் படுநெஞ் சுவக்கப் 
    புரிவாய்; வெள்ளிக் கிரியானே !  (10) 

ஊணைப் பொருளை மனையைச் 
    சதம்என் றுன்னிச்  சுழல்வார்தம் 
ஆணைக் கடங்கிச்  சுகம்எய்
    திடுவான் அயரும் சிறியேற்குன் 
சேணைக் கடந்த பதம்கண்டு 
    உவக்கும் செயல்என் றருள்செய்வாய்  ?
வீணைக் கரத்தன் புகழ்ந்தேத்து 
    இசைசால் வெள்ளிக் கிரியானே ! (11)

நாதக் கழல்ஆர் பரன்பேர் 
    உருவாய் நல்லோர் தொழமேவி
வேதப் பொருள்ஆம்  சிவவாழ்வு 
    உதவும் வெள்ளிக் கிரியான்மேற்
சீதப் பொழில்ஆர் சிரவைக் 
    கந்த சாமிசெயும் பாடல் 
ஓதப் பெறுவார் பலபே
    றும்பெற் றுயர்வீ டுறுவாரே .  (12) 
 

Related Content

வெள்ளியங்கிரி  விநாயக மூர்த்தி பதிகம்