logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வெள்ளியங்கிரி  விநாயக மூர்த்தி பதிகம் 

இயற்றியவர்  சிரவையாதீனம்  தவத்திரு . கந்தசாமி சுவாமிகள்

         
        காப்பு வெண்பா

வெள்ளிக் கிரிஅடிவாழ்  வேழமுகற் கோர்பதிகம் 
தெள்இசை ஆர் செந்தமிழால் செப்புதற்கு - வள்ளி
குயக்குன்றம் சேய்அம் புயக்குன்றம்  கூட்டும்
கயக்குன்றம் ஆம்அவன்தாள் காப்பு. 


        நூல்
    (எண்சீர் விருத்தம்)

திங்கள் அம்சடா டவியும் முக்கண்ணும்
    திகழும் யானைவத் திரமும்ஐங் கரமும் 
மங்க ளம்பொலி சித்திபுத் திகள்தோய்
    மார்பும் மென்மலர்ப் பதங்களும் பிறவும் 
பொங்கம் மேவஎன் அகம்புறம் கண்டு
    போற்றிச் சிற்சுகம் பொருந்திட அருள்வாய்
வெங்க யத்திரள் உலவணி வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே  !  (1)

ஈர்த்து வன்பவக் கடலிடை வீழ்த்தும் 
    இகல்பம னத்திளைத் திடும்எனைத் துயரம்
தீர்த்துன் அன்படி யார்இனம் மூழ்கும் 
    சிற்சு கோததி யூடுறச் செலுத்தாய் 
பார்த்து வக்கும்ஆன் மாக்களை அநித்தப் 
    பார்த்து வக்குறப் படுத்தும்வல் வினையின்
வேர்த்து வக்கற வேர்த்திடும் வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே ! (2)

அருப்பி ணைந்தசெவ் வரிமதர்க் கண்ணால் 
    அங்கை யால்இரு கொங்கையால் மனத்தை
நெருப்பி யைந்திடும் மெழுகென உருக்கும் 
    நீச மங்கையர் பாசம்என் றொழிப்பாய் ?
மருப்பி யைந்தருஞ் சரத்திரள்  இனம்ஆ
    மதித்து நாள்தொறும்  மலர்அலர் கொண்டு 
விருப்பி யைந்துபூ சனைசெய வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (3)

வெளிகொள் வேடத்தால் உலகரை  மருட்டும் 
    வேடனேன் உன்பொற் றாள்தலை அமைத்து
களிகொள் பேரருட்  கடலிடை மூழ்கக் 
    கண்ணி லேன்அகக் கண்இலேன் அருள்வாய்
அளிகொள் விம்பிதப் பொழிற்கனி அருந்தி
    அஞ்சு கத்திரள் அஞ்சுகம் வரினும்
விளிகொ ளேம்என மறைபுகல் வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (4)

ஆல காலமும் வடவையும் கலந்தாங்கு 
    அடிய னேன்உயிர் துடிதுடித் திடச்செய்
மூல வன்மலப் பிணிஒழித் தாளல் 
    முதல்வ ! நிற்கலால் பிறர்க்குமுற்  றுவதோ ? 
சீல ஔவையை முன்அமைத் தாங்கு
    செறிஉ யிர்க்குலம்  முற்றவும்  கயிலை
மேல்அ மைத்திட அருளினால் வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (5)

ஆர ணத்திரள் அறிவரும் நின்பொன்
    அடியை என்சிறு முடிமிசை அமைத்துப் 
பூர ணத்தனி  அகண்டவான் அணைமேற்
    பொருந்தி மெய்ப்பர போகம்என் றருள்வாய் ?
பார்அ ணங்குதுன் பொழிந்திடத் தன்பாற்
    படிந்த பேர்அருள்  படிந்திடப் புரியும் 
வீர ணம்கமழ் காஞ்சிசூழ் வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (6)

ஏசி  யேவெறுக்   கினும்விடா தென்னை
    இகலி மேல்எடுத் தெழும்பெரும் காற்றின் 
தூசி போற்சுழற்  றிடும் கொடு மாயைத்
    துவக்கி னாற்றயர்ந் தனன்  ; துணை புரிவாய்
தேசி லங்கெழில் மலைவடி வாகும்
    சிவபி ரான்நயப் பால்அருள் அருவி 
வீசி ஆட்டினன் மகிழ்தர வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (7)

ஏது சொல்லினும் நீதிரு உள்ளத்து 
    இரக்கம் அற்றவர் எனஇருந் திடில்யான் 
சூது தோய்புலப் பகைவிருந் தாகித் 
    தொலைவ தன்றிமெய்ந் நிலைபெறல் உளதோ?
போது கொண்டுபொன் அடிபணி வார்அம்
    புயத்திற் கற்பகம் புனைந்து தம் முடியின் 
மீது கொள்ளவிண் ணவர்வரும் வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (8)

வாதி டும்புலக் குரம்பையுட் கிடந்து
    வாடும் என்துயர் மதித்தனை அருளாய் ;
நீதி நீசெலுத் திடத்துணிந் திடில்யான்
    நிகழ்த்தல் என்னைகாண் ? நீடருட் கடலே !
சோதி அம்சுடர் உடுக்குலம் சாரி
    சுற்ற, நீண்டு,மெய்த் தொண்டர்கள் படரும்
வீதி ஒத்தியல் பேர்அருள்  வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (9)

பதுமம் ஒத்தநின் கழற்கடற் படிந்து 
    பரவு செந்தமிழ்ப் பாமழை பொழிந்து 
புதுமை ஆயிரம் விளைத்தருட் பதத்தில்
    புகவி ழைந்தனன்  அகம்இ சைந்தருள்வாய்
மதும ழைப்பொழிற் குஞ்சரம் அமுதர்
    வழங்க லானக வளம்கொல் என்றுவந்து
விதுவி திர்ப்புறப் பற்றுயர் வெள்ளி
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச் சுரனே !   (10)

கண்நு தற்பிரான்   திருவடித்   தலத்திற் 
    கவின்ற  அற்புதக் காட்சியை மண்ணார்
விண்உ ளார்எனத் தேர்தர வெள்ளி 
    வெற்ப டிக்கண்வாழ் விக்கினேச்சுரன் மேற்
தண்ட லாம்பொழிற் சிரவைகொள் கந்த
    சாமி புன்சொலால் சாற்றுபா மாலை
எண்ணு வார்இறை வன்திரு அருளால்
    இகப ரப்பயன் எய்தல்நிச் சயமே  (11)

Related Content

வெள்ளிக்கிரியான்  பதிகம் (சிரவையாதீனம்  கந்தசாமி சுவாமிகள்)

வெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்

வெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி  சுவாமி

கோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள்