logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )

திருச்சிற்றம்பலம் 

(சோணாசல முதலியார் )

            காப்பு


வாணாளை வீணாளா  வையகத்திற் போக்காமற் 
சோணாசல வெண்பாச் சொல்லுதற்கு - நாணாளு
மீங்கழுநீ  ரானைநினை  யேக்கமறக் காக்குமுக்கட 
செங்கழுநீ ரானைநினைந் தோது .  

        நூல்

ஓங்காரப்  பீடத்  துறையும்  பிரானினனைப் 
பாங்காரக் காணப் பணித்திடா - யாங்கார 
வெம்பிரமா நற்றிருமான்  மெய்யதுமாறித்  தொடாமா
சம்பிரமா சோணா சலா   (1)

கங்கைச் சடையுங் கருணைத் திருமுகமு 
மங்கை மழுமாணு மரைக்கசைத்த - பொங்கரவுஞ்
செந்நாளு மெந்நாளுஞ்  சேவிக்க  மேன்மேலுந்
தந்தாளுஞ்  சோணா சலா  (2)

எற்றைநாண் மாதுமையோ டென்முன்  வருவாயோ 
வற்றைநா ணல்லநா ளானநாண  - மற்றைநாள் 
கன்மநாள்   வீணாள்  கரிநா  னிருட்டுநாள்
சன்மநாள் சோணா சலா  (3)

தீவாய்ப்  படநாகத் தீண்டினாலுந் துயர்கூர்ந் 
தாவாவென் றேங்கியழுங்  காம  - னாவால்
விடாதார  வென்பார்க்கு  வெய்யவிட முண்டோ
சடாதரா சோணா சலா  (4)

கோயில்வலஞ் செய்யேன்  கும்பிட னின்றுருகேன் 
வாயிலெழுத் தஞ்சும் வழுத்துகிலே - னாயிற் 
கடையாளாப் பேய்போற்  கவல்கின்றேன்  கங்கைச்
சடையாளா சோணா சலா  (5)

மாதேவா சங்கரா மைக்கண்டா  முக்கண்ணா 
கோதேது  மில்லாக் குணாகரா - பூதேசா
வோம்பவா வோம்பவா வுள்ளவா  வுள்ளவா
சாம்பவா சோணா சலா  (6)

மெய்ந்நூலை விட்டுவிட்டு வேறுவே றுள்ளபல 
பொய்ந்நூலைக் கற்றுப்பு லம்புகின்றா  - ரென்னோர்க்கும் 
பொல்லாவா தைக்குளிர்க்குப்  போர்வைவுயா  கம்பலமா
சல்லவா சோணா சலா  (7)

பிறையிட்ட பொற்சடையெம் பெம்மானே நின்றா 
ணிறையிட்ட வன்பா நினைந்து - முறையிட்டுங்
கேளாது போலிருந்தாற் கெட்டேனி னிக்கணமுந்
தாளாது சோணா சலா  (8)

வேதாகமந் தெரிந்த மேலோ ருடன்கலந்து 
மாதாகமான்  புன்றகாண மாண்பினுளப் - போதாகச்
சத்துவா னந்த சகசநிட்டை தந்தருளாய் 
தத்துவா சோணா சலா (9)

மண்ணேறு பல்வகையா மன்பதைக ளத்தனையுங்
கண்ணேறு  நீங்கிக் களிப்பதற்கோ - புண்ணேறு 
சிந்தனையே னென்னையுமோர்  சீவனென விவ்வுலகிற்
றந்தனையே சோணா சலா  (10)

தண்டா மறையிலைமேற்  றண்ணீரா  வென்றனுள 
மண்டாத் துயரா வலைகின்ற - கண்டாய்
சிலையெழுத்தா  வோர்மொழியுஞ்  செப்பகிலா யீதென் 
றலையெழுத்தா சோணா சலா  (11)

பேயுடனே நட்டம் பிரியமுடன் செய்பவனிச் 
சேயுடனே சேராதென் செப்புவா - யாயுலக 
மாமகண்டா வேதண்டா வண்டரண்டர்  வால்முண்ட 
சாமகண்டா சோணா சலா (12)

மாயாம லம்புணர்ந்து  மாதவமாஞ் சைவநெறித் 
தோயாம  லம்புவியிற்  சோர்கின்றேன் - றாயாகி
வேண்டவர் வின்படியே  மெய்ஞ்ஞானப்  பால்கொடுப்பாய 
தாண்டவர் சோணா சலா (13)

துன்பக் கடல்வீழ்ந்த  தொண்டனேன்  றன்னைநீ 
யின்பக் கடலாட்ட வெண்ணினா - லன்பா 
தடுப்பாரோ  வைராரோ  கம்மியிவ னென்று 
தடுப்பாரோ சோணா சலா  (14)

தெய்வமுண் டென்றோவேளை  தெய்வமின் றென்றோர்வேளை 
மைவளருந்  துட்டமன  மிருந்தா - லுய்வதெவன் 
ஈசனானென் றானூர்ந்  தீண்டவர் வாணடானீ 
தாசனான் சோணா சலா (15)

எத்தனைதான்   கற்றென்ன  வெத்தனைதான்  கேட்டென்ன 
வத்தனையு மற்றோர்க் கவர்ந்தென்ன - சித்தந் 
தராசனார்க்  கல்லாலுன்  றாளுண்டோ மேருச 
சராசனா சோணா சலா (16)

அன்புவளா  தொண்டருள  மாலயமா  வெப்பொழுதுந்
தென்புவளர் தேவியுடன்  சேர்ந்துவளர் - நின்புகழைப் 
பாடுவேன் பந்தவினைப் பாசத்தை வேரறவே 
சாடுவேன் சோணா சலா (17)

கருநிறத்த காகங்  கனகமலை சார்ந்தாற்
றிருநிறத்த வாகுஞ் செயல்போ - லிருநிறத்த 
வாகாரநா னுனைச்சார்ந் தன்பனாவேன்  கருணா
சாகரா சோணா சலா (18)

வன்பா தகஞ்செய்யும் வஞ்சர்தமைச்  சேராம 
னின்பா தகஞ்ச  நினைத்துவா - ழன்பா
நிதானந்தா  மந்தாகினிக் குவந்தா யெந்தாய 
சதானந்தா சோணா சலா (19)

மான்செய்த கண்ணியொடும் வால்வடி வேலனொடும் 
வான்செய்த காட்சி வழங்கென்றால்  - யான்செய்த 
கன்மமா வந்துமுகங் காட்டகிலா  யீதுனக்குத் 
தன்மமா சோணா சலா  (20)

வெய்யபிறப் பீனுமுயர் வித்தாகு மாசையென 
வுய்யநல்லோர்  சொற்றறி நெறியோராயன் -  மையலிலே 
யாழ்கின்றே னின்சீரரு  ளெள்ளளவுமின்றித் 
தாழ்கின்றேன் சோணா சலா (21)

முற்றா விளஞ்சேய்க்கு  மூண்டநோய்க் காமருந்து 
பெற்றா ளருந்துகின்ற பெற்றிபோற் - சிற்றம் 
பலசதுவந்த  மன்பதைக்  காப்பார  நடஞ்செய்தித் 
தலத்துவந்த சோணா சலா (22)

ஆட்டுகின்றா யாடுகின்றா  யாடலையுங்  காண்கின்றாய்
கூட்டுகின்றாய்  கூடுகின்றாய்  கொள்கைபல - நாட்டுகின்றாய்
ஞாலமெலா மிவ்வகையே நானறியே  னின்னுடைய 
சாலமெலாஞ் சோணா சலா (23)

என்னைப்போ லேழையிலை  யெவ்வெவ்  வுலகத்து 
நின்னைப்போல்  வள்ளலிலை நிச்சயமே  - பின்னையே 
யென்றொழிலே யாசித்த  தில்லையெனா  தீவதுநின் 
றன்றொழிலே சோணா சலா (24)

நறும்பூவுடன்  சேர்ந்த நாருமண மெய்து 
மிறும்பூ தன்றைய வெளியேன் - பெறும்பே
றதுவே தானாக  வடியருடன் சேர்வேன் 
சதுவேதா சோணா சலா (25)

பத்தருக்குஞ் சித்தருக்கும் பண்ணவர்க்கும்  விண்ணவர்க்கு
முத்தருக்கு மற்றவர்க்கு  மூவரெனுங் - கத்தருக்கு 
நற்றுரையாய்  வாழ்கின்றாய்  நாயேற்கு நாயகனா 
சற்றுரையாய் சோணா சலா  (26)

வணங்காத் தலையும் வழுத்தாத நாவு 
மிணங்கா மனமு மெனக்கே - யணங்கா 
மிகுதியா வின்னம விளம்புவதே னந்தோ 
தகுதியா சோணா சலா  (27) 

என்னேநீ ராடப்போ  யெண்ணமறந் தொருவன் 
பின்னேசே றாடுகின்ற  பெற்றிபோற் - கொன்னேவெங்
கன்மத்தைச் செய்து  கழிக்கின்றே  னல்லநர 
சன்மத்தைச் சோணா சலா (28)

அண்ணா மலையென்று மண்டமெலாம் பெற்றெடுத்த 
வுண்ணா முலையென்று  முள்ளத்தே  - யெண்ணாத 
நாளில்லை நாயேற்கு னற்றாள  லாதடையுந் 
தாளில்லை சோணா சலா  (29)

இலவுதனைக் காத்தே  யிருக்குங் கிளிபோற்
குலவுகுடும் பத்தையே கோரி - விலகினேன் 
மாதுரியா னந்தசுகம் வாய்க்குமோ வேழைக்குச் 
சாதுரியா சோணா சலா (30)

நாட்டைவிட்டுக் காட்டையுற்று நற்கனிதேரோர்  சிறுவன் 
வேட்டையிற்றப் புங்கொடிய  வேங்கைகண்டு - கோட்டை 
யரண்புகுந்தே யுய்ந்ததென  யானுய்ய நின்பூஞ்
சரண்புகுந்தேன் சோணா சலா (31)

வானே முகவட்ட மாமூர்த்தி யாவிளங்கும் 
கோனே நினதுபதங் கூடாமல் - யானே
தனித்தேனோ விளங்குத்  தளரலிதற கென்றே 
சனித்தேனோ  சோணா சலா (32)

தேவாரந் தன்னைச் சிரத்தையா நாயடியே 
னாவாரப் பயந்து விழிக  -  கோவாரக 
கன்னிகரு முள்ளங் களித்துருகும் வாழ்வருளாய 
தன்னிகருஞ் சோணா சலா (33)

ஞாயிறு திங்கண யனஞ்செவ்  வாயுமைமெய் 
மேயபுத னின்மெய் வியாழமுறை - வாய 
தனியா மோர்வெற் புதழை வெள்ளியற்குச் 
சனியாமோ சோணா சலா  (34)

பெண்ணாசை யாதியாப்  பேசுகின்ற மூவாசை 
யெண்ணாசை வையகத்தி லேறகாதோ - அண்ணா
மலையானே கொண்டவர் யார்மற் றாசைதம்மிற் 
றலையானே  சோணா சலா (35)

ஓர்தனிரு தாண்முமல மோவுறவே நாற்கரணஞ் 
சேர்தரவஞ் சக்கரமுஞ் சிந்தித்தா - றார்பொழுது 
மேழுவேதத்  திசையி னேத்தரு ளெட்டங்கமுறத்
தாழுவேள் சோணா சலா (36)

காலத்தே சென்றுசிவ கங்கையிலே நீராடிப் 
பாலத்தே நீற்றைப் பரிந்தணிந்து - மூலமர 
மந்திரமே யோதிநினை மன்னிவலஞ் செய்வதுய்யுந் 
தந்திரமே சோணா சலா (37)

நின்னைச் சதமா நினைக்குஞ்  சிறியேற்கும் 
பின்னை வுறுமைப் பிணியுண்டோ - பொன்னைச் 
சதாசிவா வென்றழைக்குந்  தோகைபுணர் சாம்ப 
சதாசிவா சோணா சலா  (38)

உடல்பொரு ளோடாவி  யுனக்கே யளித்தேன் 
கடலுகங்  காணவெனைக் காவர் - தடலுடனே
யிங்கடத்தை நீபுரிந்தா  லேவாபாற  கூறுவனென 
சங்கடத்தைச் சோணா சலா (39)

தன்னிகரில் சோண சயிலனே யென்பாச 
சொன்னிகழ் பாமாலையன்று  சூட்டினருக  - கிந்நிலத்தின் 
முன்மானன் றெட்டரிய  முண்டகத்தா ளன்றியுண்டோ
சன்மானஞ் சோணா சலா (40)

வாக்கின்  வருகவென்றால்    வாய்நோமோ தாழ்ந்தேனைத் 
தூக்கின் மலர்க்கை துவளுமோ - நோக்கின் 
வலிக்குமோ நின்கடைக்கண்  வள்ளலுக்கு முள்ளஞ் 
சலிக்குமோ சோணா சலா (41) 

நன்னெஞ்சு கடனுன்ற னாணமலர்த்தாள் பூசியே
னென்னெஞ் சதல்லா  யிருப்பதா - னின்னெஞ்சுங்
கல்லாபார் மேலென்னைக் காவாதென் காரணமோ 
சல்லாபா சோணா சலா (42)

தஞ்சமென நின்கமலத்  தாளடைந்து நானிருக்க 
வஞ்சநம னென்பால்  வருவானோ - நஞ்சமிக்க 
பொங்கரா வேணிப்புனி தர்மார்க் கண்டனையாக
சங்கரா சோணா சலா (43)

கரங்குவித்து மெய்சிலிர்த்துக்  கண்ணீ ருதிர்த்துச்
சிரங்குவித்துத்  தெண்டனிட்டுத் தேம்பி - யிரங்குணர்க்கு
வந்திடுவாய் கேட்ட வரந்தருவாய்  நாயேற்கென் 
தந்திடுவாய் சோணா சலா (44)

ஒருவனொ ருத்தியுட னோகை பெறக்கூடும் 
யருவம் பனித்துளிபோற  பாய்ந்து  - கருவுற்
றுருவஞ்சார்ந் துறபவித் திங்கோடி யுழலாதான் 
சருவஞ்சா  சோணா சலா  (45)

வன்பிறவி நோய்க்கு மருந்தா விருந்தடியார் 
துன்பிறவி  ழிக்குநினைச் சூழ்ந்தவருக் - கென்பிறசீர் 
சிற்பரா வம்பலத்திற்  றெய்வநடஞ் செய்தருளுந் 
தற்பரா சோணா சலா  (46)

ஓரூரென் றில்லாம  லோடெடுத்துப் பிச்சைக்கா 
வூரூராச் சுற்றி  யலைகின்றாய்  - பேரூரி
லேற்றுவாயென்  றுன்னை  யெப்படி யானம்புவது 
சாற்றுவாய் சோணா சலா (47)

அன்பார வுன்ற  னடிக்கமலம் பூசித்த
லென்பார மென்னை பிரசித்த  - லுன்பாரங்
காரணாதீதா கருணாகரா  மழுமான
தாரணா  சோணா சலா  (48)

பந்தக்கா னென்னப்  பருத்தவுடல் சுமப்பே 
னந்தக்காலன் வெருண்டெ னாவிகொள - வந்தக்கா
லஞ்சிலிப் பேனீவந் தருளாயே லென்செய்வேன் 
சஞ்சலிப்பேன் சோணா சலா (49)

ஒருமணத்தை நீக்கி யுயர்நா வலூரர்க் 
கிருமணத்தைச் செய்தாண்ட தென்னீ - வருமணத்தோர் 
மாட்சியோ வெண்பாரேல்  மங்கையுமை கங்கையிவர் 
சாட்சியோ சோணா சலா (50)

ஞாதுரு மெய்ஞ்ஞான  நவிலரிய நேயமென 
வோதுருமம் முப்புருளி  னுண்மைதனைப் - பேதுறுவேன் 
றேர்வேனோ தேர்ந்துன் றிருவாளர்   தஞ்சபையிற் 
சார்வேனோ சோணா சலா (51)

ஞானமிட லோடருந்து  நாரணனே யாதியரிக் 
காலமிடர்  தீர்த்தெம்மைக் காத்தியென - வோலமிட 
கஞ்சுமுண்டா வுன்னைவிட  நாயேற்கு லகிலொரு 
தஞ்சமுண்டா சோணா சலா (52)

அபய கரமு மருள்சேர் முகமு 
முபய பதமு  முமையா - ளிபமுகன்சேய்
நண்ணவா மால்விடைமே  னாயேன்  சரணுனக்கே 
தண்ணவா சோணா சலா (53)

அன்பே திரியா வருளே நெய்யாமிக 
நன்போக மகலா நாணாளு - முன்பேமெய்ஞ்
ஞானமாந் தீபமிட்டு நண்பொடுவாழ்  வாழ்வருளசீர்த் 
தானமாஞ் சோணா சலா (54)

மணமென்று கூறியதோர்  வாயாலே மற்றும் 
பிணமென்று  கூறுகின்றார்  பின்பு - குணமென்ற 
வெம்மதியே னானானுமெய் யினைமெய்யென் றணுவுஞ்
சம்மதியேன் சோணா சலா (55)

மாசகன்ற  வாதவூர் வள்ளல் வழங்குமணி 
வாசகமே மாமறைக்கு மாண்பென்றே - பேசுவே 
னங்கை யானீயெழுது மன்பேபெருஞ் சான்றாஞ்
சங்கையா சோணா சலா (56)

இரந்தும்  பரிந்தே யிடுவென்று நீதி 
கரந்துவிடா  திருக்கக் கச்சூர்ப் - பொருந்தி 
யுணவா தரித்து நம்பியுண்ண வளித்தாய்சீர்
தணவாத சோணா சலா (57)

பாலையளித் தாய்காழிப் பாலனா ரின்புறவே 
சூலையளித்  தாயப்பர் துன்புறவே - யேலவிவை 
நன்மையோ வாயுண் முறைகாமத்தி னால்விளைந்த 
தன்மையோ சோணா சலா (58)

கற்பனையெ லாங்கடந்த  காரணா தீதசுக 
தற்பரனே நின்றாள்  சரண்புகுந்தே  - னற்பனெனக் 
கொள்ளாதே குற்றங் குறியாதே  யன்னியமாக 
தள்ளாதே சோணா சலா (59)

பூசேன் விபூதிதனைப்  பூணேன் சிவமணியைப் 
பேசேன் பஞ்சாக்கரத்தைப் பேதமையை - வீசேன் 
வலவனே  போற்றிரிவேன்  வாழ்வேனோ வேணிச் 
சலவனே சோணா சலா (60) 

அளவை கடந்த வருளொளி யேநின்பே 
ரருளை யணுவு  முணரேன் - களவகன்றோர் 
தந்நிதியே மெய்ஞ்ஞான  தாண்டவா வானந்த 
சந்நிதியே சோணா சலா (61)

தொண்டர்களு மாதலருந்  தூயசிவ காமியுநல் 
லண்டர்களுங் காணமன்று ளாடுகின்றாய் - பண்டிருவர்
காணோ மேயென்று  கருதுங் கமலப்பூந்
தாணோமே சோணா சலா (62)

ஆணிலே பெண்ணிலே யல்லா வுயிர்களிலே 
வீணிலே யென்போல் விழைவர்யார் - வேணி 
வியாளனே  பொல்லா வினையேனைக்  காப்பாய்
தயாளனே சோணா சலா (63)

தொல்லை வறுமையினாற் சோர்ந்தாலு  மென்மேனி 
யில்லையெனும்  லோபிகளை யாசியேன் - றில்லையிலே 
வேம்பசிவ தைக்கழுஞ் சேய்வேண்டும்  பாலாழிதந்த 
சாம்பசிவா சோணா சலா (64) 

கருணைபுரிந்  தென்னைநீ காத்தியே லென்ன 
யருணையடைந்  ததுண்டோ வன்பாத - தருணமல 
ரிண்டையுண்டோ  தொண்டுண்டோ  வென்னுண்டென் றனபாசெய்யுஞ்
சண்டையுண்டோ சோணா சலா (65)

திட்டுண்டு  வெண்ணெய்த் திருடியுண்டு மாதராற் 
கட்டுண் டடியுண்டான  கண்ணனே  - பிட்டுண்டு 
வாழ்வெவர்க்கு  நல்கவே மாறனடி யுண்டாயநீ 
தாழ்வெவர்க்குச்  சோணா சலா (66)

தாயுமிலை தந்தையிலை  தான்றனிய  னானாயநீ
சேயுமிலை சேய்களுக்குத் தோந்திதனை  - யாயுங்கால் 
வர்க்கமிலை  முன்பின மரபிலைநீ வத்துவென்னத் 
தர்க்கமிலை சோணா சலா (67)

நண்ணியவெற் போவெள்ளி நற்சிலையும் பொற்சிலையாம்
புண்ணியமா தேவியன்ன பூரணியே - யுண்மையிவை  
நம்புமேனன்று பத்தூர் நாடியிரந்  துண்டகதை 
சம்புவே சோணா சலா  (68)

விளைவான் மலிந்திடு நெல்வேலி யுனக்குண்ட 
விளையான் குடிமாற  னின்பா - முளையதனை
வாரிவருங் காலை   மறுக்காயோ மால்விடைமேற் 
சாரிவருஞ் சோணா சலா (69) 

அண்ணா மலையானா யப்பநீ  தாயுமையு 
முண்ணா முலையா னாளுண்மைசொல - வொண்ணாதா 
மிக்கதோ நல்லோர் வியந்து  துதிசெய்யத் 
தக்கதோ சோணா சலா (70)

சூதாடப்  பொய்பேசத் தூயோரை நிந்திக்க 
வாதாட வஞ்சிக்க வல்லவன்யான் - வேதாவின் 
றோதகமோ  நின்றாடு  திக்கறியே  னென்னுடைய 
சாதகமோ சோணா சலா (71) 

குகைநமசி வாயர் குருநமசி வாயர்
தகையுறு வெண்பா மாலைசாத்திப் - புகழடைந்தா
ரேத்துகின்றே  னுள்ளபடி  யில்லையவா போலச் 
சாத்துகின்றேன்  சோணா சலா (72)

நந்தவனம்  புக்கு நறுமா மலரெடுத்துச் 
சந்தரப்பன் மாலைதொடுத் தணிந்தே - யெந்தை 
யருணேசா வென்பாரை யாபத்திற் காக்குந்
தருணேசா சோணா சலா (73)

முயலகன் மேல்வைக்கா முளரித் தாளிந்த 
மயலகன் மேல்வைத்து மகிழலா - வியல்சேர் 
பரதமே செய்க பகனுனக்கு முண்டு 
சரதமே சோணா சலா (74)

பூவடிவம் வெற்பரையன்  புத்திரிக்குத்  தீண்டரிய 
தீவடிவ நின்றனக்கேற்  சீர்க்கச்சி - மாவலக்கீழ்த் 
தந்தேகம்  வாடாமற் றான்வளைத்தா  ணீயிளைத்தால்
சந்தேகஞ் சோணா சலா (75) 

நன்மார்க்க நான்மார்க்க  நண்ணுஞ் சரியையுறு
முன்மார்க்க மேனு முயலாத - வென்மார்க்கந்
துன்மார்க்க மாதலினாற்  சூழ்வதெங்கே  மேலான 
சன்மார்க்கஞ் சோணா சலா (76)

பல்லாயிரந்  தரமாப் பாலன்குறை  யெல்லாஞ்
சொல்லா திருக்கவிலை  சொல்லியுமென்  - பொல்லாத 
புத்தியின் றோடத்தாற்  பொருத்தமின்றோ வாண்டருளிச்
சத்தியின்றோ சோணா சலா (77) 

ஆடரங்கா வன்பர்மன மானந்தக்  கூத்துகந்தாய 
கோடரங்கா ணென்றன்  கொடியமன - நீடரங்க 
மண்டிப்பாய்வேக மடங்கவெங்கு மோடுவதைத் 
தண்டிப்பாய் சோணா சலா (78) 

மழைகுளிர்வெங் காற்றுருமு வல்லடிதீ வெய்யில் 
குழைபசிநோய்  கள்ளர் கொடுங்கோல் - விழைகூற்றாற் 
றீங்குவா ராதுவலஞ்  செய்வாரை நீயிருந்து 
தாங்குவாய் சோணா சலா (79)

பூமாலை கையும் புனன்மாலை நேத்திரமும் 
பாமாலை நாவும் பரிந்தணியுந் - தாமே
நெடுமாலைத் தேடவைத்த  நீயெனைச்சேர் பார்கூய்த்
தடுமாலைச் சோணா சலா (80)

முற்காசி மன்னன் முகத்தைக்  குரங்காக்கிப்
பிற்காசி கந்தவருள் பெய்தனையே - யெற்காசி
யப்படியேன் றண்டித் தருள்புரியா  யந்தோயான் 
றப்படியேன் சோணா சலா (81)

தென்பாகத் தேவியுடன்  சேர்ந்துசிறுத் தொண்டரிட்ட 
வன்பாங் கறியை யருந்தற்கே - யின்பாப்போய்ச்
சீராளா வென்றழையுஞ்  சேயையெனத் தந்தளித்த 
தாராளா சோணா சலா (82)

ஆக்குவாய் காப்பா யழிப்பாய் மறைப்பாய்பின் 
னோக்குவா யாவு நொடிப்போதே - தாக்கு 
மிமியேற்கு  நேரந்தா னெத்தனையோ கற்பந்
தமியேற்குச் சோணா சலா  (83) 

தாயிலாச் சேய்போற் றவிக்கின்றே  னென்றுரைத்தா 
லாயிலா னானென்ற   றைவையென - வாயிலா 
வூமனே யொத்தியா னொன்றுமுரை யேனிதழித் 
தாமனே சோணா சலா (84) 

அனங்காணா னஞ்சுண்டா னம்மை வினையாற் 
புனையுடம்பும் பாதியாய்ப் போனான் -  றினமுந்தா 
னேமாந்த  மானிடனென் றெள்ளாம  லேத்துவதென் 
றாமாந்தர் சோணா சலா (85)

சங்கரியத் தங்கொளலாற்  சக்கரமான் மன்னுதலால்
வெங்கரி  பயந்தவணன் மேவலா - லிங்கரிது 
நிற்குருவே யென்னுருவே நீமுழுதுங் கொண்டுறைவாய் 
சற்குருவே சோணா சலா (86)

மோன முடிவே மொழியவரு மானந்த 
ஞான வடிவேநின் னலமுழுதுந் - தீன
னியம்புவே னெவ்வா றினியவருள் செய்யாய்
சயம்புவே சோணா சலா (87)

முத்தே மணியே முழுவயிரப் பொற்றூணே 
சித்தே யெமதுகுல  தெய்வமே  - சுத்தகுண
மேருவே நற்கருணை மேகமே  வந்தடைந்தேன் 
றாருவே சோணா சலா (88)

சோதிக்க லாமா தொழும்பனேன் றன்னைமிக்க 
வாதிக்க லாமா மணியரவம் - பாதிக் 
கலாமதிகஞ்  சேரவைத்த காரணநின் றாட்குச் 
சலாமதிகஞ் சோணா சலா (89)

அண்டாண்ட  கோடி யருளா  லளித்தடிமை 
கொண்டாண்ட சோதிக் குருமணிநீ - கண்டாய்
சமுகனே யாகவெனைத் தொண்டுகொள் வாயன்பர் 
சமுகனே சோணா சலா (90)

திருவல கிட்டுத்   திருமெழுக்கு மிட்டு
மருவுதிருக் கோலமிட்டு வாழ்த்திப் - பெருகுதளி 
கம்பத்தே கத்துடனே கைகூப்பிச் சூழ்வதுநற்
சம்பத்தே சோணா சலா (91)

உருவா யருவா யுருவருவாய்  நின்ற 
வொருவா வுபதேச மோதக் - குருவாய்
வரவேண்டு முன்றன்  மலர்ச்சரணத் தன்பு
தரவேண்டுஞ் சோணா சலா (92)

ஆரூரு மம்பலமு மானந்த கானமெனும் 
பேரூரங் கட்டமெனப் பேணுகிலேன் - சீரூர் 
நித்தியமே நின்னூர் நினைக்கின்றேன்  முத்திபெறச் 
சத்தியமே சோணா சலா (93)

பாரறியா விண்ணறியா பாதாளந் தானறியா
யாரறிவா ருன்றனருஞ் சீர்த்தி - யோரணுவும்
யானறியாத் தன்மையதே யெம்பெருமா னின்னமுநீ
தானறியாய் சோணா சலா (94)

கார்த்திகைக்குக்  கார்த்திகைநாட் காட்சிபெறக் காட்டுகின்ற 
சீர்த்திவளர் மெய்ஞ்ஞான  தீபத்தை -  யேத்தி
மதுரநேயத் தமிழால் வாழ்த்த வரந்தாராய்
சதுரனே சோணா சலா (95)

வானே முதலட்ட  மாமூர்த்தி யாயமர்ந்த 
யேனே வுலகுய்ய வெண்ணியோ - வானே
றதிபதியே ஞான வருணிதியே  சீலச்
சதிபதியே சோணா சலா (96)

சம்புவே யென்றுனது தாணினைக்க வொட்டாம 
லைப்புலத்தார்கூடி யலைக்கின்ற - வெம்பிறவி 
வெந்தோடநீங்கு  விபவமருள்  வாய்மிகவுஞ்
சந்தோடஞ் சோணா சலா (97)

சோதனை செய்யாதே சுயவடிவா வந்தென்னை 
யாதரிப்பாய் காட்டி லருச்சுனனின் - பாதமலர் 
நாடினான் வேடுவனா நண்ணினாய்  வில்லாலே
சாடினான் சோணா சலா (98)

வெள்ளையா வின்னும் விளம்புவதென்  மென்கனிதேர்  
கிள்ளைமொழி போலிதனைக் கேட்டருள்க - பிள்ளைநான்
மாதாநீ தொண்டனான் வணபதிநீ  யேழைநான் 
தாதாநீ சோணா சலா (99)

அருணாசலா வென்றே யன்புடனே போற்றி
யிருணாச  மெய்த்தீப மிட்டோர்  - பெருவாழ்வைச் 
சிந்தையே செய்தளவு தோந்துரைக்க வொண்ணாதென் 
றந்தையே சோணா சலா (100)

சோணாசல வெண்பா முற்றிற்று,

 

Related Content

அண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)

உண்ணாமுலையம்மன் பதிகம்

திருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சு

திருவருணைக் கலம்பகம்

திருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)