உ
சிவமயம்
காப்பு வெண்பா
நாதப் பொருளாம் நடராஜ குஞ்சித
பாதப் பதிகம் பகர்தற்கு - மேதக்க
காப்பாகுங் கற்ப கவிநாய கன்கழல்பொற்
பூப்பாகும் கற்கண்டும் போல்.
நூல்
பூரதா ரூடஒரு முப்புரத் தினைமுன்
பொடித்தருளி உலகில் உளமுப்
புரம்எலாம் கைக்கொண் (டு) இருந்தநின் திருவருள்
புதுமைகாண் பது விழைந்தேன்,
நேரதா கியவழிநி ரூபித்திடற்(கு) உனது
நேயர் துணை யின்றி அலையும்
நிசிவேளை தன்னிலே துட்டர்பலர் கூடி எனை
நிற்பந்த மிடுவர் இதுவே
போரதா முடியும் எனில் எந்நாளும், என்(று) உனது
பொன் அடிக்(கு) உரியன் ஆவேன்,?
புத்தமுதம் அனையநின் கருணைக் கடைக்கண் அருள்;
பொற்பொது விடைப் பொரு(வு) இலா
நாரதாதியர் ஆதிசேடனொடு புலியும் இது
நவம்நவம் எனக் குதிகொளும்
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ்சிதகீத
நடனகுஞ்சித பாதனே. (1)
உலகினில் பாலினுக்குச் சர்க்கரைக்(கு) அலைவர்,
ஒருவர் கூழிற்கு வேண்டும்
உப்பினுக்(கு) அலைவர், இவர் இருவர்க்கும் உளகவலை
ஒன்(று) என்ப(து) யாவர் உணரார்?
அலகில்பல நூல்களுங்கற்(று) உள்ள படிஉனை
அறிந்துளோர்க்கும் சிறிதும் ஓர்
அறிவிலி எனக்கும் உளகவலை ஒன்(று) என்(று) உனக்(கு)
அறிவிக்கவும் வேண்டுமோ?
பலர்நகைத் திடஇன்று பரிதவித்திடும் எனைப்
பார்த்(து) அருள் புரிந்திடுதல்நின்
பாரம்அன்றோ?தருமம் அன்(று) இனித்தாமதிப்
பது,சாவகாசம் இலை, நின்
நலஅருள் புயல்பொழிந் தால்எனக் கடைநோக்கம்
நல்குதற்(கு) இதுசமயமே,
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சிதபாதனே. (2)
சலியாது சாதன சதுட்டயம் பெற்(று),உனைச்
சார்ந்த தத்துவஞானி வாய்த்
தனிமறை உணர்ந்து, சிந்தித்துத் தெளிந்துறு
சமாதிநிலை பெற்றுமீண்டு,
மெலியாத நிட்டைபெற வந்தருள வேண்டும், இது
விளையாட்டு வார்த்தையன்று,
வீணனுக்(கு) இதுதக்க தன்(று) என மறுத்தியேல்
வெகுமோசம் உளது நின்னால்
பலியாத காரியமும் உள்ளதோ? கல்லைப்
பருத்தடங் கைக்களிறதாப்
பரிணமிக் கச்செய்த திருவருட் பார்வையில்
பரமாணு ஒன்றமையுமே
நலியாத புலிபதஞ் சலியாட மன்றிடை
நகந்தருங் கொடியொ(டு) ஆடு
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ்சிதகீத
நடனகுஞ் சிதபாதனே. (3)
அவனிமிசைமானிடப் பிறவியில் கருவிகர
ணாதிகள் அனைத்தும் உற்றும்
அத்துவித உண்மைஅறி யாதுகா லங்கழித்(து)
ஆவியை விடுத்(து) ஒழிவனோ?
தவமிக முயன்று தான் பெற்றமந்திரவாள்
தனைக் கொண்டு தன் கழுத்தைத்
தானே தடிந்துகொள் வதனைஒப் பாம் என்று
சாற்றுவ(து) அறிந்திருந்தும்
பவமொழிய நின்(று) உனைப் பாடிக் கசிந்(து) உருகு
பத்தியில் குணக் கேடனைக்
பார்த்துநீ யுஞ்சற்(று) இரங்கி அருளாய் எனில்
பாவியேன் என் செய்குவேன்?
நவமணி குயிற்றிமிளிர் கனகசபையில் கமல
நான்முகனும் மாலும் ஏத்து
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சிதபாதனே. (4)
மோகபோ கங்களை விடாதுநே சித்(து) அலையும்
மூடருளும் மூடன், இவனோ
மோட்சசா தனநெறி பெறற்குரியன்? அன்(று) என்று
முற்றவும் கை விடுவையேல்,
தேகமோ வீணாகி விடும், உனைச் சிந்தித்த
சித்தமும் பித்தேறு(ம்) இச்
செய்திகேட் டவரும்நம் இருவரையும் நகைசெய்து
தீயர்என் றிடுதற்(கு) இடம்,
ஆகையால், உள்ளது மணற்சோ(று) எனில்கற்கள்
ஆராயும் அவரும் உளரோ?
அடியனேன் பிழை குறித்(து) ஒன்றும் ஆலோசியா(து)
அருள்புரிதல் உன் பாரமே;
நாகலோ கத்தரோடுமாகலோ கத்தரும்
நலம்பெற நிதந் தொழுது வாழ்
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சிதபாதனே! (5)
பலகலைக ளுங்கற்(று) உணர்ந்துபெரு மொழிதேர்ந்(து)
பற்றற்ற ஞானி முகமே
பார்த்(து) அருள்வதன்றி, எளியேன்போல வினைஉழப்
பவர்முகம் பார்ப்ப(து) இலையேல்,
நிலவலயம் மீது பைங்கூழ்கருக வுங்கண்டு
நீள்கடல்பெய்யும் முகில்போல்
நிலையிலார்க் கண்டுமிகு செல்வர்பால் சென்(று) உதவு
நீதியோ(டு) ஒக்கும் அன்றோ?
இலகும் நின் அருள்குறித்(து) என் அப்பன் என்பவர்க்(கு)
இன்அமுதம் என்ப(து) எல்லாம்
ஏசுவார்க்(கு) இடம் ஆகும், ஆதலால் திருவுளத்(து)
எண்ணி என்குறை தீரநின்
நலம்மருவு திருவருட்(கு) இடனாக் குவித்தலே
நன்று,சிற்சபையில் ஆடு
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சிதபாதனே. (6)
ஆலம்உண் டிடுவோர்க்கு நன்மருந்(து) இடவேளை
ஆராயும் அவரும் உளரோ?
அபயம் என்பார்க்(கு) அஞ்சல்என்(று) அருள்வதுஅல்லவோ
அருள், அன்றியாகம் அழியுங்
காலம் உண்டாயின் இங்(கு) யார்க்(கு) அருள்வ(து)?
உன்பெருங் கருணைக்(கு) இழுக்(கு) அல்லவோ?
கருதி அருள் புரிவையோ? கைவிடுவையோ? எனக்
கண்கலங் குறும்எளி யெனைச்
சீலம் உண்டாக அருள்; அமுதம் உண்(டு) உலகுஎலாம்
சேர்த்(து) உண்ட கண்டமான
திவ்ய!பரிபூரண! சுகாதீத வாழ்வுறத்
திருஉளம் இரங்கி அருளாய்,
'ஞாலம் உண்டவனும் எழில் நறியமுண்டகனும் உளம்
நாடுதற்(கு) அரிய மன்றுள்
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சிதபாதனே. (7)
பாலிருக் குஞ்சொல்க னிந்தபர மாதரே
பரதெய்வம் என்(று) அனுதினம்
பாவித்து நின்(று) அவர்க்(கு) ஏவல்செய்(து) அவர்குணம்
பாராட்டுவதும் உடைய என்
போலிருக்கும் பண்பின் அன்பர் அரிதேயலது
போந்தமெய்ஞ்ஞான உணர்வால்
போகமோ கங்களை விடுத்(து) உனை விடாதநல்
புண்ணியர் உனக்(கு) அரியரோ?
மேலிருக்கும் தேவர் எவராலும் நீக்கரிய
வினையினேற்(கு) அருளும் இதுவே
மேதகுநினா(து) அருள் பெருமைக்(கு) இசைந்த(து) இவ்
வினையம்நீ அறியா ததோ?
நாலிருக்குஞ் சொலும் அநாதிபரி பூரண
நவந்தரு வினோத மன்றுள்
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சித பாதனே. (8)
வாதநேகம், பெருவழக்(கு) அநேகம், கொடிய
வம்புகள் அநேகம், மடவார்
மருவுசுக போகம் என்(று) இவைமுதல் அநேகமாம்,
வாதனைப்பட்(டு) உழல் வனோ?
பேதம்நே ராதபர மாத்துவித ஒருநீ,
பிதாமகன் யான் என்(று) முன்
பேருல(கு) எலாம் அறிய மாமறை புகன்றதும்
பேதமை கொலோ? அன்றியும்
தீதநேகம் செய்மக வாயினும் பகைவர்கைச்
சிக்குண்டு மொத்துண்பரேல்
சிறிதுஞ் சகிப்பரோ பெற்றோர்? எனில்புகறி,
தேர்ந்திவை உணர்ந்தி லாயோ?
நாதனே இங்(கு) எனைக் கைநழுவ விடிலோ
நகைக்(கு) இடங் காண்; மன்றினுள்
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சித பாதனே. (9)
மறைஉணர்ந்(து) அறியேன், அறிந்தவர் இருந்தவூர்
வழியும் அறியேன், பெரியர்சொல்
மார்க்கம் அறியேன், அடியர்சேர்க்கை அறியேன், அவர்தம்
மலரடிக்(கு) அன்பும் அறியேன்,
குறையுணர்ந்(து) அறியேன், எவர்க்கும் ஏதேனும்
கொடுத்தும் அறியேன், உரியசற்
குணமும் அறியேன், வெறிய நாயினிற் கடையனேன்
கொண்டபேராசைஅதனால்
முறைஉணர்ந்(து) அரியதவம் முயல்வோர்க்கும் எட்டாத
மோட்ச கைவல்ய பதமே
முற்றும் வேண்டினன் இஃதொர் கன்னியவ் வனசுகம்
முயங்கவேண்டுதல் போலுமாம்
நறையுணர்ந்(து) அமர்வண்டின் உண்டுதிரி வேன்உனது
நாட்டம் அறியேன்? மன்றினுள்
நனிதகுஞ் சிதவேத புனிதரஞ் சிதகீத
நடனகுஞ் சிதபாதனே. (10)
முற்றும்.