logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)

சிவமயம்

இயற்றியவர்  மாயூரம் கிருஷ்ணய்யர் 

            காப்பு

        கற்பக விநாயகர் துதி

        கட்டளைக் கலித்துறை

பூநடம் ஆடும் அனந்திகழ் தாமரைப் பொய்கை செந்நெல்
காநடவு ஓங்கும் வயல்தில்லை வாழுங் கருணைவளர்
தேன்அடர் கற்ப கவிநாயகன் அருட் சித்திநல்கும்
மாநட ராஜ தயாநிதி மாலை வழுத்துதற்கே.

            நூல்

ஓங்காரம் ஆகி ஒருமூன்(று) அவத்தைக்கும் ஓர் கரியாய்
ஆங்காரம் அற்றவர் நின்(று) ஆடு சிற்சபை ஆதரித்தேன்
ஹீங்காரம் உற்ற மனோமணி வாமத்(து) இருத்தி என்புந்
தாங்கார மல்புயத் தோய்நடராஜ தயாநிதியே.  (1 )

பாண்டவ தூதன் சதமேதன் வேதன் பராவஅருள்
ஆண்டவன் மா(து) இயல் பாதிஅ நாதிஎன்(று) ஆய்பவர்உள்
மாண்டவ ரோதயன் மேதையன் தென்தில்லை மன்றகத்துள்
தாண்டவ குஞ்சிதத் தாள்நட ராஜ தயாநிதியே. (2)

விண்டலைப் போய்வரும் ஊசலைப் போல்பிற விப்பிணிப்பட்
டுண்டலைப் பாய்துரும் பாய்அலை வேனை ஒருசிறிது
கண்டலைப் பாற்றிநின் மெய்ஞ்ஞான நோக்(கு) அருள்,
தண்டலைப் பால்தில்லை வாழ்நடராஜ தயாநிதியே .  (3)

பங்கச் சனனம் எடுத்(து) எடுத்(து) ஓய்ந்து படுந்துயரம்
அங்கச் சனஞ்சன மாஒழி வித்(து) அருள் வான் பணியின்
அங்கச் சபாபவி நாசவி லாச, வணிமணிசூழ்
தங்கச் சபாபதியே! நடராஜ தயாநிதியே.  (4)

உண்டாச் சுதென்பர் உடனே ஒழிந்ததென் பார் உலகில்
கண்டு ஆச்சரியப்படுவார் அநித்தியங் காண்மின் என்பார்
வண்டாச் சிறிதும் இதில் சுழலா(து) அருள்வான் தில்லைவாழ்
தண்டாச் சிறப்பில் தனிநட ராஜ தயாநிதியே. (5)

நானே தனதன் நிகர்ஆகு வன்என்று நாணமின்றி
மானே தனத்துணை  யின்பனல் காயென்றும் வாடுவதோ?
வானே! தனக்குவையே! மன்றுள் ஆடிய மாணிக்கமாய்த்
தானே தனக்கு நிகர்நட ராஜ தயாநிதியே.  (6)

மாதன மே! தன மேஅளிப் பாயெனும் வம்பனுக்(கு) இங்(கு)
ஆதன மே(து) என்று அகற்றிவிடா(து) அருளாய், விடையின்
கேதன மே!தகு தொண்டர்முன் நின்(று) அவர் கேட்டபடி
சாதன மேதரு வாய், நட ராஜ தயாநிதியே.  (7)

கற்றே கலைகள் பிதற்றுவர் வாழ்நாள் கழிந்து நெருப்
பில்தேகம் வீதலைக் கண்டும் என்னோ உனைப் பேசிலர்முன்
உற்றே கரம் குவித்(து) ஆரணன் நாரணன் ஓத மன்றுள்
சற்றே கடைக்கண் அருள், நட ராஜ தயாநிதியே.  (8)

தெருள்நா கராதி பராவரும் பாய்புலி சீல மகிழ்
கருணா கரா! சந்திரசே கரா! என்று கைதொழு(து) உன்
அருணாரணார் உய்வ(து) என்று கொலோ? மன்றுள் ஆடுகின்ற
தருணா ருணோதய மே!நடராஜ தயாநிதியே.  (9)

சருமந்த னில்பொதி புன்மலக் கூட்டைச்சதம் என்(று) உளார்க்(கு)
அருமந்த நின்அருள் வாய்க்குங் கொலோ? அன்பர்க்(கு) அன்றிஉலாம்
கருமந்தியும் அறியாமலர்ச் சோலைக் கவின்தில்லைவாழ்
தருமந்திகழ் மன்றுளாய் நடராஜ தயாநிதியே.  (10)

கலைமேல் கலையிட்ட காரிகை யாரிடைக் காலமெல்லாந்
துலைமேல் துலைவைத்துப் பாழ்க்(கு) இறைத் தேற்குந் துணை செய்வையோ?
சிலைமேல் சிலைகொண்டு முப்புரம் செற்றுத் திருத்தில்லைவாழ்
தலைமேல் தலைவைத்(து) அருள் நடராஜ தயாநிதியே.  (11)

மலைமா(து) இடத்தும் அவள் அறியாது வளர்சடைக்கண்
அலைமா(து) ஒருத்தியும் வைத்(து)அமை யாமல்நின் அன்பர்தம்பால்
நிலைமாதும் வேட்டனை காமாரி என்றுசொல்நீ திநன்றாம்
தலைமா தலமன்(று) உறைநட ராஜ தயாநிதியே.  (12)

இனியே கவலைப் படமுடியா(து) என் உயிர்க்(கு) இரங்கி
நனிஏக இன்ப நலம்தரு வாய்,நல மேகனிந்த
கனியே! கருணைக் கடலே! கரணங் கடந்துநின்ற
தனியே! கனக சபாநடராஜ தயாநிதியே. (13)

பரம்படியிற் கருஞ்சேற்றொளிர் வெண்முத்தம் பாயொளிய
கரம்படி விண்மீன் நிகர்க்கும் பழனக் கவின்தில்லையுள்
பிரம்படி பட்டும் அடியார்க்(கு) அருளும் பெருங்கருணைத்
தரம்படி நான் மறை சூழ்நடராஜ தயாநிதியே. (14)

சமன்நிய மங்கள் உணரேன் அகத்(து) அபிசாரவஞ்ச
கமனிய மங்கையர்க் கேஅலை வேன்நின் கருத்(து) என்னையோ?
நமன்நிய மங்கடிந்(து) அன்பரைக்காத்(து) அருள்நல்கு பொதுத்
தமனிய மங்கல மாநடராஜ தயாநிதியே.  (15)

அவமே தவம்முயல் வேன்மறை நூல்முடி(வு) ஆய்ந்துணர்ந்து
பவமே தவம்நினை யேன்நினைப் பாடும் பரிசும் இலேன்
சிவமே தவளவெண்ணீ(று) அணி மேனிய தில்லைமன்றுள்
தவமே! தவப்பயனே! நட ராஜ தயாநிதியே!  (16)

வத்துச்சித் தானந்த வாஒளி நோக்கி மயற்பொறித
கைத்துச்சித் தால்நந்த லாநிட்டை கூடக் கடைக்கணிப்பாய்
வித்துச்சித் தாநந்த வார்குழையாள! விளங்கு மன்றுள்
சத்துத்சித் தானந்தமே! நட ராஜ தயாநிதியே.  (17)

நடைஅற்ப முந்தவறாதநின் மெய்யன்பர், நாப்பண்உற(வு)
அடையப்ப ணித்தருள், தான் அல(து) இல்லை அகிலம் என்பார்
தடையற்ற ஆனந்தமே! தில்லை வாழ்அந்தணர் தொழும்செஞ்
சடையப்ப னே!அப்பனே!நடராஜ தயாநிதியே.  (18)

சேயே தனிக சிகாமணியே என்று தீயர்முன்சொல்
வாயே தனின் அருள் வாழ்வறி யேனையும் மன்றகத்துள்
கூயே தனிசந் துயரென ஆண்டருள் கூட்டுவையோ?
தாயே! தனித்துணை யே! நட ராஜ தயாநிதியே.  (19)

நந்தா வளந்தரு வாழ்வும் இன்(று) ஆதலின் நாளும்நலம்
சிந்தா வளந்தரு நின்இன்ப வாழ்வு அருள்செய், யருட்பால்
முந்தா வளந்தருணத்(து) ஊட்டும் காழிமுனியொ(டு) ஐங்கைத்
தந்தா வளந்தரு வோய்நட ராஜ தயாநிதியே.  (20 )

பொங்கர் அனேகம் மலர்ந்(து) அசைந்(து) அன்ன பொலங் கொடிவி
ளங்கர னேர்விழி என்னா(து) அருள் அகிலாண்ட அன்னை
பங்கரனே! பரனே! புலி பாம்பும் பராவும் மன்றுள்
சங்கரனே! அரனே! நட ராஜ தயாநிதியே.  (21)

மந்திரம் மாமனை மக்கள் என்(று) ஏங்கி மதிமயங்கி
நைந்(து)இர வும்பகலுந்தளர் வேற்(கு) நயந்துவந்(து) ஓர்
தந்திரங் கூறுவையே, தில்லை மன்றினுள் தண்குழவிச்
சந்திர சேகர னே!நட ராஜ தயாநிதியே. (22)

எஞ்சல் யாதும் இலைநின்னை யன்றி என்(று) எண்ணி மன்றுள்
சஞ்சலி யா(து) உனை நெஞ்சத்(து) இருத்தித் தவம் முயல்வார்
அஞ்சலி யாவதும் செய்யேற்(கு) அருள் செய்வையோ? புலிப
தஞ்சலி யாரும் தொழுநட ராஜ தயாநிதியே. (23)

பார் ஆளவும்விண்பதிஆள வும்பணிப்பாய் அன்பர்கட்(கு)
ஏராளமாய் மன்றுள் என்பது கேட்(டு) உனை ஏத்துகின்றேன்
ஓர்ஆளவனை அழைமின்நம் பால் என்(று) உவந்து கொன்றைத்
தாராளனே! அருளாய்! நடராஜ தயாநிதியே.  (24)

மையல் இடப்பட்(டு) அரிவையர்க் கேஉழல் வம்பன் வெறும்
பையல் இடத்(து) அருள் செய்யோம் எனவெறுப்பாய் அகலச்
செய்யல், இடர்க்(கு) இனி யாற்றேன் விரைந்(து) அருள் செல்வமன்றுள்
தையல் இடத்(து) அமர் வோய்! நடராஜ தயாநிதியே.  (25)

எண்ணிய யாவும் பெறு(க) என்று முன்நின்(று) எவர்தரினும்
நண்ணி அவாவொடு நாடேன் நசிப்பவை ஆதலினால்,
உண்ணிய வாஎன்(று) அமு(து) அன்பர்க்(கு) ஊட்டும் உதார!மன்றுள்
தண்ணிய வார்சடையாய்! நடராஜ தயாநிதியே.  (26)

கரக்கும் பரிசுடையார்முகம் நோக்கிக்கை கூப்பிக்கரைந்து
இரக்கும் பரி(வு)ஒழித்து ஆண்டருள் வாய்,உல(கு) ஈன்றருளும்
வரக்கும்ப மென்முலை யாடநின்(று) ஆடிஒண் மன்றுள் அராத்
தரக்கும் பணிய மகிழ்நட ராஜ தயாநிதியே.  (27)

வாரணி கொங்கை மடவாரும் நண்பரும் மற்றுமுள்ள
நாரணி தந்தரு சுற்றமும் கைப்ப நமன் வருங்கால்
சீரணி குஞ்சிதத் தாள்தர வேண்டும், நற்சிற்சபைக்கண்
தாரணி யும்பர் தொழுநட ராஜ தயாநிதியே.  (28)

மரங்கனிந் தாலும் மனம்கனிந் தாய்இலை மன்னும் நந்தாட்கு
இரங்கல்நின் றன்மைக் கடாதுகண் டாய்என்(று) இகழ்ந்து விடின்
அரங்கனிற் பந்தம் தவிர்ப்பேம் என்(று) ஆள்பவர்ஆர்? சடைமேல்
தரங்க(ம்) நின்று ஆடும் பொதுநட ராஜ தயாநிதியே.  (29)

புதுமறை யோன்முத லோர்போற்றும் உன்றன் புகழ்சிறிதா
வதும்அறை யேன்,நின் அருட்(கு) ஆவல் உற்றனன் வாய்க்குங்கொலோ?
விதுமறை வார்சடையாய்! அன்பர் வேண்டும் விழைவு அருள்வாய்
சதுமறை சூழ்மன்றுளாய்! நடராஜ தயாநிதியே.  (30)

பழங்குடி யென்(று) எனைப் பார்த்(து) அருள் பக்குவம் பார்த்(து)  இகழாய் 
வழங்கும்நின்பொன்அருள் வாழ்வேவிரும்பி வரும் அடியார்
முழங்கும் அராஒலி அந்தணர் வேத முழக்(கு) ஒலியும்
தழங்குபொன் னம்பலவா! நடராஜ தயாநிதியே.  (31)

நற்குரு நாண்மலர் இட்டுநின் மூலம் நவின்(று) உய்குவ
தற்(கு)உரு வேற்றித் ததாகாரமாகத் தனித்தருள்வாய்
விற்குரு மாமலை வாங்கித் திரிபுரம் வீட்டி மன்றுள்
சற்குரு வாய்வரு வாய், நடராஜ தயாநிதியே.  (32 )

கோதையும் மாநிதி யும்புவி ஆசையும் கோண்நசையால்
வாதையு மாசகி யேன்இனி யேனும் முன் வந்தருள்வாய்
மாதைஉ மாபதியாய்ச் சிற்சபாபதி யாய் மன்னுயிர்த்
தாதையு மாய்ப்பொது வாய்நடராஜ தயாநிதியே.  (33)

பூதகி ஆருயிர் உண்டவன் போதன் புரந்தரன்முன்
ஓதகியார சிவாசங்க ராஎன்(று) உளம்உவப்ப
வேதகி யாதனை தீர்தரப் பார்த்தருள், வேத மன்றுள்
தாதகி யார்முடியாய்! நட ராஜ தயாநிதியே. (34 )

மங்(கு) அத்தம்மிக்க பெருவாழ்(வு) என்று ஆசை வலையுள்சிக்கி
இங்(கு) அத்த மிக்கின்றிலா(து) அலை வேற்கும் இரங்கியருள்
தங்(கு) அத்தம் மிக்கு மொழிச்சிவ காமி தழுவ மன்(று) ஆர்
சங்கத் தமிழ்க்(கு) இறைவா! நடராஜ தயாநிதியே.  (35 )

அக்கரமாலை அறியேன் அறிந்(து) எண்ணும் அன்பரொடு
புக்கரமாலை மதிசூடி என்றிலன் போம்வழியென்?
திக்கர மாலை உடையாய் மன்(று) ஆடிஅர்ச் சித்துப் பெற்ற
சக்கரமாலை மகிழ்நட ராஜ தயாநிதியே.  (36 )

வடுத்துப் பணிவிழி வாய்மட வார்மயல் மாய்த்திட்(டு) உனை
அடுத்துப்பணியும் அவரோ(டு) உற(வு) அருள் ஆய்ந்(து) உன்அருள்
தொடுத்துப் பணியும் புலியும் தொழும் மன்றுள் சுந்தரரைத்
தடுத்துப் பணிகொண்டு அருள்நட ராஜ தயாநிதியே.  (37 )

மேவாத வார்என்புந் தோலும்தசையும் மிடைந்த மெய்யை
ஆவாத வா(து) என்(று) அகங்கரித்(து) ஐவர்க்(கு) அழியும் எனை
வாவாத வாதை ஒழி(க)எனப் போதித்(து) வைத்து மன்றுள்
சாவாத வாழ்வளிப் பாய், நடராஜ தயாநிதியே.  (38)

கரணம் சலித்(து) அறி(வு) எல்லாம் சலித்(து) உயிர் காலன்கொளும்
மரணம் சமீபித்த தாயினும் உன்னை மறந்தும் உன்னேன்
திரள்நஞ்(சு) அயின்(று) அருள் மன்றுடையாய்! நின் செயல் அறியேன்
சரணம் சரணம்கண்டாய் நடராஜ தயாநிதியே. (39)

மழைக்கும் வெயிலுக்கும் காலுக்கும் நின்று மனந்தளரா(து)
உழைக்கும் தவம் உடையார்க்(கு) அன்றி ஏழைக்கும் ஓங்கு மன்றுள்
அழைக்கும் படிக்(கு) அருள் செய்தால் பழிப்(பு) என்கொல்? அன்பர்உளம்
தழைக்கும் திருவருளோய்! நடராஜ தயாநிதியே. (40)

பேராசை நீங்கிலன் பொய்வாழ்வில் அன்புறு பேதையர்பால்
தீராசை யோக நினைவெனில் என்று தெளிந்(து) உய்குவேன்?
கூராசை சூழுடை மால்விடை யூர்தி! பொற் கொன்றை மலர்த்
தாராசை மன்றுடை யாய்! நடராஜ தயாநிதியே.  (41)

உள்ளக் கருத்தை உணர்வாய் எனைவினை ஓய்ந்(து) உடலம்
எள்ளக் கடைப்படு நாள்வரும் முன்னம் விழைந்(து) அருள்வாய்
கள்ளக்கபடன் இவன் என்று மன்றங் கருதலரில்
தள்ளக்கருதி விடேல்,நட ராஜ தயாநிதியே. (42 )

ஆகந்திரம் என்றுவீணாள்கழித்(து) இங்(கு) அலைவ(து) அன்றி
ஏகந்தினந் தொறும் எண்ணாமல் எண்ணும் இதம்அறியேன்
மாகந்திகழ்தரு மன்றாடி! அன்பர் வருத்தம் அறத்
தாகந்திருத்தி அருள் நட ராஜ தயாநிதியே.  (43 )

வருணம் குலம் என்(று) இறுமாந்து தம்மை மகிழ்ந்து புகழ்ந் (து)
இருள் நஞ்(சு) அயின்றருள் தேவாதி தேவ என் (று) ஏத்திலராய் 
அருள்நந்தும்  மாந்தர் உற(வு) ஒழித்(து ) அம்பலத் (து) ஆட்கொள இத்
தருணம் தருணங்கண்  டாய் நடராஜ தயாநிதியே  (44)

எம்மதமும் தம்மதம் என்(று) இரா(து) ஒன்று இரண்(டு) எனவாய்
வெம்மதம் உற்றவி வாதத்தர் கூட்டம் விடுவித்(து) எனை
அம்மத மாஉரித் தாடும் பிரான்மன்றுள் ஆட்கொளவும்
சம்மதம் உண்டு கொலோ? நடராஜ தயாநிதியே.  (45)

நாம் கத்தர் என்று படைத்(து) அளிப் போரும் நவின்(று) இகலி
யாங்(கு)அத்தழல்வடி வானோய் என அன்பர் ஆடுமன்றுள்
ஏங்கத் தனிநின்று நொந்தேன் இடம்பொருள் ஏவல்என்று
தாங்கத்த காதுகொ லோ?நட ராஜ தயாநிதியே.  (46.)

அகம்பர வும்பொறி யின்வழி யேசென்(று) அலைந்து திரிந்(து)
இகம்பர மும்கெடு வேற்குந் திருவருள் ஏற்குங்கொலோ?
திகம்பர! அம்பல வாணா! தினம்தொறும் சிந்தித்து முச்
சகம்பரவும் துரையே! நடராஜ தயாநிதியே. (47)

வந்தான் நலிந்துநம் பால்இவன் என்று மனம் இரங்காய்
பந்தான பைம்பொன் பயோதர மங்கைபங்கா! எனும்முன்
சிந்தா நலம்திகழ் அன்பர்க்குச் செல்வமும் தில்லை மன்றுள்
சந்தான மும்தரு வாய் நடராஜ தயாநிதியே.  (48)

காலம்எல் லாம்சென்ற(து) இங்(கு) ஓர்பயன் இன்றிக்கட்டுரைத்த
சீலம்எல் லாம் தெரிந்(து) உன் அடி போற்றும் திறமும் இலேன்;
ஆலம்எல் லாம் உண்ட அம்பல வாண! அமரரொடு
தாலமெல் லாம்கை தொழுநடராஜ தயாநிதியே.  (49)

பண்டாடு நின்அன்பர் கூடிக்குலாவிப் பராவி உனைக்
கொண்டாடு கின்றனர் யானோ சிறிதும் குறித்தறியேன்
வண்டாடு பூம்பொழில் மன்றுடையாய்! இருமாதவர்பாண்
தண்டாடு தண்குழையாய்! நடராஜ தயாநிதியே. (50)

உடம்பைப் பொறியைக் கரணத்தை நான்என்(று) உழன்று புல்லோர் 
இடம்பை யுள்கூறி இரந்(து) உண்டு வாழ்குவன்  என்னென்(று ) உய்வேன் ?
கடம்பை யணியுங் குமாரன் சொல் கேட்டுக் களித்து மன்றுள்
தடம்பை அராஅணி வோய்! நடராஜ தயாநிதியே.  (51)

ஏற்றத்த காதல்கொண்(டு) என்றும் இயற்றும் இருவினையாம்
ஏற்றத்த காதக் கடற்கரை ஏறி வியப்ப மன்றுள்
நீற்றத்த காதமர் வெண்குழையாய்! உள் நெகிழ்ந்(து) ஒருசொல்
சாற்றத்த காத(து) என்னே? நடராஜ தயாநிதியே.  (52)

அடுப்பார் உன(து) அன்பர்நன்மலர் ஆய்ந்திட்(டு) அணிஅணியாய்த்
தொடுப்பார் அணிகுவர் நின்அடிக்கே அவர் சூழல்புக்கு
நடுப்பார் இருந்து நமைநா(டு) என்றால் உனை நற்பொதுவில்
தடுப்பாரும் உண்டுகொலோ? நடராஜ தயாநிதியே.  (53)

என(து) ஆன் அகம்பெண்டிர் மக்கள் என்(று) எண்ணி இருந்து பொன்றாது
உனதானம் உற்றுத் தினம்பணிந்(து) ஏத்தற்(கு) உவந்(து) அருள்வாய் 
மனதான வின்(று) இந்தி ராதியர் போற்றிய மன்றுள் எல்லாம்
தனதான என்(று) உறைவோய்! நடராஜ தயாநிதியே.  (54)

அலைஅலங் காரவிடையா திகளில் அலைந்த(து) எல்லாந்
தொலைஅலங் காரமர் மன்றகஞ் சூழ்எனத் தோற்றி அருள்
மலைஅலங் காரமகள் மகிழ்ந்(து) ஆட மதிக்குழவித்
தலைஅலங் காரம்புனை நடராஜ தயாநிதியே.  (55)

சூதகமேனி மினுக்கும்நல் லாரில் சுழன்று கொடும்
பாதகமேதவி ரேனையும் நின் அருள் பார்வையினால்
வாதகமேவும்நம் சிற்சபை யேதினம் வாழ்த்து(க) என்(று) ஓர்
சாதகமேபுரி வாய், நடராஜ தயாநிதியே!  (56)

கரிக்கும்ப மென்முலையார் ஆசை மாயக் கடுவெளியில்
விரிக்கும் பராரை அரம்பைஒத் தேனைவிரைந்(து) அருளாய்
அரிக்கும் பணிக்கும் தகமன்றுள் ஆடி, அளிப்பவன் கண்
தரிக்கும் பதமல ரோய்! நடராஜ தயாநிதியே.  (57 )

சனித்திரு வல்வினை யால்சுழன்(று) உன்அடி தாழ்ந்திலரை
வனித்திரு ணல்கு நிதிவேண் டினன்இது வம்பலவோ
பனித்திரு மாமலை மாதுபங்கா! மன்றுள் பார்வையொடு
தனித்திரு என்(று) அருளாய், நடராஜ தயாநிதியே.  (58)

விதிக்குப் பயந்(து) உன் விரைமலர்த் தாள்அருள் வேண்டிற்பர
கதிக்குக் கருணைபுரிவைஎன்றார் உனைக்கை தொழுதேன்;
நதிக்குச் சடாடவி தந்தளித்தாய், மன்றுள் நாடகத்துச்
சதிக்குக் களித்தருள் வோய்! நடராஜ தயாநிதியே. (59 )

உண்ணப்படித்(து) இங்(கு) யார்க்கும் உழைத்(து) உழல்வேனை என (து)
எண்ணப்படிக்(கு) உன் அருள்புரி வாய்இனி யேனும், அன்பால்
கண்அப்(ப) அடித்தொண்ட ருக்குமுன் தோன்றும்கனக மன்றுள்
தண்ணப் படிக்கும் முடிநட ராஜ தயாநிதியே  (60)

வாட்டாமல் ஐம்புலத் தீயிடை என்னை மறலி கண்ணில்
காட்டாமல் நின்அருள் கண்கடை நோக்(கு) அருள், காதலித்துத்
தீட்டா மறைகள் நின்(று) ஏத்தமன் றாடிய செய்ய மலர்த்
தாள்தா மரைதொழுதேன் நடராஜ தயாநிதியே. (61)

முன்னைப் பிறப்பில் தவத்தால் தவங்கள் முயல்வரியேன்
என்னைப் பிறங்குந் திருவருள் நோக்கமும் எய்துங்கொலோ?
பொன்னைப் பிறங்கலின் ஓங்குமன்றாடிப் பொருவில் அன்பால்
தன்னைப் பிறர்க்(கு) அளித்தாய் நடராஜ தயாநிதியே.  (62)

அனிச்சந் தனைமிதித் தாலும் பொறா(து) என்(று) அரிவையர்தாள்
வனிச்சந்த மாயத்தில் வீழ்வேற்கு நின்அருள் வாய்ப்பதுவோ?
பனிச்சந்த வான்பொழில் சூழ்தில்லை வாண! பரவை இல்போம்
தனிச்சந்(து) அகமகிழ் வோய் ! நடராஜ தயாநிதியே  (63)

போகாத புன்னெறிக் கேசென்(று) அலைந்து பொறிகலங்கி
வேகாத வெய்யிற் புழுஎன நின்று வெதும்புவனோ?
கா,கா,தமனிய மன்(று)அமர் சித்தகணங்கள் உய்யச்
சாகாத கல்வி தருநடராஜ தயாநிதியே.  (64 )

கற்றாய் இலைநமைக் காணக் கருத்துள் கரைந்து, இவண்என்
பெற்றாய்?இனி ஒழி(க) என்(று) எனைத் தேற்றி உள்பேதமற
நற்றாயி னும்இனி யாய்! மன்றுள் ஆடிய நாத! உளம்
சற்றாயி னும் இரங்காய், நடராஜ தயாநிதியே. (65)

வந்தால் தளர்ந்(து) உன் அடைக்கலம்என்(று) ஒருவன் மகிழ்ந்து
கந்தாற்ற வேண்டுவ(து) அன்றோ? எளியற்கும் காவலர் பூஞ்
சந்தாற்ற விண்படர் தில்லைக் கனக சபைக் கண்இடந்
தந்தால் தடை என்னை யோ? நடராஜ தயாநிதியே. (66)

காம்பவி யார்எழில் தோளியர் வெம்பகைக் கட்டறுத்து
யாம்பவி யாவகை இன்னருள் செய்கநின்(று) ஏத்தும் அன்பர்
சோம்பவி ஆகுலம் சூழா(து) அருள் செயுந்தூய மன்றுள்
சாம்பவி யார்புடை யார்நட ராஜ தயாநிதியே.  (67)

பார்அங்கத் தாஇனித் தாங்கேன் வினைச் சுமை பாற்றி அருள்;
சீரங்கத் தாரும் அரவிந்தத் தாரும் தெரிந்(து) அணியும்
ஓரங்கத்(து) ஆயிழை ஒன்றவைத்தாய், மன்றுள் ஒண்மலர்க்கைச்
சாரங்கத் தாய்அனையாய், நடராஜ தயாநிதியே.  (68)

நிந்திக்கும் மாயைப் பசிக்கும்நின் ஆர்அருள் நேர்ந்(து) உண்பவர்
பந்திக்கு முந்துகிலேன் பசியாறும் பரி(சு) எங்ஙனம்?
இந்திக்கு வான்பொழில் சூழ்தில்லை வாண! எழிற்கழைகல்
தந்திக்கும் முன்அருள்வோய்! நடராஜ தயாநிதியே. (69)

நாடும் பயன்தரு சாதனம் நான்கின் நலத்தவரைக்
கூடும் பரி(சு) அருள், உள்ளத்துள் தோன்றிக் குருஉருவாய்த் 
தேடும் பழவினைத் தீஇரு ளைக்கவின் தில்லைமன்றுள்
சாடும் பருதி நிகர்நடராஜ தயாநிதியே.  (70)

நடலத்தைக் கானல்நன் னீரைஅஞ் ஞானம் நலியும் இருள்
படலத்தைப் பற்(று) அற்(று) ஒழிந்து சதாநின் பரங்கருணைக்
கடலத்தை வேண்டுவர் சான்றவர் மன்றினுள் காழ்த்தவினைச்
சடலத்தை நம்புவரோ? நடராஜ தயாநிதியே.  (71)

பகைத்திட்டங் கொஞ்சமும்பாரா(து) எனைஐவர் பற்றிக்கொள்ளத்
திகைத்திட்ட நம்விதி ஈ(து) என்(று) இருந்து தியங்குகின்றேன்
நகைத்திட்டங் கண்(டு) உமை யோடுமன் றாடிய நாத! வினை
தகைத்திட்(டு) அருள்புரிவாய், நட ராஜ தயாநிதியே.  (72)

பந்திக்கு மாறுபடர்தீ வினைப்பகை பாற்றிநின்னை
வந்திக்கு மாறு வருவார்உன் அன்பர்வகை யறிந்து
சிந்திக்கு மாறு திருந்தேன் இருந்(து) அருள் தில்லை மன்றுள்
சந்திக்கு மாறும் உண்டோ?நடராஜ தயாநிதியே.  (73)

தீனத் தவர்இன்ப துன்பத் தவர்பெருஞ் செல்வத்தவர்
ஈனத்தவர் என்(று) வாடா(து) என்உள்ளத்(து) இருந்தருள் வாய்
மானத் தவரும் மலர்ப்பங்கயத் தரும் மன்றுள் விண்ணோர்
தானத் தவரும் தொழும்நட ராஜ தயாநிதியே.  (74)

முத்திக் குடையவளைப்போன் எழிலும் முதிர்ந்த செல்வப்
பத்திக் குடைய நிழற்கீழ் அரசும் படும் என்(று) இரேன்
அத்திக் குடைய சிற்றம் பலவாண! அகிலம் நல்கும்
சத்திக் குடையவனே, நடராஜ தயாநிதியே.  (75)

மங்கை இடக்(கு)அறியாமல் மயல்கொண்டு மாசுணக்கு
டங்கை இடத்துணிந் தேனையும் மன்றுள் தடுத்தருள் வாய்;
கங்கை யிடத்து நகையால் சடையில் கரந்(து) ஒருமால்
தங்கை இடத்து வைத்தோய், நடராஜ தயாநிதியே.  (76)

அலஞ்சலஞ் சாரும்ஐ வாய்வழி இன்பம் என்(று) ஆய்ந்(து) உன் அன்பர்
தலஞ்சலஞ் சேர்தலில் அன்பில் தொழேனையும் சார்ந்(து) உட்கலங்
கல்அஞ்சல்அ ஞ்சேல்என்(று) அருள், வளர்சாலி அகன்பணையுள்
சலஞ்சலம்சூழ் தில்லை வாழ்நடராஜ தயாநிதியே.  (77)

பனகாதி பனும் பராவிய மூவர்தம் பாட்டு,வின
வினகாதி னில்இந்த ஏழைசொல் அம்பலத்(து) ஏறுங்கொலோ?
வனகா திகழும் திருத்தில்லை வாண!கல் ஆல் அமர்ந்து
சனகா தியருக்(கு) அருள்நடராஜ தயாநிதியே.  (78)

அனத்துணை மென்நடைப் பொன்அனை யார்என்(று) அரிவையர்தம்
இனத்துள்நை வேனையும் மன்றிடை வாஎன்(று) இருத்தி என்றன்
மனத்துணை யாஇருந்(து) ஆண்டருள் வாய்,மலை ஈன்றகன
தனத்துணை வாழ்இடத் தாய், நடராஜ தயாநிதியே.  (79)

கல்லா பசையற்ற மண்ணா என்உள்ளங்க சிந்திலை என்
சொல்லாபணிந்(து) உனைச்சூழ்ந் திலைமன்றுள்துதித்திலை, கை
வில்லா பரணமலை பணியாய், நல்விமலையொடு
சல்லாபம் நாடக மாநடராஜ தயாநிதியே.  (80)

பாரகங் காதல்விண்ணோரகம் பாதல மும்பணிதாள்
சீரகங் காதமர் வெண்குழையாய்! திருச்சிற்சபையுள்
வீர! கங்காதரங் கத்(து) உறைவாய்! அன்பர் வேண்டஅருள்,
தாரகங் காதலித் தேன்நடராஜ தயாநிதியே.  (81)

வளமுழங்குந் தென்திருவாத வூரர்தம் வாசகம்முன்
களமுழங்குஞ் சிறியேன்வெறும் பாட்டுங் கருதுவையோ?
உளமுழங்குஞ் தொண்ட ரன்பாடவாட ஒலிச்சுத்தமத்
தளம்முழங்கும் பொதுவாழ் நடராஜ தயாநிதியே.  (82)

புகரவிக்தைக்(கு) உட்படுவதும் வீவதும் போதும் இனி
நுகரவிக்தை விகநின்னருள் ஞானம் நொடித்(து) அருள்வாய்,
மகரவித்தை தவிர்ந்(து) அன்பர்பொன் அம்பலம் மன்னிஉன்னும்
தகரவித்தைக்(கு) இறைவா! நடராஜ தயாநிதியே.  (83)

பொங்(கு) அரியாசனம் உற்(று) அரசாளும் புரவலர்க
ளுங்கரி யாவர் மனமே ஒழிக; உவந்து மன்றுள்
அங்கரி யாரும் பணியாருங் காண அளிக்கும்அயன்
சங்கரி யாரும் புகழ்நட ராஜ தயாநிதியே. (84)

மாமனும் மைத்துனனும் சுற்றத்தாரும் மனைமக்களும்
நாமனுங் கல்விஇடம் பொருள் ஏவலும் நல்லுயிரும்
பூமனும் மாலும்நின்(று) ஏத்த மன்றாடிய புண்ணியன்பூந்
தாமனும் மாபதியா(ம்) நடராஜ தயாநிதியே. (85)

ஆரணமே அறியேன் அறிந்தோரை அடுத்தறியேன்
காரணம்ஏ தறியேன் எளியேனைக் கடைக்கணிப்பாய்
பூரணமே தகும்அம்பலத் தாடிய பொன்மலர்த்தாள்
தாரணமே(வு) உளத்தாய்! நடராஜ தயாநிதியே.  (86)

கம்பத்துள் தோன்றியசிங் கத்தைக் காய்ந்த கடுஞ்சரப
மும், பத்துச் சேகரங்கொய் தோனும், மும்மை உலகனைத்தும்
நம்பத்துப் பார்மறைதந் தோனும் வேண்டிநவிலும் எல்லாச்
சம்பத்துந் தில்லைப் பொது நடராஜ தயாநிதியே. (87)

வெங்கடந்தீக்(கு) இரையாகுமுன் கண்முன்விரைந்து வந்திட் (டு)
எங்கள் தம்தீ வினைபோக்கும் எம் உள்ளத்(து) இருந்துஇகந
லங்கள் தந்(து) ஈய் உம்பர்ஆநந்தமும், தில்லை அந்தணர்தன்
சங்கடந்தீர்க்கும் பொதுநட ராஜ தயாநிதியே. (88)

தீர்ந்தாரைச் சேர்ந்(து) அவர் செந்நெறிப்புக்கிலன், தீநெறிக்கண்
சேர்ந்தாரை நேர்ந்து திரிகுவன் காலற்(கு) என்செய்வன் கொலோ?
வீர்ந்தாரை வாய்ப்பணிவே ய்ந்து மன்றாடிய எந்தை அன்பால்
சார்ந்தாரைச் சார்ந்(து) இங்(கு) அருள் நடராஜ தயாநிதியே.  (89)

சவத்தவலத்த உறவினர்வீழ்ந்(து) அழத் தாங்கிச் சென்று
சிவத்த அனற்(கு) இரையாக்குமுன் உள்ளஞ் சிறி(து) இரங்கிப்
பவத்தவனப் பிணியாற்றும் உபாயம் பணித்தருளாய்
தவத்தவர்சூழ் மன்று ளாய்! நடராஜ தயாநிதியே. (90)

நீண்மணக்கும் புழுவாய்ச் சகவாழ்வை நினைந்திட்(டு) அந்தோ
வீண்மணக்கும் புலைநாயேன் கெடவும் விதித்தனையோ?
வாண்மணக்கும் புனைந்தோய்! மன்றுள் ஏழை மனத்தடத்து உன்
தாள்மணக்கும் படிசூழ் நடராஜ தயாநிதியே. (91)

மண்தனையே நசைகொண்டு புன்மாயை மலத்தில் உழு
வண்(டு) அனையேன் உனைத்தெண்டன் இடாத வறியனைமுன்
கண்டனையே அப்பனே மன்றுள் ஆடும் கறைக்கண்ட நீ
தண்டனையே னும் செயாய், நடராஜ தயாநிதியே. (92)

மோகர சாரநெறிபுக்(கு) உழல்குவர் மூதறிவோர்
ஏகரசா னந்தம்எய்துவர் மன்றுள் இரண்டு மிலி
சேகரசாந்த பதவாழ்வு வேண்டினன் சேர்கருணா
சாகர சாதனஞ்சொல் நடராஜ தயாநிதியே.  (93)

ஓடும் கனகமும் துன்பமும் இன்பமும் ஒன்(று) எனஉள்
நாடுங் கருத்தொடு நாடாமை யுந்தர நாடுவையோ?
நீடுங் கவின் மன்றுள் ஆடிய நேயநெறியின் மயல்
சாடுங் கருணை வளர்நடராஜ தயாநிதியே.  (94)

நடையா மனத்தினர் புன்னெறிப் பட்டு நலிந்து மன்றுள்
அடையாமல் நல்லவர்பால் அணுகாமல் அழுங்குகின்றேன்
கிடையாம னவணிமன் றுடையாய்! இது கேட்டருளத்
தடையா? மனம் இலையா? நடராஜ தயாநிதியே.  (95)

ஊற்றப்பமா வடையா விண்டுகாட்ட உளத்துயர், என்
மேற்றப்பமா கணக்கில்லை எலாமும் விளம்பறியேன்
ஏற்றப்ப !  மாமணிமன் றுடையாய்! எனக்கு ஏற்றநெறி
சாற்றப்ப, மான் மழுவோய்! நடராஜ தயாநிதியே.  (96)

வாழ்ந்தாரைச் செல்வமும் ஓர் பொருளாக மதித்துமயல்
வீழ்ந்தாரை வேண்டிவினைப் படவோ இன்னும், வெவ்வினையைப்
போழ்ந்தாரை ஆளும்புராதன! புண்ணிய! போந்(து) அன்பினால்
தாழ்ந்தாரைச் சூழும்பொது நடராஜ தயாநிதியே.  (97)

போற்றேன்நின் பொன்னடிக்(கு) ஒண்மலர் தூய்நின்புகழ்புகழேன்
தேற்றேன்தெளிந்(து), உனைச்சிந்தித்திலேன்வெப்ப தீவினையேன்,
கோல்தேன்நிகர் மன்றுளாய்! கெடுவேன்என் கொடுந்துயரம்
சாற்றேன் என் செய்வைகொலோ? நடராஜ தயாநிதியே.  (98)

நித்தியமா நயிமித்தியமா நன்னெறி நடையா
பத்தியமா துதியா வறியேற்(கு) உன் பதங்கிட்டுமா?
தத்திய!மா மலர்ப்பூம் பொழில் தில்லைச் சபைக்கண்வளர்
சத்திய! மான்மிய! மெய் நடராஜ தயாநிதியே. (99)

வரவேண்டி னும்பெருஞ் செல்வமும் வாழ்வும், வன்மாற்றலரைப்,
பொரவேண்டி னும்,புகழ் தான் பெறவேண்டினும், பொய்மயக்(கு)உ
திரவேண்டி னும்,அன்பர் வேண் டியவாபெறத் தில்லைமன்றுள்
தரவேண்டி னும்தருமே நடராஜ தயாநிதியே. (100)

            முற்றும் . 

 

Related Content

நடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம்  கிருஷ்ணய்யர்)