logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசல அஷ்டகம் (ரமணர்)

(ரமணர்)

(எண்சீர் விருத்தம்)

1.    அறிவறு கிரியென வமர்தரு மம்மா
வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு
மறிவறு சிறுவய ததுமுத லருணா
சலமிகப் பெரிதென வறிவினி லங்க
வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா
மலையென வொருவரா லறிவுறப் பெற்று
மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க
வருகுறு மமயமி தசலமாக் கண்டேன்.

2.    கண்டவ னெவனெனக் கருத்தினு ணாடக்
கண்டவ னின்றிட நின்றது கண்டேன்
கண்டன னென்றிடக் கருத்தெழ வில்லை
கண்டில னென்றிடக் கருத்தெழு மாறென்
விண்டிது விளக்கிடு விறலுறு வோனார்
விண்டிலை பண்டுநீ விளக்கினை யென்றால்
விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றே
விண்டல மசலமா விளங்கிட நின்றாய்.

3.    நின்னையா னுருவென வெண்ணியே நண்ண
நிலமிசை மலையெனு நிலையினை நீதா
னுன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக்
குறவுல கலைதரு மொருவனை யொக்கு
முன்னுரு வுனலற வுன்னிட முந்நீ
ருறுசருக் கரையுரு வெனவுரு வோயு
மென்னையா னறிவுற வென்னுரு வேறே
திருந்தனை யருணவான் கிரியென விருந்தோய்.

4.    இருந்தொளி ருனைவிடுத் தடுத்திட றெய்வ
மிருட்டினை விளக்கெடுத் தடுத்திட லேகா
ணிருந்தொளி ருனையறி வுறுத்திடற் கென்றே
யிருந்தனை மதந்தொறும் விதவித வுருவா
யிருந்தொளி ருனையறி கிலரெனி லன்னோ
ரிரவியி னறிவறு குருடரே யாவா
ரிருந்தொளி ரிரண்டற வெனதுளத் தொன்றா
யிணையறு மருணமா மலையெனு மணியே.

5.    மணிகளிற் சரடென வுயிர்தொறு நானா
மதந்தொறு மொருவனா மருவினை நீதான்
மணிகடைந் தெனமன மனமெனுங் கல்லின்
மறுவறக் கடையநின் னருளொளி மேவும்
மணியொளி யெனப்பிறி தொருபொருட் பற்று
மருவுற லிலைநிழற் படிதகட் டின்விண்
மணியொளி படநிழல் பதியுமோ வுன்னின்
மறுபொரு ளருணநல் லொளிமலை யுண்டோ.

6.    உண்டொரு பொருளறி வொளியுள மேநீ
யுளதுனி லலதிலா வதிசய சத்தி
நின்றணு நிழனிரை நினைவறி வோடே
நிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடி
கண்டன நிழற்சக விசித்திர முள்ளுங்
கண்முதற் பொறிவழி புறத்துமொர் சில்லா
னின்றிடு நிழல்பட நிகரருட் குன்றே
நின்றிட சென்றிட நினைவிட வின்றே.

7.    இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று
மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற்
கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந்
துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே
யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம
மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய
மன்றக மசலமா நடமிடு மருண
மலையெனு மெலையறு மருளொளிக் கடலே.

8.    கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான்
கடனிலை யடைவரை தடைசெயி னில்லா
துடலுயி ருனிலெழு முனையுறு வரையி
லுறுபல வழிகளி லுழலினு நில்லா
திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக்
கிடநில மலதிலை வருவழி செல்லக்
கடனுயிர் வருவழி சென்றிட வின்பக்
கடலுனை மருவிடு மருணபூ தரனே.

Related Content

அருணாசல அக்ஷரமணமாலை (ரமணர்)

அருணாசல நவமணிமாலை (ரமணர்)

அருணாசல பஞ்சரத்னம் (ரமணர்)

அருணாசலப் பதிகம் (ரமணர்)